பதிக எண்: 2.18 திருமருகல் இந்தளம்
பின்னணி
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இந்தப் பதிகம் விடம் தீர்த்த பதிகம் என்று அழைக்கப்படுகின்றது. திருமருகல் தலத்தில் ஞானசம்பந்தப் பெருமான் தங்கியிருந்த போது அருளிய பதிகம். இந்த தலத்தின் வழியாக தனது ஊருக்குச் சென்று கொண்டிருந்த வணிகன் ஒருவன் தன்னுடன் தன் காதலியையும் அழைத்துக்கொண்டு சென்றான். இரவு நேரம் ஆகவே, கோயிலுக்கு அருகில் இருந்த மடம் ஒன்றில் இருவரும் தங்கினர். இரவில் ஒரு பாம்பு கடித்து வணிகன் இறந்துவிடவே, அவனுடன் சென்ற அந்தப் பெண் வருத்தமுற்றாள். இந்தப் பெண்ணின் அழுகுரல் கேட்டு அங்கு வந்த மந்திரவாதிகள், தங்கள் மந்திரத்தால் விடத்தை நீக்கச் செய்த முயற்சிகள் பலனற்றுப் போயின. தனது தாய் தந்தையரை விடுத்து வணிகனுடன் உடன்போந்த அந்தப் பெண்மணி,உற்றார் உறவினர் எவரும் அருகில் இல்லாத அந்த நிலையில், தான் செய்வது ஏதும் அறியாது, இறந்து போன தன் காதலன் உடலைப் பார்த்து புலம்புகின்றாள்: பெற்றோரை விட்டு தனது காதலனுடன் உடன்போந்த தான், காதலனை இழந்த நிலையில் தனது உயிரினைப் போக்கி கொள்வதே ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தாள். அந்த சமயத்தில் அருகில் இருந்த திருக்கோயில் கண்ணில் படவே திருக்கோயில் இருந்த திசை நோக்கி தனது குறையினை சொல்லிக் கொண்டே அழலானாள். தேவர்களை காப்பற்றுவதற்காக கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டவனே, திருமாலும் பிரமனும் காண முடியாத பெருமை உடையவனே, இரதி தேவிக்காக காமனின் உயிரை மீட்டுத் தந்த புண்ணியனே, என்னை காப்பாற்ற வேண்டும் என்று அந்தப் பெண் கதறினாள்.மேலும் மருகல் பெருமானே, காலனை காலால் உதைத்து மார்க்கண்டேயரின் உயிரினை காப்பாற்றிய பெருமானே, எனது காதலனின் உடலில் உள்ள விடத்தினை நீக்கி எனது துன்பங்களை களைய வேண்டும் என்று வேண்டியபடியே அழுது கொண்டு இருந்தாள் திருமருகலில் குடி கொண்டுள்ள சிவபெருமானை வழிபடுவதற்காக அந்த வழியே வந்த திருஞானசம்பந்தப் பெருமானின் காதுகளில் கதறி அழுது கொண்டிருந்த பெண்ணின் அழுகுரல் சென்று அடைந்தது. ஞானசம்பந்தர், அருகில் வந்து அந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறி அஞ்சேல் என்று சொல்லி என்ன நடந்தது என்று வினவினார். அந்தப் பெண்ணும் தன்னைப் பற்றி கூறலானாள். வைப்பூர் என்ற நகரத்தில் வாழ்ந்த தாமன் என்ற வணிகனின் ஏழாவது மகள் தான் என்றும், இறந்து கிடக்கும் வணிகன் தாமனின் மருமகன் என்றும், தனது தந்தை தனது பெண்களில் ஒருவரை தனது மருமகனுக்கு மணம் முடிப்பேன் என்று முன்னர் கூறிய வார்த்தையை மீறி, தனது முதல் ஆறு பெண்களுக்கும், பொருள் மீது இருந்த ஆசையால், வேறு ஒருவருக்கு மணம் முடித்த நிலையில், தனது தந்தை முன்னம் கூறிய வாக்கினை நிறைவேற்றும் பொருட்டு, தான் அந்த மருமகனுடன் உடன் போந்ததாகவும், செல்லும் வழியில் இந்த மடத்தில் தங்கிய போது, பாம்பு கடித்து