இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


சுற்றமொடு பற்றவை

சுற்றமொடு பற்றவை

பதிக எண்: 2.31 - கருப்பறியலூர் - இந்தளம்

பின்னணி:

நான்காவது தல யாத்திரையின் இறுதி கட்டத்தில், புறம்பயம், சேய்ஞலூர், திருப்பனந்தாள், ஓமாம்புலியூர், வாழ்கொளிபுத்தூர், கடம்பூர் மற்றும் நாரையூர் ஆகிய தலங்கள் சென்ற ஞானசம்பந்தர், திருக்கருப்பறியலூர் தலம் செல்கின்றார். இவ்வாறு சென்றதை குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. சிரபுரம் என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. சிரபுரச் செல்வர் என்று திருஞானசம்பந்தரை சேக்கிழார் குறிப்பிடுகின்றார். அருகில் இருக்கும் பல தலங்கள் சென்றார் என்று சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார். அவை குரக்குக்கா, புள்ளிருக்குவேளூர், திருப்புன்கூர் ஆகிய தலங்களாக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். பாடல் தோறும் பெருமானின் புகழினைக் குறிப்பிட்டு, அத்தகைய பெருமான் உறையும் இடம் கருப்பறியலூர் என்று கூறுவதால் இந்த பதிகத்தினை உரை இசை என்று சேக்கிழார் கூறுகின்றார். குரக்குக்கா தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை.

பரமர் தம் திருக்கருப்பறியலூரினைச்

சிரபுரச் சிறுவர் தொழுது செந்தமிழ்

உரை இசை பாடி அம்மருங்கின் உள்ளவாம்

சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினர்

இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகமொன்றும் சுந்தரர் அருளிய பதிகம் ஒன்றும் (சிம்மாந்து சிம்புளித்து என்று தொடங்கும் பதிகம்–7.30) கிடைத்துள்ளன. சீர்காழியில் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட அப்பர் பிரானும் சம்பந்தரும் சேர்ந்து திருக்கோலக்கா சென்று அந்த தலத்து இறைவனை வணங்கிய பின்னர், சம்பந்தர் சீர்காழி திரும்பினார். அப்பர் பிரான் இந்த தலத்துக்கு சென்றார் என்று சேக்கிழார் கூறுகின்றார். ஆனால் நமக்கு இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகம் ஏதும் கிடைக்கவில்லை.

வைத்தீஸ்வரன் கோயிலிருந்து, திருப்புன்கூர் நீடூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் சாலையில் சுமார் ஏழு கி.மீ. தூரம் சென்றால் தலைஞாயிறு என்ற பெயர்ப் பலகை காணலாம். அங்கிருத்து இரண்டு கி.மீ தொலைவில் இந்த கோயில் உள்ளது. தற்போது மேலைக்காழி என்றும் தலைஞாயிறு என்றும் அழைக்கப் படுகின்றது. சீர்காழி போன்று மாடக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டு, மலைக் கோயிலில் தோணியப்பரும் பெரியநாயகி சன்னதியும் சட்டைநாதர் சன்னதியும் இருப்பதாலும், சீர்காழி தலத்திற்கு மேற்கே இருப்பதாலும் மேலைக்காழி என்ற பெயர் வந்தது. சீர்காழியில் இருக்கும் தோணியப்பரின் கையில் மான் மற்றும் மழுவினை நாம் காணமுடியாது. ஆனால் இங்கே உள்ள பரமன் தனது கைகளில் மானும் மழுவும் தாங்கிய நிலையில் உள்ளார். தக்க யாகத்தில் பங்கேற்றதால் தனது ஒளி குன்றிய சூரியன், இந்த தலத்து இறைவனை வழிபட்டு பழைய ஒளியினை மீண்டும் பெற்றதால் தலைஞாயிறு என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். இறைவனின் திருநாமம் குற்றம் பொறுத்த நாதர்; இறைவியின் பெயர் கோல்வளை நாயகி. கிழக்கு நோக்கிய மூன்று நிலை இராஜகோபுரம் கொண்ட திருக்கோயில். மற்ற திருக்கோயில்களில் இருப்பது போன்று, மூலவரின் சன்னதிக்கு நேரே இராஜ கோபுரம் இருக்காது. கோபுரத்திலும் விமானத்திலும் அழகிய சிற்பங்கள் உள்ளன. சீர்காழி போன்று மாடக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ள திருக்கோயில். சீர்காழி போன்று மூன்று அடுக்குகள் கொண்டு, இரண்டாவது நிலையில் உமை அம்மையுடன் பரமனையும், மூன்றாவது நிலையில் சட்ட நாதரையும் காணலாம். கொகுடி எனப்படும் ஒரு வகை முல்லைக் கொடியின் கீழே, சம தளத்தில், குற்றம் பொறுத்த நாதரின் சன்னதியை காணலாம். இரண்டாவது தளத்தில் சுவாமி மற்றும் அம்பிகை ஆகிய இருவரை மட்டுமே காணலாம். சீர்காழி தலத்தில் நாம், முருகப்பெருமான், விநாயகர், திருமால் மற்றும் பிரமனையும், சுவாமி மற்றும் அம்பிகையுடன் காண்கின்றோம். சீர்காழியில் நாம் காணும் இந்த காட்சியை கயிலாயக் காட்சி என்றே கூறுவார்கள். இந்த தலத்தில் இரண்டாவது நிலையில் உள்ள அம்பிகை மற்றும் சுவாமியை, கர்ப்ப ஞான பரமேச்வரி என்றும் கர்ப்ப ஞானேச்வரர் என்றும் அழைப்பார்கள். உமா மகேசுவரர் சன்னதியும் உள்ளது. மூலவர் சுயம்பு இலிங்கம். சற்று குட்டையான பாணத்துடன் காணப்படும் இலிங்கம். அம்பிகை தெற்கு நோக்கிய சன்னதியில் காட்சி அளிக்கின்றாள். உள்மண்டபம் வௌவால் மண்டபம் அமைப்பில் உள்ளது. உள் மண்டபத்தில் சித்தி விநாயகர், உமாமகேஸ்வரர், சுப்ரமணியர் நடராஜர் சன்னதிகள் உள்ளன. சண்டீசரை அவரது மனைவி, யாமினியுடன் காணலாம். தென்முகக் கடவுள், இலிங்கோத்பவர், பிரமன் மற்றும் துர்க்கையை நாம் கோஷ்ட மூர்த்தங்களாக காணலாம். மூலவர் சன்னதிக்கு நேரே இராஜகோபுரம் இல்லை. தக்க யாகத்தில் பங்கேற்றதால் தனது ஒளி குன்றிய சூரியன், இந்த தலத்து இறைவனை வழிபட்டு பழைய ஒளியினை மீண்டும் பெற்றதால் தலைஞாயிறு என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். இந்த தலம் ஆதித்யபுரி என்றும் அழைக்கப் படுகின்றது. இறைவனை நோக்கி தவம் இருந்த சூரியன் முன்னே தோன்றிய பெருமான், இந்த தலத்தில் ஒரு குளத்தை தோற்றுவித்து அதனில் மூழ்கி குளிக்குமாறு பணித்தார். சூரியன் அமைத்த இந்த குளம் சூரிய தீர்த்தம் என்று அழைக்கப் படுகின்றது. இந்த குளத்தில் குளித்தால் நோய்கள் தீரும் என்று நம்பப் படுகின்றது. இந்திரன், அகத்தியர், வசிட்ட முனிவர், சித்ராங்கதன் மன்னன், இராவணன், இந்திரஜித், அனுமன்வழிபட்ட திருக்கோயில். மகா மண்டபத்தில் தாரை இறைவனை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது. சூரபதுமனுக்கு பயந்து இந்திரன் வேணுபுரம் என்று அழைக்கப் படும் சீர்காழி தலத்தில் மூங்கில் காட்டில் ஒளிந்து கொண்டிருந்த போது, இங்கே பூந்தோட்டம் அமைத்து அந்த தோட்டத்தில் கிடைக்கும் பூக்களைக் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தான். மேகங்களை சூரபதுமன் சிறைப்படுத்தவே, மழை இல்லாமல், தேவையான நீரின்றி செடிகள் வாடின. அப்போது இந்திரன் விநாயகப் பெருமானை வேண்ட, விநாயகர் அகத்தியரின் கமண்டலத்தை கவிழ்த்து ஒரு நதியைத் தோற்றுவித்து நிலத்தை வளம் பெறச் செய்தார் என்று தலபுராணம் குறிப்பிடுகின்றது. இந்த நதி விநாயக நதி என்று அழைக்கப் படுகின்றது.

இந்த தலத்து இறைவனின் திருநாமம் குற்றம் பொறுத்த நாதர் என்பதை திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் பத்தாவது பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த பெயர் வருவதற்கு காரணமாக மூன்று நிகழ்ச்சிகள் சொல்லப் படுகின்றன. இலங்கையிலிருந்து வெற்றியுடன் திரும்பிய இராமர் இராமேஸ்வரத்தில் சிவ லிங்கம் ஸ்தாபித்து பூஜை செய்ய நினைத்தபோது அவர் அனுமனை நர்மதை நதிக்கரையில் இருந்து லிங்கம் எடுத்து வரச் சொன்னார். ஆனால் அனுமன் லிங்கத்துடன் திரும்புமுன் பூஜைக்கான நேரம் நெருங்கி விட்டதால் சீதை மணலில் பிடித்துக் கொடுத்த லிங்கத்தை வைத்து இராமபிரான் பூஜை செய்கின்றார். திரும்பி வந்த அனுமன், பூஜை முடிந்ததைக் கண்டு ஏமாற்றம் அடையவே, இராமர் அனுமனை மணல் லிங்கத்தை எடுத்து விட்டு அனுமன் கொண்டு வந்த லிங்கத்தை அந்த இடத்தில் வைக்கச் சொன்னார். அனுமன் எத்தனை முயற்சி செய்தும் மணல் லிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்லை. அனுமன் தனது முயற்சியில் வாலை லிங்கத்தின் மேல் சுற்றி பெயர்க்க செய்த செயலை சிவபிரானுக்குச் செய்த அவமதிப்பாக கருதியதால், அந்த தவற்றுக்கு பிராயச்சித்தமாக இந்த தலத்தில், தனது குற்றம் பொறுக்குமாறு சிவனை வழிபாடு செய்தான். சீதாதேவி பிடித்து வைத்த இலிங்கத்தைத் தனது வாலினால் இறுகச்சுற்றி அனுமன் பெயர்த்தெடுக்கச் செய்த முயற்சி, சிற்பமாக இராமேச்சுரம் திருக்கோயிலில் இருப்பதை நாம் காணலாம். சிவபெருமானின் கருணை கண்டு வியந்த அனுமன், இந்த தலத்திற்கு வடகிழக்கில் தன் பெயரால் ஒரு லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் குரக்குக்கா என்று அழைக்கப் படுகின்றது. இராமலிங்க வள்ளலாரும் இந்த தலத்து இறைவனை வழிபட்டு, ஒரு பதிகம் அருளியுள்ளார்.

இந்திரன் ஒரு முறை தனது வஜ்ராயுதத்தால் சிவபிரானை தாக்கினான். ஒரு முறை இறுமாப்புடன் இந்திரன் கயிலை சென்ற போது சிவன் அவன் முன் பூதகண உருவில் தோன்றினார். எதிரே நிற்பது சிவன் என்பதை உணராத இந்திரன், தான் உள்ளே செல்வதற்கு தடையாக உள்ள பூதகணம் என்று நினைத்து. தனது வஜ்ராயுதத்தால் தாக்கினான். பதிலுக்கு பெருமான் அடிக்க இந்திரனின் தோள் முறிகின்றது. அப்போது தான் இந்திரனுக்கு தனது எதிரே நிற்பது பூதகணம் அல்ல சிவபெருமான் என்று புரிகின்றது. அவசரத்தில் செய்த அந்த குற்றத்தை மன்னிக்குமாறு இந்திரன் சிவனை பணிந்த இடம் தான் இந்த தலம். இதனால் தான் இந்த தலத்தில் உள்ள இறைவனுக்கு குற்றம் பொறுத்த நாதர் என்ற பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர்.

