இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


தழைகொள் சந்தும்

தழைகொள் சந்தும்


பதிக எண்: 2.119 திரு நாகேச்சரம் பண்: செவ்வழி

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருஞானசம்பந்தர் குடந்தை நகரில் உள்ள மூன்று தேவாரத் தலங்களுக்கும் சென்றார் என்று பெரியபுராணம் நமக்கு உணர்த்துகின்றது. குடமூக்கு, குடந்தைக் கீழ்க்கோட்டம், குடந்தைக் காரோணம் என்று இந்த தலங்கள், பண்டைய நாளில் அழைக்கப் பட்டன. குடந்தை நகரிலிருந்து புறப்பட்ட திருஞானசம்பந்தர், குடந்தைக்கு அருகில் உள்ள வேறு பல தலங்களுக்கும் சென்றார் என்று சேக்கிழார் கூறுகின்றார். பெயர் குறிப்பிடப்படாத அந்த திருத்தலங்கள் கருக்குடி கலயநல்லூர் மற்றும் கொட்டையூர் ஆகிய தலங்களாக இருக்கலாம் என்று சிவக்கவிமணியார் கருதுகின்றார். கருக்குடி தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் நமக்கு கிடைத்துள்ளது. மற்ற இரண்டு தலங்களின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. இவ்வாறு குடந்தைக்கு அருகில் உள்ள பல தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர் பின்னர் நாகேச்சரம் தலம் சென்றார் என்று சேக்கிழார் உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இரண்டு பதிகங்களும் அப்பர் பிரான் அருளிய மூன்று பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் நமக்கு கிடைத்துள்ளன.

திருநாகேச்சரத்து அமர்ந்த செங்கனகத் தனிகுன்றைக்

கருநாகத்து உரி புனைந்த கண்ணுதலைச் சென்று இறைஞ்சி

அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள் செய்து

பெருஞான சம்பந்தர் பெருகு ஆர்வத்தின் இன்புற்றார்

இந்த பாடலுக்கு அடுத்த பாடலில் மாநாகம் அர்ச்சித்த இறைவன் என்று குறிப்பிட்டு ஆதிசேஷன், இந்த தலத்து இறைவனை வழிபட்ட செய்தியை நமக்கு சேக்கிழார் உணர்த்துகின்றார். உலகை தாங்கும் ஆதிசேஷன் ஒருமுறை உலகின் சுமையால் நலிவுற்றான். ஈசனை வேண்டித் தொழுதபோது ஈசன் ஆதிசேஷனை ஒரு சிவராத்திரி தினத்தன்று குடந்தை கீழ்க்கோட்டம், நாகேச்சரம், பாம்புரம் மற்றும் நாகைக் காரோணம் சென்று வழிபட்டால் துயர் தீரும் என கூறவே ஆதிசேஷனும் அவ்வாறே செய்து பலன் அடைந்தான். ஆதிசேஷன் காலையில் குடந்தை கீழ்கோட்டத்தில் வழிபட்ட பின்னர், பகலில் திருநாகேச்சரம் சென்று வழிபட்டு பின்னர் மாலையில் பாம்புரம் சென்று வழிபட்டு பின்னர் நாகை காரோணம் சென்று வழிபட்டதாக நம்பப்படுகின்றது.ஒவ்வொரு சிவராத்திரி தினத்தன்றும் நாகராஜன் இரவின் நான்கு ஜாமங்களில் குடந்தை கீழ்க்கோட்டம், நாகேச்சரம், பாம்புரம் மற்றும் நாகைக் காரோணம் கோயில் சென்று வழிபடுவதாக நம்பப்படுகின்றது. ஜாமம் என்பது பழைய நாட்களில் பழக்கத்தில் இருந்த கால அளவு ஆகும். ஒரு ஜாமம் சுமார் இரண்டரை மணிக்கு சமம் ஆகும். எனவே மாநாகம் என்பதற்கு நாகராஜன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நாகராஜனுக்கு அருளியதால், மூலவருக்கு நாகநாதர் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். ஒரே நாளில் காலையில் இந்த தலத்திலும் பகல் வேளையில் நாகேச்சரம் தலத்திலும் மாலையில் பாம்புரம் தலத்திலும் வழிபாடு செய்தல் சிறப்பாக கருதப்படுகின்றது. நாகதோஷம் உள்ளவர்கள், இங்குள்ள மூலவரை வழிபட்டு, தங்களது தோஷத்தை நீக்கிக் கொள்ளலாம். இரண்டாவது பிராகாரத்தில் நாகராஜனுக்கு தனி சன்னதி உள்ளது.

மாநாகம் அர்ச்சித்த மலர்கமலத் தாள் வணங்கி

நாணாநாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றிப்

பானாரும் மணிவாயர் பரமர் திரு இடைமருதில்

பூநாறும் புனல் பொன்னித் தடங்கரை போய்ப் புகுகின்றார்

நாணாநாளும்=நாள் நாளும்; தன்னை வணங்கும் அடியார்களின் பிறவிப் பிணியை தீர்க்கும் பெருமான் என்று பொன் நேர் தரு மேனியனே என்று தொடங்கும் பதிகத்தின் (2/24) பாடல்கள் குறிப்பிடுவதால், அந்த பதிகம் இங்கே குறிப்பிடப்படுகின்றது என்பதை நாம் உணரலாம். இங்கே பால் மணம் வீசும் வாயினை உடையவர் என்று குறிப்பிட்டு, திருஞானசம்பந்தருக்கு அம்பிகை ஞானப் பால் ஊட்டிய நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றார். இந்த காரணம் பற்றியே திருஞானசம்பந்தருக்கு பாலறாவாயர் என்ற பெயர் வந்தது.

இந்த தலம் குடந்தை நகரிலிருந்து ஐந்து கி.மீ. வடகிழக்கு திசையில் உள்ளது. குடந்தையிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளன.கும்பகோணத்திலிருந்து உப்பிலியப்பன் செல்லும் வழியில் உள்ள தலம். சண்பகவனம், கிரிகன்னிகை வனம் என்ற பெயர்களும் இந்த தலத்திற்கு உண்டு.குடந்தையைச் சுற்றியுள்ள நவகிரகத் தலங்களில் இராகு கிரகத்துக்கு உரிய கோயிலாக கருதப்படுகின்றது. இராகு தனது மனைவியரோடு ஈசனை வணங்கி பலன் பெற்றதாக தலபுராணம் குறிப்பிடுகின்றது. இறைவனின் திருநாமங்கள் செண்பக ஆரண்யேஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர், இறைவியின் திருநாமங்கள் குன்றா முலை நாயகி, கிரிகுஜாம்பிகை, பிறை அணி வாள் நுதல் அம்மை. க்ரோசத்தலம் என்றால் காசிக்கு நிகரான தலங்கள் என்று பொருள். குடந்தையைச் சார்ந்த பஞ்ச குரோசத் தலங்கள், திருநாகேச்சரம், திருவிடைமருதூர், தாராசுரம், திருப்படலனம் (கருப்பூர்) மற்றும் சுவாமிமலை என்பன. பார்வதி தேவி, விநாயகர், முனிவர் கௌதமர், முனிவர் பராசரர், மன்னன் நளன், மன்னன் பகீரதன், சந்திரன், சூரியன், இந்திரன், நந்தி, இராகு பகவான், ஐந்தலை நாகங்களான கார்கோடகன், ஆதிசேஷன், நாகராஜன், நாகம் தக்ஷகன் வழிபட்ட தலம். தேவி பார்வதி சிவனை குறித்து, அவரது உடலில் ஒரு பாகத்தை பெறுகின்ற நோக்கத்துடன், தவம் செய்த தலமாக கருதப் படுகின்றது. பார்வதி தேவி தவம் செய்தபோது அவருடன் லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி தேவியரும் உடன் வந்து தவம் செய்தனர் என்பர். அம்பாள் சன்னதியில் அம்மனின் சிலை அருகில் லக்ஷ்மி சரஸ்வதி தேவியரின் உருவங்களையும் காணலாம்.திருநள்ளாறில் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற நளன் இங்கு வந்து சனி பகவானை வணங்கி தனது அரசை திரும்பப் பெற்றான். இந்திரன் செய்த வழிபாட்டை குறிக்கும் வகையில் இந்த கோயிலில் உள்ள குளம் இந்திர தீர்த்தம் என்று குறிக்கப்படுகின்றது. சுசீலர் என்பவற்றின் மகனை, தட்சகன் என்ற பாம்பு கடிக்கவே, முனிவரின் மகன் இறந்து விடுகின்றான். தட்சகன் மனிதனாக பிறக்க வேண்டும் என்று முனிவர் சாபமிட, அந்த சாபத்திலிருந்து விடுதலை பெற, இந்த தலத்தினில் லிங்கத்தை நிறுவி வழிபட்டான் என்று தலபுராணம் குறிப்பிடுகின்றது. விநாயகர் இங்கே இறைவனை வழிபட்டு, கணங்களுக்கு அதிபதியாக இருக்கும் தன்மையை பெற்றார். கௌதம முனிவர் இறைவனை வழிபட்டு, அகலிகையை மனைவியாக அடைந்தார். பாண்டவர்கள் இறைவனை வழிபட்டு, தாங்கள் இழந்த செல்வத்தைப் பெற்றனர்.

வெளி பிராகாரத்தில் தனி கோயில் என்று சொல்லும்படியாக அம்மன் சன்னதி அமைந்துள்ளது. அம்மன் மூன்று வேளைகளில் மூன்று ரூபங்களில் மக்களை காப்பதாக நம்பப்படுகின்றது. காலையில் பாலையாகவும், மதியத்தில் குமரியாகவும், மாலையில் திரிபுர சுந்தரியாகவும் இருப்பதாக ஐதீகம். அம்மனுக்கு வலதுபுறத்தில் லக்ஷ்மியும் இடது புறத்தில் சரஸ்வதியும் காட்சி அளிக்கின்றனர். மூன்று தேவியர்களும் ஒரே சன்னதியில் காட்சி தருவது அபூர்வம்.கார்த்திகை தீப விழா அன்றும், கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்றும் சந்திரனின் கதிர்கள் அம்மனின் கருவறையில் நேரே வந்து விழுமாறு அம்மன் சன்னதி அமைக்கப்பட்டு இருக்கின்றது. அம்மன் சன்னதி வாசலில் குபேரன், சங்கநிதி பதுமநிதியுடன் அமர்ந்து இருப்பதையும் காணலாம். இந்த காட்சி அம்மனை வழிபடுபவர்க்கு குபேரன் அருள் புரிவதற்காக காத்து இருப்பது போல் தோன்றுகின்றது. சுதை வடிவத்தில் உள்ள அம்பிகைக்கு அபிடேகம் செய்வதில்லை. சுவாமிக்கு அருகில் உள்ள இன்னொரு அம்மன் சன்னதியில் உள்ள அம்மையின் பெயர் பிறை அணி வாள் நுதல் அம்மை. இந்த அம்மையின் பெயரை தனது பதிகத்தின் (7.99) முதல் பாடலில் வைத்து சுந்தரர் பதிகம் அருளியுள்ளார். மார்கழி மாதத்தில் மூன்று தேவியர்களுக்கும் புனுகு சாத்தும்போது, அம்பிகை சன்னதியை திரை போட்டு மூடி விடுகின்றனர். இவ்வாறு 45 நாட்கள் சன்னதி மூடி இருக்கும் தருணத்தில், திரைச் சீலைக்கே ஆராதனை நடைபெறுகின்றது.

தெற்கு வடக்காக 630 அடியும் கிழக்கு மேற்காக 200 அடியும் கொண்டு பெரிய பரப்பில் அமைந்த திருக்கோயில். நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்கள் அழகிய சிற்பங்களுடன் உள்ளன. கோயில் மதிற்சுவரை அடுத்து பெரிய பிராகாரம் உள்ளது. வடக்கு புறத்தில் பூந்தோட்டம் உள்ளது. தென்புறத்தில் உள்ள குளம் நான்கு திசைகளிலும் வௌவால் மண்டபம் கொண்டுள்ளது. கிழக்கில் உள்ள கோபுரமே, பிரதான வாயில். இங்கே ஐந்து நிலைகள் உடைய கோபுரம் உள்ளது.

மூலவர் நாகநாதர் சுயம்பு மூர்த்தம். சுப்ரமணியர் சன்னதி, சிவபிரான் சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில் அமைக்கப்பட்டு மூன்று சன்னதிகளும் சேர்ந்து சோமாஸ்கந்த ரூபம் அமைப்பதை காணலாம். சுவாமி சன்னதிக்கு வலது பக்கத்தில், இரண்டாவது பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் இராகு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இராகுவுக்கு உகந்த நிறம் நீலம் என்பதால், நீலநிறத்து ஆடையையே இராகு பகவானுக்கு அணிவிக்கின்றனர். இராகு காலத்தில் இராகுவுக்கு பால் அபிஷேகம் செய்யப்படும் போது பால் நீல நிறமாக மாறுவது இன்றும் நடைபெறும் நிகழ்ச்சி ஆகும். இராகுவின் மனைவியர்களையும் (நாகவல்லி, மற்றும் நாககன்னிகை) இந்த சன்னதியில் காணலாம். தன்னை வழிபடும் அடியார்களுக்கு கேடு செய்யாமல் நன்மை செய்வதால், மங்கள இராகு என்று அழைக்கின்றனர். சுந்தரர் மற்றும் அவரது மனைவி பரவை நாச்சியார் உருவச்சிலைகளும் உள்ளன.

இராஜ வம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுர குலத்து பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவன் சுவர்பானு. பாற்கடலிலிருந்து தோன்றிய அமுதத்தை யார் முதலில் உட்கொள்வது என்ற சர்ச்சை எழுந்த போது, திருமால் மோகினியாகத் தோன்றி அமுதத்தை விநியோகிக்கத் தொடங்கினார். மோகினி வஞ்சனையாக தேவர்களுக்கு மட்டுமே அமுதம் அளிக்கப்பட்டு வந்ததை கவனித்த சுவர்பானு, அசுரர்களுடன் கலந்து அமர்ந்திருந்த சுவர்பானு, தானும் எவரும் அறியாத வண்ணம் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரின் இடையே சென்று அமர்ந்தான். சுவர்பானு இடம் மாறி அமர்ந்ததை, சூரியனும் சந்திரனும் மோகினிக்கு சுட்டிக் காட்ட, மோகினி தான் கையில் வைத்திருந்த அகப்பையால், சுவர்பானுவை ஓங்கி அடிக்க, சுவர்பானு தலை வேறு உடல் வேறாக விழுந்தான். அமிர்தம் உட்கொண்டதால் அவனது தலையில் உயிர் இருந்தது. சிறந்த சிவபக்தனாகிய சுவர்பானு, சிவபெருமானிடம் வேண்டியபோது,இறைவன் அவனுக்கு பாம்பின் உடலைக் கொடுத்து, அவனை ஒரு நிழல் கிரகம் என்ற நிலைக்கும் உயர்த்தினார். அதனால் தான், பல இடங்களிலும் நாம் இராகுவை மனிதத்தலை மற்றும் பாம்பின் உடலுடன் காண்கின்றோம். ஆனால் இந்த தலத்தினில் நாம் இராகு பகவானை மனித வடிவத்தில் காணலாம்.இராகு காலத்தில் இராகு பகவானுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை காண்பதற்கு இன்றும் மக்கள் திரளாக வருகின்றனர்.

சோழமன்னன் இராஜராஜனின் பாட்டனார் கண்டராதித்த சோழர் இந்த கோயிலை கட்டியதாக சொல்லப்படுகின்றது. கோயிலின் உள் மண்டபம் சேக்கிழார் பெருமானாலும் வெளி மண்டபம் கோவிந்த தீக்ஷதராலும் கட்டப்பட்டது என்பர். சேக்கிழார் மிகவும் நேசித்த தலம். தமது சொந்த ஊரான குன்றத்தூரில்(சென்னை அருகில் உள்ள தலம்) இதே பெயரில் ஒரு கோயில் சேக்கிழார் கட்டியுள்ளார். நடராஜர் சபைக்கு அருகில் சேக்கிழாரின் தாய் அழகம்மை அவர்களின் உருவச் சிலையும் அவரது அண்ணன் பாலறாவாயர் அவர்களின் உருவச் சிலையும் காணலாம். சேக்கிழார் உருவச்சிலையும் இந்த கோயிலில் உள்ளது. திருநீலக்குடி தலத்தைச் சார்ந்த ஏழூர்த் தலங்களில் இந்த தலமும் ஒன்று. மற்றவை நீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருபுவனம்,திருவிடைமருதூர், மருத்துவக்குடி என்பன மற்ற தலங்கள். 1986ஆம் வருடம் சுமார் ஐந்தரை அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று, தனது சட்டையை உரித்து இராகு பகவானுக்கு மாலையாக அணிவித்தது. இந்த சட்டை காட்சிப் பொருளாக ஒரு கண்ணாடிப் பேழையில் வைக்கப் பட்டுள்ளது.

பாடல் 1:

தழை கொள் சந்தும் அகிலும் மயிற்பீலியும் சாதியின்

பழமும் உந்திப் புனல் பாய் பழங்காவிரித் தென்கரை

நழுவில் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சரத்து

அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகாகுமே

விளக்கம்:

சந்து=சந்தன மரம்; நழுவில்=நழுவு+இல்=நழுவுதல் இல்லாது, விலகாது; இறைவனை வழிபடும் பணியில் நாம் சோர்வு கொள்ளலாகாது; மேலும் நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் நாம் முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு தேவர்கள் நாகேச்சரத்து நம்பனை வழிபட்டனர் என்ற செய்தி,நழுவில் வானோர் தொழ என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறு வழிபடும் அன்பர்கள் சிறப்புடன் வாழ, இறைவன் அருள் புரிவார் என்ற செய்தியும், சீர் மல்கு அழகர் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. காவிரி நதி அடித்துக் கொண்டு வரும் பொருட்கள் இங்கே பட்டியல் இடப்படுகின்றன. இந்த பொருட்களின் தன்மையை ஆராய்ந்தால், காவிரி நதி தான் பாயும் இடங்கள் அனைத்தையும் வளப்படுத்துகின்றது என்பதை நாம் உணரலாம். அழகர் என்று குறிப்பிட்டு அழகுக்கு இலக்கணமாக இறைவன் இருக்கும் தன்மையை இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.அனைவரையும் சொக்கவைக்கும் அழகினை உடையவர் என்பதை குறிப்பிடும் வகையில் தானே, மதுரையில் உள்ள இறைவனை சொக்கநாதர் என்றும் ஆலவாய் அழகர் என்று அழைக்கின்றனர். திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.27.5), திருஞானசம்பந்தர் பெருமானை சிறந்த அழகர் என்று பலரும் புகழ்வதாக கூறுகின்றார். திருஞானசம்பந்தர் இந்த பாடலில் பெருமானின் திருமேனியில் தன்மையை உணர்த்தி, பெருமான் அழகே வடிவானவர் என்று கூறுகின்றார். பரிசு=தன்மை; புரிசடை=முறுக்குண்ட சடை; புன்சடை=செம்பட்டை நிறத்தில் அமைந்துள்ள சடை; சொக்கவைக்கும் அழகு உடைய பெருமானை, பொருத்தமாக மதுரை தலத்தில் சொக்கன் என்று அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது

பவள வண்ணர் பரிசார் திருமேனி

திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர்

அழகர் என்னும் அடிகள் அவர் போலும்

புகழ நின்ற புரிபுன் சடையாரே

பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.44.7) அழகாய குழகர் என்று பெருமானை, திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். குழகன் என்றால் அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவர் என்று பொருள். ஏகவடம்=ஒற்றைச்சர மாலை; பாம்பினை பெருமான் தனது கழுத்தினில் மாலையாக அணிந்திருப்பது பெருமான் ஒற்றை வடச் சங்கிலி அணிந்திருப்பது போல் உள்ளது என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொங்கிள நாகம்=கடுஞ்சினம் கொண்டு படமெடுத்து ஆடும்; கொங்கு=தேன்; கொங்கிள மாலை=தேன் நிறைந்து புது நறுமணம் கமழும் மலர்கள் கொண்ட மாலை;உமையன்னை பால் கருணை கொண்டு அன்னைக்குத் தனது உடலின் ஒரு பாகத்தை அளித்த கருணையாளனாகிய பெருமான், மழவன் மகளை வாட வைப்பது தவறு அல்லவா என்று நயமாக கேள்வி எழுப்பப் படுகின்றது. இந்த பாடலில் குறிப்பிடப்படும் பல பொருட்கள், பாம்பு, ஆமையோடு, கொன்றை ஆகிய எவையும் அழகு சேர்க்கும் பொருட்களாக கருதப்படுவதில்லை. எனினும், இவற்றைப் பூண்டுள்ள பெருமான் அழகுடன் மிளிர்கின்றார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.

பொங்கிள நாகம் ஓர் ஏக வடத்தோடு ஆமை வெண்ணூல் புனை கொன்றை

கொங்கிள மாலை புனைந்து அழகாய குழகர் கொலாம் இவர் என்ன

அங்கு இள மங்கையோர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வோ

அன்னியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.96.2), திருஞானசம்பந்தர், சிவநெறியில் பழகும் தொண்டர்களை, அன்னியூர் தலம் வந்தடைந்து அழகனாகிய பெருமானின் சிறந்த திருவடிகளைத் தொழுது வாழுமாறு, பணிக்கின்றார். வம்=வம்மின், வாருங்கள்; பழகும்=சிவநெறியில் பழகும்;குழகன்=இளமையாக இருப்பவன்;

பழகும் தொண்டர் வம்

அழகன் அன்னியூர்

குழகன் சேவடி

தொழுது வாழ்மினே

குடவாயில் தலத்தின் மீது அருளிய பாடலில் (2.22.7), பெருமானை குறையாத அழகினை உடையவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.அறை=ஒலி; இயல் என்பது இங்கே இசையியலை குறிப்பிடுகின்றது.

அறையார் கழலன் அழலன் இயலின்

பறை யாழ் முழவும் மறை பாட நடம்

குறையா அழகன் குடவாயில் தனில்

நிறையார் பெருங்கோயில் நிலாயவனே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.23.1) சம்பந்த நாயகி இறைவனை அழகா என்று குறிப்பிடுவதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களும் அகத்துறை வகையைச் சார்ந்தவை. தலைவியின் தன்மை குறித்து, அவள் தனது தலைவனுடன் சேராது இருக்கும் தன்மை குறித்து வருந்தி ஏங்கும் தன்மையை, அவளது தாய் குறிப்பிடுவது போன்று அமைந்த பாடல்கள். உயிர்களின் உண்மையான விருப்பம், பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு இறைவனுடன் சேர்ந்து என்றும் அழியாத பேரானந்தத்தில் இருப்பதே ஆகும்,ஆனால் உயிர் அதற்கான முயற்சிகள் எடுக்காத வண்ணம், வினைகளும் உடலில் உள்ள ஐந்து கருவிகளும் செயல்படுகின்றன. அந்த தடைகளை முறியடித்து உயிர்கள் எப்போதும் பெருமானையே நினைத்த வண்ணம் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு, பெருமான் பால் தீவிர காதல் கொண்டு பெருமானுடன் சேரத் துடிக்கும் தலைவியின் நிலையை ஞானசம்பந்தர் உணர்த்தும் பதிகமாக இந்த பதிகம் உள்ளது. உயிர்கள் இறைவனது அருட்பெருக்கினில் ஈடுபட்டு தன்வயமிழந்து நிற்க வேண்டிய நிலையினை உணர்த்தும் வண்ணம் இந்த பதிகம் அருளப் பட்டுள்ளது என்று சிவக்கவிமணியார் கூறுகின்றார். இறைவனைத் தலைவனாகவும், ஆன்மாவைத் தலைவியாகவும் தாயை குருவாகவும் வைத்து இந்த பதிகத்தின் பொருளை சிந்திக்க வேண்டும் என்று கூறுவார்கள். இந்த பதிகத்தின் பாடல்களில் தனது மகளின் நிலையை இறைவனிடம் எடுத்துரைக்கும் தாயின் நோக்கம் தான் என்னே. தனது மகளின் நிலையை புரிந்து கொள்ளும் இறைவன், தனது மகளின் ஏக்கத்தைத் தீர்க்கும் வண்ணம், அவளைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த தாயின் விருப்பம் மற்றும் வேண்டுகோள். இதனை நேரிடையாக திருஞானசம்பந்தர் சொல்லவில்லை என்றாலும், இந்த கருத்து உணர்த்தப் படுவதால் ஓவ்வொரு பாடலின் முடிவிலும் இதனை குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ளவேண்டும். மழை என்பது மழை பொழியும் மேகத்தினை குறிக்கும்.கைம்மாறு கருதாது மழை பொழிவது போன்று, இறைவனும் பல விதமான உதவிகளை அனைத்து உயிர்களுக்கும் எப்போதும் செய்து கொண்டே இருக்கின்றான். மிடறு=கழுத்து; உழை=மான்; கரவா=கரத்தினை உடையவன்; விழவாரும்= திருவிழாக்கள் மலிந்த; ஆயிழை=ஆராய்ந்து செய்யப் பட்ட நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட நகைகள்;

மழையார் மிடறா மழுவாள் உடையாய்

உழையார் கரவா உமையாள் கணவா

விழவாரும் வெண் நாவலின் மேவிய எம்

அழகா எனும் ஆயிழையாள் அவளே

கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.52.5), திருஞானசம்பந்தர், காலையில் எழும்போதே நாம் இறைவனின் தன்மையையும் பண்பையும் திருமேனி அழகினையும் நினைத்தவாறு எழவேண்டும் என்று கூறுகின்றார். இவ்வாறு காலை முதலே இறைவனை நினைத்தவாறு வாழும் அடியார்கள், வானுலகம் சென்றடைந்து, வானோர்களுக்கும் அணிகலனாக திகழ்வார்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

பழைய தம் அடியார் துதி செயப் பாருளோர்களும் விண்ணுளோர் தொழக்

குழலும் மொந்தை விழாவொலி செய்யும் கோட்டாற்றில்

கழலும் வண்சிலம்பும் ஒலி செயக் கானிடைக் கணம் ஏத்த ஆடிய

அழகன் என்று எழுவார் அணியாவர் வானவர்க்கே

பற்கள் ஏதும் இல்லாத பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம் பலிக்குச் செல்லும் பெருமான், ஆடியும் பாடியும் பிச்சை ஏற்கின்ற துன்பம் உடைய வாழ்க்கை வாழ்பவர் ஆயினும், அவரது தோற்றம் மிகவும் அழகியதாகவே காணப்படுகின்றது என்று திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில்(2.91.6) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு எந்த நிலையிலும் தான் அழகராகத் திகழ்வதை பெருமான் அறிவார் என்றும் திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். புல்லம்=புல்லினை மேய்ந்து உட்கொள்ளும் எருது; உழிதருதல்=திரிதல்;

பல்லில் ஓடு கை ஏந்திப் பாடியும் ஆடியும் பலி தேர்

அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள்

புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழி தருவர்க்கு இடமாம்

மல்கு வெண் திரை ஓதம் மாமறைக்காடு அது தானே

கங்கை ஆறு தங்கிய புன்சடை உடையவனாகத் திகழ்ந்த போதிலும், பெருமான் அழகனாக காணப் படுகின்றார் என்று திருக்கோவலூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.100.9), திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பிரமன் திருமால் ஆகிய இருவர்க்கும் எட்டாதவனாக இருந்த தன்மை,இருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. ஆயிழை=தேர்ந்து எடுக்கப்பட்ட ஆபரணங்களை அணியும் பார்வதி தேவி;

ஆறுபட்ட புன்சடை அழகன் ஆயிழைக்கு ஒரு

கூறுபட்ட மேனியான் குழகன் கோவலூர் தனுள்

நீறுபட்ட கோலத்தான் நீலகண்டன் இருவர்க்கும்

வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே

கருகாவூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.46.3) திருஞானசம்பந்தர், அழகராகிய பெருமானின் திருமேனி, கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தை ஒத்துள்ளது என்று கூறுகின்றார். கழல் கொள் பாடல்=பெருமானின் திருப்பாதங்களின் சிறப்பினை கருத்தாகக் கொண்ட பாடல்; இந்த பாடலில் சிறுத்தொண்டர் என்ற அடியாரைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. அவரது பாடலுக்கு மயங்கி இறைவன் காட்சி கொடுத்ததாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். ஆனால் இந்த அடியவரைப் பற்றிய செய்திகள் வேறு ஏதும் தெரியவில்லை. இந்தத் தலத்தில் வாழ்ந்து வந்த அடியவர் ஒருவரின் இசைக்கு மயங்கி இறைவன் சுயம்புவாக காட்சி கொடுத்ததாக ஒரு செவி வழிச்செய்தி இங்கே நிலவுகின்றது. தனக்கு திருத்தொண்டுகள் புரியும் அடியார்களுக்கு அமுதமாக இனிக்கும் பெருமான் என்று முந்திய பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், தன்னைக் குறித்து இன்னிசைப் பாடல்கள் பாடும் அடியார் ஒருவருக்கு அளித்த இன்பத்தை இங்கே சுட்டிக் காட்டுகின்றார். பெருமானை குறித்த பாடல்களை எவ்வாறு பாட வேண்டும் என்றும் ஞானசம்பந்தர் இங்கே நமக்கு உணர்த்துகின்றார். நமது அகம் குழைய, அதாவது உள்ளம் கசிந்து, நாம் பெருமான் பால் வைத்துள்ள அன்பு வெளிப்படும் வண்ணம் ஓத வேண்டும் என்று கூறுகின்றார். பாட இயலாதவர்களும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க அவனது திருநாமத்தை ஓதும் அடியார்கள் என்று பின்னாளில் குறிப்பிட்டவர் அல்லவா திருஞானசம்பந்தர். பழகவல்ல என்ற தொடருக்கு அடிமைத் தன்மையில், பெருமானை ஆண்டானாக ஏற்றுக்கொண்டு அவருக்கு திருப்பணிகள் செய்யும் தொண்டர்கள் என்று விளக்கம் சான்றோர்கள் அளிக்கின்றனர். .

பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை

குழகர் என்று குழையா அழையா வரும்

கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம்

அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பாடலிலும் (3.70.2) திருஞானசம்பந்தர் அழகர் என்று பெருமானை குறிப்பிடுவதை நாம் உணரலாம். சிவந்த சடையினில் அழகிய கொன்றை மாலையையும் ஒளிவீசும் பிறைச் சந்திரனையும் அணிந்த அழகர் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.

அந்தண்மதி செஞ்சடையார் அங்கண் எழில் கொன்றையொடு அணிந்த அழகராம்

எந்தம் அடிகட்கு இனிய தானமது வேண்டில் எழிலார் பதியதாம்

கந்தமலி சந்தினோடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்

வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்து மயிலாடுதுறையே

அழகிய சிவந்த திருமேனி உடைய எவரும், தனது உடலினை கருநிறம் கொண்ட ஆடையை உடுத்திக் கொண்டு மறைத்தால், அவரது அழகுகெட்டுவிடும் அல்லவா. ஆனால் சிவந்த திருமேனி உடைய பெருமான், தனது உடலினை, கருமையான யானைத் தோல் கொண்டு போர்த்த போதிலும் அழகுடன் விளங்குகின்றார் என்று அப்பர் பிரான், கோடிகா தலத்து பாடலில் (4.51.10) குறிப்பிடுகின்றார். குழகன்=அழகன், இளைஞன்; பசுபதி=ஆன்மாக்களின் தலைவன்; உதிரம் சொட்டும் நிலையில் உள்ள யானையின் ஈரத் தோல், அதனை உடலில் போர்த்துக் கொள்வோரின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது சீவக சிந்தாமணியில் கூறப்படும் செய்தி. எனவே தான், உமை அம்மை யானையின் தோலை உரித்த இறைவன் அந்த தோலினைத் தனது உடல் மீது போர்த்ததைக் கண்டு அச்சம் அடைகின்றாள். இந்த தகவல் பல தேவாரப் பாடல்களில் கூறப்படுகின்றது. குழகன் என்று அழகிய மார்பினை உடையவன்(கோல மார்பன்) என்றும் குறிப்பிட்டு, பெருமான் மிகுந்த அழகன் என்று உணர்த்துகின்றார்.

பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா

மழகளி யானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த

அழகனே அரக்கன் திண் தோள் அருவரை நெரிய ஊன்றும்

குழகனே கோல மார்பா கோடிகா உடைய கோவே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பாடலில் (4.62.7), மாற்று குறையாத பொன் போன்று அழகுடன் திகழும் பெருமான் என்று கூறுகின்றார். ஆலவாயில் தலத்து இறைவனின் திருநாமங்களில் சொக்கன் என்பதும் ஒன்று. சொக்கன் என்ற சொல்லுக்கு அழகு, பொன், மயக்கம் என்று வேறு வேறு பொருட்கள் உண்டு. ஆலவாயிலில் உறையும் பெருமானுக்கு இந்த மூன்று பொருட்களும் பொருந்துவதை நாம் உணரலாம். சொக்கத்தங்கம் என்றால் மாற்று குறையாத தங்கம் என்று பொருள். இந்த பாடலில் அப்பர் பிரான், மாத்தாய், மாற்று குறையாத தங்கமே என்று அழைப்பதை நாம் காணலாம். குழகன்=இளமையான அழகன்: வில்லீ=வில்லினை உடையவன்: கோல வில்லீ என்றால் அழகாக வில்லினை ஏந்தியவன் என்று பொருள். தெண்திரை=தெளிந்த நீரினை உடைய கடல், இங்கே பாற்கடலைக் குறிக்கும். வழுவிலாது=எந்த விதமான கேடும், பாதகமும் இன்றி வழிபடுதல்: இந்த பாடலில் நஞ்சம் உண்ட குழகனே(அழகனே) என்று அப்பர் பிரான் கூறுகின்றார். திருமால் பிரமன் உட்பட அனைத்து தேவர்களும் அசுரர்களும், திரண்டெழுந்த நஞ்சின் நெடியினைத் தாங்க முடியாமல் ஓடியபோது, அந்த நஞ்சினை உட்கொண்ட பின்னரும் உயிருடன் இருந்தது மட்டுமல்லாமல், அந்த நஞ்சினை உட்கொண்டதால் சிறிதும் தளர்ச்சியோ, வாட்டமோ இல்லாமல் இருந்தவர் சிவபெருமான். தளர்ச்சி இருந்திருந்தால், அவரது முகம் வாட்டம் அடைந்து அவரது அழகு குறைந்து காணப்பட்டிருக்கும். அதற்கு மாறாக நஞ்சம் உண்ட பின்னரும், பெருமான் அழகு ஏதும் குறையாமல் இருந்தார் என்பதை உணர்த்தும் பொருட்டு நஞ்சம் உண்ட குழகனே என்று குறிப்பிட்டு, நஞ்சினை உண்டதால் சிறிதும் தளர்ச்சி அடையாமல் சிவபெருமான் இருந்தார் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லும் அப்பர் பிரானின் நயம் ரசிக்கத்தக்கது. மாத்து என்பது பொற்கொல்லர்கள், தங்கத்தின் தரத்தை உரைத்துப் பார்த்து அறிந்து கொள்ள பயன்படுத்தும் சிறிய பொற்கட்டி. அதே போன்று மற்றவர்களின் அழகினை அளந்து பார்ப்பதற்கு கருவியாக இருப்பது சிவபெருமானின் திருமேனி அழகு என்று பொருள் கொள்வதும் சிறப்பே.

வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்

செழுமலர்ப் பாதம் காணத் தெண் திரை நஞ்சம் உண்ட

குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள

அழகனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

அழகுடன் மிளிரும் எந்த பொருளைக் கண்டாலும், அந்த அழகிய தோற்றம் நமது மனதினில் சிறிது நேரம் நிலைத்து நின்று நமக்கு இனிய உணர்வினைத் தருவதை நாம் நமது அனுபவத்தில் உணர்கின்றோம். இந்த செய்தியைத் தான், திருஞானசம்பந்தர் இந்த பாடலில், அழகர் பாதம் தொழுதேத்த வல்லார்க்கு அழகாமே என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். அடியார்களின் மனம், இன்பத்தால் நிறைந்து அழகுடன் பொழிகின்றது என்று நாம் பொருள் கொள்ளவேண்டும். இதே கருத்தினை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் ஒன்றினை நாம் இங்கே காண்போம். அழகிய திருக்கோலம் உடைய பெருமானை நினைப்பதே நமது மனதினுக்கு அழகினைத் தரும் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் ஒரு பொதுப் பதிகத்தின் பாடலாகும் (4.74.8).பழகன்=பழகுவதற்கு இனியவன்; பொருப்பு=மலை; களிறு=ஆண் யானை; மழகளிறு=மதம் கொண்ட யானை; பருப்பு=பெரிய தன்மை;பருப்பன்=உலகிலுள்ள அனைத்துப் பொருட்களினும் பெரியவன். குழவித் திங்கள்=இளமையான பிறைச் சந்திரன்; வளராத நிலையில் உள்ள சந்திரன்;

பழகனை உலகுக்கு எல்லாம் பருப்பனைப் பொருப்போடு ஒக்கும்

மழகளிறு யானையின் தோல் மலமகள் நடுங்கப் போர்த்த

குழகனைக் குழவித் திங்கள் குளிர் சடை மருவ வைத்த

அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே

ஆருயிர் திருவிருத்தம் என்று அழைக்கப்படும் பதிகத்தின் கடைப் பாடலில் (4.84.11), அப்பர் பிரான் தனது உயிர், அழகனாகிய பெருமானின் திருவடி நீழலில் ஒதுங்குவதாக குறிப்பிடுகின்றார். கயிலாய மலையின் கீழே அமுக்கப்பட்டு வருந்திய இராவணனுக்கு பெருமான் புரிந்த அருளினை விடவும், தான் பெற்ற அருள் மிகவும் பெரியது என்று அப்பர் பிரான் கருதினார் போலும். பொதுவாக இராவணனின் கயிலாய நிகழ்ச்சியை குறிப்பிடும் அப்பர்பிரான், அரக்கனுக்கு பெருமான் அருள் புரிந்த தன்மையை குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இந்த பாடலில் அரக்கனுக்கு அருள் புரிந்த தன்மை குறிப்பிடப் படாமல், பெருமான் தனது திருவடி நீழலில் அடியேனை வைத்துள்ளான் என்று பெருமிதம் பொங்க கூறுகின்றார். பைங்கண்=பசுமையான கண்கள்; பாரிடம்=பூத கணங்கள்’

பழக ஒர் ஊர்தி அரன் பைங்கண் பாரிடம் பாணி செய்யக்

குழலும் முழவொடு மாநடம் ஆடி உயர் இலங்கைக்

கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த

அழகன் அடிநிழல் கீழது அன்றோ எனது ஆருயிரே

பெருமானின் அழகினால், பண்பினால் கவரப்பட்ட அப்பர் நாயகி அழகனே என்றும் அண்ணலே என்றும் இறைவனை அழைத்து, தன்னை இகழாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கெஞ்சுவதாக, பெண்ணின் தாயார் கூறுவது போன்று அமைந்த அகத்துறை பாடல், கழிப்பாலை தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பாடலாகும் (5.40.3). காதல் வயப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் அனைவருக்கும் தங்களது பெண் ஒன்றுமறியாத சிறிய பெண் என்று தோன்றுவது உலக இயற்கை. அப்பர் நாயகியின் தாயும் அவ்வாறே நினைப்பதை நாம் இந்த பாடலில் காணலாம். சற்றே மிகைப் படுத்தி, .தனது பெண்ணின் வயது மழலை மொழி மாறாத வயது என்றும், திருத்தமான சொற்களைப் பேசத் தெரியாத பெண் என்றும், தனது பெண்ணை, அப்பர் நாயகியின் தாய் குறிப்பிடுகின்றாள். ஏதும் அறியாத பெண்ணை, சிவபெருமான் மயக்கி அவளது மனத்தினைக் கொள்ளை கொண்டுவிட்டான் என்பது தாயின் குற்றச்சாட்டு. அகப்பொருள் வகையில் அமைந்த பாடல் என்றாலும், தங்களது ஆன்மாவினை பெண்ணாக உருவகித்து, அனைவருக்கும் ஆண்மகனாக திகழும் சிவபெருமானின் பால் காதல் கொண்டுள்ள ஆன்மாவின் நிலை இத்தகைய பாடல்கள் மூலம் உணர்த்தப் படுகின்றது. சிவபெருமானே என்னை நீ இகழலாமோ என்று அப்பர் நாயகி கேட்பதாக இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபெருமானின் பண்புகளால், அழகால் கவரப்பட்டு அவன் மீது காதல் கொண்டு, தங்களை சிவபெருமானுக்கு அர்ப்பணித்த ஆன்மாக்கள் மிகவும் அதிகமாக இருப்பதாலும், அந்த வரிசையில் தான் இப்போது தான் சேர்ந்ததால், புதியவளாகிய தன்னை இகழ்ந்து சிவபெருமான் புறக்கணிப்பானோ என்ற தலைவியின் அச்சம் தொனிப்பதை நாம் இந்த பாடலில் காணலாம்.

மழலை தான் வரச் சொல் தெரிகின்றிலள்

குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ

அழகனே கழிப்பாலை எம் அண்ணலே

இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே

பெருமானுடன் சேர்ந்த பொருட்கள் அனைத்தும், அதற்கு முன்னர் எந்த நிலையினில் இருந்தாலும், பெருமானுடன் சேர்ந்த பின்னர் அழகுடன் பொலிவதாக அப்பர் பிரான் உணர்த்தும் திருநாரையூர் பதிகம் நமது நினைவுக்கு வருகின்றது. இந்த தலத்து இறைவனின் திருநாமம் சௌந்தர்யநாதர், அழகியநாதர் பெருமானின் அழகினில் மெய்ம்மறந்த அப்பர் பிரான், இந்த பெயரினுக்கு ஏற்ப தலத்து இறைவனுடன் சேர்ந்த பொருட்கள் அனைத்தும் அழகுடன் விளங்கி பெருமானுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக வியந்து, இந்த பதிகம் (5.55) பாடியுள்ளார். அம்ம என்பது வியப்பினை குறிக்கும் சொல். இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் அம்ம அழகிதே என்று முடிகின்றன. மடந்தை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு கூறாக கொண்டிருந்தாலும், வளைந்த ஒற்றைப் பிறையினை சூடியிருந்தாலும், கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றிருந்தாலும், புலித்தோலை ஆடையாக உடுத்திருந்தாலும், உடலெங்கும் திருநீற்றினைப் பூசி இருந்தாலும், நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறத்தில் கறை கொண்ட கழுத்தினை உடையவராக இருந்தாலும்,அருவருக்கத் தக்க காய்ந்த வெண்மை நிறம் உடைய மண்டையோட்டினை தனது கையில் தாங்கியிருந்தாலும், கொக்கின் இறகினை அணிந்திருந்தாலும்,தலைமாலையுடன் காணப் பட்டாலும், விரித்த சடையினை உடையவராக இருந்தாலும், வில்வ இலைகளை மாலையாக ஏற்றிருந்தாலும், எலும்பு மாலையை பூண்டிருந்தாலும், அழகேதும் அற்ற வேடுவக் கோலம் பூண்டிருந்தாலும், கூர்மையான மழு சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தியிருந்தாலும், எருதினை வாகனமாக கொண்டிருந்தாலும், நண்பகலில் பலிக்கு திரிந்தாலும், பெருமானின் திருக்கோலம் மிகவும் அழகாக காணப் படுகின்றது என்று அப்பர் பிரான் இந்த பாடல்களில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. பெருமை பொருந்திய இமயமலைக்கு அரசனாகிய,இமவானின் மகளாகிய பார்வதி தேவியினைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டவனும், வளைந்த பிறையினைத் தனது சடையில் சூட்டிக் கொண்டவனும்,நறுமணம் வீசும் சோலைகள் சூழ்ந்த நாரையூர் நகரில் வீற்றிருக்கும் நம்பனும் ஆகிய சிவபெருமான், தனது சடையில் கங்கை ஆற்றினையும் தரித்துள்ளான்;ஆயினும் அவனது திருமேனி மிகவும் வியப்பூட்டும் விதமாக அழகு பொருந்தியதாக விளங்குகின்றது என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்

கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும்

நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு

ஆறு சூடலும் அம்ம அழகிதே

திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.77.3), அப்பர் பிரான் உற்றாரும் சுற்றத்தாரும் நம்மை கைவிட்டாலும், என்றும் நமக்கு உதவுவதற்காக பெருமான் காத்துக் கொண்டிருக்கின்றார் என்றும் அதனால் நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை என்றும் கூறுகின்றார். பண்டுள சுற்றம்=தொன்மையான சுற்றம்; விழவிடல்=ஒதுக்குதல்; வேண்டிய=வாழ்வதற்கு தேவையான; பழகுவதால் ஏற்பட்ட நண்பர்களும், தொன்மையாக நாம் பிறந்த நாளிலிருந்து நமக்கு சுற்றமாக இருக்கும் உறவினர்களும், உங்களால் பயன் ஏதும் இனிமேல் விளையாது என்று அறிந்தால் உங்களை விட்டு விலகி விடுவார்கள் என்பதால், வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை எவ்வாறு அடைவது என்று நீர் கவலை கொள்ள வேண்டாம். பெருமை நிறைந்த திருச்சேறை தலத்தில் உள்ள செந்நெறி திருக்கோயிலில் பொருந்தி உறைகின்ற அழகனாகிய பெருமான் உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றான்.எனவே நீங்கள் அச்சம் எதும் கொள்ளவேண்டியதில்லை என்று சொல்லி நமக்கு அப்பர் பிரான் ஊக்கம் அளிக்கும் பாடல்.

பழகினால் வரும் பண்டுள சுற்றமும்

விழவிடாவிடில் வேண்டிய எய்தொணா

திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய

அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே.

ஆமாத்தூர் தலத்து இறைவனுக்கு அழகிய நாதர் என்பதே திருநாமம். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களையும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே என்று தொடருடன் அப்பர் பிரான் முடிக்கின்றார். சிவபிரானின் அழகில் மயங்கி, சிவபிரான் பால் ஈடுபட்டு, பசுத்தன்மை இழந்த உயிரின் உயர்ந்த நிலையினைக் குறிக்கும் பாடலாக சிவக்கவிமணி சுப்பிரமணியம் இந்த பாடலை கருதுகின்றார். சிவபிரானின் அழகில் மயங்கி அவரிடத்தில் தனது மனதைப் பறிகொடுத்த பெண்மணி, எப்போதும் சிவபிரானின் நினைவாகவே இருந்ததால் கனவிலும் சிவபிரானையே காண்கின்றாள்.தான் கனவில் கண்ட காட்சிகளையும், அப்போது கொண்ட உணர்வுகளையும் கூறுவது போல் அமைந்த அகத்துறைப் பாடல் என்றும் கூறுவதுண்டு.ஆமாத்தூர் அழகர், பிச்சை ஏற்கச் சென்ற போது, அவருக்கு பிச்சையிடச் சென்ற பெண்மணி, அவரை நேரில் கண்டு அவரது அழகில் மயங்கி, அவர் பால் தீராத காதல் கொண்டு, அவரே தனக்கு உரிய மணாளர் என்று நினைக்கின்றாள். ஆனால் சிவபெருமான், அவளை விட்டு நீங்கிச் செல்லவே,வருத்தமடைந்து, தனது எண்ண ஓட்டங்களை மற்றவர்களிடம் சொல்லி, தன்னை சிவபெருமானுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தும் பதிகம். தன்னை விட்டுவிட்டுச் சென்று விட்டாரே என்ற வருத்தத்தையும் மீறி, வந்து சென்றவர் மிகவும் அழகியவர், என்று ஒவ்வொரு பாடலிலும் கூறுவதிலிருந்து, பெருமானின் அழகு, அப்பர் நாயகியின் மனதினில் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் உணர முடிகின்றது. தாருகாவனத்து இல்லத்தலைவிகள், சிவபிரான் பிச்சைப் பெருமானாகச் சென்றபோது அவரது அழகில் மயங்கி, அவரைப் பின்தொடர்ந்துச் சென்றது அப்பர் பிரானின் நினைவுக்கு வந்தது போலும். பிச்சைப் பெருமானின் (பிக்ஷாடனர்) அழகிய கோலத்தையும், தாருகாவனத்துப் பெண்கள் தங்களை மறந்த நிலையில் சிவபெருமானை பின்தொடர்ந்த நிலையையும் மனக்கண்ணால் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான், அவர் பால் காதல் கொண்ட தலைவியாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு, தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அழகிய பதிகம். அப்பர் பிரான் உருவாக்கிய நாயகியை நாம் அப்பர் நாயகி என்றே அழைக்கலாம். அப்பர் நாயகியின் எண்ண ஓட்டங்கள், மிகவும் சுவையாக கீழ்க்கண்ட பாடல்களில் கூறப்பட்டுள்ளன. இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம்.

வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மைக்

கண் அம்பால் நின்று எய்து கனலப் பேசிக் கடியதோர் விடையேறிக் காபாலியார்

சுண்ணங்கள் தாம் கொண்டு துதையப் பூசித் தோலுடுத்து நூல் பூண்டு தோன்றத் தோன்ற

அண்ணலார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

வண்ணங்கள்=தாளத்தோடு பொருந்தப் பாடும் இசைகள்; வலிசெய்து=வலிமை காட்டி, இங்கே ஆடற்கலையின் தனக்கிருந்த திறமை காட்டி என்று கொள்ள வேண்டும். வளை கவர்ந்தார்=காதலன் சிவபெருமான் வளைகளைக் கவர்ந்தார்; காதலன் பால் கொண்ட அன்பால், அவன் பிரிவு வெகுவாக தலைவியை பாதிக்க, அவளது உடல் மிகவும் மெலிந்து விடுகின்றது. உடல் இளைத்தது மட்டுமல்லாமல், கைகளும் மெலியவே தலைவி தனது கைகளில் அணிந்திருந்த வளையல்கள் நில்லாமல் கழன்று விடுகின்றன. இந்த நிலைக்குத் தான் தள்ளப்பட்டதற்கு, தன்னை புறக்கணித்த காதலனே காரணம் என்பதால், அவனை வளையல் கவர்ந்த கள்வனாக கருதுவது சங்க இலக்கியங்களின் மரபு. இதே மரபு தேவாரப் பாடல்களிலும் பின்பற்றப் பட்டுள்ளது.

நான் செய்த எல்லாத் தவறுகளையும் பொறுத்து அருளும் பெருமானே என்றும், தலைமுடியை மிகவும் அழகாக பின்னியிருப்பவனே என்றும், நீலகண்டனே என்றும், சுருண்ட சடையை உடைய தலைவனே என்றும், ஆரூரில் உறையும் அழகனே என்றும் பலமுறை அழைத்து பெருமானை கூப்பிடவேண்டும் என்பதை மனமே நீ தெரிந்து கொள்வாயாக;. உனக்குப் பாதுகாவலாக இருக்கும் நான், நீ என்ன செய்யவேண்டும் என்பதனை இப்போது உணர்த்திவிட்டேன் என்பதால் குற்றம் ஏதும் என்மேல் இனி இல்லை; மனமே நீ மேற்சொன்னவாறு செயற்படாமல் இருந்தால் குற்றம் உன்னுடையது தான், இதனை உணர்ந்து உடனே செயலில் இறங்குவாயாக என்று தனது மனதிற்கு அறிவுரை கூறுவது போன்று, நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல் திருவாரூர் தலத்து பதிகத்தின் பாடலாகும் (6.31.5). அழகன் என்பது பெருமானின் திருநாமங்களில் ஒன்று என்பதை அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.இழைத்த நாள்= ஒருவனுக்கு விதியால் முன்னமே தீர்மானிக்கப்பட்ட வாழ்நாள். அந்த நாள் என்னவென்று நமக்குத் தெரியாது; எனினும் அத்தகைய நாள் ஒன்று உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அரணம்=பாதுகாப்பு. அடியேன் உன் அரணம் கண்டாய் என்ற தொடரை. இறுதி அடியில் குற்றமில்லை என்ற சொல்லின் முன்னர் சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். தான் உணர்ந்த உண்மையினை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆசானாக அப்பர் பிரான் திகழ்வதை, அவரே உணர்த்துவதை நாம் இங்கே காணலாம். பிஞ்ஞகன்=அழகாக பின்னப்பட்ட தலைமுடியை உடையவன்.

இழைத்த நாள் எல்லை கடப்பதென்றால் இரவினோடு நண்பகலும் ஏத்தி வாழ்த்திப்

பிழைத்தது எல்லாம் பொறுத்தருள் செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும்

அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம் கொண்ட அழகா என்றும்

குழற்சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றமில்லை என் மேல் நான் கூறினேனே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தின் முதல் பாடலில் (6.53.1) அப்பர் பிரான் ஆனேறது ஏறும் அழகர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.வரை=மலை; மால்வரை=பெரிய மலை, இங்கே மேரு மலையினை குறிக்கின்றது. கால் வளை=இரண்டு முனைகளும் வளையுமாறு; கான்=காடு; கரி=ஆண் யானை; துடி=நடுவில் சுருங்கி உள்ள உடுக்கை எனப்படும் இசைக்கருவி; இதழி=கொன்றை மலர்; அடிகள் என்பதற்கு தலைவர் என்று பொருள்.கட்டங்கம்=மழு ஆயுதம்

மானேறு கரமுடைய வரதர் போலும் மால் வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும்

கானேறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கைக்கொண்டார் போலும்

தேனேறு திரு இதழித் தாரார் போலும் திருவீழிமிழலை அமர் செல்வர் போலும்

ஆனேறது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.54.6) அம்பலத்தில் நடமாடுகின்ற அழகன் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஏழ் பொழில்= ஏழ் உலகங்கள்: அறையார்=ஒலிக்கும் தன்மை கொண்ட; கறையார்=விடம் பூசப்பட்ட; அம்பின் நுனியிலும் மற்ற ஆயுதங்களின் நுனியிலும் நஞ்சு கலந்த பூச்சு பூசப் படுவது பண்டைய வழக்கம்.