அந்த வணிகன் இறந்த நிலையில், அருகில் சுற்றத்தார் எவரும் இல்லாத நிலையில், தான் செய்வது அறியாது திகைப்பதாகவும் கூறினாள். உடனே சம்பந்தர் சடையாய் எனுமால் என்று தொடங்கும் இந்தப் பதிகம் பாடவே, பாம்பு கடித்து இறந்த வணிகன் உயிர் பெற்று எழுந்தான். வணிகனும் பெண்ணும் சேர்ந்து ஞானசம்பந்தப் பெருமானை வணங்க, ஞானசம்பந்தரும் அவர்களுக்கு ஆசி வழங்கினார். இந்தப் பதிகத்தின் பாடல்களில், சம்பந்தர் சிவபெருமானை நோக்கி, இந்தப் பெண்ணின் மன வருத்தத்தை போக்காது இருத்தல் இறைவனின் பெருமைக்கு உகந்த செயல் அல்ல என்று கூறுவதை காணலாம். இந்த நிகழ்ச்சி பெரிய புராணத்தில் மிகவும் விரிவாக கூறப்பட்டுள்ளது.
பாடல் 1
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால்வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே.
விளக்கம்:
வெருவுதல்=பயப்படுதல். மடை=நீர்நிலைகள். உள்=உள்ளம்; உள்மெலிவு=வருத்தத்தால் மனம் வாடியிருக்கும் நிலை; சடையாய் என்பது சிவபெருமானைக் குறிக்கும். அனைத்து முனிவர்களுக்கும் முன்னோடியாய் இருப்பதாலும், முனிவர்களுக்கு அறம் உரைத்து பொருள் விளக்கியதாலும் முதல் முனிவனாக சிவபெருமான் கருதப்படுகின்றார். இந்தப் பெண்மணி வருத்தப்படுவது இறைவனின் தகுதிக்கு ஏற்ற செயல் அல்ல என்று இறைவனிடமே கூறும் சம்பந்தர் முதல் இரண்டு அடிகளில் அதற்கான காரணத்தையும் கூறுவதையும் காணலாம். சடையை உடையவனே, விடையை (எருதினை) வாகனமாக உடையவனே என்று அழைத்து நீயே சரணம் என்று சொல்லும் அடியாளின் வருத்தத்தை போக்காமல் இருக்கலாமா என்று உரிமையுடன் இறைவனை கேள்வி கேட்பதை நாம் உணரலாம். இந்தப் பாடலிலும் மற்றைய பாடல்களிலும் வரும் ஆல் எனும் சொல், பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்
பொழிப்புரை:
குவளை மலர்கள் நிறைந்த நீர்நிலைகள் உடைய மருகல் தலத்தில் உறையும் சிவபெருமானே, சடையானே என்றும் நீயே சரண் என்றும் விடையை வாகனமாக உடையவனே என்றும் உனது பெயர்களை கூவிக்கொண்டு அதே சமயத்தில் தனது காதலனை இழந்த நிலையில் வருத்தப்பட்டு பயப்படும் இந்தப் பெண்ணின் உள்ளம் வாடுதல் உனது பெருமைக்குத் தகுந்த செயல் அல்ல.
பாடல் 2
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே
விளக்கம்:
சிந்தாய்=சிந்தனையில் இடம் கொள்பவர். கொந்து=பூங்கொத்து. ஏசறுதல்=மெய் மறத்தல். சிந்துதல் என்றால் அழிதல் என்று ஒரு பொருளும் உள்ளது.எனவே அழியாமல் இருக்கும் தன்மை படைத்தவர் என்றும் பொருள் கொள்ளலாம். முந்தாய்=முன்னைப் பழம்பொருளுக்கும் முன்னைப் பழம்பொருளே;முதல்வா=ஆதியாக இருப்பவன்;
பொழிப்புரை:
குவளை மலர்களும் மற்றைய மலர்களும் கொத்தாக மலர்ந்து மணம் பரப்பும் மருகல் நகரில் வீற்று இருக்கும் இறைவனே, உன்னை தனது சிந்தைனையில் உள்ளவனே, சிவபிரானே, அனைவருக்கும் முந்தியவனே, அனைவருக்கும் முதல்வனே என்று புகழும் இந்தப் பெண்ணை, நீ எதற்காக வருத்தத்தால் மெய்மறந்து இருக்குமாறு செய்தாய்?
