1.020 தடநிலவிய மலை திருவீழிமிழலை பண்; நட்டபாடை
பின்னணி;
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருப்புகலூர் சென்ற திருஞானசம்பந்தரை, அப்பர் பிரான் சந்தித்து, தான் திருவாரூரில் வணங்கிய பெருமானின் சிறப்புகள் பற்றி சொல்லக் கேட்ட திருஞானசம்பந்தர் திருவாரூர் மற்றும் அதன் அருகிலுள்ள சில தலங்கள் சென்ற பின்னர் மீண்டும் திருப்புகலூர் வருகின்றார். பின்னர் இருவருமாக ஒன்று சேர்ந்து, அம்பர், அம்பர் மாகாளம், திருக்கடவூர் வீரட்டம், ஆக்கூர், மீயச்சூர், பாம்புரம் மற்றும் அருகிலுள்ள பல தலங்கள் சென்ற பின்னர் திருவீழிமிழலை சென்றடைகின்றார். அந்த தலத்தில் பல நாட்கள் தங்கியிருந்த திருஞானசம்பந்தர் அருளிய பதினைந்து பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்று. இந்த பதிகத்தின் கடைப்பாடலில், இந்த பதிகத்தினை முறையாக ஓதும் அடியார்கள், திருமகள் கலைமகள் மற்றும் செயமகள் ஆகியோரின் அருளினால் சிறந்த புகழுடன் வாழ்வார்கள் என்று கூறுகின்றார். எனவே இந்த பதிகத்தை ஓதுவோர், கல்வி ஞானமும் செல்வமும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள் என்று நம்பப்படுகின்றது.
இந்த பதிகம் வேறொரு சிறப்பினையும் உடையது. இந்த பதிகத்தின் நான்காவது அடியில் உள்ள கடைச் சொல்லின் கடை எழுத்தினைத் தவிர வேறெங்கும் நெடிலெழுத்தே வருவதில்லை. மற்ற அனைத்து எழுத்துக்களும் குறில் எழுத்துக்களாக உள்ளன. இவ்வாறு நான்கு பதிகங்கள் உள்ளன. பிறையணி படர்சடை என்று தொடங்கும் கழுமலம் பதிகம் (1.19) தடநிலவிய மலை என்று தொடங்கும் வீழிமிழலைப் பதிகம் (1.20), புவம்வளிகனல் என்று தொடங்கும் சிவபுரம் பதிகம் (1.21) மற்றும் சிலைதனை நிறுவி என்று தொடங்கும் திருமறைக்காடு பதிகம் (1.22) ஆகியவை இந்த நான்கு பதிகங்கள். இந்த நான்கு பதிகங்களிலும் ஐ என்ற உயிரெழுத்துடன் இணைந்த பல உயிர்மெய் எழுத்துக்கள் வருவதை நாம் காணலாம். ஐ என்ற உயிரெழுத்து நெடிலாக கருதப் பட்டாலும் ஐ என்ற எழுத்துடன் இணையும் உயிர்மெய் எழுத்துக்கள் குறில் எழுத்துகள் என்று தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. இரண்டு மாத்திரை அளவுள்ள ஐ எழுத்து, உயிர்மெய் எழுத்தாக வரும்போது இரண்டுக்கும் குறைந்த மாத்திரையுடன் வருவதால், அவை குறில் எழுத்துகளாக கருதப் படுகின்றன. இத்தகைய நுட்பமான விவரங்களையும் கருத்தில் கொண்டு பதிகங்கள் இயற்றிய திருஞானசம்பந்தரின் புலமை நம்மை வியக்க வைக்கின்றது. அகத்தியருக்கு தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுத்த பெருமானின் அருளால் பதிகங்கள் பாடத் தொடங்கிய திருஞானசம்பந்தர், சிறந்த புலமை வாய்ந்த புலவராக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.
பாடல் 1:
தடநிலவிய மலை நிறுவியோர் தழல் உமிழ் தருபட அரவு கொடு
அடல் அசுரரொடு அமரர்கள் அலைகடல் கடை உழியெழு மிகு சின
விடம் அடை தரு மிடறு உடைய்வன் விடை மிசை வரும் அவன் உறை பதி
திடமலி தருமறை முறை உணர் மறையவர் நிறை திருமிழலையே
விளக்கம்:
தடநிலவிய=அகன்று விளங்கிய; நிறுவி=மத்தாக நிறுவி; உழியெழு=கலக்கப்பட்டதால் எழுந்த; உடல் வருந்தியதால் வெளிப்பட்ட என்றும் பொருள் கொள்ளலாம்; திடம்=மன உறுதி; நான்கு மறைகளையும் முறையாக கற்றுத் தேர்ந்து அதன் பொருளையும் உணர்ந்தவர்கள், சிவபெருமான் ஒருவனே உண்மையான மெய்ப்பொருள் என்பதை உணர்ந்தவர்களாக இருப்பதால், மனதினை அலையச் செய்யும் உலக மாயைகளில் சிக்காதவர்களாக இருப்பார்கள்; திடமான சித்தம் உடைய இவர்கள் பெருமானை வழிபடும் கொள்கையிலிருந்து வழுவாது இருக்கும் தன்மை இந்த் பாடலில் திடமலி என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. மலி=மலிந்த, நிறைந்த; திடமலி=உறுதி படைத்த; அடல்=வலிமை வாய்ந்த;
பொழிப்புரை:
அகன்ற மலையாகிய மந்தர மலையை மத்தாக நிறுவி, அத்னைச் சுற்றி கொடிய விடத்தை உமிழும் வாசுகி பாம்பினை கயிறாக சுற்றி, வலிமை வாய்ந்த அசுரர்களும் தேவர்களும் ஒன்று சேர்ந்து, அலைகள் மிகுந்த பாற்கடலைக் கடைந்த போது, கடல் கலக்கப்பட்டதால் திரண்டு எழுந்த நஞ்சும், இருபுறமும் மாறி மாறி இழுக்கப் பட்டதால் உடல் வருந்திய வாசுகி பாம்பு உமிழ்ந்த நஞ்சும் சேர்ந்து மிகவும் உக்கிரமான ஆலகால விடமாக திரண்டு எழுந்த விடத்தை,தனது கழுத்தினில் அடக்கிய ஆற்றல் உடையவனும், இடபத்தின் மீதேறி வருபவனும் ஆகிய இறைவன் உறைகின்ற தலமாவது, பெருமானை வழிபடும் கொள்கையிலிருந்து வழுவாத திடமான சிந்தனை அளிக்கும் நான்கு வேதங்களையும் முறையாக கற்று உணர்ந்த மறையவர்கள் நிறைந்த தலமாகிய திருவீழிமிழலை ஆகும்.
பாடல் 2:
தரையொடு திவிதலம் நலிதரு தகுதிறல் உறு சலதரனது
வரையன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன்
உரை மலி தரு சுர நதி மதி பொதி சடையவன் உறை பதி மிகு
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திருமிழலையே
விளக்கம்:
தரை=நிலவுலகம்; திவி தலம்=விண்ணுலகம்; நலிதரு=நலிவடையச் செய்யும்; தகு=தகுந்த; திறல்= வலிமை; உறு=பொருந்திய; சலதரன்=சலந்தரன்.வருணனால் எடுத்துச் செல்லப்பட்டு வளர்க்கப் பட்டதால் ஜலந்தரன் என்ற பெயர் வந்தது. விசை=வேகம்; திகிரி=சக்கரம்; அரி=திருமால்; உரை மலி=புகழ்ச்சொற்கள் அதிகமாக உடைய கங்கை நதி; சுர நதி=தேவலோகத்திலிருந்து கீழே இறங்கிய கங்கை நதி: திரை=அலைகள்; திடர்=மேடு; கடல் மணல் கொண்டு உயர்ந்த தலம் என்று குறிப்பிடப்படுவதால், பண்டைய காலத்தில் கடற்கரையின் அருகே இந்த தலம் இருந்திருக்க வேண்டும்.
கங்கை நதி புனிதமான தீர்த்தமாக கருதப்படுவதற்கு முக்கிய காரணம், பாதாள லோகத்தில் சாம்ப்ல குவியலாக கிடந்த சகர புத்திரர்களுக்கு விமோசனம் அளித்த தன்மை தான். இந்த தன்மையை கங்கை நதி பெறுவதற்கு மூல காரணமாக இருந்தது பெருமானின் கருணை தான். கங்கையை வாழ்வைத்த கள்வன் என்று பெருமானை திருஞானசம்பந்தர், பல்லவனீச்சரம் தலத்து பதிகத்தின் பாடலில் (1.65.3) குறிப்பிடுகின்றார். வால்மீகி இராமயணத்தில் கங்கை நதி பூமிக்கு வந்த வரலாற்றினை விஸ்வாமித்திரர் இராமபிரானுக்கு சொல்வதாக அமைந்துள்ளது. அயோத்தி நகரை ஆண்டு வந்த சகரன் என்ற மன்னன் அஸ்வமேத யாகம் செய்ய நினைத்து, தனது பட்டத்து குதிரையை பல நாடுகளுக்கும் அனுப்பினான். பல நாட்கள் சென்ற பின்னரும் பட்டத்து குதிரை திரும்பி வராததைக் கண்ட சகரன் தனது அறுபதினாயிரம் மகன்களை குதிரையைத் தேடிக் கொண்டு வருமாறு பணித்தான். அஸ்வமேத யாகம் தடையேதும் இன்றி முடிந்தால், தன்னை விடவும் சகரன் மிகுந்த புகழினை அடைந்துவிடுவான் என்று எண்ணிய இந்திரன், குதிரையை திருடிக்கொண்டு போய், பாதாள உலகினில் மறைத்து வைத்தான். குதிரையை தேடிக் கொண்டு பாதாள உலகம் சென்ற சகரனின் மைந்தர்கள், குதிரை பாதாளத்தில் திரிந்து கொண்டிருப்பதையும் அதன் அருகினில் நாராயணனின் அம்சமாகிய கபில முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதையும் கண்டனர். கபில முனிவர் தான்,குதிரையை கடத்திக் கொண்டு சென்று, பாதாளத்தில் ஒளித்து வைத்த பின்னர், தவம் செய்வது போன்று நடிக்கின்றார் என்று தவறாக நினைத்த அவர்கள்,முனிவரை தாக்க நினைத்தனர். தனது தவம் கலைந்ததால் கோபத்துடன் விழித்த முனிவரின் கண்களிலிருந்து பொங்கி வந்த தீச்சுடர்கள், அறுபதினாயிரம் பேரையும் சுட்டெரித்து சாம்பலாக மாற்றியது. தனது புத்திரர்கள் வராததைக் கண்ட சகர மன்னன், தனது பேரன் அம்சுமானை குதிரையை தேடி மீட்டு வர அனுப்பினான். அறுபதினாயிரம் பேர் சென்ற வழியில் சென்ற அம்சுமான் பாதாளத்தில் அறுபதினாயிரம் பேரும் சாம்பலாக இருப்பதையும் அந்த சாம்பல் குவியலின் அருகே குதிரை திரிந்து கொண்டு இருப்பதையும் கண்டான். அப்போது அங்கே தோன்றிய கருடன், நடந்ததை விவரித்ததும் அன்றி,தேவலோகத்தில் இருக்கும் கங்கை நீரினால் இறந்தவர்களின் சாம்பல் கரைக்கப்பட்டால் அவர்கள் நற்கதி அடைவாரகள் என்றும் கூறியது. குதிரையை மீட்டுச் சென்ற அம்சுமான், அனைத்து விவரங்களையும் தனது பாட்டனாராகிய மன்னனிடம் கூறினான். சகரன், அம்சுமான், அவனது மகன் திலீபன் ஆகியோர் எத்தனை கடுந்தவம் செய்தும் அவர்களால் கங்கையை கீழே கொண்டு வர முடியவில்லை. திலீபனின் மகன் பகீரதன்.
பகீரதன் பிரமனை நோக்கி தவம் செய்து, கங்கை நதியினை வானிலிருந்து கீழே வரவழைத்து, சாம்பல் குவியலாக மாறி இருக்கும் தனது மூதாதையரின் மீது பாயவைத்து அவர்கள் நற்கதி அடையச் செய்ய வேண்டும் என்று விரும்பினான். கங்கை நதிக்கு பூலோகம் இறங்கி வர விருப்பம் இல்லாததால், வேகத்துடன் கீழே இறங்கி வரும் தன்னைத் தாங்கும் வல்லமை படைத்தவர் வேண்டும் என்ற சாக்கு சொல்லவே, பகீரதன் பெருமானை நோக்கி தவமியற்றி, பெருமான் கங்கை நதியைத் தாங்குவதற்கு ஏற்பாடு செய்தான். இதனால் கங்கையின் கோபம் மேலும் பெருகியது; சிவபெருமானையும் அடித்துக் கொண்டு,பூவுலகினையும் அடித்துக் கொண்டு பாதாளத்தில் சென்று சேர்க்கும் நோக்கத்துடன் மிகவும் வேகமாக கீழே இறங்கியது. அவ்வாறு இறங்கிய கங்கையை பெருமான் தனது சடையினில் தாங்கி அடக்கியது பல தேவாரப் பாடல்களில் கூறப் படுகின்றது. இவ்வாறு கங்கை நதியினை பெருமான் தனது சடையினில் தாங்கிய பின்னர் சிறிது சிறிதாக வெளியேற்றினார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு பெருமான் கங்கை நதியைத் தாங்காது இருந்தால், கங்கை நதி பூமியையும் புரட்டிக் கொண்டு பாதாளத்தில் சேர்த்து தானும் பாதாளத்தில் கலந்திருக்கும். அவ்வாறு நேரிடுவதை பெருமான் தவிர்த்தார் என்பதை குறிப்பிடும் வண்ணம் கங்கை வாழவைத்த கள்வன் என்று திருஞான் சம்பந்தர் கூறுகின்றார் போலும். கள்வன் தானே, தான் திருடிய பொருளை மறைத்து வைப்பான் என்பதால், கங்கை நதியைத் தனது சடையில் தேக்கி மறைத்த செய்கையை குறிப்பிடும் பொருட்டு கள்வன் என்று நகைச்சுவை ததும்ப கூறினார் போலும்.
மங்கை அங்கோர் பாகமாக வாள் நிலவு வார் சடை மேல்
கங்கை அங்கே வாழ வைத்த கள்வன் இருந்த இடம்
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்
பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
பொருள் இல்லாதவர்களுக்கு பொருள் உள்ளவர்கள் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு ஈந்து உதவுவார்களை உலகம் புகழ்கின்றது. அவர்களின் மனதினில், அடுத்தவர்க்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை உருவாக்குபவர் இறைவன் என்று அப்பர் பிரான் ஐயாற்றின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (4.38.10) குறிப்பிடுகின்றார். தங்களிடம் பொருள் இருந்தும், இரப்பவர்களுக்கு உதவாதவர்களை உலகம் உலோபி என்று இகழ்கின்றது. அவ்வாறு இருத்தல் கொடிய செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், காமம் முதலான ஆறு குற்றங்களில் ஒன்றாக உலோபம் கருதப்படுகின்றது. இந்த குற்றத்தை இறைவன் பொறுக்கமாட்டார் என்றும் அதற்கு உரிய தண்டனை அளிப்பார் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அடுத்தவர்க்கு கொடுத்து உதவுவோர்க்கு இறைவனின் அருள் உண்டு என்பதையும் இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.இறைவன், கரப்பவர்க்கு தண்டனை அளிப்பார் என்பதை உணர்த்தும் விதமாக கங்கையைத் தனது சடையில் மறைத்த நிகழ்ச்சி இங்கே நயமாக குறிப்பிடப் படுகின்றது. தனது நீரினில் அந்த சாம்பலைக் கரைத்து, அவர்களுக்கு நற்கதி வழங்கும் தன்மை கங்கை நதிக்கு இருந்ததால் தான், பகீரதன் கங்கை நதியை பூவுலகத்திற்கு, தவம் செய்து வரவழைக்க முயற்சி செய்தான். ஆனால் அவ்வாறு உதவ மறுத்த கங்கை நதிக்கு பாடம் கற்பிக்கும் வகையில்,வேகமாக இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் இறைவன் சிறை வைத்த நிகழ்ச்சி இங்கே நயமாக உணர்த்தப் படுகின்றது.
இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்த
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே
கங்கை நதியினைத் தனது சடையில் அடக்கிய பின்னர் அதனை சிறிதுசிறிதாக விடுவித்து, நிலத்தில் பாயச் செய்து புண்ணிய தீர்த்தமாக உலகோர் போற்றும் நிலைக்கு உயர்த்தி அருள் புரிந்தவர் பெருமான் தானே; மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியின் வேகத்தை இறைவன் தடுத்துத் தனது சடையில் அடக்கிக் கொண்டு சிறிய நீரோடையாக வெளியிட்டதன் பயனாக இன்றும் கங்கை நதி ஓடிக்கொண்டு இருக்கின்றது, அந்த நதியில் குளிப்பவர்களும் இதனால் பயனடைவதாக நம்பப் படுகின்றது. இவ்வாறு கங்கை நீர் ஏற்றம் பெறுவதற்கு காரணமாக இறைவன் இருந்த நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது. இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு அவரது சோற்றுத்துறை பதிகத்தின் ஒரு பாடலை (4.41.6) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், மிகவும் ஆரவாரத்துடன் வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் ஏற்று பின்னர் அதனை விடுவித்த தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கங்கை நதி அவ்வாறு விடுபட்டதால் தானே, புண்ணிய தீர்த்தமாக உலகோர் கருதப்படும் நிலைக்கு உயர்ந்தது.கங்கையில் நீராடுவோர் தங்களது பாவங்கள் தீர்க்கப் பெற்றாலும், அவர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு கங்கை நதி எவ்வகையிலும் உதவி செய்ய முடியாது. அந்த பிறாவியினில் செய்யப்பட்ட பாவங்கள் களையப் படுகின்றதே தவிர, இனியும் வரவிருக்கும் பிறவிகளுக்கு ஒதுக்கப்பட்ட வினைளின் தன்மையில் மாற்றம் ஏதும் ஏற்படுவதில்லை. பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து எவரேனும் விடுதலை பெறவேண்டும் என்றால்,பெருமானின் திருநாமங்களை பிதற்ற வேண்டும் என்ற செய்தியையும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த நிலவுலகத்திலிருந்து நிலையாக பிரிக்கப்பட்டு நிலையாக முக்தி நிலைக்கு செல்ல வேண்டும் என்பதே உயிரின் அவா.
பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் தன் திறமே
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறையனாரே
மிகவும் வேகமாக இறங்கிய கங்கை நதியினை, அப்பர் பிரான் குறிப்பிடும் பாடலை (4.65.7) நாம் இங்கே காண்போம். மையறு மனத்தன்=குற்றமில்லாத மனத்தை உடையவன்; பகீரதன் இழிதல்=இறங்குதல்; இவ்வாறு வேகமாக இறங்கிய கங்கை நதியை கட்டுப்படுத்தும் ஆற்றல் சிவபிரான் ஒருவருக்கே இருந்தமையால், பகீரதன் சிவபிரானை வேண்ட, சிவபிரானும் கங்கையைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு பின்னர் மெதுவாக கங்கை நதியை விடுவதற்கு சம்மதித்தார். சிவபிரான் ஏற்றக்கொள்ள இசைந்ததால், தேவர்கள் பயம் ஏதுமின்றி கங்கை நதி கீழே இறங்குவதை வேடிக்கை பார்த்தனர் என்று அப்பர் பிரான் இந்த நேரிசைப் பதிகத்தில் கூறுகின்றார். .
மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிர முகமதாகி
வையகம் நெளியப் பாய்வான் வந்து இழி கங்கை என்னும்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே
மிகுந்த வேகத்துடன் கங்கை நதி பல கிளைகளுடன், தேவலோகத்திலிருந்து கீழே இறங்கிய செய்கை திருப்பூவணம் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் பாடலிலும் உணர்த்தப் படுகின்றது. திருப்பூவணம் தலம் சென்ற அப்பர் பிரானுக்கு பெருமான் தனது நடனக் காட்சியையும் பலவிதமான தோற்றங்களையும் காட்டினார் என்று பெரிய புராணம் உணர்த்துகின்றது. தான் கண்ட காட்சிகளை, அப்பர் பிரான் வடிவேறு திருசூலம் என்று தொடங்கும் பதிகத்தின் (6.18) பாடல்களில் பதிவு செய்துள்ளார். இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில், கங்கையைத் தனது சடையில் ஏற்ற கோலத்தை பெருமான் அப்பர் பிரானுக்கு காட்டுகின்றார். அந்த கோலத்தினை பாடலாக பதிவு செய்த அப்பர் பிரான், ஆயிரம் முகங்களுடன் கங்கை நதி வானில் தோன்றியதாக கூறுகின்றார். மயலாகும் அடியார்=வேறு ஒன்றும் தோன்றாமல் ஈசனிடத்தில் அன்பு மட்டும் வெளிப்படுத்தும் அடியார்கள்; கலுழி=பெருக்கம்;பொற்பு=பொலிவு, அழகு, புன்சடை=செம்பட்டை நிறம் கொண்ட சடைமுடி;
மயலாகும் தன்னடியார்க்கு அருளும் தோன்றும் மாசிலாப் புன்சடை மேல் மதியம் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும் இருங்கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்
கயல் பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை ஆயிரமா முகத்தினோடு வானில் தோன்றும்
புயல் பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
பொழிப்புரை:
நிலவுலகத்தில் வாழ்வோரையும் தேவர்களையும் நலிவடையச் செய்து துன்புறுத்தும் வண்ணம் ஆற்றல் மிகுந்தவனாகத் திகழ்ந்த அரக்கன் சலந்தரனின் மலை போன்ற தலையினை வேகமாக அறுத்து வீழ்த்திய சக்கரப்படையை, திருமால் வேண்டியபோது அவருக்கு கொடுத்து அருள் புரிந்தவன் சிவபெருமான்.தன்னில் நீராடுவோரின் பாவங்களை போக்குவதால் புகழ்ந்து பலவாறும் பேசப்படுவதும் தேவலோகத்திலிருந்து கீழே இறங்கிய கங்கை நதி மற்றும் ஒற்றைப் பிறைச் சந்திரன் ஆகியவை பொதிந்த சடையை உடையவனாகிய பெருமான் உறைகின்ற தலம், பெரிய கடற்கரை மணலால் மேடாக உயர்ந்து அழகுடன் விளங்கும் திருவீழிமிழலை தலமாகும்.
பாடல் 3:
மலைமகள் தனை இகழ்வது செய்த மதியறு மனவனது உயர்
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு
சிலைமலி மதிள் புடை தழுவிய திகழ் பொழில் வளர் திருமிழலையே
விளக்கம்:
மதியறு சிறு மனவன்=புத்தி கெட்டு குறுகிய மனம் உடையவனாகத் திகழ்ந்த தக்கன்; இந்த பாடலில் மலைமகளை இகழ்ந்த தக்கன் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உயர் தலை= உயர்ந்த மனிதத் தலை; அழல் உருவன கரம்=தீயின் வடிவினன் ஆகிய அக்னியின் கை; சிலை =மலை;சிலைமலி=மலை போன்ற; மலைமகள் என்பது பார்வதி தேவியின் திருநாமம். பார்ப்பதியை பகை சாற்றிய தக்கனை பார்ப்பது என்னேடி என்று மணிவாசகர் திருவாசகம் திருவுந்தியார் பதிகத்தில் கூறுகின்றார். தக்க யாகத்தில் கலந்து கொள்ளச் சென்றது தாட்சாயணி தானே தவிர பார்வதி தேவியல்ல என்பதை நாம் அறிவோம். தனது தந்தை நடத்தும் யாகத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற விருப்பத்துடன், சிவபெருமான் தடுத்தையும் மீறி அந்த வேள்வியில் கலந்து கொள்ள சென்ற தேவி, ஆங்கே பெருமானைக் குறித்து இழிவாக தக்கன் பேசியதை கண்டிக்கவே, கோபம் அடைந்த தக்கன், தேவியையும் இழித்து பேசினான். அந்த செய்தி தான் இங்கே உணர்த்தப்படுகின்றது. பெருமானையும் தன்னையும் இழிவாக பேசியதை பொறுக்க முடியாமல் தேவி அந்த யாக குண்டத்தில் பாய்ந்து தனது உடலினை எரித்துக் கொள்கின்றாள். மேலும் அப்போது, தன்னையும் தனது கணவரையும் இழிவாக பேசிய தக்கனுக்கு தான் மகள் அல்ல என்றும் கூறுகின்றாள். இந்த விவரங்கள் புராணங்களில் சொல்லப் படுகின்றது. இவ்வாறு தனது உடலினை மாய்த்துக் கொண்ட தேவி தாட்சாயணி தான், இமயமலைச் சாரலில் ஒரு தடாகத்தில் தாமரை மலரில் சிறிய குழந்தையாக தோன்ற, அதனை கண்டெடுத்த இமவான், பார்வதி என்ற பெயருடன் அந்த குழந்தையை வளர்க்கின்றான். தான் வேள்விக் குண்டத்தில் விழுந்து உயிரை விடுவதற்கு முன்னர், தேவி சொன்ன மொழியை கருத்தில் கொண்டு, தாட்சாயணி என்று குறிப்பிடாமல் திருஞானசம்பந்தர், மலைமகள் என்று அழைத்தார் போலும். நமது புராணங்களில் உள்ள இந்த நுண்ணிய தகவல்களையும் அறிந்தவர்களாக திருஞானசம்பந்தர், அப்பர் பிரான் மற்றும் மணிவாசகர் இருந்தமை நமக்கு எல்லையற்ற வியப்பை அளிக்கின்றது.
அப்பர் பிரானும் திருச்சேறை தலத்து பதிகத்தின் பாடலில் (4.73.1) இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை என்று பதிகத்தினை தொடங்குகின்றார்.பார்வதி தேவியைத் திருமணம் செய்து கொண்ட பின்னர், பரமன் பார்வதி தேவியை பிரியவேயில்லை. எனவே தாட்சாயணியை விட்டு பிரிந்ததையே இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஆனால் தாட்சாயணி என்று கூறாமல், ஏன் இமவான் பெற்ற பெண்கொடி என்று கூறுகின்றார் என்ற ஐயம் நமக்கு எழலாம்.தாட்சாயணி தனது உடலை மாய்த்துக் கொண்ட பின்னர் தான் இமவானின் மகளாகத் தோன்றுகின்றாள்; மேலும் இமவானின் மகளாகிய பார்வதி தேவி.சிவபிரானை திருமணம் செய்து கொண்ட பின்னர், சிவபிரானை விட்டு பிரியவில்லை. தனது தந்தையாகிய தட்சனுக்கும் தனக்கும் தொடர்பு கொண்ட உடல் வேண்டாம் என்று உமையம்மை உடலை நீத்த பின்னர், தாட்சாயணி என்று உமையம்மையை அழைப்பது தவறு அல்லவா. அதனால் தான் அப்பர் பிரான்,இமவான் பெற்ற பெண்பிள்ளை என்று இங்கே குறிப்பிடுகின்றார். பெருந்திரு என்பதை உமையம்மைக்கு அடைமொழியாகக் கொண்டு, திருமகள் போன்ற அனைத்து பெண் தெய்வங்களிலும் உயர்ந்தவள் என்றும் பொருள் கொள்ளலாம். தாட்சாயணியின் உணர்வுகளை மதிக்கும் விதமாக, அப்பர் பிரான் தாட்சாயணி என்று குறிப்பிடாமல், இமவான் பெற்ற பெண்கொடி என்று கூறுகின்றார்.
பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் தவங்கள் செய்ய மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன் பால் அங்கொரு பாகமாகத்
திருந்திட வைத்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.10) திருஞானசம்பந்தர், தாட்சாயணியை முன்னிட்டு தக்கனது வேள்வியை தகர்த்தவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். தக்கன் செய்த வேள்வியை பெருமான் அழித்ததன் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல்,சமணர்களும் புத்தர்களும் பெருமானை இழித்து கூறுகின்றனர் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் தாட்சாயணி என்ற பெயரினைத் தவிர்த்து, தாமரை மலர் போன்று அழகுடன் விளங்கிய தேவி என்று குறிப்பிடுவதை உணரலாம். பிராட்டியை தக்கன் இகழ்ந்தது, அவன் செய்த வேள்வியை அழிக்க காரணமாக இருந்தது என்று இந்த பாடலில் கூறுகின்றார். அர்ஜுனனுக்கு பாசுபதம் அளிப்பதற்காக பெருமான் பூண்ட வேடுவக்கோலம் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது.
பாடுடைக் குண்டர் சாக்கியர் பயில் தரும் அறவுரை விட்டு அழகாக
ஏடுடை மலராள் பொருட்டு வன் தக்கன் எல்லையில் வேள்வியைத் தகர்த்து அருள் செய்
காடிடைக் கடி நாய் கலந்துடன் சூழக் கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.124.5) திருஞானசம்பந்தர், உமை தனை இகழ்வு செய்தவன் தக்கன் என்று குறிப்பிடுகின்றார். திருவீழிமிழலையை நினைத்து இறைவனைப் பணியும் ஆற்றல் உடைய மாந்தர்கள், புகழுடன் விளங்குவார்கள் என்று கூறுகின்றார்.உமை அன்னையை இகழ்ந்த தக்கனது முகத்தை சிதைத்து ஆட்டின் முகம் பொருத்தப்பட்ட செய்தி இங்கே குறிப்பிடப்படுகின்றது.
புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமை தனை
இகழ்வது செய்தவனுடை எழில் மறை வழிவளர்
முகமது சிதை தர முனிவு செய்தவன் மிகு
நிகழ்தரு மிழலையை நினைய வலவரே
திருவிடைவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.126.6) திருஞானசம்பந்தர், தக்கனை கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலிலும் தாட்சாயணி என்ற பெயர் தவிர்க்கப்பட்டு, கிள்ளை மொழியாள் என்று குறிப்பிடும் நயம் உணர்ந்து ரசிக்கத்தக்கது.முத்தீத் தள்ளி என்ற தொடர் மூலம் தக்கனது வேள்வி அழிக்கப்பட்ட செய்தி குறிப்பிடப் படுகின்றது. வள்ளிக்கொடி போன்ற இடையும் நெருங்கிய மார்பகங்களும் சிவந்த வாயும் வெண்மை நிறத்தில் நகையும் கொண்ட மகளிர் பெருமானின் புகழினைக் குறிப்பிடும் பாடல்களுக்கு நடனம் ஆடுகின்றனர் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீ
தள்ளித் தலை தக்கனைக் கொண்டவர் சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச் செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடம் செய் விடைவாயே
பழுவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.34.7) பெருமான், தனது மாமனார் செய்த வேள்வி முற்றுப்பெறாமல் அழித்தார் என்று குறிப்பிடுகின்றார். மந்தணம்=இரகசியம்; சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமலும், தனது மகளாகிய தாட்சாயணிக்கும் தெரிவிக்காமல் நடத்த திட்டமிடப்பட்ட வேள்வி என்பதால் இரகசியமாக செய்யப்பட்ட வேள்வி என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தான் இருந்த இடத்திலே இருந்து கொண்டு அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த பெருமான், எங்கும் நடப்பதையும் நடக்கவிருப்பதையும் அறியும் ஆற்றல் படைத்த பெருமான், அறியாத இரகசியம் ஏதேனும் உண்டோ. அந்த வேள்வி நடக்கும் இடத்திற்கு சென்றால், தனது மகள் என்றும் பாராமல், தக்கன் தாட்சாயணியை இழிவாக நடத்துவான் என்பதையும் முன்கூட்டியே அறிந்திருந்த காரணத்தால் அல்லவா, இறைவன் தனது மனைவி அங்கே செல்லவேண்டாம் என்று கூறுகின்றார். மாமடி= மாமனார், தக்கன்; சிந்த=அழியுமாறு; வேதநெறிகளுக்கு மாறாக செய்யும் வேள்வி இனிதாக முடிவடைந்தால், அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் என்ற காரணத்தினால் அந்த வேள்வி அழியும் வண்ணம் பெருமான் செயல்படுகின்றார். சுவடு ஒற்று=அடையாளம் பட ஒற்றிக் கொள்ளுதல்; பெருமானால் அனுப்பப்பட்ட வீரபத்திரர், வேள்வியில் பங்கேற்ற தேவர்கள் பலருக்கும் தண்டனை அளித்தமை, தக்கனது தலையினை கிள்ளியது ஆகிய செயல்கள், மிகவும் எளிதாக செய்யப்பட்ட தன்மை, விளையாடு சிவலோகன் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது.
