இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


உண்டாய் நஞ்சை

உண்டாய் நஞ்சை

பதிக எண்: 2.61 - திருவெண்காடு - காந்தாரம்

பின்னணி:


தனது இரண்டாவது தலயாத்திரையின் போது பல்லவனீச்சரம் மற்றும் சாய்க்காடு (இரண்டு தலங்களும் பூம்புகார் நகரத்தில் உள்ளன) ஆகிய இரண்டு தலங்கள் சென்ற ஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு அருகிலுள்ள திருவெண்காடு தலம் செல்கின்றார். திருவெண்காடு தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. கண் காட்டும் நுதலானும் என்று தொடங்கும் பதிகம் பாடி (2.48) பிள்ளை வரம் வேண்டுவோர், வெண்காடு தலம் சென்றடைந்து ஒரு மண்டலம் விரதமிருந்து பெருமானை அனுதினமும் வணங்கி ஆங்குள்ள முக்குளத்தில் நீராடினால் பழைய வினைகள் கழிக்கப்பட்டு, மக்கட்பேறு ஏற்படும் என்று சம்பந்தர் உணர்த்துகின்றார். மேலும் மந்திர மறையவை என்று தொடங்கும் பதிகத்தினை முறையாக ஓதும் அடியார்கள் தங்களது வினைகள் முற்றிலும் களையப் பெறுவார்கள் என்பது தனது ஆணை என்று கூறுகின்றார். இங்கே சிந்திக்கப்படும் பதிகத்தின் பாடல்களில், பெருமான் தனது அடியார்களுக்கு எவ்வாறெல்லாம் இறைவன் அருள் புரிகின்றார் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.

இந்த தலம் சீர்காழிக்கு தென்மேற்கில் பதினேழு கி.மீ. தூரத்தில், பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. சீர்காழியிலிருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. ஐந்து பிராகான்கள் கொண்ட பெரிய கோயில். இறைவனின் திருநாமம் சுவேதவன ஈஸ்வரர், வெண்காட்டு நாதர்; அம்பிகையின் திருநாமம் பிரம்மவித்யா நாயகி; குடந்தையைச் சுற்றியுள்ள தலங்களில் புதனுக்கு உரிய தலமாக கருதப் படுகின்றது. உமையன்னை, பிரமன், இந்திரன், ஐராவதம், புதன், மருத்துவன், அச்சுதக் களப்பாளர், சுவேதகேது, வேதராசி ஆகியோர் வழிபட்ட பயன் பெற்ற தலம். மூன்று குளம், மூன்று மூர்த்திகள், மூன்று அம்பிகைகள், மூன்று தலமரங்கள் கொண்ட புகழினை உடையது. வெண்காடர், அகோர சிவன், நடராஜர் என்று மூன்று மூர்த்திகள்; அகோரசிவன் இந்த தலத்திற்கு உரிய சிறப்பான மூர்த்தி. பிரம்மவித்யாநாயகி, துர்க்கை, காளி என்று மூன்று தேவிகள்; ஆல், வில்வம் கொன்றை என்று மூன்று தலமரங்கள். பிரம்ம வித்யா நாயகி, தனது வலது மேல் கையில் ருத்ராக்ஷம் வைத்திருப்பதை காணலாம். கல்வி அறிவை கொடுக்கக் கூடிய ஆற்றல் தேவிக்கு உள்ளதை வெளிப்படுத்தும் தன்மையை இந்த நிலை குறிப்பிடுகின்றது என்று கூறுவார்கள். தந்தை சந்திரனாலும் தாய் தாரையாலும், அனாதையாக விடப்பட புதனுக்கு ஞானத்தை அருளி வளர்த்தவள் அன்னை. இதனை உணர்த்தும் முகமாக, அம்பிகை சன்னதிக்கு அருகில் புதன் சன்னதி உள்ளது.

மருத்துவன் என்ற அரக்கனை அழிக்க, இறைவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர், அகோர வீரபத்திரர். பெருமானின் காலடியில் அரக்கன் இருப்பதை காணலாம். நடராஜர் சன்னதி, சிதம்பரத்தில் உள்ளது போன்று வெற்றிடத்துடன் காணப்படுகின்றது. ஆதி சிதம்பரம் என்று அழைப்பார்கள். நவகிரகங்கள் திருவாரூரில் இருப்பதைப் போன்று ஒன்று ஒரே வரிசையில் அமைந்துள்ளன.

பாடல் 1:


உண்டாய் நஞ்சை உமை ஓர் பங்கா என்று உள்கித்

தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்

அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும்

வெண் தாமரை மேல் கரு வண்டு யாழ் செய் வெண்காடே

விளக்கம்:

அண்டா வண்ணம்=அணுகாத வண்ணம்; தொண்டாய் திரிதல்=உடலாலும் மனத்தாலும் இறைவனுக்கு திருப்பணி செய்தல்; பெருமான் அடியார்களுக்கு பல விதத்திலும் அருள் புரிந்து உதவுவதை விளக்கும் பாடல்கள் கொண்ட பதிகம், பெருமான் செய்த மிகப் பெரிய தியாகத்தை குறிப்பிட்டு தொடங்குகின்றது. பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தின் நெடியை தாங்க முடியாமல் திசைக்கு ஒருவராக பிரமன் திருமால் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் ஓடியபோது, தயக்கம் ஏதும் இன்றி அந்த நஞ்சினை தானே உண்டு, அனைவரையும் காத்த பெருமானின் கருணைச் செயல் குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு உயர்ந்த தியாகத்தினை புரிந்த பெருமான், தியாகராஜன் என்று அழைக்கப்படுவது மிகவும் பொருத்தம் தானே. தனது உடலின் ஒரு பாதியை, பிராட்டியின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டு, அளித்த செயல், வேறு எவரும் செய்யாத அரிய செயல் அல்லவா. இவ்வாறு அடியார்களுக்கு வேண்டிய வரத்தினை அருளுவதால் தானே, எல்லையற்ற நிகரற்ற வரங்களை அருள்பவன் என்று பெருமானை அனைவரும் ;புகழ்கின்றனர்.

