இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


சீரார்கழலே தொழுவீர்

சீரார்கழலே தொழுவீர்

பதிக எண்: 2.36 - திரு இரும்பூளை - இந்தளம்

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக வலஞ்சுழி சென்ற திருஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு பழையாறை, சத்திமுற்றம், பட்டீச்சரம் முதலான தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், பின்னர் இரும்பூளை தலம் செல்கின்றார். அவர் இரும்பூளை தலம் சென்றடைந்தபோது, பந்தல்கள் எழுப்பி, தோரணங்கள் கட்டி, பெரிய மாலைகள் எங்கும் தொங்க, நீர் நிறைந்த குடங்களை வரிசையாக நிறுத்தி, பெரும் மகிழ்ச்சி பொங்க, தலத்து அடியார்கள் ஞானசம்பந்தரையும் அவரது தொண்டர்களையும் வரவேற்றனர். திருஞானசம்பந்தர், தான் சென்ற முத்துச் சிவிகையிலிருந்து கீழே இறங்கி தன்னை வணங்கிய தலத்து தொண்டர்களை தானும் வணங்கினார். பின்னர் அனைவரும் திருக்கோயில் சென்றபோது, திருஞானசம்பந்தர் சன்னதி முன்பு நின்ற வண்ணம் பாடிய பதிகம் இது. அரிய மறைகளின் உட்பொருள் விளங்கும் வண்ணம் இந்த பதிகத்தை பாடினர் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். பலருக்கும் எழுகின்ற சந்தேகங்களை கேள்வியாக கேட்டு, அதன் விடையை புரியவைப்பதன் மூலம், கேட்போர் மனதினில் எந்த செய்தியையும் ஆழமாக பதியவைக்க முடியும் அல்லவா. அந்த முறை தான் இந்த பதிகத்தில் கையாளப் படுகின்றது. இந்த தலம் சென்ற விவரத்தை குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் நாம் இங்கே காண்போம். காவணம்=பந்தல்; நாற்றி=தொங்கவிட்டு; நான்ற= தொங்கும் தன்மை உடைய; நிரை=வரிசை;

தேவர் பிரான் அமர்ந்த திரு இரும்பூளை சென்றெய்தக்

காவண நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்பப்

பூவண மாலைகள் நாற்றிப் பூரண பொற்குடம் நிரைத்தங்கு

யாவர்களும் போற்றிசைப்பத் திருத்தொண்டர் எதிர்கொண்டார்

இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய இந்த ஒரு பதிகம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. இந்த பதிகம் வினவுரைப் பதிகமாக அமைந்துள்ளது. பெருமானின் பல வீரச் செயல்களையும் கருணைச் செயல்களையும் குறிப்பிட்டு, அதன் காரணத்தை பெருமானிடமோ தொண்டர்களிடமோ வினவும் பாடல்கள் கொண்ட பதிகங்கள் இவை. பதினோரு வினாவுரைப் பதிகங்களில் ஒன்பது பதிகங்கள் பெருமானிடம் விடை வேண்டி கேள்வி கேட்பது போன்று அமைந்த பாடல்கள் கொண்ட பதிகங்கள்; எஞ்சிய இரண்டு பதிகங்களும் பெருமானின் தன்மையை அடியார்களிடமிருந்து அறிந்து கொள்ளும் முகமாக, அவர்களிடம் கேள்வி கேட்கும் வண்ணம் அமைந்த பதிகங்கள். இங்கே நாம் சிந்திக்கும் பதிகம் இரண்டாம் வகையைச் சார்ந்தது. இதே வகையைச் சார்ந்த மற்றொரு பதிகம் கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளப்பட்ட பதிகமாகும் (3.38). ஆனால் ஞானசம்பந்தர், கண்டியூர் மற்றும் திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகங்களையே வினாவுரைப் பதிகங்கள் என்று அந்தந்த பதிகத்தின் கடைப்பாடலில் குறிப்பிடுகின்றார். வ.சு. செங்கல்வராயப்பிள்ளை அவர்கள் தனது தேவார ஒளிநெறி ஆராய்ச்சி கட்டுரையில், இந்த இரண்டு பதிகங்கள் உள்ளிட்டு மேலும் ஒன்பது பதிகங்களை வினைவுரைப் பதிகங்கள் என்று குறிப்பிடுகின்றார். பல்லடைந்த வெண்தலை என்று தொடங்கும் சீர்காழி தலத்து திருப்பதிகம்(1.47), நூலடைந்த கொள்கையாலே என்று தொடங்கும் சேய்ஞலூர் தலத்து திருப்பதிகம்(1.48), வெங்கணானை என்று தொடங்கும் சோபுரம் தலத்து திருப்பதிகம்(1.51), செந்நெலங் கழனி என்று தொடங்கும் சீர்காழி தலத்து திருப்பதிகம்(2.01), விண்டெலாம் மலர் என்று தொடங்கும் வலஞ்சுழி தலத்து திருப்பதிகம்(2.02), பூவலர்ந்தன கொண்டு என்று தொடங்கும் தெளிச்சேரி தலத்து திருப்பதிகம்(2.03), சீரார் கழலே என்று தொடங்கும் இரும்பூளை தலத்து திருப்பதிகம்(2.36), சதுரம் மறை தான் என்று தொடங்கும் திருமறைக்காட்டு திருப்பதிகம்(2.37), குன்றவார் சிலை என்று தொடங்கும் ஆமாத்தூர் திருப்பதிகம்(2.50) என்பன அந்த ஒன்பது பதிகங்கள். சிவஞானம் கலந்து ஊட்டப்பட்ட பாலினை உட்கொண்ட திருஞானசம்பந்தர் இந்த பதிகங்களில் தான் கேட்ட வினாக்களின் விடைகளை அறியாதவர் அல்ல; எனினும் இந்த வினாக்களை அவர் தொடுத்த காரணம், இந்த வினாவிற்கான விடைகளை, அடியார்கள் சொல்லக் கேட்டு, தான் மகிழ்ச்சி அடையும் பொருட்டே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு திருஞானசம்பந்தர் வினாக்களைத் தொடுப்பது நமக்கு திருவாசகம் திருவெம்பாவை பதிகத்தின் பத்தாவது பாடலை நினைவூட்டுகின்றது. பெருமானின் திருமுடி, அனைத்துப் பொருட்களின் எல்லையையும் தாண்டி நிற்பதாக மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். பாதாளம் ஏழினும் கீழே உள்ள இடம், எவ்வளவு கீழே என்பதை சொற்களால் விளக்கிச் சொல்ல முடியாத இடம் என்ற தொடர், சொற்கள் உணர்த்தும் எல்லையையும் கடந்து பெருமானின் திருப்பாதம் இருப்பதாக இங்கே கூறுகின்றார். ஏழு பாதாள லோகங்களையும் கடந்த திருப்பாதங்களையும் அனைத்துப் பொருட்களின் எல்லையையும் கடந்து ஓங்கி நிற்கும் திருமுடியையும் கொண்டுள்ள இறைவன், அன்னையைத் தனது உடலின் ஒரு பகுதியில் வைத்துள்ளான் என்றும், அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு பல வகை உருவங்களை அவன் எடுக்க வல்லவன் என்றும், வேதங்கள் விண்ணோர்கள் மண்ணோர்கள் ஆகியோர் எத்தனை துதித்தாலும் அவர்களால் சொல்ல இயலாத வண்ணம் முற்றுப்பெறாத புகழினை உடையவன் என்றும் எண்ணிக்கையற்ற அடியார்களை உடையவன் என்றும் இறைவனைப் புகழ்ந்து பாடிய பெண்களுக்கு திருப்தி ஏற்படவில்லை போலும். அவனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள துடிக்கும் அவர்கள், திருக்கோயிலுடன் பிணைக்கப்பட்டு எப்போதும் பெருமானின் அருகில் இருக்கும் பெண்களிடம் தங்களது ஐயங்களை தெரிவிக்கின்றனர். ஆதி அந்தம் இல்லாத பெருமானுக்கு ஊர் என்பது தனியாக கிடையாது என்பதையும் ஒரு பெயர் இல்லாமல் பல பெயர்களை உடையவன் என்பதையும், தந்தை தாய் போன்ற உறவினர் ஏதும் இல்லாதவன் என்பதையும், அயலார் என்று எவரும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அவனுக்கு நெருக்கமானவை என்பதை இந்த பெண்மணிகள் உணர்ந்திருந்தாலும், இந்த தன்மைகளை மற்றொருவர் சொல்லக் கேட்பது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது போலும். அதனால் தான் கோயில் பிணாப் பிள்ளைகளை அழைத்து பெருமானின் புகழினையும் தன்மைகளையும் கூறுமாறு வேண்டுகின்றனர். போதார் புனைமுடி=பூக்கள் அணிந்துள்ள சடைமுடி;

