பதிக எண்: 2.120 - திரு மூக்கீச்சரம் - பண்: செவ்வழி
பின்னணி:
தனது ஐந்தாவது திருப்பயணத்தின் ஒரு பகுதியாக கொங்கு நாட்டுத் தலங்கள் பல சென்று இறைவனைப் பணிந்து பல பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், மீண்டும் சோழ நாட்டுச் தலங்களைக் காணவேண்டும் என்ற விருப்புடன், கருவூர்த் தலத்திலிருந்து வாட்போக்கித் தலம் வந்தடைகின்றார். பின்னர் பராய்த்துறை, திருவாலந்துறை, திருச்செந்துறை, மற்றும் கற்குடி தலங்கள் சென்ற பின்னர் மூக்கீச்சரம் வந்தடைகின்றார் என்று பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். திருவாலந்துறை மற்றும் திருச்செந்துறை தலங்கள் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் நமக்கு கிடைக்கவில்லை. மூக்கீச்சரம் தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. ஞானசம்பந்தர் மூக்கீச்சரம் சென்றதை குறிப்பிடும் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம். சிலம்பு=மலை
கற்குடி மாமலை மேலெழுந்த கனகக் கொழுந்தினைக் கால் வளையப்
பொற்றிரள் மேருச்சிலை வளைத்த போர் விடையாளியைப் போற்றிசைத்து
நற்றமிழ் மாலை புனைந்தருளி ஞானசம்பந்தர் புலன்கள் ஐந்தும்
செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப்பள்ளிச் சிலம்பு அணைந்தார்.
திருச்சிராப்பள்ளி நகரத்தின் ஒரு பகுதியாகிய உறையூரே மூக்கீச்சரம் என்று தேவாரப் பதிகத்தில் அழைக்கப்பட்ட தலமாகும். திருச்சி இரயில் சந்திப்பிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிலும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள திருக்கோயில். இதனை கோழியூர் என்றும் கூறுவார்கள். சோழ மன்னனின் பட்டத்து யானையை ஒரு கோழி தனது மூக்கினால் குத்தி காயம் செய்ததால் கோழியூர் என்றும் மூக்கீச்சரம் என்றும் பெயர் வந்தது என்று கூறுவார்கள். கோயிலின் உள்ளே உள்ள தூணில் ஒரு கோழி யானையுடன் சண்டையிடும் சிற்பம் உள்ளது. கோழி யானையின் தலை மீது அமர்ந்து அதன் தும்பிக்கையில் குத்துவது போல் அமைந்துள்ள இந்த சிற்பத்தில், யானை பயந்து கோழியிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்வதையும் அழகாக செதுக்கி உள்ளனர். யானை தனது தலையைத் தாழ்த்தியும் கால்களை மடக்கி ஓட முயற்சி செய்வது போன்று அமைந்த, கலை நயம் வாய்ந்த சிற்பம். கோழியின் வீரம் கருதி, வீரம் செறிந்த மண் என்று முடிவு செய்த சோழ மன்னர்களின் முதல் தலைநகரம் இது தான். இந்த நிகழ்ச்சி சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்றது. சிலப்பதிகாரத்திலும் மற்ற சங்க இலக்கியங்களில் உறந்தை என்று அழைக்கப்பட்ட நகரம். வீர ஆதித்தன் என்ற சோழ மன்னன் நகருலா வந்த போது, கோழியினால் அவனது பட்டத்து யானை தோற்று ஓடுமாறு செய்து இறைவன் தனது இருப்பிடத்தை உணர்த்தினார் என்று கூறுவார்கள். மன்னன் ஏறி வந்த யானைக்கு மதம் பிடித்த போது, ஒரு கோழி யானையின் மத்தகத்தில் குத்தி மத யானையை அடக்கியது என்றும், அந்த கோழி ஒரு வில்வமரத்தின் அருகே ஓடிச் சென்று மறைந்தது என்றும் வில்வமரத்தின் கீழே இருந்த இடத்தினைத் தோண்டியபோது ஆங்கே ஒரு சிவலிங்கம் தென்பட்டது என்றும், அதனை மன்னன் வழிபட்டான் என்றும் கூறுவார்கள். இவ்வாறு கோழியாக வந்து திருவிளையாடல் புரிந்ததால் கோழியூர் என்ற பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். ஐந்து பூதங்களின் நிறத்தை உள்ளடக்கி, தானே ஐந்து பூதங்களிலும் உறைவதாக பெருமான் உணர்த்தியதால், உறையூர் என்ற பெயர் வந்தது என்றும், உலகினில் எந்த கோயிலில் சிவவழிபாடு மற்றும் சிவதரிசனம் செய்தாலும், அந்த செய்கை இங்கு உறையும் பெருமானிடம் வந்து சேரும் என்பதால் உறையூர் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள் எனவே நிறங்கள் ஓர் ஐந்துடையாய் என்று மணிவாசகர் இந்த திருக்கோயிலை குறிப்பிடுகின்றார் என்றும் கூறுகின்றனர்.
இந்த தலத்தின் மீது அப்பர் பெருமான் தனியாக பதிகம் ஏதும் பாடவில்லை எனினும், இந்த தலத்தின் பெயரைக் குறித்து உறந்தை ஓங்கும் சிராப்பள்ளி என்று (உறந்தை என்பது உறையூரைக் குறிக்கும்) பாவநாசத் திருப்பதிகத்தில் பாடியுள்ளார். அருவி இரைச்சலுடன் நீரை கொட்டிக்கொண்டு இருப்பதால் கறங்கும் அருவிக் கழுக்குன்று என்று இந்த பாடலில் குறிக்கப்பட்டுள்ளது.. கறங்குதல் என்றால் ஒலித்தல் என்று பொருள். சோழர் குலம் சூரியகுலம் எனப்படும். எனவே சோழர் குலத்து தலைநகராகத் திகழ்ந்த உறையூரைக் குறிப்பிடும்போது, ஞாயிறாக விளங்கும் சிவபிரானின் தன்மை இங்கே கூறப்படுகின்றது. ஒரு பொதுப் பதிகத்தின் பாடல் ஒன்றில் (அடைவுத் திருத்தாண்டகத்தில்) உறையூர் என்றே அப்பர் பிரான் கூறுகின்றார்.
புறம்பயத்து எம் முத்தினை புகலூர் இலங்கு பொன்னினை
உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளங்கும் ஞாயிற்றைக்
கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை
அறம் சூழ் வீரட்டானத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே
இறைவனின் திருநாமம் பஞ்சவர்ணேஸ்வரர், ஐவண்ணநாதர், தேவியின் திருநாமம் காந்திமதி அம்மை. உள்ளங்கை அளவில் உள்ள சிறிய அழகான சுயம்பு மூர்த்தம். பிரமன் இந்த தலம் வந்து இறைவனை வழிபட்டபோது இறைவன் ஐந்து வேளைகளில் ஐந்து நிறங்களில் காட்சி அளித்ததால் ஐவண்ண நாதர் என்ற பெயர் ஏற்பட்டது என்பர். உதங்க முனிவருக்கும் அவ்வாறு காட்சி கொடுத்ததாக கூறுவர். காலை வேலையில் செம்மை நிறத்தில் இரத்தின லிங்கமாகவும், உச்சிப்போதில் நிறமற்ற தூய்மையான ஸ்படிக லிங்கமாகவும், மாலையில் பொன் மஞ்சள் நிறத்தில் தங்க லிங்கமாகவும், இரவில் வெள்ளை நிறத்தில் வைர லிங்கமாகவும், நடுநிசியில் சித்திர லிங்கமாக வட்டமிடும் பலவகை வண்ணங்களுடன் காட்சி அளித்ததாகவும் கூறுவர். உதங்க முனிவரின் சிற்பம் நடராஜர் சன்னதிக்கு நேர் எதிரே உள்ளது.
ஐந்து வண்ணங்களுடன் தலத்து இறைவன் காட்சி கொடுத்ததற்கு இன்னொரு செவி வழி செய்தியும் சொல்லப்படுகின்றது. இந்த தலத்தை சார்ந்த சோழ மன்னன் சூராதித்தன், ஒரு நாக கன்னிகையின் பால் காதல் கொண்டு அவளை மணந்தான். நான்கு சகோதரிகளுடன் பிறந்த அந்த நாகமங்கை ஒரு லிங்கத்தை தினமும் வழிபாடு செய்து கொண்டு இருந்தாள். அவளுடைய சகோதரிகளும் ஒவ்வொரு லிங்கத்தை வழிபாடு செய்து கொண்டு இருந்தனர். இந்த ஐந்து லிங்கங்களும் வேறு வேறு வண்ணத்தில் இருந்தனவாம். திருமணம் முடிந்தவுடன் தனது மனைவி வழிபட்ட லிங்கத்தை மன்னன் எடுத்த செல்ல அனுமதி கேட்டான். நாகராஜனும் அதற்கு அனுமதி கொடுத்தவுடன் தனது மனைவி வழிபட்ட லிங்கத்தை எடுக்க சென்றபோது, மீதி உள்ள நான்கு லிங்கங்களும் அதனுடன் இணைந்து இருந்ததைக் கண்டு, ஐந்து வண்ணங்கள் உடைய லிங்கத்தை கொண்டு வந்து இந்த தலத்தில் வைத்து வழிபட்டன என்று தலபுராணம் கூறுகின்றது. பஞ்ச பூதங்கள் வழிபட்டதால் ஐவண்ண நாதர் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவார்கள்.
திருமால், பிரமன், பஞ்சபூதங்கள், கருடன், கார்க்கோடகன் பாம்பு, பாம்புகளின் தாயார் கத்ரு (காச்யப முனிவரின் மனைவி) கரிகால் சோழன் உட்பட பல சோழ மன்னர்கள், இறைவனை வழிபட்டு பயன் அடைந்ததாக கூறுவார்கள். கருடனுக்கும் கார்க்கோடகன் பாம்புக்கும் இடையே இருந்த பகை, இந்த தலம் வந்தடைந்த இருவரும் பெருமானை வணங்கியவுடன் தீர்ந்தது என்று கூறுவார்கள். வேதஸ்ருதி என்ற அந்தணன் தனக்கு சாபத்தால் கிடைத்த பேய் உருவத்தை இந்த தலத்தில் செய்த வழிபாட்டின் மூலம் நீக்கிக் கொண்டான் என்றும் கூறுவார்கள். பாராய்த்துறை தலத்தைச் சார்ந்த அன்பர் ஒருவர், இந்த கோயிலில் கொடுக்கப்பட்ட திருநீறு பிரசாதத்தை தனது நெற்றியில் இட்டுக் கொள்ளாமல் வாயினால் ஊதி அலட்சியம் செய்ததன் விளைவாக, அடுத்த பிறவியில் காட்டுப் பன்றியாக பிறக்க நேர்ந்தது என்றும், வில்வ மரங்கள் நிறைந்திருந்த இந்த காட்டினில் திரிந்து கொண்டிருந்த பன்றி தன்னைத் துரத்தி வந்த வேடர்களுக்கு பயந்து இங்குள்ள குளத்தில் விழுந்தது என்றும், விழுந்த உடனே சாப விமோசனம் பெற்று மனிதனாகி மாறி பின்னர் முக்தி அடைந்தது என்றும் கூறுவார்கள். பசுக்கூட்டத்தைக் கவர்ந்து சென்ற வேடன் ஒருவன், தனக்கு இடையூறாக இருந்த கிழட்டுப் பசு ஒன்றினை இந்த தலத்தில் விட்டுச் சென்றதால் பலனாக புண்ணியம் பெற்றான் என்று கூறுவார்கள்
கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரமன் துர்க்கை உருவங்களை காணலாம். இரண்டு தட்சிணாமூர்த்தி உருவங்கள் காணப்படுகின்றன. சிறிய உருவம் சோழர் காலத்தை சார்ந்தது. பெரிய உருவம் சிறந்த கலை அழகுடன் விளங்குகின்றது. திருமாலுக்கு எதிரே உள்ள தூணில், பிட்சாடனர் உருவமும் தாருகாவனத்து மகளிரின் உருவங்களும் உள்ளன. இறைவனின் கருவறைச் சுவர்களின் மேல் அண்ணாந்து பார்த்தால் பல வகை தாண்டவக் கோலங்கள் சிற்பங்களாக காணப்படுகின்றன. குதிரை மீது அமர்ந்து கொண்டு அம்பு எய்யும் வீரனின் சிற்பத்தை அருகில் சென்று நோக்கினால், நான்கு கால்கள் உள்ள இடத்தில் நான்கு பெண்களின் உருவங்கள் இருப்பதை காணலாம். யானையின் மீது அமர்ந்து போர் புரியும் வீரனின் சிற்பத்தில் யானையின் கால்களுடன் கலந்திருக்கும் நான்கு பெண்களையும் உடலில் பல விதமான மனித உருவங்களையும் காணலாம். அம்மன் சன்னதியின் வெளிச் சுவர்களிலும் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. தவம் செய்யும் காமாட்சி அம்மை, தவக் கோலங்களில் முனிவர்கள், மன்மதன் அம்பு எய்யும் காட்சி, நடன மகளிர், வில்லுடன் இராமர், கஜசம்ஹார மூர்த்தி, கண்ணப்பர் கண் அப்பும் காட்சி, லிங்கோத்பவர், பிட்சாடனர் முதலிய சிற்பங்கள் கண்ணை கவர்கின்றன. கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கொயில்களில் ஒன்றாக, இந்த தலத்து திருக்கோயில் கருதப் படுகின்றது.
