இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


செப்ப நெஞ்சே

செப்ப நெஞ்சே

பதிக எண்: 1.28. - திரு சோற்றுத்துறை - தக்கராகம்

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி சென்ற திருஞான சம்பந்தர், அந்த ஊரிலிருந்த மூன்று தேவாரத் தலங்களுக்கும் (மூக்கீச்சரம், சிராப்பள்ளி, ஆனைக்கா) சென்று, இறைவனைப் பணிந்து வணங்கி பதிகங்கள் பாடிய பின்னர், பாற்றுறை, நெடுங்களம், காட்டுப்பள்ளி, ஆலம்பொழில், பூந்துருத்தி, கண்டியூர் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் சோற்றுத்துறை சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். அப்பர் என்று சிவபெருமானை குறிப்பிட்டு, அப்பர் சோற்றுத்துறை சென்றடைவோம் என்று பதிகம் பாடியவாறே திருக்கோயிலின் உள்ளே நுழைந்தார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் சோற்றுத்துறை சென்றடைவோம் என்று ஞானசம்பந்தர் குறிப்பிட்டதை நினைவூட்டும் வண்ணம், அந்த தொடரினை சேக்கிழார் இந்த பாடலில் பயன்படுத்தியுள்ளார். ஒன்றிய மனத்துடன் ஞானசம்பந்தர் இந்த பதிகத்தினை பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். தோடுடைய செவியன் என்று தொடங்கும் தனது முதல் பதிகத்தையே, மனம் ஒன்றிய உணர்வுடன் பாடியவர் அல்லவா ஞானசம்பந்தர். திருக்கோயிலின் உள்ளே நுழைந்த பின்னர், திருக்கோயிலை வலம் வந்த ஞானசம்பந்தர், பெருமானின் திருவடிகளை எல்லையற்ற அன்புடன் வணங்கினார் என்றும் பெரிய புராணம் நமக்கு உணர்த்துகின்றது.

அப்பர் சோற்றுத்துறை சென்றடைவோம் என்று

ஒப்பில் வண்டமிழ் மாலை ஒருமையால்

செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார்

முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன்

இந்த தலத்தின் மீது மூவரும் பாடிய பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. ஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் அருளிய, தலா ஒரு பதிகமும், அப்பர் பிரான் அருளிய நான்கு பதிகங்களும் நமக்கு கிடைத்துள்ளன. திருவையாறு தலத்தைச் சார்ந்த சப்தஸ்தானத் தலங்களில் இந்த தலமும் ஒன்று. திருவையாறு தலத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. தஞ்சையிலிருந்து பன்னிரண்டு கி.மீ. தூரத்தில் உள்ள தலம். தஞ்சை மற்றும் குடந்தை நகரங்களிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. இறைவனின் திருநாமம், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர், ஓதவனேஸ்வரர். ஓதம் என்ற சொல்லுக்கு அன்னம் என்றும் முக்தி என்றும் இரண்டு பொருள் உள்ளன. பஞ்ச காலத்தில் மக்களுக்கு சோறு கிடைக்க வழி செய்தமையால் சோற்றுத்துறை, ஓதவனம் என்ற பெயர்கள் இந்த தலத்திற்கு வந்தன. கௌதம முனிவர், அகலிகை, இந்திரன், சூரியன், அருளாளன் ஆகியோர் வழிபாட்டு பயனடைந்த தலம். இறைவியின் திருநாமம் அன்னபூரணி. இறைவன் மற்றும் அம்பிகை சன்னதிகளின் அமைப்பு கருதி, திருமணத் தலம் என்று கருதப்படுகின்றது.

கோபுர வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தால், தென்படும் பெரிய மண்டபத்தின் வலது புறத்தில் நடராஜ சபை உள்ளது. உள் பிராகாரத்தில் தென் பகுதியில் ஆறுமுகர் சன்னதி மற்றும் அதன் அருகினில் பெருமாள் சன்னதியும் உள்ளன. இங்கே கௌதமர் வழிபட்ட காட்சியை விளக்கும் சிற்பம் உள்ளது. மகா மண்டபத்தின் இடது புறத்தில் அருளாளர் அவரது மனைவி உருவச்சிலைகள் உள்ளன. இறைவன் சுயம்பு மூர்த்தி. வெளி பிராகாரத்தின் தென்கிழக்கு பகுதியில் தனிக் கோயிலாகவே அம்பாள் சன்னதி திகழ்கின்றது. அம்பாள் சன்னதியில் சண்டிகேஸ்வரிக்கு தனி மண்டபம் உள்ளது. சுவாமிக்கு வலப் புறத்தில் அம்பாள் சன்னதி உள்ளதால் திருமணக் கோலம் என்று கருதப்படுகின்றது. கௌதமர் முக்தி பெற்ற தலம். சோற்றுத்துறைக்கு கௌதம ஆஸ்ரமம் என்ற பெயரும் உண்டு. கௌதமர் மற்றும் அகலிகை உருவச் சிலைகள் கோயிலில் காணப்படுகின்றன.

கௌதமர் இருக்கும் இடத்தில் வளம் எப்போதும் குடி கொண்டிருக்கும். எனவே கௌதமர் வறட்சி உள்ள இடங்களுக்கு சென்று அந்த இடங்களில் சில நாட்கள் தங்கி அந்த ஊர் வளமையாக மாறியவுடன் அடுத்த வறட்சியான இடத்திற்கு செல்வது வழக்கம். இதனால் கௌதமரின் புகழ் மேலும் மேலும் பெருகியது. அவ்வாறு கௌதமரும் அகலிகையும் சில நாட்கள் இந்த தலத்தில் தங்கி இருந்தனர். முனிவரின் புகழ் கண்டு பொறாமை கொண்ட சில முனிவர்களும் இந்திரனும் ஒரு மாயப் பசு ஒன்றினை உருவாக்கி. கௌதமர் விவசாயம் செய்து வந்த நிலத்தில் மேய விட்டனர். கௌதமர் தனது நிலத்தில் மேய வந்த பசுவை விரட்டுவதற்காக ஒரு தருப்பை புல்லை எடுத்து அதன் முதுகினில் அடிக்க, அந்த பசு உடனே இறந்துவிட்டது. பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளான கௌதமர் இறைவனை குறித்து தவம் செய்தார். தவத்தினை மெச்சி காட்சி அருளிய இறைவன், இறந்த பசு மாயப் பசு என்பதை தெளிவு படுத்தி அதனால் பாவம் எதுவும் சூழாது என்று முனிவருக்கு ஆறுதல் கூறி ஏதேனும் வரம் கேட்குமாறு கூறினார். மக்கள் நலத்தில் நாட்டம் கொண்ட கௌதமர், வடக்கில் வற்றாத ஜீவநதியாக கங்கை இருப்பது போல் தெற்கிலும் ஒரு ஜீவநதி வேண்டும் என்று கேட்கவே, இறைவன் அருளால் தக்கணத்திற்கு கோதாவரி நதி கிடைத்தது என்பர். இந்த நிகழ்ச்சி கருகாவூர் தலத்திலும் நடந்து கௌதமர் வழிபட்டு பயன் பெற்றதாக சொல்லப்படுகின்றது.

