இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


தோடுடைய செவியன்

தோடுடைய செவியன்

பதிக எண்: 1.01. திருப்பிரமபுரம் நட்டபாடை

பின்னணி:

சோழநாட்டிற்கு அணிகலனாக விளங்கிய பல தலங்களில் சீர்காழி நகரமும் ஒன்றாகும். இந்த தலத்தில், ஏழாம் நூற்றாண்டில் சிவபாத இருதயர் அவரது மனைவியார் பகவதி அம்மையார் ஆகிய இருவரும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும், சிவபெருமானின் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றினையும் பற்றுக்கோடாக கொள்ளாமல், இல்லற வாழ்க்கை நடத்தி வந்தனர். எனினும் தங்களது குலம் தழைக்க ஒரு பிள்ளை இல்லை என்ற வருத்தம் அவர்களுக்கு இருந்து வந்தது. அந்நாளில் தமிழ்நாட்டில் சமணர் மற்றும் புத்தர்களின் ஆதிக்கம் மிகவும் பரவி இருந்தது; இந்த மதங்களின் தாக்கத்தினால், சைவநெறி போற்றப்படாமல் விளங்கியது. இந்த நிலை கண்டு மிகவும் வருத்தமுற்ற சிவபாத இருதயர், மாற்றுச் சமயக் கொள்கைகளை நிராகரித்து, சைவ சமயத்தின் சிறப்பினை நிலைநாட்டும் வல்லமை பெற்ற ஒரு குழந்தை தனக்கு பிறக்கவேண்டும் என்று பெருமானை தினமும் வேண்டிவந்தார் என்று சேக்கிழார் உணர்த்தும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நீறாக்கும்=திருநீற்றின் பெருமையினை உணர்த்தும்; பெருமானின் திருக்கூத்து அவர் செய்யும் ஐந்து தொழில்களையும் உணர்த்துவதாக கருதப் படுகின்றது.அத்தகைய தொழில்களில் முதலாகிய படைப்புத் தொழிலுடன் தொடர்பு கொண்ட மகப்பேற்றினை விரும்பினார் என்று நயமாக பெரியோர் உரை காண்கின்றார்

மனையறத்தின் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்

அனைய நிலை தலை நின்றே ஆடிய சேவடிக் கமலம்

நினைவுற முன் பரசமயம் நிராகரித்து நீறாக்கும்

புனைமணிப் பூண் காதலானைப் பெறப் போந்து தவம்புரிந்தார்

பெருமானின் அருளால், கோள்கள் அனைத்தும் வலிமை பெற்று உச்சத்தில் இருந்த ஒரு திருவாதிரை நன்னாளில், பகவதி அம்மையார் ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். வேதநெறிகள் தழைத்து ஓங்கவும், சைவ சமயம் விளங்கித் தோன்றவும், உயிர்கள் அனைத்தும் பெருமானின் அருள் பெற்று உய்யவும், புனிதமான தனது திருவாய் மலர்ந்து அழுத திருஞானசம்பந்தர் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்த குழந்தை, மூன்றாண்டுகள் வயது நிரம்பிய நிலையில் ஒரு நாளில், சைவசமயம் உய்யும் வண்ணம் பெருமான் ஒரு திருவிளையாடல் செய்து காட்டினார். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள நியமங்களை செய்வதற்கு ஏதுவாக, திருக்கோயிலில் இருந்த குளத்தினில் நீராட பிள்ளையாரின் தந்தையார் புறப்பட்டார். அந்த சமயம், குழந்தை தானும் தந்தையாருடன் செல்வேன் என்று அழத் தொடங்கவே, சிவபாத இருதயரும், குழந்தையை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்றார். தனது குழந்தையை குளத்தில் கரையில் விட்டுவிட்டு, தந்தையார் குளத்தில் நீராடத் தொடங்கினார். நீராடத் தொடங்கும் முன்னர், பிள்ளையை கரையில் தனியே விட்டுவிட்டு நீராடுவதற்கு தயங்கிவராய், கோபுரத்தை நோக்கி அம்மையையும் அப்பனையும் வணங்கிவிட்டு குளத்தில் மூழ்கினார். பெற்ற தாய் தந்தையரை விடவும் அம்மையும் அப்பனுமே குழந்தைக்கு உற்ற துணையாக வரும் நாட்களில் இருப்பார்கள் என்று குறிப்பு தந்தையாருக்கு தோன்றியது போலும். நீராடல் முடிந்த பின்னர், கரையை நோக்கிய சிவபாத இருதயர் தனது மகன் ஆங்கே இருக்கக் கண்டு தன்னை விடவும் பெரிய காவல் பெற்றார் தனது மகன் என்ற எண்ணத்துடன் தனது நித்திய அனுட்டாங்களை அனுசரித்த பின்னர், அகமர்ஷண மந்திரத்தை உச்சாடனம் செய்யும் பொருட்டு மீண்டும் நீரினுள் மூழ்கினார்.

தனது தந்தையைக் காணாது தவித்த குழந்தை, கண்ணீர் ததும்ப தனது கைகளால் கண்களை பிசைந்து கொண்டு, அம்மே அப்பா என்று அழைத்த வண்ணம் அழத் தொடங்கியது. குழந்தை அழுததை சேக்கிழார் அழுது அருளினார் என்று கூறுகின்றார். குழந்தை அழும்போது முதலில் கண்களில் நீர் பொங்கும், பொங்கும் நீரினைத் துடைக்கும் வண்ணம் குழந்தை கண்களை கசக்கும், பின்னர் குரல் கொடுத்து அழத் தொடங்கும். இதே வரிசையில் சேக்கிழார் இந்த பாடலில் கூறியிருப்பதை நாம் உணரலாம். இந்த பாடலில் சேக்கிழார் எண்ணற்ற மறையொலி பெருகவும் அனைத்து உயிர்களும் மகிழ்ச்சி அடையவும், சம்பந்தர் அழுதார் என்று கூறுகின்றார். பின்னர் நடக்கவிருப்பதை இங்கே குறிப்பாக நயத்துடன் உணர்த்துகின்றார். தேவாரப் பாடல்கள் வேதங்களின் சாரம் என்பதாலும், நாடெங்கும் தேவாரப் பாடல்கள் பின்னாளில் பாடுவதற்கும் அதனால் அனைத்து உயிர்களும் சிவானந்தம் பெற்று மகிழ்ச்சியில் ஆழ்வதற்கு அடிகோலும் வண்ணம் சம்பந்தப் பெருமானின் அழுகை அமைந்தது என்று இங்கே உணர்த்துகின்றார். கண்களில் வழியும் நீரை உமை அம்மை துடைத்து பின்னர் கையில் பாலுடன் கூடிய பொன் கிண்ணத்தை கொடுத்தமையால் அம்பிகையின் ஸ்பரிச தீட்சை கிடைக்க பெற்றதால் கண்மலர்கள் என்றும் கை மலர்கள் என்றும் சிறப்பித்து சொல்லப் பட்டுள்ளன. தமிழ் வேதமாகிய எண்ணற்ற பதிகங்கள் சம்பந்தர் வாயிலிருந்து வரப்போவதை குறிக்கும் வகையில் மலர் செங்கனி வாய் மணி அதரம் என்று வாய் சிறப்பித்து சொல்லப் பட்டுள்ளது.

கண்மலர்கள் நீர் ததும்ப கைம்மலர்களால் பிசைந்து

வண்ண மலர்ச் செங்கனி வாய் மணி அதரம் புடை துடிப்ப

எண்ணில் மறை ஒலி பெருக எவ்வுயிரும் குதூகலிப்பப்

புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அழுது அருளினார்

திருக்கோயில் சிகரத்தை பார்த்து, அம்மையே அப்பா என்று அழைத்தவாறு குழந்தை அழுதது. காலம் கனிந்து வந்தமை கண்டு பெருமான் குழந்தைக்கு அருள் செய்ய திருவுள்ளம் கொண்டவராய், தேவியுடன் தாமும் விடையின் மீது அமர்ந்தவராக குழந்தை இருந்த இடத்திற்கு அருகே வந்தார். அருகே வந்தவர், தேவியை நோக்கி, உனது திருமுலைப்பாலை ஒரு பொற்கிண்ணத்தில் பொழிந்து குழந்தைக்கு ஊட்டுவாய் என்று கூறினார். தேவியும் உடனே, பொற்கிண்ணத்தில் பாலை வைத்துக் கொண்டு, குழந்தையின் அருகே சென்று குழந்தையின் கண்களில் பெருகிய நீரினை துடைத்து, அடிசிலை உண்ணுவாய் என்று கூறினார். எண்ணரிய சிவஞானம் குழைத்து கொடுக்கப்பட்ட பால் என்று சேக்கிழார் கூறுகின்றார். வள்ளம்=கிண்ணம்

அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருட்கருணை

எழுகின்ற திருவுள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும்

தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள்

பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டென்ன

எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி

உண் அடிசில் என ஊட்ட உமையம்மை எதிர் நோக்கும்

கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொற்கிண்ணம் அளித்து

அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார்

குழந்தைக்கு பிராட்டி ஊட்டிய பாலமுதம் வெறும் பசியினை போக்குவதை மட்டுமாக இல்லாமல், சிவஞானமும் கலந்து குழைத்து ஊட்டப்பட்டது என்று சேக்கிழார் மேற்கண்ட பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அம்மை ஊட்டிய பாலடிசிலை உண்ட குழந்தை, சிவபெருமானின் திருவடிகளை சிந்திக்கும் தன்மையையும் சிவபெருமானே மேலான பரம்பொருள் என்ற கலை ஞானத்தையும் பிறவிப்பிணியினை தீர்க்கவல்ல மெய்ஞானத்தையும் உணர்ந்தது என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். குழந்தையின் கண்களில் வடியும் நீரை துடைத்து, பாலை குடிக்குமாறு கூறி அழுகை தீர்த்த தேவியார், குழந்தை பால் குடித்து முடித்த பின் வாயை துடைத்ததாக பெரிய புராணத்தில் எங்கும் கூறவில்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் குழந்தைக்கு சோறு ஊட்டிய பின்னர், குழந்தையின் முகத்தையும் வாயினையும் நன்றாக அன்னைமார்கள் துடைப்பதை காண்கிறோம். ஞானப்பால் குழந்தை குடித்ததை உலகு அறியச் செய்யக் கருதிய பார்வதி தேவியார் அன்று குழந்தையின் வாயை, கடைவாயில் வழிந்து கொண்டிருந்த பால் துளியை, துடைக்கவில்லை போலும் அவ்வாறு துடைத்திருந்தால் குழந்தையின் தந்தை எவ்வாறு குழந்தையை கேள்வி கேட்பார்? குழந்தை ஞானப்பால் குடித்ததை உலகறியும் வண்ணம் இந்த நிகழ்ச்சி நடந்தேறியது. பரமனும் தேவியும் விடையுடன் மறைந்தனர்.

