பதிக எண்: 1.95 திருவாவடுதுறை குறிஞ்சி
முன்னுரை:
தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாவடுதுறை தலம் சென்ற திருஞான சம்பந்தர் அந்த தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து சில பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். திருவிடைமருதூர் தலத்தில் உள்ள திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் ஓடே கலன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடிய வண்ணம் சென்ற திருஞான சம்பந்தர், அந்த தலத்தினில் சில நாட்கள் தங்கியிருந்ததாக பெரிய புராணம் உணர்த்துகின்றது. இந்த தலத்தின் மீது, திருஞானசம்பந்தர் மொத்தம் ஆறு பதிகங்கள் அருளியுள்ளார். மேலும் இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய ஐந்து பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் கிடைத்துள்ளன. திருஞானசம்பந்தர் அருளிய ஐந்து பதிகங்களில் ஒன்றாகிய தொடொர் காதினன் என்று தொடங்கும் பதிகத்தினை நாம் இந்த பதிவினில் சிந்திக்கின்றோம்.
சேக்கிழார், பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில் விரவுவார் திருப்பதிகம் பல பாடி பெருமானது திருப்பாதங்களைத் தொழுத வண்ணம் திருஞானசம்பந்தர் மேலும் பல நாட்கள் இந்த தலத்தினில் தங்கி இருந்தார் என்று கூறுவதால், ஒடேகலன் என்று தொடங்கும் பதிகம் மற்றும் பொங்குநூல் மார்பினர் என்று தொடங்கும் பதிகம் ஆகிய இரண்டு பதிகங்களை தவிர்த்து, மற்றைய நான்கு பதிகங்களும் பின்னர் அருளப்பட்ட பதிகங்களாக கருதப் படுகின்றன. விரவுதல்= கலத்தல்; இங்கே தனது மனதினில் விருப்பம் உடையவராக பதிகம் பாடினார் என்று பொருள் கொள்ளவேண்டும்.
பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில்
விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண்மதியோடு
அரவு சடைக்கு அணிந்தவர் தம் தாள் போற்றி ஆர்வத்தால்
உரவு திருத்தொண்டருடன் பணிந்தேத்தி உறையுநாள்
இந்த பதிகத்தினை இருக்குக்குறள் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். குறள் என்றால் சிறியது என்று பொருள். சிறிய அடிகளைக் கொண்ட பாடல் என்பதை உணர்த்தும் வண்ணம் குறள் என்று அழைக்கப் படுகின்றது. ஒவ்வொரு அடியிலும் இரண்டே இரண்டு சீர்களைக் கொண்ட பாடல். மந்திரம் என்ற சொல், சொல் சுருக்கம் உள்ளது என்ற பொருளினைத் தரும். இருக்கு வேதத்தில் உள்ள மந்திரங்கள் அளவில் சிறியதாக இருக்கும் நிலை பற்றி இந்த பாடலையும் இருக்குக்குறள் என்று பெயரிட்டு சேக்கிழார் அழைத்தார் போலும். மந்திரங்கள், அவற்றை எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றும் வல்லமை கொண்டவை. அத்தகைய மந்திரங்கள் போன்று இந்த பதிகமும் அமைந்துள்ளது என்று தண்டபாணி தேசிகர் அவர்கள் கூறுவார்கள். முதல் திருமுறையில் உள்ள இந்த பதிகம் உட்பட மொத்தம் ஏழு பதிகங்கள் திருவிருக்குக்குறள் பதிகங்களாக கருதப் படுகின்றன. அரனை உள்குவீர் என்று தொடங்கும் பிரமபுரம் பதிகமும் (1.90), சித்தம் தெளிவீர்காள் என்று தொடங்கும் திருவாரூர்ப் பதிகமும் (1.91), வாசி தீரவே என்று தொடங்கும் திருவீழிமிழலைப் பதிகமும் (1.92) நின்று மலர் தூவி என்று தொடங்கும் திருமுதுகுன்றம் தலத்து பதிகமும் (1.93), நீலமா மிடற்று என்று தொடங்கும் திருவாலவாய்ப் பதிகமும்(1.94} தோடொர் காதினன் என்று தொடங்கும் இடைமருதுப் பதிகமும் (1.95), மன்னியூர் இறை என்று தொடங்கும் அன்னியூர் பதிகமும் (1.96) அத்தகைய பதிகங்கள் ஆகும். திருஞான சம்பந்தர் அருளிய பதிகங்கள் அனைத்துமே இருக்கு வேதத்தின் சாரமாக கருதப் படுவதாக சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் கூறுகின்றார். மேற்கண்ட பெரிய புராணப் பாடலில் சேக்கிழார் இருக்குக் குறள் துணை மலர் என்று குறிப்பிடுகின்றார். ஒன்றுக்கொன்று துணையாக உள்ள இரண்டு சீர்கள் கொண்ட அடிகள் என்பதை உணர்த்தும் வண்ணம் சேக்கிழார் இவ்வாறு கூறுகின்றார். எனவே இந்த பதிகங்கள் நான்கு அடிகள் கொண்ட பாடல்களே. மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள கொல்லி பண்ணுக்குரிய இரண்டு பதிகங்களும் (3.40 & 3.41) திருவிருக்குக்குறள் வகையைச் சார்ந்தவையாக கருதப் படுகின்றன.
திரு கி.வா.ஜா அவர்களும் தனது திருமுறை மலர்கள் என்ற நூலில் இரண்டு சீர்கள் கொண்டுள்ள அடிக்கு குறளடி என்ற பெயர் உள்ளது என்றும்,மந்திரத்தைப் போன்று சுருங்கிய உருவத்தில் அமைந்திருப்பதால் இந்த பதிகத்து பாடல்களை மந்திரம் என்று கூறுவார்கள் என்றும் கூறுகின்றார். மேலும் மந்திரத்தை இருக்கு என்றும் அழைப்பார்கள் என்றும் மந்திரமாக அமைந்துள்ள குறுகிய அடிகளைக் கொண்ட இப்பாடல்கள் திருவிருக்குக்குறள் என்று அழைக்கப் படுவதாக அவர் கூறுகின்றார். அடிகள் தோறும் நான்கு சீர்கள் கொண்டுள்ள திருமந்திரப் பாடல்கள், மந்திரமாகக் கருதப் படுவதை நாம் அறிவோம்.
தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தினைத் தனது முதல் பதிகமாக பாடிய திருஞானசம்பந்தர், அந்த பதிகத்தினைத் தோடு என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்குகின்றார். அந்த பதிகத்தினைப் போன்று இந்த பதிகமும் தோடு என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கப் பெறுகின்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. தோடு என்ற சொல்லுடன் திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகமும் (1.103.1) தொடங்குகின்றது. இந்த பாடலில், ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் குழையும் அணிந்தவனாக விளங்கும் பெருமான், பிரம கபாலத்தினை ஏந்திய வண்ணம் பலி ஏற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பல நாடுகளை உடையவனாக இருந்தாலும், சுடுகாட்டினில் நள்ளிருளில் பெருமான் நடனம் ஆடுகின்றார் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஏமம்=சுடுகாடு; ஏடு=அடுக்கடுக்காக இதழ்களை உடைய மலர், இங்கே தாமரை மலர் என்று பொருள் கொள்ளவேண்டும். தோடுலா மலர் தூவி என்று அப்பர் பிரான் சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகம் (4.65) தொடங்குகின்றது. ஆனால் இந்த பதிகத்தின் உள்ள தோடு என்ற சொல் பூவின் இதழ்களை குறிக்கின்றன. எனவே, திருஞானசம்பந்தர் அருளிய இந்த மூன்று பதிகங்கள் மட்டுமே, (1.01, 1.95, 1.103) தோடு என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்குகின்றன.
தோடுடையான் ஒரு காதில் தூய குழை தாழ
ஏடுடையான் தலை கலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள் ஏமம் நடமாடும்
காடுடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே
பாடல் 1:
தொடொர் காதினன்
பாடு மறையினன்
காடு பேணி நின்று
ஆடு மருதனே
விளக்கம்:
பெருமானை தோடு அணிந்தவன் என்று குறிப்பிட்டு மாதொரு பாகனாக அவன் விளங்கும் தன்மையை உணர்த்துவதில் அருளாளர்கள் மிகுந்த இன்பம் அடைகின்றனர். தோடு அணிந்தவன் என்றும், குழை அணிந்தவன் என்றும், தோடும் குழையும் அணிந்தவன் என்றும், கழல் அணிந்தவன் என்றும், சிலம்பு அணிந்தவன் என்றும், கழலும் சிலம்பும் அணிந்தவன் என்றும், தோலும் துகிலும் அணிந்தவன் என்றும், சடையும் குழலும் உடையவன் என்றும், பலவிதமாக,மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மையை குறிப்பிட்டு அருளாளர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். தோடு அணிந்தவனாக பெருமானை குறிப்பிடும் தேவாரப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். தோடும் குழையும் அணிந்தவன் என்று குறிப்பிடும் பாடல்களைத் தவிர்த்து, தோடு ஆபரணத்தை மட்டும் குறிப்பிடும் தேவாரப் பாடல்கள் மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. தான் அருளிய முதல் பாடலையே தோடுடைய செவியன் என்று தொடங்குவதன் மூலம், மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மையை பிரமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.1.1.)திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மேலும் இந்த பாடலில், பெருமான் செய்கின்ற ஐந்து தொழில்களையும் உணர்த்தி, சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றார். பிறக்கும் உயிர்கள் முதலில் அன்னையை உணர்கின்றன. அதன் பின்னரே, அன்னையால் சுட்டிக் காட்டப்பெறும் தந்தையை குழந்தைகள் உணருகின்றன என்பதால் அன்னையை உணர்த்தும் சொல்லாக தோடு என்பதை முதலில் வைத்து, அத்தனை உணர்த்தும் சொல்லாகிய செவியன் என்பதை அடுத்து வைத்துள்ள பாங்கு ரசிக்கத்தக்கது. ஆகாயத்திலிருந்து எழும் நாதமே, மற்ற பூதங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருப்பதால் அந்த நாதத்தினை உள்வாங்கும் செவி முதலில் கூறப்பட்டுள்ளது. நமது உடலின் உறுப்புகளில், ஓம் என்ற எழுத்தினை உணர்த்தும் வடிவத்துடன் இருப்பது செவி என்பதால் செவி முதலாக கூறப்பட்டுள்ளது என்று பலவகையாக அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். நமது அகமும் புறமும் தூய்மையாக இருத்தல் அவசியம் என்பதை உணர்த்தும் வண்ணம் தூவெண் என்று கூறப்படுகின்றது.
தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்
காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.39.2) திருஞானசம்பந்தர், பெருமானை சங்க வெண்தோடு சரிந்து இலங்க விளங்கும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஏற முடித்து=எடுத்திக் கட்டி, மேலே பொருந்த; சரிந்து=கீழே தாழ்ந்து; பாரிடம்=பூதம்; போதருமாறு= நிலை; இந்த பாடலில் உலகத்தவர் இடும் பிச்சையை ஏற்பதற்காக பெருமான் செல்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். இதுவும் இறைவன் உயிர்களுக்கு செய்யும் கருணைச் செயலே ஆகும். தங்களது மலங்களை பெருமான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இடுவதற்கு தயார் நிலையில் இருக்கும் பக்கவப்பட்ட உயிர்களை அணுகும் பெருமான், அத்தகைய உயிர்கள் அளிக்கும் பிச்சையை ஏற்றுக்கொண்டு, அந்த உயிர்களை மலமற்ற உயிர்களாக மாற்றி, அந்த உயிர்களுக்கு முக்தி நிலையை அளிக்கின்றான். இந்த செயலை விடவும் பெரிய உதவி எவராலும், உயிர்களுக்கு செய்யமுடியாது என்பதால், பெருமான் செய்கின்ற இந்த செயல் சிறந்த கருணைச் செயலாக கருதப் படுகின்றது. மேலும் சங்க வெண்தோடு இலங்க என்று குறிப்பிட்டு மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது.
சடைதனை தாழ்தலும் ஏற முடித்துச் சங்க வெண் தோடு சரிந்து இலங்கப்
புடை தனில் பாரிடம் சூழப் போதருமாறு இவர் போல்வார்
உடை தனில் நால் விரல் கோவண ஆடை உண்பது ஊரிடு பிச்சை வெள்ளை
விடைதனை ஊர்தி நயந்தார் வேட்கள நன்னகராரே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.49.2) திருஞானசம்பந்தர் பெருமானை தோடுடைய காதுடையன் என்று குறிப்பிடுகின்றார்.பீடு=பெருமை; ஏடு உடைய மேலுலகு=ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள ஏழுலகங்கள்; தொலையா=அழியாத, என்றும் குறையாத; அனைத்து உலகங்களையும் உடையவன் பெருமான் என்றும் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
தோடுடைய காதுடையன் தோலுடையன் தொலையாப்
பீடுடைய போர் விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே
திருவோத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.54.4) திருஞானசம்பந்தர் பெருமானை, தோடு அணிந்தவர் என்ற பொருள் பட, தோட்டீர் என்று அழைக்கின்றார். மிகவும் அரிதான அருமையான சொல்லாட்சி; கடுமையான விடம் கொண்ட ஐந்தலை நாகத்தை அடக்கியவர் என்று பெருமானின் ஆற்றலை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் அடியார்களின் வினைகளும் அடியார்களை விட்டுவிட்டு ஓடும் வண்ணம் அவற்றை விரட்டியடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் பெருமான் என்று இங்கே குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தர் மதுரை மாநகரில் சமணர்களின் ஆதிக்கத்தை முறியடித்ததால் அவர் மீது மிகுந்த கோபம் கொண்ட இந்த தலத்து சமணர்கள், அவர் மீது கொடிய பாம்பினை ஏவினார்கள் என்றும், அந்த பாம்பு திருஞான சம்பந்தரை நெருங்காத வண்ணம் பெருமான் அதனை துரத்தியடித்தார் என்றும் செவிவழிச் செய்தி, இந்த பாடலை ஆதாரமாகக் கொண்டு சொல்லப் படுகின்றது. ஆனால் பெரியபுராணத்தில் அத்தகைய நிகழ்ச்சி ஏதும் குறிப்பிடப் படவில்லை.
தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீரே அடியார் வினை
ஓட்டீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர்
நாட்டீரே அருள் நல்குமே
கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.62.2) திருஞானசம்பந்தர், பாம்பினைத் தோடாக அணிந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.படமெடுத்தாடும் பாம்பினைத் தனது உடலில் அணிகலனாக பல இடங்களில் பூண்டு கொண்டுள்ள பெருமான், ஆமை ஓட்டினையும் பன்றிக் கொம்பினையும் தனது மார்பினில் ஆபரணமாக அணிந்துள்ளான். அரவம் என்பதற்கு ஒசை என்ற பொருளும் உள்ளது. பாடரவம் என்று இன்னிசையுடன் பொருந்திய பாடல்களை குறிப்பிடும் திருஞான சம்பந்தர், அத்தகைய பாடல்களை தொடர்ந்து பாடி, இறைவனை பணிந்தெழும் அடியார்களின் கோணல் சிந்தனைகளை இறைவன் திருத்தி, அவர்களின் மனதினை செம்மைப் படுத்துவான் என்று கூறுகின்றார். கோடரவம்=கோணல்.
ஆடரவத்து அழகாமை அணிகேழல் கொம்பார்த்த
தோடரவத்து ஒரு காதன் துணைமலர் நற்சேவடிக்கே
பாடரவத்து இசை பயின்று பணிந்தெழுவார் தம் மனத்தில்
கோடரவம் தீர்க்கும் அவன் கோளிலி எம் பெருமானே
அச்சிறுபாக்கம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.77.6) திருஞானசம்பந்தர் பெருமானை, தோடொரு காதினில் பெய்தவன் என்று குறிப்பிடுகின்றார். அரங்கு=கூத்தாடும் இடம்; நிழல் திகழ்=ஒளியுடன் திகழும்; பெய்து=அணிந்து; வெய்தாய சுடலை=வெம்மை உலவும் சுடுகாடு;கங்குல்=இரவு; கழுது=பேய் கணங்கள்; பாரிடம்=பூத கணங்கள்; ஆடரவு=படமெடுத்தாடும் பாம்பு; தனது நீண்ட சடை மேல் இளமையான ஒற்றைப் பிறைச் சந்திரன் விளங்கவும், ஒளியுடன் திகழும் மழு ஆயுதத்தை ஏந்தியவராகவும், தனது உடல் முழுவதும் திருநீறு பூசியவராகவும், ஒரு காதினில் தோடு ஆபரணத்தை அணிந்தவராகவும், வெம்மையான காற்றலைகள் வீசும் சுடுகாட்டினை தான் நடனமாடும் அரங்கமாகக் கொண்டவரும், தோலாடை உடுத்தவரும், பேய் கணங்கள் மற்றும் பூத கணங்கள் சூழ்ந்து நின்று கைதொழுது புகழும் வண்ணம் இருப்பவரும், படமெடுத்தாடும் பாம்பினைத் தனது உடலெங்கும் சூட்டிக் கொண்டு நடனமாடுபவரும் ஆகிய பெருமான், அச்சிறுபாக்கம் தலத்தினில் ஆட்சிகொண்டார் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.
நீடுரும் சடை மேல் இளம் பிறை துலங்க நிழல் திகழ் மழுவொடு நீறு மெய் பூசித்
தொடொரு காதினில் பெய்து வெய்தாய சுடலையில் ஆடுவார் தோலுடையாகக்
காடரங்காக கங்குலும் பகலும் கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த
ஆடரவு ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே
மொழிமாற்றுப் பதிகத்தின் முதல் பாடலில் (1.117.1) திருஞானசம்பந்தர், பெருமானை, தோடணி அணிகுவர் சுந்தரக் காதினில் என்று குறிப்பிடுகின்றார். சிறு குழந்தைகள் இல்லத்தில் பொருளை இடம் மாற்றிவைத்து விளையாடுவது போன்று, இந்த பதிகத்தின் பாடல்களில் திருஞானசம்பந்தர் சொற்களை இடம் மாற்றி வைத்து விளையாடுகின்றார். இவ்வாறு இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ள சொற்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றை உரிய இடத்தினில் வைத்து அடியார்கள், பதிகங்களின் பொருளினை உணர்ந்து கொள்வதைக் கண்டு, ஆனந்தம் அடையும் பொருட்டு, இவ்வாறு விளையாட சிறிய குழந்தை விரும்பியது போலும். காடது பதி, கார் அரவம் அணிகலம், காலதினில் தூச்சிலம்பர், சுந்தரக் காதினில் தோடது அணிகுவர், வேட உருவமது அணிவர்,விசயற்கு வில்லும் கொடுப்பர் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். பீடு=மிகுந்த புகழ்; மாடம்=உயர்ந்த மாட மாளிகை;பதி=வாழும் இடம்; உமையம்மை அணியும் தோடும் சிலம்பும் குறிப்பிடப்பட்டு மாதொரு பாகனாகத் திகழும் இறைவனின் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தோடு அணியும் காது சுந்தரக்காது என்றும் சிலம்பு தூய சிலம்பு என்று அடைமொழி கொடுக்கப்பட்டு சிறப்பிடப்பட்டுள்ளதை உணரலாம்.
காடது அணிகலம் கார் அரவம் பதி காலதனில்
தோடது அணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர்
வேடது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர்
பீடது அணிமணி மாடப் பிரபுரத்து அரரே
பிரமபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.65.5) தோடு ஆபரணத்தைத் தனது செவியினில் அணிந்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். யானையின் துதிக்கையை, அசைந்து ஆடும் நீண்ட கை என்று இங்கே குறிப்பிடுகின்றார்.ஒள்ளழல்=ஒளி பொருந்திய தீச்சுடர்; செவிக்கிலர் பிடித்திலர் என்று எதிர்மறையாக குறிப்பிட்டாலும், அதனை எதிர்மறைச் சொல்லாக பொருள் கொள்ளாமல், உடன்பாட்டு வகையில் பொருள் கொள்ளவேண்டும்.
தோடு செவிக்கிலர் போலும் சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தடக்கை வலிய யானை உரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர் போலும்
பீடு மிகுத்தெழு செல்வப் பிரமபுரம் அமர்ந்தாரே
கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.80.5) திருஞானசம்பந்தர், விரி தோடு ஒரு காதினில் இலங்கும் வண்ணம் பெருமான் வீற்றிருக்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். எருது என்ற சொல் எருத்து என்று விரிந்தது. விரிதோடு=எங்கும் பரந்து விரிந்து ஒளி வீசும் தோடு; பிள்ளை மதியம்=இளமையான, வளராத, ஒற்றைப் பிறைச் சந்திரன்; தக்கனின் சாபத்தினால் அழியும் நிலையில் இருந்த சந்திரன், பெருமானிடம் சரண் அடைந்த பின்னர், அழியும் நிலையிலிருந்து மாறி வளரத் தொடங்கிய தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. துள்ளு மான்மறி=துள்ளும் இயல்பினை உடைய மான் கன்று; எப்போதும் துள்ளி விளையாடும் இயல்பினை உடைய மான்கன்று பெருமானின் கையினில் நிலையாக தங்கி நிற்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. தாருக வனத்து முனிவர்கள், தாங்கள் வளர்த்த வேள்வியிலிருந்து எழுப்பி சிவபெருமான் மீது ஏவிய, வெறி கொண்ட மான்கன்றின் தன்மை,அமைதியான மான் கன்றாக பெருமானால் மாற்றப்பட்டு, பெருமானால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது. பெருமானை வந்தடைந்த பின்னர், அந்த மான்கன்றுக்கு பெருமானை விட்டு பிரிவதற்கு மனமில்லை போலும். அதனால் தான், துள்ளி விளையாடும் தனது இயல்பிலிருந்து மாறி, பெருமானை விட்டு என்றும் பிரியாமல் இணைந்து நிற்கின்றது. மேலும் துள்ளி விளையாடும் மானின் தன்மையை மாற்றிய பெருமான் ஒருவரே, அலைபாயும் தன்மை உடைய நமது மனதினையும் ஒரே நிலையில், பெருமானின் நினைவுகளுடன் ஒன்றி நிற்கும் தன்மை உடையதாக மாற்றும் வல்லமை உடையவர் என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. எனவே நமது மனதினை ஒரு நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும் என்றால் அதற்கு இறைவனின் அருள் மிகவும் அவசியம்.
வெள்ளை எருத்தின் மிசையார் விரிதோடு ஒரு காதில் இலங்கத்
துள்ளும் இளமான் மறியார் சுடர் பொற்சடைகள் துளங்கக்
கள்ள நகு வெண்டலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிள்ளை மதியம் உடையார் அவர் எம் பெருமான் அடிகளே
திருவாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.111.6) திருஞானசம்பந்தர், இறைவனின் திருக்கோலத்தை உணர்த்துகையில் தோடு அணிந்தவர் என்று குறிப்பிடுகின்றார். திருமறைகாட்டிலிருந்து வாய்மூர் தலம் சென்ற அப்பர் பிரானை பின் தொடர்ந்து, திருஞான சம்பந்தரும் வாய்மூர் தலம் செல்கின்றார். ஆங்கே அவர்கள் இருவருக்கும் பெருமான், தனது நடனக் காட்சியை காட்டி அருள் புரிய, அந்த காட்சியை அப்பர் பிரானுக்கு சுட்டிக் காட்டி, திருஞானசம்பந்தர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பாடல் இந்த பாடல். இவராணீர் என்ற சொல்லுக்கு இவர் ஆள் நீர் என்று சொற்களைப் பிரித்து செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் விளக்கம் அளிக்கின்றார்; பெருமானாகிய இவர், நம்மை ஆட்கொண்டு அருள் புரியும் தன்மை (நீர்மை)உடையவர் என்ற விளக்கம் பொருத்தமாகவே உள்ளது. வாய்மூர் தலத்தில் பெருமான் தனது நடனக் காட்சியைக் காட்ட, அதனைக் கண்ணுற்ற திருஞானசம்பந்தர் தன்னருகே இருந்த அப்பர் பிரானிடம் இவர் காணீர் (பெருமானின் நடனக் கோலத்தை காண்பீராக) என்று சொன்னதாக பெரிய புராணம் குறிப்பிடுவதால், இவர் காணீர் என்று இருந்த தொடர் திரிந்து இவராணீர் என்று மாறியதோ என்று சிவக்கவிமணி திரு C.K. சுப்ரமணிய முதலியார் அவர்கள் சிந்திக்கின்றார். செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் தருகின்ற விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளது. அல்லிய மலர்=அடுக்கடுக்காக இதழ்கள் கொண்டுள்ள மலர்கள்; தான் ஆடுகின்ற நடனத்துடன், படைத்தல் முதலான ஐந்து தொழில்கள் செய்யும் ஆற்றல் உடையவர் பெருமான் என்பதும் இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. ஐந்து தொழில்களையும் விளையாட்டு போன்று பெருமான் செய்வதால், களைப்பு அடையாமல் எந்த விதமான சிரமமும் இல்லாமல் செய்யும் தன்மை, எழிலொடு தொழிலவை இசைய வல்லார் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.