ஒரு முறை இராவணனின் மகன் இந்திரஜித் ஆகாயத்தில் சென்றபோது ஏதோ ஒரு விசை தனது விமானத்தை இழுப்பது போல் உணர்ந்து உடனே கீழே இறங்கி இந்த தலத்தில் இருந்த இலிங்கத்தின் சக்தியால் தான் விமானம் இழுக்கப்பட்டது என்பதை உணர்ந்தான். இந்த லிங்கத்தின் மேல் பறந்து சென்றது, தான் செய்த தவறு என்று உணர்ந்து, அங்கே சிவனை பூஜை செய்தான். இந்த அதிசய லிங்கத்தை இலங்கை எடுத்துச் செல்ல முடிவு செய்து லிங்கத்தை பெயர்க்க முனைந்தபோது அவனால் லிங்கத்தை அசைக்க கூட முடியவில்லை. தனது முயற்சியில் உடல் தளர்ந்த இந்திரஜித் அங்கே மயக்கம் அடைந்து விழுந்து விடுகின்றான். இதை அறிந்த இராவணன் உடனே இந்த இடத்துக்கு வந்து அவனும் இறைவனை வணங்கி தனது மகன் செய்த குற்றத்தினை பொறுத்து அருளுமாறு வேண்டினான். இராஜ கோபுரம் விசித்ராங்கதன் என்ற மன்னனால், தனக்கு குழந்தை வரம் அருளிய இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில் கட்டப் பட்டதாக சொல்லப் படுகின்றது. எனவே குழந்தைப் பேறு வேண்டுவோர் இந்த தலத்து இறைவனை வழிபட்டு பயனடையலாம் என்று நம்பப் படுகின்றது. இவ்வாறு அடியார்களின் குற்றங்களை பொறுக்கும் பெருமான், இந்த தலத்து பெருமானை நினைத்தபோது,சுந்தரருக்கு மிகவும் இனியவராக பெருமான் இருந்தார் போலும். இந்த தலத்தின் மீது அருளிய பாடல்களை (7.30) அனைத்தையும், நினைந்த போது அவர் நமக்கு இனியவாறே, என்று முடிக்கின்றார்.

கொகுடிமுல்லைக் கொடியின் கீழே மூலவரின் சன்னதி அமைந்திருப்பதால், இந்த கோயில் கொகுடிக் கோயில் என்று அழைக்கப் படுகின்றது. அடைவுத் திருத்தாண்டகத்தின் ஒரு பாடலில் பலவகையான கோயில்களை குறிப்பிடும் அப்பர் பிரான், கொகுடிக் கோயில் என்று இந்த தலத்து திருக்கோயிலை குறிப்பிடுகின்றார். ஞாழற் கோயில் மற்றும் மணிக்கோயில் ஆகிய இரண்டும் வைப்புத் தலங்களாகும். தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் நடைபெற்று வரும் திருக்கோயில். குலோத்துங்கச் சோழனின் காலத்தைய பதினெட்டு கல்வெட்டுகள் இந்த கோயிலில் காணப்படுகின்றன. இந்த தலம் தனிநாயக சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப் படுகின்றது. ஒரு கல்வெட்டு, ஊர்ச்சபையின் உறுப்பினராக இருப்பதற்கு தகுதிகள் யாவை என்று உணர்த்துகின்றது. தலமரம் கொகுடி முல்லை; தீர்த்தம், விநாயக தீர்த்தம், சூரிய தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், அனும தீர்த்தம், நயம்ப புஷ்கரணி, சங்க புஷ்கரணி, பொற்றாமரைத் தீர்த்தம் மற்றும் செங்கழுநீர் தீர்த்தம் என்பன.

இந்த தலத்து இறைவனை வழிபடும் அன்பர்கள் பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்று நம்பப் படுகின்றது. மறுபடியும் கருவறைக்குள் புக வேண்டிய அவசியம் இல்லாத நிலையினை உயிர்கள் பெறுகின்ற காரணத்தால் கருப்பறியலூர் என்ற பெயர் வந்தது. மீண்டும் கருவில் தோன்றாத வண்ணம் கருவை பறிப்பவன் என்று தனது பதிகத்தின் கடைக்காப்பில் திருஞானசம்பந்தர் பாடியுள்ளது நமது நினைவுக்கு வருகின்றது. இந்த தன்மையின் காரணமாக இந்த தலம் கர்மநாசபுரம் என்றும் அழைக்கப் படுகின்றது. வசிட்ட முனிவர், பிரமனின் அறிவுரை படி இந்த தலம் வந்தடைந்து தவம் இருந்தார். இந்த தலத்தில் செய்யப்படும் தவம் பல மடங்கு பலன் கொடுக்கவல்லது என்பதால் தனது ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு பெருமானை நோக்கி அவர் இங்கே தவம் செய்தார். அவர் போன்று எழுபத்திரண்டு முனிவர்கள் இங்கே தவம் செய்தார்கள் என்று தலபுராணம் கூறுகின்றது. இதன் காரணமாக இந்த தலத்திற்கு இன்றும் பல குழந்தைகள் வந்து தென்முகக் கடவுளை வணங்கிச் செல்வதை நாம் காணலாம். இந்த காரணம் பற்றியே, இந்த தலத்தின் மீது அருளப்பட்ட இந்த பதிகத்தை (சுற்றமொடு பற்று என்று தொடங்கும் பதிகத்தை) பாடுவோர் கல்வி ஞானத்தில் முதன்மை பெற்று விளங்குவார்கள் என்று கருதப் படுகின்றது.

பாடல் 1:


சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்

குற்றமில் குணங்களொடு கூடும் அடியார்கள்

மற்று அவரை வானவர் தம் வானுலகம் ஏற்றும்

கற்றவன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

வானுலகம்=வீடுபேறு; கற்றவன்=இயல்பாகவே அனைத்தையும் உணர்ந்தவன்; மற்று என்பது பொருள் ஏதும் இல்லாத அசைச்சொல்; துயக்கு=சோர்வு, தளர்ச்சி; துயக்கு என்ற சொல்லுக்கு பெருமானை அறியும் அறிவு வேறுபடுதல் என்று விளக்கம் அளித்து சுற்றமும் யான் எனது என்ற இருவகைப் பற்றுக்களும் நாம் பெருமானை அறியமுடியாத வண்ணம் தடுக்கின்றன என்று பொருள் கூறுகின்றனர்; கூடும்=கூடி விளங்கும்; வானுலகம்=வீடு பேறு; வானவர் என்றால் பொதுவாக தேவர்களை குறிக்கும் என்றாலும் இங்கே சிவலோகத்தில் வாழும் மேலோர்களை குறிப்பதாகவே பொருள் கொள்ளவேண்டும். தேவர்கள் வாழ்வது தேவலோகம். தேவலோகத்தில் வாழும் அவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியவர்களே. எனவே அவர்கள் இங்கே குறிப்பிடப் படவில்லை. எனவே வானுலகம் என்பதற்கு உயர்ந்த உலகமாகிய சிவலோகம் என்றும் வானோர்கள் என்பதற்கு சிவலோகம் சென்று அடையும் தகுதியினைப் பெற்ற உயர்ந்தவர்கள் என்று பொருள் கொள்வதே பொருத்தம்.

சுற்றமும் அவர்கள் பால் வைத்துள்ள பற்றும் இறைவனை அடையும் நெறியில் இடர்களை விளைவிக்கும் என்பதால் சுற்றங்கள் பால் வைத்துள்ள பற்றினை நீக்க வேண்டியது அவசியம் என்று ஞானிகளால் கருதப் படுகின்றது. மணிவாசகரும் தனது போற்றித் திருவகலில் சிவநெறியை அடையத் தடையாக உள்ளவற்றை குறிப்பிடுகையில், சுற்றத்தை குறிப்பிடுகின்றார். இறை நெறியின் சிறப்பினை உணராத சுற்றத்தார், இறைநெறியினில் ஆழ்வோர், தங்களுக்கு இறுதி வரை துணையாக உறுதியுடன் நில்லாமல் இடையிலே விலகிப் போய் விடுவார்களோ என்று அச்சம் கொள்ளுதல் இயல்பு. அந்த அச்சத்தினால், அவர்கள் அனைவரும் ஒன்றாக சூழ்ந்துகொண்டு எம்மை விட்டு விடாதீர் என்று பதறியவாறு, இறையுணர்வில் ஆழும் மனிதர்களை தடுப்பதையே, இங்கே அடிகளார் குறிப்பிடுகின்றார். அத்தகைய சுற்றத்தினரை தொல்பசுக் குழாங்கள் என்று அழைக்கின்றார். உயிர் உடலுடன் இணைந்து பிறந்த நாட்களிலிருந்து அத்தகையோர் உயிரினைச் சூழ்ந்து இருப்பதால் தொன்மையாக உள்ளவர்கள் என்பதை குறிப்பிடும் வண்ணம் தொல்பசு என்று கூறுகின்றார். உயிரின் நோக்கமே பற்றுகளை அறுத்து வினை நீக்கம் பெற்று இறைவனைச் சென்று அடைதல் என்பதை உணராத சுற்றத்தாரை, விலங்குகளுக்கு சமமாக மதித்து பசுக் குழாங்கள் என்று அடிகளார் கூறுகின்றார்.

சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்

பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்

பற்று என்பது பொதுவாக யான் எனது என்று நாம் கருதுவதை குறிப்பிடுகின்றது. யான் எனது என்ற எண்ணங்கள் தாமே பற்றினை வளர்க்கின்றன. இந்த உடலே உயிருக்கு சொந்தமும் அல்ல நிலையானதும் அல்ல. அவ்வாறு இருக்கையில் நிலையற்ற இந்த உடலை உயிர் தான் நிலையாக உள்ள பொருள் என்று கருதுவது தவறு தானே. உடலே சொந்தமல்ல என்ற போது இந்த உடலால் நாம் அடைந்த பொருட்களை எனது என்று கருதுவதும் தவறு தானே. மேலும் அனைத்துப் பொருட்களும் நிலையற்றவை என்பதை உணர்ந்தால் அந்த பொருட்களுக்கு உரிமை கொண்டாடுவதை நாம் தவிர்ப்போம் அல்லவா. மற்ற அனைத்து பற்றுக்களும் யான் எனது எனப்படும் இந்த இருவகைப் பற்றினை சூழ்ந்தே தோன்றுகின்றன என்பதால் யான் எனது என்ற இருவகைப் பற்றினை அறுத்தவர்கள் எளிதில் மற்ற பற்றுக்களையும் அறுக்க முடியும். பற்று என்பதற்கு அகப்பற்று மற்றும் புறப்பற்று என்று விளக்கம் கொடுத்து, இரண்டையும் நீக்க வேண்டிய அவசியத்தை ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் கூறுவார்கள். குரை கழல்கள்=ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகள்; கற்றா=கன்று+ஆ; தனது கன்றைப் பிரிந்ததால் அக்கன்றினை நினைத்து மனம் உருகிக் கண்ணீர் விடும் பசுவின் நிலை; தனக்கு புகழ் வேண்டாம் என்றும் தான் இனிமேல் எதுவும் கற்க வேண்டிய அவசியம் இல்லை தனது உடலின் மீது பற்று ஏதும் இல்லாதவராக அடிகளார் இருப்பதை நாம் காணலாம். உற்றார் வேண்டாம் ஊர் வேண்டாம் கற்றாரின் தொடர்பு வேண்டாம் என்று மற்ற புறப்பற்றுகளை நீத்தவராக அடிகளார் காணப்படுவதையும் நாம் உணரலாம். பெருமானின் திருவருள் கூடிய பின்னர், நூல்களை கற்ற பின்னர் அடைய வேண்டிய பலன்களை அடைந்த பின்னர் மேலும் கற்று அடைவதற்கு வேறு என்ன உள்ளது. உண்மையான கல்வியின் பயன் அனைத்துப் பொருட்களின் மீது அன்பினை வளர்த்து, அவ்வாறு வளர்ந்த அன்பினை இறைவனின் திருவடிகளில் செலுத்துவது தானே. நாம் இறைவனிடத்தில் வைத்துள்ள அன்பு உண்மையாக இருந்தால், அகத்திலும் புறத்திலும் நம்மிடையே மாற்றங்கள் தோன்றும். மெய்தான் விரும்பி என்று பாடியதற்கு ஏற்ப, மனம் கசியும் கண்ணீர் பெருகும். இந்த நிலைகளை ஏற்கனவே அடைந்து விட்ட அடிகளாருக்கு இனி கல்வி தேவை அற்றது அல்லவா. இதற்கு மேலும் ஏதேனும் தேவையாக இருந்தால் அந்த நிலைக்கு இறைவனின் திருவருள் அழைத்துச் செல்லும் என்று நம்பிக்கையுடன் கற்பனைவும் இனி அமையும் என்று கூறுகின்றார். தனக்கு முன்னே தோன்றிய இறைவன், தனது திருப்பாதத்தை அடிகளாரின் தலையில் சூட்டிய இறைவன், திடீரென்று மறைந்து விட்டாரே என்று பதைபதைக்கும் அடிகளார், தனது அருகே இல்லாத கன்றினை நினைத்து தாய்ப்பசு மனம் கசிந்து உருகி, எப்போதும் அந்த கன்றையே நினைத்து கண்ணீர் சொரிவது போன்ற தன்மையை தான் அடைய வேண்டும், இறைவனின் திருவடிகளை நினைத்து தான் கதறவேண்டும் என்று விரும்புகின்றார். தனது விருப்பம் ஈடேற இறைவனையும் வேண்டுகின்றார். இந்த மாறுதலுக்கு அடிப்படை காரணமே அகப்பற்றும் புறப்பற்றும் இல்லாத அடிகளாரின் நிலை தானே. இந்த நிலையே சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்து என்று சம்பந்தரால் இந்த பதிகத்தின் பாடலில் கூறப்படுகின்றது.

உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்

கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே

கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே

சுற்றத்தாரால் உயிருக்கு எந்தவிதமான பலனும் இல்லை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அப்பர் பிரான் திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடல் (6..62.1) தான். எத்தாயார்=எத்துணை மேம்பட்ட தாயார்; மாடு=செல்வம்; சும்மாடு-சுத்தமான செல்வம், நமது செல்வங்களையும் நமது உறவுகளையும் குறிப்பிட்டு, அவற்றில் உண்மையாக நமக்கு உதவக் கூடியது யாது என்ற கேள்வியை அப்பர் பிரான் இந்த பாடலில் எழுப்புகின்றார். நமக்கு என்று அவர் குறிப்பிடுவது நமது உயிரைத் தான். உயிர் தனது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ளவும், உண்மையான மெய்ப் பொருளை அறிந்து கொள்ளவும் உதவும் பொருட்டு, இறைவன் நமக்கு கருவி கரணங்களை அளித்துள்ளார். அந்த கருவிகள் இல்லாமல் நாம் எதனையும் அறிய முடியாது. உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர், அந்த கருவி கரணங்களால் எந்த உதவியும் உயிருக்கு செய்ய முடியாது. எனவே உடலை விட்டு பிரிந்த உயிருக்கு உதவி தேவைப்படுகின்றது. ஈட்டிய வினைகளின் ஒரு பகுதியை சூக்கும் உடல் அனுபவித்து கழிக்கும் போதும், அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையவும், முடிந்தால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் உயிர் விரும்பும் போது, உதுவுவார் யார். இந்த பிறவியில் நமக்கு வாய்த்த தாய் தந்தையாரோ சுற்றத்தாரோ உதவ முடியுமா, அவர்கள் எவராலும் உதவ முடியாது. நாம் ஈட்டிய செல்வத்தால் ஏதேனும் உதவியை விலைக்கு வாங்க முடியுமா அதுவும் நடக்காது என்பதே நிதர்சமான உண்மை. இந்த உண்மை தான் இங்கே உணர்த்தப் படுகின்றது. செத்த பிறகு அந்த உயிர்க்கு உதவி தேவைப்படும் போது, யார் உதவி செய்ய வல்லவர், எந்த செல்வம் உதவக் கூடியது என்ற கேள்வியை அப்பர் பிரான் இங்கே கேட்கின்றார் இறைவன் ஒருவனே நமக்கு அந்த தருணத்தில் துணையாக இருந்து உதவி செய்வான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. எத்தந்தை என்று ஒருமையில் குறிப்பிட்ட அப்பர் பிரான் எத்தாயர் என்று பன்மையில் குறிப்பிட்டதை நாம் உணரலாம். ஒருவனை ஈன்ற தாயைத் தவிர, வேறு நான்கு பேரையும் தாயாருக்கு சமமாக கூறுவதுண்டு. அரசனின் மனைவி குடிமக்கள் அனைவர்க்கும் தாய், குருவின் மனைவி சீடர்கள் அனைவர்க்கும் தாய், அண்ணனின் மனைவி, அந்த குடும்பத்தில் மற்ற அனைவர்க்கும் தாய், தாயை ஈன்றவளும் தனது பேரக் குழந்தைகள் அனைவர்க்கும் தாயாக மதிக்கப் படுகின்றாள். செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை என்று நமது உறவினர்களை குறிப்பிட்ட அப்பர் பிரான், அவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் இங்கே கூறுகின்றார். சிறு விறகால் தீமூட்டி செல்லா நிற்பர் என்று கூறுகின்றார். சடலத்திற்கு இறந்தவரின் மூத்த மகன் கொள்ளி வைத்த பின்னர் சுற்றியிருக்கும் ஏனையோரும் சிறிய விறகு கட்டைகளை தீ மூட்டி, சடலத்தின் மீது போடுவது வழக்கம். அவ்வாறு போட்ட பின்னர் உடனே அந்த இடத்திலிருந்து நகர்ந்தால், மற்றவர்கள் தன்னைத் தவறாக நினைப்பாரோ என்ற எண்ணத்தில், தயக்கத்துடன் பலர் இருப்பதையும் அந்த தருணத்தில் நாம் காணலாம். இந்த நிலைமை தான் சிறு விறகால் தீ மூட்டி செல்லா நிற்பர் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த செயல் இது உயிரினுக்கு செய்யும் உதவி அல்ல. உயிர் பிரிந்த உடல் முற்றிலும் எரிந்து சாம்பலாக மாற வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் செயல்.

எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்

செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லாநிற்பர்

சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக்கா உடைய செல்வா என்றன்

அத்தா உன் பொற்பாதம் அடையப் பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே

திருமூலரும் யாக்கை நிலையாமை என்ற தலைப்பின் கீழ் இறந்த பின்னர் உயிருக்கு உதவுவார்கள் எவரும் இல்லை என்பதை உணர்த்துகின்றார். அந்த தருணத்தில் யாக்கை நிலையாமை என்பதை இறந்த உடலைச் சூழ்ந்து நிற்கும் அனைவரும் உணர்ந்தாலும், தீட்டு கழிப்பதற்காக குளித்த பின்னர், அந்த உணர்வினையும் மறந்து விடுவார்கள் என்று இங்கே கூறுகின்றார். நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்கள் என்பதற்கு, தீட்டு கழிப்பதற்காக குளித்த பின்னர், இறந்தவரைப் பற்றிய நினைப்பு கூட மறந்துவிடும் என்றும் பொருள் கொள்ளலாம். சூரை=ஒரு வகை முட்செடி.

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு

சூரையம் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே

இறந்த உடலினை புதைப்பதை பலர் பழக்கமாக கொண்டுள்ளனர். இதுவும் உற்றார் இறந்த உடல் அழுகி நோய்க் கிருமிகள் பெருகாமல் இருக்க வேண்டும் என்று தங்களது நலன் கருதி செய்யப்படும் செயலே தவிர, உயிருக்கு செய்யப்படும் உதவி ஆகாது. கொண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றில் (4.67.3), அப்பர் பிரான், உறவினர்கள் ஒன்று கூடி இறந்த உடலை மண்ணில் புதைத்து ஒளித்து வைப்பார்கள் என்று கூறுகின்றார். கதிர் நரம்பு=விளங்கும் நரம்புகள்: ஆர்த்து=செய்து: உழைஞர்=உற்றார் உறவினர்கள்: ஒளித்தல்=உடலை புதைத்தல்: ஓலெடுத்து=வாய் விட்டுக் கதறி

கால் கொடுத்து எலும்பு மூட்டிக் கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்துத்

தோல் உடுத்து உதிரம் ஆட்டித் தொகு மயிர் மேய்ந்த கூரை

ஓலெடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்

சேலுடை பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்து உளானே

இதுவரை, நாம் இறந்த பிறகு நமது உயிரினுக்கு எவரும் உதவி செய்யாமல் நிற்கும் நிலையை, பல திருமுறை பாடல்கள் வாயிலாக உணர்த்தப் பட்டதை அறிந்தோம். இப்போது இறைவன், நாம் இறந்த பின்னர் நமது உயிருக்கு செய்யும் உதவிகளை உணர்த்தும் பாடல்களை இப்போது காண்போம். ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றில் (6.88.5) நன்மைகள் இல்லாத நரகத்தை தனது தொண்டர்கள் பாராத வண்ணம் அருள் புரிபவன் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

பாங்குடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை

பாங்கிலா நரகு அதனைத் தொண்டரானார் பாராத வகை பண்ண வல்லான் தன்னை

ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும்

தீங்கில் திரு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு சுந்தரரின் தில்லைப் பதிகத்தினை (7.90) நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், தருமராசன், நம்மை செக்கில் இட்டு ஆட்டும் போது, அந்த கொடுமையைத் தவிர்த்து நம்மைக் காப்பாற்றும் கடவுள் சிவபெருமான் என்று சுந்தரர் கூறுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஓராது=அவர்களின் நிலையை ஆராயாது. இந்த பாடலில் சுந்தரர் பெருமான் தனக்கு அன்பராய் வாழும் அடியார்களை எவ்வாறு காப்பாற்றுவார் என்பதை கூறுகின்றார். மேலும் பெருமானின் அன்பராய் விளங்கும் அடியார்கள், உலக இன்பத்தை பெரிதாக கருதாமல் வாழ்வார்கள் என்பதையும் இங்கே உணர்த்துகின்றார். இவ்வாறு நம்மைக் காப்பாற்றும் பெருமானின் திருவடிகளை அடைந்த நாம், வாழ்க்கையில் பெறுவதற்குரிய பொருள் வேறேதும் இல்லை என்றும் இங்கே கூறுகின்றார்.

பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே பிரியாது உள்கி

சீரார்ந்த அன்பராய்ச் சென்று முன்னடி வீழும் திருவினாரை

ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்

பேராளர் புலியூர் சிற்றம்பலத்து எம் பெருமானை பெற்றாம் அன்றே

மணிவாசகப் பெருமானும் இதே கருத்தை வலியுறுத்தி, மூவேழ் சுற்றம் முரண் உரு நரகிடை இடை ஆழாமே அருள் அரசே போற்றி என்று சிவபிரானை போற்றுகின்றார். மேலும் மணிவாசகர் கண்டப்பத்து பதிகத்தின் முதல் பாடலில், ஐம்புலன்களின் சேர்க்கையால் மயங்கி இருந்து நரகத்தில் விழ இருந்த தனது சிந்தையை தெளிவித்து சிவபிரான் ஆட்கொண்ட தன்மையை குறிப்பிடுகின்றார்.

இந்திரிய வய மயங்கி இறப்பதற்கே காரணமாய்

அந்தரமே திரிந்து போய் அருநரகில் வீழ்வேற்குச்

சிந்தை தனை தெளிவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட

அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே

விசயமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் அப்பர் பிரான், பெருமானின் தொண்டர்கள் தென்திசைக்கு செல்ல நேர்ந்தாலும், இயமன் அவர்களுடன் இனிமையான மொழியில் பேசும் வண்ணம் பெருமான் உதவி புரிவார் என்று கூறுகின்றார். கொல்லை=முல்லை நிலம்.

கொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை

வில்லை ஏற்றுடையான் விசயமங்கை

செல்வ போற்றி என்பார்க்குத் தென்திசை

எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே

திருச்சேறை பதிகத்தின் ஒரு பாடலில் (5.75.5) சேறை செந்நெறிச் செல்வனார் இருக்கும்போது நாம் இயமனுக்கு பயப்பட வேண்டியதில்லை என்றும் இயமன் நம் முன்னர் தோன்றினாலும் அவனைத் துரத்தும் வழியை தான் கண்டதாகவும் அப்பர் பிரான் கூறுகின்றார். சேறை செந்நெறிச் செல்வனாரை வணங்கி அவரது அருள் பெற்று சிவலோகம் செல்வதே அப்பர் பிரான் உணர்த்தும் வழியாகும். எரி அயில்=நெருப்பு போன்று கூர்மையை உடைய வேல். எண்ணி நாளும்=நாள்தோறும் உயிர்களின் வாழ்நாட்களை எண்ணி கணக்கிட்டு, வாழ்நாள் முடிவடையும் தருணத்தில் உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதை நாட்களை எண்ணும் கூற்றுவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். துண்ணென் தோன்றில்=நடுக்கம் உண்டாகும் வகையில் முன்னே தோன்றினால்; துரக்கும் வழி=ஓட்டும் வழி; இயமன் நம்மை அழைத்துச் சென்றால், நாம் நமது வினைத் தொகையின் ஒரு பகுதியை கழிக்கும் தன்மையில் நமது உயிர் நரகத்தில் ஆழ்த்தப்பட்டும் சொர்க்கத்தில் இருத்தப்பட்டும், அதன் பின்னர் அடுத்த பிறவியை எதிர்கொள்ளும் நிலையினை அடைகின்றது. இயமன் நம்மை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, சிவபெருமான் நம்மை சிவலோகம் அழைத்துக் கொண்டு சென்ற பின்னர் நம்மை இயமனின் தூதுவர்கள் என்ன செய்ய முடியும். நம்மை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்லும் பெருமான், நமது வினைகள் அனைத்தையும் கழித்து விடுவதால், நாம் பிறவிச் சுழலிலிருந்து விடுதலையும் அடைகின்றோம்.

எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன்

துண்ணென் தோன்றில் துரக்கும் வழி கண்டேன்

திண்ணன் சேறை திருச்செந்நெறி உறை

அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே

நனிபள்ளி தலத்து பதிகத்தின் (4.70) ஏழாவது பாடலில் தனது அடியார்கள் நரகத்தில் வீழாமல் பாதுகாப்பவர் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுவதை நாம் கீழக்கண்ட பாடலில் கூறுகின்றார். அரவித்து=மிகுந்த ஒலியுடன், ஆரவாரத்துடன். வீடிலாத் தொண்டர்=விடுதல் இல்லாத தொண்டர்: சிவபிரானின் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுச் செல்ல விருப்பமின்றி என்றும் அவருக்குத் தொண்டராக வாழும் அடியார்கள்: சிவபிரான் தனது தொண்டர்களின் வினைத் தொகையை அறவே நீக்கி விடுவதால். அத்தகைய தொண்டர்கள் நரகத்துத் துன்பங்களை அனுபவிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி

அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார்

விரவித் தம் அடியராகி வீடிலாத் தொண்டர் தம்மை

நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே

தனது அடியார்களை வானுலகம் ஏற்றுபவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுவது போன்று, தனது அடியார்களுக்கு பெருமானுக்கு வானுலகம் அளிப்பவன் பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. வானுலகம்=உயர்ந்த உலகம், தேவர்களின் உலகமாகிய தேவலோகத்தினை விடவும் உயர்ந்த முக்தி உலகம் என்பதே இந்த பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. சேய்ஞலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (1.48.11) தேவாரப் பாடல்களை முறையாக பாடும் வல்லமை உடைய அடியார்கள், வானுலகு ஆள்வார்கள் என்று கூறுகின்றார். சேய்=பெருமானின் குழந்தையாகிய முருகப்பெருமான். தோயம்=நீர்; தோயம் என்ற சொல் தோய் என்று இங்கே எதுகை கருதி மாறியுள்ளது. சாய்=சார்பு; வண் வயல்=வளமை உடைய வயல்கள். முருகப் பெருமான் பற்றிய குறிப்பு காணப்படும் பதின்மூன்று தேவாரப் பாடல்களின் இந்த பாடலும் ஒன்று. வானுலகு ஆள்பவர் என்று சிவகணங்களின் தலைவராக இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார்.

சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவித்

தோய் அடைந்த வண் வயல் சூழ் தோணிபுரத் தலைவன்

சாயடைந்த ஞானம் மல்கு சம்பந்தன் இன்னுரைகள்

வாயடைந்து பாட வல்லார் வானுலகு ஆள்பவரே

சோபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (1.51.11) தேவாரப் பதிகங்களை முறையாக ஓதும் அடியார்களுக்கு பெருமான் வானுலகம் அருளுவார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். மேயவன்=பொருந்தி உறைபவன்:

சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் மேயவனைச்

சீலம் மிக்க தொல் புகழார் சிரபுரக் கோன் நலத்தால்

ஞாலம் மிக்க தண்டமிழான் ஞானசம்பந்தன் சொன்ன

கோல மிக்க மாலை வல்லார் கூடுவர் வானுலகே

திருச்செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (1.61.11) திருஞானசம்பந்தர் முறையாக தேவாரப் பாடல்களை பாடும் வல்லமை உடைய அன்பர்கள் வானுலகம் சென்றடைவார்கள் என்று கூறுகின்றார். படப்பை=தோட்டம்; இலங்கு=விளங்கும்; மறை இலங்கு தமிழ்=வேதங்களின் கருத்துகளை விளக்கும் தேவாரப் பாடல்கள்; நறை=நறுமணம்;

‘ கறை இலங்கு மலர்க் குவளை கண் காட்டக் கடி பொழிலின்

நறை இலங்கு வயற் காழித் தமிழ் ஞானசம்பந்தன்

சிறை இலங்கு புனற் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும்

மறை இலங்கு தமிழ் வல்லார் வானுலகத்து இருப்பாரே

திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.4.11) முறையாக தேவாரப் பாடல்கள் பாடும் அடியார்கள் வானுலகு ஆள்வார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நீதி=வேத ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ள முறை;

மாதொர் கூறுடை நற்றவனைத் திருவான்மியூர்

ஆதி எம் பெருமான் அருள் செய்ய வினாவுரை

ஓதி அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்

நீதியா நினைவார் நெடு வானுலகு ஆள்வரே

திருமங்கலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.10.8) திருஞானசம்பந்தர், பெருமானின் திருவடிகளைப் போற்றிப் புகழும் அடியார்கள் வானுலகம் செல்வதற்கு தகுதி உடையவர்கள் என்று கூறுகின்றார். பொலியும்=அழகுடன் விளங்கும்; மால்=பெரிய; வரை=மலை; புக்கு=சென்றடைந்து; வலி=வலிமை; பெருமானின் திருவடியை வணங்கும் புண்ணியர்கள் வானுலகம் செல்வது திண்ணம் என்று உணர்த்தும் பொருட்டு காண்மினே என்று கூறுகின்றார். தனது தேர் செல்லும் வழியில் தோன்றி தனது பயணத்தை தடுத்தது என்று தவறாக நினைத்து, தேரிலிருந்து இறங்கி கயிலை மலை இருக்குமிடம் நோக்கிச் சென்று மலையினைப் பேர்த்து எடுக்க முயற்சி செய்தபோது அந்த முயற்சி, தடைப்பட்ட பின்னர் தனது தவறினை உணர்ந்த அரக்கன் இராவணன், பெருமானைப் புகழ்ந்து போற்றி வணங்க, அவன் பால் இரக்கம் கொண்ட பெருமான், அவனுக்கு வாட்படையும் நீண்ட ஆயுளையும் அளித்தான். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை, திருமங்கலக்குடி தலத்தில் உறையும் பெருமானை, புலித் தோலினை ஆடையாக உடுத்தியவனை, பணிந்து வணங்கி அவனது திருவடிகளை போற்றும் அடியார்கள், நல்ல செயல்களைப் புரியும் உயிர்கள் பொருந்தி விளங்கும் வானுலகம் சென்றடையும் தகுதி படைத்தவர்களாக விளங்குவதை, உலகத்தவரே நீங்கள் காண்பீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொலியும் மால் வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட

வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடி

புலியின் ஆடையினான் அடி ஏத்திடும் புண்ணியர்

மலியும் வானுலகம் புகவல்லவர் காண்மினே

காறாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.15.11) தேவாரப் பதிகங்களை தங்களால் இயன்ற வரையில் இசையுடன் இணைத்து முறையாக பாடும் அடியார்கள், வானுலகு ஆள்வார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஏய்ந்த=பொருந்திய: ஆய்ந்த சீரான்=வேத ஆகமங்களில் ஆராய்ந்து சொல்லப் பட்ட புகழினுக்கு உரியவனாகிய பெருமான்; ஏத்துதல்=புகழுதல்;: வாய்ந்த=இயன்ற வரையில்:

ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக்காறாயில்

ஆய்ந்த சீரானடி ஏத்தி அருள் பெற்ற

பாய்ந்த நீர்க் காழியுள் ஞானசம்பந்தன் சொல்

வாய்ந்தவாறு ஏத்துவார் வானுலகு ஆள்வாரே

புகலித் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.54.1), தனது அடியார்களுக்கு வானுலகம் காட்டிக் கொடுப்பதே தனது எண்ணமாக கொண்டுள்ளவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அடைவோர்=திருவடியில் சரண் அடையும் அடியார்கள்; கருவார்ந்த=அருள் நிறைந்த; பெருமானின் அருள் பெற்றவர்கள் மட்டுமே செல்லக் கூடிய இடம் முக்தி உலகம் என்பதால், கருவார்ந்த வானுலகம் என்று முக்தி உலகம் உணர்த்தப் படுகின்றது என்பது மிகவும் தெளிவாக விளங்குகின்றது. பொருதல்=போர் புரிதல், இங்கே மோதுதல் என்று பொருள் கொள்வது பொருத்தம்; கடலின் அலைகள் இடைவிடாது மோதுவதால், சீர்காழி நகரின் கடற்கரைகளில் சங்குகள் சேர்க்கப் பட்டுள்ளன என்று கூறுகின்றார். திரு=செல்வம், இங்கே அருட்செல்வம் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம்.

உருவார்ந்த மெல்லியலோர் பாகம் உடையீர் அடைவோர்க்குக்

கருவார்ந்த வானுலகம் காட்டிக் கொடுத்தல் கருத்தானீர்

பொருவார்ந்த தெண்கடல் ஒண்சங்கம் திளைக்கும் பூம்புகலித்

திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே

மீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.62.11), திருஞானசம்பந்தர் பெருமானை தியானம் செய்து தேவாரப் பாடல்கள் பாடும் அடியார்கள் வானுலகம் அடைவார்கள் என்று கூறுகின்றார். உள்கி=தியானித்து; அகல் வானுலகம் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. பக்குவப்பட்ட உயிர்கள் எத்தனை வந்தாலும், அந்த உயிர்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பரந்த முக்தி உலகம் என்று பொருள் கொள்வது சிறப்பு. மொழிந்து (வாயினால் பாடல்கள் பாடி) உள்கி (மனதினால் நினைத்து) ஆடி (உடலால்) பெருமானை தியானிக்கும் அடியார்கள் என்று குறிப்பிட்டு மனம் மொழி மெய் ஆகிய மூன்றையும் பெருமானின் வழிபாட்டினில் ஈடுபடுத்தும் அடியார்கள் என்று குறிப்பிடுகின்றார். வேடம் உடைய என்ற தொடர் மூலம்,அடியார்களின் தேவைக்கேற்ப, வேறுவேறு வேடங்கள் எடுத்து அருள் புரியும் பெருமான் என்று உணர்த்துகின்றார்.

வேடமுடைய பெருமான் உறையும் மீயச்சூர்

நாடும் புகழார் புகலி ஞானசம்பந்தன்

பாடலாய தமிழ் ஈரைந்து மொழிந்து உள்கி

ஆடும் அடியார் அகல் வானுலகம் அடைவாரே

கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.68.9) திருஞானசம்பந்தர், பெருமானின் புகழினைக் குறிப்பிடும் பாடல்களை முறையான இசையுடன் பொருத்திப் பாடும் அடியார்கள் வானுலகம் சென்றடைவார்கள் என்று கூறுகின்றார். திரு=திருமகள்; திருமரு=திருமகள் உறையும்’ நுதல்=நெற்றி.; கருவரை= கரிய மலை போன்ற உடலை உடைய அரக்கன் இராவணன். ஈசன்=தலைவன்; திருமகளைத் தனது மார்பில் கொண்டுள்ள திருமாலும், சிறந்த தாமரை மலரில் திகழும் பிரமனும் ஆகிய இருவரும் அறிய முடியாத வண்ணம், நெடிய தீப்பிழம்பாக தோன்றிய தலைவனும், கரிய மலை போன்ற உடலை உடைய அரக்கன் இராவணனை கயிலை மலையின் கீழே அடர்த்து நெருக்கியவனும் தனது நெற்றியில் கண் உடையவனும் கடம்பூர் தலத்தில் பொருந்தி இருப்பவனும் ஆகிய பெருமானை புகழும் பாடல்களை நல்ல பயிற்சி பெற்று பாடும் அடியார்கள் வானுலகம் சென்று அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

திருமரு மார்பில் அவனும் திகழ் தரு மாமலரோனும்

இருவருமாய் அறிவொண்ணா எரி உருவாகிய ஈசன்

கரு வரை காலில் அடர்த்த கண்ணுதலான் கடம்பூரில்

மருவிய பாடல் பயில்வார் வானுலகம் பெறுவாரே

மூக்கீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.11) திருஞானசம்பந்தர், முறையாக தேவாரப் பதிகங்களை பாடும் ஆற்றல் பெற்ற அடியார்கள், வானுலகினை ஆளும் தகுதி பெற்றவர்களாக விளங்குவார்கள் என்று கூறுகின்றார். மும்முடி மன்னர்=சேர, பாண்டிய மன்னர்களை வென்று அவர்களது முடியினையும் சூட்டிக் கொண்டமையால், கோச்செங்கட் சோழனை மும்முடி மன்னர் என்று கூறுகின்றார். மல்=வலிமை; சேர்த்திய= வழிப்படுத்திய; ஆற்றுப்படுத்திய; ஆற்றுப்படை என்பது தமிழ் இலக்கிய வகைகளில் ஒருவகை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாக அமைந்துள்ளன. திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) ஆகியவை இந்த ஐந்து நூல்கள்; இந்த நூல்களில் புலவர்கள், வள்ளல்கள் இருக்கும் நாடு, அதன் தன்மை, வள்ளலின் கொடைத்திறன் ஆகியவற்றை குறிப்பிட்டு, அடுத்தவரை அந்த வள்ளலைச் சந்தித்து பயனடையும் வண்ணம் வழிகாட்டுவார்கள். சிவபெருமானது அருளினால் பயனடைந்த ஞானசம்பந்தர், மூக்கீச்சரம் தலத்தில் உறையும் பெருமானின் தன்மைகளை விளக்கி, நம்மையும் பெருமான் இருக்கும் இடம் சென்று பயனடையும் வண்ணம் வழிநடத்துவதை, சேர்த்திய செந்தமிழ் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். அருட்செல்வம் மிகுந்த பெருமான், என்பதால் நாம் கேட்பன அனைத்தும் கிடைக்கும் என்பதை உணர்த்தும் பொருட்டு, பெருமானை செல்வர் என்று, அருட்செல்வம் மிகுந்த செல்வர் என்று அறிமுகப் படுத்துவது நயமாக உள்ளது. வல்லமை வாய்ந்தவரும், பாண்டியநாடு, சேரநாடு மற்றும் சோழநாட்டு மணிமகுடங்களைத் தரித்தவரும் ஆகிய கோச்செங்கட் சோழன் எழுப்பிய மூக்கீச்சரம் திருக்கோயிலில் உறைபவரும், அருட்செல்வம் மிகுந்தவரும் ஆகிய சிவபெருமானை நினைத்து, அவன் இருக்குமிடம் சென்றடைந்து, அவனை வணங்கி வாழ்த்தி, அவனது அருளினைப் பெறும் வண்ணம் வழிப்படுத்தும் இந்த செந்தமிழ்ப் பாடலை, நல்லவராக விளங்கும் சான்றோர்கள் வாழும் சீர்காழி நகரைச் சார்ந்த ஞானசம்பந்தன் இயற்றிய இந்த பத்து பாடல்களை, சொல்லும் வல்லமை உடைய அடியார்கள் வானுலகினை ஆளும் தகுதி படைத்தவர்களாக விளங்குவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

