பதிக எண்: 2.22 - திருகுடவாயில் - இந்தளம்
பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக வலஞ்சுழி சென்ற திருஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு பழையாறை, சத்திமுற்றம், பட்டீச்சரம், இரும்பூளை முதலான தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், பின்னர் அரதைப் பெரும்பாழி தலம் செல்கின்றார். அதன் பின்னர் திருச்சேறை, திருநாலூர், குடவாயில், நறையூர், தென்திருப்புத்தூர் ஆகிய தலங்கள் சென்றதாக பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். குடவாயில் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இரண்டு பதிகங்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன. இந்த தலம் தற்போது குடவாசல் என்று அழைக்கப்படுகின்றது. குடமூக்கு (இந்நாளில் கும்பகோணம் என்று அழைக்கப்படும் தலம்) சென்று இருந்த அப்பர் பிரான் அங்கிருந்து நாலூர், குடவாயில், மற்றும் நறையூர் தலங்கள் சென்றதாக பெரிய புராணத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த தலங்கள் மீது அப்பர் பிரான் அருளிய பதிகங்கள் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை.
பாடும் அரதைப் பெரும்பாழியே முதலாகச்
சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
நாடிய சீர் நறையூர் தென்திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி
நீடு தமிழ்த் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்
கும்பகோணம் திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்து பதினைந்து கி.மீ. தொலைவிலும் திருவாரூரிலிருந்து பதினாறு கி.மீ. தொலைவிலும் உள்ளது. அனைத்து உலகங்களையும் அழித்துவிடும் தன்மை கொண்ட பிரளய காலத்தில் உயிர்கள் அழிந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் பெருமான், அமிர்தம் அடங்கிய குடம் ஒன்றினில் அனைத்து உயிர் அணுக்களையும் வைத்து, குடத்தின் முகப்பில் ஒரு சிவலிங்கமாக நின்று பாதுகாத்து வந்தார். உயிர்களை நேசத்துடன் பாதுகாத்த தலைவர் என்பதால் கோ நேசர் என்று அழைக்கப்பட்ட பெருமான், நாளைடைவில் கோணேசராக மாறிவிட்டார் போலும். குடத்தின் வாயிலில் இருந்த லிங்கத்தை ஒரு புற்று மூடியது. நாளடைவில் அந்த புற்று ஒரு மலை போல் வளர்ந்தது. கருடன் அந்த புற்றினை கொத்தி அகற்றி சிவலிங்கத்தை வெளிக்கொணர்ந்து, இறைவனுக்கு கோயில் கட்டி வழிபட்டார் என்று தலபுராணம் கூறுகின்றது. அதனால் இந்த இடம் கருடாத்ரி என்றும் அழைக்கப்பட்டது. சில காலம் கழித்து, இந்த குடம் மூன்றாக உடைந்தது. குடத்தின் அடிபாகம் விழுந்த இடம் கும்பகோணம் என்றும் குடத்தின் நடுபாகம் விழுந்த இடம் கலயநல்லூர் (தற்போது சாக்கோட்டை என்று அழைக்கப்படுகின்றது) என்றும், குடத்தின் வாயில் விழுந்த இடம் கருடாத்ரி மற்றும் குடவாயில் என்றும் அழைக்கப்பட்டன. இந்த மூன்று இடங்களிலும் லிங்கங்களும் முளைத்தன. இந்த தலத்தில் எழுந்த லிங்கத்தை கோணேசர் என்று அழைத்தனர். திருணபிந்து என்ற முனிவர், தான் தொழுநோயால் வருந்திய போது, இந்த தலத்து இறைவனை வழிபட, இறைவன், குடத்திலிருந்து வெளிப்பட்டு வந்து முனிவருக்கு தரிசனம் அளித்தும் அவரது நோயினைத் தீர்த்தும் அருள் புரிந்தமையால், குடவாயில் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். மற்றும் கருடன், சூரியன், பிருகு முனிவர், சூத முனிவர், தாலப்பிய முனிவர் ஆகியோர் வழிபட்டு பயனடைந்த தலம். கோயில் மதிற்சுவர்களில் கருடனின் உருவத்தை காணலாம். சிவபெருமானின் திருக்கோயில்களில் இத்தகைய காட்சி மிகவும் அரிது. அமிர்த குடத்திலிருந்து வெளிவந்த பெருமான் கருடனுக்கு காட்சியளித்ததை கோயிலின் உள்ளே சித்திரமாக காணலாம். தாலப்பிய முனிவர் இந்த தலத்தில் உள்ள மனதார மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்தார் என்று கூறுவார்கள். புற்றினால் முழுதும் மறைக்கப்பட்டதால் வன்மீகநாதர் என்றும் சூரியன் வழிபட்டதால் சூரியேஸ்வரர் என்ற பெயரும் பிருகு முனிவர் வழிபட்டதால் பிருகநாதர் என்ற பெயர்களும் சுவாமிக்கு ஏற்பட்டன. குடதிசை என்றால் மேற்கு என்று பொருள். மேற்கு நோக்கிய நிலையில் இறைவன் வீற்றிருப்பதால் குடவாயில் என்ற பெயர் வந்ததாகவும் கூருகின்றனர்.
முகப்பு வாயில் மேற்புறத்தில் பஞ்ச மூர்த்திகள் உருவங்கள் வண்ணச் சுதை உருவங்களாக உள்ளன. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே செல்லும் நமக்கு இடது புறத்தில் தென்படும் விநாயகப் பெருமானிடம் அனுமதி பெற்றுக் கொண்டு கொடிமரம் பலிபீடம் நந்தி ஆகியவற்றைக் கடந்து சென்றால், அம்மன் சன்னதியை அடையலாம். அம்மனின் திருநாமம் பெரியநாயகி; இறைவனின் திருநாமம் கோணேஸ்வரர் அபய வரத கரங்கள் காட்டிய வண்ணம் அம்பிகை நின்ற நிலையில் அருள் புரிகின்றார். அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் சண்டேஸ்வரியை காணலாம். இரண்டு தளமாக உள்ள திருக்கோயில். கீழ் தளத்தில், அம்பிகை சன்னதி, இடும்பன், தண்டபாணி, கலைமகள், குடவாயில் குமரன், பைரவர், சந்திரன், சூரியன், நவகிரகங்கள், சூத முனிவர், சனிபகவான், சப்தமாதர், நால்வர் மற்றும் பரவை நாச்சியார் சன்னதிகள் உள்ளன. சூரியன் அமர்ந்த நிலையிலும் சந்திரன் நின்ற நிலையிலும் மாறுபட்ட கோலத்தில் உள்ளனர். கலைவாணியை வீணை இல்லாத நிலையில் நாம் காணலாம். இடது புறத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. மேல் தளத்தில் மேற்கு நோக்கிய மூலவர் சன்னதிக்கு முன்னால் பலிபீடம் நந்தி உள்ளன. கருவறை கோஷ்டத்தில் தென்முகக் கடவுளை காணலாம். மூலவர் அம்மன், துர்கையின் அம்சமாக கருதப் படுவதால், இங்கே கோஷ்டத்தில் துர்கையை காண முடியாது. அம்பிகையை ப்ருஹத் துர்காம்பிகை என்றும் அழைக்கின்றனர். சதுர பீடத்தில் பெரிய திருமேனி உடைய மூலவர் இலிங்கத்தில் கருடன் தீண்டிய சுவடுகள் உள்ளன. மூலவர் சன்னதியில் இடது புறத்தில் தான்தோன்றி நாதர் உள்ளார். சன்னதிக்கு அருகில் காசி விசுவநாதர் சன்னதியும் உள்ளது. மேல் தளம் செல்ல படிக்கட்டுகள் இருப்பதால், யானை செல்ல முடியாத சன்னதியாக மாடக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ள கோயிலாக கருதப் படுகின்றது. மயில் மண்டபம் மற்றும் மகா மண்டபம் கொண்ட சன்னதியில், முருகப்பெருமான், ஒரு முகத்துடன் நான்கு கரங்கள் கொண்டவராக, வள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகின்றார். இந்த தலத்தில் காணப்படும் ஏகபாத திருமூர்த்தி சிற்பம் மிகவும் அழகானது. திருவொற்றியூர் மற்றும் திருவானைக்கா திருக்கோயில்களிலும் நாம் ஏகபாத திரிமூர்த்தி சிற்பத்தினை காணலாம். தை மாதத்தின் மூன்று நாட்களில் சூரியனின் கதிர்கள் சன்னதியைச் சென்றடைந்து மூலவர் மேல் படர்கின்றன. சங்க இலக்கியங்களில் இடம் பெறுகின்ற பழமையான தலம். சோழன் கோச்செங்கணான், சேரமான் கணைக்கால் இரும்பொறையை சிறை வைத்த இடம் குடவாயில் சிறைக்கோட்டம் என்று புறநானூறு குறிப்பிடுகின்றது.