அல்லிய மலர் புல்கு விரிகுழலார் கழலிணை அடிநிழல் அவை பரவ
எல்லியம் போது கொண்டு எரியேந்தி எழிலொடு தொழிலவை இசைய வல்லார்
சொல்லிய அருமறை இசை பாடிச் சூடிள மதியினர் தோடு பெய்து
வல்லியந் தோடு உடுத்து இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
திருப்புனவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.11.4) திருஞானசம்பந்தர், இறைவனை சங்கவெண் தோடணி காதினன் என்று குறிப்பிடுகினறார். அங்கை இலங்கு கழல்= உள்ளங்கையில் தோன்றி விளங்கும் வண்ணம் தீச்சுடரை ஏந்தியவன்; பெருமான் அணிந்திருக்கும் தோடு வெண்சங்கினால் அமைந்த தோடு என்று கூறுகின்றார். பொங்கரவம்=சினத்துடன் சீறும் பாம்பு; பைங்கண்=பசுமையான கண்களை உடைய;பரமேட்டி=மேலானவர்களுக்கும் மேலானவன்;
சங்க வெண்தோடணி காதினானும் சடை தாழவே
அங்கை இலங்கு கழல் ஏந்தினானும் அழகாகவே
பொங்கு அரவம் அணி மார்பினானும் புனவாயிலில்
பைங்கண் வெள்ளேற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே
தோடுடைய செவியனாக பெருமானை குறிப்பிட்டுத் தனது முதல் பதிகத்தின் முதல் பாடலை தொடங்கிய சம்பந்தர், தோட்டினை பெருமானின் அணிகலனாக குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றார் போலும், நாற்பதுக்கும் மேலான பாடல்களில் தோடு அணிகலன் குறிப்பிடப் படுகின்றது.மேலும் பல பாடல்களை தோடு என்ற சொல்லுடன் தொடங்குகின்றார். கோதை=அழகிய கூந்தலை உடையவள்; ஏடு=ஒன்றன் மேல் ஒன்று அழகாக அமைந்துள்ள பூவின் இதழ்கள்; துதைந்த=படிந்துள்ள;
தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடமர் கோதையோடு இனிது அமர்விடம்
காடமர் மா கரி கதறப் போர்த்ததோர்
வேடமது உடை அணல் விசயமங்கையே
பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.56.1) திருஞானசம்பந்தர், பெருமானை வெண்தோடணி காதினன் என்று குறிப்பிடுகின்றார். ஆலகால விடத்தினால் விளைந்த ஆபத்து போன்று பல இடர்களிலிருந்து தங்களை காத்த இறைவனை, வானோர்கள்,பெருமானைத் தங்களது தந்தையாக கருதி வழிபடுகின்றனர் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். காலத்தன்று என்று பண்டைய நாளில் இறைவன் வேதங்கள் அருளிய தன்மையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. மன்னு=நிலையாக பொருந்திய;
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுதேத்த நின்ற
கறையணி கண்டன் வெண் தோடணி காதினன் காலத்தன்று
மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னிப்
பிறையணி செஞ்சடையான் பிரமாபுரம் பேணுமினே
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.57.1) சசி தங்கிய சங்க வெண் தோடு உடையவன் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். சசி=சந்திரன்; சந்திரன் போன்று வெண்மை நிறத்தினில் உடைய தோடு என்று கூறுகின்றார். வெண்மழு என்று பெருமானின் கையில் இருக்கும் மழு ஆயுதத்தை குறிப்பிடுகின்றார். பெருமானுக்கு பகைவர்கள் எவரும் இல்லாததால், பெருமான் தனது கையில் இருக்கும் மழு ஆயுதத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. எனவே அவரது மழு ஆயுதம், இரத்தக்கறை படியாமல் வெண்மை நிறத்துடன் காணப்படுகின்றது என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். கரந்தை என்றால் விபூதிப் பச்சிலை என்று பொருள். எந்த விதமான குற்றமும் இல்லாமல் நிறைவாக இறைவன் இருக்கும் நிலை ஊனமில்லி என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.
விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண்மழுவாள்
படையவன் பாய்புலித் தோல் உடை கோவணம் பல்கரந்தை
சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்க வெண்தோடு
உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.57.6) திருஞானசம்பந்தர், அழகிய பொற்றோடு தனது காதினில் திகழ்ந்து விளங்கும் வண்ணம் அணிந்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கமை=பொறுமை; பெருமான் தனது தலையில் கொன்றை மலர்கள், பிறைச் சந்திரன், கங்கை நதி, பாம்பு, தலைமாலை ஆகியவற்றைத் தாங்கி இருப்பதால், சுமையாக அந்த பொருட்களை பெருமான் சுமந்து கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றார்.அமையொடு=அமைதியான அழகுடன்; பெருமானின் திரண்ட தோளின் அருகே தோடு ஆபரணம் திகழ்ந்து விளங்குகின்றது.
கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்பச்
சுமையொடு மேலும் வைத்தான் விரிகொன்றையும் சோமனையும்
அமையொடு நீண்ட திண்தோள் அழகாய பொற்றோடு இலங்க
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே
வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.4) திருஞானசம்பந்தர், செவியினில் தோட்டினை உடையவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இசை=புகழ்; காடு=சுடுகாடு; காடர்=சுடுகாட்டினில் உறைபவர்; கரி=ஆண் யானை; கரிகாலர்=கரிக்கு காலனாக விளங்கியவர்; அனல் மெய்யர்=சோதி வடிவமாக உள்ளவர்; செய்யர்=சிவந்த திருமேனியை உடையவர்; கீளர்= அரைஞாண் கயிறு உடையவர்; சரி=தொங்கும்; தொல்லை நகர்=தொன்மை வாய்ந்த நகர்; ஆவணவர் என்ற சொல்லுக்கு இரண்டு விதமாக பொருள் சொல்லப் படுகின்றது. சிவக்கவிமணியார், உயிர்களை ஆவணம் கொண்டு தனக்கு அடிமையாக கொண்டுள்ள பெருமான் என்று விளக்கம் அளிக்கின்றார். தருமபுர ஆதீனத்து குறிப்பு, ஆ வண்ணம் அவர் என்று பிரித்து,பசுவினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள பெருமான் என்று விளக்கத்தை உணர்த்துகின்றது. எருது என்பதற்கு பதிலாக, பெருமானின் வாகனம் பசு என்று திணை மயக்கத்துடன் கையாளப் பட்டுள்ளது, பசுவேறி என்று சில திருமுறைப் பாடல்கள் இறைவனை குறிப்பிடுகின்றன.
காடர் கரிகாலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில்
தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர் தான்
பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார்
வேடம் ஒளியான பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே
திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.36.8) அப்பர் பிரான், பெருமானை தோடுடைக் காதர் என்று அழைக்கின்றார்.ஏற்றனார்=எருதினை வாகனமாக உடையவர்; காயம்= ஆகாயம் என்ற சொல் காயம் என்று குறுகியது. சூரியனும் சந்திரனும் உலாவி காய்ந்து ஒளி வீசுவதால் காயம் என்று அழைக்கப் பட்டதாக பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. இரும் பொழில்=பெரிய சோலைகள் சூழ்ந்த உலகம்; பாற்றுதல்=நீக்குதல்,விலக்குதல்: காருரி=கரிய யானையின் தோல்: தோற்றனார் என்ற சொல்லுக்கு தோற்றம் அளித்தவர் என்று பொருள் கொண்டு, பாற்கடலிலிருந்து வெளிவந்த நஞ்சினை தனது கழுத்தினில் தேக்கிய தோற்றத்துடன் அனைவர்க்கும் நீலகண்டராக காட்சி அளித்தவர் பெருமான், என்ற விளக்கம் அளிக்கப் படுகின்றது.
கால் தனால் காலன் காய்ந்து காருரி போர்த்த ஈசர்
தோற்றனார் கடலுள் நஞ்சைத் தோடுடைக் காதற் சோதி
ஏற்றனார் இள வெண் திங்கள் இரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே
சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.33.5) அப்பர் பிரான், பெருமானை ஒரு காதினில் வெண் தோடு பொருந்தி விளங்குமாறு அணிந்தவர் என்று குறிப்பிடுகின்றார். பணிவிடையின் தன்மைகளின் வரையறை ஏதுமின்றி நாம் இறைவனுக்கு பணி செய்ய வேண்டும் என்பதை இங்கே நீட்டி என்ற சொல் மூலம் அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். ஆட்டினாய் என்று இறைவன் நம்மை ஆட்டுவிப்பதை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அவன் ஆட்டுவித்தால் எவரால் ஆடாது இருக்க முடியும். நம்மை ஆட்டுவிப்பதும், அடக்குவதும், ஓட்டுவதும், உருகவைப்பதும்,பாட வைப்பதும், அவனைப் பணிய வைப்பதும் செய்யும் அவன், தனது திருவருளை நமக்கு உணர்த்தவும் செய்கின்றான்
ஆட்டினாய் அடியேன் வினை ஆயின
ஓட்டினாய் ஒரு காதில் இலங்கு வெண்
தோட்டினாய் என்று சோற்றுத் துறையர்க்கே
நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே
புறம்பயம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.13.9) அப்பர் பிரான், வெண்தோடு பெய்து என்று பெருமான் தனது காதினில் தோடணிந்த தன்மையை குறிப்பிடுகின்றார். பெய்து என்றால் அணிந்து கொண்டு என்று பொருள். விரையேறு=நறுமணம் கமழும்; திரை=அலைகள், இங்கே அலைகள் உடைய கங்கை நதி; அரை=இடை; மேகலை=பெண்கள் இடுப்பினில் அணியும் ஆபரணம்; ஆரிடம்=மற்றவர் அணுகுதற்கு மிகவும் அரிதான இடம். சுடுகாடு;புரை=உயர்வு; இந்த பாடல் அகத்துறை வகையில் அமைந்த பாடல். பெருமானை பொதுவாக சுடுகாட்டினில் நடனம் ஆடிக் கொண்டிருப்பவர் என்று பலரும் சொல்வதால், அங்கு சென்றால், தனது உள்ளத்தை கொள்ளை கொண்ட பெருமானை காணலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்த அப்பர் நாயகி, அங்கே சென்ற போதிலும், பெருமானைத் தான் காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்த நிலையினை வருத்தத்துடன் தெரிவிக்கின்றாள்.
விரையேறு நீறணிந்து ஓர் ஆமை பூண்டு வெண்தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தித்
திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத் திசை விளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரை ஏறு மேகலையாள் பாகமாக ஆரிடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன்
புரையேறு தாம் ஏறிப் பூதம் சூழப் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.20.4) அப்பர் பிரான், பெருமானை, ஒரு காதினில் தோட்டினை பொருத்திக் கொண்டவன் என்று குறிப்பிடுகின்றார். சுட்டங்கம்= இறந்ததால் சுட்டு எரிக்கப்பட்ட உடல்கள்; தனது உடல் முழுவதும் சாம்பல் பூசியவனாக இருந்தாலும் பெருமானின் அழகு சிறிதும் குறையவில்லை என்பதை உணர்த்தும் முகமாக, சுந்தரன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். விடு தோடு=ஒளி விடும் தோடு என்றும் தொங்கும் தோடு என்றும் இரண்டு விதமாக பொருள் கூறப்படுகின்றது. பட்டங்கம்=இறந்து பட்ட உடலின் எலும்புகள் மற்றும் தலைகள்; கட்டங்கம் என்ற படையினை கையில் பற்றியவனும், கையில் கங்கணம் ஏந்தியவனும், ஒளி வீசும் தோட்டினை காதினில் அணிந்தவனும், எரிக்கப்பட்ட உடல்களின் சாம்பலைத் தனது உடல் முழுவதும் நிறைவாக பூசியவனும், உடலில் சாம்பல் பூசிய பின்னரும் அழகனாக காட்சி தருபவனும், கையினில் சூலம் ஏந்தியவனும், இறந்து பட்ட உடல்களின் அங்கங்களாகிய எலும்புகள் மற்றும் தலை ஆகியவற்றை மாலையாக நிறைவாக அணிந்தவனும், பூத கணங்களுடன் கூடி பரந்த சுடுகாட்டினில் நடனம் ஆடுபவனும், திருநள்ளாறு தலத்தில் உறைவானும் ஆகிய இறைவனை அடியேன் தியானித்து வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
கட்டங்கம் ஒன்று கையில் ஏந்திக் கங்கணமும் காதில் விடு தோடும் இட்டுச்
சுட்டங்கம் கொண்டு துதைய பூசிச் சுந்தரனாய்ச் சூலம் கை ஏந்தினானைப்
பட்டங்க மாலை நிறையச் சூடிப் பல்கணமும் தாமும் பரந்த காட்டில்
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே
ஆமயம் தீர்த்து என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (6.96.2) சுரி சங்கின் தோடு கொண்டவர் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வரை=மலை; வரை மார்பு=மலை போன்று பரந்தும் வலிமையுடனும் காணப்படும் மார்பு; முயங்க=பொருந்த; முது கேழல்=பெரிய பன்றி,பண்டைய நாளில் நடந்த நிகழ்ச்சி என்பதை குறிப்பிடும் வண்ணம் முதுகேழல் என்று கூறுகின்றார்; வராக அவதாரம் நிகழ்ந்தது க்ருத யுகத்தில். நாம் வாழ்வது கலி யுகத்தில். இடையில் த்ரேதா யுகம் மற்றும் துவாபர யுகம் ஆகிய இரண்டு யுகங்கள் கழிந்தன. இந்த இரண்டு யுகங்களின் மொத்த வருடங்கள் 21,60,000. க்ருத யுகத்தின் முதல் பாதியில் வராக அவதாரம் நிகழ்ந்தது என்பதால், நாம் மேலும் 8,00,000 வருடங்களை சேர்த்துக் கொண்டால் மொத்தம்29.60 இலட்சம் வருடங்கள் வருகின்றன. எனவே பண்டைய நாளில் நடந்தேறிய நிகழ்ச்சி என்பதை உணர்த்தும் வண்ணம் முது கேழல் என்று மிகவும் பொருத்தமாக குறிப்பிடுகின்றார். மருப்பு=விலங்கின் கொம்பு; பூண்=ஆபரணம்; சுரி சங்கு=குவிந்த முகப்பினை உடைய சங்கு; துப்புரவார்=தூய்மை நிறைந்த, ஒளிவீசும் கிரீடங்ளை தங்களது தலையில் தாங்கிய தேவர்கள் பெருமானை வழிபட்டமை இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. செப்பு= அழகிய கிண்ணம்; அப்பலி=பண்டைய நாளில் தாருக வனத்து இல்லத்தரசிகள் அளித்த பிச்சை;
உ
திருச்சிற்றம்பலம்
தோடொர் காதினன்

முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார் முதுகேழல் முளை மருப்பும் கொண்டார் பூணாச்
செப்புருவ முலை மலையாள் பாகம் கொண்டார் செம்மேனி வெண்ணீறு திகழக்கொண்டார்
துப்புரவார் சுரிசங்கின் தோடுகொண்டார் சுடர்முடி சூழ்ந்து அடி அமரர்தொழவும் கொண்டார்
அப்பலி கொண்டு ஆயிழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆளுடைய அடிகளாரே
பெருமானை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்த அப்பர் பிரான், தனது கனவிலும் பெருமான் தோன்றியதாக குறிப்பிட்டு, தான் கண்ட காட்சியை எடுத்துரைக்கும் பாடல் அண்டம் கடந்த சுவடும் உண்டோ என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலாகும் (6.97.6). நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் என்று திருஞானசம்பந்தர் கூறுவது போன்று அப்பர் பிரானும் வாழ்ந்தமை இந்த பாடலில் வெளிப்படுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், தனது நெற்றியில் பட்டமும் காதினில் தோடும் பூண்டவராக பெருமானை கண்டதாக குறிப்பிடுகின்றார்.பார் திகழ, பெருமான் பலி ஏற்பதாக இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பார் திகழ என்பதற்கு, சேக்கிழார் உலகுய்ய பெருமான் பலி ஏற்கின்றார் என்று கூறுவது போன்று, உலகினில் உள்ள பக்குவப்பட்ட உயிர்கள் முக்தி உலகம் சென்றடைந்து இன்பமுடன் வாழும் பொருட்டு பெருமான் பலி ஏற்கின்றார் என்று பொருள் கொள்ளவேண்டும்.
பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன் பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டி நின்று இலயங்கள் ஆடக் கண்டேன் குழை காதிற் பிறைச் சென்னி இலஙகக் கண்டேன்
கட்டங்கக் கொடி திண்டோள் ஆடக் கண்டேன் கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவாலவாயிற் கண்டேன் தேவனைக் கனவில் நான் கண்டவாறே
திருநீடூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.56.4) சுந்தரர், பெருமானை, தனது காதினில் தோடு இட்டவன் என்று குறிப்பிடுகின்றார்.தூய்மையான சிவநெறியாக உள்ள பெருமான் என்று இந்த பாடலில் சுந்தரர் குறிப்பிடுகின்றார். உயிர்கள் பிறப்பதற்கும் இறப்பதற்கும் காரணமாக உள்ள பெருமான் என்றும் இந்த பாடலில் சுந்தரர் உணர்த்துகின்றார். வேடனாய பிரான் என்று வேடனாக தோன்றி அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் அருளிச் செய்ததை இங்கே கூறுகின்றார்.
தோடு காதிடு தூநெறியானைத் தோற்றமும் துறப்பும் ஆயவன் தன்னைப்
பாடு மாமறை பாடவல்லானைப் பைம்பொழில் குயில் கூவிட மாடே
ஆடு மாமயில் அன்னமொடாட அலைபுனல் கழனித் திருநிடூர்
வேடனாய பிரானவன் தன்னை விரும்பி நாம் பணியா விடலாமெ
தில்லைச் சிற்றம்பலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.22.8) திருவாலியமுதனார், பெருமானின் திருக்கோலம், தோடணிந்த திருக்கோலம்,தன்னை ஆட்கொண்டதாக கூறுகின்றார். செய்ய=சிவந்த; கோடு=வரிகள்; சிவந்த கோடுகள் கொண்ட தாமரை மலர்கள்; செழித்து வளர்ந்த தாமரை மலர்களில் செம்மை நிறமுடைய கோடுகளை நாம் காணலாம். ஐய=அழகிய; மாத்திரை= ஓலை போன்று சுருண்ட அணிகலன்; சுருள் தோடு என்பது தோடு ஆபரணத்தில் ஒரு வகை; பெருமானின் செவ்வாயினில் தோன்றும் முறுவலும், காதினில் பொலிந்து தோன்றும் சுருள் தோடும் தன்னை ஆட்கொண்டன என்று குறிப்பிடும், திருவாலியமுதனார், உலகம் உய்யும் பொருட்டு நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். பெருமான் ஆடுகின்ற நடனம், ஊன நடனமாக,திகழ்ந்து உயிர்கள் தங்களது வினைகளின் ஒரு பகுதியைக் கழித்துக் கொள்வதற்கு பிறப்பினை அளித்தும், காத்தும், வினைகளின் ஒரு பகுதியை பொருத்தி அந்த வினைகளின் விளைவால், நன்மை தீமைகளை அனுபவித்துக் கழிப்பதற்கும் வழி வகுக்கின்றன. அதே நடனம் ஞான நடனமாக விளங்கி பக்குவப்பட்ட ஆன்மாக்களின் வினைகளைச் சுட்டெரித்து அவை முக்தி நிலை அடையவும் அருள் புரிவதால், உலகம் உய்ய பெருமான் நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார்.
செய்ய கோடுடன் கமலமாமலர் சூழ்தரு தில்லை மாமறையோர்கள் தாந்தொழ
வையம் உய்ய நின்று மகிழ்ந்தாடு சிற்றம்பலவன்
செய்ய வாயின் முறுவலும் திகழும் திருக்காதும் காதினின் மாத்திரைகளோடு
ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண்டனவே
பொழிப்புரை:
தனது இடது காதினில் தோடு ஆபரணத்தை அணிந்தவனும், நான்மறைகளை பாடுபவனும், சுடுகாட்டினை விரும்பி அதனில் உறைபவனும், சுடுகாட்டினில் நடனம் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான், இடைமருது தலத்தினில் பொருந்தி நடனம் ஆடுகின்றான்.
பாடல் 2:
கருதார் புரம் எய்வர்
எருதே இனிதூர்வர்
மருதே இடமாகும்
விருதாம் வினை தீர்ப்பே
விளக்கம்:
பதிகத்தின் முதல் பாடலில், பெருமானின் அடையாளங்களையும், பெருமான் இருக்கும் இடமாகிய திருவிடைமருதூர் தலத்தையும் உணர்த்திய,திருஞானசம்பந்தர் அந்த தலம் சென்று இறைவனை வழிபடும் அடியார்களின் வினைகள் நீங்கிவிடும் என்று, பெருமானை வழிபடுவதால் நாம் அடைகின்ற பலனை உணர்த்துகின்றார். விருது-பெருமை; தீர்ப்பாம்=தீர்தலை உடைய தன்மை; கருதார்=சிவநெறியை கருத்தில் கொள்ளாத திரிபுரத்து அரக்கர்கள்; ஒரு காலத்தில் திரிபுரத்து அரக்கர்களும் முதலில் சிவபிரானின் அடியார்களாக விளங்கினார்கள். திருமாலும் நாரதரும், திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த இடத்திற்கு சென்று அவர்களது புத்தியை மயக்கி புத்தர்களாக மாற்றினார் என்று புராணங்கள் கூறுகின்றன. புத்தனாக சென்ற திருமாலின் உபதேசத்தால் திரிபுரத்து அரக்கர்கள் மனம் மாறி, வேதநெறியில் இருந்து வழுவியும் சிவபிரானை நிந்தித்தும் வாழத் தொடங்கினார்கள். அந்த மாற்றம் தான் சிவபெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு செல்லத் தூண்டியது. திருமால் சென்று திரிபுரத்து அரக்கர்களின் மனதினை மாற்றிய செய்தி தேவாரப் பாடல்களிலும் சொல்லப் பட்டுள்ளது. சமணர்கள் எவரும் திரிபுரத்து அரக்கர்களின் புத்தியை பேதலிக்கச் செய்யவில்லை; எனினும் கொள்கையில் அவர்களுக்கும் புத்தர்களுக்கும் இருந்த ஒற்றுமை (வேதநெறிகளை இகழ்வது சிவபெருமானை நிந்திப்பது ஆகிய கொள்கைகள்) காரணமாக சமணர்கள் பற்றிய குறிப்பும் இந்த பாடலில் காணப்படுகின்றது என்று ஆங்கீரச சர்மா அவர்கள் தனது உரையினில் விளக்கம் அளிக்கின்றார்.
திருமால் செய்த மாயத்தால் திரிபுரத்தில் வாழ்ந்த அரக்கர்கள் நீசர்களாக மாறினார் என்று நீலக்குடி பதிகத்தின் பாடலில் (5.72.5) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முதலில் சிவபிரானை வணங்கி, வேத நெறிக்கு மதிப்பு கொடுத்துக் கொண்டு வாழ்ந்து வந்த காரணத்தால் சிவபிரான் அவர்களுடன் சண்டை செய்ய விரும்பவில்லை. திருமாலும் நாரதரும் சேர்ந்து செய்த சூழ்ச்சியால், அவர்கள் மனம் பேதலித்து, புத்த சமயத்தைச் சார்ந்து சிவபிரானை நிந்திக்க தொடங்கினர். இதனால் சிவபிரான் அவர்களை அழிக்க முற்படுகின்றார்.
நேச நீலக்குடி அரனே எனா
நீசராய் நெடுமால் செய்த மாயத்தால்
ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய்
நாசமானார் திரிபுர நாதரே
திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் முதலில் வேதநெறியை கடைப்பிடித்து சிவபிரானை தொழுது வாழ்ந்ததாகவும், அதனால் அவர்களுடன் போர் செய்ய சிவபிரான் உடன்படாத நிலையும், திருமால் வேதியர் உருவம் கொண்டு திரிபுரங்கள் சென்று அரக்கர்களின் மனதில் மயக்கத்தை தோற்றுவித்து அவர்களின் சிந்தனையைக் கெடுத்து வேதநெறியிலிருந்து வழுவி சிவ நிந்தனை செய்யும் அளவுக்கு அவர்களை கெடுத்ததுவும், பின்னர் சிவபிரான் அவர்களை அழித்த வரலாறும் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வரலாற்றில் திருமாலின் பங்கு, நம்மாழ்வாரால் திருவாய்மொழி பாசுரத்தில் (5.10.4)கூறப்பட்டுள்ளது. இந்த பாசுரத்தில், திரிபுரத்து அரக்கர்களை அழிக்கின்ற நோக்கத்தினில் சிவனும் திருமாலும் வேறு அல்லாமல் ஒன்றாக விளங்கி செயல்பட்டனர் என்று நம்மாழ்வார் கூறுவதையும் காணலாம்
கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்கவாறும் கலந்து அசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னுடை வேறு அலாமை விளங்க நின்றதும்
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே
பொழிப்புரை:
அன்பின் வழியாகிய சிவநெறியின் உயர்ந்த தன்மையை கருதாமல், சிவநெறியை பின்பற்றாமல் அனைவர்க்கும் பகைவர்களாக விளங்கிய திருபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்த சிவபெருமான், எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் உலவுகின்றார். இடைமருது தலத்தினைத் தான் உறைகின்ற இடமாகக் கொண்டுள்ள பெருமானைத் தொழுது வணங்கும் அடியார்களின் வினைகள் முற்றிலும் தேய்ந்துவிடும், மேலும் அத்தகைய அடியார்கள் சிறந்த புகழினையும் அடைவார்கள்.
பாடல் 3:
எண்ணும் அடியர்கள்
அண்ணல் மருதரைப்
பண்ணின் மொழி சொல்ல
விண்ணும் தமதாமே
விளக்கம்:
அண்ணல்=பெருமையில் சிறந்த தலைவர்: பண்ணின் மொழி=பண்ணுடன் இணைந்த பாடல்கள்; தங்களது மனதால் இறைவனை சிந்தித்து, வாயால் பாடல்கள் பாடும் அடியார்கள் என்ற குறிப்பு மூலம், தங்களது உடலால் பெருமானை அடியார்கள் வழிபடுவதை இங்கே குறிப்பால் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். இவ்வாறு மனம் மொழி மெய்களால் இறைவனை வழிபடவேண்டிய தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் இரண்டாவது பாடல் மூலம் பெருமானை வழிபடுமாறு நம்மைத் தூண்டும் திருஞானசம்பந்தர், பெருமானை புகழ்ந்து பாடல்கள் பாடி பெருமானை வழிபடலாம் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்.
பொழிப்புரை:
தங்களது மனதினால் இறைவனை நினைத்து வழிபட்டு, பெருமை மிகுந்த சிறந்த தலைவராகிய சிவபெருமானை, இடைமருது தலத்தினில் உறைகின்ற மருதூர் நாதரை, இன்னிசையுடன் இணைந்த தோத்திரங்களும் தேவார திருவாசகப் பாடல்களும் பாடி இறைவனைப் போற்றிப் புகழும் அடியார்களுக்கு,மறுமையில் விண்ணுலகமும் அவர்களது வசமாக மாறிவிடும்.