அவ்வமயம் கரையேறிய தந்தையார், குழந்தையின் வாயினில் இருந்த பாலின் துளியைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டவராய், தனது கையில் ஒரு குச்சியை ஏந்தியவராய், யார் கொடுத்த பாலடிசிலை நீ உண்டனை, எச்சில் மயங்கிட உனக்கு இட்டாரை காட்டு என்று மிரட்டினார். குழந்தை கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக, உச்சி மேல் குவித்த கைகளை எடுத்து ஒரு விரலாலே திருக்கோயிலின் கோபுரத்தை காட்டி, தோடுடைய செவியன் என்ற பதிகத்தை (முதல் திருமுறை, முதல் பதிகம்) பாடியவாறு, அம்மையப்பன் தான் தனக்கு பாலடிசில் அளித்தார் என்று உணர்த்தினார். தேவர்கள் பூமாரி பொழிய, நடந்த அதிசயத்தின் தாக்கத்தை தந்தையார் உணர்ந்தார். ஞானப்பால் குடித்த பின்னர் ஞானத்தின் தொடர்பு ஏற்பட்டு இறைவனைப் புகழ்ந்து பாடல்கள் பாடிய குழந்தையை அனைவரும் ஞானசம்பந்தர் என்று அழைத்தனர். குழந்தையின் இயற்பெயர் என்னவென்று பெரிய புராணத்தில் எங்கும் குறிப்பிடப் படவில்லை.

இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானின் அடையாளங்கள் உணர்த்தப்பட்டு, அவனே பெருமைக்கு உரிய தலைவன் என்று ஒவ்வொரு பாடலில் கூறப்படுவதால், சைவ சமயத்திற்கு தலை சிறந்த ஆசானாக திருஞான சம்பந்தர் கருதப் படுகின்றார். ஆன்மாக்களுக்கு இறைவனையும், இறைவனை அடையும் வழிகளையும் உணர்த்தி உயிர்கள் தங்களது வினைகளைத் தீர்த்துக்கொண்டு இன்பமடையும் வழியை உணர்த்துவது ஆச்சாரியரின் இயல்பு என்பதால், அவ்வாறு தனது முதல் பதிகத்தில் உணர்த்திய, திருஞான சம்பந்தரை, சைவசமயத்தின் முதல் ஆசாரியராக கருதுகின்றனர். இந்த காரணம் பற்றியே, சம்பந்தர் அருளிய பாடல்களை முதல் மூன்று திருமுறைகளாக நம்பியாண்டார் நம்பியார் வகுத்தார் போலும்.

தமிழ் மொழியினைக் குறிப்பிடும் த் என்ற மெய்யெழுத்து மற்றும் வேதங்களின் முதற்சொல்லாகிய ஓம் என்ற எழுத்தையும் இணைத்து தோ என்ற எழுத்து முதல் எழுத்தாக வரும் வண்ணம் தோடுடைய செவியன் என்று பதித்தினை தொடங்கினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். மேலும் அடியார்கள் பாடும் பாடலைக் கேட்கும் உடல் கருவியாகிய செவியினையும் பிள்ளையார் சிறப்பித்தார் என்றும் கூறுகின்றார். இந்த உலகத்தில் உள்ள உயிர்கள், சிவத்தன்மை பெற்று செம்மையாக விளங்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பாடப்பட்ட பதிகம் என்றும் உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானை சுட்டிக் காட்டி உணர்த்தும் பதிகம் என்றும் சேக்கிழார் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

செம்மை பெற எடுத்த திருத்தோடுடைய செவியன் எனும்

மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்

தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு

இம்மை இது செய்த பிரான் இவன் என்றே என இசைத்தார்

பாடல் 1:

தோடுடைய செவியன் (1.001) முதல் பாடல் [தித்திக்கும் தேவாரம் 0005]

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்

காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

விளக்கம்:

பிறக்கும் உயிர்கள் முதலில் அன்னையை உணர்ந்து பின்னரே, அன்னையால் சுட்டிக் காட்டப்பெறும் தந்தையை உணருகின்றன என்பதால் அன்னையை உணர்த்தும் சொல்லாக தோடு என்பதை முதலில் வைத்து, அத்தனை உணர்த்தும் சொல்லாகிய செவியன் என்பதை அடுத்து வைத்துள்ள பாங்கு ரசிக்கத்தக்கது. ஆகாயத்திலிருந்து எழும் நாதமே, மற்ற பூதங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருப்பதால் அந்த நாதத்தினை உள்வாங்கும் செவி முதலில் கூறப்பட்டுள்ளது. நமது உடலின் உறுப்புகளில், ஓம் என்ற எழுத்தினை உணர்த்தும் வடிவத்துடன் இருப்பது செவி என்பதால் செவி முதலாக கூறப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கின்றனர். நமது அகமும் புறமும் தூய்மையாக இருத்தல் அவசியம் என்பதை உணர்த்தும் வண்ணம் தூவெண் என்று கூறப்படுகின்றது. மேலும் தோடு என்ற அணிகலன் மங்கலத்தை குறிக்கும். எந்த பாடலையும் மங்கலச் சொல்லுடன் தொடங்குவது நமது முன்னோர்களின் வழக்கம்.

இந்த பாடலில் உணர்த்தப்படும் பொருட்கள், தோடு இடபம் வெண்மதி சுடலைப்பொடி, ஆகிய அனைத்தும் வெண்மை நிறம் படித்தவை. பிராட்டி பிள்ளையாருக்கு ஊட்டிய பாலும் வெண்மை நிறம் உடையது. மேலும் பாலுடன் கலந்து கொடுக்கப்பட்ட ஞானமும் வெண்மை நிறம் வாய்ந்தது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அறியாமையை இருளுக்கும் ஞானத்தை வெண்மைக்கும் ஒப்பிடுவது வழக்கம். வெண்மை நிறம் கொண்ட பாலினையும் வெண்மை நிறத்தால் உணர்த்தப்படும் ஞானத்தையும் உமையம்மை வாயிலாக பெற்ற சம்பந்தர்க்கு வெண்மை நிறப் பொருட்களே முதலில் அவரது கண்களில் பட்டது போலும். பெருமானின் அடையாளங்களாக, பாம்பு. ஏனக்கொம்பு, பெண் கலந்த உருவம், கங்கை நதி, ஆமை ஓடு, கோவண ஆடை, கங்கணம், செஞ்சடை, சிவந்த திருமேனி முதலியவை இருக்க, வெண்மையான நிறத்தில் உள்ள பொருட்களை மட்டும் தேர்ந்து எடுத்தது இந்த பாடலின் தனிச் சிறப்பு.

குணங்கள் பலவகையாக கூறப்பட்டாலும், அவை அனைத்தும் இராஜசம் தாமசம் சத்வம் என்ற மூன்றுள்ளே அடங்கும் என்று கூறுவார்கள். இவைகளை செம்மை, கருமை மற்றும் வெண்மை நிறத்தினால் குறிப்பிடுவது வழக்கம். வெண்மை நிறம் கொண்ட பால் ஊட்டப்பட்ட, சத்வ குணம் நிறைந்த குழந்தை வெண்மை நிறப் பொருட்களை முதலில் அடையாளமாக கண்டு கொண்டது இயல்பு தானே.

மேலே குறிப்பிட்டுள்ள பாடலில் முதல் அடியில் பத்து சொற்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது அடிகளில் ஒன்பது சொற்களும் நான்காவது அடியில் எட்டு சொற்களுமாக மொத்தம் முப்பத்தாறு சொற்கள் உள்ளதை நாம் உணரலாம். இந்த முப்பத்தாறு என்ற எண்ணிக்கை சைவ சமயத்திற்கே உரித்தான முப்பத்தாறு தத்துவங்களை குறிக்கும் என்றும் விளக்கம் கூறுவார்கள்.

செவி என்பதன் மூலம் அடியார்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வண்ணம் அவர்களது வேண்டுகோளை ஏற்கும் பேரருள் தன்மை உணர்த்தப் படுகின்றது. விடையினை வாகனமாக கொண்டுள்ள தன்மை, தன்வயத்தனாக இறைவன் இருக்கும் தன்மையை உணர்த்துகின்றது. தூவெண்மதி என்ற தொடரில் உள்ள தூ என்ற சொல் இறைவன் தூய உடம்பினனாக இருத்தலை உணர்த்துகின்றது மதி என்பதற்கு அறிவு என்ற பொருளும் பொருந்தும் என்பதால் மதி சூடி என்ற தொடர், இறைவனின் முற்றும் உணர்ந்தறியும் ஆற்றலை குறிப்பிடுகின்றது. பொடிபூசி என்ற தொடர் இறைவனின் வரம்பிலா இன்பமுடையவன் என்பதையும், உள்ளம் கவர் கள்வன் என்ற தொடர் இறைவன் இயற்கை உணர்வு உடையவனாக இருத்தலையும் இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனாக இருத்தலையும் குறிக்கின்றது என்றும் பெரியோர்கள் கூறுவார்கள் இவ்வாறு பெருமானின் எண்குணங்களை உணர்த்தும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.

தருமதேவதை என்றும் அழியாது இருக்கும் நித்தியத்தன்மை வேண்டியதால், அதனை இடபமாக மாற்றி பெருமான் தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார் என்று கூறுவார்கள். எனவே இந்த செயல் பெருமானின் படைக்கும் தொழிலை உணர்த்துகின்றது; வெண்மதி சூடி என்று சந்திரனை அழியாமல் காத்த செய்கை, பெருமான் செய்யும் காக்கும் தொழிலை உணர்த்துகின்றது; சுடலைப் பொடி என்ற சாம்பல் பெருமானின் அழித்தல் தொழிலை குறிக்கின்றது. கள்வன், தான் திருடிய பொருளை வைத்திருப்பதை எவரேனும் பார்த்து விட்டதால் தான் அகப்பட்டு விடுவோம் என்று கருதி தான் திருடிய பொருளை முதலில் மறைத்து வைப்பான் என்பதால் உள்ளம் கவர் கள்வன் என்ற குறிப்பு மறைத்தல் தொழிலையும், பிரமனுக்கு அருள் செய்த தன்மை அருளும் தொழிலையும் குறிக்கின்றது என்று உணர்த்தி, பரமன் செய்யும் ஐந்து விதமான தொழில்களையும் சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் கூறுவார்கள். விடையேறி மதிசூடி என்ற தொடர்கள் இறைவன் உருவமாக இருக்கும் நிலையையும், பொடிபூசி என்பது தனது திருமேனியை மறைத்துக் கொள்வது பற்றி அருவுருமாக இருக்கும் தன்மையையும், கள்வன் மறைந்து நிற்பான் என்பதால் கள்வன் என்ற சொல் அருவமாக இருக்கும் தன்மையையும் குறிக்கின்றது என்று விளக்கம் கூறுகின்றனர்.

