இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


துணிவளர்திங்கள்

துணிவளர்திங்கள்

பதிக எண்: 1.44 திரு பாச்சிலாச்சிராமம் தக்கராகம்

பின்னணி:

தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு தலம் சென்ற ஞானசம்பந்தர் அதன் பின்னர் அருகிலுள்ள பெரும்புலியூர், நெய்த்தானம், மழபாடி, கானூர், அன்பில் ஆலந்துறை, மாந்துறை ஆகிய பல காவிரி வடகரைத் தலங்கள் சென்று ஆங்கு உறையும் இறைவனைப் புகழ்ந்து பதிகங்கள் பாடிய ஞானசம்பந்தர், மற்றொரு காவிரி வடகரைத் தலமாகிய பாச்சிலாச்சிராமம் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். அப்போது அந்த நகரத்தினை கொல்லி மழவன் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனது ஒரே மகள், மென்மையான சொல்லையும் இளமான் போன்ற அழகிய உடலையும் கொண்டவளாக இருந்தாலும், முயலகன் (ஒரு வகையான வலிப்பு நோய்) என்ற நோயினால் பீடிக்கப்பட்டவளாக உள்ளத் தளர்ச்சி அடைந்தவளாக காணப்பட்டாள். அனைத்து விதமான வைத்தியங்கள் செய்த போதிலும் தனது பெண்ணின் நோய் தீர்க்க முடியாத நிலையில், மிகவும் வருத்தம் அடைந்த மன்னன் மழவன், வழிவழியாக, மான் கன்று பொருந்திய கையினை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் பற்றி வாழ்வதே தனது கொள்கையாகக் கொண்டிருந்த மழவ மன்னன், தனது பெண்ணை, திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்று பெருமானின் சன்னதியின் முன்பு கிடத்தி, பெருமானிடம் தனது பெண்ணின் நோயினைத் தீர்க்குமாறு வேண்டினான். இறைவனின் கடைக்கண் நோக்கினும் ஆற்றல் வாய்ந்த மருந்து வேறொன்றும் இல்லை என்ற எண்ணம் கொல்லி மழவனுக்கு இருந்தமையை நாம் இந்த செயல் மூலம் புரிந்து கொள்ளலாம். அவனது எண்ணம் நனவாக மாறும் வண்ணம் இறைவனின் திருவருள் கூடுகின்றது. அந்த சமயத்தில், அடியார்கள் பலரும் ஞானசம்பந்தரின் வருகையை அறிவிக்கும் வண்ணம் காளம் முதலான இசைக்கருவிகளை இசைத்து, இந்த தலத்தை நெருங்கினார்கள். இசைக் கருவிகள் மற்றும் அடியார்கள் எழுப்பிய கோஷங்கள் மூலம் ஞானசம்பந்தர் வருவதை அறிந்த கொல்லி மழவன், தனது பெண்ணினை இறைவனின் சன்னிதானத்தில் விட்டு விட்டு, திருஞான சம்பந்தர் தனது நகரத்திற்கு வருவதற்கு தான் என்ன பேறு செய்தேன் என்ற சிந்தனையுடன், நகரத்தை பலவகையிலும் அலங்கரித்து, பூரணகும்பம் கொண்டு ஞானசம்பந்தரை எதிர்கொண்டு வரவேற்றான். சம்பந்தர் அமர்ந்திருந்த முத்துச் சிவிகையின் முன்னே, தரையில் விழுந்து அவரைப் பணிய, சம்பந்தர் அவரை எழுமாறு பணித்தார். பின்னர் தொழுத கையுடன் எழுந்த கொல்லி மழவன் அவரை திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றான். திருக்கோயிலுக்கு சென்ற ஞானசம்பந்தர், கோயிலை வலம் வந்து இறைவனின் சன்னதிக்கு வந்தார். சன்னதியின் முன்னர், உணர்வேதும் இன்றி தரையில் கிடந்த பெண்ணினைக் கண்ட ஞானசம்பந்தர், அந்த பெண் யார் என்றும் ஏன் இவ்வாறு தரையில் கிடக்கின்றாள் என்று கேட்டார். அப்போது கொல்லி மழவன், அந்த பெண் தனது மகள் என்றும், அவள் தீர்ப்பதற்கு அரிய முயலகன் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஏதும் செய்ய இயலாத நிலையில் தான் தனது பெண்ணை இறைவனின் சன்னதியில் கிடத்தியதாகவும் கூறினான், உடனே ஞானசம்பந்தர், பாச்சிலாச்சிராமம் தலத்தில் உள்ள இறைவன், நஞ்சினைத் தனது கழுத்தினில் அடக்கி வானவர்களை கொடிய விடத்தின் தன்மையிலிருந்து காப்பாற்றிய பெருமான், ஒரு இளம் பெண் நோயினால் மயக்கம் அடைந்து வருந்தும்படி செய்யலாமா என்ற பொருள்பட அழகிய தமிழ்ப் பதிகத்தை பாடினார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். அழகிய மாலை அணிந்த கொல்லி மழவன் சொன்ன பதிலைக் கேட்ட ஞானசம்பந்தர், இறைவனைப் பணிந்து வணங்கி மங்கையை வாடச் செய்வது இறைவனுக்கு பெருமை சேர்க்கும் செயலா என்று கேள்வி கேட்பது போன்று அமைந்த பாடலை பாடினார் என்றும் சேக்கிழார் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலின் கடை அடி, மணிவளர் கண்டரோ மங்கையை வாட மையல் செய்வதோ இவர் மாண்பே என்று உள்ளது. இந்த அடியில் உள்ள சொற்களை, சேக்கிழார் கையாண்டுள்ளதை நாம் இந்த பெரியபுராணப் பாடலில் நாம் உணரலாம். கொல்லி மழவன் அளித்த பதிலைக் கேட்ட ஞான சம்பந்தர், அந்த பெண்ணின் நிலையைக் கண்டு திகைப்பும் வருத்தமும் அடைந்தவராக இறைவனின் திருமுன்பு செல்லாது அங்கேயே நின்று, இறைவனைப் பணிந்து பதிகம் பாடினார் என்று சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த செய்கை, ஞானசம்பந்தர் அந்த பெண்ணின் நிலை கண்டு எத்துணை இரக்கம் கொண்டவராக இருந்தார் என்பதை புலப்படுத்துகின்றது. அந்த பெண்ணின் நோய் எந்த விதத்திலும் தீர்க்க முடியாததாக இருந்தது என்பதை தணிவு இல் பிணி என்று சேக்கிழார் இங்கே கூறுகின்றார்.

அணிகிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும் கேட்டு

அந்நிலையில் நின்றே

பணி வளர் செஞ்சடைப் பாச்சில் மேய பரம்பொருள் ஆயினாரைப்

பணிந்து

மணிவளர் கண்டரோ மங்கையை வாட மையல் செய்வதோ இவர்

மாண்பு அது என்று

தணிவில் பிணி தவிர்க்கும் பதிகத் தண்டமிழ் பாடினார்

சண்பை நாதர்

இந்த பதிகத்தின் பாடல்கள். இறைவனின் பல அரிய பண்புகளை எடுத்துரைத்து, அத்தகைய பண்புகள் உடைய பெருமானின் பெருமைக்கு தகுந்த செயலா, மழவனின் மகளை வருத்துவது என்று ஞானசம்பந்தர் இறைவனை கேள்வி கேட்கும் வகையில், அமைந்துள்ளன. இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில், முயலகன் நோயினால் துன்பமடையும் பெண்ணின் தகுதியை குறிப்பிட்டு பெருமானின் கருணைக்கு அந்த பெண்மணி தகுந்தவள் என்று சம்பந்தர் உணர்த்துகின்றார். சடையாய் எனுமால் என்று தொடங்கும் திருமருகல் பதிகத்தின் (2.18) பாடல்களிலும், தனது காதலனை இழந்து வருந்தும் பெண்ணின் தகுதிகளை குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. ஞானசம்பந்தர் கேட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில், பெருமான் மழவன் மகளின் நோயினைத் தீர்த்தமையை நாம் பதிகத்தின் முடிவுரையில் காணலாம்.

இந்த தலம் திருச்சி சேலம் பாதையில், திருச்சியிலிருந்து பன்னிரண்டு கி,.மீ, தொலைவில் அமைந்துள்ள தலம். தற்போதைய பெயர் திருவாசி. சென்னை திருச்சி நெடுஞ்சாலையில், உத்தமர் கோயில் சந்திப்பிலிருந்து ஐந்து கி.மீ. மேற்கில் உள்ள தலம். திருச்சியைச் சார்ந்த சப்த ஸ்தானத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தலம். மற்றவை செந்துறை, பாலைத்துறை, பைஞ்ஞீலி, திருவானைக்கா, வேதிகுடி, வலந்துறை என்பன. பிரமன், உமையன்னை, இலக்குமி தேவி ஆகியோர் வழிபட்ட தலம். அறுபது அடி உயரம் கொண்ட அழகிய கோபுரம், இராஜ கோபுரத்தின் கீழே, நாம் நந்தியம்பெருமானை அவரது மனைவியுடன் காணலாம். இறைவனின் திருநாமம் மாற்றறி வரதர், மணிகண்டர், பிரமபுரீஸ்வரர், இறைவியின் திருநாமம், பால சௌந்தரி, பாலாம்பிகை; சுயம்பு இலிங்கம், உருத்திராக்கப் பந்தலின் கீழே அமைந்துள்ளது. திருஞான சம்பந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி, கொல்லி மழவப் பெண்ணின் நோயினைத் தீர்த்தும், சுந்தரர் வேண்டியதற்கு இணங்க பொற்காசுகள் கொடுத்தும் அருள் புரிந்த இறைவனுக்கு வரதர் என்ற பெயர் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. இந்த தலத்தில் உள்ள நடராஜப் பெருமான் சற்று வித்தியாசமாக காணப்படுகின்றார். பாம்பின் படத்தின் மீது காலை வைத்து நடனமாடும் கோலத்தில், சுற்றி சேர்த்துக் கட்டப்பட்ட சடையின் மேல் மகுடத்துடன், பெருமான் காணப்படுகின்றார். நடராஜப் பெருமானின் சன்னதியில் முயலகனை நாம் பெருமானை வணங்கி நிற்கும் நிலையில் காணலாம். அப்பர் பெருமான் இந்த தலத்தின் மீது அருளிய பதிகங்கள் ஏதும் கிடைக்கவில்லை. சுந்தரர் பாடிய ஒரு பதிகம் கிடைத்துள்ளது. இறைவனைப் புகழ்ந்து பாடிய சுந்தரர் பொற்காசுகள் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. முதல் கோபுரத்திற்கும் இரண்டாம் கோபுரத்திற்கும் இடையில் உள்ள மண்டபம் ஆவுடையாப் பிள்ளை மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மண்டபத்தில் ஞானசம்பந்தர் கொல்லி மழவனின் பெண்ணின் நோயினைத் தீர்த்த நிகழ்ச்சிகள் சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளன. ஆளுடையப் பிள்ளை என்பது திருஞான சம்பந்தரின் பெயர்களில் ஒன்று. ஆளுடையப் பிள்ளை மண்டபம் என்ற பெயர் நாளடைவில், ஆவுடையாப்பிள்ளை மண்டபம் என்று நாளடைவில் மருவியது போலூம். இந்த தலத்தில் உள்ள சுந்தரர் உருவச்சிலையின் இரண்டு கைகளிலும் நாம் தாளத்தை காணலாம். சூரியன் தனது மனைவி உஷாதேவியுடன் காட்சி தர, மற்ற கிரகங்கள் சூரியனைப் பார்த்த வண்ணம் இருப்பதை நாம் இந்த தலத்தில் காணலாம். அம்பிகை சன்னதி இறைவனைப் பார்த்த வண்ணம் மேற்கு திசை நோக்கி உள்ளது..