அருளாளன் எனும் தொண்டனுக்கு சிவபிரான் எடுக்க எடுக்க குறையாமல் அன்னம் வரும் தன்மை கொண்ட அமுதசுரபி அளித்து பஞ்சத்தில் வாடிய மக்களின் பசியை போக்க உதவினார். சிவபிரான் அருளிய கலத்தை சோற்றுக்கலம் என்றும் பெருமானை சோறுடையான் என்றும் அழைத்தனர். இறைவனை வழிபட்டால் வறுமையும் வாட்டமும் தீரும் என்று நம்பிக்கை உண்டு.

பாடல் 1:

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்

துப்பன் என்னாது அருளே துணையாக

ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண்ணீற்று

அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே

விளக்கம்:

நெறிகொள்=முறையான வழியில் உணரும்; சென்ற பிறவிகளில் நாம் சேர்த்து வைத்துள்ள வினைகளின் தன்மையால் இந்த பிறவியில் இன்பதுன்பங்களை அனுபவிக்கின்றோம். அந்த இன்பங்களை அனுபவிக்கும் போது, நமது சாமர்த்தியத்தால் அந்த இன்பங்கள் நமக்கு நேரிடுகின்றன என்று செருக்கு கொள்ளாது இறைவனின் துணையோடு அனுபவிக்கின்றோம் என்ற உணர்வு கொள்ள வேண்டும் என்று ஞானசம்பந்தர இங்கே நமக்கு அறிவுரை கூறுகின்றார். யான் எனது என்ற செருக்குடன் இன்பங்களை எதிர்கொள்ளும் போது, நம்மை அறியாமலே அந்த செருக்கு காரணமாக பல தவறுகள் செய்து மேலும் வினைகளை தேடிக் கொள்கின்றோம். துன்பங்களை எதிர்கொள்ளும் போது, நமது பழைய தீவினைகளின் காரணமாக இந்த துன்பங்கள் நேரிடுகின்றன என்றும், இந்த துன்பங்களுக்கு நாமே முற்றும் காரணம் என்பதை உணர்ந்து, இந்த துன்பங்கள் உண்மையில் நமது வினைகளை கழிப்பதற்கே என்ற உணர்வுடன் எதிர்கொண்டால் மேலும் பல வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் நாம் இருக்கலாம். எனவே நாம் துன்பங்கள் அடைந்து அனுபவிப்பது, நமது வினையின் ஒரு பகுதியை கழித்துக் கொள்ள உதவி செய்வதால், துன்பங்களையும் இறைவனின் அருள் என்று கூறவேண்டும். இவ்வாறு இருப்பதையே, இன்ப துன்பங்களை சமமாக பாவித்து, இவை இரண்டும் இறைவனின் அருளால் நிகழ்கின்றன என்ற எண்ணத்துடன் வாழ்க்கையினை கழிப்பதையே இறைவன் விரும்புகின்றான். ஒப்பர்=சரியான அணுகுமுறை என்று ஒப்புக்கொண்டு இறைவன் ஏற்பார். வலியுறுத்தும் விதமாக ஒப்பர் ஒப்பர் என்று இரண்டு முறை கூறப்பட்டுள்ளது. ஒப்பர் ஒப்பர் என்ற தொடருக்கு, தனக்குத் தானே ஒப்பாக சொல்லும் வண்ணம் திகழ்பவர் என்ற விளக்கமும் அளிக்கப்படுகின்றது. தன்னேர் இல்லாத் தலைவன் என்று தானே மணிவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகின்றார். துப்பன் என்ற சொல் துய்ப்பன் என்ற சொல்லின் இடைக்குறை; அப்பர்=தலைவர்; ஞானசம்பந்தர் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாததால், தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறும் விதத்தில் இந்த பாடல் அமைந்திருப்பினும் நாம் அவ்வாறு எடுத்துக் கொள்ளாமல், நமக்கு உணர்த்தும் அறிவுரையாக கொள்ளவேண்டும். அப்பர் என்ற சொல்லுக்கு அப்பிக் கொண்டவர் என்ற பொருள் கொண்டு திருநீற்றினைத் தனது திருமேனியில் பூசிக் கொண்டவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

ஒப்பர் என்ற சொல்லுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் ஒப்பாக, சமமாக நினைக்கும் தன்மையை, பக்குவத்தைக் கொண்ட அடியார்கள் என்று பொருள் கொண்டு, அத்தகைய தற்போத நிலையுடன் வாழும் அடியார்களின் வாழ்க்கையை, முறையான வாழ்க்கை என்று பெருமான் ஒப்பி, ஏற்றுக் கொள்வார் என்று விளக்கம் கொள்வதும் பொருத்தமே. அத்தகைய அடியார்களை தகுந்த சமயத்தில் இறைவன் ஆட்கொண்டு அருள் புரிவார் என்று திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.88.2) ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன்

அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர்

உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத

வெருவித்

தெருவத்தில் வந்து செழு முத்து அலைக்கொள் திருமுல்லைவாயில்

இதுவே

பருவம்=தகுந்த சமயம்; உயிர்கள் இறைவனால் ஆட்கொள்ளப்படுவதற்கு தகுந்த சமயம்; இருவினையொப்பும் மலபரிபாகமும் சத்திநிபாதமும் நிகழப் பெற்று குருவின் திருவருளால் சிவஞானம் வளர்ந்து, பழமல பற்றுகள் முற்றிலும் அறுக்கப்பட்டு, சிற்றறிவு தீர்ந்து, இறைவனின் திருவடிகளைச் சென்று சாரும் பக்குவம் வரப்பெறும் தருணம்; ஒருவன் தான் செய்த நல்வினையின் பயனாக அனுபவிக்கும் இன்பத்திலும் தீவினைப் பயனாகிய துன்பத்திலும் உள்ளம் வேறுபடாது இரண்டையும் சரிசமமாக பாவித்து நுகரும் நிலையே, அதாவது இன்பத்தில் விருப்பும் துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது நோக்கும் நிலையே, இருவினையொப்பு எனப்படும். ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் என்று சேக்கிழார் இந்த தன்மையை குறிப்பிடுகின்றார். அரவத்தொடு அங்கம் அவை கட்டி என்ற தொடர் பாம்பினையும், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரது உடல்களையும் தனது தோளில் கங்காள வேடராய் தாங்கியதை குறிக்கின்றது என்பது ஒரு விளக்கம்.

