பதிக எண்: 1.101 - கண்ணார்கோயில் - குறிஞ்சி
பின்னணி:
தனது நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞான சம்பந்தருக்கு அவரது பெற்றோர்களால் உபநயனம் செய்து வைக்கப் பட்டது. பல நாட்கள் சீர்காழியில் தங்கிய திருஞான சம்பந்தர் மீண்டும் பல தலங்களைக் காண ஆவல் கொண்டமையால், தனது விருப்பத்தைத் தனது தந்தையிடமும் நீலகண்ட யாழ்ப்பாணரிடமும் தெரிவித்தார். அந்நாள் வரை நடைபெற்ற நான்கு தலயாத்திரைகளிலும் பங்கேற்ற அவரது தந்தையார், தனக்கு வயதாகியதால் முன் போன்று நெடுந்தூரப் பயணங்கள் மேற்கொள்ள இயலாது என்றும் வேள்வி செய்யவேண்டும் என்ற ஆவல் இருப்பதால் பயணங்கள் மேற்கொள்ள இயலாது என்றும் கூறினார். எனினும் தவம் இருந்து பெருமான் அருளினால் அருமையாக பெற்ற உன்னைப் பிரிந்து இருப்பது கடினம் என்பதால் சில நாட்கள் உன்னுடன் பயணம் மேற்கொள்வேன் என்று தனது நிலையினை திருஞான சம்பந்தருக்கு உணர்த்தினார். இதனை உணர்த்தும் பெரிய புராண பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் பெருமானையே தனது தந்தையாக எப்போதும் கருதியமையால், சிவபாத இருதயரை, குலத்தாதை என்று சேக்கிழார் நயமாக குறிப்பிடுகின்றார். இந்த தல யாத்திரையில், பல அதிசயங்கள் நிகழ்கின்றன.
பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும்
அருமையால் உம்மைப் பயந்த அதனால் பிரிந்து உறைவாற்றேன்
இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும்
ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார்
தந்தையார் இவ்வாறு உரைத்ததைக் கேட்ட திருஞானசம்பந்தர், தந்தையார் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மற்றுமுள்ள அடியார்கள் புடைசூழ சீர்காழி திருக்கோயிலின் உள்ளே சென்று பெருமானை வணங்கிய பின்னர் தனது ஐந்தாவது பயணத்தை தொடங்குகின்றார். ஒவ்வொரு முறையும் தனது பயணத்தைத் தொடங்கும் திருஞானசம்பந்தர், சீர்காழி பெருமானை தரிசனம் செய்து அவரை வணங்கிச் செல்வதை பழக்கமாகக் கொண்டிருந்ததை நாம் அவரது சரித்திரத்திலிருந்து அறியலாம். ஊர் மக்கள் பிரியா விடை அளிப்ப, முத்துச் சிவிகையில் ஏறி திருஞானசம்பந்தர் அமர்ந்தபோது சங்க நாதங்களின் ஒலியும், ஊது கொம்புகளின் ஒலியும், மறையோர்கள் சொன்ன மங்கல வாழ்த்தொலிகளும், பெருமானின் திருநாமங்களும் கலந்து ஒலித்தன என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இவ்வாறு தனது ஐந்தாவது தலயாத்திரையைத் தொடங்கிய திருஞானசம்பந்தர், மிகுந்த விருப்பத்துடன் கண்ணார்கோயில் திருத்தலம் சென்று அடைகின்றார். இந்த தலத்திற்கு திருஞான சம்பந்தர் சென்றதை குறிப்பிடும் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம்.
திருமறைச் சண்பையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெரு விருப்பால் அணைந்து ஏத்தி பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ் மாலை கொண்டு ஏத்தி
வரு புனல் பொன்னி வடபால் குடதிசை நோக்கி வருவார்
ஐந்தாவது தலயாத்திரையில் முதன் முதலாக சென்ற இந்த திருத்தலம் சீர்காழியிலிருந்து ஒன்பது கி.மீ தொலைவில் மயிலாடுதுறை செல்லும் பாதையில் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் தலத்திலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் தெற்கே செல்லும் பாதையில் உள்ளது. வைத்தீசுவரன் கோயில் மயிலாடுதுறை பாதையில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள பாகசாலை என்ற ஊரிலிருந்து பிரியும் சாலையில் சென்றடையலாம். கதிராமங்கலம் என்ற புகழ் பெற்ற துர்க்கையம்மன் கோயிலிலிருந்தும் ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ள தலம். இறைவனின் திருநாமம்—கண்ணாயிர நாதர், கண்ணாயிரம் உடையார், சகச்சிர நேத்ரேசுவரர்; இறைவியின் திருநாமம்—முருகுவளர் கோதை; சுகந்த குந்தளாம்பிகை. குந்தளம் என்ற வடமொழிச் சொல்லுக்கு கூந்தல் என்று பொருள். அழகாக வளரும் கூந்தலைக் கொண்ட அம்பிகை என்று பொருள் கொள்ளும் வண்ணம் இந்த பெயர் அமைந்துள்ளது. இறைவன் சுயம்புத் திருமேனி. சற்று உயரமான இலிங்கம். பெயருக்கு ஏற்ப, லிங்கத்தின் திருமேனி மீது முழுவதும் கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளது. கருவறையின் சுற்றுச் சுவர்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை சிற்பங்களை கோஷ்டத்தில் காணலாம். வழக்கம் போன்று துர்கைக்கு அருகே சண்டீசர் சன்னதி உள்ளது. கருவறையின் முகப்பில் குடவரை விநாயகர் மற்றும் தண்டபாணி சன்னதிகளை காணலாம். மேலும் விநாயகர், முருகர், நால்வர் சன்னதி, கஜலட்சுமி, பைரவர், சனிபகவான் சந்திரன் சன்னதிகள் உள்ளன. நடராஜர் சோமாஸ்கந்தர் ரிஷபாரூடர் வெண்கலச் சிலைகள் அழகு வாய்ந்தவை. இராஜகோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய நுழை வாயிலின் முகப்பில், ரிஷபாரூடர், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத முருகர் உருவங்கள் அழகிய சுதைச் சிற்பங்களாக உள்ளன. இரண்டு பிராகாரங்கள் உள்ள இந்த திருக்கோயிலில் வெளிப் பிராகாரத்தில் சன்னதிகள் ஏதும் இல்லை. இரண்டாவது நுழை வாயிலைக் கடந்து சென்றால், செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், பலி பீடம், நந்தி ஆகியவற்றை காணலாம். கோஷ்டத்தில் உள்ள தென்முகக் கடவுளுக்கு அருகில் சித்தி விநாயகர் சன்னதி தனிக் கோயிலின் அமைப்பில் காணப்படுகின்றது. பிராகாரத்தில் நால்வர் சன்னதியை அடுத்து கன்னி விநாயகர் சன்னதி உள்ளது. மூலவரின் பின் புறத்தில் சுப்ரமணியர் சன்னதிக்கு பதிலாக கஜலட்சுமி சன்னதி உள்ளது. முருகப் பெருமானின் சன்னதி, மூலவரின் எதிரே உள்ள மண்டபத்தில் உள்ளது. கஜலட்சுமி சன்னதியைத் தொடர்ந்து பைரவர், சனி பகவான், சந்திரன் சன்னதிகள் உள்ளன. உள் மண்டபத்தின் வலது புறத்தில் பள்ளியறையும், அருகே தெற்கு நோக்கிய வண்ணம் அம்பாள் சன்னதியும் அமைந்துள்ளன. அம்மன் சன்னதிக்கு அருகே கூரையில் பன்னிரண்டு ராசிகளும் செதுக்கப் பட்டுள்ளன. சற்று உயரமான பாணத்துடன் சுயம்புவாக பெருமான் காட்சி தருகின்றார். அவரது திருமேனியில், கண்கள் போன்று பள்ளம் பள்ளமாக உள்ளதால், கண்ணாயிர நாதர் என்று அழைக்கப் படுவதாக கூறுவார்கள். கண்கள் சம்பந்தமான நோய்கள் இந்த தலத்து இறைவனை வழிபட தீரும் என்று கூறுவார்கள். மூலவர் மண்டபத்தில் சந்திரசேகரர் மூர்த்தத்தை காணலாம். அடுத்து நடராஜ சபை உள்ளது. பிரதோஷ நாயகர், அஸ்திர தேவர், வள்ளி. தெய்வயானை, சுப்ரமணியர், சோமாஸ்கந்தர், விநாயகர் ஆகிய உற்சவ மூர்த்தங்கள் மிகவும் அழகானவை. கோஷ்டத்தில், நர்த்தன விநாயகர், தென்முகக் கடவுள், இலிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோரையும் துர்க்கைக்கு அருகில் சண்டேசுவரர் சன்னதியையும் காணலாம். அழகாக விளங்கும் பிராட்டியின் கூந்தல், தெய்வீக மணத்துடன் திகழ்கின்றது என்று திருஞானசம்பந்தர் பதிகத்தின் பாடல் ஒன்றினில் கூறுவதை நாம் விளக்கத்தில் காணலாம். சுவாமி மற்றும் அம்பிகை ஆகிய இருவருக்கும் தீபாராதனை காட்டிய பின்னரே, திருநீறு மற்றும் குங்குமம் ஆகியவை அடியார்களுக்கு வழங்கப் படுகின்றன. தலமரம் சரக்கொன்றை; தீர்த்தம் இந்திர தீர்த்தம்; தீர்த்தக் கரையினில் விநாயகர் மற்றும் முருகப் பெருமான் ஆகிய இருவருக்கும் சன்னதிகள் உள்ளன. கார்த்திகை சோமவாரத்தில் பிரம்மோற்சவம் கொண்டாடப் படுகின்றது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த திருக்கோயிலில் நடைபெறுகின்ற பள்ளியறை அர்த்த ஜாம பூஜையில் பங்கேற்று, நிவேதன பாலை பருகி, அன்னதானம் செய்தால், குழந்தைப் பேறு ஏற்படும் என்று நம்பப் படுகின்றது. அம்மனை வழிபட்டு செய்யப்படும் குங்கும அர்ச்சனை, ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் அனைத்து குறைபாடுகளையும் தீர்க்கும் என்று நம்பப் படுகின்றது. இராமலிங்க வள்ளலார் வழிபட்டு திருவருட்பா பாடல் பாடியுள்ளார். இராஜராஜச் சோழன் காலத்தைய கல்வெட்டு, இந்த தலத்தினை குருவான்னியக்குடி என்று குறிப்பிடுகின்றது.
இந்த தலத்தின் மீது திருஞான சம்பந்தர் அருளிய பதிகம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. இந்த தலத்திற்கு மிகவும் அருகில் உள்ள திருப்புன்கூர் மற்றும் நீடூர் தலங்களுக்கு அப்பர் பிரான் சென்ற தகவல் பெரிய புராணத்தில் குறிப்பிடப் படுகின்றது. ஆனால் அப்பர் பிரான் இந்த தலம் சென்றதாகவும், இந்த தலத்திற்கு அருகில் உள்ள புள்ளிருக்குவேளூர் தலம் பிரான் சென்றதாகவும் குறிப்புகள் ஏதும் பெரிய புராணத்தில் காணப் படவில்லை. இந்த தலத்திலிருந்து புறப்பட்ட திருஞானசம்பந்தர், அடுத்து புள்ளிருக்குவேளூர் செல்கின்றார்
.அகலிகையின் அழகில் மயங்கி, வஞ்சகமாக அவரது கணவரைப் போன்று வேடம் தரித்து ஏமாற்றிய குற்றத்தினால் கௌதம முனிவரிடம் பெற்ற சாபத்தினை இந்திரன் இந்த தலத்து இறைவனை வணங்கி தீர்த்துக் கொண்டான் என்பதும் மகாபலியை வெல்வதற்காக வாமன அவதாரம் எடுத்த திருமால் பெருமானை வழிபட்டார் என்பதும் தலபுராணம் கூறும் தகவல்கள். இந்த இரண்டு தகவல்களையும் திருஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் பாடல்களில் அளிக்கின்றார்.
பாடல் 1:
தண்ணார் திங்கள் பொங்கரவம் தாழ் புனல் சூடிப்
பெண் ஆணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழுவோர்கட்கு இடர் பாவம்
நண்ணா ஆகும் நல்வினையாய நணுகும்மே
விளக்கம்:
தண்மை=குளிர்ச்சி; தண்ணார் திங்கள்=குளுமை பொருந்திய பிறைச் சந்திரன்; பொங்கரவம்= சீற்றத்துடன் பொங்கி எழுந்து படமாடும் பாம்பு; தாழ் புனல்=வேகமாக கீழே இறங்கி வந்த கங்கை நதி; நல்வினை=புண்ணியம்; நாம் இந்த பிறவியில் அனுபவிக்கும் துன்ப இன்பங்களுக்கு காரணம், நாம் பழைய பிறவிகளில் செய்த பாவங்களும் (தீவினைகளும்) புண்ணியங்களுமே (நல்வினைகள்) என்பதை சைவம் தெளிவாக உணர்த்துகின்றது. நம்மை விட்டு பாவங்கள் நீங்கினால் எஞ்சி இருக்கும் புண்ணியங்களால் நமக்கு, இம்மையில் எப்போதும் இன்பமே ஏற்படும் என்பதை இந்த பதிகத்தின் வாயிலாக திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். நண்ணா=நெருங்காது; நண்ணும்=நெருங்கி நிற்கும்; இந்த பாடலில் சீற்றத்துடன் பொங்கி எழுகின்ற பாம்பு, குளிர்ந்த சந்திரன், மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் கங்கை நதி ஆகிய மூன்று பொருட்களை பெருமான், தனது சடையினில் சூட்டிக் கொண்டிருப்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பாம்பின் இயல்பு சீற்றத்துடன் படம் எடுத்து ஆடுவது, தண்ணீரின் இயல்பு பள்ளம் நோக்கி ஓடுதல்; ஆனால் இந்த இரண்டுமே தங்களது இயல்பிலிருந்து மாறுபட்டு மிகவும் அமைதியாக பெருமானின் சடையில் இருப்பது, பெருமானைச் சென்றடையும் பொருட்கள் அனைத்தும் தமது இயல்பில் மாறுபட்டு, பெருமானின் திருவுள்ளக் கருத்தின் வண்ணம் செயல்படும் என்பதை உணர்த்துகின்றது.
கோபத்துடன் சீறியெழும் பாம்பு பெருமானின் சடையில் அடங்கி கிடக்கின்றது என்பதை திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.52.1) குறிப்பிடும் அப்பர் பிரான், நல்லதோர் பாம்பு என்று அழைக்கின்றார். பாம்புக்கு நல்ல பாம்பு என்று முதன்முதலாக பெயர் சூட்டியவர் அப்பர் பிரான் தான் போலும். விடம் கொண்டுள்ள தன்மையால் அனைவரையும் அச்சுறுத்தும் பாம்பு நல்ல குணமுடைய நாகம் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. இறைவனின் சன்னதியில் நல்லன அல்லாத பொருட்களுக்கு இடம் ஏது. கொலை வெறியுடன் தாக்க வந்த மான்கன்று, தனது கொலை வெறியை விடுத்து, துள்ளி விளையாடும் மான்குட்டியாக பெருமானின் கைகளில் திகழ்வது போல் பாம்பும் தனது கொடிய குணத்தை விட்டுவிட்டு நல்ல குணமுடைய பாம்பாக அடங்கி விடுகின்றது. சந்திரனிடம் தான் கொண்டுள்ள பகையையும் மறந்து, சந்திரனுடன் பெருமானின் சடையில் தங்கும் பாம்பு பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப் படுகின்றது. நல்லான் ஆகிய பெருமானுடன் இணைந்த பாம்பு, தனது கொடிய குணத்தினை விட்டுவிட்டு நல்ல குணத்துடன் திகழ்வது நமக்கு தமிழ் மூதாட்டி அவ்வையாரின் மூதுரை பாடல், நல்லாரைக் காண்பதுவும் நன்றே என்று தொடங்கும் பாடலை நினைவூட்டுகின்றது. பலிதிரி செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது செல்வராக இருப்பினும் உலகத்தவரின் நலன் கருதி, பக்குவப்பட்ட உயிர்களுக்கு முக்தி அளிக்கும் வண்ணம், பெருமான் பலியேற்கின்றார் என்றும் தனக்கு கிடைக்கும் பிச்சையாக பெரிய செல்வமாக உகந்து ஏற்றுக் கொண்டு மகிழ்கின்றார் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டு விளக்கங்களும் மிகவும் பொருத்தமாக உள்ளன. நல்லர்=நன்மை பயப்பவர்: செல்வர்=அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த முக்திச் செல்வத்தை உடையவர் என்பதால் பெருமானை செல்வர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமான் பிச்சை ஏற்றுத் திரிவது, வறுமையால் அல்ல என்பதை உணர்த்தும் வண்ணம், பெருமானை செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் இங்கே காணலாம். உலகத்தவர் தங்களிடம் உள்ள மூன்று மலங்களையும் இறைவனது பிச்சைப் பாத்திரத்தில் இட்டு, தங்களது மலங்களைக் களைந்து கொண்டு, உய்வினை அடையும் பொருட்டு, பெருமான் பல இடங்களுக்கும் சென்று பலி ஏற்பதற்காக திரிகின்றான் என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
நல்லர் நல்லதோர் நாகம் கொண்டு ஆட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல் இல் ஓடு கை ஏந்திப் பலிதிரி
செல்வர் போல் திரு நாகேச்சரவரே
பலருக்கும் நன்மை பயப்பவராக விளங்கும் பெருமான், விடத்தை உடையதாக இருந்தாலும் பெருமானுடன் இணைந்த பின்னர் நல்ல குணம் உடையதாக மாறிய பாம்பினைத் தனது இடையில் பூண்டுள்ள பெருமான், தனது விருப்பம் போல் அந்த பாம்பினை ஆட்டுகின்றார். தனது அடியார்களை பீடித்துள்ள வலிமையான வினைகளையும் தீர்க்கும் மருந்தாக செயல்படும் வல்லமை உடைய பெருமான், பற்கள் இல்லாமலும் உலர்ந்தும் காணப்படும் பிரமனின் கபாலத்தைக் கையில் ஏந்தியவாறு எங்கும் திரிகின்றார். இவ்வாறு பிச்சை ஏற்றாலும் உண்மையில் முக்திச் செல்வம் எனப்படும் சிறந்த செல்வத்தை உடையவராக இருக்கும் பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
குருவையும் அவரது மனைவியையும் தெய்வமாக மதிக்க வேண்டும் என்பது நமது மதத்தின் கொள்கை. தேவகுருவாகிய பிரகச்பதி தேவர்கள் அனைவராலும் குருவாக மதிக்கப் பட்டார். சந்திரனும் அவரை குருவாக கருதி வழிபட்டான். எனினும், அவரது மனைவியாகிய தாரையின் அழகில் மயங்கிய சந்திரன் தாரை மீது மோகம் கொண்டான். இத்தகைய கொடிய பாவத்தை செய்த சந்திரன், பெருமானின் அம்சமாகிய வீரபத்திரரின் காலால் தேய்க்கப் பட்ட பின்னர், தூய்மையாக மாறி விடுகின்றான். இந்த காரணம் பற்றியே, தூமதி என்று திருஞான சம்பந்தர், தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலின் (1.1.1) கூறுகின்றார்.
தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்
காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
பிறக்கும் உயிர்கள் முதலில் அன்னையை உணர்ந்து பின்னரே, அன்னையால் சுட்டிக் காட்டப் பெறும் தந்தையை உணருகின்றன என்பதால் அன்னையை உணர்த்தும் சொல்லாக தோடு என்பதை முதலில் வைத்து, அத்தனை உணர்த்தும் சொல்லாகிய செவியன் என்பதை அடுத்து வைத்துள்ள பாங்கு ரசிக்கத்தக்கது. ஆகாயத்திலிருந்து எழும் நாதமே, மற்ற பூதங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருப்பதால் அந்த நாதத்தினை உள்வாங்கும் செவி முதலில் கூறப்பட்டுள்ளது. நமது உடலின் உறுப்புகளில், ஓம் என்ற எழுத்தினை உணர்த்தும் வடிவத்துடன் இருப்பது செவி என்பதால் செவி முதலாக கூறப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கின்றனர். நமது அகமும் புறமும் தூய்மையாக இருத்தல் அவசியம் என்பதை உணர்த்தும் வண்ணம் தூவெண் என்று கூறப்படுகின்றது. மேலும் தோடு என்ற அணிகலன் மங்கலத்தை குறிக்கும். எந்த பாடலையும் மங்கலச் சொல்லுடன் தொடங்குவது நமது முன்னோர்களின் வழக்கம்.
