இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


சடையானைச் சந்திரனோடு

சடையானைச் சந்திரனோடு

பதிக எண்: 2.14 - திருவெண்ணியூர் - இந்தளம்

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி சென்ற திருஞான சம்பந்தர், அந்த ஊரிலிருந்த மூன்று தேவாரத் தலங்களுக்கும் (மூக்கீச்சரம், சிராப்பள்ளி, ஆனைக்கா) சென்று, இறைவனைப் பணிந்து வணங்கி பதிகங்கள் பாடிய பின்னர், பாற்றுறை, நெடுங்களம், காட்டுப்பள்ளி, ஆலம்பொழில், பூந்துருத்தி, கண்டியூர், சோற்றுத்துறை, வேதிகுடி ஆகிய தலங்கள் சென்ற பின்னர் வெண்ணியூர் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இந்த தலம் வேதிகுடி தலத்திற்கு தென்கிழக்கில் வெகு தொலைவினில் இருப்பதாலும், இதனை அடுத்துச் சென்ற சக்கரப்பள்ளி வேதிகுடிக்கு மிகவும் அருகில் இருப்பதாலும், வெண்ணி தலத்திற்கு அருகில் இருக்கும் பல தலங்கள் (கருகாவூர், அவளிவணல்லூர், பரிதிநியமம், பூவனூர் ஆகிய தலங்கள்) சென்றமை பின்னர் குறிப்பிடப்படுவதாலும், வெண்ணியூர் என்ற பெயரில் வேதிகுடிக்கும் சக்கரபள்ளிக்கும் இடையே வேறொரு தலம் இருந்திருக்கலாம் என்று சிவக்கவிமணியார் கருதுகின்றார். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகமும், அப்பர் பிரான் அருளிய ஒரு குறுந்தொகைப் பதிகமும், ஒரு திருத்தாண்டகப் பதிகமும் நமக்கு கிடைத்துள்ளன. வெண்ணியூர் தலம் சென்றதை குறிப்பிடும் சேக்கிழாரின் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

வெண்ணி மேவிய விடையவர் கோயிலை

நண்ணி நாடிய காதலில் நாள்மதிக்

கண்ணியார் தம் கழலிணை போற்றியே

பண்ணில் நீடும் பதிகமும் பாடினார்

இந்த தலம் திருவாரூர் தஞ்சாவூர் நெடுஞ்சாலையில், அம்மாப்பேட்டை மற்றும் நீடாமங்கலம் ஊர்களுக்கு இடையே உள்ளது. தற்போது கோயில்வெண்ணி என்று அழைக்கப் படுகின்றது. இறைவனின் திருநாமம் வெண்ணிக்கரும்பேஸ்வரர், கரும்புக் கழிகள் ஒன்று சேர்ந்தது போன்ற அடையாளங்களுடன் காணப்படும் சுயம்பு மூர்த்தம்; பங்குனி 2 3 4 தேதிகளின் போது சூரியனின் கதிர்கள் இறைவனின் திருமேனி மீது படர்கின்றன. இறைவியின் திருநாமம், சவுந்தர நாயகி, அழகிய நாயகி. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட பழமையான திருக்கோயில் என்று சொல்லப்படுகின்றது. கரிகால் சோழன், சேர பாண்டிய மன்னர்கள் மற்றும் ஐந்து குறுநில மன்னர்களை வெற்றி கொண்ட இடம். கரிகால் சோழன் வழிபட்ட பிடாரி அம்மன் மிகவும் பிரசித்தமானது. கரிகால் சோழனும் முசுகுந்த சக்ரவர்த்தியும் திருப்பணிகள் செய்த திருக்கோயில். ஒரு காலத்தில் கரும்புக் காடுகளால் சூழப்பட்ட இடம். வெண்ணி என்றால் நந்தியாவர்த்தம் செடி என்று பொருள். தலயாத்திரை மேற்கொண்ட இரண்டு முனிவர்கள் இந்த தலம் வந்தைடைந்து கரும்புக்காட்டின் நடுவில் இருந்த சுயம்பு இலிங்கத்தை வணங்கி வழிபட்டனர். ஒருவர் இறைவனின் தலமரம் வெண்ணி என்றும் மற்றொருவர் கரும்பு என்றும் வாதம் செய்தனர். அப்போது அசரீரியாக குரல் கொடுத்த இறைவன், தனது பெயரில் கரும்பும் தலத்தின் பெயரில் வெண்ணியும் அடங்கும் என்று இருவரையும் சமாதானம் செய்தார் என்று தலபுராணம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு கரும்பேஸ்வரர் என்ற திருநாமம் பெருமானுக்கு வந்தது என்று கூறுவார்கள். தலத்தின் பெயரான வெண்ணி என்பதுடன் இணைத்து, வெண்ணிக்கரும்பேஸ்வரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகின்றார். இந்த பதிகத்தில் வெண்ணி அம்மான் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

பாடல் 1:

சடையானைச் சந்திரனோடு செங்கண் அரா

உடையானை உடைதலையில் பலி கொண்டு ஊரும்

விடையானை விண்ணவர் தாம் தொழும் வெண்ணியை

உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே

விளக்கம்:

உள்குதல்=நினைத்தல்; இந்த பாடலில் பெருமானை தவிர்த்து தனது உள்ளம் வேறு எவரையும் நினையாது என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். பல பாடல்களில் ஞானசம்பந்தர் பெருமானைத் தவிர்த்து தனது உள்ளம் வேறு எவரையும் பேணாது, நினையாது, சிந்தை செய்யாது, தொழாது அறியாது, அன்பு செலுத்தாது என்றும், தனது நா வேறு ஒருவரின் திருநாமத்தை உரையாது, பேசாது என்றும் பெருமானை தான் எப்போதும் மறவேன் என்றும் பெருமான் பால் தான் கொண்டிருந்த அன்பினை உணர்த்துகின்றார். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

கீழைத் திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில், ஞானசம்பந்தர் பெருமானைத் தவிர்த்து வேறு எந்த பேச்சினையும் பேசேன் என்று கூறுகின்றார். நமது பேச்சுகள் அனைத்தும் அவனைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்றும் அவனது புகழினை அல்லால் வேறு எதனையும் நாம் பேசாமல் இருக்க வேண்டும் என்பதையும் இந்த பாடலில் கூறுகின்றார்

செற்றவர் தம் அரணம் அவற்றைச் செவ்வழல் வாயெரி ஊட்டி நின்றும்

கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி

உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற

பெற்று அமரும் பெருமானை அல்லால் பேசுவது மற்றொர் பேச்சிலோமே

இந்த பாடலில் உமை பங்கனைத் தவிர்த்து வேறு எவரையும் தான் அறியமாட்டேன் என்று திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு, அவர் நின்றியூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினை (1.18.06) நினைவூட்டுகின்றது. சலவம்–கங்கை; மூரல் என்ற சொல் எதுகை கருதி மூரன் என்று மாறியுள்ளது. மூரல் முறுவல்=மிகவும் சிறிய புன்சிரிப்பு; சாரன்=சார்ந்து இருப்பவன்; பொழில்= சோலை; மிடையும்=நெருங்கி இருத்தல்.

மூரன் முறுவல் வெண்ணகை உடையாள் ஒரு பாகம்

சாரன் மதி அதனோடுடன் சலவம் சடை வைத்த

வீரன் மலி அழகார் பொழில் மிடையும் திரு நின்றி

ஊரன் கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் நின்றியூர் தலத்தில் உறைகின்ற பெருமானை அல்லது தனது உள்ளம் வேறு எவரையும் உணராது என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். திருக்கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் திருவிழா நேரங்களில் சங்கு பறை இவற்றின் ஒலிகள் கலந்து ஆரவாரமாக காணப்படும். நேரங்களிலும் தான் மனம் ஒன்றி வழிபடுவதால் தனது மனம் வேறு எதையும் உணராது இறை சிந்தனையில் ஆழ்ந்திருப்பதாக ஞானசம்பந்தர் கூறுகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். ஆரவும் ஆர=பறை சங்கு ஆகிய ஒலிகளின் பக்கத்தில் தோன்றும் பல விதமான ஓசைகள்; இந்த ஆரவார ஓசைகளை பெருமான் மிகவும் விரும்புவதாகவும் ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்காரவும் ஆர

அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை

நிறையும் புனல் சடைமேல் உடை அடிகள் நின்றியூரில்

உறையும் இறை அல்லது என் உள்ளம் உணராதே

கழுமலம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.19.7) ஞானசம்பந்தர் பெருமானது திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதனையும் தொழாத அறிவு உடையவனாக தான் இருப்பதாக கூறுகின்றார். நறநிறை=நறவு என்ற சொல் குறைந்து நற என வந்துள்ளது, தேன் நிறைந்த; நறவு=தேன்; தனது ஒளிக்கதிர்கள் மூலம் பயிர்களை வளர்க்கும் தன்மை உடைய பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றவனும், தேன் நிறைந்த மலர்கள் இருக்கும் திருமுடியை உடையவனும் ஆகிய பெருமான், உதிரும் தன்மை உடைய மயிர்கள் நிறைந்ததும் தசைகள் நீங்கப் பெற்றதுமான புலித் தோலினை உடையாக இடுப்பினில் அணிந்தவனும், இருளினை நீக்கும் கதிரவனின் கதிர்கள் போன்று ஒளிவீசும் மழுப் படையை ஏந்தியவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் எழுந்தருளியுள்ளான். அத்தகைய பெருமானின், ஒலிக்கும் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளை தொழுது போற்றி வணங்கும் அறிவன்றி வேறு அறிவு ஏதும் இல்லாதவனாக அடியேன் இருக்கின்றேன் என்று திருஞானசம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.

