1.129 சேவுயரும் திண்கொடியான் கழுமலம் மேகராகக்குறிஞ்சி
பின்னணி:
இந்த பதிகம் பாடப்பட்ட சூழ்நிலை பெரிய புராணத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. தனது ஆறாவது தலயாத்திரையில் நடுநாட்டு மற்றும் தொண்டை நாட்டுத் தலங்கள் பல சென்று ஆங்கே பல பதிகங்கள் பாடி பரமனைப் பணிந்த திருஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்தார்.அப்போது பாடிய பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்றாக இருக்கலாம் என்று கருதப் படுகின்றது. இந்த பதிகம் மழைவேட்டல் பதிகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. முதல் திருமுறையில் மேகராகக்குறிஞ்சி பண்ணில் இசைத்துப் பாடும் வண்ணம் திருஞானசம்பந்தர் அருளிய ஏழு பதிகங்களும் (1.129முதல் 1.135 வரை) மழை வேட்டல் பதிகங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இந்த பதிகங்களை பக்தி உணர்வுடன் மனம் ஒன்றி முறையாக பாடினால் மழை பொழியும் என்று நம்பப்படுகின்றது.
பாடல் 1:
சே உயரும் திண்கொடியான் திருவடியே சரணென்று சிறந்த அன்பால்
நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவி தொறும் வண்கமலம் முகம் காட்ட செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவி இரும் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே
விளக்கம்:
இந்த பாடலில் கலைமகளாகிய சரசுவதி தேவி இறைவனை வழிபட்டதாக சொல்லப் படுகின்றது. தனக்கு அளிக்கப்பட்ட கடமையை, படைப்புத் தொழில் புரிவதை, சரிவர செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரமன் இறைவனை வழிபட்டதால் பிரமபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று)என்ற பெயர் வந்தது என்பதை நாம் அறிவோம். அவ்வமயம் சரசுவதி தேவியும் பிரமனுடன் சேர்ந்து இறைவனை வழிபட்டிருக்க வேண்டும் என்பதையே இந்த குறிப்பு நமக்கு உணர்த்துகின்றது. மேலும் பிரமனது நாவில் சரசுவதி தேவி எப்போதும் பொருந்தி இருப்பவளக கருதப்படுவதால், பிரமன் பெருமானை வணங்கும் போது சரசுவதி தேவியும் உடனிருந்து வழிபட்டதாகத் தானே பொருள் கொள்ள வேண்டும். இந்த காரணம் பற்றியே, நாவியலும் மங்கை என்று சரசுவதி தேவியை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சிவபெருமானை வழிபடுவதால் கலைமகளின் அருள் கிடைக்கும் என்று சிவபுரம் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடலில் (1.21.5) சொல்லப் படுகின்றது. இந்த பதிகத்தின் நான்காவது பாடலில் சரியை மற்றும் கிரியை நெறி வழிபாடுகளை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் யோகநெறி பற்றி குறிப்பிடுகின்றார். சினமலி அறுபகை=கோபம் முதலான ஆறு வகையான குணங்கள்; இவை உயிருக்கு கேடு விளைவிப்பதால், உயிரின் உட்பகைகளாக கருதப் படுகின்றன. காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் என்பன இந்த ஆறு உட்பகைகள். இந்த ஆறு உட்பகைகளும் உயிரினை ஆட்கொள்ளும்போது உயிர் தனது நிலையில் செயல்படாமல், அந்த பகைகள் காட்டும் உணர்வுகளின் வழியே செயல்பட்டு, இறைவனிடத்தில் தான் கொண்டிருந்த நாட்டத்தை இழந்து, முறையற்ற செயல்கள் பல செய்து தீய வினைகளை சேர்த்துக் கொள்கின்றன. எனவே உயிர்கள் தங்களது நன்மை கருதி இவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். வளி=காற்று; நிறுவிய=நிலைபெறச் செய்து; வளி நிறுவிய=பிராணவாயுவை நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும் பிராணாயாமம்: இத்தகைய மூச்சுப் பயிற்சி அவசியம் வேண்டும் என்று, தற்போது உலகினில் பரவியுள்ள கொரோனா நோய்த் தடுப்பிற்கு உதவும் என்றும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நுரையீரல் சீரடைய உதவும் என்றும் இந்நாளைய மருத்துவர்களால் கருதப் படுகின்றது. மனனுணர்வு=மனம்+உணர்வு=இறைவன் பற்றிய சிந்தை உடையவர்களாய் ஒன்றிய மனத்துடன் தியானித்தல்; மிசையெழு=உள்ளத்தில் தோன்றுகின்ற; தனது எழில் உருவது கொடு=தனது உருவத்தினைப் போன்று உருவம் அளித்தருளும், சாரூபம் பதவி அளித்து அருள் புரியும்; சாரூபம் என்பதற்கு, கழுத்தினில் உள்ள நீலநிறத்து கறையும், சடையினில் உள்ள கங்கை நதியையும் தவிர்த்த மற்ற அடையாளங்களுடன் சிவபெருமானை போன்று திகழ்தல் என்று தருமபுர ஆதீனத்து குறிப்பு தெரிவிக்கின்றது. மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்து என்று விநாயகர் அகவலில் ஔவை பிராட்டியார் குறிப்பிடுவது போன்று, மூலாதாரத்து கனலை படிப்படியாக உயர்த்தி ஆறு ஆதாரங்களுக்கும் அப்பால் இருக்கும் சகஸ்ரதளம் செல்லவைத்து, ஆங்கே குவிந்து கிடக்கும் மலரை நிமிர்த்தும் செயலில் உயிர் வெற்றி அடைந்தால்,ஆங்கே ஞானப் பிழம்பாக இறைவன் தோன்றுவான் என்று கூறுவார்கள். அந்த நிலையைத் தான், மலர் மிசை எழுதரு பொருள் என்று குறிப்பிடுவதாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. கனம்=மேகம்;
சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொரு ணியததமு முணர்பவர்
தனதெழி லுருவது கொடுவடை தகுபர னுறைவது நகர்மதிள்
கனமரு வியசிவ புரநினை பவர்கலை மகள்தர நிகழ்வரே
வீழிமிழலை தலத்தின் மீது திருஞானசம்பந்தரால் அருளப்பட்ட பதிகத்தினை (1.20) மகிழ்ச்சியுடன் ஓதும் அடியார்கள், கலைமகள் திருமகள் செயமகள் புகழ்மகள் ஆகியோர் தம் பால் பொருந்த உலகினில் இனிதாக வாழ்வார்கள் என்று கூறுகின்றார். மூன்று தேவியர்கள் பற்றிய குறிப்பு காணப்படும் ஒரே தேவாரப் பதிகம் இது தான்.
சினமலி கரி உரி செய்த சிவன் உறைதரு திரு மிழலையை மிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ் விரகனது உரை ஒரு பதும்
மன மகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மகள் இசை தர இருநிலனின் இடை இனிது அமர்வரே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (1.124.3) வீழிமிழலை தலத்தினை, அந்த தலத்தினில் உறையும் பெருமானை நினைக்கும் அடியார்கள் கலைமகளின் அருளுடன் சிறந்த கல்விச் செல்வம் பெற்று விளங்குவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கலைமகளின் தலைமகன் என்று பலரும் போற்றப்படும் வண்ணம் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று கூறுகின்றார்.
கலைமகள் தலைமகன் இவன் என வருபவர்
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
இலைமலி இதழியும் இசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினைய வலவரே
தக்கன் சிவபெருமானை புற்க்கணித்து முன்மாதிரியாக செய்ய நினைத்த வேள்வியில் கலந்து கொண்டதற்காக கலைமகளின் மூக்கு வீரபத்திரரால் அரியப்பட்டது என்று திருஞானசம்பந்தர் புகலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.122.5) குறிப்பிடுகின்றார். நாமகள் என்பது கலைமகளுக்கு மற்றொரு பெயர். இந்த பாடலில் கலைமகளை நாவினாள் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பிரமனின் நாவில் அமர்ந்திருப்பதால் நாமகள் என்ற பெயர் வந்தது. வார்கிடங்கு=ஆழம் நிறைந்த அகழி;
ஏவிலாரும் சிலைப் பார்த்தனுக்கு இன்னருள் செய்தவர்
நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடமாவது
மாவிலாரும் கனி வார்கிடங்கில் விழ வாளை போய்
பூவிலாரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே
கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.118.5) கலைவாணியின் மூக்கு தக்க யாகத்தில் அரியப் பட்ட நிகழ்ச்சியை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பிரமனும் திருமாலும் தக்க யாகத்தில் பங்கேற்றதற்காக தண்டனை ஏதும் பெறவில்லை என்று அப்பர் பிரானும் மணிவாசகரும் குறிப்பிடுகின்றன்ர். எனவே சுருதியான் தலை என்று வேள்வித் தலைவனின் தலை அரியப்பட்டது என்று பொருள் கொள்வது பொருத்தம். வேள்வி செய்து வைப்பவர் தகுந்த ஒருவரை வேள்வித் தலைவனாக நியமிப்பார். இவரை பிரமன் என்று கூறுவார்கள். இவரது கடமை, வேள்வி தகுந்த முறையில் நடைபெறுகின்றதா என்பதை கண்காணித்து, தவறு ஏற்பட்டால் திருத்த வேண்டியது. தருமபுத்திரர் நடத்திய இராஜசூய யாகத்தின் வேள்வித் தலைவனாக,கண்ணன் நியமிக்கப் பட்டதை நாம் அறிவோம். தற்காலத்தில் நடைபெறும் வேள்வி மற்றும் ஹோமங்களிலும், நன்கு கற்றுத் தேர்ந்தவரை பிரமனாக நியமிக்கின்றனர். பிரமனாக நியமிக்கப்படும் எவரும், அந்த வேள்வி முடியும் வரையில் தனது இடத்தினை விட்டு நகராமல் வேள்வி நடைபெறுவதை கவனித்து திருத்தங்கள் தேவைப்பட்டால் அவற்றை சுட்டிக்காட்டி, தவறுகளை திருத்தவேண்டும். அவ்வாறு எவரையும் வேள்வித் தலைவனாக நியமிக்க முடியாதபோது, ஒரு கூர்ச்சத்தை பிரமனாக பாவித்து வேள்வியை தற்காலத்தில் நடத்துகின்றனர். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள நியதிக்கு மாறாக வேள்வி நடத்தப்படுவதை கண்டித்து நிறுத்த வேண்டிய கடமையிலிருந்து தவறியதற்காக, தக்க யாகத்தின் வேள்வித் தலைவனை பெருமான் தண்டிக்கின்றார். வேள்வியை சரியாக நடத்த வேண்டிய கடமையிலிருந்து தவறிய வேள்வித் தலைவனும், தவறான முறையில் வேள்வி நடத்த முயற்சி செய்த தக்கனும் ஒரே தன்மையில் தண்டனை அடைந்தனர் என்பதை நாம் உணரலாம். இந்த நிகழ்ச்சி, வேள்வி செய்வோருக்கும் வேள்வித் தலைவனுக்கும் வேள்வியை சரிவர நடத்துவதில் சமபங்கு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். நாமகள்=சரசுவதி. சுடரவன்=அக்னித்தேவன்; பரிதியான்=சூரியன்;விருதி= புகழ்; பயின்று=வழிவழியாக பயிலும், குரு சீடன் அவனது சீடன் என்று குரு சீடன் பரம்பரையாக பயிலப்பட்ட வேதம்;
சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரம் முன் இயங்கு
பரிதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அருளும் பரமனார் பயின்று இனிது இருக்கை
விருதி நான்மறையும் அங்கமோர் ஆறும் வேள்வியும் வேட்டவர் ஞானம்
கருதினார் உலகில் கருத்துடையார் சேர் கழுமல நகர் எனலாமே
திருவாசகம் திருவுந்தியார் பதிகத்தின் பாடலில் (8.14.13) தக்க யாகத்தில் பங்கேற்றதற்காக கலைமகளின் மூக்கு அரியப்பட்டது என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். சோமன்=சந்திரன்; சந்திரனின் முகம் தேய்க்கப் பட்ட செய்தி இங்கே குறிப்பிடப்படுகின்றது.
