பதிக எண்: 2.88 - தென் திருமுல்லைவாயில் - பியந்தை காந்தாரம்
பின்னணி:
தனது இரண்டாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவெண்காடு சென்ற ஞானசம்பந்தர், வெண்காட்டு வேந்தனைப் புகழ்ந்து பதிகங்கள் பாடி வணங்கிய பின்னர், அருகில் உள்ள திருமுல்லை வாயில் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். வெண்காட்டு பெருமானை விட்டு பிரிவதற்கு மனமின்றி பிரிந்தார் என்று சேக்கிழார் இங்கே கூறுகின்றார். இந்த பாடலில் மருவிய பதிகள் சென்றார் என்று குறிப்பிடும் தலங்கள் எவை என்று தெரியவில்லை என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர். அதன் பின்னர் சீர்காழி வந்து சேர்ந்தார் என்று குறிப்பிடுவதால், இந்த தலத்துடன் ஞானசம்பந்தரின் இரண்டாவது தலயாத்திரை முடிவடைகின்றது. செந்தமிழ்= செம்மை+தமிழ்; செம்மைப் பொருளாகிய சிவத்தைச் சென்று அடைவதற்கு உதவும் பதிகம் என்பதால், செந்தமிழ் என்று சேக்கிழார் சிறப்பித்து சொல்வதாக அறிஞர்களால் விளக்கம் அளிக்கப் படுகின்றது..
அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில்
திருமுல்லைவாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து ஞானசம்பந்தர் சார்ந்தார்
இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. சீர்காழியிலிருந்து பதினான்கு கி.மீ. தூரத்தில் உள்ள தலம். சீர்காழியிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. திருவெண்காடு தலத்திற்கு அருகில், கடற்கரையில் உள்ளது. முல்லைவாயில் என்ற பெயருடன் சென்னையின் அருகே வேறொரு தலம் இருப்பதால், வேறுபடுத்தி காட்டும் வண்ணம் தென்திருமுல்லைவாயில் என்று அழைக்கப்படுகின்றது. இறைவனின் திருநாமம் முல்லைவனநாதர். இறைவியின் திருநாமம் கோதை நாயகி. சுயம்பு இலிங்கம். தட்சிணாமூர்த்தி வடிவம் மேற்கொண்டு, இறைவன் உமை அன்னைக்கு பஞ்சாக்கர மந்திரம் உபதேசம் செய்த தலமாக கருதப்படுகின்றது. சிவபெருமான் குருவாக கருதப் படுவதால், இங்கே பள்ளியறை இல்லை.
இலிங்கத்தின் திருமேனியில் வெட்டுத் தழும்புகள் காணப்படுகின்றன. சோழ மன்னன் கிள்ளிவளவன் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட போது, கடலில் நீராடி வியாதியை போக்கிக் கொள்ளலாம் என்று இந்த பக்கம் வந்தான். அப்போது அவனது குதிரையின் கால்கள் முல்லைக்கொடியில் சிக்கிக் கொண்டன. முல்லைக் கொடியினை தனது வாளினால் அறுத்த மன்னன், தனது வாளினில் இரத்தம் தோய்ந்து இருந்ததைக் கண்டு இரத்தம் எங்கிருந்து வந்தது என்பதை அரிய முயன்றான். அவன் ஒரு லிங்கம் தலையில் வெட்டுப்பட்டு இருந்ததையும் அதன் மேல் இரத்தம் வடிந்ததையும் கண்டு அச்சம் கொண்டான். தான் செய்த சிவ அபராதத்திற்கு தனது உயிரினை மாய்த்துக் கொள்வதே சிறந்த பிராயச்சித்தம் என்று கருதிய மன்னன், தனது தலையை அறுத்துக் கொள்வதற்கு தனது வாளினை உருவினான். அப்போது பெருமான் இடபத்தின் மேல் அமர்ந்தவராக, உமை அன்னையுடன் மன்னனுக்கு காட்சி அளித்தார். மனம் மகிழ்ந்த மன்னன் பெருமானுக்கு கோயில் கட்டியதாக தலபுராணம் கூறுகின்றது. இலிங்கத்தின் மேல் கத்தியால் ஏற்பட்ட அடையாளத்தையும் முல்லைக் கொடிகள் சுற்றி படர்ந்ததால் ஏற்பட்ட அடையாளத்தையும் இன்றும் காணலாம்.
கசாலி என்ற முனிவரின் மகன் வாமதேவர், தனது தந்தை இறந்த பின்னர், தந்தையின் எலும்புகளை பல தீர்த்தத்தில் கரைத்தார். எங்கும் எந்தவிதமான மாறுதலும் ஏற்படவில்லை. இந்த தலத்தில் கரைத்த போது எலும்புகள் மணிகளாக மாறின. வியப்படைந்த முனிவர், தனது தந்தையின் ஈமக் கிரியைகளை இங்கே செய்தார் என்று கூறுவார்கள். இந்த காரணம் பற்றியே புண்ணிய காலங்களில் இந்த தலத்தில் உள்ள கடலில் நீராடுவது சிறப்பாக கருதப் படுகின்றது.
பாடல் 1:
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன்
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன் எங்கள் அரன் ஊர்
களி மண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவில்
தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடும் திருமுல்லைவாயில் இதுவே
விளக்கம்:
துளி=ஆலகால விடத்தின் துளி. மண்டி=நெருக்கி; பாற்கடலிலிருந்து பெருமளவில் பொங்கிய விடத்தை சிறு உருண்டையாக மாற்றி உட்கொண்ட செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது. கொடிய விடத்தின் தாக்கத்திலிருந்து தங்களை காப்பாற்றுமாறு தேவர்கள் வேண்டிய போது, சிவபெருமான், தன்னருகே இருந்த தனது அணுக்கத் தொண்டன் சுந்தரரை ஆலகால விடத்தினை கொண்டு வருமாறு பணித்தார். சுந்தரரும் அந்த விடத்தினை சிறிய உருண்டையாக மாற்றி தனது உள்ளங்கையினில் ஏந்தி பெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தார். இந்த நிகழ்ச்சி இங்கே உணர்த்தப் படுகின்றது. மேலும் இந்த நிகழ்ச்சி, அனைவர்க்கும் அச்சம் விளைவித்து விரட்டிய நஞ்சு, பெருமானின் அடியவனாகிய சுந்தரருக்கு தீங்கு ஏதும் விளைவிக்காமல் இருந்த நிலையினையும் உணர்த்துகின்றது. பெருமானின் தொண்டராக வாழ்ந்த அப்பர் பிரானுக்கு, சமணர்கள் பாலினில் கலந்து ஊட்டிய நஞ்சு எந்த தீங்கினையும் செய்யாமல் இருந்ததை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். நிறம் என்று பொதுவாக குறிப்பிட்டாலும் கருமை நிறம் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். கண்டம்=கழுத்து; கண்டன்=கழுத்தினை உடையவன்; மன்னு= பொருந்திய, துன்னு=மிகுந்த; மதுவில் தெளி=தெளிந்த தேன்; சிறை=சிறகுகள்;
