சூரிய புராணம்

(பகுதி-4)


சூரிய கோயில்கள் கோணார்க்: வேத காலம் தொட்டு சூரிய வழிபாடு நம் நாட்டில் இருந்து வந்தாலும் ஆறாம் நுற்றாண்டு முதல் தான் வட இந்தியாவில் சூரியனுக்குத் தனிக் கோயில்கள் அமைப்பது ஆரம்பமாயிற்று என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சாம்பன் சூரியனுக்கு மூன்று இடங்களில் ஆலயம் நிர்மாணித்ததாகச் சொல்லப்படுகிறது. சூரியனுடைய உதயத்தைக் குறிக்க உதயாசலம் என்று ஓரிடத்திலும், உச்சி வேளையைக் குறிக்க மற்றொரு இடத்திலும், அஸ்தமன வேளையை குறிக்க இன்னொரு இடத்திலுமாக மூன்று இடங்களில் கோயில்களை நிர்மாணித்தானாம். அம்மூன்று கோயில்களில் உதயாசலம் என்பது ஓரிஸ்ஸா ராஜ்ஜியத்திலுள்ள புவனேஸ்வரத்துக்கு அருகாமையில் சமுத்திரக்கரைக்கு அருகிலுள்ள கோணார்க் என்ற இடத்திலுள்ள சூரியனுடைய கோயிலே என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். சந்திரபாகா நதி என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டு இப்போது ஜீனாப் என்று குறிப்பிடப்படும் ஆற்றின் கரையிலுள்ள மூலஸ்தானம் எனப்படும் மூல்டானில் உள்ள சூரியன் கோயிலே மத்தியான காலத்தைக் குறிக்க அமைக்கப்பட்ட கோயில் என்றும், குஜராத் ராஜ்ஜியத்திலுள்ள மொதேராவிலுள்ள சூரியன் கோயில் அஸ்தமன காலத்தைக் குறிக்க எழுப்பப்பட்டதாகும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கோணார்க்கிலுள்ள சூரிய கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கீழைகங்க வமிசத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்மனால் கட்டப்பட்டதாகும். அருகிலே சந்திரபாகா என்ற பெயருடன் சிற்றாறு ஓடுகிறது. அதன் காரணமாகச் சிலர் இதையே சாம்பபுரம் என்றும் சொல்வர். ஆனால் வராக புராணம் கோணார்க் ÷க்ஷத்திரத்தை உதயாசலம் என்றே குறிப்பிடுகிறது. கோயிலைச் சுற்றிலும் சூரியனுக்கான சிலைகள் அதிகம் காணப்படுகின்றன. சூரியன் மும்மூர்த்திகளைக் காட்டும் சிற்பங்கள் விசேஷமானவை. அவற்றில் சூரிய நாராயணரைக் குறிக்கும் சிற்பம் மிகவும் கலையழகுடன் விளங்குகிறது. பத்மத்தின் மீது நின்ற கோலத்தில் சூரியன் காட்சி தருகிறார். தாமரைக்குக் கீழே பக்தர்கள் மண்டியிட்டு வணங்குவது சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சூரியனுக்கு இருபுறங்களிலும் இரண்டு இரண்டாக நான்கு தேவியர் காணப்படுகின்றனர். பெரிய அளவில் கீழே நின்ற கோலத்தில் இருக்கும் இருவரும் த்யௌ, பிருத்வீ என்றும், மேலே காணப்படும் இருவரும் உஷை, சந்தியா என்றும் சொல்வர். சூரியனுடைய சிற்பத்தில் காணப்படும் நான்கு கைகளில் மேலே உள்ள இரு கைகளில் சக்கரமும் சங்கமும் தாங்கப்பட்டுள்ளன. கீழே உள்ள வலதுகரம் வரதமுத்திரையுடன் காணப்படுகிறது. இடது கரம் அபயஹஸ்தமாக இருக்க வேண்டும். அது உடைந்து காணப்படுகிறது.

மூலஸ்தானம்: சேனாப் நதிக்கரையில் உள்ள மூல்தான் எனப்படும் ஊரே முன்னாளில் சாம்பனால் நிர்மாணிக்கப்பட்ட சாம்பபுரம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சேனாப் முன்னாளில் சந்திரபாகா என்ற பெயரைக் கொண்டிருந்ததாம். அல்பெரூனி என்பவர் மூலஸ்தானமே சாம்பனால் நிர்மாணிக்கப்பட்ட சாம்பபுரம் என்று குறிப்பிடுகிறார். யுவான் சுவாங் என்ற சீன யாத்திரீகர் மூலஸ்தானத்திலுள்ள சூரியன் கோயிலில் இருந்த தங்கத்தாலான சூரிய உருவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். பவிஷ்ய புராணமும் மூலஸ்தானத்தையே சாம்பபுரம் என்று குறிப்பிடுகிறது.

மொதேரா: குஜராத் மாநிலத்தில் பழங்காலத் தலைநகரான பட்டான் எனப்படும் ஊருக்குப் பதினெட்டு மைல் தெற்கே அமைந்திருக்கிறது. மொதோரா. அகமதாபாத்திலிருந்து மேக்ஸனா வழியாக அறுபத்தைந்து மைல் பிரயாணம் செய்தும் இவ்வூரை அடையலாம். இன்று சூரியனுடைய கோயில் மிகவும் சிதில மடைந்துள்ளது. சூரிய விக்கிரகம் வெகு காலத்துக்கு முன்பே கோயிலிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறது. பதினோறாம் நூற்றாண்டில் இந்த கோயில் குஜராத்தை ஆண்ட ஸோலங்கி வமிசத்தினரால் கட்டப்பட்டதாகும். கி.பி. 1026-க்கும் 1027-க்கும் இடையில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.

