Books / மஹா புராணங்கள்


சிவமகா புராணம்

ஸநத்குமார ஸம்ஹிதை (பகுதி-1)


4. ஸநத்குமார ஸம்ஹிதை: காப்பு: ப்ரபத்யே தேவமீஸாந ஸர்வஜ்ஞ மபராஜிதம்! ஸம்பவம் ஸர்வபூதாநாம் அநாதிம் விஸ்வதோமுகம்! (தேவ தேவனாகவும் ஈசான சுருதியினால் பிரதிபாத்தியனாகவும் எல்லாம் உணர்பவனாகவும் ஒருவராலும் ஜெயிக்க முடியாதவனாகவும், பூதங்கள் அனைத்தின் உற்பத்திக்குக் காரணனாகவும் ஆதியற்றவனாகவும் எங்கும் வியாபித்தவனாகவும் விளங்கும் பரமசிவனைச் சரணடைகிறேன்!

வேதாதௌய ஸ்வராப்ரோக்த ஓங்காரக்யோமஹேஸ்வரா
ஸ்ரஜதே ஸர்வபூதாநி பஞ்சபூதைதஸ் ஸதாஸிவ

1. ஸனத்குமார முனிவர் நைமிசம் அடைதல்

சூதமுனிவர், நைமிசாரணிய வாசிகளை நோக்கி நான் உலக நாயகனாகிய ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரைத் திரிகரண சுத்தியாகப் பணிந்து சொல்லுகிறேன். மகா புண்ணியகரமான நைமிசாரணியத்தில், எனக்கும் உலகத்திற்கும் குருவும் பராசரமுனிவரின் புத்திரரும் காலஞானம் அறிந்தவரும் பிரமசரிய நிலையினின்று தவறாதவரும் இலக்ஷத்து இருபத்து ஐயாயிரம் கிரந்தங்களையுடைய மகாபாரத காவியத்தை இயற்றியவரும், நான்கு வேதங்களையும் சீர்திருத்திப் பிரித்து வியாஸமுனிவர் என்று பெயர் பெற்றவருமான எனது குருவானவர், நான்கு வேதங்களால் சூழப்பெற்ற சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமதேவரைப் போல அநேகம் முனிவர்கள் சூழ வீற்றிருந்து திவ்யசரிதங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது ஞான வித்தையைக் கரைகண்டவரும் மங்களமூர்த்தியும் பிரம புத்திரருமாகிய ஸநத்குமார முனிவர், உலகம் உய்யும் பொருட்டு அங்கு வந்தார். அவர் தரிசனம் கண்டதும் நைமிசாரணிய முனிவர்கள் அனைவரும் ஆனந்தமாக எழுந்து அர்க்கிய பாத்திய ஆசமனீயங் கொடுத்து திரிகரணங்களாலும் பூஜித்து சக்தி விநயத்துடன் கைகூப்பி நின்றார்கள். ஸநத்குமார முனிவர் அவர்களுக்கு இனிய வார்த்தைகளால் அருள் பாலித்து, அவர்கள் அளித்த திவ்வியாசனத்தில் அமர்ந்தார்.

அப்போது நைமிசாரணிய வாசிகள் அவரை நோக்கி, பிரம புத்திரரே! லிங்கார்ச்சன விதியையும் தேவதேவனின் பூஜாக்கிரமத்தையும் அவரின் திருவருளால் உண்டாகும் பயன்களையும் சிவமூர்த்தி பேதங்களையும் சிவ மந்திர சொரூபத்தையும் அந்த மந்திர அனுஷ்டான விதிகளையும், அடியவர்களான எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு யோகீஸ்வரரான ஸநத்குமார முனிவர் தபோமூர்த்திகளான அந்தணச் சிரேஷ்டர்களே ஆசனத்தில் இருங்கள்! என்று சொல்லி நட்சத்திரங்களால் சூழப்பெற்ற சந்திரனைப் போல விளங்கினார்.

2. உலக உற்பத்தி

தேஜோ மூர்த்தியும் திரிகால ஞானியும் ஷாட்குண்ணிய பரிபூரணருமான ஸநத்குமார முனிவரை, நைமிசாரணிய முனிவர்கள் பணிந்து, பகவானே! தங்கள் திருவாக்கால், ஸனாதனமாயும் புண்ணியகரமாயும் பஞ்சப் பிரம ஸ்வரூபத்தை நன்கு உணர்த்த வல்லதாயும் உள்ள சிவமஹா புராணத்தை நாங்கள் மேலும் கேட்க விரும்புகிறோம். தாங்கள் எல்லாம் அறிந்தவர் தங்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றும் மூவுலகங்களிலும் இல்லை! என்றார்கள். அதற்கு அவர்களை நோக்கி ஸநத்குமாரர் கூறியபடியே நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்று சூதமுனிவர் சொல்ல ஆரம்பித்தார்.

அருந்தவ முனிவர்களே தேவதேவனான பரமசிவனால் சொல்லப்பட்ட அதிரகசியமான சிவ புராணத்தைக் கேளுங்கள். இதை அத்யந்த பக்தியுடன், கேட்பவர்களே, கிருத கிருத்தியர்கள். இப்புராணம் புண்ணியம், தேஜஸ், ஆயுள் விருத்தியைக் கொடுக்கவல்லது அறம், பொருள், இன்பம், வீடு என்பனவற்றிற்கு காரணமானது வேதத்திற்குச் சமமானது. எல்லாப் பாவங்களையும் ஒழித்து, பரிசுத்தமாக்கவல்லது. முனிவர்களே! வியாஸபகவான் முன்பு கூறியுள்ளபடி நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இந்தச் சிவமஹா புராணம் பெருமையை நூறு ஆண்டுகள் சொன்னாலும் அளவுபடுத்த முடியாது. இதைச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

பிருத்வி (நிலம்) முதலான ஐம்பெரும் பஞ்ச பூதங்களின் தோற்றமும், பிரம விஷ்ணுக்களின் தொடக்கமும் அவர்களின் சம்வாதமும் ஜம்புத்வீபம் முதலானவற்றின் பிரமாணங்களும் பாரதாதி வருஷக் கிரமங்களும் பாதாளம் முதலான கீழ் உலகக் கிரமங்களும் சந்திர சூரிய மண்டலக் கிரமங்களும், கால சக்கர கதியும், ஸநத்குமார பராக்கிரமமும் அவர் மஹாதேவரை பூஜித்த விதியும் அவர் மஹா தேவரால் அடைந்த வரப்பிரசாதமும் மேருவின் உச்சியில் அவர் வாசஸ் தானம் பெற்றதும் அங்கு அவர் தம் மாணவர்களுக்குச் சிவஞானம் போதித்த முறையும் அவர் பிரமவிஷ்ணு ருத்திரர்களைத் தரிசித்து, அவர்களுடன் சம்வாதம் செய்ததும் விபீஷணனுக்கும் உருத்திரமூர்த்திக்கும் ஏற்பட்ட சம்வாதமும் எல்லாத் தீர்த்தங்களின் மகிமையும் சிவலிங்க பூஜை முறையும் இலிங்க உற்பத்தியும் பிரளயக்கிரமமும் மூர்த்தி பேதமும் பிரம விஷ்ணுக்களுக்கு உண்டான மாயையை அகற்றத் தோன்றிய சிவலிங்கக் கோலமும் சிவலிங்கப் பிரதிஷ்டையின் பயனும்; அவரை மலர்களால் அருச்சிப்பதால் அடையும் பயனும் தூபதீபங்கொடுத்து ஆராதிப்பதால் அடையும் பயனும் பழவர்க்கங்களைக் கொண்டு நிவேதிப்பதால் அடையும் பயனும் தானமகிமையும் மாச பூஜா பலனும் உபவாசமிருந்து அர்ச்சனை செய்வதால் அடையும் பயனும் சதுர்த்தசி அஷ்டமியின் பயனும் அதில் பூஜை செய்யும் கிரமங்களும் நாமாஷ்டமியின் கிரமமும் வைலக்ஷணாஷ்டமியின் கிரமமும் விபூதி; மான்யமும் சவுச முறையும் அவிமுக்த மான்மியமும் ஓங்கார வர்ணியையும் யஞ்ஞேஸ்வர மான்மியமும் தீர்த்தக் கிரமமும் நந்திதேவரின் பூஜாக்கிரமமும் அவரை அபிஷேகித்த முறையும் நீல கண்ட மான்மியமும் திரிபுரதகனமும், வாசுதேவப் பிரபாவமும் அவரது பூஜாக்கிரமமும் தர்மப் பிரபாவமும் மகாதேவ சங்கீர்த்தனத்தால் அடையும் பயனும் ஞானவிசாரணையும் மோக்ஷக்கிரமமும் ஆகியன எல்லாம் இதில் அடங்கியுள்ளன.

முனிவர்களே! ஈஸ்வரனின் சித்திர கிருத்தியத்தை விரித்துச் சொல்லுகிறேன் பூர்வத்தில் பிரபஞ்சம் இருள் மயமாய், அறிய முடியாமலும் நாமரூபமற்றதாயும் இருந்தது. அப்போது மஹா யோகியான உருத்திரமூர்த்தியானவர் தன் ஆன்ம இச்சையினால் மனதையும் அதற்குப் பிறகு அகங்காரத்தையும் படைத்தார். அகங்காரத்திலிருந்து பஞ்ச பூதங்களும் மூலப்பிரகிருதி மஹத் அகங்காரம் பஞ்ச தன் மாத்திரைகள் விகாரம் முதலியன உண்டாயின. ஸப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தங்கள், பிராணன், அபானன், வியானன், சமானன், உதானன் சத்வரஜதமோகுணங்கள் அவற்றோடு உண்டாயின. இவற்றிலிருந்து பிரம, விஷ்ணுக்கள் பிறந்தார்கள். இவ்விருவருக்கும் மோகத்தை உண்டுபண்ணும் நிமித்தமாக சரீரமில்லாதவரும் மஹாதேவரும் பிறப்பற்றவரும் அயோனிஜரும் ஆதியந்தம் அற்றவருமாகிய பரமசிவன் தோன்றி பிரம விஷ்ணுக்களைத் தன் மாயையால் மோகிக்கச் செய்து தம் தேஜஸைச் சகல பிரபஞ்சங்களிலும் வியாபிக்கச் செய்ததால், அந்தப் பரமசிவனை விடப் பரமான பொருள் கிடையாது. பிரமவிஷ்ணுக்கள் இருவரும் பரமசிவத்தின் இடத்திலேயே ஜனித்து கற்பங்கள் தோறும் ஜகத சிருஷ்டியாதிகளைச் செய்கிறார்கள் மஹாதேவர் ஹாரூபியாய் அந்தப் பிரபஞ்ச சிருஷ்டிகளான சர்வ பூதங்களையுஞ் சங்கரிக்கிறார். கற்பங்களில் அநேக யுகங்களும் மனுவந்தரங்களும் அடங்கியுள்ளன. எழுபத்தொரு யுகங்கள் ஒரு மனுவந்தரமாம் அதுவே பதினான்கு முறை திரும்பினால் ஒரு கற்பமாம் அக்கற்பமே பிரமதேவனுக்கு ஒரு பகல் அவ்வளவு காலமே( நீசாகற்பம்) இரவாகின்றது. இவ்விதமான நாட்கணக்கின்படி மாசம், வருஷம் பக்ஷங்கள் கணக்காகி நூறு வருஷங்கள் ஒரு நிமிஷம் அவர் பிரமாதி துருணபரியந்தமான சராசரங்களையும் சூரிய சந்திராதி நவக்கிரகங்களையும் பூலோகபுவர்லோக சுவர்லோக மகாலோக ஜனோலோக தபோலோக சத்தியலோக பாதாள சுதல அதல விதல தராதல ரசாதல மகாதல லோகங்களென்னும் பதினான்கு உலகங்களையும் சிருஷ்டித்து அந்த ஒரு நிமிஷத்திலேயே பிரளயஞ் செய்து சங்கரித்து தானே சர்வ லோகங்களிலும் சர்வவியாபியாயிருந்து, பிரபஞ்ச காரியத்தை இயற்றிவருகிறார். பிரமலோக முதல் பாதாளம் வரையிலுள்ள பதினான்கு உலகங்களின் விஸ்தாரமும் பர்வதங்களின் கிரமமும் சமுத்திர பரிமாணமும் தீபங்களின் பேதமும், திக்குகளின் நிலைமையும் சொல்லுகிறேன். தாவரங்களைக் காட்டிலும் சங்கமம் ஆயிரம் மடங்கும் சங்கமங்களைக் காட்டிலும் மற்றவைகள் ஒவ்வோராயிரம் பங்கு அதிகமாகவிருக்கும்படி சிருஷ்டிக்கிறார். இவரே சர்வ கிருத்தியங்கட்கும் காரணராயிருத்தலின் மேற்கண்ட தேகங்களெடுத்த ஒவ்வொரு சீவனும் அவரிடமே பக்தி செலுத்த வேண்டும் அவரையே பஞ்சபூதாத்மகராயும் ஞான சொரூபியாயும் நிர்குணராயும் நிருமலராயும் விளங்கும் பரம் பொருளென்று ஞானவான்கள் தியானிக்கின்றார்கள். அப்பரமேசனே விளையாட்டாக சக்தியுடன் கூடி ஜகத்தைச் சிருஷ்டிக்கிறார் அவரினின்று மூலப்பிரகிருதியும் தோன்றுவர் அப்பிரமதேவர் சிவாக்கினினையை மேற்கொண்டு தன்முகத்தினின்று பிராமணர்களையும் புயத்தினின்று க்ஷத்திரியர்களையும் தொடையினின்று வைசியர்களையும் பாதத்தினின்று சூத்திரர்களையும் முன்னையர்களின் ஆசாரகிருத்தியாதிகளில் ஒவ்வொரு பங்குகுறைவாகப் பின்னையோர்கள் செய்யும்படியாகவும் சிருஷ்டித்தார் இப்படியாகச் சிருஷ்டியால் தாவர சங்கமாதிகள் விசேஷமாகப் பெருகும் யுகாந்தத்தில் உருத்திரர் கால ரூபியாகத் தோன்றிச் சங்கரிப்பார் என்று ஸநத்குமார முனிவர் கூறினார்.

இவ்வாறு கூறியதைக் கேட்ட வியாஸபகவான் வினவலானார். ஸநத்குமார முனிவரே! பிரமோற்பத்தியையும் இவ்வுலக சிருஷ்டிக்கிரமத்தையும், இந்த ஜகத்தையழியாது பாலிக்குந்திறத்தையும் அதனால் அவருக்குப் பிரமத்துவங் கிடைத்ததையும் சொல்ல வேண்டுகிறேன் என்றார். அவ்வாறே ஸநத்குமார முனிவர் சொல்லலாயினர் ஆரம்பத்தில் இருள் எங்கும் வியாபரித்தும் திக்குகள் நிலைதெரியாதிருக்கையில் மஹேசுவரன் யோகத்தின் பிரிவால் அவ்விருளைப்போக்க ஓர் ஒளியையுண்டாக்கினர். அவ்வொளி செந்நிறமாய் ரஜோகுணமடைந்து அக்கினி (நெருப்பு) உருவமெடுத்தது அவ்வக்கினி சத்துவகுணத்துடன் கூடி தமோகுணத்தினால் பிருதிவியை (நிலத்தை) யுண்டாக்கியது. அம்மூன்றினின்றும் ஜலம்(நீர்) தோன்றியது. அதினின்று அகோராத்திராதி காலங்கள் தோன்றின, அக்காலத்திற்கதிபரான சூரியாதிகள் உண்டாயினர். அதில் சூரியன் பிரபலனாய்த் தன் கிரணங்களால் இருளைப் போக்கி ஜலத்தை வற்றச் செய்கிறான். அக்காலத்தில் சங்கரன் ஜலரூபியாகத் தோன்றுவார். அந்த ஜலத்தினின்றும் அண்டமொன்று தோன்றும் அவ்வண்டத்தினின்று நாராயணன் தோன்றுவார் அவரிடமும் பிரமனும் பிரமனிடம் காலம் திக்கு முதலியனவும் தோன்றும். 

3. பிரமாண்ட வரலாறு

அவ்வியக்தத்தினின்று மகத்தும் அதினின்று பிரம்மனும் தோன்றினமையால் இதற்குப் பிரம்மாண்டம் என்று பெயர்கள் உண்டாயிற்று. அவ்வண்டத்திற்குச் சமுத்திரங்களே உதிரமும், ஆகாயமே வயிறும் வாயுவே சுவாசமும் அக்கினியே தேஜஸும் ரஸங்களே நதிகளும் முற்கூறிய ஆகாயமே மற்றவகையாற் காதுகளும் சந்திர சூரியர்களே கண்களும் மேருமலையே தொடையும் மேதினியே மார்பும் ஆகும் அப்பூமியின் எல்லையே சமுத்திரமும் அதன் எல்லையே பாதாளலோகமாகும் அப்பாதாளலோகத்தின் கீழ்ஜலமும் அந்த ஜலத்தின் எல்லையில் நாகராஜாக்கள் வசிக்குந் தானமும், அத்தான முடிவில் இருளும் அதனிறுதியில் அக்கினியும் அதன் கடைசியிற் பிருதிவியும் (நிலமும்) ஆக இவ்வேழுவகையாற் சூழப்பட்டிருக்கும்.

இவ்வகையாக ஆக்கப்பட்டுள்ள பிரபஞ்சத்தைப் பிரமதேவர் சிருஷ்டிக்க இச்சையுள்ளவராய்க் கருப்ப வாசத்திலிருந்து பிறக்கும் மானுடவர்க்கங்களை (ஜராயுஜத்தை) யும் முட்டையிலுண்டாகும் (அண்டஜம்) பறவை இனங்களையும் (உத்பீஜம்) தாவரங்களையும் சுவேதஜம் என்னும் புழுபூச்சிகளையும் தேவயோனி பேதமாகிய வித்தியாதரர் அப்சரசுகள் யக்ஷர் இராக்ஷசர் பிசாசர் கின்னரர் குஹ்யகர் சித்தர்களையும் பிருத்வியந்தரிக்ஷம் திருதிவமென்னும் மூன்று லோகங்களையும் சிருஷ்டிக்கிறார். இவ்வாறு உண்டாக்கப்பட்ட சமுத்திரம் (நிலத்திலும்) பிருதிவியினும் இருமடங்கு அதிகமாகும் பூமியிலும் சமுத்திரத்திலும் பலவகைப்பட்ட பிராணிகள் வசிக்கும் இப்புவனம் ஆதியில் கடவுளால் ஒன்றாகவே தோன்றினும் தேவ மாநுடர்களால் சுவர்க்க மத்திய பாதலம் என்னும் மூவகைப் பெயர்களோடு அழைக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவினுட் பிரிவுகள் ஒவ்வொன்றினும் உருத்திரமூர்த்தி உபாசிக்கப்பட்டு வருகிறார். இம்மூன்று உலகங்களுக்கும் காரணராயிருப்பவர் உருத்திரனே என்று உபாசித்து சிருஷ்டியாதித் தொழிலையும் செய்து வருகிறார்கள், வியாஸமுனிவரே! இவ்வகையான பிரபஞ்சத்தின் அளவையும், காரணத்தையும் தவத்தால் அறியத்தக்கது. இப்பூமியில் பலதீவுகளும் வருஷபேதங்களும் உண்டாயிருக்கின்றன. அவ்விடங்களில் பிராணிகள் அற்பாயுளுடனும், அற்பபுத்தியுடனும் கூடியிருப்பதால் அவர்களுடைய எண்ணங்களை நிறைவேற்ற காருண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமான் நாம பேதங்களோடு எழுந்தருளியிருக்கிறார்.

ஐம்புத்தீவில் கோமேதம் என்னும் தலத்தில் கிரிஜேஸ்வரர் என்னும் பெயருடனும் சான்மலித்தீவில் பசுபதி என்ற பெயரோடும் குசத்தீவில் அரன் எனவும் கிரவுஞ்சத்தீவில் விருஷபத்வஜன் என்ற பெயருடனும் சாகத்தீவில் சங்கரன் எனவும் புஷ்கரத்தீவில் பாவலோசனன் எனவும், அங்கங்குள்ள ஜீவராசிகள் வழிபட்டு,பூசனைசெய்து இஷ்ட போகங்களை அனுபவிக்க எழுந்தருளியிருக்கிறார். அத்தீவுகளில் ஐம்புத்தீவில் ஜம்பு விருக்ஷம் ஆயிரம் யோசனை உயர்ந்து புடைபரந்து அமுதத்திற்குச் சமமான ரசமுள்ள பழங்களைக் கொடுக்கும் அத்தீவின் பரப்பிற்கு இருமடங்கு தண்ணீர் அதைச் சூழ்ந்திருக்கும் அந்தத் தீவு ஏழு வகை வர்ஷங்களாகப் பிரிக்கப் பெற்றிருக்கிறது. அதனுள் பாரத வருஷம் என்பது ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு, எண்குல பர்வதங்களோடு விளங்கும் இதில் இளரவிரத கண்டம் நடுவில் உள்ளது. மேலே சொன்ன விருக்ஷத்தின் பழச்சாறு ஓர் ஆறாகப்பாயும் அதற்கும் உத்தர திக்கில் மஹாமேருமலை உள்ளது, இம்மலையை ஜம்புநதி பிரதக்ஷிணக் கிரமமாகச் சுற்றிவரும், மேருமலையின் உச்சியில் எண்பத்து நான்காயிரம் யோசனை பரந்து, அழகுடனும் கூடிய கைலாய பர்வதம் விளங்கும். அங்கு, சூரியாதிகிரணங்கள் இராது. அதன் வெளியே கிரணமாக வீசி நிற்கும் காமக்குரோதங்களை வென்ற ஜிதேந்திரியர்களே, அதை அடையக் கூடும். சிவத்தினிடத்தில் பக்தியில்லாதவரும் யாகம் முதலான தர்மங்களைச் செய்யாதவரும் அதை அடைய இயலாது. அதைச் சுற்றிலும் நீலம் நிஷதம் ஹோமகுண்டம் இமவான் என்னும் நான்கு பர்வதங்கள் உண்டு. அதன் தென்பகுதியிலுள்ள மலையானது இருபத்தையாயிரம் யோசனை உயரமுள்ளதாக இருக்கும். அதில் நளினிஹ்ராதினி பலாவனி என்ற மூன்று நதிகள் மேற்குமுகமாகவும், கங்கை என்னும் மஹாநதி அநேக உபநதிகளுடனும் ஜம்புத் தீவில் பாயும், இவையேயன்றிபல புண்ணிய தீர்த்தங்கள் இந்த ஜம்புத் தீவில் உண்டு. இவ்விதமாக மற்ற தீவுகள் ஒவ்வொன்றிற்கும் இருமடங்கு அதிக வஸ்தீரணமும் மற்றவையுங் கொண்டதாகும். இத்தீவுகள் யாவும் ஆங்காங்குள்ள மரங்களின் பெயரைத் தன் பெயராகக் கொண்டிருக்கும். ஆங்குள்ளவர்கள் அந்தந்த மரங்களின் பழச்சாற்றையே ஆகாரமாக உட்கொள்வார்கள். இந்த ஜம்புத் தீவல்லாது மற்றத்தீவுகளில் உள்ளவர்கள் நோய், மூப்பு, சோகம், துக்கம் ஆயாசம் ஆயுள் வித்தியாசம் முதலியனவின்றி மகிழ்ச்சியையே அனுபவித்து வருவார்கள். அங்கு நவரத்தினமயமாக விளங்கும் எங்கும் பொற்குன்றுகளும் கால வேறுபாடுகளால் மாறுதலைடையாது ஒரே காலம் போலப் பழங்களைக் கொடுத்து வரும் மரங்களும் இருக்கும். அங்குள்ள நதிகள் பல கிளை நதிகளுடன் கூடி, அவ்வவ்விடங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கும். அங்கு முனிவர், கந்தர்வர், சித்தர், தானவர் வித்தியாதரர் நாகர், யக்ஷர், கிம்புருடர் ஆகிய புண்ணிய புருஷர்களே வசிப்பார்கள். சூரிய சந்திராதிகளில் உண்டாகும் வெட்பதட்பங்களும் வாயு வருணர்களால் ஏற்படும் மாறுதல்களும் இராது ஒவ்வொரு தீபங்களிலுமுள்ள குலபர்வதங்கள் அறுபதினாயிரம் சிறு பருவதங்களின் மத்தியில் இருக்கும் அவ்விடங்களிலும் மேற்சொன்ன சவுக்கியங்களை அனுபவித்தே புண்ணிய புருஷர்கள் வசித்திருப்பார்கள். அப்புண்ணிய புருஷர்கள் நாளடைவில் மரணமடையாது கற்பத்தின் முடிவில் உருத்திரரால் சங்கரிக்கப்படுவார்கள்.

இனி ஜம்புத் தீவின் கால அளவைச் சொல்லுகிறேன். இந்தத் தீவில் நான்கு வகை யுகங்கள் வழங்கப்பட்டு வரும் அவை, கிரேதாயுகம் திரேதாயுகம், துவாபரயுகம் கலியுகம் எனப்படும். அவற்றிற்கு காலம், பதினேழு லட்சத்து இருபத்தெண்ணாயிரம், பன்னிரண்டு லட்சத்து ஆறாயிரம், எட்டு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் வருஷங்களையுடையன. இத்தகைய எழுபத்திரண்டு சதுர் யுகங்கள் கொண்டது ஒரு மந்வந்தரமாகும். இத்தகைய பதினான்கு மந்வந்தரம் கொண்டது ஒரு கற்பம். இந்தக் கற்பம் பிரமனுக்கு ஒரு நாளாகும். இது போன்ற நாட்கள் முந்நூற்று அறுபது கொண்ட வருடம் ஒன்றின் படி; நூறு வருஷங்களாகப் பிரமன் ஜீவித்திருப்பார். இத்தகைய பிரமகற்பம் அரனுக்கு ஒரு நிமிஷமாகும். அந்த நிமிஷத்தின் அரைப் பாகத்தில் பிரமாதிகளின் தோற்றமும் மற்றைய அரைப் பாகத்தில் அவர்கள் ஒடுக்கமும் ஆகும்.

மேலே சொன்ன ஜம்புத்தீவின் பரப்பளவிற்குள் இந்தத் தீவு சசேரு தாமிரபரனு கபஸ்தி மனு நாகத்தீவு சவுமியம் காந்தருவம் காரணம் ஆகிய எட்டுத் தீவுகள் இருக்கின்றன. இந்தப் பூமியைச் சுற்றிலும் பலவித சமுத்திரங்கள் சூழ்ந்து கடைசியில் சுத்த ஜல சமுத்திரத்தால் சூழப் பெற்றிருக்கும். இதற்கப்புறம் லோகாலோக பர்வதம் பூமியின் அளவை விட மும்மடங்கு பருத்து விசாலமுள்ளதாக இருக்கும். அந்தப் பருவதத்தின் லோகேஸர்கள் என்னும் நால்வர் வியாதிகளே இல்லாதவர்களாய் அதைப் பரிபாலித்து வருகிறார்கள். அதற்கப்புறம் சூரிய சந்திரக்கிரணங்கள் கிடையாது. இதுதான் பூமியின் பிரமாணமாகும்.

4. பாதாள வர்ணனை

ஸநத்குமார முனிவர் மேலும் தொடர்ந்து கூறலானார். முனிவரே! இதுவரையில் பூமியின் பிரமாணத்தை சொல்லி வந்தேன். இனி பாதாள லோகத்தின் அளவையும் மற்றவற்றையும் சொல்லுகிறேன். போகவதி என்னும் நகரம் நவரத்தின மயமான உப்பரிகைகளுடன் பாதாள லோகத்தில் அமைந்து இருக்கும் அந்த நகரத்தில் வாசுகி தக்ஷன், கார்க்கோடகன், தனஞ்சயன், காளியன், பவனன், பூரணன், மணிபாலன், பத்திரன், கவுசிகன், வசுலந்துமாறன், கம்பளன். அசுவதரன், தித்திரி, அரிபுத்திரன், ஜம்பு, பத்திரன், பலாசுகன், கரவீரன், புண்டரீகன், மகோரகன் என்ற நாகராஜாக்கள் வசித்திருப்பார்கள். இவர்கள் தவிர பரதாதி சித்த முனிகணங்களும் அனந்தாதி மஹாநாகங்களும் அங்கு சுகமாக வாழ்ந்து வருவார்கள். அங்குள்ளவர்கள் வெண்பட்டு நீலப்பட்டு உடுத்தி சந்திர ஹாரகேயூரங்களை அணிந்து மின்னல்போன்ற ஒளியுள்ள அப்சரசுகள் செய்யும் நடனங்களைக் கண்டும், கீதங்களைக் கேட்டும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அந்த நாகர்கள், ஜ்வரம் பீடை துன்பம் அசங்கிதம் முதலியவற்றுள் வேண்டியவற்றை அப்சரசுகளால் அடைந்து சுகமனுபவிப்பார்கள். அந்த நகரின் நடுவில் வைர வைடூரியங்கள் இழைத்த ஆயிரக்கால் மண்டப நடுவில் கோமேதகமழைத்த சிம்மாசனத்தில் நாகராஜாக்கள் அமர்ந்து ஆட்சி புரிகிறார்கள். அங்கு எங்கு பார்த்தாலும் முத்துத்தோரணங்களும் சந்திரகாந்தக் கற்களாலிழைத்த மேல்மாடிகளும் சூரிய காந்தக் கற்களாலாகிய மதில்களும் அதைச் சுற்றிலும் சுகதோததம் நிரம்பிய அகழிகளும் அவற்றுள் தங்கப்பங்கயம் போன்ற தாமரை மலர்களும் நிறைந்திருக்கும். அந்தமண்டபத்தைச் சுற்றிலும் பசும்புல் படர்ந்து பாயசம் நெய் தயிர் பால் நிறைந்துள்ள கிணறுகளோடு ஆறு ருதுக்களிலும் மாறுபடாத புஷ்பங்களைக் கொடுத்து அங்கிருப்பவர்களைச் சுகித்திருக்கச் செய்யும் கந்தமலை போன்ற அன்னக்குவியல்களும் மதக்கிணறுகளும்; நரை திரை மூப்பு அணுகாத யவுவன கன்னியர்களும் விரும்பியோரை வெறுக்காமல் சுகங்கொடுத்திருப்பார்கள். இத்தகைய அழகோடும் சிறப்போடும் விளங்கும் நாகலோகம் கோடி யோசனை அகல நீளமுடையதாக இருக்கும் இவ்வளவு விஸ்தீரணமுள்ள பாகத்தின் சிறப்பில் ஒரு பாகத்தையே உனக்குச் சொன்னேன்.