உம்பர் உலகம் கடந்தவன் என்று சம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு திருவெம்பாவை பாடலை நினைவூட்டுகின்றது. போதார் புனைமுடி=பூக்கள் அணிந்துள்ள சடைமுடி; பெருமானின் திருமுடி, அனைத்துப் பொருட்களின் எல்லையையும் தாண்டி நிற்பதாக மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். பாதாளம் ஏழினும் கீழே உள்ள இடம் என்ற தொடர் உணர்த்தும் எல்லையையும் கடந்து பெருமானின் திருப்பாதம் இருப்பதாக இங்கே கூறுகின்றார். ஏழு பாதாள லோகங்களையும் கடந்த திருப்பாதங்களையும் அனைத்துப் பொருட்களின் எல்லையையும் கடந்து ஓங்கி நிற்கும் திருமுடியையும் கொண்டுள்ள இறைவன், அன்னையைத் தனது உடலின் ஒரு பகுதியில் வைத்துள்ளான் என்றும், அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு பல வகை உருவங்களை அவன் எடுக்க வல்லவன் என்றும், வேதங்கள் விண்ணோர்கள் மண்ணோர்கள் ஆகியோர் எத்தனை துதித்தாலும் அவர்களால் சொல்ல இயலாத வண்ணம் முற்றுப்பெறாத புகழினை உடையவன் என்றும் எண்ணிக்கையற்ற அடியார்களை உடையவன் என்றும் இறைவனைப் புகழ்ந்து பாடிய பெண்களுக்கு திருப்தி ஏற்படவில்லை போலும். அவனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள துடிக்கும் அவர்கள், திருக்கோயிலுடன் பிணைக்கப்பட்டு எப்போதும் பெருமானின் அருகில் இருக்கும் பெண்களிடம் தங்களது ஐயங்களை தெரிவிக்கின்றனர். ஆதி அந்தம் இல்லாத பெருமானுக்கு ஊர் என்பது தனியாக கிடையாது என்பதையும் ஒரு பெயர் இல்லாமல் பல பெயர்களை உடையவன் என்பதையும், தந்தை தாய் போன்ற உறவினர் ஏதும் இல்லாதவன் என்பதையும், அயலார் என்று எவரும் இல்லாமல் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் அவனுக்கு நெருக்கமானவை என்பதை இந்த பெண்மணிகள் உணர்ந்திருந்தாலும், இந்த தன்மைகளை மற்றொருவர் சொல்லக் கேட்பது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது போலும். அதனால் தான் கோயில் பிணாப் பிள்ளைகளை அழைத்து பெருமானின் புகழினையும் தன்மைகளையும் கூறுமாறு வேண்டுகின்றனர்.
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்
வேதம் முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்து அரன் கோயில் பிணாப் பிள்ளைகள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏது அவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்
பொழிப்புரை:
பாற்கடலிலிருந்து பெருமளவில் பொங்கியெழுந்த ஆலகால விடத்தினை சிறு உருண்டையாக திரட்டி உட்கொண்டு, கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறத்தினை அடைந்த கழுத்தினை உடையவனும், ஒளிவீசும் திருமேனி உடையவனாக நிலையாக பொருந்தி நடனம் ஆடுபவனும், பேரொளிப் பிழம்பாக இருப்பவனும், உமை அன்னையைத் தனது உடலினில் ஒரு பாகமாக உடையவனும், பாதாளத்தையும் மேல் உலகத்தையும் கடந்து ஊடுருவி நிற்கும் நீண்ட திருமேனியை உடையவனும் ஆகிய எங்கள் இறைவனது ஊர் திருமுல்லைவாயிலாகும். காண்போர்க்கு இன்பத்தை தரும் சோலைகளை அடுத்துள்ள வளம் மிகுந்த கழனிகளில் பூத்துள்ள தாமரை மலர்களில் உள்ள தெளிந்த தேனினை உறிஞ்சி வயிறாரக் குடித்த வண்டுகள், மகிழ்ச்சியின் மிகுதியால் தங்களது சிறகுகளை விரித்து பறந்தவாறு இசை பாடுகின்ற காட்சிகள் காணப்படுவது திருமுல்லைவாயில் என்ற தலத்தில்.
பாடல் 2:
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன்
அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர்
உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவித்
தெருவத்தில் வந்து செழு முத்து அலைக்கொள் திருமுல்லைவாயில் இதுவே
விளக்கம்:
பருவம்=தகுந்த சமயம்; உயிர்கள் இறைவனால் ஆட்கொள்ளப்படுவதற்கு தகுந்த சமயம்; இருவினையொப்பும் மலபரிபாகமும் சத்திநிபாதமும் நிகழப் பெற்று குருவின் திருவருளால் சிவஞானம் வளர்ந்து, பழமல பற்றுகள் முற்றிலும் அறுக்கப்பட்டு, சிற்றறிவு தீர்ந்து, இறைவனின் திருவடிகளைச் சென்று சாரும் பக்குவம் வரப்பெறும் தருணம்;
ஒருவன் தான் செய்த நல்வினையின் பயனாக அனுபவிக்கும் இன்பத்திலும் தீவினைப் பயனாகிய துன்பத்திலும் உள்ளம் வேறுபடாது இரண்டையும் சரிசமமாக பாவித்து நுகரும் நிலையே, அதாவது இன்பத்தில் விருப்பும் துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது நோக்கும் நிலையே, இருவினையொப்பு எனப்படும். ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் என்று சேக்கிழார் இந்த தன்மையை குறிப்பிடுகின்றார். அரவத்தொடு அங்கம் அவை கட்டி என்ற தொடர் பாம்பினையும், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரது உடல்களையும் தனது தோளில் கங்காள வேடராய் தாங்கியதை குறிக்கின்றது என்பது ஒரு விளக்கம்.
பெருமானை குறித்த ஞானம் ஒன்றே வீடுபேறு அடைவதற்கு உரிய வழி. எனவே அந்த ஞானத்தை அடைவதற்கு உயிர் விருப்பம் கொள்ள வேண்டும். இவ்வாறு ஞானவேட்கை உடையவர்க்கே ஞானம் பயன் தரும். உயிர் ஞானவேட்கை அடையாத வண்ணம், ஆணவமலம் தடுக்கின்றது. எனவே என்றும் அழியாது இருக்கும் ஆணவமலத்தின் வலிமையை குறைத்து, புலன்களின் விருப்பத்தில் நாட்டம் கொள்ளாது, உண்மையான மெய்ப்பொருள் குறித்து அறிய, உயிர்கள் தலைப்பட வேண்டும். ஆணவ மலத்தின் வலிமையை உயிர்கள் குறைப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு, இறைவன் கன்மம் மாயை ஆகியவற்றை உயிர்களுடன் கூட்டி, இன்ப துன்பங்களை நுகரச் செய்கின்றான். இவ்வாறு நுகரும் தருணத்தில் உயிர்கள் இருவினையொப்பு நிலையினை அடைந்து மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆணவ மலத்தின் வலிமையை படிப்படியாக குறைத்து, அதன் வலிமையை மெலியச் செய்வதை மலபரிபாகம் என்று கூறுவார்கள்.
