1.10 உண்ணாமுலை உமையாளொடும் திருவண்ணாமலை பண்:நட்டபாடை
பின்னணி:
தனது ஆறாவது தல யாத்திரையில் தொண்டை நாடு மற்றும் நடுநாட்டில் உள்ள தலங்கள் சென்று பல பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர் அந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அறையணிநல்லூர் தலம் வந்தடைந்தார். இந்த தலத்து இறைவனைப் பணிந்து பதிகம் பாடிய திருஞானசம்பந்தர்,திருக்கோயிலிலிருந்து வெளியே வந்த போது, ஆங்கிருந்த அன்பர்கள், அருகிலிருந்த திருவண்ணாமலையை சுட்டிக் காட்டினார்கள். அந்த மலையே பெருமானின் வடிவமாக தோன்றவும், மிகுந்த ஆர்வத்துடன் அந்த காட்சியை தனது கண்ணால் பருகுவார் போன்று, மலையை கைதொழுது உண்ணாமுலை உமையாளொடும் என்று தொடங்கும் பதிகம் பாடினார் என்று பெரிய புராணப் பாடல் எடுத்துரைக்கின்றது. அந்த பாடலை நாம் இங்கே காண்போம்.
அண்ணாமலை அங்கு அமரர் பிரான் வடிவு போன்று தோன்றுதலும்
கண்ணால் பருகிக் கைதொழுது கலந்து போற்றும் காதலினால்
உண்ணாமுலையாள் எனும் பதிகம் பாடித் தொண்டருடன் போந்து
தெண்ணீர் முடியார் திருவண்ணாமலையைச் சென்று சேர்வுற்றார்.
பெருமானின் உடலில் தனக்கு ஒரு பாகம் வேண்டும் என்று விரும்பிய அன்னை பார்வதி தேவி அதற்காக காஞ்சி மாநகரில் தவம் இருந்தாள் என்றும் அந்த தவத்தின் நோக்கம் ஒரு கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலையில் நிறைவேறியது என்றும் தல புராணம் கூறுகின்றது. இந்த காட்சி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத்தன்று அரங்கேற்றப் படுகின்றது. மலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட பின்னர், சுமார் ஐந்து நிமிடங்களுக்கு இறைவன் மாதொருபாகனின் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இந்த செய்தியை திருஞானசம்பந்தரும் இந்த பதிகத்தின் முதல் பாடலில் பெண்ணாகிய பெருமான் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார்.
பாடல் 1:
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித் திரள் மழலைம் முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே
விளக்கம்:
பெண்ணாகிய பெருமான் என்ற தொடர் மூலம் மாதொருபாகனாக பெருமான் இருக்கும் நிலையை இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.பெண் ஆண் ஆகிய இரண்டும் கலந்த அலியாக இருப்பவன் பெருமான் பெண்ணாக இருப்பவன் என்றும் பெண்ணாணாக இருப்பவன் என்றும் எண்ணற்ற திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. பல திருமுறைப் பாடல்களில் இறைவன் பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவன் என்றும் சொல்லப் படுகின்றது. மேலும் பெண்கள் அணிகின்ற தோடு, சிலம்பு, மேகலை ஆகிய ஆபரணங்களை அணிபவன் என்றும் குழல் (கூந்தல்) உடையவன் என்றும், மை பூசிக் கொண்டவன் என்றும் நுண்ணிய இடையினை உடையவன் குறிப்பிடப்பட்டு மாதொரு பாகனாக பெருமான் இருக்கும் தோற்றம் உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
மாதொரு பாகன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பதினெட்டாவது பாடல் தான். மிகவும் தொன்மையான கோலம்என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல், குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும்சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைத்து குறிப்பிடப்படும் இனிமையான பாடல்.
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ
இந்த கோலத்தைக் கண்டு மணிவாசகர் மனம் குளிர்ந்தது போன்று, நம்பியாண்டார் நம்பி மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் இந்தபழமையான கோலத்தை எவ்வாறு தாங்கள் கண்டனர் என்பதை கீழ்க்கண்ட பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த பாடல்கள் பதினோராம்திருமுறையில் உள்ளன. கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்ற பதிகத்தின் இருபத்தோராவது பாடலில் நம்பியாண்டார் நம்பி, இறைவனை, வலதுகாதில் குழையும் இடது காதில் தோடும் அணிந்தவனாக காண்கின்றார். கோஷன் என்ற சொல்லின் திரிபு கோடன்: விசயனுடன் போர் செய்வதற்காகஆரவாரத்துடன் வந்த சிவபெருமான் கோஷன் என்று அழைக்கப் படுகின்றார். சிவபிரான் பேரில் காதல் கொண்டு, அதன் காரணமாக உடல் மெலிந்து தனதுகை வளையல்களை இழந்த தலைவியின் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தோடு அணிந்த காது, இடது காது என்று குறிப்பிட்டு அம்மைக்கு உரியபகுதியில் தோடு அணிந்து இருப்பதை இங்கே சுட்டிக் காட்டுகின்றார்.
வேடன் என்றாள் வில் விசயற்கு வெங்கணை அன்று அளித்த
கோடன் என்றாள் குழைக் காதன் என்றாள் இடக் காதில் இட்ட
தோடன் என்றாள் தொகு சீர் தில்லையம்பலத்து ஆடுகின்ற
சேடன் என்றாள் மங்கை அங்கை சரி வளை சிந்தினவே
மேற்கண்ட பாடலில் தோடும் குழையும் அணிந்தவனாக குறிப்பிட்டு, மாதொரு பாகனின் நிலையை உணர்த்தியதுடன் நம்பியார் திருப்தி அடையவில்லைபோலும். இதே பதிகத்தின் ஐம்பதாவது பாடலில் மிகவும் விவரமாக, இறைவனின் வலது பாகத்தில் உள்ள பொருட்களையும் இடது பாகத்தில் உள்ளபொருட்களையும் பட்டியல் இடுகின்றார். இடம் என்ற சொல், இடது பாகம் மற்றும் இருக்கும் இடம் என்ற இரண்டு பொருட்களில் இந்த பாடலில் கையாளப்பட்டுள்ளது. வீ=பூச்செண்டு: பாந்தள்=பாம்பு; சங்கம்=வெண் சங்கால் அமைந்த வளையல்: அக்கு= எலும்பு மாலை: அங்கம்சரி=அங்கு+அம்+சரி: அங்கு,பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்: அம் சரி=அழகாக சரிந்த இடுப்பு. கங்கை, குண்டலம், மழு ஆயுதம், பாம்பு, தோலாடை, அக்கு மாலை, ஆகியவைஅம்பலவனை உணர்த்தும் பொருட்களாகவும் தோடு, பூச்செண்டு, சங்கு வளையல், சேலை ஆடை, அழகாக சரிந்த இடுப்பு ஆகியவை அணங்கினைஉணர்த்தும் பொருட்களாகவும் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன.
கங்கை இடம் வலம் பூ வலம் குண்டலம் தோடு இடப்பால்
தங்கும் கரம் வலம் வெம்மழு வீயிடம் பாந்தள் வலம்
சங்கம் இடம் வலம் தோல் இடம் வலம் அக்கு இடம்
அங்கம் சரி அம்பலவன் வலம் காண் இடம் அணங்கே
சேரமான் பெருமாள் நாயனாரும் தான் அருளிய பொன் வண்ணத் திருவந்தாதி என்ற பதிகத்தின் அறுபத்து ஐந்தாவது பாடலில் மாதொரு பாகனின்கோலத்தை விவரிக்கின்றார். வீரக்கழல், பாம்பு, திருநீறு, எரி, எலும்பு மாலை, மூவிலை வேல் நீரினைத் தாங்கிய சடை முதலியன பெருமானது வலதுபக்கத்திலும், இடது பகுதியில் பாடகம். மேகலை, சாந்து, பந்து, மலர் மாலை, மோதிரம், முதலியன பெருமானது இடது பக்கத்திலும் இருப்பதாக இங்கேகூறப்படுகின்றது.