பொழிப்புரை:

பிரமன் திருமால் உள்ளிட்ட தேவர்கள் மற்றும் அரக்கர்கள் அனைவரும் பதறி எட்டு திசைகளிலும் ஓடும் வண்ணம் விரட்டிய கொடிய நஞ்சினைத் தான் உட்கொண்டு தேவர்கள் உள்ளிட்ட அனைத்து உலகத்தவரையும் காப்பாற்றிய பெருமானே என்று மனதினில் தியானித்து, தனக்கு தொண்டராகி பலவாறு திருப்பணிகள் புரியும் அடியார்களை துயரங்கள் அணுகாத வண்ணம், அவற்றை அறுத்தருளும் பெருமான் உறையும் இடம் திருவெண்காடு தலமாகும். எமது தந்தையாகிய பெருமான் குடி கொண்டுள்ள இந்த தலத்தினில் செழித்து வளர்ந்துள்ள தாமரை மலர்களில் உள்ள தேனினை உண்பதற்காக மலர்களின் மீது அமர்ந்துள்ள கருவண்டுகள், தேன் உண்ட களிப்பினை வெளிப்படுத்தும் வண்ணம் யாழிசை போன்று முரல்கின்றன.

பாடல் 2:


நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்திப்

பாதம் பன்னாள் பணியும் அடியார் தங்கள் மேல்

ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும்

வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே

விளக்கம்:

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் வேள்விப் புகையால் வானம் இருண்டு காணப்படும் வெண்காடு என்று சம்பந்தர் சொல்கின்றார். இடைவிடாது வேத மந்திரங்கள் சொல்லப் பட்டதால், வேதத்தில் உள்ள சொற்களைக் கொண்டு இந்த தலத்தில் உள்ள கிளிகள் சொற்களை பேசப் பழகிக் கொள்கின்றன என்று கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது கண்காட்டும் நுதலானும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல் ஒன்றினை (2.48.6) நினைவூட்டுகின்றது சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் அதிகமாக இருந்த ஊரான வெண்காட்டில், அரன் நாமம் ஆங்கு உள்ளோர் சொல்லக் கேட்டு கிளிகளும் அவனது நாமத்தை கூறும் திறமை படைத்தன என்று சம்பந்தர் பிரான் இந்த பாடலில் குறிப்பிட்டு மகிழ்கின்றார்.

தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையின் உடன்

ஒண்மதிய நுதல் இமையோர் கூறு உகந்தான் உறை கோயில்

பண் மொழியால் அவன் நாமம் பல ஓதப் பசும் கிள்ளை

வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் வரும் திருதிருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த பாசுரம் ஒன்றினில், திருமால் பால் தீராத காதல் உடையவளாக இருந்த ஒரு நங்கை, தான் வளர்த்த கிளி. அரியின் நாமம் சொல்லக் கேட்டு அந்த கிளியை கை கூப்பி மகிழ்ந்தாள் என்று கூறுகிறார். இறைவனின் நாமத்தை கிளிகளோ அல்லது வேறு எவரோ சொல்லக் கேட்பது அருளாளர்களுக்கு எத்துணை மகிழ்ச்சியை தருகின்றது என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த பாசுரத்தை திரு நெடுந்தாண்டகத்தில் நாம் காணலாம்.

முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூ உலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற

அளப்பு அறிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை

விளக்கொளியை மரகதத்தை திருத் தண்காவில் வெக்காவில் திருமாலை பாடக் கேட்டு

வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.132.1) வீழிமிழலை தலத்து சோலைகளில் வாழும் கிளிகள், பண்டிதர்கள் பலநாட்கள் இடைவிடாது சொல்லிய வேதங்களைக் கேட்டு பழகிய கிளிகள், அந்த வேத மந்திரங்களுக்கு பொருள் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தன என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார்.