முதிருறு கதிர் வளர் இளமதி சடையனை நறநிறை தலை தனில்
உதிருறு மயிர்பிணை தவிர் தசையுடை புலியதள் இடை இருள் கடி
கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை
அதிருறு கழலடிகளதடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே

பாற்றுறை தலத்தின் மீது அருளிய பாடலில் (1.56.4) திருஞானசம்பந்தர் சிவபெருமான் ஒருவர் தான் தனது சிந்தையில் இருப்பதாக கூறுகின்றார். இந்த பாடல் அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். ஏ=அம்பு. ஆவின்=அம்பினைக் கொண்டு; அல்லார்=சிவநெறியைச் சாராத திரிபுரத்து அரக்கர்கள்; எயில்=கோட்டை, இங்கே பறக்கும் கோட்டைகள்; ஓ=அதிசயம் நடந்ததை வெளிப்படுத்தும் குறிச்சொல்; தனது சிந்தையில் இருந்த மயக்கம் தீர்க்கப்பட்டு தனது சிந்தை முழுவதும் பரவி நின்ற பெருமான் என்று இதே பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும் சம்பந்த நாயகி, தனது சிந்தனையில் பெருமான் ஒருவரே நிறைந்து நிற்கின்றார் என்று கூறுகின்றாள்.

பூவும் திங்கள் புனைந்த முடியினார்

ஏவின் அல்லார் எயில் எய்தார்

பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை

ஒ என் சிந்தை ஒருவரே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.80.6), இறைவனது திருப்பாதங்களை தொழுது வணங்குவதே இன்பம் என்றும், அவனது திருப்பாதங்களை ஏத்தும் பண்பே சிறந்த பண்பு என்று பதிகத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது பாடல்களில் கூறிய திருஞான சம்பந்தர், இந்த பாடலில் அவனது திருப்பாதங்களைத் தவிர்த்து, தனது உள்ளம் வேறு எதனையும் விரும்பாது என்று கூறுகின்றார். வரு மாந்தளிர்=புதியதாக மரத்தில் கிளைத்து எழுகின்ற; திருமாம் தில்லை=திருமகள் பொலிந்து விளங்கும் செல்வச் செழிப்பான; கருமான்=கரிய நிறம் கொண்ட யானை;

வரு மாந்தளிர் மேனி மாதொர் பாகமாம்

திருமாம் தில்லையுள் சிற்றம்பலம் மேய

கருமான் உரி ஆடைக் கறை சேர் கண்டத்து எம்

பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே

இந்த பாடலில் சம்பந்தர் இறைவனைத் தவிர்த்து வேறு எதையும் தனது உள்ளம் உணராது என்று கூறுவது நமக்கு திருவெண்காடு தலத்தின் மீது பாடிய பாடலை (2.48.9) நினைவூட்டுகின்றது. திருமால் மற்றும் பிரமன் காண முடியாமல் நெடிய தீப்பிழம்பாக நின்றவன் என்றும் ஐராவத யானைக்கு அருள் புரிந்தவன் என்று அவனது பெருமைகளை தங்களது உள்ளத்தில் நினைத்து உருகாத மாந்தர்களை உணர்வு உடையவராக கருதமாட்டோம் என்று கூறுகின்றார். கள்=தேன்; கிடந்தான்=படுத்து கிடப்பவன்; ஒள்ளாண்மை=சிறந்த ஆண்மைத் தன்மை; ஆடுதல் என்றால் நீராடுதல் என்று பொருள். உள்ளம் முழுவதும் பெருமான் குறித்த சிந்தனைகளால் நீராட்டப்பட்டு நனைந்து நையவேண்டும் என்பதை உள்ளாடி என்று சம்பந்தர் உணர்த்துகின்றார்.

கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்

ஒள்ளாண்மை கொளல் கோடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான்

வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று

உள்ளாடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே

மாந்துறை பதிகத்தின் பாடலில் (2.110.2) மாதொருபாகனைத் தவிர்த்து தான் வேறு எவரையும் அறியேன் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அந்த நிலையினை நாமும் அடைய வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இந்த பாடலில் வெளிப்படுகின்றது. விளவு=விளாம் பழம்; வே=மூங்கில்; வேய்மணி=மூங்கிலில் உள்ள முத்துக்கள்; துளவமான்மகன் என்ற தொடர் துளவ மால் மகன் என்று, பொருள் புரிந்து கொள்வதற்காக, பிரிக்கப்பட்டுள்ளது. துளவ=துழாய், துளசி; தாமரை அசோகம் குவளை மா முல்லை என்பன மன்மதன் தனது அம்பினில் பயன்படுத்தும் அம்புகள்; அளகம்=கூந்தல்; வாள் நுதல்=ஒளி வீசும் நெற்றி; அரிவை என்பது இருபது வயதிலிருந்து இருபத்தைந்து வயதில் இருக்கும் பெண்களை குறிக்கும்; அம்பிகை வயது முதிராமல் என்றும் இளமையாக இருக்கும் நிலையினை குறிக்கும் வண்ணம் அரிவை என்று அம்பிகையை ஞானசம்பந்தர் அழைக்கின்றார். பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும், தேவர்கள் என்ற சொல் மூலம் குறிப்பிடும் ஞானசம்பந்தர், அத்தகைய தேவர்கள் தொழும் இறைவன் என்று சிவபெருமானின் பெருமையை உணர்த்துகின்றார். திருமாலும் பிரமனும் தொழும் பெருமான், என்று உணர்ந்த பின்னர், மற்ற தெய்வங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அல்லவா. அதனால் தான் பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் அறியேன் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்து உந்தி

அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானைத்

துளவ மால் மகன் ஐங்கணைக் காமனைச் சுட விழித்தவன் நெற்றி

அளக வாள் நுதல் அரிவை தன் பங்கனை அன்றி மற்று அறியோமே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில், பெருமானின் திருவடிகளைத் தொழுவதைப் போன்ற சிறந்த செயல் வேறொன்றையும் தான் அறியேன் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். குன்றின் உச்சியில் காணப்படும் தேன் கூடுகளும் கமுகு மரங்களின் ஓலைகளை கொத்தாக வாரிக்கொண்டு வரும் காவிரி நதியின் வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் நம்பனும் ஆகிய சிவபெருமான், வாடிய பிரமனின் தலையினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் பல இடங்களுக்கும் பலியேற்கச் செல்கின்றார். குற்றம் ஏதும் இல்லாத மாணிக்கம் போன்று ஒளி வீசும் பெருமானை, தங்களது உள்ளம் மகிழ வானோர்கள் புகழ்ந்து வணங்கின்றனர். இத்தகைய பெருமைகள் வாய்ந்த பெருமானைத் தொழுவதைத் தவிர்த்து நிறைவான செயல் வேறு ஒன்றினையும் நாம் அறியோம் என்று திருஞானசம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.

கோடு தேன் சொரி குன்றிடைப் பூகமும் கூந்தலின் குலை வாரி

ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்

வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும்

கேடிலா மணியைத் தொழல் அல்லது கெழு முதல் அறியோமே

மாந்துறை பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.110.4) பெருமானை வணங்குவதைத் தவிர்த்து தான் வேறு ஒன்றையும் அறியேன் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கொழுந்து=சிறப்பான ஒன்று, தலையானது; ஞாழல்=புலிக் கொன்றை மரம்; கண்டன்=கழுத்தினை உடையவன்; ஏனையோரின் கழுத்திலிருந்து மிகவும் வேறுபட்டு புகழினை உடையது பெருமானின் கழுத்து. ஸ்ரீகண்டன் என்பது அவரது திருநாமங்களில் ஒன்று. அனைவரையும் காக்கும் பொருட்டு, பாற்கடலிலிருந்து பொங்கி வந்த நஞ்சினைத் தானே உட்கொண்ட பெருமான், ஊழிக்காலத்தில் தனது வயிற்றினில் ஒடுங்கும் உயிர்களின் நலன் கருதி, வயிற்றினுள்ளே அந்த விடத்தைச் செலுத்தாமல், தனது கழுத்தினில் எப்போதும் தேக்கிய வண்ணம் இருக்கின்றார். இவ்வாறு அனைவர்க்கும் நன்மை புரிந்த, கழுத்து பெருமான் ஒருவருக்கே உரியது என்பதால், கண்டன் என்று மிகவும் பெருமையாக அவரை ஞானசம்பந்தர் இந்த பாடலில் அழைக்கின்றார்.

