இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


துஞ்சவருவாரும்

துஞ்சவருவாரும்

1.045 துஞ்ச வருவாரும் திருவாலங்காடு தக்கராகம்

பின்னணி:

தனது ஆறாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக நடுநாட்டுத் தலங்கள் சென்ற திருஞான சம்பந்தர் திருவண்ணாமலை தலத்திலிருந்து திருவோத்தூர் தலம் செல்கின்றார். ஆங்கே இறைவனின் திருவருள் துணைகொண்டு ஆண்பனையை பெண்பனையாக மாற்றிய திருஞான சம்பந்தர், மாகறல் குரங்கணில் முட்டம் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் காஞ்சி மாநகரம் வந்தடைகின்றார். காஞ்சி மாநகரத்தில் உள்ள கச்சியேகம்பம் உள்ளிட்ட பல திருக்கோயில்களும் அருகில் உள்ள தலங்களும் சென்று இறைவனை வழிபட்ட பின்னர் திருமாற்பேறு, திருவல்லம், இலம்பையங்கோட்டூர், திருவிற்கோலம்,திருவூறல் .தலங்களும் சென்ற பின்னர், திருவாலங்காடு தலத்திற்கு அருகே வருகின்றார். காரைக்கால் அம்மையார், தமது தலையினால் நடந்து சென்ற பதியாகிய திருவாலங்காட்டினை காலால் மிதித்து நடப்பதற்கு அச்சம் கொண்டவராக அருகில் உள்ள ஒரு ஊரில் (பெயர் தெரியவில்லை) தங்கியதாக பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். அன்று இரவில் திருஞானசம்பந்தரின் கனவில் தோன்றிய பெருமான், தம்மை பாடுவதற்கு மறந்தாயோ என்று வினவ, கனவு கலைந்து நள்ளிரவில் எழுந்த திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் தான் இந்த திருப்பதிகம். அடங்கன் முறையில் இந்த திருப்பதிகம் தக்கராகப் பண்ணில் பாடுவதாக அமைக்கப் பட்டிருப்பினும், சேக்கிழார் பழம்பஞ்சுரம் பண் பொருந்தும் வண்ணம் இந்த பதிகத்தை திருஞானசம்பந்தர் பாடினார் என்று கூறுகின்றார். மறுநாள் ஆலங்காடு தலம் சென்ற திருஞானசம்பந்தர் திருக்கோயில் சென்று இறைவனைப் பணிந்து வணங்கி மீண்டும் இந்த திருப்பதிகத்தை இறைவன் சன்னதியில் பாடியதாக சேக்கிழார் கூறுகின்றார். இந்த நிகழ்ச்சியிலிருந்து காரைக்கால் அம்மையாரை, எவ்வாறு உயர்வாக திருஞானசம்பந்தர் மதித்தார் என்பது புலனாகின்றது. காரைக்கால் அம்மையார் பாடிய பதிகங்கள் பதினோராம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ள்ன.திருவாலங்காடு தலத்தின் மீது அம்மையார் பாடிய இரண்டு பதிகங்களில் ஒன்று நட்டபாடை பண்ணிலும் மற்றொன்று இந்தளம் பண்ணிலும் பொருந்தும் வண்ணம் பாடப் பட்டுள்ளன. இந்த இரண்டு பண்களையே, முறையே திருஞானசம்பந்தரும் சுந்தரரும் தாம் பாடிய முதல் பதிகங்களுக்கு உரிய பண்ணாக வைத்துள்ளமை, அவர்கள் இருவரும் அம்மையார் பால் எத்துணை மதிப்பு கொண்டிருந்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சி சுந்தரர்,திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர்பிரான் ஆகியோரின் பால் வைத்திருந்த மதிப்பினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. திருஞானசம்பந்தர் பிறந்து வளர்ந்த தலமாகிய சீர்காழி தலத்தினை புனிதமாக கருதி, அந்த தலத்தினில் தனது கால் படுவதை தவிர்த்து, அந்த தலத்தை வலமாக வந்த சுந்தரர் பதிகம் பாட, பெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிந்து கொள்கின்றோம். அப்பர் பிரான் வளர்ந்த தலமாகிய திருவதிகை தலத்தின் மண்ணை மிதிப்பதை தவிர்க்கும் நோக்கத்துடன், சுந்தரர், ஊருக்கு வெளியே இருந்த சித்தவடம் மடத்தில் தங்கியதையும் நாம் பெரியபுராணத்திலிருந்து தெரிந்து கொள்கின்றோம்.

இந்த திருப்பதிகம் பன்னிரண்டு பாடல்கள் கொண்ட பதிகமாக உள்ளது. சீர்காழி தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பல பதிகங்கள், அந்த தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் உணர்த்தும் வகையில் பன்னிரண்டு பாடல்கள் கொண்ட பதிகங்களாக உள்ளன. அத்தகைய பதிகங்களை தவிர்த்தால், முன்று பதிகங்கள் பன்னிரண்டு பாடல்கள் கொண்டவையாக விளங்குகின்றன. வாழ்க அந்தணர் என்று தொடங்கும் திருப்பாசுரமும் (3.54)திருவையாறு தலத்தின் மீது அருளிய கோடல் கோங்கம் என்று தொடங்கும் திருப்பதிகமும் (2.06) மற்ற இரண்டு பதிகங்களாகும். இந்த் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பழையனூர் என்ற தலத்தினையும் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பண்டைய நாளில் பழையனூர் என்பது பெரிய நகரமாக இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அதனால் தான் பழையனூரைச் சார்ந்த திருவாலங்காடு என்று பாடல் தோறும் திருஞானசம்பந்தர் கூறுகின்றார் போலும். பழையனூர் வேளாளர்கள் தாங்கள் சொன்ன சொல்லை காத்த விதத்தை வியந்து பாராட்டும் வகையில் இந்த குறிப்பு அமைந்துள்ளது என்று சேக்கிழார் பெரிய புராணப் பாடலில் கூறுகின்றார். இந்தப் பதிகத்தின் முதல் பாடலில், ஒருத்தி என்று பழையனூர் நீலி பற்றி திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நவஞானி என்ற அந்தணப் பெண்ணை, அவளது கணவன் கொன்றான். அந்த பெண் அடுத்த பிறவியில் புரிசைக் கிழார் என்பவருக்கு மகளாக பிறந்தாள். தன்னை முந்தைய பிறப்பில் கொன்றவன், தரிசனச் செட்டி என்ற பெயரில் வணிகனாக பிறந்ததை அறிந்து அவனைக் கொல்ல தக்க சமயம் பார்த்திருந்தாள். அந்த வணிகன் பழையனூர் வந்த போது, தன்னை வணிகனது மனைவி என்றும் வணிகன் தன்னை புறக்கணிக்கின்றான் என்றும் சொன்னதை நம்பிய பழையனூர் மக்கள், அவளை ஏற்றுகொள்ளுமாறு வணிகனுக்கு அறிவுரை கூறுகின்றனர். வணிகனது மனைவியாக நடித்து அவனை கொலை செய்ய திட்டமிட, அந்த பெண்ணின் நோக்கத்தை அறிந்த வணிகன், அந்த ஊரில் இருந்த எழுபது வேளாளர்களிடம் அடைக்கலம் புகுந்தான்.அவனைத் துரத்திக் கொண்டு சென்ற அந்த பெண், தான் அவனது மனைவி என்று சொல்லி, அந்த வேளாளர்களை நம்ப வைத்து, வணிகனுடன் இணைந்தாள். அப்போதும் அந்த வணிகன், அந்த பெண்ணுடன் தங்குவதற்கு தயங்கவே, அந்த ஊர் வேளாளர்கள், வணிகனுக்கு முழு பாதுகாப்பும் தாங்கள் அளிப்போம் என்று உறுதி கூறினார்கள். அவர்கள் கொடுத்த நம்பிக்கையால், வணிகன் அந்த பெண்ணுடன் இரவு தங்குகின்றான். ஆனால் வஞ்சகமாக நடித்து வேளாளர்களை நம்ப வைத்த அந்த பெண், அன்று இரவு வணிகனைக் கொன்று பழி தீர்த்துக் கொண்ட பின்னர் மறைந்தாள். அடுத்த நாள் காலை,இறந்த வணிகனைக் கண்ட வேளாளர்கள், தங்களிடம் தஞ்சம் புகுந்த வணிகனை காப்பாற்றத் தவறியதை நினைத்து வருந்தி அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர். சென்ற பிறவியில் இறந்த பெண் தான் பேயாக வந்து இவ்வாறு பழி தீர்த்துக் கொண்டாள் என்று நம்பப்படுகின்றது. இந்த வரலாறு பதிக்த்தின் முதல் பாடலில் சொல்லப் படுகின்றது.

பாடல் 1:

துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப்போய்

நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனை நட்பாய்

வஞ்சப்படுத்து ஒருத்தி வாணாள் கொள்ளும் வகை கேட்டு

அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு அடிகளே

விளக்கம்:

பெருமான் தனது கனவில் வந்து அழைத்ததை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் பதிவு செய்கின்றார். துஞ்ச வருவார்=தூங்குகையில் கனவில் வந்தவர்;அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் திருவாசகம் சிவபுராணத்தில் சொல்வது போன்று, பெருமானின் அருள் இருந்தால் தான், நாம் அவன் குறித்த சிந்தனையில் ஆழந்து அவனை வணங்க முடியும். அதனை உணர்த்தும் முகமாக தொழுவிப்பார் என்று, இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நட்பாக இருப்பது போன்று முனைந்து நாடகமாடி தரிசன செட்டி என்பவனை வஞ்சகமாக கொன்று அவனது வாழ்நாளை பழையனூர் நீலி என்பவள் முடித்த சரித்திரம் இங்கே குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை:

அடியேன் உறங்குகையில் எனது கனவினில் தோன்றி என்னை அழைத்தவரும், அடியேன் அவரைப் பணிந்து வணங்கும் வண்ணம் செய்தவரும், அவர் உறைகின்ற தலம் செல்லாமல் வழுவிய எனது நெஞ்சத்தில் புகுந்து நினைவூட்டியவரும் ஆகிய பெருமான் உறைகின்ற தலம் திருவாலங்காடு. நட்பாக இருப்பது போன்று வஞ்சகமாக நடித்து தரிசன செட்டி என்பவனை, அவனது வாழ்நாள் முடியும் வண்ணம் தந்திரமாக கொலை செய்த நீலியின் செய்கையை அறிந்த பழையனூரின் எழுபது வேளாளர்களும் அச்சமடைந்தனர். தங்களிடம் அடைக்கலம் வேண்டிய தரிசன செட்டியின் உயிரை காப்பாற்றத் தவறியதற்கு வருத்தம் அடைந்து அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த பழையனூரை அடுத்த தலம் திருவாலங்காடு.

பாடல் 2:

கேடும் பிறவியும் ஆக்கினாரும் கேடிலா

வீடு மாநெறி விளம்பினார் எம் விகிர்தனார்

காடும் சுடலையும் கைக்கொண்டு எல்லிக் கணப் பேயோடு

ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

விளக்கம்:

கேடு=இறப்பு; விளம்புதல்=தெளிவாக உரைத்தல்; எல்லி=நள்ளிரவு; விகிர்தன் என்றால் மாறுபட்டவன் என்று பொருள். பெருமான் எதற்காக உயிர்களுக்கு பிறப்பையும் இறப்பையும் உண்டாக்குகின்றார் என்பதை சற்று சிந்திக்கலாம். செம்பினுக்கு களி இருப்பது போன்று நெல்லுக்கு உமி இருப்பது போன்று அனைத்து உயிர்களுடன் ஆணவ மலம் எப்போதும் பிணைந்துள்ளது. இந்த ஆணவ மலமும், உயிர்கள் மற்றும் இறைவன் போன்று அனாதி. எனவே ஆணவ மலத்தை அடக்கி, செயலறச் செய்ய முடியுமே தவிர, முற்றிலும் அழிக்க முடியாது. இந்த ஆணவ மலத்தின் விளைவால், சென்ற பல பிறவிகளில் செய்த நற்செயல்கள் மற்றும் தீயசெயல்களின் விளைவுகள் வினைகளாக உயிருடன் இணைகின்றன. இந்த வினைகளை உயிர், தானே தனியாக கழித்துக் கொள்ள முடியாது. ஏதாவது உடலுடன் இணைந்து தான் உயிர் இந்த வினைகளால் விளையும் நன்மை தீமைகளை நுகர்ந்து கழித்துக் கொள்ள முடியும். எனவே உயிர்கள் தங்களுடன் இணைந்துள்ள வினைகளின் தகுதிக்கு ஏற்ப, தகுந்த உடலுடன் இணைய வேண்டிய அவசியம் உள்ளது. உயிர்களை தங்களுடன் பிணிந்துள்ள வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு தன்னுடன் வந்து சேர்ந்து, நிலையான ஆனந்தம் அடைய் வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றான். எனவே, தங்களது வினைகளை கழித்துக் கொள்ள தகுந்த உடலுடன் உயிர்களை கூட்டுகின்றான். உயிர்கள் பல பிறவிகளில் சேர்த்துக்கொண்டுள்ள எல்லையற்ற வினைகளை ஒரே பிறவியில் கழிக்கவேண்டி நேர்ந்தால், அதன் விளைவை தாங்கும் சக்தி எந்த உடலுக்கும் இல்லை என்பதால், அந்த உடல் தாங்ககூடிய வினகளை மட்டும் அந்த பிறவிக்கு வைத்துவிட்டும், எஞ்சிய வினைகளை இனிமேல் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கும் இறைவன் ஒதுக்கி விடுகின்றான். அந்தந்த பிறவிக்கு ஒதுக்கப்பட்ட வினைகளை அந்த உடலுடன் இணைந்த உயிர் நுகர்ந்து கழித்த பின்னர், அந்த உடலிலிருந்து உயிர் விடுவிக்கப்பட்டு (இறப்பின் மூலம்) அடுத்த பிறவிக்கு ஏற்ற உடலுடன் பொருத்தப்படுகின்றது. இதனிடையில் தங்களது வினைகளின் ஒரு பகுதியை சொர்க்கத்திலும் நரகத்திலும் சூக்கும் உடலுடன் கூடி அனுபவிக்கின்றது, இவ்வாறு, தொடர்ந்த பல பிறவிகள் முலம் தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ளும் உயிர்களை இறைவன் தன்னுடன் முக்தி உலகில் இணைத்துக் கொள்கின்றான். இந்த செயல் இறைவன் உயிர்கள் பால் கொண்டுள்ள கருணையின் பால் நிகழ்கின்ற செயலாகும். இதனை சிவபெருமானை தவிர்த்து வேறெவரும் செய்ய முடியாது என்பதால், இந்த காரணத்திற்காகவும் இறைவன் விகிர்தன் என்று அழைக்கப்படுகின்றான். மேலும் தற்போதம் நீங்கிய நிலையில், தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை சரிசமமாக பாவித்து, அவற்றால் சலனம் அடையாமல் இருக்கும் பக்குவம் அடைந்த உயிர்களுக்கு, அந்த உயிர்களுடன் பிணைந்துள்ள எஞ்சிய வினைகளிலிருந்து விடுதலை அளித்து, இறைவன் முக்தி நிலையை பரிசாக அளிக்கின்றான். இந்த செயலும் இறைவனைத் தவிர்த்து வேறெவரும் செய்ய முடியாத செயலாகும்.

தனது உடல் முழுவதும் திருநீறு பூசியவராக, நள்ளிரவில் சுடுகாட்டினில் பெருமான் நடனம் ஆடுவதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.இந்த செயல் வேறு எவரும் செய்யாத செயல் என்பதை நாம் அறிவோம். பெருமான் பல தன்மைகளில் மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவனாக, பலரும் செய்ய முடியாத செயல்களை பல புரிந்தவனாக இருந்த தன்மையை விகிர்தன் என்ற சொல் மூலம் குறிப்பிட்டு தேவார முதலிகள் மகிழ்ந்தனர். தான் உண்ட உணவு (நஞ்சு), உறைவிடம் (காடு), உடை (தோலாடை) அணிகலன் (பாம்பு, ஏனக் கொம்பு, ஆமையோடு), உடலில் பூசும் பொருள் (திருநீறு), நடமாடும் அரங்கு (காடு), நடனமாடும் நேரம் (இரவு), வாகனம் (எருது) என்று பல அம்சங்களில் மற்றவரிலிருந்து மாறுபட்ட சிவபெருமானை விகிர்தன், விகிர்தா என்று பல பாடல்களில் தேவார ஆசிரியர்கள் அழைத்து மகிழ்கின்றார்கள். அத்தகைய பாடல்களில் சிலவற்றை நாம் இங்கே காண்போம். விகிர்தனாக விளங்கிய சிவபெருமானை வெண்காடு மேவிய விகிர்தனார் (6.35) என்றும் வீழிமிழலையுள் விகிர்தனார் (4.64) என்றும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனார் (6.59) என்றும் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான் அழைக்கின்றார். சுந்தரரும் தான் அருளிய வெஞ்சமாக்கூடல் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் (7.42) வெஞ்சமாக்கூடல் விகிர்தா என்று பெருமானை அழைக்கின்றார்.

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.10.8) திருஞானசம்பந்தர், பெருமானை விகிர்தன் என்று குறிப்பிட்டு, அவன் மிகவும் எளிதாக மதயானையின் தோலை உரித்த செய்கையை குறிப்பிடுகின்றார். ஒளிறூ என்றால் ஒளி வீசும் என்று பொருள். பிளிறூகுரல் என்றால் யானை பிளிறும் ஒளி என்று பொருள். வெளிறு என்ற சொல் எதுகை கருதி வெளிறூ என்று நீட்டப்பட்டுள்ளது. வெளிறு என்றால் எளிமை என்று பொருள். பலம் வாய்ந்த யானையை எந்த விதமான முயற்சியும் இன்றி எளிதாக தோல் உரித்த செய்கையின் குறிப்பு தோன்ற வெளிறூ பட விளையாடி என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். மனதில் அச்சமோ அல்லது கள்ளமோ இல்லாமல் விளையாட்டாக யானையின் தோலை உரித்த செய்கை இங்கே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அளறு என்றால் சேறு என்று பொருள். சேறு போல் கூழாக மாறும் நிலைக்கு இராவணன் மலையின் கீழ் நசுக்குண்டதால் தள்ளப்பட்டான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். சிவபிரான் செய்த வீரச் செயல்களில், யானையின் தோலை உரித்தது தான் வீரமும் வேகமும் நிறைந்த செயலாக கருதப்படும். ஆனால் அந்தச் செயலையும் சிறுபிள்ளை விளையாட்டாகச் செய்த திறமை உடையவன் இறைவன் என்று அவனது திறம் இங்கே சுட்டிக் காட்டப் படுகின்றது. அதள்=தோல்; யானை குரல் கொடுப்பதை பிளிறுதல் என்று குறிப்பிடுவார்கள்; வாரணம்=ஆண் யானை; வதனம்=முகம் இங்கே யானையின் மத்தகம் என்று பொருள் கொள்வது பொருத்தம்.

ஒளிறூ புலி அதள் ஆடையன் உமை அஞ்சுதல் பொருட்டால்

பிளிறூ குரல் மதவாரண வதனம் பிடித்து உரித்து

வெளிறூ பட விளையாடிய விகிர்தன் இராவணனை

அளறூ பட அடர்த்தான் இடம் அண்ணாமலை அதுவே

தக்கன் நடத்திய யாகத்தில் பங்கேற்ற சந்திரனைத் தனது காலால் தேய்த்தவர் சிவபெருமான். அவ்வாறு காலால் தேய்த்த ஒரு பொருளினை எவரேனும் தமது தலையில் தாங்கிக் கொள்வார்களா? ஆனால் தன்னிடம் சரணடைந்த சந்திரன், தனது காலால் தேய்க்கப்பட்ட இழிவான பொருள் என்று கருதாமல், தயக்கம் ஏதுமின்றி, தனது தலையில் ஏற்றுக்கொண்டு சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்தவர் சிவபெருமான். இந்த செய்கை மற்றவர்களின் செய்கையிலிருந்து வேறுபட்டதால், இந்த செய்கைக்காக விகிர்தன் என்றும் பித்தன் என்றும் சிவபெருமான் தேவாரப் பாடல்களில் அழைக்கப் படுகின்றார் என்று திரு கி.வா.ஜா அவர்கள் தனது திருமுறை மலர்கள் என்ற நூலில் விளக்கம் அளிக்கின்றார். வியலூர் தலத்தின் மீது திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய பதிகத்தின்(1.13) கடைப் பாடல் இது. தளம்=அகன்ற இடம், பெரிய நகரம். துளக்கம்=நடுக்கம்;

விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரைத்

தளம் கொண்டதொர் புகலித் தகு தமிழ் ஞான சம்பந்தன்

துளங்கில் தமிழ் பரவித் தொழும் அடியார் அவர் என்றும்

விளங்கும் புகழ் அதனோடு உயர் விண்ணும் உடையாரே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.40.10) விகிர்தன் என்று பெருமானை குறிப்பிட்டு, விகிர்தனின் சேவடி சார்ந்து இருப்போம் என்று திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறுகின்றார். சார்ந்து இருப்போம் என்று இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் கூறிய திருஞானசம்பந்தருக்கு, பெருமானின் திருவடிகளைச் சார்ந்து இருப்பது எத்தகைய பெரும் பேறு என்பதை அடியார்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது போலும். பொதுவாக பிரமனும் திருமாலும் காண முடியாத திருவடிகள் என்று கூறும் சம்பந்தர் இந்த பாடலில், அவர்கள் இருவரும் காண முடியாத திருவடிகள், சார முடியாத திருவடிகள் என்று கூறுகின்றார். இத்தகைய பெருமை வாய்ந்த திருவடிகளைச் சார்ந்து இருப்பதை ஒரு பெருமையாக கருதி, ஆர்வத்துடன் அந்த திருவடிகளைச் சார வேண்டும் என்ற அறிவுரை இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது.

கரியவன் நான்முகன் கை தொழுது ஏத்தக் காணலும் சாரலும் ஆகா

எரி உருவாகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி

வரி அரவு அல்குல் மடந்தையொர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்

விரிமலர் ஆயின தூவி விகிர்தன சேவடி சேர்வோம்

பாற்றுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.56.6) வேதம் ஓதும் விகிர்தர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். வேதத்தை முதன்முதலில் மொழிந்து உலகினுக்கு அருளியவர் பெருமான் என்பதால் வேறு எவரும் செய்யாத செயலாக இந்த செயல் கருதப்படுகின்றது. இந்த பதிகத்தின் பாடல்கள் அகத்துறை வகையில் அமைந்தவை. நலம்=அழகு; இதே பதிகதின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது பாடல்களில் கூறப்பட்டுள்ள கருத்து இங்கே மீண்டும் சொல்லப்பட்டு வலியுறுத்தப்படுகின்றது. விகிர்தர்=மாறுபட்ட தன்மையை உடையவர்; போது= மலர்; நாதர்=தலைவர்; சிவஞானம் மேலிட, உயிர் தனது உடலினை அலங்காரம் செய்து கொள்வதையும், உடலைப் பேணி பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் உணவு உட்கொள்வதையும் தவிர்க்கும் நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது.

போது பொன்திகழ் கொன்றை புனைமுடி

நாதர் வந்தென் நலம் கொண்டார்

பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை

வேதம் ஓதும் விகிர்தரே

தோணிபுரம் தலத்தின் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.60.9) திருஞானசம்பந்தர் பெருமானை விகிர்தன் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் பாடல்களும் அகத்துறை வழியே அமைந்த பாடல்களாகும். தனது நாயகனாகிய பெருமானுடன் சேர முடியாத ஏக்கத்தினால் வருந்தி தவிக்கும் சம்பந்த நாயகி, தனது நிலையினை பெருமானுக்கு எடுத்துரைக்க பல பறவைகளை தூதுக்கு அனுப்புவதாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம். பூவை=நாகணவாய்ப் பறவை; குயிலை, இறைவனை வரவழைக்கும் நோக்கத்துடன் கூவுமாறு வேண்டிய சம்பந்த நாயகி, என்ன செய்வது என்று அறியாம்ல் திகைத்த நிலையில், மீண்டும் எவரையேனும் தூதாக அனுப்பலாம் என்ற நோக்கத்துடன், நாகணவாய்ப் பறவைகளை அழைக்கின்றாள். பொற்பு=அழகு; சொற்பதம்=சொற்களாக அமைந்துள்ள வேத மந்திரங்கள்; இந்த பாடலிலும் தூது செல்லவிருக்கும் பறவைகளை புகழ்வதையும் வேண்டுவதையும் நாம் உணரலாம். நற்பதங்கள்=நல்ல சந்தர்ப்பங்கள்; பறவையை வேண்டுவது மட்டுமன்றி, பறவையின் வாய் மிகவும் அழகானது என்றும் சம்பந்த நாயகி புகழ்கின்றாள்; மெய்=உடல்; விகிர்தன்=ஏனைய தெய்வங்களிலிருந்து பல தன்மைகளில் மாறுபட்டவன்;இவ்வாறு இறைவன் மாறுபட்டிருக்கும் தன்மையும் அவனது தோளின் அழகும் தன்னைக் கவர்ந்ததை இங்கே சம்பந்த நாயகி உணர்த்துகின்றாள்.

நற்பதங்கள் மிக அறிவாய் நான் உன்னை வேண்டுகின்றேன்

பொற்பு அமைந்த வாய் அலகில் பூவை நல்லாய் போற்றுகின்றேன்

சொற்பதம் சேர் மறையாளர் திருத்தோணிபுரத்து உறையும்

விற்பொலி தோள் விகிர்தனுக்கு என் மெய்ப் பயலை விளம்பாயே

புறவம் என்று அழைக்கப்ப்டும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.74.2) திருஞானசம்பந்தர் பெருமானை நாகத்தைத் தனது இடுப்புக் கச்சையின் மேல் இறுகக்கட்டி அசைத்த விகிர்தர் என்று கூறுகின்றார். உரவன்=வலிமை உடையவன்; விகிர்தன் என்பதற்கு எவராலும் தோற்றிவிக்கப் படாமல் தானே தோன்றியவன் என்றும் ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன் என்று இரண்டு பொருள்கள் கூறப்படுகின்றன. இவை இரண்டுமே இறைவனுக்கு பொருந்தி இருப்பதை நாம் உணரலாம்.

உரவன் புலியின் உரி தோலாடை உடை மேல் பட நாகம்

விரவி விரி பூங் கச்சா அசைத்த விகிர்தன் உகிர் தன்னால்

பொரு வெங் களிறு பிளிற உரித்துப் புறவம் பதியாக

இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

வெங்குரு (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களி ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.9) திருஞானசம்பந்தர் பெருமானை, எமை ஆள விரும்பிய விகிர்தர் என்று குறிப்பிடுகின்றார். புக்கும் என்ற சொல்லை சேற்றிடைப் புக்கும் என்றும் திகழ் வானத்திடை புக்கும் என்றும் இரண்டு இடங்களிலும் சேர்த்து பொருள் கொள்ளவேண்டும். நிலத்தைத் தோண்டிச் சென்ற பன்றியாகவும் வானில் பறந்து சென்ற அன்னமாகவும் முறையே திருமாலும் பிரமனும் தங்களின் முன்னே தோன்றிய தீப்பிழம்பின் அடிமுடி தேடிய நிகழ்ச்சி உணர்த்தப் படுகின்றது. பிரமனும் திருமாலும் தங்களது முயற்சியில் தோல்வி அடையும் வண்ணம் நெடுந்தழலாக நின்ற பெருமை சிவபெருமான் ஒருவருக்கே உரியது என்பதால் அவரை விகிர்தர் என்று அழைக்கின்றார். தேவர்கள் போகலோகத்தில் வாழ்பவர்கள். எனவே அவர்கள் தங்கள்து போகத்திற்கு இடையூறு வரும் தருணங்களில் மட்டும் இறைவனை வணங்குகின்றனர். அவர்களிலிருந்து மாறுபட்டு எப்போதும் வழிபடும் தன்னை, சிறப்பான முறையில் ஆட்கொண்டு பெருமான் அருள் புரிகின்றார் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர் என்று குறிப்பிடுகின்றார்.

ஆறுடைச் சடை எம் அடிகளைக் காண அரியொடு பிரமனும் அளப்பதற்காகிச்

சேறிடைத் திகழ் வானத்திடை புக்கும் செலவு அறத்தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ் வெண்

நீறுடைக் கோல மேனியர் நெற்றிக் கண்ணினர் விண்ணவர் கை தொழுதேத்த

வேறெமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே

திருநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.86.2) பார்வதி தேவியுடன் உடனாக இணைந்தும் வேறாகவும் விளங்கும் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். விகிர்தர் என்ற சொல்லை எருதேறும் என்ற தொடருடன் இணைத்து பொருள் காணவேண்டும். எளிமையான எருதினை வாகனமாகக் கொண்டு ஏனையோரிடமிருந்து மாறுபட்டு காணப்படும் விகிர்தர் என்று உணர்த்துகின்றார். ஆயிழை=தேர்ந்தெடுத்த நகைகளை அணிந்த பார்வதி தேவி;

ஏறில் எருதேறும் எழில் ஆயிழையோடும்

வேறும் உடனுமாம் விகிர்தர் அவர் என்ன

நாறும் மலர்ப் பொய்கை நல்லூர்ப் பெருமானைக்

கூறும் அடியார்கட்கு அடையா குற்றமே

எருக்கத்தம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.89.03) திருஞானசம்பந்தர் பெருமானை விகிர்தா என்றும் பித்தா என்றும் அழைக்கின்றார். எண்ணார்=எண்ணத்தகும் பித்தா பிறைசூடி என்று இங்கே சம்பந்தர் உணர்த்தும் தொடரே சுந்தரரின் வாக்காக பின்னர் அமைந்தது. வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜா. அவர்கள் பித்தா பிறைசூடி என்ற தொடருக்கு ஒரு சுவையான விளக்கத்தினை, தனது திருமுறை மலர்கள் என்ற புத்தகத்தில் அளித்துள்ளார். தக்கனது யாகத்தில் பங்கேற்றதற்காக, சந்திரனைத் தனது காலால் தேய்த்த சிவபெருமான், அதே சந்திரன், தனது கலைகளை இழந்து அழியும் தருவாயில் சிவபிரானிடம் சரணடைந்த போது, எஞ்சியிருந்த ஒரே கலையினை தனது தலையில் வைத்துக் கொண்டு சந்திரன் அழியாமல் காப்பாற்றுகின்றார். காலால் தேய்த்த ஒரு பொருளினை எவரேனும் தலையில் வைத்துக் கொள்வார்களா என்ற கேள்வியை எழுப்பும் கி.வா.ஜா அவர்கள்,பித்தா என்று அழைத்தது மிகவும் பொருத்தம் என்று வேடிக்கையாக கூறுகின்றார். பித்தா என்று அழைத்ததற்கு காரணத்தை நமக்கு உணர்த்தும் வகையில்,பிறைசூடி என்று உடனே சுந்தரர் தனது முதல் பதிகத்தில் கூறுகின்றார் என்று திரு கி.வா.ஜா. அவர்கள் கருத்து தெரிவிக்கின்றார். தக்கனது சாபத்தினால் தனது கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து, ஒற்றைப் பிறையுடன் முற்றிலும் அழியும் நிலையிலிருந்த சந்திரன், தன்னை காப்பாற்றுவார் எவருமின்றி பெருமானிடம் சரணடைந்த செய்தியே, பெருமான் மற்றவரிடமிருந்து மாறுபட்டவர் என்பதை உணர்த்துகின்றது.