மல்லையார் மும்முடி மன்னர் மூக்கீச்சரத்து அடிகளைச்

செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்

நல்லராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன

சொல்ல வல்லார் அவர் வானுலகு ஆளவும் வல்லரே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (3.44.11) தேவாரப் பாடல்களை பாடும் அடியார்கள் வானுலகு ஆள்வதற்கு தகுதி படைத்தவர்களாக விளங்குவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அதாவது, அத்தகைய அடியார்கள் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குதல் முறை என்று கூறுகின்றார். அழகும் குளிர்ச்சியும் நிறைந்த சீர்காழி தலத்தில் அவதரித்தவனும், நான்மறைகளை கற்றுத் தேர்ந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன், பாய்கின்ற நீரினால் சூழப்பட்ட கழிப்பாலை தலத்தில் உறையும் இறைவனை, சிந்தையால் உணர்ந்து சொன்ன செந்தமிழ் பாடல்களை ஓதுவதில் வல்லமை வாய்ந்த அடியார்கள், எல்லோருக்கும் முன்னதாக வானுலகினை ஆளும் வாய்ப்பினை பெறுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அந்தண் காழி அருமறை ஞானசம்

பந்தன் பாய்புனல் சூழ் கழிப்பாலையைச்

சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்

முந்தி வானுலகு ஆடல் முறைமையே

திருமாகறல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.72.6) திருஞானசம்பந்தர், பெருமானை தியானிக்கும் அடியார்களின் பழவினைகள் முற்றிலும் அழிக்கப் படுவதால், அவர்கள் வானுலகம் செல்வது மிகவும் எளிதாக மாறிவிடுகின்றது என்று கூறுகின்றார். மறையோர்கள் மற்றும் பலவிதமான மாந்தர்கள் இறைவனை வழிபடுவதால் ஏற்படும் ஆரவாரம் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. இன்னவகை=தங்களுக்கு தோன்றிய முறையில்; இமையோர்=தேவர்கள்; இமையோரில் எழு என்ற தொடர் மூலம், சத்துவ குணம் கொண்ட அடியார்கள் வானவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. படிமம்=உருவம், வேடம் மன்னு=என்றும் நிலையாக இருக்கும்: வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் எந்த காலத்திற்கும் பொருந்துவனவாக இருப்பதால் மன்னு மறை என்று குறிப்பிடுகின்றார். ஒல்க=சுருங்க: என்றும் நிலையாகவும் உண்மையாகவும் இருக்கும் கருத்துகளை சொல்லும் வேதங்களை நன்கு கற்றறிந்த மறையோர்களும், பல விதமான சிவ வேடங்கள் தாங்கிய சிவனடியார்களும் ஒன்று கூடி, தங்களுக்கு விருப்பமான வகையில் இனிமையாக இறைவனை இறைஞ்சி தொழும் தன்மையில் தேவர்களை ஒத்து விளங்குகின்றனர். இவ்வாறு சிறப்பாக மாகறல் தலத்தில் தொழப்படும் சிவபெருமான், மின்னல் போன்று ஒளிவீசும் விரிந்த செஞ்சடையில், சுருண்டு அழகாக காணப்படும் சடையில், மலர்கள் கங்கை நதி மற்றும் பிறைச் சந்திரன் ஆகியவற்றை அணிந்தவனாக காணப்படுகின்றான். அந்த பெருமானை நினைத்து வழிபடும் அடியார்களின் பழவினைகள் சுருங்கி செயலற்று போகும். இந்த தன்மையால் அவர்கள் மிகவும் உயர்ந்ததாகிய முக்தி உலகம் செல்வது எளிமையான செயலாக மாறிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (3.76.11) திருஞான சம்பந்தர், தொடர்ந்து முறையாக தேவாரப் பாடல்கள் பாடும் அடியார்கள், பெருமானின் அருள் கைகூடுவதால், உயர்ந்த வானுலகமாகிய முக்தி உலகம் சென்றடைந்து நிலையாக ஆங்கே இருப்பார்கள் என்று கூறுகின்றார்.

மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழிபதி மன்னு கவுணி

வெந்த பொடி நீறணியும் வேதவனம் மேவு சிவனின் அருளினால்

சந்தம் இவை தண்டமிழின் இன்னிசை எனப் பரவு பாடல் உலகில்

பந்தன் உரை கொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வானுலகமே

கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (3.89.11) திருஞானசம்பந்தர், தேவாரப் பாடல்களை முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், நன்மை பயக்கும் வானுலகம் சென்றடைவார்கள் என்று கூறுகின்றார். காய்ந்து=கோபம் கொண்டு; தன்னை வழிபட்டுக் கொண்டிருந்த சிறுவன் என்பதை பொருட்படுத்தாமல், மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனை உதைத்து வீழ்த்தியவர் என்று பாடலின் முதல் அடியில் குறிப்பிடப் படுகின்றது. கடிகொள்=சிறந்த காவலை உடைய; அடிகள்=தலைவர்;

காய்ந்து தம் காலினால் காலனைச் செற்றவர் கடிகொள் கொச்சை

ஆய்ந்து கொண்டு இடமென இருந்த நல்லடிகளை ஆதரித்தே

ஏய்ந்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன

வாய்ந்த இம்மாலைகள் வல்லவர் நல்லர் வானுலகின் மேலே

வடகுரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (3.91.4) திருஞானசம்பந்தர், பெருமானின் திருவடிகளைத் தொழவேண்டும் என்ற எண்ணம் உடைய அடியார்கள் வானுலகம் சென்றடைவார்கள் என்று கூறுகின்றார். துத்தி=அலைத்து; உள்ளக்குறி= குறிக்கோள்; கறியுமா=காரம் உறைக்கும்; கதலி=வாழை; மறி= மான் கன்று; உலாம்= பொருந்திய; வான்=உயர்ந்த; மிகக் கூடுவார்=என்றும் கூடியிருந்து; உறைப்புச் சுவையினை கொண்ட மிளகுக் கொடிகளையும் வாழைப் பழங்களையும் கலந்து அடித்துக் கொண்டு வந்து, தனது இரண்டு கரைகளிலும் வீசி எறியும், அகன்ற காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள குரங்காடுதுறை என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமானின், தனது கையினில் மான் கன்றினை ஏந்தியுள்ள பெருமானின், மலர் போன்ற திருவடிகளைத் தொழுது உள்ளம் உருக போற்றும் குறிக்கோள் கொண்டவர்களாக விளங்கும் அடியார்கள், மறுமையில் உயர்ந்த உலகமாகிய சிவலோகத்தை அடைந்து என்றும் ஆங்கே வாழ்ந்து மேன்மையுடன் மகிழ்ந்து இருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி

எறியுமா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை

மறி உலாம் கையினர் மலரடி தொழுதெழ மருவும் உள்ளக்

குறியினார் அவர் மிகக் கூடுவார் நீடு வானுலகின் ஊடே

இதே பதிகத்தின் கடைப் பாடலில் (3,91,11) தம்மால் இயன்ற அளவு இசையுடன் இணைத்து, தேவாரப் பாடல்கள் பாடும் அடியார்கள் வானுலகம் சென்றடைவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தாழ்=மலையிலிருந்து கீழே இறங்கி பள்ளத்தை நோக்கி வரும்; போழ்=பிளவு பட்ட, போழிள=இளம் பிறைச் சந்திரன்; இந்த பாடலில் அடியார்கள் தங்களால் முயன்ற அளவு இசையோடு இணைத்து தேவாரப் பாடல்களை பாடினாலும் பெருமான், அத்தகைய அடியார்களுக்கு வானுலகம் அளிப்பார் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமானின் அருள் பெறுவதற்கு, அவர் பால் மிகுந்த அன்பு கொண்டு மனம் ஒன்றி வழிபடுதல் வேண்டும். தேவார திருவாசக பாடல்களை அதற்குரிய பண்ணுடன் பாட முடியவில்லையே என்று கவலை கொள்ளாமல், தங்களால் இயன்ற அளவு பாடினாலும் உரிய பலன் கிடைக்கும் என்று சம்பந்தர் கூறுகின்றார். பதிகத்தின் பொருளை புரிந்து கொண்டு மனமொன்றி பாடுவது தான் முக்கியம்.

தாழ் இளம் காவிரி வடகரை அடை குரங்காடுதுறைப்

போழிள மதி பொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்

காழியான் அருமறை ஞானசம்பந்தன கருது பாடல்

கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வானுலகின் ஊடே

குறுக்கை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.49.8) அப்பர் பிரான், திருக்கோயிலில் விளக்கினை ஏற்றி., பெருமானின் சன்னதியில் ஒளிவீசச் செய்யும் அடியார்களுக்கு குறைவற்ற செல்வமாகிய வானுலகினில் உறைகின்ற பேற்றினை பரிசாக பெருமான் அளிப்பார் என்று கூறுகின்றார். நிறைமறை=நிறைந்த வேதங்கள்; கறை நிறத்து எலி=கறுத்த நிறத்தை உடைய எலி; மகாபலியின் வரலாறு இங்கே கூறப்பட்டுள்ளது. விளக்கினைத் தூண்டிய எலி, அருள் பெற்ற நாள் ஒரு மகா சிவராத்திரி என்று சொல்லப்படுகின்றது. விளக்கினைத் தூண்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்பட்ட செயல் அல்ல என்பதை உணர்த்தும் வண்ணம், தனது மூக்கு சுட்டுவிடவே கோபம் கொண்ட எலி திரியைத் தூண்டியது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கோயிலில் விளக்கு எரிப்பவர்கள், தெரிந்து செய்தாலும், தெரியாது செய்தாலும் அதன் பலன் அவர்களுக்கு கிடைக்கும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது.

நிறை மறைக்காடு தன்னில் நீண்டு எரி தீபம் தன்னைக்

கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட

நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம்

குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே

குரக்குக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.75.10) பெருமான் வரமருள, வானுலகம் ஆளும் வாய்ப்பினை அடியார்கள் பெறுவார்கள், அதாவது சிவகணங்களுக்கு தலைவராக விளங்கும் வாய்ப்பினை பெறுவார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வரத்தன்=வரம் அருள் புரிபவன்; வரதன் என்ற சொல்லின் விகாரம்; ஒல்க=குறைய; குரக்கினம்=குரங்கு கூட்டங்கள்; முடி உரத்தை=தலைகள் மற்றும் வலிமையை;

இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி

உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம்

குரக்கினம் குதி கொள்ளும் குரக்குக்கா

வரத்தனைப் பெற வானுலகு ஆள்வரே

சித்தக் குறுந்தொகை என்று அழைக்கப் படும் பதிகத்தின் முதல் பாடலில் (5.97.1) பெருமானின் திருவடிகளை வணங்கும் அடியார்கள் வானுலகு ஆள்வார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அணியார்=அணி+ஆர், அழகு பொருந்திய; முந்தி=தலையின் முன் புறத்தில் அனைவரும் காணும் வண்ணம்; வந்தித்தல்=வாழ்த்துதல்; அந்தி வான்=மாலை நேரத்து வானம்; பதிகத்தின் முதல் பாடலில் பெருமானை வணங்கும் அடியார்கள் வானுலகு ஆள்வர் என்று கூறும் அப்பர் பிரான், பதிகத்தின் கடைப் பாடலிலும் இதே கருத்தை உணர்த்துகின்றார். இந்த பாடலில் பெருமானின் திருவடிகளை நாள்தோறும் வலம் வரும் அடியார்கள், வானுலகம் ஆளும் வாய்ப்பினை பெறுவார்கள் என்று கூறுகின்றார்.

