இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


சூலம்படை சுண்ணப்பொடி

சூலம்படை சுண்ணப்பொடி

பதிக எண்: 1.18. திருநின்றியூர் நட்டபாடை

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையினை கண்ணார்கோயில் தலத்தில் தொடங்கிய திருஞான சம்பந்தர் அங்கிருந்து புள்ளிருக்குவேளூர் (தற்போது வைத்தீஸ்வரன் கோயில் என்று அழைக்கப்படும் தலம்) சென்ற பின்னர் திருநின்றியூர், நீடூர், திருப்புன்கூர் சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. திருநீடூர் தலத்தின் மீது காழிப் பிள்ளையார் அருளிய பதிகம் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. மற்ற இரண்டு தலங்களின் மீது அருளிய ஒவ்வொரு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

நீடு திருநின்றியூரில் நிமலனார் நீள்கழல் ஏத்திக்

கூடிய காதலில் போற்றி கும்பிட்டு வண்டமிழ் கூறி

நாடு சேர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி

ஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ் பாடி அமர்ந்தார்.

இந்த தலம் வைத்தீஸ்வரன் கோயில் மயிலாடுதுறை பாதையில், வைத்தீஸ்வரன் கோயில் தலத்திலிருந்து சுமார் ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரம் மயிலாடுதுறை இரயில் பாதையில் ஆனந்த தாண்டவபுரம் இரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே சுமார் மூன்று கி.மீ, தொலைவில் உள்ளது. இலக்குமி வழிபட்டமையால் திருநின்றியூர் என்று பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோயில். இந்த திருக்கோயிலின் அமைப்பைக் கண்ட சுந்தரருக்கு கோச்செங்கட் சோழனின் நினைவு வந்தது போலும். அந்த நிகழ்ச்சியை தனது முதல் பாடலில் வைத்து ஒரு பதிகம் பாடியுள்ளார். ஆனால் அந்த பழைய அமைப்பு, சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நகரத்தார் திருப்பணி செய்த போது மாற்றப் பட்டுள்ளது. பழைய மாடக்கோயில் அமைப்பு சிதைந்து போனதே இதற்கு காரணம். பூம்புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழ அரசன் ஒருவன் தினமும் இந்த தலம் வந்தடைந்து அர்த்த ஜாம பூஜையை கண்டு களிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் இந்த தலம் வந்தடைந்த போது, ஏற்பட்ட காலதாமதத்தின் காரணமாக, இருளில் அவனால் கோயிலை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் வருந்தினான். அப்போது சிவலிங்கத்திலிருந்து ஒரு ஜோதி எழுந்து கோயில் இருந்த இடத்தை அடையாளம் காட்டியதாகவும், அந்த ஜோதியின் திரி இலிங்கத்தின் முடி மேல் விழுந்தமையால் பள்ளம் ஏற்பட்டதாகவும் செவிவழிச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதனால் திரிநின்றியூர் என்று அழைக்கப் பட்ட இந்த தலம், நாளடைவில் திருநின்றியூர் என்று மருவியதாகவும் கூறுகின்றனர். வீரசோழன் என்ற சோழ மன்னன், இந்த தலத்தில் உள்ள கோயிலைக் கடந்து செல்கையில், அவனுடன் எடுத்து வரப்பட்ட தீப்பந்தங்கள் அனைத்தும் அணைந்ததால், நின்றியூர் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். எவ்வளவு முயற்சி செய்தும், தீப்பந்தங்கள் எரியவில்லை என்றும் இந்த கோயிலின் எல்லையைத் தாண்டிய பின்னரே இந்த காரணம் பற்றியே, தீப்பந்தங்கள் மீண்டும் எரியத் தொடங்கின என்றும் சொல்லப் படுகின்றது. இவ்வாறு தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்றது என்று கூறுகின்றனர். பின்னர் விசாரித்த போது, மன்னன் ஒரு இடையன் மூலம், காட்டில் ஒரு இடத்தில் பசு தானாகவே பால் பொழிந்து வருகின்றது என்று சொல்ல, மன்னன் அந்த இடத்தினை கோடரியால் தோண்ட இரத்தம் வெளிப்பட்டது என்றும், அந்த இடத்தை மேலும் தோண்டிப் பார்த்த போது ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது என்றும் சொல்கின்றனர். அசரீரி வாயிலாக, அந்த இடத்தில் கோயில் கட்டுமாறு இறைவன் பணிக்க, கோயில் கட்டப்பட்டது என்றும் கூறுகின்றனர். வடமொழியில் இந்த தலம் வர்த்தி நிவாரணபுரம் என்று அழைக்க படுகின்றது என்றும் கூறுகின்றனர். பரி என்றால் அகழி என்று பொருள். இந்த கோயிலைச் சுற்றி அகழி ஏதும் இப்போது இல்லை; எனினும் பண்டைய நாளில் அகழி இருந்ததை உணர்த்தும் அடையாளங்கள் காணப்படுகின்றன. சுற்றி அகழி இருந்த காரணத்தால், இறைவன் பரிகேஸ்வரர் என்று அழைக்கப் படுகின்றார் என்று கூறுகின்றனர். திருமாலின் மார்பிலிருந்து நீங்காமல் இருக்க வேண்டும் என்ற வரத்தினை, மகாலட்சுமி இந்த தலத்து இறைவனை வழிபட்டு பெற்றமையால், இந்த தலத்து இறைவனை வழிபட்டால், செல்வத்திற்கும் தம்பதி ஒற்றுமைக்கும் என்றும் குறை நேராது என்பது நம்பிக்கை. பரசுராமரால் அழைத்து வரப்பட்ட அந்தணர்கள் நிறைந்த இந்த தலத்து இறைவனை எண்ணற்ற தேவர்களும் சித்தர்களும் வழிபட்டுள்ளனர்.

இந்த தலத்தின் மீது அருளப்பட்ட நான்கு தேவாரப் பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. ஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரான் அருளிய ஒவ்வொரு பதிகமும் சுந்தரர் அருளிய இரண்டு பதிகங்களும் கிடைத்துள்ளன. இறைவனின் திருநாமம் மகாலக்ஷ்மீசர், லட்சுமிபுரீச்வரர், பரிகேச்வர்வர்; இறைவியின் திருநாமம் உலகநாயகி, லோகநாயகி; திருமால், திருமகள், ஜமதக்னி, அகத்தியர், பரசுராமர், பிரமன் இந்திரன் இராமலிங்க அடிகளார் பட்டினத்து அடிகளார் ஆகியோர் வழிபட்ட தலம். கிழக்கு நோக்கிய வண்ணம் மூன்று நிலைகளை உடைய இராஜகோபுரம். கோயிலில் கொடிமரம் இல்லை. மூலவர் உயர்ந்த பீடத்துடன் கம்பீரமாக காணப்படுகின்றார். சுயம்பு மூர்த்தம். மூலவர் திருமால் வழிபட்ட இலிங்கம். மூலவரின் உச்சியில் குழி உள்ளது. இந்த அடையாளம், இலிங்கம் பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சமயத்தில், கோடரி பட்டதால் ஏற்பட்டது என்று சொல்கின்றனர். மூலவரின் வலது பக்கத்தில் அம்பிகை சன்னதி, தெற்கு நோக்கிய வண்ணம் உள்ளது. அன்னையின் மேல் இரண்டு கரங்கள் அக்கமாலை மற்றும் மலரினை தாங்கிய வண்ணம் இருக்க, கீழ் இரண்டு கரங்கள் அபயம் மற்றும் வரம் அளிக்கும் கரங்களாக உள்ளன. கோஷ்டத்தில் நாம் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோரை காணலாம். துர்க்கையின் அருகே சண்டீசர் சன்னதி உள்ளது. வெளி பிராகாரத்தில் செல்வவிநாயகர் சன்னதி, அதனை அடுத்து பரசுராம இலிங்கம், வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமணியர், நால்வர், மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. பரசுராமர் வழிபட்ட லிங்கமும், நால்வர் மற்றும் மகாலட்சுமி உருவங்களும் ஒரே சன்னதியில் வைக்கப் பட்டுள்ளன.

பிராகாரத்தில் ஒரே மேடையின் மீது இரண்டு இலிங்கங்கள் இருப்பதை நாம் காணலாம். சிறிய வடிவில் உள்ள இலிங்கம், ஜமதக்னி முனிவர் வழிபட்ட இலிங்கம். இரண்டாவது இலிங்கம், தனது தாயினைக் கொன்ற பிரம்மஹத்தி பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காக, பரசுராமர், தாபித்து வழிபட்ட இலிங்கம் என்று சொல்லப் படுகின்றது. அருகில் திருமாலின் உருவத்தையும் காணலாம். ஜமதக்னி முனிவர் மற்றும் பரசுராமர் ஆகிய இருவருக்கும் சிவபெருமான் காட்சி கொடுத்தார் என்று சொல்லப்படுகின்றது. திருக்கோயிலில் பரசுராமரின் திருவுருவம் உள்ளது. பரசுராமர் வழிபட்டு பலன் அடைந்ததால், பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் தலமாக கருதப் படுகின்றது. குழந்தைப் பேறு பெறுவதற்கும், கடன் தொல்லை தீர்வதற்கும் இந்த தல வழிபாடு வழிவகுக்கும். நவகிரகங்களின் சன்னதியில், சூரியனும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பார்த்தபடி இருக்கும் புதுமையை நாம் இங்கே காணலாம். இந்த அமைப்பின் காரணமாக, அமாவாசை தினத்தன்று, முன்னோர்களுக்கு ஈமக்கடன் செய்வதற்கு உகந்த தலமாக இந்த தலம் கருதப் படுகின்றது. நவகிரக சன்னதியை அடுத்து பைரவர் மற்றும் சந்திரன் ஆகியோர் ஒரே சன்னதியில் உள்ளனர். கருவறையின் சுற்றுச் சுவர்களில் காணப்படும் தென்முகக் கடவுளின் உருவத்தில் இருக்கும் முயலகன் சற்று வித்தியாசமாக உள்ளது. வழக்கமாக வலப்புறம் திரும்பி இருக்கும் முயலகன், இங்கே இடது புறமாக திரும்பி இருப்பதை காணலாம். முயலகனின் கையில் நாகத்தையும் காணலாம். துவார விநாயகர் தண்டபாணி மற்றும் துவார பாலகர்களை வழிபட்டு நேரே உள்ளே சென்றால் சுவாமி சன்னதியை காணலாம். இந்திரன், ஐராவத யானை அகத்தியர் வழிபட்ட தலம். இராஜராஜச் சோழனின் காலத்தைய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது. தல மரம் விளாமரம்; தீர்த்தம் மகாலட்சுமி தீர்த்தம். இந்த கோயில் தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப் பட்டு வருகின்றது. பெருமானை மாதுளை முத்துகள் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பாக கருதப் படுகின்றது.

சுந்தரர் தான் பாடிய பதிகத்தின் பாடலில் (7.65.3), பரசுராமர் முன்னூறு வேதியர்களை கோயில் திருப்பணிக்கு நியமித்து, முன்னூற்று அறுபது வேலி நிலங்களையும் அளித்தார் என்று கூறுகின்றார். அவரே இந்த தலத்திற்கு நின்றியூர் என்று பெயரிட்டு அழைத்தார் என்றும் சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். மேலே குறிப்பிட்ட கொடையினை பரசுராமர், அழகிய பொற்கலசங்கள் கொண்டு நீர் வார்த்து இறைவனுக்கு அர்ப்பணம் செய்தார் என்றும் பரசுராமரின் பக்தியை மெச்சிய இறைவன் அவருக்கு தனது திருவடிகளை காட்டி அருளினார் என்றும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. இந்த பதிகத்தின் பாடல்களில், சுந்தரர் பெருமானை வழிபட்டு பயனடைந்த அடியார்கள் பலரையும் குறிப்பிடுகின்றார்.

மொய்த்த சீர் முன்னூற்று அறுபது வேலி மூன்று நூறு வேதியரோடு நுனக்கு

ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏத்தி ஓங்கு நின்றியூர் உனக்கு அளிப்பப்

பத்தி செய்த அப் பரசுராமற்குப் பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன்

சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வத் தென் திருநின்றியூரானே

பாடல் 1:

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 1 (திதே 0418)

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 1 (திதே 0419)

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 1 (திதே 0420)

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 1 (திதே 0421)

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 1 (திதே 0422)

சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு

பாலம் மதி பவளச் சடைமுடி மேலது பண்டைக்

காலன் வலி காலின்னொடு போக்கிக் கடி கமழும்

நீலம் மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே

விளக்கம்:

பாலம் என்ற சொல்லுக்கு பலவிதமாக பொருள் கொள்ளப்பட்டு விளக்கம் அளிக்கப் படுகின்றது. பாலம் என்ற தொடர் பால்+அம் என்று பிரிக்கப்பட்டு பால் போன்ற வெண்மை நிறத்தில் காணப் படும் அழகிய சந்திரன் என்பது ஒரு பொருள். பாலன் என்று சொல்லின் திரிபாக (எதுகை கருதி) எடுத்துக் கொண்டு, இளைய பிறைச் சந்திரன் என்பது மற்றொரு பொருள். பாலம் என்ற சொல்லுக்கு நெற்றி என்று பொருள் கொள்ளப்பட்டு பெருமானின் நெற்றியின் மீது உள்ள பிறைச் சந்திரன் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். சடைமுடி மேல் என்று பின்னர் வருவதால், நெற்றி என்று பொருள் கொள்வது பொருத்தமாக தோன்றவில்லை. நிலையோர்=நிலையாக உறைபவர்; சுண்ணப் பொடி=வாசனைப் பொடி; சாந்தம்=குழைத்த சந்தனம்; பவளச்சடை=பவளம் போன்று செம்பட்டை நிறத்தில் அமைந்துள்ள சடைமுடி; பண்டைக் காலனின் வலிமையை போக்கினார் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பண்டைய நாளில் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சி செய்த காலன், அப்போது பெருமானிடம் உதை வாங்கி அழிந்த பின்னர், இயமன் சிவபெருமானது அடியார்கள் பால் செல்வதை தவிர்த்து விட்டான் என்ற பொருள் பட பண்டைக் காலன் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இந்த திருக்கோயிலின் எதிரே உள்ள மூன்று நீர்நிலைகள் வட்டத்தின் வெளிப்பகுதியின் ஒரு பாகமாக, மாலை போன்ற அமைப்பினில் இருப்பதை நாம் காணலாம், இந்த நிலையை உணர்த்தவே நீலம் மலர்ப் பொய்கை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் போலும்.

பெருமான் சுடுகாட்டுச் சாம்பலை, நறுமணம் மிகுந்த சந்தனமாக கருதி பூசிக் கொள்ளூம் தன்மை பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. பாச்சிலாச்சிராமம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.44.5) திருஞானசம்பந்தர், பெருமானை சாந்தணி மார்பர் என்று குறிப்பிடுகின்றார். வாய்மூரி=ஒரு வகை பண்; கங்கை நதியினைத் தனது தலையில் வைத்துள்ள பெருமான், பெண்ணாகிய மழவன் மகள் பால் இரக்கம் கொள்ளாது இருப்பது தவறு அல்லவா என்று நயமாக இந்த பாடலில் கேள்வி கேட்கப் படுகின்றது. சதுர்=சதுரப்பாடு, சாமர்த்தியம்; மண்ணுலகில் வாழும் அடியார்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன், பாலும் நெய்யும் கொண்டு பெருமானை நீராட்டி வழிபடுகின்றனர். இந்த பெருமான், தனது நீண்டு வளர்ந்த சடையினில் கங்கை நதியினை தேக்கி வைத்தவராக, மோந்தை முழா குழல் தாளம் வீணை முதலிய இசைக் கருவிகள் முழங்க வாய்மூரி முதலான பல பண்களில் பாடல்கள் பாடுபவராக, ஆந்தை போன்று சிறிய கண்களை உடைய பூத கணங்கள் சூழ்ந்தவராக விளங்கும் பெருமான், பாச்சிலாச்சிராமம் தலத்தினில் உறைகின்றார். திருநீற்றினை, சந்தனக் கலவையாகத் தனது மார்பினில் பூசியுள்ள பெருமான், மழவன் மகளாகிய தையலை வாடும் வண்ணம் வருத்துவது இவரது சதுரப்பாட்டு தன்மைக்கு பெருமை சேர்ப்பது அல்ல என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மாந்தர் தம் பால் நறு நெய் மகிழ்ந்தாடி வளர்சடை மேல் புனல் வைத்து

மோந்தை முழாக் குழல் தாளமொர் வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி

ஆந்தை விழிச் சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வோ

நெடுங்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.52.7) சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்து நீறு என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மாறு கொண்டார்= வேதநெறிக்கு மாறான வழியில் சென்றதால், பகைவர்களாக மாறிய திரிபுரத்து அரக்கர்கள்; சாந்தம்=சந்தனம்; உமை அன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் பொருத்தி, தனது உடலின் ஒரு கூறாகக் கொண்டவனே, வேறுவேறு திசைகளில் பறந்து கொண்டு ஒன்று சேராமல் இருப்பதன் மூலம், தங்களை எவரும் அழிக்க முடியாத வண்ணம் வானில் திரிந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒன்றாக இணைத்து, கொடிய வெம்மை மிகுந்த அம்பினை எய்து, வேதநெறிக்கு மாறாக வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவனே, அனைத்து உயிர்களுக்கும் அரசனாகத் திகழ்பவனே, தனது கொடி மீது இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே, நீ அணிந்த திருநீற்றினை சந்தனம் போன்று உயர்ந்த வாசனைப் பொருளாக கருதி மகிழ்ச்சியுடன் தங்களது உடலில் பூசிக் கொள்ளும் அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம், நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, அருள் புரிவாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்

மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்

ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம் பெருமான் அணிந்த

நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

காவிரிபூம்பட்டினம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.65.4) திருஞானசம்பந்தர், பெருமானை நீரார் நீறு சாந்தம் வைத்த நிமலன் என்று குறிப்பிடுகின்றார். தயங்க=போல் விளங்க; தார்=மாலை; ஆர்கின்ற என்ற சொல்லுக்கு உலகம் இன்பமடைதல் என்று பொருள் கொண்டு, அடியார்கள் பாடும் இசைப் பாடலினை கேட்கும் உலகத்தவர்கள் இன்பம் அடைகின்றனர் என்று சொல்வதும் பொருத்தமே. மைந்தர்=வலிமை வாய்ந்தவர்கள்; புகார் என்ற பெயருக்கு ஏற்ப வலிமை மிகுந்த வீரர்கள் வாழ்ந்த தலமாக காவிரிப்பூம்பட்டினம் இருந்த தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பொன் போன்று காணப்படும் கொன்றை மலர்களால் தொடுத்த மாலையினை உடைய பெருமானின் பரந்த மார்பு நீரினில் குழைத்த திருநீறு சந்தனம் போல் பூசப்பெற்று பொலிவுடன் விளங்குகின்றது. இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து நீங்கிய பரமன் உறையும் இடம் யாதெனின், போருக்கு மிகவும் அவசியமான வேற்படை போன்று கண்களை கொண்டுள்ள மாதர்களும் அவர்களின் துணையாக விளங்கும் வல்லமை வாய்ந்த இளைஞர்களும் கோயிலில் புகுந்து ஒன்று கூடி இசையுடன் பொருந்திய பாடல்களை உலகம் அதிரும் வண்ணம் பாட, அத்தகைய பாடல்களைக் கேட்பதற்காக உலகத்து மக்கள் திரளும் காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

தாரார் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பகலம்

நீரார் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்

போரார் வேற்கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால்

பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே

கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.73.2) திருஞானசம்பந்தர், பெருமானை, சாந்த நீற்றார் என்று குறிப்பிடுகின்றார். தாருகவனத்து மகளிரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த பாடல்கள், இந்த பதிகத்தின் பாடல்கள் என்று கூறுவார்கள். பிச்சைப் பெருமானாக, தனது கையினில் மண்டை ஓட்டினை ஏந்தியவராக பலியேற்க தாருகவனம் சென்ற பெருமானின் அழகினால் கவரப்பட்டு, முனிவர்களின் மனைவியர் பலரும், தங்களையும் அறியாத நிலையில், தாங்கள் இல்லத்தில் செய்து கொண்டிருந்த வேலைகளை பாதியில் விட்டுவிட்டு, பெருமானின் பின்னே தொடர்ந்து சென்றதாக புராணம் கூறுகின்றது. அன்று, தாங்கள் வாழ்ந்து வந்த இல்லங்களின் வழியே வீதிவலம் வந்த பெருமானின் கோலத்தினை, தனது அழகிய வாயினால் இனிமையான சொற்கள் கொண்டு பலி இடுவீர்களாக என்று கேட்டதை நினைக்கும் தாருகவனத்து மகளிரின் தன்மையை எடுத்துரைக்கும் பாடலாக உள்ளது. பைஞ்ஞீலி தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகத்தின் (7.36) பாடல்களும் இவ்வாறே அமைந்துள்ளன. நீத்தலாகா வெள்ளம்=நீந்திக் கடக்க முடியாத அளவு பெருகிய வெள்ளம்; மூழ்கு=மூழ்கி மறைந்த; ஏய்ந்த=பொருந்த; போந்த= வாயிலிருந்து வெளிவந்த; மைந்தர்=ஆண்மகன்; கோணல்=வளைந்த; வெகு நாட்களாகத் தன்னை விட்டு பிரிந்திருக்கும் தலைவனின் வருகையை ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிற்கும் தலைவி, கடந்த நாட்களில் தலைவனுடன் தான் சேர்ந்திருந்த இனிமையான பொழுதுகளை நினைத்து அசை போடும் தலைவியின் தன்மையை குறிப்பிடும் சங்க இலக்கியப் பாடல்களைப் போன்று இந்த பாடல் அமைந்துள்ள விதம் ரசிக்கத் தக்கது. தனது உள்ளம் கவர்ந்த தலைவன் பெருமான் தான் என்பதை சுட்டிக் காட்டும் வண்ணம் பெருமானின் சடையில் உள்ள பொருட்கள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. இந்த பாடல் போன்றே வரும் பாடல்களிலும் இறைவனின் அடையாளத்தினை சுட்டிக் காட்டும் சம்பந்த நாயகி, இறைவனை தனது உள்ளம் கவர்ந்த கள்வன் என்று கூறுகின்றாள். எப்படியெல்லாம் தனது உள்ளம் கவரப்பட்டது என்பதை விரிவாக கூறும் நோக்கம் தான் என்னே. அந்த அடையாளங்கள் கொண்ட இறைவனை நாம் கண்டு சம்பந்த நாயகியுடன் சேர்த்து வைத்து அவளின் துயர நிலையினை மாற்ற வேண்டும் என்பதே ஆகும்

நீத்தலாகா வெள்ளம் மூழ்கு நீள்சடை தன் மேலோர்

ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆரப்

போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போலாம்

காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே

நீந்திக் கடக்க முடியாத வண்ணம் பெருவெள்ளத்துடன், தன்னைத் தாங்குவதற்காக சடையினை விரித்த வண்ணம் நிற்கும் பெருமான் சடையினையும் மூழ்கடிக்கும் நோக்கத்துடன் வேகமாக கீழே இறங்கி பாய்ந்து வந்த கங்கை நதி, வளைந்த ஒற்றைப் பிறைச் சந்திரன், பாம்பு, கொன்றை மலர்கள் ஆகியவற்றைத் தனது நீண்ட சடையில் தாங்கிய பெருமான், அழகான தோற்றத்துடன் வீதிவுலா வந்த பெருமான் அழகிய இனிமையான சொற்களைப் பேசி இன்பம் பயந்தார். அனைவரிலும் அதிகமான வல்லமை உடையவராக விளங்கும் பெருமான், திருநீற்றினை நறுமணம் தரும் சந்தனமாக கருதி தனது மேனி முழுவதும் பூசிக் கொள்கின்றார். அவரது இருப்பிடம் காந்தள் சடைகள் தழைத்து வளர்ந்து பூத்து நறுமணம் கமழும் கானூர் தலமாகும் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.41.6) திருஞானசம்பந்தர் பெருமானை, சாந்தாக நீறு அணிந்தான் என்று குறிப்பிடுகின்றார். தீந்து=தீய்ந்து; சாந்து= சந்தனம்; ஆகம்=உடம்பு; கொளுவ=கொள்ளும் வண்ணம்; கொள்ள என்ற தன்வினைச் சொல்லின் பிறவினைச் சொல்லாக வருவது கொளுவ; செற்று=வென்று; ஓய்ந்து=தனது கவலைகளிலிருந்து ஓய்வு பெற்று; ஆர=பொருந்த; பெருமானின் அடியார்கள் உலகத்தவரால் மிகவும் உயர்வாக மதிக்கப் படுவார்கள் என்று இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் குறிப்பிட்ட திருஞான சம்பந்தர், இந்த பாடலில், பெருமானை வழிபட்டு, அவரது அடியான் சந்திரன் அடைந்த பயனை குறிப்பிடுகின்றார். மன்மதனை வெற்றி கொண்ட பெருமான் என்பதற்கு இரண்டு விதமாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். மன்மதன் தனது கணைகளால் தாக்கிய பின்னரும், தொடர்ந்து தவம் செய்தவர் பெருமான் என்றும், மன்மதனின் உதவி ஏதும் தேவைப்படாமல் பார்வதி தேவியை திருமணம் புரிந்து கொண்டவர் என்றும், இரு வகையிலும் மன்மதனை வெற்றி கொண்ட நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. திருநீற்றினை, நறுமணம் வீசும் சந்தனமாக பாவித்துத் தனது திருமேனியில் பூசிக் கொள்பவன் சாய்க்காடு தலத்தில் பொருந்தி உறையும் பெருமான். மன்மதனின் உடல் தீய்ந்து எறியும் வண்ணம் அவனை வெற்றி கொண்டு மகிழ்ந்தவன் ஆவான். நாளுக்கு நாள் தனது கலைகள் தேய்ந்து, ஒற்றைப் பிறையுடன் முழுவதும் அழிந்து விடும் நிலையில் இருந்த பிறைச் சந்திரனின் கவலைகள் முற்றிலும் ஓயும் வண்ணம், பிறைச்சந்திரனை தனது சடையில் அணிந்து கொண்டு, சந்திரன் அழியாமல் தொடர்ந்து ஒளிவீசும் வண்ணம் அருள் புரிந்தவன் பெருமான். மலைமகளின் தோளினில் தோய்ந்த பெருமான், மலைமகளை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்ட பெருமான், இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டவர் ஆவார் என்பதே இதன் பொழிப்புரை.

சாந்தாக நீறு அணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன்

தீந்து ஆகம் எரி கொளுவச் செற்று உகந்தான் திருமுடி மேல்

ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள்

தோய்ந்து ஆகம் பாகமா உடையானும் விடையானே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.56.6) திருஞானசம்பந்தர், பெருமானை நோக்கி சாந்த நீறு பூசினீர் என்று கூறுகின்றார். சலம்=தண்ணீர், இங்கே கங்கை நதி; வலம்=வெற்றி; வெற்றி பொருந்திய ஆயுதமாக மழுப்படை மாறியது பெருமானைச் சென்றடைந்த பின்னர் தான். தாருகவனத்து முனிவர்கள் இந்த வலிமை மிகுந்த படையினை யாகத்திலிருந்து எழுப்பி, சிவபெருமான் மீது ஏவிய போதிலும், சிவபெருமான் இந்த ஆயுதத்தை தனது கையில் ஏந்தி செயலிழக்கச் செய்தார். ஆனால் பெருமான் இந்த ஆயுதத்தைத் தனது கையினில் ஏந்திய பின்னர், வெற்றி தரும் ஆயுதமாக மாறி விடுகின்றது. பெருமான் தனது வலது கையினில் இந்த ஆயுதத்தை ஏந்தியிருக்கும் தன்மை, வலமல்கு வெண்மழு என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பாடலில், சாந்த நீறு பூசியவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இல்லம் என்ற சொல் இலம் என்று சுருங்கியுள்ளது. இல்லம் என்று தலத்து மறையோர்கள் வாழ்ந்த இல்லம் குறிப்பிடப் படுகின்றது. இலமல்கு=வீடு தோறும் வாழ்ந்த மறையோர்கள்; திருஞானசம்பந்தரின் காலத்தில், மறையோர்கள் மிகவும் அதிகமாக வாழ்ந்த தலமாக இடைமருது விளங்கியது போலும். இலமல்கு=இல்லாதவர்களாக: இலமல்கு என்ற தொடருக்கு, ஆசைகள் ஏதும் இல்லாமல், ஆசைகள் அற்றவர்களாக தலத்து மறையோர்கள் அந்நாளில் விளங்கினார்கள் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. புலம் என்ற சொல்லுக்கு அறிவு, இடம் என்று இருவேறு பொருள்கள் கொள்ளலாம். ஞானம் மிகுந்த திருக்கோயில் என்றும் ஞானம் அளிக்கும் திருக்கோயில் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மற்றவர் போன்று நறுமணம் கமழும் சந்தனத்தை பெருமான் விரும்புவதில்லை. பகட்டான ஆடைகளையும் அவர் விரும்புவதில்லை. எளிய கோலத்துடன் இருப்பதையே அவர் எப்போதும் விரும்புகின்றார். எனவே தான் திருநீற்றைனை சந்தனமாக கருதி பூசிக் கொள்கின்றார் என்று அருளாளர்கள் தங்களது பாடல்களில் குறிப்பிடுகின்றனர். கங்கை நதி தேக்கப்பட்ட சிவந்த சடையினை உடைய பெருமானே, திருநீற்றினை நறுமணம் தருகின்ற சந்தனமாக பாவித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் உடலில் பூசிக் கொண்டவரே, வலது கையினில் வெண்மழு ஆயுதத்தை ஏந்திய வண்ணம் மயானத்தில் நடனம் ஆடுபவரே, இந்த தலத்தினில் உள்ள இல்லங்களில் வாழும் மறையோர்கள் நான்கு மறைகளையும் இனிமையான பண்களுடன் இசைத்து, இறைவனைப் போற்றி பாட, இடைமருது தலத்தினில் உள்ள ஞானமயமான திருக்கோயிலை, தலைவனாகிய தான் வாழும் இடமாக நீர் ஏற்றுக்கொண்டு பொலிவுடன் விளங்குகின்றீர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சலமல்கு செஞ்சடையீர் சாந்த நீறு பூசினீர்

வலமல்கு வெண்மழு ஒன்றேந்தி மயானத்து ஆடலீர்

இலமல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில்

புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே

பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.69.3) திருஞானசம்பந்தர், பெருமானை சாந்த வெண்ணீறு அணிந்தார் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் வெண்மழு என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நன்கு கூரியதாக தீட்டப்பட்டு வெண்மையான ஒளி வீசும் மழுப்படை. பெருமானது திருக்கரத்தில் இந்த படை இருப்பதே, தீயவருக்கு அச்சத்தை விளைவிப்பதால் எவர் மேலும் செலுத்தப்பட்டு அதனால் குருதிக்கறை படிய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பதால், என்றும் வெண்மையாகவே இருக்கும் மழு ஆயுதம் என்று பொருள் கொள்ள வேண்டும். சாந்த வெண்ணீறு என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஏனையோர் அனைவரும் வாசனை தரும் சந்தனத்தைத் தங்களது திருமேனியில் பூசிய வண்ணம் காட்சி தர, பெருமானோ, திருநீற்றினையே சந்தனமாக கருதி தனது திருமேனியில் பூசிக் கொண்டு உள்ளார் என்று விளக்கம் அளிப்பது ஒரு வகை. பெருமானின் திருமேனியின் மீது பூசிய திருநீற்றினை அணிவோர்கள் சாந்தம் பெறுகின்றனர் என்று விளக்கம் கூறுவது மற்றொரு வகை. கொன்றை மலர்கள் பொருந்திய சடையினை உடையவரும், திருநீற்றினை சந்தனமாக கருதி மிகுந்த விருப்புடன் தனது திருமேனியில் அணிந்தவரும், எப்போதும் பூதகணங்கள் சூழ இருப்பவரும், தனது உடலிலும் படத்திலும் பொறிகள் கொண்டுள்ள பாம்பினைத் தனது இடையில் கச்சாக கட்டி தனது விருப்பம் போன்று அசைப்பவரும், சின்னமாக இடபம் இடம் பெறுகின்ற கொடியினை உடையவரும், வெண்மை நிறத்தில் ஒளியுடன் மிளிரும் மழுப்படையினை தனது கையினில் ஏந்தியவரும், மூவிலைச் சூலத்தைத் தனது ஆயுதமாகக் கொண்டவரும் ஆகிய சிவபெருமான் திருப்பாண்டிக் கொடுமுடி தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சடையமர் கொன்றையினாரும் சாந்த வெண்ணீறு அணிந்தாரும்

புடையமர் பூதத்தினாரும் பொறி கிளர் பாம்பு அசைத்தாரும்

விடையமரும் கொடியாரும் வெண்மழு மூவிலைச் சூலப்

படையமர் கொள்கையினாரும் பாண்டிக் கொடுமுடியாரே

குற்றாலம் (குறும்பலா) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.71.8) சாந்தம் என நீறு அணிந்த பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். திணி=நெருங்கிய; பலம் மிகுந்து பருத்து காணப்படுவதால் ஒன்றுக்கொன்று நெருங்கிய தன்மையில் தோள்கள் இருந்ததாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். சாரல் சாரல்=மழைச் சாரலை உடைய மலைச்சாரல்; பூந்தண் நறு=நறுமணமும் குளிர்ச்சியும் கொண்ட வேங்கைப் பூக்கள்; பிடி=பெண் யானை; பெண்பால் என்ற தகுதியில் கூந்தல் உடையது என்று சொன்னார் போலும். யானைகள் பூக்களைப் பறித்து வந்து சிவபெருமானை வழிபாடு செய்வதாக திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்

ஏந்து திணி திண்தோள் இராவணனை மால் வரைக் கீழ் அடர ஊன்றிச்

சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல்சாரல்

பூந்தண் நறு வேங்கைக் கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்திக்

கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே

துருத்தி மற்றும் வேள்விக்குடி ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்து அருளிய பதிகத்தின் பாடலில் (2.90.2) திருஞானசம்பந்தர், பெருமானை நீறு சாந்து என உகந்து அணிவர் என்று குறிப்பிடுகின்றார். தூறு=கூட்டமாக அமைந்த சிறிய புதர்ச் செடிகள்; வீறு=பெருமை; தலத்து அம்மையின் திருநாமம், பரிமள சுகந்த நாயகி. இந்த வடமொழிப் பெயர் மிகவும் அழகாக நாறுசாந்து இளமுலை என்று தீந்தமிழ் மொழியில் கொடுக்கப் பட்டுள்ளது. புல்கு=பொருந்திய; அம்மையுடன் உடனாக இருப்பதாக இந்த பதிகத்தின் பல பாடல்களில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திருமணம் நடைபெற்ற தலத்தினில் அம்மையுடன் சேர்ந்து உறைவது தானே முறை. உலகினில் உள்ள அனைத்து உடல்களும் எரிந்து அழித்து உலகமே ஒரு சுடுகாடாக காட்சி அளிக்கும் தருணத்தில், ஊழித்தீயினில் நின்று பெருமான் நடனம் ஆடுவது இங்கே உணர்த்தப் படுகின்றது. சிறிய முட்செடிகள் ஆங்காங்கே புதராக மண்டிக் கிடக்கும் சுடுகாட்டினில், கொழுந்து விட்டெரியும் நெருப்பினில் நடனம் ஆடும் பெருமான், ஒளிவீசும் சாம்பலை நறுமணம் கமழும் சந்தனச் சாந்தாக பாவித்து மிகுந்த விருப்பத்துடன் தனது உடலில் பூசிக் கொள்கின்றார். பிறைச் சந்திரனைத் தனது முடியினில் பொருத்தியுள்ள பெருமான், பகல் நேரத்தில் திருத்துருத்தி தலத்தினில், நறுமணம் வீசும் சந்தனக்குழம்பு அணிந்துள்ள மார்பகங்களை உடைய இளைய பெண்ணாகிய உமையன்னையுடன் உறைகின்றார். அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கொளி சேர்

நீறு சாந்து என உகந்து அணிவர் பிறை புல்கு சடை முடியார்

நாறு சாந்து இளமுலை அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்

வீறு சேர் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.94.8) திருஞானசம்பந்தர், சாந்தம் உடையார் என்று பெருமான் திருநீற்றினை, சந்தனமாகக் கருதி அணிந்துள்ள நிலையினை குறிப்பிடுகின்றார். ஏழும் மூன்றும்=பத்து தலைகள்; வேள்வி என்ற சொல் எதுகை கருதி வேழ்வி என்று திரிந்தது; கேழல்=பன்றி; சாந்தமும் உடையார் என்பதற்கு என்றும் அமைதியாக இருப்பவர் என்று விளக்கமும் அளிக்கப் படுகின்றது. விதம் விதமான நுட்பமான கால அளவையாக விளங்கும் பெருமான், மிகவும் நுண்ணியராகவும் உள்ளார். பல்வேறு பக்குவ நிலைகளில் விளங்கும் அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிய விரும்பும் பெருமான், எண்ணற்ற அணுகுமுறைகளைக் கையாண்டு உயிர்களுக்கு அருள் புரிகின்றார். அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு, பல சமயங்களில் நேரில் தோன்றும் பெருமான் எண்ணற்ற வடிவங்களில் காட்சி அளித்தவர் ஆவார்; எண்ணற்ற தன்மைகளை உடைய பெருமான், எண்ணற்ற முடிகளை உடையவர் ஆவார்; அவர் வண்டுகள் மொய்க்கும் புது மலர்களைத் தனது கூந்தலில் சூட்டிக் கொண்டுள்ள உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் உடையவர் ஆவார். இவ்வாறு பல உருவங்களை உடையவராக இருக்கும் அவர், வாழ்கொளிபுத்தூர் தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர் பட அடர்த்து

வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல உடையார்

கேழல் வெண்பிறை அன்ன கெழுமணி மிடறு நின்று இலங்க

வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

மூக்கீச்சரம் (தற்போதைய பெயர் உறையூர், திருச்சி நகரத்தின் ஒரு பகுதி) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.120) திருநீற்றினை சாந்தமாக பூசிய பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கோச்செங்கட் சோழன் கட்டிய கோயில் என்பதால் வேந்தன் மூக்கீச்சரம் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. காந்தள் ஆரும் விரல் ஏழை=காந்தள் மலரை ஒத்த விரல்களைக் கொண்ட உமையம்மை. உமையம்மையுடன் இறைவன் கூடி இருப்பதன் காரணத்தை நாம் யாரும் ஆராய்ந்து அறிய முடியாது என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். வெண்மையான திருநீற்றினை, நறுமணம் நிறைந்த சந்தனமாக கருதித் தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டுள்ள பெருமான், தனது சடையினில் மிகுந்த நீர்ப்பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியைத் தாங்கியவன்; காந்தள் மலரைப் போன்று, மென்மையாகவும் மெலிந்தும் நீண்டும் அழகாக காட்சி தரும் விரல்களை உடைய பார்வதி தேவி காணும் வண்ணம் பெருமான் நடனமாடும் காரணத்தை ஆராய்ந்து அறியும் நிறைந்த ஞானம் உடையவர் எவரேனும் உளரோ, இல்லை என்பதே விடை. இத்தகைய சிறப்பு வாய்ந்த நடனத்தை தினமும் ஆடுபவராக உள்ள பெருமான், சோழ வேந்தனாகிய கோச்செங்கட் சோழன் எழுப்பிய மாடக் கோயிலாகிய மூக்கீச்சரம் தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சாந்தம் வெண்ணீறு எனப் பூசி வெள்ளம் சடை வைத்தவர்

காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம்

ஆய்ந்து கொண்டு ஆங்கு அறிய நிறைந்தார் அவர் ஆர் கொலோ

வேந்தன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.4.6) திருஞானசம்பந்தர், பெருமானை, சந்த வெண்பொடி அணி சங்கரன் என்று குறிப்பிடுகின்றார். வெருவுறுதல்= அச்சம் உண்டாதல். வெந்துயர்=கொடுமையான துயரம். ஏத்துதல்=புகழ்தல். அரவு=பாம்பு. அரை=இடுப்பு. சந்தம்=நறுமணம். மூன்று வயதில் தனக்கு ஞானப்பால் கொடுத்து ஆட்கொண்ட இறைவனை, திருஞானசம்பந்தர் தந்தை என்று அழைத்து மகிழ்வதையும் நாம் இங்கே உணரலாம். சங்கரன் என்றால் நன்மையைச் செய்பவன் என்று பொருள். சங்கரன் என்று அழைத்து தனக்குத் தனது தந்தையாரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பொருள் அளித்து நன்மை செய்யவேண்டும் என்பதனை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பால் உணர்த்துகின்றார். ஐந்து தலைப் பாம்பினை இடுப்பில் அணிந்து அதனை ஆடச் செய்து, நறுமணம் கமழும் திருநீற்றினை உடலில் பூசிக் கொண்டு, நன்மைகளைச் செய்யும் சங்கரனே, அச்சப்பட வைக்கும் கொடுமையான துயர்கள் என்னை வருத்தினாலும் எனது தந்தையாகிய உனது திருப்பாதங்களைத் தவிர வேறு ஒன்றினையும் எனது நாக்கு புகழ்ந்து பாடாது. இவ்வாறு இருக்கையில் எனக்கு பொருள் ஒன்றும் ஈயாது இருப்பது தான் உந்தன் ஆளுடைமையின் கருணைச் செயலா என்ற கேள்வியை திருஞானசம்பந்தர் எழுப்பும் பாடல்.

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.119.1) திருஞானசம்பந்தர், பெருமான் பூசுவது சாந்தம் பொடி நீறு என்று கூறுகின்றார். அள்ளல்=சேறு; அகடு=முதுகு; அள்ளல் கார் ஆமை அகடு=சேற்றில் திளைக்கும் கரிய ஆமையின் முதுகு போன்று வளைந்த பிறைச் சந்திரன்; தாழை மடல்களை யானைத் தந்தங்களுக்கு ஒப்பிடுகின்றார். காளியை குணம் செய்=காளியின் ஆவேசத்தை குறைத்து, சாந்தத்துடன் திகழும் வண்ணம் மாற்றி;

புள்ளித் தோலாடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு

கொள்ளித் தீ விளக்குக் கூளிகள் கூட்டம் காளியைக் குணம் செய் கூத்துடையோன்

அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முட்டாழைகள் ஆனை

வெள்ளைக் கொம்பு ஈனும் விரிபொழில் வீழி மிழலையான் என வினை கெடுமே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.119.5) திருஞானசம்பந்தர், நறுமணம் வீசும் சந்தனமாக கருதி திருநீற்றை பெருமான் பூசிக் கொள்கின்றார் என்று கூறுகின்றார். கூசுமா மயானம்=எவரும் சென்றடைவதற்கு கூச்சம் கொள்ளும் சுடுகாடு; குடவயிறு=குடம் போன்று பெரிய வயிறு; மெல்லோதி=மென்மையான கூந்தல் உடைய உமை அன்னை; பொங்கரவு=சினத்துடன் பொங்கி படமெடுத்தாடும் பாம்பு; அரையோன்= இடுப்பில் கச்சாக கட்டியவன்; மலர்களின் மீது படர்ந்து வரும் தென்றல் காற்று மலர்களின் நறுமணத்தையும் சுமந்து கொண்டு வருவதாகவும், தேன் துளிகளும் காற்றுடன் கலந்து வருவதாகவும் கூறுகின்றார். வீழிமிழலையான் திருநாமத்தை சொன்னால், நமது வினைகள் கெட்டுவிடும் என்றும் உணர்த்துகின்றார்.

கூசுமா மயானம் கோயில் வாயில் கண் குடவயிற்றன சில பூதம்

பூசுமா சாந்தம் பூதி மெல்லோதி பாதி நற்பொங்கரவு அரையோன்

வாசமாம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல்

வீசுமாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை கெடுமே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடல்களில் (3.120) திருஞானசம்பந்தர், பாண்டிய அரசி மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறையார் ஆகிய இருவரின் தன்மைகளையும் விவரிக்கின்றார். அந்த பதிகத்தின் ஏழாவது பாடலில், அரசியார், முத்தின் தாழ்வடமும் சந்தனக் குழம்பு நீறும் தனது மார்பினில் அணிந்தவராக விளங்கியதாக குறிப்பிடுகின்றார். வடமும் மற்றும் நீறும் என்று குறிப்பிட்டிருப்பதால், சந்தனக் குழம்பு என்பதை, நாம் திருநீற்றுக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக எடுத்துக் கொள்வதே பொருத்தம். திருநீற்றினை, சந்தனக் குழம்பாக பாவித்து அரசியார் அணிந்து கொண்டார் என்பதை நாம் இந்த பாடலிலிருந்து உணரலாம். சமண மதத்தைச் சார்ந்த தனது கணவனாரின் மனம் புண்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அரசியார் தனது நெற்றியில் திருநீறு இடாமல், மார்பினில் திருநீறு பூசிக்கொண்டு இருந்த தன்மை இங்கே விளக்கப் படுகின்றது என்று சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். பின்னர் திருஞான சம்பந்தர், சமணர்களை வாதத்தில் வென்று, மன்னனையும் திருநீறு இடச் செய்தமை சைவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டமை ஆகியவை, சைவ சமய வரலாற்றினில் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வுகள். அதன் பின்னர் அரசியாரும், மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது நெற்றியில் அனைவரும் காண திருநீற்றினை இட்டிருப்பார் என்பதை நாம் எவரும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம். திருநீறு அணிந்ததால் பளிங்கு திருமேனியுடன் காட்சி தந்த பெருமான், ஒளிவீசும் பச்சை மரகத நிறத்தில் திருமேனி உடைய உமையன்னை தனது அருகில் இருக்கும் வண்ணம் ஆலவாய் தலத்தினில் வீற்றிருக்கின்றார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

முத்தின் தாழ்வடமும் சந்தனக் குழம்பு நீறும் தன் மார்பினில் முயங்கப்

பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணி செய நின்ற

சுத்தமார் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தாற் போல்

அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே

பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.121.3) திருஞானசம்பந்தர், பெருமானை, சாந்த வெண்ணீறு பூசியவர் என்று அழைக்கின்றார். சுவடு தாமறியார் என்று முந்தைய பாடலில் குறிப்பிட்ட திருஞான சம்பந்தர் இந்த பாடலிலும் அவ்வாறு குறிப்பிடுகின்றார். பூவினில் பொருந்தியுள்ள நறுமணத்தை நம்மால் உணர முடிந்தாலும் காண இயலாதது போன்று இறைவன் எங்கும் இருப்பதை நாம் உணர முடிந்தாலும் அவ்வாறு இறைவன் பொருந்தி இருக்கும் சுவட்டினை நாம் காண முடியாது என்ற செய்தியைத் தான் திருஞானசம்பந்தர் இங்கே நமக்கு உணர்த்துகின்றார். காட்டில் வாழ்பவர் என்றும், நாட்டினில் உறைபவர் என்றும், தக்க தருணத்தில் உடல்களிலிருந்து உயிர்களை பிரிக்கும் கொடிய தொழிலைச் செய்யும் காலனைத் தனது காலால் உதைத்து வீழ்த்தியவர் என்றும், நறுமணம் கமழும் திருநீற்றினைத் தனது உடலில் பூசியவர் என்றும் வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ளவர் என்றும், தான் அனைத்துப் பொருட்களிலும் கலந்து நிற்கும் தன்மையை எவரும் அறிய முடியாத வண்ணம் சுவடு ஏதும் வைக்காதவர் என்றும் அடியார்கள் அவரை குறிப்பிடுகின்றனர். எத்தனை புகழ்ச் சொற்கள் உள்ளனவோ அத்தனைப் புகழ்ச் சொற்களையும் பயன்படுத்தி வேதங்களால் புகழ்ந்து பேசப்படும் இறைவன் வேதத்தின் பொருளாகவும் உள்ளார். இத்தகைய தன்மையைக் கொண்டுள்ள இறைவன் பந்தணைநல்லூர் பசுபதியாக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடுந்தொழில் காலனைக் காலால்

வீட்டினார் எனவும் சாந்த வெண்ணீறு பூசியோர் வெண்மதி சடை மேல்

சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல்லுள சொல்லு நால் வேதப்

பாட்டினர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

சமணர்களின் சூழ்ச்சியால், பல்லவ மன்னன் அப்பர் பிரான் மீது மதம் கொண்ட யானையை ஏவி, அவரது தலையை இடறச் செய்வதற்கு முயற்சி செய்த தருணத்திலும் கலங்காமல் இருந்த அப்பர் பிரான், அப்போது இறைவனின் திருக்கோலத்தை நினைத்தவாறு அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.2.1) பெருமானை வெண் சாந்து அணிந்தவனாக காண்கின்றார். சாந்து என்ற சொல் இரண்டு சொற்களுக்குப் பொதுவாக வருகின்றது. சுண்ணவெண் சாந்து மற்றும் சந்தனச் சாந்து என்றும் பொருள் கொள்ளவேண்டும் என்று விளக்கம் பொதுவாக அளிக்கப் பட்டாலும், சுண்ண வெண் சந்தனச் சாந்து என்ற தொடர் திருநீற்றினை மட்டுமே குறிப்பதாக பொருள் கொள்வது சிறப்பாக கருதப் படுகின்றது. வெண்பொடி என்று அழைக்கப்படும் திருநீற்றினை நறுமணம் வீசும் சந்தனச் சாந்தாக பாவித்து பெருமான், தனது மார்பினில் அணிந்து கொண்டார் என்று பொருள் கொள்வதே சிறப்பு. வெண் சாந்து=வெள்ளை நிறமுடைய திருநீறு. தமர்=அடியவர். அகலம்=மார்பு, சுண்ணம்=பொடி, முரண்=போர்க்குணம் மிகுந்த. உரிவையுடை=உரித்துத் தனது உடலின் மேல் போர்த்துக் கொண்ட போர்வை, வண்ண உரிவை என்பதால் புலியின் தோலை குறிப்பதாக கொள்ளவேண்டும். திண்மை= வலிமை, இங்கே நதியின் தன்மையை குறிப்பதால், அகன்ற கெடில நதியைக் குறிக்கின்றது. அரண் முரண் ஏறு என்பதற்கு சிவபிரானை அடைந்தவர்க்கு அரணாகவும் அடையாதவர்க்கு முரணாகவும் இருக்கும் இடபம் என்றும் பொருள் கூறுவார்கள். குழைத்துப் பூசப்பட்ட திருநீறும், சந்தனமும் தனது உடலில் பூசிக்கொண்டவரும், சூளாமணி போல் சுடர்விடும் சந்திரனைத் தனது முடியில் அணிந்தவரும், புலியின் தோலை உரித்து அதனைத் தனது உடையாக ஏற்றவரும், வளர்கின்ற பவளக்கொடி போன்ற நிறம் கொண்ட மேனியை உடையவரும், போர்க்குணம் மிகுந்த இடபத்தைக் காவலாகக் கொண்டவரும், தனது அகன்ற மார்பினில் பாம்பினை அணியாக அணிந்தவரும் பலருக்கும் நன்மை செய்யும், திண்மையான கெடிலக் கரையில் உள்ள திருவதிகை நகரில் உறைபவரும் ஆகிய சிவபெருமானின் அடியானாகிய நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப் போவதும் இல்லை என்று அப்பர் பிரான் வீர முழக்கமிடும் பாடல்.