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இளமருது இலவங்கம்

கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன்

அலை கொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடரவுடன் வைத்த

மலையை வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே

பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தொழேன் என்று சம்பந்தர் கூறுவதை கருத்தினில் கொண்டு தான், பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றாரோ? சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில் திருஞான சம்பந்தரைக் குறிப்பிடும் வரிகள் நமது நினைவுக்கு வருகின்றன. வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான் சம்பந்தன் என்று சுந்தரர் கூறுகின்றார். கொன்றைசூடியின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் போற்றி வழிபடாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றார். அச்சிறுபாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், கையில் மான்கன்றினை ஏந்திய பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத கருத்தினை உடையவன் என்று தன்னை திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (1.77.11) உணரலாம். கருங்குவளை மலர்கள் பொழியும் தேனினை உட்கொள்ளும் தவளைகளின் வாய் நிறைந்துள்ள நிலையும், வாளை மீன்கள் துள்ளி விளையாடுவதால் புதியதாக மலர்ந்த மலர்களின் இதழ்கள் கிழியும் நிலையும் குறிப்பிடப்பட்டு சீர்காழி நகரின் நீர்வளமும் நிலவளமும் சம்பந்தரால் நமக்கு உணர்த்தப்படுகின்றது.

மைச்செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப் பொய்கையில்

புதுமலர் கிழிய

பச்சிற வெறி வயல் வெறி கமழ்ப் பதி அவர் அதிபதி கவுணியர்

பெருமான்

கைச் சிறு மறியவன் கழல் அலால் பேணாக் கருத்துடை ஞான சம்பந்தன

தமிழ் கொண்டு

அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் அருவினை

இலரே

பெருமானை, தான் நனவிலும் கனவிலும் மனம் ஒன்றி விரும்பி வழிபட்டு மறவாது இருந்த நிலையினை திருவாவடுதுறை தலத்து பாடல் ஒன்றில் (3.4.3) ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மனவினும்=மனம் ஒன்றி; தனது தந்தையார் வேள்வி செய்வதற்காக வேண்டிய பொருளை நாடி இறைவனிடம் ஞானசம்பந்தர் விண்ணப்பம் வைக்கும் பதிகம் இந்த பதிகம். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், பெருமானின் அருளினைப் பெறுவதற்கு தான் தகுதி வாய்ந்தவன் என்பதை குறிப்பிடுகின்றார்.

நனவினும் கனவினும் நம்பா உன்னை

மனவினும் வழிபட மறவேன் அம்மான்

புனல் விரி நறுங்கொன்றை போது அணிந்த

கனல் எரி அனல் புல்கு கையவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையே

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடலில் (3.9.5) முறையாக இசை பாடியாடும் தொண்டர்களின் இதயத் தாமரையில் அன்புடன் குடிகொண்டிருக்கும் இறைவனை அல்லாது தனது உள்ளம் வேறு எவரையும் நினையாது என்று கூறுகின்றார். இறை=தங்குமிடம்; வாஞ்சியம்= அன்புடன்; முன்=முற்பட, ஈடுபடும்; பெருமான் விருப்பத்துடன் பிச்சை எடுக்கின்றார் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பிறையுறு செஞ்சடையார் விடையார் பிச்சை நச்சியே

வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழி மிழலையார்

முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள்

இறை உறை வாஞ்சியம் அல்லது எப்போதும் என் உள்ளமே

கல்லால் நீழல் என்று தொடங்கும் பொது பதிகத்தின் முதல் பாடலில் (3.40.1) ஞானசம்பந்தர், கல்லால் மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்த பெருமானை அன்றி வேறு எவரையும், உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்த ஞானியர், தெய்வமாக கருத மாட்டார்கள் என்றும் தானும் அவ்வாறே இருப்பேன் என்றும் கூறுகின்றார்.

கல்லால் நீழல்

அல்லாத் தேவை

நல்லார் பேணார்

அல்லோம் நாமே

இவ்வாறு சம்பந்தர் கூறுவது நமக்கு சுந்தரர் வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலை (7.86.7) நினைவூட்டும். பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்று கூறுகின்றார் மெய்ப்பொருளாய் இருப்பவனும் வெண்மையாக உள்ள திருநீற்றினை தனது உடல் முழுவதும் பூசிக்கொள்பவனும், வேதங்களின் தலைவனும், தனது கையினில் மான் மற்றும் மழு ஏந்தியவனும், அனைவரது வாழ்நாளினை முடிக்கும் காலனின் வாழ்நாளை முடித்தவனும், படத்தினை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், தனது அடியார்கள் அன்றி ஏனையோர் அறிய முடியாத வண்ணம் தன்னை மறைத்துக் கொள்பவனும், எங்களது தலைவனும் ஆகிய இறைவனை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப் படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். படிறன் என்றால் வஞ்சகன் என்று பொருள். தனது அடியார்களுக்கு காட்சி அளிக்கும் இறைவன், அடியார் அல்லாதாருக்கு காட்சி கொடுக்காமல் மறைந்து கொள்வதை, படிறு என்று சுந்தரர் குறிப்பிடுவதாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத முதல்வன்

கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்

பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்

ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே

திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.55) முதல் பத்து பாடல்கள் அனைத்தையும், பெருமானை அல்லாது வேறு எவரையும் தனது மனம் ஆதரவாக நினையாது என்று கூறுகின்றார். அந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். அரையா=அரசனே,

விரையார் கொன்றையினாய் விடம் உண்ட மிடற்றினனே

உரையார் பல் புகழாய் உமைநங்கை ஓர் பங்குடையாய்

திரையார் தெண்கடல் சூழ் திருவான்மியூர் உறையும்

அரையார் உன்னை அல்லாது அடையாது எனது ஆதரவே

வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர், பெருமானை அன்றி வேறு எவரையும் தனக்குத் துணையாக கருத மாட்டேன் என்றும் அவரைத் தவிர்த்து வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் கருணையே உருவமாக உள்ள பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார். பண்டைய நாளிலிருந்து இடைவிடாது தொடர்ச்சியாக அடியார்களுக்கு அருள் புரிந்து வரும் அன்னையை, குற்றம் ஏதும் இல்லாதவள் என்று அடியார்கள் புகழ்வதாக அடிகளார் கூறுகின்றார், இனியும் தொடர்ந்து வாழ்வதில் தனக்கு விருப்பம் ஏதும் இல்லாமையால், பெருமானே நீ என்னை விரைவில் அழைத்துக் கொள்வாயாக என்று விண்ணப்பம் வைக்கும் பாடல்.

பழுது இல் தொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று

இலேன் கண்டாய்

செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை

உறை சிவனே

தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை என

நினைவனோ சொல்லாய்

மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்

புரியாயே

மேற்கண்ட பாடலில் பெருமானே உன்னைத் தவிர பற்றுக்கோடு வேறேதும் எனக்கு இல்லை என்று அறிவிக்கும் அடிகளார், தனது நிலையை பெருமானே நீ இன்னும் காணவில்லையா என்று கேட்கும் வகையில், கண்டாய் என்ற சொல்லை கையாண்டுள்ளார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பற்று நான் மற்றிலேன் கண்டாய் என்ற தொடர் வருகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல், இந்த தொடர் உணர்த்தும் செய்தியை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது. பெருமானே உன்னைத் தவிர வேறு பற்றுக்கோடு ஏதும் கொள்ளாமல் வாழும் எனக்கு அருள் புரியாமல் இருக்கின்றாயே இது நியாயமா என்று கேட்பது போன்று அமைந்துள்ள பாடல். பெருமானே ஒருவனே தனக்கு பற்றுக்கோடு என்பதால், அவனைத் தவிர வேறு எவரிடமும் சென்று முறையிடேன் என்று புலம்பும் அடிகளார், அவன் அருள் புரியாமல் இருப்பதால் அவன் மீது தான் கோபம் கொண்டாலும் அவனது அருளினை தொடர்ந்து வேண்டுவதையும் நாம் உணரலாம்.

பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்றிலேன்

கண்டாய்

சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருபெருந்துறை உறை சிவனே

ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை

ஆனால்

வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

பொழிப்புரை:

ஒற்றைப் பிறைச் சந்திரனையும் சிவந்த கண்களை உடைய பாம்பினையும் தனது சடையின் மீது பொருத்திக் கொண்டவனும், உடைந்த மண்டையோடாகிய பிரம கபாலத்தைத் தனது உண்கலனாக ஏந்திக்கொண்டு ஊரூராக பலியேற்கச் செல்பவனும், இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்பவனும், தேவர்களால் தொழப்படுபவனும், வெண்ணி எனப்படும் தலத்தினைத் தனது உறைவிடமாக உடையவனும் ஆகிய பெருமானை தவிர்த்து வேறு எவரையும் எனது மனம் நினையாது.

பாடல் 2:

சோதியை சுண்ண வெண்ணீறு அணிந்திட்ட எம்

ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத

வேதியை வேதியர் தாம் தொழும் வெண்ணியில்

நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே

விளக்கம்:

நீதி=புண்ணியத்தின் வடிவமாக உள்ளவன்; சுண்ணம்=பொடி; வேதி=வேதங்களை அருளியவன்; பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நினையேன் என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்டமைக்கு ஞானசம்பந்தர் இந்த பாடலில் விளக்கம் அளிக்கின்றார் போலும். உயிரின் உண்மையான விருப்பம், தன்னுடன் பிணைந்துள்ள வினைகள் அனைத்தையும் தீர்த்துக் கொண்டு, பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளைச் சென்று சார்தல். பெருமானை நாம் நினைப்பதற்கு அரியவனாகத் திகழ்வதால், அவன் அருள் இருந்தால் தான், நம்மால் அவனை நினைக்கமுடியும். அவ்வாறு அவனது அருள் பெற்று அவனை நினைக்கும் அடியார்களை வல்லார் என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். .