நாமகள் நாசி சிரம் பிரமன் படச்
சோமன் முகம் நெரித்து உந்தீபற
தொல்லை வினை கெட உந்தீ பற
திருவாசகம் தோணோக்கம் பதிகத்தின் பாடலிலும் (8.15.11) தக்க யாகத்தில் பங்கேற்றதற்காக கலைமகளின் மூக்கு அரியப்பட்டது என்று மணிவாசக அடிகளார் குறிப்பிடுகின்றார். தக்க யாகத்து நிகழ்ச்சியில் எவரது உயிரும் பறிக்கப்படவில்லை என்பதை நாம் உணரலாம். எனினும் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை அளிக்கப்பட்டு அனைவரும் தூய்மை செய்யப்பட்டனர் என்பதை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார்.
காமன் உடல் உயிர் காலன் பல் காய் கதிரோன்
நாமகள் நாசி சிரம் பிரமன் கரம் எரியைச்
சோமன் கலை தலை தக்கனையும் எச்சனையும்
தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ
சே=எருது, இடபம்; திண்=வலிமை; பெருமானது கொடியினை வலிமையான கொடி என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். எப்போதும் வெற்றியே பெறுகின்ற கொடி திண்கொடி என்று அழைக்கப் படுகின்றது. வாவி=நீர்நிலை; வண்கமலம்=செழிப்புடன் வளர்ந்த தாமரை மலர்கள்;
பொழிப்புரை:
இடப இலச்சினை தாங்கிய வெற்றிக் கொடியை உடைய சிவ்பெருமானின் திருவடிகளே தமக்கு சரண் என்று, தனது நாவில் அமர்ந்துள்ள சரசுவதி தேவியுடன் பிரமதேவன் பெருமனை சிறந்த அன்புடன் வழிபட்ட கோயில் கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்திலுள்ள திருக்கோயிலாகும். இந்த தலத்து மகளிரின் முகத்தை நினைவூட்டும் வகையில் குளங்கள் தோறும் செழுமையான தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன; மகளிரின் வாய் போன்று செங்கழுநீர் மலர்கள் காணப்படுகின்றன: காவி மலர்கள், கருங்குவளை மலர்கள் மற்றும் நெய்தல் மலர்கள், தலத்து மகளிரின் கண்கள் போன்று மலர்ந்துள்ளன. இத்தகைய இயற்கை காட்சிகள் கொண்டதும் அழகிய மகளிர் வாழ்கின்றதும் ஆகிய தலம் கழுமலம் ஆகும்.
பாடல் 2:
பெருந் தடங்கண் செந்துவர் வாய்ப் பீடுடைய மலைச்செல்வி பிரியா மேனி
அருந்தகைய சுண்ண வெண்ணீறு அலங்கரித்தான் அமரர் தொழ அமரும் கோயில்
தரும் தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும் இறைவனது தன்மை பாடிக்
கரும் தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப் பாட்டலரும் கழுமலமே
விளக்கம்:
பிரமனும் சரசுவதி தேவியும் வழிபட்ட திருக்கோயில் என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் பெருமானை தேவர்கள் வழிபட்ட செய்தியை குறிப்பிடுகின்றார். தடங்கண்=அகன்ற கண்; செந்துவர்=பவளம் போன்று சிவந்த வாய்; பீடு= பெருமை;அருந்தகைய=அருமையானது, பெறுதற்கு அரியது என்று கொண்டாடப்படும் திருநீறு; பூதி என்றால் செல்வம் என்று பொருள்; விபூதி என்றால் சிறந்த செல்வம் என்று பொருள். அனைத்துச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாக திருநீறு பண்டைய நாளில் மதிக்கப்பட்டமை இந்த பாடல் மூலம் புலனாகின்றது.இந்த காரணம் பற்றியே திருக்கோயிலில் நாம் பெறுகின்ற திருநீற்றினை அங்கேயே தூணில் சிந்திவிட்டு வாராமல், நமது இல்லத்திற்கு கொண்டு வந்து,நமது இல்லத்தில் வைத்திருக்கும் திருநீற்றுப் பேழையில் சேர்க்க வேண்டும். விபூதியை தரையில் சிந்துவது பெரிய பாவம். தரும் தடக்கை=பல வகையான தானங்கள் அளிக்கும் அந்தணர்களின் கை; மிகவும் அதிகமாக தானங்கள் வழங்கும் கை என்று உணர்த்தும் வண்ணம் அகன்ற கை என்ற பொருளில் தடக்கை என்று கூறினார் போலும். தானம் அளித்தல், தானம் வாங்குதல், வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேள்வி வளர்த்தல், வேள்வி செய்வித்தல் என்பன அந்தணர்களின் ஆறு கடமைகளாக பண்டைய நாட்களில் கருதப்பட்டன. இந்த பாடலில், திருஞான சம்பந்தர் இறைவனது தன்மைகளைப் புகழ்ந்து பாடிய வண்ணம் அந்தண மகளிர் கழற்சிக்காய் அம்மானை முதலிய ஆட்டங்கள் ஆடுவதாக கூறுகின்றார். இந்த குறிப்பு நமக்கு மணிவாசக அடிகளார் அருளிய திருவம்மானை பதிகத்தை நினைவூட்டுகின்றது. கழற்சிக்காய் என்பது வழுவழுப்பாகவும் உருண்டையாகவும் உள்ள கற்களைக் கொண்டு மேலே தூக்கிப் போட்டு பிடிக்கும் விளையாட்டு, இந்த விளையாட்டு சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றது.
பொழிப்புரை:
பெரியதும் அகன்றதும் ஆகிய கண்களை உடையவளும், பவளம் போன்ற சிவந்த வாயினை உடையவளும் மிகுந்த பெருமை படைத்தவளும் மலைச்செல்வியும் ஆகிய பார்வதி தேவியை விட்டுப் பிரியாத மேனியை உடைய பெருமான், மிகவும் அருமையானதாகிய திருநீறு கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்ளும் பெருமான், வானோர்கள் தொழ அமரும் திருக்கோயில் கழுமலம் தலத்தில் உள்ள திருக்கோயிலாகும். தமது அகன்ற கைகள் கொண்டு கை நிறைய தானம் வழங்குவோரும் மூன்று வகையான வேள்விகளைச் செய்வோரும் ஆகிய அந்தணர்களின் வீடுகள் தோறும் இறைவனது புகழத்தக்க பெருமைகளை பாடியவாறு, கருமையான அகன்ற கண்களை உடைய மகளிர், கழற்சிக்காய் மற்றும் அம்மானை ஆடுகின்ற காட்சிகள் நிறைந்த தலம் கழுமலமாகும்.
பாடல் 3:
அலங்கல் மலி வானவரும் தானவரும் அலைகடலைக் கடைய பூதம்
கலங்க எழு கடுவிடம் உண்டிருண்ட மணிகண்டத்தோன் கருதும் கோயில்
விலங்கல் அமர் புயல் மறந்து மீன் சனி புக்கு ஊன் சலிக்கும் காலத்தானும்
கலங்கல் இலா மனப் பெரு வண்கையுடைய மெய்யர் வாழ் கழுமலமே
விளக்கம்:
தலத்து அந்தணர்களின் கொடைத்தன்மையை சென்ற பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் தலத்து மக்களின் வள்ளல் தன்மையை குறிப்பிடுகின்றார். வண்=வள்ளல் தன்மை. அலங்கல்=மாலை; தானவர்=அசுரர்; விலங்கல்=மலைகள்; மலைகள் மேகங்களை தடுத்து குளிர்விப்பதால், மழை பொழிகின்றது என்று விஞ்ஞானம் உணர்த்துகின்றது. புயன்=மழை; மீன்= மகர ராசி; மகர ராசியில் சனி புகுந்தால் நாட்டில் வறட்சி நிலவும் என்றும் பஞ்சம் ஏற்படும் என்று சோதிட சாத்திரம் கூறுகின்றது. மாலைகள் அணிந்த வானவர்கள் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தேவர்கள் அணியும் மாலை வாடாது என்றும் அவர்களது கால்கள் நிலத்தில் பதியாது என்றும் அவர்களது கண்கள் இமையா என்றும் கூறுவார்கள். நளவெண்பா நூலில் இந்த தகவல்கள் கொண்டு, நளனைப் போன்று உருவம் தரித்து வந்திருந்த இந்திரன் உள்ளிட்ட நான்கு தேவர்களையும் தமயந்தி அடையாளம் கண்டு கொண்டாள் என்றும் அவர்களினும் மாறுபட்டவர் நளன் என்றும் புரிந்து கொண்டாள் புகழேந்திப்புலவர் கூறுகின்றார்.
கண்ணிமைத்தலால் அடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால் எண்ணி
நறுந்தாமரை விரும்பு நன்னுதலே அன்னாள்
அறிந்தாள் நளன் தன்னை ஆங்கு
பொழிப்புரை:
மலர்மாலைகள் அணிந்த தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்த போது, பூதங்களும் கலங்கும் வண்ணம் கொடிய ஆலகால விடம் பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த போது, தேவர்களையும் அசுரர்களையும் காக்க வேண்டி தானே உட்கொண்டு தனது கழுத்தினில் தேக்கியதால், கரிய மணி படர்ந்தது போன்ற கழுத்தினை உடையவனாக மாறியவன் பெருமான். இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமான், தனது உறைவிட்மாக கருதுவது கழுமலம் தலத்தில் உள்ள திருக்கோயில். மலைகள் மீது அமர்ந்து மழை பொழியும் மேகங்கள் மழை பொழிய மறக்கும் காலத்திலும், மகர ராசியில் சனி கோள் புகுவதால் வறட்சி நிலவி உணவுப் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் உண்பதற்கு ஏதும் கிடைக்காமல் அவதியுறும் நேரத்திலும், மனம் கலங்காமல் தொடர்ந்து வள்ளல் தன்மையுடன் மக்களை காப்பாற்றும் பொருட்டு கொடுத்துச் சிவந்த கைகளை உடைய உண்மையாளர்கள் வாழ்வது கழுமலம் தலமாகும்.