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே

பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்

வேதம் முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன்

கோதில் குலத்து அரன் கோயில் பிணாப் பிள்ளைகள்

ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்

ஏது அவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்

தற்போது ஆலங்குடி என்று அழைக்கப்படும் இந்த தலம் கும்பகோணம் மன்னார்குடி பாதையில் குடந்தையிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. குடந்தையிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. பூளை எனும் செடியை தல விருட்சமாக கொண்டதால் இரும்பூளை என்ற பெயர் வந்தது. பாற்கடல் கடைந்தபோது எழுந்த விஷத்தை கண்டத்தில் அடக்கியதால் இந்த தலம் ஆலங்குடி என பெயர் வழங்கப்படுவதாக கூறுவர். ஆலகால விஷத்தின் தன்மையிலிருந்து அனைவரையும் காப்பாற்றியதால் ஆபத்சஹாயேஸ்வரர் என்ற திருநாமம் இறைவனுக்கு வந்தது. குடந்தையைச் சுற்றி உள்ள நவகிரகத் தலங்களில் குரு பகவான் வழிபாட்டிற்கு உகந்த தலமாக கருதப் படுகின்றது. இறைவனின் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்; இறைவியின் திருநாமம், ஏலவார் குழலி அம்மை, உலகேச்வரி, ஏலாலகம்பாள். அட்டதிக் பாலகர்கள், அகத்தியர், காகபுஜண்டர், சுகப்ரம்மம், ஆதிசங்கரர், விஸ்வாமித்ர முனிவர், முசுகுந்த சக்ரவர்த்தி, உமை அம்மை மற்றும் சுவாசனன் என்ற மன்னன் வழிபட்ட தலம். திருமால், மகாலக்ஷ்மி, பிரமன், கருடன், அஷ்ட திக்பாலகர்கள், ஐயனார், வீரபத்திரர் ஆகியோர் வழிபட்டபோது நிறுவிய லிங்கங்கள் கோயில் பிராகாரத்தில் உள்ளன. மூலவர் கிழக்கு நோக்கிய சன்னதி. சுயம்பு இலிங்கம். தனது தாயார் விநதையை மீட்பதற்காக, அமிர்த கலசம் எடுத்து வந்த கருடன், இந்த தலம் அடைந்த போது, இங்கே உள்ள தட்சிணாமூர்த்தியை அமிர்தத்தால் நீராட்டி வழிபட்டான். ஆதிசங்கரர் இந்த தலம் வந்தபோது தக்ஷிணாமூர்த்தியிடம். உபதேசம் பெற்றதாக கூறுவர். இந்த கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி புகழ் வாய்ந்தது. பாற்கடல் கடைந்தபோது எழுந்த விஷத்தின் தன்மையால் மயக்கம் அடைந்த தேவர்கள் விழித்து எழுந்தபோது அவர்களுக்கு தட்சிணாமூர்த்தி உபதேசம் செய்ததாக கூறுவர். இந்த தலத்தில் உள்ள அமிர்த புஷ்கரணி எனும் குளத்தின் கரையில் பார்வதி தேவி அவதரித்து பின்னர் தவமிருந்து இறைவனை மணாளனாக அடைந்ததாக கூறுவர். அதனால் திருமண மங்கலம் என்ற பெயரும் இந்த தலத்திற்கு உண்டு. திருமணத் தடைகள் நீங்கவும், வேலை வாய்ப்பு பெருகவும், புத்திரப் பேறு கிட்டவும் சிறந்த பரிகாரத் தலமாகக் கருதப் படுகின்றது. இடைமருதூர் கோயிலுக்கு உரிய கோஷ்ட மூர்த்தங்கள் கோயில்களில் இந்த தலமும் ஒன்று. பரிவார தேவதைகளில் ஒன்றான, தென்முகக்கடவுளுக்கு உரிய திருக்கோயில். இந்த தலத்தில் விஷத்தால் யாரும் பாதிக்கப்படுவது இல்லை என்று கூறுகின்றனர். உள்ளே நுழைந்ததும் முதலில் தென்படுவது அம்பிகை சன்னதி, அடுத்து வருவது மூலவர் சன்னதி, பின்னர் தென்முகக்கடவுள். வேறெங்கும் இல்லாத வகையில் உள்ள இந்த அமைப்பு மாதா பிதா குரு என்ற வரிசையில் சன்னதிகள் அமைந்துள்ளன. தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது இந்த கோயிலில் மட்டும் தான்.

காவிரி தென் கரை தலங்களில் உள்ள ஐந்து வனத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த ஐந்து தலங்களாவன, முல்லை வனம் (கருகாவூர்), பாதிரி வனம் (அவளிவள நல்லூர்) வன்னி வனம் (அரதை பெரும்பாழி), பூளை வனம் (இரும்பூளை), மற்றும் வில்வ வனம் (கொள்ளம்புத்தூர்) ஆகும். இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில், விடியற்காலையில், காலையில், மதியத்தில், மாலையில், இரவில் சென்று வழிபடுவது (மேலே குறிப்பிட்டுள்ள வரிசையில்) மிக சிறப்பாக கருதப்படுகின்றது. முசுகுந்த சக்ரவர்த்தியின் சபையில் அமைச்சராக இருந்தவர் அமுதோகன். சிவபக்தனாக இருந்த இவர் ஏதோ தவறு செய்யவே இவரை சிரச்சேதம் செய்யுமாறு மன்னர் உத்தரவிட்டார். மன்னரின் உத்தரவு நிறைவேற்றப்படவே அமைச்சர் இறந்தார். ஆனால் மன்னனை ப்ரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. இந்த தலத்தின் குரு தட்சிணாமூர்த்தியை வழிபட மன்னனுக்கு பாவங்கள் நீங்கி நற்கதி கிடைத்ததாக கூறுவர்

ஐந்து நிலை இராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் காட்சி கொடுப்பவர் கலங்காமல் காத்த விநாயகர். கலங்க வேண்டாம் என்று தேவர்களுக்கு அபயம் அளித்து கஜமுகாசுரனை அழித்தமையால் கலங்காமல் காத்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. அடுத்து வெளி பிராகாரத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதி உள்ளது. இரண்டாம் வாயிலைக் கடந்தால் சூரியன் உற்சவ மூர்த்திகள் உள்ள அறை. உள் பிராகாரத்தில் நால்வர், சூரியன், சோமேசர், குரு மோக்ஷேஸ்வரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணு நாதர், பிரமீசர் எனும் சப்தலிங்கங்களுடன் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மை, அகத்தியர் சன்னதிகள் உள்ளன. சுக்ரவார அம்மன், சனீஸ்வரர், சப்தமாதா சன்னதிகளும் உள்ளன. வடக்குச் சுற்றில் உள்ள சபாநாதர் கோயிலில் திருமுறை சன்னதி உள்ளது. உற்சவ தட்சிணாமூர்த்தி நான்கு முனிவர்களுடன் காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன் துர்க்கை ஆகியோர் கோஷ்டத்தில் உள்ளனர். வீராசனத்தில் தென் முகக் கடவுளை காணலாம். காலடியில் முயலகன், இரு புறமும் சனகாதி முனிவர்கள் புடை சூழ, தென்முகக்கடவுள் அபய ஹஸ்தத்துடன் இருப்பதை இங்கே காணலாம். .

