பதிக எண்: 2.94 - வாழ்கொளிபுத்தூர் - பியந்தை காந்தாரம்
பின்னணி:
நெல்வாயில் அரத்துறை இறைவனின் அருளால் முத்துச் சிவிகை, முத்துக் குடை மற்றும் ஊதுகொம்பு பெற்ற திருஞானசம்பந்தர், அதன் பின்னர் நெல்வெண்ணெய், பழுவூர், விசயமங்கை, புறம்பயம், வைகா, சேய்ஞலூர், பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம்புலியூர் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் வாழ்கொளிபுத்தூர் வந்து அடைகின்றார். இந்த தலம் வந்தடைந்த சம்பந்தர், பொடியுடை மார்பினர் என்று தொடங்கும் (1.40) பதிகத்தினை பாடி, கருங்குவளை மலர் போன்று கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடைய இறைவரின் திருவடிகளை வணங்கினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். பதிகங்கள் பாடி நீடுவார் என்று குறிப்பிட்டுள்ளமையால் பல பதிகங்கள் சம்பந்தர் இந்த தலத்து இறைவனை குறித்து பாடியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் நமக்கு மேலே குறிப்பிடப்பட்ட பதிகமும் சாகை ஆயிரம் உடையார் என்று தொடங்கும் மற்றொரு பதிகமே கிடைத்துள்ளன. பொடியுடை மார்பினர் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் பெருமானின் திருவடிகளை குறிப்பிட்டு மகிழ்ந்த சம்பந்தர், பெருமான் எவற்றையெல்லாம் உடையவராக விளங்குகின்றார், என்று சாகை ஆயிரம் உடையார் என்று தொடங்கும் இந்த பதிகத்தில் விளக்குகின்றார். பொடியுடை மார்பினர் என்று தொடங்கும் பதிகத்தினில், சேர்வோம், சார்வோம், காண்போம் என்று உலகத்தவரையும் தன்னுடன் இணைத்து, உலகத்தவர்கள் பெருமானின் திருவடிகளைப் போற்றும் தன்மையை குறிப்பிடுவதால், பார் புகழ் பதிகங்கள் என்று சேக்கிழார் கூறுகின்றார் போலும். உலகத்தவரோடு இணைந்து தானும் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடுவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும்.
சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர்
பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்புகழ் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.
பாடல் 1:
சாகை ஆயிரம் உடையார் சாமமும் ஓதுவது உடையார்
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார்
தோகை மாமயில் அனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே
விளக்கம்:
சாகை=பகுதிகள்; சாமவேதத்தில் ஆயிரம் பகுதிகள் ஒரு காலத்தில் இருந்ததாக கூறப் படுகின்றது. ஆனால் இப்போது இரண்டு சாகைகளே வழக்கத்தில் உள்ளன. கௌதம சாகை மற்றும் ஜைமினி சாகை என்பவையே அந்த இரண்டு சாகைகள்; வேதங்களின் பல பிரிவுகளாக இருப்பதும் பெருமான் என்பதே இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமான் தான் முதல் முதலில் வேதங்களை அருளியவர் என்பதால் ஆயிரம் சாகை கொண்ட சாம வேதத்தை உடையவர் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். சாமமும் என்று சிறப்பு உம்மைத் தொகையாக இங்கே வருவதால், சாம வேதத்துடன் சேர்த்து மற்ற மூன்று வேதங்களையும் உடையவராக பெருமான் விளங்குகின்றார் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். கடை=வீட்டின் முன் வாயில். பொதுவாக பிச்சை எடுப்பவர்களை கீழ்நிலையிலும் பிச்சை இடுபவர்களை மேல்நிலையிலும் கொள்வதும் வழக்கம். ஆனால் பெருமான் பலியேற்பதன் உயர்ந்த நோக்கத்தினை கருதி, பிச்சை என்று குறிப்பிடாமல் பலி என்று உயர்வாக குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இந்த பாடலில் இறைவன் பலியேற்கும் செயலை இரப்பது என்று கூறுகின்றார். எனவே தான் பலி அளிப்பவர்களை உயர்வாக ஈகையார் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஈகையார்=கொடை அளிப்பவர்கள். பிராட்டியின் அழகினுக்கு தோகை உடைய மயில் உதாரணமாகவும் பிராட்டியின் இடை மெலிந்து காணப்படும் நிலைக்கு துடி இசைக் கருவியை உதாரணமாகவும், இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நுண் துளி=நுண்ணிய துளிகளாக உள்ள மகரந்தப் பொடிகள். அவை காற்றினில் பறந்து வருவதால், நுண்துளி வீசுவதாக கூறுகின்றார்.
பிராட்டியின் அழகினுக்கு மயிலை உவமையாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறியிருப்பது நமக்கு அத்தகைய பாடல்களை நினைவூட்டுகின்றது. கோலக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.123.5) திருஞானசம்பந்தர், பிராட்டியை மயிலார் சாயல் மாது என்று அழைக்கின்றார். இறைவனின் அழகினை இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் பாடிய திருஞானசம்பந்தர், இங்கே இறைவியின் அழகை நினைத்து மயில் போன்ற சாயல் உடைய மாது என்று கூறுகின்றார். எந்த செயலையும் தொடர்ந்து செய்தலை பயிலுதல் என்று கூறுவார்கள். நாம் நமது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் கற்றுக் கொண்டே இருப்பதால் தான் கல்வி [பயிலுதல் என்று சொல்கின்றனர். எயில்=கோட்டை; சாய=மடிந்து விழ; மயில் போன்று அழகினை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும். வலிமையான மூன்று கோட்டைகளை உடைய திரிபுரத்து அரக்கர்கள் மடிந்து விழும் வண்ணம் அந்த மூன்று கோட்டைகளையும் எரித்த எமது தலைவனும் ஆகிய இறைவன் குயில்கள் நிறைந்து வாழும் சோலைகள் உடைய கோலக்கா தலத்தில் உறைகின்றான். அவனை இடைவிடாது தியானம் செய்து வணங்க, நமது பாவங்கள் முற்றிலும் அழிந்து விடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே
பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.108.3) மயில் போன்ற சாயலை உடைய உமையன்னையைத் தன்னுடன் கொண்டிருப்பவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சாமம் போக=உரிய நேரத்தில்; பாம்பும் சந்திரன் ஆகிய இரண்டும் இயல்பாகவே ஒன்றுக்கொன்று பகையுடன் விளங்குவன. எனினும் பெருமானின் சன்னதியில் பகைமை உணர்ச்சிக்கு இடமில்ல என்பதால், இரண்டுமே தங்களின் இடையே உள்ள பகையை மறந்து அமைதியாக பெருமானின் சடையினில் பொருந்தி இருக்கும் சூழ்நிலையை நலமல்கு செஞ்சடை என்று குறிப்பிடுகின்றார். பகைமை உணர்ச்சியால் ஏற்படும் கோபமின்றி பாம்பு சாந்தமாகவும், பாம்பிடம் தான் கொண்டிருந்த அச்சம் நீங்கியதால் கலவரமேதும் இன்றி சந்திரன் இருக்கும் தன்மை தான், நலமல்கு என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. நன்கு வளர்ந்த ஆண் மயிலின் தோகையின் சாயலில் அழகுடன் விளங்குபவள் என்றும் தூய்மையான மொழி பேசுபவள் என்றும் பிராட்டியை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
நாகமும் வான்மதியும் நலமல்கு செஞ்சடையான் சாமம்
போக நல் வில் வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான்
தோகை நன் மாமயில் போல் வளர் சாயல் தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்து உகந்தான் உறை கோயில் பாதாளே
கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.52.7) திருஞானசம்பந்த்ர், பிராட்டியை கலவ மாமயிலாள் என்று குறிப்பிடுகின்றார். கலவ மாமயில் என்றால் தோகை பொருந்தி அழகாக காணப்படும் மயில் என்று பொருள். மயிலாள்=மயில் போன்ற சாயலை உடையவள்; குலவுதல்=போற்றுதல்; உன்னுதல்=தியானம் செய்தல்; பெருமானைக் கண்டு அவன் பால் வைத்துள்ள அன்பின் மிகுதியால் கசிந்து கண்ணீர் பெருக்கி நெகிழ்ந்த உள்ளத்துடன், இசையுடன் இணைந்த பாடல்களை பாடும் வல்லமை வாய்க்கப்பெற்று, அவனைப் பலவாறும் புகழும் அடியார்கள் தேவர்களினும் உயர்வாக கருதப் படுவார்கள் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
கலவ மாமயிலாளொர் பங்கனைக் கண்டு கண் மிசை நீர் நெகிழ்த்திசை
குலவுமாறு வல்லார் குடி கொண்ட கோட்டாற்றில்
நிலவு மாமதி சேர் சடை உடை நின்மலா என உன்னுவார்
உலவு வானவரின் உயர்வாகுவது உண்மையதே
புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.54.4) திருஞானசம்பந்தர் பிராட்டியை மயிலார்ந்த சாயல் மட மங்கை என்று அழைக்கின்றார். ஆர்ந்த= ஒத்த, பொருந்திய; பயிலார்ந்த=பயிற்சி பொருந்திய; வெருவ=அச்சம் கொள்ள; மெய்=உடல்; எயில்=மதில்: கையில் வெண்மழு ஒன்றை உடையவரே, மயில் போன்ற சாயலை உடைய உமை அன்னை அச்சம் கொள்ளும் வண்ணம், மிகுந்த கோபத்துடன் வந்த ஆண் யானையின் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவரே, வேதங்களில் நல்ல பயிற்சி உடைய வேதியர்கள் நிறைந்துள்ள தலமாகிய புகலி நகரில், செழுமை வாய்ந்ததும் அழகிய மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய திருக்கோயிலை, நீர் உமது இருப்பிடமாக கொண்டுள்ளீர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கையிலார்ந்த வெண்மழு உடையீர் கடிய கரியின் தோல்
மயிலார்ந்த சாயல் மடமங்கை வெருவ மெய் போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே
நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.87.2) திருஞானசம்பந்தர் பிராட்டியை மயில் அன்ன சாயல் மட மங்கை என்று குறிப்பிடுகின்றார். பொருள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடுமயில் என்ற தொடர் கடும் அயில் என்று இங்கே பிரிக்கப் பட்டுள்ளது. நான்கு அடிகளிலும் முதற்சீர், இடமயில், கடுமயில், மடமயில், நடமயில் என்று இருப்பதை நாம் உணரலாம். நான்கு அடிகளிலும் மயில் என்ற சொல் கையாளப் பட்டுள்ள நயத்தினை நாம் உணரலாம். திருஞானசம்பந்தரின் கவிதை நயத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்த பாடல் உள்ளது. வானைக்காவில் வெண்மதி (3.53.) என்று தொடங்கும் திருவானைக்கா பதிகத்து பாடலும் வீடலாலவாயிலாய் என்று தொடங்கும் ஆலவாய்ப் பதிகமும் (3.52) நமது நினைவுக்கு வருகின்றன. இந்த இரண்டு பதிகங்களின் முதல் பாடல்களில் முறையே ஆனைக்கா மற்றும் ஆலவாய் என்ற சொற்கள் நான்கு அடிகளிலும் வருகின்றன. இட மயில்=மயில் போன்ற சாயலுடன் இடது பாகத்தில் பொருந்தி இருக்கும் பார்வதி தேவி; நாணி=நாணினை உடைய வில்; திரிபுர தகனத்தின் போது, அம்பிகை வில்லை பிடித்ததாகவும், இறைவன் அந்த வில்லினில் அம்பினை கோத்து எய்ததாகவும் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இடது கையினால் வில்லினைப் பற்றிக் கொண்டு வலது கையினால் நாணினை இழுத்து, அம்பினை விடுவிப்பதே முறையாக கருதப்படுகின்றது. பெருமானும் அவ்வாறே செய்து, திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் நோக்கி அம்பினை எய்ததாக புராணங்கள் கூறுகின்றன. மயில் போன்று சாயல் உடையவளும், இளமை மற்றும் அழகும் உடையவளும் ஆகிய உமை அன்னை, தனது உடலின் இடது பாகத்தில் பொருந்தியவளாக, தனது கையினில் மேரு மலையை வளைத்துச் செய்யப்பட்ட வில்லினை ஏந்தி நிற்க, வாசுகி பாம்பினை நாணாக பூட்டி, கொடிய தன்மையும் கூர்மையும் கொண்ட அம்பினை கோத்த பெருமான், மூன்று திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்து வெற்றி கொண்டு, தேவர்களுக்கு புது வாழ்வு அளித்த தலைவன் ஆவான்; இளமையான மயிலைத் தனது வாகனமாகக் கொண்ட முருகப் பெருமானின் தந்தை என்று போற்றும் தொண்டர்களின் மனதினில் நின்றவனும், வலிமை வாயந்தவனும் ஆகிய பெருமான், மயில்கள் நடமாடுவதும் குயில்கள் கூவுவதும் நடைபெறுகின்ற சோலைகள் நிறைந்த நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
இட மயில் அன்ன சாயல் மடமங்கை தன் கை எதிர் நாணி பூண வரையில்
கடும் அயில் கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன்
மடமயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும்
நடமயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரின் நம்பன் அவனே
துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.98.6) திருஞானசம்பந்தர், மயிற்கு எதிர்ந்த அணங்கு சாயல் மாது என்று தேவியை குறிப்பிடுகின்றார். மூவெயில்=மூ+எயில், மூன்று கோட்டைகள்; வில்லி அல்லையே=வில்லாளி நீ அல்லவா. அடர்ந்த மரங்கள் வெய்யிலின் தாக்கத்தை குறைக்கும் என்பது இந்த பாடலின் முதல் அடியில் சொல்லப் படுகின்றது. துயிற்கு எதிர்ந்த=கூட்டினில் அடைந்து கிடந்து தூங்கியும் சோம்பியும் இராமல் வெளியே திரியும் பறவைகள்; மல்கு=நிறைந்த; தண்=குளிர்ச்சி வாய்ந்த; மயிற்கு எதிர்ந்த=மயிலுடன் மாறுபட்டு அழகினில் மயிலையும் வென்ற பார்வதி தேவி;
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம்பொழில்
துயிற்கு எதிர்ந்த புள்ளினங்கள் மல்கு தண் துருத்தியாய்
மயிற்கு எதிர்ந்த அணங்கு சாயல் மாதொர் பாகமாக மூ
வெயிற்கு எதிர்ந்ததோர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே
வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.8) திருஞானசம்பந்தர், தேவியை, மயிலின் நேர் அன சாயலாள் என்று அழைக்கின்றார். இந்த பதிகம் அகத்துறை வகைப் பாடல்கள் கொண்ட பதிகம். ஆன்மாவினை, தனது தலைவனுடன் சேரத் துடிக்கும் தலைவியாக உருவகித்து, இறைவனைத் தலைவனாக உருவகித்து, ஆன்மா எவ்வாறு இறைவனுடன் சேர்ந்து என்றும் அவனிடமிருந்து பிரியாமல் இருப்பதற்கு தலைப்பட வேண்டும் என்றும், தனது ஆசை நிறைவேறாத ஆன்மா எவ்வாறு வருந்தி, தனது விருப்பத்தை இறைவனிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இத்தகைய அகத்துறைப் பாடல்கள் மூலம் அருளாளர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். எதற்காக தணியாத இந்த வேட்கை ஆன்மாவிடம் ஏற்படவேண்டும் என்று கேள்வி கேட்போர்க்கு விடையளிக்கும் முகமாக, இந்த பாடல் அமைந்துள்ளது. பரகதி=உயர்ந்த நிலை, முக்தி நிலை; தொடர்ந்து இறைவனின் புகழினைப் பாடும் அடியார்கள் பரகதி அடைவார்கள் என்றும், அவ்வாறு இறைவனின் புகழினை நினைக்காதவர்கள் பரகதி அடைய மாட்டார்கள் என்றும் கூறுகின்றார். இறைவனின் புகழினைப், பெருமையினைப் புரிந்து கொண்டு அவனது மேன்மையை உணர்வதே இறை வழிபாட்டின் முதல் படி என்பதால், அந்த முதல் படி, படிப்படியாக நம்மை உயர்த்தி, பக்குவம் அடையச் செய்து உய்வினை அளிக்கும் என்பதால், இறைவனின் புகழினை நாம் உணரத் தலைப்பட வேண்டும் என்று கூறுகின்றார். குயில் போன்று இனிய மொழியினை உடையவளும், கொடி போன்று மெல்லிய இடையினை உடையவளும் ஆகிய உமையன்னை, கலக்கம் அடையும் வண்ணம், சிறந்த கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறொரு இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தைத் தொடரலாம் என்று முயற்சி செய்த அரக்கன் இராவணன் செயல் இருந்தமையால், அன்னையின் அச்சத்தை நீக்கும் பொருட்டு, அரக்கனின் ஒளிவீசும் கிரீடங்களை அணிந்த பத்து தலைகள் மற்றும் இருபது தோள்களும் கயிலை மலையின் அடியில் அகப்பட்டு நசுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றிய சிவபெருமான். மயிலினைப் போன்று சாயல் உடைய உமை அன்னையுடன் வலஞ்சுழித் தலத்தினில் அமர்ந்துள்ளான். இத்தகைய தன்மை உடைய பெருமானின் புகழினைத் தொடர்ந்து பயிலும் அடியார்கள், பெருமானின் அருளினால் மறுமையில் உயர்ந்த கதி பெறுவார்கள்; அவ்வாறு இறைவனைப் புகழாத மாந்தர்கள் அந்த உயர்ந்த நிலையை காண முடியாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய
கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர்முடி தோள் இருபதும் ஊன்றி
மயிலின் நேர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே
பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.2.10) திருஞானசம்பந்தர் பிராட்டியை, அழகிய மயில் போன்ற சாயல் உடையவள் என்றும் கரும்பன்ன மென்மொழியாள் என்று குறிப்பிடுகின்றார். கலவம்=தோகை; கலவ மாமயிலார்=தோகை உடைய அழகிய மயில் போன்ற; இயல்=சாயல்; கதிர் வாள் நுதல்=ஒளிக்கதிர்களை வீசும் நெற்றி; அலவை=தகாத சொற்கள்; பலரும் பெருமானின் தன்மைகளை நன்கு உணர்ந்து அவரைப் புகழ்ந்து பேச, அந்த தன்மையிலிருந்து மாறுபட்டு தகாத சொற்களைப் பேசும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் என்று கூறுகின்றார். ஆதர்=அறிவற்ற மூடர்கள்; நண்ணுதல்=நெருங்கி அணுகுதல்: பெருமானை மனம் வாக்கு மொழிகளால் அணுகி வழிபடுதல்; சிவபோகத்தை நல்குவான் என்று பொருள் கொள்ள வேண்டும். ஆக்கினான் என்ற சொல் மூலம், சமணர்கள் மற்றும் புத்தர்களின் நிலைக்கு பெருமானே காரணம் என்று கூறுகின்றார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற திருவாசகத் தொடர் உணர்த்துவது போன்று, அவன் அருள் இருந்தால் தான் அவனைப் பணிந்து நாம் வழிபடமுடியும். அவ்வாறு நாம் பெருமானை வழிபடுவதற்கும், சென்ற பிறவிகளில் நாம் செய்த புண்ணியமே காரணம் என்பதையும் நமக்கு அருளாளர்கள் உணர்த்துகின்றனர். எனவே சமணர்களும் புத்தர்களும் சென்ற பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாக, இந்த பிறவியில் பெருமானை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடையும் பாக்கியம் இல்லாதவர்களாக விளங்குகின்றனர். உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப இந்த பிறவியின் தன்மை அமைகின்றது என்பதையும் அதனை நிர்ணயம் செய்பவன் பெருமான் ஒருவன் தான் என்பதையும் நாம் அறிவோம். எனவே சமணர்களாகவும் புத்தர்களாகவும் பிறந்து, பெருமானை அவர்கள் வழிபடாது இருக்கும் தன்மையை உண்டாக்கியவன் இறைவன் என்பதும் புலனாகின்றது. இதனை உணர்த்தும் பொருட்டே, இந்த பாடலில் தேரமண் ஆதர்கள் ஆக்கினான் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
கலவ மாமயிலார் இயலாள் கரும்பன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல்
குலவு பூங்குழலாள் உமை கூறனை வேறுரையால்
அலவை சொல்லுவார் தேரமண் ஆதர்கள் ஆக்கினான் தனை நண்ணலும் நல்கும் நற்
புலவர் தாம் புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே
சண்பை நகர் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.6) திருஞானசம்பந்தர், நடனமாடும் மயில் போன்று அழகிய சாயல் உடையவள் என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். அணவுதல்=நெருங்குதல், அணுகுதல்; பாற=அழிய; ஆலும்=நடமாடும்; இயலி= போன்று; அமர்வு எய்தும்=விருப்புடன் இருக்கையாக கொள்வது; கிண்டி=கிளறி; நறவு=தேன்; சாலி= ஒரு வகை நெல்; கோல=அழகு; உகளும்=துள்ளி குதிக்கும்;நீலம்=நீலோற்பலம்; இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில் பிராட்டியின் அழகினை பல விதமாக வர்ணித்த திருஞானசம்பந்தர் இந்த பாடலில் பொதுவாக அன்னையின் அழகு மயிலின் சாயலை ஒத்திருந்தது என்று கூறுகின்றார். சேல்=மீன்கள். சிறுவன் மார்க்கண்டேயனை நெருங்கி அவனது உயிரினை கவர்வதற்கு முயற்சி செய்த இயமன் அழியும் வண்ணம் உதைத்த பெருமான், நடமாடும் மயில் போன்று சாயலை உடையவளும், தேர்ந்தெடுத்து அழகிய நகைகளை அணிபவளும் ஆகிய உமை அன்னையுடன் மிகுந்த விருப்போடு அமரும் இடம் சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும். இந்த தலத்தில் உள்ள ஏலம் நறுமணம் சோலைகளில் காணப்படும் மலர்களின் மீது வண்டுகள் கூட்டமாக அமர்ந்து அந்த மலர்களைக் கிளறி மலர்களில் நிறைந்துள்ள தேனை உண்ட களிப்பினில் இசை பாடுகின்றன. அருகில் உள்ள சாலி நெல் வயல்களில் அழகான மீன்கள் துள்ளி குதித்தாட, அவற்றின் அசைவால் நீலோற்பல மொட்டுகள் மலர்ந்து அழகாக காணப்படுகின்றன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதை செய்த பரமன்
ஆலும் மயில் போல் இயலி ஆயிழை தனோடு அமர்வு எய்தும் இடமாம்
ஏல மலி சோலை இன வண்டு மலர் கிண்டி நறவு உண்டு இசை செயச்
சாலி வயல் கோல மலி சேல் உகளும் நீலம் வளர் சண்பை நகரே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.87.9) திருஞானசம்பந்தர், தேவியை, காட்டினில் வாழும் மயில் போன்ற சாயலை உடையவள் என்று குறிப்பிடுகின்றார். மயிலியல்= மயில் போன்று; இயல்=போன்று; கனமிகு=பருத்த; பிராட்டியை நினைத்தவுடன் திருஞான சம்பந்தருக்கு, தனக்கு அன்னை பாலூட்டிய நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது போலும். பயிறல்= நெருங்கிப் பழகுதல், தலைவன் தலைவியுடன் நெருங்கிப் பழகுதல்;
கான்மிகு மயிலியல் மலைமகள் கதிர்விடு கனமிகு
பான்முகம் இயல் பணை இணைமுலை துணையொடு பயிறலின்
நான்முகன் அரி அறிவரிய நள்ளாறர் தம் நாமமே
மேன்முக எரியினில் இடில் இவை பழுதிலை மெய்ம்மையே
சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (4.8.4) அப்பர் பிரான், தேவியை மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலாள் என்று குறிப்பிடுகின்றார். வளர் பொறி=பெரிய புள்ளிகள் பெரிய புள்ளிகளை உடைய ஆமையின் ஓட்டினை அணிந்தவராகவும், நீண்ட கூந்தலை உடைய பார்வதி தேவியை உடலில் ஒரு பாகத்தில் ஏற்றவராகவும், அழகான மானின் தோலையும் ஒளிவீசும் முப்புரி நூலினை மார்பினில் அணிந்தவராகவும், ஒளிவீசி பிரகாசிக்கும் புள்ளிகளை உடைய பாம்பு படர்ந்திருக்கும் மார்பினை உடையவராகவும், உள்ள சிவபெருமான் காட்டினை நாடாக உணர்ந்து மகிழ்ந்து நடனம் ஆடுகின்றார். நெருங்கிய புள்ளிகளைக் கொண்ட மயில் போன்ற சாயலையும் இளமையான கொடி போன்ற தோற்றத்தையும் உடைய பார்வதி தேவியும், குளிர்ந்த சூழ்நிலையில் இருந்து கொண்டு ரீங்கார இசை பாடும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய கங்கையும், சிவபெருமானுடன் இணைந்து உள்ளார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலு நூலும் வளரக்
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடு நாடு மகிழ்வர்
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்று சாயல் அவளோடு அன்று வாய்மை பெருகிக்
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளன் போல் குலாவி உடனே
பொழிப்புரை:
ஆயிரம் சாகைகள் கொண்ட சாமவேதத்தை உடையவராக விளங்கும் பெருமான், சாம வேதத்தை ஓதுபவராக உள்ளார்; தங்களது மலங்களை, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களை, பெருமானிடம் சமர்ப்பிக்கும் பக்குவம் வரப்பெற்ற பற்பல அடியார்களின் இல்லங்களுக்கும் சென்று இரப்பதை தனது செயலாகக் கொண்டுள்ளவர் சிவபெருமான்; தோகை உடைய மயில் போன்று அழகினையும் நடுவினில் மெலிந்து காணப்படும் துடி இசைக்கருவி போன்று மெலிந்த இடையினையும், உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர் சிவபெருமான். அவர், தங்களது மகரந்தப் பொடிகளை காற்றினில் வீசும் வாகை மரங்கள் நிறைந்த வாழ்கொளிபுத்தூர் தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 2:
எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோர் இவர் அறங்கள்
கண்ணும் ஆயிரம் உடையார் கையும் ஓர் ஆயிரம் உடையார்
பெண்ணும் ஆயிரம் உடையார் பெருமையொர் ஆயிரம் உடையார்
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
விளக்கம்:
அன்பு தான் சிவபெருமானது தன்மை என்று கூறுவார்கள். இறைவனின் எட்டு அரிய குணங்களில் ஒன்று, பேரருள் உடைத்தல் என்பதாகும். அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டுள்ள பெருமான், அனைத்து உயிர்களிலும் கலந்து இயக்குவதை நாம் அறிவோம். இறைவன் உயிர்கள் மீது கொண்டுள்ள கருணையின் காரணமாக, அவரது அன்பு வெளிப்பட்டு பல விதங்களிலும் நாம் பயனடைவதற்கு காரணமாக உள்ளது. எனவே தான், அளவு கடந்த கருணை உடையவர் என்பதை உணர்த்தும் எண்ணற்ற (எண்ணில்) ஈரம் உடையவர் என்று இங்கே கூறுகின்றார். அறம் என்பது கொடை என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது. தான் இருந்த இடத்திலே இருந்து கொண்டு உலகில் நடப்பது அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர் என்பதால் ஆயிரம் கண்களை உடையவர் என்று கூறுகின்றார். ஆயிரம் என்பதற்கு எண்ணற்ற என்று பொருள் கொள்ள வேண்டும். வண்ணம் என்ற சொல்லுக்கு நிறம் என்பதை விடவும், தன்மை என்று பொருள் கொள்வது இங்கே பொருத்தமாக உள்ளது.
