இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


தொண்டெலாம் மலர்

தொண்டெலாம் மலர்

பதிக எண்: 2.28 - திருக் கருவூர் ஆனிலை - இந்தளம்

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக, கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு), திருநணா (பவானி), பாண்டிக்கொடுமுடி ஆகிய கொங்கு நாட்டுத் தலங்கள் சென்ற ஞானசம்பந்தர், பாண்டிக்கொடுமுடி தலத்திலிருந்து வெஞ்சமாக்கூடல் சென்ற பின்னர் கருவூர் ஆனிலை தலத்திற்கு வருகின்றார். வெஞ்சமாக்கூடல் தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. கருவூர் ஆனிலை தலம் வந்த செய்தியை குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

செல்வக் கருவூர் திருவானிலைக் கோயில் சென்று இறைஞ்சி

நல்லிசை வண்தமிழ்ச் சொற்றொடை பாடி அந்நாடு அகன்று

மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து

பல்கு திரைப் பொன்னித் தென்கரைத் தானம் பல பணிவார்

இந்த தலத்துடன் ஞானசம்பந்தரது கொங்கு நாட்டுப் பயணம் முடிவுற்றதை உணர்த்தும் வண்ணம், அந்நாடு அகன்று என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். கருவூரிலிருந்து புறப்பட்ட சம்பந்தர் மாணிக்க வெற்பு முதலான பல தலங்கள் சென்றதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். மாணிக்க வெற்பு என்று வாட்போக்கி (தற்போதைய பெயர் இரத்தினகிரி) தலத்தினை சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. தானம் என்பது ஸ்தானம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். இறைவன் உறையும் இடம் என்று பொருள். தென்கரைத் தானம் என்று சேக்கிழார் குறிப்பிடும் தலங்கள் எவை எவை என்று தெரியவில்லை. இரத்தினகிரிக்கும் பராயத்துறைக்கும் இடைப்பட்ட தலங்களாக அவை இருக்கவேண்டும் என்று கருதப் படுகின்றது.

கரூர் என்று அழைக்கப்படும் தலமே கருவூர் என்று அந்நாளில் அழைக்கப்பட்டது. இந்த நகரம் மாவட்டத் தலைநகர். இரயில் சந்திப்பு உள்ளது. தமிழ் நாட்டின் பல இடங்களிளிளிருந்தும் நேரடி பேருந்து வசதி உள்ளது. திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் மிகவும் அதிகமாக உள்ளன. காமதேனு பசு வழிபட்டதால் ஆனிலை என்பது திருக்கோயிலின் பெயராக மாறியது. ஊரின் பெயரையும் சேர்த்து கருவூர் ஆனிலை என்று ஞானசம்பந்தரால் தனது பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவனின் திருநாமம் ஆனிலையப்பர், பசுபதீஸ்வரர், பசுபதிநாதர்; சுயம்பு இலிங்கம். சௌந்தரவல்லி அலங்காரவல்லி என்று இரண்டு அம்மன் சன்னதிகள்; ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் (13, 14, 15) சூரியனின் நேராக பெருமானின் சன்னதி சென்று அடையும். இதனை சூரியன் செய்யும் வழிபாடு என்று கூறுவார்கள்.

படைப்புத் தொழில் செய்து வந்த பிரமன், ஒரு சமயத்தில் தனது திறமையை குறித்து கர்வம் கொண்டார். அதனால் அவரது சிந்தனை சிதறியது. தான் எத்தனை முயற்சி செய்த போதும் அவரால் முன்போல் படைப்புத் தொழிலை சரிவர செய்ய முடியவில்லை. அப்போது காமதேனு பசு படைப்புத் தொழிலினை மேற்கொள்ள முன்வந்தது. இந்த தலத்தில் இருந்த ஒரு எறும்புப் புற்றில் இருந்த சுயம்பு இலிங்கத்தைத் தினமும் தனது பாலை அந்த இலிங்கத்தின் மேல் பொழிந்து, காமதேனு பசு இறைவனை ஆராதனை செய்து வந்து. ஒரு நாள் தவறுதலாக, காமதேனுவின் குளம்பு புற்றினுள்ளே இருந்த இலிங்கத்தின் மீது படவே, புற்றிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. இரத்தம் கண்டு பதறிய காமதேனு, தனது தவறினை மன்னிக்குமாறு இறைவனிடம் வேண்ட, இறைவன் நேரில் தோன்றி காமதேனு பசுக்கு தரிசனம் அளித்ததுடன், அந்த பசு படைத்தல் தொழிலை செய்வதற்கு தேவையான ஆற்றலையும் அளித்தார். இறைவனின் அருள் பெற்ற காமதேனுவும் சிலநாட்கள் படைப்புத் தொழிலை சரிவர செய்தது. பிரமனும் சிவபெருமானின் அருள் இருந்தால் எவரும் படைப்புத் தொழிலை சரிவர செய்யமுடியும் என்பதை புரிந்து கொண்ட பிரமனும், தனது ஆணவத்தை விட்டொழித்து இறைவனை வழிபட்டு, இறைவனின் அருளினைப் பெற்ற பின்னர், மீண்டும் படைப்புத் தொழிலை சரிவர செய்யத் தொடங்கினார். கருவினை உற்பத்தி செய்யும் படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலை காமதேனு பசுவுக்கும் பிரமனுக்கும் அளித்த இலிங்கம் என்பதால், கருவூர் என்ற பெயர் வந்தது. காமதேனு இலிங்கத்திற்கு பால் பொழிந்து ஆராதனை செய்வது ஒரு பளிங்குச் சிற்பமாக அம்மன் சன்னதிக்கு அருகில் காணப் படுகின்றது.

ஏழு நிலை கொண்ட இராஜகோபுரத்தைத் தாண்டிய பின்னர் கருங்கல்லால் செய்யப்பட்ட விளக்குத் தூண் காணப்படுகின்றது. நந்திக்கு அருகில் திருஞானசம்பந்தர் மற்றும் எறிபத்த நாயனார் உருவச் சிலைகளும் முசுகுந்த மன்னன் மற்றும் புகழ்ச் சோழ மன்னனின் உருவச் சிலைகளும் காணப்படுகின்றன. முசுகுந்த மன்னர், காமதேனு வழிபட்ட இலிங்கத்தை, எறும்புப் புற்றிலிருந்து எடுத்து தாபித்ததாக தலபுராணம் கூறுகின்றது. தான் படையெடுத்து வென்ற போரில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சடைமுடியும் திருநீறும் உடைய சைவ அடியாராக விளங்கியமை கண்டு, மனம் வருந்தி தனது தவறுக்காக, இறந்தவரின் தலையினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் மூன்று முறை தீயினை வலம் வந்து, தீயில் பாய்ந்து தனது உயிரினை விட்ட சோழ மன்னன், புகழ்சோழர். சோழ மன்னனின் பட்டது யானை, பெருமானுக்கு சாத்த இருந்த மலர் மாலையை ஒரு சிவனடியாரின் கையில் இருந்து பறித்து வீசி எறிந்த குற்றத்திற்காக அந்த யானையை கொன்ற அடியார், எறிபத்த நாயனார். இந்த இரண்டு நாயன்மார்களும் கரூரைச் சார்ந்தவர்கள். கருவூர்த் தேவரின் சன்னதி வெளிப்பிராகாரத்தில் உள்ளது. கருவூர்த் தேவர் அருளிய 103 பாடல்கள் (10 பதிகங்கள்) ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா தொகுப்பினில் சேர்க்கப் பட்டுள்ளன. இவரது சன்னதியின் மேற்கூரையில் பதினெண் சித்தர்களின் உருவங்களையும் அவர்கள் முக்தி அடைந்த தலங்களின் விவரங்களையும் நாம் காணலாம். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. .

பாடல் 1:

தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு

உண்டல் ஆருயிர் ஆய தன்மையர்

கண்டனார் கருவூருள் ஆனிலை

அண்டனார் அருள் ஈயும் அன்பரே

விளக்கம்:

தொண்டு=தொண்டு புரியும் அடியார்கள்; பெருமானை ஆருயிர் ஆய தன்மையர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். இதனை நஞ்சு உண்ட செய்கையுடன் சேர்த்து பொருள் கொள்ளவேண்டும். பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால விடத்தின் நெடியைக் கூட தாங்க இயலாமல் பல திசைகளிலும் சிதறி ஓடிய தேவர்கள், சிவபெருமானிடம் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினார்கள். இறைவனும் அவர்களை பாதுகாக்க திருவுள்ளம் கொண்டு, உட்கொண்டார். அன்று அவர் நஞ்சினை உட்கொண்டிராவிட்டால், தேவர்கள் அன்றே உயிர் இழந்திருப்பார்கள். எனவே தான் தேவர்கள் தங்களது ஆருயிராக பெருமானை கருதினார்கள் என்பதை இந்த பாடலில் ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். கண்டனார் என்ற சொல்லுக்கு சொல்லினை கண்டு அனார் என்று இரு சொற்களாக பிரித்து, கற்கண்டு போன்று இனிமையாக உள்ளவர் என்று பொருள் விளக்கம் அளிக்கப்படுகின்றது. கண்டம் என்ற சொல்லுக்கு கழுத்து என்று பொருள் கொண்டு, சிறப்பு வாய்ந்த கழுத்தினை உடையவர் என்றும் பொருள் கொள்ளலாம். அகண்டன் என்றால் அருவுமாக இருப்பவன், அளவிட முடியாதவன் என்று பொருள். அகண்டவன் என்ற சொல்லுக்கு கண்டன் என்பது எதிர்ச்சொல். உயிர்களுக்கு அருள் புரியும் பொருட்டு பல வேறு கோலங்கள் கொண்டு, உயிர்கள் காணும் வண்ணம் இருப்பவன் என்பது மிகவும் பொருத்தமான விளக்கமாக உள்ளது. எனினும், இந்த பதிகத்தில் அடுத்து வரும் பாடல்களில், காது, கண், சடைமுடி என்று பல அங்கங்கள் குறிப்பிடப் படுவதால், இந்த பாடலில் பெருமானின் கழுத்து தான் குறிப்பிடப்படுகின்றது என்று பொருள் கொள்வது மற்ற விளக்கங்களை விடவும் மிகவும் பொருத்தமாக உள்ளது.