சுந்தரர் இந்த தலத்திற்கு வந்ததாக பெரிய புராணக் குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை. எனினும் சுந்தரரைப் பற்றிய கர்ண பரம்பரையான செய்தி இந்த தலத்தில் உலாவுகின்றது. இந்த தலத்திற்குச் சற்று தொலைவில் உள்ள வெட்டாறு பகுதிக்கு சுந்தரர் வந்தபோது ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஆற்றைக் கடப்பது எவ்வாறு என்று சுந்தரர் திகைத்து நின்றபோது, ஒரு ஓடக்காரன் அவர் கண்ணில் பட்டான். சுந்தரரும் அந்த ஓடத்தில் ஏறிக்கொள்ள, நதியில் சென்று கொண்டிருந்த ஓடம் ஒரு பாறை மீது மோதிச் சிதறியது. கலங்கின சுந்தரர்க்கு இறைவன் காட்சி கொடுத்ததாகவும், அவரை ஆலங்குடி சேர்த்ததாகவும், ஆலங்குடியில் இருக்கும் ஞான தக்ஷிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த கோயிலின் வெளியே தனிக்கோயில் ஒன்றினில், வீரபத்திரரால் தலையிழந்த தக்கன் ஆட்டுத்தலையுடன் காட்சி அளிப்பதை காணலாம்.

தென்முகக்கடவுள் சன்னதியை அடுத்து உற்சவ மூர்த்திகள் வைக்கப் பட்டுள்ளன. இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதை நாம் காணலாம். இங்கிருந்த சுந்தரர் சிலையினை, சோழ மன்னன் ஒருவன் திருவாரூருக்கு எடுத்துச் சென்றதாகவும், அதனை விரும்பாத ஒரு அர்ச்சகர், திருவாரூரிலிருந்து இந்த சிலையினை கடத்தி ஒளித்து எடுத்து வந்ததாகவும், தன்னைத் தடுத்த காவலர்களிடம் இருந்து தப்பிக்க, அம்மை கண்ட தனது குழந்தையை மூடி எடுத்துச் செல்வதாகவும் கூறினார் என்றும், இந்த தலம் வந்த பின்னர் சிலையைப் பார்த்தபோது சிலையினில் அம்மைத் தழும்புகள் இருந்ததைக் கண்டு, நடுங்கி கோயிலில் சிலையினை வைத்துவிட்டார் என்றும் கூறுவார்கள். காளமேகப் புலவர் இந்த தலத்து இறைவன் மீது சிலேடை நயம் பொருந்த ஒரு கவிதை இயற்றியுள்ளார்.

ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை

ஆலம் குடியான் என்று ஆர் சொன்னார் ஆலம்

குடியானே ஆகில் குவலயத்தோர் எல்லாம்

மடியாரோ மண் மீதினில்

இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பார்வதி தேவியுடன் பெருமான் உடனுறையும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. பெருமானின் அருள் தன்மையாக கருதப்படுபவள் பிராட்டி என்பதால் பேரருள் தன்மை உடையவனாக பெருமான் இருக்கும் தன்மை இந்த பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடல்களில் குறிப்பிடப்படும் செயல்களை நாம் சற்று ஆராய்ந்தால், பெருமானின் பேரருள் தன்மை தான் இந்த செயல்களுக்கு காரணம் என்பதும் நமக்கு புலப்படும்.

பாடல் 1:

சீரார் கழலே தொழுவீர் இது செப்பீர்

வாரார் முலை மங்கையொடும் உடனாகி

ஏரார் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

காரார் கடல் நஞ்சமுண்ட கருத்தே

விளக்கம்:

கார்=கருமை; காரார் கடல்=கரிய கடல்; காரார் என்ற சொல்லை நஞ்சு என்ற சொல்லுடன் கூட்டி, கருமை நிறம் உடைய நஞ்சு என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் விடம் எழுந்தது வெண்மை நிறத்தில் அலைகள் கொண்டுள்ள பாற்கடல் தானே. சீர்=சிறப்பு; கழல்=வீரக்கழல் அணிந்த பெருமானின் திருப்பாதங்கள்; ஏர்=அழகு; இந்த பாடலில் ஆலகால நஞ்சினை, விடம் என்று தெரிந்த பின்னரும் பெருமான் பருகியதன் காரணம் யாது என்று ஞானசம்பந்தர் கேள்வி கேட்கின்றார். இதற்கு விடையினை உணர்த்தும் பல தேவாரப் பாடல்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் விவரம் பின்வருமாறு; பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால விடத்தின் தாக்கத்தினை தாங்க முடியாமல், தேவர்களும் அசுரர்களும் திசைக்கு ஒருவராக ஓடினார்கள். மேலும் அந்த விடம் மிகவும் வேகமாக பரவியதால், அனைத்து உலகங்களில் உள்ள உயிர்களும் அழியும் ஆபத்தும் இருந்தது. பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும், தங்களை இந்த கொடிய விடத்திலிருந்து காப்பாற்றுமாறு பெருமானை வேண்ட, தேவர்கள் உட்பட அனைத்து உயிர்களையும் காப்பாற்றும் பொருட்டு பெருமான் இந்த விடத்தை பருகினார். மேலும் எந்த பொருளும் தனக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாது என்பதை உணர்த்தும் வண்ணம், அமுதம் பருகுவது போன்று ஆர்வமுடன் பருகினார்.

பொழிப்புரை:

மிகுந்த சிறப்பு வாய்ந்த, வீரக்கழல்கள் அணிந்த பெருமானின் திருப்பாதங்களை தொழுகின்ற அடியவர்களே, அடியேன் கேட்கும் கேள்விக்கு தகுந்த விடையினை அளிப்பீர்களாக. கச்சை அணிந்த மார்பகங்களை அணிந்த பார்வதி அன்னை உடனாக, அழகு மிகுந்த இரும்பூளை தலத்தினில் வீற்றிருக்கும் நமது தலைவனாகிய பெருமான், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த, கருமை நிறம் கொண்ட நஞ்சினை அமுதமாக கருதி பருகியதன் காரணம் தான் என்னே.

பாடல் 2:

தொழலார் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர்

குழலார் மொழிக் கோல்வளையாளொடு உடனாகி

எழிலார் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

கழல் தான் கரிகானிடை ஆடும் கருத்தே

விளக்கம்:

தொழலார்=பலரும் தொழும் தன்மையை உடைய; குழல்=புல்லாங்குழல்; கோல்வளை=திரண்ட வளையல்கள்; கோல்வளையாள்=திரண்ட வளையல்களை அணிந்த பிராட்டி; கரிகாடு=சர்வ சங்காரத்தின் பின்னர் இருக்கும் உலகம்; ஆடும் கருத்து=வினைகளுடன் பிணைந்திருக்கும் உயிர்களுக்கு, தங்களது வினைகளை கழித்துக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் கருத்து; உமை அம்மையின் குரல் இனிமைக்கு, தேனையும், பாலையும், கரும்பின் சாற்றையும், வெல்லப் பாகினையும், யாழின் இசையையும், குழலின் இசையையும், பண்ணையும், கிளி, குயில் ஆகிய பறவைகளின் குரலையும் உவமையாக கூறுவது திருமுறை மரபு. பல தேவாரப் பாடல்களில் இத்தகைய உவமைகளை நாம் காணலாம். வலம் கொள்ளுதல்=வெல்லுதல்: கடந்து நிற்றல், பண்டைய நாட்களில் தோற்றவர், தங்களை வென்றவரை வலம் வந்து பணிந்து தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுதல் வழக்கமாக இருந்தது போலும். குழலும், யாழும், தேவியின் குரலுடன் போட்டியிட முயன்று தோற்றதால், தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு தேவியை வலம் வந்ததாக, தேவார ஆசிரியர்கள் நயமாக கூறுகின்றார்கள். பிராட்டியின் குரலோடு போட்டி போட்டு, தோற்ற குழல் பிராட்டியை வலம் வந்ததாக குறிப்பிட்டு, அப்பர் பிரான், திருவாரூர் பதிகத்தினை (4.53.1) தொடங்குகின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான் ஆரூர் பெருமானைத் தொழுது வலம் வந்து வணங்குபவர்கள் பிறந்த பயனை அடைந்தவர்கள் என்று கூறுகின்றார். தோன்றினார் தோன்றினாரே=பிறந்தவர் பிறந்தவர்களாவர்கள், அதாவது பெருமானைத் தொழாது வீணாக காலத்தை கழிப்பவர்கள் பிறந்தவர்களாக கருதப் படமாட்டார்கள். நாம் பிறந்ததன் பயன், சிவபிரானை கும்பிட்டு உய்வினை அடைதல் தானே. அந்த கருத்து தான் இங்கே கூறப்படுகின்றது.

குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேற்கண்ணி தன்னைக்

கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்களைக் கணங்கள் ஆர

அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர்

தொழல் வலம் கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே

புல்லாங்குழலின் இனிமையான ஓசையையும் வென்ற இனிய மொழியை உடையவளும், அழகிய வேல் போன்ற கண்களை உடையவளும் ஆகிய பார்வதி தேவியின், திருவடிகளை வலம் வந்து, அந்த திருவடிகள் பற்றிய சிந்தனையிலிருந்து நீங்காது இருக்கும் அடியார்களின் கண்கள் நிறையுமாறு காட்சி அருள்பவன் சிவபெருமான். தனது இடது கையினில், எப்போதும் வலம் சுழித்து எழும் தீப்பிழம்பை கையில் ஏந்தியவராக காட்சி தரும் சிவபெருமான், தன்னுடைய அருளாகிய ஒளியினை அடியார்கள் பால் வீசும் இடம் திருவாரூர் ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாரூர்ப் பெருமானை வலம் வந்து தொழக்கூடிய வாய்ப்பினைப் பெற்றவர்கள், தாங்கள் பிறந்த பயனை அடைந்தவர்கள் ஆவார்கள் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

திருநாட்டுத்தொகை என்று அழைக்கப்படும் பதிகத்தின் பாடலில் (7.12.5) பிராட்டியின் குரல் குழலை வென்றது என்று சுந்தரர் கூறுகின்றார். மிழலை நாட்டு மிழலை என்பது திருவீழிமிழலை தலத்தினை உணர்த்துகின்றது. வெண்ணி நாட்டு மிழலை, கீழைவழி, பழையாறை, கிழையம் என்பன வைப்புத் தலங்கள். உமையம்மை கூறனாக திகழும் பெருமான், இளமையான இடபத்தை உடையவன் என்றும் பெரிய கயிலாய மலைக்கு உரியவன் என்று இங்கே கூறுகின்றார்.

குழலை வென்ற மொழி மடவாளை ஓர் கூறனாம்

மழலை ஏற்று மணாளன் இடம் தடமால்

கிழவன் கீழை வழி பழையாறு கிழையமும்

மிழலை நாடு மிழல் வெண்ணி நாட்டு மிழலையே

பெருமானின், வீரக்கழல் அணிந்த திருப்பாதங்கள் கருமை நிறம் கொண்ட காட்டினில் நடமாடுவதன் கருத்து யாது என்று கேள்வி கேட்கின்றார். பிரளயம் முடிந்த பின்னர், அனைத்து உடல்களும் உலகத்தின் அனைத்துப் பொருட்களும் அழிந்து சாம்பலாக மாறிய பின்னர், உலகமே கருமை நிறம் படிந்த சுடுகாடாக காட்சியளிக்கின்றது. மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து களைப்படைந்த உயிர்களுக்கு இளைப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பினை அளித்த மகிழ்ச்சியில் பெருமான் நடனமாடுகின்றார். பக்குவமடைந்த சில உயிர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று முக்தி உலகம் செல்ல எஞ்சிய உயிர்கள் வினைகளுடன் பிணைந்து இருக்கும் தன்மையை உணரும் பெருமான், அந்த உயிர்களுக்கும் முக்தி உலகம் செல்வதற்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு, மீண்டும் உலகத்தை தோற்றுவித்து உயிர்களையும் தகுந்த உடல்களுடன் இணைக்கின்றார். இந்த செய்கையினால் மகிழும் பெருமான், தனது நடனத்தை மேலும் தொடர்கின்றார். அவரது நடனம் தொடர்ந்து நடைபெற்றால் தானே ஐந்தொழில்களும் நடைபெறும்

பொழிப்புரை:

அனைவராலும் வணங்குதற்கு தகுதி படைத்த பெருமானின் திருவடிகளைத் தொழும் அடியார்களே, எனது கேள்விக்கு தகுந்த விடை அளிப்பீர்களாக. குழலின் இனிமையை வென்ற இனிய குரல் உடையவளும், வரிசையாக தனது கைகளில் வளையல்கள் அடுக்கிக் கொண்டு இருப்பவளும் ஆகிய பிராட்டியுடன், அழகிய இரும்பூளை தலத்தினில் வீற்றிருக்கும் பெருமான், தனது வீரக்கழல் அணிந்த அழகிய பாதங்கள் கருமை நிறம் கொண்ட சுடுகாட்டினில் படும் வண்ணம் நடனம் ஆடுவதன் கருத்து தான் என்னே.

பாடல் 3:

அன்பால் அடி கை தொழுவீர் அறியீரே

மின்போல் மருங்குன் மடவாளொடு மேவி

இன்பாய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

பொன்போல் சடையில் புனல் வைத்த பொருளே

விளக்கம்:

புனல்=கங்கை; மருங்கு=இடுப்பு; மடவாள்=அழகும் இளமையும் ஒருங்கே பொருந்திய உமை அன்னை; தனது அடியான் பகீரதனின் வேண்டுகோளுக்கு இரங்கிய பெருமான், வேகமாக கீழே பாய்ந்த கங்கை நதியின் பெருக்கினால் உலகினுக்கு எந்த கேடும் விளையாத வண்ணம் காக்கும் பொருட்டு தனது சடையினில் கங்கை நதியினை ஏற்றதை நாம் அறிவோம்.

பொழிப்புரை:

பெருமான் பால் அன்பு வைத்து, அவனது திருவடிகளைத் தொழும் அடியார்களே, அடியேன் கேட்கும் கேள்விக்கு விடையினை நீங்கள் அறிவீர்களா, அப்படி அறிந்தால் சொல்வீர்களாக. மின்னல் போன்று ஒளிவீசுவதும் மெலிந்ததும் ஆகிய இடையினை உடைய உமையன்னையுடன் பொருந்தி, இன்பமாக இரும்பூளை தலத்தினில் வீற்றிருக்கும் நமது தலைவன், பொன் போன்று ஒளிவீசும் தனது சடையினில் கங்கை நதியினை ஏற்றுக்கொண்டுள்ள காரணம் தான் யாது.

பாடல் 4:

நச்சித் தொழுவீர் நமக்கு இது சொல்லீர்

கச்சிப் பொலி காமக்கொடியுடன் கூடி

இச்சித்து இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

உச்சித் தலையில் பலி கொண்டுழல் ஊணே

விளக்கம்:

நச்சி=விரும்பி; உச்சித்தலை=கபாலம், மண்டையோடு; இந்த தலத்து இறைவியின் திருநாமம் ஏலவார்குழலி. இதே திருநாமம் கச்சி ஏகம்பத்து இறைவிக்கும் இருப்பதால், காமாட்சி அன்னையின் நினைவு வந்தது போலும். காமகோட்டம் என்பது தானே காமாட்சி அம்மைக் கோயிலின் பெயர். அங்கு உறையும் அன்னையை, காமக்கொடி என்று அழைப்பது தானே முறை. உச்சி என்ற சொல்லுக்கு உச்சிப்போது என்று பொருள் கொண்டு, பெருமான் நண்பகலில் பலி ஏற்பதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. ஊண்=உண்ணுதல்; பலி=அடியார்களின் பணிவுடன் இடுகின்ற பிச்சை; சுந்தரர் திருக்கச்சூர் தலம் வந்தடைந்த பொது, அவர் மிகவும் பசியால் வாடி இருந்ததைக் கண்ட பெருமான், ஒரு முதியவராக அவர் முன் தோன்றி, தான் பல இல்லங்களில் பிச்சை ஏற்றுக்கொண்டு வந்து அவருக்கு உணவு அளிப்பதாக கூறினார். உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்று வந்த பெருமான், சுந்தரர் உணவு உட்கொண்ட பின்னர் மறைந்து விடுகின்றார். அப்போது தான், சுந்தரர் முதியவராக வந்தவர் இறைவன் என்பதை உணர்ந்து கொள்கின்றார். அந்த தருணத்தில் இறைவனின் கருணையை நினைத்து, முதுவாய் ஒரிகதற என்று தொடங்கும் பதிகத்தை (7.41) சுந்தரர் பாடுகின்றார்,

