Books / பன்னிரு திருமுறைகள்


பனிரெண்டாம் திருமுறை


பெரிய புராணம் | திருத்தொண்டர் புராணம்

பன்னிரு திருமுறைகளில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் 12வது திருமுறையாகும்.

இந்தத் தமிழ் மண்ணிலே பிறந்து, இங்கேயே வாழ்ந்து பக்தி நெறி தழைக்கச் செய்த நாயன்மார்களைப் பாடிய பெருங்காப்பியம் பெரியபுராணம். முற்றிலும் தமிழ்நாட்டுப் புண்ணியர்களைப் பாடிய சிறப்பு மிக்க புண்ணிய நூல் ஆதலால் பெரியபுராணம் தேசிய காப்பியம் எனப் போற்றப்படுகிறது. இதன் ஆசிரியர் சேக்கிழார் ஆவார். இவர் பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். தொண்டை நாட்டைச் சார்ந்த வேளாளர் மரபில் தோன்றியவர். இவரது இயற்பெயர் அருள்மொழித் தேவர். சேக்கிழார் என்பது மரபுப் பெயராகும். சோழநாட்டை இரண்டாம் குலோத்துங்கன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். சேக்கிழாரின் புலமையைப் பற்றி அறிந்த மன்னன், அவரைத் தன் முதலமைச்சர் ஆக்கினான். பின்னர் அவரது செயல்திறனை அறிந்த சோழன், உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் அளித்தான். சேக்கிழார் முதலமைச்சராக இருந்த போது கல்வெட்டுச் செய்திகளையும், பக்திப் பாடல்களையும் திரட்டினார். தேவையான குறிப்புகளுடன் தமது காப்பியத்தைத் தொடங்க தில்லை சென்றார். இறைவர் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்க காப்பியம் முழுவதும் இறைவரின் அருள் திறத்தை மணம் வீசச் செய்து, நூலை முடிக்கும் போது உலகெலாம் என முடித்துள்ளார். நம்பியாரூரரான சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையில் ஒவ்வோர் அடியவர் பெருமையையும் ஒரு அடியில் கூறுகிறார். இதனைத் தொகைநூல் என்பர். இதனைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி இயற்றினார். ஓர் அடியாரின் சிறப்பை ஒரு பாடலால் விளக்கும் இதனை வகைநூல் என்பர். இந்த இரு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு ஓர் அடியாரின் சிறப்பை ஒரு புராணத்தால் விளக்குவது பெரிய புராணம். இதனை விரிநூல் என்பர். சேக்கிழார் இதற்கு இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும். பிற்காலத்தே இதன் பெருமை கருதிப் பெரிய புராணம் என வழங்கலாயிற்று. இதில் 2 காண்டங்களும், 13 சருக்கங்களும் உள்ளன. மொத்தம் 4286 பாடல்கள் உள்ளன. இக்காப்பியத்தில் இடம் பெறும் தனியடியார்கள் அறுபத்து மூவர். தொகை அடியார்கள் ஒன்பது பேர்.

சேக்கிழார் வர்ணிக்கும் நாயன்மார்கள் முக்தியை விடப் பக்தியையே பெரிதாக எண்ணும் இயல்பினர். சிவனையன்றி வேறு எதனையும் சிந்தையில் கொள்ளா மாண்பினர். தமிழில் பக்திக்கு ஒரு நூல் பெரிய புராணம் என்பதில் ஐயமில்லை. அதனால் தான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று சேக்கிழாரைப் பாராட்டுகிறார். மாதவச் சிவஞான முனிவர், எங்கள் பாக்கியப் பயனாகிய குன்றை வாழ் சேக்கிழாரின் அடி சென்னியிருத்துவாம் எனச் சேக்கிழாரைத் தெய்வமாகவே கருதி வழிபடுகிறார். சைவ சமயத்தின் தெய்வப் பாடல்கள் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இதில் பெரிய புராணம் 12ம் திருமுறையாகும்.


© Om Namasivaya. All Rights Reserved.