விண்ணோர் பெருமானே விகிர்தா விடை ஊர்தீ

பெண் ஆண் அலியாகும் பித்தா பிறைசூடி

எண்ணார் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற

அண்ணா என வல்லார்க்கு அடையா வினை தானே

திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.98.2) திருஞானசம்பந்தர் வெம்முக வேழத்து ஈருரி போர்த்த விகிர்தா என்று குறிப்பிடுகின்றார். இயற்கை காட்சிகளைக் காணும் சம்பந்தர் அந்த காட்சிகளின் காரணத்திற்கு, தமிழ்ப் பண்பாட்டின் அம்சத்தையும் ஏற்றி சுவை பட கூறுவதையும் நாம் இந்த பதிகத்தில் காணலாம். குட்டியுடன் மலை உச்சிக்குச் செல்லும் ஒரு தாய்க்குரங்கினைக் காணும் திருஞானசம்பந்தருக்கு கணவனுடன் ஊடல் கொண்டு தனது குழந்தையையும் அழைத்துக்கொண்டு மலை உச்சிக்கு தற்கொலை செய்து கொள்ள செல்லும் பெண்ணின் நிலை நினைவுக்கு வருகின்றது. இரண்டையும் இணைத்து கூறும் திருஞானசம்பந்தர் அந்த காலத்தில் இருந்த மகளிரின் பண்பாட்டையும் நமக்கு விளக்குகின்றார்.இந்த பாடலில் பெருமான் பாம்புடன் பிறைச் சந்திரனை தனது சடையில் வைத்துள்ள தன்மை குறிப்பிடப்பட்டு, அந்த செய்கையினால் இறைவனுக்கு பழி ஏதும் இல்லை என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். பாம்பும் சந்திரனும், இயற்கையாகவே தங்களின் இடையே பகை கொண்டவை. எனினும் இவை இரண்டும் பெருமானின் சடையில் அடங்கி இருக்கும் தன்மைக்கு காரணம் இறைவனின் சன்னதியில் பகை உணர்ச்சிக்கு இடமில்லை என்பது தான். எனவே தான் இந்த செய்கையால் இறைவனுக்கு பழியேதும் இல்லை என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். மாறாக இந்த தன்மை இறைவனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் செயலாக அமைந்துள்ளது என்பதை உணர்த்துகின்றார் கைம்மகவு=தனது கையினில் குட்டிக் குரங்கு; கடுவன்=ஆண் குரங்கு; மந்தி=பெண் குரங்கு; கழை=மூங்கில் மரங்கள்; வரை=மலை; வெம்முகம்=கொடுமையான முகம்; வேழம்=யானை; யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது அந்நாளில் நிலவி வந்த நம்பிக்கை. மான்தோல் புலித்தோல் வேங்கையின் தோல் போன்றவற்றை பலரும் வைத்திருப்பதை காணும் நாம், யானைத் தோல் வைத்திருக்கும் எவரையும் காண்பதில்லை. சங்க இலக்கியமாகிய சீவக சிந்தாமணி, இரத்தப் பசை உடைய யானையின் தோல் நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று உணர்த்துகின்றது. வாரணத்தின் ஈருரி போல் கோளிமிழ்ப்பு என்பது சிந்தாமணித் தொடர். தன்னைச் சாரும் பொருட்களின் தன்மையை மாற்றும் வல்லமை வாய்ந்த பெருமான், நஞ்சின் தன்மையையும் மாற்றியவர், வெறிகொண்ட மான் கன்றின் தன்மையை மாற்றிவர், யானைத் தோலின் தன்மையையும் மாற்றி தனது உடலுக்கு எந்தவிதமான கேடும் அடையாமல் இருந்ததால் அவரை, விகிர்தன் என்று இங்கே குறிப்பிட்டார் போலும்.யானை பொதுவாக சாந்த குணம் உடைய விலங்கு. ஆனால் மதம் கொண்ட யானை வெறியுடன் ஓடி வரும் போது அந்த யானையின் முகத்தில் சாந்தம் அகன்று ஒருவிதமான கொலைவெறித் தன்மை வெளிப்படும் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

கைம்மகவு ஏந்திக் கடுவனோடு ஊடிக் கழை பாய்வான்

செம்முக மந்தி கருவறை ஏறும் சிராப்பள்ளி

வெம்முக வேழத்து ஈருரி போர்த்த விகிர்தா நீ

பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே

புகலி என்று அழைக்கப்பட்ட சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.104.5) திருஞானசம்பந்தர் பெருமானை விகிர்தன் என்று அழைக்கின்றார். அழகார் உமையோடுடன் வேடு பட நடந்த விகிர்தன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். கொடிய விலங்குகள் வாழும் காட்டுக்கு, தனது அழகிய மனைவியை வேடுவக் கோலம் பூணவைத்து எவரேனும் அழைத்துச் செல்வரோ. தனது உண்மையான உருவத்தை எவரேனும் மறைக்க விருப்பம் கொண்டால், காண்போரைக் கவரும் அழகிய வேடத்தை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் சிவபெருமானோ, பாசுபதம் பெறுவதற்காக தவம் இருந்த அர்ஜுனனைக் காணச் சென்ற போது, வேடுவக் கோலம் தாங்கிச் செல்கின்றார். தான் மட்டும் செல்வது அல்லாமல், தனது மனைவி பார்வதி தேவியையும் வேடுவச்சி கோலத்துடன் அழைத்துச் செல்கின்றார். அவரது உண்மையான கோலமும் இந்த பாடலில் கூறப்படுகின்றது. இத்தகைய மாறுபட்ட செய்கைகளையும் அந்த செயல்களின் பின்னணியில் அமைந்துள்ள காரணத்தையும் புரிந்து கொள்ளும் அடியார்கள் இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர் என்று கூறுகின்றார்.

சூடு மதிச் சடைமேல் சுரும்பார் மலர்க் கொன்றை துன்று நட்டம்

ஆடும் அமரர் பிரான் அழகார் உமையோடும் உடன்

வேடுபட நடந்த விகிர்தன் குணம் பரவித் தொண்டர்

பாட இனிதுறையும் புகலிப் பதியாமே

சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.112.4) திருஞானசம்பந்தர் ஐந்து பூதங்களுடன் இறைவன் ஒன்றியிருக்கும் தன்மையை குறிப்பிடுகையில் விகிர்தன் என்று அழைக்கின்றார். ஐந்து பூதங்களின் தன்மையாக இருந்து அவற்றை இயக்குவது பெருமான் ஒருவன் தானே.மாருதம்=காற்று; மருவிய=பொருந்தி உறையும்; விகிர்தன்=மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்ட தன்மை உடையவன்; பண்புனை=இனிய இசைகளுடன் பொருந்திய குரல்; வண்டுகள் செண்பக மலர்ச் சோலைகளைத் தேடிக் கொண்டு வருவது போன்று, புகழ் மிகுந்த இந்த சிவபுர நகரத்தை நாடி பல இடங்களிலிருந்தும் அடியார்கள் வருகின்றனர் என்று குறிப்பு தோன்ற வண்டுகள் வருகின்ற செய்தி அமைந்துள்ளது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த கோயிலின் தலமரம் சண்பகம். பண்டைய நாளில் சண்பகவனம் என்று அழைக்கப்பட்ட தலம். திருஞானசம்பந்தரின் காலத்தில் இங்கே சண்பக மரங்கள் மிகவும் அதிகமாக இருந்தன போலும். ஐந்து பூதங்களின் தன்மையையும் அவற்றுடன் இறைவன் இணைந்து நின்று இயக்கும் தன்மையையும் பல திருமுறைப் பாடல்கள் விளக்குகின்றன.

மண் புனல் அனலொடு மாருதமும்

விண் புனை மருவிய விகிர்தன் நகர்

பண்புனை குரல் வழி வண்டு கிண்டிச்

செண்பக மலர் பொழில் சிவபுரமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.130.6) திருஞானசம்பந்தர் பெருமானை விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும் விகிர்தன் என்று கூறுகின்றார். தேந்தாம்=இசையுடன் இணைந்து ஒலிக்கும் முழவினை உணர்த்தும் குறிப்புச் சொல்; நன்னெறி= உயிர்கள் வினைகளின் பிணைப்பிலிருந்தும் விடுதலை அளித்து, என்றும் அழியாத பேரின்பத்தில் ஆழ்த்தும் முக்தி நெறி. .சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரும் முக்தி நிலை அளிக்க முடியாது என்பதால், சிவபெருமானை ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.தாமம்=மாலை; மக்களை ஆட்சி செய்யும் வேந்தனுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணம், மக்களை காப்பதும் அவர்களுக்கு நல்ல வழி கட்டுவதும் தானே. எனவே வேந்தன் என்று மிகவும் பொருத்தமாக இறைவன் அழைக்கப்படுகின்றார்.

வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறி காட்டும் விகிர்தனாகி

பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்

காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாடக் கவினார் வீதித்

தேந்தாம் என்று அரங்கு ஏறிச் சேயிழையார் நடமாடும் திருவையாறே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.21.5) திருஞானசம்பந்தர், பெருமானை, விகிர்தா என்று அழைக்கின்றார். பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தை விரும்பி உட்கொண்ட பெருமானை மிகவும் பொருத்தமாக விகிர்தன் என்று அழைக்கின்றார். நண்ணி=விரும்பி, நெருங்கி;அசைத்தல்=இறுகக் கட்டுதல்; பெருமானின் கழுத்தினில், அவர் உட்கொண்ட ஆலகால விடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாததால் தூய மிடறு என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மிடறு=கழுத்து; விடத்தினை தேக்கியதால் ஏற்பட்ட கருமை நிறமுடைய கறை, பெருமான் தான் உட்கொண்ட விடம் கழுத்திலே தேக்கப்பட்டு விட்டதால், பிரளய காலத்தில் தன்னுள் ஒடுங்கும் உயிர்களுக்கு எத்தகைய சேதமும் விளையாது என்பதை உலகுக்கு உணர்த்தவே ஏற்பட்டுள்ளது என்பதால், கறையினை பொருட்படுத்தாது தூயமிடறு என்றே கருதவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார் போலும். உடல் நண்ணி வணங்குதல்= பெருமான் உறையும் திருக்கோயில்களின் உள்ளே சென்று பெருமானை உடலால் நெருங்கி வணங்குதல்; உடலின் உறுப்புகள் அனைத்தும் நிலத்தை நெருங்கித் தொடும் வண்ணம் அட்டாங்க வணக்கம் செலுத்துதல் என்றும் பொருள் கூறுகின்றனர். இரண்டு வகையான விளக்கங்களும் பொருத்தமாக உள்ளன. பொங்கி எழுந்த ஆலகால விடத்தின் நெடியைக் கூட தாங்க முடியாமல் ஆளுக்கொரு திசையாக பதறி ஓடியவர்கள், பிரமன் திருமால் உள்ளிட்ட தேவர்கள், ஆனால் சிவபெருமானோ, அந்த விடத்தினை தயக்கம் ஏதுமின்றி உட்கொண்டு அனைவரையும் விடம் தாக்காத வண்ணம் காப்பாற்றியவர். இவ்வாறு ஏனையோரிடமிருந்து பெருமான் மாறுபட்டு இருக்கும் தன்மையை குறிப்பிடும் வண்ணம் விகிர்தன் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தனது அடியார்கள் பால் அன்பு கொண்டு அருள் புரிபவன் இறைவன் என்பதால், நிலத்தில் தனது உறுப்புகள் தோய விழுந்து வணங்குவேன் என்று குறிப்பிட்டு, இறைவனின் கருணையை நினைத்து மனம் கசிந்து நாமும் அவனை வணங்கவேண்டும் என்று நமக்கு திருஞானசம்பந்தர் வழிகாட்டுகின்றார்.

நட நண்ணி ஓர் நாகம் அசைத்தவனே

விட நண்ணிய தூ மிடறா விகிர்தா

கடல் நண்ணு கழிப்பதி காவலனே

உடல் நண்ணி வணங்குவன் உன்னடியே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.48.11) பிறைச்சென்னி விகிர்தன் என்று பெருமானை, திருஞானசம்பந்தர் அழைக்கின்றார்.தண்பொழில்=குளிர்ந்த சோலைகள்; சண்பை என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. பண்பொலி=பண்ணுடன் இசைந்து பாடுவதால் பொலிவு பெற்று விளங்கும்; பொலிவு=அழகு, சிறப்பு; இந்த பாடலில் சண்பையர் கோன் என்று தன்னை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சீர்காழி நகரில் இருந்த தொண்டர்களும், மற்ற தலங்களில் இருந்த தொண்டர்களும் திருஞான சம்பந்தரை, சைவ சமயத்தின் தலைவனாக ஏற்றுக் கொண்ட தன்மை, இங்கே சண்பையர் கோன் என்ற தொடரால் உணர்த்த படுகின்றது.

தண் பொழில் சூழ் சண்பையர் கோன் தமிழ் ஞான சம்பந்தன்

விண் பொலி வெண் பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்

பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்

மண் பொலிய வாழ்ந்து அவர் போய் வான் பொலியப் புகுவாரே

தமது கைகளால் தொழுதும் தலையை சாய்த்து வணங்கியும் உள்ளம் கசிந்தும் பெருமானைத் தொழும் அடியார்களின் உடற்பிணிகளையும் துன்பங்களையும் தீர்க்கும் விகிர்தன் என்று பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.60.3) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.கோடல்=காந்தள் மலர்கள்; பாம்பு படம் எடுத்து ஆடுவதைப் போன்று காந்தள் பூக்கள் இருப்பதாக கூறுகின்றார். எந்த பொருளிலும் சிவத்தைக் காணும் தன்மையராக விளங்கிய திருஞான சம்பந்தருக்கு, காந்தள் மலர், பெருமானின் உடலுடன் இணைந்த பாம்பினை நினைவூட்டியது போலும். பால் நெய் தயிர் கோமியம் மற்றும் பசுஞ்சாணம் கலந்த பஞ்சகவ்யத்தை விரும்பி பெருமான் நீராடுவது இங்கே உணர்த்தப்படுகின்றது.

கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்கள்

மெய்யார் குறையும் துயரும் தீர்க்கும் விகிர்தனார்

நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும்

பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே

திருக்கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.68.10) திருஞானசம்பந்தர் பெருமானை வேடம் பலபல காட்டும் விகிர்தர் என்று அழைக்கின்றார். அறம் காட்டும் அவர்கள்=தாம் தரும் நெறியில் நிற்பது போன்று காட்டிக் கொள்ளும் சமணர்கள்; அவர்களது தோற்றம் புறத்தோற்றமே அன்றி அகத்தில் உண்மையில் தருமநெறியினை பின்பற்றாதவர்களாக சமணர்கள், அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்தமை பெரியபுராணத்தில் பல இடங்களில் சுட்டிக் கட்டப்பட்டுள்ளது. சோடை=வறண்ட நிலை; பொருளற்ற பேச்சுகள்;

ஆடை தவிர்த்து அறம் காட்டும் அவர்களும் அந்துவராடைச்

சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர்

வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேத முதல்வன்

காடதனின் நடம் ஆடும் கண்ணுதலான் கடம்பூரே

ஈங்கோய்மலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.70.7) பெருமானை விகிர்தன் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். எண்ணற்ற பல பிறவிகளில் செய்த செயல்கள் காரணமாக, உயிர்கள் சேர்த்துக் கொண்டுவரும் வினைகளை, வலிமையாக உயிருடன் பற்றியுள்ள வினைகளை, உயிர்கள் நுகர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து அந்த வினைகளை நுகர்ந்து கழிக்கும் முயற்சியில், உயிர்கள் மேலும் பல புதிய வினைகளை (ஆகாமிய வினைகள் என்று சொல்வார்கள்) சேர்த்துக் கொள்வதால், புதியதாக சேர்ந்த அந்த வினைகளை கழிக்கும் முயற்சியில் மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றன. இவ்வாறு பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீளமுடியாமல் தவிக்கும் உயிர்கள் தங்களின் வினைகளை எளிதில் தீர்த்துக் கொள்வதற்கு உள்ள ஒரே வழி சிவபெருமானை வழிபடுவது தான். சிவபெருமான் ஒருவனே உயிர்களைப் பற்றியுள்ள வினைகளை முற்றிலும் அறுத்து நீக்கும் ஆற்றல் படைத்தவன் என்பதால் அவன் மற்ற தெய்வங்களிலிருந்து வேறுபட்டவன் என்பதை உணர்த்தும் வண்ணம் விகிர்தன் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். மேலும் இத்தகைய உதவியினை உயிர்களுக்கு அவன் செய்வதால் உயிர்களால் மிகவும் விரும்பப்படுகின்றான் என்பதை உணர்த்த நம்பான் என்றும் இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். தனையார்=பூக்களில் சிறந்த பூவாக இருப்பதால், தலைமையான பூ என்று தாமரை மலரை குறிப்பிடுகின்றார். நனை=அரும்பு; நம்பான்=உயிர்களின் விருப்பத்திற்கு உரியவன், உயிர்களால் நம்பப்படுபவன்;

வினையாயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி கொன்றை

நனையார் முடி மேல் மதியம் சூடு நம்பான் நல மல்கு

தனையார் கமலமலர் மேல் உறைவான் தலையோடு அனல் ஏந்தும்

எனை ஆளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே

குற்றாலம் தலத்தில் உள்ள குறும்பலாவின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.71.9) திருஞான சம்பந்தர் மதியணிந்த விகிர்தர் என்று குறிப்பிடுகின்றார்.பிரமனும் திருமாலும் காணாத வகையில் நின்றதும் அழியும் நிலையிலிருந்த சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்தமையும் விகிர்தரின் செயல்களாக கருதப்படுகின்றன. விரவி=கலந்து; மரவம்=குங்கும மரம்; மலைச் சாரலில் மல்ர்ந்து நிற்பது, குரவ மரம் புன்முறுவல் செய்வது போல் உள்ளது என்று கூறுகின்றார்.

அரவின் அணையானும் நான்முகனும் காண்பரிய அண்ணல் சென்னி

விரவி மதியணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரிபூஞ்சாரல்

மரவம் இரு கரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்தக்

குரவ முறுவல் செய்யும் குன்றிடம் சூழ் தண்சாரல் குறும்பலாவே

திருநணா என்று அழைக்கப்பட்ட பவானி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.72.3) திருஞானசம்பந்தர் விகிர்தர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். நல்ல இசையுடன் பொருத்தி இசைக்கப்படும் வேதங்கள் என்று பாடலில் முதல் அடியில் உணர்த்துகின்றார். வேதங்களை நான்கு வேறுவேறு முனிவர்களுக்கு மொழிந்த பெருமான் அந்த வேதங்களை நல்ல இசையுடன் சேர்த்து நன்றாக பாடுகின்றார். அனைத்து கலைகளையும் தோற்றுவித்து உலகத்தவர்க்கு கற்றுவித்த பெருமான் என்று பொருள் கொள்வது ஒரு வகை. இசை என்று இந்த பாடலில் குறிப்பிடப்படுவது முதல் பாடலில் குறிப்பிட்ட வீணை இசை என்று பொருள் கொண்டு, பிரளயத்தால் உலகத்தின் அனைத்து உடல்களும், உலகமும் உலகிலுள்ள அனைத்து பொருட்களும் அழிந்த பின்னர், உயிர்கள் தங்களது வினைகளை கழித்துக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அருளுவதற்கு பெருமான் திருவுள்ளம் கொண்டு வீணை இசைக்க, பெருமானின் திருவுள்ளக் கிடைக்கையினை புரிந்து கொள்ளும் அம்பிகை உலகினை படைத்தார் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.தேவதேவன் மற்றும் தேவியின் இந்த செயலால், தங்களது வினைகளைக் கழித்துக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பினை பெறுகின்ற உயிர்கள், இறைவனின் இந்த கருணைச் செயலின் நோக்கத்தை புரிந்து கொண்டு பெருமானை புகழ்கின்றன என்ற செய்தி இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. மின் தாங்கு=மின்னலைத் தாங்கியது போன்று ஒளியுடன் மிளிரும்; சடை என்பது பெருமானின் அடையாளமாக கருதப் படுகின்றது. பல முனிவர்களும் தவசிகளும் சடையுடன் காணப்பட்டாலும் சடையன் என்று பெருமானை மட்டுமே அழைக்கின்றோம் அல்லவா. பலரும் தவம் செய்வதற்கு முன்னோடியாகத் திகழும் அவனைத் தவிர்த்து சடையன் என்று அழைக்கப்படுவதற்கு தகுதி படைத்தோர் வேறொருவரும் இல்லை. விகிர்தன்=மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவன்; வேதங்களை முதன்முதலில் மொழிந்தவன் என்பதால் ஏனையோரிலிருந்து மாறுபட்டு இறைவன் இருக்கும் தன்மை இங்கே சுட்டிக்காட்டப் படுகின்றது விரை=நறுமணம்; வெற்பு=மலை; செவ்வி=சிறப்பாக; நுதல்=நெற்றி; நன்றாங்கு இசை என்பதற்கு இசையுடன் பொருந்திய சாமவேத கீதங்கள் என்று விளக்கம் தரப்படுகின்றது. சாமவேதம் கேட்பதிலும் பாடுவதிலும் மிகவும் விருப்பம் உடைய பெருமான் என்று வேதங்களும் திருமுறை பாடல்களும் உணர்த்துகின்றன.

நன்று ஆங்கு இசை மொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த

மின்றாங்கு செஞ்சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில்

குன்றோங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி

சென்றோங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திருநணாவே

கொச்சைவயம் (சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிக்கத்தின் பாடலில் (2.83.10) திருஞானசம்பந்தர்,சமணர்களும் புத்தர்களும் மெய்யுரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மெய் என்ற சொல் இங்கே மெய்ப்பொருளாகிய பெருமானை குறிக்கும். அவன் அருள் இருந்தால் மட்டுமே, அவனை நினைக்கவோ, சிந்திக்கவோ, வழிபடவோ முடியும். அவனது அருளினைப் பெறாத சமணர்கள் மற்றும் புத்தர்கள் எவ்வாறு அவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளமுடியும். அவன் பால் அன்பு செலுத்தி பக்தியுடன் அவனை வழிபடுவோர் மட்டுமே உணரும் வண்ணம் பக்தி வலையில் படுவோன் அல்லவா. அவன் மீது வெறுப்பு கொண்டு, அவனைப் பற்றி வீண் பழிச்சொற்களை அள்ளி வீசும் சமணர்கள் மற்றும் புத்தர்களால் அவனை புரிந்து கொள்ள முடியாது. இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில், ஒப்பில் நடமாடவல்ல விகிர்தன் என்று கூறுகின்றார்.

கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர் இடு சீவரத்தின் உடையார்

மெய் உரையாத வண்ணம் விளையாடவல்ல விகிர்தத்து உருக்கொள் விமலன்

பையுடை நாக வாயில் எயிறார மிக்க குரவம் பயின்று மலரச்

செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து மணநாறு கொச்சைவயமே

கோளறு திருப்பதிகத்தின் பாடலில் (2.85.10) வேட விகிர்தன் என்று பெருமானை திருஞான சம்பந்தர் அழைக்கின்றார். அர்ஜுனனுக்கு அருள் புரியும் நோக்கத்துடன், அவன் தவம் புரிந்து கொண்டிருந்த கானகம் சென்ற பெருமான், முதலில் அவனுடன் வலிய சண்டையில் ஈடுபட்டு பின்னர் அவனுக்கு அருள் புரிந்த செயலை கருத்தினில் கொண்டு, விகிர்தன் என்று அழைத்தார் போலும்.

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.86.2) விதியான வேத விகிர்தன் என்று பெருமானை, திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.இந்த பதிகத்தின் முதல் பாடலில் மனம் மொழி மெய்களால் விளையும் பாவங்களுக்கு காரணமாகிய குற்றம் பிணி நோய் ஆகிய மூன்றும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றன. உயிரின் குற்றமே மலங்களுடன் பிணைந்து இருப்பதே. அந்த மலங்களின் சேர்க்கையால் ஏற்படும் வினைகளின் காரணமாகத் தானே பிறவிகள் எழுகின்றன. பிறப்பு எடுத்த பின்னர், பழைய வினைகளை நுகரும் நாம் மேலும் பல குற்றங்களை செய்து பாவ வினைகளை சேர்த்துக் கொள்கின்றோம். இந்த வினைகளை தீர்த்துக் கொண்டு தனது நிலையினை உயர்த்திக் கொள்ளவே உயிர் விரும்புகின்றது. அந்த விருப்பத்தினை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வது என்பதை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒருங்கும்=கெடும்; ஊன்=உடல்; இயங்கு விடையான்=விடையின் மீது அமர்ந்து பல இடங்கள் செல்பவன். விதி=வாழ்க்கை நெறிமுறைகள்; ஆடி என்ற சொல் இங்கே பெயர்ச் சொல்லாக வந்துள்ளது. ஆடி=ஆடுபவன்;

ஊன் அடைகின்ற குற்றம் முதலாகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும்

வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதியான வேத விகிர்தன்

கானிடை ஆடி பூதப் படையான் இயங்கு விடையான் இலங்கு முடிமேல்

தேனடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திருநாரையூர் கை தொழவே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (2.87.7) திருஞானசம்பந்தர், பெருமானை விகிர்தர் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பாம்பினைத் தனது உடலின் பல பாகங்களிலும் சூட்டிக் கொண்டுள்ள தன்மை, தனது கையில் தீப்பிழம்பை வைத்துக் கொண்டு நடமாடுவது, விடத்தை உட்கொண்ட தன்மை ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இந்த மூன்று செயல்களும் சிவபெருமான் ஒருவருக்கே உரிய செயல்கள் என்பதை நாம் அறிவோம்.இவ்வாறு மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டு சிவபெருமான் இருக்கும் தன்மையை உணர்த்தவே, திருஞானசம்பந்தர் இங்கே விகிர்தன் என்று அழைக்கின்றார். பாம்பின் உடல் ஒளி உடையதாக இருக்கும் என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. எனினும் பெருமானின் திருமேனி ஒளியுடன் போட்டி போடமுடியாமல் தோல்வி அடைந்த பாம்புகளின் ஒளி மங்கியதாக திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். துளிதரு=தேன் துளிகள்; எழிலார=அழகுடன் விளங்க; இந்த தலத்தினில் வேதங்கள் ஓதப்படும் நிலை மிகவும் அழகாக உள்ளது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.குழுவாக பலரும் சேர்ந்து முறையாக வேதங்கள் ஓதுவது, கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். அந்த தன்மையே, இங்கே வேதங்கள் அழகாக ஓதப்படுகின்றன என்று சொல்லப் படுகின்றது.

ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் மங்க அவையார ஆடலரவம்

மிளிர் தரு கை இலங்க அனலேந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன்

துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழிலார வென்றி அருளும்

நளிர்மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரின் நம்பன் அவனே

கடிக்குளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.104.2) துளக்கிலா விகிர்தன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். எண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்கு, அந்த எண்ணெய்/நெய் குறையக் குறைய ஒளி மங்குவதையும், அவை முழுதும் தீர்ந்த பின்னர் அணைந்து விடுவதையும் நாம் காண்கின்றோம். மின்சாரம் போன்ற சக்திகளால் ஒளிவிடும் விளக்குகளும், அந்த சக்தியின் தொடர்பு அறுந்த பின்னர் அணைந்து போவதையும் நாம் காண்கின்றோம். ஆனால் சோதி வடிவாக இருக்கும் இறைவன் எந்த விதமான சக்தியின் தொடர்புமின்றி ஒளிர்கின்றான்; மேலும் அந்த ஒளி என்றும் குறையாது வளர்கின்ற ஒளியாகவும், எந்த விதமான தூண்டுதலும் தேவைப்படாமல் மிளிர்கின்ற ஒளியாகவும், என்றும் அழியாத ஒளியாகவும் விளங்குகின்றது.எனவே தான் துளக்கிலா விளக்கே என்ற பொருள் பட, துளக்கிலா விகிர்தன் என்று கூறுகின்றார். .

விண்ணுளார் தொழும் விளக்கினைத் துளக்கிலா விகிர்தனை விழவாரும்

மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவித் தம்

கண்கள் ஆர்தரக் கண்டு நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தைப்

பண்கள் ஆர்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே

திருவாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.111.4) விகிர்தனார் என்று திருஞான சம்பந்தர், பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் அகத்துறை அமைப்பில் அமைந்துள்ளன. வஞ்சனையாக தங்களது மனம் கவரும் வகையில் பெருமான் வருகின்றார், என்று பெருமானது அழகில் தங்களது மனதினை பறிகொடுத்த மகளிர் பாடும் வண்ணம் அமைந்த பாடல்கள். வாய்மூர் தலத்திற்கு அப்பர் பிரான் முதலில் செல்ல,அவரைப் பின்பற்றி திருஞான சம்பந்தரும் பின்னர் செல்கின்றார். ஆங்கே பெருமான் தனது நடனக்கோலத்தை காட்டி அருளிய போது, அதனை முதலில் உணர்ந்த திருஞானசம்பந்தர் அப்பர் பிரானுக்கு அந்த காட்சியை காட்டுகின்றார். கண் கவரும் வகையில் பெருமானின் நடனக்காட்சி அமையவே, தன்னை பெருமான் பால் காதல் கொண்ட பெண்ணாக உருவகித்து பாடிய பாடல். தாருகவனத்து மகளிரில் ஒருத்தியாக தன்னை பாவித்துக் கொண்டு பாடிய பாடல் என்று கொள்வதும் பொருத்தமே. அந்நாள் வரையில் கற்புக்கரசிகளாக திகழ்ந்து, தனது கண்வரைத் தவிர்த்து வேறெந்த ஆடவனின் அழகிலும் மயங்காதிருந்த முனிபத்னிகள், முதல் முறையாக வேறோர் ஆடவனின் (பிச்சைப்பெருமான்) தோற்றத்தில் தங்களது மனதினை பறிகொடுத்தமையால்,வெருவ வந்திடர் செய்த விகிர்தனார் என்று உணர்ந்ததை திருஞானசம்பந்தர் பதிவு செய்கின்றார் போலும். இந்த நடனக் காட்சியை அப்பர் பிரானும் பாட அடியார் பரவக்கண்டேன் என்று தொடங்கும் (6.77) பதிகத்தை பாடுகின்றார். தனது அருகே இருந்த திருஞானசம்பந்தர், பெருமானைப் புகழ்ந்து பாடியதை தான், அப்பர் பிரான் பாட அடியார் பரவக்கண்டேன் என்று குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. தான் ரசித்த நடனக்காட்சியை, அப்பர் பிரானும் காணவேண்டும் என்று இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே என்று திருஞானசம்பந்தர் பாடல் தோறும் குறிப்பிடுகின்றார் என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

எரிகிளர் மதியமொடு எழில் நுதல்மேல் எறிபொறி அரவினொடு ஆறு மூழ்க

விரிகிளர் சடையினர் விடையேறி வெருவ வந்திடர் செய்த விகிர்தனார்

புரி கிளர் பொடியணி திருவகலம் பொன் செய்த வாய்மையர் பொன் மிளிரும்

வரி அரவு அரைக்கு அசைத்து இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

திருநாகைகாரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.116.6) திருஞானசம்பந்தர், விடம் கொண்ட பாம்பினை தனது விருப்பம் போல் ஆட்டிய விகிர்தனார் என்று கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்கள் பெருமான் தனது இடுப்பினில் கச்சாக நாகத்தை இறுகக் கட்டிக்கொண்டு திகழ்கின்றார் என்று குறிப்பிடுகின்றன.