பாடல் 1:

துணி வளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச் சடை சுற்றி

முடித்துப்

பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆரிடமும் பலி தேர்வர்

அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து

உறைகின்ற

மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ

இவர் மாண்பே

விளக்கம்:

துளங்குதல்=அசைதல், நிலை கலங்கி வருத்துதல்; சுடர்ச்சடை=ஒளி மிளிரும் சடை; இந்த தலத்தில் உள்ள பெருமானின் சடை படர்ந்து இராமல், சுற்றி முடிக்கப்பட்ட நிலையில் காணப்படும், இதனை உணர்த்தும் முகமாக சடை சுற்றி முடித்து என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த நிலை, நமக்கு திருத்தினை நகரில் உள்ள நடராஜப் பெருமானை நமக்கு நினைவூட்டுகின்றது. பணி=பாம்புகள்; பணி வளர்=பாம்புகள் தங்கும்; கோலம் செய்தல்=அழகிய உடலும் அங்கங்களும் கொடுத்த இறைவன்; துணி=துண்டிக்கப்பட்ட, கீற்று; துணி என்பதற்கு ஒளி என்ற பொருளும் பொருந்தும். பெருமான் அருள் புரிந்து, தேய்ந்து அழிந்து விடும் நிலையில் சரணடைந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக் கொண்ட பின்னர், அழிவதற்கு மாறாக சந்திரன் நாளொரு கலையாக வளர்ந்த தன்மை குறிக்கப்படுகின்றது. பாரிடம்=பூத கணங்கள்; ஆரிடமும்=எல்லோரிடமும்; அணி வளர்=நாளுக்கு நாள் வளர்கின்ற அழகு; மணி வளர் கண்டர் என்று, ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கி, விடத்தின் தன்மையை மாற்றிய பெருமான் என்று குறிப்பிட்டு, கொடிய விடத்தின் தன்மையையே மாற்றிய பெருமானுக்கு, முயலக நோயினால் வருந்தும் பெண்ணின் வினையின் தன்மைகளை மாற்றுதல் மிகவும் எளிதான செயல் என்பதை குறிப்பிட்டு, அவ்வாறு செய்யாமல் இருக்கலாமா என்ற கேள்வியை ஞான சம்பந்தர் இங்கே எழுப்புகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் வரும் கடைச் சொல்லினை எதிர்மறை ஏகாரமாக கொண்டு பொருள் கொள்ள வேண்டும். அணிவளர் கோலம் எலாம் செய்து என்ற தொடரினை மங்கையை என்ற சொல்லுடன் இணைத்து, அழகிய உடலினை மழவன் மகளுக்கு தந்த பெருமான், அந்த மங்கையை முயலகன் நோயினால் வாடும் வண்ணம் செய்வது தகுமா என்று சம்பந்தர் கேட்பதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. மணிகண்டர் என்பது தலத்து இறைவனின் திருநாமங்களில் ஒன்று. பாற்கடலிலிருந்து பொங்கிய ஆலகால விடத்தைத் தனது கழுத்தினில் தேக்கியதன் விளைவாக, பெருமானின் கழுத்தினில் கருமை நிறம் போன்ற கறை ஏற்பட்டதால் பெருமானுக்கு நீலகண்டர், மணிகண்டர் என்ற பெயர்கள் வந்தன.

பொழிப்புரை:

முழு நிலவிலிருந்து துண்டிக்கப்பட்டது போன்று, தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் தன்னை வந்து சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்து ஒளியுடன் திகழ்ந்து வளரும் வண்ணம் தனது சடையில் ஏற்றுக்கொண்ட பெருமான், தனது சடையினை ஒன்றாக சேர்த்து முடித்த வண்ணம் பாச்சிலாச்சிராமம் தலத்தில் காணப்படுகின்றார். இத்தகைய பெருமான் பாம்புகளை தனது உடலின் பல பகுதிகளிலும் அணிவதைத் தனது கொள்கையாக உடையவராக, பூத கணங்கள் தன்னைப் பின் தொடர்ந்து வர, அனைத்து இடங்களுக்கும் சென்று, இன்னார் என்று கருதாமல் அனைவரிடமும் பலியேற்கின்றார். அழகிய தோற்றத்துடன் காட்சி அளிக்கும் பெருமான், ஆலகால விடத்தின் தன்மையை மாற்றி நீலமணி போன்று தனது கழுத்தினில் அணிந்து கொண்டுள்ள பெருமான், முயலகன் நோயால் வருந்தி தவிக்கும் கொல்லி மழவனின் பெண்ணை, அவளை வருத்தி வாட்டும் நோயினைத் தீர்க்காமல் வாடச் செய்வது அவரது பெருமைக்கு உகந்த செயல் அல்ல.

பாடல் 2:

கலை புனை மான் உரி தோலுடை ஆடை கனல் சுடரால் இவர்

கண்கள்

தலை அணி சென்னியர் தாரணி மார்பர் தம் அடிகள் இவர் என்ன

அலை புனல் பூம்பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து

உறைகின்ற

இலை புனை வேலரோ ஏழையை வாட இடர் செய்வதோ

இவர் ஈடோ

விளக்கம்:

தார்=மாலை; ஈடு=உயர்வு, பெருமை; ஏழை=பெண்மணி; பொதுவாக ஆண்களுடன் ஒப்பிடும்போது உடல் வலிமையில் குறைந்தவர்களாக பெண்கள் இருக்கும் தன்மையால், பெண்களை ஏழை என்று குறிப்பிடுவது இலக்கிய மரபு. கனல் சுடராம் இவர் கண்கள்; சூரியன், சந்திரன் மற்றும் அக்னி பெருமானின் மூன்று கண்களாகத் திகழும் தன்மை இந்த தொடரால் குறிப்பிடப் படுகின்றது. மானுரி=மான் தோல்; மான் தோல் என்று குறிப்பிட்ட ஞானசம்பந்தர், மீண்டும் தோலாடை என்று கூறியுள்ளதால், தோல் என்ற சொல்லுக்கு யானையின் தோல் மற்றும் புலியின் தோல் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இறைவனின் மூன்று கண்களை சூரியன் சந்திரன் மற்றும் அக்னிக்கு ஒப்பிட்டு அற்புதத் திருவந்தாதி பதிகத்தில் ஒரு காரைக்கால் அம்மையார் ஒரு பாடலை இயற்றியுள்ளார். விண்டார்கள்=பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்கள்; கலை=அழகு;

நெடிதாய பொங்கு எரியும் தண் மதியும் நேரே

கடிதாம் கடும் சுடரும் போலும் — கொடிதாக

விண்டார்கள் மும்மதிலும் வெம் தீயினில் அழியக்

கண்டு ஆலும் முக்கண்ணான் கண்

இந்த பாடலில் தலை அணி சென்னியர் என்று பெருமான் தலைமாலை அணிந்துள்ள நிலை குறிப்பிடப்படுகின்றது. பெருமான் தனது மார்பில் தலைமாலை அணிவது போன்று தலையிலும் தலைமாலை அணிவது பற்றி பல குறிப்புகள் தேவாரப் பாடல்களில் காணப்படுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். ஊழிக்காலத்தில், அனைத்து உடல்களிலும் உயிர்கள் பிரிந்த நிலையில், ஊழியையும் கடந்தவனாக தான் ஒருவனே இருப்பதை உணர்த்தும் வண்ணம், ஊழியில் இறந்து பட்ட பிரமன், திருமால் ஆகியோரின் தலைகளை தலை மாலையாக பெருமான் இருக்கும் நிலை நமக்கு உணர்த்தப் படுகின்றது. தாருக வனத்து முனிவர்கள் அபிசார ஹோமம் நடத்தி, அதனின்று எழுப்பி ஏவிய நகுதலை என்றும் பொருள் கொள்ளலாம்.

திருப்பாம்புரம் தலத்தின் அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.41.5) திருஞானசம்பந்தர், நகுதலை மாலை அணிந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மனிதர்கள் அனைவரும் தங்களது உடல் நிலையானது என்ற எண்ணத்துடன் இருப்பதைக் கண்டு அந்த தலைகள் சிரிப்பதாக ஞானசம்பந்தர் கற்பனை செய்வதாக அழகான விளக்கம் ஒன்றினை திரு தண்டபாணி தேசிகர் அளிக்கின்றார். கதியதுவாக=நடன கதி அதுவாக; கான்=சுடுகாடு, ஓத்து ஒலி=வேதங்களின் ஒலி; ஓவா=நீங்காத; பாம்புர நகரத்து வேதியர்கள் முறையாக வேள்விகள் செய்தனர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

நதியதன் அயலே நகுதலை மாலை நாண் மதி சடை மிசை அணிந்து

கதி அதுவாகக் காளி முன் காண கானிடை நடம் செய்த கருத்தர்

விதியது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்தொலி ஓவாப்

பதி அதுவாகப் பாவையும் தாமும் பாம்புர நன்னகராரே

திருநள்ளாறு மற்றும் திருவாலவாய் ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்து பாடப்பட்ட பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.07.03), திருஞானசம்பந்தர் வெண்தலை மாலை தாங்கிய வேந்தன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மண்டையோட்டில் இரத்தப் பசையுடன் இருந்த தசைகள் உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்பட்ட தலைகள் என்று இங்கே குறிப்பிடுகின்றார். தண்ணறு மத்தம்=குளிர்ந்த நறுமணம் உடைய ஊமத்தை மலர்; கூவிளம்=வில்வம்; நண்ணுதல்=நெருங்குதல்; நண்ணலரிய=இறைவனின் திருவருள் இல்லாமல் எவரும் அணுக முடியாத;

தண்ணறு மத்தமும் கூவிளமும் வெண்டலை மாலையும் தாங்கி

யார்க்கும்

நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என் கொல்

சொல்லாய்

புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்து உடன் ஏத்தப் புனை

இழையார்

அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின் கண்

அமர்ந்தவாறே

மற்ற மாலைகளுடன் கலந்து வெண்தலை மாலையையும் பெருமான் பூண்டு கொண்டதாக, ஆவூர் பசுபதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.8.8) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். விறல்=வலிமை; பண்டு=பழமையான நாட்கள்; அனுதினமும் போகம் அனுபவிப்பதில் மிகுந்த நாட்டம் உடையவனாகத் திகழ்ந்தவன் அரக்கன் இராவணன் என்பதால், அன்று அலர்ந்த புதிய மலர்களைத் தனது சடையில் சூட்டிக் கொண்ட இராவணன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். மைந்தர்=வலிமை மிகுந்தவர்; சிந்தைக் கருத்து=இடைவிடாத சிந்தனையால் எழுந்த கருத்து; இறைவனின் செருக்கினை அழித்து, அவனது வலிமையைக் குறைத்த பெருமான், பின்னர் அவன் இறைஞ்சி வணங்கிய போது, அவனுக்கு பலவகைகளிலும் அருள் புரிந்ததைப் போன்று, இடைவிடாத சிந்தனையுடன் தன்னை வணங்கும் அடியார்களின் வினைகளைக் கழித்து அருள் புரிபவர் பெருமான் என்ற கருத்து இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

வெண்டலை மாலை விரவிப் பூண்ட மெய்யுடையார்

விறல் அரக்கன்

வண்டமர் பூமுடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி

எங்கும்

கண்டவர் சிந்தைக் கருத்தின் மிக்கார் கதி அருள் என்று கையாரக்

கூப்பிப்

பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர்ப் பசுபதீச்சரம் பாடு நாவே

மிகுந்த விருப்பத்துடன் வெண்தலைமாலையை பெருமான் அணிந்து கொள்வதாக, சீர்காழி நகரின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.81.2) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வண்= வளம் நிறைந்த; இதழி=கொன்றை மலர்; மாசுணம்=பாம்பு; களி வண்டு=தேனைக் குடித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் திரியும் வண்டுகள்; யாழ் செய்தல்=யாழின் இசை போன்று இனிமையாக முரலுதல்;

துளி வண் தேன் பாயும் இதழி தூமத்தம்

தெளி வெண் திங்கள் மாசுண நீர் திகழ் சென்னி

ஒளி வெண்தலை மாலை உகந்தான் ஊர் போலும்

களி வண்டு யாழ் செய்யும் காழி நகர் தானே .