சுண்ண வெண் சந்தனச் சாந்தும் சுடர்த் திங்கள் சூளாமணியும்

வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்

அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும்

திண் நல் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

திருநீற்றினை விலையிலி சாந்தம் என்று அப்பர் பிரான் ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.8.9) குறிப்பிடுகின்றார். சந்தனம் மிகவும் விலை உயர்ந்த பொருள் என்பதை நாம் அறிவோம். சிவபெருமான், மலிந்து கிடந்து மற்றவரால் ஒதுக்கப்படும் பொருட்களையே விரும்பி அணிபவர் என்பதால், சுடுகாட்டில் கிடைக்கும் சாம்பலையே திருநீறாக அணியும் தன்மை இங்கே கூறப்பட்டுள்ளது. எருக்கு, கொன்றை, எலும்பு மாலை, பாம்பு, ஆகியவை போன்று மற்றவர்கள் விலக்கும் பொருட்கள் போல், திருநீறும் இறைவனால் விரும்பப்பட்டு உடல் முழுவதும் பூசிக் கொள்ளப் படுவதால் விலையிலி சந்தனம் என்று திருநீற்றினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். வடநாட்டில் பாயும் கங்கை நதி இங்கே வடகங்கை என்று அழைக்கப் படுகின்றது. உமையம்மை மற்றும் கங்கை இருவருக்கும் மணவாளராக சிவபெருமான் இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. வேட விகிர்தர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, வேடுவக் கோலம் தாங்கி அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளியதை குறிக்கும் என்றும் பொருள் கொள்ளலாம். மலை மங்கையாகிய உமையம்மையுடன், நமது நாட்டின் வடக்கே பாயும் கங்கையையும் தனது மனைவியாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தவர் சிவபெருமான். பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்தி, தனியாகச் சென்று பிச்சை ஏற்கும் பிச்சைப் பெருமான், அடியார்கள் அவரைக் குறித்து செய்யும் தவத்தால் மகிழ்ந்து அவர்களுக்கு அருள் புரிபவர் ஆவார். நறுமணம் கமழும் திருநீற்றினை, சந்தனமாக கருதி தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டு பல திருவிளையாடல்கள் புரிபவர் சிவபெருமான்: அவர் மற்றவர்களிடம் இருந்து பெரிதும் மாறுபட்டவர். மிகுந்த ஆரவாரத்துடன் பாற்கடல் கடையப்பட்ட சமயத்தில், அதனின்று கரிய நெருப்பு போன்று எழுந்த நஞ்சினை, சிறிதும் அஞ்சாமல் உண்டு அனைவரையும் காப்பாற்றியவர் சிவபிரான் தான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மலை மட மங்கையோடும் வடகங்கை நங்கை மணவாளராகி மகிழ்வர்

தலை கலனாக உண்டு தனியே திரிந்து தவவாணராகி முயல்வர்

விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்

அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே

சடையனார் என்றும் சாந்த நீற்றர் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் தில்லைச் தலத்தின் மீது அருளப்பட்ட பாடலாகும் (4.22.3). சடையன்,சடையனார் என்பது ஒப்பற்ற சடையினைக் கொண்ட சிவபெருமானுக்கு மட்டுமே உரித்தான பெயர்கள். சிவபெருமானின் சடை பல சிறப்புகளை உடையது. கடல் போல் பாய்ந்து வந்த கங்கை நீரினை ஏற்றுத் தேக்கிய சடை; அழிந்து தேய்ந்த நிலையில் தன்னை வந்து சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்த சடை; பல விதங்களிலும் வேறுபாடு கொண்ட தண்ணீர், சந்திரன், பாம்பு ஆகிய மூன்றினையும் ஏற்றுக்கொண்டு, மூன்றினையும் ஒருங்கே வைத்த சடை. இத்தகைய சிறப்புத் தன்மைகள் மற்றவர்களின் சடைக்கு இல்லை என்பதால், சடையன் என்பது சிவபெருமானுக்கே உரித்த தனிப் பெயராகும். தனி நிலா=ஒப்பற்ற நிலா; சாந்தம்=சந்தனம். மற்றவர்கள் வாசனை பொருந்திய சந்தனத்தை உடலில் பூச, அவர்களிலிருந்து மாறுபட்டவரான சிவபெருமான், திருநீற்றினை சந்தனம் என்று பூசிக் கொள்வதாக அப்பர் பிரான் இங்கே சொல்கின்றார். பெருமானின் எளிமையான திருக்கோலம் இங்கே குறிப்பிடப் படுகின்றது. சடையனார் என்று சிறப்பாக அழைக்கப்படும் சிவபெருமான், திருநீற்றையே சந்தனமாக தனது உடலில் பூசியுள்ளார். அவரது தலையில் ஏற்றுள்ள ஒப்பற்ற நிலவு ஒளி வீசுகின்றது; அவர் பிரமனின் மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்கின்றார்; நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த தில்லை நகரின் சிறப்பாகக் கருதப்படும் சிற்றம்பலத்தில், தனது திருவடிகளில் அணிந்துள்ள வீரக்கழல் ஆரவாரம் செய்யுமாறு, ஊழித்தீயின் இடையே நின்று சிவபெருமான் கூத்து நிகழ்த்துகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சடையனார் சாந்த நீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னிச்

உடையனார் உடைதலையில் உண்பதும் பிச்சை ஏற்றுக்

கடி கொள் பூந்தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே

அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.24.3) அப்பர் பிரான், நிலவு போன்று வெண்மை நிறத்தில் உடைய திருநீற்றினை, நறுமணம் கமழும் சந்தனமாக கருதி பூசிக் கொள்பவர் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். கொப்பளித்த பாதம்= தழும்பினை உண்டாக்கும் வண்ணம் இடைவிடாது இடபத்தின் மீது பெருமான் அமர்ந்து செல்லும் நிலை உணர்த்தப் படுகின்றது. கொப்பளித்த=பொருந்திய; அடையும்=சென்று சேரும் தன்மை; தக்கனிடம் கொண்டிருந்த அச்சத்தின் காரணத்தால், சந்திரனுக்கு அவனிட்ட சாபத்தை மாற்றும் விருப்பம் இல்லாதவர்களாக பிரமனும் மற்ற தேவர்களும் இருந்த பின்னணியில், பெருமான் சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்ததை, தேவர்கள் புகழ்ந்தனர் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த

சடையும் கொப்பளித்த திங்கள் சாந்தம் வெண்ணீறு பூசி

உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்தென்றும்

அடையும் கொப்பளித்த சீரார் அதிகை வீரட்டானாரே

சரக்கறை திருவிருத்தம் என்று அழைக்கப்படும் பொது பதிகத்தின் பாடலில் (4.111.3) திருநீற்றினை, அப்பர் பிரான், சாந்தாய வெந்த தவள வெண்ணீறு என்று குறிப்பிடுகின்றார். தகுணிச்சம்=முழவு வாத்தியத்தில் ஒரு வகை. பண்டைத் தமிழகத்தில் மூன்று விதமாக முழவு வாத்தியங்கள் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகின்றது. வீந்தார்=அழிந்தவர்கள்: தவளம்= வெண்ணிறம் கொண்டது: வீந்தார் தலைக் கலன் ஏந்தீ என்ற சொற்றொடருக்கு, ஊழிக் காலத்தில் அழியும், திருமால் மற்றும் பிரமன் உள்ளிட்ட பல தேவர்களின் தலைகளால் கோர்க்கப்பட்ட மாலையை அணிகலனாகக் கொண்டவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஊழிக்காலத்தில் அழியும் தேவர்களில் ஒருவனாகிய பிரமனின் தலையை, உண்கலனாக ஏந்திய இறைவனே, எனது விண்ணப்பத்தை நீ கேட்பாயாக: சந்தனமாக உனது உடலினில் பூசிக்கொள்ளும் வெண்மை நிறம் கொண்ட திருநீறும், தகுணிச்சம் எனப்படும் இசைக் கருவியும், தாமரை மலர் போன்று மிருதுவான மேனியில் புள்ளிகளைக் கொண்ட மானின் தோலும், புலித்தோலும் இருக்கும் கருவூலமாக எனது நெஞ்சத்தை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும். அவ்வாறு நீ அருள் செய்து எனது நெஞ்சத்தினை ஒப்பற்ற தனி நெஞ்சமாக மாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுவதாக அமைந்த பாடல்.

வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு

சாந்தாய வெந்த தவள வெண்ணீறும் தகுணிச்சமும்

பூந்தாமரை மேனிப் புள்ளி உழை மான் அதள் புலித்தோல்

தாந்தாம் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

திருநீற்றினை சாந்தமாகக் கொண்டவன் பெருமான் என்று மீயச்சூர் இளங்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (5.11.7) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பைங்கொன்றை= பசிய கொன்றை மலர்கள், புத்தம்புதிய கொன்றை மலர்கள்; தார்=மாலை; இடம்=நேரம், தகுந்த நேரம்; பூத கணங்களை படையாக கொண்டவனும், பசுமையான கொன்றை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையினை அணிந்தவனும், தனது சடையினில் கங்கை வெள்ளத்தை அடக்கியவனும், அனைவர்க்கும் சாந்தம் அளிக்கும் திருநீற்றினை அணிபவனும், இடபத்தினைத் தனது ஊர்தியாக கொண்டுள்ளவனும் ஆகிய சிவபெருமான், திருமீயச்சூர் தலத்தில் உள்ள இளங்கோயிலில், அடியார்கள் தகுந்த நேரத்தில் தன்னைப் புகழ்ந்து பாடி வணங்கும் வண்ணம் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

படைகொள் பூதத்தன் பைங்கொன்றை தாரினன்

சடைகொள் வெள்ளத்தன் சாந்த வெண் நீற்றினன்

விடைகொள் ஊர்தியினான் திரு மீயச்சூர்

இடை கொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே

திருவீழிமிழலை தலத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.12.2) அப்பர் பிரான் பெருமானை நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார் என்று குறிப்பிடுகின்றார். இந்த தலத்தில் ஆதிரைத் திருநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் தன்மையை அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். அனைவரையும் வெற்றி கொள்ளும் வல்லமை படைத்த ஈசனின் கொடி என்பதால் வெல்கொடி என்று சிறப்பித்து சொல்வதை நாம் உணரலாம். விரவுதல் என்றால் கலத்தல் என்பது பொதுவான பொருள்; இங்கே பூசிக்கொள்ளுதல் என்று பொருள் கொள்வது பொருத்தம். ஏனைய கொடிகளை வென்று வெற்றி வாகை சூடும் இடபக் கொடியினை உடையவன். இறைவன்; அவன் நிறைந்த திங்களைத் தனது சடையில் சூடியுள்ளான்; இந்த தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் ஆதிரைத் திருநாள் அன்று, எப்போதும் திருநீற்றினை சந்தனமாக தனது உடலெங்கும் பூசிக்கொள்ளும் இறைவன் சாம்பலைத் தவிர்த்து, நறுமணம் மிகுந்த கஸ்தூரி புனுகு ஆகிய வாசனைப் பொருட்களை பூசிக் கொண்டு வேறு கோலத்தில் காட்சி அளிக்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஏற்று வெல்கொடி ஈசன் தன் ஆதிரை

நாற்றம் சூடுவர் நல் நறும் திங்களார்

நீற்றுச் சந்தன வெள்ளை விரவலார்

வேற்றுக் கோலம் கொள் வீழிமிழலையே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.24.9) அப்பர் பிரான் பெருமானை, சாந்த வெண் நீற்றினர் என்று குறிப்பிடுகின்றார், வேதத்தர்=வேதம் ஓதுபவர்; கீதத்தர்=இன்னிசைப் பாடல்களை பாடுபவர்; அல்கும்=சுருங்கும்; பூத கணங்களை தனது படை வீரர்களாக கொண்டவரும், வேதங்களை விரும்பி ஓதுபவரும், இன்னிசை கீதங்களை விரும்பிப் பாடுபவரும், தனது சடையில் கங்கை நீரினைத் தேக்கி அடைத்தவரும், வெண்ணீற்றினை நறுமணம் மிகுந்த சந்தனமாக பாவித்துத் தனது உடல் முழுவதும் பூசிக் கொள்பவரும், புலித்தோலினை தனது உடையாக உகந்து ஏற்றுக் கொண்டவரும், ஆகிய பெருமான் திருவொற்றியூர் தலத்தில் உறைகின்றார். அவரை அடைந்து அவரது திருவடிகளை வணங்கும் அடியார்களின் வினைகள் சுருங்கிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை;

படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்

சடைகொள் வெள்ளத்தர் சாந்த வெண் நீற்றினர்

உடையும் தோலும் உகந்தார் உறை ஒற்றியூர்

அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே

சாந்த வெண்ணீறணி அழகர் என்று பெருமானை திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.52.8) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சாந்தம்=சந்தனம்; ஏனையோர் நறுமணம் வீசும் சந்தனத்தை விரும்பி உடல் முழுவதும் பூசிக் கொள்வது போன்று, திருநீற்றினை இறைவன் தனது உடல் எங்கும் பூசிக் கொள்ளும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. பொதுவாக பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் வயது முதிர்ந்தவராகவும் மாணவர்கள் இளைஞர்களாக இருக்கும் நிலையையே நாம் எங்கும் காண்கின்றோம். பெருமான் இந்த விதத்திலும் மற்றவரிடமிருந்து மாறுபட்டவராக, இருப்பதை நாம் காண்கின்றோம். பாடம் கேட்ட சனகாதி முனிவர்கள் முதியவராக காணப்பட, அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் பெருமான் மிகவும் இளையவராக இருக்கும் நிலையை நாம் பல திருக்கோயில்களில் உள்ள சிற்பங்களில், தென்முகக்கடவுளின் சிற்பங்களில் காண்கின்றோம், இந்த நிலையை உணர்த்தும் பொருட்டு, இளமையுடன் அழகாக விளங்கும் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கழலினைத் தனது காலில் அணிந்துள்ள பெருமான், தனது அடியானாகிய சிறுவன் மார்க்கண்டேயனது உயிரைக் கவர வந்த இயமனின் மீது கோபம் கொண்டு அவனைக் காலால் உதைத்தவர் ஆவார். கொழுந்து விட்டு எரியும் தழலின் நிறத்தை உடைய பெருமான், தனது உடலெங்கும் சந்தனம் பூசிக் கொள்வது போன்று திருநீற்றினைப் பூசிக்கொண்டு மிகவும் அழகராக காணப்படுகின்றார். ஆல மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு வேதங்களின் பொருட்களை விளக்கிய பெருமான், இளையவராகவும் அழகியராகவும் காணப்படுகின்றார். இத்தகைய தன்மைகள் கொண்ட பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கழல் கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்

தழல் கொள் மேனியர் சாந்த வெண்ணீறு அணி

அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய

குழகர் போல் திரு நாகேச்சரவரே

திருப்புன்கூர் மற்றும் திருநீடூர் தலங்களின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.11.6) அப்பர் பிரான், வேறு எவரும் பூசிக்கொள்ள விரும்பாத சுடுகாட்டுச் சாம்பலை, சந்தனமாக கருதி பூசிக் கொள்பவர் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். பூணலாப் பூண்=எவரும் அணிய முடியாத அணிகலன், கொடிய விடம் கொண்டு படம் எடுத்தாடும் பாம்பினை அணிகலனாக உடலில் பூணும் வல்லமை உடையவன் சிவபெருமான் ஒருவனே என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. ஊணலா ஊணான்=தான் உண்பதற்காக அன்றி பிச்சை எடுப்பவன்; பிச்சை எடுத்த உணவினை உண்ணாத போது அவன் எதற்காக பிச்சை எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயற்கை. இறைவன் பிச்சை எடுப்பதே, தான் வாழ்வதற்கன்றி என்பதையும், உலகத்தவர்கள் தங்களது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மலங்களை பிச்சையாக இறைவனிடம் சமர்ப்பித்து தாங்கள் உய்வதற்காகத் தான் என்பதையும் பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. எவரும் அணிவதற்கு தயக்கம் கொள்ளும் பாம்பினை, அணிகலனாகத் தனது உடலில் அணிந்தவன் சிவபெருமான்; மற்றவர்கள் பூசிக் கொள்ள விரும்பாத சுடுகாட்டு சாம்பலைத் தனது உடலில், சந்தனம் பூசிக் கொள்வது போன்று மிகவும் விருப்பத்துடன் அணிந்து கொள்பவன் சிவபெருமான்; புலால் நாற்றம் வீசும் மண்டையோட்டில் பிச்சை எடுத்த உணவினை உண்ணாதவன் சிவபெருமான். மேற்கண்ட அவனது செய்கைகளின் காரணத்தை எவரும் அறிந்திலர். ஒளி திகழும் மேனியை உடையவனும், மிகவும் சிறந்த செம்மையான பவளக் குன்றினை ஒத்த மேனியை உடையவனும் ஆகிய திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவலோகனும், மிகுதியான மலர்கள் காணப்படும் வயல்களை உடைய நீடூர் தலத்து இறைவனும் ஆகிய இறைவனை, கீழ்க்குணம் கொண்ட நான் நினையாமல் இருந்தது அறிவீனம் ஆகும் என்று குறிப்பிட்டு அப்பர் பிரான் வருந்தும் பாடல்.

பூணலாப் பூணானைப் பூசாச் சாந்தம் உடையானை முடைநாறும் புன்கலத்தில்

ஊணலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளிதிகழும் மேனியானைச்

சேணுலாம் செழும்பவளக் குன்று ஒப்பானைத் திருப்புன்கூர் மேவிய சிவலோகனை

நீணுலா மலர்க்கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையாவாறே

வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.58.7) அப்பர் பிரான், பெருமானை, பசுஞ்சாந்தம் கொண்டணிந்தவர் என்று குறிப்பிடுகின்றார். மேனி எல்லாம் என்று குறிப்பிட்டு இருப்பதால், பசுஞ்சாந்தம் என்று திருநீற்றினை குறிப்பிடுகின்றார் என்பது தெளிவாகின்றது. பசுவிலிருந்து கிடைக்கும் சாணத்திலிருந்து தானே திருநீறு தயாரிக்கப் படுகின்றது. எனவே திருநீறு என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம். வேறோர் ஊர் புகுவார் போல வலம்புரமே புகுந்தார் என்று சொல்வதன் மூலம், அப்பர் நாயகி தன்னை வலம்புரத்து அடியாரில் ஒருவராக கருதுகின்றாள் என்பது புலனாகின்றது. பசுஞ்சாந்து=குளிர்ந்த சந்தனம் என்றும் பொருள் கொள்ளலாம். வட்டணைகள்= சுழன்றுசுழன்று; தனது ஊர் வலம்புரம் அல்ல என்பதை உணர்த்திய பெருமான், இறுதியில் வலம்புரம் தலத்தில் புகுந்தது, தன்னைத் தவிர்க்க வேண்டும் என்று நோக்கத்துடன் செயல்பட்டது என்ற முடிவுக்கு வந்த அப்பர் நாயகி, பெருமானது பேச்சினை மாயப் பேச்சு என்று சுட்டிக் காட்டுகின்றாள். பட்டாடையினை உடுத்தியவராய், பவளம் போன்று சிவந்த தனது மேனியில் சந்தனம் பூசியவராய், தனது திருவடிகள் வருந்துமாறு தனது பாதங்களை ஊன்றியும் தூக்கியவராகவும் நடனம் ஆடிய பெருமான், இந்த தலம் வந்த போது அவரைக் கண்ட நான், அடிகளே உமது ஊர் எந்த ஊர் என்று கேட்டேன். அவ்வாறு கேட்ட என்னை விழித்துப் பார்த்து எனது உள்ளத்தினை கொள்ளை கொண்ட பெருமான், எனக்கு விடை ஏதும் சொல்லாமல், தனது ஊர் வலம்புரம் அல்ல என்பதை உணர்த்துவார் போன்று, மிகவும் வேகமாக நடந்து, மற்றொரு ஊருக்குச் செல்வதாக எனக்கு போக்கு காட்டினார். சுழன்றுசுழன்று, மிகவும் வேகமாக வேறோர் தலத்திற்குச் செல்வதாக அவர் செயல்பட்ட விதம், எனது வருத்தத்தை அதிகரித்தது; அவரது பிரிவால் எனது உயிர் உடலிலிருந்து பிரியும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். ஆனால் அவரோ, பல மாயங்கள் பேசி, இறுதியில் வலம்புரம் தலத்தில் புகுந்து நிலையாக நிலை பெற்று உறைகின்றார். எனவே, தனது ஊர் வலம்புரம் அல்ல என்று என்னிடம் பேசியது, என்னைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பேசிய மாயமான பேச்சுகள் தாம் என்று அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.

பட்டுடுத்துப் பவளம்போல் மேனிஎல்லாம் பசுஞ்சாந்தம் கொண்டணிந்து பாதம்நோவ

இட்டெடுத்து நடமாடி இங்கே வந்தார்க்கு எவ்வூரீர் எம்பெருமான் என்றேன் ஆவி

விட்டிடுமாறு அது செய்து விரைந்து நோக்கி வேறோர் பதி புகப் போவார் போல

வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.83.10.) அப்பர் பிரான் சாந்தம் என்று கருதி திருநீறு அணிந்த பெருமானின் மலை கயிலை மலை என்று குறிப்பிடுகின்றார். பாந்தள்=பாம்பு; ஏந்து=உயர்ந்த; தாள் என்ற சொல் இங்கே கால் விரலை குறிக்கும்; சாந்தம்=சந்தனம்; நீண்ட கிரீடங்களை அணிந்த தலைகளை உடைய அரக்கன் தலைவன் இராவணன் பரந்த தனது கைகளைக் கொண்டு கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் அசைத்திடலும், அதனால் அச்சம் கொண்டு மென்மையான இயல்புகள் கொண்ட அன்னை பார்வதி தேவி நடுங்கியதைக் கண்ட பெருமான், மிகவும் விரைவாக செயல்பட்டு தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றினார். சாம்பலை நறுமணம் மிகுந்த சந்தனமாக கருதி தனது உடலெங்கும் பூசிக்கொண்ட பெருமானின் கால் விரல் கயிலை மலை மீது அழுந்தியதால் அரக்கன் இராவணனது மிகவும் உயர்ந்த திரண்ட தோள்களும் பத்து தலைகளும் மலையின் கீழே நசுக்குண்டு அரக்கன் வருந்தினான். பின்னர் அரக்கன் தனது தவற்றினை உணர்ந்து பெருமானைப் புகழ்ந்து இனிய சாமகானம் பாட, அவன் மீது இரக்கம் கொண்ட பெருமான், அரக்கனுக்கு பல விதமான வரங்களையும் அளித்தார். அவர் தனது சடையில் பாம்பினை அணிந்துள்ளார். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் பாசூர் தலத்தில் பொருந்தி உறையும் பரஞ்சுடராக இருக்கின்றார் அவரைக் கண்டு தொழுது அடியேன் வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல்.

வேந்தன் நெடுமுடி உடைய அரக்கன் கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடிச்

சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பைத் தடக் கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி

ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன் தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட

பாந்தள் சடைமுடி எம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே

திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.19.4) சுந்தரர், பெருமான் உவகையுடன் ஏற்றுக்கொள்ளும் பொருட்கள் எவையெவை என்று பட்டியல் இடுகின்றார். வேதத்தின் ஆறு அங்கங்களை விரும்பிச் செய்தவரும், வலிமை வாய்ந்த இடபத்தை வாகனமாக விரும்பி ஏற்றவரும், ஏழிசைகளையும் விரும்பிக் கேட்பவரும், பகீரதனுக்கு அருள் புரியும் பொருட்டு கங்கை நதியினைத் தனது சடையில் விரும்பி ஏற்றவரும், முப்புரி நூலை விரும்பி அணிபவரும், பூசிக் கொள்கின்ற சந்தனமாக திருநீற்றினை மிகுந்த விருப்பத்துடன் தனது திருமேனியில் பூசியவரும் ஆகிய பெருமான்,நால்வேதங்களை ஓதியவாறு எங்கும் நிறைந்து காணப்படும் பெருமான், எழுந்தருளியுள்ள இடம் திருநின்றியூர் என்று இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார். கங்கை தன்னை வேறு உகந்தார் என்று கூறுவது சற்று சிந்திக்கத் தக்கது. பெருமான் தனது உடலினில் உமை அன்னையையும் சடையினில் கங்கை நங்கையையும் ஏற்றுக் கொண்டுள்ள தன்மையை நாம் அறிவோம். அருளே வடிவமாக விளங்கும் உமையன்னையைத் தனது உடலில் பெருமான் ஏற்றுக் கொண்டது பொதுவாக உயிர்களுக்கு அருள் புரியும் நோக்கத்தை உடையது. கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டது, பகீரதனுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் என்பதால், உமை அன்னையை ஏற்றுக் கொண்டுள்ள நோக்கத்திலிருந்து மாறுபட்டது என்பதை உணர்த்தும் வண்ணம் வேறு உகந்தார் என்று சுந்தரர் கூறுகின்றார். கங்கை நதியினை ஏற்ற செய்கையும் பின்னர், பாரத நாட்டின் ஒரு பகுதி செழிப்புடன் விளங்க கங்கை நதி, உதவுவதையும் நாம் இங்கே நினைக்கவேண்டும்.

ஆறு உகந்தார் அங்கம் நான்மறையார் எங்குமாகி அடல்

ஏறு உகந்தார் இசை ஏழு உகந்தார் முடிக் கங்கை தன்னை

வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தமதா

நீறு உகந்தார் உறையும் இடமாம் திரு நின்றியூரே

பெருமானின் எளிய தன்மையை குறிப்பிட்டு, பெருமானே ஏன் உனக்கு வேறு பொருட்கள் கிடைக்கவில்லையோ என்று நகைச்சுவையாக குறிப்பிடும் ஒரு பாடலில் (7.44.2) சுந்தரர் திருநீற்றினைத் தவிர்த்து உமக்கு நறுமணம் வீசும் பொருள் ஏதும் பூசிக் கொள்வதற்கு கிடைக்கவில்லையா என்று கேட்பதை நாம் இங்கே காணலாம். தூறு=காடு;

தூறு அன்றி ஆடரங்கு இல்லையோ சுடலைப் பொடி

நீறன்றி சாந்தம் மற்றில்லையோ இமவான் மகள்

கூறன்றிக் கூறு ஆவது இல்லையோ கொல்லைச் சில்லை வெள்

ஏறு அன்றி ஏறுவதில்லையோ எம் பிரானுக்கே

திருமுருகன்பூண்டி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.49.9) தன்னந்தனியாக காட்டில் இருப்பது ஆபத்து அல்லவா என்று பரிவுடன் கேட்கும் பாடலில், திருநீற்றினை சந்தனமாக பூசிக் கொண்டு எளிய தோற்றத்துடன் பெருமான் இருப்பதை சுந்தரர் குறிப்பிடுகின்றார். தனது தோழன் சேரமான் பெருமான் அளித்த எண்ணற்ற பரிசுப் பொருட்களுடன் சுந்தரர் திருவாரூருக்கு திரும்பிச் செல்லும் வழியில் வேடுவர்கள் சுந்தரரின் பரிசுப் பொருட்களை கொள்ளையடித்த பின்னணியில், தன்னந்தனியாக பெருமான், இந்த தலத்தினில் வீற்றிருப்பது அவருக்கு கவலை அளிக்கவே, பெருமானின் நிலை கண்டு பரிந்து, பெருமானே வழிப்பறி கொள்ளையர் நிறைந்த இந்த காட்டினில் பலவிதமான நகைகளைத் தனது மார்பினில் தாங்கிய உமையன்னையுடன் பாதுகாப்பு ஏதுமின்றி தனியாக ஏன் வீற்றிருக்கின்றீர் என்று கவலையுடன் கேட்கின்றார். தனக்குத் தோழனாக இருந்து பல சமயங்களில் உதவி செய்த பெருமானின் நிலை கண்டு சுந்தரர் கவலை கொள்வது இயற்கை தானே.

சாந்தமாக வெண்ணீறு பூசி வெண் பல் தலைக் கலனா

வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் பாகம் வைத்து உகந்தீர்

மோந்தையோடு முழக்கு அறா முருகன்பூண்டி மாநகர் வாய்

ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம் பிரானீரே

திருவாசகம் அன்னைப்பத்து பதிகத்தின் பாடலில் (8.17.8) மணிவாசகர் சந்தனச் சாந்தினர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். தலைவியின் பேச்சுகளையும் செய்கைகளையும் உற்று கவனித்த தோழியின் கூற்றாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம். தலைவியின் போக்கினில் மாற்றத்தை உணர்ந்த அவளது தாய், அந்த மாற்றத்திற்கு காரணம் யாது என்பதை அறியமுடியாதவளாக இருக்கின்றாள். அதன் காரணத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் அவள், தலைவியின் தோழியை அணுக, அந்த தோழி, தலைவியின் நடவடிக்கை மூலம் தான் அறிந்து கொண்ட தகவல்களை, தலைவியின் தாய்க்கு உணர்த்துவதால், மிகவும் பொருத்தமாக இந்த பதிகத்திற்கு அன்னைப் பத்து என்ற தலைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. தாளி அறுகு=அறுகம்புல்; மிகவும் எளிமையாக அறுகம்புல் மாலையினை அணிந்து கொள்ளும் பெருமான், நறுமணம் வீசும் சந்தனத்தை பூசிக்கொண்டுள்ளார் என்று சொல்வது பொருத்தமாக காணப்படவில்லை. எனவே, திருநீற்றினை சந்தனமாக பாவித்து பெருமான் அணிந்து கொண்டுள்ளார் என்று பொருள் கொள்வதே பொருத்தமாக உள்ளது. எளிமையான கோலத்துடன், அறுகம்புல் மாலையை அணிந்து கொண்டு, திருநீற்றைனை பூசிக் கொண்டுள்ள பெருமான், தனது உள்ளத்தைக் கவர்ந்து ஆட்கொண்டார் என்று சொல்லும் மணிவாசகநாயகி, பெருமான் தனது கையினில் தாளம் ஏந்தியவாறு காணப்பட்டதாகவும் சொல்கின்றாள் என்று தோழி இங்கே உணர்த்துகின்றாள். மிகவும் எளிமையான கோலத்துடன் காணப்படும் பெருமான், வேறெதிலும் நாட்டம் கொள்ளாமல் வேத கீதங்களை தாளத்துடன் இசைத்துப் பாடும் பொருட்டு, தாளம் ஏந்தியதாக குறிப்பிடுகின்றாள் போலும்.

தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்

ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்

ஆளெம்மை ஆளும் அடிகளார் தம் கையில்

தாளம் இருந்தவாறு அன்னே என்னும்

சாட்டியக்குடி தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.15.2) கருவூர்த் தேவர், பெருமானை, திருநீற்றினை சந்தனமாக கருதி அணிபவர் என்று கூறுகின்றார். பாந்தள்=பாம்பு; சாட்டியக்குடி என்பது தலத்தின் பெயர்; ஏழிருக்கை என்பது திருக்கோயிலின் பெயர்; ஏந்தெழில்=எழுச்சி மிகுந்த அன்பினை உடைய; பரிகலம்=உண்கலம்; பட்ட வர்த்தனம்= பெருமைக்குரிய வாகனம்; மஞ்சன சாலை=குளிக்கும் இடம்;

பாந்தள் பூணாரம் பரிகலம் கபாலம் பட்டவர்த்தனம் எருது என்பர்

வார்ந்த கண் அருவி மஞ்சன சாலை மலைமகள் மகிழ் பெருந்தேவி

சாந்தமும் திருநீறு அருமறை கீதம் சடைமுடி சாட்டியக்குடியார்

ஏந்தெழில் இதயம் கோயில் மாளிகை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே

பொழிப்புரை:

சூலத்தைத் தனது படைக்கலமாக கொண்டுள்ள பெருமான், சுடுகாட்டு சாம்பலை நறுமணம் மிகுந்த வாசனைப் பொடியாகவும் குழைத்த சந்தனமாகவும் பாவித்து, தனது உடல் முழுவதும் பூசிக்கொண்டு, பால் போன்று வெண்ணிறத்தில் அமைந்துள்ள பிறைச் சந்திரனைத் தனது பவள நிறத்தில் உள்ள சடைமுடியில் மேலே வைத்துள்ளார். பண்டைய நாளில் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சி செய்த இயமனின் வலிமையைத் தனது காலினால் இயமனை உதைத்து வீழ்த்திய பெருமான், நறுமணம் கமழும் நீல மலர்கள் நிறைந்த நீர்நிலைகள் கொண்டுள்ள நின்றியூரில் நிலையாக உறைகின்றார்.

பாடல் 2:

சூலம்பொடி சுண்ணப்பொடி (1.018)பாடல் 1 தொடர்ச்சி மற்றும் பாடல் 2 (திதே 0422)

சூலம்பொடி சுண்ணப்பொடி (1.018) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0423)

சூலம்பொடி சுண்ணப்பொடி (1.018) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0424)

சூலம்பொடி சுண்ணப்பொடி (1.018) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0425)

சூலம்பொடி சுண்ணப்பொடி (1.018) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0426)

சூலம்பொடி சுண்ணப்பொடி (1.018) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0427)

சூலம்பொடி சுண்ணப்பொடி (1.018) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0428)

சூலம்பொடி சுண்ணப்பொடி (1.018) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0429)

சூலம்பொடி சுண்ணப்பொடி (1.018) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0430)

சூலம்பொடி சுண்ணப்பொடி (1.018) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0431)

அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார்

நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்

நச்சம் மிடறு உடையார் நறுங்கொன்றை நயந்து ஆளும்

பச்சம் உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே

விளக்கம்:

நஞ்சம் என்பது எதுகை நோக்கி நச்சம் என்று திரிந்தது. பக்ஷம் என்ற வடமொழிச் சொல் பட்சம் என்று தமிழ்ச் சொல்லாக மாற்றப் பட்டுள்ளது. வேற்றுமை பாராட்டி ஒரு பாலாருக்கு பரிந்து செயல் புரிதல் என்று பொருள்; தீயவினைகள் அகற்றப் படுவதால் அத்தகைய தீவினைகள் விளையும் கேடும் அகற்றப் படுகின்றன. நித்தம் என்ற சொல்லும் எதுகை கருதி நிச்சம் என்று மாற்றப் பட்டுள்ளது. பெருமான் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கின்றார் என்று திருஞான சம்பந்தர் உணர்த்துவது, தனது அடியார்களுக்கு பல விதமான நன்மைகளை புரியும் பெருமான், அடியார் அல்லாதவர்களுக்கு அத்தகைய நன்மை புரியார் என்பதே ஆகும். இந்த தன்மையை அப்பர் பிரான் மிகவும் அழகாக நமச்சிவாயப் பதிகத்தில் சொல்வதை நாம் கீழ்க்கண்ட பாடல் மூலம் (4.11.6) உணரலாம். சலம்=வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை. எப்போதும் ஒரே தன்மையுடன் தோன்றுபவன். சங்கரன்=இன்பம் அளிப்பவன்.

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்

நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்

குலமிலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்

நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே

உள்ளொன்றும் புறமொன்றுமாக இல்லாமல், எப்போதும் ஒரே தன்மையுடன் காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான், என்பதே மேற்கண்ட பாடலின் திரண்ட பொழிப்புரை. .

பெருமானது அடியார்கள் அச்சம் ஏதும் இல்லாதவராக இருப்பார்கள் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அனைவரிலும் வலியவனாக உள்ள பெருமான் துணையாக இருக்கையில் பெருமானின் அடியார்கள் எதற்காகவும் எவரிடமும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதை இங்கே உணர்த்துகின்றார். அவர் இவ்வாறு கூறுவது நமக்கு திருநாவுக்கரசர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவூட்டுகின்றது. தங்களுடன் இருந்த போது தீராத வயிற்று வலியால் வருந்திய தருமசேனர், திருவதிகைப் பெருமானின் அருளினால் தனது வயிற்றுவலி (சூலைநோய்) நீங்கப்பெற்று பெருமானின் அருளினால் சைவராக மாறியதை அறிந்த சமண குருமார்கள் இந்த மாற்றம் தங்களது மதத்தின் பால் மக்கள் வைத்திருந்த மதிப்பினை வேகமாக குறைத்துவிடும் என்று அச்சம் கொண்டு உண்மையை திரித்து மன்னனிடம் சொல்லவும், தருமசேனரை பழிவாங்கவும் முயற்சி செய்தனர். சைவ சமயத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த தனது தமக்கையாருடன் கூடுவதற்காக, தான் பொய்யாக உருவாக்கிக் கொண்ட சூலை நோய் தீரவில்லை என்ற நாடகம் நடத்தி, சூலை நோய் சமண சமய மருத்துவர்களால் தீர்க்கப்படவில்லை என்று சமண சமயத்திற்கு ஒரு இழுக்கினை ஏற்படுத்தி, சமணசமய குருமார்களுக்கான விதிகளை மீறியதும் அல்லாமல், சமண சமயத்தை மிகவும் இழிவாகவும் தருமசேனர் பேசினார், என்று பல்லவ மன்னனிடம் சமண குருமார்கள் முறையிட்டனர். பல்லவ மன்னன் அவரை அழைத்து, தீர விசாரித்து, தக்க தண்டனை அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். பல்லவ மன்னனும் தனது படைவீர்ர்களை அமைச்சர்களுடன் அனுப்பி, திருநாவுக்கரசரை (தருமசேனர் என்ற பெயர் பெருமானால் நாவுக்கரசர் என்று மாற்றப்பட்டது.) சிறை பிடித்து வருமாறு கட்டளையிட்டான். தன்னை அணுகிய அமைச்சர்களை நோக்கி நாவுக்கரசர், உமது மன்னனின் ஆணையினைக் கேட்டு அதன் வழியே உமது மன்னனைச் சாரும் நிலையில் தான் இல்லை என்று விடை அளித்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார்.

நாமார்க்கும் குடி அல்லோம் என்றெடுத்து நான்மறையின்

கோமானை நதியினுடன் குளிர்மதி வாழ் சடையானைத்

தேமாலைச் செந்தமிழின் செழும் திருத்தாண்டகம் பாடி

யாமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள் செய்தார்

மன்னனின் கட்டளை தனக்குப் பொருந்தாது என்று வீரமொழி பேசிய நாவுக்கரசர், அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை என்று கூறிய பாரதி உட்பட பல புலவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்ததை இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது. அந்த தருணத்தில் அப்பர் பிரான் அருளிய பதிகம் தான் நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் இந்த பதிகம் (6.98). இயமனுக்கும் அஞ்சமாட்டோம் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் அப்பர் பிரான் முழங்குவதை நாம் உணரலாம்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை

தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண் குழை ஓர் காதில்

கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடி குறுகினோமே

சமண குருமார்களின் போதனையால் மதி மயங்கிய பல்லவ மன்னன், அப்பர் பிரானை சுண்ணாம்புக் காளவாயில் இடுமாறு கட்டளை இடுகின்றான். இறைவனின் அருளால் உயிர் பிழைத்த அப்பர் பிரானை இடறித் தள்ள பட்டத்து யானை ஏவப்படுகின்றது. அப்போது அருளிய பதிகத்தில், இறையவனின் அடிமையாக இருக்கும் தான் எதற்கும் அஞ்சுவதில்லை என்றும் தம்மை அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் ஏதும் நிகழாது என்றும் அப்பர் பிரான் மிகவும் உறுதியுடன் கூறுகின்றார். இந்த பதிகத்தின் (4.02) முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. சாந்து என்ற சொல் இரண்டு சொற்களுக்குப் பொதுவாக வருகின்றது. சுண்ணவெண் சாந்து மற்றும் சந்தனச் சாந்து என்றும் பொருள் கொள்ளவேண்டும். வெண் சாந்து=வெள்ளை நிறமுடைய திருநீறு. தமர்=அடியவர். அகலம்=மார்பு, சுண்ணம்=பொடி, முரண்=போர்க்குணம் மிகுந்த. உரிவையுடை=உரித்துத் தனது உடலின் மேல் போர்த்துக் கொண்ட போர்வை, வண்ண உரிவை என்பதால் புலியின் தோலை குறிப்பதாக பொருள் கொள்ளவேண்டும். திண்மை=வலிமை, இங்கே நதியின் தன்மையை குறிப்பதால், அகன்ற கெடில நதியைக் குறிக்கின்றது. அரண் முரண் ஏறு என்பதற்கு சிவபெருமானை அடைந்தவர்க்கு அரணாகவும் அடையாதவர்க்கு முரணாகவும் இருக்கும் இடபம் என்றும் பொருள் கூறுவார்கள்.

சுண்ண வெண் சந்தனச் சாந்தும் சுடர்த் திங்கள் சூளாமணியும்

வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும

அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும்

திண் நல் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

பாவம் இலர் கேடும் இலர் என்ற தொடருக்கு, அடியார்கள் யான் எனது என்கின்ற செருக்குடன் கூடிய எண்ணம் இல்லாமல் இருப்பதால், அவர்களுக்கு ஆகாமிய வினைகளும் அவற்றால் விளையும் கேடுகளும் இருப்பதில்லை என்று பெரியோர்கள் விளக்கம் கூறுகின்றனர். பண்டைய வினைகளை நுகர்ந்து கழிக்கும் உயிர்கள், அந்த வினைகளால் ஏற்படும் துன்பங்களையும் இன்பங்களையும் அனுபவிக்கும் போது தாங்கள் செய்யும் செயல்களால், எண்ணும் எண்ணங்களால் மேலும் வினைகளை பெருக்கிக் கொள்கின்றன. அவ்வாறு வளரும் வினைகளை ஆகாமிய வினைகள் என்று கூறுவார்கள். இவ்வாறு மேலும்மேலும் வினைகளை பெருக்கிக் கொள்வதால், உயிர் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து, பழைய வினைகள் மற்றும் புதியதாக தோன்றும் ஆகாமிய வினைகள் ஆகியவற்றின் அழுத்தத்தால், விடுபட முடியாமல் தவிக்கின்றது, ஆனால் பெருமானின் அடியார்கள் அனைத்தும் இறைவனின் செயல் என்று ஏற்றுக்கொண்டு செயல்படுவதால், வினைகளால் மாற்றம் ஏதும் விளையாத தற்போத நிலையில் இருப்பதால், ஆகாமிய வினைகள் தோன்றுவதில்லை; அவற்றால் ஏற்படும் கேடுகளும் தவிர்க்கப் படுகின்றன.

இந்த பாடலில் திருஞானசம்பந்தர், பெருமானின் திருப்பாதம் பணியும் அடியார்கள் நோய் அற்றவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றார். திருவலிதாயம் என்று அழைக்கப்படும் சென்னை நகரத்து பாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.03.01) திருஞான சம்பந்தர், பெருமான் பால் சித்தம் வைத்த அடியார்கள் மேல் நோய்கள் அடையா என்று கூறுகின்றார். பத்தரோடு பலரும் என்ற தொடருடன் இந்த பதிகத்தின் முதல் பாடலை திருஞானசம்பந்தர் தொடங்குகின்றார். பெருமானைத் தொழும் அடியார்கள் அனைவரும் பக்தியுடன் தானே இறைவனைத் தொழுகின்றனர். அவ்வாறு இருக்கையில் பத்தர்கள் மற்றும் பலர் என்று ஏன் வேறுபடுத்தி காட்டுகின்றார் என்ற ஐயம் நமக்கு எழலாம். பொதுவாக பக்தர் என்ற வடமொழிச் சொல் பத்தர் என்றே தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுகின்றது. ஆனால் இங்கே பத்தர் என்ற சொல் பத்து குணங்களை உடையவர் என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது போலும். அதனால் பத்தரோடு பலரும் என்று கூறுகின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. பத்து கொலாம் அடியார் செய்கை தானே என்ற அப்பர் பிரானின் திருவாய்மொழி (4.18.10) நமது நினைவுக்கு வருகின்றது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அடியார்களை பத்தர் என்ற சொல் மூலம் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர்.. பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்கள் மற்றும் சிவச்சரிதைகள் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் என்பன ஆகும். பத்து அக குணங்கள், சிவபெருமானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் என்பன ஆகும். இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த அடியார்களும் மற்றும் வேறு பல அடியார்களும் வலிதாயத்து இறைவனை தொழுவதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பொலிய=அழகுடன் விளங்கும்; ஒத்த=ஒப்பிடும் வகையில்; ஒரு குழுவாக சேர்ந்து வேத மந்திரங்கள் சொல்லியும் பதிகங்கள் பாடியும் இறைவனை வழிபடும் அடியார்கள் ஒருமித்து ஒரே இசையுடன் வேத மந்திரங்கள் சொல்வதையும் பதிகங்கள் பாடுவதையும் நாம் இன்றும் காண்கின்றோம். உயர் சென்னி=எப்போதும் உயர்ந்து காணப்படும் பெருமானின் தலை; தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாக விளங்கும் பெருமானுக்கு, எவரையும் தனது தலையை தாழ்த்தி வழிபடவேண்டிய அவசியம் எப்போதும் ஏற்படுவதில்லை. இந்த தன்மையை சேர்ந்தறியா கையான் என்று மிகவும் அழகாக மணிவாசகர் திருவாசகத்தில் (திருவம்மானை 13ஆம் பாடல்) குறிப்பிடுகின்றார். மத்தம்=ஊமத்தை மலர்: இறைவன் எங்கும் நிறைந்தவனாக, அனைத்துப் பொருட்களுடனும் அந்தந்த பொருட்கள் அழியும் வரையிலும் இணைந்தும், அனைத்து உயிர்களும் தமக்குரிய உடல்களுடன் பிணைந்து உள்ளளவும் இணைந்து பிரியாது நிற்கின்றான்; எனினும் இந்த தன்மையை நாம் உணர்ந்து, இவ்வாறு நம்முடன் இணைந்து நம்மை இயக்கும் இறைவனை நமது மனக் கண்ணால் கண்டு அவனை வழிபடுவதில்லை. இதனை உணரும் இறைவன், நமது நலன் கருதி, மிகவும் எளியவனாக நிலவுலகம் வந்து, பல திருக்கோயில்களில் நிலையாக பொருந்தி உறைவதன் மூலம், நாம் அனைவரும் அவனை வழிபட்டு உய்வினை அடையும் பொருட்டு, நம்பால் மிகுந்த கருணை கொண்டு, விளங்குகின்றான். இந்த உண்மையைத் தான், பிரியாது உறைகின்ற வலிதாயம் என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் விளக்குகின்றார். இடர்=வினைகளால் வரும் துன்பங்கள்; நோய்=பிறவிப்பிணி நோய் என்றும் பொருள் கொள்வதும் சிறப்பே; சிறந்த பத்து குணங்கள் உடையவர்களாகத் திகழும் அடியார்களும் வேறு பலரும் ஒன்று கூடி, தங்களது உள்ளங்கைகளில் கொண்டுள்ள அழகிய மலர்களுடன் நீரினைக் கலந்து அர்க்கியம் விட்டு, தாங்கள் இறைவனை வழிபட சித்தமாக இருப்பதை தெரிவிக்க, குழுக்களாக ஒன்று சேர்ந்து ஒன்றுபட்ட இசையுடன் வேத மந்திரங்களையும் பதிகங்களையும் அன்பர்கள் இசைக்க, உலகின் பல இடங்களில் உள்ளவர்களும் வலிதாயத்து பெருமானைத் தொழுதும் புகழ்ந்தும் வணங்குகின்றனர். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமையால் எவரையும் வணங்க வேண்டிய அவசியமற்றவனாகத் திகழ்வதால், தாழ்ந்து அறியாது எப்போதும் உயர்ந்து காணப்படும் தலையினை உடையவனாகிய சிவபெருமான், தனது தலையினில் ஊமத்தை மலர்களை சூட்டிக் கொண்டுள்ளான். அவன் பிரியாது உறையும் வலிதாயம் தலத்தினைத் தங்களது மனதினில் நிலைநிறுத்தி வழிபடும் அடியார்களை, வினைகளால் விளையும் துன்பங்களும், பிறவிப்பிணி நோயும் அணுகாமல் விலகிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பத்தரோடு பலரும் பொலியம் மலர் அங்கைப் புனல் தூவி

ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுதேத்த உயர் சென்னி

மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம்

சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்றிடர் நோயே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.15.10) திருஞானசம்பந்தர், பெருமானைப் புகழ்ந்து பாடும் சிந்தனை உடைய அடியார்களை உடலை வருத்துவதில் வெற்றி கொள்ளும் நோய்கள் சென்றடையா என்று கூறுகின்றார். இறை=சிறிதும்; மத்தம்= . செருக்கு; பயிலுதல்=தொடர்ந்து ஒரு செயலைச் செய்தல்; தங்களது சித்தத்தில் செருக்கு நிறைந்து சிறிதும் அறிவு இல்லாதவர்களாக விளங்கும் சமணர்களும் புத்தர்களும், பெருமானைக் குறித்து இழிவாக பேசிய பேச்சுகளை ஒரு பொருட்டாக மதிக்காமல், நாம் நாள்தோறும் தொடர்ந்து வழிபடும் வண்ணம் நெய்த்தானம் தலத்தில் உறையும் பெருமானை, இயல்பாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து விடுபட்டு விளங்கும் பெருமானை, புகழ்ந்து பணிந்து வணங்கும் சிந்தனை உடைய அடியார்களது உடல், மனிதர்களை துன்புறுத்தும் எந்த நோயாலும் பாதிக்கப் படாது செழுமையாக விளங்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மத்தம் மலி சித்தத்து இறை மதி இல்லவர் சமணர்

புத்தர் அவர் சொன்னம் மொழி பொருளா நினையேன்மின்

நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானமது ஏத்தும்

சித்தம் உடை அடையார் உடல் செறு நோய் அடையாவே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.50.3) திருஞானசம்பந்தர் மீண்டும்மீண்டும் பெருமானின் திருநாமங்களை சொல்லி வந்தால்,துன்பம் அளிக்கும் உலகியல் பாசங்களிலிருந்து விடுபடாமல், வேதனை நோயில் ஆழ்ந்து இருக்கும் உயிர்கள், பெருமானது அருள் பெற்று பாசங்களிலிருந்து விடுபடலாம் என்பதை தான் கண்டு கொண்டதாக கூறுகின்றார். பேதை=அறியாமையை வளர்க்கும் பாசப் பிணைப்புகள்;

பெண்டிர் மக்கள் சுற்றம் என்னும் பேதைப் பெருங்கடலை

விண்டு பட்டே வாழமாட்டேன் வேதனை நோய் நலியக்

கண்டு கண்டேன் உன்றன் நாமம் காதலிக்கின்றது உள்ளம்

வண்டு கிண்டி பாடும் சோலை வலிவலம் மேயவனே

நமது தீவினைகளின் காரணமாகத் தானே நமக்கு நோய்கள் விளைகின்றன. அந்த தீவினைகள், பெருமானின் அருளால் களையப்படும் போது, அந்த வினைகளால் ஏற்படும் நோய்களும் அகல்கின்றன. பல்லவனீச்சரம் என்று அழைக்கப்படும் காவிரிப்பூம் பட்டினம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.65.11) திருஞானசம்பந்தர், தேவாரப் பாடல்களை முறையாக பாடும் அடியார்கள் தீவினை நோய் அற்றவர்களாக, விளங்குவார்கள் என்று கூறுகின்றார். அத்தன்=தந்தை; ஒத்தமைந்த=தங்களது இயல்புகளுக்கு ஒத்த: அணிகொள்=அழகு நிறைந்த: பத்தர் என்ற சொல்லுக்கு பத்து குணங்களை உடையவர் என்றும் பக்தர் என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம். பத்து சிறந்த குணங்களை உடைய அடியார்கள் போற்றும் காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் உறையும் எனது தந்தையாகிய பெருமானை, அழகு நிறைந்த சீர்காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இந்த பத்து பாடல்களை, தங்களது சித்தத்தில் நிறுத்தி பாடும் அடியார்கள் தங்களது தீவினைகள் முற்றிலும் களையப் பெற்று, தங்களது இயல்புக்கு ஏற்ப அமைந்த தேவர்கள் வாழும் உலகினை அடைந்து உயர்வாக வாழ்வார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்து எம்

அத்தன் தன்னை அணிகொள் காழி ஞானசம்பந்தன் சொல்

சித்தம் சேர செப்பு மாந்தர் தீவினை நோய் இலராய்

ஒத்தமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவரே

குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.6) திருஞானசம்பந்தர் பெருமானை, அடியார்களை கொடிய நோய்கள் அணுகாத வண்ணம் காப்பவர் என்று கூறுகின்றார். தனது அடியார்களை காலன் அடையாத வண்ணம் சிவபெருமான் காப்பார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இதன் மூலம், சிவனடியார்களை மரணம் நெருங்காது என்று தவறாக பொருள் கொள்ளலாகாது. பிறப்பெடுத்த எவரும் இறப்பிலிருந்து தப்ப முடியாது. உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர் என்ன நடைபெறும் என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு உயிரும், அவரது உடலிலிருந்து பிரிக்கப் பட்ட பின்னர், அவரது உயிரினைத் தாங்கிய சூக்கும உடல் நரகத்திற்கும் சொர்கத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, அந்த பிறவியில் சேர்த்துள்ள வினைகளின் ஒரு பகுதியின் பயனை நுகர நேர்கின்றது. அவ்வாறு நரகத்தில் கழிக்க வேண்டிய வினைகளின் தன்மைக்கு ஏற்ப இயமன், தனது பணியாட்கள் மூலம் அந்த தண்டனைகளை செயல்படுத்துகின்றான். இயமனையோ அவனது தூதர்களையோ, அடியார்கள் பால் நெருங்க இயலாத வண்ணம் பெருமான் காப்பதால், பெருமானின் அடியார்களுக்கு மரணம் ஏற்படாது என்று தவறாக பொருள் கொள்ளக் கூடாது. அவர்களது உயிர் உடலிலிருந்து பிரியும் தருணத்தில், பெருமானின் கணங்கள், அந்த அடியார்களை அழைத்துச் சென்று பெருமானின் திருவடிக்கீழ் சேர்ப்பார்கள். அத்தகைய அடியார்கள், இயமனால் அழைத்து செல்லப்பட்டு நரகம் சொர்க்கம் ஆகியவற்றில் ஆழ்ந்து துன்பம் அடையார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த தன்மையே இந்த பாடலில் காலன் அடையா வண்ணம் என்று குறிப்பிடப் படுகின்றது. அதாவது நரக வேதனைகளிலிருந்து தப்பிக்கலாம் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும்.