வலம் தான் கழல் இடம் பாடகம் பாம்பு வலம் இடம்
மேகலம் தான் வலம் நீறு இடம் சாந்து எரி வலம் பந்து இடம் என்பு
அலர்ந்தார் வலம் இடம் ஆடகம் வேல் வலம் ஆழி இடம்
சலம் தாழ் சடை வலம் தண் அம் குழல் இடம் சங்கரற்கே
தோடுடைய செவியன் என்று, மூன்று வயது குழந்தையாக இருந்த போது, தனது முதல் பதிகத்தைத் தொடங்கிய திருஞான சம்பந்தர் பல பாடல்களில் தோடொர் காதினன் என்று குறிப்பிடுகின்றார். தோடு ஒரு காதில் அணீந்தவன் என்பதால் குழை மற்றொரு காதினில் அணிந்த மாதொரு பாகன் என்பது உணர்த்தப் படுகின்றது. சில பாடல்களில் தோடும் குழையும் அணிந்தவன் என்றும் குறிப்பிடப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.30.5) திருஞானசம்பந்தர் தோடும் குழையும் அணிந்தவனாக மாதொரு பாகனின் கோலத்தில் பெருமானை காண்கின்றார், கனபொற்குழை=எடை மிகுந்த பெரிய பொற்குழை; தாதார்=மகரந்தப் பொடிகள் பொருந்திய, தேனைத் தேடி வரும் வண்டுகள் சுவைப்பதற்கு முன்னர் பறிக்கப்பட்ட மலர்கள்; குழையும் தோடும் அணிந்துள்ள பெருமான், மகரந்த பொடிகள் நிறைந்த மலர்களை தனது குளிர்ந்த சடையில், கங்கை நதியினை அடக்கியதால் குளிர்ந்த சடையில், சூடியவனாக, தனது சடையினை தூக்கி முடிந்த நிலையில் காட்சி அளிக்கின்றான் என்று கூறுகின்றார். நாதன் என்ற சொல் எதுகை கருதி நாதான் என்று நீண்டது. அவன் அனைத்து உயிர்களுக்கும் நாதனாகத் திகழ்கின்றான் என்றும் சம்பந்தர் இங்கே கூறுகின்றார். போது=மலர்கள் (விதியாய் விளைவாய்)
காதார் கனபொற் குழை தோடது இலங்க
தாதார் மலர் தண் சடை ஏற முடித்து
நாதான் உறையும் இடமாவது நாளும்
போதார் பொழில் பூம்புகலி நகர் தானே
குரங்கணில்முட்டம் என்ற தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.31.4) சம்பந்தர் இறைவனை தோடார் குழையான் என்று அழைக்கின்றார். இதன் மூலம் இடது காதினில் தோடும் வலது காதினில் குழையும் அணிந்த பெருமான் என்பது உணர்த்தப் படுகின்றது. பாலனம்=காப்பாற்றுதல்; தனது அடியார்களை நன்கு காப்பாற்றும் பெருமான் என்றும் காக்கும் தொழிலைப் புரிபவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமாக உள்ளன. கூடாதன செய்த என்ற தொடர் மூலம் மற்றவர்கள் செய்ய முடியாத பல அரிய செயல்கள் செய்த பெருமான் என்று நமக்கு திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில்
தோடார் குழையான் நல்ல பாலன நோக்கி
கூடாதன செய்த குரங்கணின்முட்டம்
ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே
செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில் (1.61.8), திருஞான சம்பந்தர் இறைவனை தோடுடையான் குழையுடையான் என்றுகுறிப்பிடுகின்றார். பீடு=பெருமை; அடர்த்த=அடக்கிய, வலிமையை குறைத்த; சேடு=பெருமை; கணபதீச்சரம் என்பது திருக்கோயிலின் பெயர்.செங்காட்டங்குடி என்பது தலத்தின் பெயர் இவை இரண்டையும் இணைத்து திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுவதை நாம் உணரலாம்.சேர்ந்தாடும் என்று பேய்களுடன் இணைந்து நடனம் ஆடுவதை இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார். காட்டில் உறைபவனாக இருந்தாலும், பலநாடுகளிலும் உள்ள கோயில்களில் இறைவன் குடி கொண்டு இருப்பதால், சம்பந்தர் நாடுடையான் என்றும் இறைவனை அழைக்கின்றார். பீடு=பெருமை.எவராலும் வெல்ல முடியாதவனாக, செருக்குடன் திரிந்த அரக்கன் இராவணனின் வலிமையை முதலில் அடக்கிய பெருமை உடையவன் என்பதால், அரக்கன்தோளடர்த்த பீடு உடையான் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் தோடார் குழை தான் ஒரு காதில் இலங்க பெருமான் காட்சி தருவதாக கூறுகின்றார்.
தோடுடையான் குழை உடையான் அரக்கன் தன் தோள் அடர்த்த
பீடு உடையான் போர் விடையான் பெண் பாகம் மிகப் பெரியான்
சேடு உடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்தாடும்
காடு உடையான் நாடு உடையான் கணபதீச்சரத்தானே
பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.63.4) திருஞானசம்பந்தர், தோடும் தாழ்குழையும் அணீந்தவன் என்று குறிப்பிடுகின்றார். தாருகவனத்து இல்லத்தரசிகளை அங்கோல் வளையார் என்று குறிப்பிட்டு, அவர்களது இல்லத்திற்கு பிச்சைப் பெருமானாக சென்ற நிகழ்ச்சியை இங்கே குறிப்பிடுகின்றார். ஆநலம்=கற்புநெறி; ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் குழையும் அணிந்து மாதொரு பாகனாக இறைவன் திகழும் தோற்றம் இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. வெங்கோ=கோபம் கொண்ட தலைவன், இயமன்; தங்களின் இல்லத்திற்கு பலியேற்க வந்த பிச்சைப் பெருமானின் அழகில் மயங்கி தங்களது நிலையினை மறந்த தாருகவனத்து இல்லத்தரசிகள், தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு, பெருமானை பின்தொடர்ந்தனர். இந்த செய்கையால் அவர்கள் கற்பு நிலையிலிருந்து தவறியதாக கருதப்பட்டது. இதற்கு மூல காரணமாக இருந்த பெருமானை, கற்பினைக் கவர்ந்த கள்வன் என்று இங்கே கூறுகின்றார். உரிய காலத்தில், உயிர்களை, அவை அந்நாள் வரை குடிகொண்டிருந்த உடல்களிலிருந்து பிரிக்கும் இயமனை, அனைவரும் பழிக்கின்றனர். எனினும் அவன், தனது கடமையை தொடர்ந்து செய்ய வேண்டிய கடடாயத்தில் இருப்பதால்,பெருமானிடம் தனது நிலையினை அவன் எடுத்துரைக்க, பெருமான் அவனுக்கு தருமநெறியிலிருந்து வழுவாமல், எவ்வாறு தனது கடமையை நிறைவேற்றுவது என்பதை இயமனுக்கு கற்றுக் கொடுத்தார் என்ற செய்தி இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. இவ்வாறு இயமனுக்கு குருவாக இருந்த காரணத்தால், இயமனுக்கு தனது கடமையை அவன் செவ்வனெ செய்யும் வண்ணம் கற்றுக் கொடுத்து அவனை ஊக்குவித்த பெருமான் உறைகின்ற தலம் என்பதால் வெங்குரு என்ற பெயர் இந்த தலத்திற்கு ஏற்பட்டது என்றும் கூறுவார்கள். இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், தாருகவனத்து மகளிரின் கோல்வளைகளை பெருமான் திருடியதாகவும் கூறுகின்றார்.