மந்தணம் இருந்து புரி மாமடி தன் வேள்வி
சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர்
அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டார்
பைந்தொடி நன்மாதர் சுவடு ஒற்று பழுவூரே
சத்திமுற்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.96.8) அப்பர் பிரான் பெருமானை, இகழ்ந்தவன் வேள்வி அழித்தவன் என்று குறிப்பிடுகின்றார்.சிவபெருமானை, இந்த வேள்வி செய்வதற்கு முன்னமும் பல முறை தக்கன் இகழ்ந்தமை கந்த புராணத்தில் குறிப்பிடப்படுகின்றது. பெருமான் அதற்காக சினம் கொண்டு எப்போதும் தக்கனை தண்டிக்கவில்லை. எனவே, இந்த வேள்வி நடைபெற்ற போது தக்கன் தன்னை இகழ்ந்ததற்காக, பெருமான் கோபம் கொண்டு வீரபத்திரரை அனுப்பினார் என்று பொருள் கொள்வது பொருத்தமற்றதாக தோன்றுகின்றது. எனவே இகழ்ந்தவன் என்று தக்கனை குறிப்பிடுவது,பிராட்டியை இகழ்ந்தவன் என்ரு பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. இகழ்ந்தவன்=தக்கன். பொறை இரத்தல்=பிழை பொறுக்குமாறு வேண்டுதல். சிவபிரானையும் பிராட்டியையும் இகழ்ந்து, அவரைத் தவிர்த்து மற்றைய தேவர்களை அழைத்துத் தவறாக யாகம் புரிந்தமையால் தக்கனது யாகம் அழிக்கப்பட்டது. யாகத்தில் பங்கெடுத்துக் கொண்ட பல தேவர்கள் தண்டனை பெற்றாலும் அவர்கள் மன்னிக்கப்பட்டு உயிருடன் இருந்தார்கள். தலை வெட்டப்பட்ட தக்கனும், ஆட்டுத் தலை பொருத்தப்பட்ட பின்னர் தனது தவற்றினை உணர்ந்து சிவபிரானை வேண்டினான்.
இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன் தன் புன்மைகள் தீரப் புரிந்து நல்காய்
திகழ்ந்த திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே
முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.85.7) அப்பர் பிரான், பிராட்டியை இகழ்வாக தக்கன் பேசியதை குறிப்பிடுகின்றார், உணராத தக்கன் என்று சிவபெருமானின் பெருமையை உணராது, அவரை ஒதுக்கிவைத்து வேள்விச் செய்யத் துணிந்த தக்கனின் செய்கையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வேள்வி உருண்டு ஓட என்று, வேள்வி தொடர்ந்து நடைபெறாமல் வேள்வியை அழித்த செய்கை இங்கே உணர்த்தப் படுகின்றது.தக்கனின் வேள்வி தொடர்புடைய செய்திகள், திருவாசகம் திருவுந்தியார் பதிகத்தில் விவரமாக கூறப்படுகின்றன. அந்த பதிகத்தில் மூன்று பாடல்களில் கலங்கிற்று வேள்வி, மயங்கிற்று வேள்வி, மடிந்தது வேள்வி என்று கூறப்படுகின்றது. வேள்வியில் அளிக்கப்பட்ட அவிர்பாகத்தைப் பெறுவதற்காக நீட்டிய அக்னியின் கை வெட்டப்பட்டது என்றும், அவிர்பாகத்தை உண்பதற்காக வாயைத் திறந்த சூரியனின் பற்கள் தகர்க்கப் பட்டன என்றும், தலையை இழந்த தக்கனின் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்ததால் வேள்வி தொடர்ந்து நடைபெறவில்லை என்றும் இந்த பாடல்களில் மணிவாசகர் கூறுகின்றார். இவ்வாறு வேள்வி தகர்க்கப்பட்ட செய்தியை மேற்கண்ட பாடல்களில் உணர்த்திய மணிவச்சகர், வேள்வி தகர்க்கப்பட்ட போது தேவர்கள்,உருத்திரனிடம் இருந்த பயத்தால் அஞ்சி ஓடியதையும் மற்றொரு பாடலில் கூறுகின்றார். மகள் என்ற முறையில் தக்கன் நடத்திய யாகத்திற்கு சென்ற தாட்சாயணி, சிவபெருமானை அழைக்காமல் வேள்வி நடத்தியது முறையல்ல என்று கூற, தக்கனுக்கு மிகுந்த கோபம் வருகின்றது; தாட்சாயணி உலகத்திற்கு தலைவி என்பதை கருத்தில் கொள்ளாமல், தேவியை இழிவாக தக்கன் பேசுகின்றான். அவ்வாறு அவன் இழிவாக பேசியதை கண்டித்து எவரும் தக்கனை திருத்தவில்லை; மேலும் கோபத்தில், தக்கன் தேவியை, நீ எனக்கு மகளும் அல்ல, நான் உனக்கு தந்தையும் அல்ல என்றும் ஏசுகின்றான். இதனால் மிகவும் மனம் வருந்திய அன்னை, தக்கனுக்கு மகளாகப் பிறந்ததால் தானே, இழிவான சொற்களைத் தான் கேட்ட நேர்ந்தது என்று வருந்தி, தக்கன் தந்த உடலினை விட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்து, வேள்விக் குண்டத்தில் பிராட்டி குதித்து விடுகின்றாள். இந்த பாடலிலும் தாட்சாயணி என்று குறிப்பிடாமல் மலைமகள் என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம்.
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓடத் தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம்
தகர்த்தவன்காண் தக்கன்றன் தலையைச் செற்ற தலைவன்காண் மலைமகளாம் உமையைச் சால
மதிப்பு ஒழிந்த வல்லமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடு மதனை எல்லாம்
சிதைத்தவன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவனென் சிந்தையானே
பொழிப்புரை:
மலைமகள் பார்வதி தேவியாக மறுபிறப்பு எடுத்த தாட்சாயணியினை இகழ்ந்த, அற்ப புத்தி உடையவனும் குறுகிய மனம் உடையவனும் ஆகிய தக்கனின் உயர்ந்த மனிதத் தலை மற்றும் தீயின் வடிவமாக விளங்கும் அக்னி தேவனின் கை ஆகிய இரண்டையும் அறுத்து, தனது கோபத்தை வெளிப்படுத்திய சிவபெருமான் உறைகின்ற தலமாவது, கலை ஞானம் பொருந்திய புலவர்களின் துன்பத்தை நீக்கும் பொருட்டு நிறைந்த செல்வத்தை வழங்கும் அடியார்கள் மிகவும் அதிகமாக வாழ்வதும், மலை போன்று உயர்ந்த மதில்களால் சூழப்பட்டதும் அழகிய சோலைகள் என்றும் வளரும் வண்ணம் நீர்வளம் நிறைந்ததும் ஆகிய திருவீழிமிழலை தலமாகும்.
பாடல் 4:
மருவலர் புரமெரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய
பெருவலியினன் நலம் மலிதரு கரன் உர மிகு பிணம் அமர்வன
இருளிடை அடை உறவொடு நட விசையுறு பரன் இனிதுறைபதி
தெருவினில் வரு பெரு விழவொலி மலிதர வளர் திருமிழலையே
விளக்கம்:
மருவுதல்=பொருந்துதல்; மருவலர்=பொருந்தாத பகைவர்கள்; மடிதர=அழிய; கணை=அம்பு; நிறுவுதல் என்ற சொல் இங்கே ஊடுருவிச் செல்லல் என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. உர மிகு=வலிமை வாய்ந்த; எத்துணை வலிமை வாய்ந்த உடலாக இருந்தாலும் ஒரு நாள் அழியக் கூடியவை என்பதை உணர்த்தும் வண்ணம், உர மிகு பிணம் என்று குறிப்பிடுகின்றார் போலும். மனிதர்களுடன் ஒப்பிடுகையில் தேவர்கள் வலிமையும் நீண்ட ஆயுளும் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர். அனைத்து தேவர்களினும் இந்திரன், பிரமன், திருமால் ஆகியோர் வலிமை வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றனர்.எனினும் எவரும் இறப்பினைத் தவிர்க்கமுடியாமல் ஒரு நாள் இறந்து விடுகின்றனர் என்பதை உணர்த்தும் வண்ணம், உரமிகு பிணம் என்று இங்கே குறிப்பிடுகின்றார் போலும். பரன்=மேலானவன்; அடை உறவு=பெருமானை வந்து அடையும் பேய்க்கணம். பிறப்பும் ஆதியும் இல்லானாகிய பெருமானுக்கு தாய் தந்தை உற்றார் எவரும் இல்லை என்பதால் எப்போதும் பெருமானைச் சூழ்ந்து காணப்படும் பேய்க் கணங்களை உறவு என்று குறிப்பிட்டார் போலும்.இந்த குறிப்பு நமக்கு, சீர்காழி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் பாடல்கள் அகத்துறை பாடல்களாக,தாயின் கூற்றாகவும், தோழியின் கூற்றாகவும், தலைவியின் கூற்றாகவும் அமைந்துள்ளன. சிவபெருமானின் எந்த அம்சம் தனது மகளை வெகுவாக மயக்கி,அவன் பால் தீராத காதல் கொள்ளும் வகை செய்தது என் வியக்கும் தாய், பெருமானின் உறவு, உண்கலன், உறைவிடம், ஆகியவை குறித்து இகழ்ச்சியாக பேசுகின்றாள். தனது மகள் சிவபெருமான் பேரில் தீராத காதல் கொள்ளும் அளவுக்கு, சிவபெருமானின் எந்த அம்சம், தனது பெண்ணின் கருத்தினைக் கவர்ந்தது என்பதை யோசித்துப் பார்க்கும் தாய்க்கு, சிறப்பான அம்சமாக எதனையும் உணர முடியவில்லை. எதனைக் கண்டு தனது பெண் சிவபிரான் பால் காதல் கொண்டாள் என்று வியக்கும் பாடல். ஈமம்=சுடுகாடு. சிவபெருமானின் உறவுகளாக, அவனை எப்போதும் சூழ்ந்து இருப்பன பேயக்கணங்கள்;அவனது உண்கலனோ, உலர்ந்த மண்டையோடு; அவனது இருப்பிடமோ சுடுகாடு; அவனது உடலில் ஒரு பாகத்தில் இருப்பதோ பார்வதி. இவ்வாறு காணப்படும் சிவபெருமான் தான், சிறந்த துறைமுகமாக விளங்கும் தோணிபுரத்து இறைவர். இவரிடம் உள்ள எந்த அம்சத்தை பெருமையாக கருதி எனது பெண் அவர் மீது தீராத காதல் கொண்டுள்ளாள் என்று தலைவியின் தாய் வியப்பதாக அமைந்துள்ள பாடல்.
உறவு பேய்க்கணம் உண்பது வெண்தலை
உறைவது ஈமம் உடலிலோர் பெண்கொடி
துறைகள் ஆர் கடல் தோணிபுரத்துறை
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பாவதே
பொழிப்புரை:
அனைவரிடமும் பகைமை பாராட்டிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் வெந்து அழியும் வண்ணம், ஒரே அம்பு மூன்று கோட்டைகளையும் ஊடுருவிச் செல்லும் வகையில், அம்பினைச் செலுத்திய பெருமை மிகுந்த ஆற்றல் உடையவனும் நன்மைகள் பொருந்திய வரத்தினை அருளும் கரங்கள் உடையவனும் ஆகிய பெருமான், வலிமையான உடல்கள் கொண்ட உயிர்களும் நிலைத்து வாழமுடியாமல் இற்ந்து பட்டழிந்து பிணமாக இருக்கும் சுடுகாட்டினில் நள்ளிருளில் நடனமாடுகின்றான். அப்போது எப்போதும் பரமனுடன் இணைந்து இருக்கும் பேய்க் கணங்கள், உறவாக அவனை வந்தடைய, இசை பாடுபவனாக மிகுந்த மகிழ்ச்சியுடன் பெருமான் நடனம் ஆடுகின்றான். அத்தகைய பெருமான், அனைத்து உயிர்களுக்கும் மேலானவனாக விளங்கும் பெருமான், மகிழ்ந்து உறைகின்ற தலம், சிறப்பான திருவிழாக்களின் ஆரவாரங்கள் நிறைந்த வீதிகள் நிறைந்த திருவீழிமிழலை தலமாகும்.
பாடல் 5:
அணி பெறு வடமர நிழலினில் அமர்வொடும் அடி இணை இருவர்கள்
பணி தர அறநெறி மறையொடும் அருளிய பரன் உறைவிடம் ஒளி
மணி பொரு வரு மரகத நிலமலி புனல் அணைதரு வயலணி
திணி பொழில் தருமணம் அது நுகர் அறுபதம் முரல் திருமிழலையே
விளக்கம்:
அணி=அழகு; இணை இருவர்=இரு பக்கங்களிலும் இரண்டிரண்டு பேராக அமர்ந்திருக்கும் சனகாதி முனிவர்கள் நால்வர்; அமர்வு=விருப்பம்;
பொழிப்புரை:
அழகிய கல்லால மரத்தின் கீழே அமர்ந்த வண்ணம், தனது இணையான திருவடிகளை சனகர் சனந்தனர் ஆகிய இருவர் ஒரு புறமும் சனாதனர் சனற்குமாரர் ஆகிய இருவர் ஒரு புறமும் பணிந்த வண்ணம் இருக்கையில், அவர்கள் நால்வர்க்கும் அறநெறியை நான்கு வேதங்களின் விளக்கமாக அருளியவனும்,அனைத்து உயிர்களுக்கும் மேலானவனும் ஆகிய பரமன் உறைகின்ற இடமாவது திருவீழிமழலை ஆகும். இந்த தலம் ஒளி பொருந்திய ஒப்பில்லாத மரகத மணிகள், மிகுதியாக அடித்துக் கொண்டு வரும் ஆற்று நீர் நிறைந்து வயல்கள் செழித்து காணப்படுவதும் அடர்ந்த சோலைகளில் பரவியிருக்கும் நறுமணத்தை நுகரும் வண்டுகள் முரல்வதும் ஆகிய காட்சிகள் நிறைந்த தலமாகும்.