விடையதேறி அவ்விடவரவு அசைத்த விகிர்தர் அவர்

படை கொள் பூதம் பலபாட ஆடும் பரமர் அவர்

உடை கொள் வேங்கை உரிதோல் உடையார்க்கு இடமாவது

கடை கொள் செல்வம் கழிசூழ் கடல் நாகைக் காரோணமே

திலதைப்பதி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.118.4) திருஞானசம்பந்தர், பெருமான் தனது சடையில் வைத்துள்ள பொருட்களை பட்டியல் இட்டு, அத்தகைய பொருட்களை வேறெவரும் வைத்துக் கொள்ளாத காரணத்தால், பெருமானை விகிர்தர் என்று குறிப்பிடுகின்றார். தலத்தின் பெயர் திலதைப்பதி, திருகோயிலின் பெயர் மதிமுத்தம்.

கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம்

வெங்கண் நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன் இடம்

செங்கயல் பாய் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி

மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகார் மதிமுத்தமே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகதின் பாடலில் (3.1.8) திருஞானசம்பந்தர் பெருமானை விகிர்தா என்று அழைக்கின்றார். வேயின்=மூங்கில் போல்; ஆர்=பொருந்திய; பணைத்தோளி=திரண்ட தோள்களை உடைய காளிதேவி; காளி தேவி நடனத்தில் மிகவும் சிறந்தவள் என்று கருதப்படுபவள்.எவராலும் வெல்ல முடியாத தாருகன் என்ற அரக்கனை கொன்ற பின்னர், காளிதேவிக்கு ஏற்பட்ட ஆவேசத்தைக் கண்டு அனைத்து உலகங்களும் நடுங்கின.அத்தகைய காளியின் கர்வத்தை அடக்கும் பொருட்டு, பெருமான் காளியை நடனப் போட்டிக்கு அழைத்து, அந்த போட்டியில் காளியை வென்று அவளை அட்க்கினார். அப்போது ஆடிய நடனமே ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படுகின்றது. பல திருக்கோயில்களில் நாம் ஊர்த்துவ தாண்டவச் சிற்பத்தை காணலாம். தில்லைச் சிதம்பரத்தில், கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு அருகே நாம் இந்த சிற்பத்தை காணலாம். இந்த சிற்பம் உள்ள தூணின் பக்கத்தில், இந்த நடனப் போட்டியில் தோல்வி அடைந்த காளிதேவி நாணத்துடன் தலைகுனிந்து நிற்பதையும், திருமால் நடுவராக இந்த போட்டிக்கு இருந்த தன்மையும் அழகிய சிற்பங்களாக உள்ளன. பெருமான் காளிதேவியுடன் நடனம் ஆடி வென்ற தன்மையை விகிர்தா என்ற சொல் மூலம் விளக்குகின்றார். இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் பெருமானை வேதியா விகிர்தா என்று அழைக்கின்றார்.

வேயினார் பணைத் தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது

ஆயினாய் இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே

தீயினார் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம்

மேயினாய் கழலே தொழுது எய்துதும் மேல் உலகே

புகலி என்று அழைக்கபப்ட்ட சீர்காழி தலத்தின் பாடலில் (3.3.6) திருஞானசம்பந்தர் பெருமானை விகிர்தா என்று அழைக்கின்றார். திரிபுரத்து அரக்கர்களை அழித்த வீரச்செயல் விகிர்தா என்று அழைப்பதற்கு காரணமாக உள்ளது. அரிமா=சிங்கம்; தகுவாய்=தகுந்த பயன்களைத் தருவாய்; அடை அரிமா=குகையிலே சென்று அடையும் சிங்கம்; சிங்கத்தின் பொதுத் தன்மையாக குகையில் சென்று அடைவது குறிப்பிடப் பட்டாலும், சிங்கம் என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நரசிங்கத்தை என்று உரை ஆசிரியர்கள் கருதுகின்றனர். இரணியனது இரத்தம் குடித்த நரசிம்மர், அதனால் வெறி அதிகமாகி திரிந்த போது, நரசிம்மரது ஆவேசத்தை அடக்கி அவரது தோலை சட்டையாக தரித்து அவரின் எலும்பை கதையாக மாற்றிகொண்ட வடுகநாதரின் உருவம் தான் சீர்காழி திருக்கோயிலில் உள்ள சட்டநாதர் உருவம். நரசிம்மரும் இலக்குமியும் வணங்கி வழிபட இறைவன் அவர்களுக்கு அருள் புரிந்ததாக கூறுவர். பணிந்த நரசிம்மரின் அகம் அடங்கியது. பிரமனின் கர்வமும் பிரளய காலத்தில் பூமி அழிந்துவிட சிவனால் அனைத்தும் தோற்றுவிக்கப் பட்டதால், அழிந்தது. இவ்வாறு அடி பணிந்தவரின் அகங்காரத்தை அடக்கும் மூர்த்தியாக பரமன் இங்கே திகழ்கிறார். புடைபட=பொருந்தும் வண்ணம்;படையுடை நெடு மதில்=படையாக திகழ்ந்த மதில்கள், மூன்று கோட்டைகள். வேறு எந்த படையும் தேவைப்படா வண்ணம் மூன்று பறக்கும் கோட்டைகளே படையாக திரிபுரத்தவர்களுக்கு அமைந்திருந்த நிலை படையுடை என்ற சொல் மூலம் குறிப்பிடப் படுகின்றது. பரமன்=அனைவர்க்கும் மேலானவன்;பரிசு=தன்மை;

அடை அரிமாவொடு வேங்கையின் தோல்

புடைபட அரை மிசைப் புனைந்தவனே

படை உடை நெடு மதில் பரிசு அழித்த

விடை உடைக் கொடி மல்கு வேதியனே

விகிர்தா பரமா நினை விண்ணவர் தொழப் புகலித்

தகுவாய் மடமாதொடும் தாள் பணிந்தவர் தமக்கே

பூந்தராய் (சீர்காசி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.05.02) திருஞானசம்பந்தர் வெள்ளம் தாங்கு விகிர்தன் என்று பெருமானை அழைக்கின்றார். மிகவும் வேகத்துடன் கீழே இறங்கிவரும் கங்கை நதியைத் தாங்கும் ஆற்றல் சிவபெருமான் ஒருவருக்கே உள்ளது என்பதால் தானே, அதற்காக சிவபெருமானை நாடுமாறு பகீரதனுக்கு பிரமன் ஆலோசனை கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் திருவடிகளை தொழுதால் பல நன்மைகள் நமக்கு விளையும் என்று கூறிய ஞானசம்பந்தர், இந்த காரணம் பற்றியே தங்களது ஞானத்தை பெருகிக் கொள்ள விரும்புவோர் பெருமானின் திருவடிகளைத் தொழுகின்றனர் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் மற்ற பாடல்களில் பெருமானின் திருவடிகளைத் தொழுவதால் நாம் அடையவிருக்கும் பயன்களை எடுத்துக் கூறுகின்றார். வெள்ளம்=கங்கை; இந்த தலத்திற்கு தோணிபுரம் என்ற பெயர் உள்ளது. ஒரு சமயம் பிரளய வெள்ளம் எங்கும் பொங்கி உலகினை மூட முயற்சி செய்த போது, பெருமான் உமையம்மையுடன் ஒரு படகினில் ஏறி,வெள்ளத்தில் மூழ்காமல் சற்று மேடாக இருந்த இந்த தலம் வந்தார் என்று தலபுராணம் கூறுகின்றது. பிரணவ மந்திரத்தை தோணியாக மாற்றி, அதனில் வந்த பெருமான் அறுபத்து நான்கு கலைகளையும் தனது ஆடையாக உடுத்தி வந்தார் என்று கூறுவார்கள். அந்த சமயத்தில், தேவர்கள் பலரும் பறவையின் வடிவத்தில் இந்த தோணியை தாங்கி வந்தனர் என்று கூறுவார்கள். இந்த தகவலை திருஞானசம்பந்தர் தோணிபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.100.9) கூறுகின்றார்.

புள்ளினம் புகழ் போற்றிய பூந்தராய்

வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ

ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்னெறி

மூலம் ஆய முதலவன் தானே

கொள்ளம்பூதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.06.03) திருஞானசம்பந்தர் பெருமானை, விலையில் ஆட்கொண்ட விகிர்தன் என்று குறிப்பிடுகின்றார். இலவசமாக நமக்கு கிடைக்கும் பொருளை அதிகமான அக்கறையுடன் நாம் பாதுகாப்பதில்லை. ஆனால் விலை கொடுத்து வாங்கும் பொருளை மிகவும் அருமையாக பேணி பாதுகாக்கின்றோம். மூன்று வயது குழந்தையாக தான் இருந்த போது, சிவஞானத்தை விலையாக கொடுத்து தன்னை ஆட்கொண்ட பெருமானை, வேறெவரும் அடையாத பேற்றினை தனக்களித்த பெருமானை விகிர்தன் என்று அழைக்கின்றார். மதுரையில் சமணர்களை அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் முறியடித்த பின்னர், பல பாண்டி நாட்டு தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், பாண்டி நாட்டைக் கடந்து சோழநாட்டின் பகுதியான திருக்களர் பாதாளீச்சரம் தலங்கள் சென்ற இறைவனைப் பணிந்த பின்னர், காவிரி நதியின் கிளைநதி, முள்ளிவாய்க்கரை வந்தடைந்தார். இந்த ஆறு இப்போது ஓடம்போக்கியாறு என்று அழைக்கப்படுகின்றது. அடுத்த கரையில் இருந்த திருக்கோயில் செல்வதற்கு ஞானசம்பந்தர் விரும்பிய போதிலும், ஆற்றின் வெள்ளத்தின் காரணமாக அவரால் நதியைக் கடந்து செல்ல முடியவில்லை. மேலும் சுழன்று அடித்த காற்று மற்றும் அடர்ந்த மழை காரணமாக, ஓடம் செலுத்துவோர் அனைவரும், தங்களது ஓடங்களை, துறைகளில் கட்டிவிட்டு சென்று விட்டனர். பலத்த மழை, சுழன்று அடித்த காற்று, நதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் ஆகிய எதனையும் பொருட்படுத்தாத திருஞானசம்பந்தர், ஒரு ஓடத்தின் கட்டை அவிழ்த்து விட்டு, தானும் தன்னுடன் வந்த அடியார்களும் அந்த ஓடத்தில் ஏறிக்கொண்ட பின்னர், தனது நாவின் வல்லமையால் எழுந்த பதிகத்தையே, துடுப்பாக கொண்டு,கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகத்தை (3.6) பாடவே, எவரும் துடுப்பு போடாமலே, அனைவரையும் ஓடம் அடுத்த கரைக்கு கொண்டு சேர்த்த அதிசயம் நிகழ்ந்தது. எனது நம்பிக்கைக்கும் விருப்பத்திற்கும் உரிய பெருமானே, கொள்ளம்பூதூர் தலத்தினில் நடனமாடும் பெருமானே, உன்னை தியானிக்கும் அடியார்களாக நாங்கள், உனது தோற்றத்தைக் கண்டு களிக்கும் வண்ணம், இந்த ஓடத்தினை செலுத்துவாயாக என்று பாட, ஓடம் தானே நகரத் தொடங்கியது. இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், பெருமானை அடியார்கள் உள்க செல்லவுந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே என்று குறிப்பிடுகின்றார். உள்குதல்= அகத்தில் உன்னை தொழும் அடியார்கள், தங்களது புறக்கண்களால் உன்னைக் கண்டு களிக்க, ஓடத்தை செலுத்துவதன் மூலம், அருள் புரிவாயாக என்று பெருமானிடம் வேண்டுகின்றார். இந்த நிகழ்ச்சி, நமது விருப்பத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக உள்ள இறைவன், நம்பன் என்ற பெயருக்கு ஏற்ப, அருள் புரிகின்றான் என்பதை உணர்த்துகின்றது.

குலையினார் தெங்குசூழ் கொள்ள்ம்பூதூர்

விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க

செல்ல உந்துக சிந்தையார் தொழ

நல்குமாறு அருள் நம்பனே

திருகோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.12.6) பொடி பூசவல்ல விகிர்தா என்று திருஞானசம்பனர் பெருமானை அழைக்கின்றார்.ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களும் அதுவரை தான் தங்கியிருந்த உடல்களை விட்டுப் பிரிந்த பின்னரும், உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் உடல்களும் எரிந்தழிந்த பின்னரும், தான் அழியாமல் எஞ்சி நிற்கும் ஆற்றல் படைத்தவன் சிவபெருமான் ஒருவன் தான். இந்த தன்மையை, உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் நிலையற்றவை தான் ஒருவனே என்றும் நிலையாக இருப்பவன் என்பதை உணர்த்தும் முகமாக, பெருமான் அனைத்து உடல்களும் எரிந்து அழிந்த சாம்பலைத் தனது உடல் முழுவதும் பூசிக்கொண்டுள்ளான்.

பந்தமரும் விரல் மங்கை நல்லாள் ஒரு பாகமா

வெந்தமரும் பொடிப் பூசவல்ல விகிர்தன் மிகும்

கொந்தமரும் மலர்ச் சோலை சூழ்ந்த திருக் கோட்டாற்றுள்

அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கில்லை அல்லலே

பூந்தராய் என்று அழைக்கப்பட்ட சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.13.9) திருஞானசம்பந்தர், பெருமானை திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் வெந்து அழியுமாறு அழித்த விகிர்தர் என்று குறிப்பிடுகின்றார். தாமுகம்=தங்களது முகம் போன்று சிறப்பாக திரிபுரத்து அரக்கர்கள் கருதிய அவர்களது மூன்று பறக்கும் கோட்டைகள்; வேமுகம்= வெந்து அழியும் வண்ணம்; வேமுகம்=தீயின் இடத்தில்;

தாமுகம் ஆக்கிய அசுரர் தம் பதி

வேமுகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும்

பூமகனும் அறிகிலாப் பூந்தராய் நகர்க்

கோமகன் எழில் பெறும் அரிவை கூறரே

திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.68.6) திருஞானசம்பந்தர், வேத விகிர்தர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.ஏதம்=குற்றம்; கோதை-நீண்ட கூந்தலை உடையவள், இங்கே பார்வதி தேவி; வேத=வேதங்களால் புகழப்படுபவன்: தேவர்கள் மற்றும் முனிவர்களால் நாள்தோறும் வேத மந்திரங்களும் கீதங்களும் ஓதப்பெற்று புகழப்ப்டும் இறைவன் என்று கூறுகின்றார். போது விட=அரும்புகள் மலர; தாது=மகரந்தத்தூள்;சிறை=சிறகுகள் உடைய வண்டுகள்; கூதல் நலிய=குளிர்வடைந்து வருந்த; மாது=அழகிய; கோது=கிளரும்; குயில்கள் செடி கொடிகளில் உள்ள இளந்தளிர்களை கோதும் தன்மை உணர்த்தப்படுகின்றது.

ஏதமில பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன்

கீதமொடு நீதிபல ஓதி மறவாது பயில் நாதன் நகர் தான்

தாது பொறி போது விட ஊது சிறை மீது துளி கூதள் நலியக்

காதல் மிகு சோதி கிளர் மாது பயில் கோது கயிலாய மலையே

திருவைகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.71.2) முப்புரம் எரித்த விகிர்தன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வானில் எப்போதும் வேறுவேறு திசைகளில் பறந்து கொண்டு இருக்கும், இந்த மூன்று கோட்டைகளும் ஒரே நேர் கொட்டினால் வரும் தருணத்தில் மட்டுமே ஒரே அம்பினால் அழிக்க முடியும் என்ற வரத்தின் விளைவால், ஒன்றுக்கொன்று துணையாக திகழும் இந்த மதில்களை எவராலும் அழிக்க முடியவில்லை.பெருமான் மட்டும் இந்த மதில்களை எரித்த வல்லமை உடையவராய் விளங்கியதால் பெருமானை முப்பரம் எரித்த விகிர்தன் என்று சம்பந்தர் இங்கே அழைக்கின்றார். தடம்=பொய்கை, குளம்; புண்டரிக மாமலர்= தாமரை; எழிலார்=அழகு மிகுந்த; பொதுவாக கோட்டைகள் கல் மண் ஆகியவை கொண்டு செய்யப்படும். ஆனால் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளோ தங்கம் வெள்ளி இரும்பு கொண்டு செய்யப்பட்டவை என்பதால் எழிலார் முப்புரம் என்று குறிப்பிடுகின்றார். விண்டவர்= சிவநெறியை விட்டு பிரிந்து சென்றவர்; அண்டம்= ஆகாயம்

அண்டம் உறு மேரு வரை அங்கி கணை நாண் அரவதாக எழிலார்

விண்டவர் தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடமாம்

புண்டரிக மாமலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடமெலாம்

வண்டின் இசை பாட அழகார் குயில் மிழற்று பொழில் வைகாவிலே

தனது உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு ஏனையோரிடமிருந்து மாறுபட்டு காணப்படும் பெருமானை விகிர்தன் என்று விளமர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.88.11) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். செழுவிய=சிறப்பு வாய்ந்த; அந்தணர்களுக்கு சிறப்பினை அளிப்பது, தங்களது ஆறு கடமைகளை ஒழுங்காக செய்தல்; வேதமோதுதல், வேதம் ஓதுவித்தல், வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், தானம் அளித்தல், தானம் வாங்குதல் ஆகியவை அந்தணர்களின் ஆறு தொழில்களாக கருதப்படுவதால், அவர்களை அறுதொழிலர் என்று அழைத்தனர். பெருமானை நமது சிந்தையில் இடையறாது நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால், நாம் செய்ய வேண்டியது தேவாரப் பாடல்களை முறையாக கற்றுக் கொண்டு உரிய இசையுடன் ஓதுவது தான் என்பதும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. பறையும்=நீங்கும்;

வெந்த வெண்பொடி அணி அடிகளை விளமருள் விகிர்தரைச்

சிந்தையுள் இடைபெற உறை செய்த தமிழிவை செழுவிய

அந்தணர் புகலியுள் அழகர் அமருறை ஞானசம்

பந்தன மொழியிவை உரை செயும் அவர் வினை பறையுமே

வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.103.8) திருஞானசம்பந்தர், பெருமானை விகிர்தர் என்று குறிப்பிடுகின்றார். பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்பதை உலகினுக்கு முன்மாதிரியாக செய்து காட்டிய கருணை உள்ளத்தவர் அல்லவா. தண்டணை=தண்டு+அணை; அணை=சென்று சேர்ந்த, இங்கே கொண்ட என்று பொருள் கொள்வது பொருத்தம். ஒண்டணை= ஒண்டு+அணை, உடலுடன் ஒன்றாக இணைந்த; மிண்டு=செருக்கு;விகிர்தன்=மாறுபட்ட தன்மை உடையவன்; வைகும்=தாங்கும்; வண்டு என்பது இங்கே ஆண் வண்டினை குறிப்பதாக கொண்டு, தன்னோடும் என்ற சொல்லுக்கு பெண் வண்டு என்று விளக்கம் அளித்துள்ளனர்.

தண்டணை தோள் இரு பத்தினொடும் தலை பத்து உடையானை

ஒண்டணை மாதுமை தான் நடுங்க ஒரு கால் விரல் ஊன்றி

மிண்டு அது தீர்த்து அருள் செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும்

வண்டு அணை தன்னொடு வைகு பொழில் வலம்புர நன்னகரே

திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.1) வெள்ளமதார விரும்பி நின்ற விகிர்தன் என்ரு பெருமானை, திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பெருமானின் சடையை பள்ளம் என்று கூறுகின்றார். பள்ளத்தில் தண்ணீர் தேங்குவது இயற்கை. மேலும் பள்ளத்திலிருந்து வெளியே வராமல் நீர் தங்கியிருப்பதும் இயற்கை. பெருமானின் சடையினைச் சென்று சேர்ந்த கங்கைநதி, வெளியே வராமல் அங்கே தங்கியிருந்த காரணத்தால், பள்ளத்தில் தங்கியிருந்த நீர் போன்று வெளியே வராமல் இருந்ததால், பெருமானின் சடையின் ஆற்றலை குறிப்பிடும் வண்ணம் பள்ளம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார் போலும். பயிலும்=தொடர்ந்து நடக்கும் செயல்; தொடர்ந்து நடக்கும் என்று எந்த செயலையும் பயிலுதல் என்று சொல்வது வழக்கம். விகிர்தன் என்றால் மாறுபட்டவன் என்று பொருள் என்பதை நாம் அறிவோம். இந்த பாடலில் பெருமானின் இரண்டு செயல்களுக்கு இடையே விகிர்தன் என்ற சொல் வருகின்றது. வெள்ளத்தை விரும்பியவன் என்று பொருள் தரும் வெள்ளமதார விரும்பி நின்ற என்ற தொடர் மற்றும் விடையேறும் வள்ளல் என்ற தொடர் ஆகிய இரண்டு சொற்றொடர்களுக்கு இடையே வரும் விகிர்தன் என்ற சொல், அந்த தொடர்கள் குறிப்பிடும் இரண்டு செயல்களுக்கும் பொருத்தமாக இருப்பதை நாம் காணலாம். கங்கை நதியினைத் தனது சடையில் தாங்கியதும் இடபத்தைத் தனது வாகனமாக ஏற்றுக்கொண்டதும்,வேறொருவர் செய்யாத செயல் அல்ல என்பதால், மிகவும் பொருத்தமாக விகிர்தர் என்று அழைக்கின்றார்.

பள்ளமதாய படர்சடை மேல் பயிலும் திரைக் கங்கை

வெள்ளமது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடையேறும்

வள்ளல் வலஞ்சுழி வாணன் என்று மருவி நினைந்து ஏத்தி

உள்ளம் உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே

திருவாலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.108.5) திருஞானசம்பந்தர், பெருமானை, வெந்த நீறது அணியும் விகிர்தர் என்று குறிப்பிடுகின்றார். அருகர்-சமணர்கள், ஜைனர்களின் குருவின் பெயர் அருகதேவர். அவரை பின்பற்றுவதால் சமணர்களை அருகர் என்று கூறுவர்.சிந்த=சிதற: புரியும்=செய்கின்ற; திறங்கள்=கொள்கைகள், வலிமைகள். அருமறை=அரிய வேத நூல்களில் குறிப்பிடப்படும் கிரியைகள்;விகிர்தன்=வேறுபட்ட செயல்களை செய்பவன், சிவபிரான். மற்ற கடவுளர்களிடம் இருந்து வேறுபட்டு சாம்பலை உடலில் பூசி இருப்பதால் சிவபிரான் விகிர்தன் என்று அழைக்கப்படுகின்றார். இந்த பாடலில் சமணர்கள் வேதநெறியை போற்றாமல் இருந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றார். வேதநெறி தழைத்து ஓங்கவும், சைவம் பொலிந்து விளங்கவும் திருஞானசம்பந்தரின் அவதாரம் நிகழ்ந்தது என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது.

அந்த ணாளர் புரியு மருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே

ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.122.1) வீங்கிருள் நட்டம் ஆடிய விகிர்தர் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வீங்கிருளில் பெருமான் நட்டம் ஆடுகின்றார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பிரளயம் ஏற்படும் போது அனைத்து உயிர்களும் இறைவனிடத்தில் ஒடுங்குகின்றன. அத்தகைய உயிர்கள் அனைத்தும் மலத்துடன் இணைந்து இருப்பதால், அந்த உயிர்களால் முக்திநிலை அடைந்து நிலையான ஆனந்தம் பெறமுடிவதில்லை. அந்த உயிர்களுக்கு, தங்களது மலங்களை கழித்துக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, இறைவன் உலகினை மீண்டும் படைப்பதற்கு திருவுள்ளம் கொள்கின்றார். அந்த தருணத்தில் அவர் ஆடுகின்ற நடனத்திலிருந்து நாதம் பிறக்கின்றது. நாதத்திலிருந்து ஆகாயமும் பின்னர் மற்ற நான்கு பூதங்களும் தோன்ற, பஞ்ச பூதங்களின் கலப்பாகிய உலகத்து பொருட்களும் தோன்ற,உயிர்களும் அவற்றின் வினைத் தொகுதியின் தன்மைகளுக்கு ஏற்ப உடல்களுடன் இணைக்கப் படுகின்றன. இவ்வாறு உலகம் மீண்டும் தோன்றுவதற்கு இறைவனின் நடனம் மூல காரணமாக இருப்பதை நாம் உணரலாம். இந்த செய்தியை உணர்த்தும் பொருட்டு வீங்கிருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் என்று சம்பந்தர் கூறுகின்றார். இங்கே விகிர்தர் என்று திருஞானசம்பந்தர் கூறுவதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். விகிர்தர் என்றால் மாறுபட்ட இயல்பு உடையவர் என்று பொருள்; மேலே குறிப்பிடப்பட்ட செய்திகளில் உள்ள சில அம்சங்ளை நாம் மீண்டும் நினைவு கூர்வோம். பிரளய காலத்தில் எஞ்சி நிற்பவர் இறைவன் மட்டுமே. அனைவரும் நல்ல ஒளியின் பின்னணியில் நடனம் ஆடுவதை விரும்புவர்; ஆனால் இறைவனோ நள்ளிருளில் நடனம் ஆடுகின்றார். அவ்வாறு ஆடும் நடனத்தில் இசைக்கப்படும் உடுக்கையின் ஓசை, ஆதி நாதமாக உலகத்தைத் தோற்றுவிக்கின்றது. இத்தகைய செயல்களை இறைவனைத் தவிர்த்து வேறு எவரும் செய்ய முடியாது என்பதை குறிப்பிடும் வண்ணம், ஏனையோரிடமிருந்து மாறுபட்டவர் என்று உணர்த்தும் வண்ணம் விகிர்தர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தேங்கமழ்=இனிமையான நறுமணம்; செறிந்த=நெருங்கிய, அடர்ந்த; கோதுதல்=குடைதல், கிளறுதல்;வீங்கிருள்=அடர்ந்த இருள், பிரளய காலத்து இருள்;

பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி அடிகள்

வீங்கிருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்

தேங்கமழ் பொழிலில் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்

ஓங்கிய புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே

சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (4.08.09) திருநீற்றினை விரும்பி அணியும் விகிர்தர் என்று குறிப்பிடுகின்றார். விலையிலி சாந்தம் என்று திருநீறு இங்கே குறிப்பிடப் படுகின்றது. சந்தனம் மிகவும் விலை உயர்ந்த பொருள் என்பதை நாம் அறிவோம். சிவபிரான் மற்றவரால் ஒதுக்கப்பட்டு, மலிந்து கிடக்கும் பொருட்களையே விரும்பி அணிபவர் என்பதால், சுடுகாட்டில் கிடைக்கும் சாம்பலையே திருநீறாக அணியும் தன்மை இங்கே கூறப்பட்டுள்ளது. எருக்கு, கொன்றை, எலும்பு மாலை, பாம்பு, ஆகியவை போன்று மற்றவர்கள் விலக்கும் பொருட்கள் போல், திருநீறும் இறைவனால் விரும்பப்பட்டு உடல் முழுவதும் பூசிக் கொள்ளப் படுவதால் விலையிலி சந்தனம் என்று திருநீற்றினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். வேட விகிர்தர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, வேடுவக் கோலம் தாங்கி அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளியதை குறிக்கும் என்றும் கொள்ளலாம்.

மலை மட மங்கையோடும் வடகங்கை நங்கை மணவாளராகி மகிழ்வர்

தலை கலனாக உண்டு தனியே திரிந்து தவவாணராகி முயல்வர்

விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்

அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.36.10) அப்பர் பிரான் பெருமானை, விடையுடை விகிர்தன் என்று அழைக்கின்றார்.குடை=அரசர்க்குரிய கொற்றக்குடை; வெற்பு=மலை; விகிர்தன் என்ற சொல்லுக்கு அனைத்து உயிர்களிலிருந்தும், உலகப் பொருட்களிலிருந்தும் மாறுபட்டவன் என்ற பொருளும் பொருத்தமாக உள்ளது. அனைத்துப் பொருட்களும் பதி, பசு பாசம் என்று மூன்று பிரிவுகளில் அடங்குகின்றன. இடபத்தை வாகனமாகக் கொண்டவர் பெருமான் ஒருவர் தானே. நாம் வாழும் வீடு பழுதுபட எவரேனும் காரணமாக இருந்தால் நமக்கு அவர்கள் மீது தீராத கோபம் ஏற்படுகின்றது. மேலும் நமது மனைவிக்கு அச்சத்தை ஊட்டும் செயல் செய்பவர் மீது அளவு கடந்த கோபம் வருவது இயற்கை. இந்த இரண்டு செயல்களையும் நாம் மன்னிக்க முடியாத குற்றங்களாக கருதுவோம். ஆனால் சிவபெருமான் எவ்வாறு நம்மிடமிருந்து மாறுபடுகின்றார் என்பதை விளக்கும் பாடல் கீழ்க்கண்ட அப்பர் பிரானின் பாடல். அரக்கன் இராவணன் சிவபெருமான் வாழும் கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்கின்றான். இந்த செயலால், மலையின் அசைவால், அன்னை பார்வதி தேவி அச்சம் கொள்கின்றாள். அரக்கனது வலிமையை அடக்க, தனது கால் விரலை மிகவும் மெதுவாக மலையின் மீது ஊன்றிய பெருமான், அரக்கன் இராவணன் சாம கானம் பாடியதும், அவனுக்கு படை (சந்திரஹாசம் எனப்படும் வாள்) வாழ்நாள் (மூன்று கோடி வாழ்நாட்கள்) பெயர் (இராவணன்) முதலியன அளிக்கின்றார். இவ்வாறு இயற்கைக்கு மாறுபட்ட செயலைச் செய்பவர் விகிர்தராகத் தானே இருக்க முடியும்.