இவ்வாறு மலபரிபாகம் நிகழ்ந்து, இருவினையொப்பு நிலை ஏற்பட்டபின் நிகழ்வது சத்திநிபாதம். சத்தி என்பது இறைவனின் அருள். நிபாதம் என்றால் வீழ்ச்சி என்று பொருள். அந்நாள் வரை திரோதானமாக நின்று மறைப்பைச் செய்து வந்த இறைவனின் சக்தி, மலபரிபாகம் உற்ற நிலையில் அருட்சக்தியாக மாறி ஆன்மாவில் பதியும். இவ்வாறு பக்குவப்பட்ட உயிர்களுக்கு தக்க தருணத்தில் வந்து உதவி செய்து முக்தி நிலை அளிப்பதையே பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பண்பன்=பண்பினை உடையவன். அரவத்தொடு அங்கம்=தனது திருமேனி முழுவதும் பாம்பினை உடையவன்; கையினில் கங்கணமாக, தோளில் ஆபரணமாக, இடையினில் கச்சாக, காலினில் சலங்கையாக, கழுத்தினில் அணியாக, தலைக்கு மாலையாக பல இடங்களிலும் பெருமான் பாம்பினை அணிந்துள்ள கோலத்தினை அருளாளர்கள் தங்களது பாடல்களில் உணர்த்துகின்றனர். அரவிக்க=ஒலிக்க; புகழ்ந்து பேசப்பட; உருவத்தில் மிக்க=பெரிய அளவினில்; தெருவம்=தெருக்கள்; ஓதம்=அலைகள்;
பயனுற்ற பண்பன் என்ற தொடருக்கு, பக்குவம் அடைந்த உயிர்களின் பக்குவத்திற்கு பரிசாக, தன்னைப் போன்று எண்குணங்கள் உடையவர்களாக மாற்றும் இறைவன் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. இந்த விளக்கம் நமக்கு அப்பர் பிரான் அருளிய நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் பதிகத்தின் (6.98) கடைப் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. தென்திசைக் கோன்=இயமன். நாணற்றார்=நாணம் இல்லாத சமணர்கள். உடை இல்லாமல் எங்கும் திரிந்தாலும் அதற்காக வெட்கப்படாத சமணர்கள். கோ ஆடி=தலைமைத் தன்மையை உரைத்து. நள்ளாமே விள்ளப் பெறுதல்=விரும்பாது விலகும் நிலை. பொறுக்க முடியாத வயிற்று வலியால் திருவதிகை வந்தடைந்த நிலைக்கும், வயிற்று வலி தீர்க்கப்பட்டு சிவபிரானால் ஆட்கொள்ளப் பட்ட நிலைக்கும் உள்ள மாற்றத்தினை இந்த பாடலில் நாம் காணலாம். பல்லவ மன்னன் என்ன, அவனையும் விட பெரிய நாவலந் தீவினுக்கு அரசன் என்ன, தென் திசைக்கு அதிபதியாகிய இயமன் என்ன, எவரது கட்டளைக்குமே தான் பணிய வேண்டிய அவசியம் இல்லை என்று அப்பர் பிரான் முழங்குவதை நாம் உணரலாம்.
நாவார நம்பனையே பாடப் பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம்
ஆவா என்று எமை ஆள்வான் அமரர் நாதன் அயனொடு மாற்கு அறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும் குணமாகக் கொள்ளோம் எண் குணத்துளோமே
இறைவன் உயிர்கள் உய்யும் வழியினை அடைவதற்காக அளித்துள்ள முப்பத்தாறு தத்துவங்களை முறையாக பயன்படுத்தி, சிவபிரானின் தன்மையை முறையாக ஒரு குரு மூலம் கேட்டறிந்து, தனது சந்தேகங்களை தெளிவித்துக் கொண்டு, சிவனை எப்போதும் சிந்தித்தல் உயிரின் நிலையை படிப்படியாக முக்தி அடையும் வழிக்கும் உயர்த்தும். இந்த நிலைகள் பத்தாக வகுக்கப்படுகின்றன. அதனில் ஒன்பதாவது நிலை சிவக்கலப்பு என்பதாகும். இந்த நிலையில் உயிர், உடலுக்கு எத்தகைய துன்பங்கள் வரினும் அவற்றைத் துன்பங்களாக உணராது அவற்றின் மெய்த்தன்மையை உணர்ந்து, உலகியல் பொருட்கள் மேல் பற்று கொள்ளும் உயிரின் இயல்பையும், உயிர்க்கு மேலான இறைவனின் அருளினையும், அனைத்து நிகழ்வுகளுக்கும் சிவமே காரணம் என்பதையும் உணர்ந்து, உயிருக்கு மேலாக விளங்கும் சிவத்தை பற்றி நின்று, சிவத்தோடு வேறறக் கலந்து நிற்கும். தனது பக்தியின் நிலையால் இந்த நிலையினை அடைந்த அப்பர் பெருமான், தானும் சிவபெருமானைப் போல் எண்குணங்கள் கொண்டவன் என்று கூறுகின்றார். சிவபெருமானின் எட்டு குணங்களாவன, தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் ஆகியவை ஆகும்.
பொழிப்புரை:
பக்குவம் அடைந்த அடியார்களுக்கு தக்க தருணத்தில் முக்தி உலகினைப் பரிசாகத் தந்து அருளும் பண்பினை உடையவனும், பிரமனைப் படைத்தவனும், பாம்புகளைத் தனது திருமேனியின் பல இடங்களிலும் பொருத்தியவனும், பலராலும் புகழ்ந்து பேசப் படுவானும் ஆகிய இறைவன் உறையும் ஊர் திருமுல்லைவாயிலாகும். உருவத்தில் பெரியதும் ஒளி வீசும் தன்மை படைத்ததும் ஆகிய சங்குகள் மற்றும் சிப்பிகள் கடலின் அலைகளால் மோதப்பட்டு, அச்சமடைந்து தங்களின் உள்ளே இருக்கும் செழுமையான முத்துக்களை வெளிக்கொணர்ந்து தள்ளும் தெருக்களை உடைய தலம் திருமுல்லைவாயில் ஆகும்.
பாடல் 3:
வாராத நாடன் வருவார் தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில்
ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதி நேர நீடு திருமுல்லைவாயில் இதுவே
விளக்கம்:
வாராத நாடன்=மீண்டும் நிலவுலகத்திற்கு வர வேண்டிய நிலையினைத் தடுக்கும் முக்தி உலகத்தினை தனது செல்வமாக உடைய சிவபெருமான்; பல திருமுறைப் பாடல்கள் முக்திச் செல்வத்தினை வாரா வழி என்றும் வாராத செல்வம் என்றும் குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். நிதி என்ற சொல் நிதி என்று திரிந்தது. நிதி=செல்வம்;
திருவதிகை தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் பாடலில் (6.3.2) அப்பர் பிரான் வாரா உலகு என்று முக்தி உலகத்தை குறிப்பிடுகின்றார். வில்வலான்=மன்மதன்: தனது கரும்பு வில்லினைக் கொண்டு அனைவரின் மனதிலும் காம உணர்வினைத் தூண்டுவதில் தோல்வி அடையாதவன் என்பதால் வல்லமையாக வில்லினைக் கையாளும் திறமை கொண்டவன் என்று மன்மதன் புகழப் படுகின்றான். அவனது திறமையில் நம்பிக்கை கொண்ட தேவர்கள், அவனால் சிவபெருமானின் தவத்தைக் கலைத்து, அவர் மனதில் உமையம்மையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தினை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்துடன், மன்மதனை சிவபெருமான் மீது மலரம்புகளை விடுமாறு கட்டளை இட்டார்கள். ஆனால் பலரையும் தனது கரும்பு வில்லாலும் மலர்க் கணைகளாலும் வெற்றி கொண்ட மன்மதனின் திறமை சிவபெருமானால் அழிக்கப் பட்டது. வில்வட்டம்=வில்லினைக் கையாளும் திறமை;
வெள்ளிக்குன்று அன்ன விடையான் தன்னை வில்வலான் வில்வட்டம் காய்ந்தான் தன்னைப்
புள்ளி வரி நாகம் பூண்டான் தன்னைப் பொன் பிதிர்ந்து அன்ன சடையான் தன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் தன்னை வாரா உலகு அருள வல்லான் தன்னை
எள்க இடு பிச்சை ஏற்பான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
அப்பர் பிரானும் இதே கருத்தினை, திருவையாறு பதிகத்தின் (6.38.9) பாடலில் மீண்டு வாராத உலகு அருள வல்லவன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். மணிவாசகரும் கீர்த்தித் திருவகலில், மீண்டு வாரா வழி அருள் புரிபவன் என்று இதே கருத்தை வலியுறுத்துகின்றார்.