பாடல் 1
திகழும் திருமாலொடு நான்முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவாயில் மன்னி
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே
விளக்கம்:
நிலாவுதல்=மாறாது வீற்றிருத்தல், நிலையாக இருத்தல்; புகல=விரும்பித் துதிக்க; திகழும்= சிறப்புடன் விளங்கும்; வைகுண்டத்தில் திருமாலும் பிரமலோகத்தில் பிரமனும் தலைவர்களாக சிறந்து விளங்கும் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் இருவரும் பெருமானைப் புகழ்ந்து துதித்தாலும் அவர்களின் புகழ்ச் சொற்களால் பெருமான் மகிழ்ச்சி அடையவில்லை போலும். எளிமையான தனது அடியார்களின் புகழ்ச் சொற்களில் தான் பெருமான் மயங்குகின்றார் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அடியார்கள் புகழ மகிழும் பெருமான் என்று குறிப்பிடும் ஞானசம்பந்தர், அத்தைகைய அடைமொழி ஏதும் திருமால் மற்றும் பிரமனின் புகழ்மொழிகளுக்கு அளிக்கவில்லை. அடியார்கள் புகழ பெருமான் மகிழ்ச்சி அடைகின்றார் என்று குறிப்பிடுவதன் மூலம், அடியார்களுக்கு பெருமான் அருள் புரியும் தன்மையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமானின் இந்த தன்மை, கோயிலின் சிறப்பினை மேலும் உயர்த்துகின்றது. ஒரு தலத்தினில் பல கோயில்கள் இருந்தால், அந்த கோயில்களில் அமைப்பில், சிறப்பினில் பெரியதாக உள்ள திருக்கோயிலை பெருங்கோயில் என்று அழைப்பது வழக்கம். இந்த பதிகத்தின் பாடல்களில் திருஞானசம்பந்தர் பெருங்கோயில் என்று குறிப்பிடுவதால், அவரது காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திருக்கோயில்கள் இந்த தலத்தினில் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது.
பொழிப்புரை:
வைகுண்டத்தின் தலைவனாகவும், பிரமலோகத்தின் தலைவனாகவும் அனைவரும் கருதும் வண்ணம் சிறப்புகள் வாய்ந்த திருமால் மற்றும் பிரமனால் புகழ்ந்து துதிக்கப்படும் சிவபெருமான், நிலவுலகத்தில் வாழும் அடியார்கள் புகழ்ந்து போற்றுவதை மிகவும் விரும்பி, மகிழ்ச்சி அடைகின்றான். அத்தகைய பெருமான், குடவாயில் தலத்தினில் உள்ள சிறப்பு வாய்ந்த பெருங்கோயிலில் நிலையாக வீற்றிருக்கின்றான்.
பாடல் 2:
ஓடும் நதியும் மதியோடு உரகம்
சூடும் சடையன் விடை தொல் கொடிமேல்
கூடும் குழகன் குடவாயில் தனில்
நீடும் பெருங்கோயில் நிலாயவனே
விளக்கம்:
ஆதி அந்தம் இல்லாத பெருமானின் கொடியும் தொன்மை வாய்ந்ததாக உள்ள நிலை இங்கே தொல்கொடி என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. உரகம்=பாம்பு, தனது மார்பினால் ஊர்ந்து செஹ்ல்லும் பாம்பு; ஓடும் நதி என்று மிகுதியான நீர்ப் பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதி குறிப்பிடப் படுகின்றது. நீடும்=நீண்ட பெருமை வாய்ந்த; தொல்கொடி மேல் விடை கூடும் என்று மாற்றி அமைத்து பொருள் காணவேண்டும்.
பொழிப்புரை:
மிகுந்த வெள்ளப் பெருக்குடன், தேவலோகத்திலிருந்து கீழே இறங்கி வந்த கங்கை நதியையும், பிறைச்சந்திரன் மற்றும் பாம்பினையும் தனது சடையில் சூட்டிக்கொண்டுள்ள இறைவன், தனது தொன்மை வாய்ந்த கொடியினில் இடபத்தை இலச்சினையாகக் கொண்டுள்ளார். இத்தகைய இறைவன், இளமையும் அழகும் ஒருங்கே கொண்டவராக, குடவாயில் தலத்தில் நீண்ட புகழுடன் விளங்கும் பெருங்கோயிலில் நிலையாக வீற்றிருக்கின்றான்.
பாடல் 3:
கலையான் மறையான் கனலேந்து கையான்
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான்
கொலையார் சிலையான் குடவாயில் தனில்
நிலையார் பெருங்கோயில் நிலாயவனே
விளக்கம்:
கலையான் மறையான் என்ற சொற்கள் திருமாலையும் பிரமனையும் குறிப்பிடுகின்றன என்று சிலர் விளக்கம் அளித்து, இறைவன் திருமாலாகவும் பிரமனாகவும் பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றது என்று பொருள் கூறுகின்றனர். பதிகத்தின் முதல் பாடலில், சிறப்பு வாய்ந்த திருமால் மற்றும் பிரமனால் புகழப்படும் பெருமான், என்று குறிப்பிட்ட ஞானசம்பந்தர், அவர்களுக்கு எதனால் புகழ் வந்தது என்று ஒரு நொடி யோசித்தார் போலும். அவர்கள் இருவரும் முறையே காத்தல் மற்றும் படைத்தல் தொழில்கள் புரிவதால் தானே அவர்களை சிறந்தவர்களாக உலகம் கருதுகின்றது. ஆனால் உண்மையில் இறைவனின் கருணையால் தானே, அவர்கள் இருவரும் அத்தகைய ஆற்றல் பெற்று தங்களது தொழிலை ஒழுங்காக செய்ய முடிகின்றது. இவ்வாறு அவர்களை பெருமான் இயக்கும் தன்மையை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அபிஷேகப் பிரியன் என்று சிவபெருமானை குறிப்பிடுவது போன்று திருமாலை அலங்காரப் பிரியன் என்றும் ஆடம்பரப் பிரியன் என்று அழைப்பார்கள். கலை என்றால் உயர்ந்த ஆடைகள் என்று பொருள். பட்டாடையை, பீதாம்பரத்தை விருப்பத்துடன் அணியும் திருமாலை கலையான் என்று அழைப்பது பொருத்தம் தானே. எப்போதும் வேதங்களை ஓதியவாறு பிரமன் படைப்புத் தொழில் ஈடுபடுவதால் மறையான் என்ற பெயர் பிரமனுக்கு ஏற்பட்டது. சங்கார காரணனாக விளங்கும் உருத்திரன், சங்காரத்திற்கு உதவும் தீயுடன் தொடர்பு கொண்டவன் என்பதால் கனலன் என்ற பெயர் அவனுக்கு பொருத்தமாக உள்ளது. இவ்வாறு கலையான் மறையான் கனலேந்து கையான் என்ற தொடர் மூன்று மூர்த்திகளையும், படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களை செய்கின்ற மூன்று மூர்த்திகளை உணர்த்துகின்றது என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். மூவராகிய பெருமான் என்று பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப் படுவது நமது நினைவுக்கு வருகின்றது. எனவே இந்த பின்னணியில், மூவராக பெருமான் இயங்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது என்பதும் பொருத்தமான விளக்கமே. மூவராக விளங்கும் பெருமான் உயிர்களுக்கு அறக்கருணை புரியும் அன்னையாகவும் (மாதொரு பாகனாக உள்ள நிலை), மறக்கருணை புரிபவனாகவும் உள்ள தன்மையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. கொலையார் சிலையான் என்ற தொடர் திரிபுரத்து அரக்கர்களை அழித்து மறக்கருணை புரிந்ததை நினைவூட்டுகின்றது. .
கலை என்றால் ஞானம் என்று பொருள். எனவே ஞானத்தின் வடிவமாகவும், நான்கு மறைகளை அளித்தவனாகவும் உள்ள இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. சிலை=வில், மலை ஆகிய இரண்டு பொருள்களும் இங்கே பொருந்தும். கொலையார்=கொலைத் தொழில் புரிந்த; திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்து, அந்த கோட்டைகளிலிருந்த அரக்கர்களை மாய்த்த அம்பினை விடுத்த மேருமலையாகிய வில்;
பொழிப்புரை:
ஞானமே வடிவமாக உள்ளவனும், நான்கு மறைகளையும் உலகுக்கு அளித்தவனும், தீப்பிழம்பைத் தனது கையில் ஏந்திய வண்ணம் நடனமாடுபவனும், மலைமகளைத் தனது உடலின் ஒரு பாகத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டவனும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்து, அந்த கோட்டைகளிலிருந்த அரக்கர்களை மாய்த்த அம்பினை விடுத்த மேருமலையாகிய வில்லினை உடையவனும் ஆகிய பெருமான் குடவாயில் தலத்தில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் நிலையாக வீற்றிருக்கின்றான்.
