பதிக எண்: 2.10 - திருமங்கலக்குடி - இந்தளம்
பின்னணி:
தனது ஐந்தாவது யாத்திரையின் ஒரு பகுதியாக கோடிகா அமர்ந்த தேவர் சிகாமணியையும் கஞ்சனூர் ஆண்ட கோவையும் நேரில் கண்டு வணங்கி பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், பின்னர் மாந்துறை மஞ்சனை வணங்கிப் பாடி திருமங்கலக்குடி வந்து சார்ந்ததாக பெரிய புராணம் கூறுகின்றது. மாங்குடி என்று இங்கே குறிப்பிடப்படும் இந்த தலம், திருச்சி மாவட்டத்தில் அன்பில் ஆலந்துறை தலத்திற்கு அருகினில் உள்ள தலத்திலிருந்து வேறுபட்டது. இந்த தலம் வைப்புத் தலங்களில் ஒன்று. இந்த தலத்தின் மீது திருஞான சம்பந்தர் அருளிய பதிகமும் நமக்கு கிடைக்கவில்லை. கஞ்சனூர் தலம் சுக்கிர பகவானுடன் தொடர்பு கொண்ட தலமாகும். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகமும் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. தனது திருத்தாண்டகப் பதிகத்தில் அப்பர் பிரான், கஞ்சனூர் ஆண்ட கோ என்றும் கஞ்சனூர் கற்பகம் என்றும் இறைவனை குறிப்பிடுகின்றார். அந்த தொடரினை சேக்கிழார் இந்த பாடலில் கையாண்டுள்ளார்.
கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக் கண்ணுற்று இறைஞ்சி முன் போந்து
மஞ்சனை மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும் திருமங்கலக்குடி சேர்ந்தார்
திருமங்கலக்குடி தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகமும் திருஞான சம்பந்தர் அருளிய இந்தளம் பண்ணில் பொருந்தும் இந்த பதிகமும் கிடைத்துள்ளன. இந்த தலம் கும்பகோணத்திலிருந்து பதினைந்து கி.மீ. தூரத்தில் கதிராமங்கலம் செல்லும் பாதையில் உள்ளது. சுயம்பு இலிங்கம்; இங்குள்ள மரகத இலிங்கம் தினமும் உச்சிக் காலத்தில் வழிபடப் படுகின்றது. இறைவனின் பெயர் பிரணவ நாதேஸ்வரர், பிராண வரதேச்வரர், புராணேசுவரர். அம்பிகையின் பெயர் மங்களநாயகி, மங்களாம்பிகை. விளையாட்டாக ஒரு சமயம் தான் இறைவனின் கண்களை பிராட்டி பொத்தியதால், உலகமே சிறிது நேரம் இருளில் ஆழ, அந்த இருளின் விளைவால் உயிர்கள் தவித்தன. இதனை உணர்ந்த இறைவன், தனது நெற்றிக் கண்ணைத் திறந்து,உலகினுக்கு ஒளியும் வெப்பமும் அளித்து உயிர்களின் துன்பத்தை நீக்குகின்றார். எனினும் இந்த இடைப்பட்ட நேரம் மிகவும் குறைந்ததாக இருந்தாலும், அந்த குறைந்த நேரத்தில், உயிர்கள் சிறிது நேரம் தவிப்பதற்கு காரணமாக இருந்த செய்கையால், தான் பெற்ற சாபத்தினால் கிளியாக சிலகாலம் இருந்த அம்பிகை, இந்த தலம் வந்தடைந்து இறைவனை வழிபட்டு, தனது சாபத்தை நீக்கிக் கொண்டார் என்பது தலபுராணம் குறிப்பிடும் செய்தி. அந்த சாபம் நீங்கிய தினம் மகர சங்கராந்தி என்பதால், ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சி திருவிழாவாக கொண்டாடப் படுகின்றது பண்டைய நாளில், காளி சூரியன் பிரமன் திருமால் நவகிரகங்கள் அகத்தியர் பூமாதேவி முதலானோர் வழிபட்டு பயனடைந்த தலம். நவகிரக சன்னதி இல்லாத தலம். அருகில் உள்ள சூரியனார் கோயில் தான் இந்த தலத்திற்கு உரிய நவகிரக சன்னதியாக கருதப்படுகின்றது. எனவே இந்த கோயிலை வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் செல்லவேண்டும் என்று கூறுவார்கள். இந்த தலத்தினை பஞ்சமங்களத் தலம் என்று கூறுவார்கள். மங்கலக்குடி என்ற பெயர், மங்களாம்பிகை, மங்கள விமானம், மங்கள தீர்த்தம் மங்கள விநாயகர் ஆகியவை கொண்டுள்ள காரணத்தால் இந்த பெயர் வந்தது
காலவ முனிவர் என்பவர் தனது ஜாதகத்தில் இருந்த கிரகங்களின் அமைப்பினை நன்கு ஆராய்ந்து படித்து, குறிப்பிட்ட காலத்தில் தனக்கு தொழுநோய் வரும் என்பதை அறிந்து கொண்டார். ஒன்பது கோள்களையும் வேண்டி அவர் தவம் இருக்கவே, ஒன்பது கோள்களும் நேரில் தோன்றி அவருக்கு வரம் அளிக்க இசைந்தன. தனக்கு தொழுநோய் வாராமல் தடுக்க வேண்டும் என்று முனிவர் வேண்டிக் கொள்ளவே கோள்களும் இசைந்து அருள் புரிந்தன. கோள்கள் வரம் அளித்த விவரத்தை அறிந்த பிரமதேவன், ஒன்பது கோள்களையும் அழைத்தார். ஒவ்வொருவரின் ஜாதகத்தில் உள்ள கோள்களின் அமைப்பு உணர்த்தும் வண்ணம் அந்தந்த காலத்தில் உரிய பலன்களை அளிப்பது மட்டுமே கோள்களின் கடமை என்றும், அந்த அமைப்பினை மாற்றி வேறொரு பலனை அளிப்பதற்கு அவைகளுக்கு அதிகாரம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். மேலும் முனிவர் எதிர்கொள்ள இருந்த தொழுநோயினை, தன்னிச்சையாக செயல்பட்டு மாற்றிய குற்றத்திற்கு தண்டனையாக கோள்கள் தொழுநோய் அனுபவிக்க வேண்டும் என்ற தண்டனையும் விதித்தார். ஒன்பது கோள்களும் மண்ணுலகம் வந்து திருமங்கலக்குடி தலத்தினில் பதினோரு வாரங்கள் தங்கி இறைவனை வழிபட்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் எருக்கம் இலையினில் தயிர்சாதம் வைத்து பெருமானுக்கு நிவேதனம் செய்து, முடிவில் நோயிலிருந்து விடுதலை பெற்றன என்பது தலபுராணம் கூறும் செய்தி.
குலோத்துங்கச் சோழனிடம் அமைச்சராக பணிபுரிந்த அலைவாணர் என்ற அடியார், மக்களிடம் இருந்து வசூல் செய்த வரிப்பணத்தை, மன்னனின் அனுமதியின்றி கோயில் திருப்பணிக்கு பயன்படுத்தினார். விவரம் அறிந்த மன்னன் அவருக்கு மரணதண்டனை விதித்து, அவரது தலையினை சீவி எறிந்தான். இந்த அடியார் திருமங்கலக்குடி தலத்திற்கு அருகில் உள்ள திருவியலூர் என்ற தலத்தைச் சார்ந்தவர் ஆவார். அவரது மனைவி, திருமங்கலக்குடி திருக்கோயிலில் உள்ள அம்பிகையிடம் தனது மாங்கல்யத்தை காப்பாற்றுமாறு வேண்டிய போது, அம்பிகை சிவனார்க்கு செய்தி சொல்ல, பெருமான் இறந்த அடியாருக்கு அருள் செய்ய முடிவு செய்தார். அசரீரி குரல் மூலமாக, இறந்தவரது தலையினையும் உடலையும் மீண்டும் பொருத்துமாறு இறைவன் பணிக்க, மந்திரியாரின் மனைவியும் அவ்வாறே செய்தார்; தூக்கத்திலிருந்து எழுவது போன்று இறந்த மந்திரியார் உயிர்பெற்று எழுந்தார். அவர் உடனே திருமங்கலக்குடி தலத்து கோயிலின் கருவறை சென்று, இறைவனின் திருமேனியை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார். இதனால் இறைவனுக்கு பிராண நாதேஸ்வரர் என்ற பெயரும் தேவிக்கு மங்களநாயகி என்ற பெயரும் வந்ததாக கூறுவார்கள். பெண்களின் மங்கல நாண் காக்கும் தலம் என்று பிரசித்தி பெற்று, மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை என்ற தொடரும் எழுந்தது. இன்றும் அம்மையின் திருப்பாதங்களில் தாலி வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. சூரியன் வழிபட்ட ஐந்து தலங்களில் ஒன்றாக கருதப் படுகின்றது. மற்றவை, நன்னிலம் அருகில் உள்ள சிறுகுடி, சென்னை செங்குன்றம் அருகில் உள்ள ஞாயிறு, நீடாமங்கலம் அருகில் உள்ள பரிதிநியமம், மற்றும் கும்பகோணம் அருகில் உள்ள தலைஞாயிறு.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம். சுயம்பு மூலவர் நீண்டுயர்ந்த பாணம். ஆவுடையாரை விடவும் பாணம் உயர்ந்து காணப்படுகின்றது. அகத்தியர் இந்த தலம் வந்த போது, சுவாமி உயர்ந்தவராக அவருக்கு காட்சி தந்தார் என்றும் அந்த அடிப்படையில் பாணம் உயர்ந்து காணப்படுகின்றதும் என்று சொல்கின்றனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தென்முகக் கடவுள், திருமால், ரிஷபாரூடர், பிரமன், விஷ்ணு துர்க்கை, காவேரி அன்னை ஆகியோரைக் காணலாம். பதினெட்டாம் பெருக்கு அன்று காவேரிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இறைவனின் சன்னதிக்கு செல்லும் முன்னர், இருபுறமும் நாம் மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி சிலைகளை காணலாம். இருவரும் பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் உள்ளனர். சரஸ்வதி கையில் வீணை இல்லை. உள் பிராகாரத்தில், பதினொரு சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி சன்னதிகளும் நடராஜ சபையும் உள்ளன. இரண்டு நடராஜர் மூர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஆனி திருமஞ்சனம் நன்னாளிலும் மற்றொன்று திருவாதிரைத் திருநாளிலும் வலம் வருகின்றன. நடராஜர் சன்னதியில் மரகத லிங்கம் உள்ளது. ஒரு நடராஜரின் பாதத்திற்கு அருகில், பூதகணம் இசைக்கருவியை இசைத்தவாறு இருப்பதை காணலாம். இங்கே காணப்படும் புருஷாமிருகம் சிலை, சற்று வித்தியாசமாக, மனித முகம், விலங்கு உடல் மற்றும் பறவையின் சிறகுகளுடன் காணப்படுகின்றது. அம்பிகை சன்னதி, முன்மண்டபத்தில் தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. ஏயர்கோன் கலிக்காம நாயனார் முக்தி அடைந்த தலம். இங்கே உள்ள பல தீர்த்தங்களில், சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் என்பவையும் அடங்கும். இந்த இரண்டு தீர்த்தங்களையும் கலந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். கோஷ்டத்தில் காணப்படும் விஷ்ணு துர்க்கை தவிர்த்து சிவதுர்க்கையை நாம் சோமாஸ்கந்தர் சன்னதியின் பின்புறத்தில் காணலாம். இரண்டு துர்கைகள் வடிவத்திலும் நாம் மகிடனின் தலையை காணமுடியாது. அகத்தியர் வழிபட்ட ஆத்மலிங்கம் உட்சுற்றின் வடகிழக்கு மூலையில் உள்ளது. பங்குனி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளன்று மாலை, நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சி மிகவும் பிரசித்தமானது. திருமணத் தடைகளை நீக்கும் தலமாகவும் கருதப் படுகின்றது. பல்லவ மன்னர்கள், இராஜராஜச் சோழன், விஜயநகர நாயக்க மன்னர்கள், காலத்தைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குலோத்துங்கச் சோழன், பதினோறாம் நூற்றாண்டில் திருப்பணிக்காக வழங்கிய கொடைகள் குறித்த விவரங்கள் ஒரு கல்வெட்டில் காணப்படுகின்றது. திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப் படும் கோயில். தலமரம் வெள்ளெருக்கு; தீர்த்தம் அகத்திய தீர்த்தம், காவிரி தீர்த்தம், மங்கள தீர்த்தம். நவராத்திரியின் போது மூலவர் அம்பிகைக்கும் சந்தனக் காப்பு செய்யப்பட்டு, சந்தனமே அம்பிகைக்கு ஆடையாக பயன்படுத்தப் படுவது இந்த கோயிலின் தனிச்சிறப்பு.
அருகில் உள்ள சூரியனார் கோயில் எனும் தலம், குடந்தையைச் சுற்றியுள்ள தலங்களில் சூரியனுக்கு உரியதாக கருதப் படுகின்றது. நவகிரகங்கள் இந்த தலம் வந்தடைந்து பெருமானை வழிபட்ட போது நீராடிய குளங்கள் அவர்கள் பெயராலே அழைக்கப் படுகின்றன. சூரியன் தனது இரண்டு மனைவிகளுடன், மேற்கு நோக்கி, திருமங்கலக்குடி மூலவரை நோக்கிய வண்ணம் காட்சி தர, அவரைச் சுற்றி எட்டு கோள்களும் தனித்தனி மண்டபங்களில் அருள் பாலிக்கின்றனர், மற்ற கிரகங்கள் அனைத்தும் சிவசூரியனை பார்த்த வண்ணம் உள்ளனர். எந்த விதமான ஆயுதமும் இன்றியும் வாகனம் இன்றியும் காட்சி தருகின்றனர். சூரியனின் ஒற்றைச் சக்கரத் தேர், ஏழு குதிரைகளால் இழுக்கப் படுவதை நினைவூட்டும் வகையில் மண்டபம் தேர் வடிவில் அமைந்துள்ளது. சூரியன் இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷா தேவியுடனும், தனது இரண்டு கரங்களிலும் செந்தாமரை மலரினை ஏந்திய வண்ணம் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். இவர் சிவசூரியன் என்றே அழைக்கப் படுகின்றார். சுவாமி சன்னதிக்கு முன்னர் நந்தி தேவர் இருப்பது போன்று சூரியனின் சன்னதிக்கும் முன்னர் நாம் குதிரையை காணலாம். சூரியனை சாந்தப் படுத்தும் பொருட்டு குரு பகவானின் சன்னதி, சூரியனின் சன்னதிக்கு நேராக உள்ளதாக சொல்லப் படுகின்றது. தலமரம் வெள்ளெருக்கு. இந்த கோள்கள் பிரமனின் சாபம் பெற்று பூவுலகம் வந்த போது, அகத்திய மாமுனிவரை சந்திக்க, அவர் தான் இந்த ஒன்பது கோள்களையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்தார் என்று சொல்லப் படுகின்றது. அவர்கள் தவம் செய்ய வேண்டிய முறையினை அகத்திய பெருமான் விளக்க, ஒன்பது கோள்களும் மங்கலக்குடி இறைவனை முறையாக வழிபட்டு, எருக்க இலையில் தயிர் சாதத்தினை பெருமானுக்கு நிவேதனமாக அளித்து அதனை உண்ட பின்னர், கோள்களின் நோய் தீர்ந்தது என்று தலபுராணம் குறிப்பிடுகின்றது. எருக்க இலையில் வைக்கப்பட்ட சூடான தயிர் சாதம் தொழுநோயினை தீர்க்கும் மருத்துவ குணம் உடையது என்பது இப்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சூரியனார் கோயில் ஆலயம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர மன்னர்களால் விரிவுபடுத்தப் பட்டது என்று சொல்லப் படுகின்றது. ஐந்து நிலை இராஜகோபுரம் கொண்ட கோயில். இராகு பகவானின் சன்னதிக்கு அருகில் சண்டேசுவரர் சன்னதி உள்ளது. இரத சப்தமியை ஒட்டி சிறப்பாக பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது.
.பாடல் 1:
சீரினார் மணியும் அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி
நீரின் மாமுனி வன் நெடும் கைகொடு நீர் தனை
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே
விளக்கம்:
சீர்=புகழ்; சந்து=சந்தனம்; வரை=மலை; செறி=மிகுந்து நெருக்கமாக கிடக்கும்; வாரி= வெள்ளம்; பூரித்து=மனம் மகிழ்ந்து; ஆட்டி=நீராட்டி; தீர்க்கபாகு என்ற முனிவர், பெருமானின் சன்னதியில் அமர்ந்தவாறு தனது கைகளை நீட்டி காவிரி ஆற்றிலிருந்து நீரினை எடுத்து பெருமானை நீராட்டி அர்ச்சனை செய்தததாக தலபுராணம் கூறுகின்றது. அந்த தகவல் இந்த பாடலில் கொடுக்கப் பட்டுள்ளது. புராணர்=முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருளாகவும் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியராக இருக்கும் தன்மை; புராணம் என்ற சொல் புரா மற்றும் நவம் ஆகிய இரண்டுசொற்களின் கலவை. புரா என்றால் பழமை; நவம் என்றால் புதுமை; பெருமான் பழமைக்கும் பழையவனாகவும் புதுமைக்கும் புதியவனாகவும் இருக்கும்தன்மை இந்த சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.
புதுமையாக எந்த பொருள் வந்தாலும், புதுமை என்ற அடைமொழி அந்த பொருளிலிருந்து பேர்ந்து விலகும் வண்ணம் புதுமையாக காட்சி அளிப்பவன் பெருமான் என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். பெருமானை புராணர் என்று அழைத்துஅருளாளர்கள் மகிழும் சில பாடல்களை நாம் இங்கே காண்போம். பல பாடல்களில் ஆதி புராணர் என்று குறிப்பிடப்பட்டு, அனைத்து உயிர்களுக்கும்மிகவும் பழமையானவர் பெருமான் என்றும் சொல்லப்படுகின்றது. புராணன் என்ற வடமொழிச் சொல், புரா மற்றும் நவன் என்ற இருவேறு சொற்கள் இணைந்தவை. புரா என்றால் புராதனன் என்ற சொல்லின் சுருக்கம்; நவன் என்றால் புதுமையானவன் என்று பொருள். இதனையே மணிவாசகர் முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழம்பொருள் என்றும் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே என்றும் திருவெம்பாவை பதிகத்தில் கூறுகின்றார். பெற்றி=தன்மை; புதுமையாக எந்த பொருள் வந்தாலும், புதுமை என்ற அடைமொழி அந்த பொருளிலிருந்து பேர்ந்து விலகும் வண்ணம் அந்த பொருளினும் புதுமையாக காட்சி அளிப்பவன் பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார்.
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.132.6) திருஞானசம்பந்தர். பெருமானை புராணர் என்று குறிப்பிடுகின்றார். அறுபகை=உயிர்களுக்கு உட்பகைகளாக விளங்கும் காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய ஆறு குற்றங்கள்; அகன்=அகம், உள்ளம்; புகல்=அடைக்கலம், பற்றுக்கோடாக கருதுதல்; மெய்ஞானத்தின் தன்மையை புரிந்து கொண்டு மெய்ஞானத்தின் வழி நடப்போர், உலகியல்இன்பங்களில் ஆழ்வதைத் தவிர்த்து, இறை சிந்தனையில் எப்போதும் ஆழ்ந்திருக்கும் தன்மையராக இருப்பதால், இறைவன் அத்தகைய அடியார்களின்உள்ளத் தாமரையில் உறைபவன் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. செற்று=அடக்கி வெற்றி கொண்டு; தகவு-தகுதி; மணித்தலம்= இரத்தினங்கள்கிடைக்கும் இடம்; வர்க்கம்=சுற்றம்; சங்குள வர்க்கம்=சங்குகளுடன் தொடர்பு கொண்ட மற்ற பொருட்கள்; சலசத்தீ=தாமரையாகிய தீ, மலர்ந்த தாமரைமலர் செக்கச் செவேலென்று இருப்பதால் தீப்பிழம்புக்கு ஒப்பிடப் படுகின்றது. அருகிலுள்ள புங்க மரங்களிலிருந்து மலர்கள் மலர்ந்து விரிந்த தாமரைமலரின் மேல் விழுவது, திருமண நிகழ்ச்சிகளில் பொரி இடுகின்ற சடங்கினைப் போன்று அமைந்துள்ளது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த தலம் திருமணத் தலமாக கருதப் படுகின்றது. கல்யாணபுரம் என்பது இந்த தலத்தின் பெயர்களில் ஒன்று. கருவரையில் பின் சுவற்றில்பெருமானின் திருமணக் கோலம் புடைச் சிற்பமாக உள்ளது. கருவரையில் தான் கண்ட பெருமானின் திருக்கோலத்தை, இயற்கைக் காட்சி திருஞானசம்பந்தருக்கு நினைவூட்டியது போலும். எங்கும் எதிலும் சிவத்தையே கண்டு மகிழ்ந்தவர் அல்லவா. பெருமான் பால் மிகுந்த அன்பினை தமது உள்ளத்தில் பொருத்தியவராக, காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய உயிரின் ஆறு உட்பகைகளையும் களைவதில் வெற்றி கொண்டவர்களாக, தமது ஐந்து புலன்களையும் தம்வசப்படுத்தி தாம் நினைக்கும் வழியில் செலுத்துபவராக, உண்மையான மெய்ஞானம் படைத்தவர்களாக விளங்கி அந்த ஞானத்தின் வழியே தமது வாழ்க்கையை நடத்துபவராக விளங்கும் சான்றோர்களின் இதயத்தாமரையைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள இறைவன் உறைகின்ற இடம் திருவீழிமிழலை தலமாகும். சங்கு இனங்களும் முத்துக்களும் மணிகளும் விளங்கும் தூய நீர்நிலைகளில் விரிந்து மலர்ந்த தாமரை மலர்களின் மீது அருகிலுள்ள புங்க மரங்களின் பூக்கள் உதிர்ந்து தூவப்படும் காட்சி, திருமண விழாவில் ஹோம குண்டத்தில் பொரி இடுகின்ற சடங்கினை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இத்தகைய இயற்கை காட்சிகள் கொண்ட தலம் திருவீழிமிழலயாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.
அகன் அமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானம்
புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில்
தகவுடை நீர் மணித்தலத்துச் சங்கு உள வர்க்கத்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்கு மலர்ப் பொரியட்ட மணம் செய்யும் மிழலையாமே
வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.39.6) திருஞானசம்பந்தர், பெருமானை புராணர் என்று குறிப்பிடுகின்றார். கறி=மிளகு; மிளகு மலைச்சாரலில் வளரும் கொடிகள்; இங்கே மலை என்பது கோவர்தன மலையினை குறிப்பிடுகின்றது. ஐங்கணையோன்=ஐந்து விதமான அம்புகளை உடைய மன்மதன்; தாமரை, முல்லை, மா, அசோகம் மற்றும் நீலோற்பலம் என்பன மன்மதனின் ஐந்து அம்புகள் என்று சொல்லப் படுகின்றன. உயிர்களின் காதல் உணர்ச்சியை தூண்டுவதற்கு மன்மதன் இந்த ஐந்து அம்புகளையும் பயன்படுத்துவதாக கூறுவார்கள். சிவபெருமானின் தவத்தை கலைக்க முயன்ற மன்மதன், பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிவந்த தீப்பொறிகளால் எரிந்து மனைவி இரதி தேவிக்கு மட்டும் தெரியும் வண்ணம் வாழ்ந்ததையும் நாம் அனைவரும் அறிவோம். மீண்டும்மீண்டும் இரதி தேவி, தனது கணவன் அனைவரின் கண்களுக்கும் தெரியும் வண்ணம் வாழவேண்டும் என்று வேண்டவே, பெருமான் இரதி தேவிக்கு ஒரு வரத்தினை அளிக்கின்றார். திருமால் கண்ணனாக அவதாரம் எடுக்கும் போது, மன்மதனின் அம்சமாக அநிருத்தன் என்று ஒரு மைந்தன் ருக்மிணி தேவிக்கு மகனாக பிறப்பான் என்றும், உஷை என்ற பெயருடன் பாணாசுரனின் மகளாக பிறக்கும் இரதிதேவியை அவன் மணந்து கொள்வான் என்றும் வரம் அளித்தார். பின்னர் அவ்வாறே நடந்தது. இதனைக் குறிப்பிடும் வண்ணம், மன்மதனை கண்ணனின் மகன் என்று இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பூத புராணர்=பூதங்களுக்கு ஆதியாக இருப்பவர், ஆதி என்ற சொல் இங்கே தலைவர் என்ற பொருளில் வந்துள்ளது. மறி=மான் கன்று; மைஞ்ஞிற=கருமை நிறம் உடைய; மைஞ்ஞிற மான்=கருமான், கருமை நிறமுடைய விலங்கு, கருமையான உடலினை உடைய யானை; வெறி வளர்=நறுமணம் மிகுந்த; பூதங்கள் என்று பஞ்ச பூதங்களை குறிப்பிடுகின்றார். பஞ்ச பூதங்களின் கலவையாகத் தான் உலகினில் உள்ள அனைத்துப் பொருட்களும் உடலும் தோன்றுகின்றன. பஞ்ச பூதங்களுக்கு முன்னமே தோன்றியவன் என்ற குறிப்பு மூலம், அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவன் பெருமான் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. மிளகுக் கொடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்த கோவர்த்தன மலையினை, தனது கைவிரல் ஒன்றினால் தாங்கிய கண்ணனின் அன்பு மகன் அநிருத்தனாக வளர்ந்தவனும் ஐந்து அம்புகளின் மூலம் உயிர்களில் காதல் உணர்ச்சியை பெருக்குபவனும் ஆகிய மன்மதனின் உடலினை நெற்றிக் கண்ணிலிருந்து வெளிவந்த தீப்பொறிகள் எரித்து உண்ணும் வண்ணம் கோபத்தால் பொங்கியவரும், பூதகணங்களின் தலைவரும், மான் கன்றினைத் தனது கையினில் ஏந்தியவரும், மங்கை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்திருப்பவரும், கருமை நிறம் உடைய தோலினை கொண்ட யானையை அடக்கி அதன் தோலினை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்டவரும், நறுமணம் மிகுந்த கொன்றை மலர் மாலையினை அணிந்தவரும் ஆகிய பெருமான் வேட்கள நகரின் தலைவராக விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கறிவளர் குன்றம் எடுத்தவன் காதல் கண்கவர் ஐங்கணையோன் உடலம்
பொறிவளர் ஆரழல் உண்ணப் பொங்கிய பூத புராணர்
மறிவளர் அங்கையர் மங்கையொர் பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோலுடை ஆடை
வெறிவளர் கொன்றை அந்தாரார் வேட்கள நன்னகராரே
முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.131.2) திருஞானசம்பந்தர் பெருமானை, புராணர் என்று அழைக்கின்றார். வேரி=தேன், அம்பிகை தனது கூந்தலில் சூடியிருந்த மலர்களில் உள்ள தேன்; கயம்=நீர்நிலை; மூரி=பெருமை; முயங்கி=தடவிக் கொண்டு; காற்றுக்கு இயற்கையில் மணம் இல்லை. ஆனால் முதுகுன்றத்து தலத்தில் வீசும் காற்று, சோலைகளில் உள்ள மலர்களில் படிந்தும் அவைகளை உதிர்த்தும் வருவதாலும், தலத்தின் நீர்நிலைகளில் உள்ள நீரின் மீது தவழ்ந்து வருவதாலும் குளிர்ச்சியும் நறுமணமும் கொண்டதாக விளங்குகின்றது என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். கார்=மழை; அர்ஜுனன் போர் புரியும் ஆற்றலை நேரில் காண அம்பிகை விரும்பியதால், தேவியையும் உடன் அழைத்துக் கொண்டு அர்ஜுனன் தவம் புரிந்த இடத்திற்கு பெருமான் சென்றதாக புராணம் கூறுகின்றது. பொறை=வலிமை; தேன் மிகுந்த புதிய மலர்களை உடையதாய் தேனின் மணம் வீசும் கூந்தலை உடைய உமை அன்னையுடன், வேடுவ வேடம் தாங்கியவனாய், வெம்மை மிகுந்த கொடிய காட்டினில் தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை அணுகியவர் சிவபெருமான். அவர் அர்ஜுனனின் போரிடும் ஆற்றலை உமையம்மை கண்டு அறிந்து கொள்ளும் பொருட்டு, அவனுடன் போரிட்ட பின்னர் அவனுக்கு பாசுபத அத்திரத்தை அளித்தார். இத்தகைய பெருமான், அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றிய பெருமான், மழையால் செழித்து வளர்ந்துள்ள நறுமணம் வீசும் சோலைகளில் உள்ள கனிகளை உதிர்த்தும், மலர்களை சிந்தியும், வரும் வழியில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரின் மீது தவழ்ந்தும் வரும் வலிமை மிகுந்த தென்றல் காற்று புகுந்து வீசும் முற்றங்கள் கொண்ட அழகிய வீடுகளை உடைய முதுகுன்றம் எனப்படும் தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வேரி மிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில் விசயன் மேவு
போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில்
காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலரும் உதிர்த்துக் கயம் முயங்கி
மூரி வளம் கிளர் தென்றல் திரு முன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே
திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.07.01) திருஞானசம்பந்தர் பெருமானை புராணர் என்று அழைக்கின்றார். பொன்னியன்ற=பொன் இயன்ற, பொன் போன்ற; கூவிளம்=வில்வம்; தென்ன=இசைக் குறிப்பு; தன்னை அடிமையாக ஆட்கொண்ட பெருமான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
வன்னிக் கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னியன்ற சடையில் பொலிவித்த புராணனார்
தென்ன என்று வரி வண்டிசை செய் திருவாஞ்சியம்
என்னை ஆளுடையான் இடமாக உகந்ததே
பெரும்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.67.6) திருஞானசம்பந்தர் பெருமானை வேத புராணர் என்று குறிப்பிடுகின்றார். கற்றது உற=கல்வி கற்றதன் பயனை அடையும் வண்ணம்; பெருமானின் அரிய பெருமைகளை நூல்கள் வாயிலாகக் கற்று, அந்த நூல்களில் உணர்த்திய வண்ணம் பெருமானை முறையாக வழிபட்டு வாழ்வதே கல்வி கற்றதன் பயனாகும். கல்வி கற்றதன் பயனே இறைவனைத் தொழுதல் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு திருவள்ளுவரின் திருக்குறள் (கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்) ஒன்றினை நினைவூட்டுகின்றது. வாலறிவன்=தூய அறிவின் வடிவமாக இருக்கும் இறைவன்; நல்லனவற்றை பெரிதும் விரும்பும் பெருமான் என்று இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் தொண்டர்களையும் தொண்டர்கள் செய்யும் திருப்பணிகளையும் மிகவும் விரும்பும் பெருமான் என்று குறிப்பிட்டு, அத்தகைய அடியார்களுக்கு பெருமான் எவ்வாறு உதவி செய்கின்றார் என்பதை குறிப்பிடுகின்றார்.