பாடல் 6:
வசையறு வலி வனசர உருவது கொடு நினைவரு தவமுயல்
விசையன திறல் மலைமகள் அறிவுறு திறல் அமர் மிடல் கொடு செய்து
அசைவில படை அருள் புரிதரும் அவன் உறை பதியது மிகுதரு
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலி தரு திருமிழலையே
விளக்கம்:
வசையறு வலி=குற்றமற்ற வலிமை, குறையேதும் இல்லாத பூரணமான வலிமை; மிகவும் வலிமை வாய்ந்தவனாக அனைவராலும் கருதப்பட்ட அர்ஜுனனை வென்ற பெருமானின் வலிமை குற்றம் குறைகள் அற்றதாகத் தானே இருக்க வேண்டும். சர=இயங்கும்; வனசர உரு=காடுகளில் இயங்கும் வேடர்கள்;நினைவரு தவம்=நினைத்தற்கும் அரிய தவம்; விசையன=விஜயனது; திறன்=திறமை; மிடல்=வலிமை; அசைவில படை=எப்போதும் வெற்றியையே காணும் பாசுபத அத்திரம்; அர்ஜுனனின் பலத்தினை பரீட்சை செய்வதற்காக பெருமான் வேடுவக் கோலம் தாங்கி, அன்னை பார்வதி தேவி உடன்வர சென்றதாக இந்த பாடலில் கூறப்படுகின்றது. போர்க் கலையில் சிறந்து விளங்கிய அர்ஜுனனுக்கு முதுகினில் மச்சம் இருந்ததாகவும், அர்ஜுனன் எவரிடமும் தோற்று ஓடாததால் அந்த மச்சத்தினை பார்க்கும் வாய்ப்பு எவருக்கும் கிடைக்கவில்லை என்றும் கூறுவார்கள். அன்னை பார்வதி தேவிக்கு இந்த மச்சத்தினைக் காண ஆவல் உண்டானதாகவும், அதனால் தான் தன்னை நோக்கி தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் வழங்கச் சென்ற இறைவன்,தன்னுடன் அன்னையையும் அழைத்துக் கொண்டு சென்றதாகவும், அர்ஜுனனை போரில் தோற்கடித்து அவனது முதுகு மச்சத்தை பார்வதி தேவி காண வைத்ததாகவும் கூறுவார்கள். சிதம்பரத்தை அடுத்த வேட்களம் தலத்தில் தான் அர்ஜுனன் பாசுபதம் பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த தலத்து இறைவனின் பெயர் பாசுபத நாதர் என்பதாகும். இங்கு உள்ள அர்ஜுனன் உருவச் சிலையில் முதுகில் ஒரு வடு இருப்பதையும் நாம் காணலாம்.
மேற்கண்டவாறு அர்ஜுனனின் வீரத்தின் திறமையை காண்பதற்காக வேடனாக பெருமான் சென்ற நிகழ்ச்சி பல திருமுறை பாடல்களில் கூறப்படுகின்றது.அர்ஜுனனை விற்போரிலும் மற்போரிலும் வென்ற பெருமான் அர்ஜுனனை நாணமடையச் செய்தார் என்று கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.79) பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நிரந்த மொழி=ஒழுங்கு உடையது போன்று சொல்லப்படும் பொய் மொழிகள்; பெயர்கள் பத்துடைய மன்னன்=அர்ஜுனன்; கௌந்தேயன், பார்த்தன், விஜயன், கிரிடீ, சுவேதவாகனன், விபத்சு, பல்குனன், சவ்யசாசி, தனஞ்சயன் என்பன அர்ஜுனனின் மற்ற பெயர்கள் ஆகும்.
நேசம் இல் சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து
ஆசை கொள் மனத்தை அடியவர் அவர் தமக்கு அருளும் அங்கணன் இடம்
பாசம் அறுத்து அவனியில் பெயர்கள் பத்துடைய மன்னவனைக்
கூச வகை கண்டு பின் அவற்கு அருள் நல்க வல கோகரணமே
ஏடுடை மலராள் பொருட்டு அர்ஜுனனுடன் பெருமான் போர் புரிந்ததாக சொல்லப்படும் பாடல் வெங்குரு தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பாடல் (1.75.10). அர்ஜுனனுக்கு பாசுபதம் அளிப்பதற்காக பெருமான் பூண்ட வேடுவக்கோலம் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. அர்ஜுனனுக்கு அருள் புரிய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்ட பெருமான், அவனுடன் சண்டை செய்யாமலே, அந்த அத்திரத்தை அவனுக்கு வழங்கியிருக்கலாம். பெருமான் சண்டையிட வேண்டிய அவசியமே இல்லை. எனினும், பெருமான் வ்லிய சண்டைக்கு இழுத்தது, பார்வதி தேவியின் விருப்பத்தை நிறைவேற்றவே என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இதே பதிகத்தின் மூன்றாவது பாடலிலும், காரிகை காணத் தனஞ்சியன் தன்னைக் கறுத்து அவற்கு அளித்து உடன் காதல் செய் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். காதல் செய் பெருமான் என்ற தொடர் மூலம், பெருமான் விஜயனுடன் சண்டையிட்டது அவன் பால் கொண்டிருந்த அன்பின் காரணமாகத் தான் என்பதும், வெறுப்பால் விளைந்ததல்ல என்பதையும் உணர்த்துகின்றார்.
பாடுடைக் குண்டர் சாக்கியர் பயில் தரும் அறவுரை விட்டு அழகாக
ஏடுடை மலராள் பொருட்டு வன் தக்கன் எல்லையில் வேள்வியைத் தகர்த்து அருள் செய்
காடிடைக் கடி நாய் கலந்துடன் சூழக் கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
புகலி என்று அழைக்கப்ப்டும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.104.5) திருஞானசம்பந்தர், அழகிய உமையன்னையுடன் வேடுவக்கோலம் பூண்டவனாக காட்டில் நடந்தான் என்று கூறுகின்றார். தான் வேடுவக்கோலம் பூண்டது மட்டுமன்றி பிராட்டியையும் வேடுவப்பெண்ணின் கோலத்துடன் அழைத்துச் சென்றதாக கூறுகின்றார். எனவே பார்வதி தேவி அர்ஜுனனின் வீரத்தைக் காணவேண்டும் என்பதும் பெருமானின் நோக்கமாக இருந்தமை புலனாகின்றது. இவ்வாறு தனது அடியானுக்கு அருள் புரியும் நோக்கத்த்துடன் கானகத்தில் நடந்த பெருமானின் கருணைச் செயலை நினைக்கும் தொண்டர்கள் அவனைப்போற்றிப் புகழ்வதை பெரிதும் விரும்பும் பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றர்.
சூடுமதிச் சடைமேல் சுரும்பார் மலர்க் கொன்றை துன்று நட்டம்
ஆடும் அமரர் பிரான் அழ்கார் உமையோடுமுடன்
வேடுபட நடந்த விகிர்தன் குணம் பரவித் தொண்டர்
பாட இனிதுறையும் புகலிப் பதியாமே
முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (1.131.2) திருஞானசம்பந்தர், அர்ஜுனனின் போர் வல்லமையை அளக்கச் சென்ற பெருமான் தேவியையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றதாக கூறுகின்றார். வேரி=தேன், அம்பிகை தனது கூந்தலில் சூடியிருந்த மலர்களில் உள்ள தேன்;கயம்=நீர்நிலை; மூரி=பெருமை; முயங்கி=தடவிக்கொண்டு; காற்றுக்கு இயற்கையில் மணம் இல்லை. ஆனால் முதுகுன்றத்து தலத்தில் வீசும் காற்று,சோலைகளில் உள்ள மலர்களில் படிந்தும் அவைகளை உதிர்த்தும் வருவதாலும், தலத்தின் நீர்நிலைகளில் உள்ள நீரின் மீது தவழ்ந்து வருவதாலும் குளிர்ச்சியும் நறுமணமும் கொண்டதாக விளங்குகின்றது என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். கார்=மழை; அர்ஜுனன் போர் புரியும் ஆற்றலை நேரில் காண அம்பிகை விரும்பியதால், தேவியையும் உடன் அழைத்துக் கொண்டு அர்ஜுனன் தவம் புரிந்த இடத்திற்கு பெருமான் சென்றதாக புராணம் கூறுகின்றது. பொறை=வலிமை
வேரி மிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில் விசயன் மேவு
போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில்
காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலரும் உதிர்த்துக் கயம் முயங்கி
மூரி வளம் கிளர் தென்றல் திரு முன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே
தெளிச்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.3.1) திருஞானசம்பந்தர் உமை அன்னையுடனாக பெருமான் அர்ஜுனனைக் காண சென்றதாக கூறுகின்றார். பான்மை=பெருமை; பாவகம்=உண்மையல்லாத தன்மை; வேடுவனாக பன்றியின் பின்னே சென்றது பெருமானின் திருவிளையாடலில் ஒன்று என்று கூறுகின்றார். மேவரும் தொழில்=மேன்மையான தொழில்; யாவ்ரும் செய்தற்கு அரிய செயல்; தேவர்கள் இந்த தலத்தினில் மூன்று வேளைகளிலும் பூஜை செய்தமை இங்கே குறிப்பிடப்படுகின்றது.
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகு தெளிச்சேரியீர்
மேவரும் தொழிலாளொடு கேழற் பின் வேடனாம்
பாவகம் கொண்டு நின்றது போலும் நும் பானமையே
இரும்பூளை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.36.6) திருஞானசம்பந்தர், சேடார் சேயிழையோடு உடனாகி காடார் கடுவேடுவன் ஆனவன் என்று கூறுகின்றார். ஈடாய்=அருள் பொருந்துதல்; தோடார்=இதழ்கள் நிறைந்த; தூய=தூவித் தொழுகின்ற; சேடு=பெருமை, இங்கே திரண்டும் அடர்ந்தும் காணப்படும் பெருமை உடைய கூந்தல்; சேயிழை=சிறந்த ஆபரணங்களை அணிந்த பிராட்டி; இந்த பாடலில், காட்டில் வாழும் வேடனாக வந்ததன் காரணம் தான் யாது என்று கேட்கின்றார். சிறந்த பாசுபத அத்திரம் பெறுகின்ற நோக்கத்துடன் காட்டினில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை கொல்வதற்காக, மூகாசுரன் என்ற அரக்கனை துரியோதனன் ஏவுகின்றான். அந்த அரக்கனும், காட்டுப்பன்றி வேடத்தில் அர்ஜுனன் இருக்கும் இடத்திற்கு வருகின்றான். காட்டுப்பன்றியை வேட்டையாடி கொல்வது வேடர்களின் வழக்கம். எனவே தான் காட்டினில் உலாவும் வேடனாக பெருமான் உருவம் எடுக்கின்றார். தனது அடியார்களுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் சூழ்நிலைக்குத் தக்கவாறு வேடம் கொள்வதில் வல்லவர் சிவபெருமான்.
தோடார் மலர் தூய்த் தொண்டர்கள் சொல்லீர்
சேடார் குழல் சேயிழையோடு உடனாகி
ஈடாய் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
காடார் கடுவேடவன் ஆன கருத்தே
கோளறு திருப்பதிகத்தின் பத்தாவது பாடலிலும் (2.85.10) திருஞானசம்பந்தர் பார்வதி தேவியுடன் பெருமான் விஜயனுக்கு அருள் புரிவதற்காக சென்றார் என்று குறிப்பிடுகின்றார். பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் உயிர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பல ஆபத்துகளை குறிப்பிட்டு, பெருமானின் அருள் துணையாக இருப்பதால் அனைத்து விதமான ஆபத்துகளும் விலகும் என்று உணர்த்திய திருஞானசம்பந்தர் இந்த பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்களை வாதில் வெல்வதற்கும் பெருமானின் அருள் துணையாக இருக்கும் என்று கூறுகின்றார். விசையன்= அர்ஜுனன்; வேட விகிர்தன்=வேடனாக மாறியவன்;
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே
திருக்கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.44.2) திருஞானசம்பந்தர் மானலம் மட நோக்குடையாளுடன் பெருமானை விஜயனைக் காண்பதற்கு சென்றதாக கூறுகின்றார். அலங்கல்=மாலை; கான்=கானகம், காடு; இலங்க=பிரகாசித்து விளங்க; மானலம் என்ற சொல்லினை மான்+நலம் என்றும் மா+நலம் என்றும் இரண்டு விதமாக பிரித்து வேறு வேறு பொருள், பெரியோர்கள் காண்கின்றனர். மானைப் போன்று மருண்ட பார்வை உடையவள் என்றும் உலகினுக்கு பெரிய நலன்கள் அருளுபவள் என்பதே இந்த இரண்டு வேறுவேறு விளக்கங்கள். எப்போதும் ஈசனுடன் கூடி அம்பிகை,உடனிருப்பதால் உயிர்களுக்கு அன்னை பெரிய உதவி புரிகின்றாள் என்று பெரியோர்கள் கருதுகின்றனர்.
வானிலங்க விளங்கும் இளம் பிறை
தான் அலங்கல் உகந்த தலைவனார்
கான் இலங்க வரும் கழிப்பாலையார்
மானலம் மட நோக்கு உடையாளொடே
நாகைக்காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.71.7) அப்பர் பிரான், தேவியுடன் பெருமான் விஜயனைக் காண்பதற்காக சென்றதாக குறிப்பிடுகின்றார். வெம்கடும்= வெப்பம் மிகுந்து கடுமையான: ஏழை=பெண், இங்கே உமையம்மை: பல திருமுறைப் பாடல்களில் ஏழை என்று உமை அம்மையை குறிப்பிட்டுள்ளார்கள். ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் பொதுவாக, அவர்களது உடலின் தன்மை காரணமாக வலிவு குன்றி இருப்பதால்,பெண்களை ஏழை என்று அழைப்பார்கள்.