இந்த பாடலில் உணர்த்தப்படும் பொருட்கள், தோடு இடபம் வெண்மதி சுடலைப்பொடி, ஆகிய அனைத்தும் வெண்மை நிறம் படித்தவை. பிராட்டி பிள்ளையாருக்கு ஊட்டிய பாலும் வெண்மை நிறம் உடையது. மேலும் பாலுடன் கலந்து கொடுக்கப்பட்ட ஞானமும் வெண்மை நிறம் வாய்ந்தது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அறியாமையை இருளுக்கும் ஞானத்தை வெண்மைக்கும் ஒப்பிடுவது வழக்கம். வெண்மை நிறம் கொண்ட பாலினையும் வெண்மை நிறத்தால் உணர்த்தப்படும் ஞானத்தையும் உமையம்மை வாயிலாக பெற்ற திருஞான சம்பந்தர்க்கு வெண்மை நிறப் பொருட்களே முதலில் அவரது கண்களில் பட்டது போலும். பெருமானின் அடையாளங்களாக, பாம்பு. ஏனக்கொம்பு, பெண் கலந்த உருவம், கங்கை நதி, ஆமை ஓடு, கோவண ஆடை, கங்கணம், செஞ்சடை, சிவந்த திருமேனி முதலியவை இருக்க, வெண்மையான நிறத்தில் உள்ள பொருட்களை மட்டும் தேர்ந்து எடுத்தது இந்த பாடலின் தனிச் சிறப்பு. குணங்கள் பலவகையாக கூறப்பட்டாலும், அவை அனைத்தும் இராஜசம் தாமசம் சத்வம் என்ற மூன்றுள்ளே அடங்கும் என்று கூறுவார்கள். இவைகளை செம்மை, கருமை மற்றும் வெண்மை நிறத்தினால் குறிப்பிடுவது வழக்கம். வெண்மை நிறம் கொண்ட பால் ஊட்டப்பட்ட, சத்வ குணம் நிறைந்த குழந்தை வெண்மை நிறப் பொருட்களை முதலில் அடையாளமாக கண்டு கொண்டது இயல்பு தானே. ஒரு காதினில் தோட்டினையும் மற்றொரு காதினில் குழை ஆபரணத்தையும் அணிந்த பெருமான், இடபத்தை தனது வாகனமாகக் கொண்டும், தன்னிடம் சரணடைந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்ற வண்ணம், சுடுகாட்டுச் சாம்பலினைத் தனது திருமேனி முழுதும் பூசியவராய் உள்ளார். அவர் எனது உள்ளத்தை கொள்ளை கொண்ட கள்வனாக விளங்குகின்றார்; இதழ்கள் அடுக்கடுக்காக அமைந்தள்ள தாமரை மலர் மேல் அமரும் பிரமன், பண்டைய நாளில் பெருமானைப் பணிந்து ஏத்த, பிரமன் தனது படைப்புத் தொழிலினை சரிவர செய்யும் வண்ணம் அருள் புரிந்தவர் சிவபெருமான்; இவரே பெருமை உடையதும் பிரமாபுரம் என்று அழைக்கப் படுவதும் ஆகிய சீர்காழி நகரினில் உறைபவரும் எனது பெருமை மிக்க தலைவனாகவும் இருக்கின்றார்.
தனது மூதாதையர்களாகிய சகர புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டும் என்ற விருப்பம் கொண்ட பகீரதன், கடுந்தவம் புரிந்து, தேவலோகத்தில் இருந்த கங்கை நதியை பூமிக்கு வரவழைத்தான். ஆனால் அடுத்தவர்க்கு உதவி செய்வதற்காக பூமிக்கு வருவதற்கு விருப்பம் இல்லாதவளாக கங்கை இருந்ததால், இந்த பூமியையே புரட்டி பாதாளத்திற்கு இழுத்துச் செல்லும் நோக்கத்துடன், மிகுந்த ஆவேசத்துடன் கீழே இறங்கினாள். அப்போது பூமிக்கு எந்த விதமான கேடும் நேராமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கங்கை நதியினைத் தனது சடையில் தாங்கிய பெருமான், பின்னர் சிறிது சிறிதாக கங்கை நதியினை விடுவித்தார். அவ்வாறு விடுவித்தமையால், கங்கை நதி புனித தீர்த்தமாக மாறியது என்று அப்பர் பிரான் சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.41.6) குறிப்பிடுகின்றார். பந்தமும் வீடுமாய் இருப்பவன் சிவபிரான் தான் என்பதை நமக்கு இதே பதிகத்தின் ஐந்தாவது பாடல் மூலம் உணர்த்திய அப்பர் பிரான், பந்தத்திலிருந்து நாம் விடுபட்டு வீடுபேறு அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே கூறுகின்றார். பேர்த்து இனிப் பிறவா வண்ணம்=மறுபடியும் பிறப்பு எடுத்து இந்த உலகத்திற்கு வருவதைத் தவிர்த்து, இங்கிருந்து பெயர்ந்து வீடுபேறு என்ற இடத்திற்கு செல்வது: பிதற்றுதல்=தனது நிலையை மறந்து பேசுதல்; நமது நிலையை மறந்து நாம் பேசுகின்றோம் என்று மற்றவர்கள் கருதும் வண்ணம், மறுபடியும் மறுபடியும் சிவபெருமானது திருநாமத்தை உச்சரித்தல்;
பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் தன் திறமே
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத்துறையனாரே
இங்கே கங்கையை ஏற்று தீர்த்தமாய் போத விட்டார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வானுலகத்தில் இருந்த கங்கை நதி தனது மூதாதையர் முக்தி அடைவதற்காக, அவர்களது உடல் எரிந்த சாம்பல் குவியலின் மீது பட வேண்டும் என்று பகீரத மன்னன் விரும்பினான். இதற்கு விருப்பம் இல்லாத கங்கை நதி, வானுலகத்திலிருந்து கீழே இறங்கும் போது, மண்ணுலகத்தையே கரைத்து பாதாளத்தில் ஆழ்த்தி விடுவது போல, மிகுந்த வேகத்துடன் இறங்கியது. அவ்வாறு நடந்திருந்தால், பகீரதனின் முன்னோர்களான சகர புத்திரர்களுக்கு அவர்கள் செய்த பாவத்திலிருந்து விமோசனம் கிடைத்திருக்காது; பாவத்தைத் தீர்க்கும் புனித நீராக கங்கையும் கருதப்பட மாட்டாது; சிவபெருமான் தனது சடையில் கங்கையைத் தாங்கி, கங்கையின் வேகத்தைக் குறைத்ததால் தான், கங்கை மண்ணுலகத்திற்கு எந்த கெடுதலையும் விளைவிக்காமல், பாதாளம் சென்றது; சகர புத்திரர்கள் விமோசனம் அடைந்தார்கள்; இன்றளவும் கணக்கற்ற மக்கள் கங்கையில் தினமும் நீராடி தங்களது பாவங்களைக் போக்கிக் கொள்கின்றார்கள்; கங்கையும் தீர்த்தமாக கருதப்படுகின்றது. இந்த செய்தியைத் தான் ஆரவாரத்துடன் வந்த கங்கை, சிவபெருமான் தனது சடையில் ஏற்றதால், தீர்த்தமாக மாறியது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் இறைவனிடம் நாம் என்ன கேட்கவேண்டும் என்று நமக்கு உணர்த்தப் படுகின்றது. இனிப் பிறவாத தன்மையை நமக்கு அருளுமாறு இறைவனிடம் வேண்டுங்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பார்வதி தேவியை தனது உடலில் பாகமாகக் கொண்டவரும், பார்த்தனுக்கு பாசுபத மூர்த்தியாக காட்சி தந்து அருள் புரிந்தவரும், பெரிய அலைகள் கொண்டு மிகுந்த ஆரவாரத்துடன் வானிலிருந்து இறங்கிய கங்கையைத் தனது சடையில் ஏற்றுப் பின்னர் ஒரு சடையினை மட்டும் எடுத்து, கங்கை நதியை மெதுவாக ஓடவிட்டு அதனை, மக்களின் பாவத்தைத் தீர்க்கும் புண்ணிய தீர்த்தமாக மாற்றியவரும் ஆகிய சிவபெருமான், சோற்றுத்துறையில் உறைகின்றார். அவரது திருநாமங்களை எப்போதும் பிதற்றித் திரிவதன் மூலம், மறுபடியும் மறுபடியும் பிறவி எடுத்து இந்த உலகத்தில் உழலும் நிலையிலிருந்து நாம் இடம் பெயர்ந்து வீடுபேறு அடையலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
இந்த பாடலில் பெண் ஆணாகிய பேரருளாளன் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலையினை மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமுறை ஆசிரியர்கள் பல பாடல்களில் குறிப்பிடுகின்றனர். பெருமான் புரிந்த பல அருட்செயல்களில் இந்த செயலே மிகவும் பெரிய அருட்செயலாக கருதப்படுவதால், பேரருளாளன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். கை தொழுவார்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். எவரேனையும் கண்டவுடன் கைகூப்பித் தொழுதல் நமது பாரம்பரிய பழக்கம். நமக்கு சமமானவர்களை நமது நெஞ்சினுக்கு நேராக கைகளை வைத்துத் தொழவேண்டும் என்றும், நம்மை விடவும் உயர்ந்தவர்களை நமது முகத்திற்கு நேராக கைகளை வைத்துத் தொழவேண்டும் என்றும் நமது தலையின் மேல் கைகளை வைத்து இறைவனைத் தொழவேண்டும் என்று கூறுவார்கள். நம்மை விடவும் கீழாக எவரையும் கருதாது இருக்கவேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
பொழிப்புரை:
குளிர்ச்சி பொருந்திய பிறைச் சந்திரனையும், சீற்றத்துடன் பொங்கி எழும் பாம்பினையும், பள்ளத்தை நோக்கி ஓடும் தன்மையை உடைய பெரிய நீர்ப்பரப்பினைக் கொண்டு மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியையும் தனது சடையினில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டு பேரருள் புரிந்தவனாக பெண்ணாகவும் ஆணாகவும் திகழ்கின்றான். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமான், கண்ணார்கோயில் தலத்தினை விட்டு என்றும் பிரியாதவனாக ஆங்கே உறைகின்றான். இந்த பெருமானை, தங்களது கைகளால் தொழும் அடியார்களை பாவங்களும் அதனால் விளையும் துன்பங்களும் நெருங்காது; புண்ணியங்கள் அவர்களை நெருங்க அதன் விளைவாக இன்பங்களே அவர்களது வாழ்வினில் ஏற்படும்.
பாடல் 2:
தண்ணார் திங்கள் (1.101) பாடல்கள் 2, 3, 4 (திதே 0379)
கந்து அமர் சந்தும் கார் அகிலும் தண் கதிர் முத்தும்
வந்து அமர் தெண்ணீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டிக்
கொந்து அலர் சோலைக் கோகிலம் ஆடக் குளிர் வண்டு
செந்திசை பாடும் சீர் திகழ் கண்ணார் கோயிலே
விளக்கம்:
மண்ணி=காவிரி நதியின் கிளையாறுகளில் ஒன்று: கோகிலம்=குயில்; செந்து=தமிழ்ப் பண்களில் ஒன்று; செவ்வழி என்றும் கூறுவார்கள்; கந்து=கந்தம், நறுமணம்; சாந்து=சந்தனக் கட்டைகள்; கார்=கரிய, வயிரம் பாய்ந்து உறுதியான; கதிர்=ஒளிவீசும்; வந்தமர்=வந்து சேரும்; கொந்து=கொத்து கொத்தாக மலர்கள் மலரும் வளமான சோலைகள்; பொதுவாக குயில்கள் பாடுவதாக பாடல்களில் குறிப்பிடும் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குயில்கள் நடமாடின என்று கூறுகின்றார். பாடும் இயல்பினை உடைய குயில்கள் நடமாடியது இந்த தலத்தின் தனிச் சிறப்பு போலும். இந்த குறிப்பு பெருமானின் அருள் இருந்தால் இயல்பு நிலை மாறி சிறப்பான நிலையினை எவரும் அடையலாம் என்பதை உணர்த்துகின்றது போல அமைந்துள்ளது. வண்டு பாடும் என்ற தொடரினை வண்டும் பாடும் என்று மாற்றி அடியார்கள் செவ்வழிப் பண்ணில் பதிகங்கள் பாடியது போன்று தலத்து வண்டுகளும் பாடின என்று சிவக்கவிமணியார் தனது பெரியபுராண விளக்கத்தில் கூறுகின்றார். வண்டுகள் கற்றுக் கொண்டு பாடும் அளவுக்கு தேர்ச்சி பெற்றன என்ற குறிப்பு அடியார்கள் இந்த தலத்தில் இடைவிடாது சிறந்த இன்னிசைப் பாடல்கள் பாடினர் என்பதை உணர்த்துகின்றது. கண்ணார்கோயில் சென்று தொழுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை முதல் பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர் அடுத்த இரண்டு பாடல்களில் தலத்தின் இயற்கை வளத்தினை குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
நறுமணம் பொருந்திய சந்தனக் கட்டைகளும் வயிரம் பாய்ந்து உறுதியான கரிய அகில் கட்டைகளும் குளிர்ச்சி பொருந்தி அழகுடன் ஒளிவீசும் முத்துக்களும் அடித்துக் கொண்டு வரப்படும் நீர்ப் பெருக்கினை உடைய மண்ணியாறு வந்து சேர்வதால் நிலவளம் மிகுந்த வயல்களையும் கொத்து கொத்தாக மலரும் மலர்கள் கொண்ட சோலைகளும் நிறைந்த இந்த தலத்தினில் மகிழ்ச்சி பொங்க குயில்கள் நடமாடுகின்றன. குளிர்ந்த சூழ்நிலையை விரும்பும் வண்டுகள், அடியார்கள் செவ்வழிப் பண்ணில் இறைவனை துதித்து பாடும் பாடல்களைக் கேட்டு, செவ்வழிப் பண்ணில் முரலும் சிறப்பினை உடையது கண்ணார்கோயில் எனப்படும் இந்தத் திருத்தலம்.
பாடல் 3:
தண்ணார் திங்கள் (1.101) பாடல்கள் 2, 3, 4 (திதே 0379)
பல்லியல் பாணிப் பாரிடம் ஏத்தப் படு கானின்
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன்னிடம் என்பர்
கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னிக்
கல்லியல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார் கோயிலே
விளக்கம்:
பாணி என்ற வடமொழிச் சொல் பொதுவாக கைகள் என்று பொருள் தந்தாலும் இங்கே கைகளால் இசைக்கப்படும் தாளத்தை குறிப்பிடுகின்றது. பாரிடம்=பூத கணங்கள்; எல்லி=இரவு; கல்லியல் இஞ்சி=கல் மதில்; மஞ்சு=மேகம்; படுகான்=பிணங்கள் இடப்படும் சுடுகாடு; கொல்லை=முல்லை நிலம், காடும் காடு சார்ந்த இடம்; சென்ற பாடலில் அடியார்கள் இறைவன் சன்னதியில் பாடுவதை குறிப்பிட்ட திருஞானசம்பந்தருக்கு இறைவனின் நடனத்திற்கு பூதகணங்கள் பாடுவது நினைவுக்கு வந்தது போலும். இந்த பாடலில் பூதகணங்கள் நடமாட சுடுகாட்டினில் இறைவன் ஆடும் நடனத்தை குறிப்பிடுகின்றார். மௌவல்=காட்டு மல்லிகை
பொழிப்புரை:
பெருமானைப் புகழ்ந்து, பலவகையான பாடல்களை பூதகணங்கள் தங்களது கைகளில் தாளம் இட்டவாறு பாட, அத்தகைய பாடல்களுக்கு ஏற்ப,பிணங்கள் இடப்படும் சுடுகாட்டினில் நடமாடும் பெருமான், எங்கள் தலைவன், உறையும் இடம் கண்ணார்கோயில் என்று கூறுவார்கள். முல்லை நிலத்து பூக்களாகிய முல்லை, மல்லிகை, காட்டு மல்லிகை ஆகிய கொடிகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து செழிப்புடன் வளரும் சோலைகள் கொண்ட கண்ணார்கோயில் வானளாவ மேகத்தைத் தொடும் வண்ணம் உயர்ந்த கல் மதில்கள் கொண்டதாகும்.
பாடல் 4:
தண்ணார் திங்கள் (1.101) பாடல்கள் 2, 3, 4 (திதே 0379)
தண்ணார் திங்கள் (1.101) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0380)
தண்ணார் திங்கள் (1.101) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0381)
தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்
மரு வளர் கோதையை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு
உரு வளர் ஆலநீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே
விளக்கம்:
மருவளர்=நறுமணம் வளர்கின்ற; இயல்பாகவே தேவியின் கூந்தல் நறுமணம் உடையது என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். இயல்பாகவே நறுமணம் உடைய கூந்தல் என்று திருஞான சம்பந்தர் கூறுவது நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. பல தேவாரப் பாடல்களில், பிராட்டியின் கூந்தல் இயற்கையாகவே நறுமணம் வாய்ந்தது என்று சொல்லப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் தேவியின் திருநாமம் மருவார்குழலி என்பதாகும். மணம் பொருந்திய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.25.1) மருவார் குழலி என்று குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர் மணம் கமழும் கூந்தலை உடைய தேவியை ஒரு பாகத்தில் வைத்தவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். மருவார் குழலி என்ற தொடர் பல தேவாரப் பாடல்களில் மூவர் பெருமானர்களால் குறிப்பிடப் படுகின்றது.
மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன்பள்ளி மேவிய
கருவார் கண்டத்து ஈசன் கழல்களை
மருவாதார் மேல் மன்னும் பாவமே
புறவம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.74.3) மணம் நிறைந்த கூந்தலை உடைய தேவி காணுமாறு சுடுகாட்டில் நடனம் ஆடியவன் என்று பெருமானை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். உதரபந்தம்= பூதங்கள் இடுப்பில் அணியும் ஒருவகை ஆபரணம்
பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பார்க்கக்
கந்தம் மல்கு குழலி காண கரிகாட்டு எரி ஆடி
அந்தண் கடல் சூழ்ந்த அழகார் புறவம் பதியா அமர்வெய்தி
எந்தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே
இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.121.6) திருஞானசம்பந்தர், தேவியை கமழ் குழல் உடையவள் என்று குறிப்பிடுகின்றார். சிறந்த மேகலை ஆபரணம் அணிந்த தேவி என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், பெருமானை மதிப்பு வாய்ந்த அணிகலன் ஏதும் அணியாதவர் என்று சுட்டிக் காட்டுகின்றார். எலும்பு மாலையும், ஆமை ஓடும், பன்றிக் கொம்பும், மண்டையோடும் கொண்டவனாக திகழும் பெருமானின் ஆபரணங்கள் மிகவும் எளிமையானவை என்று உணர்த்தப் படுகின்றன. கலை உடை= மேகலை ஆடை; மேகலை ஆபரணம் பொருந்திய ஆடை; மேகலை என்பது பெண்கள் தங்களது இடையில் அணியும் ஆபரணம். நேர்த்தியான மேகலை ஆபரணம் பொருந்திய இடுப்பினில் விரிந்த ஆடையும், அகில் மணம் கமழும் கூந்தலும் உடையவளும், அழகும் இளமையும் பொருந்தியவளும் ஆகிய மலைமகளைத் தனது உடலின் ஒரு பாகத்தில் உடையவனாகிய பெருமான், விலை மதிப்புள்ள நகைகளை அணியாது, விலை மதிப்பேதும் இல்லாத பன்றிக் கொம்பு, ஆமையோடு, எலும்பு மாலை அணிந்தவனாக, தசை உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் மண்டையோட்டினை உடையவனாக இருக்கின்றார். அவரது படைக்கலம் மழு ஆயுதம் மற்றும் இலை வடிவத்தில் கூரிய நுனியினை உடைய சூலமாகும். அவரது இருப்பிடம் இடைமருது தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கலையுடை விரிதுகில் கமழ் குழல் அகில் புகை
மலையுடை மடமகள் தனை இடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலன் என மழுவினோடு
இலையுடை படையவன் இடம் இடைமருதே
வலிவலம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.123.6) திருஞானசம்பந்தர் தேவியை நறுமணம் மிகுந்த கூந்தலை உடையவள் என்று குறிப்பிடுகின்றார். விரவது=கலத்தல்; இந்த பாடலில் பெருமான் உமை அன்னையுடன் கூடி இருப்பது போன்று தோற்றம் தருவது, நிலவுலகம் மற்றுமுள்ள பல உலகங்களில் வாழும் உயிர்களில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புணர்ந்து தத்தம் இனங்களைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை முன்னிட்டே என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
தரை முதலினில் உயிர் புணர் தகை மிக
விரை மலி குழல் உமையொடு விரவது செய்து
நரை திரை கெடு தகை அது அருளினன் எழில்
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.133.1) திருஞானசம்பந்தர், பிராட்டியை கந்தம் மல்கு குழலி என்று குறிப்பிடுகின்றார். கந்தம்=நறுமணம்; இயற்கையாகவே நறுமணம் கமழும் கூந்தலை உடையவள் பிராட்டி என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. குழலி=கூந்தலை உடையவள்; கடி=நறுமணம்; அந்தமில்=எல்லையற்ற நற்குணங்களை உடைய; அணங்கு= தெய்வத்தன்மை பொருந்திய மாது, இங்கே பார்வதி தேவி; மூன்று வயது குழந்தையாக இருந்த போதே, தோடுடைய செவியன் என்றும் நறவநிறை வண்டு என்றும் தொடங்கும் பதிகங்களை பாடிய தனக்கு ஞானப்பால் அருளிய அன்னையையும், அதற்கு காரணமாக இருந்த தந்தையாரையும் நினைத்தவாறே அன்றிரவு உறங்கிய திருஞானசம்பந்தர் அடுத்த நாள் பொழுது விடிந்ததும் திருக்கோயிலுக்கு சென்று தனது தந்தையும் தாயும் ஆகிய பெருமானையும் பிராட்டியையும் வணங்கினார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பல பாடல்களில் பெருமானை எந்தை என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஊழிக்காலத்தில் இறந்துபட்ட உடல்கள் எரிந்த சாம்பலைத் தனது உடலெங்கும் பூசிக்கொண்டு, அனைத்து உயிர்களும் தத்தம் உடல்களை விட்டுப் பிரிந்த பின்னரும் அழியாமல் என்றும் நிலையாக இருப்பவன் தான் ஒருவனே என்பதை உணர்த்துகின்ற பெருமான், தனது விரிந்த மார்பினில் முப்புரி நூல் பொருந்தியவராகவும், தனது உடலின் ஒரு பாகத்தில் பிராட்டியை பொருத்தியவராகவும், நறுமணம் வீசும் சோலைகள் நிறைந்த காஞ்சி மாநகரில் வீற்று இருக்கின்றார். எல்லையற்ற நற்குணங்கள் பொருந்தியவராக இந்த தலத்தில் வாழும் அடியார்கள் போற்ற, தெய்வப் பெண்ணாகிய பார்வதி தேவி உடன் பொருந்தியவராக பெருமான் நடனம் ஆடுபவரும் எமது தந்தையும் ஆகிய பெருமான் எழுந்தருளிய ஏகம்பம் திருக்கோயிலைத் தொழுது போற்ற எமது இடர்கள் முற்றிலும் கெட்டுவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வெந்த வெண்பொடிப் பூசுமார்பின் விரிநூல் ஒரு பால் பொருந்த
கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல்புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடர் கெடுமே
தில்லைத் திருத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (3.1.2) நறுமணம் கமழும் கூந்தலை உடைய அன்னை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நுதல்=நெற்றி; கொட்டம்=நறுமணம்
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல்
பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம்
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை கொலோ
பூந்தராய் என்று அழைக்கப்படும் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.2.9) திருஞான சம்பந்தர், பிராட்டியை கொங்கு சேர் குழலாள் என்று அழைக்கின்றார். நிழல்=ஒளி; மங்குல்=மேகம்; வான்மிசை=ஆகாயம் வரை; கொங்கு=நறுமணம்; இயல்பாகவே நறுமணம் வாய்ந்த கூந்தலை உடையவள் பார்வதி தேவி என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. ஏலவார்குழலி, நறுங்குழல் நாயகி, மருவார் குழலி என்பன அம்பிகையின் திருநாமங்கள். கந்தம் மல்கு குழலி (சீர்காழி 1.74.3) மருவார் குழலி (1.25.1 செம்பொன்பள்ளி), மருவளர் கோதை (கண்ணார் கோயில் 1.101,4), கொட்டமே கமழும் குழலாள் (தில்லைச் சிதம்பரம் 3.01.02), மருவமர் குழலுமை (விசயமங்கை 3.17.1). கந்தமல்கு குழலி (கச்சி ஏகம்பம் 1.133.1), விரைதரு மென் கூந்தல் (4.67.10 கொண்டீச்சரம்), நறுங்குழல் மடவாள் (5.74.2) (திருவெறும்பியூர்) வம்பின் நாண்மலர்க் கூந்தல் உமையாள் (திருவதிகை 6.4.9) மருவை வென்ற குழல் மடவாள் (திருவெறும்பியூர் 6.91.3) வம்பமரும் குழலாள் (கோளிலி 7.20.2) வம்புலாம் குழலாள் (பாண்டிக்கொடுமுடி 7.48.8) என்ற தொடர்கள் நமது நினைவுக்கு வருகின்றன.