பாடல் 4:
பாரிதனை நலிந்து அமரர் பயம் எய்தச் சயம் எய்தும் பரிசு வெம்மைப்
போரிசையும் புரம் மூன்றும் பொன்ற ஒரு சிலை வளைத்தோன் பொருந்தும் கோயில்
வரிசை மென்முலை மடவார் மாளிகையின் சூளிகை மேல் மகப் பாராட்டக்
காரிசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு எய்தும் கழுமலமே
விளக்கம்:
பாரிதனை=நிலவுலக மக்களை; நலிந்து=நலிவடையச் செய்து, வருத்தியும்; பரிசு=தன்மை; வெம்மை=கொடுமையான; இசையும்=நிகழ்த்தும்;பொன்ற=அழிய; சிலை=மேரு மலையாகிய வில்: வாரிசை=கச்சு பொருந்திய; சூளிகை=உச்சி; கார்=மேகங்கள்; காரிசையும்=மேகங்கள் பொருந்தும்;விசும்பு=ஆகாயம்; விசும்பியங்கும் கணம்=வானவெளியில் உலாவும் கந்தருவர்கள்; மடவார்= அழகும் இளமையும் ஒருங்கே பொருந்திய மகளிர்;பாராட்ட=தாலாட்டு பாடி பாராட்ட: தாலாட்டு பாடும் அன்னைமார்கள் தங்களது குழந்தைகளை கொஞ்சியும் பாராட்டியும் பாடுவதை இன்றும் நாம் காண்கின்றோம்.
பொழிப்புரை:
நிலவுலக மக்களை பலவிதமாக வருத்தியும், தேவர்களை அச்சமடையச் செய்தும், கொடிய போரினைச் செய்து வெற்றி பெறுகின்ற இயல்பினை உடைய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே சமயத்தில் அழிக்கும் பொருட்டு, மேருமலையாகிய வில்லை வளைத்து அம்பு எய்திய சிவபெருமான் பொருந்தி அமர்வது கழுமலத்தில் உள்ள திருக்கோயில் ஆகும். இந்த தலத்தினில், கச்சு பொருந்திய மிருதுவான மார்பகங்களை உடையோரும் அழகும் இளமையும் பொருந்தியவரும் ஆகிய மகளிர் மாடவீடுகளின் உச்சியில் நின்ற வண்ணம் தங்களது குழந்தைகளை இசைப்பாட்டு பாடி தாலாட்டுகின்றனர். மேகங்கள் உலாவும் வானவெளியில் பறந்து செல்லும் கந்தருவர்கள் இந்த தாலாட்டு பாட்டினை கேட்டு மகிழ்கின்றனர். இத்தகைய மகளிர் வாழும் தலம் கழுமலமாகும்.
பாடல் 5:
ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும்
நீர் நின்ற கங்கை நகு வெண்டலை சேர் செஞ்சடையான் நிகழும் கோயில்
ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளிமலை என்ன நிலவி நின்ற
கார்வண்டின் கணங்களால் கவின் பெருகு சுதைமாடக் கழுமலமே
விளக்கம்:
ஏர்=அழகு; வெண்மை நிறத்தில் சுண்ணம் அடிக்கப்பட்டு, உயர்ந்து நிற்கும் மாட வீடுகள் வெள்ளி மலை என்று சொல்லும் வண்ணம் கம்பீரமாக நிற்கின்றன என்று கூறுகின்றார். இசை=பொருந்தி; மன்னும்=நிலையாக பொருந்தி இருக்கும்; பிளவு பட்டு வாய் திறந்து இருப்பது போன்று காட்சி அளிப்பதால் சிரிக்கும் தோற்றத்தினைக் கொண்டுள்ள தலை என்பதை உணர்த்த நகுவெண்தலை என்று கூறுகின்றார் நிலையற்ற உலகம், என்றேனும் ஒரு நாள் அழியும் நிலையில் உள்ள உலகப்பொருட்கள், இந்த உலகத்தில் உள்ள உயிர்களும் பொருட்களும் தருகின்ற நிலையற்ற சிற்றின்பம் ஆகியவற்றை நிலையாக கருதி வாழும் மனிதர்களின் மடமை கண்டு ஏளனமாக, பெருமானின் சடையில் உள்ள மண்டையோடு சிரிப்பதாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.நிகழும்=எழுந்தருளியிருக்கும்;
பொழிப்புரை:
ஊர்ந்து செல்லும் தன்மை உடைய பாம்பு, ஒளி வீசும் ஒற்றைப் பிறைச் சந்திரன், வன்னி இலைகள், ஊமத்தை மலர்கள் ஆகியவயுடன், நிலையாக தங்கியிருக்கும் கங்கை நதி, வாய் பிளந்து சிரிக்கும் தன்மையில் காணப்படும் மண்டையோடு ஆகியவை ஒன்று சேரும் செஞ்சடை உடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் தலம் கழுமலம் ஆகும். இந்த தலத்தில் திகழும் மாட வீடுகள், கண்ணைப் பறிக்கும் அழகுடன் வெண்மை நிறத்தில் சுதையால் அமைந்து வெள்ளிமலை போன்று காட்சி அளிக்கின்றன. இந்த வீடுகளை அலங்கரிக்கும் நறுமணம் நிறைந்த புதிய மலர்களில் ஒழுகும் தேனைப் பருகும் பொருட்டு, கருவண்டுகள் சூழ்ந்து காணப்படுவது, இந்த வீடுகளுக்கு மேலும் அழகினை சேர்க்கின்றன.
பாடல் 6:
தரும் சரதம் தந்தருள் என்று அடி நினைந்து தழலணைந்து தவங்கள் செய்த
பெரும் சதுரர் பெயலர்க்கும் பீடார் தோழமை அளித்த பெருமான் கோயில்
அரிந்த வயல் அரவிந்தம் மதுவுகுப்ப அது குடித்துக் களித்து வாளை
கரும் சகடம் இளக வளர் கரும்பிரிய அகம் பாயும் கழுமலமே
விளக்கம்:
சரதம்=என்றும் நிலையான உண்மை, உயர்ந்த தத்துவப் பொருள்; பீடார்=பெருமை மிகுந்த; பெயல்=மழை; பெயலர்=மழையில் நனைந்த வண்ணம் தவம் செய்வோர்; தரும் சதுரம் என்று மெய்ஞ்ஞானியர்களுக்கு தருகின்ற சரதம் என்று பொருள் கொள்ளவேண்டும். சிந்தை தெளிவடையவும் உண்மையான மெய்ப்பொருள் பற்றி மேன்மேலும் அறிந்து கொள்ளவும் பெருமானின் அருள் தேவைப்படுகின்றது. ஒன்றிய மனத்துடன் பெருமானை தியானம் செய்யும் அடியார்கள் அத்தகைய அருள் பெறுகின்றனர். தாமும் அத்தகைய அருளினை பெற வேண்டும் என்று பலரும் தவத்தில் ஆழ்வது இங்கே குறிப்பிடப்படுகின்றது.
பொழிப்புரை:
ஒன்றிய மனத்துடன் பெருமானை தியானம் செய்து பெருமானின் அருளினால் சிந்தை தெளிவு பெற்று, உண்மையான மெய்ப்பொருள் பற்றி மேன்மேலும் தெரிந்து கொள்வதை உணரும் பலரும், தாமும் அத்தகைய அருளினை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், பெருமானது திருவடிகளை நினைந்த வண்ணம், தீயினில் நின்றும் மழையினில் நனைந்தும், சுற்றுப்புறச் சூழலை பொருட்படுத்தாமல் தமது புலன்களை அடக்கி தவம் செய்கின்றனர். இந்த தவசிகளுக்கு பெருமை மிகுந்த தனது நட்பினை அளித்து கருணை புரியும் பெருமான் உறைவது கழுமலம் தலத்திலுள்ள திருக்கோயிலாகும். அறுவடை செய்த வயல்களில் முளைத்தெழுந்த தாமரை மலர்களிலிருந்து ஒழுகும் தேனைப் பருகிக் களித்த வாளை மீன்கள் துள்ளிக்குதித்து விளையாடுவதால், வயல் வரப்புகளில் நிற்கும் பெரிய கருவண்டுகள் நிலைபெயர்ந்து ஓடுகின்றன; அருகிலுள்ள வயல்களின் கரும்பு ஒடிந்து விழுகின்றன. இத்தகைய நீர்வளமும் நிலவளமும் கொண்டது கழுமலம் தலம்.
பாடல் 7:
புவி முதல் ஐம்பூதமாய்ப் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய்க் கரணம் நான்காய்
அவையவை சேர் பயனுருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில்
தவ முயல்வோர் மலர் பறிப்பத் தாழவிடு கொம்பு உதைப்பக் கொக்கின் காய்கள்
கவண் எறிகல் போல் சுனையில் கரை சேரப் புள் இரியும் கழுமலமே
விளக்கம்:
சென்ற பாடலில் தவசிகளின் தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அத்தகைய தவசிகள் இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்யத் தேவையான மலர்கள் பறிப்பதை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தான் கண்டு மகிழ்ந்த இயற்கை காட்சிகளை படம் பிடித்து காட்டுவது போன்று மிகவும் அழகாக விவரிப்பதில் திருஞானசம்பந்தருக்கு இணை வேறெவரும் இல்லை என்றே சொல்லலாம். கிளைகளை கீழெ இழுத்து மலர்கள் பறித்தபின்னர் விடுவதால் ஏற்படும் விளைவுகளை குறிப்பிடுவது நமக்கு நனிபள்ளி தலத்தின் பாடலை (2.84.3) நினைவூட்டுகின்றது. பெறுமலர்=தங்களுக்கு கிடைத்த மலர்கள், இறைவனை வழிபடுவதற்கு பயன்படுத்தப்படும் மலர்கள் என்பதால், நலங்கள் பெற்றுத் தரும் மலர்கள் என்பதை உணர்த்த பெறுமலர் என்று குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே; ஒழியாது=இடைவிடாது; வெறுமலர்= தேன் இல்லாமல் வெறுமையாக இருக்கும் மலர்கள்;காளை=தலைவன்; தங்களுக்கு கிடைத்த மலர்களைக் கொண்டு இடைவிடாது தொண்டர்கள் வழிபாடு செய்ய, அதனை ஏற்றுக்கொண்ட பெருமான்,விடத்தை தேக்கியதால், கருங்குவளை மலர் படிந்தது போன்று கழுத்தினில் கருமை நிறம் படைத்தவராக உள்ளார். விடத்தினை உண்டு தனது ஆண்மையை உலகுக்கு உணர்த்திய பெருமான், அனைவர்க்கும் தலைவனாகவும் விளங்குகின்றார். அத்தகைய பெருமான் மிகுந்த விருப்பத்துடன் தனது உறைவிடமாக ஏற்றுக் கொண்டுள்ள இடம் நனிபள்ளி தலமாகும். எண்ணற்ற வண்டுகள் தேன் நுகர்ந்ததால் தேன் இல்லாமல் வெற்று மலர்கள் நிறைந்த கொம்புகள் உடைய மரங்கள், அந்த வண்டுகள் அமர்ந்ததால், வண்டுகளின் பாரம் தாங்காமல் கீழே தாழ்ந்து இருந்தன. வண்டுகள் பறந்து சென்றதும் அந்த கிளைகள் மேலேழுந்து செல்ல, அவ்வாறு மேலெழுந்து செல்வதால் ஏற்படும் அதிர்வினில் அரும்பாக இருந்த பல மலர்கள் மலர்வதால், அவ்வாறு புதியதாக மலர்ந்த பூக்களின் நறுமணம் எங்கும் பரவ, அந்த நறுமணத்தால் கவரப்பட்ட வண்டுகள் வந்து அவ்வாறு மலர்ந்த பூக்களில் பொருந்தி தேன் உண்ட களைப்பில் உறங்கும் இதழ்களைக் கொண்ட மலர்கள் கொண்ட சோலைகள் நிறைந்துள்ள தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான்
கறு மலர் கண்டமாக விடம் உண்ட காளை இடமாய காதல் நகர் தான்
வெறுமலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடுபோது அலர்த்த விரை சூழ்
நறுமலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கு நனிபள்ளி போலும் நமர்காள்
மலர் பறிப்பதற்காக கீழே இழுக்கபட்ட கிளைகள் விடுபட்டவுடன் வேகமாக மேலே சென்று, அருகிலிருந்து மாமரத்தின் கிளைகளை தாக்க, அந்த கிளைகளிருந்து மாங்காய்கள் கவண் காய்கள் போன்று கீழே சுனையில் விழ, சுனையில் இருந்த பறவைகள் பயந்து கரை சேர்கின்றன என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். புதைப்ப=சென்று பொருந்த; கொக்கு= மாமரம்; புவி முதல் ஐந்து=நிலம் நீர் காற்று தீ ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள்; புலன் ஐந்து=சுவை, ஒளி, நாற்றம், ஒலி மற்றும் தொடு உணர்வு ஆகிய ஐந்து தன்மாத்திரைகள்; நிலன் ஐந்து=இந்த ஐந்து தன்மாத்திரைகள் அமர்வதற்கு இடமாக உள்ள மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து அறிவுக் கருவிகள் (ஞானேந்திரியங்கள்); கரணம் நான்கு=மனம் புத்தி சித்தம் மற்றும் அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்கள்; மேற்கண்ட தத்துவங்களோடு தொடர்பு கொண்டுள்ள ஐந்து தொழிற்கருவிகளும்(கன்மேந்திரியங்களையும்) கை கால் வாய் எருவாய் கருவாய் இங்கே குறிப்பிடப்படுவதாக கருதி நாம் பொருள் கொள்ள வேண்டும். இந்த இருபத்து நான்கு தத்துவங்களாகவும், அவற்றின் பயனாகவும், அவற்றின் உருவமாகவும் உள்ள இறைவன், அருவமாகவும் இருக்கின்றான் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. அல்ல உரு=அருவம் அல்லாத அருவம்; ஐந்து பூதங்களின் பயன் ஐந்து தன்மாத்திரைகள்; ஐந்து புலன்களின் பயன், காண்டல், கேட்டல்,நுகர்தல், பேசுதல் மற்றும் உணர்தல்; அந்தக்கரணங்களின் பயன், நினைத்தல், முடிவு செய்தல், சிந்தித்தல் மற்றும் முடிவினை செயல்படுத்த துணிந்து எழுதல் என்பன.