ஏரிசையும் வட ஆலின் கீழ் இருந்தங்கு ஈரிருவர்க்கு இரங்கி நின்று

நேரிய நான்மறைப் பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில்

பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு

வேரிமலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலையாமே

வேதங்களுக்கு கிளிகள் பொருள் சொல்வதாக சம்பந்தர் மேற்கண்ட பாடலில் கூறுவது, நமக்கு ஆதி சங்கரரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றினை நினைவூட்டுகின்றது. மீமாம்சை சாத்திரத்தில் வல்லவராக விளங்கிய மண்டனமிஸ்ரர் என்பவருடன் வாதம் செய்ய விரும்பிய ஆதிசங்கரர், அவர் வாழ்ந்து வந்த மாகிஷ்மதி என்ற நகரம் செல்கின்றார். அந்த நகரம் சென்றடைந்த சங்கரர், பண்டிதரின் வீடு எங்கே உள்ளது என்று கேட்க, ஆங்கிருந்த மக்கள், எந்த வீட்டுத் திண்ணையில் கிளிகள் அமர்ந்து கொண்டு வேதங்கள் பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றனவோ அந்த வீடே மண்டனமிஸ்ரரின் வீடு என்று அடையாளம் காட்டுகின்றனர். இந்த இரண்டு குறிப்புகளும் தென்னாடு மற்றும் வடநாடு ஆகிய இரண்டு இடங்களிலும் வேதங்களில் பயிற்சி பெற்ற பண்டிதர்கள் நாள்தோறும், வேதங்களின் பொருளை தங்களது சீடர்களுக்கு சொல்லி வந்தனர் என்பது புலனாகின்றது. நவின்று=விருப்பத்துடன்; ஏத்தி=புகழ்ந்து; ஏதம்=குற்றங்கள், குற்றங்களால் விளையும் துன்பங்கள்; சொல் பயிலும்=தொடர்ந்து கற்றுக்கொள்ளும்; பொதுவாக சொல் என்றால் வேதத்தில் உள்ள சொற்களை குறிக்கும். பன்னாள்=பல நாட்கள்; தலைவனாகிய பெருமான் நிச்சயம் என்றேனும் ஒரு நாள் நம்மை ஆட்கொள்வான் என்ற நம்பிக்கையில் தொழும் அடியார்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நமக்கு, மணிவாசகரின் திருவாசகப் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. கோயில் மூத்த பதிகத்தின் கடைப் பாடலில், மணிவாசகர், தன்னை உடையவனாகிய சிவபெருமானே என்று அழைத்து, தளர்ந்து கிடக்கும் தனது உயிருக்கு இரங்கி, சிவபெருமான் தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்று கெஞ்சுகின்றார். தனது நிலை கண்டு இரக்கம் கொண்டு இறைவன் என்றாவது ஒரு நாள் அருள் நல்குவான் என்ற நம்பிக்கையில், அவனது திருநாமங்களை பல முறை பிதற்றியும், கண்களில் நீர் பெருகியும், குழறுகின்ற வாயினால் வாழ்த்தியும், மனத்தால் பல முறையும் தியானித்தும், மனம் மொழி மெய் ஆகிய மூன்று கருவிகளாலும் இறைவனை நினைத்துத் தான் இருக்கும் நிலையை இங்கே உணர்த்துகின்றார். இந்த நிலையை அடைந்து, மணிவாசகர், அப்பர் பிரான் ஆகியோர் பெற்ற பேற்றினை நாமும் பெறவேண்டும் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர்

மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகி

பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம்பலம் என்றே

ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே

பொழிப்புரை:

நமக்கு தலைவனாகிய பெருமான் நம்மை ஆட்கொண்டு அருள் புரிவான் என்ற நம்பிக்கையுடன் மிகுந்த விருப்பம் கொண்டு பல நாட்களும் அவனது திருப்பாதங்களைப் பணிந்து வணங்கும் அடியார்களின் குற்றங்களையும் அந்த குற்றங்களால் விளையும் தீமைகளையும் தீர்த்து அருள் புரியும் இறைவன் வாழும் ஊர் திருவெண்காடு தலமாகும். இந்த தலத்தில் வாழும் அந்தணர்கள் தொடர்ந்து வேதங்கள் ஓதுவதைக் கேட்கும் கிளிகள், அந்த வேத மந்திரங்களின் சொற்களை பயின்று பேசும் பெருமை உடையனவாக விளங்குகின்றன.

பாடல் 3


தண் முத்து அரும்ப தடம் மூன்று உடையான் தனை உன்னிக்

கண் முத்து அரும்பக் கழல் சேவடி கை தொழுவார்கள்

உள் முத்து அரும்ப உவகை தருவான் ஊர் போலும்

வெண் முத்து அரும்பிப் புனல் வந்தலைக்கும் வெண்காடே

விளக்கம்:

தடமூன்று=முக்குளம்; கண்முத்து=கண்ணீர்த் துளிகள்; உள் முத்து அரும்ப=உள்ளம் மகிழ; தூய முத்து போன்று துன்பக் கலப்பு ஏதும் இல்லாத இன்பம்; தண் முத்து=குளிர்ந்த முத்து; கழல்=கழலினை அணிந்துள்ள திருப்பாதங்கள்; உன்னுதல்=தியானம் புரிதல்; இந்த கோயிலின் தெற்கு பிராகாரத்தில் சூரிய குண்டமும் வடக்கு பிராகாரத்தில் சோம குண்டமும் வெளி பிராகாரத்தில் அக்னி குண்டமும் உள்ளன. இந்த மூன்று குளங்களே தடம் மூன்று என்று இங்கே குறிப்பிடப்படுகின்றன. மூன்று குளங்களைப் போன்று மூன்று மூர்த்திகள் (வெண்காடர், அகோர சிவன், நடராஜர்), மூன்று அம்பிகை சன்னதிகள் (பிரம்ம வித்யா நாயகி, துர்க்கை மற்றும் காளி) மூன்று தல மரங்கள் (ஆல மரம், வில்வமரம் மற்றும் கொன்றை மரம்), கொண்டுள்ள தலம் திருவெண்காடு.

