இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


புவம்வளி கனல்புனல்

புவம்வளி கனல்புனல்

பதிக எண்: 1.21. திருச்சிவபுரம் நட்டபாடை

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக வலஞ்சுழி சென்ற திருஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு பழையாறை, சத்திமுற்றம், பட்டீச்சரம்,இரும்பூளை முதலான தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், பின்னர் அரதைப் பெரும்பாழி தலம் செல்கின்றார். அதன் பின்னர் திருச்சேறை, திருநாலூர்,குடவாயில், நறையூர் சித்தீச்சரம், தென்திருப்புத்தூர் ஆகிய தலங்கள் சென்றதாக பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தென்திருப்புத்தூர் என்று பெரிய புராணத்தில் குறிப்பிடப்படும் தலம் அரிசிற்கரைப்புத்தூர் தலமாகும். தென்திருப்புத்தூர் தலம் சென்று அங்கு வீற்றிருக்கும் இறைவனைப் பணிந்து, மின்னும் சடை மேல் என்று பதிகம் பாடிய பின்னர், அந்த தலத்தில் பல நாட்கள் தங்கிய பின்னர், திருஞானசம்பந்தர் அருகிலுள்ள சிவபுரம் தலம் சென்றதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன.இதே தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய ஒரு பதிகமும் நமக்கு கிடைத்துள்ளது. திருஞானசம்பந்தர் இந்த தலம் சென்றதை குறிப்பிடும் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம்.

அங்கண் இனிதமரு நாள் அடல் வெள்ளேனத்து உருவாய்ச்

செங்கண் நெடுமால் பணியும் சிவபுரத்துச் சென்றடைந்து

கங்கைச் சடைக் கரந்தவர் தம் கழல் வணங்கிக் காதலினால்

பொங்குமிசைத் திருப்பதிகம் முன் நின்று போற்றிசைத்தார்

இந்த பதிகத்தின் நான்காவது அடியில் உள்ள கடைச் சொல்லின் கடை எழுத்தினைத் தவிர வேறெங்கும் நெடிலெழுத்தே வருவதில்லை. மற்ற அனைத்து எழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் உள்ளன. இவ்வாறு நான்கு பதிகங்கள் உள்ளன. பிறையணி படர்சடை என்று தொடங்கும் பிரமபுரத்து பதிகம் (1.19),தடநிலவிய மலை என்று தொடங்கும் வீழிமிழலைப் பதிகம் (1.20), புவம் வளிகனல் என்று தொடங்கும் சிவபுரம் பதிகம் (1.21) மற்றும் சிலைதனை நிறுவி என்று தொடங்கும் திருமறைக்காடு பதிகம் (1.22) ஆகியவை இந்த நான்கு பதிகங்கள். இந்த நான்கு பதிகங்களிலும் ஐ என்ற உயிரெழுத்துடன் இணைந்த பல உயிர்மெய் எழுத்துக்கள் வருவதை நாம் காணலாம். ஐ என்ற உயிரெழுத்து நெடிலாக கருதப் பட்டாலும் ஐ என்ற உயிரெழுத்துடன் இணையும் உயிர்மெய் எழுத்துக்கள் குறில் எழுத்துகள் என்று தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. இரண்டு மாத்திரை அளவுள்ள ஐ எழுத்து, உயிர்மெய் எழுத்தாக வரும்போது இரண்டுக்கும் குறைந்த மாத்திரையுடன் வருவதால், அவை குறில் எழுத்துகளாக கருதப் படுகின்றன. இத்தகைய நுட்பமான விவரங்களையும் கருத்தில் கொண்டு பதிகங்கள் இயற்றிய திருஞானசம்பந்தரின் புலமை நம்மை வியக்க வைக்கின்றது. அகத்தியருக்கு தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுத்த பெருமானின் அருளால் பதிகங்கள் பாடத் தொடங்கிய திருஞானசம்பந்தர், வல்லமை வாய்ந்த புலவராக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.

இந்த பதிகத்தின் பாடல்களில் சிவபெருமான் தான், படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று செயல்களும், பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளால் செய்யப்படுவதற்கு காரணகர்த்தவாக விளங்குகின்றார் என்றும் சிவபெருமானை சென்று அடைவதற்கான வழிகள் சரியை கிரியை யோகம் ஞானம் என்றும் சொல்லப்பட்டுள்ளது; மேலும் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் சிவபெருமானை நாம் வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களும் சொல்லப் பட்டுள்ளன. பதிகத்தின் கடைப் பாடலிலும் இந்த பதிகம் ஓதுவதால் நாம் பெறுகின்ற நன்மைகள் விளக்கப் பட்டுள்ளன. அனைவரும் சிவபுரம் சென்று பெருமானை வழிபட்டு பயனடையும் வண்ணம் ஊக்குவிக்கும் பாடல்கள் கொண்ட சிறப்பு வாய்ந்த பதிகம்.

பாடல் 1:

புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுண மமர்நெறி

திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரு முயிரவை யவைதம

பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய

சிவனது சிவபுர நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே

விளக்கம்:

புவம்=ஆகாயம்; வளி=காற்று; கனல்=அக்னி, தீ: புனல்=தண்ணீர்; புவி=பூமி, நிலம்; கலை உரை மறை= அறுபத்துநான்கு கலைகளையும் உணர்த்தும் நான்மறைகள்; திரிகுணம்=மூன்று விதமான குணங்கள், சாத்வீகம் தாமசம், ராஜசம்; அமர் நெறி=பொருந்தி அமரும்; திவம்=தேவலோகம்; மலிதரு=மலிந்து காணப்படும், நிறைந்து காணப்படும்; சுரர்=தேவர்கள்; முதலியர்=தேவர்கள் முதலான ஏழு வகை பிறப்புகளுடன் திகழும் பலவகையான எண்ணற்ற உயிர்கள்,தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் பறவைகள் ஊர்வன நீரில் வாழ்வன மற்றும் தாவரங்கள் ஆகிய ஏழு வகைகளில் அடங்கும் அனைத்து உயிர்கள்;பவம்=வினைத்தொகுதிகள்; பவமலி தொழில்=வினைத் தொகுதிக்கு ஈடாக உள்ள உடலுடன் சேர்க்கும் படைக்கும் தொழில்; பதுமநன் மலர்=சிறந்த மலராகிய தாமரை மலர்; மருவிய=பொருந்திய; ஒவ்வொரு உயிர்க்கும் அந்தந்த பிறவிகளில் நுகர்ந்து கழிக்க வேண்டிய வினைகளின் தன்மையை நிர்ணயிப்பது சிவபெருமான் ஒருவர் தான் என்பதால், சிவபெருமான் தான் படைப்புத் தொழிலின் தன்மையை வகுக்கின்றார் என்பது தெளிவாகின்றது.மேலும் பதுமநன்மலரது மருவிய சிவன் என்று குறிப்பிட்டு இருப்பதால், மருவிய பிரமன் என்று குறிப்பிடாமல், பிரமனுடன் பொருந்தி இருந்து படைப்புத் தொழிலை செய்பவர் சிவபெருமான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக உள்ளது.

இந்த பாடலில் சிவபெருமான், பிரமனாக இருந்து செயல்படுவதை திருஞானசம்பந்தர், நமக்கு உணர்த்துகின்றார். படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் செய்வதற்கு பிரமன் திருமால் உருத்திரன் ஆகியோரை நியமித்து, அவர்கள் மூவருடன் ஒன்றியிருந்து அவர்கள் தத்தம் செயல்களை சரிவர செய்வதற்கு, பெருமான் உதவும் தன்மை, பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. மேலும் சிவபெருமான் அருள் பெற்ற காரணத்தால் தான், பிரமன் தனது படைப்புத் தொழிலினை சரிவர செய்யமுடிகின்றது என்றும் பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. தான் அருளிய முதல் பாடலிலேயே, ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள் செய்த பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தருமதேவதை என்றும் அழியாது இருக்கும் நித்தியத்தன்மை வேண்டியதால், அதனை இடபமாக மாற்றி பெருமான் தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார் என்று கூறுவார்கள்.எனவே இந்த செயல் பெருமானின் படைக்கும் தொழிலை உணர்த்துகின்றது; வெண்மதி சூடி என்று சந்திரனை அழியாமல் காத்த செய்கை, பெருமான் செய்யும் காக்கும் தொழிலை உணர்த்துகின்றது; சுடலைப் பொடி என்ற சாம்பல் பெருமானின் அழித்தல் தொழிலை குறிக்கின்றது. கள்வன், தான் திருடிய பொருளை வைத்திருப்பதை எவரேனும் பார்த்து விட்டதால் தான் அகப்பட்டு விடுவோம் என்று கருதி தான் திருடிய பொருளை முதலில் மறைத்து வைப்பான் என்பதால் உள்ளம் கவர் கள்வன் என்ற குறிப்பு மறைத்தல் தொழிலையும், பிரமனுக்கு அருள் செய்த தன்மை அருளும் தொழிலையும் குறிக்கின்றது என்று உணர்த்தி, பரமன் செய்யும் ஐந்து விதமான தொழில்களையும் திருஞானசம்பந்தர் தனது முதல் பாடலில் குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் கூறுவார்கள்.விடையேறி மதிசூடி என்ற தொடர்கள் இறைவன் உருவமாக இருக்கும் நிலையையும், பொடிபூசி என்பது தனது திருமேனியை மறைத்துக் கொள்வது பற்றி அருவுருமாக இருக்கும் தன்மையையும், கள்வன் மறைந்து நிற்பான் என்பதால் கள்வன் என்ற சொல் அருவமாக இருக்கும் தன்மையையும் குறிக்கின்றது என்று விளக்கம் கூறுகின்றனர்.

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்

காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

வியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.13.5) திருஞானசம்பந்தர், பிரமனாக சிவன் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். எண்=எண்ணம் என்ற சொல்லின் திரிபு; தியானம் என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது; தன்னை நினைத்து தியானம் செய்யும் அடியார்களுக்கு தியானத்தின் பயனாக விளங்குபவன் இறைவன்; இறை=தலைவன்; கண்ணார் தரு உரு= பார்ப்போரின் கண்கள் நிறையும் வண்ணம் அழகாக இருக்கும் இறைவனின் உருவம் அத்தகைய அடியார்களின் மனதினில் என்றும் நீங்காது பதிந்து நிற்கும் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

எண்ணார் தரு பயனாய் அயன் அவனாய் மிகு கலையாய்ப்

பண்ணார் தரு மறையாய் உயர் பொருளாய் இறை அவனாய்க்

கண்ணார் தரும் உருவாகிய கடவுள் இடம் எனலாம்

விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரிநீர் வியலூரே

கானூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் முதல் பாடலில் (5.76.1) அப்பர் பிரான், திருமாலாகவும் பிரமனாகவும் உள்ள சிவபெருமான்,உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தையும் காத்தும் படைத்தும் அருள் புரிகின்றார் என்று கூறுகின்றார். திருவின் நாதன்=திருமகளின் கணவன்;செம்மலர்=தாமரை மலர்; பரமன்=மேலானவர்; பரம்=அனைத்தினும் உயர்ந்த

திருவின் நாதனும் செம்மலர் மேலுறை

உருவனாய் உலகத்தின் உயிர்க்கெலாம்

கருவனாகி முளைத்தவன் கானூரில்

பரமனாய பரஞ்சுடர் காண்மினே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.48.7), அப்பர் பிரான், சிவபெருமான் அரியாகவும் அயனாகவும் இருக்கின்றான் என்று கூறுகின்றார்.இயற்றமிழ் இசைத் தமிழுக்கு அடிப்படை, இயலும் இசையும் நாடகத்திற்கு அடிப்படை. எப்போதும் இசைப் பாடல்களை பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கும் பெருமான் இயலுக்கும் அடிப்படையாக உள்ள தன்மை இங்கே கூறப்படுகின்றது. இவ்வாறு இயல் இசை நாடகம் ஆகிய மூன்றின் வடிவமாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. எல்லாம் காணும் கண்ணவன் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நமது கண்கள் ஒரு சமயத்தில் ஒன்றினை மட்டுமே பார்த்து அறிந்து கொள்ளும் சக்தி படைத்தது. ஆனால் இறைவனோ அனைத்தையும் ஒரே சமயத்தில் கண்டு உணர வல்லவன் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. நோக்காதே அனைத்தையும் நோக்கி அறிந்து கொள்ளும் திறமை உடையவன் அல்லவா. இன்பக் கேள்வி= கேட்பதற்கு இனிமையாக உள்ள; கழிந்தோர்=தங்களது மலங்களை முற்றிலுமாக கழித்துக் கொண்ட சான்றோர்கள்; கதி=நிலை, இங்கே முக்தி நிலை என்று பொருள் கொள்ளவேண்டும்.

