இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


புனலாடிய புன்சடை

புனலாடிய புன்சடை

பதிக எண்: 2.21 - திருக்கழிப்பாலை - இந்தளம்

பின்னணி:

தில்லையின் புனிதம் கருதி, இரவு வேளையில் தில்லைச் சிதம்பரம் தலத்தில் தங்குவதை தவிர்க்கவேண்டும் என்று எண்ணிய திருஞானசம்பந்தர், அருகிலுள்ள வேட்களம் தலம் சென்றார். ஆங்கு உறையும் இறைவனை வணங்கிய பின்னர் அந்தமும் ஆதியும் என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி இறைவனை வாழ்த்தினார். வேட்களம் தலத்தில் தங்கியவாறு தில்லைப் பெருமானின் நடனக் கோலத்தை அடிக்கடி கண்டு களித்து வந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார். மேலும் அருகிலுள்ள கழிப்பாலை மற்றும் சிவபுரி ஆகிய தலங்களும் சென்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. சிவபுரி தலம் திருவுச்சி என்றும் நெல்வாயில் என்றும் அழைக்கப்படுகின்றது.

கைம்மான் மறியார் கழிப்பாலையுள் அணைந்து

மெய்ம்மாலைச் சொற்பதிகம் பாடி விரை கொன்றைச்

செம்மாலை வேணித் திருவுச்சி மேவி உறை

அம்மானைக் கும்பிட்டு அருந்தமிழும் பாடினார்

கழிப்பாலை தலத்தின் மீது ஞானசம்பந்தர் இந்தளம் பண்ணில் பாடிய இந்த பதிகமும் கௌசிகம் பண்ணில் பாடிய பதிகம் (வெந்த குங்கிலியப் புகை என்று தொடங்கும் பதிகம்— திருமுறை 3.44) மற்றொன்றும் நமக்கு கிடைத்துள்ளன. மேலும் இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய ஐந்து பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் நமக்கு கிடைத்துள்ளன. இந்த திருக்கோயில் கொள்ளிடத்தின் வடகரையில் காரைமேடு என்று அழைக்கப்படும் இடத்தில் தான்,நாயன்மார்களின் காலத்தில் இருந்ததாக தெரியவருகின்றது. அந்த திருக்கோயில் கொள்ளிடத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்படவே, அந்த கோயிலில் இருந்த மூர்த்தங்கள் சிவபுரி தலத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கே ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டு அதனுள்ளே வைக்கப் பட்டுள்ளன. இறைவனின் பெயர் பால்வண்ண நாதர்; இறைவியின் திருநாமம் வேதநாயகி; மூன்று நிலைகள் கொண்ட இராஜகோபுரம். சிறிய இலிங்கத் திருமேனி. இலிங்கத்தின் மேற்பகுதியில் குதிரைக் காலடிபட்டு பிளந்தது போன்று காணப் படுகின்றது. கபில முனிவர் இந்த தலம் வந்த போது, பசுக்கள் தாமாகவே பால் சொரிந்து, மண்ணின் நிறம் வெண்மையாக இருப்பதைக் கண்டார். இந்த வெண்மை நிறத்து மணலைக் கொண்டு இலிங்கம் அமைத்து வழிபட்டமையால், இலிங்கமும் வெண்மை நிறத்துடன் காணப்படுகின்றது. இவ்வாறு இந்த லிங்கத்தை கபில முனிவர் வழிபட்டுவந்த நாட்களில், ஒரு நாள் அந்த வழியாக சென்ற மன்னனது குதிரையின் கால் குளம்பு பட்ட லிங்கம் பிளந்ததாகவும், முனிவர் பிளவு பட்ட லிங்கத்திற்கு பதிலாக புதியதாக வேறொரு லிங்கம் பிடித்து பிரதிஷ்டை செய்ய முயன்றபோது,இறைவன் காட்சி தந்து, பசுக்களின் பால் கலந்த இந்த லிங்கத்தையே வழிபடுமாறு கூறியதால், முனிவர் தொடர்ந்து பிளவுபட்ட லிங்கத்தையே வழிபட்டார் என்றும் கூறுவார்கள். லிங்கத்திற்கு பால் அபிஷேகம் மட்டும் நடைபெறுகின்றது. மற்ற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கு நடைபெறுகின்றன. கருவறையின் உட்சுவற்றில் பெருமானின் திருமணக் கோலம் புடைச் சிற்பமாக காணப்படுகின்றது. வாயிலின் இரு புறங்களிலும் அதிகாரநந்தி தனது துணைவியுடன் காட்சி தருகின்றார். விநாயகர் சுப்பிரமணியர் கிராதமூர்த்தி திருமால் மகாலட்சுமி சூரியன் காலபைரவர் சந்திரன் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன் துர்க்கை ஆகியோரை காணலாம். கோமுகம் அருகே சண்டீசர் சன்னதி உள்ளது. பிராகாரத்தின் மேற்கு பகுதியில் பஞ்சலிங்கங்களும் திருமால் சன்னதியும் உள்ளன. இந்த திருக்கோயிலில் உள்ள கால பைரவர் காசியில் உள்ள காலபைரவருக்கு சமமாக கருதப்படுகின்றார். இந்த சன்னதியின் அருகில் நவகிரக சன்னதி உள்ளது. சிவகாமி அம்மையுடன் கூடிய நடராஜப் பெருமானுக்கு தனி சன்னதி உள்ளது.மூலவர் அமைந்துள்ள மண்டபத்தின் வலது புறத்தில் அம்பாள் சன்னதி அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் தெற்கு நோக்கிய சன்னதி. வான்மீகி முனிவர் வழிபட்ட தலமாகவும் கருதப்படுகின்றது.