சங்கோடு இலஙகத் தோடு பெய்து காதிலொர் தாழ்குழையன்
அங்கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆனலம் வவ்வுதியே
செங்கோல் நடாவிப் பல்லுயிர்க்கும் செய்வினை மெய் தெரிய
வெங்கோத் தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே
திருவிடைச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.78.6) திருஞானசம்பந்தர் பெருமானை, தோடணி குழையினர் என்று குறிப்பிடுகின்றார்.பீடு=பெருமை; பாஙகர்=அருகே; கோடல்=செங்காந்தள் பூ; ஒழுகுவ=தேன் ஒழுகும் தன்மை, தேன் சொரியும் பூக்கள்; தும்பி=வண்டு; தேனை உறிஞ்சும் முயற்சியில், வண்டுகள் பூவில் மூழ்கி விடுகின்றன என்று கூறுகின்றார்.
தோடணி குழையினர் சுண்ண வெண்ணீற்றர் சுடலையின் ஆடுவர் தோலுடையாகப்
பீடுயர் செயததோர் பெருமையை உடையர் பேயுடன் ஆடுவர் பெரியார் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் அரவமமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல் இடைச் சுரம் மேவிய இவர் வணம் என்னே
கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.103.1) ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் தூய குழையும் அணிந்தவன் என்றும் குழை ஆபரணம் தாழ்ந்து தொங்குகின்றது என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் இங்கே காண்போம். ஏடு உடையான்=தாமரை மலரினை தனது இருப்பிடமாக கொண்டுள்ள பிரமன்; பல நாடுகளும் சென்று பெருமான் பலி ஏற்கின்றான் என்பதை உணர்த்தும் வண்ணம் இரந்து உண்ணும் நாடுடையான் என்று கூறுகின்றார். ஏமம்=ஜாமம்;
தோடுடையான் ஒரு காதில் தூய குழை தாழ
ஏடுடையான் தலை கலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள் ஏமம் நடமாடும்
காடுடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே
பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.108.2) திருஞானசம்பந்தர் பெருமானை தோடமர் காதில் நல்ல குழையான் என்று குறிப்பிடுகின்றார். நிரம்பா மதி=வளராத சந்திரன், ஒற்றைப் பிறைச் சந்திரன், அடியார் பாடும் பாடல்களுக்கு மிகவும் மகிழ்பவன் பெருமான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில் நல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடரவம் பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
பாடலினால் இனியான் உறை கோயில் பாதாளே
பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.1.6) திருஞானசம்பந்தர் காதிலங்கு குழை சங்க வெண்தோடுடன் வைத்ததே என்று கூறுகின்றார். மாது=அழகு; மாது இலங்கிய=அழகுடன் விளங்கும்; மருங்கு=அருகே, பக்கம்; போது=மலரும் தன்மையில் உள்ள அரும்பு;அங்கமலம்=அம்+கமலம்=அழகிய தாமரை மலர்; மதுவார்=தேன் நிறைந்த; சோதி அம் சுடர் மேனி=ஒளியுடன் திகழும் அழகிய திருமேனி; இந்த பதிகத்தின் பாடல்கள் வினாவுரை முறையில் அமைந்துள்ளன. பெருமானின் பல செயல்களுக்கு பெருமானிடம் விடை கேட்பது போன்று அமைந்துள்ள பாடலகள் கொண்ட பதிகம்.
மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கெலாம்
போதில் அங்கமலம் மதுவார் புனல் பூந்தராய்ச்
சோதி அஞ்சுடர் மேனி வெண்ணீறணிவீர் சொலீர்
காது இலங்கு சங்க வெண் தோடு உடன் வைத்ததே
கோழம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.13.3) பெருமானை, வெண்குழை தோடு விளங்கிய காதன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஏதனை=உயிர்கள் செய்யும் குற்றங்களுக்கு காரணமானவன்; உயிர்கள் தங்களது வினைகளை நுகர்ந்து கழிக்க வேண்டிய நியதியை ஏற்படுத்தியவன் என்பதால், அத்தகைய வினைகளால் உயிர்கள் செய்யும் குற்றங்களுக்கு பெருமான் காரணனாக கருதப்படுகின்றான். குற்றம் நீ குணங்கள் நீ என்ற திருஞானசம்பந்தர் (ஆல்வாய் பதிகம்; 3.52) வாய்மொழி நமது நினைவுக்கு வருகின்றது. ஏதமிலா= குற்றங்கள் இல்லாத; இமையோர்=கண்கள் இமைப்பதையும் மூச்சுக் காற்றினை உள்ளே இழுத்து வெளிவிடுவதையும் கட்டுப்படுத்தும் தன்மை உடைய யோகியர்கள்; வேதன்=வேதத்தின் வடிவமாக விளங்குபவன்; கடிபொழில்=நறுமணம் நிறைந்த சோலைகள்;
ஏதனை ஏதமிலா இமையோர் தொழும்
வேதனை வெண்குழை தோடு விளங்கிய
காதனைக் கடிபொழில் கோழம்பம் மேவிய
நாதனை ஏத்துமின் நும் வினை நையவே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.49.3), நாம் பெருமானை தோடுடைய காதனே என்றும் சங்க வெண்குழையாய் என்று அழைத்து மாதொரு பாகனின் திருக்கோலத்தைப் போற்றிப் புகழவேண்டும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நாடு முழுவதும் சிறக்க வேண்டும் என்று நல்லார்கள் பெருமானிடம் வேண்டுவதாக திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு லோகா சமஸ்தாச் சுகினோ பவந்து என்ற வடமொழித் தொடரை நினைவூட்டுகின்றது. அனைத்து மந்திரங்களையும் சொல்லி முடித்த பின்னர், இந்த தொடருடன் எந்த வழிபாட்டினையும் முடிப்பது வழக்கம்.திருஞானசம்பந்தரும் வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பாடலின் (3.54.1) வையகமும் துயர் தீர்கவே என்று முடிப்பதும் நமது நினைவுக்கு வருகின்றது.
நாடெலாம் ஒளி எய்த நல்லவர் நன்றுமேத்தி வணங்குவார் பொழில்
காடெலாம் மலர் தேன் துளிக்கும் கடற்காழித்
தோடுலாவிய காதுளாய் சுரிசங்க வெண்குழையான் என்றென்று உன்னும்
வேடம் கொண்டவர்கள் வினை நீங்கல் உற்றார்களே
புறவார் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.53.2) திருஞானசம்பந்தர், பெருமானை தோடிலங்கிய காதயன்மின் துளங்க வெண்குழை என்று குறிப்பிடுகின்றார். நீடல்=நீளும் தன்மை கொண்ட, நீண்ட; கோடல்=காந்தள் மலர்; ச்ங்கரன்=இன்பம் அளிப்பவன்; அறைதல்=ஒலித்தல் இங்கே முரலுதல் என்பது பொருந்தும்; அலர=மலர; அளம்=குவியலாக; வண்டுகளின் உடலிலிருந்து உதிரும் மகரந்தத் தூள்கள் குவியலாக காணப்படுகின்றன என்று கூறுகின்றார். நிரை=வரிசையாக; அயல்=பக்கத்தில், அருகே; மின்=மின்னல் போல் ஒளிரும்; தோடு மற்றும் குழை ஆபரணங்களின் தன்மையில் காணப்படும் வேறுபாடு மிகவும் அழகாக உணர்த்தப் படுகின்றது. தோடு ஒரே இடத்தில் பொருந்தி விளங்க, குழை துள்ளி ஆடும் தன்மை சொல்லப் பட்டுள்ளது.