பாண்டிநாட்டுத் தலங்களில் ஒன்றான திருப்பூவணம் அப்பர் பிரான் சென்ற போது, பெருமான் அவருக்கு தனது நடனக் கோலத்தையும் பல விதமான கோலங்களையும் காட்டினார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். அந்த கோலங்களில் ஒன்று தான் தலைக்குத் தலைமாலை அணிந்த கோலம். படை மலிந்த=படைகளில் சிறந்த; நடை மலிந்த=விரைந்து செல்லக் கூடிய; நயனம்=கண். நெற்றியில் கண் கொண்டு மற்றவர்களின் கண்ணினின்று வேறுபட்டு காணப்படுவதால், நயனம் என்று சிறப்பாக உணர்த்தப்பட்டுள்ளது. மூரல்=நகைப்பு; உலர்ந்த வெண்தலையில் காணப்படும் பற்கள், சிரிக்கும் நிலையினை உணர்த்துவதால் மூரல் வெண் சிரமாலை என்று கூறப்பட்டுள்ளது. சிவபெருமானின் அருகில் இருப்பதால் பூதகணங்கள் மிகவும் மகிழ்ச்சியாக பொலிந்து காணப்படுவதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.

படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கையுடைய

பிள்ளை தோன்றும்

நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி

தோன்றும் நயனம் தோன்றும்

உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும் மூரல் வெண் சிரமாலை

உலாவித் தோன்றும்

புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும்

பூவணத்தெம் புனிதனார்க்கே

உடலிலிருந்து பிரிக்கப்பட்டு உலர்ந்து வெண்மையாக காணப்படும் தலை என்றாலே பொதுவாக எவருக்கும் அருவருப்பு ஏற்படும். அனால், பெருமான் தலைமாலை அணிந்திருந்தாலும், அந்த மாலை பெருமானுக்கு மேலும் அழகு சேர்ப்பதாகவே அமைந்துள்ளது என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்பது பொருத்தமாகும். சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.85.2), அப்பர் பிரான் இவ்வாறு கூறுகின்றார். தொண்டு= தொண்டர்கள், அடியார்கள்: குரைசேர் கழல்=சிலம்புகள் அணிந்ததால் ஒலி எழுப்பும் பாதங்கள். புதுமலர்களாக காணப்படுவதால் வண்டுகள் தங்கும் தன்மை படைத்த கொன்றை மாலையினையும், வன்னி, ஊமத்தை மலர்களோடு, ஒளி வீசும் பாம்பினையும் தனது சடையில் அணிந்து காணப்படுபவர் சிவபெருமான் ஆவார். சிலம்புகள் ஒலியெழுப்பும் அவரது திருவடிகளை அடியவர்கள் வணங்குகின்றார்கள். அத்தகைய பெருமை வாய்ந்த சிவபெருமான் சோற்றுத்துறை தலத்தில் உறைகின்றார். நீண்டு அழகாக காணப்படும் அவரது சடையில் உள்ள வெண்தலை மாலை சிவபெருமானுக்கு மேலும் அழகினைச் சேர்க்கின்றது என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

வண்டணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவும்

கொண்டு அணைந்தேறு முடி உடையான் குரை சேர் கழற்கே

தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார்

சடை மேல்

வெண்டலை மாலை அன்றோ எம் பிரானுக்கு அழகியதே

நாமார்க்கும் என்று தொடங்கும் ஒரு பொது பதிகத்தின் பாடலில் (6.98.5) இறந்தவர்களின் தலைகளை மாலையாக அணிந்த பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பாடல் அப்பர் பிரான் தனது வாழ்வினில் இரண்டாவதாக பாடிய பதிகம் ஆகும். இந்த பதிகத்தில் அவர் தனது கொள்கை யாது என்று தெளிவுபடுத்துவதை காணலாம். பெருமானைத் தவிர்த்து வேறு எவருக்கும் கீழ்ப்படியேன் என்றும், பெருமானைப் பணிவதால் தனக்கு எதிரிகள் எவரும் இல்லை என்றும், பெருமானின் திருவடிகளை தான் சென்றடைந்து சேர்ந்ததாகவும், வேறு எந்த சிறு தெய்வத்தையும் தொழேன் என்றும், தனக்கு எந்தவிதமான குறையும் இல்லை என்றும் அப்பர் பிரான் முழங்குவதை நாம் உணரலாம். இடைதல்=கீழ்ப்படிதல்: செறல்=வருத்துதல்: பிணியார் என்று தன்னை வருத்திய சூலை நோயினை இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற ஆர் என்ற மரியாதை விகுதி கொடுத்து குறிப்பிடுகின்றார். பொன்றினார் என்றால் இறந்தவர்கள் என்று பொருள். ஊழிக்காலத்தில் அனைத்து உடல்களும் இறந்து அனைத்து உயிர்களும் ஒடுங்கிய பின்னரும், அழியாமல் எஞ்சி நிற்பது சிவபெருமான் ஒருவன் தானே. இதனை உணர்த்தும் விதமாக ஸ்தாணு (நிலையானவன்) என்று அவன் அழைக்கப் படுகின்றான். இந்த வடமொழிச் சொல் தாணு என்ற பல திருமுறைப் பாடல்களில் கையாளப் பட்டுள்ளது.

என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம் இருநிலத்தில்

எமக்கு எதிரா ஆரும் இல்லை

சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம் சிவபெருமான்

திருவடியே சேரப் பெற்றோம்

ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே உறுபிணியார்

செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்

பொன்றினார் தலைமாலை அணிந்த சென்னிப் புண்ணியனை நண்ணிய

புண்ணியத்து உளோமே

அஞ்சைக்களத்து அப்பனைக் குறித்து பாடிய பதிகத்தின் பாடலில் (7.4.1) சுந்தரர் இறைவனை, தலைக்கு தலைமாலை அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். இந்த தலம் பண்டைய நாளில் மகோதை என்று அழைக்கப்பட்டது. அஞ்சைக்களம் என்பது திருக்கோயிலின் பெயர். கதம்=சினம்; கதநாகம்=சினம் கொண்டு படமெடுத்தாடும் நாகம்; அலைக்கும் புலி=கொல்லும் தன்மை கொண்ட புலி; திரை=அலைகள்; என்னே என்று பெருமானின் பல செயல்களுக்கு காரணம் யாது என்று சுந்தரர் பெருமானை நோக்கி கேட்கின்றார்.

தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே சடை மேல் கங்கை

வெள்ளம் தரித்தது என்னே

அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னனே அதன் மேல்

கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே

மலைக்குந் நிகர் ஒப்பன வன்திரைகள் வலித்து எற்றி முழங்கி

வலம்புரி கொண்டு

அலைக்கும் கடல் அங்கரை மேல் மகோதை அணியார் பொழில்

அஞ்சைக்களத்து அப்பனே

முடிப்பது கங்கையும் என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (7.44.4) சுந்தரர், சிவபெருமானின் தோற்றம் இகழத்தக்கது போல் தோன்றினாலும், அந்த தோற்றத்தின் உண்மை நிலையை புரிந்து கொண்டு, என்றும் அவனை விட்டு பிரியாது வணங்குவீர்களாக என்று கூறுகின்றார். ஓரி என்ற சொல்லும் நரியையே குறிக்கும். ஊழிக் காலத்தில் அனைத்து உடல்களில் இருந்தும் உயிர்கள் பிரிக்கப்பட்டு உலகமே சுடுகாடாக காட்சியளிக்கும் நிலையில் நடனமாடும் இறைவன், சுடுகாட்டினைத் தனது நடன அரங்காக தேர்ந்து எடுப்பதில் வியப்பேதும் இல்லை. இதன் மூலம் தான் ஒருவனே என்றும் அழியாது இருப்பவன் என்பதை நமக்கு பெருமான் நினைவூட்டுகின்றார். சுடுகாடு என்பதால் நரிகளும் பேய்களும் உலவுவது இயற்கை தானே. ஊழிக்காலத்தில் இறந்து பட்ட உடல்களின் தலையினை மாலையாக அணிந்து கொள்வதும், அவரைத் தவிர்த்து அனைவரும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியவர்கள் என்பதை நினைவூட்டவே. வாய் பிளந்த நிலையில் உள்ள அந்த தலைகள் சிரிதலை என்று கூறுகின்றார்.

நரி தலை கவ்வ நின்று ஓரி கூப்பிட நள்ளிருள்

எரிதலைப் பேய் புடை சூழ வாரிருள் காட்டிடைச்

சிரி தலை மாலை சடைக்கணிந்த எம் செல்வனைப்

பிரிதலைப் பேசன்மின் தொண்டர்காள் எம் பிரானையே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (7.57.1) தலைகளை அணிகலனாக அணிந்த பெருமான் என்று சுந்தரர் கூறுகின்றார். கலன்=அணிகலன்; யானை பொதுவாக சாந்த குணம் உடைய விலங்கு. ஆனால் மதவெறி பிடித்த யானை எவரது கட்டுக்கடங்காமல் ஓடுவதன்றியும் எதிர்பட்டவரை தனது துதிக்கையால் பற்றி வீசி எரிந்து கொல்லும் தன்மை உடையதாக இருப்பதால், கொலைக்கை யானை என்று குறிப்பிடுகின்றார். குரை=ஒலிக்கும்; குரை சேர் கழல்=ஒலிக்கும் தன்மை கொண்ட கழல்கள் அணிந்த திருப்பாதங்கள், அலைத்த=எதிர்ப்பவரை வருத்தும்; சிவபெருமான் வேதியராக வந்து தன்னை ஆட்கொண்டதை, சுந்தரர் பெருமானின் ஆணையாக கருதுகின்றார். .