சிந்திப்பார் மனத்தான் சிவன் செஞ்சுடர்

அந்தி வான் நிறத்தான் அணியார் மதி

முந்தி சூடிய முக்கண்ணினான் அடி

வந்திப்பார் அவர் வானுலகாள்வரே

திருவாரூர் பதிகத்தின் பாடலில் (6.34.8) அப்பர் பிரான், சிவபெருமான், தன்னைப் புகழ்ந்து கீதங்கள் பாடும் அடியார்களுக்கு, பண்டைய நாளிலிருந்தே வானுலகம் கொடுத்து வருகின்றார் என்று கூறுகின்றார். முயலகன்=தாருகவனத்து முனிவர்கள் பெருமான் மீது ஏவிய அரக்கன். பூதத்தான்=பூத கணங்களை உடைய நந்தி தேவன்; பொரு நீலி=செம்மை நிறத்து திருமேனி உடைய உன்னுடன் பொருந்தும் வண்ணம் நீல நிறத்து உடலைப் பெற்றுள்ள பார்வதி தேவி; புனிதன்=பிரம தேவன்; மறை நால்வர்=சனகாதி முனிவர்கள்; அரக்கன் முயலகனால் எவருக்கும் தீங்கு ஏற்படாவண்ணம், அவனைத் தனது பாதத்தின் கீழே அழுத்தியவாறு நடனம் ஆடுபவனே, உலகினில் மேம்பட்ட சுடரொளியாகத் திகழ்பவனே, உனது புகழினை பாடல்களாக பாடும் அடியார்களுக்கு அழியாத தன்மை உடைய நிலையான இன்பம் அளிக்கும் வீடுபேற்றினை அருளுபவனே, பூத கணங்களை உடைய நந்தி தேவர் உடனிருக்க, தனது செம்மை நிறத்திற்கு பொருத்தமாக இருக்கும் வண்ணம் நீல நிறத்து திருமேனியை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டவாறு, புனிதனாக விளங்குபவனாக, பொய்களைத் தவிர்த்து உண்மையான செய்திகளையே சொல்லும் வேதங்களில் வல்லவராக விளங்கிய சனகாதி முனிவர்கள் ஆகியோருக்கு வேதங்களை விவரித்து உபதேசம் செய்த பெருமானே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப் பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ

கீதத்தை மிகப் பாடும் அடியார்க்கு என்றும் கேடிலா வானுலகம் கொடுத்த நாளோ

பூதத்தான் பொருநீலி புனிதன் மேவிப் பொய்யுரையா மறைநால்வர் விண்ணோர்க்கு என்றும்

வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்டநாளே

குற்றம்=உடலுடன் இணைந்துள்ள அறுவகைக் குற்றங்கள் இவற்றை அகப்பகை குற்றங்கள் என்று கூறுவார்கள். காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாச்சரியம் எனப்படும் இந்த குற்றங்கள் நாம் பொருட்களின் மீது பற்று கொள்வதற்கு காரணமாக உள்ளன. ஞானம், அருள், தவம், பொறை, வாய்மை, அன்பு, ஐம்பொறி அடக்கல் ஆகிய குணங்கள் பற்றினை தவிர்க்கும். எனவே இத்தகைய குற்றங்கள் இல்லாதவர்களாக நாம் விளங்கினால் தான் பற்று ஏதும் இல்லாத நிலையினை அடைந்து முக்தி நிலை அடைவதற்கு தகுதி உள்ளவர்களாக மாற முடியும்.

பொழிப்புரை:

சுற்றங்களும் யான் எனது எனப்படும் பற்றும், பெருமானை அறிந்து பெருமானிடத்தில் அறிவு செல்வதைத் தடுத்து பெருமானுடன் ஒன்று சேரும் நெறியினில் தளர்வினை ஏற்படுத்தும் என்பதால், சுற்றங்களையும் சுற்றங்கள் பால் வைத்துள்ள பற்றினையும் அறவே நீக்கி, குற்றம் ஏதும் இல்லாத குணங்களுடன் கூடி விளங்கும் அடியார்களை மேலோர்கள் வாழும் முக்தி உலகத்திற்கு அழைத்துச் செல்லும் வழியினை கற்று செயல்படுத்தும் பெருமான் வீற்றிருக்கும் தலம் கருப்பறியலூர் ஆகும்.

பாடல் 2:

சுற்றமொடு பற்றவை (2.031) பாடல்கள் 1 தொடர்ச்சி, 2(திதே 0209)

வண்டு அணை செய் கொன்றையது வார்சடைகள் மேலே

கொண்டு அணை செய் கோலமது கோள் அரவினோடும்

விண்டு அணை செய் மும்மதிலும் வீழ்தர ஒரம்பால்

கண்டவன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

கோள்=துன்பம் மற்றும் வலிமை என்று இரு பொருள் கொண்ட சொல். இங்கே வலிமை என்ற பொருள் பொருத்தமாக உள்ளது. கோலம்=அழகு; வார்சடை=நீண்ட சடை; விண்டு= தமது இடத்தை விட்டு நீங்கி; பறக்கும் தன்மையால் ஓரிடத்திலிருந்து நீங்கி எளிதாக மற்றோர் இடத்தை அடைந்து; தங்களது மூன்று பறக்கும் கோட்டைகளும், ஒரே அம்பினால் மட்டுமே அழிக்கப்பட முடியும் என்பது திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வரம். எனவே ஒரே நேர்க்கோட்டில் வந்த போதிலும், எப்போதும் பறந்து கொண்டிருந்த கோட்டைகள் என்பதால், அந்த நிலையிலிருந்து அவர்களால் எளிதில் மாறி, தங்களை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும் இந்த காரணம் பற்றியே அவர்கள், ஒரே கோட்டினில் வாராத வண்ணம் வேறுவேறு திசையில் பறந்து செல்பவர்களாக இருந்தனர். ஆனால் பெருமான் தனது ஆற்றலின் மூலம், அந்த மூன்று கோட்டைகளை ஒரே நேர்க்கோட்டில் வரும் வண்ணம் இழுத்ததும் அன்றி, அவ்வாறு அந்த கோட்டைகள் இணைந்து இருந்த சிறிய நேரத்திலேயே, ஒரே அம்பினைக் கொண்டு அந்த கோட்டைகளை அழிக்கின்றார். இவ்வாறு அந்த அரக்கர்கள் பெற்றிருந்த வரத்தின் நிபந்தனையின் வண்ணமே இந்த கோட்டைகளை பெருமான் அழிக்கின்றார்.

பொழிப்புரை:

வண்டுகள் சென்று அடையும் கொன்றை மலர் மாலையினை தனது நீண்ட சடையில் அணிந்தவனும், வலிமை மிகுந்த பாம்பு சென்று அணையும் அழகிய திருமேனியை உடையவனும், தங்களது பறக்கும் தன்மையால் ஓரிடத்திலிருந்து நீங்கி எளிதாக மற்றோர் இடத்தினை அடைந்து ஆங்கே உள்ளவர்க்கு துன்பம் விளைவிக்கும் மூன்று பறக்கும் கோட்டைகளும் அழிந்து பொடியாக கீழே விழும் வண்ணம் ஒரே அம்பினை எய்து திரிபுரங்களின் வீழ்ச்சியைக் கண்டவனும் ஆகிய பெருமான் இருப்பது கருப்பறியலூர் தலமாகும்.

பாடல் 3:

சுற்றமொடு பற்றவை (2.031) பாடல்கள் 3, 4, 5, 6, 7, 8, 9 (திதே 210)

வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாக

போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற

நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும்

காதவன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

வேள்வி முதலாக=வேள்வி முதலாகிய பல நற்செயல்களில் ஈடுபட்டு; போதினொடு= பொழுதோடு, உரிய காலத்தில்; போது=அப்போது மலர்ந்த மலர்; சம்பந்தர் இந்த தலம் சென்ற காலத்தில், இந்த தலத்தில் வேதியர்கள் அதிகமாக இருந்தனர் போலும்; அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய ஆறு தொழில்களையும் செய்து இருந்தமை, வேள்வி முதலாக என்ற சம்பந்தரின் கூற்று நமக்கு உணர்த்துகின்றது. ஒரு காதினில் குழை அணீந்தவனாக பெருமானை சித்தரித்து, மற்றொரு காதினில் தோடு அணிந்தவன் என்பதை உணர்த்தி, மாதொருபாகனாக பெருமான் இருக்கின்ற நிலையை பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

பொழிப்புரை:

வேதியர்கள் வேதம் ஓதுவது, வேதம் கற்றுக் கொடுப்பது, வேள்வி வளர்ப்பது, வேள்வி செய்து வைப்பது ஆகிய செயல்களை புரிந்து கொண்டு, தவறாமல் ஒவ்வொரு பொழுதிலும் அப்போது மலர்ந்த பூக்களை பெருமானுக்கு மாலைகளாக சாத்தியும் அருச்சனை செய்தும் எங்களது நாதனே என்று வழிபட, அவர்களது வழிபாட்டினை ஏற்றுக் கொள்ளும் இறைவன் பிரளய காலத்தில் அடர்ந்த இருளினில் தனது காதில் தொங்கும் வண்ணம் அணிந்துள்ள குழை அசைந்து ஆடும்படி நடனம் ஆடுகின்றான். இவ்வாறு குழை அசைந்து ஆடியவாறு தொங்கும் காதினை உடைய பெருமான் இருக்கும் தலம் கருப்பறியலூர் ஆகும்.

பாடல் 4:

சுற்றமொடு பற்றவை (2.031) பாடல்கள் 3, 4, 5, 6, 7, 8, 9 (திதே 210)

மடம்படு மலைக்கு இறைவன் மங்கையொரு பங்கன்

உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனை

தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால்

கடந்தவன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

மடம்படு என்ற சொல்லினை மலைக்கு இணைத்தும், மங்கையுடன் இணைத்தும் இருவகையாக அறிஞர்கள் பொருள் கொள்கின்றனர். மடம்=ஆசிரமம்; பல ஆசிரமங்கள் அமைத்து முனிவர்கள் தங்கி தவம் செய்யும் இமயமலை என்பது ஒரு பொருள். மடம்=மடப்பம், பேதைமை, மென்மை; மென்மையான உடலினை உடைய பார்வதி தேவி என்பது மற்றொரு பொருள்; மடம் என்பது பெண்களுக்கு இருக்க வேண்டிய சிறந்த குணங்களில் ஒன்றாக கருதப்பட்டு அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய சிறந்த குணங்களைக் கொண்டிருந்த பிராட்டி என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. உடம்பினை விடக்கருதி நின்ற மறையோன்= மார்க்கண்டேயன்; தனது வயது பதினாறு என்று விதிக்கப் பட்டுள்ளது என்பதை தனது தந்தையார் மூலம் அறிந்து கொண்ட சிறுவன் மார்க்கண்டேயன் தனது வாழ்நாளை நீட்டிக்க வேண்டும் என்று ஒரு போதும் விரும்பியதில்லை. தான் இறக்கும் தருவாயிலும் இறைவனை வழிபாடு செய்யவேண்டும் என்பதே அவனது விருப்பமாக இருந்தது. எனவே இறப்பு வருவது குறித்து அவன் அச்சம் கொள்ளாமல் தான் இருந்தான். மேலும் இறப்பினை எதிர்கொள்ள தயாராகவும் இருந்தான். இந்த செய்தியே இங்கே உடம்பினை விடக்கருதி நின்ற மறையோன் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. உயிர் கால=உயிர் போக அணவு=நெருங்கிய; கடந்தவன்=அடியார்க்கு வந்த துன்பத்தைத் தனது துன்பமாக கருதி அதனைப் போக்கிக் கொண்டு கடந்தவன்;

பொழிப்புரை:

பல ஆசிரமங்கள் அமைத்து தவம் செய்த முனிவர்கள் தங்கிய இடமாகிய இமயமலையின் தலைவன் இமவானின் மகளாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் பொருத்தி வைத்துள்ள இறைவன், குறித்த நாளில் இறப்பதற்கு தயாராக இருந்த சிறுவன் மார்க்கண்டேயனைத் தொடர்ந்து வந்து அவனது உயிரினை பறிக்கும் நோக்கத்துடன் அவனை நெருங்கிய இயமனின் உயிர் போகும் வண்ணம் அவனைக் காலால் உதைத்து, இயமனால் தனது அடியானுக்கு நேரவிருந்த ஆபத்தினைக் கடந்த பெருமான் உறையும் தலம் கருப்பறியலூர் ஆகும்.