வெங்கடும் கானத்து ஏழை தன்னொடும் வேடனாய்ச் சென்று
அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடுசரம் அருளினானை
மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானைக்
கங்குலும் பகலும் காணப் பெற்று நாம் களித்தவாறே
திருக்கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.53.8) சுந்தரர், வாடா முலயாள் தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்க் கோடர் கேழற் பின் பெருமான் சென்றதாக குறிப்பிடுகின்றார். நாடா வண்ணம்=தன்னை அர்ஜுனன் அறிந்து கொள்ள முடியாத வண்ணம். வேடுவனாக வந்தவர் சிவபெருமான் தான் என்பதை அர்ஜுனன் முன்னமே அறிந்திருந்தால், அவரது திருவருளை நாடிச் சென்று அவரது திருவடிகளைப் பணிந்திருப்பான் என்பதை உணர்த்தும் வண்ணம் நாடா வண்ணம் என்ற தொடர் அமைந்துள்ளது. நாழி=வில் அம்பறத் தூணி;
வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்
கோடார் கேழற் பின்சென்று குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணம் செருச் செய்து ஆவ நாழி நிலையருள் செய்
பீடார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே
பொழிப்புரை:
குற்றம் குறைகள் அற்ற வலிமையுடன், வனத்தில் திரியும் வேடுவனின் கோலம் கொண்டவனாக, நினைப்பதற்கு அரிய தவத்தை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட விஜயனது வலிமையை உமை அன்னைக்கு உணர்த்தும் பொருட்டு, விஜயனை வலிய போருக்கு இழுத்து மிகுந்த வல்லமையுடன் போர் செய்த பின்னர் அவனுக்கு தோல்வி என்பதை அறியாத வண்ணம் என்றும் வெற்றியையே அளிக்கும் பாசுபத அத்திரத்தை அவனுக்கு அருளிய பெருமான் உறைகின்ற தலமாவது வீழிமிழலையாகும். அனைத்து திசைகளிலும் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகல் அடர்ந்து காணப்படும் தலம் திருவீழிமிழலையாகும்
பாடல் 7:
நலமலிதரு மறைமொழியொடு நதி உறு புனல் புகை ஒளி முதல்
மலரவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு
சலமலிதரு மறலி தனுயிர் கெட உதை செய்தவன் உறை பதி
திலகம் இது என உலகுகள் புகழ்தரு பொழில் அணி திருமிழலையே
விளக்கம்:
மறைமொழி=வேத மந்திரங்கள்; ஒளி=தீபம்; திறல்=ஆற்றல், முறை, தன்மை; சலம்=வஞ்சனை; மறலி=இயமன்; மார்க்கண்டேயன் பிறக்கும் முன்னரே அவரது ஆயுட்காலம் பதினாறு வயது என்று இறைவனால் தீர்மானிக்கப்பட்டது; இதனை அவரது தந்தையார் மிருகண்டு முனிவரும் அறிவார். இதனை சிறுவன் மார்க்கண்டேயனும் அறிந்திருந்ததாக திருமுறை பாட்ல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இவ்வாறு முன்னமே குறிப்பிடப்பட்ட நாளில் அந்த சிறுவனது உயிரினைக் கவர இயமன் முயற்சி செய்ததில் தவறேதும் இல்லை. ஆனால் அந்த உயிரினை பறிப்பதற்காக வந்தபோது இயமன் அணுகிய முறை தான் தவறானது. அந்த சிறுவன் பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்ததை கண்ட இயமன், என்ன செய்திருக்க வேண்டும்; பெருமானால் குறிக்கப்பட்ட ஆயுட்காலம் எனினும், பெருமானை சிறுவன் மார்க்கண்டேயன் வழிபட்டுக் கொண்டிருந்த தருணம் என்பதால், பெருமானின் அனுமதியை பெற்ற பின்னரே இயமன் தனது கடமையை செய்வதில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், பெருமான் அறியாமல் சிறுவனது உயிரைக் கவர்ந்து விடலாம் என்று நினைத்ததே இயமன் செய்த தவறு. இதனையே இங்கு வஞ்சனை என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திலகம் என்று வீழிமிழலை தலத்தினை உலகத்தவர் புகழ்கின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திலகம் எவ்வாறு அதனை அணியும் மகளிருக்கு அழகு சேர்க்கின்றதோ அது போன்று வீழிமிழலை தலத்தில் செய்யப்படும் வழிபாடு, அவ்வாறு வழிபடும் அடியார்களுக்கு பல நலன்களை அளித்து புகழினைச் சேர்க்கும் என்று உணர்த்தப் படுகின்றது. பதினாறு வயது நிரம்பி தனது வாழ்நாள் முடிவடைய இருந்த தருணத்தில், சிறுவன் மார்க்கண்டேயன் பெருமானை வழிபட்டது கடவூர் வீரட்டம் தலத்தின் உறைகின்ற பெருமான் என்பதை நாம் அறிவோம். இந்த தலத்தின் அருகே நதி ஏதும் இல்லை. அவ்வாறு இருக்கையில் நதிநீரைக் கொண்டு எவ்வாறு சிறுவன் மார்க்கண்டேயன் இறைவனை நீராட்டி வழிபாடு செய்தான் என்ற ஐயம் நமக்கு எழலாம். கடவூர் மயானத்திலிருந்த கிணற்றில், கங்கை நதியை வரவழைத்து இறைவனை நீராட்டியதாக புராணங்கள் உணர்த்துகின்றன. எனவே கடவூர் மயானத்தில் இருக்கும் கிணற்றினில் கங்கை நதி கலந்திருப்பதாக நம்பப்படுகின்றது. இன்றும் அந்த கிணற்றிலிருந்து கொண்டுவரப்படும் நீர் கொண்டு தான் பெருமான் நீராட்டப் படுகின்றார். கங்கை நீரினை வரவழைத்து பெருமான் சிறுவன் மார்க்கண்டேயரால் வழிபடப்ப்ட்ட செய்தி, பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
கருப்பறியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.31.7) நீரும் மலரும் கொண்டு சிறுவன் மார்க்கண்டேயன் இறைவ்னை வழிபட்டார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அரங்கல்=அழிதல்; அப்பு=நீர்; சோதி ஒளி=தீபம்; நற்புகை=தூபம்; வளர்க்கு=வளர்க்கும்; வடு= பிரம்மச்சாரி சிறுவன்,மார்க்கண்டேயன்; அந்தகன்=இயமன்; அந்தந்த உயிர்களுக்கு விதிக்கப்பட்ட நாளினில் அந்த உயிரினை சிறியோர் முதியோர் பெண்டிர் நோய்வாய்ப் பட்டோர் என்று இரக்கம் ஏதும் கொள்ளாமலும் வலிமை உடையவர் சக்ரவர்த்தி என்று அச்சம் ஏதும் கொள்ளாமலும், குருடன் போன்று, உயிர் பொருந்தியிருக்கும் உடலினை சட்டை செய்யாமல் செயல்படுவதால் இயமனுக்கு அந்தகன் என்ற பெயர் வந்தது. சிவபூஜை செய்து கொண்டிருந்த சிறுவனின் உயிரைக் கவர முயற்சி செய்த காலனின் உயிர் பெருமானால் அழிக்கப் பட்டது என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சிறுவன் சண்டீசன் செய்த சிவ பூஜைக்கு இடையூறாக வந்த அவரது தந்தையின் கால்கள் வெட்டப்பட்டு அவர் கீழே விழுந்து இறந்ததும் பெருமானின் செயலால் தானே. சண்டீசர் தனது தந்தையின் கால்களின் மீது மரக் கொம்பினைத் தானே வீசினார். இறைவனின் செயலால் தானே அந்த கொம்பு மழுவாளாக மாறி எச்சதத்தரின் கால்களை வெட்டியது. பண்டைய நாளில் இயமன் செய்த தவறினை செய்த எச்சதத்தனும், இயமன் பெற்ற தண்டனையை அடைந்தான் அல்லவா. காதுதல்=கொல்லுதல்; காதினன்= உதைத்தவன்; பெருமான் இயமனை உதைத்து வீழ்த்தியதால் உதைத்தவன் என்று பொருள் கொள்ளவேண்டும்.பெருமானை வழிபாடு செய்து கொண்டிருந்ததையும் பொருட் படுத்தாமல் சிறுவனது உயிரைக் கவர எண்ணியதால் அந்தகன் என்று நயமாக கூறினார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
ஆதி அடியைப் பணிய அப்பொடு மலர்ச் சேர்
சோதி ஒளி நற்புகை வளர்க்கு வடு புக்குத்
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறியலூரே
கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.107.5) அப்பர் பிரான், சிறுவன் மார்க்கண்டேயன், அனுதினமும் பெருமானை நீராட்டி அர்ச்சனை செய்து வழிபட்டதாக கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சிறுவன் மார்க்கண்டேயனுக்காக பெருமான் காலனை உதைத்த வரலாறு குறிப்பிடப்படுகின்றது. உழக்குதல்=நிலை குலைவித்தல்: குழை திகழ் காதினன் என்று ஒரு காதில் குழையும், மற்றோர் காதில் தோடும் அணிந்து காணப்படும் மாதொருபாகனின் கோலம் இங்கே நினைவூட்டப் படுகின்றது
குழைத் திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்து எழுந்து
பழக்கமோடு அர்ச்சித்த மாணி தன் ஆருயிர் கொள்ள வந்த
தழல் பொதி மூவிலை வேலுடைக் காலனைத் தான் அலற
உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே
கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.31.6) அப்பர் பிரான், பால் நற்றயிர் நெய்யோடு பலபல கொண்டு இறைவனை சிறுவன் மார்க்கண்டேயர் நீராட்டி வழிபட்டதாக கூறுகின்றார். சேலின் நேர் அனைய கண்ணார்=மீன்களைப் போன்று கண்களை உடைய மகளிர்: திறம் விட்டு=வலையில் அகப்படாமல் விடுபட்டு இருத்தல்: மால்=மயக்கம்: மாலினைத் தவிர நின்ற என்ற சொற்றொடருக்கு, மயக்கம் தரும் மரணத்தைத் தவிர்த்த மார்க்கண்டேயர் என்று பொருள் கொள்ளலாம்.
சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டுச் சிவனுக்கு அன்பாய்ப்
பாலு நற்றயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற்காக அன்று
காலனை உதைப்பார் போலும் கடவூர் வீரட்டனாரே
குறுக்கை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.49.2) அப்பர் பிரான், சிறுவன் மார்க்கண்டேயன் ஆற்று நீர் கொண்டு இறைவனை நீராட்டியதாக குறிப்பிடுகின்றார். சாற்றும் நாள்=முன்னமே சொல்லிய நாள்; தனக்கு குழந்தை இல்லை என்று சிவபிரானை நோக்கி தவம் செய்த மிருகண்டு முனிவருக்கு, சிவபிரான் பிள்ளை வரம் அளித்த போது ஒரு நிபந்தனை விதித்தார்; பதினாறு ஆண்டுகள் மட்டும் வாழ்நாள் கொண்ட அறிவுடைய மகன் வேண்டுமா அல்லது நூறு ஆண்டு வாழ்நாள் கொண்ட அறிவில்லாத மகன் வேண்டுமா என்று கேட்டார். பதினாறு ஆண்டுகள் இருந்தாலும் அறிவுடைய மகனே வேண்டும் என்று வேண்டிய மிருகண்டு முனிவர் அவ்வாறே பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழ்நாள் கொண்ட மகனைப் பெற்றார். அந்த காலம் முடிந்த பின்னர் தான் இயமன் சிறுவனின் உயிரைப் பறிக்க வந்தான். பூரித்து=நிறைவாக; குமைத்தல்=தண்டித்தல், வதைத்தல். இறைவனை நீராட்டும் பொருட்டு தனது தவ வலிமையால், கங்கை நீரினை, கடவூர் மயானத்தில் உள்ள ஒரு கிணற்றில் வரவழைத்த மார்கண்டேயர், அந்த நீரினைக் கொண்டு இறைவனை நீராட்டினார். இன்றும் அந்த கிணற்றில் கங்கை நீர் பொங்குவதாக நம்பப் படுகின்றது.
நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து
ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணாளரைக் கொல்வான்
சாற்று நாள் அற்றது என்று தரும ராசற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே
பொழிப்புரை:
ஓதுவோர்க்கு நன்மைக்ள் பலவற்றை அருளும் வேத மந்திரங்களை சொல்லிய வண்ணம், ஆற்றுநீர், நறுமணம் மிகுந்த புகை, தீபம், மலர்கள் கொண்டு முறையாக பூஜை செய்து வழிபடும் தன்மை கொண்ட அந்தணச் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரை, வஞ்சனையான முறையில் கவர வந்த இயமனின் உயிர் அவனது உடலிலிருந்து பிரியும் வண்ணம் உதைத்த பெருமான் உறைகின்ற பதி வீழிமிழலையாகும். உடலுக்கு திலகம் அழகினை அளிப்பது போன்று,அடியார்கள் அனைவருக்கும் புகழினையும் பல நன்மைகளையும் அளிக்கும் ஆற்றல் உடையது என்று உலகத்தவரால் புகழப்படுவதும், அழகிய சோலைகளால் சூழப்பட்டதும் ஆக விளங்குவது திருவீழிமிழலை தலமாகும்.
பாடல் 8:
அரன் உறைதரு கயிலையை நிலைகுலைவது செய்த தசமுகனது
கரம் இருபது நெரி தர விரல் நிறுவிய கழலடி உடையவன்
வரன் முறை உலகவை தருமலர் வளர் மறையவன் வழி வழுவிய
சிரமது கொடு பலி திரிதரு சிவனுறை பதி திருமிழலையே
விளக்கம்:
வரன் முறை=வரையறுக்கப்பட்ட முறை; அந்தந்த ஆன்மாக்களுக்கு வகுக்கப்ப்ட்ட நெறி முறையின் வழியே தகுந்த உடலை படைப்பது; வழி வழுவிய=ஒழுக்க நெறியிலிருந்து வழுவிய, எவராயினும் பொய் சொல்வது தவறு; அதிலும் படைப்புத் தொழிலை செய்யும் பிரமன் பலருக்கும் முன்மாதிரியாக செயல்பட வேண்டிய பிரமன், தான் பெருமானின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்னது பெருந்தவறு என்பதை குறிப்பிடும் வண்ணம் வழிவழுவிய என்று கூறுகின்றார். நிலை குலைவது செய்த=நிலை குலையச் செய்த; கயிலாய மலையை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தைத் தொடரலாம் என்ற முடிவுடன், கயிலாய மலையைத் தனது இருபது கைகளாலும் தூக்குவதற்கு அரக்கன் இராவணன் முயற்சி செய்த போது, கயிலாய மலையில் ஏற்பட்ட அசைவு காரணமாக உமை அன்னை நடுக்கம் அடைந்தாள் என்று பல தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றார். அத்தகைய பாடல்கள்சிலவற்றை நாம் இங்கே காண்போம். வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.9.8) திருஞானசம்பந்தர்,மலையான் மகள் அஞ்ச வரை எடுத்தவன் என்று அரக்கன் இராவணனை குறிப்பிடுகின்றார். சரண்=சரணடையத் தகுதி வாய்ந்த திருப்பாதம்; உகிர்=நகம்;சுருதித்தொகை=சாகைகளின் கூட்டமாகிய வேதம்; விலையாயின சொல்=பெறுமதிப்புடைய சொற்கள்; கலை ஆறு=ஆறு அங்கங்கள்;
மலையான் மகள் அஞ்சவ் வரை எடுத்தவ் வலி அரக்கன்
தலை தோள் அவை நெரியச் சரண் உகிர் வைத்தவன் தன் ஊர்
கலை ஆறொடு சுருதித்தொகை கற்றோர் மிகு கூட்டம்
விலையாயின சொற்றோர் தரு வேணுபுரம் அதுவே
சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.21.8) கயிலையை எழுதரு வகை எடுத்த அரக்கன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.அசைவு=உடல் தளர்ச்சியால் ஏற்படும் வருத்தம்; அயன்=பிரமன்; தனது உடலினை மிகவும் வருத்திக் கொண்டு பிரமனை நோக்கி தவமிருந்து வரம் பெற்றவன் அரக்கன் இராவணன் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இசை கயிலை=பெருமான் மிகுந்த விருப்புடன் எழுந்தருளியுள்ள கயிலாய மலை; எழுதரு வகை=பெயர்த்து எடுக்கும் முயற்சி; நிசிசரன்= இரவிலும் எங்கும் திரியக்கூடிய ஆற்றல் பெற்ற அரக்கன் இராவணன்; பணி=பணியும் வண்ணம்; திசைமலி=எட்டு திசைகளிலும் நிறைந்த; நிகழ்வு உடையர்=நீண்ட நாட்கள் வாழ்வார்கள்; முயல்வினில்=செய்த முயற்சியின் விளைவாக;
அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவழி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை இருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுர நினைபவர் செழுநில னினில்நிகழ் வுடையரே
திருவேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.39.9) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன், அருவரை ஒல்க எடுத்தான் என்று குறிப்பிடுகின்றார். ஒல்க=நெகிழ, அசைய; திருவொளி=ஒளிவீசும் திருமேனி; திசைமுகன்=நான்கு திசைகளில் நடக்கும் செயல்களை நோக்கும் வண்ணம் திசைக்கொரு முகம் கொண்டுள்ள பிரமன்; பேதுறுகின்ற=பேதமையால் உருகின்ற, அறியாமையால் ஏற்படும்; வரை=மலை; கருவரை=கரிய கோவர்தன மலை; அருவரை=அரிய கயிலாய மலை; ஒல்க=நெகிழ, தளர; ஆடெழில் தோள்கள்=வெற்றியும் அழகும் மிகுந்த தோள்கள்;
திருவொளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த
கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால்
அருவரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடெழில் தோள்கள் ஆழத்து அழுந்த
வெருவுற ஊன்றிய பெம்மான் வேட்கள நன்னகராரே
வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.40.8) உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் என்று திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணனை குறிப்பிடுகின்றார். சயவிரி மலர்=வாகை மலர்; வாகை மரம் இந்த தலத்தின் தலமரம் என்பதை நினைவூட்டும் வகையில் இந்த குறிப்பு அமைந்துள்ளது. வரை=மலை; ஒல்க=அசைய; அடர்த்து=நெருக்கி; ஆர்தல்= உண்ணுதல்; ஐ=தலைவன்; ஆர்தலை=உண்ணும் செயலை உடைய தலைவன்;அயல்=உறவினர் அல்லாதார், ஊரார்கள்;
உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக் கை அடர்த்து
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி போற்றி
வயல் விரி நீள் நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்ச்
சயவிரி மாமலர் தூவித் தாழ்சடையான் அடி சார்வோம்
திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.45.9) கயிலை மலை நிலை குலையும் வண்ணம் செய்தவன் என்று அரக்கன் இராவணனின் செய்கையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தரளக்கடகம்=முத்துகளால் செய்யப்பட்ட தோள் வளையம்; பைய=மெதுவாக; பரிந்தார்=கருணை புரிந்தவர்; பவழ=பவளம் போன்று சிவந்த நிறத்தில் காணப்பட்ட; புறவம்= முல்லை நிலம்; நறவம்=நறுமணம் உடைய மலர்:
கவிழ மலை தளரக் கடகக்கையால் எடுத்தான் தோள்
பவழ நுனை விரலால் பைய ஊன்றிப் பரிந்தாரும்
தவழும் கொடி முல்லை புறவம் சேர் நறவம் பூத்து
அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே
பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.108.8) சம்பந்தர் உமையன்னை இராவணனின் செயலால் அச்சம் கொண்டு நடுங்கியதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காண்போம். மறுக=அச்சம் கொள்ள; தொல்லை மலை=மிகவும் பழமையான கயிலாய மலை; கொல்லை விடை=முல்லை நிலத்திற்கு உரிய கடவுளாகிய திருமால், திரிபுர தகனத்தின் போது விடையாக பெருமானை தாங்கிய நிலை; திருமால் விடையாக தன்னைத் தாங்கியதை பெருமான் உகந்து ஏற்றுக் கொண்டான் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போர் செய்ய புறப்பட்ட போது, தேவர்கள் பலரும் அந்த போரினில் பெருமானுக்கு உதவும் பொருட்டு பல விதங்களில் பங்கேற்றனர். அவ்வாறு பங்கேற்றமை குறித்து அவர்களுக்கு கர்வம் ஏற்பட்டது போலும்.அந்நாள் வரை திரிபுரத்து அரக்கர்களிடம் அஞ்சி நடுங்கி ஒளிந்து கொண்டிருந்த தேவர்களால் பெரிதாக என்ன உதவி செய்து விடமுடியும் என்பதையும் மறந்து அவர்கள் கர்வம் கொண்டது தவறான செய்கை தானே. எவரின் உதவியும் தேவைப்படாமல் திரிபுரத்து அரக்கர்களை தன்னால் வெல்ல முடியும் என்பதை அனைவர்க்கும் உணர்த்தும் பொருட்டு, தேவர்கள் பங்கேற்ற தேரின் மீது தனது காலினை பெருமான் வைத்த போது தேரின் அச்சு முறிந்தது.தேரின் அச்சு முறிந்ததால் தேரின் மீது பெருமான் செல்ல முடியாமை கண்டு, திருமால் விடையாக மாறி தன்னை வாகனமாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார், திருமாலின் வேண்டுகோளினை ஏற்று விருப்பத்துடன் பெருமான் விடையின் மீது அமர்ந்தார் என்பதை உணர்த்தும் பொருட்டு கொல்லை விடை உகந்தான் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்
மல்கிய நுண்ணிடையாள் உமை நங்கை மறுக அன்று கையால்
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான்
கொல்லை உடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறை கோயில் பாதாளே
கைச்சினம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.45.8) திருஞானசம்பந்தர், மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாளரக்கன் என்று குறிப்பிடுகின்றார். போது=மலர்; நீதியினால்= முறையாக; உலவு கொன்றை, வினைத்தொகை, பெருமானின் திருமுடி மேல் எப்போதும் கொன்றை மலர் இருக்கும் தன்மையை உணர்த்துகின்றது.
போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடி மேல்
மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாளரக்கன்
நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்றாடும்
காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே
வெண்காடு தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடலில் (2.48.8) அரக்கன் இராவணனின் செயலால் தேவி நடுங்கிய செய்தி ஞானசம்பந்தரால் குறிப்படுகின்றது. மொழியாள்=சொல்லினை உடையவள்; கண்=மயில் தோகையில் உள்ள கண்கள்; மஞ்ஞை=மயில்; கருமை என்று குறிப்பிட்டாலும் அந்த சொல் நீல நிறத்தினை உணர்த்துவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். உரம்=வலிமை; மொய்த்த=பொருந்திய; பண் மொய்த்த என்று குறிப்பிடுவதன் மூலம், இனிமையான பண்கள் தாமே சென்று தேவியின் சொற்களில் சென்று அமர்ந்தது போன்று இனிமையான சொற்களை உடையவள் தேவி என்று திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். உன்மத்தன்=பைத்தியக்காரன்; கயிலாய மலையினை பேர்த்து எடுக்க நினைப்பதே பெரிய குற்றம். அரக்கன் இராவணன் அறியாமையால் செய்தான் என்று எண்ணுவது என்பது தவறு என்று உணர்த்தும் முகமாக, இராமாயணம் தேர்ப்பாகன் அரக்கனுக்கு அறிவுரை செய்ததை உணர்த்துகின்றது.பல தேவாரப் பாடல்களும், தேர்ப்பாகன் செய்த அறிவுரையை குறிப்பிடுகின்றன. எனவே, தேர்ப்பாகன் செய்த எச்சரிக்கையினையும் புறக்கணித்து, கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் எண்ணத்துடன் அந்த மலையை நோக்கி ஓடியவனை பித்துக்குளி என்றும் பைத்தியக்காரன் என்று அழைப்பது மிகவும் பொருத்தம் தானே. சில பதிப்புகளில் உண்மத்தன் என்று காணப்படுகின்றது. எதுகை கருதி உன்மத்தன் என்ற சொல் உண்மத்தன் என்று திரிந்ததாக கருதினார்கள் போலும்.
பண் மொய்த்த இன் மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே
நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.57.8), உமையன்னை கலக்கம் அடையும் வண்ணம் அரக்கன் இராவணன் கயிலாய மலையை எடுத்தான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மாது=பெருமை, காதல்; கறுத்த=கோபம் கொண்ட, தான் செல்லும் வழியில் இருந்துகொண்டு தனது பயணத்திற்கு தடையாக கயிலை மலை இருந்தது என்று எண்ணியதால் கோபம் கொண்ட அரக்கன் இராவணன். மறுகும் வண்ணம்=கலக்கம் அடையும் வண்ணம்; மாது என்ற சொல்லுக்கு அழகினை உடையவள் என்று பொருள் கொண்டு, தலத்து அம்பிகையின் திருநாமம் கல்யாண சுந்தரி என்பதை உணர்த்துவதாக சிலர் விளக்கம் கூறுவதும் பொருத்தமாக உள்ளது.
காதமரும் வெண்குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப
மாதமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டுகந்தீர்
தீதமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திருநல்லூர்
மாதமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
மேற்கண்ட நல்லூர் பதிகத்தின் பாடலில் பிராட்டி நடுங்கியதைக் கண்ட பெருமான், பெருமான் மகிழ்ச்சி கொண்டதாக இந்த பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுவது, சிந்தனைக்குரியது. தனது கால் பெருவிரலை ஊன்றி அன்னை கொண்டிருந்த அச்சத்தை தவிர்த்ததாக மிகவும் அதிகமான திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. இந்த விளக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு அவ்வாறு பிராட்டி கலங்கிய போது, இவ்வாறு மகிழ்ந்தது பெருமானின் திருவிளையாடல்களில் ஒன்று என்று சான்றோர்கள் பொருள் கண்டனர். கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்ற செயலுக்கு கோபம் கொண்ட பார்வதி அன்னையின் கோபத்தினை தணிப்பதற்காக, பெருமான் இந்த திருவிளையாடலை புரிந்தாரோ என்று நமக்கு தோன்றுகின்றது. இத்தகைய கற்பனை ஒன்றினை உள்ளடக்கி அப்பர் பிரான் பிரான் பாடிய பாடலை நாம் இங்கே காண்பது பொருத்தமாகும், கயிலை மலையினை அரக்கன் அசைத்தபோது, பார்வதி தேவி கொண்ட அச்சத்தினை நீக்கிய பெருமான், அதனை ஒரு வாய்ப்பாக கருதி தேவி தன்னிடம் கொண்டிருந்த ஊடலைத் தீர்த்தான் என்றுசுவையாக தனது கற்பனையை ஏற்றி அப்பர் பிரான் பாடிய பாடல் மறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.34) கடைப் பாடலாகும். இந்தபதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அரக்கன் இராவணனின் கயிலை நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. கங்கை நங்கையை பெருமான் தனது சடையில்மறைத்ததை காரணமாக கொண்டு தேவி ஊடல் செய்ததாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். உருவம் வேறுவேறாக திகழ்ந்தாலும், பெருமானும்பிராட்டியும் இணைந்தே செயல்படுவதாக சைவ சித்தாந்தம் சொல்கின்றது. பெருமானின் கருணை தான் தேவி. எனவே அவர்களுக்குள்ளே ஊடல் என்றபேச்சுக்கே இடமில்லை. எனினும் புலவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி, அப்பர் பிரான், ஒரு கற்பனை நிகழ்ச்சியை புகுத்தி, தேவாரப்பாடலுக்கு நயம் சேர்ப்பதை நாம் இந்த பாடலில் காணலாம். கங்கை நங்கையைத் தனது தலையில் மறைத்து வைத்ததால் தேவிக்கு கோபம்ஏற்படுகின்றது. அந்த கோபம் ஊடலாக மாறுகின்றது. அரக்கன் இராவணன் கயிலை மலை அசைத்ததால் ஏற்பட்ட அசைவு, அன்னைக்கு அச்சத்தைஏற்படுத்த, அந்த அச்சத்தை தீர்க்கும் முகமாக, அன்னையிடம் அஞ்சேல் என்று சொல்லிய பெருமான், தனது கால் பெருவிரலால் மலையினை அழுத்தி,மலையின் ஆட்டத்தை நிறுத்துகின்றார். தேவியின் அச்சம் மட்டுமா மறைகின்றது. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஊடலும் மறைந்து விடுகின்றதுஎன்பதை சொல்லாமல் சொல்லி விளக்கும் நயமான பதிகம்.
கங்கை நீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத்
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான் மலையை
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட
அங்கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடு தானே
உலகியலில் வாழும் நாம், எத்துனை கருத்தொத்த தம்பதியராக இருப்பினும் அவர்களின் இடையே, சிறுசிறு விஷயங்களில், கருத்து ஒவ்வாது இருப்பதையும்,அந்த வேறுபாடு காரணமாக ஊடல்கள் ஏற்படுவதையும் காண்கின்றோம். சங்க இலக்கியங்களில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் ஊடல் வெகுவாகவிவரிக்கப் படுகின்றது. திருக்குறளிலும் ஊடல் காதலுக்கு மேலும் சுவை ஊட்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு ஊடலுவகை என்று தனி அதிகாரம்கொடுக்கப்பட்டு பத்து பாடல்கள் உள்ளன. அந்த ஊடல் அதிக நேரம் நீடிப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் உண்மையான பாசமும் நேசமும் கொண்டுதம்பதியர் திகழ்வதால், அவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறிய இடர் நேர்ந்தாலும், அடுத்தவர் அந்த இடரினைக் களையும் போது, அந்நாள் வரைஅவர்களின் இடையே இருந்த ஊடல் காணமல் போய்விடுகின்றது. இதனை உலக வாழ்க்கையில் அடிக்கடி காண்கின்றோம். அத்தகைய நிகழ்ச்சியாக,இராவணன் கயிலை மலையினை அசைத்த போது தேவி கொண்ட அச்சத்தை பெருமான் களைந்த விதத்தினை அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார்.இறைவனின் செயல் வடிவமே சக்தி. சக்திக்கும் சிவத்திற்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. சிவபிரானின் எண்ணத்திற்கு ஏற்ப செயல் படும் சக்திக்கும் சிவத்திற்கும் வேறுபாடு இல்லாத போது, அவர்களிடையே ஊடல் வருவதற்கான வாய்ப்பு அறவே இல்லை. ஆனாலும், அவர்களுக்கு ஊடல் ஏற்பட்டது போன்று அப்பர் பிரான் கற்பனை செய்து அந்த ஊடல் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
வெண்காடு தலத்தின் மீது அருளிய மற்றோர் பதிகத்தின் பாடலிலும் (2.61.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் கயிலாய மலையினை அசைத்ததால் பார்வதி தேவி நடுங்கியதாக குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். வளையார்=வளையல்கள் பொருந்திய; மலையாள்=இமயமலையில் வளர்ந்தவளாகிய அன்னை பார்வதிதேவி; வெருவ=அச்சம் கொள்ள; முளையார்=முளைத்து வளரும் தன்மை கொண்ட பிறைச்சந்திரன்; இளையாது=தளர்ச்சி அடையாது;
வளையார் முன் கை மலையாள் வெருவ வரை ஊன்றி
முளையார் மதியம் சூடி என்று முப்போதும்
இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும்
விளையார் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே
மீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.8) உமையன்னைக்கு அச்சம் விளைவித்த, திரண்ட தோள்களையும் வலிமையையும் உடைய அரக்கனின் வலிமை நலியுமாறு, மலையின் கீழே, சிவபெருமான் அடக்கினார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஒலி கொள் புனல் என்று மிகுந்த ஆரவாரத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி என்று கூறுகின்றார்.
புலியின் உரிதோல் ஆடை பூசும் பொடி நீற்றர்
ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச
வலிய திரள் தோள் வன்கண் அரக்கர் கோன் தன்னை
மெலிய வரைக் கீழ் அடர்த்தார் மீயச்சூராரே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.91.8) திருஞானசம்பந்தர், கயிலாய மலை இராவணனால் அசைக்கப் பட்டதால் அன்னை நடுங்கியதைக் கண்ட பெருமான், சிரித்த வண்ணமே தனது கால்பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியதாக கூறுகின்றார். இந்த நகைப்பின் காரணம், இந்த பாடலில் குறிப்பிடப்படவில்லை. தன்னால் முடியாத காரியத்தை அரக்கன் செய்யத் துணிந்ததற்காக, அரக்கன் மீது பரிதாபம் கொண்டதால் விளைந்த நகைப்பா, தேவியின் அச்சம் தேவையற்றது என்ற எண்ணத்தில் எழுந்த நகைப்பா, தேவி தன்னுடன் கொண்டிருந்த ஊடலைத் தீர்ப்பதற்காக தனக்கு கிடைத்த வாய்ப்பு என்று கருதியதால் விளைந்த நகைப்பா என்பது பற்றி திருஞானசம்பந்தர் குறிப்பிடாமல் நமது கற்பனைக்கு விட்டுவிடுகின்றார்.ஓரான்=உணராதவன்;
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனது ஒரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்குத் தன் திருவிரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன்
பக்க வாயும் விட்டலறப் பரிந்தவன் பதி மறைக்காடே
சீர்காழி நகரத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.96.8) தனது வலிமையை பெரிதாக கருதிய அரக்கன் இராவணனின் வலிமை கண்டு, கயிலாய மலையினை எடுக்கும் ஆற்றலைக் கண்டு, உமையன்னை அஞ்சியதாக சம்பந்தர் கூறுகின்றார்; ஏர்=அழகு; ஏர்கொள் மங்கை= அழகுடைய பார்வதி தேவி;சீர்கொள் பாதம்=சிறப்புடைய திருவடி; செறுத்த=வெற்றி கொண்ட; தார்=பூ; கடுந்திறல்=மிகுந்த வலிமை;
கார் கொள் மேனி அவ் வரக்கன் தன் கடுந்திறலினைக் கருதி
ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரியச்
சீர்கொள் பாதத்து ஒரு விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில்
தார்கொள் வண்டினம் சூழ்ந்த தண்வயல் காழி நன்னகரே
திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.8) பார்வ்தி தேவி அச்சம் கொள்ளும் வண்ணம் மலையை அசைத்து இராவணன் எடுக்க முயற்சி செய்தான் என்று கூறுகின்றார். ஆன்மாவினை, தனது தலைவனுடன் சேரத் துடிக்கும் தலைவியாக உருவகித்து, இறைவனைத் தலைவனாக உருவகித்து, ஆன்மா எவ்வாறு இறைவனுடன் சேர்ந்து என்றும் அவனிடமிருந்து பிரியாமல் இருப்பதற்கு தலைப்படவேண்டும் என்றும், தனது ஆசை நிறைவேறாத ஆன்மா எவ்வாறு வருந்தி, தனது விருப்பத்தை இறைவனிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இத்தகைய அகத்துறைப் பாடல்கள் மூலம் அருளாளர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். எதற்காக தணியாத இந்த வேட்கை ஆன்மாவிடம் ஏற்படவேண்டும் என்று கேள்வி கேட்போர்க்கு விடையளிக்கும் முகமாக, இந்த பாடல் அமைந்துள்ளது. பரகதி=உயர்ந்த நிலை, முக்தி நிலை; தொடர்ந்து இறைவனின் புகழினைப் பாடும் அடியார்கள் பரகதி அடைவார்கள் என்றும், அவ்வாறு இறைவனின் புகழினை நினைக்காதவர்கள் பரகதி அடைய மாட்டார்கள் என்றும் கூறுகின்றார். இறைவனின் புகழினைப், பெருமையினைப் புரிந்து கொண்டு அவனது மேன்மையை உணர்வதே இறை வழிபாட்டினால் முதல்படி என்பதால், அந்த முதல் படி,படிப்படியாக நம்மை உயர்த்தி, பக்குவம் அடையச் செய்து உய்வினை அளிக்கும் என்பதால், இறைவனின் புகழினை நாம் உணரத் தலைப்பட வேண்டும் என்று கூறுகின்றார்.
குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய
கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர்முடி தோள் இருபதும் ஊன்றி
மயிலின் நேர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே
கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.109.8) சம்பந்தர் கயிலாய மலையினை அரக்கன் இராவணன் எடுக்க முயற்சி செய்த போது உமையம்மை அஞ்சவே, அந்த அச்சத்தினை நீக்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை சற்று சுளித்து மலையின் மீது ஊன்றி, அரக்கன் சோர்வு அடையுமாறு செய்தார் என்று கூறுகின்றார். சோர்வடைந்த இராவணன் தனது தவறினை உணர்ந்து பெருமானை போற்றி சாமகானம் பாடிய பின்னர் அவன் செய்த தவறினை பொருட்படுத்தாது அவனுக்கு அருள் நல்கிய பெருமானின் திருவடிகளைத் தொழும் அடியார்கள் இறைவனின் திருவடித் தாமரைகளைச் சென்றடைய தவம் செய்யும் முனிவர்கள் போன்றவர்கள் ஆவார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் பெருமானின் திருவடிப் பெருமையை உணர்த்துகின்றார்.அரக்கனது பற்கள் ஒளி வீசும் வாள் போன்று இருந்தன என்று சம்பந்தர் கூறுகின்றார்.
ஒளிகொள் வாள் எயிற்று அரக்கன் அவ் உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சிச்
சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள் செய்த
குளிர் கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நல் கொழுந்தினைத் தொழுவார்கள்
தளிர் கொள் தாமரைப் பாதங்கள் அருள் பெரும் தவம் உடையவர்களே
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.68.8) பார்வதி தேவி நடுங்கும் வண்ணம் அரக்கன் இராவணன் கயிலாய மலையை அசைத்தான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மருப்பு=தந்தம்; தனது தந்தத்தில் நெருப்புப் பொறி பறக்க மலையுடன் மோதும் பருத்த யானைக்கு அரக்கன் இராவணனை இங்கே ஒப்பிடுகின்றார். மலையுடன் மோதுவது வீணான செயல் என்பதை புரிந்து கொள்ளாத மதயானையை போன்று, பெருமானின் புனிதமான இருக்கை என்பதையும் அதனில் பெருமான் வீற்றிருக்கின்றார் என்பதையும் பொருட்படுத்தாமல் அரக்கன் இந்த செயலில் ஈடுபட்டான் என்று கூறுகின்றார். ஒருக்குடன்=ஒருங்கு உடனே; வெருக்கு=அச்சம்; நிருத்த விரல்=நடனம் புரியும் விரல்; நடனமாடுவோரின் அங்கங்கள் எப்போதும் மிருதுவான தன்மையுடன் இருக்கும். அத்தகைய மிருதுவான விரலாக இருந்தாலும், பெருமானின் விரல், அரக்கனை அலற வைக்கும் வண்ணம் மலையின் கீழே நெருக்கும் வலிமை வாய்ந்ததாக இருந்தது என்று குறிப்பிடுவதன் மூலம் பெருமானின் வலிமை எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை உணர்த்துகின்றார்.கருத்தில ஒருத்தன்=அறிவற்ற அரக்கன்; எருத்து இற=கழுத்து முறியும் வண்ணம்;
மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு செருச் செய்த பருத்த களிறின்
பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன் உணராது
ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கென நிருத்த விரலால்
கருத்தில ஒருத்தனை எருத்திற நெரித்த கயிலாய மலையே
சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.8) திருஞானசம்பந்தர் வரைக்குல மகள் கலக்கம் அடையும் வண்ணம் அரக்கன் இராவணன் கயிலாய மலையை அசைத்தான் என்று கூறுகின்றார்.
வரைக்குல மகட்கொரு மறுக்கம் வருவித்த மதியில் வலியுடை
அரக்கனது உரக் கர சிரத்துற அடர்த்து அருள் புரிந்த அழகன்
இருக்கையது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில்
தருக்குல நெருக்கு மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (3.103.8) கயிலை மலையினை அரக்கன் இராவணன் பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது,உமையன்னை நடுங்கியதாக திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். தண்டணை=தண்டு+அணை; அணை=சென்று சேர்ந்த,இங்கே கொண்ட என்று பொருள் கொள்வது பொருத்தம். ஒண்டணை=ஒண்டு+அணை, உடலுடன் ஒன்றாக இணைந்த; மிண்டு=செருக்கு;விகிர்தன்=மாறுபட்ட தன்மை உடையவன்; வைகும்=தாங்கும்; வண்டு என்பது இங்கே ஆண் வண்டினை குறிப்பதாக கொண்டு, தன்னோடும் என்ற சொல்லுக்கு பெண் வண்டு என்று அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தண்டணை தோள் இரு பத்தினொடும் தலை பத்து உடையானை
ஒண்டணை மாதுமை தான் நடுங்க ஒரு கால் விரல் ஊன்றி
மிண்டு அது தீர்த்து அருள் செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும்
வண்டு அணை தன்னொடு வைகு பொழில் வலம்புர நன்னகரே
கலிக்காமூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் ஞானசம்பந்தர் (3.105.8) அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, உமையம்மை நடுங்கிய செய்தி குறிப்பிடப்படுகின்றது. ஊர் அரவம்=தரையில் ஊரும் பாம்பு; தரையில் ஊரும் தன்மையை உடைய பாம்பினைத் தனது நீண்ட முடியின் மீது சூட்டிக் கொண்டுள்ள பெருமான், இரைச்சலை எழுப்பும் அலைகள் கொண்ட கடலால் சூழப்பட்ட உலகினை ஆள்கின்றான். அத்தகைய பெருமான், கருமை நிறம் உடையதும் ஒலி எழுப்புவதும் ஆகிய கடலால் சூழப்பட்ட கலிக்காமூர் தலத்தில் உறைகின்றார். தேர் போன்று அகன்ற மார்பகங்களை உடைய உமையன்னை அஞ்சும் வண்ணம், சிறந்த கயிலை மலையினை பேர்த்தேடுக்கத் துணிந்த அரக்கன் இராவணன்,உடல் வருந்தி கதறும் வண்ணம் கயிலை மலையின் மீது தனது பாதத்தை ஊன்றிய சிவபெருமானின் இருப்பிடம் கலிக்காமூர் ஆகும் என்பதே இந்த பாடலில் பொழிப்புரை .
ஊர் அரவம் தலை நீள்முடியான் ஒலி நீர் உலகாண்டு
கார் அரவக் கடல் சூழ வாழும் பதியாம் கலிக்காமூர்
தேர் அரவ அல்குல் அம் பேதை அஞ்சத் திருந்து வரை பேர்த்தான்
ஆரரவம் பட வைத்த பாதம் உடையான் இடமாமே
திருவதிகை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.25.10) கயிலாய மலை குலுங்கும் வண்ணம் ஆரவாரத்துடன் அரக்கன் இராவணன் மலையை எடுத்தான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தடக்கை=அகலமுடைய கை: தடவரை=அகன்ற மலை, இங்கே கயிலாய மலை குறிப்பிடப் படுகின்றது.ஆர்த்து=மிகுந்த ஆரவாரம் செய்து: கிடக்கை=கிடத்தல்: ஓங்கு=மிகுதியாக பெருகிய: முருகு=நறுமணம்:
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர் மணி முடிகள் சாய
முடக்கினார் திருவிரல் தான் முருகமர் கோதை பாகத்து
அடக்கினார் என்னை ஆளும் அதிகை வீரட்டானாரே
கயிலாய மலையினை பேர்த்து எடுக்க அரக்கன் இராவணன் முயற்சி செய்த போது, அவனது முயற்சி வீண் முயற்சி என்பதை நன்கு அறிந்தவர் சிவபெருமான்.எனினும் தனது அருகில் அமர்ந்திருந்த பார்வதி தேவி அச்சம் கொண்டதைக் கண்டு, அந்த அச்சத்தை நீக்கும் பொருட்டு பெருமான் தனது கால்பெருவிரலை மலையின் மீது ஊன்றி அரக்கனின் வலிமையை அழித்தார் என்று அப்பர் பிரான் கூறும் பாடல் (4.27.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
தீர்த்த மாமலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிரல் அதனை ஊன்றிச்
சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று
ஆர்த்த வாய் அலற வைத்தார் அதிகை வீரட்டனாரே
தன்னிடம் மிகவும் அதிகமாக விருப்பம் கொண்டிருந்த பார்வதி தேவி, அரக்கன் இராவணன் கயிலை மலையினை எடுக்க முயற்சி செய்த போதுஅஞ்சியதைக் கண்ட பெருமான், தேவியின் அச்சம் தேவையற்றது என்பதை உணர்த்தும் வண்ணம் சிரித்தவாறே தனது கால் பெருவிரலை மலையின் மீதுஊன்ற, அரக்கன் அலறி வீழ்ந்தான் என்று உணர்த்தும் பாடல் (4.30.10) இது. மாலினாள்=பெருமானிடம் அதிகமான விருப்பம் உடையவள்; வேலினான்=வேல்ஏந்திய வீரன்; நூலினான்=வேத நூல்களை அருளிய பெருமான்
மாலினாள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பதோர் அளவில் வீழக்
காலினால் ஊன்றி இட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
திருப்பயற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (4.32.10) அப்பர் பிரான் இராவணன் கயிலை மலையை அசைத்தபோது உமையம்மைஅஞ்சியதாக குறிப்பிடுகின்றார். மூர்த்தி=தலைவன்; முனிதல்=கோபித்தல்; ஆர்த்தல்=ஆரவாரம் செய்தல்; அடர்த்தல்= நெருக்குதல்; அரிவை=பார்வதி தேவி;
மூர்த்தி தன் மலையின் மீது போகாதால் முனிந்து நோக்கிப்
பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல்லரிவை அஞ்சத்
தேத்தெத்தே என்னக் கேட்டார் திருப்பயற்றூரனாரே
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.47.5) அப்பர் பிரான், பார்வதி தேவி கயிலாய மலையை எடுத்த போது, அச்சம் கொண்டதாக குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் (4.47) அப்பர் பிரான், இறைவன் சற்றே தனது கால் விரலின் அழுத்தத்தை கூட்டியிருந்தால்,எவருக்கும் அரக்கன் இராவணனை மீண்டும் காணும் வாய்ப்பே இருந்திருக்காது என்று கூறுகின்றார். கன்றி=மிகுந்த கோபம் கொண்டு; வென்றி=பல வெற்றிகள் பெற்ற: கைத்தலம்=கைகள்; வெருவ=அஞ்ச; நக்கு=புன்முறுவல் பூத்தல்; நகழ்தல்= துன்பம் அடைதல்; மன்றி=சற்றே அழுத்தி; பெருமான் அரக்கனை தண்டிக்க வேண்டும் என்று நினைத்து சற்று அழுத்தமாக ஊன்றியிருந்தால், அரக்கன் இராவணனை எவரும் உயிருடன் பர்ர்க்கும் வாய்ப்பே இருந்திருக்காது என்று கூறுவதன் மூலம், இறைவனின் திருவுள்ளக் கருத்து அரக்கனை தண்டிப்பது அல்ல என்பதும் பார்வதி தேவியின் அச்சத்தைத் தவிர்ப்பது தான் என்பது நமக்கு புலனாகின்றது. இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் நேரிழை அஞ்ச நோக்கி வெளித்தவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வெளித்தவன்=அடியார்களுக்கு தன்னை மறைத்துக் கொள்ளாமல் வெளிப்படுத்திக் கொள்ளும் இறைவன்; நேரிழை அஞ்ச என்று அன்னை, இராவணன் கயிலை மலையை எடுத்த போது அச்சம் அடைந்த தன்மையை குறிப்பிடுகின்றது.
கன்றித்தன் கண் சிவந்து கயிலை நன் மலையை ஓடி
வென்றித்தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத் தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான்
மன்றித் தான் ஊன்றினானேல் மறித்து நொக்கில்லை அன்றே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.57.10) அப்பர் பிரான், அரக்கன் இராவணன், கயிலாய மலையைத் தனது தலைக்கு மேலே இருபது கைகளாலும் தாங்கிய வண்ணம் தூக்கினான் என்று கூறுகின்றார். உலப்பு=அழிவு: அலைத்த=அலைகள் வீசும்: ஒறுத்தல்= தண்டித்தல்:சென்றுற=சென்று நிற்க; இந்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு தான், பல திருக்கோயில்களில் அரக்கன் இராவண வாகன அமைப்பு உருவாக்கப்பட்டது போலும் என்று தோன்றுகின்றாது.
மலைக்கு நேராய அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச
தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள
உலப்பிலா விரலால் ஊன்றி ஒறுத்தவற்கு அருள்கள் செய்து
அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே
தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.1.11) அப்பர் பிரான், அரக்கன் இராவணன் கயிலாய மலை அதிரும் வண்ணம் ஆர்த்தெடுத்தான் என்று கூறுகின்றார். மதுரம்=இனிமை; சதுரன்=சாமர்த்தியம் உடையவன்; அதிர=நடுங்குமாறு; ஆர்த்து=ஆரவாரித்து கொள் சேவடி=கொள்ளுதல் செய்த, கொண்ட திருவடி; அரக்கன் புகழ்ந்து பாடியதை ஏற்றுக் கொண்ட; கொள்ளுதல் என்பதற்கு அருளுதல் என்ற பொருள் உண்டு.சேவடி என்ற சொல்லினை, மிதி மற்றும் கொள் என்ற இரண்டு சொற்களுக்கும் பொதுவாக எடுத்துக் கொண்டு மிதி சேவடி மற்றும் கொள் சேவடி என்று பொருள் கொள்ள வேண்டும். அரக்கனது கர்வத்தினை அடக்குவதற்காக மிதித்த திருவடி, பின்னர் அவனது வழிபாட்டினை ஏற்றுக்கொண்டு அவனுக்கு அருள்கள் (சந்திரகாசம் என்ற வாள் மற்றும் மூன்று கோடி வாழ்நாள்) வழங்கிய சேவடியாக மாறிய நிலை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. திருமலை என்பது கயிலாய மலையினை குறிக்கும். கோயில் என்பது தில்லைச் சிதம்பரத்தை குறித்தலைப் போல, திருமலை என்ற சொல் கயிலாயத்தை குறிக்கும். சர்வ சங்கார காலத்தில் (முற்றூழிக் காலத்தில்) அழித்தல் தொழிலில் ஈடுபடும் சிவபிரானின் கோபம், முற்றிலும் தணிக்கப்படுவது, இறைவியின் இனிமையான மொழியால் தான். தனது. கோபம் தணிக்கப்பட்ட பின்னர், இறைவன் மீண்டும் படைத்தல் தொழிலில் ஈடுபடுகின்றான். இளைப்பு ஏதும் இன்றி, மூவகைத் தொழில்களிலும் ஈடுபடும் சிவபிரானை சதுரன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். உமை அம்மையின் மொழியினை, இனிமையான மொழி என்று குறிப்பிடும்,அப்பர் பெருமானுக்கு, அந்த இனிய மொழியால் விளைந்த விளைவு நினைவுக்கு வந்தது போலும். தான் நினைத்த மாத்திரத்தில், உலகங்களையும்,உலகத்தில் உள்ள பொருட்களையும் படைத்து, உயிர்களையும் பல உடல்களுடன் சேர்த்த, சாமர்த்தியமான செயல் சதுரன் என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது. தில்லைச் சிற்றம்பலத்தில் நடமாடும் இறைவனது கோலத்தில், நம்மை மிகவும் அதிகமாக கவர்வது அவனது தூக்கிய திருவடி தான். இந்த திருவடியை, சிவபிரானின் அருட்செயலை குறிப்பதாக கூறுவார்கள். எனவே, இந்தத் திருப்பாதத்தை கை தொழுது வணங்கி உய்யவேண்டும் என்ற அறிவுரையுடன் பதிகத்தை அப்பர் பிரான் முடிக்கின்றார்.