பாடல் 4:
சுலவும் சடையான் சுடுகாடு இடமா
நல மென்முலையாள் நகை செய்ய நடம்
குலவும் குழகன் குடவாயில் தனில்
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே
விளக்கம்:
சுலவும்=சுற்றும்; நலம்=அழகு; நகை செய்ய=மகிழ்ந்து புன்முறுவல் செய்யும்; குழகன்=அழகும் இளமையும் ஒருங்கே பொருந்திய இளைஞன்; மாதொரு பாகனாக பெருமான் இருக்கும் கோலத்தை மிகவும் அழகாக நமது கண் முன்னே கொண்டுவரும் அப்பர் பிரான் (4.08.10), பெருமானின் திருவாயின் வலது பகுதி வேதத்தை சொல்வதாகவும், இடது பகுதி அந்த வேதத்தை கேட்டு ரசித்தபடியே புன்முறுவல் செய்வதாகவும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் கூறுகின்றார். ஓலை=தோடு: சங்கு=வெண் சங்கால் செய்யப்பட்ட குழை ஆபரணம். மாதொரு பாகனாக இறைவனைக் காணும் அப்பர் பிரான் வேறெந்த பாடலிலும் காணப்படாத காட்சியினை இங்கே வழங்குகின்றார். மாதொருபாகனின் உருவத்தை சற்று விவரமாக சொல்லும் திருமுறைப் பாடல்களில் இந்த தேவாரப் பாடல் ஒன்று. புதிய சுருள் பொன்னால் செய்யப்பட்ட தோட்டினை ஒரு காதிலும், மற்றோர் காதினில் வளைந்த குழை ஆபரணம் தனது தோளில் புரளும் படியாக அணிந்துள்ள பெருமானின், திருவாயின் ஒரு பகுதி வேத கீதங்களைப் பாட, திருவாயின் மற்றொரு பகுதி பெருமான் பாடும் வேத கீதத்தை ரசித்தபடியே புன்முறுவல் பூக்கின்றது. சடையாக காணப்படும் வலது பகுதில், தேன் சொட்டும் கொன்றை மலர் விரிந்த படியே இருக்க, இடது பகுதியில் உள்ள கூந்தல் பின்னப்பட்டு அழகாக காணப்படுகின்றது, இவ்வாறு பெருமானின் தன்மையும் இயல்புகளும் ஒரு புறத்திலும் மற்றோர் புறத்தில் உமை அம்மையின் தன்மையும் இயல்புகளும் காணப்பட்டன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை..
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஓர் காது சுரி சங்கு
நின்று புரள
விதி விதி வேத கீதம் ஒருபாடும் ஓதம் ஒருபாடும் மெல்ல
நகுமால்
மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர்
இது இவர் வண்ணம் வண்ணம் இவள் வண்ணம் வண்ணம் எழில்
வண்ணம் வண்ணம் இயல்பே
வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.39.7) திருஞானசம்பந்தர், மலைமகள் மகிழும் வண்ணம் பெருமான் நடனம் ஆடினார் என்று கூறுகின்றார். மண்ணும் சாம்பல் பொடியாகும் வண்ணம் செய்யும் பெருமான் என்று சம்பந்தர் கூறுகின்றார். மண் என்பதற்கு மண்ணுலகம் என்று பொருள் கொள்ளவேண்டும். பிரளய காலத்தில் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் அழிந்து எரியும் போது உலகமே சுடுகாடாக காட்சி அளிக்கின்றது. இந்த பிரளய காலத்தை தான் சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மா என்ற சொல்லினை அன்னைக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக கொள்ளவேண்டும். உலகப் பொருட்கள், மற்றும் உடல்கள் அனைத்தும் அழிந்த பின்னரும். அன்னை பெருமானைப் போன்று அழியாமல் இருப்பதால், அந்த சிறப்பினை உணர்த்தும் வண்ணம், மா மகள் என்று கூறுகின்றார். நொய்யன=நுட்பமான செயல்; கண்பொடி=கண் பொடிந்து விழுந்த, வெண்பொடி என்ற சொல்லுக்கு உகந்தார் என்பதை அடைமொழியாக கொண்டு, திருநீற்றின் சிறப்பினை உணர்த்துவதாக ஒரு விளக்கமும் அளிக்கப் படுகின்றது. உகந்து ஆர்=விருப்பம் பொருந்திய; விருப்பம் பொருந்திய மனதுடன் நாம் திருநீற்றினை ஏற்றுக்கொண்டு நெற்றியில் அணிந்து கொள்ள வேண்டும்.
மண் பொடிக் கொண்டு எரித்து ஓர் சுடலை மாமலை வேந்தன்
மகள் மகிழ
நுண்பொடிச் சேர நின்றாடி நொய்யன செய்யல் உகந்தார்
கண்பொடி வெண் தலையோடு கையேந்திக் காலனைக் காலால்
கடிந்து உகந்தார்
வெண்பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்னகராரே
கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.73.1) திருஞானசம்பந்தர், மாலை நேரத்தில் பெருமான் நடனம் ஆடியதைக் கண்டு பிரட்டி மகிழ்ச்சி அடைந்தாள் என்று கூறுகின்றார். வானார்=வானில் பொருந்திய; மன்னு=நிலையாக பொருந்திய; போது=மலர்; புனம்=காடு; மாலை ஆடுவார் என்று மாலை நேரத்தில் பெருமான் நடனம் ஆடியதை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த ஆலகால விடத்தினை உட்கொண்டு தங்கள் அனைவரையும் காப்பாற்றிய பெருமானுக்கு நன்றி சொல்வதற்கு ஒரு நாள் மாலை நேரத்தில் தேவர்களும் அனைவரும் சென்று அவரை வணங்கினார்கள். அதனால் மகிழ்ச்சி அடைந்த பெருமான், நந்திதேவரின் இரு கொம்புகளின் இடையே நின்ற வண்ணம் நடனம் ஆடினார். உமையன்னை முதலாக அனைவரும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். தேவியின் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருந்தது; ஆலகால விடம் உட்கொண்ட பின்னரும் பெருமானின் உடலுக்கு எந்த விதமான கேடும் நேராமல் இருந்தது மற்றும் மிகவும் அழகான நடனத்தினை தான் காணும் வாய்ப்பினை பெற்றது. ஆகிய இரண்டுமே தேவியின் உவப்பிற்கு காரணங்கள்.
வானார் சோதி மன்னு சென்னி வன்னி புனங் கொன்றை
தேனார் போது தானார் கங்கை திங்களொடு சூடி
மானேர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார்
கானூர் மேய கண்ணார் நெற்றி ஆனூர் செல்வரே
சிவபுரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.125.5) உமையவள் மகிழ பெருமான் நடனம் ஆடியதாக ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தனக்கு பணிவிடை செய்வதற்கு தேவர்கள் இருக்கையில், தன்னையும் ஒரு பொருட்டாக கருதி பெருமான், தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அப்பர் பிரான், சுந்தரர் மற்றும் மாணிக்க வாசகர் தங்களது பல பாடல்களில் பெருமான் தங்களை அடிமையாக ஏற்றுக் கொண்டதை குறிப்பிடுகின்றனர். ஆனால் அத்தகைய குறிப்பு மிகவும் அரிதாக ஞானசம்பந்தரின் பதிகங்களில் காணப்படுகின்றன. .
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன் உமையவள் மகிழ் நட நவில்பவன்
இறையவன் உமையவர் பணி கொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமை உடையவனே
பிராட்டியின் உடல் மகிழ்ச்சியினால் பூரிக்கும் வண்ணம், பெருமான் நடனம் ஆடினார் என்று புகலி (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.54.6) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். முழவ ஒலியின் பின்னணியில் தீப்பிழம்பைத் தனது கையில் ஏந்திய வண்ணம் நடனமாடிய பெருமான், பிராட்டியின் உடலும் உள்ளமும் மகிழ்ச்சியால் பூரித்ததை உணர்ந்து மேலும் ஊக்கமடைந்து நடனமாடினார் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
மண்ணார்ந்த மண் முழவம் ததும்ப மலையான் மகள் என்னும்
பெண்ணார்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர்
விண்ணார்ந்த மதியம் இடை மாடத்தாரும் வியன் புகலிக்
கண்ணார்ந்த கோயிலே கோயிலாக் கலந்தீரே
சந்திரனின் கதிர்கள் போன்று ஒளிவீசும் தனது பற்கள் முறுவல் செய்ய, மலைமகள் மகிழ்ந்து நடனத்தை ரசிக்கும் வண்ணம் பெருமான் நடனம் ஆடுகின்றார் என்று திருநெல்வேலி தலத்து பதிகத்து பாடல் (3.92.4) ஒன்றினில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். காண்தகு என்று பிராட்டியின் அழகான திருக்கோலம் இங்கே குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு அழகிய பிராட்டி அருகில் இருந்து புன்முறுவல் செய்கையில், சிறிதும் பொருத்தமற்ற சூழ்நிலையில், பாம்பினை ஆபரணமாக அணிந்து கொண்டு ஊருக்கு புறத்தே உள்ள சுடுகாட்டினைத் தான் நடனமாடும் அரங்காக பெருமான் கொள்ளலாமா என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் வினவுகின்றார்.
காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல் செய்து அருளவேயும்
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடமாடல் பேணி
ஈண்டு மாமாடங்கள் மாளிகை மீதெழு கொடி மதியம்
தீண்டி வந்துலவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே
தில்லைத் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.80.5) பிராட்டி, தனது நடனத்தைக் கண்டு மகிழ்ந்து நிற்கும் வண்ணம் பெருமான் தில்லை சிற்றம்பலத்தில் நடனம் ஆடுகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இத்தகைய அழகிய ஆடலைக் கண்ட கண்கள், வேறு எந்த காட்சியையும் கண்டு மகிழாது என்று கூறுகின்றார். நின்ற என்ற சொல் ஞின்ற என்று மருவியுள்ளது. நகர ஞகரப் போலி என்று நன்னூல் இலக்கண நூலில் குறிப்பிடப்படும் விதிக்கு, உதாரணமாக இந்த பாடல் நன்னூல் உரையாசிரியர்களால் கருதப்படுகின்றது. செய்=வயல்: நீலம்=நீலோற்பல மலர்:
செய்ஞ்ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய்ஞ்ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றன்
கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பதென்னே
அப்பர் பெருமான் தில்லைக் கூத்தனை நேரில் காண்பதற்கு எத்தனை ஆர்வத்துடன் இருந்தாரோ, அதற்கும் மேல் நடராஜப் பெருமான் அப்பர் பிரானைக் காண்பதற்கு ஆர்வத்துடன் இருந்தார் போலும். அப்பர் பெருமான் சிற்றம்பலத்தின் எதிரே பலமுறை தொழுது எழுந்த போது, நீ எப்போது வந்தாய் என்ற குறிப்பு தோன்ற இறைவனது சிரிப்பு காணப்பட்டதாக அப்பர் பெருமான் உணர்ந்தார். இதனை கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் அப்பர் பிரான் பதிவு செய்கின்றார். கை நின்ற ஆடல் என்று, சிவபிரானின் திருக்கையில் குறிப்பு நின்றதாக அப்பர் பிரான் இங்கே பதிவு செய்கின்றார் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. கருநட்டக் கண்டனை என்று தொடங்கும் பதிகத்தில் பெருமானின் திருக்குறிப்பினைத் தான் உணர்ந்ததை குறிப்பிடும் அப்பர் பிரானின் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, தில்லைச் சிற்றம்பலத்து கூத்தனை முதல் முறையாக பார்த்த போது அவரது புன்சிரிப்பு வெளிப்படுத்திய திருக்குறிப்பு, இந்த பதிகம் பாடிய போது, சிவபிரானின் கைகளில் வெளிப்படுகின்றது போலும்.
ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை
கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் (6.53.11) பெருமான் தனது நடனத்தை, பிராட்டி மனம் மகிழ்ந்து மனம் குளிர்ந்து காணும் வண்ணம், நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். வெயிலாய=சூரியனின் ஒளி; சூரியனின் ஒளி மற்ற அனைத்து ஒளிகளையும் தன்னுள் அடக்கி பிரகாசிக்கும். அது போன்று மற்ற ஒளிகளை அடக்கி அவற்றை மிஞ்சும் வண்ணம் ஒளி வீசும் திருமேனியை உடைய பரமன் என்று உணர்த்தப்படுகின்றது. அயில்=கூர்மை; தான் உறையும் இருப்பிடமாகிய கயிலாய மலையினை பேர்க்கத் துணிந்த அரக்கனை பெருமான் மன்னித்த செய்கை, ஏனையோரிலிருந்து மாறுபட்ட செய்கையாக கருதப் படுகின்றது. தான் வாழ்கின்ற இல்லத்தையே பேர்த்து எடுக்க முயற்சி செய்பவரை, வேறு எவரும் மன்னிக்கமாட்டர்கள் அல்லவா. அதனால் தான், பெருமானை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர் என்று கூறுகின்றார் போலும். குயில் போன்று இனிய மொழிகளை உடைய பிராட்டி என்றும், பெருமானின் திருமேனி ஒளி, மற்ற அனைத்து ஒளிகளையும் மிஞ்சும் வண்ணம் மிளிர்கின்றது என்றும் கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமான் தன்னை ஆட்கொண்ட செய்தியை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.
கயிலாய மலை எடுத்தான் கதறி வீழக் கால்விரலால் அடர்த்து அருளிச்
செய்தார் போலும்
குயில் ஆரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்தாட வல்ல
குழகர் போலும்
வெயிலாய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர்
விகிர்தர் போலும்
அயிலாரும் மூவிலை வேற்படையார் போலும் அடியேனை ஆளுடைய
அடிகள் தாமே
மங்கையவள் மகிழ சுடுகாட்டின் இடையே பெருமான் நடனம் ஆடினார் என்று சுந்தரர் கச்சி அனேகதங்காவதம் பதிகத்தின் பாடலொன்றினில் (7.10.9) கூறுகின்றார். சங்கையவர்=பெருமானின் தன்மையில் ஐயப்பாடு கொண்டவர்; புணர்தல்=சேர்தல்; தளவம்=முல்லை அரும்பு; விரா மிகு=என்றும் பிரியாமல் இருக்கும்; அங்கை அவன்=உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குபவன்;
சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவே நகையால் விரா மிகு சீர்
மங்கையவள் மகிழச் சுடுகாட்டிடை நட்ட நின்றாடிய சங்கரன் எம்
அங்கையவன் அனல் ஏந்துபவன் கனல் சேர் ஒளியன்னதோர் பேர்
அகலத்து
அங்கையவன் உறைகின்ற இடம் கலிச்கச்சி அனேகதங்காவதமே
திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.55.8) சுந்தரர் மான் போன்ற மருண்ட பார்வை உடைய பார்வதி தேவி மகிழும் வண்ணம் பெருமை வாய்ந்த நடனம் புரிந்தவன் பெருமான் என்று கூறுகின்றார். இந்த நடனத்தின் போது, திரிபுரத்தில் வாழ்ந்த வந்த அடியார்களில் ஒருவர் முழவு வாத்தியத்தை இயக்கும் பேற்றினைப் பெற்றார் என்று கூறுகின்றார்.