பெருமானை குறித்த ஞானம் ஒன்றே வீடுபேறு அடைவதற்கு உரிய வழி. எனவே அந்த ஞானத்தை அடைவதற்கு உயிர் விருப்பம் கொள்ள வேண்டும். இவ்வாறு ஞானவேட்கை உடையவர்க்கே ஞானம் பயன் தரும். உயிர் ஞானவேட்கை அடையாத வண்ணம், ஆணவமலம் தடுக்கின்றது. எனவே என்றும் அழியாது இருக்கும் ஆணவமலத்தின் வலிமையை குறைத்து, புலன்களின் விருப்பத்தில் நாட்டம் கொள்ளாது, உண்மையான மெய்ப்பொருள் குறித்து அறிய, உயிர்கள் தலைப்பட வேண்டும். ஆணவ மலத்தின் வலிமையை உயிர்கள் குறைப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு, இறைவன் கன்மம் மாயை ஆகியவற்றை உயிர்களுடன் கூட்டி, இன்ப துன்பங்களை நுகரச் செய்கின்றான். இவ்வாறு நுகரும் தருணத்தில் உயிர்கள் இருவினையொப்பு நிலையினை அடைந்து மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆணவ மலத்தின் வலிமையை படிப்படியாக குறைத்து, அதன் வலிமையை மெலியச் செய்வதை மலபரிபாகம் என்று கூறுவார்கள்.

இவ்வாறு மலபரிபாகம் நிகழ்ந்து, இருவினையொப்பு நிலை ஏற்பட்டபின் நிகழ்வது சத்திநிபாதம். சத்தி என்பது இறைவனின் அருள். நிபாதம் என்றால் வீழ்ச்சி என்று பொருள். அந்நாள் வரை திரோதானமாக நின்று மறைப்பைச் செய்து வந்த இறைவனின் சக்தி, மலபரிபாகம் உற்ற நிலையில் அருட்சக்தியாக மாறி ஆன்மாவில் பதியும். இவ்வாறு பக்குவப்பட்ட உயிர்களுக்கு தக்க தருணத்தில் வந்து உதவி செய்து முக்தி நிலை அளிப்பதையே பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பண்பன்=பண்பினை உடையவன். அரவத்தொடு அங்கம்=தனது திருமேனி முழுவதும் பாம்பினை உடையவன்; கையினில் கங்கணமாக, தோளில் ஆபரணமாக, இடையினில் கச்சாக, காலினில் சலங்கையாக, கழுத்தினில் அணியாக, தலைக்கு மாலையாக பல இடங்களிலும் பெருமான் பாம்பினை அணிந்துள்ள கோலத்தினை அருளாளர்கள் தங்களது பாடல்களில் உணர்த்துகின்றனர். அரவிக்க=ஒலிக்க; புகழ்ந்து பேசப்பட; உருவத்தில் மிக்க=பெரிய அளவினில்; தெருவம்=தெருக்கள்; ஓதம்=அலைகள்; பயனுற்ற பண்பன் என்ற தொடருக்கு, பக்குவம் அடைந்த உயிர்களின் பக்குவத்திற்கு பரிசாக, தன்னைப் போன்று எண்குணங்கள் உடையவர்களாக மாற்றும் இறைவன் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது.

இம்மையில் இறைவனின் அருளால் இன்பமடைந்து வாழும் நாம், இறைவனை வழிபடுவதன் மூலம் மறுமையிலும் நிலையான இன்பத்தை அடையலாம் என்பது இதே பதிகத்தின் நான்காவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிலும் இன்பம் அளிக்கும் பெருமானை, அவன் உறையும் தலம் சென்றடைந்து வழிபடுவது தானே முறை.

பொழிப்புரை:

நெஞ்சமே நீ வாழ்வினில் அடையும் பலவிதமான சிற்றின்பங்களை, உனது சாமர்த்தியத்தால் அடைகின்றாய் என்று கருதி, யான் எனது என்ற செருக்குடன் இருக்காதே. நீ அனுபவிக்கும் அத்தனை இன்பங்களும் சிவபெருமானின் அருள் உனக்கு துணையாக இருப்பதால் நிகழ்கின்றன என்று நினைத்த வண்ணம், எதிர்கொள்வாயாக. இந்த அணுகுமுறையே சரியானது என்று விதித்து இருப்பதால், அவர் இதனை ஏற்றுக்கொள்வார். இதற்கு எந்த ஐயப்பாடும் நீ கொள்ளவேண்டா. இவ்வாறு நமக்கு உதவி புரியும் பெருமானார், ஒளி பொருந்திய திருநீற்றினைத் தனது உடலில் பூசிக் கொண்டுள்ள பெருமானார், அனைத்து உயிர்களுக்கும் தலைவராக விளங்கும் பெருமானார், உறைகின்ற சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக.

பாடல் 2:

பாலும் நெய்யும் தயிரும் பயின்றாடித்

தோலும் நூலும் துதைந்த வரை மார்பர்

மாலும் சோலை புடை சூழ் மட மஞ்ஞை

ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே

விளக்கம்:

மால்=மயக்கம், பிரமிப்பு என்றும் பொருள் கொள்ளலாம். செழிந்து ஓங்கி வளர்ந்துள்ள நிலை நமக்கு வியப்பினை அளிக்கும் என்றும், கிளைகள் நெருங்கி வளர்ந்துள்ள நிலை, சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் உள்ளே புகுவதைத் தடுத்து இருண்டு கிடக்கும் நிலை மயக்கத்தை உண்டாக்குகின்றது என்று இருவகையாக பொருள் கொள்ளலாம். பயின்று=தொடர்ந்து, இடைவிடாமல். துதைந்த=பொருந்திய; ஆலும்=ஒலிக்கும்; பால் தயிர் மற்றும் நெய் ஆகியவற்றால் தொடர்ந்து நீராட்டப்படும் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு, பால் நெய் தயிர் கோமியம் சாணம் ஆகியவை கொண்டு, உரிய முறையில் கலந்து, பஞ்சகவ்யம் தயாரித்து இறைவனை நீராட்டுவார்கள். அதை தவிர்த்து, பால் தயிர் நெய் ஆகியவற்றை கொண்டு தனித்தனியாகவும் இறைவனை நீராட்டுவது பழக்கம். இந்த இரண்டாவது தன்மை இங்கே சொல்லப் படுகின்றது என்று கூறலாம். பஞ்சக்கவ்யம் எனப்படும் கலவையின் மூன்று பொருட்கள் சொல்லப் பட்டமையால், எஞ்சிய இரண்டும் குறிப்பால் உணர்த்தப்பட்டு பஞ்சகவ்யத்தால் இறைவன் நீராட்டப்படுவதை உணர்த்துகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமே.

பொழிப்புரை:

பால் நெய் தயிர் ஆகிய பொருட்களைக் கொண்டு தொடர்ந்து இடைவிடாமல் நீராட்டப்படும் இறைவன், தனது மலை போன்ற மார்பினில் புலித் தோலும் முப்புரி நூலும் அணிந்து கொண்டவர் ஆவார். வியப்புறும் வண்ணம் செழித்து ஓங்கி வளர்ந்த மரங்கள் உடைய சோலைகளில் உள்ள இளமையான மயில்கள் ஆரவாரம் செய்யும் காட்சிகள் கொண்ட சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக.