பொழிப்புரை:

ஒளி வடிவாக விளங்குபவனும், திருநீற்றுப் பொடியை தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டவனும், அனைத்து உயிர்களுக்கும் முழுமுதற் கடவுளாக விளங்குபவனும், தோற்றமும் முடிவும் இல்லாதவனும், வேதங்களை அருளியவனும், வேதியர்களால் வணங்கப் படுபவனும், வெண்ணி தலத்தில் எழுந்தருளி இருப்பவனும், புண்ணியமே வடிவமாக உள்ளவனும் ஆகிய பெருமானை நினைக்கும் தன்மை உடையவர்களை விட்டு அவர்களது வினைகள் முற்றிலும் நீங்கிவிடும்.

பாடல் 3:

கனி தனைக் கனிந்தவரைக் கலந்து ஆட்கொள்ளும்

முனிதனை மூவுலகுக்கு ஒரு மூர்த்தியை

நனி தனை நல்லவர் தாம் தொழும் வெண்ணியில்

இனிதனை ஏத்துவார் ஏதம் இலாதாரே

விளக்கம்:

நனி=மிகுதி, மிகுதியான பெருமை உடையவன்; ஏதம்=குற்றம்; முனிதன்=இறைவன்; இனிதன்= இன்பமே உருவானவன்; கனியாக இனிப்பவன் சிவபெருமான் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அவனது நினைவுகளே நமது மனதினில் ஒரு பரவச நிலையை ஏற்படுத்தும்; அவனது திருநாமங்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்; எனவே தான் பெருமானை கனி போன்று இனிப்பவர் என்று உணர்த்தும் வண்ணம், அருளாளர்கள் கனி என்று பெருமானை குறிப்பிடுகின்றனர். அவ்வாறு குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

கண்ணார் கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.101.6) ஞானசம்பந்தர் கண்ணார் கோயிலில் கனியாகத் திகழ்பவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். மேலும் பெருமான் கண் போன்று இன்றியமையாத உறுப்பாக திகழ்பவன் என்றும் குறிப்பிடுகின்றார். அனைத்து உறுப்புகளிலும் கண்ணே மிகவும் அருமையான உறுப்பாக அனைவராலும் கருதப் படுகின்றது. அதனால் தான் மிகவும் முக்கியமாக கருதுவோரை நமது கண் என்று அழைக்கின்றோம். மிகவும் முக்கியமானவராக பெருமான் இருப்பதால், நாம் அவரை கண் போன்று கருதி போற்ற வேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படும் செய்தி. நடலை=துன்பம். நரகத்தில் உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்கள். அடியார்களின் உடலிலிருந்து பிரிந்த உயிர்கள், நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் இழுத்துச் செல்லப்படுவதை தவிர்த்து, சிவலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் என்பதை ஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பாக

உண்ணவனைத் தேவர்க்கு அமுது ஈந்து எவ்வுலகிற்கும்

கண்ணவனைக் கண்ணார் திகழ் கோயில் கனி தன்னை

நண்ண வல்லார்கட்கு இல்லை நமன் பால் நடலையே

கற்றவர்கள் அறிந்து உண்ணும் கனியாக சிற்றம்பலத்தில் பெருமான் திகழ்கின்றார் என்று அப்பர் பெருமான் பாவநாசத் திருப்பதிகத்தின் முதல் பாடலில் (4.15.1) கூறுகின்றார். புனவாயிலில் உறையும் பெருமான் பழம்பதிநாதர் என்று அழைக்கப்படுகின்றார். இந்த தலத்திற்கு பழம்பதி என்ற ஒரு பெயரும் உண்டு. எனவே பழம்பதி என்று புனவாயிலை குறிப்பதாக கொள்ளவேண்டும். உலகப் பற்றினை முழுவதுமாக விட்டொழித்தாலும், இறைவன் உறையும் தலங்கள் சென்று இறைவனை வழிபடுவதை தொடர்ந்து செய்யும் அடியார்கள் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

பற்றற்றார் சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
சிற்றம்பலத்து எம் திகழ்கனியைத் தீண்டற்கு அரிய திருவுருவை
வெற்றியூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே

பழம் என்றாலே இனிமையானது. அந்த பழம் நழுவிப் பாலில் விழுந்தால், பழம் மேலும் இனிக்கும் அல்லவா. மேலே குறிப்பிட்ட பாடலில் கனி என்று பெருமானை குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு பெருமான் கனியினும் மேம்பட்ட இனிப்பினை உடையவன் அல்லவா என்ற எண்ணம் தோன்றியது போலும். அதனால் இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (4.15.5) பாலில் திகழும் பைங்கனி என்று பெருமானை குறிப்பிடுகின்றார். விடமுணி=விடத்தை உண்டவன்; பைங்கனி= பசுமையான கனி; குருமணி=நல்ல நிறமுடைய மாணிக்கம்: குடமூக்கு=கும்பகோணத்தில் உள்ள கும்பேசர் கோயில். உள்ளம் மகிழ்ச்சியுடன் இருந்ததால், உடலும் குளிர்ந்ததாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.

கோலக்காவில் குருமணியைக் குடமூக்கு உறையும் விடமுணியை
ஆலங்காட்டில் அந்தேனை அமரர் சென்னியாய் மலரைப்
பாலில் திகழும் பைங்கனியைப் பராய்த்துறையெம் பசும்பொன்னைச்
சூலத்தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே

பாலில் தோய்ந்த பழம் போன்று இனிப்பவன் என்று மேற்கண்ட பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான், இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (5.14.10), இன்னும் ஒரு படி மேலே சென்று கனியினும் இனியன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இனியன் என்ற சொல்லினை, கனியினும் இனியன், கரும்பினும் இனியன், பாவை நல்லாரினும் இனியன், அரசினும் இனியன் என்று கூட்டி பொருள் கொள்ளவேண்டும். சிறிய குழந்தைகள் விரும்பி உண்பது இனிப்பான பழங்களை; சற்று வளர்ந்த குழந்தைகள் கரும்பினை விரும்புவார்கள். வாலிப வயதில் இருக்கும் ஆடவர்கள் விரும்புவது அழகிய இளம் பெண்களை; வயது முதிர்ந்தோர் விரும்புவது நல்லாட்சி நடத்தும் அரசினை; இவ்வாறு நான்கு நிலைகளில் இருக்கும் மனிதர்கள் விரும்பும் பொருட்களை விடவும் இனியனவாக இருப்பவன் சிவபெருமான் என்று கூறுவதன் மூலம், அனைத்து வகை மாந்தர்களுக்கும் பெருமான் இனியவனாக இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.

கனியினும் கட்டி பட்ட கரும்பினும்

பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்

தனி முடி கவித்து ஆளும் அரசினும்

இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே

ஏயிலானை என்று தொடங்கும் ஒரு பொது பதிகத்தின் பாடலில் (5.91.7), அப்பர் பிரான் உலகத்தவரை அழைத்து நான் உங்களுக்கு கனி ஒன்று தருகின்றேன், அதனை உண்டு சுவைக்கும் வல்லமை உங்களுக்கு உண்டா என்று கேட்கின்றார். புனிதனாகிய ஈசனின் பொற்கழலினை இனிய கனி என்று குறிப்பிட்டு, அந்த கனி சாலவும் இனியது என்று சொல்கின்றார். ஈசன் எனும் கனியினை நாம், எப்போதும் சிந்தனை செய்து, அவனைப் புகழ்ந்து போற்றி, அவனது பெருமைகளை நமது மனதினில் அசை போட்டவாறு இருந்தால் தான், அந்த கனியின் சுவையை நாம் உணரமுடியும். அவ்வாறு இருக்க முடியுமா என்ற கேள்வியை கேட்கின்றார்.

மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன்

கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே

புனிதன் பொற்கழல் ஈசன் எனும் கனி

இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே

சிவபெருமானை நினைக்க நினைக்க நமக்கு இன்பம் பெருகும் என்பதால், அவனைப் புகழ்ந்து பாட பாட நமது உள்ளம் மகிழ்ச்சி கொள்ளும் என்பதால், சுவையான கனியாக இறைவனை இங்கே, அப்பர் பிரான், உருவகம் செய்கின்றார். திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் (6.32) முதல் பாடலை, கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி என்று அப்பர் பிரான் தொடங்குகின்றார்.

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும்

கதியே போற்றி

அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி அல்லல் அறுத்து

அடியேனை ஆண்டாய் போற்றி

மற்று ஒருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும்

மருந்தே போற்றி

செற்றவர் தம் புரம் எரித்த சிவனே போற்றி திருமூலட்டானனே

போற்றி போற்றி

கன்றாப்பூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.79.8), அப்பர் பிரான் பெருமானை, கரும்புக்கட்டி என்றும், கனி என்று தேன் என்றும் குறிப்பிடுகின்றார். இரும்பு அமர்ந்த=இரும்பு பொருந்திய; சுரும்பு=வண்டு; என்னான்=எனக்கு முதல்வானாக இருப்பவன்; கன்றாப்பு தலத்தில் உள்ள இறைவனின் திருநாமம் நடுதறியப்பர்; காறை என்ற சொல்லுக்கு இரண்டு விதமாக பொருள் சொல்லப்படுகின்றது. திருக்காறை எனப்படும் தலத்தில் உறைபவன். காறை=பன்றியின் வெண்கொம்பு பதிக்கப்பட்ட ஆபரணம்.

கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக் கன்றாப்பின்

நடுதறியைக் காறையானை

இரும்பு அமர்ந்த மூவிலை வேல் ஏந்தினானை என்னானைத் தென்

ஆனைக்காவான் தன்னை

சுரும்பு அமரும் மலர்க் கொன்றை சூடினானைத் தூயானைத் தாயாகி

உலகுக்கு எல்லாம்

தரும் பொருளைத் தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள்

போக்கினேனே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.51.9) சுந்தரர், மெய்ஞ்ஞான நூல்களைக் கற்றுத் தேர்ந்து, அந்த கருத்துகளை எப்போதும் சிந்திக்கும் அடியார்களுக்கு கனி போன்று இனிப்பவன் பெருமான் என்று கூறுகின்றார். உற்றுளன்=தனது உள்ளத்தில் பொருந்தியவன்; பெற்றுளன்=பெருமையை உடையவன்; கை அகன்றிட்டு=பிரிந்து நீங்கி; எற்றுளன்= எதற்காக இன்னும் உயிருடன் வாழ்கின்றேன் என்று தெரியாமல் வாழ்பவன்; திருவொற்றியூரில் தங்கியிருந்த, திருவாரூர்ப் பெருமானை பார்க்காமல் இருந்த தனது நிலையை நினைத்து வருத்தமுடன் சுந்தரர் பாடிய பதிகம்.

கற்றுளவான் கனியாய கண்ணுதலைக் கருத்தார

உற்றுளனாம் ஒருவனை முன் இருவர் நினைந்து ஏத்தப்

பெற்றுளனாம் பெருமையனைப் பெரிது அடியே கை அகன்றிட்டு

எற்றுளனாய்ப் பிரிந்து இருக்கேன் என் ஆரூர் இறைவனையே

திருவாசகம் பிடித்தபத்து பதிகத்தின் பாடலில் (8.37.4) பெருமானை அளிந்ததோர் கனி என்று மணிவாசகர் அழைக்கின்றார். அளிந்ததோர் கனி=பக்குவமாக கனிந்த பழம்; பெருமானை ஞானவொளி வீசும் சுடராகவும், அவனது அருளை சுடர் தரும் ஒளிக்கும் ஒப்பிட்டு கூறுகின்றார். பெருமானுக்கும் சுடருக்கும் அடிப்படையில் ஒரு வேற்றுமை உள்ளது. உலகத்தில் உள்ள சுடர்கள் அனைத்தும் ஒளியைத் தந்தாலும், அதன் அருகினில் செல்லும்போது நாம் வெம்மையை உணர்கின்றோம். ஆனால் ஒளிச்சுடராகிய இறைவனின் அருகில் நாம் சென்றால், இன்பத்தை உணர்கின்றோம். எனவே தான் அருளுடைச் சுடர் என்று கூறுகின்றார். பக்குவப்பட்ட கனி போன்று தன்னை நினைக்கும் அடியார்களின் மனதினில் சிவானந்தத்தை உண்டாக்கி, அதனை அனுபவிக்கும் போகத்தையும் தருகின்ற பெருமான் என்றும், கடுமையான தவங்கள் புரிவோருக்கும் தலையாய தலைவனாக திகழும் இறைவன் என்றும் முதலடியினில் கூறுகின்றார். ஆய கலைகள் அறுபத்து நான்காக உள்ள இறைவன், ஒவ்வொரு கலையும் ஒரு பயனைத் தரும் வண்ணம் அமைத்துள்ளான். கலைகளின் இருப்பிடமாக உள்ள இறைவன், தன்னை அணுகும் அடியார்களுக்கு மெய்ப்பொருளின் தன்மையை உணர்த்தும் மெய்ஞானத்தை அளிக்கின்றார். இறைவனை நா எவ்வளவு புகழ்ந்தாலும் அது முற்றுப்பெறாத புகழாகவே இருத்தலின், புகழினைக் கடந்தவன் என்று அழைக்கின்றார். அறிவினால் அறியப்படாமால் உணர்வினால் அறியப்படுவதால், இறைவனை போகமே என்று விளிக்கின்றார். பொதுவாகவே, யோகத்தில் ஆழும் மனிதர்களின் முகத்தினில் தனி ஒரு பொலிவினை நாம் உணர்கின்றோம். அனைத்து யோகிகளுக்கும் முன்னோடியாக இருக்கும் பரமயோகியின் பொலிவினை நம்மால் அளக்கமுடியுமா. தெருள்= மயக்கம். அறியாமையை விளைவிக்கும் ஆணவ மலத்தால் சூழப்பட்டு, தடுமாறும் மனிதர்களின் சிந்தையுள் புகுந்து செம்மைப்படுத்தி, தெளிவினை ஏற்படுத்தும் திறன் பெருமான் ஒருவனுக்கே உண்டென்பதால், செல்வன் என்று அழைக்கும் மணிவாசகர், தான் அறியாமை ஆகிய இருளில் ஆழ்ந்திருந்தாலும், இறைவன் பால் தான் கொண்டுள்ள நம்பிக்கையைப் பற்றுக்கோடாகக் கொண்டு இறைவனை நெருங்கியதாக கூறுகிறனர். இந்த பதிகத்தின் பாடல்கள் மூலம், இறைவனை நாம் நெருங்கவேண்டும் என்றால், அவன் பால் நம்பிக்கை வைத்து அன்புகொண்டு அவனைப் புகழவேண்டும் என்பது உணர்த்தப் படுகின்றது.

அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க்கு அரசே

பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே

தெருளிடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே சிவபெருமானே

இருளிடத்து உன்னை சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே

சேந்தனாரும் திருவிசைப்பா பாடல் (தலம்–வீழிமிழலை) ஒன்றினில், சிவபெருமானை கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி என்று கூறுகின்றார்,

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணை மாகடலை

மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச்

செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த

கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே

முகத்தலை தலத்தின் மீது அருளப்பட்ட திருவிசைப்பா பாடலில் கருவூர்த்தேவர், தான் நுகர்ந்த சுவை மிகுந்த இனிய கனியாக பெருமான் விளங்கிய தன்மையை உணர்த்துகின்றார். புழுங்கு=வேகுதல், வெம்மையால் வருந்துதல், இங்கே துன்பத்தால் வருந்தும் உயிர் என்று பொருள் கொள்ள வேண்டும்;

புழுங்கு தீவினையேன் வினைகெடப் புகுந்து புணர்பொருள் உணர்வு

நூல் வகையால்

வழங்கு தேன் பொழியும் பவளவாய் முக்கண் வளரொளி மணிநெடுங்

குன்றே

முழங்கு தீம்புனல் பாய்ந்து இளவரால் உகளும் முகத்தலை அகத்து

அமர்ந்து அடியேன்

விழுந்து தீங்கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே

திருமூலரும், திருமந்திரப் பாடல் ஒன்றில், அனைத்து உலகங்களுக்கும் முதற்பொருளாக இருக்கும் சிவபிரான், அனைத்து உயிர்கட்கும் உயிராக இருக்கின்றார் என்றும், அந்த சிவபிரானை உணர்த்தும் நமச்சிவாய என்னும் சொல்லாகிய கனியை உண்ட தான், அந்த கனி இனிப்பாக இருந்ததை உணர்ந்தேன் என்றும் கூறுகின்றார். இவ்வாறு இறைவனையும் இறைவனது நாமத்தையும் பழத்திற்கு உருவகப்படுத்தி, இறைவனை உணரும் அடியார்கட்கும் அந்த நினைப்பே இனிப்பாக உள்ளதாக பல அருளாளர்கள் கூறியுள்ளார்கள்.

ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்

ஒன்று கண்டீர் உலகுக்கு உயிராவது

நன்று கண்டீர் இனி நமச்சிவாயப் பழம்

தின்று கண்டேற்கு இது தித்தவாறே

பொழிப்புரை:

தன்னை மனமுருகி வழிபடும் அடியார்களுக்கு இனிய கனியாக விளங்கும் இறைவன், கனிந்த மனத்துடன் தன்னை வழிபடும் அடியார்களுடன் கலந்து அவர்களின் மனதினில் உறைந்து அவர்களை ஆட்கொண்டு அருள் புரிகின்றார். அனைத்து உயிர்களுக்கும் இறைவனாக விளங்கும் பெருமானை, மூவுலங்கங்கட்கும் தலைவனாக விளங்கும் மூர்த்தியை, மிகுதியான பெருமை உடையவனை, நல்லவர்களால் தொழப்படும் பெருமானை, வெண்ணியில் எழுந்தருளியுள்ள பெருமானை, இன்பமே வடிவமாக உள்ளவனை, புகழ்ந்து பாடும் அடியார்கள் எத்தகைய குற்றமும் இன்றி சிறப்புடன் வாழ்வார்கள்.