பாடல் 1:


புனலாடிய புன்சடையாய் அரணம்

அனலாக விழித்தவனே அழகார்

கனல் ஆடலினாய் கழிப்பாலை உளாய்

உன வார்கழல் கை தொழுது உள்குதுமே

விளக்கம்:

புனல்=கங்கை நதி; அரணம்=கோட்டை; வார் கழல்=கழல் அணிந்த நீண்ட திருவடிகள்; உள்குதல்=நினைத்து தியானம் செய்தல்; ஆடிய=மூழ்கிய, நனைந்த என்று பொருள். அரணம் அனலாக விழித்தவனே என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளையும் இறைவன் வீழ்த்தினான் என்று கந்த புராணம் குறிப்பிட்டாலும் விழித்தே திரிபுரத்தை அழித்தான் என்றும் சிரித்ததே திரிபுரத்தை அழித்தான் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன. திருவாசகம் திருவுந்தியார் பதிகத்தில் எந்த அம்பினையும் பயன்படுத்தாமல், மூன்று கோட்டைகளையும் பெருமான் எரித்தார் என்று மணிவாசகர் உணர்த்துகின்றார்.

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில்

ஓரம்பே முப்புரம் உந்தீபற

ஒன்றும் பெருமிகை உந்தீபற

திருவீழிமிழலை பதிகத்தின் பாடலில் (6.50.9) அப்பர் பிரான், தன்னிடம் இருந்த வில்லையும் அம்பினையும் பயன்படுத்தாமல் பெருமான் திரிபுரத்து கோட்டைகள் மூன்றையும் எரித்தார் என்று கூறுகின்றார். திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற போது சிறப்பு வாய்ந்த அம்பினை எடுத்துச் சென்ற பெருமான், அந்த அம்பினையும் பயன்படுத்தாமல், தனது காலின் கீழே அந்த அம்பினை வைத்து விட்டு, அரக்கர்களை வென்றதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இப்பக்கம் பல ஆனான் என்று கூறுவதால், பரந்தான் என்ற சொல்லினை அப்பக்கம் பரந்தான் என்று கொள்ளவேண்டும். உலக மாயையின் இரு பக்கங்களில் இறைவன் உள்ள நிலை இங்கே கூறப்படுகின்றது.

பரந்தானை இப்பக்கம் பல ஆனானைப் பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும்

வரத்தானை வணங்குவார் மனத்துளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்காம்

சரத்தானைச் சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனைச் சடாமகுடத்து அணிந்த பைங்கண்

சிரத்தானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் திரிபுரத்து கோட்டைகள் மூன்றும் பற்றி எரியும் வண்ணம் வில்லினைத் தொட்டவன் என்று கூறுகின்றார். வன்கூற்று=கொடிய கூற்றுவன்; பிணையல்=சடையுடன் பிணைந்த; உரு=இடி; வன்கூற்றை என்ற சொல்லை முடித்தவன் என்ற சொல்லுடன் கூட்டி பொருள் கொள்ள வேண்டும். சாபம்=வில்; வில்லை பிடித்தவன் என்று கூறுவதன் மூலம், வில்லினை பயன்படுத்தாமல் மூன்று கோட்டைகளையும் பெருமான் அழித்தார் என்ற செய்தி உணர்த்தப் படுகின்றது.

முடித்தவன் காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் வலியார் தம் புரம் மூன்றும் வேவச் சாபம்

பிடித்தவன் காண் பிஞ்ஞகனாம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி

முடித்தவன் காண் மூவிலை நல்வேலினான் காண் முழங்கி உருமெனத் தோன்றும் மழையாய் மின்னி

இடித்தவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், அப்பர் பிரான் அம்பு ஏதுமின்றி மூன்று கோட்டைகளையும் பெருமான் எரித்தார் என்று கூறுகின்றார். பூவுலாம்=பூக்கள் அதிகமாக பொருந்திய; எயில்=கோட்டை; ஏ=அம்பு;

பூ உலாம் சடை மேல் புனல் சூடினான்

ஏ அலால் எயில் மூன்றும் எரித்தவன்

தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்

மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே

பொழிப்புரை:

கங்கை நதியின் நீரில் நனையும் வண்ணம் சடையினில் கங்கை நதியை அடக்கியவனே, முப்புரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளையும் நெருப்பு பற்றி எரியும் வண்ணம் விழித்து அழித்தவனே, நெருப்பினில் நின்றவண்ணம் அழகாக நடனம் ஆடுபவனே, நீ கழிப்பாலை தலத்தில் உறைகின்றாய்; கழல் அணிந்த உனது நீண்ட திருவடிகளை நாம் கைதொழுது தியானம் செய்கின்றோம்.

