இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


திருமுருகு ஆற்றுப்படை

Thirumurugatrupadai, also known as Tirumurugarruppatai, is an important work of classical Tamil literature and is part of the Pattuppāṭṭu (Ten Idylls) anthology. This collection is significant for its religious and devotional themes, and Thirumurugatrupadai specifically focuses on the worship of the Tamil god Murugan, also known as Subramanya or Skanda.


திருமுருகு ஆற்றுப்படை

பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. சிவனுடன் வாதம் புரிந்த நக்கீரரால் இது இயற்றப்பட்டது. இதுகடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழிச் செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்த நூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ஆற்றுப்படுத்தல் என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். முருகாற்றுப்படை எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.

திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி(இந்நாளில் பழநி என்றுவழங்கப்படுவது), திருவேரகம்(சுவாமிமலை) , குன்றுதோறாடல், பழமுதிர் சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன. இப் புலவர் பெருமானே பத்துப்பாட்டின்கண் ஏழாம் எண்ணுமுறைக்கண் நின்ற நெடுநல்வாடை என்னும் பாடலையும் இயற்றியவர் ஆவார். இவர் பெயர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று அடைமொழிகளோடு வழங்கப்படுதலால், இவர் மதுரையிற் பிறந்தவரென்றும், இவர் தந்தையார் மதுரையின்கண் மாணாக்கர் பலர்க்கும் தமிழறிவுறுத்தும் நல்லாசிரியத்தொழில் நடத்தியவர் என்றும் அறியப்படும். கீரனார் என்பதே இவர்தம் இயற்பெயராகும். அப்பெயர் முன்னர்ச் சிறப்புப் பொருளைத் தரும் இடைச்சொல்லாகிய ந என்பது அடையாக வந்து நக்கீரனார் என்றாயிற்று. பண்டைக்காலத்தே கல்வி, கேள்விகளானே நிறைந்து நல்லிசைப் புலமைவாய்ந்த சான்றோர் பெயர் முன்பு இச் சிறப்படைச்சொற் பெய்து வழங்கும் வழக்க முண்மையை நத்தத்தனார். நப்பூதனார், நக்கண்ணையார், நப்பசலையார் எனவரும் பிற சான்றோர் பெயர்களிடத்தும் காண்க. பண்டைநாட் செந்தமிழ்ப் புலவர்களுள்ளும், நக்கீரனார் பெருஞ் சிறப்புடையர் என்பதனை இவரைப்பற்றி வழங்கும் பல வரலாறுகளானும் உணரலாம். இவர் மதுரையில் கடைச்சங்கத்தே வீற்றிருந்து தமிழாராய்ந்த தண்டமிழ்ப் புலவருள் ஒருவர் என்ப. ஒரு காலத்தே, மதுரையில் பட்டிமண்டபத்தே இப் புலவர் பெருமான் வீற்றிருந்தபொழுது அவண் வந்த குயக்கொண்டான் என்பான் ஒருவன், வடமொழியே சிறந்ததென்றும், தமிழ் மொழி தாழ்ந்ததென்றும் கூறினானாகத் தமிழ்மொழியையே தம்முயிரினும் சிறந்ததாகப் போற்றும் நக்கீரனார் அதுகேட்டுப் பொறாது சினங்கொண்டு

முரணில் பொதியின் முதற்புத்தேன் வாழி
பரண கபிலரும் வாழி- அரணிய
ஆநந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்
ஆநந்தஞ் சேர்க சுவா

எனப் பாடியருள, அக் குயக்கொண்டான் அப்பொழுதே மாண்டு வீழ்ந்தான் என்றும், அதுகண்ட ஏனைச் சான்றோர்கள் அவன் அறியாமைக்கும் சாவிற்கும் இரங்கி நக்கீரரை அவனுக்கு உய்தியருளும்படி வேண்டினராக, அவரும் சினம் விலகப்பெற்று அவன்பால் இரக்கமுடையராய்,

ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் சீரிய
அந்தண் பொதியின் அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க சுவா

எனப்பாடி அவனை உயிர்ப்பித்து உய்யக்கொண்டருளினார் என்றும், ஒரு கதை வழங்கி வருகின்றது. இக்கதை பண்டுதொட்டே வழங்கிவருவதலை, நிறைமொழி மாந்தர் என்னும் தொல்காப்பியச் சூத்திர வுரையில் பேராசிரியர், இவை தெற்கண்வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் சாகவும் (மீண்டும்) வாழவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின, என விளக்கிச் சேறலான் அறிக. இனி, சிவபெருமான் தருமி என்னும் ஓர் அந்தணன் பொருட்டுப் பாடியருளிய கொங்குதேர் வாழ்க்கை என்னும் செய்யுள் குற்றமுடைத்தென்று நக்கீரனார் கூறினர் என்றும், இச் செய்யுள்பற்றி இறைவர்க்கும் இவர்க்கும் நிகழ்ந்த சொற் போரில் இறைவனார் வெகுண்டு நெற்றிக்கண்ணைத் திறந்தனர் என்றும், அதற்கும் அஞ்சாதவராய் நக்கீரனார், நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே! என வினயமாய் மொழிந்தனர் என்றுங் கூறுப. இக்கதைகள் நக்கீரனார் தெய்வத்தன்மையுடைய நல்லிசைப்புலவர் என்றும் தமிழின்பால் அளவிலா ஆர்வமுடையர் என்றும், தன்னெஞ்சறிந்தது பொய்யரப் பெருந்தகையாளர் என்றும், தமிழ்மொழியைத் தம் ஆருயிரினும் சிறந்ததாகப் போற்றுபவர் என்றும் நமக்கு நன்கு விளக்குதல் காண்க.