பாடல் 4:
விரியார் சடைமேனி
எரியார் மருதரைத்
தரியாது ஏத்துவார்
பெரியார் உலகிலே
விளக்கம்:
தரியாது=தயக்கம் ஏதுமின்றி தாமதம் செய்யாமலும்; எரி=மழுப்படை; இரண்டாவது மற்றும் மூன்றாவது பாடல்களில் குறிப்பிடப்பட்ட வண்ணம் பெருமானை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைய வேண்டும் என்று முடிவு செய்த பின்னர், காலதாமதம் செய்யாமலும், தயக்கம் கொள்ளாமலும் உடனே வழிபடத் தொடங்கவேண்டும் என்ற அறிவுரை இங்கே சொல்லப் படுகின்றது.
பொழிப்புரை:
விரிந்த சடையினை உடையவரும், மழுப்படையை ஏந்தியவரும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் வண்ணத்தில் திருமேனி உடையவரும் ஆகிய மருதூர் பெருமானை, தயக்கம் ஏதுமின்றி தாமதம் செய்யாமல் இன்றே புகழ்ந்து போற்றும் அடியார்கள், அனைவரிலும் சிறந்தவர்களாக உலகத்தவரால் மதிக்கப் படுவார்கள்.
பாடல் 5:
பந்த விடையேறும்
எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர்
புந்தி நல்லரே
விளக்கம்:
பந்த விடை=கட்டுத் தறியில் கட்டப்பட்டு பாதுகாக்கப்படும் எருது; பெருமானின் வாகனமாகிய இடபம் கட்டப்படுவதில்லை; எனினும் எருதுகளின் பொதுத்தன்மை கருதி பந்த விடை என்று இங்கே கூறுகின்றார் என்ற விளக்கம் சிலரால் அளிக்கப்படுகின்றது. பந்த விடை என்ற தொடருக்கு, பெருமானின் வாகனமாகிய இடபம் தானே ஏற்படுத்திக் கொண்ட பந்தம் என்று பொருள் கொண்டு, வேறோர் சுவையான விளக்கமும் அளிக்கப்படுகின்றது. தருமதேவதை,தானே விரும்பி பெருமானின் வாகனமாக மாறியதை நாம் அறிவோம். இவ்வாறு பெருமானின் சேவையில் தன்னை பிணைத்துக் கொண்ட இடபம் என்பதை உணர்த்தும் வண்ணம், பந்த விடை என்று கூறுகின்றார் என்பதே அந்த சுவையான விளக்கம்.
மனம் புத்தி அகங்காரம் சித்தம் என்பன நான்கு அந்தக்கரணங்கள். இந்த நான்கு அந்தக்கரணங்கள் தாம், நம்மை செயல்படுத்துகின்றன. மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐந்து அறிவுக் கருவிகளும், தாம் அறிகின்ற பொருளை அறியமுடியாது. தான் பார்க்கும் பொருள் யாது என்பதை கண்ணால் உணர முடியாது; ஏன் அந்த பொருளைத் தான் பார்ப்பதையே கண்ணால் உணர முடியாது. கண் தான் காணும் பொருளின் தன்மையை செய்தியாக மனதினுக்கு அனுப்புகின்றது. அது போன்றே மற்ற புலன்களும் தங்களது செய்கை மூலம் அந்தந்த பொருளின் தன்மைகளை மனதினுக்கு அனுப்புகின்றன. மனம் தான் புலன்கள் மூலம் பற்றிய செய்திகளை ஆதாரமாகக் கொண்டு, புத்திக்கு அனுப்ப, புத்தி அந்த செய்திகளின் அடிப்படையை உணர்ந்து தான் அறிந்துகொண்ட பொருளினால் விளையும் நன்மை தீமைகளை ஆராய்கின்றது. இவ்வாறு செய்யப்படும் ஆராய்ச்சியின் தன்மை, அந்தந்த உயிர்களின் புத்தியின் தன்மையின் அடிப்படையில் நடைபெறுவதால், அந்த ஆராய்ச்சியின் முடிவும் உயிருக்கு உயிர் மாறுபடும் தன்மையில் உள்ளது. அகங்காரம், மனம் ஆராய்ந்து அறிந்து கொண்ட நன்மை தீமைகளை ஆராய்ந்து தனக்குத் தோன்றிய வண்ணம் புலன்கள் மூலம் அறிந்து கொண்ட பொருளை உயிர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை தீர்மானிக்கின்றது. அந்த தீர்மானத்தை சித்தம் தன்னிடம் தேக்கிக் கொண்டு, உயிருக்கு வேண்டிய சமயத்தில் நினைவூட்டுகின்றது.ஆனால் இந்த செயல்கள் அனைத்தும், உடனுக்குடன், அறிவுக் கருவிகள் தாம் அறிகின்ற பொருட்கள் பற்றிய செய்தியை மனதினுக்கு அனுப்பும் போதே நடைபெறுவதால், நாம் நினைத்துப் பார்க்கவும் முடியாத வேகத்தில் நடைபெறுவதால், நாம் அந்தந்த புலன்கள் செயல்படுவதாக கருதுகின்றோம்.மேற்கண்ட விவரங்களை சற்று ஆராய்ந்தால், ஒரு பொருளினை எவ்வாறு நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில் புத்தி மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது என்பதை நாம் உணரலாம். நமது சிந்தனைக்கு எட்டிய பொருளின் நன்மை தீமைகளை ஆராய்ந்து உயிர் முடிவெடுக்க உதவுவது புத்தியே.எனவே இந்த புத்தி, விரிவடைய வேண்டும், நல்ல கோணத்தில் எதனையும் ஆராயவேண்டும். இந்த கருத்தினை உள்ளடக்கியே, மருதவாணரை சிந்தனை செய்யும் உயிர்களின் புத்தி நல்ல தன்மையில் விளங்கும் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். நமது சிந்தனையில் உயிரினுக்கு உண்மையாக உதவும் எண்ணங்கள் இருப்பின், அந்த எண்ணங்களை ஆராய்ந்து செயல்படுத்தும் புத்தியும் உயிரினுக்கு உதவும் வகையில் தானே செயல்படும். எனவே தான் மருதரை சிந்தை செய்யும் உயிர்களின் புத்தி நல்ல தன்மையில் இருக்கும் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இரண்டாவது மற்றும் மூன்றாவது பாடல்களில் குறிப்பிடப்பட்ட வண்ணம் பெருமானை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைய வேண்டும் என்று அறிவுரை கூறும் திருஞானசம்பந்தர், இறைவனை வழிபடுவதால் நாம் பெறவிருக்கும் நன்மையை இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
இந்த பாடலில் எமது தந்தை என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுன்றார். பிராட்டியின் வழியாக சிவஞானம் கலந்த ஞானப்பால் அளித்து மூன்று வயதிலிருந்தே தேவாரப் பதிகங்கள் பாடுமாறு அருள் புரிந்த பெருமானையும் பிராட்டியையும் தனது தந்தையாகவும் தாயாகவும் கருதி திருஞானசம்பந்தர் வளர்ந்தார் என்பதை நாம் பெரிய புராணத்தின் திருஞானசம்பந்தர் புராணத்திலிருந்து அறிந்து கொள்கின்றோம். தோடுடைய செவியன் என்றும் நறவநிறை வண்டு என்றும் தொடங்கும் பதிகங்களை பாடிய தனக்கு ஞானப்பால் அருளிய அன்னையையும், அதற்கு காரணமாக இருந்த தந்தையரையும் நினைத்தவாறே அன்றிரவு உறங்கிய திருஞானசம்பந்தர் அடுத்த நாள் பொழுது விடிந்ததும் திருக்கோயிலுக்கு சென்று தனது தந்தையும் தாயும் ஆகிய பெருமானையும் பிராட்டியையும் வணங்கினார் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். இவ்வாறு சேக்கிழார் நமக்கு உணர்த்துகின்ற பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம். ஒவ்வொரு தலயாத்திரை மேற்கொள்ளும் முன்னரும், பயணத்தினை முடித்துக் கொண்டு திரும்பி வந்த பின்னரும், சீர்காழி தலத்து இறைவனையும் இறைவியையும் வணங்குவது பிள்ளையாரின் பழக்கமாக இருந்து வந்ததை இந்த பாடல் நமக்கு உணர்த்துகின்றது.
காதலுடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்றிருந்த தங்கள்
தாதையாரையும் வெளியே தாங்கரிய மெய்ஞானம் தம் பால் வந்து
போத முலை சுரந்தளித்த புண்ணியத் தாயரையும் முன் வணங்கிப் போற்றி
மேதகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார்.
பல திருமுறைப் பாடல்களில், அருளாளர்கள் பெருமானைத் தங்களது தந்தையாக கருதி தொழுது போற்றுவதை நாம் காண்கின்றோம். திருஞானசம்பந்தர் அவ்வாறு பெருமானைத் தனது தந்தை என்றும் எந்தை என்றும் குறிப்பிடும் தேவாரப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். குரங்கணில்முட்டம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.31.2) திருஞானசம்பந்தர்
இந்த தலத்து பெருமான், தனது தந்தையாகவும் தலைவனாகவும் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். தந்தை என்று பெருமானை பாசத்துடன் குறிப்பிட்டாலும், தான் பெருமானின் அடிமை என்பதையும் அவர் பணிவுடன் உணர்த்துகின்றார். இதே பதிகத்தின் மூன்றாவது பாடலிலும், பெருமானை எந்தை பிரான் என்று குறிப்பிடுகின்றார்.
விடைசேர் கொடி அண்ணல் விளங்கு உயர் மாடக்
கடை சேர் கருமென் குளத்து ஓங்கிய காட்டில்
குடையார் புனல் மல்கு குரங்கணில் முட்டம்
உடையான் எனை ஆளுடை எந்தை பிரானே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.32.4) எந்தை உறைகின்ற தலம் இடைமருது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.வேத முதல்வன் என்ற தொடரினை அந்தம் அறியாத என்ற தொடருடன் கூட்டி பொருள் காண வேண்டும். அருங்கலம்=அரிய ஆபரணங்கள்; அந்தம் அறியாத பெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் வெந்த பொடி பூசியவன் என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தனக்கு முடிவு என்பது என்றும் இல்லை என்றும் தன்னைத் தவிர்த்து அனைத்து உயிர்களும் அனைத்துப் பொருட்களும் ஒரு நாள் அழியும் தன்மை வாய்ந்தவை என்பதை உணர்த்தும் பொருட்டே,பெருமான் சாம்பலைத் தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டுள்ளார். அருங்கலன் என்று விலையுயர்ந்த சந்தனக் கட்டைகள், அகில் கட்டைகள்,மாணிக்கம் முத்து போன்ற அரிய பொருட்கள் காவிரி நதியினால் அடித்துக் கொண்டுவரப்படும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. அந்தமற்றவன் பெருமான் என்ற குறிப்பு, பெருமான் ஆதியும் இல்லாதவன் என்பதையும் உணர்த்துகின்றது.
அந்தம் அறியாதவரும் கலம் உந்திக்
கந்தம் கமழ் காவிரிக் கோலக்கரை மேல்
வெந்த பொடிப் பூசிய வேத முதல்வன்
எந்தை உறைகின்ற இடமருது ஈதோ
அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.33.2) திருஞானசம்பந்தர் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். முதிரா மதி என்ற தொடர் மூலம், பெருமான் தனது சடையினில் ஏற்றுக் கொண்டுள்ள ஒற்றைப்பிறைச் சந்திரனின் தனமையை, வளராதும் தேயாதும் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். பெருமானைச் சார்ந்த பொருட்களும் பெருமானைப் போன்று என்றும் அழியாத தன்மையுடன் விளங்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. கிடை=கூட்டம்; கிள்ளை=கிளி; வேதம் பயிலும் சிறுவர்கள் கூட்டமாக இருந்து வேதமந்திரங்களை சொல்லி பழக்கப்படுத்திக் கொள்வதையும், அந்த ஒலிகளை கேட்கும் கிளிகள் இசையுடன் வேத மந்திரங்களைச் சொல்லும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. வேத மந்திரங்களை பிறர் சொல்லக் கேட்ட கிளிகளும், அந்த மந்திரங்களை சொல்லும் ஆற்றல் பெற்றன என்று குறிப்பிட்டு, இடையறாது இந்த தலத்தினில் வேதம் ஓதப்பட்ட தன்மையை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். இவ்வாறு பல தலங்கள் அந்நாளில் திகழ்ந்தமையை பல பதிகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அரவம்=ஒலி; ஓத்து அரவம்=வேதங்கள் ஓதப்படுவதால் எழும் ஒலி.
சடையார் சதுரன் முதிரா மதி சூடி
விடையார் கொடி ஒன்றுடை எந்தை விமலன்
கிடையார் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை
அடையார் பொழில் அன்பில் ஆலந்துறையாரே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.34.3) எருதினை தனது வாகனமாக உடைய எந்தை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.துன்னும்=நெருக்கமாக இருக்கும், இங்கே பெருமான் இந்த தலத்தினில் எழுந்தருளிய நிலை என்று பொருள் கொள்ளவேண்டும். பெருமானின் அடியார்கள் துன்பங்களால் விளையும் அவல நிலையை அடையமாட்டார்கள் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். வாழ்வினில் தாங்கள் எதிர் கொள்ளும் இன்பங்களையும் துன்பங்களையும் ஒன்றாக கருதும் பக்குவத்தினை, அத்தகைய இன்ப துன்பங்களால் மனம் சலியாதும் மகிழாதும் ஒரே நிலையில் இருக்கும் தன்மையை, பெருமான் அவர்களுக்கு அளிப்பதால் துன்பங்களால் மனம் தளரும் அவல நிலையை பெருமானின் அடியார்கள் அடையமாட்டார்கள் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.
இடியார் குரல் ஏறுடை எந்தை
துடியார் இடையாளொடு துன்னும்
கடியார் பொழில் சூழ்தரு காழி
அடியார் அறியார் அவலம்மே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.110.10) திருஞானசம்பந்தர், வளம் கொழிக்கும் இடைமருது தலத்தினில் தனது தந்தையாகிய இறைவன் உறைகின்றார் என்று குறிப்பிடுகின்றார். சிந்தையில் என்ற தொடரினை சிந்தை இல் என்று பிரித்து, சிந்திக்கும் திறனற்ற சமணர்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். பெருமானின் பல்வேறு செயல்களின் பின்னணியில் அமைந்துள்ள உயர்ந்த நோக்கத்தினை சிந்தனை செய்து புரிந்து கொள்ள முடியாமல் இருந்த காரணத்தினால் தானே அவர்கள் பெருமானை தூற்றியவர்களாக பண்டைய நாளில் திகழ்ந்தனர். அத்தகைய,ஆதாரமற்ற பழிச் சொற்ளை பொருட்படுத்தாது வாழ்வீர்களாக என்று உலகத்தவர்க்கு அறிவுரை கூறும் பாடல். வேத ஒலியும் விழாக்களின் ஒலியும் நீங்காமல் ஒலித்த நகரம் என்று நகரத்தின் சிறப்பு உணர்த்தப்படுகின்றது.
சிந்தையில் சமணொடு தேரர் சொன்ன
புந்தியில் உரையவை பொருள் கொள்ளாதே
அந்தணர் ஓத்தினோடு அரவம் ஓவா
எந்தை தன் வளநகர் இடைமருதே
சீர்காழி தலத்து அண்ணலையும் பிராட்டியையும் திருஞானசம்பந்தர் தந்தையாகவும் தாயாகவும் கருதினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுவது நமக்கு திருஞானசம்பந்தர் வலிவலம் தலத்தின் மீது அருளிய தேவாரப் பாடலை (1.50.7) நினைவூட்டுகின்றது. சிவஞானிகள் பலராலும் ஆராயப்படும் தன்மையினை உடைய பெருமானை, அன்புடன் சிந்திக்க தனது மனம் பெருவிருப்பம் கொள்கின்றது என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மேலும் இறைவனை சிந்திக்கவொட்டாமல் ஐந்து பொறிகளும் செய்யும் மாயத்தைக் குறித்து தான் அஞ்சுவதாகவும் இந்த பாடலில் கூறுகின்றார். தனது அச்சத்தை தெரிவிக்கும் திருஞானசம்பந்தர், அந்த அச்சத்தினை நீக்கும் வண்ணம் இறைவன் அருள் புரியவேண்டும் என்பதையும் இங்கே உணர்த்துகின்றார்.
தாயும் நீயே தந்தையும் நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே
இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.76.11) திருஞானசம்பந்தர், பெருமான் உறைகின்ற தலத்தினை எந்தையார் உறைகின்ற இலம்பையங்கோட்டூர் என்று கூறுவதை நாம் காணலாம். சீர்காழி நகரின் அருகே அமைந்துள்ள கடற்கரையினை நறுமணம் கமழும் கடற்கரை என்று குறிப்பிடுகின்றார். கழி=உப்பங்கழிகள்; நந்துதல் என்றால் குறைத்தல் என்று பொருள்; தனது அடியார்களின் வினைகளை முற்றிலும் குறைத்து,ஒன்றுமில்லாமல் செய்து விடுவதால், பெருமானை நந்தி என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நால்வர் பெருமானார்கள் நால்வரும் பெருமானை நந்தி என்று பல அழைக்கின்றனர். திருமந்திரம் நூலில் மிகவும் அதிகமான இடங்களில் பெருமானை நந்தி என்று திருமூலர் அழைக்கின்றார். தமிழ் மொழி சிறந்து வளர்வதற்கு தேவாரப் பாடல்கள் மூலம் தொண்டு செய்தமையின், தன்னை தமிழ் மொழிக்கு இனிய துணைவனாக விளங்கியவன் என்று பெருமையுடன் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தேவாரப் பாடல்கள் முக்கிய பங்கு ஆற்றிய தன்மை உணர்த்தும் வண்ணம், ஔவையார் மூவர் தமிழ் என்றே குறிப்பிடுகின்றார். தீந்தமிழ் தேவாரப் பாடல்களைப் பாடும் அடியார்கள், மறுமையில் சில் காலம் விண்ணுலகில் வாழ்ந்து சுகபோகங்களை அனுபவித்த பின்னர், வீடு பேற்றினையும் பெறுவார்கள் என்று இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது.
கந்தனை மலிகனை கடலொலி ஓதம் கானலம் கழிவளர் கழுமலம் என்னும்
நந்தியார் உறைபதி நான்மறை நாவன் நற்றமிழ்க்கு இன்துணை ஞானசம்பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று இம்மையில் வீடு எளிதாமே
அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.83.1) திருஞானசம்பந்தர், பெருமானை., விடையார் கொடி எந்தை என்று குறிப்பிடுகின்றார்.ஒவ்வொரு கலையாக தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையிலிருந்த சந்திரன், பெருமானைச் சரண் அடைந்ததால், தக்கனால் தான் அடைந்த சாபம் நீங்கப் பெற்று, அழிவிலிருந்து தப்பி இன்பம் அடைந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. அதனைப் போன்று நாமும், பெருமானின் திருவடிகளில் சரண் அடைவதன் மூலம், கொடிய வினைகளிலிருந்து விடுபட்டு இன்பம் அடையலாம் என்று உணர்த்தப் படுகின்றது.
அடையார் புரம் மூன்றும் அனல் வாய் விழ எய்து
மடையார் புனல் அம்பர் மாகாளம் மேய
விடையர் கொடி எந்தை வெள்ளைப் பிறை சூடும்
சடையான் கழல் ஏத்தச் சாரா வினை தானே
சில பாடல்களில் பெருமானை, நம் அனைவர்க்கும் தந்தையாக விளங்குபவன் என்ற பொருள்பட, எந்தை என்றும் திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். நமது தந்தையாகிய பெருமானின் கழல்களை பணிந்து போற்றும் அடியார்களை துன்பம் வந்து அடையாது என்று அம்பர்மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.83.4) கூறுகின்றார். கொந்தண் பொழில்=கொத்து கொத்தாக பூக்கள் நிறைவாக பூக்கும் அழகிய சோலைகள்;கோலவரிவண்டு=கோடுகள் நிறைந்த அழகிய வண்டுகள்; மந்தம் மலி=தாழ்ந்த குரலில் உள்ள ரீங்காரம் நிறைந்த; கமழ் புன்சடை=இயற்கையாக நறுமணம் கமழும் அழகாக சுருண்ட சடை;
கொந்தண் பொழிற் சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலி அம்பர் மாகாளம் மேய
கந்தங் கமழ் கொன்றை கமழ் புன்சடை வைத்த
எந்தை கழல் ஏத்த இடர் வந்தடையாவே
நல்லம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.85.5) திருஞானசம்பந்தர், தனது திருவடிகளைத் தொழும் அடியார்களை ஆட்கொண்டு பெருமான் அருள் புரிவான் என்று கூறுகின்றார். துணிவார்=துணிந்த மனத்தவர்களாக; அப்பர் மற்றும் திருஞானசம்பந்தரின் காலத்தில், சமணம் மற்றும் புத்த சமயங்களின் ஆதிக்கம் மிகவும் அதிகமாக இருந்தமையால், மக்கள், பலரும் காணும் வண்ணம் பெருமானைத் தொழுவதற்கும் அச்சம் அடைந்தனர் போலும்.அதனால் தான், துணிவுடன் பெருமானை வழிபட்ட அடியார்கள் என்று கூறினார் போலும். நணியான்=அடியார்களை வந்தடைந்து அருள் புரியும் சிவபெருமான்;
மணியார் திகழ் கண்டம் உடையான் மலர் மல்கு
பிணிவார் சடை எந்தை பெருமான் கழல் பேணி
துணிவார் மலர் கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமை ஆள்வான் நல்ல நகரானே
இவ்வாறு சமணர்களின் ஆதிக்கத்திற்கு அஞ்சிய வண்ணம் சைவர்கள் அந்நாளில் வாழ்ந்து வந்த நிலையினை பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். பாண்டிய அரசியாரும் மந்திரியார் குலச்சிறையாரும் சைவ நெறியில் நின்று ஒழுகிய போதிலும், பாண்டிய மன்னன் முன்பு தங்களது தன்மை, தாங்கள் திருநீறு அணியும் தன்மை, வெளிப்படாத வண்ணம் வாழ்ந்தனர் என்று கூறுகின்றார். இவ்வாறு சைவப் பெருமக்கள் அச்சம் கொண்டிருந்த தன்மை குறித்து அவர்கள் இருவரும் பெரிதும் வருத்தம் அடைந்த போதிலும், அந்த நிலைக்கு தீர்வு காணமுடியாதவர்களாக மனம் புழுங்கினார்கள் என்றும் சேக்கிழார் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார்.
ஆங்கவர் தாங்கள் அங்கண் அரும்பெறல் தமிழ்நாடு உற்ற
தீங்கினுக்கு அளவு தோற்றாச் சிந்தையில் பரிவு கொண்டே
ஒங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை
பூங்கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டுய்த்தார்
இந்த தன்மை கண்டு மிகவும் வருத்தம் அடைந்தவராக, திருஞானசம்பந்தரின் தந்தை சிவபாத இருதயர் இருந்த தன்மையும் பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் புராணத்தில் குறிப்பிடப் படுகின்றது. கையர்=கீழ்மக்கள்; உலகினில் கீழ்மக்களாகத் திகழ்ந்த சமணர்கள் மற்றும் புத்தர்களின் பொய்யுரைகள் மிகவும் அதிகமாக வளர, பழைய அரிய மறை வழக்கங்கள் சுருங்க, அடியார்கள் திருநீற்று சாதனத்தின் பெருமை போற்றப் பெறாது மறைந்ததைக் கண்டு, குற்றம் இல்லாத் சிறப்பினை உடைய சிவபாத இருதயர் பெரிதும் வருத்தம் அடைந்தார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.அருகி=மிகவும் குறைந்து, அரிதாக விளங்கிய நிலை: ஏதம்=குற்றம்; இவ்வாறு மனம் வருந்தியதோடு நில்லாமல், பெருமானை நோக்கி, பரசமயத்தை நிராகரித்து நீறாக்கும் ஆற்றல் உடைய மகனைப் பெறவேண்டும் என்றும் சிவபாத இருதயர் தவமிருந்தார் என்பதை பெரிய புராணத்திலிருந்து நாம் அறிகின்றோம்.
மேதினி மேற் சமண் கையர் சாக்கியர் தம் பொய் மிகுத்தே
ஆதி அருமறை வழக்கம் அருகி அரனடியார் பால்
பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழியக் கண்டு
ஏதமில் சீர்ச் சிவபாத இருதயர் தாம் இடர் உழந்தார்
திருவாலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.94.4) திருஞானசம்பந்தர், ஆலவாய் தலத்தினை எந்தை வாழ்கின்ற ஆலவாய் என்ற பொருள்பட, எந்தை ஆலவாய் என்று கூறுகின்றார். பந்த பாசங்களிலிருந்து இயற்கையாகவே விடுதலை பெற்றுள்ள பெருமானை பந்தியார் என்று குறிப்பிடுகின்றார். உலகப் பொருட்கள் மற்றும் உயிர்கள் மீது நாம் கொண்டுள்ள பாசம், மற்றும் அந்த பாசத்தினால் நாம் கட்டுண்டு இருக்கும் நிலையிலிருந்தும் விடுபட வேண்டும் என்று விரும்பினால், பாசங்களிலிருந்து விடுதலை அடைந்த பெருமானைத் தானே நாடவேண்டும். எனவே தான் பெருமானை சிந்தனை செய்து பயனடையுமாறு திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுறை கூறுகின்றார்.
அந்தமில் புகழ்
எந்தை ஆலவாய்
பந்தியார் கழல்
சிந்தை செய்மினே
அன்னியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.96.7) திருஞானசம்பந்தர், அன்னியூர் இறைவனை எந்தையே என்று பாவித்து வணங்கினால்,நம்மை பீடித்துள்ள பாசக்கட்டுகள் விலகிவிடும் என்று கூறுகின்றார். பந்தம்=மல மாயையால் விளைந்த பாசக்கட்டு; உலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் நிலையானவை என்று தவறாக நினைத்து அவற்றின் மீது உயிர்கள் வைக்கும் பாசக்கட்டு.