பாடல் 3
அறையார் கழலும் அழல்வா யரவும்
பிறையார் சடையும் உடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே
விளக்கம்:
அறை=ஒலி. இறை=முன்கை, மணிக்கட்டு. மணம் புரியும் பெண்கள் மங்கலமாக வளைகள் அணிவது வழக்கம். தனது காதலனை இழந்த காரணத்தால்,தனது முன்கையினை அழகு செய்யும் வளையல்களை இழந்து நிற்கும் பெண்ணின் நிலை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. கழலினை அணியாக அணிந்துள்ள இறைவன், இந்த பெண்மணி வளையல் ஆகிய அணியை விடுக்கும் நிலையினை ஏற்படுத்தலாமா என்று கேள்வி மிகவும் நயமாக விடுக்கப்பட்டுள்ளது.அழல்=நெருப்பு:
பொழிப்புரை:
ஒலி செய்யும் வீரக்கழல்களை அணிந்தவனே, கொடிய விஷம் பொருந்திய பாம்பினையும், பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்தவனே, பெருமைக்கு உரிய வேதங்களை கற்று உணர்ந்த பெரியோர்கள் வாழும் மருகல் நகரில் மகிழ்ந்து உறையும் சிவபிரானே, இந்தப் பெண் தனது முன்கையில் வளையல்கள் அணியும் நிலையினைப் போக்கி இந்தப் பெண்ணின் எழிலை நீ கவர்ந்தது தகுமா?
பாடல் 4:
ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே
விளக்கம்:
மெலி நீர்மையள்=மெலிந்து இருக்கும் தன்மையள். காதலனை இழந்த காரணத்தால் உடல் மெலிந்து இருக்கும் பெண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மிகுந்த ஆரவாரத்துடன் வேகமாக இறங்கி வந்த கங்கை என்பதைக் குறிக்க ஒலி நீர் என்று கூறப்பட்டுள்ளது. இறைவன் பிட்சாடனர் கோலத்தில் பிச்சை ஏற்றது தாருகவனத்து முனிவர்களின் செருக்கினை அழிக்கும் நோக்கத்துடன் என்பதால், சிவபிரான் ஏற்ற பிச்சை இழிவாக கருதப்படுவது இல்லை. அவ்வாறு இருக்கையில் இந்தப் பெண்ணை இந்த பரிதாபமான நிலைக்கு ஆளாக்கி ஏன் வீண் பழியை தேடிக் கொள்கிறாய் என்ற கேள்வியை, சொல்லாமல் கேட்கும் நயத்தை நாம் இந்தப் பாடலில் காணலாம்
பொழிப்புரை:
கங்கை நதியை தனது சடையில் மறைக்கும் வல்லமை படைத்த சிவபிரானே, நீ உலகெங்கும் திரிந்து பிச்சை ஏற்றாலும் அதனை ஒரு குற்றமாக கருதாமல் உலகம் உன்னை புகழ்கின்றது. நீர்வளம் நிறைந்த மருகல் தலத்தில் மகிழ்வுடன் வீற்றிருக்கும் இறைவனே, வருத்தத்தால் இந்த பெண்மணி உடல் மெலியுமாறு ஏன் திருவுள்ளம் கொண்டாய்?