பொழிப்புரை:
நிலம் நீர் தீ காற்று ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களாகவும், சுவை ஓளி நாற்றம் ஒலி மற்றும் தொடு உணர்வு ஆகிய ஐந்து தன்மாத்திரைகளாகவும்,மேற்குறிப்பிட்ட தன்மாத்திரைகள் அமர்கின்ற நிலைக்கலன்கள் என்று சொல்லப்ப்டும் கண் மூக்கு வாய் செவி தோல் ஆகிய ஐந்து அறிவுக் கருவிகளாகவும்,மனம் சித்தம் புத்தி அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்களாகவும் மேற்கண்ட தத்துவங்கள் சேர்கின்ற பயனாகவும் இருக்கின்ற இறைவன்,உருவமாகவும் அருவமாகவும் இருக்கின்றான். அத்தகைய இறைவன் அமர்கின்ற திருக்கோயில் கழுமலம் தலத்தில் உள்ள திருக்கோயிலாகும். பெருமானை தியானித்து தவம் செய்ய முயல்வோர், இறைவனை அர்சித்து வழிபடும் பொருட்டு கிளைகளை கீழே இழுத்து மலர்கள் பறித்ததன் பின்னர், விடப்படும் கிளைகள் மேலே எழும்பி நிமிர்ந்து தாக்குதலால் மாங்காய்கள் கிளைகளிலிருந்து விடுபட்டு வேகமாக கீழே விழ, அவ்வாறு வேகமாக விழுகின்ற காய்கள் கவண் கல்லிலிருந்து விசப்படும் கல் போன்று அருகிலுள்ள சுனைகளிலும் நிலத்திலும் வீழ்வதால், ஆங்குள்ள பறவைகள் அச்சமடைந்து அகந்று கரை சேர்கின்ற காட்சிகள் கொண்ட தலம் கழுமலம்.
பாடல் 8:
அடல் வந்த வானவரை அழித்து உலகு தெழித்து உழலும் அரக்கர் கோமான்
மிடல் வந்த இருபது தோள் நெரிய விரல் பணி கொண்டோன் மேவும் கோயில்
நடவந்த உழவர் இது நடவொணா வகை பரலாய்த் தென்று துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்த வயல் கரை குவிக்கும் கழுமலமே
விளக்கம்:
அடல்=வலிமை; அடல் வந்த=வலிமையுடன் சண்டைக்கு வந்த; அழித்து=கொன்றழித்து; உழலும்= திரியும்; தெழித்து=அச்சுறுத்தி; மிடல்=வலிமை;பரல்=பருக்கைக்கல், பருத்த கற்கள்; துன்று= நெருங்கிய; நடவொணா=நாற்று நடுவதற்கு இடையூறாக; தன்னுடன் சண்டைக்கு வந்த பலரையும் அரக்கன் இராவணன் வெற்றி கொண்டதைக் கண்டு இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அச்சம் கொண்டு ஓடி ஓளிந்தனர்.
பொழிப்புரை:
தன்னுடன் சண்டையிட வந்த, வலிமை வாய்ந்த பல தேவர்களை கொன்றழித்தும், ஏனைய தேவர்களையும் உலகத்தவரையும் அச்சுறுத்தி மூவுலகங்களிலும் திரிந்த அரக்கர்கள் தலைவன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தபோது, அவனது வலிமை வாய்ந்த இருபது தோள்களும் கயிலாய மலையின் கீழே அகப்ப்ட்டு நெரியும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றிய சிவபெருமான் பொருந்தி உறைகின்ற திருக்கோயில் கழுமலம் தலத்தில் உள்ள திருக்கோயிலாகும். நாற்று நடவந்த உழவர்களுக்கு இடையூறாக இருக்கும் பரற்கற்கள் போன்று தோற்றம் அளிக்கும் வண்ணம், கடல் அலைகளால் அடித்துக் கொண்டுவரப்படடு கரையினில் சேர்க்கப்பட்ட சங்குகளும் முத்துக்களும் பரவலாக வயல்களில் காணப்படும் தலம் கழுமலமாகும்.
பாடல் 9:
பூமகள் தன் கோன் அயனும் புள்ளினோடு கேழல் உருவாகிப் புக்கிட்டு
ஆமளவும் சென்று முடி அடி காணா வகை நின்றான் அமரும் கோயில்
பா மருவும் கலைப்புலவோர் பன் மலர்கள் கொண்டு அணிந்து பரிசினாலே
கா மனைகள் பூரித்துக் களி கூர்ந்து நின்றேத்தும் கழுமலமே
விளக்கம்:
புள்=பறவை, இங்கே அன்னம் என்று பொருள் கொள்ள வேண்டும்; கேழல்=பன்றி; ஆமளவும்= தம்மால் முயன்ற வரையிலும்; கா மனை=ஆசை பூரித்து விளங்கும் இல்லங்கள்; பரிசு=தன்மை; இறைவனை பாமாலை கொண்டும் பூமாலை கொண்டும் அணிவித்து அழகு பார்த்து வழிபட்ட அடியார்கள், அதன் பயனாக பல நலன்கள் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்த தன்மை குறிப்பிடப் படுகின்றது. கலைப் புலவோர்=கலைகளை அறிந்த புலவர்கள்;மருவும்=பொருந்தியுள்ள;
பொழிப்புரை:
மலர்மகளின் தலைவனாகிய திருமாலும் பிரமனும், முறையே பன்றியாக, அன்னப் பறவையாக, வடிவம் எடுத்து, தங்களால் முயன்ற அளவு ஆழ்ந்து தோண்டியும் பறந்தும் சென்ற போதிலும், அவர்களால் தனது அடியையோ முடியையோ காண முடியாத வண்ணம் நீண்டுயர்ந்த அனற் பிழம்பாக நின்ற பெருமான் அமர்கின்ற திருக்கோயில் உள்ள தலம் கழுமலமாகும். பலவகையான இலக்கியங்களில் விரிவாக எடுத்துச் சொல்லப்படும் கலைகளைக் கற்றுத் தேர்ந்த புலவர்கள், பாமாலை கொண்டும் பூமாலை கொண்டும் இறைவனை அழகுபடுத்தி வழிபடும் தன்மையால், அவர்களது முறையான விருப்பங்கள் ஈடேறக்கண்டு மகிழும் அவர்களது இல்லத்தாரும் இறைவனை புகழ்ந்து வழிபடுகின்றனர். இத்தகைய இல்லங்கள் நிறைந்த தலம் கழுமலமாகும்.