அந்தணாளர் தம்
தந்தை அன்னியூர்
எந்தையே என
பந்தம் நீங்குமே
நமது தந்தையாகிய இறைவனின் திருப்பாதங்களைச் சென்றடைந்து, அழிவற்ற இன்பத்தில் நாம் என்றும் ஆழ்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினால்,சந்தங்களுடன் பொருந்திய தேவாரப் பாடல்களைப் பாடி இறைவனைப் புகழவேண்டும் என்று திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.114.11) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். செந்திசை=செம்மையான சிறந்த இசை; அந்தமில்=காலத்தால் அழியாமல் இருக்கும்;
அந்தமில் ஞானசம்பந்தன் சொன்ன
செந்திசை பாடல் செய் மாற்பேற்றைச்
சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்தவல்லார்
எந்தை தன் கழலடி எய்துவரே
சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (1.125.11) திருஞானசம்பந்தர், பெருமானை தனது தந்தை என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். புந்தியர்=அறிவினில் சிறந்தவர்கள்; வினை சிந்தி=பிணைந்துள்ள வினைகள் கழன்று விலக: அறிவுடையவர்கள் ஓதும் நான்மறைகளையும் முறையாக ஓதி உணர்ந்தவனும், புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தின் தலைவனும் ஆகிய ஞானசம்பந்தன், சிறந்த தமிழ் கொண்டு சிவபுர நகரினில் உறையும் பெருமானை குறித்து, தனக்கு தந்தையாக திகழ்பவனை குறித்து, உரைத்த இந்த பத்து பாடல்களையும் முறையான பண்ணுடன் பொருத்தி இசைக்கும் அடியார்கள், தங்களுடன் பிணைந்துள்ள வினைகள் கழன்று சிந்தப்பெற்று, இம்மையிலும் மறுமையிலும் உயர்ந்த கதியை அடைவார்கள்.
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்
பந்தன தமிழ் கொடு சிவபுர நகர் உறை
எந்தையை உரை செய்த இசை மொழிபவர் வினை
சிந்தி முன் உற உயர் கதி பெறுவர்களே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.133.1) திருஞானசம்பந்தர், எந்தை பொருந்தி உறைகின்ற ஏகம்பம் என்று குறிப்பிடுகின்றார். அணங்கு=தெய்வத் தன்மை உடைய பெண், இங்கே பார்வதி தேவி என்று பொருள் கொள்ளவேண்டும்.
வெந்த வெண்பொடிப் பூசு மார்பின் விரிநூல் ஒரு பால் பொருந்தக்
கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல் புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடர் கெடுமே
தனது தந்தையாகிய பெருமானுக்கு ஏற்ற இடமாக விளங்குவது அனேகதங்காவதம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடலை (2.05.4) நாம் இங்கே காண்போம். தந்தத் திந்த தடம் என்ற தொடர், மலைச்சாரலில் அருவி நீர் விழுகின்ற போது எழுகின்ற ஒசைக்குறிப்பினை உணர்த்துகின்றது. பெருமானின் தன்மையை எவராலும் அளக்க முடியாது என்பதையும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
தந்தத் திந்தத் தடம் என்று அருவித் திரள் பாய்ந்து போய்ச்
சிந்த வெந்த கதிரோனொடு மாசறு திங்களார்
அந்தமில்ல அளவில்லவன் அனேகதங்காவதம்
எந்தை வெந்த பொடி நீறு அணிவார்க்கு இடமாவதே
திருமழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.09.07) திருஞானசம்பந்தர் பெருமானை எந்தையான் என்று குறிப்பிடுகின்றார். சந்தம்=அழகு;வார்=நீண்ட; மைந்தன்=வலிமை வாய்ந்தவன்; வார் பொழில்=நீண்ட சோலைகள்; இந்த பாடலிலும் பெருமானை மருந்து என்று குறிப்பிட்டு, இறைவனை வழிபடுவோரின் வினைகள் தேய்ந்து அழிந்து விடும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வினையிலாத நிலை தானே, உயிர்களை முக்தி உலகுக்கு அழைத்துச் செல்லும் என்பதால், வினைகளைத் தீர்க்கும் மருத்துவனாக பெருமான் செயல்பட்டு உயிர்களுக்கு முக்தி நிலை அளிப்பதை, இதே பதிகத்தின் நான்காவது பாடலில் உணர்த்தியது போன்று திருஞானசம்பந்தர் இந்த பாடலிலும் உணர்த்துகின்றார். இமையாத மூன்று கண்களை உடைய பெருமான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் இரண்டு கண்கள் எப்போதும் திறந்தே இருப்பதால் சூரிய சந்திரர்கள் ஒளியுடன் பிரகாசிக்க உலகமும் அதனால் நன்மை அடைகின்றது. மூன்றாவது கண் திறந்த போது, அதனின்று எழும் நெருப்புப் பொறிகளின் வெப்பத்தை உலகம் தாங்க முடியாது என்பதால் நெற்றிக்கண் எப்போதும் மூடியவண்ணம் உள்ளது. இவ்வாறு தங்களது நிலையிலிருந்து மாறாமல் இமைக்காமல் இந்த மூன்று கண்களும் உள்ள நிலை இமையா முக்கண் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. இமையாத கண்கள் இமைத்து நிலை மாறிய போது விபரீதங்கள் ஏற்பட்டதை நாம் புராணங்களிலிருந்து அறிகின்றோம்,. எப்போதும் மூடியிருக்கும் நெற்றிக் கண் திறந்ததால், மன்மதன் உடல் எரிந்ததை நாம் அனைவரும் அறிவோம். சிவபிரானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்கள் என்று சொல்லப்படும். ஒருமுறை விளையாட்டாக, பார்வதி தேவி, சிவபிரானின் கண்களை மூட, அனைத்து உலகங்களும் இருளில் மூழ்கின என்பதை புராணங்களும் திருமுறைப் பாடல்களும் உணர்த்துகின்றன.
சந்த வார் குழலாள் உமை தன்னொரு கூறுடை
எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம் பிரான்
மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினைச்
சிந்தியா எழுவார் வினையாயின தேயுமே
திருமங்கலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (2.10.11) திருமங்கலக்குடி தலத்தில் நிலையாக வீற்றிருக்கும் எனது தந்தை என்று குறிப்பிடுகின்றார். மந்தம்=தென்றல்; காவலன்=தலைவன்; முந்தி ஏத்துதல்=முதன்மை கொடுத்து பாடுதல்; தேவாரப் பாடல்கள், நம்மை இறைவனின் திருவடிகளில் சேர்த்துவிடும் வல்லமை கொண்டவை என்று குறிப்பிட்டு, தேவாரப் பாடல்களை நாம் பாடவேண்டிய அவசியத்தை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
மந்தமாம் பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை எழிலார் பொழில் காழியர் காவலன்
சிந்தை செய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதலாவரே
திருக்காறாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.15.4) திருஞானசம்பந்தர், தந்தையின் தன்மைகள் உடையவன் பெருமான் என்று கூறுகின்றார். உயிர்களுக்கு, அவர்களது தாயும் தந்தையும் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுபவன் இறைவன் என்று இங்கே கூறுகின்றார்.அணியான்=அருகில் இருப்பவன்; சேயான்=தொலைவில் இருப்பவன்; தன் பால் அன்பு செலுத்தும் அடியார்களுக்கு மிகவும் அருகிலிருந்து உதவி புரியும் இறைவன், தன் பால் அன்பு கொள்ளாதவர்களுக்கு எட்ட நிற்கின்றான் என்றும் கூறுகின்றார். புகழ் வாய்ந்த திருக்காறாயில் தலத்தினில் பொருந்தி நிலையாக உறையும் இறைவனே என்று போற்றி வழிபடும் அடியார்களின் மேல் வினைகளைத் தீர்ப்பதன் மூலம், அத்தகைய அடியார்களை பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுவித்து முக்தி நிலை அளிப்பவன் பெருமான் என்பதையும் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள்
ஆயானே ஆய நல்லன்பர்க்கு அணியானே
சேயானே சீர் திகழும் திருக்காறாயில்
மேயானே என்பவர் மேல்வினை மேவாவே
நெல்லிக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.19.7) திருஞானசம்பந்தர் எந்தைப் பெம்மான் என்று இறைவனை அழைக்கின்றார்.நிலாவிய=நிலையாக பொருந்தி உறையும்; இறை= சிறிதும்; இறவா=அழிவற்ற: சென்னி=பொதுவாக தலை, இங்கே சடை என்று பொருள் கொள்வது சிறப்பு;பெம்மான்=பெருமைக்கு உரிய ஆண்மகன்; ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் இருந்த சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்த பெருமையும், என்றும் நிலையாக நிற்கும் கயிலாய மலையினை உடைய பெருமையும், கங்கை நதியினை ஒளித்து மறைத்த பெருமையும் உடைய பெருமான் என்று கூறுகின்றார்.
பிறை தான் சடை சேர்த்திய எந்தை பெம்மான்
இறை தான் இறவாக் கயிலைம் மலையான்
மறை தான் புனல் ஒண் மதிமல்கு சென்னி
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே
கருவூர் ஆனிலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.28.11) திருஞானசம்பந்தர் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். கந்தம்=நறுமணம்;பொழில்=சோலை; இந்த பதிகத்தினை முறையாக பாடும் அடியார்கள், தங்களது மனக் கவலை தீரப் பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுவது,நமக்கு தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்று திருவள்ளுவர் கூறுவதை நினைவூட்டுகின்றது. இதே பதிகத்தின் கடைப் பாடலில், எந்தையாகிய பெருமானைப் புகழ்ந்து பாடிய பாடல்களை சொல்லும் வல்லமை பெற்ற அடியார்களின் சிந்தை தூய்மையாக விளங்கும் என்றும் கூறுகின்றார்.
கந்தமார் பொழில் காழி ஞானசம்
பந்தன் சேர் கருவூருள் ஆனிலை
எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தையில் துயர் ஆய தீர்வரே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.32.2) திருஞானசம்பந்தர், எந்தையின் இடம் திருவையாறு என்று குறிப்பிடுகின்றார்.கந்து=பற்றுக்கோடு; அமர=பொருந்து; அப்பர் பெருமான் திருவையாறு அகலாத செம்பொற்சோதி என்று, அனைத்து சோதிகளிலும் உயர்ந்த சோதியாக பெருமான் விளங்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில், பெருமானாகிய சோதி எவ்வாறு மற்ற விளக்குகளினும் உயர்ந்தது என்பதை திருஞானசம்பந்தர் எடுத்துரைக்கின்றார். புகையினை வெளியிடாத சோதி என்றும் தூண்டுதல் தேவைப்படாத சோதி என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.உந்தல்=தூண்டுதல்; மின் விளக்கு உட்பட நாம் உலகினில் காணும் அனைத்து விளக்குகளுக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகின்றது. மின் விளக்காக இருந்தால், நாம் ஒரு விசை (ச்விட்ச்) மூலம் இயக்குகின்றோம். மற்ற விளக்குகளை வேறோர் நெருப்புச் சுடர் கொண்டு ஏற்றுகின்றோம். மேலும் மின்சாரம்,திரி, எண்ணெய், மெழுகு முதலியன இந்த விளக்குகள் ஒளிவிட்டு பிரகாசிக்க தேவைப் படுகின்றன. அந்த சாதனங்கள் துண்டிக்கப்ப்ட்டால், விளக்குகள் அணைந்து விடுகின்றன. அனைத்து விளக்குகளும், ஒளியினை வெளிப்படுத்தும் போது, வெப்பம் மற்றும் புகையை வெளியிடுகின்றன. ஆனால்,பெருமானாகிய சோதி, எந்த விதமான தூண்டுதலும் தேவைப் படாமல், தானே சுடர் விட்டெரிகின்றது; மேலும் வெப்பமோ புகையோ வெளிப்படுவதில்லை;எனவே, பெருமானாகிய சோதி அனைத்து சோதிகளிலும் உயர்ந்தது என்று இந்த பாடல் மூலம், திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். சந்த மலியும் தரு=அழகுடன் பொலியும் மரங்கள்; வளி=காற்று; நந்து=நந்தவனம்; வண் திருவையாறு=வள்ளல் தன்மை உடையவர்கள் வாழும் திருவையாறு.
கந்து அமரவுந்து புகை உந்தல் இல் விளக்கேர்
இந்திரன் உணர்ந்து பணி யெந்தை இடம் எங்கும்
சந்தமலியும் தரு மிடைந்த பொழில் சார
வந்த வளி நந்தணவு வண் திருவையாறே
இரும்பூளை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.36.11) திருஞானசம்பந்தர், எந்தையாகிய பெருமானின் இருப்பிடம் இரும்பூளை என்று குறிப்பிடுகின்றார். ஈசன்=ஈசனை என்றும் ஈசன் என்று இருவகையாக பொருள் கொள்ளலாம். ஈசனை குறித்து திருஞானசம்பந்தர் செப்பிய மொழிகள்;தனதுரையாக ஈசன் ஞானசம்பந்தர் மூலம் செப்பிய உரைகள் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனின் அருள் தன்மைகளே இந்த பத்து பாடல்களிலும் உணர்த்தப் பெறுவதால், அதனை உணர்ந்து கொள்வது ஈசனை வழிபாடு செய்வதன் முதல் படி என்பதால், இந்த பாடல்களை ஓதும் அடியார்கள் உய்வினை அடைவார்கள் என்று குறிப்பிடுகின்றார். சந்தம் என்பது இங்கே சந்தத்துடன் ஓதப்படும் வேதங்களை குறிக்கும் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். சந்தம் என்பதற்கு ஓசைநயம் என்று பொருள் கொள்ளலாம். சந்தக்கவிக்கு அருணகிரியார் என்று சொல்லும் வண்ணம், சந்தம் நிறைந்த திருப்புகழ் பாடல்களை பாடி புகழ்பெற்ற அருணகிரியார், திருஞானசம்பந்தரை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர் ஆவார். முருகப் பெருமானின் அவதாரம் என்று பல பாடல்களில் திருஞானசம்பந்தரை குறிப்பிடும் அருணகிரியார், திருஞானசம்பந்தர் போன்று தனக்கு சந்தக்கவி பாடும் ஆற்றல் வாய்க்க வேண்டும் என்று பல திருப்புகழ் பாடல்கள் மூலம் கந்தப்பெருமானிடம் வேண்டுகின்றார். எனவே இந்த பின்னணியில் நோக்கும் போது, சந்தம் என்ற சொல்லுக்கு சந்தத்துடன் இணைந்த தேவாரப் பாடல்கள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. சந்தம் பயில் என்ற சொல்லினை சண்பை நகருடன் இணைத்து, வேதங்கள் பயிலும் சீர்காழி நகரத்து மக்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. செம்மை என்பதற்கு மனதினைச் செம்மைப் படுத்தி நன்னெறியில் அழைத்துச் செல்லும் பாடல்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
எந்தை இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந் தண்டமிழ் செப்பிய பத்து இவை வல்லார்
பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே
எந்தை என்று தனது தந்தையாக பெருமானை, பெருமையுடன் பல பாடல்களில் குறிப்பிட்ட, திருஞானசம்பந்தர், சூரியன் முதலாக எண்ணற்ற தேவர்கள் பெருமானை எந்தை என்று குறிப்பிட்டு, இறைஞ்சுவதாக முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.64.2) குறிப்பிடுகின்றார். குரங்கின் கையில் மலரோ மலர் மாலையோ கிடைத்தால், முதலில் குரங்கு அந்த மலரினையும் மாலையையும் பிய்த்து எரிவதை தான் நாம் காண்கின்றோம். இது இயற்கை. அதனால் தான் குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்ற பழமொழியும் எழுந்தது. ஆனால் திருஞானசம்பந்தர் கண்ட முதுகுன்றத்து குரங்குகள் சற்று வித்தியாசமானவை. அந்த குரங்குகள் தினமும் அடியார்கள் பூக்களை சுமந்து கொண்டு இறைவனின் சன்னதி சென்றடைந்து இறைவனின் திருமேனியின் மீது பூக்கள் தூவி வழிபடுவதை இந்த தலத்து குரங்குகளும் காண்கின்றன. மனிதன் செய்யும் பல செயல்களை உற்று கவனிக்கும் குரங்குகள்,தாங்களும் அந்த செயல்களை செய்ய முயற்சி செய்வதை நாம் கண்டிருக்கின்றோம். அத்தகைய இயல்பு கொண்ட குரங்குகள், முதுகுன்றத்து அடியார்கள் மலர்கள் கொண்டு இறைவனை வழிபடும் மனிதர்களைக் கண்டு, தாங்களும் மலர்கள் கொணர்ந்து இறைவனின் திருமேனி மேல் தூவியதை தான் கண்டதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முந்திச் சென்று குரங்குகள் தொழுது வணங்கியதாக சம்பந்தர் கூறுவது, அடியார்கள் செல்வதற்கு முன்னமே தினமும் குரங்குகள் திருக்கோயிலுக்கு சென்றதை உணர்த்துகின்றது போலும். இந்த குறிப்பு நமக்கு குரக்குக்கா தலத்தில் இன்றும் நடைபெறும் நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. சித்திரை வைகாசி மாதங்களில் இன்றும் குரங்குகள் கூட்டம் கூட்டமாக மலர்களுடன் வந்து குரக்குக்கா தலத்து இறைவனை வழிபடுவதை நாம் காணலாம்.
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வானை
மந்தி ஏறி இன மா மலர்கள் பல கொண்டு
முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.79.9) எந்தை உறைகின்ற திருவாரூர் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர், இந்த பிறவியில் நமக்கு தாய் தந்தையாக விளங்குவோர், நம்முடன் உடன் பிறந்தோர், மனைவி, நமது மகன் மகள் ஆகியோர், நாம் அவர்கள் மீது வைத்துள்ள பற்று/பாசம்/அன்பு மேன்மேலும் பெருகும் வண்ணம் செயல்படுகின்றனரே தவிர, நமது உயிர் உய்வினை அடையும் தன்மைக்கு எந்த விதத்திலும் உதவி செய்வதில்லை. மேலும் இத்தகையோருடன் நாம் கொண்டுள்ள இந்த உறவுப் பிணைப்பு, இந்த பிறவிக்கு மட்டுமே உரித்தானதது.நாம் இதுவரை எடுத்துள்ள பல பிறவிகளில் இந்த உறவு இருந்ததில்லை, மேலும் இனியும் நாம் எடுக்க இருக்கும் பிறவிகளுக்கும் இந்த உறவு தொடரப் போவதில்லை. இந்த பிறவியிலும் இந்த உறவுகள் நமது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இருப்பதில்லை. எனவே இந்த உறவுகள் நிலையற்றவை. ஆனால் நமது தந்தையாக அனைத்துப் பிறவிகளிலும் இருந்து நம்மை காப்பற்றும் பெருமான், நமக்கு நிலையான உறவினராக உள்ளார் என்பதை உணர்த்தி,திருஞானசம்பந்தர், நம்முடன் நிலையான உறவு கொண்டுள்ள அந்த இறைவனைத் தொழுது, நாம் ஆழ்ந்துள்ள பந்தம் பாசம் எனும் மயக்கத்தைத் தீர்த்துக் கொண்டு, வாழ்வினில் உய்வினை அடையுமாறு அறிவுரை கூறுகின்றார். மேலும் அச்சம் ஏதுமின்றி வாழ்க்கையை நாம் எதிர்கொள்வதற்கும் பெருமானை வழிபடுவது நமக்கு உதவும் என்றும் கூறுகின்றார்.
தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும்
பந்த நீங்காதவர்க்கு உய்ந்து போக்கில்லை எனப் பற்றினாயே
வெந்த நீறாடி ஆதியார் சோதியார் வேத கீதர்
எந்தை ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே
எந்தை என்று குறிப்பிட்டு பெருமானின் ஆற்றலை உணர்த்தும் திருஞானசம்பந்தர், அந்த பெருமானை சரணடைந்தால் நமது வாழ்வினில் துன்பங்கள் ஏதும் இருக்காது என்று உறுதியாக கூறும் பாடல் தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (2.82.9). திண்=மிகவும் அதிகமான; திறல்=வலிமை;இரும்=பெரிய; களிறு=ஆண் யானை; செந்தினம்=ஒரு வகை இசை; அறுபதம்=ஆறு கால்களைக் கொண்ட வண்டுகள்;
முந்திக் கண்ணனும் நான்முகனும் அவர் காணா
எந்தை திண் திறல் இருங் களிறு உரித்த எம் பெருமான்
செந்தினத்து இசை அறுபதம் முரல் திருத்தேவூர்
அந்தி வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
சுடுகாட்டினை இடமாகக் கொண்டு நடனமாடினாலும், பெருமானே தனது தந்தை என்று நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.84.5)திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கனல்=நெருப்பு; வீடு உடன் எய்துவார்கள்=பேரின்பம் தரும் முக்தி வீட்டினை இந்த பிறவி முடிந்தவுடனே அடையும் தகுதி படைத்தவர்கள்; வெறிநீர்=நறுமணம் உடைய நீர்; விதி=முறை; தினமும் பெருமானை நோக்கி செய்யப்படும் பூஜை முதலிய வழிபாடுகள் முடிந்த பின்னர்,மலர்கள் தோய்ந்து இருக்கும் நீருடன் சிறிது பாலையும் சேர்த்து, பூமியில் தெளித்து இதமர்க்யம் என்று மூன்று முறை சொல்லி முடிப்பார்கள். இந்த பழக்கத்தையே, விதி என்று வெறிநீர் என்று விரலால் தெளிப்ப என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். அந்தணர் குலத்தில் அவதரித்த மூன்று வயதுக் குழந்தை, தனது தந்தையார் பூஜை செய்யும் முறையினை உற்று கவனித்து, தான் உணர்ந்த செய்திகளை இந்த பாடலில் கூறும் நயத்தை நாம் உணரலாம்.தெளிந்த நீர்நிலைகளில் அந்தணர்கள் காலை, நண்பகல் மற்றும் மாலை நேரங்களில் சந்தியா வந்தனம் செய்வது வழக்கம். அத்தகைய நீர்நிலைகளில் மலர்ந்துள்ள மலர்களின் நறுமணம் நீருடன் கலந்து இருப்பதை வெறிநீர் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றாரோ என்றும் தோன்றுகின்றது. மேலும் இந்த சந்தியாவனத்தின் ஒரு பகுதியாக சூரியனுக்கு அர்க்கியம் வழங்கி சூரியன் மூலமாக அனைத்து தேவர்களுக்கும் தினமும் அர்க்கியம் வழங்கும் முறையில்,இரண்டு கைகளையும் இணைத்து நீரினை முகந்து, விரல்களின் நுனியால் அந்த நீரினை தெளிப்பது வழக்கம். எனவே இவ்வாறு செய்யப்படும் சந்தியாவந்தனம் இங்கே குறிப்பிடப்படுகின்றது என்ற விளக்கமும் பொருத்தம் ஆனதே. இந்த பாடலில் தோடும் குழையும் அணிந்த கோலத்தில், மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மையும் குறிப்பிடப்படுகின்றது. இந்த பதிகத்தின் ஆறாவது பாடலிலும், பெருமானை எந்தை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
தோடொரு காதனாகி ஓர் காது இலங்கு சுரி சங்கு நின்று புரளக்
காடு இடமாக நின்று கனலாடும் எந்தை இடமாய காதல் நகர் தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால்
நாடு உடனாடு செம்மை ஒலி வெள்ளம் ஆகும் நனிபள்ளி போலும் நமர்காள்
பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த கொடிய ஆலகால விடத்தினை உட்கொண்டு, அனைத்து உலகத்தவரையும் காப்பாற்றிய பெருமானை மிகவும் பொருத்தமாக, எந்தை என்று, கோளறு திருப்பதிகத்தின் பாடலில் (2.85.5), திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். துஞ்சிருள் வன்னி என்று வன்னி இலைகள் தங்களின் ஊடே வெளிச்சம் புகாத வண்ணம் நெருக்கமாக அடர்ந்து இருக்கும் நிலையினை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.சிவபெருமான், அடியார்களின் உள்ளத்தின் உள்ளே இருப்பதால், கொடிய அரக்கர்களும், கடுமையான இயற்கை உபாதைகளுக்கு காரணமாக விளங்கும் இடியும் மின்னலும், செருக்கு கொண்டு பலரையும் துன்புறுத்தும் பூதங்களும், அத்தைகைய அடியார்களைக் கண்டு அச்சம் கொண்டு, அவர்களுக்கு நல்ல செயல்களையே புரியும் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உறுதி அளிக்கின்றார்.
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிக் கொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (2.86.11) திருஞானசம்பந்தர் எந்தைப் பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.பொருபுனல்=கரையினில் மோதுகின்ற அலைகள் கொண்ட நீர்நிலைகள்; இந்த பாடலின் கடை அடியில் செம்மை என்ற சொல் இரண்டு முறை வருவதை நாம் உணரலாம். இந்த பதிகத்தினை ஓதும் அடியார்கள் இம்மை மற்றும் மறுமையிலும் சிறந்து விளங்கும் தன்மை இவ்வாறு குறிப்பிடப் படுகின்றது.செற்ற=வெற்றி கொண்ட: தீயினைப் போன்று சிவந்த வண்ணத்தை உடையவனும் எமது தந்தையும் ஆகிய பெருமானை மனதினில் தியானித்து நினையாத திரிபுரத்து அரக்கர்களின் நகரங்களை அன்று நெருப்பினில் எரிந்து அழியும் வண்ணம் அழித்து வெற்றி கொண்ட பெருமான் பொருந்தி உறைகின்ற செல்வம் வாய்க்கப் பெற்ற திருநாரையூர் தலத்தினை தொழுது வணங்கிய வண்ணம், கரையினில் மோதும் அலைகள் கொண்ட நீர்நிலைகளால் சூழப்பட்ட சீர்காழி நகரத்தைச் சார்ந்தவனும் மறைக் குலத்தில் வந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன், உரைத்த மாலையாகிய இந்த பத்து பாடல்களை ஓதும் அடியார்கள் இம்மையில் தங்களது செல்வம் வளரப் பெற்றும் மற்றும் மறுமையில் திருவருட்பேறு பெற்றும் சிறப்புடைய வாழ்வினை அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
எரியொரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார்
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார்
திருவளர் செம்மையாகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே
தான் பயணம் செய்வதற்கு சிவிகை வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இறைவனிடம் வேண்டியதாக பெரிய புராணத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.எனினும் திருஞானசம்பந்தர் தந்தையாரின் தோளினில் ஏறிக் கொண்டு வாராமல் தானே நடந்து வந்ததைக் கண்ட பெருமான், தானே முன்வந்து அருள் புரிந்தமை இங்கே அருள் சென்று கைகூடியது என்று கூறுகின்றார். நமது தேவைகளை புரிந்து கொண்டு தந்தையார், நாம் கேட்காமல் இருந்த போதும்.தாமே வந்து நமது தேவைகளை நிறைவேற்றுவது போன்று, இறைவன் தானே முன்வந்து முத்துச்சிவிகை அளித்ததால் எந்தை என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் திருநெல்வாயில் அரத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடல் (2.90.1). திருஞானசம்பந்தருக்கு தந்தையாகவும் இறைவனாகவும் திகழ்ந்தவர் அல்லவா சிவபெருமான். ஏறு=இடபம்; அந்தண்= அழகு மற்றும் குளிர்ச்சி; ஈசன்=தலைவன்; கந்தம்=நறுமணம்;இறைவனின் புகழினை வாயினால் பாடி மனதினால் சிந்திக்கும் அன்பர்களுக்கு இறைவன் அருள் கைகூடும் என்றும் அல்லாதார்க்கு அவனது அருள் கைகூடாது என்பதையும் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் நிவா நதி குறிப்பிடப்பட்டு,தலத்தின் நீர்வளத்திற்கு இந்த நதி காரணம் என்பதும் உணர்த்தப் படுகின்றது. சென்று கைகூடுவது என்று திருவருள் தானே வந்தடைந்ததை பிள்ளையார் குறிப்பிடுகின்றார்.