அறையார் பொற்கழல் ஆர்ப்ப அணியார் தில்லை அம்பலத்துள் நடமாடும் அழகன் தன்னைக்

கறையார் மூவிலை நெடுவேல் கடவுள் தன்னைக் கடல் நாகைக் காரோணம் கருதினானை

இறையானை என்னுள்ளத்து உள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற

பொறையானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே

வலஞ்சுழி மற்றும் கோட்டையூர் ஆகிய தலங்களை இணைத்து அருளிய பதிகத்தின் பாடலில் (6.73.1) அப்பர் பிரான், கருமணி போல் கண்டத்து அழகன் என்று கூறுகின்றார். ஆலகால விடத்தைத் தேக்கியதால் பெருமானின் கழுத்தின் தோன்றும் கருமை நிறத்துடன் படர்ந்த கறையும் மிகவும் அழகாக விளங்கும் தன்மை, பெருமானைச் சென்றடையும் எந்த பொருளும் அழகுடன் மிளிரும் என்பதை உணர்த்துகின்றது. வரு பொன்னி என்று பிலத்துவரத்திலிருந்து வெளியே சுழித்து வந்த காவிரி நதி என்று தலத்துடன் இணைந்த சம்பவத்தை குறிப்பிடுவதாக சிவக்கவிமணி திரு சி.கே.சுப்பிரமணியம் அவர்கள் பெரியபுராண விளக்கம் புத்தகத்தில் கூறுகின்றார். ஈசன், ஈஸ்வரன் என்றால் தலைவன் என்று பொருள், பரமேஸ்வரன் என்று தலைவர்களுக்கும் தலைவனாக பெருமானே விளங்கும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. மாதேவன் என்று இந்த சொல் மிகவும் அழகாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. குருமணி=அழகான நிறம் உடைய மணி; பாடலின் நான்காவது அடியில் உள்ள கோமான் என்ற சொல்லினை அழகமரும் என்று சொல்லுடனும் சேர்த்து பொருள் கொள்ளவேண்டும். கோமான்= தலைவன். பெருமானின் அழகினை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து இன்பமடைந்த அப்பர் பிரான், அந்த இன்பத்தினை உணர்த்தும் வண்ணம், தனது நெஞ்சத்திற்கு கண்டாய் கண்டாய் பல முறைகள் குறிப்பிட்டு சொல்கின்றார் போலும்.

கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்

பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய் பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்

வருமணி நீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்

குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே

பிரம கபாலத்தைத் தனது கையினில் உண்கலனாக ஏந்திய போதிலும், வளையும் உடலினைக் கொண்ட பாம்பினை அணிகலனாக உடலின் பல இடங்களில் அணிந்த போதிலும், சங்கு மாலை மற்றும் எலும்பு மாலைகளை அணிந்த போதிலும் பெருமான் அழகுடன் திகழ்கின்றார் என்று நாரையூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.74.7) அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அக்கு என்பதற்கு உருத்திராக்க மணிகள் என்றும் பொருள் கொள்ளலாம்.

தக்கனதுவேள்வி கெடச்சாடினானைத் தலைகலனாப் பலியேற்ற தலைவன்தன்னை

கொக்கரைச் சச்சரி வீணைப் பாணியானைக் கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை

அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன் தன்னை

நக்கனைக் வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர்நன்னகரில் கண்டேன் நானே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.89.5) அப்பர் பிரான், மிகவும் உகந்து நடனம் ஆடும் அழகர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஏழு பிறப்பும் அறுப்பவர் சிவபெருமான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தாங்கள் ஈட்டி சேமித்து வைத்துள்ள வினைத் தொகைகளுக்கு ஏற்ப,அனைத்து உயிர்களும் மறுபிறப்பு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளன. பிறவிகளை ஏழு வகைப் பிரிவுகளாக பெரியோர்கள் பிரிக்கின்றனர். தாவரம், நீரில் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள் மற்றும் தேவர்கள் என்பன இந்த ஏழுவகைப் பிறவிகள் ஆகும். தேவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியவர்கள் என்பதால், அவர்களையும் பிறப்பு வகைகளில் ஒன்றாக குறிப்பிடுகின்றார்கள். பெருமானின் அருளால் நமக்கு முக்திநிலை வாய்க்குமானால் நாம் இங்கே குறிப்படப்பட்டுள்ள ஏழு வகைப் பிறவிகளில் ஒன்றாக பிறப்பதை தவிர்க்க இயலும். இந்த செய்தியை, அப்பர் பிரான், ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் என்று குறிப்பிடுகின்றார். சூழும்=நம்மை வளைத்துச் சூழ்ந்து கொண்டு வினைகள் நமக்கு அளிக்கும் துயரங்கள்;

சூழும் துயரம் அறுப்பார் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்

ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும்

தாழ்வின் மனத்தேனை ஆளாக் கொண்டு தன்மை அளித்த தலைவர் போலும்

ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

முதியவராக வந்து, சுந்தரர் தனக்கு அடிமை என்று சொல்லிய பெருமான் சுந்தரரின் திருமணத்தை தடுத்து நிறுத்தவே, இருவரும் திருவெண்ணெய்நல்லூர் வழக்காடு மன்றத்திற்கு செல்கின்றனர். ஆங்கே, தான் எவருக்கு அடிமை அல்ல என்று சுந்தரர் முதலில் முழங்கிய போதும் (முதியவராக வந்த இறைவன் அடிமை ஓலை காட்டிய போது), சுந்தரர் முதியவருக்கு அடிமை என்று மன்றம் தீர்ப்பளித்தது. வேறு வழியின்றி முதியவரை பின்தொடர்ந்து சுந்தரர் செல்ல,முதியவரோ அந்த தலத்தில் உள்ள திருக்கோயிலின் உள்ளே நுழைந்து மறைந்து விடுகின்றார். பின்னர் இடபத்தில் அமர்ந்தவராக பெருமான் வானில் காட்சி கொடுத்த பின்னரே, முதியவராக வந்து தன்னை ஆட்கொண்டவர் பெருமான் என்பதை சுந்தரர் புரிந்து கொள்கின்றார். அப்போது பெருமான் பணித்த வண்ணம் பித்தா பிறைசூடி என்று தொடங்கும் பதிகத்தை பாடுகின்றார். இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும், இறைவனே உனக்கு நான் அடிமை அல்ல என்று கூறியது தவறு என்றும் இனியும் அவ்வாறு சொல்லமாட்டேன் என்றும் சொல்லும் சுந்தரர், இறைவனின் திருநாமங்களை ஒவ்வொரு பாடலின் கடை அடியில் சொல்லி இறைவனை அழைக்கின்றார். அத்தகைய திருநாமங்களில் ஒன்று தான் அழகா என்பது. இந்த திருநாமத்தை பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் குறிப்பிடுகின்றார். தன்னைத் தொழும் அடியார்களின் துயரங்களைத் தீர்ப்பது இறைவனின் கடமை என்று இங்கே சுந்தரர் கூறுவதை நாம் உணரலாம். அரிசிற்கரைப் புத்தூர் என்ற தலத்து இறைவனின் திருநாமம் அழகிய நாதர். இந்த பதிகத்தின் (7.69) பாடல்களில் சுந்தரர் இறைவனை திருப்புத்தூர் அழகன் என்று குறிப்பிடுகின்றார்.

மழுவாள் வலன் ஏந்தீ மறையோதீ மங்கை பங்கா

தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே

செழுவார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்

அழகா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

நாட்டியத்தான்குடி தலத்தின் மீது அருளிய பாடலில் (7.15.7) சுந்தரர் இறைவனை அழகா என்று அழைக்கின்றார். நமது வாழ்வினில் எத்துணைத் துன்பம் வரினும், இறைவன் பால் நாம் கொண்டுள்ள அன்பினை, மனம் சலியாமல் தொடரவேண்டும் என்று சுந்தரர் இந்த பாடலில் நமக்கு அறிவுரை கூறுகின்றார்.இரண்டு கண்களிலும் பார்வை இழந்து தட்டுத் தடுமாறிய வண்ணம் பல தலங்கள் தொடர்ந்து சென்று இறைவனைப் பணிந்து வணங்கிய சுந்தரரின் வாழ்க்கை, அவர் நமக்கு உணர்த்தும் அறிவுரையை, அவரும் தனது வாழ்வினில் கடைப்பிடித்தார் என்பதை நமக்கு உணர்த்துகின்றது. தான் அடிமையாக ஆட்பட்டது, துன்பம் அடைவதற்கு அல்ல என்றும், இறைவனின் திருவடிகளைப் பற்றுக்கோடாக கொண்டு நிலையான இன்பம் அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் என்பதை உணர்த்தும் சுந்தரர், எத்தனைத் துன்பம் உறினும், இறைவன் தன்னை விரும்பி தனது துயரங்களை களையாது இருந்தாலும் தான் இறைவனை தொடர்ந்து விரும்புவேன் என்று இந்த பாடலில் சுந்தரர் உணர்த்துகின்றார்.

ஐவாய் அரவினை மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா

எய்வான் வைத்ததொர் இலக்கினை அணைதர நினைந்தேன் உள்ளம் உள்ளளவும்

உய்வான் எண்ணி வந்து உன்னடி அடைந்தேன் உகவாய் ஆகிலும் உகப்பன்

நைவான் நான் உனக்கு ஆட்பட்டது அடியேன் நாட்டியத்தான்குடி நம்பீ

நமச்சிவாயப்பதிகத்தின் பாடலில் (7.48.6), தனது இடுப்பினில் கச்சாக இறுகக் கட்டப்பட்ட பாம்பினைத் தன் விருப்பம் போன்று அசைத்தாடும் அழகன் என்று சுந்தரர் கூறுகின்றார்.

ஏடு வான் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின் மேல்

ஆடு பாம்பு அரைக்கு அசைத்த அழகனே அந்தண் காவிரிப்

பாடு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச்

சேடனே உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

கூடலையாற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.85.7) அழகனாகிய பெருமான் தன்னுடன் வந்ததை ஒரு அதிசயம் என்று குறிப்பிடுகின்றார்.மழை=மேகம்; மழை நுழை மதியம் என்று மேகங்களின் ஊடே செல்கின்ற சந்திரன் என்று கூறுகின்றார்.

மழை நுழை மதியமொடு வாளரவும் சடைமேல்

இழை நுழை துகில் அல்குல் ஏந்திழையாளோடும்

குழை அணி திகழ் சோலைக் கூடலையாற்றூரில்

அழகன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே

திருவாசகம் குயிற்பத்து பதிகத்தின் பாடலில் மணிவாசகர், பெருமானை பொன்னை அழித்த நன்மேனிப் புகழில் திகழும் அழகன் என்று குறிப்பிடுகின்றார்.பொன்னை விடவும் பெருமானின் திருமேனி அழகாக இருப்பதால், பொன் தனது புகழினை இழந்தது என்றும் பலராலும் பெருமான் புகழப் படுகின்றார் என்றும் அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். தென்னவன் சேரலன் சோழன் என்று தமிழகத்தைத் தனது இடமாகக் கொண்டுள்ள பெருமான் என்று நமக்கு உணர்த்துகின்றார். தென்னாடு உடைய சிவனே போற்றி என்று போற்றித் திருவகவலில் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது.புயங்கன்=பாம்புகளை அணிந்தவன் என்றும் பாம்பு போன்று உடலை நெளித்து அழகாக நடனம் ஆடுபவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். .

உன்னை உகப்பன் குயிலே உன் துணைத் தோழியும் ஆவன்

பொன்னை அழித்த நன்மேனிப் புகழில் திகழும் அழகன்

மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய

தென்னவன் சேரலன் சோழன் சீர்ப் புயங்கன் வரக் கூவாய்

திருவாசகம் அன்னைப்பத்து பதிகத்தின் பாடலில், மணிவாசகர் நிரம்ப அழகியர் என்று பெருமானை, பெருமான் பால் தீராத காதல் கொண்ட பெண் குறிப்பிடுவதாக அவளது தோழி கூறுவதாக அமைந்துள்ளது. நிரம்ப அழகியர் என்று சொல்வதன் மூலம், பெருமானின் அழகினை உணர்த்த அளவுகோல் ஏதும் பயன்படாது ஏறனும் எப்போதும் அழகிய திருக்கோலம் உடைய இறைவனையே தான் நினைத்துக் கொண்டு இருப்பதால், தனது மனம் ஆனந்தத்தில் திளைப்பதாகவும் இங்கே, மணிவாசக நாயகி கூறுகின்றாள்.

நித்த மணாளர் நிரம்ப அழகியர்

சித்தத்து இருப்பரால் அன்னே என்னும்

சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை

அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்

திருவாசகம் சென்னிப்பத்து பதிகத்தின் பாடலிலும் மணிவாசகர், பெருமானை அழகன் என்று குறிப்பிடுகின்றார். இரு கரைகளையும் தாண்டிய வண்ணம் பெருகிப் பாயும் வெள்ளம் போன்று, எல்லையற்ற ஆனந்தத்தை, அமுதம் போன்று இனிய ஆனந்தத்தை பெருமானின் நினைவுகள் நமக்கு அளிக்கும் என்று இந்த பாடலில் மணிவாசகர் கூறுகின்றார்.

அட்டமூர்த்தி அழகன் இன்னமது ஆய ஆனந்த வெள்ளத்தான்

சிட்டன் மெய்ச் சிவலோக நாயகன் தென் பெருந்துறைச் சேவகன்

மட்டுவார்குழல் மங்கையாளை ஓர் பாகம் வைத்த அழகன் தன்

வட்ட மாமலர் சேவடிக் கண் நம் சென்னி மன்னி மலருமே

பொழிப்புரை:

தழைகளோடு கூடிய சந்தன மரங்கள், அகில் மரங்கள், மயிற்பீலிகள், தரமான பலவகை பழங்கள், ஆகியவற்றை, தனது நீர்ப்பெருக்கினால், அடித்துக் கொண்டு வரும் காவிரி நதியின், பண்டைக் காலம் முதற்கொண்டு தமிழகத்தை வளம் செய்யும் காவிரியின், தென்கரையில் அமைந்ததும், மறவாது வானோர்கள் தொழுது பெருமானின் அருள் பெறுகின்ற சிறப்பினை உடையதும் ஆகிய நாகேச்சரம் தலத்தினில் உறைகின்ற அழகரின் திருப்பாதங்களை புகழ்ந்து வணங்கி தொழுகின்ற ஆற்றல் உடைய அடியார்களுக்கு பலவகையான அழகு மிகுந்த நலன்கள் சேரும்; அவர்களின் மனமும் அழகுடன் பொலியும்.

பாடல் 2:

பெண்ணொர் பாகம் அடையச் சடையில் புனல் பேணிய

வண்ணமான பெருமான் மருவும் இடம் மண்ணுளார்

நண்ணி நாளும் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரம்

கண்ணினால் காண வல்லார் அவர் கண் உடையார்களே

விளக்கம்:

நன்கு=பல விதமான நன்மைகள்; கண் என்ற சொல்லுக்கு அறிவு என்றும் பொருள்; எனவே கண் உடையர்கள் என்ற தொடருக்கு அறிவு உடையவர்கள் என்று பொருள் கொண்டு, பெருமானைத் தொழாத மனிதர்கள் அறிவற்ற மூடர்கள் என்று சொல்கின்றார் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. சென்ற பாடலில் பதினாறு பேறுகளில் ஒன்றான அழகு குறிப்பிடப்பட்டது. இந்த பாடலில் மற்றொரு பேறான அறிவு குறிப்பிடப்பட்டு, பெருமானைத் தொழுகின்ற அடியார்கள், அழகு அறிவு முதலான பதினாறு பேற்றினையும் பெறுகின்றனர் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. நாகேச்சரத்து பெருமானை, தங்களது கண்களால் கண்டு தொழுகின்ற வாய்ப்பினை பெற்ற அடியார்களே, கண் பெற்றதன் பயனை முழுமையாக அடைந்தவர்கள் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுவது தில்லைத் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்து பாடல்களை (4.80) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், தில்லைப் பெருமானின் நடனக் காட்சியை விடவும் வேறொரு காட்சியை உயர்ந்த காட்சியாக கருதும் அடியார்கள் உண்மையான தொண்டர்கள் அல்ல என்றும் பேய்த் தொண்டர்கள் என்றும் சாடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம்.பீளை=அழுக்கு: பேய்த் தொண்டர்=பொய்யான தொண்டர்கள், பேய்த்தேர் (கானல்நீர்) என்பது போல: தென்னை மரத்தில் கொத்தாக காணப்படும் பூக்களை தென்னம் பாளை என்று அழைப்பது போன்று கமுகு மரத்தின் பூக்களையும் பாளை என்றே அழைப்பார்கள்.

பாளையுடைக் கமுகு ஓங்கிப் பன்மாடம் நெருங்கி எங்கும்

வாளையுடைப் புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை தன்னுள்

ஆளவுடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்

பீளையுடைக் கண்களால் பின்னைப் பேய்த்தொண்டர் காண்பதென்னே

இந்தப் பதிகத்தின் முதல் பாடலில் நடனக் காட்சியைப் பொதுவாக குறிப்பிடும் அப்பர் பிரான், அதற்கடுத்த பாடல்களில், சிவபிரானின் திருவடி, உடுத்த துகில், உடுத்த கச்சு, கை, மார்பில் அணிந்திருக்கும் பன்றிக் கொம்பு, சிரித்த முகம், நெற்றிக்கண், தலையில் சூடிய ஊமத்தை மலர் என்று பல அழகிய அம்சங்களை குறிப்பிடுகின்றார். இறைவனின் அங்கங்களை விவரிக்கும் போது, பாதத்திலிருந்து தொடங்கி கேசம் வரையிலும், இறைவியின் அழகினைக் கூறும்போது கேசத்திலிருந்து பாதம் வரை விவரிப்பதும் மரபு. அந்த மரபின் படி அப்பர் பெருமான் இந்த பாடலில் திருவடியிலிருந்து தொடங்கி, தலையில் சூடியுள்ள ஊமத்தை மலருடன் ஒன்பதாவது பாடலில் முடிக்கின்றார். நாம் இறைவனின் திருவருளைப் பெற, பற்றிக் கொள்ளவேண்டியது அவனது திருவடிகள் என்பதை உணர்த்தும் வகையில், இறுதிப் பாடலில் அவனது பாதத்தில் அமைந்துள்ள விரலின் பெருமையை, அரக்கன் இராவணனின் வலிமையை அழித்து பின்னர் அவனுக்கு அருள் செய்த கால்விரலின் பெருமையை குறிப்பிடும் நேர்த்தி ரசிக்கத்தக்கது.

இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு இணங்கிலா ஈசன் என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகத்தையும் நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சிவபெருமானை வணங்காத மனிதர்களையும், சிவபெருமானின் அடியார்களைச் சாராத மாந்தர்களையும் பேய்கள் என்றும் பிணங்கள் என்று திருமாளிகைத் தேவர் சாடுகின்றார். அலங்கல்=மாலை: தூர்த்த வார்த்தை=வஞ்சகச் சொற்கள்: தொழும்பர்=பிறருக்கு அடிமையாக இருப்பவர், மற்ற தெய்வங்களைத் தொழும் அடியார்கள்: பிட்டர்=சிறியோர்: பிழம்பு=எளிதில் விளங்காதபடி பேசுதல், முணுமுணுப்புச் சொற்கள்: இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், சிவபிரானைச் சாராதவர்களுடன் தனது வாய் பேசாது என்றும் தனது கண்கள் அவரைக் காணாது என்றும் திருமாளிகைத் தேவர் கூறுகின்றார்.

எட்டுரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி

விட்டிலங்கு அலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்திலாத

துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும்

பிட்டரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே

ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்கள் கண்களே அல்ல என்று ஆமாத்தூர் பதிகத்தின் (2.44.4) பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கண்கள் செய்யவேண்டிய தொழில், சிவபிரானைக் காண்பது தான் என்ற செய்தி இங்கே எதிர்மறையாக உணர்த்தப் படுகின்றது. கோணாகம்=வலிமை உடைய நாகம். புல்குதல்= தழுவுதல்;

கோணாகம் பேர் அல்குல் கோல் வளைக்கை மாதராள்

பூணாகம் பாகமாப் புல்கி அவளோடும்

ஆண் ஆகம் காதல் செய் ஆமாத்தூர் அம்மானைக்

காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே

அங்கமாலைத் திருப்பதிகத்தின் இரண்டாவது பாடலில் (4.10.2) அப்பர் பிரான், நாம் கண்கள் பெற்றதன் நோக்கமே சிவபெருமானின் நடனக் காட்சியை காண்பதற்கு என்று கூறுகின்றார். நஞ்சு உண்ட பின்னரும், இறவாமல் இருந்த காரணத்தால், பிறப்பு இறப்புகளைக் கடந்த இறைவன் சிவபெருமான் என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது. ஏதாவது ஒரு தொழிலினைச் செய்துகொண்டு நடனம் ஆடுவதே கடினம். ஆனால் சிவபெருமான் அல்லும் பகலும் இடைவிடாமல் நடனம் ஆடிக் கொண்டு இருந்தாலும், ஐந்து தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருக்கின்றார். அவர் செய்யும் ஐந்து தொழில்களையும் உணர்த்துவதே இந்த நடனக் கோலம்.

கண்காள் காண்மின்களோ – கடல்

நஞ்சுண்ட கண்டன் தன்னை

எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக்

கண்காள் காண்மின்களோ

இந்த பாடலில் பெருமானை நாள்தோறும் அணுகி தொழுது ஏத்த வேண்டும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் தலம் என்று சேக்கிழார் பெரிய புராணப் பாடலில் குறிப்பிடுவதை, நாம் பதிகப் பின்னணியில் சிந்தித்தோம். தங்களுக்கு துன்பம் வரும்போது மட்டும், அந்த துன்பத்தை தீர்த்துக் கொள்வதற்காக கோயிலுக்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் சென்று இறைவனை வழிபடும் பலரை நாம் இன்றும் காண்கின்றோம் அவ்வாறில்லாமல் நாள்தோறும் இறைவனை வழிபட வேண்டும் என்று உணர்த்தும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம். திருமருகல் மற்றும் செங்காட்டங்குடி தலங்களை குறிப்பிட்டு அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.6.1) நாள்தோறும் அந்தணர்கள் இறைவனின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கியதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். செங்காட்டங்குடி தலத்தினில் தான் விரும்பி உறைகின்ற தோற்றத்தை திருமருகல் தலத்தில் காட்டி அருள் புரிந்ததன் காரணம் யாது என்று திருஞானசம்பந்தர் இறைவனிடம் வினவும் பாடலிது. திருமருகல் தலத்தினில் மேலும் பல நாட்கள் தங்கி தன்னைப் பணியவேண்டும் என்று இறைவன் இந்த குறிப்பு மூலம் உணர்த்தியதாக புரிந்து கொள்ளும் திருஞானசம்பந்தர் அவ்வாறே செய்தார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. மைந்தன்=வல்லமை வாய்ந்தவன்

அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடிபரவ

மங்குல் மதி தவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்

செங்கயலார் புனல் மல்கு சீர்கொள் செங்காட்டங்குடி குடி அதனுள்

கங்குல் விளங்கெரி ஏந்தி ஆடும் கணபதீச்சரம் காமுறவே

திருப்பனையூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.37.1) திருஞானசம்பந்தர் நாள்தோறும் இறைவனை வழிபட்டு வந்த தொண்டர்கள் வாழ்ந்து வந்த தலம் திருப்பனையூர் என்று கூறுகின்றார். நிரவி=கலந்து; அத்தகைய வழிபாட்டினால், தொண்டர்களின் மனம் மகிழ, அவர்கள் பொலிவுடன் விளங்கினார்கள் என்றும் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

அரவச் சடை மேல் மதிமத்தம்

விரவிப் பொலிகின்றவன் ஊராம்

நிரவிப் பல தொண்டர்கள் நாளும்

பரவிப் பொலியும் பனையூரே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.50.4) திருஞானசம்பந்தர், தான் நாள்தோறும் இறைவனின் திருநாமங்களை சொல்லி, இறைவனைப் போற்றி வழிபடுவதாக கூறுகின்றார். பிறவிப் பிணியினால் பீடிக்கப்பட்டு வருந்தும் தான், அந்த நோயினைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நாள்தோறும் இறைவனின் திருநாமத்தை ஓதி வருவதாகவும், உலகத்தவர் காணும் வண்ணம் தன்னை ஆட்கொண்டருளி முக்தி தந்து அருளவேண்டும் என்று இந்த பாடலில் அவர் வேண்டுகின்றார். தேவாரப் பாடல்கள் பாடி, வேதநெறி தழைத்து ஓங்கச் செய்யவும், சைவநெறி மறுமலர்ச்சி பெறவும், சைவ அடியார்களின் கூட்டம் மேன்மேலும் பெருகவும், மூன்று வயது சிறுவனுக்கு ஞானப்பால் ஊட்டி அருள் புரிந்த பெருமான், அந்த நோக்கம் நிறைவேறியவுடன், திருஞான சம்பந்தருக்கு அனைவரும் காணும் வண்ணம், நல்லூர் பெருமணம் தலத்தினில் முக்தி அளித்தமையை நாம் பெரியபுராணத்திலிருந்து உணர்கின்றோம்.தங்களது உள்ளத்தில் வஞ்சனை ஏதுமின்றி, பொய்யை நீக்கி உண்மையான அன்புடன் பெருமானை வணங்கும் அடியார்கள், உலகப் பொருட்களின் மீது தாங்கள் கொண்டிருந்த பாசத் தொடர்பினை நீக்கி, செம்மையான மனம் உடையவர்களாக விளங்கும் அடியார்களின் சிந்தையில் இறைவன் உறைவதாக,இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

மெய்யராகிப் பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து

செய்யர் ஆனார் சிந்தையானே தேவர் குலக் கொழுந்தே

நைவன் நாயேன் உன்றன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்

வையம் முன்னே வந்து நல்கி வலிவலம் மேயவனே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் தான் எப்போதும் இறைவனின் புகழினை சொல்வதாக, திருஞானசம்பந்தர் கூறுகின்றார். துற்றுதல்=உணவு உட்கொள்ளுதல்; நாம் உறக்கம் கொள்ளும்போது புலன்கள் நமது வசம் இருப்பதில்லை. நாம் உணவு உட்கொள்ளும் போதும் நமது புலன்கள் உணவின் சுவையை ரசிப்பதால், அப்போதும் அந்த புலன்கள் நம் வசம் இருப்பதில்லை. ஆனால் இந்த நேரங்களிலும் இறைவனை நினைத்து பணியும் வண்ணம் தனது புலன்களை பழக்கியிருப்பதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இதன் மூலம் எப்போதும் இறை நினைவுடன் அவர் வாழ்ந்த தன்மையை நாம் உணர்கின்றோம். தன்னைப் பணிந்து வணங்கிய தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, விடத்தையும் உட்கொள்வதற்கு துணிந்த பெருமானின் தியாகச் செயலை நினைவு கூர்ந்து, தனது அடியார்கள் பொருட்டு எதையும் செய்யும் கருணை உள்ளம் கொண்டவர் பெருமான் என்று உணர்த்துகின்றார்.இந்த பதிகத்தின் முந்தைய பாடலில், வஞ்சனையற்ற மனத்துடன் இறைவனைத் தொழும் அடியார்களின் மனதினில் இறைவன் உறைவதாக குறிப்பிட்ட,திருஞானசம்பந்தர் தானும் அந்த தன்மையுடன் திகழ வேண்டும் என்று விரும்புவதை குறிப்பிட்டு, தான் அவ்வாறு மாறுவதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்று வேண்டுகின்றார்.

துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன் உன் திறமே

தஞ்சமில்லாத் தேவர் வந்துன் தாள் இணைக்கீழ் பணிய

நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைந்து அடியேன்

வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே

தனது அடியார்களின் துயரினை, அவர்கள் தங்களது வாழ்வினில் எதிர்கொள்ளும் இடர்களை நீக்க பெருமான் அருள்புரிய வேண்டும் என்று வேண்டுகின்ற நெடுங்களம் தலத்து பாடல்களில் (1.52) அத்தகைய அடியார்களின் தன்மைகளை திருஞானசம்பந்தர் பட்டியல் இடுகின்றார். நாள்தோறும் பூவும் நீரும் கொண்டு இறைவனின் பொன்னடிகளை புகழும் அடியார்களின் துயர் களையப்பட வேண்டும் என்று இந்த பதிகத்தின் நான்காவது பாடலில் கூறுகின்றார்.வவ்வுதல்=திருடுதல்; நிமலன்=இயற்கையாகவே மலங்கள் நீங்கப் பெற்றவன், குற்றமற்றவன்; அடல்=வலிமை மிகுந்த; பெருமான் மிருகண்டு முனிவருக்கு,பிள்ளைப்பேறு தன்னை நோக்கி தவமிருந்த முனிவருக்கு வரம் அளித்த போது, அவருக்கு பிறக்கவிருக்கும் மகனின் ஆயுட்காலம் பதினாறு வருடங்கள் தான் என்று தெளிவாக கூறுகின்றார். எனவே இந்த பதினாறு ஆண்டுகள் ஆயுட்காலம் என்பது இறைவனால் வரையறுக்கப் பட்டது தான். எனவே தான் இயமனும் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரை பிரிப்பதற்காக, பிற உயிர்களைப் பிரிப்பது போன்று, தனது கடமையை நிறைவேற்றும் பொருட்டு, தான் வைத்திருந்த பாசக் கயிற்றினை சிறுவனின் கழுத்தின் மீது வீசுகின்றான். சிறுவன் அப்போது இறைவனை வழிபாடு செய்வதில் ஈடுபட்டிருந்ததை பொருட்படுத்தாமல்,சிறுவனது உயிரினை பிரிக்க நினைத்ததே அவன் செய்த தவறு. இயமனும் பெருமானை வழிபட்டு, தனது கடமையை நிறைவேற்ற பெருமான் உதவி புரிய வேண்டும் என்று வேண்டியிருந்தால், இயமனுக்கு தண்டனை கிடைத்திருக்காது. பெருமானுக்கு செய்யப்படும் வழிபாட்டினுக்கு இடர் செய்தமையால் தான்,அவன் தண்டனை பெற்றான், சண்டீசரின் தந்தை விசாரசருமன் எச்சதத்தரின் மீது வீசிய கோலும் மழுவாளாக மாறியது, நமது நினைவுக்கு வருகின்றது.எச்சதத்தர், தனது மகன் சண்டீசர் செய்து வந்த வழிபாட்டினை தடுக்கும் பொருட்டு, பெருமானை நீராட்டுவதற்கு வைத்திருந்த பாற்குடத்தை இடறி பாலை கீழே கொட்டியதற்கு இறைவன் அளித்த தண்டனையே, சண்டீசர் வீசிய கோல் மழுவாட்படையாக மாறி அவரது காலை துண்டித்தது. எனவே பெருமான் செய்த செயல் குற்றமற்றது என்பதை உணர்த்தும் பொருட்டு, நிமலனே என்று பெருமானை ஞானசம்பந்தர் அழைக்கின்றார்.

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத

என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடல் கூற்று உதைத்த

பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்

நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

தொடர்ந்து தங்களை வருத்தும் பிறவிப்பிணியை நீக்கிக் கொள்ள விரும்பும் மனிதர்கள் நாள்தோறும் இறைவனை திருநாமங்களை சொன்னால், இறைவன் அவர்களுக்கு நிலையான ஆனந்தம் அளிக்கும் முக்தி நிலையை அருளுவான் என்று தூங்கானைமாடம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.59.5)திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். தீர்மை= தீர்வு; ஆறு=வழி; ஓவாது=இடைவிடாது; வியல் தீர=பலவகையாக படுதல், பல வகையான பிறப்புகள் எடுத்தல்; உயர் தீர=ஓங்கி உயர்ந்து; மரணம்=அழிவு; நமது உயிரினை மலங்கள் பிணித்து உள்ளமையால் நாம் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றது., நமது மலங்களின் கட்டினை அறுத்து, முக்தி உலகத்திற்கு அழைத்துச் செல்லும் வல்லமை, இயல்பாகவே மலங்களின் சேர்க்கை இல்லாத சிவபெருமான் ஒருவருக்கே உண்டு என்பதை உணர்த்தும் முகமாக, இந்த பாடலில் பெருமானின் பெயரினை விமலன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

மயல் தீர்மை இல்லாத தோற்றமிவை மரணத்தொடு ஒத்து ஒழியுமாறு ஆதலால்

வியல் தீர் மேலுலகம் எய்தல் உறின் மிக்கொன்றும் வேண்டா விமலன் இடம்

உயர் தீர ஓங்கிய நாமங்களால் ஓவாது நாளும் அடி பரவல் செய்

துயர் தீர் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே

உலகத்து உயிர்கள் மீதும் உலகத்து பொருட்கள் மீது கொண்டுள்ள மயக்கம் தொடர்ந்து இருக்கச் செய்யும் வாழ்க்கைக்கு வழி வகுக்கும் பிறப்பும், ஒரு நாள் அழிந்துவிடும் என்பதால் நிலையற்ற தன்மை கொண்டவை; எனவே பல வகையான பிறப்புகள் எடுப்பதற்கு காரணமாக உள்ள பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு சிவனது உலகம் சென்று அடையவதற்கு விருப்பம் கொண்டவர்களாக விளங்கும் மனிதர்களே, நீங்கள் மிகவும் அதிகமான முயற்சி மேற்கொண்டு, பல்வேறு நெறிகளில் ஈடுபட்டு ஏதும் செய்ய வேண்டிய அவசியமில்லை; இயற்கையாகவே மலங்களின் சேர்க்கை இல்லாமல் தூயவனாக திகழும் பெருமான் உறையும் இடம் சென்று, அவனது திருநாமங்கள் பலவற்றை சொல்லி, இடைவிடாது அவனது திருவடிகளை புகழ்ந்து பணிந்து வணங்கினால் போதும். எனவே நமது துயர்களைத் தீர்க்கும் தலமாகிய கடந்தை நகர் சென்று ஆங்குள்ள அகன்ற தூங்கானை மாடமாக விளங்கும் திருக்கோயில் சென்று, அங்கே உறையும் பெருமானைத் தொழுது நீங்கள் விரும்பும் பயன் அடைவீர்களாக என்று திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறும் பாடலிது.

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.61.1) திருஞானசம்பந்தர் , தேன் நிறைந்ததும் நறுமணம் நிறைந்ததும் ஆகிய மலர்களை நாள்தோறும் இறைவன் திருமேனி மீது தூவி தவறாமல் முறையாக திருப்பணி செய்து வழிபடும் அடியார்கள் இந்த தலத்தில் இருப்பதாக கூறுகின்றார்.நறை=தேன்; விரை=நறுமணம்;

நறைகொண்ட மலர் தூவி விரை அளிப்ப நாடோறும்

முறை கொண்டு நின்று அடியார் முட்டாமே பணி செய்யச்

சிறை கொண்ட வண்டறையும் செங்காட்டங்குடி அதனுள்

கறை கொண்ட கண்டத்தான் கணபதீச்சரத்தானே

பலபல வேடமாகி என்று கோளறு திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தர் சொல்லிய வண்ணம், தனது அடியார்களுக்கு அருள் புரிவதற்காக பெருமான் வேறு வேறு வேடங்களை எடுக்கின்றார். அத்தகைய வேடங்களையும் அடியார்களுக்கு அருள் புரிந்த கருணைச் செயல்களையும் நாள்தோறும் நினைக்கும் சீர்காழி தலத்து கன்னியர்கள் பெருமானைப் புகழ்ந்து போற்றுகின்றனர் என்று இந்த பாடலில் (1.79.6) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உயிர்களுக்கு முதலில் தோற்றத்தையும் பின்னர் இறுதியையும் வழங்கும் பெருமான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

முன்னுயிர்த் தோற்றமாகி இறுதியுமாகி முடியுடை அமரர்கள் அடி பணிந்து ஏத்தப்

பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த பேரருளாளனார் பேணிய கோயில்

பொன்னியல் நறுமலர் புனலோடு தூபம் சாந்துமும் ஏந்திய கையினராகிக்

கன்னியர் நாடொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசறுமே

உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானின் புகழினை பலருக்கு உணர்த்தியும் நாள்தோறும் இறைவனை பணிந்து வழிபாடு செய்தும் வாழும் அடியார்கள் நிறைந்த தலம் நாகைக் காரோணம் என்று திருஞானசம்பந்தர் சொல்லும் பாடலை (1.84.6) நாம் இங்கே காண்போம்.

ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு

வானத்து இளம் திங்கள் வளரும் சடையண்ணல்

ஞானத்து உரை வல்லார் நாளும் பணிந்து ஏத்த

கானல் கடல் நாகைக் காரோணத்தானே

பூந்தராய் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.5.6) திருஞானசம்பந்தர் பெருமானின் திருவடிகளை நாள்தோறும் போற்றிப் பணியும் அடியார்களுக்கு பெருமான் தினமும் பேரின்பம் நல்குவான் என்று கூறுகின்றார்.பிஞ்ஞகன்=அழகிய தலைக் கோலம் உடையவன்.

பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்

நாதன் சேவடி நாளும் நவின்றிட

நல்கும் நாள்தோறும் இன்பம் நளிர்புனல்

பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே

திருவையாறு தலத்தில் உள்ள தொண்டர்கள் பெருமானின் தன்மைகளை அறிந்து வியப்பு அடைந்து நாள்தோறும் அவனைப் போற்றிப் புகழ்கின்றனர் என்று இந்த பாடலில் (2.06.08) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். குரவம்=குரா மலர்கள்; நாண்மலர்=அன்று அலர்ந்த; விரவி=எங்கும் கலந்து; பறைதல்=அழிதல்,நீங்குதல்; பரவுதல்=வாழ்த்துதல், புகழ்தல்;

குரவ நாண்மலர் கொண்டு அடியார் வழிபாடு செய்

விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே

பரவி நாடொறும் பாட நம் பாவம் பறைதலால்

அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே

நமது வாழ்நாள் எப்போது முடிவடையும் என்பதை உணராத நாம், இன்றிலிருந்தே நாள்தோறும் இறைவனை வழிபடத் தொடங்கவேண்டும் என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் பாடல் சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பாடலாகும் (2.41.3). நவின்று= விருப்பத்துடன்; புகழ்நாமம்=பெருமானது புகழினை குறிப்பிடும் திருநாமங்கள்; கங்காதரர், காலகாலர், நடராஜர், திரிபுராந்தகர், கஜசம்ஹாரர், மாதொருபாகர், பிக்ஷாடனர், சந்திரசேகரர், பாசுபதர்,போன்ற திருநாமங்கள் அவரது கருணையையும் ஆற்றலையும் உணர்த்தும் வண்ணமாக அமைந்துள்ளன. இந்த பாடலில் நமது தலை பெருமானுக்கு அர்ச்சனை செய்ய பயன்படும் பூக்களை சுமந்து செல்லவேண்டும் என்றும் காதுகள் அவனது புகழினை உணர்த்தும் திருநாமங்களை கேட்க வேண்டும் என்றும் நமது நா விருப்பத்துடன் அவனது திருநாமங்களை சொல்லவேண்டும் என்றும் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

நீ நாளும் நெஞ்சே நினை கண்டாய் யார் அறிவார்

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம் பெருமாற்கே

பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப

நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே

ஆக்கூர் தான்தோன்றி மாடம் தலத்தின் மீது அருளிய பாடலிலும் (2.42.8) பெருமானின் பொன்னடிக்கு நாள்தோறும் பூவும் நீரும் சுமந்து வந்து அடியார்கள் வழிபடுகின்றனர் என்று கூறுகின்றார். கன்னெடிய=கல்+நெடிய=நெடிது உயர்ந்த கயிலாய மலை;

கன்னெடிய குன்று எடுத்தான் தோள் அடரக் கால் ஊன்றி

இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில்

பொன்னடிக்கே நாடோறும் பூவோடு நீர் சுமக்கும்

தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடலில் (2.49.4) திருஞானசம்பந்தர் நாள்தோறும் தங்களது கைகளில் மலர்கள் ஏந்தியவர்களாக திருக்கோயிலை அடைந்து முறையாக பெருமானை ஐயனே அரனே என்று அழைத்து ஆதரித்து நினைக்கும் அடியார்கள், உயர்ந்தவர்களினும் உயர்ந்தவர்கள் என்று கூறுகின்றார்.

மையினர் பொழில் சூழ நீழலில் வாசமார் மது மல்க நாடொறும்

கையினால் மலர் கொண்டு எழுவார் கலிக்காழி

ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதியுளே நினைப்பவர்

உய்யுமாறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே

நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில் (2.84.8), நாளும் பெருமானின் திருவடிகளைப் பணிந்தும் போற்றியும் வாழ்ந்த அடியார்கள் நிறைந்த தலம் நனிபள்ளி என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். வாளன்=வாளினை உடையவன்; உலம்=கற்றூண்; நலமிகு கீழுமேலும்= நலமுடைய கீழ் ஏழ் மற்றும் மேலேழ் உலகங்கள்; வலமிகு வாளன் வேலன் என்ற தொடரினை அரக்கன் என்பதுடன் கூட்டி. வலிமை மிகுந்த வாள் வேல் ஆகிய ஆயுதங்களை உடைய அரக்கன் இராவணன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நலங்கள் பல உடைய கீழேழ் மற்றும் மேலேழ் உலகங்களிலும் தனக்கு நிகராக எவரும் இல்லாதவனாக திகழும் சிவபெருமானை, நீதியின் வடிவமாக திகழும் பெருமானை வணங்கி, நாள்தோறும் அவனது திருவடிகளைப் போற்றி புகழும் அடியார்கள் நிறைந்த தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக என்று நனிபள்ளி தலத்தின் சிறப்பினை இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் பத்தாவது பாடலிலும், தெளிவடைந்த மனதுடைய தொண்டர்கள் பெருமானின் திருவடிகளை நாள்தோறும் புகழ்ந்து போற்றுகின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

வலமிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு

உலமிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர் தான்

நிலமிகு கீழும் மேலும் நிகராதும் இல்லை என நின்ற நீதி அதனை

நலமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்

கூற்றுவன் நம்மை வருத்தாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் நாள்தோறும் இறைவனின் திருவடிகளை புகழ்ந்தும் அவனது பெருமைகளை ஆடியும் பாடியும் வணங்க வேண்டும் என்று மாந்துறை பதிகத்தின் பாடலில் (2.110.9) திருஞான சம்பந்தர் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார். நித்திலம்=முத்து;தொத்து=கொத்து; நிறை=வரிசை; ஆலியா= ஆரவாரம் செய்து; நிரந்து வந்து=நிறைவாக வந்து; கோலம்=சிவக்கோலம்; திருநீறு அணிந்து உருத்திராக்கம் தரித்தவாறு இருத்தல்; நலிதல்=வருத்துதல்; இந்த பாடலில் திருமால் இறைவனின் திருவடிகளைத் தேடியும் காணமுடியாமல் திகைத்ததாக சொல்லப் படுகின்றது. பிரமனைப் பற்றிய குறிப்பும் இந்த பாடலில் இருப்பதால், பிரமன் இறைவனின் திருமுடியைக் காண முடியாமல் வருந்தியதையும் குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். சிவபெருமானைப் புகழ்ந்து பாடி, வணங்கினால் கூற்றுவன் நம்மை வருத்த மாட்டான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அதாவது, நரக வேதனைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம் என்று உணர்த்துகின்றார்.

நீலமாமணி நித்திலத் தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி

ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை

மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணை நாளும்

கோலம் ஏத்தி நின்று ஆடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே

ஆடானை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.112.7) திருஞானசம்பந்தர், நாள்தோறும் அழகும் நறுமணமும் கொண்ட மலர்களை இறைவனின் திருமேனியின் மீது தூவி, இறைவனை வலம் வந்து வணங்கும் அடியார்கள், தங்களை பீடித்துள்ள வலிய வினைகளும் நீங்கப் பெறுவார்கள் என்று கூறுகின்றார். பெருமானை வலம் வருதல், இறைவனை வழிபடும் வகையில் முக்கியமான அங்கமாகும்.

துலங்கு வெண்மழு ஏந்திச் சூழ் சடை

அலங்கலான் உறை ஆடானை

நலம் கொள் மாமலர் தூவி நாடொறும்

வலம் கொள்வார் வினை மாயுமே

விசயமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.17.3) திருஞானசம்பந்தர், வானவர் தலைவர் இந்திரன், திருமால் மற்றும் பிரமன் ஆகியோரை விடவும் சிறப்பான தகுதி வாய்ந்த அடியார்கள் நாள்தோறும் விசயமங்கை விமலனைத் தொழுது எழுகின்றனர் என்று கூறுகின்றார். அக்கு=உருத்திராக்கம்:எலும்பு என்ற பொருளும் பொருத்தமே; அரை=இடுப்பு; தொக்க=சிறந்த; வானவர் தலைவர்=திருமால், பிரமன் இந்திரன் ஆகியோர். திருமால் பிரமன் இந்திரன் ஆகியோர் இந்த தலத்து இறைவனை வழிபட்டு பயன் பெற்றதாக தலபுராணம் கூறுகின்றது. அர்ஜுனன் வழிபட்ட வரலாற்றிலிருந்து, மகாபாரத நாட்களிலும் இந்த தலம் பிரசித்தி பெற்று விளங்கியமை தெரிய வருகின்றது. அதனால் தான் தொன்மை வாய்ந்த நகரம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தக்க=தகுதி உடைய; மிக்கவர்=மிகுந்த சிறப்பு வாய்ந்தவர். இந்திரன் பிரமன் திருமால் ஆகியோரினும் சிறப்பு வாய்ந்தவராக தலத்து அடியார்களை ஞானசம்பந்தர் கருதுவதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

அக்கரவு அரையினர் அரிவை பாகமாத்

தொக்க நல் விடையுடைச் சோதி தொன்னகர்

தக்க நல் வானவர் தலைவர் நாள்தொறும்

மிக்கவர் தொழுதெழு விசயமங்கையே

பஞ்சக்கார பதிகத்தின் முதல் பாடலில் (3.22.1) திருஞானசம்பந்தர், நாள்தோறும் பெருமானை உணர்த்தும் ஐந்தெழுத்து மந்திரத்தை தியானம் செய்யுமாறு பணிக்கின்றார். துஞ்சல்=உறக்கம்; நெஞ்சக நைதல்=அன்பினால் குழைதல்; இந்த நிலை தியானத்திற்கு அடிப்படை; நினைமின்=தியானம் செய்யுங்கள்;உயிர் இறைவனை வழிபட விரும்பினாலும், அதற்கு உடன்படாமல், ஒரு நிலையில் நில்லாமல் பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனதினை ஒரு நிலைப்படுத்தி வழிபட்ட மார்க்கண்டேயன் நெஞ்சினில் வஞ்சனை ஏதும் இன்றி பெருமானின் திருவடிகளை வழிபட்டதாக இங்கே உணர்த்தப் படுகின்றது. இயமனை உதைத்து வீழ்த்தியது திருவைந்தெழுத்து என்று குறிப்பிடுவதன் மூலம், திருவைந்தெழுத்து பெருமானின் வடிவத்தை உணர்த்துகின்றது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். நமச்சிவாய மந்திரத்தின் ஐந்து எழுத்துக்களும் பெருமானின் வடிவத்தை எவ்வாறு உணர்த்துகின்றன என்பதை உண்மை விளக்கம் எனப்படும் சித்தாந்த நூல் அழகாக விளக்குகின்றது. இந்த ஐந்து எழுத்துக்கள், முறையே பாதம், உந்தி,தோள், முகம் மற்றும் தலையை குறிக்கும் என்று இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்

நெஞ்சக நைந்து நினைமின் நாள்தொறும்

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்தக் கூற்று

அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (3.22.9) திருஞானசம்பந்தர் பெருமானின் திருநாமங்களை நாள்தோறும் பிதற்றும் பக்தர்களுக்கு பற்றுக்கோடாக ஐந்தெழுத்து மந்திரம் திகழும் என்று கூறுகின்றார். கார்வணன்=கரிய மேகம் போன்ற வண்ணம் உடைய திருமால்; பெருமானின் திருவடியைக் காண முயற்சி செய்தவர் திருமால்; பெருமானின் திருமுடியைக் காண முயற்சி செய்தவர் பிரமன். இவ்வாறு இருக்கையில் திருவடியைக் காண முடியாத பிரமன் திருமால் என்று இருவரையும் இணைத்து சம்பந்தர் இங்கே குறிப்பிடுவதை நாம் உணரலாம். அடி முடியைக் காணச் சென்ற இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.இருவரும் அடுத்தவரினும் தாமே பெரியவர் என்ற எண்ணம் கொண்டு அகந்தையுடன் இருந்ததும் அன்றி, தங்களது எண்ணம் மிகவும் சரியானது என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அடியையும் முடியையும் தேடி புறப்பட்டவர்கள்; இருவருமே வேதங்கள் மற்றும் முனிவர்கள் சிவபெருமானே அனைவரினும் உயர்ந்தவன், ஆதலால் உங்களது வாதங்களை தவிர்ப்பீர் என்று கூறிய அறிவுரையை மதிக்காமல் தொடர்ந்து வாதம் செய்தி கொண்டிருந்தவர்கள். மேலும் தங்களது வலிமையின் பால் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாய், அடியையும் முடியையும் கண்டு விடமுடியும் என்ற செருக்குடன் தங்களது முயற்சியைத் தொடங்கியவர்கள். இருவரும் தங்களது முயற்சியில் தோல்வி அடைந்தவர்கள். எனவே தான், பிரமன் பெருமானின் திருவடியை காண்பதற்கு முயற்சி செய்யாமல் இருந்த போதிலும், திருமாலால் காண முடியாத திருவடியை பிரமனும் காண்பதற்கு இயலாது என்பதை உணர்த்தும் வண்ணம், பிரமனும் திருமாலும் காண முடியாத திருவடி என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். ஆர்தல்=அனுபவித்தல்,திளைத்தல்; ஆர்வணம்=பற்றுக்கோடு; பித்தர்=பேசியதையே மீண்டும் மீண்டும் பேசும் தன்மை உடையவர்கள்; பித்தர்கள் பிதற்றுவது போன்று மீண்டும் மீண்டும் பெருமானின் திருநாமத்தை சொல்லும் அடியார்கட்கு இனிமையான உணர்வினைத் தரும் என்றும், சிறந்த பற்றுகோடாக இருக்கும் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச்

சீர் வணச் சேவடி செவ்வி நாள்தொறும்

பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு

ஆர் வணம் ஆவன அஞ்செழுத்துமே

மேலை திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.29.6) திருஞான சம்பந்தர், காட்டுப்பள்ளி நாதனாரின் திருவடிகளை நாளும் நினைந்து புகழ்ந்து போற்ற வேண்டும் என்று கூறுகின்றார். ஒண்குழை=ஒளி வீசும் குழை ஆபரணம்.

வேதனார் வெண்மழு ஏந்தினார் அங்கம் முன்

ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழை

காதினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி

நாதனார் திருவடி நாளும் நின்று ஏத்துமே

நீண்ட வாழ்நாள் உடைய வானவர்கள் நாள்தோறும் பெருமானை வணங்குகின்றனர் என்று வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.2)திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மங்கையர்க்கரசி என்பது இந்த தலத்து அம்பிகையின் திருநாமம். இதனை மங்கை என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். சொல் என்பது இங்கே வேதத்தின் சொற்களை உணர்த்துகின்றது. வேதத்தில் சொல்லப்படும் சொற்கள் உணர்த்தும் பொருள், என்றும் பொருத்தமாக இருக்கும் தன்மையை உடையதாக உள்ளன. என்றும் பொய்க்காத பொருளை உணர்த்தும் சொற்களிலிருந்து பிரியாத வேதங்கள் என்று,வேதங்களின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. வேதங்கள் உணர்த்தும் கருத்துக்களே தேவாரம் திருவாசகம் ஆகிய திருமுறை பாடல்களில் சொல்லப் பட்டுள்ளதால், என்றும் உண்மையாக நிலவும் தேவாரப் பாடல்களின் சிறப்பினை நாம் உணரலாம். தொல் ஆனை=பண்டைய நாளில் தாருகவனத்து முனிவர்களால் ஏவிவிடப் பட்ட யானை; உரிவை=தோல்; மற்புரி புயம்=மல் யுத்தம் புரியும் வண்ணம் வலிமை வாய்ந்த தோள்கள்; காட்டினில் தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனுடன் விற்போரில் ஈடுபட்ட பெருமான், அர்ஜுனனின் வில்லையும் உடைத்து விடுகின்றார். அதன் பின்னர் ஆயுதம் ஏதுமற்ற நிலையில் பெருமானை அர்ஜுனன் மல்யுத்தத்திற்கு அழைக்க பெருமானும் அர்ஜுனனுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார் என்று மகாபாரதம் உணர்த்துகின்றது. துற்று=உணவு; துற்பு=உண்ணுதல்; துற்பரிய=உண்ணுதற்கு அரிய, அனைவராலும் உண்பதை தவிர்க்கப்படும் நஞ்சு;அயிலல்=உண்ணுதல்; இயன்ற தொகு சீர்=பல காரணங்களாலும் தொகுக்கப்பட்ட புகழ்; வெற்பு=மலை; அரையன்=அரசன்; வளர் வானவர்=மனிதர்களை விடவும் நீண்ட ஆயுளைக் கொண்டவர் வானவர்கள் என்பது ஒரு நம்பிக்கை. மனிதர்களின் வாழ்வினில் உள்ள ஒரு ஆண்டு, தேவர்களின் வாழ்வில் ஒரு நாளைக்கு சமம் என்று கூறுவார்கள்.

சொல் பிரிவிலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை

மற்புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழத்

துற்பரிய நஞ்சு அமுதம் ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர்

வெற்பரையன் மங்கை ஒரு பங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே

ஆலவாய் தலத்தினை நெருங்கும் திருஞானசம்பந்தர் அரசி மங்கையர்க்கரசியார் நாள்தோறும் திருப்பணி செய்தும் புகழ்ந்தும் இறைவனை வழிபடுகின்ற தன்மையை, இந்த தலத்தின் மீது அருளிய பாடலில் (3.120.1) குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில், திருஞானசம்பந்தர், அரசி மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறை மந்திரியார் செய்து வந்த திருப்பணிகளை குறிப்பிடுகின்றார். இவர்கள் இருவர் தாமே பாண்டிய நாட்டினில் சைவம் மீண்டும் தழைப்பதற்கு மூல காரணமாக செயல் பட்டனர். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் பாண்டிமாதேவி நாடொறும் பணிந்து இனிது ஏத்திய பெருமான் என்று குறிப்பிடுகின்றார்..

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக்கைம் மடமானி

பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாடொறும் பரவப்

பொங்கழல் உருவன் பூத நாயகன் நால்வேதமும் பொருள்களும் அருளி

அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் அது இதுவே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.26.1) அப்பர் பிரான், தான் நாள்தோறும் பெருமானைப் புகழ்ந்து வாழ்த்தியும் அவனது பல திருநாமங்களை சொல்லியும், அவனது திருவடிகளை காண்பதற்கு முயற்சி செய்ததாக கூறிகின்றார். நல்லூர் தலத்தினில் பெருமானின் திருவடியை நேரில் காணும் வாய்ப்பினையும், அந்த திருவடி தனது தலை மீது பதிக்கப் பெறுகின்ற பேற்றினையும் அப்பர் பிரான் பெற்றதை நாம் பெரியபுராணத்திலிருந்து அறிகின்றோம். காண்பான்=காணும் பொருட்டு: அலந்து போனேன்=வருந்தினேன். நம்பனே என்று பெருமானை அழைத்து, தனது நம்பிக்கைக்கு உரியவன் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தில் அப்பர் பிரான், சிவபெருமானை உமைபங்கன் என்றும் பரமயோகி என்றும் கூறுகின்றார். உமையம்மையுடன் எப்போதும் இணைந்து இருந்தாலும் யோகத்தில் ஆழ்ந்து இருப்பவன் சிவபெருமான் என்று இங்கே உணர்த்தப்படுகின்றது.

நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதி மூர்த்தி

பங்கனே பரம யோகீ என்றென்றே பரவி நாளும்

செம்பொனே பவளக் குன்றே திகழ் மலர்ப் பாதம் காண்பான்

அன்பனே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே

உயிர் நாள்தோறும் இறைவனைப் பணிந்து வணங்கவேண்டும் என்று விரும்பினாலும், உயிரைப் பிணைத்துள்ள வினைகளும் அந்த வினைகளால் செயல்படுத்தப் படும் ஐந்து புலன்களும், உயிர் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு தடையாக உள்ளன. இந்த தடையினை மீறி உயிர் செயல்பட வேண்டும் என்றால், அதற்கு பெருமான் துணையாக இருக்கவேண்டும். பெருமானின் அருள் தான், உயிர்கள் ஐந்து புலன்களின் சேட்டைகளை அடக்குவதற்கும் புலன்களைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் உதவுகின்றன. இத்தகைய உதவியை அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டுவதை நாம் திருவாவடுதுறை பதிகத்தின் பாடலில் (4.57.2) காணலாம். இந்த பாடலில், ஐம்புலன்களின் வழியே இழுத்துச் செல்லப்படும் உயிர் தான் உய்வதற்கு உண்டான வழிமுறைகள் பின்பற்றமுடியாமல் இருக்கும் தனது பரிதாபமான நிலையை, தனது ஆற்றாமையை இறைவனிடம் எடுத்துச் சொல்லி அவனது அருளை, அப்பர் பிரான் வேண்டுகின்றார்.

நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும்

ஊன் உகந்து ஓம்பு நாயேன் உள்ளுர ஐவர் நின்றார்

தான் உகந்தே உகந்த தகவிலாத் தொண்டனேன் நான்

ஆன் உகந்து ஏறுவானே ஆவடுதுறை உளானே

தனது திருவடிகளை வணங்கும் ஞானிகளுக்கு முக்தி நிலை வழங்கும் பெருமான் என்று குறிப்பிட்டு, தானும் அந்த முக்தி நிலையை அடையவேண்டும் என்று தனது விருப்பத்தை வெளியிடும் அப்பர் பிரான், நாள்தோறும் பெருமானை விருப்பத்துடன் வழிபடும் வழியை தான் அறியாது இருப்பதாக தனது வருத்தத்தையும் தெரிவிக்கும் பாடல் பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பாடலாகும் (4.60.7). சித்தர்=ஞானிகள்; சித்தர் என்ற சொல்லுக்கு, சித்தத்தில் பெருமானை நிலை நிறுத்தி வணங்கி வழிபடும் அடியார்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இவ்வாறு தனது விருப்பத்தையும் இயலாமையும் குறிப்பிட்டு, பெருமானை விரும்பும் உணர்வினையும் வழியினையும் அவர் தான் தனக்கு தந்தருள வேண்டும் என்ற தனது வேண்டுகோளை தெரிவிக்கும் பாடல்.

சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்குவார்கள்

முத்தனை மூர்த்தியாய முதல்வனை முழுதுமாய

பித்தனைப் பிறரும் ஏத்தப் பெருவேளூர் பேணினானை

மெத்த நேயவனை நாளும் விரும்புமாறு அறிகிலனே

பெருவேளூர் தலத்தின் மீது பதிகத்தின் முதல் பாடலில் (4.60.1) அப்பர் பிரான், பெருவேளூர் பெருமானை, தேன் நிறைந்த மலர்கள் தூவி நாள்தோறும் வணங்குவேன் என்று கூறுகின்றார். பெருமான் வேதங்கள் ஓதும் தன்மையை, வேதங்களை தனது நாவினில் அணிந்துள்ள பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இறைவனை நாம் மறவாமல் எப்போதும் நினைத்துக் கொண்டே இருந்தால், நமது மனதினில் இறைவன் இருப்பார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எனவே நாம் எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

மறையணி நாவினானை மறப்பிலார் மனத்துளானை

கறையணி கண்டன் தன்னைக் கனல் எரியாடினானைப்

பிறையணி சடையினனைப் பெருவேளூர் பேணினானை

நறையணி மலர்கள் தூவி நாடொறும் வணங்குவேனே

இராமேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.61.1) மிகுந்த விருப்பத்துடன் நாள்தோறும் பெருமானை வணங்கித் தொழவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். மதி=அறிவு; அரக்கன் இராவணனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்ட பாவத்தைக் கழிக்கும் வழி, பெருமானை வழிபடுதல் என்பதை தனது அறிவினால் உணர்ந்து கொண்ட இராமர் என்பதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். படுத்து=அழித்து; பெண்கள் பால் கொண்டிருந்த காமத்தை கழிக்க முடியாத அரக்கன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிட்டு இராவணனின் அழிவுக்கு காரணமாக இருந்தது அவன் உலகப் பொருட்களில் ஒன்றான பெண்கள் பால் வைத்திருத்த ஆசையே என்று உணர்த்துகின்றார். அலர்=மலர்.

பாசமும் கழிக்க கில்லா அரக்கனைப் படுத்துத் தக்க

வாச மிக்கு அலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில்

நேச மிக்க அன்பினாலே நினைமின் நீர் நின்று நாளும்

தேச மிக்கான் இருந்த திருவிராமச்சுரம்மே

நாள்தோறும் இறைவனைத் தொழவேண்டும் என்ற நினைப்பினை நமது மனதினில் ஏற்படுத்துவதே இறைவனின் அருள் தான் என்று நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில் (4.70.6) அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது தான் திருவாசகம் சிவபுராணத்தில் சொல்லப்படும் முக்கியமான செய்தி அல்லவா. அகழ்தல்=நிலத்தைத் தோண்டிச் செல்லுதல்: நின்மலன்=மலங்கள் அணுக முடியாத தன்மையை உடையவன்:சிவபெருமான் இயல்பாகவே மலங்களை களைந்தவன்: ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மலங்களில் கட்டுண்டு கிடக்கும் நாம், அந்த மலங்களின் பிடியிலிருந்து விடுபட்டால் தான், இறைவனைச் சென்று அடைய முடியும். மலங்களால் அணுக முடியாத ஒருவன் தானே, மலங்களைக் களைய நமக்கு உதவ முடியும். எனவே தான் நின்மலன் என்று சிவபிரானை குறிப்பிட்டு, அவனை வணங்கினால் நாம் பயன் அடைய முடியும் என்பதை அப்பர் பிரான் இங்கே நமக்கு உணர்த்துகின்றார்.

செம்மலர் கமலத்தோனும் திருமுடி காண மாட்டான்

அம்மலர் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான்

நின்மலன் என்று அங்கு ஏத்து நினைப்பினை அருளி நாளும்

நம் மலம் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.78.10) அப்பர் பிரான், பிறப்பு எடுத்தன் பயனே பெருமானின் பெருமைகளை குறிப்பிட்டு அவனை அணுகுதல் என்று நமக்கு அறிவுரை சொல்கின்றார். பெருமானின் பெருமைகளை பேசாமலும் அவனை நினைக்காமலும் தான் பயனற்ற வாழ்க்கை வாழ்ந்ததாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அந்த தன்மையை மாற்றி இறைவன் தனக்கு அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் இறைஞ்சும் பாடல் இது.கூற்றாயினவாறு என்ற பதிகத்தை பாடி, தனது சூலை நோயினை இறைவனது அருளினால் தீர்த்துக் கொண்ட பின்னர், அப்பர் பிரான் பெருமானை நினைக்காத நிமிடமே இல்லை எனலாம். எனவே இந்த பாடல் மூலம் அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறுவதாகவே நாம் பொருள் கொள்ளவேண்டும்.வெட்டனவு=கடுமையான நடத்தை: தேர்ப்பாகன் கூறிய அறிவுரையை மதியாமல், கயிலை மலையினை பேர்த்தேடுக்கச் செய்த முயற்சி என்பதால் கடுமையான நடத்தை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். துட்டு=எவர்க்கும் அடங்காத தன்மை: எள்+தனை=எட்டனை, சிறிய பொழுதும் நினையாமல். இறைவனே, உன்னை மகிழ்விக்கும் இசைப் பாடலை பாட அறியாதவன் என்று முந்தைய பாடலில் கூறும் அப்பர் பிரான், இறைவனை, தனது இசைப் பாடலால் மகிழ்வித்த இராவணனை இங்கே குறிப்பிடுவதன் மூலம், இசைக்கு மயங்கி சிவபெருமான் அருள் புரிவதை நமக்கு உணர்த்துகின்றார்.

வெட்டனவு உடையனாகி வீரத்தால் மலை எடுத்த

துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதம் கேட்ட

அட்டமா மூர்த்தியாய ஆதியை ஓதி நாளும்

எட்டனை எட்டமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே

நின்று நிலையாக பெருமானைப் புகழ்ந்து ஏத்தாத காரணத்தால் தான் எதற்காக, வீணாகக் கழிகின்ற இந்த இழிந்த பிறப்பெடுத்தேன் என்று தன்னையே அப்பர் பிரான் நொந்து கொள்ளும் பாடலிது (4.79.5). தன்னைக் குறிப்பிட்டு, உலகத்தவர்க்கு அறிவுரை சொல்வது அப்பர் பிரானின் பழக்கம். இந்த பாடலும் அந்த வகையில் தான் அமைந்துள்ளது. சீகாமரம் பண்ணினை காமரம் என்று குறிப்பிடுகின்றார். எவருக்கும் பயன்படாத வகையில் தான் இருப்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். அறுபது வயதைக் கடந்த பின்னர் அப்பர் பிரான் சைவ சமயத்திற்கு மீண்டு வந்ததை நாம் அறிவோம். அதற்கு முன்னர் அவர் சமண சமயத்தைச் சார்ந்திருந்த காலத்தில், துறவியாக இருந்ததையும் நாம் அறிவோம். எனவே பெண்களுடன் கூடுவதை தவிர்த்தவராக இருந்தார் என்பதை நாம் உணர்கின்றோம். இவ்வாறு பெண்கள் இன்பம் துய்ப்பதற்கு தான் பயன்படாமல் இருந்த நிலையை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். நேர்வழியில்,உரிமை உள்ள வாழ்க்கைத் துணையுடன் இன்பம் துய்த்தல் தவறன்று. இருபாலரும் ஒன்று கூடினால் தான், உயிர்கள் தங்களது வினைகளைக் கழித்துக் கொள்வதற்கு தகுந்த உடலினை பெறமுடியும். எனவே உயிர்கள் தங்களது வினைகளைக் கழித்துக் கொள்வதற்கு ஏதுவாக உடல்களை தோற்றுவிக்கும் புணர்ச்சி, இன்றியமையாதது என்பதால், இருபாலரும் முறையாக ஒன்று கூடுதலில் தவறு ஏதும் இல்லை. மேலும் இந்த சிற்றின்பத்தில் மயங்கி, உயிர் தன்னுடைய நோக்கத்தினை, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்தி நிலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தினை, ஒரு காலும் மறக்காமல் செயல்பட வேண்டும். மன்னி=நிலையாக; இறை=சிறிது நேரமும்

கறையணி கண்டன் தன்னைக் காமரம் கற்றுமில்லேன்

பிறைநுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன்

மறை நவில் நாவினானை மணி நின்று இறைஞ்சி நாளும்

இறையேயும் ஏத்த மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே

அன்னியூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலில் (5.8.3) அப்பர் பிரான், தன்னை நாளும் பணிந்து வழிபடும் அடியார்களின் வினைகளை முற்றிலுமாகத் துரத்தி ஒழிப்பவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். துரவை=இல்லாததாக; குரவம்=குரவம் எனப்படும் மலர்’; பரவி=போற்றிப் புகழ்ந்து; நாள்தோறும் தன்னைப் போற்றிப் புகழ்ந்து வணங்கும் அடியார்கள் மேல் படர்ந்துள்ள கொடுமையானதும் வலிமை வாய்ந்ததும் ஆகிய வினைகளை, ஒன்றும் இல்லாமல் நீக்கிவிடும் கருணை உள்ளம் கொண்டவரும், குரவ மலரின் நறுமணம் வீசும் கூந்தலை உடைய உமை அம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக கொண்டவரும், பாம்பினை தனது இடுப்பினில் கட்டி தனது விருப்பம் போன்று ஆடச் செய்பவரும் ஆகிய பெருமான் அன்னியூர் தலத்து இறைவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பரவி நாளும் பணிந்தவர் தம் வினை

துரவையாகத் துடைப்பவர் தம்மிடம்

குரவம் நாறும் குழல் உமை கூறராய்

அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில், அப்பர் பிரான் நிராமயனாக விளங்கும் பெருமானை நாள்தோறும் நினைக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். நிராமயன் என்றால் நோய் அற்றவன் என்று பொருள். இங்கே நோய் என்பது பிறவிப் பிணியை குறிப்பிடுகின்றது.எனவே நிராமயன் என்றால் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்காதவன் என்று பொருள் கொள்வது மிகவும் சிறப்பு. பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியவர்கள் என்பதால், தாங்கள் அடைய முடியாத விடுதலையை அவர்களால் மற்றவர்களுக்கு அருளமுடியாது.எனவே பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்காத சிவபெருமான் ஒருவரால் தான், முக்திநிலை அளிக்க முடியும் என்பதால், அத்தகைய பெருமானை வழிபட்டு முக்தி நிலையை பெறுமாறு உலகத்தவரை அப்பர் பிரான் பணிக்கின்றார். இந்த பாடலில் இராமபிரான் சிவபெருமானை வழிபட்ட செய்தி குறிப்பிடப்படுகின்றது.இந்த தலத்தின் அருகே உள்ள வட்டப்பாறை என்ற இடத்தில் தான் இராமனும் சுக்ரீவனும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதாக உறுதி பூண்டனர் என்று நம்பப்படுகின்றது. இந்த திருக்கோயில் தலபுராணம், இராமபிரான் சிவபெருமானை வணங்கியதாக கூறுகின்றது, அந்த தகவல் தான் அப்பர் பிரானால் இந்த பாடலில் கொடுக்கப்பட்டுள்ளது, அரா=பாம்பு:

குரா மன்னும் குழலாள் ஒரு கூறனார்

அரா மன்னும் சடையான் திரு ஆமாத்தூர்

இராமனும் வழிபாடு செய் ஈசனை

நிராமயன் தனை நாளும் நினைமினே

வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.42.8) அப்பர் பிரான், பெருமான் பால் அன்பு கொண்டு இனிய நினைவுகளுடன் நாள்தோறும் அவனை நினைக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். வார்=கச்சு: சிட்டனார்=அனைவரிலும் உயர்ந்தவன்.

நட்டம் ஆடிய நம்பனை நாள் தொறும்

இட்டத்தால் இனிதாக நினைமினோ

வட்ட வார் முலையாள் உமை பங்கனார்

சிட்டனார் திருவேட்களம் தன்னையே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பாடலில் (5.47.2) அப்பர் பிரான் பெருமான் பால் மிகுந்த அன்பு கொண்டவர்களாக, விருப்பத்துடன் அடியார்கள் நயந்து தொழுகின்றனர் என்று குறிப்பிடுகின்றார். அத்தகைய பெருமானை, காமாட்சி தேவியும் விருப்பத்துடன் வழிபட்டாள். இத்தகைய பெருமைகள் படைத்த பெருமானை அறிவற்ற மூடர்கள் மட்டுமே அவர் உறைகின்ற திருக்கோயில் சென்று வழிபடாமல் இருப்பார்கள், எனவே உலகத்தவரே நீங்கள் உங்களது கைகளை கூப்பி பெருமானைத் தொழுவீர்களாக என்று இந்த பாடலில் அப்பர் பிரான் அறிவுரை கூறுகின்றார். கொச்சையார்=அறிவற்றவர்கள்,பக்குவம் அடையாதவர்கள்; குறுகார்=தலை தாழ்த்தி வணங்கி குனிந்த நிலையில் பெருமானின் சன்னதி சென்றடைதல். இச்சையால் உமை நங்கை வழிபட என்று, காஞ்சி நகரில் காமாட்சி தேவி இறைவனை வழிபட்ட செய்தி குறிப்பிடப்படுகின்றது. செறி தீம்பொழில்=அடர்ந்த இனிய சோலைகள்;

நச்சி நாளும் நயந்து அடியார் தொழ

இச்சையால் உமை நங்கை வழிபடக்

கொச்சையர் குறுகார் செறி தீம்பொழில்

கச்சி ஏகம்பமே கை தொழுமினே

நள்ளாற்று நாயகனை நாள்தோறும் வலம் வரும் அடியார்களின் வினைகள் முற்றிலும் மாய்ந்துவிடும் என்று அப்பர் பிரான் கூறும் பாடலை (5.68.10) நாம் இங்கே காண்போம். இற=நொறுங்க: மலங்க=கலங்க; மால்=பெருமை உடைய, பெரிய; மாயும்=அழியும். நள்ளாறு என்றாலே அனைவர்க்கும் ஆலயத்தின் முன் பகுதியில் வீற்றிருக்கும் சனிபகவான் சன்னதி தான் நினைவுக்கு வரும். சனிபகவானுக்கு உரிய தலமாக கருதப்பட்டு, சனிபகவானின் தொடர்பினால் தங்களது வாழ்வினில் ஏற்படும் துன்பங்களை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, இந்நாளில் மிகவும் அதிகமாக மக்கள் இந்த தலம் செல்வதை நாம் காண்கின்றோம். கிரகங்கள் அனைத்தும், இறைவனின் கட்டளைப்படி இயங்குகின்றன என்பதையும், நமது முந்திய வினைகளின் தகுதிக்கு ஏற்ப நமக்கு வாழ்வினில் இன்பங்களும் துன்பங்களும் கிரகங்களால் அளிக்கப்படுகின்றன என்பதை உணராமல் திருநள்ளாறு செல்லும் பலரும் சனிபகவானை தரிசித்த பின்னர், இறைவனை தரிசிக்காமலும் திரும்பி விடுகின்றனர். இவ்வாறு இருப்பது தவறு என்பதை உணர்த்தும் பொருட்டு, திருநள்ளாறு பெருமானை தினமும் வலம் வரும் அடியார்களது வினைகள் முற்றும் மாய்ந்துவிடும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இதன் மூலம் நமது வினைகளை நாம் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று நாம் விரும்பினால், நாம் வழிபட வேண்டியது, சிவபெருமானைத் தான் என்றும் வேறு எவரையும் அல்ல என்பதையும் மிகவும் அழகாக அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.

இலங்கை மன்னன் இருபது தோளிற

மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர்

நலம் கொள் நீற்றர் நள்ளாறரை நாடொறும்

வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே

கருவிலி கொட்டிட்டை தலத்தின் மீது அருளிய பாடலில் (5.69.2) இறைவனைத் தொழுவதற்கு உரிய காலம் எது என்று கூறுகின்றார். காலன் நமது வாழ்க்கையை முடிக்கும் முன்னர் நாம் இறைவனை வழிபடுவதை தொடங்கலாம் என்று இங்கே கூறுகின்றார். ஆனால் காலன் நம்மை ஆட்கொள்ளும் நாள் எது என்பதை எவரும் அறியாத காரணத்தால், இன்றே நாம் இறைவனை வழிபடுவதை தொடங்க வேண்டும் என்பது பதிகத்தின் உட்கருத்து; இறைவனை நாம் எவ்வாறு தொழவேண்டும் என்பதையும் இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். பூவும் நீரும் கொண்டு இறைவனை வழிபடுவீர்களாக என்று அறிவுரை கூறுகின்றார். ஏலமாமலர்=நறுமணம் வீசும் சிறந்த மலர்கள்; கோல=அழகிய; வார் பொழில்=நீண்ட சோலைகள்;

ஞாலம் மல்கு மனிதர்காள் நாடொறும்

ஏல மாமலரோடு இலை கொண்டு நீர்

காலனார் வருதன் முன் கருவிலிக்

கோலவார் பொழில் கொட்டிட்டை சேர்மினே

தினமும் பெருமானை நினைத்து வணங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் எந்த விதமான நெகிழ்வோ தளர்ச்சியோ இல்லாமல் விருப்பத்துடன் பெருமானை வணங்க வேண்டும் என்பதை இங்கே உணர்த்தும் அப்பர் பிரான் அருளிய கழிப்பாலைத் தலத்து பாடலை நாம் இங்கே காண்போம். நெளிவு=நெகிழ்வு,தளர்ச்சி: வளி=மூச்சுக் காற்று; உணவு இல்லாமலும் தண்ணீர் இல்லாமலும் சில நாட்கள் சிலர் வாழலாம், ஆனால் காற்றின்றி எவரும் வாழ முடியாது. எனவே அனைவரையும், தவத்தினில் ஈடுபட்டு உணவின்றி, தண்ணீரின்றி வாழும் முனிவர்களையும் உள்ளடக்கி, வளியுண்டார் என்று, அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நேரிழையாள்=சிறந்த ஆபரணங்களை அணிந்தவள், இங்கே உமையம்மை: கண்டல்=தாழை: இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கிய பெருமானை தினமும் நினைக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டில் எந்தவிதமான தளர்ச்சியும் இல்லாமல், அவனை விருப்பத்துடன் நீங்கள் நினைப்பீர்களாக.அழகிய ஆபரணங்களை அணிந்தவளும் ஒளியுடன் திகழும் வண்டுகள் மொய்க்கும் அடர்ந்த கூந்தலை உடையவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனாக விளங்கும் பெருமானை அவனது அடியார்கள் தங்கள் உள்ளத்தினில் தியானம் செய்து வணங்கி வழிபடுகின்றார்கள்.அதிகமான தேனைக் குடித்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரியும் வண்டுகள் நிறைந்த அடர்ந்த சோலைகளுக்கு, தாழை மடல்கள் வேலியாக விளங்கும் கழிப்பாலை தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய சிவபெருமான், காற்றை உட்கொள்வதால் நிலைத்து நிற்கும் தன்மை படைத்த இந்த உடலினை நிலையாக நீத்து, இனி மற்றொரு பிறவி எடுக்காத வண்ணம் இருக்கும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக என்று அப்பர் பிரான் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் (6.12.3)

நெளிவு உண்டாக் கருதாதே நிமலன் தன்னை நினைமின்கள் நித்தலும் நேரிழையாள் ஆய

ஒளி வண்டார் கருங்குழலி உமையாள் தன்னை ஒரு பாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த

களி வண்டார் கரும்பொழில் சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை மேய கபாலப்பனார்

வளி உண்டார் மாயக்குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும்நாமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.30.5) அப்பர் பிரான், நறுமணம் மிகுந்த மலர்களும் சந்தனமும் தூபமும் தீபமும் கொண்டு,வானோர்கள் நாளும் சிறப்போடு பூசிக்கும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். வானவர்கள் தினமும் மாலை வேளையில் திருவாரூர் பெருமானை வழிபடுவதாக தல புராணம் கூறுகின்றது. இந்த செய்தியை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். .மறம்=பாவம்; மறப்படும் சிந்தை= பாவத்தின் கண் அகப்பட்ட சிந்தனை; இந்த குறிப்பு சமண சமயத்தினை சார்ந்து இருந்த நிலையினை உணர்த்துகின்றது.

பிறப்போடு இறப்பு ஒன்றும் இல்லாதான் காண் பெண்ணுருவோடு ஆணுருவம் ஆயினான் காண்

மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண்

நறப்படு மலர் தூபம் தீப நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர்

சிறப்போடு பூசிக்கும் திருவாரூரில் திருமூலட்டானத்து எம் செல்வன் தானே

தனது தலையின் மீது இறைவனின் திருப்பாதங்கள் படர்ந்து நன்மை புரிந்ததை நினைவு கூர்ந்து அப்பர் பிரான் இறைவனைப் போற்றுவதன் மூலம்,இறைவன் நமது வாழ்நாளில் புரிந்த எண்ணற்ற நன்மைகளை நாம் நாள்தோறும் நினைவுகூர வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற அறிவுரை பொதிந்துள்ள பாடல் திருவாரூர் பதிகத்து பாடலாகும் (6.31.10). நாம் திருக்கோயிலில் இறைவனின் சன்னதியில் நின்று கொண்டிருந்தாலும் சில சமயங்களில், மனம் நமது கட்டுக்கு அடங்காமல், நமது சிந்தனை எங்கெங்கோ திரிந்து கொண்டிருப்பதை நாம் உணர்கின்றோம். அத்தகைய சமயங்களில் நாம் இறைவனின் பண்புகளையும் திருநாமங்களையும் சிந்தித்தால், இறைவனது அருளால் மனம் கட்டுக்குள் வரும். இந்த செய்தி தான் இங்கே அப்பர் பிரானால் உணர்த்தப் படுகின்றது. போது போக்கி=காலத்தை வீணே கழித்து. புறம்புறம்=மிகவும் தொலைவான இடங்கள்; மனம் இறைவனின் நினைவுகளில் நில்லாமல் வேறெங்கோ செல்வதை புறம்புறம் திரிந்து என்று குறிப்பிடுகின்றார். கங்கையைத் தனது சடையில் அடக்கியவன், தக்கனது வேள்வியினைத் தகர்த்தவன், இலங்கை மன்னன் இராவணனது வலியினை அடக்கியவன், என்று இறைவனின் வல்லமை இங்கே உணர்த்தப் பட்டுள்ளது. அவ்வளவு வல்லமை படைத்து இருந்தாலும், நம் மீது கருணை கொண்டு ஆரூரில் உறையும் இறைவன் என்றும், என் மீதும் (அப்பர் பிரான் தன்னைச் சொல்லிக் கொள்கின்றார்)கருணை கொண்டு தனது திருவடியை என் தலை மேல் வைத்தவன் என்று கூறி, அடியார்க்கு இரங்கும் அவனது இளகிய மனம் அப்பர் பிரானால் இங்கே குறிப்பிடப் படுகின்றது.

புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போதுபோக்கிப் புறம்புறமே திரியாதே போதுநெஞ்சே

சலம் கொள் சடைமுடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெருவேள்வி தகர்த்தாய் என்றும்

இலங்கையர்கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம் கொண்ட எந்தாய் என்றும்

நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாடோறும் நவின்று ஏத்தாய் நன்மையாமே

நம்மை பீடித்துள்ள வினைகளின் பயனாக வரும் துன்பங்களை எந்த உயிரும் அனுபவித்து தான் கழிக்க முடியும். எனவே அத்தகைய துயரங்களை நீக்குவது என்பது எவர்க்கும் இயலாத காரியம். இறைவனின் அருளால் தான் அதனை நீக்க முடியும். அவ்வாறு இறைவனின் பெறுவதற்கு அவனை வழிபட வேண்டும்.அவ்வாறு தான் வழிபட்டதால், தன்னை ஊழ்வினைகள் ஏதும் செய்யாது என்று இறுமாப்புடன் அப்பர் பிரான் சொல்வதை நாம் இந்த பாடலில் (6.47.5)உணரலாம். அறவா=அறமே உருவாக உடையவன்; தினமும் விடிவதற்கு முன்னரே எழுந்து நீரினில் மூழ்கி குளித்து, பின்னர் நறுமணம் மிகுந்த மலர்களைக் கொய்து, இறைவனே உனது திருப்பாதங்களை வாழ்த்தி வணங்கி, அத்தகைய வழிபாட்டினால், பழைய வினைகளால் ஏற்படும் துன்பங்களை, எளிதில் துறக்க முடியாத துன்பங்களை அடியேன் நீக்கிக் கொண்டேன். இந்த நிலையில் ஊழ்வினைகள் தன்னை என்ன செய்ய முடியும் என்று பெருமையாக குறிப்பிடும் அப்பர் பிரான், தனக்கு அஞ்சேல் என்று சொல்லி இறைவன் தன்னை வினைகளின் தாக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகின்றார்.