மூப்பூர் நலிய நெதியார் விதியாய் முன்னே அனல் வாளி

கோப்பார் பார்த்தன் நிலை கண்டருளும் குழகர் குடமூக்கில்

தீர்ப்பார் உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமைக்

காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே

மூப்பூர்=முதுமைப் பருவம் அடையும் நிலை; மூப்பூர்=மூப்பு நிலை ஊர்ந்து வந்து நம்மை அடையும் நிலை; ஊர்தல் என்பது மெதுவாக சென்றடையும் தன்மையை உணர்த்துகின்றது. எவரும் ஒரே நாளில் மூப்பு நிலையை அடைவதில்லை. நாம் உணரமுடியாத நிலையில், சிறிது சிறிதாக மூப்புத் தன்மை ஒவ்வொரு உயிரையும் சென்றடைகின்றது. இந்த தன்மை தான் இங்கே குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு முதுமைக் காலம் நம்மை வந்தடைந்து நமது உடல் நலியும் போது நம்மை காப்பவர் சிவபெருமான் என்று சிலரால் விளக்கம் அளிக்கப் படுகின்றது. ஆனால் சிவபெருமான் நாம் மூப்படையும் போது மட்டும் தானா, நமக்குத் துணையாக இருந்து காப்பாற்றுகின்றான். மணிவாசகர், திருவாசகம் போற்றித் திருவகலில் குறிப்பிட்ட வண்ணம், நாம் கருவில் உருவாகத் தொடங்கும் நாளிலிருந்து, சிறிய குழந்தையாக இருந்த போதும், காளைப் பருவம் அடைந்த போதும், இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் போது, மற்ற பல தருணங்களிலும் நம்மை பலவித ஆபத்துகளிலிருந்தும் காத்துக் கொண்டிருப்பவர் சிவபெருமான் அல்லவா. பெருமான் உள்ளிருந்து இயக்குவதால் தானே அனைத்து உயிர்களும் இயங்குகின்றன. எனவே வயது முதிர்ந்த போது இறைவன் நம்மை காப்பாற்றுகின்றான் என்ற விளக்கம் அவ்வளவு பொருத்தமாக இல்லை, மூப்பூர் என்ற சொல்லுக்கு சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் வானில் ஊர்ந்து கொண்டிருந்த மூன்று திரிபுரத்தவர்களின் கோட்டை என்று பொருள் கூறுகின்றார். எப்போது கீழே இறங்கி எந்த ஊரினை நசுக்கி அழிக்கலாம் என்ற எண்ணத்துடன் செயல்படுவதால் இந்த கோட்டைகள் மெதுவாக பறந்து செல்கின்றன என்று கூறினார் போலும். நெதி=நியதி; நெதியார் விதி= நியதியின் வழியின் நடக்கும் செயல்கள்; எந்த முறையில் கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்று அவர்கள் வரம் பெற்றிருந்தார்களோ அதே வழியில்; முன்னே=பண்டைய காலத்தில்; வாளி=காற்று; வளி என்ற சொல் வாளி நீண்டது. பார்த்தன் என்பது அர்ஜுனனின் பத்து பெயர்களில் ஒன்று; தீர்ப்பார் என்ற சொல்லினை அடுநோய் அவலம் என்ற சொல்லின் பின் வைத்து பொருள் கொள்ளவேண்டும். அடுதல்=கொல்லுதல்; அடுநோய்=உடலினை வருத்தி கொல்லும் நோய்; வானில் ஊர்வது போன்று மிகவும் மெதுவாக பறந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், எந்த முறையில் அந்த கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்று திரிபுரத்து அரக்கர்கள் வரம் கேட்டுப் பெற்றார்களோ, அதே முறையில், அந்த மூன்று கோட்டைகளையும் ஒரே நேர்கோட்டினில் வரச் செய்த பெருமான், அக்னி காற்று திருமால் ஆகிய மூவரும் பொருத்தப்பட்ட அம்பினை தான் ஏந்தியிருந்த வில்லினில் கோத்து, அந்த அம்பினை விடுத்ததன் மூலம் அந்த கோட்டைகளை எரித்து அழித்தவர் ஆவார். அவர் பாசுபதம் அத்திரம் வேண்டி தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனின் வலிமையை பரிசோதித்த பின்னர் அவனுக்கு பாசுபத அத்திரம் கொடுத்து அருளினார். இவ்வாறு ஆற்றலும் கருணையும் ஒருங்கே உடைய பெருமான், அழகும் இளமையும் பொருந்தியவராக உறைகின்ற குடந்தை நகரினில் உள்ள, குடந்தைக் காரோணம் என்ற தலத்திலும் உறைகின்றார். அவர் தன்னைப் பணிந்து வணங்கும் அடியார்களை வருத்தி கொல்லும் தன்மை வாய்ந்த கொடிய நோய்கள் அணுகாத வண்ணமும் வினைகள் அவர்களை வருத்தி கீழ்மை நிலையில் ஆழ்த்தாத வண்ணமும் காலன் அவர்களைச் சென்றடைந்து துன்பம் இழைக்காத வண்ணமும் காப்பாற்றுகின்றார். அவரே காரோணத்தார் என்று அழைக்கப் படுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.83.7), திருஞானசம்பந்தர், பெருமானின் திருப்பாதங்களைத் தொழுது ஏத்தும் அன்பர்களுடன் பிணைந்துள்ள கொடிய நோய்களும் தளர்ச்சி அடைந்து விலகி விடும் என்று கூறுகின்றார். அத்தகைய அடியார்கள். தவம் செய்வதால் அடையக்கூடிய பலன்களை அடைவார்கள் என்றும் சொல்கின்றார்.

மிளிரும் அரவோடு வெள்ளைப் பிறை சூடி

வளரும் பொழில் அம்பர் மாகாளம் மேய

கிளரும் சடை அண்ணல் கேடில் கழல் ஏத்தத்

தளரும் உறு நோய்கள் சாரும் தவம் தானே

திருப்பரங்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.100.5) திருஞானசம்பந்தர், பெருமானை தியானிக்கும் சிந்தை உடைய அடியார்களை நோய்கள் அணுகாது என்று கூறுகின்றார். உன்னிய=தியானிக்கும்; பொறி=பாம்பின் படத்தில் காணப்படும் புள்ளிகள்; இயல்=ஒத்த; பொன்னைப் போன்ற நிறத்தில் உள்ள கொன்றை மலர்கள்; தொன் மறை= மிகவும் பழமையான வேதங்கள்; பெருமானது வாயிலிருந்து வெளிவந்த வேதங்களே முதன் முதலில் தோன்றிய நூல்களாக கருதப் படுகின்றன.

பொன்னியல் கொன்றை பொறிகிளர் நாகம் புரிசடைத்

துன்னிய சோதி ஆகிய ஈசன் தொன் மறை

பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை

உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.102.6) திருஞானசம்பந்தர், பெருமானை சடையா என்றும் விடையா என்றும் அழைத்துப் போற்றும் அடியார்களை கொடிய நோய்கள் மற்றும் பாவங்கள் சென்றடையா என்று கூறுகின்றார். கறி=மிளகு; கழி சம்பிரசம்=மிளகுகள் நீக்கப்பட்ட மிளகுக் கொடிகள்; இந்த மிளகுக் கொடிகள் ஊறியதால், காவிரி நதியின் தண்ணீர் தனிச் சுவையுடன் இருப்பதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் பெருமானை மனமுருகிப் பாடும் அடியார்களை கொடிய நோய்கள் சென்றடையா என்றும் கூறுகின்றார்.

குறியார் திரைகள் வரைகளின்றும் கோட்டாறு

கறியார் கழி சம்பிரசம் கொடுக்கும் கலிக்காழி

வெறியார் கொன்றைச் சடையா விடையா என்பாரை

அறியா வினைகள் அருநோய் பாவம் அடையாவே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.10.6) திருஞானசம்பந்தர், பெருமானின் திருப்பாதங்களைப் புகழ்ந்து மனமுருகி பாடும் அடியார்களை கொடிய நோய்கள் அடையாது என்று கூறுகின்றார். பிறை சேர் கடல்=சந்திரன் தோன்றிய பாற்கடல்; இலக்குமி தேவி தோன்றுவதற்கு முன்னர் பாற்கடலிலிருந்து சந்திரன் தோன்றியமையால், இலக்குமி தேவியை சந்திர சகோதரி என்று அழைப்பார்கள். தேவர்களையும் அசுரர்களையும் திசைக்கு ஒருவராக ஓடச்செய்த ஆலகால விடத்தினை மிகவும் துணிவுடன் பெருமான் உட்கொண்டதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருகி வரும் அருவி நீரினை உடைய அண்ணாமலை தலமானது, பாற்கடலிருந்து தோன்றிய சந்திரனின் பிறைகள் ஒவ்வொன்றாக அழிந்து ஒற்றைப் பிறையுடன் சரணடைந்த போது அந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு வாழவைத்த சிவபெருமான் உறைகின்ற தலமாகும். அவர் பாற்கடலிலிருந்து அனைவரும் அச்சம் கொள்ளும் வகையில் பொங்கி எழுந்த ஆலகால விடத்தினை, சற்றும் தாமதம் செய்யாமல் மிகுந்த துணிவுடன் பருகியவர் ஆவார். மேலும் அந்த விடம் தனது வயிற்றினுள்ளே சென்றால், பிரளய காலத்தில் தன்னில் ஒடுங்கவிருக்கும் உயிர்களின் நலன் கருதி, தனது கழுத்தினில் தேக்கியதால் அவரது கழுத்து கருமை நிறம் படர்ந்து காணப்படுகின்றது. அவர் தனது திருமேனியின் மீது வெண்ணீறு பூசிக்கொண்டவர் மற்றும் நறுமணம் கமழ்கின்ற சடையை உடையவர் ஆவார். அத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமானின், வீரக்கழல்கள் அணிந்த திருப்பாதங்களை புகழ்ந்து பணிந்து வணங்கி மனம் உருகும் அடியார்களை, கொடிய நோய்கள் சென்று அணுகா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சைப்

பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகிக்

கருகும் மிடறுடையார் கமழ் சடையார் கழல் பரவி

உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.104.11), திருஞானசம்பந்தர், தேவாரப் பாடல்களை முறையாக பாடும் அடியார்கள், தங்களைப் பற்றியுள்ள நோய் களையப் பெறுவார்கள் என்று கூறுகின்றார். போதன்=தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்டுள்ள பிரமன்; பிரமன் போன்று வேதம் ஓதுவதில் வல்லவராக விளங்கிய மறையோர்கள்;

வேதமோர் கீதம் உணர் வாணர் தொழுதேத்த மிகு வாசப்

போதனைப் போல் மறையோர் பயிலும் புகலி தன்னுள்

நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ் மாலை நாவில்

ஓத வல்லார் உலகினில் உறுநோய் களைவாரே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.118.4) திருஞானசம்பந்தர், பெருமானை எங்கள் நோய் அகல நின்றவன் என்று குறிப்பிடுகின்றார். கொங்கணி=தேன்; கொங்கணி நறும்=தேன் நிறைந்ததால் நறுமணம் கமழும் கொன்றை; தொங்கல்=மலர் மாலை; குளிர் சடையான்=கங்கை நதி தேக்கப்பட்டதால் எப்போதும் குளிர்ந்து காணப்படும் சடை; அடியார்களின் நோயினைத் தீர்ப்பதற்காகவே, நிலவுலகில், பல தலங்களில் எழுந்தருளியுள்ள பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நோய் என்பதற்கு பிறவிப்பிணி என்று பொருள் கொள்வதும் சிறப்பே. இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், திருஞானசம்பந்தர், பருப்பதம் தலத்தையும் ஆங்கே உறையும் பெருமானையும் புகழ்ந்து பாடி, நமது நோய்களையும் அத்தகைய நோய்களால் விளையும் அவலமான நிலையையும் போக்கிக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகின்றார்.

கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர் சடையான்

எங்கள் நோய் அகல நின்றான் என அருள் ஈசன் இடம்

ஐங்கணை வரி சிலையால் அநங்கனை அழகழித்த

பைங்கண் வெள்ளேறு உடையான் பருப்பதம் பரவுதுமே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.7.9) சிவபெருமானின் திருவடிகளை அடைந்த அடியார்களை, உயிர்களை பெரிதும் வருத்தும் நோய்கள் சென்று அடையா என்றும் காலன் நெருங்க மாட்டான் என்றும் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அத்தகைய அடியார்களின் அடியார்களைக் கண்டு கூற்றுவன் அகன்று சென்று விடுவான் என்றும், பக்குவமடைந்த உயிர்களுக்கு புகலிடமாகிய சிவகதி அவர்களை சென்றடையும் என்றும் கூறுகின்றார். அடியார்களின் அடியார்களுக்கே மேலே குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும் என்றால், அடியார்களுக்கும் அத்தகைய பலன் கிடைக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ. செடிகொள் நோய்=துன்பம் தரும் நோய்கள்; திறம்பார்=தீய வினைகளின் தாக்கத்தால் ஏற்படும் துன்பங்களால் மனம் மாறுபடாமல் தொடர்ந்து இறைவனையே துதிப்பார்கள்; செறும் தீவினை=வருத்தும் தீய வினைகள்; இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில்,திருஞானசம்பந்தர், திருவாஞ்சியத்து ஐயர் பாதம் அடையும் அன்பர்களை கொடிய வினைகள் சென்று தீண்டாது என்றும் கூறுகின்றார்.

செடிகொள் நோயின அடையார் திறம்பார் செறு தீவினை

கடிய கூற்றமும் கண்டகலும் புகல் தான் வரும்

நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திருவாஞ்சியத்து

அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.33.11) திருஞானசம்பந்தர், பெருமானின் புகழினைக் குறிப்பிடும் தேவாரப் பாடல்களை பாடும் அடியார்களை பழியும் நோயும் அண்டாது என்று கூறுகின்றார். மலிவு எய்திட=நிறைந்திட, மகிழ்ச்சியால் நிறைந்திட என்று பொருள் கொள்ள வேண்டும். ஆயிழை=தேர்ந்தெடுத்த அழகிய நகைகளை அணிந்து கொள்ளும் பிராட்டியார்;

ஆடல் அரவார் சடையான் ஆயிழை தன்னோடும்

நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை

மாட மலி காழி வளர் பந்தனது செஞ்சொல்

பாடல் உடையாரை அடையா பழிகள் நோயே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.59.1) திருஞானசம்பந்தர், பெருமானைப் புகழ்ந்து, அவனுக்கு மாலை சூட்டி அழகு பார்க்கும் அடியார்களை அருநோய் அடையா என்று கூறுகின்றார். அலங்கல்=மலர் மாலை; வலம் கொள் மழு என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இதற்கு இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். சிவபெருமானின் வலது கையில் உள்ள மழு என்றும், சிவபெருமானால், தோற்கடிக்கப் பட்டு செயலிழந்த மழு ஆயுதம் என்றும் பொருள் கொள்ளலாம். தாருகவனத்து முனிவர்கள் அபிச்சார ஹோமம் செய்து அந்த யாகத்திலிருந்து கொடிய மழுப்படையை தோற்றுவித்து, அதனை சிவபெருமான் மீது ஏவியதையும், பெருமான் அந்த ஆயுதத்தை மிகவும் இலாவகமாக தனது கையால் பற்றிக் கொண்டு, செயலிழக்கச் செய்ததையும் நாம் அறிவோம். பண்டைய நாளில் போரினில் தோல்வி அடைந்தவர்கள், தம்மை வெற்றி கண்டோரை வலம் வந்து வணங்கி, தமது தோல்வியை ஒத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. அந்த வகையில், சிவபெருமானை கொல்வதற்காக ஏவப்பட்ட மழு ஆயுதம், தனக்கிட்ட பணியினை செய்ய முடியாமல் தோற்றதை ஒப்புக்கொண்டு பெருமானை வலம் வந்து பணிந்தது என்று பொருள் கொள்வது சிறப்பே

நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம்

கலங்கள் தன்னில் கொண்டு கரை சேர் கலிக்காழி

வலம் கொள் மழு ஒன்று உடையாய் விடையாய் என ஏத்தி

அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா அருநோயே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.61.5) திருஞானசம்பந்தர், பெருமானை, அடியார்களின் கொடுமையான நோய்கள் தள்ளிப் போக அருளும் தலைவன் என்று கூறுகின்றார். பிள்ளைப் பிறை=இளம் பிறையுடன் காணப்படும் சந்திரன், ஒற்றைப் பிறைச் சந்திரன்; ஒவ்வொரு பிறையாக தேய்ந்து அழியும் நிலையில், ஒற்றைப் பிறையுடன் இருந்த சந்திரன், பெருமானை சரணடைந்த பின்னர், தேயும் நிலையிலிருந்து வளரும் நிலைக்கு மாறியதால், முற்றிலும் அழியவிருந்த ஒற்றைப் பிறைச் சந்திரன் வளரும் இளம் பிறையாக மாறியதை குறிப்பிடும் வண்ணம், பிள்ளைப் பிறை என்று இங்கே கூறுகின்றார். பெம்மான்=பெருமான்; உள்ளுதல்=தியானித்து, நினைத்து; பெருமானைச் சரணடைந்த பின்னர், அழியும் நிலையிலிருந்து வளரும் நிலைக்கு மாறிய ஒற்றைப் பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும், தனது சடையில் சூடிக் கொண்ட பெருமானே என்று போற்றித் தொழும் அடியார்களை, அனைத்து நோய்களும் அணுகாத வண்ணம், தள்ளிப் போகும் வண்ணம் காத்து அருள் புரிபவன் நமது தலைவனாகிய சிவபெருமான். இந்த பெருமான், வெண்ணிறமும் கோடுகளும் கொண்ட சங்குகளை கடலைகள் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவெண்காடு தலத்தினை தனது ஊராக கருதி உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று

உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறு நோய்கள்

தள்ளிப் போக அருளும் தலைவன் ஊர் போலும்

வெள்ளைச் சுரி சங்கு உலவித் திரியும் வெண்காடே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.79.4) திருஞானசம்பந்தர், நோய்களால் நாம் அடையும் துன்பங்களை நீக்கிக் கொள்ளும் வழி,பெருமானை வழிபடுவது தான் என்று கூறுகின்றார். திருஞானசம்பந்தர் தனது நெஞ்சத்தை கண்டித்து, அறிவுரை சொல்வதாக அமைந்த பாடல் எனினும்,உண்மையில் நம்மைப் போன்ற மனிதர்களுக்கு அவர் அளிக்கும் அறிவுரையாகத் தான் இந்த பாடலை நாம் கருத வேண்டும். நீதி=வேதங்கள் மற்றும் ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ள வழிமுறைகள்; வாதித்தல்=வருத்துதல்; நெஞ்சமே, நீ வேதங்கள் மற்றும் ஆகமங்கள் குறிப்பிடும் வழியில் சென்று இறைவனை வணங்காமல் வீணாக காலத்தைக் கழிக்கின்றாய்; மேலும் புலன்களால் பெறுகின்ற இன்பத்தையே மிகவும் முக்கியமாக கருதி வாழ்வதால்,உடலுக்கும் உயிருக்கும் துன்பம் அளிக்கும் பல விதமான நோய்களில் சிக்குண்டு வருந்துகின்றாய்; அதனால், மேன்மேலும் துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்று அச்சம் கொள்ளும் நெஞ்சமே, ஆரூர் ஆதியைத் தொழுது வாழ்வினில் உய்வினை அடையலாம் அஞ்சற்க என்று அறிவுரை கூறும் பாடல்.

நீதியால் வாழ்கிலை நாள் செலா நின்றன நித்த நோய்கள்

வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே

சாதியார் கின்னரர் தருமனும் வருணர்கள் ஏத்து முக்கண்

ஆதி ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

கோளறு திருப்பதிகத்தின் பாடலில் (2.85.4) திருஞானசம்பந்தர், இறைவன் தனது உள்ளத்தில் உறைவதால், கொடிய நோய்களும், தமது தன்மை விலக்கப் பெற்று நல்லவையாகத் திகழும் என்று கூறுகின்றார். வடபால்=வடக்கில் உள்ள கயிலாய மலை; வடவால் என்பதும் பாடம்; வடவால்=கல்லால மரம்; கல்லால மரத்தின் கீழே இருந்த வண்ணம் பெருமான் சனகாதி முனிவர்களுக்கு, தென்முகக் கடவுளின் வடிவத்தில் உபதேசம் செய்வதையே நாம் பல திருக்கோயில்களிலும் காண்கின்றோம். எனினும் அன்னையை விட்டு இறைவன் எப்போதும் பிரிவதில்லை என்பதாலும், அவனது அருட்சக்தியாக அம்பிகை எப்போதும் அவனுடன் திகழ்கின்றாள் என்பதாலும், அம்பிகை உடனாக இருக்கையில் பெருமான் உப்தேசம் செய்தார் என்று கொள்வதில் தவறேதும் இல்லை. பிறைச்சந்திரன் போன்று அழகாக வளைந்த நெற்றியினை உடைய தேவியுடன், வடக்கு திசையில் உள்ள கயிலாய மலையில் அமர்ந்த வண்ணம் நான்மறைகளையும் ஓதும் எங்கள் பரமன், கங்கை நதி, கொன்றை மாலை ஆகியவற்றைத் தனது சடையில் அணிந்தவனாக எனது உள்ளத்தில் புகுந்துள்ளான். இந்த தன்மையால், சினம் மிகுந்த காலன், தீக்கடவுள், இயமன், இயமனது தூதர்கள், கொடிய நோய்களுக்கு அதிபதியாகிய சிறு தெய்வங்கள் முதலிய அனைத்தும், தங்களது கொடிய குணங்களை விட்டொழித்து மிகுதியான நல்ல குணம் உடையவர்களாக மாறி எனக்கு நல்லனவே செய்வார்கள். இவ்வாறு எனக்கு நல்லனவாக செயல் புரியும் இந்த சிறு தெய்வங்கள் அனைத்தும், மற்ற அடியார்களுக்கும் மிகவும் நன்மை பயப்பனவாகவே விளங்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

விற்குடி வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.108.5) திருஞானசம்பந்தர், தனது அடியவர்கள் மீது படர்ந்துள்ள வினைகளை வேரறுக்கும் பெருமான், அவர்களைப் பற்றியுள்ள நோய்களையும் தீர்க்கின்றான் என்று கூறுகின்றார். கடிய ஏறு=விரைந்து செல்லும் இடபம்; இடிய மால் வரை=பெரிய மலையாகிய மேரு மலை; கால் வளைத்தான்=அந்த மலையின் ஒரு முனையைத் தனது காலால் அழுத்திக் கொண்டு, மற்றொரு முனையைத் தனது கையில் பிடித்துக் கொண்டு வில்லாக வளைத்த பெருமான்; வெடிய=பகையாக, உயிர்களுக்குப் பகையாக விளங்கும் வினைகள்; வீட்டுவித்தல்=நீக்குதல்;படியதாக=பண்புடன்;

கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனலெழ ஊர் மூன்றும்

இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேலுள்ள

வெடிய வல்வினை வீட்டுவிப்பான் உறை விற்குடி வீரட்டம்

படியதாகவே பரவுமின் பரவினால் பற்றறும் அருநோயே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் (2.108.8) திருஞானசம்பந்தர், பெருமானைப் புகழ்ந்து இசைப் பாடல்கள் பாடும் அடியார்களை நோய்கள் அணுகாது என்று கூறுகின்றார். இகல்=புகழ், வலிமை; தொடங்கும் ஆறு=சிவபெருமானுடன் தொடர்பு கொள்ளும் நெறி, சிவநெறி;

இடம் கொள் மாகடல் இலங்கையர் கோன் தனை இகல் அழிதர ஊன்று;

திடம் கொள் மால் வரையான் உரையார் தரு பொருளினன் இருளார்ந்த

விடம் கொள் மாமிடறு உடையவன் உறைபதி விற்குடி வீரட்டம்

தொடங்குமாறு இசை பாடி நின்றார் தமைத் துன்பம் நோய் அடையாவே

திருவாடானை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.112.3) திருஞானசம்பந்தர், பெருமானைத் தொழும் அடியார்களின் கொடிய நோய்களும் மாய்ந்துவிடும் என்று கூறுகின்றார். மங்கு நோய்=உடலின் வலிமையையும் ஆற்றலையும் மங்கச் செய்யும் கொடிய நோய்கள். மங்குதல்=கெடுதல்;அங்கை=அழகிய கை; இதே பதிகத்தின் கடைப் பாடலில், செந்தமிழ் தேவாரப் பாடல்களை பாடுவோரை பற்றியுள்ள நோய்கள் அழிந்துவிடும் என்றும் கூறுகின்றார்.

மங்கை கூறினன் மான்மறி உடை

அங்கையான் உறை ஆடானை

தம் கையால் தொழுது ஏத்த வல்லவர்

மங்கு நோய் பிணி மாயுமே

பூந்தராய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.5.4) திருஞானசம்பந்தர், மனக்கவலை ஆகிய நோயினையும் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்து=சந்திரன்; பூசுரர்=அந்தணர்கள்; சுரர் என்றால் தேவர்கள் என்று பொருள்; தேவர்களைப் போன்று சிறப்பு உடையவர்களாய், நிலவுலகில் வாழும் அந்தணர்கள். பல திருமுறைப் பாடல்களில் அந்தணர்கள் பெருமானைப் போற்றி வழிபடுவது குறிப்பிடப் படுகின்றது. நிலவுலகில் வாழும் தேவர்கள் என்று சிறப்பித்து சொல்லப்படும் அந்தணர்கள் போற்றிப் புகழும் பூந்தராய் நகரத்தில் பொருந்தி உறையும் பெருமானை, சந்திரனைத் தனது சடையில் தரித்த எமது இறைவனை, புகழ்ந்து பாடினால் நமது மனதினை வருத்தும் சிந்தனைகளும் உடலை வருத்தும் நோய்களும் முற்றிலும் அழியும் வண்ணம் இறைவன் அருள் புரிவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்

ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிடச்

சிந்தை நோய் அவை தீர நல்கிடும்

இந்து வார்சடை எம் இறையே

திருவேடகம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.32.3) திருஞானசம்பந்தர், ஏடகத்து இறைவனைக் கண்டு கை தொழுதால். நோய்களும், அந்த நோய்களின் தாக்கத்தால் ஏற்படும் கவலைகளும், நம்மை விட்டு விலகிப் போய்விடும் என்று கூறுகின்றார். அலம்பும்=ஒலிக்கும்; வண்டலம்பும்=வண்டுகள் ரீங்காரம் இடுகின்ற; செண்டு=வட்டமாக சுற்றி வரும் நடை; சேடன்=மேன்மையானவன் குழகன்=அழகும் இளமையும் ஒருங்கே சேர்ந்தவன்;

குண்டலம் திகழ் தரு காதுடைக் குழகனை

வண்டலம்பும் மலர்க் கொன்றையான் வான் மதியணி

செண்டலம்பும் விடைச் சேடனூர் ஏடகம்

கண்டு கை தொழுதலும் கவலை நோய் கழலுமே

கோகரணம் தலம் செல்லும் மகளிர், ஆங்குள்ள தீர்த்தத்தில் பெருமானின் திருநாமத்தை சொல்லியவாறு மூழ்கியெழ, கொல்லும் தன்மை வாய்ந்த கடுமையான விடநோய்களும் நீங்கப் பெற்று நலமடைகின்றனர் என்று அந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.79.7) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திருத்தம்=தீர்த்தம்; கல்லவடம் மொந்தை குழல் தாளம் கொக்கரை ஆகிய இசைக் கருவிகளுக்கு ஏற்ப பெருமான் நடமாடுகின்றார் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.

கல்லவட மொந்தை குழல் தாள மலி கொக்கரையர் அக்கு அரை மிசை

பல்ல பட நாகம் விரிகோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே

நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக

கொல்ல விடநோய் அகல்தரப் புகல் கொடுத்து அருளும் கோகரணமே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.1) திருஞானசம்பந்தர், பெருமானை உள்ளம் உருகி நினைக்கும் அடியார்களை நோய்கள் சென்றடையா என்று கூறுகின்றார். இந்த பாடலில் பெருமானின் சடையை பள்ளம் என்று கூறுகின்றார். பள்ளத்தில் தண்ணீர் தேங்குவது இயற்கை. மேலும் பள்ளத்திலிருந்து வெளியே வராமல் நீர் தங்கியிருப்பதும் இயற்கை. பெருமானின் சடையினைச் சென்று சேர்ந்த கங்கைநதி, வெளியே வராமல் அங்கே தங்கியிருந்த காரணத்தால், பள்ளத்தில் தங்கியிருந்த நீர் போன்று வெளியே வராமல் இருந்ததால், பெருமானின் சடையின் ஆற்றலை குறிப்பிடும் வண்ணம் பள்ளம் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பயிலும்=தொடர்ந்து நடக்கும் செயல்; தொடர்ந்து நடக்கும் எந்த செயலையும் பயிலுதல் என்று சொல்வது வழக்கம். விகிர்தன் என்றால் மாறுபட்டவன் என்று பொருள் என்பதை நாம் அறிவோம். இந்த பாடலில் பெருமானின் இரண்டு செயல்களுக்கு இடையே விகிர்தன் என்ற சொல் வருகின்றது. வெள்ளத்தை விரும்பியவன் என்று பொருள் தரும் வெள்ளமதார விரும்பி நின்ற என்ற தொடர் மற்றும் விடையேறும் வள்ளல் என்ற தொடர் ஆகிய இரண்டு சொற்றொடர்களுக்கு இடையே வரும் விகிர்தன் என்ற சொல், அந்த தொடர்கள் குறிப்பிடும் இரண்டு செயல்களுக்கும் பொருத்தமாக இருப்பதை நாம் காணலாம். வரம் அளிப்பது என்று முடிவு செய்து விட்டால், வரம்பின்றி தனது அடியார்களுக்கு பெருமானின் அருள் புரியும் தன்மை குறித்து அவரை வள்ளல் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். எப்போதும் வலஞ்சுழி தலத்தில் வாழும் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் வலஞ்சுழி வாணன் என்று அழைக்கின்றார். வாழ்நன் என்ற சொல் வாணன் என்று திரிந்துள்ளது. என்ன புண்ணியம் செய்தனை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில், வலஞ்சுழி வாணனைப் போற்றி வழிபடும் வண்ணம் அறிவுரை கூறிய சம்பந்தர், இந்த பதிகத்தின் முதல் பாடலிலும் அத்தகைய அறிவுரை கூறுகின்றார். மேலும் உள்ளம் உருகி பெருமானை நாம் வழிபடுவதால், கொடிய நோய்கள் நம்மை அணுகாது என்றும் அத்தகைய நோய்களால் நமக்கு ஏற்படும் துன்பங்களும் நம்மை அணுகாது என்றும், பெருமானை குறித்து செய்யப்படும் வழிபாடு அளிக்கும் பயனையும் நமக்கு உணர்த்துகின்றார். மருவி=நெருங்கி; கொடிய நோய் என்று பிறவிப்பிணி குறிப்பிடப் படுகின்றது என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

பள்ளமதாய படர்சடை மேல் பயிலும் திரைக் கங்கை

வெள்ளமது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடையேறும்

வள்ளல் வலஞ்சுழி வாணன் என்று மருவி நினைந்து ஏத்தி

உள்ளம் உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே

பள்ளம் சென்றடைந்த தண்ணீர் அந்த பள்ளத்திலிருந்து வெளியே வரமுடியாமல், நிலையாக இருப்பது போன்று, பெருமானின் சடையை சென்றடைந்த கங்கை நதி, அலைகள் நிறைந்து பெரிய நீர்ப்பரப்புடன் இருந்த போதிலும், அங்கிருந்து வெளியே வரமுடியாமல் தொடர்ந்து பெருமானின் சடையினில் தங்கியுள்ளது. மேலிருந்து வேகமாகப் பாய்ந்த கங்கை நதியினைத் தனது சடையினில் மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், இந்த இரண்டு செய்கைகள் போன்று பல சிறந்த செயல்களை, வேறெவரும் செய்ய முடியாத பல செயல்களை செய்த விகிர்தராக விளங்குகின்றார். தனது அடியார்களுக்கு எல்லையற்று வரங்கள் வழங்கும் குணமுடைய பெருமானை, வலஞ்சுழி தலத்தை விட்டு பிரியாமல் வீற்றிருக்கும் வலஞ்சுழி வாணனை, அந்த தலம் சென்றடைந்து, அவரது பெருமைகளை நினைத்து, உள்ளம் உருகி வழிபடும் அடியார்களை பிறவிப்பிணி உட்பட பல கொடிய நோய்களும் நெருங்காது. எனவே உலகத்தவரே, வலஞ்சுழி பெருமானை வழிபட்டு, பயனடைவீர்களாக என்று திருஞான சம்பந்தர் நமக்கு அறிவுரை கூறும் பாடல், மேற்கண்ட பாடல்.

திரிகோணமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.123.5) திருஞானசம்பந்தர் சிவபெருமானை தாயினும் நல்ல தலைவர் என்று கூறுகின்றார். தன்னை இசைத்துப் பாடும் அடியார்களின் வாயிலும் மனதிலும் பொருந்தி நீங்காமல் நிற்கும் தன்மை உடையவர் என்று பெருமானை திருஞானசம்பந்தர் இங்கே புகழ்வதை நாம் உணரலாம். தொழிலர்=பெருமானை வழிபடும் செயலை இடைவிடாது செய்யும் அடியார்கள்;

தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம் அடி போற்றி இசைப்பார்கள்

வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர்

நோயிலும் பிணியும் தொழிலர் பால் நீக்கி நுழை தரு நூலினர் ஞாலம்

கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.56.3) அப்பர் பிரான், பெருமானை உற்ற நோய் தீர்ப்பர் என்று குறிப்பிடுகின்றார். உற்ற நோய்=உயிருக்கு உற்ற நோய், வினைத் தொகுதிகள் மற்றும் அவற்றால் விளையும் தொடர்ந்த பிறப்பு இறப்புகள்: செற்றவர்=பகைவர்: செறுதல்=வெல்லுதல்: கலந்து=உள்ளமும் உயிரும் இறை உணர்வுடன் கலத்தல்: உலத்தல்=பாசப் பற்றுகளை அறுத்தல்: அலத்தல்=பாசப் பற்றுகளால் துயர் உறுதல்: அற்றவர்=பாசப் பற்றுகளை அறவே ஒழித்து பக்குவம் அடைந்த அடியார்கள்: அலத்தல் என்பதற்கு விரதம் முதலியவற்றால், உடலை வருத்திக் கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம். உயிரினை, அதனை பீடித்துள்ள வினைத் தொகுதிகளின் பிடியிலிருந்தும் மூன்று மலங்களின் பிடியிலிருந்தும் மீட்டு, பிறப்பு இறப்புச் சுழற்சியில், மறுபடியும் சிக்காத வண்ணம் உயிருக்கு உறுதுணையாக இருந்து காக்கும் வல்லமை படைத்தவர். சிவபெருமான். அவர் தேவர்களுக்கு பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களை அவர்கள் வாழ்ந்து வந்த கோட்டைகளுடன் எரித்து வென்றவர். பாசப் பற்றுகளால் துயருற்று, படிப்பினையைப் கற்றுக் கொண்ட கற்றவர்கள், ஒன்று கூடி, தங்களது பாசப் பற்றுகளை முற்றிலும் அறுத்தும், தங்களது உள்ளமும் உயிரும் இறையுணர்வுடன் கலக்குமாறும், சிவபெருமானைத் தொழுது புகழ்ந்து பாடுகின்றார்கள். அவ்வாறு பாசப் பற்றுகளை விட்டொழித்த அடியார்களுக்கு அன்பராக, ஆவடுதுறையில் உறையும் இறைவன் திகழ்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை ஆவர் போலும்

செற்றவர் புரங்கள் மூன்றும் தீயெழச் செறுவர் போலும்

கற்றவர் பரவி ஏத்திக் கலந்து உலந்து அலந்து பாடும்

அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே

மருளவா மனத்தனாகி என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (4.76.6) அப்பர் பிரான், பெருமானின் அருளால் நன்னெறியில் வாழும் தான், ஒருக்கால் பழமல வாசனை காரணமாக நிலை மாறினாலும், பெருமான் தன்னை மீட்டு காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகின்றார். ஆயிரம் என்ற சொல், எண்ணற்ற என்ற பொருளில் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. நோய்=மல வாசனைகள். தவங்கள் பல செய்து தனது ஐம்பொறிகளும் அடக்கிய, முனிவர்களும், ஒரு நிமிட நேரத்தில் தங்களது புத்தி பேதலித்து காமம், கோபம் முதலான குணங்களால் பாதிக்கப்பட்டு, தங்களது தவத்தின் வலிமையை இழந்த நிகழ்ச்சிகளை நாம் பல புராணங்கள் மூலம் அறிந்துள்ளோம். அவ்வாறான நிலை தனக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று இங்கே அப்பர் பிரான் வேண்டுகின்றார். நாயினும் கீழான தன்மை உடைய அடியேனை, சூலை நோய் கொடுத்து, நல்ல நெறியாகிய சிவநெறியினை எனக்குக் காட்டி, என்னை ஆட்கொண்ட இறைவனே, பல பாம்புகளை உடலில் அணிந்திருந்தாலும் அமுதமாக எனக்குத் தோன்றும் இறைவனே, நீ எனது உள்ளத்தில், அமுதம் போன்று எனக்கு இனியவனாக, வந்து தங்கிவிட்டாய்: எனது உள்ளத்தில் இவ்வாறு வந்து தங்கியதால் என்னை எந்த மலமும் அணுகாது. ஒருகால் பழைய தொடர்பு காரணமாக ஏதாவது மலம் என்னை வந்து சார்ந்தால், இறைவனே நீ தான் அருள் புரிந்து, அந்த நோயினை நீக்க வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்

ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து

நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க

நோயவை சாருமாகில் நோக்கி நீ அருள் செய்வாயே

வென்றிலேன் புலன்கள் ஐந்தும் என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (4.78.5) அப்பர் பிரான், பெருமானை, வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தர் என்று கூறுகின்றார். வெம்மை நோய்=தொடர்ந்து துயரில் ஆழ்த்தும் பிறவிப் பிணி. துயரத்தில் ஆழ்த்துவதால் வெம்மை நோய் என்று குறிப்பிடுகின்றார். சென்ற பிறப்பினில் இறைவனுக்கு அடிமையாக தனது வாழ்வினை அர்ப்பணித்து, திருப்பணிகள் செய்திருந்தால், பிறவிப் பிணியினை அப்போதே இறைவன் தீர்த்திருப்பான் என்றும், இந்த பிறவி எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் கூறும் அப்பர் பிரான், சென்ற பிறவியை நினைத்து தனது வருத்தத்தை இங்கே தெரிவிக்கின்றார். தேவர்களும் மற்ற சிறு தெய்வங்களும், மூன்று மலங்களின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். சிவபெருமான் ஒருவரே, இயல்பாகவே மலங்களின் பிடியிலிருந்து நீங்கியவர். எனவே விகிர்தன் என்று குறிப்பிட்டு, அவர் மற்றவர்களிலிருந்து மாறுபட்டவர் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். முக்தி அடையும் வரை, அனைத்து உயிர்களும் மறுபடியும் மறுபடியும் பிறப்பெடுத்து ஏதோ ஒரு உடலுடன் இணைந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆனால் இறைவனுடன் ஒன்று கலந்த முக்தி நிலையில், உடலிலிருந்து பிரிந்திருக்கும் உயிர், பேரின்பத்தில் திளைக்கின்றது. அதனால் தான் வடிவம் ஏதும் இல்லாத நிலை என்று முக்தி நிலையினை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். உடலோடு இணைந்து வாழும் வாழ்க்கை கால நியதிக்கு உட்பட்டது. எனவே முடிவு என்று ஒன்று, அத்தகைய வாழ்க்கைக்கு உண்டு. ஆனால் முக்தி நிலைக்கு முடிவு என்பதே கிடையாது. எனவே தான் வடிவமும் முடிவும் இல்லாத முக்தி நிலைக்குத் தான் ஏங்குவதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.

செம்மை வெண்ணீறு பூசும் சிவன் அவன் தேவதேவன்

வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி

அம்மை நின்று அடிமை செய்யா வடிவிலா முடிவில் வாழ்க்கைக்கு

இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே

குறுவித்தவா என்று தொடங்கும் திருவையாறு பதிகத்தின் பாடல்களில் தனது முந்தைய வினைப் பயன்களின் காரணமாக தனக்கு வாய்த்த சூலை நோயினைத் தீர்த்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். குறுவித்தல்=குறுகுவித்த, குன்றுதல்: நோய் உறுவித்து=சூலை நோய் கொடுத்து தண்டித்து: சிவபிரானின் அடிமை என்ற உயர்ந்த பதவி பெற்றதால், அடிமைக்களே என்ற பன்மை விகுதி கொண்டு மரியாதையாக, அப்பர் பிரான் தன்னை அழைத்துக் கொள்கின்றார். தான் தனது வாழ்க்கையை எவ்வாறு நடத்த வேண்டும் என்று தனக்கு அறிவித்தவன் சிவபெருமான் என்று இங்கே கூறுகின்றார். சூலை நோயால் வருந்திய தனக்கு நல்லதொரு மாற்றம் அருளுவார் என்ற நம்பிக்கையில், இரவோடு இரவாக திருவதிகை வந்து சேர்ந்த தம்பி தனது கால்களில் விழுந்து வணங்கிய போது, திலகவதியார், குறிக்கோள் இல்லாத பரசமயப் பெருங்குழியில் விழுந்தவரே, இப்போது எழுந்திரும் என்று அவரை எழுப்பினார். பின்னர் சிவபெருமானைப் பணிந்து திருப்பணிகள் செய்வீர் என்று அவருக்கு ஆலோசனை கூறினார். தனது தமக்கையாரின் மொழிகளை சிவபெருமானின் திருவாக்காகவே ஏற்றுக் கொண்டு அப்பர் பிரான், தமக்கையாரின் பின்னே திருவதிகை கோயிலுக்குச் செல்கின்றார். திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (4.94.1), ஈன்றாளுமாய், எந்தையுமாய், உடன் தோன்றினராய் மூன்றாய் தனக்கு அருள் புரிந்தவர் சிவபெருமான் என்று அப்பர் பிரான் கூறுவதை நாம் இங்கே நினைவு கூரலாம். திலகவதியார், தனது தம்பியை திருப்பணிகள் செய்யத் தூண்டியதை பெரியபுராணப் பாடலில் சேக்கிழார் உணர்த்துகின்றார். இந்த பாடலில் தனது பாதங்களில் சரணம் அடைந்தவர்களின் பற்றுகளை நீக்கும் தன்மை கொண்டவர் சிவபெருமான் என்று உணர்த்தப் படுவதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும். எனது முந்தைய வினைப் பயன்களின் காரணமாக, எனக்கு கொடிய சூலை நோய் வாய்த்தது: அந்த நோயின் கொடுமை தாங்க முடியாமல் நான் மனவலிமையும் உடல் வலிமையும் குறைந்து குன்றிப் போனேன். இவ்வாறு என்னைக் குன்றச் செய்தவன் சிவபெருமான் தான்: பின்னர், எனது சூலை நோயினைத் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டு, திருத்தொண்டுகள் செய்து அந்த நோயினைத் தீர்க்கலாம் என்ற வழியினையும், எனது தமக்கையார் மூலம் எனக்கு அறிவித்தவனும் அவனே: பல வகையான தொண்டுகள் செய்து அவனது திருவடிகளில் எனது எண்ணங்கள் பொருந்தி இருக்கும் நிலை ஏற்பட்டது அவனது கருணையால் தான் என்று தனது நிலையை அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

குறுவித்தவா குற்றநோய் வினை காட்டிக் குறுவித்த நோய்

உறுவித்தவா உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி

அறிவித்தவாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே

செறிவித்தவா தொண்டனேனைத் தன் பொன்னடிக்கீழ் எனையே.

சிவந்த மேனியில் வெண்ணீறு பூசி விளங்கும் சிவபெருமான், தேவர்களுக்கும் தேவனாக விளங்குகின்றான். மற்ற தேவர்களினும், மற்ற தெய்வங்களினும் வேறுபட்டு விளங்கும் சிவபெருமானின் மீது ஆர்வம் கொண்டு, சென்ற பிறவியில் அடிமையாக அவருக்குத் திருத்தொண்டுகள் செய்யாமல், உயர்ந்த நோக்கம் ஏதுமின்றியும் நிலையில்லாத இன்பங்களை நாடியும் பயனற்ற வாழ்க்கையைக் கழித்ததால், நான் இந்த பிறப்பு எடுத்து துயர் அடைகின்றேன். இறைவனே, உனக்கு அடிமையாக வாழாமல், முடிவும் வடிவமும் இல்லாத முக்தி நிலையினை அடையத் தவறிவிட்டேன். இந்த பிறவி எடுத்தது எதற்காக என்று நான் இன்னும் உணரவில்லை. இறைவனே நீ தான், என்னை உனக்கு அடிமையாக என்னை ஏற்றுக் கொண்டு, என்னை நல்வழிப்படுத்தி, இனிமேல் நான் பிறவி ஏதும் எடுக்காத வண்ணம். எனது பிறவியை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் அப்பர் பிரானால் இந்த பாடலில் விடுக்கப் படுகின்றது.

கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.93.9) அப்பர் பிரான், சிவபெருமானின் அருளால், தன்னை பிடித்திருந்த நோய் தேய்ந்து அழிந்தது என்று கூறுகின்றார். அனங்கை=அனங்கன் என்று அழைக்கப்படும் மன்மதன். தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதனின் உடலை எரித்து அழித்த பின்னர், இரதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி மன்மதனுக்கு மறுபடியும் உயிர் கொடுத்தாலும், இறைவன் அவனுக்கு உடலைக் கொடுக்கவில்லை. தனது மனைவி இரதிதேவியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரியும் வண்ணம் வரம் அளித்ததால், மற்றவர் கண்களுக்கு புலப்படாதஅவன், உருவமற்றவன் என்ற பொருள்பட, அனங்கன் என்று அழைக்கப் படலானான். கடுமையான சூலை நோயினால் வருந்திய அப்பர் பிரான், தமக்கை திலகவதியாருடன் திருவதிகை வீரட்டானம் திருக்கோயில் சென்று பெருமானை வழிபட்டவுடன், அவரது சூலை நோய் மிகவும் விரைவாக தீர்க்கப்பட்டது. இவ்வாறு மிகவும் விரைவாக இறைவன் செயல்பட்ட விதம், அப்பர் பிரானுக்கு மன்மதனை எரித்த சம்பவத்தை நினைவூட்டியது போலும். வில்லினில் அம்பினைக் கோத்து, அம்பு எய்த பின்னரே திரிபுரத்து மூன்று கோட்டைகளும் அழிந்தன. ஆனால் இறைவன் தனது நெற்றிக் கண்ணினை திறந்து விழித்த மாத்திரத்தில் மன்மதன் எரிந்து சாம்பலாக மாறினான். எனவே தனது தீவினைகளை பெருமான் விரைவாக அழித்ததை நினைவு கூர்ந்த அப்பர் பிரானுக்கு மன்மதனை எரித்த செய்தி அவரது நினைவுக்கு வந்தது போலும். அந்த நிகழ்ச்சியினை இந்த பாடலில் கூறுகின்றார். மேலும் உடலினைப் பற்றியுள்ள அறுவகைக் குற்றங்களில் (காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம்) காமம் முதலாக கூறப்படுகின்றது. காமத்தை வெற்றி கொள்வதே, மற்ற குற்றங்களை வெல்வதை விட, கடினமான செயலாக கருதப் படுகின்றது. எனவே நம்மை வெற்றி கொள்ளும் குற்றமாக கருதப் படும் காமத்தையும் வென்ற பெருமான் என்று, அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான கண்டியூர் குறித்த பதிகத்தில், மற்றொரு அட்ட வீரட்டச் செயலாகிய காமனை எரித்த செயலையும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

மாய்ந்தன தீவினை மங்கின நோய் கண் மறுகி விழத்

தேய்ந்தன பாவம் செறுக்க கில்லா நம்மைச் செற்ற அநங்கைக்

காய்ந்த பிரான் கண்டியூர் எம் பிரான் அங்கம் ஆறினையும்

ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே

எனது பெருமான் என்னை ஆட்கொண்ட காரணத்தால், எனது தீவினைகள் மடிந்து போயின; என்னைப் பற்றியிருந்த பிறவிப்பிணி மங்கி தனது செயல் திறமையை இழந்ததால், அடியேன், பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுபட்டேன்; நாம் வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமாக விளங்கும் காம உணர்வினை நம்மில் உண்டாக்கும் மன்மதனை, வெகுண்டு அழித்து வீரச்செயல் புரியும் பெருமான் கண்டியூர் தலத்தில் உறைகின்றான். அவன் நான்கு வேதங்களையும், வேதங்களுக்கு அரணாக அமைந்துள்ள ஆறு அங்கங்களையும் ஆராய்ந்த பெருமான். அவன் அல்லவா என்னை ஆட்கொண்டுள்ளான் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்துள்ளது மேற்கண்ட பாடல்.

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.99.1) அப்பர் பிரான், தன்னை வருத்திய சூலை நோயினை, பெருமான் தீர்த்து அருள் புரிந்ததை நினைவு கூர்ந்து, தான் ஏதேனும் பிழை செய்தால் தன்னை புளியம் வளாரால் அடித்து தண்டிக்கும் உரிமையை பெருமானுக்கு அளிக்கின்றார். காதுவித்தல்=கொலை செய்ய முயற்சி செய்தல்; பல வருடங்கள் சமணர்களுடன் சேர்ந்து வாழ்ந்த தவற்றுக்கு தண்டனையாக, தனக்கு வந்த சூலை நோயினையும் சமணர்கள் தன்னைக் கொல்வதற்கு முயன்று செய்த பல சூழ்ச்சிகளையும் அப்பர் பிரான் கருதுவது அவரது மனப் பக்குவத்தை உணர்த்துகின்றது. பொதுவாக நமக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், அத்தகைய தீங்குகளுக்கு நமது பண்டைய வினைகள் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளாமல் தீங்கு விளைவிப்பவரை கோபித்துக் கொள்ளும் தன்மையே நம்மில் காணப்படுகின்றது. ஆனால் அப்பர் பிரானோ எவரையும் குற்றம் சாட்டாமல், தனது செயல்களுக்கு இறைவன் அளித்த தண்டனையாக அவற்றை ஏற்றுக் கொள்ளுதல், அவரின் தனிச் சிறப்பான குணம். முனிதல்=கோபித்தல்.

ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரொடே

காதுவித்தாய் கட்ட நோய் பிணி தீர்த்தாய் கலந்து அருளிப்

போதுவித்தாய் நின் பணி பிழைக்கில் புளியம் வளாரால்

மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.53.3) அப்பர் பிரான், தன்னைப் பற்றுக்கோடாக கொண்டு வழிபடும் அடியார்களின் நோயினைக் களைபவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். உற்றவர்=தம்மைப் பற்றுக்கோடாக அடைந்த அடியார்கள்: பெற்றம்=எருது: பிறங்கு=நன்றாக விளங்கும்; தன்னைப் பற்றுக்கோடாகக் கொண்டுள்ள அடியார்களின் பிறவிப் பிணியினை நீக்கி அருள் புரிபவர் சிவபெருமான். எருதினை வாகனமாகக் கொண்டுள்ள அவரது சடை பொலிவுடன் விளங்குகின்றது. கெடில நதியால் சூழப்பட்ட திருவதிகை வீரட்டத்தில் உறையும் அவரின் பெருமைகளை கற்றால் தான் எனது கண்கள் துயில் கொள்ளும். எனவே, அடியேன் அவரது பெருமைகளைக் கற்கின்றேன். என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

உற்றவர் தம் உறுநோய் களைபவர்

பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர்

சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம்

கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.4.10) அப்பர் பிரான், தனது உடல் உற்ற நோயினைத் துரத்தி அடித்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். துரக்கன்= துரத்தியவன்; நோய்களைத் துரக்கன் என்ற தொடரினை நோய் களைந்து உரக்கன் என்று பிரித்து, தான் உற்ற நோயினைத் தீர்க்கும் வல்லமை பெற்றவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார் என்று சொல்வதும் பொருத்தமே. உரக்கன்=வல்லமை உடையவன். சமணர்கள் பல மந்திரங்கள் தந்திரங்கள் பயன்படுத்தியும் தீராத சூலை நோய், திருவதிகைப் பெருமானை தரிசனம் செய்து கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகம் பாடிய மாத்திரத்தில் தீர்ந்தது என்றால், அவனது வல்லமை தான் என்னே. இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களில் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்து அழித்த செய்தியை குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில் அந்த வீரச் செயலை குறிப்பிடவில்லை; தனது உடல் உற்ற நோய்களை பெருமான் களைந்த செயலினை, திரிபுரங்களை அழித்த செயலினும் உயர்ந்ததாக அப்பர் பிரான் கருதினார் போலும். உயிர்களுக்கு உய்வினை அளிக்கும் செயல், வேறு எவராலும் செய்ய முடியாத செயல் அல்லவா. அரக்கன் இராவணன் அலறுமாறு தனது கால் விரலை ஊன்றி மலையின் கீழே அவனை அழுத்தி வருத்தி, அவனை திருத்தியவனும், திருவண்ணாமலையாகத் திகழ்பவனும் அடியேன் மீது இரக்கம் கொண்டு எனது சூலை நோய் மற்றும் பிறவிப்பிணி நோய் ஆகிய இரண்டையும் துரத்தியவனும் ஆகிய பெருமானை மறந்தால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது. எனவே அவனது தொண்டனாகிய அடியேன் எப்போதும் அவரை மறவாமல் நினைத்து, வாழ்வினில் உய்வினை அடைவேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அரக்கனை அலற விரல் ஊன்றிய

திருத்தனைத் திருவண்ணா மலையனை

இரக்கமாய் என் உடலுறு நோய்களைத் ,

துரக்கனைத் தொண்டனேன் மறந்து உய்வனோ

கடம்பந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.18.10) அப்பர் பிரான், நமது நோய்கள் கெட வேண்டும் என்றால், பெருமானை நினைக்க வேண்டும் என்று கூறுகின்றார். நூல்=வேதங்கள் மற்றும் சைவ ஆகம நூல்கள்; நோய்=பிறவிப்பிணி நோய்; இந்த பிறவியில் நாம் நுகர்ந்து கழித்த வினைகள் தவிர எஞ்சிய வினைகள் தாமே, நாம் அடுத்தடுத்து பிறவிகள் எடுப்பதற்கு காரணமாக உள்ளது. இந்த வினைகளை, இனிமேல் நாம் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு தொடர்ந்து வரும் வினைகளை மேலை வினைகள் என்று அழைப்பார்கள். இவ்வாறு வரும் பிறவிகளுக்கு காரணமாக உள்ள அந்த மேலை வினைகள் அழிந்த பின்னர், பிறவி என்பது ஏது. நன்றா=நல்ல முறையில், குற்றங்கள் ஏதுமின்றி; வேதங்கள் மற்றும் சைவ ஆகம நூல்களில் குறிப்பிடப்படும் நெறிமுறைகள் வழியே இறைவனை, குற்றங்கள் ஏதும் இல்லாத வகையில், பிறவிப்பிணி தீர்க்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் தியானம் செய்வீர்களாக. அவ்வாறு செய்தால், பாலுடன் இணைந்த ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பமுடன் நீராடும் பரமனும், தனது கால் பெருவிரலினை ஊன்றி அரக்கன் இராவணனின் வலிமையை அழித்தவனும், கடம்பந்துறை தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவன், நம்மை பற்றியுள்ள மேலை வினைகளை கெடுத்து நம்மை விட்டு அந்த வினைகள் நீங்கும் வண்ணம் அருள் புரிவான் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

நூலால் நன்றா நினைமின்கள் நோய் கெடப்

பால் ஆனைந்து ஆடும் பரமனார்

காலால் ஊன்று உகந்தான் கடம்பந்துறை

மேலாம் நாம் செய்த வல்வினை வீடுமே

சோற்றுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.33.3) அப்பர் பிரான், நமது உடலுடன் ஒட்டிக் கொண்டு வரும் நோய்களே என்று குறிப்பிட்டு,அந்த நோயினைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், பெருமானுக்கு அடிமையாக மாறி பணி செய்ய வேண்டும் என்று சொல்கின்றார். எத்தனை பிறவிகள் எடுத்தாலும், உயிருடன் ஒட்டிக் கொண்டு வருவது, முந்தைய பிறவிகளில் ஈட்டிய வினைகளே. அந்த வினைகளின் பயனால் விளைவதே பிறப்பு இறப்புகள் என்பதால், ஒட்டி நின்ற பிறவி நோய், வினை என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கட்டி நின்ற=எளிதில் பிரிக்க முடியாத வண்ணம் பிணைந்து நிற்கும்; பெரியோர்களைக் கண்டால், அவர்களுக்கு வணக்கம் தெரிவித்த படி, அவர்களது பாதங்களைத் தொட்டு வணங்கும் பழக்கத்தினை நாம் இன்றும் வடநாட்டில் காணலாம். தென்னாட்டிலும் தாங்கள் வழிவந்த கோத்திரத்தையும் பெயரினையும் சொல்லி, பெரியோர்களை வழிபடும் போது அவர்களது பாதங்களை தொட்டு வணங்குவது, சிலரிடம் பழக்கத்தில் இருந்து வருகின்றது. இவ்வாறு நம்மை விடவும் உயர்ந்தவர்களை, அவர்களது பாதங்களைத் தொட்டு வணங்குதல், நமது பணிவினை அவர்களுக்கு தெரிவிக்கும் முறையாகும். அனைவரிலும் உயர்ந்தவனாகிய இறைவனை வணங்கும் போதும் அவனது திருப்பாதங்களைத் தொட்டு பணிவுடன் வணங்குவது தானே முறை. பணிவுடன் இணைந்த இந்த வணக்கத்தை தான், அப்பர் பிரான் இந்த பாடலில் தொட்டு நின்றும் என்று உணர்த்துகின்றார். இறை பணியில் ஈடுபடும் நாம், மானசீகமாக, மனதினால் இறைவனின் திருவடிகளை தொட்டவாறு, இறைபணியில் ஈடுபட வேண்டும் என்பதை உணர்த்தும் பாடல். பட்டி என்றால் மீளா அடிமை என்று பொருள். இறைவனுக்கு அடிமையாக மாறி இறைத் தொண்டு புரிய நினைக்கும் எவரும், அந்த அடிமைத் தளையில் இருந்து விடுபடாத வண்ணம் இறுதி வரை உறுதியுடன் இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் பட்டியாய் பணி செய்ய வேண்டும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அறியாமையில் மூழ்கி இருக்கும் நெஞ்சமே, இந்த உயிருடன் ஒட்டிக் கொண்டு பிரிக்க முடியாத வண்ணம் பிணைந்து இருக்கும் வினைகளும் அந்த வினைகளால் ஏற்படும் பிறவிப் பிணியும், உன்னை விட்டு நீங்க வேண்டுமென்று நீ விரும்பினால் அதற்குரிய வழியினைச் சொல்கின்றேன் கேட்பாயாக. சோற்றுத்துறையில் வீற்றிருக்கும் பெருமானது திருவடிகளை உனது மனதினால் தீண்டி நின்று, அவருக்கு அடிமையாக உன்னை கருதிக் கொண்டு அவருக்கு பணி செய்வாயாக, என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

ஒட்டி நின்ற உடலுறு நோய் வினை

கட்டி நின்ற கழிந்து அவை போயற

தொட்டு நின்றும் அச்சோற்றுத் துறையர்க்கே

பட்டியாய்ப் பணி செய் மட நெஞ்சமே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.47.7) அப்பர் பிரான், நோய்களும் வினைகளும் வாராமே நம்மை காப்பவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். ஆப்பு=கட்டு; தமை நோய் வினை வாராமே அருள் நோக்குவான் என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். உலகப் பொருட்களின் மீது நாம் வைத்துள்ள பற்றினை இந்த பதிகத்தின் முந்தைய பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில், அந்தப் பற்று நமக்கு எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை விளக்குகின்றார். நமது ஐந்து புலன்களும் அனுபவிக்கும் சிற்றின்பத்தை விரும்பும் நாம், அந்த சிற்றின்பத்தை விளைவிக்கும் பொருட்கள் மீது பற்றினை வளர்த்துக் கொள்கின்றோம். எனவே ஐம்புலன்கள் நம்மை கட்டுப்படுத்தும் நிலையிலிருந்து நாம் விடுதலை பெறவேண்டும். அந்த விடுதலையை நமக்கு அருளும் இறைவனின் வல்லமையை உணர்ந்து அவனைப் பணிந்து அவனது அருள் பெற்று அத்தகைய திறமையை பெறவேண்டும் என்று உணர்த்தும் பாடல். மூக்கு வாய் செவி கண் உடல் ஆகிய ஐந்து புலன்களும் சேர்ந்து நம்மைப் பிணைத்து தங்களின் விருப்பத்தின் வழியே நம்மை இழுத்துச் சென்று வழிநடத்தும் நிலையினை மாற்றி, ஐம்புலன்களால் நாம் கட்டுண்டு நிற்கும் நிலையினை மாற்றி, கச்சி ஏகம்பத்து இறைவன், தனது திருக்கண்களால் நோக்கி அருள் புரிவான். அவ்வாறு அவன் புரியும் அருளினால், வினைகளால் ஏற்படும் நோய்களும் துன்பங்களும் வராமல் நாம் காக்கப் படுகின்றோம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மூக்கு வாய் செவி கண் உடலாகி வந்து

ஆக்கும் ஐவர் தம் ஆப்பை அவிழ்த்து அருள்

நோக்குவான் தமை நோய் வினை வாராமே

காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.53.3) அப்பர் பிரான், பெருமானை உற்றவர் தம் உறு நோய் களைபவர் என்று கூறுகின்றார். உற்றவர்=தம்மைப் பற்றுக்கோடாக அடைந்த அடியார்கள்: பெற்றம்=எருது: பிறங்கு=நன்றாக விளங்கும்; தன்னைப் பற்றுக்கோடாகக் கொண்டுள்ள அடியார்களின் பிறவிப் பிணியினை நீக்கி அருள் புரிபவர் சிவபெருமான். எருதினை வாகனமாகக் கொண்டுள்ள அவரது சடை பொலிவுடன் விளங்குகின்றது. கெடில நதியால் சூழப்பட்ட திருவதிகை வீரட்டத்தில் உறையும் அவரின் பெருமைகளை கற்றால் தான் எனது கண்கள் துயில் கொள்ளும். எனவே, அடியேன் அவரது பெருமைகளைக் கற்கின்றேன். என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

உற்றவர் தம் உறுநோய் களைபவர்

பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர்

சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம்

கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.57.3) அப்பர் பிரான், பல விதமான நோய்களால் நலிவுற்று வருத்தம் அடையாமல் இருக்க வேண்டும் என்றால் கோளிலிப் பெருமானின் திருப்பாதங்களின் புகழினை சொல்ல வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். மனித வாழ்வின் இயல்பு இந்த பாடலில் கூறப்படுகின்றது. மனிதர்களின் வாழ்நாள் மிகவும் குறைந்தது என்றும் அந்த குறைந்த வாழ்நாளும் பலவிதமான நோய்களுக்கு உட்பட்டது என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். பல விதமான நோய்கள் என்று குறிப்பிடும் வண்ணம் ஐம்பதோடு ஆறெட்டு என்று குறிப்பிடுகின்றார். நம்முடைய வாழ்நாட்களின் வரையறையை அறியும் ஆற்றல் நமக்கு இல்லை. மேலும் நம்மை ஆட்கொண்டு வருத்துவதற்காக தொண்ணூற்று எட்டு விதமான நோய்கள் காத்துக் கொண்டு நிற்கின்றன. இந்த உண்மையை, வாழ்க்கையின் நிலையில்லாத தன்மையை நமது உடலை எதிர்நோக்கும் துன்பங்களை அறியாத ஏழையாக இருந்து துன்பத்தில் ஆழ்ந்து அல்லலடையாமல் இருக்க, நீர் கோளிலி இறைவனின் திருப்பாதங்களை வணங்கி புகழ்ந்து கூறுவீர்களாக. அதனால் உங்களது துன்பங்களை நீங்கள் தீர்த்துக் கொள்ளலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்

ஆளும் நோய்களோர் ஐம்பதோடு ஆறெட்டும்

ஏழைமைப் பட்டிருந்து நீர் நையாதே

கோளிலி அரன் பாதமே கூறுமே

பழையாறை வடதளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.58.2) அப்பர் பிரான், பழையாறை வடதளி பெருமானை நோக்கும் அடியார்களுக்கு அருநோய்கள் இல்லாமல் போய்விடும் என்று கூறுகின்றார். மூக்கினால் முரன்று ஓதிய=மூக்கின் வழியாக சொல்லப்படும் சொற்கள் போல், சமணர்களின் மந்திரங்கள், மெல்லெழுத்துக்கள் அதிகமாக கொண்டுள்ளதால் மூக்கினால் சொல்லப் படும் சொற்கள் போல் தோன்றும். அணி=அழகிய; தூர் அறுத்தே=வேருடன் களைந்தே.; தாங்கள் எங்கு சென்றாலும் தங்களது கையில் மயிற்பீலி, நீருடன் குண்டிகை எடுத்துச் செல்லும் வழக்கம் கொண்டவர்களாக சமணர்கள் அந்நாளில் திகழ்ந்தார்கள். எனவே குண்டிகை தூக்கினார் என்று அவர்கள் இங்கே குறிப்பிடப் படுகின்றனர். மூக்கினால் ஒலிப்பது போன்ற தங்களது மந்திரங்களைச் சொல்பவர்களும், எங்கும் குண்டிகை தூக்கிச் செல்லும் வழக்கம் உடையவர்களாகிய சமணர்களின் கூட்டத்தை வேரோடு அறுத்து, அவர்கள் வஞ்சமாகக் கொண்டிருந்த பழையாறை வடதளி என்னும் கோயிலைத் தனது கோயிலாக மாற்றிக் கொண்ட சிவபெருமானை தரிசித்து வணங்கும் அடியார்களுக்கு, கடுமையான நோய்களும் துன்பங்களும் வாரா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மூக்கினால் முரன்று ஓதிய குண்டிகை

தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு

ஆக்கினான் அணி ஆறை வடதளி

நோக்கினார்க்கு இல்லையாம் அரு நோய்களே

திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.60.4) அப்பர் பிரான், உடலில் பொருந்தும் நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் படைத்தவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். இருந்து=சிந்தித்து இருந்து; ஏழைகாள்=அறிவில் ஏழையாக இருப்பவர்களே; அருந்தவம் தரும்=மிகவும் அறிய தவங்களைச் செய்வதால் கிடைக்கும் பலன்கள்; பொருந்து=உடலில் பொருந்திய; துரப்பது=நீக்குவது; மன்னும்=நிலை பெற்ற; இறைவனை, நோய்கள் தீர்க்கும் மருந்து என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். மந்திரமாக உள்ள அஞ்செழுத்து, மருந்தாகவும் பயன்படும் நிலை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. அறிவற்றவர்களே, நான் பலமுறை சிந்தித்த பின்னர் கூறுகின்றேன்; கேட்பீர்களாக; மிகவும் அரிய தவம் செய்வதால் அடையும் பயன்களை எளிதில் கொடுக்கக்கூடிய அஞ்செழுத்து மந்திரத்தை நீங்கள் ஓதுவீர்களாக. அவ்வாறு ஓதினால், உங்களது உடலில் பொருந்தியுள்ள நோய்களும் அதனால் விளையும் துன்பங்களும் உங்களை விட்டு அறவே நீங்கிவிடும். இவ்வாறு உங்களது நோய்களைத் நீக்கும் மருந்தாக செயல்படும் இறைவன், மாற்பேறு தலத்தில் நிலைபெற்றுள்ளார் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறுகின்ற பாடல்.

இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்

அருந்தவம் தரும் அஞ்செழுத்து ஓதினால்

பொருந்து நோய் பிணி போகத் துரப்பதோர்

மருந்தும் ஆவர் மன்னு மாற்பேறரே

கொட்டிட்டைக் கருவிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.69.8) அப்பர் பிரான், பிறவிப் பிணியே உயிர்களுடன் பிணைந்துள்ள நோய் என்றும் அந்த நோயினைத் தீர்த்துக் கொள்ளும் வழி, கொட்டிட்டைக் கருவிலி தலம் சென்றடைந்து அந்த தலத்து இறைவனை வணங்குவதே என்று கூறுகின்றார். உயிர்கள் அனுபவிக்கும் துன்பம் என்று இந்த பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிட்டு வந்த அப்பர் பிரான், அந்த துன்பம் யாது என்பதை இந்த பாடலில் கூறுகின்றார். மீண்டும்மீண்டும் பிறப்பெடுக்கும் தன்மையே அந்த துன்பம் என்று விளக்கம் கூறுகின்றார். குணத்தினான்=எட்டு அரிய குணங்களை உடையவன். உலகத்தவரே உம்மை பிணித்துள்ள பிறவி நோயை, உம்மை விட்டு பிரியச் செய்யும் வழி சொல்கின்றேன் கேட்பீர்களாக; சிவனடியார் கூட்டங்களால் தொழப் படுபவரும், அரிய எட்டு குணங்களை உடையவரும் ஆகிய இறைவன் கருவிலிக் கொட்டிட்டை தலத்தில் உறைகின்றார் . நீங்கள் அவரைச் சார்ந்து வழிபட்டு உங்களது பிறவிப் பிணியினை தீர்த்துக் கொள்வீர்களாக என்பதே அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் நமக்கு சொல்லும் அறிவுரை.

பிணித்த நோய்ப் பிறவிப் பிரிவு எய்துமாறு

உணர்த்தலாம் இது கேண்மின் உருத்திர

கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலிக்

குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்மினே

கொண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.70.7) அப்பர் பிரான், பெருமானைத் தொழுவதால், தீர்ப்பதற்கு அரியதாக விளங்கும் நோய்களும் மாய்ந்துவிடும் என்று கூறுகின்றார். அருநோய்=தீர்ப்பதற்கு மிகவும் அரியதாகிய நோய்; இந்த பாடலில் கொல்லை ஏறுடை இறைவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கொல்லை=முல்லை நிலம், முல்லை நிலத்திற்கு உரிய விலங்கு எருது என்பதால் கொல்லை ஏறு என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. முல்லை நிலத்திற்கு உரிய தெய்வம் திருமால். பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போர் புரியச் சென்றபோது, தனது காலினை தேர்த்தட்டில் வைத்த போது அவரது பாரத்தை தாங்க முடியாமல் தேரின் அச்சு முறிந்தது. அந்த தருணத்தில் திருமால், எருதின் வடிவம் எடுத்து பெருமானை தாங்கிய வரலாறு புராணத்திலும் பல தேவார பாடல்களிலும், திருமுறை பாடல்களிலும் கூறப்படுகின்றது. அந்த நிகழ்ச்சியினை நினைவூட்டும் வகையில், முல்லை நிலத்திற்கு உரிய தெய்வமாகிய திருமாலை வாகனமாக ஏற்றவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பல திருமுறைப் பாடல்களில் கொல்லை ஏற்றினர் என்று பெருமான் குறிப்பிடப் படுகின்றார். துன்பங்கள் மற்றும் தீர்க்க முடியாத பிறவிப்பிணி நோய் ஆகியவற்றில் அழுந்தி வாழ்க்கையை கழிக்க நினையாமல், கனைத்து குரல் கொடுப்பதும், முல்லை நிலத்தில் அதிகமாக காணப்படுவதும் ஆகிய எருதினை வாகனமாக உடையவனும், கொண்டீச்சரத்து இறைவனும் ஆகிய பரமனை, உங்களால் இயன்றவாறு தொழுதால் உங்களது வினைகள் மாய்ந்து விடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அல்லலோடு அருநோயில் அழுந்தி நீர்

செல்லுமா நினையாதே கனை குரல்

கொல்லை ஏறுடைக் கொண்டீச்சுரவனை

வல்லவாறு தொழ வினை மாயுமே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.12.9) அப்பர் பிரான், நமது சிந்தனையில் உள்ள நோய்களைக் களைந்து உயர்ந்த ஞானத்தை அளிப்பவன் பெருமான் என்று கூறுகின்றார். இவ்வுலகம் எல்லாம்=அனைத்து உலகங்கள் மற்றும் உலகத்தில் உள்ள பொருட்கள், தத்துவங்கள்; செற்றதோர் மனம்=பகைமை உணர்ச்சி கொண்ட மனம்; உற்றதோர் நோய்=சிந்தையில் உள்ள ஆறு வகையான குற்றங்கள், காமம், குரோதம், மோகம், உலோபம், மதம் மற்றும் மாற்சரியம் ஆகிய குணங்கள்; தங்களது மனதினில் உள்ள பகைமை உணர்ச்சியினை அறவே நீக்கி, அன்போடு சிவபெருமானை தியானிக்கும் அடியார்களின் சிந்தனையில் உள்ள, காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய நோய்களை நீக்குபவன் சிவபெருமான்; மேலும் அத்தகைய அடியார்களை உலகம் போற்றும் உத்தமர்களாக மாற்றுவான்; அவன் தான் எதுவும் ஓதாமலே அனைத்து நூல்களையும் கற்றவனாக விளங்குகின்றான். அவன், யானை போன்று வலிமை கொண்டு நம்மை பல துன்பங்களிலும் ஆழ்த்தும் பாசங்களிலிருந்து இயல்பாகவே நீங்கியவன் ஆவான். கழிப்பாலைத் தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய பெருமான் நிலையில்லாத இந்த மாய உடலை விடுத்து முக்தி நெறி செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செற்றதோர் மனம் ஒழிந்து சிந்தை செய்து சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தை உள்ளால்

உற்றதோர் நோய் களைந்து இவ்வுலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன் தான் ஒதாதெல்லாம்

கற்றதோர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபாலப்பனார்

மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.14.10) அப்பர் பிரான், தனது வல்வினை நோயினைத் தீர்த்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். உரிஞ்சி=உராய்ந்து கொண்டு; பெருமானின் சடையில் உள்ள பாம்பு சந்திரனின் மீது உராய்ந்து கொண்டு இருப்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். ஓம்பரிய வல்வினை=நீக்குதற்கு அரிய வலிமை கொண்ட வினை. பழைய வினைகளின் ஒரு பிரிவைத் தான் நாம் இந்தப் பிறவியில் அனுபவிக்கின்றோம். வினைகளின் தன்மைக்கு ஏற்றவாறு இன்பமும் துன்பமும் ஏற்படுகின்றன. இதனை மறந்த நாம் இன்பம் நுகரும் போது, நமது திறமையும் சாதுர்யமும் தான் இன்பத்திற்கு காரணம் என்று நினைத்துக் கொண்டு மமதையில் மிதந்து பல தவறுகளைச் செய்து வினையை பெருக்கிக் கொள்கின்றோம். அதே போல் நாம் அனுபவிக்கும் துன்பத்திற்கும் காரணம் நமது பழைய வினைகள் என்பதையும் மறந்து, நமக்கு துன்பம் ஏற்பட கருவிகளாக இருக்கும் மற்றவர்கள் மீது கோபமும் வெறுப்பும் கொண்டு மேலும் பல தவறுகளைச் செய்து வினைகளை பெருக்கிக் கொள்கின்றோம். இவ்வாறு பழைய வினைகளை அனுபவிக்கும் நாம், மேலும் புதிய வினைகளைச் சேர்த்துக் கொண்டு, மறுபடியும் மறுபடியும் இவ்வாறு சேரும் வினைகளைக் கழிப்பதற்காக பிறவி எடுக்க நேரிடுகின்றது. எனவே தான் நீக்குதற்கு அறிய வல்வினை என்று இங்கே கூறப்பட்டுள்ளது. பாம்பு சந்திரனுடன், தங்களின் இடையே உள்ளே பகையை மறந்து, உராய்ந்த நிலையில் உள்ள சடையில் அலை வீசும் கங்கையையும், பனி படர்ந்த கொன்றை மலர்களையும் சிவபெருமான் வைத்துள்ளார்; அவர் தனக்குப் பணி செய்யும் வானவர்களுக்கு, அவர்கள் செய்யும் பணியின் தன்மைக்கு ஏற்றவாறு அருள்கள் செய்கின்றார்; சுடலைப் பொடி பூசியிருந்தாலும் மிகவும் அழகாக காணப்படுகின்றார்; உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் தான் என்பதை உணர்ந்து, நான் என்ற எண்ணம் நீங்கி வினைகளை எதிர்கொள்ளும் அடியார்களுக்கு, கொடிய வினைகள் தீரும் வழியை வைத்துள்ளார்; உமை அம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார்; வானுலகில் உள்ளவர்களும் நிலவுலகில் உள்ளவர்களும் விரும்பித் தொழுகின்ற திருவடியினை எனது தலை மேல் வைத்த நல்லூர்ப் பிரான் மிகவும் நல்லவர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்கப் பனிக் கொன்றை சடை வைத்தார் பணிசெய் வானோர்

ஆம் பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலைப் பொடி வைத்தார் அழகும் வைத்தார்

ஓம்பரிய வல்வினை நோய் தீர வைத்தார் உமையை ஒரு பால் வைத்தார் உகந்து வானோர்

தாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

மறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.23.9) அப்பர் பிரான், பெருமானை, மூல நோய் தீர்க்கும் முதல்வன் என்று குறிப்பிடுகின்றார். மூல நோய் என்றால் ஆணவ மலம் என்று பொருள். ஆணவ மலம் தானே நாம் இந்த பிறவியில் அனுபவிக்கும் அனைத்து இன்ப துன்பங்களையும், கன்மம் மற்றும் மாயா மலத்துடன் சேர்ந்து விளைவிக்கின்றது. அந்த ஆணவ மலத்தை அடக்கி ஒடுக்கினால், நமது வினைத் தொகைகளையே செயலிழக்கச் செய்ய முடியும் அல்லவா. இந்த நிலைக்கு சிவபெருமான் ஒருவரே உதவி செய்ய முடியும் என்பதை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கன்மம் மற்றும் மாயை ஆகிய மலங்களுக்கு மூல காரணமாக விளங்கும் ஆணவ மலத்தினை அடக்கி வைப்பதற்கு நமக்கு உதவுபவனும், இயல் இசை நாடகம் ஆகிய மூன்று தமிழ்களாக இருப்பவனும், நான்கு வேதங்களாக இருப்பவனும், ஆலமரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் சொன்னவனும், அனைத்து உயிர்கள் தோன்றுவதற்கு ஆதியாகவும் அனைத்து உடல்கள் முடிவதற்கு காரணமாக இருப்பவனும், அனைத்து உயிர்கள் இறந்த பின்னரும் இருப்பதால் என்றும் இளையவன் பாலன் என்றும் கருதப் படுபவனும், அனைத்து உயிர்கள் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியதால் உயிர்களுக்கு மூத்தவன், விருத்தன் என்று கருதப் படுபவனும், செம்பவளக் குன்று போன்று திருமேனியை உடையவனும், கொன்றை மலர் மாலைகளை சூட்டிக் கொள்வானும் ஆகிய இறைவன், திருமறைக்காடு தலத்தில் மணாளனாக திகழ்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், உயிர்களுக்கு மயக்கத்தை விளைவிக்கும் வல்வினை நோயினை தீர்ப்பவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்

ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்

பால விருத்தனும் ஆனான் கண்டாய் பவளத் தட வரையே போல்வான் கண்டாய்

மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே

உயிர்களுடன் பிணைந்திருக்கும் வினைகளையும் நோயாக கருதுவது அருளாளர்களின் வழக்கம். திருவாரூர் அரநெறி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்கள் (6.33) அனைத்திலும் அப்பர் பிரான், பெருமானைச் சரணடைந்து, தான், நீக்குதற்கு மிகவும் அரியதாக விளங்கும் வினை நோயினை அறுத்துக் கொண்டதாக குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே சிந்திப்போம். உயிர்களுடன் மிகவும் வலிமையாக பிணைந்துள்ள வினைகளை மனித முயற்சியால் மட்டும் நீக்குவது என்பது மிகவும் அரிதான காரியம். சென்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைகளுடன், இந்த பிறவியில் நாம் செய்யும் செயல்களால் விளையும் வினைகளும் சேர்வதால், வினைகள் மேலும்மேலும் சேரத்தானே செய்கின்றன. இறைவன் ஒருவனுக்கு தான் நமது வினைகளை தீர்க்கும் வல்லமை உண்டு என்பதால் அந்த இறைவனை வணங்கி, அவனை அடைந்து தனது வினைகளை தான் தீர்த்துக் கொண்டதாக அப்பர் பிரான் இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் கூறுகின்றார். பொருதல்=போரிடுதல், போரிடுவதற்கு உதவும் துதிக்கை பொரும் கை என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. தேன், தான் வெகு நாட்கள் கெடாமல் இருப்பதுடன் தன்னைச் சார்ந்த பொருட்களையும் வெகு நாட்கள் கெடாமல் பாதுகாக்கின்றது. அது போன்று இறைவனைச் சார்ந்து நாம் நின்றால், நாம் தீய வழியில் செல்வது தடுக்கப் படும். மேலும் தேன் மருத்துவ குணம் உடையது, அது போன்று இறைவனும் நமது பிறவிப் பிணிக்கு மருந்தாக செயல்படுகின்றான். தேனின் சுவை இனிப்பு. இறைவனின் நினைவே நமக்கு இனிய நினைவுகளைத் தரும். இதனால் தான் பல பாடல்களில் இறைவனை தேன் என்று அருளாளர்கள் அழைக்கின்றார்கள். இரும் என்ற சொல்லை மதில் என்ற சொல்லுடன் கூட்டி பொருள் கொள்ளவேண்டும். இரும்=பெரிய; காண்பரிய செழுஞ்சுடர் என்று இறைவனின் அருள் இல்லையேல் நம்மால் காண முடியாத சோதி வடிவினன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தன்னை எதிர்த்து போரிடுவதற்காக வந்த மத யானையின் தோலை உரித்து, அதனை போர்வையாக போர்த்துக் கொண்டவனும், பூவணம் வலஞ்சுழி ஆகிய தலங்களில் பொருந்தி உறைபவனும், கட்டிக் கரும்பு போன்று அடியார்களுக்கு இனிய அமிர்தமாக திகழ்பவனும், நமக்கு பல நன்மைகள் செய்யும் தேனைப் போன்று இனிப்பவனும், பிரமனும் திருமாலும் அடி முடி காண்பதற்கரிய நெடிய செம்மையான சுடராக விளங்கியவனும். பொற்குன்றம் போல் காட்சி அளிப்பவனும், பொன் போன்று ஒளிவீசும் பெரிய மதில்களை உடைய ஆரூர் நகரத்து மூலட்டானத்தில் எழுந்தருளியுள்ள இறைவனும், இமையோர்களால் புகழ்ந்து போற்றப் படுபவனும், அரிய தவங்கள் செய்பவனும், ஆரூர் அரநெறி தலத்தில் அரநெறியப்பன் என்ற பெயருடன் விளங்குபவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை சரண் அடைந்து, அடியேன் தீர்க்கமுடியாத எனது வினைகளை நீக்கிக் கொண்டேன் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

பொருங்கை மத கரி உரிவைப் போர்வையானைப் பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானைக்

கரும்பு தரு கட்டியின் இன்னமிர்தைத் தேனைக் காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை

இருங்கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும்

அருந்தவனை அரநெறியில் அப்பன் தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே

பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.36.2) அப்பர் பிரான், நமது உடலினை வந்தடையும் சிறு நோய்களையும் பெருநோய்களையும் தீர்ப்பவர் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். சமணர்களுடன் சார்ந்து இருந்தமையால், தனது நெஞ்சில் வஞ்சகம் புகுந்தது என்றும், அந்த கள்ளமான எண்ணத்தை பெருமான் நீக்கினார் என்றும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கருத்து=ஞானம்; பள்ளப் பரவை=ஆழமான கடல்;

வெள்ளம் ஒரு சடை மேல் ஏற்றார் தாமே மேலார் கண் மேலார்கண் மேலார் தாமே

கள்ளம் கடிந்து என்னை ஆண்டார் தாமே கருத்துடைய பூதப் படையார் தாமே

உள்ளது உவகை தருவார் தாமே உறுநோய் சிறு பிணிகள் தீர்ப்பார் தாமே

பள்ளப் பரவை நஞ்சுண்டார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (6.38.2) அப்பர் பிரான், தீர்த்துக் கொள்வதற்கு மிகவும் அரியதாக விளங்கி தன்னுடன் பிணைந்திருந்த வலிமை வாய்ந்த வினைகளை தீர்க்கும் ஆற்றல் வாய்ந்தவன் பெருமான் என்று குறிப்பிட்டு, அவரிடம் வேண்டுவதை உணரலாம். நோவாமே=வருந்தாத வண்ணம்; நோக்கு=அருட்பார்வை; ஐம்புலனும் காத்தாய்=ஐந்து புலன்களையும் அடக்கினாய்; காப்பரிய ஐம்புலனும் காத்தாய் என்பதற்கு, எளிதில் அடக்க முடியாததும் தீய வழிகளில் உயிரினை இழுத்துச் செல்வதும் ஆகிய ஐந்து புலன்களையும் அடக்கும் வல்லமையை தனது அடியார்களுக்கு அளிப்பவன் சிவபெருமான் என்று கூறுவதும் பொருத்தமே. ஊனக் கண்களால் காண முடியாதவன் பெருமான் என்பதை, மணிவாசகரும் நோக்கரிய நோக்கே என்று சிவபுராணத்தில் உணர்த்துகின்றார். ஊனக் கண்களால் காண்பதற்கு அரிய திருமேனியை உடையவன் நீயே என்றும், பிணி மற்றும் பசியால் அடியார்கள் வருந்தாத வண்ணம் தனது அருட் பார்வையால் அவர்களை உற்று நோக்கி காப்பவன் நீயே என்றும், அடக்குவதற்கு மிகவும் அரியதாக விளங்கும் ஐந்து புலன்களையும் அடக்கியவன் நீயே என்றும், தான் கொண்டிருந்த தவத்தினை கெடுப்பதற்கு முயற்சி செய்த மன்மதனை நெற்றிக் கண்ணால் விழித்து அந்த கண்ணிலிருந்து தோன்றிய ஒளிப்பிழம்பால் எரித்து அழித்தவன் நீயே என்றும், அடக்க முடியாத பெரிய பாம்பினையும் தனது உடலில் சுற்றிக் கட்டியும் நாணாக வில்லினில் கோத்தும் அடக்கியவன் நீயே என்றும், உனது அடியவன் என்று கருணை கூர்ந்து அடியேனது தலையின் மீது திருவடியை வைத்தவன் நீயே என்றும், ஏனையோரால் தீர்க்கமுடியாத வல்லமை வாய்ந்த தீவினைகளால் ஏற்படும் பிறவிப் பிணி நோயினை தீர்க்க வல்லவன் நீயே என்றும், திருவையாறு தலத்தினை விட்டு அகலாத செம்பொற் சோதியாகிய இறைவனே உன்னை அடியேன் பலவாறாக அழைத்து வணங்குகின்றேன்என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

நோக்கரிய திருமேனி உடையாய் நீயே நோவாமே நோக்கருள வல்லாய் நீயே

காப்பரிய ஐம்புலனும் காத்தாய் நீயே காமனையும் கண் அழலால் காய்ந்தாய் நீயே

ஆர்ப்பரிய மாநாகம் ஆர்த்தாய் நீயே அடியான் என்று அடி என்மேல் வைத்தாய் நீயே

தீர்ப்பரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ

பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.43.1) பொல்லா நோய் தீர்த்த புனிதன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானை பொய்யிலி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நேற்று இருந்தவர் இன்று இருப்பதில்லை என்ற பெருமை படைத்த உலகினில், இன்று உண்மையாக காணப்படுபவர் நாளை காணாமல் போய், பொய்யாக மாறிவிடுகின்றார். இந்த நிலையாமை, திருமால் பிரமன் உட்பட அனைத்து தேவர்களையும் ஆட்கொள்கின்றது. ஆனால் சிவபெருமானோ என்றும் நிலைத்து நிற்கின்றார் என்பதை உணர்த்தும் வண்ணம், அவர் என்றும் உண்மையானவர், பொய்யிலி என்று அப்பர் பிரான் நயமாக அழைக்கின்றார். அப்பர் பிரானின் சொல்லாற்றல் வியக்கத்தக்கது. உலகம் மற்றும் உலகப் பொருட்கள் அனைத்தும் நிலையற்றவை. எனவே அவைகளின் மீது உயிர்கள் கொண்டுள்ள பாசமும் நிலையற்றது தானே. உண்மையல்லாது பொய்யாக காணப்படும் பாசம் இறைவனை நெருங்குவதில்லை. இயற்கையாகவே பாச உணர்வுகளிலிருந்து நீங்கியவன் இறைவன். எனவே பொய்யான பாச உணர்வுகளிலிருந்து நீங்கிய பெருமான் பொய்யிலி என்று மிகவும் பொருத்தமாக அழைக்கப் படுகின்றார் என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். இந்த விளக்கமும் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கிய இந்த குணம் இறைவனின் எட்டு அரிய குணங்களில் ஒன்றாக கருதப் படுகின்றது. தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் ஆகிய இந்த எட்டு குணங்களே சைவ சித்தாந்தத்தில் சிவபெருமானது குணங்களாக கூறப்படுகின்றன.

நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானைக்

கல்லாதன எல்லாம் கற்பித்தானைக் காணாதன எல்லாம் காட்டினானைச்

சொல்லாதன எல்லாம் சொல்லி என்னைத் தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக் கொண்டு

பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னைப் புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே

தண்ணீர் உயரத்திலிருந்து கீழே பாயும் தன்மை உடையது. அதனை உயரமான இடத்தில் நிறுத்தி வைப்பது மிகவும் கடினம். அவ்வாறு நில்லாமல் ஓடும் தன்மை கொண்ட கங்கை நதியைத் தனது சடையினில் அடக்கிய ஆற்றல் படைத்தவன் இறைவன். மனம் ஒரு குரங்கு. ஒரு கிளையைப் பற்றிக் கொண்டிருக்கும் போதில் மற்றொரு கிளையினைப் பற்ற நினைக்கும் குரங்கு போன்று மனமும் ஒரு பொருளை நினைத்துக் கொண்டிருக்கையில் மற்றொரு பொருளை நாடிச் செல்லும் தன்மையுடையது. இந்த உலகில் வாழும் உயிர், பல விதமான பந்தங்களில் சிக்கி இறைவனை நினைப்பதற்கு ஏற்ற நேரமும் பொறுமையும் இன்றி தவிக்கின்றது இந்த தடங்கல்களை மீறி ஒருவேளை இறைவனை நினைத்தாலும் மறுகணமே இறைவனை நினைப்பதை நிறுத்திவிட்டு வேறொரு பொருளை நமது மனம் நினைப்பதை நாம் அனைவரும் கண்கூடாக உணர்கின்றோம். இவ்வாறு அலை பாயும் மனத்தினை ஒரு நிலையில் நிறுத்தி இறைவனை நினைப்பது என்பது மிகவும் கடினம். நமது முயற்சியால் மட்டுமே செய்து விட முடியாத செயல் இந்த செயல். இந்த செயலை இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே செய்ய முடியும். எனவே தான் என் நெஞ்சத்தை நினைவித்தான் என்று இறைவன் செய்த செயலை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இறைவன் தனது சடையில் நீரினை தேக்கியதை நாம் அனைவரும் அறிவோம். நீரினை உயரமான இடத்தில் நிறுத்தி வைப்பது எத்தனை கடினமோ, அதனை விடவும் கடினமாக செயலாக நமக்கு தோன்றுவது மனதினை ஒரு நிலையில் நிறுத்தி வைப்பது தான். ஆனால் இந்த இரண்டையும் மிகவும் எளிதாக செய்து முடிப்பார் பெருமான். நமது மனம் வேறு எதிலும் அலை பாயாமல் தடுப்பதை, இறைவன் செய்வதை நாம் உணருவதில்லை. எனவே தான் இந்த இரண்டு செயல்களையும் ஒரே அடியில், அடுத்தடுத்து குறிப்பிட்டு அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார்.

சமணர்களுடன் பல வருடங்கள் வாழ்ந்து சமண நூல்களை நன்கு கற்றறிந்த அப்பர் பிரானுக்கு சைவ சமயக் கோட்பாடுகளை இறைவன் உணர்த்தியதால் தான், அவரால் அந்த கொள்கைகளை, நாம் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் பல பதிகங்களில் விளக்க முடிந்தது. இந்த ஆற்றல் தனக்கு இறைவனின் அருளால் வந்தது என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கயிலாய யாத்திரை மேற்கொண்ட போது, உடல் முழுதும் தளர்ச்சி அடைந்த நிலையில், தனது பயணத்தை மேலும் தொடர முடியாமல் தவித்த நிலையில், வடக்கே உள்ள ஒரு குளத்தில் முழுகிய தான், திருவையாறு குளத்தில் இருப்பதை உணர்ந்த அப்பர் பிரான், திருக்கோயிலுக்கு செல்லும் வழியினில், எதிர்ப்பட்ட விலங்குகள் அனைத்தும் தனக்கு சிவமாகவும் சக்தியாகவும் தோன்றியதைக் கண்டார். மேலும் பெருமானின் திருவடிகளும் அவரது கண் முன்பு தோன்றின. இந்த செய்தியை, மாதர் பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் (4.03), கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் என்று பதிவு செய்கின்றார். இவ்வாறு அந்நாள் வரை தான் காணாத காட்சிகளை தனக்கு காட்டி அருளியவன், பெருமான் தான் என்பதை இந்த பாடலில் அப்பர் பிரான் நினைவு கூர்கின்றார். காணாதன எல்லாம் காட்டினானை என்பதற்கு, அப்பர் பிரானின் வாழ்வினில் நடந்த பல சம்பவங்கள், இதற்கு முன்னே எவரும் கண்டிராத அற்புதங்கள் நிகழ்ந்ததை அபப்ர் பிரான் உணர்த்துகின்றார் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். நீற்றறை குளிர்ந்த அறையாக மாறியது, கல் தெப்பமாக மாறி அப்பர் பெருமானை கரையேற்றியது, உண்ட நஞ்சு அமுதமாக மாறியது, இடறித் தள்ள வந்த பட்டத்து யானை வலம் வந்து சென்றது, இடப இலச்சினையும் சூலமும் பொறிக்கப் பெற்றது, பெருமானின் திருவடி தனது தலை மேல் பதிக்கப் பெற்றது ஆகிய பல நிகழ்ச்சிகள் அவரது வாழ்வினில் நடைபெற்றதை நாம் அனைவரும் அறிவோம். இவை அனைத்தும் இதற்கு முன்னம் எவரும் கண்டிராத அதிசயங்கள் தானே.

அப்பர் பிரான் சமண சமயத்தை விட்டுவிட்டு சைவ சமயம் மாறியதால் கோபம் கொண்ட சமணர்கள், அவர் சமண சமயத்தை நிந்தனை செய்தார் என்ற பழியினை அவர் மீது சுமத்தி, தங்களுக்கு பல்லவ மன்னனிடம் இருந்த செல்வாக்கினை பயன்படுத்தி, அவரை நீற்றறையில் தள்ளினார்கள். ஆனால் அப்பர் பிரானோ, எது நடந்தாலும் தனக்கு ஈசன் துணையிருப்பான் என்ற நம்பிக்கையில், தனக்கு பல்லவ மன்னன் அளித்த தண்டனையை ஏற்றுக்கொண்டார். அப்போது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.90.2) நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் என்று கூறுகின்றார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக தான் சொல்லி அறியாத நமச்சிவாய மந்திரத்தை சொல்ல வைத்தவன் இறைவன் என்றும், அந்த மந்திரத்தை தான் ஓதியதால் தான், தனக்கு கல்வியும் ஞானமும் வாய்க்கப் பெற்றது என்றும் கூறுகின்றார். சொல்லி என்னை என்ற தொடரை எனக்கு சொல்லி என்று மாற்றி அமைத்து பொருள் கூட்டவேண்டும்.

திருப்பூந்துருத்தி தலத்தில் திருமடம் நிறுவி, இறைத் தொண்டினில் தனது வாழ்நாளை கழித்து வந்த அப்பர் பிரான், தான் சைவ சமயம் சார்ந்த பின்னர், தனது வாழ்நாளில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தார் போலும். அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இறைவனின் அருளால் நடைபெற்றன என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்துகின்றார். உயரமான இடத்தில் நிற்காமல் கீழ் நோக்கிப் பாயும் இயல்பினைக் கொண்ட கங்கை நதியினை தனது சடையில் அடைத்து தேக்கியவன் சிவபெருமான்; இறைவனை நினைக்காமல் இருந்த அடியேனது நெஞ்சம், இறைவனை எப்போதும் நினைக்கும் வண்ணம் மாற்றி அருள் புரிந்தவன் சிவபெருமான்; அடியேன் அந்நாள் வரை கற்காமல் இருந்த சைவ சமயக் கோட்பாடுகளின் உண்மை நிலையினை கற்பித்து உணர்த்தியவன் சிவபெருமான்; மேலும் எவரும் அந்நாள் வரை கண்டிராத அதிசயங்களை அடியேனது வாழ்வினில் நிகழ்த்திக் காட்டியவன் பெருமான்; அவனே அடியேன் அந்நாள் வரை கண்டிராத உண்மையை. அனைத்து உயிர்களும் சிவமாகவும் சக்தியாகவும் இருக்கும் தன்மையை காட்டியதும் அன்றி, பெருமானின் திருப்பாதங்களையும், கயிலை மலைக் காட்சியையும் காணச் செய்தான்; அடியேன் அந்நாள் வரை சொல்லியிராத திருநாமங்களை சொல்ல வைத்து, கிடைத்தற்கரிய ஞானத்தையும் கல்வியையும் எனக்கு அளித்தவன் பெருமான்; இவ்வாறு பல வகையிலும் அருள் புரிந்த பெருமான், தொடர்ந்து அடியேனை ஆட்கொண்டு, அடியேனது பொல்லாத பிறவிப் பிணி நோயினை தீர்த்தவன் சிவபெருமான்; அவன் தூய்மையே வடிவமாகவும் நற்செயல்களே உருவமாகவும் உள்ளவன். அத்தகைய தன்மைகள் பொருந்திய இறைவனை அடியேன் பூந்துருத்தி தலத்தில் கண்டேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

புள்ளிருக்கு வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.54.10) அப்பர் பிரான், பெருமானை, அருநோய் பாவம் அறுத்தான் என்று குறிப்பிடுகின்றார். இறுத்தான்=நசுக்கியவன்; கயிலாய மலையினை தகர்ப்பதற்கு முயற்சி செய்த அரக்கன் இராவணனின் பத்து தலைகளும் மலையின் அடியில் நசுங்குமாறு தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவனும், பின்னர் அரக்கன் இராவணன் தனது கை நரம்புகளை வீணை நரம்புகள் போல் மீட்டி சாம வேதம் இசைக்க, அந்த இன்னிசை கேட்டு இன்பமடைந்து, அரக்கனின் துயர் தீர்த்தவனும், அடியார்களின் கொடிய நோய்களையும், தீய வினைகளையும் தீர்த்தவனும், பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த கொடிய ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கி, நீலகண்டனாக விளங்குபவனும், தனது நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளால் மன்மதனின் உடல் எரிந்து சாம்பலாகுமாறு விழித்தவனும், தீப்பொறி கக்கும் மழுப் படையினையும் கலைமான் கன்றினையும் தனது கையினில் ஏந்தியவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல்.

இறுத்தானை இலங்கையோர் கோன் சிரங்கள் பத்தும் எழுநரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை

அறுத்தானை அடியார் தம் அருநோய் பாவம் அலைகடலில் ஆலாலம் உண்டு கண்டம்

கறுத்தானைக் கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானைக் கனல் மழுவும் கலையும் அங்கை

பொறுத்தானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் (6.54.8) பெருமானை, அப்ப்ர் பிரான், தீரா நோய் தீர்த்து அருள வல்லான் என்று குறிப்பிடுகின்றார். ஆயிரம் நாமங்கள் கொண்டு வானவர்கள் சிவபெருமானை ஏத்துவதாக இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில், திருமால் சிவபெருமானை புகழ்ந்து அவரது ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு பாடிய சஹஸ்ரநாமம் ஒரு பகுதியாக உள்ளது. திருமால் அருளிய இந்த தோத்திரத்தை, வானவர்கள் பயன்படுத்திக் கொண்டு சிவபெருமானை வணங்கினார்கள் என்பதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். ஒரு நாமம், ஒரு உருவம் என்ற கட்டுப்பாட்டுக்கு அடங்காத பெருமானுக்கு, ஆயிரம் திருநாமங்கள் பாடி தெள்ளேணம் கொட்டுவோம் என்று மணிவாசகர் திருவாசகத்தில் கூறுகின்றார். பல்வேறு வடிவங்களில் அடியார்களுக்கு காட்சி அளிப்பவனும், எங்கும் நிறைந்தும் காணப்படுபவனும் ஆகிய இறைவனை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் அடக்க முடியுமா, முடியாது அல்லவா. எந்த வடிவத்தில் நாம் அவனை நினைத்தாலும் அதனையும் கடந்து வேறோர் உருவம் எடுக்கும் சக்தி படைத்த அவனுக்கு எந்த உருவத்தை நாம் கற்பிப்பது. அவன் எடுக்கும் உருவங்களுக்கு ஏற்ப, அவனது கருணைச் செயல்களுக்கு ஏற்ப, அவனது புகழத்தக்க குணங்களுக்கு ஏற்ப, அவனுக்கு பல பெயர்கள் அமைகின்றன. எனவே அத்தகைய பெயர்களையும் நாம் ஒரு எண்ணிக்கையில் அடக்க முடியாது. அதனால் தான் மணிவாசகர் தெள்ளேணம் பதிகத்தின் முதல் பாடலில், ஓருருவம் ஒருநாமம் இல்லாதவன் என்று கூறுகின்றார். ஆயிரம் என்பது எண்ணிக்கை கடந்த நிலையை உணர்த்துவதாகவும் பொருள் கொள்ளலாம். வாராத செல்வம்=வீடுபேறு, எளிதில் கிடைக்காத முக்திச் செல்வம் என்றும் மறுபடியும் பிறப்பு எடுக்க நேரிட்டு நிலவுலகுக்கு திரும்பி வாராத நிலை அளிக்கும் முக்திச் செல்வம் என்று இருவிதமாக பொருள் கொள்ளலாம். பஞ்சாக்கர மந்திரத்தை மந்திரம் என்றும், பஞ்சாக்கர மந்திரத்தால் விளக்கப்படும் ஆகம நூல்களை தந்திரம் என்றும் அந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முறையின் வழியே செய்யப்படும் தியானம், பூஜை, ஜெபம் ஆகியவற்றை மருந்து என்றும் அப்பர் பிரான் உணர்த்துவதாகவும் பொருள் கொள்ளலாம்.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்

வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்

தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட

போரானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

எண்ணிக்கையில் அடங்காத பல்லாயிரம் திருநாமங்கள் சொல்லி வானோர்கள் சிவபெருமானை வாழ்த்தி வணங்குகின்றார்கள். எப்போதும் தங்களது சிந்தனையில் பெருமானை நினைத்து வாழும் அடியார்களுக்கு, எளிதில் எவருக்கும் கிடைக்காத முக்திச் செல்வத்தை அளிப்பவன் சிவபெருமான்; மந்திரமாகவும் அவற்றைச் செயல்படுத்தும் முறைகளாகவும் இருந்து தீராத நோய்களையும் தீர்க்க வல்ல மருந்தாகவும் இருப்பவன் சிவபெருமான். தங்களது விருப்பம் போன்று வானில் பறந்து கொண்டு இருந்த மூன்று கோட்டைகளும் தீப்பற்றி அழியுமாறு, வல்லமை வாய்ந்த வில்லினைக் கையில் ஏந்தி போரில் ஈடுபட்டவன் சிவபெருமான். இத்தகைய பண்புகள் கொண்ட புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடலே மேற்கண்ட பாடலாகும்.

எளிதில் நீங்காத நோய்களையும் நீக்கும் ஆற்றல் வாய்ந்தவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (6.56.8). நீர் பெருகி ஓடும் ஆறு, மக்களின் தண்ணீர்த் தேவையைத் தீர்ப்பதுடன் பல உணவுப் பொருட்கள் விளைவதற்கும் காரணமாக உள்ளது; அது போன்று இறைவனும் பல விதங்களில் மக்களுக்கு உதவுகின்ற தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பிறவிப்பிணி நோய்,பெருமானைத் தவிர வேறு எவராலும் தீர்க்கமுடியாத நோயாக இருப்பதால், பேராத நோய் என்று கூறுகின்றார். ஊனம்=பந்த பாசங்களில் கட்டுண்டு இருப்பதும் ஐம்பொறிகளின் ஆளுமையில் மயங்கி கிடப்பதும் உயிர்களின் ஊனமாக கருதப்படுகின்றது. அருகி= கிடைப்பதற்கு அரிய; அலைகளுடன் மிகுந்த நீர்ப்பெருக்குடன் பாயும் ஆறு உயிர்களுக்கு பல விதங்களிலும் நன்மை செய்வதைப் போன்று உயிர்களுக்கு பல வகையிலும் உதவி புரிந்து இன்பம் அளிப்பவனே, பேர்த்து எடுக்க முடியாமல் உயிருடன் வலிமையாக பிணைந்து இருக்கும் பிறவிப் பிணி நோயிலிருந்து உயிரினை விடுவிக்கும் ஆற்றல் கொண்டவனே, உன் பால் அன்பு கொண்டு உன்னையே நினைந்து உருகும் அடியார்களின் உள்ளத்தில் இருப்பவனே, பந்த பாசங்களில் கட்டுப்பட்டும் ஐம்பொறிகளின் அடிமையாக இருந்தும் ஊனமுற்ற நிலையில் இருக்கும் உயிர்களின் ஊனத்தை நீக்கும் தலைவனே, கிடைப்பதற்கு மிகவும் அரியதாக விளங்கும் பசும்பொன்னாக மிளிர்பவனே, எவரும் குறை கூறாத வண்ணம் நிறைவான குணங்களை கொண்டு இருப்பவனே, கரிய மேகங்கள் பலனை எதிர்பாராது மழை பொழிவது போன்று அடியார்களுக்கு அருள் புரிபவனே, கயிலை மலையினை இருப்பிடமாக உடையவனே, உன்னை பலமுறையும் நான் போற்றுகின்றேன் என்று அப்பர் பிரான் பெருமானை போற்றும் பாடல்.