ஆயிரம் கண்களை உடையவர் என்றும் ஆயிரம் கைகளை உடையவர் என்றும் பெருமானை ஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய திருவாரூர் பதிகத்தின் ஒரு பாடலை (4.4.8) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. பொன்வரை=மேரு மலை: ஆயிரம் என்ற சொல் எண்ணிக்கையற்ற என்ற பொருளில் இந்த பாடலில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இறைவன் சிவபெருமான் உண்மையில் உருவம் ஏதும் இல்லாதவனாக இருந்தாலும் அடியார்களின் தவத்திற்கும் அன்புக்கும் இரங்கி, பல வடிவங்களில் அவர்களுக்கு காட்சி அளித்திருக்கின்றான். பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகத்தில் அனைத்து இடங்களிலும் அவன் பரவி இருப்பதால், அவன் ஒரே சமயத்தில் பல இடங்களில் இருக்க முடிகின்றது. அவ்வாறு அவன் இருக்கும் நிலை, இறைவனுக்கு எண்ணற்ற கால்கள் இருப்பது போலும் என்ற சிந்தனை அப்பர் பிரானுக்கு வருகின்றது. அதே போன்று, ஆயிரம் கைகள் இருந்தாலும் நாம் செய்ய முடியாத காரியங்களை, இறைவன் அனாயாசமாக செய்கின்ற நிலை, அப்பர் பிரானுக்கு, இறைவனுக்கு எண்ணற்ற கைகள் இருக்கின்றன என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. இந்த எண்ணத்தைத் தான் ஆயிரம் தோளுடையான். ஆயிரம் சேவடியான் என்று இந்த பாடலில் வடிக்கின்றார். மென்மையான தாமரை மலர் போன்ற எண்ணற்ற திருவடிகளை உடையவனும், மேருமலை போன்று வலிமையான எண்ணற்ற தோள்களை உடையவனும், எண்ணற்ற சூரியன் ஒன்று சேர்ந்தது போன்று ஒளி வீசுபவனும், எண்ணற்ற நீண்ட முடிகளை உடையவனும், எண்ணற்ற பெயர்களை விரும்பி ஏற்றவனும், ஆரூர் நகரத்தில் உறையும் அம்மான் ஆவான் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை ஆகும்.
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்
ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோளுடையானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடியானும்
ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
பொழிப்புரை:
நமது எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டதாக, அளக்க முடியாத வண்ணம், ஈரம் உடையவராக, கருணை உள்ளம் கொண்டவராக பெருமான் இருக்கின்றார்; பெருமானது கருணையினால், கொடையாக அவரிடமிருந்து பல நன்மைகளைப் பெற்ற அடியார்கள் எத்தனை பேர் என்று கணக்கிட முடியாத தன்மையில் உள்ளனர்; ஒரே சமயத்தில் எல்லா உலகங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளும் வல்லமை படைத்தவராகவும், ஒரே சமயத்தில் பல செயல்களை புரியும் வல்லமை படைத்தவராகவும் பெருமான் விளங்குவதால், ஆயிரம் கண்களை உடையவராகவும் ஆயிரம் கைகளை உடையவராகவும் அவர் இருப்பது போன்று நமக்கு தோன்றுகின்றது. தனது உடலில் ஒரு கூறாக பொருந்தியுள்ள சக்தியின் அம்சமாக பல பொருட்களையும் பல உயிர்களையும் பெருமான் உடையவராக இருக்கின்றார். அவரது பெருமைகள் கணக்கில் அடங்காதவை. பெருமானின் தன்மைகளும், செயல்களும் கணக்கற்றவை. இத்தகைய தன்மைகளை உடைய பெருமான் வாழ்கொளிபுத்தூர் தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 3:
நொடியொர் ஆயிரம் உடையார் நுண்ணியராம் அவர் நோக்கும்
வடிவும் ஆயிரம் உடையர் வண்ணமும் ஆயிரம் உடையார்
முடியும் ஆயிரம் உடையார் மொய்குழலாளையும் உடையார்
வடிவும் ஆயிரம் உடையர் வாழ்கொளிபுத்தூர் உளாரே
விளக்கம்:
மொய் குழலாள்=புதிய மலர்களை தேன் நிறைந்த மலர்களைத் தனது கூந்தலில் பிராட்டி சூட்டிக் கொண்டுள்ள தன்மையினால் அவரது கூந்தலில் உள்ள மலர்களை எப்போதும் வண்டுகள் மொய்த்த வண்ணம் உள்ளன. இந்த நிலை தான் இங்கே மொய்குழலாள் என்று குறிப்பிடப் படுகின்றது. நொடி=வினாடி; வினாடி என்பது மிகவும் நுட்பமான கால அளவு; மிகவும் நுட்பமான கால அளவாக விளங்குபவர் பெருமான் என்று கூறுகின்றார். உயிர்களின் பக்குவநிலை உயிர்களுக்கு உயிர் மாறுபட்டு பல்வேறு நிலைகளில் காணப்படுகின்றது. அனைத்து உயிர்களுக்கும் கருணை புரிய வேண்டும் என்று விரும்பும் இறைவன், அந்தந்த உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப தனது அணுகும் நிலையினை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதால், பெருமான் அவ்வாறு செயல்படும் திறத்தினை, நோக்கும் வடிவும் ஆயிரம் உடையார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். தனது அடியார்களுக்கு அருள் புரிவதற்காக வேறுவேறு உருவங்கள் எடுத்து பெருமான் வந்ததை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். அடியார்களின் தேவைக்கேற்ப, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு, பல மாறுபட்ட உருவங்களில் பெருமான் வருகின்றார். இந்த உருவங்களில் தான் பெருமான் காட்சியளிப்பார் என்று நாம் கற்பனை செய்தாலும், அந்த உருவங்களையும் தாண்டி வேறொரு உருவம் எடுக்கும் வல்லமை வாய்ந்த பெருமானை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் அடக்க முடியுமா, முடியாது அல்லவா. எந்த வடிவத்தில் அவனை நினைத்தாலும் அதனையும் கடந்து வேறோர் உருவம் எடுக்கும் சக்தி படைத்த அவனுக்கு எந்த உருவத்தை நாம் கற்பிப்பது. அதனால் தான் மணிவாசகர் தெள்ளேணம் பதிகத்தின் முதல் பாடலில், ஓருருவம் ஒருநாமம் இல்லாதவன் என்று கூறுகின்றார்.
திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை
உரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
பொழிப்புரை:
விதம் விதமான நுட்பமான கால அளவையாக விளங்கும் பெருமான், மிகவும் நுண்ணியராகவும் உள்ளார். பல்வேறு பக்குவ நிலைகளில் விளங்கும் அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிய விரும்பும் பெருமான், எண்ணற்ற அணுகுமுறைகளைக் கையாண்டு உயிர்களுக்கு அருள் புரிகின்றார். அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு, பல சமயங்களில் நேரில் தோன்றும் பெருமான் எண்ணற்ற வடிவங்களில் காட்சி அளித்தவர் ஆவார்; எண்ணற்ற தன்மைகளை உடைய பெருமான், எண்ணற்ற முடிகளை உடையவர் ஆவார்; அவர் வண்டுகள் மொய்க்கும் புது மலர்களைத் தனது கூந்தலில் சூட்டிக் கொண்டுள்ள உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் உடையவர் ஆவார். இவ்வாறு பல உருவங்களை உடையவராக இருக்கும் அவர், வாழ்கொளிபுத்தூர் தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 4:
பஞ்சின் நுண்துகில் அன்ன பைங்கழல் சேவடி உடையார்
குஞ்சி மேகலை உடையார் கொந்தணி வேல் வலன் உடையார்
அஞ்சும் வென்றவர்க்கு அணியார் ஆனையின் ஈருரி உடையார்
வஞ்சி நுண்ணிடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
விளக்கம்:
கொந்து=கோபம்; பெருமானின் கையில் இருக்கும் வேற்படையின் ஆற்றல் கொந்து என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. கொந்து என்ற சொல்லுக்கு பூங்கொத்து என்று பொருள் கொண்டு பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வேல் என்ற விளக்கமும் பொருத்தமே. அஞ்சு=ஐந்து புலன்கள்; குஞ்சி=சடைமுடி; குஞ்சி மேகலை=சைவத் துறவிகள் சிலர் தங்களது சடைமுடியை மறக்கும் வண்ணம் துவராடை அணிவார்கள்; அத்தகைய ஆடையினை பெருமான் அணிந்துள்ளதாக இங்கே குறிப்பிடுகின்றார். குஞ்சிமேகலை என்ற தொடருக்கு பதிலாக குஞ்சி மேற்கலை என்று இருந்ததோ என்று வித்துவான் மாணிக்கவாசக முதலியார் அவர்கள் தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட விளக்கத்தில் கூறுகின்றார். இந்த கருத்து ஆய்வுக்கு உரியதாகும். அணியார்=மிகவும் அருகினில் இருப்பவர்;
பொழிப்புரை:
பஞ்சாடை போன்று மென்மையானதும் சிவந்த நிறமுடையதும், பசும்பொன்னால் செய்யப்பட வீரக் கழல்களை அணிந்ததும் ஆகிய திருவடிகளை உடையவர் பெருமான்; அவர் தனது சடைமுடியை மறைக்கும் வண்ணம் துவராடையினையும் அணிகின்றார். தனது கோபத்தை வெளிப்படுத்தி செயல்படும் தன்மை உடைய வேல் ஆயுதத்தை தனது வலது கையினில் கொண்டுள்ளவர் பெருமான்; தங்களது ஐந்து புலன்களையும் வென்ற அடியார்களுக்கு மிகவும் அருகில் இருப்பவராக பெருமான் திகழ்கின்றார். தன்னை எதிர்த்து வந்த மதயானையை அடக்கி அதன் தோலினை உரித்து போர்வையாக தனது உடலில் போர்த்துக் கொண்டவர் பெருமான்; அத்தகைய பெருமான், வஞ்சிக்கொடி போன்று மெல்லிய இடையினை உடைய மகளிர் வாழும் தலமாகிய வாழ்கொளி புத்தூர் தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 5:
பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார்
விரவுவாரையும் உடையார் வெண் தலைப் பலி கொள்வது உடையார்
அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர் மிக உடையார்
வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
விளக்கம்:
பரவுதல்=புகழ்ந்து பேசுதல்; பெருமானின் எல்லையற்ற புகழினை அனைவரும் உள்ளபடி உணர்ந்து கொண்டால், அனைவரும் பெருமானையே தொழுது வாழ்வார்கள் என்ற அச்சத்தினால், புறச் சமயத்தவர்கள் பெருமானை இகழ்ந்து பேசுகின்றனர் எனும் குறிப்பு தோன்ற சம்பந்தர் இகழ்வதை குறிப்பிடுகின்றார் போலும். விரவுதல்=ஒன்றாக கலத்தல்;
சக்கரப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.27.7) திருஞானசம்பந்தர் பெருமானை பல்லாயிரம் பேரினார் என்று குறிப்பிடுகின்றார். நிரை=வரிசை; கொத்து கொத்தாக பூப்பதால் கொன்றை மலரை நிரை மலர் என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தார்=மாலை; பல்லாயிரம்=எண்ணற்ற; பெருமானின் திருநாமங்கள் அனைத்தும் அவனது பண்பினையோ, அவனது கருணைச் செயலையோ குறிப்பிடும் வண்ணத்தில் இருப்பதை நாம் உணரலாம். இன்ன தன்மையன் என்று அவனது தன்மைகள் அனைத்தையும் நம்மால் அறிய முடிவதில்லை; அதே போன்று அவன் இதுவரை எடுத்த அனைத்து வேடங்களையும் நாம் அறிந்திருந்தாலும், நாம் கற்பனை செய்ய இயலாத புது வேடம் எடுத்து அடியார்களுக்கு அருள் புரியும் தன்மையன் சிவபெருமான். எனவே தான், அவனது பெயர்கள் எத்தனை என்பதை கூட நம்மால் அறிய முடியாது;
பாரினார் தொழுதெழு பரவு பல்லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையம்
தாரினார் வளநகர் சக்கரப்பள்ளியே
ஆயிரம் பேரினை உகந்து ஏற்றுக் கொண்டவன் என்று திருவாரூர் தலத்தின் மீது அருளிய பாடல் (4.4.8) ஒன்றினில் அப்பர் பிரான், பெருமானை குறிப்பிடுகின்றார். பொன்வரை=மேரு மலை: ஆயிரம் என்ற சொல் எண்ணிக்கையற்ற என்ற பொருளில் இந்த பாடலில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இறைவன் சிவபெருமான் உண்மையில் உருவம் ஏதும் இல்லாதவனாக இருந்தாலும் அடியார்களின் தவத்திற்கும் அன்புக்கும் இரங்கி, பல வடிவங்களில் அவர்களுக்கு காட்சி அளித்திருக்கின்றான். பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகத்தில் அனைத்து இடங்களிலும் அவன் பரவி இருப்பதால், அவன் ஒரே சமயத்தில் பல இடங்களில் இருக்க முடிகின்றது. அவ்வாறு அவன் இருக்கும் நிலை, இறைவனுக்கு எண்ணற்ற கால்கள் இருக்கின்ற போலும் என்ற சிந்தனை அப்பர் பிரானுக்கு வருகின்றது. அதே போன்று, ஆயிரம் கைகள் இருந்தாலும் நாம் செய்ய முடியாத காரியங்களை, இறைவன் அனாயாசமாக செய்கின்ற நிலை,அப்பர் பிரானுக்கு, இறைவனுக்கு எண்ணற்ற கைகள் இருக்கின்றன என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. இந்த எண்ணத்தைத் தான் ஆயிரம் தோளுடையான். ஆயிரம் சேவடியான் என்று இந்த பாடலில் வடிக்கின்றார் என்று வாகீச கலாநிதி கி.வா.ஜா. அவர்கள் திருமுறை மலர்கள் புத்தகத்தில் விளக்கம் அளிக்கின்றார்.
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்
ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோளுடையானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடியானும்
ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகம் ஒன்றின் கடைப் பாடலில் (6.28.11) அப்பர் பிரான், பெருமானை ஆயிரம் பேரார் போலும் என்று அழைக்கின்றார். நடை=ஒழுக்கம், வாழ்க்கை நெறி; கோளரக்கர்=வலிமை வாய்ந்த அரக்கர்கள்; செற்றார் என்ற சொல் சென்றார் என்று எதுகை கருதி திரிந்தது. கொன்றாகி கொன்றதன் பால் ஒன்று உண்டார் என்ற தொடர் கண்ணப்ப நாயனாரின் சரிதக் குறிப்பினை உணர்த்துவதாக அமைந்துள்ளது என்று சிவக்கவிமணி சி.கே. சுப்ரமணியம் அவர்கள் தனது பெரிய புராண விளக்கம் நூலில் கூறுகின்றார். கண்ணப்ப நாயனார் அன்புடன் நிவேதனமாக அளித்த ஊனினை ஏற்றுக் கொண்ட செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது. அடியார்களின் மன நிலைக்கு ஏற்ப அவர்களது செய்கையை ஏற்றுக் கொள்பவன் பெருமான் என்பது இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது.
நன்றாக நடை பலவும் நவின்றார் போலும் ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்
கொன்றாகி கொன்றது ஒன்று உண்டார் போலும் கோளரக்கர் கோன் தலைகள் குறைத்தார் போலும்
சென்றார் திரிபுரங்கள் எய்தார் போலும் திசை அனைத்துமாய் அனைத்துமானார் போலும்
அன்றாகில் ஆயிரம் பேரார் போலும் அணியாரூர் திருமூலட்டனானாரே
திருப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.76.7), அப்பர் பிரான் பெருமானை ஆயிரம் பேருடையான் என்று குறிப்பிடுகின்றார். வெறி=வாசனை; விரவுதல்=கலத்தல்; மிலைச்சினான்=சூடினான்; பொறி=புள்ளி; கத நாகம்=கோபம் கொள்ளும் பாம்பு; அக்கு=எலும்பு மாலை;பொரு=போர்க்குணம் உடைய; அந்தண்=குளிர்ந்ததும் அழகியதும்;
வெறி விரவு மலர்க் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரிசடை மேல் மிலைச்சினான் காண்
பொறிவிரவு கதநாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொருபுலித் தோலாடையான் காண்
அறிவரிய நுண் பொருள்கள் ஆயினான் காண் ஆயிரம் பேருடையவன் காண் அந்தண் கானல்
செறிபொழில்சூழ் மணிமாடத் திருப்புத்தூரில் திருத்தளியான் காண் அவன் என் ̀சிந்தையானே
பெருமானை ஆயிரம் பேருடையார் என்று சுந்தரர் குறிப்பிடும் பாடல் வேள்விக்குடி மற்றும் துருத்தி ஆகிய தலங்களை இணைத்து பாடிய பதிகத்தின் (7.18.3) பாடலாகும். வஞ்சப் புகழ்ச்சி அணி வகையைச் சார்ந்த பாடல். பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களில் ஆட்படோமே என்று குறிப்பிட்டு விரும்பத்தக்க தன்மைகள் இல்லாத பெருமானுக்கு ஆட்பட மாட்டோம் என்று கூறினாலும், பதிகத்தின் கடைப் பாடலில் பெருமானுக்கு தான் ஆட்படும் வகையைக் குறிப்பிடும் பதிகம் என்று குறிப்பிட்டு, சுந்தரர் பெருமானின் தன்மைகள் எத்தன்மையாக இருந்தாலும் தான் அவருக்கு மட்டுமே ஆட்படுவேன் என்று உணர்த்துகின்றார். ஒற்றி வைத்தல் என்றால் அடமானம் வைத்தல் என்று பொருள். எனவே நகைச்சுவையாக தான் உறையும் திருவொற்றியூரை அடமானம் வைத்தவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். அனைத்து உலகங்களும் தனது உடைமையாகக் கொண்டுள்ள பெருமானின் ஊர் இது தான் என்று நம்மால் குறிப்பிட்டு சொல்ல முடியாது அல்லவா.
பேருமோர் ஆயிரம் பேருடையார் பெண்ணோடு ஆணும் அல்லர்
ஊரும் அது ஒற்றியூர் மற்றையூர் பெற்றவா நாமறியோம்
காரும் கருங்கடல் நஞ்சமது உண்டு கண்டம் கறுத்தார்க்கு
ஆரம் பாம்பாவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே
.பொழிப்புரை:
தனது புகழினை பாடும் அடியார்கள் பலரையும் உடையவர் பெருமான்; இவ்வாறு பெருமானின் புகழ் எங்கும் பரவுவதைக் கண்டு பொறாமை கொள்ளும் புறச்சமயவாதிகள், பெருமானை பழித்தும் இகழ்ந்தும் பேசுகின்றனர். பெருமான் பால் மெய்யன்பு கொண்டுள்ள அடியார்கள், அவரையே நினைந்து உருகி அவருடன் ஒன்றாக கலக்கின்றனர்; பிரமனின் தலையிலிருந்து கிள்ளியதும் உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்படுவதும் ஆகிய தலையினை கையில் ஏந்தியவாறு பல இடங்களிலும் திரிந்து பலி கொள்கின்றார். அவர் பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் ஆபரணமாக பூண்டுள்ளார். எண்ணற்ற திருநாமங்கள் கொண்டுள்ள பெருமான், எண்ணற்ற வரங்களையும் அடியார்களுக்கு அருளுகின்றார். இத்தகைய பெருமான் வாழ்கொளிபுத்தூர் தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 6:
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல உடையார்
கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதொர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
விளக்கம்:
கரந்தை=திருநீற்றுப் பச்சை; புறவம்=காடு இங்கே சுடுகாட்டினை குறிப்பிடுகின்றது. பெருமான் பால் உண்மையான அன்பு கொண்டவர்களாக விளங்கிய அடியார்கள் முன்னே வேறுவேறு வேடங்களில் பெருமான் தோன்றிய போது, அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாதவர்களாக பலரும் இருந்ததை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். கயிலாயத்தில் அணுக்கத் தொண்டராக விளங்கும் பேற்றினை பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாரும் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் ஐந்து சமயங்களில் இருந்ததை நாம் இங்கே நினைவு கொள்ளலாம். .புத்தூர் என்ற ஊரைச் சார்ந்த சடங்கவிச் சிவாச்சாரியாரின் மகளுடன் சுந்தரருக்கு நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, சுந்தரர் தனக்கு அடிமை என்று அடிமை ஓலை கொண்டு வந்த முதியவர் சிவபெருமான் தான் என்பதை அறியாமல் சுந்தரர் இருந்தார். பின்னர் திருவதிகைத் தலம் சென்ற சுந்தரர், திருநாவுக்கரசரின் திருப்பாதங்கள் பட்ட தலத்தில் தனது கால்கள் படலாகாது என்ற எண்ணத்தில், ஊருக்கு வெளியே இருந்த சித்தவடம் என்ற மடத்தினில் இரவு தங்கினார். இவரது அருகினில் வந்து படுத்த ஒர் முதியவரது கால்கள் தனது தலையின் மீது பட்டமையால், தனது தூக்கம் கலைந்து எழுந்த சுந்தரர், முதியவர் அருகில் இருப்பதை உணர்ந்து களைப்பு மிகுதியால் அவரது கால் தனது தலை மீது பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்தவராக, தான் இடம் மாறி படுத்தார். முதியவரும் தனது நிலையை மாற்றிக்கொண்டு படுக்கவே, அவரது கால்கள் சுந்தரரின் தலையின் மீது மீண்டும் படிந்தன. இதனால் கோபம் கொண்ட சுந்தரர் மீண்டும் மீண்டும் எனது தலையினை மிதித்த நீர் யாரோ என்று கேட்டார். அப்போது முதியவராக வந்த சிவபெருமான், என்னை நீர் அறியவில்லையா என்று வினவியவாறு மறைந்தார். வந்தவர் சிவபெருமான் தான் என்பதை அப்போது தான் சுந்தரர் அறிந்துகொண்டார். சுந்தரரும் அவரது தொண்டர்களும் குருகாவூர் வெள்ளடை என்ற தலத்திற்கு செல்லும் வழியில், வெய்யிலில் நடந்து களைத்து வரும் சுந்தரரின் பசியை போக்க திருவுள்ளம் கொண்ட பெருமான், ஒரு முதியவராக, சுந்தரர் வரும் வழியில் அமர்ந்து, அவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் தயிர்சோறு மற்றும் குளிர்ந்த நீர் அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட அடியார்கள் உணவினை உண்ட களைப்பினில், ஆங்கே அமைக்கப் பட்டிருந்த பந்தரின் கீழே உறங்கிய போது, பெருமான் மறைந்து விட்டார். விழித்த எழுந்த சுந்தரரும், மற்ற தொண்டர்களும் முதியவர் மறைந்ததையும் அவர்கள் தங்கியிருந்த பந்தலும் அவருடன் மறைந்ததையும் உணர்ந்து, வந்தவர் சிவபெருமான் தான் என்று தெளிந்தார்கள். திருப்புறம்பயம் தலம் சென்ற சுந்தரர் அங்கிருந்து முதுகுன்றம் செல்ல ஆர்வம் கொண்டவராக முதுகுன்றம் நோக்கி செல்லலானார். அவ்வாறு செல்லும் வழியில், தென்பட்ட ஒரு முதியவரிடம் முதுகுன்றம் செல்லும் வழி யாது என்று சுந்தரர் வினவினார். அதற்கு அந்த முதியவர் தானும் அங்கே செல்வதாக கூறி, முதுகுன்றத்திற்கு பதிலாக கூடலையாற்றூர் என்று அழைக்கப்படும் தலத்திற்கு அழைத்துச் சென்றார். கூடலையாற்றூர் நெருங்கிய போது, தனக்கு முன்னே சென்ற அந்தணர் மறைந்ததை உணர்ந்த சுந்தரர், அப்போது தான் தனக்கு வழிகாட்டிய அந்தணர் சிவபெருமான் தான் என்பதை உணர்ந்தார். தான் தவறான வழியில் அழைத்துச் செல்வதை, வேறொருவர் மூலமாக அறிந்து கொண்டால் சுந்தரர் கூடலையாற்றூர் தலம் செல்வதை விடுத்து, முதுகுன்றம் சென்று விடுவதைத் தவிர்க்கவே, பெருமானும், சுந்தரருடன் கூடலையாற்றூர் வரையில் நடந்து சென்றார் போலும். சுந்தரரை முதுகுன்றம் தலத்திற்கு பதிலாக கூடலையாற்றூர் அழைத்துச் செல்ல எத்தகைய நாடகம் பெருமான் ஆடினார் என்பதை அறியும் போது, சுந்தரர் பால் பெருமான் கொண்டிருந்த அன்பின் தன்மையை நாம் புரிந்து கொள்கின்றோம். திருக்கச்சூர் சென்ற சுந்தரர், பெருமானை கும்பிட்டு வெளியே வந்தபோது அமுது செய்ய வேண்டிய நேரம் வந்த படியால், அமுது படைத்தளிக்கும் தொண்டர்கள் வரவினை எதிர்நோக்கி, திருக்கோயில் மதிற்சுவரின் அருகே காத்திருந்தார். அப்போது ஒரு மண் திருவோட்டினை ஏந்தியவாறு வந்த வேதியர் ஒருவர், சுந்தரரை அணுகி, உமது உடலில் ஏற்பட்ட பசியினால் மிகவும் வருந்தி நீர் இளைத்து காணப்படுகின்றீர்; யான் அருகிலிருக்கும் இல்லங்களில் இரந்து உமக்கு சோறு கொண்டு வருகின்றேன், நீர் எங்கும் செல்லாமல் இங்கே இருப்பீர் என்று சொல்லிவிட்டு, அருகிலிருந்த இல்லங்களில் தான் இரந்து பெற்ற சோற்றினை கொணர்ந்து சுந்தரருக்கு கொடுத்தார். தமக்கு உணவளித்த வேதியரை வணங்கி, அவரது அன்பினை பாராட்டிய சுந்தரர், தனது தொண்டர்களுடன் அந்த சோற்றினை உண்டு மகிழ்ந்திருந்த தருணத்தில் வந்த வேதியர் மறைந்து விட்டார். அப்போது தான், வந்தவர் சிவபெருமான் தான் என்பதை சுந்தரர் உணர்ந்தார்.