மணிவாசகர், திருவெம்பாவையின் கடைசிப் பாடலில் இறைவனது ஐந்து தொழில்களைக் குறிப்பிடுவதை காணலாம். அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு காரணமாக இருந்த பாதங்கள் என்று படைத்தல் தொழிலையும், அனைத்து உயிர்களையும் காக்கும் பூங்கழல்கள் என்று காத்தல் தொழிலையும், ஈறாம் இணையடிகள் என்று அழித்தல் தொழிலையும், நான்முகனும் மாலும் காணாத புண்டரீகம் என்றும் மறைத்தல் தொழிலையும், இறுதியாக யாம் உய்ய ஆட்கொண்டருளிய பொன்மலர்கள் என்று அருளுவதையும் குறிப்பிடுகின்றார். மேலும் எண்குணத்தவனான ஈசனுக்கு எட்டு முறை போற்றுதல்கள் கூறி வாழ்த்துவதையும், எட்டு மலர்கள் பிடித்த ஈசனுக்கு எட்டு போற்றி கூறி வழிபட்டதையும் நாம் உணரலாம்.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்

போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீராடலோர் எம்பாவாய்

இந்த விளக்கத்தில் பாடலின் பொருளினை நாம் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக சொற்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பிரிக்கப்படாமல், சீர்கள் அமைந்துள்ள முறையில் பாடலை நாம் பார்த்தால், வேறு சில குறிப்புகள் உணர்த்தப்படுவதையும் நாம் காணலாம். இந்த பாடல் நான்கு அடிகளைக் கொண்டதாய் பெருமானை அடையும் சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு வழிகளையும் அதன் பயன்களை குறிப்பிடுகின்றது என்றும், ஒவ்வொரு அடியிலும் அமைந்துள்ள ஐந்து சீர்கள் ஐந்தொழிலையும், ஐந்தெழுத்தையும், ஐந்து மலங்களையும் (ஆணவம், கன்மம்,. மாயை, மாயேயம் மற்றும் திரோதனாம்) ஐந்து காரணக் கடவுளர்களையும் (பிரமன் திருமால் உருத்திரன் மகேசன் மற்றும் சதாசிவன்) குறிப்பதாக கூறுவார்கள். ஒவ்வொரு அடியிலும் மெய்யெழுத்து நீங்கலாக பதினெட்டு எழுத்துகள் இருக்கும் தன்மை பதினெண் வித்தைகளின் இயல்பையும் குறிப்பதாக கூறுவார்கள்.

தோடுடை யசெவியன்விடை யேறியோர் தூவெண் மதிசூடி

காடுடை யசுடலைப்பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன்

ஏடுடை யமலரான்முனை நாட்பணிந் தேத்த வருள்செய்த

பீடுடை யபிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே

தோடு விடை என்பன அஃறிணை; செவியன் என்பது உயர்திணை; எந்த தினையினைச் சார்ந்த உயிராக இருந்தாலும் இறைவனைப் பணிந்து வாழ்த்தி போற்றினால், அவனது அருள் கிடைக்கும் என்ற கருத்தும் இங்கே மொழியப்படுகின்றது. தோடு என்பதன் மூலம் பெண்மை உருவத்தையும் செவியன் என்பதன் மூலம் ஆண்மை உருவத்தையும் குறிப்பிட்டு மாதொரு பாகனாக இறைவன் உள்ள தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு இன்னும் பல விதமான விளக்கங்கள் பெரியோர்களால் அருளப்படும் வண்ணம் சிறந்த தன்மையில் அமைந்த பாடல் முதல் திருமுறையின் முதல் பாடலாக அமைந்த விதம், திருமுறைகளின் சிறப்புகளை உணர்த்துகின்றது என்று கூறுவார்கள். சுடலை= சுடுகாடு, சுடலைப்பொடி=சுடுகாட்டு சம்பல்; முற்றூழிக் காலத்தில் அனைத்துப் பொருட்களும் அனைத்து உயிர்களும் அழிந்த நிலையிலும், அழிவின்றி நிலையாக நிற்பவன் தான் ஒருவனே என்பதை உணர்த்தும் வண்ணம் பெருமான் சுடலைப்பொடி பூசி நிற்கின்றார் என்று கூறுவார்கள். ஏடுடைய மலர்=அடுக்காக இதழ்கள் அமைந்த தாமரை மலர்; பீடு=பெருமை; மேவிய=பொருந்திய; பண்டைய நாளில், படைப்புத் தொழிலை தான் சரிவர ஆற்றுவதற்கு இறைவன் அருளினை வேண்டி பிரமன் தவம் செயதமையால், இந்த தலத்திற்கு பிரமபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. பிரமபுரம் என்பது சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் முதலாவது திருப்பெயர். அந்த பெயரினை வைத்து முதல் பதிகம் பாடியதும் இந்த பதிகத்தின் மற்றொரு சிறப்பாகும்.

பொழிப்புரை:

ஒரு காதினில் தோட்டினையும் மற்றொரு காதினில் குழை ஆபரணத்தையும் அணிந்த பெருமான், இடபத்தை தனது வாகனமாகக் கொண்டும், தன்னிடம் சரணடைந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்ற வண்ணம், சுடுக்காட்டுச் சாம்பலினைத் தனது திருமேனி முழுதும் பூசியவராய் உள்ளார். அவர் எனது உள்ளத்தை கொள்ளை கொண்ட கள்வனாக விளங்குகின்றார்; இதழ்கள் அடுக்கடுக்காக அமைந்தள்ள தாமரை மலர் மேல் அமரும் பிரமன், பண்டைய நாளில் பெருமானைப் பணிந்து ஏத்த, பிரமன் தனது படைப்புத் தொழிலினை சரிவர செய்யும் வண்ணம் அருள் புரிந்தவர் சிவபெருமான்; இவரே பெருமை உடையதும் பிரமாபுரம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழி நகரினில் உறைபவரும் எனது பெருமை மிக்க தலைவனாகவும் இருக்கின்றார்.

பாடல் 2:

தோடுடைய செவியன் (1.001) பாடல்கள் 2 3 மற்றும் 4 [தித்திக்கும் தேவாரம் 0006]

முற்றல் ஆமை இளநாகமோடு ஏன முளைக் கொம்பு அவை பூண்டு

வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த

பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

முற்றல்=முதிர்ந்த; ஆமை என்பது இங்கே ஆமை ஓட்டினை குறிக்கும். வெகு காலத்திற்கு முன்னர் தோன்றிய கூர்மாவதாரம் என்பதைக் குறிப்பிட முற்றல் ஆமை என்று குறிப்பிட்டார்.; ஏனம்=பன்றி; முளைக் கொம்பு=பன்றியாகிய திருமாலின் வாயினில் பல் போன்று முளைத்த கொம்பு; பூண்டு=ஆபரணமாக அணிந்து கொண்டு; வராக அவதாரம் எடுத்த திருமாலின் பல் அரக்கனின் உடலில் பட்டமையால் அவனது தீய குணங்கள் இவரை ஆட்கொள்ள, அரக்கனைக் கொன்ற பின்னரும் மிகுந்த வெறியுடன் குதித்த போது, அவரது தொல்லை தாளாமல் தேவர்கள் அனைவரும் பெருமானிடம் முறையிட, பெருமான் அந்த பன்றியினை அடக்கி ஆட்கொண்டார். இவ்வாறு பன்றியை அடக்கியதை உணர்த்தும் பொருட்டு, பன்றியின் கொம்பினைத் தனது மார்பினில் ஆபரணமாக அணிந்தார் என்று புராணம் கூறுகின்றது. இளநாகம்=அடிக்கடி தனது சட்டையை உரிப்பதால், நரை திரையின்றி இருக்கும் பாம்பு. பல சதுர் யுகங்களையும் கடந்து நிற்கும் அனந்தன் முதலிய பாம்புகள் இளநாகம் என்று அழைக்கப் படுவதாக சிவக்கவிமணியார் விளக்கம் கூறுகின்றார். வற்றலோடு=தசை வற்றிய ஓடு; பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை பெருமான் கிள்ளியதால், அந்நாள் வரை உடலுடன் கொண்டிருந்த தொடர்பு நீங்கியதால், உலர்ந்து காணப்படும் ஓடு; சிவபெருமானது புகழினை எடுத்துரைக்கும் நூல்களை கற்றவர்களையும் கேட்டவர்களையும் கற்றல் கேட்டார் உடையார் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பெற்றம்=இடபம்.

பொழிப்புரை:

பண்டைய நாளில் ஆமையாக அவதாரம் எடுத்த திருமாலை அடக்கியதன் அடையாளமாக ஆமை ஓட்டினைத் தனது மார்பினில் அணிகலனாக அணிந்தவனும், நரையும் திரையும் இல்லாத உடலினைக் கொண்டுள்ளதால் என்றும் இளமையாக காணப்படும் நாகங்களை அணிந்தவனும், வராக அவதாரம் எடுத்த திருமாலை அடக்கியதன் அடையாளமாக கொம்பு போன்று முளைத்த பன்றியின் கடைப் பல்லினை ஆபரணமாக அணிந்தவனும், தசை வற்றிய பிரமனின் மண்டையோட்டினைத் தான் பிச்சை ஏற்கும் கலனாகக் கொண்டவனும் ஆகிய பெருமான் எனது உள்ளத்தை கவர்ந்து கொண்டான். இறைவனின் புகழினைக் கற்றும் கேட்டும் அறிந்த பெரியவர்கள் பெருமானது திருப்பாதங்களைத் தங்களது கைகளால் தொழுது வணங்குகின்றனர். அவர்களுக்கு அருள் புரியும் பொருட்டு இடபத்தில் ஊர்ந்தவாறு எப்போதும் இருக்கும் பெருமான் தான் பிரமாபுரத்தில் வீற்றிருக்கும் எனது பெருமைக்குரிய தலைவன் ஆவான்.