கற்றது உறப் பணி செய்து காண்டும் என்பார் அவர் தம் கண்
முற்றிது அறிதும் என்பார் கண் முதலியர் வேத புராணர்
மற்றிது அறிதும் என்பார் கண் மனத்திடையார் பணி செய்ய
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே
கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (3.67.6) திருஞானசம்பந்தர் பெருமானை புராதனன் என்றும் புராணன் என்றும் குறிப்பிடுகின்றார். புராதனன்=அனைத்து உயிர்களுக்கும் பழமையானவன்; நிராமயன்= நோயற்றவன்; பராபரன்=மேலோர்க்கும் மேலானவன்; பராவுசிவ=பலராலும் புகழப்படும் சிவபெருமான்; ராக=விரும்பத் தக்கவன்; இராவும்=இரவிலும்; எதிராயது=இரவுக்கு எதிராக உள்ள பகலிலும்; பரா=பரவி, புகழப்படும்; புராணன்=பழமையானவன்; அமராதி=தேவர்களுக்கு தலைவனாக உள்ளவன்; அதிபதி=தலைவன்; அரா மிசை=பாம்பின் மேல்; எழில்=அழகாக உள்ள பூமியினை; தரு=கொம்பு; ஆய=பொருத்திய; அர பராயண=அரனை பாராயணம் செய்யும்; வாதராயன்=திருமால்; விராய=கலந்த; எரி=பழி; இயல்பாகவே நோய்கள் அற்றவனும், மேலோர்களாக கருதப்படும் பல தெய்வங்களுக்கும் மேலாக விளங்குபவனும், அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக உள்ளவனும், பலராலும் புகழ்ந்து போற்றப் படுபவனும், அனைவராலும் விரும்பப் படுபவனும் ஆகிய பெருமானே நீ அருள் புரிவாய் என்று இரவும் அதற்கு எதிராக அமைந்துள்ள பகலிலும் அனைத்து உயிர்களாலும் தியானிக்கப் படும் பழையவன் சிவபெருமான். தான் கிடக்கும் பாம்பணையிலிருந்து எழுந்த திருமால் வராக உருவத்துடன் சென்று, அரக்கன் இரண்யாட்சனால் ஒளித்து வைக்கப்பட்ட எழில் மிகுந்த பூமியை மீட்டுத் தனது இரண்டு கொம்புகளின் இடையே பொருத்திக் கொணர்ந்த பின்னர், அந்த அரக்கனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்ட பழி தீரும் பொருட்டு, பெருமானின் திருநாமத்தை பாராயணம் செய்து வழிபட்டதால் வந்த பெயர் தராய் என்பது இந்த தலத்துடன் இணைந்தது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நிராமய பராபர புராதன பராவுசி வராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழி றராயர பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.80.5) புராண முனி என்று பெருமானை திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். பூதபதி=ஐந்து பூதங்களுக்கும் அதிபதியாகிய பெருமான்; புராண முனி=பழமையான தவக் கோலம் பூண்டவன்; மருவி=கலந்து; தேவியை புண்ணியமே உருவாக இருப்பவள் என்று குறிப்பிடுகின்றார். தான் வேறு தேவி வேறு என்று நினைக்காமல் பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மாதினை மதித்து அங்கோர் பால் கொண்ட மணி என்று சுந்தரர் கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் கூறுவது (7.59.1) நமது நினைவுக்கு வருகின்றது. முனிவர்கள் உலக நலன் கருதி தவம் செய்வது போன்று உலக நலன் கருதி அந்தணர்கள் வேள்வி வளர்ப்பதால், அவர்களை மாதவர்கள் அன்ன மறையாளர் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அந்தணர்கள் செய்கின்ற வேள்வியின் பயனாக, உலகம் குற்றம் இல்லாத வகையில் விளங்க, உலகத்தவர் இன்பம் அடைகின்றனர் என்று கூறுகின்றார். பசி, பிணி, வறுமை, பருவமழை பொய்த்தல் முதலிய தீங்குகள் நேராமலும், குறைவிலாத வகையில் உணவு, நோயற்ற வாழ்வு, உரிய காலத்தில் அளவான மழை முதலிய நிகழ்ந்து, உலக மக்கள் இன்பமுடன் வாழ வேள்விகள் வழிவகுக்கின்றன என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
பூதபதியாகிய புராணமுனி புண்ணிய நன்மாதை மருவிப்
பேதம் இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடமாம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால்
ஏதமிலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே
பற்றற்றார் சேர் என்று தொடங்கும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (4.14.10) அப்பர் பிரான் பெருமானை, பொதியின் மேய புராணன் என்று குறிப்பிடுகின்றார். புத்தூர் என்பது அரிசிற்கரைப் புத்தூரை குறிக்கும் என்று சிலரும் இது ஒரு வைப்புத் தலத்தைக் குறிப்பது என்று சிலரும் கருதுகின்றனர். மாத்தூர் என்பது வைப்புத் தலம் என்றும் வேறு சிலரால் ஆமாத்தூர் என்றும் கருதப்படுகின்றது. வித்தாய் மிழலை முளைத்தான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுவது, சிவபிரான் உயிர்களுக்கு உயிராக இருக்கும் நிலையை குறிப்பிடுவதாகும். திருப்புத்தூரில் உறையும் புனிதனை, பூவணத்தில் இருக்கும் போரிடும் காளை போன்றவனை, அனைத்து உயிர்களுக்கும் உயிராக இருக்கும் மிழலைத் தலத்து இறைவனை, வேள்விக்குடி வேதியனை, வைதீக நெறியிலிருந்து வழுவிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்தவனை, பொதிகையில் உறையும் புராணனை, பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருத்துவனாக மாத்தூர் தலத்தில் உறைபவனை, அடியேன் எனது மனதினில் நிலையாக நிறுத்தியுள்ளேன் என்று அப்பர் பிரான் மிகவும் பெருமிதத்துடன் சொல்லும் பாடல்.
புத்தூர் உறையும் புனிதனைப் பூவணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன்று எரித்தானைப் பொதியின் மேய புராணனை
வைத்தேன் எந்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே
பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.88.1) அப்பர் பிரான், பெருமானை ஆதி புராணன் என்று குறிப்பிடுகின்றார். ஆதி புராணன் என்பது இந்த தலத்து பெருமானின் திருநாமம். இந்த பதிகத்தின் முதல் மூன்று பாடல்களில் இந்த திருநாமம் குறிப்பிடப் படுகின்றது. மாலினை= மயக்கத்தை; மால் உற=திருமால் அடையும் வண்ணம்; பண்பு=அடுத்தவருக்கு தீங்கு செய்யாத பண்பு; ஆலன்=ஆல மரத்தின் நிழலில் அமர்ந்தவன்; புகலன் என்ற சொல் போலன் என்று எதுகை கருதி திரிந்தது. புகலன்=வெற்றி கொண்டவன்; ஆலன் அருமையான சொல்லாட்சி. பெருமானின் திருவடியைத் தேடிச் சென்ற திருமால், திருவடியினைக் காண முடியாமல் மயக்கம் அடையும் வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக நின்றவன் சிவபெருமான்; அவன் மலைமகளாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் கொண்டுள்ளான்; தன்னிடம் சரண் அடைந்த பாலின் நிறத்தில் அமைந்த பிறைச் சந்திரனை, தனது சடையில் ஏற்றுக் கொண்டு தக்கனது சாபத்தால் அழிந்து விடாத வண்ணம் சந்திரனை காப்பாற்றியவன் சிவபெருமான். அடுத்தவருக்கு தீங்கு செய்யாமல் வாழ்வதே சிறந்த பண்பு என்பதை அறியாமல் வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து வெற்றி கொண்டவன் சிவபெருமான். போர்க் குணம் கொண்டுள்ள இடபத்தினைத் தனது வாகனமாக உடைய பெருமான், கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் அறம் உரைத்தவன் ஆவான். இத்தகைய பண்புகள் உடைய பெருமான் பூந்துருத்தி தலத்தில் மிகவும் மகிழ்ந்து ஆதிபுராணன் என்ற நாமத்துடன் உறைகின்றான். அவனது திருவடிகளை நாம் போற்றுகின்றோம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடைய
பாலனைப் பால்மதி சூடியைப் பண்பு உணரார் மதில் மேல்
போலனைப் போர்விடை ஏறியைப் பூந்துருத்தி மகிழும்
ஆலனை ஆதி புராணனை நாம் அடி போற்றுவதே
இதே பதிகத்தின் இரண்டாவது பாடலிலும் (4.88.2) அப்பர் பிரான் பெருமானை ஆதி புராணன் என்று அழைக்கின்றார். மறி=மான் கன்று; பொறி=புள்ளிகள்; அரவம்=பாம்பு; குறி=அடையாளம்; மாமலை=சிறந்த இமயமலை; வடமொழியில் பர்வதம் என்றால் மலை என்று பொருள். இமயமலையில் வளர்ந்த அன்னையை, பர்வதவர்த்தனி என்றும் பார்வதி என்றும் அழைக்கின்றனர். இந்த பாடலில் மாமலை மங்கை என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். பல திருமுறை பாடல்கள் மலைமங்கை என்றும் மலைமகள் என்றும் தேவியை குறிப்பிடுகின்றன. மலையில் வளர்ந்த மங்கை இறைவனின் காதலியாக மாறியதை உணர்த்தும் வண்ணம் மலைவளர் காதலி என்று பாடல் தோறும் குறிப்பிட்டு, தாயுமானவர் மலைவளர் காதலி என்ற பதிகத்தை, இராமேச்சரம் தலத்து இறைவி மீது பாடியுள்ளார். தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மான்கன்றின் முரட்டுத் தன்மையை மாற்றி தனது கையினில் ஏந்தியவனும், மழுவாட் படையினை உடையவனும், சிறப்பு வாய்ந்த இமயமலைச் சாரலில் வளர்ந்த மங்கை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டு அத்தகைய உருவத்தையே தனக்கு சிறந்த அடையாளமாக கொண்டவனும், இத்தகைய குணத்தினை உடையவன் என்று எவரும் அறிந்து கொண்டு சுட்டிக் காட்டி கூற முடியாத வண்ணம் உள்ளவனும், புள்ளிகள் உடையதும் கொலைத் தொழிலினைக் கொண்டுள்ளதும் ஆகிய பாம்பினைத் தனது உடலில் பூண்டுள்ளவனும். ஞான வடிவினனாக உள்ளவனும் ஆகிய பெருமான் பூந்துருத்தி தலத்தில் மிகவும் மகிழ்ந்து ஆதிபுராணன் என்ற நாமத்துடன் உறைகின்றான். அவனது திருவடிகளை நாம் போற்றுகின்றோம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மறி உடையான் மழுவாளினன் மாமலை மங்கை ஓர்பால்
குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன்
பொறியுடை வாளரவத்தவன் பூந்துருத்தி உறையும்
அறிவுடை ஆதி புராணனை நாம் அடி போற்றுவதே
இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலும் பெருமானை ஆதி புராணன் என்று குறிப்பிடுகின்றது. மறுத்தவர்=வேத நெறியினை மறுத்து புத்த சமயத்தை பின்பற்றிய திரிபுரத்து அரக்கர்கள்; வேதநெறியினை மறுத்து புத்த சமயக் கொள்கைகளை பின்பற்றிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் அழியும் வண்ணம் கொடிய வில்லினில் ஓர் அம்பினைக் கோத்து அழித்தவனும், ஆல மரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கியவனும், ஆலால விடத்தினை உண்டு அந்த விடம் வயிற்றினில் செல்லாத வண்ணம் கழுத்தினில் அடக்கியவனும், பூதப் படையினை உடையவனும், சிவந்த நிறத்தில் திருமேனியை உடையவனும் ஆகிய பெருமான் பூந்துருத்தி தலத்தில் மிகவும் மகிழ்ந்து ஆதிபுராணன் என்ற நாமத்துடன் உறைகின்றான். அவனது திருவடிகளை நான் போற்றுகின்றேன் என்று அப்பர் பிரான் சிவபெருமானை போற்றும் பாடல்.
மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெஞ்சிலை கோத்து ஓரம்பால்
அறுத்தனை ஆலதன் கீழனை ஆல்விடம் உண்டு அதனைப்
பொறுத்தனைப் பூதப்படையனைப் பூந்துருத்தி உறையும்
நிறத்தனை ஆதி புராணனை யான் அடி போற்றுவதே
திருக்கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.93.1) அப்பர் பிரான் பெருமானை ஆதிபுராணன் என்று அழைக்கின்றார். தானவர் (முதலடி)=வித்தியாதரர்கள்: தகைமை=தன்மை; வாழ்நர் என்ற சொல்லின் திரிபே வாணர் என்பதாகும்; அண்டவாணர்=அனைத்து அண்டங்களிலும் வாழ்பவர்; இரண்டாவது அடியில் உள்ள தானவர் என்ற சொல்லுக்கு இரண்டு விதமாக உரையாசிரியர்கள் பொருள் கொள்கின்றார்கள். தானம் என்ற சொல்லுக்கு இருப்பிடம் என்று பொருள் கொண்டு, சத்திய லோகத்தையும் வைகுந்தத்தையும் இருப்பிடமாகக் கொண்ட பிரமன் திருமால் என்பது ஒரு பொருள். தான் அவர் என்று தானவர் சொல்லினைப் பிரித்து, தான் பிரமன் மால் அவர் அறியாத தகைமையினான் என்று சொற்களை மாற்றியமைத்து சிலர் பொருள் விளக்கம் அளித்துள்ளனர். வானத்தை இடமாகக் கொண்ட தேவர்கள் என்று உணர்த்தும் விதமாக வானவர் என்று முதல் அடியில் கூறியிருப்பதால், இரண்டாவது அடியில் வரும் சொல்லும், இருப்பிடங்களை குறிப்பிடுவதாக கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. ஆதிபுராணன் என்பது அருகிலுள்ள பூந்துருத்தி தலத்தில் உறையும் பெருமானின் திருநாமம். தேவர்களும் வித்தியாதரர்களும் தினமும் பூக்களைக் கொண்டு வந்து இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து தங்களது கோரிக்கைகளை மிகவும் பணிவுடன் கூறுகின்றனர். இவ்வாறு வழிபடப்படும் இறைவன் சத்திய லோகத்தையும் வைகுந்தத்தையும் தங்களது இருப்பிடங்களாகக் கொண்ட பிரமனும் திருமாலும் அறிய முடியாத தன்மையினான் ஆவான். அவன் அனைத்து உயிர்களுக்கும் உலகப் பொருட்களுக்கும் முன்னமே இருந்தவன் ஆவான். ஆனாலும் எளியவனாக, தனது அடியானாக விளங்கிய அர்ஜுனனை காக்கும் பொருட்டு, வேடுவனாக கானகத்தில் பன்றியின் பின் ஓடி, அவனது உயிரினைக் காப்பாற்றிய எளியவன் ஆவான். இத்தகைய தன்மைகள் வாய்ந்த இறைவனை, உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும் தொழுகின்றார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித்
தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான்
ஆனவன் ஆதி புராணன் அன்று ஓடிய பன்றி எய்த
கானவனைக் கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே
திருக்கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.38.8) அப்பர் பிரான் பெருமானை ஆதி புராணர் என்று குறிப்பிடுகின்றார். மரவு=மராமரம்; பெருமான்=தலைவன்; பரவுதல்=புகழ்ந்து பேசுதல்; பாம்பினைத் தனது கையில் கங்கணமாக உடைய பெருமான், அனைத்து உயிர்களுக்கும் பழமையானவர்; மராமரங்கள் நிறைந்த திருக்கடவூர் மயானம் தலத்தில் உறையும் இறைவனாகிய அவர், தன்னைப் புகழ்ந்து பேசும் அடியார்கள் மற்றும் புகழ்ந்து பாடல்கள் பாடும் அடியார்களின் துன்பங்களைத் தீர்ப்பார்; அத்தகைய அடியார்களை ஆட்கொண்டு, அவர்கள் செய்யும் திருப்பணிகளை உவந்து ஏற்றுக் கொள்வார். அவர் பிரமன் திருமால் ஆகியோருக்கும் பெரியவராக, அவர்களின் தலைவனாக விளங்குகின்றார். அவரது திருநாமம் பெருமான் அடிகள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அரவு கையினர் ஆதி புராணனார்
மரவு சேர் கடவூரின் மயானத்தார்
பரவுவார் இடர் தீர்ப்பார் பணி கொள்வர்
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே
குரக்குக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.75.8) அப்பர் பிரான் பெருமானை ஆதி புராணனார் என்று குறிப்பிடுகின்றார். நக்கன்=கோவண ஆடை மட்டும் அணிந்தவன்; செக்கர்=செவ்வானம்; அக்கு அரையர்=அக்கு மணியை இடுப்பினில் அணிந்தவர்; அக்கு என்பது எலும்பு மாலை மற்றும் உருத்திராக்கம் ஆகிய இரண்டையும் குறிக்கும். பெருமான் இரண்டையும் அணிகின்றார் என்று திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன.
செக்கர் அங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்
அக்கு அரையர் எம் ஆதி புராணனார்
கொக்கினம் வயல் சேரும் குரக்குக்கா
நக்கனைத் தொழ நம்வினை நாசமே
நாகைக்காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.83.6) அப்பர் பிரான் பெருமானை ஆதிபுராணன் என்று குறிப்பிடுகின்றார். கலங்கள்=கப்பல்கள்; திருமறைக்காடு தலத்தின் பாடல்களிலும் அப்பர் பிரான் கலங்கள் சூழ்ந்த கடற்கரை என்று குறிப்பிடுகின்றார். நாகை மற்றும் மறைக்காடு தலங்கள் கடல் வாணிகத்தால் சிறப்பு வாய்ந்த தலங்களாக தேவார முதலிகள் காலத்தில் இருந்தமை இத்தகைய குறிப்புகள் மூலம் நமக்கு தெரிய வருகின்றது. விலங்கல்=மலை; விலங்கல் மெல்லியல் என்ற தொடர் மூலம் மலைமகளாக வளர்ந்த தேவி, பெண்மைக்குரிய மென்மையான உணர்வுகளை உடையவராக இருந்தார் என்று அப்பர் பிரான் நயமாக கூறுகின்றார். அலங்கல்=மாலை; ஆதிபுராணர் என்பதும் தலத்து பெருமானின் திருநாமங்களில் ஒன்றாகும். மாலைகள் சேரும் சடையினை உடையவனும், உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றிய பழமை வாய்ந்தவனும், கரடு முரடான மலையினில் வளர்ந்த போதிலும் பெண்மைக்குரிய நளினங்களுடன் விளங்கிய தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக விரும்பி ஏற்றவனும், கப்பல்கள் நிறைந்த கடலினைக் கொண்ட நாகை தலத்தில் காரோணனாக உறைபவனும் ஆகிய பெருமானை வலம் வந்து வணங்கும் அடியார்களின் வினைகள் அனைத்தும் மாய்ந்துவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அலங்கல் சேர் சடை ஆதி புராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர் கடல் நாகைக் காரோணனை
வலம் கொள்வார் வினையாயின மாயுமே
காசனைக் கனலை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (5.93.2) அப்பர் பிரான், பெருமானை புராணன் என்று குறிப்பிடுகின்றார். புந்தி=அறிவு; சந்தி என்பது இங்கே முன்னிரவும் பின்னிரவும் சந்திக்கின்ற நள்ளிரவை குறிப்பிடுகின்றது. நள்ளிரவு என்பது இங்கே இருளில் மூழ்கிக் கிடக்கும் ஊழிக் காலத்தை குறிக்கின்றது. முற்றிலும் இருள் சூழ்ந்த நிலையில் நடனமாடுவதற்கு தனி திறமை வேண்டும் என்பதால், அத்தகைய திறமை உடைய பெருமானை சதுரன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இறைவன் தானே வந்து தனது உள்ளத்தில் புகுந்து ஆட்கொண்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார். தனது இளைய வயதினில் பெற்றோர்களை பறிகொடுத்த நிலையில் மிகவும் திகைப்பு அடைந்திருந்த மருள் நீக்கியார் (அப்பர் பிரானின் இயற்பெயர்) என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தானே சமண மதத்தினைச் சார்ந்தார். மீண்டும் அவர் சைவ சமயம் திரும்பியது, திலகவதியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபெருமானின் திருவருளால் தானே. திலகவதியாரின் வேண்டுகோளுக்கு இணங்கிய பெருமான், அவரது கனவில் தோன்றி, முன்னமே அவன் நம்மை அடைய விரும்பினான், ஆதலின் இப்போது சூலை கொடுத்து ஆட்கொள்வோம் என்று சொல்லிய வண்ணம் செய்த பெருமான் அல்லவா. இவ்வாறு பெருமான் தானே முன் வந்து, தன்னை ஆட்கொண்ட நிகழ்ச்சியை அப்பர் பிரான் நெகிழ்ந்த மனத்துடன் நினைவு கூர்ந்து குறிப்பிடுகின்றார். அடியேனது அறிவுக்கு தூண்டுகோலாக அமையும் விளக்கு போன்றவரும், உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அனைத்து பொருட்களுக்கும் பழமையானவனும், பிரளய காலத்து இருளிலிலும் நடமாட வல்ல திறமையை உடையவனும், அந்திச் செவ்வானத்து நிறத்தினில் சிவந்த திருமேனியை உடையவனும், தீப்பிழம்பினை தனது கையில் ஏந்தி நடமாடும் தலைவனும் ஆகிய இறைவன், தானே முன் வந்து எனது உள்ளத்தில் புகுந்து என்னை ஆட்கொண்டான். அவனை எவ்வாறு இந்நாள் மறக்க இயலும் என்று அப்பர் பிரான் தனது நிலைபாட்டினை உணர்த்தும் பாடல்.
புந்திக்கு விளக்காய புராணனைச்
சந்திக் கண் நடமாடும் சதுரனை
அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை
வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே
சித்தக் குறுந்தொகை என்று அழைக்கப்படும் பதிகத்தின் பாடலில் (5.97.14) அப்பர் பிரான் பெருமானை புராணன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் மற்றும் கடைப்பாடல் தவிர்த்த மற்றைய பாடல்கள், பதின்மூன்று உயிரெழுத்துக்கள் மற்றும் பதினெட்டு மெய்யெழுத்துகளைச் சார்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் அகர வரிசையில் முதல் எழுத்தாக வரும் வண்ணம் அமைந்துள்ளன. அக்கு=சங்குமணி; எலும்பு என்ற பொருளும் பொருந்தும்; நீர்கள் என்று இழிவுக் குறிப்பு தோன்ற கள் விகுதி சேர்க்கப் பட்டுள்ளது. இரண்டாவது பாடலிலிருந்து பதின்மூன்றாம் பாடல் வரை, அ முதல் ஔ வரை உள்ள உயிரெழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்ட பாடல்களை இயற்றிய அப்பர் பிரான், ஆயுத எழுத்தாகிய ஃ என்பதை முதல் எழுத்தாக கொள்ள முடியாது என்பதால், அந்த எழுத்தினை உணர்த்தும் சொல்லினை நயமாக அப்பர் பிரான் இங்கே பயன்படுத்தியுள்ளார். ஆத்திச்சூடியிலும் அஃகம் சுருக்கேல் என்று கூறப்படுகின்றது. அஃகம் என்றால் எடை மற்றும் அளவு என்று பொருள். வணிகர்களுக்கு ஔவை கூறும் அறிவுரை, (எடையையும் அளவினையும் குறைக்காமல் வாணிபம் செய்ய வேண்டும்) இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தின் பல பாடல்களில் (நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில்) பெருமானின் பண்புகளையோ தன்மையையோ செயல்களையோ ஏளனம் செய்யாது தேவர்கள் பெருமானை போற்றுவதை அப்பர் பிரான் குறிப்பிட்டார். தேவர்கள் பெருமானின் தன்மையை சரியாக புரிந்து கொண்டது போன்று நாமும் புரிந்து கொண்டு, அவனை ஏளனம் செய்யாமல் வணங்க வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அதற்கு மாறாக ஏளனம் செய்தால், நாம் நரகத்தில் தள்ளப் படுவோம் என்ற எச்சரிக்கையும் இங்கே விடுக்கப் படுகின்றது. எலும்பு மாலையை பூண்டவனாக ஆமை ஓட்டினை அணிந்தவனாக. கையினில் தீச்சுடரினை ஏந்தியவனாக, பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்பவனாக இருக்கும் பெருமானை, அவனது தன்மையை புரிந்து கொள்ளாமல் நீங்கள் ஏளனம் செய்து சிரித்தால் நீங்கள் நரகம் புகுவது நிச்சயம். எனவே நீங்கள், அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றியவனும் கூட்டமாக தேவர்களால் தொழப்படுபவனும் ஆகிய இறைவனைப் பழிப்பதை ஒழிப்பீர்களாக. தேவர்களை பின்பற்றி, ஏளனத்தை தவிர்த்து, இறைவனின் செய்கைகள் உணர்த்தும் பின்னணியையும் பெருமானின் பெருமைகளையும் ஒழுங்காக புரிந்து கொண்டு, அவனைப் பணிந்து வணங்கி வழிபடுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல்
புக்கு பல் பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவரால் தொழுவானையே
திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.8.3) அப்பர் பிரான், பெருமானை புராணன் என்று அழைக்கின்றார். நாவாய்=தோணி, கப்பல்; கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு என்று பெரியோர்கள் சொல்லிய வண்ணம், ஞானம் என்பது பெரிய கடல். அதனை முற்றும் உணர்ந்து கரையினை அடைவது என்பது மிகவும் அரிது. ஆனால் இறைவனின் அருளினால் ஞானத்தை அடைய முடியும் என்பதை பல அருளாளர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகின்றது. முற்றிலும் உணர்ந்த இறைவன், அந்த ஞானப் பெருங்கடலைக் கடந்த தோணியாக விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. சாரணன்=எங்கும் இயங்குபவன்; தக்கோர்= மெய்யுணர்வு உடையவர்கள்; மெய்யுணர்வு உடையவர்களே இறைவன் முழுமுதற் பொருள் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்பதால், இவ்வாறு அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இதன் மூலம் மெய்யுணர்வு இன்றி மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மாந்தர்களால், பெருமானின் முழுமுதல் தன்மையை புரிந்து கொள்ள முடியாது என்பதையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். காக்கும் தொழிலைச் செய்யும் நாராயணனாகவும், படைக்கும் தொழிலைச் செய்யும் பிரமனாகவும், நான்கு வேதங்களையும் ஓதுபவனாகவும், ஞானத்தின் நிறைவாக இருப்பவனும், நற்செயல்களின் வடிவமாக இருப்பவனும், ஞானப் பெருங்கடலின் எல்லையை அடைவதற்கு உதவும் தோணியாக இருப்பவனும், அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றிய பழையவனாக இருப்பவனும், முறுக்குண்ட தனது சடையினில் கங்கை நதியினை ஏற்றவனும், தூய்மையானவனாக இருப்பவனும், எங்கும் இயங்குபவனாக இருந்து அனைத்தும் அறியும் ஆற்றல் படைத்தவனும், சந்திரன் மற்றும் சூரியனுடன் உடனிருந்து செயல் படுபவனும், தன்னையே தனக்கு உவமையாக சொல்லும் வண்ணம் தனித்துவம் படைத்தவனும், மெய்யுணர்வு படைத்த சான்றோர்களுக்கு முழுமுதற் பொருளாக இருப்பவனும், திருக்காளத்தி தலத்தில் காணப்படும் கணநாதன் என்று அழைக்கப் படுபவனும் ஆகிய இறைவன் எனது மனக் கண்களில் நிறைந்துள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நாரணன் காண் நான்முகன் காண் நால் வேதன் காண் ஞானப் பெருங்கடற்கோர் நாவாயன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரிசடை மேல் புனலேற்ற புனிதன் தான் காண்
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மைக்கண் தானே காண் தக்கோர்கெல்லாம்
காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண்ணுளானே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.16.3) அப்பர் பிரான் பெருமானை புராணர் என்று குறிப்பிடுகின்றார். ஏதங்கள்=துன்பங்கள். தங்களது துன்பங்கள் இறைவனால் நீக்கப் படுவதால் அடியார்கள் இன்பம் அடைவதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். அடியார்கள், பெருமானின் திருவடிகளைத் தொழுது ஏத்தும் சிறப்பு பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. வேதங்களையும் வேத மந்திரங்களுடன் பொருந்திய செயல்களாகிய வேள்விகளை படைத்தவரும், விண்ணுலகமாகவும் மற்றும் மண்ணுலகமாகவும் இருப்பவரும், ஆகாயம் காற்று தீ நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து பூதங்களாக இருப்பவரும், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் பழையவராக இருப்பவரும், தன்னைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் உள்ளத்தில் ஞான உருவமாக இருப்பவரும், பலராலும் தனது திருவடிகள் வணங்கப் பெறுபவரும், அடியார்களின் துன்பங்களைக் களைந்து அவர்களை இன்பமுறச் செய்பவரும் ஆகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்
பூதங்களாய புராணர் போலும் புகழ வளரொளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப் படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும்
ஏதங்களான கடிவார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.30.9) அப்பர் பிரான் பெருமானை புராணன் என்று அழைக்கின்றார். விண்டவர்=நீங்கியவர்; வேலை=கடல்; புத்தேள்=தேவர்; சிறந்த வேத நெறியினை விட்டு நீங்கிய திரிபுரத்து அரக்கர்கள் மூவரின் பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினால் எரித்தவனும், கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினைத் தேக்கியதால் கருமை நிறத்தினை அடைந்த கழுத்தினை உடையவனும்., சூரிய சந்திர மண்டலங்களில் ஒளி திகழ்வதற்கு காரணமானவனும், வாய்மூர் மறைக்காடு ஆகிய தலங்களில் பொருந்தி உறைபவனும், தாமரை மலரை ஒத்த கண்களை உடைய திருமாலும் தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள தேவனாகிய பிரமனும் காண்பதற்கு அரியவனாக விளங்கியவனும், அனைத்து உயிர்களுக்கும் பழமையானவனும் ஆகிய பெருமானே, தெளிந்த நீரலைகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருவாரூர் நகரத்து திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் எமது செல்வன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை
விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தான் காண்
மண்டலத்தில் ஒளிவளர விளங்கினான்காண் வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண்
புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப் புத்தேளும் காண்பரிய புராணன் தான் காண்
தெண்டிரை நீர் வயல் புடைசூழ் திருவாரூரில் திருமூலட்டானத்து எம் செல்வன் தானே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.37.2) அப்பர் பிரான் பெருமானை புராணனே என்று தான் அழைத்ததாக கூறுகின்றார். தீவாயின் நீறா என்று மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும்; ஏ=அம்பு; ஏவார்=அம்பு பூட்டிய; அம்பு பூட்டப் படினும் அதனை பயன்படுத்தாமையால் அம்பு பூட்டிய நிலையில் வில்லினை ஏந்தியவன் என்று உணர்த்துகின்றார். சிவபெருமானின் வில்லுக்கு பினாகம் என்று பெயர். சிவபெருமானை பினாகபாணி என்றும் அழைப்பார்கள். இடும்பைக் கடல் என்பதற்கு, அப்பர் பிரான் மேற்கொண்ட கயிலை பயணத்தை தொடர முடியாமல் தவித்த நிலை என்று பொருள் கொண்டு சிவக்கவிமணி அவர்கள் விளக்கம் அளிக்கின்றார். தன் பால் கருணை கொண்டு முனிவராக வந்து உண்மை நிலையினை உணர்த்தி மேற்கொண்டு உடல் பழுது படாத வண்ணம் காத்தவரும், கண்ணினால் தான் கயிலைக் காட்சி காணவேண்டும் என்று விண்ணப்பம் வைத்த போது, அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு கயிலைக் காட்சியைக் காட்டியவரும் ஆகிய பெருமானின் கருணையை நினைத்து மனம் நெகிழ்ந்து பாடிய பாடல் இது. உடல் முழுவதும் தசைகள் தேய்ந்து சிதற, ஒன்றுக்கொன்று வரிந்து கட்டப்பட்ட எலும்புகளின் கட்டு முரிந்த நிலையிலும், கயிலை மலை சென்றடையும் தனது குறிக்கோளில் மனம் தளராதவராக அப்பர் பிரான், நிலத்தில் உருண்டும் புரண்டும் சென்றார். ஆயினும் ஒரு நிலையில் நிலத்தில் உந்திப் புரண்டு செல்வதும் முடியாத நிலையில் ஏதும் செய்ய இயலாது அப்பர் பிரான் ஓய்வு மேற்கொண்டார். அத்தகைய தருணத்தில் ஒரு முனிவரின் வடிவத்தில் தோன்றிய பெருமான், பயணத்தைத் தொடராது மீண்டு நீர் வந்த வழியினில் திரும்பிச் செல்வீராக என்று அப்பர் பிரானிடம் கூறினார். அந்த முனிவருக்கு, ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என்று அப்பர் பிரான் பதிலளித்தார். அப்பர் பிரானின் மன உறுதியைக் கண்ட பெருமான், நாவுக்கரசனே எழுந்திரீர் என்று ஆகாயத்திலிருந்து குரல் கொடுக்க, தனது உடல் முழுவதும் பழுதுகள் நீங்கி பொலிவுற்ற நிலையில் அப்பர் பிரான் எழுந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார். முப்பரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளும் தீயின் வாய்ப்பட்டு சாம்பலாக மாறும் வண்ணம் நோக்கியவனே, அடியார்களின் மனதினை தூய்மையாக்கும் புண்ணிய தீர்த்தமே, உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் பொருட்களுக்கும் முன்னமே தோன்றி பழமையானவனாக விளங்குபவனே, மூப்பு அடையாத உடலினை உடையவனே, பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனே, அனைத்து உயிர்களுக்கும் தலைவனே, மூன்று கண்களை உடையவனே, திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்ற போது சிரித்தே மூன்று கோட்டைகளையும் எரித்தமையால் அம்பு பூட்டிய வில்லினை பயன்படுத்தாமல் நின்றவனே, பிறவி என்னும் துயரக் கடலில் ஆழ்ந்து வருந்தும் அடியார்கள் பால் இரக்கம் கொண்டு, பிறவிக் கடலில் அவர்கள் அழுந்தாமல் அவர்களை கரையேற்றி அருள் புரியும் தலைவனே, திருவையாறு தலத்தில் உறைபவனே என்று உன்னை பலவாறும் வாய்விட்டு அழைத்து அடியேன் மனம் உருகுகின்றேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே
மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே
ஏவார் சிலையானே என்றேன் நானே இடும்பைக் கடல் நின்றும் ஏற வாங்கி
ஆவா என்றருள் புரியும் ஐயாறு அன்னே என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே
கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.3) அப்பர் பிரான் பெருமானை புராணன் என்று குறிப்பிடுகின்றார். தாக்குதல்=எதிர்ப்படுதல்; பல உருவங்களை எடுக்க வல்ல பெருமான் விரும்பினால் தான் நாம் அவரது உருவத்தை காண முடியும்; பெருமான் விரும்பாவிடில் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவரது உருவத்தை காண முடியாது., இந்த செய்தியைத் தான் அப்பர் பிரான் இங்கே தன்னுருவம் யாவருக்கும் தாக்காதான் என்று குரிப்ப்பிடுகின்றார். தன்னுருவம் யாவர்க்கும் தாக்காதான் என்ற தொடருக்கு ஊனக் கண்ணினால் காண முடியாதவன் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். தக்கார்=தகுதி வாய்ந்த அடியார்கள்; தான் விரும்பாதவர்கள் தனது உருவம் காண முடியாத நிலையில் உள்ள பெருமான் என்று கூறும் அப்பர் பிரான், தான் விரும்பும் அடியார்களுக்கு எவ்வகையில் பெருமான் காட்சி அளிப்பார் என்பதையும் இந்த பாடலில் கூறுகின்றார். பொன்னார் மேனியனாக பெருமான் தனது அடியார்களுக்கு காட்சியளிக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தான் விரும்பாத எவர்க்கும் தனது உருவம் எதிர்ப்படாதவாறு மறைந்து இருப்பவனும், தாழ்ந்த சடையை உடையவனும் ஆகிய இறைவன், தகுதி வாய்ந்த அடியார்கள் காணும் வண்ணம், பொன்னுருவ மேனியனாகவும், உயர்ந்த சோதியாகவும், கங்கை நதியைத் தனது சடையில் வைத்தவனாகவும், மிகவும் பழையவனாகவும், ஐந்து பூதங்களில் கலந்து இருப்பவனாகவும் காட்சி அளிக்கின்றான். மின்னல் போன்று நுண்ணிய இடையை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும், தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலினை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனும், என்றும் நிலையான உருவமுடையவனாக சிறப்புடைய வேதங்களை ஓதியவனாகவும் இருப்பவன் சிவபெருமான். அத்தகைய பெருமான், பெரிய கடல் சூழ்ந்த கோகர்ணம் தலத்தில் மிகுந்த விருப்பமுடன் எழுந்தருளியுள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தன்னுருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ்சடை எம்பெருமான் காண் தக்கார்க்குள்ள
பொன்னுருவச் சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண்
மின்னுருவ நுண்ணிடையாள் பாகத்தான்காண் வேழத்தின் உரிவெருவப் போர்த்தான் தான்காண்
மன்னுருவாய் மாமறைகள் ஓதினான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.55.8) அப்பர் பிரான் பெருமானை ஆதிபுராணன் என்று அழைக்கின்றார். உயிர்த்தல்=மூச்சு விடுதல்; கமை=பொறுமை; உயிர் உடலுடன் கூடி இருக்கும் வரை, கண்ணிமைத்தலும், மூச்சு விடுதலும் நிகழும். உயிர் நீத்த பின்னர் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறாது. சிவபெருமானின் உடலில் உயிர் வந்து சேர்வதும் இல்லை; அவரது உடலை விட்டு உயிர் பிரிவதும் இல்லை; எனவே இமைத்தலும் மூச்சு விடுதலும் அவர் உடலில் நடப்பதில்லை. ஊழி என்ற சொல் ஊழிக் காலத்திற்கு பின்னர் புதியதாக பெருமானால் தோற்றுவிக்கப்படும் உலகங்களைக் குறிக்கும். மற்றவர்கள் போல் அல்லாமல் கண்கள் இமைக்காமலும், மூச்சு இழுப்பதும் விடாமாலும் இருப்பவனே, எனது உள்ளத்திலிருந்து நீங்காமல் இருப்பவனே, உமை அம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து இருப்பவனே, ஊழிக் காலத்திற்கு பின்னர் தோன்றும் ஏழு உலகங்களாக இருப்பவனே, உடலுக்குப் பொருந்தாத நஞ்சினை அருந்தியும் உயிருடன் இருப்பவனே, அனைவருக்கும் மூத்தவனாய் முழுமுதல் கடவுளாகத் திகழ்பவனே, பொறுமையாக செயல்படும் ஞான ஒளியே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன் என்று அப்பர் பிரான் பெருமானை வணங்கும் பாடல்.
இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழான ஒருவா போற்றி
அமையா வரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (6.56.7) அப்பர் பிரான் பெருமானை ஆதி புராணன் என்று அழைக்கின்றார். தொழில்=செய்கை; தன்னை வணங்கும் அடியார்களின் தன்மையை உணர்ந்து, அந்த தன்மைக்கு ஏற்ப அவர்களை ஆட்கொள்ளும் வல்லமை படைத்த இறைவனின் தன்மை தொழில் நோக்கி ஆளும் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. வஞ்சனை உடைய மனத்துடன் தன்னைத் தொழும் அடியார்களை இனம் கண்டு கொண்டு நாணி நிற்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் கூறுகின்றார். ஏழு உலகங்களையும் கடந்தவனே, உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியவனே, உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பவனே, பண்டைய பல பிறவிகளில் ஈட்டிய வினைகளை முற்றிலும் அறுக்கும் வல்லமை வாய்ந்தவனே, மண்ணுலகம் மற்றும் விண்ணுலகத்தில் இருப்பவர்களால் புகழ்ந்து வணங்கப் படுபவனே, அடியார்கள் புகழ்ந்து பாடும் திருத்தலங்களில் உறைபவனே, மனிதர்கள் செய்யும் வழிபாடுகளின் உண்மைத் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு அருள் புரியும் பண்பினை உடையவனே, உட்கொண்ட கொடிய நஞ்சு வயிற்றுக்கு செல்லாமல் கழுத்திலே தேக்கிக் கொள்ளும் வல்லமை படைத்தவனே, கயிலை மலையினை இருப்பிடமாக உடையவனே, உன்னை பலமுறையும் நான் போற்றுகின்றேன்
அண்டம் ஏழு அன்று கடந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப் படுவாய் போற்றி
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி
கண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி
வெண்ணியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.59.2) அப்பர் பிரான், பெருமானை புராணன் என்று குறிப்பிடுகின்றார். பொருப்பு=மலை, அரையன்=தலைவன், மன்னன்; மருப்பு= யானைத் தந்தம் போன்று வெண்மை நிறத்தில் காணப்படும் பிறைச் சந்திரன், தக்கனது சாபத்தால் தனது கலைகள் அழிந்து தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் இருந்த தருணத்தில், சந்திரன் பிரமனை அணுகி சாபத்தால் தனக்கு ஏற்பட்ட நிலைக்கு மாற்றத்தை அருளுமாறு வேண்டினான். அப்போது பிரமதேவர், உனது நிலையினை மாற்றி, உன்னை முன்போல் வளரச் செய்யும் வல்லமை சிவபெருமான் ஒருவருக்கே உண்டு என்பதால் நீ அவரை சரணடைந்து பயன் பெறுவாயாக என்று அறிவுரை கூற, சந்திரனும் பெருமானை சரணடைந்து, தக்கனின் சாபத்திலிருந்து விடுதலை அடைந்தான். இவ்வாறு, எவராலும் மாற்று அளிக்க முடியாத சாபத்தை நீக்கியவரும், நெற்றியில் ஒற்றைக் கண்ணினை உடையவராகவும், திருநீறு அணிந்தவராகவும் காட்சி தரும் இறைவனின் மாறுபட்ட தன்மை இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. வளைகுளம், தொண்டை நாட்டில் உள்ள ஒரு வைப்புத் தலம். இந்த பதிகத்தின் முதல் பாடலிலும் அப்பர் பிரான் பெருமானை புராணனார் என்று குறிப்பிடுகின்றார். நெருப்புச் சுடர் போன்று பிரகாசிக்கும் தனது திருமேனியின் மேல் திருநீறு அணிந்தவனும், தனது நெற்றியில் நிறைவாக விளங்கும் கண்ணினை உடையவனும், மலையரசன் இமவானின் மகளாகிய பார்வதி தேவியை தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றவனும், பூந்துருத்தி தலத்தில் உறைபவனும், அனைத்து உயிர்களுக்கும் முன்னமே இருப்பவனும், யானைத் தந்தம் போன்று வெண்மை நிறத்தில் வளைந்து காணப்பட்ட ஒற்றை பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்று சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்தவனும், வளைகுளம், மறைக்காடு தலங்களில் நிலையாக இருப்பவனும், தன்னை விரும்பும் அடியார்களின் உள்ளத்தில் உறைபவனும் ஆகிய சிவபெருமான், மற்ற சிறு தெய்வங்களிலிருந்து மாறுபட்டு விளங்கும் சிவபெருமான், வெண்ணி என்று அழைக்கப்படும் தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக் கண் நிறைவித்தாரும்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி மேய புராணனாரும்
மருப்பனைய வெண் மதியக் கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும்
விருப்புடைய அடியவர் தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே
இதே பதிகத்தின் முதல் பாடலிலும் (6.59.1) அப்பர் பிரான், பெருமானை புராணனார் என்று குறிப்பிடுகின்றார். சிவத்தொண்டு செய்து வரும் அடியார்களுக்கு நல்ல நெறியாக, வீடுபேறு அளிப்பவனாக விளங்குபவன் பெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுவது, நமக்கு அவர் அருளிய நமச்சிவாய பதிகத்தின் பாடலை (4.11.9) நினைவூட்டுகின்றது. முதல்வனாகிய முக்கண்ணனின் நெறியே, அனைத்து நெறிகளிலும் சிறந்த நெறியாகும். சிவபெருமானின் செம்மையான நெறியை உறுதியுடன் சரணம் என்று வாழும் அடியார்களுக்கெல்லாம் மிகவும் நன்மை பயப்பதான, வீடுபேறு எனப்படும் நன்னெறியினை அளிப்பது நமச்சிவாய என்னும் மந்திரமாகும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். வெண்ணி தலத்தின் மீது அருளிய இந்த பாடலில், பெருமானின் மாறுபட்ட செயல்கள் பல குறிப்பிடப் படுகின்றன. வீடுபேறு அருளும் வல்லமை, திருநீற்றினைப் பூசிக் கொள்வது, திருமாலும் பிரமனும் காணாத வண்ணம் தீப்பிழம்பாக நின்றது, கொன்றை மலரை மாலையாக ஏற்பது, நஞ்சினை உண்டது, பறக்கும் மூன்று கோட்டைகளை எரித்தது ஆகிய செயல்களும் தன்மைகளும் பெருமானுக்கே உரித்தவை என்பதை நாம் அறிவோம். விண்டவர்=பிரிந்தவர், சிவநெறியை விட்டு பிரிந்து பகைவர்களாக மாறிய திரிபுரத்து அரக்கர்கள்; மைந்தன்=வலிமை படைத்தவன்; இறைத் தொண்டினில் ஈடுபடும் அடியார்கள் பின்பற்றக் கூடிய சிறந்த நெறியாக விளங்கும் சிவபெருமான், அடியார்கள் பற்றிக் கொள்ள உகந்த பற்றுக்கோடாக விளங்குபவன், அடியார்களுக்கு வீடுபேறு எனப்படும் மிகவும் உயர்ந்த நிலையை அளிக்க வல்லவன்; தான் ஒருவனே உலகில் நிலையானவன் என்பதையும் உலகிலுள்ள அனைத்து பொருட்களும் அனைத்து உயிர்களும் அழியக் கூடியவை என்பதையும் உணர்த்தும் வண்ணம், திருநீற்றினை பூசியவனாக அவன் காணப் படுகின்றான்; திருமாலும் பிரமனும் காண இயலாத வண்ணம் நெடிதுயர்ந்த தழற்பிழம்பாக எழுந்தவனும் பெருமானே ஆவான்; வண்டுகள் சூழும் வண்ணம் நறுமணமும் தேனும் கொண்டு திகழும் கொன்றை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிந்த பெருமான், தேவர்களை காப்பாற்றும் பொருட்டு பாற்கடலிலிருந்து திரண்டெழுந்த நஞ்சினை உண்ட வல்லவன் ஆவான்: சிவநெறியிலிருந்து மாறுபட்டு பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றினையும் எரித்தவனும் அவனே. இவ்வாறு பல பண்புகளிலும் செயல்களிலும், மற்ற தேவர்களிடமிருந்து மாறுபட்டு உள்ள பெருமான் வெண்ணி என்று அழைக்கப்படும் தலத்தில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியினாரும் தூநீறு துதைந்து இலங்கும் மார்பினாரும்
புண்டரீகத்து அயனொடுமால் காணாவண்ணம் பொங்கு தழற்பிழம்பாயபுராணனாரும்
வண்டமரும் மலர்க்கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சுண்ட மைந்தனாரும்
விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.6) அப்பர் பிரான் பெருமானை புராணன் என்று அழைக்கின்றார். விகிர்தன்=மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன்: கடை= கடை வாயில், வாயிற்படி; இந்த பாடலில் ஆகாயத்தின் பண்பு ஒலி என்பதை குறிப்பிடும் வண்ணம் விண்ணொலி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆகாயத்தின் பண்பு ஒலி எனப்படும் குணம் ஒன்று தான். காற்று ஒலி மற்றும் ஊரு ஆகிய இரண்டு பண்புகளையும், தீ ஒலி, ஊரு மற்றும் உருவம் ஆகிய மூன்று பண்புகளையும், தண்ணீர் ஒலி ஊரு உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு பண்புகளையும் நிலம் ஒலி ஊரு உருவம் சுவை மற்றும் வாசனை ஆகிய ஐந்து பண்புகளையும் உடைத்ததாக விளங்குகின்றன. புகழாகிய ஒளியை உடையவனும், திரிபுரங்களையும் எரித்த தூயவனும், பொன் நிறம் பொதிந்த மேனியினை உடையவனும், அனைத்து உயிர்களுக்கும் பழமையானவனும், ஆகாயத்தின் பண்பாகிய ஒலியாகவும் திருவிழாக் காலங்களில் எழும் ஒலியாகவும் இருப்பவனும், திருவெண்காடு தலத்தில் உறையும் விகிர்தனும், காலில் அணிந்துள்ள வீரக் கழல்களின் ஒலியும் கையில் அணிந்துள்ள வளையல்களின் ஒலியும் கலந்து ஒலிக்க பல இல்லங்களுக்கும் பிச்சை கேட்டுச் செல்பவனும், மேன்மையான ஒளியுடன் திகழ்பவனும் ஆகிய மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில், என்னை பண்டைய நாளில் ஆழ்த்திய, எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா என்று அப்பர் பிரான் தனது வருத்தத்தை தெரிவிக்கும் பாடல்.
புகழொளியை புரம் எரித்த புனிதன் தன்னைப் பொன் பொதிந்த மேனியானைப் புராணன் தன்னை
விழவொலியும் விண்ணொலியும் ஆனான் தன்னை வெண்காடு மேவிய விகிர்தன் தன்னைக்
கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக் கடைதோறும் இடுபிச்சைக்கு என்று செல்லும்
திகழொளியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
குடந்தைக் கீழ்க்கோட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.75.9) அப்பர் பிரான் பெருமானை, புராணர் என்று குறிப்பிடுகின்றார். பொங்கரவு=சினம் பொங்கும் பாம்பு; பெருமானின் திருவடிக்கு தொண்டு செய்வதற்கு தவறியவர் என்று சண்டீசரின் தந்தையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பசுக்கள் தாமே சொரிந்த பாலினைக் கொண்டு தனது மகன் பெருமானை நீராட்டுவதைக் கண்ட எச்சத்தன் தானும் அந்த இறை வழிபாட்டினால் கலந்து கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியது அவர் செய்த தவறு என்று குறிப்பிடுகின்றார். சினம் பொங்கும் பாம்பினை அணிகலனாக அணிந்தவரும், புலியின் தோலினை ஆடையாக உடுத்தவரும், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் மிகவும் பழமையானவரும், மார்பினில் வெண்மை ஒளி வீசும் பூணூலை அணிந்தவரும், புனிதராக விளங்குபவரும், சங்குகள் நிறைந்த கடலின் நீர் அண்டங்களின் எல்லையைத் தொடுமாறு தனது கைகளை வீசி சதுர நடனம் என்று அழைக்கப்பட்ட நடனத்தை மிகுந்த திறமையுடன் ஆடுபவரும், சிறந்த சைவரும், கழலும் சிலம்பும் சேர்ந்து ஒலிக்கும் பெருமானின் திருவடிக்கு ஆளாகி தனது மகன் செய்த இறை வழிபாட்டில் கலந்து கொள்ளத் தவறிய எச்சதத்தனின் மீது, அந்தணன் என்பதையும் பொருட்படுத்தாது மழுவாளினை எறிந்த சண்டீசருக்கு அப்போதே, அரவம் தவழ்ந்து கொண்டிருந்த தனது சடையிலிருந்த கொன்றை மலரினை எடுத்து சூட்டியவரும் ஆகிய இறைவன் குடந்தை கீழ்க் கோட்டம் தலத்தில் கூத்தனாக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பொங்கரவர் புலித் தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூணூல் புனிதர் போலும்
சங்கு அரவு கடல் முகடு தட்ட விட்டுச் சதுர நடம் ஆட்டுகந்த சைவர் போலும்
அங்கு அரவத் திருவடிக்கு ஆட்பிழைப்பத் தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே
கொங்கு அரவச் சடைக் கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே
இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.89.6) அப்பர் பிரான் பெருமானை புராணர் என்று அழைக்கின்றார். பார் ஊர் விடை=உலகெங்கும் திரியும் இடபம்; வேடம் பரவித் திரியும் தொண்டர் என்று சிவ வேடத்தைக் கண்டவுடன் பெருமானையே கண்டது போல் வணங்கி, சிவபெருமானை புகழ்ந்து பாடும் தொண்டர்கள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். திருநீறும் உருத்திராக்கமும் அணிந்தவர்களை கண்டால் உள்ளம் உருகும் அடியார்களின் உள்ளத்தில் இறைவன் உறைகின்றான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தனது திருவடிகளில் பொருந்திய சிலம்பினை உடையவரும், உலகெங்கும் திரிய வல்ல இடபத்தைத் தனது வாகனமாக கொண்டுள்ளவரும், பூதப் படையினை ஆட்சி செய்பவரும், மிகவும் தூயவராக மலங்களின் தாக்கம் ஏதுமின்றி இருப்பவரும், பூம்புகார் திருத்தலத்தில் பொருந்தி உறைபவரும், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கருப் பொருளாக விளங்குபவரும், சிவவேடத்தின் சின்னங்களாகிய திருநீறு, கண்டிகை, உருத்திராக்கம், சடை ஆகியவற்றை எங்கே கண்டாலும் அந்த சின்னங்களைத் தொழும் அடியார்கள் துன்பப்படாத வண்ணம் அவர்களை காப்பவரும் ஆகிய இறைவன் இன்னம்பர் திருத்தலத்தில் தான்தோன்றி ஈசனாக எழுந்தருளி உள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும்
பூதப் படையாள் புனிதர் போலும் பூம்புகலூர் மேய புராணர் போலும்
வேதப் பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவித் திரியும் தொண்டர்
ஏதப் படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே
நின்ற திருத்தாண்டகம் பதிகத்தின் பாடலில் (6.94.10) அப்பர் பிரான் பெருமானை புராணன் என்று குறிப்பிடுகின்றார். ஏலாதன=இயலாதன, பொருந்தாதன: அருக்கம்=சுருங்கிய நிலை; பூலோக புவலோக சுவலோகம்=மண்ணுலகின் மேல் அடுக்காக அமைந்த மற்ற உலகங்கள்; புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தவலோகம், மகலோகம், சத்யலோகம் மருக்கம்= பெருக்கம்; அருக்கம்=சுருக்கம்; மாபூதம்=பஞ்ச பூதங்கள் மற்றும் அவற்றின் கலவையால் ஆன மற்ற தத்துவங்கள். உயிர்களின் பால் கருணை கொண்டுள்ள சிவபெருமான், உயிர்கள் உய்யும் பொருட்டு உயிர்களின் வினைத் தொகுதியின் தகுதி பற்றி, உயிரினை தகுந்த உடலுடன் சேர்க்கின்றான். அவ்வாறு உயிர்கள் தகுந்த உடலுடன் தொடர்ந்து சேர்க்கப்படும் பொருட்டு, படைக்கும் தொழிலினை பிரமனுக்கும், காக்கும் தொழிலினை திருமாலுக்கும் ஒப்படைத்து, அவர்கள் அந்த கடமைகளைச் செய்வதற்காக, அவர்களுடன் இருந்து துணை புரியும் தன்மை, இங்கே மாலாகி நான்முகனாய் என்று கூறப்பட்டுள்ளது. உயிருடன் எப்போதும் பிணைந்திருக்கும் வினைகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், உயிர்கள் அவைகளை நீக்கிக் கொள்ளவும், இறைவன் நமக்கு அளித்துள்ள உபகரணங்கள் தத்துவங்கள் ஆகும். அவற்றுள் முதல் இருபது தத்துவங்கள், ஐம்பூதங்களும் (நிலம், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம்) அவைகளின் கலப்பினாலும் உண்டானவை. அவையாவன, ஐந்து ஞானேந்திரியங்கள் (மெய், வாய், கண், மூக்கு, செவி), ஐந்து கன்மேந்திரியங்கள் (வாய், கை, கால், எருவாய், கருவாய்) ஐந்து தன்மாத்திரைகள் — ஓசை, ஊரு (உணர்வு), ஒளி, சுவை, நாற்றம் ஆகும். இந்த தத்துவங்கள், மற்றுமுள்ள தத்துவங்களின் துணை கொண்டு, உண்மையான மெய்ப்பொருளின்இயல்பினை அறிந்து, உயிர்கள் உய்யவேண்டும் என்பதே இறைவனின் ஆசை. திருமாலாகவும், பிரமனாகவும் அவர்களுடனே இருந்து அவர்கள் செய்யும் தொழிலுக்குத் துணையாக இருப்பவன் சிவபெருமான்; அவன் பஞ்ச பூதங்கள், ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள் மற்றும் ஐந்து தன்மாத்திரைகள் ஆக இருந்து, உயிர்கள் மெய்ப்பொருளை அறியும் முயற்சியில் உயிர்களுக்கு உதவி செய்கின்றான்; அவன் அனைத்துப் பொருள்களிலும் பெரியதாய் விரிந்து காணப்படுபவன்; அனைத்துப் பொருட்களிலும் நுண்ணியதாக உள்ளவன். அவனே அனைத்துப் பொருட்களின் மகிழ்ச்சியாக காணப்படுகின்றான். எட்டுத் திசைகளையும் தாண்டி, அந்த திசைகளுக்கு எல்லையாக உள்ளவன்; உலகின் பரந்த பரப்பாக விளங்கும் அவன் பரலோகமாகவும், பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தவலோகம், மகலோகம், சத்யலோகம் ஆகிய உலகங்களாகவும் அவைகளில் உட்பட்ட அண்டங்களாகவும் விளங்குகின்றான். அவன் தான் அனைவருக்கும் முன்னவன். உலகில் உள்ள சடப்பொருட்கள் அனைத்தும் தாமாக இயங்க முடியாதவை. அத்தகைய சடப் பொருட்களையும் இயங்கச் செய்யும் சிவபெருமான், எழுகின்ற ஒளிச்சுடராக என்றும் விளங்குவது அதிசயத்தக்க செயலாகும்.
மாலாகி நான்முகனாய் மாபூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வுமாகிப்
பாலாகி எண் திசைக்கும் எல்லையாகிப் பரப்பாகிப் பரலோகம் தானேயாகிப்
பூலோக புவலோக சுவலோகமாய்ப் பூதங்களாய்ப் புராணன் தானேயாகி
ஏலாதன எல்லாம் ஏல்விப்பானாய் எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே
திருவாசகம் போற்றித் திருவகவல் பதிகத்தின் கடைப் பகுதியில் மணிவாசக அடிகளார் பெருமானை புராண காரண என்று அழைக்கின்றார். புராணனாக இருக்கும் பெருமான், அனைத்து பொருட்களும் தோன்றுவதற்கு மூல காரணனாக இருக்கும் தன்மை இதன் மூலம் குறிப்பிடப் படுகின்றது. திருவாசகம் குழைத்தபத்து பதிகத்தின் கடைப்பாடலில் மணிவாசக அடிகளார் பெருமானை புராண என்று அழைக்கின்றார். பெரிய பதம் என்று பெருமான் தனக்கு திருவடி தீட்சை அருளியதை குறிப்பிடும் மணிவாசக அடிகளார், திருவடி தீட்சையின் விளைவாக அடியார்கள் பெறுகின்ற பயனை தனக்கு அளிக்காமல் விட்டு விட்டாரே என்று வருந்துகின்றார். புகழே என்று புகழுடன் கூடிய பெரிய பதவியாகிய சிவலோகம் உணர்த்தப் படுகின்றது. அதனை தனக்கு அருளாமல் பெருமான், தான் தொடர்ந்து நிலவுலகில் வருந்தும் வண்ணம் செய்வது முறையோ என்ற கேள்வி இங்கே எழுப்பப்படுகின்றது. பெருமான் தனக்கு அருள் புரிந்த தன்மையை குறிப்பிட்டு, மானுட வடிவில் குருநாதராக எழுந்தருளி, உபதேசம் செய்து, திருவடி தீட்சை தந்தமையை உணர்த்தும் அடிகளார், அத்தகைய அருளினைப் பெற்ற பின்னரும், தான் திருந்தாமல், அழகற்ற செயல்களைச் செய்து கொண்டு திரிந்ததால், குருநாதரை இழந்ததாக நினைத்து மனம் கலங்குகின்றார். குழைத்தாய் என்ற சொல் இங்கே துன்பத்தால் வாடச் செய்தமையை உணர்த்துகின்றது. பெருமான் தன்னை உடனடியாக அழைத்துக் கொண்டு, அவரது திருப்பாத நிழலில் என்றென்றும் தான் தங்கியிருக்க அருள் புரிவதே தனது வாட்டத்தை போக்கும் என்பதை அடிகளார் உணர்த்தும் பாடல்.
அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்றுகின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணி கொண்டாய்
புகழே பெரிய பதம் எனக்குப் புராண நீ தந்து அருளாதே
குழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பாடலில் (9.6.2) சேந்தனார், பெருமான் மீது காதல் கொண்ட தலைவியின் தாயின் வாய்மொழியாக கூறும் பாடலில், பெருமானை ஆதி அமரர் புராணன் என்று கூறுகின்றார். மாது=அழகு; மாதி=மாது உடையவள், அழகினை உடையவள்; மெய்ச் சுருதி=உண்மைப் பொருளை உணர்த்தும் வேதங்கள்; சுருதி விதி வழியோர்=வேதங்களில் சொல்லப் பட்டுள்ள வாழ்க்கை நெறியை கடைப்பிடிக்கும் சான்றோர்கள்; நீதி=பெருமை; பெருமானின் தன்மையை முற்றிலும் அறிந்து கொள்ளாத தனது மகள் பெருமானை அடைந்து அவனைத் தழுவி இன்பம் அடையலாம் என்று நினைக்கின்றாள் என்று தனது மகள் கொண்டுள்ள தகாத ஆசையை குறிப்பிட்டு தலைவியின் தாய் வருந்துகின்றாள். அளவற்ற பெருமை உடைய பெருமானின் தன்மையை புரிந்து கொள்ளாததால், பெருமானை அடைவது மிகவும் எளிது என்று தனது மகள் நினைப்பதாகவும், பெருமானை புரிந்து கொள்வதோ, அடைவதோ அத்துணை எளிதான காரியம் அல்ல என்பதையும் நமக்கு விளக்கும் முகமாக இந்த செய்தி அமைந்துள்ளது என்று பொருள் கொள்வதும் சிறப்பே.
மாதி மணம் கமழும் பொழில் மணிமாட மாளிகை வீதி சூழ்
சோதி மதிலணி சாந்தை மெய்ச் சுருதி விதி வழியோர் தொழும்
ஆதி அமரர் புராணனாம் அணி ஆவடுதுறை நம்பி நின்ற
நீதி அறிகிலேன் பொன் நெடுந் திண்டோள் புணர நினைக்குமே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பாடலில் (9.5.2) சேந்தனார், பெருமானை புராண சிந்தாமணி என்று அழைக்கின்றார். பிறவிப் பிணியிலிருந்து தம்மைத் தாமே விடுவித்துக் கொள்ள இயலாத பிரமன், திருமால் இந்திரன் மற்றும் வேறு பல தேவர்களை வழிபடும் தன்மையை, பொய்த் தெய்வ நெறி என்று அழைக்கின்றார். பலரும் அந்த பொய் நெறியில் ஈடுபட்டு, அந்த தேவர்களை, நிலையற்றவர்களும் என்றோ ஒரு நாள் அழியும் நிலையில் இருப்பவர்களும் ஆகிய தேவர்களை, பரம் பொருளாக நினைத்து வழிபடும் வழியில் தான் புகா வண்ணம் ஆட்கொண்டவன் பெருமான் என்று சேந்தனார் இங்கே குறிப்பிடுகின்றார். இந்திர சாலங்கள் நிலைத்து நிற்காது அழிவது போன்று அழியும் சிறு தெய்வங்கள் என்பதை உணர்த்துகின்றார். வேண்டியவர்க்கு வேண்டியதை அளிக்கும் சிந்தாமணியாக உள்ள பெருமானை புராணன் என்று அழைக்கும் சேந்தனார், நான்கு வேதங்களிலும் வல்லவர்கள் வாழும் திருவீழிமிழலையில் உறைகின்றான் என்று குறிப்பிடுகின்றார். மேலும் அறிவுடையவர்கள் சிவபெருமானை விடுத்து, பயனற்ற பிற பொருட்களை பொருளாக கருத மாட்டார்கள் என்றும் கூறுகின்றார்.
இத் தெய்வ நெறி நன்று என்று இருள் மாயப் பிறப்பறா இந்திர சாலப்
பொய்த் தெய்வ நெறி நான் புகா வகை புரிந்த புராண சிந்தாமணி வைத்த
மெய்த் தெய்வ நெறி நான் மறையவர் வீழிமிழலை விண்ணிழி செழுங் கோயில்
அத் தெய்வ நெறியில் சிவமலாது அவமும் அறிவரோ அறிவுடையோரே
திருமந்திரம் முதல் தந்திரத்தின் பாடல் ஒன்றினில் திருமூலர், புராணன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஒன்றிய மனத்துடன் தன்னை வணங்கும் அடியார்களுக்கும் தன்னை இகழும் மனிதர்களுக்கும், ஆதி முதல்வனாகவும் அவர்களது காலத்தைக் கடந்து நிற்கும் புதியவனாகவும் இருப்பவன் பெருமான்; இத்தகைய பெருமானின் பெருமையை புரிந்து கொள்ளாமல், முழுமுதற் காரணனாக விளங்கும் தன்மையை புரிந்து கொள்ளாமல், உள்ளம் மகிழ்ந்து அவனைப் பற்றிய செய்திகளை கற்றும் கேட்டும் நில்லாமல் நன்னெறியை விட்டு நீங்கி நிற்கும் மனிதர்கள் என்றும் துயரத்தில் ஆழ்வார்கள். அவர்கள் தன்னால் எந்த விதமான நன்மையும் அடையாத வண்ணம் பெருமான், கல்லால் செய்யப்பட்ட பசுவாக இருப்பான் என்று திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார்.
புகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன்
இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமா
மகிழ நின்று ஆதியை ஒதி உணராக்
கழிய நின்றார்க்கு ஒரு கற்பசு ஆமே
திருமந்திரம் இரண்டாவது தந்திரம் அதோமுக தரிசனம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பெருமானை புராணன் என்று குறிப்பிடுகின்றார். அனைத்து அண்டங்களுமாக விளங்கும் பெருமான், அதோமுகம் கொண்டவனாக ஆன்மாக்களை கடைத்தேற்ற வேண்டும் என்ற கருணையின் காரணமாக, பஞ்சக் கிருத்தியங்களில் முதல் மூன்றினை பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மூவர் மூலமாக செய்வித்தும் எஞ்சிய இரண்டு செயல்களை தானே செய்தும், ஐந்து தொழில்களும் தொடர்ந்து நடைபெற காரணமாக உள்ளான். சதோமுகம் என்று நூற்றெட்டு இதழ்களைக் கொண்ட தாமரை மலர் உணர்த்தப் படுகின்றது.