பெண்ணவன் காண் ஆணவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண் அரியவன் காண் அயனானான் காண்

எண்ணவன் காண் எழுத்தவன் காண் இன்பக் கேள்வி இசையவன் காண் இயலவன் காண் எல்லாம் காணும்

கண்ணவன் காண் கருத்தவன் காண் கழிந்தோர் செல்லும் கதியவன் காண் மதியவன் காண் கடலேழ் சூழ்ந்த

மண்ணவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.5) அப்பர் பிரான், தாமரையான் நான்முகனாக தானேயாகி சிவபெருமான் நின்றதாக குறிப்பிடுகின்றார். திக்கு=வழி; பெருவேள்வி என்று தக்கன் செய்த வேள்வியினை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சிவபெருமானை புறக்கணித்து தான் செய்யும் வேள்வி, மிகவும் பிரம்மாண்டமான அளவில் அமைந்து, அனைவரும் தன்னை பின்பற்றி சிவபெருமானை புறக்கணித்து வேள்விகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்ட வேள்வி என்பதை குறிக்க, பெரு வேள்வி என்று இங்கே குறிப்பிடுகின்றார். சைவம்,வைணவம், காணாபத்தியம் (கணபதி வழிபாடு), கௌமாரம் (முருகர் வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), சௌரம் (சூரிய வழிபாடு) என்பவை ஆறு வைதீக சமயங்களாக கருதப் படுகின்றன. பைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் என்பவை சைவ சமயத்தின் ஆறு உட்பிரிவுகள். ஆறு வகை சமயத்தவர்க்கும் வீடுபேறாய் நின்றவன் சிவபெருமான் என்று மணிவாசகரும் திருவண்டப்பகுதி பதிகத்தில் குறிப்பிடுகின்றார். வளி=காற்று; அக்கு=எலும்பு மாலை, சங்கு என்றும் பொருள் கொள்ளலாம். திக்கு=வழி, நெறி;

தக்கனது பெருவேள்வி தகர்த்தானாகித் தாமரையான் நான்முகனும் தானே ஆகி

மிக்கதொரு தீ வளி நீர் ஆகாசமாய் மேலுலகுக்கு அப்பாலாய் இப்பாலானை

அக்கினோடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயமாகி நின்ற

திக்கினை என் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

வலஞ்சுழி மற்றும் கொட்டையூர் தலங்களை இணைத்து அருளிய பதிகத்தின் பாடலில் (6.73.9) அப்பர் பிரான், இதழ்கள் நிறைந்த தாமரை மலரைத் தனது இருக்கையாக கொண்ட பிரமனாக இருப்பவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். தளம்=இதழ்கள்; அசைவு=துன்பங்கள்; சீதையின் பிரிவால் ஏற்பட்ட துன்பத்தையும், சிவபிரானை வழிபட்ட இராவணனை கொன்றதால் ஏற்பட்ட பழியால் வந்த துன்பத்தையும் இராமபிரான் பெருமானை வழிபட்டு தீர்த்துக் கொண்டான் என்று இராமாயணம் கூறுகின்றது. இந்த பாடலில் அறுபத்துநான்கு கலைகளாகவும் பெருமான் இருக்கின்ற நிலையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆதனம், ஆசனம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.

தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன் தன மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்

இளம்பிறையும் முதிர்சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டெட்டு இருங்கலையும் ஆனான் கண்டாய்

வளங்கிளர் நீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாமுனிகள் தொழுதெழு பொற்கழலான் கண்டாய்

குளம் கிளர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே.

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.82.6) அப்பர் பிரான், பெருமானின் நிலை, திருமாலாகவும் பிரமனாகவும் இருக்கும் நிலை,உணர்த்தப் படுகின்றது. மாவாய்ப் பிளந்து உகந்த=குதிரையின் வாயினைப் பிளந்த: குதிரை வடிவம் எடுத்துத் தன்னை அழிக்கவந்த கேசி என்ற அரக்கனின் வாயைப் பிளந்து அவனது குதிரை உடலைக் கிழித்து கொன்ற கண்ணன், அதனால் கேசவன் என்ற பெயரினைப் பெற்றான் என்று பாகவத புராணம் கூறுகின்றது.

மாவாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும்

மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்றம் உடையார் போலும்

கோவாய முனி தன் மேல் வந்த கூற்றைக் குரைகழலால் அன்று குமைத்தார் போலும்

தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திருச்சாய்க்காட்டு இனிதுறையும் செல்வர் தாமே

கஞ்சனூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் முதல் பாடலில் (6.90.1) அப்பர் பிரான் திருமாலாகவும் பிரமனாகவும் இருப்பவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். மூன்று சுடர்க் கண்ணினான் என்று, சூரியன் சந்திரன் மற்றும் அக்னி இறைவனின் கண்களாக இருக்கும் நிலை இந்த பாடலில் கூறப்படுகின்றது. நாவலன்=புலவன். வேதங்களை அருளிய பெருமான் என்பதால் புலவன் என்றும், தருமிக்கு பொற்கிழி அளிக்க உதவும் வண்ணம் பாட்டு எழுதியமையால் புலவன் என்றும், பாண பத்திரர்க்கு உதவும் வண்ணம் கவிதை எழுதி சேரமான் புலவனுக்கு அளித்தமையால் (பதினோராம் திருமுறை முதல் பதிகம், மதிமலி புரிசை என்று தொடங்கும் பதிகம்) புலவன் என்றும் இறைவனை, அப்பர் பிரான் அழைத்தார் என்று விளக்கம் கூறுவதுண்டு. அக்னி சிவபெருமானை கஞ்சனூர் தலத்தில் வழிபட்டு தனது துன்பத்தைத் தீர்த்துக் கொண்டான் என்பது தலவரலாறு.

மூவிலை நற்சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை

நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால்வேதம் ஆறங்கம் ஆயினானை

ஆவினில் ஐந்து உகந்தானை அமரர் கோவை அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும்

காவலனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேனே

கானாட்டுமுள்ளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (7.40.1) சுந்தரர், பெருமான் தான், இந்திரனாகவும் திருமாலாகவும் பிரமனாகவும் திகழ்கின்றார் என்று கூறுகின்றார். திருமால் கண்ணனாக அவதாரம் எடுத்தபோது, கொக்கின் உருவத்தில் மறைந்திருந்த அசுரன் ஒருவனை, கொக்கின் வாயினைக் கிழித்து கொன்றார் என்று பாகவதம் உணர்த்துகின்றது. புள்=பறவை;

வள்வாய மதி மிளிரும் வளர்ச்சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர் தம் கோனைப்

புள்வாயைக் கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானைப் பொன்னிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை

முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று மொட்டலர்ந்து விரை நாறு முருகு விரி பொழில் சூழ்

களவாய கருங்குவளை கண்வளரும் கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே

பொழிப்புரை:

ஆகாயம்; காற்று அக்னி, தண்ணீர் நிலம் முதலான ஐந்து பூதங்களையும் அறுபத்து நான்கு கலைகளையும் உணர்த்தும் நான்மறைகளையும், சாத்வீகம் தாமசம், ராஜசம் முதலான மூன்று விதமான குணங்களும் பொருந்தி அமர்கின்ற எண்ணற்ற உயிர்களையும், தேவலோகத்தில் வாழும் தேவர்கள் முதலாக ஏழு வகைப் பிறப்புகளில் அடங்குவதும் எண்ணற்று மலிந்து கிடப்பதும் ஆகிய பல தரப்பட்ட உயிர்களையும், அதாவது தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் பறவைகள் ஊர்வன நீரில் வாழ்வன மற்றும் தாவரங்கள் ஆகிய ஏழு வகைகளில் அடங்கும் அனைத்து உயிர்களையும், படைப்பவராக சிவபெருமான் திகழ்கின்றார். அந்தந்த பிறவிகளில் நுகர்ந்து கழிக்கவேண்டிய வினைத் தொகுதிக்கு ஈடாக தகுந்த உடலுடன், மிகுந்த கவனத்துடன் சேர்த்துப் பொருத்தும் தொழிலைச் செய்வோனாக திகழும் பிரமனுடன், சிறந்த மலராக கருதப் படும் தாமரை மலர் மீது உறைபவனாக விளங்கும் பிரமனுடன் இணைந்து செயல்பட்டு, படைப்புத் தொழிலினை நிறைவேற்றும் சிவபெருமான் உறைகின்ற சிவபுரம் தலத்தினை, மனதினால் தியானித்து வணங்கும் அடியார்கள் செழுமை வாய்ந்த இந்த உலகினில் நீண்ட நிலையான புகழுடன் வாழ்வார்கள்.

பாடல் 2:

மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்

நிலைமலி சுரர்முத லுலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும்

அலைகட நடுவரி துயிலமர் அரியுரு வியல்பர னுறைபதி

சிலைமலி மதிள்சிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே

விளக்கம்:

சென்ற பாடலில் பிரமனுடன் இணைந்து பிரமனாக எவ்வாறு சிவபெருமான் செயல்படுகின்றார் என்பதை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் எவ்வாறு திருமாலுடன் இணைந்து காத்தல் தொழிலை செவ்வனே செய்கின்றார் என்பதை கூறுகின்றார். திருமாலாக சிவபெருமான் செயல்படும் நிலை பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். தனது கைகளில் சங்கு மற்றும் சக்கரம் தாங்கியவனாக இருப்பது சிவபெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடலை (4.04.05) இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். பல ஊழிகளை கடந்து இருப்பவன் சிவபெருமான் ஒருவன் தான் என்பதால், ஊழியினை அளக்க வல்லான் பெருமான் என்று கூறுகின்றார். ஊழியில் இறந்துபடும் மற்ற உயிர்களால் (திருமால் பிரமன் உட்பட) எவ்வாறு ஊழிக் காலத்தினை அளக்கமுடியும். பெருமான் பால் அளவு கடந்த அன்பு கொண்டிருக்கும் அடியார்களை பெண்களாக உருவகித்து, அவர்கள் சிவபெருமானை அடைய விரும்புவதாகவும் அதற்காக தங்களது தோழிகளை தூதுக்கு அனுப்புவதாகவும், அப்பர் பிரான் இந்த பாடலில் கற்பனை செய்கின்றார். உண்மையில் பெருமானைத் தவிர்த்து அனைத்து உயிர்களும் பெண்பாலர்கள் தானே; அத்தகையவர்கள் பெருமானை அடைய விரும்புவதில் வியப்பு ஏதும் இல்லை அல்லவா. . . .

ஊழி அளக்க வல்லானும் உகப்பவர் உச்சி உள்ளானும்

தாழிளம் செஞ்சடையானும் தண்ணமர் திண்கொடியானும்

தோழியர் தூது இடையாடத் தொழுது அடியார்கள் வணங்க

ஆழி வளைக் கையினானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.43.6) திருமாலாகவும் பிரமனகவும் இந்திரனாகவும் சிவபெருமான் விளங்குகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மாயன்= திருமால்; மாலன்=இந்திரன்; தேயம்=தேசம் என்ற வடமொழி சொல்லின் தமிழாக்கம். காயம்= உடல்; ஏய=பொருந்திய;திருமாலாகவும், இந்திரனாகவும், பிரமனாகவும் உள்ள பெருமான், நிலமாகவும், பல தேசங்களாகவும், எட்டு திசைகளாகவும், புனித தீர்த்தங்களாகவும் உள்ள இறைவன், உலகத்தில் திரிகின்ற பல உடல்களாகவும், அந்த உடல்களில் உள்ள உயிர்களாகவும் இருக்கும் பெருமான் காஞ்சி மாநகரத்தில் உறைகின்றார்.மென்மையான தோள்களை உடைய பார்வதி அன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் பொருத்தியுள்ள பெருமான் விளங்கித் தோன்றும் கச்சி மேற்றளியைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மாயனாய் மாலனாகி மலரவனாகி மண்ணாய்த்

தேயமாய்த் திசை எட்டாகித் தீர்த்தமாய்த் திரிதர்கின்ற

காயமாய்க் காயத்துள்ளார் காஞ்சி மாநகர் தன்னுள்ளால்

ஏய மென் தோளி பாகர் இலங்கு மேற்றளியானாரே.

திருவதிகை திருத்தாண்டகம் ஒன்றினில் (6.03) அப்பர் பிரான், சிவபெருமான் திருமாலாகவும் பிரமனாகவும் இருக்கும் நிலையினை உணர்த்துகின்றார்.பொன் நிறத்தான்=பிரமன்; புள்ளூர்தியான்=பறவையை, அதாவது கருடனை வாகனமாகக் கொண்ட திருமால்: தொங்கல்= மாலை; சமண சமயத்தைச் சார்ந்து தான் வாழ்ந்த நாட்களில், தனது அறியாமை காரணமாக, பெருமானை இகழ்ந்து பேசியது குறித்து அப்பர் பிரான் வருத்தம் தெரிவிக்கும் பாடல்கள் அடங்கிய பதிகம். ஏழை=அறிவில் ஏழையாக திகழ்ந்த நிலை;

வெறிவிரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டத்தானை வெள்ளேற்றினானைப்

பொறி அரவினானைப் புள்ளூர்தியானைப் பொன் நிறத்தினானைப் புகழ் தக்கானை

அறிதற்கரிய சீர் அம்மான் தன்னை அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை

எறிகெடிலத்தானை இறைவன் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

திருக்கருகாவூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.15.4) அப்பர் பிரான், சிவபெருமான் பிரமனாகவும் திருமாலாகவும் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார், படைத்தான்=உலகைப் படைத்த பிரமன்; இடத்தல்=பெயர்த்தல்; இரண்யாக்ஷன் என்ற அரக்கன், பூமியை கடலின் அடியில் ஒளித்து வைத்தபோது, அந்த உலகத்தை அந்த இடத்திலிருந்து பெயர்த்தெடுத்து மீட்ட திருமால்; பரிசு=தன்மை; ஒருக்கி=ஒருங்கே கூட்டி; கடைத்தான் என்றால் கலக்குபவன் என்று பொருள். வஞ்சனை உடைய மனிதர்களின் மனத்தை கலக்கும் சிவபிரான், தன்னை உணர்ந்துத் தொழும் அடியார்களுக்கு வழிகாட்டியாக உள்ளான் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

படைத்தானாம் பாரை இடந்தானாகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான் தானாம்

உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலால் மூட்டி ஒருக்கி நின்று

அடைத்தானாம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தானாம் ஆனேறு ஒன்று ஊர்ந்தானாகும்

கடைத்தானாம் கள்ளம் அறிவார் நெஞ்சில் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

ஆக்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.21.1) அப்பர் பிரான், கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். கடித்தாமரை=நறுமணம் மிகுந்த தாமரை மலர்; கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் என்பதற்கு இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப்படுகின்றது; நறுமணம் மிகுந்த தாமரை மலர் போன்ற தனது கண்ணினை மலருக்கு பதிலாக திருமால் அர்ச்சனை செய்தபோது, அதனை ஏற்றவர் என்பது ஒரு பொருள். தாமரை மலர்கள் போன்ற கண்ணினை உடைய திருமாலாக இருந்து உலகினை காப்பவர் என்பது மற்றொரு பொருளாகும்.இரண்டாவது பொருள் மிகவும் பொருத்தமாக உள்ளதாக தோன்றுகின்றது; கொடித்தாமரைக் காடே நாடும் தொண்டர்=மூலாதாரத்திலிருந்து, இதயம் வழியாக ஆறு ஆதாரங்கள் வழியாக குண்டலினி சக்தியை தலையின் உச்சிக்கும் மேல் அமைந்துள்ள சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபடும் தொண்டர்கள் என்பது சான்றோர்கள் அளிக்கும் விளக்கம். .முடித்தாமரை=ஊழிக்காலத்தில் இறந்து பட்டவர்களின் தலைமாலையாகிய தாமரை மாலை; தொண்டர் குற்றவேல் என்பதற்கு தொண்டர்கள் செய்யும் குற்றேவல் என்றும் தொண்டர்களுக்கு பெருமான் செய்த குற்றேவல் என்றும் இரண்டு விதமாக பொருள் கூறப்படுகின்றது. தொண்டர்கள் தங்களை பெருமானுக்கு அடிமையாக கருதி திருத்தொண்டுகள் புரிவதையும், அத்தகைய தொண்டுகளை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, அதற்கு பரிசாக மேலான முக்தி நிலையினை பெருமான் அளிப்பதையும் நாம் பெரிய புராணத்தில் கூறப்படும் பல நிகழ்ச்சிகளில் காண்கின்றோம். தனது அடியார்களின் பக்தியின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், பெருமானும் அடியார்களுக்கு தொண்டனாக இருந்ததையும் பல அடியார்களின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிகின்றோம். சுந்தரருக்காக திருவாரூர் வீதிகளில் நடந்து சென்று பரவை நாச்சியாருடன் அவரை இணைத்தது, சுந்தரருக்கு உணவளிக்க வேண்டி திருக்கச்சூர் தலத்தில் பல இல்லங்களுக்கு சென்று உணவினை பிச்சையாக பெற்றது, குருகாவூர் வெள்ளடை தலம் சென்று கொண்டிருந்த சுந்தருக்காக பந்தல் அமைத்து பொதி சோறுடன் காத்து இருந்தது,மணிவாசகரின் பெருமையை பாண்டிய மன்னனுக்கு உணர்த்தும் வண்ணம் மன்னனிடம் பிரம்படி பெற்றது, திருப்பைஞ்ஞீலி தலம் சென்று கொண்டிருந்த அப்பர் பிரானுக்கு தயிர்சோறும் குளிர்ந்த தண்ணீரும் அளித்தது ஆகிய செயல்கள் நமது நினைவுக்கு வருகின்றன.