இதுவன்றி இரணியபுரம் என்ற நகரம் கோடி யோசனை விஸ்தீரண முடையதாய், வைர வைடூரிய கோமேதகங்கள் இழைத்துப் பொன்னாலாகிய விதானங்களுடன் விளங்கும் அங்கு காலவேறுபாடுகள் இராது. ஒரே விதமான சிறந்த மலர்களையும் கனிகளையும் கொடுத்துக்கொண்டு செடிகளும் மலர்களும் விளங்கும். அங்குள்ள கன்னியர்கள் வெண்பட்டு உடுத்தி, முத்தாரம் முதலிய ஆபரணங்களைப் பூண்டு விமானத்தில், ஏறி புருஷர்களுக்குச் சுகத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அங்குள்ளோருக்கு பயம், கோபம், பிணி, மூப்பு வியாதி, அசங்கிதம் முதலியன இராது. அங்கு பிரகலாதன் முதலிய தைத்தியர்களும் மற்றவர்களும் நிறைந்திருப்பார்கள். சுரபி என்னும் அசுரன் நாராயணனது ஆக்ஞையால் பூமியைத்தாங்கிக் கொண்டு இருப்பான். அவனைச் சுற்றிலும் சுதன்மா சர்வாங்கன் சுசர்வாங்கன். சுலபன் ஆகிய நால்வர் இருப்பார்கள். இவர்கள் வசிக்குமிடம் காமியபுரி என்று பெயர் அங்கேயும் பாயசம், பால், தயிர், நெய், தேன் முதலியவை நிரம்பிய கிணறுகளும் குளிர்ந்த காற்றும், எக்காலத்திலும் பழங்களைத்தரும் மரங்களும், ஆறு ருதுக்களிலும் மலரும் நந்தவனங்களும் சந்திரனைப் போன்ற தவளமாளிகைகளும் அமிர்தமயமான குண்டங்களும் இருக்கின்றன அங்கு புண்ணிய புருஷர்கள் வந்து அப் போகங்களை அனுபவிப்பார்கள். பாதாள லோகத்தின் வர்ணனையைச் சிறிதே சொன்னேன். இனி அனந்தன் வசிக்கும் குஹ்ய புரியானது, நவரத்தினமிழைத்த மாளிகைகளும் அமிர்தமயமான வாவிகளும் வைடூரியம் போன்ற பசும்புற்றரைகளும் விரும்பியவற்றை கொடுக்கத்தக்க மரங்களும் கொடிகளும் கோடி சூரியர்களும் உதித்தாற் போன்ற பிரகாசமும் பிரமதேவதை சத்திய லோகத்தையும் விஷ்ணுவின் வைகுண்டத்தையும் போன்ற சிறப்பையுடையது. இனி இயமபுரத்தைச் சொல்லுகிறேன்.

இரவுரவம், போதம், சூகரம், பாலம், கும்பீபாகம், களக்கிரகம், பிரவாசி, அதோமுது வைதரணி, அசிபத்ரவனம், யமசூலி, பைரவம், ஏகபாஷாணம்; அசிதாலவனம், ஊர்த்துவகம், சூலம், கரம், பவாலுகை, சிருங்காடகவனம் அந்தகாரம் தமசுகோரம் மக்ஷிகம் என்ற பேதமுள்ள நரகங்களில் தத்தமது கர்மத்திற்கு ஏற்ப அவரவர் கிலேசத்தை அடைவார்கள். இன்னும் அந்த நகரங்களில் உரிவாள் முதலியவற்றால் வெட்டியும் அறுத்தும் வைதரணி நதியில் நீந்திச்செய்தும் உடலின் தோலை உரித்து விட்டு உப்பு ஜலத்தை இறைத்தும் சான்மவி என்னும் விருட்சத்தில் போட்டு மேலிருந்து இழுத்தும் சிலரைச் செக்கிலிட்டு ஆட்டியும் சிலரைக் கும்பீபாகத்தில் உடலை வெட்டிச் சமைத்தும் துன்புறுத்துவார்கள். பொய்சாக்ஷி சொன்னவன் ரவுரவ நரகத்தையும் பரமஹிம்சை செய்தவன் போதகத்தையும் மித்திர பேதஞ்செய்தவன் சூகரத்தையும் பிராமண சொத்தை அபகரித்தவன் கும்பீபாகத்தையும் கொடுத்ததை மீண்டும் வாங்கிக் கொண்டவன் காலக்கிரகத்தையும் பெண் கொலை ஸ்திரீ ஹத்தி செய்தவன் துர்க்கந்த மாமிசமுடைய நரகத்தையும் பிறருடைய தனதான்ய தங்க ரஜிதம் முதலானவற்றை அபகரித்தவன் யமசூலத்தையும் தாயை கொன்றவன் அதோமுகத்தையும் சிவசொத்தை அபகரித்தவன் சர்ப்பங்களால் கடிக்கப் பெற்று வைதரிணி நதியையும் ஊரைத் தீயிட்டுக் கொளுத்தியவன் அசிபத்ரவனத்தையும் வேத சாஸ்திரங்களை நிந்தித்து தர்ம மார்க்கத்தை அழித்தவன் அநேக ஆயிரம் ஆண்டுகள் பைரவத்தையும் சினேகிதனின் மனைவியை இச்சித்தவன் ஏகபாஷாணத்தையும் சரணங்கொடுத்து கை விட்டவன் அசிதாலவனத்தையும் பிறன் மகளிரைக் கூடிக் களித்தவனும் பிறர் சொத்துக்களை அபகரித்தவனும் பொருள் வாங்கிக் கொண்டு பொய் சாட்சி சொன்னவனும் யமசூலத்தையும் அடைவார்கள். பிராமணருடைய யக்ஞோபவீதம், ஆசாரம் காயத்திரி முதலியவற்றையும் சிவலிங்கத்தையும் சிவபூஜையையும் நிந்தித்தவனுடைய நாவை அறுத்து அநேகம் நாட்கள் வைதரணி நதியில் கஷ்டமடையச் செய்வார்கள் பிரஜைகள் செய்த குற்றத்திற்கு ஏற்ப தண்டனை தராமல் அதிக்கிரமத்து கைகால்களை வாங்கிவிட்ட அரசனைச் சிருங்காடகவனத்தில் இயம தூதர்கள் இழுத்துச் செல்வார்கள். அங்கு அவனைத் துண்டு துண்டாக வெட்டி விடுவார்கள். வீட்டைக் கொளுத்தியவன் அந்த காரத்தையுடைய நரகத்தை அடைவான். அங்கு காட்டு ஈக்களால் உடல் மொய்த்துக்கடிக்கப் பெறுவான். நரகங்களைச் சுருக்கமாகச் சொன்னேன் பாவஞ் செய்தவர்களே யமபுரத்தைஅதிகக் கஷ்டத்துடன் அனேகக் காலங் கழித்து அவ்வழியைத் தாண்டுவார்கள். புண்ணியஞ் செய்தவர்களோ அதிக விரைவில் வாகனம் பல்லாக்கு குடை முதலியவற்றுடன் குளிர்ந்த நந்தவனங்கள் வழியாக ஆங்காங்கு பசி தாங்களைத் தனித்துக் கொண்டு மகிழ்ச்சியாகச் செல்வார்கள். பிறவி யெடுப்போருக்குப் பிறக்கும் காலத்திலும் பிராணனை விடுகின்ற காலத்திலும் வருந்துக்கமும் சம்சார துக்கமும் பலவித ஆசைகளால் அடையும் துக்கமும் அடையகூடாத பெரும்போகங்களை ஆசைப்பட்டு அடையும் துக்கமுமாக எப்பொழுதும் துக்ககரமாகவே இருக்குமாகையால் ஞானத்தை அடைந்தவன் ஒருவனே துக்கநிவாரணம் அடைவான்.

அந்த ஞானமோ, சிவசரிதங்களைக் கேட்பதாலேயே உண்டாக வேண்டும்; அவ்விதம் அடைந்த ஞானமே சகல துக்கங்களையும் கிலேசங்களையும் ஒழிக்கவல்லது புண்ணிய மிகுதியால் சுவர்க்கம் முதலிய பதவிகளை அடைந்தவர்களும் அந்தப் புண்ணியம் கழிந்த பிறகு மீண்டும் துன்பங்களையே அனுபவிக்க வேண்டிவரும் ஆகையால் ஒருவன் சம்சாரத்தினின்றும் விலகி சிவ சக்கரத்தை அடைந்து ஞானவானாகி எப்போதும் சிவோகம் பாவனையால் இருப்பதே யாவற்றிலும் உசிதமாகும். சிவஞானம் அடைந்தவன் தன் ஞான வன்மையால் எல்லாத் தோஷங்களையும் விலக்கி இராகத் துவேஷாதிகளிலிருந்தும் நீங்கி மஹேஸ்வரனுக்குப் பிரியனாய் அந்த ஞானாக்கினியில் ஜனனக் கூட்டமாகிய காட்டை எரித்துச் சாம்பலாக்கி விடுகிறான்.

5. மேல் உலக வர்ணனை

ஸநத்குமார முனிவர் மேலும் சொல்லலானார். பூமியின் பரிமாணத்தையும் சப்த தீபங்களின் சிறப்பையும் நாகலோகச் சிறப்பையும் இதுவரை சுருக்கமாகச் சொன்னேன். இனி மேல் உலகங்களின் பெருமைகளைக் கூறுகிறேன். பூவுலகத்திற்கு மேலுள்ள புவர்லோகத்தில், பைசாச, குவிஹ்யகயக்ஷ கின்னர கிம்புருட சித்த வித்தியாதராதி தேவ வர்க்கத்தினரும் புஷ்கலா வாத்தமாதி மேகக் கூட்டத்தினரும் வசிப்பார்கள் இதற்கு மேல் இலட்சம் யோசனை தூரத்தில் சூரியமண்டலம் இருக்கும் அதைச்சுற்றிலும் சூரியவொளி போன்ற விமானக் கூட்டங்களும் அவற்றுள் அறுபதினாயிரம் ரிஷிகள் வேதசாஸ்திரங்களைப் பயின்றவாறு நாக கந்தருவர்களால் சூழப்பட்டும் அறுபதினாயிரம் அப்சரமங்கையரின் நடனமும் ஹாஹா ஹூஹூ என்ற பெயரையுடைய இரண்டு கந்தர்வ புருஷர்களும் காவிய நாடகலங்காரங்களால் சூரியனைப் போற்றும் கூட்டமும் அவர்கள் வாயுவேக; மனோவேகங்களில் சஞ்சரிக்கத் தக்க விமானத் தொகுதிகளும் புண்ணியசாலிகளான இராஜ ரிஷிகள் அந்த மண்டலமார்க்கமாகச் செல்லுதலும் புண்ய புருஷர்களெல்லாம் இஷ்டகாமியங்களை அடையச் சென்று. வசித்திருக்கும் ஸ்தானங்களும் பொருந்தியிருக்கும் சூரியலோகத்தின் அவாந்தா பேதமான புண்ணியர்கள் திவ்யவிமானங்களின் அலங்கார மேனியுடன் அப்சரமங்கையர் சகிதமாகச் சுகிப்பார்கள் மேலே சொன்ன சூரிய லோகத்தைவிடப் பெருமையை

யுடையதாய், அதைவிட இருமடங்கு விசாலமுடைய சந்திரலோகம் மேலே இருக்கும் அந்த லோகத்தில் மந்திர ஜெபங்களால் சித்தியடைந்த உத்தமப் பிராமணர்களும் சோமபானஞ் செய்த வேதியரும், அஸ்வமேத முதலிய மஹா யாகங்களைச் செய்த உத்தம இராஜ ரிஷிகளும், பூதானம் செய்த புண்ணிய மூர்த்திகளும் ஆடைகள், பொன், வெள்ளி, பசு முதலிய தானங்களைச் செய்தவர்களும் வசித்து வருவார்கள். அதற்கு மேல் அங்காரகன் முதலிய கிரக லோகம் மிக்கச் சிறப்புடன் விளங்கும் அங்கு ஆகாயகங்கை அலகநந்தா என்ற பெயருடன் சுத்த ஜலமாகப் பிரவகிக்கும். அதற்கு மேல் மிகவும் ஒளிவாய்ந்த மஹரிஷிகளின் லோகம் இருக்கும் அதற்கு மேல் அமராவதி போன்ற சிறப்பையுடைய யுத்தகளத்தில் பகைவருக்கு இளைக்காமற் புறங்காட்டாமல் போர் புரிந்து வெற்றி கொண்ட க்ஷத்திரியர் வாழும் லோகம் இருக்கும். அதற்கும் மேல் கோடி சூரியப்பிரகாசம் போன்று தேவலோகத்தை விட நான்குமடங்கு விசாலமுடைய துருவலோகம் வரையில் அநேகபேதங்கள் இருந்தும் அவை சுவர்க்கலோகம் என்றே வழங்கப்பெறும் இதற்குமேல் மகர்லோகம் என்னும் புண்ணியநாடு அநேகம் புண்ணியர்களாலும் சித்தர்களாலுஞ் சூழப்பட்டு, ஒளியோடு ஆனந்தத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கும் அதற்கு மேல் ஜனோலோகம் ஒன்றுண்டு அங்கு தேஜோமயமான தேகங்களோடு அநேகம் முனிவர்களின் கூட்டங்களும் சித்தர் கூட்டங்களும் சுத்தம் புண்ணியபயன்களை அனுபவித்து கொண்டிருப்பார்கள். அதற்குமேல் தபோலோகம் இருக்கும். அதில் விரத உபவாசங்களால் பேதம் இளைக்கச் செய்த புண்ணியவான்கள் புண்ணியத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அதற்குமேல் சத்தியலோகம் இருக்கும். அங்கு ஜனகர் ஜனந்தனர் ஸநத்குமாரர் கார்த்திகேயர் முதலான சப்த ரிஷிகளும் அந்தர பேதமுள்ள பிரமர்களும் வசிப்பார்கள் இந்தச் சத்தியலோகத்தின் உட்பிரிவு ஒன்றில் எல்லாவுலகங்களையும் சிருஷ்டிக்கும் பிரமதேவர் வசிப்பார் அதற்கு மேல் விஷ்ணுலோகமாகிய வைகுண்டம் இருக்கும் அங்கு பல விஷ்ணு பக்தர்களும் பூதர் கூட்டங்களும் திவ்விய தேகத்துடன் நித்தியசூரிகளாக வசிப்பார்கள். இந்த வைகுண்டத்தின் அவாந்தர பேதமான கோலோகம் என்ற ஒரு உலகம் ஒரு புறம் இருக்கும். அதில் வைஷ்ணவ பக்தர்கள் வசித்து வருவார்கள். இதுவரை நான் கூறிவந்தது புண்ணியஞ் செய்தோர் அடையும் பதவிகளாகும் இதற்குமேல் கோடியோசனை விஸ்தீரணமுடைய புண்ணிய ஸ்தானம் இருக்கும் அந்தஸ்தானம் யோகாப்யாசத்தாலும் ஸநஷ்டிக பிரமசர்ய விரதத்தாலும் தேவ அனுக்கிரகத்தாலும் அடையக் கூடாததாக இருக்கும். ஆனால் அது சிவஞானத்தாலேயே அடைய வேண்டியதாகும் அதன் சிறப்பை என்னால் கூறி அளவுபடுத்த முடியாது.

மேலே சொன்ன லோகங்களைச் சிருஷ்டிக்க வல்லமையுடைய பிரமதேவர் நான்கு வேதங்களாலும் பிரமஞானிகள் பலராலும் சூழப்பட்டு இருக்கையில், இந்திரர் முதலிய தேவர்களும், பல மாமுனிவர்களும் அவரைக் காணவந்தார்கள். பிரமதேவர், அவர்களை ஆதரவுடன் ÷க்ஷம விசாரணை செய்து, யாதுவரம் வேண்டும்? என்று கேட்டார். அதற்குத் தேவர்கள் மகிழ்ச்சியுடன் அவரை நோக்கி, தங்கள் அருளால் ஒரு குறையும் இல்லை அநேக லோக சுகத்தை அடைய நீங்கள் அனுப்பச் சென்று, அவற்றை அனுபவித்தலும் உங்களைத் தரிசித்துக் கொண்டிருப்பதே மேலானது என்று சொல்லி எங்களுக்கு இருக்கும் ஒரு பெரிய சந்தேகத்தை விளக்கத் தங்களையன்றி வேறு யாருமில்லாததால் தங்களையே கேட்டுத் தெளிவு பெறவந்தோம் அதாவது எல்லா வேதாந்தங்களின் இரகசிய அர்த்தமாகவும் தமஸ பரஸ்தாத் என்னும் சுருதிக்கு வெளியில் விளங்கும் ஒளியாயும் இருப்பதை நாங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்றார்கள். அதற்கு அவர் அவ்வாறே விளக்கத் துவங்கினார். எல்லா ஜகத்திற்கும் காரணகர்த்தராக இருப்பவர் சிவபெருமானே ஆவர் அவரிலும் அன்னியமானது வேறொன்றுமில்லை என்பதே நீங்கள் கேட்டதற்குப் பொருளாகும் அவரே பலமூர்த்திகளாகப் பிரிந்து. ஐந்தொழில்களை நடத்தி வருகிறவர். நீங்கள் கேட்ட சந்தேகம் என்னால் அளவுபடுத்திக் கூற இயலாதது. அந்தப்பரம சிவனே அளவுபடுத்தி விளக்கக்கூடும் என்று ஆனந்த மேலிடத் தேவர்களுக்கு உபதேசித்தார் அத்தகைய இரகசியப் பொருளை நானும் அவரால் ஒருவாறு கேட்டு இருக்கிறேன் ஆகையால் அதை உங்களுக்குக்கூறுகிறேன் என்று ஸநத்குமார முனிவர் சொல்லத் துவங்கினார்.

6. ருத்திரமூர்த்தியின் பிரபாவம்

முனிவர்களே! நைமிசாரணியத்தை அடைந்த ஸநத்குமார முனிவரை நோக்கி, வேதவியாஸ முனிவர், அறுகுணச் செல்வரே! அடியேனுக்குள்ள சந்தேகத்தை வேறு யாராலும் விளக்க இயலாததாலும் தாங்களே சிவஞானத்தை உபதேசிக்கவல்ல குருவாக இருப்பதாலும் உருத்திர மான்மியத்தை அடியேனுக்குச் சொல்ல வேண்டும் என்றார். அவர் அவ்வாறே கூறலானார். அந்த மான்மியத்தை என் குருமுகமாக நான் கேட்டவாறே உங்களுக்குச் சொல்லுகிறேன். என்று சூதமா முனிவர் சொல்லலானார். முற்காலத்தில் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தண்ணீரே சூழ்ந்திருந்தது. அந்தக் காலத்தில் அக்கினி, வாயு, சூரியன், சந்திரன், நட்சத்திரம், பூமி, திக்குகள் முகூர்த்தம் சரணம் தேவாசுர கந்தருவர் பைசாச ராக்கதராகிய சிருஷ்டியே கிடையாது. எல்லா விஷயமும் உருத்திரமூர்த்தியின் தேஐசில் வியாபிக்கப் பெற்றிருந்தன. அதை இவ்வாறு தான் இருந்தது என்று என்னால் கூறமுடியாது. அத்தகைய தேஜஸைக் கண்டு ஸநத்கமாரனான நான் அஞ்ஞானத்தினால் கைகால்களை அசைக்கச் சக்தியற்றவனாய் பிரபஞ்சம் ஒடுங்கியதோ என்று சந்தேகம் கொண்டு, அதையறிய ஆசையுற்று அலைந்து கொண்டிருந்தேன். அவ்வாறு இருக்கும்போது கோரைப் பற்களுடனும் பார்க்கப் பயங்கரமானதாகவும் உற்று நோக்கினால் மங்களகரமுள்ள தாகவும் உள்ள ஒரு முகத்தைக் கண்டேன். அதனருகே செல்லவேண்டும் என்று ஜலத்தில் போகும்போது, துந்துபியின் சப்தத்தைப் போல தகைத்த அந்த முகமாகிய ருத்திரமூர்த்தி ஒரு வார்த்தை கூறினார் அதாவது ஸநத்குமாரரே! நீர் ஏன் இவ்வாறு சுற்றி உழல்கிறீர்? நான் ஒருவனே அத்துவிதமான வஸ்து யுகந்தோறும் நானே தர்மங்களை நிலைநிறுத்துபவன் இதைச் சிருஷ்டிப்பவனும் பிறகு அழிக்கிறவனும் காப்பவனும் நானேயாவேன்! எல்லாம் என்னில் அடங்கும் என் மாயையை இன்னது என்று அறிந்தவர்களே; என்னைப் பஞ்சக் கிருத்திய சொரூபி என்று அறிவார்கள் என்று சொல்லி மறைந்தார். ஆகையால் அவரது பெருமையை இப்படிப் பட்டது என்று என்னால் எப்படி வரையறுத்துச் சொல்லமுடியும்? முதலில் பிரபஞ்ச காரணத்தைச் சொல்லுகிறேன். அவ்வுருத்திரமூர்த்தியிடமிருந்தே பிரமதேவர் தோன்றி அவர் முதலில் அன்னத்தைச் சிருஷ்டிப்பார் அவ்வன்னத்தினாலே பிராணன்களைப் பிரதிஷ்டை செய்து; பூதங்களை விருத்தி செய்வார் அவ்வன்னம் யக்ஞத்தில் உண்டாகும் அவ்வியக்ஞம் கர்மத்தினால் உண்டாகும் அக்கருமத்திற்கு ஆதாரமாகிய யக்ஞத்தீயினாலேயே பர்வஜன்யன் தோன்றி வர்ஷித்து அன்னத்தை விருத்தி செய்வான். அந்த யக்ஞத்திற்கு ரிக் யஜுர் சாமம் ஆகிய வேதங்களும் அநேக கற்பங்களும் உபநிஷதங்களும் ஆரணிய பிரமாணங்களும் அதர்வண சுருதிகளும் இன்றியமையாதனவாகும் வேதங்கள் ஏகாக்ஷரமாகிய பிரணவத்தினிடம் தோன்றும் அந்தப் பிரணவமே பிரம சொரூபம் அதுவே ஆறு அங்கங்களையுடைய வேதம் எனவும் கூறப்படும். சாங்கிய யோகத்தால் அறியத்தக்கது. அப் பிரணவ ஸ்வரூபமேயாகும். வேதத்திற்குத் தாயான காயத்திரிக்கும் அந்தப் பிரணவமே காரணமாக இருக்கிறது. உருத்திரன், சக்தி, பிரமன், விஷ்ணு ஆகியவர்களாலும் பூஜிக்கத் தக்கது. ஆகையால் சிருஷ்டிக்குக் காரணம் யஞ்ஞமேயாகும் என்று உருத்திரமூர்த்தியே கூறியுள்ளார். அவரது உபதேசத்தினாலேயே பிரமதேவர் இந்த ஜகத்தைச் சிருஷ்டிக்க முயன்றார். அவ்வகையைச் சொல்லுகிறேன்.

பரமேச பேதமாகிய ஐந்து ரூபங்களில் மேல் நோக்கிய உரோமங்களோடும், பயங்கர அக்கினி சொரூபமாயுமுள்ள ஒரு முகமும் சூரியனாகப் பிரகாசிக்கும், இரண்டாவது முகமும் சந்திரனாகப் பிரகாசிக்கும் மூன்றாவது முகமும் குபேர சம்பந்தமுள்ள நான்காம் முகமும் பரமபத சொரூபத்தை விளக்கும், ஐந்தாவது முகமுமாகிய இவற்றின் அம்சங்களைக் கொண்டே ஐந்து பேதங்களாகப் பிரமதேவர் சிருஷ்டிப்பார். இந்த ஐந்து மூர்த்தங்களே தியானிக்கத் தக்கவை இவற்றில் முதல் மூர்த்தம் இலக்குமியோடு கூடி விளையாடிப் பரிபாலித்தும் இரண்டாவது மூர்த்தம் தவஞ் செய்தும் மூன்றாவது எவற்றையும் சம்ஹாரம் செய்தும், நான்காவது சிருஷ்டித் தொழிலை இயற்றியும், ஐந்தாவது ஞானத்தைக் கொடுத்தும் விளங்கும். இதனால் எல்லா பூதங்களுக்கும் இரக்ஷகர் ஈசானன் என்று ஏற்படும் உற்பத்திபிரளயம், ஆகதி, கதி, வித்தியை, அவித்யை ஆகிய ஆறையும் அறிந்ததால் பகவானாகவும் மகான்களால் தியானிக்கத் தக்கவராகவும் பெரிதினும் பெரிதாக இருப்பதால் மஹாதேவராகவும் பிரமாதி ஸ்தம்ப பரியந்தமுள்ள சராசரத்தைப் பாலனம் பண்ணிச் சங்கரிப்பதால் பசுபதியாயும் ஜகத்திற்கெல்லாம் தானே அன்னைவடிவமாகவும் தந்தை வடிவமாகவும் இஷ்டராயும், தன்னால் தோன்றியவராயும் இருப்பதால் சுவயம்புவாயும் பிரமன் சிரத்தில் ஒன்றையறுத்துக் கபாலத்தை ஏந்தியதால் கபாலியாகவும், பிரளயகாலத்தில் மூவுலகங்களையும் சங்கரிப்பதால் சம்வர்த்தராகவும், பிரளயகாலத்தில் மூவுலகங்களையும் சங்கரிப்பதால் சம்வர்த்தராகவும் மீண்டும் அவற்றை சிருஷ்டிப்பதால் தாதாவாகவும்; எல்லோருக்கும் சுகம் ஏற்படச் செய்வதால் சங்கரராகவும் எல்லாப் பூதங்களிலும் இவரினும் அதிகமான வஸ்துவைக் கண்டிராததால் விஸ்வேசுவரராகவும் எக்காலத்திலும் தியானிப்பவர்களுக்கு அழியாத ஆனந்த ஐஸ்வரியத்தைக் கொடுப்பதால் மஹேஸ்வரராகவும் அவரிடமிருந்தே தோன்றும் சராசரத்திலுள்ள பிராணிகள் அவரை அறிய விரும்பாமல் பிரமமாயும் மேலானதற்கும் மேலானதாயும் பரத்திற்கும் பரமாக இருப்பதால் பிரப்பிரம்மமாயும் விளங்குவர்அதைக் காண்பிப்பதற்கும் சொல்லுவதற்கும் யாராலும் இயலாது; அவரே நீலலோகிதரராயும் ஏகாக்ஷர சொரூபியாயும் பிராணமயமாயும் அன்னமயமாயும் விளங்குவார். அவரது தரிசனத்தை விட ஆனந்தம் தரக்கூடிய வேறு எதுவும் இல்லை. எல்லாத் தேவர்களுக்கும் அவரே தேவராவர். அவரது மான்மியத்தை அறிந்து பக்தியுடன் தியானிப்பவர்கள். உருத்திரமூர்த்தியின் சரிதத்தைப் பக்தியுடன் கேட்டுப் படிப்பவர்கள், அவர் கிருபையால் எல்லாச் சம்பத்தையுமடைந்து, சிவஞானம் ஓங்கப்பெறுவார்கள்.

7. விரூபாக்ஷரிடம் பக்தி

முனிவர்களே! எல்லாப் பேதமுமுடைய சராசரங்களும் விருபாக்ஷனிடமிருந்தே தோன்றுவன; அவர் இலிங்கரூபியாய் விளங்குவார். அவரிடமிருந்தே விஷ்ணு உதிப்பார், அந்த இலிங்கத்திடமிருந்தே எல்லாத்தேவர் வர்க்கத்தினரும் அவதரிப்பார்கள். அவரது இரகசியத்தை மேலுஞ் சொல்லுகிறேன்.இமை கொடுக்கும் நேரத்திற்குள் பிரம விஷ்ணு முதலியோருக்கு அநேக கற்பங்களாகின்றன, அவரது  அநேககாலம் சொன்னாலும் அளவிடமுடியாதது. அவரது திருநாமங்களை இடைவிடாமல் உச்சரிப்பவர்கள் அடையும் பயனை விரித்துக் கூறுகிறேன்.

திரிகரண சுத்தியுடன் அவரைச் சரணடைந்து தோத்தரிப்போர், உருத்திர லோகத்தில் என்றும் வசிப்பார்கள். பஞ்சமாபாதகங்களைச் செய்பவர்களாயிலும் அவரது நாமங்களை உச்சரித்தோர் அந்தப் பாதங்களிலிருந்து நீங்கிட இன்பமடைவார்கள். நூறு அஸ்வமேதமியற்றினோரும் உருத்திர ஜெபம் செய்தவர்அடையும் பயனை அடைய மாட்டார்கள். பயமடைந்தோர் உருத்திரமூர்த்தியையே உபாசித்து. அதைப் போக்கடித்துக் கொள்ள வேண்டும். ஏனையோரால் ஒரு போதும் அக அகலாது. அவரை உபாசித்து விஷ்ணு பதவி முதல் எப்பதவியையும் மூவுலகாதி பத்தியமும் அடையலாம். பிற பதவியை மற்ற தேவர்கள் உபாசித்து அடையினும் அவை நீடித்திருப்பவையல்ல. அவை கற்ப பேதங்களில் அழியும், எம்பெருமானை உபாசித்து அடையும் பதவியோ அப்படிப் பட்டதல்ல. எக்காலத்திலும் அழியாது ஆதிதேவராகவும் மகாதேவராகவுமுள்ள அவரை அடைந்தோர் எக்காலத்திலும் அஞ்ஞானம் அணுகப் பெறார். அவரது நாமத்தியானத்தால் பிராமணத்வம் உண்டாகும். வேதசாஸ்திர முறைப்படி நடவாது, வர்ணாசிரம தர்மங்களை மீறியவனாயினும் சிவ என்னும் சொல்லை உள்ளன்புடன் உச்சரித்தவுடனே அப்பாதகங்களிலிருந்து நீங்கி, நற்கதி அடைகிறான். ஏழுவகை யோனிகளில் பிறந்து சம்சாரமாகிய காட்டில் உழன்று காமக் குரோதாதிகளான புலி கரடிகளால் துரத்தப்பட்ட ஆன்மாக்கள் சிவபெருமானாகிய சிங்கத்தைச் சரணடைந்தாலன்றி இரட்சிக்கப் பட மாட்டார்கள். சிவபெருமானை மனத்தால் ஒரு முறையாவது தியானித்தவர்கள் பாபமாகிய சட்டையைப் போக்கி, தோலுரித்த சர்ப்பத்தைப் போலப் பிரகாசிப்பார்கள். இருகாலங்களில் அக்னி ஹோத்திரத்தைத் தவறாமல் இயற்றினாலும் பவுண்டரீக முதலிய யாகங்களை விதிப்படி குறைவின்றி தக்ஷிணை கொடுத்து முடித்தாலும். உருத்திர பக்தர்களடையும் பலனில் பதினாறில் ஒரு கலையளவேனும் அடையார்கள். அநேக கர்மயோகங்களாலும் தியான யோகங்களாலும் பக்தி யோகங்களாலும் எந்தப் பதவியை நாடி உபாசிக்கிறார்களோ அதையடைய அவர் கருணை செய்வார், சாங்கய யோகத்தினால் அறியப்பட்டவரும் அப்பிரமேயமான பராக்கிரமமுடையவரும் நாச ரஹிதரும் நிஷ்களரும் அஞ்ஞானமுடையவர்களால் அணுகப் பெறாதவருமாகவுள்ள விரூபாக்ஷியை அடைந்து இஷ்டசித்தியைப் பெறாதார் யார்? தீர்த்தங்களுள் புண்ணிய தீர்த்த ஸ்வரூபியாகவும் மங்களங்களுக்குள் மங்களமாயும் பரிசுத்தப் பொருட்களில் பரிசுத்தருமாக உள்ளவர் பரமேஸ்வரன் அவர் பாலில் மறைந்து கிடக்கும் நெய் போலவும். விறகில் நெருப்புப் போலவும்; பூமியில் ஜலம் போலவும்; தீயில் வெப்பம் போலவும், நீரில் குளுமை போலவும் வியாபித்திருப்பார். அவரைத் தேவர் கந்தர்வர், யக்ஷர், சித்தர், வித்தியாதரர் முதலானோரும் அறியச் சக்தியற்றிவர் எனும்போது மானுடரோ அறியவல்லார்? இவ்வரும் பெருமைகள் வாய்ந்த உருத்திரமூர்த்தியை அனுதினமும் அர்ச்சனை செய்து வருபவர்கள் யமனை வென்று எல்லா உலகங்களுக்கும் தடையின்றிச் செல்லும் விமானங்களில் ஏறி, தேவர்கள் வழிபட உருத்திரலோகத்தில் வாழ்வார்கள்.

