இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


புலனைந்தும் பொறி

புலனைந்தும் பொறி கலங்கி

பதிக எண்: 1.130 - திருவையாறு மேகராகக்குறிஞ்சி

பின்னணி:


சீர்காழி நகரத்திற்கு வடக்கிலும் மேற்கிலும் உள்ள பல தலங்களையும் கண்டு ஆங்கு வீற்றிருக்கும் இறைவனது புகழினைப் பதிகங்களாக பாடும் வண்ணம் தனது ஐந்தாவது தலயாத்திரை மேற்கொண்ட திருஞானசம்பந்தர், கண்ணார்கோயில் என்ற தலத்திற்கு முதலில் செல்கின்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, புள்ளிருக்குவேளூர், நின்றியூர், நீடூர், திருப்புன்கூர், பழமண்ணிபடிக்கரை, குறுக்கை வீரட்டம், அன்னியூர், பந்தணைநல்லூர், திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி, வேள்விக்குடி, கோடிகா, கஞ்சனூர், மாந்துறை, மங்கலக்குடி, வியலூர், திருந்து தேவன்குடி, இன்னம்பர், வடகுரங்காடுதுறை, திருப்பழனம் முதலான தலங்கள் சென்ற பின்னர் திருவையாறு வந்தடைகின்றார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். உலகத்தவர் உய்யும் வண்ணம் தேவாரப் பதிகங்கள் அருளும் திருஞானசம்பந்தர் வருவதை அறிந்த அடியார்கள் திருவையாறு நகரத்தினை அழகுபடுத்தி, மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர். ஆடல் பாடல்களுடன் தலத்து தொண்டர்கள் திருஞானசம்பந்தரின் வருகையை கொண்டாடினார்கள் என்பது இந்த பதிகத்தின் பல பாடல்களில் தலத்தில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ஞானசம்பந்தர் குறிப்பிடுவதன் மூலம் புலனாகின்றது., பல்லக்கின் அருகே தொண்டர்கள் வந்த போது, ஞானசம்பந்தர் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி அடியார்கள் அனைவரையும் வணங்கிய பின்னர் நந்தியம்பெருமானுக்கு சிவபெருமான் அருள் புரிந்த சிறப்பினை உடைய திருவையாறு என்று அந்த தலத்தினை வணங்கி, புலனைந்தும் என்று தொடங்கும் பதிகம் பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். எனவே திருக்கோயில் செல்வதற்கு முன்னர் பாடிய பாடலாக இந்த பதிகம் கருதப் படுகின்றது.

வந்தணைந்து திருத்தொண்டர் மருங்கு வர மானேந்து கையர் தம் பால்

நந்தி திருவருள் பெற்ற நன்னகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில்

ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சல் என்பார் தம் ஐயாறு என்று

புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர்

சிலாத முனிவர் பிள்ளைப்பேறு வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். நேரில் தோன்றி அவருக்கு காட்சியளித்த பெருமான், அவரை புத்திரகாமேட்டி யாகம் செய்யுமாறு ஆலோசனை கூறி, யாகத்தின் முடிவில் பூமியின் அடியில் ஒரு பெட்டகம் கிடைக்கும் என்றும் கூறினார். முனிவரும் அவ்வாறே செய்து பூமிக்கு அடியில் இருந்த பெட்டகத்தை எடுத்து திறந்து பார்த்தார். அந்த பெட்டியில் நான்கு தோள்களும், மூன்று கண்களும், பிறைச்சந்திரனை தாங்கிய சடையும் கொண்ட உருவம் இருந்தது. அப்போது ஒரு அசரீரி மூலமாக, முனிவரை பெட்டியை ஒரு முறை மூடி பின்னர் திறந்து பார்க்குமாறு இறைவன் பணித்தார். முனிவரும் அவ்வாறே பெட்டியை ஒரு மூடிய பின்னர் திறந்து பார்த்தார். அப்போது பெட்டியின் உள்ளே ஒரு அழகிய குழந்தை இருந்தைக் கண்டு மனம் மகிழ்ந்தார். அந்த குழந்தைக்கு ஜப்பேசன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார்.

கல்வி கேள்விகளில் மிகவும் சிறந்தவனாக விளங்கிய ஜப்பேசன், தனது வாழ்நாள் பதினாறு வருடங்கள் மட்டுமே என்பதை அறிந்து கொண்டான். ஆனால் அதைப்பற்றி கவலை ஏதும் கொள்ளாமல், பெருமானின் அருள் பெற்று விதியை மாற்றுவேன் என்று தீர்மானமாக இருந்தான். திருவையாறு தலத்தில் இருந்த சூரிய புஷ்கரணி என்ற குளத்தில் இறங்கி, ஒற்றைக் காலில் நின்ற வண்ணம் அந்த சிறுவன் தவம் செய்யத் தொடங்கினான். மீன்களும் தண்ணீர் பாம்பும் அவனது உடலை கடித்து அரித்ததை பொருட்படுத்தாமல் தனது தவத்தினை நாட்கணக்கில் தொடர்ந்த சிறுவனுக்கு, சிவபெருமான் நேரில் தோன்றி காட்சி கொடுத்தார். மேலும் அந்த குளத்தில் கங்கை, காவிரி, ஆகிய நதிகளின் நீர் பொங்கும் வண்ணம் செய்தார். மேலும், கங்கை நீர், அம்பிகையின் பால், இடபத்தின் வாயில் வழிந்த நுரை இவற்றை கொண்டு, சிறுவனை நீராட்டினார். சிறுவனின் உடல் நலம் தேறிய பின்னர், அவனுக்கு நந்தி என்ற நாமம் அளித்து சிவகணங்களுக்கு தலைவனாக பதவி அளித்தார். மேலும் கயிலாய மலையின் முதல் வாயிலைக் காவல் காக்கும் பொறுப்பினையும் அந்த சிறுவனுக்கு அளித்தார். புலிக்கால் முனிவர் வியாக்ரபாதரின் மகளாகிய சுயம்பிரபை என்பவளை நந்திக்கு, திருமழபாடி தலத்தில் திருமணம் செய்து வைத்தார். இவ்வாறு நந்திக்கு பல விதங்களிலும் பெருமான் அருள் செய்தமை சேக்கிழாரால் மேற்கண்ட பாடலில் உணர்த்தப் படுகின்றது. நந்தியின் திருமணத்திற்கு அருகில் உள்ள தலங்களில் இருந்த அந்தணர்கள் பலவிதங்களிலும் உதவி செய்தனர். திருமணம் முடிந்த பின்னர், உதவி செய்த அந்தணர்களுக்கு நன்றி கூறும் விதமாக மணமக்கள், மழபாடியிலிருந்து புறப்பட்டு திருப்பழனம், சோற்றுத்துறை, வேதிக்குடி, கண்டியூர், பூந்துருத்தி, நெய்த்தானம் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் இறுதியாக திருவையாறு சென்று அடைந்தனர். இந்த நன்றி கூறும் விழாவுக்கு ஏழூர் பெருவிழா என்று பெயர். இன்றும் ஏழூர் திருவிழா என்ற பெயரில் நந்தியின் திருமணமும், திருமணம் முடிந்த பின்னர் தம்பதிகள் ஏழு ஊர்களுக்கும் செல்வது ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவாக கொண்டாடப் படுகின்றது. இந்த ஏழூர் திருவிழாவினை முதன் முதலில் தொடங்கி நடத்தி வைக்கப் பட்டது இராஜராஜ சோழனின் காலத்தில் என்பதை அறியும்போது சைவ மதத்தின் வளர்ச்சிக்கு சோழர்கள் செய்த சேவையை நாம் உணர்கின்றோம்.

இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய ஐந்து பதிகங்களும், திருநாவுக்கரசர் அருளிய பன்னிரண்டு பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் இது வரை கிடைத்துள்ளன. அப்பர் பிரானுக்கு இறைவன் கயிலாயக் காட்சியை, இந்த தலத்து கோபுரத்தில் காட்டி அருள் புரிந்தார். சுந்தரரும் சேரமான் பெருமான் நாயனாரும் கண்டியூர் தலத்திலிருந்து (காவிரித் தென்கரைத் தலங்களில் ஒன்று) இந்த தலம் வந்தடைந்த போது, காவரி நதியைக் கடக்க வேண்டி இருந்தது. நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால், அவர்கள் இருவரால் நதியை கடக்க முடியவில்லை. பரவும் பரிசு ஒன்று என்று தொடங்கும் பதிகத்தினை உரத்த குரலில் பாடிய சுந்தரர், ஐயாறு உடைய அடிகளோ என்று குரல் கொடுத்த வண்ணம் பதிகம் பாடினார். தனது கன்று எங்கிருந்து குரல் கொடுத்தாலும் அதனை புரிந்து கொள்ளும் தாய் போல், சிவபெருமான் ஒலம் என்று எதிர்க் குரல் கொடுத்து, சுந்தரர் பாடிய பாடலை தான் செவி சாய்த்து கேட்டதை உணர்த்தினார். சுந்தரர் இருந்த இடத்திற்கு மேற்கே உள்ள காவிரியின் நீர் உறைந்து பளிங்கு மலை போல் நிற்க, கிழக்கு பகுதியில் உள்ள நீர் நன்றாக வடிந்து, குளிர்ந்த மணல் பரப்பு தோன்றியது. பெருமானின் கருணைச் செயலை நேரில் கண்ட, சுந்தரர், சேரமான் பெருமான் நாயனார் மற்றும் அவர்கள் இருவரையும் சூழ்ந்திருந்த தொண்டர்கள் அனைவரும், மெய் சிலிர்த்து, கண்கள் தாரை தாரையாக கண்ணீர் பொழிய, தங்களது கைகளை தலைமேல் கூப்பி, இறைவனை வணங்கினர். பின்னர் அனைவரும், காவிரி நதியின் மணல் பரப்பில் நடந்து அடுத்த கரையினைச் சென்றடைந்து ஐயாரப்பனை தரிசனம் செய்து வணங்கினார்கள். திருக்கோயிலிருந்து திரும்பிய அவர்கள் மீண்டும் நதியைக் கடந்து தென்கரை அடையும் வரையில், ஒரு புறம் நீர் உறைந்தும் மறுபுறம் மணல் பரப்பாகவும் இருந்தது. இறைவனை தரிசனம் செய்த தொண்டர்கள் அனைவரும் மீண்டும் நதியைக் கடந்து தென்கரை அடைந்த பின்னர், காவிரி நதி முன்போல் வெள்ளப் பெருக்குடன் ஓடத் தொடங்கியது. நீரின் வல்லமையை வெற்றி கொண்ட மூன்று தேவாரப் பதிகங்களில் சுந்தரர் அருளிய இந்த பதிகமும் ஒன்றாகத் திகழ்கின்றது. மற்றைய இரண்டு பதிகங்கள் கடலிடையே அப்பர் பிரான் அருளிய நமச்சிவாயப் பதிகமும், கொள்ளம்புதூர் தலத்து இறைவனை நோக்கி திருஞானசம்பந்தர் அருளிய கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகமும் ஆகும்.

திருவையாறு தலம் தஞ்சாவூரிலிருந்து பதினோரு கி.மீ. தொலைவில், கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது. கும்பகோணம் தஞ்சாவூர் ஆகிய இரண்டு இடங்களிலிருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. ஐந்து ஆறுகள் பாய்வதால், காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து நதிகள் இந்த தலத்தின் அருகே பாய்வதால் ஐயாறு என்று பெயர் வந்ததாக கூறுவார்கள். இறைவனின் திருநாமம், பஞ்சநதீஸ்வரர், ஐயாரப்பன், பிரணதார்த்திஹரன்; இறைவியின் திருநாமம், அறம் வளர்த்த நாயகி, தர்ம சம்வர்த்தினி, தர்மாம்பிகை, வடிவுடைமங்கை. ஒரே கோயிலின் உள்ளே, தென் கயிலை, வடகயிலை, ஐயாரப்பன் என்று மூன்று சன்னதிகள் உள்ளன. காசிக்கு சமமாக சொல்லப்படும் ஆறு தலங்களில் இந்த தலமும் ஒன்று. மற்ற தலங்கள், திருவிடைமருதூர், சாய்க்காடு, மயிலாடுதுறை, வாஞ்சியம், வெண்காடு என்பன. நந்தி தேவரின் திருமணத்துடன் தொடர்பு கொண்ட, திருவையாறு, சோற்றுத்துறை, வேதிகுடி, பூந்துருத்தி, பழனம், கண்டியூர், நெய்த்தானம் ஆகிய தலங்கள் ஒரு தொகுப்பாக ஏழூர் (சப்த ஸ்தானம்) என்று அழைக்கப் படுகின்றன.

பாடல் 1:


புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி

அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில்

வலம் வந்த மடவார்கள் நடமாட முழவு அதிர மழை என்று அஞ்சிச்

சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திருவையாறே

விளக்கம்:

அலமந்த போது=வருந்தி இறக்கும் தருவாயில்; தன்மை நவிற்சியணி; குரங்குகள் இயல்பாக மரம் ஏறி வேடிக்கை பார்ப்பதை, மேகங்கள் தென்படுகின்றனவா என்று பார்ப்பதாக தனது கருத்தினை ஏற்றிச் சொல்லும் பாங்கு, சங்க காலத்துக் கவிதைகளின் நயம் தேவாரப் பாடல்களில் உள்ளன என்பதை நமக்கு உணர்த்துகின்றது. பொறி=செயல்பாடுகள்; நெறி= செல்ல வேண்டிய வழி; ஐ=கோழை; முழவு=மத்தளம் போன்ற வாத்தியம்; முகில்=மேகம்; அலமந்து (நான்காவது அடி)=சுழன்று

உயிர் உடலை விட்டு பிரியும் சமயத்தில் உயிர் படும் துன்ப வேதனைகளை சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஐந்து புலன்களும் தங்களது செயல்பாட்டின் வலிமை குறைந்து உயிருடன் ஒத்துழைக்கத் தவறுதலும், தாங்கள் செல்ல வேண்டிய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் செல்லுதலும், கோழை தொண்டையை அடைத்துக் கொண்டு உணவு உட்செல்வதை தடுத்தும் பேசும் பேச்சினை தெளிவற்றதாக செய்தும் உயிரினை வருத்துதல் உயிர் உடலை விட்டு பிரியும் நேரம் மிகவும் நெருங்கி விட்டது என்பதை உணர்த்தும் செயல்களாகும். அந்த தருணத்தில் உயிர், தான் உடலை விட்டு பிரிந்த பின்னர் அடைய இருக்கும் நரக வேதனைகள், மீண்டும்மீண்டும் எடுக்க வேண்டிய பிறப்புகள் ஆகியவற்றை நினைத்து கவலை அடையும். அந்த நிலையில் சுற்றத்தார், அவரது செல்வம் ஏதும் அவருக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இறைவன் ஒருவன் தான் அவருக்கு அபயம் அளிக்கும் நிலையில் இருப்பார் என்பதை இந்த பாடலில் உணர்த்துகின்றார். கோயிலின் இரண்டாவது பிரகாரத்தில் சோமாஸ்கந்தர் சன்னதிக்கு அடுத்து சட்டநாதர் சன்னதியும் பிரணதார்த்திஹரர் சன்னதியும் உள்ளன. ப்ரணதார்த்திஹரன் என்பது இந்த தலத்து இறைவனின் திருநாமங்களில் ஒன்று. உயிர் அடையும் வேதனைகளை முற்றிலும் அழித்து நீக்குபவன் என்பது இந்த வடமொழி திருநாமத்தின் பொருள். இறைவனின் இந்த தன்மையையே இந்த பாடலில் திருஞான சம்பந்தர்,கோழை தொண்டையை அடைக்கும் தருணத்திலும் நமக்கு தகுந்த வழியினை காட்டுபவன் என்று குறிப்பிடுகின்றார். ஐ (கோழை) தொண்டையை அடைக்கும் தருணத்திலும் நமக்கு வழியை (ஆற்றினை) காட்டுபவன் என்பதால் ஐயாறன் என்று பெயர் வந்ததாக சில அறிஞர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் பொருத்தமாக இருப்பதுடன், பிரணதார்த்திஹரன் என்ற வடமொழிச் சொல்லுக்கு நேர் மொழி பெயர்ப்பாக ஐயாரப்பன் என்ற திருநாமம் இருப்பதையும் நாம் உணரலாம்.

இவ்வாறு உயிர் உடலினை விட்டு பிரியும் தருவாயில் ஏற்படும் துயரங்களையும், அதனை நீக்கும் வல்லமை படைத்தவன் இறைவன் ஒருவனே என்பதையும் ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுவது, நமக்கு அப்பர் பிரான் திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. எத்தாயார்=எத்துணை மேம்பட்ட தாயார்; மாடு=செல்வம்; சும்மாடு-சுத்தமான செல்வம், நமது செல்வங்களையும் நமது உறவுகளையும் குறிப்பிட்டு, அவற்றில் உண்மையாக நமக்கு உதவக் கூடியது யாது என்ற கேள்வியை அப்பர் பிரான் இந்த பாடலில் எழுப்புகின்றார். நமக்கு என்று அவர் குறிப்பிடுவது நமது உயிரைத் தான். உயிர் தனது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ளவும், உண்மையான மெய்ப் பொருளை அறிந்து கொள்ளவும் உதவும் பொருட்டு, இறைவன் நமக்கு கருவி கரணங்களை அளித்துள்ளார். அந்த கருவிகள் இல்லாமல் நாம் எதனையும் அறிய முடியாது. உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர், அந்த கருவி கரணங்களால் எந்த உதவியும் உயிருக்கு செய்ய முடியாது. எனவே உடலை விட்டு பிரிந்த உயிருக்கு உதவி தேவைப்படுகின்றது. ஈட்டிய வினைகளின் ஒரு பகுதியை சூக்கும் உடல் அனுபவித்து கழிக்கும் போதும், அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையவும், முடிந்தால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் உயிர் விரும்பும் போது, உதுவுவார் யார். இந்த பிறவியில் நமக்கு வாய்த்த தாய் தந்தையாரோ சுற்றத்தாரோ உதவ முடியுமா, அவர்கள் எவராலும் உதவ முடியாது. நாம் ஈட்டிய செல்வத்தால் ஏதேனும் உதவியை விலைக்கு வாங்க முடியுமா அதுவும் நடக்காது என்பதே நிதர்சமான உண்மை. இந்த உண்மை தான் இங்கே உணர்த்தப் படுகின்றது. செத்த பிறகு அந்த உயிர்க்கு உதவி தேவைப்படும் போது, யார் உதவி செய்ய வல்லவர், எந்த செல்வம் உதவக் கூடியது என்ற கேள்வியை அப்பர் பிரான் இங்கே கேட்கின்றார் இறைவன் ஒருவனே நமக்கு அந்த தருணத்தில் துணையாக இருந்து உதவி செய்வான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. எத்தந்தை என்று ஒருமையில் குறிப்பிட்ட அப்பர் பிரான் எத்தாயர் என்று பன்மையில் குறிப்பிட்டதை நாம் உணரலாம். ஒருவனை ஈன்ற தாயைத் தவிர, வேறு நான்கு பேரையும் தாயாருக்கு சமமாக கூறுவதுண்டு. அரசனின் மனைவி குடிமக்கள் அனைவர்க்கும் தாய், குருவின் மனைவி சீடர்கள் அனைவர்க்கும் தாய், அண்ணனின் மனைவி, அந்த குடும்பத்தில் மற்ற அனைவர்க்கும் தாய், தாயை ஈன்றவளும் தனது பேரக் குழந்தைகள் அனைவர்க்கும் தாயாக மதிக்கப் படுகின்றாள்.

செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை என்று நமது உறவினர்களை குறிப்பிட்ட அப்பர் பிரான், அவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் இங்கே கூறுகின்றார். சிறு விறகால் தீமூட்டி செல்லா நிற்பர் என்று கூறுகின்றார். சடலத்திற்கு இறந்தவரின் மூத்த மகன் கொள்ளி வைத்த பின்னர் சுற்றியிருக்கும் ஏனையோரும் சிறிய விறகு கட்டைகளை தீ மூட்டி, சடலத்தின் மீது போடுவது வழக்கம். அவ்வாறு போட்ட பின்னர் உடனே அந்த இடத்திலிருந்து நகர்ந்தால், மற்றவர்கள் தன்னைத் தவறாக நினைப்பாரோ என்ற எண்ணத்தில், தயக்கத்துடன் பலர் இருப்பதையும் அந்த தருணத்தில் நாம் காணலாம். இந்த நிலைமைத் தான் சிறு விறகால் தீ மூட்டி செல்லா நிற்பர் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த செயல் இது உயிரினுக்கு செய்யும் உதவி அல்ல. உயிர் பிரிந்த உடல் முற்றிலும் எரிந்து சாம்பலாக மாற வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் செயல்.

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்

செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்

சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக்கா உடைய செல்வா என்றன்

அத்தா உன் பொற்பாதம் அடையப் பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே.

திருச்சேறை பதிகத்தின் ஒரு பாடலில் (5.75.5) சேறை செந்நெறிச் செல்வனார் இருக்கும்போது நாம் இயமனுக்கு பயப்பட வேண்டியதில்லை என்றும் இயமன் நம் முன்னர் தோன்றினாலும் அவனைத் துரத்தும் வழியை தான் கண்டு கொண்டதாகவும் அப்பர் பிரான் கூறுகின்றார். சேறை செந்நெறிச் செல்வனாரை வணங்கி அவரது அருள் பெற்று சிவலோகம் செல்வதே அப்பர் பிரான் உணர்த்தும் வழியாகும். எரி அயில்=நெருப்பு போன்று கூர்மையை உடைய வேல். எண்ணி நாளும்=நாள்தோறும் உயிர்களின் வாழ்நாட்களை எண்ணி கணக்கிட்டு, வாழ்நாள் முடிவடையும் தருணத்தில் உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதை நாட்களை எண்ணும் கூற்றுவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். துண்ணென் தோன்றில்=நடுக்கம் உண்டாகும் வகையில் முன்னே தோன்றினால்; துரக்கும் வழி=ஓட்டும் வழி; இயமன் நம்மை அழைத்துச் சென்றால், நாம் நமது வினைத் தொகையின் ஒரு பகுதியை கழிக்கும் தன்மையில் நமது உயிர் நரகத்தில் ஆழ்த்தப்பட்டும் சொர்க்கத்தில் இருத்தப்பட்டும், அதன் பின்னர் அடுத்த பிறவியை எதிர்கொள்ளும் நிலையினை அடைகின்றது. இயமன் நம்மை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, சிவபெருமான் நம்மை சிவலோகம் அழைத்துக் கொண்டு சென்ற பின்னர் நம்மை இயமனின் தூதுவர்கள் என்ன செய்ய முடியும். நம்மை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்லும் பெருமான், நமது வினைகள் அனைத்தையும் கழித்து விடுவதால், நாம் பிறவிச் சுழலிலிருந்து விடுதலையும் பெறுகின்றோம்.

எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன்

துண்ணென் தோன்றில் துரக்கும் வழி கண்டேன்

திண்ணன் சேறை திருச்செந்நெறி உறை

அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே

நனிபள்ளி தலத்து பதிகத்தின் (4.70) ஏழாவது பாடலில் தனது அடியார்கள் நரகத்தில் வீழாமல் பாதுகாப்பவர் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் கூறுகின்றார். அரவித்து=மிகுந்த ஒலியுடன், ஆரவாரத்துடன். வீடிலாத் தொண்டர்=விடுதல் இல்லாத தொண்டர்: சிவபிரானின் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுச் செல்ல விருப்பமின்றி என்றும் அவருக்குத் தொண்டராக வாழும் அடியார்கள்: சிவபிரான் தனது தொண்டர்களின் வினைத் தொகையை அறவே நீக்கி விடுவதால். அத்தகைய தொண்டர்கள் நரகத்துத் துன்பங்களை அனுபவிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி

அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார்

விரவித் தம் அடியராகி வீடிலாத் தொண்டர் தம்மை

நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே

நமது மனதினை குரங்குக்கு ஒப்பிடுவது ஆன்மீக இலக்கியங்களின் வழக்கம். தனது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, திருவையாறு தலத்தில் உள்ள குரங்குகள் மரமேறி மேகங்கள் தென்படுகின்றனவா என்று எட்டிப் பார்ப்பது போன்று, உயிரின் நலத்தினை விரும்பும் மனம், மரணம் நெருங்கி வரும் நேரத்திலாவது ஐயாரப்பனை நினைத்து உய்வினை அடைய வேண்டும் என்ற செய்தி இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

மூப்பினால் உடலில் தோன்றும் பல மாற்றங்களை குறிப்பிட்டு, அதனால் ஏற்படும் விளைவுகளையும் உணர்த்தி, அத்தகைய காலம் வந்து நாம் ஏதும் செய்ய இயலாத நிலை வருமுன்னம் பெருமானைத் தொழுது பயன் அடையுமாறு திருஞான சம்பந்தர் அறிவுரை கூறும் பாடல் பெண்ணாகடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (1.59.6). நீர்மை=தன்மை; பன்னீர்மை=பற்களின் வலிமை; பற்கள் உடைந்தும் விழுந்தும் வலிமையற்று காணப்படும் நிலை என்று சிலர் பொருள் கூறுகின்றனர்.; பன்னீர்மை என்ற சொல்லுக்கு பல வகையான உடலின் வலிமைகள், இன்பத்தை அனுபவிக்க உதவும் புலன்கள் என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். பல் வீழ்ந்து நாத்தளர்ந்து என்று இதே பதிகத்தின் மற்றோர் பாடலில் வருவதால், இரண்டாவது பொருள் மிகவும் பொருத்தமாக உள்ளது. கண் பவளந்நிற நன்னீர்மை=செவ்வரி ஓடும் கண்கள்; நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும் மனிதனின் கண்களில், சுத்தமான இரத்த ஓட்டத்தினால் கண்களில் சிவப்பு நிறத்தில் கோடுகள் தெரியும். மருத்துவர்கள் கீழ் இமையினை சற்றுத் தாழ்த்தி கண்களில் சிவப்பு கோடுகள் உள்ளதா என்று பார்ப்பார்கள். இரத்த ஓட்டம் குறைந்தால் கண்கள் வெளுத்து தோன்றுவது இயல்பு. திரை=சுருக்கம்; தோலில் சுருக்கம் காணப்படுவதும், முடிகள் நரைப்பதும் முதுமையின் அடையாளங்கள். முதுமை அடைந்த பின்னர், உடல் நலம் குன்றுவதால் பல தலங்கள் சென்று இறைவனை வணங்க மனம் விரும்பினாலும் உடல் ஒத்துழைக்காது என்பதால், உடலில் வலிமை உள்ள போதே பெண்ணாகடம் சென்று இறைவனை வணங்கி பயன் அடையுமாறு உணர்த்தும் பாடல். மனிதர்களே, உடலில் உள்ள பல்வகை சிறப்புத் தன்மைகள் குறைந்து, காதுகள் தாங்கள் கேட்கும் சக்தியை இழந்து, கண்கள் தங்களது பவளம் போன்ற செம்மை நிறமும் பார்வையும் குன்றி, செழிப்புடன் காணப்பட்ட உடலின் தோல் சுருங்கி, முடிகள் நரைத்து முதுமைப் பருவம் உம்மை வந்து அடைவதன் முன்னம், பொன்னின் நிறம் மேலே தோன்றுமாறு நீர்ப்பெருக்கினை உடைய கங்கை நதியினைத் தனது செம்பட்டை நிறத்து சடையினில் ஏற்ற பெருமான் உறையும் தூங்கானை மாடம் திருக்கோயில் உள்ளதும் தொன்மையான நதியாகிய நிவா பாய்வதும் ஆகிய கடந்தை நகரம் சென்றடைந்து, ஆங்கே உள்ள பெருமானை வணங்கித் தொழுது நீங்கள் விரும்பிய பயனை அடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பன்னீர்மை குன்றிச் செவி கேட்பிலா படர் நோக்கில் கண் பவளந்நிற

நன்னீர்மை குன்றித் திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன்

பொன்னீர்மை துன்றப் புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன் சடையினான் உறையும்

தொன்னீர்க் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலும் (1.59.8) மூப்பின் தன்மை குறிப்பிடப்பட்டு, உடல் உயிருடன் ஒத்துழைக்கும் நிலையில் உள்ள போதே, இறைவனைத் தொழுது பயன் அடையுமாறு திருஞான சம்பந்தர் நமக்கு அறிவுரை கூறுகின்றார்; இல் சூழ் இடம்=இல்லமாக கருதி வாழுமிடம்; இந்த பாடலிலும் மூப்பின் தன்மை குறிப்பிடப்பட்டு, மூப்பு அடைந்து உடல் தளர்வதன் முன்னமே தூங்கானை மாடத்து தூண்டா விளக்கினைத் தொழவேண்டும் என்ற அறிவுரை கூறப்படுகின்றது. இறை=சிறிது நேரம்; பிரியாது=தாழ்த்தாது; போதும்=செல்வீர்கள்; கல்=கயிலை மலை; மூப்பு அடைவதால் பற்கள் விழுந்து நாத் தளர்ந்து பேச்சு குழறி உடல் வாடி பலரது பழிப்பினுக்கும் ஆளாகும் வாழ்க்கையினைத் தவிர்க்கும் நோக்கத்துடன் தவம் செய்வதற்கு தகுந்த இடத்தினை தேடி நிற்கும் மனிதர்களே, சிறிது நேரத்தையும் வீணாக்காமல் நான் சொல்லும் இடத்திற்கு நீங்கள் அனைவரும் செல்வீர்களாக. தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி கயிலாய மலையினைச் சூழ்ந்து நின்று அதனை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணன் கதறி அழும் வண்ணம், அவனை மலையின் கீழே அமுக்கிய பெருமான் சிறந்த இடம் என்று கருதி தனது காதலியுடன் உறைகின்றதும், தொன்மை வாய்ந்த கடந்தை நகரினில் உள்ளதும் ஆகிய அகன்ற தூங்கானை மாடம் திருக்கோயில் சென்று ஆங்குள்ள இறைவனை வணங்கித் தொழுது உங்கள் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்வீர்களாக என்பதே இந்த பாடலில் சொல்லப்படும் அறிவுரை.

பல் வீழ்ந்து நாத் தளர்ந்து மெய்யில் வாடிப் பழிப்பாய வாழ்க்கை ஒழியத் தவம்

இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும்

கல் சூழ் அரக்கன் கதறச் செய்தான் காதலியும் தானும் கருதி வாழும்

தொல் சீர்க் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே

சாநாளும் வாழ்நாளும் சலிப்பினைத் தருவதால் அவற்றைத் தவிர்க்கும் வழியினை திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நமக்கு அவர் அருளிய சாய்க்காடு பதிகத்தின் பாடல் ஒன்றினை (2.41.3) நினைவூட்டுகின்றது. நமது வாழ்நாள் எத்தனை, நாம் இறக்கும் நாள் எது என்பதை அறிந்தவர் யாரும் இல்லை. எனவே இப்போதிருந்தே, தினமும், சிவபெருமானை வழிபட மலர்களைத் தலையில் சுமந்தும், அவரது திருநாமத்தை காதுகளால் கேட்டும், அவரது பெருமையை தினமும் நாக்கினால் புகழ்ந்து பாடியும், அவரது நினைவுகளை நமது நெஞ்சத்தில் வைத்தும் நாம் வாழ்ந்தால் நல்வினைகளை அடைய முடியும் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றினையும் ஈடுபடுத்தி பெருமானை வணங்கி வழிபடும் நிலை உணர்த்தப் படுகின்றது.

நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யார் அறிவார்

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம் பெருமாற்கே

பூ நாளும் தலை சுமப்பப் புகழ் நாமம் செவி கேட்ப

நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.97.9) திருஞானசம்பந்தர் பெருமானை நீல மேவு கண்டனார் என்று குறிப்பிடுகின்றார். ஏலம்=நறுமணம் உடைய கூந்தல் தைலம்; வயது முதிர்ந்து கால்கை தளர்ந்த நிலையில் இறைவனைப் புகழ்ந்து பாடியும் போற்றியும் வணங்க வேண்டும் என்று மனம் விரும்பினாலும், உடல் அதற்கு ஒத்துழைக்க முடியாத நிலையினை அடைவதற்கு முன்னமே, உடல் நலமாக இருக்கும் போதே, இறைவனைப் பணிந்து வணங்கி பயன் அடையுமாறு அறிவுரை கூறுகின்ற பாடல்.

காலினோடு கைகளும் தளர்ந்து காம நோய்தனால்

ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்பதன் முனம்

மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா

நீலமேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே

கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.99.1) திருஞானசம்பந்தர், உலகியல் இன்பங்களில் ஆழ்ந்து காலத்தைக் கழித்து விட்டு, இன்று நாள் இனிமையாக கழிந்தது, நாளையும் நாள் இனிமையாக கழியும் என்று வாழாமல், பெருமானைத் தொழுது பயன் அடையுமாறு அறிவுரை கூறுகின்றார். பொன்றுகின்ற=உறுதியாக அழிந்துபடும்; விரி புனல்= விரிந்த பரப்பினை உடைய நீர்ப்பெருக்கு, கங்கை நதி; போகவிட்டு=மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகில் வாழும் தன்மையை ஒழித்துவிட்டு; போதுமின்=செல்வீர்களாக, அழியாத ஆனந்தத்தைத் தரும் முக்தி உலகுக்கு செல்வதை; தயங்கு=விளங்கும்; மின் தயங்கு=மின்னலை போன்று மிகுந்த ஒளிவீசும்; இன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிந்தது என்றும் வரப்போகும் நாட்களும் மிகவும் இன்பம் பயப்பதாக இருக்கும் என்று உலகியல் இன்பங்களில் ஆழ்ந்து இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. என்றோ ஒரு நாள் அழியக்கூடிய இந்த உடலினை நிலை என்று எண்ணி, உடல் தரும் பல் விதமான இன்பங்களில் ஆழ்ந்து, இன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிந்தது என்றும் இனி வரப்போகும் நாட்களும் இன்பம் பயப்பவையாக இருக்கும் என்றும் நினைத்து உடல் தரும் சிற்றின்பங்களை இரசித்து வாழும் வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து விடுபட்டு இறைவனுடன் இணைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழும் முக்தி நிலையினை பெறுவதற்கு, உலகத்தவரே நீங்கள் விரும்பி வருவீர்களாக. மின்னல் போன்று மிகுந்த ஒளியுடன் திகழும் சோதி வடிவினனும், வெண்மையான பிறைச் சந்திரன் விரிந்து பரந்து மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி மற்றும் கொன்றை மலர்கள் ஆகியவற்றை நெருக்கமாக தனது சடைமுடியில் வைத்துள்ளவனும் ஆகிய பெருமான் உறையும் கோடிகா தலம் சென்றடைந்து இறைவனை வணங்கி வழிபடுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால்

பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்

மின் தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்

கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே

நோய்வாய்ப் பட்டபோது உடலும் உள்ளமும் நோயின் தன்மையால் வருந்த எவருக்கும் பொதுவாக இறையுணர்வு தோன்றுவதில்லை. நோயினால் களைத்த உடல் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கவும் ஒத்துழையாது போகலாம். ஆனால் அந்த தருணத்திலும் உறுதியாக நின்று பெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை நாம் உச்சரித்தால் ஏற்படும் விளைவினை, திருஞான சம்பந்தர் திருவைந்தெழுத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.22.6) கூறுவதையும் நாம் இங்கே காண்போம். அம்மை என்பதற்கு மறுமை என்று பொருள். பல உரை ஆசிரியர்கள் அடுத்த பிறவியிலும் பஞ்சாக்கர மந்திரம் உயிரினுக்கு துணையாக இருக்கும் என்று பொருள் கூறியுள்ளனர். சிவக்கவிமணியார் அம்மை என்பதற்கு அன்னை என்று பொருள் கொண்டு, பெற்ற தாயினும் பரிந்து நன்மை புரியும் தன்மை கொண்டது பஞ்சாக்கர மந்திரம் என்று பொருள் கூறுகின்றார். பஞ்சாக்கர மந்திரம், வினைகளை அறுத்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கும் என்ற திருஞான சம்பந்தரின் வாக்கினை அறிந்த நாம், பஞ்சாக்கர மந்திரத்தை ஓதும் அன்பர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்பதையும் நன்கு அறிவோம். மறுபிறப்பு ஒன்று இருந்தால் தானே, அந்த பிறவியில் பஞ்சாக்கர மந்திரம் உதவி செய்வதற்கு. எனவே அம்மை என்பதற்கு அன்னையினும் பரிந்து என்று பொருள் கொள்வது சிறப்பு. பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து உயிர்களுக்கு அருள் செய்பவன் பெருமான் அல்லவா.

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்

அம்மையிலும் துணை அஞ்செழுத்துமே

துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.42.5) அப்பர் பிரான், தனது இடரினை கழிக்க விரும்பும் உயிர், பெருமானைப் புகழ்ந்து பாட வேண்டும் என்று கூறுகின்றார். உடல் தனைக் கழிக்கலுற்ற=ஒரு நாள் உடலை விட்டு விலகும் தன்மை கொண்ட உயிர். முந்தைய பிறவிகளில் ஈட்டிய வினைகளின் பயனாக பல வகையான துன்பத்திலும் ஆழும் உடலை விடுத்து விடுதலை அடைய விரும்பவது தான் ஆன்மாவின் உண்மையான விருப்பம். ஆன்மாவின் இந்த உண்மையான விருப்பத்தை புரிந்து கொண்டவர்களுக்கு அறிவுரை கூறும் முறையில் அமைந்த பாடல் இது. இதே பதிகத்தின் முந்தைய பாடலில் இந்த பிறவியில் நாம் அடையும் துயரங்களிலிருந்து விடுதலை பெற இறைவனை வழிபடுவீர்கள் என்று அறிவுரை கூறிய அப்பர் பிரான், இனிமேல் பிறவியே எடுக்காமல் இருப்பதற்கான வழிமுறையை இங்கே கூறுகின்றார். காண்பரிதாகி நின்ற சோதி என்று இறைவனை, அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அவனது அருள் இல்லையேல் அவனை நாம் காண முடியாது என்ற கருத்தினை உணர்த்தும் வண்ணம், எவரும் தங்களது சொந்த முயற்சியால் காண முடியாதவன் இறைவன் என்று இங்கே கூறப்படுகின்றது. தங்களுக்குள்ளே யார் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமனும் திருமாலும், தனது முடியையும் அடியையும் காண முடியாத, நெடுஞ்சுடராக நின்ற தன்மையை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. உடலுடன் தொடர்பு கொண்டுள்ள தன்மையை, நிலையாக நீக்க விரும்பும் உலகத்து உயிர்களே உங்களுக்கு நான் கூறும் அறிவுரையை கேட்பீர்களாக. உங்களது பிறவிப் பிணியினை அடியோடு நீக்க உங்களுக்கு விருப்பம் உண்டென்றால், பெருமானைப் புகழ்ந்து நீங்கள் அனைவரும் வணங்குவீர்களாக. கருமையான நிறத்தில் திரண்டெழுந்த கடல் நஞ்சினை உண்ட பின்னரும், அந்த நஞ்சின் தன்மையால் எந்த கேடும் அடையாமல் இருந்தவரும், தங்களதுமுயற்சியால் மட்டுமே இறைவனை கண்டுவிடலாம் என்று எண்ணும் காண்பதற்கு அரியவனாக இருப்பவனும் ஆகிய சிவபெருமானை, ஞானச் சுடராக விளங்குபவனை அடியேன் துருத்தித் தலத்தில் கண்டேன். நீங்களும் அவனைப் பணிந்து வழிபட்டு அவனைக் காண்பீர்களாக.