இவ்வாறு பல வேடங்களில் அடியார்களுக்கு காட்சி தரும் பெருமான், அவரே தன்னை உணர்த்தினாலன்றி அவரை நாம் அடையாளம் கண்டு கொள்ள இயலாது என்பதை நாம் அப்பர் பெருமானது சரித்திரத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியிலிருந்து அறிந்து கொள்ளலாம். திருமறைக்காடு தலத்திற்கு சென்ற அப்பர் பிரான், அந்நாள் வரை அடைந்து கிடந்திருந்த திருக்கோயிலின் கதவுகள் திறப்பதற்கு பதிகம் பாடியதையும், கோயில் கதவுகள் அடைப்பதற்கு திருஞானசம்பந்தர் பதிகம் பாடியதையும், இறைவன் அவர்கள் இருவருக்கும் அருள் புரிந்ததையும் நாம் அறிவோம். பின்னர் இருவரும் தாங்கள் தங்கியிருந்த மடத்திற்கு திரும்பினார்கள். அப்போது அப்பர் பிரான், நடந்ததை நினைத்துப் பார்க்கின்றார். தாம் பத்து பாடல்கள் பாடிய பின்னரே கதவுகள் திறந்த தன்மையையும், திருஞான சம்பந்தர் ஒரே பாடல் பாடி கதவினை மூடிய தன்மையையும் நினைத்துப் பார்த்த அப்பர் பிரான், தனது அரிய முயற்சியினையும் ஞானசம்பந்தரின் எளிதான முயற்சியையும் ஒப்பிட்டு பார்க்கின்றார். பெருமானின் திருவுள்ளக் கிடக்கையை அறியாமல் தான் இருந்ததற்கு மனம் வருந்திய அப்பர் பிரான், கவலை மேலிட சற்று அயர்ந்து உறக்கம் கொண்டார். அப்போது அவரது கனவில், தனது மேனியில் முழுதும் திருநீறு அணிந்தவராக வேதியர் வேடத்தில் தோன்றிய பெருமான், வாய்மூரில் இருக்கின்றோம் தொடர்ந்து வா என்று கூறினார். கனவு கலைந்த நிலையில் எழுந்த அப்பர் பிரான், வாய்மூர் செல்ல முடிவு செய்த போது, கனவில் தோன்றிய வேடத்துடன் ஒரு வேதியர் தனக்கு வழிகாட்டுவதை கண்டார். தன்னைத் தொடர்ந்து வா என்று பெருமானே கனவில் உணர்த்தியதால், தனக்கு முன்னே சென்றவர் பெருமான் என்பதை உணர்ந்தவராக அப்பர் பிரான், அவரைத் தொடர்ந்து சென்று வாய்மூர் தலத்தில் உள்ள திருக்கோயில் சென்றடைகின்றார். பெருமானே உணர்த்தியதால் அப்பர் பிரானால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
ஆனால் அப்பர் பெருமானும் தன் முன்னே தோன்றிய பெருமானை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் இருந்த இருவேறு நிகழ்ச்சிகளை நாம் இங்கே காண்போம். திருவானைக்கா தலத்திலிருந்து புறப்பட்ட அப்பர் பிரான், அருகிலிருக்கும் பல தலங்களையும் தரிசனம் செய்த பின்னர், திருப்பைஞ்ஞீலி தலம் நோக்கி செல்கின்றார். பசி வேட்கை இளைப்பு முதலியவற்றால் தளர்ச்சி அடைந்த போதிலும் அதனை பொருட்படுத்தாது தொடர்ந்து சென்ற அப்பர் பிரான் காணும் வண்ணம், அவர் சென்ற வழியினில், ஒரு சோலையையும் குளத்தினையும் படைத்து, திருநீறு அணிந்த வேதியராக கட்டுச் சோற்றினை வைத்துக் கொண்டு பெருமான் காத்திருந்தார். தன்னருகில் அப்பர் பிரான் வந்த போது, அவரை நோக்கி நெடுந்தூரம் வந்த களைப்பாலும் பசியாலும் இளைத்துக் காணப்படும் நீர் நான் தரும் பொதி சோற்றினை உண்டு அருகிலுள்ள குளத்து நீரினைப் பருகி, உமது இளைப்பினை போக்கிக் கொள்வீர் என்று விண்ணப்பம் வைத்தார். வேதியர் அளித்த பொதிசோற்றினை இறைவனது கருணை என்று நினைத்து அப்பர் பிரான் அதனை ஏற்றுக் கொண்டு தனது களைப்பினை நீக்கிக் கொண்டார். உணவு உட்கொண்டு தனது களைப்பினை போக்கிக் கொண்ட அப்பர் பிரானை பார்த்து வேதியர், நீர் எங்கே போகிறீர் என்று கேட்க, அப்பர் பிரானும் தான் திருப்பைஞ்ஞீலி செல்வதாக பதில் கூறினார். உடனே முதியவர், தானும் அவ்விடத்திற்கே செல்வதாக கூறி, அவருடன் நடந்தார். பைஞ்ஞீலி தலம் நெருங்கிய தருணத்தில், தன்னுடன் வந்த வேதியர் மறைந்ததைக் கண்ட அப்பர் பிரான், தன்னுடன் அதுவரை வந்தது பெருமான் என்பதனை உணர்ந்து அவரது கருணையை வியந்து பதிகம் பாடுகின்றார்.
கயிலாயம் செல்லும் வழியில் முனிவர் ஒருவர் அப்பர் பிரானை எதிர்கொள்கின்றார். கொடிய பாலைவனத்தில் உடல் உறுப்புகள் தேய்ந்து அழியும் வண்ணம் நீர் எங்கே செல்கின்றீர் என்று அப்பர் பிரானை முனிவர் கேட்க, அப்பர் பிரானும் தான் கயிலாயம் செல்வதாக கூறுகின்றார். அதற்கு முனிவர், உலகினில் வாழும் மனிதர்கள் சென்று அடைவதற்கு எளிய மலை அல்ல கயிலை என்று உணர்த்தி, அங்கிருந்து மீண்டு அப்பர் பிரான் தமிழகம் செல்வதே உத்தமம் என மொழிந்தார். அதற்கு அப்பர் பிரான், என்றேனும் ஒரு நாள் அழியக்கூடிய இந்த உடலுடன் கயிலை மலையினைக் காணாது திரும்பி செல்லமாட்டேன் என்று பதில் கூறிய பின்னர் தனது பயணத்தை தொடர நினைக்கின்றார். ஆனால் அப்போது முனிவர் மறைந்து விடவே அப்பர் பிரான் முனிவரை காணமுடியாமல் திகைத்தார். வானிலிருந்து, உயர்ந்த நாவுக்கரசனே எழுந்திரு என்ற குரல் பிறக்கின்றது. அந்த குரலினைக் கேட்ட அப்பர் பிரான், முனிவராக வந்தது பெருமான் தான் என்பதை உணர்கின்றார். மேலும் பெருமானே, நான் கயிலைக் காட்சி காண்பதற்கு அருள் புரிவாயாக என்று விண்ணப்பம் வைக்கின்றார். பெருமானும், திருவையாறு திருக்கோயில் கோபுரத்தில் அப்பர் பிரானுக்கு, கயிலைக் காட்சி காட்டி அருள் புரிகின்றார்.
திருநீல கண்ட குயவனாரும், முதிய வேதியராக தோன்றி தன்னிடம் திருவோட்டினை பத்திரமாக வைக்கும் வண்ணம் பணித்தவர் பெருமான் என்பதை முதலில் உணரவில்லை. இயற்பகை நாயனாரும், தன்னை அணுகி தனது மனைவியை தனக்கு கொடுக்குமாறு வேண்டியவர் சிவபெருமான் தான் என்பதை முதலில் உணரவில்லை; இளையான்குடி மாற நாயனாரும், தனது இல்லத்திற்கு நள்ளிரவில் வந்து உண்பதற்கு உணவு கேட்டவர் சிவபெருமான் தான் என்பதை முதலில் அறியவில்லை; தன்னிடம் கோவணத்தை கொடுத்து பாதுகாக்குமாறு பணித்தவர் சிவபெருமான் தான் என்பதை முதலில் அமர்நீதிநாயனார் அறியவில்லை; மாவிரதியர் வேடத்தில் வந்து, திருமணப் பெண்ணின் கூந்தல் தனக்கு பூணூலாக உதவும் என்று கேட்டவர் பெருமான் தான் என்பதை முதலில் மானக் கஞ்சாறர் உணரவில்லை; தனது வேட்டியினை வெளுத்துத் தருமாறு கொடுத்த முதியவர் சிவபெருமான் தான் என்பதை திருக்குறிப்புத் தொண்டரும் முதலில் அறியவில்லை; பைரவராக தனது இல்லம் வந்து பிள்ளைக்கறி கேட்டவர் சிவபெருமான் தான் முதலில் சிறுத்தொண்டரும் அறியவில்லை; மேற்கண்ட குறிப்புகள் உணர்த்தும் செய்தியை, மிகவும் அழகாக, பெருமானின் திருவருளே துணையாக இருந்தால் தான் பெருமானை நாம் காண முடியும், அடையாளம் புரிந்து கொள்ள முடியும் என்று அப்பர் பிரான் கூறும் பாடலை (6.97.10) நாம் இங்கே காண்போம்.
மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்
ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன் ஓரூரன் அல்லன் ஓருவமன் இல்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்டொணாதே
இந்த பாடலில் சிவபெருமான் தண்டு தாளம் குழல் தண்ணுமை ஆகிய இசைக் கருவிகளை உடையவராக இருக்கின்றார் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் பயிலும் இசைக் கருவிகளை குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம். தண்டு என்பது ஒருவகை நரம்பிசைக் கருவி. பல்லவனீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.65.10) தண்டு, உடுக்கை, தாளம், தக்கை ஆகிய இசைக் கருவிகளின் இசைக்கு பொருந்தும் வண்ணம் பெருமான் நடமாடுகின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இடுக்கண்=துன்பம்; உடுக்கை= உடை மற்றும் உடுக்கை வாத்தியம்; இங்கே உடுக்கை இசைக்கருவி என்று பொருள் கொள்வதே பொருத்தம். கண்டறியாத இடம் என்று குறிப்பிட்டு சமணர்களும் புத்தர்களும் இறைவனை தரிசித்து மகிழும் வாய்ப்பினை இழந்தவர்கள் என்பதை சம்பந்தர் சுட்டிக் காட்டுகின்றார் போலும். பயில்வார் என்ற சொல் இறைவனை குறிப்பதாக பொருள் கொண்டு பல இசைக் கருவிகளின் இசைக்கு பொருந்தும் வண்ணம் நடமாடும் பெருமானார், பண்டைய நாளிலிருந்தே தனது அடியார்களின் இடர்களை தீர்த்து வருகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டறியாத இடம்
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார்
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சரமே
நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.84.7) கொடுகொட்டி மற்றும் வீணை ஆகிய இசைக் கருவிகளை இயக்கும் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தகை=பெருமை; முதலடியில் உள்ள தண்டு என்ற சொல் சூலம் என்ற சொல்லுடன் பொருந்தி வருவதால், தண்டாயுதம் என்று பொருள் கொள்வதே பொருத்தம். தகைமலி=பெருமைகள் மலிந்த, நிறைந்த பெருமைகள் உடைய; நகை=வெண்மை; கொடுகொட்டி=திரிபுரங்களை எரித்த பின்னர் ஆடிய கூத்து; கந்தம்=நறுமணம்; கொடுகொட்டி என்பதற்கு இசைக் கருவி என்று பொருள் கொண்டு, வீணையுடன் கொடுகொட்டி கருவியினை இசைக்கும் பெருமான் என்று பொருள் கூறுவதும் பொருத்தமே. பூசல்=ஆரவாரம் மிகுந்த ஓசை; புகை மலி கந்த மாலை= வேள்வியிலிருந்து எழும்பும் புகை காற்றினில் ஒன்றறக் கலப்பது போன்று, தமது நறுமணத்தை காற்றினில் கலக்கும் பூக்கள்; படப்பை=தோட்டம். இறைவனுக்கு சூட்டப்படும் மாலைகளை, அடியார்கள் தாங்களே கட்டும் பழக்கம் பண்டைய நாளில் இருந்தது போலும்; மாலை புனைவார்கள் பூசல் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதிலிருந்து, அவ்வாறு பூமாலைகள் தொடுக்கும் அடியார்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால் ஆரவாரம் எழுந்தது என்பதை உணர்கின்றோம். அவர்கள் அவ்வாறு மாலைகளை தொடுக்கும் போதும், மாலைகளுக்கு தேவையான மலர்களை பறிக்கும் போதும், இறைவனின் புகழினை பாடிக் கொண்டு இருந்தமை, திருவாசகம் பூவல்லி பதிகத்திலிருந்து அறியப் படுகின்றது. தண்டு என்பது நரம்பிசைக் கருவி என்று சொல்லப் படுகின்றது.
தகைமலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடுகொட்டி வீணை முரல
வகைமலி வன்னிக் கொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர் தான்
புகைமலி கந்த மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்
தாளம் ஏந்தியவராக பெருமானை பல தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. தாளத்திலிருந்து எழுகின்ற ஒலியாக இருப்பவன் இறைவன் என்று திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.11.4) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இசையாகவும் அதற்கு அடிப்படையாக உள்ள ஏழு சுரங்களாகவும் வல்லினம் மெல்லினம் மற்றும் இடையினம் ஆகிய மூன்று விதமான ஓசைகளை வெளிப்படுத்தும் தமிழ் எழுத்துகளாகவும், உள்ளத்தில் ஏற்படும் பல விதமான உணர்ச்சிகளாகவும், இசையுடன் பொருந்திய தாளத்தின் ஒலியாகவும், மண் நீர் உயிர் காற்று நெருப்பு ஆகாயம் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய எட்டு மூர்த்தங்களாகவும் இருப்பவன் வீழிமிழலை தலத்து இறைவன் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழ் அவையும்
உண்ணின்றதோர் சுவையும் உறுதாளத்தொலி பலவும்
மண்ணும் புனல் உயிரும் வரு காற்றும் சுடர் மூன்றும்
விண்ணும் முழுதானான் இடம் வீழிம்மிழலையே
சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.28.6) திருஞானசம்பந்தர், துடிகளோடு முழவம் விம்மவே படிகொள் பாணி பாடல் பயின்றாடும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். படி=முறை; துடி=உடுக்கை; புறங்காடு=சுடுகாடு; பாணி=தாளம்; விம்முதல்= ஒலித்தல்; அடிகள் என்ற சொல் அடிகொள் என்று திரிந்ததாக பொருள் கொண்டு, தலைவர் உறையும் சோற்றுத்துறை என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது. உடுக்கை, முழவம், ஆகிய இசைக் கருவிகள் முழங்கும் பின்னணியில், தனது திருமேனி முழுவதும் திருநீற்றினைப் பூசிக் கொண்டுள்ள இறைவன், ஊருக்கு வெளியே இருக்கும் சுடுகாட்டினை முறையான நடமாடும் அரங்கமாக ஏற்றுக்கொண்டு, தரமான தாளத்துக்கு பொருந்தும் வண்ணம் பாடப்படும் பாடல்களை பாடிய வண்ணம் நளினமாக நடமாடும் திருவடிகளை உடையவராக உறைகின்ற சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக என்று இந்த பாடல் மூலம் நமக்கு அறிவுரை வழங்கப் படுகின்றது.
துடிகளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்காடு அரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே
பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.44.05) திருஞானசம்பந்தர், பெருமான் மோந்தை, முழவம், குழல், வீணை, தாளம் ஆகிய இசைக் கருவிகளின் பின்னணியில் வாய்மூரி முதலான பல பண்களில் பாடுகின்றார் என்று கூறுகின்றார். வாய்மூரி=ஒரு வகை பண்; கங்கை நதியினைத் தனது தலையில் வைத்துள்ள பெருமான், பெண்ணாகிய மழவன் மகள் பால் இரக்கம் கொள்ளாது இருப்பது தவறு அல்லவா என்று கேள்வி கேட்பது மிகவும் நயமாக உள்ளது. சதுர்=சதுரப்பாடு, சாமர்த்தியம். மண்ணுலகில் வாழும் அடியார்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன், பாலும் நெய்யும் கொண்டு பெருமானை நீராட்டி வழிபடுகின்றனர். இந்த பெருமான், தனது நீண்டு வளர்ந்த சடையினில் கங்கை நதியினை தேக்கி வைத்தவராக, மோந்தை முழா குழல் தாளம் வீணை முதலிய இசைக் கருவிகள் முழங்க வாய்மூரி முதலான பல பண்களில் பாடல்கள் பாடுபவராக, ஆந்தை போன்று சிறிய கண்களை உடைய பூத கணங்கள் சூழ்ந்தவராக விளங்கும் பெருமான், பாச்சிலாச்சிராமம் தலத்தினில் உறைகின்றார். திருநீற்றினை, சந்தனக் கலவையாகத் தனது மார்பினில் பூசியுள்ள பெருமான், மழவன் மகளாகிய தையலை வாடும் வண்ணம் வருத்துவது இவரது சதுரப்பாடு தன்மைக்கு பெருமை சேர்ப்பது அல்ல என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மாந்தர் தம் பால் நறு நெய் மகிழ்ந்தாடி வளர்சடை மேல் புனல் வைத்து
மோந்தை முழாக் குழல் தாளமொர் வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச் சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வோ
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.53.5) திருஞானசம்பந்தர், மொந்தை தக்கை முதலான இசைக் கருவிகளை பூத கணங்கள் இயக்க பெருமான் நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். கல் வேந்தன்=மலையரசன் இமவான்; ஆடி=ஆடுபவன்; வழங்கு=ஊர்ந்து செல்லும். மீசு=மேலே; அணவி=பொருத்தி; தழங்கு=ஒலிக்கின்ற; மாசுணம்=பாம்பு; வானில் ஊர்ந்து செல்லும் பிறைச் சந்திரனையும், வன்னி மத்தம் முதலான மலர்களையும் பாம்பினையும் தனது சடை மேல் ஒன்றோடொன்று நெருக்கமாக பொருத்தி வைத்துக் கொண்டுள்ள பெருமானை, பல திசைகளிலும் உள்ள தேவர்கள் வணங்குகின்றனர். இந்த காட்சியை எப்போதும் இறைவனுடன் கூடி இருப்பவளும், செழிப்பான இமயமலைக்கு அரசனாகிய இமவானின் மகளும் ஆகிய பார்வதி தேவி கண்டு மகிழ்கின்றாள். மொந்தை தக்கை முதலான வாத்தியங்கள் ஒலிக்க, மிகவும் அதிகமான பேய்க் கணங்கள் சூழ்ந்து இருக்கும் நிலையில், கொழுந்து விட்டெரியும் தீச்சுடரினைத் தனது கையில் தாங்கியவாறு நடனம் ஆடும் பெருமான் பொருந்தி உறைவது முதுகுன்றம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீசணவி
செழுங்கல் வேந்தன் செல்வி காணத் தேவர் திசை வணங்க
தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய்க்கணம் பூதம் சூழ
முழங்கு செந்தீ ஏந்தியாடி மேயது முதுகுன்றே
சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.63.7) மொந்தை என்ற இசைக் கருவியை முழக்கிய வண்ணம் பெருமான் தாருகவனத்தில் பலியேற்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். முல்லையாழ் என்ற தொடர் முலையாழ் என்று எதுகை கருதி மாறியுள்ளது. அடியார்க்கு நல்லார் தனது சிலப்பதிகாரம் நூலின் உரையினில், முல்லையாழ், குறிஞ்சியாழ், பாலையாழ், நெய்தல்யாழ், மருதயாழ் என்று பண் வகைகள் இருந்ததாக குறிப்பிடுகின்றார். முல்லையாழை செவ்வழி யாழ் என்றும் அழைப்பார்கள். கெழுவ=ஒலிக்க; வவ்வுதல் என்றால் திருடுதல் என்று பொருள். தாருகவனத்து முனிவர்கள், கரும காண்டத்தின் மீது மிகுந்த பிடிப்பு உள்ளவர்களாக, தாங்கள் செய்யும் வேள்வி முதலியன தங்களுக்கு பல ஆற்றல்களைப் பெற்றுத் தரும் என்ற ஆணவத்தில், அறியாமையில் மூழ்கி இருந்தனர். தாருக வனத்தில் பெருமான் புரிந்த திருவிளையாடல்களின் விளைவாக, அந்த முனிவர்களின் ஆணவம் அவர்களை அறியாமலே ஒழிந்ததை குறிப்பிடும் முகமாக ஐயம் வவ்வுதியே என்று கூறினார் போலும். மேலும் பெருமானின் அழகில் மயங்கிய தாருகவனத்து இல்லத்தரசிகள், தன்வயம் அற்றவர்களாக பெருமான் பின்னே சென்றதை குறிப்பிடுவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. தலையாய்க் கிடந்து என்று சுவர்பானு என்ற அரக்கனது தலை, சீர்காழி தலம் சென்று இறைவனை வழிபட்ட நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே அமர்ந்த சுவர்பானு என்ற அரக்கன் அமுதம் பெற்றதை, சூரிய சந்திரர்கள் மூலம் அறிந்து கொண்ட மோகினி, தனது கையில் இருந்த சட்டுவத்தால் சுவர்பானுவின் தலையில் ஓங்கி அடிக்க, சுவர்பானுவில் தலை வேறு உடல் வேறாக பிளந்து விடுகின்றது. அறுபட்ட தலையுடன் சீர்காழி சென்ற அரக்கன், இறைவனது அருளால் பாம்பின் உடலும் மனிதத் தலையும் பெற்ற இராகு கிரகமாக மாறியதை குறிப்பிடும் வண்ணம் தலையாய்க் கிடந்த சிலம்பன் என்று கூறுகின்றார். சிலையான் மலிந்த சிலம்பன் என்று குறிப்பிடுவதால், வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவனாக இந்த அரக்கன் விளங்கியதை நாம் தெரிந்து கொள்கின்றோம்.