பாடல் 3:

செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்

கைகொள் வேலர் கழலர் கரிகாடர்

தையலாள் ஒர் பாகமாய எம்

ஐயர் சோற்றுத்துறை சென்று அடைவோமே

விளக்கம்:

வேல்=சூலம்; கழல்=வீரக்கழல் அணிந்தவர்; ஐயர்=தலைவர்; தையலாள்=பெண், இங்கே உமை அன்னை; கரிகாடு=எரிந்து கரிந்து போன உடல்கள் காணப்படும் சுடுகாடு; செய்யார்=சிவந்த மேனியர்

பொழிப்புரை:

சிவந்த திருமேனியை உடையவரும், செம்பட்டை நிறத்தினில் சடையை உடையவரும், விடையினைத் தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்பவரும், தனது கையினில் மூவிலைவேல் எனப்படும் சூலப் படையினைத் தாங்கியவரும், தனது கால்களில் வீரக்கழல்கள் அணிந்தவரும், எரிந்து கரிந்து போன உடல்கள் காணப்படும் சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவரும், உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவரும், எமது தலைவருமாகிய பெருமான், உறைகின்ற சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக.

பாடல் 4:

பிணிகொள் ஆக்கை ஒழியப் பிறப்பு உளீர்

துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்

மணிகொள் கண்டர் மேய வார் பொழில்

அணிகொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே

விளக்கம்:

பிணி என்பதற்கு உடற்பிணி என்றும் பிறவிப்பிணி என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். உடலும் உடலில் உள்ள பல புலன்களும் தாமே, உயிரினை பலவிதத்திலும் அலைக்கழித்து, உயிர் மீண்டும் பிறப்பெடுக்கும் வண்ணம் செயல் புரிகின்றன. எனவே பிறவிப்பிணிக்கு வித்தாக அமைந்துள்ள உடல் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இந்த பிறவிப்பிணியை அறுத்து நீக்கும் வல்லமை வாய்ந்தவர் பெருமான் ஒருவர் தான் என்பதை குறிக்கும் வண்ணம், துணி கொள் போரார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். துணிகொள்= துண்டிக்கும் வல்லமை வாய்ந்த; உடலுடன் சேரும் வாழ்க்கையை ஒழித்து, பெருமானின் திருவடிகளில் சென்று சார்ந்து முக்தி நிலை அடைய்வதே வாழ்வின் நோக்கம் என்பதால், ஆக்கை அழிய பிறப்பு எடுத்துள்ள மனிதர்களே என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். துளங்கு=ஒளியுடன் பொலிந்து விளங்கும்; மழுவாள் ஏந்திய கையர் என்று குறிப்பிட்டு, தகுதி வாய்ந்த அடியார்களின் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுப்பதற்காக தயார் நிலையில் உள்ள இறைவன் என்பதை உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

உயிரினை பல வகையிலும் மயக்கித் தங்களது வழியில் உயிரினை இழுத்துச் சென்று மீண்டும் மீண்டும் இறந்து பிறக்கும் தன்மைக்கு உட்படுத்தும் புலன்கள் கொண்ட உடலுடன் சேர்ந்து வாழும் தன்மையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிறக்கும் மனிதர்களே, பிறப்பிறப்புச் சங்கிலியுடன் நீங்கள் கொண்டுள்ள தொடர்பு துண்டிக்கப்பட வேண்டும் என்று நீர் விரும்பினால், அந்த சங்கிலியைத் துண்டிக்கும் ஆற்றல் வாய்ந்தவரும், போர் செய்வதற்கு தகுந்த ஆயுதமாகிய ஒளியுடன் மிளிரும் மழுவாளினை ஏந்தியவரும், கருமையான மாணிக்கமணி பதிக்கப்பட்டது போன்று கழுத்தினை உடையவரும் ஆகிய பெருமான் பொருந்தி உறைகின்ற சோற்றுத்துறை தலத்தினை, நீண்ட பொழில்கள் நிறைந்த சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக.

பாடல் 5:

பிறையும் அரவும் புனலும் சடை வைத்து

மறையும் ஓதி மயானம் இடமாக

உறையும் செல்வம் உடையார் காவிரி

அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே

விளக்கம்:

அறையும்=மோதும், இரு கரைகளிலும் மோதும் நீர்ப்பெருக்கு; செல்வம் உடையவர் என்று பெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். செல்வராகிய பெருமான் தனது சடையில் அணிந்திருக்கும் நகைகள் தான் என்னே, பிறைச் சந்திரன், கங்கை ஆறு மற்றும் பாம்பு.

உடலில் அணிந்துள்ள நகைகளோ, பன்றிக் கொம்பு, எலும்பு மாலை, கங்கணமாக பாம்பு; உடையோ புலித்தோல்; உண்கலனாக கையில் ஏந்தியிருப்பதோ மண்டையோடு; மேற்கூறிய பொருட்களில் எவையும் செல்வரது வாழ்க்கைக்கு பொருந்தும் பொருட்கள் அல்ல; உறையும் இடமாவது அவரது செல்வ நிலைக்கு பொருத்தமாக உள்ளதா என்றால் அதுவும் சுடுகாடாக உள்ளது. இத்தகைய தன்மையில் வாழும் இறைவனை செல்வர் என்று ஏன் ஞானசம்பந்தர குறிப்பிடுகின்றார். உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தும், நிலையற்றவை மேலும் அவை அளிக்கும் இன்பங்களும் நிலையல்ல. ஆனால் முக்தி உலகமோ என்றும் அழியாதது; முக்தி தரும் இன்பமோ, என்றும் அழியாதது, குறையாதது. எனவே வேறு எவரிடமும் இல்லாததும் அனைத்துச் செல்வங்களிலும் சிறந்ததும் என்றும் அழியாமல் நிலையாக இருப்பதுவும் ஆகிய முக்திச் செல்வம் உடைய இறைவனை விடவும், செல்வம் உடையார் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் வேறு எவரேனும் உளரோ.

பொழிப்புரை:

ஒற்றைப் பிறைச் சந்திரனையும் பாம்பினையும் கங்கை நதியையும் தனது சடையினில் வைத்துள்ள இறைவன், மறைகள் ஓதியவராக மயானத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள இறைவன், என்றும் அழியாததும் நிலையானதும் வேறு எவரிடமும் இல்லாததும் ஆகிய முக்திச் செல்வத்தைத் உடமையாக கொண்டுள்ள செல்வரும் ஆகிய சிவபெருமான் ஆரவாரத்துடன் பாய்ந்து வரும் காவிரி நதிக் கரையினில் உள்ள சோற்றுத்துறை தலத்தினில் உறைகின்றார். நாமும் அந்த சோற்றுத்துறை தலத்தினை சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக.