முடித்தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூவுலகும் தாமாகி நின்றார் போலும்

கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும்

கொடித்தாமரைக் காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்

அடித்தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

மறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.23.3) அப்பர் பிரான், திருமாலாகவும் பிரமனாகவும் சிவபெருமான் இருப்பதாக கூறுகின்றார்.தொக்க என்ற சொல் துக்க என்று எதுகை கருதி, பாடலின் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது அடிகளில் மருவியுள்ளது. துக்க=செறிந்து அமைந்த, உருவம் உடையவன்; நெருங்கி பொருந்தி உள்ள; நிரூபி=உருவம் இல்லாதவன்; ரூபி=உருவம் உடையவன்; நான்காவது அடியில் வரும் துக்க என்ற சொல்லுக்கு, பொருத்தம் கருதி எதிர்மறையாக பொருள் கொள்ள வேண்டும். ஆனைக்கா தலத்தினில் பெருமான் சிலந்திக்கு அருள் புரிந்த வரலாறு நாம் அனைவரும் அறிந்ததே. திருக்காளத்தி தலத்திலும் சிலந்திக்கு அருள் புரிந்ததாக தலவரலாறு குறிப்பிடுகின்றது.

சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீ வாய்ப் படுத்தான் கண்டாய்

நிலந்துக்க நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்

சலம் துக்க சென்னிச் சடையான் கண்டாய் தாமரையான் செங்கண் மால் தானே கண்டாய்

மலம் துக்க மால்விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.65.3) அப்பர் பிரான், தாமரை மலர் மீது வீற்றிருக்கும் மறையோன் பிரமனாகவும், பிரமனை தோற்றுவித்த திருமாலாகவும், சிவபெருமான் இருக்கின்றார் என்று கூறுகின்றார். பொறை=பொறுக்கும் தன்மை, இங்கே தாங்குதல் என்ற பொருளில் வரும்;புண்டரீகம்=தாமரை மலர்; மாசுணம்=பாம்பு; தேய்ந்த ஒற்றைப் பிறையுடன் சரணடைந்த சந்திரனை அன்று முதல் வளரும் வண்ணம் அருள் புரிந்தமை உணர்த்தும் பொருட்டு பிள்ளைப் பிறை என்று கூறுகின்றார். பேழ் வாய்=பிளந்த நிலையில் உள்ள பெரிய வாய்; எல்லி=இரவுப் பொழுது; பிரமன் திருமாலின் நாபியிலிருந்து உதித்தவன் என்பதால், திருமாலை பிரமனைப் பயந்தவன் என்று கூறுகின்றார். புண்டரீகப் போது என்ற தொடரை நண்ணிய என்ற சொல்லுடன் இணைத்து, அடியார்களின் இதயத் தாமரையை அடைந்து ஆங்கே உறைபவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தம்.

பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீகப் போதின்

மறையவன் காண் மறையவனைப் பயந்தோன் தான் காண் வார்சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளைப்

பிறையவன் காண் பிறை திகழும் எயிற்றுப் பேழ்வாய்ப் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும்

இறையவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

நிலவுலகின் படைப்பினில் முதன் முதலாக தோன்றியது கல் என்று சான்றோர்கள் ஆராய்ந்து துணிந்துள்ளனர். தமிழ்க்குடியின் பழமையை குறிப்பிட கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய குடி என்று சொல்வது தானே வழக்கம். உயிர்களின் பல்வேறு பிறவியை குறிப்பிடும் போது மணிவாசகனார்,கல்லாய் என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். மேலும் கல், மலை என்பவை மற்ற பொருட்களை விடவும் நிலையாக உள்ள தன்மை காரணமாக, காத்தல் தொழிலை குறிப்பிடும் பாடலை மலை என்று தொடங்குகின்றார் போலும். வளர்=பொருந்திய, இருக்கும்; மறை தரு வழி=வேதங்கள் மற்றும் ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள வாழ்க்கை நெறியை பின்பற்றும் மனிதர்கள்; நிலை மலி=நிலையாக வாழும்; நீண்ட காலம் வாழும், மனிதர்களின் சராசரி ஆயுளை விடவும் தேவர்களின் சராசரி ஆயுட்காலம் மிகவும் அதிகமாக இருப்பதால் நிலையாக வாழும் தேவர்கள் என்று குறிப்பிடுகின்றார் போலும்; சுரர்=தேவர்கள்;நிலைபெறும் வகை=நிலையாக அழியாமல் இருக்கும் வண்ணம் செயல்படுதல், காத்தல் தொழில்; அறிதுயில்=யோக நித்திரை, பாற்கடலில் படுத்து உறங்குவது போல் தோன்றினாலும், திருமால் உண்மையில் உறங்குவதில்லை; உலகினில் நடக்கும் அனைத்தும் அறிந்தவண்ணம் கண்களை மூடிக் கொண்டு இருப்பதால், அவரது உறக்கம், துயில், அனைத்தும் அறிகின்ற துயில் என்பதை உணர்த்தும் வண்ணம், அறிதுயில் என்று சொல்லப்படுகின்றது.எப்போதும் உலகத்தில் உள்ள உயிர்களை எவ்வாறு காப்பது என்பதே தனது சிந்தனையாக திருமால் இருக்கின்றார் என்றும், அத்தகைய திருமாலின் வடிவினில் சிவபெருமான் உறைகின்றார் என்றும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. விண்ணும் மண்ணும் என்று குறிப்பிட்டு, மற்ற உலகங்களும் இணைத்து சொல்லப் படுவதாக பொருள் கொள்ளவேண்டும். அரி உரு இயல்=திருமாலின் உருவத்தில்; பரன்= அனைவர்க்கும் மேலான சிவபெருமான்;

இந்த பாடலில் சிவபெருமான் உறைகின்ற சிவபுரம் நகரத்தினை நினைக்கும் அடியார்கள், திருமகளின் அருள் பெற்று செல்வத்துடன் திகழ்வார்கள் என்று சொல்லப் படுகின்றது. இவ்வாறு பெருமானின் அடியார்களுக்கு திருமகள் அருள் புரியும் தன்மை குறிப்பிடப் படும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே சிந்திக்கலாம். முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.93.6) திருஞானசம்பந்தர், முதுகுன்றத்து முதியோனை ஐயா என்று அழைத்து,தங்களது தலைவராக கொண்டாடும் அடியார்களுக்கு திருமகள் அணிகலனாக விளங்கி மிகுந்த செல்வம் அளிப்பாள் என்று கூறுகின்றார்.செய்யாள்=திருமகள்; மொய்க்கும்=திரண்டு வந்து நெருக்கும்; இறை வழிபாடு, நமது தீய குணங்களை நீக்கி நற்குணங்களை வளர்க்கும் என்பதை இந்த பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார். உலோபியாக இருந்து அடுத்தவர்க்கு ஏதும் கொடுக்காமல் வாழ்வது உயிரின் ஆறு உட்பகைகளில் ஒன்றாக கருதப் படுகின்றது. எனவே அடுத்தவர்க்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொண்டால், இறைவன் அவ்வாறு நாம் அடுத்தவர்க்கு உதவி புரிய நமக்குத் தேவையான செல்வத்தை நமக்கு அருளுவார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.

மொய்யார் முதுகுன்றில்

ஐயா என வல்லார்

பொய்யார் இரவோர்க்குச்

செய்யாய் அணியாளே

திருவல்லம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.113.4) திருஞானசம்பந்தர், தனது திருவடிகளைச் சாரும் அடியார்களை, திருமகள் வணங்கிப் பொருந்துமாறு செய்பவர் பெருமான் என்று கூறுகின்றார். பொதுவாக செல்வம் நிலையாக ஓரிடத்தில் நிற்பதில்லை. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்லும் இயல்பு கொண்டது செல்வம். இந்த இயல்பினை திருமகளின் குற்றம் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். மை என்றால் குற்றம் என்று பொருள். ஆனால் சிவனடியார்களை வந்தடையும் செல்வம், பெருமானின் அருளால் அவர்களை வந்தடைவதால், அவர்களை விட்டு நீங்காமல் அவர்களிடம் நிலையாக தங்கிவிடும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மேலும் மழையாக பொழிந்து உலகினுக்கு வளம் சேர்ப்பதற்கு காரணமாக இருப்பதும் சிவபெருமான் தான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். தவழ் திருமகள்=ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் இடம் பெயர்ந்து தவழ்ந்து செல்லும் திருமகள்;

கொய்த அம்மலரடி கூடுவார் தம்

மைதவழ் திருமகள் வணங்க வைத்துப்

பெய்தவன் பெருமழை உலகம் உய்யச்

செய்தவன் உறைவிடம் திருவல்லமே

சிவபுரம் தலத்தினை நினையவல்ல அடியார்களுடன் திருமகள் பொருந்தி உறைவதால் அவர்கள் செல்வம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்று கூறும் திருஞானசம்பந்தர், வீழிமிழலை தலத்தை நினைத்து வழிபடும் அடியார்களுக்கும் அத்தகைய பேறு வாய்க்கும் என்று (1.124.1) கூறுகின்றார்.அலர்மகள்=தாமரை மலர் மேல் உறையும் இலக்குமி தேவி; நலமலி=நலங்கள் நிறைந்த, அழகிய; நலம்=அழகு; அவனி=பூமி;

அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்

மலர்மலி குழலுமை தனை இடம் மகிழ்பவர்

நலமலி உரு உடையவர் நகர் மிகு புகழ்

நிலைமலி மிழலையை நினைய வலரே

கோளறுத் திருப்பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.85.3) திருஞானசம்பந்தர், சிவபெருமான் தனது உள்ளத்தில் உறைவதால், திருமகள், துர்க்கை, செயமகள்,நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆகிய பலரும் தனக்கு நல்லதையே செய்வார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திருமறைக்காடு தலத்தில் இருந்த தன்னை, பாண்டிய நாட்டிற்கு வந்து ஆங்குள்ள சமணர்களின் கொட்டத்தை அடக்கவேண்டும் என்று விண்ணப்பம் விடுத்த பாண்டிய நாட்டு அரசியார் மற்றும் பாண்டிய நாட்டு அமைச்சர் சார்பில் வைக்கபட்ட தூதுவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, பாண்டிய நாடு செல்ல திருஞானசம்பந்தர் முடிவு செய்கின்றார். அப்போது அருகிருந்த அப்பர் பிரான், தனது வாழ்க்கையில் நடைபெற்ற சமணர்களின் வஞ்சனையான செயல்களை நினைவு கூர்ந்தவராக,திருஞானசம்பந்தரை எச்சரிக்கை செய்கின்றார். அப்பர் பிரானின் ஐயத்தை நீக்கும் வகையில், திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் இந்த பதிகம். இந்த பதிகத்தின் பாடல்களில், சிவபெருமான் தனது உள்ளத்தில் இருப்பதால், தனக்கு எந்தவிதமான கெடுதியும் நேராது என்று ஞானசம்பந்தர் விடையாக விளக்கம் அளிக்கின்றார். சிவபெருமானது கருணையால், அனைத்து தெய்வங்களும் தனக்கு நல்லனவே செய்யும் என்று உறுதியாக கூறும் திருஞனாசம்பந்தர், பெருமானின் அடியார்கள் அனைவர்க்கும் திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆகிய பலரும் நல்லதையே செய்வார்கள் என்று கூறுகின்றார். நெதி=செல்வம்; கலையதூர்தி=துர்க்கை;

உருவளர் பவளமேனி ஒளிநீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகலர் கொன்றைத் திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்

அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

பொழிப்புரை:

மலைகள் பல பொருந்தியுள்ள நிலவுலகத்தினில் வாழ்பவர்களும் நான்மறைகளில் சொல்லப் பட்டுள்ள வழிகளில் நடந்து அக ஒழுக்கத்தையும் புற ஒழுக்கத்தையும் பேணி வளர்ப்போரும் ஆகிய மனிதர்கள் மற்றும் விண்ணினில் நிலையாக நீண்ட காலம் வாழ்கின்ற தேவர்கள் முதலாக பல வகையான உயிர்களும் அழியாமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன், மிதந்து வரும் அலைகளை உடைய பாற்கடலின் நடுவே பாம்புப் படுக்கையில் பொருந்திய வண்ணம் அறிதுயில் கொள்கின்ற திருமால், உறங்குவது போன்று தோன்றினாலும் அனைத்து உலகங்களிலும் நடக்கின்ற நிகழ்ச்சிகளை அறிந்தவராக காணப்படுகின்றார். அந்த திருமாலின் உடலின் பொருந்தி உறைந்து, அவரை செயல்படுத்தும் சிவபெருமான், எழுந்தருளி உள்ள தலமாவது,கற்களால் வலிமையாக கட்டப்பட்ட மதில் சுவர்கள் கொண்ட சிவபுரம் தலமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபுரம் தலத்தினை தியானித்து தொழும் அடியார்கள் இம்மையில் சிறந்த செல்வம் உடையவர்களாக திகழ்வார்கள்.