முலையாழ் கெழுவ மொந்தை கொட்ட முன்கடை மாட்டு அயலே
நிலையாப் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே
தலையாய்க் கிடந்து இவ்வையம் எல்லாம் தன்னதொர் ஆணை நடாய்ச்
சிலையான் மலிந்த சீர்ச் சிலம்பன் சிரபுரம் மேயவனே
பல்லவனீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.65.6) குழல், வீணை, மொந்தை முழவு ஆகிய இசைக் கருவிகளை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மொந்தை=பறை போன்ற இசைக்கருவி; ஆர்க்க=ஒலிக்க; கழி=உப்பங்கழி; தெண்டிரை=தெண்+திரை; தெளிந்த நீரினை உடைய அலைகள்; குழவம்=மத்தளம்; ஓதம்=நீர்; மொண்டு=முகந்து; குழலின் ஓசைக்கு பொருந்தும் வண்ணம் வீணை மொந்தை ஆகிய இசைக் கருவிகள் முழங்கவும், மத்தளம் அதிர்ந்து ஒலிக்கவும், தனது கால்களில் பொருந்திய கழல்கள் நடனத்திற்கு ஏற்ப, ஆரவாரித்து ஒலிக்க நடனம் ஆடும் கடவுள் இருக்கும் இடம் பல்லவனீச்சரம் தலமாகும். சுழிகள் பொருந்திய கடல் நீரினில், காவிரி நதி தெளிந்த நீரினை முகந்து எறியும் வண்ணம் விளங்குவதும், பழியின்றி ஒழுக்கமான வாழ்க்கையை தொடர்ந்து நடத்தும் நன்மக்கள் வாழ்வதும் ஆகிய காவிரிப்பூம்பட்டினத்து நகரில் உள்ளது பல்லவனீச்சரம் தலம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவதிரக்
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம்
சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்டிரை மொண்டு எறியப்
பழியிலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சரமே
ஈங்கோய்மலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.70.2) திருஞானசம்பந்தர், குழல், யாழ் மற்றும் மொந்தை ஆகிய மூன்று இசைக் கருவிகளை குறிப்பிடுகின்றார். கோலச் சடை=அழகான சடை; பிராட்டி காண பரமன் ஆடுவதாக இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. பிரளய காலத்தில் பெருமான் நடனம் ஆடுவதை பார்வதி தேவியைத் தவிர்த்து வேறு எவரும் காண முடியாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, பிராட்டி காண நடனம் ஆடும் பரமனார் என்று இங்கே கூறுகின்றார். மூன்று வேறுவேறு வகையான இசைக் கருவிகளை கொட்ட என்று பொதுவாக குறிப்பிடுகின்றார். குழலை ஊதியும் யாழினை வாசித்தும் மொந்தையை கொட்டியும் என்று பொருள் கொள்ள வேண்டும். இசைக்கருவிகளை இயக்கி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பிராட்டியின் குரல் இனிமைக்கு, தேன், பால், குழல், மழலைச்சொல், கரும்பு, கிளி, குயில் ஆகியவை உவமையாக பல தேவாரப் பாடல்களில் கூறப்படுகின்றன.
சூலப்படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடமாகக்
கோலச் சடைகள் தாழக் குழல் யாழ் மொந்தை கொட்டவே
பால் ஒத்து அனைய மொழியாள் காண ஆடும் பரமனார்
ஏலத்தொடு நல் இலவங்கம் கமழும் ஈங்கோய்மலையாரே
கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.73.8) திருஞானசம்பந்தர், பெருமானை தாளம் முழவு மொந்தை மற்றும் வீணை ஆகிய இசைக்கருவிகளை பாடலுக்கு ஏற்ற வண்ணம் இசைப்பதில் வல்லவர் என்று கூறுகின்றார். நீர்மை=இனிமை; தமிழ் மொழியில் புலமை பெற்றவன் என்று பல பாடல்களில் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் ஞானசம்பந்தர் தான் தமிழ்மொழி பால் கொண்டுள்ள பற்றினை, அன்பினை, வெளிப்படுத்தும் வண்ணம் தமிழ் மொழி இனிமையானது என்று இந்த பாடலில் கூறுகின்றார். இடம் என்பது இங்கே நாயகியின் இல்லத்தை குறிக்கின்றது. பெருமானின் சொற்கள் தமிழ் மொழியினைப் போன்று இனிமையாக இருந்ததாக நாயகி இங்கே கூறுகின்றாள். குமிழின் மேனி=குமிழம்பூ நிறத்தில் உள்ள திருமேனி; குமிழம்பூ என்பது பாலை நிலத்தில் பூக்கும் ஒரு பூ வகை. பெண்களுடைய மூக்கின் கூர்மைக்கு உவமையாக பல இலக்கியங்களிலும் சொல்லப் படுவது. பொன்னின் நிறத்திலும் மங்கிய சிவப்பு (Rose) வண்ணத்திலும் காணப்படுகின்றது. இங்கே பசலை பூத்த தனது மேனியின் நிறத்திற்கு உவமையாக குமிழம்பூ நிறத்தினை தலைவி குறிப்பிடுகின்றாள். கோல=அழகு; கோல நீர்மை=அழகின் தன்மை; இந்த பாடல் அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். தமிழ் மொழி போன்று இனிமையான சொற்களைப் பேசியும் முழவு மொந்தை தாளம் ஆகிய இசைக் கருவிகளுடன் வீணை மீட்டி வாசித்தும் பாடல்களைப் பாடியவாறு எனது இல்லத்தின் உள்ளே வந்த பெருமான், தான் இருந்த இடத்தினை விட்டு அகலாமல் சிறிது நேரம் நின்றார். அவ்வாறு பெருமான் நின்றதன் காரணம், நான் அவர் பேரில் காதல் கொண்டு அவரை மீண்டும் மீண்டும் பார்க்கத் துடிப்பது போன்று அவரும் என் பால் காதல் கொண்டுள்ளமை என்று நான் நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில், திடீரென்று அவர் மறைந்து விட்டார். அவரின் பிரிவால் நான் தாங்கவொண்ணாத் துயரம் அடைந்தேன்; உடலும் மெலிந்து எனது அழகும் கெட்டது. எனது உடல் நலனையும் அழகினையும் கொள்ளை கொண்ட எனது தலைவர், பவளத்தின் நிறத்தினில் திருமேனி உடைய பெருமான் நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்த கானூர் தலத்தினில் பொருந்தி உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல
முழவ மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்
குமிழின் மேனி தந்த கோல நீர்மை அது கொண்டார்
கமழும் சோலைக் கானூர் மே பவள வண்ணரே
வெங்குரு (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களின் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.5) திருஞானசம்பந்தர், தக்கை இசைக்கருவி அடங்கிய மூட்டையைத் தனது தோளில் தொங்க விட்டுக் கொண்டு வீடுகள் தோறும் பலி ஏற்கச் சென்றார் என்று கூறுகின்றார். பொக்கணம்=துணி மூட்டை, துணிப்பை; கடை=வாயிற்படி; தாருகவனத்தில் இருந்த அனைத்து இல்லங்களின் வாயில் சென்று பெருமான் பலி ஏற்றதை இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பசிய=பசுமையான, இளமை வாய்ந்த;
சடையினர் மேனி நீறது பூசித் தக்கை கொள் பொக்கணம் இட்டு உடனாக
கடைதொறும் வந்து பலியது கொண்டு கண்டவர் மனமவை கவர்ந்து அழகாகப்
படையது ஏந்திப் பைங்கயற்கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள் செய்து
விடையொடு பூதம் சூழ்தரச் சென்று வெங்குரு மேவியுள் வீரற்றிருந்தாரே
இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (1.75.4) திருஞானசம்பந்தர் பூதகணங்கள் குடமுழா கொடுகொட்டி முதலிய இசைக் கருவிகளை இயக்க,அதற்கேற்ப பெருமான் நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். கூவிளம்=வில்வம்; பண் திகழ்வாக=ஒரே சுவரத்தில்;
வண்டணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதம் கொடுகொட்டி குடமுழாக் கூடியும் முழவப்
பண் திகழ்வாகப் பாடியொர் வேதம் பயில்வர் முன் பாய் புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவளோடும் வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
பிரமபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.117.5) பெருமான் கொட்டுவது தக்கை இசை வாத்தியம் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடல் மொழிமாற்றுப் பதிகத்தின் பாடல் என்பதால், சில சொற்களை மாற்றி வைத்தமைத்து நாம் பொருள் காண வேண்டும். கொட்டுவர் தக்கை, அக்கு அரை ஆர்ப்பது, குறுந்தாளன பூதம், விட்டுவர் என்பு, கலப்பிலர் இன்புகழ், உலகின் மட்டு வருந்தழல் ஏந்துவர், சூடுவர் மத்தமும் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ள வேண்டும். அக்கு=சங்கு மணி; அக்கு என்பதற்கு எலும்பினால் ஆன மாலை என்றும் பொருள். ஆனால் இங்கே சங்குமணி என்பதே பொருத்தமாக உள்ளது. வீட்டுதல்=கொல்லுதல் விட்டுவர் என்ற சொல்லினை வீட்டுவர் என்று நீட்டி பொருள் கொள்ள வேண்டும். என்பு என்ற சொல்லுக்கு புலி என்ற பொருளும் உள்ளது. கலப்பிலர்=தானே சென்று கலக்கும் தன்மை அற்றவர்; பெருமானை புகழ் சென்று அடைகின்றதே தவிர, பெருமான் புகழினை நாடி எந்த ஒரு செயலும் செய்வதில்லை. தாள்=கால்; குறுந்தாள் அன=குட்டையான கால்களை உடைய; மற்றவர் நம்மை புகழ்வது கேட்பதற்கு எப்போதும் இனியவாக இருக்கும் அதனால் தான் இன்புகழ் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உலத்தல்=குறைத்தல், அழித்தல்; உலவின்= உலகினை அழிக்கும் பொருட்டு வரும் பிரளயாக்னி; மட்டு=வளைத்து;
கொட்டுவர் அக்கு அரை ஆர்ப்பது தக்கை குறுந்தாளன
விட்டுவர் பூதம் கலப்பிலர் இன்புகழின் என்பு உலவின்
மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான்
தொட்டுவரும் கொடித் தோணிபுரத்து உறை சுந்தரரே
தக்கை எனப்படும் வாத்தியத்தை கொட்டி முழக்கும் சிவபெருமான் தனது இடையிலே பூண்பது சங்கு மாலையாகும். அவரைச் சூழ்ந்து நிற்பன குறுகிய கால்களை உடைய பூதங்களாகும். தாருகவனத்து முனிவர்களால் தன் மீது ஏவிவிடப்பட்ட புலியைக் கொன்ற பெருமான், புலியின் தோலை ஆடையாக அணிந்துள்ளார். கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் புகழினை நாடி, எந்த செயலையும் அவர் செய்வதில்லை; மாறாக புகழ் தான் பெருமானை நாடிச் சென்று சேர்கின்றது. உலகினை வளைத்து அழிப்பதற்கு எழுந்து வரும் பிரளயாக்னியைத் தனது கையில் ஏந்தியவர் பெருமான். இத்தகைய தன்மைகளை உடைய பெருமான் ஊமத்தை மலரை சூடியவராக, அழகிய வடிவினராக, வானளாவும் கொடிகளை உடைய மாளிகைகள் கொண்டுள்ள தோணிபுரம் என்று அழைக்கப் படும் சீர்காழி நகரினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.6.1) திருஞானசம்பந்தர், வீணை, முழவம், மொந்தை, குழல் ஆகிய இசைக் கருவிகளை குறிப்பிட்டு அந்த இசைக் கருவிகள் எழுப்பும் இசைக்கு ஏற்ப நடமாடும் வல்லமை படைத்தவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். கோடல்=வெண் காந்தள் மலர்; கூவிளம்=வில்வம்; குலாய=பொருந்திய, தழுவிய; அய்யன்= தலைவன்; மூன்று வகை மலர்களுடன் கங்கை மற்றும் பிறைச்சந்திரன் சேர்த்து பெருமான் தனது சடையில் ஐந்து வகையான பொருட்களை சூடிக் கொண்டுள்ள நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. ஐந்து வகையான பொருட்களை சூடிக் கொண்டுள்ள பெருமான் நடனம் ஆடுகின்றான் என்று சொல்வது பெருமான் ஐந்தொழில்கள் புரியும் தன்மையை, அவனது திருக்கூத்து உணர்த்தும் தன்மையை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. வெண் காந்தள் மலர், குளிர்ந்த வில்வமாலை, கோங்கம் பூக்கள் ஆகியவற்றைத் தனது சடையினில் சூடிக் கொண்டுள்ள பெருமான், சிறப்பு வாய்ந்த கங்கை நதி மற்றும் ஒளிவீசும் வெண்பிறை ஆகியவற்றையும் தனது சடையில் பொருந்தும் வண்ணம் சூடிக் கொண்டுள்ள ஒப்பற்ற ஒருவனாக காணப்படுகின்றான். பாடல்களும், வீணை முழவம், குழல் மொந்தை ஆகிய இசைக் கருவிகளும் முறையான தாளத்துடன் இணைந்து ஒலிக்க, அந்த பாடலுக்கும் இசைக்கும் ஏற்ப நடனம் ஆடும் வல்லமை பெற்றவன் திருவையாறு தலத்தில் உறைகின்ற தலைவன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர்
ஓடு கங்கை ஒளி வெண் பிறை சூடும் ஒருவனார்
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண்ணாகவே
ஆடுமாறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே
கச்சியேகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.12.3) திருஞானசம்பந்தர், முழவம், மொந்தை, குழல், யாழ் ஆகிய இசைக் கருவிகளை குறிப்பிட்டு, இந்த இசைக் கருவிகளின் இசைக்கு ஏற்ப சிறப்பாக பாடல்கள் ஒலிக்கும் காஞ்சி மாநகரம் என்று குறிப்பிடுகின்றார். சிதைவில்லாத என்ற தொடருக்கு குறைவற்ற, இடையறாத என்று பொருள் கொள்ள வேண்டும். ஏரார்=அழகு மிகுந்த;
பாராரும் முழவம் மொந்தை குழல் யாழொலி
சீராலே பாடல் ஆடல் சிதைவில்லதோர்
ஏரார் கச்சி ஏகம்பனை எம்மானைச்
சேராதார் இன்பமாய் அந்நெறி சேராரே
தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.35.7) முழவம் குழல் மொந்தை ஆகிய இசைக்கருவிகள் ,முழங்கும் பின்னணியில் பெருமான் எரியில் நின்று நடனமாடுகின்றார் என்று கூறுகின்றார். வலன்=வலது கை; பழகும் வினை=பிறவிகள் தோறும் இடைவிடாது தொடர்ந்து வந்து பிறவிகளுடன் பழகும் வினை; எரி=நெருப்புப் பிழம்பு;
பழகும் வினை தீர்ப்பவன் பார்ப்பதியோடும்
முழவம் குழல் மொந்தை முழங்கு எரியாடும்
அழகன் அயில் மூவிலை வேல் வலனேந்தும்
குழகன் நகர் போல் குரங்காடுதுறையே
கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.52.3) திருஞானசம்பந்தர், குழல் மற்றும் மொந்தை இசைக்கருவிகள் ஆரவாரத்துடன் ஒலிக்கும் திருவிழாக்கள் மலிந்த தலம் கோட்டாறு என்று கூறுகின்றார். பழைய தம் அடியார்=பழவடியார்;
பழைய தம் அடியார் துதி செயப் பாருளோர்களும் விண்ணுளோர் தொழக்
குழலும் மொந்தை விழாவொலி செய்யும் கோட்டாற்றில்
கழலும் வண்சிலம்பும் ஒலி செயக் கானிடைக் கணம் ஏத்த ஆடிய
அழகன் என்று எழுவார் அணியாவர் வானவர்க்கே
பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.69.4) முழவம் குழல் மொந்தை மற்றும் பறை ஆகிய இசைக் கருவிகள் முழங்கும் பின்னணியில் பெருமான் நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். தேன் ஒழுகும் கொன்றை மலர் மாலைகளை உடையவரும், உலகத்தவர் அனைவரும் புகழ்ந்து தொழும் வண்ணம் ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கி அனைத்து உயிர்களையும் விடத்தின் தாக்குதலிலிருந்து காத்த பெருமை வாய்ந்த, கறை படிந்த கழுத்தினை உடையவரும், சுடுகாட்டினை அரங்காகக் கொண்டு தனது கையினில் தீச்சுடரினை ஏந்தி நடனம் ஆடுபவரும், நாளும் புகழில் வளரும் வேதங்களை இசைத்த வண்ணம் மண் முழவம் குழல் மொந்தை பறை ஆகிய இசைக்கருவிகள் முழங்க அதன் பின்னணியில் நடனம் ஆடுபவரும் ஆகிய சிவபெருமான், பாண்டிக்கொடுமுடி தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நறை வளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்தக்
கறை வளர் மாமிடற்றாரும் காடு அரங்காக் கனல் ஏந்தி
மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை
பறை வளர் பாடலினாரும் பாண்டிக் கொடுமுடியாரே
திருவாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.111) திருஞானசம்பந்தர், அம்பிகை தாளம் இசைத்த வண்ணம் பாட, பெருமான் அதற்கேற்ப நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். அப்பர் பிரானும் திருஞானசம்பந்தரும் திருவாய்மூர் தலம் சென்றிருந்த போது, அவர்களுக்கு பெருமான் தனது நடனக் காட்சியை காட்டி அருள் புரிகின்றார். அந்த காட்சியை அப்பர் பிரானுக்கு சுட்டிக் காட்டி, திருஞானசம்பந்தர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பாடல் இந்த பாடல். இவராணீர் என்ற சொல்லுக்கு இவர் ஆள் நீர் என்று சொற்களைப் பிரித்து செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் விளக்கம் அளிக்கின்றார்; பெருமானாகிய இவர், நம்மை ஆட்கொண்டு அருள் புரியும் தன்மை (நீர்மை) உடையவர் என்ற விளக்கம் பொருத்தமாகவே உள்ளது. வாய்மூர் தலத்தில் பெருமான் தனது நடனக் காட்சியைக் காட்ட, அதனைக் கண்ணுற்ற திருஞானசம்பந்தர் தன்னருகே இருந்த அப்பர் பிரானிடம் இவர் காணீர் (பெருமானின் நடனக் கோலத்தை காண்பீராக) என்று சொன்னதாக பெரிய புராணம் குறிப்பிடுவதால், இவர் காணீர் என்று இருந்த தொடர் திரிந்து இவராணீர் என்று மாறியதோ என்று சிவக்கவிமணி திரு C.K. சுப்ரமணிய முதலியார் அவர்கள் சிந்திக்கின்றார். செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் தருகின்ற விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளது. கிறிமையார்=பொய்யான வேடம் பூண்டவர்; பெருமானின் இயல்பான தோற்றம் அருவம் என்பதால், அடியார்களுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் அவர் ஏற்றுக் கொள்ளும் எந்த வேடமும் பொய்யான வேடம் தானே. விளரிள=சதைப் பிடிப்பு உடையது, வெண்மை நிறம் கொண்டுள்ளது; இளமை வாய்ந்த தளிர்களுடன் வளர்கின்ற கொடி போன்ற அழகிய உமையன்னை தாளமிசைத்துப் பாடவும், அதற்கேற்ப தனது கையை வீசிக் கொண்டு பெருமான் நடனமாடுகின்றார். ஒளியுடன் கூடிய மாணிக்கக் கல்லை வைத்திருக்கும் பாம்பினைத் தனது இடுப்பிலே இறுகக் கட்டிக் கொண்டுள்ள பெருமான் தன்னை வழிபடும் மகளிர்க்கு அருள் புரிகின்றார். தனது உடலில் வெண்ணீறு அணிந்தவராக, தனது சடையில் வளரும் பிறைச் சந்திரனைச் சூட்டிக் கொண்டவராக காணப்படும் பெருமான், நடனம் ஆடிக் கொண்டு வருவதை காண்பீராக என்று திருஞானசம்பந்தர் அப்பர் பிரானுக்கு உணர்த்துவதாக அமைந்த பாடல்.
தளிரிள வளர் என உமை பாடத் தாளம் இட ஓர் கழல் வீசிக்
கிளரிள மணி அரவு அரையார்த்து ஆடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க்கு அருள் நல்கி வெண்ணீறு அணிந்தோர் சென்னியின் மேல்
வளரிள மதியமொடு இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.8.4) திருஞானசம்பந்தர், யாழும் குழலும் இசைக்க முழவம் மற்றும் மொந்தை இசைக்கருவிகள் முழங்க, தனது காலில் அணிந்துள்ள கழல்கள் ஒலிக்கும் வண்ணம் பெருமான் காட்டின் இடையே நடனம் ஆடுகின்றான் என்று திருஞானசம்பந்தர இந்த பாடலில் கூறுகின்றார். குஞ்சித்து=காலை வளைத்து;
மழுவமர் செல்வனும் மாசிலாத பல பூதம் முன்
முழவொலி யாழ் குழல் மொந்தை கொட்ட முதுகாட்டிடை
கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர் தனுள்
விழவொலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.9.4) திருஞானசம்பந்தர், பெருமான் தனது கையில் தமருகம் ஏந்தியவராக இருக்கும் நிலையை குறிப்பிடுகின்றார். கட்டங்கம்=யோக தண்டம்: கண்டிகை=உருத்திராக்கம்; இலங்கும்=பொருந்திய, வாய்ந்த, விளங்கும்; தாழ்வடம் என்பது கழுத்தில் தொங்கும் எலும்பு மாலையை குறிக்கின்றது. தமருகம்=துடி, உடுக்கை. அடியார்க்குமே என்ற தொடர் மூலம், தனது அடியார்களும் தன்னைப் போன்ற உருவம் கொண்டவர்களாக பெருமான் மாற்றுகின்றார் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இதனையே சாரூப பதவி என்று கூறுவார்கள்.
கலை இலங்கும் மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
விலை இலங்கும் மணி மாடத்தார் வீழிமிழலையார்
தலை இலங்கும் பிறை தாழ்வடம் சூலம் தமருகம்
அலை இலங்கும் புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே
கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.38.5) திருஞானசம்பந்தர், பெருமானுடன் இணைந்துள்ள பூத கணங்கள், மொந்தை முழவம் ஆகிய கருவிகள் கொண்டு இசை முழங்க பெருமான் அதற்கேற்ப நடனமாடுவதாக கூறுகின்றார். இந்த பாடலில் நஞ்சுண்ட தன்மையின் விளக்கம் கேட்கப் படுகின்றது. உண்பதற்கு ஏதும் கிடைக்காமல் நஞ்சினை உண்டவன், கடவுள் தன்மை உடையவன் என்று எவ்வாறு கருதலாம் என்றும் உண்மையாகவே நஞ்சம் உண்டிருந்தால் எவ்வாறு சாகாமல் இருக்க முடியும் என்று மாற்று மதத்தவர் எழுப்பும் கேள்விகளுக்கு விடை அளிக்குமாறு ஞானசம்பந்தர் இங்கே கோருகின்றார். விரவுதல் என்றால் கலத்தல் என்று பொருள். பழைய அடியார்கள் என்று சென்ற பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், அத்தகைய அடியார்களுடன் தான் கலவாது இருக்கும் நிலையை இங்கே குறிப்பிடுகின்றார். தேவாரம் பாடத் தொடங்கிய நாளிலிருந்து, ஞானசம்பந்தர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவருடன் எண்ணற்ற அடியார்கள் சென்று கொண்டிருந்தனர். மேலும் அவர் சென்ற தலங்களில் எல்லாம் அடியார்கள் அவரை சிறப்பாக வரவேற்று அவருடன் திருக்கோயில்களுக்கு சென்ற விவரங்கள் பெரிய புராணத்தில் சொல்லப் பட்டுள்ளன. எனவே அவர் அடியார்களுடன் கலவாது இருந்த நேரம் என்பதே இல்லை என்றே கூறலாம். எனினும், விரவிலாது உமைக் கேட்கின்றேன் என்று நம்மைப் போன்றவர்களை கருத்தினில் கொண்டு திருஞானசம்பந்தர் கூறுகின்றார் என்று நாம் பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். இதன் மூலம், அடியார்களுடன் கலந்து இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். அருளாளர்கள் அடியார்களுடன் கூடி இருப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். கண்டியூர் வீரட்டத்து பெருமானின் திருவடிகளுக்கு விருப்பத்துடன் அடிமைத் தொண்டு புரியும் அடியார்களே, பெருமானின் தொண்டர்களுடன் கலவாமல் இருந்ததால் அறியாமையில் கிடக்கும் அடியேன், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன், விளக்கமாக விடை கூறுவீர்களாக. அலைகள் மோதுகின்ற இரு கரைகளை உடைய காவிரிநதிக் கரையினில் உள்ள கண்டியூர் வீரட்டம் தலத்தில் பெருமான், முழவம் மொந்தை ஆகிய வாத்தியங்கள் ஒலிக்க, ஆரவாரம் செய்த வண்ணம் தன்னை சூழ்ந்து கொண்டிருக்கும் பேய்கள் கூட்டத்துடன் இருக்கையில், தன்னைப் புகழ்ந்து வேண்டிய வானவர்களுக்காக பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினை உட்கொண்ட தன்மையை விவரமாக கூறுவீர்களாக என்று பெருமானின் அடியார்களை நோக்கி வினவுவதாக அமைந்த பாடல்..