இனி, இவ்வாசிரியரைப் பார்ப்பன வகுப்பினர் என்று கூறுவாரும் உளர். சங்கறுப்ப தெங்கள் குலம் சங்கரனார்க் கேதுகுலம் எனவரும் பழைய வெண்பாவானே இவர் சங்குத் தொழில் செய்யுமொரு பார்ப்பன மரபினர் எனவும் கருதுவாரும் உளர். கீதமொழி கூட்டி வேதமொழி சூட்டுகீரர் என அருணகிரியார் கூறுவதனால் அருணகிரியாரும் இவரை அந்தணர் என்றே கருதினர் என்று கூறுவாறுமுளர். ஈண்டு அருணகிரி அடிகளார் திருமுருகாற்றுப்படையையே வேதம் என மதிப்பாராய் அதனையே வேதமொழி எனப் பாராட்டுகின்றார் ஆகலான், அதுபற்றி அவர் அந்தணராகக் கருதினர் என்றது நிரம்பாதென்க. இவர் அந்தண மரபினர் என்றற்குச் சிறந்த சான்றுகள் இல்லை. இனி, இந் நல்லிசைப்புலவர் திருமுருகாற்றுப்படை இயற்றியதற்குக் காரணமாகக் கூறப்படும் வரலாறும் ஒன்றுள்ளது. அஃதாவது: இறைவனார் சினத்திற்கு ஆளானமையாலே நோயுற்ற நக்கீரனார் அது தீர்தற்பொருட்டுக் கைலை காணச் சென்றார் என்றும், அங்ஙனம் செல்லுங்கால் திருப்பரங்குன்றத்தே உறையுமொரு பூதம் இவரைத் தினற்பொருட்டு அம்மலைமுழைஞ்சில் சிறையிட்டு வைத்ததென்றும் அச் சிறையினின்றும் தப்புதற்பொருட்டு நக்கீரனார் இத் திருமுருகாற்றுப்படையைப் பாடி முருகப்பெருமானைப் பரவ, அவர் வேலுடன் வெளிப்பட்டு அக்கொடிய பூதத்தைக் கொன்றொழித்து நக்கீரரை உய்யக்கொண்டார் என்றது.

இதனால், முருகப்பெருமான்பாற் பேரன்புகொண்டு வழிபட்டவர் நக்கீரர் என்பது புலனாம். இன்றும் தமிழகத்தே முருகப்பெருமான் சீரடியார்கள், இவர் பாடிய திருமுருகாற்றுப்படையை நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழியாகக் கொண்டு நாடோறும் ஓதி அவ்விறைவனின் திருவருள் பெற்றுவருகின்றனர். இனி, இப் புலவர் பெருமான் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை என்னும் இவைகளேயன்றி, நற்றிணையில் ஏழு செய்யுட்களும், குறுந்தொகையில் எட்டுச் செய்யுட்களும், அகநானூற்றில் பதினேழு செய்யுட்களும், திருவள்ளுவமாலையில் ஒன்றுமாகப் பல செய்யுட்களைப் பாடித் தமிழை வளம்படுத்துள்ளார். இனிப் பதினொராந் திருமுறையிற் காணப்படும் கைலைபாதி காளத்திபாதி யந்தாதி முதலிய ஒன்பது நூல்களையும் இயற்றியவர் நக்கீரரே என்க. சங்ககாலத்து நூல்களுள் காணப்படும் இவர் செய்யுட்போக்கானும் சொல்லமைப்பு வடமொழிக் கலப்பு முதலியவற்றானும் இவற்றிற் பெரிதும் வேறுபடுதலால் இவற்றைப் பாடிய நக்கீரர் எனப்படும் மற்றொருவர் ஆதல் வேண்டும் எனக் கருதுவாரும் உளர்.

மதுரையில் மேலைமாசி வீதியின்கண் நக்கீரர் கோயில் என்று வழங்கப்படும் கோயில் ஒன்றுளதென்றும், அங்கு நக்கீரர் திருவுருவச்சிலை யுளதென்றும், இன்னும் திருப்பரங்குன்றத்தினும், திருவீங்கோய்மலையிலும் இப் புலவர்பெருமானுடைய திருவுருவச்சிலை உள்ளன என்றும் கூறுப. திருக்காளத்தியின் கண் இவரான் நடப்பட்ட சிவலிங்கவுருவம் ஒன்றுளதென்றும், அத் திருவுருவத்திற்கு நக்கீரநாதர் அல்லது நக்கீரலிங்கம் என்று திருப்பெயர் வழங்கப்படுகின்றதென்றும் கூறுப. இனி, ஆசிரியர் நக்கீரனார் சிறந்த நூலாசிரிய ராதலோடு ஒப்பற்ற உரையாசிரியருமாகத் திகழ்கின்றார். இறையனார் களவியலுக்கு இவர்கண்ட வுரை பண்டைக்காலத் தமிழ் உரைநூலிற் றலைசிறந்து விளங்குகின்றது. இப்புலவர் நூல்களிலே முருகவேள், இந்திரன், திருமால், அயன், சிவன், பலதேவர், குறுந்தாட்பூதங்கள், வரையரமகளிர், சூரரமகளிர் முதலிய பல தெய்வங்கள் கூறப்பட்டுள்ளன. தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் முதலிய, புரவலர்களைப்பற்றியும், ஆலங்கானம், இடையாறு, உறையூர், கருவூர், காவிரிப்பூம்பட்டினம், திருப்பரங்குன்றம், திருவாவினன்குடி, திருவேரகம், தொண்டி, முசிறி, பழமுதிர்சோலை, பெருங்குளம், மதுரை, மருங்கூர்ப் பட்டினம், வேங்கடம், மூதில், திருமருதந்துறை முதலிய சிறந்த ஊர்களைப்பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. இனிப் பண்டைக்காலத் தமிழ்மக்களுடைய தெய்வவழிபாடு அரசியல், தொழில், போர், காதல் முதலிய பல்வேறு செய்திகளும் இவர் நூல்களிலிருந்து நன்கு தெளியப்படும்.

பாட்டுடைத்தலைவன் வரலாறு!

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இயற்றிய இத்திருமுருகாற்றுப் படைக்குச் செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப் பெருமானே பாட்டுடைத் தலைவனாவான். ஏனை ஆற்றுப்படைகட்கு இவ்வுலகத்தே சிறந்த வண்மையாளராய்த் திகழ்ந்த புரவலர்களே பாட்டுடைத் தலைவராக, இப்பாட்டிற்கு உயிர்களின் துயர்போக்கி அந்தமில் இன்பத்து அழியாவீட்டை நல்கியருளும் ஒப்பற்ற வள்ளற் பெருமானாகிய முருகவேளையே சான்றாண்மைமிக்க நல்லிசைப் புலவராகிய நக்கீரர் பாட்டுடைத் தலைவனாகத் தேர்ந்துகொண்டமை பெரிதும் போற்றற்பாலதொன்றாம்.