பாடல் 5:

சுற்றமொடு பற்றவை (2.031) பாடல்கள் 3, 4, 5, 6, 7, 8, 9 (திதே 210)

ஒருத்தி உமையோடும் ஒரு பாகம் அதுவாய

நிருத்தன் அவன் நீதியவன் நித்த நெறியாய

விருத்தன் அவன் வேதமென அங்கம் அவை ஓதும்

கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

நிருத்தன்=நடனம் ஆடுபவன்; நித்தன்=அழியாமல் என்றும் இருப்பவன்; விருத்தன்= முதியவன் என்று பொதுவான பொருள்; இங்கே அனைவர்க்கும் முன்னே தோன்றியவன் என்பதால் அனைவரையும் விடவும் முதியவன் என்று சொல்லப் படுகின்றது; அனைவர்க்கும் மூத்தவன் என்று பொருள் பட விருத்தன் என்று கூறப்பட்டுள்ளது. கருத்தவன் என்பதற்கு வேதங்களின் பொருளை கருத்தில் கொண்டுள்ளவன் என்பது பொருள். வேதங்களின் பொருளை நன்கு ஆராய்ந்து தனது மனதில் கொண்டுள்ள பெருமான் என்பதால் தானே சனகாதி முனிவர்கள் வேதங்களின் பொருளை சரியாக புரிந்து கொள்வதற்கும் தங்களது ஐயப்பாட்டினைத் தீர்த்துக் கொள்வதற்கும் பெருமானை நாடினார்கள். வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் ஆராய்ந்து உணர்ந்தவன் என்று இங்கே கூறுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய பாசூர் தலத்துப் பாடலை (6.83.5) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் பெருமான் வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஆராய்ந்து பொருள் உணர்ந்து கொண்டு பாடினார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

வேடனாய் விசயன் தன் வியப்பைக் காண்பான் விற்பிடித்து கொம்புடைய ஏனத்தின் பின்

கூடினார் உமையவளும் கோலம் கொள்ளக் கொலைப் பகழி உடன் கோத்துக் கோரப் பூசல்

ஆடினார் பெருங்கூத்துக் காளி காண அருமறையோடு ஆறங்கம் ஆய்ந்து கொண்டு

பாடினார் நால்வேதம் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே

ஓதும் என்ற சொல்லை வேதங்கள் செய்யும் செயலைக் குறிப்பதாக வைத்துக் கொண்டால் வேதங்கள் மற்றும் அங்கங்களின் மையப் பொருளாக, கருத்தாக இருப்பவன் என்று பொருள் கொள்ளலாம். இவ்வாறு சிலர் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் இந்த பதிகத்தின் பெரும்பாலான பாடல்கள், கற்றவன் கண்டவன் காதவன் கடந்தவன் கண்ணவன் காதினன் காய்ந்தவன் கரந்தவன் என்று பெருமானின் பண்பு, தன்மை அல்லது செயலுடன் தொடர்பு கொண்டிருப்பதால், கருத்தவன் என்ற சொல்லுக்கு கருத்தினை உடையவன் என்று பொருள் கொள்வதே மிகவும் பொருத்தமாக உள்ளது.

ஒருத்தி=ஒப்பற்றவள்; உமை அன்னையை ஒப்பற்றவள் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் சோற்றுத்துறை பதிகத்தின் பாடலை (6.44.7) நினைவூட்டுகின்றது. மாமணி=சிந்தாமணி; நினைத்ததை அளிக்கும் சிந்தாமணி தேவலோகத்தில் இருப்பதாக நம்பப் படுகின்றது. வண்மை மனம்=வேண்டும் வரத்தினை அளிக்கும் மனம்.

வானவனாய் வண்மை மனத்தினானே மாமணி சேர் வானோர் பெருமான் நீயே

கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே கடிய அரணங்கள் மூன்று அட்டானே

தானவனாய்த் தண்கயிலை மேவினானே தன் ஒப்பாரில்லாத மங்கைக்கு என்றும்

தேனவனே திருச்சோற்றுத்துறை உளானே திகழொளியே சிவனே உன் அபயம் நானே

அடியார்கள் வேண்டும் வரத்தினை அளிக்கும் சிறந்த தேவனாக விளங்குபவனே. நினைத்ததை அளிக்கும் சிறந்த மணியாகிய சிந்தாமணி சென்று சேரும் தேவர்களின் பெருமானாக இருப்பவனே, பன்றி வேடம் தரித்து தவம் புரிந்து கொண்டிருந்த அர்ஜுனனை கொல்வதற்காக ஓடிய பன்றியின் பின் சென்று அதனைக் கொன்றவனே, வலிமையான அரண்கள் கொண்ட மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவனே, அடியார்க்கு எதனையும் அளிக்க வல்லவனே, குளிர்ந்த கயிலாய மலையினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவனே, தனக்கு ஒப்பாக வேறு எந்த பெண்மணியும் இல்லாத அளவுக்கு அழகும், வீரமும், திறமையும் வாய்ந்த பார்வதி தேவிக்கு தேன் போன்று இனிப்பவனே. சந்திரன் சூரியன் ஆகிய அனைத்து ஒளிகளுக்கும் மூல காரணமாக திகழும் ஒளியே, சோற்றுத்துறை இறைவனே, சிவபெருமானே, அடியேன் உன்னை சரணடைந்து உனக்கு அடைக்கலப் பொருளாக மாறியுள்ளேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல். ஒருத்தி என்ற சொல்லுக்கு ஒருமித்த கருத்தினை உடையவள் என்று பொருள் கொண்டு, பெருமானுடன் ஒத்த கருத்துக்களை கொண்டவளாக அன்னை செயல்படுகின்றாள் என்றும் சிலர் விளக்கம் கூறுகின்றனர். பெருமானின் எண்ணங்களை செயலாக மாற்றுபவள் சக்தி தானே.

பொழிப்புரை:

தனக்கு நேராக எவருமின்றி ஒப்பற்றவளாக திகழும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், எப்போதும் நடனம் ஆடுபவனும், நித்தம் இருப்பவனாக என்றும் அழியாமல் இருப்பவனும், நன்னெறி காட்டுபவனும், அனைவர்க்கும் முன்னே தோன்றியமையால் முதியோனாக கருதப் படுபவனும், வேதங்கள் ஒதுபவனும், வேதங்கள் மற்றும் ஆறு அங்கங்களின் பொருளை தனது மனதினில் எப்போதும் கொண்டிருப்பவனும் ஆகிய இறைவன் உறையும் இடம் கருப்பறியலூர் ஆகும்.

பாடல் 6:

சுற்றமொடு பற்றவை (2.031) பாடல்கள் 3, 4, 5, 6, 7, 8, 9 (திதே 210)

விண்ணவர்கள் வெற்பரசு பெற்ற மகள் மெய்த்தேன்

பண் அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான்

எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும்

கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

மன்மதன் பெருமானின் தவத்தைக் கலைக்கச் செய்த முயற்சி, தேவர்களின் தூண்டுதலால் ஏற்பட்டது என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பெருமானின் எண்ணத்திற்கு மாறாக எவரும் ஏதும் செய்ய இயலாது என்பதை உணர்த்தும் பாடல் இது. காலும்=உமிழும்

பொழிப்புரை:

மலைகளின் அரசன் என்று அழைக்கப்படும் இமவான் பெற்ற மகளை, தேனும் பண்ணும் சென்று அமர்ந்தது போன்று இனிய மொழிகளை உடைய பார்வதி தேவியை, இறைவனுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தேவர்களின் தூண்டுதலால் முன்வந்து, தனது தவத்தினை கலைக்க முயற்சி செய்த மன்மதனின் உடல் வெந்து அழியும் வண்ணம் திறந்த நெற்றிக் கண்ணினை உடையவனாகிய பெருமான் உறையும் இடம் திருக்கருப்பறியலூர் ஆகும்.

பாடல் 7:

சுற்றமொடு பற்றவை (2.031) பாடல்கள் 3, 4, 5, 6, 7, 8, 9 (திதே 210)

ஆதி அடியைப் பணிய அப்பொடு மலர்ச் சேர்

சோதி ஒளி நற்புகை வளர்க்கு வடு புக்குத்

தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக்

காதினன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

அரங்கல்=அழிதல்; அப்பு=நீர்; சோதி ஒளி=தீபம்; நற்புகை=தூபம்; வளர்க்கு=வளர்க்கும்; வடு= பிரம்மச்சாரி சிறுவன், மார்க்கண்டேயன்; அந்தகன்=இயமன்; அந்தந்த உயிர்களுக்கு விதிக்கப்பட்ட நாளினில் அந்த உயிரினை சிறியோர் முதியோர் பெண்டிர் நோய்வாய்ப் பட்டோர் என்று இரக்கம் ஏதும் கொள்ளாமலும் வலிமை உடையவர் சக்ரவர்த்தி என்று அச்சம் ஏதும் கொள்ளாமலும் குருடன் போன்று உயிர் பொருந்தியிருக்கும் உடலினை சட்டை செய்யாமல் செயல்படுவதால் இயமனுக்கு அந்தகன் என்ற பெயர் வந்தது. சிவபூஜை செய்து கொண்டிருந்த சிறுவனின் உயிரைக் கவர முயற்சி செய்த காலனின் உயிர் பெருமானால் அழிக்கப் பட்டது என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சிறுவன் சண்டீசன் செய்த சிவ பூஜைக்கு இடையூறாக வந்த அவரது தந்தையின் கால்கள் வெட்டப்பட்டு அவர் கீழே விழுந்து இறந்ததும் பெருமானின் செயலால் தானே. சண்டீசர் தனது தந்தையின் கால்களின் மீது மரக் கொம்பினைத் தானே வீசினார். இறைவனின் செயலால் தானே அந்த கொம்பு மழுவாளாக மாறி எச்சதத்தரின் கால்களை வெட்டியது. பண்டைய நாளில் இயமன் செய்த தவறினை செய்த எச்சதத்தனும், இயமன் பெற்ற தண்டனையை அடைந்தான் அல்லவா. காதுதல்=கொல்லுதல்; காதினன்=உதைத்தவன்; பெருமான் இயமனை உதைத்து வீழ்த்தியதால் உதைத்தவன் என்று பொருள் கொள்ள வேண்டும். பெருமானை வழிபாடு செய்து கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல் சிறுவனது உயிரைக் கவர எண்ணியதால் அந்தகன் என்று நயமாக கூறினார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

உலகின் ஆதியாக விளங்கும் பெருமானை நீர் மலர் தீபம் தூபம் ஆகியவற்றை முறையாக வளர்த்து வழிபட்ட பிரமச்சாரி சிறுவன் மார்க்கண்டேயனின் உடலில் புகுந்து, அவனது உயிரினைப் பறிப்பதன் மூலம் அவனுக்கு தீங்கு செய்யத் துணிந்து அவனை நெருங்கி அந்தகன் போன்று செயல்பட்ட இயமன் அழியும் வண்ணம் உதைத்து வீழ்த்திய பெருமான் இருப்பது கருப்பறியலூர் என்ற தலமாகும்.

பாடல் 8:

சுற்றமொடு பற்றவை (2.031) பாடல்கள் 3, 4, 5, 6, 7, 8, 9 (திதே 210)

வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்

பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு

ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேனாள்

காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

அமர்=சண்டை; ஏய்ந்த=அமைந்த; காய்ந்தவன்=கோபித்தவன்; வால்மீகி இராமாயணம் உத்தர காண்டத்தில் இராவணனிடம் போர் புரிந்து தோற்றவர்களின் விவரங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.

பொழிப்புரை:

புகழ் வாய்ந்த மன்னர்களும் வீரர்களும் தேவர்களும் அஞ்சும் வண்ணம் பாய்ந்து போர் புரியும் வல்லமை வாய்ந்த இலங்கை நகரின் மன்னவனான இராவணனுக்கு அமைந்துள்ள தோள்கள் அனைத்தும் ஒடிந்து விழுமாறு கோபம் கொண்டு, தனது கால் விரலால் மலையை அழுத்தி, அரக்கனை நசுக்கிய பெருமான் இருக்குமிடம் கருப்பறியலூர் ஆகும்.

பாடல் 9:

சுற்றமொடு பற்றவை (2.031) பாடல்கள் 3, 4, 5, 6, 7, 8, 9 (திதே 210)

பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை

கரந்து ஒர் சடை மேல் மிசை உகந்து அவளை வைத்து

நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்

கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

நிரந்து=வரிசையாக முறையாக; பரந்து=பரவி; மேல்மிசை=மேலிடத்தில்; கரந்து=ஒளித்து; நிரந்தரம்=எப்போதும்; நேடி=தேடி; முதலில் ஒளித்தவனாக இருந்தாலும் பின்னர் அருள் புரிந்து வெளிப்படச் செய்தவன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒளிக்கப் பட்ட கங்கை நதி பின்னர் சிறிது சிறிதாக, அவனது அருளால் வெளிப்படுகின்றது. பிரமனும் திருமாலும் தங்களது செருக்கினை ஒழித்து இறைஞ்சிய போது, அவர்களுக்கு இலிங்க வடிவத்தில் காட்சி அளித்ததும் பெருமானின் திருவருளினால் தானே.

பொழிப்புரை:

வரிசை வரிசையாக வரும் பல அலைகளுடன் பரந்து மிகுந்த வேகத்துடன் பாய்ந்து கீழே இறங்கிய கங்கை நதியை தனது சடையினில் நிரந்தரமாக இருக்கும் வண்ணம் ஏற்றுக் கொண்டு அதை மறைத்து வைத்து மகிழ்ந்தவனும், முறையாக ஒருவர் பன்றி வடிவமெடுத்து கீழ்நோக்கியும் மற்றொருவர் அன்னமாக மேலே பறந்து சென்ற போதும், திருமால் மற்றும் பிரமன் தேடி அலைந்த போது அவர்கள் காண இயலாத வண்ணம் நீண்டு நின்று தனது அடியையும் முடியையும் மறைத்தவனும் ஆகிய பெருமான் உறையுமிடம் கருப்பறியலூர் தலமாகும்.