நீடல் கோடல் அலர வெண்முல்லை நீர்மலர் நிரைத் தாது அளஞ்செய்
பாடல் வண்டறையும் புறவார் புனங்காட்டூர்த்
தோடு இலங்கிய காதயன் மின் துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடும் சங்கரனே அடைந்தார்க்கு அருளாயே
தலைச்சங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.55.1), திருஞானசம்பந்தர், பெருமான் தோடும் குழையும் அணிந்து காட்சி தரும் தன்மையை குறிப்பிடுகின்றார். நலம்=அழகு; சங்கை=ஐயம், சந்தேகம்; கமுகின் காய்கள் செம்மை நிறத்தில் இருப்பதால், செங்காய் பைங்கமுகு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாழ்தல்=இறங்கி வருதல்; நிலவுலகத்து மனிதர்களுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் பெருமான் நிலவுலகம் வந்து பல தலங்களிலும் எழுந்தருளி இருக்கும் நிலையினை, தாழ்ந்தீர் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிட்டார் போலும். திருமாலுக்கு சங்கு அளித்து அருள் புரிந்த தலத்து இறைவனை அழகிய சங்கு என்ற பொருள் தரும் தொடருடன் தொடங்குவது மிகவும் பொருத்தமாக உள்ளது. பெய்து=அணிந்து;
நலச்சங்க வெண் குழையும் தோடும் பெய்து ஓர் நால்வேதம்
சொலச் சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர்
குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர்கொள் சோலைக் குயில் ஆலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே
பெரும்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.67.5) திருஞானசம்பந்தர், பெருமானை தோடுடையார் குழைக்காதில் என்று குறிப்பிடுகின்றார்.தனது உடலெங்கும் திருநீறு அணிந்து கொள்ளும் வழக்கம் உடைய பெருமான், தனது காதுகளிலும் திருநீறு அணிந்து கொள்கின்றார் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. பிரளய காலம் முடிந்து உலகின் அனைத்துப் பொருட்களும் அனைத்து உடல்களும் எரிந்து சாம்பலாக மாறும் நிலையில், எங்கும் இருள் சூழ்ந்து காணப்படும் நேரத்தில், நெருப்புப் பிழம்பு ஏந்தியுள்ள கரம் வீசி, ஊழித்தீயின் நடுவில் நின்று பெருமான் ஆடும் நடனமே, இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. அனலாட என்று முதல் அடியிலும், எரி வீசும் கை உடையார் என்று இரண்டாவது அடியிலும் குறிப்பிடப்படுவதை நாம் உணரலாம்.
தோடுடையார் குழைக் காதில் சுடுபொடியார் அனலாடக்
காடு உடையார் எரி வீசும் கையுடையார் கடல் சூழ்ந்த
நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த
பீடு உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.84.5) திருஞானசம்பந்தர், பெருமான் தோடும் குழையும் அணிந்தவனாக இருக்கும் நிலையை குறிப்பிடுகின்றார். கனல்=நெருப்பு; வீடு உடன் எய்துவார்கள்=பேரின்பம் தரும் முக்தி வீட்டினை இந்த பிறவி முடிந்தவுடனே அடையும் தகுதி படைத்தவர்கள்; வெறிநீர்=நறுமணம் உடைய நீர்; விதி=முறை; தினமும் பெருமானை நோக்கி செய்யப்படும் பூஜை முதலிய வழிபாடுகள் முடிந்த பின்னர்,மலர்கள் தோய்ந்து இருக்கும் நீருடன் சிறிது பாலையும் சேர்த்து, பூமியில் தெளித்து இதமர்க்யம் என்று மூன்று முறை சொல்லி முடிப்பார்கள். இந்த பழக்கத்தையே, விதி என்று வெறிநீர் என்று விரலால் தெளிப்ப என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். அந்தணர் குலத்தில் அவதரித்த மூன்று வயதுக் குழந்தை, தனது தந்தையார் பூஜை செய்யும் முறையினை உற்று கவனித்து தான் உணர்ந்த செய்திகளை பதிகத்தில் கூறும் நயத்தை நாம் உணரலாம்.தெளிந்த நீர்நிலைகளில் அந்தணர்கள் காலை, நண்பகல் மற்றும் மாலை நேரங்களில் சந்தியா வந்தனம் செய்வது வழக்கம். அத்தகைய நீர்நிலைகளில் மலர்ந்துள்ள மலர்களின் நறுமணம் நீருடன் கலந்து இருப்பதை வெறிநீர் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றாரோ என்றும் தோன்றுகின்றது. மேலும் சந்தியாவனத்தின் ஒரு பகுதியாக சூரியனுக்கு அர்க்கியம் வழங்கி சூரியன் மூலமாக அனைத்து தேவர்களுக்கும் தினமும் அர்க்கியம் வழங்கும் முறையில்.இரண்டு கைகளையும் இணைத்து நீரினை முகந்து, விரல்களின் நுனியால் அந்த நீரினை தெளிப்பது வழக்கம். எனவே இவ்வாறு செய்யப்படும் சந்தியாவந்தனம் இங்கே குறிப்பிடப்படுகின்றது என்ற விளக்கமும் பொருத்தம் ஆனதே.
தோடொரு காதனாகி ஓர் காது இலங்கு சுரி சங்கு நின்று புரளக்
காடு இடமாக நின்று கனலாடும் எந்தை இடமாய காதல் நகர் தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால்
நாடு உடனாடு செம்மை ஒலி வெள்ளம் ஆகும் நனிபள்ளி போலும் நமர்காள்
நறையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.87.3) ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் குழையும் அணிந்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சூடகம்=வளையல்; தனது அடியார்களுக்கு அருள் புரிய வருகின்ற பெருமான், பார்வதி தேவியுடன் வருகின்றான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பார்வதி தேவி தானே அருட்சக்தி; எனவே தொண்டர்களுக்கு அருள் புரிய விரும்பும் பெருமான், பிராட்டியுடன் வருவது தானே பொருத்தம்; ஈடகம்=பெரிய வீடுகள், பெருமை மிகுந்த வீடுகள்; பெருமான் பெரிய வீடுகள் சென்று பிச்சை ஏற்பதாக ஞானசம்பந்தர் கூறுகின்றார். எனவே அந்த வீடுகளில், தங்களின் மலங்களை பெருமானுக்கு பிச்சையாக அளிக்கும் பொருட்டு, பெருமானின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பக்குவமடைந்த உயிர்கள் இருப்பதை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். அத்தகைய அடியார்கள் இறைவனது அருளினால் செல்வந்தர்களாக, பெரிய வீடுகள் உடையவர்களாக இருந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெரிய வீடு, என்பதற்கு பெருமையில் சிறந்த வீடு என்று பொருள் கொண்டு பக்குவம் அடைந்த அடியார்கள் வாழும் பெருமை படைத்த வீடு என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. படு பிச்சன்=ஈடுபாடுடன் பிச்சை ஏற்கும் பெருமான்; மிகவும் அதிகமான உயிர்கள், முக்தி நிலை அடைந்து தன்னை விட்டு பிரியாது இருக்கவேண்டும் என்ற ஆவல் உடையவன் பெருமான். எனவே தான், மிகுந்த ஆர்வத்துடன், பக்குவப்பட்ட உயிர்களைத் தேடிக் கொண்டு அவனே முன்சென்று பிச்சை எடுக்கின்றான். இந்த தன்மையை புரிந்து கொண்ட அடியார்கள் அவனைப் புகழ்ந்து போற்றுகின்றனர் என்றும் கூறுகின்றார். வேழம்=யானை; இலங்கு=பொலிந்து விளங்க; நாடகம்= நடனம்; தொண்டர்கள் மனதினில் நின்ற மைந்தன் என்று பொதுவாக, இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில், தலத்து மகளிர்கள் இறைவனின் புகழினை பாடியும் நடனமாடியும் வெளிப்படுத்துவதை குறிப்பிடுகின்றார்.