எண் திசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே
வண்டு இசைக்கும் நறும் கொன்றைத் தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூமலர்ச் சேவடி என் மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கு ஒர் சரம் கூட்ட வல்லாய் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ
புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில், அப்பர் பிரான், வாராத செல்வம் வருவிவிப்பான் என்று குறிப்பிடுகின்றார். ஆயிரம் நாமங்கள் கொண்டு வானவர்கள் சிவபெருமானை ஏத்துவதாக இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில், திருமால் சிவபெருமானை புகழ்ந்து அவரது ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு பாடிய சஹஸ்ரநாமம் ஒரு பகுதியாக உள்ளது. திருமால் அருளிய இந்த தோத்திரத்தை, வானவர்கள் பயன்படுத்திக் கொண்டு சிவபெருமானை வணங்கினார்கள் என்பதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றா என்றும் எண்ணற்ற திருநாமங்களை சொல்லி இறைவனைப் புகழ்ந்தனர் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்வதும் பொருத்தமே.
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
இந்த தலத்தில் உள்ள இறைவனுக்கு வைத்தியநாதன் என்ற பெயர். தாரகாசுரனுடன் செய்த போரினில் காயம் அடைந்த தனது படை வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யுமாறு. சிவபெருமானை முருகப் பெருமான் வேண்ட, சிவபெருமான் தனது மனைவி உமை அம்மையுடன் இங்கே எழுந்தருளி மருத்துவம் செய்ததாக தல வரலாறு கூறுகின்றது. பெருமான் அளித்த மருந்தினை, எண்ணெயில் குழைத்து காயங்களில் தடவுவதற்கு வசதியாக தேவி, தனது கையில் எண்ணெய்க் கிண்ணம் தாங்கியதால் தேவிக்கு தைல நாயகி என்றும் வைத்தியம் செய்த பெருமானுக்கு வைத்தியநாதன் என்ற பெயரும் ஏற்பட்டன. நாளடைவில் தைல நாயகி என்ற பெயர் தையல் நாயகி என்று மருவிவிட்டது. இந்த தலத்தின் தலமரமான வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்து சிவபெருமான் காயம் பட்ட வீரர்களுக்கு சிகிச்சை செய்ததாக நம்பப்படுகின்றது.
மணிவாசகர் திருவம்மானைப் பதிகத்தின் இரண்டாவது பாடலில், சிவபெருமானை வாரா வழி அருளியவன் என்று குறிப்பிடுகின்றார். ஆசை வாரியன்=அன்புக் கடலாக உள்ளவன்; இந்த பாடலிலும் திருவாசகத்தின் வேறு பல பாடல்களிலும், மணிவாசகர் சிவபெருமானை தென்னன் என்று குறிப்பிடுவதை நாம் காணலாம். வேத காலத்திற்கு முன்னமே, தமிழகத்தில் சிவ வழிபாடு இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த கருத்தினை ஒட்டியே, மணிவாசகர் சிவபெருமானை தென்னாட்டிற்கு உரிய கடவுளாக சித்தரிக்கின்றார். மேலும் பாண்டிய மன்னன் மலயத்துவஜனின் மகளாகிய மீனாட்சியை மணந்து கொண்டு சோமசுந்தரராக பாண்டிய நாட்டை ஆண்ட பெருமானை தென்னன் என்று அழைப்பது மிகவும் பொருத்தம் தானே. பித்தனைப் போன்று தான் மீண்டும் மீண்டும் பெருமானின் திருநாமத்தை பிதற்றும் வண்ணம் செய்தவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் மணிவாசகர் கூறுகின்றார்.
பாரார் விசும்புள்ளார் பாதளத்தார் புறத்தார்
ஆராலும் காண்டற்கு அறியான் எமக்கு எளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி
வாரா வழி அருளி வந்து என் உளம் புகுந்து
ஆரா அமுதாய் அலைகடல் வாய் மீன் விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதும் காண் அம்மானாய்
மணிவாசகர் ஆனந்தமாலை பதிகத்தின் மூன்றாவது பாடலில், வாரா உலகு நெறியேற, பெருமான் தனது திருவுருவத்தை தனக்கு காட்டியதாக கூறுகின்றார், செறிவு=உறவு; வழி=ஞானம்; பெருந்துறையில் தன்னை பெருமான் ஆட்கொண்டு திருவடி தீட்சை தந்தமையால் தனக்கு நிச்சயமாக பெருமான் முக்தி அளிப்பார் என்ற நம்பிக்கையை இங்கே வெளிப்படுத்தும் மணிவாசகர், அந்த நாளுக்காக தான் ஏங்குவதாக குறிப்பிடுகின்றார்.
சீலம் இன்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும் காட்டி வழிகாட்டி வாரா உலகு நெறியேறக்
கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே
திருமூலர் தனக்கு வாராவழி தந்த இறைவனின் பேரு மாநந்தி என்று கூறுகின்றார். சிவபெருமானை நந்தி என்று பல பாடல்களில் திருமூலர் குறிப்பிடுகின்றார். இனிப் பிறந்து உலகின் கண் வாராது ஒரே நிலையாக இருத்தற்குரிய முக்தி உலகம் தந்தமையால், பெருமான் பெரியார்களிலும் பெரியவனாக உள்ளான் என்று திருமூலர் இங்கே கூறுகின்றார். துன்பக் கலப்பற்று என்றும் அழியாத இன்பத்தினை அருளுவதால் முக்தி உலகத்தினை ஆரா அமுது என்று கூறுகின்றார். பெருமானின் எண்ணற்ற பெயர்களில் ஏதேனும் ஒன்றினை பொருள் உணர்ந்து தியானித்தால், அவனது அருளில் திளைத்து மேற்கூறிய இன்பக் கடலில் என்றும் மூழ்கி இருக்கலாம் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.