மூவெயில் சேற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின்
திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ மணிமுழா முழக்க அருள் செய்த
தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும்பொழில் திருப்புன்கூர்
உளானே
பொழிப்புரை:
தனது சடை சுழலும் வண்ணம் நடனமாடும் பெருமான், சுடுகாட்டினைத் தான் நடமாடும் இடமாகக் கொண்டுள்ளான். அழகிய மார்பகங்களைக் கொண்டுள்ள உமையன்னை, பெருமானின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்தவளாக புன்முறுவல் பூக்கின்றாள். இவ்வாறு போற்றப்படும் இறைவன், அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவனாக, குடவாயில் தலத்தில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் நிலையாக வீற்றிருக்கின்றான்
பாடல் 5:
என்றன் உளம் மேவி இருந்த பிரான்
கன்றன் மணி போல் மிடறன் கயிலைக்
குன்றன் குழகன் குடவாயில் தனில்
நின்ற பெருங்கோயில் நிலாயவனே
விளக்கம்:
கன்றன் என்ற சொல்லுக்கு, மான் கன்றினை உடையவன் என்றும் கன்று போன்று இளமை வாய்ந்த இளைஞன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்வார்கள். இந்த இரண்டுமே இங்கே பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம். தனது உள்ளத்தில் பொருந்தியிருக்கும் பெருமான் என்று மிகவும் பெருமையாக ஞானசம்பந்தர் கூறிக் கொள்வதை நாம் உணரலாம். இவ்வாறு ஞானசம்பந்தர் கூறுவது, நமக்கு அவர் அருளிய கோளறு திருப்பதிகத்தை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில், ஞானசம்பந்தர், பெருமான் தனது உள்ளத்தில் புகுந்து இருப்பதால், தான் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்றும், சமணர்கள் சூழ்ச்சிகள் ஏதும் புரிந்தால் தான் அவற்றை, இறைவனின் துணையோடு எளிதில் வெற்றி கொள்வேன் என்றும் அப்பர் பிரானுக்கு விடை அளிப்பதை நாம் உணரலாம். இந்த பதிகத்தின் (2.85) முதல் பாடலை நாம் இங்கே காணலாம். வேயுறு தோளி=மூங்கில் போன்று அழகான தோள்கள் உடைய உமையன்னை; ஆசு=குற்றம், கேடு; கோள்களும் எந்த வகையான குற்றமும் புரியாமல், கேட்டினையும் விளைவிக்காமல், நல்லனவையே செய்யும் என்று கூறுகின்றார்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல
வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த
அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
பல பாடல்களில் திருஞானசம்பந்தர் இறைவன், தனது உச்சியில், சென்னியில், கண்ணில், நாவில், மனதில் சித்தத்தில் இருப்பதாக கூறுகின்றார். கானூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.73.9) திருமாலும் பிரமனும் தேடியும் தன்னை அறிய முடியாமல், அவர்களை திகைப்பில் ஆழ்த்திய பெருமான், தனது சிந்தை, நாக்கு, சென்னி, ஆகிய இடங்களில் பொருந்தி நின்று, தனது உள்ளத்தில் தினமும் காலையும் மாலையும் நின்று ஆடுகின்றான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அந்தம் ஆதி=அனைத்து உயிர்களுக்கும் முடிவாகவும் தோற்றமாகவும் இருக்கும் இறைவன்; இந்த பாடலில் ஞானசம்பந்தர், பெருமான் தன்னை முழுமையாக ஆட்கொண்டதை உணர்த்துகின்றார். சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னிய ஈசன் என்று குறிப்பிட்டு, தனது நாவிலிருந்து வரும் சொற்களும், அந்த சொற்களுக்கு அடித்தளமாக உள்ள சிந்தனையும் ஈசனது வடிவம் என்று குறிப்பிட்டு, தேவாரப் பாடல்களில் உள்ள கருத்துகள் அனைத்தும் பெருமான் அருளியவை என்று நமக்கு உணர்த்துகின்றார். தனது சிந்தைனையில் உறைந்துள்ள ஈசனை, தான் காலையும் மாலையும் அகவழிபாடு செய்த தன்மையையும் நமக்கு இங்கே உணர்த்துகின்றார்.
அந்தமாதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவரியான்
சிந்தை உள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான்
வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான்
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே
தனது உள்ளத்திலும் சிந்தையிலும் இறைவன் இருப்பதாக திருஞானசம்பந்தர் குறிப்பிடும் ஒரு சில பாடல்களை நாம் இங்கே காண்போம். திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.36.1) தனது தந்தையாகிய பெருமானின் இணையடிகள் தனது மனதின் உள்ளே இருப்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சீர்காழி தலத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தின் முதல் பாடலிலும் (3.43.1) இவ்வாறு அவர் கூறுகின்றார். வண்=வள்ளல் தன்மை உடைய; காளத்தி=காளத்திநாதர்; மல்கு=மிகுந்த; உந்தும்=அலையால் தள்ளிக் கொண்டு வரும்; மந்தம்= தென்றல் காற்று; மல்கு வண் என்ற தொடருக்கு வளம் மிகுந்த காளத்தி தலம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
சந்தமார் அகிலொடு சாதி தேக்கம்மரம்
உந்து மாமுகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில் வளர் மல்கு வண் காளத்தி
எந்தையார் இணையடி என் மனத்துள்ளவே
சிற்றேமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.42.7) ஒளி பொருந்திய வெண்ணூலைத் தனது மார்பினில் அணிந்துள்ள பெருமான் எனது உள்ளத்தில் இருக்கின்றான் அல்லவா என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கொம்பு=கிளை; பிராட்டியை, கிளர்ந்து எழுகின்ற சந்திரனைப் போன்று ஒளி பொருந்திய முகம் உடையவள் என்று குறிப்பிடுகின்றார். தாமம்=மலர் மாலைகள்; மாதவன்=சிறந்த முறையில் தவம் புரிபவன்;மதுவும் ஆர்=தேன் நிறைந்த;
கிளரும் திங்கள் வாண்முக மாதர் பாடக் கேடிலா
வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மாதவன்
தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான்
ஒளிரும் வெண்ணூல் மார்பன் என் உள்ளத்துள்ளான் அல்லனே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.20) எனது மனதினில் புகுந்து கொண்டுள்ள பெருமானே, என்னை விடுத்து நீ வெளியே போவதற்கு விடமாட்டேன் என்று எச்சரிக்கை விடுப்பதையும் காணலாம். அறையோ=அறைகூவல் விடுத்தல், ஆணையாக கூறுதல்; காதலாகி கசிந்து இருந்ததால் மனதினில் புகுந்தார் என்றும் பொருள் கொள்ளலாம்; மனதினில் புகுந்ததால் இறைவன் பால் அப்பர் பிரானுக்கு ஆசை வரவே, இறைவனே தனது கருத்தாக நினைந்து இருந்தார் என்றும் பொருள் கொள்ளலாம். நெருங்கிய மாடங்கள், உயர்ந்த மாளிகைகள், இவற்றின் மேல் ஏற்றப்பட்ட கொடிகள், வானில் உலவும் சந்திரனைத் தீண்டுமாறு உயர்ந்து காணப்படுகின்றன. இவ்வாறு செல்வச் செழிப்பு மிகுந்த திருவாரூர் நகரில் உறையும் எங்கள் தலைவனே, உன்னைக் காண்பதே எனது கருத்தாக, மற்ற சிந்தனை ஏதும் இல்லாமல் இந்நாள் வரை இருந்த நான் உன்னை எனது ஆசை தீர கண்டு கொண்டேன்; நீ எனது மனதினில் புகுந்ததையும் நான் உணர்ந்துவிட்டேன்; உனது காலில் பொலிவுடன் விளங்கும் வீரக் கழல்களை, எனது மனதிற்கு அணிகலனாக நான் அணிந்துகொண்டேன்; பெருமான் மீது கொண்டுள்ள பற்றினைத் தவிர்த்து, மற்றப் பற்றுகள் அனைத்தையும் விட்டு விட்டேன்; நீ என்னை விடுத்து, அதாவது எனது மனதிலிருந்து வெளியே போக விடமாட்டேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்,
காண்டலே கருத்தாய் நினைந்து இருந்தேன் மனம் புகுந்தாய் கழலடி
பூண்டு கொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோ
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வானிளம் மதி
தீண்டி வந்து உலவும் திருவாரூர் அம்மானே.
திருவதிகை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.25.2) அப்பர் பிரான், இறைவன் தனது உள்ளம் புகுந்து கூடினார் என்று கூறுகின்றார். இந்த பாடலில் கூடல் மற்றும் ஆலவாய் என்று மதுரை மாநகர் அழைக்கப்படுவதை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.
பாடினார் மறைகள் நான்கும் பாயிருள் புகுந்தென் உள்ளம்
கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை
சூடினார் சூடல் மேவிச் சூழ்சுடர் சுடலை வெண்ணீறு
ஆடினார் ஆடல் மேவி அதிகை வீரட்டானாரே
தில்லைச் சிதம்பரத்தின் மீது அருளிய பதிகத்துப் பாடலில், தனது மனதினில் புகுந்த பெருமான், அவ்வாறு புகுந்ததற்கு எந்தவிதமான சுவடுகளையும் வைக்கவில்லை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். உயிரின் வேட்கை இறைவனைச் சென்று அடைவது. இதனை புரிந்து கொள்ளாத நாம், உயிரின் விருப்பத்தை விட்டு விட்டு, இந்த உடலின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் நமது விருப்பங்களை இறைவனிடம் தெரிவிக்கின்றோம். இந்த உடலின் தேவைகள் அனைத்தும் நிலையற்றவை, ஒரு நாள் அழியக்கூடியவை. ஆனால் உயிர் விரும்பும் முக்தி நிலை, என்றும் அழிவற்றது, சற்றும் குறையாத பேரின்பத்தை கொடுக்க வல்லது. எனவே அந்த முக்தி நிலையை வேண்டிப் பெறாது, அழியும் இன்பங்களை வேண்டுவோரை கல்மனவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தில்லையுள் உள்ள அடியார்கள் இறைவனிடம் முக்தி நிலை வேண்டுவதால், அவர்களை நல்மனவர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பேரின்பத்தைத் தரவல்ல சிவபெருமானிடம் சென்று சிற்றின்பத்தை யாசிப்பது, ஒரு பெரிய பணக்காரரிடம் சென்று பத்து காசுகள் யாசித்துப் பெறுவது போன்று நகைக்கு உரியதல்லவா. அதனால் நமக்கு ஏற்படும் பயன் என்ன?