பாடல் 2:


துணையாக ஓர் தூ வளமாதினையும்

இணையாக உகந்தவனே இறைவா

கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய்

இணையார் கழல் ஏத்த இடர் கெடுமே

விளக்கம்:

பெருமானின் திருவடிகளை தியானம் செய்வோம் என்று பதிகத்தின் முதல் பாடலில் வழிநடத்திய ஞானசம்பந்தர், இந்த பாடலில் பெருமானின் இணையான திருவடிகளை ஏத்த நமது இடர் கெடும் என்று கூறுகின்றார். வளம்=அழகு; தனக்கு சரிசமமாக பிராட்டியை கருதியவன் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம், மாதினை இணையாக உகந்தவன் என்று கூறுகின்றார். பிரளய காலத்திலும் அழியாமல் பெருமானுடன் இருப்பதால் தேவியை பெருமானின் துணை என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

என்றும் அழியாமல் உடனிற்பவளும் தூய்மையும் அழகும் பொருந்தியவளும் ஆகிய தேவியைத் தனது துணையாகக் கொண்டவனும், அந்த தேவியைத் தனது திருமேனியில் ஒரு பாகமாக ஏற்று மகிழ்ச்சி அடைந்தவனும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஓர் அம்பினை எய்தி வீழ்த்தியவனும் ஆகிய பெருமானே நீ, கழிப்பாலை தலத்தில் உறைகின்றாய். உனது இணையான திருவடிகளைத் தொழுது போற்றும் அடியார்களின் இடர்கள் கெட்டுவிடும்.

பாடல் 3:


நெடியாய் குறியாய் நிமிர் புன்சடையின்

முடியாய் சுடு வெண்பொடி முற்று அணிவாய்

கடியாய் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்

அடியார்க்கு அடையா அவலம் அவையே

விளக்கம்:

குறியாய்=குறுகியவனே; கடி=நறுமணம்; பதிகத்தின் முதல் பாடலில் பெருமானை தியானித்து வழிபடுவோம் என்று நம்மை வழிநடத்தும் ஞானசம்பந்தர், அடுத்த இரண்டு பாடல்களில் அவ்வாறு வழிபடும் அடியார்கள் அடையும் பலன்களை கூறுகின்றார். அத்தகைய அடியார்களின் துன்பங்கள் கெட்டுவிடும் என்றும் அவர்களை அவலங்கள் அடையா என்றும் உணர்த்தும் சம்பந்தர், அதற்கான காரணத்தை பதிகத்தின் நான்காவது பாடலில் உணர்த்துகின்றார். பெருமானை வழிபடுவதால் ஏற்படும் பலன்களை முதலில் குறிப்பிட்டு, பின்னர் பெருமான் அடியார்கள் பால் வைத்துள்ள அன்பு தான் அடியார்களுக்கு அவன் அருள் புரிவதற்கு காரணம் என்று குறிப்பிட்டு, அத்தகைய பெருமான் பால் நாமும் அன்பு செலுத்தவேண்டும் என்று கூறுவது மிகவும் நயமாக உள்ளது. தற்காலத்து மனிதர்களை கருத்தினில் கொண்டு எழுதப்பட பாடல் போன்று தோன்றுகின்றது.

பொழிப்புரை:

மிகவும் பெரியவனாக இருப்பவனே, அந்த நிலையிலிருந்து குறுகி மிகவும் நுண்ணிய பொருளாகவும் இருப்பவனே, நிமிர்த்து கட்டப்பட்ட மென்மையான சடைமுடியை உடையவனே, வெந்த சாம்பலாகிய திருநீற்றினை உடல் முழுதும் அணிபவனே, நீ நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்த கழிப்பாலை தலத்தில் உறைகின்றாய். உனது அடியார்களைச் சென்று அவலங்கள் அடைய மாட்டா.