உடல் தனைக் கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கெல்லாம்

இடர் தனைக் கழிய வேண்டில் இறைவனை ஏத்துமின்னோ

கடல் நிறம் நஞ்சம் உண்டு காண்பரிதாகி நின்ற

சுடர் தனைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே

கடும்பகல் நட்டமாடி என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (4.77.7) அப்பர் பிரான், தோலால் மூடப்பட்டு அழகாக காட்சி தரும் உடல் உண்மையில் அருவருக்கத் தக்கது என்று குறிப்படும் அப்பர் பிரான், அத்தகைய நினைப்பிலிருந்து விடுபட்டு பெருமானை தியானித்து வாழ்வில் உய்வினை அடையவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். அளறு=சேறு: பாறுதல்=நீங்கி ஓடுதல்: பன்றி சேற்றினில் ஆழ்ந்து கிடப்பது போல், மனிதன் மூன்று மலங்களில் சிக்குண்டு, உடலினை பெரிதாகக் கருதி உலக இன்பங்களில் மூழ்கி இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தீவினைகளை உடைய நெஞ்சமே, பன்றி சேற்றில் புரண்டு இன்பம் அடைவது போல, உலக வாழ்வின் இன்பங்களில் சிக்குண்டு, உனது உடலினை பெரிதாக கருதி, அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் வாழ்க்கையை வாழ்கின்றாய். உவர்ப்புச் சுவை கலந்த உமிழ் நீர் ஊறுவதால் நாற்றமெடுத்து, இரத்தம் ஒழுகும் பல ஓட்டைகள் ஒரு போர்வையால் மூடப்பட்டு காணப்படும் இந்த உடலின் இழிவான தன்மையை அறிந்து கொள்ளாமல், உடலை அழகுடைய உடல் என்று நீ கருதுகின்றாய். இந்த நிலையிலிருந்து நீ தேறி, வெளியே வந்து, சிவபெருமானை நினைப்பாயாகில், உனக்கு சிவகதி திண்ணமாகும். எனவே இறைவனை விருப்பத்துடன் நினைந்து உய்வாயாக என்று அப்பர் பிரான் உயிர்களுக்கு அறிவுரை கூறும் பாடல்.

பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டுத்

தேறி நீ நினைதியாயில் சிவகதி திண்ணமாகும்

ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல்

கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலில் (5.66.3) அப்பர் பிரான், சிவபெருமானின் புகழினைக் கேளாத மனிதர்களை துளையிலாச் செவித் தொண்டர்கள் என்று குறிப்பிடுகின்றார். செவிகளின் பயன் கேட்கும் ஒலிகளை உணர்வது. ஒலிகளை உணரும் பொருட்டு, நமது காதுகளில் துளைகள் உள்ளன. துளைகள் வழியே ஒலியலைகள் சென்று செவிப்பறையில் ஏற்படுத்தும் அதிர்வுகள் மூலம் ஒலிகளை நாம் அடையாளம் கண்டு கொள்கின்றோம். பெருமானின் நாமத்தைக் கேளாத காதுகளை, பெருமானின் திருநாமங்கள் ஏற்படுத்தும் அதிர்வினை உணராத நிலையை, அப்பர் பிரான் துளையிலாச் செவிகள் என்று கூறுகின்றார். இந்த பாடலில் தங்களது இளமைக் காலத்தில் இறைவனைத் தொழாது இருந்த மனிதர்களை தொண்டர்கள் என்று அப்பர் பிரான் அழைப்பது நமக்கு வியப்பினைத் தரலாம். இந்நாள் வரை பெருமானின் நாமத்தை கேளாது இருந்தாலும் பரவாயில்லை, இனியாவது அவனது திருநாமங்களை, புகழினை கேட்டு உய்வினை அடைவீர்களாக என்று அறிவுரை கூறும் அப்பர் பிரான், தனது அறிவுரையை செவி மடுத்து இறைவனை தொழுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தொண்டர்கள் என்று சிறப்பாக அழைக்கின்றார். அப்பர் பெருமானுக்கு தான், பெருமானின் திருநாமங்களை கேட்டு அனைவரும் உய்வினை அடைய வேண்டும் என்பதில் எத்துணை ஆசை. கருவி கரணங்கள் துடிப்புடன் இருக்கும் இளைய பருவத்தில் எமது பெருமானை அடைந்து வழிபடாத, துளையற்ற செவிகளை உடைய தொண்டர்களே, நீங்கள் உங்களது முதுகு வளைந்து உடல் அல்லலுறும் முதுமைக் காலத்திலாவது, வலஞ்சுழியில் உள்ள பெருமானும் நமக்குத் தலைவனாக உள்ளவனும் ஆகிய ஈசனை, பற்றுக் கோடாக கருதி வழிபட்டு வாழ்க்கையில் உய்வினை அடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இளைய காலம் எம்மானை அடைகிலாத்

துளையிலாச் செவித் தொண்டர்காள் நும்முடல்

வளையும் காலம் வலஞ்சுழி ஈசனைக்

களைகணாகக் கருதி நீர் உய்ம்மினே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.42.4) அப்பர் பிரான், ஆசா பாசங்களில் ஆழ்ந்து வாழ்வினில் கடைத்தேற முடியாமல் வருந்தும் உயிர்கள் எவ்வாறு உய்வினை அடைவது என்பதை சொல்லிக் கொடுக்கின்றார். அலை ஆர்=கடலைலைகள் போன்று; ஒன்றன் பின்னொன்று விடாது வரும் கடலலைகள் போன்று வினைகள் உயிரினை அலைக்கழித்து துன்பம் அளிப்பதால், அலையார் வினை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். கடையாகும் வாழ்வு=கீழான வாழ்க்கை; பாசம்=பாசக் கயிறு; எறிநீர்=அலைகள் வீசும் கங்கை நதி; இடைவிடாது கரையை வந்து சேரும் கடலலைகள் போன்று ஓயாது உயிரினை வந்தடையும் வினைகள் உயிரினை அலைக்கழிக்கின்றன. மேலும் ஆசை எனப்படும் பாசக் கயிற்றினால் சுருக்கிடப்பட்டு உயிர் கீழான வாழ்க்கை நடத்துகின்றது. இந்த இழிவான தன்மையால் மனம் தளரும் உலகத்தவரே, நீங்கள் அஞ்சாமல் இருப்பதற்கு அடியேன் ஒரு வழிமுறை சொல்கின்றேன் கேட்பீர்களாக; இலைகளுடன் நிறைந்து காணப்படும் கொன்றை மலர், அலைகள் வீசும் கங்கை நதி, பிறைச் சந்திரன் ஆகியவற்றை தனது பெரிய சடையில் மகிழ்ச்சியுடன் வைத்துள்ளவனும், தேவர்களால் போற்றப் படுபவனும், அழியாமல் என்றும் நிலையாக இருப்பவனும் ஆகிய பெருமான் உறைகின்ற நெய்த்தானம் நன்னகரத்தில் அமைந்துள்ள திருக்கோயிலை, மனதில் நினைத்து வணங்கினால் நீர், வாழ்வினில் உய்வினை அடையலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அலையார் வினைத்திறம் சேர் ஆக்கை உள்ளே அகப்பட்டு ஆசை எனும் பாசம் தன்னுள்

தலையாய் கடையாரும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்ச வேண்டா

இலையார் புனக்கொன்றை எறி நீர்த் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும்

நிலையான் உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே

எதிர்கொள்பாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.1.1) சுந்தரர், மன்னாதி மன்னராக இருந்து பலராலும் மதிக்கப்பட்டு சிறப்பாக வாழ்ந்தாலும், அவர் இறந்த பின்னர், அவருக்கு துணையாக, அவரது சூக்கும உடலுடன் நரகத்திற்கும் சொர்கத்திற்கும் உடன் செல்பவர் எவரும் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று உணர்த்துகின்றார். எனவே, இறைவன் பால் நாம் வைத்துள்ள சிந்தனையை, தொடர்ந்து அந்த வழியில் நிலைநிறுத்தி, வாழ வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். நாம் செத்த பின்னரும், இறைவன் ஒருவனே நமக்குத் துணையாக இருப்பவன் என்பதை நினைவில் கொண்டு, அந்த துணையினை நாம் உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். வம்மின்=வாரும்

மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள்

செத்த போதில் ஆருமில்லை சிந்தையுள் வைம்மின்கள்

வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே

அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே

ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலினை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் போது, அவரை பற்றி பலரும் பலவிதமாக பேசுவதை நாம் உலக வழக்கினில் இன்றும் காண்கின்றோம். அவர் செய்த பல நற்செயல்கள் பேசப்படும் அதே சமயத்தில், அவர் செய்யத் தவறிய செயல்களும் பேசப் படுவதையும் நாம் உணர்கின்றோம். தனது வாழ்நாளில் பெருமானை நினைக்கத் தவறிய மனிதர்களை பலரும் இகழ்ந்து பேசுவார்கள் என்று குறிப்பிடும் சுந்தரர் (7.59.4), அத்தகைய இகழ்ச்சிக்கு ஆளாகாமல் நாம் வாழ வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். இந்த திருப்பதிகம் கொடுங்கோளூர் தலத்தில் அருளியது என்றாலும் திருவாரூர் தலத்திற்கு உரிய பதிகமாகவே கருதப்படுகின்றது. முதல் முறையாக சேரமான் பெருமாள் நாயனாரின் விருந்தினராக கொடுங்கோளூர் சென்றிருந்த சுந்தரருக்கு சில நாட்கள் கழிந்த பின்னர், திருவாரூர்ப் பெருமானின் நினைவு வந்தது. தான் இத்தனை நாட்களாக திருவாரூர்ப் பெருமானை மறந்திருந்த தன்மைக்கு வருத்தம் தெரிவித்து, ஆரூரானை மறக்கலும் ஆமே என்று பாடல் தோறும் குறிப்பிட்டு பாடிய பதிகம். பின்னர் இந்த கருத்தினை தனது நண்பராகிய சேரமான் பெருமாள் நாயனாருக்கும் தெரிவித்து, அவரது அனுமதியுடன், அவரிடம் விடை பெற்று செல்கின்றார். வாழும் காலத்தில், பெருமானை எப்போதும் பணிந்து வணங்கி வழிபடும் அடியார்கள், பெருமானின் திருவருளால், பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு முக்தி உலகம் சென்றடைந்து என்றும் அழியாத பேரானந்தத்தில் ஆழ்கின்றனர். கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கிடைத்தும், அதனைப் பயன்படுத்திக் கொண்டு உய்வினை அடையாத மனிதர்கள் இறந்தால், அந்த மனிதனின் பிணத்தைக் காணும் உறவினரும் நண்பர்களும், முக்தி அடையும் வழியை நாடாமல் மீண்டும்மீண்டும் பிறவி எடுப்பதற்காக இறந்து விட்டானே என்று ஏளனமாக சிரிப்பார்கள். அவ்வாறு பலர் சிரிக்கும் நிலைக்கு ஆளாகாமல், வாழ்நாளில் பெருமானை வழிபட்டு உய்வினை அடைய வேண்டும் என்று சுந்தரர் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

செத்த போதினில் முன்னின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்

வைத்த சிந்தையுண்டே மனமுண்டே மதியுண்டே விதியின் பயனுண்டே

முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறுடையானை

அத்தன் எந்தை பிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலுமாமே

இறக்கும் சமயத்தில் சிவனது திருப்பாதங்களை நினையாதவர் பேதைகள் என்று ஆரூர்ப் பதிகம் ஒன்றின் (2.79) முதல் பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தில் அத்தகையோர் எவ்வாறு துன்பப்படுவார்கள் என்பதை நமக்கு படம் காட்டுவது போல் விவரிக்கும் நேர்த்தியை நாம் காணலாம். பவனம்=காற்று: இறக்கும் சமயத்தில், உடலினை விட்டு நீங்கும் பொருட்டு பிராணவாயு பெருகும். இதனை மேல் மூச்சு வாங்குதல் என்று கூறுவார்கள். இந்த நிலையை, உடலில் காற்று அதிகமாக உள்ளது என்பதை குறிக்கும் வகையில், உடல் காற்றாய் மாறியது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். சோடை என்றால் வறட்சி என்று பொருள். நாக்கு உலர்ந்து போய் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த சமயத்தில், வாயில் ஊட்டப்படும் உணவை உள்ளே செலுத்த முடியாமல் நாக்கு திண்டாடும். அப்போது மெல்லிய துணியை அல்லது பஞ்சினை முழுவதும் பாலினில் நனைத்து, அருகில் இருப்போர் ஊட்டுவார்கள்; இந்த நிலையைத் தான் நாவெழாப் பஞ்சு தோய் சட்ட உண்டு என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடல் மூலம் சிவனது திருப்பாதங்களை இறக்கும் சமயத்தில் நினைப்போர் மேற்கொண்ட துன்பங்களிலிருந்து விடுபடுவார்கள் என்று நமக்கு உணர்த்துகின்றார். திருஞான சம்பந்தர் இந்த பாடலில் விவரித்தவாறு, இறக்கும் தருணத்தில் உடல் படும் வேதனையில், இறைவனைப் பற்றிய நினைப்பு தோன்றாமல் இருப்பது இயற்கையே. எனவே அந்த நிலையில் இறைவன் பற்றிய சிந்தனை நமக்கு ஏற்பட வேண்டும் என்றால் இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே ஏற்படும். எனவே அத்தகைய அருள் புரிய வேண்டும் என்று நாம் தொடர்ந்து, நமது உடல், உயிருடன் ஒத்துழைக்கும் நேரங்களில்,. இறைவனைப் பணிந்து வேண்டவேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பவனமாய் சோடையாய் நாவெழாப் பஞ்சு தோய் சட்ட உண்டு

சிவன தாள் சிந்தியாமே பேதைமார் போல நீ வெள்கினாயே

கவனமாய் பாய்வதோர் ஏறு உகந்து ஏறிய காளகண்டன்

அவனது ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

இந்த பாடலில், இறக்கும் தருவாயில் இறைவனை நினைத்தாலும், நமக்கு நல்வழி காட்டுபவன் ஐயாறப்பன் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மூப்பு அடைந்த போதே, நமது எண்ணங்களுடன் உடற்கருவிகள் ஒத்துழைக்காத நிலையில் இருப்பதை நாம் உணர்கிறோம். ஏன் இளமைக் காலத்தில் இருந்த போதிலும், நோய்வாய்ப் பட்ட நேரங்களில் உடல் உயிரின் விருப்பத்திற்கு ஒத்துழைக்காத நிலையில் இருப்பதை நாம் காண்கின்றோம். அவ்வாறு இருக்கையில் இறக்கும் தருவாயில் நாம் இறைவனை நினைக்க வேண்டும் என்றால், பெருமானது அருள் நமக்கு கைகூட வேண்டும். இதனை உணரும் அப்பர் பிரான், தான் இறக்கும் தருவாயிலும் இறைவன் பற்றிய நினைவுடன் இருப்பதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பல பாடல்களில் விண்ணப்பம் வைக்கிறார். அத்தகைய பாடல்களை இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும்.

பல பாடல்களில் சிவபிரானிடம், அப்பர் பெருமான் தான் இறக்கும் சமயத்தில் அவனது திருநாமங்களைச் சொல்லும் நிலையில் தான் இருக்குமாறு அருள வேண்டும் என்றும், தனது நெஞ்சம் சிவபிரானைப் பற்றிய நினைவுகளுடன் இருக்குமாறு அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார். அந்த நிலையினைத் தான் அடையாமல் போய்விடுவேனோ, என்ற அச்சத்தை வெளிப்படுத்தி இறைவனிடம் வேண்டும் பாடல் (4.12.5) ஒன்று இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. தன்னை அவ்வாறு நினைக்க வைத்து, பல அடியார்களுக்கும், தூய்மையான வேதியர்க்கும், தேவர்களுக்கும் அளித்தது போன்று வீடுபேறு தனக்கும் அளிக்க வேண்டும் என்பதை இங்கே குறிப்பாக உணர்த்துகின்றார். தீர்த்த=புனிதம் உடைய; மாதீர்த்த=மிகவும் புனிதமான; இசை பாடும் என்ற வினைச் சொல்லை, அப்பனை என்ற பெயர்ச் சொல்லுடன் சேர்த்து, பண் பொருந்த இசை பாடும் இறைவன் என்று பொருள் கொள்ள வேண்டும். நாம் இறக்கும் சமயத்திலும் சிவபெருமானது நினைவு இருக்க வேண்டும் என்ற தனது கவலையை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த கவலை நமக்கும் இருக்கவேண்டும், திருப்புகலூர் தலத்தில் இறைவனைப் பற்றிய சிந்தனையில் இருந்த போதே இறைவனின் திருவடிகளில் சேர்ந்த அப்பர் பிரானுக்கு அருளியது போல், நமக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று நாம் இறைவனை வேண்டும் முகமாக, தினமும் சிவபூஜை செய்யும் அன்பர்கள் தாங்கள் பூசையினை முடிக்கும் சமயத்தில், இந்த பாடலை சொல்லவேண்டும் என்று பெரியோர்கள் கருதுகின்றனர். கண் பொருந்துதல்=இறப்பினைக் குறிக்கும் மங்கலச் சொல். கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ என்று (இறக்கும் சமயத்தில் பழனத்து அப்பனின் நினைவை நான் கை விட்டு விடுவேனோ) தனது அச்சத்தை வெளிப்படுத்தும் அப்பர் பிரான், தான் இறக்கும் சமயத்திலும் சிவபிரானைப் பற்றிய நினைவு தனக்கு இருக்கவேண்டும் என்ற தனது விண்ணப்பத்தை, மறைமுகமாக இறைவனிடம் தெரிவிக்கின்றார். இந்த மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கும், தூய்மையான வேதியர்களுக்கும், மற்றும் விண்ணுலகத்தில் வாழும் தேவர்களுக்கும் முக்திநிலை அளிக்கக் கூடிய சிவபிரானை, அவனது அடியார்கள் பண்ணோடு பொருந்திய பாடல்களைப் பாட அதனைக் கேட்டு இன்பமுறும் பழனத்து அப்பனை, நான் இறக்கும் தருவாயில் நினைக்காமல் போய்விடுவேனோ என்று அஞ்சுகின்றேன். அவ்வாறு ஏதும் ஏற்படாதவாறு, நான் அந்த சமயத்திலும் உன்னை நினைக்குமாறு நீ அருள் புரிய வேண்டும் என்பதே அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் விடுக்கும் வேண்டுகோள்.

மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்

விண் பொருந்து தேவர்க்கும் வீடு பேறாய் நின்றானைப்

பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என்

கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய ஒரு பாடலில் (4.46.2) அப்பர் பிரான், இறக்கும் தருவாயில் இறைவனை நினைக்கும் உணர்வினை தனக்கு இறைவன் அருள வேண்டும் என்று கோருகின்றார். கோல்=தோணி செலுத்தும் கோல்: மனன்=ஐம்புலங்களுக்கு இன்பம் அளிக்கும் ஆசைகள்: மறியும் போது=நிலை குலைந்து கவிழ்ந்து வீழ்தல்: உனும்=உன்னும் என்பதன் இடைக்குறை, நினைக்கும் செயல்: மேற்கண்ட பாடலில் நாற்றம் வீசும் புலாலால் அமைக்கப்பட்ட இந்த உடல், பாறையில் மோதி உடையும் மரக்கலம் போன்று ஒரு நாள் அழியக்கூடியது என்பதனை உணராமல், இந்த உடல் நிலையானது என்று இந்நாள் வரை தான் மயங்கி இருந்ததாகவும், மான் போன்று மருண்ட பார்வையை உடைய பெண்களின் குளிர்ந்த பார்வைக்காக ஏங்கி காலத்தைக் கழித்து, இறைவனை தியானிக்காமல் தனது காலத்தைக் கழித்ததை குறிப்பிட்டு அதற்கு வருந்துவதாக அப்பர் பிரான் கூறுகின்றார். சினம் முதலான ஆறு தீய குணங்களை (குரோதம், காமம், உலோபம். மோகம், மதம், மாற்சரியம்) சரக்காக ஏற்றி, நமது அறிவு எனப்படும் துடுப்பினைக் கொண்டு, மனம் எனப்படும் அந்த தோணியை, பரந்து கிடக்கும் உலகப் பொருட்களாகிய பாசக் கடலில், நாம் செலுத்த முயலும்போது, ஐம்புலன்களுக்கு இன்பம் அளிக்கும் ஆசை எனப்படும் பாறையில் மோதி, மனமாகிய மரக்கலம் நிலை குலைந்து வீழும். மனம் எனப்படும் தோணியில், தீய குணங்களும், ஆசைகளும் மிகுந்து, நல்ல குணங்களும் நினைவுகளும் இல்லாத காரணத்தால், இறைவனே உன்னை அறிய முடியாமல் நான் வருந்துவேன். இறைவனே, ஒற்றியூரில் குடிகொண்டுள்ள அரசே, அந்த சமயத்தில். உன்னை நினைத்து உன்னையே தியானிக்கும் உணர்வினை எனக்கு தந்து அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் கோரிக்கை விடுக்கும் பாடல் இது

மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலை ஊன்றிச்

சினமெனும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும் போது

மனன் எனும் பாறை தாக்கி மறியும் போது அறியவொண்ணாது

உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே

தற்போது தனது (அப்பர் பிரானின்) நெஞ்சத்தினுள் புகுந்து தன்னை (சிவபிரான் தன்னை) நினைக்குமாறு செய்யும் இறைவன், தான் இறக்கும் தருவாயிலும் அவ்வாறு அருள் செய்ய வேண்டும் என்று வேண்டும் பாடல் ஆவடுதுறை தலத்துப் பதிகத்தின் (4.57) முதல் பாடலாகும். மஞ்சன்=மைந்தன் என்ற சொல்லின் திரிபு; மைந்தன் என்பதற்கு மகன் என்ற பொருளும் வலிமை மிக்கவன் என்ற பொருளும் உண்டு. நமது இறுதிக் காலத்தில் இறைவனது அருள் இருக்கவேண்டும் என்று கோரும் இந்த பாடல் நாம் தினமும் சொல்ல வேண்டிய பாடல்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. நமது உடலுக்கு வெளியே இருப்பவர் எவராலும் நமது உள்ளத்துள் புகுந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. உயிருக்கு உயிராக நம்முடன் கலந்து இருப்பவன் இறைவன் என்பதால், அவன் ஒருவனால் தான், நமது நெஞ்சத்தில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே இறைவன் பால் நமது சிந்தனைகள் செல்லாமல் இருக்கும் சமயத்திலும், இறைவன் அருள் பாலித்தால், நமது நெஞ்சத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, இறைவனைப் பற்றிய சிந்தனையில் நாம் ஈடுபடமுடியும். அதனால் தான் மணிவாசகர் அவன் அருளாலே அவன் தான் பணிந்து என்று சிவபுராணத்தில் கூறுகின்றார். இதே கருத்து தான் அப்பர் பிரானால் இங்கே கூறப்படுகின்றது. துஞ்சுதல் என்றால் பொதுவாக உறங்கும் நிலையை குறித்தாலும், இலக்கியங்களில் மங்கல வழக்காக, துஞ்சுதல் என்ற சொல், மீளா தூக்க நிலையாகிய, இறப்பினை குறிக்கும். உறக்கத்தினை, இறப்பிலிருந்து வேறுபடுத்தி காட்டவே, உறக்கத்தினை துஞ்சுதல் என்று கூறாமல், கண் வளர்தல் என்று இலக்கியங்களில் கூறுவார்கள். தாலாட்டுப் பாடல்களில் கண் வளராய் என்று பாடுவதை நாம் அறிவோம். இறக்கும் தருவாயில், நமது புலன்கள் ஒவ்வொன்றாக செயலிழிக்கும் நேரத்தில், சிவபிரானைப் பற்றிய நினைவு நமது நெஞ்சினில் தோன்ற வேண்டும் என்றால் இறைவனின் அருள் இருத்தல் மிகவும் அவசியம். எனவே தான் பல பாடல்களில் இறக்கும் சமயத்தில் இறைவனின் நினைவு தனக்கு வரவேண்டும் என்றும், அந்த சமயத்தில் இறைவன் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுகோள் விடுக்கின்றார். நாமும் அவ்வாறே இருக்க வேண்டும் என்பதால் தான், அங்கமாலை பதிகத்தில், இறக்கும் சமயத்தில் நமது உற்றவராக இறைவன் ஒருவன் தான் இருக்க முடியும் என்பதனை நமக்கு உணர்த்துகின்றார். ஆவடுதுறைப் பெருமானே, மிகுந்த வலிமை உடையவனே, மாணிக்கம் போன்று ஒளி வீசுபவனே, மரகத மணிக் குவியல் போன்று பிரகாசிப்பவனே, அடியேன் உன்னை நினைக்குமாறு, எனது உள்ளத்தினுள் புகுந்து அருள் புரிபவனே, நான் இறக்கும் தருவாயில் நீ எனக்குத் துணையாக இருந்து, அஞ்சேல் என்ற உறுதிமொழி அளித்து அருள் புரிய வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மஞ்சனே மணியும் ஆனாய் மரகதத் திரளும் ஆனாய்

நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினானே

துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று

அஞ்சல் என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.75.8) தான் இறக்கின்ற சமயத்தில், உனது திருநாமத்தைச் சொல்லி நீ எங்கிருக்கின்றாய் என்று நான் வினவினால், இங்குள்ளேன் என்று நீ இருக்கும் இடத்தினை எனக்கு காட்ட வேண்டும் என்று, தனது ஆசையினை வெளிப்படுத்தி அப்பர் பிரான் வேண்டுகின்றார். தனது உடலை விட்டு உயிர் பிரியும் நாளில், தனக்கு அடுத்த பிறவி ஏதும் இல்லாத வண்ணம் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்பதால், இறைவன் எங்குள்ளான் என்று தான் தேடும் போது, தான் இருக்கும் இடத்தை இறைவன் தனக்கு காட்டியருள வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல். நாம் தினமும் சொல்ல வேண்டிய பாடலாக பெரியோர்களால் கருதப்படும் பாடல். பங்கம்=இழிந்த எண்ணம், உலகப் பொருட்கள் மேல் வைத்துள்ள பாசம்: பரமன்=அனைவருக்கும் மேம்பட்டவன்: அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி என்பதற்கு, தரையில் உடலின் எட்டு அங்கங்களும் படுமாறு கீழே விழுந்து வணங்குதல் என்றும் பொருள் கொள்ளலாம். அனைவருக்கும் மேம்பட்ட இறைவனே, உடல் முழுதும் திருநீறு பூசப்பட்டதால் சங்கை ஒத்த வெண்ணிறமான மேனி கொண்டவனே, மண்ணுடன் கலக்கப் போகும் உடலினை புறக்கணித்து, எனது உள்ளத்தில் உன்னை பற்றிய ஆர்வத்தை வளர்த்து, உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாசம் என்னை விட்டு அகலுமாறு நீக்கி, மனதினில் உன்னை தியானித்து, இறக்கும் தருவாயில், இறைவனே நீ எங்கு உள்ளாய் என்று நான் வினவினால், நான் இங்கே தான் இருக்கின்றேன் என்று உனது இருப்பிடத்தைக் காட்டி எனக்கு நீ அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து

பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்

சங்கு ஒத்த மேனிச் செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை

எங்குற்றாய் என்ற போது இங்கு உற்றேன் என் கண்டாயே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில் (4.95) அப்பர் பிரான், எந்த காரணம் பற்றியேனும், தான் இறைவனை நினையாமல் இருந்தாலும் இறைவன் அதனை பொருட்படுத்தாது தன்னை குறிக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றார். தான் இறக்கும் நேரத்தில், ஒருகால் சிவபிரானைத் தான் நினைக்க மறந்தாலும், சிவபிரான் தன்னை குறிக்கொண்டு பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோள் இந்த பதிகத்தின் ஒன்பது பாடல்களிலும் விடுக்கப் படுகின்றது. இத்தகைய வேண்டுகோள் ஒரு பதிகத்தின் பெருவாரியான பாடல்களிலும் விடுக்கப் படுவது இந்த ஒரு பதிகத்தில் மட்டும் தான். எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனே என்ற பதிகத்தைப் பாடி முடித்த நிலையில், சிவபிரானை நினைத்து தியானத்தில் ஆழ்ந்து இருந்த நிலையில் அப்பர் பிரான் சிவபிரானிடம் கலந்ததை நாம் அவரது சரித்திரத்திலிருந்து அறிகின்றோம். எனவே இந்த பதிகம் சிறப்பானதாகவும், சிவபிரானின் அன்பைப் பெறுவதற்காக நாம் ஓத வேண்டிய பதிகமாக கருதப் படுகின்றது. இந்த பதிகத்தின் பாடல்களிலும், நான் உம்மை மறக்கினும், என்று சிறப்பு உம்மைத் தொகை சேர்த்து, கூறப்பட்டுள்ளதால், நான் உன்னை மறக்க மாட்டேன்; அப்படி ஒரு கால் மறக்கும் நிலை ஏற்பட்டால் நீ செய்ய வேண்டியது என்ன என்று இறைவனை நோக்கி, அப்பர் பிரான் வேண்டுவதாக அமைந்துள்ளது. புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி மறவாதிருக்க வரம் தர வேண்டும் என்று அடுத்த பிறவிக்கே வரம் வேண்டிய அப்பர் பிரான், சிவபிரானை எந்த காலத்திலும் மறந்திருக்கவே முடியாது. எனவே இந்த பாடல், நம்மைப் போன்றவர்கள் சிவபிரானிடம் வேண்டி, இறக்கும் தருவாயில் நாம் அவனை நினைக்க மறந்தாலும், அவனது அருள் பெறுவதற்காக இயற்றப்பட்ட பதிகம் ஆகும்.

இந்த பதிகத்தின் முதல் பாடலில் தான் முழுவதும் இறைவனை மறந்தாலும் பெருமான் தன்னை குறிக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றார். சட்ட=முழுவதும்; அட்டுதல்= இடுதல்: பெண்களின் பார்வையில் ஒரு விதமான அச்சம் கலந்து இருப்பதால், பெண்களின் பார்வைக்கு மானின் மருண்ட பார்வையை ஒப்பாக கூறுவது இலக்கிய மரபு. அந்த மரபினைப் பின்பற்றி அப்பர் பிரான், மான் போன்ற மருண்ட பார்வை உடைய உமை அம்மை என்று இங்கே கூறுகின்றார். பெட்டை மான்=பெண் மான். பல தேவாரப் பாடல்களில் மான் போன்ற பார்வை உடைய உமையம்மை என்று கூறப்பட்டுள்ளது. அறிகின்றோம். எனவே அப்பர் பிரான் சிவபிரானை மறக்கவே இல்லை. எனவே இந்த பாடல், தான் வாழும் நாளில் இறைவனை தான் மறந்தாலும் அப்போதும் இறைவனின் கருணை தன் பால் இருக்கவேண்டும் என்று வேண்டுவதாக அமைந்துள்ளது என்று கூறுவது பொருத்தம் அன்று. பல பாடல்களில் இறக்கும் தருவாயில் சிவபெருமானைப் பற்றிய நினைவு தனக்கு இருக்கவேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுவதை நாம் கண்டோம். எனவே இந்த பாடலும் இறக்கும் தருணத்தைக் குறிப்பிடும் பாடலாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த பதிகத்தின் எஞ்சிய பாடல்களில் (ஆறாவது பாடலைத் தவிர) இறக்கும் தருவாய் என்று குறிப்பிடுவதால், இந்த பாடலிலும் அந்த தருணத்தையே குறிப்பிடுவதாக நாம் கொள்ள வேண்டும். வானத்திலிருந்து தனது ஒளியினை சொட்டு சொட்டாக மண்ணில் வீழ்த்தும் நிலவினை, பிறையாகச் சடையில் அணிந்து, அந்த சந்திரனின் அருகில் தேன் சொட்டும் கொன்றை மலர்களை அணிந்துள்ள இறைவனே, பெண் மானைப் போன்ற மருண்ட பார்வையினை உடைய உமை அம்மையின் கணவரே, பளிங்கு போன்று தெளிந்த நீரினை உடைய மிழலைத் தலத்தில் உறைபவரே, அடியேன் நான் இறக்கின்ற தருணத்தில் உம்மை முழுவதும் மறந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் உமது கருணைப் பார்வை என் மீது விழவேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வான் சொட்டச் சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலே

தேன் சொட்டச் சொட்ட நின்றட்டுத் திருக் கொன்றை சென்னி வைத்தீர்

மான் பெட்டை நோக்கி மணாளீர் மணிநீர் மிழலையுளீர்

நான் சட்ட உம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே

இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில், இயமன், தன்னை தென் திசைக்கு அழைத்துச் செல்லும் தருணத்தில், தான் இறைவனை நினைக்க மறந்தாலும், இறைவன் தன்னை ஆட்கொண்டு அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார். வெந்தழல் ஓம்பும் மிழலை என்று இங்கே வாழ்ந்த அந்தணர்கள் வேள்விகளை இடைவிடாது செய்த தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தென்திசையில் இயமலோகம் இருப்பதால் தென் திசைக்கு உரிய கடவுளாக இயமன் கருதப் படுகின்றான். இறந்த பின்னர் அனைவரது உயிரும் தென் திசைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரவர்கள் செய்த வினைகளின் ஒரு பகுதி, சொர்க்க போகத்திலும் நரகத்திலும் புகுத்தப் படுகின்றது. அவ்வாறு தென் திசைக்கு எடுத்துச் செல்லப்படும் போது, நமது உற்றாரோ உறவினரோ நமக்கு உதவி செய்ய முடியாது. அதனால் தான், அப்பர் பிரான், அங்கமாலை பதிகத்தில், உயிர் பிரியும் தருவாயில் குற்றாலத்துக் கூத்தன் ஒருவன் தான் நமக்குத் துணை என்று கூறுகின்றார். உயிரினை, அதனுடன் பிணைக்கப் பட்டுள்ள வினைகளுக்கு ஏற்ப உடலுடன் பொருத்தி, அந்த உடல் உலாவும் உலகங்களில் உள்ள பொருட்களின் மீது பற்றுதலை ஏற்படுத்தியும், மற்றும் பக்குவம் அடைந்த ஆன்மாக்கள் பந்தங்களிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடையவும் இறைவன் வழிவகுக்கின்றார். இந்த கருத்தைத் தான் பந்தமும் வீடும் பரப்புகின்றீர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருப்பவரே, உலகத்தின் எட்டுத் திசைகளிலும் உள்ள உயிரினங்களின் இடையே பற்றினையும் பற்று நீங்கிய நிலையையும் பரப்புகின்றவரே, எருதினை வாகனமாகக் கொண்டு உகந்தவரே, வேள்விகள் ஓம்பும் அந்தணர்கள் வாழும் மிழலையை இருப்பிடமாகக் கொண்டவரே, எனது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், கூற்றுவனின் தூதுவர்கள் எனது உயிரை தென் திசைக்குச் செலுத்தும்போது, அடியேன் உன்னை மறக்க நேரிட்டால், நீர் மறக்காமல் என்னை காப்பாற்றவேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அந்தமும் ஆதியாகி நின்றீர் அண்டம் எண் திசையும்

பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்றுகந்தீர்

வெந்தழல் ஓம்பும் மிழலையுள்ளீர் என்னைத் தென் திசைக்கே

உந்திடும் போது மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே

இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் அப்பர் பிரான் (4.95.3), தனது உடல் உறுப்புகள் பலமிழந்து செயலற்ற தன்மையில் இருக்கும் தருணத்தில், இறைவனை தான் நினைக்க முடியாமல் போனாலும், இறைவன் தன்னைக் குறிக்கொண்டு காப்பாற்ற வேண்டும் என்று கூறுகின்றார். குலைக்கின்று=பலம் இழந்து, செயல் இழந்து: கலை=மான் விலக்குதல்= புறக்கணித்தல். அப்பர் பிரான் மற்றும் சம்பந்தர் இருவருக்கும் நித்தம் ஒரு படிக்காசு அருளி, அவர்களுடன் இருந்த அடியார்களுக்கும் மற்றவர்களுக்கும், பஞ்ச காலத்திலும் குறைவிலாது அன்னம் கிடைப்பதற்கு அருள் செய்த செய்கை குறிப்பிடப் படுகின்றது என்று சிவக்கவிமணி இந்த பதிகத்திற்கு விளக்கம் கூறுகின்றார். அலை வீசும் நீர், நிலம், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களாக உள்ள இறைவனே, மான் கன்று பொருந்திய கையினை உடையவரே, அனைத்துக் கலைகளின் உண்மைப் பொருளாக இருப்பவரே, எவரையும் புறக்கணிக்காது அருள் செய்பவரே, மிழலைத் தலத்தில் உறைபவரே, எனது வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், எனது கை, கால் முதலிய அங்கங்கள் செயலிழந்து, அடியேன் உன்னை நினைக்க மறந்தாலும், நீர் என்னை கைவிடாது காத்தருள வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அலைகின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரமாகி நின்றீர்

கலைக் கன்று சேரும் கரத்தீர் கலைப் பொருளாகி நின்றீர்

விலக்கின்றி நல்கு மிழலையுளீர் மெய்யில் கையொடு கால்

குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே

இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (4.95.4) அப்பர் பிரான், இறக்கும் தருவாயில் விக்கல் எடுத்து அவதிப்படும் நேரத்தில், தான் இறைவனை மறக்க நேர்ந்தாலும், இறைவன் தன்னை காக்க வேண்டும் என்று இறைஞ்சுகின்றார். தீத்தொழிலான்=தீயினை வளர்த்து வேள்வி செய்த தக்கன்: வேள்விகளில் அவியாக, நெய்யினையும் மற்ற பொருட்களையும் இடுவது வழக்கம். சிவபிரானை மதிக்காமல் செய்யப்பட்ட வேள்வியில், அவியாக தக்கனது தலையே பயன்படுத்தப் பட்டது அனைவருக்கும் பாடம் புகட்டும் வகையில் அமைந்தது. காளிதேவி பார்வதியின் அம்சம் என்பதால், காளியைத் தேவியாகப் பெற்றவர் என்று இங்கே கூறப்படுகின்றது. வேய்=மூங்கில்; மூங்கிலினால் செய்யப்பட்ட திரிதண்டம் எனப்படும் தண்டத்தினைத் தான் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் பழக்கம் உடையவர்களாக அந்நாளில் அந்தணர்கள் இருந்து வந்தனர். உம்மை மதிக்காமல், பிடிவாதமாக தீயினை வளர்த்து வேள்வி செய்த, தக்கனது வேள்வியை அழித்து, அவனது தலையைக் கொய்து வேள்வித் தீயினில் இட்டவரே, பேய்களைத் தனது விருப்பம் போன்று ஆட்டி வைக்கும் காளியைத் தேவியாக உடையவரே, கையில் திரிதண்டம் எனப்படும் மூங்கில் கோலை ஏந்தியவாறு எங்கும் செல்லும் அந்தணர்கள் வாழும் மிழலைப் பதியை உறைவிடமாக ஏற்றுக் கொண்டவரே, இறக்கும் தருவாயில் விக்கல் எடுத்து அவதிப்படும் நேரத்தில், உம்மை நினைத்து அஞ்செழுத்து ஓதுவதற்கு அடியேன் மறந்தாலும், நீர் என்னை ஒரு பொருளாகக் கருதி காப்பாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டும் பாடல்.