அவ்வினைக்கு இவ்வினை என்று தொடங்கும் பதிகம் (1.117) பாடி, நஞ்சினை உண்டு உலகத்தை காத்த திருலகண்டத்தின் மீது ஆணை என்று குறிப்பிட்டு, அடியார்களின் கடுமையான விஷஜூரத்தை தீர்த்த திருஞானசம்பந்தரின் மனம், அந்த தலத்தினை விட்டு அகன்று பாண்டிக்கொடுமுடி மற்றும் கருவூர் ஆனிலை ஆகிய தலங்கள் சென்ற பின்னரும், இறைவனின் அந்த கருணையினை நினைத்தவாறே இருந்தது போலும். அதிசயம் நிகழ்த்திய பதிகத்திற்கு ஆதாரமாக இருந்த நீலகண்டம் அல்லவா. அதனால் தான், கருவூர் சென்ற போது அருளிய இந்த பதிகத்தின் முதல் பாடலிலும் பெருமானின் சிறப்பு வாய்ந்த கழுத்தினை குறிப்பிட்டார் போலும்.

அருள் ஈயும் அன்பர் என்று இந்த பாடலை ஞானசம்பந்தர் முடிக்கின்றார். ஞானசம்பந்தர், கருவூர் ஆனிலை சென்றதை குறிப்பிடும் சேக்கிழார் செல்வக் கருவூர் என்று குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. பண்டைய நாளில் சேரர்களின் தலைநகரமாக இருந்த கரூர் நகரம் செல்வச் செழிப்புடன் இருந்தது வியப்புக்கு உரிய செய்தி அல்ல. அருள் ஈயும் அன்பர் என்று இறைவனை ஞானசம்பந்தர் குறிப்பிடும் பின்னணியில், சேக்கிழார் குறிப்பிட்டது பொருட் செல்வம் அல்ல, இறைவனின் அருள் செல்வம் என்று நமக்கு புலனாகின்றது. இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலும் பெருமானின் அருள் புரியும் செயல் குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை:

ஆலகால நஞ்சினை உட்கொண்டு தங்களைக் காப்பாற்றிய இறைவனை, தேவர்கள் தங்களது உயிரினும் மேலாக மதிக்கின்றனர். பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால நஞ்சினைத், தனது கழுத்தினில் தேக்கி வைத்து அனைத்து உயிர்களையும் காப்பாற்றிய பெருமானின் கழுத்து தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப் படுகின்றது. இறைவனுக்குத் தொண்டு புரியும் அடியார்கள், மலர்களை இறைவனது பாதங்களில் தூவி அவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். அண்டங்கள் அனைத்திலும் பரந்து நிற்கும் பெருமான், கருவூர் ஆனிலை தலத்தினில், எழுந்தருளி, தனது அடியார்களுக்கு அருள் அளிக்கும் அன்பனாக விளங்குகின்றான்.

பாடல் 2:

நீதியார் நினைந்தாய நான்மறை

ஓதி யாரொடும் கூடலார் குழைக்

காதினார் கருவூருள் ஆனிலை

ஆதியார் அடியார் தம் அன்பரே

விளக்கம்:

நினைந்தாய நான்மறை ஓதி என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உயிர்களை அவற்றின் வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப, தகுந்த உடலுடன் பொருத்திய இறைவன், அந்த உயிர்கள் வாழ்க்கை நெறியினை அறிந்து கொண்டு, தங்களின் வினைகளைக் கழித்துக் கொள்ள வேண்டும் என்று திருவுள்ளம் கொள்ளும் இறைவன், வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் வேதங்களை ஓதி அருள் புரிகின்றான். நீதியார் என்ற சொல்லுக்கு, ஒழுக்கத்துடன் முறையான வாழ்க்கை வாழும் அடியார்கள் என்று விளக்கம் கொடுத்து, அத்தகைய அடியார்கள் பெருமானின் பெருமையை நினைத்த வண்ணம் வேதங்கள் ஓதி பெருமானை போற்றுகின்றனர் என்றும் அந்த அடியர்களுடன் கூடி இணைந்து இருக்கும் பெருமான் என்ற விளக்கமும் அளிக்கப்படுகின்றது. எனினும் கூடலார் என்ற எதிர்மறைச் சொல்லினை உடன்பாட்டுச் சொல்லாக மாற்றி பொருள் கொள்வது பொருந்துமா என்ற கேள்விக் குறி எழுகின்றது. எனவே நீதியார் என்ற சொல் பெருமானை குறிப்பதாக பொருள் கொள்வதே பொருத்தம் என்று தோன்றுகின்றது. அது போன்றே ஓதி என்ற சொல்லினை பெயர்ச் சொல்லாக கருதி (வினைச்சொல்லாக கருதாமல்) ஓதியவன் என்று பொருள் கொள்வதே பொருத்தமாக உள்ளது.

இந்த பாடலில் கூடலார் என்று பெருமானின் தன்மையை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களுடன் இணைந்து நிற்கும் பெருமான், அந்தந்த உயிர்களின் தன்மையால் தான் எந்தவிதமான மாறுதலும் அடைவதில்லை. அவன் என்றும் தனது தனித்தன்மையுடன் செயல்படுகின்றான். இந்த தன்மையை மிகவும் அழகாக திருவெம்பாவை பதிகத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பெண்ணாகி ஆணாகி அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி என்று கூறுகின்றார். அதாவது ஆண் பெண் அலி எனும் மூன்று உருவங்களாக இருக்கும் பெருமான், மண் முதலான ஐந்து பூதங்களாகவும் சூரியன் சந்திரன் மற்றும் ஆன்மாகவும் இருந்தாலும் அவைகளிலிருந்து வேறுபட்டவனாக இருக்கின்றான் என்று சொல்கின்றார். அட்ட மூர்த்தங்கள் என்று சொல்லப்படும் பொருள்களுடன் இணைந்து இருந்தாலும், அவைகளின் தன்மையால் தான் எந்தவிதமான மாறுதலையும் கொள்ளாமல் தனித்து நிற்கின்றான் இறைவன் என்பதை இந்த பாடலில் மணிவாசகர் கூறுகின்றார். இதே கருத்து தான் ஞானசம்பந்தரால் இந்த பாடலில் கூடலர் என்ற சொல் மூலம் எடுத்துரைக்கப் படுகின்றது.

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றாற்போல்

கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்

தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளி சேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்

பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

மேற்கண்ட பாடலில் குறிப்பிட்ட வண்ணம் உயிர்களுடன் கலந்து நின்று அவற்றை இயக்கும் பெருமான், அந்த உயிர்களின் தன்மையுடன் தான் கலக்காமல் வேறாகவும் நிற்கின்றான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் திருவீழிமிழலை பதிகத்தின் (1.11.02) இரண்டாவது பாடலாகும் இந்த பாடல் ஒன்று முதல் எட்டு வரை உள்ள எண்களை வரிசைப் படுத்தி, ஓவ்வொரு எண்ணுக்கும் பொருந்தும் வண்ணம் பெருமானின் குணங்களை குறிப்பிடுவதால், எண்ணலங்கார பாடல் என்று அழைக்கப் படுகின்றது. ஈறாய் என்று உலகமும் உலகத்துப் பொருட்களும் அனைத்து உயிர்களும் ஓடுங்கும் இடமாக இறைவன் இருக்கும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. என்றும் மாறுபடாமல் நிலைத்து நிற்கும் கருத்துகளை சொல்லும் வேதங்கள் என்று உணர்த்த, மாறா மறை நான்கு என்று குறிப்பிடுகின்றார்.

ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய்

மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய்

ஆறார் சுவை ஏழ் ஒசையொடு எட்டுத்திசை தானாய்

வேறாய் உடன் ஆனான் இடம் வீழிமிழலையே

இறைவன் இவ்வாறு உயிர்களுடன் இணைந்தும், தனது தன்மை எந்தவிதத்திலும் கெடாது வேறாக இருக்கும் நிலையினை, அப்பர் பிரான் ஒன்பது என்ற எண்ணின் தன்மையுடன் ஒப்பிட்டு உணர்த்தும் பாடலை (5.89.9) நாம் இங்கே காண்பது மிகவும் பொருத்தம். ஒன்பதொன்பது= எண்பத்தொரு பதங்களால் பேசப்படுபவன்; இந்த விளக்கம் பல உரைகளில் காணப்படுகின்றது. பதம் என்ற சொல்லுக்கு எழுத்து என்று பொருள் கொண்டு எண்பத்தொரு எழுத்துக்களால் பேசப்படுபவன் இறைவன் என்று வர்த்தமானன் பதிப்பகத்து தேவார உரையில் கூறப்படுகின்றது. வடமொழியில் உள்ள ஐம்பத்தொரு எழுத்துக்களையும் தமிழ்மொழியில் உள்ள முப்பது எழுத்துக்களையும் கூட்டினால் நமக்கு எண்பத்தொன்று என்ற எண்ணிக்கை கிடைக்கின்றது. வடமொழியாகவும் தமிழ்மொழியாகவும் இருக்கும் இறைவன் இந்த எண்பத்தொரு எழுத்துகளாக உள்ளான் என்று கூறுவதும் பொருத்தமாக உள்ளது. .ஒன்பது களிறு என்பது எட்டு திசைகளில் உள்ள யானைகளையும் கயிலாயத்தில் உள்ள அயிராவணம் உள்ளிட்டு ஒன்பது யானைகளை குறிக்கும். உலகினைத் தாங்கும் யானைகள் அவனை சூழ்ந்து நிற்கும் வண்ணம் உலகெங்கும் விரிந்தவன் பெருமான் என்று அவனது வியாபக நிலை (விஸ்வரூப நிலை) உணர்த்தப்படுகின்றது. ஒன்பதொன்பது பல்கணம் என்ற தொடர் பதினெண் சிவகணங்களை குறிக்கும். ஒன்பதாம் அவை தீத்தொழில் என்ற தொடர் நமது உடலில் உள்ள ஒன்பது வாயில்கள், மலங்கள் ஒழுக நிற்கும் நிலையினை குறிக்கும்.

ஒன்பது ஒன்பது யானை ஒளி களிறு

ஒன்பது ஒன்பது பல்கணம் சூழவே

ஒன்பதாம் அவை தீத்தொழிலின் உரை

ஒன்பது ஒத்து நின்று என்னுள் ஒடுங்குமே

ஒன்பது ஒத்து என்பதற்கு திரு சி.கே.எஸ். வேறொரு சுவையான விளக்கத்தினை தருகின்றார். ஒன்பது என்ற எண் எத்தனை முறை விரிக்கப்பட்டாலும் (எத்தனை முறை வேறொரு எண்ணினால் பெருக்கப்பட்டாலும்) வரும் எண்ணில் உள்ள இலக்கங்களின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கும். அது போல் ஆன்மாவின் பேச்சுகள் எவ்வளவு விரிந்து சூழினும் இறுதியில் யான் எனது என்று அகங்கார நிலையினை அடைந்து உயிர் இடம் கொண்டுள்ள உடலையே சுற்றி சுற்றி வந்து அந்த உடலினுள்ளே ஓடுங்கும் என்று கூறுகின்றார். ஈற்றிரண்டு அடிகளுக்கு வேறு விதமாகவும் பொருள் கூறலாம். உயிரினுள்ளே கலந்து நிற்கும் பெருமான், உயிரின் தன்மையால் தான் சற்றும் மாறாது, ஒன்பது எனப்படும் எண் தனித்தன்மையில் இருப்பது போன்று, தனது தனித் தன்மையுடன் என்னுளத்தின் உள்ளே இறைவன் உறைகின்றான் என்று அப்பர் பிரான் கூறுவதாக பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது.

ஒன்பது என்ற எண் மற்ற எண்களுடன் (ஒன்பதால் முழுவதுமாக வகுபடும் எண்களைத் தவிர்த்து) சேர்க்கப்படும் போது (கூட்டல்), அந்த எண்களுடன் கலவாமலும் அந்தந்த எண்களின் தன்மையை மாற்றாமலும் இருக்கும் தன்மை இங்கே விளக்கப்பட்டுள்ளது. இந்த தன்மை இறைவன் உயிர்களுடன் இருந்து இயக்கினாலும், உயிருடன் வேறாகவும் இருந்து அந்தந்த உயிர்களின் தன்மையை மாற்றாமல் இருப்பது போன்று உள்ளது. ஒன்பது என்ற எண் கொண்டு எந்த எண்ணினை பெருக்கினாலும் வரும் எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பதாக இருப்பது போன்று, பெருமான், எந்த பொருளுடன் கலந்தாலும் தான் எந்த மாற்றமும் அடையாமல் இருக்கின்றான்.

9 + 1 = 10 கூட்டுத்தொகை 1

9 + 2 = 11 2

9 + 3 = 12 3

9 + 4 = 13 4

9 + 5 = 14 5

9 + 6 = 15 6

9 + 7 = 16 7

9 + 8 = 17 8

9+ 9 = 18 9

9 + 10 = 19 1

9 + 11 = 20 2

9 +12 =21 3

பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் கழுத்தினைச் சிறப்பித்து உணர்த்திய ஞானசம்பந்தர் இந்த பாடலில் பெருமானின் காதினைச் சிறப்பித்து கூறுகின்றார். அடியார்களின் வேண்டுதலைக் கேட்டு அருள் புரியும் பெருமான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமான் அருவமாக இருந்து செயல்படுபவன்; அவன் முற்றும் உணர்ந்தவன்; எந்த கருவி கரணங்களில் உதவியும் இன்றி அவன் அனைத்தையும் கேட்கும், காணும், பேசும் வல்லமை பெற்றவன்; எனினும் அவனை நம்மில் ஒருவனாக நினைத்து, அவனுக்கு ஒரு உருவம் அளித்து கருவி கரணங்கள் உடையவனாக நாம் கருதுகின்றோம். தனது அடியார்களின் பிரார்த்தனைகளை கேட்டு, அவர்களது விருப்பங்களை அறிந்து கொண்டு செயல்படும் இறைவன் என்று குறிப்பிடும் பொருட்டு, தோடுடைய செவியன் என்று தனது பதிகத்தை தொடங்கினாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. நினைந்தாய நான்மறை என்ற தொடருக்கு நினைந்து ஆராயத்தக்க கருத்துகள் கொண்ட நான்மறை என்ற விளக்கமும் அளிக்கப்படுகின்றது. மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துகளும் வேதங்களில் சொல்லப்படுவதால், இந்த விளக்கமும் பொருத்தமே.

பொழிப்புரை:

புண்ணியமே உருவாக உள்ள சிவபெருமான், உயிர்கள் வாழ்க்கை நெறியினை சரியாக அறிந்து கொண்டு வாழவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டு, வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கும் நான்கு வேதங்களையும் ஓதி உலகினுக்கு அருளினார். அனைத்து உயிர்களுடனும் இணைந்து அவற்றை இயக்கும் பெருமான், தான் இணைந்துள்ள உயிர்களிலிருந்து வேறாகவும் இருந்து செயல்படுகின்றார். தனது ஒரு காதினில் குழை ஆபரணத்தையும் மற்றொரு காதில் தோட்டினையும் அணிந்து கொண்டு, மாதொருபாகனின் தோற்றத்தை உணர்த்தும் பெருமான் அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக உள்ள பெருமான், கருவூர் ஆனிலை தலத்தினில் உறைகின்றார். அவர் அடியார்களுக்கு அன்பராக விளங்குகின்றார்.

பாடல் 3:

விண்ணுலாம் மதி சூடி வேதமே

பண்ணுளார் பரமாய பண்பினர்

கண்ணுளார் கருவூருள் ஆனிலை

அண்ணலார் அடியார்க்கு நல்லரே

விளக்கம்:

நல்லார் என்ற திருநாமம் நல்லர் என்று திரிந்ததாக சொல்வார்கள். நல்லார் என்பதும் அடியார்க்கு நல்லார் என்பதும் பெருமானின் திருநாமங்கள். தனது அடியார்களுக்கு பலவிதமாக நன்மை புரிகின்றவர் என்பதால் நல்லார் என்று பெருமானை ஞானசம்பந்தர் அழைக்கும் பாடல் (3.49.5) நமது நினைவுக்கு வருகின்றது. கொலையைத் தொழிலாக கொண்டவராக இருந்தாலும். நற்குணங்கள் மற்றும் நல்ல ஒழுக்கங்கள் ஏதும் இல்லாதவராக இருந்தாலும், அவர்கள் நமச்சிவாய மந்திரத்தை உரைத்தால், அவர்களது தீங்குகளை நீக்கும் தன்மை, அனைவர்க்கும் நன்மையை புரியும் சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய மந்திரத்திற்கு உள்ளது என்று சம்பந்தர் கூறும் பாடல் (3.49.5) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மந்திரத்திற்கு உரியவராகிய பெருமானை நல்லார் என்று ஞானசம்பந்தர் அழைக்கின்றார்.

கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்

இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்

எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்

நல்லார் நாமம் நமச்சிவாயவே

அப்பர் பெருமான் நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தினை (5.52) நல்லர் என்று பெருமானைக் குறிப்பிட்டு தொடங்குகின்றார். விடம் கொண்டுள்ள தன்மையால் அனைவரையும் அச்சுறுத்தும் பாம்பு நல்ல குணமுடைய நாகம் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. இறைவனின் சன்னதியில் நல்லன அல்லாத பொருட்களுக்கு இடம் ஏது. கொலை வெறியுடன் தாக்க வந்த மான்கன்று, தனது கொலை வெறியை விடுத்து, துள்ளி விளையாடும் மான்குட்டியாக பெருமானின் கைகளில் திகழ்வது போல் பாம்பும் தனது கொடிய குணத்தை விட்டுவிட்டு நல்ல குணமுடைய பாம்பாக அடங்கி விடுகின்றது. சந்திரனிடம் தான் கொண்டுள்ள பகையையும் மறந்து, சந்திரனுடன் பெருமானின் சடையில் தாங்கும் பாம்பு பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது. நல்லான் ஆகிய பெருமானுடன் இணைந்த பாம்பு, தனது கொடிய குணத்தினை விட்டு விட்டு நல்ல குணத்துடன் திகழ்கின்றது.

நல்லர் நல்லதோர் நாகம் கொண்டு ஆட்டுவர்

வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்

பல் இல் ஓடு கை ஏந்திப் பலிதிரி

செல்வர் போல் திரு நாகேச்சரவரே

சீர்காழி மீது அருளிய ஒரு பதிகத்தை (2.11) நல்லான் என்று இறைவனை அழைத்துத் சம்பந்தர் தொடங்குகின்றார். நன்மையே வடிவான இறைவன் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வேதங்களிலும் அதன் ஆறு அங்கங்களிலும் வல்லவனாக உள்ள பெருமான், வேதங்களில் காணப்படும் துதிகளின் வடிவமாகவும் உள்ளார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

நல்லானை நான்மறையோடு இயல் ஆறங்கம்

வல்லானை வல்லவர் பால் மலிந்து ஓங்கிய

சொல்லானைத் தொல் மதில் காழியே கோயிலாம்

இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே

நல்லவனாக உள்ள பெருமான், நான்மறைகள் மற்றும் அதன் அங்கங்களிலும் வல்லவனாக இருக்கும் நிலையினை அப்பர் பிரான் கச்சி ஏகம்பத்து பதிகத்தின் ஒரு பாடலிலும் (4.07.07) குறிப்பிடுகின்றார். சிவன் என்ற சொல்லுக்கு மங்களம் என்று பொருள். நன்மை பயக்கும் இறைவனை மங்களம் என்ற பொருள்பட சிவன் என்று மிகவும் பொருத்தமாக வேதங்கள் அழைக்கின்றன. நல்லான=மேன்மை உடைய: துகள்=களங்கம்; வேதங்களில் வல்லவர்களாக விளங்கி இறைவனின் தன்மையை உள்ளவாறு உணர்ந்து கொள்ளும் அடியார்களின் மனதினில் இறைவன் உறைகின்றான் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

நல்லானை நல்லான நான்மறையோடு ஆறங்கம்

வல்லானை வல்லார் கண் மனத்து உறையும் மைந்தனைச்

சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகள் ஏதும்

இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தேனே

உலகத்தவர்க்கு நன்மை பயப்பவனாக விளங்கும் பெருமான், உலகமாகவும், குணக் குன்றாகவும் விளங்கும் தன்மை தொழற்பாலதே குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (4.94.7) அப்பர் பெருமானால் உணர்த்தப் படுகின்றது.

ஞாலத்தானை நல்லானை வல்லோர் தொழும்

கோலத்தானைக் குணப்பெரும் குன்றினை

மூலத்தானை முதல்வனை மூவிலச்

சூலத்தானைக் கண்டீர் தொழற்பாலதே

நம்பி என்றால் ஆண்களில் சிறந்தவன் என்று பொருள். நல்லவனாகத் திகழும் பெருமானை நம்பி என்று அப்பர் பிரான் அழைப்பதை நாம் நள்ளாறு தலத்தின் மீது அருளப்பட்ட திருத்தாண்டகப் பதிகத்தின் ஒரு பாடலில் (6.20.8) காணலாம்.

சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதியானைத் தொல் அவுணர் புரம்

மூன்று எரியச் செற்ற

வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை

வேதம் நான்கும்

கல்லாலின் நிழற்கீழ் அறம் கண்டானைக் காளத்தியானைக்

கயிலை மேய

நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்

பெற்று உய்ந்தவாறே

நல்லான் என்று இறைவனை குறிப்பிடும் நாரையூர் தலத்தின் ஒரு பதிகத்தின் பாடலில் (6.74.1), பெருமான் பலருக்கும் அருள் செய்த கருணைச் செயல்கள் குறிப்பிடப்படுகின்றன. திருமாலுக்கு ஆழி அருள் செய்தது, அடியார்கட்கு எளியானாக இருப்பது, முப்புரங்களை எரித்து அனைவரையும் காப்பாற்றியது, அர்ஜுனனுக்கு பாசுபதம் அளித்தது ஆகிய செயல்கள் இந்த பாடலில் குறிக்கப்படுகின்றன.

சொல்லானைப் பொருளானைச் சுருதியானைச் சுடராழி நெடு

மாலுக்கு அருள் செய்தானை

அல்லானைப் பகலானை அரியான் தன்னை அடியார்கட்கு

எளியானை அரண் மூன்று எய்த

வில்லானைச் சரம் விசையற்கு அருள் செய்தானை

வெங்கதிரோன் மாமுனிவன் விரும்பி ஏத்தும்

நல்லானைத் தீயாடு நம்பன் தன்னை நாரையூர் நன்னகரில்

கண்டேன் நானே

கண்ணுளார் என்ற தொடரில் உள்ள கண் என்பது அடியார்களின் கண்களைக் குறிக்கும். முந்திய இரண்டு பாடல்களில் கழுத்து காது, என்று பெருமானின் அங்கங்களை குறிப்பிட்ட ஞானசம்பந்தர் கண் என்று அடியார்களின் கண்களை குறிப்பிடுகின்றார். பெருமானின் உருவம் அடியார்களின் கண்களில் நிறைந்து நிற்பதாக இங்கே ஞானசம்பந்தர் கூறுவது, அப்பர் பெருமானின் காளத்தித் திருத்தாண்டகத்தை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் அப்பர் பிரான் காளத்திப் பெருமானை என் கண்ணுளானே என்று அழைக்கின்றார். பெருமான் மீது தீராத காதல் கொண்ட அப்பர் பெருமான், தனது மனமும் கண்ணும் களிக்கும் வண்ணம் பரவசமடைந்து காளத்தி நாதனை என் கண்ணுளான் என்று முடியும் வண்ணம் திருத்தாண்டகம் இயற்றினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சிக்

கம்பன் காண் பிச்சை அல்லால்

மற்று ஊண் ஒன்று இல்லாத மாச்சதுரன் காண் மயானத்து

மைந்தன் காண் மாசு ஒன்றில்லா

பொற்றூண் காண் மாமணி நற்குன்று ஒப்பான் காண் பொய்யாது

பொழில் ஏழும் தாங்கி நின்ற

கற்றூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன்

என் கண்ணுளானே

நல்கூர்ந்தான்=வறுமை உடையவன்: உணவு ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவை. எனவே தான் உணவுக்காக நம்மிடம் உள்ள எந்த பொருளையும் விற்பதற்கு தயாராக எவரும் இருப்பதை நாம் உலகினில் காண்கின்றோம். இறைவன் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை; மேலும் உலகனைத்தும் தன்னுடையதாக கொண்டுள்ள இறைவனிடம் இல்லாத செல்வம் வேறு எவரிடத்தில் உள்ளது. இருந்தாலும் இறைவனையும் நம்முள் ஒருவனாக கருதி, அருளாளர்கள் தமது கருத்தினை இறைவன் பால் ஏற்றிச் சொல்வது பழக்கம். பிச்சைப் பெருமானாக சென்ற இறைவன், தனது உணவுத் தேவைக்காக பலியேற்கவில்லை; எனினும் அவன் உணவுக்காக பிச்சை ஏற்றதாக கற்பனை செய்து பல அருளாளர்களும் பாடியுள்ளனர். பெருமான் அணிந்திருந்தது நாகம், பன்றிக் கொம்பு. எலும்பு மாலை முதலியன. இவற்றை விற்றால் வாங்குவார் யார். எனவே தான், தனது உணவுக்காக விற்கக்கூடிய நிலையில் தன்னிடம் பொருள் ஏதும் இல்லாத வறியவன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சதுரன்=வல்லமை உடையவன், சாமர்த்தியம் உடையவன். சதுரன் என்று இறைவனை குறிப்பிடுவதன் மூலம், இறைவன் உண்மையில் வறியவன் அல்லன், வறியவனாக நடித்தவன் என்று அப்பர் பிரான் உணர்த்துவதையும் நாம் காணலாம். பொழில்=சோலைகள் சூழ்ந்த ஏழு உலகங்கள்; பொய்யாது=இடைவிடாது; மாசு ஒன்றில்லா=அழியும் தன்மையாகிய குற்றம் இல்லாத; தாங்குதல்=உலகம் இயங்குமாறு தாங்குதல்;