பொழிப்புரை:

குளிர்ந்த முத்துக்கள் தோன்றும் அகன்ற மூன்று நீர்நிலைகளை தீர்த்தமாக கொண்டுள்ள வெண்காட்டு இறைவனை தியானித்து, கண்களில் முத்து போன்று கண்ணீர் மல்க வீரக்கழல் அணிந்துள்ள அவனது திருப்பாதங்களை கைகூப்பித் தொழும் அடியார்களின் உள்ளங்களில் முத்து போன்று தூய்மையான, துன்பக்கலப்பு ஏதும் இல்லாத இன்பம் தோன்றும் வண்ணம் அருள் புரியும் இறைவன் உறையும் தலம் திருவெண்காடு. வெண்மை நிறத்து முத்தினைப் போன்று தெளிந்த நீரினை உடைய அருவிகள் ஏற்படுத்தும் அலைகள் வீசும் நீர்நிலைகளைக் கொண்ட தலம் வெண்காடு.

பாடல் 4:


நரையார் வந்து நாளும் குறுகி நணுகா முன்

உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே

கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர் போலும்

விரையார் கமலத்து அன்ன மருவும் வெண்காடே

விளக்கம்:

நரையார்=நரைமுடி; இகழ்ச்சி குறிப்பு தோன்ற ஆர் என்ற மரியாதை விகுதி கொடுக்கப் பட்டுள்ளது. நாளும் குறுகி=வாழ்நாள் சுருங்கி இறக்கும் நாள் நெருங்கும் தன்மை; நணுகுதல்=நெருங்குதல்; வேறா=மற்ற தெய்வங்களிலிருந்து வேறான தன்மை உடையவனாக; கரையா=வருத்தம் அடைந்து உள்ளம் நைந்து போகாமல்; வேறா= வேறுபாடு ஏதுமின்றி, சிந்தனையும் சொற்களும் வேறுபாடு ஏதுமின்றி பெருமானையே குறிப்பிடும் வண்ணம் இருக்கும் நிலை; கரையா வண்ணம்=தன்னை ஒளித்துக் கொள்ளாது; விரை=நறுமணம்; கமலம்=தாமரை மலர்; மருவி=பொருந்தி வாழ்தல்;

வேறா உள்குவார்கள் என்ற தொடருக்கு சிவக்கவிமணியார் வேறொரு சுவையான விளக்கத்தை அளிக்கின்றார். மற்ற தெய்வங்களிலிருந்தும் உயர்ந்து வேறுபட்டவனாக பெருமான் விளங்கும் தன்மையை உணர்ந்த அடியார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கம் அப்பர் பிரான் தில்லைப் பதியின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. அருந்துணை–ஒப்பற்ற துணை; வான்புலன்கள்=வானத்தைப் போன்று பெரிய புலன்கள்; உண்மையான மெய்ப்பொருளை நாம் நினைக்காத வண்ணம், நம்மைத் திசைதிருப்பும் வல்லமை வாய்ந்த ஐம்புலன்களை, இகழ்ச்சி தோன்ற வான்புலன்கள் என்று குறிப்பிடுகின்றார்.

அருந்துணையை அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி

வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும்

பொருந்தணை மேல் வரும் பயனைப் போக மாற்றிப் பொது நீக்கித் தனை நினைய வல்லோர்க்கு என்றும்

பெருந்துணையை பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

சிவபிரான் துணையாக இருந்ததால் அமணர்களின் வஞ்சனையில் இருந்து தப்பித்த அப்பர் பிரான் தனக்கு ஒப்பற்ற பெருந்துணையாக இருந்த சிவபிரான், யாருக்கெல்லாம் பெருந்துணையாக இருப்பான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உடன் பிறந்தார், சுற்றத்தார், செல்வம் இவைகளின் மீது வைத்த பாசத்தை நீத்து, புலன்களின் மேல் செல்லும் மனத்தை அடக்கி மகளிர் தரும் சிற்றின்பப் பயனை அடியோடு ஒழித்து பொதுவாக பல தெய்வங்களை நினைப்பதை விடுத்து சிவபிரான் ஒருவனையே போற்றும் வல்லவர்களுக்கு பெருந்துணையாக சிவபிரான் இருப்பார் என்று இந்த பாடலில் கூறுகிறார். பற்றுகளை அறுத்தவரே, இயல்பாகவே பற்றற்ற பரமனைச் சேரலாம் என்ற கருத்து இந்தப் பாடலில் கூறப்படுகின்றது. பற்று அறுவதற்காகத் தானே நமக்கு பல பிறப்பை இறைவன் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். மாயையாகிய உலகப் பொருட்களின் மேல் நாம் வைத்துள்ள பாசத்தை நீக்கி, மெய்ப்பொருளை தியானித்து நமது வினைகளைக் கழிக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற அறிவுரை இங்கே வழங்கப்படுகின்றது.