கொங்குசேர் குழலாள் நிழல் வெண்ணகைக் கொவ்வை வாய்க்கொடி நேரிடையாள் உமை
பங்கு சேர் திரு மார்புடையார் படர் தீயுருவாய்
மங்குல் வண்ணனும் மாமலரோனும் மயங்க நீண்டவர் வான்மிசை வந்தெழு
பொங்கு நீரின் மிதந்த நற் பூந்தராய் போற்றுதுமே
விசயமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.17) முதல் பாடலில் அம்மையை மருவமர் குழலி என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். மரு=வாசனை. இயற்கையாகவே நறுமணம் சென்று அமரும் கூந்தலை உடைய தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.
மருவமர் குழல் உமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கை எம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழில் அணி விசயமங்கையே
சண்பை நகர் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.75.1) நறுமணம் கமழும் கூந்தலை உடைய தேவி என்று உமையன்னையை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சந்தம் என்ற சொல்லுக்கு நறுமணம் அழகு என்று இரண்டு பொருள்களும் பொருந்தும். எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என்று தேவர்கள் பெருமானை இறைஞ்சியதாக திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சூரபதுமனின் கொடுமைகளுக்கு அஞ்சிய தேவர்கள் இந்த தலத்து பெருமானிடம் புகல் அடைந்ததால் புகலி என்ற பெயர் வந்தது என்பதை நாம் அறிவோம். அந்த சம்பவம் தான் இந்த பாடலின் முதல் அடியில் குறிப்பிடப் படுகின்றது. பெருமான்=பெருமைக்குரிய ஆண் மகன் என்ற சொற்றொடர் பெருமான் என்று குறுகியதாக கூறுவார்கள். வளர்=வாசனை வளரும்; வாய்மை=தன்மை; சீர்காழி தலத்தில் அமர்ந்துள்ள பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்த பின்னர், சிறந்த முறையில் தூபம் தீபம் முதலிய உபசாரங்கள் செய்தமை இங்கே குறிப்பிடப் படுகின்றது. அந்தி=மாலை நேரம்; அமர்=பொருந்திய; சந்தி=சந்திப் பொழுதுகள்; இரண்டு வேறுவேறு காலங்கள் சந்திக்கும் நேரங்கள்; இரவும் பகலும் சந்திக்கும் நேரம் காலை நேரம்; காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் கலக்கும் நேரம் நண்பகல்; பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட நேரம் மாலை; இரவும் முற்காலை நேரமும் இணையும் நேரம் நள்ளிரவு, அர்த்த ஜாமம்; இத்தகைய நான்கு பொழுதுகளிலும் அர்ச்சனைகள் செய்து பெருமானை அந்நாளில் வழிபட்டு வந்தனர் என்பது இந்த பாடல் மூலம் தெளிவாகின்றது. பெருமானை விடவும் அழகில் சிறந்தவர் வேறு எவர் உள்ளார். அதனால் தான் பெருமானை அழகன் என்று இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சொக்க வைக்கும் அழகினை உடையவன் என்ற பொருளினை கொண்ட திருநாமம் தானே மதுரை தலத்தில் வீற்றிருக்கும் பெருமானின் திருநாமம்–சொக்கன்; மலி=சிறந்த; குந்தளம்=கூந்தல்; விரித்த சடையுடன் உள்ள பெருமானுக்கு துணைவியாக இருப்பவள் மிகுந்த அழகுடன் விளங்கும் கூந்தலை உடையவள் பிராட்டி என்று கூறுவது நயமாக உள்ளது. சந்தம் மலி=அழகு பொருந்திய; எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என்று கூறுவது நமக்கு, இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் என்ற திருவாசகத் தொடரை நினைவூட்டுகின்றது.
எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர்
வந்து துதி செய்ய வளர் தூபமொடு தீப மலி வாய்மை அதனால்
அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்
சந்த மலி குந்தள நன் மாதினொடு மேவு பதி சண்பை நகரே
புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.84.3) பிராட்டியை, கொங்கியல் சுரிகுழல் உமை என்று திருஞான சம்பந்தர் அழைக்கின்றார். கொங்கு=நறுமணம்; சுரிகுழல்=சுருண்ட குழல்; திருவுரு=மாதொரு பாகனாக விளங்கும் திருவுருவம்; பரசு=மழு ஆயுதம்; இரலை=மான் கன்று; இயற்கையாகவே நறுமணம் மிகுந்ததும் சுருண்டு அழகாக காணப்படுவதுமாகிய கூந்தலை உடையவளும், வரிசையாக அழகான வளையல்கள் அணிந்த கை உடையவளும், இளமை வாய்ந்த மார்பினை உடையவளும் ஆகிய உமையன்னையைத் தனது உடலினில் கொண்டவராக,மாதொரு பாகனின் திருக்கோலத்தில் விளங்குபவர் சிவபெருமான்; மழு ஆயுதத்தையும் மான் கன்றினையும் தனது கைகளில் ஏந்திய சிவபெருமான் இடபத்தைத் தனது வாகனமாக கொண்டுள்ளார். இத்தகைய தன்மைகள் உடைய பெருமான், வீற்றிருந்து அருள் புரியும் தலம், பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்த போது, அந்த கடலினும் உயர்ந்து மிதந்து அழியாமல் நின்ற சிறப்பினை உடைய புறவம் எனப்படும் சீர்காழி தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கொங்கியல் சுரிகுழல் வரி வளை இளமுலை உமை ஒரு
பங்கியில் திருவுரு உடையவர் பரசுவொடு இரலை மெய்
தங்கிய கரதலம் உடையவர் விடையவர் உறை பதி
பொங்கிய பொருகடல் கொள அதன் மிசை உயர் புறவமே
தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.100.2) நறுமணம் மிகுந்ததும் பூ போன்று மென்மையானதும் ஆகிய கூந்தலை உடைய தேவி என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். கொங்கியல்=இயற்கை மணம்; பூங்குழல்=மலர் போன்று மென்மையான கூந்தல்; கோமளம்=தாமரை மலர், இங்கே தாமரை மலர் போன்று அழகும் இளமையும் வாய்ந்த உமை அன்னை; பங்கியலும்=ஒரு பாகத்தில் பொருந்திய; பங்கியலும் என்ற சொல்லினை இரண்டு இடங்களிலும் பொருத்தி, அன்னையின் திருமேனி பொருந்திய பாகம் மற்றும் திருநீறு பூசிய இடம், ஆகிய இரண்டு இடங்களிலும் பொருத்தி உரை காண்பது சிறப்பு. சாயல்=உடல் தோற்றப் பொலிவு; பெருமான் பால் கொண்டிருக்கும் தீராத காதல், பயனளிக்காததால் உடல் வெளுத்து அழகிழந்து காணப்படும் நிலை இங்கே சொல்லப் பட்டுள்ளது. துங்கம்=உயர்வு; துங்கியல்=உயர்ந்த; சிறந்த மழுப்படையினை உடையவனும், பால் போன்று பல நலங்களைத் தருகின்ற திருநீற்றினைத் தனது திருமேனியின் மீது பூசியவனும், அழகிய நடையினை உடைய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவனும், உடைந்த மண்டையோட்டினைத் தனது கையில் ஏந்தியவனாக உலகெங்கும் திரிந்து பலியேற்பவனும் எமது தலைவனும் ஆகிய சிவபெருமான், மிகவும் மகிழ்ந்து உறைவது திருவிடைமருதூர் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கொங்கியல் பூங்குழற் கொவ்வைச் செவ்வாய்க் கோமள மாதுமையாள்
பங்கியலும் திருமேனி எங்கும் பால் வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோர வந்தென் சாயல் கொண்டார் தமதூர்
துங்கியல் மாளிகை சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே
அருணை வடிவேல் முதலியார் அவர்கள், உயிர்கள் போகத்தை விரும்பி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெருமான் போகவடிவம் கொண்டு போகி போல் நிற்கின்றாரே அன்றி அவர் உண்மையில் போகம் அனுபவிப்பவர் அல்லர் என்று விளக்கம் கூறுவார். இதே கருத்து திருச்சாழல் பதிகத்தில் மணிவாசகரால் உணர்த்தப் படுவதையும் நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். பெருமான் பெண்ணைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டிராவிடில் உலகத்து உயிர்கள் எல்லாம் துறவு மேற்கொண்டு யோகத்தில் புகுவர்; அதனால் உலகம் வளராது நிற்கும். எனவே போகத்தில் ஆழ்ந்திருப்பது போன்று தோற்றத்தை நமக்கு பெருமான் நல்குகின்றான் என்பதே இந்த பாடல் உணர்த்தும் செய்தியாகும்.
தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி
பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ
மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் இன்பம் துய்க்காமல் யோகியராக மாறினால், அவர்களால் ஏற்படவிருந்த இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும். இனப்பெருக்கம் தடைப்பட்டால் வினைகளுடன் பிணைந்திருக்கும் உயிர்கள் மீண்டும் பிறப்பெடுத்து தங்களது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ள தேவையான உடல்கள் இல்லாமல் போய்விடும். எனவே உடல்களை தோற்றுவிக்கும் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எனவே தான் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, மனிதர்கள் இன்பம் துய்க்கும் வழியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக, இறைவனும் தான் போகம் துய்ப்பது போன்று காட்சி அளிக்கின்றான். மனிதப் பிறவி தான் அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்தது என்று சொல்வதன் காரணம், மனிதப் பிறவி தான், உயிர் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொண்டு உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைய வழி வகுக்கும் பிறவியாகும். இந்த மனிதப் பிறவியின் பெருக்கம் தடைப்பட்டால், எண்ணற்ற உயிர்கள் என்றென்றும் மலங்களுடன் பிணிக்கப்பட்டு விடுதலை அடைய முடியாமல் போய்விடும். மேலும் உயிர்கள் முக்தி நிலை அடைந்து தன்னுடன் வந்து இணைந்து என்றென்றும் பேரின்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பமும் ஈடேறாமல் போய்விடும். எனவே, அத்தகைய உயிர்கள் பொருத்தப் படுவதற்கான தகுந்த உடல்கள் இனப் பெருக்கத்தின் மூலம் தான் உருவாக்கப் பட முடியும் என்பதால், உயிர்கள் போகிகளாக வாழ்ந்து இன்பம் துய்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் இறைவன் பிராட்டியுடன் கூடியிருந்து, உலகம் தொடர்ந்து வளரும் பொருட்டு நமக்கு முன்மாதிரியாக விளங்குகின்றான் என்ற செய்தி மேற்கண்ட திருவாசகப் பாடலில் உணர்த்தப் படுகின்றது.
இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதை கருவூர்த் தேவர் ஒரு திருவிசைப்பா பாடலில் விளக்குகின்றார்.
மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளம் திங்களை முடிமேல்
கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட சோளேச்சரத்தானை
அங்கை ஓடு ஏந்திப் பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவனருள் கடலே
பெருவேளூர் தலத்தின் மீது பாடிய பதிகத்தின் பாடலில் (4.60.3) அப்பர் பிரான் நறுமணம் வீசுவதும் மென்மையானதும் ஆகிய கூந்தலை உடைய நங்கை என்று பார்வதி தேவியை குறிப்பிடுகின்றார். குறவி=குறத்தியாகிய வள்ளி அம்மை; வள்ளியம்மையின் தோள்களைக் புணர்ந்து தனது அன்பினை வெளிப்படுத்தியவன் என்று முருகனைக் குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, உமையம்மைக்குத் தனது உடலின் ஒரு பாகத்தைக் கொடுத்து தனது அன்பினை வெளிப்படுத்திய பெருமானின் செய்கை நினைவுக்கு வந்தது போலும். நங்கையோர் பாகத்தன் என்று பெருமானை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்றும்
நறவு இள மென்கூந்தல் நங்கையோர் பாகத்தானைப்
பிறவியை மாற்றுவானைப் பெருவேளூர் பேணினானை
உறவினால் வல்லனாகி உணருமாறு உணர்த்துவேனே
கொண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.62.10) அப்பர் பிரான், பிராட்டியை விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை என்று கூறுகின்றார். விரை=நறுமணம்:: பாறி=சிதறி: வெருவர=அச்சம் கொள்ள: விலங்கல்=மலை, கயிலை மலை: ஞான்று=நாளன்று என்பதன் திரிபு: பருவரை=பருத்த மலை; நறுமணம் கமழ்ந்து கருமையும் மென்மையும் கலந்து காணப்படும் கூந்தலையும், ஒளிவீசும் அணிகளையும், வேல் போன்று நீண்டும் ஒளிபடைத்தும் காணப்படும் கண்களையும் உடைய உமையம்மை அச்சம் கொள்ளுமாறு, கயிலை மலையினை பேர்த்து எடுக்க அரக்கன் இராவணன் முயற்சி செய்த அன்று, அவனது பருத்த மலை போன்று விளங்கும் தோள்களும் தலைகளும் சிதறி விழுமாறு, தனது கால் விரல் ஒன்றினை கயிலை மலை மீது ஊன்றியவன் திருக்கொண்டீச்சரம் என்று அழைக்கப்படும் தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேல் ஒண் கண்ணாள்
வெருவர இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்து ஞான்று
பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழக்
திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சரத்து உளானே
நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.52.6) அப்பர் பிரான் பிராட்டியை, வம்பு பூங்குழல் மாது என்று குறிப்பிடுகின்றார். மறுக=அஞ்சி மயங்குமாறு; கம்ப யானை=அசையும் யானை; யானை நடக்கும் போதும் யானையின் துதிக்கை அசைந்து கொண்டே இருக்கும். அதனை உணர்த்தும் வண்ணம் கம்ப யானை என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். வம்பு=நறுமணம்; யானையின் பசுமையான தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நம்பப்படுகின்றது. இறைவன் தன்னை எதிர்த்து வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட நிகழ்ச்சி இறைவனின் உடலுக்கு ஏதேனும் கேட்டினை விளைவிக்குமோ என்ற அச்சத்தை இறைவிக்கு ஏற்படுத்தியதால், இறைவி அடைந்த கலக்கம் இங்கே உணர்த்தப் படுகின்றது. இதழி=கொன்றை மலர். நறுமணம் உடையதும் பூக்கள் போன்று மேன்மையை உடையதுமாகிய கூந்தலை உடைய அன்னை உமையம்மை, இறைவன் தனது உடலின் மீது போர்த்துக் கொள்ளும் யானையின் பசுந்தோல் அவரது உடலுக்கு ஏதேனும் தீங்கினை விளைவிக்குமோ என்ற அச்சத்தினால் கலக்கம் அடையுமாறு, அசைந்து வந்த மதயானையின் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவர் சிவபெருமான். செம்பொன்னினைப் போன்று காணப்படும் கொன்றை மலர்களை தனது சடையில் அணிந்துள்ள பெருமான் அடியார்களால் விரும்பப் படுகின்றார். அத்தகைய பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வம்பு பூங்குழல் மாது மறுகவோர்
கம்ப யானை உரித்த கரத்தினர்
செம்பொனார் இதழும் மலர் செஞ்சடை
நம்பர் போல் திரு நாகேச்சரவரே
திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.74.2) அப்பர் பிரான், பிராட்டியை நறுங்குழல் மடவாள் என்று குறிப்பிடுகின்றார். பிறங்கு=விளங்கும்; கறங்கு= சுழலும், ஓரிடத்தில் நில்லாமல் சுற்றித் திரியும்; சீர்=புகழ் பேணும்=விரும்பும்; தலத்து இறைவியின் திருநாமம் நறுங்குழல் நாயகி. அதனை சற்றே மாற்றி நறுங்குழல் மடவாள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அழகாக விளங்குகின்றதும் பின்னப்பட்டதும் ஆகிய செஞ்சடையை உடையவனும், இறைவனது புகழினை விரும்பிப் பேணும் தன்மை உடையதும் ஓரிடத்தில் நில்லாமல் பல இடங்களிலும் சுற்றித் திரிவதும் ஆகிய பூத கணங்களால் சூழப் பட்டவனும், நெற்றிக் கண்ணினை உடையவனும் ஆகிய பெருமான், நறுங்குழல் நாயகியுடன் எறும்பியூர் மலையில் வீற்றிருந்து நாள்தோறும் அடியார்களுக்கு அருள் பாலிக்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணு சீர்க்
கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்
நறுங்குழல் மடவாளொடு நாள் தொறும்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
பிராட்டியின் கூந்தல் தெய்வீக நறுமணம் வீசுகின்றது என்று குறிப்பிடும் அப்பர் பிரான் அந்த கூந்தலை அன்றலர்ந்த நறுமணம் வீசும் மலர்கள் அலங்கரிக்கின்றன என்று கூறும் பாடல் (6.4.9), அதிகை தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலாகும். கோசரம்=தேசம்: நாண் மலர்=அன்று அலர்ந்த மலர்கள், அந்நாளில் மலர்ந்த பூக்கள்: செம்பொன்னினால் செய்தது போன்று அழகுடன் செம்பட்டை நிறத்தினில் உள்ள சடை கொண்டவன் என்று பெருமானை குறிப்பிடும் அப்பர் பிரானுக்கு பிராட்டியின் கூந்தலுக்கு உரிய இயற்கை நறுமணத்தினை உணர்த்துவது பொருத்தம் என்று தோன்றியது போலும்.
