இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


செம்பொனார் தருவேங்கை

செம்பொனார் தருவேங்கை


பதிக எண்: 2.110 - திருமாந்துறை - நட்டராகம்

பின்னணி:

தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு தலம் சென்ற திருஞான சம்பந்தர் அதன் பின்னர் அருகிலுள்ள பெரும்புலியூர், நெய்த்தானம், மழபாடி, கானூர், அன்பில் ஆலந்துறை, மாந்துறை ஆகிய தலங்கள் சென்றார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. காவிரியின் வடகரைத் தலம் என்பதை உணர்த்தும் வண்ணம், வடகரை மாந்துறை என்று கீழ்க்கண்ட பெரிய புராணப் பாடலில் கூறப்பட்டுள்ளது. காவிரி நதியின் தென்கரையில் மாந்துறை என்று இன்னொரு தலம் (திருமங்கலக்குடி தலத்திற்கு அருகில்) உள்ளது. அந்த தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டவே வடகரை மாந்துறை என்று திருஞானசம்பந்தர் தனது பாடல்களில் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரைப் பின்பற்றி, சேக்கிழாரும் வடகரை மாந்துறை என்று குறிப்பிடுகின்றார். அதன் மருங்கு என்று மழபாடி தலம் குறிக்கப் படுகின்றது. இறைவனின் அருளினால் திருக்கானூர் பணிந்து ஏத்தி என்று சேக்கிழார் குறிப்பிடுவதை நாம் உணரலாம். இறைவன் உறையும் திருத்தலங்கள் சென்று அவனைக் கண்டு களிப்பதும், அவனது அருள் இருந்தால் தான் நடைபெறும். ஆனால் அடிப்படையாக உயிர்கள் அவ்வாறு பல தலங்கள் செல்ல வேண்டும் என்று விரும்ப வேண்டும். ஆன்ற=பல நற்குணங்கள் பொருந்திய; முதல் சைவர்=ஆதி சைவர்; கரடம்=அருவி; மதநீர் அருவி போன்று பெருகிப் பாயும் மதயானை; பல பதிகள் என்று சேக்கிழார் குறிப்பிடும் தலங்கள் யாது என்று அறிய முடியவில்லை;

அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ

முதல் மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனைத் தொழுது போற்றிப்

பத நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் பல பதிகள் பணிந்து பாடி

மத கரட வரை உரித்தார் வடகரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர்

இந்த தலம் லால்குடி இரயில் நிலையத்திற்கு ஐந்து கி.மீ. மேற்கில் உள்ளது. திருச்சியிலிருந்து லால்குடி செல்லும் வழியில் பதினைந்து கி.மீ. தொலைவில் உள்ளது. மாமரங்கள் அடர்ந்து காணப்பட்ட தலம் என்பதால் மாந்துறை என்ற பெயர் வந்தது என்று கூறுவார்கள். ஆம்ரவன நாதர், மாந்துறை நாதர் என்ற பெருமானின் திருநாமங்கள் இதனை உறுதிபடுத்துகின்றன. இறைவியின் திருநாமம் அழகம்மை, பாலாம்பிகை. மருதவாணர், கண்வ முனிவர், பிரமன், சூரியன், சந்திரன், மிருகண்டு முனிவர், இந்திரன், வருணன், சூரியனின் மனைவி சஞ்சனா தேவி ,ஆகியோர் இறைவனை வழிபட்டு பலனடைந்த தலம். தனது தாய் இறந்ததையும் அறிய முடியாமல், தாயை நினைத்து அழுத மான்கன்று ஒன்றினுக்கு, தாய் மானாக வந்து இறைவன் அருள் புரிந்த தலம். உள்வாயிலின் மேல் பகுதியில் இறைவன் மானுக்கு அருளிய வரலாறும், உள் வாயிலைத் தாண்டிய இடத்தில் மிருகண்டு முனிவர் வழிபட்ட காட்சியும் ஓவியங்களாக தீட்டப் பட்டுள்ளன.

மிருகண்டு முனிவர் தனக்கு பிள்ளை வேண்டும் என்றும், பிரமன் சிவபெருமானின் திருமுடியைத் தான் கண்டதாக பொய் சொன்னதற்கு வருந்தியும், இந்திரன் கௌதம முனிவரிடம் தான் பெற்ற சாபத்திலிருந்து விடுபடவும், இந்திரன் அகலிகையை ஏமாற்றியதற்கு வருந்தியும், சூரியனின் மனைவி சஞ்சனா தேவி சூரியனின் வெப்பத்தைத் தான் தாங்கும் சக்தியைப் பெறுவதற்கும், வருணன் பல நதிகள் மூலமாக தன்னில் கலக்கும் கழிவுகள் ஏற்படுத்தும் அசுத்தம் நீங்கவும், தக்கன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டதால் ஒளி மங்கிய சூரியன் தனது ஒளியினைத் தான் மீண்டும் பெறுவதற்கும், இந்த தலத்து இறைவனை வழிபட்டு பயன் பெற்றதாக தலபுராணம் கூறுகின்றது. மருத வானவர்கள் என்று வானுலகின் மருத்துவர்கள் அச்வினி தேவர்கள் இறைவனை வணங்கினார்கள் என்று திருஞானசம்பந்தர் இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார்.

திருஞானசம்பந்தர் தனது கையில் தாளம் ஏந்தியவாறு காட்சி அளிக்கும் சிலையினை நாம் பல திருக்கோயில்களில் காண்கின்றோம். இந்த தலத்தினில், சுந்தரர் தாளம் ஏந்தியிருக்கும் காட்சியை நாம் காணலாம். வழக்கமாக காணப்படும் விநாயகர், தென்முகக் கடவுள், திருமால், பிரமன், துர்கை ஆகிய மூர்த்தங்களுடன், ஆதிசங்கரரின் உருவச் சிலையையும், நாம் இந்த தலத்தினில் காணலாம். பெருமான் சுயம்பு மூர்த்தம், பங்குனி மாதத்தின் முதல் மூன்று நாட்களில் சூரியனின் ஒளி பெருமானின் திருவடியில் படுவதை நாம் காணலாம். இது சூரியன் இறைவனுக்கு செய்யும் வழிபாடாக கருதப் படுகின்றது. நவகிரக சன்னதி வித்தியாசமான நிலையில் இருப்பதை நாம் காணலாம். சூரியன் தனது இரு மனைவிகளுடன் நடுவில் இருக்க, மற்ற கிரகங்கள் சூரியனைப் பார்த்து இருப்பது போன்ற அமைப்பு இங்கே உள்ளது. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய ஒரு பதிகம் மட்டுமே நமக்கு இதுவரை நமக்கு கிடைத்துள்ளது.

பாடல் 1:


செம்பொனார் தரு வேங்கையும் ஞாழலும் செருந்தி செண்பகம் ஆனைக்

கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்து அலர் பரந்து உந்தி

அம்பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற

எம்பிரான் இமையோர் தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே

விளக்கம்:

செம்பொனார் தரு=செம்பொன்னை ஒத்த நிறம் கொண்ட; ஞாழல்=புலிநகக் கொன்றை; ஆரம்= சந்தனம்; பொன்=பொன்னி நதி, காவிரியின் மற்றொரு பெயர்; பைங்கழல்=பசுமையான திருவடி; பரமனின் திருப்பாதங்கள் மிகவும் மிருதுவாக இருப்பதால் பூங்கழல் என்றும் பைங்கழல் என்றும் சொல்லப் படுகின்றன. பைங்கழல் என்ற தொடருக்கு பசும்பொன்னைப் போன்று ஒளியுடன் மிளிரும் திருப்பாதங்கள் என்றும், பசும் பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல்கள் அணிந்த திருப்பாதங்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

செம்பொன்னை ஒத்த நிறத்தில் காணப்படும் வேங்கை மலர்கள், புலிநகக் கொன்றை மலர்கள், செருந்தி மலர்கள், செண்பக மலர்கள் மற்றும் யானையின் தந்தங்கள், சந்தன மரங்கள், மாதவி சுரபுன்னை குருந்தம் ஆகிய மலர்களையும் தள்ளிக் கொண்டு வருகின்ற பரந்த நீர்ப் பரப்பினை உடைய அழகிய பொன்னி என்று அழைக்கப்படும் காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள மாந்துறை என்ற தலத்தில் உறைகின்ற எமது தலைவனும், தேவர்களால் தொழப்படுவானும் ஆகிய பெருமானின் பசுமையான பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளை புகழ்ந்து வணங்குவோமாக.

பாடல் 2:


விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்து உந்தி

அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானைத்

துளவ மால் மகன் ஐங்கணைக் காமனைச் சுட விழித்தவன் நெற்றி

அளக வாள் நுதல் அரிவை தன் பங்கனை அன்றி மற்று அறியோமே

விளக்கம்:

விளவு=விளாம் பழம்; வே=மூங்கில்; வேய்மணி=மூங்கிலில் உள்ள முத்துக்கள்; துளவமான்மகன் என்ற தொடர் துளவ மால் மகன் என்று, பொருள் புரிந்து கொள்வதற்காக, பிரிக்கப் பட்டுள்ளது. துளவ=துழாய், துளசி; தாமரை அசோகம் குவளை மா முல்லை என்பன மன்மதன் தனது அம்பினில் பயன்படுத்தும் அம்புகள்; அளகம்=கூந்தல்; வாள் நுதல்=ஒளி வீசும் நெற்றி; அரிவை என்பது இருபது வயதிலிருந்து இருபத்தைந்து வயதில் இருக்கும் பெண்களை குறிக்கும்; அம்பிகை வயது முதிராமல் என்றும் இளமையாக இருக்கும் நிலையினை குறிக்கும் வண்ணம் அரிவை என்று அம்பிகையை திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். சாதியின் பலம் என்ற தொடருக்கு சாதிக்காய் என்று பொருள் கொண்டு, காவிரி நதியால் சாதிக்காய் அடித்து கொண்டுவரப் படுகின்றது என்றும் சிலர் பொருள் கொள்கின்றனர். பலன்கள் என்று பன்மையில் சொல்லப் பட்டு இருப்பதால், பல வகையான பலன்கள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இந்த பதிகத்தின் முதல் பாடலில் இறைவனை நமக்கு அறிமுகம் செய்து வைத்த திருஞானசம்பந்தர், சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தான் வணங்கும் தன்மை உடையவராக அறியேன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அந்த நிலையினை நாமும் அடைய வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இந்த பாடலில் வெளிப்படுகின்றது. பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும், தேவர்கள் என்ற சொல் மூலம் குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அத்தகைய தேவர்கள் தொழும் இறைவன் என்று சிவபெருமானின் பெருமையை இந்த பாடலில் உணர்த்துகின்றார். திருமாலும் பிரமனும் தொழும் பெருமான், என்று உணர்ந்த பின்னர், மற்ற தெய்வங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அல்லவா. அதனால் தான் பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் அறியேன் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நமக்கு வழிகாட்டும் நல்லோராகிய நால்வரும் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் போற்றாது இருந்த தன்மையை அவர்களது வாழ்விலிருந்து நாம் அறிகின்றோம். அவர்களது இந்த கொள்கை அவர்களின் பல பாடல்களில் வெளிப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

கீழைத் திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.05.09), திருஞானசம்பந்தர் பெருமானைத் தவிர்த்து வேறு எந்த பேச்சினையும் பேசேன் என்று கூறுகின்றார். நமது பேச்சுகள் அனைத்தும் அவனைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்றும் அவனது புகழினை அல்லால் வேறு எதனையும் நாம் பேசாமல் இருக்க வேண்டும் என்பதையும் இந்த பாடலில் கூறுகின்றார். செற்றவர்=பகைவர்; அரணம்=கோட்டை; உற்றவர்=மலபரிபாகம் அடைந்த அடியார்கள்; பெருமானை குறித்த ஞானம் ஒன்றே வீடுபேறு அடைவதற்கு உரிய வழி. எனவே அந்த ஞானத்தை அடைவதற்கு உயிர் விருப்பம் கொள்ள வேண்டும். இவ்வாறு ஞானவேட்கை உடையவர்க்கே ஞானம் பயன் தரும். உயிர் ஞானவேட்கை அடையாத வண்ணம், ஆணவமலம் தடுக்கின்றது. எனவே என்றும் அழியாது இருக்கும் ஆணவமலத்தின் வலிமையை குறைத்து, புலன்களின் விருப்பத்தில் நாட்டம் கொள்ளாது, உண்மையான மெய்ப்பொருள் குறித்து அறிந்து கொள்ள, உயிர்கள் தலைப்பட வேண்டும். ஆணவ மலத்தின் வலிமையை உயிர்கள் குறைப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு, இறைவன் கன்மம் மாயை ஆகியவற்றை உயிர்களுடன் கூட்டி, இன்ப துன்பங்களை நுகரச் செய்கின்றான். இவ்வாறு பழவினைகளின் பயனாக இன்ப துன்பங்களை நுகரும் தருணத்தில் உயிர்கள் இருவினையொப்பு நிலையினை அடைந்து மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆணவ மலத்தின் வலிமையை படிப்படியாக குறைத்து, அதன் வலிமையை மெலியச் செய்வதை மலபரிபாகம் என்று கூறுவார்கள். இவ்வாறு மலபரிபாகம் அடைந்த நிலையில் உயிர்கள் மெய்ஞானம் பெறுகின்ற தன்மையை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உணர்வு எய்தல்=மீண்டும் பிறவாமைக்கு அடிகோலும் வகையில் மெய்ஞானத்தை அறிந்து கொள்ள வாய்ப்பினை அளிக்கும் மானிடப் பிறப்பின் சிறப்பினை உணர்ந்து, அந்த நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவது. தேவர்களுக்கு பகைவர்களாக விளங்கிய முப்புரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளுக்கு சிவந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பினை ஊட்டி வீரச்செயல் புரிந்தபெருமான், கற்றவர்கள் தொழுது புகழும் வண்ணம் திகழும் பெருமான், காட்டுப்பள்ளி தலத்தின் மீது அதிகமான விருப்பம் கொண்டவராக, ஆங்கே வீற்றிருக்கின்றார். மலபரிபாக நிலையினை அடைந்து மெய்ஞானம் கைவரப் பெற்ற சான்றோர்கள், தேவர்களும் தொழுது புகழும் வண்ணம் விளங்கும் பெருமானை, இடபத்தினை வாகனமாகக் கொண்ட பெருமானின் புகழினை குறிப்பிடும் பேச்சுகளைத் தவிர்த்து மற்றைய பேச்சுகளை பேசுவதில்லைஎன்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செற்றவர் தம் அரணம் அவற்றைச் செவ்வழல் வாயெரி ஊட்டி நின்றும்

கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி

உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற

பெற்று அமரும் பெருமானை அல்லால் பேசுவது மற்றொர் பேச்சிலோமே

இந்த பாடலில் உமை பங்கனைத் தவிர்த்து வேறு எவரையும் தான் அறியமாட்டேன் என்று திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு, அவர் நின்றியூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினை (1.18.06) நினைவூட்டுகின்றது. சலவம்-கங்கை; மூரல் என்ற சொல் எதுகை கருதி மூரன் என்று மாறியுள்ளது. மூரல் முறுவல்=மிகவும் சிறிய புன்சிரிப்பு; சாரன்=சார்ந்து இருப்பவன்; பொழில்= சோலை; மிடையும்=நெருங்கி இருத்தல். சிறிய புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களைக் கொண்டுள்ள உமை அன்னையைத் தனது உடலில் ஒரு பாகத்தில் வைத்தவனும், முற்றிலும் அழிந்த நிலையில் தான் தொடர்ந்து வாழும் பொருட்டுத் தன்னைச் சார்ந்து நின்ற பிறைச் சந்திரனுடன் கங்கை நதியையும் தனது சடையில் வைத்துள்ள வீரனும், அழகிய சோலைகள் நெருங்கி இருக்கும் நின்றியூரில் நிலை பெற்று உள்ளவனும் ஆகிய பெருமானின் திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதையும் எனது உள்ளம் உணராது என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் பாடல்.

மூரன் முறுவல் வெண்ணகை உடையாள் ஒரு பாகம்

சாரன் மதி அதனோடுடன் சலவம் சடை வைத்த

வீரன் மலி அழகார் பொழில் மிடையும் திரு நின்றி

ஊரன் கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (1.18.3) நின்றியூர் தலத்தில் உறைகின்ற பெருமானை அல்லது தனது உள்ளம் வேறு எவரையும் உணராது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திருக்கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் திருவிழா நேரங்களில் சங்கு பறை இவற்றின் ஒலிகள் கலந்து ஆரவாரமாக காணப்படும். அத்தகைய ஆரவாரம் மிகுந்த நேரங்களிலும் தான் மனம் ஒன்றி வழிபடுவதால் தனது மனம் வேறு எதையும் உணராது இறை சிந்தனையில் ஆழ்ந்திருப்பதாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். ஆரவும் ஆர=பறை சங்கு ஆகிய ஒலிகளின் பக்கத்தில் தோன்றும் பல விதமான ஓசைகள்; இந்த ஆரவார ஓசைகளை பெருமான் மிகவும் விரும்புவதாகவும் திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பறை சங்கு முதலிய கருவிகளிலிருந்து எழுகின்ற ஓசை, மற்றும் அந்த கருவிகளின் அருகிலுள்ள ஏனைய வாத்தியங்களிலிருந்து ஒலிக்கும் ஒலிகளும் எங்கும் பரவி இருக்கும் சூழ்நிலையில், அந்த ஓசைகளின் அடிப்படைத் தன்மையில் இறைவன் இருப்பதை சான்றோர்கள் உணருகின்றனர். நிறைந்த நீரினை உடைய கங்கை நதியினைத் தனது சடையில் வைத்துள்ள இறைவன் நின்றியூர் தலத்தில் உறைகின்றான். அந்த ஒரு பொருளைத் தவிர்த்து வேறு எதனையும் எனது உள்ளம் உணராது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்காரரவும் ஆர

அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை

நிறையும் புனல் சடைமேல் உடை அடிகள் நின்றியூரில்

உறையும் இறை அல்லது என் உள்ளம் உணராதே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (1.18.9) திருஞான சம்பந்தர், பெருமானது திருவடிகளைத் தவிர்த்து தனது சிந்தை எதனையும் உணராது என்று கூறுகின்றார். தமது முன்னர் எழுந்த அழற்றூணின், இயல்பினை அறிய மாட்டாது, பகைவரோ எவரோ என்று இன்னதென்று அறியாத நிலையில் பிரமனும் திருமாலும் திகைத்து நின்ற நிலை, அல்லர் என ஆவார் என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது. மற்ற எவரும் உயிர்களுக்குத் தலைவர் அல்லர் தாம் ஒருவனே உயிர்களுக்குத் தலைவன் என்று செருக்குடன் அவர்கள் இருவரும் நின்ற நிலையை குறிப்பிடுவதாக கொள்வதும் பொருத்தமே. அல்லர் என ஆவர் என நின்றும் என்ற தொடருக்கு வேறு விதமாகவும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. தான் பெருமானின் திருமுடியைக் கண்டதாக பொய் பேசிய பிரமன் மற்றும் தன்னால் பெருமானின் திருவடியைக் காண இயலவில்லை என்று உண்மை பேசிய திருமால் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. நல்ல மலர்=தாமரை மலர்; கண்ணனாக அவதாரம் செய்த போது, தனது மகன் மண்ணைத் தின்று விட்டானே என்ற கவலையில் அவனது வாயினைத் திறந்து அன்னை யசோதை பார்த்தபோது, அவனது வயிற்றினில் உலகம் இருப்பதைக் கண்ட செய்தி இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. நல்ல மலராகிய தாமரை மலரின் மேல் அமரும் பிரமனும், உலகினை உண்டவன் என்று கருதப்படும் திருமாலும் தங்களுக்குளே தானே தலைவன் என்றும் அடுத்தவர் தலைவன் அல்ல என்றும் வாதம் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் அடியையும் முடியையும் காண முடியாமல் தவித்து நிற்கும் வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்றவன் பெருமான் .அத்தகைய பெருமான் நெல்வயல்கள் சூழ்ந்த நின்றியூர் தலத்தில் நிலையாக உறைகின்றார். அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த முக்திச் செல்வதைத் தன்னிடம் வைத்துள்ள செல்வராகிய பெருமானின் திருவடிகளை தவிர்த்து வேறு எதையும் எனது சிந்தை உணராது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நல்லம் மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்

அல்லர் என ஆவர் என நின்றும் அறிவரிய

நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரின் நிலையார் எம்

செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே

இவ்வாறு அவர் கூறுவது அவர் அருளிய பிறையணி படர்சடை என்று தொடங்கும் பதிகத்தின் பாடலை (1.19.7) நமது நினைவுக்கு கொண்டுவருகின்றது. இந்த பாடலில் திருஞான சம்பந்தர், பெருமானைத் தொழுகின்ற அறிவினைத் தவிர்த்து வேறெந்த அறிவினையும் தான் அறிய மாட்டேன் என்று கூறுகின்றார்நறநிறை=நறவு என்ற சொல் குறைந்து நற என வந்துள்ளது; நறவு=தேன்; தனது ஒளிக்கதிர்கள் மூலம் பயிர்களை வளர்க்கும் தன்மை உடைய பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றவனும், தேன் நிறைந்த மலர்கள் இருக்கும் திருமுடியை உடையவனும் ஆகிய பெருமான், உதிரும் தன்மை உடைய மயிர்கள் நிறைந்ததும் தசைகள் நீங்கப் பெற்றதுமான புலித் தோலினை உடையாக இடுப்பினில் அணிந்தவனும், இருளினை நீக்கும் கதிரவனின் கதிர்கள் போன்று ஒளிவீசும் மழுப் படையை ஏந்தியவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் எழுந்தருளியுள்ளான். அத்தகைய பெருமானின், ஒலிக்கும் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளை தொழுது போற்றி வணங்கும் அறிவன்றி வேறு அறிவு ஏதும் இல்லாதவனாக அடியேன் இருக்கின்றேன் என்று திருஞான சம்பந்தர் சொல்வதாக அமைந்த பாடல்.

முதிருறு கதிர் வளர் இளமதி சடையனை நறநிறை தலை தனில்
உதிருறு மயிர் பிணை தவிர் தசையுடை புலியதள் இடை இருள் கடி
கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை
அதிருறு கழலடிகளதடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.50.5) தான் எப்போதும் பெருமானின் திருநாமத்தை, சொல்லுவேன் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். தான் உறங்கும் போதும் உணவு உட்கொள்ளும் போதும் இறைவனின் திருநாமத்தையும், அவனது பெருமைகளையும் சொல்லுவேன் என்று கூறுகின்றார். துற்றுதல்=உண்ணல்; துஞ்சுதல்=உறக்கம்; ஆலகால விடம் பொங்கி வந்த போது, அதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல், பிரமன் திருமால் ஆகியோரும் அந்த விடத்தின் தாக்கத்திலிருந்து விடுபட முடியால் வருந்தியதால், தாங்கள் தஞ்சம் அடைவதற்கு தகுதி வாய்ந்தவர் வேறு எவரும் இல்லாத நிலையில், தேவர்கள் அனைவரும் பெருமானின் திருப்பாதங்களில் பணிந்து சரணடைய, அவர்கள் காப்பாற்றும் பொருட்டு, நஞ்சினை உண்ட கருணை உள்ளம் படைத்தவர் பெருமான், அவரது இந்த பெரிய கருணைச் செயலை நினைத்து நாளும் அடியேன் மனம் நெகிழ்கின்றேன். எனினும் எனது மனதினில் வஞ்சம் இருக்கும் காரணத்தால் அடியேனால் மனம் ஒன்றி வழிபட முடியவில்லை. பெருமானே நீ தான் எனது மனதினில் உள்ள வஞ்சத்தை நீக்கி, மனம் ஒன்றி அடியேன் உன்னை வழிபட வழி வகுக்க வேண்டும் என்று திருஞான சம்பந்தர் வேண்டும் பாடல்.

துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன் உன் திறமே

தஞ்சம் இல்லாத் தேவர் வந்து உன் தாள் இணைக் கீழ்ப் பணிய

நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைத்து அடியேன்

வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே

பொய்யான கருத்துகளை நமது சிந்தனையிலிருந்து அகற்றி, வேதனைகளை அளிக்கும் பந்த பாசங்களைத் துறந்து, செம்மையான சிந்தனை உடையவர்களாக வாழும் சான்றோர்களின் சிந்தனையில் உறையும் இறைவன் என்று, திருஞானசம்பந்தர் வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.50.4) குறிப்பிடுகின்றார். மேலும் இந்த பாடலில் பெருமானின் திருநாமத்தை தினமும் ஓதுவது, பெருமானிடம் நாம் மிகவும் உரிமையுடன் உதவி பெறுவதற்கு வழிவகுக்கும் என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். பெருமானே, நான் தினமும் உந்தன் திருநாமத்தை ஓதி வருவதால், உலகத்தவர் பலரும் காணும் வண்ணம் நீ எனக்கு அருள் புரிய வேண்டும் என்று உரிமையுடன் திருஞான சம்பந்தர் கேட்பதை நாம் உணரலாம். நமது வினைகளின் செயலால், நாள்தோறும் பலவிதமான அல்லல்களை எதிர்கொண்டு, மனம் வருந்தும் நாம் பெருமானின் அருளினை எவ்வாறு பெறுவது என்பதை நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல்.

மெய்யராகி பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து

செய்யாரானார் சிந்தையானே தேவர் குலக் கொழுந்தே

நைவன் நாயேன் உன்றன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்

வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே

நெடுங்களம் தலத்தின் மீது அருளிய இடர் களையும் பதிகத்தின் முதல் பாடலில் (1.52.1) திருஞான சம்பந்தர், பெருமானை குறித்து பேசாத மனிதர்கள் குறை உடையவர்கள் என்று கூறுகின்றார். ஓர்தல்=ஆராய்தல்; ஓராது இருத்தல்=பொருட்படுத்தாது விலக்குதல்; ஓராய்= மன்னித்து அருள் புரிவாய்; திருஞான சம்பந்தர் உலகிலுள்ள மனிதர்களை இரண்டு வகையாக பிரிக்கின்றார். பெருமானின் பெருமைகளை குறிப்பிட்டு அவனை வாழ்த்தி வணங்கும் அடியார்கள் ஒரு பிரிவினர். மற்றொரு பிரிவினர், பெருமானை வாழ்த்தி வணங்காத மனிதர்கள். பின்னவர், உலகெலாம் படைத்து நம்மையும் தோற்றுவித்து அருள் புரியும் பெருமானை வணங்காத குற்றம் செய்ததனால் குறை உடையவர்கள். அத்தகைய குறை ஏதும் இல்லாமல் நிறைந்த குணம் உடையவர்களாக இருப்பவர்கள் முன்னவர்கள். இத்தகையவர்களை நிறை உடையவர்கள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இரு வகையினருக்கும் அருள் புரியுமாறு பெருமானை வேண்டுகின்றார். அவரவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு எவ்வாறு அருள் புரிவது என்பதையும் அவரே குறிப்பிடுகின்றார். குறை உடையவர்களின் குற்றத்தை பொறுத்தருள வேண்டும் என்றும், நிறை உடையவர்களுக்கு, அவர்கள் தொடர்ந்து இறைவனை வழிபடும் பொருட்டு எந்த இடர்ப்பாடும் நேராமல் இருக்க வேண்டும் என்று வேண்டுகின்றார். இவ்வாறு அனைவர்க்கும் அருள் புரிய வேண்டும் என்று திருஞானசம்பந்தர் வேண்டுவது அவரது பரந்த உள்ளத்தை நமக்கு காட்டுகின்றது.

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்

பிறையுடையாய் பிஞ்ஞகனே என்று உனைப் பேசின் அல்லால்

குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த

நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

பெருமானே நீ மனிதர்கள் செய்யும் குற்றத்தினை பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று திருஞான சம்பந்தர் வேண்டுவதை நாம் கண்டோம். எல்லாம் வல்ல பெருமான், நமது குற்றங்களை மன்னித்து அருள் புரிவாரா என்ற சந்தேகம் நமக்கு எழாத வண்ணம், சந்திரனின் குற்றத்தை பொருட்படுத்தாமல், அவனை வாழவைத்த கருணைச் செயல் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. தேய்ந்து அழியும் நிலையில் இருந்த சந்திரன் வளரும் பிறையாக மாறியது, வளரும் பிறை என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. சிறந்த வேதங்களை உடையவன் பெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், தோலுடையாய் என்று பெருமானின் பற்றற்ற நிலையையும் குறிப்பிடுகின்றார். உயிருள்ள உடலுடன் ஓட்டியிருக்கும் வரையில் தான் தோலுக்கு அழகு. உடலிலிருந்து பிரிந்த தோல் அருவருக்கத்தக்கது. ஆனால் பற்றற்றவர் என்பதால் வேதங்களையும் தோலாடையையும் வித்தியாசம் பார்க்காமல் ஏற்றுக் கொள்பவர் பெருமான் என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. வேதங்களை உடையவனே, புலித் தோலை ஆடையாக உடுத்தவனே, அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன் சரணடைந்த சந்திரனைத் தனது நீண்ட சடையின் மேல் அணிந்து கொண்டு வளரும் சந்திரனாக மாற்றியவனே, அழகிய தலைக் கோலம் உடையவனே, என்று பலவிதமாக உனது புகழினைப் பேசாத மனிதர்களின் குற்றங்களை, பெருமானே நீ பொருட்படுத்தாது மன்னித்து அருள் புரிவாயாக. நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, உன்னையன்றி வேறு எந்த தெய்வத்தையும் நினைக்காத உயர்ந்த நிறைவான கொள்கை உடைய அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம் அருள் புரிவாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தன்னை எப்போதும் சிந்திக்கும் அடியார்களை இடர்களும் நோய்களும் நெருங்காத வண்ணம் பாதுகாக்கும் பெருமான், அவர்களது சித்தத்தை விடாது பற்றிக் கொண்டு இருக்கின்றான் என்று வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.50.10) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பொதிகை மலையையும் கயிலாய மலையையும் தனது இல்லமாக கருதி உறைகின்ற பெருமான், தனது அடியார்களின் சித்தத்தையும் தான் உறைவதற்கான சிறந்த இடமாக கருதி, மிகவும் பற்று கொண்டவனாக, ஆங்கே உறைகின்றான் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். விதி என்ற சொல் இங்கே புண்ணியம், நல்வினை என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. சமணர்களும் புத்தர்களும் நல்வினை அற்றவர்களாக விளங்குவதால், பெருமானைப் போற்றிப் புகழும் அறிவற்ற மூடர்களாக அவர்கள் விளங்குகின்றனர் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அவர்களின் பரிதாபகரமான நிலையைக் கண்டு, அவர்கள் எவ்வாறு வாழ்க்கையில் உய்வினை அடைய முடியும் என்று வருந்துகின்றார்.

பொதியிலானே பூவணத்தாய் பொன் திகழும் கயிலைப்

பதியிலானே பத்தர் சித்தம் பற்று விடாதவனே

விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்றிவர்கள்

மதியிலாதார் என் செய்வாரோ வலிவலம் மேயவனே

பாற்றுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.56.4) திருஞானசம்பந்தர் சிவபெருமான் ஒருவர் தான் தனது சிந்தையில் இருப்பதாக கூறுகின்றார். இந்த பாடல் அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். ஏ=அம்பு. ஏவின்=அம்பினைக் கொண்டு; அல்லார்=சிவநெறியைச் சாராத திரிபுரத்து அரக்கர்கள்; எயில்=கோட்டை, இங்கே பறக்கும் கோட்டைகள்; ஓ=அதிசயம் நடந்ததை வெளிப்படுத்தும் குறிச்சொல்; தனது சிந்தையில் இருந்த மயக்கம் தீர்க்கப்பட்டு தனது சிந்தை முழுவதும் பரவி நின்ற பெருமான் என்று இதே பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும் சம்பந்த நாயகி, தனது சிந்தனையில் பெருமான் ஒருவரே நிறைந்து நிற்கின்றார் என்று கூறுகின்றாள். கொன்றை மலர்களையும் பிறைச் சந்திரனையும் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், சிவநெறியை விட்டு நீங்கி பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த வந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினைக் கொண்டு வீழ்த்தினார். அத்தகைய ஆற்றல் வாய்ந்த இறைவனே, அடியார்களின் பாவங்களைத் தீர்க்கும் குளத்தினை உடைய பாற்றுறை தலத்தினில் உறைகின்றார். அவரே எனது சிந்தையில் நிறைந்து நிற்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பூவும் திங்கள் புனைந்த முடியினார்

ஏவின் அல்லார் எயில் எய்தார்

பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை

ஒ என் சிந்தை ஒருவரே

இவ்வாறு திருஞானசம்பந்தர் கூறுவதை கருத்தினில் கொண்டு தான், பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றாரோ? சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில் திருஞான சம்பந்தரைக் குறிப்பிடும் வரிகளை நாம் இங்கே சிந்திப்பது பொருத்தம். வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான் சம்பந்தன் என்று கூறுகின்றார். கொன்றைசூடியின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் போற்றி வழிபடாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றார். அச்சிறுபாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், கையில் மான்கன்றினை ஏந்திய பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத கருத்தினை உடையவன் என்று தன்னை திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (1.77.11) உணரலாம். கருங்குவளை மலர்கள் பொழியும் தேனினை உட்கொள்ளும் தவளைகளின் வாய் நிறைந்துள்ள நிலையும், வாளை மீன்கள் துள்ளி விளையாடுவதால் புதியதாக மலர்ந்த மலர்களின் இதழ்கள் கிழியும் நிலையும் குறிப்பிடப்பட்டு சீர்காழி நகரின் நீர்வளமும் நிலவளமும் திருஞான சம்பந்தரால் நமக்கு இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

மைச்செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழிய

பச்சிற வெறி வயல் வெறி கமழ்ப் பதி அவர் அதிபதி கவுணியர் பெருமான்

கைச் சிறு மறியவன் கழல் அலால் பேணாக் கருத்துடை ஞான சம்பந்தன தமிழ் கொண்டு

அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் அருவினை இலரே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.80.6) பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறெவரது திருவடிகளையும் தனது உள்ளம் போற்றி வணங்காது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வரு மாந்தளிர்=புதியதாக மரத்தில் கிளைத்து எழுகின்ற; திருமாம் தில்லை=திருமகள் பொலிந்து விளங்கும் செல்வச் செழிப்பான; கருமான்=கரிய நிறம் கொண்ட யானை; இறைவனது திருப்பாதங்களை தொழுது வணங்குவதே இன்பம் என்றும், அவனது திருப்பாதங்களை ஏத்தும் பண்பே சிறந்த பண்பு என்றும் இந்த பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் கூறிய திருஞான சம்பந்தர், இந்த பாடலில் அவனது திருப்பாதங்களைத் தவிர்த்து, தனது உள்ளம் வேறு எதனையும் விரும்பாது என்று கூறுகின்றார். புதிதாக கிளைத்து வரும் மாந்தளிர் போன்று மென்மையான திருமேனியை உடைய உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக வைத்துள்ள இறைவன், திருமகள் நிறைந்து விளங்கும் செல்வச் செழிப்பான தில்லை நகரில் உள்ள சிற்றம்பலத்தில் பொருந்தி உறைகின்றான்; கரிய நிறம் கொண்ட யானையின் தோலை உரித்து ஆடையாக அணிந்தவனாகவும், தான் உட்கொண்ட நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கறை படிந்த கழுத்தினை உடையவனாகவும் இருக்கும் பெருமானது திருவடிகளை அன்றி தனது உள்ளம் வேறு எதையும் விரும்பாது என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் பாடல்.

வரு மாந்தளிர் மேனி மாதொர் பாகமாம்

திருமாம் தில்லையுள் சிற்றம்பலம் மேய

கருமான் உரி ஆடைக் கறை சேர் கண்டத்து எம்

பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே

பிறவி அறுக்க வேண்டும் என்று விரும்பும் அடியார்களே, அறத்தின் வடிவமாக விளங்கும் ஆரூர்ப் பெருமானை மறவாது புகழ்ந்து பாடுவீர்கள் என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் பாடலை (1.91.2) நாம் இங்கே காண்போம். இவ்வாறு இறைவனை மறவாது வழிபடுவதன் மூலம், நாம் பிறப்புக்கு காரணமாக உள்ள, யான் எனது எனப்படும் பற்றுகளை அறுத்தெறிந்து துறவியாக வாழ்ந்து, அதன் முடிவான பயனாக நமது பிறப்பையும் அறுத்துக் கொள்ளலாம் என்று நமக்கு ஞானசம்பந்தர் அறிவுரை கூறும் பாடல்.

பிறவி அறுப்பீர்காள்

அறவன் ஆரூரை

மறவாது ஏத்துமின்

துறவி ஆகுமே

திருநீலகண்டப் பதிகத்தின் பாடலில் (1.116.6) அனுதினமும் மறவாமல் பெருமானின் திருவடிகளில் மலர்கள் தூவிப் பணிந்து வணங்குவோம் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பறித்த மலர் கொண்டு உம்மை புகழ்ந்து பாடுவோம் என்று திருஞானசம்பந்தர் கூறுவது சிந்திக்கத் தக்கது. தற்போது பணம் கொடுத்து மலர்களை வாங்கி இறைவனுக்கு அர்ச்சிப்பது என்பது பழக்கமாக மாறிவிட்டது. ஆனால் இன்றும் ஒரு சில வீடுகளில், அவர்களது இல்லத்தில் வளரும் முல்லை, மல்லிகை, பாரிஜாதம், கருங்குவளை முதலிய மலர்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறு நாமே மலர்களை பறித்து இறைவனுக்கு சமர்ப்பிப்பதே சிறந்த வழிபாடாக கருதப்படுகின்றது. இந்த செய்தியே இங்கே சொல்லப் படுகின்றது. திருவடிப் பிழைத்தல் என்று பெருமானுக்கு அபச்சாரம் ஏதும் நடக்காதபடி நடந்து கொள்வதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மனித மனதின் இயல்பினை மறக்கும் மனம் என்று சுட்டிக் காட்டுவதையும் நாம் உணரலாம். பல வகையான இன்ப துன்பங்களுக்கு இடையே வாழ்வினைக் கழிக்கும் மனிதர்கள், அந்த இன்ப துன்பங்களின் தாக்கத்தை பெரிதாக கருதும் போது, அவர்களது மனதிலிருந்து இறை சிந்தனை பின்னுக்கு தள்ளப் படுதலோ, மறத்தலோ இயற்கையாக நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள். அத்தகைய மனம், எப்போதும் இறைவனை மறக்காது இருக்கும் வண்ணம் செய்வது இடைவிடாத பயற்சியால் மட்டுமே நடைபெறும். அத்தகைய பயிற்சி உடையவர்களாக நாம் விளங்க வேண்டும் என்பதே இங்கே திருஞானசம்பந்தர் வலியுறுத்திக் கூறும் அறிவுரை ஆகும். இந்த பாடலில் திருஞான சம்பந்தர் பிறப்பில் பெருமான் என்று கூறுகின்றார். பிறப்பிலி என்பது பெருமானின் திருநாமங்களில் ஒன்று. பிறப்பையும் இறப்பையும் கடந்த பெருமான் என்று பொருள் கொள்வது ஒரு வகை. தனது அடியார்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்து அவர்களுக்கு இனிமேல் பிறவி ஏற்படாமல் செய்வதால் பிறப்பு இல் பெருமான் என்று கூறியதாக பொருள் கொள்வது சிறப்பு.

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்

பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ் பிழையாத வண்ணம்

பறித்த மலர் கொடு வந்து உமை ஏத்தும் பணி அடியோம்

சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

மனதின் இயற்கை தான் பற்றியதை விட்டு வேறொன்றைப் பற்றி, அதன் மயமாக மாறி, தான் அதுகாறும் பற்றியிருந்த பொருளையும் மறந்து விடுதல். அதனால் மனதினை குரங்குடன் ஒப்பிடுகின்றனர். குரங்கு மரத்தின் ஒரு கிளையினைப் பற்றி இருக்கையில், அடுத்து எந்த கிளையைப் பற்றலாம் என்று மேலும் கீழும் பார்த்த வண்ணம் இருப்பது போன்று, மனமும் தான் ஒரு பொருளை பற்றியிருக்கையில் அடுத்து எங்கே தாவலாம் என்று நினைக்கின்றது. எனவே தான் ஒரே நிலையில் மனதினை நிலை நிறுத்துவது மிகவும் கடினம் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். ஈசனாரின் திருவடியை திருந்தடி என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். திருந்தடி என்ற தொடரினை, திரு உந்து அடி என்று பிரித்து, ஒரு சுவையான விளக்கமும் கொடுக்கப் படுகின்றது. திரு என்றால் செல்வம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நால்வர் பெருமானர்கள் செல்வமாக கருதுவது, பெருமானின் அருளையும், அனைத்துச் செல்வங்களிலும் சிறந்து, என்றும் அழியாது விளங்கும் முக்திச் செல்வம் என்பதால், அந்த பொருளையே நாமும் கொண்டு, அந்த உயர்ந்த செல்வத்தை நாம் பெறுவதற்கு ஊக்கமளிக்கும் திருவடி என்பதே அந்த சுவையான விளக்கம். உலக மாயைகளிலிருந்து விடுபட்டு உயிர்கள் திருந்த திருவருள் புரியும் அடி என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அடியார்களுக்கு இனிமேல் பிறப்பு ஏற்படாவண்ணம் அவர்களை ஆட்கொண்டு அருள் புரியும் பெருமானே, உலகத்து இன்ப துன்பங்களில் ஆழ்ந்து அவற்றின் தாக்கத்தினால் அவ்வப்போது உன்னை மறந்துவிடும் மனதினை, உலக மாயையின் காரணமாக உன்னை அவ்வப்போது மறந்துவிடும் மனதினை, கடுமையான பயிற்சி மூலம் உயிரினை வற்புறுத்தி, உன்னை எப்போதும் மறக்காமல் இருக்கும் வண்ணம் இருக்கும் நாங்கள், உமக்கு திருத்தொண்டுகள் செய்வதில் ஈடுபட்டு, அத்தகைய திருப்பணிகள் செய்யும் போது உமக்கு சிவாபராதம் ஏதும் ஏற்படாத வண்ணம்,தவறுகள் ஏதும் செய்யாத வண்ணம் உம்மை வழிபடுகின்றோம். மேலும் அன்று அலர்ந்த மலர்களை பறித்துக் கொண்டு வந்து உமது திருவடிகளில் தூவி, உம்மை புகழ்ந்தும் போற்றியும் வழிபடுகின்றோம். எனவே, உயிர்களின் சிறப்பினை குறைக்கும் தன்மை உடைய தீவினைகள் தீண்டா வண்ணம் அருள் புரிந்து எம்மை காப்பீராக. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது, நீலகண்டம் என்று அழைக்கப்படும் பெருமானின் மீது, ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன் என்று திருஞான சம்பந்தர் சொல்வதாக அமைந்த பாடல்.

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.12.1) திருஞான சம்பந்தர், பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது மனம் நினைக்காது என்று கூறுகின்றார். ஏர்= அழகு; மறையான் என்ற சொல்லுக்கு வேதங்களை அருளியவன், வேதங்களின் வடிவமாக இருப்பவன் என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம், இரண்டுமே பொருந்துகின்றன. ஏகாம்பரம் என்ற வடமொழிச் சொல் ஏகம்பம் என திரிந்தது. இந்த தலத்தில் உள்ள மாமரம் மிகவும் புகழ் பெற்றது. மிகவும் பழமையான இந்த மரம், நான்கு வேதங்களின் வடிவமாக உள்ளதாக கருதப் படுகின்றது. இந்த மரத்தின் நான்கு கிளைகளில் உள்ள பழங்கள் வேறுவேறு சுவையுடன் விளங்குவதாக கூறுவார்கள். இந்த மரத்தின் அடியில் தான், பிராட்டி மணலால் இலிங்கம் பிடித்து பெருமானை வழிபட்டதாக சொல்லப் படுகின்றது. காஞ்சியில் தவம் புரிந்த பிராட்டிக்கு பரிசாக, இறைவன் தனது உடலின் ஒரு பாகத்தை அளித்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த செய்தியை உணர்த்தும் முகமாக ஆணும் பெண்ணும் ஆகிய பெம்மான் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிட்டார் போலும். பெம்மான் என்பது பெருமான் என்ற சொல்லின் திரிபு. கங்கையைத் தனது சடையில் மறைத்து வைத்தவன் பெருமான். எனினும் அந்த கங்கை நதி, பெருமானின் சடையின் சிறை வைக்கப் பட்டது உலக நலனைக் கருத்தில் கொண்டு என்பதால், கங்கை நதியினை மறைத்த செய்கை சடையின் குற்றமாக கருதப் படுவதில்லை. வேதத்தின் பொருளாக உள்ளவனும், குற்றமற்றதும் சுருண்டு அழகாக உடையதும் ஆகிய சடையினில் வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனை ஏற்றுக் கொண்டு அருள் புரிந்த பெருமானும், பெண்ணாகவும் ஆணாகவும் காட்சி அளிப்பவனும், எனது இறைவனும், அழகு பொலியும் கச்சி ஏகம்பம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது உள்ளம் நினைக்காது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.

மறையானை மாசிலாப் புன்சடை மல்கு வெண்

பிறையானைப் பெண்ணோடு ஆணாகிய பெம்மானை

இறையானை ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்து

உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (2.12.3) திருஞான சம்பந்தர், பெருமானைச் சென்று அடையாத உயிர்கள் நன்னெறியில் சேர மாட்டா என்று கூறுகின்றார். பார்=நிலவுலகம்; ஆரும்= நிறைந்து ஒலிக்கும்; சிதைவு=கேடு, இங்கே குறைவு என்று பொருள் கொள்ளுதல் மிகவும் பொருத்தம். சிவநெறி ஒன்று தான் பேரின்பம் அளிக்கும் வீடுபேற்றினை அடைவதற்கு உதவும் என்பதால், இன்பமாய நெறி என்று கூறுகின்றார். உலகெங்கும் கேட்கும் வண்ணம் மிகுந்த ஆரவாரத்துடன் முழங்கும் முழவம், மொந்தை, குழல் யாழ் ஆகிய இசைக் கருவிகள் எழுப்பும் இசையொலியின் பின்னணியில் ஆடலும் பாடலும் என்றும் குன்றாமல் நடைபெறுகின்ற அழகு வாய்ந்த கச்சி ஏகம்பம் தலத்தில் பொருந்தி உறைகின்ற பெருமானைச் சாராத மனிதர்கள் பேரின்பம் தரும் வீடுபேற்றினை சென்று அடைய மாட்டார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாராரும் முழவ மொந்தை குழல் யாழொலி

சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லாதோர்

ஏரார் பூங்கச்சி ஏகம்பனை எம்மானைச்

சேராதார் இன்பமாய அந்நெறி சேராரே

இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (2.12.5) பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது உள்ளம் நினைக்காது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பெருமான் பலி ஏற்பது, உயிருடன் இணைந்துள்ள, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று பொருட்களை பெறுவதற்காக என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கடை=வாயில்; உடையான் என்று உயிர்களைத் தனது உடைமையாக கொண்டுள்ள பெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தவம் செய்யும் முனிவர்கள் அனைவரும் சடைமுடியுடன் இருந்ததாக புராணங்களிலிருந்து நாம் அறிகின்றோம். எனினும் சடையான் என்று எந்த முனிவரும் அழைக்கப் படவில்லை. அனைத்து முனிவர்களுக்கும் தலையாய முனிவனாகிய பெருமான் ஒருவனே சடையான் என்று அழைக்கப் படுகிறான். மேலும் பெருமானின் சடை பல சிறப்புகள் வாய்ந்தது. கங்கை நதியைத் தன்னிடம் தேக்கிய பெருமையை உடையது பெருமானின் சடை. மேலும் அழியும் நிலையில் இருந்த சந்திரனை வாழ வைத்தது பெருமானின் சடை. இயற்கையாகவே ஒன்றுக்கொன்று பகையுடன் திகழும் பாம்பு, சந்திரன் மற்றும் தண்ணீர் ஆகிய மூன்றினையும், தங்களது பகையினை மறந்து ஒரே இடத்தில் இருக்கும் வண்ணம் செய்த சடை பெருமானின் சடை. பல பெருமைகள் வாய்ந்த சடையினை உடையதால் சடையான் என்று அழைக்கப் படுபவனும், தனக்கு பலி அளிப்போரின் வீட்டின் வாயில் சென்று அவர்கள் பிச்சையாக கொடுக்கும் ஆணவம் கன்மம் மற்றும் மாயை ஆகிய மூன்று மலங்களையும் ஏற்றுக் கொண்டு, முக்தி உலகத்தினை அவர்களுக்கு பரிசாக அளிக்கும் ஆற்றல் உடையவனும், ஆரவாரம் மிகுந்த கச்சி நகரத்தில் பொன்னிற மலர்கள் பொலிந்து விளங்கும் கம்பை நதிக்கரையினில் உள்ள கச்சி ஏகம்பம் தலத்தில் உறைபவனும், அனைத்து உயிர்களையும் தனது உடைமையாகக் கொண்டவனும் ஆகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது உள்ளம் நினைக்காது என்று திருஞான சம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல். மூன்றும் கொண்டான் என்ற தொடருக்கு உடல் பொருள் ஆவி என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது. எனினும் கடையே போய் மூன்றும் கொண்டான் என்று வருவதால், பக்குவம் அடைந்த உயிர்களின் மலங்களை பிச்சையாக ஏற்றுக் கொள்கிறான் என்று பொருள் கொள்வதே மிகவும் பொருத்தமாக உள்ளது.

சடையானைத் தலை கையேந்திப் பலி தருவார் தம்

கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள்

புடையே பொன் மலரும் கம்பைக் கரை ஏகம்பம்

உடையானை அல்லாது உள்காது என் உள்ளமே

வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.14.1) பெருமானைத் தவிர்த்து வேறு எந்த தெய்வத்தையும் தனது உள்ளம் நினைக்காது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். உள்குதல்=நினைத்தல்; பல பாடல்களில் திருஞான சம்பந்தர் பெருமானைத் தவிர்த்து தனது உள்ளம் வேறு எவரையும் பேணாது, நினையாது, சிந்தை செய்யாது, தொழாது, அறியாது, அன்பு செலுத்தாது என்றும், தனது நா வேறு ஒருவரின் திருநாமத்தை உரையாது, பேசாது என்றும் பெருமானை தான் எப்போதும் மறவேன் என்றும் பெருமான் பால் தான் கொண்டிருந்த அன்பினை உணர்த்துகின்றார். ஒற்றைப் பிறைச் சந்திரனையும் சிவந்த கண்களை உடைய பாம்பினையும் தனது சடையின் மீது பொருத்திக் கொண்டவனும், உடைந்த மண்டையோடாகிய பிரம கபாலத்தைத் தனது உண்கலனாக ஏந்திக்கொண்டு ஊரூராக பலியேற்கச் செல்பவனும், இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்பவனும், தேவர்களால் தொழப்படுபவனும், வெண்ணி எனப்படும் தலத்தினைத் தனது உறைவிடமாக உடையவனும் ஆகிய பெருமானை தவிர்த்து வேறு எவரையும் எனது மனம் நினையாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சடையானைச் சந்திரனோடு செங்கண் அரா

உடையானை உடை தலையில் பலி கொண்டு ஊரும்

விடையானை விண்ணவர் தாம் தொழும் வெண்ணியை

உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே

இந்த பாடலில் திருஞானசம்பந்தர் இறைவனைத் தவிர்த்து வேறு எதையும் தனது உள்ளம் உணராது என்று கூறுவது நமக்கு திருவெண்காடு தலத்தின் மீது பாடிய பதிகத்தின் பாடலை (2.48.9) நினைவூட்டுகின்றது. திருமால் மற்றும் பிரமன் காண முடியாமல் நெடிய தீப்பிழம்பாக நின்றவன் என்றும் ஐராவத யானைக்கு அருள் புரிந்தவன் என்றும் அவனது பெருமைகளை தங்களது உள்ளத்தில் நினைத்து உருகாத மாந்தர்களை உணர்வு உடையவராக கருத மாட்டோம் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். கள்=தேன்; கிடந்தான்=பாற்கடலில் படுத்து கிடப்பவன், திருமால்; ஒள்ளாண்மை=சிறந்த ஆண்மைத் தன்மை; ஆடுதல் என்றால் நீராடுதல் என்று பொருள். உள்ளம் முழுவதும் பெருமான் குறித்த சிந்தனைகளால் நீராட்டப்பட்டு நனைந்து நைய வேண்டும் என்பதை உள்ளாடி என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். தேன் நிறைந்த செந்தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும், பாற்கடலில் படுத்து இருப்பவனும் ஆகிய திருமாலும் ஆகிய இவர்கள், தங்களில் யார் உயர்ந்தவர் என்பதை அறியும் பொருட்டு, அன்னமாக உயர்ந்தும் பன்றியாக தாழ்ந்தும் சென்ற போதும், தங்களின் முன்னே தோன்றிய தழற் பிழம்பின், முடியையும் அடியையும் உணர முடியாமல் திகைத்தனர்; இவ்வாறு அரியும் பிரமனும் உணர்வதற்கு அரியவனாக நின்ற பெருமானை, ஐராவதம் எனப்படும் வெள்ளானை தவம் செய்து வழிபட்டு உய்வினை அடைந்தது. இவ்வாறு அருள் புரியும் மேன்மை வாய்ந்த திருவெண்காட்டு பெருமான் என்று தங்களது உள்ளத்தில் கசியும் அன்பினால் பெருமானை நீராட்டி உருகி உருகாத மாந்தர்களின் ஞானத்தை நாம் மதியோம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்

ஒள்ளாண்மை கொளல் கோடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான்

வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று

உள்ளாடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே

துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.98.5), திருஞானசம்பந்தர், தான் முந்தைய பிறவியிலும் பெருமானை மறவாதவனாக வாழ்ந்ததாக கூறுகின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர், தான் சென்ற பிறவியில் இறைவனை ஒரு பொழுதும் மறக்காமல் இருந்ததாகவும், அவ்வாறு இருந்த தனக்கு முக்தி அளிக்காமல் மறுபடியும் மண்ணுலகில் பிறக்கச் செய்தது ஏன் என்றும் பெருமானிடம் கேள்வியாக வினவுவதை நாம் உணரலாம். பிறப்பிறப்பினைத் தவிர்க்கும் வழியை நீ எனக்கு உணர்த்தாமல், பிறவிப் பிணியினை எனக்குத் தந்து சென்ற பிறவியில் இறக்குமாறும் இந்த பிறவியில் மறுபடியும் இந்த மண்ணுலகில் பிறக்குமாறும் செய்தது நியாயமா என்ற கேள்வி இறைவனை நோக்கி திருஞான சம்பந்தரால் எழுப்பப் படுகின்றது. துறத்தல் என்பதை ஒரு துறவி தான் அடுத்தவருக்கு கற்றுத் தரமுடியும் என்பதால், பகலில் துறவிக் கோலம் பூண்டு வேதங்களை உபதேசம் செய்தவனாகிய துருத்திப் பெருமானை நோக்கி இந்த கேள்வி கேட்கப் படுகின்றது. இவ்வாறு மறுபடியும் தான் பிறப்பு எடுப்பதற்கு தான் செய்த தவறு தான் என்னே என்றும் கேட்கின்றார். திருஞான சம்பந்தர் தனது முந்திய பிறப்பினில் தவறுகள் ஏதும் செய்யாது இருந்த போதிலும், அவருக்கு மீண்டும் பிறப்பு அளித்தது, அவர் மூலம் தேவாரப் பதிகங்கள் உலகினுக்கு கிடைக்க வேண்டும் என்பதே பெருமானின் திருவுள்ளக் கருத்து என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

துறக்குமாறு சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி

மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம்மண்ணின் மேல்

பிறக்குமாறு காட்டினாய் பிணிப் படும் உடம்பு விட்டு

இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே

இந்த பதிகம் நமக்கு திருஞானசம்பந்தர் அருளிய திருப்புகலூர் பதிகத்தின் ஒரு பாடலை (2.115.4) நினைவூட்டும். இந்த பதிகத்தில் திருஞான சம்பந்தர், இறைவனை வழிபடும் அடியவர்கள், இறைவனை நினைக்காத நாட்களை, இறைவனைப் பற்றி பேசாத நாட்களை பயனில்லாத நாட்கள் என்று கருதுவார்கள் என்று கூறுகின்றார். பூவும் நீரும் கொண்டு இறைவனை வழிபட்டு, நாவினால் அவனது புகழினை பாடும் அடியார்கள் அவனது புகழைத் தவிர தங்கள் செவிகளால் வேறு எதனையும் கேளார் என்று கூறுகின்றார். மேலும் அத்தகைய அடியார்கள் இறைவனை நினைக்காத நாட்களை, இறைவனைப் பற்றி பேசாத நாட்களைப் பயனற்ற நாட்கள் என்றும் உணர்வு ஒழிந்த நாட்கள் என்றும் கருதுவார்கள் என்று கூறுகின்றார்.

பூவும் நீரும் பலியும் சுமந்து புகலூரையே

நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார் செவித் துளைகளால்

யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள் தாம்

ஓவும் நாளும் உணர்வொழிந்த நாள் என்று உள்ளம் கொள்ளவே

புகலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.3.8) திருஞானசம்பந்தர், இரவு பகல் ஆகிய எந்நேரத்திலும் இறைவனைப் புகழ்ந்து போற்றுவேன் என்று கூறுகின்றார். இரவொடு பகலதாய்= இரவும் பகலாகவும் வெவ்வேறு காலங்களாக இருப்பவனே; வழியடியேன்=இதுவரை எடுத்த அனைத்து பிறப்புகளிலும் வழிவழியாக; குர=குராமலர்; இனமார்=கூட்டமாக அமைந்துள்ள; இரவாகவும் பகலாகவும் ஒரு நாளின் அனைத்துப் பொழுதுகளாகவும் இருக்கும் பெருமானே கடந்த பல பிறவிகளாக வழிவழியாக உன்னைப் புகழ்ந்து வழிபட்டுவந்த அடியேன் அந்த பழக்கத்திலிருந்து விடுபடாமல் உன்னைத் தொடர்ந்து வழிபடுவேன்; குரா மலரும் நறுமணம் வீசும் கொன்றை மலரினையும் தனது விரிந்த சடையில் அணிந்து கொண்டுள்ள பெருமானே, ஆண்களில் சிறந்தவனாக கருதப்படுபவனே, அதிரும் கடலினை எல்லையாகக் கொண்டுள்ள இலங்கைத் தீவினுக்கு அரசனாக விளங்கும் இராவணனின், கூட்டமாக விளங்கிய இருபது தோள்களையும் மலையின் கீழே அடர்த்து நெருக்கியவனே, அன்னத்தைப் போன்று அழகு நடையினை உடைய உமை அன்னையுடன் அமர்ந்தவனாக நீ புகலி நகரில் காட்சி தருகின்றாய் என்று இறைவனை நோக்கி திருஞானசம்பந்தர் கூறும் பாடல்.

இரவொடு பகலதாம் எம்மான் உன்னைப்

பரவுதல் ஒழிகிலேன் வழி அடியேன்

குரவிரி நறும் கொன்றை கொண்டு அணிந்த

அரவிரி சடைமுடி ஆண் தகையே

அன மென்னடையாளொடும் அதிர்கடல் இலங்கை மன்னை

இனமார் தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.4.01) திருஞானசம்பந்தர், தான் எந்த நிலையில் இருந்தாலும் பெருமானின் திருவடிகளை என்றும் தொழுதெழுவேன் என்று கூறுகின்றார். நோய்: முந்தைய பிறவிகளிலிருந்து தொடர்ந்து வரும் பழவினைகள் நோய் என்று கூறப்படுகின்றது. கழல்=காலில் அணியும் ஒருவகை ஆபரணம், இங்கே கழல் அணிந்த இறைவனின் திருப்பாதங்களை குறிப்பிடுகின்றது. மிடறு=கழுத்து. பாற்கடலினை அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது கடலில் அமுதம் தோன்றும் முன்னர் தோன்றிய நஞ்சினை, அனைவரையும் காப்பாற்றும் பொருட்டு தனது கழுத்தினில் அடக்கிக் கொண்ட வேத நாயகனே என்று இறைவனை அழைக்கும் திருஞானசம்பந்தர், தான் எந்த நிலையிலும் சிவபெருமானை மறவாது தொழுவேன் என்று இந்தப் பாடலில் கூறுகின்றார். எந்தத் துன்பம் வந்தாலும், அந்தத் துன்பங்களால் எத்தகைய தளர்ச்சி ஏற்பட்டாலும், தொடர்ந்து வரும் பழவினைகளின் தாக்கத்தால் அயர்ச்சி அடையாமல் சிவபெருமானின் பாத கமலங்களைத் தொழுது வணங்குவேன் என்று கூறும் திருஞானசம்பந்தர் எழுவேன் என்று குறிப்பிடுவதன் மூலம் சிவபெருமானின் பாதங்களை வணங்குவதால், எத்தகைய துன்பம் வந்தாலும் நாம் அந்தத் துன்பங்களைக் கடந்து எழலாம் என்ற செய்தியையும் இந்தப் பாடல் மூலம் நமக்கு வழங்குகின்றார். மூன்று வயதில் தன்னை ஞானப்பால் கொடுத்து ஆட்கொண்ட சிவபெருமானைநோக்கி உரிமையுடன் திருஞானசம்பந்தர், தனக்கு வேண்டிய பொருளைத் தரவில்லையானால், அந்தச் செய்கை சிவபெருமானின் அருளுக்கு உகந்த செய்கையாகாது என்று கூறுவதையும் நாம் இந்தப் பாடலில் காணலாம். இந்தக் கோரிக்கை இந்தப் பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் காணப்படுகின்றது. ஆவடுதுறை தலத்து இறைவனே, எத்தைகைய துன்பம் வந்தாலும், உடலில் தளர்ச்சி ஏற்பட்டாலும் பழவினைகள் எனை தொடர்ந்து வந்து துன்பம் விளைவித்தாலும் உனது திருவடிகளைத் தொழுது அத்தகைய இடர்களிலிருந்து மீண்டு எழுவேன். பாற்கடலில் இருந்து எழுந்த நஞ்சினை அருந்தி பின்னர் கழுத்தினில் அடக்கி, அனைவரையும் காத்த அருட்கடலே, உன்னால் ஆட்கொள்ளப்பட்ட எனக்கு பொருள் ஏதும் அளிக்காமல் இருப்பது தான், உனது அருட்செயலா என்று பெருமானை பார்த்து திருஞான சம்பந்தர் கேள்வி கேட்பதாக அமைந்த பாடல்.

இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (3.4.5), தான் எந்த அவல நிலையில் இருந்தாலும், பெருமானின் திருப்பாதங்களைத் தவிர்த்து வேறெதையும் சிந்தை செய்யேன் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். கையது வீழ்தல்=பக்கவாத நோய். கழிவு உறுதல்=உடலின் வன்மை குறைதல். கையது என்றால் கைப்பொருள் என்றும் கையில் உள்ள பொருள், அதாவது செல்வம் என்றும் பொருள் கொள்ளலாம். நமது செல்வம் அழிந்த நிலையில் நாம் மற்றவரால். துச்சமாக, கழிவுப் பொருளை அவமதிப்பது போல் நடத்தப்படும் அவல நிலை இங்கே குறிக்கப் படுகின்றது என்றும் விளக்கம் கூறுவர். செம்மை என்ற சொல் செய் என்று திரிந்து உள்ளது. கொய்யணி நறுமலர்=புதியதாக பறிக்கப்பட்டு நறுமணம் வீசும் மலர். நறுமணம் வீசும் கொன்றை மலரை சடையில் அணிந்த பெருமானே, கழுத்தில் நஞ்சினை அடக்கியதால் ஏற்பட்ட கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடைய வேதியனே, நான் எனது உடல் கடும்பிணியால் பாதிக்கப்பட்டு அவல நிலையில் இருந்தாலும் வீரக் கழல்கள் பொருந்திய உனது திருப்பாதங்கள் தவிர வேறு எதனையும் சிந்தை செய்யேன். இவ்வாறு இருக்கும் அடியேனுக்கு பொருள் ஏதும் தராமல் இருப்பது தான் நீ அருள் செய்யும் முறையா என்று இறைவனை நோக்கி திருஞான சம்பந்தர் கேள்வி கேட்கும் பாடல்.

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.9.5) முறையாக இசை பாடியாடும் தொண்டர்களின் இதயத் தாமரையில் அன்புடன் குடிகொண்டிருக்கும் இறைவனை அல்லாது தனது உள்ளம் வேறு எவரையும் நினையாது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இறை=தங்குமிடம்; வாஞ்சியம்=அன்புடன்; முன்=முற்பட, ஈடுபடும்; பெருமான் விருப்பத்துடன் பிச்சை எடுக்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வெறி=மிகுந்த விருப்பம்; எந்த ஒரு பொருளின் மீது அடக்க முடியாத அளவு ஆசை கொள்வதை வெறி பிடித்தல் என்று சொல்கிறோம் அல்லவா. நச்சி=விரும்பி; தனது சடையில் ஒற்றைப் பிறைச் சந்திரனை சூட்டிக் கொண்டிருக்கும் பெருமான், இடபத்தை வாகனமாகக் கொண்ட பெருமான், மிகுந்த விருப்பம் கொண்டவராக, தீராத ஆசை உடையவராக தேர்ந்தெடுத்த பக்குவப்பட்ட உயிர்களின் மலங்களைப் பிச்சையாக பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் திரிகின்றார். அத்தகைய பெருமானை, முறையாக இசைப் பாடல்கள் பாடி வழிபடும் தொண்டர்கள் பாட, அதற்கேற்ப வேறு சில தொண்டர்கள் ஆட, அந்த ஆடல் பாடல்களைக் கண்டு மனம் மகிழும் பெருமான், அந்த தொண்டர்களின் மனதினில் விருப்பத்துடன் அமர்கிறார். அத்தகைய இறைவனையே தனது மனம் எப்போதும் விரும்பும் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.

பிறையுறு செஞ்சடையார் விடையார் பிச்சை நச்சியே

வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழி மிழலையார்

முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள்

இறை உறை வாஞ்சியம் அல்லது எப்போதும் என் உள்ளமே

தனது உடல் நோய்வாய்ப் பட்டு உடலும் உள்ளமும் சோர்ந்திருந்த போதிலும், பெருமானின் திருநாமமே தனக்கு உற்ற துணை என்றும் பெருமானின் திருநாமமாகிய ஐந்தெழுத்து மந்திரம் என்றும் திருஞான சம்பந்தர் குறிப்பிடும் பாடலை (3.22.6) நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். நோய்வாய்ப் பட்ட போது உடலும் உள்ளமும் நோயின் தன்மையால் வருந்த எவருக்கும் பொதுவாக இறையுணர்வு தோன்றுவதில்லை. நோயினால் களைத்த உடல் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கவும் ஒத்துழையாது போகலாம். ஆனால் அந்த தருணத்திலும் உறுதியாக நின்று பெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை நாம் உச்சரித்தால் ஏற்படும் விளைவினை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். கொடிய சூலை நோய் வருத்திய போதும் சைவ சமயம் மாறியதால் கோபம் கொண்ட சமணர்கள் அடுக்கடுக்காக பல தீமைகள் விளைவித்த போதிலும், அப்பர் பிரான் தொடர்ந்து இறைவனின் திருநாமங்களை சொல்லி வந்ததையும் அதனால் அவர் அடைந்த பலன்களையும் நாம் அறிவோம்.

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்

அம்மையிலும் துணை அஞ்செழுத்துமே

அம்மை என்பதற்கு மறுமை என்று பொருள். பல உரை ஆசிரியர்கள் அடுத்த பிறவியிலும் பஞ்சாக்கர மந்திரம் உயிரினுக்கு துணையாக இருக்கும் என்று பொருள் கூறியுள்ளனர். சிவக்கவிமணியார் அம்மை என்பதற்கு அன்னை என்று பொருள் கொண்டு, பெற்ற தாயினும் பரிந்து நன்மை புரியும் தன்மை கொண்டது பஞ்சாக்கர மந்திரம் என்று பொருள் கூறுகின்றார். பஞ்சாக்கர மந்திரம், வினைகளை அறுத்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கும் என்ற திருஞான சம்பந்தரின் வாக்கினை அறிந்த நாம், பஞ்சாக்கர மந்திரத்தை ஓதும் அன்பர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்பதையும் நன்கு அறிவோம். மறுபிறப்பு என்ற ஒன்று இருந்தால் தானே, அந்த பிறவியில் பஞ்சாக்கர மந்திரம் உதவி செய்வதற்கு. எனவே அம்மை என்பதற்கு அன்னையினும் பரிந்து என்று பொருள் கொள்வது சிறப்பு. பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து உயிர்களுக்கு அருள் செய்பவன் பெருமான் அல்லவா. தும்மல் இருமல் ஆகியவை தொடர்ந்து வந்து உடலை வருத்திய போதிலும், நரகத் துன்பங்கள் போன்று கொடிய துன்பங்கள் ஏற்பட்டு உடல் வருந்தினும், முற்பிறப்பில் செய்த வினைகளின் பயனால் பலவிதமான துன்பங்களை அனுபவிக்க நேர்ந்த போதிலும், இறைவனின் திருநாமமாகிய பஞ்சாக்கர மந்திரத்தை இடைவிடாது சொன்னால், அந்த மந்திரம் இம்மையில் துணையாக இருந்து பழவினைகளை அறுத்து நன்மை பயக்கும். பொதுவாக பெற்ற அன்னையினும் அதிகமாக நன்மைகள் புரிவது அஞ்செழுத்து மந்திரம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இந்த பதிகத்தின் முதல் பாடலில் (3,22.1) உறங்கும் நேரம் மற்றும் விழித்திருக்கும் நேரம் அனைத்திலும் பெருமானின் திருநாமமாகிய அஞ்செழுத்தினை தினமும் நாம் சொல்ல வேண்டும் என்று திருஞான சம்பந்தர் நமக்கு அறிவுரை கூறுகின்றார். துஞ்சல்=உறக்கம்; நெஞ்சகம் நைதல்=அன்பினால் குழைதல்; இந்த நிலை தியானத்திற்கு அடிப்படை; நினைமின்=தியானம் செய்யுங்கள்; உயிர் இறைவனை வழிபட விரும்பினாலும், ஒரு நிலையில் நில்லாமல் பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனதினை ஒரு நிலைப்படுத்தி வழிபட்ட மார்க்கண்டேயன் நெஞ்சினில் வஞ்சனை ஏதும் இன்றி பெருமானின் திருவடிகளை வழிபட்டதாக இங்கே உணர்த்தப் படுகின்றது. இயமனை உதைத்து வீழ்த்தியது திருவைந்தெழுத்து என்று குறிப்பிடுவதன் மூலம், திருவைந்தெழுத்து பெருமானின் வடிவத்தை உணர்த்துகின்றது என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். நமச்சிவாய மந்திரத்தின் ஐந்து எழுத்துக்களும் பெருமானின் வடிவத்தை எவ்வாறு உணர்த்துகின்றன என்பதை உண்மை விளக்கம் எனப்படும் சித்தாந்த நூல் மிகவும் அழகாக விளக்குகின்றது. இந்த ஐந்து எழுத்துக்கள், முறையே பெருமானின் பாதம், உந்தி, தோள், முகம் மற்றும் தலையை குறிக்கும் என்று இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது.

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்

நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்தக் கூற்று

அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.

தூங்கும் சமயத்தில் நாம் எவ்வாறு இறைவனின் திருநாமத்தை நினைக்க முடியும், சொல்ல முடியும் என்ற ஐயம் நமக்கு எழலாம். நாள் முழுவதும், அதாவது நாம் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் இறைவனின் திருநாமத்தை நினைத்துக் கொண்டே இருந்தால், அதே நினைவு தான் உறக்கத்திலும் தொடர்ந்து கனவாக வரும் என்று கூறுவார்கள். அருளாளர்கள் அத்தகைய அனுபவத்தை அடைந்ததையே நமக்கு அவர்களது பாடல்களில் உணர்த்துகின்றனர். தூங்கும் பொழுதினும் கண் விழித்திருக்கும் பொழுதினும், நெஞ்சம் கசிந்து உருகி நாள்தோறும் அவனது திருநாமமாகிய பஞ்சாக்கரத்தை நினைப்பீர்களாக. தனது நெஞ்சில் வஞ்சகம் ஏதுமின்றி அவனது திருவடியை வாழ்த்தி வந்த சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்ந்து செல்ல வந்த கூற்றுவன் அஞ்சும் வண்ணம் அவனை உதைத்து வீழ்த்தியது திருவைந்தெழுத்தே ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.52.5) திருஞானசம்பந்தர் தேவர்கள், நீலகண்டனாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தமது சிந்தையில் நினையாமல் தினமும் வாழ்கின்றனர் என்று கூறுகின்றார். சிறுவர்களாக இருந்த போதிலும் பெருமானின் பெருமையினை புரிந்து கொண்டு பெருமானுக்கு தொண்டு செய்த, சண்டீசர் மற்றும் மார்க்கண்டேயர் ஆகியோரை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். கோலம்=அழகிய; அழகியதும் மிகவும் நீண்டதும் ஆகிய மதிற்சுவர்களை உடையதும், கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் மதுரை தலத்தில் உறைகின்ற பெருமானே, சண்டீசர் மார்கண்டேயர் போன்ற சிறுவர்கள் பண்டைய நாளில் வழிபட்டதை போன்று, இன்றும் சிறுவர்கள் உன்னை வழிபடுகின்றனர்; நீல கண்டனாக விளங்கி ஆலகால விடத்திலின் தாக்குதலிலிருந்து தேவர்களை காத்த உம்மையன்றி வேறு எவரையும் தங்களது சிந்தையில் கொள்ளாமல் தேவர்கள் தொடர்ந்து உன்னை வணங்குகின்றனர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கோலமாய நீள் மதில் கூடல் ஆலவாயிலாய்

பாலனாய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே

நீலமாய கண்டனே நின்னை அன்றி நித்தலும்

சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே

திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.55) முதல் பத்து பாடல்கள் அனைத்தையும், பெருமானை அல்லாது வேறு எவரையும் தனது மனம் ஆதரவாக நினையாது என்று திருஞானசம்பந்தர் முடிக்கின்றார். அந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். அரையா=அரசனே,விரையார்=நறுமணம் மிகுந்த; மிடறு=கழுத்து; உரையார்=பெருமானின் புகழினை எடுத்துரைத்து பெருமானைப் போற்றி வணங்கும் அடியார்கள்; நங்கை=பெண்களில் சிறந்தவள்; நம்பி என்ற சொல்லின் பெண்பால்; திரையார்=அலைகள் நிறைந்த; தெண் கடல்= குளிர்ச்சி பொருந்திய; நறுமணம் வாய்ந்த கொன்றை மாலையை அணிந்தவனே, ஆலகால விடத்தைத் தேக்கியதால் கருமை நிறத்தில் கறை படர்ந்த கழுத்தினை உடையவனே, பெண்களில் சிறந்த உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றவனே, உன்னைப் பல தொண்டர்களும் புகழ்ந்து போற்றிக் கொண்டு இருக்கின்றனர். அலைகள் நிறைந்ததும் குளிர்ச்சி வாய்ந்ததும் ஆகிய கடலால் சூழப்பட்ட திருவான்மியூர் தலத்தில் உறையும் பெருமானே, அனைத்து உயிர்களுக்கும் அரசனாக விளங்குபவனே, உன்னை அன்றி வேறு எவரையும் நான் எனக்கு ஆதரவாக கருத மாட்டேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விரையார் கொன்றையினாய் விடம் உண்ட மிடற்றினனே

உரையார் பல் புகழாய் உமை நங்கை ஓர் பங்குடையாய்

திரையார் தெண் கடல் சூழ் திருவான்மியூர் உறையும்

அரையா உன்னை அல்லாது அடையாது எனது ஆதரவே

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (3.55.2) பெருமானை அடிகேள் என்று அழைக்கும் திருஞான சம்பந்தர், பெருமானைத் தவிர்த்து வேறு ஒருவர் பால் தனது மனம் அன்பு பாராட்டாது என்று கூறுகின்றார். கொடி=இடபக்கொடி; இடி போன்று உரத்த குரலில் முழக்கம் இடுகின்ற இடபத்தை வாகனமாகக் கொண்டவனே, தேவர்கள் தங்களது முடிகளைத் தாழ்த்தி வணங்கும் திருப்பாதங்கள் உடையவனே, இடபக் கொடியை உடையவனே, பிறைச் சந்திரனுடன் பாம்பு மற்றும் கொன்றை மலர்களைத் தனது சடையினில் சூட்டிக் கொண்டவனே, மாதவி முதலான பல கொடிகள் நறுமணம் வீசும் திருவான்மியூர் தலத்தில் உறைகின்ற தலைவனே, உன்னை அல்லால் வேறு ஒருவர் பால் எனது மனம் அன்பு செலுத்தாது என்று திருஞான சம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.