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவா மல்கு கரை மேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
சிரபுரம் (சீர்காழி தலத்தின் ப்ன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.102.6) திருஞானசம்பந்தர், இமையோர்கள் எந்தை என்று பெருமானிடம் சரண் புகுந்தனர் என்று கூறுகின்றார். ஓட்டந்து=ஓட்டம் தந்து; ஆழி=கடல், இங்கே அருட்கடலாக பெருமான் விளங்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. அந்தம்=முடிவு; பிரளய வெள்ளத்தில் பூமி முழுவதும் மூழ்கிய போதிலும் சீர்காழி நகரம் மிதந்தது என்றும், பெருமான் உமையன்னையுடன், ஓம் எனப்படும் பிரணவ மந்திரத்தை தோணியாக மாற்றி, இந்த தலம் வந்தடைந்து தங்கி, மீண்டும் உலகினை படைத்தார் என்று சீர்காழி தலபுராணம் குறிப்பிடுகின்றது. இத்தகைய ஆற்றல் படைத்த பெருமானை வணங்கும் அடியார்களை விட்டு வலிமையான வினைகளும் நீங்கிவிடும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார், இன்பன்=இன்பமே வடிவானவன்; யாழின் நேர்மொழி ஏழை என்று உமையன்னையின் குரல் இனிமை இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது.
ஊழி அந்தத்தின் ஒலி கடல் ஓட்டந்து இவ்வுலகங்கள் அவை மூட
ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார் தாம்
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிதுறை இன்பன் எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரம் தொழ வல்வினை அடையாவே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.113.5) எனது தந்தையாகிய பெருமானின் இடம் சீர்காழி தலம் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். விருது=வெற்றி எனப்படும் பட்டம்; சரிதை=சரித்திரம்; பல வெற்றிகள் கண்டு சரித்திரம் படைத்தவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.கிள்ளை=கிளி; இந்த தலத்தினில் வாழும் கிளிகள், அடிக்கடி அந்தணர்கள் வேதம் ஓதுவதைக் கேட்டு பழகியதால், வேதம் பயில்கின்ற சிறுவர்கள் பிழை செய்வதை புரிந்து கொண்டு, அந்த பிழைகளை திருத்துவதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த குறிப்பு இந்த தலத்தினில் வாழ்ந்து வந்த அந்நாளைய அந்தணர்கள் மிகவும் அதிகமாக வேதங்கள் ஓதியதை உணர்த்துகின்றது.
விருதிலங்கும் சரிதைத் தொழிலார் விரிசடையினார்
எருதிலங்க பொலிந்தேறும் எந்தைக்கு இடமாவது
பெரிதிலங்கும் மறை கிளைஞர் ஒதப் பிழை கேட்டலால்
கருது கிள்ளைக் குலம் தெரிந்து தீர்க்கும் கடற் காழியே
திருக்கேதாரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.114.3), திருஞானசம்பந்தர், இந்த தலத்தினில் வாழ்ந்த முனிவர்கள் பலரும் பொழுது புலர்வதற்கு முன்னரே எழுந்து நீராடி, எந்தையே என்று பெருமானை அழைத்து வழிபட்டனர் என்று குறிப்பிடுகின்றார். புரோதயம்=பூர மற்றும் உதயம் என்ற இரண்டு வடமொழிச் சொற்கள் இணைந்த சொற்றொடர். பூர்வம் என்பது கிழக்கு திசையினை குறிக்கும். கிழக்கு திசையில் நிகழும் சூரிய உதயத்திற்கு முன்னர் என்று பொருள் கொள்ள வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்னர் உள்ள மூன்று நாழிகை நேரம் பிரம முகூர்த்தம் என்று அழைக்கப்படும், இந்த நேரத்தில் செய்யப்படும் நற்செயல்கள் பல மடங்கு பலன்களை தரும் என்று நம்பப் படுகின்றது. பண்டைய நாட்களில் முனிவர்கள் ஒன்று கூடி தவம் செய்த இடமாக திருக்கேதாரம் இருந்து வந்தது. குரங்குகள் குதித்து விளையாடுவதால், அசைகின்ற மலர்களிலிருந்து தேன்மழை பொழிகின்றது என்பதை உணர்த்தும் பொருட்டு சரேல் எனச் சொரிந்தது என்று கூறுகின்றார். முரிந்து=நெரிக்கப்பட்டு; கெந்தம்=கந்தம் என்ற சொல் எதுகை கருதி திரிந்தது;நறுமணம் என்று பொருள்.
முந்தி வந்து புரோதயம் மூழ்கி முனிகள் பலர்
எந்தை பெம்மான் என நின்றிறைஞ்சும் இடம் என்பரால்
மந்தி பாயச் சரேலச் சொரிந்தும் முரிந்து உக்கபூக்
கெந்த நாறக் கிளரும் சடை எந்தை கேதாரமே
திருக்கேதாரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.114.5) திருஞானசம்பந்தர், பல ஊழிகளையும் உணரும் அறிவினை உடைய சிவயோகிகள் சிறந்த பொருளினை உணர்த்தும் வேத மந்திரங்கள் கொண்டு, பெருமானை எந்தை என்று போற்றும் இடம் திருக்கேதாரம் என்று கூறுகின்றார்.மேழி=கலப்பை; பூழ்தி=புழுதி என்ற சொல் மருவியுள்ளது. கீண்ட=நகங்களால் கீற; மாணிக்கக் கற்கள் மிகவும் அதிகமாக புதைந்து கிடக்கும் கேதாரம் தலத்தில் உள்ள நிலத்தினை, உழ அந்த மாணிக்கக்கற்கள் வெளிப்படுகின்றன என்றும், பன்றிகள் தங்களது கால்விரல் நகங்களால் நிலத்தினை கீற,மாணிக்கக் கற்கள் தென்படுகின்றன என்றும் குறிப்பிடுகின்றார். ஒண்பொருள்=சிறந்த பொருள்;
ஊழியூழி உணர்வார்கள் வேதத்தின் ஒண் பொருள்களால்
வாழி எந்தை என வந்திறைஞ்சும் இடம் என்பரால்
மேழி தாங்கி உழுவார்கள் போலவ் விரை தேரிய
கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே
இரும்பை மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.117.3) திருஞானசம்பந்தர், எந்தை பெம்மானின் இடம் இரும்பை மாகாளம் என்று குறிப்பிடுகின்றார். இரும்பை என்பது தலத்தின் பெயர்; மாகாளம் என்பது திருக்கோயிலின் பெயர். பலவின் கனிகள் என்ற தொடருக்கு, பல விதமான கனிகள் என்று பொருள் கொள்வதை விடவும், பலாப்பழங்கள் என்று பொருள் கொள்வது பொருத்தம். தற்போதும் இந்த பகுதியில் பலா மரங்கள் மிகவும் அதிகமாக இருப்பதை நாம் காணலாம்.
வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடையூர்தியான்
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை தனுள்
கந்தமாய பலவின் கனிகள் கமழும் பொழில்
மந்தி ஏறிக் கொணர்ந்துண்டு உகள்கின்ற மாகாளமே
திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.119.11) தேவாரப் பதிகங்களை முறையாக பாடும் அடியார்கள், எந்தையாகிய பெருமான் உறைகின்ற சிவலோகம் சென்று சேர்வார்கள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நந்தி என்பது இங்கே பெருமானை குறிப்பிடுகின்றது.நந்துதல் என்றால் படிப்படியாக குறைத்தல் என்று பொருள். நம்மைப் பிணித்துள்ள வினைகளை படிப்படியாக குறித்து முற்றிலும் ஒன்றும் இல்லாத தன்மை ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்த பெருமான் என்று பொருள். கந்தம்=நறுமணம்; உலகு=இங்கே சிவலோகம் என்று பொருள் கொள்ளவேண்டும்;
கந்த நாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல்
நந்தி சேரும் திருநாகேச்சரத்தின் மேல் ஞானசம்
பந்தன் நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய்
எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே
தன்னை பெருமான் பால் காதல் கொண்ட தலைவியாக உருவகித்து மூக்கீச்சரம் தலத்தின் (திருச்சி நகரத்தின் ஒரு பகுதியாகிய உறையூர்) மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.6) திருஞானசம்பந்தர், எந்தையாகிய பெருமானைச் சென்று அடையாததால், தான் படுகின்ற வேதனையை விவரிக்கின்றார்.ஏதம்=துன்பம்; மானதன்=பெருமை உடையவன்; பகைவரின் மானத்தை அழிப்பவன் என்றும் மானம் உடையவன் என்றும் இருவகையாக விளக்கம் கூறப்படுகின்றது. நேரியன்=நேர்மை உடையவன்; செம்பியன்=சோழன்; அந்தண் என்ற சொல்லினை அம் மற்றும் தண் என்று இரண்டு சொற்களாக பிரித்து உள்ளத்தில் குளிர்ச்சி உடையவன் என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த பாடலின் இரண்டாவது அடி, அகத்துறைப் பொருளைக் கொண்டது. பெருமான் பால் தீராத காதல் கொண்ட பெண்மணியின் கூற்றாக உள்ளது. தன்னை பெருமான் பால் காதல் கொண்டுள்ள பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டு திருஞானசம்பந்தர் சொல்லும் கருத்துகளை சம்பந்த நாயகியின் சொற்கள் என்று கி.வா.ஜா. அவர்கள் தனது திருமுறை மலர்கள் புத்தகத்தின் குறிப்பிடுகின்றார். பெருமான் பால் தீராத காதல் கொண்டுள்ள சம்பந்த நாயகி, பெருமானுடன் இணைய முடியாத ஏக்கத்தினால் வருத்தம் அடையவே,அவளது உடலும் கைகளும் இளைத்து விடுகின்றன; அதனால் அவளது கைகளில் அணிந்திருந்த வளையல்கள் தாமாகவே கழன்று விழுந்து விடுகின்றன.இந்த நிலைக்கு தனது உள்ளத்தைக் கொள்ள கொண்ட பெருமானே காரணம் என்பதால், தனது வளையல்களைத் தான் அறியாத வண்ணம் கழலும் வண்ணம் தன்னை மாற்றிய பெருமானை வளை கவர்ந்தவன் என்று சம்பந்தநாயகி குறிப்பிடுகின்றாள். மெய்=உடல்; வீங்கிருள்=நிறைந்த இருள்; இறைவன் பால் தீராத காதல் கொண்டு, அவன் பால் எல்லையற்ற அன்பினைப் பொழிந்து, மனம் வாக்கு காயங்களால் தன்னை முற்றிலும் இழந்த அடியார்களின் நிலையை, காதல் வயப்பட்டு தலைவனைப் பிரிந்த தலைவியின் இயல்புகளாகிய, பசலை கொள்ளுதல், உடல் இளைத்தல், பித்தரைப் போன்று இருத்தல் ஆகிய தன்மைகளுக்கு ஒப்பிடுதல் இலக்கிய மரபு. அருளாளர்கள் அடைகின்ற இந்த மாற்றம், உயிர்களை தன் பால் ஈர்த்து வளைத்து அவர்களை மெய்யுணர்வு கொள்ளச் செய்யும் பெருமானின் அருட்செயலை குறிப்பிடுவதாக ஒரு சுவையான விளக்கம் கூறப்படுகின்றது. திருநீற்றினைத் தனது உடல் முழுவதும் பெருமான் பூசிக்கொண்டுள்ள நிலை, தான் ஒருவனே என்றும் நிலையானவன் என்பதையும், ஏனைய உயிர்களும் பொருட்களும் ஒரு நாள் அழிந்து சாம்பலாக மாறக்கூடியவை என்பதையும் பெருமான் நமக்கு உணர்த்தும் பொருட்டே.
வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கிருள்
வந்து என் ஆரவ் வளை கொள்வதும் இங்கொரு மாயமாம்
அந்தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய
எந்தை மூக்கீீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் ஏதமே
தனது தந்தையார் வேள்வி செய்ய விரும்பியபோது, இறைவனிடம் அதற்காக பணம் வேண்டிய திருஞானசம்பந்தர், தனது விருப்பத்தை பதிகமாக தெரிவிக்கும் பதிகம் இடரினும் தளரினும் என்று தொடங்கும் பதிகம் (3.04). இந்த பதிகத்தின் ஆறாவது பாடலில் எந்தை என்றும் ஏழாவது பாடலில் அப்பா என்றும் திருஞானசம்பந்தர் இறைவனை குறிப்பிடுவதை நாம் உணரலாம். விரவி=கலந்து; வினைகளால் ஏற்படும் கடுந்துயரம் இங்கே நெருப்புடன் ஒப்பிடப்படுகின்றது. நெருப்பு போன்ற துன்பம் என்று கூறும் திருஞானசம்பந்தருக்கு, இறைவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய நெருப்பு நினைவுக்கு வந்தது போலும். மன்மதனை எரித்த நிகழ்ச்சியை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒப்புடை ஒருவன்=தனக்கு நிகராக தன்னை மட்டும் கொண்ட தன்மை படைத்தவன். அழகில் தனக்கு நிகராக வேறு ஒருவரும் இல்லாத காரணத்தால், மன்மதனை, அவனுக்கு அழகில் நிகரான ஒருவன் அவன் ஒருவன் தான் என்று நயமாக கூறுவதை காணலாம். அப்படி என்ற சொல் வியப்புச் சொல்லாக இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
அப்பா உன் அடி அலால் அரற்றாது என் நா
ஒப்புடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
பூந்தராய் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.05.05) திருஞானசம்பந்தர், தன்னை வணங்கும் அடியார்களின் மேல் வினைகளை விடுவித்து, வீடுபேறு அருளும் வல்லமை வாய்ந்தவன் எந்தையாகிய ஈசன் ஒருவனே என்று உறுதியாக கூறுகின்றார்,மேல்வினை=இனியும் நாம் எடுக்கவிருக்கும் பிறவிகளில் அனுபவித்து கழிப்பதற்காக ஒதுக்கப் பட்டுள்ள வினைகள்; தனது அடியார்களைப் பற்றியிருக்கும் மேல் வினைகளை அழித்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து அவர்களை விடுவிக்கும் ஆற்றல் வாய்ந்தவன் பெருமான் என்றும் குறிப்பிடுகின்றார்.மேல்வினைகள் தாமே நாம் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுப்பதற்கு காரணமாக உள்ளன. எனவே அந்த மேல்வினைகள் நீக்கப்பட்ட பின்னர், அத்தகைய வினைகளால் விளைகின்ற பிறவிகளும் தவிர்க்கப் படுகின்றன. எண்ணற்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைகளை ஒரே பிறப்பினில் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுமானால், அந்த வினைகளை நுகர்ந்து கழிக்கும் தருணத்தில் விளையும் இன்ப துன்பங்களை தாங்கும் ஆற்றல் நமது உடலுக்கும் உயிருக்கும் இல்லை என்பதால், நம்பால் கருணை கொண்டு பெருமான், அந்த வினைகளின் ஒரு பகுதியை மட்டுமே இந்த பிறவிக்கு ஒதுக்கிவிட்டு, எஞ்சியவற்றை இனிமேல் நாம் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு ஒதுக்கி விடுகின்றார். இந்த மேலை வினைகளைக் கழித்துக் கொண்டு பிறப்பிறப்புச் சுழற்சியைத் தவிர்க்கும் வழியை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் நமக்கு கற்றுக் கொடுக்கின்றார்.
பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நுந்தம் மேல்வினை ஓட வீடுசெய்
எந்தையாய எம் ஈசன் தானே
இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.10.5) திருஞானசம்பந்தர் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். ஊறு=உணரும் சுவை;ஒளி ஒலி நாற்றம் சுவை ஊறு எனப்படும் ஐந்து குணங்களில் ஒன்று. பிரமனின் தலை பெருமானின் திருக்கைகளால் தொடப்பட்டு கிள்ளி எறியப்பட்டமையால், ஊறுடை வெண்டலை என சொல்லப்பட்டுள்ளது. வீறு= வேறு ஒருவர்க்கு இல்லாத சிறப்பான அழகு; விறல்=வலிமை;ஆர்ந்த=பொருந்திய; பேறு=வீடுபேறு பேரும்=பெயர்ந்து விடும். முக்தி உலகத்தினை உடையவனாகிய பெருமானின் திருநாமங்களை சொல்லும் அடியார்கள், தங்களை பீடித்துள்ள பிறவிப்பிணி என்ற கொடிய நோய் நீக்கப்பட்டு, வீடுபேற்றினை அடைவார்கள் என்று கூறுகின்றார்.
ஊறுடை வெண்டலை கையில் ஏந்திப் பலவூர்தொறும்
வீறுடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி எந்தை மேய இராமேச்சுரம்
பேறுடையான் பெயர் ஏத்து மாந்தர் பிணி பேருமே
வைகல் மாடக்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.18.1) திருஞானசம்பந்தர், எந்தையாரிடம் வைகல் மாடக்கொயில் என்று கூறுகின்றார். துளமதி=துள்ள மதி என்ற தொடரின் இடைக்குறை. துள்ளிக்குதிக்கும் எண்ணம் கொண்டுள்ள மான் கன்று; உளமதி=உள்ளத்தில் ஞானம் உடைய சிவஞானிகள்; வளமதி=அழகிய சந்திரன்; சந்திரனைத் தொடும் அளவுக்கு உயர்ந்த மாடக் கோயில் என்று கடை அடியில் குறிப்பிடுகின்றார்.
துளமதி உடை மறி தோன்று கையினர்
இளமதி அணி சடை எந்தையாரிடம்
உளமதி உடையவர் வைகல் ஓங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே
திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.36.1) திருஞானசம்பந்தர், தனது தந்தையாகிய பெருமானின் திருவடிகள் தனது மனதினில் நிலையாக பொருந்தியுள்ளன என்று கூறுகின்றார். சந்தனம், அகில், ஆத்தி, தேக்கு, சாதிக்காய் மரங்களை பொன்முகலி ஆறு அடித்துக் கொண்டு வருவதாக குறிப்பிடுகின்றார். வண்=வள்ளல் தன்மை உடைய: அடியார்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்கள் கேட்காமலே அள்ளிக் கொடுக்கும் பெருமானை, வள்ளல் என்று மிகவும் பொருத்தமாக குறிப்பிடுகின்றார்.
சந்தமார் அகிலொடு சாதி தேக்கம்மரம்
உந்து மா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில் வளர் மல்கு வண் காளத்தி
எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே
பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடலில் (3.37.6) திருஞான சம்பந்தர் பிரமாபுரத்து வேதியனை எந்தை என்று ஏத்துமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். ஏடு= மலர்; மலரை ஒத்து குளிர்ச்சியை தருகின்ற சந்திரன் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சந்திரன் வெண்மை நிறம் உடையது. பொதுவாக பாம்பு கருமை நிறம் உடையது. எனவே சந்திரன் மெய்யடியார்களையும் பாம்பு பொய்யடியார்களையும் குறிப்பிடுகின்றன என்ற விளக்கம் அளித்து, சந்திரனையும் பாம்பினையும் ஒரு சேர ஏற்றுக்கொண்ட இறைவன், இருவகைப் பட்ட அடியார்களையும் ஏற்றுக்கொண்டு அருள் புரிகின்றான் என்ற சுவையான விளக்கமும் தருமபுர ஆதினத்து வலைத்தளத்தினில் அளிக்கப் படுகின்றது. உயிரின் விருப்பத்தோடு நெஞ்சத்தின் செயல்கள் எப்போதும் ஒத்துப் போவதில்லை. இவ்வாறு மாறுபட்டு செயல்பட்டு, நெஞ்சம் அடைகின்ற பயன் தான் யாது. மேலும் மேலும் வலிமையான வினைகளைச் சேர்த்துக்கொண்டு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து மீளாமல் உழல்வதைத் தவிர்த்து வேறெந்த எந்த பயனையும் நெஞ்சம் அடைவதில்லை. இந்த உண்மையைத் தான் திருஞானசம்பந்தர் கேள்வியாக, தனது நெஞ்சத்தினை நோக்கி, இந்த பாடல் மூலம் வினவுகின்றார். நெஞ்சமே என்று விளித்து,என்னுடன் பிணங்கி மாறுபட்டு நின்று நீ சாதிக்கப் போவது தான் யாது, மேலும் மேலும் வினைகளை சேர்த்துக் கொள்வதற்கு ஏன் துடிக்கின்றாய் என்று வினவி, தனது திருக்கரத்தினில் நெருப்பேந்தி நடனமாடும் பெருமானை, தனது அடியார்களுக்கு பேரின்பத்தை வழங்குவதை தனது கொள்கையாகக் கொண்டுள்ள பெருமானை, பிரமாபுரத்து வேதியனை, பிறைச் சந்திரனையும் பாம்பையும் தனது சடையில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமானை, எனது தந்தை என்று பாவித்து புகழ்ந்து போற்றி பலனடைவாயாக என்று அறிவுரை கூறுகின்றார். நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை சொல்லும் பாடல்.
ஊடினால் இனி யாவது என்னுயிர் நெஞ்சமே உறு வல்வினைக்கு
ஓடி நீ உழல்கின்றதென் அழல் அன்று தன் கையில் ஏந்தினான்
பீடு நேர்ந்தது கொள்கையான் பிரமாபுரத்து உறை வேதியன்
ஏடுநேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே
சீர்காழி தலத்தின் மீது பதிகத்தின் பாடலில் (3.43.1) தனது தந்தையாகிய பெருமானின் திருவடிகள், தனது மனதினில் நன்கு பதிந்துள்ளன என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மெய்=உடல், இங்கே பெருமானின் திருமேனி; திருநீற்றினில் நீராடியது போன்று, பெருமானின் திருமேனி முழுவதும் திருநீற்றினில் மூழ்கியிருக்கும் தன்மையை, வெண்பொடி ஆடிய மெய்யனார் என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
சந்தமார் முலையாள் தன கூறனார்
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார்
கந்தமார் பொழில் சூழ் தரு காழியுள்
எந்தையார் அடி என் மனத்து உள்ளவே
திருப்புகலூர் தலத்தினில் அப்பர் பிரானும் திருஞானசம்பந்தரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போது அப்பர் பிரான், திருவாரூர் நகரத்து சிறப்பினையும் ஆங்கே திருவாதிரைத் திருநாள் விமரிசையாக கொண்டாடப் படுவதையும் திருஞானசம்பந்தருக்கு எடுத்துச் சொல்கின்றார். அதனைக் கேட்ட திருஞானசம்பந்தர் உடனே திருவாரூர் செல்கின்றார். அவ்வாறு திருவாரூர் சென்றபோது, அந்த தலத்து அடியார்கள் ஊர் எல்லையில் அவரை வரவேற்கின்றனர். அப்போது அந்த தலத்து அடியார்கள் ஆரூர்ப் பெருமானுடன் நெருக்கமாக இருக்கும் தன்மையை உணர்ந்த, திருஞான சம்பந்தர், அந்த அடியார்களிடம், தனது தந்தையாகிய பெருமான் தன்னை ஏற்றுக்கொள்வாரோ என்று வினவும் பாடல்கள் கொண்ட பதிகம் (3.45). ஒன்றினை அருளிச் செய்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காணலாம். இந்த பாடலில் இறைவனைத் தனது சிந்தையில் புகுந்தவன் என்றும் தனது தந்தை என்றும் குறிப்பிடும் திருஞானசம்பந்தருக்கு, பெருமான் தன்னை ஏற்றுக்கொள்ளும் தன்மையில் எந்தவிதமான ஐயப்படும் இருந்ததில்லை. நால்வர் பெருமானார்களுக்கும் சிவபெருமானுக்கும் இடையே இருந்த தன்மையை குறிப்பிடுகையில், மகன்மை நிலை என்று தானே திருஞானசம்பந்தரின் நிலையை குறிப்பிடுகின்றனர். எனினும் அத்தகைய ஐயம் தனக்கு உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, திருவாரூர் அடியார்களிடம் உதவி கேட்பது போன்று உணர்த்துவதன் மூலம், திருவாரூர் அடியார்களின் பெருமையை நமக்கு உணர்த்துகின்றார். திருவாரூர் அடியார்களும் திருஞான சம்பந்தரின் பெருமையையும், அந்நாள் வரை இறைவன் அவருக்கு ஞானப்பால் அளித்தும், பொற்றாளம் வழங்கியும், முத்துச் சிவிகை, முத்துக் குடை மற்றும் ஊதுகுழல் சின்னங்கள் அளித்தும், பூதகணம் மூலமாக பந்தல் விரித்து வரவேற்றும், உலவாக்கிழை அளித்தும் அருள் புரிந்த செயல்களை நன்கு அறிந்தவர்கள். எனவே திருஞானசம்பந்தருக்காக எவரும் இறைவனிடம் பரிந்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் நன்கு உணர்ந்தவர்கள்.