விரவிலாது உமைக் கேட்கின்றேன் அடி விரும்பி ஆட் செய்வீர் விளம்புமின்
கரையெலாம் திரை மண்டு காவிரிக் கண்டியூர் உறை வீரட்டன்
முரவ மொந்தை முழா ஒலிக்க முழங்கு பேயொடும் கூடிப் போய்ப்
பரவு வானவர்க்காக வார்கடல் நஞ்சம் உண்ட பரிசதே
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.57.5) திருஞானசம்பந்தர், பெருமான், மொந்தை, தாளம், தகுணிச்சம் எனப்படும் ஒரு வகையான தோற்கருவி ஆகியவை ஒலிக்கும் பின்னணியில் எண்தோள் வீசி நின்று நடனமாடுவதாக குறிப்பிடுகின்றார். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு முறையாக அருள் செய்கின்ற பெருமான் என்று இந்த பாடலின் முதல் அடியில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பலகினார்=பல வகையான; பாணியாலே அலகினால்=பாடிக் கொண்டே கையால் தாளமிடுதல்; முட்டா=தடைபடாமல்; உலகத்தவர் இடையறாது பாடல்கள் பாடி துதிக்கும் வண்ணம் இறைவன் திருவொற்றியூர் தலத்தினில் உறைகின்றான் என்று கூறுகின்றார்.
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள் செய்து நல்ல
பலகினார் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலரிட்டு முட்டாது
உலகினார் ஏத்த நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே
குடமூக்கு (தற்போதைய பெயர் கும்பகோணம்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.59.4) திருஞானசம்பந்தர், கொக்கரை இசைக்கருவி எழுப்பும் ஓசைக்கு ஏற்ப அடியார்களால் பாடப்படும் பாடல்களை உடையவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் உமையன்னை அஞ்சும் வண்ணம் பெருமான் எலும்பு பாம்பு ஆமையோடு பன்றியின் கொம்பு ஆகியவற்றை அணிந்து கொண்டார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அரை=இடுப்பு; மிக்கு=மிகுந்து, மிகவும், தாழ=தொங்க; ஆலகால நஞ்சினை உட்கொண்ட போதும், பிரளய காலத்தில் உலகம் எரிந்து அழிந்து உலகமே சுடுகாடாக மாறிய நிலையிலும், எலும்பு மாலை முதலியன பூண்டுகொண்ட போதும், இராவணன் கயிலாய மலையினை அசைத்த போதும், அன்னை அச்சம் கொண்டதாக தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. சுந்தரர் தனது கச்சி ஏகம்பம் திருப்பதிகத்தின் பாடல் ஒன்றினில், கம்பை ஆற்றின் வெள்ளம் பெருகிய போது, தான் வழிபட்டுக் கொண்டிருந்த இலிங்கத் திருவுருவம் அந்த வெள்ளத்தில் கரைந்து விடுமோ என்று அச்சம் கொண்டு, இலிங்கத்தை பார்வதி தேவி இறுகத் தழுவியதாக குறிப்பிடுகின்றார். இந்த வரலாறு பெரிய புராணத்தில் மிகவும் விவரமாக திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணத்தில் சொல்லப் பட்டுள்ளது. கரை=தீவு; உலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டிருப்பதால் உலகத்தையே தீவாக கருதுகின்றார் போலும்; எக்கரையாரும்=எந்த உலகத்தாரும், அனைத்து உலகத்து மக்களும்; எக்கரையார் என்பதற்கு எந்த தன்மையில் உள்ளார்களும் என்றும் பொருள் சொல்லப் படுகின்றது.
மிக்கரை தாழ வேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ
அக்கரவு ஆமை ஏனம் மருப்போடு அவை பூண்டு அழகார்
கொக்கரையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.76.5) திருஞானசம்பந்தர், கத்திரிகை, துத்திரி, ஒலிக்கின்ற துடி, தக்கை, இடக்கை, படகம் ஆகிய எண்ணற்ற இசைக் கருவிகள் எழுப்பும் பின்னணியில் பெருமான் நடனம் ஆடுவதாக குறிப்பிடுகின்றார். கறங்கு=ஒலி எழுப்பும்; துடி=உடுக்கை; பெருமான் வைத்திருக்கும் துடியிலிருந்து எழுகின்ற நாதமே ஆகாயம் தோன்றுவதற்கு காரணமாக உள்ளது என்று சொல்லப் படுகின்றது. திரள்=கூட்டம்; அலம்ப=ஒலிக்க; பரச=பரவ; ஒத்தற மிதித்து நடம்=தாளத்திற்கு ஏற்ப கால்களை பூமியில் பதித்து ஆடும் நடனம்; மெய்த்தகைய=உண்மையான; மிடைந்து உகளும்=ஒருவருக்கொருவர் நெருங்கி நின்று மகிழ்ச்சி பொங்க; வேதவனம்=திருமறைக்காடு;:
கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம்
எத்தனை உலப்பில் கருவித் திரள் அலம்ப இமையோர்கள் பரச
ஒத்தற மிதித்து நடமிட்ட ஒருவர்க்கு இடமது என்பர் உலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே
கோகர்ணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.79.2) திருஞானசம்பந்தர், கல்லவடம் மொந்தை குழல் தாளம் கொக்கரை ஆகிய இசைக் கருவிகளுக்கு ஏற்ப பெருமான் நடமாடுகின்றார் என்று கூறுகின்றார். கோகரணம் தலம் செல்லும் மகளிர், ஆங்குள்ள தீர்த்தத்தில் பெருமானின் திருநாமத்தை சொல்லியவாறு மூழ்கியெழ, கொல்லும் தன்மை வாய்ந்த கடுமையான விடநோய்களும் நீங்கப் பெற்று நலமடைகின்றனர் என்று அந்த தலத்தின் மீது அருளிய பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திருத்தம்=தீர்த்தம்;
கல்லவட மொந்தை குழல் தாள மலி கொக்கரையர் அக்கு அரை மிசை
பல்ல பட நாகம் விரிகோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே
நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக
கொல்ல விடநோய் அகல்தரப் புகல் கொடுத்து அருளும் கோகரணமே
தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.81.2) திருஞானசம்பந்தர், பம்பை யாழ் முழவம் மொந்தை குழல் தாளம் முதலான இசைக் கருவிகள் ஒலிக்கும் பின்னணியில் பெருமான் நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். இயம்ப=ஒலிக்க; அரிய மாமலையர் என்பதை மாமலையர் அரிய என்று மாற்றி பொருள் கொள்ள வேண்டும். சல்லரி=பம்பை; பம்பை, யாழ், முழவம் மொந்தை குழல் தாளம் முதலான இசைக் கருவிகள் பின்னணியில் ஒலிக்க, பெரிய மலையாகிய இமயமலையின் அரசராக விளங்கிய இமவானின் மகளாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் நிலையாக வைத்து, தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு நள்ளிருளில் நடனம் ஆடுபவரும், நீண்ட சடையினை உடையவரும், அனைவர்க்கும் தலைவரும் ஆகிய சிவபெருமான் உறையும் இடமாவது, சொல்லுதற்கரிய பெருமையை உடைய தொண்டர்கள் போற்றிப் புகழ்வதால் நாளுக்கு நாள் புகழ் பெருகும் தோணிபுரம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை
சல்லரி யாழ் முழவம் மொந்தை குழல் தாளம் அது இயம்பக்
கல் அரிய மாமலையர் பாவை ஒரு பாக நிலை செய்து
அல் எரி கை ஏந்தி நடமாடு சடை அண்ணல் இடம் என்பர்
சொல்லரிய தொண்டர் துதி செய்ய வளர் தோணிபுரமாமே
அவளிவணல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.82.7) திருஞானசம்பந்தர், மொந்தை, யாழ், குழல், முழவம் ஆகிய இசைக் கருவிகளை குறிப்பிடுகின்றார். கூடு அரவம்=ஒத்து இசைக்கும் ஒலி; பீடு=பொதுவாக பெருமை என்ற பொருளினைத் தரும் சொல், இங்கே பெரிய என்று பொருள்; அம்பு செய்து=தண்ணீர் அம்பு போன்று பாய்தல்; பெருமான் தனது தோளினை அதிரவீசி ஆடும்போது, சடையில் உள்ள கங்கை நீர் ததும்புகின்றது என்று கூறுகின்றார். கங்கை நீர் ததும்பியது என்று திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு சுந்தரர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. திருவொற்றியூரில் வாழ்ந்து வந்த சங்கிலி நாச்சியாரை, சுந்தரர் திருமணம் செய்து கொண்டதை அறிந்த பரவை நாச்சியார், சுந்தரர் மீது கோபம் கொண்டவராக, சுந்தரர் தான் இருக்கும் இடத்திற்கு வந்தால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியதை அறிந்த சுந்தரர், பரவையாரின் கோபத்தை தணிக்க வேண்டி திருவாரூர் பெருமானது உதவியை நாடினார். பெருமானும் அதற்கு இசைந்தவராக, பரவையார் பால் தூது சென்றார். சைவ வேதியரின் வடிவம் கொண்டு தூதுவராக சென்ற பெருமான், சுந்தரரை நீ இந்த மாளிகையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பரவையாரிடம், சொன்னார். அதனைக் கேட்ட பரவையார், தன்னை விட்டுப் பிரிந்து சென்று திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்த சுந்தரருக்கு இந்த மாளிகையில் இருக்க என்ன உரிமை உள்ளது கடிந்து சொன்னதுமன்றி, இதனைச் சொல்வதற்காக நள்ளிரவில் நீர் வந்ததும் நன்றாக இருக்கின்றது என்று கேலியாக பேசினார். சுந்தரர் எந்த அளவுக்கு பரவையாரிடம் வேட்கை கொண்டுள்ளார் என்பதை நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் நோக்கத்துடன், பெருமான் சுந்தரரை பார்க்கச் சென்றார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். பெருமானின் வருகையையும் அவர் கொண்டு வரும் சேதியையும் எதிர்ப்பார்த்து தவிப்புடன் காத்திருந்த சுந்தரர், பரவையாரின் மறுமொழியை பெருமான் உரைத்ததைக் கேட்டு சுந்தரர், மிகுந்த வருத்தம் அடைந்தார். மேலும் பெருமானை நோக்கி, நீர் உண்மையாக என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டிருந்தால், நாங்கள் இருவரும் ஒன்று சேரும் வண்ணம் அருள் புரிந்திருப்பீர் என்று கோபமாக கூறினார். மீண்டும் பரவையார் பால் சென்று எங்கள் இருவரையும் நீ கூட்டி வைத்திடாவிடில், என் உயிர் நீங்கும் என்றும் எமக்கு உதவி செய்யாது இருப்பதற்காகவா, நீர் என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டீர் என்ற கேள்வியையும் எழுப்பினார். மீண்டும் ஒரு முறை பரவையார் பால் தூது செல்வதற்கு ஒப்புக்கொண்ட பெருமான், இந்த முறை தனது உண்மையான வடிவத்துடன் தூது சென்றார். இதனிடையில் பரவையாரும், ஆரூர் பெருமான் தான் தனது தோழர் சுந்தரருக்காக ஒருகால் சைவ வேதியராக தூது வந்தாரோ என்ற எண்ணம் கொண்டவராக, அதனை அறியாமல் தான் உதாசீனம் செய்துவிட்டோமோ என்ற கவலையுடன் துயரில் ஆழ்ந்திருந்தார். தேவ கணங்களும் முனிவர்களும் புடைசூழ பெருமான், இரண்டாவது முறையாக, தூது சென்ற போது, பரவையார் பெருமானை வணங்கிய பின்னர், அடியவருக்கு எளியவராக நீரே இரண்டு முறை தூதுவராக திரிந்த போது, அடியேன் சுந்தரருடன் இணையாது இருப்பேனோ என்று கூறினார். இந்த செய்தியை உடனே சுந்தரரிடம் சொல்லி, சுந்தரரை பரவையாருடன் விரைவில் சேர்த்திடும் பொருட்டு, பெருமான் விரைந்து சென்ற போது அவரது சடையில் இருந்த கங்கை ததும்பியது என்று சேக்கிழார் கூறுகின்றார். தனது அடியான் சுந்தரரின் துயரம் தீர்ந்த மகிழ்ச்சி, கங்கை நதி ததும்பும் வண்ணம் நடந்த பெருமானின் துள்ளல் நடையில் வெளிப்படுகின்றது.
கூடரவ மொந்தை குழல் யாழ் முழவினோடும் இசை செய்யப்
பீடு அரவமாகு படர் அம்பு செய்து பேரிடபமோடும்
காடரமாகு கனல் கொண்டு இரவில் நின்று நடமாடி
ஆடரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே
மொந்தை குழல் யாழ் முழவம் ஆகிய இசைக் கருவிகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தும் வண்ணம் இசைக்கும் பின்னணியில் பெருமான் தனது தோள்களை அதிர வீசி நடமாட, அவரது சடையில் இருக்கும் கங்கை நதி ததும்பி அம்பு போன்று வேகமாக வெளியே பாய, பெரிய இடபத்துடன் திகழும் பெருமான், சுடுகாட்டினில் ஒசையுடன் எரியும் நெருப்பினைத் தனது கையில் ஏந்திய வண்ணம், நடனமாடுகின்றார். படமெடுத்தாடும் பாம்பினைத் தனது கச்சையில் இறுக்கமாகக் கட்டியுள்ள பெருமான் அவளிவணல்லூர் தலத்தினில் உறைகின்றார் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.85.7) திருஞானசம்பந்தர், குழல், கொக்கரை, முழவு ஆகிய வாத்தியங்கள் எழுப்பும் இசைக்கு பொருந்தும் வண்ணம், அவனது புகழினை அடியார்கள் பாடல்களாக திருவிழாக்களில் பாட, அவற்றை ஏற்றுக்கொண்டு மகிழ்கின்றார் என்று கூறுகின்றார். இக்ஷு என்ற வடமொழி சொல்லுக்கு கரும்பு என்று பொருள்; இந்த சொல் இக்கு என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கு உக=கரும்பின் இனிய சுவை சொட்டும் வண்ணம்; கரும்பினும் இனிய மொழிகளைப் பேசியவாறு பெருமான் பலியேற்கச் செல்கின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
அக்கினொடு அரவரை அணி திகழ ஒளியதோர் ஆமை பூண்டு
இக்குக மலி தலை கலனெனெ இடுபலி ஏகுவர்
கொக்கரை குழல் முழ விழவொடும் இசைவதோர் சரிதையர்
மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில் விழிமிழலையே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.103.2) தனது கையில் பெருமான் கொடுகொட்டி இசைக் கருவியை வைத்திருப்பதாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். கோத்த கல்லாடை=காவி நிறத்து கற்கள் பண்டைய நாளில் துணிகளில் காவி சாயம் ஏற்றுவதற்கு பயன்பட்டதால், கல் கோத்த ஆடை என்று குறிப்பிடுகின்றார். பொதுவாக பெருமானை கோவணம் மற்றும் புலித்தோல் அணிந்தவர் என்றே பெரும்பாலான திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. காவி உடையினை அணிந்தவராக பெருமானை குறிப்படும் இந்த பாடல் சற்று வித்தியாசமான பாடலாகும். திசையவர்=எல்லா திசைகளிலும் உள்ளவர்கள், உலகத்திலுள்ள அனைவரும் என்று பொருள் கொள்ள வேண்டும்; காய்த்த கல் ஆல்=ஒரு வகை கல்லால மரம்; நூற்றுக் கணக்கான ஆண்டுகள் காய்ந்து பாறை போன்று கெட்டித் தன்மை உள்ளதாக இருக்கும் ஆலமரம்; காய்த்த என்று சொல்லுக்கு காய்கள் நிறைந்த என்று பொருள் கொண்டு, காய்கள் நிறைத்த கல்லால மரம் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. தேய்த்து=அழித்து; தேசு=தேஜஸ் என்ற வடமொழிச் சொல் தேசு என்று தமிழாக்கப் பட்டுள்ளது. முத்தீ=மூன்று வகையான வேள்விகளில் வளர்க்கப்படும் தீ; ஆகவனீயம், காருகபத்தியம், தக்ஷிணாக்கினியம் என்று கூறுவார்கள். அனங்கன்=உடல் அற்றவன். மன்மதன் எரிக்கப் பட்டவுடன் அவனது மனைவி இரதி தேவி, இறைவனிடம் தனது கணவனை உயிர்ப்பித்து தருமாறு வேண்ட, அவளது கோரிக்கைக்கு இரங்கிய பெருமான், மன்மதனுக்கு மீண்டும் உயிரினை அளித்தார். ஆனால் அவ்வாறு உயிர் அளித்த போது, இரதி தேவியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தென்படுவான் என்றும் ஏனையோர் கண்களுக்கு புலப்படாமல் தனது தொழிலை, உயிர்களிடம் இனப்பெருக்கம் தொடர்ந்து நடப்பதற்கு ஏதுவாக, காதல் உணர்ச்சியை தூண்டும் செயலை, மன்மதன் தொடர்ந்து செய்வான் என்று பெருமான் வரம் அளித்ததால், எந்த உயிரும் காண முடியாத வண்ணம் மன்மதன் தனது தொழிலினை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றான் என்று கூறுவார்கள்
கோத்த கல்லாடையும் கோவணமும் கொடுகொட்டி கொண்டு ஒரு கைத்
தேய்த்து அன்று அனங்கனைத் தேசு அழித்துத் திசையார் தொழுது ஏத்தக்
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும்
வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன்னகரே
நீரில் ஊறிய காவிக் கற்களால் விளையும் சாயம் தோய்த்து ஏற்றப்பட்ட காவி ஆடையும் கோவணமும் அணிந்தவராக விளங்கும் பெருமான் கொடுகொட்டி என்ற வாத்தியத்தை ஒரு கையினில் ஏந்தி வாசிப்பவர் ஆவார். பண்டைய நாளில் தனது தவத்தினை கலைக்க முயற்சி செய்த மன்மதனின் அழகான உடலினை சுட்டெரித்து, அவன் உடலற்றவனாக திரியும் வண்ணம் செய்தவர் சிவபெருமான். உலகில் உள்ள அனைவரும் தொழும் வண்ணம், காய்ந்து பாறையாக இறுகி நின்ற கல்லால மரத்தின் கீழிருந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் வேதத்தின் பொருளை விளக்கியவர் சிவபெருமான். அவர் நிலையாக இருக்கும் இடம் யாதெனின், நாள்தோறும் செய்ய வேண்டிய கடமையாக விதிக்கப்பட்ட மூன்று தீக்களை வளர்த்து நான்கு வேதங்களையும் நன்றாக பயின்று வாழும் அந்தணர்கள் நிறைந்த வலம்புரம் நகரமாகும் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரையாகும்.
பல்லவனீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.112.4) திருஞானசம்பந்தர், யாழினைத் தனது கையில் வைத்திருக்கும் பெருமான் மொந்தை என்ற கருவியை வாசிக்கும் ஆற்றல் உடையவராக இருக்கின்றார் என்று கூறுகின்றார். அண்ணல்=தலைவர்; பண்ணோடு பொருந்திய இசையினை வெளிப்படுத்தும் யாழினைத் தனது கையினில் கொண்டுள்ள பெருமான் மொந்தை எனப்படும் இசைக் கருவியினை வாசிக்கும் ஆற்றலை உடையவர். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் தலைவனாக இருந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.;
பண்ணில் யாழினர் பயிலும் மோந்தையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அண்ணலா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.10.1) மழலை மொழி போன்று இனிய இசையினை எழுப்பும் வீணையைக் கையில் ஏந்திய பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். முளைக்கதிர்=பெருமானின் திருமுடி மேல் வைக்கப்பட்ட பின்னர், முளைக்கத் தொடங்கிய பிறைகளைக் கொண்ட சந்திரன்: தக்கனின் சாபத்தால், ஒவ்வொரு கலைகளாக தேய்ந்து அழிந்து போகும் நிலையில் இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரன் காப்பாற்றப் பட்ட நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப் படுகின்றது. உழி=இடம்: மண்ணினைத் தோண்ட நமக்கு செம்பொன் கிடைப்பது போன்று, நம்மைப் பற்றியிருக்கும் பாசம் மாயை ஆகியவற்றைத் தோண்டி எடுத்து வீசி எறிந்தால், ஆங்கே பெருமான் தோன்றுவார் என்பதை, கிளைத்து உழித் தோன்றிடும் கெடில வாணர் என்ற தொடர் உணர்த்துகின்றது. திளைத்ததோர் மான்மழுக் கையர் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். மான் கன்றுக்கு உரிய குணம், அங்குமிங்கும் துள்ளித் திரிந்து மகிழ்ந்து விளையாடுதல். அந்த குணத்தினை மாற்றி, கொலை வெறி கொண்ட மானாக மாற்றப்பட்ட ஒரு மான் கன்று, தாருகவனத்து முனிவர்களால் சிவபெருமான் மீது ஏவப்பட்டது. மானின் கொடிய குணத்தினை மாற்றிய பெருமான், அந்த கன்றினை தனது கைகளில் ஏற்றிக் கொண்டார். மானும் மகிழ்ச்சியுடன் அவரது கரங்களில் அமர்ந்தது. அவ்வாறு மான் கன்று மகிழ்ச்சியில் திளைத்த செய்கை, இங்கே திளைத்ததொரு மான் என்று குறிப்பிடப் படுகின்றது.
முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மழுக் கையர் செய்ய பொன்
கிளைத்து உழித் தோன்றிடும் கெடில வாணரே
திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.66.9) அப்பர் பிரான், கொக்கரை தாளம் வீணை ஆகிய இசைக்கருவிகளை இயக்கும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். வக்கரை=திருவக்கரை என்று அழைக்கப்படும் தொண்டை நாட்டுத் தலம். தேவாரப் பாடல் பெற்ற தலம். பாணி=கை: அக்கு=சங்கு மணி; கொக்கரை, தாளம், வீணை ஆகிய இசைக்கருவிகளை கையில் ஏந்தி, அந்த கருவிகள் எழுப்பும் இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடும் பெருமான் இளைய தோற்றம் உடையவராக உள்ளார். சங்குமணி மாலையைத் தனது இடுப்பினில் அணிந்துள்ள பெருமான், ஐந்து தலை பாம்புகளையும் அணிகலனாக ஏற்று தனது விருப்பம் போல் அவற்றை ஆட்டுவிக்கின்றார். திருவக்கரை என்று அழைக்கப்படும் தொண்டை நாட்டுத் தலத்தில் உறையும் அவர், தாருகவனத்து மகளிர் தன்மீது காதல் கொள்ளும் வண்ணம் அழகிய தோற்றம் உடையவர் ஆவார். மிகவும் குறைந்த ஆடைகளை அணியும் அவர், நாகேச்சரத்து தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கொக்கரை தாளம் வீணை பாணி செய் குழகர் போலும்
அக்கரை அணிவர் போலும் ஐந்தலை அரவர் போலும்
வக்கரை அமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்
நக்கரை உருவர் போலும் நாக ஈச்சரவனாரே
திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.104.7) அப்பர் பிரான், பெருமான் தாளம், குழல், யாழ் இவற்றை இசைத்த வண்ணம் கீதங்கள் பாடுபவராக ஆகாயத்தில் செல்கின்றார் என்று கூறுகின்றார். உரை ஆசிரியர்கள், திரிபுரத்து அரக்கர்களை அழித்து தேவர்களின் இடரினைக் களைந்த பெருமான், மகிழ்ச்சியுடன் கயிலாயம் திரும்பிய போது, இசைக் கருவிகளின் இசைக்கு ஏற்ப பாடியதை இந்த குறிப்பு உணர்த்துகின்றது என்று விளக்கம் கூறுகின்றனர். காளம்=ஆலகால விடம்; காளம் கடந்ததோர் கண்டம்=ஆலகால விடத்தை தேக்கியதால், எந்த விதமான கேடும் அடையாத பெருமானின் கழுத்து; நாளங்காடி=பகலில் இயங்கும் கடைகள்; இரவினில் இயங்கும் கடைகள் அல்லங்காடி என்று பண்டைய நாட்களில் அழைக்கப் பட்டன. வியாளம் என்றால் பாம்பு என்று பொருள். அந்த சொல் வேளம் என்று எதுகை கருதி திரிந்தது.