8. ஸநத்குமாரர் வரம் பெறுதல்

இவ்வாறு கூறிய பிரமதேவரை முனிவர்கள் பார்த்து, சிவபெருமானை எவ்வாறு பூஜிக்க வேண்டும்? அவர் எத்தகைய பூஜையில் பரியமுடையவர் அவரைப் பூஜித்து யார் யார் என்னென்ன பயனையடைந்தனர் என்று கேட்டார்கள். அதற்கு பிரமதேவர் கூறுகிறார். முனிவர்களே! முன்னாளில் இருஷிகேசனாகிய மஹாவிஷ்ணு அறுபத்தினாயிரத்து அறு நூறு ஆண்டுகளாக அவரைப் பூஜித்து அவரை நேரில் சிரித்து, தாம் அடைய விரும்பிய சக்கரத்தையும் தேவர்களுள் தலைமையும் போரில் ஒருவராலும் வெல்லமுடியாத வல்லமையையும் அவருக்குச் சமமான தேஜஸையும் எல்லாவுலகங்களையும் காக்கும் சக்தியையும் அடைந்திருக்கிறார். நான் பலகாலமாக விரூபாக்ஷ சாரூபியும் புஷ்கராஷ சொரூபியும் மஹேஸ்வரரும் சூல பாணியுமான மஹாதேவனை யாகம் முதலான செயல்களாலும் பக்திபூர்வகமான பூஜைகளாலும் வேதவாக்கிய அர்ச்சனைகளாலும் தியானத்தாலும் பூஜித்து அவரைக்கண்டு நான் நினைத்திருந்தபடி ஒரே காலத்தில் நான்கு வேதங்களையும் உச்சரிக்க நான்கு முகங்களும் தேவ மானுடர் என்னைப் பூஜித்தால் அந்தப் பூஜைக்கு இரங்கி அவர்கள் கோரியதைக் கொடுக்க சக்தியும் சராசரங்களைச் சிருஷ்டிக்கும் வல்லமையும், பூத பவுஷிய வாத்தமான காலங்களை அறியும் ஞானமும் பிரமபட்டமும் வேதங்களுக்கு அங்கமான ஆறு சாஸ்திரங்களும் சாங்கியாதி யோகங்களும் அறுபத்து நான்கு கலைகளும் தொண்ணூற்றாறு தத்துவங்களும் நிர்மலமானதும் சத்யலோகப் பட்டாபிஷேகமும் கிடைக்கப் பெற்றுள்ளேன். இப்பரமேசனைக் குறித்தே இந்திரன் பாசுபதம் என்னும் விரதத்தை அனுஷ்டிக்கச் சங்கற்பம் செய்து நீரையும் காற்றையுமே உண்டு சுகங்களை நீத்து, ஆடையாபரணங்களை நீக்கி மான்தோல் புலித்தோலையுடுத்து பல காலம் தவமிருந்து சிவபெருமானைத் தரிசித்து மூவுலக ஆதிபத்தியமும் தேவர்களுக்குத் தலைமைப்பதவியும் வஜ்ராயுதமும், பெருவலிமையும் பிராமண, க்ஷத்ரியர்களாலியற்றப்படும் யாகத்திற்கு அதிதேவதையாக இருந்து; அந்தந்த யாகங்களுக்கு உண்டான பயன்களை கொடுக்கும் சக்தியும் பெற்று சுவர்க்கத்தையரசு செய்து போகத்தை அனுபவிக்கிறான். என் மனதிலிருந்து தோன்றிய ஸநத்குமார முனிவன், பரமேசனைத் தியானித்து அடைந்த மேன்மைகளைக் கூறுகிறேன்.

பூர்வத்தில் நான் கைலாயத்தைத் தரிசிக்கச் சென்றேன். அப்போது பகற்காலத்தில் பிரகாசிக்கும் சூரியனைப்போன்ற ஏழாயிரம் விமானங்கள் பத்துத்திக்குகளும் செவிடுபடும்படியாகச் சப்தம் உண்டாக்கும். மண்கள் கட்டப் பெற்றனவாய் மன்னற்கொடி போன்ற வெண்பட்டு அணிந்த தேகமும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலும் வைர வைடூரிய கங்கணங்களும் தண்டைகளும் தாமரை மலர்களைப் பழிக்கும் கண்களும் கொவ்வைக்கனிகளைப் போன்ற அதரமும் மல்லிகையரும்பைப் போன்ற பல்வரிசையும் குயிலோசைப் போன்ற குரலும் எள்ளின் பூவைப் போன்ற நாசியும் மன்மதனின் வில்லைப் போன்ற புருவமும், பிறை போன்ற நெற்றியும் வட்டமுகமும் அகனின்றும் தோன்றும் புன்னகையோ அச்சந்திரனிடத்தும் உதிக்கும் சந்திரிகையைப் போன்றும் யானை மத்தகங்கள் போன்ற ஸ்தனங்களும் பொருந்திய அநேகம் கன்னியர்கள் மின்னல் போல ஒளி வீசும் கோள்வளைகள் அணிந்த கைகளில் வெண்சாமரைகள் எடுத்து வீசிவரக் கண்டேன். அவ்விமானங்களில் அப்சரசுகளின் வாத்திய சங்கீத கோஷம் மிகுந்திருந்தன அத்தகைய விமானங்களிலே மிகவும் அழகு பொருந்திய விமானங்களின் நடுவே ஸநத்குமார முனிவர் தேஜாமயமான சரீரத்துடன் அநேக புண்ணிய புருஷர்கள் மத்தியில் உட்காருஞ் சமயத்திலிருந்தார் அங்கே பல இராஜ ரிஷிகளும் கூடியிருந்தார்கள். அவர்களுக்கும் தனித்தனி விமானங்கள் அநேகம் இருந்தன. பிருதிவியினும் அந்தரிக்ஷங்களிலும் பாதாளத்திலும் நட்சத்திர மார்க்கத்திலும் பர்வதங்களிலும் யோகஸ்தானங்களிலும் உள்ள கணக்கற்ற உருத்திர மூர்த்திகள் திவ்விய தேஜஸோடு உருத்திராட்ச மாலைகளை அணிந்து விபூதியணிந்து முக்கண்களோடு ஒருவருக்கு ஒருவர் சிறிதும் வித்தியாசமற்று மேருமலை போன்ற தேகமுடையவராய் சூழ்ந்திருக்க அவர்கள் நடுவே விளங்கும் ருத்ரமூர்த்தியை சனத்குமாரமுனிவர் நமஸ்கரித்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் ஸனத்குமார முனிவருக்கு இருந்த தேஜஸையும் பிரபாவத்தையும் என்னால் சொல்ல இயலாது என் புதல்வராகிய ஸனத்குமாரருக்கு இத்தகைய பிரபாவம் உண்டானது. அந்த ருத்திர பூஜா பலனாலேயே என்று உணர்வீர்களாக அந்த உலகத்தில் ஸனத்குமாரருக்குச் சமானமான கீர்த்தியுடன் அநேக கணங்கள் வசிக்கக் கண்டேன் அவர்களுடைய நாமஸ்மரணையினாலேயே பாவங்களனைத்தும் தொலையும் அந்த ருத்திர கணங்களுடைய பெயர்களைப் பர்வ காலத்திலும் அமாவாசையிலும் பிதுர்தினத்திலும் ஸ்மரித்தால் புத்திரபாக்கியம் அடைவார்கள். க்ஷத்திரியர் ஸ்மரித்தால் யுத்தத்தில் வெற்றியடைவார்கள். நாள்தோறும் மூவேளைகளிலும் ஸ்மரித்தவர்கள் சத்ருத்திர பாராயணம் செய்த பயனை அடைவார்கள். பெரும் பெரும் பாவங்களைச் செய்தவர்களாயினும் உருத்திர மஹாத்மியத்தைக் கேட்டால் அவர்களின் பாவங்கள் யாவும் ஒழியும் அவர்கள் உருத்திர லோகத்தை அடைவார்கள் அநேகம் பெரியோர்கள் உருத்திர உபாசனையில் சிறந்தவர்களாகி உலகம் முழுவதையும் வென்று சமானமற்றவர்களாய் எங்கும் சஞ்சரித்தார்கள். அதிகம் சொல்வதில்பயனில்லை. முனிவர்களே! நானும் என் பிதாவுமாகிய நாராயணனும் அந்தப் பகவானுடைய ஊர்த்துவ நேத்திரமாகிய திருநெற்றிக்கண்ணைத் தரிசித்து பிரமத்துவத்தையும் விஷ்ணுத்வத்தையும் அடைந்தோம் அவருடைய பிரபாவத்தை என்னால் சொல்ல முடியாது அத்தகைய பிரபாவங்களையுடைய உருத்திர மூர்த்தியின் சந்நிதானத்தில் நிற்கும் ஸநத்குமார முனிவரிடம் நான் சென்றேன் அவர் என்னைக் கண்டதும் விரைந்து நமஸ்கரித்து சொல்லுகிறார்.

வருக பிதாமகரே! எல்லா உலகங்களுக்கும் தடையின்றிச் செல்லும் விமானத்தையும் திவ்விய தேகத்தையும் பெற்ற நான் இந்த உருத்திர லோகத்தில் உள்ள சிசுவைக்கூட ஜபிக்கச்சக்தியற்று இருக்கிறேன். ஆகையால் இந்தத் தேகத்தை விட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறேன்! என்றார். அதைக் கேட்ட நான் தியான யோகத்தில் ஒரு முகூர்த்தகாலம் இருந்து தியானித்து ஸநத்குமாரருக்கு இத்தகைய கஷ்டம் உண்டானதற்குக் காரணம் என்னவென்று யோசித்தேன். பராத்பரமான ஜகதீசனுடைய சுரூபமே அங்குள்ள யாவுமே என்று தெரிந்துக் கொண்டு சர்வ வியாபியான மகாதேவரின் மகிமையினால் ஸநத்குமாரன் புறக்கணிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று யோசித்து விமானத்திலிருந்து இறங்கி கைகூப்பிச் சென்று சர்வதோமுகனாயும் ஆதியந்த சூனியனாயும் நாசரஹிதனாயும் காரணங்களுக்கெல்லாம் மூல காரணனாயும் விளங்கும் சிவபெருமானைத் தரிசித்து நமஸ்கரித்து ஸநத் குமாரரை நோக்கி மகனே! எல்லா உலகங்களுக்கும் பிரபுவான மகாதேவரை விடச் சிறந்தவர்கள் ஒருவருமிலர் யோகத்தால் அறியத் தக்கவர் அவரே தேவர்களில் உத்தமதேவர் அவர் அந்த ஜகதீசனுடைய மாயையை என்னாலும் என் பிதாவாலும் அறிய முடியாது. இந்த விஷயத்தில் துக்கித்துத் தேகத்தை இழக்கவேண்டாம் பூர்வம் லோக நாயகனாகிய மகேஸ்வரனைக் குறித்து நந்திதேவர் பல நாட்கள் தபஞ்செய்து அகண்ட சாம்ராஜ்ய பதவியை அடையவிரும்பி அது கிட்டாமல் தன் தேகத்தை விடத் தீர்மானித்தார். அப்போது சிவபெருமான் தோன்றி, மகனே! வீணாகத் துக்கிக்க வேண்டாம் தேகத்தை விடாதே! யாவராயினும் என் மயமாவது கஷ்டம் என்னுடைய தத்துவங்களையெல்லாம் உனக்கு உபதேசிக்கிறேன் என் ஆன்ம சொரூபத்தை ஒருவர் அறிவது என்பது துர்லபம். ஆகையால் நீ கணாதிபத்யத்தை அடைந்து என் சேவை செய்து கொண்டு சிலகாலம் கழித்து என் சொரூபத்தை உணரக் கடவாய் என்று ஆசீர்வதித்தார். நந்திதேவருக்குச் சமானனான நந்திமுகன் என்னும் கணன் ஒரு சமயம் சிவபிரானைக் குறித்துத் தவம் செய்தான். அவரைத் தவத்தின் பயனாய்த் தரிசித்து ஐயனே! தங்களது ஆன்ம சொரூபத்தை ஒருவர் அறிவது என்பது துர்லபம் ஆகையால் நீ கணாதிபத்யத்தை அடைந்து என் சேவை செய்து கொண்டு சிலகாலம் கழித்து என் சொரூபத்தை உணரக் கடவாய் என்று ஆசீர்வதித்தார். நந்திதேவருக்குச் சமானனான நந்திமுகன் என்னும் கணன் ஒரு சமயம் சிவபிரனைக் குறித்துத் தவம் செய்தான். அவரைத் தவத்தின் பயனாய்த் தரிசித்து ஐயனே! தங்களது ஆத்ம சொரூபத்தை உபதேசிக்க வேண்டும். என்று கேட்டான் அதற்கு சாம்பவமூர்த்தி நீ ஈசானன் என்னும் உருத்திரனிடம் யோக சாஸ்திரத்தைப் பயின்று அநேக காலம் சென்ற பிறகு அறியக் கடவாய் என்று அருளினார். ஈசானன் ருத்திரனை உபாசித்தே என் தந்தையாகிய விஷ்ணுவும் கணாபத்யத்தை அடைந்தார். நீ துக்கப்படாமல் இன்னும் சிவத்யானம் செய்து கொண்டிருந்தால் சிவபெருமான் உனக்குத் தரிசனம் கொடுப்பார்! என்று கூறினார். அதன் பிறகு ஸநத்குமார முனிவர் ரிக், யஜுர், சாமம், அதர்வண வேதங்களாலும் உபநிஷதங்களாலும் சிவபெருமானை அநேகவிதமாகத் தோத்திரஞ் செய்யலானார்.

சராசரங்களுக்கெல்லாம் காரணகர்த்தாவாகிய பரமசிவனே! சர்வ பூதங்களின் அந்தராத்ம ஸ்வரூபியே! தேவ தேவரே! சர்வ பூதங்களையும் சங்கரிப்பவரே! உலகங்களை ரக்ஷிப்பவரே! சாங்கிய யோசத்தினால் அறியத் தக்கவரே! கர்ம ஸ்வரூபியே! தர்மபலன்களைக் கடாக்ஷிப்பவரே! கோடி சூர்ய சமானமான கண் உள்ளவரே! தேவரீரே சிலகாலம் நான்கு முகங்களுடன் பிரகாசிக்கிறீர், நான்கு கரங்களுடன் பிரகாசிக்கிறீர்! நான்கு வேதங்களின் ஸ்வரூபியே! சதக்கிருது நீரே! வாயு ஸ்வரூபியே! காலாக்கினி ருத்திர ஸ்வரூபியே! தர்மத்தை நிலை நிறுத்தி அதர்மத்தை ஒழிப்பவரே! விஷ்ணுவுக்குச் சக்ராயுதம் அளித்தவரே! காளகூட விஷத்தை உண்டவரே! தேவ அசுரர்களை ரட்சிப்பவரே! காலங்களைக் கணிக்கச் சூரிய ஸ்வரூபமாக ஆனவரே! உற்பத்தி நாசமற்றவரே! சரணமடைந்தோரை ரட்சிப்பவரே! ரிக்கு முதலிய வேதங்களின் அர்த்தஸ்வரூபியே! கால ஸ்வரூபியே! உம்முடைய சரீரத்திலிருந்தே பதினான்கு உலகங்களும் தோன்றி நாசமடைகின்றன! இவ்வாறு யாவும் உம்மிடம் தோன்றி அழிதலை ஒருவரும் அறிந்திலர், யோகேஸ்வரரே! உமக்கு நமஸ்காரம், நமஸ்காரம்! என்று ஸநத்குமாரர் பலமுறை பணிந்தார். அவரை மகிழ்விக்க சிவபெருமான் பிரசன்னமான முகமண்டலமும், முக்கண்களும், தண்டக மண்டலமேந்திய கரமும், சந்திர சூடமும் புலித்தோலாடையும் சிங்கத்தோல் போர்வையும் நாகப்பூணூலும் உருத்திராக்ஷõபரணங்களும் கங்காதரமும், கட்வாங்கம், அசனி, சூலம், மழு, கத்தி, வில், முத்கரம், சங்கு, சக்கரம், அலம், கபாலம் இவற்றைத் தாங்கியும் காளை வாகனத்தினராய் அநேக சிவகணங்களால் சூழப்படும் நந்திதேவர் சூலாயுதமேந்தி முன்னே செல்லவும் கோடி சூரியருக்குச் சமானமாகக் காட்சியளித்தார். பிறகு அவர் ஸநத்குமாரரை நோக்கி திடபக்தியுடைய ஸநத்குமார முனிவனே! உனது தியான ஸ்தோத்திரங்களுக்கு மகிழ்ந்தேன். நிர்மல சித்தத்தோடு கூடிய உனக்கு மங்களமுண்டாகட்டும்! என்று அருள்கூறி உனக்கு இஷ்ட மானதைக் கேட்கலாம். உனக்கு மகத்தான கீர்த்தியை ஏற்படுத்த வேண்டும் என்றே பிரசன்னமானேன் என்றார்.

ஸநத்குமாரர் சிவபெருமானை நோக்கி மஹேஸ்வரா! என் தந்தை பிரமதேவரால் ஸநாதனமாயும் பராத்மரமாயுள்ள உம்மைத் தரிசித்ததே சிரேஷ்டமானது. அதைவிடச் சிறந்தது ஒன்றுமில்லை ஆயினும் நான் வரம் பெறுதற்குப் பாத்திரனாக இருந்தால் எந்தக் காலத்திலும் தங்கள் திருவடித் தாமரைகளிலிருந்து என் மனம் நீங்காது, அன்பு கொண்டிருக்கும்படி வரமருள வேண்டும். நான் பலகாலம் தியானஞ் செய்து கொண்டிருக்கும்போது என் மனம் சலித்து காமக் குரோதாதிகளில் பிரவேசித்து சுகதுக்கங்களை அனுபவித்திருக்கக் கூடுமாயின் அவற்றையெல்லாம் குற்றங்களாகப் பாராட்டாமல் பொறுத்தருள வேண்டும். நான் பிராணாயாமம் செய்து தங்களது பிரம்மானந்த ஸ்வரூபத்தை அனுசந்தானம் செய்து கொண்டிருக்கும்போது ஜகத்வாசனையால் பிரம்மானந்தத்திற்குப் பின்னமுண்டாகாதவாறு அருள்புரிய வேண்டும். யாருக்கு மனத்தூய்மையில்லையோ அவர்களது ஹவ்விய கவ்வியங்களைத் தேவர்களும் பிதுரர்களும் புசிக்க மாட்டார்கள். உம்மிடமிருந்து தோன்றிச் சகல உலகங்களையும் சிருஷ்டி செய்யும் பிரம்மதேவனது பதவியளித்தினும் எனக்கு வேண்டாம், நீரே யக்ஷ கின்னரர் கிம்புருஷ காந்தர்வ சித்த வித்தியாதர உரகமானுட சராசரமாகத் தோன்றுகிறீர். நீரே பிரபு ஆகையால் உம்மைவிட வேறு தெய்வத்தைச் சரணம் அடையமாட்டேன். எக்காலத்தும் அழிவற்று விளங்கும் சுயம் ஜோதியே! என்னை அனுக்கிரகிக்க வேண்டும்! என்று வேண்டினார். அதைக் கேட்டு மகிழ்ந்த சிவபெருமான் யோகீஸனான ஸனத்குமார முனிவனே! என்னைப் பக்தி செய்யத்தக்க சிவபக்தர்களில் நீயே சிறந்தவன்! முனிவர்களில் நீயே சிலாக்யன் எப்போதும் குமார ஸ்வரூபனாயும் ஸர்வலோக சஞ்சாரியாயும் எக்காலத்தும் அழியாத உடலும் சிவதத்துவ உணர்ச்சியும் பெற்றவனாக விளங்குக என்னுடைய நாமங்களும் எனது லோகவிபவங்களும் எனது ரகசியங்களும் உனக்கு நன்றாக விளங்குமாக! எங்கும் நீ நினைத்தபடி செல்லத் தக்கதும் நிர்மலமான நவமணிகளிழைத்ததும் முத்துச் சரங்கள் தொங்க விட்டதும் ஸ்படிகத் திண்ணையையுடையதும் சந்திர மண்டலம் போல ஆகாயத்தில் செல்லத் தக்கதும் வைடூரிய சாளரமுடையதும் திவ்விய தீபங்களமைந்ததும் சுகமான காற்றும் உயர்ந்த துவஜங்களும் கொண்ட திவ்விய விமானத்தில் ஏறிச் சஞ்சரித்து அநேக காலம் சென்ற பிறகு பராசர முனிவருடைய தேஜஸால் விஷ்ணு அமிசமாகத் தோன்ற விருக்கும் வியாசனுக்குச் சிவதத்துவங்களை உபதேசிக்க கடவாய் அவன் உன்னால் ஞானமடைந்து அவனே உனக்குச் சத்பாத்திரமானவனாகையால் நீ அவனுக்கு எல்லாவற்றையும் உபதேசம் செய்க! என்றருளி அந்தர்த்தியானமானார்.

9. பிரமகீதை உரைத்தது

ஸநத்குமார முனிவர், தேவதேவனாகிய பரமேசனால் அழியாத தேகத்தைப் பெற்று பார்வதி தேவியால் புத்திரனாக ஸ்வீகரிக்கப்பட்டுச் சர்வ லோக சஞ்சாரியாய் தாமே தாதாவாய்; தாமே ஜகத்கர்த்தராய் அழிவற்று வாழ்ந்து வந்தார். முனிவர்களே! பரமசிவனே யக்ஞபதி உமாபதி, யக்ஞஹோதாவும் ஹோமஸ்வரூபியும் அவரே வியக்தமாகவும் அவ்யக்தமாகவும் அவரே! யோகிகள் எல்லோருள் தம் யோகத்தினால் பராத்பர வஸ்து வென்று உணர்ந்து தியானிக்கப்படுபவரும் அவரே! மோக்ஷங்கொடுக்க வல்லவரும் அவரே! அவரைத் தியானிப்போர் எல்லாப் பாபங்களையும் ஒழித்து அவரது திருவடிகளை அடைவார்கள். தாமரை இலையானது தண்ணீரிலிருந்தாலும் அந்தத் தண்ணீர் ஒட்டப்பெறாதது போல அவருடைய ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் ஜகத்திலிருந்தாலும் குடும்ப தோஷங்களால் தொந்தரவடைய மாட்டார்கள் என்று ஸநத்குமார முனிவர் கூறினார். இவ்வாறு சிவப்பிரபாவத்தை ஸநத்குமாரர் மூலமாகக் கேட்ட முனிவர்கள் அனைவரும் செய்சிலிர்த்து ஆனந்தப் பரவசத்துடன் அவருடைய பாதங்களில் பணிந்து கூறலானார்கள்!

சிவஞானத்தில் வல்லவரான சிரேஷ்டரே உங்கள் அருளால் வேதாந்தங்களின் இரகசியத்தையும் சிவத் தியான கிரமத்தையும் அறிந்து கொண்டோம். சீடர்களான எங்களால் தங்களது நிஷ்டைக்குத் தடை நேர்ந்தது. இனிமேல் தாங்கள் நிஷ்டையில் இருக்கலாம் என்று விண்ணப் பித்து அவர்கள் ஸநத்குமார முனிவரிடம் விடைபெற்றுக்கொண்டு இச்சையற்றவர்களாய் அது முதல் சிவபஞ்சாக்ஷரங்களாலும் விபூதி ருத்திராக்ஷõதிகளாலும் ஓங்காரத்தினாலும் காலவித்தைகளாலும், சமாதானத்தினாலும் ஸவ்வியாப ஸவ்வியாபிரதக்ஷிணங்களாலும் வாமதேவாதி விரதங்களாலும் சத்ருத்திரீ முதலான ஸ்தோத்திரங்களாலும் சிவபூஜை செய்து வந்தார்கள். இவ்விதமாகப் பூசித்த முனிவர்களுக்கெல்லாம் மனவாக்கு காயங்களுக்கு எட்டாத உருத்திரமூர்த்தி திருவருள்புரிந்து அவரவர் விரும்பிய பொருளைக் கொடுத்திருக்கிறார். ஆகையால் எவன் பூவுலகில் சிவபூஜையை முறைப்படி செய்கிறானோ அவனது மனோரதம் பூர்த்தியாகிவிடும் அவரே கோரிக்கைகளைக் கொடுப்பவர். அவரே பிராமணாதி ஸர்வ வர்ணங்களிலும் பக்தி செய்வோரைத் தாரதம்மியம் இல்லாமல் காத்தருள்பவர். எந்தப் பக்தனாவது இந்தப் பூலோகத்தில் மூன்று நாட்கள் சம்சாரசிந்தையினால் கஷ்டமடைந்து அதற்காகவாவது சிவ பூஜை செய்தால் அதுவும் சிறந்ததேயாகும். பாவ மிகுதியை உடையவனே யாயினும் சிவநாம ஸ்மரணை செய்தால், உடனே தன் பாவங்களை ஒழித்துச் சிவஞானியாவான். சிவபெருமானை ஆஸ்ரயித்தவன் ஒருபோதும் துர்க்கதி அடைவதில்லை. இந்த அத்தியாயத்திற்குப் பிரம கீதை என்று பெயர். இது பூர்வத்தில் பிரமதேவரால் சில முனிவர்களுக்குச் சொல்லப்பட்டது. இதைப் பக்தியோடு படிப்பவர்களும், படிக்க கேட்பவர்களும் படிக்கச் செய்பவர்களுமாகிய அவர்கள் யாவரும் எல்லாப் பாவங்களிலிருந்தும் நீங்கிப் புனிதராவார்கள். இந்தப் பிரம கீதையை பிராமணர்கள் சிவசந்நிதியில் நாள்தோறும் பாராயணஞ் செய்தால் இந்தவுலகத்தில் சித்தர்களாக இருந்து பிறகு, ÷க்ஷமத்தை அடைவார்கள். இந்தப் பிரம கீதையை அர்த்தத்துடன் தெரிந்து கொண்டு சிவபெருமானைப் பூஜித்தவர்கள் நரைமூப்பு மரணங்களையும் எல்லாப் பந்தங்களையும் ஒழித்துச் சிவபதத்தை அடைவார்கள்.

10. மும்மூர்த்தி திருநகர்கள்

வியாச முனிவர் ஸனத்குமார முனிவரை நோக்கி, சுவாமி பிரமலோகம் விஷ்ணுலோகம், உருத்திர லோகங்களின் கிரமத்தையும் அவற்றின் சிறப்பையும் கேட்க விரும்புகிறேன் என்று கேட்டார். ஸனத்குமார முனிவர் சொல்லத் துவங்கினார். எண்பத்து நான்காயிரம் யோசனை அகல நீளங்களை உடையதும் அநேக நதிகளையுடையதும் சுவர்ண மயமானதும் பூமிக்கு ஓர் ஆதார ஸ்தம்பமானதும் இரத்தின மயமான கும்பங்களும் அமிர்த மயமான சுனைகளும் ஆறு ருதுக்களிலும் பலவித மலர்களைக் கொடுக்க வல்லதும், சக்கிரவாகம் சகோரம் முதலான பறவைகள் சஞ்சரிக்கப் பெற்றதும், ஐராவத குலத்தில் உண்டாகிய யானைகளும் புலிகளும், கரடிகளும், வானரங்களும் ரத்தின மயமான மாளிகைகள் விளங்கப் பெற்றதும் குபேரன் முதலிய யக்ஷர்களும் சித்திரசேனன் முதலிய கந்தர்வர்களும் வித்தியாதர கணங்களும் தத்தம் நாயகியரோடு விளையாடிக் கொண்டிருக்கப் பெற்றதும் ஹாஹா ஹுஹு க் களாகிய காயகாளும், விசுவாவசுவும் தும்புருநாரதரும் கானஞ்செய்யப் பெற்றதுமாக இருப்பது மேரு பர்வதம். அங்கு மயில் நடமிட சந்திரகிரணத்திற்கு இணையான காந்தியுள்ள ஜலமாக கங்காநதி பிரவகிக்கவும், அதன் தீரத்தில் அநேகம் தேவர்கள் தங்கள் நாயகியரோடு கூடி ஆங்குள்ள பொற்றாமரை மலர்களைக் கொய்து கொண்டு அருகிலுள்ள வெண்மணற் குன்றுகளில் விளையாடவும் குளிர்ந்த நறுமணங் கமழும் மந்தமாருதம் வீசவும். எப்பொழுதும் ஆனந்தமயமாக இருக்கும் அதன் சிறிது மேற்பாகத்தில் சூரியகிரணமும் சந்திரகிரணமும் கிடையாது அந்தப்பகுதி தேவமானுடர்களால் மனதாலும் காண்பதற்கரியது, அங்கு தேவாதி தேவனுடைய நகரம் விளங்கும் அது பதிவெண்ணாயிரம் யோஜனை பரப்பளவும் பொன்மயமானமதிலும் மேன்மாடியில் ஸ்படிகங்கள் இழைக்கப் பெற்றதும் வைடூரியமயமான வீடுகளும் மாளிகைகளின் மேல் துவஜங்கள் நாட்டப் பெற்றதுமாக இருக்கும் அந்த நகரத்திற்கு ஆயிரம் வழிகளுண்டு அவ்வழிகளில் அநேக ஆயிரம் மாளிகைகள் உள்ளன.