அந்தமாய் உலகு ஆதியும் ஆயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தையே புகுந்தான் திருவாரூர் எம்
எந்தை தான் எனை ஏன்று கொளும் கொலோ
திருக்கருகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.46.7) திருஞானசம்பந்தர், எந்தையாகிய பெருமானின் திருமேனி கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தில் உள்ளது என்று கூறுகின்றார். சுடுகாட்டினில் இட்டு சுடப்பட்ட உடல்களின் சாம்பலை, தனது திருமேனி மேல் பூசிய வேதியனாகிய பெருமான், அடியார்களின் சிந்தையுள்ளே நின்று அருள் புரியும் செல்வராக விளங்குகின்றார். நறுமணம் கமழும் முல்லை மலர்ந்து மணம் வீசும் திருக்கருகாவூர் தலத்தினில் உறையும் எமது தந்தையாகிய பெருமான், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் வண்ணத்தில் திருமேனி உடையவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல் கமழும் கருகாவூர் எம்
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே
திருமழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.48.11) திருஞானசம்பந்தர், தனது தந்தையாகிய பெருமானைப் புகழ்ந்து, இனிய சந்தங்களுடன் பொருந்திய பாடல்களை, மிகுந்த மகிழ்ச்சியுடன் தான் பாடுவதாக குறிப்பிடுகின்றார். மந்தம்=தென்றல் காற்று; இந்தப் பதிகத்தினை நன்குக் கற்றுத் தேர்ந்து முறையாக பாடும் அடியார்கள், எத்தகைய பாவமும் இல்லாதவர்களாக விளங்குவார்கள் என்று கூறுகின்றார்.
மந்தம் உந்து பொழில் மழபாடியுள்
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான்
கந்தமார் கடல் காழியுள் ஞானசம்
பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை பாவமே
வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (3.54.3) திருஞானசம்பந்தர், தனது தந்தையாகிய பெருமானின் தன்மைகள் அளப்பதற்கு மிகவும் அரியது என்பதால், அவரது தன்மையை எவ்வகைக் கூற்றாலும் கூற இயலாது என்று வியப்பதை நாம் இந்த பாடலில் உணரலாம். தன்னை இடையறாது சிந்திக்கும் அடியார்களின் வினைகளை, பெருமான் தீர்க்கின்றார் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தையாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ
இதே பதிகத்தின் நான்காவது பாடலில் திருஞானசம்பந்தர், கோள்களாலும் தீய வினைகளாலும் விளைகின்ற துன்பங்கள், எந்தையாகிய பெருமானின் திருப்பாதங்களை வணங்கி அவனது புகழினைச் செவிமடுக்கும் அடியார்களை, சென்று அடையா என்று கூறுகின்றார். ஆட்பாலவர்= ஆட்கொண்டு அருள் புரிவதற்கு தகுதி வாய்ந்த அடியார்கள்; முக்தி நிலையை அடைவதற்கு தகுதி படைத்த பக்குவம் அடைந்த உயிர்கள்; ஆதி மாண்பு=தொன்றுதொட்டு உயிர்களுக்கு பலவகையில் பெருமான் அருள் புரிகின்ற பெருமை; கேட்பான் புகில்=சொல்லவும் கேட்கவும் தொடங்கினால்; கிளக்க=ஆராய; பெருமானின் அளவற்ற பெருமையை ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாது என்பதால், ஆராயவேண்டாம் என்று கூறுகின்றார்.
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா
கோட்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை
தாட்பால் வணங்கித் தலை நின்று இவை கேட்கத் தக்கார்
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.68.11) திருஞானசம்பந்தர், இந்த பதிகத்தின் பாடல்களை, தனது தந்தையாகிய பெருமானின் திருவடிகளைப் போற்றி சந்த இசையுடன் செந்தமிழில் அருளிய பாடல்கள் என்று குறிப்பிட்டு, இந்த பதிகத்தை மனதினால் சிந்தித்து முறையான இசையுடன் பாடும் அடியார்களின் வினைகள் நலிந்துவிடும் என்றும், அதன் விளைவாக அந்த அடியார்கள் பரலோகம் அடைவது எளிது என்று கூறுகின்றார். சிந்தை செய்து பாடல்களை பாடவேண்டும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதால், தேவாரப் பாடல்களை பல முறை சிந்தித்து,பொருளினை புரிந்து கொண்டு, அந்த பொருளில் மனம் லயித்து அனுபவித்து பாடவேண்டும் என்று உணர்த்துகின்றார் என்பதை நாம் புரிந்துகொண்டு பாடல்களின் பொருளை புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்.
அந்தண் வரை வந்த புனல் தந்த சந்தனமொடு உந்தி அகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலிப்
பந்தன் உரை சிந்தை செய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே
திருவைகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.71.9) திருஞானசம்பந்தர், பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காணாது திகைத்த திருமாலும் நான்முகனும், பெருமானின் ஆற்றலை உணர்ந்தவர்களாக, பெருமானை எந்தை என்று அழைத்து தொழுதனர் என்றும், அப்பொது ஈசன் அவர்களுக்கு அருள் புரிந்தான் என்றும் குறிப்பிடுகின்றார். பெருமான்= பெருமையை உடையவன்; அந்தம் முதல் ஆதி என்று குறிப்பிட்டு பெருமானின் முழுமுதற் தன்மையையும் உலகின் ஒடுக்கத்திற்கும் தோற்றத்திற்கும் பெருமான் மூல காரணனாக இருக்கும் நிலையையும் திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பிரமனும் திருமாலும் திருவைகாவூர் தலத்தில் வாயில் காப்பாளராக இறைவனைத் தொழுத வண்ணம் இருப்பதை நாம் காணலாம்.அதனால் தான், வழக்கமாக பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி அலைந்த போதும் அவர்கள் காணாத வண்ணம் நெடுஞ்சுடராய் நின்ற பெருமான் என்று தனது ஒன்பதாவது பாடலில் குறிப்பிடும் சம்பந்தர் இங்கே அவர்கள் இருவரும் பெருமானைத் தொழுத வண்ணம் நிற்க பெருமான் அவர்களுக்கு அருள் புரிந்தார் என்று கூறுகின்றார். இறைவனைப் போன்று அடியார்களும் தங்களது உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டவர்களாக அன்றைய நாளில் இருந்த நிலையினை நாம் இந்த பாடல் மூலம் அறிகின்றோம்.
அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர் கோனை அயன் மாலும் இவர்கள்
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள் செய் ஈசன் இடமாம்
சிந்தை செய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள்
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே
தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.74.7) திருஞானசம்பந்தர் தனது தந்தைக்கும் தந்தையாக விளங்கியவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். தனக்கு மகப்பேறு வேண்டும் என்று விரும்பிய சிவபாத இருதயர், பெருமானை வேண்டி அந்த பேற்றினைப் பெற்றமையால், தனது தந்தைக்கும் தந்தையாக விளங்கியவர் சிவபெருமான் என்பதை உணர்த்த, இவ்வாறு கூறினார் போலும். கன்றியெழ=கோபத்துடன் பொங்கி எழுந்த; வென்றி நிகழ்=வெற்றி பெற்ற; அசுரர்களைத் தவிர்த்து மற்ற அனைவரையும் வெற்றி கொள்ளவேண்டும் என்ற வெறியுடன் திகழ்ந்து பலரையும் வெற்றி கொண்ட திரிபுரத்து அரக்கர்கள்; துன்று புரம்= ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருந்த மூன்று பறக்கும் கோட்டைகள்; தாங்கள் பெற்றிருந்த வரத்தின் துணையால் ஒன்றுக்கொன்று சிறந்த பாதுகாப்பாக திகழ்ந்த திரிபுரத்து கோட்டைகளின் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. அவிய=தீயினில் வெந்து சாம்பலாக மாறும் வண்ணம்; நிலை=நிலையான பற்றுக்கோடு; தனக்கு நிலையாகத் திகழ்ந்த பெருமான், தனது தந்தைக்கும் மகப்பேறு வரம் அருளி இன்பம் அடையச் செய்தான் என்று கூறுகின்றார். அமர்=விரும்பும்; முன்றில்=வீட்டின் முன்னே உள்ள முற்றம்; கறவைக் குருளைகள்=கறவைப் பசுக்களின் கன்றுகள்; வீட்டு முற்றத்தில் உள்ள பலா மரத்தின் கனிகளைத் தின்று துள்ளி விளையாடும் கன்றுகள் என்று குறிப்பிட்டு தலத்தின் வளத்தை உணர்த்துகின்றார்.இசைய=பொருந்த நின்ற; ஒன்ற=ஒரு சேராக;
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகை செய்
என்றனது சென்று நிலை எந்தை தன தந்தை அமர் இன்ப நகர் தான்
முன்றின் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவைக் குருளைகள்
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே
கொச்சைவயம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.89.4) திருஞானசம்பந்தர் தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று, நமக்கு அறிவுரை கூறுகின்றார். தந்தையாகிய பெருமானின் திருவடிகளை சிந்தனை செய்து நாம் வாழ்வினில் உய்வினை அடையலாம் என்றும் நாம் கவலை அடைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறுகின்றார். பவர்=கொடி; காவிரி நதியின் நீர்வளத்தால் செழிப்புடன் விளங்கும் தலத்தின் தன்மையை இங்கே குறிப்பிடுகின்றார். மாடே=அருகே: பூங்கொத்துகள் நிறைந்ததும் நீண்டதும் ஆகிய கூந்தல் உடைய பெண்கள் குதித்துக் கொண்டு நீராடும் காவிரி நதி என்றும், நறுமணம் நிறைந்த தாழை மற்றும் சந்தனக் காடுகள், வாழை தோப்புகள், வள்ளிக் கொடிகள்,குவளை மலர்க் கொடிகள் ஆகியவற்றில் மோதி ஓடும் காவிரி நதி என்றும் குறிப்பிடுகின்றார். அளி=வண்டுகள்; அளிக்குவளை=வண்டுகள் மொய்க்கும் குவளை மலர்கள்;
கந்தமார் கேதகைச் சந்தனக் காடு சூழ் கதலி மாடே
வந்து மா வள்ளையின்பவர் அளிக் குவளையைச் சாடியோட
கொந்துவார் குழலினார் குதிகொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய
எந்தையார் அடி நினைந்து உய்யலாம் நெஞ்சமே அஞ்சல் நீயே
வடகுரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.91.2) திருஞானசம்பந்தர், தேவர்கள் எந்தையாகிய பெருமானின் திருவடிகளைத் தொழுதெழும் இயல்பினை உடையவர்கள் என்று குறிப்பிடுகின்றார்.
மந்தமா இழி மதக் களிற்றிள மருப்பொடு பொருப்பின் நல்ல
சந்தமார் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி
உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
எந்தையார் இணையடி இமையவர் தொழுதெழும் இயல்பினரே
கலிக்காமூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.105.10) திருஞானசம்பந்தர், எந்தை பெருமானை நினைத்து தொழும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும் என்று கூறுகின்றார். பிறக்கிய=மிகுவித்த, விளங்கும்; மீசு=மேல்; தோற்றம் என்பதற்கு தன்மை மற்றும் பெருமை என்று பொருள் கொள்வது பொருத்தமே. காசினி=உலகம்; நீராடுவதை தவிர்ப்பதால் மிகுந்த அழுக்குடன் விளங்கிய மேனி படைத்த சமணர்களும் துவராடையைத் தங்களது உடலின் மீது போர்த்துக் கொண்ட புத்தர்களும், சிவபெருமானது, எவராலும் தோற்றுவிக்கப் படாமல் தானே தோன்றிய தன்மையையும் பெருமையையும் உணரமாட்டார்கள். இந்த உலகத்தினில், எங்கும் நீர்வளம் கொண்டதாக விளங்கும் கலிக்காமூர் தலத்தில் உறையும் ஈசனை, எந்தை பெருமானை நினைத்து அவரது புகழினைப் பாடி தொழும் அடியார்களைப் பற்றியுள்ள வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம்
காசினி நீர்த் திரள் மண்டி எங்கும் வளமார் கலிக்காமூர்
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே
குருகாவூர் வெள்ளடை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3,124.5) திருஞானசம்பந்தர், பெருமானை எந்தை பிரான் என்று அழைக்கின்றார். சுரி குழல்=சுருண்ட கேசம்; சுருண்ட குழலையும், அழகிய உடுக்கை போன்ற இடையினையும் உடையவளாக விளங்கும் பார்வதி தேவியுடன், வெப்பத்தின் மிகுதியால் பொறிந்த மரங்கள் நிறைந்த சுடுகாட்டின் இடையே நடனம் ஆடுகின்ற பெருமானே, விரிந்த பசுமையான சோலைகள் சூழ்ந்த வெள்ளடை தலத்தில், நெருப்புப் பிழம்பினையும் மழுப் படையினையும் ஏந்திய வண்ணம், நீர் காட்சி தருகின்றீர் என்று பெருமானை நோக்கி பாடும் பாடல்.
சுரி குழல் நல்ல துடியிடையோடு
பொரி புல்கு காட்டிடை ஆடுதிர் பொங்க
விரி தரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரி மழுவாட் படை எந்தை பிரானே
கூற்றுவனே நேரில் தோன்றி வருத்துவதைப் போன்று தன்னை வருத்திய சூலை நோயினை எவ்வாறு போக்கிக் கொள்வது என்று தெரியாமல் தவித்த தனது சூலை நோயினை போக்கிய பெருமானை, சமணர்களின் சூழ்ச்சியிலிருந்து தன்னை மீட்ட பெருமானை, தனது தாய் என்றும் தந்தை என்றும் அப்பர் பிரான் குறிப்பிட்டு, திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தினை (4.94.01) தொடங்குவது நமது நினைவுக்கு வருகின்றது. தனக்கு நல்ல வழி காட்டிய தமக்கையார் திலகவதியார், தனக்கு மறுபிறவி அளித்தது போல் உதவி செய்தார் என்பதை உணர்ந்ததால், அப்பர் பிரான் தனது தமக்கையாரையும் இங்கே உடன் தோன்றினராய் என்று குறிப்பிடுகின்றார். தாய், தந்தை, தமக்கை இவர்கள் மூவரும் அவருக்கு கண் முன்னே தோன்றி பலவகையிலும் அவரை நன்னெறிப் படுத்தியவர்கள். ஆனால் சிவபிரான் தானே, உண்மையாக அனைவருக்கும் துணையாக இருந்து உதவுகின்றான். எனவே, பெருமான் தனக்கு முன்னே தோன்றாவிடினும், தனக்கு பல வகையிலும் உதவி செய்த துணைவனை தோன்றாத் துணைவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். தோன்றாத் துணை நாதன் என்பது இங்குள்ள இறைவனின் திருநாமம்.
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே
அற்புதமான பழைய ஆவணம் காட்டி, தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு, தான் கயிலாயத்தில் அணுக்கத் தொண்டனாக ஆலால சுந்தரனாக பணியாற்றிய போது சமர்ப்பித்த விண்ணப்பத்தை நினைவில் வைத்துக்கொண்டு, திருவெண்ணெய் நல்லூரில் நடைபெறவிருந்த தனது திருமணத்தை தடுத்த பெருமானை, தனது தந்தையாக கருதுவதாக காஞ்சி திருமேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (7.21.01) சுந்தரர் குறிப்பிடுகின்றார். நொந்தா ஒண்சுடர்= பிரகாசம் குன்றாத விளக்கு; தனது மனதினில் புகுந்த பெருமான், என்றும் தன்னை விட்டு நீங்காது இருப்பதாகவும், தனது தந்தையாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தான் புகழமாட்டேன் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.
நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்து இருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற
சிந்தாய் எந்தை பிரான் திருமேற்றளி உறையும்
எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே
தனக்கு தந்தையாக உள்ள பெருமான், அனைவர்க்கும் தாயாகவும் தந்தையாகவும் திகழ்கின்றார் என்று திருச்சதகம் கைம்மாறு கொடுத்தல் பதிகத்துப் பாடலில் மணிவாசகர் கூறுகின்றார். எவராலும் அறிய முடியாத வண்ணம் விளங்கும் பெருமான், தனது மனதில் புகுந்து கொண்டதாகவும் இங்கே அடிகளார் குறிப்பிடுகின்றார்.
எந்தையாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய் தம் பிரான் தனக்கு அஃதிலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தையாலும் அறிவரும் செல்வனே
பொழிப்புரை:
பெருமானுக்கு சேவை செய்யும் தன்மையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள தன்மை உடைய எருதினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள பெருமான், எந்தையாகவும் விளங்குகின்றார். மருதர் என்று அழைக்கப்படும் பெருமானை, சிந்தை செய்து தங்களது மனதினால் தியானிக்கும் அடியார்கள்,சிறந்த ஞானம் பெற்றவர்களாக விளங்குவார்கள்.
பாடல் 6:
கழலும் சிலம்பார்க்கும்
எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க்கு
உழலும் வினை போமே
விளக்கம்:
ஆர்க்கும்=ஒலிக்கும்; பேணுதல்=நியமமாக கருதி தொடர்ந்து செய்தல்; மருத வாணரை விரும்பித் தொழுவதே தங்களது நியமமாக கருதி வழிபடும் அடியார்களை வருத்தும் வினைகள் அவர்களை விட்டு அகன்று நீங்கிவிடும் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் கூறியது போன்று, இந்த பாடலிலும் பெருமானை வழிபடுவதால் நாம் அடையக்கூடிய பலனை நமக்கு உணர்த்தி, பெருமானை வழிபடும் வண்ணம் நம்மை திருஞானசம்பந்த்ர் ஊக்குவிக்கின்றார். கழலும் சிலம்பும் அணிந்தவராக பெருமானை சித்தரித்து, மாதொரு பாகனாக அவர் விளங்கும் நிலையினையும் அவர் இங்கே உணர்த்துகின்றார். பல திருமுறைப் பாடல்கள் பெருமானை கழலும் சிலம்பும் அணிந்தவராக குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். புகலூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.2.6) திருஞானசம்பந்தர், பெருமான் காட்டினில் நடமாடும் தன்மையை குறிப்பிடுகின்றார். குழல் முதலிய இசைக் கருவிகள் ஒலிக்கும் பின்னணியில், குள்ளமான பூத கணங்கள் போற்றிசைப்ப, கழலின் ஓசையும் சிலம்பின் ஓசையும் கலந்து ஒலிக்கும் வண்ணம், முற்றூழிக் காலத்தினில் பெருமான் நடனம் ஆடுகின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
கழலின் ஓசை சிலம்பின் ஒலியோசை கலிக்கப் பயில் கானில்
குழலின் ஓசை குறட்பாரிடம் போற்றக் குனித்தார் இடம் என்பர்
விழவின் ஓசை அடியார் மிடைவுற்று விரும்பிப் பொலிந்து எங்கும்
முழவின் ஓசை முந்நீர் அயர்வெய்த முழங்கும் புகலூரே
வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.35.7) திருஞானசம்பந்தர் கழலும் சிலம்பும் ஆர்க்க, உமையன்னையுடன் பெருமான் நின்றான் என்று கூறுகின்றார். நெறியார் குழலாளொடு நின்றான் என்ற தொடர் மூலம், மாதொரு பாகனாக நின்ற பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. வீழிமிழலைப் பெருமானை உணர்ந்து தியானிக்கும் அடியார்களுக்கு துன்பங்களும் அத்தகைய துன்பங்களால் விளையும் மனவருத்தமும் இராது என்று கூறுகின்றார்.
செறியார் கழலும் சிலம்பு ஆர்க்க
நெறியார் குழலாளொடு நின்றான்
வெறியார் பொழில் வீழிம்மிழலை
அறிவார் அவலம் அறியாரே
நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.71.7) கழலும் சிலம்பும் ஒலிக்க பெருமான் வருவதாக கூறுகின்றார். தவளம்=வெண்மை;புலம்பும்=ஒலிக்கும்; கீள்=பெரிய துணியிலிருந்து கிழிக்கப்பட்டு, கயிறு போல் திரிக்கப்பட்டது; குழல்=சுருண்ட சடை;
குழலார் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம்
தழலார் மேனித் தவள நீற்றர் சரி கோவணக் கீளர்
எழிலார் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடையேறிக்
கழலார் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தாரே
பெருமான் தனது கால்களில் கழலும் சிலம்பும் அணிந்திருப்பதாக சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.117.7)திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சொற்களை இடம் மாற்றி வைத்து அருளிய பதிகம் என்பதால் மொழிமாற்றுப் பதிகம் என்று அழைக்கப்படுகின்றது. காலது கழல் சிலம்பு, கங்கை கற்றைச் சடை உள்ளால், மாலது பாகம், மழுவது ஏந்தல், வளர் கொழுங்கோட்டு ஆலது இருப்பர், அடல் ஏறு ஊர்வர், என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். கொழுங்கோடு=செழிப்பாக உள்ள மரக்கிளை; ஏறு=எருது; ஊர்தல்=எருதினை வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கு செல்லுதல்; சேல்=மீன்; கண்ணி=கண்ணினை உடைய உமையன்னை; மீன் போன்று அழகிய கண்களை உடையவள் என்று பொருள்படும்படி, மதுரை தேவியை அங்கயற்கண்ணி என்று அழைப்பார்கள்.
காலது கங்கை கற்றைச் சடையுள்ளால் கழல் சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர் கொழுங்கோட்டு
ஆலது ஊர்வது ஆடல் ஏற்று இருப்பர் அணிமணி நீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே
திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.4.2) திருஞானசம்பந்தர், கழலும் சிலம்பும் ஆர்க்க வல்லீர் என்று பெருமானை அழைத்து,சிவந்த வண்ணத்தில் திருமேனி கொண்டிருப்பதன் காரணம் யாது என்று கேட்கின்றார். சந்து=சந்தனம்;
சந்து உயர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டு தம்
சிந்தை செய்து அடியார் பரவும் திருவான்மியூர்ச்
சுந்தரக் கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆக்கிய வண்ணமே
திருக்களர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.51.3) திருஞானசம்பந்தர், கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் நடமாடும் வல்லமை பெற்றவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். மைந்தர்=மக்கள்; சேடர்=ஒழுக்கத்தில் சிறந்த பெரியோர்கள்; நிமலன்=மலங்களின் சேர்க்கை அற்றவன்;நீடவல்ல=நீண்ட காலமாக எழுந்தருளியுள்ள; அடைந்தார்கள்=பெருமானிடம் சரண் அடைந்த அடியார்கள்: இந்த பாடலில், அடியார்களின் சார்பாக,திருஞானசம்பந்தர், அடியார்களுக்கு பெருமான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுவதை நாம் உணரலாம்.
பாடவல்ல நன் மைந்தரோடு பனிமலர் பல கொண்டு போற்றிச்செய்
சேடர் வாழ் பொழில் சூழ் செழுமாடத் திருக்களருள்
நீடவல்ல நிமலனே நிறை கழல் சிலம்பு ஆர்க்க மாநடம்
ஆட வல்லானே அடைந்தார்க்கு அருளாயே
கோட்டாறு தலத்தின் மீது அருளிய பாடலில் (2.52.5) சம்பந்தர், பேய்க் கணங்கள் புகழும் வண்ணம் கானகத்தில், வளமான சிலம்பும் கழலும் ஒலிக்க நடனமாடும் அழகிய பெருமான் என்று கூறுகின்றார். எழுவார்=பஞ்சாக்கர மந்திரத்தை சிந்திந்து எழும் சித்தர்கள்;
பழைய தம் அடியார் துதி செயப் பாருளோர்களும் விண்ணுளோர் தொழக்
குழலும் மொந்தை விழாவொலி செய்யும் கோட்டாற்றில்
கழலும் வண் சிலம்பும் ஒலி செயக் கானிடைக் கணம் ஏத்த ஆடிய
` அழகனென்று எழுவார் அணியார் வானவர்க்கே
குடவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.58.2), தனது திருவடிகளில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம், பெருமான் பலியேற்கச் செல்கின்றார் என்று திருஞானசம்பந்தர கூறுகின்றார். செடியார்ந்த=முடை நாற்றம் கொண்ட; குடியார்ந்த=குடியாக உள்ள;குலாவி=கொண்டாடி; படியார்ந்த=படிகள் நிறைந்த; இந்த தலத்தில் உள்ள பெருமான் சன்னதிக்கு செல்வதற்கு படிகள் ஏறிச் செல்ல வேண்டிய நிலையை உணர்த்துகின்றார். யானை ஏறிச் செல்லமுடியாத வண்ணம் கோச்செங்கட்சோழன் கட்டிய திருக்கோயில். படியார்ந்த கோயில் என்று குறிப்பிட்டு, ஈசன் உலகநாதனாக விளங்கி அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் தன்மையை, படியார்ந்த என்ற சொல் நமக்கு நினைவூட்டுகின்றது என்று பொருள் கொள்வதும் சிறப்பே. படி என்ற சொல்லுக்கு உலகம் என்று பொருள் கொண்டு, உலகம் சிறப்புடன் போற்றும் வண்ணம் திகழ்ந்த கோயில் என்ற விளக்கமும் பொருத்தமானதே. பைங்கழல்=பசும் பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல்; சிலம்பு என்பது பெண்கள் அணியும் அணிகலன். சிலம்பும் கழலும் அணிந்தவர் என்று குறிப்பிடுவதன் மூலம் மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனாக பெருமானை சித்தரிப்பதில் பெருமகிழ்ச்சி அடைபவர் திருஞானசம்பந்தர். மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மையை, தோடும் குழையும் அணிந்தவனாகவும்,சிலம்பும் கழலும் அணிந்தவனாகவும், சடையும் கூந்தலும் உடையவனாகவும், பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவனாகவும்,எண்ணற்ற பாடல்களில் அவர் குறிப்பிடுகின்றார்.
அடியார்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப அங்கையில்
செடியார்ந்த வெண்டலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர்
குடியார்ந்த மாமறையோர் குலாவி ஏத்தும் குடவாயில்
படியார்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே
திருவடிகளில் பொருந்திய பசும்பொன் கழலும் சிலம்பும் ஒலித்து ஆரவாரம் செய்ய, தனது அழகிய கையினில் முடை நாற்றம் கொண்டதும் உலர்ந்து வெண்மையாக காணப்படுவதும் ஆகிய பிரமகபாலத்தை ஏந்திய வண்ணம் பலியேற்பதற்காக உலகம் எல்லாம் திரிபவரும் ஆகிய பெருமான், சிறந்த மறையோர்கள் குடிகளாக வாழ்ந்து பெருமானைப் புகழ்ந்து கொண்டாடும் குடவாயில் தலத்தினில் யானை ஏறிச் செல்ல முடியாத வண்ணம் படிகள் நிறைந்த மாடக்கோயிலினை, இறைவனாகிய தான் உறையும் கோயிலாக பாவித்து தொடர்ந்து உறைகின்றார் என்பதே மேற்கண்ட பாடலின் திரண்ட பொழிப்புரையாகும்.
நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.87.8) பெருமானை கழல்களும் சிலம்பும் அணிந்த பெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் எதிரும் சிலம்பு என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். மாதொரு பாகனாக விளங்கும் பெருமான், தனது வலது காலில் கழலும் இடது காலில் சிலம்பும் அணிவதை நாம் அறிவோம். இவ்வாறு இரு வேறு கால்களில் கழல்கள் மற்றும் சிலம்பு அணிந்துள்ள கோலத்தை இங்கே குறிப்பிடுகின்றார்.எதிர்= மாற்று; எதிர் என்ற சொல் மூலம், ஒரு காலில் கழல் பூண்டுள்ள பெருமான் அந்த தன்மைக்கு மாறாக மற்றோர் காலில் சிலம்பினை அணிந்துள்ளார்,என்று இந்த பாடலில் உணர்த்துகின்றார். அரையன்=அரசன்; தனது தவறினை உணர்ந்து, இறைஞ்சிய அரக்கன் நலன்கள் பல பெறுகின்ற வண்ணம் அருள் புரிந்த பெருமானை, நம்பன் என்று அழைப்பது பொருத்தம் தானே. அவ்வாறே நாமும் நமது தவறுகளை உணர்ந்து பெருமானிடம் இறைஞ்சி வேண்டினால் நம்மையும் ஆட்கொண்டு பெருமான் அருள் புரிவார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுவதை நாம் உணரலாம். நடலை=துன்பம்;
அடல் எருது ஏறுகந்த அதிரும் கழற்கள் எதிரும் சிலம்பொடு இசையைக்
கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன்
உடலோடு தோள் அனைத்து முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆளவல்ல நறையூரின் நம்பன் அவனே
கடிக்குளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.104.1) திருஞானசம்பந்தர், குரைகழல் சிலம்பார்க்க நிற்பவர் சிவபெருமான் என்று கூறுகின்றார்.இந்த தலத்து இறைவனின் திருநாமம், கற்பக நாதர் என்பது, கற்பகம் என்று இந்த பதிகத்து பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. முன்வினை=பழைய பல பிறவிகளில் ஈட்டப்பட்ட வினைகள்; பழைய பல பிறவிகளில் நாம் சேர்த்துக் கொண்ட வினைகள் தாமே, நாம் இனி எடுக்கவிருக்கும் எண்ணற்ற பிறவிகளுக்கு காரணமாக இருந்து நம்மைத் தொடர்ந்து வருகின்றன. கடிக்குளத்து கற்பகத்தை தலை சாய்த்து வணங்கும் அடியார்களை இந்த வினைகள் மூடாது, அதாவது தொடராது என்று கூறுகின்றார். வினைகள் நம்மைத் தொடராது நம்மை விட்டு அகன்றுவிட்டால், நாம் வினைகள் அற்றவர்களாக மாறி,பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்றோம் அல்லவா.
பொடிகொள் மேனி வெண்ணூலினர் தோலினர் புலியுரி அதளாடை
கொடிகொள் ஏற்றினர் மணி கிணின் என வரு குரை கழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தைத் தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே
வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.4) திருஞானசம்பந்தர், ஒலிக்கும் வீரக்கழலும் சிலம்பும் ஆரவாரம் செய்யும் வண்ணம் பெருமான் நின்று ஆடும் அற்புதம் அதிசயம் என்று கூறுகின்றார். கதிர்=சூரியன்; அறத்திறம்=தருமத்தின் பல வகைகள் மற்றும் வேதங்கள் ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ள நுண்ணிய கருத்துக்கள்; மருந்துமாக நின்று உயிர்களை காக்கும் தன்மையன் என்று இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிட்ட திருஞான சம்பந்தர், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நெஞ்சின் தாக்கத்தினால் உலகம் அழியாத வண்ணம், அந்த விடத்தினை பெருமான் உட்கொண்ட செய்தியை, கறைகொள் கண்டத்தர் என்ற தொடரினால் உணர்த்துகின்றார். காலை மாலை நேரங்களில் சிவந்த வண்ணத்துடன் காணப்படும் சூரியன், பகல் பொழுதினில் வெண்மை நிறத்துடன் காணப் படுகின்றான். சிவந்த திருமேனியை உடைய இறைவன், தனது உடலின் மீது திருநீற்றினை பூசியவண்ணம் வெண்மை நிறத்துடனும் காணப்படுகின்றான். எனவே காய்கதிர் நிறத்தினர் என்று மிகவும் பொருத்தமாக இறைவனின் திருமேனி நிறத்தினை, சிவந்த வண்ணத்துடனும், வெண்மை நிறத்துடனும் காட்சி அளிக்கும் தன்மையை சூரியனுடன் ஒப்பிடுகின்றார். வலஞ்சுழி தலத்தினில் மகிழ்ச்சியுடன் உறையும் பெருமான், அனைத்து உடல்களும் உயிரிலிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் உலகமே சுடுகாடாக காட்சி தரும் நிலையில், அந்த காண்பதற்கு அரிய அந்த காட்டினில், உலகத்தை மீண்டும் தோற்றுவித்து உயிர்களுக்கு தங்களது மலங்களைக் கழித்துக் கொள்ள ஒரு வாய்ப்பினை அளிக்கும் எண்ணம் கொண்டு இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடையும் பெருமான், தான் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஆரவாரம் செய்யும் வண்ணம் நடனமாடும் அற்புதத்தை நாம் அறியோம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். .
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கு அன்று
இறைவர் ஆலிடை நீழலிலிருந்து உகந்து இனிது அருள் பெருமானார்
மறைகள் ஓதுவர் வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து
அறை கழல் சிலம்பார்க்க நின்றாடிய அற்புதம் அறியோமே
கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.107.3) திருஞானசம்பந்தர், தனது உடலின் ஒரு பாகத்தில் தேவியை ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், தனது கால்களில் அணிந்துள்ள சிலம்பும் கழலும் ஒலிக்கும் வண்ணம், பல இல்லங்களுக்கும் பலியேற்கச் செல்கின்றார் என்று கூறுகின்றார்.தான் பிச்சையாக ஏற்கும் உணவினை மிகுந்த விருப்பத்துடன் உட்கொள்ளும் எண்ணத்துடன், பெருமான் பிச்சை ஏற்பதாக இந்த பாடலில் கூறுகின்றார்.பிச்சை ஏற்கும் நாடகத்தில், பெருமான் உண்மையாக விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வது, பக்குவமடைந்த அடியார்கள் தங்களிடமிருந்து பிரித்துக் கொடுக்கும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களைத் தானே.
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பு ஆர்க்க
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவார் அகந்தொறும் இடு பிச்சைக்கு
உண்ணலாவதோர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து
அண்ணல் நண்ணு கேதீச்சரம் அடைபவருக்கு அருவினை அடையாவே
புகலி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.3.4) திருஞானசம்பந்தர், தனது பாதங்களில் திகழும் கழலும் சிலம்பும் ஆரவாரத்துடன் ஒலிக்க,முழவத்தின் பின்னணியில் மிகவும் அரிதான நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். நிழல்=ஒளி; முருகு=நறுமணம்; அலம்ப=ஆரவாரத்துடன் ஒலிக்க;
நிழல் திகழ் மழுவினை யானையின் தோல்
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே
கழல் திகழ் சிலம்பொலி அலம்ப நல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே
முடிமேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி
அடியார் அவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.57.6) திருஞானசம்பந்தர் பொறுமையாக இருக்கும் பெருமான் என்று குறிப்பிட்டு, அவர் கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் அணிந்துள்ளார் என்று கூறுகின்றார். பொறுமையாக இருப்பவர் சிவபெருமான் என்று ஏன் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. அவரே அதற்கு இந்த பாடலின் இரண்டாவது அடியில் விளக்கம் அளிப்பதை நாம் உணரலாம்.கங்கை நதி, பிறைச் சந்திரன் மற்றும் பாம்பினை சுமந்து கொண்டிருக்கும் சடையில், விரிந்த கொன்றை மலர்களையும் சுமந்து கொண்டிருந்தாலும், அந்த சுமையினை பொருட்படுத்தாதமல் அமைதியாக பெருமான் திகழ்கின்றார் என்று கூறுகின்றார் போலும். கமை=பொறுமை; அமையொடு= அமைதியாக
கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப
சுமையொடு மேலும் வைத்தான் விரிகொன்றையும் சோமனையும்
அமையொடு நீண்ட திண்தோள் அழகாய பொற்றோடு இலங்க
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே
திருக்கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.79.6) திருஞானசம்பந்தர், பெருமான் தனது கழல்களில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்க பலிக்கு வருகின்றார் என்று கூறுகின்றார். இந்து சமயங்களின் ஆறு பிரிவுகளாக கருதப்படுவன, சைவம், வைணவம், சாக்தம், ச்காந்தம்,காணாபத்தியம் மற்றும் சௌரம் என்பன. இவற்றுள் காணாபத்தியம் (கணபதி), ச்காந்தம் (முருகன்) வைணவம் (திருமால்) சாக்தம் (உமை அன்னை)சௌரம் (சூரியன்) ஆகிய ஐந்து சமயக் கடவுளர்களும் சிவத்தின் அம்சமாக கருதப் படுவதால், அந்த சமயத்தவர்கள் செய்யும் வழிபாடும் சிவபெருமானையே சென்று அடைவதாக திருஞானசம்பந்தர் கருதுவது இங்கே வெளிப் படுகின்றது. எனவே மேற்கண்ட சமயத்தவர்கள் அனைவரும் இறுதியில் அடைவது சிவானந்தம் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. வேறு இரதி=உலக இன்பங்களிலிருந்து வேறான சிவானந்தம்; கம்பம்=நடுக்கம், சிவானந்த மேலீட்டல் பெறுகின்ற உடல் நடுக்கம். மெய் தான் விரும்பி விதிர்விதிர்த்து என்றும் ஆகம் விண்டு கம்பம் என்றும் திருவாசகத்தில் குறிப்பிடப் படுவது, இத்தகைய நடுக்கமே ஆகும். இத்தகைய தன்மை படைத்த அடியவர்கள் வாழும் தலம் கோகரணம் என்று கூறுகின்றார்.
நீறு திருமேனி மிசை ஆடி நிறை வார்கழல் சிலம்பு ஒலி செய
ஏறு விளையாட இசை கொண்டு இடுபலிக்கு வரும் ஈசன் இடமாம்
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் நாமம் மிகக்
கூறு மனம் வேறு இரதி வந்தடியர் கம்பம் வரு கோகரணமே
திருக்கோணமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.123.1) திருஞானசம்பந்தர் பெருமானை, நிரைகழல் அரவம் சிலம்பொலி அலம்பும் நிமலர் என்று குறிப்பிடுகின்றார். நிரை= வரிசை: பெருமான் தனது வலது திருவடியில் வரிசையாக அமைந்துள்ள கழல்களையும் இடது திருவடியில் சிலம்பும் அணிந்துள்ளார் என்றும் அவைகள் அனைத்தும் அவர் நடனமாடும்போது ஒலிக்கின்றன என்றும் கூறுகின்றார். கெழு=ஒதுக்கப்ப்ட்டு வளரும்; வரை கெழு மகள் என்று இமயமலைச் சாரலில் உள்ள ஒரு தடாகத்தில், தாமரை மலர் மீது குழந்தையாக தோன்றி, இமவானால் கண்டெடுக்கபட்டு உமையன்னை வளர்ந்த தன்மையை உணர்த்துகின்றார்.
நிரைகழல் அரவம் சிலம்பொலி அலம்பும் நிமலர் நீறணி திருமேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்தும் காரகில் பிளவும் அளப்பரும் கனமணி வரன்றிக்
குரைகடல் ஒதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே
சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (4.08.06) கழலையும் சிலம்பினையும் அழகுற அணிந்தவர் சிவபெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கணித்தல்=குறிப்பிடுதல்: வேப்ப மரம் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் பூக்கும் தன்மை உடையது. வேப்ப மரம் பூக்கும் காலமும் திருமணங்கள் நடைபெறும் காலமும் ஒன்றாக இருப்பதால், திருமண காலத்தை வேப்ப மரங்கள் பூத்து கணிப்பதாக குறிப்பிட்டு, கணிவளர் வேங்கை என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. அவள் வண்ணம் வண்ணம் அவர் வண்ணம் வண்ணம் அழலே என்ற தொடர் மூலம் பெருமான் மாதொரு பாகனாக திகழும் தன்மையை நேரிடையாக குறிப்பிடுவதையும் நாம் உணரலாம்.
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகார்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ண இயலார் ஒருவர் இருவர்
மணி கிளர் மஞ்ஞை ஆல மழையாடு சோலை மலையான் மகட்கும் இறைவர்
அணிகிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ணம் வண்ணம் அழலே
பெருமானின் திருவடிகளின் சிறப்பினை உணர்த்தும், இன்னம்பர் தலத்து பதிகப் பாடல் ஒன்றினில் (4.100.6) சிலம்பும் கழலும் முறையாக பொருந்திய திருவடிகள் பெருமானின் திருவடிகள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கீண்டும்=கிழித்தும்: கிளர்ந்தும்=நிலத்தை கிளறித் தோண்டியும்:ஆரணங்கள்=வேதங்கள்; ஈண்டும்=பொருந்திய, வந்தடைந்த;
கீண்டும் கிளர்ந்தும் பொற்கேழல் முன் தேடின கேடுபடா
ஆண்டும் பல பல ஊழியும் ஆயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு
ஈண்டும் கழலின இன்னம்பரான் தன் இணை அடியே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.101.1) அப்பர் பிரான், பெருமானை சிலம்பு அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். இதன் மூலம் மற்றொரு காலில் கழல் அணிந்தவன் என்பது சொல்லாமலே உணர்த்தப்படுகின்றது. குலம்=கூட்டம்; பாவரு= பெருகிய, குண்டர்=மூர்க்கர்;அலம்புதல்=ஆர்ப்பரித்தல், ஆரவாரம் செய்தல், பெருத்த ஓசையுடன் ஒலித்தல்; அம்பு=நீர், புலம்பு அலம்பு=பெருமானை நினைத்து உருகுவதால் கண்களில் பெருகும் கண்ணீர். பெருமானிடம் வைத்துள்ள அன்பு ஒரு நிலையினைக் கடக்கும் போதும் அழுகையாக மாறுகின்றது என்று பல திருமுறை பாடல்களில் கூறும் அருளாளர்கள் அத்தகைய அழுகையால் விளைகின்ற பயனையும் நமக்கு உணர்த்துகின்றனர். அழுதால் அவனைப் பெறலாமே என்று தானே நமக்கு திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. பலவிதங்களிலும் தன்னைக் கொல்வதற்கு சூழ்ச்சிகள் செய்த சமணர்களின் கூட்டத்தின் முன்னே, பெருமானின் திருவருளால் காப்பாற்றப் பட்ட தான், சிவபெருமானின் அடியார்களுக்கு அடியவனாக இருக்கும் தன்மை சமணர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும் என்ற தனது ஆசையினை இந்த பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமானின் சன்னதியாகிய திருமூலட்டானைத்தில் அவனது பேரருளினை தங்களது கண்களில் கண்ணீர் வழிய எண்ணி உருகி வழிபடும் அடியார்களுக்கு அடியேனாக இருக்கும் நல்வினைப் பேற்றினை அடியேன், உடல் வலிமை உள்ளவர்களாகவும் கூட்டமாக திரிபவர்களாகவும் உள்ள சமணர்கள் காணும் வகையில் பெறுவேனோ என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தி,பெருமானே, அவ்வாறு பெறுவதற்கு நீரே அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் பெருமானிடம் விண்ணப்பம் வைக்கின்றார். .
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு கொலோ
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பு அலம்பா வரு சேவடியான் திரு மூலட்டானம்
புலம்பு அலம்பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
பெருமானின் திருவடிகளின் சிறப்பினை உணர்த்தும், திருவதிகை வீரட்டானம் பதிகத்தின் பாடலில் (6.06.5), பெருமானின் திருவடிகள் கழலும் சிலம்பும் அணிந்துள்ள தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொருகழல், அனைவரையும் வெற்றி கொள்ளும் வீரம் உடைய பெருமான் அணிந்துள்ள வீரக்கழல் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். ஒரு காலத்து ஒன்றாக நின்ற அடி=ஏகபாத திரிமூர்த்தியாக இறைவன் இருக்கும் நிலை. முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றை கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில்,மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை, இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் பிரிவது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில், அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம்.பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் ஆனைக்காவிலும் குடவாயில் திருக்கோயிலிலும் உள்ளது. பிரமனாகவும் திருமாலாகவும் உள்ள நிலையைக் குறிப்பிடும் பாடலில், மாதொரு பாகனின் நிலை உணர்த்தப்படுவது பாடலின் நயம்.
ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி ஊழி தோறூழி உயர்ந்த அடி
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி
இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம் செல்வன் அடி
நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.42.6) அப்பர் பிரான், தனது கால்களில் ஒலிக்கும் சிலம்பினையும் கழலினையும் அணிந்து உலகம் அதிரும் வண்ணம் நடமாடும் பெருமான் என்று கூறுகின்றார். மிறை=துன்பம்; பழைய வினைகளின் பயனால் நாம் துன்பங்கள் மட்டுமன்றி இன்பங்களையும் நுகர்கின்றோம்; ஆனால் அத்தகைய இன்பங்களில் ஆழ்ந்து மகிழும் தருணங்களில் நாம் நம்மை மிகவும் உயர்வாக நினைத்துக் கொள்கின்றோம்.அத்தகைய தருணங்கள் தான், நாம் அகந்தை கொண்டு இறைவனை மறக்கும் தருணங்களாக மாறுகின்றன. எனவே தான். இன்பம் நுகரும், நேரங்களிலும் நம்மை உயர்வாக எண்ணிக் கொள்ளமால், அடக்கத்துடன் தாழ்மையாக நினைத்து இறைவனை வணங்க வேண்டும். அவ்வாறு இருப்பவரின் நெஞ்சத்தில் இறைவன் உறைவான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். வியவேல்=மகிழாமல் இருத்தல்; நிறைவுடையான் என்ற தொடரினை அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற என்ற தொடருடன் இணைத்து, ஊழிக்காலத்தில் மன நிறைவுடன் நடனம் ஆடும் இறைவன் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர்.ஊழிக்காலம் முடிந்த பின்னர், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை நீக்கிக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு,உலகத்தை தோற்றுவிக்க எண்ணம் கொள்ளும் பெருமான், அந்த எண்ணத்தினால் மனநிறைவு அடைகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றாரோ என்று தோன்றுகின்றது
மிறைபடும் இவ்வுடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி
வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை கூத்தாடும் குணம் உடையான் கொலை வேல் கையான்
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற
நிறைவுடையான் இடமாம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
ஆமயம் தீர்த்து என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.96.3) சிலம்பும் கழலும் ஆர்ப்ப முயலகனை அழுத்தியவாறு இறைவன் காணப்படுகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடலில் கூத்தபிரான் தனது காலின் கீழே வைத்து அடக்கிய முயலகனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முயலகனை பற்றிய குறிப்புகள் காணப்படும் திருமுறை பாடல்கள் மிகவும் அரிதாக உள்ளன. முடி=சடைமுடி; முளை=முளைத்த;அலம்பு=ஒலிக்கின்ற; ஆர்க்க=ஒலி செய்ய; மூசு=மொய்க்க, தனது படத்தினால் மறைக்க; வடி=கூர்மை. மாதொரு பாகனாக விளங்கும் பெருமான் சங்கரநாராயணராகவும் விளங்குகின்றார் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் சொல்வதை நாம் உணரலாம். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்ட தன்மையை அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இளநாகம் உடனாக் கொண்டார்
அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடிக்கீழ் கொண்டார்
வடி கொண்டு ஆர்ந்து இலங்கு மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே
கச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பாடலில் (7.41.2) பசியால் வாடிய தனக்கு உணவு அளிக்கும் பொருட்டு, பெருமான் பிச்சை ஏற்ற அதிசயத்தைக் குறிப்பிடும் சுந்தரர், கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் உச்சிப் போதினில் பல இல்லங்கள் சென்று பிச்சை எடுத்த பெருமானே என்று குறிப்பிட்டு உருகுவதை நாம் உணரலாம். பெருமான் அந்த தலத்தில் வாழும் அந்தணர் போன்று பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்றார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். எனினும் பெருமானே சென்றார் என்பதை வலியுறுத்தும் வண்ணம் சுந்தரர் தனது பாடலில், பாம்பு அணிந்தவராகவும் கழலும் சிலம்பும் அணிந்தவராகவும் பெருமான் பிச்சை ஏற்கச் சென்றார் என்று குறிப்பிட்டார் போலும். கலிக்க=ஒலிக்க; பெருமானின் செய்யும் செயல்களின் பின்னணியை எவரும் அறிய முடியாது என்பதை இச்சை அறியோம் என்ற தொடர் கொண்டு சுந்தரர் குறிப்பிடுகின்றார். எளியவனாகிய அடியேன் பொருட்டு பிச்சை எடுத்த செயல் கண்டால் மற்ற அடியார்கள் மனம் பதைபதைத்து உருகுவார்கள் என்று சுந்தரர் கூறுகின்றார்.
கச்சேர் அரவு ஒன்று அரையில் அசைத்துக் கழலும் சிலம்பும் கலிக்கக்
உச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனை ஆள்வாய்
அச்சமில்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே
வெஞ்சமாக்கூடல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.42.5) சுந்தரர் வெண் தோடும் குழையும் தனது காதுகளில் அணிந்த பெருமான் என்று குறிப்பிட்டு அவரது காதில் இருந்த குழையணி அசைந்தது என்று கூறுகின்றார். குழைக்கும் தோட்டினுக்கும் உள்ள அமைப்பு வேறுபாட்டினை உணர்த்தும் வண்ணம், துளை உடைய குழை என்று இங்கே கூறுகின்றார். பெருமானின் காதுகள் நீண்டு, அவரது தோள்களைத் தொட்ட நிலையினை தூங்கும் காது என்று உணர்த்துகின்றார். கள்ளையே, பிள்ளை, வெள்ளை என்ற சொற்கள் எதுகை கருதி களையே, பிளை, வெளை என்று இடையெழுத்து குறைந்து காணப் படுகின்றன. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், இறைவன் தனது சீரிய அடியார்களுள் ஒருவனாக தன்னையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தினை வைக்கின்றார்.
வெண் குழையும் சுருள் தோடும் தூங்கும் காதில் துளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுதற்கு அரியாய்
வெளை மால்விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
திருக்கோலக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.62.7) சுந்தரர், பெருமானை பைங்கழல் சிலம்பார்த்த சோதி என்று குறிப்பிடுகின்றார்.சிலம்பு என்பது பொதுவாக பெண்கள் அணியும் ஆபரணம். ஒரு காலில் சிலம்பு அணிந்தவன் என்று குறிப்பிட்டு மற்றொரு காலில் கழல் அணிந்த தன்மையும் உணர்த்தப்படுகின்றது. பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை, பரமன் கிள்ளி எறிந்த பின்னர், செருக்கு நீங்கப்பெற்ற பிரமன், தனது செருக்கினை பெருமான் நீக்கியதை என்றும் அனைவரும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அந்த தலையினில் பலி ஏற்க வேண்டும் என்று வேண்டியதாக கந்தபுராணம் கூறுகின்றது. துன்று பைங்கழல்=பசும்பொன் மிகுதியாகக் கொண்டு செய்யப்பட்ட: மின் மற்றும் தங்கிய என்ற சொற்கள் இணைந்து மின்றங்கிய என்ற தொடர் உருவாகி உள்ளது.
அன்று அயன் சிரம் அரிந்ததில் பலி கொண்டு அமரர்க்கு அருள் வெளிப்படுத்தானைத்
துன்று பைங்கழலில் சிலம்பு ஆர்த்த சோதியைச் சுடர் போல் ஒளியானை
மின்றங்கிய இடைமடமங்கை மேவும் ஈசனை வாசமா முடிமேல்
கொன்றை அஞ்சடை குழகனை அழகார் கோலக்காவினில் கண்டு கொண்டேனே
கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார் கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.84) ஒன்பதாவது பாடலில் சுந்தரர், இறைவனை, மகரக்குழையும் தோடும் அணிந்த காதுகளை உடையவனாக காண்கின்றார். இறைவன் தூது சென்றதையும், தன்னை ஆட்கொண்டதையும், தான் இறைவனைத்தலைவனாக ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்டு தனது வாழ்க்கையை மிகவும் சுருக்கமாக சுந்தரர் கூறும் நேர்த்தியை நாம் இங்கே காணலாம். மாதினைஒரு பாகம் கொண்டுள்ள சிவபிரானை மாதன் என்று அழைக்கின்றார். மிகவும் அருமையான சொல்லாட்சி. இறைவனின் கையில் இருக்கும் உடுக்கையில்இருந்து தான், நாதமும் பின்னர் ஓசையும் பிறந்த செய்தியை இங்கே நாதனும் நாதம் மிகுத்து ஓசையது ஆனவன் என்ற சொற்றொடர் மூலம்குறிப்பிடுகின்றார். அடியார்கள் உள்ளத்தின் மீது தான் வைத்துள்ள பற்றினை சிறிது நேரம் கூட நீக்காத இறைவன் என்று குறிப்பிட்டு, சிறந்த அடியார்கள்பெரும் பேற்றினையும் நமக்கு உணர்த்துகின்றார்.
நாதனை நாதம் மிகுத்து ஓசை அது ஆனானை ஞான விளக்கொளியாம் ஊனுயிரைப் பயிரை
மாதனை மேதகு பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்றனை ஆள் தோழனை நாயகனைத் தாழ்மகரக்குழையும் தோடும் அணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவதென்றுகொலோ கார்வயல்சூழ் கானப்பேருறை காளையையே
மாதொரு பாகன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பதினெட்டாவது பாடல் தான். மிகவும் தொன்மையான கோலம்என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல், குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும்சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைத்து குறிப்பிடும் இனிமையான பாடல்.