அதோமுகம் கீழ் அண்டமான புராணன்
அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத்து ஒண் மலர்க் கண்ணிப் பிரானும்
சதோமுகன் ஊழித் தலைவனும் ஆமே
திருமந்திரம் ஐந்தாம் தந்திரம் உட்சமயம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பெருமானை அனாதி புராணன் என்று குறிப்பிடுகின்றார். தேவர்கள் உள்ளிட்டு அனைத்து உயிர்களையும், பண்டைய நாளிலிருந்தே தனு கரண புவன போகங்களில் பொருத்திய சிவபெருமான், பழமைக்கெல்லாம் பழமையானவன் ஆவான்; அகச் சமயங்கள் ஆறும் தன் திருவருளாகிய திருவடியை நாடச் செய்து, அந்த சமயங்களில் கலந்து நின்று வியாபித்து இருப்பவன் சிவபெருமான். அவனே முழுமுதற் கடவுள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்த அனாதி புராணன்
சமையங்கள் ஆறும் தன் தாளிணை நாட
அமைய அங்கு உழல்கின்ற ஆதிப் பிரானே
பொழிப்புரை:
ஒளி வீசுவதால் பெருமை வாய்ந்து புகழ் மிகுந்த மாணிக்கக் கற்கள், நறுமணம் வீசும் அகில் மற்றும் சந்தனக் கட்டைகள் ஆகியவை செறிந்து கிடக்கும் மலைச்சாரலில் இருந்து அவற்றை வாரிக் கொண்டு பெரிய வெள்ளமாக வரும் காவரி நதியின் வடகரையில் அமைந்துள்ள திருமங்கலக்குடி தலத்தில், தீர்க்கபாகு என்ற முனிவன், தனது நெடிய கையினை நீட்டி காவிரி நதியிலிருந்து நீர் கொணர்ந்து இறைவனை நீராட்டி அர்ச்சனை செய்ய, அந்த வழிபாட்டினை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் இறைவன், முன்னைப் பழம்பொருட்கும் பழம் பொருளாகவும், பின்னைப் புதுமைக்கும் புதியவனாக, புராணனாக, எழுந்தருளி உள்ளான்.
பாடல் 2:
சீரினார் மணியும் (2.010) பாடல்கள் 2, 3, 4 (திதே 0528)
பணம் கொள் ஆடரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே
மணம் கொள் மாமயில் ஆலும் பொழில் மங்கலக்குடி
இணங்கிலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட
அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே
விளக்கம்:
பணம்=பாம்பின் படம்; பயின்று=இடைவிடாது; ஆலும்=நடமாடும்; அணங்கு=தெய்வத்தன்மை வாய்ந்த பெண், பார்வதி தேவி; இணங்கிலா=ஒன்றுக்கொன்று மாறுபட்டு, மாறுபட்ட இரண்டு குணங்கள் எந்த பொருளிலும் காணப்படுவதில்லை. ஆனால் இறைவன் சிவபெருமானிடம் ஒன்றுக்கொன்று மறுதலையாய் விளங்கும் பல குணங்கள் இருப்பதை நாம் காண்கின்றோம். அத்தகைய குணங்களில் ஒன்று தான் சோதியுமாய் இருளுமாய் இருக்கும் நிலை. இந்த நிலையைத் தான் சோதியனே துன்னிருளே என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். இவ்வாறு இறைவனின் மாறுபட்ட குணங்கள் அனைத்தும் குறிப்பிடப் படுவதால், ஒன்றுக்கொன்று மாறுபட்ட வேதங்கள் என்று குறிப்பிட்டார் போலும்,
இவ்வாறு இரண்டு மாறுபட்ட தன்மைகளை உடையவன் சிவபெருமான் என்று கூறுவது நமக்கு மணிவாசகரின் பொற்சுண்ணம் பதிகத்தின் கடைப் பாடலை நினைவூட்டும். இன்பம்-துன்பம், மெய்ம்மை-பொய்ம்மை, சோதி-இருள், பாதி-முற்றும், ஆதி-அந்தம், என்று பிரிக்க முடியாத இரட்டைப் பொருட்களாக இறைவன் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் பட்டுள்ளது. எனவே வேதம்-பொருள், பந்தம்-வீடு என்பவையும் இரட்டையாக உள்ள மறுதலைப் பொருட்களாக நாம் கொள்ளவேண்டும். வேதம் என்பது வேதங்களில் சொல்லப்பட்டுள்ள மெய்ப் பொருளையும் வேள்வி என்பது யாகங்கள் செய்யப் பட வேண்டிய முறைகளையும் குறிக்கும். பந்தம் என்பது உலகப் பொருட்களுடன் நம்மை பிணிக்கும் மலங்கள்; வீடு என்பது நம்மைப் பிணிக்கும் மும்மலங்களின் கட்டிலிருந்து நாம் விடுபட்டு உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்தால் அடையக் கூடியது. எனவே உலகப் பொருட்களுடன் நம்மை பிணைக்கும் பந்தமும், உலகப் பொருட்களிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் நாம் அடையும் வீடுபேறும் மறுதலைப் பொருட்கள் என்பதை நாம் உணர வேண்டும். பந்தங்களிலிருந்து விடுபட்டால் நாம் அடைவது வீடு.
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு
சோதியுமாய் இருள் ஆயினார்க்குத் துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்கு
பாதியுமாய் முற்றும் ஆயினார்க்குப் பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
தீர்க்கபாகு முனிவர் வணங்கி வழிபட மகிழ்ந்திருந்த இறைவன் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், பதிகத்தின் இரண்டாவது பாடலில், தலத்து பெண்களும் மறையோர்களும் வழிபட இறைவன் உறைகின்ற நிலையை குறிப்பிட்டு, அவனது திருப்பாதங்களில் நாம் சரணடைய வேண்டும் என்று நம்மை தூண்டுகின்றார். அல்குல் நல்லார் என்று பெண்களை குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
படமெடுத்து ஆடும் பாம்பின் படம் போன்று புடைத்து அழகாக காணப்படும் மார்பகங்களை உடைய பெண்கள், தொடர்ந்து இறைவனின் புகழினைப் பாட, மயில்கள் அழகாக நடமாடுவதும் நறுமணம் வீசுவதும் ஆகிய சோலைகள் நிறைந்த மங்கலக்குடி தலத்தில் இறைவன் உறைகின்றான். தம்முள் மாறுபடும் பல செய்திகளை குறிப்பிடும் வேதங்களில் வல்லவர்களும், தேவர்களும் வணங்கித் தொழும் வண்ணம், தெய்வத்தன்மை பொருந்திய பார்வதி அன்னையுடன் இறைவன் மகிழ்ந்து திருமங்கலக்குடி தலத்தில் உறைகின்றான். அவனது திருவடிகளே நாம் சரணடையத் தகுந்த புகலிடமாகும்.
பாடல் 3:
சீரினார் மணியும் (2.010) பாடல்கள் 2, 3, 4 (திதே 0528)
கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்
மருங்கெலாம் மணமார் பொழில் சூழ் மங்கலக்குடி
அரும்பு சேர் மலர்க் கொன்றையினான் அடி அன்பொடு
விரும்பி ஏத்த வல்லார் வினையாயின வீடுமே
விளக்கம்:
கருங்கை=கருமையான கை, துதிக்கை; கள்வனார் என்று பெருமான் தனது மனதினை கொள்ளை கொண்ட தன்மையை தான் முதன்முதலாக அருளிய தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிட்டு மகிழ்ந்த திருஞானசம்பந்தர், இந்த பாடலிலும் அதனை குறிப்பிடுகின்றார். மருங்கு=அருகில்; வீடும்=அழியும்; பதிகத்தின் இரண்டாவது பாடலில், பெருமானின் திருவடிகளே நாம் சரணடையத் தகுந்த புகலிடம் என்று கூறிய திருஞானசம்பந்தர், அந்த திருவடிகளை அன்போடு வணங்கினால் நமது வினைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். கரிய யானையும், யானையின் தோலும் அஞ்ஞானத்தை குறிக்கும் சின்னங்களாக கருதப் படுகின்றன. சோதி வடிவமாக, ஞானத்தின் வடிவமாக காணப்படும் பெருமான், யானையின் தோலினைப் போர்த்துக் கொண்டு மறைந்திருக்கும் தன்மை கள்வனின் செயல் போல் காணப்படுவதால் கள்வர் என்று கூறினார் போலும். மேலும் ஆணவத்தால் மூடப்பட்டுள்ள உயிரின் உள்ளே ஒளியாக இறைவன் விளங்கும் தன்மையை, கரிய யானையின் தோலைப் போர்த்துள்ள இறைவனின் உருவத்தை குறிப்பிட்டு திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதும் நெறியினை இங்கே அன்பு நெறி என்று சுருக்கமாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். யானைத்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அன்னை பார்வதி தேவி அச்சமடைந்ததை கண்ணுற்ற பெருமான், பார்வதி தேவிக்காக தனது உடல் மீது போர்த்திருந்த யானைத் தோலை அகற்றி, தேவியைப் பார்த்து தனது பற்கள் அனைத்தும் தெரியும் வண்ணம் சிரித்தவாறே, தனக்கு யானையின் தோலைப் போர்த்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாதவர் போன்று, அந்த போர்வையை பெருமான் விளையாட்டாக நீக்கினார் என்று அப்பர் பிரான் பயற்றூர் தலத்து பதிகத்தின் முதல் பாடலில் (4.32.1) குறிப்பிடுகின்றார். இவ்வாறு தேவியை பரிகாசம் செய்து விளையாடியதை, கள்ளத்தனம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. உண்மையில் ஆலகால விடத்தின் தன்மையை, கொடிய பாம்பின் தன்மையை, வெறி பிடித்த மான் கன்றின் தன்மையை, மிகுந்த ஆவேசத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியின் தன்மையை மாற்றியது போன்று, யானைத் தோலின் கேடு விளைவிக்கும் தன்மையையும் பெருமான் மாற்றினார் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
திருப்பயற்றூர் தலத்தின் மீது அப்பர் பெருமான் அருளிய பதிகத்தின் பாடலை நாம் இங்கே சிந்திக்கலாம். அலக்கம்=நடுக்கம்; எயிறு=பல்; உதிரம்=இரத்தம்; இந்த பாடலில் யானையின் தோலை உரித்தபோது தேவி நடுங்கியதாக அப்பர் பிரான் கூறுகின்றார். மூன்று நிகழ்ச்சிகளில் தேவி அஞ்சியதாக அப்பர் பிரான் தனது தேவாரப் பாடல்களில் கூறுகின்றார். அவையாவன, யானையின் தோலை உரித்த தருணம், இராவணன் கயிலை மலையை அசைத்தது, பெருமான் புலித்தோலை போர்த்தது. இந்த மூன்று நிகழ்ச்சிகளில் யானையின் தோலை உரித்த சமயத்தில் நடுங்கியதாக, அதிகமான பாடல்களில் சொல்லப் படுகின்றது. திருஞானசம்பந்தர் சுமார் நாற்பது பாடல்களிலிலும் அப்பர் பிரான் சுமார் முப்பது பாடல்களிலும், யானையின் தோலை உரித்து பெருமான் தனது உடலில் போர்த்துக் கொண்ட சமயத்தில், தேவி அஞ்சியதாக குறிப்பிடுகின்றார்கள். சுந்தரர் தனது கச்சி ஏகம்பம் திருப்பதிகத்தின் பாடல் ஒன்றினில், கம்பை ஆற்றின் வெள்ளம் பெருகிய போது, தான் வழிபட்டுக் கொண்டிருந்த இலிங்கத் திருவுருவம் அந்த வெள்ளத்தில் கரைந்து விடுமோ என்று அச்சம் கொண்டு, இலிங்கத்தை பார்வதி தேவி இறுகத் தழுவியதாக குறிப்பிடுகின்றார். குருதி வெள்ளம் ஆறாக ஓடுமாறு தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலை உரித்த பெருமான், அந்த யானையின் தோலை போர்வையாகத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டார். பசுமையான இரத்தப் பசையுள்ள யானையின் தோல் பெருமானின் உடலுக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்குமோ என்ற அச்சத்தினால் உமையம்மை நடுக்கம் கொண்டு, தனது விரல்களை உதறினார். இதனைக் கண்ணுற்ற பெருமான் சிறிது நேரம் யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்த்த பின்னர், தொடர்ந்து அந்த தோலினைப் போர்த்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாதவரைப் போல் நடித்து, அந்த போர்வையை நீக்கி விட்டு, தனது பற்கள் வெளியே தெரியுமாறு, தேவியின் தேவையற்ற அச்சத்தை எண்ணி நகைத்தார். அத்தகைய பெருமான் தான் திருப்பயற்றூரில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கல் நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலராகித் தாமும்
சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே
திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.73.6) அப்பர் பிரான் யானையின் தோலை உரித்துப் போர்த்த பெருமான், அம்மையின் அச்சம் கண்டு சிரித்தார் என்று கூறுகின்றார், இந்த பாடலில் கால பயிரவரின் திருக்கோலம் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ஓதும் அடியார்கள், தங்கள் அச்சம், இடர், வறுமை, பிணி முதலியன நீங்கப்பெற்று, செல்வம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள் என்று நம்பப்படுகின்றது கதிர்=ஒளி; விரித்த பல்=பலவாறு விரிந்த; வெடிபடு=ஓசையை உண்டாக்கும்; வேழம்=யானை: விள்ளுதல்= மலர்தல்; பலவாறு விரிந்த ஒளியினை உடைய சூலத்தையும், ஓசையை உள்ளடக்கிய தமருகம் எனப்படும் உடுக்கையையும் கையில் ஏந்தி அழகிய வடிவம் கொண்ட கால பயிரவ மூர்த்தியாக கோலம் கொண்ட சிவபெருமான், தன்னை அழிப்பதற்காக தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையினை அழித்தார்; யானை சிவபெருமானை நெருங்கியதையும், அதன் தோலினை சிவபெருமான் உரித்த பின்னர் அந்த தோலினைப் போர்வையாக உடலின் மீது போர்த்துக் கொண்டதையும் கண்ட பார்வதி தேவி மிகவும் அச்சம் எய்தினாள். தேவியின் பயத்தைக் கண்ட சிவபெருமான் தனது பவளம் போன்று ஒளி திகழும் வாய் மலர்ந்து சிரித்தார். இவ்வாறு சிறிதும் அஞ்சாமல் வீரச்செயல் புரிந்தவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (6.43.7) தான் யானையின் தோலை உரித்த பின்னர் உடலின் மீது போர்த்துக் கொண்ட போது உமையம்மை நடுங்கியதைக் கண்ட பெருமான் சிரித்ததாக, அப்பர் பிரான் கூறுகின்றார். வானில் பறந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் மிகவும் குறைந்த நேரத்தில் பெருமான் எரித்த செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது. இமைப் பொழுதில் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வேதநெறியினை நினைத்து பின்பற்றாத பகைவர்கள் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரு நொடியினில் சாம்பல் பொடியாக மாறும் வண்ணம் எரித்தவனும், அழகான தனது கைகள் கொண்டு தன்னை எதிர்த்து வந்த மதயானையினை உறுதியாகப் பற்றிக் கொண்டு அதனை தோலினை உரித்தவனும், யானையின் பசுந்தோல் தனது கணவனின் திருமேனிக்கு கேடு விளைவிக்குமோ என்ற அச்சம் கொண்டு நடுங்கிய உமை அன்னையின் பேதைமை கண்டு சிரித்தவனும், எப்போதும் இறைவனுடன் இருக்கும் பேற்றினைப் பெற்றதால் சிறப்பினை அடைந்த பூத கணங்களால் சூழப்பட்டவனும், தனது திருச்சடையின் மேல் பிறைச் சந்திரனையும் பாம்பினையும் கங்கை நதியினையும் பொருத்தியவனும், தூய்மையே வடிவமாக உள்ளவனும், இயல்பாகவே பொய்யான பாசங்களிலிருந்து நீங்கப் பெற்றவனும் ஆகிய இறைவனை பூந்துருத்தி தலத்தினில் உறைபவனும் ஆகிய இறைவனை அடியேன் கண்டேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மதகரியை உற்றுப் பற்றி உமை அதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீரார்ந்த பூதம் சூழத் திருச்சடை மேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
பொழிப்புரை:
நீண்டு கரிய நிறத்தில் அமைந்துள்ள துதிக்கையினை உடைய யானையின், இரத்தப்பசை தோய்ந்த தோலினைத் தனது உடலின் மீது போர்த்தவரும், எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வரும் ஆகிய பெருமான் உறையும் திருமங்கலக்குடி தலத்தினைச் சூழ்ந்துள்ள சோலைகளில் நறுமணம் வீசுகின்றன. அந்த சோலைகளில் விளங்கும் அரும்புகளுடன் கூடிய கொன்றை மலர் மாலைகளை அணிந்துள்ள சிவபெருமானின் திருவடிகளை மிகுந்த விருப்பம் கொண்டு அன்புடன் புகழ்ந்து பாட வல்ல அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும்.
பாடல் 4:
சீரினார் மணியும் (2.010) பாடல்கள் 2, 3, 4 (திதே 0528)
சீரினார் மணியும் (2.010) பாடல் 4 தொடர்ச்சி மற்றும் பாடல் 5 (திதே 0529)
பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம்
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி
குறைவிலா நிறைவே குணமில் குணமே என்று
முறையினால் வணங்கும் அவர் முன்னெறி காண்பரே
விளக்கம்:
ஆடியும் பாடியும், மனதினில் தியானம் செய்தும் மனம் மொழி மெய்களால் இறைவனை வழிபடும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஒரு குறையும் இல்லாமல் நிறைவாக இருப்பவன் இறைவன் என்று திருஞானசம்பந்தர் கூறுவது, நமக்கு குறைவிலா நிறைவே என்ற திருமுறைத் தொடரினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. குறைவிலாது நிறைந்து நிற்கும் தன்மையை நிறைவார்ந்த நீர்மை என்று குறிப்பிடும் (6.3.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்தன்னை
மறையானை மாசு ஒன்று இலாதான் தன்னை வானவர் மேல் மலரடியை வைத்தான் தன்னைக்
கறையானைக் காதார் குழையான் தன்னைக் கட்டங்கம் ஏந்திய கையினானை
இறையானை எந்தை பெருமான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் ஐந்தாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலை குறைவிலா நிறைவே என்று மணிவாசக அடிகளார் தொடங்குகின்றார். இந்த பாடலில் கோதிலா அமுது என்று குறிப்பிட்டு மணிவாசகர் அமுதமும் குறை உடையது என்று நமக்கு உணர்த்துகின்றார். அமுதம் உண்ட தேவர்கள் எவரும் இறப்பிலிருந்து தப்பிக்கவில்லை: மேலும் அமுதம் தோன்றிய இடம், நஞ்சு தோன்றிய பாற்கடலாகும். ஆனால் சிவபெருமானோ எத்தைகைய குறையும் இல்லாதவர். அதனால் தான் அவரை கோதிலா அமுது என்று இங்கே மணிவாசகர் குறிப்பிடுகின்றார். குறையேதும் இல்லாமல் நிறைவாக இருப்பவனும், குற்றங்கள் இல்லாத அமுதமாக இருப்பவனும், முடிவு என்பது இல்லாமல் எப்போதும் எரியும் சுடராக விளங்குபவனும் ஆகிய சிவபெருமான், வேதத்தின் சொற்களாகவும், அந்த சொற்களின் பொருளாகவும் தனது மனதினில் நிலை பெற்று இருப்பதாக மணிவாசகர் கூறுகின்றார். கரைகள் ஏதும் இல்லாத நீர் பாய்வது போன்று, தங்கு தடை ஏதும் இன்றி தனது சிந்தையில் ஊறும் சிவபெருமான், தனது உடலில் இடம் கொண்டமையால், தான் இனிமேல் இறைவனிடம் ஏதும் வேண்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் இங்கே உணர்த்துகின்றார்.
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே
சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே
இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே
குறைவிலா நிறைவே என்று பெருமானை தனது ஆவடுதுறை தலத்தின் மீது அருளீய பதிகத்தில் (7.70.6) அழைக்கும் சுந்தரர், தனக்குத் துணையாக வேறு எவரும் இல்லாததால் பெருமான் தான், அஞ்சல் என்று சொல்லி தனக்கு அருளவேண்டும் என்று கூறுகின்றார். நம் அனைவருக்கும் கூட, இறைவன் ஒருவன் தான் துணை. என்பதை உணர்த்தும் பாடல். சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் தான் உறவாகக் கருதாததால், தனது பிழை ஒன்றினை பொறுத்து அருளினால் இறைவனுக்கு தாழ்வு ஏதும் ஏற்படாது என்று இறைவனுக்கே உணர்த்தி, தனது பிழைகளை பொறுக்குமாறு இறைவனை பணியும் பாடல்.
குறைவிலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழைக்காது உடையானே
உறவிலேன் உனையன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே
சிறை வண்டார் பொழில்சூழ் திருவாரூர்ச் செம்பொனே திருவாவடுதுறையுள்
அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
உயிரின் செயல்களை இராஜசம் தாமசம் சாத்துவீகம் ஆகிய மாயாகாரிய மூன்று குணங்களே தீர்மானிக்கின்றன. ஆனால் பெருமான் இந்த மூன்று குணங்களைக் கடந்தவன்; உணர்வுகளைக் கடந்தவன். எனவே தான் குணமிலி என்று பெருமானை குறிப்பிடுகின்றார். அதனால் பெருமான் குணம் ஏதும் இல்லாதவன் என்று நாம் கருதுதல் தவறு. அவன் மேலே குறிப்பிட்ட மாயாகாரிய குணங்களுக்கு மாறாக அருட்குணங்கள் எட்டு கொண்டவன். எனவே தான் குணமில் குணமே என்று பெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, எல்லையற்ற ஆற்றல் உடைமை, வரம்பிலாத இன்பம் உடைமை, ஆகிய சிறந்த எட்டு குணங்களை உடையவனாக இறைவன் திகழ்கின்றான். முன்னெறி=எல்லா நெறிகளுக்கும் முதன்மையான சிவநெறி; பாரிடம்=பூதகணம்;
திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் 46ஆவது பாடலில் மணிவாசக அடிகளார் பெருமானை குணமிலி என்று கூறுகின்றார். உழை=மான்; மழை தரு கண்டன்=மழை பொழியும் மேகம் போன்று கருமை நிறம் உடைய கழுத்தினை உடையவன்; மான்=மானைத் தனது இடது கையில் கொண்டுள்ளவன்; தேய்மதி=தக்கனின் சாபத்தால் நாளுக்கு ஒரு பிறையாக தேய்ந்து, அழியும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒற்றைப் பிறைச் சந்திரன்; பரன்= அனைவர்க்கும் மேலானவன்; அபரன்=மேன்மைத் தன்மை எதுமின்றி கீழானவன்; விழைதல்=விரும்புதல்; இந்த பாடலின் முதல் பகுதியில் உழை தரு நோக்கியர் கொங்கை பலாப் பழத்து ஈயின் ஒப்பாய் விழை தருவேன் என்று தனது நிலையினை அடிகளார் குறிப்பிடுகின்றார். பலாப் பழத்தின் மணத்தால் கவரப்படும் ஈ, அந்த பழத்தை நன்றாக உண்ட பின்னரும், அந்த பழத்தினை விட்டு வெளியே வர முடியாத வண்ணம், பலாப் பழத்தின் பிசினுடன் ஒட்டி இருப்பது இயற்கை. அதனைப் போன்று மகளிர் தரும் சிற்றின்பங்களில் ஆழ்ந்து மகிழும் உள்ளம், அந்த சிந்தனையை விட்டு வெளியே வர முடியாமல் இருப்பது போன்று, தனது சிந்தனை மான் போன்ற மருண்ட அழகிய பார்வையை உடைய மகளிர் பால் செல்வதையே விரும்புகின்றது என்று அடிகளார் தன்னை இழித்துக் கூறுகின்றார். இந்த குறை காரணமாகவே, பெருமான் தன்னை விட்டு விட்டதாக கருதும் அடிகளார், இவ்வாறு தன்னை விட்டு விடுவது பெருமானுக்கு அழகா என்ற கேள்வியை கேட்கின்றார். தன்னைக் கைவிட்டு விடாமல் உடன் அழைத்துச் சென்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இந்த பதிகத்தின் பாடல்களில் விடுக்கப் படும் விண்ணப்பம்.
உழை தரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்
விழை தருவேனை விடுதி கண்டாய் விடின் வேலை நஞ்சு உண்
மழை தரு கண்டன் குணமிலி மானிடன் தேய் மதியன்
பழை தரு மா பரன் என்றென்று அறைவன் பழிப்பினையே
இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் தனது சிறுமையை காரணம் காட்டி, பெருமான் தன்னை கைவிடலாகாது என்று இறைஞ்சும் அடிகளார்,சலிப்படைந்து பெருமானை குறை கூறுகின்றாரோ என்று தோன்றுகின்றது. நமக்கு நெருக்கமானவராக நாம் கருதும் ஒருவர், பல முறை வேண்டியும் நமக்கு இரங்காமல் இருந்தால் நமக்கு சலிப்பு ஏற்பட்டு, அவரை குறை கூறுவது மனித இயல்பு தானே. சென்ற 45 பாடல்களில் வேண்டிய பின்னரும், தனக்கு அருள் புரியாமல் இருக்கும் பெருமானை பழித்து கூறுவேன் என்று எச்சரிக்கை விடுவதாகவும் ஒரு கோணத்தில் இந்த பாடல் அமைந்துள்ளது. அறைதல்=உரக்க கூறுதல். மேலோட்டமாக பார்த்தால், பெருமானை குறை கூறுவது போன்று இருந்தாலும், உண்மையில் பெருமானது பெருமையே இங்கே குறிப்பிடப் படுகின்றது. வேலை=கடல்; வேலை நஞ்சு உண்பவன்=பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினை உண்பவன் என்பது பொருள். தனக்கு உண்ண ஏதும் கிடைக்காததால், பித்தன் போன்று நஞ்சினை உண்ட பைத்தியக்காரன் என்பது ஒரு பொருள்; உண்மையான பொருள், ஆலகால நஞ்சினை உட்கொண்டு உலகினைக் காத்தவன் என்பது; வஞ்சகமான எண்ணம் கொண்டவர்களை கருமை படர்ந்த நெஞ்சினன் என்று கூறுவது உலக இயல்பு. செம்மை நிறத்தில் உள்ள பெருமானின் திருமேனியில், கருமை நிறம் படர்ந்திருப்பது, குற்றத்தின் அடையாளமாக கருதப்படும் என்பது ஒரு பொருள்; நீலகண்டனாக பெருமான் தனது வயிற்றினில் ஒடுங்கும் உலகத்து உயிர்களை காப்பாற்றுகின்றான் என்பது மற்றொரு பொருள். குணமிலி என்பதற்கு எந்த விதமான நற்குணமும் இல்லாதவன் என்பது ஒரு பொருள்; தாமசம் இராஜசம் மற்றும் சத்துவம் ஆகிய மூன்று குணங்களைக் கடந்தவன் என்பது மற்றொரு பொருள். தாமசம் இராஜசம் மற்றும் சத்துவம் ஆகிய மூன்று குணங்களில் எந்த குணம் மேலோங்கி இருக்கின்றதோ, அந்த குணம் தான், நமது செய்கைகளுக்கு காரணமாக இருப்பதை நாம் அறிவோம்; பெருமானோ இந்த மூன்று குணங்களைக் கடந்து இருப்பதால், அவனது செயல்கள் எப்போதும் அவனது முழுக் கட்டுப்பாட்டில் உள்ளன. மானிடன் என்பதற்கு நம்மைப் போன்று பல இழிந்த குணங்களை உடையவனாகவும், தெய்வத்திற்கு உரிய சிறந்த குணங்கள் இல்லாதவனாகவும் பெருமான் இருக்கின்றான் என்பது ஒரு பொருள். தாருக வனத்து முனிவர்கள் ஏவிய மானைத் தனது இடது கையில் ஏந்தியவன் என்பது மற்றொரு பொருள். தேய் மதியன் என்றால் குறைந்த, வளர்ச்சி அடையாத புத்தி உடையவன் என்பது ஒரு பொருள்; தக்கனது சாபத்தால் நாளொன்றுக்கு ஒவ்வொரு கலையாக தேய்ந்து ஒற்றைக் கலையுடன் தன்னிடம் சரணடந்த சந்திரனை, அழியாமல் காத்த பெருமை உடையவன் என்பது மற்றொரு பொருள்; மாபரன் என்ற சொல்லினை மா அபரன் என்று பிரித்து பொருள் கண்டால், மிகவும் கீழானவன் என்பது ஒரு பொருள்; மாபரன் என்பதை மா பரன் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டு என்று பொருள் கொண்டால், அனைத்து உயிர்களுக்கும் மேலானவன் என்பது மற்றொரு பொருள்.
கோயில் திருப்பதிகம் நான்காவது பாடலில், மணிவாசகர், பெருமானை குணங்கள் தாம் இல்லா இன்பமே என்று குறிப்பிடுகின்றார். வேதங்கள் உணர்த்தும் வாழ்க்கைக் கல்வியினை நன்கு கற்று, கற்றதன் பயனை உணர்ந்த முனிவர்கள் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். ஒழிந்தோர்=முனிவர்கள் தேவர்கள் அல்லாத ஏனையோர்; அனைத்து உயிர்களின் உணர்வுகளையும் கடந்த மெய்பொருள் என்று பெருமானை குறிப்பிடும் அடிகளார், அனைத்துப் பொருட்களுடனும் கலந்து இருந்தாலும் தான் எந்த மாற்றமும் அடையாமல் இருப்பவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். பொருட்கள் அனைத்தும் தோற்றம், இருப்பு, முடிவு ஆகிய மூன்று நிலைகளுக்கு உட்பட்டவை. ஆனால் இறைவனோ தோற்றம் முடிவு ஆகிய நிலைகளுக்கு அப்பாற்பட்டவன். பொருட்களோடு இணைந்து இருந்தாலும், பொருட்கள் தோன்றும்போது அவன் தோன்றுவதில்லை, பொருட்கள் அழியும்போது அவன் அழிவதுமில்லை. மேலும் இவ்வாறு பொருட்களுடன் இணைந்து இருப்பதால் அவன் எந்த மாற்றமும் அடைவதில்லை. எனவே தான் அவனை இணங்கிலி என்று கூறுகின்றார். சத்துவம், இராஜசம், தாமசம் ஆகிய மூன்று குணங்களின் அடிப்படையில் ஓவ்வொரு உயிரும் இன்பம் அடைகின்றது. ஆனால் இந்த இன்பமும் நிலையாக நீடித்து இருப்பதில்லை. ஆனால் மூன்று குணங்களைக் கடந்த பெருமான் என்றும் மாறாத இன்ப வடிவினனாக இருப்பதுமன்றி, தன்னைச் சரணடைந்தவர்கட்கும் எந்த குறையினையும் வைக்காமல் பூரண இன்பத்தை வழங்குகின்றான். இணங்குதல்=வண்ணம், வடிவு, அளவு, சுவை ஆகிய பண்புகளால் ஒன்றையொன்று ஒத்திருத்தல்; எந்த வகையிலும் தன்னுடன் ஒத்த பொருள் ஏதும் இல்லாத காரணத்தால், பெருமானை இணங்கிலி என்று குறிப்பிடுகின்றார்.
உணர்ந்த மாமுனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவு அரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப்பு அறுக்கும் எம் மருந்தே
திணிந்தது ஓர் இருளில் தெளிந்த தூ ஒளியே திருப்பெருந்துறை உறை சிவனே
குணங்கள் தாம் இல்லா இன்பமே உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே
பொழிப்புரை:
தாங்கள் இசைக்கும் பறையின் ஒலியுடன் பாடலொலியைக் கலந்து ஆடல் புரியும் பூத கணங்கள் சூழ வீற்றிருக்கும் சிவபெருமான், வேதங்கள் பயின்று அதன் வழியே ஒழுகும் அந்தணர்கள் நிறைந்துள்ள திருமங்கலக்குடி தலத்தில் உறைகின்றார். அவரை குறைவிலா நிறைவே என்றும் குணமில் குணமே என்றும், ஏனையோருக்கு இல்லாத அரிய எட்டு குணங்களை உடையவனே என்றும் புகழ்ந்து, வேத ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ள முறையில் வணங்கும் அடியார்கள் தொன்மையான நெறியாகிய சிவநெறியின் பயனை உணர்வார்கள்.