வாரா வழி தந்த மாநந்தி பேர் நந்தி
ஆரா அமுது அளித்தான் ஆனந்த பேர் நந்தி
பேராயிரம் உடைப் பெம்மான் பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுக என்றானே
வில்லின் உரு=வான்வில்லின்; வானவில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக மனதினுக்கு இன்பம் தருவதாக இருந்தாலும் மிகவும் சிறிய நேரமே நிலைத்து நின்ற பின்னர் மறைந்து விடுகின்றது; மனிதப்பிறவி நமக்கு இன்பம் தருவது போன்று தோன்றினாலும் அந்த இன்பமும் நிலைத்து நீடிப்பதில்லை; மனிதப்பிறவியும் நிலையற்றதாக உள்ளது. வில்லின் உரு என்பதற்கு வயது முதிர்ந்த காலத்தில் உடலில் கூன் விழுவதால் வில் போன்று வளையும் உடல் என்று இளமை நிலையாமையை உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. பேராத=நீங்காத; அலர்=மலர், இங்கே தாமரை மலரை குறிக்கின்றது; பிரியாத மார்பின் அலர் மேவு பேதை என்று, தாமரை மலரினில் உறையும் இலக்குமி தேவி திருமாலின் மார்பினை விட்டு பிரியாது இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
தனது திருவடிகளை வந்தடைந்த அடியார்களை மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகத்திற்கு அனுப்பாத சிறப்பினை உடைய முக்தி உலகத்தை உடையவன் சிவபெருமான்; வானவில் போன்று தோன்றி விரைவில் மறையும் குறைந்த வாழ்நாளைக் கொண்டுள்ள மனிதர்கள், உடலும் உள்ளமும் உருகி தன்னை வழிபட்டால், அவர்களுக்கு தெவிட்டாத இன்பத்தை அளித்து, அவர்கள் பால் மிகுந்த அன்பு கொண்டு அவர்களை விட்டு பிரியாது இருப்பவன் சிவபெருமான்; அத்தகைய பெருமான், உலகத்தவர்க்கு அருள் புரியும் நோக்கத்துடன் எழுந்தருளி இருக்கும் ஊர் திருமுல்லைவாயிலாகும். நீங்காத ஒளியுடைய திருமாலின் மார்பினை விட்டு என்றும் பிரியாது இருப்பவளும், மலர்மகள் என்று அழைக்கப்படுபவளும் ஆகிய இலக்குமி தேவியின் அருளினால் செல்வம் தழைத்து ஓங்கும் பெருமையினை உடைய தலம் திருமுல்லைவாயிலாகும்.
பாடல் 4:
ஒன்றொன்றொடொன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய்
அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர்
குன்று ஒன்றொடொன்று குலை ஒன்றொடொன்று கொடி ஒன்றொடொன்று குழுமிச்
சென்றொன்றொடொன்று செறிவால் நிறைந்த திருமுல்லைவாயில் இதுவே
விளக்கம்:
ஒன்றொன்றொடொன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் என்ற தொடர் மூலம் இருபத்தைந்து என்ற எண்ணினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பாடலின் முதல் தொடரில், ஒன்றொன்றொடொன்றும் என்ற தொடரில் ஒன்று என்ற எண் மூன்று முறை வருவதை நாம் உணரலாம். இத்துடன் ஒரு நான்கு, ஒரு ஐந்து, இரு மூன்று (ஆறு) ஏழு ஆகிய எண்களைக் கூட்டினால் வருகின்ற எண் இருபத்தைந்து ஆகும். இருபத்து நான்கு எனப்படும் இந்த எண், ஆன்மாவிற்கு மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டு வினைகளைக் கழித்துக் கொள்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள ஆன்ம தத்துவங்களை குறிக்கின்றது. இந்த தத்துவங்களுடனும் ஆன்மாவுடனும் இறைவன் இணைந்திருக்கும் செய்தி பாடலின் முதல் அடியில் கொடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ஒன்றி இருக்கும் இறைவன், இவற்றிலிருந்து வேறாக இருக்கும் தன்மையும், மறைமுகமாக, உணர்த்தப் படுகின்றது. ஆகாயம், காற்று, தீ, நீர், பூமி ஆகிய பஞ்ச பூதங்கள், கண் மூக்கு, வாய், செவி மெய் ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், வாக்கு, கால், கை, எருவாய் மற்றும் கருவாய் எனப்படும் கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஒலி ஒளி ஊறு நாற்றம் சுவை ஆகிய தன்மாத்திரைகள் ஐந்தும் சித்தம் புத்தி அகங்காரம் மனம் எனப்படும் நான்கு அந்தக்கரணங்கள் என்பவையே இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்கள். இந்த ஆன்ம தத்துவங்களுடன் ஆன்மாவையும் சேர்த்து இருபத்தைந்து பொருட்களுடன் உடனாக இருப்பவன் இறைவன் என்று குறிப்பிட்டு, அவற்றிலிருந்து வேறாக இருப்பவன் என்பதை சொல்லாமல் சொல்லி விளக்குகின்றார். புருடன் என்றால் ஆளும் உரிமையுடையவன் என்று பொருள். ஆன்ம தத்துவங்கள் அனைத்தையும் ஆளுமை கொண்டு தனது தேவைக்கு ஏற்ப, ஆன்மா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; ஆனால் ஒரு சில ஆன்மாக்களைத் தவிர்த்து மற்ற ஆன்மாக்கள் அனைத்தும் தத்துவங்களுக்கு அடிமைகளாக செயல்படுவதை நாம் காண்கின்றோம்.
இவ்வாறு இருபத்தைந்து பொருட்களையும் கடந்து நிற்கும் பெருமான், என்று சம்பந்தர் உணர்த்துவது, நமக்கு அப்பர் பிரான் அருளிய திருவாரூர் பதிகத்தின் கடைப் பாடலை (4.4.10) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான் பெருமானை ஐயஞ்சின் அப்புறத்தான் என்று குறிப்பிடுகின்றார். ஐயஞ்சின் அப்புறத்தான் என்பதற்கு இருபத்தைந்தைக் கடந்தவன் என்று பொருள். இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களுடன் புருடன் எனப்படும் வித்தியா தத்துவத்தையும் கடந்தவன் இறைவன் என்று பொருள் பலரால் கூறப்படுகின்றது. பை=நச்சுப்பை: சுடர் விடுதல்=தனது தலையில் வைத்துள்ள மாணிக்கக் கல்லால் ஒளி மிளிரச் செய்யும் பாம்பு: அம் சுடர்=அழகிய மாணிக்கச் சுடர்: நாகப் பள்ளி கொள்வான்=நாகத்தை படுக்கையாக உடைய திருமால்:
பையம் சுடர் விடு நாகப் பள்ளி கொள்வான் உள்ளத்தானும்
கையஞ்சு நான்கு உடையானைக் கால் விரலால் அடர்த்தானும்
பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந்தார்க்கு அருள் செய்யும்
ஐ அஞ்சின் அப்புறத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
ஐயஞ்சின் அப்புறத்த்தான் என்பதற்கு சுவையான விளக்கம் தருமபுர ஆதீனத்து வலைத்தளத்தில் காணப்படுகின்றது. இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களுக்கு அப்பாற்பட்டவன் திருவாரூர் அம்மான் என்று கூறப்படுகின்றது. திருவாரூர் தியாகேச மூர்த்தம் சோமாஸ்கந்த வடிவம் போல் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த வடிவம் சோமாஸ்கந்த வடிவத்தினினும் மாறுபட்டது என்று அவர் விளக்கம் கூறுகின்றார். இங்கே உள்ள தியாகேச மூர்த்தம், இந்திரனிடமிருந்து முசுகுந்த மன்னன் பெற்றது என்பதை நாம் அறிவோம். இந்திரனுக்கு இந்த மூர்த்தம் எவ்வாறு கிடைத்தது. திருமால் தனது உள்ளத்தில் தியாகேசரின் உருவத்தை நிலைநிறுத்தி வழிபட்டு வந்தார். தியாகேசரும் திருமாலின் மூச்சுக் காற்றின் சலனத்திற்கு ஏற்ப நடமாடினார் என்று கூறுவார்கள். எனவே திருமால் தனது மனதினில் நிலைநிறுத்திய இந்த மூர்த்தம், சிவபெருமானின் முகங்களிலிருந்து தோன்றிய மூர்த்தத்திலிருந்து மாறுபட்டது தானே. ஒருமுறை இந்திரன் தான் வழிபடுவதற்காக இந்த மூர்த்தத்தை திருமாலிடம் வேண்ட, திருமாலும் அவனுக்கு அளித்தார். அன்று முதல் இந்த மூர்த்தம் இந்திரனால் வழிபடப்பட்டு வந்தது. பின்னர் முசுகுந்த மன்னான் இதனை திருவாரூருக்கு கொண்டு வந்தார். இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களும் சிவபிரானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவை. ஈசான முகத்திலிருந்து தோன்றிய மூர்த்தங்கள், சோமஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர் மற்றும் நடராஜர்: தத்புருட முகத்திலிருந்து தோன்றியவை, பிக்ஷாடனர், காமாரி (காமனை அழித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), ஜலந்தராரி (ஜலந்தரனை அழித்தவர்), திருபுராரி (திருபுரங்களை அழித்தவர்) ஆகும். சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றியவை, இலிங்கோத்பவர், சுகாசனர், உமை மகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), மற்றும் அர்த்த நாரீஸ்வரர் ஆகும். அகோர முகத்திலிருந்து தோன்றியவை, கஜ சம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (பாசுபத மூர்த்தி) மற்றும் நீலகண்டர். வாமதேவ முகத்திலிருந்து தோன்றியவை, கங்காளர், சக்ரதானர், கஜமுகானுக்ரகர் (ஐராவதத்திற்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுக்ரகர் மற்றும் ஏகபாதர் ஆகும்.