பாடல் 6:

துடிகளோடு முழவம் விம்மவே

பொடிகள் பூசிப் புறங்காடு அரங்காகப்

படிகொள் பாணி பாடல் பயின்றாடும்

அடிகொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே

விளக்கம்:

படி=முறை; துடி=உடுக்கை; புறங்காடு=சுடுகாடு; பாணி=தாளம்;விம்முதல்=ஒலித்தல்; அடிகள் என்ற சொல் அடிகொள் என்று திரிந்ததாக பொருள் கொண்டு, தலைவர் உறையும் சோற்றுத்துறை என்ற விளக்கமும் அளிக்கப்படுகின்றது.

பொழிப்புரை:

உடுக்கைகள், முழவங்கள், ஆகிய இசைக் கருவிகள் முழங்கும் பின்னணியில், தனது திருமேனி முழுவதும் திருநீற்றினைப் பூசிக்கொண்டுள்ள இறைவன், ஊருக்கு வெளியே இருக்கும் சுடுகாட்டினை முறையான நடமாடும் அரங்கமாக ஏற்றுக்கொண்டு, தரமான தாளத்துக்கு பொருந்தும் வண்ணம் பாடப்படும் பாடல்களை பாடிய வண்ணம் நளினமாக நடமாடும் திருவடிகளை உடைய உறைகின்ற சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக.

பாடல் 7:

சாடிக் காலன் மாளத் தலைமாலை

சூடி மிக்குச் சுவண்டாய் வருவார் தாம்

பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து

ஆடி சோற்றுத்துறை சென்று அடைவோமே

விளக்கம்:

சுவண்டாய்=பொருத்தமாக; சாடி=காலால் உதைத்து; பெருமான் தலைமாலைகளை பொருத்தமாக அணிந்திருப்பதாக ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பிரளய காலத்தில் அனைத்து உடல்களை விட்டு உயிர்கள் பிரிந்து உலகம் அனைத்தும் அழிந்த பின்னர், திருமால் பிரமன் இந்திரன் ஆகியோரின் உயிரற்ற உடல்களில் இருந்த தலைகளை மாலையாக பெருமான் அணிந்து கொள்கின்றார் என்று கூறுவார்கள். இந்த செய்கையின் மூலம், தான் ஒருவனே என்றும் நிலையானவன் என்பதையும் மற்ற உடல்கள் அனைத்தும் ஒரு நாள் அழியக் கூடியவை என்பதை பெருமான் உணர்த்துகின்றார் என்பதால், பெருமான் பொருத்தமாக தலைமாலை அணிந்து கொண்டு இருப்பதாக திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். சுடுகாட்டினில் நடமாடும் பெருமான் என்று முந்தைய பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், இந்த பாடலில் தன்னைப் போற்றிப் புகழும் அடியார்களின் உள்ளத்திலும் குடிகொண்டு நடமாடுகின்றார் என்று கூறுகின்றார். மேலும் நடமாடிய திருவடி, தனது அடியார்களுக்கு தீங்கு நினைப்போரை உதைத்து தள்ளும் என்பதையும் நயமாக உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்வதற்காக வந்த காலனைத் தனது காலால் உதைத்து சிறுவன் மார்கண்டேயனுக்கு நீண்ட ஆயுள் அளித்தவரும், தலைமாலையை மிகவும் பொருத்தமாக அணிந்தவரும் ஆகிய பெருமானை, ஆடியும் பாடியும் மனதினில் தியானித்தும் போற்றும் அடியார்களின் உள்ளத்தை நாடிச் சென்று ஆங்கே உறைந்து நடனம் ஆடுபவர் சிவபெருமான். அத்தகைய தன்மை உடைய பெருமான் உறைகின்ற சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக.

பாடல் 8:

பெண்ணோர் பாகம் உடையார் பிறைச் சென்னி

கண்ணோர் பாகம் கலந்த நுதலினார்

எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய

அண்ணல் சோற்றுத்துறை சென்று அடைவோமே

விளக்கம்:

அண்ணல்=தலைவர்; எண்ணாது=இறைவனின் பெருமையை எண்ணாமலும், தனது செய்கையால் தனக்கு ஏற்படவிருக்கும் பின்விளைவுகளை எண்ணாமலும்; சென்ற இரண்டு பாடல்களில் நடனம் ஆடிய பெருமானின் திருவடிகளைக் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், சென்ற பாடலில் காலனை உதைத்த திருவடி என்று குறிப்பிட்ட ஞானசம்பந்தர், அந்த திருவடியை ஊன்றி அரக்கன் இராவணனின் செருக்கினை அடர்த்த தன்மையை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

தனது உடலின் ஒரு பாகத்தில் உமையன்னையை உடையவரும், தனது சடையினில் ஒற்றைப் பிறைச் சந்திரனை உடையவரும், தனது நெற்றியுடன் கலந்த மூன்றாவது கண்ணினை உடையவரும் ஆகிய சிவபெருமானின் பெருமையை எண்ணாமலும், தனது செய்கையால் தனக்கு ஏற்படவிருக்கும் பின்விளைவுகளை எண்ணாமலும், புனிதமான கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் வலிமையை அடக்கும் பொருட்டு கயிலை மலையின் மீது தனது கால் பெருவிரலை ஊன்றியவரும், அனைத்து உயிர்களுக்கும் தலைவரும் ஆகிய சிவபெருமான் உறைகின்ற சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக.

பாடல் 9:

தொழுவார் இருவர் துயரம் நீங்கவே

அழலாய் ஓங்கி அருள்கள் செய்தவன்

விழவார் மறுகில் விதியான் மிக்க எம்

எழிலார் சோற்றுத்துறை சென்று அடைவோமே

விளக்கம்:

தொழுவார் இருவர்=திருமால் மற்றும் பிரமன்; தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண முடியாமல் வருந்திய திருமாலும் பிரமனும், தங்களின் முன்னே தீப்பிழம்பாக தோன்றியது சிவபெருமான் தான் என்பதை உணர்ந்த பின்னர், பெருமானை வணங்கித் தொழுத போது, பெருமான் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளியது இங்கே குறிப்பிடப்படுகின்றது. மறுகு=வீதி; விதி=வேதங்களில் உணர்த்தப்பட்டுள்ள முறை; அடியார்களுக்கு அருள் புரியும் திருவடி, திருமால் காண்பதற்கு அரியதாக இருந்த நிலையும் இங்கே உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை:

தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண முடியாமல் வருந்திய திருமாலும் பிரமனும், தங்களின் முன்னே தீப்பிழம்பாக தோன்றியது சிவபெருமான் தான் என்பதை உணர்ந்த பின்னர், தங்களது வினைப்பயன் காரணமாகத் தான் தங்களால் பெருமானை முதலில் உணர முடியவில்லை என்றும், பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண முடியவில்லை என்றும் வருந்தினார்கள். அப்போது, அவர்கள் இருவரது துயரத்தினை நீக்கும் வண்ணம், பெருமான் இருவருக்கும் காட்சி கொடுத்தார். எப்போதும் திருவிழாக்கள் கொண்டாடப் படும் வீதிகளில் வாழும் மக்கள், வேதங்களில் உணர்த்தப் பட்டுள்ள முறையில் தங்களது வாழ்க்கையை நடத்தும் சிறப்பான மக்கள், வாழ்கின்ற சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக.