இடியார் ஏறு உடையாய் இமையோர் தம் மணி முடியாய்

கொடியார் மாமதியோடு அரவம் மலர்க் கொன்றையினாய்

செடியார் மாதவி சூழ் திருவான்மியூர் உறையும்

அடிகேள் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே

இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.55.3) பெருமானை ஐயா என்று அழைக்கும் திருஞான சம்பந்தர், தனது அன்பு பெருமானைத் தவிர்த்து வேறு ஒருவரையும் சென்று அடையாது என்று உறுதிபட கூறுகின்றார். வளர்=தங்கும்; தன்னைக் கொல்வதற்காக தாருக வனத்து முனிவர்களால், தன் மீது ஏவப்பட்ட மழு ஆயுதத்தை செயலறச் செய்து, அதனைத் தனது கையில் ஏந்தியவன் பெருமான். அந்த நிகழ்ச்சியைத் தான், கையினில் பொருந்திய வெண் மழு உடையவன் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடல் குறிப்பிடுகின்றார். ஒண் கண்=ஒளி பொருந்திய கண்கள்; கண் வளருதல்=உறங்குதல்; சிறிய குழந்தைகள் எவ்வளவு அதிகமாக தூங்குகின்றனரோ, அந்த அளவுக்கு வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறுவார்கள். பண்டைய தாலாட்டுப் பாடல்கள், கண் வளராய் என்று குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. பிராட்டிக்கு பெருமானின் மார்பினில் சாய்ந்து கொண்டு இருப்பது, மிகவும் இன்பமாக உள்ளது என்பதை குறிப்பிடும் முகமாக உமையாள் வளர் மார்பினன் என்று பெருமானை அழைக்கின்றார். செய்யார்= வயல்கள் பொருந்திய; ஐயன்=தலைவன்; தனது கையில் வெண்மழு பொருந்தியவனும், நெருப்புச் சுடர் போன்ற சிவந்த நிறத்தில் திருமேனி உடையவனும், மைப்பூசப் பெற்றதும் ஒளி வீசுவதும் ஆகிய கண்களை உடைய உமையன்னை சாய்ந்து கொண்டு இன்பமடையும் வண்ணம் அகன்ற மார்பினை உடையவனும், சிவந்த மீன்கள் பாயும் வண்ணம் நீர்வளம் நிறைந்த வயல்கள் கொண்ட திருவான்மியூர் தலத்தில் உறைபவனும், எனது தலைவனும் ஆகிய பெருமானை அல்லாது வேறு எவரையும் எனது மனம் ஆதரித்து அன்பு செலுத்தாது என்று திருஞான சம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.

கையார் வெண்மழுவா கனல் போல் திரு மேனியனே

மையார் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே

செய்யார் செங்கயல் பாய் திருவான்மியூர் உறையும்

ஐயா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் (3.55.7) திருஞான சம்பந்தர் பெருமானை ஆனாய் என்று அழைத்து, அவரைத் தவிர்த்து தனது மனம் வேறு எவரையும் ஆதரிக்காது என்று கூறுகின்றார். ஆன்=பசு; ஆனான்=பசுவேறி, பசுவை, அதாவது இடத்தைத் தனது வாகனமாகக் கொண்டவன். பசுவேறி என்று கோளறு திருப்பதிகத்தின் பாடலில் திருஞான சம்பந்தர் சொல்வது நமது நினைவுக்கு வருகின்றது. வரை=மலை; தக்கனது சாபத்தின் விளைவாக வந்த அழிவிலிருந்து சந்திரனை காப்பாற்றியது, ஆலகால விடத்தின் தாக்கத்திலிருந்து தேவர்களை காத்தது, தரும தேவதையை இடப வாகனமாக ஏற்றுக் கொண்டது ஆகியவை பெருமானின் கருணைச் செயல்கள்; தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்தது வீரச் செயல்; ஆற்றலும் கருணையும் ஒருங்கே கொண்டுள்ள பெருமானைத் தானே நாம் நாட வேண்டும் என்ற அறிவுரை, இந்த செயல்கள் பற்றிய குறிப்பு மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. வானில் உலவும் சந்திரன் அடைக்கலமாக சேர்ந்த சடையை உடைய பெருமானே, மலை போன்று தன்னை எதிர்த்து வந்த மதம் கொண்ட காட்டு யானையின் தோலை உரித்து கொன்றவனே, உலகினை காக்கும் பொருட்டு ஆலகால விடத்தை உட்கொண்டு தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனே, தேன் நிறைந்த மலர்கள் கொண்ட சோலைகள் உடைய திருவான்மியூர் தலத்தினில் உறைபவனே, பசுவின் இனத்தைச் சார்ந்த இடபத்தைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவனே, உன்னை அல்லாது எனது மனம் வேறு எவரையும் நாடாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வானார் மாமதி சேர் சடையாய் வரை போல வரும்

கானார் ஆனையின் தோல் உரித்தாய் கறை மாமிடற்றாய்

தேனார் சோலைகள் சூழ் திருவான்மியூர் உறையும்

ஆனாய் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே

பட்டீச்சரம் தலத்து இறைவனைத் தொழுது புகழும் அடியார்கள், வினைகளின் பிணைப்பு முற்றிலும் நீங்கியவர்களாக வாழ்ந்து, தேன் ஒழுகும் நறுமணம் கமழும் மலர்கள் கொண்டு, பலவிதமான பாடல்கள் பாடி, மறவாது இறைவனை வழிபடும் தன்மையில் இருப்பார்கள் என்று கூறும் பாடலை (3.73.7) நாம் இங்கே காண்போம். உலகு=உலகத்தவர்; துறவி எனும் உள்ளம்= உலகப் பற்றைத் துறந்த உள்ளம் உடைய ஞானிகள்; கொடி வீதி=கொடிகள் அசையும் அழகான தெருக்கள்; தொகு=நிறையும், நிறைந்த; எழுதல்=துயில் எழுதல்; நறவ விரை=தேன் சிந்தும் நறுமணம் வீசும் மலர்கள்; அவர்=சிவபெருமான்; சிவபெருமானைப் போன்ற தோற்றத்தினை பெறுகின்ற அடியார்களின் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இதனை சாரூப நிலை என்று கூறுவார்கள்.பிறவித் துன்பமும், அந்த பிறவியால் அடையும் நோய்களும், மூப்புத் தன்மையும் இறைவனின் அருளால் ஒழிக்கப்பட்டு, தேவருலகத்தில் வாழ்வோரால் பாராட்டப்படும் தன்மை உடையவர்களாகிய, உலகப் பற்றைத் துறந்த உள்ளமுடைய ஞானிகள் வாழ்கின்றதும், அசைகின்ற கொடிகள் உடைய வீதிகள் கொண்டதுமாகிய பட்டீச்சரம் தலத்தில் உறைகின்ற இறைவனுடன் அழகிய பொருட்கள் அனைத்தும் வந்தடைகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பட்டீச்சரம் தலத்து திருக்கோயிலை, காலை தூக்கத்திலிருந்து எழுகின்ற நேரத்திலிருந்து நாள் முழுவதும் நினைத்துப் போற்றித் தொழுகின்ற அடியார்கள், வினைகள் முற்றிலும் நீங்கப் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் தேன் ஒழுகும் நறுமணம் நிறைந்த மலர்கள் மற்றும் தோத்திரங்கள், இசைப் பாடல்கள் கொண்டு பெருமானை வழிபடும் தன்மையை மறவாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் மறுமையில் முக்தி உலகம் சென்றடைந்து சாரூப பதவி பெற்று, சிவமாகும் தன்மை உடையவர்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர் உலகு பேணல் உறுவார்

துறவி எனும் உள்ளம் உடையர்கள் கொடி வீதி அழகாய தொகு சீர்

இறைவன் உறை பட்டீச்சரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய்

நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாதவரே

நமச்சிவாயப் பதிகத்தின் நான்காவது பாடலில் (4.11.4) அப்பர் பிரான், தான் எத்தகைய துன்பத்தில் ஆழ்ந்தாலும், தனது தலைவன் என்று சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் கருத மாட்டேன் என்று கூறுகின்றார். தருமசேனர் என்ற பெயருடன் சமணர்களுக்கு குருவாக இருந்து அவர்கள் சார்பில் புத்த மதத்தவருடன் வாதங்கள் செய்து வெற்றி கொண்ட தருமசேனரின் இழப்பு சமணர்களை வெகுவாக பாதித்தது. பல கொடுமைகளை அவருக்கு இழைத்து பயமூட்டினால் அவர் மறுபடியும் தங்களது மதத்தில் இணைந்து விடுவார் என்ற நப்பாசை அவர்களுக்கு இருந்தது. ஆனால் சைவ மதத்தைச் சார்ந்த நிலையில், சிவபெருமான் பால் எல்லையில்லாத அன்பு வைத்து, மிகவும் பிடிப்புடன் இருந்த நாவுக்கரசர், சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் தான் பட்ட கஷ்டங்களுக்காக வேண்டுவதில் விருப்பம் இல்லாதவராக இருந்தார். அந்த கொள்கைப் பிடிப்பு இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. அடுக்கல்=மலை. எந்த வகையான இடுக்கண் தன்னை எதிர் நோக்கினும். அந்த இடுக்கணிலிருந்து நீர் என்னை விடுவிக்க வேண்டும் என்று எவரையும் இறைஞ்சும் நிலையில் தான் இல்லை. அருளின் வயமாகிய சிவபெருமானின் நாமமாகிய நமச்சிவாய மந்திரம், மலையின் கீழ் மாட்டிக் கொண்டு எழமாட்டாத நிலையில் இருந்தாலும், அதனால் தனக்கு ஏற்படும் நடுக்கத்தை கெடுத்து காப்பாற்றும் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும்

விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம்

அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற

நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.63.5) அப்பர் பிரான், பெருமானைத் தவிர்த்து வேறெந்த நினைவும் அற்றவன் தான் என்று குறிப்பிடுகின்றார். பிஞ்ஞகன்=தலைக் கோலம் அணிந்தவன்: வாமதேவம் என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்று. நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோயிலின் மூலவர் ஐந்து முகங்களைக் கொண்டவராக விளங்குகின்றார். ஐந்து முகங்களாவன, ஈசானம் (கிழக்கு நோக்கியது: ஸ்படிக நிறம்), தத்புருடம் (உச்சியில் உள்ளது: பொன்னிறம்), அகோரம் (தெற்கு நோக்கியது: நீலநிறம்), வாமதேவம் (வடக்கு நோக்கியது: செம்மை நிறம்), சத்யோஜாதம் (மேற்கு நோக்கியது: வெண்மை நிறம்; சடையில் பிறையினைச் சூடிய கடவுளே, அழகிய தலைக் கோலம் கொண்டவனே, பார்வதி தேவியை ஒரு பாகத்தில் கொண்டவனே, வேதங்களில் வல்லவனே, அனைவர்க்கும் தலைவனே, வண்டுகள் சூழ்ந்த நறுமணம் மிக்க கொன்றை மலரை அணிந்தவனே, வாமதேவனே, ஒலிக்கும் கழல்களை காலில் அணிந்தவனே, தேவர்களால் போற்றப் படுபவனே, அழகிய அண்ணாமலையில் உறைபவனே, உன்னைத் தவிர யான் வேறு எவரையும், வேறு எந்த பொருளையும் நினைக்க மாட்டேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல். இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும் என் பொனே என்று பெருமானை அழைக்கும் அப்பர் பிரான், உன்னை அல்லால் ஏது நான் நினைவிலேனே என்று கூறுகின்றார்.

பிறையணி முடியினானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா

மறை வலா இறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா

அறை கழல் அமரர் ஏத்து அணி அணாமலை உளானே

இறைவனே உன்னை அல்லால் யாது நான் நினைவு இலேனே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (4.63.3) அப்பர் பிரான், பெருமானின் திருப்பாதங்களைத் தவிர்த்து தான், வேறெதையும் நாட மாட்டேன் என்று சொல்கின்றார். இந்த பாடலில் உலகுக்கு உருவமாகவும் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உயிராகவும் பெருமான் உள்ள தன்மை கூறப்பட்டுள்ளது. இதே நிலை அப்பர் பெருமானின் நின்ற திருத்தாண்டகத்திலும், வடமொழி வேதத்தில் காணப்படும் ஸ்ரீ ருத்திரத்திலும் சொல்லப் பட்டுள்ளது. மாடு=செல்வம்: ஓதிய= சொல்லப்பட்ட; உயிருள்ள ஆன்மாக்கள், உயிரற்ற சடப் பொருட்கள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை: அதே போல் பிறப்பு, பிறப்பில்லாத தன்மையாகிய வீடுபேறு ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. இவ்வாறு இருவேறு மாறுபட்ட பொருட்களாக இருப்பது இறைவன் சிவபெருமான் ஒருவனால் தான் முடிந்த காரியம். உயிருள்ள ஆன்மாக்கள் மற்றும் உயிரற்ற சடப் பொருட்களை கொண்டுள்ள உலகமாகவும், அந்த உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் மூல கன்ம வினையாகவும், வினையின் காரணமாக உயிர்கள் எடுக்கும் பிறப்பாகவும், அந்த பிறப்பிலிருந்து கிடைக்கும் விடுதலையாகிய வீடுபேறாகவும் நிற்கும் பெருமானே, பொன்னினையும் நீருடன் கலந்து சொரியும் அருவிகள் காணப்படும் அண்ணாமலையில் உறையும் இறைவனே, தேவர்கள் தலைவனே, உனது திருவடிகளில் பொருந்துவது தவிர வேறு செல்வம் ஏதும் இல்லாதவனாக நான் உள்ளேன். உனது திருவடியினும் உயர்ந்த செல்வமாக நான் எதனையும் கருத மாட்டேன் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம்

பெருவினை பிறப்பு வீடே நின்ற எம் பெருமான் மிக்க

அருவி பொன் சொரியும் அணாமலை உளாய் அண்டர் கோவே

மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடிலேனே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.81.8) அப்பர் பிரான், பெருமானே தன்னை விலக்கினாலும், தான் தொடர்ந்து பெருமானுக்கு, திருத்தொண்டு செய்வேன் என்று கூறுகின்றார். பொருட்களின் மீது உள்ள தூசினை நாம் துடைத்து அடியோடு நீக்குவது அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு துடைத்து வெளியேற்றினாலும் தான் இறைவனது திருவடியை விட்டு நீங்காது இருப்பேன் என்றும் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அழகிய சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே, எனக்கு மற்றவர்கள் இழைக்கக் கூடிய தீங்குகளிலிருந்து காப்பாற்றும் படைக்கலமாக உனது நாமத்தை எந்தன் நாவினில் கொண்டுள்ளேன். இந்த பிறப்பு மட்டுமல்லாது எந்த வகையான பிறப்பு எடுத்தாலும், இடையில் விட்டு நீங்காது உனக்கு அடிமைத் தொண்டினைச் செய்வேன். நீயே என்னை விலக்கினாலும் நான் உன்னை விட்டு பெயராமல், உன்னை மனத்தால் தொழுது உடலால் வணங்கி, எனது உடலில் திருநீறு அணிந்து நீ காக்கப்பட வேண்டிய பொருளாக உன்னிடம் அடைக்கலம் புகுகின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

படைக்கலமாக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்

இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்

துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறு அணிந்து உன்

அடைக்கலம் கண்டாய் அணித் தில்லைச் சிற்றம்பலத்து அரனே

இடைவிடாது உனது அன்பராக இருப்பேன் என்று சிவபெருமானிடம் கூறும் அப்பர் பிரான் வேறொரு செய்தியையும் இறைவனுக்குத் தெளிவுபடுத்துகின்றார். புழுவாய் பிறக்கினும் புண்ணியா உனதடி வழுவாது இருக்க வரம் வேண்டியவர் அல்லவா. மறுபிறப்பு என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட சைவராகிய அவருக்கு தனது மறுபிறப்பு எந்த வகையான பிறப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகின்றது. இந்த பிறப்பினில் நாம் செய்த வினைகளுக்கு ஈடாக உள்ள உடலுடன் அடுத்த பிறவியில் நமது உயிர் இறைவனால் பொருத்தப் படுகின்றது. தாவரம், நீரில் வாழ்வன, ஊர்வன, நடப்பன, பறப்பன, மனிதர், தேவர் என்ற ஏழுவகையான பிறப்புகளில் எதுவாக இருந்தாலும் தான் இறைவனுக்கு அடிமையாக இருப்பேன் என்று உறுதியாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.90.4) அப்பர் பிரான் நாளும் மறவாது தன்னைத் தொழும் அடியார்களின் பிறவியை அறுக்கும் குணம் உடையவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். பக்தன் என்று சொல்லும் போது, இறைவனிடத்தில் பக்தி உடையவன் என்று பொருளை மட்டும் குறிப்பிடுகின்றது. பத்தர் என்று சொல்லும் போது பத்து குணங்களை உடையவர்கள் என்பதையும் குறிக்கும் நேர்த்தியை நாம் உணரலாம். பத்து என்ற சொல்லினை பற்று என்ற சொல்லின் திரிபாகக் கொண்டு, பெருமானின் திருவடிப் பற்று கொண்ட அடியார்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அடியார்களுக்கு இருக்க வேண்டிய குணங்களை பத்து புற குணங்கள் என்றும் பத்து அக குணங்கள் என்றும் சான்றோர்கள் வரைப்படுத்தி உள்ளார்கள். பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல்,சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும்.

பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான்

முத்தர் கண் முன்னம் பணி செய்து பாரிடம் முன் உயர்ந்தான்

கொத்தன கொன்றை மணம் கமழும் திருவேதிகுடி

அத்தனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களையும் (5.2) அப்பர் பிரான், பெருமானை மறந்து வாழ்வினில் உய்வினை அடைய மாட்டேன் என்று கூறுகின்றார். அந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. பனைக்கை=பனை மரம் போன்று அடி பெருத்து நுனி சிறுத்து காணப்படும் துதிக்கை; அனைத்து வேடமாம்=உலகமே தனது உருவமாக உடையவன்: பொதுவாக யானை மிகவும் சாதுவான பிராணி. ஆனால் மதம் பிடித்த யானை, மிகவும் ஆவேசமாக செயல்படுவதால் அதனை எதிர்கொள்வது மிகவும் கடினம். மதம் பிடித்த யானைக்கு மூன்று இடங்களிலிருந்து (மண்டையோடு, கண்களுக்கும் காதுகளுக்கும் இடையே உள்ள இடம், மற்றும் ஆண்குறி) மத நீர் ஒழுகும் என்பதால் மும்மத வேழம் என்று இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது, கயாசுரன் என்ற யானையின் தோலை உரித்து, அதனை போர்வையாக போர்த்துக் கொண்டது, எட்டு வகையான வீரச் செயல்களில் ஒன்றாகும். பரந்த உலகாகவும், அந்த உலகில் உள்ள அனைத்துப் பொருட்களாகவும் சிவபெருமான் இருக்கும் தன்மை, அனைத்தும் வேடமாம் என்ற சொற்றொடர் மூலம் குறிக்கப் படுகின்றது. அனைத்தும் வேடமாம் என்ற தொடருக்கு, எவரெவர் எந்தெந்த கோலத்தினை விரும்புகின்றாரோ அந்த கோலத்தில் காட்சி அளிப்பவன் சிவபெருமான் என்றும் விளக்கம் சிலர் கூறுகின்றார்கள். மதம் பிடித்தமையால் மிகுந்த ஆவேசத்துடன் தாக்க வந்த யானையின், பனை மரத்தினைப் போன்று பருத்து வலிமையுடன் காணப்படும் துதிக்கையை கொண்டிருந்த யானையின் தோலினை உரித்துக் கொன்றவன் சிவபெருமான். தன்னை நினைப்பவர் மனத்தினைக் கோயிலாகக் கொண்டவன் சிவபெருமான்: பரந்த உலகமாகவும், அந்த உலகில் உள்ள அனைத்துப் பொருட்களாகவும் இருக்கும் சிவபெருமானை, அம்பலத்தில் கூத்தாடும் பெருமானை, நான் தினையளவு சிறிய நேரம் கூட மறக்காமல் எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருப்பேன்; தினைப் பொழுது சிவபெருமானை மறந்தாலும் நான் வாழ்வில் உய்வினை அடைய மாட்டேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்

நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்

அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனை

தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ

இதே பதிகத்தின் அடுத்த பாடலில் (5.2.2) கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான் தன்னை கொடியேன் என்று கூறிக் கொள்கின்றார். வினைத் தொகுதிகளின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு உயிரும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. அத்தகைய பிறவிகளில், மனிதப் பிறவியில் தான், இறைவனை உணர்ந்து, அவனை வழிபட்டு உய்வதற்கான வாய்ப்பு, அவ்வாறு அறிவதற்கு உதவும் கருவி கரணங்கள் கொடுக்கப்பட்டு, அளிக்கப் படுகின்றது. அத்தகைய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, இறைவனை நினையாத மனிதர்களை கொடியவர்கள் என்று உணர்த்தும் விதமாக, இறைவனை நினைக்காத தன்னை கொடியேன் என்று சுட்டிக் காட்டி அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தன்னிடம் இல்லாத குறையாயினும், அந்த குறை தன்னிடம் உள்ளது போன்று தன்னைச் சுட்டிக் காட்டி, அடுத்தவரின் குறைகளை உணர்த்துவது அப்பர் பிரானின் பாணி. தீர்த்தன்=தூய்மை உடையவன்; மூர்த்தி=தலைவன்; தூயவனாக இருப்பவனும், சிவலோகத்தின் நாயகனும், அவனது அன்பான குணத்தை உணர்த்தும் வகையில் சிவன் என்று மங்கலமாக அழைக்கப் படுபவனும், தலைவனும், அனைத்துப் பொருட்களும் மற்றும் அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவனும், பார்த்தனுக்கு பாசுபதம் அளித்து அருள் செய்தவனும், சிற்றம்பலத்தில் நடமாடுபவனும் ஆகிய சிவபெருமானை மறந்தால் கொடியவனாகிய நான் வாழ்வில் உய்வினை அடைய மாட்டேன். எனவே எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை

மூர்த்தியை முதலாய ஒருவனைப்

பார்த்தனுக்கு அருள் செய்த சிற்றம்பலக்

கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ

இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் (5.2.3) எள்ளத்தனை குறைந்த நேரமும் பெருமானை மறக்க மாட்டேன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எட்டனைப் பொழுது=மிகவும் சிறிய பொழுது. எள், தினை போன்ற தானியங்கள் அளவில் மிகவும் சிறியவை. மிகவும் சிறிய நேரம், வினாடிக்கும் குறைந்த நேரம் என்பதை உணர்த்தும் பொருட்டு தினைத்தனைப் பொழுதும், எட்டனைப் பொழுதும் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தில் கூறுகின்றார். ச்ரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு சிட்டர் ஆகும். தனது கையில் பாம்பினைச் சுற்றிக் கட்டிக் கொண்டு இருப்பவனும், கையில் கபாலத்தையும் மான் கன்றினையும் ஏந்தியவனும், முற்றூழிக் காலத்தில் மிகவும் விருப்பத்துடன், சுடுகாட்டில் ஊழித்தீயின் இடையே கூத்து ஆடுபவனும், ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள் வாழும் தில்லை நகரத்தில் உள்ள அம்பலத்தில் கூத்தாடுபவனும் ஆகிய சிவபெருமானை எள் போன்று சிறிய நேரத்தில் மறந்தாலும் நான் வாழ்வில் உய்வினை அடைய மாட்டேன். எனவே எப்பொழுதும் நான் அவரை நினைத்தவாறே இருப்பேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி

இட்டமா இடுகாட்டு எரி ஆடுவான்

சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை

எட்டனைப் பொழுதும் மறந்து உய்வனோ

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்கள் (5.4) அனைத்திலும் அப்பர் பிரான், பெருமானை மறந்து வாழ்வினில் உய்வினை அடைய மாட்டேன் என்று கூறுகின்றார். சிட்டன்=சிரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்; பெரியவன், உயர்ந்தவன்; வானவர் சிட்டன்=தேவர்களால் உயர்ந்தவன் என்று போற்றப்படுபவன்; இட்டம்=விருப்பம்; இட்டம் உடையவன்=இட்டன்; அட்டன்=தீயினை பயன்படுத்தி பொருளின் தன்மையை மாற்றுபவன். தீக்கடவுள் நுனியாக அமைந்த அம்பினை பயன்படுத்தி, திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றினையும் எரித்து சாம்பலாக பெருமான் மாற்றிய தன்மை அட்டன் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. அரிசி பருப்பு மற்றும் காய்கறிகளை வேகவைத்து அவற்றின் தன்மையை மாற்றுவதால், அடுதல் என்று சமையல் தொழிலுக்கு பெயர் வந்தது. வட்டம்=சிறிய கிழிந்த உடை; வட்டன்=சிறியதாக உள்ள உடையை அணிந்தவன்;. பெரிய துணியிலிருந்து கிழிக்கப் பட்டதால் வட்ட என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. கிழிந்த கோவணம் என்று பொருள் கொள்வது தவறு. பெரிய துணியிலிருந்து கிழிக்கப்பட்ட கோவணம் என்று பொருள் கொள்ள வேண்டும். வட்டன் என்பதற்கு அன்பு வட்டத்தில் இருப்பவன் என்று பொருள் கொண்டு, பெருமானை அன்புடன் வழிபடும் அடியார்களின் உள்ளத்தில் இருப்பவன் என்று பொருள் கூறுவதும் பொருத்தமே. பத்தி வலையில் படுவன் காண்க என்பது தானே திருவாசகத் தொடர்.

வட்டனைம் மதி சூடியை வானவர்

சிட்டனைத் திருவண்ணா மலையனை

இட்டனை இகழ்ந்தார் புரம் மூன்றையும்

அட்டனை அடியேன் மறந்து உய்வனோ

இந்த பதிகத்தின் பல பாடல்களில் அண்ணாமலையான் என்று அப்பர் பிரான் பெருமானை அழைக்கின்றார். தங்களின் முன்னே எழுந்த தழற் பிழம்பின் அடிமுடி காண முடியாத பிரமனும் திருமாலும், தழற் பிழம்பாக தோன்றிய பெருமானின் அடியையும் முடியையும் அகந்தையால் காண முயற்சி செய்த தங்களது தவறினை உணர்ந்து, பெருமானை இறைஞ்ச, பெருமானும் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்கி தனது திருவுருவத்தை அவர்களுக்கு காட்டினார் என்பது தலபுராணம். அவர்கள் இருவரும், இறைவன் இந்த தலத்தில் நிலையாக இருந்து அனைவர்க்கும் அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்டியதன் பேரில், பெருமான் மலை வடிவமாக இங்கே தங்கியதாக கூறப்படுகின்றது எனவே தான் மலையையே சிவலிங்கமாக கருதி, கிரிவலம் மேற்கொள்ளப் படுகின்றது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும் கலி யுகத்தில் கல்மலையாகவும் இருப்பதாக கூறுவார்கள். அப்பர் பெருமானும் மலையை பெருமானாக கருதி, அண்ணாமலையன் என்று கூறுகின்றார். சிறியதும், பெரிய துணியிலிருந்து கிழிக்கப் பட்டதும் ஆகிய கோவணத்தை உடையவனும், பிறைச் சந்திரனை அணிந்தவனும், தேவர்களால் பெரியவன் என்றும் உயர்ந்தவன் என்றும் போற்றப் படுபவனும், அண்ணாமலையாக இருப்பவனும், தனது அடியார்களுக்கு முக்தி நிலை அளிப்பதில் பெருவிருப்பம் கொண்டிருப்பவனும், தன்னை இகழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள் மூவரையும் அவர்கள் தங்கியிருந்த கோட்டைகளுடன், ஒரே அம்பினை எய்து எரித்தவனும் ஆகிய பெருமானை மறந்தால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது. எனவே அடியேன் எப்போதும் அவரை மறவாமல் நினைத்து, வாழ்வினில் உய்வினை அடைவேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல். ஆன் என்ற சொல் பசுவினை குறிக்கும். ஆனன் என்று பசுவினைத் தனது வாகனமாக கொண்டவன் என்று கூறுகின்றார். அதாவது பசுவின் இனத்தைச் சார்ந்த எருதினை வாகனமாகக் கொண்டவன் என்று பொருள் கொள்ள வேண்டும். பசுவேறி என்று சொல்வது போல ஆனன் என்று சொல்கின்றார். இந்த பதிகத்தின் இரண்டாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. வானன்=ஆகாயமாக உள்ளவன்; பஞ்ச பூதங்களில் நெருப்புக்கு உரிய தலமாக திகழும் தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரானுக்கு, இறைவன் ஆகாயமாக இருப்பது நினைவுக்கு வந்தது போலும். மைந்தன்=வல்லமை வாய்ந்தவன்; ஏனன்=பன்றி வடிவினன்; ஏனன் என்பதற்கு பன்றிக் கொம்பினை அணிந்தவன் என்று பலரும் விளக்கம் கூறுகின்றனர். கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் என்று பல திருமுறை பாடல்கள் கூறினாலும், இங்கே அந்த பொருள் பொருத்தமாக தோன்றவில்லை. பன்றிக் கொம்பினன் என்று கூறியிருந்தால் அந்த பொருள் பொருத்தமாக இருக்கும். எனவே பன்றி வடிவினன் என்று, பெருமான் பன்றியாக தோன்றி பன்றிக் குட்டிகளுக்குத் தாயாக மாறி பால் கொடுத்த திருவிளையாடல் இங்கே நினைவூட்டப் படுகின்றது என்றே கூறலாம்.

குருவித்துறை என்ற ஊரினில் ஒரு சமயத்தில் சகலன் சகலை என்ற வேளாள குலத்து தம்பதியர் வாழ்ந்தனர். அவர்களுக்கு பன்னிரண்டு பிள்ளைகள் இருந்தனர். செல்வந்தர்களாக இருந்த காரணத்தால், தவறு செய்த போதிலும் பிள்ளைகளை கடிந்து கொள்ளாமல் அவர்கள் வாழ்ந்ததால், பிள்ளைகள் நல்லது தீயது தெரியாமல் வளர்ந்தனர். சிறு வயதினில் தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள் காட்டிற்கு சென்று வேட்டையாடும் சமயத்தில், ஆங்கே தவம் செய்து கொண்டிருந்த வியாழ பகவானை கண்டனர். அவர் மீது கற்களை வீசியெறிந்து அவரை வருத்தினார்கள். அவரது தவத்தையும் கலைத்தனர். தனது தவம் கலைந்ததால் கோபம் கொண்ட வியாழன், பன்னிரண்டு சகோதரர்களையும் பன்றிக் குட்டிகளாக பிறந்து சிறு வயதில் தாயினையும் தந்தையையும் இழந்து வருந்துமாறு சாபம் கொடுத்தார். சாபம் பெற்ற பின்னர், தாங்கள் செய்த தவறினை உணர்ந்த பன்னிருவரும் முனிவரைப் பணிந்து தங்களது சாபம் நீங்கும் வழியினை காட்டுமாறு வேண்டினர். முனிவரும் அவர்களை இப்பிறவியின் எஞ்சிய நாட்களில் பெருமானின் திருநாமத்தை உரைத்து அவனை வழிபடுமாறு கூறினார். பன்னிருவரும் அவ்வாறே செய்தனர். அடுத்த பிறவியில் ஒரு காட்டுப் பன்றியின் வயிற்றில் பிறந்தனர். பன்னிரு பன்றிக் குட்டிகளும் மிகவும் சிறிய குட்டிகளாக இருந்த போதே, வேட்டையாட வந்த பாண்டிய மன்னனின் அம்புக்கு இரையாகி, தாய்ப் பன்றியும் தந்தைப் பன்றியும் மாண்டன. தாயை இழந்த குட்டிகள் பசியால் தவித்து வாடிய போது, பெருமான் ஒரு தாய்ப் பன்றியின் வடிவில் தோன்றி, பன்றிக் குட்டிகளுக்கு பால் கொடுத்தார். இறைவன் அளித்த தாய்ப்பால் அவர்களது பசியை மட்டுமா நீக்கியது. அந்த குட்டிகள் ஞானம், நற்குணங்கள், வலிமை ஆகியவை பெற உதவியது; மேலும் அந்த பன்றிகள் மானிட வடிவம் பெற்று, தாங்கள் பெற்றிருந்த ஞானத்தால், பாண்டிய மன்னனின் மந்திரிகளாகவும் பணி புரிந்து பின்னர் சிவபதமும் அடையவும் பெருமான் கொடுத்த பால் உதவியது அல்லவா.

வானனைம் மதி சூடிய மைந்தனைத்

தேனனைத் திருவண்ணா மலையனை

ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த

ஆனனை அடியேன் மறந்து உய்வனோ

மற்ற பூதங்களுக்கு ஆதாரமாக திகழும் ஆகாயமாக இருப்பவனும், வானில் உலவும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனும், வல்லமை வாய்ந்தவனும், அடியார்களுக்கு தேன் போன்று இனித்து பல நன்மைகளை செய்பவனும், அண்ணாமலையாக இருப்பவனும், பன்றி வடிவம் எடுத்து தாயை இழந்து தவித்த பன்றிக் குட்டிகளுக்கு, அவற்றின் தாயாகத் தோன்றி, அருள் புரிந்தவனும், தன்னை இகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களையும் அவர்கள் வாழ்ந்து வந்த கோட்டைகளையும் ஒரே அம்பினால் வீழ்த்தியவனும், எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவனும், ஆகிய பெருமானை மறந்தால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது. எனவே அடியேன் எப்போதும் அவரை மறவாமல் நினைத்து, வாழ்வினில் உய்வினை அடைவேன் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலிலும் அப்பர் பிரான் (5.4.3) பெருமானை மறந்தால் அடியேன் வாழ்வினில் உய்வினை அடைய மாட்டேன் என்று கூறுகின்றார். மத்தன்=ஊமத்தை மலர் அணிந்தவன்; சித்தன்=அடியார்களின் சித்தத்தை கோயிலாகக் கொண்டவன்; முத்தன்= இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன்; இந்த பண்பு இறைவனின் எட்டு குணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. முனிந்தார்=சிவநெறியை ஒட்டி வாழ்வதை வெறுத்த திரிபுரத்து அரக்கர்கள்; சிவநெறியை ஒட்டி வாழும் அடியார்களுக்கே அருள் புரிபவன் பெருமான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. ஊமத்தை மலரை விரும்பி அணிபவனும், தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்டவனும், அடியார்களின் சிந்தனையைத் தான் உறையும் திருக்கோயிலாகக் கொண்டவனும், திருவண்ணாமலையாக இருப்பவனும், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனும், சிவநெறியை வெறுத்து விலகிய திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த வந்த மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் அழித்தவனும், உயிரினங்கள் அனைத்திற்கும் தந்தையாக இருந்து காப்பவனும் ஆகிய பெருமானை மறந்தால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது. எனவே அடியேன் எப்போதும் அவரை மறவாமல் நினைத்து, வாழ்வினில் உய்வினை அடைவேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மத்தனை மதயானை உரித்த எம்

சித்தனைத் திருவண்ணா மலையனை

முத்தனை முனிந்தார் புரம் மூன்று எய்த

அத்தனை அடியேன் மறந்து உய்வனோ

எப்போதும் இறைவனை மறவாது புகழ்ந்து வணங்கினால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (5.6.1). அப்பர் பிரான் கூறுகின்றார். இறையும்=சிறிது நேரமும்; அப்போதும்=உடலினை விட்டு உயிர் பிரியும் அந்த நேரத்திலும்; ஏன் இறைவனை எப்போதும் மறவாது இருக்க வேண்டும் என்பதற்கு அப்பர் பிரான் இந்த பாடலில் காரணம் கூறுகின்றார். மனித மனம் பழக்கத்திற்கு அடிமைப் பட்டது. எனவே தான் எப்போதும் நாம் மறவாமல் இறைவனை நினைத்துக் கொண்டு இருந்தால் தான், இறக்கும் தருவாயிலும் நாம் அவனை நினைக்க முடியும். நாம் இறக்கும் தருவாயில், நமது உயிரினை தொடர்ந்து வரும் துன்பங்களிலிருந்து காக்க வல்லவன் இறைவன் ஒருவன் தான் என்பதால், நாம் அவனது துணை நாட வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே தான் எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டு இருக்குமாறு அப்பர் பிரான் இங்கே அறிவுரை கூறுகின்றார். சிகப்பு என்ற சொல் செப்பு என எதுகை கருதி மருவியது. நாம் இறக்கும் தருணத்தில், அஞ்சேல் என்று அபயம் கொடுக்கும் பெருமான் என்று கூறுகின்றார். அதாவது, நரக வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றி, சிவலோகம் அழைத்துச் சென்று அருள் புரிபவர் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

எப்போதும் இறையும் மறவாது நீர்

முப்போதும் பிரமன் தொழ நின்றவன்

செப்போதும் பொனின் மேனிச் சிவனவன்

அப்போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரனே

எப்போதும் என்பதற்கு நாம் இன்பம் அனுபவிக்கும் போதும் துன்பம் அனுபவிக்கும் போதும் என்ற விளக்கமும் பொருத்தும். இன்ப துன்பங்களை நாம் வாழ்வினில் நுகரும் நிலை நமது முந்தைய வினைகளின் பயனாக ஏற்படுகின்றது. ஆனால் இதனை உணராது பலரும், துன்பம் அடையுங்கால், இறைவன் அருள் புரியவில்லையே, இறைவனுக்கு கண் இல்லையா என்று அங்கலாய்ப்பதை நாம் காண்கின்றோம். இன்னும் சிலரோ ஒரு படி மேலே சென்று இறைவனை திட்டவும் செய்கின்றனர். இன்பத்தை நுகரும் போதோ, நமது திறமையால் வந்த இன்பம் என்று கருதிக் கொண்டு, அந்த மமதையில் இறைவனை நினைக்காமல் இருக்கின்றோம். இவ்வாறு இராமல், எப்போதும் இன்பத்தை நுகரும்போதும், துன்பத்தை அனுபவிக்கும் போதும் இறைவனை நினைக்க வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். தான் செய்யாத ஒன்றினை அறிவுரையாக அப்பர் பிரான் வழங்குவதில்லை. சமணர்களின் கொடுமைகளால் துன்பங்கள் நேர்ந்த போதும், எந்த நிலையிலும் இறைவனை ஏத்துவேன் என்று சொல்லியவாறே, அந்த சோதனைகளை எதிர்கொண்டவர் அப்பர் பிரான். கொடிய சூழ்ச்சிகளிலிருந்து இறைவன் அருளால் தப்பிய போதும், இறைவனையே நினைத்து பதிகம் பாடியவர் அப்பர் பிரான். கொடிய சூலை நோயால் வருந்திய போதும், என்னை அடிமையாக ஏற்றுக் கொண்ட பெருமானே உன்னை இனிமேல் இரவும் பகலும் பிரியாது வணங்குவேன் என்றும், மறவாமல் இசை பாடல்கள் பாடுவேன் என்றும் நலம் தீங்கிலும் உன்னை மறவேன் என்றும் வரும் நாட்களில் தான் நடந்து கொள்ளும் விதத்தினை தனது பதிகம் (4.1.6) மூலம் உணர்த்தியவர் அப்பர் பிரான். தான் செய்த தவற்றினை உணர்ந்து வருந்தி, இறைவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டும் அப்பர் பிரான், தான் தனது வாழ்க்கையை இனி எவ்வாறு நடத்துவேன் என்பதையும் இங்கே விளக்குகின்றார். துன்பம் ஏற்பட்டபோது இறைவனின் அருளை வேண்டுவதும் அந்த துன்பம் துடைக்கப்பட்ட பின்னர், இறைவனை மறப்பதும் மனித இயல்பு. அந்த மனித இயல்பிற்கு மாறாக, தான் நலமாக இருக்கும் தருணத்திலும், இடர்ப்படும் நேரங்களிலும் உன்னையே நினைத்து இருப்பேன் என்று இறைவனிடம் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இதற்கு ஏற்றாற்போல் தனக்கு பல இடர்பாடுகளை சமணர்கள் செய்த போதும் கலங்காமல் சிவபெருமானையே நினைந்து இருந்தார். சமணர்கள் செய்த பல சூழ்ச்சிகளில் இருந்து சிவபெருமான் அருளால் தப்பிய அப்பர் பிரான் தனது எஞ்சிய வாழ்நாளில், பல தலங்கள் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி நாடெங்கும் சைவ சமய உணர்வினை பரப்பி, அதன் மறுமலர்ச்சிக்கு அடிகோலினார். படைக்கும் கடவுள் என்று அழைக்கப்படும் பிரமனால் மூன்று பொழுதிலும் தொழப்படுபவன் சிவபெருமான்; சிவந்த மேனியை உடைய சிவபெருமான் ஒருவன் தான் நாம் இறக்கும் தருவாயில் இருக்கும் போதும், அஞ்ச வேண்டாம் என்று நமக்கு தைரியம் சொல்லி நம்மை காப்பாற்ற வல்லவன். அவரே ஆரூர் நகரத்தில் குடிகொண்டுள்ள இறைவன் ஆவார்.. எனவே மரணம் நமக்கு எப்போதும் நேரும் என்பதை யாரும் அறிய முடியாத .நீங்கள் அனைவரும் ஒரு சிறுபொழுதும் ஆரூரானை மறவாமால் இருப்பீர்களாக என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் (5.90) ஒரு பாடலில், அப்பர் பிரான், சிவபெருமானுக்கு மீளாத அடிமையாக இருந்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அடையாத மனிதர்களை, வீணான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கூறுகின்றார். அறிவு வளர்ச்சி பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து பொருள் ஈட்டும் திறம் பெற்று, தனது காலில் நிற்கும் தன்மையை அடைந்த மனிதனை நாம் ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். அந்த இளைஞன் தனது வாழ்க்கையினை, பிறரைச் சாராமல் வாழும் நிலையை அடைந்து விட்டான், என்பதை உணர்த்தும் பொருட்டு ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். பொருள் ஈட்டுவது உடலின் தேவைகளை நிறைவேற்ற உதவும். ஆனால் உயிரின் தேவையை, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு என்றும் அழியாத முக்தி உலகினை அடைந்து இறைவனுடன் சென்று இணைந்து இன்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்பது தானே உண்மையான விருப்பம். உயிரின் இத்தகைய விருப்பத்தை நிறைவேற முயற்சிகள் மேற்கொள்ளும் மனிதர்களையே அப்பர் பிரான் ஆளாக கருதுகின்றார். அதாவது பெருமானது அடியார்களைத் தான், அவர் ஆளானாராக கருதுகின்றார். ஏனென்றால் அவர்கள் தானே, நிலையான இன்பம் அளிக்கக் கூடிய முக்தி நிலைக்கு செல்வதற்கான வழியில் அடியெடுத்து வைத்தவர்கள். அவ்வாறு ஆளாகாத ஒருவன், சிவபெருமானின் அடியார் ஒருவரை அணுகி, ஆளாகும் நிலையினை அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்றும் இந்த பாடலில் நமக்கு அறிவுரை கூறுகின்றார்.

ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளாத சுரையோ தொழும்பர் செவி

வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

காசனைக் கடலை என்று தொடங்கும் பொது பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் (5.93) அப்பர் பிரான் பெருமானை தான் மறக்க மாட்டேன் என்று சொல்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. காசு என்ற சொல்லுக்கு கறை என்றும் பொற்காசு என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளப்பட்டு விளக்கம் அளிக்கப் படுகின்றது. நஞ்சினைத் தேக்கியதால் விடத்தின் கறை தனது கழுத்தினில் உடையவன் என்றும் பொற்காசு போன்று திருமேனி நிறத்தினை உடையவன் என்றும் உள்ள இந்த இரண்டு விளக்கங்களும் பொருத்தமாக உள்ளன. தேசு=ஒளி வீசும் திருமேனி உடையவன்; தெண்ணர்=தெளிந்த அறிவில்லாதவர்கள்; தெளிந்த அறிவில்லாதவர்கள் இறைவனை புகழார் என்று இந்த பாடலின் இரண்டாவது அடியில் கூறும் அப்பர் பிரானுக்கு, பெருமானைப் புகழாமலும் பெருமானை இகழ்ந்தும் வாழ்ந்து வந்த சமணர்களின் நிலையும் அவர்களுடன் பல வருடங்கள் சேர்ந்து இருந்ததால் தனக்கு ஏற்பட்ட களங்கமும் நினைவுக்கு வந்தது போலும். தனது களங்கத்தை பொருட்படுத்தாது, தனது குற்றத்தைக் களைந்து, தன்னை ஆட்கொண்ட இறைவன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தனது குற்றம் மட்டுமன்றி, அனைத்து அடியார்களின் குற்றத்தையும் நீக்கி ஆட்கொள்ளும் வல்லமை படைத்தவர் இறைவன் என்று அவனின் கருணைத் திறத்தினை உணர்த்துகின்றார். தேவர்களை காக்கும் பொருட்டு விடத்தினை உட்கொண்டவன் பெருமான்: அந்த விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் ஏற்பட்ட கறையினை உடையவனும், தனது கையினில் அனல் ஏந்தி நடனம் ஆடுபவனும், ஒளிக்கதிர்களை வீசி மிளிரும் மணி போன்று விளங்கும் திருமேனியை உடையவனும் ஆகிய பெருமானை அறிவிலாத சில மூடர்கள், தங்களது தெளிவின்மையால் அவரை புகழாமல் இருக்கின்றனர். தன்னை வழிபடும் அடியார்களின் குற்றத்தைக் களைந்து ஆட்கொள்ளும் வல்லமை படைத்த ஈசனை இனி நான் எவ்வாறு மறப்பேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காசனைக் கனலைக் கதிர் மாமணித்

தேசனைப் புகழார் சில தெண்ணர்கள்

மாசினைக் கழித்து ஆட்கொள வல்ல எம்

ஈசனை இனி யான் மறக்கிற்பனே

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (5.93.2) அப்பர் பிரான், தனது உள்ளம் புகுந்த பெருமானை தன்னால் மறக்க இயலாது என்று கூறுகின்றார். புந்தி=அறிவு; புராணன்=மிகவும் பழமையானவன்; சந்தி என்பது இங்கே முன்னிரவும் பின்னிரவும் சந்திக்கின்ற நள்ளிரவை குறிப்பிடுகின்றது. நள்ளிரவு என்பது இங்கே இருளில் மூழ்கிக் கிடக்கும் ஊழிக் காலத்தை குறிக்கின்றது. முற்றிலும் இருள் சூழ்ந்த நிலையில் நடனமாடுவதற்கு தனி திறமை வேண்டும் என்பதால், அத்தகைய திறமை உடைய பெருமானை சதுரன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இறைவன் தானே வந்து தனது உள்ளத்தில் புகுந்து ஆட்கொண்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார். அடியேனது அறிவுக்கு தூண்டுகோலாக அமையும் விளக்கு போன்றவரும், உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அனைத்து பொருட்களுக்கும் பழமையானவனும், பிரளய காலத்து இருளிலிலும் திறமையாக நடமாட வல்ல திறமையை உடையவனும், அந்திச் செவ்வானத்து நிறத்தினில் சிவந்த திருமேனியை உடையவனும், தீப்பிழம்பினை தனது கையில் ஏந்தி நடமாடும் தலைவனும் ஆகிய இறைவன், தானே முன் வந்து எனது உள்ளத்தில் புகுந்து என்னை ஆட்கொண்டான். அவனை எவ்வாறு இந்நாள் மறக்க இயலும் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

புந்திக்கு விளக்காய புராணனைச்

சந்திக் கண் நடமாடும் சதுரனை

அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை

வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே

ஈசன் என்றால் தலைவன் என்று பொருள். இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் (5.93.3) அப்பர் பிரான் ஈசனைத் தன்னால் மறக்க இயலாது என்று கூறுகின்றார். அரற்றுதல்=மீண்டும்மீண்டும் உரத்த குரலில் வாய் விட்டு அலறுதல்; ஈசன்ஈசன் என்று எனது இறைவனை எப்போதும் தியானித்து, அவனின் திருநாமத்தை என்றும் அரற்றியவாறு அடியேன் வாழ்கின்றேன்; நான் இவ்வாறு அலறுவதன் பயனாக ஈசன் என் மனதிலிருந்து எப்போதும் பிரியாதவனாக உறைகின்றான். அந்த ஈசனை எனது மனதினில் தாங்கும் அடியேன் எவ்வாறு ஈசன் தன்னை மறக்க இயலும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஈசன்ஈசன் என்று என்றும் அரற்றுவன்

ஈசன் தான் என் மனத்தில் பிரிவிலன்

ஈசன் தன்னையும் என் மனத்துக் கொண்டு

ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே

இந்த பதிகத்தின் நான்காவது பாடலிலும் பெருமானை ஈசன் என்று அழைக்கும் (5.93.4) அப்பர் பிரான் பெருமானை தன்னால் மறக்க இயலாது என்று கூறுகின்றார். ஏற்ற=இருக்கப் பெற்ற; இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் பெருமான் தனது மனதினில் பிரிவின்றி எப்போதும் இருப்பதாக கூறிய அப்பர் பிரான் இந்த பாடலில், இறைவனின் சேவடிகள் தனது மனதினில் இருக்கும் நிலையினை குறிப்பிடுகின்றார். பெருமானின் திருவடிகள் எனது மனதினில் நிலைபெற்று இருப்பதால், பெருமான் பால் அடியேன் வைத்திருந்த அன்பினை அவன் உணர்ந்து கொண்டான் என்பதை நானும் அறிந்து கொண்டேன். எனது மனதினில் இடம் பெற்ற பெருமானின் திருவடிகளை போற்றி புகழும் அடியேன், இனிமேல் பெருமானை மறக்க இயலுமோ என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்

ஈசன் சேவடி ஏற்றப் பெறுதலால்

ஈசன் சேவடி ஏத்தப் பெற்றேன் இனி

ஈசன் தன்னையும் யான் மறக்கிற்பனே

பொன்னுள்ளத் திரள் என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (5.96.9), அப்பர் பிரான், பெருமான் மீது தான் வைத்துள்ள பற்றினைத் தவிர்த்து வேறு எந்த பற்றும் இல்லாதவன் தான் என்று கூறுகின்றார். எப்பற்றி=எய்ப்பு அற்று, நம்மை கவலையால் வருத்தி உடல் இளைக்க வைக்கும் துன்பம் ஏதுமின்றி; பிரமனும் திருமாலும் இறைவனைக் காணும் பேறு பெற்றது, பன்றியாய் கீழே சென்றும் அன்னமாய் மேலே பறந்து சென்றும் பல துன்பங்களை அடைந்து தங்களது முயற்சியில் தோல்வியுற்று, இறைவனை இறைஞ்சி வேண்டிய பின்னர் தானே. தங்களது வலிமையின் பால் பற்று கொண்டு பிரமனும் திருமாலும் உன்னை தேட முயற்சி செய்த போது, பல துன்பங்கள் அடைந்த பின்னரும் உன்னை அவர்களால் காண முடியவில்லை. உனது திருவருள் ஒன்றினையே பற்றுக்கோடாக கொண்டு வாழும், நாயினும் கீழான அடியேனுக்கு, பெருமானே, வேறு எந்த பொருள் மீது பற்று இல்லை என்று அப்பர் பிரான் இறைவனை நோக்கி சொல்வதாக அமைந்த பாடல்.

கைப் பற்றித் திருமால் பிரமன் உனை

எப்பற்று அறிதற்கு அரியாய் அருள்

அப்பற்று அல்லது மற்று அடி நாயினேன்

எப்பற்றும் இலேன் எந்தை பிரானிரே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் (5.96.6) அப்பர் பிரான், பெருமானின் மீது தான் வைத்துள்ள அன்பினைத் தவிர வேறெந்த பொருளின் மீதும் தான் அன்பு வைக்கவில்லை என்றும் தனக்கு வேறு எந்த பொருளும் மயக்கத்தை ஏற்படுத்தாது என்றும் உறுதியுடன் கூறுகின்றார். மால் என்ற சொல்லுக்கு ஆர்வம் என்ற பொருளும் உள்ளது. பசு என்பது இங்கே பசுவின் இனத்தைச் சார்ந்த எருதினை குறிக்கும். விடப்பையினை உடைய பாம்பினை மாலையாக அணிந்தவனும், அனைவரிலும் உயர்ந்தவனும், பசுவின் இனத்தைச் சார்ந்த இடபத்தின் மேல் மை தீட்டிய கண்களை உடைய உமையம்மையோடு ஏறி அமர்பவனும், வல்லமை உடையவனும் ஆகிய பெருமானே, அடியேனுக்கு உன் பால் வைத்துள்ள ஆசையினைத் தவிர வேறு எந்த ஆசையும் இல்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பைம் மாலும் அரவா பரமா பசு

மைம்மால் கண்ணியோடு ஏறு மைந்தா எனும்

அம்மால் அல்லது மற்று அடி நாயினேற்கு

எம்மாலும் இலேன் எந்தை பிரானிரே

நீறு அலைத்ததோர் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.98.6) அப்பர் பிரான் பெருமானை நினையாதவர்களின் நெஞ்சம் நெஞ்சமே அல்ல என்று கூறுகின்றார். முன்னுதல்=நினைத்தல்; முன் நெஞ்சம்=இறைவனை நினைக்கும் நெஞ்சம்; மூர்க்கர்=கொடியவர்; வன்=கொடிய; பெருமானை நினைக்காமல் தங்களது வாழ்க்கையை கழிப்பவர்கள், வீணான வாழ்க்கையை கழிக்கின்றார்கள் என்று இங்கே கூறுகின்றார். தம் நெஞ்சம் தமக்குத் தாமிலாதவர் என்று தங்களது நெஞ்சத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு பலன் அடையாமல் இருக்கும் வீணர்களை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மனிதப் பிறவி எடுத்துள்ள நாம் பெறற்கரிய பாக்கியம் செய்தவர்கள். இறைவன் நமக்கு அளித்துள்ள கருவி கரணங்களை நன்கு உபயோகித்து, மெய்ப் பொருளின் தன்மையை உண்மையாக உணர்ந்து, பழைய பிறவிகளிலிருந்து நாம் கொண்டு வந்துள்ள வினைகளை முற்றிலும் கழித்து, பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டு முக்தி நிலையினை அடைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்திருப்பது தான், நாம் உயிருக்கு செய்யும் கைம்மாறு ஆகும். கண்ணிருந்தும் குருடனாக பொருட்களை பார்த்து அறியாமல் இருக்கும் மனிதனை மூடன் என்பது போல், நெஞ்சம் இருந்தும் அதனை சரிவர பயன்படுத்தாமல் இருப்பவர் மூடர் தானே. இறைவனை நினைக்கும் தன்மை உடைய நெஞ்சம் இல்லாதவர்களாக வாழும் கொடிய குணம் கொண்டவர்கள் வீணாக இறந்து படுகின்றார்கள். அத்தகைய மூடர்கள் தங்களுக்கு இறைவன் அளித்துள்ள நெஞ்சத்தின் உதவியுடன் இறைவனை நினைத்து வணங்கி, முறையான வழியில் பயன்படுத்தி உயிருக்கு உய்வினைத் தேடித் தராமல் உள்ளனர். இறைவனின் துணையுடன் தன்னுடைய நெஞ்சத்தை அறிந்து கொண்டு உயிருக்கு நன்மை தேடித் தந்து, வலிமை வாய்ந்த கொடிய நெஞ்சத்தினால் ஏற்படும் கேட்டினை நீக்கும் வல்லமை உடையவர்களாக உலகத்தவரே நீங்கள் விளங்குவீர்களாக. இறைவனை நினைக்க பழக்கப்பட்ட எனது உள்ளம் ஈசனை கண்டு கொண்டது என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்

தன் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்

வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லீரே

என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே

தில்லைத் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் (6.1) அனைத்துப் பாடல்களிலும், அப்பர் பிரான், பெரும்பற்றப் புலியூர் என்று அழைக்கப்படும் தில்லைச் சிதம்பரத்தில் உறையும் பெருமானைப் பற்றி பேசாத நாட்களை எல்லாம் தான் பிறவாத நாளாக கருதுவதாக கூறுகின்றார். இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலையும் அப்பர் பிரான் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்று முடிக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். அரியான்=அரியவன், தங்களது முயற்சியால் அறிந்து விடலாம் என்று நினைப்பவர், எத்தகைய தகுதி படைத்தவராயினும், அவர்களால் அறிய முடியாதவன் பெருமான் என்று பொருள். கல்விக்கு அதிபதியாக விளங்கும் பிரமனும், செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் திருமாலும், அன்னமாகப் பறந்தும், பன்றியாக ஆழ்ந்தும் முயற்சி செய்த போது அவர்களால் காணமுடியாத நிலையில் பெருமான் இருந்ததை நாம் இங்கே நினைவு கூரலாம். இறைவன் மீது நாம் வைத்துள்ள பக்தி, அன்பு என்ற கருவிகளால் மட்டும் தான் நாம் அவனை அறிய முடியும்.

அரியானை அந்தணர் தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்

தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள் தம் கோனை மற்றைக்

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையை கலந்து நின்ற

பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

அந்தணர்=தில்லை வாழ் அந்தணர்கள்; பரம்பரை பரம்பரையாக, தங்களை ஆடவல்லானின் திருப்பணியில் ஈடுபடுத்திக் கொண்ட அந்தணர்கள். கரி=சாட்சி; கரியான்=சாட்சியாக உள்ளவன்; கரியான்=திருமால் (மற்றொரு பொருள்); பிறவா நாள்=இறந்த நாள், வாழாத நாள் என்பதை மங்களகரமாக பிறவா நாள் என்று எதிர்மறையாக சொல்லுகின்றார். திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாத அரியவன், மிகவும் எளிமையான முறையில் அந்தணர்களின் சிந்தையில் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் பட்டுள்ளது, தேவர்களும் காணமுடியாத அரியவனாக உள்ள இறைவன் என்று நாம் மலைத்து விடாமல், அவனிடம் பக்தி கொண்டு அவனை வழிபட்டால் நமக்கு மிகவும் எளியவனாக இறைவன் மாறுவான் என்னும் கருத்து சொல்லப்படுவதால், இந்த பதிகம் அடியார்களால் மிகவும் விரும்பப் படுகின்றது என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். கனை கடல்=ஒலிக்கின்ற கடல். அளவிட முடியாத பெரிய உருவத்தினனாக இருக்கும் சிவபெருமான், மிகவும் நுண்ணியனாகவும் உள்ளான் என்பதை அணுவை யார்க்கும் தெரியாத தத்துவன் என்ற தொடர் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே என்ற திருவாசக சொற்றொடர் நமது நினைவுக்கு வருகின்றது செற்றவர்=பகைவர்; அரணம்=கோட்டை; உற்றவர்=மலபரிபாகம் அடைந்த அடியார்கள்; பெருமானை குறித்த ஞானம் ஒன்றே வீடுபேறு அடைவதற்கு உரிய வழி. எனவே அந்த ஞானத்தை அடைவதற்கு உயிர் விருப்பம் கொள்ள வேண்டும். இவ்வாறு ஞானவேட்கை உடையவர்க்கே ஞானம் பயன் தரும். உயிர் ஞானவேட்கை அடையாத வண்ணம், ஆணவமலம் தடுக்கின்றது. எனவே என்றும் அழியாது இருக்கும் ஆணவமலத்தின் வலிமையை குறைத்து, புலன்களின் விருப்பத்தில் நாட்டம் கொள்ளாது, உண்மையான மெய்ப்பொருள் குறித்து அறிந்து கொள்ள, உயிர்கள் தலைப்பட வேண்டும். ஆணவ மலத்தின் வலிமையை உயிர்கள் குறைப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு, இறைவன் கன்மம் மாயை ஆகியவற்றை உயிர்களுடன் கூட்டி, இன்ப துன்பங்களை நுகரச் செய்கின்றான். இவ்வாறு இன்ப துன்பங்களை நுகரும் தருணத்தில் உயிர்கள் இருவினையொப்பு நிலையினை அடைந்து மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆணவ மலத்தின் வலிமையை படிப்படியாக குறைத்து, அதன் வலிமையை மெலியச் செய்வதை மலபரிபாகம் என்று கூறுவார்கள். இத்தகைய மலபரிபாகம் அடைந்த நிலையில் உயிர்கள் மெய்ஞானம் பெறுகின்ற தன்மையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். உணர்வு எய்தல்=மீண்டும் பிறவாமைக்கு அடிகோலும் வகையில் மெய்ஞானத்தை அறிந்து கொள்ள வாய்ப்பினை அளிக்கும் மானிடப் பிறப்பின் சிறப்பினை உணர்ந்து, அந்த நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவது; சிவபெருமான், தங்களது முயற்சியால் கண்டு கொள்ளலாம் என்று நினைப்பவர்க்கு (அவர்கள் எவ்வளவு தகுதி படைத்திருந்தாலும்), மிகவும் அரியவனாக விளங்குகின்றார், பரம்பரை பரம்பரையாக, தங்களைத் தில்லை சிற்றம்பலத்து இறைவனின் திருப்பணியில் ஈடுபடுத்திக் கொண்ட அந்தணர்களின் சிந்தையில் வசிப்பவன்; சிறப்பான வேதங்களின் உட்பொருளாக உள்ளவன், பகுத்துப் பார்க்க முடியாத அணுவினும் நுண்ணியன், தங்களது முயற்சியால் எவரும் உணரமுடியாத மெய்ப்பொருள், தேன் போலும் பால் போலும் மிகவும் இனிமையாக இருப்பவன், சுயம்பிரகாசமாக தானே ஒளிரும் ஒளியான்; திருமாலாகவும் பிரமனாகவும் தீயாகவும் காற்றாகவும் ஒலிக்கும் கடலாகவும், உயர்ந்த மலைகளாகவும் உடன் இருந்து செயல்படுபவன்; இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபெருமான் பெரும்பற்றப் புலியூர் என்று அழைக்கப்படும் தில்லையில் உறைகின்றான். அவனது புகழினைப் பேசாத நாட்கள் எல்லாம் பயனற்ற நாட்களாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பெருமானின் அடியார்களுக்கு மட்டுமே பெருமானின் அருள் கிடைக்கும் என்றும், அவனது அடியார் அல்லாதவர் மேல் அவனது அருள் பார்வை படராது என்றும் குறிப்பிடும் அப்பர் பிரான் திருவாரூர் திருத்தாண்டகப் பாடல் நமது நினைவுக்கு வருகின்றது. உயிராவணம்=உயிராத வண்ணம்; உயிர்த்தல் என்ற சொல் மூச்சு விடுதல் என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது. உற்று நோக்கி=தியானத்தில் ஆழ்ந்து மனதினில் உருவகப் படுத்திய இறைவனின் உருவத்தினை நினைந்து; கிழி=திரைச்சீலை, துணி; உயிர் ஆவணம் செய்தல்=உயிரினை ஒப்படைத்தல் ஆவணம்=சாசனம்; ஆவணம் என்பதற்கு ஓலை என்ற பொருள் கொண்டு அடிமை ஓலை எழுதி, தன்னை அடிமையாக இறைவனுக்கு ஒப்படைத்தல் என்றும் பொருள் கூறுவார்கள். அயிராவணம்= கயிலை மலையில் உள்ள யானை, இரண்டாயிரம் தந்தங்களை உடையது. அயிராவணம் (நான்காவது அடியில் உள்ள சொல்)=ஐ இரா வண்ணம், ஐயம் ஏதும் இல்லாத வண்ணம் உள்ள உண்மையான மெய்ப்பொருள்; இந்த தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் திருநாமம் தியாகராஜன் என்பதால், அந்த பெயருக்கு பொருத்தமாக ஆரூர் ஆண்ட பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பதை நாம் உணரலாம். அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தேவர் வாழும் உலகத்தை ஆளக்கூடிய வல்லமையும் தகுதியும் இருந்த போதிலும், மண்ணுலகில் வாழும் அடியார்களின் நலன் கருதி, அவர்கள் தன்னை வணங்கி பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், ஆரூரில் குடிகொண்டுள்ள பெருமானை, ஆரூர் ஆண்ட பெருமான் என்று கூறுகின்றார்.

உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உரு எழுதி

உயிர் ஆவணம் செய்திட்டு உன் கைத் தந்தால் உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி

அயிராவணம் ஏறாதே ஆனேறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட

அயிராவணமே என் அம்மானே நின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே

அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்டான் என்று அப்பர் பெருமான் கூறுவது, அமரர் நாட்டினை விட சிறப்பு வாய்ந்தது திருவாரூர்த் தலம் என்பதை உணர்த்துகின்றது. இதனால் தான் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்று சுந்தரர் திருத்தொண்டத் தொகை பதிகத்தில் கூறினார் போலும். ஒட்டி வாழ்தல்=உடனாகி இருத்தல்; இந்தப் பாடலில், இறைவன் யாரோடு ஒட்டி வாழ்வான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மனதினை ஒருமுகப்படுத்தி இறைவனை தியானித்து, அவனது உருவத்தை நமது மனதிலிருந்து நீங்காத வண்ணம் எழுதி வைத்து, நாம் அவனுக்கு பூரண அடிமை என்ற நிலையை அவனுக்கு உணர்த்தினால், அவன் அத்தகைய அடியார்களுடன் இணைந்து வாழ்வான் என்று இங்கே விளக்குகின்றார். அடியார்கள் மண்ணில் வாழ்ந்த போதே அவர்களுடன் ஒட்டி வாழும் சிவபெருமான், அத்தகைய அடியார்கள் தங்களது உடலைத் துறந்த பின்னர், அவர்களுக்கு முக்தி அளித்து அவர்களை விட்டுப் பிரியாது இணைந்து வாழ்வான் என்பதும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. எவரோடு இறைவன் ஒட்டி வாழ்வான் என்று முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், கடைசி அடியில், இறைவனை உணராதவர்கள், அவனது இன்பத்தைப் பெறுவதற்கு உரியவர்கள் அல்லர் என்று கூறுகின்றார். அருட்கண் என்று சிவபெருமான் நமக்கு அருளிய கண் என்று இங்கே கூறப்படுகின்றது என்று பொருள் கொண்டு, பெருமான் நமக்குக் கொடுத்த கண் கொண்டு, அவனைக் கண்ணாரக் கண்டு மகிழ வேண்டும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது என்று பொருள் கொள்வதும் சிறப்பே. அயிராவணம் என்று இரண்டாயிரம் தந்தங்களைக் கொண்ட பெருமை வாய்ந்த யானை கயிலையில் இருந்தாலும், அதனை வாகனமாகக் கொள்ளாமல், எளிமையான எருதினை வாகனமாகக் கொண்டு, தேவர்கள் உலகத்தினை ஆளும் திறமையும் வல்லமையும் கொண்டிருந்தாலும், தேவலோகத்தை ஆளாமல், அடியார்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரூர் நகரினை ஆளும் இறைவனே; தங்களது உயிர் மூச்சினை அடக்கி, உன்னை தியானித்து, உனது உருவத்தைத் தங்களது உள்ளத்தில் என்றும் அழியாத வண்ணம் பதித்து, உனக்கு அடிமையாகத் தங்களைக் கருதி, அந்த அடிமை சாசனத்தை உனது கையில் ஒப்படைக்கும் அடியார்களுடன், நீ இணைந்து வாழ்கின்றாய். எவருக்கும் எந்த ஐயமும் ஏற்படாமல் உண்மையான மெய்ப்பொருளாக இருப்பவனே, உன்னால் வழங்கப்பட்ட கண்கள் கொண்டு உன்னைக் காணாதவர்கள், உனது அருளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்லர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திருவாரூர் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (6.3̀1.7) அப்பர் பிரான், பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தெய்வமாக கருத மாட்டேன் என்று உறுதியாக கூறுகின்றார். பாற்றுதல்=அழித்தல்; பரிசு=தன்மை; சுற்றி நின்ற சூழ் வினைகள்=வினைகளின் பிணைப்பிலிருந்து உயிர் மீண்டு செல்லாத வண்ணம், நல்வினைகளும் தீவினைகளும் நம்மை எப்போதும் சூழ்ந்து இருப்பதால் சுற்றி நின்ற சூழ் வினைகள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தீயவினைகள் போல் நல்வினைகளும், நம்மை தப்பிக்க விடாமல் பிறவிப் பிணியில் ஆழ்த்துகின்றன. நல்வினைகள், அடுத்த பிறவியில் நம்மை இன்பத்தில் ஆழ்த்தி உலக மாயையில் மயங்கச் செய்து வினைகளை நாம் மேலும் பெருக்கிக் கொள்ள வழி வகுக்கின்றன. அதனால் தான், பெரியோர்கள் நல்வினைகளை பொற் சங்கிலிக்கும் தீயவினைகளை இரும்புச் சங்கிலிக்கும் ஒப்பிடுவார்கள். துஞ்சுதல்=தூங்குதல். தூங்கும் சமயத்தில் நாம் செயலற்று இருப்பது போல், வினைகளைப் போக்கிக் கொள்வதற்கு ஏதும் செய்யாமல் இருக்கும் நிலை என்று இங்கே பொருள் கொள்ளவேண்டும். நெஞ்சமே, நான் சொல்வதை கேட்பாயாக, உன்னைப் பற்றியிருக்கும் பாவங்கள் உன்னை விட்டு விலக வேண்டும் என்றால், மேன்மையான கதிக்கு, முக்தி நிலைக்கு, நீ செல்ல வேண்டும் என்றால், உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் வினைகளை வீழ்த்தி அவற்றினின்று விடுதலை அடைய வேண்டும் என்று நீ விரும்பினால் நான் சொல்வதைக் கேள். நீ செயலற்று இருப்பதை விட்டுவிடு. புற்றில் வாழும் பாம்பினை கச்சாக அணிந்த புனிதனே, சோலைகள் சூழ்ந்த ஆரூர் நகரில் உறையும் இறைவனே என்று சிவபெருமானை பலமுறையும் துதித்து, இறைவனே நீ தான் எனக்குத் துணை, நீ தான் எனக்கு உறவு, உன்னைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் பரம்பொருளாக நினைக்க மாட்டேன் என்று கதறுவாயாக என்று தனது நெஞ்சத்தை விளித்து, தனது நெஞ்சத்திற்கு அறிவுரை சொல்வது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்

சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சாவண்ணம்

உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும் உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கேன் என்றும்

புற்றரவக் கச்சு ஆர்த்த புனிதா என்றும் பொழில் ஆரூரா என்றே போற்றா நில்லே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.47.10) பெருமானின் திருவருள் குறித்து பேசாத நாள் பிறவா நாள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். துணை மாலை=மலர்களை ஒன்றுக்கொன்று துணையாக இருக்குமாறு பிணைத்து கட்டப்பட்ட மாலை; உன்னை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்று அரியானை என்று தொடங்கும் தில்லைத் தாண்டகத்தின் அனைத்துப் பாடல்களிலும் (6.1) முழங்கிய அப்பர் பிரான், இந்த பாடலிலும் பெருமானின் அருள் திறத்தினைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாள் என்று குறிப்பிடுகின்றார். சமண சமயத்தை விட்டொழித்த நாள் முதல், தனது வாழ்க்கையின் இறுதி நாள் வரையில், பெருமானின் புகழினை பதிகமாக பாடி வந்த அப்பர் பிரான், தனது வாழ்க்கையை பயனுள்ள வாழ்க்கையாக கழித்திருக்கின்றார். இந்த குறிப்பு, பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் என்ற குறிப்பு நம்மைப் போன்றோர்க்காக அப்பர் பிரான் அருளிய நன்மொழி ஆகும். அதே போன்று, தூநெறிக் கண் செல்லாது நின்றது, துணை மாலை சூட்டும் தூயோனாக இல்லாத நிலை ஆகியவையும் நம் போன்றோரை மனதினில் கொண்டு உரைத்த சொற்கள் ஆகும். மற்றவர்களின் குறையையும் தனது குறையாக ஏற்று, தன்னைச் சுட்டிக் காட்டியவாறு, அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி ஆகும். இந்த உலகத்தில் நாம் பிறப்பு எடுத்ததன் நோக்கமே, உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் என்பதை அறிந்து கொண்டு, அவனது புகழினைப் பாடி, நமது மலங்களை அறுத்துக் கொண்டு, நிலையாக அவனுடன் சேர்ந்து இருப்பதற்கு வழி தேடுவது தானே. எனவே நாம் இறைவனைப் புகழாத நாட்கள் எல்லாம், பிறந்ததன் பயனை அடையாத நாட்கள் என்று கருதுவது தானே முறை. இதனை உணர்த்தும் பொருட்டே, அப்பர் பிரான், இறைவனின் திருவருளைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாள் என்று கூறுகின்றார்.

துறந்தார் தூநெறிக் கண் சென்றேன் அல்லேன் துணை மாலை சூட்ட நான் தூயேன் அல்லேன்

பிறந்தேன் நின் திருவருளே பேசின் அல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

செறிந்தார் மதில் இலங்கைக் கோமான் தன்னைச் செருவரைக் கீழ் அடர்த்து அருளிச் செய்கை எல்லாம்

அறிந்தேன் அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே

துறவிகள் வகுத்த தூய நெறியில் செல்லாமல் வாழ்ந்து வரும் அடியேன், மனத் தூய்மை அற்றதால், உனக்கு மலர்களை தொடுத்து மாலைகளாக கட்டி அந்த மாலைகளை உனக்கு சூட்டி வழிபடும் தகுதியை இழந்தவனாக உள்ளேன். பூமியில் பிறந்தோர் எவரும், உன்னை புகழ்ந்து பேசுவது தான், தாங்கள் எடுத்த பிறவியின் நோக்கத்தை உணர்ந்து செயல்படும் முறையாகும். எனவே, இறைவனே, உனது திருவருளினைப் புகழாத நாட்களை பிறவாத நாட்கள் என்றே நான் கருதுகின்றேன். அடர்த்தியாக வலிமையுடன் காணப்பட்ட மதில்களால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனாக விளங்கிய அரக்கனை கயிலை மலையின் கீழ் அடர்த்து அவனது வலிமையைக் குறைத்த நீர், பின்னர் அவன் உம்மை புகழ்ந்து சாமகானம் இசைத்த போது அவனுக்கு அருளிய செய்கையினை அடியேன் அறிந்தேன். நானும் இனிமேல் உனது திருவருளைப் புகழ்ந்து பாடுவேன். நீர்வளம் மிகுந்து குளிர்ந்த ஆவடு துறை தலத்தில் உறையும் அமரர்கள் தலைவனே, அரக்கன் இராவணனது குற்றங்களை மன்னித்து அவனுக்கு வரங்கள் பல அருளியது போன்று, எனது குற்றங்களையும் மன்னித்து எனக்கு அருள் செய்து, அஞ்சேல் என்று சொல்லித் தேற்றி, இனிமேல் பிறவாத வண்ணம் என்னை காப்பாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.99.10) அப்பர் பிரான், சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது உள்ளம் உணராது என்று கூறுகின்றார். ஒருவன்=ஒப்பற்ற ஒருவனாகிய சிவபெருமான். இருவர்=நல்வினை, தீவனைகள்; மூவர்=ஆணவம், கன்மம் மாயை எனப்படும் மும்மலங்கள்; இல்லாத தரவு=உண்மை அல்லாத யான், எனது என்னும் செருக்கு. இருவரையும் மூவரையும் என்பதற்கு, இரண்டு சொற்களையும் இணைத்து, ஐம்புலன்கள் என்றும் கூறுவார்கள். சிவபெருமானை அன்றி வேறு ஒருவரையும் நினையாது இருந்தால் அவனது அருள் பெற்று, நம்மை தடுமாற்றத்தில் ஆழ்த்தும் இருவினைகள், மும்மலங்கள் அவற்றை வெற்றி கொண்டு, யான் எனது எனப்படும் இருவகைச் செருக்கினை அகற்றி, நாமும் இறைவனடி சேர்ந்து உய்யலாம் என்ற கருத்து இந்தப் பாடல் மூலம் நமக்கு அப்பர் பிரானால் உணர்த்தப் படுகின்றது. அவர் நமக்களித்த இந்த அறிவுரை மிகவும் முக்கியமானதும் பயன் உள்ளதாகவும் இருக்கின்றது. தனது பெரும்பாலான பதிகங்களில் இராவணனுடன் இணைத்து கயிலாய மலையினைக் குறிப்பிடும் அப்பர் பிரான், இந்தப் பதிகத்திலும் அந்த நிகழ்ச்சியை மிகவும் பொருத்தமாக குறிப்பிடுகின்றார். வெண்காடு, ஆரூர், கழுக்குன்றம் முதலிய தலங்களை, இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில் குறிப்பிடும் அப்பர் பிரான், தான் சென்று சேர வேண்டிய இடமாகிய கயிலாய மலையை, பதிகத்தின் கடைசி அடியில் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமே. புண்ணியனே உன்னடிக்கு விரைந்து வருகின்றேன் என்று தொடங்கும் பதிகம். கயிலை மலையானே உன்னடிக்கே விரைந்து வருகின்றேன் என்று முடிகின்றது. உயிருக்கு உயிராக நின்று அனைத்துச் செயல்களையும் செய்விப்பவன் சிவபெருமான் தானே. அவ்வாறு இருக்கையில், நம்முடைய செயல்களுக்கு நான் என்றும் எனது என்றும் எண்ணம் கொண்டு பெருமிதம் அடைவது தவறு அல்லவா. அதனால் தான் பொய்யான நிலை என்று பொருள் படுமாறு இல்லாத தரவு என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சித் தடுமாற்றத்துள்ளே நின்ற

இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க் கில்லேன் ஏலக்

கருவரை சூழ் கானல் இலங்கை வேந்தன் கடுந்தேர் மீது ஓடாமைக் காலால் செற்ற

பொருவரையாய் உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே

அழகிய புகலூர் நகரில் உறையும் புண்ணியனே, ஒப்பற்ற ஒருவனாகிய உன்னைத் தவிர எனது உள்ளம் வேறு எவரையும் உணராது. உணர்ச்சிகளைத் தடுமாறச் செய்யும் நல்வினை, தீவினைகளையும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய குணங்களையும் என் மீது ஏவினாலும். உனது அருள் இருந்ததால், உண்மை அல்லாத யான் எனது என்ற தன்மையினை என்னால் அறுக்க முடிந்தது. எனவே மறுபடியும் ஒரு கருப்பைக்குள் நான் புக வேண்டிய நிலையில் இல்லை. பொழில்கள் நிறைந்த இலங்கைக்கு அரசனாகிய இராவணனின் தேர் கயிலாய மலையினைக் கடந்து ஒடாதவாறு செய்யும் வல்லமை பெற்றவனே, நான் உனது திருவடிகளை நாடி விரைந்து வருகின்றேன். நீ என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கயிலாயத்தில் அணுக்கத் தொண்டனாக தான் வாழ்ந்த காலத்தில் செய்த ஒரு சிறு தவறினுக்காக, நிலவுலகினில் சுந்தரராக பிறக்க நேர்ந்தவர்க்கு, தான் எதனால் நிலவுலகில் பிறந்தோம் என்பது கூட மறந்துவிட்டது. ஆனால், தான் அவருக்கு அளித்த வாக்கினை நிறைவேற்றும் பொருட்டு, அடிமை ஓலை காட்டி பெருமான் சுந்தரரை ஆட்கொண்ட பிறகு, அவருக்கு அனைத்தும் நினைவுக்கு வரவே, பெருமானே இனிமேல் உன்னை மறவாது நினைக்கின்றேன் என்று உறுதி கூறும் பாடல் தான் (7.1.1), அவர் தனது வாழ்க்கையில் அருளிய முதல் பாடல்.