சிவக்கவிமணியார் உச்சி என்ற சொல்லுக்கு உச்சிப் பொழுது என்று பொருள் கொண்டு நண்பகலில் பெருமான் பலிக்கு சென்றதாக விளக்கம் அளிக்கின்றார். பகலில் பலி ஏற்றதை குறிப்பிடும் சில பாடல்களை நாம் இங்கே காண்போம். பரிதிநியமம் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.104.4) திருஞானசம்பந்தர், மாலையிலும் நண்பகலிலும் பெருமான் பலி ஏற்றதாக கூறுகின்றார். வெஞ்சுரம்=கொடிய பாலைவனம் போன்ற சுடுகாடு; பெருமான் நடனமாடுவதை விளையாடல் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். நடனம் ஆடிக்கொண்டே ஐந்து தொழில்களையும் விளையாட்டு போன்று மிகவும் எளிதாக பெருமான் செய்வதால் விளையாடல் என்று கூறுவது பொருத்தமே. இந்த விளையாட்டினை மிகவும் விருப்பத்துடன் பெருமான் செய்வதாகவும் கூறுகின்றார். விளையாட்டில் ஈடுபடும் எவரும் விருப்பத்துடன் தானே ஈடுபடுகின்றனர். பேணுதல்=மிகுந்த விருப்பத்துடன் செய்தல்; சுரும்பு=வண்டுகள்; அம்=அழகிய; ஆர்=ஒலிக்கும்; சம்பந்த நாயகி தனது கூந்தலில் நறுமணம் மிகுந்த அழகிய மலர்களை சூடிக் கொண்டுள்ள தன்மையால், வண்டுகள் அந்த கூந்தலை வட்டமிடுகின்றன என்று கூறுகின்றார். தனது அவிழ்ந்த கூந்தலை முடியும் எண்ணமும் இன்றி, பெருமானின் நினைவுகளில் தலைவி ஆழ்ந்திருக்கும் தன்மை இங்கே குறிப்படப் பட்டுள்ளது.

வெஞ்சுரம் சேர் விளையாடல் பேணி விரிபுன்சடை தாழத்

துஞ்சிருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து

அஞ்சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும்

பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிந் நியமமே

பிரமபுரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.63.3) பகலில் பலி ஏற்பது போன்று வந்த பெருமான், தனக்கு பலியிடவந்த மாதர்களின் மனதினை கொள்ளை கொண்டார் என்று கூறுகின்றார். இந்த பாடல் தாருகவனத்து மகளிர், தங்களது ஆடை நழுவுதையும், முடித்து கட்டப்பட்ட கூந்தல் அவிழ்ந்து தொங்குவதையும் உணராதவர்களாக, தங்களை மறந்து, தாங்கள் செய்து கொண்டிருந்த செயல்களை அப்படியே விட்டுவிட்டு பெருமானை பின்தொடர்ந்து வந்த தன்மையை உணர்த்தும் பாடல். வாய்பிளந்து பற்கள் இல்லாமல் காணப்படும் மண்டையோடு சிரிக்கும் தன்மையில் உள்ளது போன்று காட்சியளிக்கின்றது. நளிர்சடை=குளிர்ந்த சடை; வவ்வுதல்=கவர்தல்; பாய்கலை= பரந்த ஆடை; ஐயம்=பிச்சை; அடைக்கலம் புகுவதற்கு வேறு இடம் இல்லாமல் தேவர்கள் அடைக்கலம் புகுந்த தலம் புகலி என்று கூறுகின்றார்.

நகலார் தலையும் வெண்பிறையும் நளிர்சடை மாட்டு அயலே

பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய்கலை வவ்வுதியே

அகலாது உறையும் மாநிலத்தில் அயல் இன்மையால் அமரர்

புகலான் மலிந்த பூம்புகலி மேவிய புண்ணியனே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.104.3) பகலே பலி என்று வந்து நின்ற பிரான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பாறு=பருந்து; மண்டையோட்டில் ஒட்டி உலர்ந்துள்ள தசைத் துணுக்குகளை பருந்துகள் கொத்தி தின்பது பழக்கம் என்பதால் அத்தகைய பண்பினை உடைய மண்டையோடு என்று கூறுகின்றார். கோவண ஆடையும் மான்தோல் அல்லது புலித்தோல் அணிந்த நிலையில் ஏனையோரிடமிருந்து மாறுபட்ட கோலத்தவனாக பெருமான் காணப்படும் நிலை இங்கே, வேறணி கோலத்தன் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது.

ஆறணி செஞ்சடையான் அழகார் புரம் மூன்றும் அன்று வேவ

நீறணியாக வைத்த நிமிர்புன்சடை எம் இறைவன்

பாறணி வெண்தலையில் பகலே பலி என்று வந்து நின்ற

வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே

பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பகல் நேரத்தில் பலியேற்கச் செல்பவர் பெருமான் என்று அம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.19.7) திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். இகலுறு=வலிமை மிகுந்த; இலங்க=வீசி, தோள்களை வீசி;

இகலுறு சுடரெரி இலங்க வீசியே

பகலிடம் பலி கொள பாடியாடுவர்

அகலிடம் மலிபுகழ் அம்பர் வம்பவிழ்

புகலிட நெடுநகர் புகுவர் போலுமே

சிவபிரான் மீது தீராத காதல் கொண்ட அப்பர் நாயகி, பலியேற்பதற்காக பகற்பொழுதினில் சிவபிரான் தனது இல்லம் வந்ததாக கற்பனை செய்துகொண்டு, அவரின் வருகையை பெருமிதத்துடன் மற்ற பெண்மணிகளுக்கும் அறிவிக்கும் பாடல் (4.97.3). அவ்வாறு தனது இல்லம் புகுந்தவருக்கு தான் பிச்சை இட்ட பின்னரும் அவர் எனது இல்லத்தினை விட்டு நீங்காதவராக அங்கேயே நின்றார்; அவர் யாரென்று நீங்கள் கேட்பீராகில், அவர் தான், வடக்கே கயிலை மலையையும் தெற்கே நல்லூரையும் இடமாக கொண்டு உறைபவரும், தொடர்ந்து நடனம் பயின்று ஆடும் சிவபிரான் ஆவார். பட+ஏர்=படவேர்; ஏர்=அழகு; நடவார்=நடவாமல் இருக்கின்றார், நீங்காமல் இருக்கும் நிலை;

படவேர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர்

இடுவார் இடைப் பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து

நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர் கொலோ

வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே

வீடுதோறும் சென்று பிச்சை எடுப்பவர்கள் பொதுவாக இரவில் பிச்சை எடுப்பதையே நாம் காண்கின்றோம். ஆனால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட பெருமான் நண்பகலில் பிச்சை எடுப்பதையே தனது வழக்கமாக கொண்டுள்ளதை பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. பெருமான் பிச்சை எடுப்பது தான் உண்டு மகிழ்வதற்காக அல்ல; உலகில் உள்ள உயிர்கள் உய்வதன் பொருட்டு அவர்கள் தங்களின் மலங்களை பெருமானிடம் ஒப்படைத்து, மலங்கள் நீங்கப்பெற்று முக்தி நிலை அடைய வேண்டும் என்ற பெருமானின் ஆசை தான் காரணம் இவ்வாறு பெருமான் கருணை வயத்தராகி மன்னுயிர்கள் உய்வதன் பொருட்டு, பகலில் பலி ஏற்கத் திரிவது நாரையூர் தலத்து பாடல் ஒன்றினில் (5.55.8) உணர்த்தப் படுகின்றது. எலும்பினை ஆபரணமாக அணிந்து, எருதின் மீதேறி, பிறைச் சந்திரனை, மின்னல் போன்று ஒளி மிளிரும் முறுக்கான சடையின் மீது அணிந்து, நண்பகலில் பல இல்லங்கள் சென்று, பெருமான் பிச்சை கேட்கின்றார். நாரையூர் வீற்றிருக்கும் அன்பனாகிய பெருமானுக்கு இந்த செயல் எந்த விதத்திலும், இழிவினை ஏற்படுத்தாமல், அவருக்கு அழகினைச் சேர்ப்பது வியப்பே