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செஞ்சடை எம் பெருமானே தெய்வ நாறும்
வம்பின் நாண் மலர்க் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே அண்ட கோசரத்துளானே அவனாகில் அதிகை வீரட்டனாமே
இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.16.1) அப்பர் பிரான் பிராட்டியை ஏலக் கமழ் குழலாள் என்று குறிப்பிடுகின்றார். கண்ணி=தலையில் அணியும் மாலை; மாலை=திருமாலை; வேலை=கடல்; வினைகள் மூன்று வகைப்படும். தொல்வினை, ஊழ்வினை மற்றும் மேல்வினை என்பனவே அந்த மூன்று பிரிவுகள். பழைய பல பிறவிகளில் ஈட்டிய மொத்த வினைத்தொகுதி தொல்வினை ஆகும். அந்த தொல்வினையின் ஒரு பகுதி ஊழ்வினையாக, இந்த பிறவியில் அனுபவித்து கழிப்பதற்காக ஒதுக்கப்படுகின்றது. அந்த வினையின் விளைவுகளாக வரும் இன்ப துன்பங்களை நாம் எதிர்கொள்ளும் முறைகள் மேலும் பல வினைகளுக்கு வழிவகுத்து, நமது வினைகளை பெருக்குகின்றன. இவ்வாறு நமது வினைகளை மேலும்மேலும் பெருக்கிக் கொள்வதை தடுக்கும் வல்லமை, இறைவனின் கருணையால் தான் நமக்கு ஏற்படும். அந்த பக்குவ நிலை, விருப்பு வெறுப்பு இல்லாமல் இன்ப துன்பங்களை எதிர் கொள்ளும் பக்குவம், இருவினைகளையும் ஒன்றாக எதிர்கொள்ளும் பக்குவம் வந்த பின்னர், பக்குவம் அடைந்த இந்த உயிர் இனிமேல் வினைகளை அனுபவிப்பதால் நிலை தடுமாறாது என்பதை உணரும் இறைவன், மொத்த வினைகளையும் அகற்றி கழித்து விடுகின்றான். இவ்வாறு அவன் செய்யும் உதவியே, மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு வினைகளை முற்றிலும் தீர்க்கும் வல்லமை, சிவபெருமான் ஒருவனுக்கே உண்டு என்பதால், மற்றவர்களிடமிருந்து மாறுபட்டுள்ள அவனை விகிர்தன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார் (விகிர்தன்=மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன்). தந்திரம்=செய்யும் முறைகள்: வேதங்களில் வேள்விகள் முதலான சடங்குகள் செய்யும் போது சொல்லப்பட வேண்டிய மந்திரங்கள் தவிர, அந்த மந்திரங்கள் சொல்லப் படும்போது செய்ய வேண்டிய வழிமுறைகளும் சொல்லப் பட்டுள்ளன. இதனையே மந்திரமும் தந்திரமும் ஆனார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். வேதங்களை மந்திரம் எனவும் சிவ ஆகமங்களை தந்திரம் என்றும் சொல்வதுண்டு ஏலம் என்ற சொல்லுக்கு, மயிர்ச்சாந்து என்றும் நறுமணம் என்றும் இரண்டு பொருள்கள் கூறுகின்றனர்.
சூலப்படை உடையார் தாமே போலும் சுடர்த் திங்கள் கண்ணி உடையார் போலும்
மாலை மகிழ்ந்து ஒரு பால் வைத்தார் போலும் மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்
வேலைக் கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏலக் கமழ் குழலாள் பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே
சூலப்படையினை உடையவரும், சுடராக ஒளி வீசும் சந்திரனைத் தனது சடையில் மாலையாக அணிந்தவரும், திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டவரும், மந்திரங்களாகவும் அந்த மந்திரங்களின் பயனைப் பெறுவதற்கு வழிவகுக்கும் செயல்களாகவும் அமைந்தவரும், கடலில் தோன்றிய விடத்தினை உண்டவரும், ஊழ்வினையை அனுபவிக்கும் உயிர்கள் தாங்கள் ஏற்றிக் கொள்ளும் ஆகாமிய வினையைத் தீர்ப்பவரும், ஏனைய தெய்வங்களும் தேவர்களும் செய்ய முடியாத செயல்களை செய்யும் வல்லமை வாய்ந்த விகிர்தரும், நறுமணம் கமழும் கூந்தலை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவரும் ஆகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார் என்பது மேற்கண்ட பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் ஏரார் கமழ் குழலாள் என்றும் எட்டாவது பாடலில் ஏலம் கமழ் குழலாள் என்றும் பிராட்டியை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.45.10) அப்பர் பிரான் பிராட்டியை மருவுற்ற மலர்க்குழலி என்று குறிப்பிடுகின்றார். மரு=நறுமணம்; துளக்கம்=அசைவு; உரு ஒற்றி=உருவத்தை உற்று நோக்கி; பெருமானை அடையாத ஏக்கத்தினால் தனது உடல் இளைத்து, தனது கை வளையல்கள் ஒவ்வொன்றாக கழன்றன என்று தலைவி உணர்த்தும் பாடல். நறுமணம் மிகுந்த மலர்களை தனது கூந்தலில் அணிந்துள்ள பார்வதி தேவி அச்சம் அடையும் வகையில், எண் திசைகளும் நடுங்கும் வண்ணம் கயிலை மலையினை அசைத்து வீண் சண்டைக்கு வந்த அரக்கன் இராவணனை வெகுண்டு நோக்கிய பெருமான், அவனது வலிமை முற்றிலும் அழியுமாறு தனது கால் பெருவிரலை கயிலை மலை மீது ஊன்றினார். நெடிய தீத்திரளாக தங்கள் முன்னே எழுந்த பெருமானின் உருவத்தை உற்று நோக்கிய திருமாலும் பிரமனும், அடியையும் முடியையும் காணும் முயற்சியில் ஈடுபட்டு அந்த முயற்சியில் தோல்வி அடையும் வண்ணம் உயர்ந்து நின்றவர் பெருமான். அத்தகைய பெருமை உடைய பெருமான், திருவொற்றியூர் தனது ஊர் என்று சொல்லிச் சென்றதால், அவரது வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த எனது உடல், அவர் வாராததால் ஏற்பட்ட ஏக்கத்தில் மெலிய, எனது கையில் மிகவும் அடர்த்த வண்ணம் அணிந்திருந்த வளையல்கள் ஒவ்வொன்றாக கழன்று விழுகின்றன என்று அப்பர் நாயகி கூறுவதாக அமைந்த அகத்துறைப் பாடல்.
மருவுற்ற மலர்க்குழலி மடவாள் அஞ்ச மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்
செருவுற்ற வாளரக்கன் வலி தான் மாளத் திருவடியின் விரல் ஒன்றினால் அலற ஊன்றி
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடிக் காண ஓங்கின அவ்வழல் ஒள்ளலார் இங்கே வந்து
திருவொற்றியூர் நம்மூர் என்று போனார் செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்றவாறே
சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.87.3) அப்பர் பிரான், பிராட்டியை, வம்பின் மலர்க் குழல் உமையாள் என்று அழைக்கின்றார். மலர்க் குழல் என்ற தொடருக்கு, மலரைப் போன்று மென்மையான கூந்தல் என்று பொருள் கொண்டு, நறுமணமும் மென்மையும் பொருந்திய கூந்தல் பிராட்டியின் கூந்தல் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. வம்பு=நறுமணம்; கம்பம்=அசைவு; யானையின் இயல்பு அசைந்தசைந்து நடந்து வருவது, எனவே கம்பம் என்று இலக்கியங்களில் குறிப்பிடப் படுகின்றது. நறுமணம் கமழும் மலர்களை அணிந்த கூந்தல் உடையவளாகிய உமையம்மையின் மணவாளனும், தாமரை மலரோன் என்று அழைக்கப்படும் பிரமனும் திருமாலும் காண்பதற்கு அரியவனாக திகழ்ந்த வல்லமை உடையவனும், மதநீர் பெருக்கெடுத்து ஓட அசைந்தசைந்து வந்த யானை கதறி விழுமாறு அதன் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்டவனும், பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்து வந்த நஞ்சினை தேக்கியதால் கறுத்த கழுத்தினை உடையவனும், அம்பர் நகரில் உள்ள பெருங்கோயிலில் அமர்பவனும், சாத்தை அயவந்தி மற்றும் திருவையாறு ஆகிய தலங்களில் உறைபவனும், செம்பொன் போன்று திகழும் திருமேனி உடையவனும் ஆகிய சிவபெருமான். சிவபுரம் என்று அழைக்கப்படும் தலத்தின் செல்வனாக விளங்குகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வம்பின் மலர்க் குழல் உமையாள் மணவாளன் காண் மலரவன் மால் காண்பரிய மைந்தன் தான் காண்
கம்பமத கரி பிளிற உரி செய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தான் காண்
அம்பர் நகர்ப் பெருங்கோயில் அமர்கின்றான் காண் அயவந்தி உள்ளான் காண் ஐயாறன் காண்
செம்பொன் எனத் திகழ்கின்ற உருவத்தான் காண் சிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே
எறும்பியூர் தலத்தின் மீது அருளிய, பன்னிய செந்தமிழ் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (6.91.3) அப்பர் பிரான் மலர்களின் நறுமணத்தையும் வென்ற நறுமணம் கொண்ட கூந்தலை உடைய அன்னை என்று தேவியை குறிப்பிடுகின்றார். கடுஞ்சுடர்=பேரொளியை உடைய விளக்கு; படிந்து=நிலத்தில் வீழ்ந்து; ஒரு=ஒப்பற்ற; ஓத வேலி=அலைகளை உடைய கடல்; நிறை=மிகுதியாய் காணப் படுகின்ற; மருவை வென்ற=மலர்களின் மணத்தை வென்ற நறுமணம்; நறுங்குழல் மங்கை என்பது தலத்து இறைவியின் திருநாமம். இந்த பெயர் அப்பர் பிரானுக்கு, இயற்கையாகவே நறுமணம் வீசும் தேவியின் கூந்தலை நினைவுபடுத்தியது போலும். இந்த பாடலில் அப்பர் பிரான் மலர்களின் நறுமணத்தை வென்ற நறுமணம் உடைய கூந்தலை உடையவள் தேவி என்று கூறுகின்றார். தெய்வீக மணம் கமழும் கூந்தல் என்பதால் இயற்கையில் மணம் வாய்ந்த கூந்தலாக, வேறு நறுமணப் பொருட்களோ வாசனை மலர்களோ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாத கூந்தலாக இருந்த தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது.
கருவை என் மனத்திருந்த கருத்தை ஞானக் கடும் சுடரைப் படிந்து கிடந்து அமரர் ஏத்தும்
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகின் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாசத்
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்று அடையப் பெற்றேன் நானே
திருக்கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.20.7) சுந்தரர் நறுமணம் உடைய கூந்தல் கொண்ட உமையம்மை என்று குறிப்பிடும் வண்ணம் வம்பமரும் குழலாள் என்று கூறுவதை நாம் காணலாம். தன்னிடத்தில் அன்பு உடையவனே என்று பெருமானை அழைத்து, பெருமானே உன்னை அல்லால் வேறு எவரொருவர் எனக்கு உதவி செய வல்லார், நீயே குண்டையூரில் குவிந்து கிடக்கும் இந்த நெல்மலையினை திருவாரூர் மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுந்தரர் கோரும் பாடல்.
எம்பெருமான் உனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும்
வம்பமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகை சூழ் திருகோளிலி எம்பெருமான்
அன்பதுவே அடியேற்கு அவை அட்டித் தரப் பணியே
திருப்பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.48.8) சுந்தரர் தேவியை மணம் வீசும் குழலாள் என்று கூறுகின்றார். வம்பு=நறுமணம்; இந்த பாடலிலும் பெருமானின் சடை மற்றும் பிராட்டியின் கூந்தல் குறிப்பிடப்பட்டு, அவற்றின் சிறப்புகள் உணர்த்தப் படுகின்றன. கோலுதல்=வளைத்தல்; திரிபுரங்களை எரிப்பதற்காக பெருமான் வில்லை வளைத்த நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப் படுகின்றது.
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்
வம்புலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டைக்
கொம்பின் மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
பிராட்டியின் கூந்தல் இயற்கை மணம் வாய்ந்தது எனும் தேவாரப் பாடல் குறிப்புகள் நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றன. பரஞ்சோதி முனிவர் தாம் அருளிய திருவிளையாடல் புராணத்தில், இந்த நிகழ்ச்சியை, தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் மற்றும் கீரனை கரையேற்றிய படலம் ஆகிய இரண்டு படலங்களில் கூறுகின்றார். பெருமான் தருமிக்கு எழுதிக் கொடுத்த பாடல் குறுந்தொகை எனப்படும் சங்க இலக்கியத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. இறைவன் எழுதிக் கொடுத்த பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே
வண்டினை நோக்கி பாடுவதாக அமைந்த இந்த பாடலின் கருத்து; நறுமணத்தினை ஆராய்ந்து திரியும் வாழ்க்கையை உடைய அழகிய சிறகுகளை உடைய வண்டே, பயிற்சி மிக்க நட்பும் மயில் போன்ற சாயலும் நெருங்கிய பற்களும் உடைய எனது தலைவியின் கூந்தலில் வீசும் நறுமணத்தினை விடவும் அதிகமான நறுமணம் கொண்ட பூவினை நீ இதுவரை கண்டதுண்டோ. எனது கேள்விக்கு விருப்பு வெறுப்பு ஏதும் இன்றி உண்மையான பதிலை நீ கூறுவாயாக. இந்த பாடல் பொருட்குற்றம் உள்ள பாடல் என்று நக்கீரன் உரைக்க, இறைவன் நேரில் தோன்றி, நக்கீரனிடம், நீ வணங்கும் ஞானப் பூங்கோதையின் (திருக்காளத்தி தலத்து அம்மை) கூந்தலுக்கு இயற்கையில் நறுமணம் இல்லையா என்று கேட்க, நக்கீரன் இல்லை என்று முதலில் பதில் உரைத்தார். பின்னர் தான் தவறு செய்தேன் என்று ஒப்புக்கொண்டு, கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, கோப பிரசாதம், திருவெழுகூற்றிருக்கை ஆகிய பாடல்களை (பதினோராம் திருமுறை) பாடியதாகவும் பரஞ்சோதி முனிவர் கூறுகின்றார்.
திருவாசகம் கீர்த்தித் திருவகவல் பதிகத்தின் பாடலில் (80வது வரி) மணிவாசக அடிகளார், மருவார் குழலி மாது என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பாடலில் (8.10.14) மணிவாசக அடிகளார், பெருமானை அருவாய் மறை பயில் அந்தணனாய் ஆண்டு கொண்ட திரு என்றும் பிராட்டியை மருவார் மலர்க்குழல் மாது என்றும் குறிப்பிடுகின்றார். அருவமாக எங்கும் நிறைந்திருக்கும் பெருமான் தனக்கு அருள் புரியும் நோக்கத்துடன் அந்தணனாக வந்து குருந்த மரத்தின் கீழே இருந்த தன்மையை குறிப்பிடுகின்றார். பெருமானுடன், அவனது அருளின் வடிவமாக திகழும் பிராட்டியும் உடன் வந்ததால் தான், தனக்கு பெருமானின் அருள் கிடைத்தது என்பதை உணர்த்தும் வண்ணம் மருவார் மலர்க் குழல் மாதினொடும் வந்தருளி என்று கூறுகின்றார். திரு என்றால் தெய்வத் தன்மை என்று பொருள். சிவபெருமான் ஒருவரையே தெய்வமாக அடிகளார் கருதுவதால், திருவான தேவர் என்று பெருமானை குறிப்பிட்டு, மற்ற தேவர்கள் அனைவரும் திருவற்ற தேவர்கள் என்று உணர்த்துகின்றார். பயிலுதல் என்றால் ஒரு செயலை தொடர்ந்து செய்தல் என்று பொருள். அந்தணர்கள் தொடர்ந்து அனுதினமும் வேதம் ஓதிக் கொண்டே இருப்பதால் மறை பயில் அந்தணர் என்று கூறுகின்றார். .
கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறை பயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ
தரு=மரங்கள்; தருவளர்=மரங்கள் வளர்கின்ற; கானம்=காடு; துங்க=உயர்ந்த; வேழம்=யானை; உருவளர் ஆல்=உயர்ந்து வளரும் ஆலமரம்; கரு=புகழ், மேன்மை; இந்த பாடலில் பெருமானை அடைந்து பணியும் மனிதர்களே கற்றோர் என்று சம்பந்தர் கூறுகின்றார். எனவே ஏனையோரை அவர் கற்றவராக மதிக்கவில்லை என்பது இதனின்று புலனாகின்றது. கற்றதனால் ஆய பயன் நற்றாள் தொழல் என்று தானே வள்ளுவப் பெருந்தகையும் கூறுகின்றார். பெருமான் தோலுரித்த யானை கயாசுரன் என்ற அரக்கன் என்றாலும் யானையின் பொதுத்தன்மை குறித்து காட்டில் வாழும் யானை என்று இங்கே குறிப்பிடுகின்றார். முதல் பாடலில் இந்த தலத்து இறைவனை வணங்கித் தொழும் அடியார்கள் அடையவிருக்கும் பலனை குறிப்பிடும் சம்பந்தர், இரண்டாவது மூன்றாவது பாடல்களில் தலத்தின் இயற்கை அழகினை குறிப்பிட்டு நம்மை இந்த தலத்திற்கு செல்லுமாறு ஊக்குவிக்கும் சம்பந்தர், இந்த பாடலில் தலத்து பெருமானை வணங்குவோரே கற்றவர்களாக கருதப் படுவார்கள் என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
மரங்கள் அடர்ந்த கானகத்தில் வாழ்வதும் சிறந்ததும் பெரியதும் ஆகிய யானையின் தோலை உரித்து அதனை, உமையன்னை அஞ்சும் வண்ணம் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட பெருமான், சனகர் சனந்தனர் சனத்குமாரர் சனாதனர் ஆகிய நான்கு முனிவர்க்கும், உயர்ந்து வளரும் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்த வண்ணம், வேதங்களின் பொருளாகிய அறத்தினை உணர்த்தினார். இத்தகைய பெருமையை உடைய பெருமான் உறைவதும், நாளும் புகழ் வளர்ந்து திகழ்வதும் ஆகிய கண்ணார்கோயில் திருக்கோயிலை அடைந்து பெருமானைப் பணியும் மனிதர்களே, கற்றவர்களாக கருதப் படுவார்கள்.
,பாடல் 5:
தண்ணார் திங்கள் (1.101) பாடல் 5 (திதே 0382)
தண்ணார் திங்கள் (1.101) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0383)
தண்ணார் திங்கள் (1.101) பாடல்கள் 5 தொடர்ச்சி, 6 (திதே 0384)
மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரைச்
செறு மாவலி பால் சென்று உலகெல்லாம் அளவிட்ட
குறு மாண் உருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறு மா கண்டன் மேயது கண்ணார் கோயிலே
விளக்கம்:
வாமனர் வணங்கியதால் இந்த தலத்திற்கு குறுமாணிக்குடி என்ற பெயரும் உள்ளது. குறு மாண் உருவன்=குள்ளமான பிரமச்சாரி உருவம் எடுத்த திருமால்; தற்குறி=தன்னால் குறிப்பிட்டு வணங்கப் படும் அடையாளம்; இந்த தலத்தில் உள்ள இலிங்கம் வாமனரால் தாபிக்கப் பட்டதாக கருதப் படுகின்றது. இந்த தலத்தினை அடுத்துள்ள ஊர் குறுமாணிக்குடி என்று இன்றும் அழைக்கப் படுகின்றது. மறு=குற்றம்; உருவத்தில் சிறியவனாக, குள்ளனாக மூன்றடி மண் இரந்த பின்னர், அவ்வாறு பெற்ற மூன்றடிகளை அளக்கும் தருவாயில் நெடுமாலாக வளர்ந்தது குற்றமுடைய வஞ்சக செயலாக இங்கே குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு குற்றமுடைய வாமனன் என்று கூறுவது நமக்கு பெரியாழ்வாரின் பாசுரம் ஒன்றினை நினைவூட்டுகின்றது.
திரிவிக்ரமனாக வளர்ந்து இரண்டு அடிகளால் மூவுலகத்தையும் அளந்து மூன்றாவது அடியினை மாவலியின் தலை மேல் வைத்து அழுத்தியதை மாயச்செயல் என்று மாவலியின் மகன் நமுசி கூறியதாக பெரியாழ்வார் இந்த பாசுரத்தில் கூறுகின்றார். கடலூர் அருகில் உள்ள திருமாணிக்குழி தலத்தில் பெருமானின் சன்னதியில் நமக்கு இடது புறம் தோன்றும் சுவற்றில், திருமால் மாவலியிடம் யாசிப்பது, நெடுமாலாக வளர்வது, மூன்றடி அளப்பது, ஒரு அரக்கனுடன் போரிட்டு அவனை வானில் சுழற்றுவது, பெருமானை வழிபடுவது ஆகிய சித்திரங்கள் பொறிக்கப் பட்டுள்ளதை நாம் கண்டு மகிழலாம். முந்தைய வண்ணம், மூன்றடி யாசகம் கேட்டபோது இருந்த குள்ளமான உருவத்துடன் மூன்றடிகளை அளக்காமல், மாயமாக உயர்ந்த திருவிக்ரமன் உருவத்தால் மூன்றடிகள் அளந்த மாயத்தினை புரிந்து கொள்ளாமல் தனது தந்தை ஏமாந்து விட்டதாக அரக்கன் கூறுவதாக அமைந்த பாசுரம்.
என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முந்தைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னு முடியனே அச்சோவச்சோ
வேங்கட வாணனே அச்சோவச்சோ
அசுரர்களில் சற்று மாறுபட்டவனாக இருந்தவன் மாவலி. வலிமை உடையவனாக இருந்தாலும் மக்களை அன்பால் அரவணைத்து அறம் தவறாமல் ஆட்சி புரிந்தவன்; வேதங்களை மதித்து வேள்விகளை வளர்த்து இறையுணர்வுடன் திகழ்ந்தவன். எனவே தான் மற்றிணை இன்றி வாழ்ந்தவன் என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மற்றிணை இன்றி என்ற தொடரினை திருமாலுக்கு அடைமொழியாக கொண்டு, தனது வாமன உருவத்திற்கு இணையான அழகிய உருவம் வேறேதும் இல்லாத வண்ணம் தோன்றிய பெருமாள் என்றும் பொருள் கொள்ளலாம். தேவர்களை வென்ற மாவலியின் செயல் இங்கே வானோரைச் செறு மாவலி என்றார் தொடரால் உணர்த்தப் படுகின்றது. செறு என்ற சொல்லுக்கு வருத்திய என்றும் பொருள் கூறப்படுகின்றது. இந்த பாடலில் கற்றவனாக திகழ்ந்த வாமனன் பெருமானை வணங்கிய செயல் உணர்த்தப் படுகின்றது. மாணிகுழி என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.77.4) திருஞானசம்பந்தர், வாமனராக அவதாரம் எடுத்த திருமால், தனது அவதார நோக்கம் நிறைவேறும் பொருட்டு பெருமானை வணங்கியதாக குறிப்பிடுகின்றார். குறளன் என்று வாமனனாக அவதரித்ததை குறிக்கும் திருஞானசம்பந்தர், தினமும் தனது குலத்திற்கு ஏற்ப நியமங்கள் செய்த நெடுமால் குறளன் என்று குறிப்பிட்டு, திருமால் அந்தணச் சிறுவனாக பிறந்ததையும் குறிக்கின்றார். மனதினை ஒருமுகப் படுத்தி வழிபாடு செய்ய வேண்டிய அவசியம் இந்தப் பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. நெடுமால் என்று குறிப்பிடுவதன் மூலம் திருமால், திரிவிக்ரமனாக மாறியதும் இங்கே கூறப்பட்டுள்ளது.