அன்றின்றொடென்றும்=அன்றும் இன்றும் என்றும்; மேற்குறிப்பிட்டவாறு இறைவன் இருபத்தைந்து பொருட்களிலிருந்தும் வேறாக இருப்பதை உணராத பலர் ஆன்மாவையே பதி என்று நினைத்து மயங்குகின்றனர் என்று சம்பந்தர் குறிப்பிடுவதாக பெரியோர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் பெருமானின் தன்மையை சரியாக உணராதவர்கள் என்பதை குறிப்பிடும் வகையில், அவர்கள் அறியாத வண்ணம் நிற்கும் பெருமான் என்று சம்பந்தர் இரண்டாவது அடியில் குறிப்பிடுவதை நாம் உணரலாம். குன்று ஒன்றொடொன்று= குன்றுகள் ஒன்றுக்கொண்டு இணைவது போன்று உயர்ந்த மாட வீடுகள் ஒன்றுக்கொன்று அருகினில் உள்ள தலம் என்று தலத்தின் செழுமை உணர்த்தப் படுகின்றது. தலத்தின் நீர்வளம் குலைகளும் கொடிகளும் ஒன்றுடன் ஒன்று நெருங்கி இருக்கும் நிலையை உணர்த்துகின்றன.
பொழிப்புரை:
ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கினோடு புருட தத்துவத்துடன் உடனாக இருந்து இயக்கும் பெருமான், இந்த தத்துவங்களிலிருந்து வேறாகவும் விளங்குகின்றான். ஆனால் இந்த உண்மையை அன்றும் இன்றும் என்றும் அறியாமல் பலரும் இருக்கின்றனர். இவ்வாறு பலரும் உணர்ந்து கொள்ளமுடியாத தன்மையுடன் இருக்கும் சிவபெருமான் திருமுல்லைவாயில் தலத்தில் உறைகின்றான். குன்றுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்தது போன்று உயர்ந்த மாடங்கள் கொண்டுள்ள வீடுகள் நெருக்கமாக இருந்து தலத்தின் செல்வச்செழிப்பினை பறை சாற்ற, குலைகுலையாக காய்கள் தொங்கும் தென்னை மற்றும் கமுகு மரங்களும் கொடிகளும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு தலத்தின் நீர்வளத்தைப் பறை சாற்ற அழகுடன் விளங்கும் தலம் திருமுல்லைவாயிலாகும்.
பாடல் 5:
கொம்பு அன்ன மின்னின் இடையாளொர் கூறன் விடை நாளும் ஏறு குழகன்
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானில் மதியேறு சென்னி அரனூர்
அம்பன்ன ஒண் கணவர் ஆடரங்கின் அணி கோபுரங்கள் அழகார்
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லைவாயில் இதுவே
விளக்கம்:
கொம்பு=பூங்கொடியின் கொம்பு; கூறன்=ஒரு கூறாக கொண்டுள்ளவன்; விடை=இடபம்; குழகன்=அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவன்; சென்னி=தலை; ஒண்=ஒளிவீசும்; கணவர்=கண்களை உடைய பெண்கள்; அணி=அழகிய; செவ்வி=செம்மையான;
பொழிப்புரை:
பூங்கொம்பு போன்றும் மின்னல் போன்றும் மெலிந்த இடையினை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும், இடபத்தின் மீது ஏறிக்கொண்டு நாள்தோறும் பல இடங்கள் செல்பவனும், அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவனும், நமது நம்பிக்கைக்கு பாத்திரமாக உள்ளவனும், நம் பால் மிகுந்த அன்பு கொண்டுள்ளவனும், முதன்முதலாக நான்மறைகளையும் ஓதிய வினை உடையவனும், வானில் உலவும் பிறைச்சந்திரனைத் தனது தலையில் வைத்துள்ளவனும் ஆகிய பெருமான் உறையும் தலம் திருமுல்லைவாயிலாகும். அம்பு போன்று ஒளி மிகுந்த கண்களை உடைய மகளிர் நடமாடும் அரங்குகளும் அழகிய கோபுரங்களும் அணிகலன் போன்று அழகினை மேம்படுத்த, செம்பொன் போன்று அழகிய செம்மையான மாடங்கள் கொண்ட தலம் திருமுல்லைவாயிலாகும்.
பாடல் 6:
ஊனேறு வேலின் உருவேறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன்
ஆனேறு அது ஏறி அழகேறு நீறன் அரவேறு பூணும் அரனூர்
மானேறு கொல்லை மயிலேறு வந்து குயிலேறு சோலை மருவித்
தேனேறு மாவின் வளமேறி ஆடு திருமுல்லைவாயில் இதுவே
விளக்கம்:
ஊனேறு வேல்=உடலில் உள்ள சதையைக் கிழித்துக்கொண்டு பாயும் கூர்மையான நுனியினை உடைய வேற்படை; அழகேறு நீறன்=அழகு தரும் திருநீற்றினைத் தனது உடலில் பூசியுள்ள இறைவன். அழகு தரும் நீறு என்று இங்கே கூறுவது நமக்கு மந்திரமாவது நீறு பதிகத்தின் பாடலை நினைவூட்டுகின்றது. சுந்தரமாவது நீறு என்றும் கவினைத் தருவது நீறு என்றும் காண இனியது என்றும் திருநீறு அழகினைத் தருகின்றது என்று சம்பந்தர் இந்த திருநீற்றுப் பதிகத்தில் கூறுகின்றார். கொல்லை=முல்லை நிலம்; காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலம் என்று கூறுவார்கள். காட்டினை குறிப்பிடும் வண்ணம் காட்டில் வாழும் மான்களும், நிலத்தை உணர்த்தும் வண்ணம் சோலைகளில் வாழும் மயில்களும் குயில்களும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. தேன் என்பது இங்கே தேனை விருப்பத்துடன் அருந்தும் வண்டினைக் குறிப்பிடுகின்றது. ஏறும் என்ற சொல், வாகனம் ஏறுதல், உயர்தல், எண்ணிக்கையில் அதிகரித்தல், மிகுதல் என்று பல பொருளைத் தரும் சொல்லாகும்.