பாடல் 3:

தோடுடைய செவியன் (1.001) பாடல்கள் 2 3 மற்றும் 4 [தித்திக்கும் தேவாரம் 0006]

நீர் பரந்த நிமிர் புன்சடை மேல் ஓர் நிலா வெண்மதி சூடி

ஏர் பரந்த இன வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்

ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓர் ஊர் இது என்னப்

பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

நீர்=கங்கை நதி; ஏர்=அழகு; இன=நல்ல இனத்தைத் சார்ந்த; வெள்வளை=வெண்மை நிறம் உடைய வெண்முத்து வளையல்; நிமிர்=நிமிர்ந்த; புன்சடை=பொன்னின் நிறத்தில், அதாவது செம்பட்டை நிறத்தில் அமைந்த சடை; ஒர் நிலா வெண்மதி=பிறைகள் அனைத்தும் அழிந்து ஒற்றைப் பிறையுடன் சரணடைந்த சந்திரன்; சோர=நழுவ; பிரளய காலத்திலும் அழியாமல் இருந்தமையால், மற்ற ஊர்களுக்கு முந்திய தலமாக, முதலாகிய தலமாக கருதப் படுகின்றது.

தன்னை நாயகியாக பாவித்துக் கொண்டு சம்பந்தப் பெருமான் அருளிய அகத்துறைப் பதிகம்; தனது உள்ளத்தைக் கவர்ந்த காதலன் பெருமான் என்று பதிகம் முழுவதும் சொல்வதை நாம் உணரலாம். பெருமானை அடைய வேண்டும் என்ற ஏக்கத்தினால் தனது உடல் மெலிய, உடல் மெலிந்ததால் வளையல்கள் கைகளில் நில்லாமல் கழன்று விழுந்தமைக்கு காரணமாகிய பெருமானை, வளையல் கவர்ந்த கள்வன் என்று கூறுகின்றார். தனது தலைவனைக் கூடாத ஏக்கத்தில், தங்களது வளையல் கழலும் தன்மையில் இருப்பதை பெண்கள் உணர்த்துவதையும், அதற்கு காரணமாக இருந்த தலைவனை குற்றம் சாட்டுவதையும் நாம் சங்க இலக்கியங்களில் வெகுவாக காணலாம். ஊழிக் காலத்திலும் அழியாத நின்ற தன்மையால் இந்த தலத்திற்கு தோணிபுரம் என்ற பெயர் வந்ததை, பேர் பரந்த என்ற தொடர் மூலம் சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பேர் என்பதற்கு புகழ் என்று பொருள் கொண்டு, சீர்காழியின் புகழ் உலகெங்கும் பரந்து நின்றமை குறிப்பிடப் பட்டுள்ளது என்றும் பொருள் கொள்ளலாம்.

பொழிப்புரை:

கங்கை நீர் பரந்ததும் செம்பட்டை நிறத்தில் அமைந்ததும் நிமிர்ந்து நிற்பதும் ஆகிய தனது சடையின் மேல், தக்கனது சாபத்தினால் முற்றிலும் அழிந்த நிலையில் ஒற்றைப் பிறையுடன் தன்னைச் சரணடைந்த சந்திரனை, வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனை சூடிக் கொண்டவர் பெருமான். அவரது அழகினில் பெருமையில் நான் மயங்கி அவர் மீது காதல் கொண்டேன். நான் அவர் மீது கொண்டுள்ள காதலின் தீவிரத்தால், அவரைப் பிரிந்து நிற்பதை தாங்கமுடியாத

ஏக்கத்தில்

எனது உடல் மெலிய எனது கையில் இருந்த வளையல்கள் நழுவி விட்டன; அவர் எனது உள்ளத்தையும் கவர்ந்து விட்டார். இத்தகைய தன்மைகள் கொண்டுள்ள பெருமான், பிரளய காலத்திலும் அழியாமல் நின்றமையால் பரந்த உலகத்தின் முதலாவது ஊராக கருதப்படும் பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறைகின்ற பெருமான் ஆவார். அவரே எனது பெருமைக்கு உரிய தலைவன்.

பாடல் 4:

தோடுடைய செவியன் (1.001) பாடல்கள் 2 3 மற்றும் 4 [தித்திக்கும் தேவாரம் 0006]

விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில்

உண் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன்

மண் மகிழ்ந்த அரவம் மலர்க் கொன்றை மலிந்த வரை மார்பில்

பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

மகிழ்ந்த=மகிழ்ந்து உலாவிய; தேரிய=தேடிக்கொண்டு வந்து; மண் மகிழ்ந்த அரவம்= தரையில் ஊர்ந்து செல்லும் தன்மை பற்றியும் மண்புற்றினைத் தான் வாழும் இடமாக கொண்டுள்ள தன்மை பற்றியும் மண் மகிழ்ந்த அரவம் என்று கூறுகின்றார். இந்த பாடலில் விண் மகிழ்ந்த மதில் என்று சம்பந்தப்பெருமான் கூறுகின்றார். எப்போதும் வானில் பறந்து கொண்டிருந்த கோட்டைகள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் தருணத்தில் அந்த கோட்டைகளை நோக்கி எய்யப்படும் ஒரே அம்பினைக் கொண்டு மட்டுமே அந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்ற வரத்தினைப் பெற்றிருந்ததால், அந்த கோட்டைகள் அவ்வாறு ஒரே நேர்க்கோட்டினில் நேரமும் மிகவும் குறைவானது என்பதால், அந்த வரமே மிகப் பெரிய அரணாக திரிபுரத்து அரக்கர்களுக்கு விளங்கியது என்பதை உணர்த்தும் வண்ணம் விண் மகிழ்ந்த மதில் என்று குறிப்பிடுகின்றார். பொதுவாக பிச்சை எடுப்பவர்கள் ஒரு வகையான கூச்சத்துடன் பிச்சை எடுப்பதை நாம் காண்கின்றோம். ஆனால் உள்ளம் மகிழ்ந்த நிலையில் பெருமான் பிச்சை எடுப்பதாக சம்பந்தப் பெருமான் குறிப்பிடுகின்றார். உயிர்கள் தங்களைப் பற்றியுள்ள மலங்களை பிச்சையாக இட்டு உய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் பெருமான் பிச்சை எடுப்பதால், தான் பிச்சை எடுப்பதை மிகுந்த மகிழ்வுடன் செய்கின்றார் என்று இங்கே கூறப்படுகின்றது.

நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் தங்களை திருமால் பால் காதல் கொண்டுள்ள பெண்களாக உருவகப்படுத்திக் கொண்டு கூறும் சொற்களை, பராங்குச நாயகியின் (பராங்குசன் என்பது நம்மாழ்வாரின் மற்றொரு பெயர்) சொற்கள் என்றும் பரகால நாயகியின் சொற்கள் என்று (பரகாலன் என்பது திருமங்கை ஆழ்வாரின் மற்றொரு பெயர்) பாசுரங்களின் வியாக்கியானம் குறிப்பிடுகின்றது. அதே போன்று சம்பந்தர் தன்னை பெண்ணாக உருவகித்துக் கொண்டு கூறும் உரைகளை நாம் சம்பந்த நாயகியின் சொற்கள் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சம்பந்த நாயகி இங்கே, தனது இல்லம் தேடி பெருமான் வந்ததாக கற்பனை செய்து கொண்டு, அந்த தருணத்தில் அவனது அழகினைக் கண்ட தான் மயங்கி நின்று தனது உள்ளத்தை பறிகொடுத்ததால், உள்ளம் கவர் கள்வன் என்று பெருமானை அழைக்கின்றார். பெருமான் அணிந்துள்ள பாம்புகள் புற்றில் வாழ்வன அல்ல. எனினும் பாம்புகளின் பொதுத் தன்மை கருதி, மண் மகிழ்ந்த நாகம் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை:

வான்வெளியில் பறந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரையும் துன்புறுத்தி வந்த திரிபுரத்து அரக்கர்கள் தங்களது மூன்று கோட்டைகளையும் தாங்கள் பெற்றிருந்த வரத்தினால் தகர்க்க முடியாத அரணாக மாற்றியவர்கள். அத்தகைய வல்லமை உடைய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினை எய்தி அழித்ததவனும், தனது கையினில் பிரமனின் மண்டையோட்டினை ஏந்திய வண்ணம் உள்ளத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பலி ஏற்கச் செல்பவனும் ஆகிய பெருமான் என்னருகில் வந்து எனது உள்ளத்தினைக் கொள்ளை கொண்டுவிட்டான். மண் புற்றினை மிகவும் விரும்பி அதனில் பதுங்கி வாழும் பாம்பும் கொன்றை மலர்களும் அலங்கரிக்கும் தனது மலை போன்ற மார்பினில் இடப்பகுதியினில் மிகுந்த மகிழ்ச்சியுடன் உமை அன்னையை ஏற்றுக் கொண்டுள்ளவனும் பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது உள்ளத்தினைக் கொள்ளை கொண்ட கள்வனாவான். ,

பாடல் 5:

தோடுடைய செவியன் (1.001) பாடல் 5 [தித்திக்கும் தேவாரம் 0007]

ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன

அருமையாக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்

கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் காலம் இது என்னப்

பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

ஒருமை என்ற சொல்லினை பெண்மை மற்றும் சடையன் ஆகிய இரண்டு சொற்களுடன் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். ஒருமை=ஒரு புறம்; தனது உடலின் ஒரு பக்கத்தில் உமையன்னையை ஏற்றுக்கொண்டு காணப் படுவதால், அவரது திருமுடியில் ஒரு பாகம் சடையும் மற்றொரு பக்கத்தில் குழலும் காணப்படும் தோற்றம் இங்கே, பெருமை ஒருமை பெண்மை உடையன் சடையன் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. தனது இயல்பினில் நீர் வண்ணமற்றது; எனினும் கரையிலிருந்து கடலினைக் காணும் நமக்கு, அருகினில் நீலநிறத்துடனும் தொலைவில் கருமை நிறம் பெற்று இருப்பதாகவும் தோன்றுகின்றது. கருமை என்பது கடலின் இயல்பான நிறம் அன்று, அது ஒரு தோற்றமே என்பதை உணர்த்தும் வண்ணம் கருமை பெற்ற கடல் என்று இங்கே கூறுகின்றார்.