இனி, இம் முருகப்பெருமானே, தமிழ்நாட்டின்கண் முதனிலமாகக் கொள்ளப்படும் மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலத் தெய்வம் ஆவார். இதனைச் சேயோன் மேய மைவரை யுலகமும் எனவரும் தொல்காப்பிய நூற்பாவான் உணரலாம். உலகில் மக்கள் முதன்முதலாகத் தோன்றி வாழத் தொடங்கியது குறிஞ்சி நிலத்திலேதான் என்பர் உயிர்நூல் ஆராய்ச்சி வல்லுநர். மக்கள் முதன்முதலாக இவ்வுலகியற்கையைக் கூர்ந்து நோக்கி இவ் வுலகத்தை இவ்வாறு ஒழுங்குற நடத்தற்கு ஒரு முழுமுதற்பொருள் இருத்தல் வேண்டுமென்றும், அப்பொருள் இவ் வுலகின்கண் ஒவ்வோர் அணுவினும் உள்ளீடாய் உறைந்து இவ்வுலகினை இயக்குகின்றதென்றும், எங்கும் நிறைந்து எப்பொருட்கும் தான பற்றுக்கோடாய்த் தனக்கொரு பற்றுக்கோடுமின்றி நிற்பதும், தோற்றமும் ஈறும் இல்லாததும், எப்பொருளையும் தன்னுட்டோற்றி யழிப்பதுமாகிய, அப்பொருளாலேதான் இவ்வுலகம் இனிதின் இயங்குகின்றதென்றும், தம் கூரிய அறிவானே கண்டகாலத்தே, அப்பொருளைக் கந்தழி என்னும் பெயரானே வழங்கி, அதனை மனத்தானே போற்றி வருவாராயினர். இக் கடவுளறிவு மிகுந்த பிற்காலத்தே இங்ஙனம் கருதலளவையான் மட்டுமே ஊகித்துக் கண்ட அவ்விறைப் பொருளை மற்றோராற்றாற் காண்டல் அளவையானும் காணத்தலைப்பட்டனர். அஃதாவது இப் பேருலகத்தே எத்திசையினும், யாண்டும் முதிர்ந்த மனனுணர்ச்சிக்குப் புலனாகத் தெள்ளத் தெளியக் காணப்படுகின்ற அழகே அக் கடவுளின் தோற்றம் ஆதல்வேண்டும் என்று கருதினர். அவ்வழகு கடவுளின் வெளிப்பாடாகலான், அதற்கு முருகு என்னும் சிறந்ததொரு பெயரிட்டு வணங்குவாராயினர். முருகு என்னும் தனித்தமிழ்ச்சொல் அழகு, இளமை, இன்பம் முதலிய உயரிய கடவுட் பண்புகளை உணர்த்தும் ஒருசொல்லாதல் அறிக. அவ்விறைப் பொருளை ஆண் பெண் ஆகிய இரண்டுபாலுள் ஒன்றாகக் கருதாமையால், கந்தழி என்றாற்போன்று முருகு என்றே வழங்குவாராயினர்.

தமிழ்மொழி, மக்களிடத்தே வளர்ச்சியுற்று எழுத்து சொல் பொருள் என்னும் முத்திறத்த இலக்கணங்கள் சான்றோர்களால் வகுக்கப்பட்ட காலத்தேதான் முருகென இறைப்பொருள் என்னும் பொருட்டாய் நின்றசொல், அன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று முருகன் என்று வழங்கப்பட்டது. நிலத்தை நான்காக வகுத்த காலத்தே, தமிழ்நாட்டில் முதன் முதற்றோன்றிய இம் முருகு நானிலத்தொன்றாய் முதனிலமாகிய மலைநிலத் தெய்வமாக வகுக்கப்பட்டது. இக்காலமே வடவாரியர் தமிழகம் புகுந்து தமிழரொடு கலந்துவாழ்ந்த காலம் ஆகும். ஆகவே, அவர்கள் வழங்கிவந்த இந்திரன், திருமால், வருணன் முதலிய கடவுளரையும் குறிஞ்சி நிலமொழிந்த ஏனை நிலங்கட்குத் தெய்வமாக அமைத்துக்கொள்ளலாயினர். இனி, இம் முருகனையும் வடவாரியர் கொண்டிருந்த தெய்வங்களுள் ஒன்றாய கந்தன் என்னும் தெய்வத்தையும் ஒன்றாகக் கருதி, அக் கந்தன் என்னும் தெய்வத்தின் வரலாறனைத்தும் இம் முருகனுடைய வரலாறாகவே வேற்றுமையின்றி வழங்கலாயினர். குமாரசம்பவம், கந்தபுராணம் முதலிய வடமொழிக் காப்பியங்களிலே இக் கந்தனுடைய வரலாறு கூறப்பட்டுள்ளது. அவ்வரலாறு புராணந்தோறும் சிற்சில வேறுபாடுகள் உடையதாம். அவ் வரலாறு வருமாறு:

சிவபெருமான் மலையரையன் மகளை மணந்த காலத்தே இந்திரன் அவர்பாற் சென்று, நீ இவளுடன் புணர்தலை ஒழிதல் வேண்டும், என வேண்டினானாக, இறைவனும் அவன் வேண்டுகோட்கிணங்கி அவளைப் புணர்தல் தவிர்ந்தவனாய்க் கருவினை அவ்விந்திரன் கையிற் கொடுத்தருளினான். அதனை, ஏழ்பெருந் துறவியர் அவ் விந்திரனிடத்திற் பெற்று, அதன் ஆற்றல் தம்மாற் பொறுக்கவியலாமை கண்டு அவ்வாற்றல் தணியும் பொருட்டு இறைவன் கூறாகிய முத்தீயிலே பெய்து மீண்டும் எடுத்துத் தம் மனைவியர்பாற் பகுத்துக்கொடுத்தனர். அவருள், அருந்ததியொழிந்த ஏனைமகளிர் அறுவரும் அக் கருவினை விழுங்கிச் சூன்முதிர்ந்து, சரவணப் பொய்கையில், தாமரைப் பாயலிலே கருவுயிர்த்தனர். அறுவர் ஈன்றமையானே ஆறு வடிவமாக அக் கரு வளருங்கால், இந்திரன் முன்னர்த் தான் துறவிகட்கு இக் கருவினை அளித்தமை மறந்து, அதனைத் தன் வச்சிரத்தால் எறிந்தான். எறிந்தகாலத்தே அவ்வாறு வடிவமும் ஒன்றாய்க் கூடி, அவ்விந்திரனோடு பொருது அவனை வலியழித்துப் பின்னர்ச் சூரபன்மா முதலிய அவுணர்களையும் போரிட்டழித்தது என்பது. இவ் வரலாறு பாயிரும் பனிக்கடல் என்னும் பரிபாடலிற் கண்டபடியாம். இவ் வரலாறு வேறுவேறு வகையாகவும் வழங்கப்படுகின்றது.

இவ் வரலாற்றுக் குறிப்புகள் இத் திருமுருகாற்றுப் படையிற் பலவிடங்களிற் காணப்படுகின்றன. ஏது பாவித்திடினும் அதுவாக வந்தருள்செய் எந்தைநீ குறைவு முண்டோ, எனத் தாயுமான அடிகளார் கூறியாங்கு வடிவமும் பெயருமில்லாத அம் முழுமுதற் கடவுள், தன் அன்பர்கள் அன்பாலே அழைத்த யாதாமொரு பெயரையும், தன் பெயராகக் கொண்டருளி, யாதாமொரு வடிவையும் தன்வடிவமாக ஏற்றருளி, அவர் நினைந்தவடிவில் அவர் நெஞ்சத்தாமரையிலே விரைந்து எழுந்துவந்து அருள்செய்வன் என்பது முக்காலும் உண்மையேயாம்.