பாடல் 4:


எளியாய் அரியாய் நிலம் நீரொடு தீ

வளி காயம் என வெளி மன்னிய தூ

ஒளியாய் உனையே தொழுது உன்னும் அவர்க்கு

அளியாய் கழிப்பாலை அமர்ந்தவனே

விளக்கம்:

காயம்=ஆகாயம், ஆகாயம் என்ற சொல்லின் முதற்குறை; வளி=காற்று; இறைவன் தனது அன்பர்களுக்கு எளியனாகவும் அன்பர் அல்லாதவர்க்கு அரியவனாகவும் உள்ள நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த கருத்து பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய் என்று திருமறைக்காடு தலத்தின் திருத்தாண்டகப் பதிகத்தின் (6.23) முதல் பாடல் நமது நினைவுக்கு வருகின்றது. தொல்லமரர்=தொன்மை வாய்ந்த தேவர்கள்; மனிதர்களின் வாழ்நாளை ஒப்பிடும் போது, அதிகமான வாழ்நாளைப் பெற்றவர்கள் தேவர்கள் என்பதால் தொல்லமரர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சூளாமணி=தலையில் அணியப்படும், விலை உயர்ந்ததும் கிடைத்தற்கு அரியதும் ஆகிய ஆபரணம். கருதுவார்க்கு ஆற்ற எளியான் என்று குறிப்பிட்டமையால், காண்டற்கு அரிய கடவுள் என்பதை நாம் தன்னைக் கருதாத மனிதர்கள் காண்பதற்கு மிகவும் அரியவராக பெருமான் திகழ்கின்றார் என்று பொருள் கொள்ள வேண்டும். மாண்ட=மாட்சிமை பொருந்திய; விரதம் மேற்கொள்பவர்கள், கடைப் பிடிக்கவேண்டிய நியமங்களின் வழியே, சில செயல்களை விலக்கியும் பல கடுமையான நெறிமுறைகளை கடைப்பிடித்தும் விரதம் மேற்கொள்ள மனவுறுதி வேண்டும். அத்தகைய மனவுறுதி படைத்தவர்களை மாண்ட மனத்தார் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். ஈதல் என்றால் உயர்ந்தவர் தன்னிலும் தாழ்ந்தவருக்கு அளிக்கும் கொடையாகும். ஈவான் என்று இறைவனை குறிப்பிடுவதன் மூலம், அப்பர் பிரான் இறைவனை அனைவரையும் விடவும் உயர்ந்தவன் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.

தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளாமணி தான் கண்டாய்

காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்

வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்

மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே

பொழிப்புரை:

அடியார்களுக்கு மிகவும் எளியவனாகவும், அடியார் அல்லாதார் உணர முடியாத அரியானாகவும், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களில் வெளிப்படையாக தோன்றும் தூய ஒளியானாகவும் விளங்கும் இறைவனாகிய நீ கழிப்பாலை தலத்தில் விருப்பமுடன் அமர்ந்துள்ளாய். உன்னையே தொழுது தியானம் செய்யும் அடியார்கள் பால் அன்பு செய்து அவர்களை களிப்பினில் ஆழ்த்துகின்றாய்.

பாடல் 5:


நட நண்ணி ஓர் நாகம் அசைத்தவனே

விட நண்ணிய தூ மிடறா விகிர்தா

கடல் நண்ணு கழிப்பதி காவலனே

உடல் நண்ணி வணங்குவன் உன்னடியே

விளக்கம்:

நண்ணி=விரும்பி, நெருங்கி; அசைத்தல்=இறுகக் கட்டுதல்; பெருமானின் கழுத்தினில், அவர் உட்கொண்ட ஆலகால விடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாததால் தூய மிடறு என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மிடறு=கழுத்து; விடத்தினை தேக்கியதால் ஏற்பட்ட கருமை நிறமுடைய கறை, பெருமான் தான் உட்கொண்ட விடம் கழுத்திலே தேக்கப்பட்டு விட்டதால், பிரளய காலத்தில் தன்னுள் ஒடுங்கும் உயிர்களுக்கு எத்தகைய சேதமும் விளையாது என்பதை உலகுக்கு உணர்த்தவே ஏற்பட்டுள்ளது என்பதால், கறையினை பொருட்படுத்தாது தூயமிடறு என்றே கருதவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார் போலும். உடல் நண்ணி வணங்குதல்=பெருமான் உறையும் திருக்கோயில்களின் உள்ளே சென்று பெருமானை உடலால் நெருங்கி வணங்குதல்; உடலின் உறுப்புகள் அனைத்தும் நிலத்தை நெருங்கித் தொடும் வண்ணம் அட்டாங்க வணக்கம் செலுத்துதல் என்றும் பொருள் கூறுகின்றனர். இரண்டு வகையான விளக்கங்களும் பொருத்தமாக உள்ளன.