குடை உடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின்

இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கி

விடையுடை விகிர்தன் தானும் விரலினால் ஊன்றி மீண்டும்

படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் (4.64) அப்பர் பிரான் விகிர்தனார் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலில் வேதத்தின் பொருளர் என்றும் இரண்டாவது பாடலில் பாற்கடலிலிருந்து எழுந்த அமுதம் என்றும், பிரமன் திருமால் ஆகிய இருவருக்கும் கான்பதற்கு அரிய விருந்தினர் (புதியவர்) என்று மூன்றாவது பாடலிலும், மிகவும் அரிதான வேடத்தைப் பூண்டவர் என்று நான்காவது பாடலிலும், விறகினுள் தீயர் போன்று அனைத்துப் பொருட்களினும் மறைந்து நிற்பவர் என்று ஐந்தாவது பாடலிலும், ஐந்து பூதங்களிலும் கலந்து நிற்பவர் என்று ஆறாவது பாடலிலும், வெந்தழல் உருவர் என்று ஏழாவது பாடலிலும், திருமாலுக்கு சக்கரப்படை அளித்தவர் என்று எட்டாவது பாடலிலும், உயிருக்கு உயிராக இருப்பவர் என்று ஒன்பதாவது பாடலிலும், தான் வாழும் கயிலை மலையைப் பேர்த்தெடுக்க முயற்சி செய்தவன் என்பதையும் பொருட்படுத்தாமல் மிகுந்த விருப்பத்துடன் அரக்கன் இராவணனுக்கு பல வரங்கள் அளித்தவர் என்று பத்தாவது பாடலிலும் குறிப்பிட்டு அனைத்து பாடல்களிலும் விகிர்தர் என்று அழைக்கின்றார். இங்கே குறிப்பிடப்பட்ட செயல்கள் மற்றும் பண்புகள் அனைத்தும் சிவபெருமான் ஒருவருக்கே உரியதாக இருப்பதை நாம் உணர்ந்தால்,விகிர்தன் என்ற திருநாமம் எத்துணை பொருத்தமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த பதிகத்தின் ஆறாவது பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நமது எண்ணங்களுடன் இருப்பவரும், நமது எண்ணங்களுக்கு எட்டாதவராகவும் இருக்கும் சிவபெருமான், இமவானின் மகளாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் பாதியில் கொண்டுள்ளவர்; அவர் காற்றில் ஓசை மற்றும் ஊறு (தொடு உணர்வு) ஆகிய இரண்டு பண்புகளாகவும்,மண்ணினில் ஓசை, ஊறு, உருவம், சுவை மற்றும் நாற்றம் ஆகிய ஐந்து பண்புகளாகவும், நீரினில் ஓசை, ஊறு, உருவம், மற்றும் சுவை ஆகிய நான்கு பண்புகளாகவும், தீயினில் ஓசை, ஊறு மற்றும் உருவம் ஆகிய மூன்று பண்புகளாகவும், ஆகாயத்தில் ஓசையாகவும் திகழ்கின்றார். இவ்வாறு எங்கும் பரந்து இருக்கும் சிவபெருமான் தான் வீழிமிழலையில் விகிர்தனாக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

எண்ணகத்தில்லை அல்லர் உளரல்லர் இமவான் பெற்ற

பெண்ணகத்து அரையர் காற்றில் பெருவலி இருவராகி

மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீயதனில் மூவர்

விண்ணகத்து ஒருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

திருக்கோவலூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.69.7) படைகள் போல் வரும் வினைகளைத் தீர்க்கும் ஆற்றல் வாய்ந்தவன் சிவபெருமான் என்பதால் அவனை விகிர்தன் என்று அழைக்கும் அப்பர் பிரான், அந்த விகிர்தனை தான் மிகவும் விரும்பி புகழ்வதாக கூறுகின்றார். கோவல் வீரட்டத்து உறையும் இறைவனே நீர் தான், என்னை வருத்தும் வினைகளிலிருந்து விடுவித்து, உம்மை வணங்கித் தொழும் நிலைக்கு என்னை ஆளாக்க வேண்டும் என்று அப்பர் பிரான் இறைஞ்சும் பாடல். பழைய வினைகள் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாக இருக்கும் தன்மை குறித்து, அப்பர் பிரான் இந்த பாடலில் படைகள் போல் என்று குறிப்பிடுகின்றார். வாள், அம்பு, ஈட்டி, கத்தி, சூலம் ஆகிய எந்த படையாயினும் உடலுக்கு வருத்தம் தருவது போன்று,பழைய வினைகள் தனது உயிருக்கும் உடலுக்கும் துன்பங்கள் விளைவிக்கின்றன என்றும் கூறுகின்றார்.

படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும்

விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும்

இடையிலேன் என் செய்கேன் நான் இரப்பவர் தங்கட்கு என்றும்

கொடையிலேன் கொள்வதே நான் கோவல் வீரட்டனீரே

வென்றிலேன் புலன்கள் ஐந்தும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.78.5) உயிர்களைத் தொடர்ந்து துன்பத்தில் ஆழ்த்தும் பிறவிப்பிணியைத் தீர்க்கும் வல்லமை வாய்ந்த ஒப்பற்ற தலவன் என்பதால் பெருமானை விகிர்தன் என்று குறிப்பிடுகின்றார். வெம்மை நோய்=தொடர்ந்து துயரில் ஆழ்த்தும் பிறவிப் பிணி. துயரத்தில் ஆழ்த்துவதால் வெம்மை நோய் என்று குறிப்பிடுகின்றார். சென்ற பிறப்பினில் இறைவனுக்கு அடிமையாக தனது வாழ்வினை அர்ப்பணித்து, திருப்பணிகள் செய்திருந்தால், பிறவிப் பிணியினை அப்போதே இறைவன் தீர்த்திருப்பான் என்றும், இந்த பிறவி எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் கூறும் அப்பர் பிரான், சென்ற பிறவியை நினைத்து தனது வருத்தத்தை இங்கே தெரிவிக்கின்றார். தேவர்களும் மற்ற சிறு தெய்வங்களும், மூன்று மலங்களின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். சிவபெருமான் ஒருவரே, இயல்பாகவே மலங்களின் பிடியிலிருந்து நீங்கியவர். எனவே விகிர்தன் என்று குறிப்பிட்டு, அவர் மற்றவர்களிலிருந்து மாறுபட்டவர் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். முக்தி அடையும் வரை, உடலுடன் பொருந்தியிருந்தால் தான், தன்னுடன் பிணைந்துள்ள வினைகளை நுகர்ந்து கழித்துக் கொள்ளமுடியும் என்பதால், அனைத்து உயிர்களும் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து ஏதோவொரு உடலுடன் இணைந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆனால் இறைவனுடன் ஒன்று கலந்த முக்தி நிலையில்,உடலிலிருந்து பிரிந்திருக்கும் உயிர், பேரின்பத்தில் திளைக்கின்றது. அதனால் தான் வடிவம் ஏதும் இல்லாத நிலை என்று முக்தி நிலையினை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். உடலோடு இணைந்து வாழும் வாழ்க்கை கால நியதிக்கு உட்பட்டது. எனவே முடிவு என்று ஒன்று, அத்தகைய வாழ்க்கைக்கு உண்டு.ஆனால் முக்தி நிலைக்கு முடிவு என்பதே கிடையாது. எனவே தான் வடிவமும் முடிவும் இல்லாத முக்தி நிலைக்குத் தான் ஏங்குவதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.

செம்மை வெண்ணீறு பூசும் சிவன் அவன் தேவதேவன்

வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி

அம்மை நின்று அடிமை செய்யா வடிவிலா முடிவில் வாழ்க்கைக்கு

இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே

பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.88.10) அப்பர் பிரான், வேத விகிர்தன் என்று பெருமானை அழைக்கின்றார். பைக்கை=படத்தை விரிக்கும்; பாந்தி=பதுங்கி; மொய்=கூட்டம்; மொய்க்கை=கூட்டமாக அமைந்த இருபது கைகள்; மிக்க=சிறப்பினில் மிகுந்த; படத்தை விரித்து ஆடும் பண்பினை உடையதும் பதுங்கி எடுக்கும் குணத்தினை உடையதும் ஆகிய பாம்பினையும் கங்கை நதியையும் தனது சடையில் வைத்துள்ளவர் சிவபெருமான் ஆவார்; வலிமையான தோள்களை உடைய அரக்கன் இராவணன் கயிலை மலையினை அசைத்தபோது அச்சமடைந்து நடுங்கிய உமையம்மையின் அச்சத்தினை தீர்க்கும் வண்ணம் இருபது கைகள் உடைய அரக்கன் மலையின் கீழே அழுந்தி வருந்தும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவன் சிவபெருமான். சிறந்த வேதங்களால் போற்றப்படுவனும், பல தன்மைகளில் ஏனையோரிடமிருந்து மாறுபட்டவனும் ஆகிய பெருமான் பூந்துருத்தி தலத்தில் மிகவும் மகிழ்ந்து ஆதிபுராணன் என்ற நாமத்துடன் உறைகின்றான். அவனது திருவடிகளை நான் போற்றுகின்றேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே

வைக்கையும் வான் இழி கங்கையும் மங்கை நடுக்குறவே

மொய்க்கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும்

மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே

விடையும் விடைப்பெரும்பாகா என்று தொடங்கும் பதிக்த்தின் பாடலில் (4.111.9) வெண்திரை கங்கை விகிர்தா என்று அழைக்கின்றார்..தண்டல்=சேகரித்தல்: தண்டி=சேகரித்து வைத்தல்: விகிர்தன்=மாறுபட்டவன்: மிகுந்த வேகத்துடன் கீழே பாய்ந்து வந்த கங்கை நதியை சடைக்குள்ளே அடக்கி வைக்கும் ஆற்றல் வேறு எவருக்கு இல்லை என்பதால், சிவபெருமானை அப்பர் பிரான் விகிர்தன் என்று அழைக்கின்றார். கண்டிகை=உருத்திராக்க மாலை: கடி சூத்திரம்=அரைநாண்: குண்டிகை=நீர்ப் பாத்திரம்

வெண் திரைக் கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு

கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம்

குண்டிகை கொக்கரை கோணல் பிறை குறட்பூதப் படை

தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.05.06) வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார் என்று கூறுகின்றார். துணி=வெட்டுப்பட்ட:கரும்பின் இடை என்ற தொடரை கட்டி ஒக்கும் என்ற சொற்களுடன் சேர்த்து கரும்பின் இடைக் கட்டி ஒக்கும் என்று பொருள் கொள்ளவேண்டும்:விகிர்தன்=மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு காணப்படுபவன்: போகத்தன், யோகத்தன், மற்றும் வேகத்தனாக ஒரே உருவில் ஒன்றுக்கொன்று ஒவ்வாத வேடத்தை தரித்தவன் சிவபெருமான் என்பதால் விகிர்தன் என்று அழைப்பதாக உரை ஆசிரியர்கள் கருதுகின்றனர். உமையம்மையை தன்னுடன் எப்போதும் வைத்திருப்பதால் போகத்தனாகவும், மங்கையோடு இருந்தாலும் யோகம் செய்யும் யோகத்தனாகவும், அடியார்களுக்கு அருள் புரிவதிலும், வீரச் செயல்கள் புரிவதிலும் வேகத்தைக் காட்டும் வேகத்தானவும் இருக்கும் நிலை: வீணைகளின் ஒலியை வெட்டியும், வீணையின் நரம்புகள் துண்டிக்கப்பட்டு அறுமாறும் வீணை வாசிப்பது ஒரு கலை என்று உரை ஆசிரியர்கள் கருதுகின்றார்கள்.

கட்டி ஒக்கும் கரும்பின் இடைத் துணி

வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்

அட்ட மூர்த்தி அண்ணாமலை மேவிய

நட்டம் ஆடியை நண்ண நன்காகுமே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.10.7) அப்பர் பிரான், வெந்த வெண்பொடி பூசும் விகிர்தர் என்று அழைக்கின்றார். தனது உடல் முழுவதும் திருநீற்றைப் பூசிக் கொள்பவர் பெருமான் ஒருவர் தாமே. இந்த பதிகத்தின் முதல் பாடலில் உம்மால் ஆட்கொள்ளப்பட்ட அடியானாகிய தான் நேரில் காணும் பொருட்டு கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று வேண்டிய அப்பர் பிரான், இந்த பாடலில் பல அடியார்களும் அவ்வாறு வேண்டுவதாக கூறுகின்றார். திருமறைக்காடு தலத்து திருக்கோயிலின் கதவுகள் திறக்க முடியாத வண்ணம் ஒன்றுடன் மற்றொன்று பிணைந்து நின்ற நிலை பிணி என்று சொல்லப் படுகின்றது.

வெந்த வெண்பொடி பூசும் விகிர்தரோ

அந்தம் இல்லி அணி மறைக்காடரோ

எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட

இந்த மாக்கதவம் பிணி நீக்குமே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.12.07) வீரன் வீழிமிழலை விகிர்தன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தீரன்=அறிஞன்;தீத்திரளன்=கொழுந்து விட்டெரியும் தீயின் நிறம் கொண்ட மேனியை உடையவன்; இயல்பாகவே தனது புலன்களை வெற்றி கொண்ட பெருமான் என்பதால் வீரன் என்றும் விகிர்தன் என்றும் கூறுகின்றார்.

தீரன் தீத்திரளன் சடைத் தங்கிய

நீரன் ஆடிய நீற்றன் வண்டார் கொன்றை

தாரன் மாலையன் தண் நறும் கண்ணியன்

வீரன் வீழிமிழலை விகிர்தனே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.13.7) அப்பர் பிரான், வானவரும் உணராததோர் வேதியா விகிர்தா என்று அழைக்கின்றார்.நீதி=நெறிமுறை; வேதியன்=வேதம் விரித்தவன்; தேவர்களால் உணரப்படாத நிலை, மற்றும் வேதங்களீன் மற்றவர்களிடமிருந்து பெருமான் மாறுபட்டு இருக்கும் நிலையாக உணர்த்தப் படுகின்றது. திருவிளையாடல் புராணத்தில் வேதம் பொருள் விரித்த படலத்தில், நைமிசாரண்யத்தில் வாழ்ந்து வந்த முனிவர்களுக்கு ஆலவாய் அழகன், ஒரு சிறுவனாக வந்து வேதங்களின் பொருளை விரித்து சொன்ன நிகழ்ச்சி சொல்லப்படுகின்றது. பொதுவாக வானவர்கள், மண்ணுலக மாந்தர்களை விடவும் அறிவில் சிறந்தவர்களாக கருதப் படுகின்றார்கள். எனவே அவர்கள் அனைத்தையும் உணரக் கூடியவர்கள் என்று நம்பப் படுகின்றது. ஆனாலும் அவர்களாலும் உணர முடியாதவன் சிவபெருமான் என்று கூறி அப்பர் பிரான், பெருமான் எவ்வாறு மாறுபட்டவர் என்று இங்கே விளக்குகின்றார். எனவே அவரை மிகவும் பொருத்தமாக விகிர்தா என்று அழைக்கின்றார். தங்களுக்குரிய நெறிமுறைப் படி, தினமும் நியமங்கள் செய்து, வேதங்கள் ஓதிய அவர்களாலும் அறியப்பட முடியாதவன் என்று கூறி சிவபெருமானின் சிறப்பினை அப்பர் பிரான் மேலும் உயர்த்துகின்றார்.

நீதி வானவர் நித்தல் நியமம் செய்து

ஓதி வானவரும் உணராததோர்

வேதியா விகிர்தா திருவீழியுள்

ஆதியே அடியேனை குறிக்கொளே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலிலும் (5.14.8) அப்பர் பிரான் பெருமானை, வெந்த வெண்பொடி பூசும் விகிர்தனார் என்று குறிப்பிடுகின்றார். கந்தம்=வாசனை; வெந்த வெண்பொடி=முற்றூழிக் காலத்தில் அனைத்து உயிர்களும் தாங்கள் பொருந்தியிருந்த உடலினை விட்டு ஒருங்கே விலக, அவ்வாறு உயிரற்ற உடல்கள் எரிந்த சாம்பல்; விகிர்தன்= மாறுபட்டவன்; அனைத்து உயிர்களும் தன்னிடம் ஒடுங்க, அனைத்துப் பொருட்களும் அனைத்து உடல்களும் அழிந்த பின்னரும் எஞ்சியிருக்கும் இறைவனின் தன்மை மற்றவரிடமிருந்து மாறுபட்ட தன்மை என்பதால் அப்பர் பிரான், இந்த பாடலில் இறைவனை விகிர்தன் என்று குறிப்பிடுகின்றார். இந்த காரணம் பற்றியே பெருமான் சேடர் என்றும் அழைக்கப்படுகின்றார். சேஷம் என்ற வடமொழிச் சொல்லுக்கு எஞ்சியது, மிஞ்சியது என்று பொருள். பிரளய காலத்தில், உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அனைத்து உடல்களும் அழிந்த பின்னரும், தான் அழியாமல் பெருமான் இருப்பதால், சேடர் என்று மிகவும் பொருத்தமாக அழைக்கப் படுகின்றார்.

வெந்த வெண்பொடி பூசும் விகிர்தனார்

கந்த மாலைகள் சூடும் கருத்தனார்

எந்தை என் இடைமருதினில் ஈசனைச்

சிந்தையால் நினைவார் வினை தேயுமே

திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.23.7) அப்பர் பிரான், பெருமானை, வென்றி ஏறுடை எங்கள் விகிர்தன் என்று அழைக்கின்றார்.விகிர்தன்=மாறுபட்ட குணம் உடையவன். யானை போன்ற வாகனங்களை ஏற்றுக் கொள்ளாமல் எருதினை வாகனமாக ஏற்றது ஏன் என்ற கேள்வியை இங்கே அப்பர் பிரான் எழுப்புகின்றார். இந்த கேள்வி நமக்கு திருவாசகம் திருச்சாழல் பதிகத்தின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது. கடகரி=மதமுடைய யானை: ஆண் யானைகளுக்கு மதநீர் வழிவது இயற்கை. கட்டுப்படுத்த முடியாத மதயானையை எவரும் வாகனமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே மதயானை என்று இங்கே, மதம் கொண்ட யானையை குறிப்பிடாமல், ஆண் யானையை குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். இந்த பாடலில்,ஆண் யானை, குதிரை, தேர் ஆகியவற்றை வாகனமாகக் கொள்ளாமல் எருதினை வாகனமாக ஏற்றுக் கொண்டது ஏன் என்று ஒரு பெண் வினவ, அடுத்தவள் விடை கூறுவதாக அமைந்த பாடல். திரிபுரத்தவருடன் போருக்குச் சென்ற போது, தேரின் அச்சு முறிந்து தேர்த்தட்டு உடைந்த போது திருமால் இடபமாக மாறி பெருமானை ஏற்ற நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டு, எருதின் பெருமை இங்கே உணர்த்தப் படுகின்றது.

கன்றியூர் முகில் போலும் கருங்களிறு

இன்றி ஏறலான் இது என் கொலோ

நின்றியூர் பதியாக நிலாயவன்

வென்றி ஏறுடை எங்கள் விகிர்தனே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.41.5) அப்பர் பிரான் பெருமானை, வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார் என்று குறிப்பிடுகின்றார்.இந்த பதிகத்தின் முதல் பாடலில் கோவண ஆடையை உடுத்தவர் என்றும், பூதகணங்களால் சூழப்பட்டவர் என்றும் கூறும் அப்பர் பிரான் அடுத்த பாடலில் ஊமத்தை மலர் அணிந்தவர் என்று குறிப்பிடுகின்றார். மூன்றாவது பாடலில், பேய்கள் தூங்கும் காட்டில் உறைபவன் என்றும் நான்காவது பாடலில் பூதகணங்களால் தொழப்படுபவர் என்றும் கூறுகின்றார். இங்கே குறிப்பிடப்பட்ட உடை, தொழுபவர்களின் தன்மை, மற்றும் சூழ்ந்து இருப்பவர்களின் தன்மை, அணியும் மலர், உறையும் இடம் ஆகிய அம்சங்களில், மற்றவர்களிலிருந்து சிவபிரான் மாறுபடுவதை நாம் உணரலாம். எனவே தான் சிவபெருமானை விகிர்தன் என்று மிகவும் பொருத்தமாக அப்பர் பிரான் இந்த பாடலில் அழைக்கின்றார். யானையின் பசுமையான தோல் உடலுக்குத் தீங்கு விளைக்கும் என்பதால், அதனை எவரும் அணிவதில்லை. ஆனால் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு விகிர்தனாகத் திகழும் சிவபிரான், யானையின் தோலைப் போர்த்தவர் ஆவார். பல தேவாரப் பாடல்களில் பூத கணங்கள் யாழ் பறை முதலிய வாத்தியங்களால் இசைக்க நடம் ஆடுபவன் என்றும், இராவணின் யாழின் இன்னிசை கேட்டு மகிழ்ந்தவன் என்றும், யாழினை மீட்டுபவன் என்றும் சிவபிரான் குறிக்கப்படுகின்றார். ஆனால் இங்கே பொதுவாக யாழின் இசையுடன் பொருந்தும் பாட்டை உகந்தவன் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து தேவாரப் பதிகங்களும், பண்ணிசைப் பாடல்களாக அமைந்துள்ளன. யாழ் முதலிய கருவிகள் எழுப்பும் இசையுடன் பொருந்துமாறு தேவாரப் பண்கள் அமைந்துள்ளன. மேலும் ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் பிரானும் பல தலங்கள் இணைந்து வழிபட்டதாக பெரிய புராணம் கூறுகின்றது. அத்தகைய தருணங்களில், சம்பந்தருடன் இணைந்து சென்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழின் இசையை அப்பர் பிரானும் கேட்டிருக்க வேண்டும். அதனால் தான், யாழின் இசைக்குப் பொருந்திய பாடல்களை உகந்து கேட்கும் சிவபிரான் என்று கூறுகின்றாரோ என்ற எண்ணம் எழுகின்றது.

வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார்

தாழச் செஞ்சடை மேல் பிறை வைத்தவர்

தாழைத் தண்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்

யாழின் பாட்டை உகந்த அடிகளே

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.56.2) அப்பர் பிரான் பெருமானை வித்தின் விளைவாய விகிர்தன் என்று கூறுகின்றார். முதலாகிய வித்து=அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு மூல காரணனாக இருப்பவன்; இந்த பதிகத்தின் முதல் பாடலில் வினைகள் நாசமாகும் என்று கூறிய அப்பர் பிரான், இந்த பாடலில், அந்த வினைகளின் பயனாகிய துன்பங்கள் தீரும் என்று கூறுகின்றார். அத்தன்=தந்தை

முத்தினை முதலாகிய மூர்த்தியை

வித்தினை விளைவாய விகிர்தனைக்

கொத்தலர் பொழில் சூழ் தரு கோளிலி

அத்தனைத் தொழ நீங்கும் நம் அல்லலே

நாகைக்காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.83.2) விண் தலம் பணிந்து ஏத்தும் விகிர்தர் என்று குறிப்பிட்டு, அனைத்து தேவர்களாலும் வணங்கப்படும் இறைவன் என்று உணர்த்துகின்றார். அலம்பிய=ஒலித்த; விண்தலம்=தேவர் உலகம்; தேவர் உலகத்தில் உள்ள தேவர்கள் என்று பொருள் கொள்ளவேண்டும்; கண்டல்=தாழை மலர்; அம்=சிறந்த நறுமணம்; கழலும்=நீங்கும்; இந்த பதிகத்தின் முதல் பாடலில் இறைவனின் திருநாமத்தை சொல்வதால் வினைகள் ஓய்ந்துவிடும் என்று சொல்லிய அப்பர் பிரான், அந்த வினைகள் நம்மை விட்டு பூரணமாக விலக வேண்டும் என்றால், நாகைக் காரோணனை கண்டு வணங்க வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். விகிர்தன்=ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன்; வினைகளை அகற்றும் ஆற்றல் பெருமானைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்பதால், மாறுபட்ட திறமை படைத்தவர் என்பதை உணர்த்தும் வண்ணம், விகிர்தன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

வண்டு அலம்பிய வார்சடை ஈசனை

விண் தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனைக்

கண்டல் அம் கமழ் நாகைக் காரோணனை

கண்டலும் வினையான கழலுமே

சித்தக் குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.97.25) அப்பர் பிரான், பிரமனும் திருமாலும் காண முடியாமல் பேரழலாய் நின்ற தன்மை வியக்கத்தக்கது என்று குறிப்பிட்டு, அத்தகு வியக்கும் தன்மையால் விகிர்தனாக பெருமான் இருக்கின்றான் என்று கூறுகின்றார். நயக்க=விரும்ப; இயக்கர்=கந்தருவர்;கின்னரர்=கின்னரம் எனப்படும் இசைக் கருவியை வாசிப்பவர் என்பதால் வந்த பெயர். குதிரை முகமும் மனித உடலும் கொண்டவர்கள் என்று இவர்களை கூறுவார்கள். தானவர்=அசுரர்; விகிர்தன்=ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன் ய எனப்படும் எழுத்து, பொதுவாக எந்த சொல்லிலும் முதல் எழுத்தாக வராது என்பதால் இயக்கர் என்று கூறப்பட்டுள்ளது. யமுனை யதி யவனன் என்றார் சொற்கள், மற்ற மொழியில் இருந்து வந்த சொற்கள். இயக்கர் கின்னரர் தானவர் என்று குழுக்களாக குறிப்பிட்டமையால், இந்திரன் என்ற சொல் அவனது தலைமையின் கீழ் வாழும் தேவர் குழாத்தை குறிப்பதாக பொருள் கொள்ள வேண்டும்

இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர்

நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்

மயக்கம் எய்தவன் மால் எரி ஆயினான்

வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே

நீறலைத்தத்தொர் என்று தொடங்கும் பொதுப்பதிகத்தின் பாடலில் (5.98.3) அப்பர் பிரான், பெருமானை, வெள்ளத்தை சடை வைத்த விகிர்தனார் என்று குறிப்பிடுகின்றார். வெள்ளத்தார்= அருள் வெள்ளத்தை உடையவர்; கள்ளம்=ஆணவ மலம்; விஞ்சையர்=வித்தியாதரர், தேவர்களில் ஒரு வகை;கள்ளம்=ஆணவமலம்; கங்கை வெள்ளத்தை மட்டுமா அடக்கியவன் பெருமான். தனது உள்ளத்தில் இருந்த ஆணவ மலத்தினையும் அடக்கி தான் மனம் ஒன்றி அவனை நினைப்பதற்கு வழி வகுத்தவன் பெருமான் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். உலகப் பொருட்களின் மீது உலகத்து உயிர்களின் மீது ஒருவன் வைத்துள்ள விருப்பம் தானே, ஒன்றிய மனத்துடன் இறை வழிபாட்டில் ஈடுபடவொட்டாமல் அவனைத் தடுக்கின்றது. அத்தகைய விருப்பம் ஏதும் இல்லாமல், இறைவனிடத்தில் தனது மனம் ஒன்றியதால், தனது உள்ளத்தின் உள்ளே விளங்கும் ஞானவொளியாக பெருமான் இருப்பதை தான் அறிய முடிந்தது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

வெள்ளத்தார் விஞ்சையர்கள் விரும்பவே

வெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார்

கள்ளத்தைக் கழியம் மனம் ஒன்றி நின்று

உள்ளத்தில் ஒளியைக் கண்டது உள்ளமே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.5.7) அப்பர் பிரான் பெருமானை வேழத்து உரி மூடும் விகிர்தா என்று குறிப்பிடுகின்றார். மண் துளங்க, விண் துளங்க=மண்ணுலகம் அசையுமாறு, விண்ணுலகம் அதிருமாறு: கண் துளங்க=கண்ணின் இமைகள் அசைய, மூடிக் கிடந்த நெற்றிக்கண் திறக்க, பண் துளங்க=பண் பொருந்த: பசுமையான யானைத் தோல், உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் அதனை போர்வையாக உடலின் மீது போர்த்துக் கொள்ள எவரும் அஞ்சுவார்கள். ஆனால் ஏனையோரிலிருந்து மாறுபட்ட சிவபெருமான், பசுமையான யானைத் தோலைத் தனது உடல் மீது போர்த்துக் கொள்வதால் அவனை, விகிர்தன் என்று அப்பர் பிரான் இங்கே அழைக்கின்றார்.

மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால்கடலும் விசும்பும் ஆனாய் போற்றி

விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி

பண் துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி

கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய் போற்றி கார்க் கெடிலம் கொண்ட கபாலிபோற்றி

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.15.1.) அப்பர் பிரான் பெருமானை, மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் என்று குறிப்பிடுகின்றார். கண்ணி=தலையில் அணியும் மாலை; மாலை=திருமாலை; வேலை=கடல்; வினைகள் மூன்று வகைப்படும். தொல்வினை, ஊழ்வினை மற்றும் மேல்வினை என்பனவே அந்த மூன்று பிரிவுகள். பழைய பல பிறவிகளில் ஈட்டிய மொத்த வினைத்தொகுதி தொல்வினை ஆகும். அந்த தொல்வினையின் ஒரு பகுதி ஊழ்வினையாக, இந்த பிறவியில் அனுபவித்து கழிப்பதற்காக ஒதுக்கப்படுகின்றது. அந்த வினையின் விளைவுகளாக வரும் இன்ப துன்பங்களை நாம் எதிர்கொள்ளும் முறைகள் மேலும் பல வினைகளுக்கு வழிவகுத்து, நமது வினைகளை பெருக்குகின்றன. இவ்வாறு நமது வினைகளை மேலும் மேலும் பெருக்கிக் கொள்வதை தடுக்கும் வல்லமை, இறைவனின் கருணையால் தான் நமக்கு ஏற்படும். அந்த பக்குவ நிலை, விருப்பு வெறுப்பு இல்லாமல் இன்ப துன்பங்களை எதிர் கொள்ளும் பக்குவம், இருவினைகளையும் ஒன்றாக எதிர்கொள்ளும் பக்குவம் வந்த பின்னர், பக்குவம் அடைந்த இந்த உயிர் இனிமேல் வினைகளை அனுபவிப்பதால் நிலை தடுமாறாது என்பதை உணரும் இறைவன், மொத்த வினைகளையும் அகற்றி கழித்து விடுகின்றான். இவ்வாறு அவன் செய்யும் உதவியே, மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு வினைகளை முற்றிலும் தீர்க்கும் வல்லமை, சிவபெருமான் ஒருவனுக்கே உண்டு என்பதால், மற்றவர்களிடமிருந்து மாறுபட்டுள்ள அவனை விகிர்தன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். தந்திரம்=செய்யும் முறைகள்: வேதங்களில் வேள்விகள் முதலான சடங்குகள் செய்யும் போது சொல்லப்பட வேண்டிய மந்திரங்கள் தவிர,அந்த மந்திரங்கள் சொல்லப்படும்போது செய்ய வேண்டிய வழிமுறைகளும் சொல்லப்பட்டுள்ளன. இதனையே மந்திரமும் தந்திரமும் ஆனார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். வேதங்களை மந்திரம் எனவும் சிவ ஆகமங்களை தந்திரம் என்றும் சொல்வதுண்டு.

சூலப்படை உடையார் தாமே போலும் சுடர்த் திங்கள் கண்ணி உடையார் போலும்

மாலை மகிழ்ந்து ஒரு பால் வைத்தார் போலும் மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்

வேலைக் கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்

ஏலக் கமழ் குழலாள் பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே

இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (6.15.4) அப்பர் பிரான், பெருமானை, வியன் கொண்டல் மேற்செல் விகிர்தர் என்று குறிப்பிடுகின்றார்.திண்குணம்-வலிமைக் குணம்; நூறி=அழித்து: வியன்=அகன்ற: இந்திரன் ஒருமுறை சிவபெருமானை புறக்கணித்து வேள்வி செய்த தருணத்தில் அந்த வேள்வியை சிவபெருமான் அழிப்பதற்காக சென்ற போது, திருமால் மேகத்தின் வடிவினைக் கொண்டு பெருமானைத் தாங்கினார் என்பது புராண வரலாறு.திருமால் மேக வடிவினனாய், பெருமானைத் தாங்கிச் சென்ற வரலாறு திருவிசைப்பா பாடல் ஒன்றிலும் (ஏகநாயகனை என்று தொடங்கும் பாடல்)கூறப்படுகின்றது. திண்குணத்தார் என்பதற்கு வலிமையான மனம் உடையவர் என்று பொருள் கொண்டு, பெருமானை உணர்த்தும் அடைமொழியாக கொண்டு பொருள் கூறுவதும் பொருத்தமே. சலனம் அடையாமல் உறுதியான நிலையில் நிற்கும் வல்லமை பெற்றவன் சிவபெருமான் என்று இந்த தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.