அவை சூரிய பிரகாசமும் இரத்தின மயமான பீடங்களும் மரகதத் திண்ணைகளும் வைடூரியக் கட்டில்களும் முத்துத்திரைவிடுத்த சாளரங்களும் மாணிக்க ஊஞ்சல்களும் அமிர்தம் நிறைந்த கும்பங்களும் அகருசந்தன தூபமும் நறுமணங்கமழ்ந்து வாடாத மலர்களுமுடையன நரை திரை மூப்பற்ற துவாரபாலகர்கள் அம்மாளிகைகளைக் காப்பார்கள் அம்மாளிகைகளின் காந்தியோ பிரளய காலாக்கினியின் தேஜசுபோல ஜ்வலித்தும் ஒரு பக்கம் இரத்தினங்களின் காந்தியும் மற்றொரு பக்கம் சுவர்ணத்தின் ஒளியும், வேறொரு பக்கம் வைரநிறமும் இன்னொரு புறம் வைடூரிய விளக்கமும் நவரத்தின ஒளியானது நானாவகையாகப் பத்துத் திக்குகளிலும் பரவி ஜொலிக்கும் அத்தகைய சிறப்புடைய நகரத்தின் நடுவே ஒரு சிறந்த மாளிகையுண்டு. அதுவே சிவஸ்தானமாகும். அங்கு நவரத்தினங்கள் இழைத்த ஏழாயிரம் ஸ்தம்பங்களுள்ள மண்டபமும் இரத்தின கசிதமான அநேகம் பிரகாரங்களையுடைய ஒரு கோபுரமும் உண்டு. அந்த மண்டபத்தைச் சுற்றிலும் வைடூரிய நிறம் பொருந்திய பசும்புற்ற பிரதேசங்களும் தங்கத் தகட்டினையொத்த தளங்களையுடைய வில்வ மரங்களும் அந்த மண்டபத்தில் இந்திர நீலங்கள் இழைத்த அறைகளும் அவற்றிற்கு வைரங்களால் சாளரங்களும் மரகதத்தினால் திண்ணைகளும் கோமேதகத்தினால் பீடங்களும் அங்கங்கே புஷ்ப பழங்களை இடைவிடாமல் வழங்கும் மரங்களும் அந்த மண்டபம் முழுவதும் அநேகவாயிற்படிகளும் பல நிறமுடைய துவஜங்களும் பொன்மயமான மலர்களையுடைய பாரிஜாதங்களும் மரகத நிறமான கதலிகளும் நறுமலர்களைச் சொரியும் கடம்ப மரங்களும் அமுதம் பெருகும் தடாகங்களும் செந்தாமரை, வெண்தாமரை மலர் போன்ற பல மலர்கள் நிரம்பிய வாவிகளும் இந்திர நீலங்களை மாலைகட்டினாற் போன்று எப்பொழுதும் வண்டுகள் பண்பாடும் குளங்களும் தளர்களைப் புசித்துச் சிவநாமங்களைப் பஞ்சம ஸ்வரத்துடன் பஜிக்கும் குயில்கள் வாழ்கின்ற சோலைகளும், அந்தச் சோலைகளிற் படர்ந்துள்ள அமிர்தமாரி பொழியும் மேகங்களைக் கண்ட பொன்னிற சிறகுகளையுடைய மயில்கள் தாமும் சிவ பெருமானைப் போலவே நீலகண்டம் என்னும் பெயர் பெற்றிருப்பதை எண்ணிக் கனி கூர்ந்து சிவநாமஸ்மரணை செய்வன போலவே கேகயத் தொனி செய்யும் சிறப்பும் மரகதரத்தினம் போலப் பசுமை வாய்ந்த கிளிகளும் பார்வதி தேவியின் குரலொலியைக் கற்றுக் கொள்ள அவ்விளஞ் சோலையில் தவஞ் செய்வோரைப் போலத் தேவியின் நாமங்களை ஸ்மரித்துக் கொண்டிருக்கும் வனப்பும் மந்த மாருதம் வீசுதலும் துக்கமற்றதும் குளிர்ந்துள்ளதும் ஒளிமயமானதாகவுமுள்ள அந்த மண்டபத்திற்கு எட்டு வாசல்கள் இருக்கின்றன.

அவற்றுள் கிழக்கு வாசல் ஸ்ரீதுவாரம் என்று பெயர் பெற்றிருக்கும் அவ்வுயர்ந்த கோபுரத்தில் மஹாசித்தன் என்ற பெயருடைய சிவகணநாதன் தாமரை மாலையணிந்து பெருந்தவசியாய் அந்த வாயிலை காப்பான் தென் திசையில் லக்ஷ்மித்வாரத்தில் காளமேகம் போல மிகவுயர்ந்து கறுத்த தேகத்தையுடையவனாய் சூலம் தாங்கி மகாகாயன் என்ற சிவகணன். காத்திருப்பான் தென் திசையில் சிவநாமபுரம் என்ற வாயிலில் சிலாக்கின படி மகாவீரியனாகிய கண்டகர்ணன் என்பான் புண்ணியச் சிவகணங்களோடு காவல் செய்வான் நிருதி திக்கிலுள்ள வாயிலில் பீமநாதன் என்பவன் காத்திருப்பான் மேற்றிசைத் துவாரம் வாருணம் எனப்பெயர் பெறும் அங்கு நந்தீசுவர கணங்கள் காவல் செய்வர் வடமேற்கு வாயிலை ஹவிஜிஹ்வன் என்னும் கணநாதன் காப்பான் வடவாயிலுக்குக் கீர்த்தித் துவாரம் என்று பெயர் அங்கு மகேசன் என்னும் சிவகணநாதன் காவல் செய்வான் ஈசான் வாயிலில் சிவருத்திர கணங்கள் தொகுதியாகக் காத்திருப்பார்கள் எட்டுத் துவாரங்கள் இருப்பினும் ஈசான வாயிலே ஈஸ்வரனுக்கு பிரியமானது அங்கு கோபத்தை வென்று இந்திரிய நிக்கிரகம் செய்து சாந்தத்தை அடைந்து பசுபதியிடத்தில் பக்தி செய்தவர்களும் சாங்கிய யோகாப்பியாசஞ் செய்தவர்களும் ஆகமவிதி வழுவாமல் சிவபெருமானைப் பூஜித்தவர்களும் கிரகஸ்தாசிரம தர்மத்திலிருந்து முறைப்படிப் புண்ணியம் செய்தவர்களும் சிவபெருமானைப் பார்த்திவ லிங்கத்திலும் பாணலிங்கத்திலும் பூஜித்தவர்களும் க்ஷத்திரியர்களாக இருந்து நியாயந் தவறாமல் இராஜ நீதியைச் செலுத்தியவர்களும் யுத்தரங்கத்தில் இராஜநீதி தவறாம் தம் உயிரை விட்ட க்ஷத்திரியர்களும் சுயதர்மந் தவறாது சத்தியவாதிகளாக இருந்து வர்த்தகத்தில் அநியாயம் செய்யாத வைசியர்களும் உருத்திரன் இந்திரன் விஷ்ணு முதலியோருக்கு யாகங்களால் ஆகுதி கொடுத்த பிராமணர்களும் நாள்தோறும் ஆயிரம் கோதானம் செய்தவர்களும் சாஸ்திர விதிப்படி பூதானம் செய்தவர்களும், வீடும் அதற்கு வேண்டிய சாமான்களும் போஜன பதார்த்தங்களும் ஆயுள் வரையில் அவனது குடும்ப சவரக்ஷணைக்கு வேண்டிய எல்லா பொருள்களும் அடங்கிய (ஸோபஸ்கர) தானஞ் செய்தவர்களும், சுவர்ண தானஞ் செய்தவர்களும் துலாபுருஷ தானஞ் செய்தவர்களும் யாவரிடத்திலும் பிரியமாக வசனிக்கிறவர்களும், முறைப்படிப் பிரமசரியம் தவறாமல் வேதாத்தியானஞ் செய்தவர்களும், பவுணடரீகம் வாஜபேயம் அஸ்வமேதம் அப்தோர் யாமம், கருட சயனம் முதலிய யாகங்களை விதிப்படி தக்ஷிணை கொடுத்து தவறுதலின்றிச் செய்தவர்களும் அங்கு ஆனந்தத்தை அனுபவித்து அநேக கற்ப காலம் வசித்து மீண்டும் பூவுலகத்தையடைந்து சிறந்த பிறவிகளை எடுத்துத் தர்மத்தையும் சிவஞானத்தையும் உலகத்தில் பிரபலப்படுத்திச் சிவதத்துவத்தை அடைந்து மோக்ஷத்தைப் பெறுவார்கள். இதுவே தேவ தேவனான மஹாதேவனுடைய யஸ்தானம் எல்லாக் கோரிக்கைகளையும் அணிமாத அஷ்டசித்திகளையும் கொடுக்கவல்ல சிவபுரத்தைப்பற்றி உங்களுக்குச் சொன்னேன்.

முனிவர்களே! அந்தச் சிவபுரத்திற்கு அருகில் மேருவின் மற்றொரு கொடு முடிவில் தேவதேவனாலேயே நிர்மாணஞ் செய்து புண்டரீகாக்ஷனுக்குக் கொடுத்த விஷ்ணு நகரம் ஒன்றுண்டு, அந்த நகரம் சந்திரகிரணத்திற்குச் சமமான வெள்ளியிற்செய்த மதில்களும் தயிர்க்கடல் போன்று அழகு வாய்ந்த தடாகங்களும் நவரத்தினங்களிழைத்த ஆயிரம் வாயில்களும் இரத்தினங்களாற் செய்த ஈராயிரங்கால் மண்டலமும் உடையது. அந்த மண்டபத்தினிடையே நவரத்தின பொற்பராகங்களால் செய்யப்பட்ட விஷ்ணுபதமும், அவ்விஷ்ணு பதத்தின் நாற்புறமும் கைலாய சிகரத்தைப் போன்ற நான்கு கோபுர வாயில்களும் பொன்மயமான மரங்களும் எப்பொழுதும் புஷ்பிக்கும் கொடிகளும் கோகிலங்களும் கிளிகளும் அமைந்திருக்கும் கிழக்கு வாசலில் மேகம் போன்ற உடலுள்ள யக்ஞகரன் என்னும் பிரதாபமுடையவனும் மேலை வாயிலில் ஹரிபுத்திரன் என்பவனும், மற்ற இருவாயில்களில் விஷ்ணுகணங்களும் காவல் செய்கிறார்கள். அங்கு விரும்பியவற்றைக் கொடுக்கும் மதுநதி என்னும் ஆறு பெற்றாமரை முதலிய மலர்களையுடையதாகப் பிரகாசிக்கும் அதில் வான்கோழி, சக்கரவாகம், சகோரம் முதலிய பறவைகள் வசிக்கும், சத்தியவான்களும் இடைவிடாமல் அக்கினி காரியங்களை செய்தவர்களும், தேவர் பிராமணர்களைப் பூஜித்தவர்களும் முக்காலங்களிலும் விஷ்ணுபக்தியைச் செய்தவர்களும் விஷ்ணு சரிதங்களை வாசித்தவர்களும் அங்கு துக்கசோகங்கள் இல்லாமல் பல காலம் வசித்து தங்கள் புண்ணியங்களுக்குத் தக்கவாறு பூவுலகில் பிறவியெடுத்து, தர்மங்களை நிலை நிறுத்தி விஷ்ணு பதவியை அடைவார்கள். விஷ்ணு பதவியின் பிரபாவத்தைச் சொன்னேன். இனி பிரம பதவியைச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

மேருவின் மற்றொரு சிகரத்தில் ஹிரண்யகர்ப்பனாகிய பிரமதேவனுடைய நகரம் விளங்கும், அது இரண்டாயிர யோசனை பரப்பளவு உள்ளது. விசோகம் (சோகம் அற்றது) என்ற பெயரையும் உடையது பொன் மயமான மதில்களும் எப்பொழுதும் மலர்கள் பழம் முதலியவற்றைக் கொடுக்கும் மரங்களும் வாவிகள், தடாகங்களும், குயில்களும், சோலைகளும், பொன் அன்னங்களும், சந்திரமண்டலங்களுக்கு இணையான மாளிகைகளும் அதியுன்னமான மூன்று கோபுரவாயில்களும் இடையே ஓர் ஆயிரக்கால் மண்டபமும் கொண்டது. அந்த மண்டபத்தில் வைடூரியத்தால் செய்த அறைகளும் நான்கு வாயில்களும் அமைந்திருக்கும். கிழக்கில் துவராதிபனும் வடக்கில் பிரமயோனி என்ற பெயர் உள்ளவனும் காவல் செய்வார்கள். அந்த நகரத்தில் சிருஷ்டி கர்த்தாவான பிரஜாபதி வசித்திருக்கிறார். அங்கு அமிர்தா என்னும் நதி ஓடுகிறது. அதில் முத்துப் போன்ற மணலும் செந்தாமரை முதலிய மலர்களும் விளங்கும். அங்குள்ளவர்கள் அந்த நதிநீரைப் பருகி; நரை, திரை, மூப்பு இன்றி மகிழ்ச்சியாக வசிப்பார்கள். வேதங்களை இடைவிடாமல் அத்தியயனஞ் செய்தவர்களும், அஷ்ட விரதங்களைச் செய்தவர்களும், வேதங்களை அத்தியயன காலத்தில் துவங்கி உத்ஸர் ஜன காலத்தில் விட்டவர்களும், அவ்வேதங்களை உதித்தம் அநுதித்தம், சொரிதம் முதலிய ஸ்வரபேதம் உணர்ந்து உச்சரித்து அநேகம் முறைகள் அத்தியயனஞ் செய்தவர்களும் யாகங்களைச் செய்தவர்களும், குருபக்தி செய்தவர்களும் முறைப்படி பிøக்ஷயேற்றுப் புசித்தவர்களும் தீர்த்தயாத்திரை செய்தவர்களும் பிராமணப் பிறவியெடுத்துக் கோபம் ஒழித்தவர்களும் தியான யோகஞ் செய்தவர்களும், யோகசாஸ்திரத்தைப் பயின்றோரும் சாங்கியத்தைக் கற்றோரும் வேதாந்தங்களை வாசித்தவர்களும் அந்தப் பிரம பதவியை அடைந்து சோக மோகங்களைப்போக்கி அநேக அவாந்தா கல்பங்கள் அங்கு வசித்து, மீண்டும் கர்ம பூமியை அடைந்து, விதிப்படிப் பரமசிவனை அர்ச்சனை செய்து, நற்கதியை அடைவார்கள். அது ஸத்வகுணப் பிரதானமான ஞானத்தாலேயே அடையத் தக்க ஸ்தானமாகும் அந்த பிரஜாபத்திய ஸ்தானம் இத்தகையது. இவ்விதமாக மலைகளில் உன்னதமான மேருபர்வதத்தின் உச்சியில் இந்த மூன்று ஸ்தானங்களும் இப்புவனத்திற்கு ஆதாரமாக விளங்குகின்றன. இவற்றில் வசிக்கும் புண்ணியவான்களே மகாமங்களங்களுடன் கூடிசிலர் மேகரூபிகளாகி வர்ஷித்தும் மின்னல்களாகப் பிரகாசித்தும் கிரகநக்ஷத்திரங்களாகி விளங்கியும் இந்திர லோகங்களுக்கு அதிபத்தியமுமடைவார்கள். அவர்களே எவ்வுலகத்திலும் சஞ்சரிக்கும் வல்லமையும் அநேக காலம் வசிக்கும் தீர்க்க ஆயுளும் பெற்றவர்கள். இந்த விஷயம் பூர்வத்தில் பிரமதேவரால் சொல்லப்பட்டது. இதைப் பூரணைக் காலங்களில் வாசிப்பவர்கள். இஷ்டார்த்தங்களை அனுபவிப்பார்கள். வியாஸ முனிவனே, இந்த அத்தியாயத்தைக் கேட்பவர்கள் பிரமஹத்தி பாவங்களை ஒழித்துச் சுகஜீவிகளாக வாழ்வார்கள் என்று ஸநத்குமார முனிவர் சொன்னார்.

11. பலதேவர் உலகு உரைத்தல்

வியாஸ முனிவர், ஸநத்குமார முனிவரை நோக்கி உலகங்களின் கிரமத்தைத் தாங்கள் சொல்லக் கேட்டேன். உருத்திர மூர்த்திகளுடைய அண்டங்களையும் சங்கியையும் எனக்கு விவரித்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கிணங்க ஸநத்குமார முனிவர் எடுத்துரைக்கலானார். பிரமலோகத்தை விட மகேஸ்வரலோகம் இருமடங்கு விசாலமானது பிரம விஷ்ணு மகேஸ்வர லோகங்கள் மூன்றையும் சேர்க்கச் சரிபாதியாகவுள்ளது உருத்திரலோகம் அங்கு அநேகமாயிரம் உருத்திர மூர்த்திகளும் அநேகங்கோடி விஷ்ணுக்களும் வசிப்பார்கள். அங்குள்ளவர்களுக்கும் நறுமண தேகமும் சிவனருளும் சூலாயுதமும் பொறாமையின்மையும் சந்திரசூடமும் விருஷப வாகனமும் உண்டு. பிரமலோகத்திலிருந்து எண்ணற்றவர்களும் விஷ்ணு லோக வாசிகளும் நிர்மல மனதுடன் மூவுலகங்களையும் வென்றவகளாய் மகிழ்ச்சியான உள்ளத்துடன் எல்லாம் உணரும் வன்மையோடு வசித்திருப்பார்கள், மணிமயமான பூமியும்-நுண்ணிய பொற்பராகம் போன்ற மணலும் விளங்கும் அவ்விடத்தில் சூரிய சந்திரக்கிரணங்களும் வாயுவின் சஞ்சாரமும் கிடையாது ஆயினும் ஒளியும் காற்றும் குறைவிலாது விளங்கும் எத்தகைய உயர்ந்த தேவபதவியை அடைந்தவர்களானாலும் சந்திரசேகரமாகிய உருத்திரபதவியை அடைந்தாவலன்றி அவ்வுலகை அடைய ஒருவராலும் இயலாது, அங்குள்ளவர்கள் யாவரும் சுயம் பிரகாச ஸ்வரூபிகள் இரத்தின மயமான கோபுரங்களும் எங்குஞ் செல்லத்தக்க விமானங்களும் உண்டு பூமண்டலத்தில் இல்லற வாழ்வை விதி வழுவாமல் நடத்தி சிவபூஜையைக் காலந்தவறாமல் செய்தவேதியர்கள் அவ்விடத்திலும் சந்தோஷ சித்தத்துடன் சிவபூஜை செய்து கொண்டிருப்பார்கள். கந்த புஷ்ப. தூப தீப சதருத்திரீய மந்திரம் முதலியவற்றுடன் மகாதேவப் பிரசாதம் பெற்றவர்களே இந்த உலகத்தை அடைவார்கள். முன்பு சொல்லிய எல்லா உலகங்களும் . இந்த உருத்திர உலகத்திற்குகீழேயே இருக்கின்றன என்று அறிவாயாக அதற்கு மேல் இரண்டு பங்கு அதிகமான பிரமாணத்துடன் மாயேசபவனம் என்ற பெயருள்ளலோகம் உண்டு. அதில் அநேகமான பூதகணங்களுடன் மனோவுல்லாசமான கிரகங்களில் யோகிகளாயும் மாயேசர் என்னும் பெயர்பெற்ற உருத்திரகணங்கள் வசிப்பார்கள் அதற்குமேல் இருமடங்கு அதிக பிரமாண்டத்துடன் பலலோகம் உண்டு. அங்கு ஹரான் என்ற பெயர் கொண்ட உருத்திர கணங்கள் வசிப்பார்கள். அதற்கு ஸர்வ நாமபுரம் என்ற பெயரும் உண்டு அதற்குமேல் அக்கினிஸ்தானம் என்ற லோகத்தில் உருத்திர பகவானைக் குறித்து அக்கினி காரியஞ் செய்து சிவகணங்களானவர்கள் வாழ்வார்கள். அதைவிட இரு பங்கு உச்சியில் உக்நம் என்னும் லோகத்தில் பாசுபத விரதத்தை அனுஷ்டித்த புண்ணியர்கள் பஸ்ம ருத்திராக்ஷதாரிகளாக வசிப்பார்கள், லோகாநுக்கிரக கார்த்தமாய்ப் பரமேசனும் அங்கு தானும் ஒரு பஸ்மருத்திராக்ஷதாரியாய் வசித்திருக்கிறார் சமதமாதிகுண சம்பன்னர்களும் பூததயை யுடையவர்களும் அபயங்கொடுத்து ரட்சித்தவர்களும் சத்தியவான்களும் இந்திரிய நிக்கிரகஞ் செய்தவர்களும் பாசுபத யோகிகளும் இடைவிடாமல் சிவபூஜை செய்தவர்களும் அந்தலோகத்தை அடையப் பெறுவார்கள். அந்தப் பசுபத ஸ்தானத்தைவிட இருபங்கு மேம்பட்டதாய் மாஹேசுவர ஸ்தானம் என்று ஒன்றுண்டு அங்கு அநேக மகேசுவரர்களுடன் நாயகனாகிய மஹேஸ்வரர் வசிப்பர், அங்கு சர்வலோகேசனாயும் ஈஸ்வரனாயும் காமரூபியாயும் அந்தராத்மாவாயும் விளங்கும் சிவபெருமான், உயிர்களனைத்திற்கும் ஆனந்தத்தை உண்டாக்க பிரமலோக விஷ்ணு லோகாதிகளைச் சிருஷ்டித்து விரும்பியவற்றைத் தந்தருளி வசித்திருப்பார். அதைவிட மேலாக ஸ்திர ஸ்தானம் என்று ஒருஸ்தானம் உண்டு. அதுவே எல்லா உலகங்களிலும் சிறந்தது.

12. அழியாத பதவி

வியாஸ முனிவர், ஸநத்குமாரரை வணங்கி சுவாமி! தாங்கள் சொன்ன ஸ்திரஸ்தானத்தின் சிறப்பை அறிய ஆவலுடன் இருக்கிறேன் என்றார். அதற்கிணங்கி ஸநத்குமார முனிவர் கூறலானார். வியாஸ முனிவரே! தேவாதிதேவனான பரமேஸ்வரனின் மகாத்மியத்தையும் அந்த ஸ்திர லோக சிறப்பையும், பிருமா முதலான தேவர்களும் சாங்கிய யோகிகளும் மீமாம்சையை உணர்ந்தவர்களுமே உள்ளபடி அறிவார்கள். உமை விநாயகர் திருமால் ருத்திரர் முதலியோராலேயும் அது துதிக்கத்தக்கது. அந்த விஷயத்தை அந்த ஈஸ்வரப் பிரசாதத்தாலேயே நான் அறிந்தேன்.

அந்த ஸ்திர ஸ்தானத்தில், அநேகம் ஆயிரயோசனை விசாலமான ஒரு நகரம் இருக்கும், அங்கு ஓர் உயர்விடத்தில் அதிக நிர்மலமாகவும் ஞானமயமாகவும் விளங்கும் ஒரு பீடம் இருக்கும், அந்தப் பீடத்தில் திரிகாலங்களிலும் அழிவற்ற அவ்யயநிஷ்கள நிரஞ்சன நிராமய, சச்சிதானந்த ஸ்வரூபியான பரமசிவன் எழுந்தருளியிருப்பார். அவருடைய இடது கண்ணிலிருந்து உமாதேவியார் தோன்றி அவரது இடது பாகத்தில் வீற்றிருப்பதால் வாம லோசனை என்ற பெயர் உண்டாயிற்று அவருடைய வலது கண்ணிலிருந்து வெண்மை நிறமான முத்துப் போன்ற தொரு நீர்த்துளி தோன்றியது அதுவே கங்கை என்ற பெயருடன் மூன்று உலகங்களிலும் வியாபித்தது பிரமதேவனுடைய சிரஸைக் கிள்ளிய ருத்திரப் பரிவாரங்களும் விஷ்ணு மூர்த்தியானவர். ஒரு சமயம் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜித்து அதில் ஒரு மலர் குறைந்ததற்காக தம் கண்ணைப் பறித்து அருச்சனை செய்தபொழுது அவருக்கு சக்கரப் பிரசாதமளித்தபோது உண்டாகிய பரிவாரங்களும் தக்ஷயாக சங்காரத்திற்காக வீரபத்திரரை அனுப்பியபோது உண்டான பரிவாரங்களும் அந்தகாசூர சங்காரத்தின் போது தோன்றிய பரிவாரங்களும், பொன் மயமான உடல் பெற்ற முப்பது கோடித் தொகையுள்ள வேறு பரிவாரங்களும் கருமை நிறம் வாய்ந்த எண்பது கோடித் தொகையுள்ள வேறு பரிவாரங்களும் அவரது மனத்தால் எட்டுவிதமாகச் சிருஷ்டிக்கப்பட்டு அங்கே வசிக்கிறார்கள்.

வியாஸ முனிவனே! அந்த ஸ்தானத்தைக் காணவும் உவமையினால் உணர்த்தவும் வர்ணித்துச் சொல்லவும் ஒருவராலும் இயலாது. இந்த எண்வகை பரிவாரத்தவர்களும் பற்பல கோடி பிரம்ம விஷ்ணுக்களையும் அநேகங்கோடி அண்டங்களையும் சிருஷ்டித்துக் காத்துச் சங்கரிக்கும் வல்லமையுள்ளவர்கள், இதுவே அநாமயமும் சாசுவதமுமான ஸ்தானமாகும். அத்தகைய சிவபெருமானை இந்த உலகத்தில் சிவலிங்கமூர்த்தத்தில் அன்புகொண்டு ஆராதித்தால், தாய் தந்தையைக் கொன்றவன், கோஹத்தி செய்தவன் குரு மனைவியை குலாவியவனாயினும் அப்பாவங்களை நீக்கி அந்த ஸ்தானத்தை அடைவான். இத்தகைய பாவியும் சிவலிங்க அர்ச்சனையால் அவ்வுலகை அடைவான் என்னும்போது மனப்பூர்வமாகப் பக்தியோடு பூஜித்தவன் அதனை அடைவான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? இதுவே தகராகாச வித்தையால் அறியும் சிவபுரமாகிய அழியாப்பதவி என்று அறிவாயாக!

13. சிவ ÷க்ஷத்திரங்கள்

ஸநத்குமார முனிவர் சொன்னதையெல்லாம் கேட்டு வந்த வியாஸமுனிவர் அவரை நோக்கி சுவாமி! எல்லாம் வல்லவனும் லோகநாயகனும் சுபர்த்தியும் வருஷபத்துவஜனும் ஆகிய சிவபெருமானுக்கு எத்தகைய பூஜையினால் மகிழ்ச்சியுண்டாகுமோ? அத்தகைய பூஜையை அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும் என்றார். அதற்கிணங்க ஸநத்குமார முனிவர் கூறலானார். எல்லா பாவங்களையும் ஒழிப்பதாயும் மோக்ஷத்தைக் கொடுப்பதாயும் விரைவில் சிவபெருமானை மகிழ்விப்பதாகவும் உள்ள சிவ பூஜாவிதியைச் சொல்லுகிறேன் ஜாக்கிரதையாகக் கேட்பாயாக. பூர்வத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் நாற்பத்து எண்ணாயிரம் முனிவர்கள், சப்த மருத்துக்கள், பன்னிரு ஆதித்தர்கள் எட்டு வசுக்கள் நாகர்கள் கந்தர்வ யக்ஷ கின்னரர்கள் முதலியோர் ஒருங்கு சேர்ந்து மேருபர்வதத்தின் உச்சியில் ஈசானமூர்த்தியை அடைந்து சிவ மகாத்மியத்தை அறிந்து கொள்ள விரும்பி இருக்கும்போது சத்தியவானாகவும் ஜிதேந்திரியனாகவும் பக்தியுள்ளவனாகவும் உள்ள விபீஷணன் பக்தியோடு அங்கு சென்று சிவபெருமானை வணங்கிக் கைகூப்பி, தேவ தேவா! எத்தகைய சிவபூஜையைச் செய்தால் இஷ்டசித்திகள் கைகூடும்! இந்த விஷயத்தை எனக்குத் தெளிவுப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கேட்க, ஈசானனர் கூறினார்.

விபீஷணா! நீ கேட்ட விஷயம் மிகவும் இரகசியமானது. சாஸ்திரங்கள் அனைத்தின் சாரமாகவுள்ளது. அதைப் பிரம்மா முதலான தேவர்களும் அறியார்கள். அதை என் பக்தனான உனக்கு உபதேசிக்கிறேன். எனக்குப் பிரீதியான ஸ்தலங்கள் அநேகம் இருக்கின்றன அவற்றில் நான் அநேக மூர்த்தங்களாக விளங்கியிருப்பினும், அவ்வகைகளில் பூஜிப்பதைவிட இலிங்கமூர்த்தத்தில் என்னைப் பூஜிப்பதிலேயே நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் இஷ்டகாமியங்களை அளிக்கும் ஸ்தலங்களைச் சொல்லுகிறேன். சாசுலாங்கம், பத்திரகர்ணம், கோகர்ணம், அவிமுக்தம், ஓங்காரம் என்ற ஐந்து ஸ்தானங்களே பஞ்சாயதனம் எனப்படும். இவையே உத்தம ஸ்தானங்கள் இவ்விடங்களில் என்னைத் தரிசித்த உயிரினங்கள் மோக்ஷமடையும் இதுபரம இரகசியம் இவ்வைந்து ÷க்ஷத்திரங்களிலும் அவிமுக்தம் எனக்குப் பெருவிருப்பமானது, ருத்திரவாசம் என்றும் ஆனந்த கானனம் என்றும் சொல்லப்படுகிற அவிமுக்த ÷க்ஷத்திரத்தில் இறப்போருக்கு நானே தாரக உபதேசத்தால் சகல பாவங்களிலிருந்தும் நீக்கி முக்தியைத் தருகிறேன். ஓங்கார ÷க்ஷத்திரத்தைத் தியானித்தவனுக்கு நான் மகிழ்ந்து அஸ்வமேத பயனைக் கொடுக்கிறேன். இந்தப் பஞ்சாயதன ஸ்தானங்களேயன்றி, அரிச்சந்திர பதத்தில் ருத்திரமூர்த்தமாக வசிக்கிறேன். அங்கு அநேகம் முனிவர்கள் என்னைப் பூஜித்து சித்தி அடைந்தார்கள். சுவர்ணாசலத்தில் யோகீஸ்வரன் என்ற பெயருடன் இருக்கிறேன். அங்கு என்னைப் பூஜித்தவர்கள் விஷ்ணு பதவியை அடைந்திருக்கிறார்கள். தருவனத்தில் பத்ததண்டி என்றும் மகாகாளன் என்றும் வசிக்கிறேன். கமலாலயத்தில் பைரமூர்த்தமாக வசிக்கிறேன் காளஞ்சரத்தில் கற்கடேஸ்வரன் என்றும் வாமகூடத்தில் பூதேசுவரன் என்றும் கேதாரத்தில் மஹேஸ்வரனாகவும் தேவதாருவனத்தில் சுந்தரேசனாகவும் வசிக்கிறேன். இந்த எட்டு ஸ்தானங்களும் எனக்கு விருப்பத்தை உண்டாக்கும் ÷க்ஷத்திரங்களாகும். இவ்விடங்களில் என்னை ஆராதிப்போர் நெற்றிக் கண்ணும் நீலகண்டமும் பெற்று ருத்திரர்களாக வாழ்வார்கள்.