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ
பாதச்சிலம்பொலி காட்டிய பண்பு என்று குறிப்பிட்டு பெருமான் தான் அணிந்திருந்த சிலம்பிலிருந்து எழுகின்ற ஒலியை தான் உணரும் வண்ணம் அருள் புரிந்தவன் பெருமான் என்று கீர்த்தித் திருவகவலில் மணிவாசக அடிகளார் கூறுகின்றார். தெள்ளேணம் பதிக்த்தின் கடைப் பாடலில் (8.11.20) சிலம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ என்று பெருமான் அணிந்துள்ள சிலம்பின் பெருமையை பாடும் வண்ணம் அடிகளார் ஊக்குவிக்கும் பாடல் இது.அரிசியில் கலந்துள்ள கல்லினை பிரிப்பதற்கு, அரிசியை முறத்தில் கொட்டி, இடமும் வலமுமாக புடைத்து அசைத்தலை தெள்ளுதல், கொளித்தல் என்று கூறுகின்றனர். பெண்கள் ஒன்றாக கூடி இந்த செயலில் ஈடுபடுவது வழக்கம். அந்த சமயத்தில் அவர்கள் அனைவரும் இறைவனின் புகழினைப் பாடியவாறு தங்களது செயலில் ஈடுபடுமாறு அடிகளார் தூண்டுகின்றார். சிவபெருமானை வணங்கும் தேவர்கள் கூட்டத்தினை, அவர் அணிந்துள்ள கொக்கின் இறகினை, அவரின் மணாட்டியாகிய உமையம்மையின் சிறப்புகளை, அவர் நஞ்சுண்ட திறத்தினை, அவர் நடமாடும் அழகினை, நடமாடும்போது அசையும் அவரது கால் சிலம்பினை, பாடி தெள்ளேணம் கொட்டுவோமாக என்று இந்த பாடல் கூறுகின்றது. குலம் பாடி என்று பல தேவர்கள் உள்ளிட்ட பெருமானின் அடியார்களின் பெருமையை பாடிய பின்னர், பெருமானின் பெருமையை பாட வேண்டும் என்று இந்த பாடலில் உணர்த்துகின்றார். குலம் என்பது இங்கே கூட்டம் என்ற பொருளில் வருகின்றது. சாதி குலங்களைக் கடந்தவன் பெருமான் என்பதை நாம் அறிவோம்.
குலம் பாடிக் கொக்கிறகும் பாடிக் கோல்வளையாள்
நலம் பாடி நஞ்சுண்டவா பாடி நாள்தோறும்
அலம்பார் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
பெருமான் நடனம் ஆடும்போது எழுகின்ற சிலம்பொலியை கேட்பதற்கு தீராத ஆசை கொண்டவன் என்று மணிவாசக அடிகளார் தன்னைக் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். இந்த குறிப்பு நமக்கு, சேரமான் பெருமாள் நாயனாரின் வழிபாட்டினை நினைவூட்டுகின்றது. சேரமான் பெருமாள் நாயனார், தினமும் பெருமானுக்கு பூசை செய்து முடித்த பின்னர், தான் இருந்த இடத்தில் இருந்த படியே, எப்போதும் நடனமாடுகின்ற சிதம்பரம் பெருமானின் பாதச் சிலம்பொலியை கேட்கும் பேறு உடையவராக இருந்தார் என்பதை நாம் அறிவோம். பெருமானின் பாதச் சிலம்பொலியை கேட்கும் வாய்ப்பினைப் பெற்ற அடிகளார், எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இன்பம் அளிக்கும் ஒலி என்று இங்கே குறிப்பிடுகின்றார். இத்தகைய அருமையான ஒலியை எழுப்பும் நடனத்தின் சிறப்பினைப் புகழ்ந்து பாடியவாறே, நாம் இறைவனுக்கு பணிவுடன் அளிக்க இருக்கும் மலர்களை கொய்வோம் என்று பாடலை முடிக்கின்றார்.
சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத்
தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய்
பேரானந்தம் பாடிப் பூவல்லிக் கொய்யாமோ
அற்புதப்பத்து பதிகத்தின் பாடலில் பெருமானின் சேவடிச் சிலம்பு ஒலிப்பதை அடிகளார் குறிப்பிடுகின்றார். திரு (திருவருள்) என்பது இங்கே பெருமானுடன் என்றும் பிரியாது விளங்கும் அருள் சக்தியாகிய பிராட்டியை குறிக்கும். உலகினில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிர்க்கும் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது.அந்த இறப்பின் பின்னர், உயிர்கள் சேர்த்துக் கொண்டுள்ள வினைகளின் தகுதிகளுக்கு ஏற்ப, பல பிறவிகள் காத்திருக்கின்றன. அத்தகைய பிறவிகள் உயிருக்கு எண்ணற்ற துன்பங்களையும் ஈட்டித் தருகின்றன. இந்த தன்மையை புரிந்து கொள்ளும் உயிர்கள், மேலும் வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆனால், தானோ அத்தகைய முயற்சிகள் ஏதும் செய்யாமல், வஞ்சனையான பல செயல்களைச் செய்து காலத்தைக் கழிக்கும் நிலையில் இருப்பதாக அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஏறுண்டு=தாக்கப்பட்டு; மேலும் இளைய மாதர்களின் கண் வலையில் சிக்கி கலங்கி, இன்ன செய்வது என்று அறியாத வண்ணம் திகைத்து நிற்பதாகவும் கூறுகின்றார். இத்தகைய இழிந்த நிலையில் இருக்கும் தன்னையும் ஏற்றுக்கொண்டு, தனக்கு துணைவனாக நின்று இறைவன் ஆட்கொண்டு அருள் புரிவது அற்புதம் என்று குறிப்பிடும் அடிகளார், அந்த அற்புதத்தின் பெருமையை தான் முழுவதுமாக அறிந்து கொள்ளவில்லை என்றும் கூறுகின்றார்.
பொருந்தும் இப்பிறப்பு இறப்பிவை நினையாது பொய்களே புகன்று போய்
கருங்குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே
அரும் துணைவனாய் ஆண்டு கொண்டருளிய அற்புதம் அறியேனே
சேரமான் பெருமாள் நாயனாரும் தான் அருளிய பொன் வண்ணத் திருவந்தாதி என்ற பதிகத்தின் அறுபத்து ஐந்தாவது பாடலில் மாதொரு பாகனின்கோலத்தை விவரிக்கின்றார். வீரக்கழல், பாம்பு, திருநீறு, எரி, எலும்பு மாலை, மூவிலை வேல், கங்கை நீரினைத் தாங்கிய சடை முதலியன பெருமானதுவலது பக்கத்திலும், இடது பகுதியில் பாடகம். மேகலை, சாந்து, பந்து, மலர் மாலை, மோதிரம், முதலியன இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது.
வலம் தான் கழல் இடம் பாடகம் பாம்பு வலம் இடம்
மேகலம் தான் வலம் நீறு இடம் சாந்து எரி வலம் பந்து இடம் என்பு
அலர்ந்தார் வலம் இடம் ஆடகம் வேல் வலம் ஆழி இடம்
சலம் தாழ் சடை வலம் தண் அம் குழல் இடம் சங்கரற்கே
பிரார்த்தம் ஆகாமியம் சஞ்சிதம் என்பன மூன்று வகையான வினைகள். பிராரத்தம் என்பது அந்தந்த உயிர்களின் தன்மைக்கு ஏற்ப, இந்த பிறவியில் நுகர்ந்து கழிப்பதற்காக ஒதுக்கப்பட்ட வினைகளின் தொகுதி. இந்த வினைகள், நமக்கு புலப்படாவண்ணம், உடலில் உயிர் உள்ளளவும் செயல் படும் தன்மை உடையன. இவற்றை நுகர்ந்து கழிக்கும் தருணத்தில், நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களின் தன்மைக்கு ஏற்ப மனம் சலனமடைந்து தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ப, ஆகாமிய வினைகளை தேடிக் கொள்கின்றது. எண்ணற்ற பல பிறவிகளில் நாம் ஈட்டிய வினைகளில், இந்த பிறவிக்கு என்று இறைவனால் ஒதுக்கப்பட்ட வினைகள் போக எஞ்சிய வினைகள், சஞ்சித வினைகளாக நாம் இனி எடுக்கவிருக்கும் பிறவிகளுக்காக காத்து நிற்கின்றன.இந்த ஆகாமிய வினைகள், இந்த உயிரின் சஞ்சித வினைகளுடன் சேர்ந்து அந்த வினைகளை மேலும் அதிகரித்து, நாம் எடுக்கவிருக்கும் பிறவிகளின் தன்மையையும் எண்ணிக்கையையும் மேன்மேலும் அதிகரிக்கின்றன. எனவே நாம் முதலில் ஆகாமிய வினைகளை தவிர்க்கவேண்டும். அவற்றைத் தவிர்க்க,நாம் பழைய வினைகளின் தாக்கத்தால் ஏற்படும் இன்ப துன்பங்களை, மனச் சலனம் ஏதுமின்றி, இன்ப துன்பங்களை ஒன்று போல் எதிர்கொள்ள வேண்டும்.இவ்வாறு செயல்படுவதால், நாம் ஆகாமிய வினைகளை தவிர்ப்பதும் அன்றி, நமது உயிர், மேன்மேலும் பல பிறவிகளில் எதிர்கொள்ளும் வினைகளை, மனச் சலனமின்றி சந்திக்கும் பக்குவத்தை அடைந்து விடுகின்றது. இத்தகைய பக்குவம் அடைந்த உயிரினுக்கு, மேலும் பல பிறவிகள் கொடுத்து அந்த பிறவிகளில் வினைகளை நுகரச் செய்வதால், உயிர்கள் தனது போக்கினில் எந்த விதமான மாறுதலும் அடைவதில்லை என்பதால், பெருமான் சஞ்சித வினைகளை மொத்தமாக நீக்கி, இனி வரவிருக்கும் பிறவிகளையும், அந்த உயிர்களுக்கு தடுத்து விடுகின்றான். இத்தகைய பக்குவத்தை அடைவதற்கு, நமது ஞானம் விரிவடைவதற்கு, இறைவனின் அருள் கைகூட வேண்டும். அந்த ஞானம் பெற்று நமது புத்தி விரிவடைவதற்கு மருத வாணரை சிந்தனை செய்யவேண்டும் என்று முந்தைய பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் அந்த ஞானத்தின் உதவி கொண்டு, இறைவனின் அருளால்,பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, நம்மை வருத்தும் வினைகளிலிருந்து விடுதலை அடையலாம் என்று வழிகாட்டுகின்றார்.
பொழிப்புரை:
தனது வலது திருக்காலில் வீரக்கழலும் இடது திருக்காலில் சிலம்பும் அணிந்து அழகுடன் பொலிந்து மாதொருபாகனின் தோற்றத்தை நமக்கு உணர்த்துபவர் சிவபெருமான், கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் நடனமாடிய வண்ணம் இடைமருது தலத்தினில் உறைகின்றார். இந்த தன்மை உடைய மருத வாணரை விரும்பித் தொழுவதே தங்களது நியமமாக கருதி வழிபடும் அடியார்களை வருத்தும் வினைகள் அவர்களை விட்டு அகன்று நீங்கிவிடும்.
பாடல் 7:
பிறையார் சடையண்ணல்
மறையார் மருதரை
நிறையால் நினைபவர்
குறையார் இன்பமே
விளக்கம்:
நிறையால்=நிறைவான மனத்துடன், அண்ணல்=தலைவர்; மறையார் மருதர் என்ற தொடருக்கு மறைக்கும் செயலைச் செய்பவர் என்ற விளக்கமும் பொருந்தும். திரோதானம் என்ற தொழிலை, பெருமான் தானே ஏற்றுக்கொண்டு செய்கின்றார் அல்லவா. மறையார் என்ற அடைமொழியினை இந்த தலத்திற்கு உரித்தாக்கி, மறைகள் நிறைவாக பயிலப்படும் இடைமருதூர் என்று பொருள் கொண்டு, அத்தகைய மருதூரில் உறையும் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நமது சிந்தனையில் எப்போதும் இறைவனே நிறைந்து இருந்தால், சிந்தனையில் உள்ள பொருளை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் மற்ற அந்தக்கரணங்களும், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றும், இறைவனையே நினைத்து செயல்படும் என்பதையே நிறையால் நினைபவர் என்று குறிப்பிடுகின்றார். இறைவனை வழிபட்டு நமது சிந்தையை செம்மையாக மாற்றிக் கொள்ளலாம் என்று ஆலோசனை கூறும் திருஞானசம்பந்தர், மனதினை இறை வழிபாட்டினில் ஈடுபடுத்தும் தன்மையை இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
தக்கனது சாபத்தால் நாளும் ஒவ்வொரு கலையாக இழந்து தேய்ந்து, ஒற்றைப் பிறையுடன் தன்னைச் சரணடைந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு, சந்திரனை முற்றும் அழியாமல் காத்தவரும், அனைத்து உயிர்களுக்கும் தலைவராக விளங்குபவரும், நான்கு வேதங்களையும் உலகினுக்கு அளித்தவரும், ஆகிய பெருமான் இடைமருது தலத்தினில் மருதராக, திகழ்கின்றார். இந்த மருதவாணரை, வஞ்சனை ஏதுமின்றி நிறைவான மனத்துடன்,மனம் புத்தி அகங்காரம் சித்தம் எனப்படும் நான்கு அந்தக்கரணங்களாலும் நினைத்து தொழும் அடியார்கள், தங்களது வாழ்வினில், இம்மையிலும் மறுமையிலும் குறைவற்ற இன்பம் அடைவார்கள்.
பாடல் 8:
எடுத்தான் புயம் தன்னை
அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர் சூட்ட
விடுத்தார் வேட்கையே
விளக்கம்:
புயம்=தோள்கள்; வேட்கை=உலகத்து உயிர்கள் மற்றும் உலகப் பொருட்களின் மீது கொண்டுள்ள பற்று; இந்த பற்றே, நமது வினைகளை மேன்மேலும் பெருக்கி, மீண்டும் மீண்டும் நாம் பிறப்பெடுக்க வழி வகுப்பதால், இந்த பற்றினை நாம் இறைவனது அருளால் நீக்கிக்கொண்டால், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறலாம். ஆனால் உலகப் பற்றினை அவ்வளவு எளிதாக நம்மால் நீக்கிக்கொள்ள முடியாது. இறைவன் அருள் இருந்தால் தான்,நாம் யான் எனும் அகப்பற்று மற்றும் எனது எனப்படும் அகப்பற்று ஆகிய இரண்டினையும் விலக்கிக் கொள்ள முடியும். இத்தகைய உலகப்பற்று அற்ற நிலையே, சிவயோக நிலை எனப்படும். அடுதல் என்றால் அழித்தல் என்று பொருள். இங்கே அரக்கனின் தோள்களை நெருக்கி அவனது வலிமையை அழித்தான் என்று பொருள் கொள்வது பொருத்தம். அடுதல் என்ற சொல்லுக்கு தண்டனை என்ற பொருள் கொண்டு, உமையன்னை அஞ்சி நடுங்கும் வண்ணம் கயிலை மலையினை அசைத்த செயலுக்கு பெருமான் அளித்த தண்டனை தான், அரக்கனை மலையின் கீழே நெருக்கியது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நம்மால் முடிந்த வரையிலும் நாம் மலர்களை நாமே தேர்ந்தெடுத்து பறித்து, மாலைகளாக தொடுத்து இறைவனுக்கு சூட்டவேண்டும். அதனையே இங்கே தொடுத்தார் மலர் சூட்டி என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மனதினால் இறைவனை வழிபடும் தன்மையை முந்தைய பாடலில் உணர்த்திய திருஞான சம்பந்தர் இந்த பாடலில், நமது உடலினை இறைவழிபாட்டினில் ஈடுபடுத்துவது எப்படி என்று கற்றுக் கொடுக்கின்றார்.
பொழிப்புரை:
தான் செல்லும் வழியில் தனக்கு இடையூறாக இருந்தது என்ற எண்ணத்துடன், கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைத்து விட்டுத் தனது பயணத்தைத் தொடரலாம் என்ற நோக்கத்துடன் கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் தோள்களை நெருக்கி அவனது வலிமையை அழித்தவர் சிவபெருமான். அத்தகைய ஆற்றல் உடைய பெருமானை, இடைமருதராக இந்த தலத்தினில் உறையும் பெருமானை,தாங்களே பறித்த தூய்மையான மலர்களை தொடுத்து, இறைவனுக்கு சூட்டி வணங்கி மகிழும் அடியார்கள், தாங்கள் அந்நாள் வரையில் கொண்டிருந்த ஆசைகளை, உலகத்தில் உள்ள உயிர்கள் மற்றும் உலகத்து பொருட்கள் அனைத்தின் மீது கொண்டிருந்த ஆசையை விட்டுவிடும் ஆற்றலையும் அதன் பயனாக வீடுபேற்று இன்பத்தையும் பெறுவார்கள்.
பாடல் 9:
இருவர்க்கு எரியாய உருவ மருதரைப்
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே
விளக்கம்:
இருவர்=பிரமன் மற்றும் திருமால். பரவி=புகழ்ந்து; மருவி=பொருந்தி, எல்லா நலன்களும் பொருந்தி என்று பொருள் கொள்ளவேண்டும். சென்ற பாடலில்,இறைவனுக்கு மலர்கள் சூட்டி வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை உணர்த்திய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் அவனைப் புகழ்ந்து பாடுவதால், பேசுவதால் நாம் அடையவிருக்கும் பயனை சொல்கின்றார். மனம் மற்றும் மெய் மூலம் இறை வழிபாடு செய்வதை சென்ற இரண்டு பாடல்களில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் நமது வாயினை எவ்வாறு இறை வழிபாட்டினில் பயன்படுத்துவதை என்பதை உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும், தனது திருவடியை மற்றும் திருமுடியை காண முடியாமல் திகைத்து நிற்கும் வண்ணம், அவர்களின் எதிரே நெடிய தீப்பிழம்பாக தொன்றிய பெருமான், இடைமருது தலத்தினில் மருதவாணர் என்ற நாமத்துடன், உறைகின்றார். அவரைப் பணிந்தும், அவரைப் புகழ்ந்து பேசியும் பாடியும் வ்ழிபடும் அடியார்கள் அனைத்து நலன்களும் இம்மையிலும் மறுமையிலும் பொருந்தப் பெற்று இன்பமாக வாழ்வார்கள்.
பாடல் 10:
நின்றுண் சமண் தேரர்
என்று மருதரை
அன்றி உரை சொல்ல
நன்று மொழியாரே
விளக்கம்:
நாம் ஒரு இடத்தில் அமர்கின்றோம் என்றால், நமக்கு அந்த இடம் சொந்தமானது அல்லது அந்த இடத்தினில் அமர்வதற்கு நமக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று பொருள். அந்நாளில் சமணத் துறவிகள், எந்த இடத்தினையும் தங்களது இடமாக கருதாமல் வாழ்ந்ததால், அமர்ந்து உணவு உட்கொள்ளும் தன்மையை விடுத்தவர்களாக விளங்கினார்கள். அந்த தன்மையே இங்கே, நின்றுண் சமணர் என்ற தொடர் மூலம் சொல்லப் படுகின்றது.என்று=என்றும், எந்த காலத்திலும்; சமணர் மற்றும் புத்தர்கள் சிவபெருமானைக் குறித்து சொல்லும் இகழ்ச் சொற்கள், எவருக்கும் நன்மை பயக்காது என்பதால், அந்த சொற்களை நாம் பொருட்படுத்தாது புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகின்றார். பெருமானை வணங்காத சமணர்கள் மற்றும் புத்தர்களின் வாயிலிருந்து நற்சொற்கல் வாராது என்று கூறுவதன் மூலம், பெருமானைப் பணிந்து வணங்கும் அடியார்களின் வாயிலிருந்து நல்ல சொற்களே தோன்றும் என்பதும் இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களில் சொல்லப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி, உயிர் இறைவனை வழிபடத் தொடங்கும் போது, பலவிதமான இடையூறுகள் அந்த வழிபாட்டினை செய்யவிடாமல் தடுப்பதை நாம் காண்கின்றோம். இத்தகைய இடையூறுகளை மணிவாசகர் மிகவும் கோர்வையாக போற்றித் திருவகவலில் (வரிகள் 44–57) குறிப்பிடுகின்றார். அத்தகைய இடையூறுகளில் ஒன்று தான் மாற்று மதத்தவரின் செய்கைகள். எனவே நாம் மாற்று மதத்தவரின் உரைகளால் திசை திருப்பபடாமல் இருக்கவேண்டும் என்பதை இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
எந்த இடமும் தமக்கு சொந்தமில்லை என்ற கருத்துடன் தரையில் அமர்ந்து உணவு உட்கொள்வதை தவிர்த்து, நின்ற வண்ணம் உண்ணும் சமணத் துறவிகளும் புத்தத் துறவிகளும், எந்த காலத்திலும், மருத வாணரைப் புகழ்ந்து பேச மாட்டார்கள். எனவே அவர்கள் சொல்லும் சொற்கள், எந்த நன்மையையும் விளைவிக்காது.
பாடல் 11:
கருது சம்பந்தன்
மருதர் அடி பாடிப்
பெரிதும் தமிழ் சொல்லப்
பொருத வினை போமே
விளக்கம்:
பொருத வினை=இந்நாள் வரையில் நம்முடன் பொருந்தி இருந்த வினைகள்; கருது=இறைவனது திருவருளை மட்டுமே கருதி, வாழ்ந்த திருஞானசம்பந்தர்.தன்னைப் புகழ்ந்து பேசியும் பணிந்து வழிபட்டும் வாழும் மனிதர்களுக்கு திருவருள் புரிபவன் சிவபெருமான் என்பதை நன்கு புரிந்து கொண்ட திருஞானசம்பந்தர், மக்கள் அனைவரும் இறைவனின் தன்மைகளை புகழ்ந்து பாடி பயன் அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், மக்களுக்கு உதவும் பொருட்டு, தேவாரப் பதிகங்களை அருளியுள்ளார்.
பொழிப்புரை:
மக்கள் இறைவனது தன்மைகளை புரிந்து கொண்டு, இறைவனைப் பணிந்தும் புகழ்ந்தும் வழிபட உதவும் நோக்கத்தை, கருத்தினில் கொண்டவனாக ஞானசம்பந்தன், மருதவாணரின் திருவடிகளை பெரிதும் புகழ்ந்து பாடிய தமிழ்ப் பாடல்களை பாடி இறைவனைப் போற்றும் அடியார்களுடன் அந்நாள் வரை பொருந்தியிருந்த வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும்.
முடிவுரை:
பதிகத்தின் முதல் பாடலில், நான்மறைகள் மூலம் நாம் வாழவேண்டிய முறையினை நமக்கு உணர்த்திய பெருமான், பொதுவாக காட்டினில் வாழ்பவராக இருந்தாலும், நமக்கு அருள் புரியும் நோக்கத்துடன் திருவிடைமருதூர் தலத்தினில் உறைகின்றார் என்று சுட்டிகாட்டும் திருஞான சம்பந்தர், அந்த இறைவனைத் தொழுது வழிபடுவதால் நமக்கு புகழ் சேரும் என்றும் நமக்கு பல வகையிலும் துன்பம் அளிக்கின்ற வினைகள் நம்மை விட்டு நீங்கிவிடும் என்றும், அந்த பெருமானைத் தொழுவதால் நாம் அடையவிருக்கும் பலனை இரண்டாவது பாடல் மூலம் உணர்த்துகின்றார். பெருமானைப் புகழ்ந்து தொழுது போற்றுவதற்கு உதவியாக திருமுறைப் பாடல்களும் பல தோத்திரப் பாடல்களும் உள்ளன என்பதை உணர்த்தி அத்தகைய பாடல்களை உரிய பண்ணுடன் பொருத்தி பாடுமாறு நமக்கு மூன்றாவது பாடல் மூலம் அறிவுரை கூறுகின்றார். இந்த அறிவுரையினை சற்றும் தாமதம் செய்யாமல், தயக்கமேதும் கொள்ளாமல், உடனே செயல்படுத்த வேண்டும் என்ற அறிவுரை நான்காவது பாடலில் கொடுக்கப் படுகின்றது. இவ்வாறு இறைவனை சிந்தனை செய்யும் அடியார்களின் சிந்தனை விரிவடைந்து மேன்மேலும் ஞானம் பெருகும் என்றும், அவர்களது வினைகள் அவர்களை விட்டு அகலும் என்றும் ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். மனதினால் இறைவனை சிந்தித்தும் உடலால் அவனுக்கு மலர்மாலைகள் தொடுத்து சூட்டியும் அவனது புகழினை நமது வாயினால் புகழ்ந்து பாடியும், நமது மனம் மொழி மெய்யினை எவ்வாறு இறைவழிபாட்டினில் பயன்படுத்த வேண்டும் என்று ஆறாவது ஏழாவது மற்றும் எட்டாவது பாடல்களில் திருஞான சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். மேற்கண்டவாறு இறைவனைப் புகழ்ந்து வாழும் அடியார்கள், இம்மையிலும் மறுமையிலும் பல நலன்களை பெறுவார்கள் என்று ஒன்பதாவது பாடல் நமக்கு உணர்த்துகின்றது. மாற்று மதத்தவர்கள் சிவபெருமானைக் குறித்து இழிவாக பேசும் சொற்கள்,எந்த விதமான நன்மையும் பயக்காது என்பதை உணர்த்தி, அவற்றைப் புறக்கணிக்கவேண்டும் என்ற அறிவுரை பத்தாவது பாடலில் சொல்லப் படுகின்றது.மக்களின் நன்மையினை கருத்தில் கொண்டு, அவர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடி, இறைவனை வண்ங்க உதவும் பொருட்டு தான் அருளிய தேவாரப் பாடல்களை முறையாக பாடும் அடியார்களுடன் அந்நாள் வரை பொருந்தி இருந்த வலிய வினைகளும் அவர்களை விட்டு நீங்கிவிடும் என்று கடைப் பாடலில் உணர்த்துகின்றார். இந்த பதிகம் மூலம் மருதவாணரை வழிபடவேண்டிய அவசியத்தையும், அவரை எவ்வாறு வழிபடுவ்து என்பதையும், அவ்வாறு வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் நன்மைகளையும், அறிந்து கொள்ளும் நாம், திருவிடைமருதூர் சென்றடைந்து, மருதவாணரைப் பணிந்து வணங்கி, அவர் மீது மூவர் பெருமானார்கள் அருளிய தேவாரப் ப்திகங்களை முறையாக பாடி, இம்மையிலும் மறுமையிலும் பல நன்மைகள் பெற்று இன்பம் அடைவோமாக.