இந்த பாடலும் அகத்துறை வகையைச் சார்ந்த பாடலாகும். பெருமான் தனது உள்ளத்தைக் கவர்ந்ததாக பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் கூறும் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் பெருமான் தனது உள்ளத்தினை எவ்வாறு கவர்ந்தார் என்று கூறுகின்றார். தனது தோழிகள் பெண்மைக்கு இரங்கி தனது மனைவியை ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டவன் என்றும் பலவாறு பெருமானைப் புகழ்ந்து பேசவே, அவர்களது பேச்சினைக் கேட்ட தானும் பெருமான் பால் காதல் கொண்டு, அவனது திருவுருவத்தை எப்போதும் தனது மனதினில் நினைத்து சுமந்தவாறு, தனது உள்ளத்தை அவனிடம் இழந்ததாக சம்பந்த நாயகி இங்கே கூறுகின்றாள்.

மேலே குறிப்பிட்ட சம்பந்த நாயகியின் கூற்று நமக்கு அப்பர் பிரான் சீர்காழி தலத்தின் மீது அருளிய மாது இயன்று என்று தொடங்கும் பதிகத்தினை (5.45) நினைவூட்டுகின்றது. தோணிபுரம் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. அப்பர் பிரானின் இந்த பதிகத்து பாடல்கள் தாயின் கூற்றாகவும் தலைவியின் கூற்றாகவும் உள்ள பாடல்களைக் கொண்டதாகும். பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டு இருப்பவன் என்றும், கங்கையைத் தனது சடையில் மறைத்துக் கொண்டவன் என்றும் பெருமானை குறிப்பிட்டு அவனது உண்மையான தன்மையை புரிந்து கொள்ளாமல் தனது பெண் இருக்கின்றாளே என்று கவலைப்பட்ட தாய், பேய்களைத் தனது உறவாகவும் உண்ணும் கலன் மண்டையோடாகவும் உறைவிடம் சுடுகாடாகவும், உடலின் ஒரு பாகமாக ஒரு பெண்ணையும் கொண்டுள்ள இறைவன் பால் எந்த தன்மையைக் கண்டு எனது பெண் காதல் கொண்டுள்ளாள் என்று வியக்கின்றாள்(பாடல். 5.45.8).

உறவு பேய்க்கணம் உண்பது வெண்தலை

உறைவது ஈமம் உடலிலோர் பெண்கொடி

துறைகள் ஆர் கடல் தோணிபுரத்துறை

இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பாவதே

அதற்கு தலைவி பதில் கூறும் முகமாக அமைந்துள்ள பாடலும் (5.45.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மேக யானை என்பது எதுகை கருதி மாக யானை என்று திரிந்துள்ளது. மாக யானை=மேகத்தைப் போன்று கரிய நிறம் உடைய யானை: மருப்பு=கொம்பு, இங்கே யானையின் தந்தம் என்று பொருள் கொள்ள வேண்டும். தான் மட்டுமல்ல, தனது தோழியர் பலரும் சிவபெருமான் மீது தீராத காதல் கொண்டுள்ளதாக அப்பர் நாயகி கூறுகின்றாள். சம்பந்தர் இந்த பதிகத்தின் பாடலில் கூறுவது போன்று, அப்பர் நாயகியும் தனது தோழிகளை பின்பற்றிச் சென்று இறைவனிடம் தனது பறி கொடுத்ததாக கூறுகின்றாள்’

மாக யானை மருப்பேர் முலையினர்

போக யானும் அவள் புக்கதே புகத்

தோகை சேர் தரு தோணிபுரவர்க்கே

ஆக யானும் அவர்க்கு இனி ஆகதே

உரை செய்ய அமர்ந்து என்ற தொடருக்கு, பெருமான் தனது மனதினில் அமர்ந்து கொண்டு தான் அவனைப் பாடுமாறு செய்தார் என்று சம்பந்தர் கூறுவதாக சிலர் பொருள் கொள்கின்றனர். இந்த விளக்கமும் பொருத்தமாக உள்ளது. வடமொழி வேதங்களை தனது வாயினால் மொழிந்த பெருமான், தமிழ்வேதம் எனப்படும் தேவார திருவாசகப் பதிகங்களை நால்வர் பெருமானார்கள் பாடுமாறு செய்தமையால் திருமுறைகள் தமிழ் வேதம் என்று கருதப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. இத்தகைய விளக்கம் நமக்கு எனது உரை தனது உரையாக என்று இலம்பையங்கோட்டூர் தலத்து பதிகத்து பாடல்களில் திருஞானசம்பந்தர் கூறுவதை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது.

இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தில், ஞான சம்பந்தர், எனது உரை தனது உரையாக என்ற தொடரினை பதிகத்தின் (1.76) முதல் பத்து பாடல்களிலும் அடக்கி, சிவபெருமானின் உரை தான் தனது வாய்மொழியாக தேவாரப் பாடல்களாக வந்தன என்ற உண்மையை சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். இந்த பதிகம் அகத்துறை கருத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. தனது உரையினை எனது உரைகளாக வெளிப்படுத்தி அருளியவன் என்று சிவபெருமானை இந்த பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர் மறைக்காடு நெய்த்தானம்

நிலையினான் எனது உரை தனது உரையாக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்

கலையினார் மடப்பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கிக் கணமயில் ஆலும்

இலையினார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என் எழில் கொள்வது

இயல்பே

திருஞான சம்பந்தப் பெருமானை மட்டுமா பெருமான் பாட வைத்தார், அப்பர் பிரான் சுந்தரர் மற்றும் மணிவாசகர் ஆகியோரையும் தனது பண்புகளையும் பெருமையையும் பாடி உலகுக்கு உணர்த்துமாறு செய்தவர் பெருமான் தானே. இந்த செய்தியை அவர்கள் மூவரும் பதிவு செய்துள்ள சில பாடல்கள் நாம் இங்கே காணலாம். தன்னைப் பல நாட்கள் தொடர்ந்து தேவாரப் பதிகங்கள் பாட வைத்தவன் சிவபெருமான் தான் என்பதை புள்ளிருக்கு வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (6.54.3) அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அண்ணித்தல்=தித்தித்தல்; புத்தேள்=கடவுள், தேவர்கள்; பாடப் பயில்வித்தானை=பாடக் கற்றுக் கொடுத்தவன் என்றும் தொடர்ந்து பாடவைத்தவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தீங்கரும்பு=இனிமையான கரும்பு;

பத்திமையால் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை

எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை எம்மானை என்னுள்ளத்து உள்ளே ஊறும்

அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீங்கரும்பை அரனை ஆதிப்

புத்தேளைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

அபயம் என்று சரணடைந்த தனது சூலை நோயினைத் தீர்த்து ஏற்றுக்கொண்டதும் அல்லாமல், தன்னிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதை முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (668) ஒரு பாடலில் அப்பர் பிரான், தன்னை பாமாலை பாட பயில்வித்தவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். எவராலும் தீர்க்கமுடியாத சூலை நோயினைக் கொடுத்து திருவதிகைக்கு வரவழைத்து அப்பர் பிரானின் வாழ்வில் ஒரு திருப்பு முனையை அமைத்துக் கொடுத்து, அவரை தேவாரப் பதிகங்கள் பாடச் செய்தவர் பெருமான் தானே. எத்திசையும் வானவர்கள் தொழநின்றான்=வானவர்கள் தங்களுக்கு இட்ட கட்டளையின் படி, வெவ்வேறு இடத்தில் இருந்தவாறு தங்களது தொழில்களைச் செய்தவாறு இருப்பார்கள். அவ்வாறு வெவ்வேறு இடங்களில் இருந்தவாறே, இறைவனைத் தொழும் நிலை, எத்திசையும் வானவர்கள் தொழ நின்றான் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. சித்தன்=எல்லாம் செய்ய வல்லவன்:

எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறூர்ந்த பெம்மானை எம்மான் என்று

பத்தனாய்ப் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை

முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செழும்பவளக் கொழுந்து ஒப்பானைச்

சித்தனை என் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (6.84.4) தமிழ்மாலை பாடுவித்து என் சிந்தை மயக்கு அறுத்த பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பன்னிய நூல் என்றால் இலக்கண முறைப் படி அமைந்த பாடல்கள் என்று பொருள். இந்த பாடல்களைப் பாடியதால் தனது மனதில் இருந்த மயக்கும் சிந்தைகள் அறுந்தன என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அவரது பாடல்களை பொருள் உணர்ந்து ஓதினால், நாமும் நமது சிந்தைகளில் உள்ள மயக்கங்களை அறுத்துத் தூய்மை பெறலாம் என்ற செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது.

கந்தமலர்க் கொன்றை அணி சடையான் தன்னைக் கதிர் விடுமாமணி பிறங்கு கனகச்சோதிச்

சந்த மலர்த் தெரிவை ஒரு பாகத்தானைச் சராசர நல் தாயானை நாயேன் முன்னைப்

பந்தம் அறுத்து ஆளாக்கப் பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என்

சிந்தை மயக்கு அறுத்த திருவருளினானைச் செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து, பின்னர் அடிமை ஓலை காட்டி சுந்தரரை ஆட்கொண்ட பெருமான், அவரை திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்துறை திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்ற பின்னர் அங்கே மறைந்து விடுகின்றார். பின்னர் வானில் எழுந்த ஓசை மூலம், எம்மை பாடுவாய் என்று சுந்தரரை பணிக்கின்றார். உன்னை அறிந்து கொள்ள முடியாமல், நாயினும் கடையேனாக இருந்த அடியேன் என் சொல்லிப் பாடுகேன் என்று சுந்தரர் சொல்ல, இறைவனார் முன்பு என்னை பித்தன் என்றே மொழிந்தனை, ஆகவே பித்தன் என்றே பாடுக என்று அடியெடுத்துக் கொடுத்து, சுந்தரரை பித்தா பிறைசூடி என்று தொடங்கும் பதிகத்தை பாடவைத்தார். இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் பெரிய புராண பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்

முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே

என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார் நின்ற

வன்பெருந்தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடலுற்றார்

மணிவாசகர் தனது கோத்தும்பீ பதிகத்தில், தன்னை பாடுவித்த நாயகன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். சீ என்று வெறுக்காது தான் செய்த திருப்பணிகளை ஏற்றுக்கொண்டவன் என்றும் அடியார்களின் குற்றங்களைப் பொறுத்து அருளும் பெருமையாளன் என்றும் இந்த பாடலில் பெருமானை குறிப்பிடுகின்றார்.