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம்பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத்தான் முடி பத்து இற
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.12.11) கயிலாய மலை அசையும் வண்ணம் அரக்கன் இராவணன் அந்த மலையினை எடுத்தான் என்று கூறுகின்றார். மழலை= இளமை; சுழல=அசைய; இளமையான எருதினைத் தனது வாகனமாக ஏற்றுள்ள இறைவன், உமை அம்மையுடன் திருமணக் கோலத்தில் திருக்கயிலை மலையில் உறைகின்றான். அந்த திருக்கயிலை மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் அரக்கன் இராவணன் ஈடுபட்ட போது மலை சற்று அசைந்தது. மலை அசைந்ததை உணர்ந்த பெருமான், தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றவும், அரக்கன் மலையின் கீழே அகப்பட்டு அலறினான். பின்னர் வீழிமிழலைப் பெருமானின் திருவடிகள் வாழ்க என்று வாய் விட்டு அலற, பெருமான் அரக்கனை மேலும் தண்டிக்காமல் விட்டார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மழலை ஏற்று மணாளன் திருமலை
சுழல ஆர்த்து எடுத்தான் முடி தோளிற
கழல் கொள் காலின் திருவிரல் ஊன்றலும்
மிழலையான் அடி வாழ்க என விட்டதே
குடமூக்கு தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பதிகத்தின் (5.22) கடைப் பாடலில், அரக்கன் மலையை எடுத்த போது உமையம்மை அஞ்சியதாகவும்,தேவியின் அச்சத்தைக் கண்ட பெருமான் சிரித்ததாகவும் கூறுகின்றார். கொன்று=வருத்தி; பெருமான் அப்போது சிரித்த சிரிப்பு நன்மை விளைவித்த சிரிப்புஎன்பதை உணர்த்தும் பொருட்டு நன்று தான் நக்கு என்று அப்பர் பிரான் கூறுகின்றார். முப்புரம் எரிக்கப்பட்ட போது சிரித்த சிரிப்பு திரிபுரத்துஅரக்கர்களுக்கு அழிவை ஏற்படுத்தியது. ஆனால் அரக்கன் இராவணன் கயிலை மலையை எடுக்க .முயற்சி செய்த போது சிரித்த சிரிப்பு அவனுக்கு பலநன்மைகளைத் தேடித் தந்தது.
அன்று தான் அரக்கன் கயிலாயத்தைச்
சென்று தான் எடுக்க உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு நல்விரல் ஊன்றிப் பின்
கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே
பொழிப்புரை:
சிவபெருமான் உறைகின்ற கயிலாய மலை நிலை குலையும் தன்மையில், அதனைப் பெயர்த்து எடுத்த அரக்கன் இராவணனது, இருபது கரங்கள் நெரிபடும் வண்ணம் வீரக்கழல் அணிந்த தனது கால் பெருவிரலை ஊன்றியவன் சிவபெருமான். அத்தகைய ஆற்றல் உடைய திருப்பாதங்கள் கொண்ட பெருமான் உறைகின்ற தலம் திருவீழிமிழலை ஆகும். அந்தந்த ஆன்மாக்களுக்கு தகுந்த உடல் என்று முன்னமே வகுக்கப்பட்ட நெறிமுறையின் வழியே உலகில் பிறப்பெடுக்கும் உடல்களைப் படைப்பவனும், தாமரைப் பூவினில் வளர்பவனும் ஆகிய பிரமன், தான் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்க நெறியிலிருந்து முறை தவறி, பெருமானின் திருமுடியைக் கண்டேன் என்று பொய் சொன்னமைக்காக, அவனது ஐந்து தலைகளில் ஒன்றினைக் கொய்து அந்த தலையில் பலியேற்று உலகெங்கும் திரிகின்ற பெருமான் உறைகின்ற தலம் திருவீழிமிழலை ஆகும்.
பாடல் 9:
அயனொடு எழிலமர் மலர்மகள் மகிழ் கணன் அளவிடல் ஒழியவொர்
பயமுறு வகை தழல் நிகழ்வதொர் படி உருவது வர வரன்முறை
சயசய என மிகு துதி செய வெளி உருவியன் உறைபதி
செய நிலவிய மதில் மதியது தவழ்தர உயர் திருமிழலையே
விளக்கம்:
அளவிடல் ஒழிய=அளவிட முடியாத; அயன்=பிரமன்; தழல்=நெருப்புத்தூண்; வரன் முறை= வரையறுக்கப்பட்ட முறை; வெளி=ஆகாயம்; உருவிய அவன்=கடந்தவன்; செயம் நிலவிய= பகைவர்களை தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்ட; உருவர=உருவம் பொருந்த;
பொழிப்புரை:
அழகிய தாமரை மலர் மேல் உறைகின்ற இலக்குமி தேவி மகிழும் கண்ணனாகிய திருமாலும் பிரமனும், முடியும் அடியும் எங்கே உள்ளது என்று அளவிட்டு காண முடியாத தன்மையில், அவர்கள் இருவரும் அச்சம் கொண்டு நிமிர்ந்து பார்க்கும் வண்ணம், நீண்ட சோதிப்பிழம்பாக நின்றவன் பெருமான். பின்னர் அவர்கள் இருவரும், தெளிவடைந்து, தங்கள் முன்னே சோதிப் பிழம்பாக தோன்றியவன் பெருமான் என்பதை உணர்ந்து, சயசய என்று முறையாக போற்றி வழிபடும் வண்ணம், ஆகாயத்தையும் கடந்து உயர்ந்து நின்றவனாகிய பெருமான் உறைகின்ற தலம் திருவீழிமிழலை தலமாகும். பகைவர்களை தடுத்து நிறுத்துவதில் வெற்றி காணும் வகையில், சந்திரன் தவழ்ந்து செல்லும் வண்ணம் உயர்ந்த மதில்களை கொண்ட தலம் திருவீழி மிழலையாகும்.
பாடல் 10:
இகழுருவொடு பறிதலை கொடும் இழிதொழில் மலி சமண் விரகினர்
திகழ் துவர் உடையுடல் பொதிபவர் கெட அடியவர் மிக அருளிய
புகழுடை இறை உறைபதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி
திகழ் சுரர் நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திருமிழலையே
விளக்கம்:
இகழுரு=பலரும் இகழும் வகையில் ஆடையின்றி திரிந்த தன்மை; பறிதலை=முடி பறிக்கப்பட்ட மொட்டைத்தலை; இழிதொழில்=பெருமானை பலவாறாக பழித்துக் கூறும் செயல் செய்வோர்; விரகினர்=சாமர்த்தியமாக செயல் படுவோர்; பொதிபவர்=உடலில் பொதியும் வண்ணம் போர்த்துக் கொள்ளுதல்;சமணர்களும் புத்தர்களும் கெடுமாறு அருள் புரிந்தவன் பெருமான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகம் அருளிய பல நாட்கள் கழித்தே, திருஞானசம்பந்தர் பாண்டிய நாடு சென்று ஆங்கே அனல்வாதம் மற்றும் புனல்வாதத்தில், சமணர்களை தோற்கடித்து சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டுகின்றார் என்பதால், மதுரை நிகழ்ச்சி இங்கே உணர்த்தப்படவில்லை என்பது தெளிவாகின்றது. எனினும், திருஞான சம்பந்தர்,தேவாரப் பாடல்கள் பாடுவதற்கு முன்னமே, அப்பர் பிரானை கொல்வதற்கு சமணர்கள் புரிந்த பல சூழ்ச்சிகளை முறியடித்து, சமணர்களின் ஆதிக்கத்தை முறியடித்து, பல்லவ மன்னன் மகேந்திர வர்மனும் சைவ மதத்திற்கு திரும்பும் வண்ணம் பெருமான், அருளிச் செய்த செயல்களை கருத்தில் கொண்டு,இவ்வாறு திருஞானசம்பந்தர் கூறினார் என்று பொருள் கொள்ளவேண்டும். சுரர்=தேவர்கள்; சுரர்தரு=தேவலோகத்தில் இருக்கும் கற்பக மரம், நினைத்ததை அளிக்க வல்லது என்று சொல்லப் படுகின்றது. பதிகத்தின் மூன்றாவது பாடலில் தலத்து மாந்தர்களின் கொடைத் தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அந்த கருத்தை வலியுறுத்தும் முகமாக மீண்டும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த தலத்தில் மிகவும் அதிகமான நாட்கள் தங்கிய் திருஞான சம்பந்தருக்கு தலத்து மனிதர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது போலும்.
பொழிப்புரை:
பலரும் இகழத்தக்க வகையில் ஆடையின்றித் திரிவோரும் முடி பறித்த தலையோரும், பெருமானைக் குறித்து வீணான பழிச் சொற்கள் அதிகமாக பேசும் இழிதொழில் செய்வோரும், தந்திரமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்படுவோரும் ஆகிய சமணர்கள் மற்றும் துவராடைத் தங்களது உடல் மீது பதியும் வண்ணம் போர்த்துக் கொண்டு திரியும் புத்தர்களும் கெடும் வண்ணம் தனது அடியார்களுக்கு அருள் புரிவதால் புகழப்படுபவன் சிவபெருமான். அத்தகைய இறைவன் உறைகின்ற இடம் திருவீழிமிழலை ஆகும். நீர் நிறைந்த கடல்களால் சூழப்பட்ட இந்த உலகினில், தனது நிழலில், அமர்வோர் நினைத்ததை அளிக்கும் தேவலோகத்து கற்பக மரம் போன்று தன்னை அண்டும் இரப்போர்க்கு அவர்கள் வேண்டுவதை அளிக்கும் தன்மை உடையவர்களாக்த் திகழும் கொடையாளர் மிகுந்து விளங்கும் தலம் திருவீழிமிழலையாகும்.
பாடல் 11:
சினமலி கரி உரி செய்த சிவன் உறைதரு திருமிழலையை மிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ் விரகனது உரை ஒருபதும்
மனமகிழ்வொடு பயில்பவர் எழில் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மகள் இசை தர இருநிலனிடை இனிது அமர்வரே
விளக்கம்:
இந்த பதிகத்தை முறையாக ஓதும் அடியார்கள், கல்வி, செல்வம், வெற்றி ஆகியவை தங்களது வாழ்வினில் பெற்று, மிகுந்த புகழுடன் வாழ்வார்கள் என்று கூறுகின்றார். சினமலி கரி=மிகுந்த கோபத்துடன் பெருமானை எதிர்த்து வந்த ஆண்யானை; தனமனர்=செல்வம் நிறைந்ததால் மகிழ்ந்த மனத்துடன் வாழும்;விரகன்=புலமை வாய்ந்தவன்;
பொழிப்புரை:
மிகுந்த கோபத்துடன் தன்னை நோக்கி வந்த மத யானையை அடக்கி, அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்ட பெருமான் உறைகின்ற திருவீழிமிழலை தலத்தையும் ஆங்கே உறைகின்ற இறைவனையும் போற்றி, மிகுந்த செல்வங்களை அடைந்த தன்மையால் மன மகிழ்வுடன் வாழும் மக்கள் நிறைந்ததும் சிரபுரம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழி நகரைச் சார்ந்தவனும் தமிழ் மொழியில் சிறந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் உரைத்த இந்த பத்து பாட்ல்களையும், மிகவும் விரும்பி, மகிழ்ந்த மனத்துடன் பயிலும் அடியார்களுக்குத் துணையாக, அழகு மிகுந்த மலர்மகளாகிய இலக்குமி தேவியும், கலை மகளாகிய சரசுவதி தேவியும், வெற்றியின் அடையாளமாக விளங்கும் துர்க்கையும் இருக்க, அந்த தேவிகளுடன் இணைந்த புகழ்மகளும் பொருந்த, கடல் சூழ்ந்த இந்த பெரிய உலகினில் அந்த அடியார்கள் இனிதாக வாழ்வார்கள்.
தடநிலவிய மலை நிறுவிய (Tadanilaviya Malai Niruvia) is a richly evocative phrase that can be interpreted in a devotional and poetic sense, often used to describe the strength, stability, and grandeur of Lord Shiva or the divine mountains associated with him. Let's break it down:
தடநிலவிய (Tadanilaviya): This phrase can be interpreted as "broadly spread" or "widely extending." The term தடம் (Tadam) can refer to something large, expansive, or solid, while நிலவிய (Nilaviya) suggests being firmly established, spread out, or stable.
மலை (Malai): Means mountain. In Hindu mythology, mountains symbolize stability, strength, and the eternal presence of divinity. The most iconic mountain associated with Lord Shiva is Mount Kailash, considered his divine abode.
நிறுவிய (Niruvia): Means established, placed, or fixed. It implies that something has been firmly set or anchored in place.
"தடநிலவிய மலை நிறுவிய" can be translated as "the one who firmly established the vast mountain" or "the one who placed the widely spread mountain."
In a devotional sense, this phrase could refer to Lord Shiva, who is often associated with mountains and is considered the lord of Mount Kailash. The image of establishing a vast mountain could symbolize Shiva’s role as the anchor of the universe, the unshakable force of stability and strength. It evokes the grandeur and immovable nature of divine power.
Mountain Symbolism: Mountains are often depicted as a metaphor for strength, steadfastness, and spiritual elevation. In Hinduism, mountains like Mount Meru or Mount Kailash represent cosmic axes or centers of the universe. They are seen as places where heaven and earth meet, and thus, establishing a mountain symbolizes the divine power to hold the cosmos together.
Lord Shiva’s Role: Shiva, as Mahadeva, is frequently described as residing on mountains, symbolizing his role as the eternal, unchanging force of the universe. He is the one who is beyond time and change, as steady and powerful as a mountain, yet compassionate and present in the world.
Broad and Established: The imagery of a mountain being widely spread and firmly established reflects qualities like strength, stability, and permanence. It suggests the unshakeable nature of divine power, which stands as a refuge and guide for all beings.
Divine Power: By saying that someone has "established the mountain," it implies divine intervention or a higher power at work in creating the universe and maintaining cosmic order.
"தடநிலவிய மலை நிறுவிய" is a phrase that exalts the greatness and stability of divine forces, particularly Lord Shiva, who is often seen as the one who embodies the strength and immovable nature of mountains. The phrase evokes the image of cosmic creation and the eternal power of the divine that upholds and sustains the world, making it a powerful description of Shiva's role as both the creator and the anchor of the universe.