அட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புகள் என்று பொருள். அஷ்டாங்கம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கமே அட்டாங்கம் என்பதாகும். ஒரு ஆணின் எட்டு உறுப்புகள், தலை, இரண்டு செவிகள், முகவாய்க்கட்டை, இரண்டு தோள்கள், மற்றும் இரண்டு கைகள் நிலத்தினைத் தொடும் வண்ணம் தரையில் கிடத்தி வணங்குதல் அட்டாங்க வணக்கம் என்று சொல்லப்படுகின்றது. பெண்களுக்கு உரிய வணக்கம் பஞ்சாங்க வணக்கம் என்பதாகும். தலை, இரண்டு கைகள் (விரல்கள் மற்றும் உள்ளங்கை) மற்றும் இரண்டு முழங்கால் முட்டிகள் ஆகியவை தரையில் படும் வண்ணம் வணங்குதல் பஞ்சாங்க வணக்கம். விகிர்தன்=ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன்; பொங்கி எழுந்த ஆலகால விடத்தின் நெடியைக் கூட தாங்க முடியாமல் ஆளுக்கொரு திசையாக பதறி ஓடியவர்கள், பிரமன் திருமால் உள்ளிட்ட தேவர்கள், ஆனால் சிவபெருமானோ, அந்த விடத்தினை தயக்கம் ஏதுமின்றி உட்கொண்டு அனைவரையும் விடம் தாக்காத வண்ணம் காப்பாற்றியவர். இவ்வாறு ஏனையோரிடமிருந்து பெருமான் மாறுபட்டு இருக்கும் தன்மையை குறிப்பிடும் வண்ணம் விகிர்தன் என்று சம்பந்தர் கூறுகின்றார். திருமுறைப் பாடல்கள், இவ்வாறு மாறுபட்டு இருக்கும் பெருமானின் பல தன்மைகளை குறிப்பிட்டு விகிர்தன் என்று பெருமானை அழைக்கின்றன.

தனது அடியார்கள் பால் அன்பு கொண்டு அருள் புரிபவன் இறைவன் என்பதால், நிலத்தில் தனது உறுப்புகள் தோய விழுந்து வணங்குவேன் என்று குறிப்பிட்டு, இறைவனின் கருணையை நினைத்து மனம் கசிந்து நாமும் அவனை வணங்கவேண்டும் என்று நமக்கு சம்பந்தர் வழிகாட்டுகின்றார்.

பொழிப்புரை:

எப்போதும் நடனம் ஆடுவதை விரும்புவனே, ஒப்பற்ற நாகத்தினை தனது இடுப்பினில் கச்சையாக கட்டியவனே, விடம் பொருந்தி இருந்தாலும் விடத்தினால் பாதிக்கப்படாமல் தூய்மையான தன்மையுடன் விளங்கும் கழுத்தினை உடையவனே, பல தன்மைகளில் ஏனைய தேவர்களிடமிருந்து மாறுபட்டு விகிர்தனாக திகழ்பவனே, கடலை அடுத்துள்ள கழிப்பாலை தலத்தின் காவலனே, எனது உடல் உறுப்புகள் நிலத்தில் தோயும் வண்ணம் நான் உனது திருவடிகளை வணங்குகின்றேன்.

பாடல் 6:


பிறையார் சடையாய் பெரியாய் பெரிய

மறையார் தரு வாய்மையினாய் உலகில்

கறையார் பொழில்சூழ் கழிப்பாலை உளாய்

இறையார் கழல் ஏத்த இடர் கெடுமே

விளக்கம்:

மறையார்=மறை+ஆர், மறைகளில் பொருந்திய; வாய்மை=உண்மையான மெய்ப்பொருள்; கறையார்=கறை+ஆர், கறை பொருந்திய; கறை என்பது கருமை நிறமுடைய இருள் என்றார் பொருளில் வந்துள்ளது. அடர்ந்து நெருங்கி வளர்ந்த மரங்கள் உடைய சோலைகள் என்பதால், மரத்தின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு, சோலைகளின் உள்ளே சூரியனின் கதிர்களும் சந்திரனின் கதிர்களும் நுழைவதை தடுப்பதால், சோலை இருண்டு காணப்படுகின்றது என்று கூறுகின்றார். தலத்தின் நிலவளமும் நீர்வளமும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனே, அனைவர்க்கும் மேலானவனே, பெரிய சிறப்பினை உடைய மறைகளில் பொருந்திய உண்மைப் பொருளாக இருப்பவனே, அடர்ந்து செழித்து வளர்ந்த மரங்கள், சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக்கதிர்கள் உள்ளே புகா வண்ணம் நெருங்கிய மரங்கள் உடையதால் இருள் படர்ந்து கருமை நிறத்துடன் காணப்படும் சோலைகள் கொண்டதாக இந்த உலகத்தினில் விளங்கும் கழிப்பாலை நகரத்தினில் உள்ளவனே, தெய்வத்தன்மை உடையவனே உனது திருவடிகளைப் புகழ்ந்து ஏத்துவார்களின் இடர்கள் முற்றிலும் கெட்டுவிடும்.