கல் மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பதென்னே
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன்மலையில் வெள்ளிக்குன்றது போல பொலிந்திலங்கி
என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடில்லையே
சமணர்களின் சூழ்ச்சியால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் தள்ளிவிடப்பட்ட அப்பர் பிரான், இறைவனின் திருவருள் கூடியதால், கல்லே தெப்பமாக மிதக்க திருப்பாதிரிப்புலியூர் அருகே கரையில் சேர்க்கப் படுகின்றார். திருப்பாதிரிப்புலியூர் தலத்திலுள்ள திருக்கோயிலுக்கு செல்லும் அப்பர் பிரான், தனக்கு தாயாகவும் தந்தையாகவும் உடன் பிறந்த தமக்கையாகவும் இருந்து வழி காட்டும் இறைவன், தனது மனதினில் இருந்து தன்னைத் தாங்கிக் கொண்டான் என்று கூறுகின்றார். இவ்வாறு தன்னைத் தாங்கிய இறைவனை தோன்றாத் துணைவன் என்றும் அழைக்கின்றார்.
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே
தன்னை நினைக்காத மனிதர்களின் நெஞ்சில் நில்லாத இறைவன், தனது மனதினில் புகுந்ததும் அன்றி, தனது உள்ளத்தை விட்டு என்றும் அகலாதவராக உறைகின்றார் என்று திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றில் (6.36.8) அப்பர் பிரான் கூறுகின்றார். உள்ளூறும் அன்பர்= பெருமான் பால் உள்ளத்தில் சுரந்து பெருகும் அன்பினை உடையவர்; ஆர் முழவம்=மத்தளத்தின் ஓசை போன்று எப்போதும் இரைச்சலுடன் இருக்கும் கடல். நிலமாகவும் கடலாகவும் பெருமான் இருக்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது.
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே உள்ளூறும் அன்பர்
மனத்தார் தாமே
பேராது என் சிந்தை இருந்தார் தாமே பிறர்க்கு என்றும் காட்சிக்கு
அறியார் தாமே
ஊராரும் மூவுலகத்து உள்ளார் தாமே உலகை நடுங்காமல்
காப்பார் தாமே
பரார் முழவத்திடையார் தாமே பழனநகர் எம் பிரானார் தாமே
கயிலைத் திருத்தாண்டகத்தின் பாடல் ஒன்றினில் (6.55.3) அப்பர் பிரான், சிவபெருமானை மருவி என் சிந்தை புகுந்தாய் என்று அழைத்துப் போற்றுகின்றார். மருவார்=பொருந்தாதவர்கள்; சிவநெறியில் பொருந்தாத முப்புரத்து அரக்கர்கள் என்று இங்கே பொருள் கொள்ளவேண்டும்; மருவி=விரும்பி; உள்ளாவி=உடலின் உள்ளே இருக்கும் உயிர்; கருவாகி ஓடும் முகில்=நீரினை உட்கொண்ட மேகம். தேசம்=பல தேசங்களைக் கொண்ட உலகம். திரு=செல்வம்; இங்கே அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்ததாகிய முக்திச் செல்வத்தை குறிப்பிடுகின்றது. சிவநெறியில் பொருந்தாமல் வேறு நெறியைச் சார்ந்திருந்து, உலகத்தவரை வருத்திய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பால் எரித்தவனே, மிகவும் விருப்பத்துடன் எனது சிந்தனையில் புகுந்தவனே, பிரமனின் உருக் கொண்டு என்னை படைத்தவனே, உடலின் உள்ளே இருக்கும் உயிரினை எவரும் காணாத வண்ணம் ஒளித்தவனே, பக்குவம் அடைந்த உயிர்களுக்கு உயர்ந்த முக்திச் செல்வத்தை அளித்து, என்றும் தீராத இன்பம் அளிக்கும் திறமை படைத்தவனே, உலகத்தார் அனைவராலும் வணங்கப் படுபவனே, நீரினை உட்கொண்ட மேகமாக நின்று மழை பொழிந்து உலகுக்கு நன்மை விளைவிப்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். இதே கருத்தினை இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலிலும் குறிப்பிடுகின்றார்.
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை
புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி உள்ளாவி வாங்கி
ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திருவே போற்றி தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி கயிலை மலையானே போற்றி
திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் (6.63.2) அப்பர் பிரான், பெருமான் தனது உள்ளத்தில் மகிழ்ந்து இருப்பதாக கூறுகின்றார். மருந்து=பிறவிப் பிணிக்கு மருந்தாக உள்ளவன்; மந்திரிப்பார்=மனதினில் ஆழமாக பஞ்சாக்கர மந்திரத்தை உச்சரிப்பவர்: பெருமான் தனது சடையில் அணிந்திருப்பது பிறைச் சந்திரன் என்றாலும், தேய்ந்து அழியும் நிலையில் இருந்த சந்திரன், பெருமான் தனது சடையில் அணிந்து கொண்ட நொடியிலிருந்து அழியாமல் வளரத் தொடங்கியதால் வளர்மதி என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கருந்தான மத களிறு=கரிய மதநீர் பெருக்கும் யானை; கனம்=பெருமை மிகுந்த; இரத்தத்தின் ஈரப்பசை மிகுந்த யானையின் தோலை உடலின் மீது அணிந்து கொண்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று கூறுவார்கள். எனவே தான், பெருமான் அந்த யானையை அடக்கிய பின்னர், அந்த யானையின் தோலை உரித்து, தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட போது உமையன்னை அச்சம் கொண்டாள் என்று இங்கே கூறப்படுகின்றது. மற்றவர்களின் உடலுக்கு கேடு செய்யும் யானையின் பசுந்தோலும் இறைவனின் உடலுக்கு எந்தவிதமான கெடுதியும் செய்யவில்லை என்பதும் இங்கே மறைமுகமாக உணர்த்தப் படுகின்றது. பிறவிப் பிணிக்கு மருந்தாக உள்ளவனை, தனது திருநாமத்தை (பஞ்சாக்கர மந்திரத்தை) மந்திரமாக மனதினில் ஆழமாக உச்சரிக்கும் அடியார்களின் மனதினில் இருப்பவனை. தேய்ந்து அழிந்து கொண்டிருந்த சந்திரனுக்கு அருள் புரிந்து வளர்மதியாக மாற்றியவனை, மிகவும் மகிழ்ச்சியுடன் அடியேனது உள்ளத்தில் இருப்பவனை, இறப்பு இல்லாதவனை, மற்றவர் போன்று பிறவி எடுக்காமல் தானே தோன்றியவனை, வானோர்களின் தலைவனை, உமையவள் அஞ்சும் வண்ணம், தன்னை எதிர்த்து வந்த கருமை நிறத்து மதநீர் ஒழுக்குடன் எதிர்த்து வந்த யானையின் தோலை உரித்து தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவனை, பெருமை மிகுந்த மழுவாள் படையினை உடையவனை, பலி ஏற்பதற்காக ஊரூராக திரிபவனை. திருவானைக்கா தலத்தில் உறைபவனை, செழிப்பான நீர்த்திரளின் வடிவமாக அமைந்த பெருமானை அடியேன் சென்று நாடினேன் என்று இந்த பாடல் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.
மருந்தானை மந்திரிப்பார் மனத்துளானை வளர்மதியம் சடையானை
மகிழ்ந்து என் உள்ளத்து
இருந்தானை இறப்பிலியைப் பிறப்பிலானை இமையவர்தம் பெருமானை
உமையாளஞ்சக்
கருந்தான மதகளிற்றின் உரிபோர்த்தானைக் கனமழுவாட் படையானை
பலிகொண்டு ஊரூர்
திரிந்தானைத் திருவானைக்கா உளானைச் செழுநீர் திரளைச் சென்று
ஆடினேனே
திருவெம்மானை பதிகத்தின் பாடலில் (8.16) மணிவாசகர் ஊனாகவும், உயிராகவும், உணர்வாகவும் தன்னுள் பெருமான் கலந்து நிற்கின்றார் என்று கூறுகின்றார். வானவர்கள், முந்திய பிறவிகளில் தாங்கள் ஈட்டிய நல்வினைகளின் பயனை நுகர்ந்து கழிப்பதற்காக தேவர்களாக பிறந்தவர்கள். எனவே அந்த போகத்திற்கு காரணமான நல்வினைகள் நுகர்ந்து தீர்க்கப்பட்ட பின்னர், அவர்கள் மண்ணுலகம் வந்து பிறக்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் நிலவுலகில் இருக்கும் மனிதர்களோ, இறைவனின் உதவியுடன் தங்களது மலங்களை முற்றிலும் கழித்துக்கொண்ட பின்னர் முக்திவுலகம் செல்லும் தகுதி படைத்தவர்களாக மாறுகின்றனர். எனவே முக்தி உலகம் செல்லும் வழி வானோர்கள் அறியாத ஒன்று. இதனைத் தான் அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார்.