பாடல் 1:
சாந்தம் வெண்ணீறு எனப் பூசி வெள்ளம் சடை வைத்தவர்
காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம்
ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியந் நிறைந்தார் அவர் ஆர் கொலோ
வேந்தன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே
விளக்கம்:
திருநீற்றினை சாந்தமாக கருதி பூசிக் கொண்ட பெருமான் என்று இந்த பாடலை ஞானசம்பந்தர் தொடங்குகின்றார். பெருமானின் எளிய தன்மை இதன் மூலம் குறிப்பிடப்படுகின்றது. ஏனையோர் அனைவரும் வாசனை தரும் சந்தனத்தைத் தங்களது திருமேனியில் பூசிய வண்ணம் காட்சி தர, பெருமானோ, திருநீற்றினையே சந்தனமாக கருதி தனது திருமேனியில் பூசிக் கொண்டு உள்ளார் என்று விளக்கம் அளிப்பது ஒரு வகை. பெருமானின் திருமேனியின் மீது பூசிய திருநீற்றினை அணிவோர்கள் சாந்தம் பெறுகின்றனர் என்று விளக்கம் கூறுவது மற்றொரு வகை. சாந்த வெண்ணீறு என்று குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.
நின்றியூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.18.1) சந்தனம் போன்ற சுடுநீறு என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பாலம் என்ற சொல்லுக்கு பலவிதமாக பொருள் கொள்ளப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகின்றது. பாலம் என்ற தொடர் பால்+அம் என்று பிரிக்கப்பட்டு பால் போன்ற வெண்மை நிறத்தில் காணப் படும் அழகிய சந்திரன் என்பது ஒரு பொருள். பாலன் என்று சொல்லின் திரிபாக (எதுகை கருதி) எடுத்துக் கொண்டு, இளைய பிறைச் சந்திரன் என்பது மற்றொரு பொருள். பாலம் என்ற சொல்லுக்கு நெற்றி என்று பொருள் கொள்ளப்பட்டு பெருமானின் நெற்றியின் மீது உள்ள பிறைச் சந்திரன் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். சடைமுடி மேல் என்று பின்னர் வருவதால், நெற்றி என்று பொருள் கொள்வது பொருத்தமாக தோன்றவில்லை. நிலையோர்=நிலையாக உறைபவர்; சுண்ணப் பொடி=வாசனைப் பொடி; சாந்தம்=குழைத்த சந்தனம்; பவளச்சடை=பவளம் போன்று செம்பட்டை நிறத்தில் அமைந்துள்ள சடைமுடி; பண்டைக் காலனின் வலிமையை போக்கினார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அதற்கு பண்டைய நாளில் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சி செய்த காலன், அப்போது பெருமானிடம் உதை வாங்கி கீழே விழுந்த பின்னர், இயமன் சிவபெருமானது அடியார்கள் பால் செல்வதை தவிர்த்து விட்டான் என்ற பொருள் பட பண்டைக் காலன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் அளிக்கின்றனர். இன்றைய காலன், அத்தகைய தவறினைச் செய்வதில்லை என்று நயமாக உணர்த்தும் தன்மை ரசிக்கத்தக்கது.
சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு
பாலம் மதி பவளச் சடைமுடி மேலது பண்டைக்
காலன் வலி காலின்னொடு போக்கிக் கடி கமழும்
நீலம் மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே
பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.44.5) திருஞானசம்பந்தர் பெருமானை சாந்தணி மார்பர் என்று அழைக்கின்றார். பெருமான் தனது மார்பினில் எப்போதும் திருநீற்றினை அணிந்து கொள்பவர் என்பதால், திருநீற்றினையே சந்தனம் என்று சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். வாய்மூரி=இசையில் ஒரு வகை; கங்கை நதியினைத் தனது தலையில் வைத்துள்ள பெருமான், பெண்ணாகிய மழவன் மகள் பால் இரக்கம் கொள்ளாது இருப்பது தவறு அல்லவா என்று நயமாக சொல்லப் படுகின்றது. சதுர்=சதுரப்பாடு, சாமர்த்தியம்;
மாந்தர் தம் பால் நறு நெய் மகிழ்ந்தாடி வளர்சடை மேல் புனல் வைத்து
மோந்தை முழாக் குழல் தாளமொர் வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச் சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வோ
நெடுங்களம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.52.7) நறுமணம் வீசும் சந்தனம் என்று கருதி, பெருமானின் திருமேனி மீது அபிஷேகம் செய்யப்பட்ட திருநீற்றினை அணிந்து கொள்ளும் அடியார்களின் இடரினைக் களைய வேண்டும் என்று பெருமானிடம் ஞானசம்பந்தர் விண்ணப்பம் வைக்கும் பாடல் இது. திருநீற்றினை இட்டுக் கொள்ளும் போது, இறைவனின் திருநாமத்தை சொல்ல வேண்டும் என்றும் அவனது புகழினைப் பேச வேண்டும் என்றும் இங்கே கூறுகின்றார். சந்தனத்தைப் பூசிக் கொள்வது போன்று மிகுந்த விருப்பமுடன், பெருமானின் திருமேனியில் இருந்த திருநீற்றினைத் தங்களது உடலில் பூசிக் கொண்டு மகிழும் அடியார்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்
ஏறு கொண்டாய் சாந்தம் ஈதென்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களைவாய் நெடுங்களம் மேயவனே
காவிரிப்பூம்பட்டினம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.65.4) நீரில் குழைத்த சாம்பலைத் தனது உடலில் சந்தனம் போல் பூசியுள்ள பெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தயங்க=போல் விளங்க; தார்=மாலை; ஆர்கின்ற என்ற சொல்லுக்கு உலகம் இன்பமடைதல் என்று பொருள் கொண்டு, அடியார்கள் பாடும் இசைப் பாடலினை கேட்கும் உலகத்தவர்கள் இன்பம் அடைகின்றனர் என்று சொல்வதும் பொருத்தமே. மைந்தர்=வலிமை வாய்ந்தவர்கள்; புகார் என்ற பெயருக்கு ஏற்ப வலிமை மிகுந்த வீரர்கள் வாழ்ந்த தலமாக காவிரிப்பூம்பட்டினம் இருந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. நீரார் நீறு=நீரினில் குழைத்து பூசப்பட்ட திருநீறு.
தாரார் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பகலம்
நீரார் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்
போரார் வேற்கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால்
பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே
பெருமான் தனது திருமேனியில் பூசியுள்ள திருநீறு, சந்தனம் போன்று நறுமணம் கமழ்வதாக உள்ளது என்று பெருமான் மேல் தீராத காதல் கொண்ட தாருகவனத்து மகளிர் சொல்வதாக, கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் (1.73.2) கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் தாருகவனத்து மகளிரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த பாடல்கள் என்று கூறுவார்கள். பிச்சைப் பெருமானாக, தனது கையினில் ஓட்டினை ஏந்தியவராக பலியேற்க தாருகவனம் சென்ற பெருமானின் அழகினால் கவரப்பட்டு, முனிவர்களின் மனைவியர் பலரும், தங்களையும் அறியாத நிலையில், தாங்கள் இல்லத்தில் செய்து கொண்டிருந்த வேலைகளை இடையிலே விட்டுவிட்டு, பெருமானின் பின்னே தொடர்ந்து சென்றதாக புராணம் கூறுகின்றது. அன்று, தாங்கள் வாழ்ந்து வந்த இல்லங்களின் வழியே வீதிவலம் வந்த பெருமானின் கோலத்தினை, தனது அழகிய வாயினால் இனிமையான சொற்கள் கொண்டு பலி இடுவீர்களாக என்று கேட்டதை நினைக்கும் தாருகவனத்து மகளிரின் தன்மையை எடுத்துரைக்கும் பாடலாக உள்ளது. நீத்தலாகா வெள்ளம்=நீந்திக் கடக்க முடியாத அளவு பெருகிய வெள்ளம்; மூழ்கு=மூழ்கி மறைந்த; ஏய்ந்த=பொருந்த; போந்த=வாயிலிருந்து வெளிவந்த; மைந்தர்=ஆண்மகன்; கோணல்=வளைந்த; வெகு நாட்களாகத் தன்னை விட்டு பிரிந்திருக்கும் தலைவனின் வருகையை ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிற்கும் தலைவி, கடந்த நாட்களில் தலைவனுடன் தான் சேர்ந்திருந்த இனிமையான பொழுதுகளை நினைத்து அசை போடும் தலைவியின் தன்மையை குறிப்பிடும் சங்க இலக்கியப் பாடல்களைப் போன்று இந்த பாடல் அமைந்துள்ள விதம் ரசிக்கத் தக்கது. தனது உள்ளம் கவர்ந்த தலைவன் பெருமான் தான் என்பதை சுட்டிக் காட்டும் வண்ணம் பெருமானின் சடையில் உள்ள பொருட்கள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. இந்த பாடல் போன்றே பதிகத்தின் மற்றைய பாடல்களிலும் இறைவனின் அடையாளத்தினை சுட்டிக் காட்டும் சம்பந்த நாயகி, இறைவனை தனது உள்ளம் கவர்ந்த கள்வன் என்று கூறுகின்றாள். எப்படியெல்லாம் தனது உள்ளம் கவரப்பட்டது என்பதை விரிவாக கூறும் நோக்கம் தான் என்னே. அந்த அடையாளங்கள் கொண்ட இறைவனை நாம் கண்டு சம்பந்த நாயகியுடன் சேர்த்து வைத்து அவளின் துயர நிலையினை மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.