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா

எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

நாட்டியத்தான்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.15.8) பெருமானைத் தவிர்த்து வேறு ஒருவரிடம் சென்று எதையும் இரக்க மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். நலிதல் என்ற சொல்லுக்கு தனக்கு உதவுமாறு அடுத்தவரிடம் இடைவிடாது வேண்டுதல் என்று பொருள். மானுட வாழ்க்கையின் நிலையாமையை நினைத்தால், வருத்த மிகுதியால் கண்களில் கண்ணீர் பெருகும் என்பதால் தான் மானுட வாழ்க்கையை பெருமையாக நினைக்க மாட்டேன் என்றும், பெருமான் பலியேற்று உண்பதையோ எருதினை வாகனமாகக் கொண்டு உள்ள தன்மையையோ தான் இகழ மாட்டேன் என்றும், எத்தகைய துன்பத்தை தான் எதிர்கொள்ள நேரிடினும் தான் பெருமானை தொடர்ந்து வணங்குவேன் என்றும், மறுமை இன்பத்தையும் நினைக்காமல் இருப்பேன் என்றும் வேறு எந்த தெய்வத்திடமும் எதனையும் வேண்டி இரக்காமல் இருப்பேன் என்றும் சுந்தரர் உணர்த்தும் பாடல். மறுமையை நினைய மாட்டேன் என்று சுந்தரர் கூறுவது நமக்கு பெரிய புராணத்தில் அடியார்களின் தன்மை குறித்து சேக்கிழார் கூறுவதை நினைவூட்டுகின்றது. தாங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக பாவிக்கும் பக்குவம் அடைந்த அடியார்கள், மண் திருவோட்டினையும் பொன்னையும் ஒன்றாகவே கருதுவார்கள் என்றும், எப்போதும் இறைவனை தொடர்ந்து வழிபட்டுக் கொண்டு இருப்பதே தங்களது வாழ்வின் நோக்கமாக கருதுவதால், முக்தி உலகுக்கு செல்வதையும் விரும்ப மாட்டார்கள் என்று அடியார்களின் தன்மையை சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

கலியேன் மானுட வாழ்க்கை ஒன்றாகக் கருதிடில் கண்கள் நீர் மல்கும்

பலி தேர்ந்து உண்பதொர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறினும் பழியேன்

வலியே ஆகிலும் வணங்குதல் ஒழியேன் மாட்டேன் மறுமையை நினைய

நலியேன் ஒருவரை நான் உனை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பி

கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களில் (7.21) சுந்தரர், பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும், புகழ்ந்து போற்ற மாட்டேன் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இட்டு=தனியே விட்டுவிட்டு; எம்மானை=எமது தந்தை;எம்மனை=எமது அன்னை; தனக்கு பெருந் துணையாக இருந்த தனது பெற்றோர்கள் தன்னைத் தனியாக விட்டுவிட்டு சென்று விட்டதால், தனக்குத் துணையாக பெருமானைத் தவிர்த்து எவரும் இல்லை என்று குறிப்பிடும் சுந்தரர், பெருமான் தனக்கு செய்த உதவியையும் இங்கே குறிப்பிடுகின்றார். மெய்=உடல்; மெய்ம்மால்=உடலின் தொடர்பால் வரும் மயக்கம்; உடலின் தொடர்பால், உடலிலுள்ள ஐந்து பொறிகளின் தொடர்பால் தனக்கு ஏற்பட்ட மயக்கத்தினை தீர்த்து அருள் புரிந்தவன், உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமான் என்று கூறுகின்றார். உயிர்கள் கொண்டுள்ள மயக்கத்தைத் தீர்த்து,உண்மையான மெய்ப்பொருளை உணர்வதற்கு உதவி செய்யும் ஆற்றல் படைத்தவர் பெருமானைத் தவிர்த்து வேறெவரும் இல்லை என்பதால், பெருமானையே அனைவரினும் பெரிய பொருளாக கருதி தான் புகழ்ந்து போற்றுவேன் என்று கூறுகின்றார்.

எம்மான் எம்மனை என்றவர் இட்டு இறந்தொழிந்தார்

மெய்ம் மாலாயின தீர்த்து அருள் செய்யும் மெய்ப்பொருளே

கைம்மா ஈருரியாய் கனமேற்றளி உறையும்

பெம்மான் உனை அல்லால் பெரிது ஏத்த மாட்டேனே

கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (7.21.1) அற்புதமான பழைய ஆவணம் காட்டி, தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு, தான் கயிலாயத்தில் அணுக்கத் தொண்டனாக ஆலால சுந்தரனாக பணியாற்றிய போது சமர்ப்பித்த விண்ணப்பத்தை நினைவில் வைத்துக் கொண்டு, திருவெண்ணெய் நல்லூரில் நடைபெற விருந்த தனது திருமணத்தை தடுத்த பெருமானை, தனது தந்தையாக கருதுவதாக இந்த பாடலில் சுந்தரர் குறிப்பிடுகின்றார். நொந்தா ஒண்சுடர்=பிரகாசம் குன்றாத விளக்கு; தனது மனதினில் புகுந்த பெருமான், என்றும் தன்னை விட்டு நீங்காது இருப்பதாகவும், தனது தந்தையாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தான் புகழமாட்டேன் என்றும் சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்து இருந்தேன்

வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற

சிந்தாய் எந்தை பிரான் திருமேற்றளி உறையும்

எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.21.2) சுந்தரர் பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தான் மகிழ்ந்து போற்ற மாட்டேன் என்று கூறுகின்றார். சேடு=பெருமை; சேடார்=பெருமைகள் நிறைந்த; மாடு=செல்வம்; பெருமானே தனது செல்வம் என்று குறிப்பிட்டு, பெருமானைத் தவிர்த்து தான் வாழ்வில் வேறு சிறந்த செல்வமாக, வேறு எதனையும் கருத மாட்டேன் என்று கூறுகின்றார். பெருமான் பால் அன்பு வைத்தால் தான், பெருமானின் அடியார்களுக்கு தொண்டு செய்ய முடியும். அவ்வாறு அடியார்களுக்கு தொண்டு செய்வதன் மூலம், பெருமானின் மனதினை குளிர்வித்து, பெருமானிடமிருந்து பல பேறுகளையும் பெற்ற தான், பிறவாமை என்கின்ற வரத்தினையும் தான் பெற்றதாக சுந்தரர் கூறுகின்றார். பெருமைகள் மிகுந்த பல மாளிகைகள் சூழப்பட்ட திருமேற்றளி தலத்தில் உறைகின்ற பெருமானே, உன்னைத் தவிர்த்து வேறு எவரையும் சிறந்த செல்வமாக கருதி அடியேன் மகிழ்ந்து போற்ற மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார்.

ஆட்டான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக்

கேட்டேன் கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டு ஒழிந்தேன்

சேட்டார் மாளிகை சூழ் திருமேற்றளி உறையும்

மாட்டே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே

இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (7.21.4) பெருமானைத் தவிர்த்து, வேறு எவரையும் புகழ்ந்து போற்ற மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். மோறாந்து=மயக்கம் அடைந்து; உலகத்து பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் தரும் மயக்கத்தில் ஆழ்ந்து உயிர்கள் இறைவனை மறந்து விடுதல் இயற்கை. வேறாக=தானே வந்து; சேறார்=சேறு நிறைந்த; சேறு நிறைந்த தன்மை தலத்தின் நீர்வளத்தை உணர்த்துகின்றது. ஏறு=ஆண் சிங்கம்; சிங்கம் காட்டில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் தலைவனாக இருப்பது போன்று, பெருமான் அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இருக்கும் தன்மையை உணர்த்துகின்றார். உலகப் பொருட்கள் தரும் மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்து, அடியேன் பல சமயங்களில் உன்னை நினைக்காது இருந்தாலும், உண்மைப் பொருளாகிய பெருமானே, நீ தானாகவே முன் வந்து எனது உள்ளத்தில் புகுந்து அடியேன் உன்னை நினைக்குமாறு செய்யும் ஆற்றலும் கருணை உள்ளமும் கொண்டவன் ஆவாய். நீர்வளம் நிறைந்த திருமேற்றளி தலத்தினில் உறையும் ஆண் சிங்கம் போன்றவனே, உன்னை அல்லாது அடியேன் வேறு எவரையும் புகழ்ந்து போற்ற மாட்டேன் என்று சுந்தரர் உணர்த்தும் பாடல்.

மோறாந்து ஒரொரு கால் நினையாது இருந்தாலும்

வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே

சேறார் தண் கழனி திருமேற்றளி உறையும்

ஏறே உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.23.4) சுந்தரர், பெருமானைத் தவிர்த்து வேறெந்த தெய்வத்தையும் மனதாலும் விரும்பேன் என்று கூறுகின்றார். சுரும்பார் விண்ட மலர்= அப்போது தான் அரும்பிலிருந்து மலராக மாறிய நிலை; பாதி மலர்ந்த நிலையில் இருக்கும் மலர்கள் என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. அத்தகைய மலர்களில் வண்டுகளின் எச்சில் படாத தன்மையால், அவற்றைத் தூவி பெருமானைத் தொழுவதை அடியார்கள் பெரிதும் விரும்பும் நிலை இங்கே சொல்லப் படுகின்றது. தூங்கு கண்ணீர்=இறைவன் பால் கொண்டுள்ள காதலால் கசிந்து கண்ணீர் மல்க இருக்கும் நிலை; தனியாக இறைவனை வழிபடுவதை விடவும் பல அடியார்களுடன் சேர்ந்து இறைவனை வழிபடுவதையே அருளாளர்கள் பெரிதும் விரும்புவார்கள். தானும் அவ்வாறு இருந்ததை சுந்தரர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். கரும்பாரும்=கரும்புகள் நிறைந்த;

சுரும்பார் விண்ட மலரவை தூவித் தூங்கு கண்ணீர்

அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்

விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால்

கரும்பாரும் கழனிக் கழிப்பாலை மேயவனே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தினை (7.24) சுந்தரர் பொன்னார் மேனியனே என்ற தொடருடன் தொடங்குகின்றார். திருவாலம்பொழில் தலத்து இறைவனை வணங்கிய பின்னர், அந்த தலத்தினில் சுந்தரர் இரவு தங்கிய போது, இறைவன் அவரது கனவில் தோன்றி, மழபாடி வருவதற்கு மறந்தனையோ என்று நினைவூட்ட, அடுத்த நாள் திருமழபாடி தலம் சென்ற சுந்தரர் பொன்னார் மேனியனே என்று இறைவனை அழைத்து பாடிய பதிகம். அன்னே=இப்பொழுது; மன்னே=நிலையாக இருப்பவன்; மன்னன் என்று பொருள் கொண்டு தலைவனே என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களில், பெருமானைத் தவிர்த்து வேறெவரையும் தான் இனிமேல் நினைக்க மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். பொன்னின் நிறத்தில் திருமேனி உடைய பெருமானே, புலியின் தோலைத் தனது இடுப்பினில் அணிந்து கொண்டு, பாம்பினை அந்த உடையின் மீது கச்சாக அணிந்து கொண்டு தனது விருப்பம் போன்று அந்த பாம்பினை அசைக்கும் ஆற்றல் வாய்ந்தவனே, மின்னல் போன்று ஒளிவீசும் செஞ்சடையில் ஒளியுடன் மிளிரும் கொன்றை மலர்களை அணிந்தவனே, என்றும் அழியாது நிலை பெற்று இருப்பவனே, சிறந்த மணி போன்று உயர்வாக கருதப்படுபவனே, மழபாடி தலத்தினில் மாணிக்க வண்ணர் என்ற திருநாமத்துடன் உறைபவனே, இப்பொழுதிலிருந்து உன்னைத் தவிர்த்து வேறு எவரையும் அடியேன் நினைக்க மாட்டேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கு அசைத்து

மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.24.2) சுந்தரர், பெருமானை உறவினன் என்ற பொருள் பட கேளா என்று அழைத்து, பெருமானே உன்னைத் தவிர்த்து நான் வேறு எவரை நினைப்பேன் என்று கூறுகிறார். எனை மறந்தனையோ என்று பெருமான் கனவில் கேட்டதற்கு விடை பகரும் முறையில் அமைந்த பதிகத்து பாடல்களில் ஒன்று. கேள்=சுற்றம், உறவு; கீள்=கோவணத்தை தாங்குவதற்காக இடுப்பில் சுற்றிக் கட்டப்பட்ட துணிக் கயிறு; தாள்=திருப் பாதங்கள்; ஏன்றுகொள்= ஏற்றுக் கொள்வாய்; பூசி=பூசியவனே; பெருமானும் சுந்தரரை தனது உறவாக கருதியமை, நம் தமர் என்று பெருமான் சுந்தரரை குறிப்பிடுவது நமது நினவுக்கு வருகின்றது. இந்த தகவல் பெரிய புராணத்தில் சேக்கிழாரால் சொல்லப் படுகின்றது. கீளும் கோவணமும் அணிந்து திருநீறு பூசிய திருமேனியுடன் காட்சி தரும் பெருமானே, அடியேன் உனது திருப்பாதங்களே சரணம் என்று கருதி உன்னை அடைந்துள்ளேன்; நீ என்னை உனது அடிமையாக ஏற்றுக் கொண்டு அருள் புரிவாயாக. வாள் போன்று நுனியில் கூர்மையாக காணப்படும் கண்களை உடைய உமை அன்னையைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டுள்ள இறைவனே, மாணிக்க வண்ணர் என்ற திருநாமத்துடன் மழபாடி தலத்தினில் உறைகின்ற பெருமானே, எனது நெருங்கிய உறவினனே, உன்னை தவிர்த்து அடியேன் வேறு எவரை நினைப்பேன், நினைக்க மாட்டேன் என்று சுந்தரர் சொல்வதாக அமைந்த பாடல்.

கீளார் கோவணமும் திருநீறும் பூசி உன்றன்

தாளே வந்தடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ

வாளார் கண்ணி பங்கா மழபாடியுள் மாணிக்கமே

கேளா நின்னை யல்லால் இனி யாரை நினைக்கேனே

தனது சுற்றமே என்று பெருமானை, மேற்கண்ட பாடலில் அழைத்த சுந்தரர், இதே பதிகத்தின் அடுத்த பாடலில் (7.24.3), இந்த உலகியல் வாழ்க்கை மூலம் தான் பெற்ற சுற்றங்கள் எவரும் தனக்கு உற்ற துணையாக இருக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார். அம்மான்=தலைவன்; அனை=அன்னை என்ற சொல் குறுகியது; எம்மான்=எனது தந்தை; எனது தந்தை மற்றும் எனது தாய் ஆகியோர் எனக்கு எள்ளளவும் துணையாக இருக்க மாட்டார்கள்; இதுவரை நான் எடுத்த அத்தனை பிறவிகளிலும் அவர்களை எனது வலிமையான துணை என்று நினைத்து வாழ்ந்து வந்தமையால் மீண்டும்மீண்டும் பிறந்தும் இறந்தும் துன்பத்தில் விழுந்து இளைத்து விட்டேன்; மேகங்கள் தவழும் சோலைகள் நிறைந்த மழபாடி தலத்தினில் உறையும் மாணிக்கமே, இனிமேல் தந்தை தாய் ஆகியோரை உண்மையான துணை என்று கருதாமல், அனைவர்க்கும் தலைவனாகிய பெருமானே நமக்கு சிறந்த துணை என்று கருதுவேன்; இனிமேல் வேறு எந்த தெய்வத்தையும் எனக்கு துணையாக கருத மாட்டேன் என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல்.

எம்மான் எம் அனை என்றனக்கு எள் தனைச் சார்வாகர்

இம்மாயப் பிறவி பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்

மைம்மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே

அம்மான் நினை அல்லால் இனி யாரை நினைக்கேனே

திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் (7.26), சுந்தரர், பெருமானை பலவாறாக அழைத்து, பெருமானே உன்னை அல்லால் வேறு எவரையும் அறிந்து ஏத்த மாட்டேனே என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (7.26.5) பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் விருப்பத்துடன் போற்ற மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். நாம் நமது வாழ்க்கையில் சில சமயம் தீய சக்திகளை சந்திக்க நேரிடுகின்றது. அந்த தீய சக்திகள் நமக்கு கேடு ஏதும் செய்யாமல் இருக்க வேண்டுமே என்ற அச்சத்தின் காரணமாக, நமக்கு விருப்பம் இல்லையென்றாலும், வேண்டா வெறுப்பாக, அந்த தீய சக்திகள் நமக்கு கெடுதல் ஏதும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவற்றைப் போற்றுகின்றோம். சுந்தரரோ, அத்தகைய தீய சக்திகளை எதிர் கொண்டாலும், அச்சம் காரணமாக அவற்றைப் போற்றாது தான் இருப்பேன் என்று இந்த பதிகத்தின் பாடலில் கூறுகின்றார். சிவந்த மீன் போன்ற கண்களை உடைய மாதர்களின் தன்மையில் மயங்கி கிடந்து, நன்மை பயக்கும் செய்கைகளை அறியாத காரணத்தால், வேறொன்றும் செய்யாமல், அடியேன் வருந்தினேன். எனினும் ஓரிரு சமயங்களில் பெருமான் உன்னை நினைத்தாலும், எப்போதும் உன்னையே நினைத்து, உனது தன்மைகளை முழுவதுமாக அறிந்து கொண்டு, உன்னைப் போற்றிப் புகழாது இருந்தேன். எனது குற்றத்தை பொருட்படுத்தாமல் என்னை மன்னித்து அருள் புரிய வேண்டும் என்று சுந்தரர் வேண்டும் பாடல்.

செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்திலே கிடந்து அலறி

நஞ்சேன் நானடியேன் நலம் ஒன்று அறியாமையினால்

துஞ்சேன் நான் ஒரு கால் தொழுதேன் திருக்காளத்தியாய்

அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே

இந்த பதிகத்தின் முதல் பாடலில், பெருமானைத் தவிர்த்து வேறெவரையும் அறிந்து கொண்டு புகழ்ந்துப் போற்ற மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். செண்டாடும்=விரைந்து நடக்கும்; மிகவும் வேகமாக நடக்கும் இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்ட சிவனே, செழுமையான ஒளி வடிவினனே, வண்டுகள் சூழும் வண்ணம் நறுமணம் மிகுந்த கூந்தல் உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனே, உன்னை ஒரு முறை கண்டவர்கள் உன் பால் காதல் கொண்டு உன்னைத் தொடர்ந்து போற்றும் வண்ணம் செயல்படும் இறைவனே, பூத கணங்களுக்கு தலைவனே, திருக்காளத்தி தலத்தில் உறைபவனே, பரவெளியாக இருப்பவனே, உன்னைத் தவிர்த்து வேறு எவரையும் அறிந்து கொண்டு அவர்களை போற்ற மாட்டேன் என்று சுந்தரர் சொல்வதாக அமைந்த பாடல்.

செண்டாடும் விடையாய் சிவனே என் செழுஞ்சுடரே

வண்டாரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே

கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய்

அண்டா உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே

திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.26.9) சுந்தரர், பெருமான் மிகவும் எளிதாக தனது உள்ளத்தில் புகுந்துறையும் தன்மையை குறிப்பிடுகின்றார். அம்பிகை உடனாக பெருமான் தனது உள்ளத்தில் உறைவதாக இங்கே கூறுகின்றார். இத்தகைய எளிமையுடன் திகழும் பெருமானைத் தவிர்த்து தனது உள்ளம் வேறெதையும் உணராது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். இளந்தளிர் போன்று மென்மையான பாதங்களை உடைய உமை அன்னையைத் தனது திருமேனியில் விரும்பி வைத்தவனாக, மிகவும் எளிதாக எனது உள்ளத்தில் புகும் தன்மை உடைய பெருமானே, மலர்களில் உள்ள தேனைப் பருகியதால் மிகுந்த களிப்புடன் ரீங்காரம் செய்யும் வண்டுகள் நிறைந்த சோலைகள் கொண்ட திருக்காளத்தி தலத்தில் உறைகின்ற ஒளியே உன்னை அல்லாது அடியேன் இனி வேறு ஒன்றையும் உணரேன் என்று சுந்தரர் சொல்வதாக அமைந்த பாடல்.

தளிர் போல் மெல்லடியாள் தனை ஆகத்து அமர்ந்தருளி

எளிவாய் வந்தென்னுள்ளம் புகுத வல்ல எம் பெருமான்

களியார் வண்டறையும் திருக்காளத்தி உள்ளிருந்த

ஒளியே உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே

கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களில் (7.28), சுந்தரர், பெருமானைத் தவிர்த்து தனக்கு துணை வேறெவரும் இல்லை என்று குறிப்பிடுகின்றார். கண்ணின் உள்ளே பொருந்தியுள்ள கண்மணி போன்று தனக்கு மிகவும் அருமையானவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களுடனும் இணைத்து அவற்றை செயல்பட வைக்கும் பெருமான், தனக்கென ஓருருவம் இல்லாதவன் என்பதால், பிறவா உரு ஆனவன் என்று அவரை குறிப்பிடுகின்றார். ஐந்து பூதங்களாகவும், அவற்றின் பல்வேறு கலவையாகவும் விளங்கும் பல பொருட்களாக இருக்கும் பெருமானே, பெண்ணாகவும் ஆணாகவும் அலியாகவும் தோற்றம் அளிக்கும் நீ, பிறவாமல் தானே தோன்றியவனாக உள்ளாய்; எனது கண்ணினில் இருக்கும் கருமணி போன்று அருமையான பெருமானே, கடவூர் தலத்தினில் பொருந்தி விளங்கும் தலைவனே, எனக்கு உன்னையன்றி சிறந்த துணை வேறெவரும் இல்லை என்பதே இந்த பாடலின் (7.28.6) பொழிப்புரை.

மண்ணீர் தீவெளி கால் வரு பூதங்களாகி மற்றும்

பெண்ணோடு ஆண் அலியாய்ப் பிறவா உரு ஆனவனே

கண்ணார் உள் மணியே கடவூர் தனுள் வீரட்டத்து எம்

அண்ணா என்னமுதே எனக்கார் துணை நீ அலதே

கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் மற்றொரு பாடலில் (7.28.4) சுந்தரர், பெருமானைத் தவிர்த்து தனக்கு வேறோர் துணை இல்லை என்று கூறுகின்றார். மேலும் தனது பொன் மேனியின் ஒரு பாகத்தில் பிராட்டியை ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிடுகின்றார். காராரும் மிடறு=ஆலகால விடத்தைத் தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்து; போர்க்குணம் மிகுந்து, தன்னை எதிர்த்து ஓடி வந்த மத யானையை கொன்று அதன் தோலை உரித்து தனது பொன் மேனியின் மீது போர்த்துக் கொண்டவனும், கச்சணிந்த மார்பகத்தை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டு மகிழ்ந்தவனும், ஆலகால விடத்தை தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனும், கடவூர் வீரட்டம் தலத்தில் உறைபவனும், எனக்கு தெவிட்டாத அமுதமாக இருப்பவனும் ஆகிய பெருமானைத் தவிர்த்து தனக்கு வேறு துணை இல்லை என்று சுந்தரர் கூறுகின்றார்.

போராரும் கரியின் உரி போர்த்துப் பொன் மேனியின் மேல்

வாராரும் முலையாள் ஒரு பாகம் மகிழ்ந்தவனே

காராரும் மிடற்றாய் கடவூர் தனுள் வீரட்டானத்து

ஆரா என்னமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே

கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.28.7) சுந்தரர் பெருமானைத் தவிர்த்து தனக்கு தகுந்த துணையாக வேறு எவரையும் கருத மாட்டேன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானை எதிர்த்து வந்த யானையை இகழ்ச்சி குறிப்பு தோன்ற ஆர் மரியாதை விகுதி கொடுத்து, கரியார் என்று அழைக்கின்றார். கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்று பொன் நிறத்தில் மின்னும் சடை என்று பெருமானை சடையினை உணர்த்துகின்றார். நாகம் அடிக்கடி தனது சட்டையை உரிப்பதால் நரையும் திரையும் (சுருக்கமும்) அற்ற உடல் கொண்டதாக விளங்குவதால் இளநாகம் என்று குறிப்பிடப் படுகின்றது. சுடலை=சுடுகாடு; நரிகள் உலாவும் சுடுகாடு என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில் உணர்த்தப்படும் சுடுகாடு, பிரளய காலத்து உலகமாகும். அந்த சமயத்தில் அனைத்து உயிர்களும் இறந்த தருணத்தில், உலகினில் நரிகளும் இருக்காது. எனினும் சுடுகாட்டின் பொதுத் தன்மை குறித்து, நரிகள் உலாவும் தன்மை இங்கே சொல்லப் படுகின்றது. இறந்து எரிந்து போன உடல்களின் மண்டையோடு வாய் பிளந்த நிலையில் இருக்கும் தன்மை நகு வெண்டலை என்று சொல்லப் படுகின்றது. கொழுந்து விட்டெரியும் நெருப்புச் சுடர் போன்று சுருண்ட சடையின் மீது இளமை வாய்ந்த நாகத்தை அணிந்த பெருமானே, நரிகள் உலாவும் சுடுகாட்டினில் காணப்படும் வாய் பிளந்த நிலையில் உள்ள மண்டையோட்டினை தலை மாலையாக அணிந்தவனே, இரத்தப் பசை மிகுந்து ஈரமாக காணப்படும் யானையின் தோலை போர்வையாக அணிந்தவனே, கடவூர் வீரட்டம் தலத்தினில் உறைபவனே, தேவர்கள் உள்ளிட்டு அனைவரும் காண்பதற்கு அரியவனே, எனக்கு அமுதம் போன்று இனிப்பவனே, எனக்கு உன்னைத் தவிர்த்து வேறெவரையும் தகுந்த துணையாக அடியேன் கருத மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார்.

எரியார் புன்சடை மேல் இளநாகம் அணிந்தவனே

நரியாரும் சுடலை நகு வெண்டலை கொண்டவனே

கரியார் ஈருரியாய் கடவூர் தனுள் வீரட்டத்தெம்

அரியாய் என்னமுதே எனக்கார் துணை நீ அலதே

தேவார முதலிகள் மூவரும் நமச்சிவாய பதிகங்கள் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர் அருளிய காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகமும் அப்பர் பிரான் அருளிய சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகமும், பெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய மந்திரம் நமக்கு நல்கும் நலன்களை எடுத்துரைக்கின்றன. சுந்தரர் அருளிய இந்த திருப்பதிகத்தின் (7.48) அனைத்துப் பாடல்களிலும், தான் நமச்சிவாய மந்திரத்தை அடிக்கடி சொல்லி தனது நாவினை பழக்கியிருப்பதால், தான் மறக்கினும் தனது நா நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் என்று சுந்தரர் மிகுந்த உறுதியுடன் கூறுகின்றார். நாமும் அந்த நிலையை அடைய வேண்டும் என்பதே சுந்தரரின் விருப்பமாக உள்ள தன்மையை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த திருப்பதிகம் பாண்டிக்கொடுமுடி என்ற தலத்தின் மீது அருளிய பதிகமாகும். இந்த பதிகத்தின் முதல் பாடல் நாம் இங்கே காண்போம்.

மற்றுப் பற்று எனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்

பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்

கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி

நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

மற்று பற்றின்றி என்ற தொடரின் முன்னே எனக்கு என்ற சொல்லினைச் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். பெற்றலும் பிறந்தேன்=பேற்றினை பெற்றதால் பிறந்தவனாக உள்ளேன், அதாவது பெருமானின் திருப்பாதங்களை மனதினில் நினைக்கும் வாய்ப்பு பெற்றமையால், தான் பிறந்ததன் பயனை அடைந்தேன் என்று சுந்தரர் கூறுகின்றார். பெரும்பற்றப் புலியூர் பெருமானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்னும் அப்பர் பிரானின் திருவாய்மொழி நமது நினைவுக்கு வருகின்றது. நாம் பிறப்பெடுத்தன் நோக்கமே உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவர் தான் என்பதை உணர்ந்து கொண்டு அவனது திருப்பாதங்களைப் பற்றுக் கோடாகக் கொண்டு, முக்தி நிலை அடைய வேண்டும் என்பது தானே. இத்தகைய முயற்சியின் முதல் படியாக பெருமானின் திருநாமத்தை சொல்வது என்பதால், இந்த திருநாமத்தை சொல்லும் நாட்களே பிறந்த நாட்களாக அருளாளர்களால் கருதப் படுகின்றது. கறையூர் என்பது தலத்தின் பெயர்; பாண்டிக்கொடுமுடி என்பது திருக்கோயிலின் பெயர். பெருமானின் அடியார்களை கற்றவர்கள் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். கற்றவர் உண்ணும் கனியே, கற்றவர் விழுங்கும் கற்பகக்கனி என்ற தொடர்கள் நமது நினைவுக்கு வருகின்றன. அருளாளர்கள் பெருமானின் திறத்தை நன்கு அறிந்தவர்களையே கற்றவர்கள் என்று குறிப்பிடுகின்றனர். கற்றவர்கள் தொழுது வணங்கிப் போற்றப்படும் சிறப்பினை உடைய கறையூர் தலத்தில் உள்ள திருப்பாண்டிக் கொடுமுடி திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமானே, சிறந்த தவத்தின் வடிவாக உள்ளவனே, அடியேன் வேறு எந்த பற்றுக் கோடும் இல்லாதவனாக உனது திருப்பாதங்களையே துணையாக நினைத்து வழிபடுகின்றேன்; இத்தகைய பேற்றினை பெற்றதன் காரணமாக அடியேன் பிறப்பெடுத்த நோக்கத்தை அடைந்தவனாகவும், இனிமேல் பிறப்பற்ற தன்மை உடையவனாகவும் இருக்கின்றேன்; பெருமானே உன்னை நான் மறக்கினும் எனது நா, உனது திருநாமமாகிய நமச்சிவாய மந்திரத்தை மறவாமல் இடையறாது சொல்லும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.48.2) நட்டவா என்று பெருமானை அழைக்கும் சுந்தரர், தனது நா நமச்சிவாய மந்திரத்தை தவறாமல் சொல்லும் என்று கூறுகின்றார். பெருமானின் திருநாமத்தை சொல்லும் நாட்களே பிறந்த நாட்கள் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட சுந்தரர், அதற்கான காரணத்தையும் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானை மறந்து அவரை போற்றாத நாட்களை கெட்ட நாட்கள் என்று பெரியோர்கள் கருதுகின்றனர் என்பதே அந்த காரணம். பெருமானை போற்றி வணங்கி வழிபடுவது உயிர்களின் கடமை என்பதால், பெருமானை மறந்த நாட்களும் இகழ்ந்த நாட்களும் பிறவி எடுத்ததன் நோக்கத்தை நிறைவேற்றாத கெட்ட நாட்களாக கருதப் படுகின்றன. இட்டன்=அன்புடையவன்; வாசிகை=வட்ட வடிவமாக, திருவாசி போன்று அமைந்த மாலை. திருக்கோயிலின் எதிரே உள்ள காவிரி நதி, சற்று வளைந்து, கோயிலுக்கு மாலை சாற்றியது போன்று இருப்பதை நாம் காணலாம். மேலும் காவிரி நதி மலர்களையும் முத்து மணிகளையும் அடித்துக் கொண்டு வந்து கரையில் சேர்ப்பதால், மாலையாக இருப்பதாக கருதுகின்றார் போலும். நட்டவா=கொடுமுடி தலத்தினில் நிலையாக வீற்று இருப்பவர்; அடியார்களிடத்தில் அன்பு கொண்டவனாக விளங்கும் பெருமானே, உனது திருவடிகளை புகழ்ந்து பணிந்து வணங்கும் அடியார்கள், உன்னை மறந்த நாட்களையும் இகழ்ந்த நாட்களையும், பிறப்பு எடுத்ததன் நோக்கத்தை நிறைவேற்றாது கெட்ட நாட்கள் என்று கருதுகின்றனர். நானும் அத்தகைய நாட்களை வேறாக கருதாமல், அவ்வாறே கருதுகின்றேன். தேன் கலந்த நீரினை உடைய காவிரி நதி, மலர்களை அடித்துக் கொண்டு வந்து கரையில் சேர்ப்பது, கொடுமுடி பெருமானுக்கு மாலை அணிவிப்பது போன்று காணப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பாண்டிக் கொடுமுடி திருக்கோயிலில் நிலைபெற்று விளங்கும் பெருமானே, உன்னை அடியேன் மறக்கினும் எனது நா, மறவாமல் இடையறாது சொல்லும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இட்டன் உன்னடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்

கெட்ட நாள் இவை என்றலால் கருதேன் கிளர் புனல் காவிரி

வட்ட வாசிகை கொண்டடி தொழுதேத்து பாண்டிக் கொடுமுடி

நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (7.48.3) நாவலா என்று பெருமானை அழைக்கும் சுந்தரர், தனது நா நமச்சிவாய மந்திரத்தை தவறாமல் சொல்லும் என்று கூறுகின்றார். ஓவு நாள்= நாட்கணக்கிலிருந்து நீக்கப்பட்ட நாட்கள்; காவு நாள்=பாடையில் கட்டி தூக்கிச் செல்லப் படும் நாள்; பெருமானை மறந்திட்ட நாட்களின் தன்மை பற்றி முதல் இரண்டு பாடல்களில் கூறியமையால், இந்த பாடலிலும் மேற்கண்ட நாட்களை மறந்திட்ட நாட்கள் என்பதை இவை என்ற சொல்லின் மூலம் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்ளவேண்டும்; நான்மறைகள் மற்றும் நான்மறைகளின் பொருளையும் சொல்லும் வல்லமை படைத்த பெருமானை நாவலன் என்று குறிப்பிடுகின்றார். பாவு=பரந்த; பாண்டிக்கொடுமுடி பெருமானே, உன்னை மறந்த நாட்களை, வாழ்க்கை கணக்கிலிருந்து நீக்கப் பட்ட நாட்கள் என்றும், உணர்வற்று வாழ்ந்த நாட்கள் என்றும், உயிரற்ற நாட்கள் என்றும், உயர்ந்த பாடை மேல் கட்டி தூக்கிச் செல்லப்பட்ட நாட்கள் என்றும், கருதுவேனே அன்றி அவற்றை வாழும் நாட்களாக எப்போதும் அடியேன் கருதமாட்டேன். தேன் கலந்து குளிர்ந்ததும் பரந்ததும் ஆகிய நீர்ப்பரப்பினை உடைய காவிரி நதி வந்து பாய்கின்ற பாண்டிக்கொடுமுடி திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமானே, மேலான பரஞ்சோதியே, நான்மறைகளையும் அவற்றின் பொருளையும் விரிவாக எடுத்துச் சொல்லும் வல்லமை படைத்தமையால் நாவலா என்று அழைக்கப்படும் பெருமானே, அடியேன் உன்னை மறக்கினும் எனது நா உனது திருநாமத்தை இடையறாது சொல்லும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல்

காவு நாள் இவை என்றலால் கருதேன் கிளர் புனல் காவிரிப்

பாவு தண் புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி

நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (7.48.4) வல்லவா என்று பெருமானை அழைக்கும் சுந்தரர் தனது நா நமச்சிவாய மந்திரத்தை தவறாமல் சொல்லும் என்று கூறுகின்றார். கல்லை=மலையில் கிடைக்கும் மலைப் பண்டங்கள்; இழி=கீழே இறங்குதல்; எல்லையற்ற புகழினை உடைய பெருமானே, எமது தலைவனே, எனது தந்தைக்கும் தலைவனாக விளங்குபவனே, பொன் போன்றும் மணி போன்றும் உயர்வாக கருதப்படுபவனே, மலையில் கிடைக்கும் மலைப் பண்டங்களை தள்ளிக் கொண்டு கீழே இறங்கி வந்து, செல்வம் கொழிக்கச் செய்யும் காவிரி நதியின் கரையில் இருப்பதும், நல்லவர்களால் வணங்கி துதிக்கப் படுவதும் ஆகிய சிறப்பு வாய்ந்த கறையூர் தலத்தினில் உள்ள பாண்டிக்கொடுமுடி திருக்கோயிலில் உறைபவனே, வல்லவனே, உன்னை அடியேன் மறக்கினும், எனது நா உனது திருநாமத்தை இடையறாது சொல்லும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மாமணி

கல்லை உந்தி வளம் பொழிந்திழி காவிரி அதன் வாய்க்கரை

நல்லவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி

வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

புக்கொளியூர் அவினாசி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.92.8) சுந்தரர், பெருமானைத் தவிர்த்து வேறெந்த தேவரையும், தான் கொண்டாடாத நிலையில் இருப்பதாக கூறுகின்றார். பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் அணிகலனாகவும், தான் திரிபுரத்தவர்களுடன் போருக்குச் சென்ற போது ஏந்திய வில்லின் நாணாகவும் ஏற்றுக் கொண்ட பெருமான் என்று குறிப்பிடும் சுந்தரர், தான் பிற தேவர்களை விரும்பி போற்றாத காரணத்தால், அவர்கள் எவரையும் தான் காணவில்லை என்றும் கூறுகின்றார். பல தலங்களில் பெருமானின் திருக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், எத்தனை முறை பெருமான் தனக்கு காட்சி கொடுத்தாலும் தான் மகிழ்ந்து ரசிப்பேன் என்று கூறுகின்றார். அந்தணராக பெருமான் தனக்கு திருவெண்ணெய் நல்லூர், திருவதிகை வீரட்டம், திருக்கச்சூர், குருகாவூர் செல்லும் வழியில், கூடலையாற்றூர், திருவாரூர் ஆகிய தலங்களில் காட்சி கொடுத்ததையும், திருவாரூர், சீர்காழி, திருப்பைஞ்ஞீலி ஆகிய தலங்களில் சிவபெருமானாக காட்சி கொடுத்ததையும் நினைத்துப் பார்க்கும் சுந்தரர், மீண்டும்மீண்டும் சிவபெருமானை காண வேண்டும் என்ற தனது ஆசையை இந்த பாடலில் வெளிப்படுத்துகின்றார்.

பேணாது ஒழிந்தேன் உன்னை அல்லால் பிற தேவரைக்

காணாது ஒழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் யான்

பூண் நாண் அரவா புக்கொளியூர் அவினாசியே

காணாத கண்கள் காட்ட வல்ல கறைக் கண்டனே

இதே பதிகத்தின் முதல் பாடலில் இந்த பிறவியில் மட்டுமல்ல, தான் எடுக்கவிருக்கும் எந்த பிறவியிலும் பெருமானை மறவேன் என்று சுந்தரர் கூறுகின்றார். இம்மை மறுமை என்பன, இந்த பிறவி மற்றும் அடுத்த பிறவிகளை குறிப்பது போன்று எழுமை என்ற சொல் வினைப்பயனால் இனிமேல் எழவிருக்கும் பிறவிகள் என்பதை குறிக்கும். உயிர்களை பொதுவாக ஏழு வகைப் பிறவிகளாக வகைப் படுத்துகின்றனர். தாவரம், நீரில் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, பறவைகள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் தேவர்கள் என்பனவே அந்த ஏழு வகையான பிறவிகள். பெருமானையே தனது உறவினனாக கருதி, தனது பற்றுக்கோடாக உணர்ந்து, அவனையே தியானித்து உருகுவதாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம் பெருமானையே

உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்த்து உள்ளத்தால்

புற்றாடு அரவா புக்கொளியூர் அவினாசியே

பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே

வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.86.5) சுந்தரர், பெருமானை, பரமன் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின்பாடல்கள் அனைத்தினும், சுந்தரர், பெருமானை வழிபடாத மனிதர்களை இழித்து கூறுவதை நாம் காணலாம். உள்ளம் உருகித் தொழுதால் உடனாகும்தன்மை உடைய பெருமானை, பரவிப் புகழ்ந்து போற்றாத மனிதர்கள் வேறெதனைப் போற்றி பயனடைவார்கள் என்று இகழ்ச்சியாக கூறுகின்றார். உரம்=ஞானம்; முன்னம்=விரைந்து; பரவுதல்= புகழ்ந்து போற்றுதல்; பெருமானை விடவும் உயர்ந்த பொருள் வேறு எதுவும் இல்லை என்பதால், பெருமானைப் புகழ்ந்து போற்றாத மனிதர்கள் வேறெந்த பொருளினைப் புகழ்ந்து போற்றுவார்கள் என்று சுந்தரர் வியக்கின்றார். ஞானம் என்ற சொல்லுக்கு பொருள் என்று சொல்லும் வண்ணம், ஞானமே வடிவமாக உள்ளவனும், உள்ளம் உருகி தன்னை வழிபடும் அன்பர்கள் உள்ளத்தில் உறைபவனும் பிரமனின் உடலிலிருந்து பறிக்கப்பட்ட தலையையே தனது உண்கலனாக கொண்டுள்ளவனும், சிவந்த கண்களை உடையதும் பெரியதும் ஆகிய இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளவனும், தனது அடியார்கள் விரும்பும் வரத்தினை அவர்கள் கேட்கும் முன்னரே விரைந்து அருளுபவனும், அனைவரிலும் உயர்ந்தவனும், வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானைப் புகழ்ந்து போற்றாத மனிதர்கள், போற்றுவதற்கு உரிய பொருளாக காண்பது எதனை என்று இகழ்ச்சியாக சுந்தரர் கேள்வி கேட்கும் பாடல்.

உரம் என்னும் பொருளானை உருகில் உள் உறைவானைச்

சிரம் என்னும் கலனானைச் செங்கண் மால் விடையானை

வரம் முன்னம் அருள் செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்

பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவென்னே

வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.86.1) சுந்தரர், தன்னை அடைந்தவர்களுக்கு அன்புடன் அருள் புரியும் பெருமானைச் சாராமல் வேறு எவரையேனும் சார்ந்து இருந்தால் உரிய பயன் கிடைக்காது என்பதையும் உணர்த்துகின்றார். எனவே அவ்வாறு இறைவனைத் தவிர்த்து வேறு ஒருவரைச் சார்ந்து நிற்றல், சார்பு என்று அழைக்கப்படுவது தவறு என்று கூறுகின்றார். மேலும் இந்த பாடலில் இறைவனை யாவர்க்கும் அறிவொண்ணாதவன் என்றும் வேதத்தின் பொருளாக உள்ளவன் என்றும் கூறுகின்றார். அடையில்-அடைந்தால்; இறைவன் தன்னைச் சாரும் அடியார்கள் பால் அன்பு வைத்துள்ளார் என்று சுந்தரர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இவ்வாறு இறைவனை சார்ந்து இருக்கும் அடியார்கள் இறைவனின் அன்பினைப் பெறுவதாலும், இறைவனைச் சாராதவர்கள் அவனது அன்பினை பெறமாட்டார்கள் என்பதையும் உணர்த்தும் இறைவனே சிறந்த சார்பு என்றும் கூறுகின்றார்.

விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை

அடையில் அன்பு உடையானை யாவர்க்கும் அறிவொண்ணா

மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்

சடையில் கங்கை தரித்தானைச் சாராதார் சார்பு என்னே

இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.86.2) சுந்தரர், பெருமானை உணராதவர்களின் உணர்வு, உணர்வாக மதிக்கப் படலாகாது என்று கூறுகின்றார். பூங்கழல்=அழகிய பசும் பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்கள்; தனது காலில் அணிந்துள்ள அழகிய பொன்னால் செய்யப்பட்ட கழல்கள் ஒலிக்கும் வண்ணம், தனது திருவடிகள் பெயர்ந்து பூமி அதிர ஆரவாரத்துடன் நடமாடும் பெருமான், தனது கையினில் தீப்பிழம்பினை ஏந்தியவராகவும் தான் அணிந்து கொண்டுள்ள பாம்புகள் சுழன்று ஆடும் வண்ணம் கைகளை வீசி நடமாடுகின்றார். தொடர்ந்து பறை இசைக் கருவியும் சங்கின் ஒலியும் இடைவிடாது கேட்கும் ஒலிக்கும் பின்னணியில், அடியார்கள் அல்லாது ஏனையோருக்கு தன்னை மறைத்து கொள்ளும் கள்வராகிய பெருமான் பனங்காட்டூர் தலத்தினில் உறைகின்றார். அவரது பெருமைகளை, தன்மைகளை உணர்ந்து, போற்றாத மனிதர்களின் உணர்வுகள் உணர்வாக கருதப் படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

அறையும் பூங்கழல் ஆர்ப்ப அரவாட அனலேந்திப்

பிறையும் கங்கையும் சூடிப் பெயர்ந்து ஆடும் பெருமானார்

பறையும் சங்கொலி ஓவாப் படிறன் தன் பனங்காட்டூர்

உறையும் எங்கள் பிரானை உணராதார் உணர்வு என்னே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (7.86.3) சுந்தரர் பெருமானின் புகழினை உணர்த்தாத பேச்சுகள் பேச்சுகளாக மதிக்கப்படா என்றும் கூறுகின்றார். படிறன்=வஞ்சகக் கள்வன்; உயிர்களோடு இணைந்து இருந்தாலும் உயிர்கள் காணாதபடி மறைந்து இறைவன் இருப்பதால், அவனை படிறன் என்று அழைத்தார் போலும். எண்ணார்=எண்ணற்ற; பெருமானுக்கு உகந்ததாக கருதப்படும் மலர்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த தலத்தில் உள்ள அடியார்கள், அன்றலர்ந்த பூக்களைக் கொண்டு இறைவனின் திருமேனியின் மீது தூவி இசையுடன் பொருந்திய பாடல்களை பாடி இறைவனை வணங்குகின்றார்கள் என்று சுந்தரர் கூறுகின்றார். குளிர்ந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், தழல் போன்று சிவந்த நிறத்தில் திருமேனி உடையவர் ஆவார். அவரது திருமேனி மீது, பெருமானுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படும் புதியதாக மலர்ந்த மலர்களை தூவி, தங்களது மனம் பொருந்தி வழிபடுகின்ற அடியார்களின் பாடல்கள் இடைவிடாமல் ஒலிக்கும் பனங்காட்டூர் தலத்தினில் உறைகின்ற பெருமானை, பெண்ணாகவும் ஆணாகவும் விளங்கும் தலைவனைப் பற்றி பேசாத மனிதர்களின் பேச்சு பேச்சாக மதிக்கப் படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

தண்ணார் மதி சூடித் தழல் போலும் திருமேனிக்கு

எண்ணார் நாண்மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள்

பண்ணார் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர்

பெண் ஆண் ஆய பிரானைப் பேசாதார் பேச்சு என்னே

மற்றோர் பற்று இங்கு அறியேன் என்று திருவாசகம் போற்றித் திருவகவலில் குறிப்பிட்டு, மணிவாசகர், பெருமானைத் தவிர்த்து தனக்கு பற்றுக்கோடு வேறெவரும் இல்லை என்று குறிப்பிடுகின்றார். திருச்சதகம் பதிகத்தின் இரண்டாவது பாடலிலும் (8.5.2), மணிவாசக அடிகளார், பிற தெய்வம் எதனையும் மனதினாலும் நினையேன் என்றும் கூறுகின்றார். பெருமானின் கருணையால் தனக்கு ஏது கிடைத்தாலும், நரகம் புகுவதாக இருந்தாலும், பெருமானை இகழாமல் ஏற்றுக் கொள்வேன் என்று சொல்லும் மணிவாசக அடிகளார், பெருமானின் திருவருளை,. இந்திரன் மால் அயன் ஆகியோரின் வாழ்வினை விடவும் சிறந்ததாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறுகின்றார். மேலும் பெருமானின் அடியார்களுடன் சேர்ந்து இருப்பதால், தனக்கு நரகம் கிடைப்பதாக இருந்தாலும் அதற்காக கவலைப்பட மாட்டேன் என்றும் கூறுகின்றார். நரகம் புகினும் மற்றும் குடி கெடினும் என்ற தொடர்கள் சிறப்பும்மைத் தொகையுடன் இருப்பதால், பெருமானைப் போற்றி வணங்கும் அடியார்களின் குடிகள் கெடாது என்பதையும் பெருமானின் அடியார்களின் சேர்க்கை நரகத்தைப் பெற்றுத் தாராது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடி கெடினும்

நள்ளேன் உனது அடியாரொடு அல்லால் நரகம் புகினும்

எள்ளேன் உனது திருவருளாலே இருக்கப் பெறின் இறைவா

உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே

திருவாசகம் ஆசைப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் (8.25.10) மணிவாசக அடிகளார், உலகியல் சிற்றின்பங்களில் ஆழ்ந்திருக்கும் தன்னை, அந்த மாயையிலிருந்து விடுவிக்கும் துணை ஏதும் காணாமல் தவிப்பதாக கூறுகின்றார். பெருமான் தனக்குத் துணையாக இருந்து கொண்டு, தன்னை அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் என்று வேண்டுகின்றார். வெகுளி=மயக்கம்; வஞ்சம் என்ற சொல் வெஞ்சம் என்று திரிந்தது போலும். தங்களது கண் பார்வையினால், ஆடவரை மயக்கத்தில் ஆழ்த்தும் பெண்கள் என்று கூறுகின்றார். ஆடவர்கள் அறியாத வண்ணம் அவர்களது மனதினை கொள்ளை கொள்ளும் கண்கள் செய்யும் வஞ்சகத்தை அடிகளார் இங்கே குறிப்பிடுகிறார் போலும். வஞ்சக எண்ணத்துடன், மீன் போன்று அழகிய கண்கள் கொண்ட மகளிர் விரிக்கும் வலையில் அகப்பட்டு தான், துன்பத்தில் ஆழ்ந்ததாக குறிப்பிடும் அடிகளார், ஞானமே உருவான பெருமானே என்று அழைத்து, தனது மயக்கத்தை தெளிவிக்கும் உரிய துணை இல்லாமல் வருந்துவதாக கூறுகின்றார். பஞ்சினும் மெல்லிய பாதங்களை உடைய அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அழைக்கின்றார். பெருமானே, பவளம் போன்ற உனது அழகிய திருவாயால் அஞ்சேல் என்று சொல்லியும் அபயகரம் காட்டியும் தன்னைப் பெருமான் தேற்ற வேண்டும் என்று தான் ஆசைப் படுவதாக வேண்டுகின்றார்.

வெஞ்சேல் அனைய கண்ணார் தம் வெகுளி வலையில் அகப்பட்டு

நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே நானோர் துணை காணேன்

பஞ்சேர் அடியாள் பாகத்து ஒருவா பவளத் திருவாயால்

அஞ்சேல் என்ன ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே

வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் (8.28.10) மணிவாசகர், பெருமானை அன்றி வேறு எவரையும் தனக்குத் துணையாக கருத மாட்டேன் என்றும் அவரைத் தவிர்த்து வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் கருணையே உருவமாக உள்ள பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார். பண்டைய நாளிலிருந்து இடைவிடாது தொடர்ச்சியாக அடியார்களுக்கு அருள் புரிந்து வரும் அன்னையை, குற்றம் ஏதும் இல்லாதவள் என்று அடியார்கள் புகழ்வதாக அடிகளார் கூறுகின்றார், இனியும் தொடர்ந்து வாழ்வதில் தனக்கு விருப்பம் ஏதும் இல்லாமையால், பெருமானே நீ என்னை விரைவில் அழைத்துக் கொள்வாயாக என்று விண்ணப்பம் வைக்கும் பாடல். செழுமதி அணிந்தாய் என்று குறிப்பிட்டு, அழியும் நிலையில் இருந்த சந்திரனுக்கு உதவி புரிந்து காத்ததைப் போன்று, மீண்டும்மீண்டும் பிறப்பெடுத்து பிறப்பிறப்புச் சுழற்சியில் ஆழ்ந்து அவதிப்படும் தன்னையும் ஆட்கொண்டு, பிறவிக் கடலிலிருந்து கரையேற்ற வேண்டும் என்று வேண்டுகின்றார். வேறெந்த தெய்வத்தையும் தனக்கு தகுந்த துணையாக கருதாமலும், அவர்கள் எவரையும் துதிக்காமலும், தொடர்ந்து பெருமானையே வழிபட்டு வரும் தனக்கு இனியும் உயிர் வாழ்வதில் விருப்பம் இல்லை என்பதால், தன்னை வாவென்று அழைத்து முக்தி உலகினுக்கு பெருமான் உடனழைத்துச் செல்ல வேண்டும் என்று வேண்டுகின்றார்.

பழுது இல் தொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்

செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய்

மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் (8.28.4) மணிவாசக அடிகளார் வல்லை வாளரக்கர் புரம் எரித்தானே என்று பெருமானை அழைக்கின்றார். வல்லை=மிகவும் விரைவாக; நமது வாழ்நாள் எப்போது முடிவுக்கு வரும் என்பதை நாம் எவரும் அறிய மாட்டோம். இறைவனால் முன்னமே குறிக்கப் பட்டஅந்த நாளின் முன்னர், நமது வாழ்வினை முடித்துக் கொள்ள நாம் விரும்பினாலும், நம்மால் அவ்வாறு செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம். எனவே தான் அடிகளார் இறைவனிடம் வேண்டுகின்றார். இந்த வேண்டுகோள் மூலம் இரண்டு உதவிகளை அடிகளார் எதிர்பார்க்கின்றார். முதலாவது, இந்த உலகில் தொடர்ந்து வாழ விருப்பம் இல்லாத தனது வாழ்நாளை முடிப்பது; இந்த பிறவியை முடித்துக் கொள்வதுடன் இனியும் எந்த பிறவியும் எடுக்காத நிலை தனக்கு ஏற்பட வேண்டும் என்பதே இரண்டாவது விருப்பம். பெருமானின் திருவடிகளைச் சென்றடைந்து முக்தி நிலை அடைந்தால் தானே பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து எவரும் தன்னை விடுவித்துக் கொள்வது என்பது நடைபெறும். எனவே தான் இரண்டாவது கோரிக்கையாக, பெருமான் வருக என்று சொல்லி, தான் இருக்கும் முக்தி உலகத்திற்கு தன்னையும் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று விண்ணப்பம் வைக்கின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானைத் தவிர்த்து, தனக்கு பற்றுக்கோடு வேறேதும் இல்லை என்று இறைவனுக்கு அடிகளார் உணர்த்துவதையும் நாம் இந்த பாடலில் காணலாம். வல்லை=மிகவும் விரைவாக; வாளரக்கர்=வாளேந்தி சண்டையிடும் அரக்கர்கள்; வல்லையாய்=வலிமை உடையவனாக, திருமாலும் பிரமனும் இருந்த போதிலும் அவர்கள் இருவரும் தனது அடியையும் முடியையும் காண முடியாத வண்ணம், நெடிதுயர்ந்த வல்லமை இங்கே குறிப்பிடப் படுகின்றது.

வல்லை வாளரக்கர் புரம் எரித்தானே மற்று நான் பற்றிலேன் கண்டாய்

தில்லை வாழ்க் கூத்தா சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

எல்லை மூவுலகும் உருவி அன்றி இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை

வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

இந்த பதிகத்தின் மற்றொரு பாடலில் (8.28.3) மணிவாசக அடிகளார், பெருமானின் திருப்பாதங்களைத் தவிர்த்து வேறெதையும் பற்றுக்கோடாக கொள்ள மாட்டேன் என்று கூறுகின்றார். பெருமானுடன் தான் ஊடுவதாக அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். ஊடுதல் என்ற செயல் எவரிடத்தில் தமக்கு உரிமை உள்ளதோ அவர்களிடம் மட்டும் செய்யப்படுவது. ஊடுவது உன்னோடு என்ற தொடர் மூலம், பெருமான் தனக்கு மிகவும் நெருங்கியவன் என்றும் பெருமான் பால் தான் கோபம் கொண்டு, ஊடுவதற்கும் தனக்கு உரிமை உள்ளது என்றும் அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். எதனால் தனக்கு அத்தகைய உரிமை வந்தது என்பதற்கு காரணத்தையும் கூறுகின்றார். பெருமான், தானே தன்னைத் தேடி வந்து ஆட்கொண்ட செயல், பெருமான் தன் பால் வைத்த கருணையின் வாயிலாக நிகழ்ந்தது என்பதையும் அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பெருமானோடு ஊடிய தான், ஊடல் தீர்ந்த பின்னர், பெருமானுடன் இணைந்து மகிழ்வதாகவும் சொல்லும் அடிகளார், பெருமான் பற்றி தான் அறிந்து கொள்ளும் தகவல்கள், தனது உயிருக்கும் உறுதி பயப்பதாக கூறுகின்றார். உறுதி என்று பெருமானது கருணையினால் உயிர் அடையவிருக்கும் வீடுபேறு தன்மையை உணர்த்துகின்றார். அந்த பேறு தனக்கு வாய்க்கும் என்று ஏங்குவதாகவும், தனக்கு இந்த உடலைச் சுமந்து கொண்டு உயிர் வாழ்வதில் சிறிதேனும் விருப்பம் இல்லை என்றும் பெருமானிடம் விண்ணப்பம் வைக்கின்றார். கற்புடைய மகளிர்க்கு ஊடுவதும் உவப்பதும் தனது தலைவனிடம் மட்டுமே நடைபெறும் நிகழ்ச்சிகள்; ஊடுவதையும் உவப்பதையும் குறிப்பிடுவதன் மூலம், தன்னை தலைவியாகவும் பெருமானைத் தலைவனாகவும் அடிகளார் உருவகிக்கின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இவ்வாறு ஊடியும் உகந்தும் மகிழ்கின்ற தலைவியின் மனதினில் உறுதி பிறக்குமாறு செய்வது தலைவனின் கடமை அல்லவா. அந்த கடமையை தலைவனாகிய பெருமான் நிறைவேற்றி தன்னை நிலையான மகிழ்ச்சியில் ஆழ்த்துவான் என்று அடிகளார் எதிர்பார்க்கின்றார்.

பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்

தேடி நீ ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

ஊடுவது உன்னோடு உவப்பதும் உன்னை உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி

வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

வாழாப்பத்து பதிகத்தின் ஐந்தாவது பாடலை (8.28.05) நாம் இப்போது சிந்திப்போம். தனது உடல், மனம் மொழி, கேட்கும் செய்திகள், சுவாசிக்கும் காற்று பார்க்கும் பொருட்கள் அனைத்தும் சிவமயமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் அடிகளார், அந்த தன்மையில் அவை இல்லாமல் இருப்பதை குறிப்பிட்டு, அவற்றை அடக்கும் ஆற்றல் தனக்கில்லை என்று உணர்த்துகின்றார். எனவே தான் தொடர்ந்து உயிர் வாழ்வதால் தனக்கு பயனேதும் இல்லை என்று இறையிடம் விண்ணப்பம் வைக்கும் அடிகளார், தன்னை இறைவன் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றார். திருப்பெருந்துறையில் பெருமான் தன்னை ஆட்கொண்டு அருள் புரிந்த செய்கை உண்மையில் நிகழ்ந்த போதிலும், தனது இந்திரியங்கள் தன் வசமின்றி திரிவதை குறிப்பிடும் அடிகளார், அந்த நிலை தான் தன்னை தொடர்ந்து மண்ணின் மேல் வாழ வழி வகுக்கின்றது என்று கூறுகின்றார். பண்ணின ஒத்து இனிய மொழி கொண்ட பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமானைத் தவிர்த்து மற்று எவர் பேரிலும் தனக்கு பற்று இல்லை என்று கூறுகின்றார். .

பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்

திண்ணமே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

எண்ணமே உடல் வாய் மூக்கொடு செவி கண் என்றிவை நின் கணே வைத்து

மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

குழைத்த பத்து பதிகத்தின் பாடலில் (8.33.6) மணிவாசகர், இறைவனிடத்தில் என்றும் அன்புடன் இருப்பதே தான் வேண்டும் பரிசு என்று குறிப்பிடுகின்றார். தான் விரும்பும் பொருட்களால் தனக்கு நன்மை ஏற்படுமா அல்லது தீமை ஏற்படுமா என்பதை மனித மனம் எளிதில் உணர முடிவதில்லை. ஆனால் இதனை நன்கு அறிந்த இறைவன், நமக்கு தீங்கினை விளைவிக்கும் பொருட்களை நமக்கு உடனே தருவதில்லை. ஆனால் இந்த நிலையை புரிந்து கொள்ளாத நாம், இறைவனிடம் மறுபடியும் வேண்டிவேண்டி, அவன் நமக்குத் தவிர்த்துள்ள பொருட்களை மன்றாடி கேட்கின்றோம். இறைவனும் நாம் மீண்டும்மீண்டும் வேண்டுவதால் நமக்கு அந்த பொருட்களைத் தந்து அருள் புரிகின்றான். இந்த கருத்தையே பாடலின் முதல் அடியில் அடிகளார் கூறுகின்றார். இவ்வாறு ஏன் நமக்கு தீமை பயக்கக்கூடிய பொருட்களை, அதன் தன்மையை அறிந்திருந்தும் இறைவன் நமக்கு அளிக்கின்றான் என்ற ஐயம் நமக்கு எழலாம். சற்று சிந்தித்தால் நமக்கு காரணங்கள் புலன்படும். நாம் வேண்டும் பொருள் கிடைத்ததும், தொடக்கத்தில் மகிழ்ச்சியுடன் நாம் அதனை அனுபவித்தாலும் பின்னர் அந்த பொருளால் தீமை விளையும் போது, நமது அனுபவம் விரிகின்றது. நாமும் இந்த அனுபவத்தின் பயனால், நாம் வேண்டும் பொருட்கள் நமக்கு அளிக்கவிருக்கும் நன்மை தீமைகளை ஆராய முற்படுகின்றோம். இரண்டாவது காரணம், நம்மைப் பற்றியுள்ள வினையாகும். நாம் தீமையை அனுபவிக்க காரணமாக உள்ள வினை நம்மை, அத்தகைய பொருட்களின் மீது நாட்டம் ஏற்படும் வகையில் நம்மை உந்துமேயானால், நமது மனம் அதனை நாடத் தான் செய்யும். பொருளின் உண்மை நிலையை அறியாமல் நாம் விரும்பும் போது, இறைவனும் அந்த பொருட்களை நமக்கு அளித்து, நமது அனுபவம் விரிவடைய உதவுவதுடன், ஒரு வகையில் நமது வினையின் ஒரு பகுதி கழியவும் உதவி செய்கின்றான். இந்த காரணங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை இது தான். நாம் விரும்பும் பொருள் நமக்கு கிடைக்காவிடில், அதற்காக வருத்தம் அடையாமல், நமக்கு வரவிருக்கும் தீமை தவிர்க்கப் பட்டுள்ளது என்பதை உணர்ந்து நாம் மகிழ்ச்சி அடையவேண்டும். இவ்வாறு நாம் விரும்பிய பொருள் கிடைப்பினும் கிடைக்காவிடினும் ஒரே தன்மையில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்தால் நமக்கு பொருள் கிடைக்காத ஏமாற்றமும் இராது, எந்த பொருளின் மீது நமக்கு பற்றும் ஏற்படாது.

அடுத்த அடியில் அடியையும் முடியையும் காண வேண்டுமென்று விரும்பிய அயனுக்கும் மாலுக்கும் அரியவனாக இருந்த பெருமான் தானே வந்து தன்னை ஆட்கொண்டதாக அடிகளார் குறிப்பிடுகின்றார். திருமாலுக்கும் பிரமனுக்கும், பெருமானது அடியையும் முடியையும் காண வேண்டுமென்ற விருப்பம் இருந்த போதிலும், தங்களது முயற்சியில் ஈடுபடும் முன்னர், பெருமானது அடியையும் முடியையும் காண்பதற்கான தகுதியைப் பெறுவதற்கு அவர்கள் முயலவில்லை. எனவே தான், தற்போதம் நீங்காத நிலையில் அவர்கள் விரும்பியது அவர்களுக்கு கிடைக்கவில்லை. மேலும் பிரமனும் திருமாலும் எதற்காக இறைவனது அடியையும் முடியையும் காண வேண்டும் என்று விரும்பினார்கள்; தங்களது மேலாண்மை அடுத்தவர்க்கு உணர்த்தப்பட்டு தன்னை உயர்ந்தவன் என்று அனைவரும் கருத வேண்டும் என்ற நோக்கத்துடன் தானே. ஆனால் அடிகளாரோ குதிரை வேண்டும் என்று அரசன் கட்டளையிட்ட போது, தான் வேறு எவரையும் அனுப்பாமல், தானே குதிரைகள் பெற்று வர தொண்டித் துறைமுகம் செல்வதற்கு உடன்பட்டார். இறைவனைக் காண வேண்டும் என்றோ இறைவனது உபதேசம் கேட்க வேண்டும் என்றோ அவர் விரும்பாவிடினும், அடிகளாருக்கு அருள்வதற்கு இறைவன் திருவுள்ளம் கொள்கின்றான். தொண்டித் துறைமுகம் செல்லும் வழியில் திருப்பெருந்துறையில், தனது சீடர்களுக்கு விளக்கம் சொல்லும் ஆசானாக காட்சி அளித்த பெருமான், தானே வந்து ஆட்கொண்டதை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். இறுதி அடிக்கு இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். முந்தைய அடியில் இறைவனே வந்து தன்னை ஆட்கொண்டதை குறிப்பிடும் அடிகளார் அவ்வாறு இறைவன் விருப்பத்துடன் தன்னை ஆட்கொண்டதை தானும் விரும்புவதாக சொல்கின்றார் என்று பொருள் கொள்ளலாம். இறைவனுக்கு ஆட்பட்டு அடிமையாக வாழ்வதே தனது விருப்பம் என்று அடிகளார் கூறுவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த இரண்டு விதமான பொருளுக்கும் வேறுபாடு அதிகமாக இல்லை என்பதையும் நாம் உணரலாம்.

வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய்

வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் உன்னை வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உந்தன் விருப்பு அன்றே

திருவாசகம் எண்ணப்பதிகம் பதிகத்தின் பாடலில் (8.44.2), மணிவாசக அடிகளார், பெருமானை விட்டு ஒரு பொழுதும் தன்னால் பிரிந்திருக்க முடியாது என்று கூறுகின்றார். பெருமானைப் பிரிந்து தன்னால் (அடிகளாரால்) ஒரு பொழுதும் இருக்க முடியாது என்பதை நன்கு அறிந்து கொண்ட பெருமான்,தன்னை விட்டு பிரியலாமா என்று உரிமையுடன் கேட்பதை நாம் உணரலாம். திருப்பெருந்துறை தலத்தில் குருந்த மரத்தின் அடியில் அந்தணனாக தோன்றி ஆட்கொண்ட போதே, தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் பெருமானுக்கு அர்ப்பணித்த அடிகளார், இந்த பாடலில், பெருமானுக்கு அடிமையாக இருந்து கொண்டு தொண்டு செய்யும் உரிமை தமக்கில்லை என்று கூறுகின்றார். தனக்கு குருவாக தோன்றி, உபதேசம் செய்த பெருமானுக்கு தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அடிகளார் சமர்ப்பித்தார் என்பதில் எந்த விதமான ஐயமும் நமக்கு இல்லை. எனினும், ஆட்கொண்ட சில நேரத்தில் தன்னுடன் இருந்த சீடர்களையும் அழைத்துக் கொண்டு குருநாதர் மறைந்ததால், தான் அடிமையாக பணி செய்வதற்கு தயாராக இருந்த போதிலும், பெருமான் தன்னை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தான், தன்னை உடன் அழைத்துச் செல்லாமல், மறைந்து விட்டார் என்ற முடிவுக்கு அடிகளார் வந்தார் போலும். அதனால் தான் உனக்கு அடிமை உரியேன் அல்லேன் என்று கூறுகின்றார். எனினும் அவரது மனம் பெருமானால் புறக்கணிக்கப்பட்ட இந்த நிலையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தான் பெருமானைப் பிரிந்து இருப்பதை தான் தாங்க முடியாமல் வருந்துவதாக இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பெருமானின் திருவுளக் கருத்து இன்னது என்பதை அறிய முடியாமல் தான் இருக்கும் நிலையையும் உணர்த்துகின்றார். இந்த பின்னணியில் தான், பெருமான் தன்னை ஆட்கொண்டதை நினைவு கூரும் அடிகளார், அன்று அருள் புரிந்த தன்மை பொய்யோ என்ற கேள்வியை பெருமானிடம் கேட்கின்றார். எங்கோ தொண்டித் துறைமுகம் நோக்கி அரசுப் பணியின் நிமித்தமாக சென்று கொண்டிருந்த தன்னை, தானே வலிய திருப்பெருந்துறை தலத்திற்கு அழைத்து, தன்னை கண்டு கொள் என்று உணர்த்தியும், திருவடி தீட்சை அளித்தும், உன்னை என்றென்றும் பிரியேன் என்று சொன்னதும் பொய்யாக மாறி விட்டதே என்று அடிகளார் அங்கலாய்க்கின்றார். ஆனால் ஏன் பெருமான் இவ்வாறு செய்தார் என்பதை நாம் சற்று சிந்தித்தால் புரிந்து கொள்ளலாம். பெருமானின் அருளால் சிவானந்தம் கைவரப் பெற்ற அடிகளார், தாம் பெற்ற இன்பத்தை உலகத்தவர்க்கு திருவாசகப் பாடல்கள் மூலம் உணர்த்தி, பலரும் அந்த சிவானந்த உணர்வினை பெறவேண்டும் என்ற ஆசையினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே பெருமானின் திருவுள்ளக் கருத்தாக இருந்தது என்பதை நாம் உணர்கின்றோம்.

உரியேன் அல்லேன் உனக்கு அடிமை உன்னைப் பிரிந்து இங்கு ஒரு பொழுதும்

தரியேன் நாயேன் இன்னதென்றறியேன் சங்கரா கருணையினால்

பெரியோன் ஒருவன் கண்டு கொள் என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்

பிரியேன் என்றென்று அருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே

திருவாசகம் திருப்புலம்பல் பதிகத்தின் பாடலில் (8.39.2) மணிவாசக அடிகளார், பெருமானைத் தவிர்த்து தனக்கு உற்ற துணையாக வேறு எவரையும் அறியேன் என்று கூறுகின்றார். தயங்கு= விளங்கும்; மழ=இளமையான; தவத்தில் ஈடுபடுவோர் அனைவரிலும் உயர்ந்தவனாக இருப்பதால், சடையான் என்று அழைக்கப் படுபவனே, பிரளயத் தீயினில் நின்று நடனம் ஆடுபவனே, தனது கரத்தில் பொருந்தியிருக்கும் சூலப் படையை உடையவனே, அனைத்து ஒளிகளிலும் உயர்ந்த ஒளியாக இருப்பவனே, அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இருப்பவனே, இளமை வாய்ந்த வெண்மை நிறத்து இடத்தைத் தனது வாகனமாகக் கொண்டவனே, விரிந்து பரந்த சோலைகளால் சூழப்பட்ட பெருந்துறை தலத்தில் உறையும் பெருமானே, என்னை உடைமையாக உடையவனே, அடியேன் உன்னை அல்லாது வேறு எவரையும் உற்ற துணையாக கருத மாட்டேன் என்று மணிவாசக அடிகளார் பெருமானிடம் சொல்லும் பாடல். மற்ற சோதிகள் அனைத்தும் புறவிருளை போக்க மட்டுமே நமக்கு உதவும். ஞானமே உருவாக இருக்கும் பெருமான் நமது அக இருளை போக்குவதால், பரஞ்சோதி என்று மிகவும் பொருத்தமாக அழைக்கப் படுகிறான். தனக்கு சிறந்த துணைவனாக இருக்கும் பெருமான் தனது எஜமானனாகவும் இருக்கின்றான் என்பதை உடையான் என்ற சொல் மூலம் விளக்குகின்றார். துணையாக வரும் பெருமான், சிறந்த சூலப் படையை வைத்திருப்பதால் அவனை விடவும் உற்ற துணை வேறு எவரும் இருக்க முடியாது என்பதை உணர்த்துகின்றார். உயிருடன் பிணைந்துள்ள மலங்களை அறுத்து எறிவதற்காகத் தானே பெருமான், சூலப் படையை வைத்திருக்கின்றான்.

சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச் சூலப்

படையானே பரஞ்சோதீ பசுபதீ மழ வெள்ளை

விடையானே விரிபொழில் சூழ் பெருந்துறையாய் அடியேன் நான்

உடையானே உனை அல்லாது உறுதுணை மற்று அறியேனே

இதே பதிகத்தின் முதல் பாடலில் (8.39.1) பெருமானின் திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதனையும் புகழ மாட்டேன் என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். நெறி=நிலை, இயல்பு; அழகிய தாமரை மலரில் உறைகின்ற பிரமனும் திருமாலும் அறிய முடியாத இயல்பினை உடைய பெருமானே, கோங்க மலர் போன்று அழகாக குவிந்து காணப்படும் மார்பகங்கள் உடைய பிராட்டியைத் தனது உடலில் ஒரு கூறாகக் கொண்டவனே, திருநீற்றில் நீராடியது போன்று உடலெங்கும் சாம்பல் பொடி பூசியவனே, உயர்ந்த மதில்களைக் கொண்ட திருவாரூர் தலத்திற்கு உரியவனே, அடியேனாகிய நான் உனது தாமரை மலர்கள் போன்று மென்மையானதும் வீரக்கழல்கள் அணிந்ததும் ஆகிய திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதனையும் புகழ மாட்டேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பூங்கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே

கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா வெண்ணீறாடி

ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே அடியேன் நின்

பூங்கழல்கள் அவை அல்லாது இவை யாதும் புகழேனே

பதினோராம் திருமுறை பொன் வண்ணத் திருவந்தாதி பதிகத்தின் பாடலில் (11.6.40) சேரமான் பெருமாள் நாயனார், பெருமானைத் தவிர்த்துத் தனக்கு பற்றுக்கோடு ஏதும் இல்லை என்று கூறுகின்றார். களைகண்=பற்றுக்கோடு; மூப்பு என்ற சொல் மூப்படைந்து இறக்கும் நிலையை குறிக்கின்றது. மூப்பொழித்த நிலை என்று பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்றதை உணர்த்துகின்றது என்று பொருள் கொள்வது சிறப்பு. மூப்பொழித்த கனி என்ற குறிப்பு, அதியமான் அவ்வை பிராட்டிக்கு தந்த நெல்லிக் கனி போன்று முதுமையை தடுக்கும் பெருமான் என்று பொருள் கொள்வதும் சிறப்பே, தலை சிறந்த முனிவனே, நறுமணம் வீசும் கொன்றை மாலையை அணிந்தவனே, என்னை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்த கனியே, வீரக்கழல் அணிந்த உனது திருவடிகள் அல்லாது வேறு பற்றுக்கோடு எனக்கு இல்லை; உயிர்க்கு நன்மை பயக்கும் பெரிய தவம் செய்ய இயலாமல், எனது ஐந்து பொறிகள் அளிக்கும் துன்பங்களை நினைத்துக் கொண்டே வாழும் எனது அவல நிலையை, உன்னிடம் அல்லாது வேறு எவரிடம் முறையிடுவேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

முனியே முருகலர் கொன்றையினாய் என்னை மூப்பொழித்த

கனியே கழலடி அல்லால் களைகண் மற்று ஒன்றும் இலேன்

இனிய இருந்தவம் செய்யேன் திருந்த அஞ்சே நினைந்து

தனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கு இனிச் சாற்றுவனே

திருக்கயிலாய ஞான உலா பதிகத்தின் பாடலில் சேரமான் பெருமாள் நாயனார், தனது கண்கள் பெருமானை அல்லாது காணாது, செவிகள் பெருமானின் புகழிசை அல்லாது கேட்காது, அவனது திருவடிகள் அல்லாது கை தொழாது என்று கூறுகின்றார்.

கண் அவனை அல்லாது காணா செவி அவனது

எண்ணரும் சீர் அல்லது இசை கேளா அண்ணல்

கழலடி அல்லது கை தொழா

கயிலை மலை சென்றடைந்த காரைக்கால் அம்மையாரிடம் இறைவன், அம்மையே நீ வேண்டும் வரம் யாது என்று கேட்டபோது, சிறிதும் தயக்கம் ஏதுமின்றி, இறைவனிடத்தில் என்றும் மாறாத விருப்பம் தனக்கு இருக்க வேண்டும் என்று அம்மையார் வரம் கேட்டதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இறவாத=மறையாத; அம்மையார் இறைவனிடம் கேட்ட வரங்களாவன: இந்தப் பிறவியில் நான் உன்னிடம் வைத்துள்ள அன்பு, நான் இறக்கும் வரையில் இருக்க வேண்டும்; அடுத்த பிறவி என்பது இல்லாத நிலை; ஒருக்கால் அடுத்த பிறவி நேரிடுமாயின் அப்போதும் உன்னை என்றும் நினைந்து மறவாமல் இருக்கும் நிலை; உனது திருவடிக்கீழ் இருந்து உனது நடனத்தைப் பார்த்துக் கொண்டே நான் மகிழ்ந்து பாடும் நிலை.