திண்குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித் திசை வணங்கச் சேவடியை வைத்தார் போலும்

விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும்

பண்குணத்தார் பாடலோடு ஆடல் ஓவாப் பரங்குன்றம் மேய பரமர் போலும்

எண்குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலிலும் (6.32.8) அப்பர் பிரான் பெருமானை வெள்ளையேறேறும் விகிர்தா என்று குறிப்பிடுகின்றார். உள்ளம் என்ற சொல் இங்கே உயிர் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மனம் ஒன்றித் தன்னை வழிபடும் அடியார்களின் உள்ளத்தில் உறைபவன் என்றும் பொருள் கொள்ளலாம். வானவர்கோன் தோள் துணித்தது எந்த சமயத்தில் என்பது இங்கே குறிப்பிடப்படவில்லை.திருவிளையாடல் புராணத்தில், இந்திரன் தோள் நெரிக்கப்பட்ட வரலாறு என்று ஒரு படலம் உள்ளது. தக்க யாகத்தில் பங்கேற்ற பல தேவர்கள் அடைந்த தண்டனையுடன் இந்திரனும் தண்டனை அடைந்ததாக மணிவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகின்றார். ஒரு முறை, இந்திரன் சிவபெருமானைக் காண்பதற்காக கயிலாயம் சென்றபோது, சிவபிரான் பூதகணம் வேடம் தாங்கி, கயிலை வாயிலில் இருந்ததை, உணராத இந்திரன், பூதகணம் தனது வழியில் குறுக்கிடுவதாக நினைத்து, தனது வஜ்ராயுதத்தால் பூதகணத்தை அடித்தான் என்றும் அப்போது சிவபெருமான் தனது சுயரூபத்தைக் காட்டி அவனை தண்டித்தார் என்றும் ஒரு புராண நிகழ்ச்சி கூறிகின்றது. இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் வெண்மதியங்கண்ணி விகிர்தன் என்று அப்பர் பிரான் இறைவனை அழைக்கின்றார்.

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி

வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்கோன் தோள் துணித்த மைந்தா போற்றி

வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி

தெள்ளு நீர்க்கங்கைச் சடையாய் போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.35.7) அப்பர் பிரான், பெருமானை விகிர்தர் என்று அழைப்பதற்கான காரணங்களை ஒரே பாடலில் கூறுகின்றார். இந்தப் பாடல் சிவபிரான் பால் காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் கூற்று போல் அமைந்த அகத்துறைப் பாடல். சிவபிரான் மாதொரு பாகர் (மற்றவர்களோ பெண் ஆண் என தனித்து இருப்பவர்கள்) வாழ்வது பெண்கள் விரும்பாத வாழ்க்கை (மற்றவர்கள் உல்லாசமாக வாழ்வார்கள்) நாகத்தை ஆபரணமாக பூண்டவர் (மற்றவர்கள் அணிவது பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள்) சடையை விரித்து இருப்பவர் (மற்றவர்கள் தலைமுடியினை ஒழுங்காக வாரி இருப்பவர்கள்) உண்பது மற்றவர்கள் பயந்து ஓடிய நஞ்சு, இரவில் உறைவது எவரும் நெருங்க அஞ்சும் சுடுகாடு. இவ்வாறு சில குணங்களைக் கூறும் அப்பர் பிரான் பல குணங்களை நமது கற்பனைக்கு விட்டு விடுகின்றார். சிவபிரான் பழகும் கூட்டம் பூத கணங்கள் (மற்றவர்கள் மனிதர்கள்), இரந்து உணவு ஏற்றல் (மற்றவர்கள் இரப்பதற்கு கூசுவார்கள்); பூசுவது சாம்பல் பொடி (மற்றவர்கள் நறுமணம் வீசும் பொடி); ஆடையாக அணிவது யானைத்தோல், புலித்தோல் (மற்றவர்கள் நல்லாடை) கையில் ஏந்துவது தீ (மற்றவர்கள் தீயினுக்கு அஞ்சுவார்கள்). தான் நாணும்படியாக என்னை புகழ்ந்து வார்த்தை ஏதும் பேசாதவர் சிவபெருமான் என்றும், உண்பதற்கு நஞ்சு கிடைக்காவிட்டால் வேறு ஏதும் உண்ணார் என்றும் சொல்லும் அந்தப் பெண்மணி, சிவபிரான் தன்னிடம் வந்து பாலின் இனிமையையும் மிஞ்சுமாறு தன்னிடம் இனிமையாக பேசியதாகவும் அவர் விண்ணில் உலவும் மதியினைச் சூடிக்கொண்டு வேதம் ஓதிக்கொண்டு வெண்காட்டில் உறையும் சிவபிரான் என்று அடியாளம் காட்டுகின்றாள். இத்தகைய மாறுபட்ட குணங்கள் தாம் அப்பர் நாயகியைக் கவர்ந்து சிவபிரான் பேரில் ஆசை வைக்கத் தூண்டியதோ. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான், பெருமானை வெண்காடு மேவிய விகிர்தனார் என்று அழைக்கின்றார்.

பெண்பால் ஒரு பாகம் பேணா வாழ்க்கைக் கோள் நாகம் பூண்பனவும் நாணாம் சொல்லார்

உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றேல் ஓவி உண்ணார்

பண்பால் விரிசடையார் பற்றி நோக்கி பாலை பரிசு அழியப் பேசுகின்றார்

விண்பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.51.9) அப்பர் பிரான் பெருமானை வெண்தலை கைக்கொண்ட விகிர்த வேடர் என்று குறிப்பிடுகின்றார். உயிர்களை உய்விக்கும் நோக்கத்துடன் பலியேற்பதும், உண்கலனாக பிரம கபாலத்தைத் தாங்கிச் செல்வதும் வேறெவரும் நினைத்துப் பார்க்கவும் முடியாத செயல் என்பதால் அப்பர் பிரான் விகிர்தர் என்று கூறுகின்றார்.

கொண்டலுள்ளார் கொண்டீச்சரத்தின் உள்ளார் கோவலூர் வீரட்டம் கோயில் கொண்டார்

தண்டலையார் தலையாலங்காட்டிலுள்ளார் தலைச்சங்கை பெருங்கோயில் தங்கினார் தாம்

வண்டலோடு மணற்கொணரும் பொன்னி நன்னீர் வலஞ்சுழியார் வைகலின் மேல் மாடத்து உள்ளார்

வெண்டலை கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே

நாம் தெருவில் காணும் பிச்சைக்காரர்களும், சீரான வடிவில் அமைந்த திருவோட்டினை ஏந்தியவாறு காட்சி அளிக்கின்றார்கள். ஆனால் உலகுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் பெருமானோ, மண்டையோட்டில் பலி ஏற்கச் செல்கின்றான். பற்கள் வெளியே தெரியுமாறு அருவருக்கத் தக்க தோற்றம் கொண்ட ஓட்டினை கையில் ஏந்தியவாறு செல்லும் பெருமான், மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவர் தானே. அதனால் தான் மிகவும் பொருத்தமாக அவரை, வெண் தலையில் பலி ஏற்கும் விகிர்தர் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். இந்த பாடல் வீழிமிழலை தலத்திற்கு உரிய பாடல் (6.53.8). ஆதனம்=ஆசனம்;வியன்=அகன்ற: இந்த பதிகத்தின் மூன்றாவது, ஆறாவது, ஒன்பதாவது மற்றும் பதினோராவது பாடல்களில் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் என்று குறிப்பிடுகின்றார்.

குண்டரொடு பிரித்து என்னை ஆட்கொண்டார்போலும் குடமூக்கில் இடமாக்கிக் கொண்டார் போலும்

புண்டரீக புதுமலர் ஆதனத்தார்போலும் புள்ளரசைக் கொன்றுயிர் பின் கொடுத்தார்போலும்

வெண்தலையில் பலிகொண்ட விகிர்தர்போலும் வியன் வீழிமிழலைநகர் உடையார்போலும்

அண்டத்துப் புறத்து அப்பாலானார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான் பெருமானை வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனார் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை (6.59.1) நாம் இங்கே காண்போம். இந்த பாடலில், பெருமானின் மாறுபட்ட செயல்கள் பல குறிப்பிடப்படுகின்றன. வீடுபேறு அருளும் வல்லமை, திருநீற்றினைப் பூசிக் கொள்வது, திருமாலும் பிரமனும் காணாத வண்ணம் தீப்பிழம்பாக நின்றது,கொன்றை மலரை மாலையாக ஏற்பது, நஞ்சினை உண்டது, பறக்கும் மூன்று கோட்டைகளை எரித்தது ஆகிய செயல்களும் தன்மைகளும் பெருமானுக்கே உரித்தவை. என்பதை நாம் அறிவோம். விண்டவர்=பிரிந்தவர், சிவநெறியை விட்டு பிரிந்து பகைவர்களாக மாறிய திரிபுரத்து அரக்கர்கள்; மைந்தன்=வலிமை படைத்தவன்;

தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியினாரும் தூநீறு துதைந்து இலங்கும் மார்பினாரும்

புண்டரீகத்து அயனொடு மால் காணாவண்ணம் பொங்கு தழல் பிழம்பாய புராணனாரும்

வண்டமரும் மலர்க் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சுண்ட மைந்தனாரும்

விண்டவர் தம் புரம்மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.6) அப்பர் பிரான், பெருமானை வெண்காடு மேவிய விகிர்தன் என்று கூறுகின்றார். இந்தபாடலில் ஆகாயத்தின் பண்பு ஒலி என்பதை குறிப்பிடும் வண்ணம் விண்ணொலி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆகாயத்தின் பண்பு ஒலி எனப்படும்குணம் ஒன்று தான். காற்று ஒலி மற்றும் ஊறு ஆகிய இரண்டு பண்புகளையும், தீ ஒலி, ஊறு மற்றும் உருவம் ஆகிய மூன்று பண்புகளையும், தண்ணீர் ஒலிஊறு உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு பண்புகளையும் நிலம் ஒலி ஊறு உருவம் சுவை மற்றும் வாசனை ஆகிய ஐந்து பண்புகளையும் உடைத்ததாகவிளங்குகின்றன.

புகழொளியை புரம் எரித்த புனிதன் தன்னைப் பொன்பொதிந்த மேனியானைப் புராணன் தன்னை

விழவொலியும் விண்ணொலியும் ஆனான்தன்னை வெண்காடுமேவிய விகிர்தன் தன்னைக்

கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக் கடைதோறும் இடுபிச்சைக்கு என்று செல்லும்

திகழொளியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

தலையாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.79.3) அப்பர் பிரான், பெருமானை இளமதி சூடும் விகிர்தன் என்று குறிப்பிடுகின்றார்.மெய்த்தவம்=உண்மையான தவம்; உண்மையான தவத்தினை ஏற்றுக்கொள்ளும் இறைவனை மெய்த்தவன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். அடியார்கள் செய்யும் திருப்பணிகளை இறைவன் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. சந்திரனைத் தனது சடையில் ஏற்ற தன்மையை உடையவன் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், இறைவனை விகிர்தன் என்று அழைக்கின்றார். எய்த்து=உடலினை வருத்தி பயன் ஏதும் அடியாத நிலை. பிறவி எடுத்ததன் நோக்கமே, இறைவனின் திருப்பாதங்களை பற்றிக் கொண்டு நிலையான இன்பம் தரும் வீடுபேற்றினை அடைவது தானே. அந்த நெறியினில் தனது உடலினை ஈடுபடுத்தாது, பல வேறு வகைகளில் சமணக் கோட்பாடுகளின் வழியே தனது உடலை வீணாக வருத்துக் கொண்டு திரிந்தாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தலத்து இறைவனின் திருநாமத்தை பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான். உமையன்னை என்று தலத்து பிராட்டியின் திருநாமத்தை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இளமாமதி சூடும் விகிர்தன் தன்னை

எய்த்து அவமே உழி தந்த ஏழையேனை இடர்க்கடலில் வீழாமே ஏற வாங்கிப்

பொய்த்தவத்தார் அறியாதநெறி நின்றானைப் புனல் கரந்திட்டு உமையொடரு பாகம் நின்ற

தத்துவனைத் தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே

கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.81.1) அப்பர் பிரான் பெருமானை விகிர்தன் என்று அழைக்கின்றார். கொண்டலம்=அழகிய மேகம்; கண்டலம்=கண்+தலம், நெற்றியில் இடம் கொண்ட மூன்றாவது கண்; மண்டலம்=பல வகையான உலகங்கள்; பலவகையான உலகங்களில் உயிர்களை, அடுத்தடுத்த பிறவிகளில், கொண்டு சேர்ப்பதும் உயிர்களை மயக்கத்தில் ஆழுத்துவதுமான வினைகளை அறுத்தொழிக்கும் மருந்தாக இறைவன் செயல்படும் தன்மை, விகிர்தன் என்ற சிறப்புப் பெயரை பெருமானுக்கு அளித்துள்ளது. விண்டலம்=விண்+ தலம்=தேவர் உலகம்; கொண்டலம் சேர் கண்டம்=கருமேகம் போன்ற கறை படர்ந்த பெருமானின் கழுத்து. குழகன்=அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவன்;

கண்டலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய் கல்மதில்சூழ் கந்தமாதனத்தான் கண்டாய்

மண்டலம் சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் மதிற்கச்சி ஏகம்பம்மேயான் கண்டாய்

விண்டலம்சேர் விளக்கொளியாய் நின்றான்கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்

கொண்டலம் சேர் கண்டத்தெம் கூத்தன்கண்டாய் கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.82.8) அப்பர் பிரான் பெருமானை, விலையிலா ஆரம் சேர் மார்பர் வெண்ணீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் என்று குறிப்பிடுகின்றார். விலையிலா ஆரம் என்று இறைவன் அணிந்துள்ள எலும்பு மாலையினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.விலையில்லாத மலிவான மாலை என்று ஒரு பொருளும் எவரும் விலை சொல்ல முடியாத, விலை மதிப்பில்லாத மாலை என்று மற்றொரு பொருளும் கொள்ளலாம். ஊழிக் காலத்தில் அனைத்து உயிர்களும் அழிந்த பின்னர், எஞ்சியிருந்த எலும்புகளை அணிந்து கொண்டு, தான் ஒருவனே அழிவில்லாதவன் என்பதை உணர்த்தும் கோலம் தான் எலும்பு மாலை அணிந்த கோலமாகும். திருமால் பிரமன் உள்ளிட்ட தேவர்களின் உடலில் இருந்த எலும்புகளுக்கு விலை எவர் சொல்ல முடியும். இறந்த உடலின் எலும்புகளை மட்டுமா இறைவன் அணிந்து கொண்டிருக்கின்றார். அந்த உடல்கள் எரிந்த சாம்பலையும் தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டு காட்சி அளிப்பவர் சிவபெருமான். இவ்வாறு எலும்பினை அணிந்து கொண்டு, மயானத்து சாம்பலை பூசிக் கொண்டு இருப்பவர், மற்றவர்களிடமிருந்து முற்றும் மாறுபட்டவர் தானே, அதனால் தான், அப்பர் பிரான் இந்த பாடலில், மாறுபட்டவர் என்ற பொருளை உணர்த்தும் விகிர்தர் என்ற சொல்லால் இறைவனை குறிப்பிடுகின்றார். மலையினார்=மலையில் பிறந்து வளர்ந்த; காப்பு=உறைவிடம்; தொலைவிலார்=தொலைவு இல்லாதவர்; தோல்வி அடைந்து தொலைந்து போகாத நிலை; மெய்=உடல், பெருமானின் திருமேனி; சிலை=மலை,மேருமலை; மேருமலையை வில்லாகவும் வாசுகி பாம்பினை நாணாகவும் கொண்ட தன்மை உணர்த்தப் படுகின்றது.

விலையிலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண்ணீறு மெய்க்கு அணிந்த விகிர்தர்போலும்

மலையினார் மங்கை மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும்

தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும்

சிலையினார் செங்கண் அரவர்போலும் திருச்சாய்க்காட்டு இனிதுறையும் செல்வர் தாமே

ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.88.4) அப்பர் பிரான், பெருமானை, காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன் என்று குறிப்பிடுகின்றார். அன்றினவர்=பகைவர்கள், திரிபுரத்து அரக்கர்கள் மூவர்;: திரிபுரத்து அரக்கர்களை சிவபெருமான் அழித்த விதம், மூன்று விதமாக புராணங்களில் சொல்லப் படுகின்றது. ஒரே அம்பினை எய்து மூன்று கோட்டைகளை எரித்ததாகவும், புன்முறுவல் சிரித்து எரித்ததாகவும், விழித்தே எரித்ததாகவும் சொல்லப் படுகின்றது. தேவார ஆசிரியர்களும் இந்த மூன்று முறைகளையும் தங்களது பதிகத்தில் குறிப்பிடுகின்றார்கள். இந்த பாடலில்,அப்பர் பிரான் திரிபுரத்து கோட்டைகளை விழித்தே அழித்ததாகக கூறுகின்றார். வென்றி=வெற்றி; சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவரச் சென்ற நாள் வரையில் தான் எடுத்த காரியத்தில் வெற்றி கொண்டவனாக விளங்கியவன் இயமன்; பொன்றி வீழ=உயிர் அழிந்து உடல் கீழே விழ;விகிர்தன்=மாறுபட்டவன், இயமனது செயலைச் செய்யவிடாமல் தடுத்தவன் சிவபெருமான் ஒருவனே என்பதால் விகிர்தன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இருபிறப்பர் என்று அந்தணர்களை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அந்தணச் சிறுவர்களுக்கு உபநயனச் சடங்கு (பூணூல் அணிவிக்கும் விழா) நடைபெறுவதை இரண்டாவது பிறப்பு என்று கூறுவார்கள். இந்த செய்தி சேக்கிழார் பெருமானால், திருஞானசம்பந்தர் புராணத்தில் உணர்த்தப் படுகின்றது. பண்டைய நாட்களில் உபநயனம் முடிந்த பின்னர், சிறுவர்களை குருகுலம் அனுப்பி, அங்கே தங்கியிருந்து வேதங்களை கற்கச் செய்வது வழக்கம். அந்நாள் வரை பெற்றோரிடம் இருந்த வளர்ந்து வந்த சிறுவர்கள், பெற்றோர்களைப் பிரிந்து குருகுலம் சென்றடைந்து, குருகுலத்து ஆசிரியரையும் அவரது மனைவியரையும் தங்களது பெற்றோர்களாக கருதி அவர்களுக்கு பணிவிடைகள் செய்தவாறு, வேதங்கள் கற்றுக் கொள்வதை மறுபிறப்பு என்று அழைப்பார்கள். அவர்கள் அந்நாள் வரையில் வளர்ந்து வந்த சூழ்நிலை முற்றிலும் மாறி வேறு வகையான வாழ்க்கை வாழ்வதால் மறுபிறப்பு என்று அழைத்தனர் போலும். உபநயனம் முடிந்த பின்னர், வேதங்களைக் கற்பதன் மூலம் ஞானம் பெறுவதற்கான தகுதி அடைவதால், வாழ்க்கை முறை மாறுபடுகின்றது என்பதால் இரண்டாவது பிறப்பு என்று அழைப்பதாகவும் விளக்கம் அளிப்பதுண்டு. இந்த பாடலில் அப்பர் பிரான் முத்தீயாளர் என்று அந்தணர்களை அழைக்கின்றார். ஆகவனீயம், காருகபத்தியம், தாக்கிணாக்னி என்பன அந்தணர்கள் தினமும் வளர்க்க வேண்டிய மூன்று விதமான அக்னிகள் ஆகும். ஆகவனீயம் என்ற வேள்வி, தேவர்களுக்காக செய்யப்படும் வேள்வி. நமது முன்னோர்களை நினைத்து செய்யப்படும் வேள்வி தட்சிணாக்னி என்பதாகும். இல்வாழ்க்கையில் ஈடுபட்டோர் தினமும் செய்ய வேண்டிய வேள்வி காருகபத்தியம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மூன்று வகையான வேள்விகளை தினமும் செய்து வந்தமையால், அந்தணர்கள் முத்தீயாளர் என்று அழைக்கப் பட்டார்கள். இந்த பாடலின் மூன்றாவது அடியில், ஒன்று, இரண்டு,மூன்று, நான்கு என்ற சொற்களை பயன்படுத்தி எண்ணலங்கார அடியாக அப்பர் பிரான் அமைத்திருக்கும் நேர்த்தியை நாம் உணரலாம்.

அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர் கோனை

வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன் தன்னை

ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும்

தென்றல் மலி வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.14.07) சுந்தரர், வெண் திங்கள் சூடிய விகிர்தர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.எப்போதும் உணமையே பேசுவோர் போல் தோன்றினாலும் அவ்வப்போது அந்த நிலையிலிருந்து பிறழ்கின்ற பெருமான் என்று குறிப்பிடும் சுந்தரர், அவ்வாறு தனது தன்மையிலிருந்து பெருமான் வழுவினாலும் தான் அவரை மட்டுமே தலைவராக ஏற்றுக்கொள்வேன் என்று உணர்த்துகின்றார். தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டதன், தன்னை எப்போதும் பேணி பாதுகாப்பேன் என்று உணர்த்திய பெருமான், தான் விரும்பிய பொன்னைத் தாராத காரணத்தால் அவரை பொய்யர் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார் போலும். இந்த பதிக்த்தின் முதல் பத்து பாடல்களிலும் இவரலாது இல்லையோ பிரனார் என்று குறிப்பிட்டாலும்,பதிகத்தின் கடைப்பாடலில் ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல என்று குறிப்பிட்டு, தான் வாயினால் பெருமானின் புகழினைச் சொல்லியும் மனதினால் நினைத்து பரமனின் திருவடிகளைப் பணிகின்ற அடியான் என்று தன்னை குறிப்பிடுகின்றர்.

கையது கபாலம் காடுறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர்

மெய்யது புரிநூல் மிளிரும் புன்சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர்

பையரவல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்

மெய்யரே யொத்தோர் பொய் செய்வதாகில் இவரலாது இல்லையோ பிரானார்

க்லயநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.16.5) சுந்தரர் பெருமானை புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார்.நிற்பான் என்று திருமாலை இங்கே குறிப்பிடுகின்றார். திருமாலின் கோலங்கள் பல இருப்பினும், அர்ச்சனைக்கு உரியது நின்ற திருக்கோலம் என்பதால் அந்த கோலம் இங்கே கூறப்படுவதாக சுந்தரர் குறிப்பிடுகின்றார் என்று தருமபுரத்து ஆதீனக் குறிப்பு உணர்த்துகின்றது. தோத்திரங்கள் என்று பெருமானின் புகழினை எடுத்துரைக்கும் தமிழ்ப் பாடல்கள் என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய்

வெற்பார் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில்

சொற்பால பொருட்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லித் துதித்து இறை தன் திறத்தே

கற்பாரும் கேட்பாருமா எங்கும் நன்கார் கலைபயில் அந்தணர்வாழும் கலயநல்லூர் காணே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.38.1) சுந்தரர், பெருமானை விடை மேற்கொள் விகிர்தன் என்று குறிப்பிடுகின்றார்.திருவதிகை அருகே உள்ள சித்தவடம் மடத்தில் ஒரு இரவுப் பொழுதினில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்த சுந்தரரின் அருகில் வந்து படுத்த ஒரு முதியவரின் கால் சுந்தரரின் தலை மற்றும் முகத்தின் மீது படுகின்றது. அதனால் உறக்கம் கலைந்த சுந்தரர், தன்னருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த முதியவரைக் கண்ட பின்னர், முதியவரின் உடல் தளர்ச்சியால் ஏற்பட்ட நிகழ்ச்சி என்று கருதி, தனது நிலையினை மாற்றி, முதியவரின் தலையின் அருகே தனது தலையும் இருக்கும் வண்ணம் படுக்கின்றார். ஆனால், சிறிது நேரம் கழித்து விழித்தெழுந்த முதியவர், தனது நிலையினை மாற்றிக் கொண்டு படுக்கவே மீண்டும் முதியவரின் கால் சுந்தரரின் முகத்தின் மீது படுகின்றது. இரண்டாவது முறையாக தனது உறக்கம் கலையவே, விழித்தெழுந்த சுந்தரர் முதியவரைப் பார்த்து கோபமும் இகழ்ச்சியும் கலந்து தோன்ற, யார் நீ என்று கேட்கின்றார். என்னைத் தெரியவில்லையா என்று கேட்டவாறு முதியவர் மறையவே, வந்தவர் பெருமான் தான் என்பதை சுந்தரர் உணர்கின்றார். பெருமானின் திருவடிகள் தனது தலை மீது பதியவேண்டும் என்று பலநாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த தான், தன்னருகே வந்து படுத்துக்கொண்ட பெருமானை அறியாமல் இருந்ததும் அல்லாமல் அவரை மிகவும் இகழ்வாக தான் நினைத்தது பெரிய தவறு என்பதை உணர்த்தும் முகமாக, பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இனியும் பெருமானை சிறிதும் இகழமாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். இந்த பாடலில், நாய் தனது எஜமானனை, அவன் எந்த வேடத்தில் வந்தாலும் அடையாளம் கண்டுகொள்கின்றது. ஆனால் தானோ, முதியவராக வந்து எனது தலை மீது தனது திருவடியை பதித்தது பெருமான் என்பதை உணராமல், நாயினும் கீழாக தான் இருந்த தன்மையை நினைத்து சுந்தரர் வருந்தும் பாடல். நாய்க்கும் இருக்கும் அறிவு கூட தனக்கு இல்லையே என்று அங்கலாய்க்கும் பாடல். பெருமானின் திருவடிகள் தனது தலை மீது படாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பின்னணியில், பெருமானின் திருவடிகள் தனது தலை மீது படர்ந்த போது, அதனை உணராது இருந்த தனது மடமையை குறிப்பிட்டு வருத்தம் அடைகின்றார்.

தம்மானை அறியாத சாதியார் உளரே சடைமேற் கொல் பிறையானை விடைமேர் கொள் விகிர்தன்

கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானைக் கறை கொண்ட கண்டத்து

அம்மான் தன் அடிக்கொண்டென் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்

எம்மானை எறிகெடில வடவீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போலியானே

எவராலும் வெல்ல இயலாத சலந்தரனை அழிப்பதற்காக மிகவும் கூர்மையான சக்கரத்தை உருவாக்கும் பெருமான், அத்தகைய அரிய ஆயுதத்தை,திருமாலுக்கு வழங்குகின்றார். தன்னிடம் இருக்கும் அரிய ஆயுதத்தை எவரும் அடுத்தவருக்கு அளிக்க மாட்டார்கள். ஆனால் விகிர்தராகிய பெருமான்,அதனை, விருப்பத்துடன் திருமாலுக்கு அளிக்கின்றார். இந்த நிகழ்ச்சியை சுந்தரர், அடல் ஆழி அன்று அரி தான் வேண்ட கொடுத்து அருள் புரி விகிர்தா என்று ஆவடுதுறை பதிகத்தின் பாடலில் (7.70.7) குறிப்பிடுகின்றார். அடல்=வலிமை வாய்ந்த;

வெய்ய மா கரி ஈருரியானே வேங்கை ஆடையினாய் விதி முதலே

மெய்யனே அடல் ஆழி அன்று அரி தான் வேண்ட நீ கொடுத்தருள் புரி விகிர்தா

செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திருவாவடுதுறையுள்

ஐயனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

வெஞ்சமாக்கூடல் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் சுந்தரர் பெருமானை வெஞ்சமாக்கூடல் விகிர்தன் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் தனது சிறப்பான அடியார்களுள் தன்னையும் (சுந்தரரையும்) சேர்த்து வைத்துக்கொண்டு அருள் புரிய வேண்டும் என்று பாடல்தோறும் வேண்டுகின்றார். பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டுள்ள பெருமான், சுடுகாட்டின் மீது தான் கொண்டுள்ள பற்றினை விடாதவனாக இருக்கின்றான் என்று ஒன்றுக்கொன்று ஒவ்வாத இரு பண்புகளை குறிப்பிட்டு, விகிர்தன் என்ற சொல்லுக்கு பொருத்தமான விளக்கம் அளிப்பதை நாம் உணரலாம்.

பண்ணேர் மொழியாளையொர் பங்குடையாய் படுகாட்டகத்து என்றுமோர் பற்றொழியாய்

தண்ணார் அகிலும் நலசாமரையும் அலைத்து எற்று சிற்றாறதன் கீழ்க்கரை மேல்

ம்ண்ணார் முழவும் குழலும் இயம்ப மடவார் நடமாடு மணியரங்கில்

விண்ணார் மதிதோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே

திருவாஞ்சியம் பதிகத்தின் பாடலில் (7.76.4) சுந்தரர் வெள்ளை நுண்பொடி பூசும் விகிர்தர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். சள்ளை=ஒரு வகை மீன்:வள்ளைக் கொடியின் மலரை தன்னைக் கொத்தித் தின்ன வந்த நாரைப்பறவை என்று மயங்கி, மீன் அச்சம் கொள்வதாக குறிப்பிடுகின்றார். வள்ளைக் கொடி என்பது ஒரு வகை கீரை. வாய்க்கால்களில் நீர்நிலைகளின் ஓரங்களில் படரும் கொடி. நீரில் மிதகும் தன்மை உடைய இந்த கொடியில் பூக்கும் பூக்கள்,புனல் வடிவம் கொண்டவையாக, தொண்டைப் பகுதியில் ஊதா நிறத்திலும் மற்ற இடங்களில் வெளிறிய நிறத்துடன் காணப்படும் என்று கூறுவார்கள்.,வள்ளை மலரைக் கண்டு அச்சம் கொண்டு துள்ளும் சிறு மீன்கள் வாளையின் வாயில் விழுவதாக இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார். வள்ளைப் பூவினைக் கண்ட சுந்தரருக்கு பெருமானின் திருமேனியில் பூசியிருக்கும் திருநீறு நினைவுக்கு வந்தது போலும். தலத்தின் நீர்வளம் இந்த இயற்கை வர்ணனை மூலம் உணர்த்தப்படுகின்றது.

சள்ளை வெள்ளையங் குருகு தானதுவாம் எனக்கருதி

வள்ளை வெண்மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில்

துள்ளு தெள்ளு நீர்ப் பொய்கைத் துறைமல்கு வாஞ்சியத்து அடிகள்

வெள்ளை நுண்பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே

வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் 7.86.7) சுந்தரர், பெருமானை மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் என்று கூறுகின்றார். பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார் மெய்ப்பொருளாய் இருப்பவனும் வெண்மையாக உள்ள திருநீற்றினை தனது உடல் முழுவதும் பூசுபவனும், வேதங்களின் தலைவனும், தனது கையினில் மான் மற்றும் மழு ஏந்தியவனும்,அனைவரது வாழ்நாளினை முடிக்கும் காலனின் வாழ்நாளை முடித்தவனும், படத்தினை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், தனது அடியார்கள் அன்றி ஏனையோர் அறிய முடியாத வண்ணம் தன்னை மறைத்துக் கொள்பவனும், எங்களது தலைவனும் ஆகிய இறைவனை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப் படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத முதல்வன்

கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்

பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்

ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.91.7) திரிபுரத்து கோட்டைகளை தீயில் வேகவைத்து அழித்த விகிர்தன் என்று சுந்தரர் கூறுகின்றார். சென்ற=வானில் உலவிய; விகிர்தன் என்ற சொல், இந்த பாடலில் குறிப்பிடப்படும் மூன்று தன்மைகளுக்கும் பொருந்துவதை நாம் உணரலாம்.திரிபுரங்களை அழித்தது, அடியார்களின் வினைகளை நீக்குதல் மற்றும் வெள்ளை இடபத்தை வாகனமாக ஏற்றது என்பன அந்த மூன்று செயல்கள்.