நீத்தலாகா வெள்ளம் மூழ்கு நீள்சடை தன் மேலோர்
ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆரப்
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போலாம்
காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே
இடைமருது தலத்தின் மீது அருளிய பாடலில் (2.56.6) திருஞானசம்பந்தர் பெருமான், சந்தனமாக கருதி திருநீற்றினைத் தனது மார்பினில் பூசிக்கொண்டுள்ள பெருமானை, சாந்தநீறு பூசினீர் என்று குறிப்பிடுகின்றார். சலம்=கங்கை நீர்; வலம்=வெற்றியை குறிப்பிடுகின்றது. பண்டைய நாளில் தோற்றவர்கள், வெற்றி கொண்டவர்களை வலம் வந்து வணங்குவது பழக்கமாக இருந்தது போலும். பிராட்டியின் இனிமையான மொழியிடம் தோற்று ஓடிய குழல் இசைக்கருவி, பிராட்டியை வலம் வந்ததாக அப்பர் பிரான் ஒரு பாடலில் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. அதைப் போன்று, பெருமானிடம் இருந்த மழு ஆயுதத்தைப் பார்க்கும் பகைவர்கள் அச்சம் கொண்டு, தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு பெருமானை வலம் வருவதாக இந்த பாடலில் ஞானசம்பந்தர் கூறுகின்றார். இலமல்கு=இல்லங்களில் நிறைந்த; புலமல்கு=அறிவு நிறைந்த, ஞானம் மிகுந்த;
சலமல்கு செஞ்சடையீர் சாந்த நீறு பூசினீர்
வலமல்கு வெண்மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர்
இலமல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில்
புலமல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே
குற்றாலம் (குறும்பலா) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.71.8) சாந்தம் என நீறு அணிந்த பெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். திணி=நெருங்கிய; பலம் மிகுந்து பருத்து காணப்படுவதால் ஒன்றுக்கொன்று நெருங்கிய தன்மையில் தோள்கள் இருந்தததாக கூறுகின்றார். சாரல் சாரல்=மழைச் சாரலை உடைய மலைச்சாரல்; பூந்தண் நறு=நறுமணமும் குளிர்ச்சியும் கொண்ட வேங்கைப் பூக்கள்; பிடி=பெண்யானை; பெண்பால் என்ற தகுதியில் கூந்தல் உடையது என்று சொன்னார் போலும். யானைகள் பூக்களைப் பறித்து வந்து சிவபெருமானை வழிபாடு செய்வதாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார்
ஏந்து திணி திண்தோள் இராவணனை மால் வரைக் கீழ் அடர
ஊன்றிச்
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல்
பூந்தண் நறு வேங்கைக் கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய
ஏந்திக்
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே
வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.119.5) நறுமணம் கமழும் சந்தனம் போன்று திருநீற்றினைத் தனது உடலின் மீது பூசிய பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கூசுமா மயானம்=எவரும் செல்வதற்கு கூச்சம் கொள்ளும் சுடுகாடு; எவரும் செல்வதற்கு அஞ்சும் சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள பெருமானின் உறைவிடத்தை பானை போன்று வயிற்றினை உடைய பூதங்கள் காவல் காப்பதாக இங்கே கூறுகின்றார். பூதி=விபூதி, திருநீறு; மெல்லோதி=மென்மையான மொழிகளை உடைய பார்வதி தேவி; பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்துக் கொண்டுள்ள பெருமான், பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக இறுகக் கட்டியுள்ளார். இத்தகைய தன்மையை உடைய பெருமானின் திருநாமத்தை ஓத வினைகள் யாவும் நீங்கும் என்று கூறுகின்றார். .
கூசுமா மயானம் கோயில் வாயில் கண் குடவயிற்றன சில பூதம்
பூசுமா சாந்தம் பூதி மெல்லோதி பாதி நற்பொங்கு அரவு அரையோன்
வாசமாம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த
வான் தென்றல்
வீசுமாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை
கெடுமே
பந்தணைநல்லூர் பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.121.3) சாந்த வெண்ணீறு பூசியவர் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சுவடு தாமறியார் என்று இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்ட திருஞான சம்பந்தர் இந்த பாடலிலும் அவ்வாறு குறிப்பிடுகினார். பூவினில் பொருந்தியுள்ள நறுமணத்தை நம்மால் உணர முடிந்தாலும் காண இயலாதது போன்று இறைவன் எங்கும் இருப்பதை நாம் உணரமுடிந்தாலும் அவ்வாறு இறைவன் பொருந்தி இருக்கும் சுவட்டினை நாம் காண முடியாது என்ற செய்தியைத் தான் சம்பந்தர் இங்கே நமக்கு உணர்த்துகின்றார்.
காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடுந்தொழில் காலனைக்
காலால்
வீட்டினார் எனவும் சாந்த வெண்ணீறு பூசியோர் வெண்மதி சடை
மேல்
சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல்லுள சொல்லு நால்
வேதப்
பாட்டினர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
நமது உணர்வுகள் மூலம் நம்மால் உணரப்படும் இறைவனை அறிவு பூர்வமாக நம்மால் காண முடியாது என்பதை மணிவாசகர் திருச்சதகம் பாடல் ஒன்றினில் மிகவும் அழகாக உணர்த்துகின்றார். இன்ன தன்மையன் என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இறைவனை நாம் உணர்வினால் அவன் இருப்பதை புரிந்து கொண்டு அவனை வழிபட்டு வணங்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் அவனது தன்மை யாது என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்குவது தவறு. இந்த பாடலில் இறைவனை உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் கூறுகின்றார். எப்படி உண்மையாக இருக்கும் பொருள், இல்லாத பொருளாக மாற முடியும். நமது உணர்வினால் உணரப் படுபவன் இறைவன். எனவே அவன் உள்ளதை, அவன் இருக்கும் உண்மையை நாம் யாவரும் உணர்வால் அறிந்து உணர்கின்றோம். ஆனால் அதே இறைவனை நமது அறிவின் துணையால் இன்ன தன்மையன் என்று ஆராயத் தொடங்கினால் அவனை நாம் உணர முடியுமா. முடியாது என்பதே விடை. எனவே தான் அறிவினால் கண்டறியாத பொருள் என்று உணர்த்தும் பொருட்டு இன்மையுமாய் உள்ளவன் என்று கூறுகின்றார். உணர்வால் உணர முடியும் இறைவனை அறிவினால் உணர முடியாது என்பதை சுட்டிக் காட்டவே உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். வளி=காற்று; ஊன்=உடல்;
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாய் என் சொல்லி வாழ்த்துவனே
திருநீற்றினை விலையிலி சாந்தம் என்று அப்பர் பிரான் ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.8.9) குறிப்பிடுகின்றார். சந்தனம் மிகவும் விலை உயர்ந்த பொருள் என்பதை நாம் அறிவோம். சிவபிரான், மலிந்து கிடந்து மற்றவரால் ஒதுக்கப்படும் பொருட்களையே விரும்பி அணிபவர் என்பதால், சுடுகாட்டில் கிடைக்கும் சாம்பலையே திருநீறாக அணியும் தன்மை இங்கே கூறப்பட்டுள்ளது. எருக்கு, கொன்றை, எலும்பு மாலை, பாம்பு, ஆகியவை போன்று மற்றவர்கள் விலக்கும் பொருட்கள் போல், திருநீறும் இறைவனால் விரும்பப்பட்டு உடல் முழுவதும் பூசிக் கொள்ளப் படுவதால் விலையிலி சந்தனம் என்று திருநீற்றினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். வடநாட்டில் பாயும் கங்கை நதி இங்கே வடகங்கை என்று அழைக்கப் படுகின்றது. உமையம்மை மற்றும் கங்கை இருவருக்கும் மணவாளராக சிவபெருமான் இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. வேட விகிர்தர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, வேடுவக் கோலம் தாங்கி அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளியதை குறிக்கும் என்றும் கொள்ளலாம்.
மலை மட மங்கையோடும் வடகங்கை நங்கை மணவாளராகி
மகிழ்வர்
தலை கலனாக உண்டு தனியே திரிந்து தவவாணராகி முயல்வர்
விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட
விகிர்தர்
அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம்
உண்ட அவரே
சடையனார் என்றும் சாந்த நீற்றர் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் தில்லைச் தலத்தின் மீது அருளப்பட்ட பாடலாகும் (4.22.3). சடையன், சடையனார் என்பது ஒப்பற்ற சடையினைக் கொண்ட சிவபெருமானுக்கு மட்டுமே உரித்தான பெயர். சிவபெருமானின் சடை பல சிறப்புகளை உடையது. கடல் போல் பாய்ந்து வந்த கங்கை நீரினை ஏற்றுத் தேக்கிய சடை; அழிந்து தேய்ந்த நிலையில் தன்னை வந்து சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்த சடை; பல விதங்களிலும் வேறுபாடு கொண்ட தண்ணீர், சந்திரன், பாம்பு ஆகிய மூன்றினையும் ஏற்றுக்கொண்டு, மூன்றினையும் ஒருங்கே வைத்த சடை. இத்தகைய சிறப்புத் தன்மைகள் மற்றவர்களின் சடைக்கு இல்ல என்பதால், சடையன் என்பது சிவபெருமானுக்கே உரித்த பெயராகும். தனிநிலா=ஒப்பற்ற நிலா; சாந்தம்=சந்தனம். மற்றவர்கள் வாசனை பொருந்திய சந்தனத்தை உடலில் பூச, அவர்களிலிருந்து மாறுபட்டவரான சிவபெருமான், திருநீற்றினை சந்தனம் என்று பூசிக் கொள்வதாக அப்பர் பிரான் இங்கே சொல்கின்றார். பெருமானின் எளிமையான திருக்கோலம் இங்கே குறிப்பிடப்படுகின்றது.
சடையனார் சாந்த நீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னிச்
உடையனார் உடைதலையில் உண்பதும் பிச்சை ஏற்றுக்
கடி கொள் பூந்தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே
திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.24.3) அப்பர் பிரான் சந்தனமாகத் தனது உடலின் மீது வெண்ணீற்றினை பூசிய பெருமான் என்று கூறுகின்றார்.
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்தச்
சடையும் கொப்பளித்த திங்கள் சாந்தம் வெண்ணீறு பூசி
உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும்
அடையும் கொப்பளித்த சீரார் அதிகை வீரட்டானரே
திருநீற்றினை சாந்தமாகக் கொண்டவன் பெருமான் என்று மீயச்சூர் இளங்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (5.11.7) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பைங்கொன்றை=பசிய கொன்றை மலர்கள், புத்தம்புதிய கொன்றை மலர்கள்; தார்=மாலை; இடம்=நேரம், தகுந்த நேரம்
படைகொள் பூதத்தன் பைங்கொன்றை தாரினன்
சடைகொள் வெள்ளத்தன் சாந்த வெண் நீற்றினன்
விடைகொள் ஊர்தியினான் திரு மீயச்சூர்
இடை கொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே
திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.83.10.) அப்பர் பிரான் சாந்தம் என்று கருதி திருநீறு அணிந்த பெருமானின் மலை கயிலை மலை என்று குறிப்பிடுகின்றார். பாந்தள்=பாம்பு; ஏந்து=உயர்ந்த; தாள் என்ற சொல் இங்கே கால் விரலை குறிக்கும்; சாந்தம்=சந்தனம்;
வேந்தன் நெடுமுடி உடைய அரக்கன் கோமான் மெல்லியலாள்
உமை வெருவ விரைந்திட்டு ஓடிச்
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பைத் தடக் கைகளால்
எடுத்திடலும் தாளால் ஊன்றி
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன் தன்
இசை கேட்டு இரக்கம் கொண்ட
பாந்தள் சடைமுடி எம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன்
உய்ந்தவாறே
மற்றவர்கள் பூசிக் கொள்ள விரும்பாத திருநீற்றினைத் தனது உடலில் சந்தனம் போன்று பூசிக் கொண்ட பெருமான் என்று அப்பர் பிரான் உணர்த்தும் திருத்தாண்டகப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடல் (6.11.6) நீடூர் தலத்தின் மீது அருளியது. பூணலாப் பூண்=எவரும் அணிய முடியாத அணிகலன், கொடிய விடம் கொண்டு படம் எடுத்தாடும் பாம்பினை அணிகலனாக உடலில் பூணும் வல்லமை உடையவன் சிவபெருமான் ஒருவனே என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. ஊணலா ஊணான்=தான் உண்பதற்காக அன்றி பிச்சை எடுப்பவன்; பிச்சை எடுத்த உணவினை உண்ணாதபோது அவன் எதற்காக பிச்சை எடுக்கவேண்டும் என்ற கேள்வி எழுவது இயற்கை. இறைவன் பிச்சை எடுப்பதே, தான் வாழ்வதற்கன்றி, உலகத்தவர்கள் தங்களது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்களை பிச்சையாக இறைவனிடம் சமர்ப்பித்து தாங்கள் உய்வதற்காகத் தானே.