நமக்கு ஒப்பற்றத் துணைவனாய் விளங்கும் சிவபெருமான், அடியார்களின் அல்லலாகிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் மருந்தாக செயல்படுபவன். இந்த உலகத்தில், தான் பிறப்பெடுத்த பின்னர் தோன்றிய உடன்பிறப்புக்களை, மற்ற சுற்றத்தார், மற்றும் செல்வம் முதலான உலகப் பொருட்கள் இவற்றின் மீது வைத்த பற்றுக்களை விட்டு, நல்ல வழியில் செல்லவிடாமல் திசை திருப்பும் வல்லமை பெற்ற ஐம்புலன்களை அடக்கி, மகளிரோடு கூடி அனுபவிக்கும் சிற்றின்பத்தை அறவே வெறுத்து, மற்ற தெய்வங்களுடன் சமமாக நினைக்காமல், சிவபெருமானின் தனிப் பெரும் சிறப்புக்களை புரிந்து கொண்டு அவனை ஏனையோரிலும் உயர்ந்தவன் என்பதை உணர்ந்து வழிபடும் அடியார்களுக்கு பெரிய துணையாக இருப்பவன் சிவபெருமான். இவ்வாறு அனைவருக்கும் துணையாக இருக்கும், பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாட்களை நாம் பிறவாத நாட்களாக கருதவேண்டும் என்பதே மேற்கண்ட அப்பர் பிரானின் பாடலின் திரண்ட கருத்தாகும்.

பொது நீக்கி என்று பொதுவான தேவர்களோடு இணைக்காமல், சிவபிரானின் தனித் தன்மைகளை புரிந்து கொண்டு அவரை நினைக்க வேண்டும் என்று இங்கே சொல்லப்படும் கருத்து திருவாசகம் அச்சப்பத்து பதிகத்தின் இரண்டாவது பாடலை நினைவூட்டும். இந்தப் பாடலில் மணிவாசகர், சிவபிரான் அல்லாத மற்றைய தேவர்களைத் தேவர்கள் அல்ல என்று கருதி, அவர்களை வெறுக்காதவரைக் கண்டால் நாம் பயம் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்.

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக் கடல் கொளினும் அஞ்சேன்

இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரானாம்

திருவுரு அன்றி மற்று ஓர் தேவர் எத்தேவர் என்ன

அருவராதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

பொழிப்புரை:

தலைமுடி நரைத்து மூப்பு தோன்றி வாழ்நாள் சுருங்கி, இறுதிக் காலம் நெருங்குவதன் முன்னம், தங்களது சிந்தையிலும் செயலிலும் வேறுபாடு ஏதுமின்றி பெருமானை எப்போதும் நினைத்து வாழும் அடியார்களின் மனதினில், தன்னை ஒளித்துக் கொள்ளாமல் அடியார்கள் தன்னை உணரும் வண்ணம் உறைபவன் சிவபெருமான். அவன் உறைகின்ற வெண்காடு தலமாவது, நறுமணம் மிகுந்த தாமரை மலர்களுடன் அன்னங்கள் பொருந்தி வாழும் தலமாகும்.

பாடல் 5:


பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று

உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறு நோய்கள்

தள்ளிப் போக அருளும் தலைவன் ஊர் போலும்

வெள்ளைச் சுரி சங்கு உலவித் திரியும் வெண்காடே

விளக்கம்:

பிள்ளைப் பிறை=இளம் பிறையுடன் காணப்படும் சந்திரன், ஒற்றைப் பிறைச் சந்திரன்; ஒவ்வொரு பிறையாக தேய்ந்து அழியும் நிலையில், ஒற்றைப் பிறையுடன் இருந்த சந்திரன், பெருமானை சரணடைந்த பின்னர், தேயும் நிலையிலிருந்து வளரும் நிலைக்கு மாறியதால், முற்றிலும் அழியவிருந்த ஒற்றைப்பிறை வளரும் இளம் பிறையாக மாறியதை குறிப்பிடும் வண்ணம், பிள்ளைப் பிறை என்று இங்கே கூறுகின்றார். பெம்மான்= பெருமான்; உள்ளுதல்=தியானித்து, நினைத்து;

பொழிப்புரை:

பெருமானைச் சரணடைந்த பின்னர், அழியும் நிலையிலிருந்து வளரும் நிலைக்கு மாறிய ஒற்றைப் பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும், தனது சடையில் சூடிக் கொண்ட பெருமானே என்று போற்றித் தொழும் அடியார்களை, அனைத்து நோய்களும் அணுகாத வண்ணம், தள்ளிப் போகும் வண்ணம் காத்து அருள் புரிபவன் நமது தலைவனாகிய சிவபெருமான். இந்த பெருமான், வெண்ணிறமும் கோடுகளும் கொண்ட சங்குகளை கடலைகள் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவெண்காடு தலத்தினை தனது ஊராக கருதி உறைகின்றான்.

பாடல் 6:


ஒளி கொள் மேனி உடையாய் உம்பராளீ என்று

அளியராகி அழுதுற்று ஊறும் அடியார்கட்கு

எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும்

வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே

விளக்கம்:

ஒளி=ஞான ஒளியே சிவனது திருமேனியாக விளங்குதல்; உம்பர்=தேவர்கள்; ஆளீ=ஆட்சி செய்பவன்; வெளிய உருவத்து யானை என்று ஐராவத யானையினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். கோட்டாறு, மதுரை ஆலவாய், சாய்க்காடு ஆகிய தலங்களிலும் ஐராவத யானை வழிபட்டதாக தலபுராணங்கள் கூறுகின்றன. தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள், திருவானைக்கா, காளத்தி, குற்றாலம், வெண்காடு, மதுரை ஆலவாய், திருவிடைமருதூர், மருத்துவக்குடி, வரகூர் (கண்டமங்கலத்திற்கு அருகில் உள்ளது) ஆகிய தலங்கள் யானை வழிபட்ட தலங்கள் என்று தனது திருத்தலங்கள் வரலாறு புத்தகத்தில் கூறுகின்றார். கந்த புராண தகவல்களின் படி, சூரபத்மனின் மகன் பானுகோபன் தேவருலகம் சென்று இந்திரனின் மகன் ஜெயந்தனுடன் போர் செய்து வெற்றி கொண்டான். ஜெயந்தன் மயக்கம் அடைந்து தேரினில் சாய்ந்து விழ, கோபம் கொண்ட ஐராவத யானை பானுகோபனின் தேரினை இடித்து தேர்ப்பாகனையும் கொன்றது. பின்னர் பானுகோபனின் மார்பின் மீது ஐராவதம் மோதிய போது, அரக்கனது வலிமையான மார்பில் மோதியதால், ஐராவதத்தின் தந்தங்கள் முறிந்தன. அரக்கன் யானையை தனது கையினால் அடிக்க ஐராவத யானை மூர்ச்சை அடைந்தது. மூர்ச்சை தெளிந்து எழுந்த ஐராவத யானை, திருவெண்காடு சென்றடைந்து இறைவனின் அருளால் தந்தங்கள் வளரப் பெற்றது என்று கந்தபுராணம் கூறுகின்றது. இந்த நிகழ்ச்சியே இங்கே குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை:

தானாகவே ஒளிவீசும் திருமேனியை உடையவனே என்றும் தேவர்களின் தலைவனாக ஆட்சி செய்பவனே என்றும் இறைவனைப் புகழ்ந்தும் தொழுதும், உள்ளம் உருகி கண்ணீர் பெருக்கி வழிபடும் அடியார்களுக்கு எளியவனாகவும் தேவர்களுக்கு அரியானாகவும் இருப்பவன் சிவபெருமான் வாழும் தலமாக விளங்குவது திருவெண்காடு தலம். இந்த தலத்து இறைவனை வெண்ணிற மேனியை உடைய ஐராவத யானை வணங்கி பயன் அடைந்தது.

பாடல் 7:


கோள் வித்து அனைய கூற்றம் தன்னைக் குறிப்பினால்

மாள்வித்து அவனை மகிழ்ந்து அங்கு ஏத்த மாணிக்காய்

ஆள்வித்து அமரர் உலகம் அளிப்பான் ஊர் போலும்

வேள்விப் புகையால் வானம் இருள் கூர் வெண்காடே

விளக்கம்:

கோள்=கொலைத் தொழில்; வித்து=விதை போன்று; மாணி=பிரம்மச்சாரி, சுவதேகேது என்ற சிறுவன். இந்த சிறுவனுக்கு ஆயுட்காலம் எட்டு வருடங்கள் என்று முன்னமே தீர்மானிக்கப் பட்டிருந்தது. இந்த சிறுவன் பெருமானிடத்தில் அளவிலா பக்தி கொண்டிருந்தான். குறிப்பிடப்பட்ட நாளில் அவனது உயிரினை பறிப்பதற்காக இயமனின் தூதர்கள் வந்த போது, தனது அடியானுக்கு அவமரியாதை செய்தனர் என்று பெருமான் அந்த தூதர்களை தண்டித்தார். அதனால் அந்த தூதர்கள் அஞ்சி சிறுவனது உயிரினை பறிக்காமல் திரும்பினர். இந்த செய்தியை, கண்காட்டும் நுதலானும் என்று தொடங்கும் பதிகத்திலும், நமன் தூதன் ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவர் என்று சம்பந்தர் பதிவு செய்துள்ளார். தனது தூதர்கள் செய்ய இயலாத கடமையைத் தான் நிறைவேற்றும் வண்ணம், வந்த இயமன் பெருமானை வழிபடுவதால் இறப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று முயற்சி செய்வது எந்த பலனையும் அளிக்காது என்று சிறுவனிடம் சொல்லி அவனை எள்ளி நகையாடினான். இயமனின் பரிகாசத்தை பொருட்படுத்தாத சிறுவன் சுவேதகேது தொடர்ந்து பெருமானை வழிபட்டான், இதனால் மேலும் கோபமடைந்த இயமன் தனது பாசக்கயிற்றினை எடுக்க, நடுங்கிய சிறுவன் இலிங்கத்தை கட்டிக்கொள்ள இயமன் வீசிய பாசக்கயிறு சிறுவனையும் இலிங்கத்தையும் சேர்த்து இழுத்தது. இயமனின் தகாத செய்கையை உணர்ந்த, சிவபெருமான் தனது கணங்களுடன் வெளிப்பட, அதனைக் கண்ட இயமன் மூர்ச்சை அடைந்து கீழே வீழ்ந்தான். இவ்வாறு வெளிப்பட்டு தனது கோபத்தை பெருமான் காட்டியதை குறிப்பு என்று சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். இந்த வரலாறு லிங்க புராணத்தில் குறிப்பிடப் படுகின்றது. இந்த தகவல் கூர்ம புராணத்தில் உள்ளதாக உ.வே.சா. அவர்கள் கூறுகின்றார். சுவேதகேதுவின் பக்தியை மெச்சிய பெருமான், ஏழு நடனக் காட்சியை அவனுக்கு காட்டினார் என்று கூறுகின்றனர். சென்ற ஆறு பாடல்களில் பெருமான் அடியார்களுக்கு எவ்வாறெல்லாம் அருள் புரிகின்றார் என்று பொதுவாக எந்த அடியாரையும் குறிப்பிடாமல் உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில் சிறுவன் சுவேதகேதுக்கு பெருமான் அருள் புரிந்ததை குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:

மிகுந்த மகிழ்ச்சியுடன் தன்னைப் புகழ்ந்து வணங்கிய சுவேதகேது என்று சிறுவனின் உயிரினை, முன்னமே குறிப்பிட்ட நாளில் பறிப்பதற்காக வந்த இயமனை மாள்வித்து, தனது அடியார்களை தனது அனுமதியின்றி நெருங்கலாகாது என்று குறிப்பினால் உணர்த்திய சிவபெருமான் உறையும் தலம் திருவெண்காடு ஆகும். அந்த சிறுவனுக்கு நீண்ட ஆயுள் அளித்ததுமன்றி, அந்த சிறுவன் மறுமையில் இந்திரலோகம் ஆளும் வாய்ப்பினையும் அளித்தவர் சிவபெருமான். இந்த தலத்தில் உள்ள அந்தணர்கள் தொடர்ந்து வேள்விகள் செய்வதால், அந்த வேள்விகளிலிருந்து வெளிப்படும் புகையால் சூழப்பட்ட வானம் இருண்ட காணப்படுகின்றது.

பாடல் 8:


வளையார் முன் கை மலையாள் வெருவ வரை ஊன்றி

முளையார் மதியம் சூடி என்று முப்போதும்

இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும்

விளையார் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே

விளக்கம்:

வளையார்=வளையல்கள் பொருந்திய; மலையாள்=இமயமலையில் வளர்ந்தவளாகிய அன்னை பார்வதிதேவி; வெருவ=அச்சம் கொள்ள; முளையார்=முளைத்து வளரும் தன்மை கொண்ட பிறைச்சந்திரன்; இளையாது=தளர்ச்சி அடையாது;

பொழிப்புரை:

கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த இராவணனின் செய்கையால், கயிலாய மலை அசைந்ததால், பார்வதி தேவி நடுக்கமுற்றதைக் கண்ட பெருமான், தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றவே மலையின் கீழே அமுக்குண்டு அரக்கன் இராவணனது உடல் வருந்தியது. இத்தகைய ஆற்றல் படைத்த பெருமானை, அழியும் நிலையில் இருந்த ஒற்றைப் பிறைச்சந்திரனைத் தனது சடையில் சூட்டிக்கொண்டு, சந்திரனை அழியாமல் வளரும் வண்ணம் செய்த கருணையாளனே என்று முப்போதும் தளர்ச்சி ஏதும் அடையாமல் அடியார்கள் புகழ்ந்து வணங்க, திருவெண்காடு தலத்தில் உறைபவன் சிவபெருமான். இந்த பெருமையினை உடைய வெண்காடு தலம், செழிப்பான விளைச்சலை உடைய வயல்கள் நிறைந்த தலமாகும்.

பாடல் 9:


கரியானோடு கமல மலரான் காணாமை

எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு

உரியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும்

விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே

விளக்கம்:

எரி=தீப்பிழம்பு; விரி=விரிந்த; உரியான்=அருளும் உரிமை உடையவன்; கமலமலரான்= தாமரை மலரில் வாழும் பிரமன்; பெருமானைப் புகழ்ந்து பாடும் அடியார்களே அவனது அருளுக்கு உரியவர்கள் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

கரிய நிறத்தினை உடைய திருமாலும் தாமரை மலரில் வாழும் பிரமனும் தனது அடியையும் முடியையும் காண முடியாத வண்ணம், நெடிய தீப்பிழம்பாக உயர்ந்த எங்கள் பெருமானே என்று போற்றி துதிக்கும் அடியார்களுக்கு உரிமையுடன் அருள் புரிபவன் சிவபெருமான். அவன் அமரர்கள் உணர்வதற்கு மிகவும் அரியவனாக விளங்குகின்றான். இத்தகைய பெருமான் வாழும் ஊர் திருவெண்காடு தலமாகும். வண்டுகள் இசை பாடும் விரிந்த பொழில்கள் கொண்ட தலம் திருவெண்காடு.

பாடல் 10:


பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்து ஏத்த

ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி

மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத

வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே

விளக்கம்:

பாடும் அடியார்=பண்ணுடன் பொருந்திய பாடல்களை பாடும் அடியார்கள்; பரிந்து=அன்புடன்; தனது விருப்பபடி படமெடுத்து ஆடும் குணம் கொண்டது பாம்பு; அந்த பாம்பினைத் தனது இடையில் கச்சாக கட்டி, தனது விருப்பப்படி பாம்பினை ஆட்டுவிக்கும் திறமை கொண்டவன் சிவபெருமான்.

பொழிப்புரை:

பண்ணுடன் பொருந்திய பாடல்களை பாடும் அடியார்கள் பலரும் ஒன்று கூடி, மிகுந்த அன்புடன் இறைவனைப் புகழ்ந்து பாட, படம் எடுத்து ஆடும் பாம்பினைத் தனது இடையில் கச்சாக கட்டி, தான் விரும்பும் வண்ணம் பாம்பினை ஆட்டுவிக்கும் திறமை கொண்டவன் சிவபெருமான். தனது சிவவேடத்தின் பெருமையை உணரும் அறிவற்ற மூடர்களாக சமணர்களும் சாக்கியர்களும் இருக்கும் வண்ணம், பெருமான் திருவெண்காடு தலத்தில் உறைகின்றார்.