விபீஷணா முதலில் சொன்ன ஐந்தும் பிறகு சொன்ன எட்டும் ஆகிய பதின்மூன்று ஸ்தானங்களிலே என்னைப் பூஜித்தவர்கள். அநேக கோடி ருத்திரர்களாக இருக்கிறார்கள். இவ்விடங்களில் மிலேச்சர்களானாலும் குரூர ஜந்துக்களாயினும் மரணமடைந்தால் அவையாவும் மஹேஸ்வர கதியை அடையும் என்று அறிவாயாக. அந்த ÷க்ஷத்திரங்களில் என் சிவலிங்கத்தை அர்ச்சித்தால் அவர்கள் பாவிகளாயினும் பிராயச்சித்தமில்லாமலே தங்கள் பாவத்தை ஒழிப்பார்கள். கோரமான தவஞ்செய்வோரும் சிவலிங்க பூஜா பயனையடைய மாட்டார்கள், பிரயாகையில் நூறு ஆண்டுக்காலமாக ஸ்நானம் செய்த பலனும் நூறுமுறை சாந்திராயண விரதம் அனுஷ்டித்த பயபலனும் ஆயிரம் பொன்னை தானஞ் செய்த பயனும் கோமூத்திரம் யவை சருகு அருந்தி விரதம் இருந்த பயனும் திலதானஞ் செய்த பலனும் லிங்க பூஜைக்கு ஈடாக மாட்டா நானே உலகங்களைனைத்திற்கும் கர்த்தா நானே படைப்பவன். நானே சங்கரிப்பவன் யுகந்தோறும் தர்மத்தை நிலைநிறுத்துகிறவன். நானே பிரமன் நானே விஷ்ணு, சூரியன் சந்திரன், நானே கண்ணுக்குப் புலப்படும் எல்லாப் பொருள்களும் நானே மன்மதன், வாயு அநேகமான ரிஷிகள், பூஜிக்கத்தக்க சாஸ்திர ஸ்வரூபி நானே குபேரன், இந்திரன், நானே ருஷபம் தர்மம், நானே ஸ்கந்தன் நானே ஷட்ருதுக்கள், நானே அஷ்டமாநாகங்கள்; நானே மேரு மந்திர கைலாசாதி பர்வதங்கள்! நானே பிரஹலனாதி அசுரர்கள் நானே க்ஷீராப்தி முதலிய சமுத்திரங்கள் நானே வருஷமாஸாதி காலங்கள் நானே தாவரஜங்கமங்கள் இவ்விதம் சர்வாத்ம ஸ்வரூபியாக விளங்கும் என்னை அர்ச்சிப்பவர்கள் விரும்பிய பொருளை அடைந்து பிறவியில்லாத மோக்ஷத்தை அடைவார்கள். எனக்குப்பிரியமான திதிகளில் சத் பிராமணனுக்குத் தீபதானம் செய்தவர்கள் என் உலகத்தை அடைவார்கள் இலிங்கபூஜை செய்து பொன்தானஞ் செய்தோரும் என் பூஜைக்காக அர்க்கிய பாத்தியமும் தூபதீபமும் கொடுத்தவர்களும் காணாபத்யத்தை அடைவார்கள். முறைப்படி யாகம் செய்து விசேஷ தக்ஷிணை கொடுத்தவன் சிவலிங்கார்ச்சனை செய்த பயனை அடைவான். என்னுடைய லிங்கத்தைப் பாலினால் அலம்பியவன் தன் பிறவியாகிய அழுக்கைக் கழுவியவனாவான். ஏக லிங்கார்ச்சனையை ஓராண்டுக்காலம் செய்தவன் காணாபத்தியம் அடைவான். சிவபூஜையில் மனோலயப்பட்டவனுக்குப் பிரயாகை புஷ்கரம முதலிய தீர்த்தங்கள் வேண்டியதில்லை பலமுறை புண்ணிய தீர்த்த ஸ்நானம் செய்தவர்களும் சிவலிங்கார்ச்சனையில் வரும் பயனை அடைய மாட்டார்கள். யாவற்றுக்கும் காரணமாகிய மனத்தைப் பரிசுத்தம் செய்து, என் பூஜையில் மனதை ஸ்திரமாக நிறுத்த வேண்டும். சிலர் தவஞ்செய்கிறார்கள். சிலர் யாகஞ்செய்வார்கள். சிலர் மாசோ வாரப÷க்ஷõபவாசங்கள் இருப்பார்கள். அவை தரும் பயன்களையும் என் பூஜையினாலேயே அடையலாம் என்னுடைய மூர்த்தியை வீடு, காடு, மலை, நதி, தீரம், மனம் முதலிய எங்காவது அர்ச்சித்தவன் கணாபத்தியமடைவான். என் நாமஸ்மரணை செய்தாலும் என் மஹாத்மியங்களைப் படித்தாலும் எல்லாப் பாவங்களையும் ஒழித்து, ருத்திரலோகத்தை அடைவார்கள் என் மகாத்மியத்தை அறிந்து சிவபூஜை செய்து, சிவஞானம் அடைந்து சிவோகம் என்னும் பயனை அடைந்தவர்கள் சந்திர சூரியர்கள் இல்லாத இடங்களிலும் பிரகாசத்தை ஏற்படுத்துவார்கள். சூரியனைக் கண்ட இருள் போலவும் கருடனைக்கண்ட நாகம் போலவும் என் நாமஸ்மரணை செய்பவனைக் கண்டதும் எல்லாப் பாவங்களும் நடுங்கும்! என்று சிவபெருமான் கூறியருளினார்.

அதைக்கேட்ட விபீஷணன், சர்வ பூதேஸ்வரனே! சர்வ தேகமுகனே! நாசமில்லாப் பொருளே! அப்பரமேயஸ்வரூபியே! புராண புரூஷா! நீரே வாயு! நீரே அக்கினி! நீரே தக்ஷிணாமூர்த்தி நீரே பரிசுத்தமுள்ளவர்! நீரே ஏழுகடல்கள்! பக்தாகளின் காமதேனு கற்பக விருக்ஷம் நீரே சர்வேஸ்வரர்! எனக்கு அஷ்டமகா சித்திகளும் கைகூடச் செய்ய வேண்டும். நான் தேவரீருக்குத் தாசன் சரணங்கொடுக்க வேண்டும்! என்று பலவாறு வேண்டினான். சிவபெருமான் அவனுடைய வேண்டுகோளுக்கு இரங்கி விபீஷணா! என்னுடைய இலிங்கார்ச்சனமே அஷ்டமாசித்திகளையும் கொடுக்கத்தக்கது. அதைக் காட்டிலும் சிறந்த மந்திரமும் கிடையாது. அதுவே அஸ்வமேதம் முதலான மஹாயாகங்களின் பயனையும் தரவல்லது இன்னும் அது சீக்கிரத்தில் கைகூடும் படி ஓர் இரகசியத்தைச் சொல்லுகிறேன். சதுர்த்தசி அஷ்டமி ஆகிய இவ்விரு தினங்களில் எட்டு யாமங்களிலும் இடை விடாமல் பூஜித்தவன் அதிசீக்கிரத்தில் சித்தியடைவான். இது பரம இரகசியம் இதனைச் சிவபக்தர்களுக்கே உபதேசிக்க வேண்டும். சிவபக்தியில்லாதவனுக்கு இதைச் சொல்லலாகாது உன்னால் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்களைப் பக்தியுடன் படித்தவர்கள் சிவ பூஜா பயனை அடைவார்கள்! என்று கூறியருளினார். அதன் பிறகு விபீஷணன் சிவபெருமானிடம் விடை பெற்று கொண்டு தன் இச்சைப்படி இலங்காபுரியை அடைந்து. தான் உபதேசிக்கப்பட்டவாறே அஷ்டமி சதுர்த்தி தினங்களில் எட்டு யாமங்களிலும் ஏகமனதாய், சிவலிங்க பூஜையை விதி வழுவாமல் செய்து அஷ்டமகா சித்திகள் கைகூடப் பெற்றான். சிவலிங்க பூஜா பலன் இத்தகையது! என்று ஸநத்குமார முனிவர் கூறினார்.

14. சிவபூஜா பயன்

வியாஸ முனிவர் ஸநத்குமார முனிவரை நோக்கி, சுவாமி ஜ்யோதிஷ்டோமம், தீர்த்த ஸ்நானம், உபவாசம் ÷ஷாடசதானம் இவற்றைச் செய்ய சக்தியற்ற அந்தணன் எவ்விதமாக நற்கதியை அடைவான் என்பதை விளக்க வேண்டும்! என்று கேட்கவே ஸநத்குமார முனிவர் கூறலானார். வியாஸ முனிவனே! சவுசிதி கங்கை குரு÷க்ஷத்திரம், பிரயாகை, நைமிசம் புஷ்கரம் திரிசிரோதா க்ஷீரநதி கண்டகி பிரம்மவர்த்தம், யமுனை, கங்காத்துவாரம், சுகச்சிராசுவம்பத்திர கர்ணம் த்ருஷத்வதி கரதோயை லோகிதை சரயுகோகை, அருணை, தாமரை, சோணமடு, கோதாவரி நர்மதை வேத்திரவதி காவிரி; கிருஷ்ணை விதஸ்தா ஸரஸ்வதி ஸப்தசமுத்திரங்கள் முதலியனவும் சிவலிங்க நமஸ்காரத்தினாலடையும் பயனில் பதினாறில் ஒரு பங்கு பயனையும் கொடுக்க மாட்டாது. பிரம்மாண்டத்தில் அறுபத்தெட்டுக்கோடி புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. அத்தீர்த்தங்கள் யாவற்றிலும் ஸ்நானம் செய்தவனுடைய பயனை ஒரு மாதகாலம் கோபமில்லாமல் சாந்தசித்த மடைந்து சிவலிங்க பூஜையைச் செய்தவன் அடைவான். நான்கு வேதங்களையும் ஒரு முறை பாராயணம் செய்தய பயனை ஒரு முகூர்த்தம் சிவலிங்க பூஜையைச் செய்தவன் அடைவான். ஆகையால் யாகம்தானம் தவம் முதலிய யாவற்றிலும் சிவலிங்க பூஜையே சிறந்தது சகல சராசரங்களும் சிவலிங்கத்திடமிருந்தே தோன்றி அதிலேயே லயமடையும்! என்று கூறினார். அதைக் கேட்டதும் வியாஸ முனிவர், ஸநத்குமார முனிவரை நோக்கி சுவாமி! ஜகத்முழுவதும் எப்படி இலிங்கத்தில் தோன்றி இலிங்கத்திலேயே லயமடையும்? இலிங்க பூஜையை எப்படிச் செய்தால் சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து விரைவில் விரும்பிய வரங்களைக் கொடுப்பார்? ஏராளமான முனிவர்களும் பிதுர்க்களும் தக்ஷிணாமூர்த்தியை உபாசித்திருப்பதற்குக் காரணம் என்ன? சிவ பூஜை செய்து ருத்திர லோகத்தை அடைந்தவர்களும் பூலோகத்திற்குத் திரும்பி விடுவது ஏன்? பிறவியை ஒழிக்கத்தக்க சிவபூஜை விதி யாது? இவற்றையெல்லாம் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்று கேட்க ஸநத்குமார முனிவர் கூறலானார்.

ஆதிகாலத்தில் மகேஸ்வரர் சிருஷ்டியை விரும்பி பிரகிருதியைச் சிருஷ்டித்தார். பிரகிருதியிலிருந்து வாயுவும் வாயுவிலிருந்து அக்கினியும் அக்கினியிலிருந்து லிங்கமும் தோன்றின. அந்த லிங்கமானது கோடி சூரியனை மிஞ்சிய ஒளியும் இரத்தினமயமான காந்தியும் ஊனக் கண்ணாற் காணமுடியாத பேரொளிப் பிழம்பும் நூறு யோசனை அகலமும், ஆயிரம் யோசனை உயரமுமானதாய்த் தோன்றியது. இலிங்கத்தினிடத்தே பிரமாதி தேவர்கள் யாகங்கள் விஷ்ணு சந்திர சூரியாதி நவக்கிரகங்கள் முதலானோர் தம் ஒளியை இழந்தவர்களாய் அங்கேவந்து பரமசிவனைத் தோத்தரித்துத் துதிக்க முயன்றார்கள். அப்போதே சத்வ ரஜோதமோ குணங்கள் பிரகிருதி சாங்கியயோகம் நதிகள் மலைகள் கடல்கள் பிருதிவி(நிலம்) அந்தரிக்ஷம் திக்குகள் நக்ஷத்திரங்கள் மாதம் முதலான காலங்கள் முதலிய யாவும் அந்த லிங்கத்தில் லயமடைந்தன அதனால் லிங்கம் ஒன்றே அநேக காலம் விளங்கியது மீண்டும் உலகத்தைப் படைக்க விரும்பிய பரமேஸ்வரர் லிங்கத்திலிருந்தே விஷ்ணுவையும் பிரமனையும் படைத்து ஞான உபதேசம் செய்து பிரமனை நீ சிருஷ்டி செய்க! விஷ்ணுவே நீ பாலனஞ் செய்க! என்று அருளி அந்தர்த்தானமாயினர் இவ்விதமாக லிங்கோற்பவத்தைச் சொன்னேன். இந்த உலகம் பிரளய காலத்தில் யாவும் ஜலனமாகி, அநேக ஆயிரம் ஆண்டுகள் அவ்வண்ணமே இருந்து, சிவதேஜசினால் அந்த ஜலம் சோஷிக்கப்பட்டு ஒழிய அதிலிருந்த ஜீவராசிகள் அழிந்தது. அப்பொழுது பைரவ நாதம் ஒன்று உண்டாகி மீண்டும் அத்தேஜஸ் லிங்கமயமாயிற்று.

அதற்குப் பிறகு திருமால் முதலிய தேவர்கள் பரமசிவனை நோக்கி, பரமசிவனே! நீயே குமாரஸ்வாமி! நீயே ஓங்கார ஸ்வரூபி! ஷட்கார ஸ்வரூபி! தண்ட நீதி! பிரம விஷ்ணுக்கள் முதலியோர் பிரளயத்தில் உம்மையே அடைகிறார்கள். நீரேயாக ஸ்வரூபி! உம்முடைய மாயையினாலே இந்தஜகம்முழுவதும் மறைக்கப்பட்டிருக்கிறது. உம்முடைய ஞானஸ்வரூபத்தை எங்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். அப்பொழுது சிவபெருமான் அவர்களை நோக்கி தேவர்களே! இது முதல் நீங்கள் என் ஞானத்தையடைந்தவர்கள் ஜராமரணத்தை ஒழித்தவர்கள் இனி இச்சைப்படி படைத்தல் முதலான தொழில்களைச் செய்து உலகத்தை நடத்துவீர்கள்! என்று கூறி மறைந்தார். ஆகவே உலகம் முழுவதற்கும், சிவபெருமானே காரணகர்த்தர் அவரைப் பூஜித்த பிரமதேவர் படைத்தல் தொழிலைச் செய்கிறார். நூறு வாஜபேய பயனும் நூறு அஸ்வதேம பயனும் ஆயிரம் ராஜசூயப் பயனும் ஒன்பது மாதம் நியமத்துடன் சிவலிங்கார்ச்சனை செய்வதால் அடைந்து சிவஞானிகளாவார்கள்.  மேரு, மந்தர், விந்திய, மலயாசல, மகேந்திர பர்வத ராஜாக்கள் வாலகில்லியர், நைமிசாரணியர், மாத்ரு பர்வத கணங்கள், நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள், பிதுர்க்கணங்கள் முதலானோர் யாவருமே சிவலிங்கார்ச்சனையே சிறந்ததென்று செய்து இஷ்ட சித்தியை அடைந்திருக்கிறார்கள். பாகயாகம் அவிர்யாகம் என்ற இரண்டின் பயனையும் முறைப்படி சிவபூஜையை ஒருநாள் செய்தவன் பெறுவான். புலஸ்தியர் புலகர் கிருது, தக்ஷன், நந்திசர், பிருகு, அங்கிரசு, மரீசி, ததீசி சம்வர்த்தர், சைமினி, சஞ்சகீஷு, சுக்கிரன், பிரகஸ்பதி, சியவனர், ஜமதக்கினி, உத்தங்கர், அகஸ்தியர், மது, பிரகலாதன், அத்திரி, வசிஷ்டர், காசிபர், கவுதமர், பரத்துவாஜர், விசுவாமித்திரர், சமுத்திர ராஜாக்கள் ஆகிய இவர்களும் சிவ லிங்கார்ச்சனையால் சித்தி பெற்றார்கள். புற்று மண்ணைக் கொண்டு பார்த்திவலிங்கம் செய்து ஒரு வருஷம் பூஜித்தவன் காணாபத்தியம் அடைவான் சிவலிங்கார்ச்சனை செய்வதிலும் சிவாலயத்தை விளக்குதல் பத்துப்பங்கு விசேஷப் பயனும் மெழுகுவது நூறு பங்கும் பயனும் உண்டாக்கும்.

ஒருமுறை சிவலிங்கத்திற்கு நீரினால் அபிஷேகம் செய்தவன் பத்துக்குற்றங்களையும் பாலினால் அபிஷேகித்தவன் நூறு குற்றங்களையும், நெய்யினால் அபிஷேகித்தவன் ஆயிரங்குற்றங்களையும், தேனால் அபிஷேகித்தவன் பதினாயிரங் குற்றங்களையும் மன்னிக்கப் பெறுவான். சிவபெருமான், அபிஷேகித்தினாலேயே பெருந்திருப்தி அடைவார். புஷ்பங்களால் அர்ச்சித்தவன் இருபதினாயிரம் குற்றங்களை ஒழித்தவனாவான். தூபத்தினால் முப்பத்தினாயிரம் குற்றங்களையும் தீபத்தினால் நாற்பதாயிரம் குற்றங்களையும் ஒழிப்பான். சிவபெருமானை அர்ச்சிப்பவன் தன் குற்றங்களையும் நீக்கிக் கொண்டு, இஷ்ட காமியங்களை அடைவான். ருத்திராட்சமாலைகளால் அலங்கரித்தவன் எண்ணற்ற பயன்களை அடைவான். விதியால் செய்யப்படும் யாகங்களைவிட சிவமந்திரம் ஜெபித்து ருத்திராக்ஷத்தைப் பூண்டவன், பெரும் பயன் அடைவான். உபாம்சமாக ஜபித்தவன், அதினிலும் நூறு பங்கு பயனையும் மானசீகமாக ஜபித்தவன், ஆயிரம் பங்கு பயனையும் அடைவார்கள். திருமணம் ஒஷதம் முதலான சிவபூஜா உபகரணங்களைச் சேகரிப்பதாலும் சிவாலயத்திற்கு விரோதமாக இருக்கும் செடி, கொடி, மரங்களைச் சேதிப்பதாலும் தோஷங்கள் ஏற்படாது பூஜா உபகரணங்களைகொடுத்து உபகாரஞ் செய்தவனும் சிவபூஜை செய்த பயனை அடைவான். சிவ நிர்மாலியத்தைக் காலில் மிதிபடாதவாறு தகுந்த இடத்தில் விடுப்பவன் ஆயிரம் பசு தானபயனை அடைவான். சிவபெருமானுக்கு ஷட்ரசோபேதமான உணவுகளை உபயோகித்தவன் நூறு வருஷம் சிவபூஜை செய்த பயனைப் பெறுவான் பெண்கள் மிலேச்சர் முதலியவர்கள் பிரணவ மந்திரோச்சாரணமில்லாமலே நூறு பிரதக்ஷிணம் செய்தால் சிவபூஜை செய்த பயனை அடைவார்கள் ஆகையால் யாராயினும் பக்தியோடு உபவாசம் இருந்து சிவ பூஜை செய்யவேண்டும் தாமரை நீலோத்பலம் வில்வம், பவழம் முத்து முதலிய நவரத்தினங்கள் முதலியவற்றால் அர்ச்சனை செய்து. கீத வாத்தியங்களால் பஜனை செய்தவர்கள் இகலோகத்தில் எல்லாப் போகங்களையும் அனுபவித்து ருத்திரலோகத்தில் சுகம் அடைவார்கள். மானுடயோனியில் பிறந்தோர் திரிகாலங்களிலும் சிவ பூஜை செய்யவேண்டும். சிவபெருமானை யோகமூர்த்தி, இந்திரமூர்த்தி, தக்ஷிணாமூர்த்தி, வருணமூர்த்தி, வரதமூர்த்தி, குபேரமூர்த்தி, யாகமூர்த்தி, விஷ்ணுமூர்த்தி, அக்கினிமூர்த்தி, நிஷ்களமூர்த்தி, முதலிய பேதங்களில் அவரவர் விரும்பிய மூர்த்தங்களில் பூஜிக்கலாம் அவ்வாறு பூஜித்தவன் பாசுபதவிரதத்தை அனுஷ்டித்தவனாவான் இத்தகைய மூர்த்தியை உபாசித்து அநேகம் முனிவர்கள் சிறந்த கதியை அடைந்திருக்கிறார்கள். தக்ஷிணாமூர்த்தியை பூஜிப்பது சிலாக்கியம் அந்தப் பூஜையால் ஜீவனோபாயம், சிரத்தை நம்பிக்கை தயை, சுகம், இஷ்டார்த்தம், ஞானம் முதலியன யாவும் உண்டாகும் ஆதலின் தக்ஷிணாமூர்த்தியை உபாசித்து சிவோகம் பாவனையை அடைய வேண்டும், பராசர புத்திரனே; இந்த லிங்கோற்பவ கதனம் சகல பாவங்களையும் ஒழிக்கும் சிவலிங்க தரிசனம் செய்தாலும் சிவ சரிதங்களைக் கேட்டாலும் சிவநாமங்களை ஸ்மரித்தாலும் சகல பாவங்களையும் ஒழித்து. அசுவமேத பயனை அடைவார்கள். இது பிரம்ம தேவருக்குச் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டது. இதைப் படித்தவர்களும் கேட்டவர்களும் கோபம் மோகம் முதலியன நீக்கி, உருத்திரலோகத்தை அடைவார்கள் என்று ஸநத்குமார முனிவர் கூறினார்.

15. புண்ணிய ÷க்ஷத்திரங்கள்

முனிவர்களே! இவ்வாறு ஸநத்குமார முனிவர் கூறியதும் வியாஸ முனிவர் அவரை நோக்கி, சுவாமி! திரியம்பகனுடைய ஸ்தானங்கள் யாவை? அவருடைய மூர்த்தங்கள் எத்தனை? அம்மூர்த்தங்களைப் பூஜிப்பதால் அடையும் பயன்கள் எவை? எந்த மூர்த்தத்தைப் பூஜிப்பதால் இஷ்டசித்திகளை அடையலாம்? என்று கேட்கவே, ஸநத்குமார முனிவர் கூறலானார். ஆதிதேவனாகவும் மஹாதேவனாகவும், சுபர்த்தியாகவும் எல்லாத் தேவர்களாலும் துதிக்கப்பட்டவனாகவும் பக்தர்களை அனுக்கிரகிப்பவனாகவுமுள்ள சிவபெருமானை நமஸ்கரித்துச் சொல்லுகிறேன். வியாஸ முனிவனே! ஷட்குண்யப் பரிபூரணரான சிவபெருமான் நானாவித பூதங்களிடத்தும் வியாபித்திருக்கிறார் அவரையே பலபேதமான பெயர்களால் துதித்து பூஜிப்பவர்கள் போகங்களை அடைகிறார்கள். அவரே சூரியனாகி உலகங்களைனைத்திலும் பிரகாசிக்கிறார். அவரையே பிராமணர்கள் பூஜித்துப் பயனடைகிறார்கள் சூரியனை, திரிமூர்த்தி ஸ்வரூபம் என்று கூறப்படும் அவரே விஷ்ணு என்ற பெயருடன் எல்லா உலகங்களிலும் வியாபித்து பாலனஞ்செய்து தச அவதாரங்கள் எடுத்து தருமத்தை நிலைநிறுத்துகிறார். அந்த மூர்த்தத்தைப் பூஜித்து அநேகர் சித்தி அடைந்திருக்கிறார்கள். அவரே சுப்பிரமணியராக இருந்து, தேவசேனாதிபத்தியத்தை வகித்து அசுரர்களைக் கொன்று எப்போதும் பகவானுடன் கூடி ஸோமாஸ்கந்த மூர்த்தியாக விளங்குகிறார். இன்னும் சந்திரன் குபேரன், வருணன், சப்த மருத்துக்கள், உமாபதி முதலிய மூர்த்திகளாகவும் விளங்குவார், யார் யார் எந்தெந்த மூர்த்தங்களில் பக்தி செய்கிறார்களோ, அவ்வவர்களுக்கு அந்தந்த மூர்த்தத்திலிருந்தே எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார். ஆகையால் அவர் வசிக்கும் இடங்களை அநேகம் ஆண்டுகள் சொன்னாலும் சொல்லி முடியாது. எங்கும் நிறைந்த மகேஸ்வர ஸ்வரூபத்தை அகண்டமாகயன்றிக் கண்டமாகச் சொல்ல முடியாது. ஆயினும் சுருக்கிச் சொல்லுகிறேன். சீக்கிரத்தில் சித்தியளிக்கவல்ல உருத்திரபதம் என்னும் ÷க்ஷத்திரமும் சிலேஷ்மாதகமும் அவிமுக்தமும் மஹாலயமும் கோகர்ணமும் பத்திரகர்ணமும், சுவர்ணாசலமும் மாஹேஸ்வரமுமாகிய ஸ்தானங்களில் இடைவிடாது எழுந்தருளியிருப்பார், மாஹேஸ்வர ÷க்ஷத்திரம் இரண்டும் யோசனை அகலநீளங்களையுடையது. அங்கே உயிர் துறந்தவர்களுக்குப்பூர்வம் சிவபெருமானைப் பிரார்த்தித்து உமாதேவியார் வரமேற்றவாறு, உருத்திர தேகம் கிடைக்கும் சிலேமாதகம் என்னும் ஸ்தலம் பதினான்கு யோசனை பரப்பளவுடையது அங்கே சிவபெருமானைப் பூஜித்தவர்கள் இஷ்டசித்திகளை அடைவார்கள். அங்கு அநேகர் பூஜித்துக் கணாபத்தியம் அடைந்திருக்கிறார்கள்.

விஷ்ணு சந்திரன், இந்திரன், சூரியன், மருத்துக்கள், அசுவினி தேவதைகள் பூஜித்து மேலான பதவியை அடைந்தார்கள். சுவர்ணாசலம் என்பது மேருவின் சிகரத்தில் அரையோசனை விஸ்தீரணம் உடையது. அங்கு முனிவர்கள் அநேகர் பூஜித்துப்போக பாக்கியங்களை அடைந்துள்ளனர், அவிமுக்தமாகிய காசி ÷க்ஷத்திரத்தில் பிரணவ ஸ்வரூபியான பகவான், விசுவேஸ்வரன் என்னும் பெயரோடு விளங்குகிறார். இது தேவர்களும் அடையத்தக்க ஸ்தானம், இந்தக் கலி காலத்தில் பகவான், அங்கு பிரத்தியட்சமாக வசிக்கிறார். காசியிலேயே  கர்த்தமேஸ்வரம், பீமசண்டேசுவரம்,இராமேஸ்வரம் விருஷபத்து வஜேஸ்வரம், மணிகர்ணிகை என்ற ஐந்து ÷க்ஷத்திரங்களில் பஞ்சாயதனமாக விளங்குகிறார், அங்கு அநேக யோகியர்கள் எக்காலமும் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கே இறப்பவர்களுக்கு வாசாம கோசரமான ஆனந்த ஸ்வரூபம் கிடைக்கும். சிவபெருமான் அதனை நீங்காது இருப்பதால் அவிமுக்தம் என்ற பெயர் உண்டாயிற்று அந்த ÷க்ஷத்திரத்தில் பிரும்மா முதலான தேவர்கள் உபதேசிக்கிறார்கள் பத்திரகர்ணம் என்னும் ÷க்ஷத்திரம் அதிவிரைவில் மன விருப்பங்களைக் கொடுக்கவல்லது. தமக்குத்தாமே சமானமாக விளங்கும் உஜ்வலம் சுபுண்யம் என்ற இரண்டு ÷க்ஷத்திரங்கள் அதிபுண்ணியமானதாகவும் பார்ப்பதற்கு ரம்மியமாகவும் கங்காத்துவாரத்தில் விளங்குவன அந்த÷க்ஷத்திரங்களை அதர்மவான்களும் பாவிகளும் ரஜோதமோ குணங்களுடையவர்களும் அடையமாட்டார்கள். களங்கமற்ற மனமுடையவர்களே அங்கு வசிப்பார்கள். பிரமவர்த்தம் என்பது மகாபுண்ணியகரமானது, அங்கே சிவபெருமானை பூஜித்தால் விரைவில் சித்திஅடையலாம் வியாஸ முனிவனே! மகா புண்ணியகரமான ஸ்தானங்களைச் சொன்னேன். இந்த இரகசிய ஸ்தானங்களை சிவ பக்தர்களுக்கும், வேதத்தில் நம்பிக்கை வைத்தவர்களுக்குமே உபதேசிப்பாயாக என்றார்.

16. பரமனுக்குப் பிரியமான தலங்கள்

ஸநத்குமார முனிவரை வியாஸ முனிவர் நோக்கி, சுவாமி பரமசிவனின் ஸ்தான மஹாத்மியங்களையும் தீர்த்தச் சிறப்புகளையும் கேட்கக் கேட்க எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. மீண்டும் தேவதேவனான மஹாதேவருடைய சரித்திரங்களை விஸ்தாரமாகச் சொல்ல வேண்டும்! என்றார். அதற்கிணங்கி ஸநத்குமார முனிவர் கூறலானார். வியாஸ முனிவனே! எல்லா பாபங்களையும் ஒழிக்கத்தக்கதாகவும் பர்வகாலங்களில் ஒரு முறை படித்தாலும் இந்திராதி லோகங்களைக் கொடுக்கவல்லதும், உலகிற்கு அருளும் பொருட்டு மகாதேவனால் சொல்லப்பட்ட இரகசியங்களை உனக்குச் சொல்லுகிறேன் பக்தியுடன் கேட்பாயாக. சிவபெருமானுக்கு அத்யந்த பிரியமுள்ள ஸ்தானங்களாவன: ஸாகலாண்டம், குரண்டம், முகுண்டம், மண்டலேசுவரம், காலஞ்சரம், கதகண்டம் பலேசுவரம் என்ற ஸ்தலங்களில் பரமசிவன் அநேகவிதமான பூதகணங்களோடும் தேவர்கள் முனிவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் முதலானவர்களால் பூஜிக்கப் பெற்று, மிகப் பிரீதியுடன் அவ்விடங்களில் இருப்பார். பிராணிகள் இந்த ஸ்தங்களை ஒரு முறையாவது அடைந்து பரிசுத்தமனத்தோடு அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி தேவப் பிதுர்க்களுக்குத் தர்ப்பணங்களைச் செய்து சிவபெருமானைப் பூஜித்து நியமனத்துடன் ஒருநாள் வசித்தாலுங்கூட ராஜஸூய அஸ்வமேத யாகங்களை செய்த பயனை அடைவார்கள். மேலே சொன்ன இடங்களில் பிராணிகள் பாபஞ் செய்யாமல் வசித்து அந்திமககாலத்தில் உடலை நீப்பார்களானால் சாங்கியம் முதலிய யோகங்களுக்குத் துர்லபமாயும் ஞானியருக்கு அப்பிரத்யக்ஷமாயும் பாசுபதம் போன்ற விரதங்களான சாதிக்கத் தக்கதான மாஹதேவ பதத்தை அடைவார்கள்!