தாபர சங்க மங்கள் என்றிரண் டுருவில் நின்று
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்

என்பதும்,

திருக்கோயி லுள்ளிருக்கும் திருமேனி தன்னைச்
சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவன் அங்கே
உருக்கோலி மந்திரத்தால் எனநினையும் அவர்க்கும்
உளனெங்கும் இலன்இங்கும் உளன்என் பார்க்கும்
விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல்
மந்திரத்தின் வந்துதித்து மிகுஞ்சுரபிக் கெங்கும்
உருக்காண வொண்ணாத பால்முலைப்பால் விம்மி
ஒழுகுவது போல்வெளிப்பட் டருளுவன்அன் பர்க்கே

என்பதும், பிற்றைநாள் மெய்கண்டவித்தகர் விளம்பிய மெய்ம்மொழிகள்.

அறிமுகம்

பத்துப்பாட்டினுள் ஐந்து பாட்டுக்கள் ஆற்றுப்படை என்னும் புறத்துறை ஒன்றனையேபற்றி யாக்கப்பட்டனவாம். தொல்காப்பியத்தில் புறத்திணைப் பாடாண்டிணைப் பகுதியில் தரவினல்லிசை எனத் தொடங்கும் நூற்பாவினகத்தே,

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்

எனவரும் விதியே இப் பத்துப்பாட்டும் பிறவுமாகிய பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காணப்படும் ஆற்றுப்படைத் துறைப்பாடல்கள் அனைத்திற்கும் விதியாகும். இனி, ஆடன் மாந்தரும், பாடற் பாணரும், கருவிப் பொருநரும், இவருட் பெண்பாலாகிய விறலியும் என்னும் நாற்பாலாரும் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று தாம் பெற்றவை எல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும் என்பதே இந் நூற்பாவின் பொருளாகும்.

இவ் விதியானே, கூத்தர் முதலிய நாற்பாலாரன்றி ஏனையோர் ஆற்றுப்படுத்தப் படுவோராகச் செய்யுள் செய்தல் அமையாதாகவும், ஈண்டு ஆசிரியர் நக்கீரனார் ஈண்டுக் கூறப்பட்ட நால்வருள் ஒருவராகாதவனாகிய ஓர் அன்பனை முருகன் அருள் பெற்ற பெரியார் ஒருவர் ஆற்றுப்படுத்துவதாக நூல் செய்தமை அவ் விலக்கணத்தோ டமையாதாம் பிறவெனின், அற்றன்று; ஆண்டுத் தொல்காப்பியனார் இவ்வுலகியல் ஒன்றே கருதி ஈதற்குச் சிறந்த புரவலர்போன்று மக்களுள் இரத்தற்கும் உரிமையுடையார் இக் கூத்தர் முதலிய கலைவாணர் ஆதலை நுண்ணிதின் உணர்ந்து அவரையே ஆற்றுப்படுத்தப்படுபவராக வைத்துப் பாடல் யாத்தல் சிறப்பாம் எனக் கருதிக் கூறியதன்றி, சிறந்த வள்ளல்பால் கூத்தர் முதலியவரையன்றி ஏனையவரை ஆற்றுப்படுத்துதல் கூடாதென வரையறுத்து ஓதாமையானும் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீ இச் சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் என்னும் பகுதியே இந் நூற்பாவின்கட் சிறந்த பகுதியாதலானும், பெருவளம் என்பவற்றுள் மக்கள் பெறக்கிடந்த பெருவளம் வீடுபேற்றினும் சிறந்ததொன்று பிறிதின்மையானும், இம்மையிலே வீடுபேற்றினை எய்திய சீவன் முத்தனாவான் அவ் வீடுபேற்றினைப் பெற்றிலாதவனும் ஆனாற் பெறுதற்குத் தகுதிவாய்ந்தவனுமாகிய மற்றொருவனை அதுபெறும் வழிகூறி உய்த்தல் சிறந்த அறமே ஆகலானும் நுண்ணுணர்வுடைய நக்கீரர் தொல்காப்பியவிதி இவ்வாற்றுப் படையை ஏற்பதன்றி முரணுவதன்றெனத் துணிந்து இவ்வழி நூல் யாப்பாராயினர் என்க.

ஏனை, ஆற்றுப்படைகளினும் இஃதோராற்றான் மாறுபட்டமை கருதியே, கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை என்பனபோன்று, ஆற்றுப்படுத்தப்படுவோன் பெயரை அடையாக்கி இப்பாடலை வழங்காமல் ஆற்றுப்படுத்தற்கு இடமாகவுள்ள வள்ளல் பெயரையே அடையாகப் பெய்து முருகாற்றுப்படை என, இந் நூல் வழங்கப்படுதலும் அறிக. நிலையுதலின்றி அழிதன் மாலைத்தாகிய பொருள்களை வழங்கும் மானிடவள்ளலைப் பாடிய ஏனை ஆற்றுப்படைகளினும் அழிதலில்லாத வீட்டின்பத்தையே வழங்கும் அழிவற்ற இறைவனைப் பாடும் இவ்வாற்றுப்படை எவ்வாற்றானும் சாலச்சிறந்ததொன்றாம் எனக் கருதியே பத்துப்பாட்டினுள் இப்பாட்டை முதற்பாட்டாக நிறுத்தியதூஉம் என்க.