ஸோலங்கி வமிசத்தார் கோயில்களை நிர்மாணிப்பதில் சிறந்தவர்கள். கோயிலின் அமைப்பும் அதன் சிற்பங்களும் போற்றத் தகுந்த வகையில் இருக்கும். மிகவும் சிதிலமடைந்த இந்த நிலையிலும் மொதேரா கோயில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்ததாகக் காணப்படுகிறது. கோயில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியன் உதயமாகும் நேரத்தில் அதன் தகதகவென்ற செந்நிற கிரணங்கள் கோயிலின் வாயிலை நேரிடையாகக் கடந்து கர்ப்பகிருகத்திலே உள்ள சூரியனுடைய சிலைமீது விழுமாம். கோயிலின் முன்பாக உள்ள தடாகம் அழகுற நிர்மாணிக்கப்பட்டதாகும். அதைக் குண்டம் என்று சொல்கிறார்கள். சாம்பன் நிர்மாணித்த மூன்று கோயில்களில் மூன்றாவதான அஸ்தமன காலத்தைக் குறிக்கக்கூடியது இது என்பர். சிற்பங்கள் நிறைந்த தூண்களும் அழகிய மண்டபங்களும் பார்க்கப் பார்க்கப் பரவச மூட்டுபவையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர காஷ்மீரத்தில் மார்தாண்ட் என்ற இடத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் சூரியனுக்காக ஒரு கோயில் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாம். கட்ச் பிரதேசத்திலும், வட கூர்ஜரத்திலும் சூரியனுக்குப் பல கோயில்கள் நிர்மாணிக்கப் பட்டிருந்ததாகச் சாசனங்களிலிருந்து தெரிய வருகிறது. இன்னும் ராஜபுதனத்தில் சிரோஹாவிலும், ஜயபூரிலுள்ள காலவ முனிவர் ஆசிரமத்தில் மலை மீதும், வங்காளத்தில் ஆடியால் என்ற இடத்திலும் சூரியனுக்குக் கோயில்கள் இருப்பதாகத் தெரியவருகிறது.

சூரியனார் கோயில்: தமிழ் நாட்டிலே சூரியனுக்குத் தனி கோயிலாக நிர்மாணிக்கப்பட்டிருப்பது சூரியனார் கோவில் என்ற ஒரு தலத்தில்தான். இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறை நிலையத்திலிருந்து இரண்டரை மைல் தூரத்தில் திருமங்கலக்குடி என்ற ஸ்தலத்தை அடுத்து உள்ளது. இந்த கோயில் முதல் குலோத்துங்க சோழனுடைய ஆட்சியின் நாற்பத்து நான்காம் ஆண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. முதலாம் குலோத்துங்க சோழனுடைய காலம் கி.பி. 1070 முதல் 1120 வரை என்பர். முதல் குலோத்துங்க சோழன் கல்வெட்டுகள் இரண்டு கோயிலிலே காணப்படுகிறது. அதில் இக்கோயிலிலிருக்கும் சூரிய பகவான், அரசன் பெயராலே குலோத்துங்க சோழ மார்த்தாண்டாலய தேவர் என்று குறிக்கப்பட்டுள்ளார். கர்ப்பக்கிருகத்தில் சூரியன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். அவருக்கு இருபுறங்களிலும் உஷா தேவியும், பிரத்தியுஷா தேவியும் காணப்படுகின்றனர். நவக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கு ஒரு விதி முறை உண்டு. சூரியன் நடுவே நிற்க, சந்திரன், புதன், குரு, சுக்கிரன் நால்வரும் நான்கு நேர் திசைகளிலும் அமைந்து செவ்வாய், சனி, ராகு, கேது நான்கு மூர்த்திகளையும் நான்கு மூலைகளிலும் அமைத்து வழிபடுவது சிவாகம முறையாகும். சூரியனார் கோயிலில் இவ்வாறே நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சூரியனுக்கு எதிரில் கிழக்கு முகமாக குரு இருந்து அவரைப் பூஜை செய்வதாகச் சொல்லப்படுகிறது. காப்ப கிருகத்துக்கு வடக்கில் ராகு கிழக்கு பார்த்தும், சுக்கிரன் தெற்கு முகமாகவும் இருப்பிடம் கொண்டுள்ளார். கோயிலுக்குக் கிழக்குப்புறம் கேது, சந்திரன், செவ்வாய், மூவரும் மேற்கு நோக்கி இடம் கொண்டுள்ளனர். தெற்கில் புதன் கிழக்கு நோக்கியும், சனி வடக்கு நோக்கியும் இருக்கின்றனர். கோயிலில் குதிரையே துவஜஸ்தம்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. சுவாமிக்கு சிவசூரிய நாராயணன் என்று பெயர். அவருக்கு அருகே காசிவிஸ்வநாதரும் விசாலாக்ஷியம்மையும் காட்சி தருகின்றனர். இத்தலத்திலே சூரியன் பிரணவ ஸ்வரூபமாகவும் மும்மூர்த்திகளாகவும் விளங்கும் ஈசனை லிங்கமாக ஸ்தாபித்து பூஜை செய்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சோழ அரசன் ராஜேந்திரன் காலத்தில் அலகாத்ரி புத்தூரிலும் எண்ணாயிரம் என்ற கிராமத்திலும் சூரீயனுக்குக் கோயில்கள் இருந்தனவாம்.

சூரியன் பூஜிக்கும் தலங்கள்: சூரியன் பல தலங்களில் இறைவனைப் பூஜித்து அவர் அருள் பெற்றிருக்கிறான். சில தலங்களில் தன் பெயரால் தீர்த்தம் ஏற்படுத்தி இறைவனை அவன் வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய தலங்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளன.

திருப்பரிதி நியமம்: தஞ்சாவூருக்குத் தெற்கே ஏழு மைலில் உள்ள தலம் இது. பருதியப் பீசுவரரையும், மங்கள நாயகியையும் சூரியன் வழிபட்ட தலம். இங்குள்ள தீர்த்தம் சூரியதீர்த்தம். சம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.

மங்களக்குடி: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ள ஆடுதுறை சென்று அங்கிருந்து 3 கி.மீ. தூரம் சென்றால் மங்களக்குடி உள்ளது. காவேரி தீரம். இறைவன் திருநாமம் பிராணவரதேசுவரர். அம்பிகையின் பெயர் மங்களநாயகி. அம்பிகையின் பெயரிலேயே இங்குள்ள தீர்த்தம் மங்கள தீர்த்தம் என விளங்குகிறது. மகாகாளியும் சூரியனும் ஈசனைப் பூஜித்து அருள் பெற்ற தலம் இது. இதன் அருகிலுள்ள சூரியனார் கோயில் செல்பவர்கள் முதலில் இங்குள்ள பிராணநாதேஸ்வரரை வழிபட்டு பின்னர் சூரியனார் செல்ல வேண்டும் எனபது தான் வழக்கம். இத்தலம் அப்பராலும், சம்பந்தராலும் பாடப் பெற்றுள்ளது.

திருநாகேச்வரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் குன்றத்தூரில் உள்ள தலம் இது. சேக்கிழார் இவ்வாலயத்தை நிர்மாணித்ததாகக் கூறுவர். இறைவனை மாசி மாதம் 17-ம் தேதியும் 21-ஆம் தேதியும் சூரியன் பூஜிப்பதாகச் சொல்லப்படுகிறது.