பெருகி அலைக்கின்ற ஆறே போற்றி பேராநோய் பேர விடுப்பாய் போற்றி

உருகி நினைவார் தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி

அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி யாரும் இகழப் படாதாய் போற்றி

கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி

தனது அடியார்களை வறுமை, கொடுமையான மன நோய்கள் மற்றும் உடல் நோய்களிலிருந்து காப்பவன் சிவபெருமான் என்று திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.63.9) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நசையான்=விருப்பத்திற்கு உரியவன்; நல்குரவு=வறுமை; இசையான்=பண்ணின் வடிவமாக உள்ளவன்; உயிர்களின் விருப்பத்திற்கு உரியவனாக இருப்பவனும், நான்கு வேதங்களும் உணர முடியாதபடி அவற்றைக் கடந்து இருப்பவனும், தனது அடியார்களை வறுமை, கொடுமையான மன நோய்கள் மற்றும் உடல் நோய்களிலிருந்து காப்பவனும், பண்ணின் வடிவமாக இருப்பவனும், எண்ணிறந்த நற்குணங்களை உடையவனும், இடைமருது மற்றும் ஈங்கோய்மலை ஆகிய தலங்களை விட்டு நீங்காமல் இருப்பவனும், எருதினை வாகனமாகக் கொண்டு எங்கும் செல்வானும், விரிந்த கடல் பூமி ஆகாயம் தீ காற்று தண்ணீர் ஆகியவற்றில் கலந்து எட்டு திசைகளிலும் பரவி இருப்பவனும், திருவானைக்கா தலத்தில் உறைபவனும், செழிப்பான நீர்த்திரளின் வடிவமாக இருப்பவனும் ஆகிய பெருமானை அடியேன் சென்று அடைந்தேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல். மனக்கவலை தீர்ப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவது, தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்ற திருக்குறளை நமக்கு நினைவூட்டுகின்றது.

நசையானை நால்வேதத்து அப்பாலானை நல்குரவு தீப்பிணி நோய் காப்பான்தன்னை

இசையானை எண்ணிறந்த குணத்தான் தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின்

மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி கால் காற்றாகி எட்டுத்

திசையானைத் திருவானைக்கா உளானை செழுநீர் திரளைச் சென்று ஆடினேனே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.64.4) அப்பர் பிரான், பெருமானை பிறவி நோய் தீர்ப்பான் என்று குறிப்பிடுகின்றார். ஏயவன்=பொருந்தி இருப்பவன்; வாயவன்= வாயின் கண் இருப்பவன்; வாயிலிருந்து வரும் சொல்லாக இருப்பவன் என்று உணர்த்துகின்றார். பெருமானின் திருவடிகளை நினைத்து வாழும் அடியார்களின் வாயில் இருப்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருந்து அரவணைத்து காப்பவனும், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாததால் மேம்பட்ட பொருளாக இருப்பவனும், பார்வதி தேவியைத் தனது உடலில் ஏற்றவனே என்று அன்புடன் அழைக்கும் அடியார்களின் வாய்மொழியாக இருப்பவனும், தனது அடியார்களுக்கு இனிமேல் வரக்கூடிய பிறவிகளை தவிர்க்கும் வல்லமை உடையவனும், தன்னை நினைக்காத வானவர்கள் தானவர்கள் மற்றும் உலகத்தவர்களுக்கு மிகவும் தொலைவில் உள்ளவனும், தங்களது சித்தத்தில் நிறைவாக பெருமானின் திருவடிகளை தியானித்து எழும் அடியார்களின் மனதினில் பொருந்தி இருப்பவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

தாயவன் காண் உலகிற்குத் தன்னொப்பில்லாத் தத்துவன் காண் மலை மங்கை பங்கா என்பார்

வாயவன் காண் வரும் பிறவி நோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்

சேயவன் காண் நினைவார்க்குச் சித்தம் ஆரத் திருவடியே உள்கி நினைத்து எழுவார்உள்ளம்

ஏயவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.66.2) அப்பர் பிரான், பெருமானை, தன்னடைந்தார் தம் வினை நோய் பாவம் எல்லாம் அரித்தான் என்று குறிப்பிடுகின்றார். மின்னார் ஒளி முடி=மின்னலைப் போன்று ஒளி வீசும் சடைமுடி; தரியலர்=பகைவர்: தெரித்தல்=விளக்குதல்; அரித்தான்=அறுப்பவன், அழிப்பவன்; தன்னை எதிர்த்து வந்த மதயானையை அடக்கி அதன் தோலை உரித்தவனும், மின்னல் போன்று ஒளி வீசும் சடைமுடியினை உடையவனும், உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் தரித்தவனும், பகைவர்களான திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை ஓர் அம்பினை எய்தி எரித்தவனும், தன்னைச் சரணடையும் அடியார்களின் வினைகள் மற்றும் அந்த வினைகளால் வரும் பிறவி நோய், பாவம் அனைத்தையும் போக்குபவனும், ஆலமரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம், பொருள். இன்பம் வீடு ஆகிய நான்கு பொருட்களின் உண்மை நிலையை உணர்த்துவதும் ஆறு அங்கங்களை உடையதும் ஆகிய வேதங்களின் பொருட்களை விளக்கமாக கூறியவனும், நாகேச்சரத்து நகரினில் உறைபவனும் ஆகிய இறைவனைச் சேராதார்கள், நல்ல நெறியில் செல்லாதவர்கள் ஆவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

உரித்தானை மதவேழம் தன்னை மின்னார் ஒளி முடி எம் பெருமானை உமையோர் பாகம்

தரித்தானைத் தரியலர் தம் புரம் எய்தானைத் தன்னடைந்தார் தம் வினை நோய் பாவம் எல்லாம்

அரித்தானை ஆலதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறங்கம் வேதம்

தெரித்தானைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

பள்ளியின் முக்கூடல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.69.5) அப்பர் பிரான், பெருமானை, தன்னைச் சரணடைந்த அடியார்களை, பாவங்களும் நோய்களும் சென்று அடையாத வண்ணம் அவற்றைக் கடிந்து நீக்கும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கார் முகில்=கரிய நிறத்து மேகம்; படிந்தான்=வெளிப்பட நிறைந்தான். நிலத்தில் ஒரு வட்டம் கிழித்து, அந்த வட்டமான நிலத் துண்டினையே சக்கரமாக மாற்றி சலந்தரனை அழித்தவன் சிவபெருமான். இவ்வாறு கையில் எந்த படையுமின்றி சென்றபோது, எதிரே வந்த பலம் வாய்ந்த அரக்கனை வென்ற செய்கை செயற்கரிய செயல் என்பதால் தன்னொப்பார் இல்லாதான் என்று இறைவனை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தன்னைச் சரணாக அடைந்தவர்கள் பால், பாவங்கள் துன்பங்கள் நோய்கள் புலன்கள் காணாத வண்ணம் மறைந்து நின்று உயிரினை துன்புறுத்தும் வினைகள் வறுமை ஆகியவை அணுகாத வண்ணம் அவைகளை அறவே நீக்குபவனும், நஞ்சினைத் தேக்கியதால் மழை பொழியும் கருமை நிறத்து மேகம் போன்ற கழுத்தினை உடையவனும், மிகுந்த கோபம் கொண்டு தன்னை எதிர்த்தவர் அனைவரையும் அழித்து வந்த சலந்தரனை தனது சக்கரப் படையாலே அழித்தவனும், தனக்கு ஒப்பார் எவரும் இல்லாதவனும், அனைவரிலும் மேம்பட்டவனும், உத்தமனும், தன்னை தியானிக்கும் அடியார்களின் மனதினில் நிலையாக இருப்பவனும் திருப்பள்ளியின் முக்கூடல் தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனை பலகாலும் சிந்திக்காமல் அடியேன் பயனில்லாத வாழ்க்கை வாழ்ந்தது என்னே என்று அப்பர் பிரான் தனது பண்டைய வாழ்க்கையை குறிப்பிட்டு வருத்தம் தெரிவிக்கும் பாடல்.

அடைந்தார் தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம்

கடிந்தானைக் கார் முகில் போல் கண்டத்தானைக் கடும் சினத்தோன் தன்னுடலை நேமியாலே

தடிந்தானை தன்னொப்பார் இல்லாதனைத் தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில்

படிந்தானைப் பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழே நான் உழன்றவாறே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.74.5) அப்பர் பிரான், பெருமானை, வருபிணி நோய் பிரிவிக்கும் மருந்து என்று குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் நான்காவது பாடலில் மன்மதனை அழித்து மகிழ்ந்த சிவபெருமான் என்று குறிப்பிடுவதன் மூலம், மன்மதன் மலர்க் கணைகளை தன் மீது தொடுத்த பின்னர் உமையம்மையை திருமணம் செய்து கொண்டவர் என்று கூறிய அப்பர் பிரான், மன்மதனின் மலர்க் கணைகளுக்கும், சிவபெருமான் திருமணம் செய்து கொண்டதற்கும் தொடர்பு ஏதும் இல்லை என்று இந்த பாடலில் உணர்த்துவதை நாம் காணலாம். உமையம்மை தன்னை நோக்கித் தவம் செய்ததால் மகிழ்ந்த சிவபெருமான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி இந்த பாடலில் நமக்கு கூறப்படுகின்றது. புரை=துளை: துதிக்கையில் உள்ள துளையினை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். மனித வாழ்க்கையில் நேரும் இன்பங்களும் துன்பங்களும், இருவினைத் தொடர்பால் உண்டாகின்றன. மனிதர்கள் அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் வினைகளை மேலும் பெருக்குவதால், அவ்வாறு பெருக்கப்படும் வினைகளைத் தீர்ப்பதற்காக மறுபடியும் மறுபடியும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. இவ்வாறு பிறவி எடுக்கும் தன்மையை நோய் என்று அப்பர் பிரான் கருதுவதால், வருபிணி நோய் என்று இனிமேல் எடுக்கவிருக்கும் பிறவிகளை இங்கே குறிப்பிடுகின்றார்.

புரை உடைய கரி உரிவைப் போர்வையானைப் புரிசடை மேல் புனல் அடைத்த புனிதன் தன்னை

விரை உடைய வெள்ளெருக்கம் கண்ணியானை வெண்ணீறு செம்மேனி விரவினானை

வரை உடைய மகள் தவம் செய் மணாளன் தன்னை வருபிணி நோய் பிரிவிக்கும் மருந்து தன்னை

நரைவிடை நற்கொடி உடைய நாதன் தன்னை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

துளை உடைய துதிக்கையைக் கொண்ட யானையின் தோலினை போர்வையாக போர்த்தவன் சிவபெருமான்; முறுக்கப்பட்ட சடையின் உள்ளே கங்கை நதியை அடைத்து வைத்த புனிதன் சிவபெருமான்; நறுமணம் கமழும் வெள்ளெருக்குப் பூக்கள் கொண்ட மாலையினை அணிந்தவன் சிவபெருமான்; அவன் சிவந்த தனது மேனியில் திருநீற்றை பூசியதால், சிவப்பு நிறமும் வெண்மை நிறமும் கலந்த மேனியனாக காணப்படுகின்றான்; இமயமலையின் அரசனாகிய பர்வத மன்னனின் மகளாகிய உமையம்மை செய்த தவத்தினால் மகிழ்ந்து அவளைத் திருமணம் செய்து கொண்டவன் சிவபெருமான்; அனைத்து உயிர்களையும் தொடர்ந்து ஆட்கொள்ளும் பிறவிப் பிணிக்கு மருந்தாக செயல்பட்டு அந்த பிறவிப்பிணி நீங்குமாறு அருள் செய்பவன் சிவபெருமான்; வெண்மை நிறம் கொண்ட இடபத்தினை தனது இலச்சினையாக கொடியில் ஏந்திய நாதன் சிவபெருமான். இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்தது மேற்கண்ட பாடல்.

பிறவிப் பிணியினை கருமருவு வல்வினை நோய் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், அந்த நோயினை நீக்கும் ஆற்றல் படைத்தவன் சிவபெருமான் என்று திருப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.76.5) குறிப்பிடுகின்றார். மருவுதல்=பொருந்துதல்; உயிர்கள் மீண்டும்மீண்டும் பிறப்பெடுக்க காரணமாக இருப்பது அவர்களை பிணித்துள்ள வலிமையான வினைகள் தானே. எனவே தான் கருப்பையில் பொருத்தும் வினைகள் என்று இங்கே கூறுகின்றார். காற்றுதல்=நீக்குதல்; கா=விருப்பம்; காமரு=சென்று காண்பதற்கு விருப்பத்தினை ஏற்படுத்தும் காஞ்சி மாநகரம். மண்ணுலகில் வாழும் உயிர்களை பிடித்துள்ள கொடுமையான நோய் பிறவி நோய் தான். காண முக்தி என்று சொல்லப்படும் தில்லைச் சிதம்பரம் இந்த பிறவிப் பிணிக்கு ஒரு மருந்தாக திகழ்வதை, பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றப்புலியூர் (தில்லைச் சிதம்பரத்தின் மற்றொரு பெயர்) என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தரு=கற்பகத்தரு; அளகைக் கோன்= குபேரன். சங்காத்தம்=நட்பு; சங்காதி=நண்பன் பெருநிலவு= பெருமை படைத்த; உலகின் பெருமையே நிலையாமை என்ற நிலை தான் என்று வள்ளுவப் பெருந்தகை கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது (நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு); தடக்கை=பெருமை உடைய கை; பிறவிக்கடலில் ஆழ்ந்து மீண்டும் கருவினில் பொருந்தும் வண்ணம் உயிர்களைத் தள்ளும் வலிமை வாய்ந்த வினைகளை நீக்கி காப்பாற்றும் வல்லமை வாய்ந்தவனும், அனைவரும் சென்று காண்பதற்கு விருப்பம் கொள்ளும் அழகு வாய்ந்த காஞ்சி மாநகரத்து ஏகம்பம் திருக்கோயிலில் உறைபவனும், நேற்று இருந்த ஒருவன் இன்றில்லை என்ற பெருமை படைத்த பெரிய உலகினில் வாழும் உயிர்களைப் பற்றிப் பொருந்தும் பிறவிப்பிணி என்ற நோயினைத் தீர்க்கும் பெரும்பற்றப் புலியூர் என்று அழைக்கப்படும் தில்லைச் சிதம்பரத்தின் அரங்கினில் நடமாடுபவனும், நினைத்ததை அளிக்கும் கற்பக மரம் போன்று கொடை அருளும் பெருமை படைத்த கையினை உடையவனும், அளகாபுரியின் தலைவனாகிய குபேரனின் நெருங்கிய நண்பனும், ஒப்பற்ற யானையாக திருவாரூரில் அமர்ந்தவனும், செல்வமும் அழகும் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருப்புத்தூர் தலத்தில் திருத்தளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் திருத்தளியான் என்ற திருநாமத்துடன் உறைகின்றான். அவனே எனது சிந்தையில் நிறைந்து காணப்படுகின்றான் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல்.

கருமருவு வல்வினை நோய் காற்றினான் காண் காமரு பூங்கச்சி ஏகம்பத்தான் காண்

பெரு மருவு பேருலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத் தண் புலியூர் மன்றாடி காண்

தரு மருவு கொடைத் தடக்கை அளகைக் கோன் தன் சங்காதி ஆரூரில் தனியானை காண்

திருமருவு பொழில் புடை சூழ் திருப்புத்தூரில் திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.78.9) அப்பர் பிரான், தீராத வல்வினை நோய் தீர்ப்பார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். காரார்=கருமை பொருந்திய; கார் என்பதற்கு மேகம் என்று பொருள் கொண்டு, மேகங்கள் உட்கொள்ளும் நீரினை உடைய கடல் என்றும் பொருள் கூறுவார்கள். திருவாலங்காடு சென்ற அப்பர் பிரானுக்கு, அந்த தலத்தில் எப்போதும் உறைபவராக கருதப்படும் காரைக்கால் அம்மையாரும், கயிலை மலையிலிருந்து அம்மையார் இந்த தலம் வந்தடைந்ததும் நினைவுக்கு வந்தன போலும். இந்த பாடலில் கயிலாய மலையினை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த கருமை நிறம் கொண்ட நஞ்சினை உண்டவரும், கயிலை மலையைத் தனது இருப்பிடமாகக் கொண்டவரும், தனது இருப்பிடமாக கச்சி ஏகம்பத்தைக் கொண்டுள்ளவரும், அடமானம் வைக்கப்பட்டு தனக்கு உரிமை ஏதும் இல்லாத போதிலும் திருவொற்றியூரை நிலையாக பற்றிக் கொண்டு இருப்பவரும், உலகத்தவரால் புகழப் படுவாரும், பழையனூர் தலத்தினை மிகவும் விருப்பத்துடன் தனது இருப்பிடமாகக் கொண்டவரும், வல்லமை வாய்ந்த வினைகளால் ஏற்படும் பிறவிப் பிணியினை தீர்க்கும் வல்லமை படைத்தவரும் ஆகிய இறைவன் திருவாலங்காடு தலத்தில் உறையும் செல்வனாக விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காரார் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே

ஊரா ஏகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே

பாரார் புகழப் படுவார் தாமே பழனை பதியா உடையார் தாமே

தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே

கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.81.2) அப்பர் பிரான் பெருமானை, பழவினை நோய் தீர்ப்பான் என்று குறிப்பிடுகின்றார். வண்டாடு குழல்=வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய பிராட்டி; பிராட்டி அணிந்திருக்கும் புது மலர்களில் உள்ள தேனின் நறுமணத்தால் கவரப்பட்ட வண்டுகள் கூந்தலை மொய்க்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பண்டாடு பழவினை=தொன்று தொட்டு எண்ணற்ற பிறவிகளாக தொடர்ந்து வரும் வினைத் தொகைகள்; வினைகள் அற்ற உயிர்கள் செல்வது முக்தி உலகம் என்பதையும் அப்பர் பிரான் தொடர்ந்து குறிப்பிடுவதை நாம் உணரலாம். செண்டாடி=செண்டாடுவது போன்று விளையாட்டாக ஒரு செயலைச் செய்வது. பெருமான் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்த செயல், மிகவும் எளிதாக, விளையாட்டு போன்று பெருமான் செய்ததாக அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய் மறைக்காட்டுறையும் மணாளன் கண்டாய்

பண்டாடு பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்

செண்டாடி அவுணர் புரம் செற்றான் கண்டாய் திருவாரூர்த் திருமூலட்டானன் கண்டாய்

கொண்டாடும் அடியவர் தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே

நேர்ந்தொருத்தி என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (6.93.4) அப்பர் பிரான், பழனம் பழனமென்று பெருமான் உறைகின்ற திருத்தலத்தின் பெயரைச் சொன்னாலும், நாம் நம்முடன் பிணைந்துள்ள பழவினையை கெடுத்துக் கொண்டு உய்வினை அடையலாம் என்று கூறுகின்றார். இழவு=நட்டம்; கோவை=சங்கிலி, பிணைச் சங்கிலி; அழல்=அழுதல், வருந்துதல்; அரையன்=அரசன்; பாற்றுதல்=கெடுத்தல்; தேறுதல்=தெளிவு அடைதல்; தம்மிடம் உள்ள பொருட் செல்வம் குறைந்து விடுமோ என்ற கவலையினால் சான்றோர்களுக்கு பொருள் ஈயாமலும் வறியவர்க்கு பொருள் இடாமலும் வாழும் மனிதர்களே, தாயார் தந்தையார் மனைவி மக்கள் மற்றுள்ள சுற்றம் ஆகியோர் உம்மை பிணைக்கும் சங்கிலி போன்று உங்களது உயிர் விரும்பும் வழியில் செயல்பட ஒட்டாது தடுப்பதை அறியாமல், தெளிவடையாத மனத்துடன், அவர்களுடன் பிணைந்து அவர்களின் விருப்பங்களால் சிறைப்படுத்தப் பட்டு, அவர்களே நிலையான உறவு என்று கருதி வாழ்வதே இன்பம் என்று நினைக்கும் உலகத்தவரே, உடலுடன் இணைந்து வாழ்வதால் உயிருக்கு ஏற்படும் துன்பங்களை நீக்கி, சிவலோக வாழ்வினை அளித்து நம்மை சிவானுபவத்திற்கு அரசனாக்கி உய்விக்கும் இறைவன் நிலையாக பொருந்தி உறையும் தலமாகிய திருப்பழனத்தின் பெயரினை, பழனமே பழனமே என்று சொல்வீராகில், தொடர்ந்து உமது உயிருடன் பிணைந்து மீண்டும்மீண்டும் பிறப்பிறப்புச் சுழற்சியில் ஆழ்த்தும் தொல்வினைகளை முற்றிலும் கெடுத்து நீர் உய்வினை அடையலாம் என்று அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல். இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், வெண்காடே வெண்காடென்று சொல்வதால், வீடாத வல்வினையை வீட்டலாம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வீடாத=கெடாமல் உயிருடன் பற்றிக் கொண்டு இருக்கும் வலிமையான வினைகள். வீட்டுதல்=போக்கிக் கொள்ளுதல்;

இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார் ஈன்றெடுத்த தாய் தந்தை பெண்டீர் மக்கள்

கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர்

அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமருலகம் ஆள்விக்கும் அம்மான் மேய

பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றலாமே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (6.95.5) அப்பர் பிரான், பெருமானை வழிபடுவதால் மட்டுமே நமது பிறவிப் பிணியினை நாம் நீக்கிக் கொள்ள முடியும் என்று கூறுகின்றார். அளி=அன்பு, இங்கே சிவபிரானிடத்தில் அன்பு என்று பொருள் கொள்ளவேண்டும். பெருநோய் என்று மீண்டும்மீண்டும் பிறப்பெடுக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. சிவபெருமானைத் தொழுது வழிபட்டாலன்றி, பிறவிநோய் தீராது என்று அப்பர் பிரான் இங்கே உரைக்கின்றார். இந்த பதிகத்தின் நான்காவது பாடலில், கோயில்கள் இல்லாத ஊரினைச் சாடிய அப்பர் பிரான், கோயில் இருந்தும் அந்த கோயில் சென்று வழிபடாத மனிதர்களை இந்த பாடலில் சாடுகின்றார். தீவண்ணர் திறம் ஒரு கால் பேசாராகில் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே என்று வலியுறுத்தும் தில்லைப் பதிகத்தை (6.01) நினைவூட்டுகின்றது. உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணார் என்று இங்கே கூறுவது, வண்டுகள் மலரினைத் சுவைப்பதற்கு முன்னர் பறித்து என்றும் பொருள் கூறுவார்கள். சிவபெருமானின் திருநாமமாகிய அஞ்செழுத்தினைத் சொல்லாமால் இருப்பவர்களும், செந்தீ வண்ணத்தவராக உள்ள சிவபெருமானின் திறமையை ஒரு முறையேனும் பேசாமல் இருப்பவர்களும்; ஒரு முறையேனும் திருக்கோயில் வலம் வராதவர்களும், தாங்கள் உண்பதன் முன்னர் மலர் பறித்து சிவபெருமானின் திருமேனியில் மலர் தூவி வணங்கி பின்னர் உணவு உட்கொள்ளும் பழக்கம் இல்லார்களும்; பிறவிப் பிணியினைத் தீர்க்கும் திருநீற்றினை தங்களின் உடல்கள் மீது பூசாதவர்களும்: சிவபெருமான் மேல் சிறிதும் அன்பு இல்லாதவர்கள். அவர்கள் வாழும் வாழ்க்கையை நான் என்னென்று சொல்லுவேன். பிறவிப் பிணி என்ற பெருநோயால் பாதிக்கப்பட்டு இறந்த பின்னரும் மீண்டும்மீண்டும் பிறப்பதையே தங்கள் செயலாகக் கொண்டு அவர்கள் இறக்கின்றார்கள். அவர்களால் பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து, தப்பி வெளியே வரவே முடியாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்

ஒரு காலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்

அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் அளியற்றார் பிறந்தவாறு ஏதோ வென்னில்

பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே

கருப்பறியலூர் தலத்தின் மீது அருளீய பதிகத்தின் பாடலில் (7.30.7) சுந்தரர், நம்மைப் பற்றியுள்ள தீவினைகளும் நோய்களும் உள்ளளவும் நாம் பெருமானை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். நாம் அவ்வாறு பெருமானை நினைத்துக் கொண்டே இருப்பதால், நமக்கு பெருமான் பலவிதங்களிலும் நன்மை புரிவதால், பெருமான் நமக்கு மிகவும் இனியவராக திகழ்கின்றார் என்றும் கூறுகின்றார். மேதி=எருமை மாடு; செடி கொள்=துன்பம் தருகின்ற; கடி=நறுமணம்; தடம்=கரை, நதிக்கரை, வாய்க்கால் கரை;

செடிகொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்தொழிய சிந்தை செய்ம்மின்

கடிகொள் பூந்தடம் மண்டிக் கருமேதி கண்படுக்கும் கருப்பறியலூர்

கொடிகொள் பூ நுண்ணிடையாள் கோல்வளையாள் அவளோடும் கொகுடிகோயில்

அடிகளை என் மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனியவாறே

நீடூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.56.8) சுந்தரர், பெருமானை, ஓயுமாறு உறு நோய் புணர்ப்பான் என்று குறிப்பிடுகின்றார். மாயமாய மனம்=நிலையற்ற உலகப் பொருட்கள் தருகின்ற நிலையற்ற சிற்றின்பங்கள்; அத்தகைய நிலையற்ற சிற்றின்பங்கள் பால் மனம் செல்லாதவாறு மனத்தினை நல்ல வழியில் செலுத்துபவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மதி=மனதினை வழி நடத்தும் சித்தம்; ஐந்து பூதங்களின் சேர்க்கையால் உடல் உண்டாக வழி வகுப்பவனும் அந்த உடல் உரிய காலத்தில் உயிரை விட்டு பிரிந்து அழிவதற்கும் காரணமாக இருப்பவன் பெருமான் என்றும் கூறுகின்றார். தகுந்த உடலுடன் பொருத்தப்படும் உயிர்களுடன் வினைகளை கூட்டுவிப்பவனும், தனது அடியார்களுடன் பிணைந்துள்ள அத்தகைய வினைகளை கெடுப்பவனும் ஆகிய பெருமான், மேற்குறித்த செயல்களை செய்வதற்கு பிராட்டியைத் துணையாக கொண்டுள்ளான் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மாயமாய மனம் கெடுப்பானை மனத்துளே மதியாய் இருப்பானைக்

காயமாயமும் ஆக்குவிப்பானைக் காற்றுமாய் கனலாய்க் கழிப்பானை

ஓயுமாறு உறுநோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை

வேய்கொள் தோளுமை பாகனை நீடூர் வேந்தனைப் பணியா விடலாமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் சுந்தரர் (7.59.2) பெருமானை, தனது நோயினைக் களைந்தவன் என்று குறிப்பிடுகின்றார். மனத்தை வருத்தும் கவலைகளால் ஏற்படுவது கட்டம்; உடலை வருத்துவது பிணிகள்; இவை இரண்டையும் அழிக்கும் ஆற்றல் உடையவன் பெருமான்; முற்றும் துறந்த முனிவர்களுக்கும், பழைய வாசனை காரணமாக, சில சமயங்களில் ஆசைகளும் சில குற்றங்களும் அவர்களுடன் ஒட்டிக் கொண்டு, அவர்களை திசை திருப்பியதை நாம் புராணங்களில் காண்கின்றோம். அத்தகைய ஆசைகளையும் குற்றங்களையும் நோய்கள் என்று குறிப்பிடும் சுந்தரர், அத்தகைய நோய்களையும் களைந்து உதவி புரியும், இறைவனின் தன்மையை புரிந்து கொண்டு அவருடன் இணையும் அன்பர்கள், விட்டு விடுவதற்கு மிகவும் அரியவனாக இறைவன் திகழ்கின்றான் என்று கூறுகின்றார். மேலும் தனக்கு அந்நாள் வரை வந்த பழிச் சொற்களைத் தவிர்த்த இறைவன் இனியும் பழிச் சொற்கள் வாராது தவிர்ப்பான் என்றும் மிக உறுதியுடன் சுந்தரர் கூறுகின்றார். இவ்வாறு பல வகையிலும் அருள் புரியும் ஆரூர் பெருமானை, தான் எவ்வாறு மறக்க முடியும் என்று கூறுகின்றார். சேரமான் பெருமாள் நாயனாரின் நண்பனாக, அஞ்சைக் களத்தில் அவரது மாளிகையில் பல நாட்கள் இருந்த சுந்தரர்,ஆரூர்ப் பெருமானின் நினைவு வந்தவராக, ஆரூர் தான் விரைவில் சென்றடைய வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிடும் பதிகம் இந்த பதிகம்.

கட்டமும் பிணியும் களைவானைக் காலர் சீறிய கால் உடையானை

விட்ட வேட்கை வெந்நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானைப்

பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிரப் பணிப்பானை

அட்ட மூர்த்தியை மட்டவிழ் சோலை ஆரூரானை மறக்கலுமாமே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (7.63.6) சுந்தரர், தனது திருப்பாதங்களை, கையால் தொழும் அடியார்களின் நோய்களை அரிந்து விலக்குபவர் பெருமான் என்று கூறுகின்றார், நம்பி என்றால் ஆண்களில் சிறந்தவன் என்று பொருள். சே=இடபம்; தெரித்தல்=தோற்றுவித்தல்; மெய் வேடம்=பலிக்குச் செல்லும் போது, அந்த செய்கைக்கு மிகவும் பொருத்தமான வேடத்துடன் பெருமான் செல்கின்றார் என்று உணர்த்துகின்றார். இந்து மதத்தின் பிரிவாக காணப்படும் அனைத்து சமயங்களின் தலைவனாக இருப்பவன் பெருமான் என்று குறிப்பிடும் சுந்தரர், வேதத்தின் புனிதத்தினை காப்பாற்றும் பொருட்டு, தக்கன்,வேதத்தில் விதிக்கப் பட்ட கொள்கைக்கு விரோதமாக வேள்வி செய்ய முற்பட்ட போது அந்த வேள்வியை அழித்து, அந்த வேள்வியில் பங்கேற்ற தேவர்கள் அனைவரும் அச்சம் கொண்டு சிதறியோடச் செய்தவர் பெருமான் என்று கூறுகின்றார்.

அரிந்த நம்பி அடி கை தொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டுலகங்கள்

தெரிந்த நம்பி ஒரு சேவுடை நம்பி சில்பலிக்கு என்று அகந்தோறும் மெய் வேடம்

தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்றன் வேள்வி புக்கு அன்று இமையோரை

இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே

கச்சி ஏகம்பனின் அருளால் தனது இடது கண்ணில் பார்வை வரப்பெற்ற சுந்தரர், திருவாரூர் செல்லும் வழியில் திருத்துருத்தி தலம் சென்றடைகின்றார். இதனிடையில் அவர் தோல் நோயால் வருந்தவே, துருத்தி தலத்து இறைவனிடம் வேண்ட, இறைவன் அவரை இந்த தலத்தில் உள்ள குளத்தில் மூழ்கி குளிக்குமாறு பணிக்கின்றார். அவ்வாறே செய்த சுந்தரர், குளித்து எழுந்த பின்னர், தனது உடல் நோய் முற்றிலும் குணமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தவராக மின்னுமா மேகங்கள் என்று தொடங்கும் பதிகத்தினை (7.74) பாடுகின்றார். இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் தனக்குற்ற நோயினை பெருமான் தீர்த்ததை குறிப்பிடுகின்றார். வேங்கை=வேங்கை மரம்; வேங்கை மலர்கள் பொன்னின் நிறத்தினில் இருக்கும் தன்மை பொன்மலர் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. இழிந்திழிந்து=பல அருவிகள் மீண்டும்மீண்டும் கூடும் தன்மை; சுழிந்திழி=வெள்ளத்தின் வேகத்தால் அடித்து வரப்படும் நீரினில் சுழிகள் தோன்றுதல்; இற்றையே=இன்றே; யானைக்கு மதநீர் பொழியும் இடங்கள், கண்கள், காதின் அருகே உள்ள இடம் மற்றும் ஆண்குறி என்பன. பெண் யானைக்கு மதம் பிடிக்காது. மருப்பு=கொம்பு, இங்கே தந்தம்; இனமருப்பு என்று தேர்ந்த முற்றின தந்தங்கள் என்பதை உணர்த்துகின்றார். ஒழிந்திலேன்=இடைவிடாது ஒரு செயலை செய்வது; பிதற்றுமா என்ற சொல்லினை பிதற்றுமா ஒழிந்திலேன் என்று இணைத்து, இங்கே பெருமானின் திருநாமத்தைப் பிதற்றுவது என்ற பொருள் கொள்ளவேண்டும். தான் மறக்கினும் தனது நா இடைவிடாமல் பெருமானின் திருநாமத்தைப் பிதற்றும் என்று முழங்கியவர் அல்லவா சுந்தரர். மிகவும் அதிகமாக மதநீர் பெருக்கும் யானைகளின் தேர்ந்த தந்தங்களையும், பொன் போன்ற நிறத்தினில் காணப்படும் வேங்கை மரத்தின் நல்ல மலர்களையும் மிகவும் வேகமாக அடித்துக் கொண்டு மலைச் சாரலிலிருந்து கீழே இறங்கும் அருவிகள் ஒன்று சேர்ந்து வெள்ளப் பெருக்குடன் சுழித்துக் கொண்டு ஓடும் காவிரி நதியாக மாற, அந்த காவிரி நதியின் புனிதம் கருதி எட்டு திசையில் உள்ளவர்களும் அதனில் நீராடுவதற்காக வந்தடைகின்றனர். இத்தகைய காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள திருத்துருத்தி மற்றும் வேள்விக்குடி தலங்களின் தலைவனாக விளங்கும் பெருமானின் திருநாமங்களை இடைவிடாது பிதற்றுவதை அடியேன் நிறுத்தாமல் தொடர்ந்து சொல்வேன்; குற்றம் உடையவனாகிய அடியேன், நாயினும் தாழ்ந்தவனாகிய அடியேன், என்னைப் பற்றிய கொடுமையான நோயினை இன்று ஒழித்து, அந்த கொடுமையான நோய் எனது உடலுடன் கொண்டிருந்த உறவினை துண்டித்து ஒழித்த பெருமானின் திருநாமங்களை எப்போதும் அடியேன் பிதற்றிக் கொண்டே இருப்பேன் என்று சுந்தரர் கூறுவதாக அமைந்த பாடல். இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் தன்னை வந்தடைந்த நோயினைத் தீர்த்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மேலும் எட்டாவது, மற்றும் ஒன்பதாவது பாடல்களிலும் அம்மை நோய் என்றும் மேலை நோய் என்றும் குறிப்பிட்டு, தனது பிறவிப் பிணியை பெருமான் தீர்த்ததையும் உணர்த்துகின்றார்.

பொழிந்திழி மும்மதக் களிற்றிள மருப்பும் பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி

இழிந்திழிந்து அருவிகள் கடும்புனல் ஈண்டி எண்டிசையோர்களும் ஆட வந்திங்கே

சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்

ஒழிந்திலேன் பிதற்றுமாறு எம்பெருமானை உற்றநோய் இற்றையே உற ஒழித்தானை

கேதாரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.78.1) சுந்தரர், பசி மற்றும் நோய் என்பனவற்றை தோற்றுவிக்கும் உடல் நிலையற்றது; இந்த உடல் மடிந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும் என்பது நிச்சயம்; இத்தகைய தன்மை வாய்ந்த பிறவிகளை ஒழிக்க வேண்டும் என்றால், புண்ணியங்களை செய்து பழக வேண்டும் என்று அறிவுரை கூறும் சுந்தரர், அதற்காக நாம் வழிபட வேண்டியது, திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் காணாத வகையில் நின்ற சிவபெருமானையே என்றும் அந்த சிவபெருமான் உறைகின்ற தலம் கேதாரம் என்றும் கூறுகின்றார். பறி=பை; உடலினை பை என்று சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார். பல திருமுறைப் பாடல்கள் உடலினை குப்பாயம் என்று குறிப்பிடுகின்றன.

வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்

பாழ் போவது பிறவிக்கடல் பசி நோய் செய்த பறி தான்

தாழாது அறம் செய்ம்மின் தடம் கண்ணான் மலரோனும்

கீழ் மேலுற நின்றான் திருக்கேதாரம் எனீரே

கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.80.7) சுந்தரர், தனது அடியார்களின் உடல் உறுகின்ற நோய்களைத் தவிர்ப்பவன் பெருமான் என்று கூறுகின்றார். பிறப்பெடுத்து ஒரு உடலுடன் கூடி இருப்பதே, உயிர்களின் ஊனம் என்பதால், அத்தகைய உடலையே ஊனம் என்று சுந்தரர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வானத்துறு கடல்=வானைத் தொடும் வண்ணம் உயரும் அலைகள் மலிந்த கடல்; பானத்துறு=பாலும் விரும்பும் வண்ணம் இனிமையான மொழி கொண்ட பிராட்டி;

ஊனத்துறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி

வானத்துறு மலியும் கடல் மாதோட்ட நன்னகரில்

பானத்துறு மொழியாளொடு பாலாவியின் கரை மேல்

ஏனத்து எயிறு அணிந்தான் திருக் கேதீச்சரத்தானே

திருவாசகம் குழைத்த பத்து பதிகத்தின் பாடலில் (8.33.1) மணிவாசக அடிகளார், வினைத் தொகுதிகளின் பயனாக விளைகின்ற கொடிய நோய்களிலிருந்து பெருமான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகின்றார். மேலும் தான் செய்த பிழைகளை பெருமான் பொறுக்காமல் இருத்தல் சிவபெருமானின் தகுதிக்கு அழகோ என்ற கேள்வியை கேட்பதையும் நாம் உணரலாம். சந்திரன் செய்த பிழையை பொறுத்து அவனுக்கு மறுவாழ்வு அளித்த பெருமானே, எனது பிழையினை நீ பொறுக்காமல் இருப்பது முறையோ என்று கேட்கின்றார். உடையாய் என்ற சொல்லின் மூலம், தான் இறைவனது அடிமை என்பதையும் இறைவன் தனக்குத் தலைவன் என்பதையும் உணர்த்தி, தனது பிழையினை பொறுக்க வேண்டிய கடமை இறைவனுக்கு உள்ளது என்பதையும் அடிகளார் இங்கே குறிப்பிடுவதை நாம் உணரலாம். கல்மனத்தவனாக இருந்த தான், இறைவன் தன்னை பெருந்துறையில் ஆட்கொண்ட பின்னர், தனது மனதினைக் குழைத்துக் கொண்டு இறைவன் பால் அன்பு உடையவனாக தான் மாறினேன் என்று குறிப்பிடும் அடிகளார், அவ்வாறு இறைவனின் அன்பனாக மாறிய தன்னை பண்டை வினைகளின் பிடியிலிருந்து இறைவன் காப்பாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் வைக்கின்றார். தான் தொடர்ந்து இறைவனுக்கு அன்பனாக இருப்பேன் என்று உறுதியாக கூறும் அடிகளார், அந்த உழைப்பினுக்கு பரிசாக தனது வினைகள் களையப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறுகின்றார். தான் இறைஞ்சி இறைவனை அழைத்த பின்னரும், தனது பிழைகளை பொறுக்குமாறு வேண்டிய பின்னரும் அருள் புரியாது இருத்தல் தான் இறைவனின் வழக்கமோ என்ற கேள்வியையும் அடிகளார் எழுப்பி, இறைவனை நோக்கி நீ அவ்வாறு இருக்கலாமா என்று கேட்கும் நயத்தினை நாம் இந்த பாடலில் உணரலாம்.

குழைத்தால் பண்டைக் கொடுவினை நோய் காவாய் உடையாய் கொடுவினையேன்

உழைத்தால் உறுதி உண்டோ தான் உமையாள் கணவா எனை ஆள்வாய்

பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறை சேர் சடையாய் முறையோ என்று

அழைத்தால் அருளாது ஒழிவதே அம்மானே உன் அடியேற்கே

பொழிப்புரை:

பெருமானின் திருப்பாதங்களைப் பணியும் அடியார்களுக்கு, அனைவரிலும் வல்லவனாகிய பெருமான் தகுந்த துணையாக இருப்பதால், அவர்கள் எதற்கும் அஞ்சாமல் இருக்கின்றனர். அவர்களது தீவினைகளை பெருமான் தீர்த்து விடுவதால் பாவங்கள் அவர்களை அணுகுவதில்லை; பாவங்கள் விலகிப் போவதால் பாவங்களால் நாள்தோறும் விளையும் கெடுதிகளும் தவிர்க்கப் படுகின்றன. மேலும் மன நலனும் உடல் நலமும் வாய்க்கப் பெற்று அடியார்கள் இன்பமாக வாழ்வார்கள். இவ்வாறு தனது அடியார்களை பாதுகாக்கும் பெருமான், நிலையாக நின்றியூர் தலத்தில் உறைகின்றான். அவன் நஞ்சு தேக்கப்பட்டதால் கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவனாக உள்ளான்; நறுமணம் கொண்ட கொன்றை மாலைகளை அன்புடன் தனது திருவடிகளில் சாத்தும் அடியார்களை பெருமான் ஆட்கொண்டு அருள் புரிகின்றான். தன்னிடம் அன்பு பாராட்டாத மாந்தர்களை ஆட்கொள்ளாமல் பட்சபாதமாக நடந்து கொள்கின்றான்.

பாடல் 3:

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 3 (திதே 0432)

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 3 (திதே 0433)

பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவம் ஆர

அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை

நிறையும் புனல் சடைமேல் உடை அடிகள் நின்றியூரில்

உறையும் இறை அல்லது என் உள்ளம் உணராதே

விளக்கம்:

திருக்கோயில்களில் சிறப்பு பூஜை நேரங்களில் சங்கு பறை இவற்றின் ஒலிகள் கலந்து ஆரவாரமாக காணப்படும் நேரங்களிலும் தான் மனம் ஒன்றி வழிபடுவதால் தனது மனம் எதையும் உணராது இறை சிந்தனையில் ஆழ்ந்திருப்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். உலகெங்கிலும் பல விதமான ஓசைகள் கலந்து நிற்கின்றன. ஆனால் இந்த ஓசைகளின் மூலம் எது என்பதை ஆராய்ந்தால், நமக்கு நாததத்துவம் புலப்படும். இறைவனின் கையினில் இருக்கும் உடுக்கையின் ஒலியே, இந்த சப்த பிரபஞ்சத்தின் மூலமாக திகழ்வதை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் எனும் விளக்கம் பொருத்தமாக தோன்றுகின்றது. பாங்கு ஆரவும் ஆர=பறை சங்கு ஆகிய ஒலிகளின் பக்கத்தில் தோன்றும் பல விதமான ஓசைகள்.

அனைத்து ஓசைகளின் பின்னணியில் இறைவன் இருப்பதாக பெரியோர்கள் உணருகின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் திருவையாறு தாண்டகத்தின் முதல் பாடலை (6.38.1) நினைவூட்டுகின்றது. நமது மொழியில் உள்ள 247 எழுத்துக்களும் பொருளைத் தருவதில்லை. பொருள் தரும் எழுத்துகள் (பூ, மா, ஆ, பா, வா, போன்றவை) தவிர்த்த மற்று எழுத்துக்கள் வெறும் ஓசையை மட்டும் தருகின்றன. இந்த எழுத்துகள் தனித்து நிற்கும் போது பொருள் தராவிடினும் மற்ற எழுத்துக்களுடன் இணையும் போது பொருளைத் தருகின்றன. இவ்வாறு ஓசையாகவும் ஒலியாகவும் இருக்கும் எழுத்துகளாகவும், எழுத்துகளின் கூட்டாகிய சொற்களாகவும் இறைவன் உள்ள தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. தேசம்=உலகம்; தேச விளக்கு=உலகிலுள்ள ஒளிதரும் பொருட்கள் சூரியன், சந்திரன், கோள்கள், மற்றும் விண்மீன்கள்.

ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே

வாச மலரெலாம் ஆனாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே

பேசப் பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே

தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ

கீழைத் திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.05.09), திருஞானசம்பந்தர் பெருமானைத் தவிர்த்து வேறு எந்த பேச்சினையும் பேசேன் என்று கூறுகின்றார். நமது பேச்சுகள் அனைத்தும் அவனைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்றும் அவனது புகழினை அல்லால் வேறு எதனையும் நாம் பேசாமல் இருக்க வேண்டும் என்பதையும் இந்த பாடலில் கூறுகின்றார். செற்றவர்=பகைவர்; அரணம்=கோட்டை; உற்றவர்=மலபரிபாகம் அடைந்த அடியார்கள்; பெருமானை குறித்த ஞானம் ஒன்றே வீடுபேறு அடைவதற்கு உரிய வழி. எனவே அந்த ஞானத்தை அடைவதற்கு உயிர் விருப்பம் கொள்ள வேண்டும். இவ்வாறு ஞானவேட்கை உடையவர்க்கே ஞானம் பயன் தரும். உயிர் ஞானவேட்கை அடையாத வண்ணம், ஆணவமலம் தடுக்கின்றது. எனவே என்றும் அழியாது இருக்கும் ஆணவமலத்தின் வலிமையை குறைத்து, புலன்களின் விருப்பத்தில் நாட்டம் கொள்ளாது, உண்மையான மெய்ப்பொருள் குறித்து அறிந்து கொள்ள, உயிர்கள் தலைப்பட வேண்டும். ஆணவ மலத்தின் வலிமையை உயிர்கள் குறைப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு, இறைவன் கன்மம் மாயை ஆகியவற்றை உயிர்களுடன் கூட்டி, இன்ப துன்பங்களை நுகரச் செய்கின்றான். இவ்வாறு நுகரும் தருணத்தில் உயிர்கள் இருவினையொப்பு நிலையினை அடைந்து மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆணவ மலத்தின் வலிமையை படிப்படியாக குறைத்து, அதன் வலிமையை மெலியச் செய்வதை மலபரிபாகம் என்று கூறுவார்கள். இவ்வாறு மலபரிபாகம் அடைந்த நிலையில் உயிர்கள் மெய்ஞானம் பெறுகின்ற தன்மையை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உணர்வு எய்தல்= மீண்டும் பிறவாமைக்கு அடிகோலும் வகையில் மெய்ஞானத்தை அறிந்து கொள்ள வாய்ப்பினை அளிக்கும் மானிடப் பிறப்பின் சிறப்பினை உணர்ந்து, அந்த நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவது. தேவர்களுக்கு பகைவர்களாக விளங்கிய முப்புரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளுக்கு சிவந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பினை ஊட்டி வீரச்செயல் புரிந்த பெருமான், கற்றவர்கள் தொழுது புகழும் வண்ணம் திகழும் பெருமான், காட்டுப்பள்ளி தலத்தின் மீது அதிகமான விருப்பம் கொண்டவராக, ஆங்கே வீற்றிருக்கின்றார். மலபரிபாக நிலையினை அடைந்து மெய்ஞானம் கைவரப் பெற்ற சான்றோர்கள், தேவர்களும் தொழுது புகழும் வண்ணம் விளங்கும் பெருமானை, இடபத்தினை வாகனமாகக் கொண்ட பெருமானின் புகழினை குறிப்பிடும் பேச்சுகளைத் தவிர்த்து மற்றைய பேச்சுகளை பேசுவதில்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செற்றவர் தம் அரணம் அவற்றைச் செவ்வழல் வாயெரி ஊட்டி நின்றும்

கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி

உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற

பெற்று அமரும் பெருமானை அல்லால் பேசுவது மற்றொர் பேச்சிலோமே

கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.19.7) திருஞானசம்பந்தர் பெருமானது திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதனையும் தொழாத அறிவு உடையவனாக தான் இருப்பதாக கூறுகின்றார். நறநிறை=நறவு என்ற சொல் குறைந்து நற என வந்துள்ளது, தேன் நிறைந்த; நறவு=தேன்; தனது ஒளிக்கதிர்கள் மூலம் பயிர்களை வளர்க்கும் தன்மை உடைய பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றவனும், தேன் நிறைந்த மலர்கள் இருக்கும் திருமுடியை உடையவனும் ஆகிய பெருமான், உதிரும் தன்மை உடைய மயிர்கள் நிறைந்ததும் தசைகள் நீங்கப் பெற்றதுமான புலித் தோலினை உடையாக இடுப்பினில் அணிந்தவனும், இருளினை நீக்கும் கதிரவனின் கதிர்கள் போன்று ஒளிவீசும் மழுப் படையை ஏந்தியவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் எழுந்தருளியுள்ளான். அத்தகைய பெருமானின், ஒலிக்கும் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளை தொழுது போற்றி வணங்கும் அறிவன்றி வேறு அறிவு ஏதும் இல்லாதவனாக அடியேன் இருக்கின்றேன் என்று திருஞானசம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.

முதிருறு கதிர் வளர் இளமதி சடையனை நறநிறை தலை தனில்
உதிருறு மயிர்பிணை தவிர் தசையுடை புலியதள் இடை இருள் கடி
கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை
அதிருறு கழலடிகளதடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே

பாற்றுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.56.4) திருஞானசம்பந்தர் சிவபெருமான் ஒருவர் தான் தனது சிந்தையில் இருப்பதாக கூறுகின்றார். இந்த பாடல் அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். ஏ=அம்பு. ஆவின்=அம்பினைக் கொண்டு; அல்லார்=சிவநெறியைச் சாராத திரிபுரத்து அரக்கர்கள்; எயில்=கோட்டை, இங்கே பறக்கும் கோட்டைகள்; ஓ=அதிசயம் நடந்ததை வெளிப்படுத்தும் குறிச்சொல்; தனது சிந்தையில் இருந்த மயக்கம் தீர்க்கப்பட்டு தனது சிந்தை முழுவதும் பரவி நின்ற பெருமான் என்று இதே பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும் சம்பந்த நாயகி, தனது சிந்தனையில் பெருமான் ஒருவரே நிறைந்து நிற்கின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றாள்.

பூவும் திங்கள் புனைந்த முடியினார்

ஏவின் அல்லார் எயில் எய்தார்

பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை

ஒ என் சிந்தை ஒருவரே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.80.6), இறைவனது திருப்பாதங்களை தொழுது வணங்குவதே இன்பம் என்றும், அவனது திருப்பாதங்களை ஏத்தும் பண்பே சிறந்த பண்பு என்று பதிகத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது பாடல்களில் கூறிய திருஞான சம்பந்தர், இந்த பாடலில் அவனது திருப்பாதங்களைத் தவிர்த்து, தனது உள்ளம் வேறு எதனையும் விரும்பாது என்று கூறுகின்றார். வரு மாந்தளிர்=புதியதாக மரத்தில் கிளைத்து எழுகின்ற; திருமாம் தில்லை=திருமகள் பொலிந்து விளங்கும் செல்வச் செழிப்பான; கருமான்=கரிய நிறம் கொண்ட யானை; புதிதாக கிளைத்து வரும் மாந்தளிர் போன்று மென்மையான திருமேனியை உடைய உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக வைத்துள்ள இறைவன், திருமகள் நிறைந்து விளங்கும் செல்வச் செழிப்பான தில்லை நகரில் உள்ள சிற்றம்பலத்தில் பொருந்தி உறைகின்றான்; கரிய நிறம் கொண்ட யானையின் தோலை உரித்து ஆடையாக அணிந்தவனாகவும், தான் உட்கொண்ட நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கறை படிந்த கழுத்தினை உடையவனாகவும் இருக்கும் பெருமானது திருவடிகளை அன்றி எனது உள்ளம் வேறு எதையும் விரும்பாது என்று திருஞானசம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடலே இந்த பாடலாகும்

வரு மாந்தளிர் மேனி மாதொர் பாகமாம்

திருமாம் தில்லையுள் சிற்றம்பலம் மேய

கருமான் உரி ஆடைக் கறை சேர் கண்டத்து எம்

பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே

வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.14.1) திருஞானசம்பந்தர், பெருமானைத் தவிர்த்து தனது உள்ளம் வேறெவரையும் உணராது என்று கூறுகின்றார். உள்குதல்=நினைத்தல்; பல பாடல்களில் திருஞானசம்பந்தர் பெருமானைத் தவிர்த்து தனது உள்ளம் வேறு எவரையும் பேணாது, நினையாது, சிந்தை செய்யாது, தொழாது அறியாது, அன்பு செலுத்தாது என்றும், தனது நா வேறு ஒருவரின் திருநாமத்தை உரையாது, பேசாது என்றும் பெருமானை தான் எப்போதும் மறவேன் என்றும் குறிப்பிட்டு பெருமான் பால் தான் கொண்டிருந்த அன்பினை உணர்த்துகின்றார். ஒற்றைப் பிறைச் சந்திரனையும் சிவந்த கண்களை உடைய பாம்பினையும் தனது சடையின் மீது பொருத்திக் கொண்டவனும், உடைந்த மண்டையோடாகிய பிரம கபாலத்தைத் தனது உண்கலனாக ஏந்திக்கொண்டு ஊரூராக பலியேற்கச் செல்பவனும், இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்பவனும், தேவர்களால் தொழப்படுபவனும், வெண்ணி எனப்படும் தலத்தினைத் தனது உறைவிடமாக உடையவனும் ஆகிய பெருமானை தவிர்த்து வேறு எவரையும் எனது மனம் நினையாது என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் பாடல்.