நறுமா மலர் கொய்து நீரின் மூழ்கி நாடோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தித்

துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச்சூழுலகில் ஊழ்வினை வந்துற்றால் என்னே

உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரைநீர்க் கடல் நஞ்சுண்டு உய்யக் கொண்ட

அறவா அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே

கன்றாப்பூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.61.1), பெருமான் எங்கெங்கு உறைகின்றார் என்று பட்டியலிடும் அப்பர் பிரான், மனம் உருகி மனதினில் வஞ்சகம் ஏதுமின்றி, வாயினால் இறைவனது பெருமைகளை சொல்லி, கைகளால் பூவும் நீரும் கொணர்ந்து நாள்தோறும் இறைவனை வழிபடும் அடியார்களின் மனதினில் இறைவன் உறைகின்றார் என்று கூறுகின்றார். மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றையும் இறை வழிபாட்டினில் ஈடுபடுத்தும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. வாசனை என்ற சொல் எதுகை கருதி வாதனை என்று திரிந்தது; காதன்மை=மிகுந்த அன்பு; நடுதறி என்று கன்றுக்குட்டி கட்டப்படும் முளையின் வடிவில் இந்த தலத்தில் இறைவன் தோன்றியதை, பாடல் தோறும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

மாதினையோர் கூறு உகந்தாய் மறை கொள் நாவா மதிசூடி வானவர்கள் தங்கட்கு எல்லாம்

நாதனே என்று என்று பரவி நாளும் நைஞ்சு உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து

வாதனையால் முப்பொழுதும் பூ நீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்திக்

காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.08.03) சுந்தரர், பூவும் நீரும் கொண்டு நாள்தோறும் இறைவனை வணங்கும் அடியார்களுக்கு ஞானம் அளிப்பவன் இறைவன் என்று கூறுகின்றார். அறுபது என்று தத்துவங்களின் கூறுகளாகிய தாத்துவீகங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆகாயத்தின் பத்து கூறுகள் (அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, குகுதை, சங்கினி, சிகுவை, புருடன்) வாயுவின் பத்து கூறுகள் (பிராணன்,அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன்) தீயின் ஐந்து கூறுகள் (ஆகாரம் நித்திரை பயம் மிதுனம் சோம்பு) நீரின் ஐந்து கூறுகள் (ஓடுநீர், உதிரம், சுக்கிலம், மூளை, மச்சை) பூமியின் ஐந்து கூறுகள் (எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு) அகங்காரத்தின் மூன்று கூறுகள் (தைசதம், வைகாரியம், பூதாதி) சத்துவம் இராசதம் தாமசம் ஆகிய மூன்று குணங்கள், காமம் குரோதம் லோபம் மோகம் மதம் ஆகிய ஐந்து குற்றங்கள், சூக்குமை பைசந்தி மத்திமை மற்றும் வைகரி ஆகிய நான்கு விதமான வாக்குகள், தன்மாத்திரைகள் ஐந்து, கன்மேந்திரியங்களின் ஐந்து செயல்கள், ஆகியவையே அறுபது தாத்துவீகங்கள். பத்து என்று ஐந்து அறிவுக் கருவிகளையும் ஐந்து தொழிற் கருவிகளையும் (மெய் வாய் கண் மூக்கு செவி மற்றும் கால்கள் கைகள் நாக்கு எருவாய் மற்றும் கருவாய்) சுட்டிக் காட்டுகின்றார். எட்டு என்ற எண்ணிக்கை மூலம் ஐந்து தன்மாத்திரைகள் மற்றும் கரணங்களில் மூன்றும் குறிப்பிடப் படுகின்றன. ஆறு என்று வித்தியா தத்துவங்கள் (காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன்) உணர்த்தப் படுகின்றன.மேலே குறிப்பிடப்பட்டுள்ள தத்துவங்களும் தாத்துவீகங்களும் உயிர்களை மயக்கி, இறைவனை உயிர்கள் நினைக்காத வண்ணம் தடுக்கின்றன. எனவே அவற்றின் செயல்களுக்கு தான் அஞ்சுவதாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோடு அஞ்சும் நான்கும்

துறு பறித்தனைய நோக்கிச் சொல்லிற்று ஒன்றாகச் சொல்லார்

நறுமலர் பூவும் நீரும் நாள்தொறும் வணங்குவாருக்கு

அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே

கருப்பறியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.30.3), சுந்தரர், நாள்தோறும் தவறாமல் மூன்று வேளைகளிலும் நீரில் மூழ்கி இண்டை மலர்களைப் பறித்து மாலையாக கட்டி இறைவனுக்கு அணிவித்து தங்களது மனதினை இறைவனின் திருவடிகளில் சேர்க்கும் அந்தணர்கள் வாழ்ந்த தலம் கருப்பறியலூர் என்று கூறுகின்றார்.

முட்டாமே நாள்தோறும் நீர் மூழ்கிப் பூப்பறித்து மூன்று போதும்

கட்டார்ந்த இண்டை கொண்டு அடி சேர்த்தும் அந்தணர் தம் கருப்பறியலூர்

கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக் குழகனைக் கொகுடிக் கோயில்

எட்டான மூர்த்தியை நினைந்த போது அவர் நமக்கு இனியவாறே

தன்னை நாள்தோறும் புகழ்ந்து பாடும் அடியார்கள், உலகத்தில் உள்ள உயிர்கள் மீதும் உலகத்துப் பொருட்கள் மீது வைத்துள்ள பற்றினையும், அவர்களது வினைகளையும் அறுத்து எரியும் வல்லமை வாய்ந்த பெருமான் என்று பைஞ்ஞீலி தலத்து பாடலில் (7.36.6) சுந்தரர் கூறுகின்றார். இரவு வேளைகளில் பலி ஏற்பதற்காக வரும் பிச்சைப்பெருமான், தனது அழகினால் பல மகளிரின் மனதை கொள்ளை கொள்கின்றார் என்றும் அவரிடம் தங்களது மனதினை பறிகொடுத்த மகளிர், அவரை அடைய முடியாத ஏக்கத்தினால் உடல் இளைத்து, தங்களது கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழும் நிலையை அடைந்தனர் என்று குறிப்பிடும் சுந்தரர், இவ்வாறு மகளிரின் வளையல்கள் கொள்ளை கொண்ட இறைவன் என்று கூறுகின்றார். பெருமான் பால் கொண்டுள்ள காதல், சுந்தரர் நாயகியை பெருமானுடன் உடல் செல்லும் வண்ணம் மாற்றுகின்றது என்பதை குறிப்பிடும் வண்ணம், இரவினில் அச்சமின்றி நடந்து போகும் வல்லமை உடையீரோ என்று கேட்கவும் தூண்டுகின்றது.

குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழிலாகி நீர்

இரவும் இம்மனை அறிதிரே இங்கே நடந்து போகவும் வல்லிரே

பரவி நாடொறும் பாடுவார் வினை பற்றறுக்கும் பைஞ்ஞீலியீர்

அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.45.9) நாள்தோறும் பெருமானின் திருவடிகளை, தான் தேடுவதாக குறிப்பிடும் சுந்தரர், அவனை தனது இதயத்தில் (நாபிக்கு மேலேயோர் நால் விரல்) நிலை நிறுத்தி தியானம் செய்ததாகவும்) ஒரு கால் பெருமான் தனது இதயத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தால் தனது கையால் பிடித்திழுத்து மீண்டும் தனது இதயத்தின் உள்ளே நிறுத்துவேன் என்றும் அவ்வாறு நிறுத்தியதை நினைத்து மகிழ்ந்து ஆனந்தக் கூத்து ஆடுவேன் என்றும் பெருமானுக்கே சவால் விடும் வண்ணம் உணர்த்துகின்றார். நாபிக்கு மேலேயோர் நால்விரல் என்று குறிப்பிட்டு, தான் இறைவனை தியானம் செய்து அகப்பூசை செய்யும் தன்மையை உணர்த்துகின்றார். மாட்டுவன் என்ற சொல் எதுகை குறித்து மாடுவன் என்று குறைந்துள்ளது.வெளியே உள்ள இறைவனின் சக்தியை வாங்கி, தனது கை முட்டிக்குள்ளே இறைவனை அடக்கிக் கொண்டு தனது இதயத்தின் உள்ளே சேர்ப்பது போன்று பாவனை செய்வதை சங்கார முத்திரை என்று கூறுவார்கள்.

தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும்

நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல்

மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே

ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளே

ஆனைக்கா ஆதியின் திருவடிகளை நாளும் தொழுகின்ற அடியார்கள், தன்னையும் அடிமை கொண்டு ஆளும் உரிமை உடையவர்கள் என்று சுந்தரர் ஆனைக்காத் தலத்தின் மீது அருளிய பாடலில் (7.75.1) கூறுகின்றார். நான்கு மறைகளாகவும் மற்ற பொருட்களாகவும் அனைத்து வகையான சமயங்களாகவும் அனைத்து வகையான தோத்திரங்கள் உணர்த்தும் இறைவனாகவும் மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களுக்கும் முன்னே தோன்றிய ஆதியாகவும் பலவகையான நன்மைகளாகவும் ஒலிக்கும் நீராகவும் சிவபெருமான் இருப்பதாக சுந்தரர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், கடை அடியினில், நாளும் இறைவனை வழிபடும் அடியார்களுக்கு தான் அடிமை என்று சுந்தரர் கூறுகின்றார். இந்த பதிகம்,சுந்தரர் முதன்முதலில் திருவாரூர் சென்றபோது, அந்த தலத்து அடியார்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்ற போது, அந்த அடியார்களின் சிறப்பினை உணர்த்தும் வண்ணம், அந்த அடியார்களுக்கு தான் அடிமையாக இருப்பேன் என்று குறிப்பிட்டு உணர்த்தும் பாடல்கள் கொண்ட பதிகம்.

மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களும் எல்லாத்

துறையும் தோத்திரத்து இறையும் தொன்மையும் நன்மையையும் ஆய

அறையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும்

இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தினில், குண்டையூர் கிழார் தனக்கு அளித்த நெற்குவியலை திருவாரூர் கொண்டு சேர்ப்பதற்கு பெருமான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறும் சுந்தரர், தனது தகுதியை குறிப்பிட்டு பெருமான் உதவி செய்ய வேண்டும் என்று உணர்த்துகின்றார். அவரது தகுதி தான் யாது.நீண்ட காலமாக தினமும் பெருமானை நினைத்தவாறு தொடர்ந்து தினமும் கை தொழுது வந்ததே தனது தகுதி என்று சுந்தரர் இங்கே கூறுகின்றார். தினமும் தவறாது கைதொழுது வந்தால், பெருமானிடம் எந்த உதவியையும் உரிமையுடன் கோரும் தகுதி கிடைக்கும் என்பது நமக்கு இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. அட்டித்தருதல்= சேர்ப்பித்தல்;

நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கை தொழுவேன்

வாளன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே

கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லுப் பெற்றேன்

ஆளிலை எம்பெருமான் அவை அட்டிதரப் பணியே

திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.81.3) சுந்தரர், நஞ்சணிந்த கண்டனாகிய பெருமானை தினமும் வணங்கி நமது வினைகளை முற்றிலும் போக்கிக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகின்றார். மாமணிச் சோதியான்=மாணிக்கம் ;போன்று ஒளிவீசுபவன்;காளகண்டன்=ஆலகால விடத்தினை கழுத்தினில் தேக்கியவன்.

நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்

ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்

தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்

காளகண்டன் உறையும் தண் கழுக்குன்றமே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.88.6) சுந்தரர், அடியார்களுக்கு இறைவன் அருளும் தன்மையை குறிப்பிட்டு, தனக்கும் அருள் புரியவேண்டும் என்று வேண்டுகின்றார். இந்த பாடலில் நிறைந்த நல்குணங்கள் பெற்றுள்ள வீழிமிழலை அந்தணர்கள் நாள்தோறும் நேசத்துடன் இறைவனுக்கு பூசை செய்வதாக கூறுகின்றார். அதனை அறிந்து கொண்ட இறைவன், வீழிமிழலை தலத்தை, தனது இருப்பிடமாக கொண்டுள்ளார் என்று கூறுகின்றார். தில்லைச் சிதம்பரத்து மூவாயிரம் அந்தணர்கள் போன்று வீழிமிழலை தலத்து ஐந்நூறு அந்தணர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாக கருதப்பட்டு,பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றனர். எறிந்த சண்டி என்று, இறைவனை நீராட்ட வைத்திருந்த பாற்குடத்தை இடறியது தந்தை என்றும் பாராமல், அவரது காலினை நோக்கி கொம்பினை வீசிய சண்டீசரின் செய்கை இங்கே குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு சிவபூஜைக்கு இடையூறு செய்வது பெரிய தவறு என்பதை உணர்த்தும் பொருட்டு, இறைவன் திருவுள்ளம் கொள்ள, சண்டீசர் வீசிய கொம்பு மழுவாக மாறி, சண்டீசரின் தந்தை விசாரசருமரின் கால்களை துண்டு செய்ததை நாம் அறிவோம். சண்டீசரை தனது கணங்களுக்கு தலைவராகவும், கண்ணப்பரை தனது வலது பக்கத்தில் நிறுத்தியும்,அவர்கள் இருவருக்கும் உயர்ந்த பதவி அளித்ததை, ஏற்றம் நல்கினீர் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார்.

எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர்

செறிந்த பூம்பொழில் தேன்துளி வீசும் திருமிழலை

நிறைந்த அந்தணர் நித்த நாள்தொறும் நேசத்தால் உமைப் பூசிக்கும் இடம்

அறிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே

திருவாசகம் தெள்ளேணம் பதிகத்தின் பாடலில் மணிவாசகர், இறைவனது சிறப்புகளை நாள்தோறும் பாடியவாறு தெள்ளேணம் கொட்டுவோம் என்று கூறுகின்றார். முறம் கொண்டு, அரிசி மற்றும் தானியங்களில் உள்ள கற்களையும் மண்துகள்களையும் தூசுகளையும் புடைத்து பிரித்தெடுப்பது என்பதே தெள்ளுதல் என்ற சொல்லின் பொருள். குலம் என்பது பெருமானை வணங்கும் தேவர்களின் கூட்டத்தையும் அடியார்களின் கூட்டத்தையும் குறிப்பிடுகின்றது.கோல்வளையாள் நலம் என்று உமையன்னை, பெருமானின் உடலின் ஒரு பாகமாக திகழ்ந்து புகழுடன் விளங்குவதை உணர்த்துகின்றார். கொக்கின் வடிவில் அனைவரையும் துன்புறுத்தி வந்த குரண்டாசுரன் என்ற அரக்கனைக் கொண்டு கொக்கின் சிறகினைத் தலையில் சூட்டிக் கொண்டதும், நஞ்சினை உட்கொண்டு தேவர்களை காப்பாற்றிய செயலும் இங்கே கூறப்பட்டுள்ளன. அலம்பார்=ஒலிக்கும்; ஒலிக்கும் நீர் என்று நதிகளில் பாய்ந்து வரும் நீர்ப்பெருக்கு உணர்த்தப் படுகின்றது. பெருமானின் பல விதமான சிறப்புகளையும், தனது காலில் அணிந்துள்ள சிலம்பு ஒலிக்கும் வண்ணம் ஆடுகின்ற கூத்தின் சிறப்பினையும் நாள்தோறும் புகழ்ந்து பாடுமாறு அறிவுரை கூறுகின்றார்.

குலம் பாடிக் கொக்கிறகும் பாடிக் கோல்வளையாள்

நலம் பாடி நஞ்சுண்டவா பாடி நாள்தோறும்

அலம்பார் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற

சிலம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

திருவாசகம் பூவல்லி பதிகத்தின் பாடலில் மணிவாசகர் பெருமானின் சடையில் திகழும் கொன்றை மலரினையும் அந்த மலரில் காணப்படும் பொன் போன்ற மகரந்தத் தூள்களையும் பாடிய வண்ணம், பூக்களை கொய்வோமாக என்று கூறுகின்றார். இந்த பாடலில் வானவர்களும் முனிவர்களும் சிறப்பான முறையில் பெருமானைப் புகழ்ந்து நாள்தோறும் பாடுகின்றனர் என்று மணிவாசகர் கூறுகின்றார்.

அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி

நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்

நின்றார ஏத்தும் நிறை கழலோன் புனை கொன்றைப்

பொன்றாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

திருக்கழுக்குன்றத்து பதிகத்தினில் மணிவாசகர் இறைவனிடத்தில் பேரன்பு பூண்ட அடியார்கள் நாள்தோறும் இறைவனை போற்றுகின்றனர் என்று குறிப்பிடும் மணிவாசகர், அத்தகைய அன்பு தான் இறைவன் பால் கொள்ளவில்லை என்று வருந்துகின்றார். மேலும் அவ்வாறு தான் இறைவன் பால் பேரன்பு கொள்ளாமல் இருக்கும் நிலைக்கு நாணம் கொண்டு துன்பக்கடலில் ஆழ்ந்த போதிலும் பெருந்துறை என்ற தெப்பத்தினை அளித்து, இறைவன் தன்னை மீட்டார் என்று கூறுகின்றார். வேறெங்கும் காண முடியாத, வேறு எவரும் காணமுடியாத திருக்கோலத்தை கழுக்குன்றத்தில் இறைவன் காட்டி அருளினார் என்றும் உணர்த்துகின்றார்.

பூணொணாத ஓர் அன்பு பூண்டு பொருந்தி நாள்தொறும் போற்றவும்

நாணொணாததோர் நாணம் எய்தி நடுக்கடலுள் எய்தவும்

பேணொணாத பெருந்துறைப் பெருந்தோணி பற்றி உகைத்தலும்

காணொணாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய்க் கழுக்குன்றிலே

பொழிப்புரை:

பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டது, மற்றும் தனது சடையினில் கங்கை நதியைத் தேக்கி வைத்து பேணிப் பாதுகாப்பது ஆகிய தன்மைகளை உடைய பெருமான் விரும்பி உறைகின்ற இடம் திருநாகேச்சரம் தலமாகும். இந்த தலம் வந்தடையும் உலகத்தவர்கள் நாள்தோறும் பெருமானை வணங்கி, சிவபுண்ணியம் முதலான பலவிதமான நன்மைகள் பெறுகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாகேச்சரம் தலத்தில் உறைகின்ற பெருமானை, தங்களது கண்களால் கண்டு வழிபடும் பேறு பெற்றவர்கள், உண்மையாகவே கண்கள் பெற்ற பயனை அடைந்தவர்கள் ஆவார்கள்.

பாடல் 3:

குறவர் கொல்லைப் புனம் கொள்ளை கொண்டும் மணி குலவு நீர்

பறவை ஆலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை

நறவ நாறும் பொழில் சூழ்ந்து அழகாய நாகேச்சரத்து

இறைவர் பாதம் தொழுத் ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே

விளக்கம்:

பதிகத்தின் முதல் பாடலில் நாகேச்சரத்து நாதனின் திருவடிகளைத் தொழும் அடியார்கள் வாழ்வினில் பல நன்மைகள் பெறுவார்கள் என்று உணர்த்திய திருஞானசம்பந்தர், அடுத்த பாடலில் இந்த தலத்து இறைவனைத் தங்களது கண்களால் காணும் வாய்ப்பு பெற்றவர்களே கண்கள் பெற்றதன் உண்மையான பயனை பெறுகின்றனர் என்று கூறுகின்றார். இந்த நன்மைகளை பெறுகின்ற அடியார்கள் தங்களது வாழ்வினில் துன்பம் மற்றும் இடையூறு இல்லாதவர்களாக விளங்குவார்கள் என்று மூன்றாவது பாடலில் கூறுகின்றார். முல்லை நிலங்களின் வழியாக பாய்ந்து வரும் காவிரி நதி, முல்லை நிலத்தின் தானியங்களையும் மற்ற பொருட்களையும் அடித்துக் கொண்டு வரும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. ஆல=அசைய, இங்கே பறக்க என்று பொருள் கொள்ளவேண்டும்.

பொழிப்புரை:

குறவர்களின் முல்லை நிலத்தின் வழியாக வரும் காவிரி நதி, அந்த நிலங்களின் தானியங்கள் நிறைந்த கதிர்களையும் மற்ற பொருட்களையும் மலையில் கிடைக்கும் மணிகளையும் வாரி அடித்துக் கொண்டும் வர, அவ்வாறு அடித்துக் கொண்டு வரப்படும் தானியங்களை உட்கொள்ளும் முயற்சியில் நீர்ப்பறவைகள் ஆரவாரம் செய்த வண்ணம் கூவியவாறு பறக்கும் காட்சிகள் நிறைந்த காவிரித் தென்கரைத் தலம் திருநாகேச்சரம். தேன் மணம் கமழும் சோலைகளால் சூழப்பட்டு அழகாக விளங்கும் இந்த தலத்தினில் உறைகின்ற நாகேச்சரத்து இறைவரின் திருப்பதங்களை தொழுது புகழும் வல்லமை உடைய அடியார்களுக்கு வாழ்வினில் துன்பங்கள் நேராது.

பாடல் 4:

கூச நோக்காது முன் சொன்ன பொய் கொடு வினை குற்றமும்

நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரம்

தேசம் ஆக்கும் திருக்கோயிலாக் கொண்ட செல்வன் கழல்

நேசமாக்கும் திறத்தார் அறத்தார் நெறிப் பாலரே

விளக்கம்:

ஆடுதல்=தீர்த்தத்தில் நீராடுதல்; பொய் பேசுதல் மிகப் பெரிய குற்றமாக பண்டைய நாளில் கருதப்பட்டது போலும். தனது வாழ்நாளில் சொன்ன ஒரேவொரு பொய், தருமபுத்திரருக்கு நரகத்தில் ஒரு நாழிகை இருக்கவேண்டிய நிலையினை ஏற்படுத்தியது என்பதை நாம் மகாபாரத புராணத்திலிருந்து அறிகின்றோம். பொய் பேசுதல் மிகப்பெரிய தீமை விளைவிக்கும் என்பதை உணர்ந்தும், அஞ்சாது பொய் சொல்வதால் வருகின்ற பாவம் என்று கூச நோக்காது முன் சொன்ன பொய் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். தேசம் என்பது தேஜஸ் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.அறத்தார்=புண்ணியம் உடையவர்கள், சிவபுண்ணியம் உடையவர்கள்; நேசம்=அன்பு; உயிரினைப் பிணித்துள்ள வினைகள், உயிர் தங்களை (வினைகளை)நீக்கிக் கொள்ள முயற்சிகளுக்கு தடையாக நின்று, உயிருடன் எப்போதும் பிணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. எனவே ஐந்து புலன்களையும் உயிர் உலகப் பொருட்களின் மீது கொண்டுள்ள பற்றினையும் பயன்படுத்தி, உயிர்களை குற்றம் செய்யும் வண்ணம் தூண்டி, உயிர்களின் வினைகளை மேலும் பெருக்கி பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிர் விடுபடாத வண்ணம் செயல் படுகின்றன. எனவே தான் அத்தகைய வினைகளை நீக்கிக் கொள்ள உயிர் முயற்சி செய்ய வேண்டும்; வினைகளை நுகர்ந்து கழித்துக் கொள்வதற்கு எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டுமோ, அதனை நாம் எவரும் அறிய மாட்டோம்.ஆனால் இறைவனை வழிபடுவதன் மூலம், வாழ்க்கையில் நடப்பது அனைத்தும் இறைவனின் செயல் என்பதை உணர்ந்து, இன்ப துன்பங்களால் எத்தைகைய சலனமும் அடையாமல் சரி சமமாக பாவித்து வாழ்வதன் மூலம், இறைவனின் அருளினால், நமது வினைகளை தீர்த்துக் கொள்ளலாம். இந்த செய்தியே வினை குற்றமும் நாசமாக்கும் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த முக்திச் செல்வத்தை உடைய பெருமானி, செல்வன் என்று குறிப்பிடுகின்றார். நெறிப்பாலர்=வீடுபேறு அடையக் கூடிய நெறியின் கண் செல்பவர். பொய் என்ற சொல்லினை கூச என்ற சொல் மற்றும் நோக்காது முன் சொன்ன என்ற தொடருடனும் இணைத்து, கேட்பவர் கூசி நாணமடையும் வண்ணம் சொன்ன பொய்ச் சொற்கள் என்றும் பின்விளைவுகளை ஆராயாது சொல்லப்பட்ட பொய்ச் சொற்கள் என்று இருவகையான பொய்ச் சொற்களை இங்கே குறிப்பிடுகின்றார் என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது.

பொழிப்புரை:

பொய் பேசுவது பெரிய குற்றம் என்பதையும் அடுத்தவருக்கு பெரிய தீங்கினை விளைவிக்கும் என்பதையும் நினைக்காமல், மற்றவர்கள் கூசும் வண்ணம் பொய் சொல்வதால் ஏற்படும் பாவத்தையும், உயிரின் குற்றமாக விளங்கும் கொடிய வினைகளால் தூண்டப்பட்ட உயிர் செய்யும் பலவகையான பாவங்களையும் நாசமாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் மனிதர்கள், சென்றடைந்து நீராடும் தீர்த்தம் உடைய தலம் நாகேச்சரம் ஆகும். இந்த தலத்தில் உள்ளதும் புகழொளி வீசுவதும் ஆகிய திருக்கோயிலைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள செல்வனின் திருப்பாதங்கள் மீது அன்பு செலுத்தும் பண்பினை உடைய அடியார்கள், சிவ புண்ணியம் செய்தவர்களாகவும், வீடுபேறு அடையும் வழியில் முன்னேறிச் செல்பவர்களாக விளங்குவார்கள்.

பாடல் 5:

வம்பு நாறும் மலரும் மலைப் பண்டமும் கொண்டு நீர்

பைம்பொன் வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை

நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்

உம்பர் வானோர் தொழச் சென்று உடனாவதும் உண்மையே

விளக்கம்:

வம்பு=நறுமணம்: இந்த பதிகத்தின் நான்காவது பாடலில் நாகேச்சரத்து நாதனின் திருவடிகளை போற்றும் அடியார்கள் வீடுபேறு அடைகின்ற வழியில் முன்னேறிச் செல்வார்கள் என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் இறைவனை நம்பன் என்று குறிப்பிடுகின்றார். நம்பன் என்றால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு பத்திரமாக இருப்பவன் என்றும், விரும்பப் படுபவன் என்றும், நம்பி என்ற சொல்லின் திரிபாக, சிறந்த ஆண்மகன் என்றும் மூன்று விதமாக பொருள் கொள்ளலாம். இந்த மூன்று விளக்கங்களும் இங்கே பொருத்தமாக உள்ளன. தனது அடியார்களுக்கு இறைவன் எத்தகைய பேற்றினை அளிக்கின்றான் என்பதை இந்த பாடலின் நான்காவது அடி உணர்த்துகின்றது. உம்பரும் வானவரும் தொழும் தன்மையில் பெருமானின் அடியார்கள் உடனாவார்கள் என்று கூறுகின்றார். உடனாதல் என்றால், பெருமானுடன் ஒன்றறக் கலத்தல் என்று பொருள். முக்தி உலகில் அடியார்களுக்கு கிடைக்கும் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுஜ்ஜியம் ஆகிய நான்கு பதவிகளிலும் மிகவும் உயந்ததான சாயுச்சிய நிலையை அடைந்து இறைவனுடன் ஒன்றி இருப்பார்கள் என்று கூறுகின்றார். இவ்வாறு ஜீவன் சிவனோடு ஒன்றி இருப்பது அத்துவித கலப்பு என்றும் சொல்லப் படுகின்றது.நண்ணுதல்=நெருங்குதல், இங்கே பெருமானை நெருங்கி பணிந்து வணங்குதல் என்று பொருள் கொள்ளவேண்டும்.