17. புண்ணிய ÷க்ஷத்திரங்கள்

என் குருவே! நீங்கள் இதுவரை சொல்லி வந்த ஸ்தலங்களில் கோரிக்கையோடு பூஜைசெய்தால் சிவபெருமான் கொடுக்கும் வரங்களை விவரமாகச் சொல்ல வேண்டுகிறேன் என்றார். வியாஸ முனிவர் அதற்கு ஸநத்குமார முனிவர் கூறலானார். வியாஸ முனிவனே! அதிரகஸ்யமான சரிதங்களை உனக்குச் சொல்லுகிறேன். பூர்வம் ஒரு காலத்தில் அநேகமான வாலகில்யாதிமா முனிவர்கள் பலகாலம் பரமசிவனைப் பூஜித்து அவருடைய திருவருளைப் பெற வேண்டும் என்று, மூன்று வேளைகளிலும் தவறாமல் பூஜித்து வந்தார்கள். அந்த வாலகில்யருடைய பூஜையால் ப்ரீதியடைந்த பரமசிவன் அவர்களுக்குத் தரிசனம் கொடுக்க அவர்கள் மஹாதேவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து தேவ தேவா! பரத்திற்கும் பரமான பரம்பொருளே வாசாமகோசர ஸ்வரூபியே! வரத மூர்த்தியே! எது பார்க்கமுடியாதோ எது சொல்ல முடியாதோ, அந்தப் பொருளை நாங்கள் கண்ணெதிரே கண்டோம்! இனி எங்களுக்குப் பதினான்கு உலகங்களிலும் கிடைப்பதற்கு அரிய பொருள் எதுவுமில்லை என்று ஆனந்தப் படுகிறோம் ஆகையால் எங்கள் மீது கருணை காட்டி நீர் வசிக்கும் இரகசிய ஸ்தானங்களையும் அந்த ஸ்தன மான்மியங்களையும் ஆங்காங்கு பூஜித்தால் அடையும் பயன்களையும், உலகிற்கு அருளும் பொருட்டுக் கூறியருள வேண்டும் என்று வேண்டினார்.

ருத்திரமூர்த்தி, அந்த வாலகில்யரை நோக்கி, முனிவர்களே! எனக்கு முக்கியமான ஸ்தானங்கள் அநேகமுள்ளன. அவை மஹாபுரம், சக்தாபுரம், ஸ்ரீபர்தம், ஜாப்பியேசுவரம் ஆம்ராடிகேசுவரம், மகாகாளபுரம், மத்யமேசுவரம், தேவதாருவனம், மகாபைரவம், குஹ்யஸ்தானமாம் இவையாவும் எனக்குப் பிரியமுள்ள ஸ்தானங்களாகும். இவ்விடங்களில் எந்த வர்ணத்தாராயினும் என்னை ஒருமுறை தரிசித்தால் விரைவில் இஷ்ட சித்தியை அடைவார்கள். குஹ்ய ஸ்தானத்தில், பிரம்ம க்ஷத்திரிய, வைசிய, சூத்திர, மிலேச்சர்கள், பாவிகள், ஸ்திரீகள் முதலியவர்கள் யாராயினும் என்னைப் பூஜித்தால் அவர்கள் இந்தர லோகத்தல் பலகாலம் வசித்து, மீண்டும் பூவுலகத்தில் பிரபுக்களாகத் தோன்றிச் சர்வ சுகங்களையும் அனுபவித்து காணாபத்தியத்தை அடைவார்கள். இந்த ஸ்தானங்களில் பிதுர்க்களைக் குறித்து, சிரார்த்த தர்ப்பணங்களைச் செய்தவர்கள் பிதுர்க்களுடன் சுவர்க்க லோகத்தில் வசிப்பார்கள். இவை அடைவதற்குத் துர்லபமான ஸ்தானங்கள் இவற்றைச் சொன்னேன். இவற்றின் மகாத்மியத்தை அறிந்து, அந்திய காலத்தில் அங்கடைந்து உயிர்துறந்தால் அவர்கள் உருத்திர சாரூப்யத்தை அடைவார்கள். எல்லாப் புண்ணிய ஸ்தானங்களிலும் கங்காத்வாரத்தில் விளங்கும் குஹ்யஸ்தானமே, சிறப்பானது அதன் மகிமையை தேவர்களும் அறியார்கள். இது சிரத்தையற்றவனுக்கு சொல்லக் கூடாது. மாணவனாகவும் புத்திரனுக்குச் சமமானவனாகவும் உள்ள சிவ பக்தனுக்கே சொல்லத்தகும். இந்த அத்தியாயத்தைப் பக்தியோடு, பர்வ காலங்களில் வசித்தவர்கள் நால்வகைப் புருஷார்த்தங்களையும் அடைந்து மகிழ்வர்! என்று ஸநத்குமார முனிவர் கூறினார்.

18. சிவபெருமானின் பிரபாவம்.

ஸநத்குமார முனிவரை நோக்கி, வியாஸமுனிவர், சவாமி மஹாதேவன் விஷ்ணு பிரமன் ஆகிய இவர்களில் தொழில்களால் சிறந்தவர் யார் என்பதை விளக்கியருள வேண்டும்! என்று கேட்டார். அதற்கிணங்கி ஸநத்குமார முனிவர் சொல்லத்துவங்கினார். பூர்வத்தில் மூவுலகங்களையும் வென்ற பலிச்சக்கரவர்த்தியிடம் விஷ்ணு மூர்த்தியானவர், தேவர்களால் பிரார்த்திக்கப் பட்டுச் சென்று மூவுலகங்களையும் தானமாக வாங்கி அந்த மாபலியைப் பாதாள லோகத்திற்கு அனுப்பி பாற்கடலில்யோக நித்திரையில் இருந்தார். அந்தக் காலத்தில் பிரகலாதன் முதலான அசுரர்கள், புண்டரீகாக்ஷனாகிய விஷ்ணுவைத் தரிசிப்பதற்காகப் பாற் கடலை அடைந்தார்கள். அந்தச் சமயத்தில் சித்த வித்தியாதரர் நரகர் கந்தர்வர் தேவர்கள் பிரம்மரிஷிகள் அப்சரஸ்கள் முதலானவர்களும் அங்கு வந்திருந்தார்கள். அவர்கள் யாவரும் ஒன்றுகூடிப் பீதாம்பரதாரியாகச் சேஷாசனத்தில் திருக்கண் வளருந் திருமாலையடைந்து சாஷ்டாங்கமாகப் பணிந்து துதிக்கிறார்கள். ஜகத்ரக்ஷகராகிய ஸ்ரீ விஷ்ணுமூர்த்தியே! நீரே கர்த்தா! நீரே காமக்குரோத லோபங்களை வென்றவர்! நீரே ஸத்வகுணமுடையவர்! நீரே மூவுலகங்களையும் பரிபாலனஞ் செய்கிறவர்! அசுரர்களை அடிக்கடித் துவம்சம் செய்து எங்கள் பதவியை நிலை நிறுத்துபவர்! இவ்வுலகம் தண்ணீரில் மூழ்கியபோது அதை நிலைப்படுத்தி ரட்சித்தவராக மூர்த்தியும் நீரே! உம்மைக் காட்டிலும் எளியவர்களான எங்களுக்குக் கதிவேறில்லை என்று தோத்திரஞ் செய்தார்கள். அப்பொழுது தேவாசுரர் முதலிய எல்லோரையும் பார்த்து விஷ்ணுமூர்த்தி சொல்லுகிறார்.

தேவர்களே! முனிவர்களே அசுரர்களே; எல்லா உலகங்களுக்கும் காரண பூதனான ஜெகதீசனுடைய மகிமையைச் சொல்லுகிறேன் கேட்பீர்களாக சிவபெருமானை அர்ச்சனை செய்தே நானும் பிரமனும் இத்தகைய உயர்ந்த பதவியை அடைந்திருக்கிறோம் பூர்வத்தில் நானும் பிரமனும் தனித்தனி ஜகத்கர்த்தாக்கள் என்று விவாதஞ் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு ஜோதி தோன்றியது நாங்கள் அதன் அடியையும் முடியையும் தேடி அறிவோம் என்று ஆயிரம் ஆண்டுகள் அலைந்தும் காணமுடியாமல் அந்த ஜோதியை அடைந்து, தோத்திரஞ் செய்தோம், அப்பொழுது சிவ பெருமான் பிரசன்னராகி, மைந்தர்களே! நீங்கள் இருவரும் விவாதஞ் செய்ய வேண்டாம், பிரமனே நீ என் வலப்புறந் தோன்றினை! விஷ்ணுவே! நீ என் இடப்புறந் தோன்றினை! உங்கள் இருவருக்கும் என் கிருபை பரிபூரணமாக விளங்கும். நீங்கள் சமானஸ்தர்கள் பிரமனே நீ படைத்தல் தொழிலையையும் விஷ்ணுவே நீ காத்தல் தொழிலை செய்வீர்களாக என்று அருள்பலவரங்கள் தந்து மறைந்தார். ஆகையால் அண்டரண்ட பிரம்மாண்டங்களுக்கும் காரணபூதரான சிவபெருமானே எல்லோருடைய மனவிருப்பங்களையும் கொடுக்கவல்லவர். நீங்கள் அவரைத் துதித்து உங்கள் விருப்பங்கள் கைகூடப் பெறுவீர்களாக! என்று கூறினார். ஆகையால் வியாஸ முனிவனே சுயம்புவாகிய சிவபெரூமானே ஸர்வசிரேஷ்டன் என்று உணர்வாயாக என்று ஸநத்குமார முனிவர் சொன்னார்.

19. மலர்களின் மகிமை

வியாஸ முனிவர் ஸநத்குமார முனிவரை வணங்கி, சுவாமி! சிவலிங்கப் பிரதிஷ்டையால் அடையும் பயனும் சிவபூஜையில் புஷ்பார்ச்சனை செய்வதால் வரும் பயனும் பாலினால் அபிஷேகம் செய்வதால் வரும் பயனும் இவையென்றுவிரித்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கிணங்கி ஸநத்குமார முனிவர் கூறலானார். பராசர புத்திரனே! அக்கினிஷ்டோமம். உக்த்யம் வாஜபேயம் பவுண்டரீகம் அதிராத்திரம். அப்தோர்யாமம் என்னும் ஏழு யாகங்களையும் முறைப்படித் தக்ஷிணை கொடுத்து, அன்னதானங்கள் செய்து முறைப்படி முடித்தவர்கள் எந்தப் பயனை அடைவார்களோ. அந்தப் பயனை  ஒரு சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்தவன் அடைந்து விடுவான். ஆடவரோ பெண்டிரோ சூத்திரரோ நபும்சகர்களோ சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தவர்கள் எவ்வகையினரேனும் அற்புதவருஷங்கள் உருத்திர பதவியில் வாழ்வார்கள், மனிதப் பிறவியெடுத்து முதல் வைகாசி ஐப்பசி கார்த்திகை மகா மாதங்களில் கங்கை முதலான மகாநதிகளில் நீராடி அடையும் பயனைச்சிவ பூஜைக்கு சந்தன தானம் கொடுத்தவன் அடைவான் சிவாராதனைக்காக பூதானஞ் செய்தவர்கள், அநேக கோடி காலம் உருத்திர சாரூப்பியத்தை அடைந்து உருத்திரலோகத்தில் வாழ்வார்கள் சிவலிங்காபிஷேகத்திற்குத் தைல தானஞ் செய்தவர்கள். அதனிலும் நான்கு பங்கு சிறப்பான பயனை அடைவார்கள். நெய் தானம் செய்தவன் அறுபது கோடி வருஷமும் கபிலைப் பசுவின் பாலைத் தானங் கொடுத்தவன். எண்பது கோடி வருஷமும், உருத்திரப் பதவியில் வாழ்வார்கள். மூவேளைகளிலும் நீராடி மாசோபவாச ப÷க்ஷõவாசங்களை ஆயுள் காலம் வரையிலும் செய்தவன் அடையும் பயனை சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் ஒரு முறை செய்வதனால் அடையலாம். நூறுகோதானம் செய்வதால் வரும் பயனைச் சிவபெருமானுக்குச் சார்த்திய ஒரு மலரால் அடையலாம். சிவபெருமானை ஆடல் பாடல் இன்னிசைக் கருவிகளால் மகிழ்வித்தவன் தான் செய்த நூறு குற்றங்கள் மன்னிக்கப்படுவான். கரு நெய்தல் மலரால் சிரவணமாசத்திலும் தாமரையால் புரட்டாசிமாதத்திலும் நாயுருவி, தர்ப்பை முதலியவற்றால் ஐப்பசி மாதத்திலும் பூஜிக்கத்தகும், உற்பலம், கரவிதம், வெள்ளெருக்கு, சம்பகம் வில்வம் அறுகு முதலியவற்றால் எக்காலமும் சிவபெருமானைப் பூஜிக்கலாம். சிவபெருமானுக்கு வெண்மையான மலர்களில் விருப்பம் அதிகம் கொக்கு மந்தாரை, கரவீரம், வெள்ளெருக்கு ஊமத்தம் என்று நான்கு மலர்களின் கந்தத்தையும் சிவபெருமான் ஆக்கிராணிப்பார் கொக்கு மந்தாரையும் தாமரையும் நிர்மாலிய மாகமாட்டாது. ஒருற்பலம் ஆயிரம் கரவீர மலரையும் ஓர் வெள்ளெருக்கு ஆயிரம் உற்பலத்திற்கும் சமம் சரபுன்னை ஒன்றுக்கு ஆயிரம் சிந்து புஷ்பங்கள் சமம். கர்ணிகாரம் ஒன்றிற்கு ஆயிரம் சுரபுன்ன இணையாகும் சிந்து புஷ்பம் ஆயிரத்திற்கு ஓர் கண்டங்கத்திரி மலர் சமம். எல்லா மலர்களையும்விட வில்வபத்திரமே சிறப்பானது. வில்வபத்திரத்துக்குச் சிவபெருமான் மகிழ்வதைப் போல வேறு எந்த மலருக்கும் மகிழ்வதில்லை. சிறந்த மலர்களால் பெறும் போகங்கள் யாவற்றையும் ஒன்று சேர்த்தால் அதை விட அறுபத்து நான்கு மடங்கு பயனை வில்வத்தைச் சூட்டுவதால் அடையலாம். சிவபெருமானுக்கு அர்ச்சிக்கத்தக்க நல்லமலர்களை முயற்சி செய்து தேடி அஷ்டமி திரயோதசி சதுர்த்தசி முதலிய தினங்களில் அவற்றால் பூஜிக்க வேண்டும். பத்திரபுஷ்பங்களால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தவன் துர்க்கதி அடையமாட்டான். சிவசன்னிதியில் எப்போதும் திருவிளக்குத் தொண்டு செய்தவன் உருத்திரலோகத்தியக் கட்டளையை நியமித்தவன் ருத்திரசாரூப்யம் அடைவான். சிவபெருமானே சர்வலோக காரணபூதர் என்று உணர்ந்து திரிகரணங்களும் இணைந்து பூஜித்தவன் உருத்திர சாயுஜ்ஜியம் அடைவான்! என்று ஸநத்குமார முனிவர் சொன்னார்.

20. சிவ புண்ணியம்

வியாஸ முனிவர் ஸநத்குமாரமுனிவரை நோக்கி சுவாமி! சிவபெருமானை எவ்வாறு ஆராதனை செய்ய வேண்டும் என்பதை விவரமாகச் சொல்லவேண்டும் என்று கேட்டார். அதற்கு ஸநத்குமார முனிவர் கூறத் தொடங்கினார். வியாஸ முனிவனே! பூர்வம் ஸ்ரீகைலாயகிரியில், பார்வதி சமேதராக எழுந்தருளியிருந்த பரமேஸ்வரரை திருநந்திதேவர் இந்த விஷயமாக கேட்க அதற்கு அவர் திருவாய் மலர்ந்தருளியதை நான் நந்திதேவரிடம் கேட்டவாறு சொல்லுகிறேன் சிவபெருமான் நந்திதேவரிடம் சொன்னதாவது. என்னுடைய சன்னதி என்று நியமித்து, அதற்குப் பொற்கலசம் அமைத்தவன் அத்தகைய கலசங்கள் அநேகம் வைத்த உயர்ந்த மாளிகையில் வசிப்பான் என்னை உத்தேசித்து, பசு பொன் வஸ்திரம் ஆகியவற்றை தானஞ்செய்தவன் உலகம் முழுவதற்கும் ஏகச்சக்கராதிபதியாக இருப்பான். என் உற்சவத்திற்காக ரிஷப வாகனஞ் செய்து வைத்தவன் எல்லாப் பாபங்களையும் போக்கி என்னோடுகூடி வசிப்பான். நிவேதனம் ஆடல் பாடல் வாத்தியங்கள் தீப தூப முதலியன நடக்கும் படி ஆலயக்கட்டளைகளை நியமித்தவர்கள் பிரமலோகத்தில் வசிப்பார்கள். சிவ நாமங்களைச் சொல்லி சுரதாளம் செய்தோர் பிரமஞானிகளாவர். அக்கினிஷ்டோமாதி யாகங்களில் என்னைப் பூஜித்தோர், இந்திர பதவியை அடைவார்கள். திரிகால சந்தியாவந்தனாதிகளாகி கைவல்ய சித்தியடைவர். இயக்கர்களுக்கு நானே குரு மத்தியான்னக்கடன்களால் என்னைப் பூஜித்தவர்கள் உலக பாலகர் ஆவார்கள். என்னுடைய ஆலயத்தை திருவலகிடுதலால் ஐந்நூறு பங்கு பயனும் அடையலாம். இலிங்கக் குறியைப் பொன்னாலும் வெள்ளியினாலும் அர்ச்சனை செய்தவர்கள் காணபத்தியம் அடைந்து அநேகம் காலம் உருத்திரப் பதவியில் வாழ்வார்கள். தைலாபிஷேகம் செய்தவன் இருநூறு பங்கு பயனும் பனிநீர், பச்சைக் கற்பூரம் முதலியன கலந்த சந்தனாபிஷேகம் செய்தவன் ஆயிரம் பங்குபயனும் பாலாபிஷேகம் செய்தவன் ஐநூறு பங்கு பயனும் மலர் மாலையால் அலங்கரித்தவன் அறுநூறு பங்கு பயனும் கீதவாத்தியங்கள் செய்வித்தவன் ஏழு நூறு பங்கு பயனும் அடைவார்கள். அகர்சந்தனங்கலந்த தூபங் கொடுத்தவன் ஆயிரங்குற்றங்கள் மன்னிக்கப்படுவான். சிவாலயத்தில் நெய்யினால் சமைத்த அன்னத்தை நிவேதிப்பவன் கணாபத்தியம் அடைந்து தன் பிதுர்க்களை நற்கதி அடையச் செய்வான்.

சிவ நிர்மால்யங்களை கைகால் படாமல் அதிதூரத்தில் சேர்ந்தவர்கள் பதினான்கு மனுவந்தரம் வரையில் அழியாப் பதவியை அடைவார்கள். பூஜாகாலத்தில் தேவதியருக்குச் சரியான தக்ஷிணை கொடுத்தவன் ஒருகாலத்திலும் யமதருமனை அடையான் சிவபூஜை செய்யும் வேதியர்களுக்குத் தீபதானஞ் செய்தவன் உருத்திர சாரூப்யம் (ருத்திரனைப் போன்ற உருவம்) அடைவான் திருவீதி மகோத்சவத்திற்குக் குடையைத் தானஞ் செய்தவன் இந்திரலோகத்தில் திவ்ய விமானத்தில் ஏறிச் சந்தோஷமாகச் சஞ்சரிப்பான். அஷ்டமி சதுர்த்தி தினங்களில் பிரமசரிய நியமத்துடன் சிவார்ச்சனை செய்து பிரமணர்களையும் சுமங்கலிகளையும் பூஜித்தவன் தன் விருப்பத்தின்படி, திவ்விய விமானங்களில் ஏறி, இந்திராதி போகங்களில் வாழ்வான். சிவ நாமத்தை ஸ்மரணை செய்தவன் கணாபத்தியமடைவான். தேவாலயங்களைத் தரிசித்தவன் மிருத்தியு(மரண) பயத்தை ஒழிப்பான். மனம், வாக்கு, காயங்களால் ஒரு குற்றமுஞ் செய்யாது. ஒருவேளை உணவருந்தி சிவார்ச்சனை செய்து கொண்டிருந்தவன் பிரமபட்டம் வரையில் என்னுடைய உலகத்தில் வசிப்பான். பற்பல இடையூறுகளும் நோய்களும் வந்தவிடத்தும் அவற்றைக் கருதாது சிவபூஜையைச் செய்தவனுக்குப் பிராகிருதப்பிரளயமே கிடையாது. விஷ்ணு முதலான தேவர்களைப் பலகாலம் உபாசித்து வைகுந்தம் முதலிய பதவிகளை அடைந்தவர்கள். பல காலத்திற்குப் பிறகு மீண்டும் பூவுலகை அடைவார்கள், சிவபதவியை அடைந்தவர்கள். ஒருபோதும் பிறவியை அடையவே மாட்டார்கள். சராத் சராத் மகமான பிரபஞ்ச முழுவதும் நசிக்கும் காலத்திலும் என் பதவி மட்டும் நசியாமல் விளங்கும் என்னை எந்த மூர்த்தத்திலே பூஜித்தாலும் யானே அந்தப் பூஜையை ஏற்றுக் கொள்கிறேன். என்னையே எல்லாம் வல்ல சர்வசக்தியுடையவன் என்றுணர்ந்த உண்மை ஞானியும் நானுமே எப்போதும் நாசமற்றவர்களாக விளங்குகிறோம். உலக வியாபாரத்திலிருந்தாலும் சுகதுக்கங்களை என்னிடம் அர்ப்பணித்தவன் உருத்திரலோகத்தில் வாழ்வான் எண்பது சுவர்ண புஷ்பங்களால் அர்ச்சிப்பயனை ஒரு கொக்கு மந்தாரை கொடுக்கவல்லது ஆகையால் அத்தகைய கொக்கு மந்தாரை மலர் ஆயிரத்தால் என்னை அர்ச்சனை செய்தவன் எனக்குச் சமானமான தேகத்தையடைந்து காளகண்டமும் நான்கு தோள்களும் மூன்று கண்களும் ரிஷிபத்துவஜமும் பெற்று அநேக கோடிக் காலம் வாழ்வான். என்னுடைய நிர்மாலியத்தை பூஜித்தவன் ஆயிரம் ஆண்டுகள் மிருக பக்ஷியாதிப் பிறவிகள் எடுத்து வருந்துவான். முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தெண்ணாயிரம் முனிவர்களும் யக்ஷ கின்னர, கந்தர்வர்கள், தானவர்கள், நரகர்கள் முதலிய எல்லோரும் என்னைப் பூஜித்தே உயர் பதவியை அடைந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை வாசித்தும் பிறருக்கு எடுத்துரைத்தும் எனக்கு அர்ப்பிதம் செய்தவர்கள் உருத்திர யோகத்தை அடைவார்கள் என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.

21. சுவர்ண புஷ்ப சமானம்

சிவபெருமான் கூறியவற்றைச் சொல்லிவந்த ஸநத்குமார முனிவரை நோக்கி, வியாஸமுனிவர் சுவாமி மலர்கள் எப்படிப் பட்டவை? மலர்கள் கிடைக்காவிட்டால் அதற்குப் பதிலாக எதைக்கொண்டு அர்ச்சனை செய்யலாம்? என்று கேட்கவே ஸநத்குமார முனிவர் கூறலாயினர். பூர்வம் இந்த விஷயத்தைப் பற்றிச் சிவபெருமான் சொல்லியபடியே நான் சொல்கிறேன். நந்தீ! செந்நிறம் பொன்னிறமும் வெண்ணிறமும் தனித்தனியுடைய மலர்களும் முட்களையுடைய மரங்களிலுள்ள மலர்களும் எனக்கு விருப்பமாகும். தேவர்களுக்கு வெண்மை மலர்களும் அசுரர்களுக்குத் துர்வாசனையுடைய மலர்களும் இராக்கதர்களுக்கு முட்களையுடைய மலர்களும் பிரீதியை அளிக்கும் எல்லாப் பொருள்களிலும், தங்கமே முக்கியமானது ஆகையால் சுவர்ண (தங்க) புஷ்பத்தால் என்னை அர்ச்சித்தவன் எனது சாரூப்யத்தை அடைந்து அப்சரஸ்களோடு கூடி, அநேக காலம் வாழ்வான், சுவர்ண புஷ்பமாவது ஒரு கர்ஷமாகிலும் பதினோரு உளுந்து அளவாகிலும் எடையுடைய சுவர்ணத்தால் செய்யப்படுவது துரோணம் குந்தம் இவற்றின் மலர்கள் சுவர்ண புஷ்பங்களுக்கு சமானமாகும். செவ்வரத்தை, நரகே சரம் இவற்றின் மலர்கள் இரண்டு சுவர்ண புஷ்பங்களுக்கும் சிறு சண்பகம், மல்லிகை இவை ஐந்து சுவர்ண புஷ்பங்களுக்கும் ஜாதி மல்லிகை முல்லை, இவற்றின் மலர்கள் ஆறு சுவர்ண புஷ்பங்களுக்கும் செந்தாமரை மலர் ஏழு சுவர்ண மலர்களுக்கும் அசோகமலர் பத்துசுவர்ண புஷபங்களுக்கும் நாகமலர் பதினோரு சுவர்ண புஷ்பங்களுக்கும் விரு÷க்ஷõர்த்பம் பன்னிரண்டு சுவர்ண புஷ்பங்களுக்கும்  குசேசயமலர்(நூறு இதழ்த் தாமரை) எண்ணாயிரம் சொர்ண புஷ்பங்களுக்கும் வெள்ளெருக்கு மூவாயிரம் சுவர்ண புஷ்பங்களுக்கும் ஊமத்தை ஐயாயிரத்திற்கும் வில்வதளம் இலக்ஷம் சுவர்ண புஷ்பத்துக்கும் சமம்.

இந்தப் புஷ்பங்களால் அஷ்டமி, சதுர்த்தசி முதலிய திதிகளில் மாலை வேளையில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்தவன் தானே சிவமூர்த்தியாகிறான். இவ்விதம் பூசிப்பவனுக்கு, யக்ஷர் ராக்ஷசர் பைசாசம் முதலானவற்றால் ஒரு விபத்தும் உண்டாகாது. என்னை பூஜிப்பவர்களுக்கு வேறு விரதம் தானம் தவம் முதலியன ஒன்றும் வேண்டுவதில்லை மேலே சொன்ன மலர்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில் சகஸ்ர நாமார்ச்சனை செய்தவன் அநேக கோடி காலம் என்னிடம் சமீபித்து வாழ்ந்திருப்பான். அகர் தேவதாரு முதலியவற்றால் தூபங்கொடுத்தவன் முப்பத்திரண்டு சுவர்ணங்களைத் தானங்கொடுத்த பயனை அடைவான். ஓராண்டுக்காலம் என் சன்னிதியில் தீபம் வைத்து வந்தவன் அறுபதினாயிரம் ஆண்டுகள் என் உலகில் வாழ்ந்திருப்பான் இவ்விதம் பக்தி செய்தவர்கள் பெரும் புண்ணியசாலிகளாய் உயர்பதவிகளை அனுபவித்து வாழ்வார்கள் என்று சிவபெருமான் கூறியதாக ஸநத்குமார முனிவர் வியாஸ முனிவருக்குக் கூறினார்.

22. மாத உபவாச மகிமை

வியாஸ முனிவர், ஸநத்குமார முனிவரை நோக்கி, சுவாமி! சிவபெருமானைக் குறித்து, எவ்விதமாக எந்த மாதத்தில் விரதம் இருக்கவேண்டும்? எந்தத் தீர்த்தங்கள் சிவபெருமானுக்கு விருப்பத்தை ஏற்படுத்தும்? என்று கேட்கவே ஸநத்குமார முனிவர் கூறலானார். சிவபெருமான் உமாதேவியை நோக்கிக் கூறியது பூர்வம் வாலகில்யருக்கு இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறேன் நீயும் கேட்பாயாக! பஞ்சமி சஷ்டி, பூர்ணிமை முதலிய தினங்களில் உபவாசமிருந்து என்னை அர்ச்சிக்கும் பக்ஷத்தில் சிறந்த ரூபவானாகவும் பாக்கியவானாகவும் தோன்றுவான் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி சதுர்த்தசிகளில் ஒரு நாள் உபவாசம் இருந்து இரவு நான்கு யாமங்களிலும் என்னைப் பூஜித்தவன் குபேர சம்பத்தோடு வித்தியாவானாகவும் புத்திர பாக்கியவானாகவும் பிறப்பான். சுக்கிலபக்ஷ அஷ்டமி சதுர்த்தசி திதிகளில் பூஜித்தவன் மன்மத சரீரத்துடன் ஞானவானாகத் தோன்றுவான். நவமியில் ஒரு வேளை உணவருந்தி என்னைப் பூஜித்தவன் விசாலமான பூமியை அடைவான் துவாதசியில் போஜனத்துடன் என்னைப் பூஜித்தவன் வித்தியாவானாகவும் தனவாணாம் ரூபவானுமாகப் பிறப்பான். ஒரு வருஷ காலம் அமாவாசை விரதமிருந்து என்னைப் பூஜித்தவனும் மாதந்தோறும் மூன்று நாட்கள் எனக்காக விரதமிருந்து ஓராண்டு கழித்தவனும் இலக்ஷமாண்டுகள் சுவர்க்க வாசஞ் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் சிவப்ரீதியான தினங்களில் உபவாசமிருந்து அந்திப்பொழுதில் எனக்குத் தீபம் முதலியன வைத்து என்னைத் தரிசித்து நியமமாக இருந்தவன் சக்கரவர்த்தியாவான். ஒருமாத காலம் என்னை நோக்கி ஜலபானஞ் செய்து கொண்டு விரதமிருந்து விரதம் பூர்தியானவுடனே அந்தணர்களுக்குத்தக்க தக்ஷிணைகொடுத்து சமாராதனை செய்வித்துப் போஜனம் செய்தவன் அழகான அன்னங்களால் அலங்கரிக்கப்பட்ட திவ்விய விமானத்தில் ஏறி அநேககோடி காலஞ்சர்வ அண்டங்களிலும் சஞ்சரித்துப் பிறகு ஜன்மாந்தரவுணர்ச்சி பெற்று தர்மவானாகவும் பிரபுவாகவும் விளங்கிக் குறைவின்றி வாழ்வான். தை மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒருமுறை உணவருந்தி அந்த மாதம் முழுவதும் விரதம் அனுஷ்டித்து, மாதமுடிவில் அந்தணர்களுக்குத் தக்ஷிணை கொடுத்துப் போஜனம் செய்வித்து எனக்கு அர்ப்பிதம் செய்தவன் அறுபதினாயிரம் ஆண்டுகள் சுவர்க்கம் முதலான போகங்களை அனுபவித்து மீண்டும் உயர்ந்த பிறவியை அடைவான். மாசி மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு முறை புசித்தாவது. மூன்று நாள் முற்றும் உபவாசமிருந்தாவது! மாதவிரதம் அனுஷ்டித்தவன், தொண்ணூராயிரம் ஆண்டுகள் வரையில் தான் விரும்பிய உலகங்களில் சஞ்சரித்து மீண்டும் பூவுலகல் பிறந்து பிரமஞானியாவான் பங்குனிமாதத்தில் ஒரு வேளை புசித்து அந்த மாதம் முழுவதும் விரதமிருந்து பூர்த்தி செய்தவன் பிரமலோகத்தை அடைந்து, மீண்டும் பூவுலகத்தில் அந்தணப் பிறவியெடுத்து அடைந்து நான்கு வேதங்களையும் அத்தியயனஞ் செய்து அவ்வேதங்களில் சொல்லியவாறு யாகங்களை அனுஷ்டித்து பிரமஞானத்தை அடைந்து மோக்ஷத்திற்கு அருகனாவான்.