பாடல் 10:

கோது சாற்றிச் திரிவார் அமண் குண்டர்

ஓதும் ஓத்தை உணராது எழு நெஞ்சே

நீதி நின்று நினைவார் வேடமாம்

ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே

விளக்கம்:

கோது=குற்றம்; ஓத்து=பக்தியுடன் ஓதப்படும் மத நூல்கள்; உணராது=அறிந்து கொள்வதற்கு முயற்சி செய்யாமல்; அருவமாக எங்கும் பரந்து நிற்கும் பெருமான், தனது அடியார்களுக்கு அருள் புரிவதற்காக, அவரவர்களின் பக்குவத்திற்கு ஏற்ப, அந்தந்த சூழ்நிலைகளை கருத்தினில் கொண்டு பல விதமான வேடங்களில் வெளிப்பட்டு அருள் புரிகின்றார். அத்தனை வேடங்களையும் கடந்து அடியார்கள் வேறேதேனும் வேடத்தை தியானித்தது வழிபட்டாலும் அந்த உருவத்தில் அவர்களுக்கு காட்சி தரும் தன்மை உடையவன் என்பதை உணர்த்த, நினைவார் வேடமாம் என்ற தொடரை ஞானசம்பந்தர் இங்கே பயன்படுத்தியுள்ளார் போலும்; தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று, நமக்கு ஞானசம்பந்தர் அறிவுரை கூறும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. திருமாலும் பிரமனும், உணர்வதற்கும் காண்பதற்கும் அரியவனாகத் திகழ்ந்த பெருமான், தனது அடியார்கள் எவ்வாறு காட்சி தரவேண்டும் என்று விரும்புகின்றனரோ, அவ்வாறு காட்சி தந்து அருள் புரிவார் என்று இந்த பாடலில் உணர்த்துகின்றார். இதன் மூலம் பெருமானை அன்புடன் அணுகவேண்டும் என்று நமக்கு ஞானசம்பந்தர் அறிவுரை கூறுகின்றார்.

பொழிப்புரை:

பலவிதமான குற்றங்களை சிவபெருமான் பால் சாற்றித் திரியும் குண்டர்களாகிய சமண குருமார்கள் ஓதுகின்ற பிடக நூலினை அறிந்து கொள்வதற்கு முயற்சி ஏதும் செய்யாமல் அதனை புறக்கணித்து நெஞ்சமே நீ வாழ்வாயாக. வேதங்கள் குறிப்பிடும் முறையான சிவாகம நெறியின் வழியே நின்று, எப்போதும் சிவபெருமானின் திருவேடங்களை தியானித்து வாழும் அடியார்களின்

எண்ணங்களுக்கு உடன்பட்டு அந்த வேடங்களை எடுத்து அருள் புரியும் பெருமானும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக இருப்பவனும் ஆகிய பெருமான் சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக.

பாடல் 11:

அந்தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்

சிந்தை செய்ம்மின் அடியார் ஆயினீர்

சந்தம் பரவு ஞானசம்பந்தன்

வந்தவாறே புனைதல் வழிபாடே

விளக்கம்:

பெருமானுக்கு அடியார்களாகிய எவரும் முதலில் செய்யவேண்டியது பெருமானை சிந்தித்தல் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். அதனை அடுத்து நாம் செய்ய வேண்டியது நால்வர் பெருமானார்கள் அருளிய தேவார திருவாசகப் பாடல்களை முறையாக பாட வேண்டியது. பல பதிகங்களின் கடைகாப்புப் பாடல்களில், பதிகங்களை ஓதும் வல்லமை வாய்ந்த அடியார்கள் என்றும் பண்ணோடு பொருத்திப் பாடும் அடியார்கள் என்றும் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு மூலம் வல்லமை என்று அவர் குறிப்பிடுவது, பதிகங்களை முறையான பண்ணுடன் இணைத்துப் பாடுவது, பிழை ஏதும் இல்லாமல் பாடுவது, பொருளை உணர்ந்து மனம் ஒன்றி பாடுவது எனப்படும் தன்மைகளையே. முதற்படி தேவார திருவாசகப் பாடல்களை பாட வேண்டும் என்ற அவா நமது மனதினில் எழவேண்டும். எடுத்த எடுப்பினில் அனைவராலும், உரிய பண்ணுடன் இசைத்துப் பாடுவது என்பது முடியாமல் போகலாம். அதற்காக தேவார திருவாசகப்பாடல்களை பாட வேண்டும் என்று எடுத்த முயற்சியை கைவிடாமல், நம்மால் முடிந்த அளவு பண்ணுடன் இசைத்துப் பாடவேண்டும் என்று உணர்த்தும் முகமாகத் தான் வந்தவாறே புனைதல் வழிபாடே என்று இந்த பாடலில் கூறுகின்றார். இந்த குறிப்பு நமக்கு புகலி (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பாடலை (2.29.11) நினைவூட்டுகின்றது. பாடல்களை இசை வடிவினில் பாடத் தொடங்கும் போதே அனைவர்க்கும் இனிமையான இசையுடன் பொருந்தும் வண்ணம் பாட முடிவதில்லை. நாட்கள் செல்லச் செல்ல, அவர்கள் பண்களின் தன்மையை அறிந்துகொண்டு முறையாக பாடுவதை நாம் நமது அனுபவத்தில் காண்கின்றோம். எனவே தான், அத்தகைய மனிதர்களை கருத்தினில் கொண்டு, உம்மால் இயன்ற வண்ணம் பாடுவீர் என்று உலகத்தவர்க்கு அறிவுரையாக இந்த பாடலில் ஞானசம்பந்தர் கூறுகின்றார்.