சென்ற புரங்கள் தீயில் வேவ

வென்ற விகிர்தன் வினையை வீட்ட

நன்று நல்ல நாதன் நரையேறு

ஒன்றை உடையான் ஒற்றியூரே

நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.97.6) சுந்தரர், பெருமானை விகிர்தன் என்று கூறுகின்றார். புல்கிய=நிறைந்த; பெருமான்,அர்ஜுனனுடன் விற்போரில் ஈடுபட்டது, பகை காரணமாக அல்ல என்பதை நாம் அறிவோம். அதனால் தான், முழு வலிமையுடன் போரிடாமல், விளையாடுவது போன்று மெல்லிய தன்மையுடன் போரிட்டதாக இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார்.

மல்கிய செஞ்சடை மேல் மதியும் அரவும் உடனே

புல்கிய ஆரணன் எம் புனிதன் புரிநூல் விகிர்தன்

மெல்கிய வில் தொழிலான் விருப்பன் பெரும் பார்த்தனுக்கு

நல்கிய நம் பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே

திருவாசகம் அருட்பத்து பதிகத்தின் பாடலில் (8.29.7) மணிவாசகர் பெருமானை, மெய்யனாகிய விகிர்தன் என்று அழைக்கின்றார். உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவர் தான் என்பதால், ஏனையோர் அனைவரும் அவரிடமிருந்து மாறுபட்டுத் தானே இருக்க வேண்டும். மேவலர்=பகைவர்;இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும், பெருமானை பார்த்து, அதெந்துவே அருளாயே என்று அடிகளார் வேண்டுகின்றார். பெருமான் பால் மிகவும் சாதாரணமான வேண்டுகோளை அடிகளார் வைக்கின்றார். பெருமானே, நான் உன்னை ஆதரித்து அழைக்கின்றேன், ஏன் அழைத்தாய் என்றாவது நீ கேட்கலாகாதா என்று புலம்புகின்றார். பெருந் துயரத்தில் நாம் மூழ்கியிருக்கும் போது, நமக்கு நெருக்கமக உள்ளவர் எவரேனும், நமது துயரத்திற்கு காரணம் யாது என்று நம்மைக் கேட்டாலே, நாம் நமது துயரம் சற்று குறைந்தது போல் உணர்கின்றோம் அல்லவா. அவ்வாறு நம்மை விசாரிக்கும் நபர்,நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூட நாம் எதிர்பார்ப்பதில்லை; ஏனெனில் ந்மது துயரத்தைத் துடைக்கும் ஆற்றல் அவருக்கு இல்லமல் இருக்கலாம்.துயரத்தில் மூழ்கியிருக்கும் நாம், இறைவனிடம் நமது துயரத்தை தீர்ப்பாய் என்று முறையிட்டாலே, நமக்கு மனதிலிருந்து பாரம் இறங்கியது போன்று உணர்கின்றோம் அல்லவா. அவ்வாறு இருக்கையில் சர்வ வல்லமை படைத்த இறைவன், நம்மை பார்த்து, நமது துயரத்திற்கு காரணம் யாது என்று வினவினால், நிச்சய்மாக நமது துயரத்தை இறைவன் களைவான் என்ற நம்பிக்கை பிறக்கும் அல்லவா. இந்த பாடலில் திரிபுரங்களை எரித்த நிகழ்ச்சியும் காலனை காலால் உதைத்து வீழ்த்திய நிகழ்ச்சியும் குறிப்பிடப்படுகின்றன. இரண்டுமே வேறெவரும் செய்ய முடியாத செயல்கள் என்பதால் விகிர்தன் என்று அழைப்ப்து மிகவும் பொருத்தமாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் நிகழ்ந்த இரண்டு கருணைச்செயல்களையும் நாம் உணரலாம்.திரிபுரத்தில் வாழ்ந்த வந்த அடியார்கள் சுதன்மன் சுசீலன் சுபுத்தி ஆகிய மூவரும் அழியாமல் பெருமான் காப்பாற்றியதும், சிறுவன் மார்க்கண்டேயனை என்றும் இறவாமல் காத்ததும் நமது நினவுக்கு வருகின்றன. அதே போன்று பெருமான், தனது துயரத்தையும் நீக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப் படுவது மறைமுகமாக உணர்த்தப் படுகின்றது.

மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேவலர் புரங்கள் மூன்றெரித்த

கையனே காலாற் கால்னைக் காய்ந்த கடுந்தழல் பிழம்பன்ன மேனிச்

செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தம் மேவிய சீர்

ஐயனே அடியேன் ஆகரித்து அழித்தால் அதெந்துவே என்று அருளாயே

சிவபெருமானுக்கே உரித்தாய அவரது பல குணநலன்களையும் வேறெவரும் செய்ய முடியாத பல செயல்களையும் பெருமான் புரிந்த தன்மையையும் கருத்தினில் கொண்டு, பல திருமுறைப் பாடல்கள் அவரை விகிர்தர் என்று அழைப்பதை நாம் சிந்தித்தோம். பெருமானது சிற்ப்பான இந்த தன்மையை விகிர்தம் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் (3.64.5) அத்தகைய செயல்களை புகழ்ந்து குறிப்பிட்டு, அவர் பால் அன்பு வைத்து மனம் கசிந்து வழிபடாமல் இருக்கும் மனிதர்களின் மனத்தையும் மாற்றி அவர்களும் கசிந்துருகி பெருமானை வழிபடும் வண்ணம், நாம் அனைவரும் முயல வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். இவ்வாறு பெருமானை பலவாறு புகழ்ந்து அழைத்து அரற்றி, அவனது திருவடிகளில் விழுந்து வழிபடும் அடியார்களுக்கு தவறாது அருள் புரியும் பெருமான் பெருவேளூர் தலத்தில் உறைகின்றார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இத்தகைய அடியார்கள் உலகப் பொருட்களின் விருப்பம் ஏதும் கொள்ளாமல், பெருமானின் திருவடிகளைப் பணிந்து வாழ்வார்கள் என்று கூறுகின்றார். நாமும் பெருமானின் பலப்பல விகிர்தங்களைப் புகழ்ந்து பேசி பெருமானின் பேரருள் பெறுவோமாக.

விழையாதார் விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசிக்

குழையாதார் குழைவார் போல் குணநல்ல பல கூறி

அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார் தமக்கென்றும்

பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே

பொழிப்புரை:

அனைத்து உயிர்களுக்கும் பிறப்பு மற்றும் இறப்பினை அருளுபவரும், என்றும் அழியாது நிலை பெற்று விளங்கும் வீடுபேற்றின் தன்மையை உயிர்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்பவரும் ஆகிய பெருமான், ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்ட விகிர்தராக விளங்குகின்றார். அவர் இடுகாடு சுடுகாடு ஆகிய இரண்டையும் தனது இருப்பிடமாகக் கொண்டு, நள்ளிரவில் பேய்கள் சூழ நடனமாடும் பெருமான், பழையனூரைச் சார்ந்த ஆலங்காட்டினைத் தமது உறைவிடமாகக் கொண்டுள்ளார்.

பாடல் 3:

கந்தம் கமழ் கொன்றைக் கண்ணி சூடிக் கனலாடி

வெந்த பொடி நீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார்

கொந்தண் பொழிற் சோலை அரவில் தோன்றிக்கோடல் பூத்து

அந்தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

விளக்கம்:

கந்தம்=நறுமணம்; கண்ணி=தலையில் சூட்டிக்கொள்ளப்படும் மலர் மாலை; கொந்தண்=கொத்து கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த: அரவில் தோன்றி=படம் எடுத்தாடும் பாம்பு போன்று: அந்தண்=அழகியதும் குளிர்ந்ததும்:

பொழிப்புரை:

நறுமணம் கமழும் கொன்றை மலர் மாலைகளைத் தனது சடையில் சூட்டிக்கொண்டவனாக விளங்கும் பெருமான், கொழுந்து விட்டெரியும் கனலில் நடனம் ஆடுபவனாக, தனது உடல் முழுவதும் சாம்பல் பொடி விளங்கும் வண்ணம் பூசிக்கொண்டவனும் ஆகிய இறைவன், இந்த இரண்டு தன்மைகளால் மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவனாக திகழ்கின்றான். கொத்து கொத்தாக பூக்கும் மலர்கள் நிறைந்து அழகாக காணப்படும் சோலைகளில்,படமெடுத்தாடும் பாம்பு போன்று தோற்றமளிக்கும் காந்தள் மலர்கள் நிறைந்த்தால், சோலைகள் அழகு மற்றும் குளிர்ச்சி பொருந்தியவையாக உள்ளன.இத்தகைய சிறப்பு வாய்ந்த பழையனூரைச் சார்ந்த ஆலங்காடு எமது தலைவனாகிய இறைவன் உறைகின்ற இடமாகும்.

பாடல் 4:

பாலமதி சென்னி படரச் சூடி பழி ஓராக்

காலன் உயிர் செற்றக் காலனாய கருத்தனார்

கோலம் பொழிற் சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை

ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

விளக்கம்:

பாலமதி=பால் போன்று வெண்மை நிறத்தில் காணப்படும் சந்திரன்; ஓர்தல்=ஆராய்ந்து உணர்தல்: இந்த பாடலில் பழியோராக் காலன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சிவபூஜைக்கு இடையூறு விளைவிப்பது தீராத பழியினை உண்டாக்கும். இதனை ஆராயாது சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைப் பறித்து, அவன் செய்து கொண்டிருந்த சிவபூஜைக்கு இடையூறு விளைவிக்க முயற்சி செய்த குற்றத்திற்காக, தனது உயிரினை காலன் இழக்க நேர்ந்தது அல்லவா. உணமையில் உயிர்கள் எப்போது எவ்வாறு தகுந்த உடல்களுடன் இணைக்கபட வேண்டும் என்பதும்,அவ்வாறு இணைந்த உடல்களிலிருந்து உயிர் எப்போது நீங்க வேண்டும் என்பதும் இறைவனின் ஆணைப்படியே நிகழ்கின்றன என்பதால், இயமன் பெருமானின் கட்டளையை நிறைவேற்றும் வேலைக்காரன் தான். மேலும் தனக்கு அளிக்கப்பட்ட அந்த கடமையை செவ்வனே நிறைவேற்றும் வண்ணம்,காலனுக்கு தேவையான ஆற்றல் கொடுத்தவனும் சிவபெருமான் தான். இந்த இரண்டு தன்மைகளையும் உணராமல், காலன் செயல்பட்டது பெருந்தவறு தானே. உயிர்கள் வாழும் காலத்திற்கு எல்லை விதித்து, தனது கருத்தினுக்கு ஏற்ப இயமன் செயல்படும் வண்ணம் இயக்குவதால், பெருமானை காலனாய கருத்தனார் என்று கூறுகின்றார். கோலம்=அழகு; மஞ்ஞை=மயில்; பெடை=துணை; ஆலும்= ஆரவாரிக்கும். மயில்கள் குரல் கொடுப்பதை ஆலுதல் என்று அழைப்பார்கள்; மட மஞ்ஞை=இள மயில்கள்;

பொழிப்புரை:

பால் போன்று வெண்மை நிறத்தில் காணப்படும் சந்திரனைத் தனது தலையில் படரும் வண்ணம் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், சிவபூஜைக்கு இடையூறு செய்வதால் தனக்கு நேரவிருக்கும் பழியையும் பொருட்படுத்தாமல் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்வதற்கு முயற்சி செய்த காலனின் உயிரைப் பறித்து, காலகாலனாக விளங்கிய பெருமான், உயிர்களின் காலத்தை நிர்ணயம் செய்பவராக விளங்குகின்றார். அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் இளமை பொருந்திய ஆண் மயில்கள் தத்தம் துணையோடு கூடிக்களித்து ஆரவாரம் செய்த வண்ணம் ஆலும் காட்சிகள் நிறைந்த பழையனூரைச் சார்ந்த திருவாலங்காட்டில் உறைபவர் எமது தலைவராகிய பெருமான் ஆவார்.

பாடல் 5:

ஈர்க்கும் புனல் சூடி இளவெண் திங்கள் முதிரவே

பார்க்கும் அரவம் பூண்டு ஆடி வேடம் பயின்றாரும்

கார்க்கொள் கொடி முல்லை குருந்தம் ஏறிக் கருந்தேன் மொய்த்து

ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

விளக்கம்:

ஈர்க்கும் புனல்=ஈர்த்துச் செல்வதில், இழுத்துச் செல்வதில் வலிமை வாய்ந்த கங்கை நதி; கரை புரண்டோடும் கங்கை நதியை, தன்னில் அகப்பட்ட பல பொருட்களை அடித்துக் கொண்டு கடலில் சேர்க்கும் கங்கை நதியை, நாம் அனைவரும் கண்டிருக்கின்றோம். தனது சடையில் தேக்கப்பட்ட கங்கை நதியை சொட்டுசொட்டாக பெருமான் விட்ட அந்த கங்கை நதியைத் தான் இப்போது காண்கின்றோம்.இதிலிருந்து பெருமானின் சடையினில் சிறப்படுவதற்கு முன்னர் கங்கை நதி எத்துணை வேகத்தில் பாய்ந்திருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.65.7) அப்பர் பிரான், ஆயிரம் கிளைகளுடன் கங்கை நதி கீழே பாய்ந்தாள் என்றும், அவளது நோக்கம் அப்போது பூமியையே புரட்டிக் கொண்டு பாதாளம் சேர்த்து விடுவதாக இருந்தது என்றும் கூறுகின்றார். மை=குற்றம்: மையறு=குற்றமற்ற:குற்றமற்ற மனத்தினை உடைய பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்பதற்காக சிவபிரான் ஒப்புக்கொண்டார்: மிகவும் வேகமாக, ஆயிரம் கிளைகளுடன் கங்கை நதி கீழே இறங்கி வந்த போது, உலகத்தையே புரட்டி பாதாளத்திற்கு கொண்டு செல்வது போல் வேகமாக வந்தது. ஆனால் சிவபெருமானின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டிருந்த தேவர்கள் ஐயம் ஏதும் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப கங்கை நதியைத் தனது சடையில் அடக்கிய சிவபிரானை தேவர்கள் வாழ்த்தினார்கள்:அத்தகைய ஆற்றல் படைத்தவர் தான் சாய்க்காடு தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.

மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட

ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகமதாகி

வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை என்னும்

தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே

திருச்சேறை பதிகத்தின் பாடலில் (4.73.4) அப்பர் பிரான் மிகுந்த கோபத்துடன் பல கிளைகளாக வேகத்துடன் கீழே பாய்ந்த கங்கை நதி என்று கூறுகின்றார். தனது ஐந்து புலன்களையும் அடக்கி, ஐந்து தீக்களை வளர்த்து அதனிடையே நின்று பல ஆண்டுகள், வஞ்சனை ஏதும் இல்லாமல், தனதுமூதாதையர்கள் கடைத்தேற வேண்டும் என்ற ஓரே நோக்கத்துடன் தவம் செய்த பகீரதனின் தவத்தினால் தேவலோகத்திலிருந்து கீழே கங்கை நதிபாய்ந்தது. ஆனால் தேவலோகத்தை விட்டுத் தன்னை பிரித்ததால் ஏற்பட்ட கோபத்துடன், பல கிளைகளாகப் பிரிந்த கங்கை மிகுந்த வேகத்துடன்,பூமியையே கரைத்து, பாதாள லோகத்திற்கு அடித்துச் செல்வது போல் கீழே இறங்கியது. இவ்வாறு மிகுந்த வேகத்துடன் இறங்கிய கங்கை நதியை தனதுசடையில் ஏற்ற சிவபெருமான், கங்கை நதி சீராக மண்ணுலகில் பாயுமாறு செய்தார். இவ்வாறு எவர்க்கும் துன்பம் ஏற்படாத வண்ணம் கங்கை நதியை வழிநடத்தியவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம்

வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு

வெஞ்சின முகங்களாகி விசையொடு பாயும் கங்கை

செஞ்சடை ஏற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே

இத்தகைய வேகத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதி பெருமானின் சடையினில், புல்லின் நுனியில் இருக்கும் பனித்துளி போல் இருந்தது என்ற அப்பர் பிரானின் கூற்று (6.50.10), பெருமானின் விசுவ ரூபம், எவ்வளவு பெரிதாக இருந்தது என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

அறுத்தானைஅயன் தலைகள் அஞ்சிலொன்றை அஞ்சாதே வரையெடுத்த அரக்கன் தோள்கள்

இறுத்தானை எழுநரம்பின் இசை கேட்டானை இந்துவினைத் தேய்த்தானை இரவி தன் பல்

பறித்தானைப் பகீரதற்காய் வானோர்வேண்டப் பரந்திழியும் புனல்கங்கை பனி போலாங்குச்

செறித்தானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

கங்கை நதியினைத் தனது சடையில் அடக்கிய பின்னர் அதனை சிறிதுசிறிதாக விடுவித்து, நிலத்தில் பாயச் செய்து புண்ணிய தீர்த்தமாக உலகோர் போற்றும் நிலைக்கு கங்கை நதி உயரும் வண்ணம் அருள் புரிந்தவர் பெருமான் தானே; மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியின் வேகத்தை இறைவன் தடுத்துத் தனது சடையில் அடக்கிக் கொண்டு சிறிய நீரோடையாக வெளியிட்டதன் பயனாக இன்றும் கங்கை நதி ஓடிக்கொண்டு இருக்கின்றது,அந்த நதியில் குளிப்பவர்களும், தங்களது பாவங்களை களைந்து கொண்டு பயனடைகின்றனர். இவ்வாறு கங்கை நீர் ஏற்றம் பெறுவதற்கு காரணமாக இறைவன் இருந்த நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது. இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு அவரது சோற்றுத்துறை பதிகத்தின் ஒரு பாடலை (4.41.6) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், மிகவும் ஆரவாரத்துடன் வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் ஏற்று பின்னர் அதனை விடுவித்த தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கங்கை நதி அவ்வாறு விடுபட்டதால் தானே, புண்ணிய தீர்த்தமாக உலகோர் கருதப்படும் நிலைக்கு உயர்ந்தது. கங்கையில் நீராடுவோர் தங்களது பாவங்கள் தீர்க்கப் பெற்றாலும், அவர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு கங்கை நதி எவ்வகையிலும் உதவி செய்ய முடியாது. பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து எவரேனும் விடுதலை பெறவேண்டும் என்றால்,பெருமானின் திருநாமங்களை பிதற்ற வேண்டும் என்ற செய்தியையும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த நிலவுலகத்திலிருந்து நிலையாக பிரிக்கப்பட்டு என்றும் அழியாத பேரானந்தத்தை தருகின்ற முக்தி நிலைக்கு செல்ல வேண்டும் என்பதே உயிரின் அவா.

பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்

பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் தன் திறமே

ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத்

தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத் துறையனாரே

பொருள் இல்லாதவர்களுக்கு பொருள் உள்ளவர்கள் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு ஈந்து உதவுவார்களை உலகம் புகழ்கின்றது. அவர்களின் மனதினில், அடுத்தவர்க்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை உருவாக்குபவர் இறைவன் என்று அப்பர் பிரான் திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (4.38.10) குறிப்பிடுகின்றார். தங்களிடம் பொருள் இருந்தும், இரப்பவர்களுக்கு உதவாதவர்களை உலகம் உலோபி என்று இகழ்கின்றது. அவ்வாறு இருத்தல் கொடிய செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், காமம் முதலான ஆறு குற்றங்களில் ஒன்றாக உலோபம் கருதப்படுகின்றது. இந்த குற்றத்தை இறைவன் பொறுக்கமாட்டார் என்றும் அதற்கு உரிய தண்டனை அளிப்பார் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அடுத்தவர்க்கு கொடுத்து உதவுவோர்க்கு இறைவனின் அருள் உண்டு என்பதையும் இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.இறைவன், கரப்பவர்க்கு தண்டனை அளிப்பார் என்பதை உணர்த்தும் விதமாக கங்கையைத் தனது சடையில் மறைத்த நிகழ்ச்சி இங்கே நயமாக குறிப்பிடப் படுகின்றது. கபில முனிவரை, தங்களது தந்தை சகரன் செய்யவிருந்த அசுவமேத யாகத்து குதிரையைத் திருடியவன் என்று தவறாக கருதி, அவர் மீது பாய்ந்த சகரனின் புத்திரர்கள் அனைவரும் தியானத்திலிருந்து விழித்த கபிலரின் கண் பார்வையால் சாம்பலாக எரிந்தனர். தனது நீரினில் அந்த சாம்பலைக் கரைத்து, அவர்களுக்கு நற்கதி வழங்கும் தன்மை கங்கை நதிக்கு இருந்ததால் தான், பகீரதன் கங்கை நதியை பூவுலகத்திற்கு, தவம் செய்து வரவழைக்க முயற்சி செய்தான். ஆனால் அவ்வாறு உதவ மறுத்த கங்கை நதிக்கு பாடம் கற்பிக்கும் வகையில், வேகமாக இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் இறைவன் சிறை வைத்த நிகழ்ச்சி இங்கே நயமாக உணர்த்தப் படுகின்றது.

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்

கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்

பரப்பு நீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்த

அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே

பல்லவனீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.65.3) திருஞானசம்பந்தர் பெருமானை, கங்கையை வாழவைத்த கள்வன் என்று குறிப்பிடுகின்றார். வாள்நிலவு=ஒளி பொருந்திய பிறைச் சந்திரன்; வார் சடை=நீண்ட சடை; இந்த பாடலில் திருஞானசம்பந்தர் இறைவனை கள்வன் என்று கூறுகின்றார். தான் திருடிய பொருளினை மற்றவர் அறியாத வண்ணம் ஒளித்து வைப்பது கள்வனின் செயல் என்பதை நாம் தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தின் விளக்கத்தில் கண்டோம். அந்த பாடலில் தனது உள்ளத்தை கொள்ளை கொண்டதால் கள்வன் என்று கூறிய சம்பந்தர், கங்கை நதியினை தனது சடையினில் மறைத்து தேக்கி வைத்ததால் இறைவனை கள்வன் என்று நயமாக கூறுகின்றார். அயம்=பள்ளம்; புணரி= கடல்;பங்கயம்=தாமரை மலர்கள்; உயர் பொய்கை=கடலில் நீர் மிகுந்த காணப்படுவதால் நீர்நிலைகளிலும் தண்ணீர் மேல் உயர்ந்து காணப் படுகின்றது என்று கூறுகின்றார்.

மங்கை அங்கோர் பாகமாக வாள் நிலவு வார் சடை மேல்

கங்கை அங்கே வாழ வைத்த கள்வன் இருந்த இடம்

பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்

பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே

மிகுந்த வேகத்துடன், நிலவுலகினையே புரட்டி பாதாளத்திற்கு அடித்து இழுத்துச் செல்லும் நோக்கத்துடன் கீழே பாய்ந்த கங்கை நதியின் வேகத்தினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பெருமான் கங்கை நதியைத் தனது சடையில் தாங்கினார் என்று பல திருமுறைப்பாடல்களிலும் கூறப்பட்டுள்ளது. உமை அன்னையைத் தனது உடலில் தாங்கிய பெருமானின் தன்மையுடன், கங்கை நதியினையும் தனது சடையில் தாங்கிய செய்கையும் அதன் காரணத்தையும்,வெளிப்படுத்தும் திருவாசகம் திருச்சாழல் பதிகத்தின் பாடல் நமக்கு நினைவுக்கு வருகின்றது. பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி கங்கை நதி தேவலோகத்திலிருந்து கீழே இறங்கி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், தனது நீர்ப் பெருக்கில், வல்லமையில் செருக்கு கொண்டிருந்த கங்கை மிகுந்தஆரவாரத்துடன் கீழே இறங்கினாள். பூமியையே கரைத்து, கடலில் சேர்த்து விடுவது போன்று மிகுந்த ஆவேசத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியைபரமசிவன் தனது சடையில் தாங்குகின்றார். பரமசிவன் தனது சடையில் கங்கையை அன்று தாங்காதிருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்பதை, மிகவும்அழகாக திருச்சாழல் பதிகத்தில் மணிவாசகர் எடுத்து உரைக்கின்றார். பிலமுகம்=பாதாளம், பூமியுடன் கங்கை நதியும் பாதாளத்தில் கலந்துவிடும் நிலையைத் தவிர்க்கவே பெருமான் தனது சடையில் தாங்கினர் என்பதை நாம் உணரலாம்.

மலைமகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்றொருத்தி

சலமுகத்தால் அவன் சடையில் பாயும் அது என்னேடி

சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம்

பில முகத்தே புகப் பாய்ந்து பெரும் கேடாம் சாழலோ

இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெருமானின் சடையில் இருக்கும் பாம்பு சந்திரனுக்கு ஊறு ஏதும் செய்யாமல் இருப்பதற்கு நகைச்சுவையாக ஒரு காரணத்தை கூறுகின்றார். பெருமான் தனது சடையில் சூட்டிக்கொண்டிருப்பது ஒற்றைப் பிறைச் சந்திரன் அல்லவா. அந்த பிறைச் சந்திரன் வளருவதற்காக பாம்பு காத்திருக்கின்றது என்று கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்களில் பாம்பினுக்கு சந்திரனுக்கு இடையே உள்ள பகையைத் தீர்த்து ஆண்டவன் பெருமான் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த குறிப்புகள், நமக்கு பெருமானின் சன்னதியில் பகைமை உணர்ச்சிக்கு இடமில்லை என்பதையே உணர்த்துகின்றன. எனினும் புலவர்களுக்கு உள்ள உரிமையை பயன்படுத்தி, ஒற்றைப் பிறைச்சந்திரன் வளர்வதற்காக பாம்பு காத்து நிற்கின்றது என்று நகைச்சுவையாக கூறுகின்றார். கார்க்கொள்=மழைக் காலத்தில் வளரும் முல்லைக் கொடிகள்; கருந்தேன்=கரிய வண்டு; பல விதமான வேடங்கள் பூண்டு பெருமான் நடனம் ஆடுவதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நடன சாத்திரத்தில் சொல்லப் படும் நூற்றெட்டு விதமான நடனங்களையும் பெருமான் ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன.

பெருமான் தனது சடையில் எற்றுக்கொண்டுள்ள ஒற்றைப் பிறைச் சந்திரன் தனது, தன்மையில் என்றும் மாறாமல் ஒற்றைப் பிறைச் சந்திரனாகவே இருப்பதால், பாம்பு அதனை உண்ணாமல் இருக்கின்றது என்று நகைச்சுவையாக திருஞானசம்பந்தர் கூறுவது, நமக்கு காரைக்கால் அம்மையாரின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது (அற்புதத் திருவந்தாதி 36) பெருமானது சடையில் உள்ள பாம்பின் பால் கொண்டுள்ள அச்சம் காரணமாக, சந்திரன் வளராமல் ஒற்றைப் பிறையுடன் இருப்பதாக, அம்மையாரின் தாயுள்ளம் கற்பனை செய்கின்றது.

மறுவுடைய கண்டத்தீர் வார்சடை மேல் நாகம்

தெறுமென்று தேய்ந்துழலும் ஆ ஆ – உறுவான்

தரை மீது ஓடு மேல் தான் அதனை அஞ்சி

வளருமோ பிள்ளை மதி

பொழிப்புரை:

தன்னில் அகப்பட்ட பொருட்கள் அனைத்தையும் அடித்துச் செல்லும் ஆற்றல் உடைய கங்கை நதியைத் தனது சடையில் தேக்கி வைத்துள்ள பெருமானின் சடையில் உலவும் பாம்பு, ஒற்றைப் பிறைச் சந்திரன் வளர்ந்த பின்னர் அதனை உண்ணலாம் என்ற எண்ணத்துடன் சந்திரனுக்கு கேடு ஏதும் செய்யாமல் இருக்கின்றது. இவ்வாறு கங்கை நதி, ஒற்றைப் பிறைச் சந்திரன் மற்றும் பாம்பு ஆகிய மூன்றையும் தனது சடையில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் பல வேடங்கள் பூண்டவராக தொடர்ந்து நடனம் ஆடுகின்றார். இத்தகைய சிறப்பினை உடைய பெருமான், கார்க் காலத்தில் மலரும் முல்லைக் கொடிகள் அருகிலிருக்கும் குருந்த மரத்தின் மீது படர, முல்லை மலர்களில் உள்ள தேனைப் பருகும் நோக்கத்துடன் வரும் கரிய வண்டுகள் ஆரவாரத்துடன் மொய்க்கும் காட்சி நிறைந்ததும் பழையனூரைச் சார்ந்ததும் ஆகிய திருவாலங்காடு தலமாகும்.

பாடல் 6:

பறையும் சிறுகுழலும் யாழும் பூதம் பயிற்றவே

மறையும் பல பாடி மயானத்து உறையும் மைந்தனார்

பிறையும் பெரும்புனல் சேர் சடையினாரும் பேடை வண்டு

அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

விளக்கம்:

பயிற்ற=பல முறையும் பாடிப்பாடி பழகிக் கொள்ள; மைந்தன்=வலிமை வாய்ந்தவர்: பேடை வண்டு=பெண் வண்டு; அறையும்=ஒலிக்கும்:

பொழிப்புரை:

பறை குழல் யாழ் முதலிய வாத்தியங்களை பல முறையும் இசைத்து பழகிக் கொள்ளும் பூத கணங்களின் நடுவே இருக்கும் பெருமான், நான்கு மறைகளையும் பாடியவராக, மயானத்தில் உறைபவர் சிவபெருமான். அவர் ஒற்றைப் பிறைச் சந்திரனையும் மிகுதியான வெள்ளப் பெருக்குடன் பெருகி வந்த கங்கை நதியினைத் தனது சடையில் தாங்கிய வல்லமை உடையவர் ஆவார். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பெருமான், பெண் வண்டுகளுடன் செர்ந்து ஆண் வண்டுகள் ஒலிக்கும் பழையனூரைச் சார்ந்த திருவாலங்காடு தலத்தினில் உறைகின்றார்.