பூணலாப் பூணானைப் பூசாச் சாந்தம் உடையானை முடைநாறும்
புன்கலத்தில்
ஊணலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளிதிகழும்
மேனியானைச்
சேணுலாம் செழும்பவளக் குன்று ஒப்பானைத் திருப்புன்கூர் மேவிய
சிவலோகனை
நீணுலா மலர்க்கழனி நீடூரானை நீதனேன் என்னே நான்
நினையாவாறே
திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.19.4) சுந்தரர், பெருமான் உவகையுடன் ஏற்றுக்கொள்ளும் பொருட்கள் எவையெவை என்று பட்டியல் இடுகின்றார். வேதத்தின் ஆறு அங்கங்களை விரும்பிச் செய்தவரும், வலிமை வாய்ந்த இடபத்தை வாகனமாக விரும்பி ஏற்றவரும், ஏழிசைகளையும் விரும்பிக் கேட்பவரும், பகீரதனுக்கு அருள் புரியும் பொருட்டு கங்கை நதியினைத் தனது சடையில் விரும்பி ஏற்றவரும், முப்புரி நூலை விரும்பி அணிபவரும், பூசிக் கொள்கின்ற சந்தனமாக திருநீற்றினை மிகுந்த விருப்பத்துடன் தனது திருமேனியில் பூசியவரும் ஆகிய பெருமான், நால்வேதங்களை ஓதியவாறு எங்கும் நிறைந்து காணப்படும் பெருமான், எழுந்தருளியுள்ள இடம் திருநின்றியூர் என்று இந்த பாடலில் சுந்தரர் கூருகின்றார். கங்கை தன்னை வேறு உகந்தார் என்று கூறுவது சற்று சிந்திக்கத் தக்கது. பெருமான் தனது உடலினில் உமை அன்னையையும் சடையினில் கங்கை நங்கையையும் ஏற்றுக் கொண்டுள்ள தன்மையை நாம் அறிவோம். அருளே வடிவமாக விளங்கும் உமையன்னையைத் தனது உடலில் பெருமான் ஏற்றுக் கொண்டது பொதுவாக உயிர்களுக்கு அருள் புரியும் நோக்கத்தை உடையது. கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டது, பகீரதனுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் என்பதால், உமை அன்னையை ஏற்றுக் கொண்டுள்ள நோக்கத்திலிருந்து மாறுபட்டது என்பதை உணர்த்தும் வண்ணம் வேறு உகந்தார் என்று சுந்தரர் கூறுகின்றார். கங்கை நதியினை ஏற்ற செய்கையும் பின்னர், பாரத நாட்டின் ஒரு பகுதி செழிப்புடன் விளங்க கங்கை நதி, உதவுவதையும் நாம் இங்கே நினைக்கவேண்டும்.
ஆறு உகந்தார் அங்கம் நான்மறையார் எங்குமாகி அடல்
ஏறு உகந்தார் இசை ஏழு உகந்தார் முடிக் கங்கை தன்னை
வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தமதா
நீறு உகந்தார் உறையும் இடமாம் திரு நின்றியூரே
பெருமானின் எளிய தன்மையை குறிப்பிட்டு, பெருமானே ஏன் உனக்கு வேறு பொருட்கள் கிடைக்கவில்லையோ என்று நகைச்சுவையாக குறிப்பிடும் ஒரு பாடலில் (7.44.2) சுந்தரர் திருநீற்றினைத் தவிர்த்து உமக்கு நறுமணம் வீசும் பொருள் ஏதும் பூசிக் கொள்வதற்கு கிடைக்கவில்லையா என்று கேட்பதை நாம் இங்கே காணலாம். தூறு=காடு;
தூறு அன்றி ஆடரங்கு இல்லையோ சுடலைப் பொடி
நீறன்றி சாந்தம் மற்றில்லையோ இமவான் மகள்
கூறன்றிக் கூறு ஆவது இல்லையோ கொல்லைச் சில்லை வெள்
ஏறு அன்றி ஏறுவதில்லையோ எம் பிரானுக்கே
திருமுருகன்பூண்டி தலத்தின் மீது அருளிய பாடலில் (7.49.9) தன்னந்தனியாக காட்டில் இருப்பது ஆபத்து அல்லவா என்று பரிவுடன் கேட்கும் பாடலில், திருநீற்றினை சந்தனமாக பூசிக் கொண்டு எளிய தோற்றத்துடன் பெருமான் இருப்பதை சுந்தரர் குறிப்பிடுகின்றார். தனது தோழன் சேரமான் பெருமான் அளித்த எண்ணற்ற பரிசுப் பொருட்களுடன் சுந்தரர் திருவாரூருக்கு திரும்பிச் செல்லும் வழியில் வேடுவர்கள் சுந்தரரின் பரிசுப் பொருட்களை கொள்ளையடித்த பின்னணியில், தன்னந்தனியாக பெருமான் வீற்றிருப்பது அவருக்கு கவலை அளிக்கவே, பெருமானின் நிலை கண்டு பரிந்து, பெருமானே, வழிப்பறி கொள்ளையர் நிறைந்த இந்த காட்டினில் பலவிதமான நகைகளைத் தனது மார்பினில் தாங்கிய உம்னையன்னையுடன் பாதுகாப்பு ஏதுமின்றி தனியாக ஏன் வீற்றிருக்கின்றீர் என்று கவலையுடன் கேட்கின்றார். தனக்குத் தோழனாக இருந்து பல சமயங்களில் உதவி செய்த பெருமானின் நிலை கண்டு சுந்தரர் கவலை கொள்வது இயற்கை தானே.
சாந்தமாக வெண்ணீறு பூசி வெண் பல் தலைக் கலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் பாகம் வைத்து
உகந்தீர்
மோந்தையோடு முழக்கு அறா முருகன்பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர்
எம் பிரானீரே
வெள்ளம்=நீர், கங்கை நதி; காந்தள் ஆரும்=காந்தள் மலர்கள் போன்று மெலிந்தும் மென்மையாகவும் நீண்டும் காணப்படும் விரல்கள்; ஏழை=பார்வதி தேவி; பொதுவாக பெண்கள் ஆண்களை விடவும் உடல் வலிமையில் குறைந்தவர்களாக காணப்படுவதால் அவர்களை ஏழை என்று குறிப்பது இலக்கிய மரபு. வேந்தன் என்ற சொல் இங்கே, சோழ வேந்தன் கோச்செங்கட் சோழனை குறிப்பிடுகின்றது. அவன் கட்டிய மாடக்கோயில் இந்த கோயில். அடிகள்=தலைவர்; பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் செய்கைகளின் தன்மையை எவரும் புரிந்து கொள்ள முடியாது என்று உரைத்த கருத்து அனைத்து பாடல்களுக்கும் பொருந்துவதாக உள்ளது.
வேந்தன் என்பதற்கு உலகுக்கெல்லாம் அரசனாக விளங்கும் சிவபெருமான் என்று பொருள் கொண்டு, உலகத்து மக்கள் அனைவரையும் பாதுகாத்து, அவரவர்களின் வினைகளுக்கு ஈடாக படியளிக்கும் தலைவனாக, அருள் புரியும் நாதனாக விளங்கும் பெருமான், எல்லா உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் தலைவனாகவும் அந்த உயிர்களை இயக்குபவனாகவும் இருக்கும் தன்மையை வேந்தன் என்ற சொல் மூலம் உணர்த்துகின்றார் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பெரும்பாலான உரைகளில் வேந்தன் என்ற சொல் கோச்செங்கட் சோழனை குறிப்பதாக உணர்த்தப் படுகின்றது.
கங்கை நதியினைத் தாங்கிய செயல், எவ்வாறு கங்கைக்கு பாடம் புகட்டும் வண்ணம் அமைந்துள்ளது என்பதை அப்பர் பிரான், திருவையாற்று பதிகத்தின் கடைப் பாடலில் (4.38.10) மிகவும் அழகாக கூறுகின்றார். கங்கையைச் சடையுள் வைத்தார் என்று தொடங்கும் இந்த பதிகத்தின் கடைப்பாடலில், அந்த செயலுக்கான விளக்கம் சுவையாக கொடுக்கப் பட்டுள்ளது.
இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே
இந்த பாடலில் பொருள் இல்லாமல் இருப்பவர்களுக்கு கொடை கொடுத்து உதவும் செல்வர்களுக்கு பொருளும் கொடுத்து அவர்களுக்கு அருளும் குணமும் வைத்தவர் இறைவன் என்று அப்பர் நயமாக கூறுவதை காணலாம். இரந்தவர்க்கு கொடுத்து உதவாது மறைத்து வாழ்பவர்க்கு நரகம் என்ற ஒன்றினை இறைவன் வைத்துள்ளான் என்று கூறி பணம் படைத்தவர்களுக்கு எச்சரிக்கை விடுவதையும் இந்த பாடலில் நாம் உணரலாம். அடுத்தவர்களுக்கு உதவாமல் செல்வத்தை மறைத்து வைக்கும் உலோபிகளுக்கு இறைவன் தண்டனை அளிப்பான் என்பதற்கு கங்கை நதி ஒரு உதாரணம் என்பதால், கங்கை நதியுடன் தொடர்பு கொண்ட நிகழ்ச்சி இங்கே கூறப்பட்டுள்ளது. தங்களிடம் பொருள் இருந்தும், இரப்பவர்களுக்கு உதவாதவர்களை உலகம் உலோபி என்று இகழ்கின்றது. அவ்வாறு இருத்தல் கொடிய செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், காமம் முதலான ஆறு குற்றங்களில் ஒன்றாக உலோபம் கருதப்படுகின்றது. இந்த குற்றத்தை இறைவன் பொறுக்கமாட்டார் என்றும் அதற்கு உரிய தண்டனை அளிப்பார் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.
கபில முனிவரை, தங்களது தந்தை சகரன் செய்யவிருந்த அசுவமேத யாகத்து குதிரையைத் திருடியவன் என்று தவறாக கருதி, அவர் மீது பாய்ந்த சகரனின் புத்திரர்கள் அனைவரும் தியானத்திலிருந்து விழித்த கபிலரின் கண் பார்வையால் சாம்பலாக எரிந்தனர். தனது நீரினில் அந்த சாம்பலைக் கரைத்து, அவர்களுக்கு நற்கதி வழங்கும் தன்மை கங்கை நதிக்கு இருந்ததால் தான், பகீரதன் கங்கை நதியை பூவுலகத்திற்கு, தவம் செய்து வரவழைக்க முயற்சி செய்தான். ஆனால் அவ்வாறு உதவ மறுத்த கங்கை நதிக்கு பாடம் கற்பிக்கும் வகையில், வேகமாக இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் இறைவன் சிறை வைத்த நிகழ்ச்சி இங்கே நயமாக உணர்த்தப் படுகின்றது. தன்னில் நீராடுபவர்களுக்கு, அவர்களின் பாவத்தை போக்கும் புனித தன்மை படைத்தது கங்கை நதி. அதனால் தான், கபில முனிவரின் சாபத்தால் சாம்பலாக மாறிய சகர மன்னனின் புதல்வர்களை உய்விக்க வேண்டி, பகீரதன் கங்கை நதியை பூவுலகிற்கு கொண்டு வர முயன்றான். ஆனால் அப்போது, கங்கை நதிக்கு விருப்பம் இல்லாத நிலை இருந்தது, அதனால் தான், தான் கீழே இறங்கி வரும்போது தன்னைத் தாங்கும் வல்லமை படைத்தவர் வேண்டும் என்று சாக்கு கூறியபோது, கங்கையை தனது சடையில் தாங்கி சிறை செய்து கங்கை நதிக்கு தண்டனை அளித்து, அனைவருக்கும் அருள வேண்டும் என்று கங்கை நதிக்கு உணர்த்தியவர் அல்லவா சிவபெருமான்.