காளம் கடந்ததொர் கண்டத்தராகிக் கண்ணார் கெடில
நாளங்கடிக்கு ஒர் நகரமும் மாதிற்கு நன்கிசைந்த
தாளங்கள் கொண்டும் குழல் கொண்டு யாழ் கொண்டும் தாம் அங்ஙனே
வேளங்கள் கொண்டும் விசும்பு செல்வார் அவர் வீரட்டரே
சரக்கறைத் திருப்பதிகம் என்ற பொது பதிகத்தின் பாடல்களில் அப்பர் பிரான், பெருமானும் பெருமானுடன் இணைந்த பொருட்களும் இருக்கின்ற சரக்கறையாக தனது மனம் மாற வேண்டும் என்று வேண்டுகின்றார். இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் (4.111.8) ஏழு வேறுவேறு இசைக் கருவிகளை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கொடுகொட்டி, கொக்கரை, தக்கை, குழல், தாளம், வீணை, மொந்தை என்பன பல வகையான இசைக் கருவிகள்: கொடுகொட்டி=ஒரு வகையான தோல் பறை: கொக்கரை=சங்கு என்றும் ஒரு வகையான பறை என்றும் இரண்டு விதமான வாத்தியங்களை குறிப்பதாக கூறுவார்கள்: மொந்தை=ஒரு வகையான பறை: வடுவிட்ட=குற்றம் இல்லாத: தடுகுட்டம்=குணலை எனப்படும் ஒரு வகை கூத்து, கால் தரையில் பாவாது ஆடப்படும் கூத்து என்று கூறுவார்கள் விடுபட்டு ஏறு=பலி எருது: கிராமங்களில் கடவுளுக்கு உரியது என்று எருதினை விட்டுவிடுவார்கள். அந்த எருதினை மற்ற எருதுகள் போல, வண்டியில் பூட்டுவதோ, ஏரில் பூட்டுவதோ இல்லை: மேலும் அந்த எருது தனது விருப்பம் போல் எங்கு மேய்ந்தாலும் அதனை அடிக்க மாட்டார்கள். இவ்வாறு எவரும் அடக்காமல் வளரும் காளையைப் போன்று, சிவபெருமானுக்கு வாகனமாகத் திகழும் இடபமும், எவருக்கும் அடங்காமல் தனது விருப்பம் போல் திரியும் என்பதை உணர்த்த விடுபட்டு ஏறு என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நாம் நெடுநாட்களாக விரும்பிய ஒன்று ஈடேறிவிட்டால் நாம் மகிழ்ச்சியில் திளைத்து என்ன செய்வது என்று அறியாமல் ஏதேதோ செய்கின்றோம். அப்போது மற்றவர்கள் நம்மை தலைகால் தெரியாமல் நடப்பதாகவும், கால்கள் தரையில் படாமல் நடப்பதாகவும் கூறுவார்கள். சிவபெருமானுடன் இணைந்துள்ள பொருட்களும் அது போல் மகிழ்ச்சியாக தங்களது கால்கள் தரையில் பாவாதவாறு நடனம் ஆடுவதாக அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபெருமானுடன் இணைந்து இருக்கும் வாய்ப்பு என்பது எளிதில் அடையமுடியாத பேறு அல்லவா. எனவே அத்தகைய அரிய பேற்றினைப் பெற்ற பொருட்கள் இறுமாப்புடன் இருப்பது இயற்கை தானே.
விடுபட்டு ஏறு உகந்தேறி விண்ணப்பம் மேல் இலங்கு
கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை
வடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவும்
தடு குட்டம் ஆடும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே
எவராலும் அடக்கப் படாமல் தனது விருப்பம் போல் எங்கும் திரியும் இடபத்தை வாகனமாக விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டவனே, உன்னிடம் அடியேன் ஒரு விண்ணப்பம் வைக்கின்றேன். உனது நடனத்திற்கு ஏற்றவாறு இசைக்கும் கொடுகொட்டி, கொக்கரை, தாளம், குழல், வீணை, மொந்தை முதலான இசைக் கருவிகளும் உனது சடையுடன் இணைந்த குற்றமில்லாத கொன்றை, வன்னி, மத்தம் ஆகிய மலர்களும், உனது மேனியில் உலாவும் கொடிய விடம் கொண்ட பாம்பும், உன்னுடன் இணைந்ததை நினைத்து மகிழ்ச்சியுடன் கூத்தாடுகின்றன. அவை அனைத்தும், மகிழ்ச்சிப் பெருக்கில் தங்களது கால்கள் தரையில் பாவாதவாறு குணலைக் கூத்து ஆடும் நடனக் கூடமாக எனது நெஞ்சம் இருக்க வேண்டும். அவ்வாறு நீ அருள் செய்து எனது நெஞ்சத்தினை ஒப்பற்ற தனி நெஞ்சமாக மாற்ற வேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் அப்பர் பிரான் விடுக்கும் வேண்டுகோளாகும். இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் கொக்கரை இசைக் கருவி குறிப்பிடப் படுகின்றது.
இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (4.111.3) பெருமான் தகுணிச்சம் என்ற இசைக் கருவியை வைத்திருப்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். தகுணிச்சம்=முழவு வாத்தியத்தில் ஒரு வகை. பண்டைத் தமிழகத்தில் மூன்று விதமாக முழவு வாத்தியங்கள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகின்றது. வீந்தார்=அழிந்தவர்கள்: தவளம்=வெண்ணிறம் கொண்டது: வீந்தார் தலைக் கலன் ஏந்தீ என்ற சொற்றொடருக்கு, ஊழிக் காலத்தில் அழியும், திருமால் மற்றும் பிரமன் உள்ளிட்ட பல தேவர்களின் தலைகளால் கோர்க்கப்பட்ட மாலையை அணிகலனாகக் கொண்டவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஊழிக்காலத்தில் அழியும் தேவர்களில் ஒருவனாகிய பிரமனின் தலையை, உண்கலனாக ஏந்திய இறைவனே, எனது விண்ணப்பத்தை நீ கேட்பாயாக: சந்தனமாக உனது உடலினில் பூசிக்கொள்ளும் வெண்மை நிறம் கொண்ட திருநீறும், தகுணிச்சம் எனப்படும் இசைக் கருவியும், தாமரை மலர் போன்று மிருதுவான மேனியில் புள்ளிகளைக் கொண்ட மானின் தோலும், புலித்தோலும் இருக்கும் கருவூலமாக எனது நெஞ்சத்தை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு நீ அருள் செய்து எனது நெஞ்சத்தினை ஒப்பற்ற தனி நெஞ்சமாக மாற்ற வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு
சாந்தாய வெந்த தவள வெண்ணீறும் தகுணிச்சமும்
பூந்தாமரை மேனிப் புள்ளி உழை மான் அதள் புலித்தோல்
தாந்தாம் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே
பொதுப் பதிகம் ஒன்றினில் (4.112.7) அப்பர் பிரான் பிரளயத்தால் உலகம் முழுதும் அழிந்த பின்னர், பெருமான் கங்காள வேடத்தராய், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் உயிரற்ற உடல்களை சுமந்தவாறு, மீண்டும் உலகத்தைப் படைப்பதை தனது கடமையாக எண்ணிய வண்ணம், வீணை வாசித்தவாறு இருப்பார் என்று கூறுகின்றார்.
பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
வரும் கடன் மீள நின்று எம்மிறை நல்வீணை வாசிக்குமே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.7.1) அப்பர் பிரான் பூத கணங்கள், குழல், கொக்கரை, வீணை, கொடுகொட்டி ஆகிய வாத்தியங்களை இசைத்துப் பாட, அதற்கேற்ப பெருமான் நடனமாடுகின்றார் என்று கூறுகின்றார். பகுவாயன=திறந்த வாயினை உடைய: பூதங்களுடன் இணைந்து, அவைகளின் நடனத்திற்கு இசைந்து ஆடிய நடனம் என்று பெருமானின் நடனத்தை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு நமக்கு அவரது இன்னம்பர் பதிகத்தின் பாடலை நினைவூட்டும். பூதங்கள் பாடவும், உடன் ஆடவும் சிவபெருமான் நடனம் ஆடுகின்றார் என்று பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. பூத கணங்களோடு நடனம் ஆடுவது எத்தனை சிறப்பு வாய்ந்தது என்பதை அப்பர் பிரான், இன்னம்பர் பதிகத்தின் பாடலில் (4.100.3) குறிப்பிடுகின்றார். நடனக்கலை என்றால் என்ன என்று அறியாதன பேய்களும் பூதங்களும். எனவே எப்படி ஆடுவது என்பது குறித்து அவைகளின் இடையே ஒத்த கருத்து எழவில்லை. அதனால் ஒருவரின் ஆட்டத்திற்கும் மற்றொருவர் ஆட்டத்திற்கும் இடையே ஒற்றுமை ஏதும் இல்லாமல், எந்த நெறிமுறையினையும் சாராத நடனமாக அவைகளின் நடனம் உள்ளது. இத்தகையவர்களுடன் கூடி ஆடுவதே கடினம். அதிலும் அவர்களின் நடனத்திற்கு இணைந்தவாறு ஆடுவது எத்தனை கடினம் என்பதை நாம் உணரலாம். இருப்பினும், பேய்களுடன் இணைந்து நடனம் ஆடிய திருவடிகள், பெருமானின் திருவடிகள் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.
கொக்கரை குழல் வீணை கொடுகொட்டி
பக்கமே பகுவாயன பூதங்கள்
ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்
அக்கினோடு அரவு ஆர்ப்பர் ஆரூரரே
நாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.55.9) திருஞானசம்பந்தர் கின்னரம் மற்றும் மொந்தை இசைக் கருவிகள் முழங்க நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதனாக பெருமான் இருக்கும் தன்மையை உணர்த்துகின்றார்.
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே
இரவின் நின்று எரி ஆடலும் நீடுலாம்
நரலும் வாரி நன் நாரையூர் நம்பனுக்கு
அரவும் பூணுதல் அம்ம அழகிதே
பாலைத்துறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.51.7) கொடுகொட்டி கொக்கரை மற்றும் வீணை ஆகிய இசைக் கருவிகளை பெருமான் இயக்குவதாக அப்பர் பிரான் கூறுகின்றார். குரவனார்=குருவாக இருப்பவர்: நாண்மலர்=அன்றைய நாளில் பறித்த மலர்கள், புது மலர்கள்: சிவபெருமான் வீணை வாசிப்பது பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. திருவாசகம் திருவண்டப்பகுதி அகவலில், மணிவாசகர் இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க என்று குறிப்பிடுகின்றார். அனைவருக்கும் குருவாக விளங்குபவரும், கொடுகொட்டி, கொக்கரை மற்றும் வீணை ஆகிய இசைக் கருவிகளிலிருந்து எழும் இசையுடன் கலந்து இருப்பவரும் ஆகிய சிவபெருமான், அழகிய மல்லிகை, செண்பகம் என்று புதியதாக மலர்ந்த மலர்களைக் கொண்ட நிலப் பரப்பினை உடையதும் காவிரி நதிக் கரையில் உள்ளதும் ஆகிய பாலைத்துறை தலத்தில் உறையும் இறைவன் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
குரவனார் கொடுகொட்டியும் கொக்கரை
விரவினார் பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப் பொன்னிப் பாலைத் துறையரே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.4.5) பூதங்கள் வீணை தாளம் குடமுழவம் ஆகிய கருவிகளை இயக்க, அதற்கு ஏற்ப சிவபெருமான் நடனம் ஆடுகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஒழியாமே=இடைவிடாது: தொண்டை=கோவைக் காய்; அந்தடக்கை=அம்+தடம்+கை=அழகிய நீண்ட கை; இந்த பாடலில் அப்பர் பிரான் பெருமான் ஆடும் கூத்தினை, மேம்பட்ட கூத்து என்ற பொருளில் மாக்கூத்து என்று கூறுகின்றார். ஐந்து தொழில்களையும் புரிந்த வண்ணம் ஆடும் கூத்து என்பதால் மேம்பட்ட கூத்து என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஒரு செயலைச் செய்து கொண்டே ஆடினால் அதற்கு தாண்டவம் என்று பெயர். இங்கு கூத்தன், ஒரு செயலை அல்ல ஐந்து செயல்களையும் ஒரே சமயத்தில் செய்து கொண்டு ஆடுவதாக கூறப்படுகின்றது. அவையாவன, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல் ஆகும். ஐந்து தொழில்களை செய்து கொண்டு ஆடும் ஆட்டம், அனைவருக்கும் ஆனந்தம் தருவதால் ஆனந்த தாண்டவம் எனப்படுகின்றது. நாதத்திலிருந்து படைப்பு தோன்றியதாக ஐதீகம். நாதம் எழுப்பும் உடுக்கை படைப்பு தொழிலையும், அபய ஹஸ்தம் காட்டும் வலது கரம் காக்கும் தொழிலையும், கையில் ஏந்திய தீச் சுடர் அழிக்கும் தொழிலையும் முயலகன் மேல் ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலையும் தூக்கிய திருவடி அருளும் தொழிலையும் குறிப்பதாக கூறுவர். இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் குழல், கொக்கரை, கைத்தாளம், மொந்தை ஆகிய இசைக் கருவிகள் குறிப்பிடப் படுகின்றன.
பாடுமே ஒழியாமே நால் வேதம்மும் படர்சடை மேல் ஒளி திகழப் பனி வெண் திங்கள்
சூடுமே அரை திகழத் தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமையோர் பாகம்
கூடுமே குடமுழவம் வீணை தாளம் குறுநடைய சிறு பூதம் முழக்க மாக் கூத்து
ஆடுமே அந்தடக்கை அனல் ஏந்துமே அவனாகில் அதிகை வீரட்டனாமே
ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.9.10) அப்பர் பிரான், பெருமானை கொடுகொட்டி தாளம் உடையார் என்று குறிப்பிடுகின்றார். மழுங்கலா=ஒளி குறையாத; அழுங்கினார்=துன்பப்பட்டு தம்மை அடைந்தவர்; குவளைக் கோதை=குவளை மலரால் ஆகிய மாலையணிந்த உமையம்மை; ஐயுறவு=ஐயம், சந்தேகம், துன்பத்தை களைவாரோ, மாட்டாரோ என்ற ஐயம். கொடுகொட்டி=பறை போன்ற ஒரு வித தோல் கருவி; மிழலை மேய மணாளர்=திருமணக் கோலத்தில் காட்சி அளிப்பவர்; வீழிமிழலையில் வாழ்ந்து வந்த காத்யாயனர் என்ற முனிவர், இறைவனை வேண்டி ஒரு பெண் மகவு பெற்றார். பார்வதி தேவியே குழந்தை வடிவம் எடுத்த அந்த குழந்தை, காத்யாயனி என்ற பெயரில் வளர்க்கப் பட்டது. மணப்பருவம் எய்திய அந்த குழந்தை, சிவபிரானையே மணவாளனாக அடைய வேண்டும் என்று முனிவர் விரும்பினார். ஒரு நாள் சிவபிரான், முனிவரின் இல்லத்திற்கு வந்து, அவரது பெண்ணைத் தனக்கு மணமுடித்துத் தருமாறு வேண்ட முனிவர், வந்தவரை தனது அடையாளம் காட்டுமாறு வேண்டினார். வந்தவர், திருமால் தன்னை வழிபட்டபோது சமர்ப்பித்த கண்ணினைக் காட்ட, வந்தவர் சிவபிரான் தான் என்பதை உணர்த்த முனிவர், மிகவும் மகிழ்ந்து தனது பெண்ணை அவருக்கு மணமுடித்து வைத்தார். இதனால் இந்த தலம் திருமணத் தலம் என்று கருதப்படுகின்றது. மகா மண்டபத்தில் இருக்கும் கல்யாண சுந்தரர் சன்னதியில் சிவபிரான் மணக்கோலத்தில், கையில் ஒரு மலரினை ஏந்தி இருப்பதை காணலாம். இந்த நிகழ்ச்சியை உணர்த்தும் வண்ணம், அப்பர் பிரான் மிழலை மேய மணாளர் என்று இங்கே கூறுகின்றார். இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில் தனது வருத்தத்தைத் தெரிவித்த அப்பர் நாயகி (தன்னை சிவபிரான் பால் காதல் கொண்ட ஒரு பெண்மணியாக உருவகித்து, தனது ஏக்கத்தை வெளிப்படுத்திய அப்பர் பிரான்), தனது வருத்தத்தை சிவபிரான் தீர்ப்பார் எனும் நம்பிக்கையை தெரிவிக்கும் முகமாக அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் என்று குறிப்பிட்டு, தன்னை தேற்றிக் கொள்வதை நாம் உணரலாம். இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் பெருமான் வீணை மற்றும் கொடுகொட்டி ஆகிய இசைக் கருவிகளை வாசிப்பதாக கூறுகின்றார்.
மழுங்கலா நீறாடும் மார்பர் போலும் மணிமிழலை மேய மணாளர் போலும்
கொழுங்குவளைக் கோதைக்கு இறைவர்போலும் கொடுகொட்டி தாளம் உடையார் போலும்
செழுங்கயிலாயத்து எம் செல்வர் போலும் தென்னதிகை வீரட்டம் சேர்ந்தார் போலும்
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே
ஒளி மழுங்காது வெள்ளி மணியை நிறத்தினில் ஒத்த திருநீற்றினைத் தனது மார்பில் அணிந்தவர், அழகிய திருவீழிமிழலையில் திருமணக் கோலத்தில் விளங்குபவர், செழுமையான குவளை மலர் மாலை அணிந்த உமையம்மைக்குத் தலைவர், தனது ஆடலுக்கு ஏற்ப தாளம் இசைக்கும் கொடுகொட்டி என்ற இசைக் கருவியை உடையவர், கயிலாயத்தில் உள்ள எம் செல்வர், தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் திருவதிகை வீரட்டானத்தில் உறைபவர், தன்னை நினைந்து வருந்தும் அடியார்கள், சிவபிரான் தங்களது இடர்களைத் தீர்ப்பாரோ அல்லரோ என்ற சந்தேகம் ஏதும் கொள்ளாத வகையில் அவர்களது இடர்களைக் களையக் கூடியவர், ஆமாத்தூர் தலத்தில் உறையும் எங்கள் தலைவர் சிவபிரான் மிகவும் அழகியவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.10.2) அப்பர் பிரான், பிடவம் மொந்தை குடமுழவம் கொடுகொட்டி குழல் ஆகிய இசைக் கருவிகள் முழங்கும் பின்னணியில் பாடிக் கொண்டே நடனம் ஆடும் வல்லமை படைத்தவர் பெருமான் என்று கூறுகின்றார். கருதாதார்=தனக்கு உகந்த உறைவிடமாக கருதார்; களிறு=ஆண் யானை: மெய்=உடல்; கலன்= உண்ணும் பாத்திரம்; செறுபகை=உட்பகைகள். காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய ஆறும் மனிதனின் உட்பகைகளாக கருதப் படுகின்றன. காமம் என்பது ஒரு பொருளின் மீது வைக்கும் அளவு கடந்த ஆசை. அந்த ஆசை நிறைவேறுவதற்காக நாம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு, விரும்பிய பொருளை அடைய விரும்பி, பல தவறுகள் செய்கின்றோம். குரோதம் என்றால் கோபம், நாம் விரும்பிய பொருளை அடைவதில் நமக்குத் தடையாக இருப்பவர் மீது நமக்கு ஏற்படும் தீராத கோபம், அவர்களை நமது எதிரிகளாக கருதி அவர்களை அழிக்க நம்மைத் தூண்டுகின்றது. மோகம் என்பது நமது தகுதிக்கு மீறிய பொருள் மீது கொண்டுள்ள ஆசை.; உலோபம் என்றால் கஞ்சத் தனம்; மதம் என்றால் கர்வம், செருக்கு. நமது வலிமையின் மீது செருக்கு கொண்டு, எவரும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் பல தவறுகள் செய்கின்றோம். மாற்சரியம்=பொறாமை. அடுத்தவரின் நிலை கருதி பொறாமை கொண்டு, அவரை எப்படியேனும் வீழ்த்த நினைத்து தவறுகள் செய்கின்றோம். எனவே இந்த ஆறு உட்பகைகளை வென்றால், நாம் பல தவறுகளை தவிர்த்து உயர்ந்த நிலையை அடையலாம். இந்த பகைகளை ஒழிப்பதற்கு நமக்கு இறையருள் கூட வேண்டும் என்பதால் நாம் இறைவனைத் தொழவேண்டும் என்பதை உணர்த்தவே, அப்பர் பிரான் இங்கே தனது நெற்றிக் கண்ணால் பெருமான் இந்த பகைகளை அழிப்பார் என்று கூறுகின்றார். பீடுலாம்=வலிமையை கெடுத்தல்; பிடவம், மொந்தை, குடமுழவம், கொடுகொட்டி, குழல் ஆகியவை பல வகையான இசைக் கருவிகள். குடமுழவம்=குடத்தின் வடிவத்தில் அமைந்த முழவு இசைக் கருவி; முழவு=மத்தளம் போன்று அமைந்த இசைக் கருவி; கொடுகொட்டி=கிடுகிட்டி என்று இப்போது அழைக்கப்படும் தோற்பறை; மொந்தை=பறை; ஒற்றியூர்=அடமானம் வைக்கப்பட்ட ஊர். இந்த பாடலில், பெருமான் எவ்வாறு மற்றவர்கள் ஒதுக்கும் பொருட்களை ஏற்றுக் கொண்டு இருப்பதை உணர்த்தும் அப்பர் பிரானுக்கு, பெருமானின் வல்லமையில், திறமையில், பெருமையில் நமக்கு ஐயம் ஏற்படுமோ என்ற அச்சம் தோன்றியது போலும். பாடலின் கடைப் பகுதியில், நமது பிணிகளையும் உட்பகைகளையும் தீர்க்க வல்லவர் என்றும், பல விதமான இசைக் கருவிகளின் இசைக்கு ஏற்ப நடமாடும் திறமை கொண்டவர் என்றும் கூறுகின்றார். பீடு=பெருமை பீடுலாம் தனை=பெருமை உடைய செயல்களை
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்றுரிவை மெய் போர்த்தார் கலனதாக
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறுபிணியும் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
பீடு உலாம் தனை செய்வார் பிடவ மொந்தை குடமுழவம் கொடுகொட்டி குழலுமோங்கப்
பாடலார் ஆடலார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே
சுடுகாடு அல்லாமல் தனது உறைவிடமாக வேறு எந்த இடத்தையும் கருதாத பெருமானார், தனக்கு உணவாக பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டார். மதங்கொண்ட யானையின் தோலைப் போர்த்துக் கொள்வது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதையும் கருத்தில் கொள்ளாமல். தன்னை நோக்கி வெறியுடன் வந்த யானையின் தோலை உரித்து போர்த்துக் கொண்டார். அவர் தனது கையில் உண்கலனாக வைத்திருப்பது மண்டையோடு. அடமானம் வைக்கப்பட்ட ஒற்றியூர் தான் அவர் மிகவும் உகந்து தங்கும் ஊர். ஆனால் இவ்வாறு, மற்றவர்களால் தவிர்க்கப்பட்ட பொருட்களை ஏற்றுக் கொள்ளும் பெருமான், அடியார்களின் பிணிகளையும், உட்பகைகளாக விளங்கும் காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய ஆறு தீய குணங்களை நீக்கி அடியார்கள் தவறான வழியில் செல்லாதவாறு பாதுகாக்கும் பெருமானாகவும் விளங்கி, பெருமை உடைய பல செயல்களை செய்கின்றார். பிடவம், மொந்தை, குடமுழவம், கொடுகொட்டி ஆகிய இசைக் கருவிகள் பேய்க் கணங்களால் இசைக்கப்பட, அந்த இசைக்கு ஏற்ப பாடிக் கொண்டே ஆடும் திறமை உடையவராக உள்ளார். அவர் பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்றவராய், பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். அவர் தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.
புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.̀13.8) அப்பர் பிரான் கொக்கரை மற்றும் கொடுகொட்டி வாத்தியங்களை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமான் ஓரிடத்தில் தங்காமல் பல இடங்களுக்கும் சென்றதாக கூறும் அப்பர் பிரான், இந்த பாடலில் நில்லாதே பல்லூரும் சென்று பலி வேண்டினார் என்று கூறுகின்றார். நிரை வளையார்=கைகளில் வளையல்களை வரிசையாகவும் நிறைவாகவும் அணிந்த மகளிர்; தனது அழகினால், மொழியின் இனிமையால் பல மகளிரது மனதினைக் கவர்ந்த பெருமானை பொல்லாத வேடத்தர் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பெருமான் தாருகாவனம் சென்று ஆங்கிருந்த முனிவர்களின் மனைவியர் கற்பினை அழித்த திறம் கூறப் படுகின்றது. பண்டைய நாளில். தனது கணவன் அல்லாத வேற்று ஆடவனின் அழகினை நினைத்து மயங்கினால், கற்பு நிலையிலிருந்து தவறியதாக கருதப்பட்டது. தாருகவனத்து முனிவர்களின் மனைவிகள், பிச்சை ஏற்றுக்கொள்ள வந்த பிச்சைப் பெருமானின் அழகில் மயங்கி, தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டு, தங்களது உடைகள் நழுவுவதையும் உணராதவர்களாக பெருமானின் பின்னே சென்றதை, அந்த பெண்களின் கற்பினை பெருமான் அழித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த நிகழ்ச்சி இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. நல்லாள்=நல்ல ஆட்கள்
நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி நிரைவளையார் பலி பெய்ய நிறையும் கொண்டு
கொல்லேறும் கொக்கரையும் கொடுகொட்டியும் குடமூக்கில் அங்கொழியக் குளிர் தண் பொய்கை
நல்லாளை நல்லூரே தவிரேன் என்று நறையூரில் தாமும் தவிர்வார் போலப்
பொல்லாத வேடத்தர் பூதம் சூழப் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே
ஓரிடத்தில் நில்லாது பல ஊர்களுக்கும், பிச்சை எடுக்கச் சென்ற பெருமான், வரிசையாக வளையல்களை தங்களது கையில் அணிந்த தாருகவனத்து மகளிர்கள் இட்ட பிச்சையை ஏற்றுக் கொண்டதும் அன்றி, தனது அழகால் அவர்களை மயக்கி அவர்களது கற்பினையும் கவர்ந்து கொண்டார்; தனது வாகனமாக கொலைத் தொழில் புரியும் காளையைக் கொண்டுள்ள பெருமான், தான் பயன்படுத்தும் கொக்கரை கொடுகொட்டி ஆகிய இசைக் கருவிகளை குடந்தை தலத்தில் விட்டுவிட்டு நல்லூர் சென்றார். குளிர்ந்த பொய்கைகளும் நல்ல ஆடவர்களையும் உடைய நல்லூர் மற்றும் நறையூர் ஆகிய தலங்களிலிருந்து நீங்காமல் இருப்பேன் என்று கூறினாலும், தன்னைக் காணும் மகளிரின் கருத்தைக் கவரும் வண்ணம் அழகாக விளங்கிய பொல்லாத வேடத்தை உடைய பெருமான், மேற்கூறிய தலங்களில் தங்காமல், பூதங்கள் தன்னை பின்தொடர்ந்து சூழ்ந்து வர புறம்பயம் தனது ஊர் என்று சொல்லிக் கொண்டு ஆங்கே சென்று விட்டார். அவ்வாறு புறம்பயம் சென்ற பெருமான் என்னுடைய உள்ளத்தையும் கவர்ந்து சென்று விட்டார் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை ஆகும். இந்த பாடல் அப்பர் நாயகியின் கூற்றாக அமைந்த அகத்துறை பாடல்;
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.29.1) அப்பர் பிரான், பெருமானை பூத கணங்களால் இயக்கப்படும் குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரை சச்சரி ஆகிய இசைக் கருவிகளுக்கு ஏற்ப நடனம் ஆடுபவன் என்று குறிப்பிடுகின்றார். திருமணி=செல்வம் தரும் சிந்தாமணி; குருமணி=ஆசிரியர்களில் மணி போன்று உயர்ந்த நிலையில் உள்ளவன்; பெருமானின் அரிய தன்மையை உணர்த்தும் வண்ணம், பவளம், பருமணி, பசும்பொன், முத்து, சிறந்த நகை, மாணிக்கம் ஆகிய பொருட்கள் பெருமானுக்கு அடைமொழிகளாக இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றன. குருமணி என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு மணிவாசகர் அருளிய சிவபுராணத்தின் வரிகளை நினைவூட்டுகின்றது. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க என்று மணிவாசகர் கூறுகின்றார். தாங்கள் விரும்பும் சிறந்த செல்வமாக முக்திச் செல்வத்தை அருளும் வல்லமை பெற்றவன் என்பதால் சிந்தாமணியாக அடியார்களால் கருதப் படுபவனும், மேற்குறித்த பண்பினால் அடியார்களுக்கு இனிக்கும் தேனாகவும், பாலாகவும் சுவை மிகுந்தும் தெளிந்தும் உள்ள கருப்பஞ்சாறாகவும் விளங்குபவனும், ஆசிரியர்களில் மணி போன்று சிறந்த குருவாக விளங்குபவனும், பூத கணங்களால் இயக்கப்படும் குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரை சச்சரி ஆகிய இசைக் கருவிகளுக்கு ஏற்ப நடனம் ஆடுபவனும், பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களின் இடையே பெரிய இரத்தினம் போன்று திகழ்பவனும், பவளம் போன்ற மேனியை உடையவனும், பசும்பொன் போன்றும் முத்து போன்றும் கிடைத்தற்கு அரிய பொருளாக உள்ளவனும், பருப்பதம் எனப்படும் தலத்தில் வீற்றிருக்கும் கிடைத்தற்கரிய அணிகலனாக உள்ளவனும், அடியார்களின் பாவங்களை போக்கும் அரிய மாணிக்கமாக திகழ்பவனும் ஆகிய ஆரூர் பெருமானை அறியாது, அவனை மறந்து நாயினும் கீழான அடியேன் எனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்தது மிகவும் வருந்தத்தக்க செயலாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் அப்பர் பிரான் கொடுகொட்டி கருவியை குறிப்பிடுகின்றார்.
திருமணியைத் தித்திக்கும் தேனைப் பாலைத் தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறல்
குருமணியைக் குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானைப்
பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப் பருப்பதத்தில் அருங்கலத்தைப் பாவம் தீர்க்கும்
அருமணியை ஆரூரில் அம்மான் தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.35.2) ஊழிக்காலத்தில், வீணை வாசித்துக் கொண்டே வேத கீதங்கள் இசைப்பார் என்று கூறுகின்றார். இந்த பாடல் பெருமானின் திருவடிச் சிறப்பினை எடுத்துரைக்கும் பாடலாகும். சிவபெருமானின் திருவருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், நாம் அவனது திருவடிகளை கெட்டியாக பற்றிக் கொள்ள வேண்டும். இந்த பாடலில் ஏகபாதர் என்று இறைவனின் இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களில் ஒன்று குறிப்பிடப் படுகின்றது. இந்த மூர்த்தங்கள் இறைவனின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவை என்று கூறுவார்கள். சோமாஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர் மற்றும் நடராஜர் என்பன ஈசான முகத்திலிருந்து தோன்றியவை; தத்புருட முகத்திலிருந்து தோன்றியவை, பிக்ஷாடனர், காமாரி (காமனை அழித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), ஜலந்தராரி (ஜலந்தரனை அழித்தவர்), திரிபுராரி (திரிபுரங்களை அழித்தவர்) ஆகும். சத்யோஜாதம் முகத்திலிருந்து தோன்றியவை, இலிங்கோத்பவர், சுகாசனர், உமாமகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), மற்றும் அர்த்த நாரீஸ்வரர் ஆகும். அகோரம் முகத்திலிருந்து தோன்றியவை, கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (பாசுபத மூர்த்தி) மற்றும் நீலகண்டர். வாமதேவம் முகத்திலிருந்து தோன்றியவை, கங்காளர், சக்ரதானர், கஜமுகானுக்ரகர் (ஐராவதத்திற்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுக்ரகர் மற்றும் ஏகபாதர் ஆகும். முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றை கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில், மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை, இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் பிரிவது போல் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. இந்த சிற்பத்தில், அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம். பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் ஆனைக்காவிலும் உள்ளது. கடல்கள் அனைத்தும் பொங்கி உலகங்களை மூடும் காலத்தில், பிரமன் வாழும் சத்திய லோகமும் கடலினால் முழுவதும் மூடப்பட பிரமனும் அப்போது அழிவான். அவ்வாறு இறந்த பிரமனது உடலினையும், அதே சமயத்தில் இறக்கும், கடல் வண்ணனாகிய திருமாலின் உடலையும், தான் சுமந்து கொண்டு கங்காள வேடத்தில் சிவபெருமான் காட்சி அளிப்பார். ஒடுங்கிய உலகத்தினை மறுபடியும் தோற்றுவித்து, உயிர்கள் தங்களது வினைத் தொகுதிகளைக் கழித்துக் கொள்வதற்கு ஏதுவாக, ஒடுங்கிய உலகினை மறுபடியும் தோற்றுவிக்கும் எண்ணத்துடன், சிவபெருமான் வீணை வாசித்தவாறு இருப்பார் என்பதே இந்த பாடலின் கருத்தாகும். வீணையிலிருந்து பிறக்கும் நாதம் தான் ஆகாயத்தின் பண்பாகும். ஆகாயத்திலிருந்து மற்ற பூதங்களும், பின்னர் ஐந்து பூதங்களின் கலவையாகிய உலகமும். உலகப் பொருட்களும். உயிர்கள் சென்றடையும் உடல்களும் உண்டாகின்றன. தரித்தல்=மனதினில் நினைத்தல்: ஏதம்=துன்பம்: ஓதம்=கடலலைகள் எழுப்பும் ஒலி; ஊர் உண்டு=பல ஊர்கள் அடங்கிய உலகத்தினை விழுங்கி; உலகமும் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கிய பின்னரும் தான் ஒடுங்காது இருக்கும் இறைவனின் தன்மை, மற்றவரிடமிருந்து மாறுபட்டது என்பதால், மிகவும் பொருத்தமாக விகிர்தனார் என்று இறைவன் அழைக்கப் படுகின்றார். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் அப்பர் பிரான் கொடுகொட்டி கருவியை குறிப்பிடுகின்றார்.
பாதம் தரிப்பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழுருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர் ஏழுலகுமாய் நின்ற ஏக பாதர்
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டேறி ஒத்து உலகமெல்லாம் ஒடுங்கிய பின்
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே
தனது திருவடிகளை மனதினில் நிலைநிறுத்தும் அடியார்களுக்கு, திருவடி தீட்சை தந்து உய்விக்கும் பாதங்கள் பெருமானின் பாதங்கள். இந்த பாதங்களின் அடியினை எவரும் அறிய முடியாதபடி ஏழு பாதாளங்களையும் கடந்து ஊடுருவிச் செல்லும் பாதங்கள்; யார்க்கும் தீங்கு ஏற்படாவண்ணம் உள்ள இந்த பாதங்கள், ஏழ் உலகங்களாகவும் இருக்கும் இந்த பாதங்கள், ஏகபாத திரிமூர்த்தியாக விளங்கும் பெருமானின் பாதங்களாகும். கடலிலிருந்து பொங்கி வரும் ஊழி வெள்ளத்தின் ஒலி அனைத்து உலகங்களையும் மூழ்குவித்த பின்னர் அடங்குகின்றது, அந்த சமயத்தில், வேதங்களில் உள்ள சொற்களை வீணையில் இசைத்து அந்த நாதத்தை கேட்டு மகிழ்பவர் பெருமானவார். இவ்வாறு இருக்கும் தன்மையால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு விகிர்தராய் காணப்படும் பெருமான் திருவெண்காடு தலத்தில் பொருந்தி விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.
மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.40.2) அப்பர் பிரான் குழல், மொந்தை, வீணை, யாழ் ஆகிய இசைக் கருவிகளை கந்தருவர் இயக்கி பெருமானைப் புகழ்ந்து பாடுவதாக கூறுகின்றார். அறை=ஓசை; அரசனுக்கு கட்டியம் கூறி, வாழ்த்துகள் பாடி, நறுமணம் மிகுந்த மலர்கள் தூவி, இசைக்கருவிகள் இசைத்து, வேத மந்திரங்களை சொல்லி, நறுமணப் பொடிகள் கலந்த நீர் கொண்டு அவனை நீராட்டுவது வழக்கம். இறைவனது அருளால் வானாளும் பேறு பெறுகின்ற அடியார்களும் அத்தகைய சிறப்பினை பெறுவார்கள் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அந்தரம்=வானுலகம்; கறை=இருள்; கலி=ஆரவாரம்;
அறைகலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தில் கந்தருவர் அமரர் ஏத்த
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆளக் கொடுத்தி அன்றே
கறை கலந்த பொழில் கச்சிக் கம்பம் மேய கனவயிரத் திரள் தூணே கலிசூழ் மாட
மறை கலந்த மழபாடி வயிரத் தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே
கோகர்ணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.4) அப்பர் பிரான், கொக்கரையன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். நிருபன்=தலைவன், அரசன்; நிழல்=ஒளி; மாறு=பகை; மாறுபட்டு, ஆகமக் கொள்கையிலிருந்து மாறுபட்டு வாழ்ந்தவர்கள்; கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றவனும், ஆரூரனாக திருவாரூர் நகரத்தில் உறைபவனும், அடியார்கள் பால் அன்பு செலுத்துபவனும், அழகான திருப்பழனம் தலத்தில் உறைபவனும், திருநீற்றினை உடலில் பூசிக்கொண்டு ஒளி திகழும் மேனியனாக விளங்குபவனும், அனைவர்க்கும் தலைவனாக இருப்பவனும், தனக்கு ஒப்பாக வேறொருவர் இல்லாதவனும், எந்த பொருளையும் பிளவுபடுத்த வல்ல கூர்மையினை உடைய மழுப்படையினை ஏந்தியவனும், கொக்கரை எனப்படும் இசைக் கருவியை வாசிப்பவனும், சிறந்த பூத கணங்களை வைத்திருப்பவனும், ஆகம கொள்கையிலிருந்து மாறுபட்டு பகைமையுடன் விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்தவனும் ஆகிய பெருமான், பெரிய கடல் சூழ்ந்த கோகர்ணம் தலத்தில் மிகுந்த விருப்பமுடன் எழுந்தருளியுள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஆறேறு செஞ்சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான் தான் காண்
நீறேறு நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகரொன்றும் இல்லாதான் காண்
கூறேறு கொடு மழுவாட் படையினான் காண் கொக்கரையன் காண் குழுநல் பூதத்தான் காண்
மாறாய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே
திருக்கற்குடி (தற்போதைய பெயர் உய்யக்கொண்டான் மலை) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.8) அப்பர் பிரான்,பெருமானை குழல் மற்றும் முழவம் ஆகிய கருவிகளின் இசைக்கு ஏற்றவாறு நடனமாடும் வல்லமை பெற்றவன் என்று கூறுகின்றார். கூத்தாட வல்ல கானவன் என்று இறைவன் சுடுகாட்டில் நடனம் ஆடுவதை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். எனவே குழலும் முழவும் பூதகணங்களால் இசைக்கப் படுகின்றன என்று நாம் கருத வேண்டும். மருவி= விருப்பத்துடன் கலந்து; கழல் என்பது இங்கே கழல் அணிந்த பாதங்களை குறிப்பிடுகின்றது. பல செயல்களை ஒருசேர செய்ய வல்லவன் இறைவன். அவ்வாறு பல செயல்களை செய்த போதிலும் அனைத்துச் செயல்களிலும் வெற்றி காண்கின்ற தலைவனாக இறைவன் உள்ள தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. கொல்லை=முல்லை நிலம்;
வானவனை வானவர்க்கு மேலானானை வணங்கும் அடியார் மனத்துள் மருவிப் புக்க
தேனவனைத் தேவர் தொழு கழலான் தன்னைச் செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனைக் கொல்லை விடை ஏற்றினானைக் குழல் முழவம் இயம்பக் கூத்தாட வல்ல
கானவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.74.7) அப்பர் பிரான், பெருமானை, கொக்கரை சச்சரி மற்றும் வீணை ஆகிய கருவிகளை உடையவன் என்று குறிப்பிடுகின்றார். பாணி=கையில் ஏந்தியவன்; கோதண்டபாணி, தண்டபாணி, பினாகபாணி என்ற பெயர்கள் நமது நினைவுக்கு வருகின்றன. இந்த பாடலில் முருகன் மற்றும் விநாயகர் ஆகிய இருவரும் குறிப்பிடப் படுகின்றார்கள். பல திருமுறைப் பாடல்களில் முருகன் மற்றும் விநாயகர் பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும், இவர்கள் இருவரும் ஓரே பாடலில் இடம் பெறுவது அரிதாகும். அத்தகைய தேவாரப் பாடல்கள், கீழ்க்கண்ட பாடலைத் தவிர்த்து ஐந்து பாடல்கள் உள்ளன. தன்னை மதிக்காது தக்கன் செய்த வேள்வி முற்றுப் பெறாதவாறு அதனை அழித்த வல்லமை உடையவன் சிவபெருமான். பிரமனது தலையினைத் தனது உண்கலனாக ஏற்று ஊரெங்கும் திரிந்து பலி ஏற்கும் தலைவன் சிவபெருமான்; கொக்கரை, சச்சரி, வீணை ஆகிய இசைக் கருவிகளை வாசிக்கும் கருத்தினை உடையவன் சிவபெருமான்; உயிரினை கொல்லும் விடத்தினை உடைய நாகத்தினை ஆபரணமாக அணிந்தவன் சிவபெருமான்; உருத்திராக்க மணிகளையும் எலும்பினையும் மாலையாக அணிந்து அழகாக விளங்குபவன் சிவபெருமான்: ஆறுமுகனுக்கும் ஆனைமுகனுக்கும் தந்தையாகத் திகழ்பவன் சிவபெருமான்: குறைந்த ஆடைகளுடன் காணப்படும் அவன், வக்கரை மற்றும் நள்ளாறு தலங்களில் உறைகின்றான். இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தக்கனது வேள்வி கெடச் சாடினானைத் தலை கலனாப் பலியேற்ற தலைவன் தன்னை
கொக்கரைச் சச்சரி வீணைப் பாணியானைக் கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன் தன்னை
நக்கனைக் வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
திருவாய்மூர் தலத்திற்கு அப்பர் பிரான் சென்றபோது, சிவபெருமான் அவருக்கும் அவரது அருகில் இருந்த திருஞான சம்பந்தருக்கும் தனது நடனக் காட்சியை காட்டி அருள் புரிகின்றார். அந்த நடனக் காட்சியை அப்பர் பிரான் ஒரு பதிகமாக (6.77) பதிவு செய்கின்றார். இந்த பதிகத்தின் ஏழாவது பாடலில், தான் அந்த நடனக் காட்சியில் கண்ட இசைக் கருவிகள் பலவற்றைச் சுட்டிக் காட்டுகின்றார். மழை=மழை தரும் மேகம்; பெருமான் தனது மார்பினில் பூணூலை வலத்தே அணிந்துள்ளதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். மங்கல நாட்களில் பூணூல் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வரை வருமாறு, மார்பின் குறுக்கே அணியவேண்டும். பெருமானுக்கு அனைத்து நாட்களும் மங்கல நாட்கள் என்பதால், என்றுமே ஒரே விதமாக பெருமான் பூணூல் அணிந்துள்ள நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தன்மை=மற்றவர் வகுத்த வழியின் கண் செல்லாது, தான் செல்ல வேண்டிய பாதையைத் தானே வகுத்துக் கொண்டுள்ள தன்மை; அனைவர்க்கும் பெரியோனாகத் திகழும் பெருமான், எவரையும் முன்மாதிரியாக கொண்டு பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. இந்த குணத்தையே தன்வயத்தன் என்று சைவ சித்தாந்த நூல்கள் குறிப்பிடுகின்றன.
குழை ஆர் திருத்தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்
இழை ஆர் புரிநூல் வலத்தே கண்டேன் ஏழிசை யாழ் வீணை முரலக் கண்டேன்
தழையார் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்
மழை ஆர் திருமிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
தனது வலது காதினில் குழை ஆபரணத்தையும் இடது காதினில் தோடும் அணிந்தவராக பெருமான் காட்சி தந்ததைக் கண்டேன்; கொக்கரை மற்றும் சச்சரி ஆகிய இசைக் கருவிகளை பெருமான் வாசிக்கும் திறமையைக் கண்டேன்; இழைகள் பொருந்தி முறுக்கப்பட்ட பூணூலை எப்போதும் மங்கலமான முறையில், இடமிருந்து வலம் வரும் முறையில் பெருமான் அணிந்துள்ள தோற்றத்தைக் கண்டேன்; ஏழிசையினை வெளிப்படுத்தும் வீணையை பெருமானை ஒலிப்பதைக் கண்டேன்; தழைந்து தொங்கும் சடையையும், தக்கை தாளம் ஆகிய இசைக் கருவிகளை முழக்கியவராக இருக்கும் நிலையையும், மழை பொழியும் மேகத்தின் நிறத்தில் பெருமான் கழுத்து தோன்றுவதை அடியேன் கண்டேன். மேலும், ஏனையோர் வகுத்த வழியின் கண் செல்லாமல், தன்வயத்தனாக பெருமான் உள்ள தன்மையையும் அடியேன், வாய்மூர் திருத்தலத்தில் பெருமான் காட்சியளித்த போது கண்டேன் என்பதாக அப்பர் பிரான் பட்டியல் இடும் பாடல் இந்த பாடல்.
ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (6.97.8) அப்பர் பிரான் பெருமானின் கைகளில், தான் கொடுகொட்டி இசைக் கருவியை கண்டதாக கூறுகின்றார். கையலகு=குறுவாள்; நெறி=வழி; போத=செல்ல:
நீறேறு திருமேனி நிகழக் கண்டேன் நீள்சடை மேல் நிறை கங்கை ஏறக் கண்டேன்
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக்கண்டேன் கொடுகொட்டி கையலகு கையில் கண்டேன்
ஆறேறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதமாகக் கண்டேன்
ஏறேறி இந்நெறியே போதக் கண்டேன் இவ்வகை எம் பெருமானைக் கண்டவாறே
சுந்தரர் ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (7.33.5) வீணை தான் பெருமானின் திருக்கரத்தில் இருக்கும் இசைக் கருவி என்று கூறுகின்றார். கொடுகொட்டி=பெருமான் ஆடும் ஒரு வகைக் கூத்தின் பெயர்.
கோணல் மாமதி சூடரோ கொடுகொட்டி காலோர் கழலரோ
வீணை தான் அவர் கருவியோ விடையேறு வேத முதல்வரோ
நாணதாக ஓர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ நலமார் தர
ஆணையாக நம் அடிகளோ நமக்கு அடிகளாகிய அடிகளே
பைஞ்ஞீலி தலத்தின் மீது பாடிய பாடல் ஒன்றினில் (7.36.9), சுந்தரர் பல இசைக் கருவிகளை குறிப்பிட்டு, அவற்றை இயக்கும் திறமை உடையவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பல இசைக் கருவிகளை இசைக்க வல்லவராக இருக்கும் பெருமான், நாட்டியம் ஆடிக்கொண்டு பலியேற்கும் நோக்கத்துடன் பல இல்லங்கள் செல்லும் போது, நல்ல ஆடையையும் அணிகலனையும் அணியாது எலும்பு மாலையையும் ஆமை ஓட்டினையும் அணிந்து செல்வது பொருத்தமா என்று கேட்கும் பாடல். தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி, சங்கு, குடமுழா என்பன இந்த பாடலில் குறிப்பிடப்படும் இசைக் கருவிகள்.
தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சங்கிணை சல்லரி
கொக்கரை குடமுழவின் ஓசை கூடி பாடி நின்று ஆடுவீர்
பக்கமே குயில் பாடும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிறால்
அக்கும் ஆமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே
வெஞ்சமாக்கூடல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.42.9) சுந்தரர், பெருமானை கொடுகொட்டி மற்றும் வீணை இசைக் கருவிகள் உடையவன் என்று குறிப்பிடுகின்றார். கொன்றையம்=அழகிய கொன்றை மலர் தார்=மாலை; தாரவன்=மாலையை அணிந்தவன்; பொதியும்=பொதிந்துள்ள, நிறைந்த: புனம்=காடு; துங்கார் புனல்=உயர்ந்த ஆறு; மண்டி=மோதும்; பெய்து கொண்டு=அடித்துக் கொண்டு வரும்; விகிர்தன்=மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவன்; இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அடியேனையும் வேண்டுதியே என்று சுந்தரர் கூறுகின்றார். இந்த தொடர் மூலம், தன்னையும் பெருமான் தனது சிறந்த அடியார்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டு அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார்.
கொங்கார் மலர்க் கொன்றையம் தாரவனே கொடுகொட்டி ஓர் வீணை உடையவனே
பொங்கு ஆடரவம் புனலும் சடைமேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகார்
துங்கார் புனலுட் பெய்து கொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரை மேல்
வெங்கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
திருமுருகன்பூண்டி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.49.9) சுந்தரர் அந்த தலத்தினை, இடைவிடாது மோந்தை முழங்கும் தலம் என்று குறிப்பிடுகின்றார். இந்த வாத்தியத்தை இடைவிடாது முழக்கியவாறு ஆரவாரம் செய்யும் வேடர்கள் நிறைந்த தலம் என்று உணர்த்துகின்றார். சாந்தம்=சந்தனம்; கண்ணி=தலையில் அணிந்து கொள்ளும் மாலை; பெருமான் தனது தலையில் சூட்டிக் கொண்டுள்ள ஒற்றைப் பிறைச் சந்திரனை, தலைமாலை என்று குறிப்பிடுகின்றார். மூட்டை மூட்டையாக சேர மன்னன் கொடுத்த பொன் மற்றும் பொருள்களுடன், திருவாரூர் செல்லும் வழியில், சுந்தரர் திருமுருகன்பூண்டி தலத்தின் அருகே வந்தார். இந்நாள் வரை சுந்தரருக்கு பொன்னும் பொருளும் தேவைப்பட்ட போதெல்லாம், தாமே கொடுத்து அருள் புரிந்த பெருமான், தன்னைத் தவிர வேறு எவரும் சுந்தரருக்கு உதவி புரிவதை பொறாதவராக ஒரு திருவிளையாடல் நடத்தினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். வேடுவர்கள் வடிவம் எடுத்த பூதகணங்கள் சுந்தரரை வழிமறித்து அவர் கொண்டு சென்ற பொன்னையும் பொருளையும் பிடுங்கிக் கொண்டன. இதனை அறியாத சுந்தரர், திருமுருகன்பூண்டி தலம் சென்று இறைவனிடம் முறையிட்ட வண்ணம் பாடிய பதிகம். வழிப்பறி நடக்கும் இடத்தில் தனது இளமையான மனைவியுடன் ஒருவன் வசிக்கின்றான் என்றால், அவனும் அந்த கூட்டத்தைச் சார்ந்தவனாக இருக்கின்றான் என்ற பொருளுடன், பெருமான் இருப்பதாக திரு சி,கே.சுப்ரமணியம் விளக்கம் அளிக்கின்றார். இந்த விளக்கத்திற்கு பதிலாக வேறொரு விளக்கமும் அளிக்கப் படுகின்றது. சுந்தரர் பெருமான் பால் தான் வைத்துள்ள அன்பின் மிகுதியால், பெருமானின் ஆற்றலை சற்று மறந்தவராக, பெருமானே வழிப்பறிக் கள்வர்கள் திரியும் இடத்தில், நீர் உமது மனைவியுடன் எதற்காக இருக்கின்றீர்கள் என்று கவலையுடன் வினாவுவதாகவும் பொருள் கொள்ளலாம். ஆனால் பல பாடல்களிலும், இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற பெருமானை சுந்தரர் புகழ்ந்து பாடுவதால், முந்தைய விளக்கம் பொருத்தமானதாக தோன்றுகின்றது.