பாடல் 4:

மூத்தானை மூவுலகுக்கு ஒரு மூர்த்தியாய்க்

காத்தானைக் கனிந்தவரைக் கலந்து ஆளாக

ஆர்த்தானை அழகமர் வெண்ணி அம்மான் தன்னை

ஏத்தாதார் என் செய்வார் ஏழை அப்பேய்களே

விளக்கம்:

மனம் கனிந்து தன்னை வழிபடும் அடியார்களுடன் கலந்து அவர்களை ஆட்கொள்ளும் பெருமான் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி பெருமானின் திருநாமத்தை ஓதவேண்டும் என்று தானே நமச்சிவாயப் பதிகத்தினை ஞானசம்பந்தர் தொடங்குகின்றார். கனிந்த மனத்துடன் பெருமானைத் தொழவேண்டும் என்பதை உணர்த்தும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

திருநீலகண்டத் திருப்பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.116.2) பெருமானின் புகழினை கனிந்த மனத்துடன் சொல்லவேண்டும் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். மனதினால் பெருமான் திரிபுரத்து மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்ததை நினைவு கூர்ந்து, கைகளால் பூக்களைக் கொய்தும் அவரது திருவடிகளின் புகழினை வாயால் உரைத்தும் பெருமான் வழிபடவேண்டும் என்று இந்த பாடலில் மனம் மொழி மெய்யால் இறைவனை வழிபடவேண்டிய முறையினை நமக்கு ஞானசம்பந்தர் சொல்லிக் கொடுக்கின்றார். மேலும் மலர்ச் சோலைகளை வளர்த்தும் குளங்களை வெட்டியும் பெருமானுக்கு திருத்தொண்டுகள் செய்யவேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். ஏ=அம்பு; வினை=செய்கை; கனி மனம்=பெருமான் பால் அன்பு வைத்து கனிந்த மனம்;

காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும்

பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்

தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

பொதுப்பதிகம் ஒன்றினில் (4.76.5) அப்பர் பிரான், பெருமானுக்குத் தொண்டு செய்யும் வண்ணம் தன்னை மாற்றி ஆட்கொண்டதும், தன்னை அஞ்சேல் என்று சொல்லி பலவித துன்பங்களிலிருந்து தன்னை காத்ததும் சிவபெருமானுக்கு பெருமை விளைவிக்கும் செயல்கள் என்று குறிப்பிடுகின்றார். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமானை, சமணர்களுடன் கலந்து தான் வாழ்ந்து வந்த நாட்களில் நெஞ்சம் கனிந்து தான் நினையாமல் இருந்தது தனது பெருந்தவறு என்று கூறுகின்றார். நெஞ்சம் கனிந்து நினையாமல் இருந்த நிலை என்று அப்பர் பெருமான் சொல்வதை நாம் சற்று சிந்திக்கவேண்டும், சமணத் துறவிகள் சிவபெருமானை குறித்து சிந்தனை செய்தவர்களாக இருந்தனர். எதற்காக அந்த சிந்தனை, சிவபெருமானை எவ்வாறு இழிவாகப் பேசி சைவர்களை திசை திருப்பி, சமணர்களாக அவர்களை மாற்ற முயற்சி செய்யலாம் என்று ஆலோசனை செய்தவர்களாக அவர்கள் இருந்தனர்; அந்த நிலைக்கு மாறுபட்டு, பெருமான் பால் அன்பு கொண்டு கனிந்த மனத்துடன் தான் சிந்தனை செய்யாமல் இருந்ததை குறித்து, அப்பர் பிரான் வருத்தம் தெரிவிக்கும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.

வஞ்சகப் புலையனேனை வழியறத் தொண்டில் பூட்டி

அஞ்சல் என்று ஆண்டு கொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே

நெஞ்சகம் கனிய மாட்டேன் நின்னை உள் வைக்க மாட்டேன்

நஞ்சு இடம் கொண்ட கண்டா என்னென நன்மை தானே

இந்த பாடல் அப்பர் பிரான் வாழ்ந்த நாளில் சமயவாதிகள் ஒருவருக்கொருவர் வாதத்தில் ஈடுபட்டு, தங்களது மதத்தின் கொள்கையே சிறந்தது என்பதை வலியுறுத்தும் தன்மையில் வாழ்ந்து வந்ததை நினைவூட்டுகின்றது. பூவனூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (5.65.6), வீணாக அத்தகைய வாதங்களில் ஈடுபடாமல் கனிந்த மனத்துடன் கண்களில் நீர் மல்க பூவனூர் புனிதனை போற்றி வழிபடுவீர் என்று அறிவுரை கூறுகின்றார். சைவ சமயம் திரும்பிய பின்னர், அப்பர் பிரான் எவரிடமும் சமய வாதத்தில் ஈடுபட்டதாக அவரது சரித்திரத்தில் நாம் எங்கும் காண்பதில்லை. அனுசயம்=பகைமை;

அனுசயப்பட்டு அது இது என்னாதே

கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கிப்

புனிதனைப் பூவனூரனைப் போற்றுவார்

மனிதரில் தலையான மனிதரே

அம்மான் என்ற சொல் அரியமகன் என்ற சொல்லின் திரிபு என்று கூறுவார்கள். மூத்தான்=அனைத்து உயிர்களுக்கும் மூத்தவன், அனைத்துப் பொருட்களும் உயிர்களும் தோன்றும் முன்னமே இருந்தவன்; முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே என்று மணிவாசகர் அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது. பெறுவதற்கு அரியது மனிதப்பிறவி என்று பெரியோர்கள் கூறுவார்கள். தேவர்களும் அடையமுடியாத வீடுபேறு வாய்ப்பினை பெறுவதற்கு தகுதி படைத்தவர்கள் மனிதர்கள் மட்டுமே, எனவே தான் மனிதராகப் பிறந்ததன் பயனை, பெருமானை வழிபாட்டு, நமது வினைகள் முற்றிலும் தீர்த்துக் கொண்டு, நாம் வீடுபேறு அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவோமாக. நடக்கவிருந்த தனது திருமணத்தைத் தடுத்து பெருமான் தன்னை ஆட்கொள்வதற்கு முன்னம், தான் இருந்த நிலையை, மனத்து உன்னை நினைப்பின்றி பேயாய்த் திரிந்து எய்த்தேன் என்று சுந்தரர் கூறுகின்றார். இந்த தொடர் பித்தா பிறை சூடி என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.1.2) வரும் தொடராகும். ஆயன்=பசுக்கூட்டத்தை உடையவன், பசுக்களை மேய்ப்பவன்; உயிராகிய பசுக்கூட்டங்களை மேய்க்கும் சிவபெருமான்; வேயார்=மூங்கில்கள் நிறைந்த; அருட்துறை=திருவெண்ணெய் நல்லூரில் உள்ள திருக்கோயிலின் பெயர்; எய்த்தல்=இளைத்தல்

நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னைப்

பேயாய்த் திரிந்து எய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன்

வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்துறையுள்

ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே

திருமாளிகைக் தேவர் அருளிய இணங்கிலா ஈசன் என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் (ஒன்பதாம் திருமுறை), சிவபெருமானின் தன்மையை புரிந்து கொள்ளாமல், அவனை வழிபடாது வாழும் மனிதர்களை பேய் என்று குறிப்பிட்டு, அத்தகைய பேய்களுடன் தனது வாய் பேசாது என்றும், அவர்களைத் தனது கண் காணாது என்றும் குறிப்பிட்டு ஏசுகின்றார். இந்த பதிகத்தின் கடைப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. தில்லை நகரில் வாழ்பவர்களும் மேன்மையான சிறப்பினை உடையவர்களும் ஆகிய அடியார்களின் பாதத் தூளிகளை தங்களது தலையில் அணிந்து கொள்ளும் வாய்ப்பினை இழந்தவர்களாக, மீண்டும் பிறப்பெடுத்து இறப்பினை சந்திக்கும் இயல்பினை உடையவர்களாக இருக்கும் கீழ்மக்களை, பேய்களை எனது கண்கள் காணா, அவர்களுடன் எனது வாய் பேசாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சிறப்புடை அடியார் தில்லைச் செம்பொன் அம்பலவற்கு ஆளாம்

உறைப்புடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார்

இறப்பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும் மீண்டும்

பிறப்பரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே

பொழிப்புரை:

எல்லாப் பொருட்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் முன்னமே தோன்றியவனும், மூன்று உலகங்களுக்கும் ஒப்பற்ற தலைவனாக விளங்கி காப்பவனும், மனம் நெகிழ்ந்து தன்னை வணங்கும் அடியார்களுடன் கலந்து நின்று அவர்களை ஆட்கொள்பவனும், அழகிய வெண்ணி நகரினில் உறையும் தலைவனும் ஆகிய பெருமானை, வணங்கிப் போற்றி புகழாத மனிதர்கள் வாழ்வினில் எந்த பயனையும் அடையமுடியாது. பயனுடைய செயல்கள் ஏதும் செய்ய இயலாமல் வாழும் அவர்கள் மனிதர்களே அல்லர்; அவர்கள் பேயினை ஒத்தவர்கள்.

பாடல் 5:

நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள் கொன்றைத்

தாரானைத் தையலோர் பாகம் உடையானைச்

சீரானைத் திகழ்தரு வெண்ணி அமர்ந்துறை

ஊரானை உள்க வல்லார் வினை ஓயுமே

விளக்கம்:

நிறைபுனல்=நிறைந்த வெள்ளத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி; தார்=மாலை; உள்குதல்= தியானித்தல்;

பொழிப்புரை:

நிறைந்த வெள்ளத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு மறைத்தவனும், கங்கை நதியினைத் சூழ்ந்து இருக்கும் வண்ணம் கொன்றை மலர் மாலைகளை அணிந்தவனும், உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், சிறந்த புகழினை உடையவனும், பொலிவுடன் விளங்கும் வெண்ணி நகரினில் விருப்பமுடன் உறைபவனும் ஆகிய இறைவனை, தியானிக்கும் அடியார்களின் வினைகள், தங்களது செயல்பாடுகளில் ஓய்ந்து, அவர்களை விட்டு நீங்கிவிடும்.