திருநீற்றினைப் பூசிக் கொண்டதன் மூலம் தான் மிகவும் எளியவன் என்றும், அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் தான் ஒருவனே நிலையாக என்றும் அழியாமல் இருப்பவன் என்று உணர்த்தப்படுகின்றது; கங்கை நதியை சிறைப்படுத்திய தன்மை, தன்னிடம் பொருள் இருந்தும் உலோபியாக மற்றவர்க்கு கொடுத்து உதவாமல் இருந்தால், அவர்களை பெருமான் திருத்தி நல்வழிப்படுத்துவான் என்பதை உணர்த்துகின்றது; எப்போதும் அன்னையுடன் சேர்ந்து பெருமான் இருப்பது, சிருஷ்டி (தோற்றம்) ரகசியத்தை வெளிப்படுத்துகின்றது. ஆண் உயிரும் பெண் உயிரும் சேர்ந்தால் தானே உயிர்கள் பொருத்தப் படுவதற்கு ஏற்ற உடல்கள் கிடைக்கின்றன. பெருமான் ஒரு காரியத்தைச் செய்வதற்கு திருவுள்ளம் கொள்ள, பிரட்டி அந்த செயலை செய்து முடிக்கின்றாள் அல்லவா. இறைவன் வேறு சக்தி வேறு என்று நம்மால் பிரித்து பார்க்கமுடியாது. சிவபெருமானின் அருள் வடிவம் தானே சக்தி. மேலும் உலகம் என்பது மறுதலையான இரண்டு பொருட்கள் கொண்டது. எனவே தான், ஆண் பெண், இன்பம் துன்பம், இரவு பகல், ஆதி அந்தம், பந்தம் வீடு ஆகிய இரண்டு மறுதலைப் பொருட்களாக மணிவாசகர் (பொற்சுண்ணம் கதைப்பாடல்) காண்கின்றார்.
பொழிப்புரை:
வெண்மையான திருநீற்றினை, நறுமணம் நிறைந்த சந்தனமாக கருதித் தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டுள்ள பெருமான், தனது சடையினில் மிகுந்த நீர்ப்பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியைத் தாங்கியவன்; காந்தள் மலரைப் போன்று, மென்மையாகவும் மெலிந்தும் நீண்டும் அழகாக காட்சி தரும் விரல்களை உடைய பார்வதி தேவி காணும் வண்ணம் பெருமான் நடனமாடும் காரணத்தை ஆராய்ந்து அறியும் நிறைந்த ஞானம் உடையவர் எவரேனும் உளரோ, இல்லை என்பதே விடை. இத்தகைய சிறப்பு வாய்ந்த நடனத்தை தினமும் ஆடுபவராக உள்ள பெருமான், சோழ வேந்தனாகிய கோச்செங்கட் சோழன் எழுப்பிய மாடக்கோயிலாகிய மூக்கீச்சரம் தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 2:
வெண்டலை ஓர் கலனாப் பலி தேர்ந்து விரிசடைக்
கொண்டல் ஆரும் புனல் சேர்த்து உமையாளொடும் கூட்டமா
விண்டவர் தம் மதில் எய்த பின் வேனில் வேள் வெந்தெழக்
கண்டவர் மூக்கீச்சரத்து எம் அடிகள் செய் கன்மமே
விளக்கம்:
கன்மம்=செயல்; கொண்டல்=மேகம்; பெருமான் தனது தலையினில் தாங்கியது வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதி என்பதால், மழை நீரால் நிறைந்த கங்கை நதியை பெருமான் தாங்கினார் என்று சொல்வது பொருத்தமன்று. எனினும் நதிகளின் பொதுத் தன்மையை கருத்தில் கொண்டு, மழை நீரால் நிறைந்த கங்கை நதி என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. இந்த காரணம் கருதியே, கொண்டல் என்ற சொல்லுக்கு மேகம் என்றும் மழைநீர் என்றும் பொருள் கொள்ளலாகாது என்றும் கொள்ளுதல் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று தருமையாதீனக் குறிப்பு உணர்த்துகின்றது. விரிச்சடையைத் தனது இருப்பிடமாகக் கொண்ட கங்கை நதி என்ற விளக்கம் பொருத்தமாக உள்ளது. கூட்டமா=கூடி இருப்பதும்; விண்ட=உடைந்த; சிவநெறியிலிருந்து பிரிந்து சென்ற திரிபுரத்து அரக்கர்கள்; வேனில்வேள்=வசந்த காலத்தின் தலைவனாக விளங்கும் மன்மதன்; தேர்ந்து=தேடிக் கொண்டு; வசந்த காலத்தின் மன்மதனின் ஆற்றல் வலுப்பெறுகின்றது என்று கருதும் இலக்கிய மரபினைப் பின்பற்றி, வேனில் வேள் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
மன்மதனின் ஆற்றல் வேனிற்காலத்தில் அதிகரிக்கும் என்பதை உணர்த்தும் திருவாசகப் பாடல் ஒன்றினை நாம் இங்கே நினைவில் கொள்ளலாம். திருச்சதகம் ஆத்துமசுத்தி பதிகத்தின் கடைப்பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இல்லற வாழ்க்கையில் அகப்பட்டு, மாதர் தரும் சிற்றின்ப போகத்தில் மயங்கிய தான், மாதரின் பிரிவைத் தாங்கமுடியாமல் இயல்பினில் குளிர்ச்சியான சந்திரனும் என்னை சுடுகின்றது என்று வருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன் என்றும், மாதரின் கண் பார்வையாகிய வலையில் விழுந்து அதனின்று வெளியே வர முடியாமல் துன்பப் படுகின்றேன் என்றும், தான் மத்தினால் கடையப்பட்ட தயிர் போன்று துன்பம் அடைகின்றேன் என்றும், இவை அனைத்தும் மன்மதனின் கணைக்கு இலக்காக தான் இருந்ததால் ஏற்பட்டது என்று இளவேனிற்காலத்து மன்மதனின் வல்லமையை இந்த பாடலில் மணிவாசகர் கூறுகின்றார்.
வேனில்வேள் கணை கிழித்திட மதி சுடும் அது தனை நினையாதே
மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித்
தேன் நிலாவிய திருவருள் புரிந்த என் சிவன்நகர் புகப் போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டினும் உண்டு உடுத்து இருந்தேனே
மன்மதனின் ஆற்றல் முன்னே தோற்காது நின்றவர் சிவபெருமான் ஒருவர் தாம் என்பதால் அவரால், மன்மதனை வெற்றி கொள்ள முடிந்தது. அவனை சுட்டெரித்து வீழ்த்திய பெருமான் ஒருவரால் தான் மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்க முடிந்தது என்பதையும் வேனில்வேள் வெந்து எழக்கண்டவர் என்ற தொடர் மூலம் ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பெருமான் பிச்சை ஏற்பது உயிர்கள் தங்களது மலங்களைக் கழித்துக் கொண்டு உய்வினை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன்; கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டது மற்றும் பிராட்டியை தனது உடலில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டது ஆகிய செயல்களின் காரணம் முதல் பாடலில் விளக்கப்பட்டது. திரிபுரத்து அரக்கர்களை அழித்தது, எத்தகைய அரிய வரங்கள் பெற்றிருந்தாலும் இறப்பினை எந்த உயிரும் தவிர்க்கமுடியாது என்பதை உணர்த்தவே. தவம் செய்வோரை எவரும் தடுக்கலாகாது என்பதை உணர்த்த மன்மத தகனம் ஏற்பட்டது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நமது ஆணவத்தை (கர்வம்; செருக்கு) பெருமான் அழிப்பார் என்றும், காமம் முதலான உட்பகைகள் (காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம்) ஆறினையும் பெருமான் அழிப்பார் என்ற குறிப்பு உணர்த்தப் படுகின்றது என்று சிவக்கவிமணியார் விளக்கம் கூறுகின்றார்.
பொழிப்புரை:
பிரமனின் உடலிலிருந்து பிரிக்கப்பட்டதால் உலர்ந்த கபாலத்தைத் தான் உணவு உட்கொள்ளும் கலனாக ஏற்றுக்கொண்டு ஊரூராக பிச்சை இடுவோரைத் தேடிக் கொண்டு செல்வதும், மழை நீரால் நிறைந்தது போன்று மிகுந்த நீர்ப்பெருக்குடன் வந்த கங்கை நதியினைத் தனது சடையினில் சேர்த்துக் கொண்டதும், உமை அன்னையுடன் கூடி இருந்ததும், சிவநெறியிலிருந்து பிரிந்து சென்று உலகத்தவர்களுக்கு பல தீங்குகளை இழைத்து பகைவர்களாகிய மாறிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை அழித்ததும், வசந்த காலத்தின் அரசனாக கருதப்பட்டு உயிர்களின் இடையே காம இச்சையைத் தூண்டி விடும் மன்மதன் வெந்து அழியும் வண்ணம் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்துப் பார்த்ததும் எமது தலைவராகிய சிவபெருமான் செய்த செயல்கள். இத்தகைய ஆற்றல் மிகுந்த செயல்களைச் செய்த பெருமான், மூக்கீச்சரம் என்று அழைக்கப்படும் உறையூர் தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 3:
மருவலார் தம் மதில் எய்ததுவும் மால் மதலையை
உருவில் ஆரவ்வெரி ஊட்டியதும் உலகு உண்டதால்
செரு வில் ஆரும் புலி செங்கயலானையினான் செய்த
பொருவில் மூக்கீச்சரத்து எம் அடிகள் செயும் பூசலே
விளக்கம்:
பூசல்=போர்; பெருமான் செய்த சிறந்த எட்டு வீரச் செயல்களில் இரண்டு செயல்கள் போருடன் தொடர்பு கொண்டவை; திரிபுரம் எரித்தது மற்றும் மன்மதனை எரித்தது ஆகிய இரண்டு செயல்கள்; இந்த இரண்டு பூசல்களும் உலகினுக்கு நன்மை விளைவித்த போர்கள். உலகத்தவரை பல விதங்களிலும் துன்புறுத்தி வந்த திரிபுரத்து அரக்கர்களின் செயல்கள் முதல் போரினால் முடிவுக்கு வந்தன. மன்மதன் எரிக்கப்பட்டது தவசிகள் செய்யும் தவத்தினுக்கு இடையூறு செய்வது பெரிய குற்றம் என்பதை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மன்மதன் எரிக்கப் பட்டாலும், அதன் பின்னணியில் இருந்த தேவர்களின் குறையினை உணர்ந்தவராக, பார்வதி தேவியைத் திருமணம் செய்து கொண்டு, முருகப் பெருமானைத் தோற்றுவித்து சூரபத்மனுடன் முருகனுடன் போர் செய்வதற்கு வழி வகுத்தது இந்த வீரச் செயல். இந்த போரும், சூரபத்மன் மற்றும் அவனது தம்பிகளால் உலகினுக்கு ஏற்பட்ட துன்பத்தினை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது; எனவே இந்த இரண்டு போர்களும், அசுரர்களின் செயல்களால், உலகம் அழியாமல் இருக்கும் வண்ணம் காத்த போர்கள் என்பதை நாம் உணரவேண்டும். திரிபுர தகனம் மற்றும் காமதகனம் ஆகிய இரண்டு செயல்கள் மட்டுமே இந்த பாடலில் குறிப்பிட்டு இருப்பதை நாம் உணரலாம். இந்த இரண்டு செயல்களின் பின்னணியை நாம் சென்ற பாடலில் கண்டோம்.