பாடல் 5:
துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்டம் உடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே
விளக்கம்:
துணி=தெளிந்த, ஒண் கண்=ஒளி பொருந்திய கண். அயர்வு=சோர்வு. வருத்தத்தால், கணி=கருதுகின்ற. அந்த மங்கையின் ஒளி பொருந்திய கண்கள் சோர்வடைந்து காணப்படுவதாக திருஞானசம்பந்தர் சிவபிரானுக்கு உணர்த்துகின்றார். கருமை நிறத்தை நீல நிறமாகச் சொல்வது கவிஞர்களின் பழக்கம்.பல தேவாரப் பாடல்களில் விஷம் உண்ட காரணத்தால் கழுத்தில் கருமை நிறம் கொண்டவன் என்று சிவபிரான் குறிக்கப்படுகின்றார். சில பாடல்களில் நீல நிறம் என்றும் கூறப்படுகின்றது. திருமாலின் நிறம் கருமை என்று சில பாசுரங்களிலும் பல பாசுரங்களிலும் நீல நிறம் என்றும் கூறப்படுவதை நாம் இங்கே நினைவு கூறலாம். கழுத்தில் விஷம் உண்டதால் ஏற்பட்ட நிறத்தை மேகத்தோடு ஒப்பிடுவதை நாம் இங்கே காணலாம். மழை கொடுக்கும் மேகத்தை இயற்கையின் கருணை என்று கூறுவர். கருணையே வடிவான சிவபிரான், தேவர்கள் ஆலகால விஷத்தால் வருந்திய போது அதனை உண்ட சிவபிரானுக்கு அந்த விஷத்தால் ஏற்பட்ட நிறத்தை கருணையின் சின்னமாக கூறுவது சம்பந்தரின் கவிதை நயம். அவ்வாறு கருணை பொழியும் சிவபிரான், இந்தப் பெண்மணி சோர்வடைந்த கண்களுடன் இருக்கும் நிலையை ஏற்படுத்தியது சிவபிரானின் கருணைக்கு உகந்த செயல் அல்ல என்பதை உணர்த்தும் பாடல்.ஆக்கினையே என்று சிவபிரானை நோக்கிக் கூறுவதன் மூலம், இந்தப் பெண்மணயின் நிலைக்கு சிவபிரான் தான் காரணம் என்று நேரிடையாக குற்றம் சாட்டும் பாவனையில் அமைந்துள்ள பாடல்.
பொழிப்புரை:
தெளிந்த நீல வண்ணம் உடைய மேகம் படர்ந்தது போன்ற கழுத்தினை உடைய சிவபெருமானே, கருநீல வண்டுகளின் தொகுதியோ என்று கருதும் அளவுக்கு அடர்த்தியான கருமையான கூந்தல் உடைய மங்கையின் ஒளி பொருந்திய கண்கள் சோர்வடைந்து காணப்படும் நிலை உனக்கு பொருத்தமற்ற செயல் அல்லவா.
பாடல் 6:
பலரும் பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே
விளக்கம்:
அலர்=பழிச்சொல். புலரும் தனையும்=விடியும் அளவும். புடை=பக்கம். பரவுதல்=துதித்தல். காதலன் இறந்ததால் தூக்கம் இழந்து வருத்தப்படும் நிலையை இந்தப் பாடலில் சித்தரிக்கும் சம்பந்தர், பெற்றோர்களை துறந்து காதலனுடன் உடன் போந்த பெண் தனது காதலனை பறிகொடுத்த பின்னர், எவ்வாறு சமூகத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவாள் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்து, பழிக்கு உட்படுவாள் என்பதை சிவபிரானுக்கு உணர்த்தும் பாடல்.கருணைக் கடலான சிவபிரானின், கருணைச் செயல் (சந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்தது) பலராலும் போற்றப்படுவதை நினைவு கூர்ந்து, அத்தகைய கருணைக்கு பெறுவதற்கு தகுதியான பெண் என்று கூறுவதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
வளரும் பிறைகள் கொண்ட சந்திரனை சடையில் தரித்தவனே, உனது கருணைச் செயல்கள் காரணமாக பலராலும் பாராட்டப்படுவானே, உனது அருளை வேண்டி இரவு முழுதும் அழுது கொண்டிருந்த உனது அடியாளாகிய இந்தப் பெண் உலகத்தாரின் பழிச்சொல்லுக்கு ஆளாதல் தகுமா.