பாடல் 10:

சுற்றமொடு பற்றவை (2.031) பாடல்கள் 10, 11 (திதே 211)

அற்றம் மறையா அமணர் ஆதம் இலி புத்தர்

சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டுக்

குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்

கற்றென இருப்பது கருப்பறியலூரே

விளக்கம்:

தலத்து இறைவனின் திருநாமம் குற்றம் அறியாத பெருமான் என்று இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. இந்திரன் அனுமன் மற்றும் இந்திரஜித் ஆகிய மூவரும் தாங்கள் செய்த குற்றத்தை மன்னித்து மறந்து அருள வேண்டும் என்று, இந்த தலம் வந்தடைந்து வேண்டியதாக தலபுராணம் கூறுகின்றது. அவர்கள் செய்த தவற்றினை மன்னித்தமையால் குற்றம் பொறுத்த நாதர் என்று பெயர் வந்ததாக கூறுகின்றார். திருஞான சம்பந்தர், இன்னும் ஒரு படி மேலே சென்று பெருமானின் பெருமையை உணர்த்துகின்றார். பெருமான் அவர்கள் செய்த தவற்றினை மன்னித்தது மட்டுமன்றி மறந்தும் விட்டார் என்று கூறுகின்றார். மறந்தமையால் அவர்கள் செய்த குற்றம் யாது என்பதை அறியாதவராக பெருமான் இருக்கின்றார் என்று கூறுகின்றார். நமக்கு தீங்கு செய்த ஒருவரை நாம் மன்னித்தாலும். அவர் நமக்கு செய்த தீங்கு எப்போதும் நமது மனதினில் இருப்பதை நாம் மறுக்க முடியாது. அவரைக் காணும் போதும் அவரை நினைக்கும்போதும், அந்த குற்றம் நமது பின்னணியில் தோன்றுகின்றது. ஆனால் கருணையின் வடிவமாகிய பெருமானோ, அவர்கள் செய்த குற்றத்தினை பொருட்படுத்தாமையால், அவர் அந்த குற்றத்தை மறந்த தன்மையில் இருக்கின்றார்.

அற்றம்=இடுப்புக்கு கீழே உள்ள மறைக்க வேண்டிய உறுப்பு; ஆதம்=அறிவுடைய தன்மை, ஆதமிலி=அறிவில்லாதவர்கள்; சொற்றம்=சொல்லும் சொற்கள்; கொகுடி=ஒரு வகையான முல்லை. இந்த தலத்தின் தலமரம் கொகுடிமுல்லை. கற்றென=கல் போன்று, நிலையாக உறுதியாக;

பொழிப்புரை:

மறைக்க வேண்டிய உறுப்பினை மறைக்காமல் திகம்பரமாக திரியும் சமணர்களும், அறிவு இல்லாதவர்களாக திகழ்ந்த புத்தர்களும், நல்ல கருத்துக்களை சொல்லும் திறமை அற்றவர்கள். ஆகையால் அவர்கள் சொல்லை பொருட்படுத்தாது விட்டுவிடும் பெருமான், குற்றம் அறியாத பெருமான் என்ற திருநாமத்துடன், கொகுடி முல்லையைத் தலமரமாக கொண்டுள்ள கருப்பறியலூர் தலத்தினை விட்டு நீங்காமல் கல் போன்று நிலையாக பொருந்தி உள்ளான்.

பாடல் 11:

சுற்றமொடு பற்றவை (2.031) பாடல்கள் 10, 11 (திதே 211)

நலம் தரு புனல் புகலி ஞானசம்பந்தன்

கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்ளைப்

பலம் தரு தமிழ்க் கிளவி பத்தும் இவை கற்று

வலம் தரும் அவர்க்கு வினை வாடல் எளிதாமே

விளக்கம்:

கிளவி என்றால் சொற்கள் என்று பொருள். பொதுவாக சொல் என்றால் புனிதச் சொற்கள் அடங்கிய வேதத்தின் சொற்களை குறிக்கும். அந்த சொற்களுக்கு துணையாக இருப்பவன் இறைவன் என்று உணர்த்தும் முகமாக சொற்றுணை வேதியன் என்று அப்பர் பிரான் நமச்சிவாயப் பதிகத்தினை தொடங்குகின்றார். வாய்மொழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு (குரு–சீடன் சங்கிலி), பண்டைய நாட்களில் வேதங்கள் சொல்லிக் கொடுக்கப் பட்டன. எழுத்து மூலமாக அறியப்படாமல் வாய் சொற்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்பட்ட வடமொழி வேதங்கள் எழுதாக் கிளவி என்றும் அழைக்கப்பட்டன.

சங்கத் தமிழ் நூல்களில் இறைவனின் புகழினைப் பாடும் பாடல்கள், இலக்கியங்களில் பல இருந்த போதிலும், அவற்றை பாடல்களாகவே கருதி வந்தனரே தவிர தோத்திரமாக கருதவில்லை. இறைவனே வேதங்களை அருளிச் செய்தான் என்ற கருத்தும், வடமொழியில் அன்றி வேறு மொழிகளில் வேதங்கள் தோன்றாது என்ற கருத்தும் அந்நாளில் வலுப்பெற்று இருந்தது. மேலும் வடமொழி வேதங்கள் கேட்போருக்கும் ஓதுவோர்க்கும் பல விதமான இம்மை மற்றும் மறுமை பலன்களை தரவல்லது என்ற எண்ணமும் மிகுந்திருந்தது. இந்த சூழ்நிலையில் தான் தேவாரங்கள் தோன்றின. நால்வர் பெருமானாரின் உள்ளங்களில் இறைவனே இருந்து பாடினான் என்றும், இறைவனது கருத்தே தங்களது வாய்மொழியாக வந்தது என்றும் நால்வர் பெருமானார்கள் தங்களது பாடல்களில் உணர்த்துகின்றனர். எனவே தான் வடமொழி வேதங்களைப் போன்று பொருட்செறிவு வாய்ந்தவையாக திருமுறை பாடல்கள் விளங்குகின்றன. பல தேவாரப் பாடல்களில் பிறப்பிறப்புச் சுழற்சி, வினைகளின் தன்மை, நிலையான ஆனந்தம் தரும் முக்தி உலகம், ஆதி அந்தம் இல்லாத பெருமானின் தன்மை, வினைகள் அறுத்து முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும் பெருமானின் ஆற்றல், சிவபுராணங்களில் உள்ள பலவகை திருவிளையாடல்கள் முதலியன இடம் பெறுகின்றன. பெரிய புராணத்தில் விரிவாக கூறப்படும் மூவர் பெருமானாரின் வரலாறு, தேவாரப் பாடல்கள் நிகழ்த்திய அற்புதங்களையும், அந்த பாடல்களின் சிறப்புகளையும் உணர்த்துகின்றன. மேலும் பல தேவாரப் பதிகங்கள் இன்றும், பக்தி சிரத்தையுடன் ஓதும் அடியார்களுக்கு சிறந்த பலன்களை அளிப்பதையும் நாம் காண்கின்றோம். வடமொழி வேதங்களை ஓத வேண்டிய முறையில் ஓதினால் நன்மை தரும் ஒலியலைகள் எழுப்பப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அத்தகைய ஒலியலைகள் எழுப்பும் வண்ணம் தேவாரப் பாடல்களுக்கு பண்கள் வரையறுக்கப் பட்டுள்ளன. எனவே, இறைவனது அருளால், அவனது தூண்டுதலால் நால்வர் பெருமானார்களின் வாய்மொழியாக வந்த பாடல்கள், பல பலன்களை ஒதுவோர்க்கு அளிக்க வல்ல இந்த பாடல்கள், வடமொழி வேதங்களைப் போன்று சிறப்புத் தன்மை உடையன என்பது புலனாகின்றது.

வடமொழி வேதங்களுக்கு உரிய அத்தனை சிறப்புகளும் தேவாரப் பதிகங்களுக்கு உள்ளன என்பதை உணர்த்தும் வகையில் திருநெறிய தமிழ் என்று தான் அருளிய முதல் பதிகத்தின் கடைக் காப்பில் கூறிய திருஞானசம்பந்தர் வாயிலாக இறைவன் உணர்த்துகின்றார். மூன்று வயதுக் குழந்தை பாடிய பாடல் தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகம். உனக்கு பால் கொடுத்தவர் யார் என்று தந்தை கேட்ட கேள்விக்கு பதிலாக, வெளிவந்த பாடல். இறைவனே அந்த குழந்தையின் உள்ளிருந்து பாடினால் ஒழிய, மூன்று வயதுக் குழைந்தையின் வாயிலிருந்து, பெருமானின் பலவிதமான சிறப்புகளை உணர்த்துவதும், சந்தமுடைய சீர்கள் பொருந்தியதும், ஆகிய பாடல்கள் எவ்வாறு வரமுடியும். திரு என்றால் தெய்வத் தன்மை பொருந்திய என்று பொருள்; நெறிய=சிவநெறிக்கு உரிய; தமிழ்=தமிழ் வேதம். பல தேவாரப் பாடல்களில் திருஞான சம்பந்தர், தமிழ் மறை என்றும் தமிழ்க் கிளவி என்றும் இந்த பாடல்களை குறிப்பிடுகின்றார், மேலும் இந்த பாடல்கள் ஓதுவோர்க்கு அளிக்கும் பலன்களும் உணர்த்தப் படுகின்றன.

இங்கே விளக்கம் அளிக்கப்பட்டுள்ள திருக்கருப்பறியலூர் பதிகத்தில், கலந்தவர் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். தன்னோடு கலந்து உடனாக இருக்கும் பெருமான் என்று குறிப்பிடுவதன் மூலம், தனது வாய்மொழியாக வந்த இந்த பாடல்கள். இறைவனது கருத்துக்களே என்று உணர்த்துகின்றார். மேலும் பலம் தரு தமிழ்க் கிளவி என்ற தொடர் மூலம் தேவாரப் பதிகங்கள், வடமொழி வேதங்கள் போன்று ஓதுவோர்க்கு பலன் அளிப்பன என்றும் உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

நன்மைகள் தரும் நீர்வளம் நிரம்பிய புகலிப் பதியில் (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தோன்றிய ஞானசம்பந்தன்னுடன் கலந்தவனும் திருக்கருப்பறியலூர் தலத்தில் பொருந்தி உறைபவனும் ஆகிய இறைவனைக் குறித்து பாடிய, ஓதுவோர்க்கு பலன்களைத் தரும் தமிழ் வேதமாகிய பத்து பாடல்களையும் நன்கு கற்று, இறைவனை வழிபாடு செய்யும் அடியார்களின் வினைகள் எளிதில் வாடிவிடும்; வினைகள் வாடுவதால் அவர்கள் வினைகள் அற்றவர்களாக மாறி முக்தி உலகம் செல்லும் தகுதியை அடைவார்கள்.

முடிவுரை:

இந்த பதிகத்து பாடல்களில் பெருமானின் புகழ் எடுத்துரைக்கப் பட்டு, அத்தகைய பெருமை வாய்ந்தவன் உறையும் இடம் கருப்பறியலூர் என்று உணர்த்தப் படுகின்றது. முதல் பாடலில் பக்குவமடைந்த அடியார்களை முக்தி உலகினுக்கு அழைத்துச் செல்வதைக் கற்றவன் என்றும், இரண்டாவது பாடலில் ஓரம்பினால் முப்புரங்கள் மூன்றும் எரித்து அவை பொடியாக மாறுவதைக் கண்டவன் என்றும், தாழ்ந்த குழை தொங்கி ஆடும் காதினை உடையவன் என்று மூன்றாவது பாடலிலும், காலனை காலால் உதைத்து கடந்தவன் என்று நான்காவது பாடலிலும், வேதங்கள் மற்றும் அங்கங்களின் பொருளே தனது கருத்தாகக் கொண்டவன் என்றும் ஐந்தாவது பாடலிலும், மன்மதனை எரித்த நெற்றிக் கண்ணினை உடையவன் என்று ஆறாவது பாடலிலும், இயமனை உதைத்த காலினை உடையவன் என்று ஏழாவது பாடலிலும், இராவணனின் வலிமை குன்றும் வண்ணம் கோபம் கொண்டவன் என்று எட்டாவது பாடலிலும், பிரமனும் திருமாலும் தேடிக் காணாத வண்ணம் மறைந்து கொண்டவன் என்று ஒன்பதாவது பாடலிலும், கொகுடிக் கோயிலில் நிலையாக நிறைந்தவன் என்று பத்தாவது பாடலிலும் கூறுகின்றார். பெருமானின் சிறப்புகளை இந்த பாடல் மூலம் அறிந்து கொண்ட நாம் அவனது புகழினை உணர்த்தும் இந்த பதிகத்தினை ஓதி, கருப்பறியலூர் கடவுளை வணங்கி நமது வினைகளை வாடச் செய்து. பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவோமாக,

இந்த தலத்திலிருந்து சீர்காழி சென்று அடைந்து, தனது நான்காவது திருயாத்திரையை திருஞான சம்பந்தர் முடித்துக் கொள்கின்றார். அடுத்த தல யாத்திரை தொடங்கும் முன்னர், அவர் சில நாட்கள் சீர்காழி நகரினில் தங்குகின்றார் என்றும் அப்போது அவருக்கு, அந்தணர்களின் வாழ்வு முறைக்கு ஏற்ப உபநயனச் சடங்கு செய்து வைக்கப்பட்டது என்றும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். அந்த சடங்கு முடிந்த பின்னர், அவர் அருளிய திருப்பதிகம் தான் துஞ்சலும் துஞ்சலிலாத என்று தொடங்கும் திருவைந்தெழுத்துப் பதிகம்.



Share



Was this helpful?