தலைக் கலன் தலைமேல் தரித்தானைத் தன்னை என்னை

நினைக்கத் தருவானைக்

கொலைக் கை யானை உரி போர்த்து உகந்தானைக் கூற்று உதைத்த

குரை சேர் கழலானை

அளித்த செங்கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன்

அடி நாயேன்

மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை

மறந்து என் நினைக்கேனே

சுந்தரரின் மேற்கண்ட பாடல், நமக்கு அப்பர் பிரான் அருளிய அங்கமாலை பதிகத்தின் முதல் பாடலை (4.09.01) நினைவூட்டுகின்றது. தலைமாலை தலைக்கு அணிந்தவன் என்ற தொடர் மூலம், சிவபெருமான் ஒருவனே என்றும் அழியாமல் இருப்பவன் என்ற செய்தி உணர்த்தப்படுகின்றது. நமது தலை செய்யவேண்டிய செயல் யாது என்பதை உணர்த்தும் அங்கமலைப் பதிகத்தின் மற்ற பாடல்கள், நமது உடலின் பல்வேறு அங்கங்கள் எவ்வாறு இறைவனைப் பணிந்து வணங்குவதில் ஈடுபட முடியும் என்பதை அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இந்த பதிகத்தினை, பெருமானை தரிசனம் செய்து வணங்கிய பின்னர், திருக்கோயிலை வலம் வரும் போது பாடவேண்டிய பதிகம்

தலையே நீ வணங்காய் – தலை

மாலை தலைக்கணிந்து

தலையாலே பலி தேரும் தலைவனைத்

தலையே நீ வணங்காய்

பொழிப்புரை:

அழகான கொம்புகளை உடைய மானின் உரித்த தோலை மேலாடையாகவும், யானை மற்றும் புலி ஆகிய விலங்குகளின் தோலை இடையினில் உடுத்த ஆடையாகவும் அணிந்து கொள்ளும் பெருமானின் மூன்று கண்களும் சூரியன், சந்திரன் அக்னியாக சுடர் விட்டு பிரகாசிக்கின்றன. அவர் தனக்கு தலைமாலையை அணிகலனாகவும் நறுமணம் வீசும் பூமாலையினை மார்பினிலும் அணிந்துள்ளார். அனைத்து உயிர்களும் தங்களது தலைவர் என்று அவரை கொண்டாடுகின்றன. அவரே நீர்வளம் நிரம்பிய சோலைகளால் சூழப்பட்ட பாச்சிலாச்சிராமம் தலத்தினில் உறைகின்றார். இலையின் வடிவத்தில் கூர்மையான முனைகளைக் கொண்டுள்ள வேலினை ஏந்திய இறைவர், மழவன் மகளை வாடச் செய்வது அவரது பெருமைக்கு தகுந்த செயல் அல்ல.

பாடல் 3:

வெஞ்சுடர் ஆடுவர் துஞ்சிருள் மாலை வேண்டுவர் பூண்பது

வெண்ணூல்

நஞ்சடை கண்டர் நெஞ்சு இடமாக நண்ணுவர் நம்மை நயந்து

மஞ்சடை மாளிகை சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர்

சீரே

விளக்கம்:

வெஞ்சுடர்=வெம்மையை விளைவிக்கும் தீ, கொழுந்து விட்டெரியும் தீ; பிரளய காலத்துத் தீ; பைந்தொடி=பசுமையான பொன் ஆபரணங்களை அணிந்த பெண்; துஞ்சிருள்=உலகத்தை இருளில் ஆழ்த்திய இருளில் கிடைக்கும் மாலை; ஊழிக்காலத்தில் உலகத்து பொருட்கள் அனைத்தும் அழிந்த நிலையில், இறந்த உடல்கள் தானே மாலையாக அணிந்து கொள்ள கிடைக்கும். சிதைத்தல் என்றால் பொதுவாக, அழித்தல் கெடுத்தல் என்ற பொருளில் வரும், இங்கே கொடிய துன்பம் கொடுத்து வருத்துதல் என்று பொருள் கொள்ளவேண்டும். சிதை என்றால் இறந்த உடல்கள் கிடத்தப் படுவதற்காக, சுடுகாட்டினில் அடுக்கப்படும் விறகுக்கட்டைகள் கொண்ட படுக்கை. எரியும் சிதையில் கிடத்தப்பட்ட உடல் அடையும் துன்பம் போன்று கொடிய துன்பத்தை அனுபவிக்கும் மழவன் மகள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நம்மை என்று அடியார்களை குறிப்பிட்டு, தானே விரும்பி சென்று, அடியார்களின் உள்ளத்தில் அமரும் பெருமானின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. தானே வந்து எம்மை ஆட்கொண்டருளும் பெருமான் என்று விவரிக்கும் திருவெம்பாவை பாடல் நமது நினைவுக்கு வருகின்றது.

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை நானே எழுப்புவன்

என்றாலும் நாணாமே

போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே

பிறவே அறிவரியான்

தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான் வார்

கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்

ஊனேஉருகாய் உனக்கே உறுமெமக்கும் ஏனோர்க்கும் தங்கோனைப்

பாடலோரெம்பாவாய்

தங்களது மனம் விரும்புவது போன்று தங்கமான கணவன் அமையவேண்டும் என்ற நோக்கத்துடன் மார்கழி நோன்பு நோற்கும் பெண்கள் தங்களது தோழியர்களின் இல்லங்களுக்கு சென்று, அவர்களையும் அழைத்துக்கொண்டு நீராடச் செல்வதாக திருவெம்பாவை பதிகத்தின் முதல் எட்டு பாடல்கள் அமைந்துள்ளன. அத்தகைய பாடல் ஒன்று தான் இங்கே கொடுக்கப் பட்டுள்ள பாடல். முந்தைய நாள், தாங்கள் அடுத்த நாளில் செய்யவேண்டிய செயல்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, ஒரு தோழி, தான் அடுத்த நாளில் அனைவர்க்கும் முன்னே எழுந்து அனைவரையும் எழுப்புவேன் என்று பேசினாள் போலும். ஆனால் அவ்வாறு பேசியவள், தனது சொல்லினை செயல்படுத்தாமல் இருந்த நிலையைக் கண்ட இருந்த மற்ற தோழிகள், அவளைப் பரிகாசம் செய்கின்றனர். நேற்று நீ பேசிய பேச்சு காற்றில் எந்த திசையில் பறந்து சென்றது என்று கேள்வி கேட்டவாறு, நாணமே இல்லாமல் இன்னும் உறங்குகின்றாயே என்றும் கேட்கின்றனர். வானுலகில் உள்ளோரும் மண்ணுலகில் உள்ளோரும் ஏனையோரும் அறிய முடியாத இறைவன், நம் பால் மேலான கருணை கொண்டு, தானே முன்வந்து அருள் புரிகின்ற கருணைச் செயலை நினைத்து அவனது உயர்ந்த திருவடிகளின் பெருமையை பாடிக் கொண்டு வந்துள்ள எங்களுக்கு பதில் கூறும் வண்ணம், நீ உனது உறக்கத்திலிருந்து எழுந்திருந்து விடை அளிப்பாய் என்று சொல்லும் தோழிகள் வேறொரு கேள்வியையும் எழுப்புகின்றனர். பெருமானின் புகழினை நாங்கள் பாடுவதைக் கேட்ட பின்னரும் நீ உடலும் உள்ளமும் உருகாமல், உறங்கிக் கொண்டு இருப்பது பொருந்துமா என்றும் கேட்டு, அவளையும் எழுப்பி நீராடுவதற்கு அழைத்துச் செல்லும் விதமாக அமைந்துள்ள பாடல்.

பொழிப்புரை:

ஊழித்தீயின் நடுவே நின்ற வண்ணம் விருப்பத்துடன் நடனம் ஆடும் பெருமான், ஊழிக்காலத்தில் இறந்தவர்களின் தலைகளை மாலையாக விரும்பி அணிந்து கொள்கின்றார். தனது மார்பினில் வெண்ணூல் பூண்டவராகவும், கழுத்தினில் ஆலகால விடத்தினைத் தேக்கியதால் கருமை நிறத்து கறையினை உடையவராகவும் விளங்கும் பெருமான், அன்புடன் தன்னை நினைக்கும் அடியார்களின் நெஞ்சத்தை தனது இருப்பிடமாகக் கொள்கின்றார். மேகங்களை தொடும் வண்ணம் உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த பாச்சிலாச்சிராமம் தலத்தில் உறைகின்றவரும். செஞ்சடை அணிந்தவரும் ஆகிய பெருமான், பசுமையான பொன் ஆபரணங்களை அணிந்த மழவன் மகளை வருத்துவது அவரது புகழுக்கு தகுந்த செய்கை அல்ல.

பாடல் 4:

கன மலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் கனல் தரு தூமதிக்

கண்ணி

புன மலர் மாலை அணிந்து அழகாய புனிதர் கொலாம் இவர்

என்ன

வன மலி வண்பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

மன மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர்

மாண்பே

விளக்கம்:

மனமலி=எண்ணத்துள் நிறைந்து நிற்கும்; மைந்தர்=வலிமை உடையவர்; கனம்=மேகம்; மேகத்திற்கு கார் என்ற பெயரும் பொருந்தும். கார் காலத்தில் அதிகமாக பூக்கும் கொன்றை மலர்கள் என்பதை உணர்த்த, கார் மலர்க் கொன்றை என்று குறிப்பிடுகின்றார். அலங்கல்=மாலை; இலங்க=விளங்க; கனல் தரு தூமதி என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பொதுவாக குளிர்ச்சியைத் தருகின்ற சந்திரனை கனல் தரு சந்திரன் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு வியப்பினை அளிக்கலாம். தலைவனும் தலைவியும் இணைந்திருக்கும் போது அவர்களுக்கு இன்பம் தரும் சந்திரனின் கதிர்கள், அவர்கள் பிரிந்திருக்கும் தருணங்களில் அவர்களது பிரிவுத்துயரினை மேலும் அதிகரிக்கும் வண்ணம் அவர்களது துணையினை அவர்களுக்கு நினவூட்டுவதால், சந்திரனின் கதிர்கள் வெம்மை அளிப்பதாக கருதப்படுகின்றன என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதே பாணியினை பின்பற்றி, தலைவனைப் பிரிந்த தலைவிக்கு வெம்மை விளைவிக்கும் கதிர்கள் வீசும் சந்திரன் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். சிவபெருமான் தனது சடையினில் சூட்டிக் கொண்டமையால், சந்திரன் தூய்மை அடைந்ததால் தூமதி என்று கூறுகின்றார். புலன்=நிலம்

பொழிப்புரை:

கார் காலத்தில் அதிகமாக பூக்கும் கொன்றை மலர் மாலைகளை, தனது திருமேனியில் பொருத்தி அணிந்துள்ள பெருமான், தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரத்தினை அதிகரிக்கும் வண்ணம் வெம்மையான கதிர்களை வீசும் பிறைச் சந்திரனைத் தனது தலை மாலையாக அணிந்த பெருமான், அருகிலுள்ள வயல்களில் காணப்படும் எருக்கு ஊமத்தை ஆகிய அழகிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையினையும் அணிந்த புனிதராக காட்சி தருகின்றார். இவர் அழகும் செழுமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்று வனப்புடன் விளங்கும் மலர்கள் கொண்ட சோலைகளால் சூழப்பட்ட பாச்சிலாச்சிரமாம் தலத்தில் உறைகின்றார். அடியார்களின் எண்ணங்களில் நிறைந்து நிற்கும் பெருமான், மழவன் மகளை வாட்டி மயக்கம் கொள்ளச் செய்வது அவரது மாட்சிமைக்கு பொருந்தும் செயல் அல்ல.