மருவலார்=மருவாமல் இருந்தவர்கள்; மருவுதல்=கலந்து இருத்தல்; திரிபுரத்து அரக்கர்கள் சிவநெறியுடன் கலக்காமல் பிரிந்து சென்ற தன்மை மருவலார் என்ற சொல் மூலம் குறிப்பிடப் படுகின்றது. கண்ணனுக்கும் ருக்மிணி தேவிக்கும் மகனாகப் பிறந்த அநிருத்தன் மன்மதனின் அம்சமாக கருதப் படுவதால், மன்மதனை கண்ணனாக அவதாரம் செய்த திருமாலின் மகனாக தேவாரப் பாடல்களும் திவ்யப் பிரபந்த பாசுரங்களும் குறிப்பிடுகின்றன. உருவில் ஆர=நிறைந்த உருவமும்; உலகாண்ட=சேர சோழ பாண்டிய நாடுகளை தானே ஆட்சி செய்த கோச்செங்கட் சோழனின் தன்மை; தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணார் என்று சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகின்றார். ஆனையினான் என்ற சொல்லினை வில் மற்றும் புலி ஆகிய சொற்களுடன் இணைத்து பொருள் கொள்ளவேண்டும். சோழநாட்டினை ஆண்டதுமன்றி பாண்டிய நாடு மற்றும் சேரநாட்டினை ஆண்டமையால், விற்கொடி உடையவனாகவும் மீன்கொடி உடையவனாகவும் விளங்கிய கோச்செங்கட் சோழன் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
சிவநெறியுடன் கலவாது பிரிந்து சென்ற திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்ததும், திருமாலின் மகனாகிய மன்மதனை, அவனது நிறைந்த உருவமும் அழியும் வண்ணம் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து அவனது உடலுக்கு தீ மூட்டியதும் பெருமான் செய்த பூசல்களாகும். வில்லும் புலியும் செங்கயலும் பொருந்திய கொடிகளை உடைய சேர, சோழ பாண்டிய நாடுகளை ஒரு குடைக் கீழ் கொணர்ந்து ஆட்சி செய்தவனும் போரில் வல்லவனும் ஆகிய கோச்செங்கட் சோழன் எழுப்பிய மூக்கீச்சரத்து திருக்கோயிலில் உறையும் பெருமான் செய்த இரண்டு போர்களும் உலகம் அழியாமல் இருக்கும் வண்ணம் செய்யப்பட்ட போர்களாகும்.
பாடல் 4:
அன்னம் அன்ன நடைச் சாயலாளோடு அழகு எய்தவே
மின்னை அன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம்
தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்
மன்னன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மாயமே
விளக்கம்:
சாயல்=போன்ற; மாயம்=காரணம் அறிந்து சொல்ல முடியாத செயல்கள்; கோழி=கோழியூர் என்ற பெயர் கொண்டுள்ள உறையூர்; உலகில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ஈசனின் திருவுள்ளக் குறிப்பின் படியே நடைபெறுவதால், அதனை நாம் எவரும் சரியாக புரிந்து கொள்ள முடியாது என்பதையும் உணர்த்தும் வண்ணம், அடிகள் செய்கின்றதோர் மாயம் என்று குறிப்பிடும் விளக்கம், ஈசனே உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முழுமுதற் காரணமாக உள்ள நிலையை எடுத்துரைக்கின்றது. மும்மலங்களில் ஒன்றாக கருதப்படும் மாயை வேறு, இங்கே குறிப்பிடப்படும் மாயம் வேறு, கங்கை நதியையும் உமை அன்னையையும் பெருமான் ஏற்றுக் கொண்ட காரணம் இந்த பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்தப் பட்டுள்ளது.
பொழிப்புரை:
அன்னம் போன்று அழகான நடையை உடைய உமையன்னையைத் தனது உடலின் இடது பாகத்தினில் ஏற்றுக் கொண்டு, தனது அழகினை மேலும் மேம்படுத்திக் கொண்ட பெருமான், மின்னலைப் போன்று ஒளிவீசும் தனது சடையினில் கங்கை நதியை பொருந்தும் வண்ணம் ஏற்றுக்கொண்ட செய்கையின் காரணத்தை நாம் அறிந்து சொல்ல இயலாது. பாண்டிய நாடு, உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழநாடு, வஞ்சியைத் தலைநகராகக் கொண்ட சேரநாடு ஆகிய மூன்றிலும் தனது செங்கோல் உயர்ந்து ஆட்சி செய்யும் வண்ணம் விளங்கிய கோச்செங்கட் சோழன் கட்டுவித்த மூக்கீச்சரத்து திருக்கோயிலில் உறையும் தலைவராகிய சிவபெருமான் செய்யும் செயல்களின் பின்னணியில் பொருந்திய காரணத்தை நம்மால் அறிய முடியாது.
பாடல் 5:
விடமுன் ஆரவ்வழல் வாயதோர் பாம்பு அரை வீக்கியே
நடமுன் ஆரவ்வழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள்
வடமன் நீடு புகழ்ப் பூழியன் தென்னவன் கோழி மன்
அடல் மன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் அச்சமே
விளக்கம்:
அழல்=நெருப்பு; நெருப்பு போன்று கொடிய விடம்; அரை=இடுப்பு; வீக்கி=இறுகக்கட்டி; மன் நீடு= நிலைத்த நீண்ட புகழினை உடைய; பூழியன்=பாண்டிய மன்னன்; அடல்=வலிமை; கோழிமன்= கோழியூர் என்று அழைக்கப்படும் உறையூரினைத் தனது தலநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த கோச்செங்கட் சோழன்; வட என்ற சொல் ஆலமரத்தினை குறிப்பதால், வடமன் நீடு என்ற தொடர் ஆலமரம் போன்று தழைத்து நீண்டு நிலையான புகழ் உடைய என்ற பொருள் தருகின்றது. ஆரவ்வழல்=ஆர மற்றும் அழல் என்ற இரண்டு சொற்களின் இணைப்பு. எந்த பொருளும் பெருமானைச் சார்ந்தவுடன் தனது கொடிய குணங்களை விட்டொழித்து நல்லவையாக மாறி விடுகின்றன என்பதை உணர்த்தவே பாம்பு இறைவனின் உடலில் பல இடங்களில் அணிந்து கொள்ளப் படுகின்றது. நள்ளிருளில் (ஊழிக்காலத்தின் முடிவில்) நடனம் ஆடுவது, பல பிறவிகள் எடுத்து இழைத்து வருந்திய உயிர்கள் இளைப்பாறும் வண்ணம் தன்னிடம் ஒடுக்கிய மகிழ்ச்சியை இறைவன் வெளிப்படுத்தும் தன்மை. அவனது நடனமே, ஐந்து தொழில்களையும் தான் செய்வதை அனைவருக்கும் உணர்த்தும் பொருட்டு தானே.
பொழிப்புரை:
நெருப்பு போன்ற விடத்தினைத் தனது வாயில் முன்னே கொண்டுள்ள பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கட்டியுள்ள இறைவன், தான் நடனம் ஆடும்போது தீப்பிழம்பினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் நடமாடுகின்றான். பேய்கள் தன்னைச் சூழும் வண்ணம் நள்ளிருளிலும் அவன் நடனம் ஆடுகின்றான். இவ்வாறு காண்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் செயல்களைப் புரியும் இறைவன், வடக்கில் நீண்ட நிலையான புகழினை உடையவனும் தென்னவன் என்று அழைக்கப் படுபவனும் ஆகிய பாண்டிய மன்னனும், போர் செய்வதில் வல்லமை வாய்ந்த கோழியூர் மன்னன் கோச்செங்கட் சோழனும் கட்டிய நிலையான மூக்கீச்சரத்து திருக்கோயிலில் வீற்றிருக்கின்றான். .
பாடல் 6:
வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கிருள்
வந்து என் ஆரவ் வளை கொள்வதும் இங்கொரு மாயமாம்
அந்தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய
எந்தை மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் ஏதமே
விளக்கம்:
ஏதம்=துன்பம்; மானதன்=பெருமை உடையவன்; பகைவரின் மானத்தை அழிப்பவன் என்றும் மானம் உடையவன் என்றும் இருவகையாக விளக்கம் கூறப்படுகின்றது. நேரியன்=நேர்மை உடையவன்; செம்பியன்=சோழன்; அந்தண் என்ற சொல்லினை அம் மற்றும் தண் என்று இரண்டு சொற்களாக பிரித்து உள்ளத்தில் குளிர்ச்சி உடையவன் என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த பாடலின் இரண்டாவது அடி, அகத்துறைப் பொருளைக் கொண்டது. பெருமான் பால் தீராத காதல் கொண்ட பெண்மணியின் கூற்றாக உள்ளது. தன்னை பெருமான் பால் காதல் கொண்டுள்ள பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டு ஞானசம்பந்தர் சொல்லும் கருத்துகளை சம்பந்த நாயகியின் சொற்கள் என்று கி.வா.ஜா. அவர்கள் தனது திருமுறை மலர்கள் புத்தகத்தின் குறிப்பிடுகின்றார். பெருமான் பால் தீராத காத கொண்டுள்ள சம்பந்த நாயகி, பெருமானுடன் இணைய முடியாத ஏக்கத்தினால் வருத்தம் அடையவே, அவளது உடலும் கைகளும் இளைத்து விடுகின்றன; அதனால் அவளது கைகளில் அணிந்திருந்த வளையல்கள் தாமாகவே கழன்று விழுந்து விடுகின்றன. இந்த நிலைக்கு தனது உள்ளத்தைக் கொள்ள கொண்ட பெருமானே காரணம் என்பதால், தனது வளையல்களைத் தான் அறியாத வண்ணம் கழற்றிய பெருமானை வளை கவர்ந்தவன் என்று சம்பந்த நாயகி குறிப்பிடுகின்றாள். மெய்=உடல்; வீங்கிருள்=நிறைந்த இருள்; இறைவன் பால் தீராத காதல் கொண்டு, அவன் பால் எல்லையற்ற அன்பினைப் பொழிந்து, மனம் வாக்கு காயங்களால் தன்னை முற்றிலும் இழந்த அடியார்களின் நிலையை, காதல் வயப்பட்டு தலைவனைப் பிரிந்த தலைவியின் இயல்புகளாகிய, பசலை கொள்ளுதல், உடல் இளைத்தல், பித்தரைப் போன்று இருத்தல் ஆகிய தன்மைகளுக்கு ஒப்பிடுதல் இலக்கிய மரபு. இந்த செயல் உயிர்களை தன் பால் ஈர்த்து வளைத்து அவர்களை மெய்யுணர்வு கொள்ளச் செய்யும் பெருமானின் அருட்செயலை குறிப்பிடுவதாக ஒரு சுவையான விளக்கம் கூறப்படுகின்றது. திருநீற்றினைத் தனது உடல் முழுவதும் பெருமான் பூசிக்கொண்டுள்ள நிலை, தான் ஒருவனே என்றும் நிலையானவன் என்பதையும், ஏனைய உயிர்களும் பொருட்களும் ஒரு நாள் அழிந்து சாம்பலாக மாறக்கூடியவை என்பதையும் உணர்த்தும் பொருட்டே.
பொழிப்புரை:
சுடுகாட்டில் வெந்த சாம்பல் பொடியைத் தனது உடல் முழுவதும் பூசிக் கொள்பவரும், எங்கும் அடர்த்தியான இருள் நிறைந்து சூழ்ந்து இருக்கும் ஊழிக்காலத்தில் நடனம் ஆடுபவரும் ஆகிய பெருமான், இங்கே வந்து எனது கைகளில் பொருந்திய வளையல்களை, நானும் அறியாத வண்ணம், மாயமாக, கொள்ளை கொண்டுவிட்டார். அதனால் நான் மிகுந்த துன்பம் அடைந்துள்ளேன். குளிர்ச்சியான உள்ளம் உடையவனும், சிறந்த பெருமைகள் உடையவனும், நேர்மையானவனும் ஆகிய சோழ மன்னன் கோச்செங்கட் சோழன் செய்த மூக்கீச்சரத்து திருக்கோயிலில் உறைபவனும் எனது தந்தையும் தலைவனும் ஆகிய பெருமான் செய்கின்ற துன்பச் செயல்களின் தன்மையை எவராலும் புரிந்து கொள்ள முடியாது.