சித்திரை மாதத்தில் ஒரு முறை புசித்துப் பக்தியுடன் என்னைப் பூஜித்து விரதம் பூர்த்தி செய்தவன் எண்பதினாயிரம் ஆண்டுகள் வருணலோகத்தில் வசிப்பான். வைகாசி மாதத்தில் ஒரு முறை பூஜித்து, பக்தியுடன் வணங்கியவன் முப்பதினாயிரம் ஆண்டுகள் சுவர்க்கலோகத்தில் வாசஞ்செய்து மீண்டும் பூமியில் ஓர் அரசனாகப்பிறந்து, அநேக கோதானங்களைச் செய்வான். ஆனி மாதத்தில் ஒருமுறை புசித்தாவது, மூன்று நாட்களாவது அல்லது ஒரு நாளாவது உபவாசம் இருந்து பக்தியுடன் என்னைப் பூஜித்து விரதபூர்த்தி செய்தவன் சிசுஹத்தி பிரமஹத்தி குருபத்தினியைக் காமுறுதல் முதலிய பாவங்களைச் செய்திருந்தாலும் அவற்றிலிருந்து நீங்கி நற்கதி அடைவான். உலகத்தில் இவ்வித உபவாச பூஜைகளாலேயே யாவரும் நற்கதியடைவார்களாதலின் என் பூஜையே யாவற்றுக்கும் காரணம் நான்கு வேதங்களையும் வியாகரணம் முதலிய சாஸ்திரங்களையும் அத்தியயனஞ் செய்து சமஸ்த யாகங்களையும் செய்து, குடும்பியாயும் பிரமஞானியாகவுமிருக்கும் பிராமணனுக்குக் காராம் பசுவைக்கன்றுடன் தானஞ் செய்து எனக்கு அர்ப்பணம் செய்தவன் சூரியனுக்குச் சமமான விமானத்தில் ஏறித் திவ்ய சரீரத்துடன் அப்சரஸ்கள் உபசாரஞ் செய்ய பதினாயிரம் ஆண்டுகள் சுவர்க்க லோகத்தில் வசித்து, மீண்டும் பூலோகத்தில் உத்தம க்ஷத்திரிய குலத்தில் ஜனித்து, நோயற்ற வாழ்வை அடைவான், பார்வதீ எக்குலத்தில் பிறந்தோராயினும் என்னைப் பக்தியுடன் பூஜித்தால் எக்காலத்தும் துர்க்கதியடைய மாட்டார்கள் ஆடிமாதத்தில் சப்தமி திதியில் உபவாசம் இருந்தாவது அல்லது அந்த மாதம் முழுவதும் பழங்களைப் புசித்தாவது என்னைப் பக்தியுடன் பூஜித்து விரதபூர்த்தி செய்தவன் பிரமகற்பம் வரையில் சுவர்க்காதி போகங்களை அனுபவித்து, மீண்டும் பூவுலகில் பிறந்து, குபேரனுக்குச் சமமான சம்பத்துடன் தீர்க்காயுள் பெற்று வாழ்வான். ஆவணி மாதத்தில் ஒரு முறை புசித்தாவது அஷ்டமி தினத்தில் உபவாசம் இருந்தாவது விரதம் முடிவில் எனக்குத் திருந்தியாகப் பிராமணர்களை என்னுடைய மூர்த்தி என்று பாவித்துப் பூஜித்தவன் வாயுவேகமாகச் செல்லும் அம்சங்களால் அலங்கரித்த திவ்விய விமானத்தில் திவ்விய தேகத்துடன் தன் பிதுர்க்களின் கூட்டத்துடன் பத்தாயிரம் ஆண்டுகள் சுவர்க்கலோகத்தில் வசித்து மீண்டும் பூவுலகில் சிவஞானியாவான் புரட்டாசி மாதத்தில் ஒருமுறை புசித்து பக்தியுடன் என்னை பூஜித்து விரத பூர்த்தி செய்தவன் நூறாயிரம் ஆண்டுகள் வாயு லோகத்தில் சஞ்சரித்து மீண்டும் பூவுலகில் வேதசாஸ்திர சம்பன்னனாக இருப்பான் ஐப்பசி மாத விரதம் இருந்தவன் அறுபதினாயிரம் ஆண்டுக் சுவர்க்க லோகத்தில் வசித்துக் குபேர சம்பத்துடன் வாழ்வான்.

எட்டு ஆண்டுக்காலம் முன்பு சொன்ன நியமப்படி, என்னை அர்ச்சித்தவன், நூறு அசுவமேதஞ் செய்த பயனை அடைவான் ஒருநாள் புசித்தும் ஒருநாள் உபவாசமிருந்தும் ஐந்து ஆண்டுக்காலம் என்னைத் தவறாமல் பூஜித்தவன் ஆயிரம் அசுவமேதயாகஞ்செய்த பயனை அடைவான். ஒருபக்ஷம் உபவாசமிருந்து முறைப்படிப் பூஜித்தவன் பத்து அக்கினிஷ்டோமஞ்செய்த பயனையடைவான். மாசோபவாசமிருந்து பூஜித்தவன் பவுண்டரீக யாகஞ் செய்த பயனை அடைவான். கந்தமூலபலங்களைப் பூஜித்து என்னைப் பூஜித்தவன் வாஜபேயஜ்செய்த பயனை அடைவான் ஜலபானஞ் செய்து கொண்டு என்னைப் பூஜித்தவன் அப்தோரி யாமஞ் செய்த பயனை அடைவான். ஓராண்டுக்காலம், தினமும் இருபத்தைந்து நாழிகை, வரையில் என்னைப் பூஜித்துச்சாயங் காலம் புசித்தவன் சத்திரயாகஞ் செய்த பயனை அடைவான். ஒவ்வொரு நாளும் உதயகாலத்தில் என்னைப் பூஜித்து ஒருமுறை புசித்து, மறுநாள் தான் புசிக்கும் வரையில் ஜலபானஞ் செய்யாமல் ஆறுமாதம் விரதம் அனுஷ்டித்தவன் அதிராத்திரம் என்னும் யாகத்தைச் செய்த பயனை அடைவான். நான்கு மாதகாலம் வீராசனத்திலிருந்து, ஒருவருக்கும் ஹிம்சை செய்யாது என்னைப் பூஜித்தவன் பதினாயிரம் ஆண்டுகள் சுவர்க்க லோகத்தில் வாழ்ந்து மீண்டும் பூமியில் நற்குலத்தில் உதித்து நோயற்ற தீர்க்காயுளுடனும் வாழ்வான். பன்னிரண்டு ஆண்டுகள்  இரவில் மட்டும் புசித்து ஒருவருக்கும் ஹிம்சை செய்யாமல் ஜிதேந்திரியனாக இருந்து பூஜித்தவன், எல்லா யாகங்களையும் செய்த பயனை அடைந்து, விமானத்தில் ஏறித்தான் விரும்பிய உலகங்களில் நூறாயிரம் ஆண்டுகள் சஞ்சாரஞ் செய்து மீண்டும் பூமியில் சக்கரவர்த்தியாகத் தோன்றி ÷ஷாடச மகாதானங்களையுஞ் செய்து வாவி கூபதடாங்களின் நிர்மாணமும் தேவாலய அக்கிரஹார நிர்மாணங்களும் எல்லாத் தீர்த்த ஸ்நானங்களும் செய்து அழிவில்லாத சிவாக்ஷியை அடைவான். சிவ பஞ்சாக்ஷர சக்தி பஞ்சாக்ஷரங்களை நாள்தோறும் இருகாலத்திலும் ஆயிரத்தெட்டு முறை தன்னாயுள் வரையில் ஜபம் செய்தவன் திவ்விய விமானத்தில் ஏறி இஷ்டபோகங்களை அனுபவித்து உத்தமமான வமிசத்தில் தோன்றி மாணிக்கங்களும் யானைகளும் குதிரைகளும் அநேக அப்சரஸ்களுமாகிய செல்வத்தையுடையவனாய் வாழ்வான். எனக்குப் ப்ரீதியாக அந்தணர்களுக்குத் தக்ஷிணையுடன் தீபதானஞ் செய்தவன் அழியாப் பதவியை அடைவான் வேதியருக்குத் தீர்த்தத் தானஞ் செய்தவனும் தண்ணீர்ப்பந்தல் வைத்தவனும் சிவலோகத்தில் புண்ணிய தீர்த்தமத்தியில் வாழ்வார்கள், வேதியரைத் திவ்யமான சந்தனத்தால் அலங்கரித்துப் பூஜித்தவன் சந்திரமண்டலத்திற்குச் சமானமான விமானங்களில் சஞ்சரிப்பவன் பிராமணர்களுக்குப் பசுவைத் தானஞ் செய்தவன் அதற்குள்ள உரோமக்கணக்காகிய ஆண்டுகள் தேவலோகத்தில் வாழ்ந்த பின்னர் மன்மதாகாரமுடையவனாய் வித்தியாவானாகி விளங்குவான். அந்தணருக்கு வஸ்திரதானம் அளித்தவன் ஒன்பதினாயிரம் ஆண்டுகள் சுவர்க்கத்திலிருந்து, பிறகு உயர் குலத்தில் உதிப்பான், கன்னிகாதானஞ் செய்தவன் பிரமலோகத்தில் அநேக காலம் வாழ்ந்து போகியாகப் பிறப்பான் என்னுடைய மூர்த்தியைச் செய்து அலங்காரமான சுபனத்திலிருந்து சிவவேதியருக்குத் தானஞ்செய்தவன் அறுபதினாயிரம் ஆண்டுகள் சுவர்க்க லோகத்தை அனுபவித்து வித்தியாவானாகத் தோன்றுவான். சுவர்ணதானஞ் செய்தவன் சுவர்ணசரீரத்துடன் சுவர்க்க போகத்தை அனுபவித்து குபேர சம்பத்துடன் வாழ்வான். உபவீததானஞ் செய்தவன் பத்து ஜன்மம் பிராமணப் பிறவியெடுத்து வேத வித்தாக விளங்குவான். திலதானஞ் செய்தவனுக்கு அபமிருத்யு அணுகாது தீர்க்காயுள் உண்டாகும் என்று சிவபெருமான் கூறியருளினார்.

வியாஸ முனிவனே! உன்னிடமுள்ள அன்பினால் உபவாச பயனையும் தான பயனையும் உனக்குச் சொன்னேன் இதை வாசித்தவர்களும் படிக்கக் கேட்டவர்களும், சொன்னவர்களும் துர்க்கதி துக்கம் சோகம், பயம், அஞ்ஞானம் முதலியன நீங்கிச் கவர்க்காதி போகங்களை அனுபவித்துத் தர்மந் தவறாது வாழ்ந்து சிவஞானம் பெற்று, சிவ பக்தர்களாவார்கள் என்று ஸநத்குமார முனிவர் சொன்னார்.

23. நாமாஷ்டமி விதி

வியாஸ முனிவர் ஸநத்குமார முனிவரை நோக்கி, சுவாமி! எத்தகைய பூஜையால் சிவபெருமான் திருப்தி அடைந்து இஷ்ட காமியங்களை அனுக்கிரகிப்பார் என்று கேட்டார். அதற்கிணங்கி ஸநத்குமார முனிவர் பூர்வத்தில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு அருளிய வகையே சொல்லத் துவங்கினார். பார்வதி! அஷ்டமி திதியில் இந்திரிய நிக்கிரகம் செய்து உபவாசம் இருந்து பசுவின் பாலினால் என்னுடைய லிங்கத்தைப் பாலாபிஷேகம் செய்து தூபதீபம் கொடுத்துப்பழங்களை நிவேதித்து என்னைப் பூஜித்தவன் மந்திரசித்தி அடைவான். சிலைலோகம் தரு பிருதிவி இவற்றில் ஒன்றில் என் மூர்த்தியைச் செய்து திவ்யாசனத்தில் உட்கார்ந்து வேத மந்திரங்களால் என்னைப் பூஜித்துத் தான் புசிக்கும் எல்லாவஸ்துக்களையும் நிவேதனஞ் செய்தால் குறைவற்ற திருப்தியை அடைகிறேன். சுவாத்தியமாகிய காத்திய பதார்த்தங்களில் நான் பெருந்திருப்தி யடைகிறேன். ஆயினும் பக்தியின்றி எதைச் செய்தாலும் திருப்தியடைவதில்லை.

இனி அஷ்டமி பூஜாவிதியைச் சொல்லுகிறேன்.

தமஹம்புண்டரீகாக்ஷம் ருத்ரமோங் காரயாம் யஹம்
ஆயாந்து தேவாஸ்ஸகணா உமாதேவி மஹேஸ்வரீ
ஓம்பகவதே மஹாதேவாய பார்ஸ்வகதாய அநுசராய ஸ்வாஹா
ஆமலகம் ஸுக்ஷ்மமயம் ஸிவஸ்நானம் புநர்பஜ ஸ்வாஹா

என்னும் மந்திரஞ்சொல்லி நெல்லிக்கனிகளைக் கொண்டு அபிஷேகித்து ப்ரதக்ஷிணம் பராவந்தே ஸர்வமேவ உமாயுதெ ஸ்வாஹா என்னும் மந்திரத்தால் பிதக்ஷிணம் செய்து இமா ஆப ஸாந்தா, ஸாந்தமா அம்ருதா அம்ருத தமா ஆபபூதாப்ரஹ்ம பவித்ரேண பூதா ஸூர்யஸ்ய ரஸ்மிபி என்னும் மந்திரத்தால் அபிஷேகித்து ஆஹாரஸ் ஸர்வ தேவநாம் கந்தோயம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸ்வஹா கந்தம் தத்தம்மயாபக்த்யா ப்ரதிக்ருண்ஹ நமோஸ்துதே என்ற மந்திரத்தால் புஷ்பாஞ்சலி செய்து, நம பிரஐõநாம்பதயே நமோ பக்தகணார்ச்சிதா ப்ருதிக்ருஹ்ய இமந்தூபம் ஸிவலிங்க நமோஸ்துதே ஸ்வாஹா என்று தூபம் கொடுத்து, ஆபோஜ்யோதிஸ்ச தேஜஸ்ச தேவாநாம் ப்ரபவ ஸ்ம்ருத பூதோப்ரஹ்ம பவித்ரேண பூதஸ்ஸுர்ய ரஸ்மிபி ப்ரதி க்ருஹ்ய இமந்தீபம் ஸிவலிங்க நமோஸ்துதே என்று தீபங் கொடுத்து, நிவேத்ய மநஸாயுக்தம் தேவாநாம் கந்தமுத்தமம் பூதோப்ரஹ்ம பவித்ரேண பூதஸ் ஸுர்யஸ்ய ரஸ்மிமி ஆஹாரஸ் ஸர்வ தேவாநாம் நைவேத்யம் ப்ரதிக்ருஹ்யதாம் ஸ்வாஹா என்று நைவேத்தியஞ் செய்து அர்ச்சித பூஜிதஸ்சைவ மயாபக்த்யா நிவேதிதா கந்த புஷ்போபஹிரேண தத்க்ருபாம் கர்த்துமர்ஹஸி என்று கூறி க்ஷமாபணம் செய்து பூஜிக்க வேண்டும்.

இதுவரை அஷ்டமி பூஜையைச் சொன்னேன் இனி சதுர்த்தசி பூஜா விதியையும் சொல்லுகிறேன். சதுர்த்தசி தினத்தில் உதய காலத்தில் எழுந்து ஸ்நானம் செய்து நித்திய கடனை முடித்துச் சிவ பூஜைக்காகச் சிவப்புச் சந்தனத்தையும், கரவீரம் கதம்பம் முதலிய மலர்களையும் புண்ணிய நதி தீர்த்தங்களையும் அபிஷேக திரவியங்களையும் சேகரித்து, இந்திரிய நிக்கிரகத்துடன் ஆகாரமில்லாதவனாய் பரிசுத்தமான ஸ்தலத்தில் முன்பு சொல்லிய நான்கு முகூர்த்தங்களில் எந்த முகூர்த்தத்திலாவது, விதிப்படி வேத மந்திரங்களால் அர்ச்சிப்பானாக அந்த வேத மந்திரங்களை உச்சரிக்க யோக்கியதை இல்லாதவர்களுக்கு என்னைப் பூஜிக்கும் முறைகளைச் சொல்லுகிறேன்.

ஓம் நமோ பகவதே மஹா தேவாயா; த்யாயாமி பக்தவத்ஸலாய
ஆவாஹயாமி த்ரைலோக்கியாதிபதயே ஆசனம் சமர்ப்பியாமி
விஷ்ணுவே பாதயோ, பாத்தியம் சமர்ப்பியாமி
ஹராய அர்க்யம் சமர்ப்பியாமி
ஸ்ரீவத்ஸதாராய ஆசனம் சமர்ப்பியாமி
ஜேஷ்டபுஜாய மது பர்க்கம் சமர்ப்பியாமி
பிநாக தாரிணே பஞ்சாமிருதம் சமர்ப்பியாமி
கங்காதராய ஸ்நானம் சமர்ப்பியாமி
த்ரிபுவனேஸ்வராய வஸ்திரம் சமர்ப்பியாமி
உமாபதயே உபவீதம் சமர்ப்பியாமி
ஜம்பூத்வீப நிவாஸிநே கந்தம் சமர்ப்பியாமி
பாசுஹஸ்தாய அக்ஷதாம் சமர்ப்பியாமி
சோம சூர்யாக்கினி நேத்திராய புஷ்பாணி சமர்ப்பியாமி
கால கண்டாய தூபம் சமர்ப்பியாமி
கபர்த்திநே தீபம் சமர்ப்பியாமி
மஹாஸேரஜகாய நைவேத்யம் சமர்ப்பியாமி
தேஜோமூர்த்தயே கற்பூர நீராஜனம் சமர்ப்பியாமி
ஸர்வ லோகேஸ்வராய ப்ரதக்ஷிணம் சமர்ப்பியாமி
ப்ரஹ்மாது தேவ வந்தியாய நமஸ்காரம் சமர்ப்பியாமி

என்று மேற் சொல்லி நாமங்களைப் பிரணவ பூர்வமாகவும் நமோந்தமாயும் உச்சரித்துப் பூஜித்தவன் நாள்தோறும் மனோவாக்கு காயங்களாற் செய்த பாவங்களை ஒழித்து நிர்மலமான ஞானத்தை அடைந்து என்னுடைய பாதசேவைக்கு தக்கவனாவான். இந்த மகா இரகசியமாகிய பூஜா விதியை பக்தியில்லாதவர்களுக்கும் தூய்மையில்லாதவருக்கும் செய்ய யோக்கியதையில்லாதவருக்கும் சூதகத்துடன் இருப்பவருக்கும் பெண்களுக்கும் உபதேசிக்கக் கூடாது. மேலே சொன்ன இரண்டு திதி பூஜைகளையும் தன் வீட்டிலாவது பிறர் வீட்டிலாவது தேவாலயங்களிலாவது நதித்தீரங்களிலாவது தப்பாமற் செய்தவன் சந்தேகமில்லாமல் எனது பாதாரவிந்தங்களை அடைவான். இது சத்தியம் இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்? என்று ஸநத்குமார முனிவர் கேட்டார். அதற்கு வியாஸ முனிவர், சுவாமி அஷ்டமிகளில் உபவாசமிருந்து பரமசிவனைப் பூஜிப்பதால் அவருக்குத் திருப்தியுண்டாகும் என்று சொன்னீர்களல்லவா? அந்த நாமாஷ்டமியில் எவ்வகையாகப் பூஜிக்க வேண்டும் என்பதையும் சொல்லவேண்டும்; என்று கேட்டார். அதற்கு ஸநத்குமார முனிவர் சொல்லுகிறார்.

பூர்வம் சிவபெருமான் இமயமலையில் பார்வதி தேவியை பார்த்துச் சொல்லுகிறார். பார்வதி! மார்கழி மாதத்தில் கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் கோமூத்திரத்தைப் பூஜித்து என்னை நோக்கி விரதமிருந்து சகஸ்ர நாமார்ச்சனை செய்து மறுநாள் பாராயணஞ் செய்தவன் சர்வ பாபங்களிலிருந்தும் விடுபட்டு மோக்ஷத்தை அடைவான். தை மாதத்தில் பசுவின் நெய்யைப் புசித்து என்னைக் குறித்து விரதம் இருந்தவன் பிரமஹத்தி முதலிய பாவங்களை ஒழித்து அக்ஷயமான லோகத்தை அடைவான். மாசி மாதத்தில் அஷ்டமி திதியில் பசுவின் பாலால் பாயசம் செய்து தக்ஷிணா மூர்த்திக்கு நிவேதித்து விரதமிருந்தவன் சுவர்க்க லோகத்தை அடைவான். பங்குனி மாதத்து அஷ்டமியில் எள்ளுப் பொடியைப் புசித்து விரதமிருந்தவன் சிறந்த தர்மங்களைச் செய்த கதியை அடைவான். சித்திரை மாதத்தில் யவையை தக்ஷிணாமூர்த்திக்கு நிவேதித்துப் புசித்து விரதம் இருந்தவன் சிறந்த தர்மங்களைச் செய்த கதியை அடைவான். வைகாசி மாதத்தில் ஜலத்தைப் பானஞ் செய்தும் ஆனி மாத அஷ்டமியில் கோமயம் புசித்தும் ஆடி மாத அஷ்டமியில் பழங்களைப் புசித்தும் ஆவணி மாத அஷ்டமியில் தயிரைக் குடித்தும் ஐப்பசி மாத அஷ்டமியில் வென்னீர் பருகியும் கார்த்திகை மாத அஷ்டமியில் தேனைப் பருகியும் என்னைப் பூஜித்தவர்கள் அளவற்றப் பாவங்களை ஒழித்து பெரும் புண்ணியர்களாய் அழியாத மோக்ஷ லோகத்தை அடைவார்கள். இந்த அஷ்டமி விரதம் தக்ஷிணாமூர்த்தியின் சன்னிதியிலே பூஜை செய்யத் தக்கது. இந்தப் பன்னிரண்டு மாத அஷ்டமிகளுக்குத் தனித்தனி நாமங்களைச் சொல்லுகிறேன். மார்கழி மாதத்திற்கு சங்கராஷ்டமியும், தை மாதத்திற்கு தேவதேவாஷ்டமியும் மாசி மாதத்திற்கு மகேஸ்வராஷ்டமியும் பங்குனி மாதத்திற்குத் திரியம்பகாஷ்டமியும் சித்திரைக்கு ஸநாதனாஷ்டமியும் வைகாசிக்குச் சதாசிவாஷ்டமியும் ஆனிக்குப் பகவதாஷ்டமியும் ஆடிக்கு நீலகண்டாஷ்டமியும் ஆவணிக்கு ஸ்தாணுஷ்டமியும் புரட்டாசிக்குச் சம்பு அஷ்டமியும், ஐப்பசிக்கு ஈஸ்வராஷ்டமியும் கார்த்திகைக்கு உருத்திராஷ்டமியும் ஆகும். ஆகையால் அவ்வவ் மாதங்களில் அவ்வப் பெயர்களைக் கூறிய என்னைத் தக்ஷிணாமூர்த்தியின் சன்னிதியில் அர்ச்சித்து மேலே சொன்னபடி விரதமிருந்து பிராமண போஜனஞ் செய்வித்துப் பெருந் தக்ஷிணை கொடுத்து மறுநாள் பாராயணஞ் செய்ய வேண்டும். இப்படியாகப் பன்னிரண்டு அஷ்டமிகளிலும் விரதம் இருந்தவர்கள் நீலகண்டமும் சதுர்ப்புஜமும் மான் மழுவும் தரித்து உருத்திர சாரூபத்துடன் நெடுங்காலம் வசித்துப் பின்னர் பூவுலகில் மேலான பிறவியை அடைந்து கிரமங் கிரமமாக முக்தியை அடைவார்கள்! என்று திருவாய் மலர்ந்தருளினார்.

24. லக்ஷணாஷ்டமி விதிமுறைகள்

பார்வதிதேவி பரமசிவனை நோக்கி, நாதா! உலகத்தில் பலர் கூன், குருடு, நொண்டி, செவிடு முதலிய அங்கக் குறை வினர்களாகப் பிறக்கிறார்கள்! பலர் அழகான மேனியும் செல்வமும் கொண்டு வாழ்கிறார்களே! இதற்குக் காரணம் என்ன? அதை விரித்துரைக்க வேண்டும்! என்று கேட்டாள். சிவபெருமான் கூறலானார்.

உமையே! கார்த்திகை மாதம் முதல் அஷ்டமிதோறும் இராப்பகல் என்னைக் குறித்து உபவாசம் இருந்து, விதிப்படி அருச்சனை செய்தவன் இந்திர போகம் முதலான போகங்களை யெல்லாம் விடச் சிறந்த போகங்களை இந்த உலகத்திலேயே அனுபவிப்பான். என்னைப் பாதாதிகேசமாக அங்கங்களை முறைப்படிப் பூஜித்தவன் மன்மதனுக்கு ஒப்பான வடிவத்துடன் அங்கங்குறைவு எதுவுமின்றிப் பெருஞ்செல்வத்துடன் வாழ்வான். இவ்விதி முறைகளைத் தெரிந்து என்னைப் பூஜிக்காதவர்கள் அங்கவீனர்களாகவும் தரித்திரர்களாகவும் பிறக்கிறார்கள். அங்க பூஜாவிதியைச் சொல்லுகிறேன் கேள்.

ஓம் சங்கராய நம பாதௌ பூஜயாமி (திருவடி)
ஓம் லோகநாதாயநம குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)
ஓம் ருத்ராய நம ஜங்கே பூஜயாமி  (முழங்காலின் கீழ்)
ஓம் மகேஸ்வராய நம ஜாநு நீ பூஜயாமி (ஜாநு-முழங்கால்)
ஓம் ஈஸாநாயா நம ஊரு பூஜயாமி  (தொடை)
ஓம் திரியம்பகாய நம மேட்ரம் பூஜயாமி (குறி)
ஓம் கபர்திநே நம கடிம் பூஜயாமி  (இடை)
ஓம் தக்ஷ்ணாமூர்த்தியே நம நாபிம்  பூஜயாமி (உந்தி)
ஓம் திரிலோக ஜனகாயநம உதரம் பூஜயாமி (வயிறு)
ஓம் சூலபாணயே நம வக்ஷõ பூஜயாமி (மார்பு)
ஓம் வ்யோமகேஸாய நம ஹ்ருதயம் பூஜயாமி (மார்புக்குழி)
ஓம் ஜகத்பித்ரே நம ஸ்தநௌ  பூஜயாமி (ஸ்தனம்)
ஓம் வ்ருஷபத்வஜாய நம கக்ஷம் பூஜயாமி (அக்குள்)
ஓம் உமாபதயே நம ஸ்கந்தம் பூஜயாமி (தோள்)
ஓம் மஹாஸேநஜ நகாய நம பாஹுந் பூஜயாமி (கைகள்)
ஓம் நீலகண்டாய நம கண்டம் பூஜயாமி (கழுத்து)
ஓம் சர்வதோமுகாய நம முகம் பூஜயாமி (முகம்)
ஓம் விஷ்டாஸ்ரவஸே நம ஸ்ரோத்ரே பூஜயாமி (காது)
ஓம் சந்திர ஸூர்யாக்நி நேத்ராய நம நேத்ராணி பூஜயாமி  (கண்கள்)
ஓம் வேதஜிஹ்வாய நம ஜிஹ்வாம் பூஜயாமி (நாவு)
ஓம் பஸ்மோ தூளித விக்ஹாய நம தந்தா ந்  (பற்கள்)
ஓம் கஜசர்மாம் பராய நம ஓஷ்டம் பூஜயாமி (உதடு)
ஓம் காமாரயே நம நாசிகாம் பூஜயாமி (மூக்கு)
ஓம் ஸ்மஸாந வாஸிநே நம ப்ருவெள பூஜயாமி (புருவம்)
ஓம் அர்த்தேந்து சூடாமணியே நம லலாடம் பூஜயாமி (நெற்றி)
ஓம் தக்ஷயஞ் ஞவிநாஸிநே நம சிர பூஜயாமி (சிரசு)
ஓம் கங்கா கராய நம ஜடாம் பூஜயாமி (ஜடை)
ஓம் ஈசார மூர்த்தாய நம ஊர்த்தா நம் பூஜயாமி (உச்சி)
ஓம் சிவாய நம ஸர்வாண்யங்கா பூஜயாமி (உச்சி)

இவ்வாறு பன்னிரண்டு மாத அஷ்டமிகளிலும் என்னை அங்க பூஜை செய்து, உபவாசம் இருந்து விரத முடிவில் வேதாவேதங்களில் ஓதியறிந்து வல்லவர்களான இருபத்து நான்கு அந்தணோத்தமர்களை வரவழைத்து செம்புப் பாத்திரத்தில் கும்ப அலங்காரம் செய்து, என் பிரதிமையை அதன் மீது வைத்து சிவாய என்னும் நாமத்தினால் ஆவாஹனம் செய்து. ÷ஷாட சோபசாரம் செய்து திரியம்பக மந்திரத்தால் சமித்து, அன்னம் திலங்கூட்டி ஆயிரத்தெட்டு முறை ஹோமம் செய்து பிராமணர்களுக்கு, கவசம், வஸ்திரம் பிரதிமை முதலியவற்றைத் தானங்கொடுத்து, பிராமண போஜனம் செய்வித்து தானும் புசித்து விரதத்தை முடித்தவன் சுவர்க்கம் முதலான உலகங்களில் பெரும் போகங்களை அனுபவித்து முறையாக என்னுடைய சாரூப்பியத்தை (சிவனுருவை) அடைவான்!