பாடல் 5:

மாந்தர் தம் பால் நறு நெய் மகிழ்ந்தாடி வளர்சடை மேல் புனல்

வைத்து

மோந்தை முழாக் குழல் தாளமொர் வீணை முதிர ஓர் வாய்மூரி

பாடி

ஆந்தை விழிச் சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர் செய்வதோ இவர்

சார்வோ

விளக்கம்:

வாய்மூரி=இசையில் ஒரு வகை; கங்கை நதியினைத் தனது தலையில் வைத்துள்ள பெருமான், பெண்ணாகிய மழவன் மகள் பால் இரக்கம் கொள்ளாது இருப்பது தவறு அல்லவா என்று நயமாக உள்ளது. சதுர்=சதுரப்பாடு, சாமர்த்தியம்;

பொழிப்புரை:

மண்ணுலகில் வாழும் அடியார்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன், பாலும் நெய்யும் கொண்டு பெருமானை நீராட்டி வழிபடுகின்றனர். இந்த பெருமான், தனது நீண்டு வளர்ந்த சடையினில் கங்கை நதியினை தேக்கி வைத்தவராக, மோந்தை முழா குழல் தாளம் வீணை முதலிய இசைக் கருவிகள் முழங்க வாய்மூரி முதலான பல பண்களில் பாடல்கள் பாடும் பூத கணங்கள், ஆந்தை போன்று சிறிய கண்களை உடைய பூத கணங்கள் சூழ்ந்தவராக விளங்கும் பெருமான், பாச்சிலாச்சிராமம் தலத்தினில் உறைகின்றார். திருநீற்றினை, சந்தனக் கலவையாகத் தனது மார்பினில் பூசியுள்ள பெருமான், மழவன் மகளாகிய தையலை வாடும் வண்ணம் வருத்துவது இவரது சதுரப்பாட்டு தன்மைக்கு பெருமை சேர்ப்பது அல்ல..

பாடல் 6:

நீறு மெய் பூசி நிறைசடை தாழ நெற்றிக் கண்ணால் உற்று நோக்கி

ஆறு அது சூடி ஆடரவாட்டி ஐவிரல் கோவண ஆடை

பாறரு மேனியர் பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

ஏறது ஏறியர் ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே

விளக்கம்:

ஐவிரல் கோவண ஆடை=ஐந்து விரல்களின் அகலமே கொண்டுள்ள, அகலம் குறைந்த கோவணம்; ஈடு=பெருமை; இந்த பாடலில் நெற்றிக் கண்ணால் மன்மதனை உற்று நோக்கினார் பெருமான் என்று சொல்லப் படுகின்றது. அவ்வாறு நோக்கிய போது மன்மதனின் உடல் முற்றிலும் அழிந்து சாம்பலாக மாறியது. அவனது மனைவியாகிய இரதி தேவி பெருமானிடம் மன்மதனை உயிர்பிக்குமாறு வேண்ட, பெருமான் இரதி தேவியின் கண்களுக்கு மட்டும் காட்சி தரும் மன்மதன், ஏனையோருக்கு உடலற்றவனாக இருந்து கொண்டு தனது செயலைத் தொடர்ந்து செய்வான் என்று பெருமான் வரம் அளிக்கின்றார். மன்மதனை தனது நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி அவனது உடலினை எரித்த பெருமான் பின்னர் அவனது மனைவி இரதி தேவியின் தன்மைக்கு இரங்கி, அவளுக்காக பரிந்து மன்மதனுக்கு உயிர் அளித்தான் என்று பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.43.6) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆர்த்தல்= இடுப்பினில் இறுக கட்டுதல்; தானம்=இருப்பிடம்; தாமரைப் பூவினை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள பிரமன்; பதைத்தல்=நடுங்குதல்; இரதி தேவிக்கு பரிந்த பெருமான், மழவன் மகளுக்கு பரிந்து உதவாமல் இருப்பது தகுமா என்று சம்பந்தர் கேள்வி கேட்கின்றார்.

ஆர்த்தானை வாசுகியை அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை

அழகாய பொன்னார் மேனிப்

பூத்தானத்தான் முடியைப் பொருந்தா வண்ணம் புணர்ந்தானைப்

பூங்கணையான் உடலம்

பார்த்தானைப் பரிந்தானைப் பனி நீர் கங்கை படர் சடை மேல்

பயின்றானைப் பதைப்ப யானை

போர்த்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப்

பூந்துருத்திக் கண்டேன் நானே

தோணிபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.100.01) ஞானசம்பந்தர் இரதி தேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் உயிர்த்தெழச் செய்ததை குறிப்பிடுகின்றார். கரும்பமர் வில்லி=கரும்பினைத் தனது வில்லாகக் கொண்ட மன்மதன்; காய்ந்து=கோபித்து; காதல் காரிகை=மன்மதனின் காதலுக்கு உரிய மங்கை இரதி தேவி; இந்த பாடல் தலைவியின் கூற்றாக அமைந்துள்ள அகத்துறை பாடல்.

கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதல் காரிகை மாட்டருளி

அரும்பமர் கொங்கை ஓர் பால் மகிழ்ந்த அற்புதம் செப்பரிதால்

பெரும்பகலே வந்தென் பெண்மை கொண்டு பேர்த்தவர்

சேர்ந்த இடம்

சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே

மேற்குறிப்பிட்ட தகவல் வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (1.82.5) குறிப்பிடப் படுகின்றது. பெண்ணுக்கு அருள் செய்த பெருமான் என்று இங்கே குறிப்பிடுகின்றார். புயல்=மேகம்; மண்ணுலகத்தில் செய்யப்படும் வேள்விகள் வானில் மேகங்களை தோற்றுவிக்கும் என்று இந்த பாடலில் குறிப்பிடப் படுவதை நாம் உணரலாம்.

கண்ணில் கனலாலே காமன் பொடியாகப்

பெண்ணுக்கு அருள் செய்த பெருமான் உரை கோயில்

மண்ணில் பெருவேள்வி வளர்த்த புகை நாளும்

விண்ணில் புயல் காட்டும் வீழிமிழலையே

காமனை அழித்த பெருமான், பின்பு இரதி தேவி சென்று வேண்ட மன்மதனை உயிர்ப்பித்த பெருமான், மன்மதன் அவனது மனைவியின் கண்ணுக்கு மட்டும் தெரியும் வண்ணம், உடலற்றவனாக (அனங்கனாக) வாழும் வண்ணம் வரமளித்தான் என்ற செய்தி உணர்த்தப்படும் மற்றொரு ஞானசம்பந்தரின் பாடல் (3.60.09). திருவக்கரை தலத்தின் மீது அருளப்பட்ட பாடல், இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஈடு=வலிமையான உடல்; ஈடு என்பதற்கு பெருமை என்று பொருள் கொண்டு, அன்றுவரை தனது முயற்சியில் தோல்வி அடையாமல் இருந்து வந்த மன்மதன், சிவபெருமானின் தவத்தை கலைக்க முயற்சி செய்தபோது தோல்வியடைந்து தனது பெருமையை இழந்தான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. சேமம் க்ஷேமம் என்ற வடமொழி சொல்லின் திரிபு; நன்மை என்று பொருள்;

காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்பச்

சேமமே உன்றனுக்கு என்று அருள் செய்தவன் தேவர் பிரான்

சாம வெண் தாமரை மேல் அயனும் தரணி அளந்த

வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே

மன்மதனின் கொடியில் அன்னத்தின் சின்னம் பதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் பாடல் ஒன்றினில் இரதி தேவிக்காக அருள் புரிந்து மன்மதனை பெருமான் உயிர்ப்பித்தார் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். (1.66.3). மகரம்=மீன்; தாரா=சிறு நாரை; பகன்றில்=அன்றில் பறவை; அழகில் தனக்கு ஒப்பாக வேறு எவரும் இல்லாதவள் இரதி தேவி என்று குறிப்பிட, நிகரொப்பில்லா தேவி என்று கூறுகின்றார்.

மகரத்தாடு கொடியோன் உடலம் பொடி செய்து அவனுடைய

நிகர் ஒப்பில்லாத் தேவிக்கு அருள் செய் நீல கண்டனார்

பகரத் தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்து ஏத்தத்

தகரப் புன்னை தழைப் பொழில் சேர் சண்பை நகராரே

இதே செய்தி திரிகோணமலை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் ஞானசம்பந்தரால் (3.123.4) குறிப்பிடப்படுகின்றது. பழித்து இளம் கங்கை என்று, தனது விருப்பத்திற்கு மாறாக பூமிக்கு தன்னை பிரமன் அனுப்பியதற்கு பழி தீர்க்கும் வகையில், பூமியையே புரட்டிப் போடும் எண்ணத்துடன் மிகவும் வேகமாக கீழே இறங்கிய கங்கை நதி என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. பாங்குடை=அழகு;

பழித்து இளம் கங்கை சடையிடை வைத்துப் பாங்குடை மதனனைப்

பொடியா

விழித்தவன் தேவி வேண்ட முன் கொடுத்த விமலனார் கமலமார்

பாதர்

தெழித்து முன் அரற்றும் செழுங்கடல் தரளம் செம்பொனும் இப்பியும்

சுமந்து

கொழித்து வன் திரைகள் கரையிடைச் சேர்க்கும் கோணமாமலை

அமர்ந்தாரே

பாறரு=பால் தரு. பால் போன்று வெண்ணிற திருமேனியை உடையவர் பெருமான் என்று சம்பந்தர் இங்கே கூறுவது, நமக்கு அப்பர் பிரான் தில்லை பதிகத்தின் பாடல் ஒன்றினை நமக்கு நினைவூட்டுகின்றது. தனது சிவந்த திருமேனியின் மீது பெருமான், திருநீறு பூசியுள்ள நிலை, பொன்மலையின் மீது வெள்ளி குன்று போல் திகழ்கின்றது என்று அப்பர் பிரான் நயமாகச் சொல்வதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். உயிரின் வேட்கை இறைவனைச் சென்று அடைவது. இதனை புரிந்து கொள்ளாத நாம், உயிரின் விருப்பத்தை விட்டு விட்டு, இந்த உடலின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் நமது விருப்பங்களை இறைவனிடம் தெரிவிக்கின்றோம். இந்த உடலின் தேவைகள் அனைத்தும் நிலையற்றவை, ஒரு நாள் அழியக்கூடியவை. ஆனால் உயிர் விரும்பும் முக்தி நிலை, என்றும் அழிவற்றது, சற்றும் குறையாத பேரின்பத்தை கொடுக்க வல்லது. எனவே அந்த முக்தி நிலையை வேண்டிப் பெறாது, அழியும் இன்பங்களை வேண்டுவோரை கல்மனவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தில்லையுள் உள்ள அடியார்கள் இறைவனிடம் முக்தி நிலை வேண்டுவதால், அவர்களை நல்மனவர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பேரின்பத்தைத் தரவல்ல சிவபெருமானிடம் சென்று சிற்றின்பத்தை யாசிப்பது, ஒரு பெரிய பணக்காரரிடம் சென்று பத்து காசுகள் யாசித்துப் பெறுவது போன்று நகைக்கு உரியதல்லவா. அதனால் நமக்கு ஏற்படும் பயன் என்ன?