பாடல் 10:
குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்று கையில்
உணல் மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையும் கோயில்
மணம் மருவும் வதுவை ஒலி விழவினொலி இவை இசைய மண் மேல் தேவர்
கணமருவு மறையின் ஒலி கீழ்ப்படுக்க மேற்படுக்கும் கழுமலமே
விளக்கம்:
உணல் மருவும்=உணவு உட்கொண்டு வாழும்; பூசுரர் என்ற வடமொழிச் சொல்லினை மண்மேல் தேவர் என்று தமிழ்ப் படுத்தியமை ரசிக்கத் தக்கது. சுரர் என்றால் தேவர்கள் என்று பொருள். வேதம் ஓதும் அந்தணர்கள் சிறப்பாக மதிக்கப்பட்ட தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. திருவிழா மற்றும் மணவிழா ஆரவாரங்கள் நிறைந்த தலம் சீர்காழி என்று கூறப்படுகின்றது. வதுவை=தாலி கட்டும் திருமணச் சடங்கு என்று தருமபுர ஆதீனக்குறிப்பு உணர்த்துகின்றது; குணம்=நற்குணம்; புத்தர்களும் சமணர்களும் உணராத வகை நின்றான் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற திருவாசகத் தொடர் உணர்த்துவது போன்று பெருமானின் அருள் இருந்தால் தான் அவனை நாம் வணங்க வேண்டும் என்ற எண்ணமும் நமக்குத் தோன்றும். இந்த பிறவியில் நாம் எதிர் கொள்கின்ற நன்மைகளும் தீமைகளும், இதற்கு முன்னம் நாம் பல பிறவிகளில் ஈட்டிய வினைகளுக்கு ஈடாகவே நடக்கின்றன. இவ்வாறு பல பிறவிகளில் நாம் ஈட்டிய வினைகளின் பயனை இன்பமாகவும் துன்பமாகவும் நாம் நுகர்ந்து கழிப்பதே,இறைவன் நம் பால் கருணை கொண்டு நமது வினைகளையும் வினைகளுக்கு மூல காரணமாக விளங்கும் மலங்களையும் சிறிது சிறிதாக கழித்துக் கொள்வதற்காக வகுத்த வழியாகும். எனவே இந்த பிறவியில் எவரேனும் பெருமானை வணங்க முடியாமல் இருக்கின்றனர் என்றால், அதற்கு அவர்களது வினைகளே மூல காரணம் என்பதையும், இவ்வாறு வினைகள் இருப்பதும் இறைவன் வகுத்த நியதியின் வழியே நடக்கின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். இந்த செய்தியைத் தான் உணராத வகை நின்றான் என்ற தொடர் மூலம் இங்கே குறிப்பிடுகின்றார். தேவர்=உயர்ந்தவர்கள்,
புத்தர்களும் சமணர்களும் பொய்த்தவம் செய்கின்றனர் என்றும் தாம் செய்யும் பொய்த்தவத்தை மெய்த்தவமாக ஏனையோர் கருதும் வண்ணம் செயல் புரிபவர் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அப்பர் பிரான் மற்றும் திருஞானசம்பந்தர் வாழ்ந்து வந்த காலத்தில் சமண் மற்றும் புத்தத் துறவிகள் புரிந்து வந்த தவத்தின் தன்மையை உணர்த்தும் சில பாடல்களை நாம் இங்கே காண்போம். வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.39.10) சமணர்கள் பொய்த்தவம் அனுசரித்தனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அத்தமண்=அத்தம்+மண், செந்நிற காவி மண்; யாதும் அல்லா உரை=பொருள் ஏதுமில்லாத உரை; மூரி=வலிமை; செந்நிற காவி மண் தோய்ந்த ஆடைகளை அணிந்த புத்தர்கள் மற்றும் சமண் குண்டர்கள் ஆகியோர்,பொருளற்ற சொற்களையே பேசி, பொய்யான தவத்தினை அனுசரித்து, பெருமானின் தன்மைகளை பண்புகளை திரித்து பேசுகின்றனர். உலகத்தவரே,அத்தகைய வார்த்தைகளை பொருட்படுத்தாமல் புறக்கணிப்பீர்களாக. வெண்முத்து போன்ற புன்னகையை உடைய உமையன்னை அஞ்சும் வண்ணம்,தன்னை எதிர்த்து வந்த மதயானையின் வலிமையை அடக்கி அதன் இரத்தப்பசை உடைய தோலினைத் தனது உடல் மீது போர்வையாக போர்த்த திறமையாளரும் வேதமுதல்வரும் ஆகிய பெருமான் வேட்கள நன்னகரில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அத்தமண் தோய் துவரார் அமண் குண்டர் யாதும் அல்லா உரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவது அல்லால் புறனுரை யாதொன்றும் கொள்ளேல்
முத்தன வெண்முறுவல் உமை அஞ்ச மூரி வல்லானையின் ஈருரி போர்த்த
வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன்னகராரே
கழுமலம் (சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.79.10) சமணர்கள் செய்யும் தவத்திற்கும் முனிவர்கள் செய்யும் தவத்திற்கும் உள்ள வேறுபாட்டினை திருஞானசம்பந்தர் விளக்குகின்றார். ஆம்பல தவம் என்று சமணர்கள் செய்து வந்த தவத்தினை குறிப்பிடுகின்றார். அதாவது தங்களால் இயன்ற வரையில் உடலை வருத்திக் கொள்ளும் தவம்; தங்களது உணவுத் தேவையைக் குறைத்துக் கொள்ளாமல்,ஐந்து புலன்களை அடக்காமல் செய்யப்படும் தவம். ஆனால் முனிவர்கள் செய்து வந்த தவமோ, உணவையும் வெறுத்து தங்களது உடலினை பல வகையிலும் வருத்திக் கொண்டு, இறைவனைப் பற்றிய நினைப்பைத் தவிர்த்து வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் செய்யப்படும் தவமாக விளங்கியதை நாம் புராணங்கள் மூலம் அறிகின்றோம். கணிசேர்=எண்ணத்தகுந்த; நோம் பல தவம்=துன்பங்களைத் தரும் தவம்;
ஆம்பல தவம் முயன்று அறவுரை சொல்லும் அறிவிலாச் சமணரும் தேரரும் கணிசேர்
நோம்பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனிச்
சாம்பலும் பூசி வெண்டலை கலனாகத் தையலார் இடும் பலி வையகத்து ஏற்றுக் காம்பன தோளியொடு இனிதுறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசறுமே
சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.125.10) அறத்திற்கு புறம்பான மொழிகளைப் பேசுவோர் என்று சமணர்களை குறிப்பிடுகின்றார்.புறவுரை=அறத்திற்கு புறம்பான உரைகள்; வித்தகம்=சிறந்த; மெய்த்தக=உண்மையாக; சமணர்கள் புரிகின்ற தவம் பொய்த்தவம் என்பதை உணர்த்த,பெருமானின் அடியார்கள் செய்வது மெய்த்தக வழிபாடு என்று இங்கே திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
புத்தரொடு அமணர்கள் அறவுரை புறவுரை
வித்தகம் மொழிகில விடையுடை அடிகள் தம்
இத்தவம் முயல்வுறில் இறைவன் சிவபுரம்
மெய்த்தக வழிபட விழுமிய குணமே
திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் (2.23.10) திருஞானசம்பந்தர் சமணர்கள் மற்றும் புத்தர்களை பொய்த்தவத்தர் என்று குறிப்பிடுகின்றார்,இந்த பாடலில் புத்தர் பலர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். புறச்சமயங்கள் ஆறு என்று சைவ சித்தாந்தம் பாகுபாடு செய்கின்றது. சமண சமயங்களில் இரண்டு பிரிவுகளையும் புக்த சமயங்களின் நான்கு பிரிவுகளையும் சேர்த்து ஆறு புறச்சமயங்கள் என்று கூறுவர். ஆசீவகம் நிகண்டவாதம் என்ற இரு பிரிவுகள் சமண சமயத்தைச் சார்ந்தவை. ஆசீவகப் பிரிவு வெண்மை நிறத்து ஆடையை உடுத்துவதை ஏற்கும். இரண்டாவது பிரிவு, ஆடையே உடுத்தலாகாது என்று கூறும். இரண்டாவது வகையே தென்னாட்டினில் பரவி அமணம் என்று பெயர் பெற்றது. புத்த சமயத்தின் நான்கு பிரிவுகள்,மாத்தியமிகம், யோகாசாரம், வைபாடிகம், சௌராந்திரகம் என்பன. இந்த பிரிவுகளின் கொள்கை வேறுபாடுகள் சிவஞானசித்தியார் பரபக்கம் பகுதியில் சொல்லப் பட்டுள்ளன. இந்த பிரிவுகளையே புத்தர் பலர் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வழிபாட்டு முறையின் வகையில் ஈனயானம் மகாயானம் என்று இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. ஓர்தல்=ஆராய்ந்து உணர்தல்;
புத்தர் பலரோடு அமண் பொய்த் தவர்கள்
ஒத்தவ் வுரை சொல்லி இவை ஓரகிலார்
மெய்த்தேவர் வணங்கும் வெண் நாவலுளாய்
அத்தா அருளாய் எனும் ஆயிழையே
கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.68.10) திருஞானசம்பந்தர், தாம் தரும நெறியில் நிற்பது போன்று காட்டிக்கொள்ளும் சமணர்கள் என்று குறிப்பிடுகின்றார். மேலும் இந்த பாடலில் பெருமானை வேடம் பலபல காட்டும் விகிர்தர் என்று அழைக்கின்றார். அறம் காட்டும் அவர்கள்=தாம் தரும நெறியில் நிற்பது போன்று காட்டிக் கொள்ளும் சமணர்கள்; அவர்களது தோற்றம் புறத்தோற்றமே அன்றி அகத்தில் உண்மையில் தருமநெறியினை பின்பற்றாதவர்களாக சமணர்கள், அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்தமை பெரியபுராணத்தில் பல இடங்களில் சுட்டிக் கட்டப்பட்டுள்ளது.சோடை=வறண்ட நிலை; பொருளற்ற பேச்சுகள்;
ஆடை தவிர்த்து அறம் காட்டும் அவர்களும் அந்துவராடைச்
சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர்
வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேத முதல்வன்
காடதனின் நடம் ஆடும் கண்ணுதலான் கடம்பூரே
திருப்பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.69.10) திருஞானசம்பந்தர், புத்தர்கள் மற்றும் சமணர்கள் ஆகிய இருவரும் பொய்யான மொழிகளையே பேசுவார்கள் என்றும் உண்மையான தவம் குறித்து பேச மாட்டார்கள் என்றும் கூறுகின்றார். சிவபெருமானை வழிபடுவதே உண்மையான தவம் என்று பல திருமுறை பாடல்கள் எடுத்துரைக்கின்றன. எனவே சிவபெருமானை நிந்தனை செய்து வாழ்ந்த சமணர்கள் மற்றும் புத்தர்கள் செய்த தவத்தினை மெய்த்தவம் அல்ல என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகிறார்.