பாடல் 6:

முத்தினை முழு வயிரத் திரள் மாணிக்கத்

தொத்தினைத் துளக்கம் இலாத விளக்காய

வித்தினை விண்ணவர் தாம் தொழும் வெண்ணியில்

அத்தனை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே

விளக்கம்:

தொத்து=குவியல்; துளக்கம்=அசைவு, காற்றினால் அசைக்கப்பட்டு விளக்குகள் அணிவதை நாம் காண்கின்றோம். அத்தன்=தலைவன்; பொதுவாக எந்த உயிரினமும் வளர்வதற்கு ஒரு வித்து தேவைப்படுகின்றது. ஆனால் பிரளயம் முடிந்த பின்னர், உலகினில் அனைத்து வகையான உயிரினங்களும் தோன்றுகின்றன. இவை எப்படி உண்டாகின்றன. வித்து ஏதும் இல்லாமல் பொருட்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் இறைவனுக்கு இருப்பதன் காரணமே, இந்த வகையான தோற்றத்திற்கு காரணம். பெருமான் அனைத்து வகையான உயிர்களுக்கும் வித்தாக இருக்கும் நிலையே இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. இந்த குறிப்பு நமக்கு, திருவாசகம் ஆனந்தாதீதம் பாடல் (8.5.96) ஒன்றினை நினைவூட்டுகின்றது. வைச்சு வாங்குவாய்=நிலைபெறச் செய்து அழிப்பாய்; கொலார்=கொல்ல மாட்டார்; பழ அடியார்களின் கூட்டத்தில் தன்னை சேர்த்துவைத்த பெருமான், ஒரே வினாடியில் அவர்களுக்கு சமமாக தானும் மதிக்கப் படும் வண்ணம் உயர்த்திய பெருமான், தனை கைவிட்டுவிட்டு மறைந்து விட்டாரே என்று அடிகளார் ஏங்குகின்றார். தன்னிடம் ஏதும் குறை இருப்பதால் தான், பெருமான் தன்னை விட்டுவிட்டு போய்விட்டார் என்ற முடிவுக்கு வந்த அடிகளார் அதற்காக தன்னை கைவிடுதல் நியாயமா என்று கேட்கின்றார். தான் வளர்த்த மரம் நச்சுமரம் என்று தெரிந்த பின்னாரும் அதனை வெட்டாமல் உலகத்தவர் பேணிக் காப்பது போன்று, தனது குறைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன்னை ஆதரித்து அருள் புரியவேண்டும் என்று பெருமானிடம் வேண்டுகின்றார்.

விச்சு அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணும்

முழுதும் யாவையும்

வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் புலையனேனை உன் கோயில்

வாயிலில்

பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம்

வளர்த்ததோர்

நச்சு மாமரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனம் உடைய நாதனே

பொழிப்புரை:

முத்து முழுமையான வைரத்தூண் மாணிக்கத்தின் குவியல் போன்று மிகவும் அரிதாகவும் உயர்ந்தும் இருப்பவனும், காற்றினில் அசையாத அணையாத பெருஞ்சுடராக இருப்பவனும், அனைத்து பொருட்களுக்கும் உயிர்களுக்கும் ஆதாரமாக வித்தாக இருப்பவனும் ஆகிய பெருமானை, வெண்ணி தலத்தினில் உறையும் தேவர்கள் தொழுகின்றனர். இவ்வாறு நமக்குத் தலைவனாக இருக்கும் பெருமானின் திருவடிகளைச் சென்று அடையும் அடியார்களுக்கு வாழ்வினில் துன்பம் ஏதும் இல்லை.

பாடல் 7:

காய்ந்தானைக் காமனையும் செறு காலனைப்

பாய்ந்தானைப் பரிய கைமா உரித்தோன் மெய்யில்

மேய்ந்தானை விண்ணவர் தாம் தொழும் வெண்ணியில்

நீந்தானை நினைய வல்லார் வினை நில்லாவே

விளக்கம்:

பரிய=பருமையான, பருத்த; மேய்ந்தான்=வேய்ந்தான், போர்வையாக அணிந்து கொண்டவன்; காய்தல்=கோபம் கொள்ளுதல்; செறுகாலன்=கொல்லும் தொழிலை உடையாய் இயமன்; கைமா= கையினை உடைய விலங்கு, யானை; நீந்தான்=கடவுள், இயல்பாகவே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்ட இறைவன்;

பொழிப்புரை:

தனது தவத்தினை கலைப்பதற்கு முயற்சி செய்த மன்மதன் மீது கோபம் கொண்டு அவனை எரித்தவனும், தன்னை வழிபாடு செய்து கொண்டிருந்த சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைப் பறிப்பதற்காக வந்தவனும் உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதைத் தனது தொழிலாகக் கொண்டவனும் ஆகிய காலன் மீது பாய்ந்து அவனை கீழே விழும் வண்ணம் உதைத்தவனும், தன்னை எதிர்நோக்கி கொலை வெறியுடன் வந்த பருத்த மத யானையின் தோலை உரித்து அந்த தோலினை தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்டவனும் ஆகிய பெருமான் வெண்ணி நகரத்தில் உறைகின்றார். அவரை தேவர்கள் தொழுது வணங்குகின்றனர். அத்தகைய இறைவனை, இயல்பாகவே பிறப்பிறப்புச் சழற்சியில் சிக்காமல் இருக்கும் சிவபெருமானை தியானித்து அவனை வணங்கும் தன்மை உடைய அடியார்களின் வினைகள் அவர்கள் விட்டு நீங்கிவிடும்.

பாடல் 8:

மறுத்தானை மாமலையை மதியாது ஓடிச்

செறுத்தானைத் தேசு அழியத் திகழ் தோள்முடி

இறுத்தானை எழில் அமர் வெண்ணி எம்மான் எனப்

பொறுத்தானைப் போற்றுவார் பேராற்றல் உடையாரே

விளக்கம்:

மறுத்தான்=பகைவன்; செறுத்தான்=கோபம் கொண்டவன்; தேசு=தேஜஸ் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்; இறுத்தல்=முரித்தல்; அடியார்களின் குற்றங்களை பொறுப்பவன் பெருமான் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தனது இருப்பிடத்தையே பேர்த்து வேறோர் இடத்தினில் வைக்கத் துணிந்த, இராவணனின் குற்றத்தையும் பொருட் படுத்தாமல், அவன் சாமகானம் பாடி துதித்த பின்னர், முதலில் அவனது உடல் வருத்தத்தை போக்கிய பெருமான், பின்னர் பல வரங்களையும் அளித்த செய்தியை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிகழ்ச்சி மூலம், இந்நாள் வரையிலும் நாம் எந்த குற்றங்களை செய்திருந்தாலும், அந்த குற்றங்களின் காரணத்தால் பெருமான் நம்மை ஏற்றுக்கொள்வாரோ என்ற ஐயப்பாடு ஏதும் கொள்ளாமல், தயக்கம் ஏதுமின்றி இன்று முதல் நாம் பெருமானை வழிபடத் தொடங்கினாலும் நமது குற்றங்கள் இறைவனால் மன்னிக்கப்படும் என்ற செய்தியை உணர்த்தும் முகமாகத் தான், தனது பெரும்பாலான பதிகங்களில் இராவணின் கயிலாய நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் விளக்கம் அளிப்பதை நாம் இங்கே நினைவு கூர்தல் பொருத்தமாகும். அதே செய்தி தான், பொறுத்தான் என்ற சொல் மூலம் இங்கே குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை:

தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்தது என்று கயிலை மலை இருந்த இடத்தின் தன்மையை தவறாக கருதிய அரக்கன் இராவணன், கயிலை மலையின் பெருமையை உணராத பகைவனாக, அந்த மலையினை பேர்த்தெடுத்து வேறோரிடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்தவனாக மிகுந்த கோபத்துடன், தனது விமானத்திலிருந்து கீழே இறங்கி கயிலை மலையை நோக்கி ஓடினான். கோபம் மிகுந்தவனாக கயிலை மலையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட, அரக்கனின் தோள்களும் தலைகளும் வருந்தி உடலொளி மங்கும் வண்ணம், அரக்கனது உடலினை கயிலாய மலையின் கீழே நெருக்கி முறித்த சிவபெருமான், அழகு மிகுந்த வெண்ணி தலத்தில் உறைகின்றார். பெருமைக்குரிய எங்களது தலைவன் என்று அவரை போற்றி வழிபடும் அடியார்களின் குற்றங்களை பொறுத்து அருளுகின்றார். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை போற்றும் அடியார்கள், பெருமானின் அருளினால், பேராற்றல் உடையவர்களாக வாழ்வினில் விளங்குவார்கள்.

பாடல் 9:

மண்ணினை வானவரோடு மனிதருக்கும்

கண்ணினைக் கண்ணனும் நான்முகனும் காணா

விண்ணினை விண்ணவர் தாம் தொழும் வெண்ணியில்

அண்ணலை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே

விளக்கம்:

அண்ணல்=தலைவன்; அல்லல்=பிறவித்துன்பமும் ஏனைய துன்பங்களும்; பஞ்ச பூதங்களில் முதலாவதாக கருதப்படும் ஆகாயமும், இறுதியாக கருதப்படும் பூமியும் குறிப்பிடப்படுவதால், மற்ற பூதங்களாக இறைவன் உள்ள நிலையும் உணர்த்தப்படுகின்றது என்று பொருள் கொள்ளலாம்.