சாந்தமாக வெண்ணீறு பூசி வெண் பற்றலை கலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர் பாகம் வைத்து உகந்தீர்
மோந்தையோடு முழக்கறா முருகன்பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே
திருமுருகன்பூண்டி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஆறாவது பாடலில் (7.49.6) சுந்தரர், பெருமானை, கொக்கரை குடமுழா, கொடுகொட்டி, துந்துமி, தத்தளகம் ஆகிய இசைக் கருவிகளிலிருந்து எழும் இசையோசையை பெரிதும் விரும்புவர் என்று கூறுகின்றார். விட்டிசைப்பன=தாளத்திற்கு ஏற்ப விட்டுவிட்டு இசைக்கும் கருவி,
விட்டிசைப்பன கொக்கரை கொடுகொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடும் இத்துந்துமியொடு குடமுழா மகிழ்வர்
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே
கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.53.4) சுந்தரர் பறை மற்றும் முழவம் ஆகிய கருவிகளை இயக்குவதையும் பெருமானின் புகழினைக் குறிப்பிடும் பாடல்கள் பாடுவதையும் தொடர்ந்து செய்யும் தொண்டர்கள் நிறைந்த கடவூர் மயானம் தலத்தினில் உறைகின்ற பெரிய பெருமான் அடிகள், தனது அடியார்கள் அனைவருக்கும் இல்லை என்னாது அருள் புரியும் தன்மை உடையவர் என்று கூறுகின்றார். ஐங்கணையான்=தாமரை, அசோகு, முல்லை, மா மற்றும் கருங்குவளை ஆகிய ஐந்து மலர்களை அம்புகளாக கொண்டு உயிர்களிடத்தில் காம இச்சையைத் தூண்டும் மன்மதன்; நறை=தேன்:
நறை சேர் மலர் ஐங்கணையானை நயனத் தீயால் பொடி செய்த
இறையார் அவர் எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்
பறையார் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே
திருஞானசம்பந்தருக்கு கோலக்கா தலத்தினில் பெருமான், தாளம் ஈந்த செய்தியை குறிப்பிடும் சுந்தரர் அருளிய கோலக்கா தலத்து பாடலை (7.62.8) இங்கே சிந்திப்பது பொருத்தமாக இருக்கும். சம்பந்தரை நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பியவர் என்றும் இந்த பாடலில் சுந்தரர் புகழ்கின்றார்.
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அம் கணன் தனை எண் கணம் இறைஞ்சும்
கோளிலிப் பெரும் கோயில் உளானைக் கோலக்காவினில் கண்டு கொண்டேனே
திருப்பனையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.87.8) சுந்தரர், பனையூர் தலத்தின் மாட மாளிகை கோபுரங்களில் முழவம் அதிர்கின்றன என்றும் யாழ் முரல்கின்றன என்றும் கூறுகின்றார். இந்த பின்னணியில் பெருமானை, விண்ணவரும் மண்ணவரும் தொழுகின்றனர் என்று கூறுகின்றார். பழனம்=வயல்கள்; பழன=வயல்கள் சூழ்ந்த;
மண்ணிலா முழவம் அதிர் தர மாட மாளிகை கோபுரத்தின் மேல்
பண்ணி யாழ் முரலும் பழனத் திருப்பனையூர்
வெண்ணிலாச் சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ
அண்ணலாகி நின்றார் அவரே அழகியரே
கருவூர்த்தேவர் தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.8.4) துந்துபி, குழல் யாழ், மொந்தை முதலிய கருவிகள் இசைக்கும் ஒலி வானளாவ கேட்பதாகவும் அந்த பின்னணியில் நந்திதேவர் வாசிக்கும் முழவத்தின் ஒலி இடி போன்று ஒலிக்க பெருமான் நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். இருடியர் கணம்=முனிவர்கள் கூட்டம். ரிஷி என்ற வடமொழிச் சொல் இருடி என்று தமிழாக்கப் பட்டுள்ளது. முகில் என்பதற்கு மேகத்துடன் இணைந்த இடி என்று பொருள் கொள்ள வேண்டும். மேகங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வதால் தானே இடி உண்டாகின்றது.
துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்பத் தொடர்ந்து இருடியர் கணம் துதிப்ப
நந்தி கை முழவம் முகிலென முழங்க நடம் புரி பரமர் தம் கோயில்
அந்தியின் மறை நான்கு ஆரணம் பொதிந்த அரும்பெறல் மறைப் பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே
கீழ்க்கோட்டூர் மணியம்பலம் தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.10.8) கருவூர்த் தேவர், கின்னரம் முழவம் யாழ் வீணை ஆகிய இசைக் கருவிகள் எழுப்பும் இசையொலியால் ஆரவாரத்துடன் காணப்படும் தலம் என்று குறிப்பிடுகின்றார். மைந்தன்= வல்லமை வாய்ந்த ஆண் மகன்; சிலம்பின் ஒலி, கங்கை நங்கையின் மொழி மற்றும் வீணையின் நாதம் ஆகியவற்றை மழலை மொழியின் இனிமைக்கு கருவூர்த் தேவர் ஒப்பிடுகின்றார். இன்னகை=இனிய சிரிப்பு; தமருகம் என்று பெருமான் தனது கையில் ஏந்தியிருக்கும் உடுக்கை கருவியும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது.
தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு
இன்னகை மழலை கங்கை கொங்கு இதழி இளம்பிறை குழை வளர் இளமான்
கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலை செய் கீழ்க்கோட்டூர்
மன்னவன் மணியம்பலத்துள் நின்றாடும் மைந்தன் என் மனத்துள் வைத்தனனே
திருவாலியமுதனார் தில்லைச் சிற்றம்பலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.24.4) பெருமான் ஆடும் நடனத்திற்கு ஏற்ப நந்தி மத்தளம் வாசிக்கின்றார் என்று கூறுகின்றார். சந்து=சந்தன மரக் கட்டைகள்; சாதி=சாதிக்காய்; தழைப் பீலி=தழை போல் மிருதுவான மயில் தோகை;
சந்தும் அகிலும் தழைப் பீலிகளும் சாதி பலவும் கொண்டு
உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லைச்
சிந்திப்பரிய தெய்வப் பதியுள் சிற்றம்பலம் தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே
காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் பன்னிரண்டு வகையான இசைக் கருவிகள் குறிப்பிடப் படுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். ச, ரி, க, ம, த, நி, ச எனப்படும் ஸ்வரங்களை தமிழில் துத்தம், கைக்கிளை விளரி, தாரம், உழை, இளி, ஓசை என்று அழைப்பார்கள். முழவு வாத்தியங்களை மூன்று வகையாக பண்டைய நாட்களில் பிரித்தனர். மத்தளம், கரடிகை, குடமுழா, என்பவை அகமுழவு வாத்தியங்கள் என்று அழைக்கப் பட்டன. தண்ணுமை, தக்கை, உடுக்கை, தகுணிச்சம், தகுணிதம் என்பவை அகப்புற முழவு வாத்தியங்கள் என்று அழைக்கப் பட்டன. புறமுழவு வாத்தியங்கள் என்பன மூன்றாவது வகை. சச்சரி, கொக்கரை என்பன ஒரு வகையான தோல் வாத்தியங்கள்: தக்கை=உடுக்கை போன்ற வாத்தியம்: துந்துபி=பேரிகை: கரடிகை=கரடி கத்துவதைப் போன்ற ஒலியை எழுப்பும் தோற்கருவி. மென்தோல் தமருகம் என்பது மெல்லிய தோலால் இருபுறமும் மூடப்பட்ட உடுக்கை. மொந்தை=அகலம் அதிகமாக உடைய ஒரு பறைக் கருவி.
துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம் உழை இளி ஓசை பண் கெழுமப் பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்மை மென்தோல் தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
அத்தனை விரவினோடும் ஆடும் எங்கள் அப்பன் இடம் திரு ஆலங்காடே
திருக்கயிலாய ஞானவுலா பதிகத்தில் சேரமான் பெருமாள் நாயனார், சிவபெருமான் உலா வந்த போது பல விதமான இசைக் கருவிகள் இசைக்கப் பட்டதாக குறிப்பிடுகின்றார். அவையாவன, சல்லரி, தாளம், தகுணிதம், தத்தளகம், கல்லலகு, கல்லவடம் மொந்தை, சங்கு, சலஞ்சலம், தண்ணுமை, பேரி, கரதாளம் குடமுழவம் கொக்கரை வீணை குழல் யாழ் தடாரி படகம் மத்தளம் துந்துபி முருடு. (கண்ணிகள் 44—47); எச்சார்வும்=பல இடங்களில்;
விச்சாதரர் இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சாரணர் அரக்கரோடு அசுரர் எச்சார்வும்
சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்
கல்லலகு கல்லவடம் மொந்தை நல்லிலயத்
தட்டழிச் சங்கம் சலஞ்சலம் தண்ணுமை
கட்டழியாக் பேரி கரதாளம் கொட்டும்
குடமுழவம் கொக்கரி வீணை குழல் யாழ்
இடமாம் தடாரி படகம் இடவிய
மத்தளம் துந்துபி வாய்ந்த முருடு இவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப ஒத்துடனே
மங்கலம் பாடுவோர் வந்திறைஞ்ச
பொழிப்புரை:
தண்டு தாளம் குழல் தண்ணுமை ஆகிய இசைக்கருவிகளை உடையவராக இசையுடன் வேத கீதங்களை இணைத்து பாடும் ஆற்றல் உடையவர் சிவபெருமான்: சுடுகாட்டினில் வாழும் பூதங்களைத் தனது படையாக கொண்டவர் சிவபெருமான்; அவர் பல்வேறு வேடங்கள் கொண்டவராக இருந்தாலும், அவரை நேரில் பார்த்தபோது அடையாளம் கண்டு கொள்வது என்பது மிகவும் அரிதாகும். அவரை நேரில் காணும் பேற்றினை பெறுவதும் மிகவும் அரிதாகும். அத்தகைய பெருமான் வாழ்கொளிபுத்தூர் தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 7;
சாகை ஆயிரம் (2.094) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0166)
மான வாழ்க்கையது உடையார் மலைந்தவர் மதில் பரிசு அறுத்தார்
தான வாழ்க்கையது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த
ஞான வாழ்க்கையது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த
வான வாழ்க்கையது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
விளக்கம்:
மான வாழ்க்கை=பெருமை மிகுந்த வாழ்க்கை; மலைந்தவர்=மாறுபட்டவர்; தான வாழ்க்கை= தானம் வழங்கும் வாழ்க்கை, அருள் கொடை வழங்கும் வாழ்க்கை; பரிசு=தன்மை; எப்போதும் வானில் பறந்து கொண்டிருந்த அந்த மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் தருணத்தில் எய்யப்படும் ஒரே அம்பினால் மட்டுமே அவைகளை அழிக்கமுடியும் என்பது திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வரம். எனவே தான் தனித்தனி இடங்களில் இருந்த போதிலும், ஒரே நேர்கோட்டினில் இல்லாத காரணத்தால், ஒன்றுக்கொன்று துணையாக அவை விளங்கின. வெவ்வேறு திசையினில் பறந்து கொண்டிருக்கும் பொருட்கள் ஒரே நேர்கோட்டினில் வருவது என்பது எப்போதோ ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி என்பதாலும், அந்த நிலையும் பறந்து கொண்டிருக்கும் கோட்டைகள் என்பதால் மிகவும் குறைந்த நேரமே நீடிக்கும் என்ற தன்மை, அவர்களுக்கு மிகுந்த வல்லமையை அளித்தது. இவ்வாறு எவராலும் அழிக்க முடியாத தன்மையுடன் விளங்கிய அவர்களை அழித்த செயலை செய்த பெருமானை, அவர்களது வலிமை மிகுந்த தன்மையை அழித்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நள்ளிருள் என்று இங்கே குறிப்பிடப்படுவது ஊழிக் காலத்தை குறிக்கும். ஊழிக்காலத்தில் அனைத்து உடல்களும் அழிந்து உயிர்கள் இறைவனிடம் ஒடுங்கி விடும் என்பதால், அந்த சமயத்தில் நடனம் புரியும் இறைவனை வாழ்த்த, உமையன்னையைத் தவிர்த்து வேறு எவரும் இருக்க மாட்டார்கள் என்பதால், மகளிர் என்பது அன்னையை குறிக்கும். அன்னையின் சிறப்புத் தன்மைகள் கருதி ஆர் விகுதி கொடுக்கப் பட்டுள்ளதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். வான வாழ்க்கை=சிறந்த வாழ்க்கை;
பொழிப்புரை:
பெருமையாக போற்றப்படும் வாழ்க்கையை உடையவர் சிவபெருமான்; அவர், வைதீக நெறியிலிருந்து மாறுபட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், அவை ஒன்றுக்கொன்று வலிமை வாய்ந்த துணையாக இருந்த தன்மையை மாற்றி, எரித்து அழித்தவர் ஆவார்; தனது அடியார்கள் பலருக்கும் தனது அருளினை கொடையாக வழங்கி அவர்களை மகிழ்விக்கும் தன்மை படைத்தவர் பெருமான்; சிறந்த தவம் புரிபவராக விளங்கும் பெருமான், அளவற்ற ஞானம் உடையவராக இருப்பதால், நாம் அனைவரும் போற்றிப் புகழும் வண்ணம் விளங்குகின்றார். நள்ளிருளில் நடமாடும் பெருமானின் நடனத்தைக் கண்டு உமையன்னை புகழ்ந்து போற்றும் வண்ணம் சிறப்பான வாழ்க்கை உடையவர் பெருமான் ஆவார். இத்தகைய சிறப்புகளைக் கொண்டுள்ள பெருமான் வாழ்கொளிபுத்தூர் தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 8:
சாகை ஆயிரம் (2.094) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0166)
ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர் பட அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல உடையார்
கேழல் வெண்பிறை அன்ன கெழுமணி மிடறு நின்று இலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
விளக்கம்:
ஏழும் மூன்றும்=பத்து தலைகள்’; வேள்வி என்ற சொல் எதுகை கருதி வேழ்வி என்று திரிந்தது; கேழல்=பன்றி; சாந்தமும் உடையார் என்பதற்கு என்றும் அமைதியாக இருப்பவர் என்று விளக்கமும் அளிக்கப் படுகின்றது.
பொழிப்புரை:
பத்து தலைகளை உடைய அரக்கனாகிய இராவணன், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, அரக்கன் கயிலை மலையின் கீழே அமுக்குண்டு வருந்தும் வண்ணம் தனது கால் பெரு விரலை மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான்; வேதங்களில் சொல்லப் பட்டுள்ள நெறிக்கு மாறாக தக்கன் செய்ய முயற்சித்த வேள்வி ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடலாகாது என்ற எண்ணத்துடன், அந்த வேள்வி முற்றுப் பெறாமல் பெருமான் அழித்த செய்கை அவர் மிகுந்த விருப்பமுடன் செய்த செய்கையாகும். அவர் பல விருப்பங்களை உடையவராக காணப்படுகின்றார். பன்றியாக அவதாரம் எடுத்த திருமாலின் வெள்ளைப் கொம்பினை, பிறைச் சந்திரன் போன்று வளைந்து காணப்பட்ட கொம்பினை, கருநிற மாணிக்கம் பதித்தது போன்று காணப்படும் தனது கழுத்தினில், ஆபரணமாக பொலிந்து விளங்கும் வண்ணம் அணிந்தவர் பெருமான்; அவர் திருநீற்றினை, வாசனை தரும் சந்தனமாக கருதி தனது திருமேனி எங்கும் பூசிக் கொண்டுள்ளார். இத்தகைய பெருமான் வாழ்கொளிபுத்தூர் தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 9:
சாகை ஆயிரம் (2.094) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0166)
வென்றி மாமலரோனும் விரிகடல் துயின்றவன் தானும்
என்றும் ஏத்துகை உடையார் இமையவர் துதி செய விரும்பி
முன்றின் மாமலர் வாசம் முதுமதி தவழ் பொழில் தில்லை
மன்றில் ஆடலது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
விளக்கம்:
தில்லை மன்றில்=தில்லைச் சிற்றம்பலம்; வெற்றி என்ற சொல் வென்றி என்று எதுகை கருதி மாறியுள்ளது; ஏத்துகை=தொழுது வணங்கும் தன்மை;
பொழிப்புரை:
வெற்றியைத் தரும் சிறப்பு வாய்ந்த தாமரை மலரில் உறையும் பிரமனும், விரிந்த பாற்கடலில் துயில் கொள்ளும் திருமாலும் என்றும் பெருமானை தொழுது போற்றி வணங்குகின்றனர். மற்ற வானவர்கள் தோத்திரம் பாடி போற்றும் வண்ணம், சிவபெருமான், தனது முன்றிலில் உள்ள மலர்களின் நறுமணம் முழுமதி தவழும் வானை எட்டும் அளவுக்கு உயரும் தில்லைச் சிதம்பரத்து அரங்கினில் நடமாடுகின்றார். இத்தகைய பெருமான் வாழ்கொளிபுத்தூர் தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 10:
சாகை ஆயிரம் (2.094) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0166)
மண்டை கொண்டு உழல் தேரர் மாசுடை மேனி வன் சமணர்
குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடி அணிந்து எங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே
விளக்கம்:
மண்டை=புத்தர்களின் உண்கலன்;
பொழிப்புரை:
மண்டை என்று அழைக்கப்படும் தங்களது உண்கலனை எடுத்துக் கொண்டு எங்கும் திரியும் புத்தர்களும், வலிமை உடையதும் மாசு படிந்ததும் ஆகிய உடலைக் கொண்டுள்ள சமணர்களும் ஆகிய குண்டர்கள் பேசும் பேச்சுக்களை, உலகத்தவரே நீங்கள் பொருட்படுத்தாமல் விலக்குவீர்களாக. சிறிய துண்டாக விளங்கிய பிறைச் சந்திரனைத் தனது சடையினில் சூட்டிக் கொண்டுள்ளவனும், நறுமணம் கமழும் திருநீற்றினைத் தனது திருமேனியெங்கும் பூசியவராகிய இறைவன், வண்டுகள் திரியும் சோலைகள் நிறைந்த வாழ்கொளிபுத்தூர் தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 11:
சாகை ஆயிரம் (2.094) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0166)
நலம் கொள் பூம்பொழில் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை
இலங்கு வெண் பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்
நலம் கொள் சிந்தையராகி நன்னெறி எய்துவர் தாமே
விளக்கம்:
வலம் கொள்; மற்றவர்கள் வலமாக வந்து வணங்கப்படும் தன்மை உடைய; பண்டைய நாளில் தங்களில் உயர்ந்தவராக கருதப்படுவோரை வலம் வந்து வணங்குதல் பழக்கமாக இருந்தது போலும். போரினில் வென்றவர்களை தோற்றவர்கள் வலம் வந்து வணங்குதலும் பழக்கத்தில் இருந்து வந்தது. எனவே தான் மழுவாளினைத் தனது கையினில் கொண்டுள்ள பெருமான், அனைவராலும் வலம் வந்து வணங்கப் பட்டார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வலம் கொள் வெண்மழுவாளன் என்ற தொடருக்கு தனது வலது கையினில் மழு ஆயுதத்தை உடையன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நறுமணம் நிறைந்த பூக்களை, இறைவனின் திருமேனியின் மீது தூவி வழிபடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதால், அத்தகைய மலர்களை அளிக்கும் சோலைகளை நலம் தரும் பூஞ்சோலைகள் என்று அழைக்கின்றார். நன்னெறி எய்துவர் என்று சம்பந்தர் கூறுவது, நமச்சிவாய மந்திரத்தை ஓதுவதால் நன்னெறி அடையலாம், அதாவது என்றும் அழியாத பேரின்பத்தை அளிக்கும் முக்திநிலையினை அடையலாம் என்று அப்பர் பிரான் நமச்சிவாய திருப்பதிகத்தில் (4.11.10) கூறுவதை நமக்கு நினைவூட்டுகின்றது.
முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே
முதல்வனாகிய முக்கண்ணனே அனைவருக்கும் முன்னே தோன்றிய நெறியாவான். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபிரானின் செம்மையான நெறியை உறுதியுடன் சரணம் என்று வாழும் அடியார்களுக்கெல்லாம் மிகவும் நன்மை பயப்பதான, வீடுபேறு எனப்படும் நன்னெறியினை அளிப்பது நமச்சிவாய என்னும் மந்திரமாகும் என்பதே இந்த பாடலில் திரண்ட பொழிப்புரை;
பொழிப்புரை:
நலம் தரும் பூஞ்சோலைகள் நிறைந்த காழி நகரத்தைச் சார்ந்தவனும், நன்றாக தமிழ் மொழியில் தேர்ச்சி அடைந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன், அனைவராலும் வலம் வந்து வணங்கப் படுபவனும் வெண்மழுவினைத் தனது வலது கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவனை, வாழ்கொளிபுத்தூர் தலத்தில் உறையும் இறைவனை, தனது சடையில் விளங்கித் தோன்றும் வண்ணம் பிறைச் சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை, புகழ்ந்து பாடிய இந்த பத்து தமிழ் பாடல்களையும் பாடும் வல்லமை பெற்றவர், அனைவர்க்கும் நன்மை பயக்கும் சிந்தையர்களாக மாறி, நன்னெறியில் ஈடுபடுவார்கள்.
முடிவுரை:
பதிகத்தின் முதல் பாடலில் ஆயிரம் சாகைகள் கொண்ட சாம வேதத்தை உடையவர் என்று குறிப்பிடுவதன் மூலம், நான்கு வேதங்களின் மந்திரங்கள் அனைத்தையும் உடையவர் என்று சம்பந்தர் உணர்த்துகின்றார். இரண்டாவது பாடலில் உயிர்கள் பால் மிகவும் அதிகமாக இரக்கம் கொள்ளும் பெருமான், தனது அடியார்களுக்கு அருளும் வழி வகைகள் எண்ணற்றவை என்று சம்பந்தர் கூறுகின்றார். மூன்றாவது பாடலில், மிகவும் நுண்ணியவராக விளங்கும் பெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர், தங்களது ஐந்து புலன்களையும் அடக்கி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அடியார்களுக்கு மிகவும் அருகில் இருப்பவர் சிவபெருமான் என்று நான்காவது பாடலில் குறிப்பிடுகின்றார். எண்ணற்ற திருநாமங்களை உடையவர் சிவபெருமான் என்று ஐந்தாவது பாடலில் குறிப்பிடுகின்றார். அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு பெருமான் பலவித வேடங்களில் தோன்றினாலும், அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியாதவராக விளங்குகின்றார் என்று பதிகத்தின் ஆறாவது பாடலில் குறிப்பிடுகின்றார். ஏழாவது பாடலில் அடியார்களுக்கு, அருள் புரிந்து வாழ்வதே தனது குறிக்கோள் என்று வாழ்பவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். ஒன்பதாவது பாடலில் விண்ணவர்கள் அனைவரும் போற்றிப் புகழும் வாழ்க்கையை உடையவர் என்று கூறுகின்றார். பத்தாவது பாடலில் மாற்று மதத்தவர் பெருமான் குறித்து சொல்லும் வீண்பழிச் சொற்களை பொருட்படுத்தாமல் இருக்கவேண்டும் என்று அறிவுரை வழங்குகின்றார். பெருமானின் பலவிதமான பெருமைகளை, திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் மூலம் புரிந்துகொண்ட நாம், பெருமானின் புகழினை உணர்த்தும் பதிகங்களை முறையாக ஓதி, குறைவற்ற நலம் பெற்று நன்னெறியாகிய சிவஞானத்தை பெற்று மகிழ்வோமாக.