புத்தரும் புந்தியிலாத சமணரும் பொய்ம்மொழி அல்லால்
மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபலவற்றால்
சித்தரும் தேவரும் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு
பத்தர்கள் தாம் பணிந்து ஏத்தும் பாண்டிக் கொடிமுடியாரே
தவம் செய்வதாக தவத்திற்கு எதிர்மறையான பாவச் செயல்கள் புரியும் சமணர்கள் என்று சமணர்களையும் புத்தர்களையும் திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் வலஞ்சுழி தலத்து பதிகத்தின் பாடலாகும் (2.106.10). அவம்=தவத்திற்கு எதிர்மறையான பாவச்செயல்கள்; பெருமானை குறித்தும் இந்து சமயம் குறித்தும் பொய்யான கதைகளை இட்டுக்கட்டி, தவறான தகவல்களை மக்களிடையே பரப்பி வந்த பாவச் செயல்கள்; தேறன்மின்=பொருட்படுத்தாது நீக்குவீர்; மாறா நீர்=அதற்கு மாறாக; மறி உலாம்=மடிந்து மடிந்து வரும்; மருவிய=அணைந்த; பிறிவிலாதவர்=இடைவிடாமல் வழிபடும் அடியவர்;அளவறுப்பு=அளந்து அறிதல். அவர்கள் செய்து வரும் தவத்தின் இயல்பு கருதியும் தவறான தகவல்கள் அடங்கிய பொய்யான கட்டுரைகள் என்பதை உணர்ந்தும், அவர்களின் மொழிகளை பொருட்படுத்தாது நீக்குவீர் என்று உலகத்தவர்க்கு திருஞான சம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். ,
அறிவிலாதவன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார்
நெறி அலாதன கூறுவர் மற்றவை தேறன்மின் மாறா நீர்
மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப்
பிறிவிலாதவர் பெறு கதி பேசிடில் அளவறுப்பு ஒண்ணாதே
திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.121.10) திருஞானசம்பந்தர் ஆடையின்றி தெருவினில் திரிந்துண்ணும் இழிந்த தன்மை வாய்ந்த தவத்தினை மேற்கொள்ளும் சமணர்கள் என்று குறிப்பிடுகின்றார். கூறை=ஆடை; எரிந்து சொன்ன=கோபம் கொண்டு, பொறாமை கொண்டு;
உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்திடைத்
தெரிந்து தின்னும் சிறு நோன்பரும் பெருந் தேரரும்
எரிந்து சொன்னவ்வுரை கொள்ளாதே எடுத்து ஏத்துமின்
புரிந்த வெண்ணீற்று அண்ணல் பாதிரிப் புலியூரையே
புகலி தலத்தின் மீது பதிகத்தின் பாடலில் (3.3.10) தவம் அல்லாதவற்றை செய்யும் குற்றம் நிறைந்த அறிவினை உடையவர்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கணிகை=போலித் தனம்; கணிகையரின் சொற்களும் செயல்களும் அடுத்தவரை மயக்கும் நோக்கத்துடன் போலித் தன்மை உடையதாக இருக்கும். அது போன்றே சமணர்கள் மற்றும் புத்தர்கள் அந்நாளில் செய்த நோன்புகளும் போலித் தன்மை உடையதாக, சிவபெருமானின் அடியார்களை தம் வசம் இழுத்து, சைவநெறியினை அவர்கள் கைவிடும் வண்ணம் ஈர்ப்பதாக இருந்தது என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.செதுமதி=குற்றமுடைய அறிவு;
கையினில் உண்பர் கணிகை நோன்பர்
செய்வன தவமலாச் செதுமதியார்
பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத
மெய்யவர் அடி தொழ விரும்பினனே
வியந்தாய் வெள்ளேற்றினை விண்ணவர் தொழு புகலி
உயர்ந்தார் பெரும் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே
ஆலவாய்த் தலத்து அரசவையில், சமணர்கள் ஒரு கூட்டமாக சிறுவனாகிய திருஞான சம்பந்தரை நெருங்கியபோது, அரசி மங்கையரக்கரசியார் மிகுந்த கவலை கொண்டார். அப்போது, ஆலவாய் அரன் துணையாக இருக்கையில் சமணர்களுக்கு தான் எளியவன் அல்லேன் என்றும் தனக்கு எந்த கெடும் விளையாது என்றும் அரசியார்க்கு தெளிவு படுத்தும் வண்ணம் மானின் நேர்விழி என்று தொடங்கும் பதிகத்தினை பாடி, அரசியார் கவலை ஏதும் கொள்ள வேண்டாம் என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். இந்த பதிகத்து பாடல்களில் சமணர்கள் செய்து வந்த பல தவறுகளை திருஞானசம்பந்தர் சுட்டிக் காட்டுகின்றார். அத்தகைய பாடல் ஒன்றினில் (3.39.10) சமணர்களை பொய்த்தவம் புரிபவர்கள் என்று குறிப்பிடுகின்றார். தரித்தல்=சென்றடைதல்,தாங்குதல்; சமணர்களும் புத்தர்களும் நெருங்க முடியாத திருப்பாதங்கள் உடையவன் பெருமான் என்று கூறுகின்றார். இடுக்கே மடுத்து=இடுக்கண் புரிவதையே தொழிலாகக் கொண்டு; பொங்கு நூல்=நல்ல செய்திகளை குறிப்படும் நூல்கள்; அங்கதர்=வீண்பழி சொல்பவர், பொல்லாத பழிச்சொற்கள்;
தங்களுக்கும் அச் சாக்கியர்க்கும் தரிப்பொணாத நற்சேவடி
எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய்த்தவம்
பொங்கு நூல் வழி அன்றியே புலவோர்களைப் பழிக்கும் பொலா
அங்கதர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (3.39.6) திருஞானசம்பந்தர், சமணர்கள் அவமாகிய தவத்தினை புரிவோம் செயல்படுகின்றனர் என்று அவர்களின் தவத்தின் தன்மையை கூருகின்றார். சினகர்=ஜினகர் என்ற சொல் சினகர் என்று மாறியுள்ளது. அவர்களது கடவுள் ஜினன் என்று அழைக்கப் படுவதால் இந்த பெயர் வந்தது.
கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமணமா
சுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழி கொளா
அனகநந்தியார் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்
சினகருக்கு எளியேன் அலேன் திருவாலவாய் அரன் நிற்கவே
இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் (3.39.8) திருஞானசம்பந்தர் சமணர்களை பொய்தவம் புரிவோர் என்று கூறுகின்றார். அரக்கன் என்ற சொல்லுக்கு ஆர் என்ற மரியாதை விகுதி, இகழ்ச்சிக் குறிப்பினை வெளிப்படுத்தும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. தீப்போலி=தீ போன்று நிறம் உடையவன்; மிகை=மிகவும் அதிகமான செருக்கு; பணியக்கிலாது=பணிந்து புகழாது; குண்டிகை=நீர் எடுத்துச் செல்லும் பாத்திரம்; சீலம்=ஒழுக்கம்; சீலி=ஒழுக்கம் உடையவர்; நடந்து செல்லும் போது, நிலத்தில் கால் பதியும் அழுத்தத்தால் சிற்றுயிர்களுக்கு தீங்கு நேருமோ என்ற அச்சத்தினால் நடுக்கத்துடன் செல்லும் சமணர்கள் என்று குறிப்பிடுகின்றார். மேலும் தாங்கள் செல்லும் வழியில் இருக்கும் எறும்பு புழு சிறிய பூச்சிகள் ஆகியவற்றை, மயிற்பீலி கொண்டு பெருக்கித் தள்ளி., தவிர்த்த பின்னரே நடக்கம் பழக்கம் கொண்டிருந்த சமணத் துறவிகள், முன்னே சென்றவர் அடிச்சுவட்டை பின்பற்றி அடுத்தவர் நடப்பதும் அவர்களது ஒழுக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தமை இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது.
மேலெனக்கு எதிரில்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீப்
போலியைப் பணியக்கிலாதொரு பொய்த்தவம் கொடு குண்டிகை
பீலிகைப் கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன் அலேன் திருவால்வாய் அரன் நிற்கவே
விளமர் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.88.10) திருஞானசம்பந்தர், தவம் என்றால் என்ன என்பதை அறியாதவர்களாக சமணர்களும் புத்தர்களும் இருந்த நிலையை உணர்த்துகின்றார். ஒள்ளியர்=அறிவில் சிறந்தவர்கள்; கொள்ளிய=கொள்ளி போன்ற; கொள்ளிய களவினர்=நீறு பூத்த நெருப்பு போன்று,தவவேடம் பூண்ட வஞ்சகர்கள்; புத்தப் பள்ளி சமணப் பள்ளிகள் நடத்தும் குருமார்கள் சொல்லும் சொற்களை மெய்யான சொற்கள் என்று கருதாதீர் என்று எச்சரிக்கை விடுக்கும் பாடல்.
ஒள்ளியர் தொழுதெழ உலகினில் உரை செயும் மொழி பல
கொள்ளிய களவினர் குண்டிகை அவர் தவம் அறிகிலார்
பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவோடு பேணுவீர்
வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.39.2) அப்பர் பிரான், தவம் என்று எண்ணிக்கொண்டு தவறான வழியில் சமணர்கள் செயல்படுகின்றனர் என்று கூறுகின்றார். பீலி= மயிற்பீலி; வாலிய=வெண்மை நிறத்தது; தறிகள்=தடிகள்; ஆலியா=மகிழ்ந்தவாறு; சமணர்களோடு கூடியிருந்த போது அறிவில்லாமல் இருந்த நெஞ்சம், பெருமானை சரண் அடைந்த பின்னர் அழகிய நெஞ்சமாக மாறியது இங்கே உணர்த்தப் படுகின்றது.இராமயணக் காவியத்தில் வரும் வாலி திருவையாற்று இறைவனை வழிபட்டதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். வாலிய தறிகள் என்பதற்கு தறி கேட்டுத் திரியும் வாலிபர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். அடக்கி நன்னெறிப்படுத்துவார் எவரும் இன்றி, தங்களது விருப்பம் போன்று தீய வழிகளில் செல்லும் வாலிபர்கள் கெட்டழிவது போன்று, தானும் உண்மை நிலையினை அறியாமல் சமண நெறியினை பின்பற்றி கெட்டதாக கூறும் அப்பர் பிரான்,சமண நெறியினைத் சார்ந்து இருந்ததால் தான் எந்த பயனையும் அடையவில்லை என்று கூறுகின்றார்.
பீலி கை இடுக்கி நாளும் பெரியதோர் தவம் என்று எண்ணி
வாலிய தறிகள்போல மதியிலார் பட்டது என்னே
வாலியார் வணங்கி ஏத்தும் திருவையாறு அமர்ந்த தேனோடு
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்தவாறே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.3.11) அப்பர் பிரான், தவம் செய்வதாக சொல்லிக் கொண்டு பாவங்களை புரியும் சமணர்கள் என்று கூறுகின்றார். உடை உடுத்தாமல் இருத்தல் மற்றும் நீராடாமை சமணத் துறவிகளுக்கு உரிய நெறியாக கருதப் பட்டாலும், சமணப் பெண் துறவிகள் உடை அணிந்து வாழ்ந்தனர் என்பதை நாம் இந்த பாடலிலிருந்து அறிகின்றோம். சமணப் பெண் துறவிகள், ஆண் துறவிகளுக்கு சேவை செய்து வந்தனர். அத்தகைய சேவைகளில் ஒன்று தான் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. சமணசமய நூல்களைக் கற்றுத் தேர்ச்சி அடைவதால் மட்டுமே எவருமே சமண குருவாக மாற முடியாது. அவர்கள் பொறுமையின் எல்லையை சோதனை செய்து பார்த்த பின்னரே, அவர்கள் குருவாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். முடி பறித்தல் என்பது அத்தகைய ஒரு சோதனை. தலையில் உள்ள முடிகள் ஒவ்வொன்றாக, அடுத்தவரால் பிடுங்கப்படும் போது ஏற்படும் வலியினைப் பொறுத்துக் கொண்டு கண்களில் நீர் வெளிவராமல் இருக்கும் பக்குவத்தை அடைந்தவர்களே பொறுமையில் சிறந்தவர்களாக கருதப் படுவார்கள். கொன்றை மலர்கள் மலரும் பருவத்தில், அவை கொத்தாக மலர்ந்து மரத்தில் உள்ள இலைகளை மறைக்கும் அளவுக்கு, மிகவும் அதிக அளவினில் பூக்கும் என்ற செய்தியை, அப்பர் பிரான் இங்கே இலைகளை மறைக்கும் கொன்றை மலர்கள் என்று கூறுகின்றார்.
முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டித்
தலை பறிக்கும் தன்மையர்களாகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார்
மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதனழியச் செற்ற சேவடியினானை
இலை மறித்த கொன்றை அந்தாரான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
பொழிப்புரை:
நற்குணங்கள் இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவமாக கருதி மேற்கொள்வோரும் கையில் உணவினை ஏற்று நின்றவாறே உணவு உட்கொள்ளும் சமணர்களும் உணராத வகையில் நின்றவனாகிய பெருமான் உறைகின்ற திருக்கோயில் உள்ள தலம் கழுமலம் ஆகும். திருமண விழாக்களில் எழுகின்ற ஆரவாரம், திருவிழாக்களில் விளைகின்ற ஆரவாரம், ஆகிய இரண்டும் கலந்த ஓசை, தங்களது ஒழுக்கமான வாழ்க்கை முறையின் காரணமாக, நிலவுலகில் வாழும் உயர்ந்தவர்களாக கருதப்படும் அந்தணர்கள் ஓதுகின்ற வேத ஒலியை அடங்குமாறு செய்து அதனை விடவும் அதிகமாக ஒலிக்கும் தலம் கழுமலமாகும்.