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாட

அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்

பொழிப்புரை:

விளாம்பழம் போன்று தேனாக இனிக்கும் பலவகையான பயன் தரும் மரங்களின் பழங்களையும், முதிர்ந்த மூங்கிலிலிருந்து உதிரும் முத்துக்களையும் நதி நிறையும் வண்ணம் அடித்துக் கொண்டு வரும் காவிரி நதியின் வடகரையில் உள்ள மாந்துறை தலத்தில் உறையும் இறைவனை, துளசி மாலையை விரும்பி ஏற்றுக் கொள்ளும் திருமாலின் மகனும், ஐந்து விதமான மலர்களை தனது கணைகளாக பயன்படுத்தி உயிர்களிடம் வேட்கையை ஏற்படுத்துபவனும் ஆகிய மன்மதனின் உடல் எரிந்து அழியும் வண்ணம் தனது நெற்றிக் கண்ணை விழித்த இறைவனை, நீண்ட கூந்தலை உடையவளும் அழகாக ஒளி வீசும் நெற்றியை உடையவளும், என்றும் அரிவைப் பருவத்து பெண் போன்று இளமையாக இருப்பவளும் ஆகிய அன்னையைத் தனது உடலின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய இறைவனைத் தவிர்த்து வேறு ஒருவரையும் அடியேன் அறியேன்.

பாடல் 3:

செம்பொனார் தரு (2.110) பாடல் 2 தொடர்ச்சி மற்றும் பாடல் 3 (திதே 0819)

செம்பொனார் தரு (2.110) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0820)

செம்பொனார் தரு (2.110) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0821)

செம்பொனார் தரு (2.110) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0822)

செம்பொனார் தரு (2.110) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0823)

செம்பொனார் தரு (2.110) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0824)

செம்பொனார் தரு (2.110) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0825)

செம்பொனார் தரு (2.110) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0826)

கோடு தேன் சொரி குன்றிடைப் பூகமும் கூந்தலின் குலை வாரி

ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்

வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும்

கேடிலா மணியைத் தொழல் அல்லது கெழு முதல் அறியோமே

விளக்கம்:

முதல் பாடல் மூலம் அனைவராலும் தொழப்படும் பெருமான் என்று அறிந்து கொண்ட நாம், சிவபெருமான் இருக்கையில் மற்ற தெய்வங்களை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை இரண்டாவது பாடல் மூலம் உணர்கின்றோம். நாம் மற்ற தெய்வங்களை உணராத நிலையில் அவர்களைத் தொழுவதும் தவிர்க்கப் படுகின்றது அல்லவா. எனவே தான் பெருமானை வழிபடுவதைத் தவிர்த்து சிறந்த செயல் ஏதுமில்லை என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெருமானது திருவடிகளைத் தவிர்த்து வேறு எதனையும் தொழாத அறிவு உடையவனாக தான் இருப்பதாக கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது அவர் அருளிய மற்றொரு பதிகத்தின் முதல் பாடலை (3.44.1) நினைவூட்டுகின்றது. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு, தென்முகக் கடவுள் வடிவத்தில் அறம் உரைத்த பெருமானை அன்றி வேறு எந்த தேவரையும் நல்லார் பேணார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நல்லார் என்பதற்கு உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்த ஞானியர் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. ஞானியர்கள் போற்றிப் பேணாத தெய்வங்களை தானும் போற்ற மாட்டேன் என்று பதிகத்தின் கடை அடியில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். கல்லால மரத்தின் நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறநெறி உணர்த்திய தென்முகக் கடவுளாகிய சிவபெருமானை அன்றி மற்றொரு தெய்வத்தை, நல்லவர்களாகிய சான்றோர்கள் பேணார். நாமும் அத்தகைய நல்லவர்களை பின்பற்றி சிவபெருமானைத் தவிர்த்து வேறு எந்த தெய்வத்தையும் போற்றாது, வணங்காது இருப்போமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கல்லால் நீழல்

அல்லாத் தேவை

நல்லார் பேணார்

அல்லோம் நாமே

திருஞானசம்பந்தர் தான் அருளிய ஆமாத்தூர் பதிகத்தின் (2.44.10) பாடலில், ஈசனைத் தினமும் நினையாதார்களின் நெஞ்சம் நெஞ்சமாக கருதப்படாது என்று கூறுகின்றார். நித்தல் என்ற சொல் எதுகை கருதி நிச்சல் என்று மருவியுள்ளது. பெய்தல்=இடுதல்; பின் சார்தல்=பின்னே வருதல். கொச்சை=இழிவான; பிச்சைப் பெருமானாக (பிக்ஷாடனர்) வேடம் தரித்து தாருகாவனம் சென்ற சிவபிரானின் பின்னர், முனிவர்களின் மனைவியர் தொடர்ந்து வந்த செய்தி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. புலால் நாற்றம் வீசிய தோல் என்று குறிப்பதன் மூலம் அப்போது தான் உரித்த தோல் என்று உணர்த்தப் பட்டுள்ளது. யானையின் பச்சைத் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நம்பப்படுகின்றது. ஆனால் சர்வ வல்லமை படைத்த ஈசனை எந்த கேடும் அணுகமுடியாது. மதயானையின் தோல் உரிக்கப் படுவதை நேரில் கண்ட உமாதேவி அச்சம் அடைந்த நிகழ்ச்சியும் இங்கே கூறப்பட்டுள்ளது.

பிச்சை பிறர் பெய்யப் பின் சாரக் கோசாரக்

கொச்சை புலால் நாற ஈரிருவை போர்த்து உகந்தான்

அச்சம் தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்

நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே

பெருமானைப் பற்றி பேசுவதன்றி வேறு பேச்சு இல்லாதவர்களாக இருப்போம் என்று நமக்கு அறிவுரை கூறும் திருஞானசம்பந்தர், இன்னும் ஒரு படி மேலே சென்று பெருமானின் புகழினைப் பேசாத நா நாவல்ல என்று கூறுவதை நாம் ஆமாத்தூர் பதிகத்தின் பாடலில் (2.44.7) காணலாம். யாவராலும் ஒழிக்கப்படாத வலிமை உடையவனாக திகழும் கூற்றுவனின் வலிமையை அடக்கி வீழ்த்தியவனும், மலைமகள் வேறு தான் வேறு என்றில்லாமல் இருவரும் ஒன்றே என்பதை மாதொருபாகன் வேடத்தின் மூலம் உலகினுக்கு உணர்த்தியவனும், என்றும் தணியாத தீயினில் நின்று ஆடுபவனும் ஆகிய இறைவன் என்று பெருமானின் சிறப்பினை திருஞான சம்பந்தர் பேசுகின்றார்.

மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை

வேறாக நில்லாத வேடமே காட்டினான்

ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்

கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.4.9) திருஞான சம்பந்தர், தான் பசித்துக் களைத்திருக்கும் நேரத்திலும் உறங்கும் நேரத்திலும் பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதனையும் நினையேன் என்று கூறுகின்றார். ஒண் என்றால் ஒளி வீசும் தன்மை வாய்ந்த என்று பொருள். பசியால் களைத்து இருக்கும் நிலையில் எவருக்கும் எப்போது உணவு கிடைக்கும், எப்போது தனது களைப்பு நீங்கும் என்ற சிந்தனையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் சாதாரணமாக இருக்காது. உணவு உட்கொள்ளும் நிலையில் உணவின் சுவை தவிர வேறு எந்த சிந்தனையும் நமக்கு இருப்பதில்லை. உறங்கும் பொழுது நமது சிந்தனைகளை நாம் கட்டுப்படுத்த முடியாத நிலையில், இறையுணர்வு நமக்கு ஏற்படுவதில்லை. ஆனால் திருஞானசம்பந்தர் தான் பசித்து களைத்திருக்கும் நிலையிலும், உணவு உட்கொள்ளும் நேரத்திலும், உறங்கும் நேரத்திலும் சிவபெருமானின் ஒளி பொருந்திய சேவடிகளை போற்றுதல் அல்லாது வேறு எந்த செயலும் தனது மனம் செய்யாது என்று மிகவும் உறுதியாக கூறுகின்றார். மானுட வாழ்க்கையை பசித்து உண்டு பின்னர் பசிக்கும் வாழ்க்கை என்று கூறுவார்கள். நாம் உண்ணும் போது நமது பசி அடங்கினாலும், சற்று நேரம் கழித்து மீண்டும் நமக்கு பசியெடுக்கின்றது: நாம் மீண்டும் உணவு உட்கொள்கின்றோம். விழித்திருக்கும் சமயத்தில் நமக்கு பசி எடுக்கின்றது; பசி அடங்குவதற்காக சாப்பிடுகின்றோம். உறங்கும் போது பசிப்பதில்லை. உண்ணினும் பசிப்பினும் என்று கூறி விழித்திருக்கும் நேரத்தையும், உறங்கினும் என்று நாம் உறங்கும் நேரத்தையும் குறிப்பிடும் திருஞானசம்பந்தப் பெருமான், எப்போதும் சிவபெருமானின் திருவடிகளை நினைத்தவாறு தான் இருந்த தன்மையை இங்கே குறிப்பிடுகின்றார். கண்ணனாகிய திருமாலும், நறுமணம் கமழும் தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் பிரமனும் அளவிடமுடியாத வகையில் நீண்டு தழலாக காட்சியளித்த பெருமானே, நான் உணவு உட்கொண்டும் பின்னர் பசித்தும் இருப்பதான விழித்திருக்கும் வேளையிலும், உறங்கும் சமயத்திலும் உனது ஒளி பொருந்திய பாத கமலங்களை அல்லாது வேறு எதனையும் புகழ்ந்து உரைக்காது இருக்கின்றேன். அத்தகைய அடியேனுக்கு நீர் பொருள் ஒன்றும் அளிக்காமல் இருப்பது தான், எனக்கு அருள் செய்யும் தன்மையா என்று திருஞான சம்பந்தர் கேள்வி கேட்கும் பாடல்.

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண் மலர் அடியாலால் உரையாது என் நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பரிது ஆயவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

இதே பதிகத்தின் அடுத்த பாடலில் (3.4.10), மனம் மயங்கி தன் வசம் இல்லாத நேரத்திலும் பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து, வேறு எதனையும் தனது நா சொல்லாது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். அத்தன் என்றால் தந்தை என்று பொருள். தனக்கு ஞானம் அளித்த காரணத்தால் தந்தையாகவே சிவபெருமானை பல பாடல்களில் குறிப்பிடும் திருஞான சம்பந்தர் இங்கும் அவரை தந்தை என்றே அழைக்கின்றார். மேலும் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தந்தை சிவபெருமான் தானே. மனம் மயங்கி இருக்கும் நிலையில் மனம் நமது வசத்தில் இல்லாத காரணத்தால் நாம் செய்ய நினைக்கும் செயல்களை நம்மால் செய்ய இயலாது. ஆனாலும் அந்த நிலையிலும் தான் சிவபெருமானின் திருநாமத்தை உரைப்பேன் என்று திருஞான சம்பந்தப் பெருமான் மிகவும் உறுதியாக கூறுகின்றார். எப்போதும் சிவபெருமானின் புகழ்களையே பாடி நாத்தழும்பேறிய நிலையில் அவரது மனம் ஏதும் கட்டளை இடாத சமயத்திலும் அவரது நாக்கு சிவபெருமானின் நாமத்தையே சொல்லும் என்று கூறுகின்றார். புறன் உரைத்தல் என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். திருஞான சம்பந்தர் வாழ்ந்த காலத்தில் புத்தர்களும் சமணர்களும் இந்து சமயத்தை இழிவாக பேசியும், சிவபெருமானை குறித்துப் பழிச் சொற்கள் கூறியும் மக்களை திசை திருப்பி வந்தனர். ஆயினும் சிலர் அத்தகைய செயல்களை பொருட்படுத்தாமல் சிவபெருமானை தொடர்ந்து வழிபட்டு வந்தனர். அத்தகைய பக்தர்களுக்கு அருள் புரியும் சிவபெருமானே என்று இறைவனை திருஞான சம்பந்தர் இங்கே அழைக்கின்றார். பயின்றவன் என்றால் ஒரு செய்கையை தொடர்ந்து விரும்பிச் செய்பவன் என்று பொருள். தனது பக்தர்களுக்கு அருள் செய்வதை விருப்பமாக செய்பவன் சிவபெருமான் என்று புகழப்படுகின்றார். புத்தர்களும் சமணர்களும் புறன் கூறிய சொற்களைப் பொருட்படுத்தாமல் உன்னைத் தொழும் பக்தர்களுக்கு இடைவிடாது அருள் செய்யும் சிவபெருமானே, பித்த நோயால் மயங்கி இருக்கும் சமயத்திலும் தந்தையாகிய உனது பொன் கழல்களின் திறம் அல்லாது வேறு எதையும் எனது நா சொல்லாது. அவ்வாறு இருக்கையில் நீர் ஆட்கொண்ட அடிமைக்கு பொருள் ஏதும் தாராமல் இருப்பது உனது அருட்செய்கையாகுமா என்ற கேள்வி கேட்கப்படும் பாடல். இந்த பதிகம் பாடி முடிக்கப் பட்ட பின்னர், சிவபெருமானின் கட்டளையின் பேரில் ஒரு சிவகணம், எவரும் அறியாத வண்ணம் பொற்கிழி ஒன்றினை பலிபீடத்தின் மீது வைத்தது என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார்.

பித்தொடு மயங்கியோர் பிணி வரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாது என் நாப்
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.55.4) திருஞானசம்பந்தர் பெருமானை தவிர்த்து வேறு எவரையும் தனது மனம் ஆதரிக்காது என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது மனம் ஆதரிக்காது என்று கூறுகின்றார். புண்ணியத் தன்மையை கங்கை நதிக்கு அளித்த பெருமானை, புண்ணியன் என்று அழைப்பது பொருத்தமாகவும் நயமாகவும் உள்ளது. பொன்னின் நிறத்தில் உள்ள சடையில் கங்கை நதியைத் தாங்கியவனும் புண்ணியமே வடிவமாக இருப்பவனும், மின்னல் போன்று ஒளிவீசும் முப்புரி நூல் அணிந்தவனும் இடபத்தை வாகனமாகக் கொண்டவனும், தலை சிறந்த வேதியனும் ஆகிய பெருமான், பாரத நாட்டின் தென் பகுதியில் உள்ளதும் உலகத்தவரால் கொண்டாடப் படுவதும் ஆகிய திருவான்மியூர் தலத்தில் உறைகின்றான். அனைத்து உயிர்கள் பால் அன்பு பாராட்டி, அவற்றை இயக்கும் பெருமானை தவிர்த்து, தனது மனம் வேறு எவரையும் ஆதரிக்காது என்று திருஞான சம்பந்தர் உணர்த்தும் பாடல்.

பொன் போலும் சடை மேல் புனல் தாங்கிய புண்ணியனே

மின் போலும் புரிநூல் விடையேறிய வேதியனே

தென்பால் வையம் எல்லாம் திகழும் திருவான்மி தன்னில்

அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (3.55.5) பெருமானை அண்ணா என்று அழைக்கும் திருஞான சம்பந்தர், பெருமானைத் தவிர்த்துத் தனது மனம் வேறு எவரையும் ஆதரித்து வழிபடாது என்று கூறுகின்றார். நுதல்=நெற்றி; கண்ணாரும்=கண் பொருந்திய; எண்ணார்=நமது எண்ணத்தில் நிலைநிறுத்தி போற்றுதலுக்கு உரிய திருநீறு; எண்ணத் தகுவது நீறு என்ற திருஞான சம்பந்தர் திருவாய்மொழி நமது நினைவுக்கு வருகின்றது. புரிசை=மதில்கள்; அண்ணல் என்றால் தலைவன் என்று பொருள். அண்ணலே என்ற விளிச்சொல் அண்ணா என்று குறைந்தது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே அண்ணா என்ற சொல்லும் தலைவனே என்ற பொருளில் வந்துள்ளது என்பதை உணரலாம். நெற்றியில் பொருந்திய கண்ணை உடையவனே, கதிர் போல் ஒளிரும் திருமேனியின் மீது அனைவரும் மனதில் நினைத்து போற்றும் தகுதி உடைய திருநீற்றினை அணிந்தவனே, அழகியதும் நீண்டதும் ஆகிய சோலைகளும் உறுதி வாய்ந்த மதிற்சுவர்களும் உடைய திருவான்மியூர் தலத்தில் உறைபவனே, எனது தலைவனே, உன்னைத் தவிர்த்து எனது நெஞ்சம் வேறு எவரையும் அறிந்து போற்றாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கண்ணாரும் நுதலாய் கதிர் சூழ் ஒளிர் மேனியின் மேல்

எண்ணார் வெண்பொடி நீறு அணிவாய் எழில் வார் பொழில் சூழ்

திண்ணார் வண் புரிசைத் திருவான்மியூர் உறையும்

அண்ணா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே

இந்த பதிகத்தின் ஆறாவது பாடலில் (3.55.6) திருஞான சம்பந்தர், பெருமானை ஆதி என்று அழைத்து, அவரைத் தவிர்த்து தனது மனம் வேறு எவரையும் நாடாது என்று கூறுகின்றார். நீதியின் வடிவமாக உள்ளவன் பெருமான் என்று கூறுகின்றார். நாம் நமது வாழ்க்கையை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை வேதங்களின் மூலமாக நமக்கு உணர்த்தும் இறைவன், அவ்வாறு வாழ்க்கை நடத்தும் உயிர்களுக்கு தகுந்த பரிசினையும் நற்வினைகள் மூலமாக அளிக்கின்றனான். மேலும் அனைத்து உயிர்களுக்கும் அந்தந்த உயிர்கள் செய்யும் செயல்களின் தன்மைக்கு ஏற்றாற்போல், பாரபட்சம் கருதாமல், பயனையும் அளிக்கும் பெருமானை நீதி என்று பொருத்தமாக அழைக்கின்றார். சேதீத்தல்=துண்டித்தல், வெட்டுதல்; நீதியின் வடிவமாக பெருமான் இருப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டையும் இந்த பாடலில் உணர்த்துகின்றார். நான்மறைகளையும் அருளியவன் பெருமான் என்பதையும், மறைகள் ஓதுவோரை பெருமான் விரும்புவதையும் நாம் அறிவோம். நான்மறைகளை எப்போதும் ஓதியவாறு படைப்புத் தொழில் செய்யும் பிரமன் என்றும் பாராமல், அவன் அகந்தையுடன் நடந்து கொண்டதற்கு தண்டிக்கும் முகமாக அவனது ஐந்தாவது தலையினை கிள்ளி எறிந்த நிகழ்ச்சியை இங்கே குறிப்பிட்டு, பெருமான் நீதிமானாக இருக்கும் தன்மையை இங்கே உணர்த்துகின்றார். இந்த பாடலில் பெருமானை நினைப்பதைத் தவிர்த்து அவரை வழிபடும் முறைகளை அறியாதவன் என்று தன்னை குறிப்பிடுகின்றார். சரியை முறை வழிபாட்டிற்கு உதாரணமாக திருஞான சம்பந்தர் இருந்ததை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். எனவே, தன்னைச் சுட்டிக் காட்டி நமது தன்மையை உணர்த்துகிறார் என்றே பொருள் கொள்ள வேண்டும். பெருமானை வழிபடும் முறை எதனையும் நாம் அறியாது இருந்தாலும், அதற்காக கவலை கொள்ளாமல், எப்போதும் அவரை நினைத்தவாறு, அவரைத் தவிர்த்து வேறு எவரையும் நாடாது நாம் இருக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பாடல். நீதியின் வடிவமாக உள்ள பெருமானே, உன்னை நினைப்பதைத் தவிர்த்து உன்னை வழிபடும் முறை எதனையும் அறியாதவனாக அடியேன் உள்ளேன்; நான்மறைகள் அருளியவனே, நான்மறைகள் ஓதும் மறையோனாகிய பிரமனின் தலையினை அவன் பொய் பேசியதற்கு தண்டனையாக கிள்ளி எறிந்தவனே, எந்த குறைபாடும் இல்லாமல் வளமாக விளங்கும் திருவான்மியூர் தலத்தில் உறைபவனே, அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனே, உன்னை அல்லாது எனது உள்ளம் வேறு எவரையும் நாடாது என்று திருஞான சம்பந்தர் உணர்த்தும் பாடல்.

நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைத்து அறியேன்

ஓதி நான்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும்

சேதீ சேதம் இல்லாத் திருவான்மியூர் உறையும்

ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.111.5) திருஞான சம்பந்தர், பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து தனக்கு பற்றுக்கோடு வேறேதும் இல்லை என்று கூறுகின்றார். போதகம்=யானை, தாருக வனத்து முனிவர்களால் பெருமான் மீது ஏவப்பட்ட மத யானை; புயல்=மேகம்; புயல் நேர் வரும் பொழில்=மேகம் தவழும் வண்ணம் உயர்ந்த சோலைகள்; ஆதரம்=விருப்பம்; தாருக வனத்து முனிவர்களால் தன் மீது ஏவப்பட்ட மத யானையைக் கொன்று அதன் தோலினை உரித்தவனாகிய பெருமான், மேகங்கள் தவழும் வண்ணம் உயர்ந்த சோலைகள் கொண்ட வீழிமிழலை நகரத்தினைத் தான் விரும்பும் இடமாக ஏற்றுக் கொண்டு உறைகின்றான். அவனது திருவடிகளைத் தவிர்த்து அடியேனுக்கு பற்றுக்கோடு வேறேதும் இல்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

போதகம் தனை உரி செய்தோன் புயல் நேர் வரும் பொழில் மிழலை மாநகர்

ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஓர் பற்று இலமே

இறைவனைக் காண்பதே தனது கருத்தாக இருந்ததாக கூறும் அப்பர் பிரானின் மனதினில் இறைவன் புகுந்து உறைந்ததில் வியப்பு ஏதும் இல்லை. அப்பர் பிரான் திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.20.1) இறைவனைக் காண்பதே கருத்தாக இருந்த தன் மனதினில் இறைவன் புகுந்ததாக கூறுகின்றார். அறையோ=அறைகூவல் விடுத்தல், ஆணையாக கூறுதல்; அவ்வாறு தனது மனதினில் புகுந்த இறைவனை தான் வெளியே விடமாட்டேன் என்று அப்பர் பிரான் அறை கூவுவதை நாம் உணரலாம். செல்வச் செழிப்பு மிகுந்த திருவாரூர் நகரில் உறையும் எங்கள் தலைவனே, உன்னைக் காண்பதே எனது கருத்தாக, மற்ற சிந்தனை ஏதும் இல்லாமல் இந்நாள் வரை இருந்த நான் எனது ஆசை தீர உன்னை கண்டு கொண்டேன்; நீ எனது மனதினில் புகுந்ததையும் நான் உணர்ந்து விட்டேன்; உனது காலில் விளங்கும் வீரக் கழல்களை, எனது மனதிற்கு அணிகலனாக நான் அணிந்துகொண்டேன்; மற்றப் பற்றுகள் அனைத்தையும் விட்டு விட்டேன்; நீ என்னை விடுத்து வெளியே போக விடமாட்டேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

காண்டலே கருத்தாய் நினைந்து இருந்தேன் மனம் புகுந்தாய் கழலடி

பூண்டு கொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோ

ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வானிளம் மதி

தீண்டி வந்து உலவும் திருவாரூர் அம்மானே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் (4.20.7) தவறியும், பெருமான் தனது சிந்தையிலிருந்து வெளியே செல்வதை, தான் அனுமதிக்க மாட்டேன் என்று அப்பர் பிரான் உறுதி பட கூறுகின்றார். பிழைத்தேயும்=தவறியும்; மும்மலங்களை நீக்கிய தனது உள்ளத்தில் புகுந்த சிவபிரானை நோக்கி அப்பர் பிரான் சவால் விடுவதை நாம் இந்த பாடலில் காணலாம். உயர்ந்த வகையான செந்நெல், பிரம்புரி, கெந்தசாலி, திப்பியம் நெல் வகைகள் அறுவடை செய்யப்படும், குளிர்ந்த தண்ணீர் நிறைந்த வயல்களைக் கொண்ட திருவாரூரில் உறையும் அம்மானே, வானத்தில் திரியும் மூன்று கோட்டைகளையும், தீயில் பற்றி எரியுமாறு, வில்லை ஏந்தி நின்றவனே, நீ எனது சிந்தையுள் நிறைந்து நின்று விட்டாய்; நீ எந்த வகையிலும் என்னை விட்டு பிரிந்து போகுமாறு நான் தவறியும் அனுமதிக்கமாட்டேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திரியும் மூவெயில் தீ எழச் சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள்

பிரியுமாறு எங்கனே பிழைத்தேயும் போகல் ஒட்டேன்

பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவ்வையகத்து

அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.63.1) அப்பர் பிரான், பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நினைக்கும் நினைப்பு இல்லாதவன் என்று மிகவும் பெருமையாக தன்னை குறிப்பிடுகின்றார். ஓதி என்று வாயினால் தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைத் தொழுததையும், மலர்கள் தூவி என்று கையினால் மலர்கள் எடுத்து இறைவன் மேல் தூவி வழிபட்டதையும். நினையுமா நினைவு என்று இறைவனை எப்போதும் நினைத்து இருக்கும் தன்மையையும் இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இவ்வாறு மனம், மொழி, மெய்களால் அப்பர் பிரான், அன்புடன் இறைவனை வழிபட்டமை இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது, நாமும் அவ்வாறு இறைவனைத் தொழவேண்டும் என்பதே இந்த பாடலின் மையக் கருத்தாகும். ஈசன் தனது உடலில் தன்னை ஏற்க வேண்டி உமையம்மை தவம் செய்து, ஒரு கார்த்திகை நன்னாளில் இறைவனின் உடலின் இடது பாகத்தில் அமர்ந்தது இந்த தலத்தில் தான். இன்றும் கார்த்திகை நன்னாளில் இறைவனும் இறைவியும் இணைந்த மாதொரு பாகன் கோலத்தில் இறைவன் காட்சி தருவது ஒரு சிறப்பான நிகழ்ச்சியாகும். இறைவன் இவ்வாறு காட்சி அளித்த பின்னர் தான் மலையின் உச்சியில் அண்ணாமலைத் தீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்ச்சியை உணர்த்தும் விதமாக உமையவள் பங்கா என்று முதலில் இறைவனை குறிப்பிட்டு, அதன் பின்னரே சோதியாய் நின்ற தன்மையை குறிப்பிடுகின்றார். கிரிவலம் செல்லும்போது, நாம் மேற்குச் சுற்றில் ஆதி அண்ணாமலை என்று சொல்லப்படும் கோயிலையும் காணலாம். இந்த கோயிலை அடி அண்ணாமலை என்றும் அணி அண்ணாமலை என்றும் அழைப்பதுண்டு. இந்த கோயிலுக்கு அருகே மணிவாசகர் தங்கி இருந்தார் என்றும் அப்போது தான் திருவெம்பாவை அருளியதாகவும் கருதப் படுகின்றது. இங்கே மணிவாசகப் பெருமானுக்கு தனியாக ஒரு கோயில் உள்ளது. இந்த கோயில் பிரமன் வழிபட்ட தலமாகும். அணி அண்ணாமலை என்று அப்பர் பிரான் இந்த கோயிலின் மீது தான் இந்த பதிகத்தினை அருளினார் என்றும் சிலர் கருதுவார்கள். அணி அணாமலை என்பதற்கு, தொண்டர்கள் அணுகி வழிபடும் இறைவன் என்றும், அடியார் அல்லாதார் அணுக முடியாத இறைவன் என்றும் விளக்கம் அளிப்பதுண்டு. இந்த தல வரலாறே, பிரமனும் திருமாலும் சோதியின் அடிமுடி காணமுடியாமல் திகைத்து நின்ற நிகழ்ச்சி தானே.

ஓதி மாமலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க

சோதியே துளங்கும் எண்தோள் சுடர்மழுப் படையினானே

ஆதியே அமரர் கோவே அணி அணாமலை உளானே

நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே

மாமலர்கள்=சிவபெருமானை வழிபடுவதற்கு சிறந்த மலர்களாக கருதப் படுபவை, புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, குவளை. பாதிரி, அலரி, மற்றும் செந்தாமரை ஆகிய எட்டு மலர்கள் ஆகும். கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு மற்றும் அறிவு ஆகிய எட்டு குணங்களைக் கொண்டவராக இருந்து (அக மலர்கள்) இறைவனை வழிபடுதல் சிறந்த வழிபாடாக கருதப்படுகின்றது. பார்வதி தேவியை உடலில் ஏற்றவனே என்றும், மேன்மையான சோதியே என்றும், கூத்தாடும் போது அசைந்தாடும் எட்டு தோள்களை உடையவனே என்றும், ஒளி வீசும் மழுப் படையினை உடையவனே என்றும், அனைவர்க்கும் முன்னவனான ஆதியே என்றும், அமரர்கள் தலைவனே என்றும், அழகிய அண்ணாமலையில் உறைபவனே என்றும் உன்னை எப்போதும் நினைத்து மலர்கள் தூவி முறையாக வழிபட்டு உன்னை தியானிப்பதைத் தவிர வேறு எவரையும், எந்தப் பொருளையும் நான் நினைக்க மாட்டேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (4.63.2) அப்பர் பிரான், பெருமானைப் புகழ்ந்து சொல்வதைத் தவிர்த்து வேறு எவரையும் புகழ மாட்டேன் என்று கூறுகின்றார். முந்தைய பாடலில் சிவபெருமானைத் தவிர வேறு ஏதும் நினைப்பு இல்லை என்று கூறும் அப்பர் பிரான், இந்த பாடலில் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் புகழ்ந்து சொல்ல மாட்டேன் என்று கூறுகின்றார். கொன்றைக் கடவுள்=கொன்றை மலரை தனது சிறப்பான அடையாளமாகக் கொண்டுள்ள சிவபெருமான்: பண் தனை வென்ற இன்சொல் பாவை என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு அவர் திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பண்ணின் நேர் மொழியாள் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டுகின்றது. பார்வதி தேவியின் சொற்கள் மிகவும் இனிமையானது என்பதை குறிக்க, பண், யாழ், வீணை, தேன், பால், கிளி, குயில், மழலை மொழி போன்றவை பல தேவாரப் பாடல்களில் உவமையாக கூறப்பட்டுள்ளன. சில தலங்களில் அம்பிகையின் திருநாமம், அம்பிகையின் குரல் இனிமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. யாழைப் பழித்த மொழியம்மை (திருமறைக்காடு), பாலின் நன்மொழியாள் (திருவாய்மூர்), மதுர பாஷிணி (விளமர்), கரும்பன்ன செல்வி (புறம்பயம்), குயிலினும் நன்மொழியம்மை (சாய்க்காடு), தேன்மொழியம்மை (தேவூர்) என்று அம்பிகை அழைக்கப் படுகின்றாள். இனிமையில் பண்ணினையும் வென்ற சொற்களை உடைய பார்வதி தேவியை உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ள இறைவனே, நீலகண்டனே, மழைக் காலத்தில் வளரும் கொன்றை மாலையைச் சூடியவனே, தாமரை மலர் போன்று மென்மையான திருவடிகளை உடையவனே, எல்லா உலகமாகவும் இருப்பவனே, தேவர்களின் தலைவனே, அழகிய அண்ணாமலையில் உறைபவனே, உனது தொண்டனாகிய நான் உன்னைத் தவிர வேறு எவரையும் புகழ்ந்து சொல்லும் சொற்களை சொல்லமாட்டேன் என்று மிகவும் உறுதியாக அப்பர் பிரான் தனது கொள்கையை அறிவிக்கும் பாடல்.

பண் தனை வென்ற இன்சொல் பாவையோர் பங்க நீல

கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா

அண்டனே அமரர் கோவே அணி அணாமலை உளானே

தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே

இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும் (4.63.4) அப்பர் பிரான் பெருமானைத் தவிர்த்து வேறேதும் நினைவு தனக்கு இல்லை என்று கூறுகின்றார். அம்பொன்=அழகிய பொன்: கொழித்து=மிகவும் அதிகமாக: பரமன்=அனைவரிலும் மேம்பட்டவன். பசும்பொன் போன்றவனே, செம்மை நிறத்துடன் பவள மலையாக காட்சி அளிப்பவனே, அனைவர்க்கும் மேம்பட்டவனே, பால் போன்ற வெண்ணீற்றினை உடலில் பூசியவனே, செம்பொன்னே, மலர் போன்ற திருவடிகளை உடையவனே, சிறப்பு மிக்க மாணிக்கக் கற்களும் அழகிய பொன்னும் திரட்டிக் கொண்டு வந்து வீழும் அருவிகள் உடைய அழகிய அண்ணாமலையில் உறைபவனே, எனக்கு பொன் போன்று அருமையான பொருளாக உள்ளவனே, அடியேன் உன்னைத் தவிர வேறு எந்த பொருளையும் நினையாமல் இருக்கின்றேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால் வெண்ணீறா

செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க

அம்பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே

என் பொனே உன்னை அல்லால் ஏது நான் நினைவிலேனே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.2.4) தாணுவைத் தான் மறந்து உய்வினை அடைய மாட்டேன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மாணி=பிரமச்சாரி, இங்கே சண்டீசரைக் குறிக்கும்: தாணு=நிலையாக இருப்பவன், ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்கிய பின்னரும், சிவபெருமான் இருப்பதால் தாணு என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது, தமியேன்=தனியாக இருப்பவன்: நாம் இன்பங்கள் அனுபவிக்கும் போது நம்முடன் அந்த இன்பங்களை பகிர்ந்து கொள்வதற்கு பலரும் தயாராக இருப்பார்கள். ஆனால் துன்பங்கள் நம்மை வருத்தும் போது. எவரும் நம்முடன் இருப்பதில்லை. எனவே தான் துன்பத்தில் தனித்து வாடுபவன் என்று அப்பர் பிரான் தன்னைக் குறிப்பிடுகின்றார். பழைய வினைப் பயன்களின் விளைவாக நாம் துன்பங்களை அனுபவிக்க நேரும்போது, அந்த துன்பங்களை இறைவன் தவிர்த்து வேறு எவராலும் தீர்க்க இயலாது; நாம் தனியாகத் தான் அந்த துன்பங்களை அனுபவிக்க வேண்டும். இந்த தன்மையே இங்கே குறிப்பிடப் படுகின்றது. பிரமச்சாரி சிறுவனாகிய சண்டீசர், பசுக்கள் விருப்பத்துடன் தாமே பொழிந்த பாலினைக் கொண்டு நீராட்டி வழிபட்ட தன்மைக்கு, உலகங்களை ஆளும் பதவி கொடுத்தவன் சிவபெருமான்: அவன், பொற்கொல்லர்கள் பொன்னின் தரத்தை அளப்பதற்கு தங்களிடம் வைத்திருக்கும் மாற்றுக் குறையாத செம்பொன் போன்றவன்: தில்லைப் பொன்னம்பலத்துள்ளே நின்று ஆடும் அந்த சிவபெருமான், முற்றூழிக் காலத்திலும் அழியாமல் நிலைத்து நிற்பவன். இத்தகைய பெருமைகள் வாய்ந்த சிவபெருமானை மறந்தால் நான் வாழ்வில் உய்வினை அடையமுடியாது. எனவே எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

மாணி பால் கறந்து ஆட்டி வழிபட

நீணுலகெலாம் ஆளக் கொடுத்த என்

ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற

தாணுவைத் தமியேன் மறந்து உய்வனோ

இந்த பதிகத்தின் அடுத்த பாடலில் (5.2.5) அப்பர் பிரான், அத்தனை மறந்து அடியேன் உய்வினை அடைய மாட்டேன் என்று கூறுகின்றார். சிவபெருமானை பித்தன் என்று நால்வர் பெருமானார்கள் அனைவரும் அழைக்கின்றார்கள். அவ்வாறு அழைப்பது பெருமானுக்கு மிகவும் பிடிக்கும் போலும். நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து சுந்தரரை ஆட்கொண்ட பெருமானை நோக்கி, சுந்தரர் எவ்வாறு உன்னைப் புகழ்ந்து பாடும் பாடலைத் தொடங்குவது என்று கேட்டபோது, முன்னம் நீ என்னை பித்தன் என்று அழைத்தமையால் பித்தா என்று பாடலைத் தொடங்கு என்று கூறுகின்றார். ஆனால் இந்த பெயர் உண்மையில் சுந்தரரால் சூட்டப்பட்டதா என்பதை ஆராய்ந்தால், நமக்கு ஒரு உண்மை புலனாகும். சுந்தரரை ஆட்கொள்வதற்காக முதியவராக வந்த சிவபெருமான் கொண்டுவந்த ஒலையின் வாசகத்தில் பெருமானின் பெயர் வெண்ணெய் நல்லூர் பித்தன் என்று இருக்கின்றது. எனவே இந்த பெயரை, பெருமானே விரும்பி வைத்துக் கொண்ட பெயர் என்பது நமக்கு புலனாகின்றது. நடனம் ஆடுபவர் பொதுவாக, நகரத்தின் நடுவில் உள்ள பெரிய அரங்கத்தினைத் தேர்ந்து எடுப்பார்கள். அவ்வாறு செய்யாமல், காட்டினை அரங்கமாகத் தேர்ந்தெடுத்து நடனம் ஆடுபவன் பித்தனாகத் தானே இருக்கமுடியும். எனவே தான் அப்பர் பிரான் இங்கே காட்டினை அரங்கமாகக் கொண்டு நடனம் ஆடும் பித்தனே என்று அழைக்கின்றார். முத்தன்=முக்தி அருள்பவன், பாசங்களிலிருந்து இயல்பாகவே விடுபட்டு முக்தி நிலை அடைந்தவன் என்று இரண்டு பொருள்களில் எதனைக் கொண்டாலும் பொருத்தமாக உள்ளது. முளை வெண்மதி என்று இளம்பிறை குறிக்கப் படுகின்றது. சித்தன் என்பதற்கு, அடியார்களின் சித்தத்தில் இருப்பவன், எல்லாச் சித்துக்களையும் செய்ய வல்லவன், அட்டமா சித்திகளை அருள்பவன் என்று பல பொருட்கள் பொருத்தமாக கூறப்படுகின்றன. அத்தன்=தகப்பன், தலைவன்; நாட்டினில் உள்ள அரங்கங்களை விடுத்து, சுடுகாட்டினை அரங்கமாகத் தேர்ந்தெடுத்து நடனமாடும் பித்தனே, இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனே, முக்தி அளிக்கக் கூடிய வல்லமை பெற்றவனே, இளம்பிறையைச் சூடியவனே, அடியார்களின் சித்தத்தில் இருப்பவனே, தூய செம்பொன்னினால் வேயப்பட்ட பொன்னம்பலத்துள் நின்று நடனம் ஆடும் தலைவனே உன்னை மறந்து நான் வாழ்வில் உய்வினை அடைய மாட்டேன். எனவே எப்பொழுதும் உன்னை நான் நினைத்தவாறே இருப்பேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

பித்தனைப் பெருங்காடு அரங்கா உடை

முத்தனை முளை வெண்மதி சூடியைச்

சித்தனைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற

அத்தனை அடியேன் மறந்து உய்வனோ

இதே பதிகத்தின் அடுத்த பாடலில் (5.2.6) அப்பர் பிரான் ஆதியை அடியேன் மறந்து உய்வேனோ என்று கேட்கின்றார். பெருமானை மறந்தால் வாழ்வினில் உய்வினை அடைய மாட்டோம் என்பதே இதன் பொருள். நிறைவை என்பதற்கு இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். குறை ஏதும் இல்லாதவன் என்றும், எங்கும் நிறைந்திருப்பவன் என்றுள்ள இரண்டு பொருள்களும் இங்கே பொருந்துகின்றன. நீதியே வடிவமாக உள்ளவனும், குறை ஏதும் இல்லாமல் நிறைவாக காணப்படுபவனும், நான்கு மறைகளையும் ஓதுபவனும், ஒருவரும் அறியமுடியாத சோதியாக விளங்குபவனும், செம்மையாக ஒளி வீசும் பொன்னம்பலத்து ஆதியாக உள்ளவனும் ஆகிய சிவபெருமானை மறந்தால் நான் வாழ்வில் உய்வினை அடைய மாட்டேன். எனவே எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நீதியை நிறைவை மறை நான்குடன்

ஓதியை ஒருவர்க்கும் அறிவொணாச்

சோதியைச் சுடர் செம்பொனின் அம்பலத்து

ஆதியை அடியேன் மறந்து உய்வனோ

இதே பதிகத்தின் அடுத்த பாடலில் (5.2.7) அப்பர் பிரான், தங்களது தலைவனை மறந்து தான் உய்வினை அடைவேனோ என்று குறிப்பிட்டு, பெருமானை மறந்து நாம் வாழ்வினில் உய்வினை அடைய மாட்டோம் என்று உணர்த்துகின்றார். செய்ய மாது=இலக்குமி தேவி: இலக்குமி தேவியின் சிவந்த நிறம் கருதி செய்ய மாது என்று குறிப்பிடப் படுகின்றது. பைகொள் பாம்பு=நச்சுப் பைகளை உடைய பாம்பு. ஆலகால விடத்தைத் தனது கழுத்தில் அடக்கியதால் கருமையான கண்டத்தை உடையவனும், எண்தோள்களையும் மூன்று கண்களையும் உடையவனும், நச்சுப்பைகளை உடைய பாம்புகளைத் தனது இடுப்பில் சுற்றிக் கொண்டவனும், அனைவருக்கும் மேலாக இருப்பதால் அவர்களுக்கு தலைவனாக விளங்குபவனும் ஆகிய சிவபெருமான், இலக்குமி தேவி உறைவதால் செல்வச் செழிப்புடன் விளங்கும் சிற்றம்பலத்துத் தலைவன் ஆவான். எங்களது தலைவனாகிய அவனை மறந்தால் நான் வாழ்வில் உய்வினை அடையமாட்டேன். எனவே எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

மை கொள் கண்டன் எண்தோளன்

பைகொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்

செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள்

ஐயனை அடியேன் மறந்து உய்வனோ

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.4.4) அப்பர் பிரான் பெருமானை மறந்து வாழ்வினில் உய்வினை அடைய மாட்டேன் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் ஆகாயமாக இறைவன் இருக்கும் நிலையை குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில் காற்றாக அவன் இருக்கும் நிலையை குறிப்பிடுகின்றார். தேற்றன்=தெளிவினை ஏற்படுத்துபவன்; அன்பே சிவம் என்பதே சைவ சமயத்தின் கொள்கை. ஏனைய உயிர்களையும் தம்முயிராக பாவித்து, அவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதே சைவநெறி. இந்த கொள்கையிலிருந்து பிறழ்ந்து, ஏனையோரை கொடுமை செய்து வாழ்ந்தவர்கள் திரிபுரத்து அரக்கர்கள் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. இதன் மூலம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்தி வாழ்ந்தால் தான் பெருமானின் அருள் கிடைக்கும் என்ற செய்தி உணர்த்தப் படுகின்றது. காற்றாக இருப்பவனும், உயிர்களை கலக்கி வருத்தும் வினைகளை நீக்கும் பொருட்டு அவர்களது உள்ளத்தில் தெளிவினை ஏற்படுத்தி மெய்ந்நெறியில் உயிர்களை செலுத்துபவனும், திருவண்ணாமலையாக திகழ்பவனும், உலகினில் நல்லவையும் தீயவையும் இரண்டு கூறுகளாக இருக்கும் வண்ணம் படைத்தவனும், ஏனைய உயிர்களை வருத்தி கொடுமை செய்து கொடியவர்களாக திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களை அவர்கள் வாழ்ந்த மூன்று கோட்டைகளுடன் அழித்தவனும், ஆறு சைவ சமய நெறிகளாக உள்ளவனும் ஆகிய பெருமானை மறந்தால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது. எனவே அடியேன் எப்போதும் அவரை மறவாமல் நினைத்து, வாழ்வினில் உய்வினை அடைவேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காற்றனைக் கலக்கும் வினை போய் அறத்

தேற்றனைத் திருவண்ணா மலையனை

கூற்றனைக் கொடியார் புரம் மூன்று எய்த

ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ

இதே பதிகத்தின் அடுத்த பாடலில் (5.4.5) அப்பர் பிரான், பெருமானை மறந்து தான் வாழ்வினில் உய்வினை அடைய மாட்டேன் என்று கூறுகின்றார். தென்னன் என்ற சொல்லுக்கு தென்னாடு உடையவன் என்றும் அழகியவன் என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன. இரண்டும் பொருத்தமே. அனைத்து உலகுக்கும் பொதுவான இறைவனை ஏன் தென்னாடு உடையவன் என்று அருளாளர்கள் அழைக்கின்றனர் என்பது சற்றே சிந்தனைக்கு உரியது. தடாதகை பிராட்டியாரை திருமணம் புரிந்து கொண்டு, தென்னாடு எனப்படும் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தவன் சிவபெருமான். எனவே தென்னாட்டினை உடையவனாக அவன் விளங்குகின்றான். எனவே தான் தென்னாடு உடைய சிவனே போற்றி என்று சொல்லும் மணிவாசகர் உடனே எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று திருவாசகத்தில் கூறுகின்றார். என்னன்=என்னை உடையவன்; அன்னன்= அத்தகைய தன்மை உடையவன்; மின்னல் போன்று ஒளிவீசுபவனும், எனது வினைகளை தீர்த்து என்னை ஆட்கொண்டவனும், தென்னாட்டினை தனது நாடாக விரும்பி ஏற்றுக் கொண்டவனும், திருவண்ணாமலையாக திகழ்பவனும், என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டவனும், தன்னை இகழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த மூன்று கோட்டைகளையும் எரித்து அவர்களை அழித்த தன்மை உடையவனும் ஆகிய பெருமானை மறந்தால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது. எனவே அடியேன் எப்போதும் அவரை மறவாமல் நினைத்து, வாழ்வினில் உய்வினை அடைவேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட

தென்னனைத் திருவண்ணா மலையனை

என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த

அன்னனை அடியேன் மறந்து உய்வனோ

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (5.4.6) அப்பர் பிரான் பெருமானை மறந்தால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது என்று உணர்த்துகிறார். மன்றம்=ஆடும் களம், அம்பலம்; மதியாதவன்=சிவபெருமானை உயர்ந்தவன் என்று மதிக்காத தக்கன்; வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் வழியே செய்யப்படாத வேள்வி ஒரு தவறான முன் உதாரணமாக இருக்கலாகாது என்ற கருத்தினைக் கொண்டு பெருமான் அந்த வேள்வியை அழிக்கச் சென்ற செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது. வென்றனை=புலன்கள் ஐந்தினையும் வென்றவனை; தில்லைச் சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, திருக்குற்றாலம், திருவாலங்காடு ஆகிய ஐந்து சபைகளில் மட்டுமன்றி வேறு பல திருக்கோயில்களில் அமைந்துள்ள மன்றங்களில் நடனம் ஆடுபவனும், வேதங்களில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மதிக்காமல், அவைகளின் வழியே செயல்படாமல், வேள்வி செய்யத் துணிந்த தக்கனது வேள்வியை அழித்தவனும், திருவண்ணாமலையாக திகழ்பவனும், ஐந்து புலன்களையும் வென்றவனும், பெருமான் போருக்கு வருவதை அறிந்து வெகுண்டு எழுந்த திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த வந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்தவனும் ஆகிய இறைவனை, கொடியவனாகிய அடியேன் மறந்து உய்வினை அடைய முடியுமா, முடியாது. எனவே அடியேன் எப்போதும் அவரை மறவாமல் நினைத்து, வாழ்வினில் உய்வினை அடைவேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மன்றனைம் மதியாதவன் வேள்வி மேல்

சென்றனைத் திருவண்ணா மலையனை

வென்றனை வெகுண்டார் புரம் மூன்றையும்

கொன்றனைக் கொடியேன் மறந்து உய்வனோ

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.35.9) அப்பர் பிரான், பெருமானை எவ்வாறு தான் மறப்பேன் என்று கூறுகின்றார். சுற்றுவார்=வலம் வந்து தொழும் அடியார்கள்; தெற்றினார்=அழித்தவர்கள்; தன்னை வலம் வந்து தொழும் அடியார்களை உயர்கதிக்கு உயர்த்தும் பண்பினனாகிய பெருமான், உலகத்தவர்களை அழித்தவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஓர் அம்பினை எய்து வீழ்த்தினான். தனது திருப்பாதங்களைப் பற்றிக் கொண்டவர்களின் வினைகளைத் தீர்க்கும் பழனத்து பரமனை, எனது தலைவனை அடியேன் எவ்வாறு மறக்க இயலும். என்னால் மறக்க இயலாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சுற்றுவார் தொழுவார் சுடர் வண்ணன் மேல்

தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான்

பற்றினார் வினை தீர்க்கும் பழனனை

எற்றினான் மறக்கேன் எம் பிரானையே

விசயமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.71.8) அப்பர் பிரான், பெருமானின் திருவடிகளையே எப்போதும் நினைத்த வண்ணம் இருக்கும் தான், அவனது திருவடிகளைக் காணும் ஆசையில் வாழ்வேன் என்று கூறுகின்றார். தலத்து மூர்த்தி சுயம்பு மூர்த்தி. இலிங்கத்தின் மேற்புறத்தில் காணப்படும் தழும்பு, அர்ஜுனன் வில்லால் அடித்ததால் ஏற்பட்ட தழும்பு என்றும் கூறுவார்கள். இந்த தலம் அர்ஜுனன் வழிபட்ட தலமாக கருதப் படுகின்றது. பார்த்தன் என்பது அர்ஜுனனின் பெயர்களில் ஒன்றாகும். பாண்டுவின் மகனாகிய பார்த்தன் பணிவிடை செய்து இறைவனை வழிபட்டு, தான் வேண்டிய வரமாகிய பாசுபத அத்திரத்தைப் பெறுவதற்கு அருள் புரிந்த இறைவன் விசயமங்கை தலத்தில் உறைகின்றான். அடியேனை ஆட்கொண்ட அந்த இறைவனின் திருவடிகளை எப்போதும் நினைத்து அவனது திருவுருவத்தை காண்பதே எனது கருத்தாக நான் இருப்பேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து

வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை

ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால்

காண்டலே கருத்தாகி இருப்பனே

காசனைக் கடலை என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (5.93.5) அப்பர் பிரான், ஞான மூர்த்தியை தன்னால் மறக்க இயலாது என்று கூறுகின்றார். மெலிவு செய்=உடலினை சாம்பலாக எரித்து அழித்த; வேனிலான்=வேனிற் காலத்துக்கு உரியவனாகிய மன்மதன்; இந்த பதிகத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பாடல்களில் இறைவன் தனது மனதினில் இருப்பதை தான் உணர்ந்ததாக அப்பர் பிரான் தெரிவிக்கின்றார். அந்த உணர்வு அவரது மனதினில் இனிய உணர்வுகளை ஏற்படுத்தியதால் இறைவனை தேன் என்றும் பால் என்றும் இந்த பாடலில் அழைப்பதை நாம் காணலாம். மைந்தன்=வல்லமை உடையவன். தக்கன் இட்ட சாபத்தினால் தனது கலைகள் ஒவ்வொன்றாக தேய்வதை கண்ட சந்திரன் செய்வது அறியாது திகைத்தான். திருமால் பிரமன் உள்ளிட்ட பல தேவர்களும் அவனுக்கு உதவ முடியாத நிலையில், சந்திரன் பிரமனிடம் ஆலோசனை கேட்டபோது, பிரமன் சிவபெருமானை அணுகுமாறு கூறினார். சந்திரனின் அழிவினை தடுத்து நிறுத்திய பெருமான், சந்திரனின் கலைகள் நாளும் வளரவும் வழி வகுத்தார். வேறு எவரும் செய்ய முடியாத உதவியை சந்திரனுக்கு பெருமான் செய்ததால் அவரை வல்லமை வாய்ந்தவர் என்ற பொருள் பட மைந்தன் என்று அப்பர் பிரான் மிகவும் பொருத்தமாக அழைக்கின்றார். தேனும் பாலும் வெவ்வேறு வண்ணத்தில் உள்ள பொருட்கள்; மேலும் இரண்டும் உடலுக்கு நன்மையையும் உறுதியையும் அளிக்கும் பொருட்களாக இருப்பதுமன்றி பருகும் பொழுது தனது சுவையினால் இன்பத்தையும் நமக்கு அளிக்கின்றன. இறைவியைத் தனது உடலின் ஒரு பகுதியில் ஏற்றதால், இரு வேறுவேறு வண்ணங்களுடன் பெருமானின் திருமேனி விளங்குகின்றது. இருவரது திருநாமங்களை சொல்வதால், ஆன்மா இன்பத்தை உணர்கின்றது. மேலும் அந்த திருநாமங்கள் நாம் வீடுபேறு பெற்று பேரின்பத்தை பெறவும் உதவுகின்றது. பெருமானின் மாதொரு பாகன் திருக்கோலம் அப்பர் பிரானின் நினைவுக்கு வந்தது போலும்; அதன் வெளிப்பாடாக தேன் என்றும் பால் என்றும் பெருமானை குறிப்பிடுகின்றார் என்று சிலர் சுவையான விளக்கம் அளிக்கின்றனர். தேன் போன்றும் பால் போன்றும் எனக்கு இனிமையாக இருப்பவனும், சூரியன் மற்றும் சந்திரன் போன்று ஒளி வீசுபவனும், வானில் உலவும் வெண்மை நிறம் கொண்ட பிறைச் சந்திரனைத் தனது தலையில் சூடிய வல்லவனும், வசந்த காலத்தின் அரசன் என்று அழைக்கப்படும் மன்மதனின் உடலினை எரித்து சாம்பலாக்கி அழித்தவனும், .ஞானமே உருவாக இருப்பவனும் ஆகிய பெருமானை நான் எவ்வாறு மறக்க இயலும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தேனைப் பாலினைத் திங்களை ஞாயிற்றை

வான வெண்மதி சூடிய மைந்தனை

வேனிலானை மெலிவு செய் தீயழல்

ஞான மூர்த்தியை நான் மறக்கிற்பனே

இந்த பதிகத்தின் அடுத்த பாடலில் அப்பர் பிரான் (5.93.6) பெருமானை, என்னுடையவன் என்று மிகவும் உரிமையாக அழைத்து, அவனைத் தன்னால் மறக்க இயலாது என்று கூறுகின்றார். கன்னல்=கரும்பு; தேறல்=தெளிந்த கரும்புச்சாறு; என்னன்=என்னை உடையவன்; பிறங்கிய= விளங்கிய; கரும்பு கடித்து உண்பதற்கு சற்று கடினமாக இருப்பினும், கடித்து சுவைப்பதற்கு இனிமையாக உள்ளது. கரும்பின் சாறு பருக மிகவும் எளிதாக உள்ளது. பெருமான் பக்குவம் அடையாத உயிர்களுக்கு, எளிதில் அடைய முடியாமல் கடினமானவனாக தோன்றுவதும் பக்குவப் பட்ட ஆன்மாக்களுக்கு எளிமையாக தோன்றுவதும் இங்கே, கன்னல் கரும்பின் தேறல் என்ற உதாரணங்களால் உணர்த்தப் படுகின்றது. கடித்து சுவைக்கத் தொடங்கினால் கரும்பின் இனிய சுவையினை நாம் உணர்வது போன்று, பக்குவம் அடையாத உயிர்களும் இறைவனை உணரத் தலைப்பட்டால், இறைவனின் எளிய தன்மை இனிய தன்மை அவர்களுக்கு விளங்கும் என்பதை உணர்த்தும் வண்ணம் இறைவனை கரும்பு என்று அப்பர் பிரான் இங்கே அழைக்கின்றார். கரும்பினைப் போன்றும், தெளிந்த கரும்புச் சாற்றினைப் போன்றும் எனக்கு இனிப்பவனும், மின்னல் போன்று ஒளி வீசுபவனும், மின்னலைப் போன்று ஒளி வீசும் திருமேனியை உடையவனும், பொன் போன்ற திருமேனியை உடையவனும், சிறந்த மாணிக்க குன்றின் ஒளி பொருந்திய திருமேனியை உடையவனும், அடியேனை ஆட்கொண்டவனும் ஆகிய இறைவனை யான் எவ்வாறு மறக்க இயலும் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

கன்னலைக் கரும்பு ஊறிய தேறலை

மின்னலை மின் அனைய உருவனைப்

பொன்னனை மணிக்குன்று பிறங்கிய

என்னனை இனி யான் மறக்கிற்பனே

இந்த பதிகத்தின் அடுத்த பாடலிலும் (5.93.7) அப்பர் பிரான் பெருமானை தன்னால் மறக்க இயலாது என்று கூறுகின்றார். கட்டி=கட்டி வெல்லம்; சுரும்பு=வண்டு; கந்த மாமலர்=நறுமணம் வீசும் பெரிய மலர்கள்; மாமலர் என்பதற்கு மனத்தாமரை என்று விளக்கம் அளித்து, சிவமணம் வீசும் மனதினில் இறைவன் விளங்குவதை அப்பர் பிரான் கூறுவதாக சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். மனதினுக்கு நல்ல மணத்தை அளிப்பது, அக மலர்கள் என்று சொல்லப்படும் எட்டு அரிய குணங்கள் (கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கம், பொறுமை, தவம், வாய்மை, அன்பு மற்றும் அறிவு) உடையோரின் மனதினில் இறைவன் உறைகின்றான் என்பதை உணர்த்தவே இந்த குணங்களை மலர்களுக்கும் இறைவனை வண்டுக்கும் ஒப்பிட்டு, நறுமணம் மிகுந்த மலர்களை நாடிச் செல்லும் வண்டு போன்று, அரிய குணங்கள் உடைய மனதினை இறைவன் நாடிச் செல்வான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. இதயத்தில் ஊறும் பக்தி எனப்படும் தேனைச் சுவைக்க விரும்பும் வண்டாக இறைவன் செயல்படுவது இங்கே உணர்த்தப் படுகின்றது. மலர்கள் அரும்பாக இருக்கும் நேரத்தில், அவற்றின் நறுமணம் வெளியே தெரிவதில்லை. ஆனால் பூவாக மலர்ந்து நறுமணம் கமழும் தருணத்தில் மட்டுமே, அரும்பாக இருந்தபோதே அதனுள்ளே இருந்த நறுமணத்தினை நாம் உணர்கின்றோம். ஆய்மலர்=ஆராயும் உள்ளத்தாமரை. கரும்பு போன்றும் கரும்பிலிருந்து எடுக்கப்படும் வெல்லக்கட்டி போன்று எனக்கு இனிமையாக இருப்பவனும் ஆகிய இறைவன், சிறந்து எட்டு குணங்களை உடையோரின் மனதினை, நறுமணம் வீசும் மலர்களை நாடிச் செல்லும் வண்டு போன்று, நாடிச் செல்கின்றான்; நறுமணம் வீசும் சிறந்த மலர் அரும்புகளின் உள்ளே இருக்கும் நறுமணம் போன்று எனது உள்ளத்தில் இருக்கும் இறைவன் ஒளி வீசும் பொருட்கள் அனைத்திற்கும் ஒளியாக அந்தந்த பொருட்களின் உள்ளே இருக்கின்றான். மலரும் முன்னர் எடுக்கப்பட்ட அரும்புகளை மிகவும் விரும்பும் பெருமான், தன்னை ஆராய்ந்து அறியும் அடியார்களின் உள்ளத் தாமரையை பெரிதும் விரும்புகின்றான். அத்தகைய இறைவனை யான் எவ்வாறு மறக்க இயலும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கரும்பினைக் கட்டியைக் கந்த மாமலர்ச்

சுரும்பினைச் சுடர்ச் சோதியுள் சோதியை

அரும்பினால் பெரும் போது கொண்டு ஆய் மலர்

விரும்பும் ஈசனை யான் மறக்கிற்பனே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.31.7) அப்பர் பிரான், பெருமானை அல்லாது வேறு தெய்வம் இல்லை என்ற எண்ணத்துடன் நாம் பெருமானை துதித்து வழிபட வேண்டும் என்று தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். பாற்றுதல்=அழித்தல்; பரிசு=தன்மை; சுற்றி நின்ற சூழ் வினைகள்=வினைகளின் பிணைப்பிலிருந்து உயிர் மீண்டு செல்லாத வண்ணம், நல்வினைகளும் தீவினைகளும் நம்மை எப்போதும் சூழ்ந்து இருப்பதால் சுற்றி நின்ற சூழ் வினைகள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தீயவினைகள் போல் நல்வினைகளும், நம்மை தப்பிக்கவிடாமல் பிறவிப் பிணியில் ஆழ்த்துகின்றன. நல்வினைகள், அடுத்த பிறவியில் நம்மை இன்பத்தில் ஆழ்த்தி உலக மாயையில் மயங்கச் செய்து வினைகளை நாம் மேலும் பெருக்கிக் கொள்ள வழி வகுக்கின்றன. அதனால் தான், பெரியோர்கள் நல்வினைகளை பொற் சங்கிலிக்கும் தீயவினைகளை இரும்புச்சங்கிலிக்கும் ஒப்பிடுவார்கள். துஞ்சுதல்=தூங்குதல். தூங்கும் சமயத்தில் நாம் செயலற்று இருப்பது போல், வினைகளைப் போக்கிக் கொள்வதற்கு ஏதும் செய்யாமல் இருக்கும் நிலை என்று இங்கே பொருள் கொள்ளவேண்டும். நெஞ்சமே, நான் சொல்வதை கேட்பாயாக, உன்னைப் பற்றியிருக்கும் பாவங்கள் உன்னை விட்டு விலக வேண்டும் என்றால், மேன்மையான கதிக்கு, முக்தி நிலைக்கு, நீ செல்ல வேண்டும் என்றால், உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் வினைகளை வீழ்த்தி அவற்றினின்று விடுதலை அடைய வேண்டும் என்று நீ விரும்பினால் நான் சொல்வதைக் கேள். நீ செயலற்று இருப்பதை விட்டுவிடு. புற்றில் வாழும் பாம்பினை கச்சாக அணிந்த புனிதனே, சோலைகள் சூழ்ந்த ஆரூர் நகரில் உறையும் இறைவனே என்று சிவபெருமானை பலமுறையும் துதித்து, இறைவனே நீ தான் எனக்குத் துணை, நீ தான் எனக்கு உறவு, உன்னைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் பரம்பொருளாக நினைக்க மாட்டேன் என்று கதறுவாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில்

சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம்

உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும் உன்னைய ல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும்

புற்றரவக் கச்சு ஆர்த்த புனிதா என்றும் பொழில் ஆரூரா என்றே போற்றா நில்லே

நாம் பிறவி எடுப்பதன் நோக்கமே, இறைவன் நமக்கு அளித்துள்ள கருவி கரணங்களை பயன்படுத்தி உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் தான் என்பதை உணர்ந்து, அவனுக்கு அடிமையாக மாறி, பல வகையிலும் திருத்தொண்டுகள் செய்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதாகும். எவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிடில் நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட முடியாது என்பதையும் அப்பர் பிரான் மிகவும் அழகாக உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் (6.95.6) தீவண்ணராக விளங்கும் பெருமானின் தன்மைகளை நாம் பேசவேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அளி=அன்பு; உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணார் என்று இங்கே கூறுவது, வண்டுகள் மலரினைத் சுவைப்பதற்கு முன்னர் பறித்து என்றும் பொருள் கூறுவார்கள். சிவபெருமானின் திருநாமமாகிய அஞ்செழுத்தினைச்சொல்லாமல் இருப்பவர்களும், செந்தீ வண்ணத்தவராக உள்ள சிவபெருமானின் திறமையை ஒரு முறையேனும் பேசாமல் இருப்பவர்களும்; ஒரு முறையேனும் திருக்கோயில் வலம் வராதவர்களும், தாங்கள் உண்பதன் முன்னர் மலர் பறித்து சிவபெருமானின் திருமேனியில் மலர் தூவி வணங்கி பின்னர் உணவு உட்கொள்ளும் பழக்கம் இல்லார்களும்; பிறவிப் பிணியினைத் தீர்க்கும் திருநீற்றினை தங்களின் உடல்கள் மீது பூசாதவர்களும்: சிவபெருமான் மேல் சிறிதும் அன்பு இல்லாதவர்கள். அவர்கள் வாழும் வாழ்க்கையை நான் என்னென்று சொல்லுவேன். பிறவிப் பிணி என்ற பெருநோயால் பாதிக்கப்பட்டு இறந்த பின்னரும் மீண்டும்மீண்டும் பிறப்பதையே தங்கள் செயலாகக் கொண்டு அவர்கள் இறக்கின்றார்கள். அவர்களால் பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து, தப்பி வெளியே வரவே முடியாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்

ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன்முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்

அருநோய்கள் கெட வெண்ணீறணியாராகில் அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்

பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே

பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.14.6) சுந்தரர், பெருமானின் திருவடிக்குத் தொண்டு செய்து தவமிருப்பதைத் தவிர்த்து வேறொன்றும் அறியேன் என்று கூறுகின்றார். செடித்தவம்=பயனற்ற தவம்; தவம் செய்வதன் நோக்கமே, பிறவிப் பிணியை நீக்கிக் கொண்டு, உயிர் துன்பங்களிலிருந்து விடுபட வழி வகுப்பதாகும். சிவபெருமான் ஒருவரே பிறவிப் பிணியை நீக்கும் வல்லமை வாய்ந்தவர் என்பதால், மற்று எவரையும் நோக்கி தவம் செய்வதால் பயனேதும் அடைய முடியாது என்பதால் செடித்தவம் என்று இங்கே அந்த தவங்களை குறிப்பிடுகின்றார். ஏனைய தவங்களால் நமது தீவினையை போக்கிக் கொள்ள முடியாது என்பதையும் சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். மேலும் சாம்பலை பூசிக் கொண்டு எளியராக இருப்பினும், தன்னை பாதுகாக்கும் தலைவர் பெருமான் ஒருவர் தான் என்று சுந்தரர் கூறுகின்றார்.

செடித்தவம் செய்வார் சென்று உழிச் செல்லேன் தீவினை செற்றிடும் என்று

அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் ஆவதும் அறிவர் என் அடிகள்

படைத்தலைச் சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்

பிடித்த வெண்ணீறே பூசுவதானால் இவரலாது இல்லையோ பிரானார்

திருமேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில் (7.21) சுந்தரர், பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நினைக்க மாட்டேன் என்றும் புகழ்ந்து போற்ற மாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பதிகத்தின் நான்காவது பாடலை (7.21.4) நாம் இங்கே காண்போம். உற்றம் சுற்றம் ஆகியவை மீது நாம் கொண்டுள்ள பாசத்தின் காரணமாக, நாம் பல தவறுகளை செய்கின்றோம்; அந்த தவறுகள் நம்மை இறைவனை நினைக்க ஒட்டாமல் தடுக்கின்றன. எனவே இந்த புறப் பற்றுகளை ஒழித்து விட்டு பெருமானின் திருப்பாதங்களைத் தான் பற்றிக் கொண்டதாக சுந்தரர் கூறுகின்றார். இவ்வாறு தனது குறையைக் களைந்து கொண்ட சுந்தரர், இனியும் தன்னிடம் குற்றமாக இருந்து துன்பங்களைத் தருகின்ற குறையில்லை என்பதையும், பெருமானையே பற்றுக்கோடாகத் தான் கொண்டுள்ளேன் என்பதையும் பெருமானுக்கு உணர்த்துவதையும் நாம் காணலாம்.

உற்றார் சுற்றமெனும் அது விட்டு நுன்னடைந்தேன்

எற்றால் எனது குறைவு என் இடரைத் துறந்து ஒழிந்தேன்

செற்றாய் மும்மதிலும் திருமேற்றளி உறையும்

பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்த மாட்டேனே

திருமேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.21.6) சுந்தரர், பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் உள்ளம் குளிர்ந்து மகிழ்ந்து போற்ற மாட்டேன் என்று கூறுகின்றார். தான் பெருமானின் திருவடிகளை நினைத்த உடனேயே, ஊன் பொருந்திய தனது உடலின் உள்ளே சிறந்த ஒளி வடிவமாக திகழும் பெருமான் புகுந்ததாக சுந்தரர் குறிப்பிடுகின்றார். தேனும் இன்னமுதமும் திருமேற்றளி தலத்தினில் உறையும் தலைவனும் ஆகிய பெருமானைத் தவிர்த்து தான் வேறு எவரையும் மனம் குளிர்ந்து புகழ மாட்டேன் என்று சுந்தரர் கூறும் பாடல்.

நானேல் உன்னடியே நினைந்தேன் நினதலுமே

ஊனேர் இவ்வுடலம் புகுந்தாய் என் ஒண் சுடரே

தேனே இன்னமுதே திருமேற்றளி உறையும்

கோனே உன்னை யல்லால் குளிர்ந்து ஏத்த மாட்டேனே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் (7.21.7) சுந்தரர் தலைவனாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் அறிந்து கொண்டு தான் புகழ்ந்து போற்ற மாட்டேன் என்று கூறுகின்றார். கையார்=கையில் பொருந்திய; செய்=வயல்; தனது கையில் பொருந்திய கொடுமையான வில்லினில் வாசுகி பாம்பு பொருந்திய நாணினை கோத்த பெருமான், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் நெருப்புச் சுடர் விழுங்கி அழிக்கும் வண்ணம் அம்பு எய்த பெருமான், இளந் தாமரை மலர்கள் வளரும் வயல்களால் சூழப்பட்ட திருமேற்றளி தலத்தினில் உறைகின்றார் என்று சுந்தரர் கூறுகின்றார். ஐயா=தலைவன்;

கையார் வெஞ்சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே

எய்தாய் மும்மதிலும் எரி உண்ண எம் பெருமான்

செய்யார் பைங் கமல திருமேற்றளி உறையும்

ஐயா உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே

திருமழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.24.4) சுந்தரர், பரவெளியாக பரந்து நிற்கும் பெருமானே உன்னைத் தவிர்த்து வேறு எவரையும் தான் நினைக்க மாட்டேன் என்று கூறுகின்றார். பண்டே என்று திருவெண்ணெய் நல்லூர் தலத்தில் அடிமை ஓலை காட்டி தன்னை ஆட்கொண்ட கருணைச் செயலை குறிப்பிடுகின்றார். பெருமான் தன்னை ஆட்கொண்டதால், தன்னைப் போன்று பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட மற்ற அடியார்களுக்கு தொண்டு புரியத் தொடங்கினேன்; இந்நாள் வரை அந்த அடியார்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாதிருந்த குற்றத்தை நீக்கி விட்டேன்; வண்டுகள் சூழும் பூஞ்சோலைகள் நிறைந்த மழபாடி தலத்தினில் உறைகின்ற மாணிக்கமே, பரவெளியாக பரந்து நிற்கும் பெருமானாகிய உன்னை அல்லால் இனிமேல் வேறு எந்த தெய்வத்தை நினைக்கேன்; வேறு எவரையும் நினைக்க மாட்டேன் என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல்.

பண்டே நின் அடியேன் அடியார் அடியார்கட்கு எல்லாம்

தொண்டே பூண்டு ஒழிந்தேன் தொடராமைத் துரிசு அறுத்தேன்

வண்டார் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே

அண்டா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.24.5) சுந்தரர், தலைவனாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நினைக்க மாட்டேன் என்று கூறுகின்றார். கருத்து= அறிவு; கண்=பால்; அருத்தம்=விருப்பம்; அருத்தன்=அனைத்து உயிர்களாலும் விரும்பப் படுபவன்; ஏழு உலகங்களில் உள்ள அனைத்து உயிர்கள் பால் அறிவாக பொருந்தியவனும், அனைத்து உயிர்களாலும் விரும்பப் படுபவனும், இனிய பண்கள் பொருந்திய தமிழ்ப் பாடல்களாகவும் அனைத்து ஒளிகளுக்கும் மேலான சுடராகவும், மண்ணில் நிறைந்து பொழியும் பூஞ்சோலைகளால் சூழப்பட்ட மழபாடி தலத்தில் மாணிக்கமாக விளங்குபவனும் அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவனும் ஆகிய பெருமானே இனி அடியேன் வேறு எவரை நினைப்பேன், வேறு எவரையும் நினைக்க மாட்டேன் என்று சுந்தரர் சொல்வதாக அமைந்த பாடல்.

கண்ணாய் ஏழுலகும் கருத்தாய அருத்தமாய்ப்

பண்ணார் இன் தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே

மண்ணார் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே

அண்ணா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே

இந்த பதிகத்தின் அடுத்த பாடலில் (7.24.6) பெருமானை, ஆளாய், என்னை ஆட்கொண்டவனே என்று அழைத்து, பெருமானே உன்னை அல்லால் இனி வேறு எவரையும் நினைக்க மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். நாள்=வாழ்க்கையின் இறுதி நாள்; நாளார்=அனைத்து உயிர்களின் இறுதி நாளை கணக்கிட்டு அந்த நாளில் அந்தந்த உயிர்களை அவை பொருந்தியிருந்த உடலிலிருந்து பிரிக்கும் காலன்; மாளா நாள் அருளும் இறைவன் என்று இந்த பாடலில் சுந்தரர் குறிப்பிடுகின்றார். இறவாமை என்ற தன்மையிலிருந்து நம்மை பாதுகாப்பவர் என்று நாம் தவறாக பொருள் கொள்ளலாகாது. பிறந்த அனைத்து உயிர்களும் ஒருநாள் அழிய வேண்டியது என்பது எவராலும் மாற்ற முடியாத விதி; எனவே இறப்பைத் தவிர்க்க வேண்டுமென்றால் இனிமேல் பிறவி எடுக்கும் தன்மையை நாம் தவிர்க்க வேண்டும்; இத்தகைய பிறப்பினைத் தவிர்க்கும் ஆற்றல் வாய்ந்த பெருமானை மாளா நாள் அருளும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார் என்பதே இந்த தொடரின் பொருள். இந்த பாடலில் சுந்தரர், ஆளா வந்தடைந்தேன் என்று கூறுகின்றார். நாம் பொதுவாக, வாழ்க்கையில் ஓரளவு நிலையான தன்மை அடைந்த மனிதர்களை, எவரையும் சாராது தனது காலில் நிற்கும் தன்மை அடைந்த மனிதர்களை, ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். ஆனால் அருளாளர்கள், பெருமானுக்கு அடிமையாக மாறி அவனுக்கு திருத்தொண்டு செய்யும் அடியார்களையே ஆளானவர்களாக கருதுகின்றனர். சுந்தரர், அத்தகைய ஆளாக மாறியதை இங்கே குறிப்பிடுகின்றார். காலன் தன்னை வந்தடைந்து, உடல் நலிவுற, தனது உயிரினை உடலிலிருந்து பிரிக்கும் காலம் வரும் முன்னர், பெருமானே உனக்கு அடியானாக உன்னை வந்தடைகிறேன்; பெருமானை நீ அடியேனை ஏற்றுக் கொள்ள வேண்டும்; பிறவாமை என்ற தன்மையிலிருந்து என்னை விடுவித்து என்றும் இறவாமல் முக்தி உலகில் உன்னுடன் தொடர்ந்து இருக்கும் தன்மையை அருளும் பெருமானே, மழபாடி தலத்தில் உறையும் மாணிக்கமே, உனக்கு ஆட்பட்டவனாக இருக்கும் அடியேன் உன்னை அல்லாது வேறு எவரை நினைக்கப் போகிறேன்; வேறு எந்த தெய்வத்தையும் நினைக்க மாட்டேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நாளார் வந்தணுகி நலியா முனம் நின் தனுக்கே

ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்று கொள் நீ

மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே

ஆளாய் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (7.24.9) சுந்தரர், ஞானத்தின் வடிவமாகிய பெருமானே, உன்னை அன்றி அடியேன் வேறு எவரை நினைக்கேன் என்று கூறுகின்றார். தங்கள் இருவரில் எவர் பெரியவர் என்று தொடர்ந்து வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் மற்றும் திருமாலின் நடுவே, நீண்ட தழற்பிழம்பாக தோன்றிய இறைவன், தனது அடிமுடியைக் காணாது திகைத்து நின்ற, திருமால் மற்றும் பிரமனின் வேண்டுகோளுக்கு இணங்கி, இலிங்கமாக காட்சி அளித்தார் என்று இலிங்க புராணம் உணர்த்துகின்றது. அந்த இலிங்கத்தை பெருமானின் அடையாளமாக கருதி, குறியாக கருதி, இருவரும் வழிபட்டமை, நெடுமாலயன் போற்றிச் செய்யும் குறி என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. உயிர்கள் பின்பற்ற வேண்டிய நன்னெறியாக இருப்பவனே, இயல்பாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து நீங்கியவனே, நெடுமாலும் அயனும் போற்றி வழிபடும் குறியாக, இலிங்க வடிவமாக திருவண்ணாமலையில் காட்சி தந்தவனே, கொடி போன்று மெலிந்த இடையினை உடைய உமையம்மையின் தலைவனே, துள்ளி விளையாடும் மான் கன்று நிலையாக பொருந்திய அழகிய கையினை உடையவனே, மாணிக்க வண்ணராக திருமழபாடி தலத்தினில் உறைபவனே, ஞானமே வடிவமாக இருப்பவனே, உன்னை அல்லால் அடியேன் வேறு எவரை நினைப்பேன், வேறு எவரையும் நினைக்க மாட்டேன் என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல்.