என்பு பூண்டு எருது ஏறி இளம்பிறை

மின் புரிந்த சடை மேல் விளங்கவே

நன்பகல் பலி தேரினும் நாரையூர்

அன்பனுக்கு அது அம்ம அழகிதே

பகலில் பல இடங்களுக்கும் சென்று பலியேற்கும் பெருமான், எங்கிருப்பார் என்பதை தான் உணரமுடியவில்லை என்றும்; எங்கு சென்றால், தான் அவருடன் இணைய முடியும் என்று தெரியாமல் ஏங்கும் தனக்கு அவர் செல்கின்ற ஊரினை சொல்வீர்களாக என்று இறைஞ்சும் தலைவியின் கருத்தாக அமைந்த திருப்பாசூர் தலத்தின் பாடல் இந்த பாடல் (5.25.06). பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியவாறு பலி ஏற்கும் நோக்கத்துடன் இரவிலும் பகலிலும் பல இல்லங்கள் சென்று, நின்ற நிலையில் பிச்சை ஏற்ற பெருமான், தான் அடுத்து செல்லவிருக்கும் ஊரின் பெயரை அவர் சொல்லக் கேட்டு அறிந்தவர்கள் எவரேனும் இருந்தால், எனக்கு சொல்வீர்களாக. அவரைப் பிரிந்த ஏக்கத்தில் வாடும் நான், அந்த ஊருக்கு சென்று அவரைக் கண்டு எனது வருத்தத்தை தணித்துக் கொள்வேன் என்று தலைவியின் கூற்றாக அமைந்த பாடல். பல்லில்=பல இல்லங்கள்; எல்லி=இரவு. எங்கு சென்றால் அவருடன் சென்று இணையலாம் என்று ஏங்கும் ஆன்மாவின் எண்ணத்தை பிரதிபலிக்கும் பாடல்.

பல்லில் ஓடு கை ஏந்திப் பகலெலாம்

எல்லி நின்றாடு பெய்பலி ஏற்பவர்

சொல்லிப் போய்ப் புகும் ஊர் அறியேன் சொலீர்

பல்கு நீற்றினர் பாசூர் அடிகளே

பொழிப்புரை:

சிவபெருமானை விரும்பித் தொழும் அடியார்களே, நாம் கேட்கும் கேள்விக்கு விடையினை அளிப்பீர்களாக. காஞ்சிமாநகரில் கோயில் கொண்டு விளங்கும் காமாட்சி அன்னையுடன், வல்லிக்கொடி போன்று உருவம் பெற்றுள்ள பிராட்டியுடன், கூடிய வண்ணம், மிகுந்த விருப்பத்துடன் இரும்பூளை தலத்தில் இடம் கொண்டுள்ள ஈசன், பிரம கபாலத்தில் பலி ஏற்பதற்காக பல இடங்களிலும் திரிவதன் காரணம் தான் என்னே.

பாடல் 5:

சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர் இது சொல்லீர்

நற்றாழ் குழல் நங்கையொடும் உடனாகி

எற்றே இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

புற்றாடு அரவொடு என்பு பூண்ட பொருளே

விளக்கம்:

சுற்றார்ந்து=வலமாக சுற்றி வந்து; ஏற்றே=எவ்வாறேனும், எந்த தன்மையில்; என்பு பூணுதல் முழுமுதல் தன்மையையும் அரவு பூணுதல் எல்லையற்ற ஆற்றலையும் உணர்த்துகின்றது என்று சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். பெருமான் அணிந்திருக்கும் பாம்புகள், புற்றில் உறைவன அல்ல என்றாலும், பாம்புகளின் பொதுத் தன்மை குறித்து புற்றாடு அரவு என்று இங்கே குறிப்பிடுகின்றார். நற்றாழ் குழல்=அழகியதும் தாழ்ந்து தொங்கும் தன்மையை உடையதும் ஆகிய கூந்தல்; எலும்பினை ஆபரணமாகக் கொண்டுள்ள தன்மை, உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தத்தம் உடல்களிலிருந்து பிரிவதால், அந்த உடல்கள் அழிந்து எலும்பாக மாறிவிட்ட ஊழிக் காலத்திலும், தான் ஒருவன் தான் அழியாது நிலைத்து நிற்பவன் என்று உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் அத்தகைய கோலத்தில் காட்சி தருகின்றார் என்பதை நாம் அறிவோம். ஊழிக் காலம் முடிந்த பின்னர், மீண்டும் உலகினை தோற்றுவிக்க பெருமான் எண்ணம் கொள்ள, உலகும் உயிர்கள் பொருந்திய உடல்களும் தோற்றுவிக்கப் படுகின்றன. இந்த தன்மை முழுமுதற் கடவுளாக பெருமான் இருக்கும் தன்மையை உணர்த்துகின்றது. அனைவரும் அச்சம் கொண்டு தவிர்க்கும் பாம்பினைத் தனது உடலின் பல பாகங்களில் ஆபரணமாகவும், இடுப்பினில் கச்சாகவும் பெருமான் கொண்டுள்ள தன்மை, அவரது எல்லையற்ற ஆற்றலை உணர்த்துகின்றது. சென்ற பாடலில் காமக்கொடி என்று காமாட்சி அன்னையை குறிப்பிட்ட ஞானசம்பந்தர், ஏலவார்குழலி என்ற அன்னையின் திருநாமத்தை உணர்த்தும் விதமாக நற்றாழ்குழல் நங்கை என்று குறிப்பிடுகின்றார். சுற்றார்ந்து என்ற சொல்லுக்கு, அடியார்கள் புடை சூழ என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

பல முறை சுற்றி வலம் வந்து பெருமானின் திருவடிகளைத் தொழுகின்ற அடியார்களே, அடியேன் கேட்கும் கேள்விக்கு தகுந்த பதிலை சொல்வீர்களாக; தாழ்ந்த அழகிய கூந்தலை உடைய நங்கையாகிய பார்வதி தேவியுடன் கூடி, எந்த தன்மையில் உறைகின்றார் என்று அனைவரும் வியப்படையும் வண்ணம் இரும்பூளை தலத்தினில் தலைவன் ஈசன் உறைகின்றார். அவர் புற்றில் வாழும் தன்மை உடைய பாம்பையும் எலும்பினையும் ஆபரணமாக அணிந்துள்ள காரணம் யாது

பாடல் 6:

தோடார் மலர் தூய்த் தொண்டர்கள் சொல்லீர்

சேடார் குழல் சேயிழையோடு உடனாகி

ஈடாய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

காடார் கடுவேடவன் ஆன கருத்தே

விளக்கம்:

ஈடாய்=அருள் பொருந்துதல்; தோடார்=இதழ்கள் நிறைந்த; தூய=தூவித் தொழுகின்ற; சேடு= பெருமை, இங்கே திரண்டும் அடர்ந்தும் காணப்படும் பெருமை உடைய கூந்தல்; சேயிழை=சிறந்த ஆபரணங்களை அணிந்த பிராட்டி; இந்த பாடலில், காட்டில் வாழும் வேடனாக வந்ததன் காரணம் தான் யாது என்று கேட்கின்றார். சிறந்த பாசுபத அத்திரம் பெறுகின்ற நோக்கத்துடன் காட்டினில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை கொல்வதற்காக, மூகாசுரன் என்ற அரக்கனை துரியோதனன் ஏவுகின்றான். அந்த அரக்கனும், காட்டுப்பன்றி வேடத்தில் அர்ஜுனன் இருக்கும் இடத்திற்கு வருகின்றான். காட்டுப்பன்றியை வேட்டையாடி கொல்வது வேடர்களின் வழக்கம். எனவே தான் காட்டினில் உலாவும் வேடனாக பெருமான் உருவம் எடுக்கின்றார். தனது அடியார்களுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் சூழ்நிலைக்குத் தக்கவாறு வேடம் கொள்வதில் வல்லவர் சிவபெருமான்.

பொழிப்புரை:

இதழ்கள் நிறைந்த மலர்களை தூவி பெருமானை தொழுகின்ற தொண்டர்களே, நான் இங்கே குறிப்பிடுகின்ற நிகழ்ச்சியின் பின்னணியில் அமைந்துள்ள கருத்தினை உணர்ததுவீர்களாக; திரண்டும் அடர்ந்தும் காணப்படும் பெருமையினை உடைய கூந்தலை உடையவளும், சிறந்த நகைகள் அணிந்தவளும் ஆகிய பிராட்டி உடனாக, பெருமையாக இரும்பூளை தலத்தினில் எமது தலைவனாகிய ஈசன் உறைகின்றான். வேட்டையாடி விலங்குகளை கொல்லும் தன்மையுடன் காட்டினால் வாழும் வேடுவனாக அவன் மாறியதன் பின்னணி தான் என்னே.