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்

பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனைச்

சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்

தாயான ஈசற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

பொழிப்புரை:

தனது உடலின் ஒரு புறத்தில் உமை அன்னையை ஏற்றுக்கொண்டுள்ள இறைவனின் தலைமுடியின் ஒரு பாகம் சடையாகவும் மற்றொரு பாகம் பெண்களது குழலாகவும் உள்ளது. அவனை பெண்மை உடையவன் என்றும், சடையன் என்றும், இடபத்தை வாகனமாகக் கொண்டவன் என்றும் பலவாறு எனது தோழியர்கள் புகழ்ந்து கூறவே, அவர்களது பேச்சினைக் கேட்ட நானும், பெருமான் பால் காதல் கொண்டு அவனது திருவுருவத்தை எப்போதும் நினைத்தவாறு மனதினில் சுமந்து கொண்டேன். அதனால் அவர் எனது உள்ளத்தைக் கவர்ந்தவராக திகழ்கின்றார். இவ்வாறு எனது மனதினைக் கவர்ந்த கள்வர் யார் என்று நீங்கள் வினவுவரேல், நான் அதற்கு விடை கூறுகின்றேன். முற்றூழி காலத்தில் கருமை நிறம் கொண்ட கடல் பொங்கி வந்து அனைத்து உலகினையும் மூழ்கடித்த போதும், தோணிபுரமாக மிதந்த பெருமையினை உடைய பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் பொருந்தி உறையும் பெருமான் தான், எனது உள்ளம் கவர்ந்த கள்வராக, எனது பெருமைக்குரிய தலைவராக விளங்குகின்றார்.

பாடல் 6:

தோடுடைய செவியன் (1.001) பாடல்கள் 6 7 8 மற்றும் 9 [தித்திக்கும் தேவாரம் 0008]

மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலர் ஆகி மழு ஏந்தி

இறை கலந்த வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்

கறை கலந்த கடியார் பொழில் நீடு உயர் சோலைக் கதிர் சிந்தப்

பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

இறை=முன்கை, மணிக்கட்டு;: சோர=ஒவ்வொன்றாக கழன்று விழ; கறை=இருள்; கடி= நறுமணம்; இன்=நல்ல தரம் வாய்ந்த. செழித்து வளர்ந்த சோலைகளில் மரங்கள் நெருங்கி அடர்த்து காணப்படுவதால் அவைகளை ஊடுருவிக் கொண்டு சூரியன் மற்றும் சந்திரனின் வெளிச்சம் செல்ல முடியாமல் இருண்டு காணப்படுகின்றன என்பதை உணர்த்தும் வண்ணம் இருள் நிறைந்த சோலைகள் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

தான் ஓதும் வேத ஒலிகள் காற்றினில் கலக்கும் வண்ணம் உரத்த குரலில் வேதங்கள் பாடியவாறும் நடனம் ஆடியவாரும் இருக்கும் பெருமான் தனது கையில் மழு ஏந்தியவராக உள்ளார். அவர் பால் தீவிரமான காதல் கொண்டிருந்த நான் அவரை அடைய முடியாத ஏக்கத்தினால் எனது உடல் மெலிய எனது முன்கைகளில் அணிந்திருந்த தரம் வாய்ந்த வெண் முத்து வளையல்கள். நழுவி விழுகின்றன. இவ்வாறு எனது வளையல்களையும் உள்ளத்தினையும் கவர்ந்த கள்வராக அவர் விளங்குகின்றார். சூரியனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவாத வண்ணம் செழித்து நெருங்கி வளர்ந்துள்ள நறுமணம் மிகுந்து இருளுடன் காணப்படும் சோலைகளில் தனது கதிர்கள் சிந்தும் வண்ணம் பிறைச் சந்திரன் உலாவும் சோலைகள் நிறைந்த பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் எனது உள்ளத்தினைக் கவர்ந்த கள்வன் உறைகின்றான்.

பாடல் 7:

தோடுடைய செவியன் (1.001) பாடல்கள் 6 7 8 மற்றும் 9 [தித்திக்கும் தேவாரம் 0008]

சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசி சதிர்வு எய்த

உடை முயங்கும் அரவோடு உழி தந்து எனது உள்ளம் கவர் கள்வன்

கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன்னம் சிறகு அன்னம்

பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

முயங்கும்=சேரும்; புனல்=கங்கை நதி; சதிர்வு=பெருமை; கானல்=கடற்கரை சோலை; உழிதந்து=திரிந்து; பெடை=பெண்பாலைக் குறிக்கும் சொல், இங்கே பெண் அன்னத்தை குறிக்கின்றது. கழி=உப்பங்கழி;; இந்த பாடலில் நமக்கு அச்சத்தை ஊட்டும் இரண்டு பொருட்கள் பெருமானுடன் இணைந்து இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. பாம்பு மற்றும் நெருப்பு ஆகிய இவை இரண்டே அந்த பொருட்கள். இந்த இரண்டு பொருட்கள் இருப்பினும், தனது உள்ளத்தை பெருமானிடம் பறிகொடுத்ததாக சம்பந்த நாயகி குறிப்பிடுகின்றாள்.

பொழிப்புரை:

தனது சடையினில் கங்கை நதியைக் கலந்து வைத்திருப்பவனும், தனது கையினில் தீப்பிழம்பை வைத்திருப்பவனும், கையினில் தீச்சுடரினை ஏந்தியவாறு நடனமாடும் பெருமையினை உடையவனும், தனது ஆடையின் மேல் கச்சாக இறுகக் கட்டிய பாம்பினை உடையவனும், உலகெங்கும் திரிபவனும் ஆகிய பெருமான் எனது உள்ளத்தினை கொள்ளை கொண்டு விட்டான்; உப்பங்கழிகளும் குளிர்ந்த சோலைகளும் சார்ந்துள்ள கடற்கரையினில் தன்னுடைய துணைகளுடன் கலந்து திரியும் அழகிய சிறகுகளை உடைய அன்னங்கள் பொருந்திய பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் உறையும் பெருமானே எனது உள்ளத்தினை கவர்ந்தவன் ஆவான்.

பாடல் 8:

தோடுடைய செவியன் (1.001) பாடல்கள் 6 7 8 மற்றும் 9 [தித்திக்கும் தேவாரம் 0008]

வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த

உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன்

துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்

பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

வியர்=வேர்வை; வியர் என்ற சொல் அகலமான பண்பினை குறிப்பதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. இலங்கு=விளங்கும்; உலகில் உள்ள உயிர்கள் தங்களது வினைப் பயன்களைக் கழித்துக் கொள்ளும் போது இன்ப துன்பங்களை அனுபவிப்பதால் துயர் இலங்கும் உலகம் என்று குறிப்பிடுகின்றார். முற்றூழி காலத்தில் அனைத்து உயிர்களும் தன்னிடம் ஒடுங்கிய பின்னரும், மீண்டும் உலகினை தோற்றுவித்து தன்னிடம் ஒடுங்கிய உயிர்களை பெருமான் தோற்றுவிப்பது, உயிர்கள் பால் கருணை கொண்டுள்ள பெருமான் மீண்டும் ஓர் வாய்ப்பு அளிப்பது, அந்த உயிர்கள் தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினை உள்ளடக்கியது. இதனை உணர்த்தும் முகமாக பல ஊழிகள் தோன்றி அழிந்த பின்னரும் உலகம் மீண்டும் தோன்றி இயங்குகின்றது என்று கூறுகின்றார்.

இந்த பாடலில் இராவணனுடன் தொடர்பு கொண்ட கயிலை நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. பொதுவாக தனது பதிகத்தின் எட்டாவது பாடலில் இந்த நிகழ்ச்சியை குறிப்பிடுவது திருஞான சம்பந்தரின் பழக்கம். தான் வாழும் கயிலை மலையையே பேர்த்து எடுக்கச் துணிந்த அரக்கன் இராவணனது வலிமை குன்றும் வண்ணம் மலையில் கீழே அடக்கி நெரித்தமையும் பின்னர் அரக்கன் தனது தவற்றினை உணர்ந்து சாமகானம் பாடியபோது அவனுக்கு அருள் புரிந்தமையும் இத்தகைய பாடல்கள் மூலம் உணர்த்தப் படுகின்றன. அப்பர் பிரானும் பெரும்பாலான பதிகங்களில் இந்த நிகழ்ச்சியைத் தனது கடைப் பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பின் நோக்கத்தை நாம் உணர்த்து கொள்ள வேண்டும். எவரையும் வெல்லும் ஆற்றல் உடையவர் பெருமான் என்பதும், பகைவனுக்கும் அருளும் கருணை நெஞ்சம் கொண்டவர் பெருமான் என்பதும், தனது தவறினை உணர்வோரை மன்னித்து அருள்பவர் பெருமான் என்பதும் இந்த குறிப்பு மூலம் உணர்த்தப் படுகின்றது. எனவே இந்நாள் வரை நாம் எந்த தவற்றினை செய்திருந்தாலும், இனி அந்த தவறுகளை செய்யாமல், இறைவனை வாழ்த்தி வணங்கினால் நமக்கும் இறையருள் கிடைக்கும் என்ற முக்கியமான செய்தியை தேவார ஆசிரியர்கள் இந்த குறிப்பு மூலம் எடுத்துரைக்கின்றனர். திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமான தேவாரப் பாடல்களில் இடம் பெரும் (அறுநூறு பாடல்களுக்கும் மேலாக) நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

தவறு செய்த உயிர்கள், தமது தவறினை பொறுத்திட வேண்டியும், இனிமேல் அந்த தவறினை செய்யாது இருப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் இறைவனை உள்ளன்போடு வேண்டினால் இறைவன் உயிர்களை மன்னித்து அருள்வான் என்பதை உணர்த்தும் பொருட்டு சம்பந்தரின் பதிகங்களில் எட்டாவது பாடல் அமைந்துள்ளது என்று சேக்கிழார் உணர்த்தும் பெரியபுராண பாடலை நாம் இங்கே காண்போம். பிழைத்தல்=தவறு செய்தல்

மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்

கண் நுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட

எண்ணமிலா வல்லரக்கன் எடுத்து முறிந்து இசை பாட

அண்ணல் அவர்க்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார்

பொழிப்புரை

வியர்வை பெருகுவதும் மலை போன்று உயர்ந்ததும் ஆகிய தோள்களைக் கொண்டுள்ள அரக்கன் இராவணன், தனது வழியில் குறிக்கிட்டது என்று தவறாக கருதி கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, அவனது வலிமையை அடக்கிய பெருமான் எனது உள்ளத்தினைக் கவர்ந்தவர் ஆவார். உயிர்களுக்கு துன்பம் விளையும் இடமாக உள்ள இந்த உலகம் பலமுறை அழிந்து மீண்டும் தோன்றிய போதும், தான் அழியாமல் இருக்கும் பெருமையினை உடைய பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் உறையும், எனது பெருமைக்குரிய தலைவனே, எனது உள்ளத்தினைக் கவர்ந்த கள்வர் ஆவார். :

பாடல் 9:

தோடுடைய செவியன் (1.001) பாடல்கள் 6 7 8 மற்றும் 9 [தித்திக்கும் தேவாரம் 0008]

தாணுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும்

நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன்

வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர்ஏத்தப்

பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

தாணுதல்=தாள்+நுதல், நுதல்=நெற்றி; தாள்=திருப்பாதங்கள்; திருவடியும் திருமுடியும். இறை=இறைவன், தம்முள் யார் பெரியவன் என்பதைக் கண்டறிய பிரமனும் திருமாலும் முயற்சி செய்தமை இங்கே குறிப்பிடப் படுகின்றது. நீளுதல் என்ற சொல் எதுகை கருதி நீணுதல் என்று திரிந்தது; நீளுதல்=மேலே பறந்தும் கீழே அகழ்ந்தும் நீண்ட தூரம் சென்றமை; நிமிர்தல்= அப்பாற்படுதல்; பேணுதல்=காத்தல்; வாணுதல்=வாள்+நுதல், ஒளி பொருந்திய நெற்றி; செய் மகளிர்=சிவந்த உடல் கொண்ட மகளிர்;

பிரமனும் திருமாலும் இறைவனின் அடியையும் முடியையும் காணும் முயற்சியில் தோல்வி அடைந்து திகைத்து நின்ற நிகழ்ச்சி இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப் பெருமானின் பெரும்பாலான பதிகங்களில் இந்த நிகழ்ச்சி ஒன்பதாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. கல்விக்கு அதிபதியாக விளங்கும் நாமகளை மனைவியாக உடையவர் பிரமன். மேலும் அவரும் தினமும் வேதம் ஓதுபவராக உள்ளார். எனவே கல்வி அவரது வலிமையாக கருதப் படுகின்றது. செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் இலக்குமி தேவி திருமாலின் மனைவி. எனவே செல்வத்தின் அடையாளமாக அவர் கருதப் படுகின்றார். அவர்கள்; இருவரும் தங்களுக்கு உள்ள வலிமையினால், தங்களது வலிமை மீது செருக்கு கொண்டவர்களாய் இறைவனது அடியையும் முடியையும் காண்பதற்கு முயற்சி செய்தனர். இறைவன் கல்விக்கும் செல்வத்திற்கும் மயங்காதவன் என்பதையும் அன்புக்கும் பக்திக்கும் மட்டுமே அவன் கட்டுப்படுவான் என்பதை உணராமல் அவர்கள் முயற்சி செய்த போது, அவர்களால் காண முடியவில்லை; பின்னர் தங்களது தவறினை உணர்ந்து, இறைவனிடம் இறைஞ்சி வேண்டியபோது இறைவன் அவர்களுக்கு காட்சி கொடுத்தார் என்பது புராணம். எனவே இறைவன் தன்னைத் தொழும் அடியார்களுக்கு மட்டுமே அருள் புரிவார் என்பதே இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்தும் பாடம். எனவே தான் அன்புடன் இறைவன் வணங்க வேண்டும் என்ற இந்த செய்தி பதிகம் தோறும் சம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது. இதனை உணர்த்தும் சேக்கிழாரின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த பதிகத்து பாடலில், தன்னைத் துதிக்கும் உலகத்தவருக்கு பெருமான் அருள் புரிகின்றார் என்று குறிப்பிட்டு பெருமானை துதிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றார்.

தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்

வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்

இழிவாகும் கரு விலங்கும் பறவையுமாய் எய்தாமை

விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்

பொழிப்புரை:

தங்கள் இருவரில் யார் பெரியவர் என்பதை அறியும் முயற்சியில், வாதம் செய்து கொண்டிருந்த தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காணும் முயற்சியில், பன்றியாக மாறிய திருமாலும் அன்னமாக உருவெடுத்த பிரமனும் நெடுந்தூரம் சென்ற போதும் அவர்களால் தங்கள் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை; அவ்வாறு அண்ணாமலையாக நிமிர்ந்தவன் எனது உள்ளம் கவர் கள்வனாக உள்ளான். ஒளி பொருந்திய நெற்றியையும் சிவந்த மேனியையும் உடைய மகளிர் உள்ளிட்டு உலகத்தவர் பலரும் பெருமானை துதிக்க, பெருமான் அவர்களை காத்து அருள் புரிகின்றார். அவரே எனது உள்ளத்தினை கவர்ந்த கள்வரும், பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தினில் உறையும் எனது பெருமைக்கு உரிய தலைவர் ஆவார்.

பாடல் 10:

தோடுடைய செவியன் (1.001) பாடல்கள் 10 மற்றும் 11 [தித்திக்கும் தேவாரம. 0009]

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா

ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம்கவர் கள்வன்

மத்த யானை மறுக உரி போர்த்ததோர் மாயம் இது என்னப்

பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

பொறியில்=அறிவற்ற; இந்த பாடலில் பித்தர் என்று இறைவனை திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். சுந்தரரும் இறைவனை பித்தா என்று தனது முதல் பதிகத்தில் நமது நினைவுக்கு வருகின்றது. யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் எவரும் அதனை அணிய மாட்டார்கள். ஆனால் பெருமான், ஏனையோரிடமிருந்து மாறுபட்டு அணிந்து கொண்டமையை குறிப்படும் வண்ணம் பித்தர் என்று திருஞான சம்பந்தர் அழைத்தார் போலும். பெருமான் பலி ஏற்கும் நோக்கத்தை அறியாதவராக பொருந்தாத சொற்களை புத்தரும் சமணரும் கூறிய போதிலும், அந்த சொற்களை பொருட் படுத்தாமல் பெருமான், உலகத்தவர் தனக்கு பிச்சையிட்டு உய்வதற்கு வாய்ப்பினை தொடர்ந்து அளிக்கும் வண்ணம் பிச்சை ஏற்கின்றார் என்பதை இங்கே உணர்த்துகின்றார். சமணர்களின் கொட்டத்தை அடக்கி, சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டுவதே சம்பந்தப் பெருமான் அவதரித்த நோக்கம் என்பதால், பாடல்தோறும் சமணர்கள் மற்றும் புத்தர்களின் தவறான கொள்கை பெரும்பாலான பதிகங்களின் பத்தாவது பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை:

அறிவற்ற சமணர்களும் புத்தர்களும் பெருமானின் பெருமைக்குரிய செயல்களை (பலி ஏற்பது போன்ற செயல்கள்) சரியாக புரிந்து கொள்ளாமல், பிழைபட்ட கருத்துக்களை சொல்லி வந்த போதும், அத்தகைய சொற்களால் மயங்கி தங்களது மனம் போன போக்கில் உலகத்தவர் பலரும் பழித்து கூறிய போதிலும், அத்தகைய சொற்களை பொருட் படுத்தாது உலகத்தவருக்கு உய்யும் வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு பெருமான் தொடர்ந்து உலகெங்கும் திரிந்து பலி ஏற்கின்றார். இத்தகைய பண்பினை உடைய பெருமான், எனது உள்ளத்தைக் கவர்ந்து விட்டார். தன்னை தாக்கும் நோக்கத்துடன் தன்னை நாடி வந்த மதயானை மருளும் வண்ணம் அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது பெருமான் போர்த்துக் கொண்டதைக் கண்ட அனைவரும், யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறியாமல் போர்த்துக் கொள்ளும் இவர் என்ன பித்தரா என்று எண்ணினராகிலும், யானையின் பசுந்தோலால் பெருமானுக்கு கேடு ஏதும் விளையாததைக் கண்டு ஈது என்ன மாயம் என்று வியந்தனர். இத்தகைய ஆற்றல் உடைய பெருமான், பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் உறைகின்றார். அவரே எனது உள்ளம் கவர்ந்தவரும் எனது பெருமைக்குரிய தலைவரும் ஆவார்.

பாடல் 11:

தோடுடைய செவியன் (1.001) பாடல்கள் 10 மற்றும் 11 [தித்திக்கும் தேவாரம. 0009]

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய

பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

விளக்கம்:

அலர்=மலர், இங்கே தாமரை மலரைக் குறிக்கும்; அருநெறி=அருமையான நெறி. மேற்கூறிய பாடல்களில் பெருமானின் பல பெருமைகளை எடுத்துரைத்த சம்பந்தர், இந்த பாடலில் மனம் ஒன்றி பெருமானை வழிபட வேண்டுமென்று உணர்த்துகின்றார். இந்த பாடலில் சம்பந்தர், பதிகத்தைப் பாடுவதால் விளையும் பலன்களை எடுத்துக் கூறுகின்றார். இவ்வாறு அனைத்துப் பதிகங்களிலும், அந்த பதிகங்களைப் பாடுவதால் விளையும் பலன்களை குறிப்பிடுவதால், சம்பந்தர் அருளிய பதிகங்கள் திருக்கடைக்காப்பு என்று அழைக்கப் படுகின்றன. பல வடமொழி தோத்திரங்களில் பலஸ்ருதி என்று அந்த தோத்திரங்களைச் சொல்வதால் விளையும் பலன்கள் உணர்த்தப் பட்டுள்ளதை நாம் அறிவோம். காரைக்கால் அம்மையாரும் தனது பதிகங்களில் கடைப் பாடலில், அந்த பதிகங்களைப் பாடுவதால் ஏற்படும் பயனை குறிப்பிடுகின்றார்.