பாடல் 5:
சீரினார் மணியும் (2.010) பாடல் 4 தொடர்ச்சி மற்றும் பாடல் 5 (திதே 0529)
சீரினார் மணியும் (2.010) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0530)
சீரினார் மணியும் (2.010) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0531)
சீரினார் மணியும் (2.010) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0532)
சீரினார் மணியும் (2.010) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0533)
சீரினார் மணியும் (2.010) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0534)
சீரினார் மணியும் (2.010) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0535)
சீரினார் மணியும் (2.010) பாடல் 5 தொடர்ச்சி மற்றும் பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 0536)
ஆனில் அம் கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடியோர்
மானில் அங்கையினான் மணமார் மங்கலக்குடி
ஊனில் வெண் தலைக் கை உடையான் உயர் பாதமே
ஞானமாக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே
விளக்கம்:
கிளர்=கிளர்ந்து எழும், உண்டாகும்; மானில்=மான் நில், மான் நிற்கின்ற; அவிர் முடி=விரிந்த சடை; பசுவிலிருந்து கிடைக்கும் பொருட்களை அழகிய பொருட்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் இரண்டாவது பாடலை (4.11.2)நினைவூட்டுகின்றது. பெருமானுடன் சேர்ந்த பொருட்கள் அனைத்தும் அழகுடன் பொலிந்து விளங்குவது இயற்கை தானே. பொதுவாக பூ என்று கூறினால் தாமரை மலரைக் குறிக்கும். பல தேவாரப் பாடல்களில் பிரமனை பூமேல் அமர்ந்தவன் என்று அழைப்பது நாம் அறிந்ததே. சிவபெருமான் விரும்பி நீராடும் ஐந்து பொருட்களைத் தருவதால் (பால், தயிர், நெய், பசுஞ்சாணம் மற்றும் கோமியம் ஆகியவையே இந்த ஐந்து பொருட்கள்) பசு சிறப்புத் தன்மை பெறுகின்றது.
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே
திருநள்ளாறு மற்றும் திருவாலவாய் ஆகிய இரண்டு தலங்களை இணைத்து அருளிய பதிகத்தின் பாடலில் (1.7.4) திருஞானசம்பந்தர், ஆலவாய் தலத்து அன்பர்கள், பெருமானை பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராட்டுகின்றனர் என்றும் பெருமான் அதனை உகந்து ஏற்றுக் கொள்கின்றார் என்றும் கூறுகின்றார். இந்த பாடலில் பூவினில் வாசமாக இருப்பவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நறுமலரிலிந்து எழுகின்ற நாற்றம் பரந்தும் விரிந்தும் இருப்பினும் அதனை முகர்ந்து அனுபவிக்கலாமே தவிர, அது நுண்பொருளாக இருப்பதால், அதனைக் கண்ணால் காண்பதோ பற்றிக் கொள்வதோ முடியாது. எங்கோ ஓரிடத்தில் மலர்ந்திருந்தாலும், அதனைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் நறுமணம் கமழ்வதை நாம் உணர்கின்றோம். மேலும் பூவின் எந்தப் பகுதியிலிருந்து மணம் வீசுகின்றது என்பதையும் நம்மால் சொல்ல முடியாது. அது போல எங்கும் பரந்திருக்கும் இறைவனை, எதிலும் படிந்திருக்கும் இறைவனை, நாம் கண்ணால் பார்த்து உணர முடியாது, இந்த இடத்தில் தான் இறைவன் இருக்கின்றான் என்று திண்ணமாக சொல்லவும் முடியாது. இறைவன் இருப்பதை ஊகித்து, மனதினில் தியானித்து மட்டுமே அவனை நாம் பற்றிக் கொள்ள முடியும். இறைவனின் இந்த தன்மை தான் பூவினில் நாற்றம் என்று குறிப்பிடுகின்றனர். திருவண்டப் பகுதியில், பூவினில் நாற்றம் போன்று உயர்ந்து எங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை என்று மணிவாசக அடிகளார் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. நறுமணத்தை பரப்பும் மலர் போன்று பெருமானும் தனது அருளை பரப்புகின்றார். பூவினில் நறுமணமாகவும் நீரினில் அதன் தனித் தன்மையாகிய குளிர்ச்சியாகவும், புதிய சந்தனத்தில் வீசும் நறுமணமாகவும் நாவினில் கலந்து ஒலிக்கும் இன்னிசைப் பாடல்களாகவும் கலந்து விளங்குபவனும் நள்ளாறு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் நம்பெருமான் என்று அழைக்கப் படுபவனும் ஆகிய பெருமானே, ஆலவாய் தலத்தினை உமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி அமர்ந்ததன் காரணம் யாது, எமக்கு நீர் சொல்வீராக. தேவர்கள் தானவர்கள் என்று அழைக்கப்படும் அசுரர்கள் சித்தர்கள் வித்தியாதரர்கள் ஆகியோர் நிறைந்த கூட்டத்தோடு கலந்து சிறந்து விளங்குவோரும் பசுவிடமிருந்து கிடைக்கப் பெறும் பால் தயிர் நெய் கோமியம் பசுஞ்சாணம் ஆகிய பொருட்களைக் கொண்டு நீராட்டப்பட்டு வழிபடப்படும் பெருமானாகிய நீர் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் தலத்தினில், உறைகின்றீர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பூவினில் வாசம் புனலில் பொற்புப் புதுவிரைச் சாந்தினில் நாற்றத்தோடு
நாவினில் பாடல் நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர் விச்சாதரர் கணத்தோடும் சிறந்து பொங்கி
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
கொடுங்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.14.1) திருஞான சம்பந்தர், ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்தாடியவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். கூனல் பிறை=வளைந்த பிறையினை உடைய சந்திரன்; தேன் மொழியாள் என்பது இந்த தலத்து இறைவியின் திருநாமம். அமர்ந்து=மிகுந்த விருப்பத்துடன்; ஆடி=நீராடுபவன்; மேயான்=விரும்பி உறைபவன்;
வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்தோடிக்
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்
ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி உலகேத்த
தேனில் பொலி மொழியாளொடு மேயான் திரு நகரே
சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.28.12) திருஞானசம்பந்தர், பெருமானை, பாலும் நெய்யும் தயிரும் பயின்றாடி என்று அழைக்கின்றார். மால்=மயக்கம், பிரமிப்பு என்றும் பொருள் கொள்ளலாம். செழித்து ஓங்கி வளர்ந்துள்ள நிலை நமக்கு வியப்பினை அளிக்கும் என்றும், கிளைகள் நெருங்கி வளர்ந்துள்ள நிலை, சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் உள்ளே புகுவதைத் தடுத்து இருண்டு கிடக்கும் நிலை மயக்கத்தை உண்டாக்குகின்றது என்று இருவகையாக பொருள் கொள்ளலாம். பயின்று=தொடர்ந்து, இடைவிடாமல். துதைந்த=பொருந்திய; ஆலும்=ஒலிக்கும்; பால் தயிர் மற்றும் நெய் ஆகியவற்றால் தொடர்ந்து நீராட்டப்படும் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு, பால் நெய் தயிர் கோமியம் சாணம் ஆகியவை கொண்டு, உரிய முறையில் கலந்து, பஞ்சகவ்யம் தயாரித்து இறைவனை நீராட்டுவார்கள். அதை தவிர்த்து, பால் தயிர் நெய் ஆகியவற்றை கொண்டு தனித்தனியாகவும் இறைவனை நீராட்டுவது பழக்கம். இந்த இரண்டாவது தன்மை இங்கே சொல்லப் படுகின்றது என்று கூறலாம். பஞ்சகவ்யம் எனப்படும் கலவையின் மூன்று பொருட்கள் சொல்லப் பட்டமையால், எஞ்சிய இரண்டும் குறிப்பால் உணர்த்தப்பட்டு பஞ்சகவ்யத்தால் இறைவன் நீராட்டப்படுவதை உணர்த்துகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமே. பால் நெய் தயிர் ஆகிய பொருட்களைக் கொண்டு தொடர்ந்து இடைவிடாமல் நீராட்டப்படும் இறைவன், தனது மலை போன்ற மார்பினில் புலித் தோலும் முப்புரி நூலும் அணிந்து கொண்டவர் ஆவார். வியப்புறும் வண்ணம் செழித்து ஓங்கி வளர்ந்த மரங்கள் உடைய சோலைகளில் உள்ள இளமையான மயில்கள் ஆரவாரம் செய்யும் காட்சிகள் கொண்ட சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பாலும் நெய்யும் தயிரும் பயின்றாடித்
தோலும் நூலும் துதைந்த வரை மார்பர்
மாலும் சோலை புடை சூழ் மட மஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே
பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.44.5) திருஞானசம்பந்தர் பெருமானை, பால் நறு நெய் மகிழ்ந்தாடி என்று குறிப்பிடுகின்றார். வாய்மூரி=ஒரு வகை பண்; கங்கை நதியினைத் தனது தலையில் வைத்துள்ள பெருமான், பெண்ணாகிய மழவன் மகள் பால் இரக்கம் கொள்ளாது இருப்பது தவறு அல்லவா என்று நயமாக உள்ளது. சதுர்=சதுரப்பாடு, சாமர்த்தியம்; மண்ணுலகில் வாழும் அடியார்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன், பாலும் நெய்யும் கொண்டு பெருமானை நீராட்டி வழிபடுகின்றனர். இந்த பெருமான், தனது நீண்டு வளர்ந்த சடையினில் கங்கை நதியினை தேக்கி வைத்தவராக, மோந்தை முழா குழல் தாளம் வீணை முதலிய இசைக் கருவிகள் முழங்க வாய்மூரி முதலான பல பண்களில் பாடல்கள் பாடுபவராக, ஆந்தை போன்று சிறிய கண்களை உடைய பூத கணங்கள் சூழ்ந்தவராக விளங்கும் பெருமான், பாச்சிலாச்சிராமம் தலத்தினில் உறைகின்றார். திருநீற்றினை, சந்தனக் கலவையாகத் தனது மார்பினில் பூசியுள்ள பெருமான், மழவன் மகளாகிய தையலை வாடும் வண்ணம் வருத்துவது இவரது சதுரப்பாட்டு தன்மைக்கு பெருமை சேர்ப்பது அல்ல என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. முயலகன் நோயால் வருந்திய மழவன் மகளின் நிலை குறித்து, பெருமானிடம் திருஞானசம்பந்தர் விண்ணப்பம் வைக்கும் பாடல்.
மாந்தர் தம் பால் நறு நெய் மகிழ்ந்தாடி வளர்சடை மேல் புனல் வைத்து
மோந்தை முழாக் குழல் தாளமொர் வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச் சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வோ
செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.61.5) அடியார்கள் பெருமானை, பால், பழம், நெய் போன்ற பொருள்கள் கொண்டு நீராட்டுவதாக கூறுகின்றார். பெருமானுக்கு எண்ணெய்க் காப்பிட்ட பின்னர், பஞ்சகவ்யம், பால், தயிர், நெய், தேன், இளநீர், பழரசம், கருப்பஞ்சாறு, பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி கொண்டு நீராட்டுவது பழக்கம். பழச் சாறு என்பதையும் பஞ்சாமிர்தம் என்பதையும் பழம் என்ற சொல் கொண்டு குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தம். தொடர்ந்து செய்யப்படும் ஒரு செயலை பயிலுதல் என்று சொல்கின்றோம். இவ்வாறு பல பொருட்கள் கொண்டு பெருமானை நீராட்டுவதை தொடர்ந்து பண்டைய நாளில் செய்து வந்தனர் என்பதை திருஞானசம்பந்தர், பயின்றாட்டி என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். நூலினால்=வேத நூல்களில் சொல்லப் பட்டுள்ள முறைகளின் வழியே; மணமாலை=நறுமணம் மிகுந்த மாலைகள்; சேலினார்=சேல் மீன்கள் நிறைந்த; செங்காட்டங்குடி என்பது தலத்தின் பெயர், கணபதீச்சரம் என்பது திருக்கோயிலின் பெயர். கணபதி பெருமானை வழிபட்டதால் வந்த பெயர்.
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்றாட்டி
நூலினால் மணமாலை கொணர்ந்து அடியார் புரிந்து ஏத்த
சேலினார் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள்
காலினால் கூற்று உதைத்தான் கணபதீச்சரத்தானே
வடுகூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.87.2) திருஞானசம்பந்தர், பெருமானை பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்றாடியவன் என்று குறிப்பிடுகின்றார். ஆலும்=நடமாடும்; ஏலும்=பொருந்தும் வண்ணம்; சுடுநீறு=வெந்த சாம்பல்: பெருமான் தனது தன்மையை உணர்த்தும் வண்ணம் வெந்த சாம்பலை அணிந்து கொள்கின்றான் என்று கூறுகின்றார். உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அழிந்த பின்னரும், தான் ஒருவனே என்றும் அழியாமல் நித்தியமாக இருப்பவன் என்பதை உணர்த்தும் பொருட்டு, பெருமான், வெந்த சாம்பலை அணிந்து கொள்கின்றான் என்று கூறுவார்கள். பெருமானின் திருமேனியைச் சாரும் எலும்பு மற்றும் சாம்பலும் ஒளியுடன் திகழ்வதாக கூறுகின்றார்.
பாலும் நறுநெய்யும் தயிரும் பயின்றாடி
ஏலும் சுடுநீறும் என்பும் ஒளி மல்கக்
கோலம் பொழில் சோலைக் கூடி மட அன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே
குற்றாலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.99.1) திருஞானசம்பந்தர் பெருமானை, அம்பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் என்று அழைக்கின்றார். நம்பான் மேய நன்னகர் போலும் குற்றாலம் என்று உணர்த்துவதன் மூலம் நமது நம்பிக்கைக்கு உரியவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வம்பு=புதுமை; எத்தனை முறை கண்டாலும் புதுமையுடன் விளங்கும் குற்றாலம் என்று கூறுகின்றார். வம்பு என்பதற்கு நறுமணம் என்று பொருள் கொண்டு, நறுமணம் கமழும் குற்றாலம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கொம்பு=கிளைகள், இங்கே வேங்கை மரத்தின் கிளைகள். அம் என்ற சொல்லினை ஆடல் என்ற சொல்லுடன் பொருத்தி, அழகிய நீராடல் என்று பொருள் கொள்ள வேண்டும். கோல வண்டு=அழகிய வண்டுகள்; பால் நெய் என்ற இரண்டு பொருட்களை குறிப்பிடுவதன் மூலம், மற்ற மூன்று பொருட்களாகிய தயிர், கோசலம் மற்றும் கோமியத்தையும் குறிப்பதாக பொருள் கொள்ள வேண்டும்.
வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர் வேங்கைக்
கொம்பார் சோலைக் கோல வண்டு யாழ் செய் குற்றாலம்
அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை
நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.105.2) திருஞானசம்பந்தர் பெருமானை பாலொடு நெய் தயிரும் பயின்றாடும் பரமேட்டி என்று கூறுகின்றார். வண்டுகளில் இலட்சக் கணக்கான வகைகள் உள்ளன என்று கூறுவார்கள். சுரும்பு என்பது ஒரு வகை. ஆலை=கரும்பாலை; நெய் பால் தயிர் என்று குறிப்பிட்டமையால், கோமியம் பசுஞ்சாணம் ஆகியவை கலந்த பஞ்சகவ்யம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இறைவனை அனுதினமும் காலையும் மாலையும் பணிந்து வணங்குதல் நம் அனைவரின் கடமை என்று இந்த பாடலில் நமக்கு அறிவுரை கூறுகின்றார். பயின்றாடும்=தொடர்ந்து நடனமாடும்
சோலையில் வண்டினங்கள் சுரும்போடு இசை முரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகை போய் முகில் தோயும் ஆரூரில்
பாலொடு நெய் தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும் போய் பணிதல் கருமமே
சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.112.7) திருஞானசம்பந்தர், பெருமானை ஆவினில் ஐந்து அமர்ந்தவன் என்று அழைக்கின்றார். அமர்ந்தவன்=விரும்புபவன்; வியன் நகர்=அகன்ற பெரிய நகரம்; இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் மதில்களால் சூழப்பட்ட நகரம் என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் வியன் நகர் என்று குறிப்பிட்டு, அந்நாளில் சிறந்த நகரமாக இந்த தலம் இருந்த தன்மையை வலியுறுத்துகின்றார். அரிவை= இளமையான பெண், இங்கே பார்வதி. தேவியை குறிக்கும். பெண்களை அவர்களின் வயதின் அடிப்படையில் ஏழு பிரிவினராக பிரிப்பார்கள்; பேதை (எட்டு வயது வரை) பெதும்பை (ஒன்பது மற்றும் பத்து வயது) மங்கை (பதினொன்று முதல் பதினான்கு வயது வரை) மடந்தை (பதினான்கு முதல் பதினெட்டு வயது வரை) அரிவை (பத்தொன்பது முதல் இருபத்துநான்கு வரை) தெரிவை (இருபத்து நான்கு முதல் இருபத்தொன்பது வரை) பேரிளம் பெண் (முப்பது வயதிற்கு மேல்). நான்காவது மற்றும் ஐந்தாவது பாடல்களில் குறிப்பிட்ட வண்ணம் இந்த தலத்தில் உள்ள சோலைகள் வந்தடையும் வண்டுகள், தேனை பருகும் செயலில் ஈடுபட்டு தம்மை மறந்து பூவில் அமர்ந்த வண்ணம் இருக்கின்றன என்ற குறிப்பு, கணவன் மனைவியராக இந்த தலத்து அடியார்கள் இறை வழிபாட்டினில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைந்து மெய்ம்மறந்து நிற்கின்றனர் என்று உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் கொண்டு நீராட்டப் படுவதில் மிகுந்த விருப்பம் உடைய சிவபெருமான், எப்போதும் அரிவை பிராயத்து பெண் போன்று இளமையாக இருக்கும் பார்வதி தேவி உடனாக பொருந்தி உறைகின்ற நகரம், அகன்ற நகரமாகிய சிவபுரம் ஆகும். பூவில் உள்ள தேனை எடுக்கும் முயற்சியில் தன்னை மறந்து பூவில் அமரும் வண்டுகள் போன்று, இந்த தலத்தில் காணப்படும் நீர்நிலைகளில் உள்ள ஆண் அன்னங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது துணையாகிய பெண் அன்னங்களை தழுவி வாழ்கின்றன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு
மேவி நன்கு இருந்ததோர் வியன் நகர் தான்
பூவில் வண்டமர்தரு பொய்கை அன்னச்
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே
பராய்த்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.135.4) திருஞானசம்பந்தர் பெருமானை, பாலும் நெய் பயின்றாடுபவர் என்று கூறுகின்றார். தோல்=புலித்தோல் அரை=இடுப்பு; தாருகவனத்து முனிவர்கள் ஏவிய புலியைக் கொன்று, அதன் தோலினை ஆடையாக உடுத்திக் கொண்ட நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப் படுகின்றது. பயின்றாடுதல்= தொடர்ந்து நீராடுதல்; வேதங்களை விரித்து ஓதியவர் என்று இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிட்ட திருஞான சம்பந்தருக்கு இறைவன், வேதங்களின் பொருளை சனகாதி முனிவர்களுக்கு உணர்த்திய செய்கை நினைவுக்கு வந்தது போலும். அந்த நிகழ்ச்சியை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த தலத்தில் உள்ள வீராசன தட்சிணாமூர்த்தி சன்னதி சிறப்பு வாய்ந்தது. கல்லால மரத்தின் கீழே அமர்ந்த வண்ணம் சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருளினை விளக்கியவர் சிவபெருமான். இந்த செய்தியை பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. புலித்தோலினைத் தனது இடுப்பினில் ஆடையாகக் கட்டிக் கொண்டவரும், ஒளி பொருந்திய முப்புரி நூலினை தனது மார்பினில் அணிந்தவரும் ஆகிய சிவபெருமான், தொடர்ந்து பாலும் நெய்யும் கொண்டு நீராடுகின்றார். அவரே, ஆல மரத்தின் நீழலில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வருக்கு வேதங்களுக்கு விளக்கம் அறிவித்தவரும், பராய்த்துறை தலத்தினில் உறையும் எமது தலைவரும் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தோலும் தம் அரை ஆடை சுடர் விடு
நூலும் தாம் அணி மார்பினர்
பாலும் நெய் பயின்றாடு பராய்த்துறை
ஆல நீழல் அடிகளே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.6.5) திருஞானசம்பந்தர், ஆனஞ்சு ஆடு முடியான் என்று குறிப்பிடுகின்றார். வேனல்=வெம்மை, இங்கே கோபம் என்று பொருள் கொள்ள வேண்டும். வெருவ=அஞ்ச; எண்ணெய் காப்பிட்டு பெருமானை நீராட்டிய பின்னர், பஞ்சகவ்யம் பால் தயிர் நெய் தேன் இளநீர் பழச்சாறு கருப்பஞ்சாறு சந்தனம் மற்றும் திருநீறு ஆகியவை கொண்டு பெருமானை நீராட்டுவதை நம் பல கோயில்களில் இன்றும் காணலாம். அந்த முறையே இந்த பாடலின் மூன்றாவது மற்றும் நான்காவது அடிகளில் குறிப்பிடப் படுகின்றது. மைந்தனார்=வலிமை வாய்ந்தவர்; தக்கனின் சாபத்தினால் நாளொரு கலை தேய்ந்து முற்றும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்ட சந்திரன், தன்னை அழியாமல் காக்குமாறு பிரமன் உள்ளிட்ட பல தேவர்களிடம் சென்று முறையிடுகின்றான். ஆனால் எவரும் அவனைக் காக்கும் வல்லமை அற்றவர்களாக இருந்தமையால், இறுதியில் சிவபெருமானிடம் தஞ்சம் அடைகின்றான். சிவபெருமான், எஞ்சியிருந்த ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணம் அடைந்த சந்திரனைத் தனது சடை மீது சூட்டிக் கொண்டு மறுவாழ்வு அளிக்கின்றார். பெருமானின் இந்த வலிமை தான், இங்கே மதி சூடிய மைந்தனார் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது.
வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே
வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார்
தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி
ஆனஞ்சு ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே
மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.9.5) திருஞானசம்பந்தர், பெருமானை, அஞ்சாட்ட முன் ஆடிய பால்வணன் என்று கூறுகின்றார். தேனுலா=தேன் பொருந்திய; பானெய்=பால் மற்றும் நெய்; குறி=உயிரின் உறுதியான குறிக்கோள், முக்தி நிலை; இதே பதிகத்தின் நான்காவது பாடலில் மழபாடி மேய மருந்து என்று குறிப்பிட்ட திருஞான சம்பந்தருக்கு உடற்பிணியைத் தீர்ப்பதை விடவும் உயர்ந்த செயல் பெருமான் நமது பிறவிப்பிணியை தீர்ப்பது அல்லவா என்று தோன்றியது போலும். மேலும் சிறந்த முனிவர்களும் சித்தர்களும் தேவர்களும் விரும்புவது இதனைத் தானே. இதனைக் குறியாகக் கொண்டு தானே, அவர்கள் தவம் செய்கின்றனர். மெய்த்தேவர் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இவர்கள் சொர்க்கத்தில் வாழும் தேவர்களினும் வேறானவர்கள் என்று சொல்லப் படுகின்றார்கள். பொதுவாக தேவர்கள் அனைவரும், இன்பத்தில் ஆழ்ந்து இறைவனையும் மறந்து வாழும் அவர்கள், தங்களுக்கு துன்பம் நேரிடும் நேரங்களில் இறைவனிடம் தஞ்சம் அடைவதை நாம் பல புராணங்களில் காண்கின்றோம். அவ்வாறு இல்லாமல் தேவர்களாக உயர்ந்த பின்னரும் இறைவனையே நினைத்து, சொர்க்க இன்பத்தினும் உயர்ந்த இன்பமாக விளங்கும் முக்தி உலகத்தினை அடைய முயற்சி செய்யும் தேவர்களை உண்மையான தேவர்கள் என்று குறிப்பிடுகின்றார் போலும். தேன் பொருந்திய மலர்கள் கொண்டு பெருமானுக்கு அர்ச்சனை செய்தும், பால் நெய் முதலான ஐந்து பொருட்களைக் கொண்டு பெருமானை நீராட்டியும் வழிபடும் உண்மையான தேவர்களும் சித்தர்களும் செய்யும் வழிபாட்டினால் மிகவும் மகிழ்ந்து அதனில் மூழ்கித் திளைக்கும் பெருமானும், மேனி முழுதும் திருநீறு பூசப்பட்டதால் பால் போன்ற வெண்மை நிற வண்ணத்தில் திருமேனி உடையவனும், வானில் உள்ள தேவர்களால் கை தொழுது போற்றப் படுபவனும், சிறப்பு வாய்ந்த மழபாடி தலத்தின் தலைவனாக இருப்பவனும் ஆகிய சிவபெருமானை நாள்தோறும் கும்பிடும் அடியார்கள், சிவபெருமானுடன் கூட வேண்டும் என்ற தங்களது குறிக்கோள் ஈடேறப் பெற்று, முக்தி உலகம் சென்றடைந்து என்றும் பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை; இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில், அஞ்சு முன் ஆடினான் என்று திருஞான சம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார்.
தேனுலா மலர் கொண்டு மெய்த் தேவர்கள் சித்தர்கள்
பானெய் அஞ்சு ஆட்ட முன் ஆடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு மாமழபாடி எம்
கோனை நாடொறும் கும்பிடவே குறி கூடுமே
கோழம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.13.2) தேன் நெய் பால் திகழ்ந்து ஆடிய பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மையான கண்டன்=மை போன்ற கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவன், நீலகண்டன்; மான்மறி=மான் கன்று; கடி=நறுமணம்; மெய்யானை=திருவுடல் உடையவன்; மேவுவார்=பெருமான் பால் சிந்தை செலுத்தி பணிந்து வணங்கும் அடியார்கள்; மேவாவே=பொருந்தி விளங்காது விலகிவிடும்;
மையான கண்டனை மான்மறி ஏந்திய
கையானைக் கடி பொழில் கோழம்பம் மேவிய
செய்யானைத் தேன் நெய் பாலும் திகழ்ந்தாடிய
மெய்யானை மேவுவார் மேல் வினை மேவாவே
திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.23.3) திருஞானசம்பந்தர், பெருமானை பாலோடு நெய் ஆடிய பால் வணன் என்று அழைக்கின்றார். பெருமான் தனது கையில் ஏந்தியுள்ள சூலத்தினை மூவிலை வேல் என்று அழைப்பார்கள். வீடுதல்=நீக்குதல்; தனது உடல் முழுதும் பெருமான், திருநீறு பூசியிருக்கும் தன்மையால், சிவந்த அவனது திருமேனி வெண்மை நிறத்துடன் காணப்படுகின்றது. சிறுவன் மார்க்கண்டேயனை காக்கும் பொருட்டு, அவனது உயிரினைக் கவர வந்த இயமனை தனது காலால் உதைத்து அவனது உடலிலிருந்து உயிரினை நீக்கியவனே என்றும், பால் நெய் முதலான ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடுபவனே என்றும், பால் போன்று வெண்மை நிறத்தில் உள்ள திருநீற்றினைத் தனது உடல் முழுதும் பூசிக்கொண்டு வெண்மை நிறம் கொண்ட திருமேனி உடையவனாக காட்சி தருபவனே என்றும், ஆல மரத்தின் நிழலில் அமர்ந்த வண்ணம் சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கியவனே என்றும், திருவானைக்கா தலத்தினில் உள்ள வெண்ணாவல் மரத்தின் நிழலை தனது இருக்கையாக ஏற்றுள்ள பெருமானே என்றும் உன்னை அழைத்து, உனது திருநாமங்களை, ஆராய்ந்து செய்யப்பட்ட நகைகளை அணிந்து கொண்டுள்ள எனது மகள், சொல்லிக் கொண்டே இருக்கின்றாள். பெருமானே, அவளது ஏக்கத்தினை தீர்க்கும் வண்ணம், எனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டு, உன்னுடன் அவளை சேர்த்துக் கொண்டு நீ, அருள் புரிய வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இந்த பாடல் அகத்துறை வகையைச் சார்ந்த தாயின் கூற்றாக அமைந்தது.
காலால் உயிர் காலனை வீடு செய்தாய்
பாலோடு நெய் ஆடிய பால் வணனே
வேலாடு கையாய் எம் வெண் நாவலுளாய்
ஆலார் நிழலாய் எனும் ஆயிழையே
புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.25.9) திருஞானசம்பந்தர், பெருமானை பாலதாடிய பண்பன் என்று கூறுகின்றார். பூம்புகலி=அழகிய புகலி நகரம்; சீலம்=பெருமை; பாலது=பால் முதலிய ஐந்து பொருட்கள்; பண்பன்=உலகுக்கு பல விதத்திலும் நன்மை செய்பவன்:
மாலும் நான்முகன் தானும் வார் கழல்
சீலமும் முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம் புகலியுள்
பாலது ஆடிய பண்பன் நல்லனே
நாலூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.46.9) திருஞானசம்பந்தர் பெருமானை பாலோடு நெய்யாடி என்று அழைக்கின்றார். ஆழ்ந்தும் பறந்தும் சென்ற போதிலும் அவர்களால் காணமுடியாத தன்மை, தங்களின் எதிரே தோன்றிய தீப்பிழம்பு மேலும்மேலும் வளர்ந்து கொண்டிருந்தது போன்ற உணர்வினை பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவருக்கும் ஏற்படுத்தியது என்பதை குறிப்பிடும் முகத்தான், வளரெரி என்று கூறினார் போலும்; நேட=நாடி தேடிச் சென்ற; நாலோடும்=நான்கு வேதங்களும்; பெருமானை நெய்யும் பாலும் கொண்டு நீராட்டி நாம் மகிழ வேண்டும் என்று இந்த பாடலில் அறிவுரை கூறுகின்றார். திருமாலும் நான்முகனும் தங்களது ஆற்றலை அடுத்தவருக்கு உணர்த்தும் நோக்கத்துடன் தங்களின் முன்னர் எழுந்த நீண்ட தீப்பிழம்பின் அடியையும் முடியையும் தேடிச் சென்ற போது அவர்கள் இருவரும் தனது அடியையோ முடியையோ காண முடியாத வண்ணம் நெடிது உயர்ந்தவன் சிவபெருமான்; நெடுந் தொலைவு அவர்கள் இருவரும் அகழ்ந்தும் பறந்தும் சென்று தேடிய போதிலும், அவர்கள் இருவராலும் காண முடியாத தன்மை, தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பு மேலும்மேலும் வளர்ந்து கொண்டு இருந்ததோ என்ற உணர்வினை அவர்களுக்கு ஏற்படுத்தியது. இவ்வாறு அவர்கள் இருவரிலும் மேன்மையானவனாக விளங்கிய பெருமான், நான்கு வேதங்களையும் அந்த வேதங்கள் அழியாமல் காக்கும் பொருட்டு ஆறு அங்கங்களையும் அருளிய பெருமான், நாலூர் மயானம் தலத்தினில் உறைகின்றான். அந்த இறைவனை, நாம் பாலும் நெய்யும் கொண்டு நீராட்டி வழிபடுவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மாலோடு நான்முகனும் நேட வளர் எரியாய்
மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.49.7) திருஞானசம்பந்தர், பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு பெருமானை நீராட்டி வாழ்வினில் உய்வினை அடையும் அன்பர்கள் ஞான நாயகர்களாகத் திகழ்வார்கள் என்று கூறுகின்றார். புரை=பெருமை; விரை=நறுமணம்;
தானலம் புரை வேதியரொடு தக்க மாதவர் தாம் தொழப் பயில்
கானலின் விரை சேர விம்மும் கலிக்காழி
ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவாகி நின்ற ஒருவனே என்றென்று
ஆனலம் கொடு உய்ப்பார் அருள் வேந்தர் ஆவாரே
பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.60.3) திருஞானசம்பந்தர், பெருமானை, நெய் ஆடுதல் அஞ்சு உடையார் என்று அழைக்கின்றார். தமது கைகளால் தொழுதும் தலையை சாய்த்து வணங்கியும் உள்ளம் கசிந்தும் பெருமானைத் தொழும் அடியார்களின் உடற்பிணிகளையும் துன்பங்களையும் தீர்க்கும் விகிர்தன் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். கோடல்=காந்தள் மலர்கள்; பாம்பு படம் எடுத்து ஆடுவதைப் போன்று காந்தள் பூக்கள் இருப்பதாக கூறுகின்றார். எந்த பொருளிலும் சிவத்தைக் காணும் தன்மையராக விளங்கிய திருஞான சம்பந்தருக்கு, காந்தள் மலர், பெருமானின் உடலுடன் இணைந்த பாம்பினை நினைவூட்டியது போலும். பால் நெய் தயிர் கோமியம் மற்றும் பசுஞ்சாணம் கலந்த பஞ்சகவ்யத்தை விரும்பி பெருமான் நீராடுவது இங்கே உணர்த்தப் படுகின்றது.