பாடல் 7:

பாடல் சிதைந்தது

பாடல் 8:

ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர் இது சொல்லீர்

பருக்கை மதவேழம் உரித்து உமையோடும்

இருக்கை இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கியவாறே

விளக்கம்:

ஒருக்கும்=ஒன்றுபடுத்தும்; உரம்=வலிமை; பருக்கை=நீண்டு பருத்த துதிக்கை; சிவபெருமானின் கால் பெருவிரல் அழுந்தியதால் ஏற்பட்ட அழுத்தத்தால் மலையின் கீழே நெருக்குண்டு வருந்திய அரக்கன், தனது தவறினை உணர்ந்தவனாக, சாமகானம் பாடி பெருமானை மகிழ்விக்கின்றான். தனது தவறினை உணர்ந்து திருந்தியதால் அரக்கனுக்கு அருள் புரிந்ததன் மூலம், இந்நாள் வரையில் வாழ்க்கையில் எந்தவிதமான தவறுகள் செய்திருந்தாலும், அத்தகைய தவறுகளின் தன்மையை உணர்ந்து வருந்தி இறைவனை வேண்டும் எவர்க்கும் இறைவன் அருள் புரிவான் என்பதை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் அமைந்த நிகழ்ச்சி. நாம் செய்த தவறுகளின் காரணமாக இறைவன் நமக்கு அருள் புரியாது விட்டு விடுவாரோ என்று கவலை கொள்ளாமல் அனைவரும் இறைவனை பணிந்து வணங்கி அவனது அருள் பெறலாம் என்பதை உணர்த்தும் செய்கை.

பொழிப்புரை:

மனதினை புலன்களின் வழியே செல்லவிடாமல், ஒன்றுபட்ட சிந்தையுடன் இறைவனைத் தொழும் அன்பர் கூட்டத்தைச் சார்ந்த அன்பர்களே, எனது கேள்விக்கு தகுந்த விடையினை அருள்வீராக, நீண்டும் பருத்தும் காணப்படும் துதிக்கையை உடையதும் மதம் கொண்டதும் ஆகிய யானையின் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்ட தலைவன், உமையன்னையுடன் தான் இருப்பதற்கு தகுந்த இருக்கையாக இரும்பூளை தலத்தினை ஏற்றுக் கொண்டான்; அத்தகைய தலைவன், தனது இருப்பிடமாகிய கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் வலிமையை அடக்கிய பின்னர், பல வகையிலும் அரக்கனுக்கு அருள் புரிந்ததன் காரணம் தான் யாதோ.

பாடல் 9:

துயராயின நீங்கித் தொழும் தொண்டர் சொல்லீர்

கயலார் கருங்கண்ணியொடும் உடனாகி

இயல்பாய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

முயல்வார் இருவர்க்கு எரியாகிய மொய்ம்பே

விளக்கம்:

துயராயின=அனைத்துத் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் காரணமான யான் எனது என்ற செருக்கு; கயலார்=மீன் போன்ற கண்கள்; முயல்வார் இருவர்=திருவடியையும் திருமுடியையும் காண முயற்சி செய்த பிரமன் திருமால் ஆகிய இருவர்; மொய்ம்பு=ஆற்றல், வலிமை; பிரமன் திருமால் ஆகிய இருவரும் பெருமானது திருமுடியையும் திருவடியையும் காண முடியாமல் திகைத்தது ஏன் என்ற கேள்வி இங்கே கேட்கப்படுகின்றது. தங்களில் யார் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமனும், திருமாலும், தங்களின் ஆற்றலின் அளவினை அடுத்தவருக்கும் உலகத்தவர்க்கும் உணர்த்தும் வண்ணம், பெருமானின் திருமுடியையும் திருவடியையும் காண்பதற்கு முயற்சி செய்தனரே தவிர, பெருமான் கொண்ட அன்பினால் அத்தகைய முயற்சியினை அவர்கள் மேற்கொள்ளவில்லை. எனவே தான், அவர்களால் தங்களது முயற்சியில் வெற்றி பெறமுடியவில்லை. அன்புடன் பெருமானை அணுகி அவனது அருள் பெற்று, அந்த அருளே துணையாக பெருமானை அறிந்து கொள்வதற்கோ காண்பதற்கோ முயற்சி செய்தால் மட்டுமே அத்தகைய முயற்சிகளில் நாம் வெற்றி பெறலாம் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன.

கயலார் கருங்கண்ணி என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு மதுரை தலத்தினில் உறைகின்ற அங்கயற்கண்ணியையும், அவள் அருள் புரியும் தன்மையையும் உணர்த்துகின்றது. மீன் போன்று அழகிய கண்களை உடையவள் என்று பொருள்படும்படி, மதுரை தேவியை அங்கயற்கண்ணி என்று அழைப்பார்கள். பிராட்டி அங்கயற்கண்ணி என்று அழைக்கப்படுவதற்கு அழகான விளக்கம் ஒன்றினை பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் அளிக்கின்றார். தண்ணீரில் வாழும் மீன் தனது முட்டைகளுக்கு எவ்வாறு வெப்பம் அளித்து பக்குவம் அடையச் செய்ய முடியும். தனது கண்களின் வழியே வெப்பத்தைப் பாய்ச்சி, மீன்கள் முட்டைகளை பொறிப்பது போன்று, அம்பிகையும் தனது அருட்கண்களால் உயிர்களை நோக்கி காப்பதால் இந்த பெயர் வந்தது என்று கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. அளி=கருணை; செவ்வி உற=பக்குவம் அடையும் வண்ணம்; ஒளி=ஞானம், அருள்; இமவான் மகளாகப் பிறந்த அன்னை, தனது சிறிய வயதினில் கிளி மயில் அன்னம் போன்ற பறவைகளை வளர்த்த செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது. மீனாட்சியம்மை மக்களை காத்தது போன்று, அரசியாக திகழ்ந்த தடாதகை பிராட்டியார் தனது குடிமக்களை பாதுகாத்தார் என்று பரஞ்சோதி முனிவர் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஒளியால் உலகு ஈன்று உயிர் அனைத்து மீன் போல் செவ்வி உற நோக்கி

அளியால் வளர்க்கும் அங்கயற்கண் அன்னே கன்னி அன்னமே

அளியால் இமவான் திருமகளாய் ஆவி அன்ன மயில் பூவை

தெளியா மழலைக் கிளி வளர்த்து விளையாட்டு அயரும் செயல் என்னே

பொழிப்புரை:

நாம் மேலும் மேலும் வினைகளை சேர்த்துக் கொள்வதற்கு அடிப்படை காரணமாக விளங்கும் யான் எனது எனப்படும் அகப்பற்று மற்றும் புறப்பற்றினை அறவே நீக்கிகொண்ட தன்மையால் மேலும் வினைகள் பெருகுவதை தவிர்த்துக் கொண்டவர்களாக விளங்கி இறைவனைத் தொழுகின்ற தொண்டர்களே, அடியேன் இங்கே எழுப்பியுள்ள கேள்விக்கு விடை பகர்வீராக; மீன் போன்று அழகியதும் கருமை நிறம் உடையதும் ஆகிய கண்களை, மீன்கள் போன்று தனது அருட்பார்வையால் மன்னுயிர்களை பேணிக் காக்கும் கண்களை, உடைய அன்னையுடன் கூடியவராக, தான் இயல்பாக உறைவதற்கான இடமாக இரும்பூளை தலத்தினை தேர்ந்து உறையும் தலைவன், தனது திருவடியையும் திருமுடியையும் காண்பதற்கு முயற்சி செய்த திருமால் மற்றும் பிரமன், காணமுடியாத ஆற்றல் உடையவராக வண்ணம் நீண்ட நெடுந்தழலாக நின்றதன் காரணம் தான் யாதோ.