பனங்காட்டூர்: தென் ஆற்காடு மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கே இரண்டு மைலில் உள்ளது. ஸ்தல விருக்ஷம் பனைமரம். பதும தீர்த்தம். சுவாமி பெயர் பனங்காட்டீசர். அம்மன் பெயர் திரிபுராம்பிகை. சம்பந்தரால் பாடப்பெற்ற ஸ்தலம். சூரியன், சிபி ஆகியோர் இறைவனைப் பூஜித்த ஸ்தலம். தை மாதத்தில் மூன்று நாட்களுக்கு சூரியன் இறைவனைப் பூஜிப்பதாகச் சொல்லப்படுகிறது.

கூடலையாற்றூர்: தென் ஆற்காடு மாவட்டத்தில் விருத்தாசலத்துக்குத் தென்கிழக்கே பதினெட்டு மைலில் உள்ளது. இறைவன் பெயர் நெறிகாட்டு நாயகர். அம்மன் பெயர் புரிகுழல் நாயகி. இறைவன் சுந்தரரை இத்தலத்துக்கு அழைத்து வந்து காட்சி தந்த இடம். சித்திரை மாதம் முதல் மூன்று தேதிகளில் சூரியன் ஈசனை வழிபடுவதாகச் சொல்லப்படுகிறது.

கருப்பரியலூர் (மேலைக்காழி)

தஞ்சை மாவட்டத்தில் சிதம்பரத்துக்குத் தெற்கே பதினான்கு மைலில் உள்ள ஸ்தலம். தலைஞாயிறு என்றும் பெயர். சூரிய தீர்த்தமும், இந்திர தீர்த்தமும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. சுவாமி பெயர் குற்றம் பொறுத்த நாதர். அம்மன் பெயர் கோல்வளையம்மை. சம்பந்தர் சுந்தரர் இருவரும் இறைவனைப் பாடிய தலம்.

ஆடுதுறை

தஞ்சை மாவட்டத்திலுள்ள இத்தலத்து இறைவன் ஆபத்சகாயரை சூரியன் சித்திரை 6,7,8 ஆகிய மூன்று நாட்களிலும் வழிபடுவதாகச் சொல்லப்படுகிறது. தேவியின் திருநாமம் பவளக்கொடியம்மை. வானர ராஜன் சுக்கிரீவன் பூஜித்ததாலும், காவிரியின் தென் கரையில் இருப்பதாலும் தென்னங்காடுதுரை என்ற பெயரும் உண்டு. அப்பரும், சம்பந்தரும் இறைவனைப் பாடியுள்ளனர்.

திருக்கலய நல்லூர் (சாக்கோட்டை)

கும்பகோணத்துக்குத் தென்கிழக்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. இன்று சாக்கோட்டை என அழைக்கப்படும் இவ்வூர் இறைவனை சூரியன் பூஜித்து அருள் பெற்றானாம். சுந்தரரால் பாடப் பெற்ற தலம். பிரளய காலத்தில் கும்பம் வந்து நின்ற இடமாம். இறைவன் திருநாமம் அமிர்தகலையீசுவர். இறைவியின் திருப்பெயர் அமிர்தவல்லி.

திருச்செம்பொன் பள்ளி

தஞ்சை மாவட்டத்தில் மாயூரம் தரங்கம்பாடி ரயில் பிரிவில் செம்பொனார் கோயில் ரயில் நிலையத்துக்கு வடக்கே அரை மைலில் உள்ளது. சித்திரை 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சூரியனுடைய கிரணங்கள் இறைவன் திருமேனியைத் தழுவுகின்றன. அந்நாட்களில் சூரியன் இறைவனை வழிபடுவதாகச் சொல்லப்படுகிறது. அப்பரும் சுந்தரரும் இறைவன் சுவர்ணபுரீசுவரரைப் பாடியுள்ளனர். அம்மன் பெயர் சுகந்தவனநாயகி.

திருப்புந்துருத்தி

தஞ்சைக்கு வடமேற்கே ஏழு மைலில் உள்ள இத்தலத்து இறைவன் புஷ்பவனநாதரை சூரியன் பூஜித்து அருள் பெற்றானாம். சப்தஸ்தான ஸ்தலங்களில் இது ஆறாவது. இறைவியின் நாமம் அழகாலமர்ந்தநாயகி. அப்பர் பாடிய தலம் இது.

திருக்கண்டியூர்

தஞ்சாவூருக்கு வடமேற்கே ஐந்து மைலில் காவேரி தீரத்தில் உள்ளது. அட்டவீரட்டத் தலங்களில் பிரமன் சிரசை ஈசன் துண்டித்த இடம் இது. அப்பரும், சம்பந்தரும் இறைவன் வீரட்டானேசுவரரைப் பாடியுள்ளனர். இறைவியின் திருநாமம் மங்களநாயகி. சப்த ஸ்தான தலங்களில் இது ஐந்தாவது. இத்தலத்தில் சூரியன் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் இறைவனைப் பூஜிக்கிறான்.

திருப்புனவாசல்

அறந்தாங்கியிலிருந்து தென்மேற்கே இருபத்து மூன்று மைலில் உள்ளது. இத்தலத்தில் இருப்பிடம் கொண்டுள்ள இறைவன் திருநாமம் பழம்பதிநாதர், இறைவியின் பெயர் கருணைநாயகி. இத்தலத்தில் சூரியன் குற்றங்கள் எதுவும் தன்னைப் பற்றாதிருக்க இறைவனைப் பூஜித்தானாம். சம்பந்தர், சுந்தரர் இருவராலும் பாடப் பெற்றுள்ள தலம்.

ஸ்ரீவைகுண்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இத்தலத்தில், வைகுந்தநாதன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவ திருப்பதிகளில் ஆறாவது இத்தலம். சித்திரை மாதம் 5,6-ம் தேதிகளில் சூரியன் பரந்தாமனை பூஜை செய்து வழிபடுவதாகச் சொல்லப்படுகிறது. அந்த இரு நாட்களிலும் சூரிய கிரணங்கள் இறைவன் திருமேனி மீது நேரிடையாக விழுகின்றனவாம்.

திருக்கோட்டாறு

தஞ்சை மாவட்டத்தில் பேரளம்-காரைக்கால் பிரிவில் அம்பகரத்தூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கே இரண்டு மைலில் உள்ளது. இங்குள்ள தீர்த்தம் சூரிய தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது. சுவாமி பெயர் ஐராவதேசுவரர். அம்மன் திருநாமம் வண்டார் பூங்குழம்மை. இளையான்குடிமாற நாயனார் அவதாரத் தலம் இது. வெள்ளையானை இறைவனைப் பூஜித்ததால் சுவாமி பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று.