பாடல் 3:

பழுதில கடல்புடை தழுவிய படிமுத லியவுல குகள்மலி

குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலமலை தருமுயி ரவையவை

முழுவது மழிவகை நினைவொடு முதலுரு வியன்பர னுறைபதி

செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே

விளக்கம்:

முதல் இரண்டு பாடல்களில் பெருமான் எவ்வாறு பிரமன் மற்றும் திருமாலுடன் இணைந்து, படைத்தல் மற்றும் காத்தல் தொழில்களை புரிகின்றார் என்று எடுத்துரைத்த திருஞானசம்பந்தர் இந்த பாடலில் எவ்வாறு அழித்தல் தொழில் செய்யப்படுகின்றது என்பதை விளக்குகின்றார். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை புரிபவனாகவும், இந்த மூன்று தொழில்களின் இறுதிப் பயனான வீடுபேறாக விளங்குபவன் இறைவன் என்று சீர்காழி நகரத்துப் பதிகத்தின் பாடல் (1.9.2) ஒன்றினில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இறைவன் இந்த மூன்று தொழில்களையும் செய்வது எதற்காக? மலங்களுடன் பிணைந்திருக்கும் உயிர்கள், தங்களது மலங்களைக் கழித்துக் கொண்டு, வீடுபேறு அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் என்பதால், முத்தொழில்களின் பயன் வீடுபேறு என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. நேர்மை=நுண்ணிய பொருள்; கிடை=வேதம் ஓதும் கூட்டம்;

படைப்பு நிலை இறுதிப் பயன் பருமையொடு நேர்மை

கிடைப் பல் கணம் உடையான் கிறி பூதப் படையான் ஊர்

புடைப் பாளையின் கமுகின்னொடு புன்னை மலர் நாற்றம்

விடைத்தே வரும் தென்றல் மிகு வேணுபுரம் அதுவே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.53) முதல் பாடலில் சம்பந்தர், பிரமன், திருமால் மற்றும் ஈசனாக விளங்கும் மூவராய முதலொருவன் என்று குறிப்பிடுகின்றார். மூவராக விளங்கும் பெருமான் அந்த மூவருக்கும் தனி முதல்வனாகவும் விளங்குகின்றான் என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.ஐம்பூதங்களுடன் இணைந்து இருக்கும் பெருமான், தேவர், அசுரர், சித்தர், அந்தணர் முதலான அனைத்து உயிர்களுடன் இணைந்து இருக்கும் செய்தியும் இங்கே உணர்த்தப்படுகின்றது. கால்=காற்று; எரி=தீ

தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறை சேர்

நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்

மேவராய விரை மலரோன் செங்கண் மால் ஈசனென்னும்

மூவராய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.48.5) திருஞானசம்பந்தர், உருத்திரனாகத் திகழ்வது சிவபெருமான் தான் என்று உணர்த்துகின்றார்.பெருமானின் ஒரு அம்சம் தானே உருத்திரன்; புல்கி=சேர்ந்து, நெருங்கி, தழுவி; கருத்தன்=கருத்தினில் உள்ளவன்; தாங்கள் செய்யும் தவத்தின் பயனாக,முனிவர்கள் சிறந்த புகழுடன் விளங்குவது போன்று, மழபாடி தலத்தினைப் போற்றும் அடியார்களும் சிறந்த புகழுடன் விளங்குவார்கள் என்று இங்கே கூறுகின்றார்.

நல்வினைப் பயன் நான்மறையின் பொருள்

கல்வி ஆய கருத்தன் உருத்திரன்

செல்வன் மேய திருமழபாடியைப்

புல்கி ஏத்தும் அது புகழ் ஆகுமே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.72.7) அப்பர் பிரான், சிவபெருமான் தான், உருத்திரமூர்த்தியாக திகழ்கின்றார் என்று கூறுகின்றார். பொருப்பு=மலை; மருப்பு=பன்றிக் கொம்பு; புயம்=தோள்கள்;

பொருப்பு அமர் புயத்தர் போலும் புனல் அணி சடையர் போலும்

மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண்ணூலர் போலும்

உருத்திர மூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும்

எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே

கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (5.20.1) அப்பர் பிரான் மூவரும் ஆயவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். குழகன்=அழகன்;பருவரால்=பருத்த வரால் மீன்கள்; பழனம்=வயல்கள்; ஒப்பற்ற ஒருவனாகவும், சக்தி சிவன் ஆகிய இருவராகவும், பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளாகவும் உள்ள நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.

ஒருவராய் இரு மூவரும் ஆயவன்

குருவதாய குழகன் உறைவிடம்

பருவரால் குதி கொள்ளும் பழனம் சூழ்

கருவதாம் கடம்பூர் கரக் கோயிலே

கடுவாய்க்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (5.62.7) அப்பர் பிரான் பெருமானை உருத்திரமூர்த்தி என்று குறிப்பிடுகின்றார்.உம்பரான்=தேவர்களின் தலைவன்; அம்பரம்=ஆடை; பெருமான் சர்வ வியாபியாக இருப்பதால் அவனது நெடிது உயர்ந்து அகன்ற தோற்றத்திற்கு திசைகள் ஆடையாக உள்ளன என்று புராணங்கள் கூறுகின்றன. அட்டதிசாம்பரன் என்பது அவனின் ஒரு திருநாமம். அம்பரன் என்ற சொல்லினை அம்+பரன் என்று பிரித்து அழகிய பரன் என்றும் பொருள் கொள்ளலாம். அம்பரான் என்ற சொல்லுக்கு அம்பர் தலத்தில் உறைபவன் என்றும் பொருள் கொள்ளலாம். பரன்-மேலானவன். கம்பு நீர்=சங்குகளை உடைய நீர்

உம்பரானை உருத்திர மூர்த்தியை

அம்பரானை அமலனை ஆதியைக்

கம்பு நீர்க் கடுவாய்க்கரைத் தென் புத்தூர்

எம்பிரானைக் கண்டு இன்பமது ஆயிற்றே

பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் (6.10) ஏழாவது பாடலில் அப்பர் பிரான், மூவரானார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.இந்த பாடலில் அப்பர் பிரான், மூவராக இருப்பதும் அன்றி மூவர்க்கும் முதல்வராகவும் இறைவன் உள்ளார் என்று கூறுகின்றார்.

முற்றா மதிச் சடையார் மூவரானார் மூவுலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்

கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பேய்த் தோளி

பற்றாகும் பாகத்தார் பால் வெண்ணீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார்

பற்றார் மதில் எரித்தார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே

தலையாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.79.4) அப்பர் பிரான், சிவபெருமான் உருத்திரனாகவும் நான்முகனாகவும் திருமாலாகவும் இருக்கின்றார் என்று கூறுகின்றார். சிவனாகி என்று உருத்திரனாக இருக்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. செழுஞ்சுடர்=சூரியன் மற்றும் சந்திரன்,பவன்=அடியார்கள் வேண்டும் இடங்களில், வேண்டுவார் வேண்டும் வண்ணம் தோன்றுபவன்; பவனங்கள்=உயிர்கள் வாழும் இடங்கள்; இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் அனைத்து உயிர்களுக்கும் முழுமுதற்காரணனாக இருக்கும் பெருமான் நாரணனாகவும் பிரமனாகவும் இருப்பதாக கூறுகின்றார்.

சிவனாகித் திசைமுகனாய்த் திருமாலாகிச் செழுஞ்சுடராய்த் தீயாகி நீருமாகிப்

புவனாகிப் புவனங்கள் அனைத்துமாகிப் பொன்னாகி மணியாகி முத்துமாகிப்

பவனாகிப் பவனங்கள் அனைத்தும் ஆகிப் பசு ஏறித் திரிவான் ஓர் பவனாய் நின்ற

தவனாய தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே

கஞ்சனூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.90.5) உருத்திரன் என்று பெருமானை அப்பர் பிரான் அழைக்கின்றார். உருத்திரன் என்ற சொல்லுக்கு துன்பத்தை ஓட்டுபவன் என்று பொருள். நமது உடலால் உயிர் பலவகையான துன்பங்களை அடைகின்றது. உயிர் உடலினை விட்டு பிரியும்போது அந்நாள் வரை, ஐம்பொறிகளின் ஆதிக்கத்தால் அடைந்த துன்பங்களிலிருந்து உயிர் விடுதலை அடைவதால், உயிர்களின் துன்பத்தை ஓட்டுபவனாக உருத்திரன் கருதப் படுகின்றான். ஆனால் இந்த விடுதலை மிகவும் தற்காலிகமானது தான். தங்களது வினைகளின் ஒரு பகுதியை, உயிர் தனது சூக்கும உடலுடன், சொர்கத்திலோ அல்லது நரகத்திலோ, அனுபவித்துக் கழித்த பின்னர், எஞ்சிய வினைகளைக் கழிப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டு, வினைகளுக்கு ஏற்ப தகுந்த உடலுடன் பொருத்தப் படுகின்றது.

உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன் தன்னைப்

பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பினானைப் பகலிரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற

நெருப்பதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்

கருத்தவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே

திருவுந்தியார் பதிகத்தின் பாடலில் மணிவாசகர் பெருமானை உருத்திரநாதன் என்று அழைக்கின்றார். சாடிய=தாக்கிய; சரிந்திட=அழிந்துபட;உருத்திரனைப் போன்று வீரபத்திரரும் பெருமானின் ஒரு அம்சம். தக்கனது வேள்வி முற்றுப்பெறாமல் தடுப்பதில் வீரபத்திரரின் செயல்கள் அனைவர்க்கும் அச்சம் ஊட்டுவதாக இருந்தமையால், உருத்திரன் என்று குறிப்பிட்டார் போலும்.

சாடிய வேள்வி சரிந்தடத் தேவர்கள்

ஓடியவாறு உந்தீபற

உருத்திர நாதனுக்கு உந்தீபற

ஒளிவளர் விளக்கே என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், புருவத்தை நெரித்த வண்ணம் மிகுந்த கோபத்துடன் தக்கனது வேள்வியை அழித்த உருத்திரனே என்று பெருமானை, திருமாளிகைத் தேவர் குறிப்பிடுகின்றார். இறைவனைப் பின்பற்றி தனது வாழ்க்கையை நடத்துவதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்று தேவர் இறைஞ்சும் பாடல்.

தக்கன் நற்றலையும் எச்சன் வன்தலையும் தாமரை நான்முகன் தலையும்

ஒக்க விண்டு உருள ஒண் திருப்புருவம் நெரித்து அருளிய உருத்திரனே

அக்கணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆடப் பொன்னம்பலத்தாடும்

சொக்கனே எவர்க்கும் தொடர்வரியாயைத் தொண்டனேன் தொடருமா தொடரே

திருஞானசம்பந்தர் சிவபுரம் தலத்தின் மீது அருளிய இந்த பதிகத்தின் முதல் மூன்று பாடல்களுக்கும் உரையருளிய ஆசிரியர்கள், பிரமன், திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோரின் உடல்களில், சிவபெருமான் அதிட்டித்து, அம்மூவரையும் செயல்படுத்துவதாக விளக்கம் அளிக்கின்றனர். ஜீவசமாதியை அதிஷ்டானம் என்று வடமொழியில் குறிப்பிடுகின்றனர். பல மகான்கள் மற்றும் சித்த புருடர்களின் ஜீவசமாதிகளை நாம் தமிழ்நாடெங்கிலும் காண்கின்றோம்.அத்தகைய சமாதிகள் சென்று வணங்கும் அடியார்கள், மகான்கள் இன்றும் அந்த சமாதிகளில், நிலையாக பொருந்தி வாழ்வதாக கருதி வழிபடுவதால் தானே ஜீவசமாதிகள் என்று அவை அழைக்கப் படுகின்றன. அதே போன்று, மூவராகிய மூர்த்திகளின் உடலுடன் இணைந்து சிவபெருமான் பொருந்தி இணைந்து,மூவரையும் செயல்படுத்தும் தன்மை, அதிட்டித்து என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பழுதில கடல் என்ற தொடருடன் இந்த பாடலை தொடங்குகின்றார். உலகம் முழுவதும் அழிவதற்கு கருவியாக பிரளய வெள்ளம் பயன்படும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பொங்கி வந்த பிரளய வெள்ளத்தினால் உலகினை அழித்த கடல், தான் எந்த வகையிலும் கெடாமல் இருந்த தன்மையை குறிப்பிடும் வண்ணம், பழுதில கடல் என்று கூறுகின்றார். புடை= அனைத்து பக்கங்களிலும் சூழ்ந்து; படி=உலகம்; முதலிய உலகுகள் என்று நிலம் தண்ணீரில் ஒடுங்கும் நிலை, தண்ணீர் தீயினில் ஒடுங்கும் நிலை, தீ காற்றினில் ஒடுங்கும் நிலை, காற்று ஆகாயத்தில் ஒடுங்கும் நிலை, உணர்த்தப் படுகின்றது என்று சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். சுரர்=தேவர்கள்; முதலுரு=இறைவனாகிய சிவபெருமான் எடுக்கும் உருத்திர வடிவம்;

பொழிப்புரை:

தான் பழுதுபடாத வகையில் பிரளய வெள்ளத்தினால் உலகத்தை நாற்புறங்களிலும் சூழ்ந்து கடல் நீர் அழிக்கின்றது. இவ்வாறு கடல் நீரினால் அழிக்கப்படும் நிலவுலகம் முதலான பல உலகங்கள், எஞ்சிய நான்கு பூதங்கள், இந்த உலகங்களில் நிறைவுடன் குழுமி வாழும் தேவர்கள் மனிதர்கள் முதலான பல வகையான உயிர்கள் அனைத்தையும் அழிக்கும் நினைவுடன், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் எடுக்கும் உருவத் தோற்றம் உருத்திரன் ஆகும். மேலே குறிப்பிட்ட வண்ணம் அழித்தல் தொழிலைச் செய்யும் உருத்திரனின் உடலுடன் பொருந்தி உறைபவனும், அனைத்து உயிர்களுக்கும் மேலானவனும் ஆகிய சிவபெருமான் உறைகின்ற தலம் சிவபுரம் ஆகும். செழுமை வாய்ந்த மணிகள் அழகு செய்யும் மாடங்கள் நிறைந்த சிவபுரம் நகரினைத் தொழும் அடியார்கள்,உலகினில் சிறந்த புகழுடன் வாழ்வார்கள்.