சடையானைச் சந்திரனோடு செங்கண் அரா

உடையானை உடைதலையில் பலி கொண்டு ஊரும்

விடையானை விண்ணவர் தாம் தொழும் வெண்ணியை

உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே

இந்த பாடலில் திருஞானசம்பந்தர் இறைவனைத் தவிர்த்து வேறு எதையும் தனது உள்ளம் உணராது என்று கூறுவது நமக்கு திருவெண்காடு தலத்தின் மீது பாடிய பாடலை (2.48.9) நினைவூட்டுகின்றது. திருமால் மற்றும் பிரமன் காண முடியாமல் நெடிய தீப்பிழம்பாக நின்றவன் என்றும் ஐராவத யானைக்கு அருள் புரிந்தவன் என்றும் அவனது பெருமைகளை தங்களது உள்ளத்தில் நினைத்து உருகாத மாந்தர்களை உணர்வு உடையவராக கருதமாட்டோம் என்று கூறுகின்றார். கள்=தேன்; கிடந்தான்=படுத்து கிடப்பவன்; ஒள்ளாண்மை=சிறந்த ஆண்மைத் தன்மை; ஆடுதல் என்றால் நீராடுதல் என்று பொருள். உள்ளம் முழுவதும் பெருமான் குறித்த சிந்தனைகளால் நீராட்டப்பட்டு நனைந்து நையவேண்டும் என்பதை உள்ளாடி என்று சம்பந்தர் உணர்த்துகின்றார். ஒரு முறை, மேரு மலைக்கு வெளியே பிரமனும் திருமாலும் தீவிரமாக ஒரு வாதத்தில் ஈடுபட்டு இருந்தனர்; தங்களுக்குளே எவர் பெரியவர் என்பதே அந்த வாதம். தேவர்களும் முனிவர்களும், தேவையற்ற வாதம் என்று சொல்லி, வாதத்தினை கைவிடுமாறு இறைஞ்சிய போதும் அவர்கள் தங்களது வாதத்தை நிறுத்தாமல் இருந்தனர். அப்போது அவர்களின் எதிரே, விண்ணையும் மண்ணையும் தாண்டிய வண்ணம் ஒரு தீப்பிழம்பு எழுந்தது. அதைக் கண்ட இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்த தழற்பிழம்பின் அடியையும் முடியையும் காண்பவரே தங்களில் உயர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்தனர். அந்த முடிவின் தொடர்ச்சியாக, பிரமன் அன்னத்தின் வடிவம் கொண்டு நெடிது உயர்ந்து நின்ற தழலின் முடியையும், பன்றியின் வடிவம் எடுத்த திருமால் பிழம்பின் அடியையும் காண்பதற்கு முயற்சி செய்தனர். இவ்வாறு தங்களில் உயர்ந்தவன் யார் என்பதை முடிவு செய்யும் நோக்கத்துடன் இருவரும் உயர்ந்தும் தாழ்ந்தும் முயற்சி செய்தமை இங்கே ஒள்ளாண்மை கொளல் கோடி செய்யப்பட்ட முயற்சி என்று திருஞானசம்பந்தரால் இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த நிகழ்ச்சி மூலம் இறைவனின் அருள் இல்லையேல், கல்வி மற்றும் செல்வத்தால் ஏதும் பயனில்லை என்பதும் உணர்த்தப் படுகின்றது. தேன் நிறைந்த செந்தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும், பாற்கடலில் படுத்து இருப்பவனும் ஆகிய திருமாலும் ஆகிய இவர்கள், தங்களில் யார் உயர்ந்தவர் என்பதை அறியும் பொருட்டு, அன்னமாக உயர்ந்தும் பன்றியாக தாழ்ந்தும் சென்ற போதும் முடியையும் அடியையும் உணர முடியாமல் திகைத்தனர்; இவ்வாறு அரியும் பிரமனும் உணர்வதற்கு அரியவனாக நின்ற பெருமானை, ஐராவதம் எனப்படும் வெள்ளானை தவம் செய்து வழிபட்டு உய்வினை அடைந்தது. இவ்வாறு அருள் புரியும் மேன்மை வாய்ந்த திருவெண்காட்டு பெருமான் என்று தங்களது உள்ளத்தில் கசியும் அன்பினால் பெருமானை நீராட்டி உருகி உருகாத மாந்தர்களின் ஞானத்தை நாம் மதியோம் என்று திருஞானசம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.

கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்

ஒள்ளாண்மை கொளல் கோடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான்

வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று

உள்ளாடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே

திருஞானசம்பந்தர் தான் அருளிய ஆமாத்தூர் பதிகத்தின் (2.44.10) பாடலில், ஈசனைத் தினமும் நினையாதார்களின் நெஞ்சம் நெஞ்சமாக கருதப்படாது என்று கூறுகின்றார். நித்தல் என்ற சொல் எதுகை கருதி நிச்சல் என்று மருவியுள்ளது. பெய்தல்=இடுதல்; பின் சார்தல்=பின்னே வருதல். கொச்சை=இழிவான; பிச்சைப் பெருமானாக (பிக்ஷாடனர்) வேடம் தரித்து தாருகாவனம் சென்ற சிவபிரானின் பின்னர், முனிவர்களின் மனைவியர் தொடர்ந்து வந்த செய்தி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. புலால் நாற்றம் வீசிய தோல் என்று குறிப்பதன் மூலம் அப்போது தான் உரித்த தோல் என்று உணர்த்தப் பட்டுள்ளது. யானையின் பச்சைத் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நம்பப்படுகின்றது. ஆனால் சர்வ வல்லமை படைத்த ஈசனை எந்த கேடும் அணுகமுடியாது. மதயானையின் தோல் உரிக்கப் படுவதை நேரில் கண்ட உமாதேவி அச்சம் அடைந்த நிகழ்ச்சியும் இங்கே கூறப்பட்டுள்ளது.

பிச்சை பிறர் பெய்யப் பின் சாரக் கோசாரக்

கொச்சை புலால் நாற ஈரிருவை போர்த்து உகந்தான்

அச்சம் தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்

நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே

இந்த பதிகத்தின் பல பாடல்களிலும் திருஞானசம்பந்தர் பெருமானுடன் இணையாத மனிதர்களின் அங்கங்களை குறிப்பிட்டு, அவை அங்கங்கள் அல்ல என்று சாடுகின்றார். பதிகத்தின் முதல் பாடலில், அம்மான் தன் பொன்னங் கழல் பரவா பொக்கமும் பொக்கமே என்று குறிப்பிட்டு, அத்தகைய மனிதர்களின் பொலிவு பொலிவல்ல என்று கூறுகின்றார். இரண்டாவது பாடலில், பெருமானை ஏத்தாதார் பேயர்களினும் பேயர் என்று குறிப்பிட்டு, மிகவும் இழிவான பேய் என்று கூறுகின்றார். மூன்றாவது பாடலில் பெருமானைச் சாராத மனிதர்களை தாம் சார மாட்டோம் என்று கூறுகின்றார். நான்காவது பாடலில், பெருமானைக் காணாத கண்கள் கண்களல்ல என்று கூறுகின்றார். ஐந்தாவது பாடலில், சிவ வேடத்தை பூணாத மனிதர்களின் வேடங்களை பொய் வேடங்கள் என்று கூறுகின்றார். ஏழாவது பாடலில் பெருமானின் பெருமைகளை சொல்லாத நாக்குகள் நாக்கல்ல என்று சொல்கின்றார். எட்டாவது பாடலில் பெருமானின் பெருமைகளை கேளாத செவிகள் செவியல்ல என்று உணர்த்துகின்றார். மொத்தத்தில் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து போற்றாத மனிதர்களின் வாழ்க்கையை வாழ்க்கை அல்ல என்று பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் கூறுகின்றார். பதிகத்தின் பத்தாவது பாடலில், தினமும் பெருமானை நினையாதார் நெஞ்சம் நெஞ்சல்ல என்று கூறுகின்றார். இந்த செய்திகளையே அப்பர் பிரான் உடன்பாட்டு முறையாக அங்கமாலை பதிகத்தின் பாடல்களில் (4.9) நமது அங்கங்கள் எவ்வாறு இறை பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று உணர்த்துகின்றார்.

மாந்துறை பதிகத்தின் பாடலில் (2.110.2) மாதொருபாகனைத் தவிர்த்து தான் வேறு எவரையும் அறியேன் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அந்த நிலையினை நாமும் அடைய வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இந்த பாடலில் வெளிப்படுகின்றது. விளவு=விளாம் பழம்; வே=மூங்கில்; வேய்மணி=மூங்கிலில் உள்ள முத்துக்கள்; துளவமான்மகன் என்ற தொடர் துளவ மால் மகன் என்று, பொருள் புரிந்து கொள்வதற்காக, பிரிக்கப் பட்டுள்ளது. துளவ=துழாய், துளசி; தாமரை அசோகம் குவளை மா முல்லை என்பன மன்மதன் தனது வில்லினில் பயன்படுத்தும் அம்புகள்; அளகம்=கூந்தல்; வாள் நுதல்=ஒளி வீசும் நெற்றி; அரிவை என்பது இருபது வயதிலிருந்து இருபத்தைந்து வயதில் இருக்கும் பெண்களை குறிக்கும்; அம்பிகை வயது முதிராமல் என்றும் இளமையாக இருக்கும் நிலையினை குறிக்கும் வண்ணம் அரிவை என்று அம்பிகையை திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும், தேவர்கள் என்ற சொல் மூலம் குறிப்பிடும் ஞானசம்பந்தர், அத்தகைய தேவர்கள் தொழும் இறைவன் என்று சிவபெருமானின் பெருமையை உணர்த்துகின்றார். திருமாலும் பிரமனும் தொழும் பெருமான், என்று உணர்ந்த பின்னர், மற்ற தெய்வங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அல்லவா. அதனால் தான் பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் அறியேன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். விளாம்பழம் போன்று தேனாக இனிக்கும் பலவகையான பயன் தரும் மரங்களின் பழங்களையும், முதிர்ந்த மூங்கிலிலிருந்து உதிரும் முத்துக்களையும் நதி நிறையும் வண்ணம் அடித்துக் கொண்டு வரும் காவிரி நதியின் வடகரையில் உள்ள மாந்துறை தலத்தில் உறையும் இறைவனை, துளசி மாலையை விரும்பி ஏற்றுக் கொள்ளும் திருமாலின் மகனும், ஐந்து விதமான மலர்களை தனது கணைகளாக பயன்படுத்தி உயிர்களிடம் வேட்கையை ஏற்படுத்துபவனும் ஆகிய மன்மதனின் உடல் எரிந்து அழியும் வண்ணம் தனது நெற்றிக் கண்ணை விழித்த இறைவனை, நீண்ட கூந்தலை உடையவளும் அழகாக ஒளி வீசும் நெற்றியை உடையவளும், என்றும் அரிவைப் பருவத்து பெண் போன்று இளமையாக இருப்பவளும் ஆகிய அன்னையைத் தனது உடலின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய இறைவனைத் தவிர்த்து வேறு ஒருவரையும் அடியேன் அறியேன் என்று திருஞானசம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.

விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்து உந்தி

அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானைத்

துளவ மால் மகன் ஐங்கணைக் காமனைச் சுட விழித்தவன் நெற்றி

அளக வாள் நுதல் அரிவை தன் பங்கனை அன்றி மற்று அறியோமே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில், பெருமானின் திருவடிகளைத் தொழுவதைப் போன்ற சிறந்த செயல் வேறொன்றையும் தான் அறியேன் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். குன்றின் உச்சியில் காணப்படும் தேன் கூடுகளும் கமுகு மரங்களின் ஓலைகளை கொத்தாக வாரிக் கொண்டு வரும் காவிரி நதியின் வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் நம்பனும் ஆகிய சிவபெருமான், வாடிய பிரமனின் தலையினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் பல இடங்களுக்கும் பலியேற்கச் செல்கின்றார். குற்றம் ஏதும் இல்லாத மாணிக்கம் போன்று ஒளி வீசும் பெருமானை, தங்களது உள்ளம் மகிழ வானோர்கள் புகழ்ந்து வணங்குகின்றனர். இத்தகைய பெருமைகள் வாய்ந்த பெருமானைத் தொழுவதைத் தவிர்த்து நிறைவான செயல் வேறு ஒன்றினையும் நாம் அறியோம் என்று திருஞானசம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.

கோடு தேன் சொரி குன்றிடைப் பூகமும் கூந்தலின் குலை வாரி

ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்

வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும்

கேடிலா மணியைத் தொழல் அல்லது கெழு முதல் அறியோமே

மாந்துறை பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.110.4) பெருமானை வணங்குவதைத் தவிர்த்து தான் வேறு ஒன்றையும் அறியேன் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கொழுந்து= சிறப்பான ஒன்று, தலையானது; ஞாழல்=புலிக் கொன்றை மரம்; கண்டன்=கழுத்தினை உடையவன்; ஏனையோரின் கழுத்திலிருந்து மிகவும் வேறுபட்டு புகழினை உடையது பெருமானின் கழுத்து. ஸ்ரீகண்டன் என்பது அவரது திருநாமங்களில் ஒன்று. அனைவரையும் காக்கும் பொருட்டு, பாற்கடலிலிருந்து பொங்கி வந்த நஞ்சினைத் தானே உட்கொண்ட பெருமான், ஊழிக்காலத்தில் தனது வயிற்றினில் ஒடுங்கும் உயிர்களின் நலன் கருதி, வயிற்றினுள்ளே அந்த விடத்தைச் செலுத்தாமல், தனது கழுத்தினில் எப்போதும் தேக்கிய வண்ணம் இருக்கின்றார். இவ்வாறு அனைவர்க்கும் நன்மை புரிந்த, கழுத்து பெருமான் ஒருவருக்கே உரியது என்பதால், கண்டன் என்று மிகவும் பெருமையாக அவரை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் அழைக்கின்றார். இலவம், புலிநகக் கொன்றை, ஈஞ்ச மரம், சுரபுன்னை இளமருது, இலவங்கம் ஆகிய மரங்களை கலந்து அடித்துக் கொண்டு வரும் காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள மாந்துறை தலத்தினில் அமர்ந்துள்ள இறைவன், ஆலகால விடத்தை தேக்கி அனைவரையும் காப்பாற்றிய சிறப்பினை உரித்தாகக் கொண்டுள்ள கழுத்தினை உடையவன் ஆவான். பேரலைகள் வீசும் நீர்ப் பரப்பினைக் கொண்ட கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும், படமெடுத்து ஆடும் பாம்புடன் தனது தலையில் வைத்துள்ள இறைவன், மலையைப் போன்று சிறந்த செல்வங்களை உடையவன் ஆவான். நிலையான அமைதி, எல்லையற்ற ஆனந்தம் வீடுபேறு ஆகிய செல்வங்களைத் தன்னிடம் கொண்டுள்ள இறைவனை, வானவர்களின் தலைவனாக விளங்குபவனை, தவிர்த்து வேறு எவரையும் வணங்குதலை நாம் அறியோம் என்று திருஞானசம்பந்தர் சொல்வதாக அமைந்த பாடல்.

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இளமருது இலவங்கம்

கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன்

அலை கொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடரவுடன் வைத்த

மலையை வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடலில் (3.9.5) முறையாக இசை பாடியாடும் தொண்டர்களின் இதயத் தாமரையில் அன்புடன் குடிகொண்டிருக்கும் இறைவனை அல்லாது தனது உள்ளம் வேறு எவரையும் நினையாது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இறை=தங்குமிடம்; வாஞ்சியம்=அன்புடன்; முன்=முற்பட, ஈடுபடும்; பெருமான் விருப்பத்துடன் பிச்சை எடுக்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பிறையுறு செஞ்சடையார் விடையார் பிச்சை நச்சியே

வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழி மிழலையார்

முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள்

இறை உறை வாஞ்சியம் அல்லது எப்போதும் என் உள்ளமே

கல்லால் நீழல் என்று தொடங்கும் பொது பதிகத்தின் முதல் பாடலில் (3.40.1) திருஞான சம்பந்தர், கல்லால் மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்த பெருமானை அன்றி வேறு எவரையும், உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்த ஞானியர், தெய்வமாக கருத மாட்டார்கள் என்றும் தானும் அவ்வாறே இருப்பேன் என்றும் கூறுகின்றார்.

கல்லால் நீழல்

அல்லாத் தேவை

நல்லார் பேணார்

அல்லோம் நாமே

திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.55) முதல் பத்து பாடல்கள் அனைத்தையும், பெருமானை அல்லாது வேறு எவரையும் தனது மனம் ஆதரவாக நினையாது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். அந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். அரையா=அரசனே,

விரையார் கொன்றையினாய் விடம் உண்ட மிடற்றினனே

உரையார் பல் புகழாய் உமைநங்கை ஓர் பங்குடையாய்

திரையார் தெண்கடல் சூழ் திருவான்மியூர் உறையும்

அரையா உன்னை அல்லாது அடையாது எனது ஆதரவே

நீறு அலைத்ததோர் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.98.6) அப்பர் பிரான் பெருமானை நினையாதவர்களின் நெஞ்சம் நெஞ்சமே அல்ல என்று கூறுகின்றார். முன்னுதல்=நினைத்தல்; முன் நெஞ்சம்=இறைவனை நினைக்கும் நெஞ்சம்; மூர்க்கர்=கொடியவர்; வன்=கொடிய; பெருமானை நினைக்காமல் தங்களது வாழ்க்கையை கழிப்பவர்கள், வீணான வாழ்க்கையை கழிக்கின்றார்கள் என்று இங்கே கூறுகின்றார். தம் நெஞ்சம் தமக்குத் தாமிலாதவர் என்று தங்களது நெஞ்சத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு பலன் அடையாமல் இருக்கும் வீணர்களை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மனிதப் பிறவி எடுத்துள்ள நாம் பெறற்கரிய பாக்கியம் செய்தவர்கள். இறைவன் நமக்கு அளித்துள்ள கருவி கரணங்களை நன்கு உபயோகித்து, மெய்ப் பொருளின் தன்மையை உண்மையாக உணர்ந்து, பழைய பிறவிகளிலிருந்து நாம் கொண்டு வந்துள்ள வினைகளை முற்றிலும் கழித்து, பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டு முக்தி நிலையினை அடைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்திருப்பது தான், நாம் உயிருக்கு செய்யும் கைம்மாறு ஆகும். கண்ணிருந்தும் குருடனாக பொருட்களை பார்த்து அறியாமல் இருக்கும் மனிதனை மூடன் என்பது போல், நெஞ்சம் இருந்தும் அதனை சரிவர பயன்படுத்தாமல் இருப்பவர் மூடர் தானே.

முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்

தன் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்

வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லீரே

என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே

பொழிப்புரை:

பறை சங்கு முதலிய கருவிகளிலிருந்து எழுகின்ற ஓசை, மற்றும் அந்த கருவிகளின் அருகிலுள்ள ஏனைய வாத்தியங்களிலிருந்து ஒலிக்கும் ஒலிகளும் எங்கும் பரவி இருக்கும் சூழ்நிலையில், அந்த ஓசைகளின் அடிப்படைத் தன்மையில் இறைவன் இருப்பதை சான்றோர்கள் உணருகின்றனர். நிறைந்த நீரினை உடைய கங்கை நதியினைத் தனது சடையில் வைத்துள்ள இறைவன் நின்றியூர் தலத்தில் உறைகின்றான். அந்த ஒரு பொருளைத் தவிர்த்து வேறு எதனையும் எனது உள்ளம் உணராது.

பாடல் 4:

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 4, 5, 6 (திதே 0434)

பூண்டவ் வரை மார்பில் புரிநூலன் விரி கொன்றை

ஈண்டவ் வதனோடும் ஒரு பாலம் மதி அதனைத்

தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்

ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே

விளக்கம்:

தொழல் அல்லது=தொழுதால் அல்லது; ஈண்ட=நெருங்க; பாலம் மதி=பால்+அம்+மதி; பால் போன்று வெண்மை நிறத்துடன் அழகாக விளங்கும் சந்திரன்; வரை=மலை; பூண்ட=அணிந்த, அணிகலன்களை அணிந்த என்று சேர்த்து பொருள் கொள்ளவேண்டும்; கழல்=கழல்களை அணிந்த திருவடிகள்; சென்ற பாடலில் சப்தப்ரபஞ்சத்தின் ஆதாரமாக இறைவன் வைத்துள்ள உடுக்கை ஒலி இருக்கும் நிலையினை தனது உள்ளம் உணர்வதாக திருஞானசம்பந்தர் கூறினார். ஆனால் பல்வேறு விதமான ஒலிகளை கேட்கும் அனைவர்க்கும் இந்த உணர்வு ஏற்படுவதில்லை. அதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்பதையே இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.

இறைவனின் திருவுருவக் காட்சியினைக் காண்பதற்கே அவனருள் வேண்டும். அவனுக்கு ஒப்பாக சொல்வதற்கு எவரும் இல்லை, அவன் ஓரூரில் உறைபவன் அல்லன்: அவனது உருவத்திற்கு உவமை ஏதும் இல்லை: எனவே இறைவனின் நிறம் இன்னது, அவனுக்கு உவமையாக இந்த பொருட்கள் உள்ளன என்று எவராலும் சொல்ல முடியாது என்ற கருத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடலை நாம் இங்கே காணலாம் (6.97.10)

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்

ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர் உவமனில்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்ட ஒணாதே

இறைவனின் திருவுருவத்தைத் தங்கள் கண்ணால் கண்ட அருளாளர்கள் ஒரு சிலரே. அவர்கள் கூறிய அடையாளங்களைக் கொண்டு தான், நாம் இறைவன் இப்படியிருப்பான் என்று நமது மனதினில் உருவகித்துக் கொண்டு வழிபடுகின்றோம். அவ்வாறு இறைவனைக் கண்ட அருளாளர்களும் தாங்கள் கண்ட தோற்றத்தை முழுவதும் வார்த்தைகளில் வடிக்கவோ அல்லது சிற்பமாக செதுக்கவோ அல்லது ஓவியமாக வரையவோ திறன் படைத்தவர்களா என்றால் அதுவும் இல்லை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு இருக்கையில், ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் வரையறைக்குள்ளே எப்படி நாம் இறைவனின் தோற்றத்தையோ குணத்தையோ அடக்க முடியும். அதனால் தான் அவனது அடையாளத்தையும் (குறி) குணத்தையும் யார் அறிய முடியும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த கருத்தினை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (4.77.2) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

கோவணம் உடுத்தவாறும் கோளரவு அசைத்தவாறும்

தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும்

பூவணக் கிழவனாரைக் புலியுரி அரையனாரை

ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே

இன்ன உருவத்தை உடையவன் இன்ன நிறத்தை உடையவன் என்று பெருமானின் திறத்தினை, நமது சிற்றறிவின் துணை கொண்டு அறிவது மிகவும் அரிதான செயல். அவனது கருணையும் அவனது அருளும் இருந்தால் தான் அவனது தன்மையை நாம் உணர முடியும். புண்ணியங்கள் அனைத்தும் தனது உருவம் என்று சொல்லும் வண்ணம் சிறந்த தவக்கோலத்தை உடையவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறும் திருவைகா தலத்து பாடலை (3.71.4)நாம் இங்கே காண்போம். அறிவதேல் அரிது=இறைவனின் அருளும் ஞானமும் இல்லையேல் அறிய முடியாதது; மிகுத்த தவன்=மிகுந்த தவத்தினை உடையவன்; நீதியொடு=அருளோடு; நீதி பலவும்=பலவாகிய புண்ணியங்களும்; வகையினால்= முறைமைப்படி முழுதுணர்ந்து; மன்ன=நிலை பெற்று; மருவி=அடைந்து;

இன்னவுரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும்

தன்ன உருவாம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம்

முன்னை வினை போய் வகையினால் முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர்

மன்ன இருபோதும் மருவித் தொழுது சேரும் வயல் வைகாவிலே

இன்ன உருவத்தை உடையவன் இன்ன நிறத்தை உடையவன் என்று பெருமானின் திறத்தினை, நமது சிற்றறிவின் துணை கொண்டு அறிவது மிகவும் அரிதான செயல். அவனது கருணையும் அவனது அருளும் இருந்தால் தான் அவனது தன்மையை நாம் உணர முடியும். புண்ணியங்கள் அனைத்தும் தனது உருவம் என்று சொல்லும் வண்ணம் சிறந்த தவக்கோலத்தை உடையவன் பெருமான்; அவன் அடியார்களுக்கு அருளும் பொருட்டு அமர்ந்து உறையும் இடம் திருவைகா. பண்டைய வினைகள் அனைத்தையும் கழித்து ஒழிக்கும் வகையினை அறிந்து முற்றிலும் உணர்ந்து கொண்டு வினைகளை கழிக்கும் வழியினில் ஈடுபட்டு தவநிலை கூடுவதற்கு முயற்சி செய்யும் முனிவர்கள் காலை மாலை என்று இரண்டு பொழுதிலும் நிலையாக தொழுது போற்றும் வண்ணம் சென்று சேரும் தலம் திருவைகா ஆகும் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

இன்ன தன்மையன் என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இறைவனை நாம் உணர்வினால் அவன் இருப்பதை புரிந்து கொண்டு அவனை வழிபட்டு வணங்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் அவனது தன்மை யாது என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்குவது தவறு என்பதை உணர்த்தும் திருவாசகப் பாடலை இங்கே நாம் சிந்திப்பது பொருத்தமாகும். இந்த பாடலில் இறைவனை உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் கூறுகின்றார். எப்படி உண்மையாக இருக்கும் பொருள் இல்லாத பொருளாக மாற முடியும். நமது உணர்வினால் உணரப் படுபவன் இறைவன். எனவே அவன் உள்ளதை, அவன் இருக்கும் உண்மையை நாம் யாவரும் உணர்வால் அறிந்து உணர்கின்றோம். ஆனால் அதே இறைவனை நமது அறிவின் துணையால் இன்ன தன்மையன் என்று ஆராயத் தொடங்கினால் அவனை நாம் உணர முடியுமா. முடியாது என்பதே விடை. எனவே தான் அறிவினால் கண்டறியாத பொருள் என்று உணர்த்தும் பொருட்டு இன்மையுமாய் உள்ளவன் என்று கூறுகின்றார். உணர்வால் உணர முடியும் இறைவனை அறிவினால் உணர முடியாது என்பதை சுட்டிக் காட்டவே உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். வளி=காற்று; ஊன்=உடல்;

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாய் என் சொல்லி வாழ்த்துவனே

பொழிப்புரை:

தனது மலை போன்று பரந்த மார்பினில் அணிகலன்களை பூண்டவனும், முப்புரி நூலை அணிந்தவனும், நெருக்கமாக கட்டப்பட்ட விரிந்த கொன்றை மலர் மாலையினையும், பால் போன்று வெண்மை நிறத்துடன் அழகாக விளங்கும் பிறைச் சந்திரனையும் தனது சடையினில் அணிந்தவனும் ஆகிய பெருமான், வானத்தை தொடும் வண்ணம் உயர்ந்து வளர்ந்த சோலைகள் கொண்டுள்ள திருநின்றியூரில் உறைகின்றான். நம்மை ஆட்கொண்டு அருளும் அவனது திருவடிகளைத் தொழுதால் அன்றி அவனது தன்மையை எவராலும் அரிய முடியாது.

பாடல் 5:

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 4, 5, 6 (திதே 0434)

குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும்

நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்

அழலின் வலன் அங்கை அது ஏந்தி அனலாடும்

கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே

விளக்கம்:

களைகண்=பற்றுக்கோடு; ஒருவர் பாடுவதைக் கேட்கும் அடுத்தவருக்கும் பாடத் தோன்றுவது உலக இயல்பு. அந்த இயல்பினால் குழலின் இசையையும் வண்டின் இசையையும் கேட்கும் குயில்களும் பாடத் தொடங்குகின்றன என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். அழலின் வலன்=வலமாக சுழித்து கொழுந்து விட்டெரியும் அனல்;

பொழிப்புரை:

குழலின் இசையையும் வண்டின் இசையையும் கேட்டு தாமும் பாடத் தொடங்கும் குயில்கள் நிறைந்த சோலைகள், நிழலுடன் எழில் கொஞ்சும் வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய சோலைகள் சூழ்ந்த நின்றியூர் தலத்தில், வலமாகச் சுற்றி எழும் தீப்பிழம்பினைத் தனது கையில் ஏந்தியவாறும், காலில் அணிந்துள்ள கழல்கள் ஒலிக்குமாறும் நடமாடும் இறைவன் நம் அனைவருக்கும் பற்றுக் கோடாகத் திகழ்கின்றான்.

பாடல் 6:

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 4, 5, 6 (திதே 0434)

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 6 தொடர்ச்சி, பாடல் 7 (திதே 0435)

மூரன் முறுவல் வெண்ணகை உடையாள் ஒரு பாகம்

சாரன் மதி அதனோடுடன் சலவம் சடை வைத்த

வீரன் மலி அழகார் பொழில் மிடையும் திரு நின்றி

ஊரன் கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே

விளக்கம்:

சலவம்-கங்கை; மூரல் என்ற சொல் எதுகை கருதி மூரன் என்று மாறியுள்ளது. மூரல் முறுவல்=மிகவும் சிறிய புன்சிரிப்பு; சாரன்=சார்ந்து இருப்பவன்; பொழில்=சோலை; மிடையும்= நெருங்கி இருத்தல். இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெருமானது திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதனையும் தொழாத அறிவு உடையவனாக தான் இருப்பதாக கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது அவர் அருளிய பிறையணி படர்சடை என்று தொடங்கும் பதிகத்தின் பாடலை (1.19.4) நமது நினைவுக்கு கொண்டுவருகின்றது.. நறநிறை=நறவு என்ற சொல் குறைந்து நற என வந்துள்ளது; நறவு=தேன்;

முதிருறு கதிர் வளர் இளமதி சடையனை நறநிறை தலை தனில்
உதிருறு மயிர்பிணை தவிர் தசையுடை புலியதள் இடை இருள் கடி
கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை
அதிருறு கழலடிகளதடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே

நமக்கு வழிகாட்டும் நல்லோராகிய நால்வரும் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் போற்றாது இருந்த தன்மையை அவர்களது வாழ்விலிருந்து நாம் அறிகின்றோம். அவர்களது இந்த கொள்கை அவர்களின் பல பாடல்களில் வெளிப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர், பெருமானை அன்றி வேறு எவரையும் தனக்குத் துணையாக கருத மாட்டேன் என்றும் அவரைத் தவிர்த்து வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் கருணையே உருவமாக உள்ள பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார். பண்டைய நாளிலிருந்து இடைவிடாது தொடர்ச்சியாக அடியார்களுக்கு அருள் புரிந்து வரும் அன்னையை, குற்றம் ஏதும் இல்லாதவள் என்று அடியார்கள் புகழ்வதாக அடிகளார் கூறுகின்றார், இனியும் தொடர்ந்து வாழ்வதில் தனக்கு விருப்பம் ஏதும் இல்லாமையால், பெருமானே நீ என்னை விரைவில் அழைத்துக் கொள்வாயாக என்று விண்ணப்பம் வைக்கும் பாடல்.

பழுது இல் தொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்

செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய்

மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

மேற்கண்ட பாடலில் பெருமானே உன்னைத் தவிர பற்றுக்கோடு வேறேதும் எனக்கு இல்லை என்று அறிவிக்கும் அடிகளார், தனது நிலையை பெருமானே நீ இன்னும் காணவில்லையா என்று கேட்கும் வகையில், கண்டாய் என்ற சொல்லை கையாண்டுள்ளார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பற்று நான் மற்றிலேன் கண்டாய் என்ற தொடர் வருகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல், இந்த தொடர் உணர்த்தும் செய்தியை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது. பெருமானே உன்னைத் தவிர வேறு பற்றுக்கோடு ஏதும் கொள்ளாமல் வாழும் எனக்கு அருள் புரியாமல் இருக்கின்றாயே இது நியாயமா என்று கேட்பது போன்று அமைந்துள்ள பாடல். பெருமான் ஒருவனே தனக்கு பற்றுக்கோடு என்பதால், அவனைத் தவிர வேறு எவரிடமும் சென்று முறையிடேன் என்று புலம்பும் அடிகளார், அவன் அருள் புரியாமல் இருப்பதால் அவன் மீது தான் கோபம் கொண்டாலும் அவனது அருளினை தொடர்ந்து வேண்டுவதையும் நாம் உணரலாம்.

பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய்

சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருபெருந்துறை உறை சிவனே

ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை ஆனால்

வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

தனது இடது கண்ணில் பார்வை வரப்பெற்று, வலது கண்ணில் பார்வை வேண்டி திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கி பதிகம் பாடிய சுந்தரர்,வேறு எவரையும் வேண்டாது தான் இருந்த நிலையினை மீளா அடிமை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (7.95.1) உணர்த்துகின்றார். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத் திறம் நமது வாழ்நாள் முழுவதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த அடிமைத் தன்மையிலிருந்து நாம் வெளியே வாராமல் பெருமானுக்கு எப்போதும் திருத்தொண்டு செய்பவர்களாய். அடிமைத் திறத்திலிருந்து மீளாமல் இருக்க வேண்டும். மேலும் நமது தேவைகளையும் அவரிடமே முறையிட்டு பெறுதல் வேண்டும் அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார்.

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே

மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி

ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்

வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில், அப்பர் பிரான், சிவபெருமானுக்கு மீளாத அடிமையாக இருந்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அடையாத மனிதர்களை, வீணான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கூறுகின்றார். அறிவு வளர்ச்சி பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து பொருள் ஈட்டும் திறம் பெற்று, தனது காலில் நிற்கும் தன்மையை அடைந்த மனிதனை நாம் ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். ஆனால் அப்பர் பிரான் ஆளாக கருதுவது, பெருமானது அடியார்களைத் தான். ஏனென்றால் அவர்கள் தானே, நிலையான இன்பம் அளிக்கக் கூடிய முக்தி நிலைக்கு செல்வதற்கான வழியில் அடியெடுத்து வைத்தவர்கள். அவ்வாறு ஆளாகாத ஒருவன், சிவபெருமானின் அடியார் ஒருவரை அணுகி, ஆளாகும் நிலையினை அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளாத சுரையோ தொழும்பர் செவி

வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

இவ்வாறு திருஞான சம்பந்தர் கூறுவதை கருத்தினில் கொண்டு தான், பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றாரோ? சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில் திருஞான சம்பந்தரைக் குறிப்பிடும் வரிகளை நினைவூட்டுகின்றது. வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான் சம்பந்தன் என்று கூறுகின்றார். கொன்றைசூடியின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் போற்றி வழிபடாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றார். அச்சிறுபாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், கையில் மான்கன்றினை ஏந்திய பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத கருத்தினை உடையவன் என்று தன்னை திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (1.77.11) உணரலாம். கருங்குவளை மலர்கள் பொழியும் தேனினை உட்கொள்ளும் தவளைகளின் வாய் நிறைந்துள்ள நிலையும், வாளை மீன்கள் துள்ளி விளையாடுவதால் புதியதாக மலர்ந்த மலர்களின் இதழ்கள் கிழியும் நிலையும் குறிப்பிடப்பட்டு சீர்காழி நகரின் நீர்வளமும் நிலவளமும் திருஞான சம்பந்தரால் நமக்கு உணர்த்தப் படுகின்றது.

மைச்செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழிய

பச்சிற வெறி வயல் வெறி கமழ்ப் பதி அவர் அதிபதி கவுணியர் பெருமான்

கைச் சிறு மறியவன் கழல் அலால் பேணாக் கருத்துடை ஞான சம்பந்தன தமிழ் கொண்டு

அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் அருவினை இலரே

இவ்வாறு திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு சுந்தரர் வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலை (7.86.7) நினைவூட்டுகின்றது. பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார் மெய்ப்பொருளாய் இருப்பவனும் வெண்மையாக உள்ள திருநீற்றினை தனது உடல் முழுவதும் பூசுபவனும், வேதங்களின் தலைவனும், தனது கையினில் மான் மற்றும் மழு ஏந்தியவனும், அனைவரது வாழ்நாளினை முடிக்கும் காலனின் வாழ்நாளை முடித்தவனும், படத்தினை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், தனது அடியார்கள் அன்றி ஏனையோர் அறிய முடியாத வண்ணம் மறைத்துக் கொள்பவனும், எங்களது தலைவனும் ஆகிய இறைவனை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப் படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத முதல்வன்

கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்

பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்

ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே

மேலே குறிப்பிட்ட பாடல்களில் பெருமானை வழிபடாத அறிவு, அறிவு என்று கருதப்படாததை நாம் உணர்ந்தோம். மணிவாசகர் ஒரு படி மேலே சென்று, அத்தகைய அறிவு இல்லாத மூடர்களிடம் அச்சம் கொண்டு அவர்களுடன் பழகுவதை தவிர்ப்போம் என்று அச்சப்பத்து பதிகத்தினில் கூறுகின்றார். தறி=காட்டுத்தறி, தறியிலிருந்து விடுபடும் யானை மிகுந்த கோபத்துடன் வரும்; உழுவை=புலி; பெருமானின் சடை நறுமணத்துடன் கூடியது என்று அடிகளார் இங்கே கூறுகின்றார்,

தறி செறு களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்

வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா

செறி தரு கழல்கள் ஏந்தி சிறந்து இனிது இருக்க மாட்டா

அறிவு இலாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே

பொழிப்புரை:

சிறிய புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களைக் கொண்டுள்ள உமையன்னையைத் தனது உடலில் ஒரு பாகத்தில் வைத்தவனும், முற்றிலும் அழிந்த நிலையில் தான் தொடர்ந்து வாழும் பொருட்டுத் தன்னைச் சார்ந்து நின்ற பிறைச் சந்திரனுடன் கங்கை நதியையும் சடையில் வைத்துள்ள வீரனும், அழகிய சோலைகள் நெருங்கி இருக்கும் நின்றியூரில் நிலை பெற்று உள்ளவனும் ஆகிய பெருமானின் திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதையும் எனது உள்ளம் உணராது.

பாடல் 7:

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 6 தொடர்ச்சி 7 (திதே 0435)

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 7 தொடர்ச்சி (திதே 0436)

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 7 தொடர்ச்சி (திதே 0437)

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 7 தொடர்ச்சி (திதே 0438)

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 7 தொடர்ச்சி (திதே 0439)

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 7 தொடர்ச்சி (திதே 0440)

பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்

பெற்றி அதுவாகித் திரி தேவர் பெருமானார்

சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்

நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே

விளக்கம்:

பற்றி=பறித்து; பெற்றி=தன்மை; உலகத்தவர் உய்வதற்காக பலி ஏற்கும் பெருமான் இன்றும் தொடர்ந்து பலி ஏற்றுக் கொண்டு இருக்கின்றான். பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள்,பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான்.

பரந்து உலகேழும் படைத்த பிரானை

இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்

நிரந்தரமாக நினையும் அடியார்

இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே

பிரமாபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.1.4) திருஞானசம்பந்தர் பெருமான் மிகுந்த மகிழ்ச்சியுடன் பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். மகிழ்ந்த=மகிழ்ந்து உலாவிய; தேரிய=தேடிக் கொண்டு வந்து; மண் மகிழ்ந்த அரவம்= தரையில் ஊர்ந்து செல்லும் தன்மை பற்றியும் மண்புற்றினைத் தான் வாழும் இடமாக கொண்டுள்ள தன்மை பற்றியும் மண் மகிழ்ந்த அரவம் என்று கூறுகின்றார். இந்த பாடலில் விண் மகிழ்ந்த மதில் என்று திருஞானசம்பந்தப் பெருமான் கூறுகின்றார். எப்போதும் வானில் பறந்து கொண்டிருந்த கோட்டைகள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் தருணத்தில் அந்த கோட்டைகளை நோக்கி எய்யப்படும் ஒரே அம்பினைக் கொண்டு மட்டுமே அந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்ற வரத்தினைப் பெற்றிருந்ததால், அந்த கோட்டைகள் அவ்வாறு ஒரே நேர்க்கோட்டினில் இருக்கும் நேரமும் மிகவும் குறைவானது என்பதால், அந்த வரமே மிகப் பெரிய அரணாக திரிபுரத்து அரக்கர்களுக்கு விளங்கியது என்பதை உணர்த்தும் வண்ணம் விண் மகிழ்ந்த மதில் என்று குறிப்பிடுகின்றார். பொதுவாக பிச்சை எடுப்பவர்கள் ஒரு வகையான கூச்சத்துடன் பிச்சை எடுப்பதை நாம் காண்கின்றோம். ஆனால் உள்ளம் மகிழ்ந்த நிலையில் பெருமான் பிச்சை எடுப்பதாக சம்பந்தப் பெருமான் குறிப்பிடுகின்றார். உயிர்கள் தங்களைப் பற்றியுள்ள மலங்களை பிச்சையாக இட்டு உய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பெருமான் பிச்சை எடுப்பதால், தான் பிச்சை எடுப்பதை மிகுந்த மகிழ்வுடன் செய்கின்றார் என்று இங்கே கூறப்படுகின்றது.

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில்

உண் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன்

மண் மகிழ்ந்த அரவம் மலர்க் கொன்றை மலிந்த வரை மார்பில்

பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

வான்வெளியில் பறந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரையும் துன்புறுத்தி வந்த திரிபுரத்து அரக்கர்கள் தங்களது மூன்று கோட்டைகளையும் தாங்கள் பெற்றிருந்த வரத்தினால் தகர்க்க முடியாத அரணாக மாற்றியவர்கள். அத்தகைய வல்லமை உடைய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினை எய்தி அழித்தவனும், தனது கையினில் பிரமனின் மண்டையோட்டினை ஏந்திய வண்ணம் உள்ளத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பலி ஏற்கச் செல்பவனும் ஆகிய பெருமான் என்னருகில் வந்து எனது உள்ளத்தினைக் கொள்ளை கொண்டு விட்டான். மண் புற்றினை மிகவும் விரும்பி அதனில் பதுங்கி வாழும் பாம்பும் கொன்றை மலர்களும் அலங்கரிக்கும் தனது மலை போன்ற மார்பினில் இடப்பகுதியினில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உமை அன்னையை ஏற்றுக் கொண்டுள்ளவனும் பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது உள்ளத்தினைக் கொள்ளை கொண்ட கள்வனாவான் என்று திருஞான சம்பந்தர் சொல்வதாக அமைந்த பாடலே மேற்கண்ட பாடல்.

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.25.8) திருஞானசம்பந்தர், பெருமான் தனது வாழ்க்கையின் தொழிலாக பலி ஏற்பதைக் கொண்டுள்ளான் என்று கூறுகின்றார். ஊனார் தலை=புலால் துணுக்குகள் பொருந்திய தலை; உழல்=திரியும்; உயிர்கள் தன்னைத் தேடி வந்து தங்களது மலங்களை பிச்சையாக அளிக்கும் வரை காத்திருக்கும் பொறுமை அற்றவனாக, பக்குவப் பட்ட உயிர்களைத் தேடிக் கொண்டு பெருமான் திரிவது, உயிர்கள் தங்களது மலங்களை பிச்சையாக அளித்து முக்தி நிலை அடைய வேண்டும் என்பதில் பெருமான் கொண்டுள்ள ஆர்வத்தின் தன்மையை நமக்கு உணர்த்துகின்றது.

வானார் திங்கள் வளர் புன் சடை வைத்துத்

தேனார் செம்பொன் பள்ளி மேவிய

ஊனார் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை

ஆனான் கழலே அடைந்து வாழ்மினே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.40.10), சமணர்களும் புத்தர்களும் புறம் கூறுவதையும் பொருட்படுத்தாமல் பெருமான் பலி ஏற்கின்றான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். துவர்க்கூறை=துவர்ச் சாயம் ஏற்றப்பட்ட உடை; புறம்= பொருந்தாத சொற்கள்; மெய்யில்=மெய்+இல், உண்மையற்ற; பெருமான் பலி ஏற்பதன் பின்னணியில் அமைந்துள்ள நோக்கத்தினை சரியாக புரிந்து கொள்ளாமல் உண்மைக்கு பொருந்தாத சொற்களை மற்றவர் கூறுவதை பொருட்படுத்தாமல் தனது கொள்கையில் உறுதிப்பாட்டுடன் நின்று, பக்குவப்பட்ட அடியார்கள் தாங்கள் இடும் மலங்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு முக்தி அளிக்கும் பெருமானின் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. வண்டார் பூங்குழலி என்பது தலத்து இறைவியின் திருநாமம். இந்த திருநாமம் வண்டமர் பூங்குழல் மங்கை என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. உண்டு உடல் கொழுத்த சமணர்களும், துவராடை அணிந்த புத்தர்களும், உண்மையற்ற பொருந்தாத சொற்களை கூறி பழித்த போதும், அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரமனின் மண்டையோட்டினில் பலி ஏற்பதை விரும்புவனே என்று புகழ்ந்து கூறி, வண்டுகள் அமர்கின்ற புதிய மலர்கள் சேர்ந்த கூந்தலை உடைய உமையன்னையைத் தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டுள்ள பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் தொண்டர்கள் நறுமணம் மிகுந்த சிறந்த மலர்களை தூவி பணிந்து வணங்க, அதனை ஏற்றுக் கொள்ளும் வண்ணம் தோன்றி நிற்கும் பெருமானது திருவடிகளை சென்று சேர்வோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

குண்டமணர் துவர்க் கூறைகள் மெய்யில் கொள்கையினார் புறம் கூற

வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி

வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்

தொண்டர்கள் மாமலர் தூவத் தோன்றி நின்றான் அடி சேர்வோம்

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.43.7) பிரமகபாலத்தில் பிச்சையாக ஏற்ற உணவினை விருப்பத்துடன் உட்கொண்ட பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மானிடம் என்பதை மான் இடம் என்று பிரித்து பொருள் கொள்ளவேண்டும், பாடலில் உள்ள எதுகை அழகினை ரசிப்பதற்காக சொற்கள் பிரிக்காமல் கொடுக்கப் பட்டுள்ளன. ஆர்தரு=பொருந்திய; சந்து=சந்தன மரம்; சிறை=கிளைகள்; திண்=வலிமையான; மலைச்சாரல் என்பதால் ஏரினை பயன்படுத்தி உழுதல் கடினம் என்பதால், மரக் கொம்புகள் கொண்டு நிலத்தினைக் கிளறி பயிர் செய்தனர் என்று குறிப்பிடுவதன் மூலம், திருஞான சம்பந்தர் எந்த அளவுக்கு தான் சென்ற தலங்களின் இயற்கைக் காட்சிகளை மிகவும் நுண்ணியமாக ரசித்தது மட்டுமன்றி அவற்றை சுவையாகவும் தனது பதிகங்களில் கலந்து அளிக்கின்றார் என்பதை உணரும் போது நாம் வியப்பினை அடைகின்றோம். இவ்வாறு வேடுவர்கள் நிலத்தைக் கிளறி தினை விதைக்கும் தன்மையை உணர்த்துவதன் மூலம் ஒரு தத்துவத்தை குழந்தையாகிய திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதாக தருமை ஆதீனக் குறிப்பு சுவையான விளக்கம் அளிக்கின்றது. ஆன்மாக்களுக்கு வினைகளால் ஏற்படும் போகம், அவை உய்வினை அடைதற்கு தடையாக இருப்பின் அந்த தடையை நீக்கி, சிவபோகத்தை வித்தாக இட்டு விளைச்சல் தரும் புண்ணிய பூமி கற்குடி தலம் என்று உணர்த்தப் படுகின்றதே என்பதே அந்த விளக்கம்.

மானிடம் ஆர் தரு கையர் மாமழு ஆரும் வலத்தர்

ஊனிடையர் தலை ஓட்டில் உண்கலனாக உகந்தார்

தேனிடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்திக்

மானிடை வேடர் விளைக்கும் கற்குடி மாமலையாரே

சிரபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.47.2) திருஞானசம்பந்தர், பல இடங்களிலும் திரிந்து அல்லல் படுகின்ற பலி ஏற்கின்ற வாழ்க்கையை மிகவும் விரும்பி பெருமான் ஏற்றுக் கொண்டதன் காரணம் தான் யாது என்ற கேள்வியை எழுப்புகின்றார். இதற்கான பதிலை விளக்கும் பல திருமுறைப் பாடல்கள் இந்த விளக்கத்தில் அளிக்கப் பட்டுள்ளதால், இங்கே அந்த விளக்கம் தவிர்க்கப் படுகின்றது. கொல்லை முல்லை நகையினாள்=முல்லை அரும்பு போன்ற அழகிய பற்களை உடைய உமையன்னை; ஆதரவு= விரும்புதல்; சொல்ல நீண்ட=சொல்லச் சொல்ல நீளும் பெருமை; செல்ல நீண்ட=எத்தனை கொடை வழங்கினாலும் குறையாத செல்வம்; இத்தகைய அல்லல் தரும் வாழ்க்கையினை, பெருமானே ஏன் விரும்புகின்றாய் என்ற கேள்வி, சோபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.51.4) கேட்கப் படுகின்றது.

கொல்லை முல்லை நகையினாளோர் கூறது அன்றியும் போய்

அல்லல் வாழ்க்கைப் பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை கொலாம்

சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார்

செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே

திருமூலர் கூறிய வண்ணம் பெருமான் பிச்சை எடுப்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல. எனினும் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திய வண்ணம் அவர் திரிவதால், அவர் பிச்சையெடுத்து உண்கின்றார் என்று பொதுவாக சொல்லப் படுகின்றது. இதன் அடிப்படையில் பிரமகபாலத்தில் பலியேற்று உண்ணும் கொள்கை உடையவன் என்று திருஞானசம்பந்தர், சோபுரம் பதிகத்துப் பாடல் (1.51.7) ஒன்றினில் கூறுகின்றார். துற்றல்=உண்ணுதல்; குணமும் நீ குற்றமும் நீ என்று உன்னை பணிந்து வணங்கும் அடியார்களுக்கு பெருமான், அவர்கள் கற்பதன் விளைவாக கேட்பதன் விளைவாக பெரும் ஞானமாக பெருமான் விளங்குகின்றான் என்று கூறுகின்றார். பெருமானே உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் குற்றமாகவும் குணமாகவும் இருப்பதாக கருதும் அடியார்கள் இறைவனைத் தவிர்த்து வேறெதையும் கற்பதில் நாட்டம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் பழகும் மனிதர்களும் அவ்வாறே இருப்பதால் அவர்கள் கேட்கும் உரைகளும், பசுஞானமாகவோ பாசஞானமாகவோ இல்லாமல், பதிஞானத்துடன் தொடர்பு கொண்டவையாகவே இருக்கும். எனவே, அவர்கள் உண்மையான மெய்ஞானம் அடைவதில் வியப்பு ஏதும் இல்லை. இந்த உண்மை தான் இங்கே உணர்த்தப் படுகின்றது.

குற்றமின்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார்

கற்ற கேள்வி ஞானமான காரணம் என்னை கொலாம்

வற்றலாமை வாளரவம் பூண்டு அயன் வெண் தலையில்

துற்றலான கொள்கையானே சோபுரம் மேயவனே

பெருமான் ஆடியும் பாடியும் பலியேற்கச் செல்லும் தன்மை பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. பொதுவாக பிச்சை ஏற்பவர், வேறு வழியின்றி பிச்சை ஏற்கின்றனர் என்பதால், நாணத்துடன் உடலைக் கோணிக் கொண்டு பிச்சை ஏற்பதை நாம் காண்கின்றோம். ஆனால் பெருமான் பிச்சை ஏற்பது தனது தேவைக்கு அல்ல என்பதை நாம் அறிவோம். பக்குவமடைந்த உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களை பெருமானின் கையில் ஒப்படைத்துவிட்டு, மலமற்றவர்களாக முக்தியுலகம் சென்றடைந்து என்றும் அழியாத ஆனந்தத்தில் திளைத்து இருப்பதற்கு தகுதி படைத்தவர்களாக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமான் பலிக்கு செல்கின்றார். எனவே இவ்வாறு பலி ஏற்கச் செல்வதால், மேலும்மேலும் உயிர்கள் தன்னை வந்தடையும் என்ற அவரது மகிழ்ச்சி ஆடலாகவும் பாடலாகவும் வெளிப்படுகின்றது. இந்த நிலையையே பலி மகிழ்வாய் என்று திருஞானசம்பந்தர் நெடுங்களம் தலத்து பதிகத்தின் பாடலில் (1.52.4) குறிப்பிடுகின்றார்.