பாடல் 7:


முதிரும் சடையின் முடிமேல் விளங்கும்

கதிர் வெண்பிறையாய் கழிப்பாலை உளாய்

எதிர் கொள் மொழியால் இரந்து ஏத்தும் அவர்க்கு

அதிரும் வினையாயின ஆசறுமே

விளக்கம்:

எதிர்கொள் மொழி=இறைவனின் சன்னதியின் முன்னே பாடப்படும் பாடல்கள்; இறைவனின் சன்னதியில் பாடப்படும் பாடல்களுக்கு அதிக பலன் கிடைப்பதால், தேவார திருவாசகப் பாடல்களை திருக்கோயிலில் இறைவனின் சன்னதியின் முன்னர் நின்றவாறு அல்லது இல்லத்தில் உள்ள பூஜையறையில் அமர்ந்தவாறு பாடுவது நல்லது என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. அதிரும் வினைகள்=உயிர்களுக்கு அதிர்வினைத் தரும் வினைகள், உயிர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் வினைகள்; ஆசு=குற்றங்கள்; வினைகள் ஆசறும் என்று குறிப்பிட்டு வினைகளின் கொடிய தன்மைகள் விலகிவிடும் என்றும் நன்மை செய்யும் நல்வினைகள் தொடர்ந்து இன்பம் தரும் என்றும் உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

முதிர்ந்த சடைமுடியின் மேல் விளங்கித் தோன்றும் வண்ணம் வெண்மையான கதிர்களைக் கொண்ட பிறைச் சந்திரனை அணிந்து கொண்டவனே, கழிப்பாலை தலத்தில் உறைபவனே, உனது சன்னதியின் முன்னே நின்று பாடல்கள் பாடி உனது அருளினை இறைஞ்சி வேண்டும் அடியார்களை, அந்நாள் வரை நடுங்க வைத்த வினைகளின் குற்றங்கள் முற்றிலும் நீங்கி விடும்,

பாடல் 8:


எரியார் கணையால் எயில் எய்தவனே

விரியார் தரு வீழ் சடையாய் இரவில்

கரி காடலினாய் கழிப்பாலை உளாய்

உரிதாகி வணங்குவன் உன்னடியே

விளக்கம்:

வழக்கமாக சம்பந்தர் தனது எட்டாவது பாடலில் இராவணனின் கயிலை நிகழ்ச்சியை குறிப்பிடுவதை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால் இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில், அத்தகைய குறிப்பு ஏதும் இல்லை. ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில், அண்ணாமலை நிகழ்ச்சி மற்றும் சமணர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. எரியார் கணை=தீக்கடவுளை தனது நுனியாக கொண்ட அம்பு; உரிது=உரியது;

பதிகத்தின் பல பாடல்களில் இறைவனை வழிபடுவதால் நாம் அடையும் நன்மைகளை குறிப்பிடும் ஞானசம்பந்தர், நான்காவது பாடலில் இறைவன் தனது அடியார்கள் பால் அன்பு கொண்டு அருள் புரிகின்றார் என்று உணர்த்திய ஞானசம்பந்தர், அந்த அன்பினை நாம் பெறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்றும் இங்கே கூறுகின்றார். நாம், அவனது அடியான் என்ற உரிமையுடன் அவனது திருவடிகளை வணங்கவேண்டும் என்று கூறுகின்றார். இறைவன் நம்மை ஆளும் ஆண்டவன் என்பதும் நாம் அனைவரும் அவனது அடியார்கள் என்பதும் நிரந்தரமான உறவு தானே. எனவே அந்த உரிமையை நாம் பயன்படுத்திக் கொண்டு அவனை வணங்கி பயனடையவேண்டும் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய மாசில் வீணையும் என்ற பதிகத்தின் கடைப் பாடலை (5.90.10) நினைவூட்டுகின்றது.

விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே

விறகு=அரணிக் கட்டை. அரணிக் கட்டையில் தீ இருப்பதும் பாலினில் நெய் இருப்பதும் நமது கண்களுக்கு நேரே தெரிவதில்லை. அரணிக் கட்டையை கடைந்தால் தீ ஏற்படுகின்றது. ஆனால் பாலினைத் தயிராக மாற்றிய பின்னர் மத்தினைக் கொண்டு அதனைக் கடைந்தால் வெண்ணெய் கிடைக்கின்றது. சாணை தீட்டப்படாத மாணிக்கக் கல் பிரகாசமாக இருப்பதில்லை. பட்டை தீட்டப்பட்ட பின்னர் மாணிக்கக் கல் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கின்றது. மேற்கண்ட பொருட்கள் போன்று இறைவனும் மறைந்து நிற்கின்றான். தகுந்த முறையில் அவனை அறிந்துகொண்டு அவனை வழிபடவேண்டும் என்று இங்கே கூறுகின்றார். சிவபிரான் அரணிக் கட்டையில் தீ போலவும், பாலினில் நெய் போலவும், சாணை பிடிக்கப்படாத மாணிக்கக் கல்லில் பிரகாசம் போலவும் நமது கண்களுக்கு புலப்படாமல் மறைந்து நிற்கின்றான். ஆனால் நமக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்ற உறவாகிய மத்தினை நட்டு உணர்வு என்னும் கயிற்றினால் அந்த மத்தினை இறுக்கமாக கட்டி கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றுவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொழிப்புரை:

தீக்கடவுள் கூர்மையான நுனியாக பொருந்திய அம்பினைக் கொண்டு திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவனே: விரிந்து கீழே தாழும் சடையை உடையவனே: பிரளயத்தால் உலகம் அழிந்து எங்கும் இருள் படர்ந்து நிற்கும் நிலையில், உலகமே சுடுகாடாக இருக்கும் நிலையில், நடனம் ஆடுபவனே: கழிப்பாலை தலத்தில் உறையும் இறைவனே, உனது திருவடிகளை அடியேன் வணங்குவதற்கு உரிய திருவடிகளாக கருதி வணங்குவேன்

பாடல் 9:


நல நாரணன் நான்முகன் நண்ணலுறக்

கனல் ஆனவனே கழிப்பாலை உளாய்

உன வார்கழலே தொழுது உன்னும் அவர்க்கு

இலதாம் வினை தான் எயில் எய்தவனே

விளக்கம்:

நல நாரணன்=நன்மைகளைப் புரியும் நாராயணன், காத்தல் தொழில் புரிந்து அனைத்து உயிர்களையும் காப்பதால், நன்மை புரியும் நாரணன் என்ற பொருள் பட, நல நாரணன் என்று அழைக்கின்றார். எயில்=கோட்டை; வார்கழல்=நீண்ட திருப்பாதங்கள்; உன்னுதல்= நினைத்தல், தியானித்தல்; நண்ணுதல்=நெருங்குதல்; மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்த இறைவனை தியானிக்கும் அடியார்களின் வினைகள் இல்லை என்று மாறிவிடும் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு திருமூலரின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது.

மூன்று மலங்களையும் எரித்து, மும்மலக் கட்டிலிருந்து நம்மை விடுவிக்கும் வல்லமை படைத்தவன் பெருமான் என்று திருமூலர் கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. முப்புரங்களை எரித்த பெருமானின் செயல் உணர்த்தும் செய்தியினை அறியாமல், பெருமான் முப்பரம் எரித்தான் என்று சொல்பவர் மூடர்கள் என்று திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார். மூன்று மலங்கள் தாம் முப்புரங்கள் என்று நமக்கு உணர்த்தி, நமது மலக் கட்டுகளை சுட்டெரித்து, நம்மை மலங்களிளிருந்து விடுவிப்பார் பெருமான் என்பதை உணர்த்தும் பாடல். முப்புரத்தை எரித்தது பண்டைய நாளில் என்பதால், அதனை அறிந்தவர் எவரும் இல்லை என்று கூறும் திருமூலர், உயிர்களின் மூன்று மலங்களையும் தொடர்ந்து இறைவன் அழித்துக் கொண்டு இருப்பதால், நாம் இதனை உணரலாம் என்று இங்கே கூறுகின்றார்.

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள்

முப்புரமாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை ஆர் அறிவாரே

பொழிப்புரை:

உலகினைக் காக்கும் தொழிலினைப் புரிவதால் உயிர்களுக்கு நன்மை புரிபவனாக விளங்கும் திருமாலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் தங்கள் முன்னே எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண்பதற்காக நெருங்கி முயற்சி செய்த போது, அவர்களது முயற்சி வீணாகும் வண்ணம் நீண்டு நின்றவனே, கழிப்பாலையில் உறையும் இறைவனே, பறக்கும் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் எய்தி வீழ்த்தியவனே, வீரக்கழல் அணிந்த உனது திருப்பாதங்களைத் தொழுது தியானிக்கும் அடியார்கள் வினைகள் நீங்கியவர்களாக திகழ்வார்கள்.

பாடல் 10


தவர் கொண்ட தொழில் சமண் வேடரொடும்

துவர் கொண்டனர் நுண்துகில் ஆடையரும்

அவர் கொண்டன விட்டு அடிகள் உறையும்

உவர் கொண்ட கழிப்பதி உள்குதுமே

விளக்கம்:

தவர் கொண்ட தொழில்=உண்மையான தவத்தினை மேற்கொள்ளாமல் போலித் தவசிகளாக திரிவதைத் தொழிலாகக் கொண்டவர்கள்; துவர் கொண்டவர்=துவராடையைத் தங்களது ஆடையாகக் கொண்ட புத்தர்கள்; கொண்டன=கொண்டுள்ள கொள்கைகள்‘ உவர்= உப்பங்கழிகள்; உள்குதல்=தியானித்தல்;

பொழிப்புரை:

உண்மையான தவத்தினை மேற்கொள்ளாமல் போலிச் தவசிகளாகத் திரிவதையே தங்களது தொழிலாகக் கொண்டு திகழும் வேடம் போடும் சமணர்களும், துவராடையினைத் தங்களது ஆடையாகக் கொண்டு மெல்லிய ஆடையினை அணிந்தும் புத்தர்களும் கொண்டுள்ள கொள்கைகள் உண்மையானவை அல்ல; எனவே அந்த கொள்கைகளை பின்பற்றாமல் விட்டுவிட்டு, உப்பங்கழிகள் நிறைந்த கழிப்பாலை தலத்தில் உறையும் பெருமானை, உலகத்தவரே நீங்கள் தியானம் செய்வீர்களாக.