பாடல் 4:

நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி

நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடு மடியவர்

குறைவில பதமணை தரவருள் குணமுடை யிறையுறை வனபதி

சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே

விளக்கம்:

முதல் மூன்று பாடல்களில் குறிப்பிட்ட வண்ணம் படைத்தல் காத்தல் மற்றும் அழித்தல் தொழில்களுடன் மறைத்தல் மற்றும் அருளுதல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்து உயிர்களை உய்விக்கும் பெருமானை, உயிர்கள் வழிபட வேண்டிய அவசியம் உள்ளது அல்லவா. சரியை முதலான நான்கு வழிபாட்டு முறைகளில், சரியை மற்றும் கிரியை வகையைச் சார்ந்த சில வழிபாட்டு முறைகளை இந்த பாடலில் குறிப்பிட்டு, அத்தகைய வழிபாடுகள் மூலம் அடியார்கள் மறுமையில் பெறவிருக்கும் பதவிகளை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அளறு என்றால் பொதுவாக சேற்றினை குறிக்கும். இங்கே சேறு போன்று அடர்ந்து காணப்படும் சந்தனக் குழம்பினை உணர்த்துகின்றது. நறைமலி தரும் அளறு=நறுமணத்தை மிகுதியாகக் கொண்டதும் சேறு போன்று அடர்த்தியாக காணப்படுவதும் ஆகிய சந்தனக் குழம்பு; முகை=மொட்டு; முகை நகுமலர்=மலராக விரிந்த மொட்டு, மொட்டு விரிந்து மலர்வதை சிரிப்பினுக்கு ஒப்பிடுகின்றார். புகை=தூபம்; புகை மிகு=மிகுதியான தூபங்கள்; வளரொளி=வரிசையாக உள்ள தீபங்கள், வரிசையாக மிகவும் அதிகமான தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளிவீசும் நிலை, வளர்ந்து கொண்டிருக்கும் ஒளி என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. நிறை புனல்=மிகுதியான தண்ணீர்; நீரும் பூவும் கொண்டு இறைவனை வழிபடும் நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. நியதம்-ஒழுங்கான முறை; குறைவில பதம்=என்றும் குறையாத ஆனந்தம் தருகின்ற சாலோகம் மற்றும் சாமீப பதவிகள்; நினைவொடு என்ற சொல் மூலம், அனுதினமும் செய்யப்படும் அகப்பூஜை குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு அகப்பூசை மற்றும் புறப்பூசை செய்யும் அடியார்கள் என்று உணர்த்துகின்றார். சிறைபுனல்=வயல்களுக்கு நீர் பாய்ச்சும் பொருட்டு பல இடங்களில் மதகுகள் கட்டப்பட்டு சிறைப்படுத்தப் பட்ட நதியின் நீர்; வனபதி=வனப்பு (அழகு) மிகுந்த தலம்;

எண்ணற்ற திருமுறைப் பாடல்கள் பூவும் நீரும் கொண்டு இறைவனை வழிபடுதல், தோத்திரங்கள் தேவாரப் பாடல்கள் பாடி இறைவனை வழிபடுதல் ஆகியவற்றை குறிப்பிட்டு, அத்தகைய வழிபாடுகளால் நாம் அடையவிருக்கும் பலன்களையும் குறிப்பிடுகின்றன. இறைவனை நீராட்டி, அலங்காரம் செய்து,அவனுக்கு அழகான மாலைகள் சூட்டி அழகு பார்ப்பது தொண்டர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாகும். புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.92) மூன்றாவது பாடலில் முருக நாயனார், இறைவனுக்கு மாலைகள் சூட்டி அழகு பார்த்ததை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.தண்கயம்= குளிர்ந்த நீர்நிலை: துணையல்=மாலை:

தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும் புகையும்

கொண்டு கொண்டு அடி பரவிக் குறிப்பறி முருகன் செய் கோலம்

கண்டு கண்டு கண் குளிரக் களி பரந்து ஒளிமல்கு கள்ளார்

வண்டு பண் செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே

ஒழுங்கான வழிமுறைகளைக் கடைப்பிடித்து நியமத்துடன் ஒன்றிய மனத்தினராக இறைவனை வழிபடும் அடியார்களுக்கு சிவபெருமான் அருள் புரிவார் என்று திருஞானசம்பந்தர் சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.38.1) கூறுகின்றார். நித்தலும்=நாள்தோறும்: நியமம்=முறையாக வழிபடும் நிலை; கோடு=கொம்பு, யானையின் கோடு=யானைத் தந்தம்; பீலி=மயிற்பீலி; வண்=வளமையாக விளங்கும்; தத்து=தாவிக் குதிக்கும் நீர்.சாகரம்=கடல்; நீர் மலர்த் தூவி என்று புறப் பூஜையும் சித்தம் ஒன்ற என்று அகப் பூஜையும் இங்கே குறிப்பிடப்படுகின்றது; மேவும்=சென்று அடையும், தங்கும்;பொதுவாக நதிகள் கடலில் சென்று கலப்பதை பாய்தல் என்று குறிப்பிடுவது வழக்கம். பாய்தல் என்றால் வேகத்துடன் சென்று கலத்தல் என்று பொருள்.மேவுதல் என்றால் சென்று அடைதல் என்று பொருள். திருச்சியின் அருகே மிகவும் விரிந்து காணப்படும் காவிரி நதி, பூம்புகாரின் அருகே கடலில் கலக்கும் இடத்தில் அகலும் மிகவும் குன்றி காணப்படுவதை நாம் காணலாம். இவ்வாறு மிகவும் குறைந்த நீரினை கடலில் சேர்க்கும் காவிரி நதியின் தன்மைக்கு,காவிரி நதி தனது நீர்வளம் முழுவதையும் தமிழ் மண்ணுக்கு தந்துவிட்டு எஞ்சிய நீருடன் கடலில் சென்று கலப்பதே காரணம் என்று சேக்கிழார் நயமாக பெரியபுராண பாடல் ஒன்றினில் கூறுகின்றார்.

நித்தலும் நியமம் செய்து நீர்மலர் தூவிச்

சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்

மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரித்

தத்து நீர்ப் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே

உசாத்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.33.4) சிவாகம நெறியில் ஒழுகும் வேதியர்கள் தினமும் நியமத்துடன் பெருமானைத் தொழுகின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மறி=மான் கன்று; மால் விடை=பெருமை உடைய; குறிதரு கோலம்=பொலிவினை உடைய சிவக்கோலம்; செறிதரு=அடர்ந்த;

மறிதரு கரத்தினான் மால்விடை ஏறியான்

குறிதரு கோல நற்குணத்தினார் அடி தொழ

நெறிதரு வேதியர் நித்தலும் நியமம் செய்

செறிதரு பொழிலணி திருவுசாத்தானமே

நமச்சிவாயப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.49.4) திருஞானசம்பந்தர், நியமத்துடன் இறைவனை நாள்தோறும் நினைக்கும் அடியார்களுக்கு நன்மை புரிவதால் அவர்களுக்கு இனியவனாக சிவபெருமான் இருக்கின்றார் என்று கூறுகின்றார். பஞ்சாக்கர மந்திரத்தை தியானம் செய்யும் அடியார்களை நெருங்கி இருக்கும் மனிதர்களை, அணுகுவதற்கு இயமன் தூதர்களும் அஞ்சுவார்கள் என்று குறிப்பிட்டு, பஞ்சாக்கர மந்திரத்தின் வலிமையை இங்கே உணர்த்துகின்றார்.

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்

நயம் வந்து ஓதவல்லார் தமை நண்ணினால்

நியமம் தான் நினைவார்க்கு இனியான் நெற்றி

நயனன் நாமம் நமச்சிவாயவே

பெருமான் ஆடுகின்ற நடனக் கோலத்தை நினைத்து இன்புற்று இருப்பதே, உயிர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியமம் என்று ஆலவாய் பதிகத்தின் பாடலில் (3.52.6) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பொன் தயங்கு=பொன் போல் மிளிரும்; பின் தயங்க=பின்னால் தாழ்ந்து தொங்கும்; பிஞ்ஞகன்= அழகிய தலைக் கோலம் உடையவன்; இலங்கு=பிரகாசிக்கும்; அம்முடி=அழகிய முடி;

பொன் தயங்கு இலங்கொளிந் நலம் குளிர்ந்த புன்சடை

பின் தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ

கொன்றை அம்முடியினாய் கூடலால வாயிலாய்

நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே

கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்தின் முதல் பாடலில் (4.31.1), அப்பர் பிரான், சிற்றின்பத்தை நாடும் உள்ளத்தின் தன்மையை மாற்ற விரும்பும் மனிதர்கள், செய்ய வேண்டிய அகப்பூசையின் தன்மையை குறிப்பிடுகின்றார். பொள்ளம்-ஓட்டை, துவாரம்: பொள்ளத்த காயம்=பல துவாரங்களை உடைய உடல்: வெள்ளம் என்ற சொல் மிகுதியைக் குறிப்பிட கையாளப் பட்டுள்ளது. கழித்தல்=அறவே ஒழித்தல்

பொள்ளத்த காயம் ஆயப் பொருளினைப் போக மாதர்

வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்

உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணருமாறு உணர வல்லார்

கள்ளத்தைக் கழிப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே

இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (4.31.4), அப்பர் பிரான் பெருமானுக்கு செய்யப்படும் புறப்பூசையின் தன்மையை விளக்குகின்றார். திருக்கடவூரில் வாழ்ந்து வந்த குங்கிலியக் கலய நாயனார் திருமடத்தில் தங்கிய அப்பர் பிரானுக்கு, நாயனார் குங்கிலியத் தூபம் ஏற்றி சிவபிரானுக்குத் தொண்டு செய்தது நினைவுக்கு வந்தது போலும். தூபம் இட வல்லார்க்கு இனியவராக இறைவன் இருப்பார் என்று கூறி, நாயனார் செய்த திருத்தொண்டினை குறிப்பினால் இங்கே உணர்த்துகின்றார்.

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி

அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து

விரும்பி நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்

கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே

பெருமானை தினமும் நியமத்துடன் சிறுவன் மார்க்கண்டேயன் வழிபட்டார் என்று அப்பர் பிரான் குறுக்கை வீரட்டம் திருப்பதிகத்துப் பாடல் ஒன்றினில் (4.49.2) கூறுகின்றார். சாற்றும் நாள்=முன்னமே சொல்லிய நாள்; தனக்கு குழந்தை இல்லை என்று சிவபிரானை நோக்கி தவம் செய்த மிருகண்டு முனிவருக்கு, சிவபிரான் பிள்ளை வரம் அளித்த போது ஒரு நிபந்தனை விதித்தார்; பதினாறு ஆண்டுகள் மட்டும் வாழ்நாள் கொண்ட அறிவுடைய மகன் வேண்டுமா அல்லது நூறு ஆண்டு வாழ்நாள் கொண்ட அறிவில்லாத மகன் வேண்டுமா என்று கேட்டார். பதினாறு ஆண்டுகள் இருந்தாலும் அறிவுடைய மகனே வேண்டும் என்று வேண்டிய மிருகண்டு முனிவர் அவ்வாறே பதினாறு ஆண்டுகள் வாழ்நாள் கொண்ட மகனைப் பெற்றார். அந்த காலம் முடிந்த பின்னர் தான் இயமன் சிறுவனின் உயிரைப் பறிக்க வந்தான். பூரித்து=நிறைவாக; குமைத்தல்=தண்டித்தல், வதைத்தல். இறைவனை நீராட்டும் பொருட்டு தனது தவ வலிமையால், கங்கை நீரினை, கடவூர் மயானத்தில் உள்ள ஒரு கிணற்றில் வரவழைத்த மார்கண்டேயர், அந்த நீரினைக் கொண்டு இறைவனை நீராட்டினார்.இந்த செய்தியே இங்கே ஆற்றுநீர் என்ற தொடரால் குறிப்படப் படுகின்றது. இன்றும் கடவூர் மயானத்தில் உள்ள கிணற்றில் இருந்து நீர் கொண்டுவரப் பட்டு இறைவனுக்கு நீராட்டல் நடைபெறுகின்றது.

நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து

ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணாளரைக் கொல்வான்

சாற்று நாள் அற்றது என்று தரும ராசற்காய் வந்த

கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே

ஒரு பொதுப் பதிகத்தினை (4.75.1) அப்பர் பிரான், இறைவனை நாம் எவ்வாறு வழிபடவேண்டும் என்ற விளக்கத்துடன் தொடங்குகின்றார். தான் அவ்வாறு இறைவனை அவ்வாறு வழிபடாது காலத்தை வீணாக கழித்ததற்கு வருத்தமும் தெரிவிக்கின்றார். இருக்கு=ரிக் வேதம், வேத மந்திரங்கள்: இறைவனுக்கு அபிடேகம் செய்யும்போது வேதங்கள் அல்லது தமிழ் மறைகள் பாடுவது மரபு. இந்த மரபு அப்பர் பிரானால் இங்கே உணர்த்தப்படுகின்றது. வேதங்கள் ஓதியவாறே புனித நதிகளின் நீரினைக் கொண்டு இறைவனை நீராட்டி, பின்னர் சந்தன குங்குமச் சாந்தினால் அலங்காரம் செய்து, மலர்களை சூட்டி,இறைவனை கண்ணாரக் கண்டு அழகு பார்க்கும் வழக்கம் முறையாக இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. கண்டன்=பாசத்தை துண்டிப்பவன்.

தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன்னீர்

கொண்டு இருக்கு ஓதி ஆட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி

இண்டை கொண்டு ஏற நோக்கி ஈசனை எம்பிரானைக்

கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே

நமது உடல் என்னும் வீட்டில், உள்ளத்தை அகல் விளக்காகக் கொண்டு, உணர்வு எனப்படும் நெய்யினை ஊற்றி, உயிர் என்னும் திரியை வைத்து, ஞானம் என்னும் நெருப்பினால் ஏற்றி தியானம் செய்தால், சிவபிரானின் திருப்பாதங்களைக் காணலாம் என்று நமக்கு உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (4.75.4)இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.

உடம்பெனும் மனை அகத்து உள்ளமே தகளியாக

மடம் படும் உணர் நெய் அட்டி உயிரெனும் திரி மயக்கி

இடம் படு ஞானத் தீயால் எரி கொள இருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே

தான் செய்து வந்த அகப்பூசையின் தன்மையை அப்பர் பிரான் விளக்கும் பாடலை (4.77.4) நாம் இங்கே காண்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.காயம்=உடல்: கடிமனம்=உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பாசத்தைக் கடிந்து ஒதுக்கும் மனம்: தினமும் சிவபூஜை செய்வோர், இந்த பாடலை முதலில் ஓதிவிட்டு பின்னர் புறப் பூஜை தொடங்குதல் வழக்கம். எனது உடலினை கோயிலாக பாவித்து, உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பாசங்களை கடிந்து நீக்கிய மனதினை சிவபிரானுக்கு அடிமையாக மாற்றி, மலங்கள் நீக்கப் பெற்ற தூய்மையான மனத்துடன், எனது மனதின் மணியாக விளங்கும் ஆன்மாவையே இலிங்கமாக பாவித்து, எனது அன்பினையே நீராகவும் பாலாகவும் நினைத்து அந்த நீரினால் இறைவனை நன்றாக நீராட்டி, எனது வணக்கங்களை இறைவனுக்கு அளிக்கும் நிவேதனப் பொருளாக படைத்து, இறைவனுக்கு நான் பூசை செய்தேன் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்..

காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக

நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப்

பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (4.77.3) தொண்டர்கள் பெருமானுக்கு செய்கின்ற பலவகை திருப்பணிகளை குறிப்பிடும் அப்பர் பிரான், மலர்களை தொடுத்து மாலையாக இறைவனுக்கு சாத்தி வழிபடுதல் மற்றும் இறைவனின் சன்னதியில் விளக்குகள் ஏற்றி வழிபடுதல் ஆகிய இரண்டு செயல்களையும் குறிப்பிடுகின்றார். திருக்கோயிலை அலகு கொண்டு பெருக்குவதாலும், கோயில் தரையை பசுஞ்சாணி கொண்டு மெழுக்குவதாலும், பூத் தொடுத்து இறைவனுக்கு சாற்றுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கிடைக்கும் பலன்களைச் சொல்லும் அப்பர் பிரான், இறைவனுக்கு பிடித்த தேவாரப் பாடல்களையும் சாம வேதத்தையும் பாடுவதால் ஏற்படும் பலனை தன்னால் சொல்ல இயலாது என்று கூறுகின்றார். நாவன்மை பெற்றதால், இறைவனால் நாவுக்கரசர் என்று பெயர் சூட்டப்பட்ட அப்பர் பிரானே, சொல்ல இயலவில்லை என்று கூறினால், இறைவனை புகழ்ந்து பாடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் எல்லை இலாதன, சொற்களில் அடங்காதன என்பதை நாம் உணரலாம். விளக்கினார்=துடைப்பம் கொண்டு கோயிலை சுத்தம் செய்தல்; மெழுக்குதல்=பசுஞ்சாணி கொண்டு கோயில் தரையை பூசுதல்: அப்பர் பெருமானின் காலத்தில் பெரும்பாலான கோயில்கள் மண் தரையுடன் இருந்தன. பிற்காலச் சோழர்களின் காலத்தில் தான், பழைய கோயில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்டன. எனவே மண் தரையினைப் பேணி பாதுகாக்க தொடர்ந்து மெழுகுதல் அவசியம்.

விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்று ஆகும்

துளக்கி நன்மலர் தொடுத்தால் தூய விண் ஏறலாகும்

விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானமாகும்

அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (5.92.7) பெருமான், உயிர்களுக்கு நெஞ்சம், தலை, கைகள் கொடுத்ததன் காரணமே அவனை வழிபடுவதற்காக என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சூழ்த்த=சூழ்ந்த, நறுமணம் மிக்க உடையதால் வண்டுகளால் சூழப்பட்ட மலர்கள்,மாமலர்=ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்கள், வீழ்த்துதல்=வீணாக கழித்தல். அனைத்து உயிர்களையும் பற்றியிருக்கும் ஆணவமலம் இறைவனைப் பற்றிய சிந்தனைகள் நாம் செய்யவிடாமல் தடுக்கின்றன. அதனால் அறியாமையில் மூழ்கியிருக்கும் நெஞ்சினை, மடநெஞ்சம் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நாம் இறைவனைப் பற்றி நினைத்தால், ஆணவ மலத்தால் ஏற்பட்டுள்ள அறியாமை அகலும். எனவே நமது நெஞ்சம் இறைவனை நினைக்க வேண்டும் என்று கூறுகின்றார். சமண மதத்தினைச் சார்ந்து வெகுகாலம் இருந்த காரணத்தால், சிவபிரானை நினையாமல் தான் நெடுங்காலம் வீணாக கழித்ததாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிட்டு தனது வருத்தத்தை தெரிவிக்கின்றார்.

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்

தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே

தூபம், மலர்கள், நீர், சந்தனம் முதலியன கொண்டு இறைவனை வழிபடும் அடியார்கள் பற்றிய குறிப்பு காணப்படும் பொதுப் பதிகத்தின் பாடலை (5.92.6)நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். சிவபெருமானின் ஐந்து திருமுகங்களில் வாமதேவம் ஒன்றாகும். இந்த முகம் வடக்கு நோக்கிய திருமுகம்.கிழக்கு நோக்கி உள்ள முகம் தத்புருஷம். தெற்கு நோக்கி உள்ள முகம் அகோரம். சத்யோஜாதம் மேற்கு நோக்கி உள்ள முகம். ஈசானம் மேல் நோக்கி உள்ள முகம். விடியற்காலையில், பொழுது விடிவதற்கு முன்னமே நீராடி, மலர்களை பறித்து, இறைவனை வழிபட வேண்டும் என்று பல பாடல்களில் அப்பர் பெருமான் கூறியுள்ளார். அவ்வாறு வழிபடும் அடியார்கள், தங்களுக்கு உதவியாக கையில் விளக்கு ஏந்திச் சென்றனர் போலும். ஏமம்= திருநீற்றுக் காப்பு:திருநீற்றினை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல உதவும் பை அல்லது பெட்டகம்: தாமம்=மலர் மாலைகள்: இயமனின் தூதர்களை சிவனடியார்களின் அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கும் அப்பர் பிரான், அடியார்களின் அடையாளங்களை குறிப்பிடும் வண்ணம், வாமதேவராகிய சிவபெருமான் உறையும் திருக்கோயிலுக்கு, தினமும், பெருமானின் மீது வைத்த விருப்பம் அன்றி வேறு எந்த பொருளிலும் விருப்பம் இல்லாதவர்களாய், கையில் சிறிய விளக்கோடு,பெருமானுக்கு சூட்டுவதற்காக மலர் மாலைகளும், தூபம், சந்தனம் முதலான வாசனைப் பொருட்களும், திருநீறும் எடுத்துச் செல்லும் அடியார்கள் என்று குறிப்பிடுகின்றார்.

வாமதேவர் வளநகர் வைகலும்

காமம் ஒன்று இலராய்க் கை விளக்கொடு

தாமம் தூபமும் தண் நறும் சாந்தமும்

ஏமமும் புனைவார் எதிர் செல்லலே

பொழிப்புரை:

மிகுந்த நறுமணம் உடையதும் சேறு போன்று அடர்த்தியாக காணப்படுவதும் ஆகிய சந்தனக் குழம்பினை பெருமானின் திருமேனியின் மீது பூசியும், வாய் திறந்து சிரிப்பது போன்ற தோற்றத்தினைத் தரும் புதியதாக மலர்ந்த மொட்டுகள் கொண்டு இறைவனின் திருமேனி மீது தூவியும், குங்கிலியம் முதலிய தூபங்கள் காட்டியும், வரிசையாக விளக்குகள் ஏற்றி அழகுடன் ஒளி மிளிரும் வண்ணம் பெருமானின் சன்னதியை அலங்கரித்தும், நிறைந்த தண்ணீர் கொண்டு இறைவனை நீராட்டியும், நாள்தோறும் இறைவனை முறையாக தியானம் செய்தும், ஒழுங்கான வழிபாட்டு முறைகளை பின்பற்றி, நாள்தோறும் அகப்பூசை மற்றும் புறப்பூசை செய்யும் அடையர்களுக்கு, குறைவற்ற ஆனந்தம் அளிக்கும் சாலோகம் மற்றும் சாமீபம் பதவிகளை பரிசாக அளிக்கும் குணத்தினை உடைய இறைவன் உறைகின்ற அழகிய பதி சிவபுரம் நகரமாகும். வயல்களுக்கு நீர் பாய்ச்சும் பொருட்டு பல இடங்களிலும் மதகுகள் கட்டப் பட்டுள்ளதால், செழுமையாக திகழும் வயல்கள் கொண்டுள்ள சிவபுரம் நகரத்தினை நினைக்கும் அடியார்கள், தங்களது வாழ்வினில் பல வெற்றிகள் பெற்றவர்களாக, வெற்றித் திருமகளை உடையவர்களாக விளங்குவார்கள்.

பாடல் 5:

சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய

மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொரு ணியததமு முணர்பவர்

தனதெழி லுருவது கொடுவடை தகுபர னுறைவது நகர்மதிள்

கனமரு வியசிவ புரநினை பவர்கலை மகள்தர நிகழ்வரே

விளக்கம்:

நான்காவது பாடலில் சரியை மற்றும் கிரியை நெறி வழிபாடுகளை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் யோகநெறி பற்றி குறிப்பிடுகின்றார்.சினமலி அறுபகை=கோபம் முதலான ஆறு வகையான குணங்கள்; இவை உயிருக்கு கேடு விளைவிப்பதால், உயிரின் உட்பகைகளாக கருதப் படுகின்றன.காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் என்பன இந்த ஆறு உட்பகைகள். இந்த ஆறு உட்பகைகளும் உயிரினை ஆட்கொள்ளும்போது உயிர் தனது நிலையில் செயல்படாமல், அந்த பகைகள் காட்டும் உணர்வுகளின் வழியே செயல்பட்டு, இறைவனிடத்தில் தான் கொண்டிருந்த நாட்டத்தை இழந்து,முறையற்ற செயல்கள் பல செய்து தீய வினைகளை சேர்த்துக் கொள்கின்றன. எனவே உயிர்கள் தங்களது நன்மை கருதி இவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். வளி=காற்று; நிறுவிய=நிலைபெறச் செய்து; வளி நிறுவிய=பிராணவாயுவை நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும் பிராணாயாமம்: இத்தகைய மூச்சுப் பயிற்சி அவசியம் வேண்டும் என்று, தற்போது உலகினில் பரவியுள்ள கொரோனா நோய்த் தடுப்பிற்கு உதவும் என்றும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நுரையீரல் சீரடைய உதவும் என்றும் இந்நாளைய மருத்துவர்களால் கருதப் படுகின்றது. மனனுணர்வு=மனம்+உணர்வு=இறைவன் பற்றிய சிந்தை உடையவர்களாய் ஒன்றிய மனத்துடன் தியானித்தல்; மிசையெழு=உள்ளத்தில் தோன்றுகின்ற; தனது எழில் உருவது கொடு=தனது உருவத்தினைப் போன்று உருவம் அளித்தருளும், சாரூபம் பதவி அளித்து அருள் புரியும்; சாரூபம் என்பதற்கு, கழுத்தினில் உள்ள நீலநிறத்து கறையும், சடையினில் உள்ள கங்கை நதியையும் தவிர்த்த மற்ற அடையாளங்களுடன் சிவபெருமானை போன்று திகழ்தல் என்று தருமபுர ஆதீனத்து குறிப்பு தெரிவிக்கின்றது. மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்து என்று விநாயகர் அகவலில் ஔவை பிராட்டியார் குறிப்பிடுவது போன்று, மூலாதாரத்து கனலை படிப்படியாக உயர்த்தி ஆறு ஆதாரங்களுக்கும் அப்பால் இருக்கும் சகஸ்ரதளம் செல்லவைத்து, ஆங்கே குவிந்து கிடக்கும் மலரை நிமிர்த்தும் செயலில் உயிர் வெற்றி அடைந்தால், ஆங்கே ஞானப் பிழம்பாக இறைவன் தோன்றுவான் என்று கூறுவார்கள். அந்த நிலையைத் தான், மலர் மிசை எழுதரு பொருள் என்று குறிப்பிடுவதாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. கனம்=மேகம்;

இந்த பாடலில் சிவபுரம் தலத்தை தியானிக்கும் அடியார்கள், கலைமகளின் துணை கொண்டு கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடல் நமக்கு திருவீழிமிழலை பதிகத்தின் கடைப் பாடலை (1.20.11) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் வீழிமிழலை தலத்தின் மீது திருஞானசம்பந்தரால் அருளப்பட்ட பதிகத்தினை மகிழ்ச்சியுடன் ஓதும் அடியார்கள், கலைமகள் திருமகள் செயமகள் புகழ்மகள் ஆகியோர் தம் பால் பொருந்த உலகினில் இனிதாக வாழ்வார்கள் என்று கூறுகின்றார்.