பொழிப்புரை:
கூர்மையான நுனியை உடைய வேற்படை போன்று உருவம் கொண்டுள்ள கண்களை உடைய உமையம்மையின் ஒளி பொருந்திய கருமை நிறத்து உடலினைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டுள்ள இறைவன், எருதினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளான்; அவன் தனது உடல் முழுவதும் பூசிக்கொண்டுள்ள திருநீறு அவனது திருமேனிக்கு மேலும் அழகினை சேர்க்கின்றது; அவன் பாம்புகளைத் தனது உடலின் பல்வேறு இடங்களில் ஆபரணமாகப் பூண்டுள்ளான். இத்தகைய இறைவன் உறையும் ஊர் திருமுல்லைவாயிலாகும். மான்கள் துள்ளி ஆடும் முல்லை நிலத்தையும், மயில்களும் குயில்களும் வாழும் சோலைகளையும், தேனை விரும்பி உட்கொள்ளும் வண்டுகள் சூழும் மா மரங்களையும் கொண்டு நீர்வளம் மற்றும் நிலவளம் மிகுதியாக பொருந்தி விளங்கும் தலம் திருமுல்லைவாயில்.
பாடல் 7:
நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடு மேனி அரனூர்
மஞ்சாரும் மாட மனை தோறும் ஐயம் உளதென்று வைகி வரினும்
செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளிக்கொள் திருமுல்லைவாயில் இதுவே
விளக்கம்:
நீடு=நீண்ட காலமாக இடைவிடாமல்; மூடு வினை=பிணைந்துள்ள வினைகள்; தேய=அழிய; அஞ்சாடு சென்னி=பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு (பஞ்சகவ்யம் என்று அழைப்பார்கள்) நீராடும் சென்னி; அனலாடு=ஊழித்தீயினில் நடமாடுபவன்; மஞ்சாரு=மேகங்கள் பொருந்தும் வண்ணம் உயர்ந்த மாடங்கள்; வைகி=நெருங்கி; அனலாடு மேனி என்பதால் நெருப்பினில் நின்று நடமாடுபவன் என்று பொருள் கொள்வதே பொருத்தம்; அரவாடு கையன் அனலாடு மேனி என்ற தொடரினை அரவாடு மேனி அனலாடு கையன் என்று மாற்றி அமைத்துக் கொண்டு, பாம்பினைத் தனது திருமேனி எங்கும் உடையவன் என்றும், கையில் அனலேந்தி நடமாடுபவன் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பிச்சை இடுவதற்கு செஞ்சாலி என்று உயர்ந்த நெல்லினை பயன்படுத்தினர் என்று தலத்து மாந்தர்களின் உயர்ந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.
பொழிப்புரை:
இடைவிடாது நீண்ட காலமாக தங்களது உள்ளத்தில் தன்னை (பெருமானை) நினைத்து வழிபடும் அடியார்களுடன் பிணைந்துள்ள வினைகளை தேய்த்து அழிக்கும் ஆற்றல் படைத்த பெருமான், இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து நீங்கியவன் ஆவான்; பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு (பால், தயிர், நெய், கோமியம் சாணம்) மிகுந்த விருப்பத்துடன் நீராடும் பெருமான், கைகளில் பாம்பினை அணிந்தவனாக ஊழித்தீயினில் நின்று நடமாடுகின்றான். இத்தகைய பண்புகளைக் கொண்டுள்ள அரன் உறையும் ஊர் திருமுல்லைவாயிலாகும். மேகங்கள் தங்கும் வண்ணம் உயர்ந்த மாடங்களை உடைய திருமுல்லைவாயில் தலத்தினில் உள்ள இல்லங்களுக்கு பிச்சை கேட்டு எவர் சென்றாலும், அவர்களுக்கு செஞ்சாலி எனப்படும் உயர்ந்த வகை செந்நெல் சோற்றினை அளித்து மகிழும் உயர்ந்த கருணை உள்ளம் கொண்டவர்கள் வாழும் தலம் திருமுல்லைவாயிலாகும்.
பாடல் 8:
வரை வந்தெடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய
உரை வந்த பொன்னின் உரு வந்த மேனி உமைபங்கன் எங்கள் அரனூர்
வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரை வந்து வந்து செறி தேறல் ஆடு திருமுல்லைவாயில் இதுவே
விளக்கம்:
வரை=மலை, கயிலை மலை; வலி=வலிமையான; உரை வந்த=உரைத்துத் தரமாக உள்ளது என்று கண்டறியப்பட்ட; தேறல்=தேன்; சென்னைக்கு அருகே உள்ள வடமுல்லைவாயில் தலத்திற்கு வேறானது என்பதை உணர்த்தும் வண்ணம், காவிரி நதியின் வடகரையில் உள்ள தலம் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுவதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
தான் சென்று கொண்டிருந்த புட்பக விமானத்திலிருந்து கீழே இறங்கி கயிலை மலையின் அருகே வந்து அந்த மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த, வலிமை வாய்ந்த வாளினை உடைய அரக்கன் இராவணனின் தலைகள் பத்தும் மலையின் கீழே அகப்பட்டு நொறுங்குமாறு தனது கால் விரலை கயிலை மலையின் மீது ஊன்றியவன் சிவபெருமான்; உரைத்து தரமாக உள்ளது என்று கண்டறியப்பட்ட பொன்னின் நிறத்தில் திருமேனியை உடையவனும், உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும் ஆகிய பெருமான் உறையும் தலம் திருமுல்லைவாயிலாகும். மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்துக் கொண்டு வரும் காவிரி நதியின் வடகரையில் உள்ளதும் காவிரி நதியின் நீரலைகளால் தனது செழித்து வளர்ந்த மரங்களில் தேனடைகள் ஆடும் சோலைகள் உடையதும் ஆகிய தலம் திருமுல்லைவாயில்.
பாடல் 9:
மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானும் உன்னி அவர் தேட நின்ற பரனூர்
காலாடு நீல மலர் துன்றி நின்ற கதிரேறு செந்நெல் வயலில்
சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திருமுல்லைவாயில் இதுவே
விளக்கம்:
வேத முதல்வன்=பிரமன்; கரியான்=திருமால்; உன்னி=நினைத்து, தாமே உயர்ந்தவர் என்பதை அடுத்தவரை உணரவைக்க வேண்டும் என்ற முனைப்புடன்; பரன்=மேம்பட்டவன்; கால்=காற்று; பிரமனின் உடல் வெண்மை நிறத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் முகமாக பாலாடு மேனி என்று குறிப்படப் பட்டுள்ளது.
பொழிப்புரை:
தனது திருமேனியின் மேல் நீண்டு ஓடி விளையாடுவது போன்று முப்புரி நூலை அணிந்த சிவபெருமான் பல திருவிளையாடல்களை புரிகின்றான். வெண்ணிற மேனியை உடையவனும் வேதமுதல்வனாக திகழும் பிரமனும், கரிய திருமேனி உடைய திருமாலும், தங்களில் யார் உயர்ந்தவர் என்பதை அடுத்தவருக்கு உணர்த்தும் பொருட்டு பெருமானின் அடியையும் முடியையும் தேடியபோது அவர்கள் காண முடியாத வண்ணம் நீண்ட தழற்பிழம்பாக, பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவருக்கும் மேலானவனாக நின்ற பரமனின் ஊர் திருமுல்லைவாயில். காற்றில் அசையும் நீலமலர்களும் கதிர்கள் மிகுந்த செந்நெல் வயல்களில் சேல் மற்றும் வாளை மீன்கள் குதித்து விளையாடும் வயல்கள் கொண்ட தலம் திருமுல்லைவாயில்.