ஊனாய் உயிராய் உணர்வாய் என்னுள் கலந்து
தேனாய் அமுதமுமாய் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்
தேனார் மலர்க் கொன்றை சேவகனார் சீரொளி சேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றாவா கூறுதும் காண் அம்மானாய்
கோயில் திருப்பதிகத்தின் பாடலில், குறைவிலா நிறைவே என்று கோதிலா அமுதே என்றும் இறைவனை அழைக்கும் மணிவாசகர், கரைகள் ஏதும் இல்லாத நீர் பாய்வது போன்று, தங்கு தடை ஏதும் இன்றி தனது சிந்தையில் ஊறும் சிவபெருமான், தனது உடலில் இடம் கொண்டமையால், தான் இனிமேல் இறைவனிடம் ஏதும் வேண்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் இங்கே உணர்த்துகின்றார். இந்த பாடலில் கோதிலா அமுது என்று குறிப்பிட்டு மணிவாசகர் அமுதமும் குறை உடையது என்று நமக்கு உணர்த்துகின்றார். அமுதம் உண்ட தேவர்கள் எவரும் இறப்பிலிருந்து தப்பிக்கவில்லை: மேலும் அமுதம் தோன்றிய இடம், நஞ்சு தோன்றிய பாற்கடலாகும். ஆனால் சிவபெருமானோ எத்தகைய குறையும் இல்லாதவர். அதனால் தான் அவரை கோதிலா அமுது என்று இங்கே மணிவாசகர் குறிப்பிடுகின்றார். குறையேதும் இல்லாமல் நிறைவாக இருப்பவனும், குற்றங்கள் இல்லாத அமுதமாக இருப்பவனும், முடிவு என்பது இல்லாமல் எப்போதும் எரியும் சுடராக விளங்குபவனும் ஆகிய சிவபெருமான், வேதத்தின் சொற்களாகவும், அந்த சொற்களின் பொருளாகவும் தனது மனதினில் நிலை பெற்று இருப்பதாக மணிவாசகர் கூறுகின்றார்.
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க்
குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய
மன்னே
சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறை
உறை சிவனே
இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என்
இரக்கேனே
பிடித்தபத்து (8.37.6) பதிகத்தின் பாடல் ஒன்றினில் மணிவாசகர், தனது மனதினை கோயிலா ஆண்டுகொண்டு ஆனந்தம் அருளிய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அறவையேன்= ஆதரவற்றவன்; உற்றாரும் நண்பர்களும் தனக்கு உற்ற துணையாகார் என்பதை உணர்ந்த அடிகளார், தான் பெருமானைத் தவிர்த்து வேறு எந்த ஆதரவும் இல்லாதவன் என்று குறிப்பிடுகின்றார். பிஞ்ஞகன்=அழகிய தலைக்கோலம் உடையவன்; திறவு=திறந்த வெளி; இறவு= இறுதிக் காலம்; தனது உள்ளத்தில் பெருமான் இருந்து கொண்டு, சிவானந்தம் அளித்தமையால், தன்னை வினைகள் ஏதும் சூழாது என்பதை உணர்ந்த அடிகளார், வினைகளற்ற தன்மை உடையவனாக தான் மாற்றப்பட்டதால், தனது பிறவி வேரினை பெருமான் அறுத்தெறிந்து விட்டார் என்று கூறுகின்றார். பெருமானின் கருணையால் தான் உய்வினை அடைந்தது மட்டுமன்றி, தனது குடி முழுவதும் உய்வினை அடைந்ததாக கூறுகின்றார்.
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா
ஆனந்தம் அருளிப்
பிறவி வேர் அறுத்து என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா பெரிய
எம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது
இனியே
பொழிப்புரை:
அடியேனது உள்ளத்தில் விரும்பி உறையும் தலைவனும், மான் கன்றினைத் தனது கையில் ஏந்தியவனும், மாணிக்கமணி பதித்தது போன்று கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனும், கயிலை மலையை உடையவனும், அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவனும் ஆகிய பெருமான் குடவாயில் தலத்தில் உள்ளதும் பலராலும் அறியப்பட்டதும் ஆகிய திருக்கோயிலில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் நிலையாக வீற்றிருக்கின்றான்
பாடல் 6:
அலை சேர் புனலன் அனலன் அமலன்
தலை சேர் பலியன் சதுரன் விதிரும்
கொலை சேர் படையன் குடவாயில் தனில்
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே
விளக்கம்:
புனல்=கங்கை நதி; விதிரும்=நடுக்கத்தை ஏற்படுத்தும்; சதுரன்=சாமர்த்தியசாலி; வெள்ளப்பெருக்கு மிகுந்த கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டு அடைத்து வைப்பதற்கும், தனது கையில் தீப்பிழம்பை ஏந்திய வண்ணம் நடனம் ஆடுவதற்கும் தனியான சாமர்த்தியம் வேண்டும் அல்லவா. இந்த இரண்டு செயல்களும் ஏனையோரால் செய்ய முடியாத செயல்கள் அல்லவா. எனவே தான் சதுரன் என்று பொருத்தமாக திருஞானசம்பந்தர் அழைக்கின்றார்.
பொழிப்புரை:
அலைகள் வீசும் வண்ணம் வெள்ளப்பெருக்கு உடைய கங்கை நதியினைத் தனது சடையில் அடக்கிக் கொண்டு மறைத்தவனும், தனது கையில் அனல் ஏந்தி நடனம் புரிபவனும், மலங்களின் சேர்க்கை இல்லாதவனும், பிரம கபாலத்தில் பலி ஏற்பதற்காக பல இடங்களுக்கும் செல்பவனும், இவ்வாறு பல அரிய செயல்களை புரியும் சாமர்த்தியம் வாய்ந்தவனும், அடுத்தவரை நடுங்கவைக்கும் ஆற்றல் கொண்ட மழுப் படையை உடையவனும் ஆகிய பெருமான் குடவாயில் தலத்தில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் நிலையாக வீற்றிருக்கின்றான்
பாடல் 7:
அறையார் கழலன் அழலன் இயலின்
பறை யாழ் முழவும் மறை பாட நடம்
குறையா அழகன் குடவாயில் தனில்
நிறையார் பெருங்கோயில் நிலாயவனே
விளக்கம்:
அறை=ஒலி; இயல் என்பது இங்கே இசையியலை குறிப்பிடுகின்றது.
பொழிப்புரை:
ஒலி செய்யும் வீரக்கழல்களை அணிந்த திருப்பாதங்களை உடையவனும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தில் திருமேனி உடையவனும், இசைமரபில் போற்றப்படும் பறை யாழ் முழவம் ஆகிய இசைக்கருவிகளும் வேதங்களும் ஒலிக்கும் பின்னணியில் நடனம் ஆடுபவனும், குறையேதும் இல்லாத அழகினை உடையவனும் ஆகிய பெருமான் குடவாயில் தலத்தில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் நிலையாக வீற்றிருக்கின்றான்
பாடல் 8:
வரையார் திரள் தோள் அரக்கன் மடியவ்
வரையார ஒர் கால் விரல் வைத்த பிரான்
வரையார் மதில் சூழ் குடவாயில் மன்னும்
வரையார் பெருங்கோயில் மகிழ்ந்தவனே
விளக்கம்:
வரை=மலை; ஆர=அழுத்த; வரையார் என்ற சொல்லுக்கு இடைவிடாது வழிபாடு செய்யும் அடியார்கள் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. உயிரணுக்கள் சேர்த்து வைக்கப்பட்ட குடத்தினை புற்று மலை போன்று மூடியமையால், இந்த தலம் வன்மீகாசலம் என்று பண்டைய நாளில் அழைக்கப்பட்டது. வன்மீகம் என்றால் மண்புற்று என்று பொருள். அசலம் என்றால் மலை என்று பொருள். இந்த பாடலின் நான்கு அடிகளிலும் வரை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு மலை போன்று நிலையாகவும், அருள் புரிபவனாகவும் இறைவன் உள்ள நிலை உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
மலை போன்று உயர்ந்தும் திரண்டு வலிமையாகவும் உறுதியாகவும் காணப்படும் தோள்களை உடைய அரக்கன் இராவணன், கயிலை மலையின் கீழே நசுங்கி மடியும் வண்ணம் கயிலை மலையின் மீது தனது கால் பெருவிரலை ஊன்றிய தலைவர் சிவபெருமான். இத்தகைய ஆற்றல் கொண்ட பெருமான், மலை போன்று உயர்ந்த மதில் சுவர்களால் சூழப்பட்ட உடைய குடவாயில் தலத்தில் மலை போன்று உயர்ந்த கோபுரத்தினை உடைய பெருங்கோயிலில் மகிழ்ந்து வீற்றிருக்கின்றார்
பாடல் 9:
பொன்னொப்பவனும் புயலொப்பவனும்
தன் ஒப்பு அறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னல் படையான் குடவாயில் தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே
விளக்கம்:
புயல்=பலத்த மழையினை பொழிவிக்கும் கருத்த மேகம்; பொன்னப்பவன்=பொன்னின் நிறத்தில் மேனியை உடைய பிரமன்; ஒப்பு=உவமை; தன்னொப்பு அறியா=தனக்கு ஒப்பாகாத வண்ணம்; பாதாளம் ஏழினையும் கடந்தும் விண்ணையும் ஊடுருவிக் கடந்தும் நின்ற பெருமானின் திருவடி மற்றும் திருமுடியின் அருகினில் செல்ல முடியாமல் தங்களது முயற்சியில் தோல்வி அடைந்த பிரமனும் திருமாலும், எவ்வாறு சிவபெருமானுக்கு ஒப்பாகமுடியும். பெருமானின் சூலப் படையின் சிறப்பு இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் சொல்லப் பட்டுள்ளது.