25. தானப் பயன்

உமையவளே! இனி உலக நன்மைக்காகச் சில தான தர்மங்களை உனக்குச் சொல்லுகிறேன். பூலோகத்திலுள்ள எல்லாத் தானங்களிலும் அன்னதானத்தினாலேயே நான் திருப்தியடைகிறேன். அன்னத்திலிருந்தே பூதங்கள் எல்லாம் தோன்றுகின்றன. அத்தகைய மகிமையுடைய அன்னத்தை அந்தணோத்தமர்களுக்குத் தானம் செய்தால் சூரியகாந்திக்கு ஒப்பான ஒளியுள்ள திவ்விய விமானத்தில் ஏறி, பல காலம் சஞ்சரித்து மீண்டும் பூவுலகில் பிறந்து, குபேர செல்வத்தை அனுபவித்துக் கிரமமாக என் பாதத்தை அடைவார்கள். பரிமளம் மிகுந்த குளிர்ந்த நன்னீரை எனக்காக தானஞ் செய்தவன் வருணலோகத்தில் அநேக காலம் வாழ்ந்து, பூமியில் உயர் குலத்தில் பிறந்து வாவிகூட தடாகங்களை நிர்மாணஞ் செய்து அகண்ட சாம்ராஜ்யப் பதவியை அடைவான் அன்னத்தைப் பாத்திரத்தோடு தானஞ்செய்தவன் சுவர்க்கம் முதலான போகங்களை அனுபவித்துக் கிராம அதிபதியாவான். நீர் நிலைகளை நிர்மாணஞ் செய்து பலர்க்கும் பயன்படச் செய்பவன் தன் வமிசத்தில் தோன்றிய பிதுர்க்களோடு பதினாயிரம் தேவ வருடங்கள் சுவர்க்கத்தில் வாழ்ந்து மண்ணுலகில் மாமன்னனாகப் பிறந்து, நோயற்ற உடலும் வள்ளல் தன்மையும் பெற்று பல யாகங்களைச் செய்வான் வீட்டைத் தானஞ் செய்தவன் அழகுள்ள எட்டு அன்னங்கள் தாங்கும் திவ்விய விமானத்தில் ஏறி இந்திரனுலகத்தில் ஐம்பதினாயிரம் ஆண்டுகள் அப்சரஸ் கன்னியர்களோடு கூடி வாழ்வான் பொன்னைத் தானங்கொடுத்தவன் அக்கினிக்கு இணையான தேஜஸோடு அக்கினிலோகத்தில் வாழ்வான் வெள்ளி தானஞ் செய்தவன் திவ்விய விமானத்தில் அமர்ந்து குபேரலோகத்தை அடைவான் பூதானம் (புவிதானம்) செய்தவன் அலங்கார விமானம் ஏறி பிரமலோகத்தில் வாழ்ந்து மீண்டும் பூலோகத்தில் சக்கரவர்த்தியாகப் பிறப்பான் எனக்குப் பிரியமாக படிமத்தை இரத்தினங்களோடு தானஞ் செய்தவன் பிரமகற்பம் வரையில் இந்திரலோகம் முதலான உலகங்களில் வாழ்ந்து என் பாதத்தை அடைவான் வழிகளில் நிழல் தரும் நன்மரச் சோலைகளை உருவாக்கி வளர்த்தவன் பற்பல ஆண்டுகள் சுவர்க்க பதவியில் வாழ்வான் பழவர்க்கங்களைத் தானங்கொடுத்தவன், சந்திர லோகத்தை அடைந்து, அப்சரஸ்களுடன் சுகம் அனுபவித்துப் பூமியில் பேரழகனாக உயர்குலத்தில் பிறந்து, செல்வந்தனாக விளங்குவான்.

வெள்ளிப் பாத்திரத்தை நெய்யுடன் தானங் கொடுத்தவன் கந்தர்வலோகத்தில் வசிப்பான் தங்கப் பாத்திரத்தில் தேனைத் தானஞ்செய்தவன் யக்ஷபதவியை அடைவான் தாமிரபாத்தரத்தில் தீர்த்தத்தைத் தானஞ்செய்தவனும் யக்ஷபதவியை அடைவான் நோயாளிக்கு மருந்துகளைத் தானமாகக் கொடுத்து சுகப்படுத்துபவன் சந்திரலோகத்தில் ஆயிரம் ஆண்டுகள் வசித்து நோயற்ற உடலோடு யோகியாகப் பிறப்பான். பசுவைப் பொன் வெள்ளி முதலியவற்றாலான மணிகளும் கறப்பதற்கு வெண்கலப் பாத்திரமும் சேர்த்து, கன்றுடன் தானம் தருபவன் கோலோகத்தில் பல காலம் வாழ்ந்திருப்பான் தந்த மயமான கட்டிலை மெத்தை தலையணை முதலியவற்றுடன் விதான பூர்வமாகச் செய்து விதிப்படி பூசித்துத் தானங் கொடுத்தவன் நினைத்த உலகங்களுக்குச் சென்று லட்சம் ஆண்டுகள் இஷ்ட போகங்களை நுகர்ந்து உயர்குலத்தில் பிறந்து நவரத்திரனங்களும் நிலாமுக நங்கையரும் ஐராவதம் போன்ற யானைகளும். உச்சைச் சிரவம் போன்ற குதிரைகளும் கணக்கில்லாமல் அடையப் பெற்று பலகாலம் கழித்து என் அழியாப் பதவியை அடைவான் உத்தம லக்ஷணம் வாய்ந்த குதிரையைப் பொன்மயமான அணிமணிகளோடு தானஞ் செய்தவன் வாயுலோகத்தில் வசிப்பான். இரதத்தைச் சிற்பவிதிப்படிச் செய்து என் ஆலயத்திற்கு வழங்குபவன் சந்திர சூரியர் உள்ளவரையில் விமானத்தில் ஏறி எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து பல ரதங்களுக்கு அதிபனாவான் திவ்வியமான கன்னிகையைத் தானம் செய்தவன் பிரமலோகத்தில் வாசஞ்செய்து அரசனாகத் தோன்றுவான் தண்ணீர்ப்பந்தல் நிர்மாணஞ் செய்தவன் பிதுர்க்களோடு பிதுர்லோகத்தில் வாழ்வான் பானகதானஞ் செய்தவன் எண்ணற்ற கந்தர்வர்களோடு இன்னிசை இன்பத்தை அனுபவித்து பூலோகத்தில் பர தசாஸ்திரத்தில் (நடனக்கலையில்) வல்லவனாகப் பிறப்பான் நறுமண மலர் மாலைகளை எனக்காகக் கட்டிக் கொடுத்தவன் சுவர்க்க போகத்தையடைந்து சுவர்ண மயமான மணி மாலைகளை மறு பிறவியில் அனுபவிப்பான். தின்பண்ட வகைகளைச் செய்து என்னைத் திருப்தி செய்து அந்தணர்களுக்குப் பயன்படுத்தியவன் எப்பொதும் அன்னவானாக இருப்பான். சிரார்த்தகாலத்தில் பிதுர்த் தர்ப்பணம் காலந்தவறாமல் செய்தவன் மஹா தாதாவாகப் பிறந்து திருப்தியோடு வாழ்வான் அந்தணோத்தமனுக்கு ரிஷபதானம் (காளைதானம்) செய்தவன் தானியம் மிகுந்தவனாக இருப்பான். ஆடைகள் தானஞ் செய்தவன் வைகுண்டத்தில் வாழ்வான். என் சன்னிதியில் நெய்யினால் தீப ஆராதனை செய்வித்தவன் தேஜோமயமான உடலோடு யமதர்மன் சபையில் தர்ம விசாரணை செய்பவனாக விளங்குவான்.

பார்வதி! திரவபதார்த்தங்களில் எல்லாம் நெய்யே சிறப்பானதாகும். அது எவ்வாறெனச் சொல்லுகிறேன். தேவர்கள் அனைவரும் பசுவின் தேகத்தை வந்தடைந்திருக்கிறார்கள். அதை நெற்றியிலும் சந்திர சூரியர் கண்களிலும், பிராணவாயு வாயிலும் அக்கினி முகத்திலும் சந்திரன் நாவிலும் அசுவினி தேவர்கள் காதுகளிலும் உருத்திரமூர்த்திகள் எல்லா அவயவங்களிலும் லோக பாலகர்களும் நாக மன்னர்களும் பாதங்களிலும் துவாதச ஆதித்தர்கள் (பன்னிரு சூரியர்கள் கழுத்திலும்) ஏழுகடல்கள் வயிற்றிலும் கங்கை ஸ்தனங்களிலும் அஷ்டவசுக்கள் பக்கங்களிலும் புண்ணிய தீர்த்தங்கள் உபஸ்தத்திலும், லக்ஷ்மி கோமயத்திலும், விசுவதேவர்களும் காத்தியர்களும் வாலிலும், மந்திரங்கள், யாகங்கள், தானங்கள், நியமங்கள், மகரிஷிகள், நக்ஷத்திரங்கள், நவக்கிரகங்கள் காயத்திரி விஷ்ணு ஜகதி பங்திதிருஷ்டுப் ருக்வேதம் யஜுர்வேதம், சாமவேதம், அதர்வணவேதம், லோகமாதாக்கள், மேகங்கள், வருஷங்கள், தர்மம், நாராயணர், நதிகள் பூதங்கள், யக்ஷர்கள், முதலானோர்கள் ரோமகூபத்திலும், இராக்கதர், பைசாசர்கள், பக்ஷிகள், சுவாஹா, சுவதா, தக்ஷிணை, மேதை, அப்சரஸ்கள் முதலானோர் பசுவின் கொம்புகளிலும் ஆஸ்ரயித்திருக்கிறார்கள். இவ்விதமாக எல்லாத் தேவர்களுக்கும் வாசஸ்தானமாகவுள்ள புனிதமான தேனுவை அலங்காரம் செய்து என்னுடைய சன்னிதியில் பவித்திரபாணியாய்ச் சுவர்ணமும் திலமும் கையில்கொண்டு ஸர்வதேவமயமாகவும் ஸர்வலோகமயமாகவுமுள்ள இந்தத் தேனுவைத் தானஞ் செய்கிறேன். ஸர்வலோக நிமித்தாஞ்ச ஸர்வலோக நமஸ்க்ருதாம்! ப்ரயச்சாமா மஹாமூர்த்தி மக்ஷயாம் மேஸுபாமிதி என்ற மந்திரத்தைச் சொல்லி, எவன் ஒருவன், தானஞ் செய்கிறானோ அவன்தான் விரும்பிய உலகங்களில் சாமசாரியாய் பலகாலஞ் சஞ்சரித்து மீண்டும் பூவுலகத்தில் உத்தமச் சக்கரவர்த்தியாகப் பிறவியெடுத்து முற்பிறவி ஞானத்தோடு பலகாலம் புத்திரர்களோடும் வாழ்ந்து, அணிமாதி சித்திகளை அடைந்து யோகீஸ்வரனாவான்.

மலையரசன் மகளே! திவ்விய அலங்காரஞ் செய்த பசுவை விதிப்படி உபயகோமுகியாகத் தானஞ்செய்தவன், நரகவாதனை சிறிதும் இல்லாமல் நீங்குவான். கிருஷ்ணாஜிநத்தை அந்தணருக்குத் தானஞ் செய்தவன். புவிதானம் செய்த பயனை அடைந்து யோகியாவான், யோகிகள், கிரகஸ்தர், பிரமசாரிகள் முதலானோர் தங்கியிருக்க இடம் விட்டவன். அஸ்வமேதயாக பயனை அடைந்து ஜன்மாந்தரவுணர்ச்சி உண்டாகி ஞானியாவான். சன்னியாசிகளுக்குக் கமண்டலதானம் செய்தவன் பவுண்டரீக யாகஞ்செய்த பயனை அடைந்த ஞானியாவான் அவர்களுக்குத் தண்டதானஞ் செய்தவன் ஆயிரம் கோதானம் செய்த பயனைப் பெறுவான். ஆதரவற்ற தரித்திரனுக்கு நோயை நீக்கிக் காப்பாற்றியவன் பிரமஹத்யாதி பாவங்களை ஒழிப்பான் நித்திய தரித்திரனும் குடும்பியாயும் உள்ளவனுக்குப் பொன் தானஞ் செய்தவன் பத்து அஸ்வமேதயாக பயனைப் பெறுவான். இவ்விதமாகச் சொல்லிய எல்லாத் தானங்களையும் எனக்குப் பிரீதியாகச் செய்தவன் எல்லா உலகங்களுக்கும் தலைவன் ஆவான். தானங்களை இதுபோலச் செய்யச் சக்தியற்றவர்களாயினும் செய்வோரைப் பார்த்து மகிழ்ச்சியடைவோரும். இந்த அத்தியாயத்தை வாசித்து பலருக்குஞ் சொல்வோகும் சுவர்க்கம் முதலான உலகங்களை அடைவார்கள் என்பதைச் சந்தேகமின்றி நம்புவாயாக!

26. உபவாசப் பயன்

உமையவளே மேலே சொன்னது போலத் தானஞ் செய்யச் சக்தியில்லாதவர்கள் விரதங்களினால் அத்தகைய புண்ணியத்தை அடையலாம் அதாவது மார்கழி மாதத்தில் ஒருவேளை உணவருந்தி என்னைக் குறித்து விரதம் இருந்தவன் இந்திர லோகத்தை அடைவான். தை மாதத்தில் ஒருவேளை புசித்து உபவாசமிருந்து வேதாகமாதிகளைப் பாராயணம் செய்தவன் ஞானியாவான். மாசி மாதத்தில் ஒருவேளை புசித்து விரதம் இருந்தவன் சம்பத்தையும், பங்குனி மாதத்தில் ஒருவேளை புசித்து விரதம் இருந்தவன் உத்தமப் பெண்களையும், சித்திரை மாதத்தில் விரதம் இருந்தவன் உயர்குலப் பிறப்பையும், தனத்தையும், வைகாசி மாதத்தில் இருந்தவன் எல்லோராலும் போற்றி வணங்கப்படுதலையும், ஆனிமாதத்தில் விரதம் இருந்தவன் அரசர்களனைவரிலும் மேம்பாட்டையும், ஆடி மாதத்தில் விரதம் இருந்தவன் இஷ்டசித்திகளையும், ஆவணி மாதத்தில் இருந்தவன் சேனாதிபத்யத்தையும் வலிமையையும் புரட்டாசி மாதத்தில் இருந்தவன் நவரத்தினங்களையும் ஐப்பசி மாதத்தில் இருந்தவன் வாணிப லாபத்தையும் கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்தவன். அசுவமேத பயனையும் அடைவார்கள். ஒருவருஷம் ஒரே வேளை உணவுடன் விரதம் மேற்கொண்டவன் சூரியனுக்குச் சமமான விமானத்தில் ஏறி, எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து மக்கரவர்த்தியாகத் தோன்றி பற்பல சிவாலயங்களை நிர்மாணஞ் செய்வான் ஒருநாள் உபவாசமிருந்து என்னைத் திருப்தி செய்தவன் பத்துப் பொன்னைத் தானம் செய்த பயனை அடைவான். மாதந்தோறும் மூன்று நாட்கள் உபவாசம் இருந்தவன் குபேரலோகத்தை அடைவான். மாசி உபவாசம் இருந்தவன் இந்திர போகத்தை அடைவான்.

பேரரசானாகப் பிறப்பான். தீøக்ஷ செய்து கொண்டு குறித்தகாலம் வரையில் உபவாசம் இருந்தவன் அக்கினிக்குச் சமமான தேஜஸோடு சொர்க்க போகத்தை அனுபவிப்பான் உருத்திர காயத்திரியை ஜெபித்து அத்தனைப் பிராமணர்களுக்கு அன்னங்கொடுத்து. ஆடை பொன் முதலியவற்றைத் தானஞ் செய்து புசித்தவன் கைலாயத்தில் வசிப்பான் கிருஷ்ணபக்ஷ அஷ்டமியிலாவது அமாவாசையிலாவது திலத்தை பாத்திரத்துடன் தக்ஷிணையை வைத்துத் தானஞ்செய்தவன் உருத்திரலோகத்தை அடைவான். சாந்திராயண விரதம் அனுஷ்டித்தவன் தன் பிதுர்க்களுடன் பிதுர்லோகத்தை அடைந்து மகிழ்வான் பிரஜாபத்திய சிருங்காரத்தை அனுஷ்டிப்பவன் மகாபாவங்களையும் ஒழிப்பான் கோமூத்திரம் கோமயம் பால் தயிர் நெய் தூயநீர் இவற்றை முறையாக நாள் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக அருந்தி இறுதி நாளில் உபவாசம் இருத்தலான சாந்தமான கிருச்சிரம் அனுஷ்டித்தவன் அக்கினிலோகத்தில் தேஜோ ரூபியாக வசிப்பான். மகாசாந்தமான கிருச்சிரம அனுஷ்டித்தவன் பூர்வஞானத்தோடு பிரமலோகத்தையடைவான். துலா புருஷகிருச்சிரம அனுஷ்டித்தவன் சர்வ பாபங்களிலிருந்தும் ஒழிவான் அதிகிருச்சிரமம் அனுஷ்டித்தவன் காணபத்தியத்தையும் பாவக் கிருச்சிரம் அனுஷ்டித்தவன் சர்வ கர்மங்களையும் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஒரு வருஷம் ஜெபித்தவன் உருத்திர சொரூபத்தையும் (ருத்திர உருவத்தையும்) ஒரு வருஷ காலம்யவையைப் புசித்தவனும் கோமூத்திரத்தைப் பருகியவனும் எள்ளுப்பொடியைச் சாப்பிட்டவனும் காற்றையே ஆகாரமாக அருந்தியவனும் அசுவமேதஞ் செய்த பயனை அடைந்து திவ்ய விமானத்தில் ஏறி பிரமலோகத்தில் வாழ்ந்து மீண்டும் பிரமதேஜஸோடு பூமியில் தோன்றுவார்கள் பார்வதி! தானங்களை விதிப்படிச் செய்யச் சக்தியற்றவர்கள் இவ்வாறான விரதங்களையும் கிருச்சிரங்களையும் அனுஷ்டிப்பார்களானால் தானங்கள் செய்த பயனை அடைந்து, புண்ணியலோகங்களில் வாழ்வார்கள் . இக்கிருச்சிரங்களைச் சூத்திரர்களும் மந்திரமின்றி அனுஷ்டிக்கலாம், பெண்கள் தங்கள் கணவன் அனுமதியைப் பெற்றுத்தான் விரதம் தானம், தவம் பாராயணம் முதலியவற்றைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தவர்கள் யாவரும் பெரும் பதவிகளை அடைந்து வாழ்வார்கள் என்று கூறியருளினார்.

27. நியமப் பிரபாவமும் காமுகன் கதையும்

சிவபெருமானை பார்வதி நோக்கி, சுவாமி! பிரம்மா க்ஷத்திரிய வைசிய சூத்திர ஜாதிகள் எவ்வித நியம அனுஷ்டானத்தால் சற்கதி அடையலாம்? நியமம் என்பது என்ன? இவ்விஷயத்தை எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்கவே சிவபெருமான் சொல்லத் துவங்கினார். பர்வத ராஜகுமாரியே! நியமத்தில் பல வகைகள் உண்டு, அவற்றில் இந்திரிய நிக்கிரகஞ் செய்தலே முக்கியமானதாகும். மனித உடலோ நீரிற் குமிழியைப் போன்றது நியமப்படி நடப்பவர்கள். தேவர்கள் என்று சொல்லப்படுவார்கள். பஞ்ச பூதாத்மகமான உடம்பில் காமக்குரோத லோப மோகங்களும் ஹிம்சை முதலியனவும் எப்போதும் குடி கொண்டிருக்கும். அத்தீக்குணங்களை விலக்கி நான் இவ்வாறு நடக்கிறேன். என்று தன்னுள் தானே பிரதிக்ஞை செய்து கொண்டு கத்தியின் முனையில் நடப்பவன் போல மிக கவனமாக நல்ல வழியின் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்தவர்களே தெய்வத்தன்மையை அடைந்து நக்ஷத்திர ரூபிகளாக ஜோதி மயமாய் விளங்குகிறார்கள். நியமத்தாலேயே கடற்கரை கடக்காமலும் அக்கினி ஜ்வாலித்தும், சூரியன் பிரகாசித்தும் வாயு சஞ்சரித்தும் பூமி யாவரையும் தாங்கியும் விளங்குகின்றன. அது போலவே நீயும் உன் நியமத்தாலேயே அருந்தவஞ் செய்து எனக்கு மனைவியாகி இருக்கிறாய். ஓர் ஆண்டுக் காலம் நியமத்தை அனுஷ்டித்தவனைப் பிரம்மதேவன் என்று சொல்லவேண்டும் அற்பநியமமாயினும் அது பெரும் பயனை அளிக்கும். இந்த விஷயத்தில் ஆச்சரியகரமான இதிகாசம் ஒன்றைச் சொல்கிறேன், கேள்.

முன்பு ஒரு சமயம், காசி நகரத்தில், பிறப்பினாலே மட்டும் பிராமணனாயுள்ள ஒருவன் இருந்தான். அவன் விகாரமான உடலும் கர்ம விலக்கமும் பிறர் பொருளையும், பிறன் மகளிரையும் விரும்புதலும் எப்போதும் குரூரமான சுபாவமும் ஜீவன்களை இம்சித்திலும் மதுமாமிசம் அருந்துதலும் தேவ பிராமண வேதம் முதலானவற்றை நிந்தித்தலும் கோள் சொல்லுதலும் துவேஷ குணமும் பொய்சாக்ஷி கூறலும் தீக்கருமங்களைச் செய்தலும், நாஸ்திக மதக்கொள்கையும் யாவரும் அஞ்சத்தக்க பல கொடுஞ் செயல்களும் உடையவனாகச் சஞ்சரித்து வந்தான். விஷமில்லாத பாம்பைப் போலவும், கொம்பில்லாத எருமைப் போலவும் சிறகில்லாத பறவை போலவும், மலரில்லாத மரத்தைப் போலவும், முலையில்லாத மங்கையைப் போலவும். சந்தியா வந்தனம் முதலான செயல்கள் இல்லாமல் சிறிதும் பயனற்றவனாக இருந்தான். அவன் தெருவிலே வருவதைக் கண்டால் வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடி விடுவார்கள். பெண்கள் வீட்டுக் கதவுகளை அடைத்துக் கொண்டு பதுங்குவார்கள். பலர் கூடிச் செய்யும் நற்கருமங்களையெல்லாம் கெடுத்து விட்டுத் திரும்புவது வழக்கம். இப்படி நடந்து வந்த அந்தப் பாவிக்குத் தொண்ணூற்றொரு ஆண்டுகள் சென்றன. அப்போது காசி நகரிலுள்ள சிவன் கோயிலில் ஓங்காரேஸ்வர்ண சித்தர் நாள் தோறும் பூஜித்து பஞ்சாக்ஷர ஜெபம் செய்து கொண்டிருப்பார். அந்நிலையில் அவரைக் கண்ட பாவி பிராமணன். நீ யார்? உன் வடிவத்தையும் நடவடிக்கையையும் பார்த்தால் நீ அந்நிய லோகத்தவன் என்று நினைக்கிறேன். உன்னைப் போன்ற இத்தகைய பேரழகுடையவன் பூமியில் இல்லையாதலின், சுவர்க்கத்திலிருந்து தவறி விழுந்தவன் என்றே நான் கருதுகிறேன். என்று சொன்னான்.

அதற்கு சித்தர் பிராமணா! நீ மஹா ஞானி என்று அறிகிறேன். நான் சுவர்க்கத்திலிருந்து வந்ததை நீ எப்படி அறிந்தாய்? நான் சுவர்க்கத்திலிருந்து வந்தது சத்தியம் என்று நம்பு! உனக்கு சுவர்க்கலோகத்தில் நண்பர்கள் இருந்தால் அதைப்பற்றிச் சொல்லுகிறேன் என்று சொன்னார். அதற்கு தெந்தண்மை இல்லாத அந்தணன் அந்த சித்தரை நோக்கி, சுவர்க்கம் என்று ஒன்றுண்டா? அங்கே வசிப்பதற்கு இடம் உண்டோ? ரம்பை என்னும் தேவகன்னியாதி அப்ஸரஸை நீ அறிவாயோ? அவற்றைக்கூறு! என்றான். அதற்கு சித்தர், ஆமாம்! அங்கே ரம்பை முதலிய அப்சரஸ்கள் இருப்பதும்; அவர்கள் விருப்புறுவதும் நான் அறிவேன்! என்றார். அப்படியானால் அவற்றையும் நீ அங்கிருக்கும்போது எவ்வாறு இருந்தாய் என்பதையும் சொல்லவேண்டும் ரம்பை என்பவளை அறியாதவர் யார்? நீ மீண்டுஞ் சுவர்க்கத்திற்குச் செல்லும்போது, அவளை நலமா? என்று நான் கேட்டதாகச் சொல்ல வேண்டும் என்றான். அதற்கு சித்தர், நான் சுவர்க்கத்துக்குச் சென்றவுடனேயே அந்த ரம்பையைக் காண்பேன்! என்று சொல்லிவிட்டுவாயு வேகத்தில் சுவர்க்கத்தை அடைந்தார். அங்கே வனத்தில் ஒளிவீசும் வெண்ணிலாவைப் போலவும் திருமகள் போலவும் ரம்பை விளங்கினாள். முழுநிலா போன்ற முகப்பொலிவும் யானையின் மத்தகங்களை போன்ற மார்பகத் தனங்களும் பூரித்த விசாலமான சகனமும் அகன்ற மார்பும் மான்குளம்பு போன்ற உபஸ்தமும், விரிந்து செந்தாமரை போன்ற பாதம் உடையவளாக ரம்பை மன்மத வடிவப்பதுமைபோல் அமர்ந்து தன் கையிலுள்ள வீணையின் நாதத்தால் அங்குள்ள தேவர்களின் மனதை மயக்கிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கிச் சித்தர். அரம்பையே! வாரணம் எனப்படும் காசிமா நகரில்நான் வாழ்ந்திருந்தபோது ஒரு பிராமணன், உன்னுடைய நலத்தை விசாரிக்கச் சொன்னேன். அவனை நீ அறிவாயல்லவா? என்று கேட்டார். ரம்பையோ நான் அவனை அறியேன். ஆயினும் நீர் கேட்ட பிறகு, ஆலோசித்தும் நினைவுக்கு வரவில்லை. என்றாள்.

சித்தர், அப்படியா! என்று சொல்லிவிட்டு தன் நியமப்படி காசிமாநகரில் ஓங்காரேஸ்வரர் ஆலயத்திற்குத் திரும்பி வந்து வழக்கப்படிப் பூஜித்துக் கொண்டிருந்தார். மாபாவியான வேதியன் மீண்டும் சித்தனைக்கண்டு சித்தனே! நீ விண்ணுலகில் தேவகன்னியான ரம்பையைக் கண்டாயா? நலம் விசாரித்தாயா? அவள் என்ன சொன்னாள்? என்ன கேட்டாள்? அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும் என்றான். அவனை சித்தர் ஏறிட்டு நோக்கி, நீ சொன்னது போலவே நான் ரம்பையிடம் சொல்ல, அவள் என் பேச்சைக் கேட்டு சிறிது யோசித்து, நான் அந்த வேதியனை அறியேன், என்றாள் என்று கூறினார். உடனே பிராமணன் நீ மறுபடியும் சுவர்க்கத்திற்கு செல்லும்போது, உன்னை அந்தப் பிராமணன் நாள்தோறும் விசாரிக்கிறான் அவன் உன்னை அறிந்திருக்கும் போது, நீ அவனை அறியமாட்டாயா? என்று கேள்! என்றான் சித்தர் தம் பூஜையை முடித்துக் கொண்டு சுவர்க்கத்தை அடைந்து மீண்டும் ரம்பையைப் பார்த்து, பேரழகியே! நாள்தோறும் உன்மீதுள்ள அபாரமான ஆசையால் அந்தப் பிராமணன் உன் நலத்தை விசாரிக்கிறான் நான் நாள்தோறும் காசிக்குச் செல்பவன். அதுவே எனக்கு விருப்பமுள்ள இடம். நான் போகாமல் இருக்க முடியாது. நான் போகும் போதெல்லாம் அவன் என்னைத் தொந்தரவு செய்கிறான் என்று சொன்னார். ரம்பை சிரித்து விட்டு அந்தப் பிராமணன் என்னைக்காண விரும்பினால் நிச்சல மனமுடையவனாய் நியமத்துடன் தவஞ் செய்ய வேண்டும் என்று நான் கூறியதாகச் சொல்! என்று சொல்லிவிட்டு தன் இச்சைப்படி நந்தவனத்தில் விளையாடச் சென்றாள் அதன்பிறகு சித்தர், காசி நகரத்தை அடைந்து அவ்வந்தணனைச் சந்தித்து நடந்தவற்றைச் சொல்லி பிராமணனே! ரம்பையை நீ கூடி மகிழ வேண்டும் என்ற ஆசை உன் மனதில் இருந்தால் தெய்வத் தன்மை உண்டாகும்படியான நியமத்தை உணர்ந்து அதைச் செய்! என்றான். பிராமணன் அன்று முதல் அன்னத்தை வெறுத்துப் பால் பழங்களையே உண்டு தன் நாஸ்திகக் கொள்கையையும் ஒழித்து ஆஸ்திகனாகிச் சிவசேவை செய்து வரும் நியமத்தை மேற்கொண்டு சில காலத்தில் சிவகிருபை பெற்று பிரமலோகத்தில் வாழ்ந்து அரம்பை முதலானதேவதாசிகளோடு கூடிச் சுகம் அனுபவித்துக் கிரமப்படி முக்தியை அடைந்தான். பார்வதி சாமானியமான நியமமே இத்தகைய பயனைக் கொடுத்தது அல்லவா? யாராயினும் நியமமுடையவன். பலவகையான கோரிக்கைகளையும் கைகூடப் பெறுவான் என்று சிவபெருமான் கூறினார்.


© Om Namasivaya. All Rights Reserved.