பாடல் 11


கழியார் பதி காவலனைப் புகலி

மறையார் தமிழ் ஞானசம்பந்தன சொல்

வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார்

கெழியார் இமையோரொடு கேடிலரே

விளக்கம்:

பழியா மறை=மறை பழியா என்று மாற்றி வைத்தும் பொருள் கொள்ளலாம். வேதங்களின் பெருமையை உணர்ந்து அதனைப் பழியாமல் போற்று வாழும்; கெழியார்= பொருந்தி வாழ்வார்கள்; பதி என்ற சொல் பழி என்று எதுகை கருதி மாறியது என்றும் விளக்கம் கூறுகின்றனர்;

பொழிப்புரை:

உப்பங்கழிகள் பொருந்திய தலமாகிய கழிப்பாலை தலத்தின் காவலனாக விளங்கும் சிவபெருமானைப் புகழ்ந்து, வேதங்களின் பெருமையினை உணர்ந்து அவரைப் பழியாது புகழ்ந்து போற்றும் ஞானசம்பந்தன், புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்திற்கு உரிய ஞானசம்பந்தன், தமிழ்ப் புலமை வாய்ந்த ஞானசம்பந்தன், சொன்ன இந்த பதிகத்தின் பாடல்களை ஓதுவதையே இறைவனை குறித்து செய்யப்படும் வழிபாடாக கருதி அவனது திருவடிகளை வாழ்த்தும் தன்மை கொண்ட அடியார்கள் மறுமையில் வானோர்களுடன் பொருந்தி விளங்குவார்கள்; மேலும் இம்மையில் கேடு ஏதும் இல்லாத வாழ்க்கை உடையவர்களாக விளங்குவார்கள்.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில், கழிப்பாலைக் கடவுளை குறிப்பிட்டு, அவனது திருவடிகளை தியானம் செய்து தொழுவோம் என்று சொல்லும் திருஞானசம்பந்தர், அடுத்து வரும் பாடல்களில், பெருமானைத் தொழுவதால் நாம் அடையவிருக்கும் நன்மைகளை பட்டியல் இடுகின்றார். இறைவனின் திருவடிகளைப் புகழ்ந்து வழிபடும் அடியார்களின் இடர்கள் கெடும் என்று இரண்டாவது பாடலிலும், அவனது அடியார்களை அவலங்கள் அடையா என்று மூன்றாவது பாடலிலும் குறிப்பிடும் சம்பந்தர் நான்காவது பாடலில் தனது அடியார்கள் பால் அன்பு கொண்டு அருள் புரிபவன் என்று கூறுகின்றார். அடியார்கள் பால் அன்பு கொண்டு அவர்களுக்கு அருள் புரியும் இறைவனை நாம், அவனைப் பணிந்து வணங்க வேண்டும் என்று ஐந்தாவது பாடலில் அறிவுரை கூறுகின்றார். அடுத்த இரண்டு பாடல்களிலும் இறைவனை வணங்குவதால் நமக்கு கிடக்கும் நன்மைகள் குறிப்பிடப்படுகின்றன. எட்டாவது பாடலில் நாம் உரிமையுடன் வணங்க வேண்டும் என்று கூறுகின்றார். ஆண்டவன் அடியான் என்பதே நமக்கு இறைவனுக்கும் இடையில் உள்ள உறவு முறை, அந்த உறவினால் நமக்கு கிடைத்துள்ள உரிமையை நாம் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அறிவுரை இங்கே வழங்கப் படுகின்றது. ஒன்பதாவது பாடலில் முப்புரங்களை எரித்து அழித்த பெருமான், நமது வினைகளையும் எரித்து அழிக்கும் வல்லமை படைத்தவர் என்று கூறுகின்றார். பத்தாவது பாடலில், மாற்று மதத்தவர்கள் பெருமானைக் குறித்து இழித்து பேசும் பேச்சுகளை புறக்கணிக்க வேண்டும் என்ற அறிவுரை கூறப்படுகின்றது. கடைப் பாடலில், இந்த பதிகத்தை ஓதுவதால் நாம் இம்மையில் அடையவிருக்கும் நலனும் மறுமையில் நமக்காக காத்துக் கொண்டிருக்கும் நலனும் உணர்த்தப் படுகின்றது. நாம் இந்த பதிகத்தின் பாடல்களை முறையாக ஓதி, கழிப்பாலை காவலனைப் போற்றி வணங்கி, இம்மையிலும் மறுமையிலும் உரிய பலன்களை பெற்று மகிழ்ந்து வாழ்வோமாக. .



Share



Was this helpful?