பாடல் 7
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகற் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே
விளக்கம்:
சிவபிரானின் அடியவள் என்பதை உணர்த்தும் வகையில், அந்தப் பெண்மணி தினமும் துயில் எழுந்த பொழுதிலிருந்து, சிவபிரானின் கழல் நினைவாகவே இருக்கும் நிலை இங்கே கூறப்படுகின்றது. இரவு பகல் என்று இரண்டு வேளைகளையும் குறிப்பிட்டு, சிவபிரானை தொழுத வண்ணம் இருக்கும் பெண்மணிக்கு துயரம் ஏற்படும் நிலை வரலாமா என்ற கேள்வி எழுப்பப் படுவதை நாம் இங்கே காணலாம். தேவர்களின் துயர் தீர்ப்பதற்காக மழு ஏந்திய சிவபிரான், இந்தப் பெண்ணின் துயரத்தை களைய வேண்டியது அவன் கடமை என்று கூறுவது போல் அமைந்த பாடல்.
பொழிப்புரை:
மழுவினை கையில் ஏந்திய மருகல் பெருமானே. சிவபிரானே உனது திருக்கழல்கள் வாழ்க என்று தினமும் பொழுது புலரந்ததிலிருந்து இரவும் பகலும் வழுவாமால் உன்னை வாழ்த்தி தொழும் இந்தப் பெண்மணிக்கு துயரம் ஏற்படலாமா,.
பாடல் 8
இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் இவளை அலராக் கினையே
விளக்கம்:
இலங்கைக்கு இறைவன்=அரசன் இராவணன். அரசனை இறைவனுக்கு ஒப்பாக மூக்கீள் கருதுவது வழக்கம். விலங்கல்=மலை (கயிலை மலை).துலங்குதல்=விளங்குதல். தோன்றலன்=என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தவன். அலங்கல்=மலர் மாலை. மாலை சூடி தனது காதலனை மணம் செய்துகொள்ள, அவனுடன் உடன் போந்த பெண்ணுக்கு பழி ஏற்படுதல் தகுமா என்ற கேள்வி இங்கே கேட்கப்படுகின்றது. கயிலை மலையை பெயர்க்க நினைத்த இராவணன் இடர்ப்படுமாறு தனது கால் கட்டை விரலை ஊன்றியது சிவபிரான் தான். இருந்தாலும் இராவணன் கதறி அழுது, சிவபிரானை போற்றிய பின்னர் அவனுக்கு அருள் புரிந்தது அதே சிவபிரான் தானே. முந்தைய பாடல்களில் சிவபிரானிடம் அந்தப் பெண்ணுக்கு இருந்த பக்தி கூறப்பட்டுள்ளதால், இங்கே கூறப்படாவிட்டாலும், அந்தப் பெண்மணயின் பக்தி தான் திருஞான சம்பந்தரை இந்தக் கேள்வி கேட்கச் செய்தது என்பதை நாம் உணரலாம். தனது அடியவளுக்கு இந்தத் துன்பம் வராமல் காக்க வேண்டியது சிவபிரானின் கடமை. அவ்வாறு இருக்க அவளுக்கு பழி ஏற்படும் நிலையை சிவபிரான் ஏற்படுத்தலாமா என்று கேட்பது போல் உள்ளது இந்த பாடல்.
பொழிப்புரை:
இலங்கையின் அரசனாகிய இராவணன் கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, எழிலுடன் விளங்கும் உனது திருவடியால் மலையினை அழுத்திய போது ஏதும் செய்யத் தோன்றாமல் கலங்கிய நிலையில், இராவணன் உன்னை பணிந்தும் புகழ்ந்து பாடியபோது அவனுக்கு வரங்கள் அளித்து வாழவைத்த மருகல் பெருமானே, வலம் வரும் சிறப்பினை உடைய மதில்களால் சூழப்பட்ட மருகல் தலத்தினில் உறையும் பெருமானே, மணமாலை சூட வேண்டிய இந்த பெண்மணிக்கு துன்பம் வரச் செய்தது முறையோ?