இனி, பொருநராற்றுப்படை முதலிய பாடல்கள் பிற்காலத்தே ஓதும் நம்மனோர்க்குத் தம்மியல்பாகிய சொற்பொருள் இன்பங்களைச் சிறப்ப நல்கிப் பண்டைக்காலத்து வாழ்ந்திருந்த வள்ளல்களின் வரலாற்றை நமக்குணர்த்தும் அத்துணையே அல்லால், ஓதுவார்க்கு உறுதியளிப்பனவாதலில்லை. இத்திரு முருகாற்றுப்படையோ எனில், அதனை ஓதும் ஒவ்வொருவரையும் அம் முருகப்பெருமான் திருவடிக்கட் செலுத்தி அது தரும் வீட்டின்பத்தைப் பெறும்படி அறிவுறுத்துகின்றது. இதனால் இவ் வாற்றுப்படையால் ஆற்றுப்படுத்தப்படுவார் கூத்தர் பாணர் முதலிய குறிப்பிட்ட ஒருசிலரேயன்றி ஓதுவோரெல்லாம் அம் முருகன்பால் ஆற்றுப்படுத்தப் படுவோராதலையும் நுண்ணிதின் உணர்ந்துகொள்க. இவ்வாற்றல் இவ்வாற்றுப்படை மக்கட்கே பொதுவாய் அமைதலின், ஆற்றுப்படுத்தப்படுவோர் இன்னர் என அடைகொடுத்தல் இழுக்காம் என்று கருதியே நுண்மாண் நுழைபுல்முடைய நக்கீரர் ஆற்றுப்படுத்தப்படுவோர்க்கு இடனாயமைந்த முருகப்பெருமான் பெயரையே இதற்கு அடையாகப் பெய்து வழங்கினர் என்க. இதனைப் புலவராற்றுப்படை எனப் பண்டு வழங்கினாரும் உளர் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையினின்றும் உணரலாம். ஆசிரியர் நச்சினார்க்கினியர் அவரை மறுப்பாராய்ப் பின்வருமாறு தொல்காப்பிய உரையில் கூறுகின்றார் அஃதாவது: முருகாற்றுப் படையுட் புலம்பிரிந்துறையும் சேவடி எனக் கந்தழிகூறி, நின்னெஞ்சத் தின்னசை வாய்ப்பப் பெறுதி, எனவுங் கூறி அவனுறையும் இடங்களும் கூறி, ஆண்டுச் சென்றால் அவன் விழுமிய பெறலரும் பரிசில் நல்கும் எனவும் கூறி, ஆண்டுத் தான்பெற்ற பெருவளம் அவனும் பெறக் கூறியவாறு காண்க. இதனைப் புலவராற்றுப்படை என்று உய்த்துணராது பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை என்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான மறுக்க. இனி முருகாற்றுப்படை என்பதற்கு முருகன்பால் வீடுபெறச் சமைந்தான் ஓரிரவலனை ஆற்றுப்படுத்தது என்பது பொருளாகக் கொள்க, என்பதாம்.

இனி; இத் திருமுருகாற்றுப்படையில் தொடக்கத்தே முருகப்பெருமானின் இறைமைத் தன்மையின் மாண்பினை நன்கு ஓதிப் பின்னர், அப் பெருமானுடைய திருவுருவச் சிறப்பினையும், அப் பெருமானை ஏத்தி வானவர் மகளிர் ஆடும் சிறப்பினையும், அப் பெருமான் தெறற் சிறப்பினையும், திருப்பரங்குன்றத்து மாண்பினையும், பின்னர்த் திருச்சீரலைவாயின்கண் வீற்றிருக்கும் அம்முருகப்பெருமானுடைய ஆறுமுகங்களும், பன்னருகைகளும் இருக்குமாற்றை விரிக்குமுகத்தானே அவர் இயற்றும் ஐந்தொழிற் சிறப்பினையும், திருவாவினன் குடியில் அப்பெருமானைக் காண்டற்கு வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனிவரும், தத்தங்குறை வேண்டும்பொருட்டுத் திருமால், இந்திரன், உருத்திரன், அமரர்கள் முதலியோரும் வந்து திரளும் காட்சியினையும், திருவோகத்தின்கண் நாற்பத்தெட்டியாண்டு நல்லிளமையைப் பிரமசரிய நோன்பிற் கழித்த அருமறை நவின்ற இருபிறப்பாளர் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பும், குன்றுகள் தோறும் அப் பெருமானுக்கு வேன்மகன் ஆடும் விழவும் பின்னர், ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழாமுதல், குறமகள் எடுத்த வெறியயர் களன் இறுதியாக முருகக்கடவுள் விளங்கித் தோன்றும் இடங்களும் நுண்ணிதின் அழகுற எடுத்தோதினர்.

பின்னர், அம் முருகவேளை வாழ்த்தி வழிபடும் முறைமையும், அங்ஙனம் வழிபட்டார்க்கு அப்பெருமான் எளிவந்து எதிர் தோன்றி வீட்டின்பம் வழங்குதலும் அப் பெருமான் உறையும் மலைவளனும், பிறவும் மிக அழகாக விரித்தோதப்பட்டுள்ளன. இனி இத்திருமுருகாற்றுப்படை வித்தெழுத்தாகிய மந்திரங் கலந்த சொற்கள் மிகுதியாகச் சேர்த்து யாக்கப்பட்டுள்ளதென்றும், இதனை, நாடோறும் அன்பாலே ஓதி முருகப்பெருமானை வழிபாடு செய்வோர், இம்மையின்பம் உடையராய் வாழ்ந்து இறுதியில் வீடுபேறும் எய்துவர் என்று சான்றோர் கூறுப. பண்டைத் தமிழ் இலக்கியங்களிற் காணப்படும் சமயத்தீம்பாடல்களில், இது தலைசிறந்து விளங்குகின்றது. இத் திருப்பாடலைச் சைவசமயத்துச் சான்றோர், பதினொராந் திருமுறையிற் கோத்துப் போற்றுதல் உலகறிந்த தொன்றாகும்.