தீத் தொழிலான் தலை தீயிலிட்டுச் செய்த வேள்வி செற்றீர்

பேய்த் தொழில் ஆட்டியைப் பெற்றுடையீர் பிடித்துத் திரியும்

வேய்த் தொழிலாளர் மிழலையுள்ளீர் விக்கி அஞ்செழுத்தும்

ஓத்தொழிந்து உம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (4.95.5), இயமனின் தூதுவர்கள் நெருங்கும் நேரத்தில் ஏற்படும் மரண பயம் காரணமாக, தான் பெருமானை நினைக்க மறந்தாலும், பெருமான் தன்னை நினைவு கொண்டு காப்பாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுகின்றார். சுற்றுதல்=அணிதல்: பத்திமை=அன்பு; மேற்பட்ட=மேன்மை அடைந்த: வேறு உடையீர்= சிறப்பாக கொண்டிருத்தல்: நாட்பட்டு=வெகு நாட்கள் கழித்து: கோட்பட்டு=கொள்ளப் படுதல்; நாட்பட்டு வந்து பிறந்தேன் என்று அப்பர் பிரான் தன்னைக் குறிப்பிடுகின்றார். சமண சமயத்தைச் சார்ந்துத் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியினைக் கழித்த அப்பர் பிரான், தான் சமண சமயத்தைச் சார்ந்து இருந்த நாட்களை பிறவாத நாட்களாக கருதியதால், தான் கூற்றாயினாவாறு என்று தொடங்கும் பதிகத்தினை அருளிய நாளினையே பிறந்த நாளாகக் கருதுகின்றார். இந்த கருத்து நாட்பட்டு வந்து பிறந்தேன் என்ற சொற்றொடர் மூலம் வெளிப்படுகின்றது. சிற்றம்பலத்தானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே என்று பாடியவர் அல்லவா. தான் அருளிய பதிகத்தின் சிறப்பினை உலகுக்கு உணர்த்தும் வகையில் திருநாவுக்கரசு என்ற பெயரினைத் தனக்குச் சூட்டி, ஆன்மிக உலகில் ஒப்பற்ற ஒரு இடம் அளித்த சிவபிரான், தன்னை சிறப்பாக கருதியமையை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தோள்களில் பாம்பினையும், கையில் சூலத்தினையும் அணிந்தவரே, தொண்டு செய்வதில் மேம்பட்ட வீழி நகரத்து அந்தணர்களையும் அடியேனையும் சிறப்பான இடத்தில் வைத்திருப்பவரே, பெருவாரியான ஆண்டுகளை சமண சமயத்தில் கழித்த பின்னர் நாட்பட்டு, உமக்குத் தொண்டனாக வந்த அடியேன், இறக்கும் தருவாயில் இயமனின் தூதுவர்களால் கைப்பற்றப்பட்டு உம்மை மறந்தாலும், நீர் என்னை மறவாது காப்பாற்ற வேண்டும் என்பதே அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் விடுக்கும் வேண்டுகோள்.

தோள் பட்ட நாகமும் சூலமும் சுற்றியும் பத்திமையால்

மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறுடையீர்

நாட்பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர் தம்

கோட்பட்டு நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே

இந்த பதிகத்தின் ஆறாவது பாடலில் (4.95.6) ஐந்து பொறிகளின் தாக்கத்தினால், தான் இறைவனை நினைக்க மறந்தாலும், இறைவன் தன்னைக் குறிக்கொண்டு காப்பாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுகின்றார். கண்டி=உருத்திராக்க மாலை; பண்டி=உடல்; பரிகலம்=உண்கலம்: பண்டியில் பட்ட பரிகலம்=உடலிலிருந்து எஞ்சிய மண்டையோடு; இந்த பதிகத்தில் இந்த பாடல் ஒரு வித்தியாசமான பாடல். மற்றைய ஒன்பது பாடல்களில் இறக்கும் தருணத்தை குறிப்பிடும் அப்பர் பிரான், இந்த பாடலில் இறக்கும் தருவாயினை குறிப்பிடாமல் மற்ற நேரங்களை குறிப்பிடுகின்றார். உண்ணும் நேரம், பசியால் வாடும் நேரம், நோயால் வருத்தப்படும் நேரம், உறங்கும் நேரம் என்பன இங்கே குறிப்பிடப் படுகின்றன. உணவு உட்கொள்ளும் சமயத்தில், உணவின் சுவையில் மெய்ம்மறக்கும் நமக்கு, மற்ற சிந்தனைகள் தோன்றுவதில்லை. நமது நாக்கு மற்ற பொறிகளை செயல்பட விடாமல் ஓங்கி நிற்கும் சமயம் அது. பசியால் வாடும் எவருக்கும் எப்போது உணவு கிடைக்கும் என்ற சிந்தைனையைத் தவிர வேறு சிந்தனைகள் எழுவதில்லை. அதே போன்று நோயில் நாம் வருந்தும் போதும் உறக்கத்தின் போது, நமது மனமும் சேர்ந்து வாடுவதால்/உறங்குவதால், அப்போதும் நாம் இறைவனை நினைப்பதில்லை. ஐம்புலக் கள்வர் கொண்டி என்று ஐந்து புலங்களின் ஆளுகைக்கும் உட்பட்டு, அவற்றின் வழியே செயல்படும் நேரங்கள் குறிப்பிடப் படுகின்றன. இந்த தருணங்களில் நாம் நமது பொறிகளைக் கட்டுப்படுத்தி, அவற்றின் ஆளுகையிலிருந்து மீண்டு, இறைவனை நினைக்கும் பயிற்சியை மேற்கொண்டால், இறக்கும் தருவாயிலும் நம்மால் இறைவனை நினைக்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக அப்பர் பிரான், இத்தகைய நேரங்களை இங்கே குறிப்பிடுகின்றாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. கழுத்தினில் உருத்திராக்க மாலை அணிந்தவரே, சுடுகாட்டில் எரிந்த உடலில் எஞ்சியுள்ள மண்டையோட்டினை உண்கலமாகக் கொண்டவனே, வீழி எனப்படும் தலத்தினை உடையவரே, உணவு உட்கொள்ளும் போதும், உணவின்றிப் பட்டினியாக இருக்கும் போதும், நோயினில் அகப்பட்டுத் தவிக்கும் போதும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போதும், ஐம்புலன்களின் ஆளுகைக்கு உட்பட்டு, அவை இழுத்துச் செல்லும் வழியில் எனது மனம் செல்லும் போதும், அடியேன் உம்மை மறந்தாலும், நீர் உமது கருணை விழியால் பார்த்து என்னை ஆட்கொள்ளவேண்டும் என்பதே இந்த பாடலில் விடுக்கப்படும் வேண்டுகோள்.

கண்டியில் பட்ட கழுத்துடையீர் கரிகாட்டில் இட்ட

பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர்

உண்டியில் பட்டு இனி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர்

கொண்டியில் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே

இந்த பதிகத்தின் ஏழாவது பாடலில் (4.95.7) கூற்றுவன் நெருங்கும் நேரத்தை உணர்ந்து, அந்த பயத்தின் காரணத்தால், பெருமானை, தான் நினைக்க மறந்தாலும், பெருமான் தன்னை கைவிடாமல் காக்க வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுகின்றார். தோற்றம் கண்டான்=படைப்புத் தொழிலைச் செய்யும் பிரமன். இறக்கும் தருவாயில் சிலர் தங்கள் மனக்கண்ணில் இயமனின் தூதுவரைக் காண்பார்கள். அந்த தோற்றம், அவர்களுக்கு இருக்கும் மரண பயத்தை மேலும் அதிகரிக்கும். மரண பயம் மிகுந்து ஓங்கி இருக்கும் அந்த நேரத்தில், எவருக்கும் மற்ற உணர்வுகள் மறைந்து போவது இயற்கை. எனவே தான் அத்தகைய தருணத்தில் தான் இறைவனை நினைக்க மறந்தாலும், இறைவன் தன்னை மறக்காமல் ஆட்கொள்வது அவசியம் என்பதை உணர்ந்த அப்பர் பிரான் கூற்றுவனின் தோற்றத்தை இங்கே குறிப்பிடுகின்றார். படைக்கும் தொழிலைச் செய்யும் பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினைக் கொய்தவரே, தூய வெண்மை நிறம் கொண்ட எருதினை வாகனமாகக் கொண்டவரே, அழகு வாய்ந்த வீழிமிழலையை உமது இருப்பிடமாகக் கொண்டவரே, மிகுந்த கோபத்துடன் கூற்றுவன் என்னை அணுகி, என் மேல் கொடுமையான பாசக் கயிற்றினை வீசும் போது அடியேன் உம்மை மறந்தால், நீர் என்னை நினைவில் வைத்துக் கொண்டு காப்பாற்றவேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

தோற்றம் கண்டான் சிரமொன்று கொண்டீர் தூய வெள்ளெருது ஒன்று

ஏற்றம் கொண்டீர் எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர்

சீற்றம் கொண்டு என் மேல் சிவந்ததோர் பாசத்தால் வீசிய வெம்

கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே

பிறவிச் சுழலில் சிக்கிய உயிர்கள், இறப்பதே மீண்டும் பிறப்பு எடுப்பதற்குத் தானே. எனவே சுழிப்படுதல் என்பது இங்கே இறக்கும் தருணத்தை குறிப்பிடுகின்றது என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம். சொக்கம்=சுத்த நிருத்தம் எனப்படும் ஒருவகை நடனம்: நான்கு வகையான சாந்திக் கூத்தினில் ஒன்று என்றும் நூற்றெட்டு கரணங்களை உடையது என்றும் கூறுவார்கள். சொக்கம் ஆடுவதால் சொக்கன் என்ற பெயர் வந்தது போலும். பிறவிச்சுழி என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். சுழியில் அகப்படும் எந்த பொருளையும் நதி உள்ளே இழுத்துக் கொண்டு விடும், அதனை வெளியில் விடாது. அது போல் பிறவிச் சுழியில் அகப்பட்ட உயிர், வெளியே வர முடியாமல், இறந்த பின்னரும் வேறொரு பிறவி எடுக்கும். மேலும் சுழிக்கும் நீர் பார்வையில் அடங்கியது போல் தோன்றினாலும், வேறொரு இடத்தில் வெளிப்படும். பதிகத்தின் மற்றைய பாடல்களில் இறக்கும் தருணம் குறிப்பிடப் படுவதால், சுழிப்படுதல் என்பது இங்கே இறக்கும் தருணத்தை குறிக்கின்றது என்று நாம் கொள்ள வேண்டும். நீர்ச் சுழிகளை உடைய கங்கையையும், சந்திரனையும் தலையில் சூடிக் கொண்டு, சொக்கம் எனப்படும் நடனத்தை பயில்பவரே, அனைவராலும் பழிக்கப்படும் பாம்பினை விரும்பி, உமது இடுப்பினைப் பற்றி இருக்குமாறு அணியாக ஏற்றுக் கொள்பவரே, உமது நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீச்சுடர், மன்மதனை விழுங்குமாறுச் செய்தவரே, மிழலைத் தலத்தில் உறைபவரே, பிறவி சுழியில் அகப்பட்ட அடியேன், இறக்கும் தருவாயில் உம்மை மறந்தாலும், நீர் என்னை மறக்காது காப்பாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடிக் சொக்கம் பயின்றீர்

பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடையீர் படர்தீப் பருக

விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலையுள்ளீர் பிறவிச்

சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே

இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (4.95.9) இயமனின் தூதுவர்கள் தனது உயிரைக் கொள்ளை கொண்டு செல்ல வரும் தருணத்தில், பெருமானே, உனது திருநாமத்தை நான் சொல்வதை மறந்தாலும், நீவிர் என்னை காப்பாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுகின்றார். பிள்ளையில் பட்ட பிறை=இளம் பிறை: நள்ளை=நடுவு: அரைப்பிக்க= தேய்க்கப்பட: கொள்ளை என்பது எவரும் அறியாமல் செய்யப்படும் செய்கை. இயமனின் தூதுவர்கள் நமது உயிரைக் கவர்ந்து செல்லும் போது எவரும் அறியாத வகையில் செயல் படுவார்கள் என்பதால் நமன் தமர் கொள்ளை என்று குறிப்பிடுகின்றார் இளைய பிறைச் சந்திரனைச் சடையில் அணிந்தவரே, வேதங்களைத் தோற்றுவித்து ஓத வல்லவரே, வெண்மை நிறத்தை உடைய திருநீற்றினை அணிந்தவரே, நீர் பரந்து விரிந்த மிழலைத் தலத்தில் உறைபவரே, ஐம்புலப் பொறிகளின் இடையில் அகப்பட்ட என்னை, ஐம்பொறிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு நகைத்தபடியே என்னை பலவகையிலும் தேய்க்கின்றன; இவ்வாறு அவதிப்படும் எனது உயிரை இயமனின் தூதுவர்கள் கவர்ந்து செல்லும் தருணத்தில் அடியேன் உம்மை மறந்தாலும், நீர் தவறாது உமது கருணைக் கண்களால் நோக்க வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

பிள்ளையில் பட்ட பிறை முடியீர் மறை ஓத வல்லீர்

வெள்ளையில் பட்டதொர் நீற்றர் விரிநீர் மிழலையுள்ளீர்

நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர் தம்

கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே

இந்த பதிகத்தின் கடைப் பாடலிலும் (4.95.10) அப்பர் பிரான், தான் பெருமானை இறக்கும் தருணத்தில் மறக்க நேர்ந்தாலும், பெருமான் தன்னைக் கைவிடாது காப்பாற்ற வேண்டும் என்று கோருகின்றார். சேவடி என்று குறிப்பிடப்பட்டு, இறைவனின் திருவடியால் நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் இரண்டாவது அடியில் குறிப்பிடப் பட்டுள்ளன. கால் விரலை ஊன்றி இராவணனை மலையின் கீழ் நெருக்கியது, இடது காலால் உதைத்து, இயமனை வீழ்த்தியது ஆகிய இரண்டு வீரச் செயல்கள் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன. கறுக்கொண்டு=மிகுந்த ஆத்திரம் கொண்டு: இறல்=முரிதல்; நீறு செய்தல்=கொல்லுதல்: வெறி=மணம் வீசும்; தான் செல்லும் வழியைத் தடுக்கின்றது என்று நினைத்து மிகுந்த ஆத்திரத்துடன் கயிலை மலையைப் பெயர்க்கப் பயன்படுத்திய அரக்கன் இராவணனின் கைகளும் உடலும் நெறுநெறு என்ற ஒலியுடன் நொறுங்குமாறு, உமது கால் திருவிரலால் மலையை அழுத்தியவரே, மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க வந்த காலனின் உயிரை, உமது சேவடியால் உதைத்து நீக்கியவரே; நல்ல மணம் கமழும் கொன்றை மாலையை சடையில் அணிந்தவரே, அகலமான அரிசில் நதியின் கரையில் அமைந்த வீழிமிழலை தலத்தில் உறைபவரே, அடியேன் இறக்கின்ற தருணத்தில் உம்மை நினைக்க மறந்தாலும்., நீர் உமது கருணைக் கண்களால் பார்த்து காத்தருள வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் வேண்டுகின்றார்.

கறுக்கொண்டு அரக்கன் கயிலையைப் பற்றிய கையும் மெய்யும்

நெருக்கென்று இறச் செற்ற சேவடியால் கூற்றை நீறு செய்தீர்

வெறிக் கொன்றை மாலை முடியீர் விரிநீர் மிழலையுள்ளீர்

இறக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே

நாம் இந்த பிறவியில் செய்யும் செயல்கள், நல்வினைகளாகவும் தீவினைகளாகவும், இனி எடுக்கவிருக்கும் பிறவிகளின் தன்மையை என்பது பொதுவான கருத்து. பெருமானின் அருளால் அடுத்த பிறவிகளில், இந்த பிறவியில் செய்த நற்செயல்களின் பயனை இன்பமாக அடைவதை, நம்மைச் சுற்றி இருக்கும் எவரும் அறிய மாட்டார். நம்மைச் சுற்றி இருப்போர் அறிந்து கொண்டு, அவர்களும் தன்னைப் போன்று நற்செயல்கள் புரிய வேண்டும் என்றால், பெருமான் தனக்கு அருள் புரிவதை அவர்களும் பாய்ந்து கொள்ளும் வண்ணம், இந்த பிறவியிலியே பெருமான் அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான், சத்திமுற்றம் பதிகத்தின் பாடலில் (4.96.6) வேண்டுகின்றார். விழுப்பதன் முன்=வீழ்த்துவதன் முன்னர்; இகழில்=அலட்சியம் செய்தால்; செம்மை=வீடுபேறு.விரவுதல்=சேர்ந்து இருத்தல், நிறைந்து இருத்தல். தீயினைப் போன்று கொடிய இயமனின் தூதுவர்கள் ஒன்று சேர்ந்து என்னை வீழ்த்தி பல கொடுமைகளுக்கு ஆளாக்கும் முன்னர், இந்தப் பிறவியிலேயே உனது திருப்பாதங்களை எனது தலை மீது பதிப்பதன் மூலம், உனது பாதங்களின் நினைவினை உறுதியாக எனது நெஞ்சினில் எழுதி வைப்பாயாக. சத்திமுற்றத்தில் உறையும் வீடுபேறு அருளவல்ல சிவபிரானே, நீ எனக்கு அடுத்த பிறவியில் புரியும் அருட்செயல்கள், இங்குள்ளவர் அறிய முடியாது. எனவே நீ எனது வேண்டுகோளை அலட்சியம் செய்யாது இப்போதே அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன்

இம்மை உன் தாள் என் தன் நெஞ்சத்து எழுதி வை ஈங்கு இகழில்

அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு யாரறிவார்

செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

சிவபிரானின் அருள் இருந்தால் தான், நாம் நமது வாழ்க்கையின் கடைப் பகுதியில், உயிர் உடலை விட்டு பிரியும் நேரத்தில், நம்மால் சிவபிரானின் திருநாமத்தை உரைக்கும் நிலை ஏற்படும். அதனால் தான் பல பாடல்களில் இறக்கும் நேரத்தில் தனக்கு சிவபெருமானின் நினைவு ஏற்பட வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுகின்றார். அத்தகைய ஒரு பாடல், நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (4.103.3) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. சாமன்று=இறக்கும் நாளன்று: தீவேள்வி தொழிற்படுத்தல்= காமாக்னி இறைவனின் நெஞ்சில் எழுமாறு மலர்க்கணை விடுத்த மன்மதனின் செயல்: தன்வயத்தன் என்பது இறைவனின் எட்டு சிறந்த குணங்களில் ஒன்றாகும். அதாவது பெருமானை குறிப்பிட்ட செயலை செய்யும் வண்ணம், அவரது விருப்பத்திற்கு மாறாக எவரும் செய்யும் வண்ணம் எவரும் கட்டுப்படுத்த முடியாது. அவ்வாறு இருக்கையில், மன்மதன் எவ்வாறு, இறைவனின் மனதினில் காம உணர்ச்சியை தூண்டமுடியும்; மேலும் இறைவன் உணர்ச்சிகளைக் கடந்தவன்; எனவே மன்மதன் தனது முயற்சியில் வெற்றி கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. எனினும் பெருமான் கோபம் கொண்டு மன்மதனை அழித்தது, தியானத்தில், தவத்தில் ஆழ்ந்திருக்கும் எவரையும் அடுத்தவர், தவத்தினை கெடுக்கும் நோக்கத்துடன் நெருங்கலாகாது என்பதை உலகினுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாடலில் நமச்சிவாய எனும் பெருமானின் திருநாமத்தை, இறக்கும் தருவாயில், தான் உரைக்கும் பேற்றினை சிவபெருமான் அருள வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுகின்றார். சங்கரன் என்றால் நன்மையைச் செய்பவன், இனியவன் என்று பொருள். தனது விருப்பத்தை நிறைவேற்றும் பெருமானை சங்கரன் என்று அழைப்பது தானே பொருத்தம். உயிரின் உண்மையான ஆசை, பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைவது தானே. இறக்கும் தருவாயில் உயிர், இறைவனை நினைந்து அதன் மூலம் உயிர் உய்வினை அடையும் என்றால், அதனினும் பெரிய உதவி என்ன இருக்க முடியும். அதனால் தான் இத்தகைய பெரிய உதவியினைப் புரிய வேண்டி, பெருமானை, சங்கரனே என்று இங்கே அப்பர் பிரான் அழைக்கின்றார். காசியில் இறக்கும் தருவாயில் உள்ள உயிர்களுக்கு, அம்பிகை அவர்களது காதினில் நமச்சிவாய மந்திரத்தைச் சொல்வதால் தான் காசியில் இறப்போர் முக்தி அடைய முடிகின்றது என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த பதிகத்தில், தான் இறக்கும் சமயத்தில் நமச்சிவாய மந்திரத்தைச் சொல்லும் பேறு தனக்கு வாய்க்க வேண்டும் என்றும் அப்பர் பிரான் வேண்டுகின்றார். தூய்மையான மெல்லிய மலர்களை அம்புகளாகக் கொண்டு, தனது வில்லினில் கோத்து, உனக்கு இமயமலைச் சாரலில் வளரும் உமையம்மையின் மீது நாட்டம் ஏற்பட்டு, வேள்வி வளர்த்து தேவியை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், உன்னை நோக்கி அம்புகள் விடுத்த மன்மதனை விழியால் எரித்து சாம்பல் பொடியாக மாற்றிய இறைவனே, கடற்கரையில் அமைந்துள்ள நாகைக் காரோணத்தில் உறையும் இறைவனே, நான் இறக்கும் தருவாயில் உனது திருநாமாகிய அஞ்செழுத்தும் எனது மனதினில் தோன்றி, நமச்சிவாய என்று நான் சொல்லும் தகுதியை நீ அளித்து அருள வேண்டும். சங்கரனே, அது தான் இந்த உயிரினுக்கு நீ செய்யும் பெரிய உதவியாகும் என்று அப்பர் பிரான் குறிப்பிட்டு இறைவனிடம் வேண்டும் பாடல்.

தூமென் மலர்க்கணை கோத்துத் தீ வேள்வி தொழிற்படுத்த

காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக் காரோணா நின்

நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்

சாமன்று உரைக்கத் தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே

மற்றொரு பாடலில் (4.112.3) அப்பர் பிரான், தனது உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்னரும் தன்னை மறவாமல் தனது உயிரினைப் பாதுகாக்க வேண்டும் என்று கோருகின்றார். இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் உயிர்த் துணையாக ஈசன் விளங்கும் தன்மையை உணர்த்தும் அப்பர் பிரான், இந்த பாடலில் தான் இறந்த பிறகும் உயிருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகின்றார். தீயின் வண்ணத்தில் ஒளிரும் சிவபெருமானே, உனது முன்னிலையில் நான் ஏதாவது உன்னைப் பற்றி கூறினால், அந்த வார்த்தைகள் முகமனாகத் தோன்றலாம்: ஆனால் அவை அனைத்தும் உண்மைகளே தவிர வெற்று புகழ்ச் சொற்கள் அல்ல. உண்மையில் நீ தான் இந்த மூன்று உலகங்களில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் இருந்து காப்பாற்றுகின்றாய். இறக்கும் தருவாயிலும் உன்னைத் தியானம் செய்தவாறு நான் இருப்பேன். அவ்வாறு இருக்கும் எனது உயிர் இந்த உடலினை விட்டு நீங்கிய பின்னர், நீ தான் மறவாமல் இந்த உயிரினை ஆட்கொண்டு, நான் மறுபடியும் பிறவா வண்ணம் முக்திப் பேற்றினை அளித்து, பிறவிப் பிணியிலிருந்து எனக்கு விடுதலை தரவேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இம் மூவுலகுக்கு

அன்னையும் அத்தனும் ஆவாய் அழல் வண்ணா நீ அலையோ

உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததற்பின்

என்னை மறக்கப் பெறாய் எம் பிரான் உன்னை வேண்டியதே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.27.3), தான் இறக்கும் தருணத்தில் பெருமானின் திருநாமம் தனது நினைவுக்கு வரும் வண்ணம், பெருமான் அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் பெருமானிடம் வேண்டுகின்றார். நீள் கயம்=ஆழமான நீர்நிலை; வஞ்சம்=ஐந்து பொறிகளும் மனமும் செய்யும் வஞ்சனை. இறைவனை நினைக்க ஒட்டாது செய்யும் சூழ்ச்சிகள்; வான்=பெரிய; துஞ்சும் போழ்து=இறக்கும் தருவாயில்; இறக்கும் தருவாயில் உடல் பல விதமான வேதனைகளை அனுபவிக்க, மனம் என்ன செய்வதென்று முடிவு செய்ய முடியாமல் திகைக்கும். அந்த தருணத்தில் இறைவனது திருநாமத்தை நினைப்பதற்கோ அல்லது சொல்வதற்கோ உடலின் நிலை ஒத்துழைக்காது. எனவே தான், தான் இறக்கும் தருவாயில் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும் வண்ணம் உடலும் மனமும் உயிருடன் ஒத்துழைக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் வேண்டுகின்றார். எனது நெஞ்சமாகிய ஆழமான நீர்நிலையில், ஐம்பொறிகளும் மனமும் ஏற்படுத்தும் பெரிய சுழல்கள் உள்ளன. அந்த சுழல்கள், வஞ்சனையான வழியில் செயல்பட்டு, அடியேன் இறக்கும் தருவாயில் இறைவனின் திருநாமத்தை சொல்ல விடாமல் தடுக்கும். அத்தகைய வஞ்சக செயல்களில் அகப்பட்டு நிலை தடுமாறாமல், உனது திருநாமமாகிய அஞ்செழுத்து எனது நினைவில் தோன்றுமாறு ஐயாற்றுப் பெருமானே நீவிர் தான் அருள் புரிய வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நெஞ்சம் என்பதோர் நீள் கயம் தன்னுள்ளே

வஞ்சம் என்பதோர் வான்சுழிப் பட்டு நான்

துஞ்சும் போழ்து நின் நாமத் திருவெழுத்து

அஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே

இறைவன், தனது வாழ்நாளின் கடைப்பகுதியில் கண்டுகொண்டு அருள வேண்டும் என்று இங்கே வேண்டும் அப்பர் பிரான், அந்த இறைவன் நம்மை கைவிட்டால் என்ன ஏற்படும் என்ற எச்சரிக்கையினை மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில் (5.90.4) விடுத்து நமக்கு அறிவுறுத்துவதை நாம் உணரலாம். மற்றவர்க்கு நஞ்சாக இருந்த ஆலகால விடம், சிவபிரானுக்கு அமுதமாக மாறியதால், கடலில் எழுந்த நஞ்சமுது என்று நயமாக இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நடலை=துன்பம். சுடலை=சுடுகாடு; சொல் பிரமாணம்= சான்றோர்களின் வாக்கு; முனி பண்டம்=வெறுக்கத் தகும் பொருள். இந்த பாடலும் சிவபிரானின் திருவடிகளை நினையாதோரை குறித்து பாடிய பாடலாகும். நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் அப்பர் பிரான் சிவபிரானின் திருவடியைச் சார்ந்து தான் வாழ்வதால், இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை என்று கூறுகின்றார். நமக்கு இன்பம் தருபவை போல் தோன்றும் எவையும் இறுதியில் நமக்கு துன்பம் பயப்பவையே. மேலும் உலக இன்பங்கள் நிலையானவை அல்ல. உலக இன்பங்களில் மயங்கி நாம் இறைவனை உணராமல், நமது வினைகளை மேலும் பெருக்கிக் கொண்டு, நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப, இறந்த பின்னர் மறுபடியும் பிறந்து உலக வாழ்க்கையில் சிக்குகின்றோம். எனவே தான் இந்த வாழ்வினை நடலை வாழ்வு என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். சிவபிரானை வழிபட்டு நாம் முக்தி அடையும் நிலையை எய்தினால், நமக்கு பிறப்பு இறப்புச் சுழற்சியில் இருந்து விடுதலையும், என்றும் நீங்காத பேரின்பமும் கிடைக்கும். ஆர் என்ற விகுதி கொடுக்கப்பட்டு உடலுக்கு இகழ்ச்சி குறிப்பு ஏற்றப் பட்டுள்ளது. பிறப்பெடுத்த அனைவரும் ஒரு நாள் இறக்க வேண்டியது என்பது உலக நியதி. இதனை சான்றோர்கள் வாக்கு எடுத்துரைக்கின்றது. மேலும் நாமும் நமது வாழ்க்கையில், நம்மைச் சுற்றியிருக்கும் பலர் இறப்பதைக் காணும் போது, அனுபவ பூர்வமாக இந்த உண்மையை உணருகின்றோம். நாணம் இல்லாதவர்களே, துன்பம் தரும் இந்த வாழ்க்கையில் நீங்கள் சாதித்தது என்ன. இறப்பு தவிர்க்க முடியாதது என்பது சான்றோர் வாக்கு. பாற்கடலில் பொங்கி வந்த விடத்தை உண்டு, உலகினை பாதுகாத்த சிவபிரான் கைவிட்டால், நமது உடல் அனைவரும் பழிக்கத் தக்க பொருளாக, இழிந்த பொருளாக மாறிவிடும். உயிரற்ற உடல் அனைவராலும் வெறுக்கத் தக்கது என்பதால், சிவபெருமான் அருளால் இனி வரும் பிறவியையும் அதனால் நிகழப்போகும் இறப்பையும் தடுத்து பேரின்பம் அடைய நாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் நமக்கு அப்பர் பிரான் உணர்த்தும் அறிவுரை.

நடலை வாழ்வு கொண்டு என் செய்தீர் நாணிலீர்

சுடலை சேர்வது சொல் பிரமாணமே

கடலின் நஞ்சமுது உண்டவர் கைவிட்டால்

உடலார் கிடந்து ஊர் முனி பண்டமே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.47.3) இறக்கும் தருவாயில் பெருமானின் திருநாமங்களைச் சொல்லும் வல்லமை தனக்கு இருக்குமாயின், எத்துணை வலிய நோயும் தனக்கு எந்த கெடுதலையும் செய்யாது என்று கூறுகின்றார். போகின்றது. அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவது, பழைய பிறவிகள் முதலாக அந்த பிறவி வரை ஈட்டிய வினைத் தொகைகளையே நோயாக, உயிரினைப் பற்றும் நோயாக குறிப்பிடுகின்றார். அந்த வினைக் குவியல்கள் தானே, இறந்த பின்னர் அந்த உயிருக்கு அடுத்த பிறவி உள்ளதா, இருந்தால் அந்த பிறவி எத்தகையதாக இருக்கும் என்பதை தீர்மானிக்கின்றது. இந்த கருத்தினை உள்ளடக்கியே, தான் இறக்கும் சமயத்தில் இறைவன் அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் என்றும், இறக்கும் சமயத்தில் அவனது திருநாமங்களைச் சொல்லும் வண்ணம் தான் இருக்க வேண்டும் என்றும் அப்பர் பிரான் பல பாடல்களில் வேண்டுகின்றார். வரை=மலை, இங்கே இமயமலை; கழல்= கழலை அணிந்த பெருமானின் திருவடிகள்; அரையன்=அரசன்; மலைமகளாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனே, கங்கை நதியைத் தனது சடையில் தரித்த மணவாளனே, உனது திருநாமங்களை நான் சொல்லிக் கொண்டு இருக்கையில் எனது உயிர் போகும் என்றால், எத்துணை வலிமை மிக்கதாக இருப்பினும் அந்த நோய் என்னை எவ்வாறு தீண்ட முடியும். உள்ளம் கசிந்துருகி கரையுமாறு, கண்களில் நீர் பெருகி, மிகுந்த அன்புடன், உனது திருவடிகளை எப்போதும் நினைத்து வழிபடும் அடியார்களுக்கு அரசனாக விளங்கும் பெருமானே, நீர்வளம் மிகுந்து குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் அமரர்கள் தலைவனே, அஞ்ச வேண்டாம் என்று அடியேனுக்கு ஆறுதல் சொல்வாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வரையார் மடமங்கை பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்றன் நாமம்

உரையா உயிர் போகப் பெறுவேனாகில் உறுநோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே

கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக் காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு

அரையா அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே

இதே கருத்து ஒரு திருமந்திரப் பாடலிலும் கூறப்படுகின்றது. நாம் இறக்கின்ற தருவாயில் சிவபிரானை நினைத்தால் பிறவித்துன்பம் இல்லாமல் நமக்கு பேரின்ப வாழ்வு கிடைக்கும் என்று திருமூலர் கூறுகின்றார். எப்போதும் உடம்பை விட்டு பறந்தோடி விட தயாராக இருக்கும் உயிர்ப்பறவை, நமது உடலை விட்டு பறந்து போவதற்கு முன்னர், நாம் இந்த உலகினில் வாழ்ந்த பயனை அடைய விரும்பினால் ஈசனை நினைக்க வேண்டும் என்று திருமூலர் கூறுவதை நாம் இங்கே காணலாம்.

பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்

இறக்கின்ற காலத்து ஈசனை உள்கும்

சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்

பிறப்பொன்று இலாமையும் பேருலகு ஆமே

திருமூலரும் ஒரு திருமந்திரப் பாடலில், இறக்கும் தருவாயில், சிவபெருமானை நினைத்து அவனது திருப்பாதங்களே சரணம் என்று சொல்லி வாழ்த்தினால், இறைவனது அருள் நமக்கு நிச்சயமாக உண்டு என்று கூறுகின்றார்.

நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று

துஞ்சும் பொழுது உன் துணைத் தாள் சரண் என்று

மஞ்சு தவழும் வடவரை மீதுறை

அஞ்சில் இறைவன் அருள் பெறலாமே

நாம் இறப்பதற்கு முன்னர், இறைவனை வழிபட்டு, உய்யும் வழியினை தேடிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் சில திருமுறைப் பாடல்களை இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். ஒருவர் இறந்த பின்னர், அவரது உடலைக் காண வரும் சுற்றத்தாரும், நண்பர்களும் இறந்தவர், தனது வாழ்நாளில் செய்த செயல்களை (நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள், செய்யத் தவறிய செயல்கள்) விமர்சனம் செய்வதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். தில்லைக் கூத்தனை தரிசிக்காததால், தான் மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கத்தினை நிறைவேற்றாத எவரேனும் இறந்தால், அவரது உடலைக் காண வருவோர், மிகவும் இகழ்ச்சியாக, அவர் செய்யத் தவறிய செயலை, (அதாவது தில்லைக் கூத்தனை தரிசித்து பிறவிப் பயனை அடையாத நிலையை), சுட்டிக்காட்டி சிரிப்பார்கள் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். திருச்சிற்றம்பலம் சென்று நடராஜப் பெருமானின் கூத்தினைக் காணாத ஒருவனின் வாழ்க்கை வீணாகக் கழிந்தது என்பதை உணர்த்தும் வண்ணம், அவ்வாறு தில்லை செல்லாத ஒருவனை மற்றவர்கள் ஏளனமாக பேசுவதை தடுக்கும் வண்ணம், தில்லை சென்று தொழுவாயாக என்று அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல் தில்லைப் பதிகத்தில் (5.01.3) உள்ளது.

அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்

எரிசுற்றக் கிடந்தார் என்று அயலவர்

சிரிச்சு உற்றுப் பல பேசப் படா முனம்

திருச்சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே

புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.79.7) அப்பர் பிரான் உணர்த்தும் அறிவுரையை நாம் இங்கே சிந்திப்போம். உமர்=உம்மைச் சார்ந்த உறவினர்; இறந்த உடல் விரைப்பதற்கு முன்னமே, இறந்தவரின் கைகளையும் கால்களையும் இறுக்கமாக கட்டுவது வழக்கம். அந்த வழக்கத்தினை குறிப்பிட்டு, இறப்பதற்கு முன்னம் புள்ளிருக்குவேளூர் அரனைத் தொழுது வாழ்த்தி உய்யுமாறு அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பதிகம். வீடினன்=இறந்தான்; உங்களது சுற்றத்தார் அனைவரும் ஒன்று கூடி, உமது கைகளையும் கால்களையும் துணியால் கட்டி, குடும்பத் தலைவன் இறந்துவிட்டான் என்று கூறுவதன் முன்னமே, நீர் பொய்மை இல்லாத பெருமானாகிய புள்ளிருக்குவேளூர் இறைவனை, கருநிறம் படிந்த கழுத்தினை உடைய பெருமானை வாழ்த்தி, நலம் பெறுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கையினோடு கால் கட்டி உமரெலாம்

ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர்

பொய்யிலா அரன் புள்ளிருக்குவேளூர்

மை உலாவிய கண்டனை வாழ்த்துமே

திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.82.9) அப்பர் பிரான், நிலையற்ற உடலிலிருந்து உயிர் பிரிவதன் முன்னம், சிவபெருமானின் திருவடிகளை மனதினில் நிலை நிறுத்தி தியானிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். ஓரிரண்டு வாசல்கள் இல்லாமல், ஒன்பது வாசல்கள் கொண்ட உடலினை ஓட்டை மாடம் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஒன்பது வாசல்களைக் கொண்டு ஓட்டை மாடமாகத் திகழும் உடல் நிலையற்றது. என்றேனும் ஒரு நாள் உடலினை விட்டு உயிர் பிரியக் கூடியது. அவ்வாறு உயிரினைப் பிரிந்த பின்னர், சுடுகாட்டில் எரிக்கப்பட்டு வெந்து போவதற்கு முன்னர், உமது மனதினில் இறைவன் சிவபெருமானின் திருவடிகளை நிலை நிறுத்தி, திருவான்மியூர் ஈசனை, புதியதாக மலர்ந்த மலர்களைக் கொண்டு வணங்கி வழிபட்டு, அவனை வலம் வந்து துதித்தால், உங்களது வாட்டங்களைத் தீர்க்கும் கருணை உள்ளம் கொண்டவன் சிவபெருமான் ஆவார்.

ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்

காட்டில் வேவதன் முன்னம் கழலடி

நாட்டி நாண் மலர் தூவி வலம் செயில்

வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.59.4) சுந்தரர், பெருமானை, எந்தை பிரான் என்று அழைக்கின்றார். இந்த திருப்பதிகம் கொடுங்கோளூர் தலத்தில் அருளியது என்றாலும் திருவாரூர் தலத்திற்கு உரிய பதிகமாகவே கருதப்படுகின்றது. முதல் முறையாக சேரமான் பெருமாள் நாயனாரின் விருந்தினராக கொடுங்கோளூர் சென்றிருந்த சுந்தரருக்கு சில நாட்கள் கழிந்த பின்னர், திருவாரூர்ப் பெருமானின் நினைவு வந்தது. தான் இத்தனை நாட்களாக திருவாரூர்ப் பெருமானை மறந்திருந்த தன்மைக்கு வருத்தம் தெரிவித்து, ஆரூரானை மறக்கலும் ஆமே என்று பாடல் தோறும் குறிப்பிட்டு பாடிய பதிகம். பின்னர் இந்த கருத்தினை தனது நண்பராகிய சேரமான் பெருமாள் நாயனாருக்கும் தெரிவித்து, அவரது அனுமதியுடன், அவரிடம் விடைபெற்று செல்கின்றார். வாழும் காலத்தில், பெருமானை எப்போதும் பணிந்து வணங்கி வழிபடும் அடியார்கள், பெருமானின் திருவருளால், பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு முக்தி உலகம் சென்றடைந்து என்றும் அழியாத பேரானந்தத்தில் ஆழ்கின்றனர். கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கிடைத்தும், அதனைப் பயன்படுத்திக் கொண்டு உய்வினை அடையாத மனிதர்கள் இறந்தால், அந்த மனிதனின் பிணத்தைக் காணும் உறவினரும் நண்பர்களும், முக்தி அடையும் வழியை நாடாமல் மீண்டும்மீண்டும் பிறவி எடுப்பதற்காக இறந்து விட்டானே என்று ஏளனமாக சிரிப்பார்கள். அவ்வாறு பலர் சிரிக்கும் நிலைக்கு ஆளாகாமல், வாழ்நாளில் பெருமானை வழிபட்டு உய்வினை அடைய வேண்டும் என்று சுந்தரர் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

செத்த போதினில் முன்னின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்

வைத்த சிந்தையுண்டே மனமுண்டே மதியுண்டே விதியின் பயனுண்டே

முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறுடையானை

அத்தன் எந்தை பிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலுமாமே

பதினோராம் திருமுறையில் க்ஷேத்திரத் திருவெண்பா தொகுப்பில் காணப்படும் ஐயடிகள் காடவர் கோனின் பல பாடல்கள், ஒத்த கருத்தினை கூறுவதை நாம் இங்கே காணலாம். பழைய வேட்டியின் ஓரத்தில் உள்ள கரையினைக் கிழித்து இறந்தோரது கால் பெருவிரல்கள் இரண்டையும் இணைத்துக் கட்டியும், மாலை அணிவித்தும், கண்ணுக்கு மை எழுதியும், புதிய புத்தாடையால் மூடியும் பிணத்திற்கு சிங்காரம் செய்யும் பழக்கம் இங்கே உணர்த்தப் படுகின்றது. நீ உயிரிழந்து, உனது இறந்த உடலை பலவிதமாக சிங்காரித்து பலர் கூடி அழுவதன் முன்னம் கோடிகா சென்று உய்வினை நாடுவாய் என்று நமக்கு அறிவுறுத்தும் பாடல்.