விற்று அப்பணத்தால் உணவு வாங்க உதவும் பொருள் ஏதும் தன்னிடம் இல்லாத வறியவன் போன்று காட்சி அளிப்பவனும், அகன்ற கச்சி மாநகரத்தில் ஏகம்பனாக உறைபவனும், பிச்சை எடுத்து உண்பதைத் தவிர வேறு வழி இல்லாதது போன்று காட்சி அளிக்கும் திறமைசாலியும், மயானத்தில் காணப்படுபவனும், பிற உயிர்களைப் போன்று அழியும் தன்மையாகிய குற்றம் ஏதும் இல்லாமல் என்றும் நிலையாக இருப்பவனும், பொன்னால் செய்யப்பட்ட தூண் போன்று அரியவனும், தூண் போன்று அனைவரும் பிடிப்பாக பற்றிக் கொள்ள உதவுபவனும், பெரிய .மணிக்குன்று போன்று காட்சி அளிப்பவனும், இடைவிடாது சோலைகள் சூழ்ந்த ஏழு உலகங்களையும் தாங்கி நிற்கும் கற்றூணாகத் திகழ்பவனும், திருக்காளத்தி தலத்தில் காணப்படும் கணநாதனும் ஆகிய இறைவன் எனது மனக் கண்களில் நிறைந்துள்ளான். என்று அப்பர் பிரான் கூறும் வண்ணம் அமைந்துள்ள பாடல்.

பரம்=மேலானது, வேதங்கள் அனைத்து நூல்களுக்கும் முதன்மையானது. பரம் என்பது பெருமானை குறிக்கும் அடைமொழியாகக் கொள்வதும் பொருத்தமே. அண்ணலார்=தலைவர்; கண்ணுளார் என்ற சொல் கூத்தபிரானை குறிப்பதாக சில விளக்கம் அளிக்கின்றனர். எனினும் அடியார்கள் கண்களில் நிறைந்த கோலத்தை உடைய பெருமான் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. பண்ணுளார் என்ற சொல்லினை வேதத்துடன் என்ற சொல்லுடன் கூட்டி, வேதங்கள் சொல்வதற்கு உரிய பண்ணாக இருப்பவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமான் தானே முதன்முதலில் வேத மந்திரங்களை பண்ணுடன் பொருத்தி பாடி, நான்கு வேறுவேறு முனிவர்களுக்கு உபதேசம் செய்தார். எனவே பண்களாகவும் அவரே இருக்கின்றார் என்று கூறுவது பொருத்தம் தானே. .

பொழிப்புரை:

வானில் உலவும் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் சூடிக் கொண்டுள்ள பெருமான், வேதங்களை பண்ணுடன் பொருத்திப் பாடும் வல்லமை வாய்ந்தவர்; மேலான பல குணங்களை உடைய பெருமான் அடியார்களின் கண்களை விட்டு அகல்வதில்லை; அவர் தாம் கருவூர் ஆனிலை தலத்தினில் பொருந்தி உறைகின்றார். அவர் தன்னைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள அடியார்கள் அனைவர்க்கும், நன்மைகள் பல செய்வதால், அவர்கள் அனைவராலும் நல்லவராக கருதப் படுகின்றார்.

பாடல் 4:

முடியர் மும்மத யானை ஈருரி

பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்

கடியுளார் கருவூருள் ஆனிலை

அடிகள் யாவையும் ஆய ஈசரே

விளக்கம்:

கடி=காலம்; காலத்தைக் கட்டுபடுத்தும் தன்மை உடையவர் பெருமான் ஒருவரே, காலத்தைக் கடந்தவர் அவர் ஒருவர் தானே. கடி என்ற சொல்லுக்கு ஒளி என்று பொருள் கொண்டு, ஞானமாகிய ஒளியை உடையவர் பெருமான் என்று விளக்கம் கூறுவதும் பொருத்தமே. வேள்= மன்மதன்; ஈர்த்தல்=உரித்தல்; செற்றவர்=அழித்தவர்; ஈருரி என்ற தொடருக்கு இரத்தப்பசை படிந்த தோல் என்றும் பொருள் கொள்ளலாம். முதல் மூன்று பாடல்களில் கழுத்து, காது, கண் என்று பல அங்கங்களை குறிப்பிட்ட ஞானசம்பந்தர் இங்கே சடைமுடியினை குறிப்பிடுகின்றார். சடையன் என்பது பெருமானின் திருநாமங்களில் ஒன்று. தவம் புரியும் முனிவர்கள் பலரும் துறவிகள் பலரும் சடை வளர்த்தாலும் அவர்கள் யாரையும் சடையன் என்று அழைப்பதில்லை. முனிவர்களுக்கெல்லாம் முன்னோடியாக தவம் செய்த பெருமானையே சடையன் என்று அழைக்கின்றனர். மேலும் பெருமானின் சடை மிகுந்த சிறப்புகள் வாய்ந்தது அல்லவா. மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியினைத் தாங்கிய சடை, பாம்பும் சந்திரனும் நீரும் தங்களின் இடையே உள்ள பகையினை மறந்து ஒரே இடத்தில் அமைதியாக இருக்கும் சடை, அழிந்து கொண்டிருந்த நிலையில் ஒற்றைப் பிறையுடன் அபயம் வேண்டிய சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்த சடை என்பது போன்று பல சிறப்புகள் வாய்ந்த சடை மிகவும் ஒப்பற்ற சடை அல்லவா.

திருமருகல் தலத்தினில், பாம்பு தீண்டி தனது காதலனை இழந்த போது, அந்த பெண், இறைவனை சடையானே என்று அழைத்து சந்திரனுக்கு அபயம் அளித்த சடையை உடையவனே, எனது நிலை கண்டு இரக்கம் கொள்வாய் என்று பெருமானை அழைக்கின்றாள். ஞானசம்பந்தரும் அந்த சடையின் சிறப்பு கருதி, சடையாய் எனுமால் என்று பதிகத்தினைத் (2.18) தொடங்குகின்றார். சடையாய் என்றும் விடையாய் என்றும் உன்னை அழைத்து உன்னிடம் சரண் அடைந்துள்ள பெண், தனது காதலனை இழந்து நடுங்குகின்றாள்; துயரத்தால் வாடும் அவளது மனநிலையை புரிந்து கொள்ளாமால், அவளுக்கு அருள் புரியாது இருப்பது பெருமானே உனக்கு அழகல்ல என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் இறைவனிடம் எடுத்துரைக்கின்றார். ஞானசம்பந்தர் வேண்டிய பின்னர், இறைவனால் வாளா இருக்க முடியாது அல்லவா. இந்த பதிகம் பாடி முடிக்கப்பட்ட பின்னர். பாம்பின் விடம் நீங்கப் பெற்று பெண்ணின் காதலன் உயிர் பெற்று எழுந்த அதிசயம் நிகழ்ந்தது.

சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்

விடையாய் எனுமால் வெருவா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே

பொழிப்புரை:

ஒப்பற்ற சடைமுடியினை உடைய பெருமான், தனது உடலின் மூன்று இடங்களில் (கன்னம் கோசம் துதிக்கை) மதநீர் பொழிந்த வண்ணம் தன்னை எதிர்த்து வந்த மதயானையை அடக்கி, அதன் தோலை உரித்துத் தனது திருமேனி மேல் போர்த்துக் கொண்டவராவார். அவர் தனது திருமேனி முழுதும் திருநீற்றினைப் பூசியவராவார். தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதனின் உடல் சாம்பல் பொடியாக மாறும் வண்ணம், தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை அழித்து மன்மதனை வென்றவர் சிவபெருமான்; ஞானஒளி வீசும் திருமேனியை உடைய பெருமான் கருவூர் ஆனிலை தலத்தினில் உறைகின்றார். அவரே உலகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களுமாக இருந்து கொண்டு உலகத்தின் தலைவராக விளங்குகின்றார். .