திருமயேந்திரப்பள்ளி (கோயிலடிப்பாளயம்)

கொள்ளிடம் ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே ஏழு மைலில் உள்ளது. இங்குள்ள புஷ்கரணி, மந்திர புஷ்கரணி என்ற பெயர் கொண்டது. சூரியன், இந்திரன், சந்திரன், பிரம்மன் ஆகியோருக்கு ஈசன் தரிசனம் தந்த இடம். இங்கு ஈசன் திருமேனியழகர் என்றும் தேவி வடிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். சம்பந்தரால் பாடப் பெற்ற தலம்.

திருத்தெற்றியம்பலம்

தஞ்சை மாவட்டத்தில் சீர்காழிக்குக் கிழக்கே ஐந்து மைலில் உள்ள வைஷ்ணவ ஸ்தலம். இங்குள்ள புஷ்கரணியின் பெயர் சூரிய புஷ்கரிணி. ஆதிசேஷனுக்கு பிரத்தியட்சமான ஸ்தலம். சுவாமி செங்கண்மால் என்றும் தேவி செங்கமலவல்லி என்றும் திருநாமம் கொண்டு விளங்குகின்றனர். பகவான் கிழக்கு நோக்கி சயன கோலத்தில் இருக்கிறார்.

திரு வெண்காடு

தஞ்சை மாவட்டத்தில் சீர்காழிக்குக் கிழக்கே ஆறு மைலில் உள்ள இத்தலத்துக்கு சுவேதாரண்யம் என்று வடமொழியில் பெயர். மூவராலும் பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி சுவேதாரணயேகவரர் என்றும் அம்பாள் பிரம்ம வித்தியாநாயகி என்றும் பெயர் கொண்டு விளங்குகிறார்கள். ஸ்தல விருக்ஷம் வடவால விருக்ஷம், இந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம் மூன்றும் விசேஷம். மருத்துவாசுரனை சம்கரிக்க ஈசன் அகோர மூர்த்தியாக ரூபம் கொண்ட தலம். கோயிலில் புதனுக்குத் தனி சன்னதி இருக்கிறது. சூரியனால் பூஜிக்கப்பட்ட சூரியேசுவர் கோயில் வெளிப்பிரகாரத்தில் இருக்கிறது. இங்கு நவக்கிரகங்கள் வழக்கமான முறையில் இல்லாது வரிசையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

வைத்தீஸ்வரன் கோயில்

தஞ்சை மாவட்டம் சீர்காழிக்கு அடுத்து இருக்கும் தலம். இதற்குப் புள்ளிருக்கும் வேளுர் என்ற பெயரும் உண்டு. கருடன், ரிக்வேதம், வேல், சூரியன் ஆகியோர் இறைவனை இத்தலத்தில் பூஜித்து அருள் பெற்றதால் அப்பெயர் வந்தது. சுவாமி பெயர் வைத்திய நாதேஸ்வரர். அம்பிகையின் பெயர் தையல்நாயகி, இத்தலத்திலும் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கின்றன.

நீடூர் ஸ்ரீபுரம்

தஞ்சை மாவட்டத்தில் மயூரத்துக்கு அருகே உள்ளது. நீடூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே அரை மைல் தொலைவில் உள்ளது. இத்தலத்திற்கு வகுளாரண்யம் என்ற பெயரும் உண்டு. ஸ்தல விருக்ஷம் மகிழ மரம். இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் சந்திர தீர்த்தம். இந்திரன், சந்திரன். சூரியன் ஆகியோருக்கு இறைவன் தரிசனம் தந்த இடம். சுந்தரரால் பாடப்பெற்ற தலம் இது. பிரளய காலத்திலும் அழியாத நண்டு இறைவனை இத்தலத்தில் பூஜித்ததாம். ஈசன் திருநாமம் அருட்சோமநாதர். தேவி வேதநாயகி எனத் திருப்பெயர் கொண்டிருக்கிறாள்.

மாந்துறை

தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு வடகிழக்கே மூன்று மைலில் உள்ள இத்தலத்தில் சூரியன் ஈசனைப் பூஜித்து அனுக்கிரகம் பெற்றாராம். சுவாமி பெயர் மஹேசுவரர். தேவியின் திருநாமம் பார்வதி.

திருநாகேச்வரம்

தஞ்சை மாவட்டத்தில் திருக்குடந்தைக்கு அருகாமையில் உள்ள தலம், திருநாகேச்வரம் ரயில் நிலையத்திலிருந்து முக்கால் மைல் தெற்கே உள்ளது. இத்தலத்துக்கு சண்பகாரண்யம் என்று பெயர். சூரியன், ஆதிசேஷன் ஆகியோர் ஈசனைப் பூஜித்து அருள் பெற்ற தலம். இங்குள்ள தீர்த்தம் சூரியதீர்த்தம் எனப்படும். சேக்கிழாருக்கு மிகவும் அபிமான ஸ்தலம் இது. அவர் தன்னுடைய பிறந்த ஊரான செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் இவ்வூர் இறைவனின் நினைவாகவே திருநாகேச்வரம் என்ற கோயிலை எழுப்பியுள்ளார். இறைவன் திருநாமம் சண்பகாரண்யேசுவரர் என்றும் தேவியின் திருநாமம் குன்று முலைநாயகி என்றும் விளங்குகிறது. மூவராலும் பாடல் பெற்ற தலம் இது. இத்தலத்தின் வைஷ்ணவ பகுதிதான் தென் திருவேங்கடம் என்றும், திருவிண்ணகர் என்றும் கொண்டாடப்படும் உப்பிலியப்பன் கோயில் ஆகும்.

கும்பகோணம் கீழ்க்கோட்டம்

திருக்குடந்தை எனப்படும் கும்பகோணத்தில் உள்ள நாகேசுவரர் கோயிலைக் குடந்தைக் கீழ்க் கோட்டம் என்றும், பாஸ்கர ÷க்ஷத்திரம் என்றும் அழைப்பர். இங்கு சூரியன் ஈசனைச் சித்திரை மாதத்தில் 11-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு வழிபடுவதாகச் சொல்லப்படுகிறது. அம்மூன்று நாட்களிலும் சூரியனுடைய கிரணங்கள் கோயிலின் வாயிலை நேரிடையாகக் கடந்து கர்ப்பக்கிருகத்திலுள்ள இறைவன் திருஉருவின் மீது நன்குபடும் என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலில் சூரியனுக்குத் தனிச் சன்னதி இருக்கிறது. ஈசன் நாகேசுவரர் என்றும், இறைவி பெரிய நாயகி என்றும் நாமம் கொண்டுள்ளனர்.