சினமலி கரி உரி செய்த சிவன் உறைதரு திரு மிழலையை மிகு

தனமனர் சிரபுர நகரிறை தமிழ் விரகனது உரை ஒரு பதும்

மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள்

இனமலி புகழ்மகள் இசை தர இருநிலனின் இடை இனிது அமர்வரே

பொழிப்புரை:

உயிரின் உட்பகைகளாகிய காமம், குரோதம், மோகம், உலோபம், மதம் மாற்சரியம் ஆகியவற்றை வென்று, உயிர்களை இத்தகைய பகைகளின் பிடியில் சிக்காமல் விடுவித்து, மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளின் சேட்டையிலிருந்து உயிரினை விடுவிக்கும் வண்ணம் இந்த ஐந்து பொறிகளின் செயல்பாடுகளையும் உயிரின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படச் செய்தும், உள்ளிழுக்கும் காற்றினை நிறுத்தியும் விடுத்தும் கட்டுப்பாட்டில் கொண்டுவர உதவும் பிராணாயாமப் பயிற்சி செய்து மனதினை ஒரு கட்டுப்பாட்டில் கொணர்ந்தும், ஒன்றிய சிந்தனையுடன் இறைவனை தியானித்தும்,அவ்வாறு தியானம் செய்வதால் தனது உள்ளத்தில் தோன்றும் ஒளிப்பிழம்பாகிய பெருமானை நாள்தோறும் உணர்ந்தும், இவ்வாறு முறையாக நியமத்துடன் இறைவனை வழிபாடு செய்யும் யோகியர்களுக்கு, தனது எழிலான உருவத்துடன் அத்தகைய யோகியர்கள் திகழும் வண்ணம் செய்து, அதாவது சாரூப நிலை அருளி அவர்களை முக்தி உலகில் நிறுத்தியும், அருள் புரியும் இறைவன் உறைகின்ற நகரம் சிவபுரம் ஆகும். நீர்த்துளிகள் உள்ளதால் கனத்த எடையுடன் விளங்கும் மேகத்தை தீண்டும் வண்ணம் உயர்ந்த மதில்களைக் கொண்டுள்ள சிவபுரம் நகரத்தை நினைக்கும் அடியார்களை, கலைமகள் அணுகி வந்து பொருந்தி அருள் புரிய, அவர்கள் நிலவுலகில் சிறப்புடன் வாழ்வார்கள்.

பாடல் 6:

சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு

உருவிய லுலகவை புகழ்தர வழியொழு குமெயுறு பொறியொழி

அருதவ முயல்பவர் தனதடி யடைவகை நினையர னுறைபதி

திருவருள் சிவபுர நினைபவர் திகழ்குல நிலனிடை நிகழுமே

விளக்கம்:

சுருதி=வேதங்கள்; பல நல முதல் கலை=பயில்வோருக்கு பலவிதமான நன்மைகளை தருகின்ற கலைகள்; துகளறு=குற்றங்கள் இல்லாமல்; சந்தேகம் மற்றும் தெளிவின்மை ஆகிய காரணங்களால் ஏற்படும் குற்றங்களைக் களைந்து; அருதவம் முயல்பவர்=ஞானிகள்; அடி அடை வகை=பெருமானின் திருவடிகளை அடைந்து பெருமானுடன் ஒன்றும் தன்மை; சாயுச்சியம் என்று அழைக்கப்படும்; வாழையடி வாழையாக அடியார்களின் மரபு நிலைத்து ஓங்கும் என்ற தன்மை இங்கே திகழ்குல நிலனிடை நிகழுமே என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை:

வேதங்கள் மற்றும் பயில்வோர்களுக்கு பலவிதமான நன்மைகள் பெற்றுத் தரும் பல கலைகள் மற்றும் மெய்ஞானம் அளிக்கும் நூல்கள் ஆகியவற்றை,சந்தேகம் மற்றும் தெளிவின்மை ஆகிய காரணங்களால் ஏற்படும் குற்றங்களை முற்றிலும் தவிர்த்து முறையாக பயின்று உலகத்தவர் புகழும் வண்ணம் மெய்ஞானம் பெற்றவர்களாக விளங்கி, பழி பாவங்களுக்கு அஞ்சியவராக தூய்மையான ஒழுக்கத்துடன் வாழ்க்கை நடத்தி, தங்களது உடல்களில் பொருந்தியுள்ள ஐந்து புலன்களையும் முற்றிலும் அடக்கி, மிகவும் அரிதான தவத்தை மேற்கொள்ளும் ஞானிகள், அழகிய தோற்றத்தினை உடைய தனது திருவடிகளை வந்து சேர்ந்து தன்னுடன் ஒன்றும் வண்ணம் எண்ணம் கொண்டவராக அருள் புரிகின்ற சிவபெருமான் உறைகின்ற தலம் சிவபுரமாகும். இந்த தலம், பெருமானின் திருவருளை தன்னகத்தே கொண்டதாக விளங்குவதால், இந்த தலத்தினை தியானித்து போற்றும் அடியார்களின் குலம் உலகினில் புகழ் பெற்று திகழும்.

பாடல் 7:

கதமிகு கருவுரு வொடுவுகி ரிடைவட வரைகண கணவென

மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக ழெயிறத னுதிமிசை

இதமமர் புவியது நிறுவிய வெழிலரி வழிபட வருள்செய்த

பதமுடை யவனமர் சிவபுர நினைபவர் நிலவுவர் படியிலே

விளக்கம்:

வராகர் பெருமானை வணங்கிய தல வரலாறு இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. கதம்= கோபம்; கருவுரு=கரிய உடல்; வெண்ணிறப் பன்றியாக திருமால் அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் குறிப்பிடுவதால், கோபத்தால் திருமாலின் முகம் கருத்ததாக பொருள் கொள்வது சிறப்பு; சுவேத வராகன் என்று வடமொழியில் குறிப்பிடுவார்கள்; சுவேதம்=வெண்மை; உகிர்= நகங்கள்; பதம்=திருவடி; படி=உலகம்; இந்த பதிக விளக்கத்தின் பின்னணியில் நாம் சிந்தித்த பெரிய புராண பாடலும் வெள்ளேனத்து உருவாய் திருமால் சென்று இந்த தலத்து இறைவனை வணங்கினார் என்றே குறிப்பிடுகின்றது.

வராக அவதாரம் எடுத்த திருமால், அரக்கன் இரண்யாட்சனை, தான் கொன்ற பாவம் தீரும் பொருட்டு சிவபெருமானை வழிபட்டு பயனடைந்தார் என்று சுரருலகு நரர்கள் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (3.67.6) சொல்லப் பட்டுள்ளது. நிராமயன்=நோய் அற்றவன்; பராபரன்= மேலோர்க்கும் மேலானவன்; புராதனன்=அனைத்து உயிர்களுக்கும் பழமையானவன்; பராவுசிவ= பலராலும் புகழப்படும் சிவபெருமான்; ராக=விரும்பத் தக்கவன்;இராவும்=இரவிலும்; எதிராயது= இரவுக்கு எதிராக உள்ள பகலிலும்; பரா=பரவி, புகழப்படும்; புராணன்=பழமையானவன்; அமராதி= தேவர்களுக்கு தலைவனாக உள்ளவன்; அதிபதி=தலைவன்; அரா மிசை=பாம்பின் மேல்; எழில்= அழகாக உள்ள பூமியினை; தரு=கொம்பு; ஆய=பொருத்திய; அர பராயண=அரனை பாராயணம் செய்யும்; வாதராயன்=திருமால்; விராய=கலந்த; எரி=பழி; தான் கிடக்கும் பாம்பணையிலிருந்து எழுந்த திருமால் வராக உருவத்துடன் சென்று, அரக்கன் இரண்யாட்சனால் ஒளித்து வைக்கப்பட்ட எழில் மிகுந்த பூமியை மீட்டுத் தனது இரண்டு கொம்புகளின் இடையே பொருத்திக் கொணர்ந்த பின்னர், அந்த அரக்கனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்ட பழி தீரும் பொருட்டு, பெருமானின் திருநாமத்தை பாராயணம் செய்து வழிபட்டதால் சீர்காழி நகரினுக்கு வந்த பெயர் தராய் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

நிராமய பராபர புராதன பராவுசி வராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழி றராயர பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே

சிவபுரம் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலிலும் (1.112.7) வராக அவதாரம் எடுத்த திருமால் பெருமானை வழிபட்ட செய்தி குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில் வெண்மை நிறத்து பன்றி என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். எயிறு=கொம்பு, கோரைப்பல் என்று பொருள் கொள்ளவேண்டும். அடல்=வலிமை; பொன்றிட=அழிய;

அன்று அடற்காலனைப் பாலனுக்காய்ப்

பொன்றிட உதை செய்த புனிதன் நகர்

வென்றி கொள் எயிற்று வெண் பன்றி முன்னாள்

சென்று அடி வீழ்தரு சிவபுரமே

பொழிப்புரை:

திருமால், கோபம் மிகுந்து கரிய உருவம் கொண்டு வராகமாக (பன்றியாக) அவதாரம் எடுத்த போது, அவரது நகங்களால் அழுத்தப்பட்ட மேரு மலை கணகண என்று ஒலி செய்தது; மதம் மிகுந்த நீண்ட முகத்தில் பொருந்தியுள்ளதும் பிறைச் சந்திரன் போன்று வளைந்து வெண்மை நிறத்தில் காணப்பட்டதும் ஆகிய கோரைப் பற்களின் நடுவே, திருமாலால் மீட்கப்பட்ட பூமி பதமாக அமர்ந்திருந்தது; இவ்வாறு வசதியாக கோரைப் பற்களின் இடையே அமர்ந்திருந்த பூமிக்கு எந்த கேடும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக கொண்டு வந்த ஆற்றல் உடைய அழகிய திருமால், தன்னை வழிபட்ட போது அருள் புரிந்த திருவடிகளை உடையவர் சிவபெருமான். அத்தகைய பெருமை வாய்ந்த சிவபெருமான் உறைகின்ற சிவபுரம் தலத்தினை தியானித்து வழிபடும் அடியார்கள் மிகுந்த புகழுடன் உலகினில் திகழ்வார்கள்.

பாடல் 8:

அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவழி கொடுசிவன்

இசைகயி லையையெழு தருவகை இருபது கரமவை நிறுவிய

நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவ னுறைபதி

திசைமலி சிவபுர நினைபவர் செழுநில னினில்நிகழ் வுடையரே

விளக்கம்:

அசைவு=உடல் தளர்ச்சியால் ஏற்படும் வருத்தம்; அயன்=பிரமன்; தனது உடலினை மிகவும் வருத்திக் கொண்டு பிரமனை நோக்கி தவமிருந்து வரம் பெற்றவன் அரக்கன் இராவணன் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இசை கயிலை=பெருமான் மிகுந்த விருப்புடன் எழுந்தருளியுள்ள கயிலாய மலை; எழுதரு வகை=பெயர்த்து எடுக்கும் முயற்சி; நிசிசரன்= இரவிலும் எங்கும் திரியக்கூடிய ஆற்றல் பெற்ற அரக்கன் இராவணன்; பணி=பணியும் வண்ணம்; திசைமலி=எட்டு திசைகளிலும் நிறைந்த; நிகழ்வு உடையர்=நீண்ட நாட்கள் வாழ்வார்கள்; முயல்வினில்=செய்த முயற்சியின் விளைவாக;

பொழிப்புரை:

தனது உடலினை மிகவும் வருத்திக் கொண்டு பிரமதேவனை நோக்கி செய்த கடுமையான தவத்தின் விளைவாக பெற்ற வரங்களின் துணையால் மிகுந்த வலிமையுடன் விளங்கிய அரக்கன் இராவணன், அந்த வலிமையைக் கொண்டு, சிவபெருமான் விருப்பத்துடன் வீற்றிருக்கும் கயிலை மலையை பேர்த்து எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில், கயிலை மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில், தனது இருபது கைகளையும் அந்த மலையின் கீழே செலுத்தி அரக்கன் இராவணன் முயற்சி செய்த போது, அந்த அரக்கனின் பத்து தலைகளில் ஒன்று சிதறும் வண்ணம், தனது கால் பெருவிரலால் கயிலாய மலையின் மீது ஊன்றி அழுத்தியதன் மூலம், தனது வலிமையை அரக்கனுக்கு உணர்த்தி அவனைப் பணியச் செய்து அடக்கியவர் சிவபெருமான். அத்தகைய ஆற்றல் உடைய சிவபெருமான் உறைகின்ற தலம் சிவபுரமாகும். உலகின் எட்டு திசைகளிலும் பரவிய புகழினை உடைய சிவபுரம் நகரத்தை தியானிக்கும் அடியார்கள், செழுமை வாய்ந்த இந்த நிலத்தினில் நீண்ட நாட்கள் புகழுடன் வாழும் வாய்ப்பினை பெறுவார்கள்.

பாடல் 9:

அடன்மலி படையரி யயனொடு மறிவரி யதொரழன் மலிதரு

சுடருரு வொடுநிகழ் தரவவர் வெருவொடு துதியது செயவெதிர்

விடமலி களநுத லமர்கண துடையுரு வெளிபடு மவனகர்

திடமலி பொழிலெழில் சிவபுர நினைபவர் வழிபுவி திகழுமே

விளக்கம்:

அடன் மலி=அடல்மலி=மிகுந்த வலிமையினை உடைய; படை=சக்கரப்படை; களம்=கழுத்து; வெருவு=அச்சம்;துதி=தோத்திரம், புகழினை உணர்த்தி வணங்கும் பாடல்கள்; திடம்=உறுதி; வழி=மரபினில் தோன்றுவோர்;

பொழிப்புரை:

மிகுந்த வலிமை உடைய சக்கரப் படையினைத் தனது படைக்கலமாக கொண்டுள்ள திருமாலும் பிரமனும், முறையே தனது திருவடிகளையும் திருமுடியையும், அறிந்து கொள்ள முடியாத வகையில் நெடிதுயர்ந்த பேரொளிப் பிழம்பாக, அவர்களின் எதிரே வெளிப்பட்டவர் சிவபெருமான்; அவரது நெடிய உருவத்தையும், தங்களது இயலாமையையும் உணர்ந்த திருமால் பிரமன் ஆகிய இருவரும், மிகுந்த அச்சம் கொண்டவர்களாக பெருமானை துதித்து பணிந்த அளவில், ஆலகால விடத்தினால் கருமை நிறம் படர்ந்த கழுத்தையும் நெற்றியில் கண்ணும் உடையவராக தனது தோற்றத்தை, அவர்கள் இருவருக்கும் காட்டி அருள் புரிந்தவர் சிவபெருமான்; இவ்வாறு அவர்கள் இருவரும் காண்பதற்கு அரியவராக காட்சி அளித்த பெருமான், பொருந்தி உறைகின்ற நகரம் சிவபுரம் ஆகும். உறுதியான மரங்கள் நெருக்கமாக வளர்ந்துள்ள சோலைகள் நிறைந்த சிவபுரம் நகரத்தினை தியானித்து வணங்கும் அடியார்களும் அவர்களது மரபினரும் உலகினில் புகழுடன் விளங்குவார்கள்.