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன் மேல்

அந்தம் முதலாகி நடுவாய பெருமானைப்

பந்தன் உரை செய்த தமிழ்கள் பத்தும் இசை கூர

வந்த வணம் ஏத்தும் அவர் வானம் உடையாரே

மேற்கண்ட குறிப்பு, நமக்கு திருவைகா தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் முதல் பாடலை (3.71.1) நினைவூட்டுகின்றது. கோழை மிடறு=பாடுகின்ற போது குரல் நன்கு ஒலிக்க முடியாதபடி, வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாத படி, கோழை வந்து அடைத்துக் கொள்ளும் கழுத்து; கவி=இறைவனை புகழ்ந்து பாடும் பொருள்கள் அடங்கிய தோத்திரங்கள்; கோளும் இலவாக=பொருள் கொள்ளும்படி நிறுத்தி பாடுதல் இல்லையாயினும், இசை கூடும் வகை=இசை நுணுக்கங்களை நன்கு அறிந்து உணர்ந்து பாடுதல். குரல் நன்கு ஒலிக்க, பாடலின் சொற்களை பிழையின்றி உச்சரித்து, பொருளினை உணர்ந்து கொண்டு பிறரும் பொருள் புரிந்து கொள்ளும் வண்ணம் நிறுத்தியும், இசை நுணுக்கங்களை அறிந்து கொண்டு பாடலுக்கு உரிய இசை பொருந்தும் வண்ணமும் தேவாரப் பாடல்களை நாம் பாட வேண்டும் என்பதை ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். தாழை=தென்னை மரத்தினை இங்கே குறிக்கும்; நிலத்தின் செழிப்பினை உணர்த்தும் முகமாக, இறைவனைப் போற்றி பாடும் அடியார்களும் செழிப்புடன் வாழ்வார்கள் என்பதை உணர்த்தும் பாடல். ஏழை அடியார்கள்=மேலே உணர்த்திய மூன்று திறமைகள் அற்ற அடியார்கள்; திறமையில் ஏழைகள் ஆயினும் இறைவனிடத்தில் அன்பு செய்வதில் தாழ்ந்தவரல்லர். இந்த பாடலில் பாடல்களை எவ்வாறு பாடவேண்டும் என்பதை எதிர்மறையாக குறிப்பிடும் சம்பந்தர், அவ்வாறு பாட இயலாத அடியார்களின் நிலையினை சற்று சிந்தனை செய்தார் போலும். முறையாக பாட இயலவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தேவாரப் பாடல்கள் பாடாமல் இருக்க வேண்டியதில்லை என்று அவர்களைத் தேற்றி அவர்களையும் பாடுமாறு ஊக்குவிக்கும் பாடல்

கோழை மிடறாக கவி கோளும் இலவாக இசை கூடும் வகையால்

ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன்

இடமாம்

தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி

வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறு செயும் வைகாவிலே

நல்ல குரலொலியுடன் தகுந்த உச்சரிப்புடன், பாடலின் பொருள் அடுத்தவருக்கு புரியும் வண்ணம் நிறுத்தி பாடும் தன்மையுடன் இசை நுணுக்கங்களை புரிந்து கொண்டு தகுந்த இசை பொருந்தும் வண்ணம் பாட இயலாத வண்ணம் கோழை தொண்டையை அடைக்கின்றதே என்று அடியார்களே நீங்கள் கவலை கொள்ளாதீர். பெருமான் பால் நிறைந்த அன்புடன் நீங்கள் உங்களால் இயன்ற வரையில் இசையுடன் இணைத்து எவ்வாறு பாடினும் அதனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு அருள் புரியும் ஈசனது இடமாக உள்ளது திருவைகா தலமாகும். நீர்வளமும் நிலவளமும் மிகுந்து செழிப்பாக காணப்படும் இந்த தலத்தில் அமைந்துள்ள முற்றிய காய்களை உடைய தென்னை மரத்திலிருந்து காய்கள் அருகில் உள்ள பாக்கு மரத்தின் மீது வீழ, பாக்கு மரத்தின் வரிசையான குலைகள் சிதறி வாழை மரத்தின் மீது வீழ, அந்த வாழை மரத்தின் கனிகள் சிதறி வயலில் வீழ்ந்து ஆங்குள்ள நீரில் ஊறி, வயல்கள் சேறாக மாற்றப்பட்ட தன்மையில் செழிப்பாக காணப்படும் தலம் திருவைகா ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புகலி தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் உள்ள கடைசி அடியில், வந்தவணம் ஏத்தும் அவர் வானம் உடையாரே என்று கூறுவது, நமக்கு ஞானசம்பந்தர் அருளிய பழுவூர் தலத்து பதிகத்தின் கடைப் பாடலை (2.34.11) நினைவூட்டுகின்றது. இந்த இரண்டு பாடல்களின் கடை அடி ஒன்றே போல் இருப்பதை நாம் உணரலாம். பதிகத்தின் பொருளை புரிந்து கொண்டு மனமொன்றி பாடுவது தான் முக்கியம் என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. பந்தம்=தொடர்பு; ஆர=மனமார; தங்களால் முயன்ற அளவு இசையோடு இணைத்து பாடும் அடியார்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும்

பந்தம் மலிகின்ற பழுவூரனை ஆரச்

சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி

வந்த வணம் ஏத்தும் அவர் வானம் உடையாரே

இதே கருத்து திருமுதுகுன்றத்து பதிகத்து பாடலிலும் (3.34.11) உணர்த்தப் படுகின்றது. தங்களால் இயன்றவரை பண்ணுடன் இசைத்துப் பாடும் அடியார்களை விட்டு பாவம் விலகிவிடும் என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் கூறுகின்றார்.

திண்ணினார் புறவணி திருமுதுகுன்றரை

நண்ணினான் காழியுள் ஞானசம்பந்தன் சொல்

எண்ணினான் ஈரைந்து மாலையும் இயலுமாப்

பண்ணினால் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே

வந்தவாறே என்ற சொல்லினை ஞான சம்பந்தன் என்ற சொல்லுடன் இணைத்து ஞானசம்பந்தனுக்கு வந்தவாறே என்று உணர்த்துவதாகவும் பொருள் கூறுகின்றனர். அதாவது இறைவனின் அருளால் ஞானசம்பந்தனுக்கு வாய்க்கப் பெற்ற ஆற்றலின் வடிவமாக வெளிவந்த பாடல்கள் என்று கூறுவதும் பொருத்தமே. ஞானசம்பந்தரின் பாடல்கள் இறைவன் அருளால், இறைவனே அவரது மனதிலிருந்து வெளிப்படுத்திய பாடல்கள் என்பதை இவ்வாறு சிலர் உணர்த்துகின்றனர். ஆனால் இந்த இரண்டு விளக்கங்களை விடவும், முந்திய விளக்கமே மிகவும் பொருத்தமாக உள்ளது. அந்தண்=அழகும் குளிர்ச்சியும் பொருந்திய, ஞானசம்பந்தரின் பாடல்கள் அழகிய சந்த இசைப் பாடல்களாக இருப்பதால், சந்தத்தமிழ் என்றே அவர் அருளிய தேவாரப் பாடல்களை அருணகிரிநாதர் பல திருப்புகழ் பாடல்களில் குறிப்பிடுகின்றார். மேலும் ஞானசம்பந்தரைப் போன்று அழகிய சந்தக் கவிகளை பாடவேண்டும் என்று முருகப் பெருமானிடம் வேண்டுவது நமது நினைவுக்கு வருகின்றது.