நித்த நியமத் தொழிலனாகி நெடுமால் குறளனாகி மிகவும்
சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடமாம்
கொத்து அலர் மலர்ப் பொழிலின் ஈடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு
ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடும் உதவி மாணிகுழியே
வாமனராகவும் திரிவிக்ரமராகவும் அவ்தாரம் எடுத்த திருமால், பெருமானை வணங்கியதை குறிப்பிடும் அப்பர் பிரானின் தேவாரப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.30.2), அப்பர் பிரான், பெருமானை மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார் என்று குறிப்பிடுகின்றார். விண்= வீடுபேறு: வேட்டல்=விரும்புதல்; பயிலுதல்=கூடி இருத்தல்; நிலையான இன்பத்தினைத் தரும் வீடுபேற்றின் தன்மையை அடியார்களுக்கு உணர்த்தி, அவர்கள் வீடுபேற்றினை உணருமாறு செய்தவர் சிவபெருமான்; வேள்விகளால் விளையும் பயன்களை உணரவைத்து, மக்கள் வேள்விகளை விரும்பச் செய்தவர் சிவபெருமான்; தனது பக்தர்கள் பாடலுடன் இனிமையாக பண்களை இசைத்துப் பாடவும் தன்னை வழிபடுவதில் பயிற்சி பெறவும் வைத்தவர் சிவபெருமான்; வாமனனாகச் சென்று மூன்று அடி மண்ணினை இரந்து பெற்ற திருமால், திரிவிக்ரமனாக மாறி ஈரடியால் மூன்று உலகங்களையும் அளக்க வைத்தவர் சிவபெருமான்; வேறு எவருக்கும் இல்லாத வகையில் தனது நெற்றியில் கண்ணினை வைத்தவரும் அவரே. அவர் தான் கழிப்பாலைத் தலத்தில், கடற்கரைத் தலைவராக விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் அப்பர் பிரான், பெருமானை வாமனை வணங்க வைத்தார் என்று கூறுகின்றார். வாமன்=வாமனனாய் வந்த திருமால் என்று ஒரு சாரார் பொருள் கொள்வார்கள். வாமம் என்பதற்கு இடது பாகம் என்று பொருள். இடது பாகத்தில் சக்தியை வைத்தவன் என்ற பொருளும், இறைவனின் இடது பாகத்தில் அமைந்துள்ள சக்தி என்றும் இரண்டு விதமாகவும் பொருள் கொள்வார்கள். எனவே வாமனை வணங்க வைத்தார் என்பதற்கு, தனது இடது பாகத்தில் உள்ள உமையம்மையை, அனைவரும் வணங்கச் செய்பவர் சிவபெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. மேலும் நமச்சிவாய என்ற மந்திரத்தில் உள்ள நகாரம் சிவத்தை உணர்த்துவது போன்று, வகாரம் சக்தியை உணர்த்துவதும் நாம் இங்கே நோக்கத் தக்கது. எனவே வகாரத்தால் உணர்த்தப்படும் சக்தி என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அம்மையை மட்டுமல்லாமல், திருமாலையும் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவர் பெருமான் என்பதும் நமது நினைவுக்கு வருகின்றது. சோதியுள்=சூரியனின் உள்ளே: அட்ட மூர்த்தியாக விளங்கும் இறைவன், சூரியன் மற்றும் சந்திரனுடன் இணைந்து, அவர்களை இயக்க வைப்பதை நாம் அறிவோம். அவ்வாறு சூரியனின் உள்ளே சோதியாக இருக்கும் தன்மை இங்கே சோதியுள் சோதி வைத்தார் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. திருவாசகம் திருவண்டப் பகுதியில், மணிவாசகர் பெருமானை அருக்கனில் சோதி அமைத்தான் என்று குறிப்பிடுவது நாம் இங்கே நினைவு கூரத் தக்கது;
வாமனை வணங்க வைத்தார் என்று கூறுவது நமக்கு பிருங்கி முனிவரின் வரலாற்றினை நினைவூட்டுகின்றது. பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து வந்த அவர் அம்மையும் அப்பனும் அருகருகே வீற்றிருந்த போதும், அம்மையை வலம் வந்து வழிபடுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன், ஒரு வண்டாக மாறி, அவர்களிடையே புகுந்து சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கினார். சக்தி தான், அனைத்து உயிர்களிலும் சக்தியாக இருந்து, அந்த உயிர்களை இயக்குகின்றாள் என்பதையும் ஏற்றுக் கொள்ள மறுத்த பிருங்கி முனிவருக்கு உண்மை நிலையை உணர்த்த, அம்மை அவரது உடல் சக்தியிழக்குமாறு செய்கின்றாள். அந்த நிலையிலும் அவர் மனம் மாறாதிருப்பதைக் கண்ட அம்மை, அவரது பக்தியை மெச்சினாள். மற்றும் பெருமானிடம் சிவம் வேறு சக்தி வேறல்ல என்பதை அனைவர்க்கும் உணர்த்தும் வண்ணம், பெருமான் தன்னை அவரது உடலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டியதை பெருமான் ஏற்றுக்கொண்டு, பெருமான் மாதொருபாகனாக விளங்கினார். அவ்வாறு விளங்கியதன் மூலம் பிருங்கி முனிவர் உட்பட அனைவரும் அம்மையையும் வணங்குமாறு செய்தார். மாதொரு பாகனின் தோற்றத்தை உணர்த்தும் வண்ணமாக வாமனை வணங்க வைத்தார் என்ற தொடர் விளங்குகின்றது. தனது இடது பாகத்தில் இருக்கும் உமையம்மையை அனைவரும் வணங்குமாறு செய்தவர் சிவபெருமான்; மக்கள் அனைவரும் தன்னை வாழ்த்துவதற்காக அவர்களுக்கு வாயினை வைத்து அதன் மூலம் அவர்கள் உய்வதற்கான வழி வகுத்தவர் சிவபெருமான்; தேய்ந்த நிலையில் வந்து சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் ஏற்று, அவன் அழிந்து போகாமல் காத்தவர் சிவபெருமான்; சூரியனின் உள்ளே சோதியாக நின்று அவன் ஒளி வீச உதவுபவர் சிவபெருமான்; பசுவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஐந்து பொருட்களை வைத்து, அந்த ஐந்து பொருட்களையும் கொண்டு தன்னை நீராட்டும் வாய்ப்பினை அடியார்களுக்கு வைத்தவர் சிவபெருமான்; மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவரும் தன்னிடமும் பிணைந்து இருக்குமாறு அன்பு எனப்படும் சாதனத்தை வைத்தவர் சிவபெருமான்; இவ்வாறு பல விதமான அருள்கள் செய்த சிவபெருமான் மன்மதன் மீது கோபம் கொண்டு அவனை எரித்த நெற்றிக் கண்ணினை உடையவராகவும், கழிப்பாலை தலத்தில் கடற்கரைத் தலைவராகவும் விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனை சடைமேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார்
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.51.9) அப்பர் பிரான், திருமாலை இருநிலம் தாவினான் என்று குறிப்பிடுகின்றார். ஏற்ற நீர் கங்கை என்று கங்கை நதி, அதனில் குளிப்போரின் பாவங்களைத் தீர்த்து அவர்களை உயர்ந்தோர்களாக மாற்றும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பிரமனிடம் தான் பெற்ற வரத்தினால், தேவருலகில் இருந்த கங்கை நதியினை நிலவுலகுக்குக் கொண்டு வர பகீரதன் முயற்சி செய்த போதிலும், நிலவுலகம் வருவதற்கு விருப்பம் இல்லாத கங்கை நதி, உலகத்தையே தனது வேகத்தினால் புரட்டிக் கொண்டு பாதாளம் இழுத்துக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் மிகவும் வேகமாக கீழே இறங்கினாள். அதன் வேகத்தை இறைவன் தடுத்துத் தனது சடையில் அடக்கிக் கொண்டு சிறிய நீரோடையாக வெளியிட்டதன் பயனாக இன்றும் கங்கை நதி ஓடிக் கொண்டு இருக்கின்றது, அந்த நதியில் குளிப்பவர்களும் இதனால் பயனடைவதாக நம்பப் படுகின்றது. இவ்வாறு கங்கை நீர் ஏற்றம் பெறுவதற்கு காரணமாக இறைவன் இருந்த நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. ஏற்றம் உடைய கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றவனே, மூன்று உலகங்களையும் தாவி அளந்த திருமாலும், நறுமணம் மிகுந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் ஒன்று கூடி, நீண்ட அழலாக அவர்களின் முன்னே தோன்றிய உனது அடியையும் முடியையும் கண்டு விடுவோம் என்று தங்களது ஆற்றல் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உனது அடிமுடியினைத் தேட முயற்சி செய்தனர். தங்கள் ஆற்றல் மீதுள்ள செருக்கினால் உன்னைக் கண்டு விடுவோம் என்ற அவர்கள் காணாத வண்ணம் நீண்ட பெருமான் நீயே. சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சி செய்த இயமனை உதைத்து, கூற்றுவனுக்கும் கூற்றுவனாக விளங்கிய நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய் என்று அப்பர் பிரான் புகழ்ந்து கூறும் பதிகம்.
ஏற்ற நீர் கங்கையானே இருநிலம் தாவினானும்
நாற்றம் மலர் மேல் ஏறு நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கல் உற்றார்க்கு அழலுரு ஆயினானே
கூற்றுக்கும் கூற்றது ஆனாய் கோடிகா உடைய கோவே
நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.71.4) அப்பர் பிரான், திருமாலை மண் தனை இரந்து கொண்ட மாயன் என்று குறிப்பிட்டு, வாமன அவதாரத்து நிகழ்ச்சியை உணர்த்துகின்றார். வாமனனாக சென்று, மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் தானமாகப் பெற்ற பின்னர் திரிவிக்ரமனாக மாறி, மூன்று உலகங்களையும் தனது ஈரடியால் அளந்த தன்மையும் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு மூன்றடி மண்ணினை அளக்கும் சமயத்தில் நெடிய திரிவிக்ரமனாக மாறியதை மாயம் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். முன்னம் சமணர்களோடு கலந்து வாழ்ந்த நாட்களில் இழிந்த நிலையில் இருந்த தனது நெஞ்சம் உய்வினை அடைந்து தனது நிலையில் மாற்றம் பெற்றது அப்பர் பிரானுக்கு பெரும் வியப்பினை அளித்தது போலும். அம்ம என்ற சொல் வியப்பினை குறிப்பிடும் சொல். மூன்றடி மண்ணினை முதலில் தானமாகப் பெற்ற பின்னர், நெடிய வடிவெடுத்து மூன்று உலகங்களையும் அளந்து கொண்ட மாயனாகிய திருமாலுடன், தேவர்களும் அசுரர்களும் கூடி பாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து எழுந்த கொடிய நஞ்சினை உண்டதால், கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவன் சிவபெருமான். அவன் தான் அனைத்து உலகங்களுக்கும் முதல்வன்: கடலால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தில் கோயில் கொண்ட, சிவபெருமானை நினைத்து, நெஞ்சமே நீ உய்வினை அடைந்தது வியக்கத் தக்கதே என்று தனது நெஞ்சினுக்கு சொல்வதாக அமைந்த பாடல்.
மண் தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர்
தெண் திரை கடைய வந்த தீவிடம் தன்னை உண்ட
கண்டனைக் கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
அண்டனை நினைந்து நெஞ்சே அம்ம நாம் உய்ந்தவாறே
திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.108.1) அப்பர் பிரான், திருமாலை மாவலி பால் காணிக்கு இரந்தவன் என்று குறிப்பிடுகின்றார், மாணி=பிரம்மச்சாரி சிறுவனாகிய மார்க்கண்டேயன். காணி-நிலம், மூன்றடி நிலம் வேண்டும் என்று திருமாலின் அவதாரமாகிய வாமனன் மகாபலியிடம் இரந்த செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது. மூன்றடி மண் கேட்டு இரந்த வாமனன், திரிவிக்ரமனாக மாறி மண்ணுலகையும் விண்ணுலகையும் இரண்டு அடிகளால் அளந்தது புராண நிகழ்ச்சி. அத்தகைய வல்லமை பெற்ற திருமாலும் காண முடியாமல் திகைக்கும் வண்ணம் பாதாளம் ஏழினையும் ஊடுருவி தாண்டி நின்ற திருவடிகள் பெருமானின் திருவடிகள் என்று பெருமானின் திருவடிகளின் பெருமை இங்கே பேசப் படுகின்றது பேர்த்தும்=வேறு ஒன்று, பெருமானின் திருவடிகளின் தன்மையை பாடலின் முதல் மூன்று அடிகளில் கூறிய அப்பர் பிரான், அந்த பாதங்களின் வேறொரு தன்மையையும் கூறுகின்றார். திருமாலால் காண முடியாத திருவடிகளை, சிவானுபூதி வரப் பற்ற அடியார்கள் கண்டு இன்பமடைந்ததாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். கண்ட தொண்டர்=அநுபூதி நிலை கைவரப் பெற்று, பெருமானின் உருவத்தைக் கண்டு களிக்கும் பேற்றினை பெற்ற அடியார்கள்; பிரம்மச்சாரி சிறுவனாக இருந்த, மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர வந்த காலனை உதைத்து, மார்கண்டேயனுக்கு என்றும் அழியாது சிரஞ்சீவியாக இருக்கும் நிலையை அளித்தன, சிவபெருமானின் திருவடி. மகாபலியிடம் இரந்து பெற்ற மூன்றடி மண்ணினை அளப்பதற்காக நெடியவனாக நீண்டு மண்ணுலகம் மற்றும் விண்ணுலகம் ஆகிய இரண்டையும் இரண்டு அடிகளால் அளந்த வல்லமை உடைய திருமாலும் காண்பதற்கு அரியனவாக திகழ்ந்த பெருமையினை உடையது சிவபெருமானின் திருவடிகள். அத்தகைய வல்லமை வாய்ந்த திருவடிகளை சிவானுபூதி நிலை கைவரப்பெற்ற தொண்டர்கள் கண்டு மகிழ்ந்து, திருவடிகளின் சிறப்பினை குறிப்பிட்டு போற்றுகின்றனர். அந்த திருவடிகள் மாணிக்கம் போன்று சிறந்த ஒளியினை வீசுவதாகவும் உடையன. இத்தகைய பெருமைக்கு உரிய திருவடிகளை உடைய பெருமான் மாற்பேறு தலத்தில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை
மாணிக்கு உயிர் பெறக் கூற்றை உதைத்தன மாவலிபால்
காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன கண்ட தொண்டர்
பேணிக் கிடந்தது பரவப் படுவன பேர்த்தும் அஃதே
மாணிக்கம் ஆவன மாற்பேறு உடையான் மலரடியே
பேரெயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.16.10) அப்பர் பிரான், திருமாலை மாணியாய் மண் அளந்தவன் என்று குறிப்பிடுகின்றார். பாணி=தாளத்துடன் இசைந்த பாட்டு; படுதம்=ஒரு வகை கூத்து; தூணி=அம்பறாத் தூணி; மாணி=பிரம்மச்சாரி சிறுவன், இங்கே வாமனராக அவதாரம் எடுத்த திருமாலை குறிக்கின்றது. வாமனர் வழிபட்ட தலம் என்பதால் திருமாணிக்குழி என்று அழைக்கப்படும் திருத்தலம் (கடலூர் மற்றும் பண்ருட்டிக்கு அருகில் உள்ள பாடல் பெற்ற தலம்) நமது நினைவுக்கு வருகின்றது. அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரத்தை அளித்த பெருமான், அதனுடன் எடுக்க எடுக்கக் குறையாத அம்பறாத் தூணியையும் அளித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த செய்தியை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தாளத்துடன் பொருந்துமாறு இசைப் பாடல்கள் பாடும் பெருமான், தனது கால்களைப் பெயர்த்து படுதம் எனப்படும் ஒரு வகை கூத்தும் ஆடுகின்றார். எடுக்கயெடுக்க அம்புகள் குறையாமல் இருக்கும் வண்ணம் உள்ள அம்பறாத் தூணியை அர்ஜுனனுக்கு அளித்து அருள் புரிந்தவர் சிவபெருமான். வாமனனாக வந்து மாவலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் யாசித்துப் பெற்று பின்னர் திரிவிக்ரமனாக நெடிது வளர்ந்து மூன்று உலகங்களையும் தனது ஈரடிகளால் அளந்த திருமாலும் பிரமனும் போற்றிப் புகழ்ந்து பாடப்படும் பெருமான் பேரெயில் தலத்தின் தலைவராக விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை;
பாணியார் படுதம் பெயர்ந்து ஆடுவர்
தூணியார் விசயர்க்கு அருள் செய்தவர்
மாணியாய் மண் அளந்தவன் நான்முகன்
பேணியார் அவர் பேரெயில் ஆளரே
ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.29.9) அப்பர் பிரான், வையம் அளந்தவனும் அயனும் காண முடியாமல் நெடுந் தழலாக பெருமான் நின்ற செய்தியை குறிப்பிடுகின்றார். மெய்=உண்மையான பரம்பொருள்; தாமே உயர்ந்த பரம்பொருள் என்று பிரமனும் திருமாலும் ஒருவருக்கு ஒருவர் வாதம் செய்தவராக இருந்த போது, நீங்கள் இருவரும் பரம்பொருள் அல்ல, நான் தான் பரம்பொருள் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட தழலாக பெருமான் வெளிப்பட்டதை உணர்த்தும் வண்ணம், மெய்ப்பொருளை காண முயற்சி செய்தவர் என்று திருமாலையும் பிரமனையும் அப்பர் இங்கே குறிப்பிடுகின்றார். மூன்று உலகங்களையும் தனது இரண்டு அடிகளால் அளந்த திருமாலும், பிரமனும் உண்மையான மெய்ப் பொருளினைத் தேடிய போது, அவர்கள் அடியினையும் முடியினையும் காணாத வண்ணம், நீண்ட அழலாக மாறிய இறைவனே, எனது தலைவனே, குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் இறைவனே என்று எப்போதும் வாய்விட்டு கூவி அழைக்கும் எனது மகளின் உடல், இறைவனுடன் இணையாத ஏக்கத்தில் இளைத்து வருந்துவதால், அவளது கைகளில் இருக்கும் வெண்சங்கு வளையல்கள் கழன்று விழுகின்றன. ஆவடுதுறை இறைவனே, நீ தான் அருள் கூர்ந்து எனது பெண்ணின் காதலை ஏற்று, அவளது உடல் தேறுமாறு செய்ய வேண்டும் என்று அப்பர் நாயகியின் தாயார் வேண்டுவதாக அமைந்த பாடல்.
வையம் தான் அளந்தானும் அயனுமாய்
மெய்யைக் காணலுற்றார்க்கு அழல் ஆயினான்
ஐயன் ஆவடு தண்டுறையா எனக்
கையில் வெள்வளையும் கழல்கின்றதே
திருக்கடவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.37.10) அப்பர் பிரான், திருமாலை, நீண்ட மால் என்று குறிப்பிடுகின்றார். நீண்ட மால்=மாவலிச் சக்ரவர்த்தியிடமிருந்து உலகங்களை மீட்பதற்காக, மூன்று உலகங்களையும் தனது திருவடிகளால் அளந்த திருமால்; மாண்ட=செருக்கு அழிந்த; மூன்று உலங்களையும் தனது இரண்டு அடிகளால் அளக்கும் வண்ணம் நெடிது உயர்ந்து வளர்ந்த திருமாலும் பிரமனும், தங்களது திறமையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாய், நெடிய தீப்பிழம்பாக எழுந்த பெருமானின் அடியையும் முடியையும் காண்பதற்கு முனைந்தனர். ஆனால் பெருமானின் அடியையோ முடியையோ காண முடியாமல், அவர்கள் இருவரும் தவித்து தங்களது செருக்கு அழியப் பெற்றனர். அவ்வாறு திருமாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவனாக விளங்கிய பெருமான், நாம் அனைவரும் கண்டு தொழும் வண்ணம் திருக்கடவூர் தலத்தில் உறைகின்றார். நீங்கள் அவரைக் காண்பீர்களாக என்று அப்பர் பிரான் நம்மை வழிப்படுத்தும் பாடல்.