பாடல் 7:

நுணங்கு மறை பாடி ஆடி வேடம் பயின்றாரும்

இணங்கும் மலைமகளோடு இருகூறு ஒன்றா இசைந்தாரும்

வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு

அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

விளக்கம்:

நுணங்கு=நுண்ணிய; நுண்ணிய ஓசைகளையும் ஒலை அலைகளையும், நுட்பமான கருத்தும் கொண்ட; வைகல்=நாள்தோறும்; அடிகள்=தலைவர்;இசைதல்=ஒப்புக்கொள்ளுதல்; பிராட்டி, பெருமானுடன் எப்போதும் தான் இணைந்திருக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்க, பெருமான் அதற்கு இசைந்தவராக பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டமை இசைந்தமை என்று குறிப்பிடபப்டுகின்றது. சிறுத்தொண்டர்=அடக்கம் உடைய தொண்டர்கள்; அணங்கும்=தெய்வத் தன்மை பொருந்திய; இணங்கு=தன்னுடன் இணைந்த; இருகூறாக=சிவம் ஒரு கூறாகவும் சக்தி ஒரு கூறாகவும் இருக்கும் ஈரெழிற் கோலம் இங்கே குறிப்பிடப்படுகின்றது. இத்னை தொன்மைக் கோலம் என்று திருவாசகத்தில் (கோத்தும்பீ 18)மணிவாசக அடிகளார் உணர்த்துவது நமது நினைவுக்கு வருகின்றது. மிகவும் தொன்மையான கோலம் என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல், குழை, பால்வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும் சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின்தோற்றமும் இணைத்து குறிப்பிடப்படும் இனிமையான பாடல்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்

பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்

சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை

கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

இந்த கோலத்தைக் கண்டு மணிவாசகர் மனம் குளிர்ந்தது போன்று, நம்பியாண்டார் நம்பி மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் இந்தபழமையான கோலத்தை எவ்வாறு தாங்கள் கண்டனர் என்பதை கீழ்க்கண்ட பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த பாடல்கள் பதினோராம்திருமுறையில் உள்ளன. கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்ற பதிகத்தின் இருபத்தோராவது பாடலில் நம்பியாண்டார் நம்பி, இறைவனை, வலதுகாதில் குழையும் இடது காதில் தோடும் அணிந்தவனாக காண்கின்றார். கோஷன் என்ற சொல்லின் திரிபு கோடன்: விசயனுடன் போர் செய்வதற்காகஆரவாரத்துடன் வந்த சிவபெருமான் கோஷன் என்று அழைக்கப் படுகின்றார். சிவபிரான் பேரில் காதல் கொண்டு, அதன் காரணமாக உடல் மெலிந்து தனதுகை வளையல்களை இழந்த தலைவியின் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தோடு அணிந்த காது, இடது காது என்று குறிப்பிட்டு அம்மைக்கு உரியபகுதியில் தோடு அணிந்து இருப்பதை இங்கே சுட்டிக் காட்டுகின்றார்.

வேடன் என்றாள் வில் விசயற்கு வெங்கணை அன்று அளித்த

கோடன் என்றாள் குழைக் காதன் என்றாள் இடக் காதில் இட்ட

தோடன் என்றாள் தொகு சீர் தில்லையம்பலத்து ஆடுகின்ற

சேடன் என்றாள் மங்கை அங்கை சரி வளை சிந்தினவே

மேற்கண்ட பாடலில் தோடும் குழையும் அணிந்தவனாக குறிப்பிட்டு, மாதொரு பாகனின் நிலையை உணர்த்தியதுடன் நம்பியார் திருப்தி அடையவில்லைபோலும். இதே பதிகத்தின் ஐம்பதாவது பாடலில் மிகவும் விவரமாக, இறைவனின் வலது பாகத்தில் உள்ள பொருட்களையும் இடது பாகத்தில் உள்ளபொருட்களையும் பட்டியல் இடுகின்றார். இடம் என்ற சொல், இடது பாகம் மற்றும் இருக்கும் இடம் என்ற இரண்டு பொருட்களில் இந்த பாடலில் கையாளப்பட்டுள்ளது. வீ=பூச்செண்டு: பாந்தள்=பாம்பு; சங்கம்=வெண் சங்கால் அமைந்த வளையல்: அக்கு= எலும்பு மாலை: அங்கம்சரி=அங்கு+அம்+சரி: அங்கு,பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்: அம் சரி=அழகாக சரிந்த இடுப்பு. கங்கை, குண்டலம், மழு ஆயுதம், பாம்பு, தோலாடை, அக்கு மாலை, ஆகியவைஅம்பலவனை உணர்த்தும் பொருட்களாகவும் தோடு, பூச்செண்டு, சங்கு வளையல், சேலை ஆடை, அழகாக சரிந்த இடுப்பு ஆகியவை அணங்கினைஉணர்த்தும் பொருட்களாகவும் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன.

கங்கை இடம் வலம் பூ வலம் குண்டலம் தோடு இடப்பால்

தங்கும் கரம் வலம் வெம்மழு வீயிடம் பாந்தள் வலம்

சங்கம் இடம் வலம் தோல் இடம் வலம் அக்கு இடம்

அங்கம் சரி அம்பலவன் வலம் காண் இடம் அணங்கே

சேரமான் பெருமாள் நாயனாரும் தான் அருளிய பொன் வண்ணத் திருவந்தாதி என்ற பதிகத்தின் அறுபத்து ஐந்தாவது பாடலில் மாதொரு பாகனின்கோலத்தை விவரிக்கின்றார். வீரக்கழல், பாம்பு, திருநீறு, எரி, எலும்பு மாலை, மூவிலை வேல் நீரினைத் தாங்கிய சடை முதலியன பெருமானது வலதுபக்கத்திலும், இடது பகுதியில் பாடகம். மேகலை, சாந்து, பந்து, மலர் மாலை, மோதிரம், முதலியன பெருமானது இடது பக்கத்திலும் இருப்பதாக இங்கேகூறப்படுகின்றது.

வலம் தான் கழல் இடம் பாடகம் பாம்பு வலம் இடம்

மேகலம் தான் வலம் நீறு இடம் சாந்து எரி வலம் பந்து இடம் என்பு

அலர்ந்தார் வலம் இடம் ஆடகம் வேல் வலம் ஆழி இடம்

சலம் தாழ் சடை வலம் தண் அம் குழல் இடம் சங்கரற்கே

வெந்த வெண்ணீறு அணிந்து என்று தொடங்கும் (1.107) திருப்பதிகம் கொடிமாடச் செங்குன்றூர் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளியது. இந்த தலத்தினில் மூலவராக எழுந்தருளி இருப்பவரே மாதொருபாகன் தான். இந்த நிலைக்கு பொருத்தமாக, திருஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் முதல் ஐந்து பாடல்களில் பிராட்டி பெருமானுடன் இணைந்திருக்கும் கோலத்தினை குறிப்பிடுகின்றார். திரு மார்பின் நல்ல பந்தணவு விரலாள் ஒரு பாகம் அமர்ந்து என்றும், ஆகம் மலைமகள் கூறுடையான் என்றும், திருமார்பில் பல்வளைக்கை நல்ல ஏலமலர்க் குழலாள் ஒரு பாகம் அமர்ந்து என்றும், வாருறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பு என்றும் மார்பில் பணைத்தோளியோர் பாகமாக என்றும் மாதொரு பாகனாக பெருமான் திகழும் நிலை குறிப்பிடப் படுகின்றது.பூந்தராய் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.13) பாடல்களில் அன்னமன்ன நடை அரிவை பங்கர், பாகமார் மொழியுமை பங்கர், அங்கயல் அன கணி அரிவை பங்கர், எழில் பெரும் அரிவை கூறர், கொத்தணி குழலுமை கூறர், குழலுமை நங்கை பங்கர் என்று மாதொருபாகனாக உள்ள நிலை ஆறு பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. எஞ்சிய ஐந்து பாடல்களில் குழலுமை கணவர், குழலுமை தலைவர், குழலி தன் மணாளர், என்று பிராட்டி பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.

சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (3.58) இருமலர்க் கண்ணி தன்னோடும் உடனாவது என்றும், கொடியன சாயலாளோடு கூடுவது என்றும்,மானன நோக்கி தன்னோடு உடனாவது என்றும் புற்றரவு அல்குலாளோடு உடனாவது என்றும் பந்தணவு விரலாளோடு உடனாவதும் என்றும் மங்கை பாகம் நிலை என்றும் உமையையொர் பாகம் வைத்த நிலை என்றும் விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும் வேண்டினை என்றும், பெண்ணொர் பாகம் ஈரெழில் கோலமாகி உடனாவது என்றும் மங்கையோடு ஒன்றி நின்று என்றும் மாதொரு பாகனாக பெருமான் உள்ள நிலை குறிப்பிடப் படுகின்றது. பெருமானின் திருவுருவமும் பிராட்டியின் திருவுருவமும் எழில் வாய்ந்தவை. எனவே இருவரும் இணைந்த திருக்கோலம் வேறுவேறு தன்மையில் உள்ள எழில்கள் இணைந்த கோலம் என்பதை புலப்படுத்தும் வண்ணம் ஈரெழிற்கோலம் என்று இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் குறிப்பிடுகின்றார். மிகவும் அருமையான சொல்லாட்சி.

பேரெழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண்ணோர் பாகம்

ஈரெழெற் கோலமாகி உடனாவதும் ஏற்பதொன்றே

காரெழில் வண்ணனோடு கனகம் அனையானும் காணா

ஆரழல் வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே

அவளிவணல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.82.3) திருஞானசம்பந்தர், கூறுடைய வேடமொடு கூடி அழகாயதொரு கோலம் என்று மாதொரு பாகனின் திருக்கோலத்தை குறிப்பிடுகின்றார், நிலை செய்து=பிரியாமல் என்றும் நிலையாக வைத்துக் கொண்டு; ஏறுடையர்= ஏற்றம் மிகவும் உடையவர், சிறப்புகள் பல உடையவர்; ஏனும் என்ற சொல் ஏறுடையர் என்ற சொல்லினைத் தொடர்ந்து வருவதால் எருதினை வாகனமாக உடையவர் என்ற பொருள் இங்கே பொருத்தமாக காணப்படவில்லை; சிறப்பு வாய்ந்த அழகிய மாதொருபாகன் கோலத்தினை உடையவராக இருந்தாலும், சுடுகாட்டின் சூழ்நிலையை பொருட்படுத்தாமல் நடனம் ஆடுபவர் என்று பொருள் கொள்ளவேண்டும். வார்=நீண்ட; ஆறு=கங்கை நதி; சுடுகாட்டின் சூழ்நிலையை இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் உணர்த்திய ஞானசம்பந்தருக்கு அத்தகைய சூழலில் பெருமான் நடனமாடுவது பொருத்தமான செயலா என்ற ஐயத்தினை தீர்க்கும் வண்ணம், மீண்டும் இந்த பாடலில் வலியுறுத்துகின்றார் போலும். செல்வ வளம் கொழிக்கும் கோலக்கா தலத்திலும் எளிமையான தோற்றத்தில் காணப்படும் பெருமான் என்று பாடியவர் அல்லவா.

நீறுடைய மார்பில் இமவான் மகளொர் பாகநிலை செய்து

கூறுடைய வேடமொடு கூடி அழகாயதொரு கோலம்

ஏறுடையர் ஏனும் இடுகாடு இரவில் நின்று நடமாடும்

ஆறுடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே

வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.103.1) அடியார் இசைந்து ஏத்தும் வண்ணம், பெருமான் துடியிடியாளை ஓர் பாகமாக துதைந்தார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இசைந்து=மனமொன்றி, கூடி; துதைந்து=பிரியாமல் எப்போதும் கூடியே இருத்தல்; வடிவு=அழகு;இடிபட=பேரொலி எழும் வண்ணம்; ஊடுருவ=கோட்டைகளை துளைத்துக் கொண்டு; ஊடுருவிச் சென்ற; ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளையும் துளைத்து எரித்தால் தான் அந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்பது திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வரம்; முதலில் தென்படும் கோட்டையை எரித்த அம்பு அங்கேயே தங்கி விட்டால், அடுத்த கோட்டையை அழிக்க முடியாது அல்லவா. எனவே தான் முதல் கோட்டையைத் துளைத்துச் சென்று இரண்டாவது கோட்டையை அடைந்து அந்த கோட்டையையும் துளைத்து எரித்து மூன்றாவது கோட்டையை அம்பு சென்று அடையும் வண்ணம் வல்லமை படைத்த அம்பினை எய்து மூன்று கோட்டைகளையும் எரிக்க வேண்டிய நிலை பெருமானுக்கு ஏற்பட்டது. எனவே தான் மூன்று கோட்டைகளையும் ஊடுருவிச் சென்று அழிக்கும் வல்லமை படைத்த அம்பினை தேர்ந்தெடுத்து பெருமான் அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார் என்பதை இந்த பாடல் உணர்த்துகின்றது. சிலை=வில்; குனி=வளைத்த, மேருமலை வில்லாக வளைக்கப்பட்ட நிலையினை இந்த பாடல் குறிப்பிடுகின்றது.வெஞ்சிலை=கொடியவில்; துடி=உடுக்கை; மேதி=எருமைகள்; நீர்வளம் மிகுந்ததால் செழிப்பாக வளர்ந்து எருமைகளும் அழகாக காணப்பட்டன என்று கூறுகின்றார். மதில் என்றால் நகரத்திற்கு அரணாக விளங்கும் மதிற்சுவர் என்று பொருள். ஆனால் மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கோட்டினில் வரும் தருணத்தில் தான் இந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்பதால், ஒவ்வொரு கோட்டையும் மற்ற இரண்டு கோட்டைகளுக்கு வலிமை வாய்ந்த அரணாக திகழ்ந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

கொடியுடை மும்மதில் ஊடுருவக் குனி வெஞ்சிலை தாங்கி

இடி பட எய்த அமரர் பிரான் அடியார் இசைந்து ஏத்தத்

துடி இடையாளை ஒர் பாகமாகத் துதைந்தார் இடம் போலும்

வடிவுடை மேதி வயல் படியும் வலம்புர நன்னகரே

சுமார் ஆயிரம் தேவாரப் பாடல்களில் சிறப்பித்து சொல்லப்படும் மாதொரு பாகனின் திருக்கோலத்தை, ஈரெழிற் கோலத்தை தியானம் செய்யும் அடியார்கள் தங்களது வினைகள் முற்றிலும் நீங்கப் பெறுவார்கள் என்று சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.49.3) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வினை நீங்கலுற்றார் என்று இறந்த காலத்தில் சொல்லி, இத்தகைய அழகிய திருக்கோலத்தை தியானிக்கும் செயலைத் தொடங்கும் போதே, அவ்வாறு சொல்லத் தொடங்கும் அடியார்களின் வினைகள் நீங்கிவிடும் என்று உணர்த்தி, எவ்வளவு விரைவாக பெருமான் செயலாற்றுகின்றார் என்பதை விளக்குகின்றார். நாடு முழுவதும் ஒளிவீசி நலனுடன் புகழுடன் இருக்க வேண்டும் என்று பரந்த உள்ளத்துடன் இறைவனை வேண்டும் நல்லவர்கள் நிறைந்த தலம் சீர்காழி என்பதை கூறுகின்றார்.

நாடெலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார்பொழில்

காடெலாம் மலர் தேன் துளிக்கும் கடற்காழித்

தோடுலாவிய காது உளாய் சுரிசங்க வெண் குழையான் என்றென்று உன்னும்

வேடம் கொண்டவர்கள் வினை நீங்கல் உற்றாரே

குடமூக்கு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.59.7) பெருமான் கொண்டுள்ள மாதொருபாகனின் திருக்கோலம், உலகம் உய்வதற்காக பூண்ட திருக்கோலம் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பலாக்கனிகள் தாமாகவே மரங்களிலிருந்து விழுகின்ற நிலையினை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பறிப்பவர் எவரும் இல்லாத நிலையில் தானே, மரங்களிலிருந்து கனிகள் தாமே கீழும் விழுகின்ற நிலை ஏற்படும்.இந்த நிலை மிகவும் அதிகமான பலா மரங்கள் இந்த தலத்தினில் செழித்து வளர்வதால், இனிய பலாக் கனிகளை பறிப்பதும் அலுப்பு தரும் செயலாக தலத்து மக்களுக்கு மாறிவிட்டது போலும். இந்த தன்மை தலத்தின் செழிப்பினை உணர்த்துகின்றது. மலைமலி மங்கை=மலைச் சாரலில் வளர்ந்த பார்வதி தேவி; உலகம் உய்ய=உலகத்தவர்கள் மகிழ்ந்து வாழ என்றும் உலகத்து உயிர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று முக்திநிலை அடைய என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தகுந்த உடல்களுடன் உயிர்கள் உலகம் உய்ய என்ற தொடரினை, திரிபுரங்களை எரித்த செயலுடன் இணைத்துக் கொண்டு, திரிபுரங்களை எரித்து உலகத்தவரை வாழ வைத்தார் என்றும் பொருள் கொள்ளலாம், முந்திய இரண்டு விளக்கங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளன. தகுந்த மனித உடலுடன் சேர்ந்தால் தான், உயிரும் தனது வினைகளைக் கழித்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை பெற்று முக்தி நிலை பெரும் முயற்சியில் முன்னேறலாம்.

மலைமலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய

சிலை மலி வெங்கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும்

குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா

இலைமலி சூலம் ஏந்தி இருந்தான் அவன் எம் இறையே

பொழிப்புரை:

நுட்பமான ஒலி அதிர்வுகளை எழுப்பும் ஓசைகளும் நுண்ணிய கருத்துகள் கொண்டதும் ஆகிய வேத கீதங்களை பாடுகின்ற இறைவன், தன்னோடு எப்போதும் இணைந்து இருக்க வேண்டும் என்று விரும்பிய மலைமகளைத் தனது உடலின் ஒரு கூறாக ஏற்றுக்கொள்ள இசைந்தவர் ஆவார். இவ்வாறு விருப்பமுடன் தந்து உடலின் இடது பாகத்தில் பிராட்டியை ஏற்றுக் கொண்டுள்ள இறைவனை, அடக்கம் உடைய தொண்டர்கள் நாளும் வணங்கி வாழுத்துகின்றனர். இத்தகைய வாழ்த்துகளை கேட்டு மகிழும் தலைவராகிய பெருமான் தெய்வத்தன்மை பொருந்தியவராக பழையனூரைச் சார்ந்த திருவாலங்காடு தலத்தினில் உறைகின்றார்.

பாடல் 8:

கணையும் வரிசிலையும் எரியும் கூடிக் கவர்ந்துண்ண

இணையில் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார்

பிணையும் சிறு மறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து

அணையும் பழையனூர் ஆலங்காட்டு அடிகளே

விளக்கம்:

கணை=அம்பு: சிலை=மலை, மேரு மலையாகிய வில், வரிசிலை=கட்டமைந்த வில்: எரி=நெருப்பு; இணையில்=ஒப்பற்ற, ஒரு கோட்டை மற்ற இரண்டு இரண்டு கோட்டைகளுக்கு அரணாக வலிமை சேர்ப்பதாக உள்ள தன்மை; மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் இருக்கும் சமயத்தில் மட்டுமே ஒரே அம்பினைக் கொண்டு அந்த மூன்று கோட்டைகளையும் துணைக்க முடியும் என்பதே திரிபுரத்து அரக்கர்கள் பெற்ற வரம். எனவே மற்ற இரண்டு கோட்டைகளுடன் இணையாமல் இருப்பதால் மூன்றாவது கோட்டை, அந்த இரண்டு கோட்டைகளுக்கும் வலிமை செர்க்கின்றது. இந்த ஒப்பற்ற ஆற்றலை,இணையிலி என்ற சொல் மூலம் குறிப்பிடுகின்றார். கலை=ஆண் மான்; பிணை=பெண் மான்: சிறு மறி=மான் கன்று; கங்குல்=இரவு;

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.11.6) திருஞானசம்பந்தர், அக்னி, வாயு, திருமால் ஆகிய் மூவரும் பங்கேற்ற அம்பினைக் கொண்டு பெருமான் திரிபுரத்து கோட்டைகளை எரித்தார் என்று கூறுகின்றார். கல்லால் மரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர் நால்வர்க்கும் அறம் உரைத்தவனே என்று பெருமானை அழைத்து எம்மை, திரிபுரத்து அரக்கர்களின் துன்பத்திலிருந்து காக்க வேண்டும் வானோர்கள் வேண்டியதற்கு இணங்கி,பெருமான் திரிபுரத்தவர்களுடன் போருக்கு சென்றார் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், போருக்கு பெருமான் சென்ற திருக்கோலத்தை இந்த பாடலில் உணர்த்துகின்றார். வானோர் எல்லாம் ஒரு தேராய் என்று, சூரிய சந்திரர்கள் சக்கரமாகவும், பூமி தேரின் தட்டாகவும், ஆகாயம் கூரையாகவும், எட்டு திசைகள் தூண்களாகவும் நான்கு வேதங்கள் குதிரையாகவும், பிரமன் சாரதியாகவும், பிரணவ மந்திரம் தேர்த் தட்டாகவும். பங்கேற்ற செய்தி எல்லாம் ஒரு தேராய் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. நெருப்பு அம்பின் முனையாகவும் காற்று அம்பின் சிறகுகளாகவும் திருமால் அம்பின் தண்டாகவும் இருந்த தன்மை,வாசுகி பாம்பு வில்லின் நாணாகவும், மேரு மலை வில்லாகவும் நின்ற தன்மை, பாடலின் கடை இரண்டு அடிகளில் குறிப்பிடப் படுகின்றது.

கல்லால் நிழற் கீழாய் இடர் காவாயென வானோர்

எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப

வல்வாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல்

வில்லால் எயில் எய்தான் இடம் வீழிம்மிழலையே

திரிபுரத்தை எரிக்க பயன்படுத்தப்பட்ட அம்பின் நுனியாக அக்னியும் சிறகுகளாக காற்றும், தண்டாக திருமாலும் அமர்ந்து, அந்த அம்பினுக்கு ஒப்பற்ற வலிமை சேர்த்தனர் என்பது புராணம் கூறும் தகவல். இந்த தகவல் பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.33.1) நெருப்பு காற்று மற்றும் திருமால் ஆகிய மூவரையும் ஒன்று சேர்த்து கூட்டின அம்பு கொண்டு திரிபுரத்து கோட்டைகளை பெருமான் எரித்தார் என்று சொல்லப்படுகின்றது. பிணை=தங்களது துணையோடு சேர்ந்து இருக்கும்; மட=இளமை வாய்ந்த: கணை=அம்பு; நீடு எரி=நீண்டு எரியும்; மால்=திருமால்; வரை=மலை; இணையா=வேறு வேறு திசைகளில் எப்போதும் கொண்டிருப்பதால், எப்போதும் சேராமல் இருக்கும் நிலை.

கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா

இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்

பிணை மாமயிலும் குயில் சேர் மட அன்னம்

அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே

நெடுங்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.52.07) திருஞானசம்பந்தர் மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய இறைவன் என்று குறிப்பிடுகின்றார்.மூன்றையும் என்ற சொல், திருமால் அக்னி வாயு ஆகியவற்றை குறிப்பிடுகின்றது என்று பலரும் பொருள் கொண்டாலும், மூன்று என்ற சொல் திரிபுரத்து கோட்டைகள் என்று சொல்வதும் பொருத்தமாக உள்ளது. மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் தருணத்தில் தாங்கள் அழியும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்த அரக்கர்கள், அவ்வாறு ஒன்று சேர்வதை தவிர்ப்பார்கள் அல்லவா. அதனால் தான் பெருமான் அந்த மூன்று கோட்டைகளையும் ஒரு நேர்க்கோத்தில் வரும் வண்ணம் கூட்டி அதன் பின்னர் எரித்து அழித்தார் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது, அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டதை கூறு கொண்டாய் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அனைவரும் சைவநெறியினை பின்பற்றிய தருணத்தில், மாறுபட்டு விளங்கிய திரிபுரத்து அரக்கர்களை மாறுகொண்டார் என்று உணர்த்துகின்றார். பெருமானுக்கு அபிடேகம் செய்த திருநீற்றினை அடியார்கள் மிகுந்த விருப்பத்துடன் அணிந்து கொள்வதும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது.

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெங்கணையால்

மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்

ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த

நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.131.4) திருஞானசம்பந்தர், திருமாலும், அக்னியும், வாய்வும், அம்பின் மூன்று பாகங்களாக பங்கேற்றதை, அரி எரி கால் வாளியாக என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். மாசுணம்=பாம்பு; வாணர் என்ற சொல் வாழுநர் என்ற சொல்லின் திரிபு.புரவாணர்=திரிபுரத்தில் வாழ்ந்து வந்த அரக்கர்கள்; விறல்= வலிமை; மைமருவு=மேகங்கள் தவழும் உயர்ந்த மலை; எரி=நெருப்பு; கால்=காற்று; அரி=திருமால்; வாளி=அம்பு;

வெம்மை மிகு புர வாணர் மிகை செய்ய விறல் அழிந்து விண்ணுளோர்கள்

செம்மலரோன் இந்திரன் மால் சென்று இரப்பத் தேவர்களே தேரதாக

மைம்மருவு மேரு விலும் மாசுணம் நாண் அரி எரி கால் வாளியாக

மும்மதிலும் நொடி அளவில் பொடி செய்த முதல்வன் இடம் முதுகுன்றே

ஆமாத்தூர் பதிகத்தின் பாடலில் (2.50.1) திருஞானசம்பந்தர், திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்ற பெருமான், பயன்படுத்திய அம்பின் தன்மையை கூறுகின்றார். குன்றம்=மேரு மலை’; வார்=நீண்ட; சிலை=வில்; அரா=பாம்பு, வாசுகி பாம்பு; அரி=திருமால்; வாளி=அம்பு; கூர்=முனை; எரி=அக்னி; திருமால் அம்பாகவும், தீக்கடவுள் அம்பின் நுனியாகவும், காற்று அம்பின் சிறகாகவும் இருந்த நிலை உணர்த்தப்படுகின்றது. சூளிகை=வீட்டின் உச்சி;பெண்ணை=பனை;

குன்றவார் சிலை நாண் அரா வரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில்

வென்றவாறு எங்ஙனே விடையேறும் வேதியனே

தென்றலார் மணி மாட மாளிகை சூளிக்கைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல்

அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே

திருச்சேறை தலத்தின் மீது அருளீய பதிகத்தின் பாடலில் (3.86.5) திருஞானசம்பந்த்ர், திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் செய்த போரினில். திருமால் பெருமான் ஏந்திய வில்லின் அம்பாக இருந்த தன்மையை, குறிப்பிடுகின்றார். திருமாலை குறிப்பிட்டமையால், அக்னி மற்றும் வாயு ஆகியோர் பங்கேற்றதையும் உணர்த்துவதாக பொருள் கொள்ளவேண்டும்.

அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடியளவினில்

மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால்

வெந்தழி தர எய்த விடலையர் விடமணி மிடறினர்

செந்தழல் நிறம் உடைய அடிகள் தம் வளநகர் சேறையே

தசபுராணத் திருப்பதிகதின் பாடலில் (4.14.5) அப்பர் பிரான் திரிபுரத்து கோட்டைகளை பெருமான் எரித்ததை மிகவும் விவரமாக கூறுகின்றார்.நிதனம்=அழிவு: நிலை வலி=எதிர்த்து நிலைத்து நிற்கும் வலிமை: மண்ணுலகையும் விண்ணுலகையும் அழித்துக் கொண்டு பறக்கும் கோட்டைகளில் உலவிக் கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் வல்லமையைக் கண்டு அவர்களுக்கு எதிரே நிலைத்து நின்று சண்டையிடும் ஆற்றல் இல்லாததால்,அவர்கள் இழைத்த துன்பங்களுக்கு அஞ்சி, திருமால் முதலான தேவர்கள் சிவபிரானிடத்தில் தஞ்சம் புகுந்தனர்: அவர்கள் மீது கருணை கொண்ட சிவபிரான், கொலைத் தொழிலில் வல்லவராகிய திருமால் கூர்மை மிகுந்த அம்பாகவும், வாசுகி பாம்பு நாணாகவும், அம்பினில் தீக்கடவுள் இணையவும்,மேருமலையை வில்லாக வளைவித்து, மூன்று புரங்களையும் சாம்பலாகச் எரித்தார். இத்தகைய வல்லமை பெற்ற சிவபிரான் தான் நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவர் ஆவார்.

நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம் செய்து ஓடு புரமூன்று

அலை நலி அஞ்சியோடி அரியோடு தேவர் அரணம் புகத் தன் அருளால்

கொலை நலி வாளி மூள அரவம் கை நாணும் அனல் பாய நீறு புரமா

மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவனா நமக்கொர் சரணே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.64.4) அப்பர் பிரான், திரிபுரத்து அரக்கர்களின் மீது போருக்கு சென்ற போது பெருமான்,பயன்படுத்திய அம்பின் தன்மையை குறிப்பிடுகின்றார். புராணங்களில் நாம் பல அரக்கர்கள், வரம் பெறுவதற்காக கடுமையான தவம் புரிவதை படிக்கின்றோம். தவத்தின் முடிவில் இறவாமை என்கிற வரத்தைத் தான் முதலில் அவர்கள் வேண்டுகின்றார்கள். அத்தகைய வரம் இயலாது என்று உணர்த்தப்பட்ட பின்னர் மிகவும் அரிதான சூழ்நிலையில் மரணம் ஏற்படவேண்டும் என்ற வரத்தினைப் பெறுகின்றார்கள். திரிபுரத்து அரக்கர்களும்,எப்போதும் பறந்து கொண்டிருக்கும் தங்களது கோட்டைகள் ஒரே நேர்க்கோட்டில் வரும் சமயத்தில், ஒரே அம்பினால் மட்டுமே தங்களை அழிக்க முடியும் என்ற வரத்தினைப் பெறுகின்றார்கள். வானில் பறந்து கொண்டிருக்கும் மூன்று பொருட்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது என்பது மிகவும் அரிதான செயல் என்பதால், நிலையான வாழ்க்கையை தாங்கள் பெற்று விட்டதாக நினைத்து அவர்கள், தங்களது விருப்பம் போல் மற்றவரை துன்புறுத்தத் தொடங்கினார்கள். இறுதியில் அவர்களது கோட்டைகளும் அழிந்தன. இதனை உணர்த்தும் பொருட்டு, அப்பர் பிரான், நிலையிலா ஊர் மூன்று என்று இங்கே குறிப்பிடுகின்றார். எவராலும் வெல்லமுடியாது, எங்கும் திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும், அக்னி, திருமால், வாயு ஆகியோரை உறுப்புகளாகக் கொண்ட அம்பினை, மேரு மலையை வில்லாக வளைத்து வாசுகி பாம்பினை நாணாக பூட்டி, அந்த மூன்று கோட்டைகளும் ஒன்று சேர்ந்த சமயத்தில் விடுத்து, எரித்த இறைவன், என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

நிலையிலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பாகச்

சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர் தங்கள்

தலையினால் தரித்த என்பும் தலைமயிர் வடமும் பூண்ட

விலையிலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.9) அப்பர் பிரான், கோளரியைக் கூரம்பா வரை மேல் கோத்தவன் என்று திரிபுர தகனத்தின் போது நடந்ததை குறிப்பிடுகின்றார். கோளரி=வெற்றி கொண்ட சிங்கம், நரசிங்கமாக திருமால் தோன்றியதை குறிப்பிடுகின்றார். நரசிம்மராக வந்த திருமால் என்று குறிப்பிட்டு அம்பின் வலிமையை அப்பர் பிரான் நயமாக உணர்த்துகின்றார். கலை=மான்; கொள்கையான்=செய்கையான், செயலைச் செய்தவன்;தத்துவம்= உண்மையான பொருள்; திரிபுரத்தின் மேல் படையெடுத்து சென்ற போது, திருமால் அம்பின் தண்டாக நின்ற தன்மையும் இந்தப் பாடலில்,கோளரியை கூர் அம்பா வரை மெல் கோத்த சிலையான் என்று கூறப் பட்டுள்ளது. திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று அரக்கர்களுக்கு (சுதன்மன், சுசீலன்,சுபுத்தி ஆகிய மூவர்) அருள் புரிந்த தன்மையும் இங்கே சொல்லப் பட்டுள்ளது.