பொழிப்புரை:

பெருமானுக்கு அடியார்களாக உள்ளவர்களே, நீங்கள் முதலில் அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக விளங்கும் பெருமானை, குளிர்ந்தும் அழகாகவும் காணப்படும் சோற்றுத்துறை தலத்தினில் உறையும் பெருமானைக் குறித்து சிந்தனை செய்ய தொடங்குவீர்களாக. கேட்பதற்கு மிகவும் இனிய சந்தங்களுடன் அமைந்துள்ள ஞானசம்பந்தன் இயற்றிய பாடல்களை, உங்களால் இயன்ற வண்ணம் உரிய பண்ணுடன் பொருத்தி பாடுதலே சிறந்த வழிபாடாக கருதப்படும். .

முடிவுரை:

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்பங்களிலே திளைத்து, இறைவனை மறந்து விடாமல், நாம் பெறுகின்ற இன்பங்கள் அனைத்தும் இறைவனது அருளால் விளைவன என்ற எண்ணத்துடன் வாழ்வதே முறையான வாழ்க்கை என்று பதிகத்தின் முதல் பாடலில் அறிவுறுத்தும் ஞானசம்பந்தர், இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே என்று கூறுகின்றார். சோற்றுத்துறை தலம் சென்றடைந்து இறைவனை வணங்கி வழிபட்டு, அத்தகைய வழிபாட்டின் மூலமாக, இம்மையிலும் மறுமையிலும் இன்பங்கள் அடைவோமாக என்று உணர்த்துகின்றார். நம்மை மயக்கும் அழகு உடைய தலம் சோற்றுத்துறை என்று தலத்தின் இயற்கை வளத்தினை குறிப்பிட்டு, நாம் விரைவில் அந்த தலம் சென்றடைந்து இறைவனை வழிபடும் வண்ணம் இரண்டாவது பாடலில், நம்மை தூண்டுகின்றார். பெருமானை வணங்கி, அவரை நமது தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மூன்றாவது பாடலில் உணர்த்தும் ஞானசம்பந்தர், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவித்து, மறுமையில் நமக்கு நிலையான பேரின்பம் அளிக்கும் வல்லமை வாய்ந்தவர் சிவபெருமான் ஒருவர் தான் என்பதையும் உணர்த்துகின்றார். தன்னைத் தொழுது வழிபடும் அடியார்களுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் முக்தி உலகினைத் தனது ஒப்பற்ற செல்வமாக கொண்டுள்ள பெருமான் என்று ஐந்தாவது பாடலில் உணர்த்துகின்றார். பெருமான் ஆனந்தமாக நடனம் ஆடும் காட்சியை ஆறாவது பாடலில் குறிப்பிடும் ஞானசம்பந்தர், தன்னை வழிபடும் அடியார்களை சிவானந்தத்தில் ஆழ்த்தி, அவர்களின் உள்ளத்தை கோயிலாக கொண்டு, ஆங்கே இன்பநடம் ஆடுபவன் என்று ஏழாவது பாடலில் உணர்த்துகின்றார். அடியார்களின் உள்ளத்தில் நடமாடும் பெருமானின் திருப்பாதங்கள், அடியார்களுக்கு தீங்கு இழைக்க நினைப்போரை உதைத்து வீழ்த்தும் திருவடியாகவும் மாறும் என்பதையும் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இதே திருவடி, கயிலை மலையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதனை அசைப்பதன் மூலம் தனது தேவிக்கு அச்சம் விளைவித்த அரக்கன் இராவணனின் வலிமையை அடக்குவதற்கு எவ்வாறு செயல்பட்டது என்பதை பதிகத்தின் எட்டாவது பாடலில் உணர்த்துகின்றார். இவ்வாறு பல திருவிளையாடல்கள் செய்யும் திருவடிகள், திருமால் காண்பதற்கு அரியனவாக திகழ்ந்த தன்மை ஒன்பதாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. திருமாலும் பிரமனும் காண்பதற்கு அரியனவாக திகழ்ந்த பெருமானின் திருவேடத்தினை, அடியார்கள் விரும்பும் வண்ணத்தில் காணும் வகையில் காட்சி கொடுத்து அருள் புரிபவன் பெருமான் என்று பதிகத்தின் பத்தாவது பாடல் உணர்த்துகின்றது. பெருமானைப் புகழ்ந்து பாடுவதற்கு இசை ஞானம் தேவையில்லை என்றும், உள்ளம் கசிந்து பாடும் தன்மையே அடிப்படையாக வேண்டும் என்று கடைப்பாடலில் உணர்த்தும், அத்தகைய வழிபாடு சிறந்த வழிபாடாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். பெருமானின் குணங்களையும், அவன் அருள் புரியும் தனமையையும் இந்த பாடல் மூலம் புரிந்து கொண்ட நாம், சோற்றுத்துறை தலம் சென்றடைந்து பெருமானை வணங்கி, இம்மையில் இன்பமாக வாழ்ந்து, மறுமையில் நிலையான பேரின்ப வாழ்வுக்கு வழி வகுத்துக் கொள்வோமாக.

செப்ப நெஞ்சே (Seppa Nenche) is a poetic and evocative phrase in Tamil, often found in devotional or classical literature. Here’s a breakdown of its meaning:

Breakdown of the Phrase:

செப்ப (Seppa): Can mean to say, to speak, or to tell. It denotes the act of verbal expression or communication.

நெஞ்சே (Nenche): Refers to the heart or mind. It symbolizes one’s innermost feelings, thoughts, and emotions.

Full Meaning:

"செப்ப நெஞ்சே" can be translated as "O heart, speak" or "O heart, express". The phrase often calls upon the heart or mind to articulate its innermost thoughts, feelings, or truths.

Context:

Devotional Literature: In Tamil devotional hymns and literature, this phrase might be used to encourage deep reflection or expression of one's devotion and love towards a deity. It suggests a heartfelt expression of emotions and devotion.

Emotional Expression: The phrase can be an appeal to one’s own heart to reveal its true feelings or to speak out about deep-seated emotions. It encourages introspection and the articulation of what is deeply felt.

Literary Usage: In poetry or prose, "செப்ப நெஞ்சே" can be used to invoke a sense of introspection or to prompt the reader or character to confront their internal state and communicate it.

Example in Context:

In a poem or a devotional song, the phrase "செப்ப நெஞ்சே" might be used as a plea to the heart to convey the depth of one's devotion or longing. For instance, a poet might use it to express the inner conflict of a devotee who wishes to communicate their intense feelings of love and surrender to the divine.

Conclusion:

"செப்ப நெஞ்சே" is a poignant and expressive phrase that invites the heart or mind to articulate its deepest feelings and truths. It emphasizes the importance of expressing one’s innermost emotions and thoughts, whether in the context of devotion, introspection, or literary exploration. This phrase captures the essence of heartfelt communication and emotional sincerity.



Share



Was this helpful?