இன்னம்பர்

கும்பகோணத்துக்கு வடமேற்கே நாலரை மைலில் உள்ளது இத்தலம். சூரியன், ஐராவதம், அகஸ்தியர் ஆகியோர் ஈசனைப் பூஜித்ததாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் ஐராவத தீர்த்தம் ஆகும். ஈசன் திருநாமம் எழுத்தறி நாதேசுவரர் என்பதாம். இறைவியின் நாமம் கொந்தார் பூங்குழலம்மை. அப்பர், சம்பந்தர் இருவரும் இத்தலத்துக்கு வந்து இறைவனைத் தரிசித்து பாடியுள்ளனர். அரசனுக்கு இறைவனே கணக்காயராக இருந்து கணக்கு ஒப்புவித்தாராம்.

சிவபுரம்

கும்பகோணத்துக்குத் தென் மேற்கே மூன்றரைமைல் தூரத்தில் உள்ளது. இங்குள்ள தீர்த்தம் சூரிய தீர்த்தம் என்று பெயர் கொண்டு விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள ஈசன் சிவபுரநாதரையும், தேவி சிங்காரவல்லியையும் விஷ்ணு வராக அவதாரமாய் பூசித்தாராம். சம்பந்தரும் அப்பரும் இத்தலத்து இறைவனைப் பாடியுள்ளனர்.

ஆதனூர்

தஞ்சை மாவட்டத்தில் சுவாமிமலை என்ற சுப்பிரமணியர் ஸ்தலத்துக்கு மேற்கே ஒன்றரை மைல் தூரத்தில் உள்ள வைஷ்ணவ ÷க்ஷத்திரம் இது. பிரணவ விமானத்தின் கீழ் பரந்தாமன் ஆண்டளக்குமையன் என்ற திருப்பெயரோடு கிழக்கு நோக்கி சயனம் கொண்டுள்ளார். தேவியின் திருநாமம் ஸ்ரீரங்கநாயகி என்பதாகும். இங்குள்ள புஷ்கரிணி சூரிய புஷ்கரிணி என்ற பெயருடன் விளங்குகிறது. காமதேனு, திருமங்கை ஆழ்வார் ஆகியோருக்கும் பரந்தாமன் பிரத்தியக்ஷம் ஆன தலம்.

திருமீயச்சூர்

தஞ்சை மாவட்டத்தில் பேரளம் ரயில் சந்திப்பிலிருந்து மேற்கே முக்கால் மைலில் உள்ளது. இங்குள்ள புஷ்கரிணி, சூரிய புஷ்கரிணி என்ற பெயருடன் இருக்கிறது. முயற்சி நாதேசுவரர் என்ற திருப்பெயரோடு ஈசனும், சவுந்தர நாயகி என்ற திருநாமத்தோடு தேவியும் திருக்கோலம் கொண்டுள்ளனர். காளியும், சூரியனும் வழிபட்டு அருள் பெற்ற தலம் இது.

திருச்செங்காட்டங்குடி

தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே ஆறு மைலில் உள்ளது. இவ்வூரில் சந்திர தீர்த்தமும் சூரிய தீர்த்தமும் விசேஷம். இத்தலத்துக்குக் கணபதீச்சுரம் என்ற பெயரும் உண்டு. ஈசன் கஜமுகாசுரனை வதைத்ததும் சிறுதொண்டர் சிவன் அடியாராக வந்த இறைவனுக்குப் பிள்ளைக் கறி அமுதிட்டதும் இத்தலத்திலே தான். இறைவன் திருநாமம் கணபதீசுவரர். தேவியின் திருப்பெயர் புழங்குழல் நாயகி. அப்பரும் சம்பந்தரும் இத்தலத்து இறைவனைப் பாடியுள்ளனர்.

நன்னிலம்

இத்தலம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே மூன்று மைலில் உள்ளது. மதுவனம் என்ற பெயரும் இத்தலத்துக்கு உண்டு. இங்குள்ள கோயில் சோழராஜன் கோச்செங்கணான் எழுப்பிய மாடக்கோயில்களுள் ஒன்றாகும். சூரியன் பூஜை செய்ததால் இறைவன் பிரகாசநாதர் என்றும் தேவி பிரகாச நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். மதுவனேசுவரரை சுந்தரரும் தரிசித்துப் பாடியுள்ளார். சன்னதியில் தேன் கூடு இருக்கிறது.

நாட்டியத்தான்குடி

தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி ரயில் பிரிவில் மாவூர் ரோடு ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே முக்கால் மைலில் உள்ளது இத்தலம். இவ்வூரில் காவேரி தீர்த்தமும், சூரிய தீர்த்தமும் விசேஷம். கோட்புலி நாயனார் முத்தி பெற்றது இங்குதான். ஈசன் ரத்தின புரீசுவரர் என்றும், தேவி மலைமங்கையம்மை எனும் திருப்பெயரும் கொண்டுள்ளனர். சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இது.

திருநெல்லிக்காவல்

தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர் திருத்துறைப் பூண்டி ரயில் பிரிவில் உள்ளது. பிரம்மாவும், சூரியனும் ஈசனை வழிபட்ட தலம் இது. பிரம்ம தீர்த்தமும், சூரிய தீர்த்தமும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. நெல்லி வனநாதேசுவரர் சம்பந்தரால் பாடப்பெற்றவர். தேவியின் திருநாமம் மங்கள நாயகி. ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷத்து சதுர்த்தசி முதல் 7 நாட்களும் மாசிமாதம் 18-ம் தேதி முதல் 7 நாட்களும் மாலையில் சூரியன் இறைவனை வழிபடுகிறானாம்.

வலிவலம்

திருநெல்லிக்காவலுக்கு வடகிழக்கே நாலரை மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயில் மாடக்கோயில். ஈசன் மனத்துணைநாதர் என்றும் இறைவி வாளையங்கண்ணியம்மை என்றும் பெயர்கொண்டு விளங்குகிறார்கள். சூரியன் பூஜித்து அருள் பெற்ற தலம்.

திருக்கோளிலி

திருநெலிக்காவல் ரயில் நிலையத்திலிருந்து தென் கிழக்கே ஆறு மைலில் உள்ளது. முசுகுந்த சக்கரவர்த்திக்காக இந்திரன் ஏழு நிமிடங்களில் தியாகேசரைப் பிரதிஷ்டித்த சப்தவிடங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. இவ்வூர் அவனிவிடங்கர் தலமாகும். சுவாமியின் பெயர் கோளிலிநாதர். அம்மன் வண்டார்ப்பூங்குழலம்மை என்ற பெயர் கொண்டிருக்கிறாள். பிரம்மன், திருமால், அகஸ்தியர் முதலானோர் பூஜித்த தலம். இங்கு நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. மூவராலும் பாடப்பட்ட தலம் இது.