பாடல் 7:
அரையில் ஆரும் கலை இல்லவன் ஆணோடு பெண்ணுமாய்
உரையிலார் அவ்வழல் ஆடுவர் ஒன்றலர் காண்மினோ
விரவலார் தம் மதில் மூன்றுடன் வெவ்வழல் ஆக்கினான்
அரையன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் அச்சமே
விளக்கம்:
கலை=அழகிய நூலாடை; இடுப்பினில் கோவணம் மற்றும் புலித்தோல் மட்டுமே அணிந்திருக்கும் பெருமானை நூலாடை இல்லாதவன் என்று கூறுகின்றார். ஆணோடு பெண்ணுமாய் உரையிலார் என்று கூட்டி பொருள் கொள்ளவேண்டும். முழுவதும் ஆண் என்று சொல்ல முடியாத வண்ணமும் முழுவதும் பெண் என்று சொல்ல முடியாத வண்ணமும் ஆணும் பெண்ணும் கலந்த தோற்றமாக உள்ள நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது; ஒன்றலர்=பல வடிவம் உடையவர் என்பதால் ஒரே வடிவம் இல்லாதவர் என்று கூறுகின்றார். விரவுதல்=கலத்தல்; விரவலார்= கலவாமல் நிற்றல், சைவநெறியுடன் கலக்காமல் பிரிந்து சென்ற திரிபுரத்து அரக்கர்கள்; அரையன்=அரசன்; ஒன்றலர் என்ற சொல்லுக்கு, எந்தப் பொருளின் மீது பற்று கொள்ளாத இறைவன், பற்றற்ற நிலையில் இருப்பதை உணர்த்துகின்றது என்ற விளக்கமும் பொருத்தமே. உரையிலார் என்ற சொல்லுக்கு, தனது தன்மையை பெருமையை முழுவதும் விளக்குவதற்கு போதுமான சொற்கள் இல்லாத நிலையில் பெருமான் இருப்பதாக விளக்கம் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. சொற்களுக்கும் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்ட பெருமையை உடையவன் அல்லவா. எளிமையும் பற்றற்ற தன்மையும் அனைவர்க்கும் அவசியம் என்பதை உணர்த்தும் பெருமானின் எளிமையான தோற்றம் செயல்கள் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றன. ஆணும் பெண்ணுமாக இருத்தல், நெருப்பினில் நடனம் ஆடுதல் ஆகிய செயல்களுக்கான காரணம் முந்தைய பாடல்களில் தரப்பட்டுள்ளது.
பொழிப்புரை:
அழகிய நூலாடையினை இடுப்பினில் கட்டுவதைத் தவிர்த்து கோவணமும் புலித்தோலும் ஆடையாகக் கொண்டுள்ள இறைவன், முழுவதும் ஆண் என்றோ முழுவதும் பெண் என்றோ சொல்ல முடியாத வண்ணம் ஆணும் பெண்ணும் கலந்த உருவினனாக உள்ளான்; அவன் நெருப்பினில் நீராடுவதைப் போன்று ஊழித்தீ நெருப்பினில் நின்ற வண்ணம் நடனம் ஆடுகின்றான்; அவன் ஒரு வடிவத்துடன் இருப்பதில்லை, பல விதமான வடிவங்களில் இருப்பதை நாம் காண்கின்றோம்; சிவநெறியை விட்டுப் பிரிந்து சென்ற திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே சமயத்தில் நெருப்புக்கு இரையாக எரித்தவன் சிவபெருமான்; இவ்வாறு நமக்கு அச்சம் விளவிக்கக் கூடிய பல செயல்களைச் செய்யும் பெருமானே, அரசன் கோச்செங்கட் சோழன் கட்டிய மூக்கீச்சரம் திருக்கோயிலில் உறைகின்றான்.
பாடல் 8:
ஈர்க்கு நீர் செஞ்சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும்
கூர்க்கு நன் மூவிலை வேல் வலன் ஏந்திய கொள்கையும்
ஆர்க்கும் வாயான் அரக்கன் உரத்தை நெரித்து அவ்வடல்
மூர்க்கன் மூக்கீச்சரத்து அடிகள் செய்யா நின்ற மொய்ம்பு அதே
விளக்கம்:
ஈர்க்கு நீர்=தன்னை நெருங்கும் மனிதர்களை இழுக்கும் தன்மை; கங்கை நதியில் இருக்கும் வெள்ளப் பெருக்கு, நதியினை நெருங்கும் மனிதர்களை இழுத்து வெள்ளச் சுழலில் அழுத்தி மூழ்கடிக்கும் வண்ணம் நிறைந்த வேகமாக ஓடும் நீரினை உடையது; ஆர்க்கும்=ஆரவாரம் செய்த;
உரம்=உடல் வலிமை; அடல்=வலிமை; மூர்க்கன் என்ற சொல்லினை அரக்கன் என்பதற்கு முன்னர் வைத்து பொருள் காணவேண்டும். மொய்ம்பு=வல்லமை மிகுந்த செயல்; முதலையும் மூர்க்கனும் கொண்டது விடார் என்ற மொழிக்கு ஏற்ப தேர்ப்பாகனது எச்சரிக்கையையும் புறக்கணித்து செயலில் இறங்கிய இராவணனின் செய்கை, மூர்க்கனது செய்கை என்று குறிப்பிடப்பட்டது. சிவ வழிபாட்டுக்கு எவரும் இடையூறு செய்யலாகாது என்பதை உணர்த்த, கூற்றுவனை உதைத்தவர் சிவபெருமான்; மூவிலைச் சூலம் ஏந்தியது, தோற்றுவித்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று செய்வது தானே என்பதை உணர்த்தும் பொருட்டு; இராவணனுக்கு அருள் புரிந்தது இந்நாள் வரை நாம் எந்த தவறுகளைச் செய்திருந்தாலும், இன்று முதல் நாம் இறைவனை வணங்கத் தொடங்கினால், தயக்கம் ஏதுமின்றி இறைவன் நமக்கு அருள் புரிவான் என்பதை உணர்த்தும் பொருட்டு. கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றதற்கான காரணம் முந்தைய பாடல்களில் சொல்லப் பட்டுள்ளது.
பொழிப்புரை:
தன்னை நெருங்கும் எவரையும் இழுத்து தனது சுழலில் மூழ்கடிக்கும் வண்ணம் அதிகமான நீர்ப் பெருக்கு உடைய கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்று மறைத்தது, மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்வதற்காக வந்த இயமனை காலால் உதைத்து கீழே தள்ளியது, கூர்மை உடையதும் பல நன்மைகள் செய்யும் ஆற்றல் மிகுந்ததும் ஆகிய மூவிலை வேலினை தனது வலது கையில் ஏந்தியது; மிகுந்த ஆரவாரத்துடன் கயிலை மலையினை பேர்த்தெடுத்து வேறு இடத்தில் வைத்து விட்டு பயணத்தைத் தொடர்வேன் என்று கத்தியவாறு மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த முரடன் அரக்கன் இராவணனின் உடலை கயிலை மலையின் கீழே அமுக்கி அவனது உடல் நொறுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலை மீது ஊன்றியது ஆகிய செயல்கள், மூக்கீச்சரம் தலத்தினில் உறையும் சிவபெருமான் செய்த செயல்களாகும்
பாடல் 9:
நீருளாரும் மலர் மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்
சீருளாரும் கழல் தேட மெய்த் தீத்திரள் ஆயினான்
சீரினால் அங்கு ஒளிர் தென்னவன் செம்பியன் வில்லவன்
சேரும் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் செம்மையே
விளக்கம்:
செம்மை=சிறந்த செயல்; நன்மையை விளைவித்த செயல்; பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரது செருக்கினை அடக்கிய செயல் என்பதால், சிறப்பு வாய்ந்த செயல் என்று கூறப்பட்டது. சீர்=சிறப்பு, புகழ்; கழல் தேட என்று குறிப்பிட்டதால் முடி தேட என்ற தன்மையை நாம் பிரமனின் செயலுடன் இணைத்து பொருள் கொள்ளவேண்டும். திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றியவன் பிரமன். எனினும் தாமரை மலரின் பொதுத் தன்மை கருதி நீரில் பூக்கும் தாமரை என்றும் சேற்றில் பூக்கும் தாமரை என்றும் பல தேவாரப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. செம்பியன்=சோழன்; வில்லவன்=விற்கொடியை உடைய சேரன்; தென்னவன்=பாண்டியன். இந்த பாடலில் தமிழ்நாட்டு மூவேந்தர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இறைவனை வணங்கியதாக ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இதைப் போன்று திருப்பெருங்குன்றம் தலத்து பதிகத்தினில் தலத்தில் மூவேந்தர்களும் ஒன்றாக கூடி இறைவனை வணங்கியதாக சுந்தரர் குறிப்பிடுகின்றார். சுந்தரரும் சேரமான் பெருமான் நாயனாரும் மதுரை சென்ற போது பாண்டிய மன்னன் அவர்களை திருப்பெருங்குன்றம் அழைத்துச் சென்றான் என்றும் அப்போது சோழ மன்னனும் ஆங்கு வருகை புரிந்தான் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம்.
பிரமனும் திருமாலும் இறைவனை, காண முடியாமல் நின்ற நிலை, உயிர்கள் தங்களது ஆற்றலின் மூலமாக இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்றும், இறைவன் பால் உயிர்கள் வைத்துள்ள அன்பு மற்றும் அந்த அன்பினால் விளையும் இறைவனின் கருணை ஆகியவையே உயிர்கள் இறைவனை உணர்வதற்கும் காண்பதற்கும் வழிவகுக்கும் என்பதை உணர்த்தும் பொருட்டே.
பொழிப்புரை:
நீரினில் பொருந்தி இருக்கும் தாமரை மலர் மேல் உறைபவனும், திரிவிக்ரமனாக நெடிய உருவம் எடுத்து மூன்று உலகங்களையும் இரண்டடியால் அளந்த புகழினை உடைய திருமாலும், தங்கள் முன்னே தோன்றிய நீண்ட நெடிய தீப்பிழம்பின் முடியையும் அடியையும் காண முடியாத வண்ணம், நீண்ட தீப்பிழம்பாக நின்றவன் சிவபெருமான்; சிறப்புடன் விளங்கும் பாண்டிய மன்னன், சோழமன்னன் மற்றும் சேரமன்னன் ஆகியோர் ஒன்று சேர்ந்து வணங்கும் மூக்கீச்சரம் தலத்தினில் உறையும் சிவபெருமான் செய்த சிறந்த செயல், பிரமனும் திருமாலும் காண முடியாமல் திகைத்து நிற்கச் செய்த செயலாகும்.