நெறியே நின்மலனே நெடு மாலயன் போற்றிச் செய்யும்

குறியே நீர்மையனே கொடியேர் இடையாள் தலைவா

மறி சேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே

அறிவே நின்னை யல்லால் இனி யாரை நினைக்கேனே

திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.26.2) சுந்தரர், பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் அறிந்து கொண்டு போற்ற மாட்டேன் என்று கூறுகின்றார். நாம் இடர்ப்படும் தருணங்களில் நமக்கு உதவி செய்பவரைத் தானே நாம் சிறந்த துணையாக கருதுகின்றோம். கமை=பொறுமை; வானவர்களின் தலைவனே, இறைவனே, எனக்கு துன்பம் நேரும் தருணத்தில் அதனைக் கலையும் சிறந்த துணையே, நமது குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு அருள் புரியும் கருணையாளனே, கரிய பெரிய மேகம் போன்று கறை படர்ந்த கழுத்தினை உடையவனே, உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்ட கோலத்துடன் இருப்பவனே, திருக்காளத்தி தலத்தில் பொருந்தி உறையும் பெருமானே, உன்னை அல்லாது வேறு எவரையும் அறிந்து கொள்ள முயற்சி செய்யவும் மாட்டேன், அவர்களைப் போற்றவும் மாட்டேன்; எனவே நீ தான் எனக்கு அருள் புரிய வேண்டும் என்று சுந்தரர் பெருமானிடம் வேண்டும் பாடல்.

இமையோர் நாயகனே இறைவா என் இடர்த் துணையே

கமையார் கருணையினாய் கருமாமுகில் போல் மிடற்றாய்

உமையோர் கூறுடையாய் உருவே திருக் காளத்தியுள்

அமைவே உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே

இதே பதிகத்தின் அடுத்த பாடலில் (7.26.3) சுந்தரர், பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் விரும்ப மாட்டேன் என்றும் புகழ்ந்து பேச மாட்டேன் என்றும் கூறுகின்றார். உகுத்தல்= உடைத்தல்; வெண்மை நிறத்தில் உள்ள மழுப்படையினைத் தனது படைக்கலமாக கொண்டவனே, தக்க யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களைப் பெயர்த்தவனே, இடப வாகனனே, வேதியனே, பொலிந்து விளங்கும் குழை ஆபரணத்தை அணிந்தவனே, பூத கணங்களின் தலைவனே, அழகிய வாயில்கள் கொண்ட மாளிகைகள் சூழ்ந்த காளத்தி தலத்தில் உறைபவனே, என்னை உடைமைப் பொருளாக உடையவனே, உன்னைத் தவிர்த்து வேறு எவரையும் அடியேன் விரும்பவும் மாட்டேன், புகழவும் மாட்டேன் என்று சுந்தரர் உணர்த்தும் பாடல்.

படையார் வெண்மழுவா பகலோன் பல் உகுத்தவனே

விடையார் வேதியனே விளங்கும் குழைக் காது உடையாய்

கடையார் மாளிகை சூழ் கணநாத எம் காளத்தியாய்

உடையாய் உன்னை அல்லால் உகந்து ஏத்த மாட்டேனே

இந்த பதிகத்தின் நான்காவது பாடலிலும் (7.26.4) சுந்தரர் பெருமானைத் தவிர்த்து வேறு எவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள மாட்டேன் என்று கூறுகின்றார். மறி=மான் கன்று; துள்ளி விளையாடும் குணம் உடைய மான் கன்று ஒரே இடத்தில் தங்கி பொருந்தும் கையை உடையவனே, தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்டவனே, பலரும் அடைய விரும்பும் குறிக்கோளாக இருப்பவனே, குருவே, உனக்கு அடியேன் குற்றேவல் செய்ய விரும்புகின்றேன்; முறையாக நின்று அடியார்கள் வழிபடும் காளத்தி தலத்தில் உறையும் பெருமானே, அறிவே உருவமாக உள்ளவனே, உன்னை அல்லால் வேறு எவரையும் அறிந்து கொள்ளவும் புகழ்ந்து போற்றவும் அடியேனுக்கு விருப்பம் இல்லை. எனவே அடியேனை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும் என்று சுந்தரர் வேண்டும் பாடல்.

மறி சேர் கையினனே மத மாவுரி போர்த்தவனே

குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன்

நெறியே நின்று அடியார் நினைக்கும் திருக் காளத்தியுள்

அறிவே உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே

திருக்கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.28.1) சுந்தரர், தனக்கு அமுதமாக இனிக்கும் பெருமானைத் தவிர்த்து தகுந்த துணை வேறெவரும் இல்லை என்று கூறுகின்றார். பொடியார் மேனி=சாம்பல் பொடி படர்ந்த திருமேனி; வடியார்=நுனியில் கூராக வடிக்கப் பட்ட; அடிகள்=தலைவன்; அடிகள் என்ற சொல் அடிகேள் என்று திரிந்தது. வளர் என்ற சொல் இங்கே எப்போதும் பிரியாது இருக்கும் என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. திருநீறு பூசியதும் முப்புரி நூல் பொருந்தியதும் ஆகிய திருமேனி உடையவனே, மிகவும் கூர்மையாக வடிக்கப்பட்ட நுனியினை உடைய வேல் எப்போதும் பிரியாது இருக்கும் கையினை உடைய பெருமானே நீ நறுமணம் மிகுந்த கொன்றை மலர் மாலைகளை அணிந்தவனாக கடவூர் வீரட்டம் தலத்தினில் உறைகின்றாய்; எனது தலைவனே, எனக்கு அமுதமாக இருப்பவனே, உன்னை அன்றி எனக்கு தகுந்த துணை வேறெவரும் இல்லை என்று சுந்தரர் குறிப்பிடும் பாடல். வளர் அங்கை என்ற தொடரினை வளர் கங்கை என்று பாட பேதமாக சில பதிப்புகள் குறிப்பிடுகின்றன. இந்த தலத்து இறைவனின் திருநாமம் அமுத கடேசுவரர் என்பதை அமுதே என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் இரண்டாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் ஒன்பதாவது பாடல்களிலும் பெருமானை அமுதே என்று சுந்தரர் அழைக்கின்றார்.

பொடியார் மேனியனே புரிநூல் ஒரு பால் பொருந்த

வடியார் மூவிலை வேல் வளர் அங்கையின் மங்கையொடும்

கடியார் கொன்றையனே கடவூர் தனுள் வீரட்டத்தெம்

அடிகேள் என்னமுதே எனக்கார் துணை நீ அலதே

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலிலும் (7.28.2) சுந்தரர், இறைவனைத் தவிர்த்து வேறெவரும் தனக்கு தகுந்த துணை இல்லை என்று கூறுகின்றார். ஆரும்=பொருந்திய; ஆர்தல் என்றால் ஓதுதல் என்று பொருள். வானவன்=உயர்ந்தவன்; ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்து கொண்டு வாழ்வு அளித்தவனே, பிரமனின் தலையில் பலி கொள்பவனே, மறைகள் ஓதுபவனே, அனைவரிலும் உயர்ந்தவனே, மறையின் பொருளாக இருப்பவனே, ஆலகால விடத்தினை தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனே, கடவூர் வீரட்டம் திருக்கோயிலில் உறைகின்ற எனது இறைவனே, எனக்கு அமுதமாக இருப்பவனே, உன்னைத் தவிர்த்து எனக்கு தகுந்த துணை வேறு எவரும் இல்லை என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல். பலி ஏற்கும் சமயத்தில் வேதங்களை ஓதியவாறு பெருமான் சென்ற தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

பிறையாரும் சடையாய் பிரமன் தலையில் பலி கொள்

மறையார் வானவனே மறையின் பொருள் ஆனவனே

கறையாரும் மிடற்றாய் கடவூர் தனுள் வீரட்டத்து எம்

இறைவா என்னமுதே எனக்கார் துணை நீ அலதே

இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் (7.28.3) சுந்தரர், பெருமானை தனது தந்தை என்று அழைத்து, தனது தந்தையாகிய பெருமானைத் தவிர்த்து தனக்கு தகுந்த துணை வேறு எவரும் இல்லை என்று கூறுகின்றார். ஆரும்=பொருந்திய; கரத்தல்=மறைத்தல்; மறைத்தல் மற்றும் அருள் புரிதல் ஆகிய இரண்டு தொழில்களையும் தானே பெருமான் நேரிடையாக செய்கின்றான். பண்டைய நாளில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த வண்ணம் சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்தவனே, காலனைக் கொன்று அந்தணச் சிறுவன் மார்க்கண்டேயனுக்கு உயிர் அளித்தவனே, மான் கன்று பொருந்திய கரத்தினை உடையவனே, கடவூர் வீரட்டம் தலத்தில் உறைபவனே, எனக்கு தந்தையாகிய பெருமானே, உன்னைத் தவிர எனக்கு தகுந்த துணை வேறெவரும் இல்லை என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல்.

அன்றாலின் நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள் புரிந்து

கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு மான்

கன்று ஆரும் கரவா கடவூர்த் திரு வீரட்டத்துள்

என் தாதை பெருமான் எனக்கார் துணை நீ அலதே

திருப்பாண்டிக் கொடுமுடி தலத்தின் மீது அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடலில் (7.48.5) சுந்தரர், பெருமானை நஞ்சணி கண்டா என்று அழைத்து, தான் மறந்தாலும் தனது நாக்கு நமச்சிவாய மந்திரத்தை சொல்ல மறக்காது என்று கூறுகின்றார். அரண்=பாதுகாப்பு; நல்கினாய்க்கு அழிகின்றது என்=எமக்கு அருள் புரிவதால் உமக்கு ஏற்பட இருக்கின்ற நட்டம் தான் யாது; அருளாளர்கள் அடைகின்ற அச்சமே, மீண்டும் இன்னுமொரு பிறவி தமக்கு ஏற்பட்டு விடப் போகின்றதே என்பது தான். சுந்தரரும் அத்தகைய அச்சம் கொண்டவராகத் தான் விளங்கினார் என்பதையே அச்சம் என்ற சொல் உணர்த்துகின்றது. இனியும் பிறவி வாய்த்து விடப் போகின்றதே என்ற அச்சம் கொண்டு அணுகும் தொண்டர்களுக்கு வலிமை வாய்ந்த அரணாக விளங்கும் ஆதி பெருமான் நீயே என்பதை அறிந்த அடியேனும், இன்னும் பிறப்பு எடுக்க நேரிடுமோ என்ற அச்சத்துடன் உன்னை சரண் அடைகின்றேன். அஞ்சேல் என்று சொல்லி அடியேனைத் தேற்றி பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து எனக்கு விடுதலை அளிப்பதால், உனக்கு நட்டம் ஏதுமில்லை அல்லவா. பஞ்சு போன்ற மெல்லிய பாதங்களை உடைய பாவைமார்கள் குடைந்து நீராடுகின்ற காவிரிக் கரையில் அமைந்துள்ள பாண்டிக் கொடுமுடி ஆலயத்தில் உறைகின்ற பெருமானே, ஆலகால விடத்தினை உட்கொண்டு அதனை கழுத்தில் தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கறையை அணிகலனாகக் கொண்டவனே, அடியேன் உன்னை மறக்கினும் எனது நா உனது திருநாமம் நமச்சிவாய என்பதை இடையறாது சொல்லும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்

அஞ்சல் என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்

பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்து ஆடும் பாண்டிக் கொடுமுடி

நஞ்சணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

இதே பதிகத்தின் அடுத்த பாடலில் (7.48.6) சுந்தரர் பெருமானை, சேடனே என்று அழைத்து, தான் மறந்தாலும் தனது நாக்கு நமச்சிவாய மந்திரத்தை சொல்ல மறக்காது என்று கூறுகின்றார். சேடன் என்ற சொல்லினை சிரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபாக கருதுவார்கள். சிறந்த ஒழுக்கம் படைத்தவன் என்று பொருள். சேஷம் என்றால் மிச்சம், எஞ்சியது என்று பொருள். மகா சங்கார காலத்தில் உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அழிந்து, உலகிலுள்ள அனைத்து உயிர்களும் தத்தம் உடல்களிலிருந்து நீங்கி, உலகினில் எந்தவிதமான இயக்கமும் இன்றி உலகமே சுடுகாடாக காட்சி அளிக்கும் சமயத்திலும் அழியாது நிலையாக இருக்கும் பெருமானை, எஞ்சியுள்ளவன் என்ற பொருள் பட, சேடன் என்று மிகவும் பொருத்தமாக அழைக்கின்றார் என்று பொருள் கொள்வது சிறப்பே. பாடு=பெருமை; எலும்பு மாலை, புலித்தோல் மற்றும் பாம்பினைத் தனது திருமேனியில் அணிந்து கொண்ட போதும் அழகனாகத் திகழ்பவன் பெருமான் என்று கூறுகின்றார். பாடு=அருகில்; பூவின் இதழ் போன்ற ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டவனே, எலும்பு மாலை அணிந்தவனே, கொல்லும் தன்மை கொண்ட புலித்தோலை ஆடையாக உடுத்திக் கொண்டு, அதன் மேல் படமெடுத்தாடும் பாம்பினை கச்சாக அணிந்து கொண்டு, தனது விருப்பம் போன்று அந்த பாம்பை அசைக்கும் அழகனே, அழகும் குளிர்ச்சியும் பொருந்திய காவிரி நதியின் கரையில் உள்ள தலத்தில் பொருந்தி உறைகின்ற பெருமானே, அனைத்து ஒளிகளுக்கும் மேலான ஒளியாக விளங்குபவனே, பாண்டிக்கொடுமுடி இறைவனே, மகா சங்கார காலத்தில் அனைத்து உயிர்களும் தத்தம் உடல்களை விட்டு பிரிந்த பின்னரும் அழியாது நிலையாக இருப்பவனே, உன்னை அடியேன் மறந்தாலும், எனது நா உனது திருநாமத்தை, நமச்சிவாய என்ற திருநாமத்தை இடையறாது சொல்லிக் கொண்டே இருக்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஏடு வான் இளந் திங்கள் சூடினை என்பின் கொல் புலித் தோலின் மேல்

ஆடு பாம்பது அரைக்கு அசைத்த அழகனே அந்தண் காவிரி

பாடு தண் புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி

சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

இதே பதிகத்தின் அடுத்த பாடலில் (7.48.7) சுந்தரர் பெருமானை விரும்பனே என்று அழைத்து, தான் மறந்தாலும் தனது நாக்கு நமச்சிவாய மந்திரத்தை சொல்ல மறக்காது என்று கூறுகின்றார். விண்டன=நீங்கின; கோடு=கரை; குரும்பை=தென்னங் குரும்பை; பெருமானே உன்னை மிகவும் விரும்பி உனது திருப்பாதங்களை அடியேன் நினைத்ததால் என்னை பற்றியிருந்த வினைகள் என்னை விட்டு நீங்கிவிட்டன; ஒன்றுக்கொன்று நெருங்கி வளத்துடன் விளங்கும் மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த காவிரி நதியில், தென்னங்குருத்து போன்ற மென்மையான மார்பகங்களும் நீண்ட கூந்தல்களும் உடைய மாதர்கள் குடைந்து நீராடும் காவிரி நதியின் கரையில் உள்ள பாண்டிக் கொடுமுடி திருக்கோயிலை விரும்பும் பெருமானே, உன்னை அடியேன் மறந்தாலும், எனது நா உனது திருநாமமாகிய நமச்சிவாய என்பதை இடையறாது சொல்லும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை

விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டன

நெருங்கி வண் பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடை

குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி

விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

இவ்வாறு திருஞான சம்பந்தர் கூறுவது நமக்கு சுந்தரர் வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலை (7.86.7) நினைவூட்டும். பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்று அருளாளர்கள் கூறுகின்றார் மெய்ப்பொருளாக இருப்பவனும் வெண்மையாக உள்ள திருநீற்றினை தனது உடல் முழுவதும் பூசிக்கொள்பவனும், வேதங்களின் தலைவனும், தனது கையினில் மான் மற்றும் மழு ஏந்தியவனும், அனைவரது வாழ்நாளினை முடிக்கும் காலனின் வாழ்நாளை முடித்தவனும், படத்தினை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், தனது அடியார்கள் அன்றி ஏனையோர் அறிய முடியாத வண்ணம் தன்னை மறைத்துக் கொள்பவனும், எங்களது தலைவனும் ஆகிய இறைவனை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப் படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். படிறன் என்றால் வஞ்சகன் என்று பொருள். தனது அடியார்களுக்கு காட்சி அளிக்கும் இறைவன், அடியார் அல்லாதாருக்கு காட்சி கொடுக்காமல் மறைந்து கொள்வதை, படிறு என்று சுந்தரர் குறிப்பிடுவதாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத முதல்வன்

கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்

பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்

ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (7.86.6) சுந்தரர் பெருமானை குறித்து அறிந்து கொள்ளாத மனிதர்கள் வேறு எதனைக் கற்றுக் கொண்டு பயனடைவார்கள் என்று கேட்கின்றார். எயில்= மதில்; திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வரத்தின் தன்மை காரணமாக, எவராலும் அழிக்க முடியாத தன்மையுடன், மிகவும் வல்லமை வாய்ந்த கோட்டைகளாக, அவர்களது மூன்று பறக்கும் கோட்டைகளும் கருதப் பட்டன. அந்த வலிமை பொய்யானது என்று சொல்லும் வண்ணம், அந்த கோட்டைகளை எரித்து அழித்தவர் பெருமான். பொக்கம்=பொய்; திரிபுரத்து அரக்கர்களின் வலிமை வாய்ந்த கோட்டைகளை எரித்து அழித்த பெருமான், எட்டு தோள்களும் மூன்று கண்களும் உடையவன்; அவன் வெய்யிலாகவும் காற்றாகவும் தீயாகவும் மின்னலாகவும் விளங்குகின்றான். மயில்கள் நிறைந்த சோலைகளை ஊடிய வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தினில் உறைகின்ற பெருமானின் தன்மைகளை அறிந்து கொண்டு, அவனுக்கு அடிமையாக வாழ பழகிக் கொள்ளாத மனிதர்கள் வேறு எதனைக் கற்றுக் கொண்டு வாழ்வினில் பயனடைவார்கள் என்ற கேள்வியை சுந்தரர் இந்த பாடலில் கேட்கின்றார். பயிலுதல்=தொடர்ந்து ஒரு செயலைச் செய்தல். பயில்வான்=தொடர்ந்து உறைபவன்;

எயிலார் பொக்கம் எரித்த எண்டோள் முக்கண் இறைவன்

வெயிலாய்க் காற்றென வீசி மின்னாய்த் தீயென நின்றான்

மயிலார் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்

பயில்வானுக்கு அடிமைக் கண் பயிலாதார் பயில்வு என்னே

இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (7.86.4) சுந்தரர், பெருமானின் புகழினைப் பேசாதாரின் பேச்சுக்களை பேச்சாக மதியோம் என்று கூறுகின்றார். பெற்று=இடப வாகனம்; பெற்றம் என்ற சொல், எதுகை கருதி, பெற்று என குறைந்து நின்றது. கோணாதார்=நேர் வழியில் நடப்பவர், நல்லொழுக்க நெறியிலிருந்து வழுவாமல் இருக்கும் மனிதர்கள்; தனது நெற்றியில் கண் உடையவனும், திருநீறு படிந்த திருமேனியை உடையவனும் குற்றமற்ற குணங்கள் கொண்டவனும், நேர் வழியில் நன்னெறியில் நடக்கும் மனிதர்களின் மனதினில் பொருந்தி உறைபவனும், படமெடுத்து ஆடும் பாம்பினைப் பற்றிக் கொண்டு தனது இடுப்பினில் சுற்றிக் கொள்பவனும், பலரிடமிருந்தும் தன்னை மறைத்துக் கொள்ளும் கள்வனும் இடபத்தை வாகனமாகக் கொண்டவனும் பனங்காட்டூர் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானைப் பற்றி பேசாதவர்களின் பேச்சினை பேச்சாக மதிக்க மாட்டோம் என்று சுந்தரர் கூறுகின்றார்.

நெற்றிக்கண் உடையானை நீரேறும் திருமேனிக்

குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானைக்

பற்றிப் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்

பெற்று ஒன்று ஏறும் பெருமானைப் பேசாதார் பேச்சு என்னே

மேலே குறிப்பிட்ட பாடல்களில் பெருமானை வழிபடாத அறிவு, அறிவு என்று கருதப்படாததை நாம் உணர்ந்தோம். மணிவாசகர் ஒரு படி மேலே சென்று,அத்தகைய அறிவு இல்லாத மூடர்களிடம் அச்சம் கொண்டு அவர்களுடன் பழகுவதை தவிர்ப்போம் என்று அச்சப்பத்து பதிகத்தினில் கூறுகின்றார். தறி=காட்டுத்தறி, தறியிலிருந்து விடுபடும் யானை மிகுந்த கோபத்துடன் வரும்; உழுவை=புலி; பெருமானின் சடை நறுமணத்துடன் கூடியது என்று அடிகளார் இங்கே கூறுகின்றார்,

தறி செறு களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்

வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா

செறி தரு கழல்கள் ஏந்தி சிறந்து இனிது இருக்க மாட்டா

அறிவு இலாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே

மாசிலாமணி, கேடிலா மணி என்பன இந்த தலத்து இறைவனின் திருநாமங்கள்; வாடினார் தலை=பிடுங்கி எறியப் பட்டதால் வாடிய பிரமனின் தலை; கோடு=உச்சி; பூகம்=கமுகு பாக்கு மரங்கள்; பூகமும் கூந்தல்=கமுகு மரங்களின் ஓலைக் கொத்து; கெழு முதல்=நிறைந்த முதல்வன்; பெருமான் ஒருவரே நிறைந்த முழுமுதல் கடவுள் என்பதை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். நம்பன்=விரும்பப் படுபவன், அடியார்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதால் பெருமானை, அடியார்கள் மிகவும் விரும்புகின்றனர் என்று உணர்த்தும் வண்ணம், சிவபெருமானை நம்பன் என்று தேவார முதலிகள் குறிப்பிடுகின்றனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்தின் முதல் பாடலில் அப்பர் பெருமான் இறைவனை நம்பன் என்று அழைக்கின்றார். திரிபுரத்து அரக்கர்களின் கொடுமைகளிலிருந்து விடுபடத் தெரியாமல், சிவபெருமானிடம் தேவர்கள் சரணடைந்த பின்னர், திரிபுரத்து மூன்று கோட்டைகளையும் நெருப்பு மூட்டி அழித்து, தேவர்கள் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கைக்கு ஏற்ப, அவர்களது இடர்களைக் களைந்த சிவபெருமானை, நம்பன் என்று அழைப்பது தானே பொருத்தம். அம்பன்=அம்பினை உடையவன், திருமால் அக்னி வாயு ஆகிய மூவரும் இணைந்த அம்பினைத் தான் கொண்டிருந்த வில்லில் பூட்டிய செயலை இங்கே, அம்பன் என்ற சொல் மூலம் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆறு=வழி, நல்ல வழியை காட்டுபவன். கச்சியுள் ஏகம்பன் என்றும் கச்சியுள்ளே கம்பன் என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம். கம்பன்=தூணாக நின்றவன்: ஏகம்பன்=தலத்து இறைவனின் திருநாமம்.

நம்பனை நகரம் மூன்றும் எரி உண வெருவ நோக்கும்

அம்பனை அமுதை ஆற்றை அணி பொழில் கச்சியுள்ளே

கம்பனைக் கதிர் வெண் திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னைச்

செம்பொனைப் பவளத் தூணைச் சிந்தியா எழுகின்றேனே

அனைவராலும் விரும்பப்படுவனும், அனைவராலும் தங்களது இடர்களைத் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவர் என்று நம்பப்படுவனும் ஆகிய தலைவனும், எப்போதும் வானில் பறந்து திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் தீக்கு இரையாக மாற்றுவதற்கு கோபத்துடன் விழித்தபோது திருமாலாகிய அம்பினை கையில் ஏந்தியவனும், அமுதமாக அனைவர்க்கும் இனிப்பவனும், அனைவருக்கும் நல்ல வழியினைக் காட்டுபவனும், கச்சி நகரத்தில் ஏகம்பனாக வீற்றிருப்பவனும், ஒளிவீசும் கிரணங்களை உடைய சந்திரனை தனது சிவந்த செஞ்சடையில் அணிந்தவனும், உயர்ந்த செம்பொன் போன்றவனும், பவளத் தூண் போன்று காட்சி அளிப்பவனும் ஆகிய சிவபெருமானை, தியானித்து நான் உள்ளத்தில் கிளர்ச்சி உடையவனாக இங்கே நிற்கின்றேன் என்று அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார்.

திருப்பழனம் நகரத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.67) முதல் பாடலில், இறைவனிடம் நம்பிக்கை வைத்து நம்பா என்று திருப்பாதங்களைத் தொழும் அடியார்களின் பாவங்களைத் தீர்ப்பவர் பழன நகரத்து இறைவன் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். நக்கன்=குறைந்த ஆடையினை அணிந்தவன்; பெருமான் விலை உயர்ந்த ஆடைகளைத் தவிர்த்து, கோவணம் அணிந்து எளிமையாக இருக்கும் தன்மையை இங்கே திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இறைவன் நமக்கு பல விதங்களிலும் நன்மை செய்தும், நமது பல வேண்டுகோளை நிறைவேற்றியும் அருள் புரிவதால், நாம் விருப்பம் கொள்வதற்கு அவனை விடவும் அதிகமான தகுதி படைத்தவர் வேறு எவரும் இல்லை அல்லவா. இந்த பாடலில் நாதா என்றும் நம்பா என்றும் நக்கா என்றும் தன்னை அழைத்து, தனது திருவடிகளைத் தொழுது நிற்கும் அடியார்களின் பாவங்களை முற்றிலும் தீர்த்து நன்மை புரிபவர் பழன நகரத்தின் இறைவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வேதங்களை ஓதிக் கொண்டும் மார்பினில் வெண்ணூல் அணிந்து கொண்டும் வெள்ளை எருதினைத் தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்லும் பெருமான், பூதங்கள் தன்னைச் சூழ்ந்து வரும் வண்ணம் பொலிவுடன் செல்கின்றார். அவர், தாருகவனத்து முனிவர்களால் தன் மீது ஏவப்பட்ட புலியினைக் கொன்று, அதன் தோலினைத் தனது ஆடையாக உடுத்தியுள்ளார். எங்களது தலைவனே என்றும், குறைந்த உடையணிந்து எளிமையுடன் திகழும் நக்கா என்றும், நாங்கள் விரும்பும் பெருமானே என்றும் மனம் ஒன்றி அழைத்து, தனது திருவடிகளைத் தொழும் அடியார்களின் பாவங்களை தீர்க்கும் பெருமான் பழன நகரினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்

பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரி தோலார்

நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று

பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் (1.67.8), கயிலை மலையின் கீழ் இடுக்குண்டு அவதிப்பட்ட அரக்கன் இராவணன், மிகுந்த நம்பிக்கையுடன் சாமகானம் பாடி இறைவனை மகிழ்வித்து, பல அருள்கள் பெற்ற பின்னர், இராவணனால் மிகவும் விரும்பப்படும் தலைவனாக சிவபெருமான் இருந்ததைக் குறிப்பிடும் முறையில், இந்த பாடலில் நம்பான் என்று திருஞான சம்பந்தர் அழைப்பதை நாம் காணலாம். மாறா எடுத்தான்=தான் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்பதால் தனக்கு எதிரியாக பெருமானை கருதி மலையை பேர்த்து எடுக்க துணிந்தவன்: மஞ்சு=மேகம்: அரக்கனின் உயர்ந்த உருவம் இங்கே உணர்த்தப் படுகின்றது. பைந்தாமரை=பசுமையான தாமரை மலர்கள்; வம்பு=நறுமணம்; நஞ்சார்=நச்சுத் தன்மை பொருந்திய; சுடலை=சுடுகாடு; மஞ்சோங்கு உயரம் என்பதனை மலை என்ற சொல்லுடன் இணைத்து பொருள் கொள்ள வேண்டும். மேகங்கள் படர்ந்த ஆகாயத்தை எட்டும் வண்ணம் உயர்ந்த கயிலாய மலையினை, அரக்கன் இராவணன், கயிலை மலையின் புனிதம் கருதி அதனை வணங்கி வலம் செய்யும் ஏனையோரின் இயல்புக்கு மாறுபட்டு, கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்தான்; அவ்வாறு முயற்சி செய்த அரக்கனின் இருபது தோள்களும் ஒன்றோடொன்று நெருங்கி கூழாக மாறும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான்; நச்சுத்தன்மை பொருந்திய சுடுகாட்டினில் உள்ள சாம்பல் பொடியைத் தனது திருமேனியெங்கும் பூசியவன் சிவபெருமான்; அவர் நறுமணம் நிறைந்த பசுமையான தாமரைகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பழனம் நகரத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மஞ்சோங்கு உயரம் உடையான் மலையை மாறா எடுத்தான் தோள்

அஞ்சோடு அஞ்சு ஆறு நான்கும் அடர ஊன்றினார்

நஞ்சார் சுடலைப் பொடி நீறு அணிந்த நம்பான் வம்பாரும்

பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே

திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதில் திருஞானசம்பந்தருக்கு நாட்டம் இல்லாமல் இருந்தது. எனினும், வேதநெறி தழைத்து ஓங்க அவதாரம் செய்த அவர், வேதநெறியில் குறிப்பிடப்படும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வது தவறு என்று அவரது தந்தையாரும் மற்ற பெரியோர்களும் குறிப்பிட்டு வற்புறுத்தவே, தனக்கு முழு விருப்பம் இல்லாத போதிலும், திருமணம் செய்து கொள்வதற்கு திருஞானசம்பந்தர் இசைகின்றார். நல்லூர் பெருமணம் என்று அழைக்கப்பட்ட தலத்தில் (இன்றைய பெயர் ஆச்சாள்புரம்) திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. திருமண நாளன்று,திருஞானசம்பந்தர் இறைவனை நோக்கி, இறைவனே உன்னிடம் நான் எப்போதும் மணவாழ்க்கை அமையவேண்டும் என்று வேண்டவில்லையே, எனது பதிகங்கள் எனது உண்மையான விருப்பத்தை உனக்கு தெரிவிக்கவில்லையா, ஏன் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து செய்யப்படும் திருமண வாழ்க்கை எனக்கு நேரிடும் வண்ணம் செய்தாய் என்று இறைவனிடம் தனது கோரிக்கையை விடுக்கின்றார். தனது விருப்பங்கள் (பிறரின் நலனுக்காக விடுத்த வேண்டுகோள்) பலவற்றையும் நிறைவேற்றிய பெருமானை நம்பானே என்று இந்த பாடலில் அழைக்கின்றார். நம்பனே என்ற சொல் நம்பானே என்று நீண்டது. கல்லூர்ப் பெருமணம் என்று தொடங்கும் இந்தப் பதிகம் (3.125) பாடி முடிக்கப் பட்ட பின்னர் வானிலிருந்து எழுந்த ஒரு அசரீரி வாயிலாக பெருமான்,திருஞானசம்பந்தர் விடுத்த வேண்டுகோளினை ஏற்று கொண்டதை தெரிவிக்கின்றார். திருமணம் முடிந்ததும், திருக்கோயிலில் தோன்றும் ஒரு சோதியின் வழியே உட்புகுந்து, தன்னை வந்து அடையுமாறு திருஞானசம்பந்தரை பணிக்கின்றார். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் முன் செல்ல, திருஞான சம்பந்தர் தனது மனைவியுடன் அந்த சோதியின் உள்ளே புகுந்து, சிவலோகம் சென்றடைந்தார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு அடியார்கள் விடுக்கும் வேண்டுகோளினை நிறைவேற்றும் பெருமானை, விரும்புவதற்கு உரியவன் என்று அழைப்பது தானே பொருத்தம்.

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்

பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய் ஆய்த்தில

சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்

நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே

கள்ளில் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.119.6) பெருமான் ஏற்கும் பலியினை திருஞானசம்பந்தர் மக்களுக்கு நலம் பயக்கும் பலி என்று குறிப்பிடுகின்றார். மேற்கண்டவாறு சிவபெருமான் பலி ஏற்பது நம்மிடம் உள்ள தீய குணங்களை, மலங்களை அவனது பிச்சை பாத்திரத்தில் இட்டு நாம் தூய்மை அடைவதற்காகத் தான். இந்த கருத்தினை உள்ளடக்கி, மக்களுக்கு நன்மைகள் ஏற்பட பலியேற்கும் கொள்கை உடையவன் சிவபெருமான் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் நன்மை புரிய காத்திருக்கும் சிவபெருமானை நமது விருப்பத்திற்கு உரியவன் என்று அழைத்து நாம் அவனை ஏன் விரும்பவேண்டும் என்பதையும் நமக்கு திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். தன்னை அடைய விரும்பி தவம் புரிவோர்க்கு சிவபெருமான் அத்தகைய அடியார்களின் மலங்களை நீக்குவான் என்றும் இங்கே கூறுகின்றார்.

நலனாய பலி கொள்கை நம்பான் நல்ல

வலனாய மழுவாளும் வேலும் வல்லான்

கலனாய தலை ஓட்டான் கள்ளின் மேயான்

மலனாய தீர்த்து எய்து மாதவத்தோர்க்கே

எண்ணற்ற பல பிறவிகளில் செய்த செயல்கள் காரணமாக, உயிர்கள் சேர்த்துக் கொண்டுவரும் வினைகளை, வலிமையாக உயிருடன் பற்றியுள்ள வினைகளை, உயிர்கள் நுகர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் மீண்டும்மீண்டும் பிறவிகள் எடுத்து அந்த வினைகளை நுகர்ந்து கழிக்கும் முயற்சியில், உயிர்கள் மேலும் பல புதிய வினைகளை (ஆகாமிய வினைகள் என்று சொல்வார்கள்) சேர்த்துக் கொள்வதால், புதியதாக சேர்ந்த அந்த வினைகளை கழிக்கும் முயற்சியில் மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றன. இவ்வாறு பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் தவிக்கும் உயிர்கள் தங்களின் வினைகளை எளிதில் தீர்த்துக் கொள்வதற்கு உள்ள ஒரே வழி சிவபெருமானை வழிபடுவது தான் என்பதால், உயிர்கள் விரும்புவதற்கு உரியவனாக சிவபெருமான் இருக்கின்றார் என்று உணர்த்தும் பாடல் ஈங்கோய் மலை தலத்தின் மீது அருளப்பட்ட பாடலாகும் (1.70.7). வேறு எவராலும் தீர்க்கமுடியாத வினைகளை தீர்க்கும் வல்லமை வாய்ந்தவர் சிவபெருமான் என்பதால், அவரை விகிர்தா என்று திருஞான சம்பந்தர் இங்கே அழைக்கின்றார். விகிர்தர் என்றால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர் என்று பொருள். தனையார்=பூக்களில் சிறந்த பூவாக இருப்பதால், தலைமையான பூ என்று தாமரை மலரை குறிப்பிடுகின்றார். நனை=அரும்பு; மறுவாழ்வு அளித்தமையால் சந்திரன் விரும்பும் தன்மையில் உள்ள பெருமான், தீர்க்க முடியாத வலிய வினைகளைத் தீர்ப்பதால், உயிர்கள் விரும்பும் தகுதி படைத்தவனாக உள்ளான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பக்குவப்பட்ட உயிர்களின் வினைகளைத் தீர்த்து அருள் புரிந்து, மற்ற தெய்வங்களிலிருந்து வேறுபட்டு இருக்கும் இறைவன் சிவபெருமான், தழைத்து விரிந்த கொன்றை மலர்கள் மற்றும் அரும்புகள் சூடப்பட்ட சடையின் மேல் பிறைச் சந்திரனை ஏற்றவனாக, அனைத்து உயிர்களும் விரும்பும் வண்ணம் உள்ளவனும், பல நலன்கள் உடையதாக பூக்களில் தலை சிறந்ததாக விளங்கும் தாமரை மலரினில் உறையும் பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைத் தனது கையில் உணவு உட்கொள்ளும் பிரம கபாலமாகக் கொண்டவனும், தீப்பிழம்பினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் நடனம் ஆடுபவனும், என்னை ஆளுடைய பெருமானும் ஆகிய சிவபெருமான், உமை அன்னையுடன் சேர்ந்து உறையும் தலம் ஈங்கோய் மலையாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி கொன்றை

நனையார் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நல மல்கு

தனையார் கமல மலர் மேல் உறைவான் தலையோடு

எனை ஆளுடையான் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே

அனைவரும் விரும்புவதற்கு தகுதி வாய்ந்தவராக விளங்கும் பெருமானின் தன்மையை புரிந்து கொள்ளாமல், அவரை விரும்பித் தொழுவதற்கு பதிலாக,சிரித்து ஏளனம் செய்யும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் பரிதாப நிலையினை இந்த பாடலில் (1.82.10) திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். சிக்கார்=சிக்கு பிடித்த உடை; தட்டு=ஓலைத் தடுக்கு; சிறிய ஓலைத் தடுக்கையே தங்களது உடையாகக் கொண்ட சமணர்கள்; பெருமானின் தன்மையை புரிந்து கொண்டு, மறைகளை ஓதி, வேள்விகள் செய்தும் மிகுந்த விருப்பத்துடன் பெருமானை வழிபடும் வீழி மிழலை அந்தணர்கள், தகுதி வாய்ந்தவர்களாக உலகினில் மேம்பட்டவர்களாக வாழும் நிலையும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. அலர்=வீண்பழி;

சிக்கார் துவராடைச் சிறுதட்டு உடையாரும்

நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில்

தக்கார் மறை வேள்வித் தலையாய் உலகுக்கு

மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே

அனைவரின் விருப்பத்துக்கு உரியவனாக விளங்கும் பெருமானின் திருவடிகளின் சிறப்பினை நாள்தோறும் சொல்லாத மனிதர்களின் குற்றங்கள் தீரா என்று அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.83.3) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உயிரின் குற்றமாக கருதப் படுவது, உயிருடன் பிணைந்துள்ள வினைகளும் அவற்றின் தன்மையால் மீண்டும்மீண்டும் பிறவி எடுக்கும் நிலையும் தான். எனவே பிறவிப் பிணியினைத் தீர்த்துக் கொள்வதற்கு நாம் வழிபட வேண்டியது சிவபெருமான் தான் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. ஊனம் என்பதற்கு பழி பாவம் என்று பொருள் கொண்டு,சந்திரன் சிவபெருமானை வழிபட்டு, தனது பாவங்களைத் தீர்த்துக் கொண்டது போன்று நாமும் பயனடைய வேண்டும் என்று திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. குற்றம் நீங்கிய சந்திரனை செல்வ மதி என்று கூறுகின்றார். நரையார் விடை=வெண்மையான இடபம்;

திரையார் புனலொடு செல்வ மதி சூடி

விரையார் பொழில் அம்பர் மாகாளம் மேய

நரையார் விடையூரும் நம்பான் கழல் நாளும்

உரையாதவர்கள் மேல் ஒழியா ஊனமே

நம்பான் மேய நன்னகர் போலும் குற்றாலம் என்று உணர்த்தும் பாடல் மூலம் (1.99.1), நமது நம்பிக்கைக்கு உரியவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வம்பு=புதுமை; எத்தனை முறை கண்டாலும் புதுமையுடன் விளங்கும் குற்றாலம் என்று கூறுகின்றார். வம்பு என்பதற்கு நறுமணம் என்று பொருள் கொண்டு, நறுமணம் கமழும் குற்றாலம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கொம்பு=கிளைகள், இங்கே வேங்கை மரத்தின் கிளைகள். அம் என்ற சொல்லினை ஆடல் என்ற சொல்லுடன் பொருத்தி, அழகிய நீராடல் என்று பொருள் கொள்ள வேண்டும். கோல வண்டு=அழகிய வண்டுகள்; இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் பெருமானை, திருஞானசம்பந்தர் நம்பான் என்று அழைக்கின்றார். குறும்பலா என்று குறிப்பிட்டு குற்றாலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.71) இரண்டு பாடல்களிலும், பெருமானை நம்பான் என்று திருஞான சம்பந்தர் அழைக்கின்றார்.

வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர் வேங்கைக்

கொம்பார் சோலைக் கோல வண்டு யாழ் செய் குற்றாலம்

அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை

நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்

நாலூர் மயானம் என்ற தலத்தின் மீது பாடிய பாடல் ஒன்றிலும் (2.46.1) பெருமானை நம்பான் என்று குறிப்பிட்டு, அவனது திருவடிகளையே நினைத்து மயங்கும் அடியார்கள் மேல் பிறவி என்ற குற்றம் படியாது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பால் ஊரும்=பக்கத்தினில் ஊர்ந்து செல்லும்; மேலூரும்=மேலே பொருத்தப்பட்ட; மால்=மயக்கம்; பெருமான் பால் நாம் வைத்துள்ள அன்பு மயக்கமாக மாற வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். குளிர்ந்த பிறைச் சந்திரனையும் ஊமத்தை மலரினையும் தாங்கியுள்ள பெருமானின் செஞ்சடையில் அருகே மலைப்பாம்பும் ஊர்ந்து செல்கின்றது. இத்தகைய செஞ்சடையை உடைய பெருமான், வெண்ணூலைத் தனது மார்பினில் அணிந்தவனாக நாலூர் மயானம் தலத்தில் காட்சி அளிக்கின்றான். அடியார்களுக்கு பல விதங்களிலும் உதவி புரிந்து, அவர்களின் நம்பிக்கைக்கு உரியவனாக விளங்கும் பெருமானின் திருவடிகளையே எப்போதும் நினைத்த வண்ணம் மயங்கும் அடியார்களுக்கு மறுபிறப்பு என்ற தன்மை வந்து பொருந்தாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாலூரும் மலைப் பாம்பும் பனி மதியும் மத்தமும்

மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல் சேர் மார்பினான்

நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து

மால் ஊரும் சிந்தையர் பால் வந்து ஊரா மறுபிறப்பே

இறைவன் பால் நமக்கு அன்பு ஏற்படுவதற்கும் காரணமாக இருப்பது அவனது அருள் என்பதை நாம் அறிவோம். மணிவாசக அடிகளார், ஆனந்தமாலை பதிகத்தின் மூன்றாவது பாடலில், மாலும் காட்டி வழி காட்டிய இறைவன் என்று குறிப்பிடுகின்றார். மாலும் என்ற சொல்லுக்கு, தனது சிந்தையில் அன்பு மிகுதியினால் ஏற்பட்ட மயக்கம் என்று பொருள் கொண்டு, அத்தகைய மயக்கத்தையும் அதன் விளைவாக ஈடுபடுத்தப்படும் சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய வழிகளையும் காட்டிய பெருமான் என்று அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். சிறந்த ஒழுக்கமும் விரதங்களும் இறைவழிபாட்டினில் ஈடுபாடும், மெய்ஞானமும் இல்லாமல், எந்தவிதமான கட்டுப்பாடின்றி பொம்மலாட்டத்தில் ஆட்டுவிக்கப்படும் தோல் பொம்மையை போன்று ஆடுபவன் என்று தன்னை குறிப்பிடுகின்றார். இவ்வாறு தன்னை ஆட்டுவிப்பது யான் எனது என்ற பற்றுக்களே என்பதை உணர்த்தும் அடிகளார், தான் இத்தகைய ஆட்டத்தால் களைத்து சுழன்று விழுந்து வருந்துவதாகவும் குறிப்பிடுகின்றார். விழுந்து கிடப்பேன் என்று அடிகளார் கூறுவதை, நாம் பிறப்பிறப்புச் சுழற்சியில் விழுந்து கிடப்பதாக பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். யான் மற்றும் எனது என்ற உணர்வுகளால் ஆட்டுவிக்கப்படும் உயிர்கள், மீண்டும்மீண்டும் பிறப்பெடுத்து, களைத்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் என்று கூறுகின்றார். எனவே தான், தனது உயிர் இறைவனின் திருவடிகளில் சென்று சேர்வது எந்நாளோ என்று ஏங்கும் அடிகளார், தனது உயிர் உய்வினை அடைவதற்காக இறைவன் அருளிய தன்மையையும் இங்கே. மாலும் காட்டி வழிகாட்டி கோலம் காட்டி ஆண்டான் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார்.

சீலம் இன்றி நோன்பு இன்றிச் செறிவே இன்றி அறிவு இன்றி

தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை

மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறியேறக்

கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே

தன்னை அணுகும் அடியார்களின் வினைகளை நாசம் செய்யும் பெருமானை நம்பான் என்று அழைப்பது தானே பொருத்தம். நமது வினைகளை நாசம் செய்யும் பெருமான், நமக்கு செய்யும் மற்ற உதவிகளும் இந்த பாடலில் (2.11.7) குறிப்பிடப் படுகின்றது. நம்மை திருத்தும் வண்ணம் பல துன்பங்களை நமக்கு அளித்து நம்மை நல்வழிபடுத்தித் திருத்தியும், நாம் துயரடையும் தருணங்களில் நமது துன்பங்களைத் தீர்த்தும் அருள் புரியும் இறைவன் இன்ப வடிவினாகவும் அன்பு வடிவினனாகவும் இருக்கின்றார். அவர், ஏழிசையின் நுணுக்கங்களை அறிந்து பாடல்களுக்கு உரிய பண்ணுடன் இசைத்துப் பாடிப் போற்றும் அடியார்களை பேணி பாதுகாக்கின்றார்.

துன்பானைத் துன்பம் அழித்து அருளாக்கிய

இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார்

அன்பானை அணிபொழில் காழி நகர் மேய

நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே

நமது விருப்பத்திற்கு உரியவன் சிவபெருமான் என்பதை உணர்ந்து, அவனை நம்பா என்று அழைத்தால், நமக்கு பல விதங்களிலும் அருள் புரிபவன் சிவபெருமான் என்று உணர்த்தும் பாடல் முதுகுன்றம் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பாடலாகும் (2.64.6). வம்பு= நறுமணம்; மொய்ம்பு=நெருக்கம்; நறுமணம் நிறைந்த கொன்றை வன்னி ஊமத்தை முதலிய மலர்களை தனது திருமேனியின் மீது தூவி, நம்பா என்று தன்னை அழைத்து தொழும் அடியார்களுக்கு தனது அருளினை நல்கும் பெருமானாகிய இறைவன் உறையும் திருக்கோயில் உடைய தலம், கிளைகளை உடைய குரா மரமும் கொகுடி முல்லை கொடிகளும் எங்கும் பரந்து வளர்வதால் நெருக்கமாக உள்ளதும் வண்டுகள் இடைவிடாது பாடுவதும் ஆகிய சோலைகள் உடையதும் ஆகிய முதுகுன்றம் ஆகும்

வம்பார் கொன்றை வன்னி மத்த மலர் தூவி

நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில்

கம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்

மொய்ம்பார் சோலை வண்டு பாடு முதுகுன்றே

மேற்கண்ட பாடல்கள் உணர்த்தும் வண்ணம், நாம் விரும்புவதற்கு தகுதி படைத்தவனாக விளங்கும் பெருமானை, தான் நனவிலும் கனவிலும் மனம் ஒன்றி விரும்பி வழிபட்டு மறவாது இருந்த நிலையினை திருவாவடுதுறை தலத்து பாடல் ஒன்றில் (3.4.3) திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மனவினும்=மனம் ஒன்றி; தனது தந்தையார் வேள்வி செய்வதற்காக வேண்டிய பொருளை நாடி இறைவனிடம் திருஞானசம்பந்தர் விண்ணப்பம் வைக்கும் பதிகம் இந்த பதிகம். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், பெருமானின் அருளினைப் பெறுவதற்கு தான் தகுதி வாய்ந்தவன் என்பதை, தனது தன்மையை குறிப்பிட்டு திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். இவ்வாறு தனது பல விதமான தகுதிகளை குறிப்பிட்டு, பெருமானிடம் உரிமை கோருவதன் மூலம், அத்தகைய தகுதிகளை நாமும் வளர்த்துக் கொண்டு பெருமானிடம் உரிமையாக எந்த உதவியையும் கோரலாம் என்று நமக்கு திருஞான சம்பந்தர் கற்றுக் கொடுக்கின்றார். விரிந்த கங்கை நீருடன் அன்று மலர்ந்த கொன்றை மலரையும் தனது சடையில் சூட்டிக்கொண்டு, கனன்று எரிகின்ற நெருப்பையும் கையில் ஏந்திய, தாய் போன்று கருணை உள்ளம் கொண்ட சிவபிரானே, நான் நனவிலும், கனவிலும் உன்னை மனம் ஒன்றி வழிபடுவதற்கு மறந்திலேன். அவ்வாறு இருக்கையில் எனக்குத் தேவையான பொருளை நீர் தராமல் இருப்பது உனது இன்னருளுக்கு அழகாகுமா என்ற கேள்வியை திருஞான சம்பந்தர் கேட்கின்றார்.

நனவினும் கனவினும் நம்பா உன்னை

மனவினும் வழிபட மறவேன் அம்மான்

புனல் விரி நறுங்கொன்றை போது அணிந்த

கனல் எரி அனல் புல்கு கையவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையே

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

தனது உடல் நோய்வாய்ப் பட்டு தொடர்ந்து தும்மல் மற்றும் இருமல் ஆகியவற்றால் வருந்திய போதிலும் தான் தொடர்ந்து பெருமானை வழிபடுவேன் என்று ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் நான்காவது பாடலில் (3.4.4) திருஞான சம்பந்தர் கூறுகின்றார். மல்குதல்= நிறைந்து இருத்தல், பொருந்தி இருத்தல். வரி=வரிந்து கட்டப்பட்ட. வரி சிலை=வாசுகி பாம்பினை நாணாக பயன்படுத்தி கட்டப்பட்ட மேரு வில். சிலை=மலை; முனிதல்=கோபித்தல். அரற்றுதல்= இடைவிடாது கூறுதல். தொடர்ந்து தும்முவது மரணக் குறிகளில் ஒன்று. மரணம் நெருங்கும் சமயத்தில் ஒருவனது பொறிகள் ஒவ்வொன்றாக தான் செய்யும் பணிகளை நிறுத்தும். இது நாம் அனைவரும் உலகில் கண்கூடாக காணும் நிகழ்ச்சி. அத்தகைய நிலையிலும் தனது நாக்கு விடாமல் இறைவனின் திருவடிப் புகழ்களை பாடிக் கொண்டு இருக்கும் என்று திருஞான சம்பந்தர் கூறுவதில் இருந்து, தனது வாழ்நாளில் அவர் எவ்வாறு இடைவிடாது அரனின் புகழை பாடிக் கொண்டு இருந்தார் என்பதை நாம் உணரலாம். சிவபெருமானின் திருவடிகளை தனது வாழ்நாளில் எப்போதும் போற்றிக் கொண்டு இருந்ததால், தனது நாக்கு சிவபெருமானைப் போற்றும் சொற்களால் தழும்பு ஏறி, அந்தப் போற்றுதல்கள் தவிர வேறு ஏதும் செய்யாது என்று உறுதிபடக் கூறுகின்றார். கையில் நிறைந்து பொருந்திய, மேருமலையினை வளைத்து வில்லாகவும் வாசுகி பாம்பினை நாணாகவும் பொருத்தி, அதன் மூலம் ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளும் எரிந்து விழுமாறு கோபித்து வீரச்செயல் புரிந்த சிவபிரானே, நான் உடல் நலம் கெட்டு அடிக்கடி தும்மி இடர்ப்படும் நேரத்திலும் உனது பாத கமலங்களைப் போற்றி துதிப்பது அல்லாமல் வேறு ஏதும் செய்யேன். அத்தகைய அடியானுக்கு, ஆவடுதுறை அரசே, நீர் மனம் இரங்கி பொருள் அளிக்காமல் இருப்பது முறையா என்ற கேள்வி திருஞான சம்பந்தரால் கேட்கப்படும் பாடல்.

தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது என் நாக்
கைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதிள் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

தனது வாழ்வில் எந்த விதமான நிலையில் இருந்தாலும் பெருமானைத் தொடர்ந்து தொழுவேன் என்று இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். போழ் என்றால் பிளவுபட்ட என்று பொருள். முழு வட்டம் போன்ற அமைப்பில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரு பிறையாக இருந்த நிலையில் சந்திரன் இறைவனிடம் தஞ்சம் புகுந்த காரணத்தால், அவ்வாறு தஞ்சம் புகுந்த சந்திரன் போழ் இள மதி என்று அழைக்கப் படுகின்றது. தாழ் இளம் என்றால் தாழ்ந்த இடம் (பள்ளம்) நோக்கிப் பாயும் தன்மை படைத்த என்று பொருள். தடம் புனல் என்றால் குளிர்ந்தும் பரந்தும் காணப்படும் நீர் நிலை. பள்ளம் நோக்கிப் பாயும் கங்கை நதியை தனது சடையில் நிறுத்தியவனே என்று கூறுவதன் மூலம் சிவபெருமானது ஆற்றலும், பிளவுபட்ட சந்திரனை குறிப்பிடுவதன் மூலம் சிவபெருமானது கருணையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. சாவு என்று இறக்கும் நிலையும் அப்போது ஏற்படும் வருத்தங்களும் குறிக்கப் படுகின்றன. வீழினும் உன கழல் விடுவேன் அல்லேன் என்ற தொடர், வழுக்கி வீழினும் திருப்பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறுமாற்றம் என்று சுந்தரர் குறிப்பிடுவது (7.54.1) நமது நினைவுக்கு வருகின்றது. ஆவடுதுறை இறைவனே, இன்பமாக வாழும் நிலையிலும், இறக்கும் தருவாயில் துன்பங்கள் என்னை வருத்தும் போதிலும், இடர்கள் வந்து என்னை கீழ்நிலைக்குத் தள்ளினாலும், உனது திருவடிகளைத் தொழுவதை நிறுத்த மாட்டேன். பள்ளத்தை நோக்கிப் பாயும் தன்மை கொண்ட விரிந்த கங்கையை தனது சடையில் அடக்கித் தேக்கிக் கொள்ளும் வல்லமை படைத்த இறைவனே, தக்கனது சாபத்தால் பிளவு பட்ட சந்திரனை தனது சடையில் ஏற்று வாழ்வு அளித்த புண்ணியனே, ஆட்கொண்ட எனக்கு பொருள் ஏதும் அளிக்காமல் இருப்பது தான், உனது அருட்செயலா என்ற கேள்வி திருஞான சம்பந்தரால் இந்த பாடலில் கேட்கப் படுகின்றது.

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளந் தடம் புனல் தயங்கு சென்னிப்
போழிள மதி வைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வாழ்வினில் தனக்கு எந்தவிதமான துன்பங்கள் நேர்ந்தாலும் பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதனையும் தனது நா புகழாது என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடும் பாடல் திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (3.4.6). வெருவுறுதல்=அச்சம் உண்டாதல். வெந்துயர்= கொடுமையான துயரம். ஏத்துதல்=புகழ்தல். அரவு=பாம்பு. அரை=இடுப்பு. சந்தம்=நறுமணம். மூன்று வயதில் தனக்கு ஞானப்பால் கொடுத்து ஆட்கொண்ட இறைவனை, திருஞான சம்பந்தர் தந்தை என்று அழைத்து மகிழ்வதையும் நாம் இங்கே உணரலாம். சங்கரன் என்றால் நன்மையைச் செய்பவன் என்று பொருள். சங்கரன் என்று அழைத்து தனக்குத் தனது தந்தையாரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பொருள் அளித்து நன்மை செய்யவேண்டும் என்பதனை குறிப்பால் உணர்த்துகின்றார். ஐந்து தலைப் பாம்பினை இடுப்பில் அணிந்து அதனை ஆடச் செய்து, நறுமணம் கமழும் திருநீற்றினை உடலில் பூசிக் கொண்டு, நன்மைகளைச் செய்யும் சங்கரனே, அச்சப்பட வைக்கும் கொடுமையான துயர்கள் என்னை வருத்தினாலும் எனது தந்தையாகிய உனது திருப்பாதங்களைத் தவிர வேறு ஒன்றினையும் எனது நாக்கு புகழ்ந்து பாடாது. இவ்வாறு இருக்கையில் எனக்கு பொருள் ஒன்றும் ஈயாது இருப்பது தான் உந்தன் ஆளுமையின் கருணைச் செயலா என்று திருஞான சம்பந்தர் இறைவனை நோக்கி கேள்வி கேட்கும் பாடல்.

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாது என் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்த வெண் பொடியணி சங்கரனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

இதே பதிகத்தின் அடுத்த பாடலில் (3.4.7) கொடிய வினைகளின் விளைவாக தான் எத்துணை கொடிய துயரத்தை அனுபவிக்க நேர்ந்தாலும் பெருமானின் திருவடிகளை தொடர்ந்து புகழ்வேன் என்று திருஞான சம்பந்தர் சொல்கின்றார். விரவி=கலந்து; வினைகளால் ஏற்படும் கடுந்துயரம் இங்கே நெருப்புடன் ஒப்பிடப் படுகின்றது. நெருப்பு போன்ற துன்பம் என்று கூறும் திருஞான சம்பந்தருக்கு, இறைவனின் நெற்றிக் கண்ணில் தோன்றிய நெருப்பு நினைவுக்கு வந்தது போலும். மன்மதனை எரித்த நிகழ்ச்சி இங்கே கூறப்பட்டுள்ளது. ஒப்புடை ஒருவன்=தனக்கு நிகராக தன்னை மட்டுமே கொண்ட தன்மை படைத்தவன். அழகில் தனக்கு நிகராக வேறு ஒருவரும் இல்லாத காரணத்தால், மன்மதனை, அவனுக்கு அழகில் நிகரான ஒருவன் அவன் ஒருவன் தான் என்று நயமாக கூறுவதை காணலாம். அப்படி என்ற சொல் வியப்புச் சொல்லாக இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. அழகில் தனக்கு ஒப்பார் வேறு எவரும் இல்லாத அளவுக்கு அழகு படைத்த மன்மதனை, அவனது உருவம் அழியுமாறு, மற்றவர் வியக்கத் தக்க அளவுக்கு உனது நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப் பொறிகள் தோன்றும்படி விழித்தவனே, கொடிய வினைகளால் ஏற்படும் துன்பம் என்னை நெருப்பு போல வந்து தாக்கினாலும், எனது நாக்கு உனது திருவடிகளின் பெருமையைத் தவிர வேறு ஒன்றினையும் சொல்லாது. இவ்வாறு இருக்கையில், ஆவடுதுறையில் வாழும் இறைவனே நீர் எனக்கு பொருள் ஒன்றும் ஈயாது இருப்பது உனது அருட் செயலாகுமா என்ற கேள்வி இந்த பாடலில் கேட்கப் படுகின்றது.

வெப்பொடு விரவியோர் வினை வரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாது என் நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

தனது வாழ்க்கையில் பெரிய இடர்களை எதிர்கொண்டாலும் பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதனையும் சிந்தை செய்ய மாட்டேன் என்று சொல்லும் பாடல் (3.4.8) ஆவடுதுறை தலத்தின் மீது திருஞான சம்பந்தர் அருளிய பாடலாகும். ஏர் என்றால் அழகு என்று பொருள். ஆர் என்றால் அருமை என்று பொருள். ஆனால் இந்த இடத்தில், பொறுக்க முடியாத துன்பம் என்று பொருள் கொள்ளவேண்டும். இராவணனுக்கு, போர்வாள், இராவணன் என்ற பெயர், எண்ணற்ற வாழ்நாள் ஆகியவை பெற்றுத் தந்தமையால், துன்பம் தந்த இடர் முடிவில் இன்பம் தந்தமையால், அருமையான இடர் என்று பொருள் தரும்படி ஆரிடர் என்று நயமாக சொல்லியதாகவும் பொருள் கொள்ளலாம். கால் விரலால் மலையினை அழுத்தி, பொறுக்க முடியாத துன்பத்தினை, அழகான மணிமுடிகள் அணிந்த இராவணனுக்கு அளித்துப் பின்னர் அவனுக்கு அருள் செய்த ஆவடுதுறை பெருமானே, எனக்கு பெருந்துயர் தரும் பிணிகள் வந்தாலும் அனைவருக்கு சிறப்பான வாழ்வினை அளிக்கும் உனது திருப்பாதங்களை அல்லால் வேறு ஒன்றினையும் சிந்தனை செய்யேன். அத்தகைய அடியானுக்கு வேண்டிய பொருள் ஏதும் அளிக்காமல் இருப்பது தான் நீர் எனக்கு இன்னருள் புரியும் வகையா என்று பெருமானை நோக்கி திருஞான சம்பந்தர் கேள்வி கேட்கும் பாடல்.

பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் பட வரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.13.3) அப்பர் பிரான் இறைவனை நம்பான் என்று அழைக்கின்றார். நணியான்=அருகில் இருப்பவன்: சேயான்=தொலைவில் இருப்பவன்; சமணர்கள் இழைத்த பல கொடுமைகளிலிருந்தும் தன்னைக் காத்த பெருமானை, தீர்க்க முடியாத கொடிய சூலை நோயிலிருந்து காப்பாற்றிய பெருமானை, கயிலைக் காட்சி அளித்தது போன்று பல விதங்களிலும் அருள் புரிந்த பெருமானை, அப்பர் பிரான் விரும்பியது இயற்கை தானே. தான் சைவ மதத்திற்கு திரும்பி வந்த பின்னரே, வாழ்வினில் உய்வினை அடைந்ததாகவும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். அன்பு நிறைந்த மனத்துடன் உன்னை வழிபடும் அடியார்க்கு மிகவும் அருகிலும் ஏனையோருக்கு தொலைவிலும் உள்ள பெருமானே, விரும்பத் தக்கவனே, பொன்மயமான ஆடையை அணிந்தவனே, தோலாடை உடையவனே, வெண்மை நிறத்துடன் காணப்படும் திருநீற்றினைப் பொடியாக உடலில் பூசியவனே, மணி போன்று அரியவனே, மானிடர்களுக்கு மட்டுமன்றி தேவர்களுக்கும், அவர்களது பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருத்துவனாய் அவர்களுக்கு நெருங்கி இருப்பவனே, ஐயாற்றுத் தலைவனே, நான் உனக்கு அடிமையாக மாறி உய்வினை அடைந்தேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்

துணியானே தோலானே சுண்ண வெண்ணீற்றானே

மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணி தீர்க்கும்

அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.20) கடைப் பாடலில், திருமாலும் பிரமனும் தேடியும் காண முடியாத இறைவன் சிவபெருமான், தன்னை விரும்பி பாடல்கள் பாடி, பணிந்து, பல்லாண்டு இசைக்கும் அடியார்களின் மனதினில் குடி கொண்டிருப்பதை அப்பர் பிரான் கண்டு கொண்டதாக கூறுகின்றார். இரணியனின் உடலைக் கிழித்த ஆற்றல் உடைய திருமாலும் தேடிக் காண முடியாத இறைவனை, அவனது அடியார்கள் தங்களது மனதினில் இறைவன் இருக்கும் நிலையை கண்டு கொள்கின்றனர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். பிரமனும் திருமாலும், உயர்ந்தவர் யார் என்று வாதம் செய்து கொண்டிருந்த போது, அவர்களின் எதிரே நீண்ட தழற்பிழம்பாக இறைவன் தோன்றியதை, தழலாய நம்பான் என்ற தொடர் மூலம் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். இறைவன் பேரில் பல பதிகங்கள் பாடிய அப்பர் பிரான், தன்னுள்ளே இறைவன் இருப்பதை, அனுபவ பூர்வமாக உணர்ந்ததை பல பாடல்களில் தெரிவித்துள்ளார். தங்களது அறிவு ஆற்றல் ஆகியவை மீது நம்பிக்கை வைத்து நாடினால் காண முடியாத பெருமான், அவன் பால் மிகுந்த அன்பு வைத்து நாம் அழைத்தால் அவன் அருள் புரிவான் என்பதால் பல அடியார்களும் அவனைப் புகழ்ந்து போற்றி பல்லாண்டு பாடுகின்றனர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன்

நாடிக் காண மாட்டாத் தழலாய நம்பானைப்

பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்குத்

தேடிக் கண்டு கொண்டேன் திருவாரூர் அம்மானே

திருநெல்வாயில் அரத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் சுந்தரர் (7.3.3) பெருமானைத் தவிர்த்து தனக்கு வேறேதும் பற்றில்லை என்று கூறுகின்றார். காஞ்சியிலிருந்து திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்த சுந்தரர் நெல்வாயில் அரத்துறை தலத்து இறைவனைப் புகழ்ந்து பாடிய பின்னர், திருவாரூர் நோக்கிய தனது பயணத்தைத் தொடருகின்றார். புற்றில் வாழ்கின்ற இயல்பு உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக அணிந்து கொண்டு மகிழ்பவனே, புனிதனே, வெண்மை நிறத்து இடபத்தைத் தனது ஊர்தியாகக் கொண்டவனே, காஞ்சியில் உனது அருளால் இடது கண்ணால் பார்வை பெற்ற அடியேன், எனது வலது கண்ணில் பார்வை அற்றவனாக வருந்துகின்றேன்; எனது பெருமானே, எனக்கு வாழ்க்கையில் வேறோர் பற்றில்லை; வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய உமை அன்னையைத் தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே, இறப்பு மற்றும் பிறப்பு ஆகியவை தொடர்ந்து நடைபெறுகின்ற பிறப்பிறப்புச் சுழலிலிருந்து அடியேன் நீந்தி வெளியேறிச் சென்று வாழ்வினில் உய்வினை அடைவதற்கு ஒரு வழியினை நீர் தான் எனக்கு சொல்ல வேண்டும் என்றும் சுந்தரர் வேண்டுவதாக அமைந்த பாடல்.

புற்றாடரவம் அரை ஆர்த்து உகந்தாய் புனிதா ஒரு வெள்விடை ஊர்தியினாய்

மற்றொரு கண் இலேன் நின்னை அல்லால் நெல்வாயில் அரத்துறை நின்மலனே

மற்றேல் ஒரு பற்றிலேன் எம் பெருமான் வண்டார் குழலாள் மங்கை பங்கினனே

அற்றார் பிறவிக்கடல் நீந்தியேறி அடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே

நாட்டியத்தான்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.15.2) சுந்தரர் பெருமானைத் தவிர்த்து தான் வேறொருவரையும் விரும்பேன் என்று கூறுகின்றார். பெருமானே, தனது இடுப்பினில் ஒரு பாம்பினைக் கட்டிய வண்ணம் இடுகாட்டு எல்லையில் நின்று ஆடும் உனது திருக்கோலம் எனது மனத்தினை வெகுவாகக் கவர்ந்து விட்டது; மிகவும் இழிந்தவனாக இருக்கும் எனது மனதினில் நீ புகுந்து நிற்கும் காரணத்தை பெருமானே சொல்வாயாக; எனது பிறவியுடன் பிணைந்துள்ள பிறப்பிறப்புச் சுழற்சியாகிய துன்பத்தினைக் களையும் ஆற்றல் உடைய பெருமானே, மாணிக்கம் போன்று உயர்ந்தவனே, மாணிக்க வண்ணர் என்று அழைக்கப் படும் திருநாமத்துடன் நாட்டியத்தான்குடி தலத்தினில் பலரது நம்பிக்கைக்கும் உரியவனாக வீற்றிருப்பவனே, நான் உன்னை அல்லாது வேறெவரையும் விரும்ப மாட்டேன் என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல்.

கச்சேர் பாம்பொன்று இடுப்பில் கட்டிநின்று இடுகாட்டு எல்லையிலாடலைக் கவர்வன்

துச்சேன் என் மனம் புகுந்து இருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தி

வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல மணியே மாணிக்க வண்ணா

நச்சேன் ஒருவரை நான் உனை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ

இதே பதிகத்தின் முதல் பாடலில் (7.15.1) சுந்தரர், பெருமானின் புகழினை இடைவிடாது பாடுவேன் என்று கூறுகின்றார். நம்பி=ஆண்களில் சிறந்தவன்; பூண்=அணிகலன்; நாண்=இடுப்பில் கட்டும் அரை ஞாண் கயிறு; பெருமானின் அணிகலனாகவும் அரை ஞாணாகவும் விளங்கும் பாம்பினைக் கண்டு தான் அச்சம் கொள்ள மாட்டேன்; ஊருக்கு வெளியே உள்ள இடுகாட்டினில் பெருமான் நடனம் ஆடுவதைக் கண்டு இகழ மாட்டேன்; தனது சிறுமை கருதி பெருமான் தன்னை விரும்பாவிடினும், பெருமானின் பெருமையை அடியேன் உணர்ந்து கொண்டு அவரை போற்றுவேன்; பிறவாமை என்ற நிலையினை அடைந்த போதிலும், அடியேன் பெருமானை மறவாமல் இருப்பேன்; பெருமான் தனக்கு அருள் புரிந்து காட்சி கொடுக்காவிடினும், தான் பெருமானை மனக் கண்ணால் உருவகித்து மகிழ்வேன்; பெருமான் தனக்கு எத்தகைய அருள் புரியாது இருப்பினும் தான் தொடர்ந்து பெருமானைப் புகழ்ந்து பாடுவேன் என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல்.

பூணாண் ஆவதோர் அரவம் கண்டு அஞ்சேன் புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன்

பேணாய் ஆகிலும் பெருமையை உணர்வேன் பிறவேன் ஆகிலும் மறவேன்

காணாய் ஆகிலும் காண்பன் என் மனத்தால் கருதாய் ஆகிலும் கருதி

நானேல் உன்னடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.54.1) சுந்தரர், தனது வாழ்க்கையில் பல சறுக்கல்கள் ஏற்பட்டு வருந்தினும், பெருமானின் திருநாமத்தைத் தவிர்த்து வேறு எந்த தெய்வத்தின் நாமத்தை அறிந்து கொண்டு அந்த தெய்வத்தை போற்றி வணங்க மாட்டேன் என்று கூறுகின்றார். சங்கிலி நாச்சியாரின் விருப்பத்திற்கு ஏற்ப, திருவொற்றியூரை விட்டு பிரியேன் என்று சத்தியம் செய்து கொடுத்த பின்னர், சங்கிலி நாச்சியாரை சுந்தரர் திருமணம் செய்து கொள்கிறார். எனினும் சில மாதங்கள் கழித்து, வசந்த காலத்தில் திருவாரூர் தலத்தினில் நடைபெறும் விழாவுக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் தாளாமல், இத்தனை நாட்கள் ஆரூர்ப் பெருமானை பிரிந்திருந்த துயரத்தை தொடர்ந்து அனுபவிக்க மனம் இலாமையினால், தான் செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறி, ஒற்றியூர் தலத்தினை விட்டு நீங்க சுந்தரர் முடிவு செய்கின்றார். ஆனால் திருவொற்றியூர் எல்லை தாண்டிய உடனே, தனது இரண்டு கண்களிலும் பார்வை இழந்தவராக சுந்தரர் மூர்ச்சை அடைந்து விழுகின்றார். நினைவு திரும்பி எழுந்த நிலையில், ஒற்றியூர் பெருமானை நினைத்து பாடிய பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்கின்றோம். பிழுக்கை=பசுஞ் சாணம்; உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாக மாசு படிந்துள்ள உடலுடன் அடியேன் பெருமானின் திருவடியை சரணாக அடைந்தேன். எனினும் எனது குறைகளின் காரணமாக, பெருமானே, என்னால் உன்னை இடையறாது துதிக்க முடியவில்லை. அதன் விளைவாக பல துன்பங்கள் அடியேனை வந்தடைந்தன. தாம் வளர்க்கும் பசுவிடம் பாலை விரும்புவோர், பசுவின் சாணத்தை எடுத்து கொட்டகையை சுத்தம் செய்வதை ஒரு பொருட்டாக கருதாமல் அந்த தொழிலையும் செய்வார்கள். அது போன்று அடியேன் உன் பால் கொண்டுள்ள பக்தியை கருத்தில் கொண்டு, அடியேனின் குற்றங்களை பெருமானே, நீவிர் பொருட்படுத்தலாகாது. எனது வாழ்வினில் சறுக்கல்கள் ஏற்பட்டு, எனது உடலும் உள்ளமும் தளர்ச்சி அடைந்தாலும், பெருமானே, உமது திருவடியைத் தவிர்த்து வேறு எவரையும் நினைக்க மாட்டேன். எனவே ஒற்றியூர் தலத்தில் உறைகின்ற பெருமானே, எனது கண்கள் கொண்டுள்ள நோய்க்கு தகுந்த மருந்து தருவாயாக என்று சுந்தரர் வேண்டும் பாடல்.

அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படற்பாலது ஒன்றானால்

பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்

வழுக்கி வீழினும் திருப்பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம்

ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் என்றும் ஊர் உறைவானே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.68) முதல் பாடலில் சுந்தரர் இறைவனை நம்பன் என்று அழைக்கின்றார். நம்பனை மறந்து நான் வேறு எவரையும் நினையேன் என்று கூறும் பாடல் இது.

செம்பொன் மேனி வெண்ணீறு அணிவானைக் கரிய கண்டனை மாலயன் காணாச்

சம்புவைத் தழல் அங்கையினானைச் சாம வேதனைத் தன்னொப்பில்லானைக்

கும்பமா கரியின் உரியானைக் கோவின் மேல் வரும் கோவினை எங்கள்

நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே

திருவெண்ணெய் நல்லூரில் தன்னை ஆட்கொண்ட இறைவன், விரும்பத் தக்கவன் என்று, தான் இரண்டு கண்களின் பார்வையை இழந்து கோலை ஊன்றி நடந்த நிலையிலும் சுந்தரர் அழைப்பதை நாம் திருமுல்லைவாயில் பதிகத்தில் (7.69.8) காணலாம். சம்பு என்ற வடமொழி சொல்லுக்கு இன்பம் உண்டாக்குபவன் என்று பொருள். நச்சரவு ஆட்டிய நம்பன் என்று மணிவாசகர் திருவண்டப்பகுதி அகவலில் குறிப்பிடுகின்றார்.

நம்பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட

சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா

செம்பொன் மாளிகை சூழ் திருமுல்லை வாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட

பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

கூத்தாடி, தனது உணவுக்காக பிச்சை எடுக்கும் பெருமானை நம்பன் என்று நினைத்து அவனை அணுகலாமா என்று கேள்வி கேட்கும் தோழிக்கு, கூத்தாடி பிச்சை ஏற்பதால் அவனை மிகவும் எளியவனாக நினைத்து விட வேண்டாம், நான்மறைகள் தேடியும் காண முடியாதால், அந்த நான்மறைகளால் எனது பெருமானே, ஈசா என்று புகழ்ந்து பாடும் பெருமையை உடையவன் என்று மற்றொரு தோழி விடை கூறும் பாடலை நாம் திருச்சாழல் பதிகத்தில் காணலாம். நான்மறைகளும் தேடியும் காண முடியாமல், எம்பெருமான் என்றும் ஈசா என்றும் புகழ்ந்து பாடிய பெருமை உடையவன் சிவபிரான் என்று மணிவாசகர் இங்கே விளக்குகின்றார். நண்ணுதல்= அணுகுதல்

அம்பலத்தே கூத்தாடி அமுது செயப் பலி திரியும்

நம்பனையும் தேவன் என்று நண்ணுவது என்னேடி

நம்பனையும் ஆமா கேள் நான்மறைகள் தாமறியா

எம்பெருமான் ஈசா என்று ஏத்தின காண் சாழலோ

பொழிப்புரை:

குன்றின் உச்சியில் காணப்படும் தேன் கூடுகளையும் கமுகு மரங்களின் ஓலைகளை கொத்தாக வாரிக் கொண்டு வரும் காவிரி நதியின் வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் நம்பனும் ஆகிய சிவபெருமான், வாடிய பிரமனின் தலையினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் பல இடங்களுக்கும் பலியேற்கச் செல்கின்றார். குற்றம் ஏதும் இல்லாத மாணிக்கம் போன்று ஒளி வீசும் பெருமானை, தங்களது உள்ளம் மகிழ வானோர்கள் புகழ்ந்து வணங்குகின்றனர். இத்தகைய பெருமைகள் வாய்ந்த பெருமானைத் தொழுவதைத் தவிர்த்து நிறைவான செயல் வேறு ஒன்றினையும் நாம் அறியோம்.

பாடல் 4:

செம்பொனார் தரு (2.110) பாடல் 4 (திதே 0827)

செம்பொனார் தரு (2.110) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0828)

செம்பொனார் தரு (2.110) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0829)

செம்பொனார் தரு (2.110) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0830)

செம்பொனார் தரு (2.110) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0831)

செம்பொனார் தரு (2.110) பாடல் 4 தொடர்ச்சி, மற்றும் 5, 6 (திதே 0832)

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இளமருது இலவங்கம்

கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன்

அலை கொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடரவுடன் வைத்த

மலையை வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே

விளக்கம்:

நமக்கு வழிகாட்டும் நல்லோராகிய நால்வரும் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் போற்றாது இருந்த தன்மையை அவர்களது வாழ்விலிருந்தும் அவர்களது பாடல்களிலிருந்தும் நாம் அறிகின்றோம். அவர்களது இந்த கொள்கை அவர்களின் பல பாடல்களில் வெளிப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர், பெருமானை அன்றி வேறு எவரையும் தனக்குத் துணையாக கருத மாட்டேன் என்றும் அவரைத் தவிர்த்து வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் கருணையே உருவமாக உள்ள பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார். பண்டைய நாளிலிருந்து இடைவிடாது தொடர்ச்சியாக அடியார்களுக்கு அருள் புரிந்து வரும் அன்னையை, குற்றம் ஏதும் இல்லாதவள் என்று அடியார்கள் புகழ்வதாக அடிகளார் கூறுகின்றார், இனியும் தொடர்ந்து வாழ்வதில் தனக்கு விருப்பம் ஏதும் இல்லாமையால், பெருமானே நீ என்னை விரைவில் அழைத்துக் கொள்வாயாக என்று விண்ணப்பம் வைக்கும் பாடல்.