நீண்ட மாலொடு நான்முகன் தானுமாய்க்
காண்டும் என்று புக்கார்கள் இருவரும்
மாண்ட ஆரழல் ஆகிய ஆனையார்
காண்டலானை கண்டீர் கடவூரரே
சிந்திப்பார் மனத்து என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (5.97.27) அப்பர் பிரான், திருமாலை, தாவினான் என்று குறிப்பிட்டு, திரிவிக்ரமனாக மூவிலகினையும் திருமால் அளந்த செயலை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முப்பது பாடல்களும், பன்னிரண்டு உயிர் எழுத்துகள், ஆயுத எழுத்து மற்றும் பதினெட்டு மெய்யெழுத்துகளையும் முதல் எழுத்தாக கொண்ட பாடல்கள் கொண்ட பதிகம். தழலும் தாமரை=தழலின் நிறத்தில் அமைந்த தாமரை; ழ என்ற எழுத்து இரண்டாவது எழுத்தாக முதல் சொல்லில் வந்துள்ளது. அந்தரம்=வானம்; ஒள்ளழல்=ஒலியுடன் மிளிரும் நெருப்பு. இந்த பாடலில் ழ என்ற எழுத்து முதலடியில் இரணடாவது எழுத்தாக வருவதை நாம் காணலாம். மேலும் லகரமும் கையாளப்பட்டு இருப்பதை நாம் உணரலாம். ழ என்ற எழுத்துடன் எந்த சொல்லும் தமிழ் மொழியில் தொடங்காது என்பதால், ழகரத்தை இரண்டாவது எழுத்தாக கொண்டுள்ள சொல்லினை அப்பர் பிரான் பயன்படுத்தியுள்ளார்.தீச்சுடரினை ஏந்திய அழகிய கையினை உடையவனும், வானில் கம்பீரமாக திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் ஒளியுடன் மிளிரும் நெருப்பினை ஊட்டி அழித்தவனும் ஆகிய பெருமான், கொழுந்து விட்டெரியும் தழலின் நிறத்தில் அமைந்த தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும், தாவி உலகங்களை அளந்த திருமாலும் காண்பதற்கு மிகவும் அரியதாக விளங்கிய திருமுடியையும் திருவடியையும் உடையவன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அழல் அம் கையினன் அந்தரத்து ஓங்கி நின்று
உழலும் மூவெயில் ஒள்ளழல் ஊட்டினான்
தழலும் தாமரையானொடு தாவினான்
கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே
புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.13.10) அப்பர் பிரான், திருமாலை பூமி அளந்தவன் என்று குறிப்பிடுகின்றார். கோ=தலைவன்; பாரிடம்=பூதம்; விக்கினம்= இடையூறுகள், தடங்கல்கள்; தேவர்கள் தலைவனாகிய இந்திரன் உள்ளிட்டு, மகன் குமரன், வாழ்வினில் ஏற்படும் இடையூறுகளை களையும் விநாயகர், தாமரை மலரைத் தான் அமரும் ஆசனமாகக் கொண்ட பிரமன், தனது திருவடிகளால் உலகினை அளந்த திருமால் ஆகியோர் போற்றி வாழ்த்த, சிறந்த இன்னிசைப் பாடல்களை பாடிக் கொண்டு அந்த பாடல்களுக்கு ஏற்ற வகையில் நடனம் ஆடிக்கொண்டு, பூத கணங்கள் புடை சூழ, வண்டுகள் ஒலிக்கும் நறுமணம் மிகுந்த புதிய கொன்றை மலர்களை தனது சடையில் அணிந்துள்ள பெருமான், புறம்பயம் தனது ஊர் என்று சொல்லிக் கொண்டு அந்த தலத்திற்கு புறப்பட்டுச் சென்று விட்டார். அவ்வாறு புறம்பயம் சென்ற பெருமான் என்னுடைய உள்ளத்தையும் கவர்ந்து சென்று விட்டார் என்று அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த அகத்துறைப் பாடல்.
கோவாய இந்திரன் உள்ளிட்டாராகக் குமரனும் விக்கின வினாயகன்னும்
பூவாய பீடத்து மேல் அயன்னும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப
பாவாய இன்னிசைகள் பாடி ஆடிப் பாரிடமும் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறி வண்டார்க்கப் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே
திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.36.9) அப்பர் பிரான், திருமாலை நீண்டவர் என்று குறிப்பிட்டு, அவரது முன்னே பெருமான் நெடிய தீப்பிழம்பாக தோன்றியதை உணர்த்துகின்றார். திரிவிக்ரமனாக நீண்டு மூவுலகத்தினையும் ஈரடியால் திருமால் அளந்த தன்மை நீண்டவர் என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது. நேரிழை=தேர்ந்தெடுத்த நகையினை அணிந்த பார்வதி தேவி; ஆர்த்தார்=இறுகக் கட்டியவர்; வெள்ளம்=கங்கை நதி;அங்கங்கே சிவமாக நின்றார் என்ற தொடர், அனைத்துப் பொருட்களிலும் அனைத்து உயிர்களிலும் கலந்து இறைவன் இருக்கும் நிலையை உணர்த்துகின்றது.
நீண்டவர்க்கோர் நெருப்புருவம் ஆனார் தாமே நேரிழையை ஒரு பாகம் வைத்தார் தாமே
பூண்டரவப் புலித்தோல் மேல் ஆர்த்தார் தாமே பொன்னிறத்த வெள்ளச் சடையார் தாமே
ஆண்டுலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார் தாமே அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே
பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே
வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.48.10) பாலனாகி உலகளந்த படியான் என்று அப்பர் பிரான் திருமாலை குறிப்பிடுகின்றார். பாலன்=சிறுவன், இங்கே வாமன அவதாரம் எடுத்து சிறுவனாக மகாபலியை அணுகி தானம் கேட்ட திருமாலை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பாலனாக இருந்தவன் தானே, மூன்றடி மண்ணினை தானமாக பெற்ற பின்னர் மூன்று அடிகளால் அளப்பதற்கு திரிவிக்ரமனாக மாறினான். அவ்வாறு நெடிதுயர்ந்த திருமாலும் காணாத வகையில் தீப்பிழம்பாக தோன்றியவன் என்பதை உணர்த்தும் பொருட்டு, இங்கே திருமால் உலகளந்த செய்கை குறிப்பிடப் படுகின்றது. தாமரை மலர் மீது உறையும் பிரமனும், சிறுவன் வாமனனாக சென்று முன்னம் மூன்று உலகங்களையும் தாவி அளந்த திறமை உடைய திருமாலும் தங்களதுமுயற்சியினால் அடியையும் முடியையும் காணாத வண்ணம் தீப்பிழம்பாக எழுந்தவனும், தங்களது முயற்சியில் தோல்வியுற்ற திருமாலும் பிரமனும் தங்களது தலையின் மீது கைகளை கூப்பி வணங்க இருந்தவனும். நான்கு புறமும் கடலலைகளால் சூழப்பட்ட இலங்கைத் தீவுக்கு அரசனாகிய இராவணின், பூக்கள் சூட்டப்பட்டு அழகாக விளங்கிய தலைகள் நெரியுமாறு தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது அழுத்தியவனும், அழகான இளைஞனாக தோற்றம் அளிப்பவனும், அழகிய பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும், வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் தனது மனதினில் நிலையாக உள்ளான் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.
பங்கயத்து மேலானும் பாலனாகி உலகளந்த படியானும் பரவிக் காணா
தங்கை வைத்த சென்னியார் அளக்க மாட்டா அனலவன் காண் அலைகடல் சூழ் இலங்கை வேந்தன்
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலமாய
மங்கையர்க்கோர் கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே
கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.7) அப்பர் பிரான், திருமாலை, மண்ணளந்த மால் என்று கூறுகின்றார். மூவருக்கும் மேலானவன் என்று அப்பர் பிரான் கூறுவதால், பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரிலும் வேறானவன் என்றும் அந்த மூவர்க்கும் தலைவனாக திகழ்பவன் பெருமான் என்பதும் தெளிவாகின்றது. முகடு=உச்சி; ஏவலன்= அம்பு எய்வதில் வல்லவன். ஒரு நொடிக்கும் குறைவான நேரமே ஒரேயிடத்தில் இருந்த மூன்று பறக்கும் கோட்டைகளும் அழியும் வண்ணம் அம்பு எய்த திறமையும், விரைந்து ஓடிக் கொண்டிருந்த பன்றியின் மீது அம்பினை எய்து அர்ஜுனனை காப்பாற்றிய தன்மையும் நமது நினைவுக்கு வருகின்றன. மின்னளந்த=ஒளி வீசும்; ஒளி வீசும் அண்டத்தின் உச்சியையும் கடந்து நிற்பவனும், தேவர்களுக்கு தலைவனாக விளங்குபவனும், உலகத்தின் அனைத்து இடங்களிலும் தங்களது தொழிலைச் செயல்படுத்தும் பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் தோன்றுவதற்கு முதற் காரணமாக இருப்பவனும், மூவிலை வேல் சூலத்தை ஏந்திய அழகனும், எனது எண்ணத்தினை உணர்ந்து எனது சிந்தையில் கலந்து இருப்பவனும், அம்பினை விரைவாக செலுத்துவதில் தேர்ச்சி பெற்றவனும், தேவர்கள் புகழும் வண்ணம் மூன்று உலகங்களையும் அளந்த திருமாலும் காண முடியாத வண்ணம் நெடிய தீப்பிழம்பாக உயர்ந்து நின்றவனும் ஆகிய பெருமான், பெரிய கடல் சூழ்ந்த கோகர்ணம் தலத்தில் மிகுந்த விருப்பமுடன் எழுந்தருளியுள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மின்னளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர் தம் பெருமான் காண் மேவில் எங்கும்
முன்னளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூவிலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண்
எண்ணளந்து என் சிந்தையே மேவினான்காண் ஏவலன் காண் இமையோர்கள் ஏத்தநின்று
மண்ணளந்த மால் அறியா மாயத்தான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.58.1) அப்பர் பிரான், திருமாலை, மண்ணளந்த மணிவண்ணர் என்று குறிப்பிடுகின்றார். மறையவன்=பிரமன்; மண்ணளந்த மணிவண்ணர் என்று நெடுமாலாக நீண்டு வளர்ந்து மூன்று உலகங்களையும் அளந்த திருமாலின் செயல் இங்கே குறிப்பிடப்பட்டு, அத்தகைய திறமை வாய்ந்த திருமாலாலும் வணங்கப் படுபவர் சிவபெருமான் என்று உணர்த்தப் படுகின்றது. மணிவண்ணர்=கரிய மணியின் வண்ணத்தினை உடைய திருமால்; மலிந்த=சிறந்து விளங்கிய, மிகுந்த; பண் மலிந்த மொழியவர்=சிறந்த இனிய மொழிகளை உடைய பெண்கள்; அப்பர் நாயகி, தான் மட்டும் பெருமான் மீது காதல் கொள்ளவில்லை, தன்னைப் போன்ற மற்ற பெண்களும் அவர் மீது விருப்பம் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தார்கள் என்று கூறுகின்றாள்.மூன்று உலகங்களையும் தனது இரண்டு அடிகளால் அளந்த வல்லமை உடைய திருமாலும், எப்போதும் வேதம் ஓதும் மறையவனாகத் திகழும் பிரமனும் மற்றுமுள்ள தேவர்களும் சூழ்ந்து நின்று, சிறந்த முறையில் நெற்றியில் கண் பொதிந்த பெருமானை, தனது கையினில் விடம் பொருந்திய நாகத்தை வைத்துக் கொண்டு அதனை ஆட்டுபவரும் ஆகிய சிவபெருமானை வணங்குகின்றார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமானைப் பணிந்து வணங்கியவாறு, இந்த தலத்தில் உள்ள இனிமையான மொழி பேசும் பெண்மணிகள் பலர் சென்றார்கள்; அவர்களுடன் நானும் பெருமானின் பின் சென்றேன். ஆனால், நாங்கள் அவர் மீது கொண்ட காதலை புறக்கணித்த பெருமான், மண்வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட வலம்புரத்து மாட வீதிகளைக் கடந்து சென்று, அங்கே இருந்த திருக்கோயிலில் புகுந்து, நிலையாக ஆங்கே தங்கிவிட்டார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கையுடையார் காணீர் அன்றே
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சிச் தம்முடைய பின்பின் செல்ல
மண் மலிந்த வயல்புடை சூழ் மாடவீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே
எறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.91.2) அப்பர் பிரான், பெருமான் திருமாலாகவும் பிரமனாகவும் இருப்பவர் என்று குறிப்பிடும் போது, திருமாலை, வையம் அளந்தவன் என்று குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் அருளால் அவனை அறியும் திறமை தான் கைவரப் பெற்றதாக கூறும் அப்பர் பிரான், அதனால் தனது உள்ளத்தில் இருந்த கலக்கங்கள் தீர்ந்து தெளிவு பெற்றதாக இந்த பாடலில் கூறுகின்றார். விளித்து என்ற சொல் எதுகை கருதி விளிந்து என்று மாறியது. விளித்து=அறைகூவல் விடுத்து; சலந்தரனின் வலிமை முன்னே எதிர்நிற்க மாட்டாமல் திருமால் பிரமன் இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் ஒளிந்து கொண்டதால், தன்னுடன் போரிடுவதற்கு எவரும் இல்லாத நிலையில், சிவபெருமானுடன் போருக்கு செல்வது என்று சலந்தரன் தீர்மானித்தான். மிகுந்த ஆரவாரத்துடன் அவன் கயிலை நோக்கி, அறைகூவல் விடுத்தவாறு சென்றதை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வீட்டினான்=அழித்தான்; பளிங்கு=ஸ்படிகம்; ஸ்படிகத்தின் உள்ளே இருக்கும் சோதி மிகுந்த ஒளி விட்டு பிரகாசிப்பது போன்று, மிகுந்த ஒளியுடன் விளங்குபவன் பெருமானென்று கூறுகின்றார். பளிங்கின் உள்ளே பதிக்கப்பட்ட சோதியினைப் போன்று மிகவும் அதிகமான ஒளியுடன் பிரகாசிக்கும் சோதி வடிவமாக உள்ளவனும். அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவனும், அர்ஜுனனுக்கு பாசுபதம் அளிப்பதற்காக வேடுவக் கோலம் தாங்கியவனும், ஆரவாரத்துடன் பெருமானுக்கு அறைகூவல் விடுத்தவாறு கயிலை நோக்கி விரைந்த சலந்தரனை தடுத்து அவனை அழித்தவனும், வேதத்தின் பொருளினை அனைவரும் உணருமாறு அருள் செய்த வேதியனும், விண் முதலான பஞ்ச பூதங்களில் பொருந்தி இருப்பவனும், இரண்டு அடிகளால் மண்ணையும் விண்ணையும் அளந்த திருமாலாக இருப்பவனும், பிரமனாக இருந்து உலகினை படைப்பவனும், உயிர்களின் துன்பங்களைத் தீர்க்கும் அரிய மருந்தாக செயல்படுபவனும் ஆகிய பெருமானின் திறத்தினை அடியேன் உள்ளவாறு அறிந்து கொண்டேன். அதனால் எனது உள்ளத்தில் தெளிவு ஏற்பட்டு அத்தகைய பெருமானைச் சென்று அடையும் பேற்றினை அடியேன் பெற்று வாழ்வினில் உய்வினை அடைந்தேன். இந்த பெருமான் திருவெறும்பியூர் மலையின் மீது ஒளிவீசும் மாணிக்கமாகத் திகழ்கின்றான் என்று அப்பர் பெருமான் கூறுவதாக அமைந்த பாடல்.
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானைப் பசுபதியைப் பாசுபத வேடத்தானை
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அருமருந்தை ஆமாறறிந்து என்னுள்ளம்
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்று அடையப் பெற்றேன் நானே
நேர்ந்தொருத்தி என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (6.93.7) அப்பர் பிரான், பெருமானுக்கு பல்லாண்டு பாடுபவர்கள் எவரெவர் என்று பட்டியல் இடுகின்றார். அந்த பட்டியலில் பாரையளந்தான் என்று திருமாலை குறிப்பிடுகின்றார். ஈரடியால் மூவுலகையும் திருமால் அளந்த செய்தி இந்த தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. திண்ணிய என்ற சொல் எதுகை கருதி திண்ணி என்று திரிந்தது; திண்ணிய=திண்மை உடைய, பருத்த; பிங்கிருடி=பிருங்கி முனிவர்; கடுக=விரைவாக; இந்த பாடலில் பெருமானுக்கு எவரெவர் பல்லாண்டு பாடுகின்றார் என்று சொல்லப் படுகின்றது. இந்த பாடலிலிருந்து பெருமானுக்கு பல்லாண்டிசை பாடும் பழக்கம் அப்பர் காலத்தில் இருந்தது தெரிய வருகின்றது. இறைவனை தங்களில் ஒருவனாக கருதி, அந்த நெருக்கத்தின் அடிப்படையில், பல்லாண்டு இசைப்பது அருளாளர்களின் மரபு. தண்டியும், குண்டோதரனும், பிருங்கி முனிவரும், புகழ் வாய்ந்த நந்தியும், சங்கு கண்ணன் முனிவரும், பண்டைய நாளில் உலகத்தினைப் படைத்த பிரமனும், முன்னாளில் இரண்டு அடிகளால் உலகினை அளந்த திருமாலும், இறைவனின் பெருமைகளை குறிப்பிட்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்தி இசைப்ப, பருத்த வயிறும் சிறிய கண்களும் உடைய சில பூதங்கள் பாடவும் பல பூதங்கள் ஆடவும், சிவந்த கண்களை உடைய எருதினைத் தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்லும் பெருமான் உறையும் இடமாகிய கண்டியூர் திருத்தலத்தின் பெயரினை கண்டியூர் கண்டியூர் என்று நீர் கூறுவீராயின், உமது உயிருடன் வலிமையாக பிணைந்துள்ள வினைகளை நீங்கள் விரைவில் நீக்கிக் கொள்ளலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்கு கன்னன்
பண்டை உலகம் படைத்தான் தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்பத்
திண்டி வயிற்றுச் சிறு கண் பூதம் சில பாடச் செங்கண் விடை ஒன்று ஊர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையைக் கழற்றலாமே
ஆமயம் தீர்த்து என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (6.96.1) அப்பர் பிரான், வாமனரைப் பற்றிய குறிப்பு ஒன்றினை அளிக்கின்றார். ஆமயம்=நோய், இங்கே சூலை நோய்; இறைவனை பதி என்றும்; பல வகையாக பிறவி எடுத்துள்ள அனைத்து உயிர்களையும் பொதுவாக பசு என்றும் குறிப்பிடுவது வழக்கம். அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இறைவன் அமைந்துள்ள தன்மை குறிப்பிடும் வண்ணம் பசுபதி என்ற திருநாமம் இறைவனுக்கு அமைந்துள்ளது. பிறவி எடுத்து தான் உலகில் வாழும் தன்மையை அப்பர் பிரான் ஆமயம் என்று குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மேலும் அருளாளர்கள், தங்களை பிணைத்துள்ள நோய் என்று குறிப்பிட்டு வருந்துவது பிறவிப் பிணியை தானே. மானிடம் கொண்டார் என்ற தொடருக்கு மான் போன்று அழகான மங்கையாகிய உமை அன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் கொண்டவர் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. வலது கையில் மழு ஆயுதத்தை ஏற்றுள்ள பெருமான் என்று குறிப்பிடுவதால், மானிடம் என்று குறிப்பிடுவது மான் கன்றினைத் தனது இடது கையினில் ஏற்றுள்ள பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தன்னை ஆட்கொண்ட பெருமான் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், தான் செய்யும் உழவாரப் பணியினை குறிப்பிடாமல் கண்ணப்பர் செய்த திருப்பணியினை இங்கே குறிப்பிடுகின்றார். இறைவனின் கண்களிலிருந்து உதிரம் பெருகி வழிவதைக் கண்ட பின்னர், தயக்கம் ஏதுமின்றி தனது கண்களையே பேர்த்து எடுத்து இறைவனின் திருமேனியில் அப்பத் துணிந்த கண்ணப்பரின் அன்புக்கு வேறு எவரது அன்பும் ஈடாகாது அல்லவா.