பொழிப்புரை:
பொன்னின் நிறத்தில் மேனி உடைய பிரமனும், பலத்த மழையினை பொழிவிக்கும் கருத்த மேகத்தின் நிறத்தில் மேனி உடைய திருமாலும், தனக்கு உவமையாக சொல்ல முடியாத வண்ணம் பிரமன் மற்றும் திருமாலின் ஆற்றலை விடவும் அதிகமான ஆற்றல் கொண்ட சிவபெருமான், அவர்கள் இருவரும் தனது திருமுடியையோ திருவடியையோ கான் முடியாத வண்ணம் நீண்ட நெடுந்தழலாக நிமிர்ந்தவன், சிவபெருமான். கொலைத்தொழில் புரிவதில் சிறந்த படையாகிய சூலப் படையினை உடைய பெருமான், குடவாயில் தலத்தில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் நிலையாக வீற்றிருக்கின்றான்
பாடல் 10:
வெயிலின் நிலையார் விரி போர்வையினார்
பயிலும் உரையே பகர் பாவிகள் பால்
குயிலன் குழகன் குடவாயில் தனில்
உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே
விளக்கம்:
வெயிலின் நிலையார்=வெய்யிலில் நிற்பவர்; வெய்யிலில் திரிந்து காய்பவர் என்று பொருள் கொள்ள வேண்டும். பயிலும்=இடைவிடாது எப்போதும் சொல்லிகொண்டிருக்கும்; குயிலல்=பதிவு செய்தல்; குயில்+அன்=பதிவு செய்வதை அற்றவன்; அதாவது பொருட்படுத்தாமல் ஒதுக்கித் தள்ளும் தன்மை உடைய இறைவன்.
பொழிப்புரை:
வெய்யிலில் காய்ந்து திரியும் சமணர்களும் விரிந்த போர்வையால் தங்களது உடலினை மூடிக் கொள்ளும் புத்தர்களும், இடைவிடாது எப்போதும் பெருமானைக் குறித்து பழிச்சொற்கள் பேசுகின்ற பாவிகள்; அத்தகைய சொற்களை பொருட்படுத்தாது விலக்கும் பெருமான், அழகும் இளமையும் ஒருங்கே பொருந்திய பெருமான் குடவாயில் தலத்தில் நிலையாக உயர்ந்து விளங்கும் பெருங்கோயிலில் அனைவரிலும் உயர்ந்தவனாக வீற்றிருக்கின்றான்
பாடல் 11:
கடுவாய் மலி நீர் குடவாயில் தனில்
நெடுமா பெருங்கோயில் நிலாயவனைத்
தடமார் புகலித் தமிழார் விரகன்
வடமார் தமிழ் வல்லவர் நல்லவரே
விளக்கம்:
கடுத்த=வேகம் உடைய; தடம்=நீர்நிலை; வடம்=மாலை;
பொழிப்புரை:
வேகத்துடன் பாயும் ஆற்று நீரால் வளம் பெறுகின்ற குடவாயில் தலத்தில் நெடிது உயர்ந்த கோபுரத்துடன் விளங்கும் பெருங்கோயிலில் நிலையாக பொருந்திய இறைவனை, நீர்நிலைகள் கொண்ட புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தைச் சார்ந்தவனும் தமிழ் மொழியில் புலமை வாய்ந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் மாலையாக இறைவனுக்கு அணிவித்த இனிய தமிழ் பாடல்களை பாடுவதில் வல்லமை பெற்றவர்கள், இம்மையிலும் மறுமையிலும் நன்மைகள் அடைவார்கள்.
முடிவுரை:
இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் பெருங்கோயில் என்று கோயிலின் சிறப்பை உணர்த்தும், ஞானசம்பந்தர், பதிகத்தின் முதல் பாடலில், திருமால் மற்றும் பிரமனால் புகழப்படும் பெருமான் என்று பெருமானை அறிமுகம் செய்து வைக்கின்றார். எனினும் இந்த நிலவுலகத்து அடியார்கள் புகழ்வதை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் பெருமான் என்று உணர்த்தி, நாமும் பெருமானை புகழ்ந்து பதிகங்கள் பாடி, அவரை மகிழ்வித்து அவரது அருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்று நம்மை ஊக்குவிக்கின்றார். இரண்டாவது பாடலில் பெருமானது சடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தன்மையால் கங்கை நதி, பாம்பு மற்றும் பிறைச் சந்திரன் புகழுடன் விளங்குவதை சுட்டிக் காட்டுகின்றார். மூன்றாவது பாடல், பெருமான் உமை அன்னையை மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்ட தன்மை குறிப்பிடப் படுகின்றது. நான்காவது பாடல், பெருமானின் நடனம், அன்னையை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். தனது உள்ளத்தில் மகிழ்ந்து பெருமான் உறைகின்றார் என்று ஞானசம்பந்தர் ஐந்தாவது பாடலில் உணர்த்துகின்றார். ஆறாவது பாடல் மிகுந்த மகிழ்ச்சியுடன் பலியேற்கும் செய்கை குறிப்பிடப் படுகின்றது. ஏழாவது பாடலில் நடனம் ஆடும்போது, பின்னணியில் ஒலிக்கும் இசைகளை குறிப்பிட்டு, பெருமான் மகிழ்ந்து நடனம் ஆடுகின்றார் என்று சொல்லும் சம்பந்தர், அப்போது பெருமான் மறை கீதங்களை பாடுவது, அவர் மகிழ்வுடன் இருக்கும் தன்மையை உணர்த்துகின்றது என்று குறிப்பிடுகின்றார். எட்டாவது பாடல் அரக்கன் இராவணனை கயிலை மலையின் கீழே அமுக்கி வருத்திய செயல் குறிப்பிடப் படுகின்றது. கயிலை மலையினை பேர்த்தெடுக்க அரக்கன் முயற்சி செய்த போது, ஏற்பட்ட அசைவு தேவிக்கு அச்சமூட்டியது என்பதையும், அரக்கனின் முயற்சியை முறியடித்ததன் மூலம் பெருமான் தேவியின் அச்சத்தை விலக்கினார் என்பதையும் தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன. எனவே இந்த செயல், தேவி அச்சம் நீங்கி மகிழ்வடையச் செய்தது என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஒன்பதாவது பாடல், பிரமன் திருமால் ஆகியோர் இருவரையும் விடவும் ஆற்றல் கொண்டவன் பெருமான் என்பதை நாம் உணரும் போது, நாம் பெருமிதம் கொள்ளச் செய்து, நம்மை மகிழ வைக்கின்றது. மாற்று மதத்தவர்களின் கூற்றினை நாம் மதிக்காது விலக்க வேண்டும் என்ற அறிவுரை வழங்குகின்றது. அவர்களது கூற்றினை நாம் செவி சாய்த்து கேட்டால் நமது மனம் வருந்தும் என்பதால், அவர்களது பேச்சினை பொருட்படுத்தி கேட்க வேண்டாம் என்று கூறுகின்றார் போலும். பெருமானின் தன்மையை சரியாக புரிந்து கொண்டு அவரை மனமார வழிபட்டு, அவரது அருளின் துணையோடு இம்மையிலும் மறுமையிலும் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கடைப்பாடலில் உணர்த்துகின்றார். நாமும் பெருமானின் பெருமைகளை உணர்த்தும் தேவாரப் பாடல்களை முறையாக ஓதி, அவரை மகிழ்வித்து நாமும் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்வோமாக.