பாடல் 5:

பங்கயம் மலர்ப் பாதர் பாதியோர்

மங்கையர் மணி நீலகண்டர் வான்

கங்கையர் கருவூருள் ஆனிலை

அங்கை ஆடரவத்து எம் அண்ணலே

விளக்கம்:

பங்கயம்=தாமரை மலர்; இந்த பாடலில் பெருமானின் திருப்பாதங்களின் தன்மை குறிப்பிடப் படுகின்றது. அழியும் நிலையில் இருந்த சந்திரனைத் தனது சடையினில் வைத்துக் கொண்டு அபயம் அளித்த பெருமான், நமக்கு அருள் புரியவேண்டும் என்றால் நாம் பற்றிக் கொள்ள வேண்டியது அவனது திருப்பாதங்களைத் தானே. எனவே தான் பெருமானின் சடையினை நான்காவது பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், ஐந்தாவது பாடலில் பெருமானின் திருவடிகளை குறிப்பிடுகின்றார் போலும். அங்கை=அழகிய கை, அம்+கை; அம்=அழகிய

பொழிப்புரை:

தாமரை மலர் போன்று சிவந்தும் மென்மையாகவும் உள்ள திருவடிகளை கொண்டுள்ள பெருமான், தனது உடலில் ஒரு பாதியில் பார்வதி தேவியை ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் நீலமணி பதித்தது போன்று தனது கழுத்தினில். ஆலகால விடம் தேக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள கறையினை உடையவர் ஆவார். வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்றுள்ள பெருமான், தனது அழகிய கையினில் படமெடுத்து ஆடும் பாம்பினையும் ஏந்தியுள்ளார். கருவூர் ஆனிலை தலத்தினில் உறையும் அவர் எமது தலைவராவார்.

பாடல் 6:

தேவர் திங்களும் பாம்பும் சென்னியின்

மேவர் மும்மதில் எய்த வில்லியர்

காவலர் கருவூருள் ஆனிலை

மூவராகிய மொய்ம்பர் அல்லரே

விளக்கம்:

தேவர்=தலைவர்; மொய்ம்பு=வலிமை; மொய்ம்பர்=வலிமை உடையவர்; இந்த பாடலில் பெருமானின் நெற்றியின் சிறப்பு உணர்த்தப் படுகின்றது. மேவர்=விரும்பி பொருந்துதல்; பிறரை வருத்துவதில் இன்பம் அடைந்த முப்புரத்து அரக்கர்கள், பறக்கும் கோட்டைகளில் அமர்ந்த வண்ணம் பல இடங்களுக்கும் சென்று கீழே இறங்கி, அந்த கோட்டைகளின் அடியில் சிக்கிய அனைத்து உயிர்களையும் கொன்று வந்தனர். இந்த தன்மையே இங்கே மும்மதில் மேவர் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. மும்மூர்த்திகளாக பெருமான் செயல்படும் தன்மை, பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை என்ற திருவெழுகூற்றிருக்கை பதிகத்தின் வரி (1.128) நமது நினைவுக்கு வருகின்றது. மூன்று தொழில்களையும் புரிபவன் பெருமான் தான் என்பது மிகவும் விளக்கமாக சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.21) முதல் மூன்று பாடல்களில் ஞானசம்பந்தரால் உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடலில், சிவபெருமானின் உதவியால் பிரமனால் எவ்வாறு படைப்புத் தொழில் செய்யப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. புவம்=வானம்: வளி=காற்று; புனல்=தண்ணீர்; கனல்=தீ; கலை=அறுபத்து நான்கு கலைகள்; திரிகுணம்=சாத்துவீகம், ராஜசம் மற்றும் தாமசம் ஆகிய மூன்று குணங்கள்; அமர் நெறி=விரும்பத்தக்க வழிமுறைகள்; திவம்=தேவலோகம்; மருவி=கூடி பொருந்தி, தாவரங்கள் முதலாக தேவர்கள் வரை ஏழு வகையான உடல்களில் அந்தந்த உயிரின் வினைத் தொகுதிக்கு ஏற்ப உயிர்கள் பொருத்தப் படுகின்றன. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனது மனதினில் சிவபெருமான் பொருந்தி இருப்பதால், பிரமனால் படைப்புத் தொழிலை ஒழுங்காக செய்ய முடிகின்றது. பிரமன் தனது தொழிலை ஒழுங்காக செய்ய வேண்டும் என்ற கருத்தினை மனதில் கொண்டு, இறைவனை வணங்கி செயல்படுவதால், சிவபெருமான் பிரமனது மனதினில் அமர்ந்து அருள் புரிகின்றார் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

புவம் வளி கனல் புனல் புவிகலை உரை மறை திரிகுணம் அமர்நெறி

திவமலி தரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம

பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய

சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலை பெறுவரே

பதிகத்தின் இரண்டாவது பாடலில் திருமால் காத்தல் தொழிலைப் புரியும் நிலை விளக்கப் படுகின்றது. மனிதர்கள், தேவர்கள் உட்பட அனைத்து உயிர்களும் உலகில் நிலை பெற்று வாழும் பொருட்டு அவர்களை காத்தருள வேண்டும் என்ற எண்ணத்தில் பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள திருமாலின் மனதினில் நிலை பெற்று இருக்கும் சிவபெருமான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். மேற்கண்ட பாடலில் பிரமன் தனது தொழிலினைச் சரிவரச் செய்வதற்காக சிவபெருமானை வேண்டுவது போன்று, திருமாலும் தனது தொழிலினை சரிவரச் செய்யும் வண்ணம் பெருமானை வேண்டுகின்றார் என்று உணர்த்தப் படுகின்றது. திருமால் புரியும் யோக நித்திரை அறிதுயில் என்று சொல்லப் படுகின்றது தூங்குவது போன்று காட்சி அளித்தாலும் உலகில் நடப்பது அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர் திருமால் என்பதால் அவர் கொண்டுள்ள நித்திரை யோக நித்திரை என்று அழைக்கப்படுகின்றது.

மலை பல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்

நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும்

அலைகடல் நடு அறிதுயில் அமர் அரி உரு இயல் பரன் உறை பதி

சிலை மலி மதிள் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே

பதிகத்தின் மூன்றாவது பாடலில் அழித்தல் தொழில் நடைபெறும் முறை விளக்கப் படுகின்றது. கடலால் சூழப் பட்ட உலகங்களில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கும் வண்ணம், அழிக்கும் தொழிலினைச் செய்யும் உருத்திரனின் உருவில் எழுந்தருளும் சிவபிரான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார்.

பழுதில கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி

குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலமலி தரும் உயிரவை அவை

முழுவதும் அழிவகை நினைவொடு முதல் உருவியல் பரன் உறை பதி

செழுமணி அணி சிவபுரநகர் தொழும் அவர் புகழ் மிகு மூவுலகிலே

மேற்கண்ட மூன்று பாடல்களிலும் உள்ள கருத்தினை, சிவபெருமான் மூவராகவும், அவர்களின் தலைவராகவும் உள்ள நிலை, சம்பந்தரால் முதுகுன்றம் பதிகத்தின் (1.53) முதல் பாடலில் கூறப்படுகின்றது. மறை சேர் நாவர்=வேதங்களை ஓதும் நாவினை உடைய அந்தணர்கள்: எரி=தீ; கால்=காற்று; விரை மலரோன்=நறுமணம் உடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன்;

தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறை சேர்

நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்

மேவராய விரை மலரோன் செங்கண் மால் ஈசன் எனும்

மூவராய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே

புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் (6.54) ஒன்பதாவது பாடலில் நாரணனாகவும், பிரமனாகவும் பெருமான் விளங்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. பண்ணியான்=ஆக்கியவன்; படிறன்=வஞ்சகன், மறைப்பது வஞ்சகர் செய்யும் தொழில் என்பதால் கங்கையைச் சடையில் மறைத்த இறைவனை படிறன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நண்ணியவன்=நெருங்கி நின்று துணையாக இருந்தவன். நளிர்=குளிர்ச்சி

பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப் படர்சடை

மேல் புனல் கரந்த படிறன் தன்னை

நண்ணியனை என்னாக்கித் தன்னானானை நான்மறையின்

நற்பொருளை நளிர் வெண்திங்கள்

கண்ணியனைக் கடியநடை விடை ஒன்று ஏறும் காரணனை

நாரணனைக் கமலத்து ஓங்கும்

புண்ணியனைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற

நாள் போக்கினேனே

கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.80.9) சுந்தரர், இறைவனை மூவராகவும் இருவராகவும் ஒருவனாகவும் இருப்பவன் என்று கூறுகின்றார். தங்களது பாவத்தையும் வினைகளையும் அறுத்துக் கொள்ள விரும்பும் அடியார்கள், மாதோட்ட நகரில் அமைந்துள்ள கேத்தீச்சரத்து இறைவனை தொடர்ந்து வழிபடுகின்றனர் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மூவரென இருவரென முக்கண் உடை மூர்த்தி

மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்னகரில்

பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல்

தேவன் எனை ஆள்வான் திருகேதீச்சரத்தானே

பொதுவாக மும்மூர்த்திகள் என்றால் மூவரும் சமமான நிலையில் உள்ளவர்கள் என்று பொருள் கொள்ளப் படுகின்றது. ஆனால் மும்மூர்த்திகளுக்கு பெருமை கிடைப்பதன் காரணமே, பெருமான் அவர்களுடன் இணைந்து இருந்து அவர்கள் தங்கள் தொழிலினைச் செய்யும் வண்ணம் இயக்குவதே ஆகும். எனவே பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரிடமிருந்து பெருமான் வேறுபட்டவர் என்பதை உணர்த்தும் பொருட்டும், பெருமான் தான் அவர்கள் இருவரையும் இயக்குகின்றான் என்பதையும் உணர்த்தும் பொருட்டும் இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை என்று திருவெழுகூற்றிருக்கை பதிகத்தில் (1.128) திருஞானசம்பந்தர் கூறுகின்றார் இவ்வாறு மும்மூர்த்திகளிலும் தனியாக விளங்குபவன் பெருமான் என்று சம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு திருவாசகப் பாடல் (திருச்சதகம்) ஒன்றினை நினைவூட்டுகின்றது. தகர்=ஆடு; அவிதா=அச்சக் குறிப்பு சொல்; நம்மவர்=நம்மைப் போன்று அழியும் நிலையில் உள்ள பிரமனும் திருமாலும்;

சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி

ஆவ எந்தாய் என்று அவிதா விடும் நம்மவர் அவரே

மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண் மேல்

தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே

தக்கனுக்கு அஞ்சி அவன் செய்த வேள்வியில் பங்கு கொண்டு அவிர்ப்பாகம் எடுத்துக் கொண்டவர்களும் பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சின் தாக்கத்தினை தாங்க முடியாமல், எந்தை பெருமானே காப்பாற்று என்று அலறியவர்களும் எவ்வாறு பெருமானுக்கு சமமாக மூவர்களில் ஒருவன் என்று தங்களை எண்ணிக்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் இருவரும், மண்ணுலகில் பலரும் தங்களை வழிபடுதலை நினைத்து மூவரில் தாங்களும் ஒருவர் என்றே இறுமாப்புடன் இருப்பது எத்தனை பெரிய பாவம் என்பதை அறியாமல் இருக்கின்றார்களே என்று அவர்கள் இருவரது நிலையை நினைத்து அடிகளார் இரக்கம் கொள்கின்றார். மூவரில் ஒருவனாகிய உருத்திரன், குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்யும் பொருட்டு இயங்கும் இறைவனின் ஒரு அம்சமாகும். எனவே உருத்திரனை சிவன் என்று கொள்வதும் தவறு என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. சாவ முன்னாள் தக்கன் என்று குறிப்பிட்டு, வீரபத்திரனின் வலிமையின் முன்னே தக்கன் செயலற்று நின்ற தன்மையை குறிப்பிட்டு, அத்தகைய தக்கனுக்கு அஞ்சி வேள்வியில் பங்கேற்ற இருவர் என்று இழிவாக கூறுவதையும் நாம் உணரலாம்.

பொழிப்புரை:

அனைத்து உயிரினங்களுக்கும் தலைவராக விளங்கும் பெருமான் தனது நெற்றியில் பாம்பினையும் பிறைச் சந்திரனையும் உடையவர் ஆவார்; தங்களின் விருப்பப்படியே பல இடங்களுக்கும் பறக்கும் கோட்டைகளில் பறந்து சென்று, மக்களை அழித்து வந்த முப்புரத்து அரக்கர்களையும் அவர்கள் திரிந்து வந்த பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினைக் கொண்டு அழிப்பதற்கு உதவிய வில்லினை உடையவர் சிவபெருமான் ஆவார். அனைத்து உயிர்களுக்கும் காவலராக இருந்து வரும் பெருமான், கருவூர் ஆனிலை தலத்தினில் உறைகின்றார். அவர் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களைச் செய்யும் வல்லவராகவும் உள்ளார்.

பாடல் 7:

பண்ணினார் படி ஏற்றர் நீற்றர் மெய்ப்

பெண்ணினார் பிறை தாங்கு நெற்றியர்

கண்ணினார் கருவூருள் ஆனிலை

நண்ணினார் நமை ஆளும் நாதரே

விளக்கம்:

கழுத்தினில் தொடங்கி பாதம் வரை பல அங்கங்களை முந்திய பாடல்களில் குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில், பெருமானின் உடலை முழுவதுமாக குறிப்பிட்டு, மாதொருபாகனாக அவர் விளங்கும் தன்மையை உணர்த்துகின்றார். படி=நிலையான தன்மை; ஏறு=இடபம்; தனக்கு என்றும் அழியாத தன்மை வேண்டும் என்ற விருப்பம் கொண்டு பெருமானை வேண்டிய தருமதேவதையை பெருமான் இடபமாக மாற்றித் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார் என்பது திருவிடைமருதூர் தல வரலாறு. இந்த தகவலை விடையேறி என்று குறிப்பிடுவதன் மூலம் தனது முதல் பதிகத்தின் முதல் பாடலில் ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். படி ஏற்றர் என்ற தொடருக்கு படிந்து ஏறி அமர்வதற்கு வசதியாக உள்ள இடபம் என்று தருமை ஆதீனக் குறிப்பு விளக்கம் அளிக்கின்றது. கண்ணியர் என்ற சொல்லினை நெற்றி என்ற சொல்லுடன் இணைத்து, நெற்றிக் கண்ணை உடையவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

பாடல்கள் இசைத்துப் பாடும் பண்களாக இருப்பவரும், நிலையான தன்மை பெற்ற இடபத்தினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவரும், தனது திருமேனி முழுவதும் திருநீற்றினைப் பூசிக் கொண்டுள்ளவரும், தனது உடலின் ஒரு பாதியில் பார்வதி தேவியை ஏற்றுக் கொண்டுள்ளவரும், பிறைச் சந்திரனைத் தாங்கும் சந்திரனை உடையவரும், உலகத்து உயிர்கள் அனைத்தும் தங்களது கண்ணாக கருதும் பெருமையினை உடையவரும் ஆகிய சிவபெருமான், கருவூர் தலத்தில் உள்ள ஆனிலை என்று அழைக்கப்படும் திருக்கோயிலைத் தனது இருப்பிடமாக விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளார். அவரே நம்மை ஆளும் தலைவராவார்.

பாடல் 8:

கடுத்த வாளரக்கன் கயிலையை

எடுத்தவன் தலை தோளும் தாளினால்

அடர்த்தவன் கருவூருள் ஆனிலை

கொடுத்தவன் அருள் கூத்தன் அல்லனே

விளக்கம்:

கடுத்த=கோபம் கொண்ட; தான் செல்லும் வழியில் குறுக்கே நின்றது என்று கயிலை மலையின் மீது கோபம் கொண்ட அரக்கன் இராவணன். அடர்த்தல்=நெரித்தல்; தாள் என்பது பொதுவாக பாதத்தை குறிக்கும். ஆனால் இங்கே பெருமானின் கால் பெருவிரலை குறிப்பிடுகின்றது. பெருமான் உயிர்களுக்கு தண்டனை அழிப்பது, அவர்கள் தாங்கள் செய்த தவறினை உணர்ந்து மன்னிப்பு கோரவேண்டும் என்ற நோக்கத்துடன் தான். எனவே தான் நிக்ரஹம் செய்யும் பெருமான் அனுக்ரஹமும் செய்வான் என்று கூறப்படுகின்றது. அரக்கன் இராவணன் தான் செய்த தவறினை உணர்ந்து பெருமானிடம் இறைஞ்சி சாமகானம் பாடியதைக் கேட்ட பெருமான் கருணை புரிந்த செயலும் இங்கே குறிப்பிடப்படுகின்றது. அருள் புரிந்த கூத்தன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். கூத்து எப்போதும் அதனை, காண்போர்க்கு இன்பம் தரும். தனது கூத்தின் மூலம் உயிர்களுக்கு இன்பம் அளிக்கும் பெருமான், தனது அருள் செயல்கள் மூலம் தனது அடியார்களுக்கு இன்பம் அளிக்கின்றான் என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

தான் செல்லும் வழியில் குறுக்கிட்டுத் தனது பயணத்தைத் தடுத்த கயிலை மலை என்று, அந்த மலையின் மீது கோபம் கொண்டு அந்த மலையினைப் பேர்த்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு தனது பயணத்தைத் தொடரவேண்டும் என்று முடிவு செய்த அரக்கன், வாளினை உடைய அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்க்க முயற்சி செய்தான்; அந்த அரக்கனது தலைகள், தோள்கள் மற்றும் பாதங்கள் கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நொறுங்குமாறு, தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவன் சிவபெருமான். பின்னர் அரக்கன் தனது தவறினை உணர்ந்து, சாமகானம் இசைத்து வேண்டிய போது, அவனுக்கு அருள் புரிந்தவர் சிவபெருமான். இவரே கருவூர் தலத்தில் உள்ள ஆனிலை என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் கூத்தபிரானாக உறைகின்றார்.