கொலையானை உரிபோர்த்த கொள்கையானைக் கோளரியைக் கூரம்பா வரைமேல்கோத்த

சிலையானைச் செம்மைதரு பொருளான் தன்னைத் திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த

தலையானைத் தத்துவங்கள் ஆனான் தன்னைத் தையலோர் பங்கினனை தன் கை ஏந்து

கலையானைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

பொழிப்புரை:

தீ ஒரு பாகமாக அமைந்த அம்பினை, மேரு மலையை வளைத்து செய்யப்பட்ட வில்லுடன் பூட்டி, ஒப்பற்ற வலிமையுடன் திகழ்ந்த திரிபுரத்து மூன்று பறக்கும் கோட்டைகளையும், கவர்ந்து உண்ணும் வண்ணம் எரித்து அழித்தவர் எமது இறைவனாகிய சிவபெருமான். ஆண் மான், தனது துணையாகிய பெண் மான் மற்றும் மான் கன்றுகளுடன் இரவினில் வந்து அணைகின்ற பழையனூரைச் சார்ந்த திருவாலங்காடு தலமே எமது தலைவனாகிய பெருமான் உறைகின்ற இடமாகும்.

பாடல் 9:

கவிழ மலை தரளக் கடக்கையால் எடுத்தான் தோள்

பவழ நுனை விரலால் பைய ஊன்றிப் பரிந்தாரும்

தவழும் கொடி முல்லை புறவம் சேர் நறவம் பூத்து

அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே

விளக்கம்

கவிழ=நிலை குலைய; தரளம்=முத்து; நுனை விரலால் பெருமான் கயிலாய மலையை ஊன்றினார் என்று குறிப்பிட்டு, பெருமான் அழுத்தம் ஏதும் தரவில்லை என்பதை இந்த பாடலில் உணர்த்துகின்றார். பொதுவாக காலால் அழுத்துவதை விடவும் விரலால் அழுத்துவது சற்று அழுத்தம் குறைவாக இருக்கும்; முழு விரலால் அழுத்துவதை விடவும் விரல் நுனியால் அழுத்துவது மேலும் குறைவான அழுத்தத்தையே கொடுக்கும். இந்த அழுத்தத்தையே தாங்க முடியாமல் அரக்கன் அலறினான் என்றால், பெருமான் சற்று அதிகமாக அழுத்தம் கொடுத்திருந்தால், அரக்கன் என்ன கதிக்கு ஆளாகியிருப்பான் என்பதை நம்மால் ஊகிக்க முடியும். இந்த காட்சியை தனது மனக்கண்ணால் கற்பனை செய்த அப்பர் பிரான், பெருமான் சற்று அழுத்தமாக தனது கால் பெருவிரலை ஊன்றியிருந்தால், எவரும் அரக்கனை உயிருடன் பார்த்திருக்கவே முடியாது என்று கயிலாய மலையின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை (4.47.1) நாம் இங்கே சிந்திப்போம். உனகன்=இழிந்தவன், அகந்தை உடையவன்; தனது வலிமை மீது அளவற்ற அகம்பாவம் கொண்டு திரிந்ததால் தானே, கயிலாய மலயின் புனித்தன்மை, இறைவனின் ஆற்றல் இவை எவற்றையும் கருத்தினில் கொள்ளாமல்,இராவணன் அந்த மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்தான். அனகன்= இயல்பாகவே பாவங்களிலிருந்து நீங்கி தூய்மையுடன் விளங்குபவன்;மனகனாய்=நிலை பெற்ற உள்ளத்துடன் முனைந்து ஊன்றுதல்; மறித்து=மீண்டும்;

கனக மாவயிரம் உந்து மாமணிக் கயிலை கண்டும்

உனகனாய் அரக்கனோடி எடுத்தலும் உமையாள் அஞ்ச

அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான்

மனகனாய் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே

திருப்புகலி மற்றும் திருவீழிமிழலை தலங்களை இணைத்துப் பாடிய பதிகத்தின் பாடலில் (1.004.08) பெருமான் தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஒற்றியதால் ஏற்பட்ட அழுத்தத்தை தாங்க முடியாமல் அரக்கன் இராவணன் அலறி வீழ்ந்தான் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.இற்று=ஒடிந்து; ஒற்றி=ஒற்றுவது போன்று அதிகமான அழுத்தம் ஏதும் தாராமல் தொடுதல்; கட்டவர்=கட்டியது போன்று புலன்களை செயலறச் செய்தல்;அந்தண்=அழகும் குளிர்ச்சியும் உடைய; இலங்கு=விளங்கும்; எல்லி=இரவு, பிரளய காலம் என்று பொருள் கொள்ளவேண்டும். சூரியன், சந்திரன்,தாரகைகள் உட்பட வெளிச்சம் தருகின்ற அனைத்துப் பொருட்களும் அழிந்த நிலை; விலங்கல்=மலை; ஒண்=ஒளி பொருந்திய; தனது புலன்களை அடக்கும் வழியை அறியாமல் காமவேட்கையுடன் திரிந்த அரக்கன் இராவணனை முதல் அடியில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், புலன்களை அடக்கும் ஆற்றல் வாய்ந்த முனிவர்களை அடுத்த அடியில் குறிப்பிடுகின்றார்.

இலங்கையர் வேந்து எழில் வாய்ந்த திண்டோள் இற்று அலரவ் விரல் ஒற்றி ஐந்துபுலங்களைக் கட்டவ்வர் போற்ற அந்தண் புகலி நிலாவிய புண்ணியனே

இலங்கெரி ஏந்தி நின்று எல்லியாடு எம்மிறையே இதுவென்கொல் சொல்லாய்

விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.8) திருஞானசம்பந்தர், பெருமான் தனது விரல் நுனியை கயிலாய மலையின் மீது ஊன்ற அரக்கன் இராவணன், மலையின் கீழே அமுக்குண்டு வருந்தினான் என்று கூறுகின்றார். விரை=நறுமணம்; விரை= சொற்கள், இங்கே புகழ்ச் சொற்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். உரையார் கீதம்=பலராலும் புகழப்படும் சாம வேத கீதங்கள்; மதம்=கர்வம்; வரை=மலை; பொதுவாக மலர்ப்பாதம் என்றே பல திருமுறைப் பாடல்களில் பெருமானின் திருப்பாதங்கள் குறிப்பிடப் படுகின்றன. தன்னை வணங்கும் அடியார்களுக்கு மலர்ப் பாதத்தை காட்டி அருள் புரியும் பெருமான், தீயவர்களுக்கு மிகுந்த அழுத்தம் தரும் பாதங்களாக விளங்கும் தன்மையை நாம் உணரவேண்டும். அப்பர் பிரான்,சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் இறைவனால், தங்களின் தலை மீது, இறைவனின் திருப்பாதங்கள் பதிக்கப் பெற்றவர்கள். அவர்கள் அனைவரும் மலர் அனைய பாதம் என்றே பெருமானின் திருவடிகளை குறிப்பிடுவதை நாம் அறிவோம்.

வரையார் திரள் தோள் மதவாளரக்கன் எடுப்ப மலை சேரும்

விரையார் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும்

உரையார் கீதம் பாடக் கேட்டங்கு ஒளிவாள் கொடுத்தாரும்

கரையார் பொன்னி சூழ் தண் குடந்தைக் காரோணத்தாரே

அதிகமான அழுத்தம் தாராமல், சிறிதே அழுத்தம் கொடுத்து தனது கால் பெருவிரலை கயிலை மலை மீது பெருமான் ஊன்றினார் என்ற செய்தி, நமக்கு சீர்காழி தலத்தின் மீது திருஞான சம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடலை (1.74.8) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இந்த பாடலில் அரக்கனின் உடலும் முடியும் நெரிய பெருமான் சிறிதே ஊன்றினார் என்று கூறுகின்றார்.

விண் தான் அதிர வியனார் கயிலை வேரோடு எடுத்தான் தன்

திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய

புண் தான் ஒழிய அருள் செய்தான் புறவம் பதியாக

எண் தோளுடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, பெருமான் தனது கால் பெருவிரலை சிறிதே ஊன்றினார் என்று கூறுகின்றார். விலங்கல்=மலை, இங்கே கயிலாய மலை; கயிலாய மலையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் வெற்றி காண்போம் என்ற நம்பிக்கையில் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபட்ட அரக்கன் இராவணன், ஊக்கம் அழிந்தவனாக மலையில் கீழே அமுக்குண்டு வருந்திய தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது

வீக்கம் எழும் இலங்கைக்கு இறை விலங்கல்லிடை

ஊக்கம் ஒழிந்து அலறவ் விரலால் இறை ஊன்றினான்

பூக்கமழும் புனல் பாதிரிப்புலியூர் தனை

நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.19.11) அரக்கனது உடல் முழுவதும் குருதி பெருகியோடி வருந்தும் வண்ணம் பெருமான் கயிலாய மலையின் மீது தனது கால் பெருவிரலை ஊன்றினார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். செஞ்சாந்து அணிவித்து=தோள்களை நெரித்து உடலை வருத்தி உடல் முழுவதும் குருதி பெருகி ஓடுமாறு இருந்த நிலையினை அரக்கனுக்கு இறைவன் செஞ்சாந்து அணிவித்தான் என்று நயமாக கூறுகின்றார். அரக்கன் இராவணனின் தன்மை பெருமானின் தன்மையிலிருந்து வேறுபட்டது என்பதை உணர்த்தும் வண்ணம் செம்மை மற்றும் வெண்மை ஆகிய இரண்டு நிறங்களை உடையவர்களாக அரக்கன் இராவணனும் பெருமானும் முறையே விளங்கினார்கள் என்று நயமாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

மஞ்சாடு குன்று அடர ஊன்றி மணிவிரலால்

துஞ்சாப் போர் வாள் அரக்கன் தோள் நெரியக் கண் குருதிச்

செஞ்சாந்து அணிவித்துத் தன் மார்பில் வெண்ணீற்று

அம் சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.54.10) அப்பர் பிரான், பெருமான் திருவிரலை சிறிதே வைத்த போதிலும், அரக்கன் கண்வழி குருதி சோர வருந்தினான் என்று கூறுகின்றார். அருவரை தாங்கினான்=கோவர்த்தன மலையை, குடையாக உயர்த்திப் பிடித்து ஆயர்பாடி பசுக்களையும் மக்களையும் காத்த கண்ணனாகிய திருமால். கருவரை=பெரிய மலையாகிய கயிலை மலை: கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, கோகுலத்தில் இருந்த பசுக்களையும் மக்களையும் காப்பாற்றிய கண்ணனாகிய திருமாலும், அரிய வேதங்களை ஓதும் பிரமனும், அறிந்துகொள்ள முடியாதபடி அழலாய் ஓங்கி நிமிர்ந்தவன் சிவபெருமான். இலங்கை வேந்தனாகத் திகழ்ந்த அரக்கன் இராவணன், பெரிய மலையாகிய கயிலையை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, அவனது கண்களிலிருந்து இரத்தம் வழியுமாறு, தனது கால் விரலை சிறிதே ஊன்றி அவனை வருத்தியவர் சிவபெருமான். இவ்வாறு வல்லமை பெற்றவராகவும் அரியவராகும், விளங்கும் பெருமான், திருப்புகலூரில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அருவரை தாங்கினானும் அருமறை ஆதியானும்

இருவரும் அறிய மாட்டா ஈசனார் இலங்கை வேந்தன்

கருவரை எடுத்த ஞான்று கண்வழி குருதி சோரத்

திருவிரல் சிறிது வைத்தார் திருப்புகலூரனாரே

அவளிவணல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.59.8) பெருமான், தனது கால் விரல் நகத்தை ஊன்றி அரக்கன் இராவணனை, கயிலாய மலையின் கீழே நெருக்கி வருத்தினார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். உழிதருதல்=திரிதல்; உகிர்=நகம்; நடுவிலா அரக்கன்= நேர்மையான எண்ணங்கள் அற்றவன்; ஓடு மிக்கு=விரைவாக இந்த இடத்தை விட்டு ஓடு என்று; தான் செல்லும் வழியில் குறுக்கே கயிலாய மலை இருந்தது என்ற கருத்துடன், அந்த மலையினை பேர்த்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு, தனது பயணத்தைத் தொடரலாம் என்று கருதிய அரக்கனை, கயிலாய மலை இருந்த இடத்தை விட்டு நெடுந்தூரம் ஓடும் வண்ணம் பெருமான் செய்தார் என்று கூறுகின்றார்.

நாடு மிக்கு உழி தர்கின்ற நடுவிலா அரக்கர் கோனை

ஓடு மிக்கென்று சொல்லி ஊன்றினான் உகிரினாலே

பாடி மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி

ஆடு மிக்கு அரவம் பூண்டார் அவளிவணல்லூராரே

நாகைக் காரோணத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.71) கடைப் பாடலில், அப்பர் பிரான், எவ்வாறு அரக்கன் இராவணனை விட அடியார்கள் வலிமையில்உயர்ந்தவர்கள் என்று நகைச் சுவையாக கூறுகின்றார். கால் பெருவிரல் ஊன்றலின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் அரக்கன் இராவணன் அலறினான்.ஆனால், இரண்டு மங்கையரைத் (உமையம்மை மற்றும் கங்கை) தாங்கும் சிவபிரானின் திருவடிகளை தங்களது மனதினில் தரித்து நிற்கும் அடியார்கள்,உண்மையில் அரக்கன் இராவணனை விடவும் வலிமை வாய்ந்தவர்கள் என்று கூறுகின்றார். உக்கான்=நைந்தான். இந்த பாடலில் நாம் என்று அப்பர் பிரான்,மற்ற அடியார்களுடன் தன்னையும் சேர்த்துக் கொண்டு சொல்வதாகவும் பொருள் கொள்ளலாம். சிவபிரானைத் தனது மனதில் தாங்கும் வல்லமைபடைத்தமையால், அங்கமாலை பதிகத்தில் இறுமாப்பு கொண்டது போல், சிவபிரானின் அருளால் தனக்கு வாய்த்த பேற்றினை நினைத்து கர்வம் கொண்டு,நாம் என்று தன்னை உயர்த்திச் சொல்வதாகவும் பொருள் கொள்ளலாம். நுதி=நுனி;

கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர் கமலபாதத்து

ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண்திறல் அரக்கன் உக்கான்

இருதிற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம்

திருவடி தரித்து நிற்கத் திண்ண நாம் உய்ந்தவாறே

ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் (4.75.10) அப்பர் பிரான், இறைவன் தனது பெருவிரலை சிறிதே ஊன்றி, அரக்கன் இராவணனை கயிலாய மலையின் கீழே அழுத்தினார் என்று கூறுகின்றார். சிவபெருமான் சற்று அழுத்தமாக ஊன்றி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அப்பர் பிரான், இந்த பதிகத்தில் கூறாமல் நமது கற்பனைக்கு விட்டுவிடுகின்றார். அகந்தையுடன் தேடிய இருவருக்கும் (பிரமன் மற்றும் திருமால்) அகப்படாத ஈசன், அடியார்களின் அன்புக்கு அகப்பட்ட செய்தியை மிகவும் நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபிரான் தனது கால் பெருவிரலை மெதுவாக ஊன்றியதைத் தாங்க முடியாமல் அலறியவன், மலை போன்ற தோள்களையும் வலிமையையும் பெற்ற அரக்கன் இராவணன். ஆனால் அத்தகைய வலிமை ஏதும் இல்லாத தான், எப்போதும் சிவபிரானின் உருவத்தை சுமந்து கொண்டு திரிவதாக கூறுகின்றார். எதனைச் சுமந்து கொண்டு? அரக்கன் அழுத்திய பெருவிரல் மட்டுமா, இல்லை இரண்டு திருவடிகளை, திருவடிகள் மட்டுமா. இல்லை திருவடிகள் தாங்கும் உருவத்தை, ஓர் உருவம் மட்டுமா, இரண்டு உருவங்களும் சேர்ந்த ஓர் உருவைத் தான் தாங்கியபடியே ஊரெங்கும் திரிவதாக பெருமையுடன் கூறுகின்றார்

பெருவிரல் இறை தான் ஊன்றப் பிறை எயிறு இலங்க ஆங்காம்

தருவரை அனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான்

இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்குடைய வள்ளல்

திருவடி சுமந்து கொண்டு காண்க நான் திரியுமாறே

அன்னியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.8.10) பெருமானின் திருப்பாதங்களை பஞ்சின் மெல்விரல் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.பஞ்சால் அழுத்தப்பட்டது போன்று மிகவும் குறைவான அழுத்தத்துடன் பெருமான், தனது கால் பெருவிரலை ஊன்றினார் என்று கூறுகின்றார். அஞ்சும்அஞ்சும் ஆறும் நான்கும்=இருபது கைகளும், ஆயிழை=ஆராய்ந்து தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த பார்வதி தேவி; பஞ்சினைப் போன்ற மெல்லியவிரலால் அரக்கனை அடர்த்தார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பெருமான் அதிகமாக அழுத்தம் கொடுக்கவில்லை என்று உணர்த்தும் அப்பர்பிரான், அவ்வாறு அதிகமாக அழுத்தம் கொடுத்து அரக்கனை அடர்த்திருந்தால் அரக்கனின் நிலை வேறாக இருந்திருக்கும் என்பதை நமக்கு சொல்லாமல்சொல்லும் நயம் போற்றத் தக்கது. பெருமான் வீற்றிருக்கும் திருமலை என்றும் கருதாமல், அதனை பேர்த்தெடுக்கத் துணிந்த வஞ்சனையான செயல் என்றுஅப்பர் பிரானால் கருதப் படுகின்றது.

வஞ்ச அரக்கன் கரமும் சிரத்தொடும்

அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறு நான்கும் இறப்

பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆயிழை

அஞ்சல் அஞ்சல் என்றார் அன்னியூரரே

பூவணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.11.7) சுந்தரர், அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தபோது சிரித்தவாறு பெருமான் தனது கால் பெருவிரலை சிறிதே ஊன்றினார் என்று குறிப்பிடுகின்றார். இறையே=சிறிதே; மிக்கு இறையே= தனது ஆற்றலின் விளைவாக பலருக்கும் தலைவனாக விளங்கிய தன்மையால், தனது ஆற்றலை மிகவும் பெரிதாக எண்ணிய அரக்கன் இராவணன் என்று கூறுகின்றார்.

மிக்கு இறையே அவன் துன்மதியாலிட

நக்கு இறையே விரலால் இற ஊன்றி

நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம்

புக்கு உறைவான் உறை பூவணம் ஈதோ


பொழிப்புரை:

கயிலாய மலை நிலை குலையுமாறு தனது, முத்துக் கடகங்கள் பதித்த தனது கைகளால் எடுத்து அசைத்த அரக்கன் இராவணனின் தோள்களை, கயிலாய மலையின் கீழே நெருக்கும் வண்ணம், தனது பவழ நிறத்தில் அமைந்துள்ள கால் பெருவிரலின் நுனியை மிகவும் மெதுவாக கயிலாய மலையின் மீது ஊன்றியவன் சிவபெருமான். பின்னர் அரக்கன் பாடிய சாமகானம் கேட்டு மனம் மகிழ்ந்து பரிந்தவராக அவனுக்கு அருள் புரிந்தவரும் சிவபெருமான் தான்.இவ்வாறு ஆற்றலும் கருணையும் ஒருங்கே கொண்ட பெருமான், முல்லை கொடிகள் தவழும் முல்லை நிலத்தினில் நறவ மலர்கள் விரிந்து பூத்து நிற்கும் சோலைகள் கொண்ட பழையனூரைச் சார்ந்த திருவாலங்காடு தலமாகும்.

பாடல் 10:

பகலும் இரவும் சேர் பண்பினாரும் நண்போராது

இகலும் இருவர்க்கும் எரியாய்த் தோன்றி நிமிர்ந்தாரும்

புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீயபோய்

அகலும் பழையனூர் ஆலங்காட்டு அடிகளே

விளக்கம்:

பிரமனை வெண்மை நிறம் கொண்டவன் என்றும் திருமாலை கரிய நிறம் கொண்டவன் என்றும் கூறுவார்கள். பகல் என்பது வெண்மை நிறத்தை குறிப்பதாகவும் இரவு என்பது கருமை நிறத்தை குறிப்பதாகவும் கருதப்படுவதால், பகல் என்று பிரமனையும் இரவு என்று திருமாலையும் இந்த பாடலில் உணர்த்துகின்றார். திருமாலின் நாபிக்கமலத்தில் உதித்தமையால், பிரமனை திருமாலின் மகனாக கருதுகின்றனர். நண்பு=இங்கே உறவு என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. பொதுவாக, தந்தை மகன் ஆகிய இருவரின் இடையே ஏதேனும் சிறிய மனத்தாங்கல் ஏற்பட்டாலும், மகன் தனது தந்தை மீது கொண்டுள்ள மதிப்பு காரணமாகவும், தந்தை தனது மகனின் மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாகவும்,. அத்தகைய வேறுபாடுகள், அவர்கள் இருவரின் இடையே விரிசலை ஏற்படுத்தாத வண்ணம் இருவரும் இருக்கும் நிலையினை நாம் உலக வாழ்வினில் காண்கின்றோம். ஆனால் பிரமன் திருமால் ஆகிய இருவரும் தங்களுக்குள்ளே மாறுபட்டு வாதம் செய்தபோது, அவர்கள் தங்களின் இடையே இருந்த உறவினை கருத்தில் கொண்டு, விட்டுக்கொடுத்து வாதத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர முயலவில்லை. இவ்வாறு பக்குவம் அற்றவர்களாக அவர்கள் இருவரும் விளங்கிய தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது. இகலும்=மாறுபடும்; தங்கள் இருவரில் எவர் உயர்ந்தவர் என்பதில் ஒருவருக்கொருவர் மாறுபட்டு விளங்கிய தன்மை; புகலும்=வேத ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ள வழிபாடு முறைகள்;

பொழிப்புரை:

பகலும் இரவும் போன்று முறையே வெண்மை நிறமும் கருமை நிறமும் கொண்ட உடல் படைத்த பிரமனும் திருமாலும், தங்களின் இடையே இருந்த மகன் தந்தை என்ற உறவினையும் கருத்தில் கொள்ளாமல், ஒருவருக்கொருவர் தங்களில் எவர் உயர்ந்தவர் என்பதில் மாறுபட்டு தொடர்ந்து வாதம் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் தனது முடியையும் அடியையும் காண முடியாத வண்ணம் நெடுந்தழலாக நிமிர்ந்து நின்றவன் சிவபெருமான்.வேதங்கள் மற்றும் ஆகம நூல்களில் சொல்லப்பட்டுள்ள வண்ணம், வழிபாடு செய்து இறைவனை போற்றும் வல்லமை உடைய அடியார்களின், தீமைகளை அகற்றி அருள் புரியும் பெருமான், பழையனூரைச் சார்ந்த திருவாலங்காடு தலத்தின் தலைவராவார்.

பாடல் 11:

போழம் பல பேசிப் போது சாற்றித் திரிவாரும்

வேழம் வருமளவும் வெயிலே துற்றித் திரிவாரும்

கேழல் வினை போகக் கேட்பிப்பாரும் கேடிலா

ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு அடிகளே

விளக்கம்:

போழம்=உண்மைக்கு மாறுபட்ட சொற்கள்; போது=காலம்; சூழ்நிலைக்கு ஏற்ற வண்ணம் தங்களது சொற்களை மாற்றிக்கொண்டு பெருமானை பழிப்பது;வேழம் என்றால் பொதுவாக யானையை குறிக்கும். இங்கே யானைத்தீ நோயினை குறிப்பிடுகின்றது. யானைத்தீ நோய் என்பது எவ்வளவு உணவு உட்கொண்டாலும் பசி அடங்காத தன்மையை குறிப்பிடுகின்றது. தணியாத பசியை உண்டாக்கும் நோய். மணிமேகலை மற்றும் சீவகசிந்தாமணி காப்பியங்கள் இந்த நோயினை குறிப்பிடுகின்றன. காயசண்டிகை என்பவள் யானைத்தீ நோயால் வருந்தியதாகவும், மணிமேகலை தனக்கு கிடைத்த அமுதசுரபியிலிருந்து அளித்த உணவினை உட்கொண்டவுடன், காய சண்டிகை தனது நோய் தீரப்பெற்றாள் என்று மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகின்றது. அச்சனந்தி என்ற முனிவர், யானைத்தீ நோயால் வருந்திய போது, கந்துகன் என்ற செல்வந்தனின் இல்லத்தில் உணவு உட்கொண்டு தன்து நோயினைத் தீர்த்துக்கொண்டார் என்று சீவக சிந்தாமனி காப்பியம் கூறுகின்றது. துற்றி=உணவுண்டு; கேழல்=கேழ் அற்ற; கேழ்=நன்மை; இந்த பாடலில் புத்தர் மற்றும் சமணர்களின் உரைகளுக்கும் பெருமான் செய்யும் உப்தேச உரைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு உணர்த்தப் படுகின்றது. புத்தர்களும் சமணர்களும் தேவார முதலிகள் வாழ்ந்து வந்த சமயத்தில், சிறிதும் ஆதாரமற்ற வீண் பழிச் சொற்களை பேசி பெருமானை பழித்துவந்தனர். இதன் விளைவாக, அவர்களது உரையினை மதித்து அவற்றின் வழியே ஒழுகும் மனிதர்கள், பெருமான் அளிக்கும் பாதுகாப்பினை இழக்கின்றனர். வேதஙகள் மூலமாகவும், அந்த வேதங்களின் விளக்கங்கள் மூலமாகவும் பெருமான் வழங்கிய் அறிவுரைகள் மக்களை நல்வழிப்படுத்தி, அவர்கள் உய்வடைய வழி வகுக்கின்றன.

பொழிப்புரை:

உணமைக்கு மாறுபட்ட சொற்கள் பேசியும், சமயத்திற்கு ஏற்றவண்ணம் தங்களது பேச்சினை மாற்றிக்கொண்டு உண்மையை திரித்துப் பேசுவோரும், வயிறு புடைக்க உணவினை உட்கொண்டு எப்போதும் வெய்யிலில் திரிந்து கொண்டே இருப்பதால், வயிறு புடைக்க உணவு உட்கொண்ட ;பின்னரும், தணியாத பசி உடையவர்களாகத் திகழ்ந்தவர்களும் ஆகிய சமணர்களின் உரைகள் எவருக்கும் நன்மை பயக்காத உரைகள். பெருமான், வேதங்கள் மூலமாக உலகினுக்கு வாழ்க்கை நெறி குறித்து அருளிய உபதேசங்களை பின்பற்றும் அடியார்களின் தீய வினைகளை, அத்தகைய உபதேசங்கள் அறவே நீக்கி,அவர்களை நல்வழியில் செலுத்தும். இவ்வாறு தனது அடியார்களை ஆட்கொள்ளும் தன்மை அழியாத வண்ணம் என்றும் ஆட்கொள்ளும் எமது தலைவராகிய பெருமான், பழையனூரைச் சார்ந்த திருவாலங்காடு தலத்தினில் உறைகின்றார்.

பாடல் 12:

சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன்

ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை

வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை வல்லார்

சேர்ந்த இடமெல்லாம் தீர்த்தமாகச் சேர்வாரே

விளக்கம்:

தன்னில் நீராடும் மக்களின் பாவங்களை போக்கும் ஆற்றல் வாய்ந்த நதிகள் புண்ணிய நதிகளாக கருதப்படுகின்றன. நமது சிந்தனையைத் திருத்தி நல்வழிப்படுத்தும் தேவார திருவாசகப் பாடல்கள் ஒதுவோரின் மனதினை தூய்மைப்படுத்துவதால், அவர்கள் ஞானசீலர்களாக விளங்குகின்றனர். அத்தகைய அடியார்களைச் சார்ந்து நிற்போரும் அந்த அடியார்களுடன் பழகுவதால், சிந்தனை செம்மைப்பட்டு, நல்வழியில் நடக்கத் தொடங்குகின்றனர். இதன் விளைவாக, அவர்களின் உட்பகைகளாக விளங்கிய காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் எனப்படும் தீய குணங்கள் அவர்களை விட்டு விலகுவதால், இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் அடியார்களை தீர்த்தம் என்று குறிப்பிடுகின்றார் போலும். மறுகு=வீதி;

பொழிப்புரை:

சந்தனமணம் கமழும் வீதிகள் உடையதும், சண்பை என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழி தலத்தினைச் சார்ந்த ஞானசம்பந்தன், அழகும் குளிர்ச்சியும் உடைய பழையனூர் நகரத்தைச் சார்ந்த திருவாலங்காடு தலத்தின் தலைவனாக உறையும் பெருமானின் திருவருளாலே, அவனை மிகவும் விரிவாக போற்றி பாடிய பாடல்களை, முறையாக ஓதும் வல்லமை பெற்ற அடியார்கள், தாங்கள் சென்ற இடமெல்லாம் புகழுடன் விளங்குவதுமன்றி, தம்மில் நீராடும் மக்களின் பாவங்களைக் களையும் புண்ணிய தீர்த்தங்கள் போன்று, தம்மைச் சார்ந்தோரையும் தூய சிந்தனை உடையவர்களாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்களாக திகழ்வார்கள்.

துஞ்சவருவாரும் (Thunzhavaruvaarum) is a Tamil phrase that can be translated to mean "those who come to rest" or "those who seek solace." Let’s break down the components:

Breakdown of the Phrase:

துஞ்ச (Thunzh): Means "to rest" or "to sleep." It conveys the idea of taking a break or finding peace.

வருவாரும் (Varuvaarum): Comes from "வரு" (Varu), which means "to come", and "வருவார்கள்" (Varuvaargal), meaning "they will come" or "those who come." The suffix "அரும்" (arum) indicates a future or habitual action.

Full Meaning:

"துஞ்சவருவாரும்" can be interpreted as "those who come to rest" or "those who seek a place to find peace." The phrase typically refers to individuals who seek a refuge or a place where they can find solace and rest.

Context:

Spiritual and Poetic Context: In Tamil literature and poetry, this phrase might describe people seeking spiritual solace or comfort. It can symbolize a journey to find inner peace or a place of tranquility.

Religious Significance: In a religious or devotional context, "துஞ்சவருவாரும்" could refer to devotees who come to a sacred place or a temple to find rest and peace of mind.

Emotional and Psychological Context: The phrase can also be used more generally to refer to anyone looking for emotional or psychological relief from stress or challenges.

Example in Context:

In a devotional hymn or poem, "துஞ்சவருவாரும்" might describe the act of seeking divine presence or sacred space to find comfort and rest. For example, it could refer to worshippers who come to a temple to seek peace and solace.

Conclusion:

"துஞ்சவருவாரும்" poetically and culturally captures the idea of seeking rest and solace. It refers to individuals who are looking for a place of peace and comfort, whether it be a physical location, spiritual space, or emotional refuge. The phrase reflects a universal need for tranquility and the comfort of finding a restful haven.



Share



Was this helpful?