பாடல் 11:


விடையார் கொடியான் மேவி உறையும் வெண்காட்டைக்

கடையார் மாடம் கலந்து தோன்றும் காழியான்

நடையார் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு

அடையா வினைகள் அமரலோகம் ஆள்வாரே

விளக்கம்:

மேவி=பொருந்தி; கடை=வாயில்கள்; நடை=ஒழுக்கம்; விடை=இடபம்;

பொழிப்புரை:

விடையினை இலச்சினையாக தனது கொடியில் கொண்டுள்ள பெருமான் உறையும் திருவெண்காடு தலத்தின் சிறப்பினை உணர்த்தும் வண்ணம், உயர்ந்த வாயில்கள் கொண்டுள்ள மாடவீடுகள் கலந்து காணப்படும் சீர்காழி நகரத்தில் தோன்றியவனும், சிறந்த ஒழுக்கத்தை உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன், இனிய சொற்கள் கொண்டு பாடிய தமிழ்ப் பதிகத்தை சிறந்த முறையில் பாடும் வல்லமை கொண்ட அடியார்களை வினைகள் சென்று அடையா. இவ்வாறு இம்மையில் துன்பமின்றி வாழும் அவர்கள் மறுமையில் தேவருலகம் ஆளும் வாய்ப்பினை பெறுவார்கள்.

முடிவுரை:

அடியார்களுக்கு எவ்வாறெல்லாம் இறைவன் அருள் புரிகின்றான் என்று இந்த பதிகத்து பாடல்களில் சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். தனக்கு தொண்டு செய்யும் அடியார்களை துயரங்கள் ஏதும் அணுகாத வண்ணம் இறைவன் காக்கின்றான் என்று பதிகத்தின் முதல் பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். தன்னைத் தொடர்ந்து பணியும் அடியார்களின் குற்றங்களை தீர்த்து அருள்பவன் என்று இரண்டாவது பாடலில் கூறுகின்றார். கண்ணீர் மல்க பெருமானை தியானித்து வழிபடும் அடியார்களின் உள்ளங்கள் துன்பக் கலப்பு ஏதுமின்றி இன்ப உணர்வுடன் இருக்கும் வண்ணம் இறைவன் அருள் புரிவான் என்று மூன்றாவது பாடலில் கூறுகின்றார். சிந்தனையுடன் ஒன்றிய சொற்கள் கொண்டவர்களாக பெருமானை துதித்து வாழும் அடியார்களின் சிந்தையில் இறைவன் பொருந்தி உறைகின்றான் என்று நான்காவது பாடலில் கூறுகின்றார். பெருமானை நினைத்துத் தொழும் அடியார்களின் நோய்கள் அவர்களை அணுகாத வண்ணம் தள்ளிப் போகச் செய்பவன் இறைவன் என்று ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். ஏனையோர் காண்பதற்கு அரியவனாக விளங்கும் பெருமான், அடியார்களுக்கு எளியவனாக விளங்குகின்றான் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். சென்ற ஆறு பாடல்களில் இறைவன் பலவாறு அருளும் நிலையினை குறிப்பிட்ட ஞானசம்பந்தர், ஏழாவது பாடலில் சுவேதகேது நிகழ்ச்சியை குறிப்பிட்டு, பெருமானின் கருணைத் தன்மைக்கு சான்று காட்டினார் போலும். இறைவனின் அருட்தன்மையை உணர்ந்த அடியார்கள் மதிசூடி என்றும் மூன்று பொழுதிலும் தளர்ச்சி அடையாமல் புகழ்ந்து வணங்குகின்றனர் என்று எட்டாவது பாடலில் குறிப்பிடுகின்றார். தனது அடியார்களுக்கு அருள் புரியும் உரிமையை உடையவன் பெருமான் என்று ஒன்பதாவது பாடலில் கூறுகின்றார். இத்தகைய பெருமைகளை உடைய பெருமானின் தன்மையை உணராமல் சமணர்கள் மற்றும் சாக்கியர்கள் இருக்கின்றனர் என்று சம்பந்தர் பச்சாத்தாபம் கொள்வதை நாம் பத்தாவது பாடலில் உணர முடிகின்றது. இவ்வாறு பெருமான் அருள் புரியும் தன்மையையும், அடியார்கள் அவனை போற்றும் தன்மையையும் உணர்த்தும் வண்ணம் சம்பந்தர் அருளிய இந்த பத்து பாடல்களை ஓதும் அடியார்கள், வினைகள் தங்களை அணுகாத வண்ணம் இம்மையில் வாழ்ந்து, மறுமையில் தேவருலகினை ஆளும் வாய்ப்பினை அடைவார்கள் என்று பதிகத்தின் கடைப் பாடலில் கூறுகின்றார். நாமும் இந்த பதிகத்தை நன்கு கற்று, பெருமான் அருள் புரியும் தன்மையை புரிந்து கொண்டு, அவனது அருளுக்கு பாத்திரமாகும் வண்ணம் அவனை வழிபட்டு அவனது அருள் பெற்று உய்வினை அடைவோமாக.



Share



Was this helpful?