காலைக் கரை இழையால் கட்டித் தன் கை ஆர்த்து

மாலை தலைக்கு அணிந்து மை எழுதி மேலோர்

பருக்கோடி மூடி பலர் அழா முன்னம்

திருக் கோடிகா அடை நீ சென்று

இறந்து விட்டதை எவ்வாறு உறுதி செய்கின்றார்கள் என்பது கீழ்க்கண்ட பாடலில் உணர்த்தப் படுகின்றது. உடலில் துடிப்பு உள்ளதா அல்லவா என்பதை உணர்வதற்காக தொட்டும் தடவியும் உணரும் சுற்றத்தார், உயிர் பிரிந்து விட்டது என்பதை அறிந்த பின்னர், இந்த பிணத்தை எடுங்கள், இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும் நிலை நமது உடலுக்கு வருவதன் முன்னம் நெடுங்களத்து இறைவனின் திருப்பாதங்களை நினைக்குமாறு இந்த பாடலில் அறிவுரை கூறப்படுகின்றது.

தொட்டுத் தடவி துடிப்பு ஒன்றும் காணாது

பெட்டப் பிணம் என்று பேரிட்டுக் கட்டி

எடும் களத்தா என்னா முன் ஏழை மட நெஞ்சே

நெடுங்களத்தான் பாதம் நினை

சிராப்பள்ளி இறைவனை, நமது உயிர் போகுமுன்னர் நினைக்க வேண்டும் என்று உணர்த்தும் பாடல் இது. நேற்றே போன உயிர், தனது கட்டுகளை விட்டு நாற்றம் எடுக்கின்ற படியால், உறவினர்களே இந்த உடல் இங்கே இருப்பதை நாம் சகிக்க முடியாது எனவே அடக்கம் செய்ய வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்லப்படும் நிலை நமது உடலுக்கு வருவதன் முன்னர், சிவபெருமானின் திருவடிகளைப் பற்றுமாறு அறிவுறுத்தும் பாடல்.

கழிந்தது நென்னற்று கட்டுவிட்டு நாறி

ஒழிந்தது உடல் இரா வண்ணம் அழிந்தது

இரா மலையா கொண்டு போ என்னாமுன் நெஞ்சே

சிராமலையான் பாதமே சேர்

நரக வேதனையிலிருந்து நாம் தப்ப வேண்டுமென்றால், பெருமானின் புகழினைப் பாடுவது தான் ஒரே வழி என்று திருமுறைப் பாடல்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றன. குடந்தை காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.6) திருஞான சம்பந்தர், தனது அடியார்களை இயமன் நெருங்காத வண்ணம் பெருமான் பாதுகாப்பார் என்று கூறுகின்றார். தனது அடியார்களை காலன் அடையாத வண்ணம் சிவபெருமான் காப்பார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுவதன் மூலம், சிவனடியார்களை மரணம் நெருங்காது என்று தவறாக பொருள் கொள்ளலாகாது. பிறப்பெடுத்த எவரும் இறப்பிலிருந்து தப்ப முடியாது. உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர் என்ன நடைபெறும் என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு உயிரும், அவரது உடலிலிருந்து பிரிக்கப் பட்ட பின்னர், அவரது உயிரினைத் தாங்கிய சூக்கும உடல் நரகத்திற்கும் சொர்கத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, அந்த பிறவியில் சேர்த்துள்ள வினைகளின் ஒரு பகுதியின் பயனை நுகர நேர்கின்றது. அவ்வாறு நரகத்தில் கழிக்க வேண்டிய வினைகளின் தன்மைக்கு ஏற்ப இயமன், தனது பணியாட்கள் மூலம் அந்த தண்டனைகளை செயல்படுத்துகின்றான். இயமனையோ அவனது தூதர்களையோ, அடியார்கள் பால் நெருங்க இயலாத வண்ணம் பெருமான் காப்பதால், பெருமானின் அடியார்களுக்கு மரணம் ஏற்படாது என்று தவறாக பொருள் கொள்ளக் கூடாது. அவர்களது உயிர் உடலிலிருந்து பிரியும் தருணத்தில், பெருமானின் கணங்கள், அந்த அடியார்களை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்று பெருமானின் திருவடிக்கீழ் சேர்ப்பார்கள். அத்தகைய அடியார்கள், இயமனால் அழைத்து செல்லப்பட்டு நரகம் சொர்க்கம் ஆகியவற்றில் ஆழ்ந்து துன்பம் அடைய மாட்டார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த தன்மையே இந்த பாடலில் காலன் அடையா வண்ணம் என்று குறிப்பிடப் படுகின்றது. அதாவது நரக வேதனைகளிலிருந்து தப்பிக்கலாம் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும்.

மூப்பூர்=முதுமைப் பருவம் அடையும் நிலை; மூப்பூர்=மூப்பு நிலை ஊர்ந்து வந்து நம்மை அடையும் நிலை; ஊர்தல் என்பது மெதுவாக சென்றடையும் தன்மையை உணர்த்துகின்றது. எவரும் ஒரே நாளில் மூப்பு நிலையை அடைவதில்லை. நாம் உணரமுடியாத நிலையில், சிறிது சிறிதாக மூப்புத் தன்மை ஒவ்வொரு உயிரையும் சென்றடைகின்றது. இந்த தன்மை தான் இங்கே குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு முதுமைக் காலம் நம்மை வந்தடைந்து நமது உடல் நலியும் போது நம்மை காப்பவர் சிவபெருமான் என்று சிலரால் விளக்கம் அளிக்கப் படுகின்றது. ஆனால் சிவபெருமான் நாம் மூப்படையும் போது மட்டும் தானா, நமக்குத் துணையாக இருந்து காப்பாற்றுகின்றான். மணிவாசகர், திருவாசகம் போற்றித் திருவகலில் குறிப்பிட்ட வண்ணம், நாம் கருவில் உருவாகத் தொடங்கும் நாளிலிருந்து, சிறந்த குழந்தையாக இருந்த போதும், காளைப் பருவம் அடைந்த போதும், இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் போது, மற்ற பல தருணங்களிலும் நம்மை பலவித ஆபத்துகளிலிருந்தும் காத்துக் கொண்டிருப்பவர் சிவபெருமான் அல்லவா. பெருமான் உள்ளிருந்து இயக்குவதால் தானே அனைத்து உயிர்களும் இயங்குகின்றன. எனவே வயது முதிர்ந்த போது இறைவன் நம்மை காப்பற்றுகின்றான் என்ற விளக்கம் அவ்வளவு பொருத்தமாக இல்லை, மூப்பூர் என்ற சொல்லுக்கு சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் வானில் ஊர்ந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் கோட்டை என்று பொருள் கூறுகின்றார். எப்போது கீழே இறங்கி எந்த ஊரினை நசுக்கி அழிக்கலாம் என்ற எண்ணத்துடன் செயல்படுவதால் இந்த கோட்டைகள் மெதுவாக பறந்து செல்கின்றன என்று கூறினார் போலும். நெதி=நியதி; நெதியார் விதி=நியதியின் வழியின் நடக்கும் செயல்கள்; எந்த முறையில் கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்று அவர்கள் வரம் பெற்றிருந்தார்களோ அதே வழியில்; முன்னே=பண்டைய காலத்தில்; வாளி=காற்று; வளி என்ற சொல் வாளி நீண்டது. பார்த்தன் என்பது அர்ஜுனனின் பத்து பெயர்களில் ஒன்று; தீர்ப்பார் என்ற சொல்லினை அடுநோய் அவலம் என்ற சொல்லின் பின் வைத்து பொருள் கொள்ள வேண்டும். அடுதல்=கொல்லுதல்; அடுநோய்=உடலினை வருத்தி கொல்லும் நோய்; வானில் ஊர்வது போன்று மிகவும் மெதுவாக பறந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், எந்த முறையில் அந்த கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்று திரிபுரத்து அரக்கர்கள் வரம் கேட்டுப் பெற்றார்களோ, அதே முறையில், அந்த மூன்று கோட்டைகளையும் ஒரே நேர்கோட்டினில் வரச் செய்த பெருமான், அக்னி காற்று திருமால் ஆகிய மூவரும் பொருத்தப்பட்ட அம்பினை தான் ஏந்தியிருந்த வில்லினில் கோத்து, அந்த அம்பினை விடுத்ததன் மூலம் அந்த கோட்டைகளை எரித்து அழித்தவர் பெருமான். அவர் பாசுபதம் அத்திரம் வேண்டி தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனின் வலிமையை பரிசோதித்த பின்னர் அவனுக்கு பாசுபத அத்திரம் கொடுத்து அருளினார். இவ்வாறு ஆற்றலும் கருணையும் ஒருங்கே உடைய பெருமான், அழகும் இளமையும் பொருந்தியவராக உறைகின்ற குடந்தை நகரினில் உள்ள, குடந்தைக் காரோணம் என்ற தலத்திலும் உறைகின்றார். அவர் தன்னைப் பணிந்து வணங்கும் அடியார்களை வருத்தி கொல்லும் தன்மை வாய்ந்த கொடிய நோய்கள் அணுகாத வண்ணமும் வினைகள் அவர்களை வருத்தி கீழ்மை நிலையில் ஆழ்த்தாத வண்ணமும் காலன் அவர்களைச் சென்றடைந்து துன்பம் இழைக்காத வண்ணமும் காப்பாற்றுகின்றார். அவரே காரோணத்தார் என்று அழைக்கப் படுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மூப்பூர் நலிய நெதியார் விதியாய் முன்னே அனல் வாளி

கோப்பார் பார்த்தன் நிலை கண்டருளும் குழகர் குடமூக்கில்

தீர்ப்பார் உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமைக்

காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.7.9) சிவபெருமானின் திருவடிகளை அடைந்த அடியார்களை காலன் நெருங்க மாட்டான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அத்தகைய அடியார்களின் அடியார்களைக் கண்டு கூற்றுவன் அகன்று சென்று விடுவான் என்றும், பக்குவமடைந்த உயிர்களுக்கு புகலிடமாகிய சிவகதி அவர்களை சென்றடையும் என்றும் கூறுகின்றார். அடியார்களின் அடியார்களுக்கே மேலே குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும் என்றால், அடியார்களுக்கும் அத்தகைய பலன் கிடைக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ. செடிகொள் நோய்=துன்பம் தரும் நோய்கள்; திறம்பார்=தீய வினைகளின் தாக்கத்தால் ஏற்படும் துன்பங்களால் மனம் மாறுபடாமல் தொடர்ந்து இறைவனையே துதிப்பவர்கள்; செறும் தீவினை=வருத்தும் தீய வினைகள்;

செடிகொள் நோயின அடையார் திறம்பார் செறு தீவினை

கடிய கூற்றமும் கண்டகலும் புகல் தான் வரும்

நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திருவாஞ்சியத்து

அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.48.5) திருஞானசம்பந்தர், நீலகண்டரின் (ஆல மிடற்றான்) அடியார்கள் என்றால் இயமனது தூதர்கள், அத்தகைய அடியார்களைத் தொடர்வதற்கு அச்சம் கொள்வார்கள் என்று கூறுகின்றார். வேலை=கடல்; கானல்=கடற்கரை சோலை;தண்=குளிர்ந்த; மலி=நிறைந்த; விள்ளுதல்=உடைத்தல்; அடர்த்தல்=கொல்லுதல், உயிரைக் கவர்தல்; வெம் காலன்=கொடிய காலன்; காலன் உயிரினை பறிக்க வரும்போது, பாலன் என்றோ இளையவன் என்றோ நோய்வாய்ப் பட்டவன் என்றோ பாராது இரக்கம் ஏதுமின்றி, தனது கடமையை செய்வதால் கொடிய காலன் என்று திருஞானசம்பந்தர் அவனை அழைக்கின்றார். பெருமானின் அடியார்களை நீலகண்டரின் அடியார்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுவதில் ஒரு நயம் இருப்பதை நாம் உணரலாம். பிரமன் திருமால் உட்பட தேவர்கள் அனைவரையும் அச்சுறுத்தி பல திசைகளிலும் நிலை குலைந்து ஓடச் செய்த நஞ்சு, பெருமான் உட்கொண்ட பின்னர் தனது வலிமையை, உட்கொண்டவரின் உயிரினை மாய்க்கும் தன்மையை இழந்தது போன்று, பெருமானின் அடியார்களை நெருங்கும் இயமனின் தூதுவர்கள் தங்களது வலிமை இழந்து விடுவதால் அச்சம் கொள்கின்றனர் என்ற செய்தி மிகவும் அழகாக இங்கே உணர்த்தப் படுகின்றது. சுவேதகேது என்ற சிறுவனின் உயிரைப் பறிக்க வந்த இயமனின் தூதர்களை, பெருமான் தண்டித்து அந்த சிறுவனுக்கு நீண்ட ஆயுள் கொடுத்தார் என்று தலபுராணம் உணர்த்துகின்றது. நிறைந்த கடல் நீர் இருப்பதால் குளிர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருவெண்காடு தலத்தில் உள்ள இறைவனின் திருவடிகளில், நறுமணம் நிறைந்த மாலைகளும் நிறைந்த சந்தனமும் தூவி வழிபட்ட நன் மறையவனாகிய சுவேதகேதுவின் மீது தனது பாசத்தை வீசி அவனது உயிரினைக் கவர முயற்சி செய்த இயமனை இறைவன் காலால் உதைத்து அழித்த பின்னர், திருநீலகண்டரின் அடியார்கள் என்று இயமனின் தூதுவர்கள் அவரிடமிருந்து அஞ்சி விலகுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வேலைமலி தண் கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்

மாலை மலி வண் சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்

மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர்

ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.59.7) திருஞானசம்பந்தர், பெருமானின் திருநாமங்களை சொல்லி பக்தியுடன் பெருமானைத் தொழுதேத்தும் அடியார்கள் பால் கொடிய கூற்றுவன் சென்றடைய மாட்டான் என்று கூறுகின்றார். புயல்=மேகம், மழை; புயலார் பூமி= மேகங்கள் பொழியும் மழையால் வளம் பெறுகின்ற பூமி; புயல் என்பது எப்போதோ ஒரு முறை நிகழ்கின்ற நிகழ்ச்சி என்பதால், இங்கே புயல் என்று பொருள் கொள்ளுதல் பொருந்தாது. கயலார் கண்ணார்=மீன் போன்று அழகிய கண்களை உடைய மகளிர்; பண்ணார் ஒலி=பண்ணுடன் பொருந்திய பாடல்கள்; எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்யுதல் பயிலுதல் என்று சொல்லப் படுகின்றது. நிலவுலகினில் உள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் பெருமான் தொடர்ந்து உறைவதால், பயில்வான் என்று குறிப்பிடப் படுகின்றார். இந்த பதிகம் சீர்காழி தலத்தின் மீது பாடிய பதிகம் என்பதால் காழிப் பயில்வான் என்று கூறுகின்றார்.

புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ் மல்கக்

கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழி

பயில்வான் தன்னைப் பத்தி ஆரத் தொழுது ஏத்த

முயல்வார் தம் மேல் வெம்மைக் கூற்றம் முடுகாதே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (2.86.8) திருஞானசம்பந்தர் காலன் நம்மைக் கண்டு அஞ்ச வேண்டும் என்று நாம் விரும்பினால், நாம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். ஒவ்வொரு உயிரும் வாழவேண்டிய நாளின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் இறைவன், அவ்வாறு குறிப்பிடப்பட்ட நாளில் அந்த உயிரையும் உடலையும் பிரிக்கும் கடமையை இயமனிடம் ஒப்படைக்கின்றான். இந்த கடமையை அஞ்சாமல் செய்வதற்கு தேவையான ஆற்றலும் இயமனுக்கு அளிக்கப் படுகின்றது. இவ்வாறு தனது கடமையை நிறைவேற்றுவதில் அஞ்சாமல் செயல்படும் காலன், சிவனடியார்களின் அருகில் வருவதற்கு அஞ்சுவான் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. முன்னமே வாழ்க்கை முடிவடையும் நாள் என்று இறைவன் விதித்த நாளில், இயமனின் தூதுவர்களுக்கு பதிலாக சிவகணங்கள் வந்து உடலிலிருந்து உயிரினை பிரித்து சிவலோகம் அழைத்துச் செல்வார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும், இழிபாடு=அழிவு; எனவே நீங்கள் நறுமணம் மிகுந்த மலர்களைத் தூவி பெருமானை வழிபட்டு, கூற்றுவன் உங்களை அழைத்துச் சென்றால் நீங்கள் எதிர்கொள்ள இருந்த நரக வேதனையிலிருந்து விடுதலை பெறுவீர்களாக என்று உலகத்தவர்களுக்கு திருஞானசம்பந்தர் அறிவுரை கூறும் பாடல். உரு வரைகின்ற நாள்=உடலும் உயிரும் ஒன்று சேர்ந்து இருக்கும் காலம்; அழிவு இல்லாத கடலாலும் அரிய மலைகளாலும் சூழப்பட்டுள்ள இலங்கையின் தலைவனாகிய இராவணனின் வீரம் அழியும் வண்ணம் அவனது அகன்ற கைகளும் பத்து முடிகளும் நசுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை ஊன்றி மகிழ்ந்த சிவபெருமான் உறையும் செல்வச் செழிப்பு மிகுந்த திருநாரையூர் தலத்தினை நீங்கள் கைகளால் தொழுது வணங்குவீர்களாக. அப்படிச் செய்தால், உங்களது உடலுடன் உயிர் பொருந்தி இருக்கும் நாட்கள் என்று விதிக்கப்பட்ட காலம் முடிவுக்கு வரும் தருணத்தில், கூற்றுவன் உங்களது அருகில் வருவதற்கு அச்சம் கொள்வான்; அதற்கு பதிலாக, உமது வாழ்வு முடிவடையும் தருணத்தில் சிவகணங்கள் உம்மை நெருங்கி உம்மை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வர். எனவே நீங்கள் நறுமணம் மிகுந்த மலர்களைத் தூவி பெருமானை வழிபட்டு, கூற்றுவன் உங்களை அழைத்துச் சென்றால் நீங்கள் எதிர்கொள்ள இருந்த நரக வேதனையிலிருந்து விடுதலை பெறுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சுமாதல் உற நீர்

மருமலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்மின் இழிபாடு இலாத கடலின்

அருவரை சூழ் இலங்கை அரையன் தன் வீரம் அழியத் தடக்கை முடிகள்

திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே

மாந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.110.9) திருஞானசம்பந்தர், பெருமானைப் புகழ்ந்து பாடி, வணங்கினால் கூற்றுவன் நம்மை வருத்த மாட்டான் என்று கூறுகின்றார். நித்திலம்=முத்து; தொத்து=கொத்து; நிறை=வரிசை; ஆலியா=ஆரவாரம் செய்து; நிரந்து வந்து=நிறைவாக வந்து; கோலம்=சிவக்கோலம்; திருநீறு அணிந்து உருத்திராக்கம் தரித்தவாறு இருத்தல்; நலிதல்=வருத்துதல்; இந்த பாடலில் திருமால் பிரமன் ஆகிய இருவரும் இறைவனின் திருவடிகளைத் தேடியும் காணமுடியாமல் திகைத்ததாக சொல்லப் படுகின்றது. பிரமனைப் பற்றிய குறிப்பும் இந்த பாடலில் இருப்பதால், பிரமன் இறைவனின் திருமுடியைக் காண முடியாமல் வருந்தியதையும் குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். சிறந்த நீல மணிகளையும், முத்துக்களையும், மிகவும் அதிகமான தொகையில் வரிசை வரிசையாக பல்வேறு மலர்களையும், தனது நீர்ப்பெருக்கு நிறையும் வண்ணம் அடித்துக் கொண்டு ஆரவாரத்துடன் பாயும் காவிரி நதியின் வடகரையில் உள்ள மாந்துறை தலத்தினில் எழுந்தருளியுள்ள இறைவனின் திருவடிகளையும் முடியையும் முறையே திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாமல் பண்டொரு நாள் திகைத்தனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவடிகளை, திருநீறு அணிந்தும் உருத்திராக்கம் தரித்தும் வணங்கி ஆடியும் பாடியும் புகழ்ந்து பாடும் அடியார்களை கூற்றுவன் வருத்த மாட்டான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நீலமாமணி நித்திலத் தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி

ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை

மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணை நாளும்

கோலம் ஏத்தி நின்று ஆடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே

நல்லவர் தீயவர் என்று அவரது குணங்களைப் பாராமல் ஐந்தெழுத்து மந்திரத்தினை விருப்பத்துடன் உச்சரிப்பவர் எவராக இருந்தாலும் அவர்க்கு முக்தி நிலைக்கு செல்லும் வழியைக் காட்டுவது திருவைந்தெழுத்து என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் (3.22.4) கூறுகின்றார். நல்லவர் தீயவர் என்றுபாகுபடுத்தாமல், அஞ்செழுத்து நாமத்தை விருப்பத்துடன் சொல்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் செல்லுதற்கு உரிய நன்னெறியை, முக்தி நெறியை காட்டுவது அஞ்செழுத்தாகும். மேலும் அவர்கள் இறக்கும் தருவாயில், இயமனது தூதர்கள் நரகத்திற்கு அந்த உயிரை கொண்டு செல்ல முயற்சி செய்தால், அதனைத் தடுத்து அவர்களை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்கள் எதிர்கொள்ளவிருந்த நரக வேதனையை தவிர்ப்பதும் அஞ்செழுத்தே என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நல்லவர் தீயர் எனாது நச்சினர்

செல்லல் கெடச் சிவமுக்தி காட்டுவ

கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து

அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே

ஏழு நரகங்கள் செல்லும் அளவுக்கு பாவங்கள் புரிந்தவராயினும் அவர்களுக்கும் நமச்சிவாய மந்திரம் நன்மையை அளிக்கும் என்று கூறும் திருஞானசம்பந்தப் பெருமானின் பாடலும் இங்கே நினைவு கூறத் தக்கது. இந்த பாடல் திருஞானசம்பந்தர் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடல் (3.49.7) ஆகும். நரகம் ஏழ் புக நாடினர்=தீய நெறிகளில் சென்று, தீய செயல்களை செய்து, தாமே நரகம் செல்லும் வழியை தேடிக் கொண்டவர்; வரதன்=வரம் கொடுப்பவன்; ஏழு நரகங்களில் ஆழும் தன்மைக்கு உரிய கொடிய பாவங்கள் பல செய்தவராயினும், தனது அடியார்களுக்கு வரங்களை அள்ளித் தரும் தன்மையனாகிய பெருமானின் திருநாமம் திருவைந்தெழுத்தை உரைத்தால், அவர்கள் சிவலோகம் சென்றடைந்து உருத்திர கணங்களுடன் சேர்ந்து இருக்கும் பேற்றினை பெறுவார்கள். இவ்வாறு வரதன் என்று அழைக்கப் படுவதற்கு மிகவும் பொருத்தமானவராக இருக்கும் பெருமானின் திருநாமம் நமச்சிவாய என்பதாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்

உரை செய்வாயினர் ஆயின் உருத்திரர்

விரவியே புகுவித்திடும் என்பரால்

வரதன் நாமம் நமச்சிவாயவே

கலிக்காமூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.105.4) திருஞானசம்பந்தர், பெருமானின் அடியார்களைத் தங்களது மனதினில் நினைத்துப் போற்றாத மனிதர்கள், இயமனின் தூதர்களுக்கு அடிமைகளாக மாறி அவர்களது கட்டளைகளுக்கு அடிபணிந்து நரகத்தில் பல துன்பங்களையும் அனுபவிப்பார்கள் என்று கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம், பெருமானின் அடியார்களை நாம் மதித்து போற்ற வேண்டும் என்றும், அவ்வாறு போற்றுவதன் மூலம், நரக தண்டனைகளிலிருந்து தப்பிக்கலாம் என்றும் உணர்த்தப் படுகின்றது. மேலும் பெருமானின் அடியார்கள் பெறவிருக்கும் பேறும் சொல்லாமல் சொல்லப் படுகின்றது. ஊழி என்ற சொல்லுக்கு நெடுங்காலம் என்று பொருள் கொண்டு, மிகவும் பழமையான தலம் கலிக்காமூர் என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். குன்றுகள் போன்று உயர்ந்த அலைகளால் தள்ளப்பட்டு அழகும் குளிர்ச்சியும் உடைய முத்துக்கள் வந்து சேரும் கடற்கரையையும், எருமைக் கூட்டங்கள் தங்களது கன்றுகளுடன் தத்தமது இருப்பிடங்கள் சென்று சேரும் காட்சியை உடையதும் ஆகிய அழகு பொருந்திய கலிக்காமூர் தலத்தில், ஊழிக் காலங்களையும் கடந்து வாழும் பெருமான் உறைகின்றார். அவரது பெருமையினை நன்கு உணர்ந்து, அவரது திருவடிகளைப் புகழ்ந்து வணங்கும் அடியார்களை நினைத்து மதித்து வழிபடாத மனிதர்கள், கீழ்மக்கள் ஆவார்கள்; மேலும் அவர்கள் இயமனுக்கு தொண்டர்களாக விளங்கி, அவனது கட்டளையை நிறைவேற்றும் வண்ணம், அவன் தரும் தண்டனைகளை ஏற்றுக் கொண்டு நரகத்தில் இடர்படுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

குன்றுகள் போல் திரை உந்தி அந்தண் மணியார் தர மேதி

கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவினார் கலிக்காமூர்

என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி

நின்று உணர்வாரை நினைய கில்லார் நீசர் நமன் தமரே

நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.70.7) அப்பர் பிரான், தனக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டு தொண்டு செய்யும் அடியார்கள் நரகத்தில் வீழ ஒட்டாமல் பெருமான் காக்கின்றார் என்று கூறுகின்றார். அரவித்து=மிகுந்த ஒலியுடன், ஆரவாரத்துடன். வீடிலாத் தொண்டர்=விடுதல் இல்லாத தொண்டர்: சிவபெருமானின் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுச் செல்ல விருப்பமின்றி என்றும் அவருக்குத் தொண்டராக வாழும் அடியார்கள்: வாசுகி என்ற பாம்பினை, மந்தர மலையில் சுற்றி, அமுதத்தினை எதிர்பார்த்து மிகுந்த ஆரவாரத்துடன் தேவர்களும் அசுரர்களும் ஒன்று கூடி, பாற்கடலை கடைந்தபோது, கொடிய ஆலகால நஞ்சு எழுந்தது: அனைவரையும் கொடிய நஞ்சின் தாக்கத்திலிருந்து விடுவிக்கும் பொருட்டு, அந்த நஞ்சினை அமுதம் அருந்துவது போன்று மிகவும் விருப்பத்துடன் உண்டவர் சிவபெருமான். இத்தகைய பெருமையினை உடைய சிவபெருமானுக்கு அடிமையாக எப்போதும் இருந்து கொண்டு, அவருக்குத் தொண்டு செய்யும் அடியார்களுடன், ஒன்று கலந்து இருக்கும் சிவபெருமான், அந்த அடியார்கள் நரகத்தில் வீழ ஒட்டாமல் காப்பாற்றுகின்றார். அவர் தான் நனிபள்ளி தலத்தில் உறையும் இறைவன் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி

அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார்

விரவித் தம் அடியராகி வீடிலாத் தொண்டர் தம்மை

நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.92.15) அப்பர் பிரான், பெருமான் தனக்கு திருத்தொண்டு செய்யும் அடியார்கள் மீது அன்பு கொள்வதால், அத்தகைய அடியார்களை இயமனின் தூதர்கள் நெருங்கினால், பெருமானின் திருவடிகள், அவர்களை துரத்தி ஓடச் செய்யும் என்று கூறுகின்றார். மாதிரம்=திசை: முகடு=தலை, உச்சி; ஆதரம்= அன்பு; வீக்குதல்=கட்டுதல்: அதாவது, பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து, இயமனின் தூதுவர்கள் நம்மை நெருங்க வேண்டிய அவசியம் இல்லாமல் செய்வன என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. ஐயாறனின் திருவடிகள் திசைகளாகவும், வானுலகமாகவும், மண்ணுலகமாகவும், மலையின் உச்சிகளாகவும் விளங்குகின்றன. அந்த திருவடிகளை மென்மையான கழல்கள் மற்றும் கச்சும் அழகு செய்கின்றன. மேலும் அந்த திருவடிகள், இயமனின் தூதுவர்கள் நம்மை இனிமேல் அணுகா வண்ணம், நமக்கு பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை அளிக்கின்றன: தமது துன்பங்கள் தீர வேண்டும் என்று இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார்களுக்கு, இந்த திருவடிகள் ஆதாரமாக இருக்கின்ற நிலையை நாம் காணலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மாதிரம் மாநிலம் ஆவன வானவர் மா முகட்டின்

மீதன மென் கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார்

தூதரை ஓடத் துரப்பன துன்பறத் தொண்டு பட்டார்க்கு

ஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே

சமணர்களின் சூழ்ச்சியால் கல்லுடன் பிணைக்கப்பட்டு நடுக்கடலில் தள்ளிவிடப்பட்ட அப்பர் பிரான், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தினை பாட, அவருடன் பிணைக்கப் பட்டிருந்த கல்லே தெப்பமாக மாற, கடலில் மூழ்காமல் அந்த கல்லின் மீது அமர்ந்தவாறு திருப்பாதிரிப் புலியூர் தலத்தின் அருகே கரையேறுகின்றார். அதற்கு முன்னர் சமணர்கள் தன்னைக் கொலை செய்வதற்கு செய்த சூழ்ச்சிகளிலிருந்து, நீற்றறையில் அடைக்கப் பட்டது, தலையினை இடறித்தள்ள யானையை ஏவியது, விடம் ஊட்டியது ஆகிய சூழ்ச்சிகளால், தனது உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாமல் காத்து அருள் புரிந்த இறைவனின் கருணையை நினைத்த வண்ணம் ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகத்தினை பாடுகின்றார். இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் (4.94.3) இறைவன் மிகுந்த விருப்பத்துடன் தனது உள்ளத்தில் உறைகின்ற காரணத்தால், தன்னை எந்த துன்பமும் அணுகாது என்றும் தான் இயமனுக்கும் அஞ்சாத நிலையில் இருப்பதாகவும் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகின்றார். பெருமான் பால் அவர் வைத்திருந்த அளவற்ற பற்று அவரிடம் எத்தைகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை நாம் உணரலாம். விடையான்= நந்தியை வாகனமாகக் கொண்ட சிவபெருமான். அடியார்க்கடியேன் என்ற பொருளில் அடியார் அடியோம் என்று தன்னைக் குறிப்பிடுவது, சுந்தரரின் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று தொடங்கும் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தை நமக்கு நினைவூட்டுகின்றது. அருளாளர்கள் எவ்வளவு அடக்கமாக, மற்ற அடியார்களின் அடியார்களுக்கும் அடியானாக இருக்கும் தன்மையை விரும்புகின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அடியார்களின் அடியார்களுக்கும் இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. இதன் மூலம், அடியார்களையும் அவர்களது அடியார்களையும் நாம் போற்றவேண்டும் என்ற செய்தியும் உணர்த்தப் படுகின்றது. நந்தியை வாகனமாக உடைய சிவபெருமான் எனது உள்ளத்தினில் இருக்கின்றான். எனவே அவனது அடியார்களாகிய எங்களுக்கு துயரங்கள் கிடையாது; தீவினைகள் வந்து சேராது; நாங்கள் இயமனுக்கு அஞ்சமாட்டோம். பிரமனைப் போன்று வேதங்களில் திறமை பெற்ற அந்தணர்கள் வாழ்வதும், தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிலைகள் கொண்டதும் ஆகிய திருப்பாதிரிப்புலியூர் தலத்தில் உறையும் சிவபெருமானின் அடியார்களுக்குத் தொண்டர்களாகிய எங்களால் செய்ய முடியாத அரிய செயல் ஏதும் இல்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தா னினிநமக்கிங்
கடையா வவல மருவினை சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்
உடையா னடிய ரடியடி யோங்கட்கு அரியதுண்டே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.1.6) அப்பர் பிரான் தேவர்களும், ஞானிகளும், சிவபெருமானைத்தொழுது தங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்ளும் இடம் தில்லைச் சிற்றம்பலம்; தங்களது பண்பினாலும் சிவபெருமானுக்குச் செய்யும் தொண்டினாலும், மேலோர்களாகக் கருதப்படும் தில்லை வாழ் அந்தணர்கள் வாழும் இடம் தில்லைச் சிற்றம்பலம்; இத்தகைய சிறப்பு வாய்ந்த சிற்றம்பலத்தில், நடனம் ஆடும் சிவபெருமானது திருவடிகளைத் தொழுவதற்காக செல்லும் மேன்மை பொருந்திய அடியார்களை, காலன் அணுக மாட்டான் என்று கூறுகின்றார். சிட்டர் என்ற சொல் பல பொருள்பட இங்கே ஆட்கொள்ளப் பட்டுள்ளது. சித்தர் ஞானிகள் என்று ஒரு பொருள். முதன்மையானவர் என்ற பொருள் கொண்ட ச்ரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபாக, இரண்டாவது அடியிலும் மூன்றாவது அடியிலும் வருகின்றது. மெய்ஞ்ஞானிகள் என்ற பொருளில் நான்காவது அடியில் காணப்படுகின்றது. தேவர்களும், ஞானிகளும், சிவபெருமானைத் தொழுது தங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்ளும் இடம் தில்லைச் சிற்றம்பலம்; தங்களது பண்பினாலும் சிவப்பெருமானுக்குச் செய்யும் தொண்டினாலும், மேலோர்களாகக் கருதப்படும் தில்லை வாழ் அந்தணர்கள் வாழும் இடம் தில்லைச் சிற்றம்பலம்; இத்தகைய சிறப்பு வாய்ந்த சிற்றம்பலத்தில், நடனம் ஆடும் சிவபெருமானதுதிருவடிகளைத் தொழுவதற்காக செல்லும் மேன்மை பொருந்திய அடியார்களை, காலன் அணுக மாட்டான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சிட்டர் வானவர் சென்று வரம் கொளும்

சிட்டர் வாழ் தில்லைத் சிற்றம்பலத்து உறை

சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச்

சிட்டர் பால் அணுகான் செறு காலனே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.24.3) இயமனின் தண்டனைகளிலிருந்து தங்களது உயிர் விடுதலை பெற வேண்டும் என்று விரும்புவோர் பெருமானை வணங்க வேண்டுமென்று அப்பர் பிரான் கூறுகின்றார். கூற்றுத் தண்டம்=உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப, இயமன் உயிர்களுக்கு விதிக்கும் தண்டனைகளை; ஆற்றுத் தண்டம்=நீதிநெறி நூல்களில் சொல்லப்பட்டுள்ள வழியின் படி நடக்காது வாழ்க்கையை நடத்தும் தீயவர்களை இறைவன் அடக்கி திருத்தும் முறை; ஆற்றுத் தண்டத்தை அடக்கும் என்ற தொடருக்கு வேறு விதமாக சிவக்கவிமணியார் பொருள் கூறுகின்றார். ஆற்றுத் தண்டம் என்பதற்கு இயமன் ஆற்றவிருக்கும் தண்டனை என்று பொருள் கொண்டு, அத்தகைய இயம வேதனையை மாற்றும் இறைவனின் தன்மை என்று விளக்கம் அளிப்பதும் பொருத்தமாகவே உள்ளது. ஊற்றுத் தண்டு=ஊன்று கோல் என்பது ஒரு பொருள்; இனிப்பு ஊரும் கரும்புத் தண்டு என்பது மற்றொரு பொருள். நீற்றுத் தண்டம்= திருநீறு பூசிக்கொண்டு இறைவனை வணங்கும் அடியார்கள்; கூற்றுவன் அளிக்க இருக்கும் தண்டனைகளுக்கு பயப்படும் மனிதர்களே நீங்கள் யாரை குறிக்கொள்ள வேண்டியது என்பதை சொல்லுகின்றேன் கேட்பீர்களாக. அறத்தின் வழியாக அனைத்தையும் இயக்குபவனும், தீயவர்களை அறவழியில் தண்டித்து திருத்துபவனும் ஆகிய சிவபெருமானை, நீங்கள் திருநீறு பூசியவராக, மறவாமல் நினைத்து வழிபடுவீர்களாக. இவ்வாறு ஆற்றல் மிகுந்தவனாக காணப்படும் இறைவன் தன்னை வழிபடும் அடியார்கள் எதிர் கொள்ள இருக்கும் நரக வேதனைகளையும் தவிர்க்கும் கருணை உள்ளம் கொண்டவனாக இருக்கும் ஒற்றியூர் இறைவன், கட்டிக் கரும்பு போல் இனியவர் என்பதே இந்த பாடலின் திரண்ட கருத்து.

கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின்

ஆற்றுத் தண்டத்தை அடக்கும் அரனடி

நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு எலாம்

ஊற்றுத் தண்டு ஒப்பர் போல் ஒற்றியூரரே

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.39.4) அப்பர் பிரான், மயிலாடுதுறை தலத்தினில் உறையும் இறைவனின் அருள் இருந்தால், அந்த அருளின் துணை கொண்டு, நம்மை நோக்கி காலன் விரைந்து வருவதை தடுக்கலாம் என்றும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நாம் விடுதலை பெறலாம் என்றும் கூறுகின்றார். அஞ்சொலாள்=அழகிய சொற்களை உடைய உமை அன்னை, அதாவது கேட்பதற்கு இனிய மொழிகளை உடையவள்; அஞ்சிறப்பு=அஞ்சத்தக்க இறப்பு; இறப்பு மீண்டும் பிறப்பதற்கு அடிகோலுவதால், அஞ்சத்தகும் இறப்பு என்று கூறினார் போலும். மிகுந்த வல்லமை படைத்தவனும், மயிலாடுதுறை தலத்தில் உறைபவனும், அழகிய சொல்லினை உடைய உமை அம்மையைத் தனது உடலில் பங்காக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய சிவபெருமானின் அருள் இருந்தால், அத்தகைய அடியார்களை, கொடிய கோபம் கொண்டு உயிர்களை உடலிலிருந்து பிரிக்க விரையும் காலன் விரைந்து அணுகமாட்டான். பெருமானின் அருளின் உதவியால், நாம் அனைவரும் அஞ்சக்கூடிய இறப்பையும், அதன் பின்னர் இயல்பாகத் தொடர்ந்து வரும் பிறப்புகளையும் தவிர்த்து, நாம் பிறப்பிறப்புச் சுழற்சியை ஏற்படுத்தும் சங்கிலியை அறுத்து எறியலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்க னருளிலே

இதே கருத்து அப்பர் பிரானின் திருமாற்பேறு பதிகத்தின் பாடலிலும் (5.60.6) காணப் படுகின்றது. சாற்றி சொல்லுவன்=பலரும் அறிய உரக்க சொல்லுவேன்; தரணி=உலகம்; மாற்றிலாச் செம்பொன்=இதை விடவும் உயர்ந்த செம்பொன் இல்லாத நிலையில், மாற்று காண முடியாத தரமான பொன். இறைவனைப் புகழ்ந்தால், இறைவன் இயமனைத் தடுத்து, தன்னைப் புகழும் அடியார்களின் குறைகளை நீக்குவான் என்று கூறுகின்றார். நம்மிடம் உள்ள குறைகளால் தான், நாம் பலவிதமான தீய செயல்களை செய்து அதற்குரிய தண்டனைகளை நரகத்தில் அனுபவிக்க வேண்டி உள்ளது. நமது குறைகள் நீங்கி விட்டால், நாம் தீய செயல்கள் செய்வது தடுக்கப்படும் போது, நாம் அந்த செயல்களுக்கு உரிய நரக தண்டனைகளிலிருந்து தப்பிக்கின்றோம் அல்லவா. இவ்வாறு நம்மை நரக தண்டனை வேதனைகளிலிருந்து இறைவன் காப்பாற்றுவதை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உலகத்தவர்களே, பலரும் அறியும் வகையில் நான் உரக்கவும் உறுதியாகவும் சொல்கின்றேன் நீங்கள் கேட்பீர்களாக, இடபத்தின் மேல் ஏறி எங்கும் செல்பவனாகிய இறைவனின் திருப்பாதங்களை நீங்கள் புகழ்ந்து பேசினால், உங்களது உயிரினை கொள்ளை கொள்ள வரும் இயமனை நீக்கி, உங்களது குறைகளை நீக்கி, உம்மை ஆட்கொண்டு பெருமான் அருள் புரிவான். அத்தகைய இறைவன், வேறு மாற்று இல்லாத செம்பொன் போன்று உயர்ந்தவன், திருமாற்பேறு தலத்தில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்

ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்

கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வதோர்

மாற்றிலாச் செம்பொன் ஆவர் மாற்பேறரே

தமது இறுதிக் காலம் நெருங்கி விட்டது என்பதை உணரும் எவர்க்கும், நாம் நரகத்தில் எதிர்கொள்ள இருக்கும் நிலையினை நினைக்கும் போது நடுக்கம் ஏற்படுவது இயற்கை. அந்த நடுக்கத்தினைப் போக்குவதற்கு உள்ள ஒரே வழி, நரகத்திற்கு செல்லாமல் நாம் சிவலோகம் செல்லக் கூடிய வழியினை பின்பற்றுவது தானே. எனவே தான் இயமனின் செய்கைகள் பற்றி சிறிதும் கவலைப் படாமல் இருப்பதற்கு வழி காட்டும் பாடலாக கீழ்க்கண்ட பாடலை (5.75.5) அப்பர் பிரான் அமைத்துள்ளார். செந்நெறிச் செல்வனார் என்பது திருச்சேறை பெருமானின் திருநாமம். அதற்கு ஏற்ப நாம் அஞ்சாமல் இருக்க அவர் உதவி புரிவர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். எரி அயில்=நெருப்பு போன்று கூர்மையை உடைய வேல். எண்ணி நாளும்=நாள்தோறும் உயிர்களின் வாழ்நாட்களை எண்ணி கணக்கிட்டு, வாழ்நாள் முடிவடையும் தருணத்தில் உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதை நாட்களை எண்ணும் கூற்றுவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். நமது வாழ்நாள் எப்போது முடியும் என்பதை நாம் அறிய முடியாதவர்களாக இருப்பதால், அந்த தருணத்தில் இயமன் வருவதை உணரும் நாம், திடீரென்று அவன் வந்ததாக கருதுகின்றோம். துண்ணென் தோன்றில்=நடுக்கம் உண்டாகும் வகையில் முன்னே தோன்றினால்; துரக்கும் வழி=ஓட்டும் வழி; இயமன் நம்மை அழைத்துச் சென்றால், நாம் நமது வினைத் தொகையின் ஒரு பகுதியை கழிக்கும் தன்மையில் நமது உயிர் நரகத்தில் ஆழ்த்தப்பட்டும் சொர்க்கத்தில் இருத்தப்பட்டும், அதன் பின்னர் அடுத்த பிறவியை எதிர்கொள்ளும் நிலையினை அடைகின்றது. இயமன் நம்மை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, சிவபெருமான் நம்மை சிவலோகம் அழைத்துக் கொண்டு சென்ற பின்னர் நம்மை இயமனின் தூதுவர்கள் என்ன செய்ய முடியும். நம்மை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்லும் பெருமான், நமது வினைகள் அனைத்தையும் கழித்து விடுவதால், நாம் பிறவிச் சுழலிலிருந்து விடுதலையும் அடைகின்றோம். இதே கருத்து சுந்தரர் அருளிய தில்லைப் பதிகத்தின் (7.90) அனைத்துப் பாடல்களிலும் கொடுக்கப் பட்டுள்ளது.

எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன்

துண்ணென் தோன்றில் துரக்கும் வழி கண்டேன்

திண்ணன் சேறை திருச்செந்நெறி உறை

அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.83.10) அப்பர் பிரான், பொதுவாக உயிர்களுக்கு துன்பம் தருகின்ற காலன், பெருமானை நெருங்கித் தொழுகின்ற அடியார்களைத் தொடர்ந்து அவர்களின் பின்னே சென்று அவர்களின் உயிரைக் கவர்வதற்கும் அதன் பின்னர் அவர்களை வருத்துவதற்கும் அச்சம் கொண்டு அத்தகைய செய்கைகளை தவிர்ப்பான் என்று கூறுகின்றார். கடல் கழி=கடலின் அருகே காணப்படும் உப்பங்கழிகள்; தழி= தழுவுதலை உடைய; வடவரை=இந்திய நாட்டின் வடக்கே உள்ள கயிலை மலை; அணை தர=நெருங்கித் தொழ; துயக்கு=துன்பம்; கடற்கரையில் உப்பங்கழிகள் பொருந்தி காணப்படும் நாகை தலத்தில் உறையும் காரோணனின் இருப்பிடமாகிய, வடக்கே அமைந்துள்ள கயிலை மலையினை, செருக்கினால் விளைந்த ஆரவாரத்துடன் பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனை, கயிலை மலையின் கீழ் நெருக்குவதற்கு தனது பாதத்தின் விரலை ஊன்றியவன் சிவபெருமான். அத்தகைய வல்லமை வாய்ந்த திருவடியால் காலனும் துயரம் அடைந்தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவடிகளை நெருங்கி தொழும் அடியார்களை தொடர்ந்து நெருங்குவதற்கு இயமன் அச்சம் அடைவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கடல் கழி தழி நாகைக் காரோணன் தன்

வடவரை எடுத்து ஆர்த்த அரக்கனை

அடர ஊன்றிய பாதம் அணை தரத்

தொடர அஞ்சும் துயக்கறும் காலனே

இந்த பாடலில் அப்பர் பிரான் காலன், பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொண்ட அடியார்களைத் தொடர அஞ்சுவான் என்று கூறுவது, காலனின் கோபத்தை தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் பாடலை (5.91.6) நமக்கு நினைவூட்டுகின்றது. வழிபாட்டிற்கு தகுதி பெற்றுள்ள, கற்றைச் சடையானாகிய சிவபெருமான் உள்ளான், அவனை வழிபட உயிர்களாகிய நாம் உள்ளோம்: அவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஐந்தெழுத்து மந்திரங்களையும் அவனது புகழ்களையும், கற்றுக் கொள்வதற்கு நமக்கு வாயும் நாக்கும் உள்ளன: மேலும் அவனை நீராட்ட நீரும், அழகாக அலங்கரிக்க மலர்களும் உள்ளன. இவ்வாறு இறைவனை வழிபட அனைத்து வசதிகளும் உள்ள போது, அதனை பயன்படுத்திக் கொண்டு, இறைவனை வழிபடுவதை விட்டுவிட்டு, எதற்காக இயமனின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டும். எனவே மனிதர்களே, நமக்கு அருள் வழங்க காத்திருக்கும் பெருமானை வழிபட்டு, அவனது அருளுக்குப் பாத்திரமாகி இயமனின் கோபத்தை தவிர்த்து விடுங்கள் என்பதே அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் நமக்கு வழங்கும் அறிவுரையாகும்.

கற்றுக் கொள்ள வாயுள நாவுள

இட்டுக் கொள்வன பூவுள நீருள

கற்றைச் செஞ்சடையான் உளன் நாம் உளோம்

எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே

இந்த செய்தியையே ஒரு எச்சரிக்கையாக மாற்றி, அப்பர் பிரான் கண்டு கொள்ளரியானை (5.92) என்று தொடங்கும் பதிகத்தின் மூலம் பெருமானது அடியார்களின் அருகில் நீங்கள் செல்ல வேண்டா என்று இயமனின் தூதுவர்களுக்கு கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில், பெருமானின் அடியார்களை இயமனது தூதர்களுக்கு அடையாளம் காட்டும் பொருட்டு அவர்களது தன்மைகளை அப்பர் பிரான் சுட்டிக் காட்டுகின்றார். அடியார்களின் உருவத்தையும் செய்கைகளையும் இந்த பதிகத்தில் பட்டியல் இட்டு உணர்த்தும் அப்பர் பிரான், சிவபெருமானின் பெருமைகளை பாடலாக பாடுவது, அவ்வாறு பாடப்படும் பாடல்களுக்கு ஏற்ப கொடுகொட்டி, கைத்தாளம் முதலிய கருவிகளை இசைப்பது, சிவபெருமானின் திருநாமத்தை பிதற்றுவது, சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபாடு செய்வது, திருநீற்றினை அணிந்து இருப்பது, சிவபெருமானை வழிபடுவதற்காக, தூபம், தீபம், மலர் மாலைகள் ஏந்திச் செல்லுதல், முதலிய தன்மைகளை அடியார்களின் அடையாளங்களாக கூறுகின்றார். அடியார்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது மட்டுமன்றி, அவர்களைப் போற்றியும், பேணியும் பாதுகாப்பது அவர்களின் கடமை என்று இயமனின் தூதர்களுக்கு உணர்த்தும் அப்பர் பிரான், பதிகத்தின் கடைப் பாடலில், அடியார்களுக்கு இன்னல் விளைவித்தால் என்ன நடக்கும் என்பதையும் எச்சரிக்கையாக விடுப்பதையும் நாம் உணரலாம். இந்த எச்சரிக்கையை பொருட் படுத்தாது, இயமனின் தூதர்கள் அவர்களது பாசக் கயிற்றினை சுருக்காக அடியார்களின் திருமேனியின் மீது வீசி அவர்களது உயிரினைக் கவர முயற்சி செய்தால், பெருமானது திருவடிகள் அவர்களை சுட்டுவிடும் என்று கூறுகின்றார். எனவே பெருமானது அடியார்கள் உங்களின் எதிரே வந்தாலும், இயமனின் தூதர்களே நீங்கள் விலகிச் செல்வது உங்களுக்கு நல்லது என்ற அறிவுரை இந்த பாடல் மூலம், அப்பர் பிரானால் அவர்களுக்கு வழங்கப் படுகின்றது.

அரக்கன் ஈரைந்தலையுமோர் தாளினால்

நெருக்கி ஊன்றி இட்டான் தமர் நிற்கிலும்

சுருக்கெனாது அங்குப் பேர்மின்கண் மற்று நீர்

சுருக்கெனில் சுடரான் கழல் சுடுமே

தனது தொண்டர்கள் நரகத்தினை பாராத வண்ணம் அருள் புரிபவன் என்று ஓமாம்புலியூர் தலத்து பாடலில் (6.88.5) அப்பர் பிரான் கூறுகின்றார். ஓம்புதல் என்றால் பாதுகாத்தல் என்று பொருள். தினமும் நம்மைப் பாதுகாக்கும் இறைவன் உறையும் இடமாக விளங்குவதாலும் வியாக்ரபாத முனிவர் (புலிக்கால் முனிவர்) வழிபட்ட திருக்கோயில் என்பதாலும் ஓமாம்புலியூர் என்ற பெயர் வந்தது என்பர். பாங்கு=நன்மை. எல்லாவற்றையும் அழிக்கும் திறன் கொண்ட அக்னி, பலராலும் இகழப் பட்டதால் மனம் வருந்திய அக்னி தேவன், இறைவனை வழிபட்டு, அடுத்தவர்கள் தன்னை இகழாத நிலையினைப் பெற்றான் என்று புராணங்கள் கூறுகின்றன. பல தலங்களில் இறைவனின் திருநாமம் அக்னீஸ்வரர் என்று உள்ள நிலை, அக்னி வழிபட்டதையும் அவன் அடைந்த நன்மையையும் நமக்கு உணர்த்துகின்றன. தான் இதற்கு முன்னம் செய்த நற்செயல்களின் பயனாக இறைவனை வணங்கும் பேற்றினை பெற்றதால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்ட. அழகிய வடிவினை உடைய அக்னித் தேவன் மேல் இரக்கம் கொண்ட சிவபெருமான் அவனுக்கு அருள்கள் பல புரிந்தார். மேலும் சிவபெருமான், தன்னைத் தொடர்ந்து வழிபடும் தொண்டர்கள், நரகத்தில் சென்று இடர்படாத வண்ணம், அவர்கள் நரகத்தைக் காண்பதையே தவிர்த்து அருள் புரியும் கருணை உள்ளம் கொண்டவர் ஆவார். அத்தகைய இறைவன், ஓங்கி உயர்ந்த மதில்களால் சூழப்பட்டதும், அழகு மிகுந்த காணப்படுவதும், உயர்ந்த புகழுடைய அந்தணர்கள் புகழ், உலகத்தவர்க்கு நன்மை பயக்கும் வகையில் வழிபாடுகளைச் செய்து வரும் நகரமாகிய ஓமாம்புலியூர் என்ற தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன் என்று அப்பர் பிரான் தான் சமண சமயத்தைச் சார்ந்திருந்த நாட்களை குறிப்பிட்டு வருந்தும் பாடல்.

பாங்குடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை

பாங்கிலா நரகு அதனைத் தொண்டரானார் பாராத வகை பண்ண வல்லான் தன்னை

ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும்

தீங்கில் திரு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

அப்பன் நீ அம்மை நீ என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (6.95.2) அப்பர் பிரான், வினைகளும் இயமனும் தங்களுக்கே உரிய வகையில், வேறுவேறு வழியினில் உயிர்கள் துன்பம் அனுபவிப்பதற்கு காரணமாக இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். வெம்ப=நாம் வருந்தும்படி; வெய்ய=கொடிய, வருத்தம் செய்விக்கும், நமது வாழ்நாள் எப்போது முடிய வேண்டும் என்று முன்னமே குறித்த காலத்தில் மிகவும் விரைவாக வந்து துன்பம் தருபவன் கூற்றுவன்; உடனிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக நம்மைத் துன்புறுத்துவது வினைகள். இவ்வாறு தங்களுக்கே உரித்த வேறுவேறு வகையில் நம்மை துன்புறுத்தும், கூற்றம் மற்றும் வினைகளிலிருந்து நம்மைக் காப்பவன் சிவபெருமான் ஒருவன் தான் என்பதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இந்த பாடலில் தன்னைக் குறிப்பிடும் இடங்களில், நான் என்பதைத் தவிர்த்து நாம் என்று அப்பர் பிரான் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். சிவபெருமான் தனது சிந்தையில் புகுந்ததால் தன்னிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கூறும் அப்பர், அந்த மாற்றங்களால் மற்றவர்களை விடவும்தான் ஒரு உயர்ந்த நிலையில் இருப்பதை உணர்த்தும் வகையில் நாம் என்று தன்னை இறுமாப்புடன் கூறுகின்றார். இந்த பாடலில் பைய நையும் வினைப்பகை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எண்ணற்ற, பழைய பிறவிகளில் நாம் சேர்த்துள்ள வினைகளை ஒரே பிறவியில் கழிக்க வேண்டும் என்றால் அது முடியாத காரியம். மேலும் அவ்வாறான நிலை ஏற்பட்டால், அந்த வினைப் பயன்களான இன்ப துன்பங்களைத் தாங்கவும் நமது உயிருக்கும், அந்த உயிர் தங்கும் உடலுக்கும் ஆற்றல் இல்லை. எனவே தான் நம் மீது கருணை கொண்டுள்ள இறைவனால், இந்த வினைகள் மூன்றாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதியின் பயனை உயிர் உடலினை விட்டு பிரிந்த பின்னர் சொர்க்க நரகங்களில் அனுபவிக்கின்றது, மற்றொரு பகுதி அந்த பிறவியில் அனுபவிக்கப்பட்டு கழிக்கப் படுகின்றது; மூன்றாவது பகுதி சஞ்சித வினையாக பின்னர் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு கொண்டு செல்லப் படுகின்றது. அழகிய பவளம் போன்று ஒளிவீசும் செஞ்சடையில் கங்கையினை அடக்கியவரும், அனலினைக் கையில் ஏந்தி ஆடுபவரும், பசுவிடம் இருந்து வரும் ஐந்து பொருட்களால் விருப்பமுடன் நீராடுபவரும், பவள நிற மேனியாரும், குன்று போன்று உயர்ந்த தோற்றம் உடையவரும், பவள வண்ணத்தவரும் ஆகிய சிவபெருமான், எனது சிந்தையில் புகுந்திருக்கும் காரணத்தால், கூற்றுவன் நம்மை வருத்த மாட்டான்; உயிருக்கும் உடலுக்கும் கொடிய பகையாக விளங்கும் வினைகளும் எம்மை அணுகாது; அதனால் வினைகள் மெல்லமெல்ல, விடாது வருத்தும் நிலை எனக்கு இல்லை; எனது துன்பங்கள் தீர்க்கப்பட்டன; எனக்கு இடையூறு ஏதும் இல்லை; எனவே, இந்த உலகத்தில் எது நிகழ்ந்தாலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை; சூரியன் எந்த திக்கில் எழுந்தாலும் அதனால் எனக்கு நேரப் போவது ஏதும் இல்லை. எனவே நான் மற்றவர்கள் போன்று எளியவன் அல்லன் என்று தனது நிலையை மிகவும் பெருமிதத்துடன் அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

வெம்ப வருகிற்பதன்று கூற்றம் நம்மேல் வெய்ய வினைப் பகையும் பைய நையும்

எம்பரிவும் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கெழிலென் ஞாயிறு எளியோமல்லோம்

அம்பவள செஞ்சடை மேல் ஆறு சூடி அனலாடி ஆன் அஞ்சும் ஆட்டுகந்த

செம்பவள வண்ணர் செங்குன்ற வண்ணர் செவ்வான வண்ணர் என் சிந்தையாரே

சமணத் துறவிகளின் பொய்யான பேச்சுகளில் மயங்கிய பல்லவ மன்னன், அப்பர் பிரானை அழைத்து அவரை, சமண மதத்தை இழித்து பேசிய குற்றத்திற்காக விசாரிக்க முற்படுகின்றான். அவரை அழைத்து வருவதற்காக, மந்திரிகள் சேனை வீரர்களுடன் சென்ற போது, அப்பர் பிரான் அவர்களுக்கு மறுமொழியாக விடை அளித்த பதிகத்தின் முதல் பாடலில் (6.98.1), பெருமானுக்கு தான் அடிமையாக மாறிய காரணத்தால், தான் இயமனிடம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், தனக்கு நரகத்தில் துன்பமடையும் நிலை ஏற்பாடாது என்றும் மிகுந்த உறுதியுடன் அப்பர் பிரான் கூறுகின்றார். நடலை=பொய்; ஏமாப்பு= மகிழ்வுடன் இருத்தல்; குறுகுதல்=அடைதல். கோமான்=அரசர்க்கு அரசன். சிவபெருமானுக்கு அடிமையாக தன்னை கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் அறிவித்துக் கொண்ட திருநாவுக்கரசர், சிவபெருமானுக்கு ஆட்பட்ட காரணத்தால் வேறு எவருக்கும் ஆட்பட மாட்டோம், வேறு எவர்க்கும் குடியல்லோம் என்று இங்கே கூறுகின்றார். நியாயம் இல்லாத அரசனின் ஆணை தன்னைக் கட்டுப் படுத்தாது என்று அரசனை எதிர்த்து குரல் கொடுத்த புரட்சிக் கவியாக அப்பர் பெருமான் திகழ்வதை நாம் இங்கே காணலாம். இயமனுக்கே அஞ்சமாட்டோம் என்று கூறுவதன் மூலம் அரசன் எம்மாத்திரம் என்று முழங்குவதையும் நாம் உணரலாம். அரசனை தெய்வமாக மதித்த காலம் என்பதால் அரசனின் ஆணைக்கு கட்டுப்படாதவர்க்கு நரகம் உண்டு என்ற நம்பிக்கை இருந்து வந்தது. சிவபெருமானின் அருளைப் பெற்றதால் தனக்கு அந்த விதிமுறை செல்லாது என்பதையும் இங்கே அப்பர் பிரான் தெளிவுபடுத்துகின்றார் தான் எவருக்கும் குடியல்லாத தன்மை கொண்டவனும், ஓர் காதில் வெண்குழையை அணிந்தவனும், அனைவருக்கும் அரசனுமான சங்கரனுக்கு, மீளாத அடிமையாக உள்ள நாம், அவனது அன்றலர்ந்த மலர் போன்று மென்மையானதும் செம்மையானதுமான திருவடிகளை அடைக்கலமாக அடைந்தோம். ஆதலின் நாம் சிவபெருமானைத் தவிர வேறு எவருக்கும் அடிமை அல்லோம்; இயமனுக்கும் பயப்பட மாட்டோம். அரசனின் ஆணை என்னை கட்டுப்படுத்தாது என்பதால், அரசாணையை மீறிய குற்றத்திற்காக எமக்கு நரகத்தில் எந்த தண்டனையும் வராது; எவரிடமும் அச்சம் இல்லாத காரணத்தால் பொய்யினைத் தவிர்த்தவராக நாம் விளங்குகின்றோம்; என்றும் களிப்புடன் இருப்போம்; எந்தவித நோயும் இன்றி வாழ்வோம்; சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் பணியமாட்டோம்; எங்களது வாழ்வில் இனி இன்பமே நிறைந்து நிற்கும். எந்தவிதத் துன்பமும் நேராது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை

தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண் குழை ஓர் காதில்

கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடி குறுகினோமே

இதே பதிகத்தின் கடைப்பாடலில் (6.98.10) பெருமானின் அடியானாக விளங்கும் தான், பெருமானைப் போன்று ஒப்பற்ற எட்டு குணங்கள் உடையவனாக இருப்பதால், இயமன் தன்னெதிரே தோன்றி, இதனைச் செய் அதனைச் செய் என்று ஆணையிட்டாலும், அந்த ஆணையினை பொருட்படுத்த மாட்டேன் என்று அப்பர் பிரான் உறுதியாக கூறுகின்றார். இதன் மூலம், பெருமானின் அடியார்கள் தேவைப்பட்டால் இயமனை எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள் என்று உணர்த்தப் படுகின்றது. தென்திசைக் கோன்= இயமன். நாணற்றார்=நாணம் இல்லாத சமணர்கள். உடை இல்லாமல் எங்கும் திரிந்தாலும் அதற்காக வெட்கப்படாத சமணர்கள். கோ ஆடி=தலைமைத் தன்மையை உரைத்து. நள்ளாமே விள்ளப் பெறுதல்=விரும்பாது விலகும் நிலை. எமது நாவார, அதாவது நாக்கு இன்பம் பெற, சிவபெருமானது புகழினைப் பாடப் பெற்றோம்; அதனால் நாணம் ஏதும் இன்றி உடையில்லாமல் திரியும் சமணர்கள் எம்மை விரும்பாது விலகினார்கள்; ஆனால் அமரர் தலைவனாகிய சிவபெருமான் என்னை ஆட்கொள்வான்; பிரமனும், திருமாலும் அறிதற்கு அரிய வகையில், அனற்பிழம்பாகத் தோன்றியவனும், தேவர்க்குத் தேவனும் ஆகிய சிவபெருமான், எனது சிந்தையில் நீங்காது இருந்தமையால், யாம் அவனுடன் வேறறக் கலந்து நின்று அவனைப் போன்று எண்குணங்கள் உடையவனாக மாறிவிட்டோம்; எனவே தென்திசைக்கு அதிபதியாகிய இயமனே நேரில் வந்து, தனது தலைமைத் தன்மைகளை எனக்கு உணர்த்தி, தனக்கு குற்றேவல் செய்க என்றாலும் நாம் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

நாவார நம்பனையே பாடப் பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்

ஆவா என்றெமை ஆள்வான் அமரர் நாதன் அயனொடு மாற்கு அறிவரிய அனலாய் நீண்ட

தேவாதி தேவன் சிவனென் சிந்தை சேர்ந்திருந்தான் தென்திசைக் கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும் குணமாகக் கொள்ளோம் எண் குணத்துளோமே

உயிர்கள் அழிவற்றவை என்பது சைவ சித்தாந்தக் கருத்து. முற்பிறவிகளில் ஈட்டிய வினைகளின் தன்மைக்கேற்ப உயிர்கள் வெவ்வேறு உடல்களுடன் பொருத்தப் படுகின்றன. அவ்வாறு பொருத்தப் படும் உயிர்கள், மெய்ப் பொருளின் தன்மையை உணர்ந்து தங்களின் அறிவை மறைத்திருக்கும் ஆணவ மலத்திலிருந்து விடுபட்டு, மலநீக்கம் பெற்றுத் தன்னை வந்தடைந்து என்றும் அழியாத பேரின்பம் பெற வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். இது தான் ஆன்மாவின் உண்மையான விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள உயிர்களுக்கு இறைவன் முப்பத்தாறு தத்துவங்களை (ஐம்பூதங்கள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகள், மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகள், கை, கால், நாக்கு, எருவாய், கருவாய் எனப்படும் ஐந்து கன்மேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம் அகங்காரம் எனப்படும் நான்கு அகக் கருவிகள், காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை எனப்படும் ஏழு வித்தியா தத்துவங்கள், சுத்தவித்தை, ஈசுரம், சதாசிவம், சத்தி, சிவம் ஆகிய ஐந்து சிவத்தத்துவங்கள்) அளிக்கின்றான். இவைகளை முறையாக பயன்படுத்தி, சிவபெருமானின் தன்மையை முறையாக ஒரு குரு மூலம் கேட்டறிந்து, தனது சந்தேகங்களை தெளிவித்துக் கொண்டு, சிவனை எப்போதும் சிந்தித்தல் உயிரின் நிலையை படிப்படியாக முக்தி அடையும் வழிக்கும் உயர்த்தும். இந்த நிலைகள் பத்தாக வகுக்கப் படுகின்றன. அதனில் ஒன்பதாவது நிலை சிவக்கலப்பு என்பதாகும். இந்த நிலையில் உயிர், உடலுக்கு எத்தகைய துன்பங்கள் வரினும் அவற்றைத் துன்பங்களாக உணராது அவற்றின் மெய்த்தன்மையை உணர்ந்து, உலகியல் பொருட்கள் மேல் பற்று கொள்ளும் உயிரின் இயல்பையும், உயிர்க்கு மேலான இறைவனின் அருளினையும், அனைத்து நிகழ்வுகளுக்கும் சிவமே காரணம் என்பதை உணர்ந்து, உயிருக்கு மேலாக விளங்கும் சிவத்தை பற்றி நின்று, சிவத்தோடு வேறறக் கலந்து நிற்கும் நிலை சிவக்கலப்பு எனப்படும். தனது பக்தியின் நிலையால் இந்த நிலையினை அடைந்த அப்பர் பெருமான், தானும் சிவபெருமானைப் போல் எண்குணங்கள் கொண்டவன் என்று கூறுகின்றார்

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், தருமனார் தமர் செக்கில் இடும் போது தடுத்தாட் கொள்வான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். அந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலை நாம் இங்கே காண்போம். இடிபோல் முழங்கி சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனை உருண்டு ஓட உதைத்த இறைவன், தனது அடியார்களை இயமனின் தூதுவர்கள் செக்கில் இட்டு தண்டிக்கும் போது, அந்த தண்டனையைத் தடுத்து ஆட்கொள்பவன் என்று இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார். இவ்வாறு அருள் புரியும் தில்லைச் சிற்றம்பலத்து இறைவனை நாம் அடைந்த பின்னர், இந்த உலகத்தில் நாம் பெற வேண்டியது ஏதும் உள்ளதோ, ஏதுமில்லை என்று உணர்த்தும் சுந்தரரின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

கருமானின் உரியாடைச் செஞ்சடை மேல் வெண்மதியக் கண்ணியானை

உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்து உகந்து உலவா இன்பம்

தருவானைத் தருமனார் தமர் செக்கில் இடும் போது தடுத்தாட் கொள்வான்

பெருமானார் புலியூர் சிற்றம்பலத்து எம் பெருமானைப் பெற்றாம் அன்றே

மணிவாசகப் பெருமானும் இதே கருத்தை வலியுறுத்தி, மூவேழ் சுற்றம் முரண் உரு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி என்று சிவபெருமானைபோற்றுகிறார். மேலும் மணிவாசகர் கண்டப்பத்து பதிகத்தின் முதல் பாடலில், ஐம்புலன்களின் சேர்க்கையால் மயங்கி இருந்து நரகத்தில் விழ இருந்த தனது சிந்தை தெளிவித்து சிவபெருமான் ஆட்கொண்ட தன்மையை குறிப்பிடுகின்றார்.

இந்திரிய வய மயங்கி இறப்பதற்கே காரணமாய்

அந்தரமே திரிந்து போய் அருநரகில் வீழ்வேற்குச்

சிந்தை தனை தெளிவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட

அந்தமிலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே

பொழிப்புரை:

ஐந்து புலன்களும் தங்களது இயல்பான செயல்பாடுகளில் வலிமை குன்றி, தாம் செல்ல வேண்டிய வழியில் நின்று செயல்படாமல், என்ன செய்வது என்று அறியாமல் இயலாமையால், மயக்கத்தில் ஆழ்ந்து, அறிவு செயல்படுவதை நிறுத்தி உயிருடன் ஒத்துழைக்காத நிலையில் இருந்த போதும், உடலில் பெருகிய கோழை மேலெழுந்து வந்து தொண்டையை அடைத்துக் கொண்டு வாயில் செலுத்தப்படும் உணவு உட்செல்வதை தடுத்தும் பேச்சினை தடை செய்த போதிலும், உயிர் இறைவனை நினைத்தால், அந்த இறைவன், அந்த உயிரினுக்கு அஞ்சேல் என்று சொல்லி அபயம் அளிப்பான். அத்தகைய ஆற்றல் கொண்ட இறைவன் அமரும் தலம் திருவையாறு ஆகும். இந்த இறைவன் வீற்றிருக்கும் திருக்கோயிலை வலம் வரும் இளம் பெண்கள் நடனத்திற்கு ஏற்ப, முழவுகள் பின்னணியில் அதிர்ந்து ஒலிக்கின்றன. இவ்வாறு முழவுகள் எழுப்பும் ஓசையைக் கேட்ட குரங்குகள், அந்த ஓசையினை இடியின் ஓசை என்று தவறாகக் கருதி தடுமாற்றம் அச்சத்துடன் மரங்களின் மீதேறி, மேகங்கள் எங்குள்ளன என்று நான்கு திசைகளிலும் சுழன்றுசுழன்று பார்க்கின்றன.

பாடல் 2:

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 2 (திதே 0621)

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0622)

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 2 தொடர்ச்சி மற்றும் பாடல் 3(திதே 0623)

விடலேறு படநாகம் அரைக்கு அசைத்து வெற்பரையன் பாவையோடும்

அடலேறு ஒன்று அது ஏறி அஞ்சொலீர் பலி என்னும் அடிகள் கோயில்

கடலேறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகித்

திடல் ஏறி சுரி சங்கம் செழுமுத்து அங்கு ஈன்று அலைக்கும் திருவையாறே

விளக்கம்:

விடலேறு படம்=விடத்தை மேல் கொண்டுள்ள படம்; விடலம்=நஞ்சு; விடலம் என்ற சொல் விடல் என்று குறைந்தது. விடல் என்ற சொல்லுக்கு வலிமை என்று பொருள் கொண்டு மற்ற உயிர்களை கொல்லும் வல்லமை உடைய பாம்பு என்று சொல்வதும் பொருத்தமே. சுரி சங்கு= கூர்மையான வளைந்த மூக்குகளை உடைய சங்கு; அஞ்சொல்=அம்+சொல், அழகிய சொற்களை உடைய மகளிர்; தாருகவனத்து மகளிரை குறிப்பிடுகின்றது. திடல்=மணல்மேடு; கங்குல்=இரவு; காவிரியின் மணல் திடலில் முத்துகள் காணப்படும் செல்வச் செழிப்பு மிகுந்த நகரம் ஐயாறு என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர், பெருமான் பலியேற்கச் சென்ற போது தேவியுடன் சென்றதாக குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனாக, என்றும் பிராட்டியை விட்டு பிரியாமல் இருக்கும் பெருமான், தான் பலியேற்கச் சென்ற போதும் பிராட்டியுடன் சென்றது இயற்கையே. மேலும் உயர்ந்த நோக்கத்துடன், உயிர்களுக்கு உதவும் எண்ணத்துடன் பலி ஏற்பது பெருமைக்கு உரிய செயல் தானே. எனவே அதற்காக வெட்கம் கொண்டு, தேவியை உடன் அழைத்துக் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை.

பல திருமுறை பாடல்களில் இறைவன் தேவியுடன் பலியேற்கச் செல்வதாக கூறப்படுகின்றது. அத்தகைய பாடல்களில் சிலவற்றை நாம் இங்கே காண்போம். புகலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.30.4) ஒன்றினில் கயல்மீன் போன்று அகன்ற கண்களைக் கொண்ட தேவியுடன், எருதின் மீது ஏறி அமர்ந்தவராக பெருமான் தாருகவனத்து முனிவர்களின் இல்லங்களுக்கு பலி ஏற்கச் சென்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அயலார் என்ற சொல் தாருகவனத்து முனிவர்களை குறிப்பிடுகின்றது. கடை=மனைவாயில்; இயலால்=அழகோடு தாங்கள் செய்கின்ற செயல்களின் பயனாகத் தான் அனைத்தும் விளைகின்றன என்ற கன்ம காண்டக் கொள்கையில் மிகுந்த நம்பிக்கை உடையவர்களாக இருந்த தாருகாவனத்து முனிவர்கள், சிவபெருமானைப் பணிந்து வணங்காமல் இருந்த தன்மையால் அவர்களை அயலார் என்று குறிப்பிட்டார் போலும்.

கயலார் தடங்கண்ணியொடும் எருது ஏறி

அயலார் கடையில் பலி கொண்ட அழகன்

இயலால் உறையும் இடம் எண்திசையோர்க்கும்

புயலார் கடல் பூம்புகலி நகர் தானே

குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.4) திருஞான சம்பந்தர், பெருமானை, மாதார் மங்கை பாகமாக மனைகள் பலி தேர்வார் என்று கூறுகின்றார். மாதொரு பாகனாக, என்றும் பிராட்டியை விட்டு பிரியாமல் இருக்கும் பெருமான், தான் பலியேற்கச் சென்ற போதும் பிராட்டியுடன் சென்றது இயற்கையே. மேலும் உயர்ந்த நோக்கத்துடன், உயிர்களுக்கு உதவும் எண்ணத்துடன் பலி ஏற்பது பெருமைக்கு உரிய செயல் தானே. எனவே அதற்காக வெட்கம் கொண்டு, தேவியை உடன் அழைத்துக் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை அல்லவா. போது=மலர்கள்; புனல் சேர் போது என்று குறிப்பிடுவதால், நீரில் மலரும் தாமரை முதலிய மலர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். கந்தம்=நறுமணம்; தாது=மகரந்தப் பொடி; புறவு=காடு; காளம்= விடம்; காளகண்டர்=விடத்தை தேக்கியதால் கருமை நிறத்தில் படர்ந்த கரையினை கழுத்தில் உடையவன்; நீர்நிலைகளில் தோன்றும் தாமரை முதலான பூக்களின் நறுமணம் மேலோங்கி எங்கும் பரவ, அழகு மிகுந்த மகரந்த பொடிகள் நிறைந்த சோலைகளாலும் அழகிய காடுகளாலும் சூழப்பட்டதும் குளிர்ச்சி மிகுந்ததும் ஆகிய குடந்தை நகரத்தில் உள்ள காரோணம் தலத்தில் உறைகின்ற இறைவன், பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனாக பல இல்லங்கள் சென்று பலி ஏற்கின்றார். அவர் தனது காதினில் குழை ஆபரணத்தை அணிந்தவராக, தனது கழுத்தினில் விடத்தின் கறையாக கருமை நிறம் படர்ந்தவராக காணப்படுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

போதார் புனல் சேர் கந்தம் உந்திப் பொலியவ் வழகாரும்

தாதார் பொழில் சூழ்ந்து எழிலார் புறவில் அந்தண் குடமூக்கில்

மாதார் மங்கை பாகமாக மனைகள் பலி தேர்வார்

காதார் குழையர் காளகண்டர் காரோணத்தாரே

உமை அன்னையை மட்டும் அழைத்துச் செல்லாமல், கங்கை நங்கையையும் தனது சடை மேல் ஏற்றவனாக பெருமான் பலியேற்கச் சென்றார் என்று புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.43.2) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தேர்ந்து= தேர்ந்தெடுத்து; தலத்து இறைவனின் திருநாமம் வைத்தியநாதர். அந்த பெயரினுக்கு ஏற்ப உயிருடன் பிணைந்துள்ள மலமாகிய நோயினைத் தீர்த்து இன்பம் அளிப்பவன் பெருமான். இந்த தன்மையை கருத்தினில் கொண்டு ஐயம் தேர்ந்தெடுத்து என்ற தொடரின் பொருளினை நாம் உணரவேண்டும். பெருமான் பிச்சை ஏற்பதன் நோக்கமே, தங்களது மலத்தினைக் கழித்துக் கொள்ள விரும்பும் உயிர்கள் தங்களது மலத்தினை பெருமானின் பிச்சை பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்பதாகும். அந்தணர்=அம்+தணர்; குளிர்ந்த நெஞ்சம் உடையவர்; உயிர்களின் பால் எல்லையற்ற கருணையும் அன்பினையும் வைத்துள்ள பெருமானின் நெஞ்சம் அவனது கருணை இரக்கம் அன்பு காரணமாக ஈரமாக உள்ளது என்பதை குறிப்பிடும் வண்ணம் பெருமானை அந்தணர் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பக்குவம் அடைந்த உயிர்கள் தாமே, முக்தி நிலையினை அடைவதற்கு தகுதி படைத்தவர்கள். எனவே அத்தகைய உயிர்களை தேர்ந்தெடுக்கும் பெருமான், அவர்களை அணுகி, அவர்கள் தங்களது மலங்களை பிச்சையாக இட வேண்டும் என்று பலி கேட்கின்றார் என்று பொருள் கொள்ள வேண்டும். ஈடு=பெருமை. பண்டைய நாளில் போரிடும் வீரர்கள், தங்களது உயிர் நிலையினை அடுத்தவருக்கு சொல்லிவிட்டு போராடி வெற்றி பெறுவதை மிகவும் சிறப்பாக கருதினர் போலும். ஜடாயு தனது உயிர்நிலை தனது சிறகுகளில் உள்ளது என்று சொல்ல, அரக்கன் இராவணனோ, தனது உயிர்நிலை தனது தலையில் உள்ளது என்று சொல்லி போரிட்டதாக இராயணம் காவியம் உணர்த்துகின்றது. இதனால் தான், ஜடாயு மீண்டும்மீண்டும் அரக்கனின் தலையை தனது அலகால் கொத்தி போராடியது போலும். அரக்கனின் கிரீடங்கள் பேர்த்து எறியப்பட்டு கீழே விழ, பின்னர் அந்த இடத்திற்கு வந்த இராமரும் இலக்குவனும் அந்த கிரீடத்தை பார்க்கின்றனர். அரக்கன் தனது உயிர்நிலை குறித்து சொன்னது பொய். ஜடாயு சொன்னது மெய்.