பாடல் 9
எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியா ததொர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே
விளக்கம்:
மரியார்=மரித்தல் இல்லாதவர், இறப்பு இல்லாதவர். அரியாள்=அரியவளான பெண்மணி. எரி=நெருப்பு. எரி ஆர் சடை=நெருப்பு போன்று சிவந்த சடை.தகப்பன் அளித்த வாக்கினை தகப்பனே பொருட்படுத்தாத போது, அதற்கு மதிப்பு அளித்த குணம், வாக்கை காப்பாற்றும் பொருட்டு, பெற்றோர்களை மீறி உடன்போக்குக்கும் தயாராக இருந்த நிலை போன்ற அரிய பண்புகளும் சிவபிரானிடத்தில் பக்தியும் இருந்த காரணத்தால் ஒரு அரிய பெண்மணி என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சிவபிரானை வழிபட்டு முக்தி அடைந்தவர்களை மரியார் என்று சம்பந்தர் கூறுகிறார். முக்தி அடைந்து சிவனுடன் சேர்ந்த பின்னர் அவனுடன் பிரியாது இருக்கும் காரணத்தால் மரியார் பிரியாத சிவபெருமான் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பெற்றதால், அத்தகைய ஜீவன் முக்தர்களுக்கு பிறப்பு இல்லை: பிறப்பு இல்லாததால் இறப்பும் இல்லை. எனவே மரியார் என்று சம்பந்தர் அவர்களை அழைக்கின்றார். அண்ணாமலை சம்பவம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. முடியையும் அடியையும் தேடி பிரமனும் திருமாலும் முயற்சி செய்த போது, அவர்கள் அறியமுடியாத நிலையில் தீப்பிழம்பாக தோன்றியவன் என்று சிவபிரானை குறிப்பிடும் சம்பந்தர், தனது பக்தர்களாகிய ஜீவன் முக்தர்களை பிரியாது இருக்கும் நிலையும் உணர்த்தப்படுகின்றது. அடியார்களுக்கு எளியவனாக, அவர்களுடன் என்றும் இருக்கும் சிவபிரான், செருக்குடன் அணுகினால்,காண்பதற்கு அரியவன் என்ற செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது. அடியார்களுக்கு எளியவனான சிவபிரான், இந்தப் பெண்மணியை துயரடையச் செய்தல் சிவபிரானின் தகுதிக்கு தகாத செயல் அல்லவா என்பதே இங்கே எழுப்பிய கேள்வி.
பொழிப்புரை:
நெருப்பு போன்ற சிவந்த சடையையும் அடியையும், பிரமன் திருமால் ஆகியோர் தேடியபோது, அவர்கள் முன் நீண்ட ஒளிப்பிழம்பாய் தோன்றிய சிவபிரானே,உனது அடியார்களாகிய ஜீவன்முக்தர்களை என்றும் பிரியாமல் இருப்பவனே, இவ்வாறு அடியார்களுக்கு எளியானாக இருக்கும் நீ. பல அரிய குணங்களை உடைய இந்தப் பெண்மணியை துன்பத்தினால் தளர்வடையச் செய்வது அழகாகுமா
பாடல் 10
அறிவில் சமணும் அலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே
விளக்கம்:
மறி=மான் கன்று. நெறித்தல்=அடர்ந்து இருத்தல் மறி ஏந்து கையாய் என்று தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய, போர்க்குணம் ஊட்டப்பட்ட மான் கன்றினை இறைவன் தனது கையில் ஏந்திய நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. இயற்கையில் சாதுவான குணத்தை உடைய மான், தன்னை எதிர்க்க வந்த போது, அந்த மானினை தனது அருட்கண்ணால் நோக்கி அதன் போர்க்குணத்தை நீக்கிய பின்னர், துள்ளி குதிக்கும் அந்த மான் கன்றினை தனது இடது கையில் ஏந்தியவர் சிவபிரான். துள்ளி ஓடும் மானின் இயல்பு தாருகாவனத்து முனிவர்களால் மாற்றப்பட்ட போது, அந்த மான் கன்றை பழைய நிலைக்கு மாற்றி அருள் புரிந்த சிவபிரான், மான் கன்று போல் துள்ளி விளையாடும் பெண்ணின் கவலையை மாற்றி அருள் புரியாமல் இருப்பது தகுமா என்று கேட்பது போல், மான் கன்று இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு நிறைவான கோலம் அவள் கணவனுடன் சேர்ந்து வாழ்வது தானே. அந்த நிறைவான வாழ்வு வாழும் வாய்ப்பை, அடர்ந்த கூந்தலை உடைய இந்த பெண்ணுக்கு நீக்கியது ஏன் என்ற கேள்வி மருகலில் வாழும் சிவபிரானை நோக்கி இங்கே கேட்கப்படுகின்றது. தனது பத்தாவது பாடலில் சமணர்கள் பற்றிய குறிப்பினை அளிக்கும் சம்பந்தர் இந்தப் பாடலில், அறிவில்லாத சமணர்கள், அடுத்தவர் மீது பழி தூற்றும் சாக்கியர்கள் என்று அவர்களை குறிப்பிட்டு, அவர்கள் நெறி இல்லாத செய்கையை செய்வதாக கூறுகின்றார். எனவே அவர்களை பின்பற்றி எவரும் செல்லவேண்டாம் என்ற செய்தி இங்கே கூறப்படுகின்றது. சிவநெறி பற்றியும் வேத நெறி பற்றியும் அவர்கள் இழித்து கூறும் சொற்கள் இங்கே கண்டிக்கப்பட்டுள்ளன.
பொழிப்புரை:
அறிவில்லாத சமணரும், சிவபிரான் மீது பழி தூற்றுவதே தங்கள் குறிக்கோளாகக் கொண்ட புத்தர்களும், நெறியற்ற செயல்களைச் செய்து திரிபவர் ஆவார்கள். துள்ளும் மான் கன்றினை கையில் ஏந்திய மருகல் பெருமானே, அடர்ந்த கூந்தலைக் கொண்ட இந்தப் பெண்ணின் நிறைவான வாழ்க்கையை பறித்தல் உனக்கு தகுதியான செயலா?
பாடல் 11
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே
விளக்கம்:
வயஞானம்=தான் என்ற உணர்வு இல்லாமல் சிவ மயமாகிய மாறிய ஞானம். வியன் ஞாலம்=அகன்ற உலகம்.
பொழிப்புரை:
தங்களது சிவவழிபாட்டால், தாங்களே சிவமாக மாறிய தன்மை கொண்ட சான்றோர் வாழும் மருகல் தலத்தில் உறையும் இறைவனை, அவரது தன்மையை உணர்ந்து, அவரது திருவடிகளை நினைந்து பாடும் சம்பந்தரின் பாடல்களை பாட வல்லவர்களின் புகழ் உலகெங்கும் பரவி நிற்கும்.
முடிவுரை:
இந்தப் பதிகம் இந்தளம் பண்ணில் அமைந்து இருப்பது போலவே, அப்பர் பெருமான் அருளிய விடம் தீர்த்த பதிகம் (ஒன்று கொலாம் என்று தொடங்கும்),அப்பூதி அடிகளின் மகனை, பாம்பு கடித்து உயிர் நீங்கிய பின்னர், விடத்தை நீக்கி உயிர்ப்பித்த பதிகமும். இந்தளம் பண்ணில் அமைக்கப் பட்டுள்ளது.இந்தப் பதிகத்தை நியமமாக பக்தியுடன் படித்தால், திருமணம் ஆகாத பெண்களுக்கு அவர்களுக்கு அந்நாள் வரை இருந்த திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறுவது இன்றும் நடைபெறும் அதிசயம் ஆகும்.