கல் மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பதென்னே

நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

பொன்மலையில் வெள்ளிக்குன்றது போல பொலிந்திலங்கி

என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடில்லையே

அழியும் பொருட்களையும் நிலையற்ற சிற்றின்பத்தையும் சிவபிரானிடம் வேண்டும் கல் மனத்தவர்களே, அவ்வாறு வேண்டி நீங்கள் என்ன பயன் அடைந்தீர்கள்? நல்ல மனம் கொண்டு அழியாத முக்தி நிலையை வேண்டும் அடியார்கள் பொருந்தியுள்ள தில்லைச் சிற்றம்பலத்தில், பொன்மலை மீது வெள்ளிக்குன்று அமைந்தது போல் பொலிந்து நடனமாடும் சிவபிரான் யான் அறியாமல் எனது உள்ளத்தினுள்ளே புகுந்துவிட்டான். அவன் எவ்வாறு உள்ளே புகுந்தான் என்பதை நான் இன்னும் அறியவில்லை என்பதாக அப்பர் பிரான் நமக்கு உணர்த்தும் பாடல் இது.

பொழிப்புரை:

திருநீற்றை தனது உடல் முழுவதும் பூசியவராக, தாழ்ந்த நிறைந்த சடைகள் உடையவராகத் திகழும் பெருமான், தனது நெற்றிக் கண்ணினால் உற்று நோக்கி மன்மதனின் உடலை எரித்து அழித்தார். அவர் கங்கை நதியினைத் தனது சடையினில் சூடியவராக, படமெடுத்தும் ஆடும் பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக இறுகக் கட்டி தனது விருப்பம் போன்று பாம்பினை ஆட்டுவிப்பவரும் ஆகிய பெருமான், ஐந்து விரல் அகலமே உள்ள கோவண ஆடையினை அணிந்து எளியவராக திகழ்கின்றார். தனது திருமேனியின் மீது திருநீறு பூசிய காரணத்தினால், பால் போன்ற திருமேனியை உடையவராக பெருமான் காணப்படுகின்றார். இத்தகைய தன்மைகளைக் உடைய பெருமான் எப்போதும் பூத கணங்களால் சூழப்பட்டவராக உள்ள பெருமான், பாச்சிலாச்சிராமம் தலத்தினில் உறைகின்றார். தருமதேவதையின் கோரிக்கையை ஏற்று, எருதாக தருமதேவதையை மாற்றி, தனது வாகனமாக ஏற்றுக்கொண்டு அருள் புரிந்த பெருமான், உடல் வலிமையில் ஏழையாக திகழும் மழவன் மகள் நோயினால் வாடி வருந்தும் வண்ணம் செய்வது அவரது பெருமைக்கு பொருத்தமான செயல் அல்ல.

பாடல் 7:

பொங்கிள நாகம் ஓர் ஏக வடத்தோடு ஆமை வெண்ணூல் புனை

கொன்றை

கொங்கிள மாலை புனைந்து அழகாய குழகர் கொலாம் இவர் என்ன

அங்கு இள மங்கையோர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து

உறைகின்ற

சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர்

சார்வோ

விளக்கம்:

ஏகவடம்=ஒற்றைச்சர மாலை; பாம்பினை பெருமான் தனது கழுத்தினில் மாலையாக அணிந்திருப்பது பெருமான் ஒற்றை வடச் சங்கிலி அணிந்திருப்பது போல் உள்ளது என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொங்கிள நாகம்=கடுஞ்சினம் கொண்டு படமெடுத்து ஆடும்; கொங்கு=தேன்; கொங்கிள மாலை=தேன் நிறைந்து புது நறுமணம் கமழும் மலர்கள் கொண்ட மாலை; உமையன்னை பால் கருணை கொண்டு அன்னைக்குத் தனது உடலின் ஒரு பாகத்தை அளித்து கருணையாளனாகிய பெருமான், மழவன் மகளை வாட வைப்பது தவறு அல்லவா என்று நயமாக கேள்வி எழுப்பப் படுகின்றது. சென்ற பாடலில் வெண்மை நிறத்தில் திருமேனி உடைய பெருமான் என்று குறிப்பிட்ட ஞானசம்பந்தர் இந்த பாடலிலும் அந்த தன்மையை குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

கடுஞ்சினம் கொண்டு படமெடுத்து ஆடும் பாம்பினை, ஒற்றைவடச் சங்கிலி ;போன்று தனது கழுத்தினில் பெருமான் அணிந்து கொண்டுள்ளார். மேலும், ஆமை ஓடு, வெண்மை நிறத்தில் முப்புரி நூல், தேன் நிறைந்த புதிய கொன்றை மலர்கள் கொண்டு புனையப்பட்ட மாலை ஆகியவற்றை பூண்டு கொண்டுள்ள பெருமான் மிகவும் அழகுடன் காணப்படுகின்றார். அழகிய இளைஞராகிய பெருமான், தனது அழகினுக்கு பொருந்தும் வகையில் அழகிய பெண்ணாகிய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். பாச்சிலாச்சிராமம் தலத்தில் உறைகின்ற பெருமான், தனது திருமேனியின் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டுள்ள தன்மையால் வெண் சங்கின் நிறத்தில் திருமேனி உடையவராக விளங்கும் பெருமான், நீண்டு தாழ்ந்த கூந்தலை உடைய மழவன் மகள் வருந்தும் வண்ணம், சாமர்த்தியமாக செயல்படுவது தகுமா.

பாடல் 8:

ஏவலத்தால் விசயற்கு அருள் செய்து இராவணனை ஈடு அழித்து

மூவரிலும் முதலாய் நடுவாய மூர்த்தியை அன்றி மொழியாள்

யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

தேவர்கள் தேவரோ சேயிழை வாடச் சிதை செய்வதோ இவர் சேர்வே

விளக்கம்:

ஏ=அம்பு; வில்லுக்கு விஜயன் என்று புகழ்ந்து சொல்லும் வண்ணம், விற்போரில் வல்லவனாக திகழ்ந்தவன் அர்ஜுனன். அத்தகைய வல்லமை வாய்ந்த அர்ஜுனனை விற்போரிலும் மற்போரிலும் பெருமான் வெற்றி அடையவே, அர்ஜுனனுக்கு தன்னுடன் போர் செய்தவர் சிவபெருமான் என்பதை உணர்ந்த அர்ஜுனன், பெருமானை வணங்கி தனது செயலை மன்னிக்குமாறு வேண்டுகின்றான். ஏற்கனவே அவனது தவத்தினால் மகிழ்ந்திருந்த பெருமான், பாசுபதம் என்ற வலிமை வாய்ந்த அத்திரத்தையும் எடுக்க எடுக்க குறையாத அம்பறாத் தூணியையும் அளித்து அருள் புரிகின்றார். இந்த நிகழ்ச்சியே இங்கே குறிப்பிடப் படுகின்றது. விஜயனுக்கு அருள் புரிந்த பெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர் இராவணனின் பெருமையை அழித்தார் என்றும் குறிப்பிடுகின்றார். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த வேறுபாடு காரணமாக பெருமானின் செய்கையும் அவர்கள் பால் இருந்ததை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. வந்தவர் பெருமான் என்பதை அறியாத காரணத்தால் விஜயன் அவருடன் விற்போரும் மற்போரும் செய்கின்றான். பெருமானின் அருள் வேண்டி தவம் இருந்த விஜயன், வந்தவன் பெருமான் என்று தெரிந்திருந்தால், அவருடன் சண்டை செய்திருக்க மாட்டான். ஆனால் இராவணனின் நிலையே வேறு. கயிலாய மலையின் பெருமையையும் சிவபெருமானின் பெருமையையும் உணர்த்திய தேர்ப்பாகன், கயிலாய மலையினை வலம் வந்து தனது பயணத்தைத் தொடருமாறு அறிவுறுத்திய போதிலும், அதனை பொருட்படுத்தாமல், கயிலை மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்தவன் அரக்கன் இராவணன். எனவே தான் அவனது செருக்கினை அடக்கும் வண்ணம் பெருமான், கயிலை மலையின் கீழே இராவணனை அடர்த்து நெருக்கினார். தனது உடல் மலையின் கீழே அகப்பட்டு நசுங்கிய பின்னரே, இராவணன் தனது தவறினை உணர்ந்து, பெருமானின் பெருமையை எடுத்துரைக்கும் சாம கான பாடல்களை பாடி, இறைவனின் அருள் பெறுகின்றான். இந்த பாடலில் மழவன் மகளின் தன்மையும் குறிப்பிடப் படுகின்றது. சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரது நாமத்தையும் சொல்லாதவள் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தனது அடியான் அர்ஜுனனுக்கு அருள் புரிந்த பெருமான், தனது திருநாமத்தை தவிர்த்து வேறு எந்த தெய்வத்தின் பெயரையும் உச்சரிக்காத மழவன் மகளுக்கு அருள் புரிந்து அவளது நோயினைத் தீர்க்காமல் இருந்தது பெருமானின் பண்பினுக்கு அழகா என்ற கேள்வியும் கேட்கப்படுகின்றது. சேயிழை=சிறந்த ஆபரணங்களாய் அணிந்துள்ள பெண்மணி, இங்கே மழவன் மகள். சேர்வு=சேர்த்தல், அடைதல், தொடர்பு கொள்ளுதல். பெருமானுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள் பெறுகின்ற பயன் இது தானா என்ற கேள்வி இங்கே கேட்கப்படுகின்றது. நடுவாய மூர்த்தி என்பதற்கு மூவர்களில் நடு நாயகமாக நிற்பவர் என்று விளக்கம் கொள்வதும் பொருத்தமே. நடுவாய் நின்ற பெருமான் என்ற தொடர் மூலம், தங்களின் இடையே யார் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் திருமால் ஆகிய இருவரின் நடுவே, நெடிய தீப்பிழம்பாக தோன்றிய இறைவன் என்றும் சில அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். ஈடு என்பதற்கு பெருமை என்று பொருள் கொண்டு, அன்று வரை தோல்வியைக் கண்டிராத அரக்கன் இராவணன், கயிலை மலையினைப் பேர்த்தெடுக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தமையால், அவனது பெருமை குன்றியது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

விற்போரில் தனக்கு இருந்த ஆற்றலினால் விஜயனை வெற்றி கொண்ட பெருமான், பாசுபத அத்திரம் அளித்து விஜயனுக்கு அருள் புரிந்தார். தன்னை மதிக்காது, தனது இருப்பிடமாகிய கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த இராவணனின் வலிமையை அடக்கிய பெருமானை, மும்மூர்த்திகளுக்கும் தலைவனும் அவர்கள் மூவருடன் கலந்து நின்று படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களைச் செய்பவனும் ஆகிய சிவபெருமானின் திருநாமத்தைத் தவிர்த்து வேறு எதனையும் சொல்லாமல் இருக்கின்றவள் மழவன் மகள். அனைவராலும் புகழ்ந்து போற்றப்படுவபனும், தேவர்களின் தலைவனும், பாச்சியாலாச்சிராமம் தலத்தினில் உறைபவனும் ஆகிய சிவபெருமான், சிறிய பெண்ணாகிய மழவனின் மகள் வாடும் வண்ணம் அவளை முயலகன் நோய் கொண்டு வருத்துவது, அவருடன் அடியார்கள் தொடர்பு கொண்டுள்ள தன்மைக்கு பொருத்தமாகாத செயலாகும்.