தையலாள் ஒரு பாகம் சடை மேலாள் அவளோடும்

ஐயம் தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையும் இடம்

மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்துப்

பொய் சொல்லாது உயிர் போனான் புள்ளிருக்குவேளூரே

உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்திலும் கங்கை நங்கையைத் தனது சடையிலும் ஏற்றுள்ள பெருமான், பக்குவம் அடைந்து தனது மலங்களைக் கழித்துக் கொள்வதற்கு தயாராக உள்ள அடியார்களைத் தேடிச் சென்று அவர்களது மலங்களைத் தான் வாங்கிக் கொண்டு என்றும் நிலையாக உள்ள பேரின்ப முக்தியை அவர்களுக்கு அருளும் கருணை உள்ளம் கொண்டவனாக விளங்குகின்றான். தனது உயிர்நிலை தனது சிறகுகளில் உள்ளது என்ற உண்மையை எதிரிக்கு உணர்த்தி, தனது உயிர்நிலை தனது தலைகளில் உள்ளது என்று பொய் சொல்லி போரிட்ட இராவணனின் தலைகள் மீது பல முறை மோதி போரிட்ட ஜடாயு தான் உண்மை சொன்னதால் தனது உயிரினை இழக்கின்றான். அத்தகைய ஜடாயு வழிபட்ட இறைவன் உறையும் தலம் புள்ளிருக்குவேளூர் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.50.9) திருஞானசம்பந்தர், பார்வதி தேவி உடனாக இருக்கையில் பலி ஏற்பதற்கு மிகுந்த இச்சை கொண்டவராக பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். வெற்றிமை=வென்ற தன்மை; பிரமன் திருமால் ஆகிய இருவரும் நீண்ட நெருப்புப் பிழம்பாக நின்ற தனது அடியையும் முடியையும் காண்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை வென்ற பெருமான், அவர்கள் இருவரும் காண முடியாமல் இருந்த தன்மை; இச்சை=விருப்பம்; தயங்கு=வெளிப்பட்டு தெரியும் வண்ணம், விளங்குகின்ற; தயங்கு என்ற சொல்லினை தோல் என்ற சொல்லுடன் இணைத்து, அசைகின்ற தோல் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். அரை=இடுப்பு; ஆர்த்த=இறுகக் கட்டிய; ஐயம்=பிச்சை;

செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மாலடி தேட நீண் முடி

வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமை என்

தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு

ஐயம் ஏற்று உகந்தார் ஆமாத்தூர் அம்மானே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.75.2) திருஞானசம்பந்தர், மடவாளொடும் சென்று பலி ஏற்பதை விரும்பியவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பரமேட்டி=தனக்கு மேலாக எவரும் இல்லாதவன்; மடவாள்=உமை அன்னை; கலி=வறுமை முதலிய துன்பங்கள்; நம்பன்=விருப்பனாக இருக்கும் தன்மை; நலிய=துன்பம் அடைந்து மனம் வருந்தும் வண்ணம்; பல துன்பங்களை அளித்து நமது மனதினை நலியச் செய்யும் வினைகளை தீர்க்கும் பரமன், நமது விருப்பத்திற்கு உகந்தவனாக இருப்பது இயற்கை தானே. கலியை வென்ற மறையாளர் என்று குறிப்பிட்டு இருப்பதால், கலியின் தாக்கத்தை வென்ற அந்தணர்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும்

பலி விரும்பியதொர் கையினான் பரமேட்டியான்

கலியை வென்ற மறையாளர் தம் கலிக் காழியுள்

நலிய வந்த வினை தீர்த்துகந்த எம் நம்பனே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.45.6) உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டுள்ள கோலத்துடன் பெருமான், பல ஊர்களுக்கும் சென்று பிச்சை ஏற்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆர்கணாக என்ற சொல் ஆர்கணா எனக் குறைந்துள்ளது. கொள் என்ற சொல் முதலாவது மற்றும் மூன்றாவது அடிகளில் கொண் என புணர்ச்சி விதியின் படி மாறியுள்ளது. தான் மற்ற தெய்வங்களை விலக்கி பெருமான் ஒருவனைத் தானே பற்றுக் கோடாக கொண்டுள்ளேன், அவ்வாறு இருக்கையில் பெருமான் இன்னும் தனக்கு அஞ்சேல் என்று சொல்லி ஆறுதல் கூறாதது ஏன் என்ற கேள்வியை திருஞானசம்பந்தர் திருவாரூர் தலத்து அடியார்களை நோக்கி கேள்வி கேட்கும் பாடல். இங்கே பிச்சை கொள் உத்தமன் என்று கூறுகின்றார். பலரும் தன்னைப் பழிப்பதையும் பொருட் படுத்தாமல், பக்குவம் அடைந்த உயிர்களுக்கு வீடுபேறு அளித்து உய்விக்கும் வண்ணம் தொடர்ந்து பிச்சை ஏற்கும் பெருமானை மிகவும் பொருத்தமாக உத்தமன் என்று அழைக்கின்றார்.

வார்கொண் மென் முலையாள் ஒரு பாகமா

ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்

சீர்கொண் மாடங்கள் சூழ் திருவாரூரான்

ஆர்கணா எனை அஞ்சல் எனாததே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.6) மாதொரு பாகனாக விளங்கும் தோற்றத்துடன், பிச்சை இடுவீராக என்று பல இல்லங்கள் சென்று பெருமான் பலியேற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கருமான்=கரிய உருவம் கொண்ட விலங்கு, யானை; ஐயம்=பிச்சை; மட மங்கை=இளமை பொருந்திய உமையன்னை; வையம்=உலகத்தில்; விலை மாறிடினும்=பஞ்சத்தின் காரணமாக பண்டங்களின் விலை கூடிய போதிலும்; வெய்ய=கொடிய; தண் புலவர்=இனிய சொற்களை உடைய புலவர்கள்; கடுமையான சொற்களை நெருப்புக்கு ஒப்பிட்டு வெய்ய என்று கூறிய திருஞானசம்பந்தர், இனிய மொழிகளை குளிர்ந்த சொற்கள் என்று குறிப்பிடும் நயத்தை நாம் உணரலாம். தலத்து மாந்தர்களின் கொடைத் தன்மை இந்த பாடலில் எடுத்துரைக்கப் படுகின்றது. பஞ்சத்தின் காரணமாக பொருட்களின் விலை கூடினும், பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படினும், இல்லையெனாது இனிய மொழிகள் கூறி புலவர்களுக்கு உதவி செய்யும் தன்மையர் என்று இந்த தலத்து மக்களை குறிப்பிடுகின்றார். பெருமான் திருநீற்றினைப் பூசிக் கொண்டுள்ள தன்மை, தான் ஒருவனே என்றும் அழியாத உண்மையான மெய்ப்பொருள் என்பதை உயிர்களுக்கு உணர்த்துகின்றது. கருமை நிறம் கொண்ட யானையின் தோலைக் கிழித்த செய்கை, உயிர்களை அறியாமையில் ஆழ்த்தும் அஞ்ஞானத்தை, அறியாமை எனப்படும் ஆணவ மலத்தினைக் கிழிக்கும் பெருமானின் ஆற்றலை உணர்த்துகின்றது. தேவி உடனிருக்கும் தன்மை, உயிர்களுக்கு அருள் வழங்கவும் ஞானம் அளிக்கவும் பெருமான் தயார் நிலையில் எப்போதும் இருப்பதை உணர்த்துகின்றது. தேவி ஞான வடிவாகவும் அருள் வடிவாகவும் இருப்பவள் அல்லவா. இந்த வாய்ப்பினை உயிர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தானே ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று பெருமான் உணர்த்தும் பொருட்டு பலியேற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் அறிவுறுத்தும் பாடல் இது. இந்த செயல் உயிர்கள் பால் இறைவன் வைத்துள்ள கருணையை உணர்த்துகின்றது.

செய்ய திருமேனி மிசை வெண் பொடி அணிந்து கருமான் உரிவை போர்த்து

ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடமாம்

வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவிலாத வகையார்

வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே

சிவந்த திருமேனியின் மீது வெண்ணிறம் கொண்ட திருநீற்றினை அணிந்து கொண்டுள்ள பெருமான், தன்னை எதிர்த்து வந்த கருமை நிறம் கொண்ட விலங்காகிய யானையின் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்டவர் ஆவார், தன்னுடன் தனது இளமை வாய்ந்த உமையன்னையையும் அழைத்துக் கொண்டு செல்லும் தலைவராகிய பெருமான், பிச்சை இடுவீர்களாக என்று கேட்டவாறே வீடுகள் தோறும் செல்கின்றார். உயிர்கள் பால் அன்பு கொண்டு இத்தகைய கருணைச் செயலை புரியும் இறைவன், வேதிகுடி தலத்தினில் உறைகின்றார். பஞ்சத்தினால் பொருட்கள் விலையேறி கிடைப்பதற்கு அரிதாக இருந்த தருணத்திலும், நாள்தோறும் வளரும் மிகுந்த புகழும் குறையற்ற பண்பும் உடைய இந்த தலத்து மக்கள், தங்களது கொடைத் தன்மையில் மாறாமல், இனிய மொழிகளை பேசும் புலவர்களுக்கு கடுமையான சொற்கள் எதனையும் பேசாமல், கொடை அளிக்கின்றனர். இத்தகைய புகழ் வாய்ந்த தலம் தான் வேதிகுடி தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.2) வாரணி கொங்கை நல்லாள் தன்னுடன் ஊரூராக சென்று பெருமான் பலி ஏற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, பெருமானைச் சென்றடைந்து, என்றும் அழியாத நிலையான ஆனந்தத்தில் திளைக்க வேண்டும் என்று உயிர்கள் கொண்டுள்ள விருப்பத்தினை விடவும், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள மலங்களை முற்றிலும் கழித்துக் கொண்டு தன்னை வந்தடைய வேண்டும் என்று பெருமான் கொண்டுள்ள விருப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. அதனால் தான், பக்குவமடைந்த உயிர்கள் தன்னைத் தேடிவரும் வரையில் காத்திராமல், தானே அந்த உயிர்கள் இருக்கும் இடம் சென்றடைந்து, அந்த உயிர்களின் மலங்களை, பிச்சையாக ஏற்றுக் கொள்ள, மிகுந்த துடிப்புடன் பெருமான் செயல்படுகின்றார். ஆனால் நம்மில் பெரும்பாலோர் இதனை உணர்வதில்லை. வானில் உள்ள கரிய மேகங்களுக்கு அணிகலன் போன்று திகழும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், தனது சுருண்ட சடையினை அழகு செய்யும் வகையில் கொன்றை மாலையையும் குளிர்ந்த எருக்கு மாலையையும் தழைந்து தொங்கும் வண்ணம் அணிந்துள்ளார். அவர், மார்பினில் கச்சணிந்தவளும் நல்லாள் என்று அழைக்கப் படுபவளும் ஆகிய உமையன்னை உடனாக திருவலஞ்சுழியில் பொருந்தி உறைகின்றார். ஊர்கள் தோறும் சென்று பலியேற்று, அவர் அடைந்த உவகையின் தன்மையை, எங்களால் அறிய முடியவில்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காரணி வெள்ளை மதியம் சூடிக் கமழ் புன் சடை தன் மேல்

தாரணி கொன்றையும் தண்ணெருக்கும் தழைய நுழைவித்து

வாரணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்

ஊரணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.58.1) அப்பர் பிரான், உமை அன்னையுடன் ஒன்றியவராக சிவபெருமான் ஊர் பலி ஏற்கச் சென்றார் என்று கூறுகின்றார். கன்றினார்=பகைத்தவர்; நின்றதோர் உருவம்=பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்ற கோலம்; நீர்மை=வலிமை; நிறை=கற்பு; பிச்சைப் பெருமானாக, தங்களது இல்லத்தின் வாயில் முன்னே நின்று பலியேற்ற பெருமானின் அழகினைக் கண்ட தாருகவனத்து மாதர்களின் கற்பு நிலை குன்றியது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தங்களது மனைவியரின் கற்பு தாருகவனத்து முனிவர்களுக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. அந்த கற்பு நிலை குன்றிய பின்னர் தாருகவனத்து முனிவர்களின் வலிமையும் குறைந்தது என்று இங்கே கூறுகின்றார். தன்னுடன் பகைமை கொண்ட திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றும் நெருப்பினில் வெந்து அழியுமாறு மிகுந்த சீற்றத்துடன் நோக்கியவர் சிவபெருமான். பிச்சைப் பெருமான் கோலம் ஏற்று தாருகாவனம் சென்ற பெருமானின் அழகில் மயங்கிய இல்லத்தரசிகள், பெருமானின் பின்னே சென்றமையால்அவர்களது கற்பு அழிந்தது. மேலும் தங்களது மனைவிமார்களின் கற்பின் நிலை குன்றியதால் முனிவர்களின் ஆற்றலும் குறைந்தது. இவ்வாறு முனிவர்களின் மனைவியரின் கற்பையும் முனிவர்களின் ஆற்றலையும் பறித்த கோலம் சிவபெருமானின் பிச்சைப் பெருமானின் திருக்கோலம். உமை அம்மையைத் தனது உடலினில் ஏற்றுள்ள பெருமான், அதே கோலத்தில் ஊரூராக பலி ஏற்பதற்காகச் செல்கின்றார். மேலும் உமையம்மை உடன்வர வேடுவக் கோலத்தில் கானகம் சென்ற பெருமான், தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனைக் கொல்ல வந்த பன்றியைப் பின் தொடர்ந்து அதனைக் கொன்று அர்ஜுனனையும் காப்பாற்றினார். அத்தகைய இறைவனார் பருப்பதத்தை நோக்கி அதனை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரியாகச் சீறி

நின்றதோர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு

ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும்

பன்றிப் பின் வேடராகிப் பருப்பதம் நோக்கினாரே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (4.58.6) உமை அம்மையுடன் பல இடங்களிலும் திரிந்து பெருமான் பலி ஏற்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஓடர்=ஓட்டினை ஏந்தியவர்; பாடர்=பாட்டினை உடையவர்; வெய்யர்-கோபம் கொண்டவர்; வேழம்=யானை; உழிதர்தல்=சுற்றித் திரிதல்; காடராய் என்ற தொடருக்கு திருமறைக்காடு, திருவெண்காடு, திருவாலங்காடு, தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொள்ளிக்காடு, கச்சிநெறிக்காரைக்காடு, திருவேற்காடு ஆகிய தலங்களை குறிப்பதாக பொருள் கொண்டு அங்கே உறையும் பெருமானார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். வேடனாகச் சென்று அர்ஜுனனுக்கு அருள் புரிந்தவர் பெருமான். தன்னை நோக்கி வந்த மதயானையின் மீது மிகுந்த கோபம் கொண்டவராக அதன் தோலை உரித்து, அந்த தோலினைத் தனது உடல் மீது போர்வையாக போர்த்துக் கொண்டவர் சிவபெருமான். தனது கையினில் ஓடு ஏந்தியவராக உலகெங்கும் திரியும் பெருமான், காட்டினில் பார்வதி தேவியுடன் உறைகின்றார். தனது கையினில் அனற்பிழம்பை ஏந்தியவராக, விரைந்து செல்லும் காளையின் மீது அமர்ந்து செல்கின்றார். வேதங்கள் பாடியவராய் செல்லும் பெருமானை பூத கணங்கள் சூழ்ந்து பின்செல்கின்றன. அத்தகைய இறைவனார் பருப்பதத்தை நோக்கி அதனை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.

வேடராய் வெய்யராகி வேழத்தின் உரிவை போர்த்து

ஓடராய் உலகம் எல்லாம் உழிதர்வர் உமையும் தாமும்

காடராய்க் கனல் கையேந்திக் கடியதோர் விடை மேல் கொண்டு

பாடராய் பூதம் சூழப் பருப்பதம் நோக்கினாரே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.36.4) அப்பர் பிரான் இருவராக, பலி ஏற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். கீறு=கிழித்த; அருவராதது=அருவருக்கத் தகாதது; இருவராய்= சக்தியும் சிவமுமாக இருவராய்; கடை=வீட்டு வாயில்; உழலுதல்=திரிதல். இந்த பாடலில் வெறுக்கத் தகாததோர் வெண் தலை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபெருமானுடன் தொடர்பு கொண்ட காரணத்தினால், விலை மதிப்பில்லாத தன்மையை அந்த மண்டையோடு பெறுகின்றது. மேலும் உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை அந்த மண்டையோட்டில் இட்டு உய்வினை அடைவதற்கு உதவுதலால், நாம் அந்த மண்டை ஓட்டினை மற்ற மண்டையோடு போன்றது என்று கருதி வெறுக்கக் கூடாது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடல் உணர்த்தும் உட்கருத்து, பெருமான் மண்டையோட்டினை ஏந்தி திரியும் நோக்கத்தை உணர்ந்து கொண்டு, நமது மூன்று வகையான மலங்களையும் அவரது உண்கலத்தில் இட்டு நாம் உய்வினை அடையவேண்டும் என்பதே ஆகும். நாம் அளிக்கவிருக்கும் மூன்று மலங்களையும் ஏந்தி நாம் உய்வதற்கு வழிவகுப்பதால் வெறுக்கத் தகாத மண்டையோட்டினை கையில் ஏந்தியவாறு, ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் கலந்த உருவத்தோடு, தனக்கு பிச்சை இடுவாரின் வீட்டு வாயில்களைத் தேடிக் கொண்டு தெருக்களில் திரிபவர் சிவபெருமான். ஒப்பற்றவராக இருக்கும் அவருக்கு பல பெயர்கள் உள்ளன. அவர் தான் செம்பொன்பள்ளி தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து

இருவராய் இடுவார் கடை தேடுவார்

தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார்

ஒருவர் தாம் பல பேருளர் காண்மினே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.6) அப்பர் பிரான் கழலொலியும் கைவளையும் ஆர்ப்பஆர்ப்ப கடைதோறும் இடு பிச்சைக்குசெல்லும் பெருமான் என குறிப்பிடுகின்றார். கழல் என்று பெருமான் அணியும் வீரக்கழலும் கைவளை என்று பிராட்டி அணியும் வளையல்களும்குறிப்பிடப்பட்டு, மாதொரு பாகனாக பெருமான் பலிக்கு சென்ற கோலம் இங்கே உணர்த்தப் படுகின்றது. விகிர்தன்=மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன்: கடை=கடைவாயில், வாயிற்படி; இந்த பாடலில் ஆகாயத்தின் பண்பு ஒலி என்பதை குறிப்பிடும் வண்ணம் விண்ணொலி என்று அப்பர் பிரான்குறிப்பிடுகின்றார். ஆகாயத்தின் பண்பு ஒலி எனப்படும் குணம் ஒன்று தான். காற்று ஒலி மற்றும் ஊறு ஆகிய இரண்டு பண்புகளையும், தீ ஒலி, ஊறு மற்றும்உருவம் ஆகிய மூன்று பண்புகளையும், தண்ணீர் ஒலி ஊறு உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு பண்புகளையும் நிலம் ஒலி ஊறு உருவம் சுவை மற்றும்வாசனை ஆகிய ஐந்து பண்புகளையும் உடைத்ததாக விளங்குகின்றன. புகழாகிய ஒளியை உடையவனும், திரிபுரங்களையும் எரித்த தூயவனும், பொன்நிறம் பொதிந்த மேனியினை உடையவனும், அனைத்து உயிர்களுக்கும் பழமையானவனும், ஆகாயத்தின் பண்பாகிய ஒலியாகவும் திருவிழாக் காலங்களில்எழும் ஒலியாகவும் இருப்பவனும், திருவெண்காடு தலத்தில் உறையும் விகிர்தனும், காலில் அணிந்துள்ள வீரக் கழல்களின் ஒலியும் கையில் அணிந்துள்ளவளையல்களின் ஒலியும் கலந்து ஒலிக்க பல இல்லங்களுக்கும் பிச்சை கேட்டுச் செல்பவனும், மேன்மையான ஒளியுடன் திகழ்பவனும் ஆகிய மிகவும்பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை எனது தீவினைகள் மிகவும் கொடியனஅல்லவா என்று தான் சமண சமயத்தைச் சார்ந்து இருந்த நாட்களை குறிப்பிட்டு, அப்பர் பிரான் வருத்தம் தெரிவிக்கும் பாடல்.

புகழொளியை புரம் எரித்த புனிதன் தன்னைப் பொன் பொதிந்த மேனியானைப் புராணன்தன்னை

விழவொலியும் விண்ணொலியும் ஆனான் தன்னை வெண்காடு மேவிய விகிர்தன் தன்னைக்

கழலொலியும் கைவளையும் ஆர்ப்பஆர்ப்பக் கடைதோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும்

திகழொளியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.6.6) சுந்தரர், பிராட்டியுடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். கூறுபட்ட கொடியும் நீரும் என்று சுந்தரர் குறிப்பிடுவதால், மாதொரு பாகன் கோலத்துடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக உணர்த்துகின்றார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானை காட்டு யானை என்பதை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். மாறுபட்ட=பெருமானை எதிர்த்து வந்த தன்மை சொல்லப் படுகின்றது. தன்னை எதிர்த்து வந்த மதயானையைக் கொன்ற பின்னர் அந்த யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட போதிலும் தனது உடலுக்கு எந்த விதமான கேடும் அடையாதிருந்த ஆற்றலை உடைய பெருமானின் தன்மைக்கு, பிறர் இடுகின்ற பிச்சையை நாடி அவர்களது இல்லத்திற்கு செல்லுதல், பெருமானின் பெருமைக்கு தகுந்த செயல் அல்ல என்று கூறுகின்றார்.

மாறுபட்ட வனத்தகத்தின் மருவ வந்த வன்களிற்றைப்

பீறி இட்டமாகப் போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம் தோறும்

கூறு பட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றி அடர ஏறி

வேறுபட்டுத் திரிவதென்னே வேலை சூழ் வெண்காடனீரே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (7.6.3) சுந்தரர் பிராட்டியுடன் பெருமான் பலி ஏற்கச் செல்வதாக குறிப்பிடுகின்றார். பாரிடம்=பூதங்கள் மற்றும் உலகத்தவர் என்று இரண்டு பொருள்களும் இங்கே பொருத்தமாக உள்ளன. படைகள் ஏந்திய பூத கணங்கள் போற்றும் வண்ணம் பெருமான் பலி ஏற்கின்றார் என்பது ஒரு பொருள். மழுப்படையை ஏந்தி பலிக்கு செல்லும் பெருமானை, பலி கொள்வதன் உயர்ந்த நோக்கத்தை புரிந்து கொண்ட உலகத்தவர் போற்றுகின்றனர் என்பது இரண்டாவது பொருள். கரணம் இட்டு=கூத்து ஆடியவாறு.

படைகள் ஏந்திப் பாரிடமும் பாதம் போற்ற மாதும் நீரும்

உடையோர் கோவணத்தராகி உண்மை சொல்லீர் உம்மை அன்றே

சடைகள் தாழக் கரணம் இட்டுத் தன்மை பேசி இல் பலிக்கு

விடையது ஏறித் திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே

தனது மனைவியுடன் பலி ஏற்கச் சென்றதாக சிவபெருமானை குறிப்பிடும் திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரானின் பாடல்கள் நமக்கு, சுந்தரரின் பைஞ்ஞீலி பதிகத்துப் பாடல் ஒன்றினை (7.36.5) நினைவூட்டுகின்றது. இந்த பதிகம் தாருகவனத்து மகளிர் கூற்றாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம் என்று கூறுவார்கள். பெருமானுக்கு பிச்சை இடுவதற்காக வந்த பெண், பெருமானின் திருமேனியில் வெண்முத்து போன்று பிரகாசிக்கும் திருநீற்றினைக் கண்டு வியக்கின்றாள். பெருமானின் திருமேனியை உற்று நோக்கிய அவளுக்கு, பெருமானின் இடது பாகத்தில் நீண்ட கண்களோடும் காணப்படும் உமை அம்மை கண்ணில் தெரிகின்றாள். அவளுக்கு உடனே கோபம் வருகின்றது. என்ன தைரியம் இருந்தால், உடலில் ஒரு பெண்ணினை வைத்திருக்கும் கோலத்தோடு பிச்சை கேட்க பெருமான் தனது இல்லத்திற்கு வருவார் என்று எண்ணுகின்றாள். அந்த கோபம் பாடலாக வெளிப்படுகின்றது. பெருமானே நாங்கள் உமக்கு பலியிட மாட்டோம், நீர் இந்த இடத்தை விட்டு அகன்று செல்லலாம் என்று கூறுகின்றாள். அவ்வாறு சொன்ன பின்னர் அவளுக்கு வேறு ஒரு சந்தேகம் தோன்றுகின்றது. தனது உடலில் ஒரு பெண்கொடியை கொண்டுள்ள பெருமான் சடையிலும் கங்கையை வைத்துள்ளாரோ என்பது தான் அந்த சந்தேகம். கங்கை ஆற்றினை உமது சடையில் சூடியவாறு வந்தீரோ, சொல்வீராக என்று பெருமானை வினவுகின்றாள். பெருமானின் அழகில் மயங்கிய தாருகவனத்து பெண்மணிகள், அவர் இரண்டு மனைவியருடன் இருப்பதால் கோபம் கொண்டு பிச்சை இட மாட்டோம் என்று சொன்னதாக, சுவையான கற்பனை செய்த பாடல்.

நீறு நும் திருமேனி நித்திலம் நீள் நெடுங் கண்ணினாளொடும்

கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடகிலோம் பலி நடமினோ

பாறு வெண்தலை கையில் ஏந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்

ஆறு தாங்கிய சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே

கச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.41.2) சுந்தரர், பசியால் வருந்திய தனக்கு, ஒரு அந்தணர் வேடம் தரித்தவராக பல இல்லங்கள் சென்று உணவினை பிச்சையாக கேட்டு வாங்கி வந்து தனக்கு அளித்த பெருமானின் கருணைச் செயலை நினைவு கூர்ந்த சுந்தரர், பிச்சைப் பெருமானின் திருக்கோலத்தை இந்த பாடலில் வடித்து மகிழ்கின்றார். தனது கால்களில் அணிந்திருந்த கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் சென்ற பெருமான் என்று குறிப்பிட்டு, மாதொருபாகனாக பெருமான் பலியேற்கச் சென்ற தன்மை குறிப்பிடப் படுகின்றது.

கச்சேர் அரவு ஒன்று அரையில் அசைத்துக் கழலும் சிலம்பும் கலிக்கப் பலிக்கென்று

உச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே

இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனை ஆள்வாய்

அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.46.6) பெருமான் பலி ஏற்பதையும், நஞ்சு உண்டதையும் மிகவும் நயமாக இணைத்து, பெருமானின் எல்லையற்ற கருணையை குறிப்பிட்டு, தனது கோரிக்கையை சுந்தரர் பெருமானிடம் சமர்பிக்கும் பாங்கினை நாம் உணரலாம். இலவ=இலவம்பூ; மென்மையான இதழ்கள் உடைய அன்னை என்று கூறுகின்றார். கலவ மயில்=தோகை உடைய மயில்; பல இல்லங்கள் சென்று பிச்சை எடுத்த பெருமான், தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்கி நஞ்சினையும் உட்கொண்டார் என்று கூறுகின்றார். தன்னிடும் முறையிடும் அடியார்களின் வேண்டுகோளைக் கேட்ட பின்னர், அவர்களுக்கு உதவி செய்யாமல் இருக்க இயலாத பெருமான், தனக்கு பட்டாடைகளும் வாசனைப் பொருட்களும் தாரமால் இருப்பது தவறன்றோ என்று சுந்தரர் முறையிடும் பாடல். எச்சும் போது=உச்சி வேளை, நண்பகல்;

இலவ இதழ் உமையோடு எருது ஏறிப் பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சும் போது

பல அகம் புக்கு உழிதர்வீர் பத்தோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ

உலவுதிரை கடல்நஞ்சை அன்று அமரர்வேண்ட உண்டருளிச் செய்தது உமக்கு இருக்கொண்ணாதிடவே

கலவ மயில் இயலவர்கள் நடமாடும் செல்வக் கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.77.7) மலை மங்கையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்ட தோற்றத்துடன் உலகத்தின் பல இடங்களிலும் திரிந்து பெருமான் பலி ஏற்கின்றார் என்று சுந்தரர் கூறுகின்றார். ஒருபால்=ஒரு பாகத்தில்; சிலை=கல், இங்கே மேருமலை; எயில்=கோட்டை; பறக்கும் மூன்று கோட்டைகள்; தீர்த்தன்=உயிர்களின் பாவங்களை நீக்கி புனிதமாக்குபவன்;

மலைக் கண் மடவாள் ஒரு பாலாய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்

சிலைக் கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய் தீர்த்தன் நீ

மலைக் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு

அழைக்கும் திரைக் காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ

கூடலையாற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.85.3) சுந்தரர், ஊர்தொறும் சென்று தான் வைத்திருந்த பிரம கபாலத்தில் பலி இடுவீர்களாக என்று கேட்ட பெருமான், தன்னுடன் பார்வதி தேவியையும் அழைத்துக் கொண்டு மழுப்படை ஏந்தியவராக சென்றார் என்று கூறுகின்றார். ஆர்வன்=பேரன்பு உடையவன்; திருமுதுகுன்றம் செல்வதற்கு விருப்பம் கொண்டவராக, முதுகுன்றம் செல்வதற்கான வழி யாது என்று சுந்தரர், தனக்கு எதிர்ப்பட்ட ஒரு முதியவரிடம் வினவ, அந்த முதியவரோ தானும் அந்த வழியில் செல்வதாக உணர்த்தி, வேண்டுமென்றே கூடலையாற்றூர் அழைத்து வந்ததை குறிப்பிட்டு, அவ்வாறு தன்னுடன் வந்த அந்தணர் பெருமான் தான் என்பதை உணராமல் இருந்த பேதையேன் என்று தன்னை சுந்தரர் குறிப்பிடுகின்றார். எனவே தான், தன்னுடன் நடந்து வந்த பெருமானின் செயலை அதிசயம் என்று இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் சுந்தரர் கூறுகின்றார். சுந்தரர் தனது வாழ்க்கையில், ஐந்து வேறுவேறு தருணங்களில் பெருமான் தனது முன்னே தோன்றியதை, முதலில் புரிந்து கொள்ளாமல் இருந்தார் என்பதை பெரிய புராணம் நமக்கு உணர்த்துகின்றது. முதியவராக வந்து அடிமை ஓலையை காட்டி நடக்கவிருந்த திருமணத்தை தடுத்தது, திருவதிகை சித்தவடம் மடத்தில் உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தின் மீது தனது காலை படுமாறு வைத்தது, குருகாவூர் வெள்ளடை செல்லும் வழியில் பந்தரின் கீழே அமர்ந்து தயிர் சாதமும் குளிர்ந்த நீரும் தந்து உபசரித்தது, கச்சூர் தலத்தினில் அருகில் இருந்த வீடுகளில் பிச்சை ஏற்று அந்த உணவினை சுந்தரருக்கு அளித்தது ஆகியவை மற்ற நான்கு நிகழ்ச்சிகள்;

ஊர்தொறும் வெண்டலை கொண்டு உண்பலி இடும் என்று

வார் தரு மென் முலையாள் மங்கையொடும் உடனே

கூர் நுனை மழுவேந்திக் கூடலையாற்றூரில்

ஆர்வன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே

மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலைக்கும், பலிக்கு செல்லும் போதும் பிராட்டியைத் தன்னுடன் பெருமான் அழைத்துச் செல்வதற்கும் ஒரு காரணத்தை கற்பனை செய்து திருஞானசம்பந்தர் நகைச்சுவை ததும்ப உணர்த்தும் பாடலை நாம் இறுதியாக காண்போம். இந்த பாடல் தெளிச்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (2.3.4). கச்சு அணிந்த மார்பகங்களைக் கொண்ட உமை அன்னையை பாதுகாப்பாக வைப்பதற்கு இடம் ஏதும் இல்லாத காரணத்தால், பெருமானே நீர் பிராட்டியையும் உமது உடலில் ஏற்றுக் கொண்டு பலிக்கு செல்கின்றீரோ என்று நகைச்சுவை ததும்ப மாதொரு பாகனின் திருக்கோலத்தை உணர்த்தும் பாடல். ஏர் என்றால் எழுச்சி என்று பொருள்; அழகு என்ற பொருளும் பொருந்தும். பெருமான் பலிக்கு செல்வது, பக்குவபட்ட ஆன்மாக்கள் தங்களது மலங்களை, பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் என்பதால், அத்தகைய ஆன்மாக்கள் எழுச்சி பெற்று நிலையான ஆனந்தத்தில் ஆழ்த்தப் படுவதால், ஏருலாம் பலி என்று கூறினார் போலும். ஏகிட=செல்ல;

காருலாம் கடல் இப்பி கண் முத்தம் கரைப் பெயும்

தேருலா நெடு வீதியதார் தெளிச்சேரியீர்

ஏருலாம் பலிக்கு ஏகிட வைப்பிடம் இன்றியே

வாருலா முலையாளை ஒர் பாகத்து வைத்ததே

பொழிப்புரை:

மற்ற உயிர்களைக் கொல்லும் வல்லமை வாய்ந்த விடம் பொருந்திய படத்தினை எடுத்து ஆடும் பாம்பினைத் தனது இடுப்பினில் கட்டி தனது விருப்பம் போன்று அசைப்பவனும், மலையரசன் இமவான் மகளாகிய பார்வதி தேவியுடன், வலிமை வாய்ந்த இடபத்தின் மீது ஏறிக்கொண்டு தாருக வனத்து இல்லத்தரசிகளிடம், அழகிய சொற்களை உடைய மங்கையரே எமக்கு பலி இடுவீராக என்று கேட்டு பலி ஏற்றவனும் ஆகிய இறைவன் உறையும் கோயில் திருவையாறு தலத்தில் உள்ளது. வளைந்து காணப்படும் மூக்குகள் கொண்ட கடற்சங்குகள், கடலிலிருந்து மேலேறி காவிரியின் நீர்ப்பெருக்கோடு கலந்து வந்து, மணல் திடல்களில் ஏறி அமர்ந்து இரவு நேரங்களில் முத்துக்களை ஈன்று சஞ்சரிக்கும் இடம் திருவையாறு தலமாகும்.

பாடல் 3:

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 2 தொடர்ச்சி மற்றும் பாடல் 3(திதே 0623)

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 3 தொடர்ச்சி (திதே 06224)

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் 4, 5, 6, 7(திதே 06225)

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பேராளர் மங்கை

பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலும் கோயில்

கொங்காளப் பொழில் நுழைந்து கூர் வாயால் இறகு உலர்த்திக் கூதல் நீங்கிச்

செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரை தேரும் திருவையாறே

விளக்கம்:

கொங்கு=நறுமணம்; கங்காளர்=பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளின் மீது தாங்கியவர்; கானப்பேர்=தற்போது காளையார் கோயில் என்று அழைக்கப்படும் பாண்டி நாட்டு பாடல் பெற்ற தலம். கூதல்=குளிர்; திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.22.7) திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரது உடலினை சுமந்த வண்ணம் திரிந்தவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இருநிலன்=பெரிய பூமி; புனல்=பிரளய வெள்ளம்; எரி=வடவாக்னி; வளி=காற்று; முற்றூழிக் காலத்தில், பெரிய நிலமாகிய பூமி, பிரளய வெள்ளத்தில் ஒடுங்க, அந்த வெள்ளத்தை வடவாக்னி வற்றச் செய்கின்றது. அந்த வடவாக்னி காற்றால் ஒடுக்கப்பட, அந்த காற்று ஆகாயத்தில் ஒடுங்குகின்றது. இத்தகைய முற்றூழிக் காலத்தில், உலகமும் உலகினில் உள்ள அனைத்து பொருட்களும் அழிகின்ற முற்றூழிக் காலத்தில், இறந்து படுகின்ற பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் எலும்புக் கூட்டையும் தானே அணிந்து கொண்டு, தான் ஒருவனே அனைவர்க்கும் தலைவன் என்று திரியும் அழகினை உடைய பெருமான், வண்டுகள் இசை முரலும் மறைவனம் என்று அழைக்கப்படும் திருமறைக்காடு தலத்தினில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. வியனிடை முழுவதும் கெட=பரந்த இந்த உலகமும் உலகப் பொருட்களும் உலகத்து உயிர்களும் முழுவதுமாக அழிந்து பட;

இருநிலனது புனலிடை மடி தர எரி புக எரியது மிகு

பெருவெளியினில் அவி தர வளி கெட வியனிடை முழுவது கெட

இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இனமலர்

மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர் தரு பரமனே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.71.1), திருஞானசம்பந்தர் பெருமானை கங்காளர் என்று அழைக்கின்றார். சேடு=பெருமை; சேடர்=பெருமை உடையவர்; சேடர் என்ற சொல்லினை சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு என்று கொண்டால், சிறந்த ஒழுக்கமும் புகழும் உடையவர்கள் என்று பொருள். பேழ் வாய்=பிளந்த வாய்; பாம்பின் நாக்கு இரண்டாக பிளந்திருக்கும்; எனவே பேழ்வாய் நாகம் என்று கூறுகின்றார். வேதங்கள், பெருமானின் பல தன்மைகளையும் சிறப்புகளையும் உணர்த்துகின்றன. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் அனைத்து விஷயங்களையும் அனைவராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. எனவே தான் அருளாளர்கள், பல மொழிகளிலும், வேதங்களில் சொல்லப் பட்டுள்ள விவரங்களை, தங்களது பாடல்களில், மிகவும் எளிமையான முறையில், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உணர்த்துகின்றனர். இந்த தன்மையையே, திருஞானசம்பந்தர் மறை கொள் கீதம் என்று இங்கே குறிப்பிடுகின்றார். வேதங்கள் ஓதுவதை விரும்பி கேட்பது போன்று, சிவபெருமான் இத்தகைய பாடல்களையும் விரும்பி கேட்கின்றார். எனவே தான் நாமும் இத்தகைய கீதங்களை பாடி பெருமானின் அருள் பெற வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். தேவாரப் பாடல்கள் பாடுவதால், நாம் அடையவிருக்கும் பலன்களையும் பல தேவாரப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. சிறை=சிறகுகள்; தேனார்=தேனை விரும்பி உட்கொள்ளும்; ஒற்றைப் பிறைச்சந்திரனை ஏற்றுக் கொண்ட சடையினை உடையவரும், புலியின் தோலை ஆடையாக உடையவரும், இரண்டாக பிளந்த நாக்கினை உடைய பாம்பினைத் தனது உடலின் பல பாகங்களிலும் ஆபரணமாக அணிந்தவரும், ஆலகால விடத்தினைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்ட கறை படர்ந்த கழுத்தினை உடையவரும், தனது கையினில் பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்பவரும், பிரளய காலத்தினில், பிரமன் திருமால் இந்திரன் ஆகியோரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளினில் ஏற்ற வண்ணம் கங்காளராக காட்சி தருபவரும் ஆகிய பெருமான், வேதங்களின் பொருளை உணர்த்தும் பாடல்களை ஒழுக்கத்தில் சிறந்த அடியார்கள் பாட, அந்த பாடல்களின் இன்னிசையாலும் தேனுண்ட களிப்பினாலும் தங்களது சிறகுகள் படபடக்க வண்டுகள் முரலும் காட்சி உடைய நறையூர் சித்தீச்சரம் தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பிறை கொள் சடையர் புலியின் உரியர் பேழ் வாய் நாகத்தர்

கறை கொள் கண்டர் கபாலம் ஏந்தும் கையர் கங்காளர்

மறை கொள் கீதம் பாடச் சேடர் மனையின் மகிழ்வெய்தி

சிறை கொள் வண்டு தேனார் நறையூர் சித்தீச்சரத்தாரே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.93.6) திருஞானசம்பந்தர் பெருமானை, கங்காளர் என்றும் காளி ஏத்தும் அழகனார் என்றும்குறிப்பிடுகின்றார். தோற்றவர் எவருக்கும் தம்மை வென்றவர் மீது கோபமும் வெறுப்பும் ஏற்படுவது இயற்கையே. இந்த இயற்கைக்கு மாறாக, பெருமானிடம் நடனப் போட்டியில் தோல்வி அடைந்த காளியன்னை, பெருமானை புகழ்ந்தனள் என்று குறிப்பிட்டு, போட்டியிட்ட காளி தேவியும் புகழும் வண்ணம் பெருமானின் நடனம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று நமக்கு உணர்த்துகின்றார். அம்பர் மாகாளம் தலத்தில் உள்ள காளிதேவி சன்னதி மிகவும்பிரசித்தி பெற்றது. திருக்கோயிலின் தெற்கு பகுதியில் காளிதேவி சன்னதி உள்ளது. அம்பன் அம்பாசுரன் ஆகிய இரண்டு அரக்கர்களை கொன்ற பாவம் தீர, காளிதேவி இறைவனை வழிபட்டதாக தலபுராணம் குறிப்பிடுகின்றது.