பாடல் 10:

குணமறி வுகணிலை யிலபொரு ளுரைமரு வியபொருள் களுமில

திணமெனு மவரொடு செதுமதி மிகுசம ணருமலி தமதுகை

உணலுடை யவருணர் வருபரன் உறைதரு பதியுல கினினல

கணமரு வியசிவ புரநினை பவரெழி லுருவுடை யவர்களே

விளக்கம்:

உலகப் பொருட்களும் உயிர்களின் குணமும் அறிவும் அழியும் தன்மை உடையன என்பது புத்தர்களின் கொள்கைகளில் ஒன்றாகும். இந்த கொள்கையை கணபங்கக் கொள்கை என்று கூறுவார்கள்; மருவிய பொருள்=உலகினில் உள்ள பொருட்கள்; திணம்=திண்ணம் என்ற சொல்லின் இடைக்குறை; நிச்சயம்,உறுதி என்று பொருள்; செதுமதி=கேட்டினை விளைவிக்கும் அறிவு, குற்றம் பொருந்திய புத்தி; சமணர்கள் தங்களது அறிவினை, சிவபெருமானை எவ்வாறு இழித்து கூறலாம் என்று திட்டமிட பயன்படுத்தினார்களே தவிர, பெருமானின் உண்மையான தன்மையை புரிந்து கொண்டு அவனை வணங்கி அவனது அருளின் துணை கொண்டு வாழ்வினில் உய்வினை அடைவதற்கு பயன்படுத்தவில்லை என்பதால், கேட்டினை விளைவிக்கும் மதி என்று இங்கே குறிப்பிட்டார் போலும். தங்களுக்கு அரசர்களிடம் இருந்த செல்வாக்கினை பயன்படுத்தி இதர மதத்தவர்களை வருத்தி, அவர்களுக்கு பல விதங்களிலும் கெடுதி செய்ய திட்டமிடும் அறிவு என்று பொருள் கொள்வதும் பொருத்தமே; கணம்=கூட்டம், நல்லவர்களாக விளங்கும் அடியார்கள் கூட்டம்; கை உணல் உடையோர்=தங்களுக்கு இடப்படும் உணவினை, தங்களது கைகளில் ஏந்திக்கொண்டு உட்கொள்ளும் பழக்கம் உடைய சமணர்கள்; குணமறி வுகணிலை யிலபொருளு= குணம் அறிவு நிலையில பொருள் என்று பிரித்து பொருள் கொள்ளவேண்டும்; உரை மருவிய பொருள்=உரைகளால் உணர்த்தப்படும் பொருள்; உணர்வரு பரன்=உணர்வதற்கு அரியவராகிய பெருமான்; கேடு கேட்ட அறிவுடன் வாழும் சமணர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட, பெருமானின் அடியார்கள் நல்லவர்களாகத் திகழ்ந்த தன்மையை திருஞானசம்பந்தர் குறிப்பிட்டார் போலும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அழகான உள்ளத்துடன் அடுத்தவர்க்கு நல்லவர்களாக வாழும் வாழ்ந்த அடியார்கள் அழகுடன் மிளிர்ந்ததில் வியப்பேதும் இல்லை.

பொழிப்புரை:

குணம் அறிவு முதலிய பண்புகள் நிலையற்றவை என்பதால் அவை ஒருநாள் அழியும் தன்மை கொண்டவை என்றும், உலகினில் காணப்படும் பொருட்களும் சொற்களால் உணர்த்தப்படும் பொருட்களும் நிலையற்ற தன்மை உடையவை என்பதால் அவையும் அழிவது திண்ணம் என்றும் கொள்கைகள் உடையவர்களாய் திகழும் புத்தர்களும், குற்றமுடையதும் பலருக்கும் கேடு விளைவிப்பதும் ஆகிய அறிவினை உடையவர்களாக திகழ்ந்தும் தங்களுக்கு பிச்சையாக இடப்படும் மிகுதியான உணவினைத் தங்களது கைகளில் ஏந்திக்கொண்டு உட்கொள்ளும் சமணர்களும், உணர்வதற்கு அரியவராக திகழும் சிவபெருமான் உறைகின்ற தலம் சிவபுரமாகும். நல்லவர்களாக திகழும் பெருமானின் அடியார்கள் திரண்டு வாழும் சிவபுரம் தலத்தினை தங்களது மனதினால் தியானிக்கும் அடியார்கள் அழகிய உருவத்துடன் விளங்குவார்கள்.

பாடல் 11:

திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர

நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபது நவில்பவர்

நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள்

புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகபுனர் தரநல நிகுவரே

விளக்கம்:

திகழ் சிவபுரம்=புகழுடன் திகழும் சிவபுர நகரம்; விரகன்=புலமை உடையவன்; மேற்கண்ட பாடல்களில் சிவபுரம் நகரத்தினை நினைத்து தொழும் அடியார்கள் பெறுகின்ற பயன்களை சொல்லி வந்த திருஞானசம்பந்தர், இந்த பாடலில் இந்த பதிகம் ஓதுவதால் நாம் பெறவிருக்கும் பலன்களை தொகுத்து கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் சிவபுரம் தலத்தினை தியானித்து வணங்கும் அடியார்களின் தன்மை குறிப்பிடப்பட்டு, இந்த பதிகத்தை ஓதச் செய்வதன் மூலம் நம்மையும் அந்த தலத்தினை தியானிக்க செய்து அந்த பலன்களை அடையச் செய்யும் பாங்கினை உணரலாம்.

கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (1.129.11) திருஞானசம்பந்தர், இந்த பதிகத்தினை முறையாக ஓதும் அடியார்கள் மிகுந்த செல்வம் உடையவர்களாக இந்த உலகம் முழுவதும் ஆளும் வல்லமை பெற்றவர்களாக விளங்குவார்கள் என்று கூறுகின்றார். தூமலராள் துணைவர் என்று அவர்களிடம் செல்வம் பொருந்தி இருக்கும் தன்மையை உணர்த்துகின்றார். தூமலராள்=தூய்மையான தாமரை மலர் மேல் உறையும் இலக்குமி தேவி;

கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள் ஈசன் தன் கழல் மேல் நல்லோர்

நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன

சொற்றுணை ஓர் ஐந்தினோடு ஐந்திவை வல்லார் தூமலராள் துணைவராகி

முற்றுலகம் அது ஆண்டு முக்கணான் அடி சேர முயல்கின்றாரே

பொழிப்புரை:

புகழுடன் திகழும் சிவபுர நகரத்தில் பொருந்தி உறைகின்ற பெருமானின் இணையான திருவடிகளை பணிந்து வணங்குபவனும் சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் தலைவனும் தமிழ் மொழியில் புலமை உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் அளித்ததும், சிறப்பு வாய்ந்த பொருள் உடையதும், பலவிதமான நலன்கள் அடியார்களுக்கு கிடைப்பதை உணர்த்தும் பத்து பாடல்களையும் முறையாக ஓதி வழிபடும் அடியார்கள் நல்ல குலத்தினில் வாழ்வோர் போன்று நல்லொழுக்க நெறியில் திகழ்ந்து, நிலம் முதலான நிறைந்த செல்வங்கள் பல பெற்று, அழகுடன் பொலிந்து விளங்கும் உருவம், நிகரற்ற கொடைத்தன்மை, வெற்றி பெரும் தன்மை, தங்களது புகழினை மேன்மேலும் வளர்க்கும் சந்ததியார்கள், இறைவனின் அடியாராக இருப்பதால் கிடைக்கும் பெருமிதம் ஆகிய தன்மைகளைப் பெற்று இம்மையிலும் மறுமையிலும் நலமுடன் திகழ்வார்கள்.

முடிவுரை:

இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், இந்த தலத்தினை தியானித்து வழிபடும் அடியார்கள் அடையும் நன்மைகள் குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு தலத்தினை வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் பலன்கள் அனைத்துப் பாடல்களிலும் குறிப்படப்படும் அரிய பதிகம். மேலும் பெருமான் செய்யும் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று தொழில்களும் மிகவும் விவரமாகவும் சொல்லப்படும் பெருமை வாய்ந்த ஒரே பதிகம் இது தான். பெருமானின் அருள் பெறுவதற்கு உதவும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வழிகளையும் குறிப்பிடும் பாடல்கள் கொண்ட ஒரே பதிகம் இது தான்.இத்தகைய நெறிகளை பின்பற்றி இறைவனைத் தொழும் அடியார்களுக்கு இறைவன் அருளும் தன்மையும் குறிப்பிடப்பட்டு, அருளுதல் தொழிலை இறைவன் செய்யும் முறையும் விளக்கப் படுகின்றது. கலைமகள், திருமகள் மற்றும் ஜெயமகள் ஆகிய மூவரின் அருளினை எவ்வாறு பெறுவது என்பதை விளக்கும் ஒரே பதிகமும் இது தான்.

மகா சங்காரத்தில் அனைத்து உலகங்களும் முற்றிலும் அழிந்த பின்னர், பெருமான் மீண்டும் உலகத்தினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும்போது நாதம் முதல் உண்டாகின்றது. பின்னர் முறையே, ஆகாயம் காற்று தீ தண்ணீர் நிலம் ஆகிய பஞ்சபூதங்கள் அதே வரிசையில் தோன்ற, பஞ்ச பூதங்களின் கலவையாக, உலகப் பொருட்களும் உடல்களும் தோன்றுகின்றன. இந்த தன்மையை உணர்த்தும் வண்ணம், படைத்தல் தொழில் குறிப்பிடப்படும் முதல் பாடல், ஐந்த பூதங்கள் பற்றிய குறிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. உயிர்கள் நிலையாக வாழும் காத்தல் தொழிலைக் குறிப்பிடும் இரண்டாவது பாடல்,நிலைத் தன்மை கொண்ட மலை பற்றிய குறிப்புடன் தொடங்குகின்றது. அழித்தல் தொழிலைக் குறிப்பிடும் மூன்றாவது பாடல், பிரளய வெள்ளத்தினால் உலகினை மூழ்கடித்து அழிக்கும் கடல் பற்றிய குறிப்புடன் தொடங்குகின்றது. பதிகத்தின் நான்காவது பாடலில், சரியை மற்றும் கிரியை வழிமுறைகளில் உள்ள சில செயல்கள் குறிப்பிடப்பட்டு, அத்தகைய வழிபாட்டு முறைகள் மூலம், நாம் சாலோகம் மற்றும் சாமீபம் பதவிகளை அடைந்து முக்தி உலகில் மகிழ்ந்து நிலையாக இருக்கலாம் என்று உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் ஐந்தாவது பாடலில் யோகநெறி பெற்றுத் தருகின்ற சாரூப பதவி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறாவது பாடல் ஞானநெறியின் விளைவாக அடையவிருக்கும் சாயுச்சியம் பதவி உணர்த்தப் படுகின்றது. ஏழாவது பாடல் தலபுராண நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது. எட்டாவது ஒன்பதாவது பத்தாவது பதினொன்றாவது பாடல்கள் வழக்கமான பாணி பின்பற்றப்பட்டு நமக்கு அறிவுரைகள் வழங்குகின்றன. சிவபுரம் தலத்தினை தியானிப்பதால் நமக்கு கிடைக்கும் பலன்களையும், இந்த தலத்தின் மகிமையையும், ஐந்து தொழில்களை பெருமான் புரிகின்ற தன்மையையும், முக்தி உலகம் சென்று அடைவதற்கு உதவும் வழிமுறைகளையும் இந்த பதிகம் மூலம் அறிந்து கொள்ளும் நாம், அவற்றை பின்பற்றி வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் இறைவனின் அருள் பெற்று உய்வினை அடைவோமாக.

புவம்வளி கனல்புனல் (Puvamvali Kanalpunal) is a poetic phrase that vividly describes the five elements of nature—earth, air, fire, water, and space—often linked to Lord Shiva or cosmic creation in Hindu philosophy. Let’s break down the components:

Breakdown of the Phrase:
புவம் (Puvam): Refers to the earth, one of the five fundamental elements (Pancha Bhoota) in Hindu cosmology. Earth symbolizes stability, grounding, and the physical world.

வளி (Vali): Refers to air or wind, representing movement, life force, and breath. Air is associated with dynamism and vitality.

கனல் (Kanal): Refers to fire, symbolizing energy, transformation, and purification. Fire plays a key role in many rituals and is also symbolic of destruction and renewal.

புனல் (Punal): Refers to water, representing life, fluidity, and adaptability. Water is essential for life and is often associated with fertility and cleansing.

Full Meaning:

"புவம்வளி கனல்புனல்" can be interpreted as a poetic representation of the four elements—earth, air, fire, and water. In many traditional texts, these elements are considered fundamental to the creation and functioning of the universe.

Context:

This phrase likely evokes the Pancha Bhoota or the five great elements of nature (earth, air, fire, water, and space), which are believed to make up the entire universe. These elements are often associated with Lord Shiva, as he is considered the embodiment of these cosmic forces.

Earth (Puvam): Symbolizes the physical foundation of the universe. It represents stability and form.

Air (Vali): Represents the life force, breath, and movement, indicating that all living beings depend on air for survival.
Fire (Kanal): Symbolizes transformation and the energy required for both creation and destruction.
Water (Punal): Stands for sustenance, fluidity, and cleansing, representing life-giving properties.
In many Hindu traditions, Lord Shiva is worshiped in temples dedicated to the five elements. For example, temples in South India, particularly the Pancha Bhoota Sthalams, are famous for venerating Shiva in the form of these five elements.

Symbolism:

Earth (Puvam): Stability, grounding, physical existence.
Air (Vali): Life force, breath, dynamic movement.
Fire (Kanal): Energy, purification, transformation.
Water (Punal): Fluidity, adaptability, life-giving force.

Conclusion:

"புவம்வளி கனல்புனல்" poetically encompasses the fundamental forces of nature—earth, air, fire, and water—representing the cosmic elements that sustain life and form the universe. These elements, often linked to Lord Shiva, symbolize his role in creation, preservation, and destruction, portraying him as the force behind all of existence. This phrase reflects the interconnectedness of the natural world and its divine essence, which is central to Hindu philosophy.



Share



Was this helpful?