மலைபுரிந்த மன்னவன் தன் மகளை ஓர் பால் மகிழ்ந்தாய்

அலை புரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா

தலைபுரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழற் கீழ்

நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.53.3) திருஞானசம்பந்தர், தான் பெறுகின்ற பலியை சிறந்த செல்வமாக பெருமான் மதிக்கின்றார் என்று கூறுகின்றார். வாரி=கடல், கடல் போன்று பெருகி வந்த கங்கை நதி; மாகம்=ஆகாயம்; வைகு=பொருந்தும்; பெருமான் பலி கொள்வது வறுமை காரணமாக அல்ல என்பதை உணர்த்தும் பொருட்டு, செல்வன் என்று பெருமானை, திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்ததும் வேறு எவரிடமும் இல்லாத முக்திநிலையினை உள்ளவனை பெருஞ் செல்வன் என்று தானே அழைக்க வேண்டும். இந்த பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் சர்வ வியாபியாக எங்கும் நிறைந்து இருக்கும் பெருமானின் தன்மையை உணர்த்திய திருஞான சம்பந்தர், இந்த பாடலில் அவனது பல வீரச் செயல்களையும் கருணைச் செயல்களையும் உணர்த்துகின்றார். கடல் போன்று பெருகி வந்த கங்கை ஆற்றினைத் தனது சடையில் அடக்கியதும், விடமுடைய பாம்பின் தன்மையை மாற்றி கச்சையாக அணிந்து கொண்டதும், பிரமனின் தலையை நகத்தால் கிள்ளியதும், வலிமை வாய்ந்த யானையின் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்டதும் வீரச் செயல்கள். அழியும் நிலையில் இருந்த திங்களை சடையில் அணிந்து கொண்டு காப்பாற்றியதும், பிராட்டியைத் தனது உடலில் ஒரு பாதியாக ஏற்றுக் கொண்டதும், உயிர்களை உய்விக்கும் நோக்கத்துடன் உயிர்களின் மலங்களை ஏற்றுக்கொள்ள பலி ஏற்பதும் கருணைச் செயல்கள். மூரி=வலிமை வாய்ந்த; நாகம்=யானை; சீரிதாக=சிறப்பாக; செற்றலும்= கோபம் கொண்ட குணத்துடன்; பலிகொள் செல்வர் என்ற தொடருக்கு, பலி ஏற்பதை செல்வமாக கருதி மகிழும் பெருமான் என்று பொருள் கொண்டு பலியேற்பதில் பெருமானுக்கு இருக்கும் ஆர்வத்தை குறிப்பிடுவதாக பொருள் கொள்வதும் சிறப்பே. வாழ்நாள் தோறும் செல்வத்தை தேடி வாழ்வதே வாழ்க்கை எனக் கொண்டு வாழும் அனைத்து மனிதர்களும் தமக்கு கிடைக்கும் செல்வத்தை மிகவும் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வதை நாம் அன்றாட வாழ்க்கையில் காண்கின்றோம். மிகவும் அதிகமான உயிர்கள் முக்தி உலகம் வந்தடைவதை விரும்பும் பெருமான், அவ்வாறு முக்தி உலகம் செல்வதற்கு தடையாக உள்ளவை மலங்கள் என்பதை புரிந்து கொள்ளும் பக்குவப்பட்ட உயிர்கள் தங்களது மலத்தினை பிச்சையாக பெருமானின் உண்கலத்தினில் இடுவதை பெருமான் சிறந்த செல்வமாக ஏற்றுக்கொண்டு மகிழ்கின்றான். ஏனெனில் உயிர்களால் கழித்து விலக்கப்படும் மலங்கள், அந்த உயிர்கள் முக்தி உலகம் சென்றடையும் தகுதியை பெறுவதற்கு உதவுவதால், அவற்றை சிறந்த செல்வமாக பெருமான் கருதுகின்றான். கடல் போன்று பெருகி வந்த கங்கை நதியைத் தனது சடையில் ஏற்று அடக்கியவனும், அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன் இருந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு சந்திரனை அழியாமல் காத்தவனும், தனது இடுப்பினில் ஒளி பொருந்திய பாம்பினை கச்சாக இறுகக் கட்டியவனும், தனது மனைவி பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக விரும்பி ஏற்றவனும், தாமரை மலர் மேல் உறையும் நான்முகனின் தலையில் சிறப்பான நோக்கத்துடன் பக்குவமடைந்த உயிர்கள் அளிக்கும் பலியை ஏற்றுக்கொண்டு, அந்த உயிர்கள் முக்தி உலகம் செல்வதற்கு வழிவகுத்து உய்விப்பவனும், மிகவும் பெரிய செல்வத்தை உடையவனும், தாருகவனத்து முனிவர்களால் மிகுந்த கோபத்துடன் தோற்றுவிக்கப்பட்ட வலிமை உடைய யானையை அடக்கி அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்டவனும் ஆகிய பெருமான் பொருந்தி உறைவது முதுகுன்றம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வாரி மாகம் வைகு திங்கள் வாளரவம் சூடி

நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன் தன் தலையில்

சீரிதாகப் பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியதோர்

மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே

கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.68.10) சமணர்களும் சாக்கியர்களும் தன்னை இகழ்ந்து கூறும் சொற்களை பொருட்படுத்தாமல்,பிச்சை ஏற்கும் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பொருது=போர், இங்கே சொற்போர்; பண்டைய நாளில் சமணர்கள், வேறு மதத்தவரை வாதுக்கு அழைத்து, அவர்களை வாதினில் தோற்கடித்து, அவரையும் அவரது தொண்டர்களையும் தங்களது மதத்தில் இணைத்துக் கொள்வது பழக்கமாக இருந்ததை நாம் நாவுக்கரசரின் வரலாற்றிலிருந்து அறிகின்றோம். அத்தகைய வாதங்களில் சிவபெருமானைக் குறித்து இழிவாக பேசியமை இங்கே உணர்த்தப் படுகின்றது.

விருது பகரும் வெஞ்சொல் சமணர் வஞ்சச் சாக்கியர்

பொருது பகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய்

எருது ஒன்று உகைத்திங்கு இடுவார் தம் பால் இரந்துண்டு இகழ்வார்கள்

கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே

தங்களது மனதினில் இறைவனை உலாவச் செய்யும் அடியார்களுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் தான், பெருமான் பலி ஏற்கின்றான் என்று இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.76.6) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உண்பிலான்=பலி ஏற்றுப் பெறுகின்ற பிச்சையை உண்ணாதவன்; மற்றோர் தனமிலான்=வீடுபேறாகிய செல்வம் தவிர்த்து வேறு செல்வம் இல்லாதவன்; இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் திருஞான சம்பந்தர், பெருமான் தனது கருத்துகளை, திருஞான சம்பந்தர் வாய் மொழியாக வெளிப்படுத்தியவன் என்று குறிப்பிடுகின்றார். புனம்=தினைப்புனம்; இருவி=தினைத் தாள்கள்; இனம்=இடம்;

மனமுலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பிலான் மற்றோர்

தனம் இலான் எனதுரை தனது உரையாகத் தாழ்சடை இளமதி தாங்கிய தலைவன்

புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி கொழித்து ஈண்டி வந்தெங்கும்

இனமெலாம் அடை கரை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணி என் எழில் கொள்வது இயல்பே

கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.79.1) பெருமான் ஆடியும் பாடியும் பலி ஏற்கச் செல்வதாக திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அயிலுறு படை=கூர்மையான சூலப்படை; விரவிய= கலந்த; வளைந்த பிறைச் சந்திரன் மற்றும் பாம்பினை தனது சடையில் வைத்துக் கொண்டிருந்த போதிலும், மிகவும் அழகாக காணப்படும் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் அரவமும் மதியமும் விரவிய அழகர் என்று குறிப்பிடும் திருஞான சம்பந்தர், அழகனுக்குத் துணையாக இருக்கும் பிராட்டியும் அழகியவள் என்பதை உணர்த்தும் வண்ணம் மயிலுறு சாயல் வனமுலை என்று கூறுகின்றார். ஆலகால விடத்தை தனது கழுத்தினில் தேக்கியதால், பெருமானது கழுத்தினில் கருமை நிறத்து கறை படர்ந்தது என்பதை முகில் புல்கு மிடறர் என்று குறிப்பிடுகின்றார். முகில்=கருமேகம்; புல்கு= பொருந்திய; சரிதையர்=புராணங்களில் சொல்லப்படும் பல நிகழ்ச்சிகளுக்கு உரிமையாளர்;பயில்வுறு=தொடர்ந்து, மிகவும் அதிகமாக என்று பொருள் கொள்ள வேண்டும். வலி சேர்=வலிமை வாய்ந்த; பெருமான் பாடியும் ஆடியும் பலியேற்கச் செல்வதாக இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். உண்பதற்கு ஏதும் இல்லாமல், தனது உணவுத் தேவைக்காக பிச்சை ஏற்கச் செல்வோர், தாழ்வு மனப்பான்மையுடன் செல்வதால், அவர்கள் ஆடிப்பாடி மகிழும் தன்மையில் இருப்பது மிகவும் அரிது. ஆனால் பெருமானோ தனது உணவுத் தேவைக்காக பலி ஏற்கச் செல்வதில்லை; மேலும் பலி ஏற்கும் போது, பக்குவப்பட்ட உயிர்கள் பிச்சையாக இடுகின்ற மலங்களை ஏற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக அவர்களுக்கு முக்தி நிலையை அளிப்பதால், பெருமான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றார். அந்த மகிழ்ச்சி தான் ஆடலாகவும் பாடலாகவும் வெளிப்படுகின்றது. இதனைத் தான் திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

அயிலுறு படையினர் விடையினர் முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்

மயிலுறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர் வானிடை முகில் புல்கு மிடறர்

பயில்வுறு சரிதையர் எருது உகந்தேறிப் பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலிசேர்

கயிலையும் பொதியிலும் இடமென உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசறுமே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.83.2) திருஞானசம்பந்தர், ஊனார் தலை தன்னில் பலி கொண்டுழல் வாழ்க்கை வாழ்பவனாக இருப்பினும், பெருமானின் திருப்பாதங்களைப் பாடும் அடியார்களை, பிறப்பிறப்புச் சுழற்சி எனும் துன்பத்திலிருந்து விடுவித்து, பெருமான் வீடுபேறு அளிக்கின்றான் என்று உணர்த்துகின்றார். இவ்வாறு உணர்த்துவதன் மூலம், பெருமான் பலியேற்பதன் நோக்கத்தை நமக்கு தெளிவாக திருஞான சம்பந்தர் எடுத்துரைக்கின்றார்.

தேனார் மதமத்தம் திங்கள் புனல் சூடி

வானார் பொழில் அம்பர் மாகாளம் மேய

ஊனார் தலை தன்னில் பலி கொண்டுழல் வாழ்க்கை

ஆனான் கழல் ஏத்த அல்லல் அடையாவே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.86.3) திருஞானசம்பந்தர், பெருமானை, பிச்சை நாடும் நெறியான் என்று அழைக்கின்றார். தங்களது மலங்களைக் கழித்துக் கொள்வதற்கும் வினைகளை முற்றிலும் நீக்கிக் கொள்வதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு தங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளதை உயிர்கள் அனைத்தும் உணர்ந்து, செயல்பட்டால் தான், அவைகளால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வெளியே வரமுடியும், அனுபவித்துத் தான் வினைகளை கழித்துக் கொள்ளவேண்டும் என்றால், நாம் இதுவரை சேர்த்துள்ள வினைகளை கழிப்பதற்கே எண்ணற்ற பிறவிகள் நமக்கு தேவைப்படும் இந்த நிலையில், நாம் இந்த பிறவிகளில் மேலும் சேர்த்துக் கொள்ளும் வினைகள் நாம் எடுக்க வேண்டிய பிறவிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து விடுகின்றன. இவ்வாறு தான் நமது வினைகளைக் கழித்துக் கொள்ளும் நாள் எட்டாத கானல் நீராக நம்மிடமிருந்து மேலும்மேலும் விலகிச் செல்லும் நிலையில், பிச்சை பெருமானாக நம் முன்னே வந்து நின்று, நமது மலங்களைத் தான் தனது கையில் வைத்திருக்கும் பிரமகபாலத்தினில் நாம் அனைவரும் இட்டு உய்வினை அடைவதற்கு ஏதுவாக, உலகெங்கும் திரிவதை நாம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு நாம் நன்னெறி அடைவதற்காக பெருமான் பிச்சை ஏற்பதால், பிச்சை நாடும் பெருமான் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமானின் அடியார்கள் பாவம் அறியார்கள் என்றும் அவர்களைக் குற்றங்கள் சென்று அடையா என்றும் இந்த பதிகத்தின் முதல் இரண்டு பாடல்கள் உணர்த்திய திருஞானசம்பந்தர், அத்தகைய அடியார்களை பாவங்கள் சென்று அடையா என்று இந்த பாடலிலும் கூறுகின்றார். சிவசிந்தனை மேலோங்கி இருப்பதால், பண்பட்ட உள்ளத்துடன் குற்றங்கள் நீங்கிய உள்ளத்துடன் இருக்கும் அடியார்கள் தீயசெயல்களை இயல்பாகவே தவிர்ப்பார்கள் என்பதால் அவர்களை பாவங்கள் சென்று அடையாது அல்லவா.

சூடும் இளந்திங்கள் சுடர் பொன் சடை தாழ

ஓடு உண்கலனாக ஊரூர் இடு பிச்சை

நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்

பாடும் அடியார்கட்கு அடையா பாவமே

புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.97.4) பெருமான் தொடர்ந்து பலியேற்கின்றார் என்பதை குறிப்பிட,பன்னாள் இடுமின் பலி என்று பெருமான் பல இடங்களிலும் திரிகின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். துன்னார்= பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்கள்; துணி செய்து=துண்டித்து; அரவும் மதியும் விளையாட என்ற தொடர் மூலம், பாம்பும் சந்திரனும் தங்களின் இடையே உள்ள பகையை மறந்து இருப்பதாக கூறுகின்றார்.

துன்னார் புரமும் பிரமன் சிரமும் துணி செய்து

மின்னார் சடை மேல் அரவும் மதியும் விளையாட

பன்னாள் இடுமின் பலி என்று அடைவார் பதி போலும்

பொன்னார் புரி நூல் அந்தணர் வாழும் புறவம்மே

ஏற்பது இகழ்ச்சி என்பது முதுமொழி. ஆனால் சிவபெருமான் தன் பொருட்டு பலி ஏற்காமல் மக்களை உய்விப்பதற்காக பலி ஏற்பதால், அவன் எடுக்கும் பிச்சை இகழ்ச்சிக்கு உரியது அல்ல. இதனை புரிந்து கொள்ளாமல் பலர் பெருமான் பிச்சை எடுப்பதை இகழ்வாக கூறினாலும், பெருமான் அதனை பொருட்படுத்துவதில்லை. உயிர்கள் தங்களது மலங்களை பெருமான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைவதற்கு ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, பிறரது பழிச் சொற்களை புறக்கணித்து பெருமான் பிச்சை எடுக்கின்றான் என்பதை உணர்த்தும் வண்ணம், பழி ஓராது பெருமான் பலி ஏற்கின்றார் என்று திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.98.8) திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பல செய்திகளையும் தத்துவங்களையும் விளக்கமாக உரைக்கும் வேதங்களும், அருளாளர்கள் இயற்றிய பாடல்களும், பெருமானின் ஒரு சில செய்கைகளையே சொல்ல முடிகின்றது என்று உணர்த்தி, பெருமானின் பெருமை சொற்களையும் கடந்தது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். மலை போன்று பருத்தும் வலிமை வாய்ந்ததும் ஆகிய தோள்கள் பொருந்திய அரக்கன் இராவணனின் வலிமை கெடும் வண்ணம், அவனது உடலை கயிலை மலையின் கீழே அடர்த்து நொறுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான்; அவர், பிறரது பழிச் சொற்களையும் பொருட்படுத்தாமல், பிரம கபாலத்தை ஏந்தியவராக பல ஊர்கள் திரிந்து தொடர்ந்து பலி ஏற்கின்றார். பெருமானின் பெருமையினை எடுத்து உரைக்கும் வல்லமை வாய்ந்த வேதங்களும் அருளாளர்களின் கீதங்களும், முழுமையாக அவரது வீரச்செயல்கள் மற்றும் கருணைச் செயல்களின் தன்மையை சொல்லும் ஆற்றல் இல்லாமல் நிற்கின்றன. அவைகளால் ஒரு சில செயல்களையோ ஒரு சில தன்மைகளையோ தான் சொல்ல முடிகின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன் தன்

தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழி ஓரார்

சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்

சிலவல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே

கொடிமாட செங்குன்றூர் என்று அழைக்கப்படும் திருச்செங்கோடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.107.7) திருஞானசம்பந்தர், தொடர்ந்து பலி ஏற்பதையே தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். சேடன்=சிரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு, சிறந்த ஞானம் உடையவன்; கோடல்=செங்காந்தள் மலர்கள்; குறிஞ்சி நிலத்திற்கு உரிய பூக்கள். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாக கருதப்படுகின்றன. புறவு=நிலம்; மாலை போன்று நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களுடன் கூடிய நீண்ட புன்சடை தாழ்ந்து தொங்க, தனது கையினில், தசைகள் வாடி உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் பிரமனின் மண்டையோட்டினை பிச்சை பாத்திரமாக ஏற்று பல இடங்களிலும் திரிந்து பலி ஏற்பதை தனது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள பெருமான், செங்காந்தள் மலர்கள் நிறைந்த வளம் பொருந்திய வயல்களை உடைய கொடிமாட செங்குன்றூர் தலத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றான். தலை சிறந்த ஒழுக்கம் உடையவனாகத் திகழும் பெருமானின் திருப்பாதங்களைத் தொழும் அடியார்களின் வினைகள் முற்றிலும் தேய்ந்து அழிந்துவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ வெள்ளை

வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்க்

கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே

பெருமான் ஏற்கும் பலியினை திருஞானசம்பந்தர் மக்களுக்கு நலம் பயக்கும் பலி என்று கள்ளில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.119.6) குறிப்பிடுகின்றார். மேற்கண்டவாறு சிவபிரான் பலி ஏற்பது நம்மிடம் உள்ள தீய குணங்களை, மலங்களை அவனது பிச்சை பாத்திரத்தில் இட்டு நாம் தூய்மை அடைவதற்காகத் தான். இந்த கருத்தினை உள்ளடக்கி, மக்களுக்கு நன்மைகள் ஏற்பட பலியேற்கும் கொள்கை உடையவன் சிவபெருமான் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் நன்மை புரிய காத்திருக்கும் சிவபெருமானை நம்பன் என்று அழைத்து நாம் அவனை நம்ப வேண்டும் என்பதை நமக்கு திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். தன்னை அடைய விரும்பி தவம் புரிவோர்க்கு சிவபெருமான் அத்தகைய அடியார்களின் மலங்களை நீக்குவான் என்றும் இங்கே கூறுகின்றார்.

நலனாய பலி கொள்கை நம்பான் நல்ல

வலனாய மழுவாளும் வேலும் வல்லான்

கலனாய தலை ஓட்டான் கள்ளின் மேயான்

மலனாய தீர்த்து எய்து மாதவத்தோர்க்கே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.2.7) இழிவான செயல் என்று கருதாமல் பெருமான் தொடர்ந்து பலியேற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் சொல்கின்றார். பந்தம்=கீழ்மை, இழிந்த தன்மை; கந்தம்=நறுமணம்; சந்து=சந்தனக் கட்டைகள்; ஏற்பது இகழ்ச்சி என்பது சான்றோர் வாக்கு. எனினும் பெருமானின் இந்த செயலால் விளையும் நன்மை கருதி, பெருமான் பிச்சை புகினும் அவர் செய்வது நன்றே என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். நறுமணம் வீசும் சிறந்த மலர்களுடன், சந்தனக் கட்டைகள், கருமை நிறம் கொண்ட அகில் கட்டைகள் முதலிய பொருட்களைத் அடித்துத் தள்ளிக் கொண்டு வரும் காவிரி நீரினில் நீராடும் அடியார்களின் இடர்களைத் தீர்க்கும் பெருமான் வலஞ்சுழி தலத்தினில் உறைகின்றார். அவர், உலகம், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்கள், உலகில் உள்ள அனைத்து உயிர்கள் ஆகியவை தோன்றுவதற்கும் அழிவதற்கும் காரணமாகவும், அத்தகைய தோற்றம் அழிவுக்கு இடைப்பட்ட காலத்தில் அவை அனைத்திற்கும் பாதுகாப்பாகவும் இருக்கும் வல்லமை வாய்ந்தவராக உள்ளார். இத்தகைய அரிய ஆற்றல் கொண்ட இறைவனே, பலராலும் இழிவாக கருதப்படும் பிச்சை ஏற்கும் செயலினை நீர் அவ்வாறு இழிவாக கருதாமல் தொடர்ந்து பிச்சை ஏற்பதன் காரணம் தான் யாதோ என்று கேள்வி கேட்கும் பாடல். இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (2.2.9) சீர்த்த வெண்டலை என்று குறிப்பிட்டு,பிச்சை ஏற்பதால் பெருமை அடைந்த மண்டையோடு என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

கந்த மாமலர் சந்தொடு காரகிலும் தழீஇ

வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி

அந்தநீர் முதல்நீர் நடுவாம் அடிகேள் சொலீர்

பந்த நீர் கருதாது உலகில் பலி கொள்வதே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (2.2.6) பலர் ஏசிய போதிலும் பெருமான் தொடர்ந்து பலி ஏற்கின்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். தேச நீர்=உலகமாக நீர் இருக்கின்றீர்; திரு=தெய்வம்; உலகமாகவும் உலகநாதனாகவும் இருக்கும் தன்மை; ஏச=பழித்துக் கூறும் வண்ணம்; பக்குவப்பட்ட உயிர்களிடமிருந்து பலி ஏற்பதை பலரும் பழித்த போதிலும் தொடர்ந்து பலியேற்கும் பெருமானே, ஏன் இவ்வாறு செய்கின்றீர் உமது வறுமை தான் இதற்கு காரணமா என்று திருஞானசம்பந்தர் இங்கே கேள்வி கேட்கின்றார். உலகத்தையும் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தனது உடைமையாக கொண்டுள்ள பெருமான், வறியவர் அல்ல என்பதை நாம் அறிவோம். எனினும் தான் கொண்டுள்ள உயர்ந்த நோக்கத்தின் காரணமாக பிச்சையேற்கும் பெருமான், தான் செய்யும் செயலுக்கு பொருந்தும் வண்ணம் எளிமையாக, வறிய கோலத்துடன் காட்சியளிக்கின்றார் என்பதை உணர்த்தும் வண்ணம், இல்லாமை காரணமாக பெருமானே பலி ஏற்கின்றாரோ என்று திருஞானசம்பந்தர் இங்கே கேள்வி கேட்கின்றார்.

பூசநீர் பொழியும் புனல் பொன்னியில் பன்மலர்

வாசநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழித்

தேச நீர் திருநீர் சிறுமான் மறியீர் சொலீர்

ஏச வெண்தலையில் பலி கொள்வது இலாமையே

பெருமான் பலி ஏற்பது, உயிருடன் இணைந்துள்ள, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று பொருட்களை பெறுவதற்காக என்று கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.12.5) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கடை=வாயில்; உடையான் என்று உயிர்களைத் தனது உடைமையாக கொண்டுள்ள பெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

சடையானைத் தலை கையேந்திப் பலி தருவார் தம்

கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள்

புடையே பொன் மலரும் கம்பைக் கரை ஏகம்பம்

உடையானை அல்லாது உள்காது என் உள்ளமே

தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.35.4) திருஞானசம்பந்தர், பலரும் பழித்துரைக்கினும், பெருமான் அதனை பொருட்படுத்தாமல் பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். விழிக்கும் நுதல்=விழித்துப் பார்க்கும் கண் உடைய நெற்றி; தெழிக்கும்= ஒலிக்கும்; புறங்காடு=சுடுகாடு; ஊருக்கு வெளியே அமைந்திருக்கும் சுடுகாடு; தெழிக்கும் புறங்காடு=பிணங்கள் எரியும் போது, எலும்புகள் சடசட என ஒலிக்கும் ஓசை நிறைந்த சுடுகாடு; ஊழிக்காலத்தில் உலகமே சுடுகாடாக இருக்கும் தன்மையும், வடவாக்னியால் அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாக மாறும் தன்மையும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. பரிசு=தன்மை;

விழிக்கும் நுதல் மேல் ஒரு வெண்பிறை சூடித்

தெழிக்கும் புறங் காட்டிடைச் சேர்ந்து எரியாடிப்

பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன் ஊர் பொன்

கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே

திருநணா என்று அழைக்கப்பட்ட பவானி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.72.7) பிரம கபாலத்தில் உணவு உட்கொள்வதை பெருமான் உகக்கின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தாருகவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து எழுப்பிய காட்டு யானை, என்பதால் காடுகளில் திரியும் யானை என்று இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. அரை=இடுப்பு; ஊன்=தசை; பெருமான் தனது உணவுத் தேவைக்காக பிச்சை ஏற்பதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும் உபசார வழக்காக, கையினில் கபாலத்தை ஏந்திய வண்ணம் வீடுவீடாக செல்வதால் பிச்சை உணவு ஏற்கின்றார் என்றும் அதனை உண்கின்றார் என்றும் சொல்லப் படுகின்றது.

கானார் களிற்று உரிவை மேல் மூடி ஆடரவம் ஒன்று அரை மேல் சாத்தி

ஊனார் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும்

நானாவிதத்தால் விரதிகள் நல் நாமமே ஏத்தி வாழ்த்தத்

தேனார் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திருநணாவே

சீர்காழி தலத்தின் மீது (2.75.3) அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் பிரமகபாலத்தில் உணவு உட்கொள்வதை தனது கொள்கையாகக் கொண்டவன் சிவபெருமான் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். மற்றயங்கு=மல்+தயங்கு; மல்=வலிமை; வலிமை தாங்கும் தோள்கள், வலிமையான திரண்ட தோள்கள்; மைந்தன்=வல்லமை உடையவன்; துற்றல்=உணவு உட்கொள்ளுதல்;

சுற்றுலா நற்புலித் தோல் அசைத்து அயன் வெண் தலைத்

துற்றலாயதொரு கொள்கையான் சுடு நீற்றினான்

கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலிக் காழியுள்

மற்றயங்கு திரள் தோள் மைந்தன் அவன் நல்லனே

பற்கள் ஏதும் இல்லாத பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம் பலிக்குச் செல்லும் பெருமான், ஆடியும் பாடியும் பிச்சை ஏற்கின்ற துன்பம் உடைய வாழ்க்கை வாழ்பவர் ஆயினும், அவரது தோற்றம் மிகவும் அழகியதாகவே காணப்படுகின்றது என்று திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.91.6) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு எந்த நிலையிலும் தான் அழகராகத் திகழ்வதை பெருமான் அறிவார் என்றும் திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். புல்லம்=புல்லினை மேய்ந்து உட்கொள்ளும் எருது; உழிதருதல்=திரிதல்;

பல்லில் ஓடு கை ஏந்திப் பாடியும் ஆடியும் பலி தேர்

அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள்

புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழி தருவர்க்கு இடமாம்

மல்கு வெண் திரை ஓதம் மாமறைக்காடு அது தானே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.6) திருஞானசம்பந்தர் பெருமானை, விருப்பு வெறுப்பு கடந்தவர் என்பதை உணர்த்தும் வண்ணம், அருவருப்பு ஏதும் இன்றி, பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்தி பலியேற்கச் செல்கின்றார் பெருமான் என்று கூறுகின்றார். இந்த பாடல் அகத்துறை கூற்றாக அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், தன்னை பெருமாள் பால் காதல் கொண்டுள்ள தலைவியாக உருவகித்து, தனது கவனத்தை ஈர்த்து தன்பால் காதல் கொள்ளச் செய்த பெருமான், தனது வளையும் கவர்ந்த கள்வராகத் திகழ்கின்றார் என்று கூறுகின்றார். பெருமான் பால் தீராத காதல் கொண்டுள்ள தலைவி, பெருமானுடன் தான் சேர முடியாத ஏக்கத்தினால் மனம் வருந்தி, தனது கை வளையல்கள் கழன்று விழும் வண்ணம் உடல் இளைத்து இருப்பதாக கூறுகின்றாள். இவ்வாறு தான் உடல் மெலிந்ததற்கு காரணம் பெருமான் பால் தான் கொண்டுள்ள காதல் நிறைவேறாத ஏக்கம் என்று உணர்த்தும் தலைவி, தனது வளையல்கள் கழலும் வண்ணம் செய்த பெருமானை கள்வர் என்று குற்றம் சாட்டுகின்றாள். இருவர் ஆதரிப்பார் என்று கங்கை நதியினைத் தனது சடையில் வைத்தும், உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தும் பெருமான் ஆதரிக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். இறைவனின் திருமேனிக்கு ஒப்பாக கூறுவதற்கு எந்த உயிரும் எந்த பொருளும் இல்லை என்பதால், எவராலும் ஒப்பிட முடியாத திருமேனியை உடையவர் சிவபெருமான். இளமையும் அழகும் சேர்ந்த மாதர்கள் இருவரை, கங்கை நங்கையையும் உமை அன்னையையும், முறையே தனது சடையிலும் உடலிலும் வைத்து ஆதரிப்பவர் சிவபெருமான்; பல பூதங்களும் பேய்களும் எப்போதும் அவரைச் சூழ்ந்து கொண்டு தாமே அவரது அடையாளம் என்பது போன்று அவரை விட்டு என்றும் பிரியாமல் இருக்கின்றனர். விருப்பு வெறுப்பு ஆகிய குணங்களைக் கடந்த பெருமான் அருவருப்பு ஏதும் இன்றி, உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம் பல இல்லங்களுக்கும் சென்று பலியேற்கும் பெருமான் திருவலஞ்சுழி தலத்தினில் உறைகின்றார். அவரே, என்னை தீராத காதலில் ஆழ்த்தி, பிரிவாற்றாமையால் நான் உடல் மெலிந்து வருந்தும் வண்ணம் செய்து, எனது கைவளையல்கள் நழுவும் வண்ணம் உடல் மெலிய, எனது வளையல்களை கவர்ந்த கள்வர் ஆவார் என்று சம்பந்த நாயகி உணர்த்தும் பாடல்.

ஒருவரால் உவமிப்பதை அரியதோர் மேனியர் மட மாதர்

இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம்

அருவராததோர் வெண் தலை கை பிடித்து அகம் தோறும் பலிக்கென்று

வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரிவளை கவர்ந்தாரே

கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.107.3) வீடுகள் தோறும் இடும் பிச்சையை மிகுந்த விருப்பத்துடன் உண்பவர் என்று சிவபெருமானை திருஞானசம்பந்தர் உணர்த்துவதை நாம் காணலாம். மேலும்மேலும் உயிர்கள் தன்னை வந்தடைய வேண்டும் என்று விரும்பும் பெருமான், பல வீடுகளுக்கு பிச்சையேற்கச் செல்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். சுண்ணம்=திருநீறு; உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், ஒற்றைப் பிறைச் சந்திரன் தனது சடையில் தவழும் வண்ணம் காட்சி அளிக்கின்றார். அவர் திருநீற்றினைத் தனது உடல் முழுவதும் மிகுந்த விருப்பத்துடன் பூசிக் கொண்டவர் ஆவார். அவர் தான் அணிந்துள்ள வீரக் கழல்கள் அதிர்ந்து ஓசை எழுப்பும் வண்ணம் ஆடிக்கொண்டே பாடுகின்றார். தான் பிச்சையாக ஏற்கும் உணவினை விருப்பத்துடன் உட்கொள்பவர் போல இல்லங்கள் தோறும் பலி ஏற்பதற்காக திரிகின்றார். இத்தகைய பண்புகளை உடைய பெருமானார், உயர்ந்த மாதோட்ட நகரினில் விளங்கும் கேதீச்சரம் திருக்கோயிலில் உறைகின்றார். அந்த திருக்கோயிலை அடைந்து, பெருமானைச் சரணடைந்து வணங்கும் அடியார்களை, துன்பம் மற்றும் இன்பம் ஆகியவற்றை பயப்பிக்கும் இரு வகையான வினைகளும் அணுகாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பு ஆர்க்கச்

சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவார் அகந்தொறும் இடும் பிச்சைக்கு

உண்ணலாவதோர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து

அண்ணல் நண்ணு கேதீச்சரம் அடைபவருக்கு அருவினை அடையாவே

அரதைப் பெரும்பாழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.30.3) திருஞான சம்பந்தர், பெருமான் பலியேற்பதற்காக கொண்ட அழகிய திருக்கோலம், தாருகவனத்து பெண்கள் அவர் மீது தீராத காதல் கொள்ளும் வண்ணம் அவர்களை ஈர்த்தது என்று கூறுகின்றார். கோடல்=வெண் காந்தள் மலர்; ஏற்றுக் கொள்ளுதல் என்ற பொருளும் இங்கே பொருத்தமே; சால=மிகவும்; மூடல்=போர்வையாக போர்த்துக் கொள்ளுதல்; முளிதல்=வெந்து போதல்; பீடு=பெருமை; வெண்காந்தள் மலரினை மிகுதியாக அணிந்து கொள்பவரும்; மிகவும் அதிகமான அடியார்களின் வேண்டுகோள்களை ஏற்றுக் கொண்டு அருள் புரிபவரும்; கொல்லும் தன்மை உடையதாக தன்னை எதிர்த்து வந்த மதயானையை அடக்கி, அதன் தோலினை உரித்துத் தனது திருமேனியை மூடும் வண்ணம் போர்த்துக் கொண்டவரும், அனைத்து பொருட்களும் வெந்து அருவருக்கத்தக்க காட்சியுடன் காணப்படும் சுடுகாட்டின் இடையே நின்று மிகவும் அதிகமான நேரம் நடனம் ஆடுபவரும், அழகிய பெருமை உடையவரும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோயில் அரதைப் பெரும்பாழியாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கோடல் சாலவ் வுடையார் கொலை யானையின்

மூடல் சாலவ் வுடையார் முளிகானிடை

ஆடல் சாலவ் வுடையார் அழகாய

பீடர் கோயில் அரதைப் பெரும்பாழியே

பிரமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் (3.37.3) பிரமகபாலத்தில் பலி ஏற்று மகிழும் படிறன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். படிறன் என்றால் வஞ்சகன் என்று பொருள். பலி ஏற்பது போன்று வந்து தாருகவனத்து மகளிரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதால் படிறன் என்று கூறுகின்றார் போலும்.

எல்லையில் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும்

பல்லையார் தலையில் பலியது கொண்டுகந்த படிறனும்

தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூமலர் சொரிந்து ஏத்தவே

மல்லை அம்பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்துறை மைந்தனே

கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.38.1) திருஞான சம்பந்தர், பெருமான் பலியேற்பதன் காரணம் யாது என்று, இந்த தலத்து தொண்டர்களை நோக்கி வினவுகின்றார். அறியாமையால் தான் வினவினேன் என்று திருஞானசம்பந்தர் கேள்விகளைத் தொடுப்பதாக அமைந்த பதிகம் என்றாலும், திருஞானசம்பந்தர் சிவஞானம் முற்றிலும் உடையவராக இருந்தமையால், தான் அறியாததால் வினாக்களைத் தொடுத்தார் என்று பொருள் கொள்ளலாகாது. அடியார்களின் வாய்மொழியாக விளக்கத்தைக் கேட்டு இன்பமடைய வேண்டும் என்ற அவரது ஆசை இங்கே வெளிப்படுகின்றது. மேலும் அறியாமையில் என்ற தொடருக்கு அறியாமை இல்லாத வண்ணம், அதாவது எவருக்கும் ஐயம் ஏற்படாத வண்ணம், இந்த கேள்விக்கு விடை அளிப்பீர்களாக என்று திருஞானசம்பந்தர் சொல்கின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. கனைவு=வேகம்; தமர்=தொண்டர்கள்; தொண்டர்கள் பல உலகங்களையும் ஆள்வதற்கு அருள் புரிந்த பெருமான் என்று கூறுகின்றார். உரைத்தல்=கேட்போர் ஐயம் திரிபு ஏதும் இன்றி, உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக உணரும் வண்ணம் கூறுதல்; தனது உடமையாகிய அண்டங்களை மற்றவர்கள் ஆள்வதற்கு கொடுத்துவிட்டு, காட்டினில் வாழும் வளமற்ற வாழ்க்கையினை மேற்கொண்டு, பெருமான் பிச்சைக்கு திரிவதன் காரணம் யாது என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் வினவுகின்றார். தனது அடியார்களுக்கு எவ்வாறேனும் அருள் புரிய வேண்டும் என்ற விருப்பமே, அண்டங்களை அவர்கள் ஆளும் வண்ணம் செய்ததையும், பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தன்னை விரைவில் வந்தடைய வேண்டும், என்ற நோக்கத்துடன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு பெருமான் சென்று, அவர்களது மலங்களை பிச்சையாக ஏற்றுக் கொள்கின்றார் என்பதையும் அருளாளர்கள் அருளிய பாடல்களிலிருந்து நாம் அறிந்து கொண்டுள்ளோம். இவ்வாறு பெருமானின் அருளினால் உலகங்களை ஆளும் வாய்ப்பினைப் பெற்றத் தொண்டர்கள் எத்தகைய தொண்டர்கள் என்பதையும் இங்கே குறிப்பிடுகின்றார். தனம் முனே தனக்கு இன்மையோ தமர் என்பதன் மூலம், பெருமானிடம் செல்வம் பெறுவதற்கு முன்னமே செல்வம் ஏதும் இல்லாதவர்களாக இருந்த அடியார்கள் என்று குறிப்பிடுகின்றார். ஊழிக்காலத்தில் அனைத்தும் அழிந்த பின்னர், பல அண்டங்களையும் படைத்து உயிர்களுக்கு, தங்களது வினைகளை கழித்துக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் பெருமானது உடமை தானே அனைத்து அண்டங்களும். ஆனால் அவரோ தன்னை வழிபட்ட அடியார்களை, பிரமனாகவும், திருமாலாகவும், இந்திரனாகவும் மாற்றி அவர்கள் ஆள்வதற்கு சத்தியலோகம் வைகுண்டம் இந்திரலோகம் ஆகியவற்றை அளித்து அருள் புரியும் செய்கையே இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. தனமுனே தனக்கு இன்மையோ என்ற தொடர், பெருமானுக்கு அவரது முன்னோர்கள் தேடி வைத்த செல்வம் ஏதும் இல்லாத காரணத்தால், தான் ஆள்வதற்கு எதனையும் வைத்துக் கொள்ளாமல் பெருமான் விட்டு விட்டாரோ என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது என்ற விளக்கமும் சிலரால் அளிக்கப் படுகின்றது. இந்த கேள்வியின் மூலம் தாயும் தந்தையும் இல்லாத, தனக்கு முன்னோர்கள் எவரும் இல்லாத தலைவனாக, பெருமான் உள்ள தன்மை உணர்த்தப் படுகின்றது. முன்னோர்கள் இருந்தால் தானே, அவர்கள் சேர்த்து வைத்த செல்வம் பற்றிய கேள்வி வரும். முன்னே தனம் இன்மையோ என்ற தொடரினை வனனில் என்ற சொல்லுக்கு முன்னே கூட்டி, பெருமான் பலியேற்பது அவரிடம் செல்வம் இல்லாத காரணத்தினால் அல்ல என்ற செய்தியும் இங்கே தெளிவாக கூறப்பட்டுள்ளது. உலகிலுள்ள அனைத்துச் செல்வங்களும் அவருடையது தானே. மேலும் அவர் தனது உணவுத் தேவைக்காக பிச்சை ஏற்பதில்லை என்ற செய்தியும் அருளாளர்களால் நமக்கு உணர்த்தப் படுகின்றது. அண்டங்கள் அனைத்தையும் படைக்கும் பெருமான்,எதனையும் தனக்காக வைத்துக் கொள்ளாமல் தனது அடியார்களுக்கு அளிக்கும் கருணைச் செயல் பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது.

வினவினேன் அறியாமையில் உரை செய்ம்மின் நீர் அருள் வேண்டுவீர்

கனைவிலார் புனல் காவிரிக்கரை மேய கண்டியூர் வீரட்டன்

தனமுனே தனக்கு இன்மையோ தமராயினார் அண்டம் ஆளத் தான்

வனனில் வாழ்க்கை கொண்டாடிப் பாடி இவ்வையகமாப் பலி தேர்ந்ததே

அடியேன் இங்கே ஒரு கேள்வி கேட்கின்றேன், இந்த கேள்விக்கான விடையை, கேட்பவர்கள் உள்ளத்தினில் எந்த விதமான ஐயப்பாடும் இல்லாத வகையில்,உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில், அவர்களது அறியாமையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், இறைவனின் திருவருளை வேண்டும் அடியார்களாகிய நீவிர், கூறுவீர்களாக. பேரொலியுடன் பாய்ந்து வரும் காவரி நதிக் கரையினில் உள்ள கண்டியூர் தலத்தினில் பொருந்தி உறையும் வீரட்டனாகிய இறைவன், தனது அடியார்களும், இதற்கு முன்னம் அத்தகைய செல்வங்கள் இல்லாதிருந்த பிரமன், திருமால் இந்திரன் ஆகியோர்களுக்கு அண்டங்களை அளித்து அவர்கள் ஆளுமாறு செய்துவிட்டு, காட்டினில் வளமற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, ஆடியும் பாடியும் இந்த உலகத்தில் பல இடங்களுக்கும் பெருமான் திரிந்து பலி ஏற்பதன் காரணம் யாதோ, எனக்கு சொல்வீர்களாக என்று திருஞானசம்பந்தர் வினவுவதாக அமைந்த பாடல்.

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.56.5), இறைவன் ஒவ்வொரு நாளும் பலி ஏற்கின்றான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. எனவே பலி ஏற்பது அவனது தன்மை என்பதை நாம் உணர்கின்றோம். பெருமான் இன்றும் பலியேற்பதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நாம் நமது ஊனக்கண்களால் இறைவன் இவ்வாறு வருவதை காணமுடியாது: எனினும் இறைவன் வருவார் என்பதை எதிர்பார்த்து, விருப்பு வெறுப்பு ஏதுமின்றி நாம் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை ஒரே மாதிரியாக பாவித்து, நமது பழைய மலங்களை அவரிடம் சமர்ப்பிப்பதற்கு தயாராக இருந்தால், அவர் நமது பழைய வினைகளை முற்றிலும் கழித்து, நம்மைப் பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுவிப்பார் என்ற செய்தி இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. பிச்சை எடுப்பது என்பதே வேறு வழி இல்லாத காரணத்தினால் என்பதால், பிச்சை வேண்டுவோர் அப்போது பேசும் மொழிகளில் ஒரு வகையான வெறுப்பு கலந்திருக்கும். ஆனால், பெருமானோ, விருப்பத்துடன் பிச்சை எடுப்பதால் அவர் பேசும் மொழிகளும் இனிய மொழிகளாக இருக்கும் என்று பிரமபுரம் தலத்தின் மீது அருளிய இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நளிர்=குளிர்ந்த; உடலின் பல இடங்களில் பாம்பினையும் தனது கையில் மழுப்படையையும் ஏந்தியவனாக, அச்சம் தரும் கோலத்துடன் பிச்சை ஏற்கச் செல்லும் பெருமான், தனது இனிய மொழிகளால் அந்த அச்சத்தை நீக்கும் வண்ணம் செயல்படுகின்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார் போலும்

நச்சரவச் சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு

அச்சம் எழ விடை மேல் அழகார் மழு ஏந்தி நல்ல

இச்சை பகர்ந்து மிக இடுமின் பலி என்று நாளும்

பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே

பெருமானுக்கு நாம் இடும் பலி, அறம் வேண்டி (புண்ணியம் கருதி) இடப்படுவதால் இதனை அறப்பலி என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் (3.63.9) செங்காட்டங்குடி தலத்து பதிகத்தில் உள்ளது. இந்த பாடல் அகத்துறை வகையில் அமைந்த பாடல். நறவு=தேன் நறப்பொலி=தேன் நிறைந்த; நவில்-வாழ்கின்ற; குருகு=பறவை; உழல்வார்=திரிபவர்; அலர்=பழிச்சொல்; தான் பழிச்சொல்லுக்கு ஆளாகும் வகையில் பெருமான் தன்னுடன் இணையாமல் இருப்பது பெருமானுக்கு அழகா என்ற கேள்வியை இந்த பாடலில் தலைவி எழுப்புகின்றாள். தான் பெருமானிடம் ஆழமான காதல் கொண்டிருப்பதை அனைவரும் அறிந்த நிலையில், தான் பெருமானுடன் இணையாமல் இருந்தால் ஊரார் தன்னை தூற்றுவார்கள் என்றும் அந்த நிலை ஏற்படும் முன்னமே பெருமான் தனது காதலை ஏற்றுக்கொண்டு பெருமான், தன்னை அவனுடன் இணைத்துக் கொள்ளவேண்டும் என்றும் உணர்த்தும் சம்பந்த நாயகியின் கூற்றாக அமைந்த பாடல் இது. பிறப்பிலியாகிய பெருமானின் நாமத்தை எப்போதும் பிதற்றும் தான் பெருமைக்குரிய நலன்களை இழப்பது தகுமா என்று தலைவி இறைவனை நோக்கி கேள்வி கேட்பதாக அமைந்த பாடல். இந்த பாடலின் உட்கருத்து, தலைவியாக உருவகப் படுத்தப் பட்டுள்ள உயிர், பெருமானுடன் தான், தான் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிடுகின்றது.

நறப்பொலி பூங்கழிக் கான் நவில் குருகே உலகெல்லாம்

அறப்பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே

சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய

பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ எம் பெருநலமே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.76.4) திருஞானசம்பந்தர் பல ஊர்கள் சென்று பிச்சையெடுத்து உண்பதில் மிகுந்த விருப்பம் உடையவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். மிசைத்து=மேலதாக; தடவி=பூசி; பல வேறு திசைகளிலிருந்து வந்த வெளிநாட்டவர்கள், இனிய தமிழ் மொழியில் பேசும் இளம் மாதர்களுடன் உரையாடும் நோக்கத்துடன், தமிழ்ச் சொற்களை கற்றுக் கொள்கின்றனர் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

நீறு திருமேனியின் மிசைத்து ஒளி பெறத் தடவி வந்து இடபமே

ஏறி உலகங்கள் தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதியாம்

ஊறு பொருள் இன்தமிழின் இயல் கிளவி தேரும் மடமாதர் உடனார்

வேறு திசை ஆடவர்கள் கூற விசை தேரும் எழில் வேதவனமே

தான் ஏந்தியுள்ள ஓட்டினில் அளிக்கப்படும் பிச்சையை மிகவும் இனியது என்று மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளும் பெருமான் என்று வீழிமிழலை பதிகத்து பாடலில் (3.85.10) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமான் பிச்சையேற்கும் நோக்கத்தினை அறியாத சமணர்களும் புத்தர்களும், அவரது பெருமையை அறியாதவர்களாக இருப்பதால் பெருமானை தூற்றுகின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இச்சையர்=விருப்பம் உடையவர்; மொச்சைய=நீராடுவதை தவிர்ப்பதால் துர்நாற்றம் வீசும் உடலினை உடையவர்; விச்சை=வித்தை செய்பவர்;

இச்சையர் இனிது என இடுபலி படுதலை மகிழ்வதோர்

பிச்சையர் பெருமையை இறை பொழுது அறிவென உணர்விலர்

மொச்சைய அமணரும் முடைபடு துகிலரும் அழிவதோர்

விச்சையர் உறைவது விரைகமழ் பொழில் வீழி மிழலையே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் (3.85.7) கரும்பு போன்று இனிய மொழிகளை பேசிய வண்ணம் பெருமான் பலி ஏற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றர். இக்கு=கரும்பு; இக்‌ஷு என்ற வடமொழிச் சொல் இக்கு என்று தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. இக்கு உக= கரும்பின் சுவை சொட்டச் சொட்ட; மிகுதலை=பெருமானின் கையிலிருந்து நீங்காத பிரம கபாலம்; சரிதையர்=பண்பினை உடையவர்;

அக்கினோடு அரவரை அணி திகழ் ஓளியதோர் ஆமை பூண்டு

இக்கு உக மலி தலை கலனென இடு பலி ஏகுவர்

கொக்கரை குழல் முழ விழவொடும் இசைவதோர் சரிதையர்

மிக்கவர் உறைவது விரை கமழ் பொழில் வீழிமிழலையே

இவ்வாறு ஊரூராக உலகெங்கும் திரிந்து பலியேற்பதால் பெருமான் அடைகின்ற மகிழ்ச்சியின் தன்மையை நாம் அறிந்து கொள்ள இயலாது என்று திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.2) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, பெருமானைச் சென்றடைந்து, என்றும் அழியாத நிலையான ஆனந்தத்தில் திளைக்க வேண்டும் என்று உயிர்கள் கொண்டுள்ள விருப்பத்தினை விடவும், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள மலங்களை முற்றிலும் கழித்துக் கொண்டு தன்னை வந்தடைய வேண்டும் என்று பெருமான் கொண்டுள்ள விருப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. அதனால் தான், பக்குவமடைந்த உயிர்கள் தன்னைத் தேடிவரும் வரையில் காத்திராமல், தானே அந்த உயிர்கள் இருக்கும் இடம் சென்றடைந்து, அந்த உயிர்களின் மலங்களை, பிச்சையாக ஏற்றுக் கொள்ள, மிகுந்த துடிப்புடன் பெருமான் செயல்படுகின்றார். நம்மில் பெரும்பாலோர் இதனை உணர்வதில்லை. வானில் உள்ள கரிய மேகங்களுக்கு அணிகலன் போன்று திகழும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், தனது சுருண்ட சடையினை அழகு செய்யும் வகையில் கொன்றை மாலையையும் குளிர்ந்த எருக்கு மாலையையும் தழைந்து தொங்கும் வண்ணம் அணிந்துள்ளார். அவர், மார்பினில் கச்சணிந்தவளும் நல்லாள் என்று அழைக்கப் படுபவளும் ஆகிய உமையன்னை உடனாக திருவலஞ்சுழியில் பொருந்தி உறைகின்றார். ஊர்கள் தோறும் சென்று பலியேற்று, அவர் அடைந்த உவகையின் தன்மையை, எங்களால் அறிய முடியவில்லை என்று திருஞான சம்பந்தர் சொல்வதாக அமைந்த பாடல்.