பொழிப்புரை:

ஐம்பூதங்களில் மண்ணின் வடிவமாக உள்ளவனும், வானவர் மனிதர்கள் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் கண் போன்று மிகவும் முக்கியமாக திகழ்பவனும், கண்ணனாக அவதாரம் செய்த திருமாலும் பிரமனும் காணாத வகையில் நெடிய தீப்பிழம்பாக நின்றவனும், பஞ்ச பூதங்களில் ஆகாயமாகவும், மற்ற பூதங்களாகவும் இருப்பவனும், தேவர்களால் தொழப்படும் வண்ணம் வெண்ணி தலத்தினில் வீற்றிருப்பவனும் ஆகிய தலைவனின் திருப்பாதங்களைச் சென்றடைந்து வணங்கும் அடியார்கள் இம்மையில் துன்பம் நீங்கப் பெற்றவர்களாக வாழ்ந்து, பிறவித் துன்பமும் தீர்க்கப் பெற்று மகிழ்வார்கள்.

பாடல் 10:

குண்டரும் குணமிலாத சமண் சாக்கிய

மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின்

விண்டவர் தம் புரம் எய்தவன் வெண்ணியில்

தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே

விளக்கம்:

மிண்டர்கள்=வம்பு செய்பவர்கள்; மிண்டு=வம்பான பழிச்சொற்கள், இடக்கான சொற்கள்;; வெகுளுதல்=கோபம் கொண்டு அலட்சியம் செய்தல்; விண்டவர்=வேதநெறி மற்றும் சைவநெறியிலிருந்து விலகி பகைவர்களாக மாறிய திரிபுரத்து அரக்கர்கள்;

பொழிப்புரை:

வயிறு புடைக்க உண்டு பருத்த உடல் உடையவர்களாகவும், குணம் எதுமில்லா முரடர்களாகவும் திரிந்த சமண மற்றும் சாக்கியத் துறவிகள், வீண் வம்பினில் நாட்டம் மிகுந்தவர்களாக சிவபெருமானை குறித்து இழிவாக பேசும் சொற்களை உண்மை என்று மயங்கி, சிவாகமப் பொருளினை சரிவர புரிந்து கொள்ளமால் அலட்சியம் செய்யாமல், உலகத்தவரே நீங்கள் வாழ்வீர்களாக. சைவநெறியிலிருந்து மாறுபட்டு பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினால் எய்து அழித்த வல்லமை உடைய சிவபெருமான், வெண்ணி தலத்தினில் வீடிருக்கின்றார். அவருக்கு திருத்தொண்டுகள் புரிந்து அவனைப் புகழ்ந்து வணங்கும் அடியார்களுக்கு, அவர்களது வாழ்வினில் துன்பங்கள் தோன்றாது.

பாடல் 11:

மருவாரும் மல்கு காழித் திகழ் சம்பந்தன்

திருவாரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை

உருவாரும் ஒண் தமிழ் மாலையிவை வல்லார்

பொருவாகப் புக்கிருப்பார் புவலோகத்தே

விளக்கம்:

மரு=நறுமணம், இங்கே சிவமணம் என்று பொருள் கொள்வது பொருத்தமாகும். புவலோகம்= நிலவுலகத்தினும் மேலானது, இங்கே முக்தி உலகத்தினை உணர்த்துகின்றது. திரு=நீர்வளம் நிலவளம் ஆகிய அனைத்துச் செல்வங்கள்; உருவாரும்=ஞானவடிவாக திகழும்; ஒண்=ஒளி வீசும்; இங்கே ஞானவொளி என்று பொருள் கொள்ளவேண்டும்; பொரு=சிறப்பு;

பொழிப்புரை:

சிவமணம் கமழும் பெரியோர்கள் நிறைந்த காழி நகரில் தோன்றிய ஞானசம்பந்தன், நீர்வளம் நிலவளம் முதலாக அனைத்துச் செல்வங்களும் பொருந்தி விளங்கும் வெண்ணி நகரினில் உறையும் பெருமானை போற்றி பாடிய ஞானவொளி வீசும் தமிழ் மாலையினை நன்றாக கற்றுச் தேர்ந்து பொருளினை உணர்ந்தவர்களாக உரிய பண்ணுடன் இசைத்து பாடும் அடியார்கள் நிலவுலகினும் உயர்ந்த சிவலோகத்தை அடைந்து இன்பமுடன் வாழ்வார்கள்.

முடிவுரை:

பதிகத்தின் கடைப் பாடலில் குறிப்பிட்ட வண்ணம், இந்த பதிகத்தின் பாடல்கள், பெருமானின் தன்மைகள் உணர்த்தும் பல அரிய கருத்துகள் கொண்டவையாக விளங்குகின்றன. பதிகத்தின் முதல் பாடல் பெருமான் பலியேற்பதற்காக ஊரூராகச் செல்கின்றார் என்று குறிப்பிட்டு, உயிர்கள் பால் கருணை கொண்டுள்ள பெருமான், உயிர்கள் தங்களது மலங்களைக் கழித்துக் கொண்டு விரைவில் தன்னை வந்தைடைய வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவராக விளங்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது. தனது திருமேனி முழுவதும் திருநீறு பூசிக் கொண்டுள்ள தன்மை குறிப்பிடப்பட்டு, என்றும் அழிவின்றி, ஆதியும் அந்தமும் இன்றி, பெருமான் இருக்கும் நிலை இரண்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமானைப் பற்றிய சிந்தனைகள் நமக்கு இனிய உணர்வினை ஏற்படுத்தும் என்ற செய்தி, கனியாக இருப்பவன் பெருமான் என்ற குறிப்பு மூலம் மூன்றாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக இருப்பதன் மூலம், பெருமானே பிரமன் திருமால் உட்பட அனைவரையும் தோற்றுவிக்கின்றார் என்ற செய்தி நான்காவது பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. உயிர்களுடன் பிணைந்துள்ள வினைகளை முற்றிலும் ஒழிக்கும் வல்லமை படைத்தவன் சிவபெருமான் ஒருவன் தான் என்பதால், அவனை தியானித்து உயிர்கள் தங்களது வினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை ஐந்தாவது பாடலில் வழங்கப்படுகின்றது. உலகத்தில் உள்ள உயிர்கள் மற்றும் பொருட்கள் அனைத்தின் தோற்றத்திற்கும் முழுமுதற் காரணனாக இறைவன் இருக்கும் தன்மை ஆறாவது பாடலில் கூறப்பட்டுள்ளது. சிவவழிபாட்டுக்கு விளைவிக்கும் இடையூறும், தவம் புரிவோரின் தியானத்தை கலைக்க முயற்சி செய்வதும் மிகப்ப் பெரிய குற்றங்கள் என்பதை உணர்த்தும் வண்ணம், இயமனுக்கும் மன்மதனுக்கு நேர்ந்த முடிவுகள் மூலம் பதிகத்தின் ஏழாவது பாடலில் உணர்த்தப் படுகின்றன. சிவபெருமானை மனமொன்றி உண்மையாக வழிபட்டால், நமது குற்றங்களை பொருட்படுத்தாமல், நமக்கு அருள் புரிவார் என்ற செய்தி பதிகத்தின் எட்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. ஐந்து பூதங்களுடன் கலந்து, சர்வவியாபியாக உலகெங்கும் பரந்து பெருமான் இருக்கும் நிலை ஒன்பதாவது பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது.. பெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் அடியார்கள் துன்பங்கள் நீங்கப் பெறுவார்கள் என்று குறிப்பிட்டு நம்மை அத்தகைய திருத்தொண்டுகளில், நம்மை பதிகத்தின் பத்தாவது பாடல் ஊக்குவிக்கின்றது. பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது உள்ளம் நினையாது என்று பதிகத்தின் முதல் பாடலில் முழங்கிய ஞானசம்பந்தர், தொடர்ந்து வரும் பாடல்களில் பெருமானின் தன்மைகளையும் அதன் பின்னணியில் உள்ள தத்துவங்களையும் உணர்த்திய ஞானசம்பந்தர் பெருமானுக்கு திருத்தொண்டுகள் புரியும் அடியாராக நாம் இருக்கவேண்டும் என்பதை பத்தாவது பாடல் மூலம் வலியுறுத்துகின்றார். மேற்கண்ட உண்மைகளை புரிந்து கொண்டு அவற்றைப் பின்பற்றி வாழும் அடியார்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு என்றும் அழியாத இன்பம் பெறுவார்கள் என்று கடைப் பாடலில் உணர்த்துகின்றார். இந்த பதிகம் மூலம், பல அரிய தகவல்களை தெரிந்து கொண்ட நாம், அவற்றை நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து, இது போன்று பல செய்திகளை உணர்த்தும் தேவார திருவாசகப் பாடல்களை பயின்று, அவற்றின் பொருளை அறிந்து கொண்டு அந்த பதிகங்களை முறையாக ஓதி, இம்மையிலும் மறுமையிலும் பல நன்மைகள் அடைவோமாக.



Share



Was this helpful?