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார் அதிகை வீரட்டானம் ஆட்சி கொண்டார்
தாமரையோன் சிரமரிந்து கையில்கொண்டார் தலை அதனில் பலி கொண்டார்நிறைவாம் தன்மை
வாமனனார் மாகாயத்து உதிரம் கொண்டார் மான் இடம் கொண்டார் வலங்கை மழுவாள் கொண்டார்
காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கிக் கண்ணப்பர் பணியும் கொள் காபாலியாரே
தாமரையான்=தாமரை மலரைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமன். கண்ணால் நோக்கி என்ற தொடரை, இறுதி அடியில் அந்த தொடருக்கு முன்னும் வரும் இரண்டு தொடர்களுடன் இணைத்து பொருள் கொள்ள வேண்டும். இத்தகைய சொல்லாட்சி இடைநிலை தீபம் என்று அழைக்கப்படும். நெற்றிக் கண்ணினைத் திறந்து விழித்தே காமனை எரித்த பெருமான், தனது இரண்டாவது கண்ணினையும் பேர்க்கத் துணிந்த கண்ணப்பரை நோக்கி, தனது கையால் அவனைத் தடுத்து நில்லு கண்ணப்பா என்று கூறியது இங்கே உணர்த்தப் படுகின்றது. காயம்= உடல்; மாகாயம்=பெரிய உடல், திரிவிக்ரமனது உடல். மூவுலகையும் தனது இரண்டு திருவடிகளால் அளந்த திரிவிக்ரமரின் செருக்கினை அடக்கும் பொருட்டு, வயிரவர் அவரது மார்பினை கிள்ளி வெளியே வந்த உதிரத்தை தனது கபாலத்தில் ஏந்தினார் என்பது சீர்காழி தலபுராண வரலாறு. தனது உடலின் இரத்தம் அனைத்தும் வடிந்த பின்னர் திருமால் மயக்கமடைந்து கீழே விழ, அவரது மனைவி இலக்குமி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி இறைவன் திருமாலுக்கு உயிர்ப் பிச்சை அளித்தார் என்றும் புராணம் கூறுகின்றது. இந்த நிகழ்ச்சி சீர்காழி தலத்தில் பிரமபுரீசுவரர் சன்னதியின் மேலே உள்ள உட்புறச் சுவர்களில் சித்திரமாக வரையப் பெற்று இருந்ததை அடியேன் முன்னர் கண்டேன். நக்கீர தேவர் அருளிய பெருந் தேவபாணியில் (பதினோராம் திருமுறை), கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை, என்று குறிப்பிடுகின்றார். உயிருடன் எழுந்த திருமால், தனது தோலையும் முதுகெலும்பையும் பெருமான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டவே, தோலினை சட்டையாகவும் எலும்பினை கதையாகவும் சட்டநாதர் ஏற்றுள்ளார் என்றும் கூறுவார்கள். தன்னை வருத்திய சூலை நோயினைத் தீர்த்து, அடியேனை தனது அடிமையாக ஏற்றுக் கொண்ட பெருமான், திருவதிகை வீரட்டானம் தலத்தினை தான் ஆட்சி செய்யும் இடமாக கொண்டுள்ளார். தாமரை மலரினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள பிரமனின் ஐந்து தலைகளின் ஒன்றினை அரிந்து, அந்த தலையினை தான் பலி ஏற்கும் கலனாக கொண்டுள்ளார். நெடிது வளர்ந்து நிறைவான தன்மையுடன் தனது திருவடிகளால் மூன்று உலகங்களையும் அளந்த வாமனராக வந்த திருமாலின் பெரிய உடலில் இருந்த உதிரம் அனைத்தையும் தனது கபாலத்தில் ஏற்றுக்கொண்ட பெருமான், தனது உடலின் இடது பாகத்தில் மான் போன்ற அழகிய உமை நங்கையை ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் தனது வலது கையில் மழுவாள் ஆயுதத்தையும் கொண்டுள்ளார். தனது நெற்றிக் கண்ணினை விழித்து மன்மதனின் உடலை எரித்த பெருமான், கண்ணப்பர் செய்த பூஜையை அவரது அன்பு கருதி ஏற்றுக்கொண்டார் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
நெல்வாயில் அரத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.3.9) சுந்தரர், திருமாலை, மாணா உருவாகி மண்ணளந்தான் என்று குறிப்பிடுகின்றார். உலக சிற்றின்பங்களில் ஆழ்ந்து மீள முடியாமல் இருக்கும் மனிதர்களை பலவின் கனி ஈ என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். பலாச் சுளையின் வாசனையால் ஈர்க்கப்பட்டு அந்த சுளையை நாடும் ஈ, பலாச் சுளையில் பிசின் காரணமாக சுளையுடன் ஒட்டிக் கொண்டு, வெளி வராமல் தவிப்பது போல, உலகச் சிற்றன்பங்களை தொடர்ந்து அனுபவிப்பதில் நாட்டம் உடையவர்களாக, இருக்கும் தன்மையை உணர்த்துகின்றார்.
மாணா உருவாகி ஓர் மண்ணளந்தான் மலர் மேலவன் நேடியும் காண்பரியாய்
நீணீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே
வாணார் நுதலார் வலைப் பட்டு அடியேன் பலவின் கனி ஈயது போல்வதன் முன்
ஆணோடு பெண்ணாம் உருவாகி நின்றாய் அடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே
திருவாசகம் போற்றித் திருவகவல் பதிகத்தின் முதல் ஒன்பது அடிகளில் திருமாலின் ஆற்றலை உணர்த்தும் மணிவாசக அடிகளார், அத்தகைய திருமாலாலும் காண முடியாத திருவடிகள் பெருமானின் திருவடிகள் என்று கூறுகின்றார்.
நான்முகன் முதலா வானவர் தொழுதெழ
ஈரடியாலே மூவுலகு அளந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று
அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
கடுமுரண் ஏனமாகி முன் கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியும் காணா மலரடி இணைகள்
பொழிப்புரை:
தனக்கு இணையாக வேறு எந்த அரக்கரும் இல்லாத வகையில் அறம் தவறாமல் ஆட்சி நடத்தியும் வானோரை வெற்றி கொண்டு வலிமையுடனும் திகழ்ந்த மாவலியை, வாமனனாக அவதாரம் எடுத்து குற்றமான வஞ்சக முறையில் நெடிது வளர்ந்து இரண்டு அடிகளால் மூன்று உலகினையும் அளந்த பிரம்மச்சாரி சிறுவன் திருமால், தான் பெருமான் பால் கொண்டிருந்த பக்தியின் அடையாளமாக, சிவலிங்கம் தாபித்து வழிபட்ட திருக்கோயில், நஞ்சினைத் தேக்கியதால் கருமை நிறத்துடன் திகழும் பெரிய கழுத்தினைக் கொண்ட பெருமான் பொருந்தி உறையும் தலம் கண்ணார் கோயிலாகும்.
பாடல் 6:
தண்ணார் திங்கள் (1.101) பாடல்கள் 5 தொடர்ச்சி, 6 (திதே 0384)
தண்ணார் திங்கள் (1.101) பாடல்கள் 6 தொடர்ச்சி, 7 (திதே 0385)
விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பாக
உண்ணவனைத் தேவர்க்கு அமுது ஈந்து எவ்வுலகிற்கும்
கண்ணவனைக் கண்ணார் திகழ் கோயில் கனி தன்னை
நண்ண வல்லார்கட்கு இல்லை நமன் பால் நடலையே
விளக்கம்:
அனைத்து உறுப்புகளிலும் கண்ணே மிகவும் அருமையான உறுப்பாக அனைவராலும் கருதப் படுகின்றது. கண் என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாத உறுப்பு. அதனால் தான் மிகவும் முக்கியமாக கருதுவோரை நமது கண் என்று அழைக்கின்றோம். பல திருமுறைப் பாடல்கள் இறைவன் நமக்கு கண் போன்று திகழ்கின்றான் என்று உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். பல்லவனீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (1.65.2) இமையோர்களின் கண்களாய் விளங்குபவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தை பிரான் இமையோர்
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்ணுதல் நண்ணுமிடம்
மண்ணார் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி
பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் கண் போன்றவன் என்று காறாயில் பதிகத்தின் பாடலில் (2.15.3) சம்பந்தர் கூறுகின்றார். ஏதம்=குற்றம், கேடு,துன்பம்; விண்=வீடுபேறு; எண்= எண்ணம்; எண்ணான்=உள்ளத்தில் நாம் எண்ணுவதற்கு ஏதுவாக எளிமையாக இருப்பவன்; நாம் அவனை நமது மனதினில் எண்ணி துதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவன் மிகவும் எளிமையாக இருக்கின்றான். அவ்வாறு மிகவும் எளிமையாக இருக்கும் இறைவனை எண்ணித் துதிப்போர்க்கு இடர்கள் ஏற்படாது துன்பம் விளையாது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.
விண்ணானே விண்ணவர் ஏத்தி விரும்பும் சீர்
மண்ணானே மண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம்
கண்ணானே கடி பொழில் சூழ் திருக் காறாயில்
எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே
பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.64.1) உலகுக்கு கண்ணாகவும் வழிபடும் அடியார்களின் கருத்தாகவும் பெருமான் விளங்குகின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பேரருளாளன் என்று அழைக்கப்படும் பெருமான், விண்ணவர்களும் மண்ணவர்களும் வியக்கும் வண்ணம் அடியார்களுக்கு, அருள் செய்கின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அண்ணா=அண்ணாமலை;
அண்ணாவும் .கழுக்குன்றும் ஆயமலை அவை வாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார்
கண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரம் எரித்த
பெண் ஆணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
கண்ணாகவும் கண்ணின் மணியாகவும் பெருமான் இருப்பதாக அபப்ர் பிரான் திருவையாறு பதிகத்தின் பாடல் (4.13.7) ஒன்றினில் கூறுகின்றார். தனக்கு கண்ணாகவும், கண்ணின் மணியாகவும், தனது கருத்தாகவும், தான் நுகர்ந்து அனுபவிக்கும் பொருளாகவும், இருக்கும் பெருமானை, தனக்கு மிகவும் நெருங்கியவனாக இறைவன் உள்ளான் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம் அண்ணா என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இவ்வாறு தனக்கு மிகவும் நெருங்கியவனாக இருக்கும் பெருமானுக்கு அடிமையாக அப்பர் பிரான் மாறியதில் வியப்பேதும் இல்லை. அருத்து=நுகர்ச்சி;
கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே
அண்ணான ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
பாவநாசத் திருப்பதிகத்தின் பாடலில் (4.15.4) காண்பார் காணும் கண்ணான் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். அரிமான் ஏற்று=ஆண் சிங்கம்; கறங்கும்=ஒலிக்கும்; காண்பார் காணும் கண்ணானை என்பதற்கு வேறொரு விதமாகவும் சுவையான விளக்கம் அளிக்கப் படுகின்றது. அன்புடன்,திருக்கோயில்களில் உள்ள தனது உருவத்தைக் காணும் அடியார்களின் கண்களாக செயல்பட்டு தனது உருவத்தினை அவர்களுக்கு காட்டும் பெருமான் என்று கூறுவதாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. பெருமானின் அருளே கண்ணாகக் காணின் அல்லால் அவனது திருவுருவத்தை எவராலும் காண முடியாது என்று அப்பர் பிரான் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது.
புறம்பயத்து எம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை
உறைந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளங்கும் ஞாயிற்றைக்
கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை
அறம் சூழ் அதிகை வீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே
கயிலாயத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.55.11) கண்ணாய் உலகுக்கு நின்றாய் நீயே என்று அப்பர் பிரான் இறைவனை அழைக்கின்றார். கண் என்பதற்கு பற்றுக்கோடு என்று பொருள் கொண்டு, உலகத்தவர் அனைவர்க்கும் பற்றுக்கோடாக இருப்பவன் பெருமான் என்று உணர்த்தப் படுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இறை விரல்=சிறிது நேரமே விரலை வைத்து மலையினை அழுத்தியவன்;
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக் கோன் தன்னைப் போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி
பண்ணார் இசையின் சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி
நாட்டியத்தாங்குடி என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.15) பாடலில் சுந்தரர் பெருமானை கண்ணா என்று அழைக்கின்றார். தனக்கு கண் போன்று மிகவும் அருமையானவன் பெருமான் என்று இதன் மூலம் சுந்தரர் உணர்த்துகின்றார். குண்டாடி= மூர்க்கத் தன்மை; அன்பினால் மட்டுமே நாம் எதையும் அடைய முடியும் என்பது சைவர்களின் கொள்கை. எனவே அன்பு வழியினைத் தவிர்த்து நாம் வேறு எந்த வகையிலும் செல்லலாகாது என்பதை சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். தங்களது மூர்க்கத் தன்மையால் சமணர்களும் சாக்கியர்களும் தாங்கள் அடைய விரும்பும் பொருளினை அடைகின்றனர் என்பதை கேள்விப் பட்டாலும், நேரில் கண்டாலும் அதனை ஒரு பொருட்டாக கருதாமல், சிவநெறியாக உள்ள அன்பு வழியில் தான், தான் செல்வேன் என்று சுந்தரர் இங்கே கூறுகின்றார்.
குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள் கொண்டார் ஆகிலும்
கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன்
தொண்டாடித் தொழுவார் தொழக் கண்டு தொழுதேன் என் வினை போக
நண்டாடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ
திருக்கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.28.6), சுந்தரர் தனது கண்ணாகவும் கண்ணின் மணியாகவும் உள்ள பெருமான் என்று குறிப்பிட்டு, பெருமானைத் தவிர்த்து தனக்கு வேறு எவரையும், தான் துணையாக கருத மாட்டேன் என்று கூறுகின்றார். வரு=சொல்ல வருகின்ற;
மண் நீர் தீ வெளி ஆகாசம் வரு பூதங்களாகி மற்றும்
பெண்ணோடு ஆண் அலியாகிப் பிறவா உரு ஆனவனே
கண்ணார் உள் மணியே கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே
வேலை=கடல், இங்கே பாற்கடல்; உண்ணவன்=உண்டவன்; நடலை=துன்பம்; இந்த பாடலில் எமதருமனால் ஏற்படும் துன்பம் ஏதும் இல்லை என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்களில், பெருமானை நோக்கி செய்யப்படும் வழிபாடு, நரகத்தில் விளையும் துன்பங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் என்று சொல்லப்படுகின்றதே தவிர இறப்பு தவிர்க்கப்படும் என்றும் எங்கும் சொல்லப் படவில்லை. மனிதராய் பிறந்த அனைவர்க்கும், ஏன் உலகத்தில் பிறந்த எந்த உயிருக்கும், இறப்பு என்பது நிச்சயம், எனவே அந்த இறப்பினை எவராலும் தவிர்க்க இயலாது. பொதுவாக எந்த உயிரும் உடலிலிருந்து பிரிந்த பின்னர், சூக்கும உடலுடன் நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் எடுத்து செல்லப்பட்டு, ஆங்கே இன்ப துன்பங்களை அனுபவித்து தங்களது வினையின் ஒரு பகுதியை கழித்துக் கொள்கின்றன. பெருமானின் அடியார்களை அவ்வாறு நரகத்திற்கு செல்ல விடாமல் பெருமான் பாதுகாத்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வான் என்பதே திருமுறை ஆசிரியர்கள் உணர்த்தும் பொருள். இதனை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். .
பொழிப்புரை:
பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த கொடிய விடத்தின் தாக்கத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றும் பொருட்டு, மிகுந்த விருப்பத்துடன் நஞ்சினை உண்ட பெருமான், அவ்வாறு நஞ்சினை தான் உட்கொண்டு தேவர்களுக்கு அமுதம் அளித்தவன் ஆவான். அவன் உலகினுக்கு, உலகினில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் கண் போன்று மிகவும் அருமையானவனாகத் திகழ்கின்றான். அத்தகைய பெருமான் கண்ணார்கோயில் தலத்தில், நாம் அனைவரும் அவனை வணங்கி, அந்த வணக்கத்தின் பலனை அனுபவிக்கும் பொருட்டு, இனிய கனியாக திகழ்கின்றான். அந்த இனிய கனியினை நெருங்கித் தொழுது வணங்கும் அடியார்களை, இயமனால் ஏற்படும் துன்பங்கள் எவையும் அணுகாது.
பாடல் 7:
தண்ணார் திங்கள் (1.101) பாடல்கள் 6 தொடர்ச்சி, 7 (திதே 0385)
முன்னொரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம்
பின்னொரு நாள் அவ் விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி
தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்
கன்னியர் நாளும் துன்னமர் கண்ணார் கோயிலே
விளக்கம்:
தனது மனைவியை வஞ்சகமாக ஏமாற்றிய இந்திரன் மீது கோபம் கொண்ட கௌதம முனிவர், இந்திரனின் தன்மையை உலகத்தவர் அனைவரும் அறிந்து கொண்டு அவனை இகழும் வண்ணம் அவனது உடல் முழுவதிலும் பெண்குறிகள் தோன்ற வேண்டும் என்ற சாபத்தினை அளித்தார். இந்த சாபத்தின் விளைவால் அவனது உடல் முழுவதும் பெண்குறிகளின் அடையாளங்கள் தோன்ற இந்திரன் வெளியே தலைகாட்டுவதற்கு தயக்கம் அடைந்தான். பின்னர் இந்த சாபத்தினை நீக்கிக் கொள்ளும் பொருட்டு இந்த தலம் வந்தடைந்து இறைவனை வணங்கி தனது நிலையினை மாற்றுமாறு வேண்டினான். இறைவனது அருளால் அவனது உடலில் இருந்த பெண்குறி அடையாளங்கள் கண்களாக மாறின. இவ்வாறு கண்களாக மாறியதால் இந்த தலத்திற்கு கண்ணார்கோயில் என்றும் பெருமானுக்கு கண்ணாயிர நாதர் என்றும் பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகின்றது. தங்களது தலைவன் இந்திரன் அடைந்த அவமானத்தின் வெளிப்பாடாக திகழ்ந்த அவனது உடலின் நிலை மாறவேண்டும் என்று தேவர்களும் இறைவனை வழிபட்டதாக திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முனி=கௌதம முனிவர்; பெயர்தல்=அந்த இடத்தினை விட்டு விலகுதல்; சார்பு=சார்ந்து உறையும் இடம்; துன்னமர்=நெருங்கி வந்து;தண்ணருளால் என்ற சொல் தன்னருளால் என்று எதுகை கருதி மாற்றப் பட்டுள்ளது. தண் அருள்=குளிர்ந்த அருள்; துன்பங்களும் வருத்தமும் எவருக்கும் மனதினில் வெப்பம் ஏற்படுத்தும். இன்பங்கள் மனதினையும் உடலினையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பதால், இறைவனின் அருளால் வருத்தம் நீங்கி உடலும் உள்ளமும் குளிர்ந்து இருக்கும் என்பதை உணர்த்த, தண் அருள் என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
திருவெண்காடு தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.15.1) இந்திரன் செய்த வழிபாட்டினை குறிப்பிடுகின்றார். மந்திரம்=சிறப்பு வாய்ந்த நமச்சிவாய மந்திரம். மந்திர மறை=சிறப்பான நமச்சிவாய மந்திரத்தை தனது நடுவினில் கொண்டுள்ள வேதங்கள். வேதங்கள் மொத்தத்தில் நான்கு என்றாலும், அதர்வண வேதம் மந்திரங்கள், மருத்துவம் பற்றி அதிகமாக கூறுவதால், அதனை விட்டுவிட்டு மூன்று வேதங்கள் என்று கூறுவதுண்டு. இந்த மூன்று வேதங்களின் தொகுப்பினை வேதத்ரயீ என்றும் சொல்வார்கள். இன்றும் வடநாட்டில் சதுர்வேதி, திரிவேதி என்ற பெயர்கள் பழக்கத்தில் உள்ளன. இந்த மூன்று வேதங்களில் நடுவாக கருதப்படுவது யஜூர் வேதமாகும். யஜூர் வேதத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன. நடுவாக உள்ள நான்காவது காண்டத்தில் பதினோரு அனுவாகங்கள் உள்ளன. பதினோரு அனுவாகங்களில் நடுவாக கருதப்படுகின்ற ஆறாவது அனுவாகத்தில் ஸ்ரீ ருத்ரம் உள்ளது. பதினோரு சூக்தங்கள் கொண்டுள்ள ஸ்ரீ ருத்ரத்தின் ஆறாவது சூக்தத்தின் நடுப் பகுதியில் பஞ்சாட்சர மந்திரம் வருகின்றது. இவ்வாறாக வேதத்தின் நடுவில் பஞ்சாட்சர மந்திரம் வருகின்றது என்று நாம் கருதலாம். திருமூலரும் வேதத்தின் நடுவில் உள்ள மந்திரம் பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுகின்றார். மந்திர மறையவை என்ற தொடருக்கு பதிலாக மந்திர மறையவர் என்ற பாடபேதமும் வழக்கில் உள்ளது. வேத மந்திரங்களை நன்கறிந்த மறையவர்கள், இறைவனைத் தொழுகின்றனர் என்ற பொருளும் பொருத்தமாக உள்ளது. சிறந்த நமச்சிவாய மந்திரத்தைத் தனது நடுவில் கொண்டுள்ள வேதங்களும், வானவர்களும் இந்திரனும் வணங்கி வழிபட இறைவன் திருவெண்காடு தலத்தினில் உறைகின்றார், அவர் சுடுகாட்டினில் உள்ள வெந்த சாம்பலைத் தனது திருமேனியில் பூசியுள்ளவர்; அவர் உலகத்திற்கும் உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகவும் முடிவாகவும் உள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மந்திர மறையவை வானவரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்த வெண்ணீற்றர் வெண்காடு மேவிய
அந்தமும் முதல் உடை அடிகள் அல்லரே
மயேந்திரப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.31.6) திருஞானசம்பந்தர், இந்திரன் பெருமானை வழிபட்ட செய்தியை குறிப்பிடுகின்றார். சூரியன், சந்திரன், இந்திரன், பிரமன் ஆகியோர் வழிபட்டமை தலபுராணத்தில் சொல்லப் படுகின்றது. தலத்தின் பாடல்கள் தோறும் இறைவனின் திருவடிகளைப் பணிந்து உய்வினை அடையுமாறு நமக்கு அறிவுரை கூறும் திருஞான சம்பந்தர், இந்த தலத்தினில் இறைவனை வழிபட்டு உய்வினை அடைந்தவர்களை பட்டியல் இடுகின்றார். பங்குனி மாதத்தில் இலிங்கத்தின் மீது சூரியனின் கதிர்கள் சென்று விழும் வண்ணம் கோயிலின் அமைப்பு அமைந்துள்ளது. இதனை சூரியன் இறைவனுக்கு செய்யும் வழிபாடாக கருதுகின்றனர். பொதுவாக திருஞானசம்பந்தரின் பாடல்களில் பின்னடிகள் இரண்டே தலத்தின் வளத்தை, இயற்கை காட்சிகளின் நயத்தை உணர்த்துவதாக அமைந்திருக்கும். ஆனால் இந்த பதிகத்தின் முதல் ஐந்து பாடல்களிலும் தலத்தின் வளமை முதல் இரண்டு அடிகளில் உணர்த்தப் படுகின்றன. தலத்தின் இறைவனின் திருநாமத்தை உணர்த்தும் வண்ணம் இறைவனை அழகன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமானின் அழகு எல்லையற்றது, அழிவற்றது, நிலையானது என்பதை குறிப்பிடும் வண்ணம் அந்தமில் அழகன் என்று குறிப்பிடுகின்றார். சந்திரன், கதிரவன், புகழ் வாய்ந்த பிரமன், இந்திரன் ஆகியோர் வழிபடும் வண்ணம் மயேந்திரப் பள்ளி தலத்தில் இறைவன் உறைகின்றான். வேதங்களின் பெருமை நாள்தோறும் வளரும் வண்ணம் வேத மந்திரங்கள் சிறப்பித்து சொல்லப்படும் மயேந்திரப்பள்ளி தலத்தினில், எல்லையற்ற அழகுடன், அழிவற்று நிலையாக இருக்கும் அழகுடன் விளங்கும் இறைவனின் திருவடிகளை வணங்கி வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சந்திரன் கதிரவன் தகு புகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன்
மந்திர மறை வளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்மினே
பொழிப்புரை:
பண்டைய நாளில் கௌதம முனிவரால் இந்திரன் அடைந்த சாபம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்திரனும் தேவர்களும் இறைவனை வேண்டிய போது, அவர்களது வேண்டுதலுக்கு இரங்கிய ஈசன், இந்திரனுக்கு அவமானம் தரும் வகையில் அவனது உடலெங்கும் விளங்கிய பெண்குறிகள், அழகிய ஆயிரம் கண்களாக மாறும் வண்ணம், இந்திரனது வருத்தத்தை நீக்கி அவனது உடலும் உள்ளமும் குளிரும் வண்ணம், அருள் புரிந்தவன், கண்ணார்கோயில் திருத்தலத்தில் உறையும் ஈசன். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை தலத்தில் உள்ள கன்னிப் பெண்கள், திருக்கோயிலை அடைந்து பெருமானை நெருங்கி வழிபடுகின்றனர்.