பழுது இல் தொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்

செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய்

மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே.

மேற்கண்ட பாடலில் பெருமானே உன்னைத் தவிர பற்றுக்கோடு வேறேதும் எனக்கு இல்லை என்று அறிவிக்கும் அடிகளார், தனது நிலையை பெருமானே நீ இன்னும் காணவில்லையா என்று கேட்கும் வகையில், கண்டாய் என்ற சொல்லை கையாண்டுள்ளார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பற்று நான் மற்றிலேன் கண்டாய் என்ற தொடர் வருகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல், இந்த தொடர் உணர்த்தும் செய்தியை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது. பெருமானே உன்னைத் தவிர வேறு பற்றுக்கோடு ஏதும் கொள்ளாமல் வாழும் எனக்கு அருள் புரியாமல் இருக்கின்றாயே இது நியாயமா என்று கேட்பது போன்று அமைந்துள்ள பாடல். பெருமான் ஒருவனே தனக்கு பற்றுக்கோடு என்பதால், அவனைத் தவிர வேறு எவரிடமும் சென்று முறையிடேன் என்று புலம்பும் அடிகளார், அவன் அருள் புரியாமல் இருப்பதால் அவன் மீது தான் கோபம் கொண்டாலும் அவனது அருளினை தொடர்ந்து வேண்டுவதையும் நாம் உணரலாம். ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் என்ற தொடரினை, பரந்த எம் பரனே என்ற தொடருடன் பொருத்தி பொருள் கொள்ள வேண்டும். பிரபஞ்சம் முழுவதும் பரந்தும் விரிந்தும் அதற்கு அப்பாலும் ஊடுருவியும் தனித்தும் உள்ளும் புறமுமாகவும் ஒளித்தும் வெளிப்பட்டும் ஒருவன் இருக்கின்றான் என்றால் அவனை விடவும் திறமை வாய்ந்தவர் வேறு எவர் உள்ளார். எனவே தான் வேறு எவரிடமும் முறையிட முடியாமல், பெருமானே உன்னிடம் முறையிடுகின்றேன் என்று அடிகளார் கூறுகின்றார். பெருமான் அருள் புரியாவிடில், தனக்கு உதவும் ஆற்றல் படைத்தவர் வேறு எவரும் இல்லை என்பதால், தனக்கு பற்றுக்கோடு வேறு எவரும் இல்லை என்று கூறுகின்றார்.

பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய்

சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருபெருந்துறை உறை சிவனே

ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை ஆனால்

வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் பெருமான் தன்னை மிகவும் உறுதியாக ஆட்கொண்ட போதிலும் தனது உடல் உறுப்புகள் உயிரின் விருப்பத்திற்கு இணங்கி செயல் படவில்லை என்று வருந்தும் அடிகளார், பெருமான் தன்னை ஆட்கொண்டதில் எந்தவிதமான குறையும் இல்லை என்று அடுத்த பாடலில் (8.28.6) தெரிவிக்கின்றார். செஞ்சவே=செம்மையாகவே; எனவே குறை தன்னிடம் தான் உள்ளது என்ற முடிவுக்கு வந்த அடிகளார், அந்த குறை எவ்வாறு நேர்ந்தது என்பதை சிந்தித்தார் போலும். பெருமான் புரிந்த அருளினை தான் மறந்ததே காரணம் என்ற முடிவுக்கு வருகின்றார். இந்த மறதி எதனால் ஏற்பட்டது. மருளால் ஏற்பட்டது என்று குறிப்பிடுகிறார். மருள்=மயக்கம்; உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் தன்னுள் ஏற்படுத்திய மயக்கம் என்று பொருள் கொள்ளுதல் சிறப்பு. நாயிடம் இருக்கும் சிறந்த குணம் நன்றி பாராட்டுவது. பெருமான் தனக்கு புரிந்த அருளினை மறந்த தன்மையால், தன்னை நன்றியற்ற நாய் என்று குறிப்பிடுகின்றார். ஆண்டு=ஆட்கொண்டு;

பஞ்சின் மெல்லடியாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்

செஞ்சவே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த

வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

அருளினை மருளினால் மறந்த நாயேன் என்று இந்த பதிகத்தின் ஆறாவது பாடலில் குறிப்பிட்ட அடிகளார், தான் எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்பதை அடுத்த பாடலில் (8.28.7) கூறுகின்றார். பெருமான் தனக்கு புரிந்த அருளினை மறவாமல் தான், எப்போதும் பெருமான் புரிந்த உதவியை நினைத்துக் கொண்டே, உள்ளம் கசிந்து அவர் பால் மேன்மேலும் அன்பு செலுத்தி, அவர் குறித்த நினைவுகளில் ஒன்றி வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார். அத்தகைய வாழ்வே குற்றமற்ற வாழ்வாக, பயனுடைய வாழ்வாக இருந்து இருக்கும். ஒருகால் அத்தகைய வாழ்க்கை வாழ்ந்திருந்தால், பெருமானே, நீ என்னை முன்னமே உன்னிடம் அழைத்துக் கொண்டு இருப்பாயோ, உலகியல் மயக்கத்தில் ஆழ்ந்து தவறு புரிந்த அடியேனை மன்னித்து அருள் புரிந்து, நீ என்னை அழைத்துக் கொள்ள வேண்டும் என்று பெருமானிடம் மணிவாசக அடிகளார் வேண்டும் பாடல்.

பருதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்

திருவுயர் கோலச் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

கருணையே நோக்கிக் கசிந்து உளம் உருகிக் கலந்து நான் வாழும் ஆறு அறியா

மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

இதே பதிகத்தின் அடுத்த பாடலில் (8.28.8) மணிவாசக அடிகளார், பெருமான் தானே முன்வந்து தன்னை ஆட்கொண்டதை குறிப்பிட்டு மனம் நெகிழ்ந்து, பெருமானே, இனியும் இந்த மண்ணுலகில் வாழ்வதற்கு விருப்பமில்லை என்பதால் தன்னை அழைத்துக் கொள்வாயாக என்று வேண்டுகின்றார். பந்து பொருந்தும் வண்ணம் அழகிய விரல்கள் கொண்ட பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் உடைய பெருமானே, உன்னை அன்றி எனக்கு தகுந்த பற்றுக்கோடு வேறு எவரும் இல்லை; கொழுந்து விட்டெரியும் சிறந்த நெருப்பின் நிறத்தில் திருமேனி உடையவனே, சிவபுரத்தின் நாயகனே, திருப்பெருந்துறை தலத்தில் வீற்றிருக்கும் பெருமானே, அழிவில்லாத அமுதமே, கிடைத்தற்கு அரிய பொருளே, தெவிட்டாத அமுதமே, நீயே முன் வந்து அடியேனை முன்னம் ஆட்கொண்டாய்; அவ்வாறு உன்னால் ஆட்கொள்ளப்பட்ட அடியேன் இந்த உலகினில் தொடர்ந்து வாழ்வதற்கு சிறிதும் விரும்பவில்லை. என்னை கருணை கூர்ந்து அழைத்துக் கொள்வாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பந்தணை விரலாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்

செந்தழல் போல்வாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

அந்தமில் அமுதே அரும் பெரும் பொருளே ஆரமுதே அடியேனை

வந்து உய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

இந்த பதிகத்தின் அடுத்த பாடலில் (8.28.9) பெருமானை பாவநாசா என்று அழைக்கும் அடிகளார், பெருமானைத் தவிர்த்து தனக்கு வேறோர் பற்றுக்கோடு இல்லை என்று கூறுகின்றார். மா=விலங்கு, இங்கே யானை என்று பொருள் கொள்ள வேண்டும். அடியார்களின் பாவத்தை போக்குபவனே, உனது திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதனையும் அடியேன் பற்றுக்கோடாக கொள்ள மாட்டேன்; தேவர்களின் தலைவனே, சிவபுரத்தின் அரசனே, திருப்பெருந்துறை தலத்தினில் உறைபவனே, மூவுலகங்களையும் ஊடுருவித் தேடியும் திருமால் மற்றும் பிரமனால் அடியும் முடியும் காண முடியாத வண்ணம், நெடிய தீப்பிழம்பாக நிமிர்ந்தவனே, தன்னை எதிர்த்து வந்த மத யானையின் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்ட அரிய செயலை செய்தவனே, அடியேனுக்கு தொடர்ந்து இந்த மண்ணுலகில் வாழ விருப்பமில்லை; எனவே தயை கூர்ந்து அழைத்துக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிப்பாயாக என்று மணிவாசக அடிகளார் வேண்டும் பாடல். முழங்கு அழல்=ஒலியுடன் எரியும் நெருப்பு;

பாவநாசா உன் பாதமே அல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்

தேவர் தம் தேவே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

மூவுலகு உருவ இருவர் கீழ் மேலாய் முழங்கு அழலாய் நிமிர்ந்தானே

மா உரியானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

தனது இடது கண்ணில் பார்வை வரப்பெற்று, வலது கண்ணில் பார்வை வேண்டி திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கி பதிகம் பாடிய சுந்தரர், வேறு எவரையும் வேண்டாது தான் இருந்த நிலையினை மீளா அடிமை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (7.95.1) உணர்த்துகின்றார். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத் திறம் நமது வாழ்நாள் முழுவதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த அடிமைத் தன்மையிலிருந்து நாம் வெளியே வாராமல் பெருமானுக்கு எப்போதும் திருத்தொண்டு செய்பவர்களாய். அடிமைத் திறத்திலிருந்து மீளாமல் இருக்க வேண்டும். மேலும் நமது தேவைகளையும் அவரிடமே முறையிட்டு பெறுதல் வேண்டும் அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார். இவ்வாறு இந்த பிறவியில் இறைவனுக்கு மீளா அடிமையாக வாழ்கின்ற உயிர், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று, முக்தி உலகினைச் சார்ந்து, ஆங்கும் பெருமானின் அடிமையாக நிரந்தரமாக வாழ்கின்றது. மூளாத்தீ போல் உள்ளே கனன்று என்ற தொடர் மூலம், தனது வருத்தத்தை வெளிக்காட்டாது தனது மனதின் உள்ளே அடக்கி வைத்திருக்கும் நிலையை சுந்தரர் குறிப்பிடுகின்றார். மூளாத்தீ=கொழுந்து விட்டு எரியாது கனலாக இருக்கும் தீ; இந்த பாடலில், மற்ற தெய்வங்களைத் தான் வேண்டாது இருந்த நிலையையும், தனக்கு எத்தனை இடர்கள் வந்த போதிலும் சிவபெருமானுக்கு அடிமையாக இருந்த தனது நிலையிலிருந்து தான் மீளாது தொடர்ந்து இருந்த தன்மையையும் சுந்தரர் கூறுகின்றார். தனது கண்பார்வையை இறைவன் பறித்ததால் தனது நெஞ்சம் மிகவும் வருந்துவதையும், அதனால் முகம் மிகவும் வாடி இருப்பதையும் கூறும் சுந்தரர், தான் ஏதும் கூறாமலே சிவபெருமான் தனது வருத்தத்தின் காரணத்தை புரிந்து கொண்டு ஆவன செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததால் (தோழமை நிமித்தம்) தான், தனது குறையை சொன்ன பின்னரும் சிவபெருமான் ஏதும் செய்யாமல் இருந்த நிலை சுந்தரரை மிகவும் கோபம் கொள்ளச் செய்தது போலும். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் ஒருவரை நாம் அணுகும்போது, நமக்கு உதவக்கூடிய நிலையில் இருந்தும் அவர் நமக்கு உதவி செய்ய மறுத்தாலோ, தாமதம் செய்தாலோ, நாம் அவர் பால் கோபம் கொண்டு, துன்ப மேலீட்டினால் மனம் புழுங்கி, நீர் எனக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, நன்றாக வாழுங்கள் என்று நாம் பல சமயங்களில் கூறுகின்றோம் அல்லவா. இதே மன நிலையில் இருந்த சுந்தரர், சிவபெருமானை, எமக்கு உதவி செய்யாத நீர் வாழ்ந்து போதீரே என்று சொல்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் பெருமானை நோக்கி வாழ்ந்து போதீரே என்று சுந்தரர் சொல்கின்றார். வாளாங்கு=ஒன்றும் பதில் உரைக்காமலும், வேண்டுதலை பெருமான் நிறைவேற்றாமலும் இருக்கும் நிலை: அடியார் என்று இந்த பதிகத்தின் பாடல் தோறும் சுந்தரர் குறிப்பிட்டாலும், அவர் தன்னையே அடியார் என்று குறிப்பிடுகின்றார் என்பது நமக்கு புலனாகின்றது. திருவாரூர் தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானே, உம்மிடம் கொண்டிருக்கும் அடிமைத் தன்மையிலிருந்து மீளாமல் உமக்கே தொடர்ந்து அடிமையாக இருந்து கொண்டு, வேறெவரையும் வேண்டாது, எனது மனவருத்தத்தை வெளிக்காட்டாமல், கொழுந்து விட்டெரியாமல் கனலாக இருக்கும் தீ போன்று மனவருத்தத்தை உள்ளே அடக்கி மனம் வெதும்பி முகம் மிகவும் வாடி அடியார்கள் தங்களது வருத்தத்தை சொல்லும் போது, அதனைக் கேட்ட பின்னரும் வாய் திறந்து ஏதும் சொல்லாமலும் எனது வேண்டுகோளை நிறைவேற்றாமலும் வாளாக இருக்கின்றீர்; இதுவே, எமக்கு அருள் புரியாமல் இருப்பதே உமது இயல்பாக இருப்பின், நீர் இனிதாக வாழ்ந்து போவீராக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே

மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி

ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்

வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

கொழுந்து=சிறப்பான ஒன்று, தலையானது; ஞாழல்=புலிக் கொன்றை மரம்; கண்டன்=கழுத்தினை உடையவன்; ஏனையோரின் கழுத்திலிருந்து மிகவும் வேறுபட்டு புகழினை உடையது பெருமானின் கழுத்து. ஸ்ரீகண்டன் என்பது அவரது திருநாமங்களில் ஒன்று. அனைவரையும் காக்கும் பொருட்டு, பாற்கடலிலிருந்து பொங்கி வந்த நஞ்சினைத் தானே உட்கொண்ட பெருமான், ஊழிக்காலத்தில் தனது வயிற்றினில் ஒடுங்கும் உயிர்களின் நலன் கருதி, வயிற்றினுள்ளே அந்த விடத்தைச் செலுத்தாமல், தனது கழுத்தினில் எப்போதும் தேக்கிய வண்ணம் இருக்கின்றார். இவ்வாறு அனைவர்க்கும் நன்மை புரிந்த, கழுத்து பெருமான் ஒருவருக்கே உரியது என்பதால், கண்டன் என்று மிகவும் பெருமையாக அவரை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் அழைக்கின்றார். பெருமானை மலை என்று திருஞானசம்பந்தர் அழைப்பதையும் நாம் உணரலாம். அருள்நிதி தர வரும் ஆனந்த மலையே என்று மணிவாசகர் அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது. திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் இரண்டாவது பாடலில் மலை என்றும் கடல் என்றும் இறைவனின் தன்மையை மணிவாசகர் உணர்த்தும் பாடலை நாம் இங்கே காண்போம். ஆராத இன்பம் அருளும் மலை என்றும் முத்தி அளிக்கும் மலை என்றும் உணர்த்தும் திருவாசகத் தொடர்களும் நமது நினைவுக்கு வருகின்றன.

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழவெழ நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அம் கண்ணாம்

திரள் நிரை அறுபதம் முரல்வன இவை ஓர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே

அருள்நிதி தர வரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி எழுந்தருளாயே

இறைவனுக்கு உவமையாக மலையினை கூறுவதை பழைய இலக்கியங்களில் நாம் மிகவும் அதிகமாக காணலாம். தொலை தூரத்திலிருந்து பார்க்கும் போது மலை உயரமற்றதாக தோன்றினாலும், நாம் அருகில் செல்லச் செல்ல மலையின் உயரத்தை உணர்கின்றோம். மலை என்பது நுனி சிறுத்தும் அடி பெருத்தும் காணப்பட்டாலும், நம்மால் காணப்படும் பகுதியை விடவும் பல மடங்கு பெரிய பகுதி நமது கண்களுக்குத் தென்படாமல் பூமியின் உள்ளே புதைந்து கிடப்பதையும் நாம் உணரவேண்டும். மலையின் அருகே செல்லச் செல்ல, மலையின் உயரத்தை நாம் உணர்வது போன்று, இறைவனின் அருகில் நாம் செல்லச் செல்ல, இறைவனது பெருமையை நாம் உணர்கின்றோம். மேலும் மலை நமக்கு பல அரிய மூலிகைகளையும் செல்வங்களையும் அளிக்கின்றது. அது போன்று இறைவனும் நமக்கு பல விதங்களிலும் அருள் புரிகின்றான். மேலாகப் பார்த்தால் மலையில் செல்வங்கள் உள்ள நிலை நமக்கு தெரியாமல் இருப்பது போன்றி, இறைவன் நமக்கு புரியும் நன்மைகளையும் நாம் சிந்தித்தால் தான் விளங்கும். மலை பருவ காலங்களுக்கு ஏற்ப தனது தன்மையை மாற்றிக் கொள்கின்றது. ஆனால் இறைவன் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதால் ஆனந்த மலை என்று கூறுகின்றார். மலையின் பெரும்பகுதி பூமிக்குள்ளே மறைந்து இருப்பது போன்று, இறைவன் நமக்கு அளிக்கும் ஆனந்தமும், நமது மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கிலும் நிரம்பியும், அதற்கு மேலும் விரிந்து நம்மை ஆட்கொள்ளும் அளவில் உள்ளது. சங்கநிதி பதுமநிதி போன்று செல்வங்களை ஒரு பொருட்டாக கருதாத அடியார்கள், இறைவனின் கருணையை மிகவும் பெரிதாக மதித்து அதனை வேண்டி நிற்கின்றனர். அந்த கருணையை பெரிய செல்வமாக மதித்து அருள்நிதி என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார்.

அளவற்ற ஆழமும் எல்லையற்ற பரப்பும் கொண்டுள்ள கடல், தனது ஆழத்தில் முத்து பவளம் ஆகிய விலை மதிப்பற்ற பொருள்களை அடக்கியுள்ளது. மூச்சினை அடக்கி, பயிற்சி செய்து கடலுள் அழுந்துவோர் முத்து மணி பவளம் ஆகியவற்றை எடுத்து வருகின்றனர். அது போன்று நிலையான அமைதி, எல்லையில்லா ஆனந்தம், வீடுபேறு ஆகிய செல்வங்கள் இறைவனாகிய கடலின் ஆழத்தில் உள்ளன. ஒன்றிய சிந்தனையுடன் இறைவனை வழிபட்டு வணங்கும் அடியார்களுக்கு, இந்த மூன்றையும் அளிப்பதற்கு இறைவன் சித்தமாக உள்ளதால், இறைவனை கடலே என்றும் அழைக்கின்றார். பொதுவாக கடலும் மலையும் அளவிட முடியாத பொருளாக இருப்பதையும் நாம் காண்கின்றோம். அது போன்று இறைவனும் அளவிட முடியாத பண்பினையும் தன்மைகளையும் உடையவன் என்பதும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது.

நெல்வாயில் அரத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.90.1) திருஞான சம்பந்தர், இறைவனின் புகழினை வாயினால் பாடி மனதினால் சிந்திக்கும் அன்பர்களுக்கு இறைவன் அருள் கைகூடும் என்றும் அல்லாதார்க்கு அவனது அருள் கைகூடாது என்பதையும், உணர்த்துகின்றார். பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் நிவா நதி குறிப்பிடப் பட்டு, தலத்தின் நீர்வளத்திற்கு இந்த நதி காரணம் என்பதும் உணர்த்தப் படுகின்றது. சென்று கைகூடுவது என்று திருவருள் தானே வந்தடைந்ததை பிள்ளையார் குறிப்பிடுகின்றார். தான் பயணம் செய்வதற்கு சிவிகை வேண்டும் என்று திருஞான சம்பந்தர் இறைவனிடம் வேண்டியதாக பெரிய புராணத்தில் எங்கும் சொல்லப் படவில்லை. எனினும் திருஞான சம்பந்தர் தந்தையாரின் தோளினில் ஏறிக் கொண்டு வாராமல் தானே நடந்து வந்ததைக் கண்ட பெருமான், தானே முன்வந்து அருள் புரிந்தமை இங்கே அருள் சென்று கைகூடியது என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. நமது அன்றாட தேவைகளை புரிந்து கொண்டு, நமது உலகியல் தந்தையார், நாம் கேட்காமல் இருந்த போதும். தாமே முன்வந்து நமது தேவைகளை நிறைவேற்றுவது போன்று, இறைவன் தானே வந்து முத்துச் சிவிகை அளித்ததால் எந்தை என்று பெருமானை திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். திருஞான சம்பந்தருக்கு தந்தையாகவும் இறைவனாகவும் திகழ்ந்தவர் அல்லவா சிவபெருமான். ஏறு=இடபம்; அந்தண்=அழகு மற்றும் குளிர்ச்சி; ஈசன்=தலைவன்; கந்தம்=நறுமணம்; எமது தந்தையே, அனைவர்க்கும் தலைவனே, எமது பெருமானே, இடபத்தின் மீது அமரும் கடவுளே என்று பெருமானைப் புகழ்ந்து பாடி, அவனது தன்மைகளை சிந்தனை செய்யும் அடியார்களுக்கு அல்லாது ஏனையோருக்கு அவனது அருள் தானே சென்று கைகூடாது. நறுமணம் வீசும் சிறந்த மலர்களை அடித்துக் கொண்டு பெருகி வரும் நீரினை உடைய நிவா நதிக்கரையினில் அழகியதும் குளிர்ந்ததும் ஆகிய சோலைகள் கொண்டுள்ள நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் அருள் வேண்டுவீராயின், உலகத்தவரே, நீங்கள் அவனைப் புகழ்ந்து வாயினால் பாடி மனதினால் அவனது பெருமைகளை நினைப்பீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் நான்காவது பாடலில் பெருமானை நினைத்து மனம் கசிந்து உருகும் அடியார்களுக்கு மட்டுமே அவனது அருள் கைகூடும் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஆறாவது பாடலில், குளிர்ந்த மனத்துடன் பெருமானைப் புகழ்ந்து உள்ளம் நையும் அடியார்களுக்கு மட்டுமே பெருமானின் அருள் கிடைக்கும் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் ஏழாவது மற்றும் ஒன்பதாவது பாடல்களில், சிவபெருமானைப் பணிந்து வணங்கும் ஒழுக்கம் உடைய அடியார்களுக்கு மட்டுமே இறைவன் அருள் புரிவான் என்றும் கூறுகின்றார்.

எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்று ஏத்திச்

சிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்

கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவா மல்கு கரை மேல்

அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

பெருமானின் பெருமையை அறியாத காரணத்தால், அவரைத் தொழுது போற்றாது இருக்கும் மனிதர்களை சிதடர்கள், கீழ் மக்கள் என்று திருஞானசம்பந்தர். நெல்வாயில் அரத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.90.2) கூறுகின்றார். அத்தகைய சிதடர்களை பெருமானின் அருள் சென்றடையாது என்று கூறுகின்றார். ஈர=குளிர்ந்த; வார்சடை=நீண்ட சடை; சிதடர்=கீழ் மக்கள்; செல்வம்=சிறந்த குணங்கள்; சீர்=பெருமை; பெருமானின் கருணைத் தன்மையை, தானே முன்வந்து அருளிய செயலை, இதே பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞான சம்பந்தர், கருணையின் அடையாளமாக பெருமானின் சடையினில் தங்கியுள்ள கங்கை நதியையும் பிறைச் சந்திரனையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பகீரதன் பால் கொண்டுள்ள கருணை தானே, பெருமான் கங்கை நதியைத் தனது சடையில் தாங்குவதற்கு காரணமாக இருந்தது. கங்கை நதியினைத் தாங்கி இருப்பதால் எப்போதும் குளிர்ந்து காணப் படுவதும் நீண்டதும் ஆகிய சடையினை உடையவனும், ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் அணிந்தவனும் ஆகிய பெருமானின் சிறப்புகளையும் உயர்ந்த குணங்களாகிய அவரது செல்வங்களையும் அறிந்து கொண்டு புகழ்ந்து தொழுது ஏத்தாத கீழ்மக்களை அவரது அருள் சென்று அடையாது. சிறந்த மலர்களை வாரிக் கொண்டு வருவதும் மிகுந்த நீர்ப்பெருக்கினை உடையதும் ஆகிய நிவா நதிக்கரையின் மீது அமைந்துள்ள சோலைகள் நிறைந்துள்ள நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், அவரது பெருமைகளையும் சிறந்த குணங்களையும் அறிந்து கொண்டு அவர் உறையும் திருக்கோயில்கள் சென்று அவரைப் பணிந்து தொழுவீர்களாகஎன்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஈர வார்சடை தன் மேல் இளம்பிறை அணிந்த எம் பெருமான்

சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது அன்றால்

வாரி மாமலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல்

ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விற்குடி வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.108.6) திருஞானசம்பந்தர், தன் பால் அன்பு செய்யாத மனிதர்க்கு மிகவும் அரியவர் பெருமான் என்று கூறுகின்றார். இந்த பாடலில் பெருமானை மெய்யார்ந்த அண்ணலார் என்றும் குறிப்பிடுகின்றார். மெய்யார்ந்த அண்ணலார்= உண்மையான தலைவர். சிறு மறி=மான் கன்று;

பெண்ணோர் கூறினர் பெருமையர் சிறு மறிக்கையினர் மெய்யார்ந்த

அண்ணல் அன்பு செய்வார்க்கு எளியவர் அரியவர் அல்லார்க்கு

விண்ணிலார் பொழில் மல்கிய மலர் விரி விற்குடி வீரட்டம்

எண்ணிலாவிய சிந்தையினார் தமக்கு இடர்கள் வந்தடையாவே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (3.40.1) திருஞான சம்பந்தர், பெருமானைத் தவிர்த்து வேறு ஒரு தெய்வத்தை பெரியோர்கள் போற்றி வழிபட மாட்டார்கள் என்று குறிப்பிட்டு, தானும் அவ்வாறே இருப்பதாக கூறுகின்றார். கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு, தென்முகக்கடவுள் வடிவத்தில் அறம் உரைத்த பெருமானை அன்றி வேறு எந்த தேவரையும் நல்லார் பேணார் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நல்லார் என்பதற்கு உண்மையான மெய்ப் பொருளை உணர்ந்த ஞானியர் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. நமக்கு வழிகாட்டும் நல்லோராகிய நால்வரும் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் போற்றாது இருந்த தன்மையை அவர்களது வாழ்விலிருந்து நாம் அறிகின்றோம். கல்லால மரத்தின் நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறநெறி உணர்த்திய தென்முகக் கடவுளாகிய சிவபெருமானை அன்றி மற்றொரு தெய்வத்தை, நல்லவர்களாகிய சான்றோர்கள் பேணார். நாமும் அத்தகைய நல்லவர்களை பின்பற்றி சிவபெருமானைத் தவிர்த்து வேறு எந்த தெய்வத்தையும் போற்றாது, வணங்காது இருப்போமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கல்லால் நீழல்

அல்லாத் தேவை

நல்லார் பேணார்

அல்லோம் நாமே

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (3.40.2) உயிர்க்கு நன்மை விளைவிக்கக் கூடிய நற்பொருள் பெருமானைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். நன்று=நன்மை விளைவிப்பது; இங்கே உயிருக்கு நன்மை விளைவிக்கக் கூடிய பொருள் சிவபெருமான் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கி இடர்ப்படும் உயிர்கள் விரும்புவது, இந்த துன்பத்திலிருந்து விடுபட்டு நிலையான பேரின்பத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையினைத் தான். எனவே இந்த நிலை ஒன்று தான் உயிருக்கு நன்மை பயக்கக்கூடிய செயல். உயிர்களுக்கு முக்தி அளிக்கும் வல்லமை சிவபெருமான் ஒருவரைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதால் உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை வாய்ந்தவர் அவர் ஒருவர் தான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. கொன்றை மாலையினைச் சூடி நிற்கும் சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் உயிர்களுக்கு வீடுபேறு அளித்து நன்மை செய்யும் தெய்வமாக நாங்கள் கருத மாட்டோம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கொன்றை சூடி

நின்ற தேவை

அன்றி ஒன்று

நன்று இலோமே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.40.3) திருஞான சம்பந்தர், பெருமானின் பெருமைகளை பேசாத மனிதர்களுடன் தான் சேர மாட்டேன் என்று திட்ட வட்டமாக கூறுகின்றார். கல்லா நெஞ்சு என்ற தொடருக்கு சிவபெருமானின் பெருமைகளை அறியாத நெஞ்சம் என்று ஒரு பொருளும், கல் போன்று கடினமான நெஞ்சம் என்று மற்றொரு பொருளும் கொள்ளலாம். இரண்டுமே பொருத்தமாக உள்ளன. சிவபெருமானின் பெருமைகளை அறிந்து கொண்டு அவனது திருநாமங்களை சொல்லாதவர்களுடன் நாங்கள் சேர மாட்டோம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கல்லா நெஞ்சில் நில்லா ஈசன் என்று குறிப்பிடுகின்றார். தனது (பெருமானது) பெருமைகளை கற்று அறியாத மனிதர்களின் நெஞ்சத்தில் ஈசன் நிற்பதை தவிர்ப்பான்; எனவே அவனது திருநாமத்தைச் சொல்லாத மைந்தர்களுடன் நாம் சேர மாட்டோம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கல்லா நெஞ்சின்

நில்லான் ஈசன்

சொல்லதாரோடு

அல்லோம் நாமே

இந்த பதிகத்தின் அடுத்த பாடலில் (3.40.4) பெருமானைப் போற்றும் மனிதர்களே பிறந்த பயனை அடைவார்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். தோற்றினார்=பிறந்ததன் பயனை அடைந்தவர்கள்; பெருமானை போற்றாத மனிதர்கள் தாங்கள் பிறந்ததன் பயனை அடையாதவர்கள் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். கூற்றுவனை உதைத்து வீழ்த்தியவன் என்ற குறிப்பு பெருமான் காலனைக் கடந்தவன் என்பதையும் நீற்றினான் என்ற குறிப்பு திருநீற்றினை அணிவதன் மூலம் தான் ஒருவனே நிலையானவன் என்பதையும் மற்றவர்கள் அனைவரும் ஒரு நாள் அழியும் நிலையில் உள்ளவர்கள் என்பதையும் பெருமான் உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளன என்பதை நாம் அறிவோம். நிலையான தன்மை உடைய ஒருவன் தானே, நிலையற்ற பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்க இயலும். எனவே அவனை வழிபட்டு, நமது பிறவிப் பிணியை தீர்த்துக் கொள்வது தானே நமது கடமையும் பிறவி எடுத்ததன் பயனாகவும் இருக்க முடியும். எனவே தான் அந்த கடமையைச் செய்யும் மாந்தர்களை, பிறவிப் பயனை அடைந்தவர்கள் என்று உணர்த்தும் வண்ணம் தோன்றியவர்கள் என்று கூறுகின்றார், கூற்றுவனை உதைத்து தனது அடியானைக் காத்தவனும், திருநீற்றினை அணிந்து தான் ஒருவனே என்றும் நிலையானவன் என்பதை உணர்த்துபவனும் ஆகிய சிவபெருமானை போற்றி வணங்கும் அடியார்கள் மட்டுமே பிறந்தவர்களாக கருதப் படுவார்கள். ஏனையோர் பிறந்ததன் பயனை அடையாததால் பிறந்தவர்களாக கருதப் படமாட்டார்கள்

கூற்று உதைத்த

நீற்றினானைப்

போற்றுவார்கள்

தோற்றினாரே

இந்த பதிகத்தின் ஏழாவது பாடலில் (3.40.7) திருஞான சம்பந்தர் பெருமானை நினைக்காத மாந்தரை நாம் மனதினாலும் கருத மாட்டோம், அதாவது பொருட்படுத்த மாட்டோம் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுவது சான்றோர்கள் எவரை மதிப்பார்கள் என்ற கேள்வியை எழுப்புகின்றது. இந்த பாடலில் சொல்லப்பட்டுள்ள கருத்தினை உடன்பாட்டுத் தொடராக மாற்றினால், பெருமானை மதித்து வழிபடும் அடியார்களை நாம் மதிப்போம் என்பது திருஞான சம்பந்தரின் கூற்றாக உள்ள நிலையை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. கோ=தலைவன்; நண்ணுதல்=நெருங்குதல்; மாதொருபாகனாக விளங்கும் தன்மை பெண் ஆணாய என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. பெண்ணாகவும் ஆணாகவும் திகழும் மாதொரு பாகனை, தேவர்களின் தலைவனாகிய பெருமானை, தங்களது மனம் மொழி மெய்களால் நெருங்கி வழிபடாத மனிதர்களை நாம் மனதாலும் கருதுவதில்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பெண் ஆணாய

விண்ணோர் கோவை

நண்ணாதாரை

எண்ணோம் நாமே

திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.55.9) திருஞான சம்பந்தர் பெருமானை அறிவே என்று அழைத்து, உன்னைத் தவிர்த்து வேறு எவரையும் எனது மனம் நாடாது என்று பெருமானிடம் கூறுகின்றார். நெறி=நன்னெறி; பெருமானது திருவடிகள் நமக்கு நன்னெறி காட்டும் என்று சொல்கின்றார். நன்னெறியாவது நமச்சிவாயவே என்ற அப்பர் பிரானின் திருவாய்மொழி நமது நினைவுக்கு வருகின்றது. செறிவார்=அடர்ந்த என்ற பொருள் பொதுவானது. இங்கே நீண்டு உயர்ந்த என்று பொருள் கொள்வது பொருத்தம்; ஞானத்தின் வடிவமாக பெருமானை திருஞான சம்பந்தர் காண்கின்றார். நெருப்புப் பொறி போன்று கொடிய விடத்தினை கக்கும் வாயினை உடைய பாம்பினைத் தனது படுக்கையாகக் கொண்டுள்ள திருமாலும், தாமரைப் பூவினைத் தனது ஆசனமாகக் கொண்டுள்ள பிரமனும், அனைவர்க்கும் நன்னெறி காட்டும் பெருமானது திருவடியையும் மேலோங்கி நிற்கும் திருமுடியையும் காண முடியாமல் திகைத்து நிற்கும் வண்ணம், நெடுந்தழலாக நின்ற பெருமையை உடையவனே, நீண்டு உயர்ந்து வலிமையுடன் விளங்கும் மதில்களை உடைய திருவான்மியூர் நகரினில் உறைபவனே, ஞானமே வடிவமாக திகழ்பவனே, உன்னை அல்லாது வேறு எவரையும் எனது மனம் ஆதரித்து வழிபடாது என்று திருஞான சம்பந்தர் சொல்வதாக அமைந்த பாடல்.

பொறி வாய் நாகணையானும் பூ மிசை மேயவனும்

நெறியார் நீள் கழல் மேல் முடி காண்பரிதாயவனே

செறிவார் மாமதில் சூழ் திருவான்மியூர் உறையும்

அறிவே உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே

இதே பதிகத்தின் அடுத்த பாடலில் (3.55.10) பெருமானை பரவெளியாக நிற்பவனே என்று அழைக்கும் திருஞான சம்பந்தர், பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தனது மனம் விரும்பாது என்று கூறுகின்றார். திண்மை=வலிமை; திண்டேர்=வலிமை வாய்ந்த பெரிய தேர்கள்; குண்டாடும்=விதண்டாவாதம் பேசும்; சமணர்களும் புத்தர்களும் பெருமானின் பல தன்மைகளைக் கண்ட போதிலும் அந்த தன்மைகளின் பின்னணியில் அமைந்துள்ள காரணத்தை புரிந்து கொள்ளாமல் இருந்தனர். இந்த செய்தியைத் தான், காரணங்கள் கருதாதவர் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். அண்டம் என்பதற்கு பல உலகங்கள் என்று பொருள் கொண்டு, பல உலகங்களாக இருப்பவன் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. வீணாக விதண்டாவாதம் செய்கின்ற சமணர்களும் முரடர்களாக விளங்கிய புத்தர்களும் பெருமானின் பல தன்மைகளைக் கண்ட போதிலும் அந்த தன்மைகள் உணர்த்தும் பெருமானின் உண்மையான பண்புகளை அறியாதவர்களாக உண்மைக்கு புறம்பாக பெருமானைக் குறித்து இழிவாக பேசி வந்தனர்; எனினும் அத்தகைய பேச்சுகளால் குழப்பம் ஏதும் அடையாதவனாக தான் இருந்ததை குறிப்பிடும் திருஞான சம்பந்தர், அனைவரும் மாற்று மதத்தவர்களின் உண்மைக்கு புறம்பான இழிந்த சொற்களால் மனம் திரியாமல் தொடர்ந்து பெருமானை வழிபட வேண்டும் என்பதை உணர்த்துகின்றார்.

குண்டாடும் சமணர் கொடும் சாக்கியர் என்று இவர்கள்

கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்

திண்டேர் வீதியதாய் திருவான்மியூர் ஊரையும்

அண்டா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே

பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.64.3) திருஞான சம்பந்தர் பெருமானை, தன்னை வணங்காத மனிதர்களுடன் பிணக்கம் செய் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். குணக்கு=கிழக்கு திசை; குடதிசை=மேற்கு திசை; கணக்கு என்ன= அனைவர்க்கும் ஒரே விதமாக;பிணக்கம்=மாறுபாடு;

குணக்குத் தென்திசைக் கண்ணும் குடபாலும் வடபாலும்

கணக்கு என்ன அருள் செய்வார் கழிந்தோர்க்கும் மொழிந்தோர்க்கும்

வணக்கம் செய் மனத்தராய் வணங்காதார் தமக்கு என்றும்

பிணக்கம் செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.93.9) திருஞானசம்பந்தர், தன்னைப் பணிந்து வணங்காத மனிதர்களுடன் மாறுபட்டு அவர்களுக்கு அருள் புரியாமல் இருப்பவர் பெருமான் என்று கூறுகின்றார். மிசை=மேல்: எரியரா=எரி உருவராக; தம்மிடம் அன்பு செலுத்தும் அடியார்களுக்கு அணிகலனாக விளங்குபவர் பெருமான் என்றும் கூறுகின்றார். இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில், தம் பால் பரிவு கொள்ளாத மனிதர்களுக்கு தன்னை மறைத்துக் கொள்ளும் இயல்பினை உடையவர் பெருமான் என்று கூறுகின்றார். மொழிந்தோர் என்று வாயால் பெருமானைப் போற்றும் அடியார்களையும்,வணக்கம் செய் மனத்தர் என்று உடலால் பெருமானை வணங்கித் தொழும் அடியார்களையும் குறிப்பதால், கழிந்தோர் என்ற சொல், மனதினால் பெருமானை சிந்தித்தவாறு நாட்களை கழிக்கும் பெரியோர்களை குறிப்பிடுவதாக பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.

வரியரா அதன் மிசைத் துயின்றவன் தானும் மாமலர் உளானும்

எரியரா அணி கழல் ஏத்தவொண்ணா வகை உயர்ந்து பின்னும்

பிரியராம் அடியவர்க்கு அணியராய்ப் பணிவு இலாதவருக்கு என்றும்

அரியராம் அரிவையோடு இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே

தன்பால் பக்தி செய்யாத அடியார்களுக்கு மறைந்து நிற்பவர் பெருமான் என்று வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.119.3) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இசைந்தவாறு=மனம் ஒன்றி, மனமொப்பி; தூவல் என்பதன் முதற்குறை துவல் என்ற சொல்; தூவிய என்று பொருள்;வாசிகை=மாலை; இழுகு சந்தனம்=சந்தனம் போன்று நறுமணம் கமழும்; பரப்புதல்=அருள் பரப்புதல்; அசும்பு=நீர் ஊற்று; வான் சும்மை=வானிலிருந்து உதிர்வது போன்று வளத்துடன் விளங்கும்; விசும்பு=வானம்;

இசைந்தவாறு அடியார் இடு துவல் வானோர் இழுகு சந்தனத்து இளங் கமலப்

பசும் பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல்

அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்தெடுத்த வான் சும்மை

விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினை கெடுமே

அடியார்களுக்கு அன்றி மற்றவர்க்கு சிவபெருமான் அருள் புரிய மாட்டான் என்று திருஞான சம்பந்தர் கூறுவது அப்பர் பிரான் அருளிய நமச்சிவாயப் பத்து பதிகத்தின் பாடலை (4.11.6) நமக்கு நினைவூட்டுகின்றது. சலம்=வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை. வேண்டுதல் வேண்டாமை அற்றவன். அனைவருக்கும் ஒரே தன்மையாக உள்ளவன். சங்கரன்=இன்பம் அளிப்பவன். அனைவருக்கு ஒரே தன்மையாக காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு எப்போதும் நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபெருமானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்

நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்

குலமிலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்

நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.12.5) தான் இறக்கும் சமயத்திலும் பெருமானை மறவாமல் நினைப்பேன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தீர்த்த=புனிதம் உடைய; மாதீர்த்த=மிகவும் புனிதமான; இசை பாடும் என்ற வினைச் சொல்லை, அப்பனை என்ற பெயர்ச் சொல்லுடன் சேர்த்து, பண் பொருந்த இசை பாடும் இறைவன் என்று பொருள் கொள்ள வேண்டும். தான் இறக்கும் சமயத்திலும் சிவபெருமானது நினைவு இருக்க வேண்டும் என்ற தனது கவலையை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த கவலை நமக்கும் இருக்கவேண்டும், திருப்புகலூர் தலத்தில் இறைவனைப் பற்றிய சிந்தைனையில் இருந்தபோதே இறைவனின் திருவடிகளில் சேர்ந்த அப்பர் பிரானுக்கு அருளியது போல், நமக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று நாம் இறைவனை வேண்டும் முகமாக, தினமும் சிவபூஜை செய்யும் அன்பர்கள் தாங்கள் பூசையினை முடிக்கும் சமயத்தில், இந்த பாடலை சொல்லவேண்டும் என்று பெரியோர்கள் கருதுகின்றனர். கண் பொருந்துதல்= இறப்பினைக் குறிக்கும் மங்கலச் சொல். கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ என்று (இறக்கும் சமயத்தில் பழனத்து அப்பனின் நினைவை நான் கை விட்டு விடுவேனோ) தனது அச்சத்தை வெளிப்படுத்தும் அப்பர் பிரான், தான் இறக்கும் சமயத்திலும் சிவபிரானைப் பற்றிய நினைவு தனக்கு இருக்கவேண்டும் என்ற தனது விண்ணப்பத்தை, மறைமுகமாக இறைவனிடம் அப்பர் பிரான் தெரிவிக்கின்றார். இந்த மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கும், தூய்மையான வேதியர்களுக்கும், மற்றும் விண்ணுலகத்தில் வாழும் தேவர்களுக்கும் முக்திநிலை அளிக்கக்கூடிய சிவபெருமானை, அவனது அடியார்கள் பண்ணோடு பொருந்திய பாடல்களைப் பாட அதனைக் கேட்டு இன்பமுறும் பழனத்து அப்பனை, நான் இறக்கும் தருவாயில் நினைக்காமல் போய்விடுவேனோ என்று அஞ்சுகின்றேன். அவ்வாறு ஏதும் ஏற்படாதவாறு, நான் அந்த சமயத்திலும் உன்னை நினைக்குமாறு நீ அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்

விண் பொருந்து தேவர்க்கும் வீடு பேறாய் நின்றானைப்

பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என்

கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.16.1) அப்பர் பிரான், தனது அடியார்கள் அல்லாதார்க்கு பொய்யனாக இறைவன் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். செம்மை வெண்மை, மெய்யர் பொய்யர் என்று எதிர்மறைச் சொற்கள் நயமாக, இந்த பாடலில் கையாளப் பட்டுள்ளதை நாம் உணரலாம். கருமான்=வலிமை உடைய மான். தாருகாவனத்து முனிவர்கள் இறைவனை தாக்குவதற்காக ஏவிய மான் என்பதால், வலிமை உடைய மான் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. கருமான் என்பதற்கு கரிய நிறம் கொண்ட மான்கன்று என்றும் விளக்கம் கூறுகின்றனர். இடு விளக்கு=ஏற்றப்பட்ட விளக்கு; எழுதுகோல் வளையர்= எழுதப்பட்ட வரிகளைப் போன்று திரண்ட வளைகளை அணிந்த உமையன்னை. செம்மை நிறம் கொண்ட திருமேனியை உடையவரும், வெண்மை நிறத்து பூணூலைத் தனது மார்பினில் அணிந்தவரும், தாருகாவனத்து முனிவர்கள் தன் மீது ஏவிய வலிமை உடைய மான் கன்றினை அடக்கி, அந்த மான் கன்று முன் போன்று துள்ளி விளையாடுமாறு அதன் தன்மையை மாற்றித் தனது கையில் வைத்துள்ளவரும், ஒலிக்கின்ற கழலைத் தனது காலில் கட்டியவரும், சிவநெறியில் நின்று தன்னைத் தொழும் அடியார்களுக்கு உண்மையானவரும், சிவநெறியில் நில்லாத ஏனையோருக்கு பொய்யராகவும் திகழ்பவரும் ஆகிய பெருமான், முறுக்கேறிய சடையராய் புகலூரில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செய்யர் வெண்ணூலர் கருமான் மறி துள்ளும்

கையர் கனை கழல் கட்டிய காலினர்

மெய்யர் மெய்ந் நின்றவர்க்கு அல்லாதவர்க்கு என்றும்

பொய்யர் புகலூர்ப் புரி சடையாரே

தில்லைச் சிற்றம்பலத்தின் மீது அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில் (5.2.8) அப்பர் பிரான், சிற்றம்பலக் கூத்தனை மறந்து வாழ்வினில் உய்வினை அடைய மாட்டேன் என்று கூறுகின்றார். பிற்காலச் சோழர்களின் வழியில் வந்த பராந்தகச் சோழன் காலத்தில் சிதம்பரத்தில் பொற்கூரை வேயப்பட்டதாக சோழர்களின் சரித்திரத்தில் கூறப்படுகின்றது. அப்பர் பிரானின் காலம் கண்டராதித்தச் சோழர் காலத்திற்கு, சுமார் முன்னூறு ஆண்டுகள் முந்தையது. மகேந்திர பல்லவன் மற்றும் நரசிம்ம பல்லவன் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் பிரான். எனவே பராந்தகச் சோழன் காலத்திற்கு முன்னமே, தில்லை அம்பலத்தின் கூரை பொன்னால் வேயப்பட்டது என்பது அப்பர் பிரானின் இந்த பாடலிலிருந்து புலனாகின்றது. பராந்தகச் சோழனின் காலத்தில், பொன் பூச்சு புதிப்பிக்கப்பட்டு இருக்கலாம் என்று இதனால் நாம் ஊகம் செய்யலாம். கோயில் புராணத்திலும் (சிதம்பரத்தின் தல வரலாறு), இரண்யவர்மன் என்ற வடநாட்டு கெளட தேசத்து இளவரசன், தொழு நோயால் பீடிக்கப்பட்டு இருந்தமையால் அரசாளத் தகுதியற்றவன் என்று கருதப்பட்டான். தனது நோய்க்குத் தீர்வு காணும் முயற்சியில் அவன் ஒவ்வொரு தலமாக யாத்திரை செய்தபோது, தில்லை நகரம் வந்தடைந்தான்: அப்போது வியாக்ரபாத முனிவர் அவனை தில்லைப் பெருமானை வேண்டி குணம் பெறுமாறு ஆலோசனை கூறினார் அவனும் அவ்வாறே நடராஜப் பெருமானை வழிபட்டு குணம் அடைந்தான். அவன் வடநாடு செல்லாமல், இங்கேயே தங்கி தில்லையைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டான் என்றும் அப்போது அவன் அம்பலத்திற்கு பொற்கூரை வேய்ந்தான் என்றும் கோயில் புராணம் கூறுகின்றது. விண்ணில் உள்ள தேவர்கள், தில்லை அம்பலத்துக் கூத்தனை தொழுது போற்றி வணங்குகின்றார்கள். மேலும் தேவர்கள் அம்பலத்துக் கூரையினை தூய பொன்னினால் வேய்ந்து அழகு செய்துள்ளார்கள். இவ்வாறு தேவர்களால் பெருமைப் படுத்தப்பட்ட சிவபெருமானை, குற்றங்கள் உடைய அடியேன் மறந்தால் நான் வாழ்வில் உய்வினை அடையமாட்டேன். எனவே நான் எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

முழுதும் வானுலகத்து உள தேவர்கள்

தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்

எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை

இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ

இந்த பதிகத்தின் அடுத்த பாடலில் (5.2.9) தெவிட்டாத அமுதமாக இருக்கும் பெருமானை, மறந்து தான் வாழ்வினில் உய்வினை அடைய மாட்டேன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஆர்கிலா= உண்ண உண்ணத் தெவிட்டாதது: காருலா மலர்=கார்க் காலத்தில் பூக்கும் கொன்றை மலர்கள்: அம் தாரன்=அழகிய மாலையை அணிந்தவன்: தார்=மாலை; கார்க் காலத்தில் பூக்கும் அழகிய கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும், இறுக்கமாக மார்பினில் கச்சினை அணிந்துள்ள பார்வதி தேவியின் மணாளனும், தில்லையின் வீதிகளில் தேரினில் உலா வருபவனும் ஆகிய தில்லைக் கூத்தனும் உண்ணவுண்ணத் தெவிட்டாத அமுதம் போன்று இனிப்பவனும் ஆகிய சிவபெருமானை, மறந்தால் நான் வாழ்வில் உய்வினை அடைய மாட்டேன். எனவே நான் எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காருலா மலர்க் கொன்றை அம் தாரனை

வாருலா முலை மங்கை மணாளனைத்

தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை

ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ

இந்த பதிகத்தின் கடைப் பாடலையும் (5.2.10) அப்பர் பிரான் பெருமானை மறந்து உய்வினை அடைய மாட்டேன் என்று முடிக்கிறார். ஓங்கு=உயர்ந்த: மால் வரை=பெருமைக்குரிய மலை, கயிலை மலை: பாங்கு=நல் சார்பு. உயர்ந்ததும் பெருமை வாய்ந்ததும் ஆகிய கயிலாய மலையை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் பத்து தலைகளும் மலையின் அடிக்கீழ் நெருக்குண்டு வீக்கத்தினால் பருக்குமாறு, தனது கால் விரலை ஊன்றியவன் சிவபெருமான். தேவையான அளவுக்கு தண்ணீர் தேங்கும் வயல்கள் கொண்டு நீர்வளம் நிறைந்து விளங்கும் தில்லை நகரில் உறையும் கூத்தனை, நல்லவர்களைச் சாராது இருக்கும் கொடிய தொண்டனாகிய நான், சிவபெருமானை மறந்தால் வாழ்வில் உய்வினை அடையமுடியாது. எனவே எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

ஓங்கு மால் வரை ஏந்தல் உற்றான் சிரம்

வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்

தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனை

பாங்கிலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.4.7) அப்பர் பிரான், தான் வாழ்வினில் உய்வினை அடைய விரும்புவதால், பெருமானைத் தான் என்றும் மறக்க மாட்டேன் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் கொடியேன் என்று அப்பர் பிரான் தன்னைக் குறிப்பிடுகின்றார். பெருமானை நினைத்து வழிபடுவதை மறந்து சமண சமயத்தைச் சார்ந்து இருந்த தனது செயலுக்காக வருந்தி தன்னையே இகழ்ந்து கொள்கின்றார். அவ்வாறு கொடிய வாழ்க்கை வாழ்ந்து வந்த தன்னை ஆட்கொண்ட திருவதிகை வீரட்டானத்து பெருமானின் நினைவு அவருக்கு வந்தது போலும். அவர் தானே அப்பர் பிரானுக்கு வாழ்வினில் உய்யும் வழியை காட்டினார். நாற்பது வருடங்களுக்கு மேலாக சமண சமயத்தைச் சார்ந்து, சமண சமயத்தில் குருவாகத் திகழ்ந்து, பல சமய வாதப் போர்களில் ஈடுபட்டு வெற்றியுடன் திகழ்ந்த ஒருவரின் மனதை மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்லவே. அதனை எளிதாக செய்து முடித்த இறைவனின் கருணைச் செயலை எண்ணிப் பார்த்து வியந்த அப்பர் பிரான், இறைவனின் வீரச் செயல்களை வியந்து குறிப்பிடும் வண்ணம் வீரன் என்று அழைக்கின்றார். பதிகத்தின் பாடல் தோறும் திரிபுரம் எரித்த வீரச்செயல் தானே குறிப்பிடப் படுகின்றது. வீரத்திற்கு உறைவிடமாகத் திகழ்பவனும், பாற்கடலில் பொங்கிய நஞ்சினை உண்டு தேவர்களின் அச்சத்தைத் தீர்த்த வல்லமை வாய்ந்தவனும், திருவண்ணாமலை எனப்படும் தலத்தில் உறைபவனும், தனது பெருமையை உணர்ந்து தன்னை வழிபடாமல் திரிந்த திரிபுரத்து அரக்கர்களை அவர்கள் வாழ்ந்து வந்த மூன்று கோட்டைகளுடன் எரித்தவனும், திரிபுரத்து அரக்கர்களை வெற்றி கொண்டு ஆத்தி மாலை சூடியவனும் ஆகிய பெருமானை மறந்தால் அடியேன் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது. எனவே அடியேன் எப்போதும் அவரை மறவாமல் நினைத்து, வாழ்வினில் உய்வினை அடைவேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. ஆரம்=மாலை; ஆரன்=மாலை சூடியவன். இங்கே திரிபுரத்து அரக்கர்களை அழித்த நிகழ்ச்சியுடன் சேர்த்து குறிப்பிடப் படுவதால், வெற்றி மாலை சூடியவன் என்று பொருள் கொள்வது பொருத்தம்.

வீரனை விடம் உண்டனை விண்ணவர்

தீரனைத் திருவண்ணா மலையனை

ஊரனை உணரார் புரம் மூன்று எய்த

ஆரனை அடியேன் மறந்து உய்வனோ

இதே பதிகத்தின் அடுத்த பாடலில் பெருமானை, அருவன், உருவமற்றவன் என்று குறிப்பிட்டு, பெருமானை தான் மறவாமல் இருந்து வாழ்வினில் உய்வினை அடைவேன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கருவினை=அனைத்து உயிர்களுக்கும் உலகப் பொருட்களுக்கும் கருவாக இருப்பவன். திரு=செல்வம்; எத்தனை செல்வம் இருப்பினும், நமக்கு இடர் வரும் காலத்தில், நமது இடர்களைக் களைய அந்த செல்வம் பயன்படாவிட்டால், அந்த செல்வத்தால் என்ன பயன். எனவே தான் நமது இடர்களைக் களையும் இறைவனை உயர்ந்த செல்வமாக அப்பர் பிரான் கருதுகின்றார். இறைவனின் தன்மையை, அவனது பெருமையை நாம் உணர்ந்து வழிபட்டால் தான் நாம் வாழ்வினில் உய்வினை அடையமுடியும். அவ்வாறு உணராது, அழிவினைத் தேடிக் கொண்ட திரிபுரத்து அரக்கர்களை குறிப்பிட்டு, நாம் இறைவனை உணர்ந்து வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். பெருமானின் திருமேனி மூன்று வடிவமாக அருளாளர்களால் உணரப் பட்டது. உருவம் ஏதும் இல்லாத அருவத் திருமேனி, இலிங்க மூர்த்தமாக உள்ள அருவுருவத் திருமேனி மற்றும் நடராஜப் பெருமான் போன்று பல மாகேச்சரத் திருமேனி உருவங்கள். அருவத் திருமேனியுடன் பெருமான் விளங்குவதை யோகியரும் ஞானியரும் உணர்வார்கள். அவ்வாறு அப்பர் பிரானும் உணர்ந்தமையால் அருவன் என்று பெருமானை இந்த பாடலில் அழைக்கின்றார். உருவினை உணரார் என்று இந்த இரண்டு சொற்களையும் இணைத்து, போருக்கு வந்த பெருமானைக் கண்ட பின்னரும் அவன் தான் முழுமுதற் கடவுள் என்பதை உணராத திரிபுரத்து அரக்கர்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. உலகமும், உலகில் உள்ள ;அனைத்துப் பொருட்களும், உலகில் உள்ள அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு மூல காரணமாக கருவாக இருப்பவனும், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உண்டவனும், எமது இடர்களைக் களைந்து அரும் பெரும் செல்வமாக இருப்பவனும், திருவண்ணாமலையாக திகழ்பவனும், பல விதமான உருவத் திருமேனிகளை உடையவனும், அவனது பெருமையை உணராத திரிபுரத்து அரக்கர்கள் அழியும் வண்ணம் அம்பு எய்தவனும், அருவத் திருமேனி உடையவனாய் எங்கும் பரந்து இருப்பவனும் ஆகிய பெருமானை மறந்தால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது. எனவே அடியேன் எப்போதும் அவரை மறவாமல் நினைத்து, வாழ்வினில் உய்வினை அடைவேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கருவினைக் கடல் வாய் விடம் உண்ட எம்

திருவினைத் திருவண்ணா மலையனை

உருவினை உணரார் புரம் மூன்று எய்த

அருவினை அடியேன் மறந்து உய்வனோ

இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (5.4.9) அருத்தனை மறந்து அடியேன் உய்வனோ என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அருத்தன்=அறம் பொருள் இன்பம் வீடு என்று கருதப்படும் நால்வகைப் பேறுகளில் இரண்டாவதாக உள்ள பொருளாக இருப்பவன்; சொல்லின் பொருளாக இருப்பவன் என்றும் மெய்ப்பொருளாக இருப்பவன் என்றும் விளக்கம் கூறுவார்கள். திருத்தன்= திருத்தியவன், ஐந்து தலை நாகத்தின் கொடிய குணத்தினை மாற்றி, ஆபரணமாக அணிந்து கொண்டவன். கடிதல்=கோபித்துக் கொள்ளுதல்; நம்மிடம் இருந்த தீய குணங்களை உணர்ந்து, அவற்றைக் கடிந்து நீக்கவேண்டியது நாம் செய்ய வேண்டிய செயலாகும். அவ்வாறு தீய குணங்களைக் கடிந்து நீக்காமல், தொடர்ந்து தீய செயல்களைச் செய்து ஏனைய உயிர்களை வருத்திய திரிபுரத்து அரக்கர்களை கடியார் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம் தீய செயல்களைப் புரியும் மனிதர்களுக்கு அருள் புரியாமல் இறைவன் அழிப்பார் என்பதையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். அருத்தன்=நுகர்விப்பவன் என்ற பொருளும் பொருந்தும். உண்மைப் பொருளாகவும், மெய்ப் பொருளாகவும், சொற்களின் பொருளாகவும் உள்ள பெருமான், ஐந்து தலை நாகத்தின் கொடிய குணத்தினை மாற்றி திருத்தி அந்த நாகத்தினை அணிகலனாக பூண்டவன் சிவபெருமான். திருவண்ணாமலையாக திகழும் பெருமான், உயிர்களின் கருத்தாகவும் திகழ்கின்றான். தீய குணங்களைக் கடிந்து நீக்காமல், அந்த தீய குணங்களின் வழியே சென்று ஏனைய உயிர்களை வருத்திய திரிபுரத்து அரக்கர்களை ஒரே அம்பினால் எரித்து அழித்தவனும், அனைத்து உயிர்களும் தங்களது வினைப்பயனை தவறாது நுகர்ந்து கழிப்பதற்கு வழி வகுப்பவனும் ஆகிய பெருமானை மறந்தால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது. எனவே அடியேன் எப்போதும் அவரை மறவாமல் நினைத்து, வாழ்வினில் உய்வினை அடைவேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

அருத்தனை அரவு ஐந்தலை நாகத்தைத்

திருத்தனைத் திருவண்ணா மலையனை

கருத்தனைக் கடியார் புரம் மூன்று எய்த

அருத்தனை அடியேன் மறந்து உய்வனோ

இந்த பதிகத்தின் கடைப் பாடலிலும் (5.4.10) பெருமானை மறந்து வாழ்வினில் உய்வினை அடைய முடியாது என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். துரக்கன்=துரத்தியவன்; நோய்களைத் துரக்கன் என்ற தொடரினை நோய் களைந்து உரக்கன் என்று பிரித்து, தான் உற்ற நோயினைத் தீர்க்கும் வல்லமை பெற்றவன் என்று கூறுகின்றார் என்று சொல்வதும் பொருத்தமே. உரக்கன்=வல்லமை உடையவன். சமணர்கள் பல மந்திரங்கள் தந்திரங்கள் பயன்படுத்தியும் தீராத சூலை நோய், திருவதிகைப் பெருமானை தரிசனம் செய்து கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகம் பாடிய மாத்திரத்தில் தீர்ந்தது என்றால், அவனது வல்லமை தான் என்னே. இந்த பாடலில் மட்டும் தான், திரிபுரத்து அரக்கர்களை அழித்த செய்தி இடம்பெறவில்லை. இந்த பதிகத்தின் மாத ஒன்பது பாடல்களில் பெருமான் திரிபுரத்து அரக்கர்களை எரித்து அழித்த செய்கை குறிப்பிடப் படுகின்றது. அரக்கன் இராவணன் அலறுமாறு தனது கால் விரலை ஊன்றி கயிலாய மலையின் கீழே அவனை அழுத்தி வருத்தி, அவனை திருத்தியவனும், திருவண்ணா மலையாகத் திகழ்பவனும் அடியேன் மீது இரக்கம் கொண்டு எனது சூலை நோய் மற்றும் பிறவிப்பிணி நோய் ஆகிய இரண்டையும் துரத்தியவனும் ஆகிய பெருமானை மறந்தால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது. எனவே அவனது தொண்டனாகிய அடியேன் எப்போதும் அவரை மறவாமல் நினைத்து, வாழ்வினில் உய்வினை அடைவேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அரக்கனை அலற விரல் ஊன்றிய

திருத்தனைத் திருவண்ணா மலையனை

இரக்கமாய் என் உடலுறு நோய்களைத் ,

துரக்கனைத் தொண்டனேன் மறந்து உய்வனோ

காசனைக் கடலை என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (5.93.8) அப்பர் பிரான், பெருமானை, தான் எப்போதும் மறவேன் என்று கூறுகின்றார். உயிர்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை இறைவன் அந்த உயிர்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கின்றான். ஆனால் உயிர்கள் இறைவன் செய்யும் உதவிகளை நினைவில் கொண்டு அவனை நினைத்துப் பார்ப்பதில்லை. எனவே தான் வஞ்சனையான மனம் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். உடல் உறங்கினாலும் உறங்காத எனது உள்ளத்தில் சோதியாக சுடர் விட்டு மிளிரும் இறைவனே, எனது நெஞ்சத்தினில் இடம்பெற்று அடியேன் உன்னை நினைக்குமாறு தூண்டும் இறைவனே, நீதியின் வடிவமாக இருப்பவனே, நஞ்சினைத் தனது கழுத்தினில் அடக்கி, தேவர்களையும் உலகத்தினையும் நஞ்சின் தாக்கத்திலிருந்து காத்து அவர்களின் நம்பிக்கைக்கு உறைவிடமாக இருப்பவனே, வஞ்சனையின் வடிவமாக இருக்கும் அடியேன் உன்னை எவ்வாறு மறக்க இயலும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

துஞ்சும் போதும் சுடர் விடும் சோதியை

நெஞ்சுள் நின்று நினைப்பிக்கு நீதியை

நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை

வஞ்சனேன் இனி நான் மறக்கிற்பனே

இந்த பதிகத்தின் அடுத்த பாடலில் (5.93.9) அப்பர் பிரான், பெருமானை தன்னால் மறக்க இயலாது என்று கூறுகின்றார். நிதி=செல்வம் கதி=வீடுபேறான நற்கதி; மதி=ஞானம் மைந்தன்=வல்லமை வாய்ந்தவன்; புதிய பூ=அன்றைய தினம் மலர்ந்த பூ போன்று: பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் பெற்றியன் என்று மணிவாசகர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. அன்றலர்ந்த பூ போன்று புதுமையாக என்றும் திகழ்பவனும், புண்ணியமே உருவமாக உள்ள தலைவனும், அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த செல்வமாக இருப்பவனும், தருமத்தின் உருவமாக இருப்பவனும், முத்துக்களின் குன்றினைப் போன்று ஒளி வீசும் திருமேனியை உடையவனும், அனைவரும் அடைய விரும்பும் நற்கதியாகிய வீடுபேறாக இருப்பவனும், உலகத்தை காக்கும் பொருட்டு தான் உட்கொண்ட நஞ்சினை தேக்கியதால் கருமை நிறம் பொருந்திய கழுத்தினை உடைய கடவுளும், ஞான வடிவினனாக இருப்பவனும், வல்லமை வாய்ந்தவனாக இருப்பவனும் ஆகிய பெருமானை அடியேன் எவ்வாறு மறக்க இயலும் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

புதிய பூவினை புண்ணிய நாதனை

நிதியை நீதியை நித்திலக் குன்றினைக்

கதியைக் கண்டம் கறுத்த கடவுளை

மதியை மைந்தனை நான் மறக்கிற்பனே

இந்த பதிகத்தின் பத்தாவது பாடல் (5.93.10) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கருகு=கருமை நிறத்தினை உடைய; உருவ நோக்கியை=உலகம் உருப்பெற்று விளங்குமாறு நோக்கியவன்; ஊழிக் காலம் முடிந்த பின்னர் உலகத்தினை உருவாக்க பெருமான் தனியாக முயற்சிகள் ஏதும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உலகத்தினையும் உலகில் உள்ள பொருட்களையும் உலகத்தில் உள்ள உயிர்களையும் உருவாக்க வேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில் உலகினை உண்டாக்கும் வல்லமை படைத்தவன் என்பதை உணர்த்தும் பொருட்டு, உருவ நோக்கி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வழக்கமாக இராவணனின் கயிலை நிகழ்ச்சியை பதிகத்தின் கடைப் பாடலில் குறிப்பிடும் அப்பர் பிரான் இந்த பதிகத்தில், அந்த வழக்கத்திலிருந்து மாறுபடுகின்றார். இறைவனை தான் எவ்வாறு மறக்க இயலும் என்று பாடல் தோறும் உணர்த்திய அதன் காரணத்தையும், தான் உட்பட பல அடியார்களுக்கு இறைவன் அருளுவதை குறிப்பிட்டமையால், இலங்கை வேந்தனைப் பற்றிய குறிப்பினை தவிர்த்தார் போலும். பருகு பாலன்=பருகுதற்கு உரிய பால் போன்று இனிமையாக இருப்பவன்; கருமை நிறத்தினை உடைய கார் காலத்து மேகம் போன்று கறுத்த கழுத்தினை உடையவனும், உலகங்கள் அனைத்தும் ஊழிக்காலத்தில் அழிந்த பின்னர் தான் நினைத்த மாத்திரத்தில் முயற்சிகள் ஏதுமின்றி உலகத்தை மீண்டும் படைக்கும் வல்லமை வாய்த்தவனும், பல ஊழிகளை கடந்து நிற்கும் முதல்வனும், பருகுதற்கு உரிய பால் போன்று இனிமையாக இருப்பவனும், பால் போன்ற வெண்மை நிறத்தினில் உள்ள பிறைச் சந்திரனைத் தனது தலையில் சூடியவனும், தன்னை நினைக்கும் அடியார்களின் மனதினில் பொருந்தி இருப்பவனும் ஆகிய இறைவனை அடியேன் எவ்வாறு மறக்க இயலும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கருகு கார் முகில் போல்வதோர் கண்டனை

உருவ நோக்கியை ஊழி முதல்வனைப்

பருகு பாலனைப் பால் மதி சூடியை

மருவு மைந்தனை நான் மறக்கிற்பனே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (5.99.7) அப்பர் பிரான், சிவபெருமானின் புகழினை பாடும் அடியார்களுக்கே, சிவபெருமானின் அருளால் விளைகின்ற பயன்கள் கைகூடும் என்று கூறுகின்றார். கூட வேடத்தர்=தங்களது தாழ்வான குணங்களை மறைக்கும் வேடங்கள்; தனது இழிவான வேடத்தை மறைத்துக் கொண்டு, அடியார்களின் நடுவே புகுந்து கொண்டு இருப்பதால் நற்பலன் ஏதும் விளையாது: தனது உடலில் உள்ள சதைகளை குறைத்துக் கொண்டு உடலிளைத்து, பல இடங்களில் திரிவதாலும் பலன் ஏதும் விளையாது. உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால், நடனக் கோலத்தை மேற்கொண்டு அம்பலத்தில் நடமாடும் கூத்தனாக விளங்கும் சிவபெருமானை புகழ்ந்து பாடுபவர்களாக நீங்கள் மாறவேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் அப்பர் பிரான் நமக்கு சொல்லும் அறிவுரை ஆகும்.

கூட வேடத்தர் ஆகிக் குழுவிலென்

வாடி ஊனை வருத்தித் திரியிலென்

ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப்

பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.63.6) அப்பர் பிரான், பெருமானின் திருப்பாதங்களை என்றும் தான் மறக்க மாட்டேன் என்று கூறுகின்றார். அரிகுலம்= சிங்கங்கள் முதலான விலங்குகள்: புரிசடை=முறுக்கி பின்னப்பட்ட சடை: யானையின் பசுந்தோல் பிறரது உடலில் பட்டால் அவர்களைக் கொல்லும் தன்மை உடையது என்று நச்சினார்க்கினியர் சீவக சிந்தாமணி உரையில் கூறுகின்றார். ஆனால் சிவபெருமானோ. நஞ்சு உண்ட பின்னரும் இறவாமல் இருந்தது போன்று, யானையின் பசுந்தோலைப் போர்த்துக் கொண்ட பின்னரும் இறவாமல் இருந்ததால், காலனுக்கும் காலன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அலர்=மலர்: வரி=கோடு. வண்டுகள் பண் பாடும் திருவடித் தாமரைகள் என்று கூறும் அப்பர் பிரான், ஐந்தறிவு பெற்ற வண்டுகள் போற்றி இசைத்துப் பாடும் சிவபெருமானை ஆறறிவு பெற்ற நாம் வாழ்த்தாமல் இருக்கலாமா என்று நமக்கு உணர்த்துகின்றார் போலும். முறுக்கி பின்னப்பட்ட சடையில், அலைகள் மோதும் நீரினை உடைய கங்கை நதியை அடக்கியவனே, தன்னைத் தாக்க வந்த யானையின் தோலை உரித்து அந்த தோலைப் போர்வையாக உரித்து உடலில் போர்த்துக் கொண்டவனே, காலனுக்கும் காலனாக விளங்கியவனே, சிங்கம் முதலான விலங்குகள் அதிகமாக காணப்படும் அண்ணாமலையில் உறைபவனே, தேனுண்ண வந்த வண்டுகள் பண்பாடும் நறுமணம் கொண்ட புதிய மலர்கள் அழகு செய்யும் பாதங்களை உடையவனே, உனது மலரினும் மெல்லிய திருவடிகளை அடியேன் மறக்க மாட்டேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

புரிசடை முடியின் மேலோர் பொரு புனல் கங்கை வைத்துக்

கரி உரி போர்வையாகக் கருதிய காலகாலா

அரி குலம் மலிந்த அண்ணாமலை உளாய் அலரின் மிக்க

வரி மிகு வண்டு பண் செய் பாத நான் மறப்பிலேனே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் (4.63.7) அப்பர் பிரான், பெருமானைத் தவிர்த்து வேறெவர் மீதும் தனக்கு பற்றில்லை என்று கூறுகின்றார். பாம்புகள் தங்களது கழுத்தில் மாணிக்கக் கற்களை வைத்துள்ளன என்றும், இரவில் இரை தேடும் போது மணியினை உமிழ்ந்து அந்த மணியின் ஒளியில் இரை தேடும் என்றும் தனது தேடல் முடிந்தவுடன் அந்த மணியினை விழுங்கிவிடும் என்று கூறுவார்கள். அத்தகைய பாம்புகள் அதிகமாக காணப்படும் மலை அண்ணாமலை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். திருக்கோயிலில் மூலவர் சன்னதியில் உள்ள நாகாபரணத்தில் ஒளி வீசும் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்டு இருப்பதை நாம் காணலாம். உரகம்=கால்கள் இன்றி மார்பினால் நகரும் பாம்பு: இங்கே அட்ட நாகங்களை குறிக்கின்றது. சூரியன், சந்திரன், ஆகாயம், பூமி, நீர், காற்று, பாதாளத்தில் உறையும் அட்ட நாகங்கள் வைத்துள்ள மணிகள், ஆகிய அனைத்திலும் ஒளி உருவமாக உறையும் இறைவனே, பாம்புகள் இரவில் இரை தேடும் சமயத்தில் வெளிச்சத்திற்காக உமிழும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வீசும் அண்ணாமலையில் உறையும் இறைவனே, உனது திருவடிகளைப் போற்றி வாழ்த்துவது அன்றி அடியேன் வேறு எவரையும் பற்றுக்கோடாக கொள்ள மாட்டேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலும் காற்றும்

உரகமார் பவளம் எட்டும் திசை ஒளி உருவமானாய்

அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே

பரவு நின் பாதம் அல்லால் பரம நான் பற்றிலேனே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் (4.63.8) அப்பர் பிரான், பெருமானின் திருப்பாதங்களுக்கு அடிமையாக இருப்பதைத் தவிர்த்து, வேறு எந்த திறமையும் அற்றவன் என்று தன்னை குறிப்பிடுகின்றார். நல்குதல்=அருளுதல்: நிலாவுதல்=தங்குதல்: தீர்த்தன் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் சிவபெருமானைகுறிக்கின்றார். புனித தீர்த்தம் அதில் நீராடும் மக்களின் பாவங்களைத் தீர்ப்பது போன்று, தன்னை வணங்கி வழிபடும் அடியார்களின் வினைகளைக் கழிப்பவன் சிவபெருமான் என்பதை உணர்த்தும் பொருட்டு, சிவபெருமானை தீர்த்தன் என்று அழைக்கின்றார். அடியார்களின் மலங்களைக் களைந்து அவர்களை தூய்மை செய்யும் தன்மை கொண்ட சிவபெருமான் தீர்த்தன் என்று அழைக்கப் படுவது பொருத்தம் தானே. பார்த்தனுக்கு அன்று பாசுபத ஆயுதத்தை அளித்து அருள் புரிந்தவனே, மிகுந்த நீரினைக் கொண்டு ததும்பும் கங்கை நதியை நீண்ட சடையில் தங்குமாறு வைத்தவனே, ஆரவாரத்துடன் ஒன்று சேரும் மேகங்கள் அழகு செய்யும் அண்ணாமலையை இருப்பிடமாகக் கொண்டவனே, தூய்மை செய்பவனே, உனது திருவடிகளுக்கு இருக்கும் திறமை அல்லால் வேறெந்த திறமையும் அடியேன் அல்லாதவன் என்று தனது தன்மையை அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்

நீர் ததும்பு உலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்

ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே

தீர்த்தனே நின் தன் பாதம் திறம் அலால் திறமிலேனே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.63.9), அப்பர் பிரான், பெருமானின் மலரடிகளை தான் என்றும் மறக்க மாட்டேன் என்று கூறுகின்றார். வால்=வெண்மை நிறம். ஆளும் நீர்=முழங்கும் நீர்: கொண்டல்=மேகம்: பூகம்=திரட்சி, திரண்டு காணப்படும் தன்மை: பூகம் என்பதற்கு கமுகு என்ற பொருளும் உண்டு. ஆனால் இங்கே மேகக் கூட்டங்கள் என்ற பொருளே பொருத்தமாக உள்ளது. பால், நெய் மற்றும் தயிர், கோசலம், கோமியம் ஆகிய பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை விரும்பி நீராடுபவனே, திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து உன்னைக் காணவேண்டும் என்று முயன்றபோது, அவர்கள் இருவரும் காண இயலாத வகையில் சோதிப் பிழம்பாக நின்றவனே, முழங்கும் நீர் அருவிகளையும் மேகக் கூட்டங்களையும் அணிகலனாகக் கொண்ட அண்ணாமலையை உடையவனே, வெண்மை நிறத்தைக் கொண்ட இடபத்தை வாகனமாக உடையவனே, உனது மலர் போன்ற திருப்பாதங்களை நான் மறக்க மாட்டேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல். இதே செய்தியை பதிகத்தின் கடைப் பாடலிலும் அப்பர் பிரான் கூறுகின்றார்.