பாடல் 10:

துணை நல்மலர் தூய்த் தொண்டர்கள் சொல்லீர்

பணை மென்முலைப் பார்ப்பதியோடு உடனாகி

இணையில் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

அணைவில் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே

விளக்கம்:

துணை=உயிர்களுக்கு துணையாக இருக்கும் திருவடிகள்; அணைவு=பெருமானை அறிந்து சாரும் தன்மை; அணைவில்=பெருமானின் தன்மையை உணர்ந்து சார்ந்து நில்லாத தன்மை; ஆறே=ஆறு புறச்சமயங்கள்; பணை=பருத்து; பெருமான் அனைத்து உயிர்களுடன் இணைந்து இருந்தாலும், அவ்வாறு இணைந்து இருப்பதன் மூலம் உயிர்களை இயக்கினாலும், எந்த உயிரினையும் பெருமான் தான் விரும்பு வழியில் தான் இயங்கவேண்டும் என்று வற்புறுத்துவதில்லை. உயிர்கள் தங்களது விருப்பத்தின் வண்ணம் தங்களது வாழ்க்கையை நிர்ணயம் செய்து வாழ்வதற்கு பூரண சுதந்திரம் அளித்துள்ளார். அத்தகையோர் வாழும் நெறியினை உணர்த்துவன, ஆறு புறப்புறச் சமயங்கள்; உலோகாயதம் (நாத்திகம்), சமணம், நான்கு வகையான புத்த சமயங்கள்;

பொழிப்புரை:

அனைத்து உயிர்களுக்கும் துணையாக இருக்கும் பெருமானின் திருவடிகளை, மலர் தூவி வழிபடும் தொண்டர்களே, அடியேனது கேள்விக்கு தகுந்த விடை அளிப்பீர்களாக; மென்மையான பருத்த மார்பகங்களை உடைய பார்வதி தேவியுடன், இணையற்ற இரும்பூளை தலத்தினில் இடம் கொண்டுள்ள இறைவன், தன்னை அணைந்து வழிபடாத சமணம் மற்றும் பௌத்த சமயங்களை படைத்ததன் காரணம் தான் யாதோ.

பாடல் 11:

எந்தை இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்

செந் தண்டமிழ் செப்பிய பத்து இவை வல்லார்

பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே

விளக்கம்:

ஈசன்=ஈசனை என்றும் ஈசன் என்று இருவகையாக பொருள் கொள்ளலாம். ஈசனை குறித்து ஞானசம்பந்தர் செப்பிய மொழிகள்; தனதுரையாக ஈசன் ஞானசம்பந்தர் மூலம் செப்பிய உரைகள் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனின் அருள் தன்மைகளே இந்த பத்து பாடல்களிலும் உணர்த்தப் பெறுவதால், அதனை உணர்ந்து கொள்வது ஈசனை வழிபாடு செய்வதன் முதல் படி என்பதால், இந்த பாடல்களை ஓதும் அடியார்கள் உய்வினை அடைவார்கள் என்று குறிப்பிடுகின்றார். சந்தம் என்பது இங்கே சந்தத்துடன் ஓதப்படும் வேதங்களை குறிக்கும் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். சந்தம் என்பதற்கு ஓசைநயம் என்று பொருள் கொள்ளலாம். சந்தக்கவிக்கு அருணகிரியார் என்று சொல்லும் வண்ணம், சந்தம் நிறைந்த திருப்புகழ் பாடல்களை பாடி புகழ்பெற்ற அருணகிரியார், திருஞானசம்பந்தரை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர் ஆவார். முருகப் பெருமானின் அவதாரம் என்று பல பாடல்களில் ஞானசம்பந்தரை குறிப்பிடும் அருணகிரியார், ஞானசம்பந்தர் போன்று தனக்கு சந்தக்கவி பாடும் ஆற்றல் வாய்க்க வேண்டும் என்று பல திருப்புகழ் பாடல்கள் மூலம் வேண்டுகின்றார். எனவே இந்த பின்னணியில் நோக்கும் போது, சந்தம் என்ற சொல்லுக்கு சந்தத்துடன் இணைந்த தேவாரப் பாடல்கள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. சந்தம் பயில் என்ற சொல்லினை சண்பை நகருடன் இணைத்து, வேதங்கள் பயிலும் சீர்காழி நகரத்து மக்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே செம்மை என்பதற்கு மனதினைச் செம்மைப் படுத்தி நன்னெறியில் அழைத்துச் செல்லும் பாடல்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

எமது தந்தையாகிய பெருமானை, இரும்பூளை தலத்தினில் உறையும் பெருமானை, தொடர்ந்து சந்தக்கவிகள் பாடி வருபவனும், சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தைச் சார்ந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் அருளிய, சிறப்புகள் வாய்ந்ததும் செவிக்கு இனிமை தருவதும் ஆகிய பத்து தமிழ் பாடல்களை, முறையாக இசையுடன் இணைத்தும் பொருள் அறிந்து கொண்டும் பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மேல் வைத்திருந்த பாசத்தை அறுத்து, அதன் பயனாக வாழ்வினில் ஓங்கி விளங்குவார்கள்.

முடிவுரை:

இந்த தலத்தின் சிறப்பாக கருதப்படுவது தென்முகக்கடவுளின் திருக்கோலம் என்பதை நாம் முன்னுரையில் கண்டோம். சனகாதி முனிவர்களுக்கு வேதங்களை உணர்ந்து கொள்வதில் இருந்த சந்தேகங்களைத் தீர்த்தவர் தென்முகக்கடவுள் என்பதை நாம் அறிவோம். இவ்வாறு குருமூர்த்தமாக நின்று சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்த பெருமான், உண்மையான தொண்டர்களின் ஐயப்பாடுகளைத் தீர்ப்பார் என்று உணர்த்தும் முகமாக, இந்த தலத்து இறைவனை வணங்கி வழிபடுவதன் மூலம், அனைத்து அடியார்களும் தங்களது ஐயங்களை பெருமானின் அருள் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என்று, கேள்விகளை மட்டுமே கொண்டுள்ள பாடல்கள் உடைய பதிகமாக இதனை இயற்றி, ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் போலும். இந்த பதிகத்தின் பாடல்களில் தலத்து அடியார்களின் சிறப்புத் தன்மை முதல் பத்து பாடல்களிலும் உணர்த்தப்பட்டு, அத்தகைய அடியார்கள் போன்று நாமும் திகழவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் ஞானசம்பந்தர் குறிப்பாக தெரிவிக்கின்றார். இந்த பதிகத்து பாடல்கள் மூலம் குறிப்பிடப்படும் இந்த தலத்து அடியார்களின் தன்மை யாது என்பதை நாம் சற்று நினைவுபடுத்திக் கொள்ளலாம். சிறப்பான தன்மை உடைய பெருமானின் திருப்பாதங்களைத் தொழுவது, பலரும் தொழுது வணங்கும் தகுதி படைத்த பெருமானின் திருப்பாதங்களைத் தொழுவது, பெருமான் பால் அன்பு கொண்டு இரு கரங்களையும் கூப்பித் தொழுவது, விருப்பமுடன் பெருமானைத் தொழுவது, பல அடியார்களுடன் சேர்ந்து கொண்டு பெருமானைத் தொழுவது, இதழ்களை உடைய மலர்களை பெருமானின் திருப்பாதங்களில் தூவித் தொழுவது, புலன்களை அடக்கி ஒன்றிய மனத்துடன் தொழுவது, மேலும் மேலும் வினைகளை பெருக்கிக் கொள்வதற்கு வழிவகுக்கும் யான் எனது எனப்படும் பற்றுகளை அறவே ஒழித்து, அத்தகைய வினைகளால் ஏற்படும் துன்பங்களையும் துயரங்களையும் முற்றிலும் நீக்கிக் கொண்டு பெருமானைத் தொழுவது, தேர்ந்தெடுத்த சிறப்பான மலர்கள் கொண்டு இறைவனின் திருமேனி மீது தூவித் தொழுவது, என்பதே இந்த தலத்து அடியார்களின் தன்மைகளாக பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் கூறப்பட்டுள்ளது. பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்தை முறையாக ஓதும் அடியார்கள், பாசங்களை நீக்கிகொண்டு பற்றற்றவர்களாக விளங்கி, வினைகளை மேலும் பெருக்கிக் கொள்வதைத் தவிர்த்து உயர்ந்தவர்களாக வாழ்ந்து, மறுமையில் உயர்ந்த உலகமாகிய முக்தி உலகத்தினை அடைவார்கள் என்று குறிப்பிடுகின்றது.. இந்த பதிகத்தின் பாடல்கள் மூலம், அடியார்களின் தன்மையை உணர்ந்து கொள்ளும் நாம், நாமும் அத்தகைய தன்மைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்வினில் உய்வினை அடைவோமாக.



Share



Was this helpful?