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்கள்
மெய்யார் குறையும் துயரும் தீர்க்கும் விகிர்தனார்
நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும்
பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.75.5), திருஞானசம்பந்தர், பெருமானை ஆனைந்தாடிய செல்வன் என்று அழைக்கின்றார். பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்யம் என்ற பொருளால் நீராட்டப்படும் பெருமை உடைய பெருமானை, ஆனைந்து ஆடிய செல்வன் என்று அழைக்கின்றார்.
தூநயம் கொள் திருமேனியில் பொடிப் பூசிப் போய்
நாநயம் கொள் மறையோதி மாதொரு பாகமாக்
கானயம் கொள் புனல் வாசமார் கலிக் காழியுள்
தேனயம் கொள் முடி ஆனைந்தாடிய செல்வனே
தென் திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.88.7) திருஞான சம்பந்தர் பெருமானை அஞ்சாடு சென்னியன் என்று கூறுகின்றார். நீடு=நீண்ட காலமாக இடைவிடாமல்; மூடு வினை=பிணைந்துள்ள வினைகள்; தேய=அழிய; அஞ்சாடு சென்னி= பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு (பஞ்சகவ்யம் என்று அழைப்பார்கள்) நீராடும் சென்னி; அனலாடு=ஊழித்தீயினில் நடமாடுபவன்; மஞ்சாரு= மேகங்கள் பொருந்தும் வண்ணம் உயர்ந்த மாடங்கள்; வைகி=நெருங்கி; அனலாடு மேனி என்பதால் நெருப்பினில் நின்று நடமாடுபவன் என்று பொருள் கொள்வதே பொருத்தம்; அரவாடு கையன் அனலாடு மேனி என்ற தொடரினை அரவாடு மேனி அனலாடு கையன் என்று மாற்றி அமைத்துக் கொண்டு, பாம்பினைத் தனது திருமேனி எங்கும் உடையவன் என்றும், கையில் அனலேந்தி நடமாடுபவன் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பிச்சை இடுவதற்கு செஞ்சாலி என்று உயர்ந்த நெல்லினை பயன்படுத்தினர் என்று தலத்து மாந்தர்களின் உயர்ந்த தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இடைவிடாது நீண்ட காலமாக தங்களது உள்ளத்தில் தன்னை (பெருமானை) நினைத்து வழிபடும் அடியார்களுடன் பிணைந்துள்ள வினைகளை தேய்த்து அழிக்கும் ஆற்றல் படைத்த பெருமான், இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து நீங்கியவன் ஆவான்; பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு (பால், தயிர், நெய், கோமியம் சாணம்) மிகுந்த விருப்பத்துடன் நீராடும் பெருமான், கைகளில் பாம்பினை அணிந்தவனாக ஊழித்தீயினில் நின்று நடமாடுகின்றான். இத்தகைய பண்புகளைக் கொண்டுள்ள அரன் உறையும் ஊர் திருமுல்லைவாயிலாகும். மேகங்கள் தங்கும் வண்ணம் உயர்ந்த மாடங்களை உடைய திருமுல்லைவாயில் தலத்தினில் உள்ள இல்லங்களுக்கு பிச்சை கேட்டு எவர் சென்றாலும், அவர்களுக்கு செஞ்சாலி எனப்படும் உயர்ந்த வகை செந்நெல் சோற்றினை அளித்து மகிழும் உயர்ந்த கருணை உள்ளம் கொண்டவர்கள் வாழும் தலம் திருமுல்லைவாயிலாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடு மேனி அரனூர்
மஞ்சாரும் மாட மனை தோறும் ஐயம் உளதென்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக்கொள் திருமுல்லைவாயில் இதுவே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.91.2) திருஞானசம்பந்தர், பெருமானை ஆனில் ஐங்கிளர் ஐந்தும் ஆடுவர் என்று குறிப்பிடுகின்றார். கூன்=வளைந்த; இளம்பிறை=வளராத ஒற்றைப் பிறைச் சந்திரன்; பஞ்ச கவ்யத்தில் கலக்கப்பட்டு இறைவனுக்கு நீராட்ட பயன்படுத்தப் படுவதால், பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களும், பால் தயிர் நெய் கோமியம் கோசலம் ஆகிய ஐந்து பொருட்களூம் சிறந்தவையாக கருதப்படும் தன்மை, அம் கிளர் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. ஆடுதல்=நீராடுதல்; கொடுவரி=வளைந்த கோடுகள்; புலியின் உடலிலுள்ள கோடுகள் குறிப்பிடப் படுகின்றன.
கூனிளம் பிறை சூடிக் கொடுவரித் தோலுடையாடை
ஆனில் ஐங்கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பது அரவம்
கானலங் கமழ் கழியோதம் கரையொடு கதிர்மணி ததும்பத்
தேனலங் கமழ் சோலைத் திருமறைக்காடு அமர்ந்தாரே
அரசிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.95.5) பெருமானின் சென்னியை, ஆனஞ்சு ஆடிய சென்னி என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மூன்று பறக்கும் கோட்டைகள் கொண்டு அனைத்து இடங்களுக்கும் சென்று பலரையும் துன்புறுத்தி வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்களைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கிய போதிலும், அத்தகைய அச்சம் ஏதும் கொள்ளாமல், அவர்களுடன் போருக்கு சென்ற பெருமான் என்பதை குறிப்பிடும் வண்ணம் தான் அஞ்சா அரண் மூன்றும் என்று இங்கே குறிப்பிடுகின்றார். ஒரு வகையான அச்சம் கலந்த பார்வை உடைய மானின் பார்வையை மருண்ட பார்வை என்று கூறுவார்கள். பிராட்டியின் பார்வை மானின் பார்வையை ஒத்து இருப்பதாக இங்கே கூறுகின்றார்.
மானஞ்சும் மடநோக்கி மலைமகள் பாகமும் மருவித்
தான் அஞ்சா அரண் மூன்றும் தழலெழச் சரமது துரந்து
வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மாமறை ஓதி
ஆனஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே
ஆடானை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.112.6) திருஞானசம்பந்தர் ஆனஞ்சு ஆடலான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். உயிரின் ஊனம், பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்குண்டு மீண்டும்மீண்டும் பிறப்பதே ஆகும். பெருமானை ஆனஞ்சு கொண்டு நீராட்டி மலர்கள் தூவி வழிபடும் அடியார்கள்,பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்று கூறுகின்றார்.
வானிளம்மதி மல்குவார் சடை
ஆனஞ்சு ஆடலான் ஆடானை
தேன் அணிம் மலர் சேர்த்த முன் செய்த
ஊனம் உள்ள ஒழியுமே
தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தினை (3.1.1) திருஞானசம்பந்தர், பெருமான் நீராடுகின்ற பொருட்களை குறிப்பிட்டு தொடங்குகின்றார். பனிகால்=குளிர்ச்சியைத் தரும்; எம=எம்முடைய; நயத்தல்=விரும்புதல்; நாடுதல்=மனம் நாடுதல்; இந்த பாடலில் தில்லை அந்தணர்களுக்கும் பெருமானுக்கும் உள்ள நெருக்கத்தை கூற வந்த திருஞான சம்பந்தர் அபிஷேகத்தையும் அந்தணர்களையும் பிரியாத சிற்றம்பலம் என கூறுகிறார். சிவனை அபிஷேகப் பிரியர் என்று கூறுவர். அதே அளவுக்கு தில்லைவாழ் அந்தணர்களும் சிவபெருமானுக்கு உகந்தவர் என்பதால் அபிஷேகத்தையும் அந்தணர்களையும் இணைத்து கூறுகிறார். இவ்வாறு கூறுவதன் மூலம் தில்லை வாழ் அந்தணர்களின் பெருமையை திருஞானசம்பந்தர் உயர்த்துகிறார். சந்திரனின் கொடிய வினையையே தீர்த்த சிவபெருமானுக்கு நமது வினைகளை போக்குவது எளிய செயல் அல்லவா. எனவே தான் சந்திரனுக்கு அருளிய தன்மை கூறப்பட்டுள்ளது. பால், நெய், தயிர் முதலியவற்றில் ஆடினாய் என்று திருஞான சம்பந்தர், இறைவனை குறிப்பிடுகின்றார். பால், நெய், தயிர் என்ற இந்த மூன்றுடன் நிறுத்தி ஆனஞ்சு ஆடுபவன் என்று குறிப்பால் உணர்த்துவது, சைவ நூல்களில் பின்பற்றப்படும் மரபு. கோமயம், கோசலம் ஆகிய மற்ற இரண்டினை தனியாக திருமுறை பாடல்களில் குறிப்பிடுவது இல்லை. எனவே பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடும் பெருமான் என்று குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். ஆடினாய் என்ற சொல்லுக்கு நடனம் புரிதல் மற்றும் நீராடுதல் என்று இரண்டு பொருள்கள் உள்ளன. இரண்டுமே பெருமானுடன் இணைந்த செயல்கள். ஆடவல்லானை குறிக்கும் இந்த பாடலை, ஆடினாய் என்ற சொல்லுடன் நயமாக தொடங்கி, பெருமான் பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடுவதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரின் சொல்லாட்சியை நாம் இங்கே உணர்கின்றோம். இந்த பாடல் சிவபூஜையின் போது பாடக்கூடிய பாடலாக கருதப்படுகின்றது. நறுமணம் உடைய நெய், பால், தயிர் மற்றும் கோமியம், கோசலம் ஆகிய பொருட்களைக் கொண்டு நீராட்டப் படும் பெருமானே, தில்லை வாழ் அந்தணர்கள் எப்போதும் தங்களது மனதிலும் புறத்திலும் உனது நினைவுகளைக் கொண்டு உன்னை பிரியாது வழிபடும் பெருமை வாய்ந்த சிற்றம்பலத்தைத் தனது அரங்கமாக தேடிச் சென்று நடனம் ஆடுபவனே, நறுமணம் வாய்ந்த கொன்றை மாலையை விரும்பி அணிபவனே, சாமவேத பாடல்களையும் மற்றும் பல கீதங்களையும் பாடுபவனே, பல விதமாக விவரித்து சொல்லப்படும் சடையினில் குளிர்ச்சியைத் தரும் கதிர்களைக் கொண்ட பிறைச் சந்திரனை சூடியவனே, எமது தொல்லை வினைகள் அனைத்தும் சுருங்கி விலகும் வண்ணம் அருள் புரிவாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங் கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனிக்கால் கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே
புனவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.11.3) திருஞானசம்பந்தர் பெருமானை பால் நெய்யாடும் பரமன் என்று அழைக்கின்றார். விடை=இடபம்; வெல்கொடி= பெருமான் எப்போதும் வெற்றியே அடைவதால், பெருமானின் கொடி வெல்கொடி என்று அழைக்கப் படுகின்றது. விறல்=வீரம் மிக்க; பாரிடம்=பூத கணங்கள்; பூத கணங்களால் பெருமான் சூழப் பட்டுள்ள தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. புடை பட=புடை சூழ இருக்கும் நிலை; தொடை=தொடுக்கப்பட்ட மாலை; அந்தார்=அழகிய மாலை;
விடையுடை வெல்கொடி ஏந்தினானும் விறல் பாரிடம்
புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில்
தொடை நவில் கொன்றை அந்தாரினானும் வெண்மழுப்
படை வலன் ஏந்திய பால் நெய்யாடும் பரமன் அன்றே
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.15.3) திருஞானசம்பந்தர் பெருமானை, பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர் என்று குறிப்பிடுகின்றார். ஆலம்=கல்லால மரம் மற்றும் நஞ்சு என்று இரண்டும் பொருத்தமான பொருளே. பெருமானை நஞ்சு சென்று அமர்ந்த கழுத்தினை உடையவன் என்றும் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்தவன் என்றும் கூறலாம். நூலிழை=பூணூல். மேலவர்=சிவஞானம் மிகுந்த அடியவர்கள். பலவும் ஆடுவர் என்பதற்கு, மற்ற பல பொருட்கள் என்று பொருள் கொண்டு, தேன் முதலியவற்றை குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்வார்கள். பதினொரு முறை ஸ்ரீருத்ரம் சொல்லி பெருமானை வழிபடும் முறையினில், பெருமானுக்கு எண்ணெய்க் காப்பிட்டு நீராட்டிய பின்னர், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், கருப்பஞ்சாறு, பழரசம், இளநீர் மற்றும் சந்தனம் கொண்டு அபிடேகம் செய்வதும் வழக்கம். அடிகள்=தலைவர்; பால், தயிர், நெய் முதலான பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களையும் கொண்டு மிகுந்த விருப்பமுடன் நீராடும் பெருமானின் மார்பினில் தோலாடையும் பூணூலும் பொருந்தி உள்ளன. சிவஞானம் மிகுந்த அடியார்களால் துதிக்கப் படும் திருவெண்காடு தலத்தில் பொருந்தி உறையும் அவர், கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்தவர் ஆவார். அவர் எமது தலைவர் அல்லவா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர்
தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய
ஆலமது அமர்ந்த எம் அடிகள் அல்லரே
திருந்து தேவன்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.25.3) திருஞானசம்பந்தர் பெருமானை ஆனஞ்சு ஆடும் அடிகள் என்று குறிப்பிடுகின்றார். மாசு=குற்றங்கள்; மானம்=பெருமை; வான்=உயர்ந்த உலகம், இங்கே சிவலோகத்தை குறிக்கின்றது. ஆனஞ்சு= பசுக்களிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள். உள்குதல்=நினைத்தல்; காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய ஆறு குற்றங்களும் உயிர்களின் உட்பகைகளாக கருதப்படுகின்றன. இந்த குற்றங்கள் தாம் மனிதனை பல வகையான தீய செயல்களை செய்யத் தூண்டுகின்றன. பெருமானின் அடியார்களாக வாழும் அன்பர்களுக்கு இந்த குற்றங்கள் இருப்பதில்லை. இத்தகைய குற்றங்கள் இருப்பவன் எவரேனும் பெருமானின் அடியாராக மாறினால், அவரது குற்றங்களும் களையப்படும் என்பதே இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. தேன் என்ற சொல் இங்கே தேனை சேகரிக்கும் பெண் தேனீக்களை குறிப்பிடுகின்றது. பெருமானின் அடையாளங்களில் ஒன்றான சடைமுடி நீராட்டப்படும் தன்மை இங்கே கூறப் பட்டுள்ளது. திருந்துதேவன்குடி தலத்து பெருமானின் அடையாளங்கள், அடியார்களுக்கு பெருமையை சேர்க்கின்றன; அவர்களின் மனதில் உள்ள குற்றங்களை நீக்குகின்றன. முக்தி உலகத்தை அடையவேண்டும் என்ற ஆவலை அடியார்களின் உள்ளத்தில் உண்டாக்கி, அந்த உலகம் செல்வதற்கான வழிகளை காட்டுகின்றன. இத்தகைய அடையாளங்களை உடைய இறைவன், தேனை சேகரிக்கும் பெண் வண்டுகளும் ஆண் வண்டுகளும் இசை பாடும் சோலைகள் நிறைந்த தேவன்குடி தலத்து இறைவன், பசுக்களிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு அபிடேகம் செய்யப்படும் சடைமுடியை உடையவனாக விளங்குகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மானம் ஆக்குவ்வன மாசு நீக்குவ்வன
வானை உள்கச் செய்யும் வழிகள் காட்டுவ்வன
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி
ஆனஞ்சு ஆடும் அடிகள் வேடங்களே
கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.38.8) திருஞானசம்பந்தர், பெருமானின் கொள்கை ஆனஞ்சு ஆடுவது என்று கூறுகின்றார். இறை என்ற சொல்லுக்கு கேள்விக்கு விடை என்ற பொருளும் பொருந்தும் என்று சிவக்கவிமணியார் கூறுகின்றார். நல்குதல்=கொடுத்தல், இங்கே. சிறிது நேரம் ஒதுக்கி பெருமானின் பெருமையை கூறுவீர்கள் என்ற பொருளில் வந்துள்ளது. கொடி=கொடி போன்ற உடலை உடைய உமையன்னை; வரை=வரைவு, அமைதி; கடவுள் நமக்கு நாக்கு கொடுத்தன் நோக்கமே, அவனது புகழ்ச் செய்கைகளை போற்றி பேசுவதற்கு என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. சிவபெருமானது தொன்மையான புகழினை நாவினால் விரிவாக உரைத்து இறைவனைப் போற்றும் பெரியோர்களே, சிறிது நேரம் ஒதுக்கி அடியேனுக்கும் சற்று கூறுவீர்களாக. அகன்ற காவிரி நதி பாய்ந்து வளம் செய்யும் கண்டியூர் வீரட்டம் தலத்தில் உறைபவனும் நெற்றியில் கண் உடையவனும் ஆகிய இறைவன், பசுக்கள் தருகின்ற ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பத்துடன் நீராடும் கொள்கை குறித்தும், இமயமலையில் வளர்ந்த கொடி போன்று அழகிய உமையன்னை, கயிலாய மலையினை அரக்கன் இராவணன் பேர்த்தெடுக்க செய்த முயற்சியில் மலையில் ஏற்பட்ட அசைவின் காரணமாக கொண்ட அச்சத்தினை நீக்கி அமைதி பெறும் வண்ணம், கயிலாய மலையின் மீது தனது கால் பெருவிரலை ஊன்றி அரக்கனை மலையின் கீழே அடர்த்து நெருக்கியதன் தன்மையையும் சற்று விரிவாக கூறுவீர்களாக என்று அடியார்களை நோக்கி திருஞான சம்பந்தர் கேட்கும் பாடல்.
நா விரித்து அரன் தொல்புகழ் பல பேணுவீர் இறை நல்குமின்
காவிரித் தடம் புனல் செய் கண்டியூர் வீரட்டத்துறை கண்ணுதல்
கோ விரிப் பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற
மா வரைத் தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பதே
திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.53.5) திருஞானசம்பந்தர், பெருமானை, ஆனொடு அஞ்சும் ஆடினான் என்று குறிப்பிடுகின்றார். வானொடொன்று= வானுடன் ஒன்றி உலாவும் சந்திரன்; வாய்மை=உண்மைப் பொருள்; இருவேறுபட்ட உணவுப் பழக்கங்கள் கொண்ட அடியவர்களின் அன்புக்கு பாத்திரமாக இருந்த சிவபெருமான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். கண்ணப்ப நாயனாரையும் சிவகோசரியாரையும் குறிப்பிடுவதாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். காட்டுக்கு வேட்டையாடச் சென்ற திண்ணன் (கண்ணப்பன் என்ற திருநாமம் பின்னர் பெருமானால் அவனுக்கு அளிக்கப்பட்டது) அங்கே மலை மேல் குடுமித் தேவர் என்று அழைக்கப்பட்ட பெருமானின் சிலையினைக் காண்கின்றார். பெருமானின் அருளினால், திண்ணனுக்கு தான் கண்ட பெருமானின் மீது அன்பு பொங்க, அந்த சிலையைக் கட்டித் தழுவினார். தன்னைப் போன்று ஒரு மனிதராக பெருமானையும் கருதிய வேடன், பெருமான் துணையேதும் இன்றி காட்டினில் தனியே இருக்கின்றார் என்று கவலை கொண்டு, அவருக்குத் துணையாக தான் நள்ளிரவிலும் இருப்பேன் என்று முடிவு செய்தார். மேலும் பெருமானின் பசியை தீர்க்கும் வண்ணம் இறைச்சி கொண்டு வந்து கொடுப்பார் எவரும் இலாமையால், தானே இறைச்சி கொண்டு வந்து கொடுப்பேன் என்றும் முடிவு செய்தார். தாங்கள் வேட்டையாடி கொன்று கொண்டு வந்த பன்றியை நெருப்பில் இட்டு வேகவைத்து, பின்னர் தான் கடித்து பதமாக உள்ளதா என்பதை சோதித்துப் பார்த்து, மென்மையாக உள்ள இறைச்சியை தனியே வைத்து இறைவனுக்கு படைத்தார். கண்ணப்பரின் இந்த செய்கையே ஊனோடு உண்டல் நன்று என்று கண்ணப்பர் கருதியதாக திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.
அடுத்த நாள் வழக்கம் போன்று பெருமானுக்கு பூஜை செய்ய வந்த அர்ச்சகர் சிவகோசரியார், பெருமானின் சன்னதியில் இறைச்சி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அபசாரம் நிகழ்ந்தது என்று கருதி ஆங்கிருந்த இறைச்சியை அகற்றி, சன்னதியை சுத்தம் செய்து, மலர்களால் பெருமானை அர்ச்சித்து, தான் கொண்டு வந்த நைவேத்தியத்தை பெருமானுக்கு படைத்தார். மேலும் இவ்வாறு அபச்சாரம் செய்யும் வேடுவரின் செய்கை தவிர்க்கப் படுவதற்கு பெருமான் அருள் புரியவேண்டும் என்றும் பெருமானிடம் அவர் விண்ணப்பம் வைத்தார். அர்ச்சகர் இவ்வாறு, திண்ணனார் அன்புடன் படைத்த இறைச்சியை அகற்றிய செய்கை ஊனோடு உண்டல் தீது என்ற அவர் கருதியதாக இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. திண்ணனார் தம்மை வழிபட்ட முறையினை பெருமான் ஏற்றுக்கொண்ட தன்மை, சிவபெருமான் வாய்மொழியாக சிவகோசரியாருக்கு அவரது கனவிலே உணர்த்தப் பட்டதை சேக்கிழாரின் பாடல் மூலம் நாம் அறியலாம். மேலும் திண்ணனார் செய்த வழிபாட்டினை குறித்து சிவகோசரியார் கவலைப்பட வேண்டாம் என்றும் உணர்த்தி சிவபெருமான் அவரைத் தேற்றினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். இவ்வாறு இவர்கள் இருவரும் செய்த செயல்களை, செயல்கள் மூலம் பேசி தங்களது அன்பினை வெளிப் படுத்தியதாக திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இறை வழிபாட்டிற்கு அன்பே அடிப்படை என்பதும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு இந்த இரண்டு அடியார்களும் வேறுவேறு விதமாக செயல்பட வைத்தவன் இறைவன் தானே. அதனால் இந்த செய்கைகளுக்கு காரணம் அவன் என்பதை உணர்த்தும் வண்ணம், வேறுவேறு விதமாக இருவரும் பேச நின்றவன் பெருமான் என்று கூறுகின்றார். சிவகோசரியாருக்கு பெருமான், கண்ணப்பரின் தன்மையை, உணர்த்துவதை குறிப்பிடும் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம்.
அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கு இனியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள் செய்தார்
ஊன் கலந்த உணவினை உட்கொள்ளுதல் நன்று என்றும் ஊன் கலந்த உணவு உட்கொள்ளுதல் தீது என்று கருதும் தங்களது மனநிலைக்கு ஏற்ற செயல்களைப் புரிந்து வெளிப்படுத்திய அடியார்களின் செய்கைகளை, அவர்களது அன்பின் அடிப்படையில் செய்யப்பட்ட செய்கைகளை, ஏற்றுக்கொண்டு அவர்களது அன்பில் கட்டுண்டு நின்றவன் சிவபெருமான். அவன், வானில் பொருந்தி உலாவும் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டவன். அழியாமல் என்றும் உள்ள பொருளாக நிலைத்து நிற்கும் பெருமான், பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பமுடன் நீராடும் பெருமான், உறையும் இடமாகிய ஆனைக்கா தலம் சென்றடைந்து அவனைப் பணிந்து வணங்குவீர்களாக என்பதே கீழ்க்கண்ட திருவானைக்கா பதிகத்தின் பொழிப்புரை.
ஊனோடு உண்டல் நன்று என ஊனோடு உண்டல் தீதென
ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்
வானொடு ஒன்று சூடினான் வாய்மையாக மன்னி நின்று
ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே
சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.58.3) திருஞானசம்பந்தர், பெருமானை, ஆனலம் தோய்ந்த எம்மான் என்று குறிப்பிடுகின்றார். சாத்தமங்கை என்பது தலத்தின் பெயர், அயவந்தி என்பது திருக்கோயிலின் பெயர்; நூனலம்=நூல் நலம்; நலம் நிறைந்த முப்புரி நூல்; ஆனலம்=ஆன் நலம்=பசுவிடமிருந்து கிடைக்கும் மங்கலப் பொருட்களாகிய ஐந்து பொருள்கள்; தோய்ந்த=நீராடிய;
நூனலம் தங்கு மார்பின் நுகர் நீறு அணிந்து ஏறதேறி
மானன நோக்கி தன்னோடு உடனாவதும் மாண்பதுவே
தானலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை
ஆனலம் தோய்ந்த எம்மான் அயவந்தி அமர்ந்தவனே
வெண்டுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.61.2) திருஞானசம்பந்தர், பெருமானை, பாலொடு நெய் தயிரும் பயின்றாடிய பண்டரங்கன் என்று குறிப்பிடுகின்றார். வீடு செய்=விடுவித்த; பால் நெய் தயிர் என்ற மூன்று பொருட்களை குறிப்பிடுவதன் மூலம், மற்ற இரண்டு பொருள்களாகிய கோசலம் மற்றும் கோமியத்தையும் குறிப்பிடுகின்றார்.
காலனை ஓருதையில் உயிர் வீடு செய் வார் கழலான்
பாலொடு நெய் தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்
மாலை மதியொடு நீர் அரவம் புனை வார் சடையான்
வேலன கண்ணியொடும் விரும்பும் இடம் வெண்டுறையே
திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.92.5) திருஞானசம்பந்தர் பெருமானை, ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவார் என்று குறிப்பிடுகின்றார். பெருமானை பஞ்சகவ்யம் கொண்டு நீராட்டப்படுவதற்கு பயன்படுவதால், பசு அளிக்கும் பால் தயிர் நெய் கோமியம் கோசலம் ஆகிய ஐந்தும் நன்மை பயக்கும் பொருட்களாக கருதப்பட்டு, ஆனின் நல் ஐந்து என்று சிறப்பிக்கப் படுகின்றன.
ஏன வெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இளவரவும்
கூனல் வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோல் உடையார்
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில் வண்டமர் பொழில் திருநெல்வேலி உறை செல்வர் தாமே
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.102.2) திருஞானசம்பந்தர், பெருமானை, ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் என்று குறிப்பிடுகின்றார். ஏ=அம்பு; மேயான்=பொருந்தி உறைபவன்; எழுதல்=உயர்வினை அடைந்து ஓங்குதல்; ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டுகந்தான் என்று பெருமான், பஞ்சகவ்யத்தால் நீராட்டப் படுவதை மிகவும் விரும்புகின்றான் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. ஒரே நாட்டுப் பசுவிடமிருந்து எடுக்கப்படும் பொருட்களைக் கொண்டு,. பால், தயிர், நெய், கோமியம் மற்றும் சாணம் ஆகியவை கொண்டு, தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறுவார்கள். இந்த கலவை சிறந்த கிருமி நாசினியாக கருதப்படுவதால், இயற்கை வைத்தியத்திலும் இடம் பெறுகின்றது. நமது கட்டை விரல் நுனியளவு பசுஞ்சாணத்துடன், சுமார் 200 மில்லி லிட்டர் கோமியமும், அரை லிட்டர் பசுநெய்யும், ஒரு லிட்டர் பசுந்தயிரும், ஒரு லிட்டர் பசும்பாசும் கொண்டு தயாரிக்கப் பட்ட கலவை, பெருமானை நீராட்ட மிகவும் சிறந்ததாக கருதப் படுகின்றது. தன்னை வழிபடும் அடியார்களின் தீவினைகளை தீர்ப்பதற்காக திருநாரையூர் தலத்தில் பொருந்தி உறைபவர் சிவபெருமான்; அவர் பூமாலை பொருந்திய சடைமுடியினை உடையவர்; பூதகணங்கள் புடை சூழ திகழும் அவர், பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் ஐந்து பொருட்களைக் கொண்டு (பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம்) மிகுந்த விருப்பத்துடன் அபிடேகம் செய்து கொள்கின்றார். எவர்க்கும் அடங்காது திரிந்த திரிபுரத்து பறக்கும் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினை எய்து அழித்தவர் பெருமான் ஆவார். வீரக் கழல்கள் அணிந்த அவரது திருப்பாதங்களை நாம் புகழ்ந்து பாடி, வாழ்வினில் உயர்வினை அடைவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தீவினை ஆயின தீர்க்க நின்றான் திருநாரையூர் மேயான்
பூவினை மேவு சடை முடியான் புடை சூழப் பல பூதம்
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும்
ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே
இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் (3.102.9) திருஞானசம்பந்தர், பெருமானை ஆனிடை ஐந்து உகந்தான் என்று கூறுகின்றார். பரவுதல்=புகழ்ந்து தொழுதல்; ஆனிடை ஐந்து= பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள், பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம். மேய=பொருந்திய; சதைத் துணுக்குகள் ஒட்டிய நிலையில் வெண்ணிறத்துடன் காணப்படும் பிரமனின் மண்டை ஓட்டினைத் தனது கையினில் பாத்திரமாக ஏந்திய வண்ணம் பல இடங்களிலும் திரிந்து பலி ஏற்பவர் சிவபெருமான். ஒளிவீசுவதும் சுருண்டு அழகாக காணப்படுவதும் ஆகிய சடையின் மேலே, வானில் தவழும் பிறைச் சந்திரனை வைத்து, சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்தமையால் பெருமான் மிகவும் மகிழ்ந்து காணப்படுகின்றார். இத்தகைய பெருமான், தங்களது உடலினில் வரிகளை உடைய வண்டுகள் யாழின் இசை போன்று முரல, தேன் நிறைந்த தாமரை மலர்களை அன்னம் நெருங்கும் நீர்நிலைகள் கொண்ட திருநாரையூர் தலத்தினில் பொருந்தி உறைகின்றார். அவர் பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள் கொண்டு நீராட்டப்படுவதை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றார். அவரது புகழினை பாடியும் தொழுதும் அவரது திருவடிகளை சென்று அடைவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஊன் உடை வெண்தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன்சடை மேலோர்
வானிடை வெண்மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரலத்
தேனுடை மாமலர் அன்னம் வைகும் திருநாரையூர் மேய
ஆனுடை ஐந்து உகந்தான் அடியே பரவா அடைவோமே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.103.4) திருஞானசம்பந்தர் பெருமானை ஆனமர் ஐந்தும் கொண்டு ஆட்டுகந்த அடிகள் என்று கூறுகின்றார். பொருள்=உண்மையான பொருள்; சிறுகாலை=விடியற்காலை (சிவக்கவிமணியார் பெரிய புராணம் உரை); விடியற்காலையில் எழுந்து, பொழுது புலரும் முன்னம் நீராடி உடலினை சுத்தம் செய்து கொண்டு, பெருமானை வணங்க வேண்டியது முறை என்று பெரியோர்கள் கூறுவார்கள். எனவே உடலை பேணி பாதுகாத்து உறக்கத்தில் ஆழாமல், விடியலில் பெருமானின் வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது என்று பொருள் கொள்வதற்கு சிறுகாலை என்ற சொல்லுக்கு விடியற்காலை என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. சிறுகாலை என்ற சொல்லுக்கு இளமை என்று பொருள் கொண்டு, சிறு வயதிலிருந்தே இறைவனைத் தொழுவதற்கு பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திருஞானசம்பந்தர் கூறுவதாக சிலர் பொருள் கூறுகின்றனர். முதல் வகை விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளதாக தோன்றுகின்றது. ஊன் அமர் யாக்கை=தசை முதலியவற்றால் கட்டப்பட்ட உடல்; தசை எலும்பு இரத்தம் முதலிய பொருட்களின் சேர்க்கையால் ஏற்பட்டுள்ள இந்த உடல் நிலையான பொருளல்ல என்பதை உணர்ந்து, அந்த உடலினைப் பேணி பாதுகாப்பதில் வீணாக நேரத்தை கழிக்காமல், என்றும் நிலையாக நிற்கும் பெருமானின் திருவடிகளை, தேன் மணம் கமழும் கொன்றை மலர்களை சூடிக்கொண்டுள்ள பெருமானின் திருவடிகளை, தினமும் விடியற்காலை நேரத்தில் பணிந்து புகழ்வீர்களாக. பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு, பால் தயிர் நெய் கோமியம் பசுஞ்சாணம் ஆகியவற்றைக் கொண்டு மகிழ்ந்து நீராடும் அடிகளின் இடமாவது, நாள்தோறும் வானவர்கள் வந்து வழிபடும் வலம்புரம் எனப்படும் நன்னகராகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஊன் அமர் ஆக்கை உடம்பு தன்னை உணரில் பொருளன்று
தேனமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்துமினோ
ஆனமர் ஐந்தும் கொண்டு ஆட்டுகந்த அடிகள் இடம் போலும்
வானவர் நாடொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன்னகரே
கலிக்காமூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.105.5) திருஞானசம்பந்தர், பெருமானை ஆனிடை ஐந்து உகந்து ஆடினான் என்று குறிப்பிடுகின்றார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனும் திருவாசகத் தொடர் கூறுவது போன்று, பெருமானை நாம் நினைத்து வணங்குவதற்கு அவனது அருளே காரணம். பெருமான் நம் மீது கருணை கொண்டுள்ள அன்பே, அத்தகைய அருளாக மிளிர்கின்றது. இந்த அருளால் நமக்கு விளைந்த நன்மையை, பெருமானை நினைக்கும் தன்மையை நாம் பெற்றிருப்பதை, நாம் நினைத்து போற்றுவோம் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். தேவர்கள் அடையாத நலனைத் தான் அடைந்ததாக திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். தேவர்கள் போகம் தரும் உலகில் வாழ்பவர்கள். எனவே அவர்கள் அந்த உலகம் தரும் இன்பத்தில் ஆழ்ந்து இறைவனை மறந்து இருத்தல் இயற்கையே. ஆனால் தாங்கள் துன்பம் அடையும் தருணத்தில், தங்களது துன்பங்களைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு பெருமானை நாடும் குணம் உடையவர்கள் அவர்கள். மூன்று வயது குழந்தையாக இருந்த போது, இறைவனின் அருளால் ஞானப்பால் ஊட்டப் பெற்ற திருஞான சம்பந்தரோ, அன்றிலிருந்து என்றும் இறைவனை மறவாது இருந்தமையால், தேவர்களை விடவும் நலன் அடைந்தவனாகத் தன்னை கருதுகின்றார். கண்டல்=தாழை; வாண்மதி=ஒளிவீசும் சந்திரன்; அடைவாம்= அடையும் வண்ணம்; அடைவோம் என்று பன்மையில் கூறியுள்ளமையால் உலகத்தவர்கள் பெருமானின் அன்பு காரணமாக அடைந்துள்ள நன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாகும். நாம் என்ற சொல் நான் என்று எதுகை கருதி திரிந்தது என்றும் கொள்ளலாம். நான் அடைவாம் வண்ணம் அன்பு தந்த நலமே நினைவோமே, என்ற தொடருக்கு, தேவர்களும் அடைய முடியாத பேற்றினை நாம் அடையும் வண்ணம், பெருமான் அருள் புரியும் சிறப்பினை நினைந்து உருகுவோம் என்று திருஞான சம்பந்தர் கூறுவதாகவும் விளக்கமும் அளிக்கப் படுகின்றது. வானில் உலவும் ஒளிவீசும் சந்திரனைத் தீண்டும் வண்ணம் உயர்ந்த மாடங்கள் கொண்டதும், அத்தகைய மாடங்களின் அருகே பேரிரைச்சலுடன் கரையில் கடலலைகள் மோதுவது எப்போதும் நடைபெறுவதும் ஆகிய, கடற்கரைச் சோலைகளின் நிழலில் செழித்து வளரும் தாழைப் புதர்களும், உப்பங்கழிகளும் கொண்ட கலிக்காமூர் தலத்தில் உறையும் இறைவன், பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு மிகுந்த விருப்பத்துடன் நீராடுகின்றான். அத்தகைய இறைவனை தேவர்கள் தொழுது போற்றி வணங்குகின்றனர்; எனினும் அவர்கள் அடையாத நலன்களை, இறைவன் என் மீது கொண்டுள்ள அன்பினால், அடியேன் அடைந்துள்ளேன் என்று திருஞான சம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.