பழக மாமலர் பறித்தி இண்டை கொண்டு இறைஞ்சுவார் பால் செறிந்த

குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற

கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும்

அழகனார் அரிவையோடு இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.71.2) அப்பர் பிரான், பெருமானை, மால் அங்கம் தோள் மேல் கொண்ட செய்யன் என்று குறிப்பிடுகின்றார். வையம்=எருது: வையன்=எருதினை வாகனமாகக் கொண்ட சிவபெருமான்: வையம் உண்ட மால்=அண்டங்களைத் தனது வயிற்றில் அடக்கிய திருமால்: ஏன் மண்ணினைத் தின்றாய் என்று தன்னைக் கோபித்த யசோதை அன்னைக்கு, தான் மண்ணைத் தின்னவில்லை என்று வாயினைத் திறந்து கண்ணன் காட்டிய போது, கண்ணனது வாயினை எட்டிப் பார்த்த யசோதைக்கு, அவனது வயிற்றில் இருந்த அண்டங்கள் தெரிந்ததாக பாகவத புராணம் கூறுகின்றது. மேலும் ஊழிக் காலத்தில், அண்டங்கள் அனைத்தையும் தனது வயிற்றில் அடக்கிய திருமால், ஆலிலையின் மீது சிறு குழந்தை உருவில் படுத்ததாக வைணவ புராணங்கள் கூறுகின்றன. செய்யன்=சிவந்த நிறம் கொண்ட சிவபெருமான்: செய்ய போது=சிவந்த தாமரை மலர்: திசைமுகன்=நான்கு முகங்களைக் கொண்ட பிரமன், திசைக்கு ஒரு முகமாக நான்கு முகங்களைக் கொண்டதால் திசைமுகன் என்று அழைக்கப் படுகின்றார். ஐந்து முகங்களைக் கொண்டிருந்த பிரமன் நான்முகனாக மாறிய வரலாறு இங்கே கூறப்படுகின்றது. வையம் உண்ட மால் என்று குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, தனது மூன்று அடிகளால் வையம் அளந்த திருமாலும் அந்த திருமாலை சிவபெருமான் அடக்கிய நிகழ்ச்சியும் நினைவுக்கு வந்தது போலும். வாமனராக அவதாரம் எடுத்து பின் திரிவிக்ரமனாக மாறி மாவலியின் வசம் இருந்த விண்ணையும் மண்ணையும் மீட்ட திருமாலுக்கு செருக்கு ஏற்படவே, அந்த செருக்கை அடக்க வடுகநாரான சிவபெருமான் அவரது மார்பினை அடித்து கீழே வீழ்த்தினார். வீழ்ந்து விட்ட திருமாலை காப்பாற்ற இலக்குமி தேவி வேண்ட, சிவபெருமான் திருமாலை உயிர்ப்பித்தார். உயிருடன் எழுந்த திருமால் தமது உடலில் இருந்த தோலையும் எலும்பையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டவே சிவனார் எலும்பை கதையாக மாற்றிக்கொண்டு தோலை சட்டையாக அணிந்து சட்டநாதர் என்ற பெயர் பெற்றார் என்றும் கூறுவர். இது சீர்காழியின் தலவரலாறு ஆகும். இந்த நிகழ்ச்சி, சீர்காழி கோயிலில், சட்டநாதர் சன்னதிக்கு அருகே வண்ணப் படங்களாக தீட்டப்பட்டு இருப்பதை நாம் காணலாம். இதே பதிகத்தின் முதல் பாடலில் நாகைக் காரோணத்து சிவபெருமானை வழிபட்டு உய்யுமாறு நெஞ்சத்திற்கு அறிவுரை கூறிய அப்பர் பிரான், சிவபெருமான்எவ்வாறு திருமால் மற்றும் பிரமனை விட உயர்ந்தவர் என்று இங்கே கூறி, சிவபெருமானை விட உயர்ந்த தெய்வம் வேறு எவரும் இல்லை என்பதை உணர்த்தி, மற்ற தெய்வங்களை விடுத்து நாம் ஏன் சிவபெருமானைத் தொழுது வணங்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். அம்ம என்ற சொல் வியப்பினையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் சொல். சிவபெருமான் எருதினை வாகனமாகக் கொண்டவர்: அண்டங்களைத் தனது வயிற்றில் அடக்கிய திருமால், வாமன அவதாரம் எடுத்த போது, அவரது செருக்கினை அடக்கிய சிவபெருமான், அவரது முதுகெலும்பினை கதையாகவும், அவரது உடலின் தோலினை போர்வையாகவும் தனது உடலின் மீது போர்த்தவர்: சிவந்த நிறம் உடையவர்: செந்தாமரை மலரில் உறையும் பிரமனின் ஐந்து முகங்களில் ஒன்றினைத் தனது நகத்தால் கிள்ளி, பிரமனுக்கு திசைமுகன் என்ற பெயர் வருமாறு, கிள்ளப்பட்ட தலையினைக் கையில் ஏந்தியவர்: கடலால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தில் உள்ள கோயிலில் உறையும் சிவபெருமானை விருப்புற்று நினைந்த நெஞ்சமே, வியக்கத்தக்க வகையில் நீ துன்பங்களிலிருந்து விடுபட்டு உய்வினை அடைந்துள்ளாய் என்று தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

வையனை வையம் உண்ட மால் அங்கம் தோள் மேல் கொண்ட

செய்யனைச் செய்ய போதில் திசைமுகன் சிரம் ஒன்று ஏந்தும்

கையனைக் கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட

ஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்தவாறே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.72.3) திருமாலின் உடலை தனது உடல் மீது போர்த்துக் கொண்டவர், பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தன்னை அடியானாக பெருமான் ஏற்றுள்ளார் என்று இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறிய அப்பர் பிரான், எந்த சூழ்நிலையில் பெருமான் தன்னை ஏற்றார் என்பதை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பறி தலை=தலைமுடி பறிக்கப்படும் தலையை உடைய சமணர்கள்; சமண சமயத்தைச் சார்ந்து, தலையிலுள்ள முடிகளைப் பறித்து சமணத் துறவியாக வாழ்ந்து வந்த வாழ்க்கையை மாற்றி, தேவார பாடல்கள் பாடி பெருமானுக்கு பணிசெய்யும் பிறவியாக மாற்றியதை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அங்கமாலை=தலை மாலை; எறி புனல்=அலை வீசும்; தன் மீது ஏவப்பட்ட மான்கன்றினை அடக்கி, அதன் உண்மையான இயல்புடன் துள்ளி குதித்து விளையாடுமாறு தனது இடது கரத்தில் பெருமான் ஏந்தியுள்ளார்; தனது உடலின் இடது பாகத்தில் உமையம்மையை ஏற்றுள்ளார்; தாமே வலிந்து தலையில் உள்ள முடியினை நீக்கிக் கொள்ளும் சமணத் துறவியாக வாழ்ந்த எனது சமண சமயப் பிணிப்பினை நீக்கி, பாடல்கள் பாடி தனக்கு பணிவிடை செய்யுமாறு மாற்றிய வல்லமை படைத்தவர் சிவபெருமான்; மிகவும் அடர்த்தியாக தொடுக்கப்பட்ட தலைமாலையினை அணிந்த உருவத்தினை உடையவர்; அலை வீசும் கங்கை நதியைத் தனது சடையில் அடக்கியவர் சிவபெருமான். அவர் தாம் இன்னம்பர் தலத்தில் தலைவனாக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மறியொரு கையர் போலும் மாது உமை உடையர் போலும்

பறி தலைப் பிறவி நீக்கிப் பணி கொள வல்லர் போலும்

செறிவுடை அங்க மாலை சேர் திருவுருவர் போலும்

எறி புனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே

அப்பர் பிரான், தான் அருளிய ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.112.7) பெருமானை, கங்காளர் என்று குறிப்பிடுகின்றார். களேபரம்=உயிரற்ற உடல்: பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் தெய்வங்களாக கொண்டாடப்படினும், அவர்களுக்கும் முடிவு என்பது உண்டு என்பதும், சிவபெருமான் ஒருவன் தான் முடிவில்லாதவன் என்பதையும் உணர்த்தும் பொருட்டு, பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் உடல்களை தோள் மேல் போட்டுக் கொண்டு சிவபெருமான் கங்காள வேடம் தாங்கி இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது. ஊழிக் காலத்தையும் தாண்டி சிவபெருமான் இருக்கும் நிலையும், உலகினை மறுபடியும் தோற்றுவிக்கும் எண்ணம் கொண்டு, விளையாட்டாக உலகினைத் தோற்றுவித்து, உயிர்கள் தங்களது வினைகளைக் கழித்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கும் இறைவனின் கருணையும் இந்த பாடலில் அப்பர் பெருமானால் உணர்த்தப் படுகின்றது. கடல்கள் அனைத்தும் பொங்கி உலகங்களை மூடும் காலத்தில், பிரமன் வாழும் சத்திய லோகமும் கடலினால் முழுவதும் மூடப்பட பிரமனும் அப்போது அழிவான். அவ்வாறு இறந்த பிரமனது உடலினையும், அதே சமயத்தில் இறக்கும், கடல் வண்ணனாகிய திருமாலின் உடலையும், தான் சுமந்து கொண்டு கங்காள வேடத்தில் சிவபெருமான் காட்சி அளிப்பார். ஒடுங்கிய உலகத்தினை மறுபடியும் தோற்றுவித்து, உயிர்கள் தங்களது வினைத் தொகுதிகளைக் கழித்துக் கொள்வதற்கு ஏதுவாக, ஒடுங்கிய உலகினை மறுபடியும் தோற்றுவிக்கும் எண்ணத்துடன், சிவபெருமான் வீணை வாசித்தவாறு இருப்பார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்

இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்

கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்

வரும் கடன் மீள நின்று எம்மிறை நல்வீணை வாசிக்குமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.28.7) அப்பர் பிரான், பெருமானை, கங்காள வேடர் என்று அழைக்கின்றார். ஆர்=ஆத்தி மாலை; அடிமை=தொண்டு; செடி=முடை நாற்றம்; செல்கதி=வீடுபேறு அடையும் வழி; கருத்தர்=அடியார்களின் கருத்தினில் உறையும் தலைவர்; செல்கதி என்பதற்கு உயிர்கள் தங்களது வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப உடலை நோக்கிச் செல்வதற்கு வழி வகுத்தவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தனது சடைமுடியில் ஆத்தி மாலையும், இளம் பிறைச் சந்திரனையும், பாம்பினையும் சூடியவராகவும், மூவுலகிலும் நிறைந்து பரந்து அனைத்துப் பொருட்களிலும் கலந்து இருப்பவராகவும், கிள்ளப்பட்ட பிரமனின் தலை என்பதால் முடை நாற்றம் வீசும் மண்டை ஓட்டினைத் தனது உண்கலனாகக் கொண்டு திரிபவராகவும், வீடுபேறு கதிக்கு செல்லும் வழியாக இருப்பவராகவும், கொடிய நஞ்சினை தேக்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவராகவும், ஊழிக் காலத்தில் கங்காள வேடத்தவராக இருப்பவராகவும், அடியார்களின் கருத்தினில் உறைபவராகவும், அடியார்கள் செய்யும் தொண்டினை மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டு மகிழ்பவராகவும் அழகிய திருவாரூர் தலத்தின் மூலட்டானத்து பெருமான் எனது மனக் கண்ணுக்கு காட்சி அளிக்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

முடியார் மதியரவம் வைத்தார் போலும் மூவுலகும் தாமேயாய் நின்றார் போலும்

செடியார் தலைப் பலி கொண்டுழல்வார் போலும் செல்கதி தான் கண்ட சிவனார் போலும்

கடியார் நஞ்சு உண்டு இருண்ட கண்டர் போலும் கங்காள வேடக் கருத்தர் போலும்

அடியார் அடிமை உகப்பார் போலும் அணியாரூர் திருமூலட்டனானாரே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.47.6) அப்பர் பிரான், பெருமானை, கங்காள வேடர் என்று குறிப்பிடுகின்றார். கோன்=அரசன்: திருமால், பிரமன், கஜமுகாசுரன் ஆகியோரை ஒரு பொருட்டாக எண்ணாமல், அவர்களது வலிமையை அழித்த, பெருமானுக்கு, தான் ஒரு பொருட்டாக கருதக் கூடியவன் அல்லன் என்று தனது நிலையைத் தாழ்த்திக் கொண்டு, நானார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். ஆனால் எவராக இருந்தாலும் அவர்கள் தன்னடி பணிந்தால் அவர்களை ஏற்றுக் கொள்ளும் கருணை உள்ளம் படைத்தவன் சிவபெருமான் என்பதால், நல்வினையும் தீவினையும் ஆனவனே என்று இறைவனை புகழ்ந்து பாடி அவனது அருளை அப்பர் பிரான் வேண்டுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். இதன் மூலம், நாம் எத்தகைய இழிந்த நிலையில் இருந்தாலும், இறைவனை வேண்டினால் அவனது அருள் நமக்கு கிடைக்கும் என்பது உணர்த்தப் படுகின்றது. நாம் இதற்கு முன்னர் எடுத்த பிறவிகளில் ஈட்டப்பட்ட வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப நமது உயிர், உடலுடன் பொருத்தப் படுகின்றது. அந்த உடலும் உயிரும், பழைய வினைகளின் ஒரு பகுதியை அனுபவித்துக் கழிக்குமாறு அருள் புரிபவன் இறைவன். அத்தகைய அருள் இல்லையேல் உயிர்கள் என்றும் வினையுடன் பிணைந்து, வினையினைத் தீர்க்கும் வழியும் இல்லாமல் உழல வேண்டியது தான். இவ்வாறு வினைகளை அனுபவிக்கும் போது நமது வினைகளின் தன்மைக்கு ஏற்ப, நல்வினைகள் தீவினைகள் ஆகிய தன்மைக்கு ஏற்ப, நமக்கு இன்பமும் துன்பமும் மாறிமாறி வருகின்றன. உயிரினைத் தகுந்த உடலுடன் பொருத்தி, நல்வினை தீவினைகளை அனுபவித்து கழிக்குமாறு இறைவன் அருளுவதால், நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே ஆனாய் என்று அப்பர் பிரான் இறைவனை இங்கே குறிப்பிடுகின்றார். ஊழிக்காலத்தில் இறந்து பட்ட திருமாலின் உடலினைத் தனது தோள் மேல் சுமந்து கொண்டு ஊழி நடனம் ஆடுபவன் சிவபெருமான். செழித்து வளர்ந்த தாமரை மலரினை இருப்பிடமாகக் கொண்ட பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றினைத் தனது கையில் ஏந்தியும், தன்னை எதிர்த்து வந்த காட்டு யானையைக் கொன்று அதன் தோலினைத் தனது உடலின் மேல் போர்த்தவாறு கங்காள வேடம் தாங்கி எங்கும் செல்லும் இறைவனே, வினைகளால் சூழப்பட்டு இன்ப துன்பங்களில் ஆழ்ந்திருக்கும் அடியேன் உமக்கு ஒரு பொருட்டோ, அல்ல. எனினும் அனைத்து உயிர்களுக்கும் நல்வினையாகவும் தீவினையாகவும் உள்ள இறைவனே, நீர்வளம் மிகுந்து குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் அமரர்கள் தலைவனே, அடியேனை ஒரு பொருட்டாக கருதி எனது வினைகளை தீர்த்து அருள வேண்டும் என்று அப்பர் பிரான் பெருமானிடம் இறைஞ்சும் பாடல்.

கோன் நாரணன் அங்கம் தோள் மேல் கொண்டு கொழு மலரான் தன் சிரத்தைக் கையில் ஏந்திக்

கானார் களிற்று உரிவைப் போர்வை மூடிக் கங்காள வேடராய் எங்கும் செல்வீர்

நானார் உமக்கோர் வினைக் கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே

ஆனாய் அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.51.5) அப்பர் பிரான், உடை சூழ்ந்த புலித்தோலர் என்றும் கங்காளர் என்றும் பெருமானை குறிப்பிடுகின்றார். கலிக்கச்சி= ஆரவாரம் மிகுந்த; கடை=இல்லங்களின் வாசல்; தேரும்=நாடிச் செல்லும்; கங்காளர்=பிரளய முடிவினில் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளின் மீது போட்டுக் கொண்ட பெருமான்; தார்=மாலை; பெருமான் எப்போதும் வெற்றியையே கண்டமையால், வெல்கொடியார் என்று அழைக்கின்றார்.

புடை சூழ்ந்த பூதங்கள் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே நடமாடுவார்

உடை சூழ்ந்த புலித்தோலர் கலிக்கச்சி மேற்றளியுளார் குளிர்சோலை ஏகம்பத்தார்

கடை சூழ்ந்த பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலியோடும்

விடை சூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.63.5) அப்பர் பிரான், பெருமானை, கங்காள வேடத்தான் என்று அழைக்கின்றார். நண்ணாதார்=நெருங்காதவர், சிவநெறியை நெருங்காத திரிபுரத்து அரக்கர்கள்; புண்ணியம்=தவத்தின் பயனாகிய புண்ணியம்; செய்யான்=செம்மை நிறம் உடையவன்; சிறிதும் பொய் கலப்பற்ற உண்மை வடிவினனாக இருப்பவனும், உயிர்கள் தவம் இருந்து அடையும் பயனாக இருப்பவனும், சிவநெறியை அணுகாமல் இருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் அழியுமாறு அம்பினை எய்தவனும், உயிர்கள் செய்யும் தவத்தில் மேம்பட்டு விளங்குபவனும், எருதினை வாகனமாகக் கொண்டவனும், தனது இடது கையினில் மான்கன்றினை ஏந்தியவனும், கங்காள வேடம் தரித்தவனும், கட்டங்கத்தைத் தனது கொடியில் சித்திரமாக உள்ளவனும், கொழுந்து விட்டு எரியும் தீப்பிழம்பினைப் போன்று செம்மை நிறத்தில் மேனியை உடையவனும், திருவானைக்கா தலத்தில் உறைபவனும், செழிப்பான நீர்த்திரளின் வடிவமாக உள்ளவனும் ஆடிய பெருமானை அடியேன் நாடிச் சென்றேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

பொய்யேதும் இல்லாத மெய்யன் தன்னைப் புண்ணியனை நண்ணாதார் புரம் நீறாக

எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் தன்னை ஏறமரும் பெருமானை இடமான் ஏந்தும்

கையானைக் கங்காள வேடத்தானைக் கட்டங்கக்கொடியானைக் கனல்போல் மேனிச்

செய்யானைத் திருவானைக்கா உளானை செழுநீர் திரளைச் சென்று ஆடினேனே

முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.85.4) அப்பர் பிரான், பெருமானை, கங்காளன் என்று அழைக்கின்றார். மூவன்=மூத்தவன்; அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக ஆதியாக இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. காவன்=காப்பவன், கா என்றால் காப்பாற்று என்று பொருள். அந்த வினைச் சொல்லில் இருந்த பிறந்த பெயர்ச்சொல்; ஆவன்=ஆக்கம் தருபவன்; அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக இருப்பவனும், திருமால் பிரமன் உருத்திரன் ஆகிய மூவருக்கும் முதலாக இருப்பவனும், உலகத் தோற்றத்திற்கு முன்னவனும், உலக ஒடுக்கத்திற்கு பின்னர் இருப்பவனும், அனைத்து உயிர்களும் சென்று அடைய விரும்பும் முடிவான வீடுபேறாக இருப்பவனும், அனைத்து உயிர்களையும் மற்றும் உலகத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் காப்பவனும், உலகுக்கும் உலகப் பொருட்களுக்கும் கண் போன்று இன்றியமையாதவனும், முற்றூழி காலத்தில் இறந்து பட்ட பிரமன் திருமாலின் உயிரற்ற உடல்களைச் சுமந்து கங்காள வேடத்துடன் காட்சி அளிப்பவனும், கயிலை மலையாக இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் ஆக்கமும் ஊக்கமும் தருபவனும், பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பமுடன் நீராடுபவனும், பிரமனும் திருமாலும் அடிமுடி அறிய முடியாதவாறு நீண்ட அழலாக நின்ற தேவனும் ஆகியவன் சிவபெருமான். இத்தகைய பெருமைகளை உடைய இறைவன், திருமுண்டீச்சரம் தலத்தில் சிவலோக நாயகனாக காட்சி தருகின்றான். அவன் தான் எனது சிந்தையில் கலந்து இருக்கின்றான் என்று அப்பர் பிரான் பெருமிதத்துடன் உணர்த்தும் பாடல்.

மூவன் காண் மூவர்க்கும் முதலானான் காண் முன்னுமாய் பின்னுமாய் முடிவானான் காண்

காவன் காண் உலகுக்கோர் கண் ஆனான் காண் கங்காளன் காண் கயிலை மலையினான் காண்

ஆவன் காண் ஆனகத்து அஞ்சு ஆடினான் காண் ஆரழலாய் அயற்கு அரிக்கும்அறியவொண்ணா

தேவன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (6.96.3) அப்பர் பிரான் பெருமானை, கங்காளம் தோள் மேல் கொண்டார் என்று குறிப்பிடுகின்றார். முடி=சடைமுடி; தேவர்கள் அணிந்துள்ள மணி முடிகளை இந்த பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, பெருமானின் முடி குறித்த நினைவு வந்தது போலும். ஏனையோரிடமிருந்து பல தன்மைகளில் மாறுபட்டு விகிர்தனாக காட்சி தரும் பெருமான், மற்றவர்களைப் போன்று கிரீடம் ஏதும் அணியாமல், பெருமானது சடையே முடியாக விளங்கும் வண்ணம் காட்சி அளிப்பதை இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முளை=முளைத்த; அலம்பு= ஒலிக்கின்ற; ஆர்க்க=ஒலி செய்ய; மூசு=மொய்க்க, தனது படத்தினால் மறைக்க; வடி=கூர்மை

இந்த பாடலில் கூத்தபிரான் தனது காலின் கீழே வைத்து அடக்கிய முயலகனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முயலகனை பற்றிய குறிப்புகள் காணப்படும் திருமுறை பாடல்கள் மிகவும் அரியதாக காணப்படுகின்றன. தனது சடையையே முடியாக கொண்டவரும்,. வானில் முளைத்த வெண்பிறைச் சந்திரனையும், சந்திரனை மறைக்கும் வண்ணம் படம் எடுக்கும் பாம்பினையும் தனது சடையில் ஒரே இடத்தில் வைத்துக் கொண்டவர் பெருமான். ஒலிக்கும் தன்மை வாய்ந்த சிலம்பினையும் ஓசை எழுப்பும் கழலையும் தனது பாதங்களில் கொண்டுள்ள பெருமான், அடங்காத முயலகனையும் அடக்கித் தனது காலின் கீழே வைத்துக் கொண்டார்; கூர்மையான முனைகளை கொண்டதாக விளங்கும் மழு ஆயுதத்தைத் தனது வலது கையினில் கொண்டுள்ள பெருமான், தனது உடலின் இடது பாகத்தில் திருமால் பொருந்தும் வண்ணம் கொண்டுள்ளவர் ஆவார்; அவர் துடி இசைக் கருவியை தனது வலது கையில் வைத்துள்ளார், பிரளய காலத்தில் இறந்த திருமால் மற்றும் பிரமனது உடல்களைத் தனது தோள் மேல் வைத்துக் கொண்டார்; அவர் என்னை வருத்திய சூலை நோயினைத் தீர்த்து, அடியேனைத் தனது அடிமையாக ஏற்றுக்கொண்டார் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இளநாகம் உடனாக் கொண்டார்

அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடிக்கீழ் கொண்டார்

வடி கொண்டு ஆர்ந்து இலங்கு மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்

துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.67.10) சுந்தரர், பெருமானை கங்காளன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் சுந்தரர், தன்பால் மனதினை பொருத்தி வழிபடும் அடியார்களுக்கு எளியவனாக பெருமான் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். உயிர்களின் மலங்களை பிச்சையாக ஏற்றுக்கொண்டு உயிர்களை உய்விக்கும் கருணைச் செயலின் காரணத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் ஏன் பிரம கபாலத்தில் அத்தகைய பிச்சையை ஏற்க வேண்டும் என்பதற்கு விடையினை அறிய நாம் கந்த புராணத்திற்கு செல்ல வேண்டும். (ததீசி உத்தரப் படலம், தக்ஷ காண்டம்) தங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்று தங்களுக்குள்ளே வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் திருமால் ஆகிய இருவரின் முன்னே நீண்ட தீப்பிழம்பாக தோன்றிய பெருமானின் அடியையும் முடியையும் காண்பதற்கு இருவரும் முனைந்தனர். தங்களது முயற்சியில் இருவரும் தோல்வியடைந்து திகைத்து நின்ற தருணத்தில் பெருமான் மாதொரு பாகனாக அவர்களின் முன்னே காட்சி கொடுத்தார். அப்போது திருமால், பெருமானின் தன்மையை உணர்ந்தவராக பெருமானிடம் தனது தவறினை மன்னித்து விடுமாறு வேண்டினார். ஆனால் பிரமனோ அப்போதும் பெருமானை மதிக்காமல், பெருமானை இழிவாகவும் பேசவே, பெருமான் பைரவரை அழைத்தார். செருக்குடன் தன்னை நிந்தித்த பிரமனின் தலையை கிள்ளி துண்டிக்குமாறும், கர்வம் கொண்டிருந்த தேவர்கள் முனிவர்கள் மற்றும் திருமாலின் உடல்களிலிருந்து இரத்தத்தை வடியச் செய்யுமாறும் ஆணையிட்டார். உடனே, பைரவர் பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றை, உச்சியில் இருந்த தலையை தனது நகத்தால் கிள்ளி எறிந்தார். அப்போது பிரமனின் உடலிலிருந்து இரத்தம் அனைத்தும் வடியவே பிரமன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பைரவர் பிரமனை உயிர் பெற்றெழுமாறு செய்தார். கலக்கம் தெளிந்த பிரமன் அப்போது பைரவரை வணங்கி தனது தவறுகளை மன்னிக்குமாறு வேண்டினார். மேலும் மற்றவர்களின் உடலில் உள்ள இரத்தத்தினை சேகரிப்பதற்கு தனது கபாலத்தை பயன்படுத்துமாறும் வேண்டினார். பின்னர் செருக்கு கொண்டிருந்த தேவர்கள் மற்றும் முனிவர்களின் உடலில் இருந்த இரத்தத்தை வடியச் செய்த பைரவர், பின்னர் அவர்களையும் உயிர்ப்பித்தார். அதன் பின்னர் வைகுந்தம் சென்ற பைரவரை, வாயிலில் இருந்த விஷ்வக்ஸேனன் தடுக்கவே, பைரவர் அவனைக் கொன்று அவனது உடலினைத் தனது சூலத்தினில் ஏந்தியவாறு வைகுந்தத்தின் உள்ளே சென்றார். இதனிடையில் பைரவர் வந்த நோக்கத்தை அறிந்து கொண்ட திருமால், தனது மார்பினைத் தனது நகத்தினால் கீறி தனது உடலில் இருந்த உதிரத்தினை, பைரவர் ஏந்தியிருந்த கபாலத்தில் சிந்தினார். திருமால் இவ்வாறு பிரமகபாலத்தை தனது குருதியால் நிறைவு செய்ததை, பாசுரங்களும் குறிப்பிடுகின்றன. (ஆனால் பிரம கபாலம் பெருமானின் கையிலிருந்து விடுபட்டு விலகுவதற்காக திருமால் அவ்வாறு செய்தார் என்று பாசுரங்கள் கூறுகின்றன.) இலக்குமியும் பூமிதேவியும் வேண்ட, பைரவர் திருமாலை உயிர்ப்பித்தார் என்று கந்த புராணம் குறிப்பிடுகின்றது. பண்டைய நாளில் பிரமன் திருமால் முனிவர்கள் மற்றும் தேவர்கள் கொண்டிருந்த செருக்கினை, பைரவர் ஏந்தியிருந்த பிரம கபாலத்தில் வாங்கிக் கொண்டு அவர்களை உய்வித்த பெருமான், தானே நேராக பலியேற்பது பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு பெருமான் பலியேற்பதன் நோக்கமே, அவர் உயிர்கள் பால் கொண்டுள்ள கருணையே. பெருமான் இவ்வாறு பலியேற்பதை நாம் பயன்படுத்திக் கொண்டு, பெருமான் நமது எதிரே நிற்பதாக பாவித்துக் கொண்டு, நமது மலங்களை அவர் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இடுவதாக நினைத்துக் கொண்டு விட்டொழிக்க வேண்டும் என்பதே அருளாளர்கள் நமக்கு உணர்த்தும் அறிவுரை. திருமூலரும் திருமாலின் உதிரத்தினை பைரவர் ஏந்திய செய்தியை குறிப்பிடுகின்றார். ஏன்ற=ஏற்றுக் கொண்ட; அந்தணன்=பிரமன்; களேபரம்=உயிரற்ற உடல்; தனக்கு ஒப்பாக வேறோர் பொருளையோ தெய்வத்தையே சான்று காட்ட முடியாத தன்மையில் இருக்கும் சிவபெருமான், தனது அடியார்களுக்கு மிகவும் எளியவனாக விளங்குகின்றார் என்று சுந்தரர் கூறுகின்றார். மான்று= அறியாமை; அறியாமையால் அறிந்து கொள்ள முடியாதவன் என்று கூறுகின்றார்.

ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதிரத்தினை ஏற்றுத்

தோன்று தோள் மிசைக் களேபரம் தன்னைச் சுமந்த மாவிரதத்த கங்காளன்

சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன் தன்னைத் தன்னிலா மனத்தார்க்கு

மான்று சென்று அணையாதவன் தன்னை வலிவலம் தனில் வந்து கண்டேனே

பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் வாழ்நாட்கள் முடிந்து விட்ட காரணத்தால், அவர்கள் இறந்துவிட, அவர்களது எலும்புக் கூட்டினை சிவபெருமான் அணிந்தார் என்று திருவாசகம் திருச்சாழல் பதிகத்தின் ஒரு பாடலில் (8.12.11) மணிவாசக அடிகளார் கூறுகின்றார். காலாந்திரம்=கால முடிவு: ஊழிக் காலம்

நங்காய் ஈது என்ன தவம் நரம்போடு எலும்பு அணிந்து

கங்காளம் தோள் மேலே காதலித்தான் காணேடி

கங்காளம் ஆமா கேள் காலந்தரத்து இருவர்

தம் காலம் செய்ய தரித்தனன் காண் சாழலோ

திருமந்திரம் ஆறாம் தந்திரம் திருநீறு அதிகாரத்தின் பாடலில் திருமூலர், திருநீறு அணிவதன் பயனாக சிவகதி சாரலாம் என்று கூறுகின்றார். இந்த பாடலில் பெருமானை கங்காளன் என்று திருமூலர் அழைக்கின்றார். பெருமானின் அழகிய திருவடிகளைச் சென்று சார்வதே சிவகதி என்று உணர்த்துகின்றார். கங்காளன்=பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளினில் சுமக்கும் பெருமான். கங்காள வேடத்தன் என்ற குறிப்பு, பிரமன் திருமால் ஆகிய இருவரும் பிரளய முடிவினில் இறந்த பின்னரும், எஞ்சி இருப்பவன் சிவபெருமான் என்பதை உணர்த்துகின்றது. ஒளி கெடாத வண்ணம் திருநீற்றினை பூச வேண்டும் என்று திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார். நீருடன் குழைத்து திருநீற்றினை பூசினால், மங்காமல் ஒளி வீசும் என்பதை நாம் அறிவோம். பெருமான் பால் உள்ளன்போடு, அவரது அடையாளமாகிய திருநீற்றினை, தயக்கம் ஏதுமின்றி நாம் பூசிக் கொள்ள வேண்டும் என்பதை இங்கே உணர்த்துகின்றார். அவ்வாறு பூசப்படும் திருநீறு அடியார்களுக்கு சிறந்த கவசமாகத் திகழும் என்ற செய்தியும் இங்கே சொல்லப் படுகின்றது.

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை

மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்

தங்கா வினைகளும் சாரும் சிவகதி

சிங்காரமான திருவடி சேர்வரே

திருப்பைஞ்ஞிலி தலம் சென்ற சுந்தரருக்கு, பெருமான் கங்காள வேடராக காட்சி கொடுத்தார் என்று பெரிய புராணம் உணர்த்துகின்றது. சுந்தரர் திருச்சுற்றினை வலம் வந்த போது, பெருமான் கங்காள வேடத்தராக காட்சி கொடுத்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சாடுவார் நீடும்

எப்பெயர் பதியும் இருமருங்கும் இறைஞ்சி இறைவர் பைஞ்ஞிலியை எய்தி

பைப்பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் பாங்கமர் புடை வலம் கொண்டு

துப்புறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்று கங்காளரைக் கண்டார்

பொழிப்புரை:

முற்றூழிக் காலத்தில் பிரமன் திருமால் ஆகிய இருவரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளின் மீது தாங்கியவரும், கயிலாய மலையின் தலைவரும்,கானப்பேர் என்று அழைக்கப்படும் பாண்டிய நாட்டு தலத்தில் உறைபவரும், உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பகுதியில் வைத்திருப்பவரும், திரிசூலப் படையினை உடையவரும், இடபத்தை ஆட்கொண்டு அதன் மீது அமர்ந்து பயணம் செய்பவரும் ஆகிய பெருமான் தொடர்ந்து உறையும் இடம் திருவையாறு ஆகும். இந்த தலத்தில் உள்ள நறுமணம் மிகுந்த சோலைகளில் நுழையும் சிவந்த கால்களை உடைய வெண்குருகு பறவைகள் தங்களது கூர்மையான அலகுகள் கொண்டு ஈரமான இறகுகளை கோதி உலர்த்தி குளிர் நீங்கப் பெற்று, பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டிய இரையினைத் தேடுகின்றன.

பாடல் 4:

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் 4, 5, 6, 7(திதே 06225)

ஊன் பாயும் முடை தலை கொண்டு ஊரூரின் பலிக்கு உழல்வார் உமையாள் பங்கர்

தான் பாயும் விடை ஏறும் சங்கரனார் தழல் உருவர் தங்கும் கோயில்

மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள் தோறும்

தேன் பாய மீன் பாயச் செழுங்கமலம் மொட்டு அலரும் திருவையாறே

விளக்கம்:

ஊன் பாயும்=ஊன் உலர்ந்து பரவிய; முடை=முடை நாற்றம்; உடை=உடைந்த; தேன் பாயும்=தேன் ஒழுகும்; சங்கரன் என்றால் நலம் செய்பவர் என்று பொருள். பெருமான் ஊர் தோறும் சென்று பலி ஏற்பது உயிர்களுக்கு நன்மை புரியும் நோக்கத்துடன் தான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

ஊன் உலர்ந்து துர்நாற்றம் வீசும் பிரமகபாலத்தைத் தனது கையினில் ஏந்தியவாறு ஊர்கள் தோறும் சென்று பலி ஏற்பதற்காக திரிபவரும், உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவரும் பாய்ந்து செல்லும் ஆற்றலை உடைய இடபத்தைத் தனது வாகனமாகவும் உடையவரும் ஆகிய சங்கரனார் தங்கும் திருக்கோயில் உடைய தலம் திருவையாறு ஆகும். மான்கள் துள்ளித் திரியும் சோலைகளில் அருகே உள்ள வயலோரங்களில் உள்ள மரங்கள் மீது குரங்குகள் குதித்து பாய்வதால், மலர்களில் உள்ள தேன் மடுக்களில் சிந்துவதைக் காணும் மீன்கள் துள்ளி குதிப்பதால் ஏற்படும் அதிர்வுகள் மொட்டாக உள்ள தாமரை மலர்களை மலரச் செய்கின்றன.

பாடல் 5:

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் 4, 5, 6, 7(திதே 06225)

நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கு நிறைந்த கொன்றைத்

தாரோடு தண் கரந்தை சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில்

காரோடி விசும்பு அளந்து கடி நாறும் பொழில் அணைந்த கமழ் தார் வீதித்

தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம் பயிலும் திருவையாறே

விளக்கம்:

கரந்தை=விபூதிப் பச்சை; கரந்தை, கூவிளம் (வில்வம்), வெள்ளெருக்கு, கொன்றை முதலிய மலர்கள் பெருமானுக்கு உகந்த மலர்கள்; நீர்=இங்கே கங்கை நதி; தத்துவன்=உயர்ந்த பொருளாக இருப்பவன்; கார்=மேகம்; சேயிழை=சிறந்த அணிகலன்கள்; தேரோடும் வீதிகளில் நடன அரங்குகள் இருந்த நிலை, பண்டைய நாட்களில் இறைவன் வீதிவலம் வரும் போது, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றதை நமக்கு உணர்த்துகின்றன.

பொழிப்புரை:

கங்கை நதி, வில்வ இலைகள், பிறைச்சந்திரன், வெள்ளெருக்கு மலர்கள், விரிந்து நிறைந்து காணப்படும் கொன்றை மலர் கொத்துகள், குளிர்ந்த விபூதிப் பச்சை இலைகள் ஆகியவற்றைத் தனது சடையில் அணிந்தவரும், அனைத்து உயிர்கட்கும் அனைத்துப் பொருட்கட்கும் உயர்ந்த பொருளாக விளங்குபவரும் ஆகிய இறைவன் தங்கும் திருக்கோயில் திருவையாறு தலத்தில் உள்ளது. வானில் உலவும் மேகத்தைத் தொடும் வண்ணம் மிகவும் உயர்ந்து காணப்படும் இந்த திருக்கோயில், வானளவு உயர்ந்து நறுமணம் பரப்பும் சோலைகளால் சூழப்பட்டு, நறுமணம் நிறைந்து தேர்கள் ஓடும் வண்ணம் அகன்ற வீதிகளில் அமைந்துள்ள அரங்குகளில் சிறந்த அணிகலன்கள் அணிந்த மங்கையர்கள் இடைவிடாது நடனம் பயில்கின்றனர்.

பாடல் 6:

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் 4, 5, 6, 7(திதே 06225)

வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறி காட்டும் விகிர்தனாகி

பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்

காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாடக் கவினார் வீதித்

தேந்தாம் என்று அரங்கு ஏறிச் சேயிழையார் நடமாடும் திருவையாறே

விளக்கம்:

தேந்தாம்=இசையுடன் இணைந்து ஒலிக்கும் முழவினை உணர்த்தும் குறிப்புச் சொல்; நன்னெறி=உயிர்களுக்கு வினைகளின் பிணைப்பிலிருந்தும் விடுதலை அளித்து, என்றும் அழியாத பேரின்பத்தில் ஆழ்த்தும் முக்தி நெறி. சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரும் முக்தி நிலை அளிக்க முடியாது என்பதால், சிவபெருமானை ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தாமம்=மாலை; மக்களை ஆட்சி செய்யும் வேந்தனுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணம், மக்களை காப்பதும் அவர்களுக்கு நல்ல வழி காட்டுவதும் தானே. எனவே தான் அத்தகைய பொருத்தமான நல்வழியைக் காட்டும் பெருமான் வேந்தன் என்று அழைக்கின்றார்.

பொழிப்புரை:

அனைத்து உலகங்களுக்கும் வேந்தனாக விளங்கும் பெருமான், விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நன்னெறி காட்டும் விகிர்தனாக உள்ளார். நறுமணம் வீசும் கொன்றை மலர் மாலையினைத் தனது சடையில் அணிந்தவரும், புண்ணியமே வடிவமாக உள்ளவரும் ஆகிய இறைவன் உறையும் திருக்கோயில் உள்ள இடம், காந்தாரம் இசைக்கு பொருந்தும் வகையில் மகளிர் பாடல்கள் பாட, அழகிய வீதிகளில் அமைந்த அரங்குகளில் சிறந்த அணிகலன்களை பூண்ட இளம் பெண்கள் தேம் தாம் என்று ஒலிக் குறிப்புக்கு ஏற்ப நடமாடும் திருவையாறு நகரமாகும்.

பாடல் 7:

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் 4, 5, 6, 7(திதே 06225)

நின்றுலா நெடு விசும்பு நெருக்கி வரு புரம் மூன்று நீள் வாய் அம்பு

சென்று உலாம் படி தொட்ட சிலையாளி மலையாளி சேரும் கோயில்

குன்றெலாம் குயில் கூவக் கொழும் பிரச மலர் பாய்ந்து வாசமல்கு

தென்றலார் அடி வருடச் செழுங்கரும்பு கண் வளரும் திருவையாறே

விளக்கம்:

சிலை=மலை, வில் என்ற இரண்டு பொருள்களும் பொருந்துவதால், மலையாகிய வில் என்று பொருள் கொள்வது பொருத்தமே. மலையாளி=மலையை ஆள்பவர், கயிலை மலையை ஆள்பவர்; பிரசம்=தேன்; மென்மையான காற்று என்பதை குறிப்பிட வருடுதல் என்று கூறுகின்றார். நின்றுலா=நின்று உலவும்; நின்றுலா என்ற தொடரை நெடுவிசும்பின் நேருக்கு என்ற தொடருக்கு பின்னே அமைத்து பொருள் கொள்ள வேண்டும். நெருக்கி வரு புரம்=ஒரே நேர்கோட்டினில் நெருங்கி வந்த மூன்று பறக்கும் கோட்டைகள்; உலாம்=உலவும் வண்ணம்; கண் வளரும்=கணுக்கள் வளரும் வண்ணம்;.