பொழிப்புரை:

நறுமணம் கமழும் மலர்களையும், மலையில் கிடைக்கும் பல பொருட்களையும் பசுமையான பொன்னையும் நீருடன் அடித்துக் கொண்டு வருவதும் பண்டைய நாளிலிருந்தே கொழித்து வரும் நீர் கொண்டு தமிழ் கூறும் நல்லுலகத்தை வளம் படுத்தி வருவதும் ஆகிய காவிரி நதியின் தென்கரையில் உள்ள நாகேச்சரம் என்ற தலத்தில், இறைவன் உறைகின்றான். இந்த தலம் சென்றடைந்து நம்பனாகிய பெருமானை, நாள்தோறும் நெருங்கித் தொழும் அடியார்கள்,வானோர்களும் உயர்ந்தோர்களும் போற்றித் தொழும் வண்ணம், முக்தி உலகம் சென்றடைந்து பெருமானுடன் ஒன்றறக் கலக்கும் சாயுச்சிய பதவியை அடைவார்கள்.

பாடல் 6:

காளமேக நிறக் காலனோடு அந்தகன் கருடனும்

நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின்

நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்

கோளு நாளும் தீயவேனும் நன்காம் குறிக்கொண்மினே

விளக்கம்:

இந்த பாடலில் இயமன், அந்தகன் கருடன் காமன் ஆகியோர் அடைந்த துன்பங்கள் குறிப்பிடப் படுகின்றன. காலனை காலால் உதைத்து வீழ்த்தியது,அந்தகனை சூலத்தில் ஏந்தியது மற்றும் காமனை எரித்தது ஆகிய மூன்றும் பெருமானின் எட்டு வீரச் செயல்களில் இடம் பெறுவனவாகும். பெருமானின் வீரச் செயல்களில் ஒன்றான அந்தகாசுரனை வதைத்த வீரச்செயல் நடைபெற்ற இடம் திருக்கோவலூர். அட்ட வீரட்டச் செயல்கள் பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றன. இவற்றில், மிகவும் குறைந்த பாடல்களில் குறிப்பிடப்படுவது, அந்தகனை வென்ற செயலே. இந்த பாடல்களில் சூலத்தால் அந்தகனை அழுத்தி அவனது செருக்கினை அழித்தமை சொல்லப்படுகின்றது. திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.12.5) ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த அரக்கன் அந்தகனின் உடலினை, கூர்மையானதும் அழகு மிகுந்ததும் இரத்தக் கறை படிந்து காணப்படுவதும் மூவிலைச் சூலத்தின் வடிவில் அமைந்ததும் ஆகிய நீண்ட வேலினை முனையில் குத்தி ஏந்திய சிவபெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அந்தன்=அந்தகாசுரன்;அறையார்=ஒலிக்கின்ற; அயில்=கூர்மையான; கறை=இரத்தத்தால் ஏற்பட்ட கறை; ஒண் மலர்=சிறந்த மலர்கள்; முறையாயின= முறையாக சொல்லப்படும் வேத மந்திரங்கள்;

அறையார் கழல் அந்தன் தனை அயில் மூவிலை அழகார்

கறையார் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில்

முறையாயின பல சொல்லி ஒண் மலர்ச் சாந்து அவை கொண்டு

முறையால் மிகு முனிவர் தொழு முதுகுன்று அடைவோமே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.09.3) சம்பந்தர் இந்த நிகழ்ச்சியை கூறுகின்றார். அந்தகனை வென்ற மூவிலைச் சூலத்தை உடைய பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் அருட் செயல்களை, அவர் புரிந்த வீரச் செயல்களை குறிப்பிட்டு அவரைப் புகழும் அடியார்களின் வலிய வினைகள் மாய்ந்துவிடும் என்று சம்பந்தர் கூறுகின்றார். இறைவனை நீராட்டுவதை திருமஞ்சனம் என்று அழைப்பது இன்றைய வழக்கிலும் உள்ளதை நாம் உணரலாம்.

நஞ்சினை உண்டு இருள கண்டர் பண்டு அந்தகனைச் செற்ற

வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமிழலையார்

அஞ்சனக் கண் உமை பங்கினர் கங்கை அங்கு ஆடிய

மஞ்சனச் செஞ்சடையார் என வல்வினை மாயுமே.

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (6.96.5) அப்பர் பிரான் அந்தகனின் உடலினை கூர்மையான சூலத்தால் பெருமான் அழுத்தியதாக குறிப்பிடுகின்றார். தனது வலிமையால் தேவர்களை வென்ற அரக்கன், பிரமன் திருமால் இந்திரன் உள்ளிட்ட பல தேவர்களை பெண்களுக்கான உடையை அணியச் செய்து ஏளனம் செய்ததுடன் அவர்களை பல விதத்திலும் அந்தகன் துன்புறுத்தினான். தேவர்களின் முறையீட்டுக்கு இரங்கிய சிவபெருமான், பைரவரை அந்தகனுடன் போருக்கு செல்லுமாறு பணிந்தார். பைரவரும் அந்தகனை வெற்றி கொண்ட பின்னர், அவனது உடலினை சூலத்தில் ஏந்தியவாறு பெருமான் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்தார். பெருமானை தரிசனம் செய்த உடன், பெருமானின் கடைக்கண் பார்வை அரக்கனது பாவங்கள் அனைத்தையும் அழிக்கவே,செருக்கு நீங்கிய அரக்கன் பெருமானை புகழ்ந்து துதித்தான். மனம் திருந்திய அவனை பெருமான் தனது கணங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார் என்று கந்த புராணம் கூறுகின்றது. அந்தகனை வென்ற இடம், திருக்கோவலூர் என்று கருதப் படுகின்றது. அந்தகன் ஒரு அசுரன்; சுந்தரன்=ஆலால சுந்தரன் என்ற பெயருடன் திருக்கயிலையில் பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக விளங்கியவர்; பின்னாளில் நம்பி ஆரூரராக பிறந்தவர்; மாகாளர்=கயிலையின் மேற்கு வாசலை காக்கும் எழுவருள் ஒருவர்; தந்திரம்=வழிபாடு செய்யும் முறை; தந்திரம் என்ற சொல் ஆகமங்களை குறிக்கும் என்றும் கூறுவார்கள். அயில்=கூர்மை;திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போருக்கு சென்ற போது நான்கு வேதங்களும், பெருமானின் தேரினை இழுத்துச் செல்லும் குதிரைகளாக மாறின.துணை கவரி=இரண்டு சாமரங்கள்;

அந்தகனை அயில்சூலத்து அழுத்திக் கொண்டார் அருமறையை தேர்க் குதிரை ஆக்கிக்கொண்டார்

சுந்தரனைத் துணைக் கவரி வீசக் கொண்டார் சுடுகாடு நடமாடும் இடமாக் கொண்டார்

மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக் கொண்டார் மாகாளன் வாசல் காப்பாக் கொண்டார்

தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டார் தாமே

தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.63.9) அப்பர் பிரான் அந்தகனை அயில் சூலத்தால் கொன்றவன் என்று கூறுகின்றார். அயில்-கூரிய. தென்றல் மன்மதனின் தேராக கருதப் படுகின்றது. அந்தகன் என்ற சொல் இயமனை குறிப்பதால், இங்கே அந்தகன் என்று கூறியது இயமனை என்று சிலர் குறிப்பிடுகின்றனர். திருக்கடவூர் தலத்தில் காணப்படும் காலசம்ஹார மூர்த்தி கையில் சூலம் ஏந்தியவராக காணப்பட்டாலும் இயமனை காலால் உதைத்து பெருமான் வீழ்த்தினார் என்ற செய்தியே பல புராணங்களிலும் உள்ளது; மேலும் தேவாரப் பாடல்களும் அவ்வாறே உணர்த்துகின்றன. எனவே இந்த பாடலில் அந்தகாசுரனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் என்பதே பொருத்தம். கொன்றவன் என்பதற்கு அந்தகனது செருக்கினை அழித்தவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

தென்றல் நன்னெடும் தேர் உடையான்

பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்

அன்று அந்தகனை அயில் சூலத்தால்

கொன்றவன் குரங்காடுதுறையனே

திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.83.9) அப்பர் பிரான், சூலத்தில் அந்தகனைக் கோத்து அவனது செருக்கினை அழித்த செய்தியை குறிப்பிடுகின்றார். மன்மதனை எரித்தது, திரிபுரங்களை எரித்தது, இயமனை காலால் உதைத்தது, யானையின் தோலை உரித்தது, தக்கனது யாகத்தை தகர்த்தது, பிரமனின் சிரத்தைக் கொய்ந்தது, சலந்தரனை அழித்தது ஆகிய வீரச்செயல்களைக் குறிப்படும் பாடல்கள் மிகவும் அதிகமாக முதல் ஏழு திருமுறைகளில் காணப்படுகின்றன.

ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில்

சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்துத் தொல்லுலகில் பல்லுயிரைக் கொல்லும் கூற்றைக்

காலத்தால் உதை செய்து காதல் செய்த அந்தணனைக் கைக்கொண்ட செவ்வான் வண்ணர்

பால் ஒத்த வெண்ணீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே

அரிசிற்கரைப் புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.9.2) சுந்தரர் நெருப்பினை உமிழும் சூலத்தை அந்தகனின் உடலில் பாய்ச்சியதாக கூறுகின்றார். பிரமனின் சிரம் அறுத்த வீரச்செயல் மற்றும் அந்தகனைக் கொன்ற வீரச் செயல் ஆகிய இரண்டு செயல்களை குறிப்பிட்ட சுந்தரர், திருமாலுக்கு ஆழி அளித்ததை குறிப்பிட்டு, மூன்றாவது வீரச் செயலாகிய, சலந்தரனை வென்றதையும் குறிப்பால் உணர்த்துகின்றார். அரக்கன் சலந்தரனை இரண்டு கூறாக அறுத்த, சக்கரப்படை தானே பெருமானால் திருமாலுக்கு அளிக்கப் பட்டது.

அருமலரோன் சிரம் ஒன்று அறுத்தீர் செறுத்தீர் அழல் சூலத்தில் அந்தகனைத்

திருமகள் கோன் நெடுமால் பல நாள் சிறப்பாகிய பூசனை செய் பொழுதில்

ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவாக ஒர் கண்மலர் சூட்டலுமே

பொருவிறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதனீரே

கலயநல்லூர் தலத்தின் மீது அருளிய பாடலிலும் (7.16.2) இறைவன் அந்தகன் மேல் சூலம் பாய்ச்சிய செயல் குறிப்பிடப்படுகின்றது. உலகெங்கும், தான் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இழைத்த கொடுமைகளால் இருள் பரவச் செய்தவன் என்பதால் அந்தகன் என்று பெயர் வந்ததாக கூறுவார்கள். இந்த செய்தியே இங்கு இருள் மேவும் அந்தகன் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது.

செருமேவு சலந்தரனைப் பிளந்த சுடர் ஆழி செங்கண் மலர் பங்கயமாச் சிறந்தானுக்கு அருளி

இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனைத் தோள் முரித்த இறையவன் ஊர் வினவில்

பெருமேதை மறையொலியும் பேரி முழவொலியும் பிள்ளையினம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருகக்

கருமேதி புனல் மண்டக் கயல் மண்டக் கமலம் களிவண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே

திருவாசகம் பூவல்லிப் பதிகத்தின் பாடலில் அந்தகன் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. பெருமான் கோபம் கொண்டு அக்னித்தேவன், சூரியன்,இராவணன், அந்தகன், கூற்றுவன், திருமால், பிரமன், இந்திரன், சந்திரன், எச்சன் மற்றும் தக்கன் ஆகியோருக்கு அளித்த தண்டனை குறித்தும், பெருமான் கோபம் கொண்டால் அந்த கோபத்தின் விளைவை எவராலும் தாங்க இயலாது என்பதையும் மேலே குறிப்பிடப்பட்ட அனைவரும் பெருமானின் கோபத்தின் விளைவாக தங்களது தன்மைகள் மாற்றப் பெற்றனர் என்பதை உணர்த்தி பெருமானின் வலிமையை சிறப்பித்துப் பாடியவண்ணம் நாம் பூக்களைக் கொய்வோமாக, என்று பெருமானுக்கு பூமாலைகள் சூட்டி மகிழும் மகளிர்கள் பாடும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. அங்கி=அக்னி;அருக்கன்=சூரியன்; பரிசு=தன்மை;

அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன்

செங்கண் அரி அயன் இந்திரனும் சந்திரனும்

பங்கமில் தக்கனும் எச்சனும் தம் பரிசழியப்

பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ

அந்தகனின் செருக்கினை அடக்கிய வீரச் செயல், திருமூலராலும் குறிப்பிடப் படுகின்றது. ஆணவ மலத்தினை அடக்க முயற்சி செய்யும் உயிர்கள் இறைவனை வணங்கி, அவனது உதவியால் ஆணவ மலத்தினை அடக்கலாம் என்பதே இந்த பாடலின் உட்கருத்து என்று சான்றோர்கள் கூறுகின்றனர்.குருத்து=நுனி; அந்தகன் பெருமானை வழிபட்டு பெற்ற வரத்தினால் வலிமை கொண்டு விளங்கினான் என்று கந்த புராணம் கூறுகின்றது. பலரையும் வருத்திய அந்தகன், அந்த கொடிய செயல்களுக்கு உரிய தண்டணையை இயமன் மூலம் பெறாமல், சிவபெருமானால் தண்டனை அளிக்கப்பட்டு பின்னர் பெருமானின் கணங்களில் ஒருவராக கருதப்படும் நிலைக்கு உயர்ந்தான் என்ற செய்தி, சிவதீக்கை பெற்ற அடியார்கள் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு உரிய தண்டனையை சிவபெருமான் மூலமே பெறுவார்கள் என்ற சிவாகமக் கருத்து இந்த நிகழ்ச்சி மூலம் உணர்த்தப் படுகின்றது என்று திரு அருணை வடிவேல் முதலியார் அவர்கள் விளக்கம் அளிக்கின்றார். தனது தண்டனை பெறுகின்ற தவறுகள் செய்திருந்தாலும், நரகம் அழைத்துச் செல்லப்பட்டு இயமன் அந்த தண்டனைகளை அளிப்பதைத் தவிர்த்து, தனது அடியார்களுக்கு தானே தகுந்த தண்டனை அளித்து, அந்த அடியார்களை பெருமான் நல்வழிப்படுத்துவார் என்ற செய்தி உணர்த்தப் படுகின்றது.

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்

வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்

வருத்தம் செய்தான் என்று வானவர் வேண்டக்

குருத்து உயர் சூலம் கைக் கொண்டு கொன்றானே

கருடன் பற்றிய குறிப்பு காணப்படும் திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். ஆனைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.109.4) கருடனுக்கு அச்சமூட்டிய இடபம் என்று குறிப்பிடுகின்றார். அருளன்=அருள் புரிபவன்; கருள்=கருமை நிறம்; வெருள் விடை=பகைவர்க்கு அச்சமூட்டும் இடபம்; கருடனை முதல் அடியில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், இரண்டாவது அடியில் அச்சமூட்டும் இடபம் என்று குறிப்பிடுவது நமக்கு, ஒரு சமயம் கருடனுக்கு கயிலாயத்தில் ஏற்பட்ட துன்பத்தினை நினைவூட்டுகின்றது. ஒரு முறை கயிலாயத்திற்கு வந்த திருமால்,தன்னுடைய வாகனமாகிய கருடனை வாயிலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். வெளியே நந்தியுடன் பேசிக் கொண்டிருந்த போது கருடன்,சிவபெருமானைப் பற்றி இழிவாக பேசவே, நந்தியம் பெருமானுக்கு கோபம் வந்தது. கோபத்தினால் பலமாக கனைத்த நந்தி, பின்னர் தனது மூச்சுக் காற்றினை வெளியே வேகமாக விடவே. அந்த வேகத்தினைத் தாங்க முடியாமல் கருடன் காற்றால் தள்ளப்பட்டு எங்கோ கீழே விழுந்து இறந்தது, வெளியே வந்த திருமால் நடந்ததை அறிந்து சிவபெருமானிடம் கருடனுக்கு மீண்டும் உயிர் அளிக்குமாறு வேண்டினார். சிவபெருமானும் கருணை கூர்ந்து, கருடனை பிழைப்பித்தார், நந்தியையும் சாந்தப் படுத்தினார். இந்த நிகழ்ச்சி தான் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

கருடனை ஏறு அரி அயனோர் காணார்

வெருள் விடை ஏறிய மயேந்திரரும்

கருள் தரு கண்டத்து எம் கயிலையாரும்

அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே

கருடனுக்கு தண்டனை அளித்த இந்த விவரம் வீழிமிழலை தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடலில் (6.53.8) கூறப்பட்டுள்ளது. ஆதனம்=ஆசனம் புண்டரிகப் புதுமலர்= அடியார்களின் உள்ளத் தாமரை;

குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும் குடமூக்கில் இடமாக்கிக் கொண்டார் போலும்

புண்டரிகப் புதுமலர் ஆதனத்தார் போலும் புள்ளரசைக் கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும்

வெண்தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும்

அண்டத்து புறத்து அப்பாலானார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

நக்கீர தேவ நாயனார் அருளிய கோபபிரசாதம் பதிகத்திலும் (பதினோராம் திருமுறை) இந்த நிகழ்ச்சி, கார் மலை உருவ கருடனைக் காய்ந்தும் என்ற தொடர் மூலம் சொல்லப்படுகின்றது. இந்த செய்தி திருவாரூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் ஒரு பாடலிலும் (6.26.3)சொல்லப் படுகின்றது. ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டான் என்று, திருமால் தனது கண்ணினை பேர்த்தெடுத்து பெருமானுக்கு அர்ச்சனை செய்த நிகழ்ச்சியை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி தோறூழி உயர்ந்தான் தன்னை

வருகாலம் செல்காலம் ஆயினானை வன்கருப்புச் சிலைக் காமன் உடல் அட்டானை

பொருவேழக் களிற்று உரிவைப் போர்வையானை புள்ளரையன் உடல் தன்னை பொடி செய்தானை

அருவேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்தவாறே

சேந்தனாரும் வீழிமிழலை தலத்தின் மீது அருளிய தனது திருவிசைப்பா பாடலில் (ஒன்பதாம் திருமுறை) கருடனின் செருக்கு அழிக்கப்பட்ட செய்தியை கூறுகின்றார். இந்த பாடலில் பெருமானால் தங்களது செருக்கு அழிக்கப்பட்ட பலரின் பட்டியல் கொடுக்கப் பட்டுள்ளது. தக்கன், சூரியன். சலந்தரன்.பிரமன். சந்திரன், இந்திரன். எச்சன் (தக்க யாகம் நடத்திய வேள்வித் தலைவன்), அரக்கன் இராவணன், திரிபுரத்து அரக்கர்கள், தாருகவனத்து முனிவர்களால் ஏவப் பட்ட மத யானை, கருடன், இயமன், மன்மதன் என்பதே அந்த பட்டியல். இந்த பாடலில் சேந்தனார், பெருமானின் அடியார்களின் பாதத்தில் உள்ள துகளை எடுத்துத் தனது தலையில் வைத்து கொண்டு அவர்களுக்கு அடிமையாக தான் இருக்கும் நிலையை வெளிப்படுத்துகின்றார். மறலி=இயமன்; வேள்=மன்மதன்; மிகை=செருக்கு;

தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன்

மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன்

திக்கெலாம் நிறைந்த புகழ்த் திருவீழி மிழலையான் திருவடி நிழல் கீழ்ப்

புக்கு இருந்தவர் தம் பொன்னடிக் கமலப் பொடி அணித்து அடிமை பூண்டேனே

திருஞானசம்பந்தர் அருளிய இந்த பாடலில் இறப்பிற்கு காரணமாகத் திகழும் காலனும் பிறப்பிற்கு காரணமாக இருக்கும் காமனும் குறிப்பிடப் பட்டுள்ளனர்.காமனின் செயல்களால் தானே உயிர்கள் புணர்ச்சியில் ஈடுபட்டு, இனப்பெருக்கத்திற்கு உதவுகின்றன. ஆனால் பெருமானோ இறப்பையும் பிறப்பையும் வென்றவர் என்று இறப்பிற்கு காரணமாக உள்ள காலனையும் பிறப்பிற்கு காரணமாக உள்ள மன்மதனையும் வென்ற நிகழ்ச்சிகள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. ஆதியந்தம் இல்லாதவர் என்று தானே வேதங்களும் புராணங்களும் திருமுறைப் பாடல்களும் இறைவனை குறிப்பிடுகின்றன. இவ்வாறு பிறப்பிறப்பைக் கடந்த பெருமான் தானே, உயிர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கும் உதவியாக இருக்க முடியும். பிரமன் திருமால் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டவர்கள் என்பதால், எவ்வாறு தாங்கள் அடைய முடியாத விடுதலையை அவர்களால் மற்றவர்களுக்கு அளிக்கமுடியும். எனவே தான் சிவபெருமானை வழிபட்டு, அவரது அருளினால், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதல் பெறுகின்ற வழியை நாடுமாறு அருளாளர்கள் திருமுறைப் பாடல்கள் மூலம் நமக்கு அறிவுரை கூறுகின்றனர்.

காளமேகம்=கருமை நிறம் கொண்ட மேகம்; காளம் என்பதற்கு கருமை நிறம் கொண்ட ஆலகால விடம் என்ற பொருளும் பொருந்தும். ஆலகால விடம் படர்ந்தது போன்று கருமை நிறத்தில் உள்ள காலன், தனது செயலிலும் கொடுமையான ஆலகால விடம் போன்று செயல்பட்டு, உயிர்களை வதைக்கின்றான்.காமனை நீளமாய் நின்று எய்த காமன் என்று குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் ஆற்றலை முழுதும் உணர்ந்திருந்த மன்மதன், சற்று தொலைவில் நின்ற வண்ணம், மலரம்புகளை பெருமான் மேல் விடுத்து அவரது தவத்தினைக் கலைப்பதற்கு முயற்சி செய்தான். மன்மதன் அம்பு விடுத்ததை உணர்ந்த பெருமான்,தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை நோக்கவே, அவனது உடல் எரிந்து அழிந்து விடுகின்றான். பின்னர் அவனது மனைவி இரதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, மன்மதனை உயிர்ப்பித்த போதிலும், மன்மதனுக்கு உடல் கிடைக்கவில்லை. ஆனாலும் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன் உடலற்ற அனங்கனாக தனது தொழிலைத் தொடர்ந்து செய்யும் வாய்ப்பு அவனுக்கு கிட்டுகின்றது. எனவே இன்றும் மன்மதன், நம் எதிரே தோன்றாமல்,தனது தொழிலைச் தொடர்ந்து செய்து வருவதால், நீள நின்று அம்பு எய்பவனாக இருக்கும் தன்மை என்ற குறிப்பு, மன்மதனின் இன்றைய செயல்களுக்கும் மிகவும் பொருத்தமாக உள்ளது.

நாள்தோறும் நாகேச்சரத்து இறைவனை நெருங்கி வழிபடும் அடியார்களை, பொதுவாக தீயவை பயக்கும் நாளும் கோளும் நெருங்காது என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு, கோளறு திருப்பதிகத்தின் பாடல்களை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் பாடல்களில், பெருமான் தனது உள்ளத்தில் உறைவதால், நாளும் கோளும் தனக்கு எந்த விதமான தீமையும் செய்யாமல், நல்லனவே செய்யும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் திருஞானசம்பந்தர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. பெருமானின் நினைவுகளுடன் திருஞானசம்பந்தர் வாழ்ந்தது போன்று, நாமும் எப்போதும் பெருமானின் நினைவுகளுடன் வாழ்ந்தால், நமக்கும் நாளும் கோளும் நல்லனவே செயும் என்பது திண்ணம். எனவே நாமும் அத்தகைய முயற்சியில் ஈடுபடுவோமாக.

பொழிப்புரை:

கருத்த மேகம் போன்ற நிறத்தில் உடல் கொண்டுள்ள இயமனும், அந்தகாசுரனும், கருடனும், தொலைவாக நின்று தனது தொழிலைச் செய்கின்ற காமனும்,பெருமானிடம் பட்ட தண்டனைகளை நினைவு கூர்ந்து, உலகத்தவரே பெருமான் கோபம் கொள்ளும் வகையில் எந்த தவறையும் செய்யாமல் இருப்பீர்களாக. நாள்தோறும், நாதன் அமர்கின்ற நாகேச்சரத் தலத்தை நினைத்து, மனதினால் அந்த தலத்தினை நெருங்கி, இறைவனை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் எந்தவிதமான தீமையும் செய்யாமல் நல்லனவே செய்யும் என்பதை நினைவு கொள்வீர்களாக.

பாடல் 7:

வேயுதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய்ப்

பாய் புனல் வந்து அலைக்கும் பழங்காவிரித் தென்கரை

நாயிறும் திங்களும் கூடி வந்தாடு நாகேச்சரம்

மேயவன் தன் அடி போற்றி என்பார் வினை வீடுமே

விளக்கம்:

வேயுதிர்=முற்றிய மூங்கலிலிருந்து வெடித்துச் சிதறும் முத்துகள்; மறுப்பு=தந்தம்; விராய்= கலந்து; நாயிறு=ஞாயிறு, சூரியன்; சூரியனும் சந்திரனும் இந்த தலத்து இறைவனை வழிபட்ட தலபுராணச் செய்தி இங்கே குறிப்பிடப்படுகின்றது. சூரியனும் சந்திரனும் நாகேச்சரத்து நாதனை வழிபட்ட செய்தி அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்திலும் (5.52.4) காணப்படுகின்றது. தலபுராணத் தகவல்களின் படி, சந்திரன் சூரியன், மற்றும் கோள் இராகு, கார்க்கோடகன், ஆதிசேஷன், நாகராஜன், தக்ஷன் ஆகிய பாம்புகளும் தலத்து இறைவனை வணங்கினார்கள். இந்த தகவல் இங்கே கொடுக்கப்படுகின்றது. உலகினைத் தனது தலையில் தாங்குவதாக கருதப்படும் ஆதிசேஷன், ஜனப்பெருக்கத்தால் பூமியின் சுமை மிகவும் அதிகரித்தபோது,பூமியைத் தாங்க முடியாமல் தளர்வடைந்து இறைவனை வேண்டி, குடந்தை கீழ்க்கோட்டம், நாகேச்சரம், பாம்புரம் மற்றும் நாகைக் காரோணம் ஆகிய தலங்கள் சென்று வழிபட்டு, தான் இழந்த வலிமையைப் பெற்றதாக புராணங்களில் கூறப்படுகின்றது. இந்த இரண்டு தகவல்களும் இந்த பதிகத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. பணி=பணிவிடை; மைந்தர்= வல்லமை உடையவர்;

சந்திரன்னொடு சூரியர் தாமுடன்

வந்து சீர்வழிபாடுகள் செய்த பின்

ஐந்தால் அரவின் பணி கொண்டருள்

மைந்தர் போல் மணி நாகேச்சரவரே

பொழிப்புரை:

முற்றிய மூங்கிலிலிருந்து வெடித்துச் சிதறும் முத்துக்கள், யானைத் தந்தங்கள் ஆகிய பொருட்களை அடித்துக் கொண்டு வரும் காவிரி நதி, தான் பாயும் வழியில் உள்ள நிலங்களை வளப்படுத்தும் காவிரி நதி, பண்டைய நாளிலிருந்தே தமிழகத்தில் பாய்ந்து வருகின்றது. இந்த காவிரி நதியின் தென்கரையில் உள்ள நாகேச்சரம் தலத்து தீர்த்தத்தில் நீராடி, சூரியனும் சந்திரனும் இறைவனை வழிபட்டு பலன் அடைந்தனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த நாகேச்சரம் தலத்தினில் நிலையாக பொருந்தி உறையும் இறைவனின் திருவடிகளைப் போற்றிப் புகழ்ந்து வழிபடும் அடியார்களை விட்டுவிட்டு வினைகள் விலகிவிடும்.