பாடல் 8:
தண்ணார் திங்கள் (1.101) பாடல்கள் 8, 9,. 10, 11 (திதே 0386)
பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக் கீழால்
நெருக்குண்ணாத் தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த
முருக்குண்ணாதோர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த
திருக் கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே
விளக்கம்:
பெருக்கு=பெருமை; வரை=மலை, இங்கே கயிலை மலையினை குறிக்கின்றது; முருக்கு= அழிவு; பேதை=அறிவற்றவன், பெருமான் இராவணனுக்கு தேர் ஈந்ததாக இந்த பாடலில் திருஞான சம்பந்தர் சொல்வதை நாம் உணரவேண்டும். பதிகத்தின் ஆறாவது பாடலில் பெருமானின் அடியார்களுக்கு இயமனால் துன்பங்கள் ஏதும் ஏற்படாது என்று கூறிய திருஞான சம்பந்தர், இந்த பாடலில், இயமனால் ஏற்படும் துன்பங்கள் எவ்வாறு தவிர்க்கப்படும் என்பதை உணர்த்துகின்றார். அத்தகைய அடியார்களை, இயமன் நரகத்திற்கு அழைத்துச் செல்வதை தடுத்து, பெருமான் அவர்களை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார் என்று கூறுகின்றார். முந்தைய ஏழு பாடல்களில் இந்த தலம் சென்று இறைவனை வணங்குமாறு நம்மைத் தூண்டும் சம்பந்தர், அதற்கு உதாரணமாக இந்திரனும் திருமாலும் வழிபட்டு பயன் அடைந்ததை நமக்கு உணர்த்தும் திருஞான சம்பந்தர், இந்த தலத்திற்கு நேரில் செல்ல முடியவில்லையே என்று வருத்தம் அடையும் அன்பர்களின் நிலையினை உணர்ந்து அத்தகையோர் தலத்தின் உறையும் பெருமானின் திருநாமத்தினை சொல்லி உய்வினை அடையலாம் என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
திருக்கயிலை மலையின் பெருமையை அறியாத அறிவிலியாக விளங்கிய அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, பெருமான் தனது கால் பெருவிரலை மலையின் மீது அழுத்தியதன் விளைவால், அரக்கன் மலையின் கீழே நெருக்குண்டு துன்பம் அடைந்தான். அப்போது தனது தவறினை உணர்ந்த அரக்கன், பெருமானின் நீண்ட கழல்களை நினைத்து புகழ்ந்து சாமகானம் பாடியதை கண்ணுற்ற இறைவன், அரக்கனை அவன் அடைந்த துன்பத்திலிருந்து விடுவித்து, அவனுக்கு ஒளிவீசும் வாளொடு தேரினையும் அருளினார். இத்தகைய கருணை உள்ள கொண்ட பெருமானின் திருநாமத்தை, கண்ணார் என்று சொல்லும் அன்பர்கள் சிவலோகம் சென்று சேர்வார்கள்.
பாடல் 9:
தண்ணார் திங்கள் (1.101) பாடல்கள் 8, 9,. 10, 11 (திதே 0386)
செங்கமலப் போதில் திகழ் செல்வன் திருமாலும்
அங்கமலக் கண் நோக்க அரும் வண்ணத் தழல் ஆனான்
தங்கமலக் கண்ணார் திகழ் கோயில் தமதுள்ளம்
அங்கமலத்தோடு ஏத்திட அண்டத்து அமர்வாரே
விளக்கம்:
அங்கமலக் கண்=அங்கு+அம்+மலக்+கண்; அங்கு=பிரமனும் திருமாலும் தமக்குள்ளே யார் பெரியவன் என்று வாதம் செய்து கொண்டிருந்த இடத்தில்; அம் மலக்கண்=இறைவனின் திருவடியையும் திருமுடியையும், தங்களது கண்களால் காண்போம் என்று செருக்குடன், பிரமனும் திருமாலும் முயற்சி செய்ததால், அவர்களது கண்களை மலக்கண் என்று கூறுகின்றார். பெருமானை அணுக வேண்டிய முறையில் பிரமனும் திருமாலும் அணுகாமல் இருந்ததை அப்பர் பிரான், இலிங்க புராண குறுந்தொகை பதிகத்தின் (5.95) முதல் பத்து பாடல்களில் கூறுகின்றார். பிரமன் திருமால் ஆகிய இருவரும், பெருமானை எவ்வாறெல்லாம் வழிபட்டிருக்க வேண்டும் என்பதையும் இந்த பாடல்களில் குறிப்பிட்டு, அவர்கள் செய்யத் தவறியதை பாடல் தோறும் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் இருவர் என்றே அப்பர் பிரான் குறிப்பிட்டு அவர்கள் செய்யத் தவறிய செயல்களை பட்டியல் இட்டு, அவர்கள் இருவரும் இறைவனைக் காண்பதற்கு முயற்சி செய்தனர் என்று கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில் தான், செங்கணான் மற்றும் பிரமன் ஆகிய இருவரே பதிகத்தின் முந்திய பாடல்களில் குறிப்பிடப் படுகின்றனர் என்று நமக்கு உணர்த்துகின்றார். எவ்வாறு இறைவனை வணங்க வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடல்களில் கூறியது, இங்கே சுருக்கமாக தரப்படுகின்றது.
பதிகத்தின் முதல் பாடலில் இறைவனது பெருமைகளை புரிந்து கொண்டு அவன் இருக்கும் இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றும், அவனது திருவடிகளில் தூவுவதற்காக மலர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அன்றலர்ந்த தூய்மையான மலர்களை நாமே பறித்தல் வேண்டும் என்றும். மகிழ்ந்த மனத்துடன் அவனை நெருங்கிக் காண வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில் இறைவனை நீராட்டி, திலகமிட்டு அழகு செய்து, அவனை வலம் வந்து வழிபடல் வேண்டும் என்று கூறுகின்றார். பதிகத்தின் மூன்றாவது பாடலில், திருக்கோயிலின் தரையினை சுத்தம் செய்து, பசுஞ்சாணத்தால் மெழுக வேண்டும் என்றும் கூடை நிறைய அன்றலர்ந்த பூக்களை திருக்கோயிலுக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் கூறுகின்றார். நான்காவது பாடலில் நெய் பால் ஆகியவை கொண்டு இறைவனை நீராட்ட வேண்டும் என்றும் இறைவனைத் தொழும் போது பொய்யான மற்றும் வஞ்சகமான சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் பெருமானுக்கு எருக்க மாலையும் இண்டை மாலையும் சூட்டி வழிபட வேண்டும் என்றும் எளிமையான தோற்றம் தரும் உடைகளை உடுத்துக் கொண்டு இறைவனை வணங்க வேண்டும் என்றும் கூறுகின்றார். பெருமானுக்கு மிகவும் அதிகமான பூக்கள் சமர்ப்பித்து வழிபட, நமது உடலை வருத்திக் கொண்டு பூக்கள் பறிக்க வேண்டும் என்றும், பெரிய குடங்களில் நீர் சுமந்து கொண்டு சென்று பெருமானை நீராட்ட வேண்டும் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். ஏழாவது பாடலில் திருக்கோயிலில் அடியார்கள் அட்டாங்க வணக்கம் செய்யவேண்டும் என்று உணர்த்தப் படுகின்றது. எட்டாவது பாடலில், திருநீறு அணிந்தவாறு, அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஒன்பதாவது பாடலில் கருங்குவளை மலர் மாலைகளை இறைவனது திருவடியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகின்றார். உருத்திராக்கம் அணிந்தவாறு பெருமானின் சன்னதியில் சங்கு ஊதவேண்டும் என்று பத்தாவது பாடலில் கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், அவர்கள் இருவர் மீது இரக்கம் கொண்ட பெருமான் இலிங்கத்தின் உருவில் தோன்றி அவர்களுக்கு காட்சி கொடுத்தான் என்று அப்பர் பிரான் முடிக்கின்றார்.
தங்கமலக் கண்ணார்=தங்கு+அமலக்+கண்ணார்; அமலம்=மலம் நீங்கிய நிலை; ஞானக் கண் உடையவர்; மலம் என்றால் பொதுவாக ஆணவ மலத்தினை குறிக்கும். அறியாமை நிலையினை ஆணவ மலமே உண்டாக்குவதால், மலம் நீங்கிய நிலை என்பது அறியாமை நீங்கிய நிலையினை குறிக்கும். அங்கமலத்தோடு=அம்+கமலத்தோடு; உள்ளம் அங்கமலத்தோடு=தாமரை போன்ற அழகிய உள்ளத்தோடு; பெருமானைத் தொழும் அடியார்கள், ஆணவ மலம் நீங்கியவர்களாக இருப்பதால், அவர்களை அழகிய தாமரை மலர் போன்று உள்ளத்தவர்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உள்ளத்தால் இறைவனை வணங்குதல் அக வழிபாடாக கருதப் படுகின்றது. திருக்கோயில் சென்று இறைவனின் மூர்த்தத்தைக் கண்டு வழிபடுவது புறவழிபாடு எனப்படும். திகழ் கோயில் என்று குறிப்பிட்டு புறவழிபாட்டினை குறிக்கும் திருஞானசம்பந்தர் அங்கமலத்தோடு என்று குறிப்பிடுவதால், அகவழிபாடு செய்வோர் புறவழிபாட்டினை கைவிடாமல் ஈடுபடவேண்டும் என்று உணர்த்துவதாக பெரியோர்கள் பொருள் கூறுகின்றனர். தனது மொழிகளால் தூண்டப்பட்டு இந்த தலம் செல்லும் அடியார்கள் இறைவனை எவ்வாறு வழிபடவேண்டும் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
சிவந்த தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமனும் திருமாலும் தங்கள் இருவரில் யார் பெரியவன் என்று வாதம் செய்து கொண்டிருந்த இடத்தில், நெடிது உயர்ந்த தழற்பிழம்பாய் பெருமான் தோன்றிய போது, பெருமானின் திருவடியையும் திருமுடியையும் எளிதில் கண்டு விடலாம் என்று தங்கள் வலிமை மீது தாங்கள் கொண்டிருந்த செருக்கின் விளைவால் மிகுந்த நம்பிக்கையுடன், தங்களது ஊனக் கண்களின் துணையால் கண்டுவிடலாம் என்று இருவரும் முயற்சி செய்த போதிலும், அவர்கள் இருவரும் தங்களது முயற்சியில் வெற்றி காணவில்லை. இவ்வாறு அவர்கள் இருவரும் தங்களது முயற்சியில் வெற்றி பெறாத வண்ணம் நீண்டு உயர்ந்த பெருமான், ஆணவ மலத்தினை அடக்கும் வல்லமை வாய்ந்த கண்ணார்கோயில் தலத்தில் உறைகின்றார். இந்த தலத்தில் உள்ள பெருமானை நேரில் கண்டு புறவழிபாடு மற்றும் உள்ளத்தில் நினைத்து அகவழிபாடு செய்து பெருமானை போற்றி வழிபடும் அடியார்களே அமரர் உலகத்தினைச் சென்று அடைவார்கள்.
பாடல் 10:
தண்ணார் திங்கள் (1.101) பாடல்கள் 8, 9,. 10, 11 (திதே 0386)
தாறிடு பெண்ணைத் தட்டுடையாரும் தாம் உண்ணும்
சோறு உடையார் சொல் தேறன்மின் வெண்ணூல் சேர் மார்பன்
ஏறுடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேலோர்
ஆறு உடை அண்ணல் சேர்வது கண்ணார் கோயிலே
விளக்கம்:
தாறிடு பெண்ணை=குலை தள்ளும் பனைமரங்கள்; தட்டு=பனை ஓலையால் செய்யப்பட்ட; தடுக்குப் பாய்களை சமணர்கள் தாங்கள் செல்லும் இடம் எல்லாம் எடுத்து செல்வது அவர்களின் வழக்கம். பொதுவாக சமண குருமார்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து தங்குவதை தவிர்ப்பார்கள். இவ்வாறு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அடிக்கடி செல்லும் அவர்களின் தேவை கருதி, இரவினில் அவர்கள் படுப்பதற்காக பல சமணப் பள்ளிகள் அந்நாட்களில் இருந்தன. புதுக்கோட்டை அருகில் உள்ள சித்தன்னவாசல் செல்லும் வழியில் குன்றினைக் குடைந்து செய்யப்பட்ட சமணப் படுக்கைகள் இருப்பதை நாம் இன்றும் காணலாம். இவ்வாறு எடுத்துச் செல்லும் பாய்களை இடுப்பினில் சுற்றிக் கொள்வதும் உண்டு, அந்த பழக்கத்தையே இங்கே தட்டுடையார் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சோறுடையார்= சோற்றினை உட்கொள்வதே வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக கருதிய புத்தர்கள்; பரன்=அனைவர்க்கும் மேலானவன்; தனது சொற்களால் ஊக்கமடைந்து இந்த தலம் செல்லும் அடியார்களின் மனதினைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபடுவோரின் சொற்களை பொருட்படுத்த வேண்டாம் என்ற அறிவுரை இங்கே அளிக்கப் படுகின்றது.
பொழிப்புரை:
குலை தள்ளும் பனை மரங்களின் ஓலைகளால் செய்யப்பட்ட தடுக்கினை ஆடையாக உடுக்கும் சமணர்களும், சோறு உண்பதே வாழ்க்கையின் பிரதான நோக்கமாக கருதும் புத்தர்களும் சொல்லும் சொற்களை ஒரு பொருட்டாக கருதாதீர்கள்; தனது மார்பினில் வெண்ணூல் அணிந்தவனும், எருதினை வாகனமாகக் கொண்டவனும், அனைவர்க்கும் மேலானவனும், எலும்பினை ஆபரணமாக அணிந்தவனும், தனது நீண்ட சடையின் மேல் கங்கை நதியைத் தேக்கியவனும் ஆகிய பெருமான் சேர்ந்து எழுந்தருளி இருப்பது கண்ணார் கோயில் என்ற தலமாகும்.
பாடல் 11:
தண்ணார் திங்கள் (1.101) பாடல்கள் 8, 9,. 10, 11 (திதே 0386)
காமரு கண்ணார் கோயில் உளானைக் கடல் சூழ்ந்த
பூமரு சோலைப் பொன்னியல் மாடப் புகலிக் கோன்
நாமரு தொன்மைத் தன்மையுள் ஞானசம்பந்தன்
பாமரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே
விளக்கம்:
இந்த பாடலில் பதிகத்தினை முறையாக பாடும் அடியார்கள் மேல் தகாத பழிகள் வாரா என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தாம் செய்யாத குற்றத்திற்கு பலர் பழிச்சொற்கள் பெறுவதும் தண்டனை அடைவதையும் நாம் இன்றும் காண்கின்றோம். இதற்கு மூல காரணம் அவர்களின் பண்டைய வினைகளே. பெருமானை வழிபடும் அன்பர்கள் மற்றும் பதிகத்தினை ஓதும் அன்பர்கள் அத்தகைய வினைகளிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்பதால், அந்த வினைகளால் ஏற்படும் பழிகள் வருவதும் தவிர்க்கப்படும் அல்லவா. இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில், தனக்கு நேரிட்ட பழியினைத் தீர்த்துக் கொள்ளும் முகமாக திருமால் இந்த தலத்து பெருமானை வழிபட்டு பயனடைந்ததை நமக்கு திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். காமரு=அழகுடைய; நாமரு தொன்மை=மீண்டும்மீண்டும் ஒரே சொற்களைச் சொல்வதால் அந்த சொற்கள் நாவினுக்கு மிகவும் அதிகமான பழக்கமாக மாறியதை நாவுக்கு தொன்மைத் தொடர்பு உடைய சொற்கள் என்று கூறுகின்றார். பாமரு பாடல் என்ற தொடருக்கு எங்கும் பரந்து செல்லும் இனிய ஓசையினை உடைய பாடல் என்றும் பொருள் சொல்லப் படுகின்றது.
பொழிப்புரை:
அழகுடன் விளங்கும் கண்ணார் கோயில் திருத்தலத்தினில் உள்ள கோயிலில் உறையும் பெருமானை, பூஞ்சோலைகள் நிறைந்ததும் பொன்னால் அழகு சேர்க்கப்பட்ட மாடங்கள் நிறைந்ததும் ஆகிய புகலி நகரத்தின் தலைவனாக திகழும் ஞானசம்பந்தனின் நாவின் மூலமாக. பெருமானின் புகழினை மீண்டும்மீண்டும் பாடி பழக்கப்பட்ட நாவின் மூலமாக வெளிவரும் பாடல்கள் பத்தினையும் பாடவல்ல அடியார்கள் மேல் தகாத பழிகள் வாரா.
முடிவுரை:
பதிகத்தின் முதல் பாடலில் சென்ற பல பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவாக ஏற்படும் தீங்குகள் நம்மை விட்டு நீங்கும் என்றும் வாழ்வினில் இன்பம் ஏற்படும் என்று இம்மையில், பெருமானை கை தொழுவதால் ஏற்படும் விளைவினை திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில் தலத்தின் இயற்கை வளமும், அடியார்கள் பாடும் செவ்வழிப் பண்களை கேட்ட வண்டுகளும் செவ்வழிப் பண்ணில் முரல்கின்றன என்று கூறுகின்றார். மூன்றாவது பாடலில் சுடுகாட்டினில் நடனம் ஆடும் பெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், நான்காவது பாடலில் பெருமானின் திறமையை (யானை உரித்தது மற்றும் அறம் உரைத்தது) குறிப்பிடுகின்றார். பதிகத்தின் ஐந்தாவது பாடலில், திருமால் வாமனனாக சென்று வஞ்சகமான முறையில் மாவலியை ஏமாற்றியதால் தனக்கு ஏற்பட்ட பழி மற்றும் பாவத்தைத் தீர்த்துக் கொள்ள இலிங்கம் தாபித்து வழிபட்ட கோயில் கண்ணார் கோயில் என்று உணர்த்துகின்றார். ஆறாவது பாடலில் கண்ணார்கோயில் பெருமானை வணங்கி வழிபடும் அன்பர்களுக்கு இயமனால் துன்பம் ஏதும் உண்டாகாது என்று கூறுகின்றார். ஏழாவது பாடலில் தலத்தில் உள்ள கன்னிப் பெண்கள், பெருமானை நெருங்கி வழிபடுகின்றனர் என்று கூறும் திருஞானசம்பந்தர், திருக்கண்ணார் என்று இறைவனை அழைக்கும் அன்பர்கள் அனைவரும் சிவலோகம் சென்று சேர்வார்கள் என்று எட்டாவது பாடலில் கூறுகின்றார். ஒன்பதாவது பாடலில் பெருமானை வழிபடும் அடியார்கள் வானோர் உலகத்தினைச் சென்று அடைவார்கள் என்று கூறுகின்றார். பத்தாவது பாடலில் புத்தர்கள் மற்றும் சமணர்களின் சொற்களை பொருட்படுத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடலில் பதிகத்தினை ஓதும் அடியார்களுக்கு தகாத பழிகள் வாரா என்று கூறுகின்றார். கண்ணார்கோயில் சென்றடைந்து பெருமானை வணங்கி வழிபட்டு, அந்த தலத்திற்கு உரிய பதிகத்தினை பாடி, இம்மையில் துன்பங்கள் நீங்கப்பெற்று இன்பங்கள் அடைந்தும், நரகத்தினில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் துன்பங்களைத் தவிர்த்தும், மறுமையில் சிவலோகம் சென்றடைந்து என்றும் அழியாத இன்பத்துடன் இருப்போமாக.