பாடல் 9:

மேலது நான்முகன் எய்தியது இல்லை கீழது சேவடி தன்னை

நீலது வண்ணனும் எய்தியது இல்லை என இவர் நின்றதும்

அல்லால்

ஆலது மாமதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

பாலது வண்ணரோ பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர்

பண்பே

விளக்கம்:

கருமை நிறத்தினை நீலநிறம் என்று சொல்வது இலக்கிய வழக்கு. பிரமன் திருமால் ஆகிய இருவரும் திகைத்து நிற்கும் வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக நின்ற பெருமானின் ஆற்றல் இங்கே குறிப்பிடப்பட்டு, அத்தகைய ஆற்றல் உடைய பெருமான், மழவன் மகளின் துன்பத்தினைக் கண்டும் வாளா இருப்பது தவறல்லவா என்ற வேண்டுகோள் இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. ஆற்றல் இருந்தும் பெருமான் செயல்படாமல் இருப்பதால் பெருமான் பழி செய்கின்றார் என்று உரிமையுடன் ஞான சம்பந்தர் கூறுவது உணரத் தக்கது. பிரமனுக்கும் திருமாலுக்கும் அரியவராக இருப்பினும், தனது அடியார்களுக்கு எளியவனாக பெருமான் இருக்கும் தன்மை அவரது இயல்பு. இந்த இயல்பு பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. சென்ற பாடலில் மழவன் மகள், இறைவனது அடியாளாக இருக்கும் தன்மை உணர்த்தப் பட்டது. அந்த பின்னணியில் இந்த பாடலை நாம் சிந்தித்தால் மழவன் மகளுக்கு உதவாமல் இருப்பது பெருமானுக்கு பொருந்தாத தன்மை என்று ஞானசம்பந்தர் உணர்த்துவதை நாம் அறியலாம். பண்பு=நற்குணம்;

பொழிப்புரை:

தங்களின் முன்னே நீண்ட நெருப்புப் பிழம்பாக தோன்றிய பெருமானின் திருமுடியை நான்முகன் காண முடியவில்லை; கருமை நிறம் கொண்ட திருமேனி உடைய திருமாலால் பெருமானின் திருவடிகளைக் காண முடியவில்ல; இவ்வாறு பிரமன் திருமால் ஆகிய இருவரும் திகைத்து நிற்கும் வண்ணம் செய்த பெருமான், வானில் தவழும் சந்திரனை உராயும் வண்ணம் உயர்ந்து வளர்ந்த ஆல மரங்கள் நிறைந்த பாச்சிலாராமம் தலத்தில் உறைகின்றார். மேனியெங்கும் திருநீறு பூசியதால் பால் போன்று வெண்மை நிறத்தினில் காணப்படும் பெருமான், பசுமையான கொடி போன்ற மழவன் மகளை வஞ்சித்தல், அவரது தகுதிக்கும் நற்பண்புகளுக்கும் ஏற்ற செயல் அல்ல.

பாடல் 10:

நாணொடு கூடிய சாயினர் ஏனும் நகுவர் இரு போதும்

ஊணொடு கூடிய உட்கு தகையால் உரைகள் அவை கொள

வேண்டா

ஆணொடு பெண் வடிவாயினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர்

பொற்பே

விளக்கம்:

சாயினர்=இழிந்தவர்கள்; சாய்தல்=இழிதல்; தாம் இழிந்த செயல்களை செய்வதை மற்றவர் அறிந்தால் ஏளனம் செய்வார்கள் என்ற எண்ணம் கொண்டு, அத்தகைய செயல்களை செய்வதற்கு நாணம் கொள்வோர் உயர்ந்தவர்கள். ஆனால் ஆடையின்றித் திரிந்த சமணர்களோ, அவ்வாறு தாம் திரிந்த நிலைக்கு வெட்கம் அடையாமல், தொடர்ந்து ஆடை அணிவதை விடுத்து திரிந்த சமணத் துறவிகள் பரிகசிக்கத் தகுந்தவர்களே அன்றி மற்றவர்கள் பின்பற்றும் தகுதி படைத்தவர்கள் அல்லர் என்று ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். புனை=பொருத்துதல்; பொற்பு=அழகு; சாயினர் என்ற சொல்லுக்கு மென்மையான மகளிர் கூட்டம் என்று பொருள் கொண்டு, நாணம் உடைய மகளிரும், தவம் என்று சொல்லிக்கொண்டு அவமே செய்து கொண்டு, உடையின்றித் திரியும் சமணர்களைக் கண்டால் உயர்ந்த குலத்தைச் சார்ந்த மகளிரும் நாணத்தை கைவிட்டு, சமணத் துறவிகளைக் கண்டு நகைப்பார்கள் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. உயர்ந்த குணங்களை உடைய மகளிர், நாணம் முதலான நான்கு அரும் பண்புகளைக் கொண்டவராக விளங்குவார்கள் என்பதால், தங்களுக்கு உள்ள இயல்பான அடக்கத்தின் காரணமாக, அவர்கள் பொது இடத்தில் வாய்விட்டு சிரியார். எனினும் அவர்களும் வாய் விட்டு பரிகசித்து வாய்விட்டு சிரிக்கும் வண்ணம் அருவருக்கத் தக்க கோலத்துடன் சமணத் துறவிகள் இருந்த நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. உட்கும் தகையார்=அஞ்சத் தக்க இயல்பினர். சமணர்கள் புத்தர்கள் ஆகிய இருவருமே கடவுள் கொள்கையை மறுப்பவர்கள் என்பதால், அவர்களின் சேர்க்கை, அவர்களுடன் சேரும் மனிதர்களின் அறிவை மழுங்கடித்து விட்டு, பாழ்படச் செய்யும் என்பதால், அவர்களுடன் பழகுவதைத் தவிர்த்து, அச்சம் கொண்டு மற்றவர்கள் ஒதுங்கினார்கள் என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த காரணம் பற்றியே அச்சப்பத்து பதிகத்தினில் மணிவாசகர் வெண்ணீறு அணியாத மனிதரைக் கண்டால், தான் அஞ்சுவதாக மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோடு இறப்பும்

அஞ்சேன்

துணி நிலா அணியினான் தன் தொழும்பரோடு அழுந்தி

அம்மால்

திணி நிலம் பிளந்தும் காணாச் சேவடி பரவி வெண்ணீறு

அணிகிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

மேற்கண்ட பாடலில் பிறைச் சந்திரனை அணியாகத் தனது சடையில் அணிந்துள்ள பெருமானின் தொண்டர்களோடு பொருந்தி, வலிமையான நிலத்தினை வெகு தூரம் தோண்டியும் திருமாலால் காண முடியாத பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து துதிக்கும் தான், வெண்ணீறு அணியாத மனிதர்களைக் கண்டால் தான் அஞ்சுகின்றேன் என்று மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கித் தவிர்ப்பதற்கும் அஞ்ச மாட்டேன் என்று தனது மன உறுதியை நமக்கு உணர்த்தும் மணிவாசகர், வெண்ணீறு அணியாதவர்களைக் கண்டால் தான் அஞ்சுகின்றேன் என்று சொல்கின்றார் என்றால், அத்தகைய மனிதர்கள் நமக்கு பெரும் கெடுதியை விளைவிப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். பெருமானது அடியாராக இருந்து, அவரின் கருணையின் காரணமாக வாழ்வினில் உய்வினை அடையும் பாதையில் செல்லும் வாய்ப்பினை பெறுகின்ற நாம், அந்த வாய்ப்பினை வெண்ணீறு அணியாத மனிதர்களோடு பழகினால் இழந்து விடுவோம், இதனை விடவும் நமது உயிருனுக்கு பெரிய கெடுதல் வேறு எவரும் விளைவிக்க முடியாது அல்லவா.

பொழிப்புரை:

இழிந்த செயல்களைச் செய்வதற்கு நாணம் கொள்ளுதல் போன்ற பல நற்குணங்களைக் கைவிட்டு, ஆடையின்றித் திரியும் சமணர்கள் பரிகசிக்கத் தகுந்தவர்களே அன்றி அடுத்தவர் பின்பற்றும் தகுதி படைத்தவர்கள் அல்லர். தினமும் இரண்டு பொழுதினிலும் வயிறார உண்டு உடல் பெருத்தவர்களாக உள்ள புத்தர்களும் சமணர்களும் அனைவரும் அச்சம் கொண்டு ஒதுக்கத் தக்கவர்கள். எனவே இவர்கள் இருவரையும் விட்டு ஒதுங்கி நின்று, அவர்களது உரைகளை பொருட்படுத்தாமல் புறக்கணிப்பீர்களாக. பெருமைக்கு உரிய ஆணாகவும், அதே சமயத்தில் உமையன்னைக்கு இரங்கி அம்மையைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டதால் பெண்ணாகவும் விளங்குகின்ற, பெருமான், தனது மார்பினில் பல அணிகலன்களை பூண்டவராக பாச்சிலாச்சிராமம் தலத்தினில் உறைகின்றார். பூங்கொடி போன்ற அழகுடன் காணப்படும் மழவன் மகள் வாடும் வண்ணம், அவளது உடலில் முயலகன் நோயினை பொருத்துதல் இறைவனுக்கு அழகான செயல் அல்ல.

பாடல் 11

அகமலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற

புகைமலி மாலை புனைந்து அழகாய புனிதர் கொலாம் இவர் என்ன

நகை மலி தண் பொழில் சூழ் தரு காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்

தகை மலி தண்டமிழ் கொண்டு இவை ஏத்தச் சார்கிலா வினை தானே

விளக்கம்:

அகமலி=உள்ளம் நிறைந்த; தண் தமிழ்=தகுதி வாய்ந்த தமிழ் பாடல்கள்; பண்டைய நாளில் பலன் அளித்தது போன்று, இன்றும் இந்த பதிகத்தை பக்தியுடன் முறையாக பாடும் அடியார்கள் வினைவயத்தால், வரும் நோய்களிளிளிருந்து விடுதலை பெறுவது கண்கூடு. இந்த பாடலை ஓதும் அடியார்களை வினைகள் சாரா என்று கூறுவதன் மூலம், அந்த வினைகளின் செயலால் உடலுக்கு ஏற்படும் நோய்கள் நீங்கிவிடும் என்று ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். நகை மலி பொழில்=மலர்ந்த மலர்கள் கொண்ட சோலை; நற்றமிழ் ஞானசம்பந்தன் என்று இந்த பாடலில் குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கது. நற்றமிழ் என்றால் நலம் விளைவிக்கும் தமிழ் என்று பொருள். தான் அருளிய பதிகத்தின் பாடல்கள், ஓதுவோருக்கு பல விதமான நன்மைகளை செய்யும் என்று உணர்த்தும் முகமாக, ஞானசம்பந்தர் இவ்வாறு கூறுகின்றார். புகை என்ற சொல்லுக்கு மணம் என்று பொருள் கொள்ளவேண்டும் என்றும் சிலர் கருதுகின்றார்.