திருவாய்மூர்

திருநெல்லிக்காவலிலிருந்து தென்கிழக்கே எட்டு மைலில் உள்ள இத்தலத்தை அப்பர், சம்பந்தர் இருவருமே பாடியுள்ளனர். இங்குள்ள தீர்த்தம் சூரிய தீர்த்தம். பங்குனி மாதம் 12,13 ஆகிய இரு நாட்களிலும் சூரியன் ஈசனைப் பூஜை செய்கிறானாம். இறைவன் வாய்மூர்நாதர். சுயம்பு லிங்கம். தேவியின் திருநாமம் பாலின் நன்மொழி அம்மை. சப்தவிடங்கத் தலங்களில் இத்தலம் நீலவிடங்கர் தலம் ஆகும். கமலத்தயாகர் நடனம் மிகவும் அற்புதமாம். அப்பரும், சுந்தரரும் வேதாரண்யத்தில் தங்கியிருக்கையில் ஒருநாள் இரவு ஈசன் அப்பருக்குக் காட்சி தந்து அவரைத் தம்முடன் வருமாறு அழைத்துச் சென்று இவ்வூர் கோயிலில் மறைந்து விட்டார். இறைவன் அழைக்க அப்பர் போகிறார் என்பதைக் கேட்டு சம்பந்தரும் பின்னால் ஓடிவர அப்பரின் வேண்டுகோளின்படி சம்பந்தருக்கும் ஈசன் காட்சி தந்த இடம். கோயிலினுள் வேதாரண்யேசுவரருக்கும் சன்னதி இருக்கிறது.

திருத்துறைப்பூண்டி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள இத்தலத்தை வில்வாராண்ய ÷க்ஷத்திரம் என்றும் அழைப்பர். இறைவன் பிருந்தீஸ்வரரையும், இறைவி பிரகந்நாயகியையும் நவக்கிரகங்கள் வழிபட்டு அருள்பெற்ற தலம்.

குயிலாலந்துறை

தஞ்சை மாவட்டத்தில் மயவரம் தரங்கம்பாடி ரயில் பிரிவில் செம்பொனார் கோயிலுக்கு ஒரு மைல் தொலைவில் உள்ளது. சூரியன் வழிபட்டு அருள் பெற்ற தலம்.

தஞ்சாவூர்

வெண்ணாற்றங்கரையிலுள்ள மாமணிக் கோயில் என்னும் நீலமேகப் பெருமாள் ஆலயத்திலுள்ள பரந்தாமனையும் தேவியையும் சூரியன் வழிபட்டு அருள்பெற்ற இடம். நீலமேகப் பெருமாள் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அமிர்த தீர்த்தம், சூரிய தீர்த்தம், கன்னிகா தீர்த்தம் மூன்றும் விசேஷமானது. வேதசுந்தர விமானத்தின் கீழ் யாளி நகரில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் நரசிம்மரையும் சூரியன் வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாலயத்தில் சூரிய தீர்த்தம், ராம தீர்த்தம் விசேஷமாம். திருமங்கையாழ்வார் நரசிம்மரையும் தஞ்சை நாயகியையும் தரிசித்துப் பாடியுள்ளார்.

திருவையாறு

தஞ்சைக்கு வடமேற்கே ஆறு மைலில் காவேரி தீரத்தில் அமைந்துள்ள இத்தலத்தின் அருகே ஐந்து ஆறுகள் ஓடுகின்றன. அதன் காரணமாகவே பஞ்சநதேசுவரர் என்றும் ஐயாரப்பர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார். அப்பருக்குக் கைலாயக் காட்சி தந்து அருள் செய்ததால் இத்தலம் தக்ஷிண கைலாசம் என்றும் அழைக்கப்படுகிறது. நந்திதேவர் இத்தலத்தில் இறைவனை ஆராதித்துப் பேறு பெற்றார். சூரிய தீர்த்தம் விசேஷம். சூரியன் ஈசனைப் பூஜித்த இடம். அம்பிகையின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி. சப்தஸ்தான உற்சவத்தில் தலம் விசேஷமானது. சங்கீத மும்மூர்த்திகளில் முக்கியமான தியாகராஜர் சன்னதி அமைந்துள்ளதலம் இதுவே. அப்பர், சுந்தரர், சம்பந்தரர் ஆகிய மூவரும் இறைவனைத் தரிசித்து பாடியுள்ளார்கள். இந்திரனும் லட்சுமியும் பூஜித்த தலமும் இதுவே என்பர்.

திருச்சோற்றுத் தலம்

தஞ்சைக்கு வடக்கே நான்கு மைல் தொலைவில் காவேரி தீரத்தில் அமைந்துள்ளது. சப்த ஸ்தான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இறைவன் ஒதவனேசுவரர் என்றும் இறைவி அன்னபூரணி என்றும் திருப்பெயர் கொண்டு விளங்குகின்றனர். இந்திரன், சூரியன் ஆகியோர் ஈசனைப் பூஜித்தனர். சூரிய தீர்த்தம் முக்கியம்.

திருக்காட்டுப் பள்ளி

தஞ்சை மாவட்டத்தில் பூதலூருக்கு வடக்கே ஐந்து மைலில் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருக்கிறது. இதே மாவட்டத்தில் சீர்காழிக்கு அருகே மற்றொரு திருக்காட்டுப்பள்ளி இருப்பதால் இதை மேலைத் திருக்காட்டுப்பள்ளி என்று அழைப்பர். இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் சூரிய தீர்த்தம். அப்பரும், சம்பந்தரும் பாடிய தலம். சூரியன் பூஜித்ததால் இறைவன் தீயாடியப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். தேவியின் திருநாமம் வார்கொண்ட முலையம்மை என்பதாம்.

திருவாடானை

இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கைக்கு முப்பத்தாறு மைல் தொலைவில் உள்ளது. ஆடு பூஜித்ததால் இறைவனின் பெயர் ஆடானைநாதர் என்று அழைக்கப்பட்டார். தேவியின் திருநாமம் அம்பாயிரவல்லி என்பதாகும். சூரியனும் பிருகும் இறைவனை இத்தலத்தில் வழிபட்டனராம். இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் சூரிய தீர்த்தம். சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது.