1. திருப்பரங்குன்றம்

முருகக் கடவுளின் தோற்றப் பொலிவு

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி,

உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,

செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை, 5

மறு இல் கற்பின் வாணுதல் கணவன்

கடப்பமாலை புரளும் மார்பினன்

கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை,

வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி,

தலைப் பெயல் தலைஇய தண் நறுங் கானத்து,

இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து 10

உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்

சூரரமகளிரின் உடல் அழகு



மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்

கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி,

கணைக் கால், வாங்கிய நுசும்பின், பணைத் தோள்,

கோபத்து அன்ன தோயாப் பூந் துகில், 15

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்,

கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின்,

நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர்இழை,

சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி

சூரரமகளிரின் அலங்கரிப்பு



துணையோர ஆய்ந்த இணை ஈர் ஓதிச் 20

செங் கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு,

பைந் தாள் குவளைத் தூ இதழ் கிள்ளி,

தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து,

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்

மகரப்பகுவாய் தாழ மண்ணுறுத்து, 25

துவர முடித்த துகள் அறும் முச்சிப்

பெருந் தண் சண்பகம் செரீஇ, கருந் தகட்டு

உளைப் பூ மருதின் ஒள் இணர் அட்டி,

கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு

இணைப்புறு பிணையல் வளைஇ, துணைத் தக 30

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்

நுண் பூண் ஆகம் திளைப்ப, திண் காழ்

நறுங் குறடு உரிஞ்சிய பூங் கேழ்த் தேய்வை,

தேம் கமழ் மருது இணர் கடுப்ப, கோங்கின்

குவி முகிழ் இள முலைக் கொட்டி, விரி மலர் 35

வேங்கை நுண் தாது அப்பி, காண்வர,

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா,

சூரரமகளிர் ஆடும் சோலை

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி

'வாழிய பெரிது!' என்று ஏத்தி, பலர் உடன்

சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி 40

சூரர மகளிர் ஆடும் சோலை



காந்தட் பூங்கண்ணி

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து,

சுரும்பும் மூகாச் சுடர்ப் பூங் காந்தள்

பெருந் தண் கண்ணி மிலைந்த சென்னியன்

முருகன் சூரனைத் தடிந்த வகை



பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்கு, 45

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்

பேய்மகளின் துணங்கைக் கூத்து

உலறிய கதுப்பின், பிறழ் பல் பேழ் வாய்,

சுழல் விழிப் பசுங் கண், சூர்த்த நோக்கின்,

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப்

பெரு முலை அலைக்கும் காதின், பிணர் மோட்டு, 50

உரு கெழு செலவின், அஞ்சுவரு பேய்மகள்

குருதி ஆடிய கூர் உகிர்க் கொடு விரல்

கண் தொட்டு உண்ட கழி முடைக் கருந் தலை

ஒண் தொடித் தடக் கையின் ஏந்தி, வெருவர

வென்று அடு விறற் களம் பாடி, தோள் பெயரா, 55

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க

மாமரத்தை வெட்டிய வெற்றி

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை,

அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி,

அவுணர் நல் வலம் அடங்க, கவிழ் இணர்

மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து, 60

எய்யா நல் இசை, செவ்வேல் சேஎய்

ஆற்றுப்படுத்தல்



சேவடி படரும் செம்மல் உள்ளமொடு,

நலம் புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும்,

செலவு நீ நயந்தனை ஆயின், பல உடன்,

நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப, 65

இன்னே பெறுதி, நீ முன்னிய வினையே:

மதுரை மாநகரச் சிறப்பு

செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடுங் கொடி

வரிப் புனை பந்தொடு பாவை தூங்க,

பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில்,

திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து, 70

மாடம் மலி மறுகின் கூடல் குடவயின்

திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருத்தல்

இருஞ் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த

முள் தாள் தாமரைத் துஞ்சி, வைகறைக்

கள் கமழ் நெய்தல் ஊதி, எல் படக்

கண்போல் மலர்ந்த காமரு சுனை மலர், 75

அஞ்சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும்

குன்று அமர்ந்து உறைதலும் உரியன், அதாஅன்று,

2. திருச்சீர் அலைவாய்



ஆறுமுகன் யானையின்மேல் ஏறி வருதல்

வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்

வாடா மாலை ஓடையொடு துயல்வர,

படு மணி இரட்டும் மருங்கின், கடு நடை, 80

கூற்றத்தன்ன மாற்று அரு மொய்ம்பின்,

கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு

ஆறு முகங்களின் இயல்புகள்

ஐவேறு உருவின் செய்வினை முற்றிய

முடியொடு விளங்கிய முரண் மிகு திருமணி

மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப, 85

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங் குழை

சேண் விளங்கு இயற்கை வாண் மதி கவைஇ

அக லா மீனின் அவிர்வன இமைப்ப,

தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார்

மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே: 90

ஆறு திருமுகங்களின் செயல்கள்



மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க,

பல் கதிர் விரிந்தன்று, ஒரு முகம்; ஒரு முகம்,

ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக்

காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ 95

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே; ஒரு முகம்

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி,

திங்கள் போலத் திசை விளக்கும்மே; ஒரு முகம்

செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி,

கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே; ஒரு முகம் 100

குறவர் மட மகள், கொடி போல் நுசுப்பின்

மடவரல், வள்ளியொடு நகை அமர்ந்தன்றே;

தோள்களின் சிறப்பு



ஆங்கு, அம் மூஇரு முகனும், முறை நவின்று ஒழுகலின்

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்

செம் பொறி வாங்கிய, மொய்ம்பின், சுடர் விடுபு, 105

வண் புகழ் நிறைந்து, வசிந்து வாங்கு, நிமிர் தோள்:

பன்னிரு கைகளின் தொழில்கள்

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது

ஒரு கை, உக்கம் சேர்த்தியது ஒரு கை;

நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒரு கை,

அங்குசம் கடாவ ஒரு கை; இரு கை 110

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; ஒரு கை

மார்பொடு விளங்க, ஒரு கை

தாரொடு பொலிய; ஒரு கை

கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப, ஒரு கை

பாடு இன் படு மணி இரட்ட; ஒரு கை 115

நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய, ஒரு கை

வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட;

ஆங்கு, அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி

அலைவாயில் ஆறுமுகன் வந்தருளியிருக்கும் காட்சி

அந்தரப் பல்லியம் கறங்க, திண் காழ்

வயிர் எழுந்து இசைப்ப, வால் வளை ஞரல, 120

உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு

பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ,

விசும்பு ஆறு ஆக விரைசெலல் முன்னி,

உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர்

அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே, அதாஅன்று, 125

3. திருஆவினன் குடி



முன் செல்லும் முனிவரது இயல்புகள்

சீரை தைஇய உடுக்கையர், சீரொடு

வலம் புரி புரையும் வால் நரை முடியினர்,

மாசு அற இமைக்கும் உருவினர், மானின்

உரிவை தைஇய ஊன் கெடு மார்பின்

என்பு எழுந்து இயங்கும் யாக்கையர், நன் பகல் 130

பல் உடன் கழிந்த உண்டியர், இகலொடு

செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும்

கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத்

தாம் வரம்பு ஆகிய தலைமையர், காமமொடு

கடுஞ் சினம் கடிந்த காட்சியர், இடும்பை 135

யாவதும் அறியா இயல்பினர், மேவரத்

துனி இல் காட்சி முனிவர், முன் புக

பாடுவார் இயல்பு



புகை முகந்தன்ன மாசு இல் தூ உடை,

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து,

செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் 140

நல்லி யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்

மென் மொழி மேவலர், இன் நரம்பு உளர

பாடும் மகளிர் இயல்பு



நோய் இன்று இயன்ற யாக்கையர், மாவின்

அவிர் தளிர் புரையும் மேனியர், அவிர்தொறும்

பொன்னுரை கடுக்கும் திதலையர், இன் நகைப் 145

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்,

மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க:

திருமால், சிவன், இந்திரன், ஆகியோரின் இயல்புகள்



கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால் எயிற்று,

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந் திறல்,

பாம்பு படப் புடைக்கும் பல் வரிக் கொடுஞ் சிறைப் 150

புள் அணி நீள் கொடிச் செல்வனும் வெள் ஏறு

வலம்வயின் உயரிய, பலர் புகழ் திணி தோள்,

உமை அமர்ந்து விளங்கும், இமையா முக் கண்,

மூஎயில் முருக்கிய, முரண் மிகு செல்வனும்

நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து, நூறு பல் 155

வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து,

ஈர் இரண்டு ஏந்திய மருப்பின், எழில் நடை,

தாழ் பெருந் தடக் கை உயர்த்த யானை

எருத்தம் ஏறிய திருக் கிளர் செல்வனும்

பிரமனுக்காகத் திரண்டு வந்த தேவர்கள்



நாற் பெருந் தெய்வத்து நல் நகர் நிலைஇய 160

உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்

பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக,

ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி,

தாமரை பயந்த தா இல் ஊழி

நான்முக ஒருவற் சுட்டி, காண்வர, 165

தேவர்கள் வருகின்ற காட்சி



பகலில் தோன்றும் இகல் இல் காட்சி

நால் வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு,

ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்

மீன் பூத்தன்ன தோன்றலர், மீன் சேர்பு

வளி கிளர்ந்தன்ன செலவினர், வளியிடைத் 170

தீ எழுந்தன்ன திறலினர், தீப் பட

உரும் இடித்தன்ன குரலினர், விழுமிய

உறு குறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார்,

அந்தரக் கொட்பினர், வந்து உடன் காண,

முருகன் மடந்தையோடு வீற்றிருத்தல்



தா இல் கொள்கை மடந்தையொடு, சில் நாள், 175

ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று,

4. திருவேரகம்



இரு பிறப்பாளரின் இயல்பு

இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது,

இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல் குடி,

அறு நான்கு இரட்டி இளமை நல்லி யாண்டு

ஆறினின் கழிப்பிய, அறன் நவில் கொள்கை, 180

மூன்று வகைக் குறித்த முத் தீச் செல்வத்து,

இருபிறப்பாளர், பொழுது அறிந்து நுவல

அந்தணர் வழிபடும் முறை

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்,

புலராக் காழகம் புலர உடீஇ,

உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து, 185

ஆறு எழுத்து அடக்கிய அரு மறைக் கேள்வி

நா இயல் மருங்கில் நவிலப் பாடி,

விரை உறு நறு மலர் ஏந்திப் பெரிது உவந்து,

ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று,

5. குன்று தோறாடல்



வேலன் (பூசாரி) கட்டிய சிரமாலை

பைங்கொடி, நறைக் காய் இடை இடுபு, வேலன், 190

அம் பொதிப் புட்டில் விரைஇ, குளவியொடு

வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன்;

குரவைக் கூத்து



நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்;

கொடுந் தொழில் வல் வில் கொலைஇய கானவர்

நீடு அமை விளைந்த தேக் கள் தேறல் 195

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து,

தொண்டகச் சிறு பறைக் குரவை அயர

முருகனைச் சேவிக்கும் மகளிர்

விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங் கான்,

குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி,

இணைத்த கோதை, அணைத்த கூந்தல்; 200

முடித்த குல்லை, இலையுடை நறும் பூ,

செங் கால் மராஅத்த வால் இணர், இடை இடுபு,

சுரும்பு உணத் தொடுத்த பெருந் தண் மாத் தழை

திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ,

மயில் கண்டன்ன மட நடை மகளிரொடு 205

குமரக் கடவுளின் திருக்கோலம்



செய்யன், சிவந்த ஆடையன், செவ்வரைச்

செயலைத் தண் தளிர் துயல் வரும் காதினன்,

கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன்,

குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன்,

தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம் 210

கொடியன், நெடியன், தொடி அணி தோளன்

நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு,

குறும் பொறிக் கொண்ட நறுந் தண் சாயல்

மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்,

குன்று தோறாடலின் இயல்பு



முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி, 215

மென் தோள் பல் பிணை தழீஇ, தலைத்தந்து,

குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று,

6. பழமுதிர்சோலை



முருகன் இருப்பிடங்கள்

சிறு தினை மலரொடு விரைஇ, மறி அறுத்து,

வாரணக் கொடியொடு வயிற் பட நிறீஇ,

ஊர்ஊர் கொண்ட சீர் கெழு விழவினும், 220

ஆர்வலர் ஏத்த மே வரு நிலையினும்,

வேலன் தைஇய வெறி அயர் களனும்,

காடும் காவும், கவின் பெறு துருத்தியும்,

யாறும் குளனும், வேறு பல் வைப்பும்,

சதுக்கமும் சந்தியும், புதுப் பூங் கடம்பும், 225

மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும்

குறமகளின் வெறியாட்டு

நகரில் முருகனை ஆற்றுப்படுத்தல்



மாண் தலைக் கொடியொடு மண்ணி அமைவர,

நெய்யோடு ஐயவி அப்பி, ஐது உரைத்து,

குடந்தம்பட்டு, கொழு மலர் சிதறி,

முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ, 230

செந் நூல் யாத்து, வெண் பொரி சிதறி,

மத வலி நிலைஇய மாத் தாள் கொழு விடைக்

குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி

சில் பலிச் செய்து, பல் பிரப்பு இரீஇ,

சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து, 235

பெருந் தண் கணவீர நறுந் தண் மாலை

துணை அற அறுத்துத் தூங்க நாற்றி,

நளி மலைச் சிலம்பின் நல் நகர் வாழ்த்தி,

நறும் புகை எடுத்து, குறிஞ்சி பாடி,

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க, 240

உருவப் பல் பூத் தூஉய், வெருவரக்

குருதிச் செந் தினை பரப்பி, குறமகள்

முருகு இயம் நிறுத்து, முரணினர் உட்க,

முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்

முருகனை வழிபடுதல்



ஆடு களம் சிலம்பப் பாடி, பலவுடன் 245

கோடு வாய்வைத்து, கொடு மணி இயக்கி,

ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி,

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட,

ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே.

முருகனைக் கண்டு துதித்தல்



ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக, காண் தக 250

முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி,

கை தொழூஉப் பரவி, கால் உற வணங்கி

நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ் சுனை,

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப,

அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ! 255

ஆல் கெழு கடவுள் புதல்வ! மால் வரை

மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!

வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ!

இழை அணி சிறப்பின் பழையோள் குழவி!

வானோர், வணங்கு வில், தானைத் தலைவ! 260

மாலை மார்ப! நூல் அறி புலவ!

செருவில் ஒருவ! பொரு விறல் மள்ள!

அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொன்மலை!

மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!

வேல் கெழு தடக் கைச் சால் பெருஞ் செல்வ! 265

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து,

விண் பொரு நெடு வரைக் குறிஞ்சிக் கிழவ!

பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக!

நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேர் ஆள! 270

அலந்தோரக்கு அளிக்கும், பொலம் பூண், சேஎய்!

மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து,

பரிசிலர்த் தாங்கும் உரு கெழு நெடு வேஎள்!