வானிடை வாண்மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம்
கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர்
ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த
நான் அடைவாம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.114.2) திருஞானசம்பந்தர், பெருமானை, பாலும் நெய் உகந்தாட்டும் பரிசர் என்று அழைக்கின்றார். பரிசர்=தன்மையாளர்; உகந்து=மிகவும் விரும்பி; மூரியாமை=வலிமை மிகுந்த ஆனேறு, எருது; முற்றல் ஆமை= செருக்கு நிறைந்த ஆமையாக இருந்த திருமால்: வானினோடும் கலம் பலி தேர்வர் என்ற தொடர், தேவர்கள் மற்ற அடியார்களாலும் விரும்பி வழிபடப் படுபவர் என்று பொருள். தேர்வர்=தேர்ந்து எடுத்து வழிபடப் படுபவர்; பெருமானின் பெருமைகளை அறியாத மனிதர்களின் மனம் இரும்புத் தூண் போன்று வலிமை வாய்ந்தது என்று கூறுகின்றார். மாநகர் கம்பம்=காஞ்சி மாநகரத்தில் உள்ள திருவேகம்பம் திருக்கோயில்.
முற்றலாமை அணிந்த முதல்வரே மூரியாமை அணிந்த முதல்வரே
பற்றி வாளரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய்யும் உகந்தாட்டும் பரிசரே
வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வரே
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மாநகர் கம்பம் இருப்பதே
ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.115.2) திருஞானசம்பந்தர், பெருமானை நாதன் நாடொறும் ஆடுவது ஆனையே என்று கூறுகின்றார். ஆனை என்ற தொடரினை ஆன் ஐ என்று பிரித்து பொருள் காண வேண்டும். இரண்டாவது அடியில் உள்ள ஆகனே என்ற தொடர், உடலினன் மற்றும் இடம் கொடுத்தவன் என்ற இரண்டு பொருள்களில் வருகின்றது.
பாதியா உடன் கொண்டது மாலையே பாம்பு தார் மலர்க் கொன்றை நன் மாலையே
கோதில் நீறது பூசிடும் ஆகனே கொண்ட நற்கையின் மான் இடம் ஆகனே
நாதன் நாடொறும் ஆடுவது ஆனையே நாடி அன்று உரி செய்ததும் ஆனையே
வேத நூல் பயில்கின்றது வாயிலே விகிர்தனூர் திரு ஆல நல்வாயிலே
குருகாவூர் வெள்ளடை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.124.6) திருஞான சம்பந்தர், பெருமானை, ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே என்று அழைக்கின்றார். தலத்து இறைவியின் திருநாமம், காவியங் கண் மடவாள்; காவி=குவளை மலர்; குவளை மலர் போன்று அழகிய கண்ணினை உடைய அம்பிகை. காவியங் கண் மடவாள் என்று அழைக்கப்படும் தேவியுடன், காட்டின் இடையே நின்று, தனது அகன்ற கையினில் தீப்பிழம்பினை ஏந்திய வண்ணம், பெருமானே நீர் நடனம் ஆடுகின்றீர். குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வெள்ளடை தலத்தில் பொருந்தி வீற்றிருக்கும் பெருமானே நீர், பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு மிகுந்த விருப்பத்துடன் நீராடுகின்றீர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
காவியங் கண் மடவாளொடும் காட்டிடைத்
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர்
மேவிய தண் பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே
ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.44.10) அப்பர் பிரான் பெருமானை, ஆனஞ்சு ஆடிய அப்பன் என்று குறிப்பிடுகின்றார். சாடும்=சிதைக்கும், இருளை நீக்கி ஒளி கொடுக்கும் சந்திரனின் தன்மை: தேன் அஞ்சு=தேனுடன் கலந்த பஞ்சாமிர்தம்: பலவிதமான பழங்களைக் கலந்து இறைவனுக்கு அபிடேகம் செய்வது வழக்கம். அவ்வாறு கலக்கப்படும் பழங்களுடன் தேனையும் கலந்து அபிடேகம் செய்வது வழக்கம் இங்கே குறிப்பிடப் படுகின்றது. சந்திரனும் பாம்பும் பல அம்சங்களிலும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. மேலும் அவைகளின் இடையே பகையும் உண்டு. சந்திரன் பலர் காண இரவில் ஆகாயத்தில் பவனி வருவது; பாம்போ மற்றவர் தன்னைக் காணாதவாறு புற்றில் பதுங்கி இருப்பது: உடலுக்கு வெம்மை தரும் கொடிய விடம் கொண்டது பாம்பு; உடல் வெப்பத்தைத் தணிக்கும் குளிர்ச்சியைத் தருவது சந்திரன்; காண்போர் அனைவரையும் நடுங்க வைப்பது பாம்பு, தன்னைக் காணும் அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது சந்திரன்: பெரும்பாலான பாம்புகள் கருமை நிறத்தில் காணப்படுகின்றன; சந்திரனோ பால் வெள்ளை நிறம். பாம்பின் உடலைக் கொண்டது இராகு கோள்; பாம்பின் தலையைக் கொண்டது கேது கோள்; இந்த இரண்டு கோள்களும் சூரியனையும் சந்திரனையும் பிடிக்கும் நாட்கள் கிரகணம் என்று அழைக்கப் படுகின்றது. எனவே சந்திரன், பாம்பினிடம் எப்போதும் பயத்துடன் இருப்பதாக கருதப் படுகின்றது. இந்த இரண்டு பகைவர்களும் ஒருவருக்கொருவர் அச்சம் கொள்ளாமல் இருப்பது அதிசயம் தானே. சர்வ வல்லமை பொருந்திய ஈசனின் சன்னிதானத்தில், பகைமை உணர்வுகளுக்கு இடம் ஏது? அதனால் தான், தங்களுக்கு இடையே உள்ள பகையை மறந்து, இருவரும் இறைவனின் சடையில் உலாவுகின்றார்கள் என்று இங்கே அப்பர் பிரான் தெரிவிக்கின்றார். ஆகாயத்தில் உள்ள இருளினைத் தனது ஒளியின் மூலம் சிதைக்கும் சந்திரனை, அச்சம் ஏதுமின்றி தனது சடையினில் பாம்புடன் இணைந்து உலாவ வைத்தவன் சிவபெருமான். அவன் தேனுடன் கலந்த பழங்களின் கலவையால் நீராட்டப் பெறுவதை மிகவும் விரும்புகின்றான். அவன் இளநீரில் நீராடுபவன்: பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்ட பஞ்சகவ்யத்தில் நீராடுவதையும் பெரிதும் விரும்புகின்றான். அவன் தான் ஆமாத்தூரில் உறையும் அய்யன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வானம் சாடும் மதி அரவத்தொடு
தான் அஞ்சாது உடன் வைத்த சடையிடைத்
தேன் அஞ்சு ஆடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே
அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.80.1) அப்பர் பிரான் பெருமானை ஆனஞ்சாடி என்று அழைக்கின்றார். வானம் சேர்=ஆகாயத்தில் உலவும்; மைந்தன்=வல்லமை உடையவன்; பெருமானை நினைக்காது இருந்தால் கெட்டு விடுவாய் என்று அப்பர் பிரானின் எச்சரிக்கையுடன் இந்த பதிகம் தொடங்குகின்றது. ஆணவ மலத்தின் சேர்க்கையால் அறியாமையில் ஆழ்ந்திருக்கும் உயிர், நல்ல வழியில் செல்லாமல் தடுக்கப் படுகின்றது. உயிருக்கு உதவ வேண்டிய ஐந்து புலன்களும் தங்களின் விருப்பப்படியே உயிரை அலைக்கழித்து உயிரினை மேலும் துன்பத்தில் ஆழ்த்துகின்றன. இவ்வாறு கேட்டினை நோக்கி பயணம் செய்யும் உயிரினை நல்வழிப் படுத்தும் தன்மை இறைவன் ஒருவனுக்கே உண்டு என்பதால், இறைவனை நினைத்து வழிபட்டு உய்யுமாறு அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். கிற்றல் என்றால் இயலுதல் என்று பொருள். கிற்றல் என்பதற்கு சம்மதித்தல் இணக்கும் கொள்ளுதல் என்றும் பொருள் கூறுவார்கள். கூறிட இயலுதல் என்று இறைவனின் திருநாமங்களைச் சொல்ல பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். தக்கனது சாபத்தால் அழியும் நிலையில் இருந்த ஒற்றை பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடிக்கொண்டு, அவனுக்கு மறுவாழ்வு அளித்து அவன் மறுபடியும் வானில் உலவுவதற்கு அருள் புரிந்த வல்லமை உடைய சிவபெருமானை, நெஞ்சமே நீ நினையாமல் இருக்கின்றாய். இவ்வாறு இருந்தால் நீ கெட்டு விடுவாய். பசுவிலிருந்து கிடைக்கப் பெரும் ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பமுடன் நீராடுபவனும், அன்பில் ஆலந்துறைத் தலைவனும், எமது செல்வனும் ஆகிய பெருமானின் திருநாமத்தை சொல்லும் வல்லமையை நீ பெறுவாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.
வானம் சேர் மதி சூடிய மைந்தனை
நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை
ஆனஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறைக்
கோன் எம் செல்வனைக் கூறிட கிற்றியே
இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (5.80.3) அப்பர் பிரான், அன்பின் ஆனஞ்சு அமைந்து உடன் ஆடிய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். வாரணத்து உரி போர்த்தவன் என்று இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான் அந்த யானை எவ்வாறு இருந்தது என்று கற்பனை செய்து பார்த்தார் போலும். உடல் மெலிந்து இருப்பவர்களை நாம் எலும்பும் தோலாக இருக்கின்றான் என்று கூறுவது வழக்கம். இங்கே தோலும் இல்லாமல், வெறும் எலும்புக் கூடாக நின்ற யானை என்று உணர்த்தும் வண்ணம் என்பின் யானை என்று குறிப்பிடுகின்றார். அன்பிலான் என்ற சொல் தன்னை எதிர்த்து வந்த யானையின் மேல் அன்பில்லாதவன் என்றும், அன்பில் தலத்தைச் சார்ந்தவன் என்றும் இரு பொருள்பட நயமாக கையாளப் பட்டுள்ளதை நாம் உணரலாம். அள்ளூறிய=உள்ளத்தில் இருந்து ஊறி எழும்; அடியார்கள் அன்புடன் அளிக்கும் ஆவின் அஞ்சு பொருட்களையும் ஏற்றுக்கொண்டு நீராடும் செய்கையும், அன்பு இல்லாததால் யானையின் தோலை உரித்த செய்கையும் குறிப்பிடப்பட்டு, பெருமான் பால் அன்பு வைத்தால் நம்மில் ஏற்படும் மாற்றத்தினை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். அன்பின் ஆனஞ்சு என்பதற்கு அன்புடன் பசு அளிக்கும் ஐந்து பொருட்கள் என்றும் பொருள் கொண்டு, பசுக்கள் அன்புடன் அளிப்பதை இறைவன் ஏற்றுக் கொண்டு சிறப்பிக்கின்றான் என்றும் கூறலாம். அடியார்கள் பெருமான் பால் மிகுந்த அன்பு கொண்டு, ஆனஞ்சு கொண்டு பெருமானை நீராட்டுகின்றனர் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. அடியார்கள் மிகுந்த அன்பு கொண்டு அளிக்கும் பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களையும் ஏற்றுக் கொண்டு நீராடும் பெருமான், தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலை உரித்துக் களைந்து, அந்த யானை எலும்புடன் நிற்குமாறு செய்தவன் ஆவான். அன்பில் ஆலந்துறையைச் சார்ந்தவனும், எனது தலைவனும் ஆகிய பெருமானை, தங்களது உள்ளத்தில் ஊறிப் பெருக்கெடுத்த அன்புடன் நினைப்பவர்களே, பெருமானை உண்மையில் அறிபவர்கள் ஆவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அன்பின் ஆனஞ்சு அமைந்து உடன் ஆடிய
என்பின் ஆனை உரித்துக் களைந்தவன்
அன்பிலானை அம்மானை அள்ளூறிய
அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே
வாட்போக்கி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.86.6) அப்பர் பிரான் ஆனஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார் என்று குறிப்பிடுகின்றார். ஊனம்=குற்றம்; இறைவனை வணங்கித் தொழாது இருக்கும் நிலை உயிரின் குற்றமாக அப்பர் பிரானால் கருதப் படுகின்றது. கானம் ஓடி என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவது, இடுகாட்டினைத் தேடி வந்து இயமனின் தூதுவர்கள், உயிரினை கடிந்து கொண்டும், உடலின் தலையைப் பிடித்துக் கொண்டும் உயிரை பிரிக்கின்றனர் என்று சிலர் பொருள் உரைக்கின்றனர். உயிர் பிரிந்த பின்னர் தானே, இடுகாட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப் படுகின்றது. எனவே இடுகாட்டிற்கு வர வேண்டிய அவசியம் இயமனின் தூதுவர்களுக்கு இல்லை அல்லவா. கானம் என்பது பொதுவாக காட்டினை குறிக்கும் சொல். நரகத்தில் நாம் செய்த தவறுகளுக்கு ஏற்ப தண்டனை அளிப்பதற்கு வெப்பம் அளிக்கும் தீக்குழிகள் பலவும் இருப்பதால், நரகத்தினை காடு என்பதும் சொல்வதும் பொருத்தமே. நரகம் எனும் காட்டினில் நம்மை கடிந்து கொண்டு நாம் செய்த பல தீயசெயல்களுக்கும் தண்டனை அளிக்கும் இயமனின் தூதுவர்கள், நாம் இருக்கும் இடத்தைத் தேடி வந்து நமது தலையைப் பிடித்துக் கொண்டு, நமது உடலிலிருந்து உயிரினை பிரிப்பதன் முன்னமே, விருப்பத்துடன் பஞ்சகவ்யத்தில் நீராடும் பெருமானும் வாட்போக்கியில் உறைபவனும் ஆகிய பெருமானைத் தொழுவதால் தங்களது குற்றம் நீங்கியவர்களாக காணப்படும் அடியார்களுக்கு பெருமான் தானே முன் வந்து தோன்றி உதவி செய்து அருள் புரிவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.
கானம் ஓடி கடிந்து எழு தூதுவர்
தானமோடு தலை பிடியா முனம்
ஆனஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார்
ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே
அண்டத்தானை என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.94.8) அப்பர் பிரான் பெருமானை, ஆனஞ்சும் வேதிப்பான் என்று அழைக்கின்றார். ஆதிப்பால்=முதற்கண்; வேதிப்பான்= விரும்புபவன்; சாதிப்பான்=உறுதியாக செயல்படுபவன்; சோதிப்பான்=தூய்மை செய்பவன்; அனைத்து உயிர்களும் வினைகளால் கட்டுண்டு இருப்பதை நாம் அறிவோம். பெரும்பாலான உயிர்கள் தங்களுடன் கொண்டுள்ள வினைகளின் தொகுதி மிகவும் பெரியது. எனவே மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவித்துக் கழிப்பது என்பது இயலாத காரியம். மேலும் நமது உடலுக்கும் அதனை தாங்கும் சக்தி இருக்காது. எனவே தான் பெருமான் கருணை கொண்டு, வினைகளின் ஒரு பகுதியை இந்த பிறவிக்கு வைத்துவிட்டு எஞ்சியதை இனி எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு ஒதுக்கி வைக்கின்றார். இவ்வாறு ஒதுக்கி வைக்கப்படும் வினைகளுடன் இந்த பிறவியில் சேரும் வினைகளும் கூடுகின்றன. இத்தகைய வினையையே மேலை வினை (சஞ்சிதம் என்று வடமொழியில் அழைக்கப் படுகின்றது) என்று கூறுகின்றனர். மேலை வினைகளை முற்றிலும் கழித்து விட்டால், பிறவி எடுக்க வேண்டிய அவசியமே ஏற்படாது அல்லவா. எனவே தான் மேலை வினைகளை பெருமான் கழிக்கும் அருட்செயல், உயிர்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிப்பதாக முடிகின்றது. முதற்கண் தோன்றிய அட்ட மூர்த்தியும், பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பமுடன் நீராடுபவனும், பக்குவப்பட்ட உயிர்களின் மேலை வினைகளை அறுத்து அருள் புரிபவனும், உயிர்களை தவத்தினில் ஈடுபடுத்துபவனும், உயிர்கள் செய்யும் தவறுகளை ஆராய்ந்து களைந்து தூய்மை செய்பவனும் ஆகிய பெருமானே தொழத் தக்கவன்; எனவே உலகத்தவர்களே அவனைக் கண்டு பணிந்து வணங்கித் தொழுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஆதிப் பால் அட்ட மூர்த்தியை ஆனஞ்சும்
வேதிப்பானை மேல்வினை வெந்தறச்
சாதிப்பானைத் தவத்திடை மாற்றங்கள்
சோதிப்பானைக் கண்டீர் தொழற்பாலதே
பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.10.9) அப்பர் பிரான், பெருமானை ஆனஞ்சு ஆடி என்று குறிப்பிடுகின்றார். நீலம்=பெருமானின் கழுத்தினில் நீலநிறத்தை உண்டாக்கிய விடம். நெருப்பு=நெருப்பினில் இடப்படும் அவிர்பாகம். பாறு=பருந்து; ஏழுலகும் புகழும் வண்ணம், எருதின் மீதேறி எங்கும் திரியும் பெருமானை, தேவர்கள் எப்பொழுதும் வேண்டி வழிபடுகின்றார்கள். நீறணிந்த மேனியராக காணப்படும் பெருமான், தனது கழுத்தினில் விடத்தை அடைத்து வைத்ததால் நீல நிறமாக மாறிய கழுத்தினை உடையவர் ஆவார். வேள்விகளில் அளிக்கப்படும் அவிர்பாகத்தை விரும்பி ஏற்கும் பெருமான், தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு நடமாடுகின்றார். கங்கை ஆற்றினைத் தனது சடையில் ஏற்றுக்கொண்ட பெருமான், பசுவிலிருந்து பெறப்படும், பால் தயிர் நெய் கோமியம் மற்றும் கோசலம் ஐந்து பொருட்களையும் கொண்டு அடியார்கள் நீராட்ட, அதனை மிகவும் உகந்து ஏற்கின்றார். நெருப்பு போன்ற கொடிய விடத்தை கக்கும் ஐந்து தலைகள் கொண்ட நாகத்தினைத் தனது இடையில் இறுகக் கட்டி சுற்றிய பெருமான், புலால் நாற்றம் வீசுவதால் பருந்துகள் சுற்றித் திரியும் பிரமனின் மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவாறு. பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்று, பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். இவர் தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஏறேறி ஏழுலகு ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்
பாறேறு வெண் தலையார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே
கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.12.4) அப்பர் பிரான், பெருமானை ஆனஞ்சும் ஆடும் ஆதிரையினார் என்று குறிப்பிடுகின்றார். மடிநாறுதல்=அழியும் தன்மை; பூதிப் பையர்=திருநீறு கொண்ட பையினை உடையவர். பெருமான் தனது உடல் முழுவதும் திருநீறு பூசியவராக, பல திருமுறைப் பாடல்களிலும் சித்தரிக்கப் படுகின்றார். அவ்வாறு எப்போதும் உடல் முழுவதும் திருநீறு பூசியவராக காணப்படுகின்றார் என்றால், அவரது அருகில் திருநீற்றுப் பை இருக்க வேண்டும் அல்லவா. இதனை உணர்த்தும் வகையில் பூதிப் பையர் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு நமக்கு ஆலால சுந்தரர், பெருமானுக்கு அணுக்கத் தொண்டு புரிந்த தன்மையை நினைவூட்டுகின்றது. ஒரு சமயம், கயிலை மலையில் உபமன்யு முனிவர், தென்திசையிலிருந்து கயிலை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு ஒளியினை வணங்கிய பின்னர், ஒளிப்பிழம்பாக வருவது சுந்தரர் என்று தனது சீடர்களுக்கு கூறினார். சுந்தரர் யார் என்று அவர்கள் கேட்டபோது, கயிலாய மலையில் சிவபெருமான் அணிவதற்கு மலர் மாலையையும் திருநீற்றினையும் எடுத்துக் கொடுப்பவர் ஆலால சுந்தரர் என்று கூறியதாக பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. மணம் மிகுந்த திருநீற்றினைத் தனது உடலில் பூசியவராகவும், திருநீற்றுப் பையினை உடையவராகவும், புலித் தோலை உடையவராகவும், கோபத்தால் பொங்கி படமெடுக்கும் பாம்பினை உடலில் அணிந்தவராகவும்,பூணூல் அணிந்தவராகவும், உள்ள பெருமானை அவரது அடியார்கள் நறுமணம் மிகுந்த தாமரை மலர்களைக் கொண்டு அவரது திருவடிகளில் சாத்தி வழிபடுகின்றார்கள். திருவாரூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டவரும், ஆதிரை நட்சத்திர நாளினை மிகவும் விரும்புவரும். பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நீராட்டப்படுபவரும், ஆகிய இறைவன் கழிப்பாலைத் தலத்தில் விருப்பத்துடன் உறைகின்றார். கையினில் கபாலம் ஏந்திய அவர், மீண்டும்மீண்டும் பிறவிகள் எடுத்து அழியும் தன்மை கொண்ட உடல்களுடன் இணைந்து வாழும் நிலையிலிருந்து விடுபட்டு, என்றும் நிலையான இன்பத்தினை அளிக்கும் முக்தி நிலைக்குத் செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக என்று அப்பர் பிரான் அறிவுரை கூறுவதாக அமைந்த பாடல்.
பொடி நாறு மேனியர் பூதிப் பையர் புலித் தோலர் பொங்கு அரவர் பூணநூலர்
அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆனஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்
கடிநாறு பொன்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபாலப்பனார்
மடிநாறு மேனி இம் மாயம் நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.23.7) அப்பர் பிரான், பெருமானை ஆனஞ்சும் ஆடி என்று குறிப்பிடுகின்றார். பரவை=கடல்: ஆலை=ஆல்+ஐ=மிகுந்த அழகு; தடவு=அளாவும்; வேலை=கடல்; துன்பம் என்ற பொருளினைத் தரும் அலை என்ற சொல் ஆலை என்று திரிந்ததாகவும் கூறுவார். தக்கன் செய்த வேள்வியில் பங்கேற்ற பலருக்கும் துன்பமே மிஞ்சியதால், பலருக்கும் துன்பத்தினை சேர்த்த வேள்வி என்று கூறுவதும் பொருத்தமே. பாற்கடலிலிருந்து திரண்டெழுந்த நஞ்சினைத் தனது கழுத்தில் தேக்கியவனும், விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த கயிலை மலையை உடையவனும், மிகுந்த அழகுடன் விமரிசையாக செய்யப்பட்ட தக்கனது வேள்வியினை அழித்தவனும், தேவர்கள் அனைவராலும் புகழப் படுவானும், பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் பால், நெய், தயிர் கோமியம் சாணம் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பத்துடன் நீராடுவானும், பருப்பதம் தலத்தில் உறைபவனும், கடலின் நிறத்தில் தனது திருமேனியை உடைய திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும் ஆகிய இறைவன், திருமறைக்காடு தலத்தில் மணாளனாக திகழ்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள் தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய்
பால் நெய் சேர் ஆனஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே
ஆவினிலைந்து என்பதை பாலோடு அஞ்சு என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலாகும் (6.46.5). ஒரு மணி=ஒப்பற்ற மணி: உதயத்தின் உச்சி=தோன்றும் ஒளிப் பொருட்களுக்கு எல்லாம் முன்னமே தோன்றிய ஒளி; உருமு=இடி பருமணி=பெரிய மணி; பவித்திரன்=தூயவன்; அருமணி=கிடைத்தற்கு அரிய மணி; திருமணி=எந்த திருத்தமும் செய்ய வேண்டிய நிலையில் இல்லாது இயல்பாகவே ஒளியுடன் மிளிரும் மணி; உலகுக்கோர் உறுதி என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். திண்மை என்பது நிலத்தின் தனிப் பண்பு. உறுதியாக இருக்கும் தன்மையாக நிலத்துடன் கலந்து இருப்பது சிவபெருமான் என்று உணர்த்தும் வண்ணம், உலகுக்கோர் உறுதி என்று இங்கே கூறுகின்றார். உலகு என்ற சொல்லுக்கு உலகத்தவர் என்று பொருள் கொண்டு, உறுதியாக உயிர்களுக்கு இறைவன் உதவி செய்யும் தன்மையை குறிப்பதாக பொருள் கொள்வதும் பொருத்தமே.
ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி தன்னை உதயத்தின் உச்சியை உருமானானைப்
பருமணியைப் பாலோடு அஞ்சு ஆடினானைப் பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றை
திருமணியைத் தித்திப்பைப் தேனதாகித் தீங்கரும்பின் இன் சுவையைத் திகழும் சோதி
அருமணியை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.56.9) அப்பர் பிரான், பெருமானை, ஆனஞ்சு உகந்தவன் என்று குறிப்பிடுகின்றார். செய்ய மலர்=சிவந்த தாமரை மலர்; பொறை=அருள்; மிக்கார்கள்=நற்குணங்களை அதிகமாக கொண்ட சான்றோர்கள்; கை=துதிக்கை; சிவந்த தாமரை மலரைத் தனது இருக்கையாக கொண்ட பிரமனும், கண்ணனாக அவதாரம் செய்த திருமாலும் தேடியும் காணமுடியாத வண்ணம் நின்றவனே, உட்கொள்பவரின் உயிரினை தவறாது நீக்கும் கொடிய ஆலகால நஞ்சினை உலகினை காப்பாற்றும் பொருட்டு, உட்கொண்டு, நஞ்சின் தாக்கம் ஏதும் இல்லாமல் இருப்பவனே, அடியேனையும் ஒரு பொருளாக கருதி ஆட்கொண்டவனே, தனது உடலினை பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராட்டுபவனே, சான்றோர்கள் புகழும் வண்ணம் பல அரிய நற்பண்புகளை கொண்டவனே, தும்பிக்கை உடைய மத யானை தன்னை எதிர்த்து வந்த போது அதன் தோலை உரித்து போர்வையாக அணிந்தவனே, கயிலை மலையினை இருப்பிடமாக உடையவனே, உன்னை பலமுறையும் நான் போற்றுகின்றேன் என்று அப்பர் பிரான் போற்றுவதாக அமைந்த பாடல்.
செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி
பொய்யா நஞ்சுண்ட பொறையே போற்றி பொருளாக என்னை ஆட்கொண்டாய் போற்றி
மெய்யாக ஆனஞ்சு உகந்தாய் போற்றி மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி
கையானை மெய்த் தோல் உரித்தாய் போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி
கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.2) அப்பர் பிரான் பெருமானை ஆனஞ்சும் ஆடும் மெய்யான் என்று குறிப்பிடுகின்றார். மூன்று மூர்த்திகளாகவும் இறைவன் உள்ள தன்மை, பல திருமுறைப் பாடல்களில் செய்யான் (சிவந்த திருமேனி கொண்டுள்ள சிவபெருமான்) கரியான் (கருமையான திருமேனி கொண்டுள்ள திருமால்) வெளியான் (வெண்ணிற மேனி கொண்டுள்ள பிரமன்) என்று குறிப்பிடப் படுகின்றது. நான்கு திசைகளையும் பார்த்தவாறு நான்கு முகங்களை உடைய பிரமனை திசைமுகன் என்று கூறுவார்கள். ஆனால் இந்த பாடலில் செய்யான் என்று தொடங்கும் தொடரினைத் தொடர்ந்து திசைமுகன் என்ற சொல் மூலம் நான்முகனாக இருப்பவனும் பரமன் தான் என்று, அப்பர் பிரான் குறிப்பிடுவதால், செய்யான் வெளியான் கரியான் என்ற சொற்கள் மூன்று மூர்த்திகளை குறிப்பதாக நாம் பொருள் கொள்ள முடியாது. செம்மை, வெண்மை மற்றும் கருமை ஆகிய மூன்று நிறங்களும் அடிப்படை நிறங்களாக கருதப் படுகின்றன. இராஜசம், தாமசம் சத்வம் ஆகிய மூன்று அடிப்படை குணங்களாகவும் இறைவன் உள்ள தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. மேலும் செம்மை நிறமுடைய திருமேனி கொண்டுள்ள பெருமான், தனது திருமேனி எங்கும் வெண்ணீறு பூசியவனாக இருப்பதால் வெளியானாகவும் திகழ்கின்றான். கரிய நிறம் கொண்ட திருமாலையும் பார்வதி தேவியையும் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுள்ள இறைவன் கரியவனாக திகழ்வது இங்கே கரியான் என்று குறிப்பிடப் படுகின்றது ஐ=அழகு; ஐயான்=அழகியவன்; ஐ என்ற சொல்லுக்கும் தலைமை என்று பொருள் கொண்டு, தலைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நொய்யான்=நுண்மையானவன்; சேயான்=தொலைவில் இருப்பவன்; அணியான்=மிகவும் அருகில் இருப்பவன்; சீரியான்= சிறப்பான புகழினை உடையவன்
செய்யானை வெளியானைக் கரியான் தன்னைத் திசைமுகனைத் திசை எட்டும் செறிந்தான் தன்னை
ஐயானை நொய்யானைச் சீரியானை அணியானைச் சேயானை ஆனஞ்சு ஆடும்
மெய்யானைப் பொய்யாதும் இல்லான் தன்னை விடையானைச் சடையானை வெறித்த மான் கொள்
கையானைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
செம்மையான திருமேனியை உடையதால் சிகப்பு நிறத்தையும், செம்மேனி மேல் வெண்ணீற்றை பூசியதால் வெண்மை நிறத்தையும் திருமாலையும் பார்வதி தேவியையும் தனது உடலில் ஏற்றுக் கொண்டதால் கருமை நிறத்தையும் கொண்டுள்ள பெருமான், மூன்று அடிப்படை குணங்களாகிய இராஜசம் தாமசம் மற்றும் சாத்வீகம் ஆகிய மூன்று குணங்களாகவும் திகழ்கின்றான். நான்முகனாக இருப்பவனும், எட்டு திசைகளிலும் பரவி நிறைந்து உள்ளவனும், மிகவும் அழகாக இருக்கும் தலைவனும், மிகவும் நுண்ணிய பொருளாக இருப்பவனும், சிறப்பான புகழினை உடையவனும், அடியார்களுக்கு மிகவும் அருகாமையில் இருப்பவனும், தீயவர்களுக்கு தொலைவில் இருப்பவனும், பஞ்சகவ்யம் கொண்டு நீராட்டப்படும் திருமேனியை உடையவனும், பொய்யேதும் இல்லாது உண்மையே வடிவமாக இருப்பவனும், எருதினை வாகனமாக உடையவனும், சடைமுடியினை உடையவனும், மருண்ட பார்வை கொண்டுள்ள மான் கன்றினைத் தனது கையில் ஏந்தியவனும், அனைவர்க்கும் மேலானவனும் ஆகிய இறைவன் கற்குடி தலத்தில் கற்பகமாக எழுந்தருளி இருப்பதை அடியேன் எனது கண்களால் கண்டு உய்ந்தேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (6.68.1) அப்பர் பிரான், பெருமானை ஆனஞ்சும் ஆடி என்று அழைக்கின்றார். கருமணி=கண்ணின் கருமணியைப் போன்று மிகவும் அருமையானவன். கோவணவன் தன்னை என்றும் ஒரு பாடம் உள்ளது. கோளரவு=கொடிய பாம்பு: அதள்=தோல்; ஆற்ற=மிகவும்: கனகம்=பொன்; திருமணி=திருவினை உடைய மணி, வீடுபேறு ஆகிய செல்வத்தை உடைய மணி; குருமணி=நல்ல நிறமுடைய மாணிக்கக் கல்; குருமணி என்பதற்கு சிறந்த ஆசிரியன் என்றும் பொருள் கொள்ளலாம். கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க என்று திருவாசகம் சிவபுராணத்தில் மணிவாசகப் பெருமான் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. கருமணி என்பதற்கு சிவக்கவிமணி திரு சி.கே.எஸ். அவர்கள், தனது பெரியபுராண விளக்கம் புத்தகத்தில், ஒரு அருமையான விளக்கத்தை அளித்துள்ளார். முற்றூழிக் காலத்தில், உயிர்கள் அனைத்தும் இறைவனிடம் ஒடுங்குவதையும், அவ்வாறு ஒடுங்கும் உயிர்களை பின்னர் இறைவன் விடுவிப்பதையும் நாம் அனைவரும் அறிவோம். எனவே அத்தனை உயிர்களையும் ஈன்ற பெருமானை கருவினை ஈன்றவன் என்ற பொருள் பட கருமணி என்று அழைப்பது பொருத்தம் தானே
கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானைக் கருதுவார்க்கு ஆற்ற எளியான் தன்னைக்
குருமணியைக் கோளரவு ஒன்றாட்டுவானைக் கொல்வேங்கை அதளானைக் கோவணன்னைக்
அருமணியை அடைந்தவர்கட்கு அமுதொப்பானை ஆனஞ்சுமாடியை நான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
கண்ணின் கருமணியைப் போன்று நமக்கு அருமையாக இருப்பவனும், பொற்குன்றினை ஒத்து இருப்பவனும், தன்னை தியானிக்கும் அடியார்களுக்கு மிகவும் எளியவனாக இருப்பவனும், ஞானத்தை வழங்கும் சிறந்த ஆசிரியனாக விளங்குபவனும், கொடிய பாம்பினைத் தனது விருப்பம் போல் ஆட்டும் வல்லமை படைத்தவனும், கொல்லும் குணத்தினை உடைய புலியினை உரித்து அதன் தோலினை உடையாக அணிந்தவனும், இடுப்பில் கோவணத்தை அணிந்து காட்சி தருபவனும், விலையுயர்ந்த மணி போன்று அருமையானவனும், தன்னைச் சரணம் புகுந்த அடியார்களுக்கு அமுதம் போன்று இனிப்பவனும், பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை விரும்பி நீராடுபவனும், அடியேனை சரணாக ஏற்றுக் கொண்டவனும், வீடுபேறு எனப்படும் செல்வத்தை அருளும் மணியாக விளங்குபவனும், மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானும் ஆகிய சிவபெருமானை. நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா என்று தனது கொடிய வினைகள் குறித்து வருந்தும் அப்பர் பிரானின் பாடல் இந்த பாடல்.
கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.67.1) அப்பர் பிரான், பெருமானை, ஆனஞ்சும் ஆடி என்று குறிப்பிடுகின்றார். ஆளான அடியார்=பெருமானுக்கு அடிமையாக மாறி திருத்தொண்டு செய்யும் அடியார்கள்; ஆளான அடியார்கட்கு அன்பனாக பெருமான் இருந்த தன்மை, நாயன்மார்களின் சரித்திரத்திலிருந்து நாம் அறிகின்றோம். சண்டீசருக்கு பதவி அளித்தது. திருஞான சம்பந்தருக்கு பொற்றாளம் அளித்தது, முத்துப் பல்லக்கு அளித்தது, முத்துப் பந்தர் அருளியது, உலவாப் பொற்கிழி அருளியது, திருநாவுக்கரசு நாயனாருக்கு பொதிசோறு அளித்தது, அவரது தோள்களில் இடப இலச்சினைகள் பொறித்தது, தனது திருவடியை அவரது தலையினில் வைத்தது, சுந்தரருக்கு வேண்டியபோதெல்லாம் பொருள் அளித்தது முதலான நிகழ்ச்சிகள் அடியார்களுக்கு அன்பனாக விளங்கும் பெருமான் செய்யும் உதவிகள். பெரிய புராணத்தில் உணர்த்தப்படும் கருணைச் செயல்கள் அனைத்தும் இறைவன் அடியார்களுக்கு அன்பனாக இருந்த தன்மையால் எழுந்தது தானே. இவ்வாறு அடியார்களுக்கு உதவும் அன்பனாக விளங்கும் தன்மை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. துளையில்லாத முத்து என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு தோளா முத்துச் சுடர் என்று மணிவாசகர் போற்றித் திருவகவலில் குறிப்பிடுவதை நினைவூட்டுகின்றது. கீள்=கிழிக்கப்பட்ட துணியால் முறுக்கிய கயிறு, கோவணத்தை தாங்குவதற்காக இடுப்பினில் கட்டப்படுவது. இறைவனை கீளும் கோவணமும் அணிந்தவன் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை ஆனஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க
தாளானை தன்னொப்பார் இல்லாதானைச் சந்தனமும் குங்குமமும் சாந்தும்தோய்ந்த
தோளானை தோளாத முத்தொப்பானைத் தூவெளுத்தகோவணத்தை அரையிலார்த்த
கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே
தனக்கு அடிமையாக மாறி திருத்தொண்டு செய்யும் அடியார்களுக்கு அன்பனாக இருப்பவனும், பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பமுடன் நீராடுவானும், அடியேன் அடைக்கலம் புகும் இடமாக தனது திருப்பாதங்களை உடையவனும், தனக்கு ஒப்பாக வேறு எவரும் இல்லாதவனும், சந்தனம் குங்குமம் சாந்து ஆகிய வாசனைப் பொருட்களை பூசிய தோள்களை உடையவனும், துளையிடப்படாத முத்தினைப் போன்று சிறப்பும் உயர்வும் உடையவனும், தூய்மையாக வெண்மை நிறத்தில் உள்ள கோவணத்துடன் கீளினையும் தனது இடுப்பினில் அணிந்தவனும் ஆகிய பெருமானை, கீழ்வேளூரை ஆளும் அரசனாக அந்த தலத்தில் குடிகொண்டிருக்கும் கேடிலிப் பெருமானை நாடிச் சென்று அவனை வழிபடும் அடியார்கள், தாங்கள் இறந்த பின்னர் மறுபடியும் பிறத்தலாகிய கேட்டினை நீக்கியவர்களாக விளங்குவார்கள் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.
கஞ்சனூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.90.1) அப்பர் பிரான், பெருமானை ஆவினில் ஐந்து உகந்தான் என்று குறிப்பிடுகின்றார். மூன்று சுடர்க் கண்ணினான் என்று, சூரியன் சந்திரன் மற்றும் அக்னி இறைவனின் கண்களாக இருக்கும் நிலை இந்த பாடலில் கூறப்படுகின்றது. நாவலன்=புலவன். வேதங்களை அருளிய பெருமான் என்பதால் புலவன் என்றும், தருமிக்கு பொற்கிழி அளிக்க உதவும் வண்ணம் பாட்டு எழுதியமையால் புலவன் என்றும், பாண பத்திரர்க்கு உதவும் வண்ணம் கவிதை எழுதி சேரமான் பெருமாளுக்கு அளித்தமையால் (பதினோராம் திருமுறை முதல் பதிகம், மதிமலி புரிசை என்று தொடங்கும் பதிகம்) புலவன் என்றும் இறைவனை அழைத்தார் அப்பர் பிரான் என்று கூறுவதுண்டு. நாவலன்=புலவன். மூன்று இலைகளைக் கொண்டதும், உலகத்திற்கு நன்மை புரிவதும் ஆகிய சூலத்தைத் தனது வலது கையினில் ஏந்தியவனும், சூரியன் சந்திரன் மற்றும் அக்னி எனப்படும் மூன்று சுடர்களைத் தனது மூன்று கண்களாக உடையவனும், அனைவர்க்கும் தலைவனாக உள்ளவனும், நாவன்மை பொருந்திய புலவனாக உள்ளவனும், நரை போன்ற வெண்மை நிறத்தினை உடைய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவனும், நான்கு வேதங்களாகவும் ஆறு அங்கங்களாகவும் திகழ்பவனும், பசு தரும் ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பத்துடன் நீராடுபவனும், தேவர்களுக்குத் தலைவனும், திருமால் பிரமனாக இருந்து அவர்களின் செயல்களைச் செய்பவனும், அக்னியால் போற்றப் பட்டவனும், உலகுக்கு காவலாக இருப்பவனும், கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
மூவிலை நற்சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால்வேதம் ஆறங்கம் ஆயினானை
ஆவினில் ஐந்து உகந்தானை அமரர் கோவை அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும்
காவலனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலிலும் (6.92.1) அப்பர் பிரான் பெருமானை ஆவினில் ஐந்து உகந்தான் என்று குறிப்பிடுகின்றார். புணர்தல்=நெருங்குதல்;
மூவிலை வேல் கையானை மூர்த்தி தன்னை முதுபிணக்காடு உடையானை முதல் ஆனானை
ஆவினில் ஐந்துகந்தானை அமரர் கோனை ஆலாலம் உண்டு உகந்த ஐயன் தன்னைப்
பூவினில் மேல் நான்முகனும் மாலும் போற்றப் புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
பெருமான் பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் பொருட்களைக் கொண்டு நீராடுவதை திருஞான சம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு சுந்தரர் ஓணகாந்தன்தளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலை (7.5.1) நினைவூட்டுகின்றது. காணம்=காசு; ஐந்து பொறிகளின் தேவையை நிறைவேற்ற மனிதனுக்கு பணம் தேவைப் படுகின்றது. எனவே தன்னை வருத்தும் பொறிகளை இன்புறச் செய்து, அந்த பொறிகள் துன்பம் தருவதை தடுக்கும் வண்ணம், உனது அடியார்களுக்கு, உன்னை நெய் பால் தயிர் ஆகியவை கொண்டு நீராட்டும் அடியார்களுக்கு நீ பணம் அருள வேண்டும் என்று கூறுவதாக அமைந்த பாடல். பெரிய புராண வரலாற்றிலிருந்து சுந்தரர் தனக்கு பொன் வேண்டி இறைவனிடம் இறைஞ்சி பாடிய பாடல் இது என்று நாம் அறிகின்றோம்.
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசனை செய்யல் உற்றார்
கையில் ஒன்றும் காணம் இல்லைக் கழலடி தொழுது உய்யின் அல்லால்
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி ஆழ்குழிப்பட்டு அழுந்துவேனுக்கு
உய்யுமாறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன்தளி உளீரே
கானாட்டுமுள்ளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.40.7) சுந்தரர், பெருமானை ஆனஞ்சும் ஆடும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அருமணி=அரிய மணி; திருமணி= சிறந்த செல்வமாக கருதப்படும் பல மணிகள்; ஊறல் இருந்தேன்=கரும்பினில் ஊறும் இனிய சாறு; தெரிவரிய=தெரிந்து கொள்வதற்கு அரிய; குருமணி=நல்ல ஒளிவீசும் நிறத்துடன் காணப்படும் மணிகள்; திரை வாய்=அலைகளுக்கு இடையில்; கோல் வளையார்=வரிசையாக வளையல்கள் அணிந்த மகளிர்; கருமணி=நீலோற்பல மலர்;
அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும் அமரர்கள் தம் பெருமானை அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறல் இருந்தேனைத் தெரிவரிய மாமணியைத் திகழ்தரு செம்பொன்னைக்
குருமணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரைவாய்க் கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரை மேல்
கருமணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே
கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.53.9) சுந்தரர் பெருமானை ஆனஞ்சு உகப்பர் என்று குறிப்பிடுகின்றார். பாம்பு, கங்கை நதி, ஒற்றைப் பிறைச் சந்திரன் மற்றும் தலைமாலை ஆகியவை அடங்கும் சடையினை, பெட்டி என்ற பொருள் பட, பேழை என்று அழைக்கின்றார். வேள்வி அழிப்பர் என்று வேதங்களில் சொல்லப் பட்டுள்ள விதிக்கு மாறாக செய்யத் துணிந்த தக்கனது வேள்வியை அழித்தார் என்று பொருள் கொள்ள வேண்டும். தக்கன் மற்றும் வேள்வித் தலைவனின் தலைகள் அறுக்கப்பட்டு, மாற்றுத் தலைகள் பொருத்தப் பட்டன என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த செய்தி தான் இந்த பாடலில் சிரமறுப்பர் என்ற தொடரின் வழியாக சொல்லப் படுகின்றது.
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
ஆழி அளிப்பர் அரி தனக்கு ஆனஞ்சு உகப்பர் அறம் உரைப்பர்
ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே
அப்பர் பெருமான் மற்றும் சுந்தரரும் பெருமானை ஆனஞ்சு ஆடியவன் என்று மிகவும் அதிகமான பாடல்களில் குறிப்பிடுகின்றனர். அத்தகைய பாடல்களை நாம் வேறோர் தருணத்தில் சிந்திப்போம்.
பொழிப்புரை:
பசுவிலிருந்து உண்டாகும் பால் தயிர் முதலான ஐந்து தூய்மையான பொருட்களைக் கொண்டு தனது விரிந்த சடைமுடியில் அபிடேகம் செய்து கொள்பவனும், இளமையான மான் கன்றினைத் தனது கையினில் நிற்க வைத்துக் கொண்டிருப்பவனும், நறுமணம் உடைய சோலைகள் நிறைந்த மங்கலக்குடி தலத்தினை தனது இருப்பிடமாகக் கொண்டவனும், சதைப் பற்று நீங்கிய காய்ந்த வெண் தலையினைத் தனது கையில் ஏந்தியவாறு ஊரூராக பலிக்கு திரிபவனும் ஆகிய இறைவனின் திருப்பாதங்களை அடைவதே ஞானத்தின் பயன் என்பதை அறிந்து, அந்த இறைவனின் திருப்பாதங்களை புகழ்ந்து போற்ற வல்லவர்களின் வினைகள் முற்றிலும் நாசம் அடைந்துவிடும்.
பாடல் 6:
தேனுமாய் அமுதாகி நின்றான் தெளி சிந்தையுள்
வானுமாய் மதி சூட வல்லான் மங்கலக்குடி
கோனை நாள் தோறும் ஏத்திக் குணம் கொடு கூறுவார்
ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகையதே
விளக்கம்:
வான்=வெளி, இங்கே ஞானவெளி; தெளிவடைந்த சிந்தை தான் இறைவன் குடியிருக்கும் இடம், சிந்தை தெளிவடைந்த பின்னரே ஞானம் ஏற்படும் என்பதை குறிப்பிடும் வண்ணம், தெளிந்த சிந்தை என்று இறந்த காலத்தில் குறிப்பிடுகின்றார். கோன்=தலைவன், முதல்வன்; குணங்கொடு=கொண்டுள்ள குணங்கள்; ஊனமானவை=உயிரின் குற்றமாக மலங்கள் கருதப்படுவதால், மூன்று மலங்களையும் ஊனம் என்று குறிப்பிடுகின்றார். தேனும் அமுதமும் உட்கொண்ட வாய் இனிப்பது போன்று, இறைவனையே நினைக்கும் சிந்தையும் இனிப்பதாக திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இறைவனைப் புகழ்ந்து போற்றுவது உயிரினுக்கு உய்வினை அளிக்கும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இறைவனின் திருநாமங்களை சொல்லாது, வாழ்வினில் உய்வினை நாடாது இருத்தல், உயிரின் ஊனம் நிலையாக இருப்பதற்கே வழிவகுக்கும். எனவே தான், அவ்வினைக்கு இவ்வினை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (1.116), நாம் அனுபவிக்கும் அனைத்து இடர்களுக்கும் வினைகளை காரணமாக சுட்டிக் காட்டி, இறைவனின் திருநாமங்களைச் சொல்லாமல் வீணாக வாழ்நாளினைக் கழித்தல், உய்வினை நாடாது இருந்து உயிரின் ஊனங்களைத் தக்கவைத்துக் கொள்ளுதல் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். நாம் சென்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைகளின் தன்மைக்கு ஏற்ப இந்த பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம் என்று பலர் சொல்வதையும் செவியுறும் மனிதர்களே என்று அழைக்கும் திருஞானசம்பந்தர், இந்த நிலையிலிருந்து விடுதலை பெறும் வழியினை நாடாது இருப்பது உமக்கு ஊனமில்லையா என்ற கேள்வியை கேட்கின்றார். மேலும் உய்யும் வழியினையும் இங்கே சொல்லிக் கொடுக்கின்றார். சிவபெருமானுக்கு அடிமையாக மாறி, சரியை கிரியை முதலான திருப்பணிகளைச் செய்து, பழவினைகள் வந்து நம்மை தாக்காத வண்ணம் காத்துக் கொள்வோம் என்று அறிவுரை கூறுகின்றார்.
அவ்வினைக்கு இவ்வினை யாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம் பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்
கேதீச்சரம் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகத்தின் பாடலில் (7.80.5) அடியார்களின் உடலில், ஊனத்தால் பொருந்தும் நோய்களை களைபவன் பெருமான் என்று கூறுகின்றார். வங்கம்=கப்பல்; இலங்கைத் தீவு கடல் வாணிபத்திற்கு, அந்நாளில் சிறந்து விளங்கிய தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. கேதீச்சரம் தலத்தில் ஓடும் ஆற்றின் பெயர் பாலாவி. தெங்கம் பொழில்=தென்னஞ் சோலைகள்.
அங்கத்துறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில்
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல்
தெங்கம் பொழில் சூழ்ந்த திருகேதீச்சரம் தானே
பொழிப்புரை:
இறைவனை நினைத்ததால் எனது சிந்தனையில், தேனும் அமுதமும் பாய்ந்தது போன்று இனிய உணர்வினை ஏற்படுத்தி அங்கே தங்கி நின்ற இறைவன், எனது சிந்தனையைத் தெளிவித்து ஞானவெளியாக இருக்கின்றான். ஒவ்வொரு பிறையாக முற்றிலும் தேய்ந்து அழியும் நிலையில் இருந்த பிறைச் சந்திரனைத் தனது தலையில் சூட்டிக் கொண்டு அழிவிலிருந்து காப்பாற்றும் வல்லமை வாய்ந்தவனும் திருமங்கலக்குடி தலத்தின் தலைவனும் ஆகிய இறைவனின் புகழினையும் அவனது அரிய குணங்களையும் போற்றும் அடியார்கள் தங்களது ஊனங்கள் நீங்கப் பெறுவார்கள்; மேலும் அவர்கள் வாழ்வினில் உய்வினையும் அடைவார்கள்.
பாடல் 7:
வேள் படுத்து இடு கண்ணினன் மேரு வில்லாகவே
வாளரக்கர் புரம் எரித்தான் மங்கலக்குடி
ஆளும் ஆதிப் பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே
கோளும் நாளவை போய் அறும் குற்றம் இல்லார்களே
விளக்கம்:
வேள்=மதனவேள், மன்மதன்; படித்திடு=அழித்திடும்; வாளரக்கர்=கொடுமைகள் புரிந்த திரிபுரத்து அரக்கர்கள்; வாட்படையை உடைய அரக்கர்கள் என்று பொருள் கூறினும் பொருந்தும்;
பொழிப்புரை:
தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதனை சுட்டெரித்து அழியும் வண்ணம் விழித்த நெற்றிக் கண்ணை உடைய பெருமான், மேரு மலையினை வில்லாக வளைத்துக் கொண்டு முப்புரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்தவன், திருமங்கலக்குடி தலத்தினை ஆளும் தலைவனாக, அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றியவனாக விளங்குகின்றான். அவனது திருவடிகளைச் சார்ந்து அவனைப் புகழ்ந்து வணங்கும் அடியார்களை, நாட்கள் மற்றும் கோள்கள் முதலியவற்றால் ஏற்படும் தீமைகள் அணுகாது; அவர்கள் குற்றங்கள் ஏதும் இல்லாதவர்களாக திகழ்வார்கள்.
பாடல் 8:
பொலியும் மால் வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட
வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடி
புலியின் ஆடையினான் அடி ஏத்திடும் புண்ணியர்
மலியும் வானுலகம் புகவல்லவர் காண்மினே
விளக்கம்:
பொலியும்=அழகுடன் விளங்கும்; மால்=பெரிய; வரை=மலை; புக்கு=சென்றடைந்து; வலி= வலிமை; பெருமானின் திருவடியை வணங்கும் புண்ணியர்கள் வானுலகம் செல்வது திண்ணம் என்று உணர்த்தும் பொருட்டு காண்மினே என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
தனது தேர் செல்லும் வழியில் தோன்றி தனது பயணத்தை தடுத்தது என்று தவறாக நினைத்து, தேரிலிருந்து இறங்கி கயிலை மலை இருக்குமிடம் நோக்கிச் சென்று மலையினைப் பேர்த்து எடுக்க முயற்சி செய்தபோது அந்த முயற்சி, தடைப்பட்ட பின்னர் தனது தவறினை உணர்ந்த அரக்கன் இராவணன்,பெருமானைப் புகழ்ந்து போற்றி வணங்க, அவன் பால் இரக்கம் கொண்ட பெருமான், அவனுக்கு வாட்படையும் நீண்ட ஆயுளையும் அளித்தான். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை, திருமங்கலக்குடி தலத்தில் உறையும் பெருமானை, புலித் தோலினை ஆடையாக உடுத்தியவனை, பணிந்து வணங்கி அவனது திருவடிகளை போற்றும் அடியார்கள், நல்ல செயல்களைப் புரியும் உயிர்கள் பொருந்தி விளங்கும் வானுலகம் சென்றடையும் தகுதி படைத்தவர்களாக விளங்குவதை, உலகத்தவரே நீங்கள் காண்பீர்களாக.
பாடல் 9:
ஞாலம் முன் படைத்தான் நளிர் மாமலர் மேல் அயன்
மாலும் காண ஒணா எரியான் மங்கலக்குடி
ஏலவார் குழலாள் ஒரு பாகம் இடம் கொடு
கோலமாகி நின்றான் குணம் கூறும் குணமதே
விளக்கம்:
நளிர்=குளிர்ச்சி; ஞாலம்=உலகம்; ஏலவார்குழலி என்ற திருநாமம், பல தலங்களில் உள்ள அம்பிகையின் திருநாமமாக உள்ளது. எரியான்=தீப்பிழம்பாக நின்றவன்; கோலம்=அழகு; கோலமாக நின்றான்=அழகுடன் விளங்குபவன்; பெருமானின் திருநாமத்தை சொல்வது, அவனது புகழினை எடுத்து ஓதுவது ஆகியவை நல்ல குணங்களில் ஒன்றாக கருதப் படுகின்றது. குணமதே என்று கூறுவதால் பெருமானின் புகழினைக் கூறாமல் வீணாக காலத்தைக் கழித்தல் நல்ல குணமாக கருதப்படாது என்பதையும் இங்கே திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
உலகத்தை முன்னர் படைத்தவனும், குளிர்ச்சி பொருந்திய தாமரை மலர் மேல் உறைபவனும் ஆகிய பிரமனும், திருமாலும், திருவடியையும் திருமுடியையும் அறிவதற்கு அரிய நிலையில் நீண்ட தீப்பிழம்பாக உயர்ந்து நின்ற பெருமான், திருமங்கலக்குடி தலத்தில், ஏலவார்குழலி என்ற திருநாமத்திற்கு பொருந்தும் வகையில் நறுமணம் வீசும் சாந்தினைத் தனது குழலுக்கு அணிந்தவளாகிய பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் கொண்டுள்ளான். இவ்வாறு அழகுடன் விளங்கும் பெருமானின் புகழ் மிகுந்த குணங்களை கூறுவீர்களாக. அத்தகைய செய்கை சிறந்த குணமாக கருதப்படும்.
பாடல் 10:
மெய்யின் மாசினர் மேனி விரி துவர் ஆடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச்
செய்ய மேனிச் செழும் புனல் கங்கை செறி சடை
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகாகுமே
விளக்கம்:
மெய்=உடல்; மெய்யின் மாசினர்=அழுக்கேறிய உடலினை உடைய சமணர்கள்; செய்ய மேனி=சிவந்த மேனி; அழகு என்ற சொல் இங்கே பேரின்பம் என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. ஐயன்=தலைவன்; அழகு என்று பொருள் கொண்டு அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றும் விளக்கம் கூறுகின்றனர். பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கும் அடியார்களின் உள்ளம் மலர்ந்து நிற்கும் நிலை, அவர்களது முகத்திலும் உடலிலும் வெளிப்படும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
பொழிப்புரை:
குளிப்பதைத் தவிர்ப்பதால் அழுக்கேறிய மேனியை உடைய சமணர்களும் விரிந்த துவர் ஆடையினைத் தங்களது உடலின் மீது போர்த்துத் திரியும் புத்தர்களும், பெருமானைக் குறித்து இகழ்வாக பேசும் பொய்ச் சொற்களை பொருட்படுத்தாது விட்டுவிடும் புண்ணியர்கள் வாழும் திருமங்கலக்குடி தலத்தில் உறைபவனும், சிவந்த திருமேனியை உடையவனும், செழுமையாக மிகுந்த நீர் வளத்துடன் கீழே பாய்ந்த கங்கை நதியைத் தனது அடர்ந்த சடையில் தாங்கியவனும், அனைவர்க்கும் தலைவனும் ஆகிய பெருமானின் சிவந்த திருவடிகளை புகழ்ந்து போற்ற வல்ல அடியார்களுக்கு பேரின்ப வாழ்வு அமையும்.
பாடல் 11:
மந்தமாம் பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை எழிலார் பொழில் காழியர் காவலன்
சிந்தை செய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதலாவரே
விளக்கம்:
மந்தம்=தென்றல்; காவலன்=தலைவன்; முந்தி ஏத்துதல்=முதன்மை கொடுத்து பாடுதல்;
பொழிப்புரை:
குளிர்ந்த தென்றல் காற்று வீசும் சோலைகள் நிறைந்த மங்கலக்குடி தலத்தினில் மிகுந்த விருப்பத்துடன் பொருந்தி உறையும் எமது தந்தையாகிய இறைவனை, எழில் நிறைந்த சோலைகள் சூழ்ந்த சீர்காழி தலத்தின் தலைவனாகிய ஞானசம்பந்தன் சிந்தித்து பெருமானின் திருவடிகளில் நம்மைக் கொண்டு போய் சேர்த்திடும் வல்லமை வாய்ந்த வண்ணம் பாடிய இந்த பதிகத்தின் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்து இறைவனை இந்த பதிகத்து பாடல்கள் மூலம் புகழ்ந்து பாட வல்ல அடியார்கள், இமையோர்களின் தலைவனாக, இந்திரனாக மாறும் வாய்ப்பினை பெறுவார்கள்.
முடிவுரை:
இந்த பதிகத்தின் பாடல்களில், பெருமானைப் பணிந்து வணங்க வேண்டிய அவசியத்தை முதல் இரண்டு பாடல்களில் உணர்த்தும் திருஞானசம்பந்தர், மற்ற பாடல்களில் பெருமானின் திருநாமத்தை சொல்வதால், அவனது புகழ் மிக்க குணங்களை கூறுவதால், அவனது திருவடிகளைப் பணிந்து வணங்குவதால், நாம் அடையவிருக்கும் பலன்களை எடுத்து உரைக்கின்றார். பதிகத்தின் முதல் பாடலில் தீர்க்கபாகு என்ற முனிவர் இறைவனை அர்ச்சித்து வழிபட்டதையும், இரண்டாவது பாடலில் தலத்து மகளிரும் வேதியர்களும் இறைவனைப் பணிந்து வழிபடுவதையும் குறிப்பிட்டு, நாமும் மங்கலக்குடி இறைவனைத் பணிந்து வணங்க வேண்டும் என்று உணர்த்துகின்றார். மூன்றாவது பாடலில் பெருமானின் திருவடிகளை விரும்பி ஏத்தும் அடியார்களின் வினைகள் முற்றிலும் விலகிவிடும் என்றும், முறையாக பெருமானை வணங்கும் அடியார்கள் சிறந்த சிவநெறியில் ஒழுகுவார்கள் என்று நான்காவது பாடலிலும், பெருமானின் திருவடிகளை அடைதலே ஞானம் என்று உணர்ந்து வழிபடும் அடியார்களின் வினைகள் முற்றிலும் நாசமாகிவிடும் என்று ஐந்தாவது பாடலிலும், பெருமானின் அரிய குணங்களை குறிப்பிட்டு புகழும் அடியார்கள் தங்களது ஊனங்கள் நீங்கப்பெற்று உய்வினை அடைவார்கள் என்று ஆறாவது பாடலிலும், நாட்களும் கோள்களும் விளைவிக்கும் தீய பயன்களிலிருந்து பெருமானின் திருவடிகளை சரணடையும் அடியார்கள் விடுதலை பெறுவார்கள் என்றும் ஏழாவது பாடலிலும், எட்டாவது பாடலில் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து போற்றும் அடியார்கள் வானுலகம் செல்வார்கள் என்றும், பெருமானின் திருக்கல்யாண குணங்களை கூறுவதே சிறந்த குணம் என்று ஒன்பதாவது பாடலிலும், தலைவனின் திருவடிகளை போற்றுதல் தனிப் பொலிவினையும் அழகையும் அளிக்கும் என்று பத்தாவது பாடலிலும் கூறுகின்றார். திருஞான சம்பந்தர் காட்டிய வழியில் சென்று திருமங்கலக்குடி பெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்கி வானோரிலும் மிகுந்த சிறப்பினை அடைந்து, சிவலோகம் சென்று அவனைச் சார்ந்திருந்து என்றும் அழியாத பேரின்பத்தில் திளைப்போமாக.