பாடல் 10:
பனைமல்கு திண் கை மதமா உரித்த பரமன்ன நம்பன் அடியே
நினைவன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கு நெரியச்
சினை மல்கு புன்னை திகழ் வாச நாறு திருமுல்லைவாயில் இதுவே
விளக்கம்:
பனைமல்கு=பனை மரத்தின் அடிப்பாகம் போன்று உருண்டு திரண்ட துதிக்கையை உடைய யானை; வகுளம்=மகிழமரம்; முகுளம்=மொட்டுக்கள்; கைதை=தாழை மரங்கள்;
பொழிப்புரை:
பனை மரத்தின் அடிப்பாகத்தைப் போன்று உருண்டு திரண்டு உறுதியான வலிமை உடைய துதிக்கையினைக் கொண்ட மத யானைத் தன்னை எதிர்த்து வந்த போது, அதனை அடக்கி அதன் தோலினை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்ட பரமன், சிவபெருமான் ஆவார். அடியார்கள் நம்பிக்கை வைக்கும் வண்ணம் உதவி செய்யும் இறைவனின் திருவடிகளை நினையும் பேற்றினை பெறாத சமணர்களும் புத்தர்களும் அழியும் வண்ணம் திருமுல்லைவாயில் தலத்தில் இறைவன் கோயில் கொண்டுள்ளான். இந்த தலத்தை அடுத்துள்ள காடுகளில் அரும்புகளை அளிக்கும் தாழை மரங்களும் மகிழ மரங்களும் உள்ளன; மேலும் புன்னை மரங்கள் வீசும் நறுமணமும் எங்கும் பரவியுள்ளது.
பாடல் 11:
அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள் செய்த எந்தை மருவார்
திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திருமுல்லைவாயில் இதன்மேல்
தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானமிகு பந்தன் ஒண் தமிழ்களின்
அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே
விளக்கம்:
அணிகொண்ட கோதை என்று தலத்து அம்பிகையின் திருநாமம் கோதை என்பதை சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். தட்சிணாமூர்த்தியாக அம்பிகைக்கு பெருமான் மந்திர உபதேசம் செய்த தல வரலாறு இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. மருவார்=பகைவர்கள்; திண்மை என்ற சொல் திணி எங்கே மருவியுள்ளது. உலகப் பொருட்களின் மீது விருப்பு வெறுப்பு கொள்வதால், சிந்தையில் வெப்பம் உண்டாகின்றது. விருப்பு வெறுப்பின்றி எந்த பொருளையும் சம நோக்குடன் பாவிக்கும் அடியார்களின் உள்ளம் குளிர்ந்து காணப்படும் என்பதையும் அத்தகைய அடியார்கள் சீர்காழி தலத்தில் வாழ்ந்தார்கள் என்பதையும் சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். ஒண்=ஒளி, இங்கே ஞானஒளி என்று பொருள் கொள்ள வேண்டும். பெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மையையும் அவரை பகைத்துக் கொள்வதால் அடையும் தீங்கும் இங்கு ஒருசேர உணர்த்தப் படுகின்றன. ஒண்மை என்ற சொல்லுக்கு நன்மை என்ற ஒரு பொருளும் உள்ளது. நன்மையைத் தரும் பதிகம் என்று சம்பந்தர் குறிப்பிட்டதை, சேக்கிழார் செந்தமிழ் என்று பெரிய புராணத்தில் கூறுகின்றார்.
பொழிப்புரை:
நகைகளை அணிந்து கோதை என்ற திருநாமத்துடன் இந்த தலத்தில் வீற்றிருக்கும் உமையம்மை பெருமானைப் புகழ்ந்து வழிபட, எமது தந்தையாகிய பெருமான், உமை அன்னைக்கு மந்திர உபதேசம் செய்து அருள் புரிந்தார். பகைமை உணர்ச்சியுடன் வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்த வில்லினை உடையவர் சிவபெருமான். இவர் திருமுல்லைவாயில் தலத்தில் உறைகின்றார். எந்த பொருளின் மீதும் விருப்பு வெறுப்பின்றி வாழ்வதால் குளிர்ந்த மனம் உடையவர்கள் வாழும் சீர்காழி தலத்தில் தோன்றியவனும், ஞான ஒளியுடன் பிரகாசிப்பவனும் ஆகிய ஞானசம்பந்தன், திருமுல்லைவாயில் தலத்து இறைவனைப் புகழ்ந்து பாடிய சிறந்த தமிழ்ப் பாடல்கள் பத்தையும் இசையுடன் பாடும் அடியார்கள், பரந்த வானுகத்தினை ஆளும் வாய்ப்பினை பெறுவார்கள்.
முடிவுரை:
அரனூர் அரனூர் பாடல்கள் தோறும் திருமுல்லைவாயில் தலத்தை குறிப்பிடும் சம்பந்தர் இந்த பாடல்களில் அரனின் பல்வேறு தன்மையை குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கிய விடத்தினை உருண்டையாக திரட்டி உட்கொண்டு அனைவரையும் காத்து அருள் புரிந்தவன் என்று முதல் பாடலிலும், பக்குவமடைந்த அடியார்களை தக்க தருணத்தில் ஆட்கொண்டு அருள் புரிபவன் என்று இரண்டாவது பாடலிலும், தன்னிடம் அன்பு வைத்து உடலும் உள்ளமும் உருகும் அடியார்களுக்கு தெவிட்டாத இன்பத்தை அளிப்பவன் என்று மூன்றாவது பாடலிலும் குறிப்பிடும் சம்பந்தர், இருபத்து நான்கு தத்துவங்கள் மற்றும் ஆன்மாவினை உடனிருந்து இயக்கும் இறைவன் அவைகளிலிருந்து வேறாகவும் இருக்கும் திறமை வாய்ந்தவன் என்று நான்காவது பாடலில் கூறுகின்றார். ஐந்தாவது மற்றும் ஆறாவது பாடல்களில் அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் பெருமான் ஏற்றுக் கொண்டுள்ள சிறப்பு உணர்த்தப் படுகின்றது. நெஞ்சார தன்னை நினைக்கும் அடியார்களின் வினைகளை கெட்டழித்து அருள் புரியும் இறைவன் என்று ஏழாவது பாடலில் குறிப்பிடும் சம்பந்தர், பொன்மேனி கொண்டவனாக இறைவன் இருக்கும் தன்மையை எட்டாவது பாடலில் குறிப்பிடுகின்றார். அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு பல திருவிளையாடல்கள் புரிபவன் என்றும் மதயானையின் தோலை உரித்து வெற்றி கண்டவன் என்று அடுத்த இரண்டு பாடல்களில் குறிப்பிடும் சம்பந்தர் அம்பிகைக்கு மந்திர உபதேசம் செய்து அருள் புரிந்தவன் என்று கடைப் பாடலில் கூறுகின்றார். இறைவன் அடியார்களுக்கு அருள் புரியும் தன்மைகளை சம்பந்தரின் பதிகத்தின் மூலம் அறிந்து கொண்ட நாமும், திருமுல்லைவாயில் தலம் சென்று இறைவனை வணங்கி, சம்பந்தர் அருளிய இந்த பதிகத்தினை முறையாக பாடி இறைவனின் அருள் பெற்று வாழ்வினில் உய்வினை அடைவோமாக.