திருப்புல்லாணி

தர்ப்பசயனம் என்றும் அழைக்கப்படும் இந்த ÷க்ஷத்திரம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாத புரத்துக்குத் தெற்கே ஐந்து மைலில் உள்ளது. புல்லாரண்ய ரிஷி இங்கு பகவானை ஆராதித்ததால் புல்லாரண்ய ÷க்ஷத்திரம் என்றும் பெயர் பெற்றது. ஸ்ரீராமர் இலங்கை நோக்கி வானர சேனையுடன் புறப்பட்ட போது சமுத்திரத்தைக் கடக்க சமுத்திர ராஜனிடம் அனுமதிபெற அழைத்த இடம். தர்ப்பையைப் பரப்பி அதன் மேல் ஸ்ரீராமன் சயனித்திருந்ததால் தர்ப்பசயனம் என்ற பெயரை அடைந்தது. பகவான் தெய்வச்சிலையார் என்றும் தேவி தெய்வச்சிலை நாச்சியார் என்றும் பெயர் கொண்டுள்ளனர். வைஷ்ணவ ÷க்ஷத்திரம். பகவானுக்குப் பாயசம் நைவேத்தியம் இங்கு விசேஷம். சூரியன் வழிபட்டதால் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் ஸ்நானம் மிகவும் முக்கியமாகச் சொல்லப்படுகிறது.

நாகலாபுரம்

சென்னை திருப்பதி பஸ் வழியில் சென்னையிலிருந்து ஐம்பது மைலில் உள்ளது, ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊருக்கு முன்பு வேத நாராயணபுரம் என்ற பெயர் இருந்ததாம். விஷ்ணு மத்ஸ்யமாக அவதாரம் செய்தபோது பக்தர்களுக்கு அருள்புரிய இத்தலத்தில் மச்சாவதார மூர்த்தியாகத் தங்கி காட்சி தருகிறார். இடுப்புக்குக் கீழே மீனின் உருவம் காட்சி தருகிறதாம். அந்நிலையில் நின்றகோலம் கொண்டுள்ளார். வருடத்தில் மூன்று நாட்கள் சூரியன் பகவானை இத்தலத்தில் வழிபடுவதாகச் சொல்கிறார்கள். முதல் நாள் அன்று சூரியகிரணங்கள் பகவாறனுடைய பாதங்களில் படிந்திருப்பதைக் காணலாம். இரண்டாம் நாள் பகவானுடைய நாபிக் கமலத்தில் சூரிய கிரணங்கள் படிய, மூன்றாம் நாள் அவருடைய திருமுகத்திலே படிந்திருக்கும். கிருஷ்ணதேவராயர் இவ்வாலயத்துக்கு வந்திருந்து திருப்பணிகள் செய்துள்ளார். சூரிய பூஜை செய்வதாகக் கூறப்படும் அந்த மூன்று நாட்களிலும் மக்கள் அக்காட்சியைக் காண சுற்று வட்டாரங்களிலிருந்து வருகிறார்கள்.

நவக்கிரக ÷க்ஷத்திரங்கள்

சூரியனுடைய ÷க்ஷத்திரம் தமிழ் நாட்டிலே சூரியனார் கோயில் ஆகும். அவ்விதமே நவக்கிரகங்களின் மற்ற கிரகங்களுக்கும் தனி ÷க்ஷத்திரங்கள் இருக்கின்றன. அவற்றின் விவரம் இங்கு தரப்பட்டுள்ளது.

சந்திரன் -இந்தளூர்

தஞ்சை மாவட்டத்தில் மாயூரத்துக்கு முந்திய நீடூர் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே ஒன்றரை மைலில் உள்ள வைஷ்ணவ தலம். தனக்கேற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்ள சந்திரன் இத்தலத்திலே தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதன் கரையிலிருந்து சுகந்த வனநாதரையும் தேவியையும் வழிபட்டனாம். பரந்தாமனும் சந்திரனுக்குத் தரிசனம் தந்து அவன் சாபத்தைப் போக்கி அருளினாராம். சுகந்தவனநாதர் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். தேவியின் திருநாமம் சந்திரசாபவிமோசனவல்லி என்பதாகும். காவேரியின் கரையிலுள்ள இத்தலத்தில் வியாசருக்கும், வியாக்ரபாதருக்கும் பகவான் தரிசனம் தந்ததாகச் சொல்லப்படுகிறது.

(திருமூலர் நாடிக் கிரந்தப்படி சந்திரன் சுதர்சன திருமலை ÷க்ஷத்திரத்தில் சுதர்சன சக்கராதிபதியான பிரசன்ன வேங்கடேச்வரரைப் பிரதிஷ்டித்து அவர் காலடியிலேயே தன் காயத்திரியை ஸ்தாபித்துக் கொண்டு விளங்குகிறான் என்று சொல்லப்படுகிறது.)

வைத்தீஸ்வரன் கோயில்

தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இத்தலத்தை அங்காரக ÷க்ஷத்திரம் என்று கூறுவார்கள் இறைவன் அங்காரகராக நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளைக் தீர்க்கும் மருத்துவராக வேப்ப மரத்தடியில் இருப்பிடம் கொண்ட தலம் இது. ஜடாயுவிற்கு மோக்ஷம் கொடுத்த இடமும் இதுவே எனச் சொல்லப்படுகிறது. கோயில் பிரகாரத்தினுள் ஜடாயு குண்டம் என்று ஒன்று உள்ளது. வைத்தீஸ்வர சுவாமி எத்தனையோ குடும்பங்களுக்குக் குலதெய்வமாக விளங்குகிறார். இத்தலத்தில் தங்கள் குழந்தைகளுக்கு முதல் முடிகொடுக்கும் வழக்கத்தை இப்போதும் கணக்கற்றோர் கடைப்பிடித்து வருகின்றனர். இங்குள்ள சுப்பிரமணியருக்கு முத்துக்குமார சுவாமி என்று பெயர். கிருத்திகை அன்று அபிஷேகம் மிகவும் விமரிசையாக நடத்தப்படுகிறது. அங்காரகன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

அங்காரகன் தனக்கு ஏற்பட்ட வெண்குஷ்ட நோயைப் போக்கிக்கொள்ள இத்தலத்திலுள்ள சித்தார்த்த தீர்த்தத்தில் நீராடி இறைவனைப் பூஜித்தானாம். அங்காரகனுக்குத் தனி சன்னதி உள்ளது. செவ்வாய்க் கிழமைகளில் தரிசனம் மிகவும் விசேஷமாம். (அங்காரகனை ஆறுமுகனுடைய அவதாரம் என்பர் சிலர். ஆகவே பழனியில் தண்டாயுதபாணியை ஸ்தாபித்து அவர் காலடியில் தன் காயத்திரியைப் பிரதிஷ்டித்து அவரை அங்காரகன் பூஜித்து வருகிறான் என்றும் கூறுவர்.