பாடல் 10:
வெண் புலால் மார்பு இடு துகிலினர் வெற்றரை உழல்பவர்
உண்பினாலே உரைப்பார் மொழி ஊனமது ஆக்கினான்
ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர்
பண்பின் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் பச்சையே
விளக்கம்:
புலால் மார்பு=பருத்த உடலினை உடையவர்கள்; உண்பினாலே=உண்ட பின்னர்; உண்ட பின்னர் உரைப்பார் என்று ஞானசம்பந்தர் கூறுவது சற்று சிந்திக்கத் தக்கதாக உள்ளது. துறவிகள் என்பதால் பல இல்லங்கள் சென்று அவர்கள் தரும் உணவினை ஏற்றுக்கொண்டு உண்டு, சமணத் துறவிகளும் பௌத்தத் துறவிகளும் வாழ்ந்தனர் என்பதை நாம் உணர்கின்றோம். உண்பதற்கு முன்னர், சிவபெருமானை இழித்து தாம் கூறி வந்த சொற்களைச் சொன்னால், ஒரு கால் தமக்கு உணவு கிடைக்காதோ என்ற அச்சத்தினால், தன்கள் உணவினை ஏற்றுக்கொண்ட பின்னர் சிவபெருமானை இழித்துக் கூறினார்கள் என்பதை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. சமணர் மற்றும் புத்தர்களின் சொற்களை ஊனம் உடைய சொற்களாக மாற்றியவன் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு ஐயப்பாட்டினை எழுப்பலாம். திருஞானசம்பந்தர் சமணர்களை வாதினில் வென்றது பின்னர் நடந்த நிகழ்ச்சி என்பதால், மேற்கண்டவாறு சம்பந்தர் குறிப்பிடுவது பொருத்தமா என்ற சந்தேகம் நமக்கு எழலாம். ஆனால் அப்பர் பெருமானின் சரித்திரத்தை நோக்குங்கால், நமக்கு இந்த ஐயப்பட்டிற்கு விடை கிடைக்கின்றது. அப்பர் பெருமான் தனக்கு வாராத சூலை நோய் வந்ததாக சொல்லி ஏமாற்றினார் என்றும் சமணர்களை தூற்றினார் என்றும் பல பொய்யான மொழிகளைப் பேசி, உண்மையை திரித்து பல்லவ மன்னனிடம் புறம் உரைத்து, வஞ்சகமாக பல தண்டனைகள் அளித்து, சமணர்கள் அவரை கொலை செய்ய முயன்றனர். இறைவனின் அருளால் அந்த வஞ்சகச் சூழ்ச்சிகளிலிருந்து அப்பர் பிரான் தப்பியதைக் கண்ட பல்லவ மன்னன், உண்மையை உணர்கின்றான். அப்பர் பிரான் குறித்து சமணர்கள் உரைத்த சொற்கள் அனைத்தும் ஆதாரமற்ற வீண்பழிச் சொற்கள் என்பதை உணர்ந்த பல்லவ மன்னன், தானும் சைவனாக மாறியதுமன்றி சமணப் பள்ளிகளை இடித்து சிவபெருமானுக்கு கோயிலும் காட்டுகின்றான். இந்த மாற்றம் இறைவனின் திருவருளால் நடந்தது அல்லவா. இது தான் இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஒண்=ஒளி வீசும்; கிள்ளி என்பது சோழ மன்னர்களின் பெயருடன் இணைந்த பட்டம். பச்சை=நிலையான செயல் தீயினில் இடப்பட்ட பின்னரும் எரிந்து அழிந்து போகாமல், நிலையாக நின்ற காரணத்தால், போகாமார்த்த பூண் முலையாள் என்று தொடங்கும் திருநள்ளாற்றுப் பதிகம் பச்சைப் பதிகம் என்று அழைக்கப் படுகின்றது அல்லவா. சமணர் மற்றும் புத்தர்களின் மொழிகளை ஊனமக்கியதன் நோக்கம், அத்தகைய சொற்களால் தனது அடியார்கள் திசை மாறிச் செல்லாமல் இருப்பதற்கு, ஞானசம்பந்தப் பெருமானின் அவதாரமே வேதநெறி தழைத்து ஓங்கச் செய்யவும், சைவத்துறை விளங்கி நிற்பதற்கும் தானே நிகழ்ந்தது. உண்பு என்ற சொல்லுக்கு தத்தம் சமயக் கொள்கைகள் என்று சிவக்கவிமணியார் பொருள் கூறுகின்றார்.
பொழிப்புரை:
பருத்த உடலின் மீது வெண்ணிற ஆடையினைப் போர்த்துக் கொண்டு திரியும் புத்தர்களும், இடுப்பினில் ஆடை ஏதும் இல்லாமல் திரியும் சமணர்களும் தத்தம் மதங்களின் கொள்கையின் வழியே, தாங்கள் உணவு ஏற்றுக்கொண்டதன் பின்னர் கூறும் சொற்களை ஊனமுடைய சொற்களாக மாற்றியவன் சிவபெருமான்; ஒளி வீசுவதும், போரினில் எதிரிகளின் மார்பினைத் துளைப்பதால் தசைத் தொடர்பு உடையதும் ஆகிய வேற்படையை, கையாள்வதில் வல்லமை பெற்றவனும், நீண்ட புகழினை உடையவனும் ஆகிய கோச்செங்கட் சோழன் சென்றடைந்து வணங்கும் மூக்கீச்சரம் தலத்தினில் உறையும் சிவபெருமான் செய்யும் நிலைத்த செயல், சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்களை ஊனம் உடையவையாகச் செய்தல் ஆகும்..
பாடல் 11:
மல்லையார் மும்முடி மன்னர் மூக்கீச்சரத்து அடிகளைச்
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன
சொல்ல வல்லார் அவர் வானுலகு ஆளவும் வல்லரே
விளக்கம்:
மல்=வலிமை; சேர்த்திய=வழிப்படுத்திய; ஆற்றுப்படுத்திய; ஆற்றுப்படை என்பது தமிழ் இலக்கிய வகைகளில் ஒருவகை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாக அமைந்துள்ளன. திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) ஆகியவை இந்த ஐந்து நூல்கள்; இந்த நூல்களில் புலவர்கள், வள்ளல்கள் இருக்கும் நாடு, அதன் தன்மை, வள்ளலில் கொடைத்திறன் ஆகியவற்றை குறிப்பிட்டு, அடுத்தவரை அந்த வள்ளலைச் சந்தித்து பயனடையும் வண்ணம் வழிகாட்டுவார்கள். சிவபெருமானது அருளினால் பயனடைந்த ஞானசம்பந்தர், மூக்கீச்சரம் தலத்தில் உறையும் பெருமானின் தன்மைகளை விளக்கி, நம்மையும் பெருமான் இருக்கும் இடம் சென்று பயனடையும் வண்ணம் வழிநடத்துவதை, சேர்த்திய செந்தமிழ் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். அருட்செல்வம் மிகுந்த பெருமான், என்பதால் நாம் கேட்பன அனைத்தும் கிடைக்கும் என்பதை உணர்த்தும் பொருட்டு, பெருமானை செல்வர் என்று, அருட்செல்வம் மிகுந்த செல்வர் என்று அறிமுகப்படுத்துவது நயமாக உள்ளது. மும்முடி மன்னர்=சேர, பாண்டிய மன்னர்களை வென்று அவர்களது முடியினையும் சூட்டிக் கொண்டமையால், கோச்செங்கட் சோழனை மும்முடி மன்னர் என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
வல்லமை வாய்ந்தவரும், பாண்டியநாடு, சேரநாடு மற்றும் சோழநாட்டு மணிமகுடங்களைத் தரித்தவரும் ஆகிய கோச்செங்கட் சோழன் எழுப்பிய மூக்கீச்சரம் திருக்கோயிலில் உறைபவரும், அருட்செல்வம் மிகுந்தவரும் ஆகிய சிவபெருமானை நினைத்து, அவன் இருக்குமிடம் சென்றடைந்து, அவனை வணங்கி வாழ்த்தி, அவனது அருளினைப் பெறும் வண்ணம் வழிப்படுத்தும் இந்த செந்தமிழ்ப் பாடலை, நல்லவராக விளங்கும் சான்றோர்கள் வாழும் சீர்காழி நகரைச் சார்ந்த ஞானசம்பந்தன் இயற்றிய இந்த பத்து பாடல்களை, சொல்லும் வல்லமை உடைய அடியார்கள் வானுலகினை ஆளும் தகுதி படைத்தவர்களாக விளங்குவார்கள்.
முடிவுரை:
வழக்கமாக ஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்கள் தலத்து இயற்கை வளத்தினை அழகாக உணர்த்தும் பாடல்களாக இருப்பதை நாம் காண்கின்றோம். ஆனால் இந்த பதிகம் அந்த தன்மைக்கு மாறாக இருப்பதை நாம் உணரலாம். பதிகத்தின் எட்டாவது பாடல் தவிர்த்து அனைத்துப் பாடல்களிலும், கோச்செங்கட் சோழனின் பெருமை உணர்த்தப் படுகின்றது. எழுபது மாடக் கோயில்கள் எழுப்பி, அடியார்கள் பலரும் அந்த கோயில்கள் சென்று இறைவனை வணங்கிப் பயனடையும் வண்ணம் ஒப்பற்ற பணியைச் செய்த சோழ மன்னனைப் பற்றி கூறுவது மிகவும் முக்கியம் என்று ஞானசம்பந்தர் கருதினார் போலும். கொங்குநாட்டு தலங்கள் பல சென்ற பின்னர், மீண்டும் சோழநாட்டு மண்ணை மிதித்த ஞானசம்பந்தர், தனது தாய்நாடு வந்து சேர்ந்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி இவ்வாறு வெளிப்பட்டது போலும். கொங்குநாடு செல்வதற்கு முன்னர், ஞானசம்பந்தர் தனது ஐந்தாவது திருப்பயணத்தில் சென்ற தலங்கள் அனைத்தும் காவிரி நதியின் இரு கரைகளிலும் அமைந்துள்ள, சோழநாட்டுத் தலங்களாக இருந்தமை நாம் அறிவோம்.
இந்த பதிகத்தின் ஒப்பற்ற தனித்தன்மை வாய்ந்த பெருமானின் பல செயல்களை எடுத்துரைக்கும் திருஞானசம்பந்தர் அந்த செயல்களின் பின்னணியை ஆராய்ந்து அறிந்து கொள்ளுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். அவ்வாறு ஆராய்ந்து நாம் அறிந்து கொண்டால் தான் பெருமானின் பெருமையை நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் இந்த அறிவுரை நமக்கு வழங்கப் படுகின்றது. அந்த செயல்களை சுருக்கமாக நாம் இப்போது காண்போம். இத்தகைய செயல்களை செய்ததன் நோக்கம் பல தேவாரப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. அந்த கருத்துகளின் அடிப்படையில், இந்த பதிக விளக்கத்தில், அந்தந்த பாடல்களில் சுருக்கமாக கொடுக்கப் பட்டுள்ளது. தேவாரப் பாடல்கள் மேற்கோளாக காட்டப்படாததன் காரணம், பதிவின் நீளம் மேலும் அதிகமாகிவிடும் என்ற அச்சம் காரணம் தான். முதல் பாடலில் திருநீற்றைத் தனது உடல் மீது பூசிக் கொண்டது, உமையன்னையுடன் இணைந்து ஆடியது, கங்கை நதியைத் தனது சடையில் ஏற்ற செயல்களும், இரண்டாவது பாடலில் உமை அன்னையைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டது, உலகெங்கும் திரிந்து பலி ஏற்பது ஆகிய செயல்களும், மூன்றாவது பாடலில் திரிபுரம் எரித்தது மற்றும் மன்மதனை எரித்தது ஆகிய செயல்களும், நான்காவது பாடலில் கங்கை நங்கை உமையன்னை ஆகிய இருவரையும் தாங்கிய செய்கையும், நள்ளிருளில் நடனம் ஆடும் தன்மை ஐந்தாவது பாடலிலும், உயிர்களைத் தன்பால் ஈர்த்து காதல் கொள்ளச் செய்வது ஆறாவது பாடலிலும், பற்றற்ற தன்மையராக இருப்பது ஏழாவது பாடலிலும், மூவிலைச் சூலம் ஏந்திய செய்கை எட்டாவது பாடலிலும், அரி மற்றும் அயன் காணமுடியாத வண்ணம் நீண்ட தழலாக நின்ற தன்மை ஒன்பதாவது பாடலிலும், சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்கள் ஊனமாக இருக்கும் வண்ணம் செய்தமை பத்தாவது பாடலிலும் உணர்த்தப் படுகின்றது. இந்த செயல்களின் தன்மையை சரிவர புரிந்து கண்டு பதிகத்தினை முறையான பண்ணுடன் இணைத்து ஓதும் அடியார்கள் உயர்ந்த்வர்களாகத் திகழ்வார்கள் என்று கடைப் பாடலில் கூறுகின்றார். நாம் இந்த செயல்களின் தன்மைகளையும் பெருமானின் பெருமையையும் சரிவர புரிந்து கொண்டு, அவனைப் பணிந்து போற்றி இம்மையிலும் மறுமையிலும் நன்மைகள் பல அடைவோமாக. மேலும் மூக்கீச்சரம் தலம் சென்று இறைவனைப் பணிந்து வணங்கியும், திருக்கோயிலின் சிறப்பினை நேரில் கண்டும் மகிழ்ச்சி கொள்வோமாக.