பொழிப்புரை:

நீண்ட வானவெளியில் எப்போதும் பறந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளும், நேர்கோட்டினில் நெருங்கி வந்த தருணத்தில், மேரு மலையினை வளைத்துச் செய்யப்பட்ட வில்லினைத் தொட்டு, அந்த மூன்று கோட்டைகளையும் துளைத்துச் செல்லும் வண்ணம் ஒரு கூரிய அம்பினை எய்தி அந்த கோட்டைகளை அழித்த சிவபெருமான் கயிலாய மலையினை ஆள்பவன் ஆவான். இத்தகைய ஆற்றல் பொருந்திய பெருமான் சென்றடைந்து உறையும் திருக்கோயில், குளிர்ந்த தென்றல் காற்று வீசுவதால் மகிழ்ச்சி அடையும் குயில்கள் குன்றுகளில் அமர்ந்த வண்ணம் கூவ, தேன் நிறைந்ததும் செழுமை நிறைந்து தேன் உடையதும் ஆகிய மலர்களில் படர்ந்து நறுமணத்தினை சுமந்து வரும் தென்றல் காற்று கரும்புகளின் அடிபாகத்தினைத் தடவி வீச, கரும்பின் கணுக்கள் செழிப்பாக வளரும் வயல்கள் கொண்ட ஊராகிய திருவையாற்றில் உள்ளது.

பாடல் 8:

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 8 திதே (0626)

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 8 தொடர்ச்சி மற்றும் 9, 10, 11 திதே (0626)

அஞ்சாதே கயிலாய மலை எடுத்த அரக்கர் கோன் தலைகள் பத்தும்

மஞ்சாடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள் புரிந்த மைந்தர் கோயில்

இஞ்சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இளமேதி இரிந்து அங்கு ஓடிச்

செஞ்சாலிக் கதிர் உழக்கிச் செழுங்கமல வயல் படியும் திருவையாறே

விளக்கம்:

தேங்காய் தாமாக மரத்திலிருந்து விழுவதைத் தவிர்த்து எவரும் தேங்காயை பறிப்பதில்லை என்று குறிப்பிட்டு, நகரின் செல்வ வளம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. செஞ்சாலி=சிறந்த வகை நெல்; இந்த பாடலில் அஞ்சாதே மலை எடுத்த அரக்கன் என்று திருஞானசம்பந்தர் இராவணனை குறிப்பிடுகின்றார். தேரிலிருந்து வேகமாக கீழே குதித்து கோபத்துடன் மலையை நோக்கி ஓடிய அரக்கனிடம் அவனது தேர்ப்பாகன், தவறு செய்யவேண்டாம் என்று சொன்ன அறிவுரை அரக்கனது காதில் விழவில்லை. புனிதமான மலையினை வலம் வந்து வணங்காமல், அந்த மலையினை பேர்த்து எடுக்கத் துணிவது தவறு அல்லவா, அந்த தவற்றின் பின் விளைவுகள் மோசமாக இருக்குமே என்று அச்சம் கொண்டு, தவிர்த்திருக்க வேண்டும். சர்வ வல்லமை உடைய சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாவதால் என்ன நேரிடுமோ என்று கவலை கொண்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய அச்சம் ஏதும் கொள்ளாமல், தனது வலிமையின் மீது அளவு கடந்த நம்பிக்கை உடையவனாக, அரக்கன் இராவணன் தனது வழியில் குறுக்கிட்ட கயிலாய மலையினைப் பேர்த்து எடுத்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு, தனது பயணத்தைத் தொடர நினைத்தான். இந்த செய்கையைத் தான் அஞ்சாதே மலை எடுத்தான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வலிமை என்று உணர்த்தும் மைந்து என்ற சொல், எதுகை கருதி மஞ்சு என்று திரிந்தது. நெரிய= நொறுங்கும் வண்ணம்; அடர்த்த=மலையின் கீழே அமுக்கிய; இன், சாயல் ஆகிய இரண்டு சொற்களும் சேர்ந்து இஞ்சாயல் என்று மாறின. இன்=இனிய; சாயல்=நிழல்; மேதி=எருமை மாடு; இரிந்து=கலக்கம் கொண்டு அங்கும் இங்கும் ஓடி; உழக்கி=காலால் மிதித்து நசுக்கி;

செஞ்சாலி என்பது ஒரு உயர்ந்த வகை நெல்வகை. இத்தகைய நெற்கதிர்கள் எருமை மாடுகளால் பாழ்படுத்தப் படுவதை குறிப்பிட்டு, தலத்தின் நில வளத்தை திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். இத்தகைய நெல் வகையை குறிப்பிடும் வேறு சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம். ஆவூர் பசுபதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.8.3) சாலி திளைக்கும் வயல்கள் நிறைந்த தலம் என்று குறிப்பிடுகின்றார். பொங்கி வரும் புனல்=மிகுந்த கோபத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி; வானிலிருந்து கீழே இறங்கி நிலவுலகம் வருவதற்கு விருப்பம் இல்லாததால் மிகுந்த கோபத்துடன் உலகினையே புரட்டிப் போடும் எண்ணத்துடன் வேகத்துடன் வந்த கங்கை நதி; அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்ததாக கருதப்படுவது மனிதப் பிறவியே. மனிதப் பிறவி எடுப்பதன் மூலம் தான், உயிர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட கருவி கரணங்களை பயன்படுத்தி உண்மையான மெய்ப் பொருளை உணர்ந்து, அவனை துதித்து வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைய முடியும் என்பதால் போம் வழி, முக்திவுலகுக்கு செல்லும் வழியாகிய மனிதப்பிறவி என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். ஆனால் இதனை, மனிதப்பிறவிக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பினை, அனைவரும் உணர்ந்து செயல்படுவதில்லை. சிலர் இறைவனை வழிபட்டும் பல புண்ணியங்களைச் செய்தும் வாழ்வினில் உய்வினை அடைகின்றனர். ஆனால் பலர் மேலும்மேலும் தீய செயல்களை செய்து இழிந்த நிலையாகிய பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு உள்ளனர். இந்த தன்மையையே ஏற்றமானார் என்றும் இழிவுமானார் என்றும் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சாலி=ஒரு வகை உயர்ந்த ரக நெல்; பங்கயம்=தாமரை மலர்; பங்கயமங்கை என்ற தொடர் தலத்து அம்பிகை பங்கஜவல்லியை குறிப்பிடுவதாகவும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. இந்த தலத்தினில், பங்கயவல்லி மற்றும் மங்களாம்பிகை என்று இரண்டு அம்பிகை சன்னதிகள் உள்ளன. பங்கயவல்லி சன்னதி மிகவும் பழமையானதாக கருதப் படுகின்றது. பங்கயமங்கை என்ற சொல்லுக்கு தாமரை மலரில் அமரும் இலக்குமி தேவி என்று பொருள் கொண்டு, செல்வச் செழிப்பு மிகுந்த தலம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. வானிலிருந்து கீழே இறங்கி நிலவுலகம் வருவதற்கு விருப்பம் இல்லாததால் மிகுந்த கோபத்துடன் உலகினையே புரட்டிப் போடும் எண்ணத்துடன் மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது சடையினில் தரித்துக் கொண்டு மறைத்த ஆற்றல் உடையவர் சிவபெருமான்; முக்தி அடைந்து உய்யும் வாய்ப்பினை அளிக்கும் முகமாக உயிர்களுக்கு மனிதப் பிறவியை அளிப்பவர் சிவபெருமான். அத்தகைய உயர்ந்த மனிதப் பிறவியை பெறுகின்ற உயிர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அந்த உயிர்களுக்கு இழிவு அல்லது ஏற்றம் பெறுவதற்கும் வழி வகுப்பவர் சிவபெருமானே. இந்த உலகினில் உள்ள உயர்ந்த ஞானம் அடைந்த சான்றோர்களும் வானவர்களும் புகழ்ந்து ஏத்தும் சிவபெருமான் என்றும் உறைகின்ற இடம் ஆவூர் பசுபதீச்சரம்திருக்கோயிலாகும். உயர்ந்த தென்னை மரங்கள், கரும்புகள் சென்று சேரும் ஆலைகள் மற்றும் சாலி எனப்படும் உயர்ந்த நெல் விளையும் வயல்கள், நீர்நிலைகள் நிறைந்த தலமாகிய ஆவூரினை, தாமரை மலரில் உறைகின்ற திருமகள் மிகவும் விரும்புவதால், இந்த ஊர் செல்வச் செழிப்புடன் காணப் படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவூர் தலத்து பசுபதீச்சரம் திருக்கோயிலில் உறையும் பெருமானைப் புகழ்ந்து நாவே நீ பாடுவாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார் போம் வழி வந்து இழிவு ஏற்றமானார்

இங்குயர் ஞானத்தர் வானோர் ஏத்தும் இறையவர் என்றும் இருந்த ஊராம்

தெங்குயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை

பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே

பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.60.6) திருஞான சம்பந்தர் இந்த நெல் வகையினை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் அகத்துறை வகையைச் சார்ந்தவை. பெருமான் பால் பலரையும் தூதாக அனுப்பி, தனது நிலையை பெருமானுக்கு உணர்த்துமாறு வேண்டிய போதிலும் தான் எதிர்பார்த்த பதில் கிடைக்காததால் சோர்வுற்று காணப்படும் தலைவியின் நிலை உணர்த்தப்படும் பாடல். தான் தொழுது வேண்டிய போதிலும், ஜோடியாக இருந்த புறாக்கள் அசையாமல் இருந்தன போலும்; அடுத்து யாரை தூதாக அனுப்பலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த சம்பந்த நாயகியின் கண்களில், நெல்வயல்களில் இருந்த தாமரை மலர் மீது வீற்றிருந்த அன்னம் தென்படுகின்றது. வளம் மிகுந்த வயலில் செழித்து வளர்ந்திருந்த நெற்கதிர்கள் காற்றில் அசையும் காட்சி, அன்னத்திற்கு சாமரம் வீசுவது போல் தோன்றியதால் அரச போகத்தில் வாழும் அன்னம் என்று உணர்த்துகின்றார். கூற்று உதைத்த பெருமான் என்று கூற்றுவனை குறிப்பிடுவதற்கு சுவையான விளக்கம் அறிஞர்களால் அளிக்கப் படுகின்றது. தன்னை வருத்தும் கொடிய பயலை நோயினை, சம்பந்த நாயகி கூற்றுவனுக்கு ஒப்பிடுவதாகவும், காலனை காலால் உதைத்த பெருமான், தன்னை காலனாக வருத்தும் பயலை நோயினை உதைத்துத் துரத்தும் வண்ணம் தன்னுடன் கூட வேண்டும் என்று விரும்புவதை குறிப்பாக உணர்த்தும் வண்ணம் கூற்றுவன் உதை பட்டதை குறிப்பிடுவதாக விளக்கம் கூறுகின்றனர். துளங்காத=அசையாத; விண்ணும் மண்ணும் என்று குறிப்பிட்டு பொருட் பிரபஞ்சத்தையும் மறை என்று குறிப்பிட்டு சொற்பிரபஞ்சத்தையும் தோற்றுவித்தவன் இறைவன் என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பலரையும் தூதாக அனுப்பிய பின்னரும் தனது நோக்கம் நிறைவேறாததால், அன்னத்தை அழைத்த சம்பந்த நாயகி, தூதுச் செய்தி எதனையும் இந்த பாடலில் குறிப்பிடவில்லை போலும். அதற்கு பதிலாக பெருமானுடன் தான் இணைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்பதாக இந்த பாடல் அமைந்துள்ளது. நெல் வயல்களில் உள்ள சேற்றில் மலர்ந்த தாமரை மலர் மீது அமர்ந்திருந்து, செழுமையாக வளர்ந்துள்ள செஞ்சாலி நெற்கதிர்கள் காற்றில் அசைந்து சாமரம் வீசுவதைப் போன்ற தோற்றம் தர, அரச போகத்தில் திளைக்கும் அன்னமே, ஆகாயம் முதலாக நிலம் வரையில் உள்ள ஐந்து பூதங்களையும் நான்கு மறைகளையும் தோற்றுவித்த பெருமான் தோணிபுரத்தின் தலைவனாக விளங்குகின்றான். எவராலும் அசைக்க முடியாத வண்ணம் வலிமையுடன் விளங்கிய கூற்றுவனை உதைத்து வீழ்த்திய பெருமானின் திருவடிகளை அடியவள் சென்று அடைந்து சேரும் வழியினை எனக்கு உணர்த்துவீராக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சேற்று எழுந்த மலர்க் கமலச் செஞ்சாலிக் கதிர் வீச

வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண் மறைகள்

தோற்றுவித்த திருத்தோணிபுரத்து ஈசன் துளங்காத

கூற்று உதைத்த திருவடியே கூடுமா கூறீரே

திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.64.2) திருஞானசம்பந்தர், சாலி நெல்லினை குறிப்பிடுகின்றார். கருக் கொண்ட நெற்பயிர்கள் மற்றும் கரும்புகள் நிறைந்து காணப்படும் வயல்களும் வீரக்கழல் புனைந்த மன்னர்களால் காக்கப்படும் செல்வமும் நிறைந்த நகரம் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர், மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒன்ற வைத்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மருவார்= பகைவர்கள்; உம்பர் பிரான்=தேவர்கள் தலைவன்; சாலி=ஒருவகை நெல்; ஆலை=கரும்பு; பாண்டிய மன்னன், அரசியார் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் ஆகியோருடன் பாண்டி நாட்டுத் தலங்கள் அனைத்தும் சென்ற, திருஞானசம்பந்தர், பாண்டிய மன்னர் குடிமக்களை பாதுகாத்த செய்தியை இங்கே குறிப்பிடுகின்றார் போலும்.

மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மாமலையான் மடந்தை

ஒருபால் பாகமாகச் செய்த உம்பர் பிரான் அவன் ஊர்

கருவார் சாலி ஆலை மல்கிக் கழல் மன்னர் காத்தளித்த

‘ திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப் பூவணமே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.131.6) சாலி நெல் திருஞான சம்பந்தரால் குறிப்பிடப் படுகின்றது. வரைப் பண்டம்=மலைகளில் கிடைக்கும் பொருட்கள், மணிகள், அகில், சந்தனம், முதலியன; நகை=பல்; நகையார் வெண்தலை=வாய் பிளந்து காணப்படுவதால் சிரிப்பது போன்ற தோற்றத்தினை உடைய மண்டையோடுகள்; தகை=தடுப்பு, இங்கே நதிக்கு பாதுகாப்பாக இருக்கும் கரை; இடறி=இடித்துக் கொண்டு, மோதி, வாரி இறைத்துக் கொண்டு; சாலி=செஞ்சாலி எனப்படும் ஒரு வகை நெல்; வாய் பிளந்து இருப்பதால் பற்கள் வெளியே தெரியும் வண்ணம் சிரிப்பது போன்று காட்சியளிக்கும் மண்டை ஓடுகளை தனது தலையில் தலைமாலையாக அணிந்தவனும் எமது தலைவனுமாகிய பெருமான் உறையும் இடம் முதுகுன்றம் தலமாகும். மலையில் கிடைக்கும் பல வகையான பண்டங்களை அடித்துக் கொண்டு வந்து மணிமுத்தாறு நதி தனது அலைகளால், தனக்கு பாதுகாப்பாக இருக்கும் இரண்டு கரைகளையும் உடைத்துக் கொண்டு தான் அடித்துக் கொண்டு வந்த பொருட்களை வாரி இறைத்துக் கொண்டும், நெற்கதிர்கள் கழுநீர் கொடிகள் மற்றும் குவளைக் கொடிகள் ஆகியவற்றை நீரின் வேகத்தினால் சாய்த்துக் கொண்டும் தாமரைக் கொடியில் உள்ள மொட்டுகளை வயல்களின் வரப்புகளில் மோதி மலரும் வண்ணம் புரட்டியும் முதுகுன்றம் தலத்தினை வந்து அடைகின்றது. இவ்வாறு செல்வச் செழிப்பும் நீர்வளமும் உடைய தலமாகிய முதுகுன்றமே பெருமான் உறையும் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நகையார் வெண்தலை மாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நன் முத்தாறு

வகையாரும் வரைப் பண்டம் கொண்டு இரண்டு கரை அருகும் எறிய மோதித்

தகை ஆரும் வரம்பு இடறிச் சாலி கழுநீர் குவளை சாயப் பாய்ந்து

முகையார் செந்தாமரை கண் முகம் மலர வயல் தழுவு முதுகுன்றமே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.49.8) திருஞான சம்பந்தர், சீர்காழி தலத்து வயல்களை சாலி சேர் வயல் என்று குறிப்பிடுகின்றார். மைத்த=கருமை நிறம் கொண்ட; ஆலைகள்=கரும்பு ஆலைகள் மற்றும் கரும்பு ஆகிய இரண்டையும் குறிக்கும் சொல்; இங்கே கரும்புகளை குறிக்கும்; வைகலும்=தினமும்; கடலலைகள் ஓயாது ஒலிக்கும் தன்மை தினமும் ஒலிக்கும் என்று சொல்லப் படுகின்றது. கத்து=ஒலிக்கின்ற; பெருமானின் திருப்பாதங்களைத் தொழும் வாய்ப்பினை இந்த பிறவியிலேயே அருள வேண்டும் என்று திருஞான சம்பந்தர் கோருகின்றார்.

மைத்த வண்டெழு சோலை ஆலைகள் சாலி சேர் வயலார வைகலும்

கத்து வார் கடல் சென்று உலாவும் கலிக் காழி

அத்தனே அரனே அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய் உன கழல்

பத்தராய்ப் பரவும் பயன் ஈங்கு நல்காயே

கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.52.8) திருஞான சம்பந்தர், வண்டல் மண் பொருந்திய சாலி நெல் வயல்களும் கரும்பு ஆலைகளும் வளமாக இருக்கும் வண்ணம் மழை பொழியும் தலம் கோட்டாறு என்று கூறுகின்றார். கொண்டல்=மழை பொழியும் மேகம்; கழல் என்பது இங்கே வீரக் கழல் அணிந்த பாதத்தை குறிக்கும். தொண்டு=தொண்டர்கள்; தொழிலன்=ஐந்து தொழில்களைப் புரியும் இறைவன்;

வண்டலார் வயல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை

கொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ் கோட்டாற்றில்

தொண்டெலாம் துதி செய நின்ற தொழிலனே கழலால் அரக்கனை

மிண்டு எலாம் தவிர்த்து என் உகந்திட்ட வெற்றிமையே

தென் திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.88.7) திருஞான சம்பந்தர், செஞ்சாலி நெல் வகையை குறிப்பிடுகின்றார். நீடு=நீண்ட காலமாக இடைவிடாமல்; மூடு வினை=பிணைந்துள்ள வினைகள்; தேய=அழிய; அஞ்சாடு சென்னி=பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு (பஞ்சகவ்யம் என்று அழைப்பார்கள்) நீராடும் சென்னி; அனலாடு=ஊழித்தீயினில் நடமாடுபவன்; மஞ்சாரு=மேகங்கள் பொருந்தும் வண்ணம் உயர்ந்த மாடங்கள்; வைகி=நெருங்கி; அனலாடு மேனி என்பதால் நெருப்பினில் நின்று நடமாடுபவன் என்று பொருள் கொள்வதே பொருத்தம்; அரவாடு கையன் அனலாடு மேனி என்ற தொடரினை அரவாடு மேனி அனலாடு கையன் என்று மாற்றி அமைத்துக் கொண்டு, பாம்பினைத் தனது திருமேனி எங்கும் உடையவன் என்றும், கையில் அனலேந்தி நடமாடுபவன் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பிச்சை இடுவதற்கு செஞ்சாலி என்று உயர்ந்த நெல்லினை பயன்படுத்தினர் என்று தலத்து மாந்தர்களின் உயர்ந்த தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இடைவிடாது நீண்ட காலமாக தங்களது உள்ளத்தில் தன்னை (பெருமானை) நினைத்து வழிபடும் அடியார்களுடன் பிணைந்துள்ள வினைகளை தேய்த்து அழிக்கும் ஆற்றல் படைத்த பெருமான், இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து நீங்கியவன் ஆவான்; பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு (பால், தயிர், நெய்,கோமியம் சாணம்) மிகுந்த விருப்பத்துடன் நீராடும் பெருமான், கைகளில் பாம்பினை அணிந்தவனாக ஊழித்தீயினில் நின்று நடமாடுகின்றான். இத்தகைய பண்புகளைக் கொண்டுள்ள அரன் உறையும் ஊர் திருமுல்லைவாயிலாகும். மேகங்கள் தங்கும் வண்ணம் உயர்ந்த மாடங்களை உடைய திருமுல்லைவாயில் தலத்தினில் உள்ள இல்லங்களுக்கு பிச்சை கேட்டு எவர் சென்றாலும், அவர்களுக்கு செஞ்சாலி எனப்படும் உயர்ந்த வகை செந்நெல் சோற்றினை அளித்து மகிழும் உயர்ந்த கருணை உள்ளம் கொண்டவர்கள் வாழும் தலம் திருமுல்லைவாயிலாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன்

அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடு மேனி அரனூர்

மஞ்சாரும் மாட மனை தோறும் ஐயம் உளதென்று வைகி வரினும்

செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக்கொள் திருமுல்லைவாயில் இதுவே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.6) திருஞான சம்பந்தர், சாலி வயல்கள் நிறைந்த தலம் என்று சீர்காழி தலத்தினை குறிப்பிடுகின்றார். அணவுதல்= நெருங்குதல், அணுகுதல்; பாற=அழிய; ஆலும்=நடமாடும்; இயலி=போன்று; அமர்வு எய்தும்=விருப்புடன் இருக்கையாக கொள்வது; கிண்டி=கிளறி; நறவு=தேன்; சாலி=ஒரு வகை நெல்; கோல=அழகு; உகளும்=துள்ளி குதிக்கும்; நீலம்=நீலோற்பலம்; இதே பதிகத்தின் முந்தைய பாடல்களில் பிராட்டியின் அழகினை பல விதமாக வர்ணித்த திருஞான சம்பந்தர், இந்த பாடலில் பிராட்டி மயில் போன்ற சாயலைக் கொண்டுள்ளாள் என்று கூறுகின்றார். சேல்=மீன்கள்; சிறுவன் மார்க்கண்டேயனை நெருங்கி அவனது உயிரினை கவர்வதற்கு முயற்சி செய்த இயமன் அழியும் வண்ணம் உதைத்த பெருமான், நடமாடும் மயில் போன்று சாயலை உடையவளும், தேர்ந்தெடுத்து அழகிய நகைகளை அணிபவளும் ஆகிய உமை அன்னையுடன் மிகுந்த விருப்போடு அமரும் இடம் சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும். இந்த தலத்தில் உள்ள ஏலம் நறுமணம் சோலைகளில் காணப்படும் மலர்களின் மீது வண்டுகள் கூட்டமாக அமர்ந்து அந்த மலர்களைக் கிளறி மலர்களில் நிறைந்துள்ள தேனை உண்ட களிப்பினில் இசை பாடுகின்றன. அருகில் உள்ள சாலி நெல் வயல்களில் அழகான மீன்கள் துள்ளி குதித்தாட, அவற்றின் அசைவால் நீலோற்பல மொட்டுகள் மலர்ந்து அழகாக காணப்படுகின்றன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் சாலி மலி சோலைகள் என்று கூறுகின்றார்.

பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதை செய்த பரமன்

ஆலும் மயில் போல் இயலி ஆயிழை தனோடு அமர்வு எய்தும் இடமாம்

ஏல மலி சோலை இன வண்டு மலர் கிண்டி நறவு உண்டு இசை செயச்

சாலி வயல் கோல மலி சேல் உகளும் நீலம் வளர் சண்பை நகரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.20.7) பல நெல் வகைகளை குறிப்பிடும் அப்பர் பிரான், செஞ்சாலி நெல்லையும் குறிப்பிடுகின்றார். செந்நெல், பிரம்புரி, கெந்தசாலி, திப்பியம் என்பன நெல்லின் உயர் வகைகளுக்கு அந்நாளில் இருந்த பெயர்கள்; பல வகையான நெல் வகைகள் விளையும் ஊர் என்று தலத்தின் செழுமை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பல வகையான மீன்கள் வாழும் நீர்நிலைகள் கொண்ட ஊர் என்று திருவாரூர் தலத்தின் நீர்வளத்தை, இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான், தலத்தின் நிலவளத்தை, அங்கே விளையும் நெல் வகைகளைக் குறிப்பிட்டு நமக்கு உணர்த்துகின்றார். உயர்ந்த வகையான செந்நெல், பிரம்புரி, கெந்தசாலி, திப்பியன் நெல் வகைகள் அறுவடை செய்யப்படும், குளிர்ந்த தண்ணீர் நிறைந்த வயல்களைக் கொண்ட திருவாரூரில் உறையும் அம்மானே, வானத்தில் திரியும் மூன்று கோட்டைகளையும், தீயில் பற்றி எரியுமாறு, வில்லை ஏந்தி நின்றவனே, நீ எனது சிந்தையுள் நிறைந்து நின்று விட்டாய்; நீ எந்த வகையிலும் என்னை விட்டு பிரிந்து போகுமாறு நான் தவறியும் அனுமதிக்க மாட்டேன் என்று அப்பர் பிரான் மிகவும் உறுதியாக கூறும் பாடல்.

திரியும் மூவெயில் தீ எழச் சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள்

பிரியுமாறு எங்கனே பிழைத்தேயும் போகல் ஒட்டேன்

பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவ்வையகத்து

அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே

தில்லைச் சிற்றம்பலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.8.2) கருவூர்த் தேவர், செஞ்சாலி நெல்வகையை குறிப்பிடுகின்றார். பிறவிக் கடலை தான் நீந்திக் கடக்கும் முயற்சியில் தனக்கு எதிராக ஐந்து புலன்களும் செயல்படுவதாக கருவூர்த் தேவர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பௌவம்=கடல்; தனது உடன் பிறந்தாராக விளங்கும் ஐந்து புலன்களும் பகையாக நிற்க, யார் நமக்கு உதவியாக இருப்பார் என்று வருந்தி நாம் இறைவனை நினைத்தால், தான் துணையாக இருப்பேன் என்று சொல்லி அஞ்சேல் என்று அபயக் கரம் காட்டும் இறைவன் திருச்சிற்றம்பலம் கோயிலில் உறைகின்றான் என்று இந்த பாடலில் கருவூர்த் தேவர் கூறுகின்றார். செஞ்சாலி வயல்களின் நடுவே, நீலமலர் களையாக முளைத்த வயல்களைக் கொண்ட ஊர் சிதம்பரம் என்று கூறுகின்றார்.

இவ்வரும் பிறவி பௌவ நீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த

ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள் செய்வான் கோயில்

கைவரும் பழனம் குழைத்த செஞ்சாலிக் கடைசியர் களை தரு நீலம்

செய்வரம்பு அரும்பு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே

பொழிப்புரை:

தான் செய்வது தவறு என்று உணர்த்தப்பட்ட பின்னரும், அந்த தவற்றின் பின்விளைவுக்கோ, சர்வ வல்லமை வாய்ந்த சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானால் என்ன நேரிடுமோ என்றும் அச்சம் கொள்ளாமல், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த, அரக்கன் இராவணனின் பத்து தலைகளும் வலிமை வாய்ந்த இருபது தோள்களும் நொறுங்கும் வண்ணம் கயிலை மலையின் கீழே பொருந்தும் வண்ணம், தனது கால் பெருவிரலால் கயிலை மலையை அழுத்தியவன் சிவபெருமான், அரக்கன் தனது தவறினை உணர்ந்த பின்னர், அவனுக்கு பல விதங்களில் அருள் புரிந்த வல்லமை உடையவன் ஆவார். அவர் வீற்றிருக்கும் திருக்கோயில் திருவையாறு தலத்தில் உள்ளது. இனிமை தரும் நிழல் அளிக்கும் தென்னை மரத்திலிருந்து கீழே விழும் இளம் தென்னம் நெற்றுகள் மரத்தின் கீழே இருந்த எருமை மாடுகளின் முதுகினில் விழ, அச்சம் கொண்ட எருமை மாடுகள் எழுந்து குதித்து, அருகே இருந்த நெல்வயல்களின் செஞ்சாலி கதிர்களை தனது கால்களால் நசுக்கி ஆங்கே செழுமையாக பூத்துள்ள தாமரைகளின் அருகே படுக்கும் வண்ணம் நீர்வளமும் நிலவளமும் கொண்ட ஊர் திருவையாறு ஆகும்.

பாடல் 9:

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 8 தொடர்ச்சி மற்றும் 9, 10, 11 திதே (0626)

மேல் ஓடி விசும்பு அணவு வியன் நிலத்தை மிக அகழ்ந்து மிக்கு நாடும்

மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்

கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தின் நின்று

சேல் ஓடச் சிலையாடச் சேயிழையார் நடமாடும் திருவையாறே

விளக்கம்:

அணவி=நெருங்கி, அணுகி; கோல்=நடனம் கற்பிக்கும் ஆசிரியர் ஏந்தும் தலைக்கோல்; நடனம் ஆடும் போது அபிநயங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று தனது மாணவிகளுக்கு சுட்டிக் காட்டுவதற்காக வைத்திருக்கும் கோல்; சேல்=மீன் போன்ற கண்கள்; சிலை=வில் போன்று வளைந்த புருவம்; மிக்கு=மிகுந்த முயற்சி செய்து; விசும்பு=ஆகாயம்; கோல்=திரண்ட; வியன்= அகன்ற; நடனக்கலை மிகவும் சிறப்பாக போற்றப்பட்ட நிலை, இந்த பதிகத்தின் பல பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. சேலோட சிலையாட என்று நடன மாந்தர்கள் காட்டிய அபிநயத்தினை திருஞானசம்பந்தர் நயமாக குறிப்பிடுவது, இசைக்கருவிகள் முழக்கியும் நடனமாடியும் நகர மாந்தர்கள் திருஞானசம்பந்தரின் வரவினை கொண்டாடினார்கள் போலும் என்று தோன்றுகின்றது.

பொழிப்புரை:

அன்னமாக உருவெடுத்து ஆகாயத்தைத் தொடும் அளவு மேலே பறந்து சென்ற நான்முகனும், மிகவும் ஆழமாக அகன்ற பூமியைத் தோண்டிக் கொண்டு பன்றியாக சென்ற திருமாலும், பெருமானின் திருமுடியையும் திருவடியையும் காண்பதற்கு மிகுந்த முயற்சி செய்த போதிலும், அவர்கள் இருவரும் காண முடியாத வண்ணம், நெடுந்தழலாக நின்ற சிவபெருமான், பொருந்தி உறையும் திருக்கோயில் அமைந்துள்ள தலம் திருவையாறு ஆகும். நடன ஆசிரியர்கள் தங்களது கையினில் கோல் ஏந்தியவராக, தங்களது மாணவிகளுக்கு அபிநயங்கள் எவ்வாறு செய்வது என்பதை சுட்டிக் காட்ட, அதற்கு ஏற்ப வண்ணம் நடனமாடும் அழகாக குவிந்த மார்பங்களையும் சிறந்த நகைகளையும் உடைய மாதர்கள், தங்களது முகத்தில் உள்ள, மீன் போன்ற கண்கள் வேகமாக இங்குமங்கும் ஓடும் வண்ணமும், வில் போன்று வளைந்த புருவங்கள் மேலும் கீழும் ஏறியும் இறங்கியும் பாவனைகளை வெளிப்படுத்தி நடனமாடும் ஊர் திருவையாறு ஆகும். .

பாடல் 10:

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 8 தொடர்ச்சி மற்றும் 9, 10, 11 திதே (0626)

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா

மிண்டாடு மிண்டர் உரை கேளாதே ஆளாமின் மேவித் தொண்டீர்

எண் தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில்

செண்டாடு புனல் பொன்னிச் செழுமணிகள் வந்து அலைக்கும் திருவையாறே

விளக்கம்:

செண்டு=மலர்க் கொத்துகள்; குற்றுடுக்கை=உடலில் மார்பின் மேல் உடுத்தும் பாய். மிண்டு= குறும்பு; மிண்டாடு=குறும்புத் தனமாக பேசப்படும் சொற்கள்; மேவி=விரும்பி; குண்டாடு= குண்டர்கள் ஈடுபடும் இழிந்த செயல்களைச் செய்யும்;

பொழிப்புரை:

குண்டர்கள் ஈடுபடும் இழிந்த செயல்களை செய்பவரும், சிறிய ஆடையினை உடுத்தித் திரிபவரும் ஆகிய சமணர்களும், நல்ல குணம் ஏதும் இல்லாத புத்தர்களும், சிவபெருமான் குறித்து பேசும் குறும்பான சொற்களை, உலகத்தவரே, நீங்கள் கேளாது இருப்பீர்களாக. எட்டு தோள்களை உடையவரும், மூன்று கண்கள் பொருந்தியவரும், எமது தலைவரும் ஆகிய இறைவனாருக்கு அடிமையாக மாறி அவருக்கு தொண்டு செய்வீர்களாக. எமது ஈசன் மனம் மகிழ்ந்து உறையும் இடம் திருவையாறு தலத்தில் உள்ள திருக்கோயில் ஆகும். பூங்கொத்துகள் மெதுவாக அசைந்தசைந்து ஆடிக் கொண்டு வரும் வண்ணம், நீர்ப்பெருக்கினை உடைய காவிரி நதி, தனது அலைகளால் முத்துக்களை இரு கரைகளிலும் கொண்டு வந்து சேர்க்கும் நகரம் திருவையாறு ஆகும்.

பாடல் 11

புலனைந்தும் பொறிகலங்கி (1.130) பாடல் 8 தொடர்ச்சி மற்றும் 9, 10, 11 திதே (0626)

அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம் பெருமானை அந்தண் காழி

மன்னிய சீர் மறை நாவன் வளர் ஞானசம்பந்தன் மருவு பாடல்

இன்னிசையால் இவை பத்து இசையுங்கால் ஈசனடி ஏத்துவார்கள்

தன்னிசையோடு அமர் உலகில் தவநெறி சென்று எய்துவர் தாழாது அன்றே

விளக்கம்:

தாழாது=தாமதம் ஏதும் இன்றி; அந்தண்=குளிர்ச்சியும் அழகும் பொருந்திய; இசையுங்கால்= பாடும் போது; தேவார பாடல்கள் ஓதுவது தவம் என்று குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை:

அன்னங்கள் மலிந்த சோலைகள் நான்கு திசைகளிலும் புடை சூழ்ந்திருக்கும் ஐயாறு தலத்தின் பெருமான் குறித்து, அழகும் குளிர்ச்சியும் பொருந்திய சீர்காழி நகரில் பொருந்தி வாழ்பவனும், சிறப்பு வாய்ந்த நான்கு வேதங்களையும் ஓதுபவனும், வளர்ந்து கொண்டிருக்கும் புகழினை உடையவனும் ஆகிய, ஞானசம்பந்தன், போற்றிப் பாடிய இந்த பத்து பாடல்களையும் இனிமையான இசையுடன் பொருத்தி பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடும் அடியார்கள், தாங்கள் ஓதிய தேவாரப் பாடல்கள் அளிக்கும் தவத்தின் பயனாக, தாமதம் ஏதுமின்றி தேவர் உலகில் வாழும் வாய்ப்பினை பெறுவார்கள்.

முடிவுரை:

இந்த பதிகம் உள்ளிட்டு ஏழு பதிகங்கள் (1.129–1.135) மேகராகக்குறிஞ்சி பண்ணில் பொருந்தும் வண்ணம் பாடப் பட்டுள்ளன. இந்த பண்ணில் பொருந்தும் வண்ணம் இந்த ஏழு பதிகங்களையும் மனம் ஒன்றி ஓதினால், மழை பொழியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஐயாறு தலத்தில் அடியெடுத்து வைத்த உடனேயே, பெருமானின் புகழினையும் தலத்தின் சிறப்பினையும் பாடிய வண்ணம், திருக்கோயில் சென்ற திருஞானசம்பந்தரின் செயல், திருக்கோயிலுக்கு செல்லும் போதும் இறைவன் பற்றிய சிந்தனையுடன் நாம் செல்ல வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றது.

பதிகத்தின் முதல் பாடலில், உடலினை விட்டு உயிர் பிரியும் தருணத்தில், வேறு எவரும் நமக்கு உதவி செய்ய முடியாத நிலையில், அஞ்சேல் என்று சொல்லி அபயம் அளிப்பவன் சிவபெருமான் ஒருவன் தான் என்று உணர்த்தும் ஞானசம்பந்தர், இரண்டாவது பாடலில் நாம் இறப்பதற்கு முன்னமே பெருமான் நம்மைத் தேடி கொண்டு வந்து பலியேற்று அருள் புரிவதையும் உணர்த்துகின்றார். நாம் அவனை அழைக்கவேண்டும் என்று காத்திராமல், நமது இல்லம் தேடி வந்து,நமது மூன்று மலங்களையும் பிச்சையாக ஏற்றுக் கொண்டு முக்தி நிலை அளிப்பதற்கு மிகுந்த ஆவலுடன் இருக்கும் பெருமானின் கருணை இரண்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. கங்காளர் என்ற சொல் மூலம், மூன்றாவது பாடலில், உலகிலுள்ள அனைத்து உயிர்களும் உடலிலிருந்து பிரிந்த பின்னரும், தான் மட்டும் அழியாமல், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து அகப்படாமல் இருப்பவன் சிவபெருமான் என்று நமக்கு உணர்த்தப் படுகின்றது. மேலும் உயிரற்ற பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் உடல்களைத் தனது தோள் மீது சுமந்த கங்காளன் என்று குறிப்பிடுவதன் மூலம், பிரமன் திருமால் ஆகிய இருவரும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடாதவர்கள் என்பதும் இங்கே கூறப்படுகின்றது. எனவே, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்ட சிவபெருமான் ஒருவனே, உயிர்களுக்கு முக்தி நிலை அளிக்கும் தகுதி வாய்ந்தவன் என்று பதிகத்தின் மூன்று பாடல்களும் நமக்கு உணர்த்துகின்றன. இவ்வாறு நமக்கு நல்லதே புரியும் பெருமானை, மிகவும் பொருத்தமாக சங்கரனார் என்று நான்காவது பாடலில் திருஞான சம்பந்தர் அழைக்கின்றார். இந்த காரணம் பற்றியே, மிகவும் உயர்ந்த தத்துவனாக இறைவன் மதிக்கப் படுவது ஐந்தாவது பாடலில் நமக்கு உணர்த்தப் படுகின்றது. நமக்கு நன்னெறியாகிய முக்தி நெறியைக் காட்டும் பெருமானை, விகிர்தன் என்று அழைத்து, ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவன் சிவபெருமான் என்பதை ஆறாவது பாடலில் திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். ஏழாவது மற்றும் எட்டாவது பாடல்களில் பெருமானது ஆற்றல் உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், நடனக்கலை இந்த தலத்தில் அந்நாளில் போற்றப் பட்டதை உணர்த்துகின்றது. பத்தாவது பாடலில் புறச்சமயவாதிகள் பேசும் குறும்பு பேச்சினை பொருட்படுத்தாது, இறைவனுக்கு நாம் ஆளாக வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். பதிகத்தின் இறுதிப் பாடலில், பெருமானின் புகழினை எடுத்துரைக்கும் பாடல்களை முறையாக இனிய இசையுடன் பொருத்தி பாடி, அவனை வழிபடுவதே சிறந்த தவம் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் மூலம் பெருமானை எதற்காக வழிபட வேண்டும் என்றும் எப்படி வழிபடவேண்டும் என்பதையும் தெரிந்து கொண்ட நாம், அவனை முறையாக வழிபட்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று, மறுமையில் என்றும் அழியாத பேரின்பத்தில் திளைப்போமாக.



Share



Was this helpful?