காரணி வெள்ளை மதியம் சூடிக் கமழ்புன் சடை தன்மேல்

தாரணி கொன்றையும் தண்ணெருக்கும் தழைய நுழைவித்து

வாரணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்

ஊரணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (3.106.6) பெருமான் நாணம் ஏதும் கொள்ளாது பலி ஏற்கின்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் தனக்கு இடப்படும் பலியை, மிகுந்த விருப்பத்துடன், வெட்கம் ஏதும் கொள்ளாமல் ஏற்றுக் கொள்பவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இது தான் நாம் பொதுவாக காணும் பிச்சைக்காரர்களுக்கும் பெருமானுக்கும் உள்ள வேறுபாடு; பெருமான் ஏற்கும் பலி பலருக்கும் பலன் அளிப்பதால், அவர் தனது செயலைக் குறித்து நாணம் அடையத் தேவையில்லை. தொண்டு=தொண்டு புரியும் அடியார்கள்; துதைந்து=இணைந்து; தனக்குத் திருத்தொண்டு புரியும் அடியார்களுடன், தன்னை நினைத்து மனம் ஒன்றி வழிபடும் அடியார்களுடன் பெருமானே இணைந்து நிற்கின்றார் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. தழைய=ஒளிமிகுந்த; பெருமான், ஒளிவீசும் தண்டு சூலம் ஆகிய ஆயுதங்களை ஏந்திய வண்ணம், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். தான் வருவதை அடையாளம் கண்டு கொண்டு, தன்னிடம் பிச்சையாக அளிக்கப்படும் மலங்களை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளும் பெருமான், அந்த செயலை நினைத்து வெட்கம் கொள்வதோ நாணம் அடைவதோ இல்லை. ஏனெனில் பலருக்கும் உதவும் பொருட்டு செய்யப்படும் செய்கை குறித்து நாணம் அடையத் தேவையில்லை; அவர், தன்னை எதிர்த்து வந்த மதயானையை அடக்கி, அதன் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்ட ஆற்றல் உடையவர்; வண்டுகள் ஒன்று கூடி மொய்க்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த மாடங்கள் நிறைந்த வலஞ்சுழி தலத்தினில் நிலையாக வீற்றிருப்பவர். அவர், தனக்கு திருத்தொண்டு புரியும் அடியார்களுடன் நெருக்கமாக கூடி நின்று அருள் புரிகின்றார். அவ்வாறு தொண்டர்களுக்கு அருள் புரியும் தன்மையை உணர்ந்த நாமும், அவருக்கு பல விதமான திருத்தொண்டுகள் செய்து, அவரது தொடர்பினைப் பெற்று வாழ்வினில் உய்வோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தண்டொடு சூலம் தழைய ஏந்தித் தையலொரு பாகம்

கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர்

வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னி அவர்

தொண்டொடு கூடித் துதைந்து நின்ற தொடர்பைத் தொடர்வோமே

பொதுவாக பிச்சை ஏற்பவர் பெறும் பயன், பிச்சை இடுவோர் பெறும் பயனை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் சிவபெருமான் பிச்சை ஏற்பது, தான் பயன் அடைவதற்காக அல்ல. அவருக்கு பிச்சை இடுவோர்கள் தங்களது அகங்காரம் (மலங்கள்) அழியப் பெற்று நலம் பெறுவதற்குத் தான். இந்த உண்மை அப்பர் பெருமானால் கீழ்க்கண்ட திருவாரூர் தலத்து பாடலில் (4.53.6) விளக்கப் படுகின்றது. பிச்சை ஏற்கும் பெருமான் உண்பது நஞ்சு என்று பாடலின் மூன்றாவது அடியில் கூறும் அப்பர் பிரான், சிவபெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்பதையும், நகைச்சுவை உணர்வுடன் கலந்து, தெளிவு படுத்துவதை நாம் இங்கே காணலாம். இந்த பாடலில் குறிப்பிடப்படும் பிச்சை ஏற்கும் நிகழ்ச்சியை, தாருகவனத்து நிகழ்ச்சியாக கருதி, தாருகவனத்து மகளிரின் கர்வமும், பெண்மைக்குரிய இயல்புகளும் ஒழிந்து போகுமாறு, சிவபெருமான் பிச்சைப் பெருமானாக வலம் வந்தார் என்றும் விளக்கம் அளிப்பதும் பொருத்தமே. தானகம் என்ற சொல்லினை தான் அகம் என்று பிரித்து, அடியார்கள் தங்களது அகங்காரம் அழியும் பொருட்டு இறைவன் பலி ஏற்கின்றார் என்பதை உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

வானகம் விளங்க மல்கும் வளம்கெழு மதியம் சூடித்

தானகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்

ஊனகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்

ஆனகத்து அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே

ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.62.5) அப்பர் பிரான் நகைச்சுவையாக, பெருமான் தான் பலியேற்று பெற்ற உணவினை உட்கொள்ளாமல், நஞ்சினை உட்கொள்கின்றார் என்று கூறுகின்றார். தனது வாழ்க்கையின் முற்பகுதியில் சிவபெருமானை நினைக்காது, அப்பர் பிரான், தான் சமண சமயம் சார்ந்திருந்ததை எண்ணி வருத்தம் தெரிவிக்கும் பாடல் இது. பளகு என்றால் குற்றம் என்று பொருள். சமண சமயம் சார்ந்திருந்ததை குற்றம் என்று ஒப்புக்கொண்டு அப்பர் பிரான் இறைஞ்சுகின்றார். அவ்வாறு இருந்ததற்காக சிவபெருமான் தன்னை புறக்கணித்து விட்டு அருள் செய்யாமல் இருக்கக் கூடாது என்ற வேண்டுகோள் தொனிக்கும் பாடல். ஆலவாயிலில் உறையும் அப்பனே, பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி ஊர் ஊராகச் சென்று பிச்சை கேட்கின்றாய்; ஆனால் அவ்வாறு பிச்சையாக பெற்ற பொருளை நீ என்றும் உண்டதில்லை. நீ உண்டதோ பாற்கடலில் பொங்கி வந்த விடத்தைத் தான். இவ்வாறு விந்தையான குணத்தினைக் கொண்ட உன்னை, நான் எனது வாழ்நாளின் முற்பகுதியில், உன் மீது பெருவிருப்பம் கொண்டு எனது உள்ளம் உனது நினைவால் நிறையுமாறு, நினைக்காமல் இருந்தேன். எல்லா உலகங்களுக்கும் தலைவனே, நான் உன்னை நினையாமல் பண்டைய நாளில் இருந்ததை பொருட்படுத்தாமல், எனக்கு நீ அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் பெருமானிடம் வேண்டும் பாடல்.

வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்

உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்

பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளமது ஆர

அண்டனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

திருவண்ணாமலை தலத்து பதிகத்தின் பாடலில் (5.5.1), இட்டமாக இரந்து உண்பவன் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடல் தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என்று கூறுவார்கள். பட்டி=அடக்க முடியாத காளை, பண்டைய நாட்களில் கிராமங்களில், தங்களிடம் உள்ள ஒரு காளை மாட்டினை இறைவனுக்கு என்று நேர்ந்து, அதனை கோயிலில் சேர்த்து விடுவார்கள். அந்த மாடு, தங்களது வயல்களில் அல்லது தோட்டத்தில் மேய்ந்தாலும் அதனை மிரட்டாமலும் அடிக்காமலும் வெளியேற்றுவார்கள். இவ்வாறு தனது விருப்பம் போல் திரிந்து, வேலை ஏதும் செய்யாமல் வாழும் காளை மாட்டினை பட்டிமாடு என்றும் பொலி எருது என்றும் அழைப்பார்கள். வலிமை மிகுந்து காணப்படுவதால், இந்த மாட்டினை எளிதில் அடக்குவதும் கடினம். இந்த மாட்டினைப் போன்று எவர்க்கும் அடங்காத நந்தி என்பதால் பட்டி என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இலம்=இல்லம்: இல்லம் என்ற சொல்லின் இடைக்குறை: நீண்டு உயர்ந்த சோதி வடிவில், சிவபெருமான் திருமாலுக்கும் பிரமனுக்கும் காட்சி கொடுத்த தலம் என்பதால் அட்டமூர்த்தி அண்ணாமலை என்று குறிப்பிடுகின்றார்.

பட்டி ஏறுகந்தேறி பல இலம்

இட்டமாக இரந்து உண்டு உழிதரும்

அட்டமூர்த்தி அண்ணாமலை கை தொழ

கெட்டுப் போம் வினை கேடில்லை காண்மினே

தனக்கு தேவையான உணவுக்கு மாறாக கொடுப்பதற்கு தன்னிடம் ஏதும் இல்லாத காரணத்தால் பெருமான் பலியேற்கின்றார் என்று நகைச்சுவையாக அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் நின்றியூர் தலத்தின் அருளிய பாடலாகும் (5.23.1). இதன் மூலம் பெருமானின் எளிய கோலம் உணர்த்தப் படுகின்றது. கொடுங்கண்=தோண்டப்பட்ட கண்கள்; படும் கண்=படும் இடுக்கண்; ஆட்டயர்=நடனம் ஆடும்: கடுங்கை=வலிமை உடைய கை; உடலிலிருந்து உயிர்களைப் பிரிக்கும் வல்லமை கொண்ட இயமனின் கை; குறை விலை படும் கண் ஒன்று=குறைந்த விலைக்கு விற்கக்கூடிய பொருட்கள் ஏதும் தன்னிடம் இல்லாதவராக: பிச்சைப் பெருமானாக வேடம் ஏற்ற பெருமான், அந்த வேடத்திற்கு உரியவராக இருந்த நிலை இந்த தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.தோண்டப்பட்ட கண்களை உடைய கபாலத்தினை உண்கலனாக ஏற்று, தனக்கு வேண்டிய உணவுக்கு மாற்றாக கொடுப்பதற்கு, விலை குறைந்த பொருள் கூட தன்னிடம் இல்லாதவர் போன்று பிச்சைப் பெருமான் வேடம் தரித்து, பலி ஏற்பவர் சிவபெருமான். உடல்களிலிருந்து உயிரினைப் பிரிக்கும் வல்லமை கொண்ட கைகளை உடைய இயமனை, தனது அடியான் மார்க்கண்டேயனின் உயிரைக் காப்பதற்காக, உதைத்தவர் சிவபெருமான். அவ்வாறு இயமனை உதைத்துத் தனது அடியானை காத்ததால், அடியார்களின் கருத்தினில் நிலைபெற்று உறையும் பெருமான், நீண்ட கண்களை உடையவர்களாய் நடனம் ஆடும் மங்கையர்கள் நிறைந்த நின்றியூரில் எழுந்தருளி உள்ளார். அவரைப் போற்றி புகழ்ந்து பாடுங்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கொடுங்கண் வெண்தலை கொண்டு குறைவிலைப்

படும் கண் ஒன்று இலராய்ப் பலி தேர்ந்து உண்பர்

நெடுங்கண் மங்கையர் ஆட்டயர் நின்றியூர்க்

கடுங்கை கூற்று உதைத்திட்ட கருத்தரே

செம்பொன்பள்ளி பதிகத்தின் முதல் பாடலில் (5.36.1) பலி ஏற்கும் கொள்கையிலிருந்து தவறாமல் பெருமான் பலி ஏற்கின்றான் என்று நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். கான்=நறுமணம்: வெண் தலை=தசை நீங்காத தலை; அறாத=நீங்காத; தொடர்ந்து என்றும் பெருமான் பலி ஏற்கின்றான் என்பதும் மற்றவர் பழிப்பதையும் பொருட்படுத்தாமல் பெருமான் தொடர்ந்து பலி ஏற்கின்றான் என்பதும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது.

கான் அறாத கடி பொழில் வண்டினம்

தேன் அறாத திருச்செம்பொன் பள்ளியான்

ஊன் அறாததோர் வெண் தலையில் பலி

தான் அறாததோர் கொள்கையன் காண்மினே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.55.3) அப்பர் பிரான், மண்டை ஓட்டினில் தங்கிய உணவினை உட்கொள்வதை தனது கொள்கையாகக் கொண்டவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். பொதுவாக வேடம் தரிப்பவர்கள் தங்களது அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் வேடங்களையே விரும்பி ஏற்பார்கள். ஆனால் பெருமானோ வேடுவக் கோலத்தை விரும்பி ஏற்றவராக உள்ளார். அவரது உண்கலனோ காய்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும், அருவருக்கத் தக்க மண்டையோடு; எனினும் அவரது கோலம் வியப்பூட்டும் வண்ணம் அழகாக உள்ளது என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

வேடு தங்கிய வேடமும் வெண்தலை

ஓடு தங்கிய உண் பலி கொள்கையும்

நாடு தங்கிய நாரையூரான் நடம்

ஆடு பைங்கழல் அம்ம அழகிதே

உண்ணும் உணவிற்கு மாற்றாக கொடுக்கக்கூடிய பொருள் ஏதும் இல்லாத வறியவனாக, பிச்சைப் பெருமான் வேடம் ஏற்ற பெருமான் என்று காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.8.1) அப்பர் பிரான் கூறுகின்றார். நல்குரவு=வறுமை; நல்கூர்ந்தான்= வறியவன்; உணவு ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவை. எனவே தான் உணவுக்காக நம்மிடம் உள்ள எந்த பொருளையும் விற்பதற்கு தயாராக எவரும் இருப்பதை நாம் உலகினில் காண்கின்றோம். இறைவன் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை; மேலும் உலகனைத்தும் தன்னுடையதாக கொண்டுள்ள இறைவனிடம் இல்லாத செல்வம் வேறு எவரிடத்தில் உள்ளது. இருந்தாலும் இறைவனையும் நம்முள் ஒருவனாக கருதி, அருளாளர்கள் தமது கருத்தினை இறைவன் பால் ஏற்றிச் சொல்வது பழக்கம். பிச்சைப் பெருமானாக சென்ற இறைவன், தனது உணவுத் தேவைக்காக பலியேற்கவில்லை; எனினும் அவன் உணவுக்காக பிச்சை ஏற்றதாக கற்பனை செய்து பல அருளாளர்களும் பாடியுள்ளனர். பெருமான் அணிந்திருந்தது நாகம், பன்றிக் கொம்பு. எலும்பு மாலை முதலியன. இவற்றை விற்றால் வாங்குவார் யார். எனவே தான், தனது உணவுக்காக விற்கக்கூடிய நிலையில் தன்னிடம் பொருள் ஏதும் இல்லாத வறியவன் என்று அப்பர் பிரான் பெருமானை இங்கே குறிப்பிடுகின்றார். சதுரன்=வல்லமை உடையவன், சாமர்த்தியம் உடையவன். சதுரன் என்று இறைவனை குறிப்பிடுவதன் மூலம், இறைவன் உண்மையில் வறியவன் அல்லன், வறியவனாக நடித்தவன் என்று அப்பர் பிரான் உணர்த்துவதையும் நாம் காணலாம். பொழில்=சோலைகள் சூழ்ந்த ஏழு உலகங்கள்; பொய்யாது=இடைவிடாது; மாசு ஒன்றில்லா=அழியும் தன்மையாகிய குற்றம் இல்லாத; தாங்குதல்=உலகம் இயங்குமாறு தாங்குதல்; பிச்சை எடுத்து உண்பதைத் தவிர வேறு வழியில்லாத பெருமானை, ஏளனக் குறிப்பு தோன்ற மாச்சதுரன் (மிகுந்த சாமர்த்தியம் உள்ளவன்) என்று அப்பர் பிரான் இங்கே அழைக்கின்றார். அனைத்து உலகங்களும், அந்த உலகங்களில் உள்ள பொருட்களும் படைத்த பெருமான், தான் ஒன்றும் இல்லாத வறியவனாக காட்சி அளிப்பதற்கும், தனியான திறமை வேண்டும் அல்லவா. அந்த திறமை உடைத்த பெருமானை மாச்சதுரன் என்று அப்பர் பிரான் அழைத்ததாக கொள்வது மிகவும் பொருத்தமாகும். பொழில்=உலகங்கள்; ஏழ் உலகங்களையும் தாங்கி நின்ற வல்லமை பொருந்தியவனாக விளங்கிய பெருமானை கற்றூண் என்று குறிப்பிடுவது நயமாக உள்ளது. பொய்யாது=தவறாது; கணநாதன்=சிவ கணங்களுக்குத் தலைவன்; வியன் கச்சி=அகன்ற வீதிகளைக் கொண்ட காஞ்சி மாநகரம்;

விற்று ஊண் ஒன்றில்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சிக் கம்பன் காண் பிச்சை அல்லால்

மற்று ஊண் ஒன்றில்லாத மாச்சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்றில்லா

பொற்றூண் காண் மாமணி குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற

கற்றூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண்ணுளானே

விற்று அப்பணத்தால் உணவு வாங்க உதவும் பொருள் ஏதும் தன்னிடம் இல்லாத வறியவன் போன்று காட்சி அளிப்பவனும், அகன்ற கச்சி மாநகரத்தில் ஏகம்பனாக உறைபவனும், பிச்சை எடுத்து உண்பதைத் தவிர வேறு வழி இல்லாதது போன்று காட்சி அளிக்கும் திறமைசாலியும், மயானத்தில் காணப்படுபவனும், பிற உயிர்களைப் போன்று அழியும் தன்மையாகிய குற்றம் ஏதும் இல்லாமல் என்றும் நிலையாக இருப்பவனும், பொன்னால் செய்யப்பட்ட தூண் போன்று அரியவனும், தூண் போன்று அனைவரும் பிடிப்பாக பற்றிக் கொள்ள உதவுபவனும், பெரிய .மணிக்குன்று போன்று காட்சி அளிப்பவனும், இடைவிடாது சோலைகள் சூழ்ந்த ஏழு உலகங்களையும் தாங்கி நிற்கும் கற்றூணாகத் திகழ்பவனும், திருக்காளத்தி தலத்தில் காணப்படும் கணநாதனும் ஆகிய இறைவன் எனது மனக் கண்களில் நிறைந்துள்ளான் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.9.3) அப்பர் பிரான், பலியேற்கச் சென்ற பெருமான் பலி கொள்ளாமல் இருந்தார் என்று அந்த இல்லத்தில் இருந்த அப்பர் நாயகியின் கூற்றாக கூறுகின்றார். கட்டங்கம்=மழு; இட்டங்கள்=விருப்பத்தை ஏற்படுத்தும் மொழிகள்; பட்டிமை=நெறியற்ற சொற்கள்; படிறு=வஞ்சனை; பரிசு=தன்மை; நிறை= அடக்கமான குணம்; பெண்களுக்கு அழகு அவர்களது அடக்கமான குணம். சிவபிரானைக் காணும் வரை, இந்தப் பெண்மணியும் அவ்வாறே, எந்த ஆடவரையும் ஏறெடுத்துப் பார்க்காமல், இருந்து வந்தாள். ஆனால் சிவபிரானைக் கண்ட பின்னர், அவரது அழகினில் தனது மனதினைப் பறிகொடுத்த இந்த அப்பர் நாயகி, தனது அடக்க குணத்தைக் கைவிட்டு, சிவபிரானை ஏறிட்டுப் பார்த்தாக அவளே சொல்கின்றாள். கட்டங்கம் எனப்படும் மழுப்படையைக் கையில் ஏந்தி, விரைந்து செல்லும் இடபத்தின் மேல் ஏறிக்கொண்டு வந்த காபாலியார், எனது இல்லம் புகுந்தார்; அவ்வாறு புகுந்த அவர், நான் அளித்த உணவினை ஏற்றுக் கொள்ளாது இருந்தார்; ஆனால் அவர் எனது வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லாமல், எனக்கு அவர் பேரில் விருப்பம் ஊட்டும் சொற்களைப் பேசியவராக இருந்தார். இவ்வாறு நெறியற்ற சொற்களையும், வஞ்சனையான சொற்களையும் பேசிய அவர் நின்ற தோரணை மிகவும் அழகாக, அவரை பார்க்கும் பெண்கள் தங்கள் அடக்க குணத்தைக் கைவிட்டு, அவர் மீது காதல் கொள்ளும்படிச் செய்வதாக இருந்தது. நான் அவருக்கு அளித்த உணவுகளைத் தொடாமலே இருந்த அவர், தனது மனக்கருத்து என்ன என்பதையும் சொல்லாதவராக இருந்த, ஆமாத்தூர் அழகியர் மிகவும் அழகியரே என்று அப்பர் நாயகி கூறுவதாக அமைந்த பாடல். இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும், அப்பர் நாயகி, தனது இல்லத்திற்கு பலியேற்பதற்காக வந்த பெருமான், பலி கொள்ளாமல், வஞ்சகமான பேச்சுகளை பேசினார் என்று கூறுகின்றாள். இந்த நிகழ்ச்சிகள், கவியின் கற்பனைகள். தன்னை ஒரு பெண்ணாக பாவித்துக் கொண்டு, பெருமான் பால் தீராத காதல் கொண்ட பெண்ணாக பாவித்துக் கொண்டு, இத்தகைய நிகழ்வுகள் உண்மையாகவே நடைபெற்றிருந்தால், நன்றாக இருந்திருக்குமே என்ற கற்பனையின் அடிப்படையில் எழுந்த பாடல்கள்.

கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்திக் கடிய விடையேறிக் காபாலியார்

இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இடக் கொள்ளார் போவார் அல்லர்

பட்டிமையும் படிறுமே பேசா நின்றார் பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின்றார் தாம்

அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.17.1) அப்பர் பிரான், பெருமான் அனுதினமும் பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். தனது உள்ளங்கையில் தீச்சுடரை ஏந்தியும் கோவணம் உடுத்தியும் மண்டையோட்டினை பிச்சைப் பாத்திரமாக ஏந்தியும் காட்சி தரும் பெருமான் அழகராக திகழ்கின்றார் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். கோடால=கோள்+தால; தனது கையினில் பிரம கபாலத்தை ஏந்தியவராக இருப்பினும் பெருமான் அழகியர் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் பெருமான், எங்கும் பலியேற்கத் திரிவதாகவும் அப்பர் பிரான் கூறுகின்றார்.

ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர் அழகர் படையுடையர் அம் பொற்றோள் மேல்

நீறு தட வந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம்

கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்

ஈறும் நடுவும் முதலுமாவார் இடைமருது மேவி இடம் கொண்டாரே

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.4) வெட்கமோ தயக்கமோ கொள்ளாமல் வாய் திறந்த நிலையில் சிரிப்பது போன்று தோன்றும் மண்டையோட்டினை கையில் ஏந்தியவாறு விருப்பத்துடன் பிச்சையேற்கச் செல்பவன் என்று, பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். உயிர்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்திற்காக பிச்சை எடுப்பவன், எதற்காக வெட்கம் அடைய வேண்டும், தயக்கம் கொள்ள வேண்டும், மாறாக விருப்பம் தானே கொள்ள வேண்டும். அதனால் தான் நாணாது நகுதலை ஊண் நயந்தான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நற்றவன்=மென்மையான தவத்தினை செய்பவன்; முந்நீர்=கடல் :

நற்றவனைப் புற்றரவ நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான் தன்னை

முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான் தன்னைப்

பற்றவனைப் பற்றார் தம் பதிகள் செற்ற படையானை அடைவார் தம் பாவம் போக்க

கற்றவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.63.8) அப்பர் பிரான், பிச்சையே இச்சிப்பான் என்று குறிப்பிட்டு, பெருமான் மிகுந்த விருப்பத்துடன் பிச்சை எடுப்பதாக குறிப்பிடுகின்றார். ஏற்பது இகழ்ச்சி என்பது தானே முதியோர்களின் மொழி. உலகத்தவர்கள் ஏற்கும் பிச்சையிலிருந்து மாறுபட்டது, இறைவன் ஏற்கும் பிச்சை என்பதை நாம் உணரவேண்டும். உலகத்தவர்கள் தங்களது தேவைக்கு பிச்சை எடுக்கின்றனர். ஆனால் இறைவனோ, உலகத்தவர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை பெருமான் ஏந்தியுள்ள ஓட்டினில் பிச்சையாக அளித்து வாழ்வினில் உய்வினை பெறும் வண்ணம் பெருமான் பிச்சை ஏற்றுத் திரிகின்றான். உலகத்தவர்கள் மாயையிலிருந்து விடுபட்டு, தனது சேவடிகளை வந்தடைந்து முக்தி பெற வேண்டும் என்ற விருப்பத்தினால் பிச்சை ஏற்கின்றான். தாங்கள் உய்வினை அடைய வேண்டும் என்று கொண்டுள்ள விருப்பத்தினை விடவும், உயிர்கள் உய்வினை அடைய வேண்டும் என்ற பெருமானின் விருப்பம் மிகவும் அதிகம். எனவே தான் இச்சையுடன் பிச்சை ஏற்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

மகிழ்ந்தானைக் கச்சி ஏகம்பன் தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்திப்

புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப்பானைப் பூதகணப் படையானைப் புறங்காட்டு ஆடல்

உகந்தானைப் பிச்சையே இச்சிப்பானை ஒண் பவளத் திரளை என் உள்ளத்துள்ளே

திகழ்ந்தானைத் திருவானைக்கா உளானை செழுநீர் திரளைச் சென்று ஆடினேனே

எல்லாரும் தன்னை இகழ்வதையும் பொருட்படுத்தாமல் இறைவன் பண்டைய நாளிலும் பலியேற்றார் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் (6.86.7)ஆலம்பொழில் தலத்து மீது அருளப்பட்டது. குற்றங்கள் மிகுந்த எனது உடலில் புகுவதற்கு தீர்மானம் செய்த பெருமான், பல சோதனைகளை அளித்து என்னை சோதித்து எனது மனதினை தூய்மை செய்தவன் தூய்மையே வடிவமான பெருமான் ஆவான். எல்லோரும் தன்னை இகழ்ந்ததையும் பொருட்படுத்தாமல் அந்நாளில், பலி இடுவீர்களாக என்று தாருகாவனத்து முனிவர்களின் இல்லங்களுக்கு சென்று திரிந்தவனும், தனது புகழினையும் திருநாமத்தையும் சொல்லாத மாந்தர்களை நினையாதவனும், தொடர்ந்து தனது பொன்னான திருவடிகளைப் பேணும் அடியார்களுக்கு பரிசாக, அவனது அருளால் அன்றி வேறு எவராலும் செல்ல முடியாத முக்தி நிலைக்குத் தனது அடியார்கள் செல்லுமாறு உதவி செய்பவனும், ஆலம்பொழில் என்ற இடத்தில் உள்ள திருக்கோயிலில் உறைபவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ சிந்திப்பாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு உணர்த்தும் பாடல் இது. .

பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னைப் புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை

எல்லாரும் தன்னை இகழ அந்நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானைச்

சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானைத் தொடர்ந்து தன் பொன்னடியே பேணுவாரைச்

செல்லாத நெறி செலுத்த வல்லான் தன்னைத் திருவாலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

பெருமான் இடும் பணியை தங்களது தலையால் செய்வதற்கு எண்ணற்ற தேவர்களும், பூத கணங்களும் காத்துக் கொண்டு இருக்கையில், பெருமான் தானே பலி ஏற்கச் செல்கின்றார் என்று அப்பர் பிரான் கஞ்சனூர் தலத்து பதிகத்தில் (6.90.7) கூறுகின்றார். அடியார்கள் தான் ஏந்திச் செல்லும் பிச்சைப் பாத்திரத்தில் தங்களுடைய மலங்களை பிச்சையாக இட்டால் அதனை ஏற்று அவர்களை உய்விக்கும் திறன் படைத்தவன் அவன் ஒருவன் தான் என்பதால், இந்த பணிக்கு வேறு எவரையும் நியமிக்காமல் தானே இறைவன் செல்கின்றான் என்பது பெரியோர்களின் விளக்கம். இந்த செய்கை உயிர்களின் பால் பெருமான் கொண்டுள்ள கருணையினையும், உயிர்கள் தங்களது மலங்களைக் களைந்து வீடுபேறு பதவியைப் பெற்று நிலையான இன்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்பதில் பெருமான் கொண்டுள்ள அக்கறையினையும் வெளிப் படுத்துகின்றது. பெருமான் பலியேற்க வருவதை நமது ஊனக் கண்களால் நாம் காணமுடியாது. எனவே, நாம் இடவிருக்கும் பலியினை ஏற்றுக் கொள்வதற்கு, அவர் நம்மைத் தேடி வருவதாக நாம் கற்பனை செய்து கொண்டு, யான் எனது என்ற செருக்கினையும், நம்மை பீடித்துள்ள மூன்று மலங்களையும் அவனது திருப்பாதங்களில் சமர்ப்பித்து, உய்வினை அடைவோமாக.

நாரணனும் நான்முகனும் அறியாதானை நால்வேதத்து உருவானை நம்பி தன்னைப்

பாரிடங்கள் பணி செய்யப் பலி கொண்டு உண்ணும் பால்வணனைத் தீவணனைப் பகல் ஆனானை

வார் பொதியும் முலையாள் ஓர் கூறன் தன்னை மான் இடம் கை உடையானை மலிவார் கண்டம்

கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேனே

திருநாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.46.3) சுந்தரர், எவரும் விரும்பாத கோலத்தை ஏற்றவராக, பிச்சைப் பெருமானாக, அனைவரும் காணும் வண்ணம் இசை பாடி பிச்சை ஏற்கும் கொள்கையினை தவிர்க்காமல் பெருமான் இருக்கின்றார் என்று கூறுகின்றார். மேலும் அவ்வாறு பிச்சை ஏற்கச் சென்ற இடத்தில், வீண் வம்பு பேசி, பிச்சையிட வரும் மாதர்களின் வளையல்களைக் கவர்ந்தால், உமையன்னையின் மனம் கவலைப்படுமே என்று சுந்தரர் வருத்தம் அடைகின்றார்.

பூண்பதோர் இளவாமை பொருவிடை ஒன்றேறிப் பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண

பாண்பேசிப் படுதலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர்சடை மேல் மதி வைத்த பண்பீர்

வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால் வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்

காண்பினிய மணிமாட நிறைந்த நெடுவீதிக் கடல்நாகைக் காரோணம் மேவி இருந்தீரே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.57.2) சுந்தரர், பிச்சை ஏற்கும் தொழிலை காதலித்தவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். தான் வைத்திருக்கும் படைகளில் சூலத்தை மிகவும் அதிகமாக பயன்படுத்துபவனும், தன்னை தியானிக்கும் அடியார்களின் மனதினில் குடி கொண்டிருப்பவனும், இல்லங்களின் வாயிலில் நின்று பிச்சை ஏற்பதை மிகவும் விரும்புவானும், தனது தவத்தை கெடுக்க முயற்சி செய்த மன்மதனின் அழகிய உடலை நெற்றிக் கண்ணால் விழித்து எரித்தவனும், மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் தேக்கி மறைத்தவனும்,மண்ணியாற்றின் கரையில் உள்ள தலங்களில் உறைபவனும், மேலான தெய்வம் என்று அழைக்கப் படுவதற்கு உரிய தகுதிகள் அனைத்தும் உடையவனும், நீர் மடைகளில் வளரும் நீலோற்பல மலர்கள் நிறைந்த வாழ்கொளிபுத்தூர் தலத்தினில் உறைகின்ற மாணிக்க வண்ணனாக திகழ்பவனும் ஆகிய இறைவனை மறந்து அடியேன் வேறு எவரை நினைப்பேன்; சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நினையேன் என்று சுந்தரர் சொல்வதாக அமைந்த பாடல்.

படைக்கண் சூலம் பயில வல்லானைப் பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானைக்

கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானைக் காமன் ஆகம் தனை கட்டழித்தானைச்

சடைக்கண் கங்கையை தாழவைத்தானைத் தண்ணீர் மண்ணிகரையானைத் தக்கானை

மடைக்கண் நீலம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே

இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். பெருமான் பலி ஏற்பது நமக்கு அருள் புரிவதற்காக என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுவது, திருமூலரின் கருத்தினை பின்பற்றியே.

ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே

பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்

சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்

ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்

இறைவனுக்கு நாம் எதனை படைக்க வேண்டும் என்பதை திருவிளையாடல் புராணத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலில் பரஞ்சோதி முனிவர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. விநாயகர் வாழ்த்தாக அமைந்த இந்த பாடலில், ஆணவமலம், கன்மம் மற்றும் உலகப் பொருட்களின் மீதுள்ள பாசம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து (பசுபோதம் எனப்படும்) சோற்றுருண்டையாக அளிக்க வேண்டும் என்று கூறுகின்றார். பதி என்பது இறைவனைக் குறிக்கும். பசு என்பது அனைத்து உயிர்களையும் பாசம் என்பது உயிர்களைப் பற்றியிருக்கும் பந்தங்களையும் குறிக்கும். பசுபோதம் என்பது உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்களைப் பற்றிய அறிவினை குறிப்பிடுகின்றது. உயிர் தன்னைப் பிணித்திருக்கும் பற்றுகளை அறவே ஒழித்து, தம்மை பீடித்துள்ள மூன்று மலங்களையும் நீக்கினால் தான், வினைகளை மேலும் பெருக்கிக் கொள்வதை நிறுத்த முடியும். அதனால் தான் மூன்று மலங்களை நாம் வைத்துக் கொள்ளாமல் இறைவனிடம் சமர்ப்பிக்குமாறு பரஞ்சோதி முனிவர் நமக்கு அறிவுரை கூறுகின்றார். தறுகண்=வலிமை மிக்க: தள்ளரிய=தளர்வு அடையாத அன்பு, தொடர்ந்து நிற்கும் அன்பு; பாசக் கள்ள வினை=வஞ்சகம் நிறைந்த ஆணவம், கன்மம் மாயை எனப்படும் மலங்கள்; இவ்வாறு நாம் இடும் சோற்றுருண்டையை மிகவும் விருப்பத்துடன் கடவுள் ஏற்றுக்கொண்டு நமக்கு கருணை புரிவார் என்று பரஞ்சோதி முனிவர் இந்த பாடலில் கூறுகின்றார்.

உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் எனும் தறி நிறுவி உறுதியாகத்

தள்ளரிய அன்பென்னும் தொடர் பூட்டி இடைப்படுத்தித் தறுகண் பாசக்

கள்ள வினைப் பசுபோதக் கவளம் இடக் களித்துண்டு கருணை என்னும்

கொள் அமுதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்

பொழிப்புரை:

தனது கை நகத்தால் கிள்ளி எறிந்த பிரமனது தலையினைக் கையில் பற்றிக் கொண்டு பல இடங்களிலும் திரிவது, தேவர்களின் தலைவனாக விளங்கும் பெருமானின் இயல்பாகும். இவ்வாறு பலி ஏற்கும் பெருமான் தனது இடுப்பினில் புலித்தோலைச் சுற்றிக்கொண்டும், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொண்டும் தனது நெற்றியினில் ஒரு கண் உடையவராகவும் நின்றியூர் தலத்தில் நிலையாக உறைகின்றார்.

பாடல் 8: சிதைந்தது

பாடல் 9:

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல் 9, 10, 11 (திதே 0441)

நல்லம் மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்

அல்லர் என ஆவர் என நின்றும் அறிவரிய

நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரின் நிலையார் எம்

செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே

விளக்கம்:

தமது முன்னர் எழுந்த அழற்றூணின், இயல்பினை அறியமாட்டாது, பகைவரோ எவரோ என்று இன்னதென்று அறியாத நிலையில் பிரமனும் திருமாலும் திகைத்து நின்ற நிலை, அல்லர் என ஆவார் என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது. மற்ற எவரும் உயிர்களுக்குத் தலைவர் அல்லர் தாம் ஒருவனே உயிர்களுக்குத் தலைவன் என்று செருக்குடன் நின்ற நிலையை குறிப்பிடுவதாக கொள்வதும் பொருத்தமே. அல்லர் என ஆவர் என நின்றும் என்ற தொடருக்கு வேறு விதமாகவும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. தான் பெருமானின் திருமுடியைக் கண்டதாக பொய் பேசிய பிரமன் மற்றும் தன்னால் திருவடியைக் காண இயலவில்லை என்று உண்மை பேசிய திருமால் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. நல்ல மலர்=தாமரை மலர்; கண்ணனாக அவதாரம் செய்த போது, தனது மகன் மண்ணைத் தின்று விட்டானே என்ற கவலையில் அவனது வாயினைத் திறந்து அன்னை யசோதை பார்த்தபோது, அவனது வயிற்றினில் உலகம் இருப்பதைக் கண்ட செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது.

பிரமனு.ம் திருமாலும் மாறுபட்டு தங்களுக்குள் வாதம் செய்த தகவல் திருவாசகம் தோள்நோக்கம் பதிகத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் இங்கே காணலாம்.. இறந்து என்றால் கடந்து என்று பொருள். அளவு கடந்து நின்ற தன்மை இங்கே உணர்த்தப் பட்டுள்ளது.

பிரமன் அரி என்று இருவரும் தம் பேதமையால்

பரமம் யாம் பரம் என்று அவர்கள் பதைப்பொடுங்க

அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ

இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் திருமந்திரப் பாடலிலும், தானே பெரியவன் என்று இருவரும் ஒருவருக்கொருவர் வாதம் செய்தது குறிப்பிடப் படுகின்றது. பேதமை என்று அவர்களது அறிவற்ற செயல் உணர்த்தப் பட்டுள்ளது.

பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்

பிரமன் மால் தங்கள் தம் பேதமையாலே

பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க

அரனடி தேடி அரற்றி நின்றாரே

தங்களுக்குள்ளே யார் மேம்பட்டவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் மற்றும் திருமாலின் முன்னே எழுந்த தீப்பிழம்பினைக் கண்டு, அந்த தீப் பிழம்பின் இரண்டு புறத்திலும் நின்ற பிரமனும் திருமாலும் இறைவனைப் பணிந்த செய்தி, சொல்லப்படும் அப்பர் பிரானின் பாடல் (4.14.2) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. பரம் ஒரு தெய்வம்=தங்களுக்கு அப்பாற்பட்ட பரமாகிய ஒரு தெய்வம்: தம்பம்=தூண்

நிரவொலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அதுவப்

பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணியப்

பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்

பர முதலாய தேவர் சிவனாய மூர்த்தி அவனா நமக்கொர் சரணே

பொழிப்புரை:

நல்ல மலராகிய தாமரை மலரின் மேல் அமரும் பிரமனும், உலகினை உண்டவன் என்று கருதப்படும் திருமாலும் தங்களுக்குளே தானே தலைவன் என்றும் அடுத்தவர் தலைவன் அல்ல என்றும் வாதம் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் அடியையும் முடியையும் காண முடியாமல் தவித்து நிற்கும் வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்றவன் பெருமான் .அத்தகைய பெருமான் நெல்வயல்கள் சூழ்ந்த நின்றியூர் தலத்தில் நிலையாக உறைகின்றார். அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த முக்திச் செல்வதைத் தன்னிடம் வைத்துள்ள செல்வராகிய பெருமானின் திருவடிகளை தவிர்த்து வேறு எதையும் எனது சிந்தை உணராது.

பாடல் 10:

சூலம்பொடி சுண்ணப்பொடி (1.018) பாடல்கள் 9, 10, 11 (திதே 0441)

நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை

அறிவில் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே

நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில்

மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே

விளக்கம்:

ஆதர்=கீழ்மக்கள்; நெறி=சைவ சமயநெறி; அயர்தல்=மயங்குதல்; இந்த பாடலில் பெருமானின் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாக கருதப்படும் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். ஏனெனில் பொதுவாக வாழ்த்தொலிகளில் குறிப்படப்படும் அனைத்துப் புகழ் சொற்களுக்கும் முழுதும் பொருந்தும் வண்ணம் விளங்குபவன் பெருமான் ஒருவன் தான். எனவே ஏனையோரை புகழ்ந்து சொல்லப்படும் வாழ்த்துகள், வெறும் உபசார வார்த்தைகளே தவிர வேறொன்றுமில்லை என்று திருஞானசம்பந்தர் இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார்.

தொன்றுதொட்டு வரும் வைதீக நெறியினைச் சார்ந்த சைவசமயம் ஒன்றே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற வழியினை உணர்த்தும் சமயம். ஏனைய புறச் சமயங்கள் இடையில் தோன்றியவை; மேலும் அந்த சமயங்கள் முக்தி நெறிக்கு வழிகாட்டுவதில்லை என்பதால் சைவ சமயம் தவிர்த்த மற்ற சமயங்களை புறக்கணிக்குமாறு திருஞான சம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். நிலையான முக்தி நெறிக்கு வழி வகுப்பதால் சைவசமயத்தை உண்மை நெறி என்றும் முத்தி நிலைக்கு அழைத்துச் செல்லாத மற்ற சமயங்களை நெறியற்றவை என்றும் திருஞான சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.

இந்த பாடல் நமக்கு சுந்தரர் புகலூர் மீது அருளிய பாடலை (7.34.2) நினைவூட்டுகின்றது. தகுதி அற்றவர்களை புகழ்ந்து பாடுவதால் நமக்கு ஏதும் கிடைக்காது என்பதால், தகுதி உள்ள ஒருவனாகிய பெருமானைப் புகழ்ந்து பாடுங்கள்; நீங்கள் வேண்டுவன பெற்று அமரர் உலகினை ஆளும் தகுதியும் பெறுவது திண்ணம் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மிடுக்கு இலாதனை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று

கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை

பொடிக் கொள் மேனி எம் புண்ணியன் புகலூரைப் பாடுமின் புலவீர்காள்

அடுக்கு மேல் அமர் உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே

பொழிப்புரை:

தொன்றுதொட்டு மாறுபாடின்றி வரும் சைவ சமய நெறியை பயில்வதால் நாம் உணர்வதும், நிலையாக என்றும் பெயராமல் இருப்பதும் ஆகிய முழுமுதல் கடவுளாகிய சிவபெருமானை நினையாத அறிவினை உடைய அறிவற்ற கீழ்மக்கள் ஆகிய சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்களை கேட்டு, மயங்காமலும், தமக்கென்று உண்மையான முக்தி நிலைக்கு வழிகாட்டும் நெறியற்ற புறச் சமயங்களின் அடையாளங்களை நினையாமலும், நின்றியூரில் வாழ்பவனும் மான் கன்றினை தனது கையில் ஏந்தியவனும் ஆகிய பெருமானை புகழ்ந்து பேசும் வாழ்த்துரைகளே உண்மையான வாழ்த்து ஆகும்.

பாடல் 11:

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல்கள் 9, 10, 11 (திதே 0441)

குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவாக

நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை

நன்றார் தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்

குன்றாத் தமிழ் சொல்லக் குறைவின்றி நிறை புகழே

விளக்கம்:

பொதுவாக பதிகத்தின் கடைக் காப்பினில் இராவணன் குறித்த நிகழ்ச்சி திருஞான சம்பந்தரால் குறிப்பிடப் படுவதில்லை. இந்த பதிகத்தின் எட்டாவது பாடல் சிதைந்ததால், இராவணின் வலிமையை அடக்கிய தன்மையை குறிப்பிடும் திருஞானசம்பந்தரின் பாடல் நமக்கு கிடைக்கவில்லையே என்ற குறை தீர்க்கும் பொருட்டு இந்த குறிப்பு அமைந்துள்ளதோ என்று தோன்றுகின்றது. அப்பர் பிரான் தனது பெரும்பாலான பதிகங்களின் கடைப் பாடலில், அரக்கன் இராவணனுக்கு பெருமான் அருள் புரிந்த தன்மையை குறிப்பிடுகின்றார். தமிழ் என்பது இங்கே தேவாரப் பதிகங்களை குறிக்கும். குன்றாத் தமிழ்=பலன்களை அளிப்பதில் பாடிய நாள் முதல் என்றும் மாறாது விளங்கும் தேவாரப் பதிகங்கள்;

பொழிப்புரை:

கயிலை மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த அரக்கன் இராவணனின் உடலும் தோள்களும், கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நொறுங்கும் வண்ணம், தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றிய பெருமானை, நின்றியூர் தலத்தில் உறையும் பெருமானின் புகழினைப் போற்றி, தன்னை வந்தடையும் அடியார்களுக்கு நன்மை அளிக்கும் புகலித் தலத்தில் தோன்றியவனும் தமிழ் மொழியில் எல்லையற்ற ஞானம் உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் சொல்லிய இந்த பத்து பாடல்களை, ஓதுவோருக்கு அன்றைய நாள் முதல் குன்றாத பலன்களை அளிக்கும் வல்லமை பெற்ற இந்த தேவாரப் பாடல்களை, முழு மனதுடன் பக்தி வைத்து சொல்லும் வல்லமை பெற்ற அடியார்கள் வாழ்வினில் குறையேதும் இன்றி நிறைவான புகழினை பெற்று விளங்குவார்கள்.

முடிவுரை:

சூலம்படை சுண்ணப்பொடி (1.018) பாடல்கள் 9, 10, 11 (திதே 0441)

பதிகத்தின் முதல் பாடலில் பண்டைய நாளில் தனது அடியானின் உயிரைக் கவர்ந்து செல்ல முயற்சி செய்த இயமனின் வலிமையை வீழ்த்தி மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. இந்த நிகழ்ச்சியின் விளைவாக அன்று முதல் பெருமானின் அடியார்கள் அச்சம் இன்றி வாழ்வதாக இரண்டாவது பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மூன்றாவது பாடலில் அனைத்து ஒலிகளுக்கும் ஆதாரமாக இறைவனின் உடுக்கையிலிருந்து எழுந்த ஒலி இருப்பது உணர்த்தப் படுகின்றது. நான்காவது பாடலில் இறைவனைத் தொழும் அடியார்கள் மட்டுமே இறைவனின் தன்மைகளை உணரமுடியும் என்பது சொல்லப் பட்டுள்ளது. ஐந்தாவது பாடலில் இறைவன் ஒருவனே அனைத்து உயிர்களுக்கும் பற்றுக்கோடு என்று உணர்த்தி நாம் இறைவனைத் தொழ வேண்டிய அவசியத்தை திருஞான சம்பந்தர் கூறுகின்றார். அவ்வாறு இறைவன் ஒருவனே பற்றுக்கோடு என்பதை உணர்ந்ததால் தனது மனம் அவனது திருவடிகளையன்றி வேறெதையும் உணராது என்று தனது தன்மையை எடுத்துரைத்து நமக்கு வழிகாட்டும் பாங்கினை ஆறாவது பாட்டினில் நாம் உணரலாம். உயிர்கள் உய்ய ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டுத் பலியேற்று திரிவதை என்றும் மாறாத இயல்பாக பெருமான் கொண்டுள்ள தன்மை ஏழாவது பாடலில் சொல்லப் பட்டுள்ளது. இவ்வாறு என்றும் மாறாத கருணை உள்ளம் கொண்ட பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து தனது சிந்தை வேறெதையும் உணராது என்று ஒன்பதாவது பாடலில் கூறுகின்றார். நாம் புகழ்ந்து கூறும் சொற்களுக்கு தகுதி படைத்தவனாக இறைவன் ஒருவன் மட்டுமே இருப்பதால், அவனைப் புகழ்ந்து கூறும் சொற்களே உண்மையான வாழ்த்து என்று பத்தாவது பாடலில் குறிப்பிடும் திருஞான சம்பந்தர், தேவாரப் பதிகங்கள் அன்று முதல் இன்று வரை பலன்கள் அளிப்பதில் குறையாத தன்மையுடன் விளங்குகின்றன என்று கூறுகின்றார். நாமும் திருஞான சம்பந்தர் காட்டிய வழியில் சென்று, இறைவனைத் தவிர்த்து வேறு எதையும் நமது உள்ளத்தால் உணராது, அவனது திருவடிகளைத் தொழுது அவனது தன்மைகளை முழுவதும் அறிந்து கொண்டு, அவனையே பற்றுக்கோடாக நினைத்து வாழ்ந்து, அவனது திருவடிகளையே எப்போதும் சிந்தனை செய்து, உரிய முறையில் அவனை வாழ்த்தி, தேவார திருவாசக பதிகங்களை ஓதி, என்றும் குறையாத பெருமானின் அருள் பெற்று நிறைவாக வாழ்வோமாக.

ழிப்புரை:

கயிலை மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த அரக்கன் இராவணனின் உடலும் தோள்களும், கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நொறுங்கும் வண்ணம், தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றிய பெருமானை, நின்றியூர் தலத்தில் உறையும் பெருமானின் புகழினைப் போற்றி, தன்னை வந்தடையும் அடியார்களுக்கு நன்மை அளிக்கும் புகலித் தலத்தில் தோன்றியவனும் தமிழ் மொழியில் எல்லையற்ற ஞானம் உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் சொல்லிய இந்த பத்து பாடல்களை, ஓதுவோருக்கு அன்றைய நாள் முதல் குன்றாத பலன்களை அளிக்கும் வல்லமை பெற்ற இந்த தேவாரப் பாடல்களை, முழு மனதுடன் பக்தி வைத்து சொல்லும் வல்லமை பெற்ற அடியார்கள் வாழ்வினில் குறையேதும் இன்றி நிறைவான புகழினை பெற்று விளங்குவார்கள்.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் பண்டைய நாளில் தனது அடியானின் உயிரைக் கவர்ந்து செல்ல முயற்சி செய்த இயமனின் வலிமையை வீழ்த்தி மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. இந்த நிகழ்ச்சியின் விளைவாக அன்று முதல் பெருமானின் அடியார்கள் அச்சம் இன்றி வாழ்வதாக இரண்டாவது பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மூன்றாவது பாடலில் அனைத்து ஒலிகளுக்கும் ஆதாரமாக இறைவனின் உடுக்கையிலிருந்து எழுந்த ஒலி இருப்பது உணர்த்தப் படுகின்றது. நான்காவது பாடலில் இறைவனைத் தொழும் அடியார்கள் மட்டுமே இறைவனின் தன்மைகளை உணரமுடியும் என்பது சொல்லப் பட்டுள்ளது. ஐந்தாவது பாடலில் இறைவன் ஒருவனே அனைத்து உயிர்களுக்கும் பற்றுக்கோடு என்று உணர்த்தி நாம் இறைவனைத் தொழ வேண்டிய அவசியத்தை திருஞான சம்பந்தர் கூறுகின்றார். அவ்வாறு இறைவன் ஒருவனே பற்றுக்கோடு என்பதை உணர்ந்ததால் தனது மனம் அவனது திருவடிகளையன்றி வேறெதையும் உணராது என்று தனது தன்மையை எடுத்துரைத்து நமக்கு வழிகாட்டும் பாங்கினை ஆறாவது பாட்டினில் நாம் உணரலாம். உயிர்கள் உய்ய ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டுத் பலியேற்று திரிவதை என்றும் மாறாத இயல்பாக பெருமான் கொண்டுள்ள தன்மை ஏழாவது பாடலில் சொல்லப் பட்டுள்ளது.

இவ்வாறு என்றும் மாறாத கருணை உள்ளம் கொண்ட பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து தனது சிந்தை வேறெதையும் உணராது என்று ஒன்பதாவது பாடலில் கூறுகின்றார். நாம் புகழ்ந்து கூறும் சொற்களுக்கு தகுதி படைத்தவனாக இறைவன் ஒருவன் மட்டுமே இருப்பதால், அவனைப் புகழ்ந்து கூறும் சொற்களே உண்மையான வாழ்த்து என்று பத்தாவது பாடலில் குறிப்பிடும் திருஞான சம்பந்தர், தேவாரப் பதிகங்கள் அன்று முதல் இன்று வரை பலன்கள் அளிப்பதில் குறையாத தன்மையுடன் விளங்குகின்றன என்று கூறுகின்றார். நாமும் திருஞான சம்பந்தர் காட்டிய வழியில் சென்று, இறைவனைத் தவிர்த்து வேறு எதையும் நமது உள்ளத்தால் உணராது, அவனது திருவடிகளைத் தொழுது அவனது தன்மைகளை முழுவதும் அறிந்து கொண்டு, அவனையே பற்றுக்கோடாக நினைத்து வாழ்ந்து, அவனது திருவடிகளையே எப்போதும் சிந்தனை செய்து, உரிய முறையில் அவனை வாழ்த்தி, தேவார திருவாசக பதிகங்களை ஓதி, என்றும் குறையாத பெருமானின் அருள் பெற்று நிறைவாக வாழ்வோமாக.

சூலம்படை சுண்ணப்பொடி (Soolampadai Sunnappodi) is a vivid and symbolic phrase from Tamil literature, particularly in devotional or descriptive contexts associated with Lord Shiva. Let's break down the key elements:

Breakdown of the Phrase:

சூலம் (Soolam): Refers to the trident, the primary weapon of Lord Shiva. The trident (Trishul) represents Shiva's power over creation, preservation, and destruction—the three fundamental aspects of the universe.

படை (Padai): Means weapon or army. In this context, it reinforces the idea of the trident as a powerful weapon in Shiva's arsenal.

சுண்ணப்பொடி (Sunnappodi): Refers to lime powder (calcium oxide), often associated with the ash (vibhuti) that Lord Shiva applies on his body. Vibhuti is sacred ash, symbolizing purity, the destruction of ego, and the transcendence of material attachments.

Full Meaning:

"சூலம்படை சுண்ணப்பொடி" can be interpreted as "the trident-wielding lord adorned with ash" or "one who wields the trident and is adorned with sacred lime powder (ash)."

This phrase poetically describes Lord Shiva, emphasizing two important aspects of his symbolism:

The Trident (Soolam): Represents his fierce power, the ability to destroy ignorance and negativity.
The Ash (Sunnappodi): Signifies renunciation, immortality, and the destruction of desires and ego.

Context:

Trident (Soolam): The trident is a key symbol of Lord Shiva’s might and his role as the destroyer in the Hindu trinity. It represents the conquering of physical, mental, and spiritual limitations.

Ash (Vibhuti or Sunnappodi): The application of ash on Lord Shiva’s body signifies his control over worldly desires and his transcendence over material attachments. Ash is what remains after everything else is burned away, symbolizing Shiva’s role in the cyclical nature of creation and destruction.

In Tamil devotional hymns, such as Thevaram or Thiruvachakam, Lord Shiva is often described as the one who wields the trident and covers himself with sacred ash. These symbols highlight his dual role as both the fierce destroyer of ignorance (through the trident) and the serene renunciate (through the ash).

Symbolism:

Trident (Soolam): Power, destruction of ignorance, the balance of creation, preservation, and destruction.
Ash (Sunnappodi): Purity, renunciation, immortality, transcendence of worldly attachments.

Conclusion:

"சூலம்படை சுண்ணப்பொடி" poetically captures the image of Lord Shiva as both the fierce and compassionate deity, who wields immense power (through his trident) while also representing the ultimate renunciation (through his sacred ash). It evokes the image of Shiva as the lord of destruction and the embodiment of spiritual purity.



Share



Was this helpful?