சூடக முன்கை மங்கை ஒருபாகமாக அருள் காரணங்கள் வருவான்
ஈடகம் ஆன நோக்கி இடுபிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவத்
தோடகமாய் ஒர்காதும் ஒரு காதிலங்கு குழை தாழ வேழ உரியன்
நாடகமாக ஆடி மடவார்கள் பாடும் நறையூரின் நம்பன் அவனே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.113.6) சம்பந்தர் தோடும் குழையும் தனது காதுகளில் அணிந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.பீடு=பெருமை; கோடு=பெரிய கிளைகள்;
தோடு இலங்கும் குழைக் காதர் தேவர் சுரும்பார் மலர்
பீடு இலங்கும் சடைப் பெருமையாளர்க்கு இடமாவது
கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்கப் பெரும் செந்நெலின்
காடு இலங்கும் வயல் பயிலும் அந்தண் கடற் காழியே
தோணிபுரம் என்று அழைக்கப்படும் சிர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.81,10) தோடு குழை பெய்தவர் என்று குறிப்பிடுகின்றார்,வேடநிலை=இடுப்பினில் ஆடையின்றி இருக்கும் தமது வேட நிலை; ஆதர்=அறிவற்றவர்கள்; பெருமானைக் குறித்து பூரண அறிவற்ற மூடர்கள்; கேடு=தீமை விளைவிக்கும் சொற்கள்; சிவநெறியிலிருந்து மக்களை திசை திருப்ப பயன்படுத்தப் படும் வீண் பழிச்சொற்கள் என்பதால் தீங்கு விளைவிக்கும் சொற்கள் என்று கூறினார். அடைவு என்ற சொல்லுக்கு முறை என்றும் சரணம் அடையும் இடம் என்று இரண்டு விதமாக பொருள் கூறலாம். இரண்டும் பொருத்தமாக உள்ளன. பெய்தல்=அணிதல்; உறைவு=உறைவிடம்;
மூடு துவர் ஆடையினர் வேட நிலை காட்டும் அமண் ஆதர்
கேடு பல சொல்லிடுவர் அம்மொழி கெடுத்து அடைவினானைக்
காடு பதியாக நடம் ஆடி மடமாதொடு இரு காதில்
தோடு குழை பெய்தவர் தமக்கு உறைவு தோணிபுரமாமே
திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.5) குழையாராக விளங்கும் பெருமான் தோடு அணிந்தவராகவும் உள்ளார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மை=கருமை; மையமரும்=மரங்களின் கிளைகள் நெருங்கி வளர்ந்துள்ளதால் இருளடர்ந்து காணப்படும் சோலைகள்;சென்ற பாடலில் பெருமை மிகுந்த நடை நடக்கும் பாதம் என்றும் சிலம்பணிந்த திருவடி என்றும் மாதொரு பாகனாக விளங்கும் தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில், குழையும் தோடும் அணிந்தவர் என்று மாதொரு பாகனாக இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். இந்த தன்மையை மீண்டும் மீண்டும் சொல்வதில் தான், திருஞானசம்பந்தர் எத்துணை மகிழ்ச்சி அடைகின்றார். ஆர் தரு=பொருந்திய;
கையமரும் மழு நாகம் வீணை கலைமான் மறியேந்தி
மெய்யமரும் பொடிப் பூசி வீசும் குழையார் தரு தோடும்
பையமரும் அரவாட ஆடும் படர்ச்சடையார்க்கு இடமாம்
மையமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மாநகரே
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.107.3) தோடொரு காது ஒரு காது சேர்ந்த குழையான் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். தோடுடைய செவியன் என்று குறிப்பிட்டு தனது முதல் பதிகத்தினைத் தொடங்கிய ஞானசம்பந்தர், பல பாடல்களை தோடு என்று சொல்லுடன் தொடங்கி இன்பம் அடைகின்றார். தோடு என்ற சொல்லுடன் தொடங்கும் வண்ணம் ஞானசம்பந்தர் அருளிய பதினைந்து பாடல்கள் இதுவரை நமக்கு கிடைத்துள்ளன. மூன்று பதிகங்களின் முதல் பாடல்கள் தோடு என்ற சொல்லுடன் தொடங்குகின்றன. இழை=நூலிழை, இங்கே பெருமான் அணிந்துள்ள பூணூலை குறிப்பிடுகின்றது. பீடு=பெருமை; நாடு என்ற சொல் பல நாடுகளில் உள்ள அடியார்களை குறிப்பிடுகின்றது.
தோடொரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும்
பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி
நாடொரு காலமும் சேர நின்ற திருநாரையூரானைப்
பாடுமின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வாமே
சமணர்களின் சூழ்ச்சியினால், மத யானையைக் கொண்டு தனது தலையை இடற பல்லவ மன்னன் இட்ட கட்டளையை ஏற்று தன்னை நோக்கி வந்த மதயானையைக் கண்டு சிறிதும் அச்சம் கொள்ளாமல், அருளிய பதிகத்தின் (4.2.7) பாடலில், பெருமானின் தோற்றத்தை விவரிக்கும் அப்பர் பிரான் தோடு மற்றும் குழை அணிந்தவனாக பெருமானைக் கண்டதை நமக்கு உணர்த்தும் பாடல் இது. குவவு=தோளின் திரட்சியை குறிப்பிடுகின்றது, குலவு என்ற சொல் குவவு என்று திரிந்தது; திரண்ட தோள்களை உடையவன் பெருமான். விலைபெறு சங்கக் குழை=சங்கினால் செய்யப்பட்டதும் விலை உயர்ந்ததும் ஆகிய குழை ஆபரணம். விலை உயர்ந்த குழையினை குறிப்பிடும் பாடலில் விலையே இல்லாத கபாலம் என்று நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார். விலை மதிக்க முடியாத கபாலம் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும்.
கொலை வரி வேங்கை அதளும் குவவோடு இலங்கு பொன் தோடும்
விலை பெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் கடைப்பாடலில் (4.8.10) தோடும் சங்கக்குழையும் அணிந்தவனாக பெருமானை அப்பர் பிரான் காண்கின்றார். இந்த பாடலில் நாம் வேறெங்கும் காண முடியாத காட்சியை நமது கண் முன்னே அப்பர் பிரான் கொண்டு வருகின்றார். இறைவன் வேதங்கள் ஓதுவதையும் நடனம் ஆடுவதையும், மிகவும் அருகில் இருந்து எப்போதும் ரசிப்பவள் உமையம்மை. மாதொருபாகனாக இருக்கும் பெருமானின் திருவாயின் வலது பகுதி வேதத்தை சொல்வதாகவும், இடது பகுதி அந்த வேதத்தை கேட்டு ரசித்தபடியே புன்முறுவல் செய்வதாகவும் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.ஓலை=தோடு; புதுவிரி பொன் செய் ஓலை=ஒளியை பரப்பிக் கொண்டு இருக்கும் புதியதாக செய்யப்பட்ட பொன் தோடு. இந்த பாடலில் அப்பர் பிரான்,பெருமான் தனது உடலில் சடை ஒரு பாகத்திலும் குழல் மற்றொரு பாகத்திலும் உடையவராக உள்ளார் என்று கூறுகின்றார். புதிய சுருள் பொன்னால் செய்யப்பட்ட தோட்டினை ஒரு காதிலும், மற்றோர் காதினில் வளைந்த சங்கு தோளில் புரளும் படியாக அணிந்துள்ள பெருமானின், திருவாயின் ஒரு பகுதி வேத கீதங்களைப் பாட, திருவாயின் மற்றொரு பகுதி பெருமான் பாடும் வேத கீதத்தை ரசித்தபடியே புன்முறுவல் பூக்கின்றது. சடையாக காணப்படும் வலது பகுதியில், தேன் சொட்டும் கொன்றை மலர் விரிந்த படியே இருக்க, இடது பகுதியில் உள்ள கூந்தல் பின்னப்பட்டு அழகாக காணப்படுகின்றது, இவ்வாறு பெருமானின் தன்மையும் இயல்புகளும் ஒரு புறத்திலும் மற்றோர் புறத்தில் உமை அம்மையின் தன்மையும் இயல்புகளும் காணப்பட்டன என்று இந்த பாடலில் அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார்.
புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஓர் காது சுரி சங்கு நின்று புரள
விதி விதி வேத கீதம் ஒருபாடும் ஓதம் ஒருபாடும் மெல்ல நகுமால்
மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர்
இது இவர் வண்ணம் வண்ணம் இவள் வண்ணம் வண்ணம் எழில் வண்ணம் வண்ணம் இயல்பே
பாண்டி நாட்டில் பூவணம் திருத்தலம் அப்பர் பிரான் சென்றபோது, பெருமான் அவருக்குத் தனது திருக்கோலத்தைக் காட்டினார். அதனைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான் தான் கண்ட காட்சியை பதிகமாக வடித்தார். அந்த பதிகத்தின் (6.18) முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு காதினில் வெண் குழையையும், மற்றொரு காதினில் தோட்டினையும் அணிந்து பெருமான் அளித்த காட்சியை காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றியதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.
வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்று உரிவைப் போர்வை தோன்றும் எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
வாய்மூர் தலத்திற்கு அப்பர் பிரான் சென்றபோது அவருக்கு, சிவபெருமான் தனது நடனக்காட்சியை காட்டி அருளினார். அந்த நடனக் காட்சியை, பாடஅடியார் பரவக் கண்டேன் என்று தொடங்கும் திருத்தாண்டகத்தில் (6.77) அப்பர் பிரான் நமக்காக வடித்து இருக்கின்றார். இந்த பதிகத்தின் ஏழாவதுபாடலில், சிவபெருமானின் காதினில் தோடும் குழையும் கண்டதாக அப்பர் பிரான் சொல்கின்றார்.
குழையார் திருத்தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்
இழையார் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழிசை யாழ் வீணை முரலக் கண்டேன்
தழையார் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்
மழையார் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் (6.96.4) அப்பர் பிரான், பெருமானை கொண்டை கொண்டார் என்று குறிப்பிட்டு மாதொரு பாகனின் திருக்கோலத்தை உணர்த்துகின்றார். பொக்கணம்= திருநீற்றுப் பை; கொடியோன்=அசுரன் சலந்தரன்; செடியேன்=அழுக்கினை உடையவன்; புயம்=தோள்;அக்கு=சங்குமணிமாலை; கொண்டை=இழுத்து கட்டப்பட்டு முடித்த சடை என்றும் பொருள் கொள்ளலாம். செக்கர்=செவ்வானம்;
பொக்கணமும் புலித்தோலும் புயத்தில் கொண்டார் பூதப் படைகள் புடை சூழக் கொண்டார்
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்துலகும் படைத்து அவையும் அடங்கக் கொண்டார்
கொக்கிறகும் கூவிளமும் கொண்டை கொண்டார் கொடியானை அடல் ஆழிக்கு இரையாக் கொண்டார்
செக்கர் நிறத் திருமேனி திகழக் கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார் தாமே
வெஞ்சமாக்கூடல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.42.5) சுந்தரர் வெண் தோடும் குழையும் தனது காதுகளில் அணிந்த பெருமான் என்று குறிப்பிட்டு அவரது காதில் இருந்த குழையணி அசைந்தது என்று கூறுகின்றார். குழைக்கும் தோட்டினுக்கும் உள்ள அமைப்பு வேறுபாட்டினை உணர்த்தும் வண்ணம், துளை உடைய குழை என்று இங்கே கூறுகின்றார். பெருமானின் காதுகள் நீண்டு, அவரது தோள்களைத் தொட்ட நிலையினை தூங்கும் காது என்று உணர்த்துகின்றார். கள்ளையே, பிள்ளை, வெள்ளை என்ற சொற்கள் எதுகை கருதி களையே, பிளை, வெளை என்று இடையெழுத்து குறைந்து காணப் படுகின்றன. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், இறைவன் தனது சீரிய அடியார்களுள் ஒருவனாக தன்னையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தினை வைக்கின்றார்.
துளை வெண் குழையும் சுருள் தோடும் தூங்கும் காதில் துளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுதற்கு அரியாய்
வெளை மால்விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார் கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.84) ஒன்பதாவது பாடலில் சுந்தரர், இறைவனை, மகரக்குழையும் தோடும் அணிந்த காதுகளை உடையவனாக காண்கின்றார். இறைவன் தூது சென்றதையும், தன்னை ஆட்கொண்டதையும், தான் இறைவனைத்தலைவனாக ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்டு தனது வாழ்க்கையை மிகவும் சுருக்கமாக சுந்தரர் கூறும் நேர்த்தியை நாம் இங்கே காணலாம். மாதினைஒரு பாகம் கொண்டுள்ள சிவபிரானை மாதன் என்று அழைக்கின்றார். இறைவனின் கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து தான், நாதமும் பின்னர்ஓசையும் பிறந்த செய்தியை இங்கே நாதனும் நாதம் மிகுத்து ஓசையது ஆனவன் என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகின்றார். அடியார்கள் உள்ளத்தின் மீதுதான் வைத்துள்ள பற்றினை சிறிது நேரம் கூட நீக்காத இறைவன் என்று குறிப்பிட்டு, சிறந்த அடியார்கள் பெரும் பேற்றினையும் நமக்கு உணர்த்துகின்றார்.
நாதனை நாதம்மிகுத்து ஓசையதானானை ஞானவிளக்கொளியாம் ஊனுயிரைப் பயிரை
மாதனை மேதகுபத்தர் மனத்திறையும் பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்றனைஆள் தோழனை நாயகனைத் தாழ் மகரக்குழையும் தோடும்
அணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவது என்றுகொலோ கார்வயல்சூழ் கானப்பேருறை
காளையையே
மேகலை என்பது பெண்கள் தங்களது இடுப்பினில் அணியும் ஆபரணம். மாதொரு பாகனாக பெருமான் இருக்கும் நிலை, மேகலை அணிந்தவன் என்று பெருமானை குறிப்பிட்டு சொல்லப்படும் சில பாடல்களை நாம் இங்கே காண்போம். திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.06.9)தனது இடுப்பிலே மேகலை உடையவன் பெருமான் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். உலகிலுள்ள அனைத்து நூல்களுக்கும் பழமையான நூலாக வேதங்கள் கருதப்படுகின்றன. எனவே வேதங்கள் உணர்த்தும் வாழ்க்கைநெறிகள், தொன்மையான வழியாக கருதப்படுகின்றன. அதனை உணர்த்தும் முகமாக தொல்வழி என்று இந்த பாடலில் கூறுகின்றார். வேதங்களில் உணர்த்தப்படும் வாழ்க்கை நெறி தான் யாது. உண்மையான மெய்ப்பொருளாகிய சிவபெருமானின் தன்மைகளை முழுமையாக அறிந்து கொண்டு அவனையே தியானம் செய்து அவனது திருவடிகளை அடைவது தான் உயிரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது தான் வேதங்கள் உணர்த்தும் நெறி. சிவபக்தனாக திகழ்ந்த இராவணன், இந்த உண்மையை அறிந்தவன் தான். எனவே பெருமானையும் பெருமானது இருப்பிடமாகிய கயிலாய மலையையும் மதித்து போற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். எனினும் தனது உடல் வலிமையின் மீது அவன் கொண்டிருந்த அளவு கடந்த கர்வம் அவனை அறியாமையில் மூழ்குவித்து, கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்யும் வண்ணம் தூண்டியது. வரை=மலை; அரக்கன் இராவணனை மலையின் கீழே அடர்த்து வருத்திய பின்னர், பெருமான் அவன் மீது இரக்கம் கொண்டு பல விதங்களிலும் அருள் புரிந்ததை, பெருமான் புரிந்த மற்றொரு கருணைச் செயலாகிய சந்திரனுக்கு அபயம் அளித்ததை குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.