பாலு நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே

மாலு நான்முகனும் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்

ஆலு நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே

வாலுடை விடையாய் உன்றன் மலரடி மறப்பிலேனே

பெருமானைப் போற்றும் அடியார்கள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்கள் மட்டுமே தான் போற்றும் கடவுளர் என்று அப்பர் பிரான் ஒரு பொது பதிகத்தின்பாடலில் (6.95.10) கூறுகின்றார். சங்க நிதி, பதுமநிதி=குபேரனிடம் இருக்கும் நவநிதிகளில் சிறந்த இரண்டு நிதிக் குவியல்கள். இந்த பாடலில், மனிதர்களை சிவபெருமானின் அடியார், சிவபெருமானின் அடியார் அல்லாதார் என்றிரு வகையாக பிரித்து, அவர்களைத் தான் எவ்வாறு நடத்துவேன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். உலகத்தவரின் மதிப்பீட்டிற்கு மிகவும் வேறுபாடான நிலையினை அப்பர் பிரான் கொண்டுள்ள தன்மையை நாம் இங்கே காணலாம். இறைவன் விருப்பமுடன் நீராடுவதற்கு ஐந்து வகையான பொருட்களை அளிக்கும் பசு, தெய்வத் தன்மை வாய்ந்ததாக இந்து மதத்தைச் சார்ந்தவர்களால் கருதப்படுகின்றது. எனவே, பசுவின் தோலை உரிப்பதை விடவும் கொடிய செயல் ஏதும் இல்லை என்று கருதப்பட்டு, அவர்களை புலையர் என்று அழைத்தனர். ஆனால் அப்பர் பெருமானோ, பிறப்பாலும், செய்யும் தொழிலாலும் ஒருவர் இழிந்தவராக மற்றவர்களால் கருதப்பட்டாலும், அவர் சிவபெருமானிடம் அன்பு பாராட்டுகின்றார் என்றால், அவரைத் தான் மிகவும் உயர்வாக கருதுவேன் என்று கூறுவது, சிவபெருமான் பால், அவரது அடியார்கள் மேல், அப்பர் பிரான் வைத்திருந்த அன்பின் தன்மையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. சிவபெருமானிடம் அன்பு பாராட்டாத ஒருவர், சங்கநிதி பதுமநிதி எனப்படும் உயர்ந்த செல்வங்களைத் தந்து, அந்த செல்வத்துடன் இந்த நிலவுலகத்தையும் வானுலகத்தையும் ஆளும் உரிமையையும் கொடுத்தாலும், அவரது செல்வத்தையும், மங்கும் புகழினை உடைய அவரையும் நாம் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டோம். உடல் உறுப்புகள் எல்லாம் அழுகி குறையும் தன்மையை விளைவிக்கக் கூடிய தொழுநோயராக இருந்தாலும், பசுவினை உரித்துத் தின்னும் புலையராக இருந்தாலும், அவர் கங்கை நதியைத் தனது தலையில் தரித்து மறைத்த கடவுள் சிவபெருமானுக்கு அன்பராக இருந்தால், அவரை நான் வணங்கும் கடவுளாக மதிப்பேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல் இது.

சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும்

மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில்

அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்

கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே

திருமேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.21.8) சுந்தரர் தலைவனாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எந்த தெய்வம் குறித்தும் தான் அறிந்து கொள்வதோ புகழ்ந்து பேசுவதோ செய்ய மாட்டேன் என்று கூறுகின்றார். வரையார்=நறுமணம் பொருந்திய; விமலன்= இயற்கையாகவே மலங்களிலிருந்து விடுபட்டவன்; தனது உடலில் உயிர் உள்ளளவும், தனது நாவினால், நறுமணம் மிகுந்த கொன்றை மலர் மாலைகளை அணிந்தவனும் இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கியவனும் ஆகிய பெருமானது திருநாமத்தை தவிர்த்து வேறு எவரது பெயரினையும் தான் சொல்ல மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். நீர் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திருமேற்றளி தலத்தினில் உறைகின்ற தலைவனைத் தவிர்த்து வேறு எவர் குறித்து அறிந்து கொள்ளவோ புகழவோ மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார்.

வரையார் கொன்றையினாய் விமலா இனி உன்னை அல்லால்

உரையேன் நாவதனால் உடலில் உயிர் உள்ளளவும்

திரையார் தண் கழனி திருமேற்றளி உறையும்

அரையா உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே

திருமேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.21.9) சுந்தரர் பெருமானை மலையே என்று அழைத்து, பெருமானே உன்னை அல்லால் வேறு எவரையும் அடியேன் மகிழ்ந்து போற்ற மாட்டேன் என்று கூறுகின்றார். நிலையா=நிலையாக; நினைய=தொடர்ந்து என்றும் உன்னை நினைக்குமாறு; பணித்தாய்=செய்தாய்; சிலை=கற்கள், சந்திரகாந்த கற்கள்; சலம்=சஞ்சலம், தடுமாற்றம், மாறுபட்டு இருத்தல்; பெருமானின் திருவடிகளே நிலையான பொருள் என்று தான் நினைத்ததற்கு பரிசாக, பெருமான் தனது மனதில் இருந்த தடுமாற்றங்களை ஒழித்து, எப்போதும் தொடர்ந்து அவரையே நினைக்குமாறு தன்னை மாற்றி விட்டார் என்று பெருமையுடன் சுந்தரர் கூறுகின்றார். சந்திரகாந்தக் கற்கள் பதிக்கப்பட்டு செல்வச் செழிப்புடன் விளங்கும் காஞ்சி மாநகரத்து திருமேற்றளி தலத்தில் உறையும் இறைவனே, மலை போன்று உயர்ந்த பொருளாக அனைவராலும் மதிக்கப் படுபவனே, உன்னைத் தவிர்த்து வேறு எந்த தெய்வத்தையும் நினைத்து மகிழ்ந்து போற்ற மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். இதன் மூலம், பெருமான் தன்னை காக்க வேண்டும் என்று வேண்டுகின்றார்.

நிலையா நின்னடியே நினைத்தேன் நினைதலுமே

தலைவா நின் நினையப் பணித்தாய் சலம் ஒழிந்தேன்

சிலையார் மாமதில் சூழ் திருமேற்றளி உறையும்

மலையே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.24.7) எனது தந்தையாகிய பெருமானே, நான் இனிமேல் வேறு எவரையும் நினைக்க மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். சந்து=துளை; சந்தாரும்=துளைகள் பொருந்திய; மைந்து=அழகு; துளைகள் பொருந்திய சங்கினால் செய்யப்பட்ட குழை ஆபரணத்தை அணிந்த பெருமானே, தனது சடையில் ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தாங்கி சந்திரனுக்கு அருள் புரிந்து வாழ்வு அளித்தவனே, பிரளய காலத்தில் இறந்து பட்ட உடல்கள் வெந்தழிந்த சாம்பலை பூசிக் கொண்ட திருமேனியை உடையவனே, இடபத்தினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவனே, சாமர்த்தியம் மிகுந்தவனே, அழகுடன் பொலியும் சோலைகளால் சூழப்பட்ட மழபாடி தலத்தில் உறைகின்ற மாணிக்கமே, எனது தந்தை ஆகிய பெருமானே, இனி மேல் உன்னைத் தவிர்த்து அடியேன் வேறு எவரையும் நினைக்க மாட்டேன் என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல்.

சந்தாரும் குழையாய் சடை மேல் பிறை தாங்கி நல்ல

வெந்தார் வெண் பொடியாய் விடையேறிய வித்தகனே

மைந்தார் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே

எந்தாய் நினை அல்லால் இனி யாரை நினைக்கேனே

இதே பதிகத்தின் அடுத்த பாடலில் (7.24.8) சுந்தரர் தலைவனாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நினைக்க மாட்டேன் என்று கூறுகின்றார். ஐயா=தலைவா; உலகினுக்கு வெப்பம் அளிக்கும் சூரியன் மற்றும் தேவர் கணங்கள் அனைவரும் சிவந்த மலர்கள் இட்டு வணங்கும் சிறப்பினை உடையவனே, அடர்த்தியாக ஒன்றுக்கொன்று பிணைந்து கொண்டிருக்கும் கிளைகளின் வழியே சூரியனின் கதிர்கள் புக முடியாமல் இருள் அடைந்து காணப்படும் சோலைகள் நிறைந்த மழபாடி தலத்தில் உறைகின்ற மாணிக்கமே தலைவனே உன்னை அல்லால் வேறு எவரையும் நான் என்மேல் நினைக்க மாட்டேன் என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல்.

வெய்ய விரி சுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம்

செய்ய மலர்கள் இட மிகு செம்மையுள் நின்றவனே

மையார் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே

ஐயா நினை அல்லால் இனி யாரை நினைக்கேனே

திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.26.6) தலைவனாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நினைக்க மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். பொய்யான பொருட்களாகிய உலகத்து பொருட்களை நிலையான பொருட்கள் என்று நம்பி வாழும் தன்னை பொய்யன் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். தன்னை நாய் என்று சுந்தரர் குறிப்பிடுவது சற்று சிந்திக்கத் தக்கது. பொதுவாக நமது உடல் தனக்கு ஒவ்வாத உணவினை ஏற்றுக் கொள்ளாது வெளியே தள்ளிவிடும்; ஆனால் நாயோ தனது உடல் கக்கி வெளியே எடுத்து ஒதுக்கும் உணவினை, மீண்டும் உண்பதற்கு தலைப்படும். அதே போன்று, சென்ற பல பிறவிகளில் தான் செய்த பல தவறுகள் காரணமாக மீண்டும்மீண்டும் பிறப்பெடுக்கும் உயிர்கள் அதனை உணர்ந்து அந்த தவறுகளை விலக்கி ஒதுக்காமல் மீண்டும் அந்த தவறுகளை செய்வதால் நாய் என்று தன்னை குறிப்பிட்டுக் கொள்கின்றார். பொய்யவனாக செய்த தவறுகளை மீண்டும் செய்வதால், நன்னெறியில் புகும் வழியை தான் அறியாதவனாக இருப்பதாக கூறிக் கொள்கின்றார். செய்யவன் என்ற சொல் சிவந்த நிறம் உடையவன் என்றும் திருத்தம் ஏதும் தேவைப்படாமல் செம்மையாக இருப்பவன் என்றும் இரண்டு பொருள்கள் கொண்ட சொல். இந்த இரண்டு தன்மைகளும் பெருமானுக்கு பொருந்தி இருப்பதை நாம் உணரலாம். திரு=செல்வம்; நிலையற்ற பொருள்களை நிலையாக கருதி வாழும் பொய்யனும், நாய் போன்று செய்த தவறுகளை மீண்டும்மீண்டும் செய்பவனும் ஆகிய தான் நன்னெறியில் புகும் வழியை அறியாமல் இருக்கின்றேன். திருத்தம் ஏதும் தேவைப்படாமல் தூயவனாக இருக்கும் பெருமானே நீ தானே வந்து எனது துன்பங்களை தீர்த்து அருள் புரிந்தாய், உண்மையே வடிவமாக இருப்பவனே, அனைத்து செல்வங்களினும் உயர்ந்த செல்வமே, காளத்தி தலத்தின் உறைபவனே, எனது தலைவனாகிய உன்னை அல்லால் வேறு எந்த தெய்வத்தையும் அறிந்து கொண்டு புகழ்ந்து போற்ற மாட்டேன் என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல்.

பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன்

செய்யவனாகி வந்து இங்கு இடரானவை தீர்த்தவனே

மெய்யவனே திருவே விளங்கும் திருக் காளத்தி என்

ஐய நுன்றன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே

இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் (7.26.7) சுந்தரர், அடியேன் வேறு எந்த தெய்வத்தையும் அறிந்து புகழ மாட்டேன் என்று கூறுகின்றார். கடியேன்=வன்மையான, கொடுமையான குணம் கொண்டவன்; காதன்மை=பற்று; கழல்=வீரக்கழல் அணிந்த பெருமானின் திருப்பாதங்கள்; வன்மையான குணங்கள் கொண்டவனாக பெருமான் பால் பற்றேதும் இல்லாதவனாக அவனது திருப்பாதங்களின் தன்மையை அறியாது இருந்த அடியேனின் மனதினை, தான் உறைகின்ற கோயிலாகக் கொண்டவன் குளிர்ந்த நீண்ட சடையினை உடைய குழகனாகிய பெருமான்; தங்களது முடியினைத் தாழ்த்தி தேவர்களால் வணங்கப்படும் பெருமான் திருக்காளத்தி தலத்தினில் உறைகின்றான். பெருமானே, உன்னைத் தவிர்த்து அடியேன் வேறு எவரையும் அறிந்து கொள்ள மாட்டேன் என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல்.

கடியேன் காதன்மையால் கழற் போது அறியாத என்னுள்

குடியாக் கோயில் கொண்ட குளிர் வார் சடை எம் குழகா

முடியால் வானவர்கள் முயங்கும் திருக் காளத்தியாய்

அடியேன் உன்னை அல்லால் அறியேன் மற்று ஒருவரையே

இந்த பதிகத்தின் அடுத்த பாடலில் (7.26.8) ஆண் சிங்கம் போன்ற பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் புகழ்ந்து ஏத்த மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். பாறு=கழுகு; திருநீறு பூசிய திருமேனி உடையவனே, இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கியவனே, தூய்மையான கொழுந்தே, கடல் போன்று விரிந்த நற்குணங்கள் கொண்டவனே, உன்னை அன்றி வேறு எவரையும் எனது நாவினால் சொல்ல மாட்டேன்; கழுகுகள் நாடி வரும் மண்டை ஓட்டினை, தனது கையில் ஏற்றுக் கொண்டு பலியேற்க பல இடங்களிலும் திரியும் பெருமானே, காளத்தி தலத்தினில் உறைபவனே, ஆண் சிங்கம் போன்றவனே, உன்னை அல்லால் வேறு எந்த தெய்வத்தையும் குறித்து அறிந்து கொள்ளவும் மாட்டேன், போற்றிப் புகழவும் மாட்டேன் என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல்.

நீறார் மேனியனே நிமலா நினை அன்றி மற்று

கூறேன் நாவதனால் கொழுந்தே என் குணக்கடலே

பாறார் வெண்டலையில் பலி கொண்டுழல் காளத்தியாய்

ஏறே உன்னை அல்லால் இனி அறிந்து ஏத்த மாட்டேனே

திருக்கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.28.5) சுந்தரர், தலைவனாகிய பெருமானைத் தவிர்த்து தனக்கு தகுந்த துணை வேறெவரும் இல்லை என்று கூறுகின்றார். மையார்=மை போன்று கருமை நிறம் படர்ந்த; பொய்யாது=தவறாமல்; தனது உடலின் உள்ளே புகுந்த பெருமான், தன்னை விட்டு நீங்காமல் தொடர்ந்து உறைவதாக சுந்தரர் கூறுகின்றார். படமெடுத்து ஆடும் பாம்பினைத் தனது உடலின் பல இடங்களிலும் அணிந்துள்ள பெருமான் என்று தேவாரப் பதிகங்கள் குறிப்பிடுகின்றன. இந்த பாடலில் தனது கைகளில் பெருமான் பாம்பினை, கங்கணமாக அணிந்துள்ள தன்மை உணர்த்தப் படுகின்றது. உயிர் என்பதற்கு உள்ளம் என்று பொருள் கொள்ள வேண்டும். கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனே, தன்னை எதிர்த்து வந்த மத யானையின் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவனே, என்னை உனது அடிமையாக ஏற்று கொண்ட போதே தவறாமல் எனது உள்ளத்தினுள்ளே புகுந்த பெருமானே, நீ தொடர்ந்து என்னை விட்டு பிரியாமல் எனது உள்ளத்தின் உள்ளே உறைகின்றாய். தனது கையினில் படமெடுத்து ஆடும் பாம்பினை அணிந்துள்ள பெருமான் கடவூர் வீரட்டம் தலத்தினில் உறைகின்றார். எனது தலைவனே, எனக்கு அமுதமாக இருப்பவனே, உன்னைத் தவிர்த்து எனக்கு தகுந்த துணை வேறெவரும் இல்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே

பொய்யாது என் உயிருள் புகுந்தாய் இன்னம் போந்தறியாய்

கையார் ஆடரவா கடவூர் தனுள் வீரட்டத்தெம்

ஐயா என்னமுதே எனக்கார் துணை நீ அலதே

திருக்கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.28.8) சுந்தரர், கங்கை ஆற்றினைத் தனது சடையில் அடக்கியுள்ள பெருமானைத் தவிர்த்து வேறெவரும் தனக்கு தகுந்த துணை இல்லை என்று கூறுகின்றார். வேறா உன்னடியேன் என்ற தொடரினை தேறேன் என்ற சொல்லுடன் இணைத்து பொருள் காண வேண்டும். காறை=தோள் பட்டையில் இருக்கும் நீண்டு வளைந்த எலும்பு காறை எலும்பு என்று அழைக்கப்படும். அந்த எலும்பு போன்று நீண்டும் வளைந்தும் காணப்படும் பன்றியின் கோரைப்பல், காறை வெண் மருப்பு என்று இங்கே சொல்லப் படுகின்றது; குழை ஆபரணத்தைத் தனது ஒரு காதினில் பொலிந்து விளங்கும் வண்ணம் அணிந்த பெருமானே, உனது அடியேனாகிய நான், உன்னைத் தவிர்த்து வேறு எவரையும் பணிந்து வணங்குவதற்கு தேர்ந்து எடுக்க மாட்டேன். நீண்டு வளைந்து தோள்பட்டை போன்று காணப்படும் வெண்மை நிறத்தில் உள்ள பன்றியின் கோரைப் பல்லினை, தனது மார்பினில் அணிந்தவனே, திருக்கடவூர் வீரட்டம் தலத்தில் உறைகின்ற பெருமானே, கங்கை ஆற்றினைத் தனது சடையில் அணிந்த பெருமானே, உன்னைத் தவிர்த்து வேறு எவரையும் எனக்கு தகுந்த துணையாக கருத மாட்டேன் என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல்.

வேறா உன்னடியேன் விளங்கும் குழைக் காதுடையாய்

தேறேன் உன்னை அல்லால் சிவனே என் செழுஞ் சுடரே

காறார் வெண் மருப்பா கடவூர்த் திரு வீரட்டத்துள்

ஆறார் செஞ் சடையாய் எனக்கார் துணை நீ அலதே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (7.28.9) அமுதே என்று பெருமானை அழைக்கும் சுந்தரர், அவரைத் தவிர்த்து தனக்கு துணையாக வேறு எவரும் இல்லை என்று கூறுகின்றார். பாற்கடலில் கிடைத்த அமுதத்தை பல குடங்களில் தேவர்கள் அடைத்து வைத்திருந்தனர். அந்த குடங்களை விநாயகப் பெருமான் மறைத்து வைத்த தலமாக இந்த தலம் கருதப் படுகின்றது. பின்னர் விநாயகப் பெருமானை வேண்டி அந்த குடங்களைப் பெற்றனர். அந்த குடங்களில் ஒன்றினை அவர்களால் எடுக்க முடியவில்லை. அந்த குடமும், அந்த குடத்தில் இருந்த அமுதமும் இலிங்கமாக மாறியது. அந்த இலிங்கத்தை தேவர்கள் அமுத கடேசுவரர் என்று அழைத்து வணங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை உணர்த்தும் பொருட்டு, சுந்தரர், பெருமானை, அமுதே என்று அழைக்கின்றார் போலும். கயம்=மடு, நீர்நிலை, இங்கே கங்கை நதியை குறிப்பிடுகின்றது. இந்த பாடலில் சுந்தரர் பெருமானை அயனே என்றும் அழைக்கின்றார். படைப்புத் தொழில் செய்யும் வண்ணம் பிரமனை இயக்குவது பெருமான், என்பதால், பெருமானை அயன் என்று அழைத்தார் போலும். பண்டைய நாளில் பிரமனும் திருமாலும். முறையே முடியும் அடியும் காண்பதற்கு அரியவனாகத் திகழ்ந்தவனே, அனைவரும் செய்யும் செயல்களின் பயனாக இருப்பவனே, அனைத்துப் பொருட்களுக்கும் மேலானவனே, அனைத்து ஒளிகளிலும் உயர்ந்த சுடரே, கங்கை நதி பொருந்திய சடையை உடையவனே, கடவூர் திருவீரட்டம் தலத்தினில் வீற்றிருக்கும் பெருமானே, பிரமனை இயக்கி அவன் மூலமாக படைத்தல் தொழிலை செய்பவனே, அமுதமே, உன்னைத் தவிர்த்து வேறு எவரையும் அடியேன் எனக்கு தகுந்த துணையாக கருத மாட்டேன் என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல்.

அயனோடு அன்று அரியும் அடியும் முடி காண்பரிய

பயனே எம் பரனே பரமாய பரஞ்சுடரே

கயமாரும் சடையாய் கடவூர் திரு வீரட்டத்துள்

அயனே என்னமுதே எனக்கார் துணை நீ அலதே

பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடலில் (7.48.8) சுந்தரர், நம்பன் என்று பெருமானை அழைத்து, தான் மறந்தாலும், தனது நாக்கு தவறாமல் நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் என்று கூறுகின்றார். நேர்=ஒத்த; கோலினாய்=வளைத்தாய்; சிலை=மலை, வில் ஆகிய இரண்டு பொருள்களும் பொருந்தும்; வம்பு=நறுமணம்; வம்புலாம் குழலாள் என்ற தொடர் மூலம் பிராட்டியின் கூந்தல் இயற்கையாகவே நறுமணம் வாய்ந்தது என்பதை உணர்த்துகின்றார். கொம்பு=கிளை; நம்பன்=விரும்பத் தக்கவன்; செம்பொன் போன்ற நிறத்தையும் ஒளியையும் உடைய சடையை உடையவனே, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை தீமூட்டி அழிக்கும் வண்ணம் மேரு மலையை வில்லாக வளைத்து அந்த வில்லினில் பூட்டப்பட்ட அம்பினை எய்திய பெருமானே, நறுமணம் உலாவும் கூந்தலை உடைய தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவரே, கரையில் உள்ள மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் குயில் பாட மயில் ஆடும் காட்சிகள் நிறைந்த கறையூர் தலத்தில் உள்ள பாண்டிக்கொடுமுடி திருக்கோயிலில் உறைகின்ற நம்பனே, உன்னை அடியேன் மறந்தாலும், எனது நா இடையறாது உனது திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீயெழச் சிலை கோலினாய்

வம்புலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டிடைக்

கொம்பின் மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி

நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (7.48.9) சுந்தரர், பெருமானை காரணா என்று அழைத்து, தான் மறந்தாலும், தனது நாக்கு தவறாமல் நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் என்று கூறுகின்றார். சாரணன்=சார்ந்து சரண் அடையத் தகுந்தவன்; எண்ணாயிரம் கோடி=எண்ணற்றவர்கள். இந்த கோயில் மும்மூர்த்திகள் கோயில் என்றும் அழைக்கப் படுகின்றது. வன்னி மரத்தின் அடியில் பிரமனுக்கு தனி சன்னதி உள்ளது. பிரமன் வழிபட்டதால் பிரமபுரம் என்றும் திருமால் வழிபட்டதால் ஹரிஹரபுரம் என்றும் இந்த தலம் அழைக்கப் படுவதாக தலபுராணம் குறிப்பிடுகின்றது. இந்த பாடலில் பிரமன் மற்றும் திருமால் பெருமானை வழிபட்ட செய்தியை சுந்தரர் கூறுகின்றார். எங்களது பற்றுக்கோடாக விளங்கி சரண் அடையத் தக்கவன் என்றும், எமது தந்தை, எமது தலைவன், எமது தந்தைக்கு தலைவன், பொன் சிறந்த மாணிக்கம் போன்று உயர்ந்தவன் என்றும் எண்ணற்ற தேவர்கள் உன்னை போற்றிப் பிதற்றிய வண்ணம், பெருமானே, உன்னை விட்டு பிரியாமல் இருக்கின்றனர். நாரணன் மற்றும் பிரமன் தொழும் வண்ணம் கறையூர் தலத்தில் பாண்டிக்கொடுமுடி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் பெருமானே, உலகினில் நடைபெறும் அனைத்துச் செயல்களுக்கும் மூல காரணனாக திகழ்பவனே, அடியேன் உன்னை மறந்தாலும், எனது நா உனது திருநாமமாகிய நமச்சிவாய என்பதை இடையறாது சொல்லும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் எம் பொன் மாமணீ என்று

பேர் எண் ஆயிரம் கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்

நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்

காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.76.9) ஏழைப் பாகனாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் இறைவனாக கருத மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். வருக்கை=பலா; கூழை=அறிவு குறைந்த; செரு=சண்டை; இந்த தலத்தில் குரங்குகள் சண்டையிட்டுக் கொண்டு இருந்ததைக் கண்ட சுந்தரர், ஒரு சுவையான கற்பனையை ஏற்றி அந்த சண்டைக்கு காரணத்தை கூறுகின்றார். வாழைப் பழங்களையும் சாறு மிகுந்த பலாப் பழச் சுளைகளையும் குரங்குகள் தம்மில் பங்கிட்டுக் கொள்கின்றன. அப்போது தனக்கு ஒதுக்கப்பட்ட கூறு சிறிது என ஒரு குரங்கு சொல்ல, அடுத்த குரங்கு இல்லை என மறுக்க அவைகளுக்கு இடையே சண்டை மூள்கின்றது. அருகில் கிடக்கும் வாழைத் தண்டுகளையும் தாழை மட்டைகளையும் வைத்துக் கொண்டு ஒன்றுகொன்று சண்டையிடும் நிலவளமும் நீர்வளமும் நிறைந்த திருவாஞ்சியம் தலத்தில் உறைகின்ற, ஏழைப் பாகனாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் இறைவன் என்று தான் கருதுவது இல்லை என்று சுந்தரர் கூறுகின்றார்.

வாழையின் கனி தானும் மது விம்மு வருக்கையின் சுளையும்

கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது எனக் குழறித்

தாழை வாழையம் தண்டால் செருச் செய்து தருக்கு வாஞ்சியத்துள்

ஏழை பாகனை அல்லால் இறை எனக் கருதுதல் இலமே

வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.86.8) சுந்தரர், பெருமானை நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமோ என்று கேட்கின்றார். இந்த பாடலில் வஞ்சகம் அற்ற மனத்தினை உடைய அடியார்களை மறவாமல் பெருமான் இருப்பதாக கூறுகின்றார். மஞ்சு= மேகம்; மஞ்சுற்ற=மேகம் தவழும் வண்ணம் உயர்ந்த மாடங்கள் கொண்ட வீடுகள்; மணி மாடம்= மணிகள் இழைக்கப் பெற்ற அழகிய மாடம்; செம்பஞ்சுக் குழம்பினைத் தங்களது காலில் தேய்த்துக் கொண்டு அழகு படுத்திக் கொள்வது பண்டைய நாளில் மகளிரின் பழக்கமாக இருந்தது. அதே முறையில் பிராட்டியையும் செம்பஞ்சுக் குழம்பு தீட்டப் பெற்ற திருப்பாதங்களை உடையவள் என்று சுந்தரர் இங்கே கற்பனை செய்கின்றார். வஞ்சம் அற்ற மனத்துடன் பெருமானை வழிபடும் அடியார்கள் என்றும் மறவாது, அவர்களுக்கு தேவையான அருள் புரியும் பெருமானை, பிறப்பிலியை, செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப் பெற்று அழகாக திகழும் பாதங்களை உடைய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து உகப்பவனை, மேகங்கள் பொருந்தியதும் மணிகள் இழைக்கப் பெற்று அழகுடன் விளங்கும் மாடங்களை உடைய இல்லங்கள் கொண்ட வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்திலும் எங்களது நெஞ்சத்திலும் உறைபவனும் ஆகிய பெருமானை நினைக்காத மனிதர்களின் நெஞ்சம், நெஞ்சமல்ல என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியைப்

பஞ்சி சீறடியாளைப் பாகம் வைத்து உகந்தானை

மஞ்சு உற்ற மணி மாட வன்பார்த்தான் பனங்காட்டூர்

நெஞ்சத்து எங்கள் பிரானை நினையாதார் நினைவு என்னே

இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (7.86.9) சுந்தரர், பெருமானின் தன்மையை நினைத்து மனம் நெகிழாதவர்களின் நெஞ்சம் நெஞ்சமா என்ற கேள்வியை கேட்கின்றார். மழையான்=மழை தருகின்ற மேகம் போன்ற நிறத்தில் உள்ள திருமால்; மலர் என்றால் பொதுவாக தாமரை மலர் குறிப்பது போன்று மலரோன் என்ற சொல் தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமனை குறிக்கும், உழைத்தல்=உழைத்து பணி செய்தல்; உள்குதல்=நினைத்தல்; மேகத்தின் நிறத்தில் திருமேனி உடைய திருமாலும், மலரோன் என்று அழைக்கப் படும் பிரமனும் ஆகிய இருவரும், தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பின் தன்மையை அறிய முடியாமல் திகைத்த பின்னர், பெருமானின் பெருமையை புரிந்து கொண்டவர்களாக, அவனுக்குத் திருப்பணி செய்வதற்கு விரும்பினார்கள். இந்த பெருமையை உடைய பெருமான், உயர்ந்த வானத்தையும் கடந்த நெடிய தீப்பிழம்பாக நின்றான். அனைவரிலும் மூத்தவனாகிய பெருமானை, பனங்காட்டூர் தலத்தில் உறையும் பெருமானை, தனது ஒரு காதினில் குழை ஆபரணமும் மற்றொரு காதினில் தோடும் அணிந்தவனாகிய பெருமானின் தன்மைகளை நினைத்து மனம் நெகிழ்ந்து அடிமையாக மாறாதவர்களின் நெஞ்சம் நெஞ்சமாமோ என்று இந்த பாடலில் சுந்தரர் வியக்கின்றார். பிரமனும் திருமாலும் மனம் நெகிழ்ந்து பெருமானுக்கு திருப்பணி செய்ய நினைக்கின்றனர் என்று குறிப்பிட்டு, எத்துணை உயர்ந்தவர்களாக இருப்பினும் அவர்களாலும் திருப்பணி செய்வதற்கு தகுதி படைத்தவன் பெருமான், என்று இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

மழையானும் திகழ்கின்ற மலரோன் என்று இருவர் தாம்

உழையா நின்றவர் உள்க உயர் வானத்து உயர்வானைப்

பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற

குழை காதற்கு அடிமைக்கண் குழையாதார் குழைவென்னே

திருவாசகம் வாழாப்பத்து பதிகத்தின் பாடலில் (8.28.2) மணிவாசகர் பெருமானைத் தவிர்த்து தனக்கு வேறு பற்றுக்கோடு ஏதும் இல்லை என்று கூறுகின்றார். வம்பு=வீண் பேச்சு; வம்பனேன்=இறையுணர்வில் ஈடுபடாமல் வீணாக காலத்தை கழிப்பவன்; திருப்பெருந்துறை தலத்திற்கு வரவழைக்கப்பட்டு பெருமானால் ஆட்கொள்ளப் படுவதற்கு முன்னர், பாண்டிய நாட்டு மந்திரியாக பணி புரிந்தவர் மணிவாசக அடிகளார். மிகவும் முக்கியமான பதவி, எப்போதும் ஏதோ ஒரு பணி இருந்து கொண்டிருக்கும் பதவி; அத்தகைய பதவி வகித்த தன்மையை வீணாக காலம் கழித்தேன் என்று அடிகளார் சொல்வது, இறையுணர்வில் ஈடுபடுவது எத்துணை இன்பத்தையும் திருப்தியையும் அளிக்க வல்லது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இறைப்பணியில் ஈடுபடும் ஒருவன் அடையும் மகிழ்ச்சிக்கு இணையாக வேறு எந்த பணியும் ஒருவருக்கு இன்பத்தை தராது என்பதையும் அடிகளார் இங்கே உணர்த்துகின்றார். உம்பர்=தேவர்கள்; தேவர்கள் என்று இங்கே பிரமன் மற்றும் திருமாலை குறிப்பிடுகின்றார். தங்களின் முன்னே தோன்றிய நெடிய தீப்பிழம்பின் அடியையும் முடியையும் தங்களது ஆற்றலால் அளந்து விடலாம் என்று அவர்கள் இருவரும் முனைந்தனர். அதற்கு மாறாக, உணர்வினால், அன்பு என்ற உணர்வினால் அவர்கள் பெருமானை அளக்க முயற்சி செய்திருந்தால் அவர்கள் இருவர்க்கும் பெருமான் நிச்சயமாக அகப்பட்டிருப்பான். அன்பு எனப்படும் உணர்வு பக்தியாக மாறி, பெருமானை அந்த வலையில் சிக்க வைத்திருக்கும். பெருமான் பால் அன்பு என்ற உணர்வு அற்றவர்களாக அவர்கள் இருந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பாதாளம் ஏழினையும் கடந்தும் பல அண்டங்களையும் கடந்தும் பெருமான் நின்ற தன்மை உலகம் ஊடுருவும் செம்பெருமான் என்று உணர்த்தப் படுகின்றது. பெருமான் தன்னைக் குரல் கொடுத்து, தான் இருக்கும் இடத்திற்கும் தன்னை (அடிகளாரை) அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை அடிகளார் இங்கே வெளியிடுகின்றார்.

வம்பனேன் தன்னை ஆண்ட மாமணியே மற்று நான் பற்றிலேன் கண்டாய்

உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்கு உணர்விறந்து உலகம் ஊடுருவும்

செம்பெருமானே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

எம்பெருமானே என்னை ஆள்வானே என்னை நீ கூவிக் கொண்டு அருளே

சிவபெருமான் நினைப்பவர் மனத்தினைக் கோயிலாகக் கொள்பவர் என்பதற்கு சிறந்த உதாரணம், திருமயிலையில் வாழ்ந்த வாயிலார் நாயனார். எப்பொழுதும் சிவபெருமானை நினைத்துக் கொண்டே இருந்த வாயிலார், பெருமானைத் தனது மனதினில் நிறுத்தி, தனது ஞானம் என்ற விளக்கினை அந்த கோயிலுள் ஏற்றி, சிவபெருமானைத் தான் நினைப்பதால் ஏற்பட்ட ஆனந்தம் என்கின்ற நீரினால் நீராட்டி, தனது அன்பினையே நிவேதனப் பொருளாக இறைவனுக்கு படைத்து அர்ச்சனை செய்தார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். இந்த பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. எப்பொழுதும் இறைவனை மறவாமல் நினைந்திருந்த தன்மை, இறைவனை தனது மனதினில் நிலையாக நிறுத்திக் கொள்வதற்கு வாயிலார் நாயனாருக்கு சிறந்த கருவியாக அமைந்தது என்று இந்த பாடலில் சேக்கிழார் கூறுகின்றார்.

மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி

உறவாதி தனை உணரும் ஒளிவிளக்குச் சுடர் ஏற்றி

இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி

அறவாணர்க்கு அன்பென்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்

இவ்வாறு தனது மனக்கோயிலில் இறைவனை நிறுத்தி வழிபட்ட வாயிலார் முக்திப்பேறு அடைந்தார் என்பதையும் சேக்கிழார், இதற்கு அடுத்த பாடலில்கூறுகின்றார். முக்தி அடைந்த அடியார்கள், வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், நிரந்தரமாக முக்தி உலகில் இருக்க முடியும் என்பதால், பேராத நெறி என்று முக்திப் பேற்றினை சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

நீராடும் சடையாரை நீடு மன ஆலயத்துள்

ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர் பால்

பேராத நெறி பெற்ற பெருந்தகையார் தமைப் போற்றிச்

சீராரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம்.

பொழிப்புரை:

புலிநகக் கொன்றை, ஈஞ்ச மரம், சுரபுன்னை இளமருது, இலவங்கம், ஆகிய மரங்களை கலந்து அடித்துக் கொண்டு வரும் காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள மாந்துறை தலத்தினில் அமர்ந்துள்ள இறைவன், ஆலகால விடத்தை தேக்கி அனைவரையும் காப்பாற்றிய சிறப்பினை உரித்தாகக் கொண்டுள்ள கழுத்தினை உடையவன் ஆவான். பேரலைகள் வீசும் நீர்ப் பரப்பினைக் கொண்ட கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும், படமெடுத்து ஆடும் பாம்புடன் தனது சடையில் வைத்துள்ள இறைவன், மலையைப் போன்று சிறந்த செல்வங்களை உடையவன் ஆவான். நிலையான அமைதி, எல்லையற்ற ஆனந்தம் வீடுபேறு ஆகிய செல்வங்களைத் தன்னிடம் கொண்டுள்ள இறைவனை, வானவர்களின் தலைவனாக விளங்குபவனை, தவிர்த்து வேறு எவரையும் வணங்குதலை நாம் அறியோம்.

பாடல் 5:

செம்பொனார் தரு (2.110) பாடல் 4 தொடர்ச்சி, மற்றும் 5, 6 (திதே 0832)

கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவிடை மலர் உந்தி

ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானைப்

பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தித்

தாங்குவார் அவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே

விளக்கம்:

பாங்கு=முறை; சிவ ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள முறை; ஆவி=நிவேதனம்; சிவபெருமானின் பெருமையையும் சிவபெருமானை மட்டுமே நாம் ஏன் வழிபட வேண்டும் என்பதையும் இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில் உணர்த்திய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் இறைவனை நாம் முறையாக வழிபட வேண்டும் என்றும், அத்தகைய வழிபாட்டினால் நாம் அடையும் பயன் யாது என்பதையும் உணர்த்துகின்றார். உடலை வருத்தி, கடுமையான தவங்கள் மேற்கொண்டு அடையக்கூடிய பலன்களை நாம் எளிதில் அடையக்கூடிய வழியினை நமக்கு திருஞானசம்பந்தர் இங்கே சொல்லிக் கொடுக்கின்றார்.

பொழிப்புரை:

கோங்கு, குருந்து, செண்பகம், பாதிரி, குரா ஆகிய மரங்களையும், ஏராளமான மலர்களையும் அடித்துத் தள்ளிக் கொண்டும் மிகவும் உயர்ந்து எழும் அலைகளுடனும் வரும் காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள மாந்துறை தலத்தினில் உறையும் இறைவனை, முறையாக சிவ ஆகமங்களில் சொல்லிய வண்ணம் வழிபட்டு, தூபம் தீபம் நிவேதனம் காட்டியும் தோத்திரங்கள் சொல்லியும் அவனது திருவடிகளில் மலர்கள் தூவியும் அவனது திருநாமங்களைச் சொல்லும் அடியார்கள் மேலான தவங்களை செய்த பலனை அடைவார்கள்.

பாடல் 6:

செம்பொனார் தரு (2.110) பாடல் 4 தொடர்ச்சி, மற்றும் 5, 6 (திதே 0832)

பெருகு சந்தனம் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்து உந்தி

பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதன் எம் பெருமானைப்

பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த

மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே

விளக்கம்:

மருத வானவர்=வானுலகில் உள்ள மருத்துவர்கள்; அச்வினி தேவர்கள்; பரிவு=பக்தி; இரவி= சூரியன்; இந்த பாடலில், அச்வினி தேவர்கள், சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமானை வழிபட்ட செய்தி குறிப்பிடப் படுகின்றது. இந்த செய்தி தலபுராணத்திலும் உள்ளது.

பொழிப்புரை:

நிலவளத்தால் மிகவும் பருத்து காணப்படும் சந்தனம், கரிய அகில், மற்ற பெரிய மரங்கள் ஆகியவற்றை வேருடன் பேர்த்து அடித்துக் கொண்டு வரும் காவிரி நதி, மயில் பீலிகளையும் சுமந்து வருகின்றது. இவ்வாறு வலிமை வாய்ந்த நீர்ப் பெருக்கினைக் கொண்ட காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள தலமாகிய மாந்துறையில் உறையும் புனிதனாகிய எமது பெருமான் பால் மிகுந்த அன்பு கொண்டு சூரியனும், சந்திரனும், பல மன்னர்களும், அச்வினி தேவர்களும் வணங்கி, வழிபட்டு, புகழ்ந்தனர். இவ்வாறு பலராலும் வழிபடப்பட்ட மலர் போன்று மென்மையான இறைவனின் திருவடிகளை நாமும் வணங்குவோமாக.

பாடல் 7:

செம்பொனார் தரு (2.110) பாடல்கள் 7 மற்றும் 8 (திதே 0833)

நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மலர் அவை வாரி

இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு

அறவனாகிய கூற்றினைச் சாடிய அந்தணன் வரை வில்லால்

நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே

விளக்கம்:

இறவு=கானல், காடு; அறவன்=கூற்றுவன், இயமன்; குறிப்பிட்ட நாளில் உயிர்களை உடலிலிருந்து பிரிக்கும் தொழிலை தவறாமல் செய்வதாலும், கடமையிலிருந்து வழுவாமல் உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப நரக தண்டனை அளிப்பதாலும் அறவன் என்றும் தருமன் என்றும் அழைக்கப் படுகின்றான், நறவம்=தேன்; மௌவல்=காட்டு மல்லிகை; இறவில்=மிகுதியாக; வாங்கி=இழுத்து; நிறைய வாங்கி=நன்றாக; நிரை=வரிசை;

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.46) பாடல்கள் அனைத்திலும், அப்பர் பிரான், பெருமானின் திருவடிகளில் சரண் அடைந்து தான் வாழ்வினில் உய்வினை அடைந்ததாக கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. நம்பன்=நம்மால் விரும்பப்படுபவன்; கம்பன்=காஞ்சி நகரத்தில் உறையும் ஏகம்பப் பெருமான்; நன்மை=நன்மைக்கு இருப்பிடமாக இருக்கும் தன்மை; கற்பகம்=வேண்டுவார்க்கு வேண்டுவதை ஈயும் தன்மை; முக்தித் தன்மை அளிக்கும் ஆவடுதுறை தலத்து இறைவனை வணங்கும் அப்பர் பிரானுக்கு, மற்றொரு முக்தித் தலமாகிய காஞ்சி நகரம் நினைவுக்கு வந்தது போலும். காஞ்சியில் வாழ்பவர் முக்தி அடைவார்கள் என்று கூறுவார்கள். காண முக்தி அளிக்கும் தலம் சிதம்பரம், பிறக்க முக்தி அளிக்கும் தலம் திருவாரூர், இறக்க முக்தி அளிக்கும் தலம் காசி, நினைக்க முக்தி அளிக்கும் தலம் திருவண்ணாமலை, இருக்க முக்தி அளிக்கும் தலம் காஞ்சி என்று முக்தித் தலங்களின் தன்மையை கூறுவார்கள். கற்றோர்களின் சிறப்பே, அந்த கல்விச் செல்வத்தை அடுத்தவர்க்கு அளித்து மகிழ்வது தான். எல்லை இல்லாத ஞானத்தை தன்னிடம் வைத்துள்ள இறைவன், நான்கு வேதங்களை அருளி உலகத்தவர்க்கு நன்மை பயந்ததும் அன்றி, வேதங்களின் பொருளை தெளிவாக புரிந்து கொள்ள முடியாமல் தன்னை அணுகிய சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் தெளிவான உபதேசம் செய்தது அவனுக்கு மேலும் சிறப்பினைச் சேர்ப்பதாக உள்ளது. இதனை உணர்த்தும் பொருட்டு ஞானப் பெருங்கடல் என்றும் கல்லால் இருந்தான் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். நமக்கு பலவிதமான நன்மைகள் புரிவதால் நம்மால் பெரிதும் விரும்பப் படுவானும், நான்கு வேதங்களையும் கரை கண்டவனாக விளங்குபவனும், அறிவுக் கடலாக இருப்பவனும், நன்மைகளுக்கு இருப்பிடமாக உள்ளவனும், இருக்க முக்தி அளிக்கும் வல்லமை பெற்ற கச்சி நகரத்தில் உள்ள ஏகம்பம் என்று அழைக்கப்படும் தலத்தில் ஏகம்பனாக உறைபவனும், கல்லால மரத்தின் கீழே சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் உபதேசம் செய்தவனும், கற்பக மரம் போன்று தன்னை விரும்பும் அடியார்களுக்கு அவர்கள் வேண்டுவன அனைத்தும் ஈபவனும், செம்பொன், பவளம், திரண்ட முத்து போன்று மிகவும் அரியவனும், தீ, நீர் முதலிய ஐம்பூதங்களாகவும் திங்களாகவும் ஞாயிறாகவும் திகழ்பவனும், சிறப்பானதும் அழகு உடையதாகவும் உள்ள பொன்னாகவும் திகழும் பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நம்பனை நால்வேதம் கரை கண்டானை ஞானப் பெருங்கடலை நன்மை தன்னை

கம்பனைக் கல்லால் இருந்தான் தன்னைக் கற்பகமா அடியார்கட்கு அருள் செய்வானை

செம்பொன்னைப் பவளத்தைத் திரளும் முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை

அம்பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே

இதே பதிகத்தின் பத்தாவது பாடலையும் நாம் இங்கே காண்போம். கோலமாம்=அழகான; பந்தணவு மெல் விரலாள் என்பதற்கு வேறோர் சுவையான விளக்கமும் சொல்லப் படுகின்றது. வாழ்வினில் இடைவிடாது இன்ப துன்பங்களால் உதைபடும் உயிரினை, பந்தாக உருவகித்து, அந்த உயிர் சென்று சரணடையும் இடமாக தேவியின் திருக் கரங்கள் உருவகிக்கப் பட்டு, பந்தணையும் மெல் விரலாள் என்று தேவி அழைக்கப் படுகிறாள் என்பதே அந்த விளக்கம். தன்னைச் சரணடையும் உயிர்களுக்கு அபயம் அளிக்கும் கருணை உள்ளம் கொண்டவள் அல்லவா பிராட்டி; ஐந்து விரல்களையும் ஒன்று சேர்த்தால் பந்து பொருந்துவது போன்று அழகாக பொருந்தும் மெல்லிய விரல்களை உடைய பிராட்டியைத் தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனும், தொடர்ந்து கீதங்கள் பாடுபவனாகவும் நடனம் ஆடுபவனுமாக இருப்பவனும், நறுமணம் வீசும் கொத்தான கொன்றை மலர்களை மாலையாகக் கோத்து அணிந்தவனும், அழகிய நீல வண்ணத்தில் கழுத்தினை உடையவனும், செந்தமிழிலும் ஆரியத்திலும் சிறப்பான புலமை பெற்றவனும், தனது மார்பினில் வெண்ணூல் பூண்ட அந்தணனும் ஆகிய பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப் பாடலோடு ஆடல் பயின்றான் தன்னைக்

கொந்தணவு நறும் கொன்றை மாலையானைக் கோலமா நீல மிடற்றான் தன்னைச்

செந்தமிழோடு ஆரியனைச் சீரியானைத் திருமார்பில் புரி வெண்ணூல் திகழப் பூண்ட

அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரனடியே அடி நாயேன் அடைந்துய்ந்தேனே

பெருமானின் திருவடிகளைச் சரணடைந்து வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று பாடல் தோறும் குறிப்பிட்டு மகிழ்ச்சியில் திளைத்த அப்பர் பிரான், அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியவராக, பாடலின் எண்ணிக்கையை சற்று மறந்தார் போலும். வழக்கமாக பதிகங்களுக்கு பத்து பாடல்கள் அளிக்கும் அப்பர் பிரான், இந்த பதிகத்தில் அந்த எல்லையையும் தாண்டி ஒரு பாடல் அதிகமாகவே அளித்தார் போலும். இந்த பதிகத்தின் கடைப் பாடலில் (6.46.11) அப்பர் பிரான், பெருமான் தனது சூலை நோயினைத் தீர்த்து திருவதிகை தலத்தில் ஆட்கொண்டபோதே, தான் வாழ்வினில் உய்வினை அடைந்ததாக கூறுகின்றார். தனது சூலை நோயினைத் தீர்த்து தன்னை ஆட்கொண்ட நிகழ்ச்சியை குறிப்பிடும் வண்ணம் நீசனேன் உடலுறு நோயான தீர அரித்தானை என்று குறிப்பிட்டு பதிகத்தினை முடிக்கின்றார். குளிர்ந்த கடலிலிருந்து எழுந்த நஞ்சினைத் தான் உண்டதை உணர்த்தும் விதமாக, கரிய நிறத்தினைத் தனது கழுத்தினில் தரித்தவனும், எவரும் அந்நாள் வரை கண்டிராத வகையில் பிரம்மாண்டமாக தக்கனால் செய்யப்பட்ட வேள்வியை அழித்து அவனது ஆணவத்தைத் தகர்த்தவனும், தனது சடையில் பிறைச் சந்திரனைச் சூடியவனும், தனது வலிமையை பெரிதாக எண்ணி ஆணவத்துடன் கயிலாய மலையை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடல் மலையின் கீழே அழுந்துமாறு நெரித்தவனும், அழகான அணிகலன்களை அணிந்த பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், சமணர்களுடன் கலந்து கீழ்மகனாகத் திகழ்ந்த எனது உடலைப் பற்றிக் கொண்ட சூலை நோயினைத் தீர்த்து எனக்கு அருள் செய்தவனும் ஆகிய பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

தரித்தானைத் தண் கடல் நஞ்சு உண்டான் தன்னைத் தக்கன் தன் பெருவேள்வி தகர்த்தான் தன்னைப்

பிரித்தானைப் பிறை தவழ் செஞ் சடையினானைப் பெருவலியால் மலை எடுத்த அரக்கன் தன்னை

நெரித்தானை நேரிழையாள் பாகத்தானை நீசனேன் உடலுறு நோயான தீர

அரித்தானை ஆவடு தண்துறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே

பொழிப்புரை:

தேன் நிறைந்த மல்லிகை, முல்லை, காட்டு மல்லிகை போன்று அன்று மலர்ந்த மலர்களையும் மிகுதியாக வாரிக் கொண்டு வந்து தனது இரண்டு கரைகளிலும் வீசி எரியும் காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள மாந்துறை தலத்தில் உறையும் இறைவன், பண்டைய நாளில் தன்னை வழிபாடு செய்து கொண்டிருந்த சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சி செய்த குற்றத்திற்காக இயமன் பால் கோபம் கொண்டு உதைத்தவன் ஆவான். அவன் மேரு மலையினை வில்லாக வளைத்து, நெருப்பு கக்கும் வலிமை வாய்ந்த அம்பினை பூட்டி, இழுத்து வாங்கி எய்து, திரிபுரத்து மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவன் ஆவான். இத்தகைய வல்லமை வாய்ந்த இறைவனின் இணையான திருப்பாதங்களை நாம் பணிந்து வணங்குவோமாக.

பாடல் 8:

செம்பொனார் தரு (2.110) பாடல்கள் 7 மற்றும் 8 (திதே 0833)

செம்பொனார் தரு (2.110) பாடல்கள் 8 தொடர்ச்சி (திதே 0834)

மந்தமார் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்

உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை

நிந்தியா எடுத்து ஆர்த்த வல்லரக்கனை நெரித்திடு விரலானைச்

சிந்தியா மனத்தார் அவர் சேர்வது தீநெறி அது தானே

விளக்கம்:

மந்திகள் மாந்திட என்று மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். மந்தம்=தென்றல்; நிந்தியா=நிந்தனை செய்து; இந்த பாடலில் பெருமானின் பெருமையை உணராது அவனை நிந்தனை செய்த அரக்கன் இராவணன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். புட்பக விமானத்தில் பறந்து கொண்டு, கயிலை மலையின் அருகே சென்ற இராவணன், புட்பக விமானம் கயிலை மலையின் மீது செல்ல முடியாமல் இருந்ததைக் கண்ட அரக்கன் இராவணன், கயிலை மலை தான் செல்லும் வழியில் தடங்கலாக இருந்தது என்று கருதி அந்த மலையினைப் பேர்த்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு தனது பயணத்தைத் தொடர நினைத்தான். அப்போது அவனது தேர்ப்பாகன் கயிலை மலையின் பெருமையை உணர்த்தி, அரக்கன் இராவணனை கயிலை மலையினை மதித்து அதனை வலம் வந்த பின்னர் தனது பயணத்தைத் தொடருமாறு அறிவுரை கூறினான் என்று இராமாயண காவியம் கூறுகின்றது. ஆனால் அரக்கனோ கயிலை மலையினை துச்சமாக மதித்து அதனைப் பேர்த்து எடுப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்தான். இந்த செய்கையைத் தான் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். நிந்தித்து சிந்தியா= சிந்தனை செய்யாத; தீநெறி=தீயநெறி, நரகம் செல்வதற்கு வழி வகுக்கும் செய்கைகள்; இந்த பாடலில் இறைவனைப் பற்றி சிந்தனை செய்யாது வாழும் மனிதர்கள் தீயநெறியைச் சென்று அடைவார்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பெருமானைச் சிந்தியாத மனிதர்கள் தீநெறி சென்று சேர்வார் என்று கூறுவதன் மூலம், எதிர்மறைக் கருத்தாக, இறைவனைச் சிந்திக்கும் மனிதர்கள் நன்னெறி சேர்வார்கள் என்று நமக்கு திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். இவ்வாறு இவர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் திருத்தாண்டகப் பாடல்களை நினைவூட்டுகின்றது. திருவீழிமிழலை தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தின் (6.50) அனைத்துப் பாடல்களையும் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம்.

போரானை ஈருரிவைப் போர்வையானைப் புலியதளே உடை ஆடை போற்றினானைப்

பாரானை மதயானைப் பகல் ஆனானைப் பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற

நீரானைக் காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் மூன்றும் நினைந்தத் தெய்வத்

தேரானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

போர் ஆனை என்று தாருகவனத்து முனிவர்களால் பெருமான் மீது ஏவப்பட்ட யானையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தாங்கள் செய்யும் கருமம் தங்களுக்கு தகுந்த பலனை அளிக்கும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த இந்த முனிவர்கள், சிவபெருமானை வழிபடாமல் இருந்து வந்தனர். அவர்களது மனைவியர்களும், தங்களது கணவர்களுக்கு உரிய பணிவிடை செய்து வாழ்ந்து வந்ததால், அவர்களது கற்பு, முனிவர்களை ஒரு கவசம் போல் காத்து வந்தது. வேதநெறியின் வழியே செய்யும் கர்மங்கள் உரிய பலனை அளித்தாலும், முக்திப் பேறு பெறுவதற்கு பெருமானை வழிபடுவது அவசியம் என்பதனை தாருகவனத்து முனிவர்களுக்கு உணர்த்த பெருமான் திருவுள்ளம் கொண்டார். பிச்சைப் பெருமானின் கோலத்தில், வேதங்களை இசைத்தவாறு அவர் தாருகவனம் சென்ற போது, அவருக்கு பிச்சை இடவந்த முனிவர்களின் மனைவியர் அவரது அழகில் மயங்கி, அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இதனை அறிந்த முனிவர்கள் மிகுந்த கோபம் கொண்டு, பெருமானை கொல்லும் நோக்கத்துடன், அபிசார ஹோமம் என்பதை செய்து, புலி மான் யானை முதலியவற்றை பெருமான் மீது ஏவினார்கள். அவ்வாறு ஏவப்பட்ட யானையைக் கொன்று அதன் தோலினைத் தனது உடலின் மீது சிவபெருமான் போர்த்துக் கொண்டதை கண்ட முனிவர்கள், தங்களது தவத்தின் வலிமையால் ஏவப்படும் ஆயுதங்களும் மிருகங்களும், தாங்கள் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் பெருமானின் முன்னே வலிவினை இழந்து விடும் என்பதையும் பெருமானின் பெருமையையும் உணர்ந்தனர். பின்னர் சிவநெறியை பின்பற்றி வாழத் தொடங்கினார்கள். போர் யானையின் தோலினை உரித்த பெருமான் என்று குறிப்பிட்டு பதிகத்தைத் தொடங்கிய அப்பர் பிரானுக்கு, தாருகவனத்து முனிவர்களின் செயல்கள் நினைவுக்கு வந்தது போலும். சிவநெறியை மேற்கொள்ளாமல் இருந்த போது, பெருமானின் மீது கோபம் கொண்டு அவரை கொல்வதற்கு முயற்சி செய்து தீயநெறியைச் சார்ந்து இருந்த தன்மையும், பின்னர் உண்மையை உணர்ந்து சிவநெறியைச் சார்ந்து உய்வினை அடைந்ததையும் நினைவு கூர்ந்த அப்பர் பிரான் இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் பெருமானைச் சாராதவர் தீநெறிக்கு சேர்கின்றார் என்று குறிப்பிட்டு, பெருமானைச் சார்வதால் நன்னெறியினை மேற்கொள்ள முடியும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். மேலும் சிவநெறியிலிருந்து வழுவி, பெருமானை நினையாமல் வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் முடிவும் இந்த பாடலில் கூறப்பட்டு, பெருமானை சாராதாருக்கு ஏற்படும் முடிவும் நமக்கு உணர்த்தப் படுகின்றது. அட்ட மூர்த்தியாக பெருமான் விளங்கும் நிலை இரண்டாவது மற்றும் மூன்றாவது அடிகளில் உணர்த்தப் படுகின்றது. நினைந்த=மூன்று கோட்டைகளும் எரியுமாறு பெருமான் நினைத்த நொடியில், மூன்று புரங்களும் எரிந்த நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.

திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்ற சமயத்தில், தேவர்கள் அனைவரும், பெருமானுக்கு உதவும் நோக்கத்துடன், அவர் ஏறிச் சென்ற தேரின் பல பாகங்களாக இருந்த நிலை தெய்வத் தேர் என்ற தொடரின் மூலம் உணர்த்தப் படுகின்றது. சந்திர சூரியர்கள் தேரின் சக்கரங்களாகவும், பூமி தேர்த் தட்டாகவும், ஆகாயம் தேரின் கூரையாகவும், நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாகவும், பிரமன் தேரின் சாரதியாகவும், மேருமலை வில்லாகவும், வாசுகி பாம்பு வில்லின் நாணாகவும், திருமால் அக்னி வாயு ஆகியோர் அம்பின் தண்டு நுனி இறகு ஆகியவற்றில் பொருந்தவும், விந்திய மலை அச்சாகவும், பங்கேற்க பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு புறப்பட்டார் என்று கந்தபுராணம் கூறுகின்றது. புலியதள்=புலித்தோல்; மதி=சந்திரன்; பகல்=சூரியன்; சூரியன் ஒளி தரும் நேரம் பகல் என்பதால், பகல் என்ற சொல் சூரியனை குறிக்கும் வண்ணம் இங்கே கையாளப் பட்டுள்ளது. வெளி= வானம், ஆகாயம்;

தன்னை எதிர்த்து வந்த போர்க்குணம் மிகுந்த யானையை அடக்கி அதன் தோலினை உரித்து, இரத்தத்தின் ஈரப்பசை மாறாத அந்த தோலினைத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்ட சிவபெருமான் புலியின் தோலையும் ஆடையாக உடுத்திக் கொண்டவன் ஆவான். பூமி, சந்திரன், சூரியன், பல உயிர்கள், நெடிய ஆகாயம், நீர், காற்று மற்றும் தீ ஆகிய எட்டு பொருட்களிலும் உடனாக கலந்து நிற்பவன் பெருமான்; வேதநெறியிலிருந்து வழுவி தன்னை நினையாது இருந்த திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்து வந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழிக்கும் எண்ணத்துடன், தெய்வத் தன்மை வாய்ந்த தேரினில் போருக்குச் சென்றவன் சிவபெருமான். இத்தகைய பண்புகளையும் செயல்களையும் உடைய திருவீழிமிழலைப் பெருமானை அணுகி அவனை வழிபடாமல் நிற்கும் மாந்தர்கள் தங்களை அறியாமலே, தீயநெறிக்கு சென்று கெடுகின்றார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இந்த பதிகத்தின் நான்காவது பாடலையும் நாம் இங்கே சிந்திப்போம். சேயான்=தொலைவில் உள்ளவன். தலத்து இறைவனின் திருநாமங்களில் ஒன்று, நேத்ர அர்ப்பணேஸ்வரர். ஆயிரத்தெட்டு என்ற எண்ணிக்கைக்கு குறைந்த மலருக்கு பதிலாக தனது கண்ணினையே நோண்டி திருமால் அர்ச்சனை செய்ததால், பெருமானுக்கு இந்த பெயர் வந்தது. அதனால் மகிழ்ந்த பெருமான், தான் வைத்திருந்த சக்ராயுதத்தை திருமாலுக்கு அருளினார். இந்த தலபுராண வரலாற்றினை நினைவூட்டும் வகையில் சக்கரம் மாற்கு ஈந்தான் என்று சிவபெருமானின் கருணைச் செயலை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சங்கரன் என்ற சொல்லுக்கு இன்பம் அளிப்பவன் என்று பொருள். சாமவேதத்தைச் சார்ந்த உபநிடதங்கள் இரண்டு, கேனோ உபநிடதம் மற்றும் சாந்தோக்ய உபநிடதம் என்பவையே அந்த இரண்டு உபநிடதங்கள். சந்தோக்ய உபநிடதத்தில் உள்ள மந்திரங்களை சொல்லிய பின்னர் சாமவேதம் ஓதுவது வழக்கம். பெருமானும் அவ்வாறு சாந்தோக்ய உபநிடத்தின் மந்திரங்களை சொல்லிய பின்னர், சாம வேத கீதங்களை இசைப்பது, சந்தோக சாமம் ஓதும் வாயான் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது சாந்தோக்ய உபநிடதத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் முதல் இருபத்திரண்டு காண்டங்கள் சாமகானத்தை எப்படி தியானம் செய்யவேண்டும் என்று விளக்குகின்றன. காஞ்சி மகா பெரியவர் ஒரு முறை, சந்தோக சாமம் ஓதும் வாயான் என்று பாடியது யார் என்ற கேள்வியை கேட்டு விட்டு, பின்னர் அவரே அதற்கு விடையை சொல்லி, சந்தோக சாமம் என்றால் என்ன என்று விளக்கினார்கள் என்று கூறுவார்கள். தூயவனாக இருப்பவனும், சுடர் விட்டு பிரகாசிக்கும் பவளத்தின் ஒளியினை உடையவனும், உலகத்தில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் துணையாக தாயாக இருப்பவனும், தான் வைத்திருந்த சிறந்த சக்கரப் படையினை, தனது கண்ணினையே நோண்டி அர்ச்சனை செய்த திருமாலின் அன்புக்கு பரிசாக அளித்தவனும், அனைவர்க்கும் இன்பம் அளிக்கும் சங்கரனாகத் திகழ்பவனும், சாந்தோக்ய உபநிடதத்தில் சொல்லிய வகையில் சாம கீதங்களை ஓதுபவனும், திருவைந்தெழுத்து மந்திரத்தை ஓதும் அன்பர்களின் மனதினில் குடிகொண்டு இருப்பவனும், வஞ்சனையாக ஐந்தெழுத்து மந்திரத்தினை ஓதும் மனிதர்களை விட்டு தொலைவில் விலகி இருப்பவனும் ஆகிய இறைவன் திருவீழிமிழலை தலத்தில் உறைகின்றான். இத்தகைய பண்புகளையும் செயல்களையும் உடைய திருவீழிமிழலைப் பெருமானை அணுகி அவனை வழிபடாமல் நிற்கும் மாந்தர்கள் தங்களை அறியாமலே, தீயநெறிக்கு சென்று கெடுகின்றார்கள். என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தூயானைச் சுடர்ப்பவளச் சோதியானைத் தோன்றிய எவ்வுயிர்க்கும் துணையாய் நின்ற

தாயானைச் சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னைச் சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்

வாயானை மந்திரிப்பார் மனத்துளானை வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச்

சேயானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

திருவீழிமிழலை பதிகத்தின் பாடல்களில் பெருமானைச் சிந்தியாத மனிதர்கள் தீநெறிக்கண் சேர்கின்றார் என்று வருந்திய அப்பர் பிரான், திருநாகேச்சரம் பதிகத்துப் பாடல்களில் நாகேச்சரத்து பெருமானை சேராதார் நன்னெறிக்கண் சேரார் என்று அப்பர் பிரான் அறிவுரையாக கூறுகின்றார், இந்த பதிகத்தின் முதல் பாடலை (6.66.1) நாம் இங்கே காண்போம். தீயவன் என்பதை தீ+அவன் என்று பிரித்து பொருள் கொள்ளவேண்டும். அணியான்=அருகில் இருப்பவன்; சேயவன்= தொலைவில் உள்ளவன் மாயவன் என்பதற்கு திருமால் என்று பொருள் கொண்டு, மாயவனை மறையவனை என்ற தொடருக்கு திருமாலாகவும் பிரமனாகவும் இருக்கும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. இந்த பாடலில் அப்பர் பிரான் இறைவனை, மறையோர்களின் மந்திரன் தந்திரன் என்று கூறுகின்றார். தந்திரம் என்ற சொல்லுக்கு, வழிமுறைகள் என்றும் ஆகமங்கள் என்று இரண்டு பொருள்கள் கூறப்படுகின்றன. மறையோர்கள் தங்கள் மந்திரன் தந்திரன் என்று கூறுவதால், வேள்வி போன்ற சடங்குகளில் மந்திரங்களைச் சொல்லுகையில் பின்பற்ற வேண்டிய செயல் முறைகளை குறிப்பதாக பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. பல தேவாரப் பாடல்களில் மந்திரமும் தந்திரமுமாக இருக்கும் இறைவன் என்று கூறப்பட்டுள்ளது.

தாயவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகமெல்லாம்

ஆயவனைச் சேயவனை அணியான் தன்னை அழலவனை நிழலவனை அறிய வொண்ணா

மாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற

தீயவனைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் (6.66.5) ஒன்றினில் தன்னை விரும்பாத பாவியர்க்கு பொய்யனாகவும் தன்னை விரும்பும் அடியார்களுக்கு மெய்யனாகவும் இறைவன் இருக்கும் தன்மை அப்பர் பிரானால் கூறப்படுகின்றது. பக்கல்=பக்கம்: பையரவம்=படம் எடுத்து ஆடும் பாம்பு; இந்த பாடலில் பூதிப் பையான் என்று இறைவன் எப்போதும் திருநீற்றுப் பையினை தன்னருகே வைத்திருப்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். தன்னைத் தவிர வேறு எதுவும் உலகில் நிலையல்ல என்பதை உணர்த்தும் வண்ணம் தனது உடல் முழுவதும் திருநீறு பூசியவராக காணப்படும் பெருமான், திருநீற்றுப் பையுடன் காணப்படுவது பொருத்தம் தானே. தன் பக்கம் விருப்பம் உடைய அடியார்களுக்கு அவர்கள் உணரும் நிலையில் மற்றும் அவர்களுக்கு அருள் புரிவதில் உண்மையானவனாக இருப்பவனும், தன்னை விரும்பாத கொடிய பாவிகளுக்கு அவர்களால் உணரமுடியாமல் இருப்பதால் அவர்களுக்கு இல்லாத பொருளாக தோற்றம் அளிப்பவனும், ஊருக்கு புறமாக உள்ள சுடுகாட்டில் நடனம் ஆடுபவனும், பொன் போன்று ஒளிவீசும் சடையை உடையவனும், திருநீறு நிறைந்த பையினை உடையவனும், படம் எடுத்து ஆடும் பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக்கட்டி தனது விருப்பம் போல் அந்த பாம்பினை அசைப்பவனும், எங்கும் பரவி இருப்பவனும், பவளமலை போன்று சிவந்த மேனியை உடையவனும், நாகேச்சரத்து நகரினில் உறைபவனும் ஆகிய இறைவனைச் சேராதார்கள், நல்ல நெறியில் செல்லாதவர்கள் ஆவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மெய்யானைத் தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியர்கட்கு என்றும்

பொய்யானைப் புறங் காட்டில் ஆடலானைப் பொன் பொழிந்த சடையானைப் பொடிகொள் பூதிப்

பையானைப் பையரவம் அசைத்தான் தன்னைப் பரந்தானைப் பவளமால் வரை போல் மேனிச்

செய்யானைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் முதல் பாடலில் (6.5.1) சிவபெருமானின் பெருமைகளை கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை, அவர்கள் பெறுகின்ற பலனின் அடிப்படையில், மிகவும் அழகாக அப்பர் பிரான் விளக்குகின்றார். சிவபெருமானின் திருநாமமாகிய பஞ்சாக்கர மந்திரத்தை அறிந்து உணர்ந்தவர்களையே, அப்பர் பிரான் கற்றார் என்று கருதுகின்றார். எஞ்சியோரை அவர் கல்லாதார் என்று கருதுகின்றார். கல்லாதார் காட்சிக்கு அரியாய் என்று பிரமனும் திருமாலும் பெருமானை அறிய முடியாமல் நின்ற நிலை உணர்த்தப் படுகின்றது. கல்லாதவர்கள் காண முடியாமல் நிற்கும் பெருமான் கற்றவர்களின் துயரங்களைக் களைபவனாக இருக்கும் நிலையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. வியன்=அகன்ற: அரணம்=கோட்டை: உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுடன் தொடர்பு கொண்டும், அனைத்து உயிர்களிலும் கலந்தும் சர்வ வியாபியாக, எங்கும் சிவபெருமான் நிறைந்து நிற்கும் தன்மை இந்த பதிகத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. அனைத்துப் பொருட்களிலும் கலந்தும் அனைத்து உயிர்களுடன் இணைந்தும் நிற்கும் சிவபெருமானே போற்றி, சூரிய சந்திரர்கள் ஆகிய இரண்டு சுடர்களாக உள்ளவனே போற்றி, கொலைத் தொழிலைச் செய்யும் சக்தி வாய்ந்த மழுப் படையை உடையவனே போற்றி, உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதையே தொழிலாகக் கொண்ட கூற்றுவனை உதைத்தவனே போற்றி, ஐந்தெழுத்தினை கல்லாத மூடர்கள் காண்பதற்கு அரியவனாகத் திகழ்பவனே போற்றி, ஐந்தெழுத்தினை கற்று, அதனை எப்போதும் உச்சரிக்கும் அடியார்களின் துன்பங்களை களைபவனே போற்றி, அகன்று காணப்பட்ட மூன்று பறக்கும் கோட்டைகளையும் வில்லினைக் கொண்டு அழித்தவனே போற்றி. அதிகை வீரட்டத் திருக்கோயிலின் மீது காதல் கொண்டு அங்கே உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும் என்று இறைவனை அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரிசுடராய் நின்ற இறைவா போற்றி

கொல்லார் மழுவாட்படையாய் போற்றி கொல்லும் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி

கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி கற்றார் இடும்பை களைவாய் போற்றி

வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்துப் பாடல் (6.84.8) ஒன்றினில் அப்பர் பிரான் கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். உற்றோரும்= உற்று+ஓரும், அடைந்து ஆராயும்; பொன்றி=அழிந்து; கல்லாதார்=இறைவனை இடைவிடாது தியானம் செய்யாமல் இருப்பவர்கள்; தன்னை இடைவிடாது தியானிக்காமல் இருக்கும் மாந்தர்களின் மனதினை அணுகாதவனும், உயர்ந்த மெய்ந்நூல்களை தேர்ந்தெடுத்து ஆராய்ந்து அனுபவித்து படிக்கும் அடியார்களின் காதலனும், பிறர்க்கு துன்பங்கள் இழைக்கும் பொல்லாத நெறியில் சென்ற திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் அழிந்து விழுமாறு போருக்கு உகந்த அம்பினைத் தொட்டவனும், நிலையில்லாததும் புலாலால் போர்க்கப்பட்ட குடிசையும், நரை திரை மூப்பு பிணி இறப்பு ஆகிய மாற்றங்கள் நிகழ்வதும் ஆகிய உடலின் மீது அடியேன் வைத்திருந்த ஆசையை நீக்கியவனும், நிறைவான தவநெறியை மேற்கொள்ளும் வண்ணம் என்னை வழிநடத்தியவனும், வேறு எந்த நெறியையும் நாடாத வண்ணம் வேறு எந்த நெறிக்கும் புடை பெயர்ந்து செல்லாத வண்ணம், செம்மையான சிவநெறியில் என்னை செலுத்தியவனும் ஆகிய இறைவனை அடியேன் திருச்செங்காட்டங்குடி தலத்தில் கண்டேன் என்பதே அப்பர் பிரான் அருளிய பாடலின் திரண்ட பொழிப்புரை.

கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள் தன்னைக் கற்றார்கள் உற்றோரும் காதலானைப்

பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொருசரம் தொட்டானை

நில்லாத நிணக் குரம்பைப் பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும்

செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானைச் செங்காட்டங்குடி அதனில் கண்டேன்நானே

ஆலம்பொழில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.86.9) கல்லாத மூடர்களுக்கு நல்லவன் அல்லாதவனாக பெருமான் இருக்கும் நிலையை உணர்த்தும் அப்பர் பிரான், பொய்யேதும் இல்லாமல் மனதினில் வஞ்சனையை நீக்கி வழிபடும் அடியார்க்கு உண்மையாக இருப்பவன் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். கடுமையாக தவங்கள் செய்து, பறக்கும் தங்களது கோட்டைகள் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் தருணத்தில் மட்டுமே தங்களை அழிக்க முடியும் என்ற வரத்தினை பெற்றவர் திரிபுரத்து அரக்கர்கள் என்பதை குறிக்கும் பொருட்டு, கடுந்தவத்தோர் என்று அப்பர் பிரான் அவர்களை குறிப்பிடுகின்றார். சாக்கியர்=புத்தர்; செய்யினார்=வயல்கள் நிறைந்த; எரி=அக்னித் தேவன்; கால்=வாயு தேவன். தங்களது கைகளில் உணவினை ஏற்று உண்ணும் சமணர்களுக்கும் புத்தர்களுக்கும் மற்றும் சிவநெறியை கல்லாத மூடர்களுக்கும், நல்லவன் அல்லாதவனாக இருப்பவனும், நெஞ்சினில் பொய் மற்றும் கபட எண்ணங்கள் இல்லாதவர்க்கு வெளிப்படையாக தோன்றி அருள் புரிபவனும், தான் ஆபரணமாக ஏற்று அணிகின்ற பாம்பினை நாணாகவும், மேருமலை வில்லாகவும் தனது கையில் ஏந்தியவனாக, அக்னியை முனையாகவும் வாயுவை சிறகுகளாகவும் அமைந்த அம்பினைப் பொருத்தி, கடுந்தவங்கள் செய்து பெற்று வல்லமை வாய்ந்த மூன்று கோட்டைகளும் நெருப்பினில் வெந்து எரியுமாறு வீழ்த்தியவனும், வயல்கள் நிறைந்த தென்பரம்பைக்குடி எனப்படும் ஊரினில் உள்ள ஆலம்பொழில் என்ற இடத்தில் உள்ள திருக்கோயிலில் உறைபவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ சிந்திப்பாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன்மூடர்க்கு அல்லாதானைப்

பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானைப் பூணாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்

கையினார் அம்பு எரி கால் ஈர்க்குக் கோலாக் கடுந்தவத்தோர் நெடும் புரங்கள் கனல் வாய் வீழ்த்த

செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.89.7) அப்பர் பிரான் பெருமானை, கல்லாதார் காட்சிக்கு அரியார் என்று குறிப்பிடுகின்றார். பல்லார் தலை=பற்கள் நிறைந்த மண்டையோடு; பற்கள் நிறைந்த பிரமனின் மண்டையோட்டில் பலி ஏற்று உண்பவரும், தனது அடியார்களின் சித்தத்தில் இருப்பவரும், உண்மையான மெய்ந்நூல்களை கல்லாதவர்கள் காண்பதற்கு மிகவும் அரியவராக விளங்குபவரும், அத்தகைய நூல்களைக் கற்று உணரந்தவர்களின் துன்பங்களை களைபவரும், கொடுமை மிகுந்த பூதப் படைகளை உடையவரும், அலைகள் நிறைந்த ஏழு கடல்களாகவும் ஏழு மலைகளாகவும் இருப்பவரும், உலகத்தவர் அனைவராலும் புகழப் படுபவரும் ஆகிய இறைவன் இன்னம்பர் திருத்தலத்தில் தான்தோன்றி ஈசனாக எழுந்தருளி உள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பல்லார் தலையோட்டில் ஊணார்போலும் பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்

கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும் கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்

பொல்லாத பூதப் படையார் போலும் பொருகடலும் ஏழ்மலையும் தாமே போலும்

எல்லாரும் ஏத்தத் தருவார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

தனது அடியார்களுக்கு உண்மைப் பொருளாகவும், தனது அடியார் அல்லாதார்களுக்கு இல்பொருளாகவும் பெருமான் இருக்கும் தன்மை கஞ்சனூர் பதிகத்தின் நான்காவது பாடலிலும் (6.90.4) அப்பர் பிரானால் கூறப்படுகின்றது. விண் என்பது இங்கே சிவலோகத்தை குறிக்கும். விதி=நெறிமுறை, அறநெறி மற்றும் அருள்நெறி ஆகிய இரண்டு நெறிகள்; தக்கோன்=தகுதியை உடையவன்; தனது அடியார்களுக்கு, அருள்வதில் எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டு வரைமுறையின்றி அருள் செய்யும் இறைவனை பித்தன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். அடியார்கள் விரும்பும் சிவலோகத்தை உடையவனாக இருப்பவனும், மேரு மலையினை வில்லாக வளைத்து திரிபுரத்தவர்களுடன் நடைபெற்ற போரினில் பயன் படுத்தியவனும், தனது அடியார்களுக்கு உண்மைப் பொருளாகவும், அல்லாதார்க்கு இல்பொருளாகவும் இருப்பவனும், அறநெறியாகவும் அருள்நெறியாகவும் இருப்பவனும், பெண்ணாகவும் ஆணாகவும் தோன்றுபவனும், அடியார்களுக்கு அருள் வழங்குவதில் பித்தனைப் போன்று செயல்படுபவனும், பிணத்தைப் புதைக்கும் இடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவனும். பெருமைக்குரிய தகுதிகளை உடையவனும், எண்ணாக விளங்குபவனும், எட்டு திசைகள் மற்றும் கீழ் மேல் திசைகள் என்று பத்து திசைகளாக இருப்பவனும், ஆகாயமாகவும் பரந்த நிலமாகவும் இருப்பவனும், அனைவர்க்கும் கண் போன்று அரியவனும், கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

விண்ணவனை மேரு வில்லா உடையான் தன்னை மெய்யாகிப் பொய்யாகி விதி ஆனானைப்

பெண் அவனை ஆணவனைப் பித்தன் தன்னைப் பிணம் இடுகாடுடையானைப் பெரும் தக்கோனை

எண்ணவனை எண்திசையும் கீழும்மேலும் இருவிசும்பும் இருநிலமும் ஆகித்தோன்றும்

கண்ணவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே

திருவாசகம் திருவம்மானை பதிகத்தின் பாடல் (8.8.13) ஒன்றினில் மணிவாசகர் அன்பர்க்கு அன்பனாகவும் அல்லாதவர்க்கு அன்பனாக இல்லாதவனாகவும் பெருமான் இருக்கும் நிலையினை குறிப்பிடுகின்றார். சேர்ந்து அறியாக் கையான் என்பதற்கு இரண்டு விதமாக பொருள் கூறுகின்றனர். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத காரணத்தால், எவரையும் சிவபெருமான் வணங்குவது இல்லை. எனவே அடுத்தவரை வணங்குவதற்காக அவர் தனது கைகளை குவிக்க வேண்டிய அவசியம் இல்லையென்பதால், அவரது கைககள் ஒன்றுக்கொன்று சேர்வதில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் சேர்ந்தறியாக் கையான் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார் என்பது ஒரு விளக்கம். கை என்பதற்கு இடம் என்று ஒரு பொருளும் உண்டு. பெருமானது அருள் துணை இல்லாமல், நாம் சென்று சேர முடியாத இடம் முக்தி நிலை. அந்த முக்தி நிலையை தனது செல்வமாக உடையவன் என்ற பொருள்பட சேர்ந்தறியா கையான் என்று கூறுவதாக மற்றொரு வகையிலும் விளக்கம் கூறப்படுகின்றது.