பொழிப்புரை:

உள்ளம் நிறைந்த அன்புடன் தொண்டர்கள் வணங்கி வழிபட பாச்சிலாச்சிராமம் தலத்தில் உறைகின்ற சிவபெருமான், அடியார்கள் காட்டும் நறுமணம் மிகுந்த தூபங்கள் பொருந்திய மாலைகளை அணிந்தவரும், தூய்மையும் அழகும் பொருந்தியவராக விளங்குபவரும் ஆகிய சிவபெருமான் என்று, மலர்ந்த மலர்கள் அழகு செய்யும் சோலைகளால் சூழப்பட்ட சீர்காழி நகரினைச் சார்ந்தவனும், நன்மைகள் விளைவிக்கும் பாடல்கள் கொண்ட பதிகங்களை அருளியவனும் ஆகிய ஞானசம்பந்தன் அருளிய தகுதி வாய்ந்த இந்த பதிகத்தின் பாடல்களை முறையாக ஓதும் அடியார்களை விட்டு வினைகள் நீங்கிவிடும், மேலும் அந்த வினைகளின் தொடர்பால் ஏற்படும் நோய்களும் அவர்களை விட்டு விலகிவிடும்.

முடிவுரை:

இந்த பதிகம் பாடி முடித்த பின்னர், இறைவனை வணங்கி ஞானசம்பந்தர் நின்ற போது, கொல்லி மழவனின் பெண் தனது நோய் நீங்கப்பெற்று, மிகவும் விரைந்து தான் படுத்துக்கிடந்த நிலையிலிருந்து எழுந்து பொற்கொடி போன்று நடந்து வந்து, தந்தையின் அருகே வந்து நின்றாள் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். மன்னும் கவுணியர் என்று ஞானசம்பந்தர்க்கு சேக்கிழார் அடைமொழி கொடுத்து சிறப்பிப்பதை நாம் உணரலாம். மன்னும்=அடியார்களின் உள்ளத்தில் நிலை பெற்று இருத்தல்; உண்மையான மெய்ப்பொருளை, தனது முதல் பதிகத்தில் நமக்குச் சுட்டிக்காட்டி வழிநடத்தும் ஞானசம்பந்தர், தனது பதிகங்கள் மூலம் பல அற்புதங்கள் நிகழ்வித்து, அடியார்களின் குறைகளை தீர்ப்பவராக அன்றும், இன்றும், என்றும் இருக்கும் தன்மையால், அவர் அடியார்களின் மனதினில் என்றும் நீங்காதவராக இருக்கும் தன்மையை சேக்கிழார் இங்கே உணர்த்துகின்றார். கதுமென=மிகவும் விரைந்து; உணர்வற்ற நிலையில் தான் தரையில் படுத்து இருந்தமைக்கு நாணம் கொண்டவளாக விரைந்து எழுந்தாள் என்பதுவும், மற்ற ஆடவர்கள் சன்னதியில் நிறைந்து நின்றதை உணர்ந்து, தனது தந்தையின் அருகே சென்று நின்றாள் என்பதையும் சேக்கிழார் இங்கே உணர்த்துகின்றார்.

பன்னு தமிழ்மறையாம் பதிகம் பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி

மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை

மென்சொல்

கன்னி உறு பிணி விட்டு நீங்கக் கதுமென பார்மிசை நின்று

எழுந்து

பொன்னின் கொடி என ஒல்கி வந்து பொருவலித் தாதை புடை

அணைந்தாள்

தனது மகள் நோய் நீங்கப்பெற்று முழு உணர்வினோடும் தன்னருகே வந்து நின்றதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த கொல்லி மழவன், தனது மகளுடன் ஞானசம்பந்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினான். இறைவனின் கருணையை நினைத்து மனம் மகிழ்ந்த திருஞானசம்பந்தரும், மனம் ஒன்றிய சிந்தையுடன் இறைவனைப் பணிந்து எழ, நடந்த அதிசயத்தினை அறிந்து கொண்ட தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். இதனை உணர்த்தும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மழவனும் அவனது மகளும் தனது அடிகளைப் பணிய, ஞானசம்பந்தர் இறைவனது திருவடிகளைப் பணிந்தார் என்று குறிப்பிடுவதன் மூலம், தமது செயல் எல்லாம் இறைவனது செயல் என்பதையும் அனைத்து வணக்கங்களும் இறைவனைச் சாரத் தக்கன என்பதையும் உணர்த்தும் வகையில் ஞானசம்பந்தரின் செயல் இருந்தது என்பதை சேக்கிழார் உணர்த்துகின்றார்.

வன்பிணி நீங்கு மகளைக் கண்ட மழவன் பெருகு மகிழ்ச்சி

பொங்கத்

தன் தனிப் பாவையும் தானும் கூடச் சண்பையர் காவலர்

காலில் வீழ

நின்ற அருமறைப் பிள்ளையாரும் நீரணி வேணி நிமலர் பாதம்

ஒன்றிய சிந்தையுடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர்

ஆர்த்தார்

இந்த பதிகத்தின் பாடல்களை முறையாக ஓதும் அடியார்கள், இரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்கள், கோமா, நரம்புத் தளர்ச்சி, வாதம் பித்தம் வலிப்பு முதலான நோய்கள் மற்றும் போதைப் பொருட்களின் தாக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். பதிகத்தின் பல பாடல்களிலும் பெருமானின் கருணைச் செயல்களும், அடியார்களுக்கு அருள் புரியும் தன்மைகளும் குறிப்பிடப்படுவதை நாம் உணரலாம். பதிகத்தின் முதல் தொடரில் பிறைச் சந்திரன் குறிப்பிடப்பட்டு, பெருமானைச் சரணடைந்த சந்திரன் பெற்று பெற்ற மறுவாழ்வு குறிப்பிடப்படுகின்றது. சந்திரன் தவறு செய்தமையால் தானே, அவனுக்கு தக்கன் சாபம் அளித்தான். தவறு செய்த சந்திரனுக்கே அபயம் கொடுத்து காத்த பெருமான், தனது அடியார்களாக விளங்கிய கொல்லி மழுவன் மற்றும் அவனது மகளின் வருத்தத்தினை நீக்கும் வகையில் அருள் புரிய வேண்டிய அவசியத்தை, ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். முதல் பாடலில் பெருமான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த ஞானசம்பந்தர், இரண்டாவது பாடலில் பெருமானின் பலவிதமான ஆற்றல்கள் குறிப்பிடப் பட்டு அடியார்களின் வினைகளைத் தீர்க்கும் ஆற்றல் பெருமானுக்கு உள்ளது என்று உணர்த்துகின்றார். தானே விரும்பி தன்னை நினைக்கும் அடியார்களின் உள்ளத்தில் புகுந்து நிற்கும் பெருமான், அடியாளாகிய மழவன் மகளின் நோயினைத் தீர்க்காமல் இருப்பது முறையா என்று மூன்றாவது பாடலில் ஞானசம்பந்தர் கேட்கின்றார். நான்காவது பாடலில், அடியார்களின் எண்ணங்களில் நிறைந்து நிற்கும் சிவபெருமான், மழவன் மகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவளது துயரினைத் தீர்க்காமல் இருப்பது முறையா என்று கேட்கின்றார். தம்மை வழிபடும் நோக்கத்துடன் மனிதர்கள் செய்யும் நீராடல் முதலான செயல்களை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளும் பெருமான், மழவன் மகளின் பக்தியை உணர்ந்து அருள் புரியாது இருப்பது தகுமா என்ற கேள்வி எழுப்பப் படுகின்றது. ஆறாவது பாடலில் மன்மதனை எரித்த செய்தி குறிப்பிடப்பட்டு, அவனது மனைவியின் தன்மைக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்த செய்தி உணர்த்தப் படுகின்றது. பெண்களின் தன்மை கண்டு இரங்கி அவர்களுக்கு உதவும் கருனையாளனாகிய சிவபெருமான், மழவன் மகளின் தன்மை கண்டு இரங்காமல் இருப்பது சரியா என்ற கேள்வி இங்கே எழுப்பப் படுகின்றது. பதிகத்தின் ஏழாவது பாடல் மற்றும் பத்தாவது பாடல்களில், பார்வதி தேவியின் வேண்டுகோளினை நிறைவேற்றும் வண்ணம், பெருமான் தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள தன்மை குறிப்பிடப்பட்டு, பெண்ணாகிய மழவன் மகள் மீது இரக்கம் கொள்ளாதிருக்கும் தன்மை சுட்டிக் கட்டப்படுகின்றது. பெருமானின் திருநாமத்தைத் தவிர்த்து வேறு ஒருவரின் பெயரையும் சொல்லாது பெருமானையே வழிபடும் மழவன் மகளுக்கு அருள் செய்யாது இருப்பது அழகா என்ற கேள்வி எட்டாவது பாடலில் கேட்கப்படுகின்றது. பல அடியார்களுக்கும் எளியவனாக திகழ்ந்து அவர்களுக்கு தக்க தருணத்தில் உதவி புரியும் பெருமான், மழவன் மகளுக்கு உதவாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி ஒன்பதாவது பாடலில் கேட்கப் படுகின்றது. இந்த பதிகத்தின் மூலம் பெருமானின் பெருமைகளையும் கருணைச் செயல்களையும் உணர்ந்து கொண்ட நாம், இறைவனின் நினைவுகள் நியாயந்த மனதுடன், இந்த பதிகத்தினை முறையாக மனமொன்றி ஓதி, அவரது கருணைக்கு பாத்திரம் ஆவோமாக.

துணிவளர்திங்கள் (Thunivalarthingal) is a Tamil phrase that can be translated as "those who nurture courage" or "those who develop bravery." Here’s a breakdown of the components:

Breakdown of the Phrase:

துணிவு (Thunivu): Means "courage" or "bravery." It refers to the quality of being bold, resilient, and willing to face challenges.

அளர்தி (Alarthi): Means "to nurture" or "to cultivate." It denotes the act of growing, developing, or fostering something.

ங்கல் (Ngal): Is a suffix that denotes "those who" or "people who."

Full Meaning:

"துணிவளர்திங்கள்" can be interpreted as "people who cultivate or develop courage" or "those who foster bravery." The phrase refers to individuals or entities that nurture and promote the growth of courage and bravery in themselves or others.

Context:

Inspiration and Leadership: The phrase might be used to describe leaders, mentors, or role models who inspire and encourage others to be brave and face challenges with resilience.

Personal Development: It could also refer to individuals who actively work on developing their own courage and strength, often in the face of adversity or personal growth challenges.

Literary and Poetic Usage: In Tamil literature and poetry, this phrase can be used to highlight characters or figures who are known for their bravery and the efforts they make to nurture and develop this quality in themselves or others.

Example in Context:

In a motivational speech or poem, "துணிவளர்திங்கள்" might be used to celebrate those who exemplify and encourage courage. For instance, it might describe a leader who inspires others to be brave or a teacher who fosters resilience in their students.

Conclusion:

"துணிவளர்திங்கள்" reflects the idea of cultivating and nurturing courage and bravery. It celebrates those who actively develop and promote these qualities, whether in themselves or in others. This phrase is used to recognize and honor the efforts involved in growing resilience and strength in the face of challenges.



Share



Was this helpful?