பாடல் 8:

இலங்கை வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும்

மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம் மல்கிய

நலங்கொள் சிந்தையவர் நாள்தொறும் நண்ணும் நாகேச்சரம்

வலங்கொள் சிந்தை உடையார் இடராயின மாயுமே

விளக்கம்:

மலங்கி=கண் பிதுங்கி, மனம் கலங்கி; வீழம்மலை=வீழ+அம்+மலை; அம்=அழகிய; அரக்கன் கதறி வீழும் வண்ணம், அழகிய கயிலாய மலையின் மீது தனது கால் பெருவிரலை ஊன்றி பெருமான், அரக்கனை அடர்த்தார் என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த பாடலில் நாகேச்சரம் தலத்தினை வலம் வர நினைக்கும் அடியார்களது இடர்கள் முற்றிலும் தீர்ந்துவிடும் என்று கூறுகின்றார். நாகேச்சரம் என்ற சொல்லுக்கு, நாகேச்சரம் தலம் என்றும் நாகேச்சரம் தலத்தினில் குடிகொண்டிருக்கும் இறைவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தலத்தினை வலம் கொள்வது, பண்டைய நாட்களில் மிகவும் புனிதமாக கருதப்பட்டது இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. மூவர் பெருமானார்கள் தலத்தின் புனிதம் கருதி வலம் வந்த செய்தியை நாம் பெரியபுராணத்தில் காண்கின்றோம். முதுகுன்றம் சென்ற ஞானசம்பந்தர் குன்றினை வலம் வந்த செய்தியும், தில்லைச் சிதம்பரத்து நான்கு வீதிகளையும் பூமியில் உருண்டு அப்பர் பிரான் வலம் வந்த செய்தியும், சீர்காழி தலத்தின் புனிதம் கருதி அதனை மிதிக்காமல் நகரினை சுந்தரர் வலம் வந்த செய்தியும் இங்கே குறிப்பிடத் தக்கன. மேலும் பல தேவாரப் பாடல்கள் திருக்கோயிலை வலம் வருவதால், தலத்தினை வலம் வருவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை குறிப்பிடுகின்றன. அத்தகைய பதிகங்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.118.2), திருஞானசம்பந்தர், மூப்பு வந்தடைந்து நம்மை வருத்துவதன் முன்னர், பருப்பதம் வந்தடைந்து, வாய் நிறைய தோத்திரங்கள் சொல்லி இறைவனை வலம் வந்து தலை தாழ்த்திப் பணிந்து அவனை வாழ்த்துவோம் என்று அனைவரையும் அழைக்கின்றார். தோல் சுருங்கி உடல் தளர்ந்து முடி நரைத்த தோற்றத்துடன் காணப்படும் முதுமைக் கோலத்தை, அருகில் இருக்கும் திருக்கோயிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் தருணத்தை சிந்தத்து பார்த்து, உடலில் வலிமை இருக்கும் போதே, இறைவனைப் பணிந்து வணங்குவதில் ஈடுபட வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார்.

நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில்

நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே

வாய் புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலை வணங்கிப்

பாய்புலித் தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே

பெருமானை வலம் வரும் அடியார்கள் அவனை வாழ்த்தியும் புகழ்ந்தும் இசைப் பாடல்கள் பாடி வலம் கொள்ளும் மறைக்காட்டு மணாளன் என்று சம்பந்தர் குறிப்பிடும் பதிகம் (2.37.8) இது. அலங்கல்=அசைதல், வருத்துதல்; அரக்கன் இராவணனை முதலில் வருத்தி பின்னர் அவனுக்கு அருள் புரிந்தது யாது காரணம் பற்றியோ என்று இறைவனை நோக்கி சம்பந்தர் வினவும் பாடல்.

கலம் கொள் கடல் ஓதம் உலாவு கரை மேல்

வலம் கொள்பவர் வாழ்த்தி இசைக்கும் மறைக்காடா

இலங்கை உடையான் அடர்பட்டு இடர் எய்த

அலங்கல் விரல் ஊன்றி அருள் செய்தவாறே

புகலூர் வர்த்தமானீச்ச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.92.1) திருஞான சம்பந்தர், இந்த தலத்து அடியார்கள் வட்டமாக இறைவனை வலம் வந்து அவனது திருவடிகளைப் போற்றி வணங்குகின்றனர் என்று கூறுகின்றார். பட்டம்=உத்தரீயம், மேலாடை, அங்கவஸ்திரம்; பாணி=கங்கை நதி;புள்=பறவை; பேடை=பெண் பறவை; புட்டன்=புள்+தன்; நவின்று=விருப்பமுடன்;

பட்டம் பால்நிற மதியம் படர்சடைப் சுடர்விடு பாணி

நட்டம் நள்ளிருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில்

புட்டன் பேடையொடாடும் பூம்புகலூர்த் தொண்டர் போற்றி

வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.9) வலஞ்சுழி தலத்தினை வலம் வரும் அடியார்கள், தங்களது தொல்வினைகளும் துன்பங்களும் இறைவன் அருளால் நீங்கப் பெற்றவர்களாக விளங்குவார்கள் என்று கூறுகின்றார். அரவணை= பாம்பாகிய படுக்கை; துயின்றான்=தூங்கிய திருமால்; காண்பரிதாயவர்=காண்பதற்கு அரியவராக விளங்கிய சிவபெருமான்; தடக்கை=அகன்ற கை; பாதத்தால் சுழலும் மாந்தர்கள்=தங்களது பாதங்களால் வலம் வரும் அடியார்கள்; தொல்வினை=தொன்று தொட்டு பல பிறவிகளாக தொடர்ந்து வரும் வினைகள்; மழலை வீணை=மழலைச் சொல் போன்று இனிய இசையினை எழுப்பும் வீணை; ஓம்பிய=வளர்த்த; அண்ணல்= தலைவன்;

அழலது ஓம்பிய அலர் மிசை அண்ணலும் அரவணைத் துயின்றானும்

கழலும் சென்னியும் காண்பரிதாயவர் மாண்பு அமர் தடக்கையில்

மழலை வீணையர் மகிழ் திருவலஞ்சுழி வலம் கொடு பாதத்தால்

சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே

பெருமானின் திருப்பாதங்களின் மேல் மலர்கள் தூவி வணங்கிய பின்னர் பெருமானை வலம் வரவேண்டும் என்றும் அவ்வாறு வலம் வருவாரின் வினைகள் மாய்ந்துவிடும் என்றும் திருஞானசம்பந்தர் திருவாடானை பதிகத்தில் உணர்த்தும் பாடல் (2.112.7) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. துலங்கு=அழகுடன் பொலிந்து விளங்கும்;

துலங்கு வெண்மழு ஏந்திச் சூழ் சடை

அலங்கலான் உறை ஆடானை

நலம் கொள் மாமலர் தூவி நாடொறும்

வலம் கொள்வார் வினை மாயுமே

இரும்பை மாகாளத்து இறைவனை வலம் வந்து தொழும் அடியார்களின் பிணிகள் தீர்க்கப்படும் என்று திருஞானசம்பந்தர் கூறும் பாடலிது (2.117.8). இங்கே பிணி என்று பிறவிப்பிணியை குறிப்பிடுகின்றார். வட்டம் சூழ்தல்=வலம் வருதல்; இட்டம்=விருப்பம்;

நட்டத்தோடு நரியாடு கானத்து எரியாடுவான்

அட்டமூர்த்தி அழல் போலுருவன் அழகாகவே

இடமாக இருக்கும் இடம் போல் இரும்பை தனுள்

வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே

பூந்தராய் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (3.02.01), திருஞானசம்பந்தர்,அனைத்து திசைகளிலும் உள்ள வானவர்கள் ஒன்று கூடி நிறைந்து, பெருமானை வலம் வந்து சிறந்த மலர்கள் தூவி வழிபடுகின்றனர் என்று கூறுகின்றார்.புந்தி=மனம்;

பந்து சேர் விரலாள் பவளத்துவர்

வாயினாள் பனிமாமதி போல் முகத்து

அந்தமில் புகழாள் மலைமாதொடும் ஆதிப்பிரான்

வந்து சேர்விடம் வானவர் எத்திசையும்

நிறைந்து வலஞ்செய்து மாமலர்

புந்தி செய்து இறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே

கழிப்பாலை தலத்து பெருமானை வளம் வருவோர்களின் வினைகள் மாயும் என்று கூறும் பாடலிது (3.44.8). ஈரைந்து இரட்டி=இருபது; துலங்க=துளங்க என்ற சொல்லின் திரிபு, நடுங்க; கலங்கள்=கப்பல்கள்; கப்பல்கள் வந்துலவும் தலம் என்று கூறுவதால், சம்பந்தரின் காலத்தில் கழிப்பாலை சிறந்த துறைமுகமாக இருந்திருக்க வேண்டும். கழிப்பாலை இறைவனை, கழிப்பாலை தலத்தை, வலம் வரும் அடியார்கள் என்று இரண்டு விதமாக பொருள் கொள்வதும் பொருத்தமே.

இலங்கை மன்னனை ஈரைந்து இரட்டி தோள்

துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்

கலங்கள் வந்து உலவும் கழிப்பாலையை

வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே

பெருமானின் புகழினை இசைப்பாடல்களாக பாடி திருக்கோயிலை, தங்களது உடல் தளர்ச்சி அடையும் வண்ணம் மீண்டும் மீண்டும் வலம் வரும் அடியார்களின் கண்களிலிருந்து ஆனந்தக்கண்ணீர் அருவி போன்று பெருகுவதால், நிலத்தில் உள்ள மண்ணுடன் கலந்து சேறாக மாறி நிலத்தின் வெடிப்புகளை அழித்து சமன் படைக்கும் தன்மை நிகழ்கின்ற தலம் நல்லூரே பெருமான் உறையும் தலம் ஆகும் என்று அந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.83.8) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஏறு புகழ்=வளர்ந்து வரும் புகழ்; அயரும்=தளர்ச்சி அடைதல்; உடல் தளர்ச்சி அடையும் வண்ணம், மீண்டும் மீண்டும் பெருமானை வலம் வந்தனர் என்ற குறிப்பு தோன்றுகின்றது. அருவி=கண்களிலிருந்து அருவி போன்று பொழியும் கண்ணீர்;கமர்=நிலத்தில் உள்ள வெடிப்புகள்; வழிய=வெடிப்புகளை நிரப்பி பூமி சமன்படுத்த;.

ஏறு பெற்ற தென் இலங்கையவர் கோனை அருவரையில்

சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடமாகும்

கூறும் அடியார்கள் இசை பாடி வலம் வந்தயரும் அருவி

சேறு கமரான வழியத் திகழ் தரும் திரு நலூரே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.09.03) அப்பர் பிரான், மறைக்காட்டுப் மணாளனை அடியார்கள் வலம் வந்து வணங்குகின்றனர் என்று கூறுகின்றார். சுரபுன்னை மரங்கள் தற்போது மிகவும் அதிகமாக, சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் பகுதியில் காணப் படுகின்றன. இந்த மரங்கள் கடல் அலைகளால் ஏற்படும் மண் அரிப்பினையும் கடலின் சீற்றத்தையும் தவிர்க்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்த உண்மை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே தமிழர்கள் அறிந்திருந்து, மறைக்காடு தலத்தில் கடலோரத்தில் சுரபுன்னை மரங்களை வளர்த்த செய்தியை நாம் இந்த தேவாரப் பாடலிலிருந்து உணருகின்றோம். ஞாழல்=சுரபுன்னை; சின்ன வேடம்=உருத்திராக்கம் திருநீறு சடைமுடி முதலியன சிவச் சின்னங்களாக கருதப் படுகின்றன. இத்தைகைய சின்னங்களை பெரிய செல்வமாக மதித்து இறைவன் அணிகின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

புன்னை ஞாழல் புறணி அருகெலாம்

மன்னினார் வலம் கொள் மறைக்காடரோ

அன்ன மென் நடையாளை ஒர் பாகமாச்

சின்ன வேடம் உகப்பது செல்வமே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.66.10) வலஞ்சுழியினை வலம் வரும் அடியார்களின் பாதங்களைத் தனது தலையின் மேல் தாங்குவேன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வலஞ்சுழி என்பதற்கு வலஞ்சுழித் தலம் என்றும் வலஞ்சுழி தலத்து இறைவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். அரக்கன் இராவணனின் தோள்கள் நெருங்கும் வண்ணம் ஊன்றிய விரலினை உடைய பாதம் என்றாலும், பின்னர் அந்த அரக்கனுக்கு பல நன்மைகள் அளித்தது பற்றி நலம் கொள் பாதம் என்று குறிப்பிடுகின்றார்.

இலங்கை வேந்தன் இருபது தோள் இற

நலம் கொள் பாதத்து ஒரு விரல் ஊன்றினான்

மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி

வலம் கொள்வார் அடி என் தலை மேலவே

நள்ளாற்றுப் பெருமானை நாள்தோறும் வலம் வரும் அடியார்களின் வினைகள் மாய்ந்துவிடும் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடலை (5.68.10) நாம் இங்கே காண்போம்.

இலங்கை மன்னன் இருபது தோள் இற

மலங்க மால்வரை மேல் விரல் வைத்தவர்

நலம் கொள் நீற்றர் நள்ளாறரை நாடொறும்

வலம் கொள்வார் வினையாயின மாயுமே

அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலில் (5.80.10), இந்த தலத்தை வலம் வரும் அடியார்கள் வானோர்கள் வலம் வந்து வணங்கும் தகுதி படைத்தவர்களாக விளங்குவார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இற்று=நெரிந்து; மலங்க=வருந்த; அலங்கல்=மலர் மாலை;சிவபெருமான் உறைவதால் தான் இந்த தலத்திற்கு இத்தகைய சிறப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் வண்ணம், எம்பிரான் அன்பில் ஆலந்துறை என்று குறிப்பிடுகின்றார்.

இலங்கை வேந்தன் இருபது தோள் இற்று

மலங்க மாமலை மேல் விரல் வைத்தவன்

அலங்கல் எம் பிரான் அன்பில் ஆலந்துறை

வலம் கொள்வாரை வானோர் வலம் கொள்வரே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.83.6) அப்பர் பிரான், நாகைக் காரோணனை வலம் வந்து வழிபடும் அடியார்களின் வினைகள் மாய்ந்துவிடும் என்று கூறுகின்றார். கலங்கள்=கப்பல்கள்; திருமறைக்காடு தலத்தின் பாடல்களிலும் அப்பர் பிரான் கலங்கள் சூழ்ந்த கடற்கரை என்று குறிப்பிடுகின்றார். நாகை மற்றும் மறைக்காடு தலங்கள் கடல் வாணிகத்தால் சிறப்பு வாய்ந்த தலங்களாக தேவார முதலிகள் காலத்தில் இருந்தமை இத்தகைய குறிப்புகள் மூலம் நமக்கு புரிகின்றது. விலங்கல்=மலை; விலங்கல் மெல்லியல் என்ற தொடர் மூலம் மலைமகளாக வளர்ந்த தேவி,பெண்மைக்குரிய மென்மையான உணர்வுகளை உடையவராக இருந்தார் என்று அப்பர் பிரான் நயமாக கூறுகின்றார். அலங்கல்=மாலை; ஆதிபுராணர் என்பதும் தலத்து பெருமானின் திருநாமங்களில் ஒன்றாகும்.

அலங்கல் சேர் சடை ஆதி புராணனை

விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்

கலங்கள் சேர் கடல் நாகைக் காரோணனை

வலம் கொள்வார் வினையாயின மாயுமே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் (7.75.9) சுந்தரர், இறைவனை வலம் வரும் அடியார்களின் வலிய வினைகளைத் தீர்க்கும் மருந்தாக இறைவன் செயல்படுவார் என்று கூறுகின்றார். பெருமானின் திருவடிகளைப் பணிந்து வணங்கும் அடியார்கள், தன்னை அடிமை கொண்டு ஆளும் தகுதி படைத்தவர்கள் என்று சுந்தரர் கூறுவதையும் நாம் உணரலாம். அலங்கல்=அசையும், மோதும்;

வலம் கொள்வார் அவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து

கலங்கக் காலனைக் காலால் காமனைக் கண் சிவப்பானை

அலங்கல் நீர் பொரும் ஆனைக்காவுடை ஆதியை நாளும்

இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே

பொழிப்புரை:

கயிலாய மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்து முயற்சி செய்த, அரக்கன் இராவணனின் பத்து சிரங்களும் அழகிய இருபது தோள்களும் நலிவடையும் வண்ணம், கண் பிதுங்கி மனம் கலங்கும் வண்ணம், அரக்கன் இராவணனை கயிலாய மலையின் கீழே அகப்பட்டு நெரியும் வண்ணம், தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றி அழுத்தியவர் சிவபெருமான். அத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் உறைகின்ற நாகேச்சரம் தலத்தினை, நலம் விளைவிக்கும் சிந்தனை உடைய பெரியோர்கள் நாளும் நெருங்கி இறைவனை வழிபடுகின்றனர், இவ்வாறு பெருமை படைத்த நாகேச்சரம் தலத்தினை வலம் வந்து இறைவனை வணங்கும் சிந்தனை உடைய அடியார்களின் துன்பங்கள் மாய்ந்துவிடும்.

பாடல் 9:

கரிய மாலும் அயனும் அடியும் முடி காண்பொணா

எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா

விரியின் நீர் வந்தலைக்கும் கரை மேவு நாகேச்சரம்

பிரிவிலாதவ் வடியார்கள் வானில் பிரியார்களே

விளக்கம்:

வான்=சிவலோகம்; காண்பொணா=காண முடியாத வண்ணம்; அழைக்கும்=மோதப்படும்

பொழிப்புரை:

கருநிறம் உடைய திருமாலும் பிரமனும், முறையே தனது அடியையும் முடியையும் காண முடியாத வண்ணம், நீண்ட பேரழலாக நிமிர்ந்த சிவபெருமான் அமர்கின்ற இடம் நாகேச்சரம் தலமாகும். இந்த தலம், பெருகி வரும் நீர்வளம் உடைய காவிரி நதியால் மோதப்படும் கரையில் அமைந்துள்ளது. இந்த தலத்தை பிரியாது நின்று, இறைவனை வழிபடும் அடியார்கள், மறுமையில் சிவலோகத்தைப் பிரியாது திகழ்வார்கள்.

பாடல் 10:

தட்டிடுக்கி உறி தூக்கிய கையினர் சாக்கியர்

கட்டுரைக்கும் மொழி கொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை

நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம்

மட்டிருக்கும் மலர் இட்டடி வீழ்வது வாய்மையே

விளக்கம்:

தட்டு=பாய்; வெள்ளிலம்=பிணங்கள் வைக்கப்படும் பாடை; பாடைகள் நிறைந்து காணப் படுகின்ற சுடுகாடு என்பதால் வெள்ளிலங்காடு என்று சொல்லப் பட்டுள்ளது. எந்த இடத்திலும் நிலையாக தாங்காமல், அந்நாளில் சமணத் துறவிகள் இருந்த காரணத்தால், தாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் பாயினையும் குண்டிகை தாங்கிய உறியினையும் எடுத்துச் செல்வது அவர்களது பழக்கமாக இருந்து வந்தது. பனையோலையால் செய்யப்பட்ட பாய்களை அவர்கள் பயன்படுத்தினர். குண்டிகையில் அவர்கள் குடிநீர் எடுத்துச் செல்வர். மட்டு=தேன்; கட்டுரைக்கும்=உண்மையற்ற தகவல்களை இட்டுக்கட்டி,உண்மையானது போன்று சொல்வது;

பொழிப்புரை:

தங்களது கை மற்றும் உடலினிடையே உள்ள கக்கத்தில் பனையோலைப் பாயினை இடுக்கிக் கொண்டும், குடிநீர் கொண்ட குண்டிகை பாத்திரத்தை உறியில் வைத்துக் கொண்டும் திரியும் சமணத் துறவிகள் மற்றும் சாக்கியர்கள், இட்டுக்கட்டி உண்மைக்கு மாறாக சொல்கின்ற சொற்களை உலகத்தவரே,நீங்கள் பொருட்படுத்தாது விடுவீர்களாக. பாடைகள் நிறைந்த சுடுகாட்டின் இடையே, நள்ளிரவில் நடமாடும் வல்லமை வாய்ந்த தலைவனாகிய இறைவன்,நாகேச்சரம் நகரினில் உறைகின்றான். தேன் நிறைந்த புது மலர்களைக் கொண்டு அவனது திருவடிகளில் தூவி, தரையில் விழுந்து அவனை வணங்குவது உண்மையான பயனைத் தரும்.

பாடல் 11:

கந்த நாறும் புனல் காவிரித் தென்கரைக் கண்ணுதல்

நந்தி சேரும் திருநாகேச்சரத்தின் மேன் ஞானசம்

பந்தன் நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய்

எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே

விளக்கம்:

நந்தி என்பது இங்கே பெருமானை குறிப்பிடுகின்றது. நந்துதல் என்றால் படிப்படியாக குறைத்தல் என்று பொருள். நம்மைப் பிணித்துள்ள வினைகளை படிப்படியாக குறித்து முற்றிலும் ஒன்றும் இல்லாத தன்மை ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்த பெருமான் என்று பொருள். கந்தம்=நறுமணம்; உலகு=இங்கே சிவலோகம் என்று பொருள் கொள்ளவேண்டும்;

பொழிப்புரை:

நறுமணம் கமழும் நீரினை உடைய காவிரி நதியின் தென்கரையில் உள்ள நாகேச்சரம் தலத்தில் குடி கொண்டிருப்பவனும், தனது நெற்றியில் கண் கொண்டுள்ளவனும், தன்னைப் பணிந்து வணங்கும் அடியர்களின் வினைகளை குறைத்து அழிப்பதால் நந்தி என்று அழைக்கப் படுபவனும் ஆகிய இறைவன் பால், ஞானசம்பந்தன் தனது நாவினால் சொன்ன இந்த பத்து பாடல்களையும் முறையாக ஓதும் வல்லமை உடையவர்கள், எமது தந்தையாகிய ஈசன் இருக்கின்ற சிவலோகம் சென்று சேரும் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள்.

முடிவுரை:

இந்த பதிகத்தின் பல பாடல்களில் காவிரி நதி அடித்துக் கொண்டு வரும் பல பொருட்கள் குறிப்பிடப்பட்டு, காவிரி நதி இந்த பகுதிக்கு வளம் சேர்க்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. மேலும், தனது அடியார்களுக்கு பல நன்மைகளை நல்கும் நாகேச்சரத்து நம்பனை, வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் நலன்கள் உணர்த்தப் படுகின்றன. முதலாவது பாடலில் பெருமானை வழிபடும் அடியார்கள், பலருக்கும் நன்மை புரியும் அழகிய உள்ளத்துடன் விளங்குவார்கள் என்று சொல்லப் படுகின்றது. இரண்டாவது பாடலில், நாகேச்சரத்து இறைவனைத் தங்களது கண்களால் காணும் பாக்கியம் பெற்றவர்களே,கண்கள் பெற்றதன் பயனை அடைந்தவர்கள் என்று கூறுகின்றார். மூன்றாவது பாடலில் இந்த தலத்து இறைவனின் திருப்பாதங்களைத் தொழும் அடியார்களுக்கு வாழ்வில் துன்பங்கள் ஏதும் இருக்காது என்று கூறுகின்றார். இந்த தலத்து இறைவன் பால் அன்பு வைத்துத் தொழுகின்ற அடியார்கள்,வீடுபேறு அடைகின்ற வழியில் முன்னேறிச் செல்பவர்களாக விளங்குவார்கள் என்று நான்காவது பாடலில் கூறுகின்றார். ஐந்தாவது பாடலில், நாள்தோறும் நாகேச்சரத்து இறைவனை நெருங்கி வழிபடும் அடியார்கள் வழிபடும் அடியார்கள், முக்தி உலகம் சென்றடைந்து சிவபெருமானுடன் ஒன்றறக் கலந்து சாய்ஜ்ஜியப் பதவி அடைவார்கள் என்று கூறுகின்றார். நாகேச்சரம் தலத்து இறைவனை நாள்தோறும் நெருங்கி வழிபடும் அடியார்களுக்கு, நாளும் கோளும் நல்லனவே செய்யும் என்று கூறுகின்றார். ஏழாவது பாடலில் சூரியன் மற்றும் சந்திரன் வழிபட்ட செய்தியும், நாதனின் திருவடிகளை போற்றி என்று புகழும் அடியார்களை விட்டு, அவர்களை அந்நாள் வரை பிணைந்திருந்த வினைகள் கழன்று ஓடிவிடும் என்ற செய்தியும் சொல்லப் பட்டுள்ளன. நாகேச்சரத்து தலத்தினை வலம் வரும் அடியார்கள், தங்களது வினைகள் நீங்கப் பெறுவார்கள் என்று கூறுகின்றார். நாகேச்சரத்தை விட்டு பிரியாமல், என்றும் இந்த பெருமானை வணங்கி வழிபடும் அடியார்கள், மறுமையில் முக்தி உலகத்தை விட்டு பிரியாமல் இருப்பார்கள் என்று ஒன்பதாவது பாடலில் கூறுகின்றார்.நாகேச்சரத்து நம்பனை, புது மலர்கள் தூவி வழிபடும் அடியார்கள் உண்மையான பயனாகிய முக்தி உலகினை மறுமையில் பெறுவார்கள் என்று பத்தாவது பாடலில் கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில் இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், சிவபெருமான் வாழ்கின்ற உலகம் சென்றடைவார்கள் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் பல பாடல்களில், நான்காவது ஐந்தாவது ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில், இந்த தலத்து இறைவனை குறித்து செய்யப்படும் வழிபாடு முக்திப் பேற்றினைப் பெற்றுத் தரும் என்று சொல்லப்படுகின்றது. மேலும் வினைகள் மாயும் என்றும் பாவங்கள் தீரும் என்றும் ஏழாவது மற்றும் நான்காவது பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. எனவே நாம் இந்த தலம் சென்றடைந்து இறைவனை வழிபட்டு அவனது அருளால் நமது வினைகளையும் பாவங்களையும் தீர்த்துக் கொண்டு மறுமையில் முக்தி உலகம் சென்றடைவதற்கு வழி வகுத்துக் கொள்வோமாக.



Share



Was this helpful?