பாடல் 11:
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்றன் கழல் மேல் நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன
சொற்றுணை ஓர் ஐந்தினோடு ஐந்து இவை வல்லார் தூமலராள் துணைவராகி
முற்றுலகம் அது ஆண்டு முக்கணான் அடி சேர முயல்கின்றாரே
விளக்கம்:
சொற்றுணை=ஓதுவோர்களுக்கு துணையாக இருந்து நற்பயன்களைத் தரும் சொற்கள் கொண்ட பாடல்கள்; பெருமானது தன்மையை புரிந்து கொண்டு,அவனைப் போற்றி வழிபடும் அடியார்களையே கற்றவர்கள் என்று திருமுறை ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.5.9) திருஞானசம்பந்தர் கற்றவர் தொழுதேத்த நின்றான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். இறைவனுக்கு ஆட்பட விரும்பும் நாம் முதலில் அவனது திருப்பாதங்களைத் தொழ வேண்டும் என்று, இந்த பதிகத்தின் முந்திய பாடலில் வழி காட்டும் திருஞானசம்பந்தர், அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பாடலில் கூறுகின்றார். நமது பேச்சுகள் அனைத்தும் அவனைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்றும் அவனது புகழினை அல்லால் வேறு எதனையும் நாம் பேசாமல் இருக்க வேண்டும் என்பதையும் இந்த பாடலில் கூறுகின்றார். செற்றவர்=பகைவர்; அரணம்=கோட்டை;உற்றவர்=மலபரிபாகம் அடைந்த அடியார்கள்; பெருமானை குறித்த ஞானம் ஒன்றே வீடுபேறு அடைவதற்கு உரிய வழி. எனவே அந்த ஞானத்தை அடைவதற்கு உயிர் விருப்பம் கொள்ள வேண்டும். இவ்வாறு ஞானவேட்கை உடையவர்க்கே ஞானம் பயன் தரும். உயிர் ஞானவேட்கை அடையாத வண்ணம்,ஆணவமலம் தடுக்கின்றது. எனவே என்றும் அழியாது இருக்கும் ஆணவமலத்தின் வலிமையை குறைத்து, புலன்களின் விருப்பத்தில் நாட்டம் கொள்ளாது,உண்மையான மெய்ப்பொருள் குறித்து அறிந்து கொள்ள, உயிர்கள் தலைப்பட வேண்டும். ஆணவ மலத்தின் வலிமையை உயிர்கள் குறைப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு, இறைவன் கன்மம் மாயை ஆகியவற்றை உயிர்களுடன் கூட்டி, இன்ப துன்பங்களை நுகரச் செய்கின்றான். ஆனால் ஆணவ மலமோ,கன்மம் மற்றும் மாயா மலங்களை பயன்படுத்திக் கொண்டு உயிரை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ளும் நோக்கத்துடன் உயிருக்கு மேன்மேலும் வினைகளை சேர்க்கின்றன. இவ்வாறு பழைய வினைகளின் பயனை, இன்ப துன்பங்களாக, நுகரும் தருணத்தில் உயிர்கள் இருவினையொப்பு நிலையினை அடைந்து மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆணவ மலத்தின் வலிமையை படிப்படியாக குறைத்து, அதன் வலிமையை மெலியச் செய்வதை மலபரிபாகம் என்று கூறுவார்கள். இந்த மலபரிபாகம் அடைந்த நிலையில் உயிர்கள் மெய்ஞானம் பெறுகின்ற தன்மையை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உணர்வு எய்தல்=மீண்டும் பிறவாமைக்கு அடிகோலும் வகையில் மெய்ஞானத்தை அறிந்து கொள்ள வாய்ப்பினை அளிக்கும் மானிடப் பிறப்பின் சிறப்பினை உணர்ந்து, அந்த நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவது.
செற்றவர் தம் அரணம் அவற்றைச் செவ்வழல் வாயெரி ஊட்டி நின்றும்
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற
பெற்று அமரும் பெருமானை அல்லால் பேசுவது மற்றொர் பேச்சிலோமே
கற்றவர் வாழும் திருவல்லம் என்று, திருவல்லம் தலத்து பதிகத்தினில் (1.113.11) திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஈசனின் பொற்பாதங்களை பற்றிக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் செய்ய வேண்டியது திருமுறை பாடல்களை பாடுவது தான் என்று திருஞான சம்பந்தர் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்.
கற்றவர் திருவல்லம் கண்டு சென்று
நற்றமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூற வல்லார்
பற்றுவர் ஈசன் பொற்பாதங்களே
சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பாடலில் (3.58.4) திருஞானசம்பந்தர் கற்றவர்கள் நிறைந்த தலம் என்று குறிப்பிடுகின்றார். மற்றவில்=எதிரிகளின் வில்லுக்கு மாற்றாக, அவற்றை வெல்கின்ற தன்மை கொண்ட வில்; மால் வரை=பெரிய மலை, மேரு மலை; பொற்பு=அழகு; கல்விக்கு அழகு கசடற மொழிதல் என்றபது முதுமொழி. பெருமான் ஒருவனே உண்மையான மெய்ப்பொருள் என்பதும், அவனே ஒருவனே முக்திநிலையை அளிக்கும் ஆற்றல் வாய்ந்தவன் என்பது தானே என்றும் மாறாமல் நிலையாக இருக்கும் கருத்து. எனவே இந்த கருத்தினை உணர்ந்தவர்களாக, சிவநெறியை பின்பற்றி வாழ்ந்து வந்த தலத்து மக்களை, கற்றவர்கள் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சாத்தமங்கை என்று தலத்தின் பெயரையும் அயவந்தி என்று திருக்கோயிலின் பெயரையும் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமானைத் தங்களது கைகள் கூப்பித் தொழுகின்ற தலத்து மாந்தர்கள், பாவம் அற்றவர்களாக இருக்கும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
மற்றவில் மால் வரையா மதில் எய்து வெண்ணீறு பூசிப்
புற்றரவு அல்குலாளோடு உடனாவதும் பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச் செய்த பாவம்
அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.68.2) திருஞானசம்பந்தர், கற்றவர்கள் போற்றி துதிப்பதால் ஞான ஒளி பெற்ற சிறப்பினை உடையது கயிலாய மலை என்று கூறுகின்றார். செற்றது=அழித்தது; உற்றது=பிரியாமல் தனது உடலில் பொருத்தியது; அற்றவர்கள்=பற்று அற்றவர்கள்,யான் எனது எனப்படும் அகப்பற்று மற்றும் புறப்பற்றினை விட்டவர்கள்; உற்ற நகர்=தலமாக உறைகின்ற நகரம்; எற்றென=எதனால்; வினாய்= வினவினால்;கயிலாய மலையின் ஒளி, அந்த மலையில் மலிந்து கிடக்கும் இரத்தினங்கள் மற்றும் மணிகளின் ஒளியை தோற்கடித்து மங்கச் செய்வது ஏன் என்ற கேள்வி இங்கே கேட்கப் படுகின்றது. தன்னைச் சுற்றியுள்ளவர்களை காப்பது தானே சான்றோர்களின் கடன்; அவ்வாறு இருக்கையில் தன்னைச் சார்ந்தோரின் ஒளியை மங்கச் செய்வது குற்றமாகுமே என்ற கருத்தின் அடிப்படையில் இவ்வாறு கேட்கப்படுகின்றது. சொற்றொகை=சொல்+தொகை;
புற்றரவு பற்றிய கை நெற்றியது மற்றொரு கண் ஒற்றை விடையன்
செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நற்றுணைவன் உற்ற நகர் தான்
சுற்று மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றமிலது எற்றென வினாய்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே
உலகத்து உயிர்களும் பொருட்களும், பாசப்பற்றினில் உயிர்களை ஆழ்த்தி, பல விதமான வினைகளை சேர்த்துக் கொள்வதற்கு இடமாக விளங்குகின்றன என்பதையும் அந்த பற்றுகளை நீக்கும் தன்மையை நாம் சிவபெருமானின் அருளால் தான் பெறமுடியும் என்பதையும் உணர்ந்த அடியார்களை கற்றவர்கள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் (4.56.3) உணர்த்துகின்றார். உற்ற நோய்=உயிருக்கு உற்ற நோய், வினைத் தொகுதிகள் மற்றும் அவற்றால் விளையும் தொடர்ந்த பிறப்பு இறப்புகள்: செற்றவர்=பகைவர்: செறுதல்=வெல்லுதல்: கலந்து=உள்ளமும் உயிரும் இறை உணர்வுடன் கலத்தல்: உலத்தல்=பாசப் பற்றுகளை அறுத்தல்: அலத்தல்=பாசப் பற்றுகளால் துயர் உறுதல்: அற்றவர்=பாசப் பற்றுகளை அறவே ஒழித்து பக்குவம் அடைந்த அடியார்கள்: அலத்தல் என்பதற்கு விரதம் முதலியவற்றால், உடலை வருத்திக் கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம். உயிரினை, அதனை பீடித்துள்ள வினைத் தொகுதிகளின் பிடியிலிருந்தும் மூன்று மலங்களின் பிடியிலிருந்தும் மீட்டு, பிறப்பு இறப்புச் சுழற்சியில், மறுபடியும் சிக்காத வண்ணம் உயிருக்கு உறுதுணையாக இருந்து காக்கும் வல்லமை படைத்தவர். சிவபெருமான். அவர் தேவர்களுக்கு பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களை அவர்கள் வாழ்ந்து வந்த கோட்டைகளுடன் எரித்து வென்றவர். பாசப் பற்றுகளால் துயருற்று, படிப்பினையைப் கற்றுக்கொண்ட கற்றவர்கள், ஒன்று கூடி, தங்களது பாசப் பற்றுகளை முற்றிலும் அறுத்தும், தங்களது உள்ளமும் உயிரும் இறையுணர்வுடன் கலக்குமாறும், சிவபெருமானைத் தொழுது புகழ்ந்து பாடுகின்றார்கள். அவ்வாறு பாசப் பற்றுகளை விட்டொழித்த அடியார்களுக்கு அன்பராக, ஆவடுதுறையில் உறையும் இறைவன் திகழ்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை ஆவர் போலும்
செற்றவர் புரங்கள் மூன்றும் தீயெழச் செறுவர் போலும்
கற்றவர் பரவி ஏத்திக் கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே
தொடர்ந்து கல்வி பயிலும் அடியார்கள் பெருமானைப் புகழ்ந்து பாடும் நாகைக்காரோணம் தலம் என்று அப்பர் பிரான் அந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.71.8) குறிப்பிடுகின்றார். தெற்றினர்=மாறுபட்ட திரிபுரத்து அரக்கர்கள்: செற்ற=அழித்த: இந்த பாடலில் அப்பர் பிரான், நாகைக் காரோணத்து சிவபெருமானை புகழ்ந்து வழிபடாதவர், பிறந்தவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று கூறுகின்றார். நாம் பிறந்ததன் நோக்கமே உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானைக் கும்பிட்டு, நமது வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு இறைவனது திருவடிகளைச் சென்று சார்ந்து,பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக் கொள்வது தானே. எனவே தான், அவ்வாறு திகழாமல் இருப்பவர்களை பிறந்த பயனை அடையாதவர்கள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சைவ ஆகம நெறியிலிருந்து மாறுபட்ட திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றினையும் ஒரே அம்பினால் எரித்து அழியச் செய்த, வல்லமை கொண்ட வில்லினைக் கையில் ஏந்தியவர் சிவபெருமான்: அவர் வஞ்சனை உடையவர்களின் உள்ளத்தில் பொருந்தாதவர்:தொடர்ந்து கல்வி பயிலும் சான்றோர்கள் பலரும், நாகைக் காரோணத்தில் உறையும் சிவபெருமானை வழிபட்டு புகழ்ந்து பாடுகின்றார்கள். அவ்வாறு சிவபெருமானை விருப்பத்துடன் பாடும் வாய்ப்பினைப் பெற்றவர்கள், பிறவிப் பயனை அடைந்தவர்கள், ஏனையோர் பிறந்தும் பிறவாதவர்களாக கருதப் படுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால்
செற்ற வெம் சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்விலாதார்
கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே
காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.84.5) அப்பர் பிரான் இந்த தலத்தினை கற்றவர் கருதேத்தும் காட்டுப்பள்ளி என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் நான்கு பாடல்களில் செல்வம் நிலையானது அல்ல, உற்றார் நிலையான துணை அல்ல என்பதை அப்பர் பிரான் உணர்த்தியதை நாம் அறியும் போது, நமக்கு ஓரு ஐயம் எழலாம். நமக்கு உற்ற துணை யாது, நிலையான செல்வம் எது என்பதே அந்த ஐயம். அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளி என்று குறிப்பிட்டு, சான்றோர்கள் உணர்ந்து அறிந்ததை நமக்கு இந்த பாடல் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அற்ற போது=உயிர் நீங்கிய காலத்து; நமது உடலிலிருந்து உயிர் பிரிந்த விட்ட பின்னர், அந்த பிணத்துடன் சுற்றமும் துணையாகிய மனைவியும், இல்லற வாழ்க்கையால் நமக்கு ஏற்பட்ட பிள்ளைச் செல்வங்களும் அருகில் இருக்க மாட்டார்கள் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுவது நமக்கு கவியரசு கண்ணதாசனின் பிரபலமான திரைப்பாடல், வீடு வரை உறவு என்று தொடங்கும் பாடலை நினைவூட்டும். ஆனால் இந்த கருத்து கண்ணதாசனுக்கு முன்னர் பல அருளாளர்கள் அருளியது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எனவே பெருமான் ஒருவனே எப்போதும் நமக்குத் துணையாக இருப்பவன் என்பதை உணர்த்தும் பாடல்.
சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும்
அற்ற போது அணையார் அவர் என்றென்றே
கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப்
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே
கற்றவர்கள் என்றால் மெய்ப்பொருளை உண்மையாக உணர்ந்தவர்கள்; உண்ணுதல்=அனுபவித்தல்; கனி=பயன், அற்றவர்கள்=சிவபிரானைத் தவிர வேறு எந்தப் பற்றும் இல்லாதவர்கள்’ கதி= முக்திப் பேறு; கற்றவர்கள் உண்டு அனுபவிக்கும் கனியாக பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல், ஒரு திருவாரூர் திருத்தாண்டகத்தின் முதல் பாடலாகும் (6.32.1). உண்மையான மெய்ப்பொருளாக உன்னை உணர்ந்தவர்கள் உன்னை நினைத்து அதன் பயனாக வீடுபேறு நிலையினை அடைய உதவுபவனே, உனது திருவடிகளைச் சார்ந்தவர்கள் அடையும் முக்தி என்னும் நற்பேற்றினை அடையுமாறு செய்யும் பெருமானே, உன்னை அல்லாமல் வேறு அனைத்துப் பற்றுக்களையும் துறந்தவர்களுக்கு இனிக்கும் அமுதமே, எனது துயரங்களைத் தீர்த்து ஆட்கொண்ட ஆண்டவனே, வேறு எவரும் உனக்கு ஒப்பாக இல்லாதவனே, வானவர்கள் போற்றும் மருந்தே, பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களின் நகரங்களை எரித்த சிவபிரானே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன் என்று அப்பர் பிரான் பெருமானை போற்றும் பாடல்..
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதமானாய் போற்றி அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்று ஒருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர் தம் புரம் எரித்த சிவனே போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.38.5) அப்பர் பிரான் பெருமானை கற்றவர்க்கோர் கற்பகமாய் நிற்பவன் என்று கூறுகின்றார்.வள்ளுவப் பெருந்தகை கூறுவது போல், நாம் கற்ற கல்வியின் உண்மையான பயன் இறைவனைத் தொழுதல் தான். அதனால் தான் பல பாடல்களில் அருளாளர்கள் இறைவனை தொழுது ஏத்துபவர்களை கற்றவர்கள் என்றும் மற்றவரை கல்லாதவர் என்றும் குறிப்பதை காணலாம். எனவே தான் அப்பர் பிரான் கற்றவர் என்று இங்கே இறைவனை தொழுபவர்களை குறிப்பிட்டு, அவர்களுக்கு சிவபிரான் கற்பகமாய் இருப்பான், அதாவது வேண்டுவன எல்லாம் தருவான் என்று கூறுகின்றார். உற்றிருந்த= உணர்வதற்கு உதவி புரியும் தன்மைகள்; உற்றவர்=அடைந்த அடியார்கள்;
உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீலகண்டன் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ
இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.89.7) அப்பர் பிரான், பெருமானை, கற்றவர்கள் ஏதம் களைபவன் என்று கூறுகின்றார். பற்கள் நிறைந்த பிரமனின் மண்டையோட்டில் பலி ஏற்று உண்பவரும், தனது அடியார்களின் சித்தத்தில் இருப்பவரும், உண்மையான மெய்ந்நூல்களை கல்லாதவர்கள் காண்பதற்கு மிகவும் அறியவராக விளங்குபவரும், அத்தகைய நூல்களைக் கற்று உணர்ந்தவர்களின் துன்பங்களை களைபவரும், கொடுமை மிகுந்த பூதப் படைகளை உடையவரும், அலைகள் நிறைந்த ஏழு கடல்களாகவும் ஏழு மலைகளாகவும் இருப்பவரும், உலகத்தவர் அனைவராலும் புகழப் படுபவரும் ஆகிய இறைவன் இன்னம்பர் திருத்தலத்தில் தான்தோன்றி ஈசனாக எழுந்தருளி உள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை
பல்லார் தலையோட்டில் ஊணார் போலும் பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும் கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்
பொல்லாத பூதப் படையார் போலும் பொருகடலும் ஏழ்மலையும் தாமே போலும்
எல்லாரும் ஏத்தத் தருவார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.61.111) சுந்தரர், கற்றவர்களால் புகழ்ந்து போற்றப்படுபவன் பெருமான் என்று கூறுகின்றார்.பெற்றம்=இடபம், எருது; கச்சி ஏகம்பம் தலத்தில், தனது இடது கண் பார்வை மீண்டும் வரப்பெற்றதை நினைத்து மகிழ்ந்து சுந்தரர் பாடிய பதிகம் இந்த பதிகம். திருவொற்றியூர் தலத்தை விட்டு நீங்கிய பின்னர், தனது கண்களின் பார்வையை இழந்த பின்னர், சுந்தரர் வெண்பாக்கம், திருவாலங்காடு,திருமுல்லைவாயில் மாற்பேறு ஆகிய தலங்கள் சென்ற சுந்தரர், அந்த தலங்களில் உறைகின்ற பெருமானை நேரில் காணமுடியாமல் மிகவும் வருந்திய தன்மை, இங்கே கச்சி ஏகம்பத்து பெருமானை நேரில் கண்டபோது மகிழ்ந்தேன் என்றும் அத்தகைய மகிழ்ச்சி பெறுதறகரிய பேறு என்றும் உணர்த்தும் குறிப்பு மூலம் உணரப்படுகின்றது.
பெற்றம் ஏறுகந்து ஏற வல்லானைப் பெரிய எம்பெருமான் என்று எப்போதும்
கற்றவர் பரவப்படுவானைக் காணக் கண் அடியேன் பெற்றதென்று
கொற்றவன் கம்பன் கூத்தன எம்மானைக் குளிர்பொழில் திரு நாவலாரூரன்
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார் நன்னெறி உலகு எய்துவர் தாமே
சிவபெருமானை, கற்றவர் விழுங்கும் கனியாக உருவகிக்கும் திருவிசைப்பா பாடல் (வீழிமிழலை தலத்தின் மீது சேந்தனார் அருளியது) இங்கே நினைவு கூரத்தக்கது.
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணை மாகடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே
திருமூலரும், திருமந்திரப் பாடல் ஒன்றில், அனைத்து உலகங்களுக்கும் முதற்பொருளாக இருக்கும் சிவபிரான், அனைத்து உயிர்கட்கும் உயிராக இருக்கின்றார் என்றும், அந்த சிவபிரானை உணர்த்தும் நமச்சிவாய என்னும் சொல்லாகிய கனியை உண்ட தான், அந்த கனி இனிப்பாக இருந்ததை உணர்ந்தேன் என்றும் கூறுகின்றார். இவ்வாறு இறைவனையும் இறைவனது நாமத்தையும் பழத்திற்கு உருவகப்படுத்தி, இறைவனை உணரும் அடியார்கட்கும் அந்த நினைப்பே இனிப்பாக உள்ளதாக பல அருளாளர்கள் கூறியுள்ளார்கள்.
ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிராவது
நன்று கண்டீர் இனி நமச்சிவாயப் பழம்
தின்று கண்டேற்கு இது தித்தவாறே
சுந்தரரும் தனது நமச்சிவாயப் பதிகத்தில் கற்றவர் தொழுது ஏத்தும் நற்றவா என்று சிவபிரானை அழைக்கின்றார். நமச்சிவாய என்று தொடர்மொழியாய் சொல்லும்போது, சிவனுக்கு வணக்கம் என்று ஒரு பொதுவான பொருளினைத் தருவதால் இந்த ஐந்தெழுத்து தூல பஞ்சாக்கரம் என்று சொல்லப்படுகின்றது
மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
கல்வியாளர்களாக விளங்கி பெருமானின் அருட்செல்வம் பெற்றவர்களாக திகழ்ந்த அடியார்களை, செல்வர்கள் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். சீர்காழி என்று அழைக்கப்படும் சிரபுரம் தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடலில் (1.47.1) பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய பழமையான வேதங்கள், வேதங்களை சரியாக முறையாக அறிந்து கொள்ள உதவும் ஆறு அங்கங்கள் மற்றும் பிற கலைகள் கற்றுணர்ந்த செல்வர்கள் என்று தலத்து அந்தணர்களை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.செல்லடைந்த=சென்று அடையும்
பல்லடைந்த வெண் தலையில் பலி கொள்வதும் அன்றியும் போய்
வில்லடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே
சொல்லடைந்த தொன் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்
செல்லடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே
பொழிப்புரை:
கற்றவர்களால் பணிந்து வழிபடப்பெறும் கழுமலம் தலத்தில் உறைகின்ற பெருமானின், வீரக் கழல்கள் அணிந்த திருப்பாதங்கள் குறித்து, நல்லவர்களுக்கு நல்ல துணையாக விளங்கும் நற்பண்பினை உடைய ஞானசம்பந்தன் விரும்பிப் பாடியதும், ஓதுவோர்களுக்கு சிறந்த துணையாக இருப்பதும் ஆகிய இந்த பத்து பாடல்களையும் முறையாக பாடும் வல்லமை உடைய அடியார்கள், தூயமலராகிய தாமரை மலரில் உறைகின்ற இலக்குமி தேவியின் துணையுடன்,இம்மையில் இந்த உலகம் முழுவதையும் அரசாண்டு மறுமையில் மூன்று கண்களை உடைய சிவபெருமானின் திருவடிகளை சென்றடையும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.