உரை செய் தொல்வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்து மதி சூடிய மைந்தனார்
கரை செய் காவிரியின் வடபாலது காதலான்
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே
தலைச்சங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.55.8) திருஞானசம்பந்தர், பெருமானை அரை ஆர்ந்த மேகலையீர் என்று அழைக்கின்றார்.திரை=அலைகள்; வரை=மலை; ஆர்ந்த=பொருந்திய, போன்ற, மேகலையாள் என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. திருமீயச்சூர் இளங்கோயிலில் உள்ள அம்பிகை மேகலாம்பிகை என்றே அழைக்கப்படுகின்றாள். மேகலை அணிந்த அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக கொண்டுள்ள இறைவன் என்ற பொருள் பட அரை ஆர்ந்த மேகலையீர் என்று இறைவனை சம்பந்தர் இங்கே அழைக்கின்றார்.
திரை ஆர்ந்த மாகடல் சூழ் தென் இலங்கைக் கோமானை
வரை ஆர்ந்த தோள் அடர விரலால் ஊன்று மாண்பினீர்
அரை ஆர்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை
நிரை ஆர்ந்த கோயிலே கோயிலாக நினைத்தீரே
வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.94.4) திருஞானசம்பந்தர், பெருமானை மேகலை உடையார் என்று குறிப்பிடுகின்றார்.கொந்து=கோபம்; கொந்து என்ற சொல்லுக்கு பூங்கொத்து என்று பொருள் கொண்டு பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வேல் என்ற விளக்கமும் பொருத்தமே. அஞ்சு=ஐந்து புலன்கள்; குஞ்சி=சடைமுடி; குஞ்சி மேகலை என்ற இரண்டு சொற்களையும் ஒன்றுக்கொன்று தொடர்பு அற்றவையாக கருதி,சடைமுடி உடையவர் மற்றும் இடுப்பினில் மேகலை ஆபரணம் அணிந்தவர் என்று பலரும் பொருள் கொள்கின்றனர். குஞ்சி மேகலை=சைவத் துறவிகள் சிலர் தங்களது சடைமுடியை மறக்கும் வண்ணம் துவராடை அணிவார்கள்; அத்தகைய ஆடையினை பெருமான் அணிந்துள்ளதாக இங்கே குறிப்பிடுகின்றார் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். குஞ்சிமேகலை என்ற தொடருக்கு பதிலாக குஞ்சி மேற்கலை என்று இருந்ததோ என்று வித்துவான் மாணிக்கவாசக முதலியார் அவர்கள் தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட விளக்கத்தில் கூறுகின்றார். சடையின் மேல் ஒற்றைப்பிறைச் சந்திரன் என்பதே குஞ்சிமேற்கலை என்ற தொடரின் பொருளாகும். இந்த கருத்து ஆய்வுக்கு உரியதாகும். அணியார்=மிகவும் அருகினில் இருப்பவர்; இதே பாடலின் நான்காவது அடியில் வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையினை உடையவர் பெருமான் என்று கூறுகின்றார். நுண்ணிய இடை என்று மகளிரின் இடையைத் தானே சொல்வது வழக்கம்.
பஞ்சின் நுண்துகில் அன்ன பைங்கழல் சேவடி உடையார்
குஞ்சி மேகலை உடையார் கொந்தணி வேல் வலன் உடையர்
அஞ்சும் வென்றவர்க்கு அணியார் ஆனையின் ஈருரி உடையார்
வஞ்சி நுண்ணிடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
மேகலை அணிந்த பிராட்டியுடன் இருப்பதாக கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.6.1) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கன பவளம்=பெரிய பவளம்: தானவன்= தேவர்களுள் ஒருவனாக கருதப்படாமல், தனியாக நிற்கும் ஒப்பற்ற தலைவன், சிவபெருமான். எனவே வானவர்களில் ஒருவனாக அவரை எண்ணுதல் தகாது, அவர் மற்ற தேவர்களிலிருந்து மாறுபட்டவர் என்று இங்கே அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். தக்கனது பதவிக்கு அஞ்சி, சிவபிரானை புறக்கணித்து அவன் செய்யும் யாகத்தில் அவிர்பாகம் பெறுவது தவறு என்று தெரிந்தும், அதனைத் தவிர்க்க முடியாமல்,அவனது யாகத்திற்குச் சென்ற தேவர்கள், பாற்கடலில் நஞ்சு திரண்டு எழுந்த போது, தங்களை எவ்வாறு காத்துக்கொள்வது என்பது தெரியாமல், மிகுந்த பயம் கொண்டு சிவபிரானிடம் முறையிட்டனர். அடுத்தவரின் பதவியை நினைத்து அவர்க்கு பயப்படுவதும், தங்களை காப்பாற்ற வேறொருவர் தேவைப்படும் நிலையில் இருப்பதும் தெய்வத்தின் குணங்கள் அல்லவே: இந்த இரண்டு நிகழ்ச்சிகளே, பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும், உலகில் உள்ள மற்ற உயிர் வகைகளில் ஒருவர் என்பதை மிகவும் தெளிவாக புலப்படுத்துகின்றது. உண்மை நிலை இவ்வாறு இருந்தாலும், இதனை மறந்து, மூவரில் ஒருவராக சிவபிரானை நினைத்து, அவரைப் போன்று தாங்களும் தேவர்கள் என்று சொல்லித் திரிவது எத்தைகைய பாவம் என்று மணிவாசகர் திருச்சதகம் பதிகத்தில் கூறுகின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான் சிவபெருமானை அப்பாலைக்கு அப்பாலன் என்று கூறுகின்றார். பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் இறைவனிடத்தில் ஒடுங்கி விடுகின்றன. அவ்வாறு தன்னிடம் ஒடுங்கியுள்ள உயிர்கள், தங்களது ஆணவ மலத்தினை நீக்கிக்கொண்டு உய்யும்பொருட்டு சிவபிரான் மறுபடியும் ஐந்தொழில்கள் ஆற்ற முனைகின்றான். இந்த ஐந்து தொழில்களை ஆற்றுவதற்கு இடமாக உள்ள இடம் சுத்த மாயா பிரபஞ்சம் அல்லது சுத்த மாயா புவனம் எனப்படுகின்றது. இதனைத் தான் அப்பர் பிரான் இங்கே பிரளயத்திற்கு அப்பாலோர் அண்டம் என்று நின்ற திருத்தாண்டகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த புவனத்தில் உள்ள தத்துவங்கள், சுத்த தத்துவங்கள் என்று அழைக்கப்படும். சிவம்,சத்தி, சதாசிவம், ஈசுவரம், சுத்தவித்தை என்பவை இங்குள்ள தத்துவங்கள் ஆகும். பிரளயத்திற்கு அப்பால் உள்ள சுத்த மாயா புவனத்தில் இருந்துகொண்டு,தான் நினைத்த மாத்திரத்தில் உலகங்களை எல்லாம் மீண்டும் படைத்து, உயிர்களை அவைகளின் வினைகளுக்கு ஏற்றவாறு உடல்களுடன் பொருத்தும் சிவபெருமான் என்பதால் அப்பாலைக்கு அப்பாலன் என்று இங்கே கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
வனபவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால்
சினபவள திண்தோள் மேல் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின்றாளால்
அனபவள மேகலையொடு அப்பாலைக்கு அப்பாலன் என்கின்றாளால்
கன பவளம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