தேவாரப் பதிகங்களுக்கு காலத்தால் முந்தையது காரைக்கால் அம்மையார் அருளிய பாடல்கள். அம்மையார் அருளிய கொங்கை திரங்கி என்று தொடங்கும் ஆலங்காடு பதிகம் நட்டபாடை பண்ணிலும் எட்டியிலவம் என்று தொடங்கும் ஆலங்காடு பதிகம் இந்தளம் பண்ணிலும் அமைக்கப் பட்டுள்ளன. அம்மையாரை பின்பற்றி பதிகங்கள் பாடிய திருஞான சம்பந்தரும் சுந்தரரும், அவர் அருளிய நட்டபாடை மற்றும் இந்தளம் பண்களில் தத்தமது முதல் பாடல்களை அமைத்துள்ளது அம்மையாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

பொழிப்புரை:

நல்ல விதமான வாழ்க்கைக்கு இன்றியமையாத அருமையான கருத்துக்களை உணர்த்தும் வேதங்களில் வல்லவனாகிய பிரமனால் இறைவனை வழிபடும் பொருட்டு படைக்கப் பட்டதும், அகன்ற நீர்நிலைகளில் தாமரை மலர்களை உடையதும், பெருமைக்கு உரிய முக்தி நெறியினை அளிக்க வல்லதும் ஆகிய பிரமாபுரம் என்று அழிக்கப்படும் சீர்காழி நகரினில் உறையும் பெருமானை, ஒருமைப்பாடு உடைய மனத்துடன் அவனை உணர்ந்து தியானித்து ஞானாசம்பந்தர் உரைத்த சிறந்த தமிழ் வேதமாகிய பாடல்களை சொல்லும் வல்லமை பெற்றவர்களின் பழவினைகள் எளிதினில் தீர்ந்துவிடும்.

முடிவுரை:

ஞானசம்பந்தரின் தந்தையார் கேட்ட கேள்விக்கு, யார் கொடுத்த எச்சில் பாலினை உண்டாய் என்ற கேள்விக்கு, விடை அளிக்கும் முகமாக மொழிந்த பதிகம் என்பதால், தனது தந்தையார் கேட்ட கேள்வியையோ, பால் கொடுத்தவர் என்று குறிப்போ இந்த பதிகத்து பாடல்களில் காணப்படவில்லை. இந்த பதிகத்தை நாம், பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகளின் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். தந்தையார் கேட்ட கேள்வியுள் பாலைக் குடித்த விடயம் அடங்கியுள்ளது எனவே அந்த கேள்வியுடன் நாம் இந்த பதிகத்தில் சொல்லப்படும் பதிலை இணைத்துக் கொள்ளவேண்டும். இராமபிரான் முடிசூட்டிக் கொள்ளும் பாடலில் எங்கும் இராமபிரான் பெயர் காணப்படாதது போல இந்தப் பதிகத்திலும் பருகிய பால் பற்றிய குறிப்பு இல்லை போலும்.

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த

பரதன் வெண் குடை கவிக்க இருவரும் கவரி பற்ற.

விரை செறி குழலி ஓங்க வெண்ணையூர் சடையன் தங்கள்

மரபு உளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி.

இந்த நிகழ்ச்சியை ஞானசம்பந்தப் பெருமான். மதுரை நகரில் தான் அருளிய, மண்ணில் நல்ல வண்ணம் என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (3.24.2) குறிப்பிடுகின்றார். உமையம்மை தனக்கு அளித்த பொன் கிண்ணத்தில் இருந்த பால் பற்றியும், அயலாரிடம் பால் உண்டதற்காக கோபித்துக்கொண்ட தந்தை பற்றியும் கூறி தன்னை ஆட்கொண்ட அப்பனையும் அம்மையையும் நினைவு கூறுகிறார். போதை என்றால் மலர் என்று பொருள். மலர் போன்ற தன்மை உடைய உமை அம்மை என்பதால் போதையார் என்று அழைக்கப்படுகிறார். முனிதல் என்றால் கோபித்தல் என்று பொருள். அடிசில் என்றால் உணவு, இங்கு பால் என்று பொருள் கொள்ளவேண்டும்.

போதையார் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது என

தாதையார் முனிவு உற தான் எனை ஆண்டவன்

காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்

பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே

அகத்தியர் தேவாரத் திரட்டில், குருவருள் என்ற தலைப்பின் கீழ் தோடுடைய செவியன் என்று தொடங்கும் திருஞானசம்பந்தரின் பதிகமும், கூற்றாயினவாறு என்று தொடங்கும் அப்பர் பிரானின் பதிகமும் பித்தா பிறைசூடி என்று தொடங்கும் சுந்தரர் அருளிய பதிகமும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பதிகங்களும் தேவார ஆசிரியர்கள் பாடிய முதல் பதிகங்கள் ஆகும். இவை முறையே முதல், நான்காம் மற்றும் ஏழாம் திருமுறைகளில் முதல் பாடலாக அமைந்துள்ளன. கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகம் பாடிய பின்னர் அப்பர் பிரானுக்கு உலகத்தின் குருவாகிய இறைவனின் அருள் கிடைத்து, சூலை நோய் அவரை விட்டு நீங்கியது; சுந்தரரும் திருஞான சம்பந்தரும் இறைவன் அருள் பெற்ற பின்னர் பாடிய முதல் பதிகங்கள் மற்ற இரண்டு பதிகங்கள். எனவே இந்த மூன்று பதிகங்களையும் தினமும் பாடினால் குருவருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகின்றது.,

இயற்கை காட்சிகளை கவினுறக் கூறுவதில் சம்பந்தர்க்கு இணை சம்பந்தர் தான் என்று கருதும் அளவுக்கு, இயற்கைக் காட்சிகளை நயமாக எடுத்துரைப்பதை நாம் பல பாடல்களில் காணலாம். பாடலின் இரண்டு அடிகளில் பெருமானது பண்பு, மாண்பு, அவருடன் தொடர்பு கொண்ட பல புராண நிகழ்சிகளை ஆகியவற்றை குறிப்பிடும் சம்பந்தர் இரண்டு அடிகளில் இயற்கைக் காட்சிகளை குறிப்பிடுகின்றார். இந்த தன்மை இரயில் பயணங்களில் நாம் அன்றாடம் காணும் காட்சியை நினைவு படுத்துகின்றது என்று திரு கிவாஜா அவர்கள் கூறுவார். வேடிக்கை பார்ப்பதற்காக சிறு குழந்தைகள், ஜன்னல் ஓரத்தில் அமைந்துள்ள இருக்கைகளை நாடுவதும், அந்த குழந்தைகளுக்கு வழிவிடும் முதியவர்கள் ஒரு புத்தகமோ அல்லது செய்தித்தாளோ வைத்துக் கொண்டு அதில் ஆழ்ந்துவிடுவதையும் நாம் காண்கின்றோம். தேவாரப் பதிகங்கள் எனும் இரயில் வண்டியில் பயணம் செய்த குழந்தை திருஞான சம்பந்தர் இயற்கைக் காட்சிகளை ரசித்துப் பார்த்ததும், முதியவர் அப்பர் பிரான் பெருமானின் பெருமை எனும் புத்தகத்தில் தன்னை மறந்து ஆழ்ந்ததும் இயற்கை தானே. இந்த தன்மை அவர்களது பாடல்களில் வெளிப்படுகின்றது.

பதிகத்தின் பத்து பாடல்களையும் பாடிய பின்னர் திருக்கடைக்காப்பு பாடி, பதிகம் நிறைவு பெற்றதை உணர்த்தும் வண்ணம், பதிகம் அளிக்கும் பயன் மற்றும் தனது பெயரையும் சம்பந்தப் பெருமான் குறிப்பிட்டு இறைவனைத் தொழுது நின்றார். அப்போது வானத்தில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், முனிவர்கள், கின்னரர்கள் ஒன்று கூடி மலர்மாரி பொழிந்தனர் என்று சேக்கிழார் கூறுகின்றார். பின்னர் திருஞானசம்பந்தர் திருக்கோயிலின் உள்ளே செல்ல, அவரது தந்தையாரும் அவரைத் தொடர்ந்து பின் சென்றார். அவரது கையில் இருந்த சிறு கொம்பு, பிள்ளையாரை மிரட்டுவதற்காக எடுத்த கொம்பு, அவரையும் அறியாமல் கீழே விழ, ஆனந்தக் கூத்து ஆடியவராய் பிள்ளையார் அருளிய பாடலினைக் கேட்கும் விருப்பும் வியப்பு கலந்த உணரவும் உடையவராய், சிவபாத இருதயர் இருந்தார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. உமையன்னை பால் ஊட்டிய நிகழ்ச்சியை நேரில் காணும் பேற்றினை பெறவில்லை எனினும், மூன்று வயதுக் குழந்தை பதிகம் பாடியதையும், தான் கேட்ட கேள்விக்கு பதிலாக இறைவன் அடையாளங்களை உணர்த்தி பாடியதையும் உணர்ந்த, சிவபாத இருதயர் நடந்த அதிசயம் இறைவனின் அருளால் நிகழ்ந்தது என்பதை அறிந்துகொண்டார். விவரம் அறிந்த ஊர் மக்கள் பலரும், திருஞானசம்பந்தரை நேரில் காணும் விருப்பம் உடையவர்களாய் திருக்கோயிலின் முன்னர் சூழ்ந்தனர்.

சம்பந்தப் பெருமான் மூலம் இறைவனது பண்புகளையும் பெருமையினையும் அறிந்து கொண்ட நாம், உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவனே என்பதை உணர்ந்து, திருஞானசம்பந்தர் காட்டிய வழியில் சென்று, பெருமானை வணங்கி, வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

தோடுடைய செவியன் (Thodudaiya Seviyan) is a reference to Lord Shiva, describing him as the one who wears an earring (தோடு) in his ear (செவி). This phrase is a part of the famous Tamil devotional hymn Thiruppaavai, sung by Manikkavacakar, one of the great Saivite saints. The line "தோடுடைய செவியன் விதான முழுதும்" is found in the Thiruvempavai section, a set of hymns from the Thiruvasagam.

This specific description highlights Shiva’s ascetic and divine nature, often depicting him adorned with simple yet symbolic ornaments. The earring (தோடு) represents his renunciation of material attachments, as well as his transcendence beyond worldly desires.

Symbolism of the phrase:

Lord Shiva as an ascetic: Wearing earrings is symbolic of Shiva's renunciation, embodying both simplicity and supreme detachment from worldly possessions.

Protector of devotees: By describing him as "Thodudaiya Seviyan," the hymn portrays Lord Shiva as a compassionate deity who listens to the prayers of his devotees.

Divine presence: The phrase also conveys the idea that Shiva's grace and presence extend throughout the cosmos, symbolizing his omnipresence.
In Tamil devotional literature, this description of Lord Shiva serves as a powerful reminder of his accessibility to all devotees, his humility as a god who resides among ascetics, and his ultimate power over the universe.



Share



Was this helpful?