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்!

சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி! 275

போர் மிகு பொருந! குரிசில்! எனப் பல,

யான் அறி அளவையின், ஏத்தி, ஆனாது

கருதி வந்ததை மொழிதல்



நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்,

நின் அடி உள்ளி வந்தனென்; நின்னொடு

புரையுநர் இல்லாப் புலமையோய்! எனக் 280

குறித்தது மொழியா அளவையின்

சேவிப்போர் கூற்று



குறித்து உடன்

வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்,

சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி,

அளியன் தானே முது வாய் இரவலன்;

வந்தோன், பெரும! நின் வண் புகழ் நயந்து என 285

இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி;

முருகன் அருள்புரிதல்

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்,

வான் தோய் நிவப்பின், தான் வந்து எய்தி,

அணங்கு சால் உயர்நிலை தழீஇ, பண்டைத் தன்

மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி, 290

அஞ்சல் ஓம்புதி, அறிவல் நின் வரவு என,

அன்புடை நன் மொழி அளைஇ, விளிவு இன்று,

இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து

ஒரு நீ ஆகித் தோன்ற, விழுமிய

பெறல் அரும் பரிசில் நல்குமதி பலவுடன் 295

அருவியின் காட்சியும் இயற்கை வளமும்

வேறு பல் துகிலின் நுடங்கி, அகில் சுமந்து,

ஆர முழு முதல் உருட்டி, வேரல்

பூவுடை அலங்கு சினை புலம்ப, வேர் கீண்டு,

விண் பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த

தண் கமழ் அலர் இறால் சிதைய, நன் பல 300

ஆசினி முது சுளை கலாவ, மீமிசை

நாக நறு மலர் உதிர, யூகமொடு

மா முக முசுக்கலை பனிப்ப, பூ நுதல்

இரும் பிடி குளிர்ப்ப வீசி, பெருங் களிற்று

முத்துடை வான் கோடு தழீஇ, தத்துற்று 305

நன் பொன் மணி நிறம் கிளர, பொன் கொழியா,

வாழை முழு முதல் துமிய, தாழை

இளநீர் விழுக் குலை உதிர, தாக்கி,

கறிக் கொடிக் கருந் துணர் சாய, பொறிப் புற

மட நடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ, 310

கோழி வயப் பெடை இரிய, கேழலொடு

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன

குரூஉ மயிர் யாக்கைக் குடா வடி உளியம்

பெருங் கல் விடர்அளைச் செறிய, கருங் கோட்டு

ஆமா நல் ஏறு சிலைப்ப, சேண் நின்று 315

இழுமென இழிதரும் அருவி,

பழம் முதிர் சோலைமலை கிழவோனே!

தனிப் பாடல்கள்



குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்!

புன் தலைய பூதப் பொரு படையாய்! - என்றும்

இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே!

உளையாய்! என் உள்ளத்து உறை. 1

குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும்,

அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும், -இன்று என்னைக்

கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும்,

மெய் விடா வீரன் கை வேல்! 2

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட

தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி

குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்

துளைத்த வேல் உண்டே துணை. 3

இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும்,

கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட

தனி வேலை வாங்கத் தகும். 4

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்;

பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக்

கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும்

வேலப்பா! செந்தில் வாழ்வே! 5

அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்;

வெஞ் சமரில், அஞ்சல் என வேல் தோன்றும்; -நெஞ்சில்

ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும்

முருகா! என்று ஓதுவார் முன். 6

முருகனே! செந்தி முதல்வனே! மாயோன்

மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன்

தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்

நம்பியே கைதொழுவேன், நான். 7

காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்,

ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! - பூக்கும்

கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல

இடம்காண்; இரங்காய், இனி! 8

பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம்

கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு, -சுருங்காமல்,

ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப்

பூசையாக் கொண்டே புகல். 9

நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை

தற்கோல, நாள்தோறும் சாற்றினால், - முன் கோல

மா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி,

தான் நினைத்த எல்லாம் தரும். 10


Overview of Thirumurugatrupadai

1. Title Meaning:

- The name "Thirumurugatrupadai" combines "Thiru," an honorific prefix meaning "holy" or "sacred," "Muruga," referring to the deity Murugan, and "atrupadai," which means "guide" or "path." Thus, the title can be interpreted as "The Sacred Guide to Murugan."

2. Content:

- Structure: The work is a single long poem consisting of 317 lines. It is written in the **Atrupadai** poetic form, a genre in Tamil literature where the poet guides or directs people towards a benefactor or deity.
- Theme: The poem serves as a guide for devotees seeking the blessings of Lord Murugan, describing various shrines dedicated to him and extolling his virtues and powers.

3. Religious and Devotional Themes:

- Praise of Murugan: The poem is rich in devotional content, praising Murugan as a warrior god, the remover of obstacles, and the bestower of boons.
- Sacred Geography: It describes various sacred abodes of Murugan, especially the six major shrines known as **Arupadai Veedu** (Six Battle Camps), which are central to Murugan worship in Tamil Nadu.
- Ritual and Worship Practices: The text provides insights into the rituals, festivals, and modes of worship associated with Murugan, highlighting the cultural and religious practices of the Tamil people.

4. Poetic Style:

- Atrupadai Form: The Atrupadai genre typically involves a bard or guide directing a person to a patron or deity, extolling the virtues of the benefactor. In Thirumurugatrupadai, the guide encourages devotees to seek Murugan’s blessings.
- Imagery and Description: The poem is notable for its vivid descriptions of nature, temples, and the divine qualities of Murugan. It uses rich imagery and metaphor to enhance its devotional appeal.

5. Cultural and Historical Context:

- Murugan Worship: Thirumurugatrupadai is an important text in the context of Tamil religion and culture, reflecting the significance of Murugan worship in Tamil Nadu. Murugan is a prominent deity in Tamil tradition, associated with youth, beauty, valor, and wisdom.
- Syncretic Elements: The poem reflects the syncretic nature of Tamil religious life, where indigenous traditions of Murugan worship blended with broader Hindu practices.

6. Literary Significance:

- Influence on Devotional Literature: Thirumurugatrupadai is a foundational text in Tamil devotional literature and has influenced subsequent works focused on Murugan worship.
- Cultural Heritage: The work is an important part of Tamil literary and religious heritage, continuing to be revered and studied for its spiritual and cultural significance.

Thirumurugatrupadai is celebrated not only for its literary beauty but also for its profound spiritual content, offering insights into the worship of Murugan and the religious traditions of ancient Tamil Nadu. It remains a key text for devotees and scholars alike, reflecting the enduring legacy of Murugan worship in Tamil culture.



Share



Was this helpful?