பாடல் 9:

உழுது மாநிலத்து ஏனமாகி மால்

தொழுது மாமலரோனும் காண்கிலார்

கழுதினான் கருவூருள் ஆனிலை

முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே

விளக்கம்:

உழுது=நிலத்தினை தோண்டிக்கொண்டு சென்று; தொழுது என்ற சொல்லினை காண்கிலார் என்ற சொல்லுடன் கூட்டி பொருள் கொள்ளவேண்டும். நிலத்தை அகழ்ந்து கொண்டு சென்ற திருமால் என்று குறிப்பிட்டமையின் அன்னமாய் பறந்து சென்று திருமுடி தேடிய பிரமனின் செயலையும் குறிப்பதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். கழுது=பேய்கள்; மாமலரோன்=சிறந்த மலராகிய தாமரை மலரைத் தனது இருக்கையாகக் கொண்ட பிரமன்;

பொழிப்புரை:

பன்றியின் உருவெடுத்து நிலத்தை அகழ்ந்து கொண்டு சென்ற திருமாலும், அன்னத்தின் உருவம் கொண்டு மேலே பறந்து சென்ற பிரமனும், சிவபெருமானைத் தொழுது அதன் பின்னர் தங்களது முயற்சியில் ஈடுபடாத காரணத்தால், அவர்கள் இருவராலும் பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண முடியவில்லை. சுடுகாட்டினில் பேய்களால் சூழப்பட்டு நடனம் ஆடுபவனும், உலகம் முழுவதுமாக பரந்து இருப்பவனும் ஆகிய பெருமான், கருவூர் ஆனிலையில் உறைகின்றார்.

பாடல் 10:

புத்தர் புன்சமண் ஆதர் பொய்யுரை

பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய்ப்

பத்தர் சேர் கருவூருள் ஆனிலை

அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே

விளக்கம்:

அத்தர்=தந்தை; புன்சமண்=கீழ்மை குணம் கொண்ட சமணர்கள்; ஆதர்=அறிவிலிகள்; பத்தர் என்ற சொல்லுக்கு பத்து அரிய குணங்களை உடையவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். விடம் தீர்த்த திருப்பதிகத்தின் கடைப் பாடலில் (4.18.10) அப்பர் பிரான் அடியார்களின் செய்கை பத்து வகைப்பட்டது என்று கூறுகின்றார். சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர்.. பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும்.

பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்

பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன

பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை

பத்து கொலாம் அடியார் செய்கை தானே

பொழிப்புரை:

புத்தர்களும் கீழ்மைத் தன்மை உடைய சமணர்களும் அறிவற்றவர்களாக பேசும் பொய்யான சொற்களை, பித்தர்கள் பேசுவது போன்ற பொருளற்ற சொற்களை, உலகத்தவரே, நீங்கள் பொருட்படுத்தாமல் விட்டு விடுவீர்களாக; சிறந்த பத்து அக குணங்களும் புற குணங்களும் உடையவர்களாக, கருவூர் ஆனிலை சென்றடைந்து பெருமானை வழிபடும் உண்மையான அடியார்கள் போன்று, நீங்களும், அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக விளங்கும் பெருமானை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக. . ,

பாடல் 11:

கந்தமார் பொழில் காழி ஞானசம்

பந்தன் சேர் கருவூருள் ஆனிலை

எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர்

சிந்தையில் துயர் ஆய தீர்வரே

விளக்கம்:

கந்தம்=நறுமணம்; பொழில்=சோலை; இந்த பதிகத்தினை முறையாக பாடும் அடியார்கள், தங்களது மனக் கவலை தீர்ப் பெறுவார்கள் என்று ஞானசம்பந்தர் கூறுவது, நமக்கு தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்று திருவள்ளுவர் கூறுவதை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் தனது தந்தை என்று ஞானசம்பந்தர் கூறுவது, சேக்கிழார் அருளிய பெரிய புராணத்து பாடல் ஒன்றினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. திருக்கோலக்கா செல்வதற்கு முன்னம், சீர்காழி தலத்தில் வீற்றிருக்கும் தனது தந்தையாகிய சிவபெருமானையும் தாயாகிய பார்வதி தேவியையும் வணங்கிப் பின் சென்றார் என்று இந்த பாடலில் சேக்கிழார் கூறுகின்றார். மேதகை=மேன்மை பொருந்திய; வெளியே=வெளிப்பட்டு; போத முலை=சிவஞானம் கலந்த பாலினைச் சுரந்த முலை; முன் வணங்கி போற்றி=கோலக்கா தலத்திற்கு செல்வதற்கு முன்னர் வணங்கி; திருக்கோலக்கா தலம் சென்றது திருஞான சம்பந்தரின் முதல் தலயாத்திரை. ஒவ்வொரு தலயாத்திரை மேற்கொள்ளும் முன்னரும், பயணத்தினை முடித்துக் கொண்டு திரும்பி வந்த பின்னரும், சீர்காழி தலத்து இறைவனையும் இறைவியையும் வணங்குவது பிள்ளையாரின் பழக்கமாக இருந்து வந்ததை இந்த பாடல் நமக்கு உணர்த்துகின்றது.

காதலுடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்றிருந்த தங்கள்

தாதையாரையும் வெளியே தாங்கரிய மெய்ஞானம் தம் பால் வந்து

போத முலை சுரந்தளித்த புண்ணியத் தாயரையும் முன் வணங்கிப்

போற்றி

மேதகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில்

சென்றார்

இவ்வாறு சீர்காழி தலத்து அண்ணலையும் பிராட்டியையும் திருஞானசம்பந்தர் தந்தையாகவும் தாயாகவும் கருதினார் என்று சேக்கிழார் கூறுவது நமக்கு சம்பந்தர் வலிவலம் தலத்தின் மீது அருளிய தேவாரப் (1.50.7) நினைவூட்டுகின்றது. தனது தந்தை சிவபெருமான் என்று பல பாடல்களில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சிவஞானிகள் பலராலும் ஆராயப்படும் தன்மையினை உடைய பெருமானை அன்புடன் சிந்திக்க தனது மனம் பெருவிருப்பம் கொள்கின்றது என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மேலும் இறைவனை சிந்திக்கவொட்டாமல் ஐந்து பொறிகளும் செய்யும் மாயத்தைக் குறித்து தான் அஞ்சுவதாகவும் இந்த பாடலில் கூறுகின்றார்.

தாயும் நீயே தந்தையும் நீயே சங்கரனே அடியேன்

ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்

ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்

மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே

பொழிப்புரை:

நறுமணம் நிறைந்த சோலைகள் பொருந்திய சீர்காழி நகரத்தினைச் சார்ந்த திருஞானசம்பந்தன், கருவூர் ஆனிலை தலம் சென்றடைந்து தனது தந்தையாக கருதும் சிவபெருமானை குறிப்பிட்டு பாடிய பத்து பாடல்களையும் முறையாக கற்றறிந்து, பொருளை முழுதுமாக உணர்ந்து, அந்த பாடல்களுக்கு உரிய பண்ணுடன் இசைத்து ஓதும் அடியார்கள், தங்களது மனக்கவலை நீங்கி இன்பமாக வாழ்வார்கள்.

முடிவுரை:

இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானின் இயல்பு குறிப்பிடப்படுகின்றது. அடியார்களுக்கு அருள் தரும் அன்பர் என்று முதல் பாடலிலும், அடியார்கள் அன்பு வைத்து வணங்கும் தகுதி படைத்தவர் என்று இரண்டாவது பாடலிலும், அடியார்களுக்கு நல்லன செய்யும் தலைவர் என்று மூன்றாவது பாடலிலும், உலகில் உள்ள பொருட்கள் அனைத்துமாக இருப்பவர் என்று நான்காவது பாடலிலும், பெருமான் அடியார்களுடன் இணைந்துள்ள தன்மையை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். படம் எடுத்து ஆகும் இயல்பினை உடைய பாம்பினைத் தனது கைகளில் ஆபரணமாக அணிந்தவர் என்று ஐந்தாவது பாடலிலும், மூவராகவும் இருந்து உலகத்து உயிர்களை செயல்படுத்துபவர் என்று ஆறாவது பாடலிலும், நம் அனைவரையும் ஆளும் நாதர் என்று ஏழாவது பாடலிலும், உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுமாகத் திகழ்பவர் என்று ஒன்பதாவது பாடலிலும் அவரது ஆற்றல் குறிப்பிடப்படுகின்றது. தனது புகழினைப் பாடும் அடியார்களின் நிலை கண்டு இரக்கம் கொண்டு உதவி செய்பவர் என்று எட்டாவது பாடலில் குறிப்பிடும் ஞானசம்பந்தர், பத்தாவது பாடல் மூலம், அவரது திருப்பாதங்களைத் தொழுது வணங்கி வாழுமாறு அறிவுரை கூறி, நம்மை வழிநடத்துகின்றார். கடைப்பாடலில், இந்த பதிகத்தை ஓதுவதால் நாம் அடையவிருக்கும் பயன் குறிப்பிடப்படுகின்றது. ஞானசம்பந்தரின் இந்த பதிகம் மூலம் பெருமானின் தன்மையையும் ஆற்றலையும், கருணையையும் புரிந்து கொண்ட நாம், கருவூர் ஆனிலை தலம் சென்று பெருமானைத் தொழுது வணங்கி, ஞானசம்பந்தர் பாடிய இந்த பதிகத்தினை முறையாக பாடி, மனக்கவலைகள் ஏதுமின்றி இன்பமுடன் வாழ்வோமாக.



Share



Was this helpful?