கையார் வளை சிலம்பக் காதார் குழை ஆட

மையார் குழல் புரளத் தேன் பாய வண்டு ஒலிப்ப

செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்

கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை

ஐயாறு அமர்ந்தானை பாடுதும் காண் அம்மானாய்

திருவாசகம் பொற்சுண்ணம் பதிகத்தில் (8.9.12) மணிவாசகர், பொய்யர் தம் பொய்யன் என்றும் மெய்யர் மெய் என்றும் இறைவனை குறிப்பிடுவதை நாம் உணரலாம்.

மையமர் கண்டனை வானநாடர் மருந்தினை மாணிக்கக் கூத்தன் தன்னை

ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும்

பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் போதரிக் கண் இணை பொற்றொடித் தோள்

பையரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே

அனைத்து உயிர்களிலும் கலந்து அந்த உயிர்களை இயக்குபவன் பெருமான் என்பது சைவ சித்தாந்தக் கொள்கை. அவ்வாறு இறைவன் பொய்யர்களின் உடலிலும் இணைந்து இருக்கையில் அவர்களால் இறைவனை ஏன் உணர முடிவதில்லை என்ற ஐயத்தினை போக்கும் விதமாக கருவூர்த் தேவர் விளக்கம் அளிக்கும் பாடலை (9.9.8) நாம் இங்கே காண்போம். உண்மையான மெய்யடியார்களுக்கு அவர்களது மனதினில் இருக்கும் அறியாமை இருளை நீக்கி, அறிவொளியைத் தரும் இறைவன் தன்னை வழிபடாத பொய்யர்கள் உணர முடியாத வண்ணம் அவர்களுடன் இணைந்திருப்பான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். ஜீவன் முக்தர்களின் சொற்களும் செயல்களும், பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு மெய்ப்பொருளை உணர்த்தும் என்றும் இந்த பாடலில் கருவூர்த் தேவர் கூறுகின்றார். மையார் என்றால் கரிய நிறம் உடையவர் என்று பொருள். உமையம்மையைத் தனது உடலின் இடது பாகமாக பெருமான் ஏற்றுக் கொண்டமையால் அவரது உடலின் இடது பாகம் கருமை நிறத்தில் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமானின் அடியார்கள் அல்லாதவர்களின் மனதினில் அறியாமை எனப்படும் இருள் சூழ்ந்து இருப்பதால் அவர்களால் இறைவனை உணர முடிவதில்லை என்பதே இந்த பாடல் உணர்த்தும் கருத்து.

மெய்யரே மெய்யர்க்கு இடுதிருவான விளக்கு எழுது கோல் வளையாள்

மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்து இருந்தும்

பொய்யரே பொய்யர்க்கு அடுத்த வான் பளிங்கின் பொருள்வழி இருள் கிழித்தெழுந்த

ஐயரே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே

மேற்கண்ட பாடல்களில் சொல்லிய வண்ணம், தன்னை நினைத்து வழிபடாத மனிதர்களுக்கு அருள் புரியாது பெருமான் இருக்கும் நிலையினை சிந்தித்த திருஞானசம்பந்தருக்கு, அத்தகைய மனிதர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் என்று தோன்றியது போலும். திருவெண்ணியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.14.4), அவர்களின் பரிதாப நிலையை குறிப்பிட்டு, ஏழையாகிய அவர்கள் என் செய்வார்கள் என்று கவலை கொள்கின்றார். ஏழை என்பதற்கு, பெருமானைப் பணிந்து வணங்கும் தன்மையில் ஏழைகள் என்று பொருள் கொள்ள வேண்டும். மூத்தான்=அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியவன்; அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் என்பதால், அனைத்துப் பொருட்களின் தோற்றத்திற்கு காரண கர்த்தா இறைவன் என்பது புலனாகின்றது. மூர்த்தி=தலைவன்; ஆர்த்தல்=பிணித்துக் கட்டுதல்; தன்னை வழிபட்டு நெகிழ்ந்த மனத்தவர்களாக இருக்கும் அடியார்களோடு கலந்து, அவர்கள் என்றும் தன்னை விட்டுப் பிரியாத வண்ணம் அவர்களை பிணைப்பவன் இறைவன்; பெருமானுடன் கலந்தால் தான், நாம் பிறவி எடுத்ததன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை, கலந்து ஆளாக பிணிப்பவன் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். பெருமானைப் புகழ்ந்து வழிபடுவதால், இத்தனை நன்மைகள் இருக்கையில், அந்த நன்மைகளை அடையாமல் இருக்கும் ஏனையோர் பரிதாபத்திற்கு உரியவர்கள் தானே.

மூத்தானை முவுலகுக்கு ஒரு மூர்த்தியாய்க்

காத்தானைக் கனிந்தவரைக் கலந்து ஆளாக

ஆர்த்தானை அழகமர் வெண்ணி அம்மான் தன்னை

ஏத்தாதார் என் செய்வார் ஏழை அப்பேய்களே

சிவநெறியே நன்னெறி என்பதை உணர்ந்து அந்த நெறியின் கண் வாழ்ந்து, பெருமானை புகழ்ந்து பதிகங்கள் பாடி, அவனை வணங்கி வாழ்வினில் உய்வினை நாம் அடையவேண்டும் என்பதே திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரான் நமக்கு உணர்த்தும் அறிவுரையாக அமைந்துள்ளது. .

பொழிப்புரை:

குரங்குகள் உண்டு மகிழும் வண்ணம் செழிப்பாக வளர்ந்த கனிகளை உடைய மரங்கள் நிறைந்த மாஞ்சோலைகளில் தென்றல் வீசுகின்றன. அத்தகைய சோலைகளைத் தனது கரையினில் கொண்டுள்ள காவிரி நதி மாணிக்கக் கற்களை அடித்துக் கொண்டு வருகின்றது. இந்த காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள மாந்துறை தலத்தினில் உறைகின்ற இறைவனை, நிந்தித்து, அவன் உறைகின்ற கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனை, தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றி அழுத்தி, கயிலை மலையின் கீழே அடர்த்து அவனது வலிமையை அடக்கிய இறைவனை, சிந்தனை செய்யாத மனத்தினை உடைய மனிதர்கள் தீநெறியைச் சேர்கின்றார்கள்.

பாடல் 9:

செம்பொனார் தரு (2.110) பாடல் 9 (திதே 0835)

செம்பொனார் தரு (2.110) பாடல் 9 தொடர்ச்சி (திதே 0836)

செம்பொனார் தரு (2.110) பாடல் 9 தொடர்ச்சி மற்றும் 10, 11 (திதே 0837)

நீலமாமணி நித்திலத் தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி

ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை

மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணை நாளும்

கோலம் ஏத்தி நின்று ஆடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே

விளக்கம்:

நித்திலம்=முத்து; தொத்து=கொத்து; நிறை=வரிசை; ஆலியா=ஆரவாரம் செய்து; நிரந்து வந்து= நிறைவாக வந்து; கோலம்=சிவக்கோலம்; திருநீறு அணிந்து உருத்திராக்கம் தரித்தவாறு இருத்தல்; நலிதல்=வருத்துதல்; இந்த பாடலில் திருமால் இறைவனின் திருவடிகளைத் தேடியும் காணமுடியாமல் திகைத்ததாக சொல்லப் படுகின்றது. பிரமனைப் பற்றிய குறிப்பும் இந்த பாடலில் இருப்பதால், பிரமன் இறைவனின் திருமுடியைக் காண முடியாமல் வருந்தியதையும் குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். சிவபெருமானைப் புகழ்ந்து பாடி, வணங்கினால் கூற்றுவன் நம்மை வருத்த மாட்டான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அதாவது, நரக வேதனைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம் என்று உணர்த்துகின்றார். இவ்வாறு அவர் கூறுவது, நமக்கு சுந்தரர், தில்லைச் சிற்றம்பலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களை நினைவூட்டுகின்றது. அந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலை நாம் இங்கே காண்போம். இடிபோல் முழங்கி சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனை உருண்டு ஓட உதைத்த இறைவன், தனது அடியார்களை இயமனின் தூதுவர்கள் செக்கில் இட்டு தண்டிக்கும் போது, அந்த தண்டனையைத் தடுத்து ஆட்கொள்பவன் இறைவன் என்று இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார். இவ்வாறு அருள் புரியும் தில்லைச் சிற்றம்பலத்து இறைவனை நாம் அடைந்த பின்னர், இந்த உலகத்தில் நாம் பெற வேண்டியது ஏதும் உள்ளதோ, ஏதுமில்லை என்று உணர்த்தும் சுந்தரரின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

கருமானின் உரியாடைச் செஞ்சடை மேல் வெண்மதியக் கண்ணியானை

உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்து உகந்து உலவா இன்பம்

தருவானைத் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட்கொள்வான்

பெருமானார் புலியூர் சிற்றம்பலத்து எம் பெருமானைப் பெற்றாம் அன்றே

குடந்தை காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.6) திருஞான சம்பந்தர், தனது அடியார்களை இயமன் நெருங்காத வண்ணம் பெருமான் பாதுகாப்பார் என்று கூறுகின்றார். தனது அடியார்களை காலன் அடையாத வண்ணம் சிவபெருமான் காப்பார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுவதன் மூலம், சிவனடியார்களை மரணம் நெருங்காது என்று தவறாக பொருள் கொள்ளலாகாது. பிறப்பெடுத்த எவரும் இறப்பிலிருந்து தப்ப முடியாது. உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர் என்ன நடைபெறும் என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு உயிரும், அவரது உடலிலிருந்து பிரிக்கப் பட்ட பின்னர், அவரது உயிரினைத் தாங்கிய சூக்கும உடல் நரகத்திற்கும் சொர்கத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, அந்த பிறவியில் சேர்த்துள்ள வினைகளின் ஒரு பகுதியின் பயனை நுகர நேர்கின்றது. அவ்வாறு நரகத்தில் கழிக்க வேண்டிய வினைகளின் தன்மைக்கு ஏற்ப இயமன், தனது பணியாட்கள் மூலம் அந்த தண்டனைகளை செயல்படுத்துகின்றான். இயமனையோ அவனது தூதர்களையோ, அடியார்கள் பால் நெருங்க இயலாத வண்ணம் பெருமான் காப்பதால், பெருமானின் அடியார்களுக்கு மரணம் ஏற்படாது என்று தவறாக பொருள் கொள்ளக் கூடாது. அவர்களது உயிர் உடலிலிருந்து பிரியும் தருணத்தில், பெருமானின் கணங்கள், அந்த அடியார்களை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்று பெருமானின் திருவடிக்கீழ் சேர்ப்பார்கள். அத்தகைய அடியார்கள், இயமனால் அழைத்து செல்லப்பட்டு நரகம் சொர்க்கம் ஆகியவற்றில் ஆழ்ந்து துன்பம் அடைய மாட்டார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த தன்மையே இந்த பாடலில் காலன் அடையா வண்ணம் என்று குறிப்பிடப் படுகின்றது. அதாவது நரக வேதனைகளிலிருந்து தப்பிக்கலாம் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும்.

மூப்பூர் நலிய நெதியார் விதியாய் முன்னே அனல் வாளி

கோப்பார் பார்த்தன் நிலை கண்டருளும் குழகர் குடமூக்கில்

தீர்ப்பார் உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமைக்

காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.7.9) சிவபெருமானின் திருவடிகளை அடைந்த அடியார்களை காலன் நெருங்க மாட்டான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அத்தகைய அடியார்களின் அடியார்களைக் கண்டு கூற்றுவன் அகன்று சென்று விடுவான் என்றும், பக்குவமடைந்த உயிர்களுக்கு புகலிடமாகிய சிவகதி அவர்களை சென்றடையும் என்றும் கூறுகின்றார். அடியார்களின் அடியார்களுக்கே மேலே குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும் என்றால், அடியார்களுக்கும் அத்தகைய பலன் கிடைக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ. செடிகொள் நோய்=துன்பம் தரும் நோய்கள்; திறம்பார்=தீய வினைகளின் தாக்கத்தால் ஏற்படும் துன்பங்களால் மனம் மாறுபடாமல் தொடர்ந்து இறைவனையே துதிப்பவர்கள்; செறும் தீவினை=வருத்தும் தீய வினைகள்;

செடிகொள் நோயின அடையார் திறம்பார் செறு தீவினை

கடிய கூற்றமும் கண்டகலும் புகல் தான் வரும்

நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திருவாஞ்சியத்து

அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.48.5) திருஞானசம்பந்தர், நீலகண்டரின் (ஆல மிடற்றான்) அடியார்கள் என்றால் இயமனது தூதர்கள், அத்தகைய அடியார்களைத் தொடர்வதற்கு அச்சம் கொள்வார்கள் என்று கூறுகின்றார். வேலை=கடல்; கானல்=கடற்கரை சோலை; .தண்=குளிர்ந்த; மலி=நிறைந்த; விள்ளுதல்=உடைத்தல்; அடர்த்தல்= கொல்லுதல், உயிரைக் கவர்தல்; வெம் காலன்=கொடிய காலன்; காலன் உயிரினை பறிக்க வரும்போது, பாலன் என்றோ இளையவன் என்றோ நோய்வாய்ப் பட்டவன் என்றோ பாராது இரக்கம் ஏதுமின்றி, தனது கடமையை செய்வதால் கொடிய காலன் என்று திருஞானசம்பந்தர் அவனை அழைக்கின்றார். பெருமானின் அடியார்களை நீலகண்டரின் அடியார்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுவதில் ஒரு நயம் இருப்பதை நாம் உணரலாம். பிரமன் திருமால் உட்பட தேவர்கள் அனைவரையும் அச்சுறுத்தி பல திசைகளிலும் நிலை குலைந்து ஓடச் செய்த நஞ்சு, பெருமான் உட்கொண்ட பின்னர் தனது வலிமையை, உட்கொண்டவரின் உயிரினை மாய்க்கும் தன்மையை இழந்தது போன்று, பெருமானின் அடியார்களை நெருங்கும் இயமனின் தூதுவர்கள் தங்களது வலிமை இழந்து விடுவதால் அச்சம் கொள்கின்றனர் என்ற செய்தி மிகவும் அழகாக இங்கே உணர்த்தப் படுகின்றது. சுவேதகேது என்ற சிறுவனின் உயிரைப் பறிக்க வந்த இயமனின் தூதர்களை, பெருமான் தண்டித்து அந்த சிறுவனுக்கு நீண்ட ஆயுள் கொடுத்தார் என்று தல புராணம் உணர்த்துகின்றது.

வேலைமலி தண் கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்

மாலை மலி வண் சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்

மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர்

ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.59.7) திருஞானசம்பந்தர், பெருமானின் திருநாமங்களை சொல்லி பக்தியுடன் பெருமானைத் தொழுதேத்தும் அடியார்கள் பால் கொடிய கூற்றுவன் சென்றடைய மாட்டான் என்று கூறுகின்றார். புயல்=மேகம், மழை; புயலார் பூமி= மேகங்கள் பொழியும் மழையால் வளம் பெறுகின்ற பூமி; புயல் என்பது எப்போதோ ஒரு முறை நிகழ்கின்ற நிகழ்ச்சி என்பதால், இங்கே புயல் என்று பொருள் கொள்ளுதல் பொருந்தாது. கயலார் கண்ணார்=மீன் போன்று அழகிய கண்களை உடைய மகளிர்; பண்ணார் ஒலி=பண்ணுடன் பொருந்திய பாடல்கள்; எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்தல் பயிலுதல் என்று சொல்லப் படுகின்றது. நிலவுலகினில் உள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் பெருமான் தொடர்ந்து உறைவதால், பயில்வான் என்று குறிப்பிடப் படுகின்றார். இந்த பதிகம் சீர்காழி தலத்தின் மீது பாடிய பதிகம் என்பதால் காழிப் பயில்வான் என்று கூறுகின்றார்.

புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ் மல்கக்

கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழி

பயில்வான் தன்னைப் பத்தி ஆரத்தொழுது ஏத்த

முயல்வார் தம் மேல் வெம்மைக் கூற்றம் முடுகாதே

கொலையைத் தொழிலாக கொண்டவராக இருந்தாலும். நற்குணங்கள் மற்றும் நல்ல ஒழுக்கங்கள் ஏதும் இல்லாதவராக இருந்தாலும், அவர்கள் நமச்சிவாய மந்திரத்தை உரைத்தால், அவர்களது தீங்குகளை நீக்கும் தன்மை, அனைவர்க்கும் நன்மையை புரியும் சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய மந்திரத்திற்கு உள்ளது என்று திருஞானசம்பந்தர் கூறும் பாடல் (3.49.5) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்

இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்

எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்

நல்லார் நாமம் நமச்சிவாயவே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் திருஞானசம்பந்தர், மந்தர மலையளவு பாவங்கள் செய்தவர்களாக இருப்பினும், உலகிலுள்ள உயிர்கள் மற்றும் பொருட்கள் மீது வைத்துள்ள பாசத்தால் கட்டுண்டவர்களாக இருப்பினும் அவர்கள் நமச்சிவாய மந்திரத்தை சொல்வாராயின் அவர்களது வலிமை வாய்ந்த தீவினைகள் மறையும்; மேலும் அவர்களது செல்வமும் பெருகும் என்று கூறுகின்றார். நந்தி=சிவபெருமான்’

மந்தரம் அன பாவங்கள் மேவிய

பந்தனை அவர் தாமும் பகர்வரேல்

சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்

நந்தி நாமம் நமச்சிவாயவே

ஏழு நரகங்கள் செல்லவேண்டிய பாவங்கள் புரிந்தவராயினும் அவர்களுக்கும் நமச்சிவாய மந்திரம் நன்மையை அளிக்கும் என்று கூறும் சம்பந்தப் பெருமானின் பாடலும் (3.49.7) இங்கே நினைவு கூர்தல் பொருத்தம். இந்த பாடல் ஞானசம்பந்தர் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடல் (காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் பதிகம்) ஆகும்

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்

உரை செய்வாயினர் ஆயின் உருத்திரர்

விரவியே புகுவித்திடும் என்பரால்

வரதன் நாமம் நமச்சிவாயவே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (2.86.8) திருஞானசம்பந்தர் காலன் நம்மைக் கண்டு அஞ்ச வேண்டும் என்று நாம் விரும்பினால், நாம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். ஒவ்வொரு உயிரும் வாழவேண்டிய நாளின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் இறைவன், அவ்வாறு குறிப்பிடப்பட்ட நாளில் அந்த உயிரையும் உடலையும் பிரிக்கும் கடமையை இயமனிடம் ஒப்படைக்கின்றான். இந்த கடமையை அஞ்சாமல் செயல்படுவதற்கான ஆற்றலும் இயமனுக்கு அளிக்கப் படுகின்றது. இவ்வாறு தனது கடமையை நிறைவேற்றுவதில் அஞ்சாமல் செயல்படும் காலன், சிவனடியார்களின் அருகில் வருவதற்கு அஞ்சுவான் என்று இந்த பாடலில் கூறப் படுகின்றது. முன்னமே வாழ்க்கை முடிவடையும் என்று இறைவன் விதித்த நாளில், இயமனின் தூதுவர்களுக்கு பதிலாக சிவகணங்கள் வந்து உடலிலிருந்து உயிரினை பிரித்து சிவலோகம் அழைத்துச் செல்வார்கள் என்று பொருள் கொள்ளவேண்டும், இழிபாடு= அழிவு; எனவே நீங்கள் நறுமணம் மிகுந்த மலர்களைத் தூவி பெருமானை வழிபட்டு, கூற்றுவன் உங்களை அழைத்துச் சென்றால் நீங்கள் எதிர்கொள்ள இருந்த நரக வேதனையிலிருந்து விடுதலை பெறுவீர்களாக என்று உலகத்தவர்களுக்கு திருஞானசம்பந்தர் அறிவுரை கூறும் பாடல். உரு வரைகின்ற நாள்=உடலும் உயிரும் ஒன்று சேர்ந்து இருக்கும் காலம்; அழிவு இல்லாத கடலாலும் அரிய மலைகளாலும் சூழப்பட்டுள்ள இலங்கையின் தலைவனாகிய இராவணனின் வீரம் அழியும் வண்ணம் அவனது அகன்ற கைகளும் பத்து முடிகளும் நசுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை ஊன்றி மகிழ்ந்த சிவபெருமான் உறையும் செல்வச் செழிப்பு மிகுந்த திருநாரையூர் தலத்தினை நீங்கள் கைகளால் தொழுது வணங்குவீர்களாக. அப்படிச் செய்தால், உங்களது உடலுடன் உயிர் பொருந்தி இருக்கும் நாட்கள் என்று விதிக்கப்பட்ட காலம் முடிவுக்கு வரும் தருணத்தில், கூற்றுவன் உங்களது அருகில் வருவதற்கு அச்சம் கொள்வான்; அதற்கு பதிலாக, உமது வாழ்வு முடிவடையும் தருணத்தில் சிவகணங்கள் உம்மை நெருங்கி உம்மை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வர். எனவே நீங்கள் நறுமணம் மிகுந்த மலர்களைத் தூவி பெருமானை வழிபட்டு, கூற்றுவன் உங்களை அழைத்துச் சென்றால் நீங்கள் எதிர்கொள்ள இருந்த நரக வேதனையிலிருந்து விடுதலை பெறுவீர்களாக என்று நமக்கு திருஞான சம்பந்தர் அறிவுரை கூறும் பாடல்.

உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சுமாதல் உற நீர்

மருமலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்மின் இழிபாடு இலாத கடலின்

அருவரை சூழ் இலங்கை அரையன் தன் வீரம் அழியத் தடக்கை முடிகள்

திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே

ஆகாயம் வரை மிகவும் உயரமாக கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குவியல் ஆயினும், ஒரு தீப்பொறி அந்த அடுக்கினில் படர்ந்துப் பற்றிக்கொண்டால் அனைத்து கட்டைகளும் சாம்பலாக மாறி ஒன்றும் இல்லாத நிலை ஏற்படுவது போல், நாம் இந்த உலகினில் தொடர்ந்து செய்த பாவங்கள் எத்தனை ஆயினும் அவை அனைத்தையும் சுட்டெரிக்கும் தன்மை வாய்ந்து நமச்சிவாய என்னும் திருநாமம் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தின் (4.11.3) பாடலாகும்.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்

உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை

நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே

திருவைந்தெழுத்துப் பதிகத்தின் நான்காவது பாடலிலும், நரக வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றும் ஆற்றல் கொண்டது ஐந்தெழுத்து மந்திரம் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நமன் தமர்=இயமனின் தூதுவர்கள்; இயமனின் தூதுவர்கள் கொண்டு செல்லும் இடம் நரகம். ஒருவரது உயிர் அவரது உடலிலிருந்து பிரிக்கப் பட்ட பின்னர், அவரது உயிரினைத் தாங்கிய சூக்கும உடல் நரகத்திற்கும் சொர்கத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, அந்த பிறவியில் சேர்த்துள்ள வினைகளின் ஒரு பகுதியின் பயனை நுகர நேர்கின்றது. இந்த செய்தியையே திருஞான சம்பந்தர் இங்கே நமன் தமர் கொண்டு போமிடத்து வரும் அல்லல் என்று கூறுகின்றார். அத்தகைய நரக வேதனையை தடுக்கும் ஆற்றல் வாய்ந்த அஞ்செழுத்து, நல்லவர் தீயவர் என்ற பாகுபாட்டினை பார்ப்பதில்லை என்று இந்த பாடலில் கூறுகின்றார். நல்லவர் தீயவர் என்று பாகுபடுத்தாமல், அஞ்செழுத்து நாமத்தை விருப்பத்துடன் சொல்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் செல்லுதற்கு உரிய நன்னெறியை, முக்தி நெறியை காட்டுவது அஞ்செழுத்தாகும். மேலும் அவர்கள் இறக்கும் தருவாயில், இயமனது தூதர்கள் நரகத்திற்கு அந்த உயிரை கொண்டு செல்ல முயற்சி செய்தால், அதனைத் தடுத்து அவர்களை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்கள் எதிர்கொள்ளவிருந்த நரக வேதனையை தவிர்ப்பதும் அஞ்செழுத்தே என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நல்லவர் தீயர் எனாது நச்சினர்

செல்லல் கெடச் சிவமுக்தி காட்டுவ

கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து

அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே

கலிக்காமூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.105.4) திருஞானசம்பந்தர், பெருமானின் அடியார்களைத் தங்களது மனதினில் நினைத்துப் போற்றாத மனிதர்கள், இயமனின் தூதர்களுக்கு அடிமைகளாக மாறி அவர்களது கட்டளைகளுக்கு அடிபணிந்து நரகத்தில் பல துன்பங்களையும் அனுபவிப்பார்கள் என்று கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம், பெருமானின் அடியார்களை நாம் மதித்து போற்ற வேண்டும் என்றும், அவ்வாறு போற்றுவதன் மூலம், நரக தண்டனைகளிலிருந்து தப்பிக்கலாம் என்றும் உணர்த்தப் படுகின்றது. மேலும் பெருமானின் அடியார்கள் பெறவிருக்கும் பேறும் சொல்லாமல் சொல்லப் படுகின்றது. ஊழி என்ற சொல்லுக்கு நெடுங்காலம் என்று பொருள் கொண்டு, மிகவும் பழமையான தலம் கலிக்காமூர் என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். குன்றுகள் போன்று உயர்ந்த அலைகளால் தள்ளப்பட்டு அழகும் குளிர்ச்சியும் உடைய முத்துக்கள் வந்து சேரும் கடற்கரையையும், எருமைக் கூட்டங்கள் தங்களது கன்றுகளுடன் தத்தமது இருப்பிடங்கள் சென்று சேரும் காட்சியை உடையதும் ஆகிய அழகு பொருந்திய கலிக்காமூர் தலத்தில், ஊழிக் காலங்களையும் கடந்து வாழும் பெருமான் உறைகின்றார். அவரது பெருமையினை நன்கு உணர்ந்து, அவரது திருவடிகளைப் புகழ்ந்து வணங்கும் அடியார்களை நினைத்து மதித்து வழிபடாத மனிதர்கள், கீழ்மக்கள் ஆவார்கள்; மேலும் அவர்கள் இயமனுக்கு தொண்டர்களாக விளங்கி, அவனது கட்டளையை நிறைவேற்றும் வண்ணம், அவன் தரும் தண்டனைகளை ஏற்றுக்கொண்டு நரகத்தில் இடர்படுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

குன்றுகள் போல் திரை உந்தி அந்தண் மணியார் தர மேதி

கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவினார் கலிக்காமூர்

என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி

நின்று உணர்வாரை நினைய கில்லார் நீசர் நமன் தமரே

இதே கருத்து அப்பர் பிரானின் திருமாற்பேறு பதிகத்தின் பாடலிலும் (5.60.6) காணப் படுகின்றது. சாற்றி சொல்லுவன்=பலரும் அறிய உரக்க சொல்லுவேன்; தரணி=உலகம்; மாற்றிலாச் செம்பொன்=இதை விடவும் உயர்ந்த செம்பொன் இல்லாத நிலையில், மாற்று காண முடியாத தரமான பொன். இறைவனைப் புகழ்ந்தால், இறைவன் இயமனைத் தடுத்து, தன்னைப் புகழும் அடியார்களின் குறைகளை நீக்குவான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நம்மிடம் உள்ள குறைகளால் தான், நாம் பலவிதமான தீய செயல்களை செய்து அதற்குரிய தண்டனைகளை நரகத்தில் அனுபவிக்க வேண்டி உள்ளது. நமது குறைகள் நீங்கி விட்டால், நாம் தீய செயல்கள் செய்வது தடுக்கப்படும் போது, நாம் அந்த செயல்களுக்கு உரிய நரக தண்டனைகளிலிருந்து தப்பிக்கின்றோம் அல்லவா. இவ்வாறு நம்மை நரக வேதனைகளிலிருந்து இறைவன் காப்பாற்றுவதை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்

ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்

கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வதோர்

மாற்றிலாச் செம்பொன் ஆவர் மாற்பேறரே

நனிபள்ளி தலத்தின் மீது அருளியுள்ள பாடலில் (4.70.7) அப்பர் பிரான், தனக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டு தொண்டு செய்யும் அடியார்கள் நரகத்தில் வீழ ஒட்டாமல் காக்கின்றார் என்று கூறுகின்றார். அரவித்து=மிகுந்த ஒலியுடன், ஆரவாரத்துடன். வீடிலாத் தொண்டர்=விடுதல் இல்லாத தொண்டர்: சிவபிரானின் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுச் செல்ல விருப்பமின்றி என்றும் அவருக்குத் தொண்டராக வாழும் அடியார்கள்: வாசுகி என்ற பாம்பினை, மந்தர மலையில் சுற்றி, அமுதத்தினை எதிர்பார்த்து மிகுந்த ஆரவாரத்துடன் தேவர்களும் அசுரர்களும் ஒன்று கூடி, பாற்கடலை கடைந்தபோது, கொடிய ஆலகால நஞ்சு எழுந்தது: அனைவரையும் கொடிய நஞ்சின் தாக்கத்திலிருந்து விடுவிக்கும் பொருட்டு, அந்த நஞ்சினை அமுதம் அருந்துவது போன்று மிகவும் விருப்பத்துடன் உண்டவர் சிவபெருமான். இத்தகைய பெருமையினை உடைய சிவபிரானுக்கு அடிமையாக எப்போதும் இருந்து கொண்டு, அவருக்குத் தொண்டு செய்யும் அடியார்களுடன், ஒன்று கலந்து இருக்கும் சிவபெருமான், அந்த அடியார்கள் நரகத்தில் வீழ ஒட்டாமல் காப்பாற்றுகின்றார். அவர் தான் நனிபள்ளி தலத்தில் உறையும் இறைவன் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி

அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார்

விரவித் தம் அடியராகி வீடிலாத் தொண்டர் தம்மை

நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.92.15) அப்பர் பிரான், பெருமான் தனக்கு திருத்தொண்டு செய்யும் அடியார்கள் மீது அன்பு கொள்வதால், அத்தகைய அடியார்களை இயமனின் தூதர்கள் நெருங்கினால், பெருமானின் திருவடிகள், அவர்களை துரத்தி ஓடச் செய்யும் என்று கூறுகின்றார். மாதிரம்=திசை: முகடு=தலை, உச்சி; ஆதரம்=அன்பு; வீக்குதல்=கட்டுதல்: அதாவது, பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து, இயமனின் தூதுவர்கள் நம்மை நெருங்க வேண்டிய அவசியம் இல்லாமல் செய்வன பெருமானின் திருவடிகள் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. ஐயாறனின் திருவடிகள் திசைகளாகவும், வானுலகமாகவும், மண்ணுலகமாகவும், மலையின் உச்சிகளாகவும் விளங்குகின்றன. அந்த திருவடிகளை மென்மையான கழல்கள் மற்றும் கச்சும் அழகு செய்கின்றன. மேலும் அந்த திருவடிகள், இயமனின் தூதுவர்கள் நம்மை இனிமேல் அணுகா வண்ணம், நமக்கு பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை அளிக்கின்றன: தமது துன்பங்கள் தீர வேண்டும் என்று இறைவனுக்குத் தொண்டு செய்யும் அடியார்களுக்கு, இந்த திருவடிகள் ஆதாரமாக இருக்கின்ற நிலையை நாம் காணலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மாதிரம் மாநிலம் ஆவன வானவர் மா முகட்டின்

மீதன மென் கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார்

தூதரை ஓடத் துரப்பன துன்பறத் தொண்டு பட்டார்க்கு

ஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே

சமணர்களின் சூழ்ச்சியால் கல்லுடன் பிணைக்கப்பட்டு நடுக்கடலில் தள்ளிவிடப்பட்ட அப்பர் பிரான், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தினை பாட, அவருடன் பிணைக்கப் பட்டிருந்த கல்லே தெப்பமாக மாற, கடலில் மூழ்காமல் அந்த கல்லின் மீது அமர்ந்தவாறு திருப்பாதிரிப் புலியூர் தலத்தின் அருகே அப்பர் பிரான் கரையேறுகின்றார். அதற்கு முன்னர் சமணர்கள் தன்னைக் கொலை செய்வதற்கு செய்த சூழ்ச்சிகளிலிருந்து, நீற்றறையில் அடைக்கப் பட்டது, தலையினை இடறித்தள்ள யானையை ஏவியது, விடம் ஊட்டியது ஆகிய சூழ்ச்சிகளால், தனது உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாமல் காத்து அருள் புரிந்த இறைவனின் கருணையை நினைத்த வண்ணம் ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகத்தினை பாடுகின்றார். இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் (4.94.3) இறைவன் மிகுந்த விருப்பத்துடன் தனது உள்ளத்தில் உறைகின்ற காரணத்தால், தன்னை எந்த துன்பமும் அணுகாது என்றும் தான் இயமனுக்கும் அஞ்சாத நிலையில் இருப்பதாகவும் மிகுந்த நம்பிக்கையுடன் அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமான் பால் அவர் வைத்திருந்த அளவற்ற பற்று அவரிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை நாம் உணரலாம். விடையான்=நந்தியை வாகனமாகக் கொண்ட சிவபெருமான். அடியார்க்கடியேன் என்ற பொருளில் அடியார் அடியோம் என்று தன்னைக் குறிப்பிடுவது, சுந்தரரின் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று தொடங்கும் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தை நமக்கு நினைவூட்டுகின்றது. அருளாளர்கள் எவ்வளவு அடக்கமாக, மற்ற அடியார்களின் அடியார்களுக்கும் அடியானாக இருக்கும் தன்மையை விரும்புகின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அடியார்களின் அடியார்களுக்கும் இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. இதன் மூலம், அடியார்களையும் அவர்களது அடியார்களையும் நாம் போற்ற வேண்டும் என்ற செய்தியும் உணர்த்தப் படுகின்றது. நந்தியை வாகனமாக உடைய சிவபெருமான் எனது உள்ளத்தினில் இருக்கின்றான். எனவே அவனது அடியார்களாகிய எங்களுக்கு துயரங்கள் கிடையாது; தீவினைகள் வந்து சேராது; நாங்கள் இயமனுக்கு அஞ்சமாட்டோம். பிரமனைப் போன்று வேதங்களில் திறமை பெற்ற அந்தணர்கள் வாழ்வதும், தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிலைகள் கொண்டதும் ஆகிய திருப்பாதிரிப்புலியூர் தலத்தில் உறையும் சிவபெருமானின் அடியார்களுக்குத் தொண்டர்களாகிய எங்களால் செய்ய முடியாத அரிய செயல் ஏதும் இல்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விடையான் விரும்பி என்னுள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு
அடையா அவலம் அருவினை சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர்
உடையான் அடியர் அடியோங்கட்கு அரியது உண்டே.

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.1.6) அப்பர் பிரான் தேவர்களும், ஞானிகளும், சிவபெருமானைத் தொழுது தங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்ளும் இடம் தில்லைச் சிற்றம்பலம்; தங்களது பண்பினாலும் சிவபிரானுக்குச் செய்யும் தொண்டினாலும், மேலோர்களாகக் கருதப்படும் தில்லை வாழ் அந்தணர்கள் வாழும் இடம் தில்லைச் சிற்றம்பலம்; இத்தகைய சிறப்பு வாய்ந்த சிற்றம்பலத்தில், நடனம் ஆடும் சிவபிரானது திருவடிகளைத் தொழுவதற்காக செல்லும் மேன்மை பொருந்திய அடியார்களை, காலன் அணுக மாட்டான் என்று கூறுகின்றார். சிட்டர் என்ற சொல் பல பொருள் பட இங்கே ஆட்கொள்ளப் பட்டுள்ளது. சித்தர் ஞானிகள் என்று ஒரு பொருள். முதன்மையானவர் என்ற பொருள் கொண்ட ச்ரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபாக, இரண்டாவது அடியிலும் மூன்றாவது அடியிலும் வருகின்றது. மெய்ஞ்ஞானிகள் என்ற பொருளில் நான்காவது அடியில் காணப்படுகின்றது.

சிட்டர் வானவர் சென்று வரம் கொளும்

சிட்டர் வாழ் தில்லைத் சிற்றம்பலத்து உறை

சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச்

சிட்டர் பால் அணுகான் செறு காலனே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.24.3) இயமனின் தண்டனைகளிலிருந்து உயிர் விடுதலை பெற வேண்டும் என்று விரும்புவோர் பெருமானை வணங்க வேண்டுமென்று அப்பர் பிரான் கூறுகின்றார். கூற்றுத் தண்டம்=உயிர்களின் தீய வினைகளுக்கு ஏற்ப, இயமன் உயிர்களுக்கு விதிக்கும் தண்டனை; ஆற்றுத் தண்டம்=நீதிநெறி நூல்களில் சொல்லப்பட்டுள்ள வழியின் படி நடக்காது வாழ்க்கையை நடத்தும் தீயவர்களை இறைவன் அடக்கி திருத்தும் முறை; ஆற்றுத் தண்டத்தை அடக்கும் என்ற தொடருக்கு வேறுவிதமாக சிவக்கவிமணி பொருள் கூறுகின்றார். ஆற்றுத் தண்டம் என்பதற்கு இயமன் ஆற்றவிருக்கும் தண்டனை என்று பொருள் கொண்டு, அத்தகைய இயம வேதனையை மாற்றும் இறைவனின் தன்மை என்று விளக்கம் அளிப்பதும் பொருத்தமாகவே உள்ளது. ஊற்றுத் தண்டு=ஊன்றுகோல் என்பது ஒரு பொருள்; இனிப்பு ஊரும் கரும்புத் தண்டு என்பது மற்றொரு பொருள். நீற்றுத் தண்டம்=திருநீறு பூசிக்கொண்டு இறைவனை வணங்கும் அடியார்கள்; கூற்றுவன் அளிக்க இருக்கும் தண்டனைகளுக்கு பயப்படும் மனிதர்களே நீங்கள் குறிக்கொள்ள வேண்டியது யாரை என்பதை சொல்லுகின்றேன் கேட்பீர்களாக. அறத்தின் வழியாக அனைத்தையும் இயக்குபவனும், தீயவர்களை அறவழியில் தண்டித்து திருத்துபவனும் ஆகிய சிவபெருமானை, நீங்கள் திருநீறு பூசியவராக, மறவாமல் நினைத்து வழிபடுவீர்களாக. இவ்வாறு ஆற்றல் மிகுந்தவனாக காணப்படும் இறைவன் தன்னை வழிபடும் அடியார்கள் எதிர் கொள்ள இருக்கும் நரக வேதனைகளையும் தவிர்க்கும் கருணை உள்ளம் கொண்டவனாக இருக்கும் ஒற்றியூர் இறைவன், கட்டிக் கரும்பு போல் இனியவர் என்பதே இந்த பாடலின் திரண்ட கருத்து

கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின்

ஆற்றுத் தண்டத்தை அடக்கும் அரனடி

நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு எலாம்

ஊற்றுத் தண்டு ஒப்பர் போல் ஒற்றியூரரே

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.39.4) அப்பர் பிரான், மயிலாடுதுறை தலத்தினில் உறையும் இறைவனின் அருள் இருந்தால், அந்த அருளின் துணை கொண்டு, நம்மை நோக்கி காலன் விரைந்து வருவதை தடுக்கலாம் என்றும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நாம் விடுதலை பெறலாம் என்றும் கூறுகின்றார். அஞ்சொலாள்=அழகிய சொற்களை உடைய உமை அன்னை, அதாவது கேட்பதற்கு இனிய மொழிகளை உடையவள்; அஞ்சிறப்பு=அஞ்சத்தக்க இறப்பு; இறப்பு மீண்டும் பிறப்பதற்கு அடிகோலுவதால், அஞ்சத்தகும் இறப்பு என்று கூறினார் போலும். மிகுந்த வல்லமை படைத்தவனும், மயிலாடுதுறை தலத்தில் உறைபவனும், அழகிய சொல்லினை உடைய உமையம்மையைத் தனது உடலில் பங்காக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய சிவபெருமானின் அருள் இருந்தால், அத்தகைய அடியார்களை, கொடிய கோபம் கொண்டு உயிர்களை உடலிலிருந்து பிரிக்க விரையும் காலன் விரைந்து அணுகமாட்டான். பெருமானின் அருளின் உதவியால், நாம் அனைவரும் அஞ்சக்கூடிய இறப்பையும், அதன் பின்னர் இயல்பாகத் தொடர்ந்து வரும் பிறப்புகளையும் தவிர்த்து, நாம் பிறப்பிறப்புச் சுழற்சியை ஏற்படுத்தும் சங்கிலியை அறுத்து எறியலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்க னருளிலே

தமது இறுதிக் காலம் நெருங்கி விட்டது என்பதை உணரும் எவர்க்கும், நாம் நரகத்தில் எதிர்கொள்ள இருக்கும் நிலையினை நினைக்கும் போது நடுக்கம் ஏற்படுவது இயற்கை. அந்த நடுக்கத்தினைப் போக்குவதற்கு உள்ள ஒரே வழி, நரகத்திற்கு செல்லாமல் நாம் சிவலோகம் செல்லக் கூடிய வழியினை பின்பற்றுவது தானே. எனவே தான் இயமனின் செய்கைகள் பற்றி சிறிதும் கவலைப் படாமல் இருப்பதற்கு வழி காட்டும் பாடலாக கீழ்க்கண்ட பாடலை (5.75.5) அப்பர் பிரான் அமைத்துள்ளார். செந்நெறிச் செல்வனார் என்பது திருச்சேறை பெருமானின் திருநாமம். அதற்கு ஏற்ப நாம் அஞ்சாமல் இருக்க அவர் உதவி புரிவர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். எரி அயில்=நெருப்பு போன்று கூர்மையை உடைய வேல். எண்ணி நாளும்=நாள்தோறும் உயிர்களின் வாழ்நாட்களை எண்ணி கணக்கிட்டு, வாழ்நாள் முடிவடையும் தருணத்தில் உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதை நாட்களை எண்ணும் கூற்றுவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். நமது வாழ்நாள் எப்போது முடியும் என்பதை நாம் அறிய முடியாதவர்களாக இருப்பதால், அந்த தருணத்தில் இயமன் வருவதை உணரும் நாம், திடீரென்று அவன் வந்ததாக கருதுகின்றோம். துண்ணென் தோன்றில்=நடுக்கம் உண்டாகும் வகையில் முன்னே தோன்றினால்; துரக்கும் வழி=ஓட்டும் வழி; இயமன் நம்மை அழைத்துச் சென்றால், நாம் நமது வினைத் தொகையின் ஒரு பகுதியை கழிக்கும் தன்மையில் நமது உயிர் நரகத்தில் ஆழ்த்தப்பட்டும் சொர்க்கத்தில் இருத்தப்பட்டும், அதன் பின்னர் அடுத்த பிறவியை எதிர்கொள்ளும் நிலையினை அடைகின்றது. இயமன் நம்மை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, சிவபெருமான் நம்மை சிவலோகம் அழைத்துக் கொண்டு சென்ற பின்னர் நம்மை இயமனின் தூதுவர்கள் என்ன செய்ய முடியும். நம்மை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்லும் பெருமான், நமது வினைகள் அனைத்தையும் கழித்து விடுவதால், நாம் பிறவிச் சுழலிலிருந்து விடுதலையும் அடைகின்றோம்.

எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன்

துண்ணென் தோன்றில் துரக்கும் வழி கண்டேன்

திண்ணன் சேறை திருச்செந்நெறி உறை

அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே

நாகைக்காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.83.10) அப்பர் பிரான், பொதுவாக உயிர்களுக்கு துன்பம் தருகின்ற காலன், பெருமானை நெருங்கித் தொழுகின்ற அடியார்களைத் தொடர்ந்து அவர்களின் பின்னே சென்று அவர்களின் உயிரைக் கவர்வதற்கும் அதன் பின்னர் அவர்களை வருத்துவதற்கும் அச்சம் கொண்டு அத்தகைய செய்கைகளை தவிர்ப்பான் என்று கூறுகின்றார். கடல் கழி=கடலின் அருகே காணப்படும் உப்பங்கழிகள்; தழி=தழுவுதலை உடைய; வடவரை=இந்திய நாட்டின் வடக்கே உள்ள கயிலை மலை; அணை தர=நெருங்கித் தொழ; துயக்கு=துன்பம்;

கடல் கழி தழி நாகைக் காரோணன் தன்

வடவரை எடுத்து ஆர்த்த அரக்கனை

அடர ஊன்றிய பாதம் அணை தரத்

தொடர அஞ்சும் துயக்கறும் காலனே

காலனின் கோபத்தை தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று அப்பர் பிரான் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடலை (5.91.6) நமக்கு, திருஞான சம்பந்தர் சொல்லும் கருத்து நினைவுக்கு கொண்டு வருகின்றது. அனைவரும் வழிபடும் தகுதி பெற்றுள்ள, கற்றைச் சடையானாகிய சிவபெருமான் உள்ளான், அவனை வழிபட உயிர்களாகிய நாம் உள்ளோம்: அவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஐந்தெழுத்து மந்திரங்களையும் அவனது புகழ்களையும், கற்றுக் கொள்வதற்கு நமக்கு வாயும் நாக்கும் உள்ளன: மேலும் அவனை நீராட்ட நீரும், அழகாக அலங்கரிக்க மலர்களும் உள்ளன. இவ்வாறு இறைவனை வழிபட அனைத்து வசதிகளும் உள்ள போது, அதனை பயன்படுத்திக் கொண்டு, இறைவனை வழிபடுவதை விட்டுவிட்டு, எதற்காக இயமனின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டும். எனவே மனிதர்களே, நமக்கு அருள் வழங்க காத்திருக்கும் பெருமானை வழிபட்டு, அவனது அருளுக்குப் பாத்திரமாகி இயமனின் கோபத்தை தவிர்த்து விடுங்கள் என்பதே அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் நமக்கு வழங்கும் அறிவுரையாகும்.

கற்றுக் கொள்ள வாயுள நாவுள

இட்டுக் கொள்வன பூவுள நீருள

கற்றைச் செஞ்சடையான் உளன் நாம் உளோம்

எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே

சிவபெருமானின் அடியார்களை இயமனின் தூதர்கள் நெருங்க வேண்டாம் என்ற செய்தியையே ஒரு எச்சரிக்கையாக மாற்றி, அப்பர் பிரான் கண்டு கொள்ளரியானை (5.92) என்று தொடங்கும் பதிகத்தின் பாடல் மூலம் பெருமானது அடியார்களின் அருகில் நீங்கள் செல்ல வேண்டா என்று இயமனின் தூதுவர்களுக்கு கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில், பெருமானின் அடியார்களை இயமனது தூதர்களுக்கு அடையாளம் காட்டும் பொருட்டு அவர்களது தன்மைகளை அப்பர் பிரான் சுட்டிக் காட்டுகின்றார். அடியார்களின் உருவத்தையும் செய்கைகளையும் இந்த பதிகத்தில் பட்டியல் இட்டு உணர்த்தும் அப்பர் பிரான். சிவபெருமானின் பெருமைகளை பாடலாக பாடுவது, அவ்வாறு பாடப்படும் பாடல்களுக்கு ஏற்ப கொடுகொட்டி, கைத்தாளம் முதலிய கருவிகளை இசைப்பது, பெருமானின் திருநாமத்தை பிதற்றுவது, சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபாடு செய்வது, திருநீற்றினை அணிந்து இருப்பது, சிவபெருமானை வழிபடுவதற்காக, தூபம், தீபம், மலர் மாலைகள் ஏந்திச் செல்லுதல், முதலிய தன்மைகளை அடியார்களின் அடையாளங்களாக கூறுகின்றார். அத்தகைய அடியார்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது மட்டுமன்றி, அவர்களைப் போற்றியும், பேணியும் பாதுகாப்பது அவர்களின் கடமை என்று இயமனின் தூதர்களுக்கு உணர்த்தும் அப்பர் பிரான், பதிகத்தின் கடைப் பாடலில், அடியார்களுக்கு இன்னல் விளைவித்தால் என்ன நடக்கும் என்பதையும் எச்சரிக்கையாக விடுப்பதையும் நாம் உணரலாம். இந்த எச்சரிக்கையை பொருட் படுத்தாது, இயமனின் தூதர்கள் அவர்களது பாசக் கயிற்றினை சுருக்காக அடியார்களின் திருமேனியின் மீது வீசி அவர்களது உயிரினைக் கவர முயற்சி செய்தால், பெருமானது திருவடிகள் அவர்களை சுட்டுவிடும் என்று கூறுகின்றார். எனவே பெருமானது அடியார்கள் உங்களின் எதிரே வந்தாலும், இயமனின் தூதர்களே நீங்கள் விலகிச் செல்வது உங்களுக்கு நல்லது என்ற அறிவுரை இந்த பாடல் மூலம், அப்பர் பிரானால் அவர்களுக்கு வழங்கப் படுகின்றது.

அரக்கன் ஈரைந்தலையுமோர் தாளினால்

நெருக்கி ஊன்றி இட்டான் தமர் நிற்கிலும்

சுருக்கெனாது அங்குப் பேர்மின்கண் மற்று நீர்

சுருக்கெனில் சுடரான் கழல் சுடுமே

தனது தொண்டர்கள் நரகத்தினை பாராத வண்ணம் அருள் புரிபவன் என்று ஓமாம்புலியூர் தலத்து பாடலில் (6.88.5) அப்பர் பிரான் கூறுகின்றார். ஓம்புதல் என்றால் பாதுகாத்தல் என்று பொருள். தினமும் நம்மைப் பாதுகாக்கும் இறைவன் உறையும் இடமாக விளங்குவதாலும் வியாக்ரபாதர் முனிவர் (புலிக்கால் முனிவர்) வழிபட்ட திருக்கோயில் என்பதாலும் ஓமாம்புலியூர் என்ற பெயர் வந்தது என்பர். தனது தொண்டர்கள் நரகம் என்பதனை காணாவண்ணம் உதவி செய்பவன் என்று பெருமான், நம்மை பாதுகாக்கும் தன்மையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். பாங்கு=நன்மை. எல்லாவற்றையும் அழிக்கும் திறன் கொண்ட அக்னி, பலராலும் இகழப் பட்டதால் மனம் வருந்திய அக்னிதேவன், இறைவனை வழிபட்டு, அடுத்தவர்கள் தன்னை இகழாத நிலையினை பெற்றான் என்று புராணங்கள் கூறுகின்றன. பல தலங்களில் இறைவனின் திருநாமம் அக்னீஸ்வரர் என்று உள்ள நிலை, அக்னி வழிபட்டதையும் அவன் அடைந்த நன்மையையும் நமக்கு உணர்த்துகின்றன. தான் இதற்கு முன்னம் செய்த நற்செயல்களின் பயனாக இறைவனை வணங்கும் பேற்றினை பெற்றதால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்ட. அழகிய வடிவினை உடைய அக்னி தேவன் மேல் இரக்கம் கொண்ட சிவபெருமான் அவனுக்கு அருள்கள் பல புரிந்தார். மேலும் சிவபெருமான், தன்னைத் தொடர்ந்து வழிபடும் தொண்டர்கள், நரகத்தில் சென்று இடர்படாத வண்ணம், அவர்கள் நரகத்தைக் காண்பதையே தவிர்த்து அருள் புரியும் கருணை உள்ளம் கொண்டவர் ஆவார். அத்தகைய இறைவன், ஓங்கி உயர்ந்த மதில்களால் சூழப்பட்டதும், அழகு மிகுந்து காணப்படுவதும், உயர்ந்த புகழுடைய அந்தணர்கள் உலகத்தவர்க்கு நன்மை பயக்கும் வகையில் வழிபாடுகளைச் செய்து வரும் நகரமாகிய ஓமாம்புலியூர் என்ற தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன் என்று தனது இளமைக் காலத்தை குறிப்பிட்டு அப்பர் பிரான் வருத்தம் தெரிவிக்கும் பாடல்.

பாங்குடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை

பாங்கிலா நரகு அதனைத் தொண்டரானார் பாராத வகை பண்ண வல்லான் தன்னை

ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும்

தீங்கில் திரு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

அப்பன் நீ அம்மை நீ என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (6.95.2) அப்பர் பிரான், வினைகளும் இயமனும் தங்களுக்கே உரிய வகையில், வேறுவேறு வழியினில் உயிர்கள் துன்பம் அனுபவிப்பதற்கு காரணமாக இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். வெம்ப=நாம் வருந்தும்படி; வெய்ய=கொடிய, வருத்தம் செய்விக்கும், நமது வாழ்நாள் எப்போது முடிய வேண்டும் என்று முன்னமே குறித்த காலத்தில் மிகவும் விரைவாக வந்து துன்பம் தருபவன் கூற்றுவன்; உடனிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக நம்மைத் துன்புறுத்துவது வினைகள். இவ்வாறு தங்களுக்கே உரித்த வேறுவேறு வகையில் நம்மை துன்புறுத்தும், கூற்றம் மற்றும் வினைகளிலிருந்து நம்மைக் காப்பவன் சிவபெருமான் ஒருவன் தான் என்பதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இந்த பாடலில் தன்னைக் குறிப்பிடும் இடங்களில், நான் என்பதைத் தவிர்த்து நாம் என்று அப்பர் பிரான் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். சிவபெருமான் தனது சிந்தையில் புகுந்ததால் தன்னிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கூறும் அப்பர் பிரான், அந்த மாற்றங்களால் மற்றவர்களை விட தான் ஒரு உயர்ந்த நிலையில் இருப்பதை உணர்த்தும் வகையில் நாம் என்று தன்னை பெருமிதம் கலந்த இறுமாப்புடன் கூறுகின்றார். இந்த பாடலில் பைய நையும் வினைப்பகை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எண்ணற்ற, பழைய பிறவிகளில் நாம் சேர்த்துள்ள வினைகளை ஒரே பிறவியில் கழிக்க வேண்டும் என்றால் அது முடியாத காரியம். மேலும் அவ்வாறான நிலை ஏற்பட்டால், அந்த வினைப் பயன்களான இன்ப துன்பங்களைத் தாங்கவும் நமது உயிருக்கும், அந்த உயிர் தங்கும் உடலுக்கும் ஆற்றல் இல்லை. எனவே தான் நம் மீது கருணை கொண்டுள்ள இறைவனால், இந்த வினைகள் மூன்றாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதியின் பயனை உயிர் உடலினை விட்டு பிரிந்த பின்னர் சொர்க்க நரகங்களில் அனுபவிக்கின்றது, மற்றொரு பகுதி அந்த பிறவியில் அனுபவிக்கப்பட்டு கழிக்கப் படுகின்றது; மூன்றாவது பகுதி சஞ்சித வினையாக பின்னர் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு கொண்டு செல்லப் படுகின்றது. அழகிய பவளம் போன்று ஒளிவீசும் செஞ்சடையில் கங்கையினை அடக்கியவரும், அனலினைக் கையில் ஏந்தி ஆடுபவரும், பசுவிடம் இருந்து வரும் ஐந்து பொருட்களால் விருப்பமுடன் நீராடுபவரும், பவள நிற மேனியாரும், குன்று போன்று உயர்ந்த தோற்றம் உடையவரும், பவள வண்ணத்தவரும் ஆகிய சிவபெருமான், எனது சிந்தையில் புகுந்திருக்கும் காரணத்தால், கூற்றுவன் நம்மை வருத்த மாட்டான்; உயிருக்கும் உடலுக்கும் கொடிய பகையாக விளங்கும் வினைகளும் எம்மை அணுகாது; அதனால் வினைகள் மெல்லமெல்ல, விடாது வருத்தும் நிலை எனக்கு இல்லை; எனது துன்பங்கள் தீர்க்கப்பட்டன; எனக்கு இடையூறு ஏதும் இல்லை; எனவே, இந்த உலகத்தில் எது நிகழ்ந்தாலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை; சூரியன் எந்த திக்கில் எழுந்தாலும் அதனால் எனக்கு நேரப்போவது ஏதும் இல்லை. எனவே நான் மற்றவர்கள் போன்று எளியவன் அல்லன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெம்ப வருகிற்பதன்று கூற்றம் நம்மேல் வெய்ய வினைப் பகையும் பைய நையும்

எம்பரிவும் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கெழிலென் ஞாயிறு எளியோம் அல்லோம்

அம்பவள செஞ்சடை மேல் ஆறு சூடி அனலாடி ஆன் அஞ்சும் ஆட்டுகந்த

செம்பவள வண்ணர் செங்குன்ற வண்ணர் செவ்வான வண்ணர் என் சிந்தையாரே

சமணத் துறவிகளின் பொய்யான பேச்சுகளில் மயங்கிய பல்லவ மன்னன், அப்பர் பிரானை அழைத்து அவரை, சமண மதத்தை இழித்து பேசிய குற்றத்திற்காக விசாரிக்க முற்படுகின்றான். அவரை அழைத்து வருவதற்காக, மந்திரிகள் சேனை வீரர்களுடன் சென்ற போது, அப்பர் பிரான் அவர்களுக்கு மறுமொழியாக விடை அளித்த பதிகத்தின் முதல் பாடலில் (6.98.1), பெருமானுக்கு தான் அடிமையாக மாறிய காரணத்தால், தான் இயமனிடம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், தனக்கு நரகத்தில் துன்பமடையும் நிலை ஏற்படாது என்றும் மிகுந்த உறுதியுடன் அப்பர் பிரான் கூறுகின்றார். நடலை=பொய்; ஏமாப்பு=மகிழ்வுடன் இருத்தல்; குறுகுதல்=அடைதல். கோமான்=அரசர்க்கு அரசன். சிவபெருமானுக்கு அடிமையாக தன்னை கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் அறிவித்துக் கொண்ட திருநாவுக்கரசர், சிவபெருமானுக்கு ஆட்பட்ட காரணத்தால் வேறு எவருக்கும் ஆட்பட மாட்டோம், வேறு எவர்க்கும் குடியல்லோம் என்று இங்கே கூறுகின்றார். நியாயம் இல்லாத அரசனின் ஆணை தன்னைக் கட்டுப்படுத்தாது என்று அரசனை எதிர்த்து குரல் கொடுத்த புரட்சிக் கவியாக அப்பர் பெருமான் திகழ்வதை நாம் இங்கே காணலாம். இயமனுக்கே அஞ்சமாட்டோம் என்று கூறுவதன் மூலம் அரசன் எம்மாத்திரம் என்று முழங்குவதையும் நாம் உணரலாம். அரசனை தெய்வமாக மதித்த காலம் என்பதால் அரசனின் ஆணைக்கு கட்டுப்படாதவர்க்கு நரகம் உண்டு என்ற நம்பிக்கை இருந்து வந்தது. சிவபெருமானின் அருளைப் பெற்றதால் தனக்கு அந்த விதிமுறை செல்லாது என்பதையும் இங்கே அப்பர் பிரான் தெளிவுபடுத்துகின்றார்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை

தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண் குழை ஓர் காதில்

கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடி குறுகினோமே

ஒரு சக்கரவர்த்தியின் நிழலில் இருக்கும் ஒருவன் மற்ற அரசர்களையோ அந்த சக்கரவர்த்தியின் சிற்றரசர்களையோ மதிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தான் இங்கே சிவபெருமானை அரசர்க்கு அரசன் என்ற பொருள் பட கோமான் என்று குறிப்பிட்டு, தான் பல்லவ மன்னனுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதனை அப்பர் பிரான் உணர்த்துகின்றார். சிவபெருமானுக்கு அடிமையாக மாறியதன் பின்னர் தனக்கு ஒரு புது மதிப்பு வந்து சேர்ந்ததாக உணரும் அப்பர் பிரான் தன்னை, நாம் என்று மிகவும் உயர்வாக கூறிக்கொள்வதையும் நாம் உணரலாம். எவராலும் தீர்க்க முடியாத சூலை நோயினைத் தீர்த்த இறைவனின் அருள் இருப்பதால், தனக்கு எந்த பிணியும் வராது என்ற நம்பிக்கை இந்த பாடலில் ஒலிப்பதையும் நாம் உணரலாம். பிணி என்பதற்கு பிறவிப்பிணி என்று பொருள் கொண்டு, பிறவிப்பிணி தீர்க்கப்பட்ட நிலையில் தான் இருப்பதாக அப்பர் பிரான் கூறினார் என்றும் பொருள் கொள்ளலாம். இந்தப் பாடலின் இறுதி வரியில் அப்பர் பிரான் மீளா ஆளாய், இறைவனது சேவடிக் கீழ் தஞ்சம் அடைந்ததாக கூறுகின்றார். இறைவனிடம் அன்பு பூண்ட அருளாளர்கள் தங்களை மீளா அடிமை என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமை அடைகின்றார்கள். தான் எவருக்கும் குடியல்லாத தன்மை கொண்டவனும், ஓர் காதில் வெண்குழையை அணிந்தவனும், அனைவருக்கும் அரசனுமான சங்கரனுக்கு, மீளாத அடிமையாக உள்ள நாம், அவனது அன்றலர்ந்த மலர் போன்று மென்மையானதும் செம்மையானதுமான திருவடிகளை அடைக்கலமாக அடைந்தோம். ஆதலின் நாம் சிவபெருமானைத் தவிர வேறு எவருக்கும் அடிமை அல்லோம்; இயமனுக்கும் பயப்பட மாட்டோம். அரசனின் ஆணை என்னை கட்டுப்படுத்தாது என்பதால், அரசாணையை மீறிய குற்றத்திற்காக எமக்கு நரகத்தில் எந்த தண்டனையும் வராது; எவரிடமும் அச்சம் இல்லாத காரணத்தால் பொய்யினைத் தவிர்த்தவராக நாம் விளங்குகின்றோம்; என்றும் களிப்புடன் இருப்போம்; எந்தவித நோயும் இன்றி வாழ்வோம்; சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் பணியமாட்டோம்; எங்களது வாழ்வில் இனி இன்பமே நிறைந்து நிற்கும். எந்தவிதத் துன்பமும் நேராது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இதே பதிகத்தின் கடைப்பாடலில் (6.98.10) பெருமானின் அடியானாக விளங்கும் தான், பெருமானைப் போன்று ஒப்பற்ற எட்டு குணங்கள் உடையவனாக இருப்பதால், இயமன் தன்னெதிரே தோன்றி, இதனைச் செய் அதனைச் செய் என்று ஆணையிட்டாலும், அந்த ஆணையினை பொருட்படுத்த மாட்டேன் என்று அப்பர் பிரான் உறுதியாக கூறுகின்றார். இதன் மூலம், பெருமானின் அடியார்கள் தேவைப்பட்டால் இயமனை எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள் என்று உணர்த்தப் படுகின்றது. தென்திசைக் கோன்=இயமன். நாணற்றார்=நாணம் இல்லாத சமணர்கள். உடை இல்லாமல் எங்கும் திரிந்தாலும் அதற்காக வெட்கப்படாத சமணர்கள். கோ ஆடி=தலைமைத் தன்மையை உரைத்து. நள்ளாமே விள்ளப் பெறுதல்=விரும்பாது விலகும் நிலை. எமது நாவார, அதாவது நாக்கு இன்பம் பெற, சிவபெருமானது புகழினைப் பாடப் பெற்றோம்; அதனால் நாணம் ஏதும் இன்றி உடையில்லாமல் திரியும் சமணர்கள் எம்மை விரும்பாது விலகினார்கள்; ஆனால் அமரர் தலைவனாகிய சிவபெருமான் என்னை ஆட்கொள்வான்; பிரமனும், திருமாலும் அறிதற்கு அரிய வகையில், அனற்பிழம்பாகத் தோன்றியவனும், தேவர்க்குத் தேவனும் ஆகிய சிவபெருமான், எனது சிந்தையில் நீங்காது இருந்தமையால், யாம் அவனுடன் வேறறக் கலந்து நின்று அவனைப் போன்று எண்குணங்கள் உடையவனாக மாறிவிட்டோம்; எனவே தென்திசைக்கு அதிபதியாகிய இயமனே நேரில் வந்து, தனது தலைமைத் தன்மைகளை எனக்கு உணர்த்தி, தனக்கு குற்றேவல் செய்க என்றாலும் நாம் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

நாவார நம்பனையே பாடப் பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்

ஆவா என்றெமை ஆள்வான் அமரர் நாதன் அயனொடு மாற்கு அறிவரிய அனலாய் நீண்ட

தேவாதி தேவன் சிவனென் சிந்தை சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும் குணமாகக் கொள்ளோம் எண் குணத்துளோமே

உயிர்கள் அழிவற்றவை என்பது சைவ சித்தாந்தக் கருத்து. முற்பிறவிகளில் ஈட்டிய வினைகளின் தன்மைக்கேற்ப உயிர்கள் வெவ்வேறு உடல்களுடன் பொருத்தப் படுகின்றன. அவ்வாறு பொருத்தப்படும் உயிர்கள், மெய்ப்பொருளின் தன்மையை உணர்ந்து தங்களின் அறிவை மறைத்திருக்கும் ஆணவ மலத்திலிருந்து விடுபட்டு, மலநீக்கம் பெற்றுத் தன்னை வந்தடைந்து என்றும் அழியாத பேரின்பம் பெறவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். இது தான் ஆன்மாவின் உண்மையான விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள உயிர்களுக்கு இறைவன் முப்பத்தாறு தத்துவங்களை (ஐம்பூதங்கள், சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகள், மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகள், கை, கால், நாக்கு, எருவாய், கருவாய் எனப்படும் ஐந்து கன்மேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம் அகங்காரம் எனப்படும் நான்கு அகக் கருவிகள், காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை எனப்படும் ஏழு வித்தியா தத்துவங்கள், சுத்தவித்தை, ஈசுரம், சதாசிவம், சத்தி, சிவம் ஆகிய ஐந்து சிவத்தத்துவங்கள்) அளிக்கின்றான். இவைகளை முறையாக பயன்படுத்தி, சிவபிரானின் தன்மையை முறையாக ஒரு குரு மூலம் கேட்டறிந்து, தனது சந்தேகங்களை தெளிவித்துக் கொண்டு, சிவனை எப்போதும் சிந்தித்தல் உயிரின் நிலையை படிப்படியாக முக்தி அடையும் வழிக்கும் உயர்த்தும். இந்த நிலைகள் பத்தாகவும் வகுக்கப் படுகின்றன. அதனில் ஒன்பதாவது நிலை சிவக்கலப்பு என்பதாகும். இந்த நிலையில் உயிர், உடலுக்கு எத்தகைய துன்பங்கள் வரினும் அவற்றைத் துன்பங்களாக உணராது; அந்த துன்பங்களின் மூல காரணத்தை, மெய்த்தன்மையை உணர்ந்து, உலகியல் பொருட்கள் மேல் பற்று கொள்ளும் உயிரின் இயல்பையும், உயிர்க்கு மேலான இறைவனின் அருளினையும், அனைத்து நிகழ்வுகளுக்கும் சிவமே காரணம் என்பதை உணர்ந்து, உயிருக்கு மேலாக விளங்கும் சிவத்தை பற்றி நின்று, சிவத்தோடு வேறறக் கலந்து நிற்கும் நிலை சிவக்கலப்பு எனப்படும். தனது பக்தியின் நிலையால் இந்த நிலையினை அடைந்த அப்பர் பெருமான், தானும் சிவபெருமானைப் போல் எண்குணங்கள் கொண்டவன் என்று கூறுகின்றார்.

மணிவாசகப் பெருமானும் இதே கருத்தை வலியுறுத்தி, மூவேழ் சுற்றம் முரண் உரு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி என்று சிவபிரானை போற்றுகிறார். மேலும் மணிவாசகர் கண்டப்பத்து பதிகத்தின் முதல் பாடலில், ஐம்புலன்களின் சேர்க்கையால் மயங்கி இருந்து நரகத்தில் விழ இருந்த தனது சிந்தையை தெளிவித்து சிவபெருமான் தன்னை ஆட்கொண்ட தன்மையை குறிப்பிடுகின்றார்.

இந்திரிய வய மயங்கி இறப்பதற்கே காரணமாய்

அந்தரமே திரிந்து போய் அருநரகில் வீழ்வேற்குச்

சிந்தை தனை தெளிவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட

அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே

பொழிப்புரை:

சிறந்த நீல மணிகளையும், முத்துக்களையும், மிகவும் அதிகமான தொகையில் வரிசை வரிசையாக பல்வேறு மலர்களையும், தனது நீர்ப்பெருக்கு நிறையும் வண்ணம் அடித்துக் கொண்டு ஆரவாரத்துடன் பாயும் காவிரி நதியின் வடகரையில் உள்ள மாந்துறை தலத்தினில் எழுந்தருளியுள்ள இறைவனின் திருவடிகளையும் முடியையும் முறையே திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாமல் பண்டொரு நாள் திகைத்தனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவடிகளை, திருநீறு அணிந்தும் உருத்திராக்கம் தரித்தும் வணங்கி ஆடியும் பாடியும் புகழ்ந்து பாடும் அடியார்களை கூற்றுவன் வருத்த மாட்டான்.

பாடல் 10:

செம்பொனார் தரு (2.110) பாடல் 9 தொடர்ச்சி மற்றும் 10, 11 (திதே 0837)

நின்று உணும் சமண் தேரரும் நிலையிலர் நெடுங்கழை நறவேலம்

நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரை வாரி

ஒன்றி நேர் வரு காவிரி வடகரை மாந்துறை ஒரு காலம்

அன்றி உள் அழிந்து எழும் பரிசு அழகிது அது அவர்க்கு இடமாமே

விளக்கம்:

நறவு=நறுமணம்; நறவேலம் என்ற சொல்லினை, நறவு ஏலம் என்றும் நறவு வேலம் என்றும் இருவகையாக பிரித்து பொருள் கொள்கின்றனர். நறவேலம் என்று தேன்கூடுகள் பொருந்திய வேலமரம் என்று பொருள். தேரர்=புத்தர்கள்; கழை=மூங்கில்; மூங்கிலை வைத்துக் கொண்டு கூத்தாடி வித்தை காட்டுபவனை, நாம் கழைக் கூத்தாடி என்று தானே அழைக்கின்றோம். கழை என்பதற்கு கரும்பு என்ற பொருளும் பொருந்தும். நிலையிலர்=நிலையற்ற உரைகளை உடையவர்; காலத்தால் என்றும் அழியாத, பொருள் பொதிந்த சொற்களை உடையன வேதங்களும் பல அருளாளர்கள் அருளிய பாடல்களும். அவ்வாறு இன்றி, மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவையாக புத்தர்கள் மற்றும் சமணர்கள் சொல்லிய வார்த்தைகள் இருந்தன என்று கூறுகின்றார். பலவிதமாக சிவபெருமானை நிந்தனை செய்யும் உரைகளாக இருந்த அவை அனைத்தும் காலப்போக்கில் எவரும் பொருட்படுத்தாத சொற்களாக மாறி அழிந்த தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. உள் அழிந்து எழும் பரிசு=உள்ளம் அழிந்து, அதாவது நெஞ்சம் உருகி தொழுதெழும் தன்மை;

பொழிப்புரை:

சமணர்களும் புத்தர்களும், சிவபெருமானைக் குறித்து சொல்லும் சொற்கள், பொய்யான உரைகள் என்பதால் நிலயற்ற சொற்களாக உள்ளன. நீண்ட மூங்கில், தேன் பொருந்திய வேல மரம், மாங்கனிகள், வாழைக் குலைகள், நாணலுடன் நுரை குமிழ்களையும் ஒருங்கே அடித்துக் கொண்டு நிறைவான நீர்ப்பெருக்குடன் வரும் காவிரி நதியின் வட கரையில் அமைந்துள்ள மாந்துறை தலத்தில் உறையும் பெருமானை, ஒரு சமயம் மட்டுமன்றி எப்போதும் தங்களது நெஞ்சம் உருகி வழிபடும் தன்மை கொண்ட அடியார்கள் பரமானந்த நிலையினை அடைவார்கள்.

பாடல் 11:

செம்பொனார் தரு (2.110) பாடல் 9 தொடர்ச்சி மற்றும் 10, 11 (திதே 0837)

வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானைச்

சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழுமறை நிறை நாவன்

அரவெனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறு மாலை

பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர் தாமே

விளக்கம்:

வரை=மலை; வரை வளம்=மலையில் கிடைக்கும் பொருட்களை வாரிக்கொண்டு வரும் தன்மை; அரவெனும் பணி=அரனைப் பணிமின் என்று உயிர்களை வழிப்படுத்தும் திருப்பணி; அரஅர (ஹரஹர) என்று அனைவரையும் பெருமானின் திருநாமத்தை சொல்ல வைக்கும் திருப்பணி. சிரபுரம்=சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. தான் கவுண்டின்ய கோத்திரத்தைச் சார்ந்தவன் என்பதை கவுணியன் என்ற சொல் மூலம் ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

மலையில் கிடைக்கும் பொருட்களைக் அடித்துக் கொண்டு வந்து தரும் காவிரி நதியின் வடகரையில் உள்ள மாந்துறை தலத்தினில் உறையும் பெருமானை, சிரபுரம் என்று அழைக்கப் படும் சீர்காழி நகரினைச் சார்ந்தவனும், கவுணிய கோத்திரத்தில் பிறந்தவனும், சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினை உடையவனும், பெருமானைப் பணிந்து வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீர்கள் என்று உயிர்களை நல்வழிப் படுத்தும் தொண்டினில் வல்லவனும் ஆகிய சம்பந்தன், பெருமான் பால் மிகுந்த அன்பு கொண்டு பாடிய பத்து பாமாலைகளையும் பாடிப் பெருமானைப் புகழும் அடியார்கள் தங்களது துன்பங்களும் அந்த துன்பங்களுக்கு காரணமாக உள்ள பாவங்களும் நீங்கப் பெற்று இன்பமாக வாழ்வார்கள்.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில், தேவர்கள் அடிபணிந்து வணங்கும் பெருமான் என்று அறிமுகம் செய்து அந்த பெருமானின் திருவடிகளை நாம் அனைவரும் பணிந்து வணங்குவோம் என்ற அறிவுரையை திருஞானசம்பந்தர் வழங்குகின்றார். இவ்வாறு பெருமானை பணிந்து வணங்கும் நாம் வேறோர் தெய்வத்தை அறியாதவர்களாக இருத்தல் வேண்டும் என்பதை இரண்டாவது பாடலில் உணர்த்துகின்றார். இதே கருத்தினை வலியுறுத்தி, மூன்றாவது மற்றும் நான்காவது பாடல்களில் மாசிலா மணியாக விளங்கும் இறைவனைத் தவிர்த்து வேறு எவரையும் தொழாது வாழவேண்டும் என்று கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் முறையாக சிவபெருமானை வழிபட்டு, தூபம் தீபம் காட்டி, மலர்களை அவனது திருமேனியில் சார்த்தி, அவனது திருநாமங்களை சொல்லி வழிபடும் அடியார்கள் சிறப்பான தவத்தின் பயனை அடைவார்கள் என்று கூறுகின்றார். ஆறாவது பாடலில் தலபுராணத்து செய்திகளை உணர்த்தி, பெருமானை வழிபடுமாறு நம்மைத் தூண்டுகின்றார். ஏழாவது பாடலில் பெருமானின் எல்லையற்ற ஆற்றலை உணர்த்திய திருஞான சம்பந்தர், எட்டாவது பாடலில் பெருமானைத் சிந்திக்காது இருக்கும் மனிதர்கள் தீநெறியைச் சார்கின்றனர் என்று சாடுகின்றார். ஒன்பதாவது பாடலில், பெருமானை வழிபடும் அடியார்கள் நரகவேதனையை தவிர்ப்பார்கள் என்று கூறுகின்றார் மேலும் பெருமானை நெஞ்சுருகி வழிபடும் அடியார்கள் நிலையான ஆனந்தம் அடைவார்கள் என்று பத்தாவது பாடலில் கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில் அத்தகைய அடியார்கள் இம்மையில் அடையும் பயன் உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகம் மூலம் பெருமான் தன்னை நெஞ்சம் உருக வழிபடும் அடியார்களுக்கு கருணை புரிந்து அருள் புரிகின்ற தன்மையை தெரிந்து கொள்ளும் நாம், பெருமானை வழிபட்டு ஆனந்த பரவசம் அடைவோமாக.



Share



Was this helpful?