புதன் -கச்சிநெறிக் காரைகாடு (காஞ்சிபுரம்)

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரத்தில் விஷ்ணு காஞ்சி எனப்படும் சின்ன காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ளது. இறைவன் திருநாமம் சத்திய விரதேசுவரர். தேவியின் நாமம் காமாக்ஷியம்மை. சம்பந்தர் பாடிய தலம். இத்தலத்திலே புதன் இறைவனை வழிபட்டு அருள் பெற்றான்.

(புதனை ஈசுவரனுடைய அம்சமாக சிலர் கூறுவர். அவர்கள் சித்தாந்தப்படி புதன் மதுரையில் ஸ்ரீமீனாக்ஷிசுந்தரேசுவரர் கோயிலில் யந்திர மந்திர ரூபியாய் சாந்நித்தியம் கொண்டிருக்கிறான்.)

பிரகஸ்பதி - காயாரோகணம் (காஞ்சிபுரம்)

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரம். காயாரோகணம் என்ற கோயிலில் பிரகஸ்பதி இறைவனை வழிபட்டு இருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்துக்கு வடகிழக்கே ஏழு மைலில் உள்ள திருக்குடந்தை பெருங்குளம் என்ற தலத்தில் பிரகஸ்பதி பொலிந்து நின்ற பெருமாளை வழி பட்டதாகவும் கூறப்படுகிறது. நவதிருப்பதிகளில் இத்தலம் எட்டாவதாகும். பிரகஸ்பதி திருச்செந்தூர் ÷க்ஷத்திரத்தில் தம்முடைய யந்திரத்தை ஆறுமுகப் பெருமான் திருவடிகளின் கீழ் ஸ்தாபித்துக் கொண்டு அவரை வழிபடுவதாகவும் சொல்லப்படுகிறது.

சுக்கிரன் - 1, வெள்ளியங்குடி

தஞ்சை மாவட்டத்திலே திருவிடைமருதூருக்கு வடக்கே ஐந்து மைல் தொலைவில் உள்ள வைஷ்ணவ ஸ்தலத்தை வடமொழியில் பார்க்கவபுரி என்றும் அழைப்பர். இங்கே சுக்கிரன் தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி பரந்தாமன் கோலவில்லி ராமனை வழிபட்டு அருள்பெற்றார். பகவான் கிழக்கு நோக்கி சயனித்துள்ளார். தேவியின் திருநாமம் மரகதவல்லி நாச்சியார். பிரம்மன், இந்திரன், பராசரர் ஆகியோரும் இத்தலத்தில் வழிபட்டுப் பகவானுடைய தரிசனம் பெற்றனராம்.

தாழமங்கை

தஞ்சை மாவட்டத்தில் ஐயம்பேட்டைக்கு அருகிலுள்ள இத்தலத்தில் சுக்கிரன் ஈசனை வழிபட்டாராம். இறைவன் திருநாமம் வெள்ளீசுவரர். தேவியின் திருப்பெயர் வெள்ளை நாயகி. (திருமூலர் நாடிக்கிரந்தப்படி சுக்கிரன் ஸ்ரீரங்க ÷க்ஷத்திரத்தில் ஸ்ரீரங்கநாதருடைய காலடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டு அவரை வழிபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.)

சனி - திருநள்ளாறு

தஞ்சை மாவட்டத்திலுள்ள பேரளம் காரைக்கால் ரயில் பிரிவில் இத்தலம் அமைந்துள்ளது. அவந்தி நாட்டு அரசன் நளன் சனியால் மிகவும் துன்புறுத்தப்பட்டபோது இத்தலத்துக்கு வந்தது இறைவனைத் தரிசித்து அக்கஷ்டத்தைத் தீர்த்து விட்டுச் சென்றான். நாரதர் உபதேசப்படி அரசன் நளன் சனியால் மக்களோடு இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, மோக்ஷம் அடைந்தான். வந்தவர்களுடைய மேனியிலிருந்து தெரித்த நீர்த்துளிகள் அவர்கள் மீதுப் பட்டதும் அவர்கள் சாபம் காரணமாகப் பெற்றிருந்த யாளி உருவம் நீங்கி மானிட ரூபத்தை அடைந்தனராம். பரத்வாஜரால் இந்த ÷க்ஷத்திரத்தின் மகிமையைச் சொல்லக்கேட்டு அவந்தி நாட்டு மன்னன் உருசிராஜன் இத்தலம் வந்து இறைவனைத் தரிசித்து பேறு பெற்றானாம். காம்பீலி தேசத்து அரசன் தெண்டிகுப்தன் இத்தலத்தில்தான் முக்தி பெற்றான்.

ஆதியில் பிரம்மன் இங்கு இறைவனைப் பூஜை செய்ததால் ஆதிபுரி என்றும், நகவிடங்கர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் நகவிடங்கபுரி என்றும் பெயர்கள் இத்தலத்துக்கு வழங்கப்படுகின்றன. நளன் வழிபட்டதால் நளேசுவரம் என்ற பெயரும் உண்டு. ஸ்தல விருக்ஷம் தர்ப்பையாதலால் தர்ப்பாரண்யம் என்றும் பெயர் வழங்குகிறது. இத்தலத்திலே சனி பகவானைப் பக்தியுடன் ஆராதிப்பவர்கள் ஏவல், வைப்பு, கிரகதோஷம் ஆகிய துன்பங்களிலிருந்து விடுபட்டு நன்மை அடைகின்றனர். இத்தலத்தில் வாணி தீர்த்தம், அன்ன தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், நள தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் இருக்கின்றன. நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானைத் தரிசிப்பவர்கள் கிரக பீடைகளிலிருந்து நிவர்த்தியடைகின்றனர். நளகூபம் என்றொரு தீர்த்தம் இருக்கிறது. அதில் யாரும் நீராடுவதில்லை. அதைத் தரிசிப்பதோடு திரும்பி விடுகின்றனர். சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றான இத்தலத்தை அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவரும் பாடியுள்ளனர்.

ராகு - சீர்காழி

தஞ்சை மாவட்டத்திலுள்ள இத்தலத்தில் கடைத் தெருவிலே நாகேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இறைவனை ராகு பூஜித்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. தேவியின் திருநாமம் பொன்னாம வல்லி என்பதாகும். சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இது.

கேது - செம்மங்குடி

சீர்காழிக்கும் வடகிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. இறைவன் பெயர் நாகேசுவரர் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

(கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருப்பூரிலிருந்து நான்கு மைலில் திருமுருகன் பூண்டியிலும் ஆலயத்தில் கேதுவுக்கும் தனிச் சன்னதி இருக்கிறது. சூரபத்மனைக் கொன்ற பிறகு அத்தோஷம் நீங்க முருகப்பெருமான் இவ்வூரில் இறைவனை வழிபட்டார்.


© Om Namasivaya. All Rights Reserved.