கடிக்குளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.104.7) கூந்தல் கலவை சேர்தரு கண்ணியன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கண்ணி என்பது மாலையை குறிக்கும். பெருமானை தலை மாலை அணிந்தவன் என்றும் பிறைச் சந்திரனை மாலையாக அணிந்தவன் என்றும் கொன்றைக்கண்ணியான் என்றும் கூவிளங்கண்ணியான் என்றும் குறிப்பிடுகின்றனர். பெருமானின் சடையின்/கூந்தலின் ஒரு பாகத்தில் பூக்களும் மற்றொரு பாகத்தில் கண்ணியும் இருப்பதாக மாதொரு பாகனின் திருக்கோலம் உணர்த்தப் படுகின்றது. குலவு=விளங்கும்; கோலம்=அழகு; குலவு கோலம்=அழகுடன் விளங்கும்; குழாம்= மகளிர் கூட்டம்; புலவு புள்ளினம்=புலால் உண்ணும், மீன்களை உண்ணும் நாரை; சீர்=சிறப்பு;
குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் குழாம் பல குளிர் பொய்கை
புலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தைச் சீர்
நிலவி நின்று ஏத்துவார் மேல் வினை நிற்க கில்லா தானே
கழலும் சிலம்பும் அணிந்தவனாக பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடும் ஒரு சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம். புகலூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.2.6) திருஞானசம்பந்தர், பெருமான் காட்டினில் நடமாடும் தன்மையை குறிப்பிடுகின்றார். குழல் முதலிய இசைக் கருவிகள் ஒலிக்கும் பின்னணியில், குள்ளமான பூத கணங்கள் போற்றிசைப்ப, கழலின் ஓசையும் சிலம்பின் ஓசையும் ஒலிக்கும் வண்ணம், முற்றூழிக் காலத்தினில் நடமாடுகின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
கழலின் ஓசை சிலம்பின் ஒலியோசை கலிக்கப் பயில் கானில்
குழலின் ஓசை குறட்பாரிடம் போற்றக் குனித்தார் இடம் என்பர்
விழவின் ஓசை அடியார் மிடைவுற்று விரும்பிப் பொலிந்து எங்கும்
முழவின் ஓசை முந்நீர் அயர்வெய்த முழங்கும் புகலூரே
வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.35.7) திருஞானசம்பந்தர் கழலும் சிலம்பும் ஆர்க்க, உமையன்னையுடன் பெருமான் நின்றான் என்று கூறுகின்றார். நெறியார் குழல்= சுருண்ட கூந்தல்; அறிவார்=உணர்ந்து தியானிப்போர்; செறி-வளைந்த; நெறியார் குழலாளொடு நின்றான் என்ற தொடர் மூலம், மாதொரு பாகனாக நின்ற பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
செறியார் கழலும் சிலம்பு ஆர்க்க
நெறியார் குழலாளொடு நின்றான்
வெறியார் பொழில் வீழிம்மிழலை
அறிவார் அவலம் அறியாரே
நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (1.71.7) கழலும் சிலம்பும் ஒழிக்க பெருமான் வருவதாக கூறுகின்றார்.தவளம்=வெண்மை; புலம்பும்=ஒலிக்கும்; கீள்=பெரிய துணியிலிருந்து கிழிக்கப்பட்டு, கயிறு போல் திரிக்கப்பட்டது; குழல்=சுருண்ட சடை; இந்த பாடலில் கொக்கின் இறகர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கொக்கிறகு= கொக்கின் உருவத்தில் மற்றவருக்கு துன்பம் செய்து கொண்டிருந்த குரண்டாசுரன் என்ற அசுரனைக் கொன்றதன் அடையாளமாக பெருமான் தனது தலையில் சூடிக் கொண்ட இறகு; குரண்டாசுரன் என்ற அரக்கன், கொக்கின் உருவம் கொண்டு மனிதர்களை துன்புறுத்தி வந்தான் என்றும், பெருமான் அந்த கொக்கினை அழித்து மனிதர்களின் இடரினை தீர்த்ததும் அன்றி, கொக்கை அழித்ததன் அடையாளமாக கொக்கிறகினை தனது தலையில் அணிந்து கொண்டார் என்று கந்தபுராணம் கூறுகின்றது.
குழலார் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம்
தழலார் மேனித் தவள நீற்றர் சரி கோவணக் கீளர்
எழிலார் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடையேறிக்
கழலார் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தாரே
இந்த பாடலில் திருஞானசம்பந்தர், பெருமானை சரி கோவணக்கீளர் என்று அழைக்கின்றார். கீள் என்பது இடுப்பினில் காட்டப்படும் அரைஞாண் கயிறு.அந்த அரைஞாண் கயிற்றிலிருந்து தொங்கும் தன்மை உடைய கோவணம் சரிகோவணம் என்றும், அந்த கோவணம் கீளிலிருந்து தொங்குகின்றது என்பதை உணர்த்த, சரி கோவணக் கீளர் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பல திருமுறைப் பாடல்கள், கீளும் கோவணமும் அணிந்து எளிமையான கோலத்துடன் இருப்பவன் சிவபெருமான் என்று உணர்த்துகின்றன. சாம்பல் பூச்சும் கீளுடையையும் கொண்டவன் பெருமான் என்று கோலக்கா பதிகத்தின் முதல் பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். சடை பிறை சாம்பல் பூச்சு மற்றும் கீளுடை என்பன பெருமானின் அடையாளங்கள்; இறைவனது பற்றற்ற தன்மையை குறிக்கும் விதத்தில் மெய்யில் சாம்பல் பூசி கோவண ஆடை அணிந்திருக்கும் நிலையை நமக்கு இந்த பாடல் உணர்த்துகின்றது.மாதர்கள் குடைந்து விளையாடும் பொய்கைகள் கொண்ட தலம் என்று குறிப்பிட்டு, அந்த தலத்திலும், வாசனைப் பொடிகள் பூசி பட்டாடை உடுத்தி ஒய்யாரமாக இல்லாமல் பற்றின்றி விளங்கும் ஈசனை குறிக்கும் சம்பந்தப் பெருமான் இறைவன் ஏன் அவ்வாறு இருக்கிறான் என்ற கேள்வியை கேட்டு,இறைவனது பற்று அற்ற நிலை தான் காரணம் என்ற விடையை நமக்கு சொல்லாமல் சொல்லி விளக்கும் நேர்த்தியை இந்த பாடலில் நாம் காணலாம்.எல்லாம் இருந்தும் தான் பற்று அற்ற யோகியாக இருப்பதன் மூலம் உயிர்களுக்கு யோக நெறி காட்டி விடுதலை பெறுவதற்கான வழியையும் காட்டும் தலைவன் என்று பரமனை குறிப்பதை நாம் உணரலாம். கீள் என்றால் கிழிக்கப்பட்டது என்று பொருள். எனவே கீள் என்பதற்கு இடையில் கட்டியுள்ள துணியாலான கயிறு என்று பொருள் கொள்வதே பொருத்தம். சில பதிப்புகளில் கீழ் என்று உள்ளது. அது பொருத்தமற்றது. கீளுடை என்பது அந்த துணிக்கயிற்றுடன் சேர்ந்த கோவண ஆடையைக் குறிக்கும். தான் பற்றற்ற கோலத்தில் இருப்பதன் மூலம், உயிர்களும் உலகப் பொருட்கள் மற்றும் உலகிலுள்ள உயிர்கள் மீது தாங்கள் கொண்டுள்ள பற்றினை நீக்கி, இனிமேலும் பாசத்தால், அகப்பற்று மற்றும் புறப்பற்று ஆவிய இரண்டு விதமான பற்றுகளால் விளையும் வினைகளை தவிர்த்து, தன்னை வந்தடையும் பக்குவத்தைப் பெற வேண்டும் என்ற பெருமானின் விருப்பம் இந்த நிலை மூலம் உணர்த்தப் படுகின்றது. மேலே குறிப்பிட்ட நறையூர் சித்தீச்சரம் தலத்தின் பாடலில், கழலார் சிலம்பு ஒலிக்க வருவார் என்ற குறிப்பின் மூலம் பெருமான் சிலம்பும் கழலும் அணிந்த தன்மையாராக, மாதொரு பாகனின் திருக்கோலத்தை உணர்த்தும் விதமாக இருப்பதை உணர்த்துகின்றார்.
இடைமருது தலத்தின் மீது அருளிய பாடலில் (1.95.6) திருஞானசம்பந்தர், ஒரு காலில் சிலம்பும் மற்றொரு காலில் கழலும் ஒலிக்க அணிந்து கொண்டுள்ள மாதொரு பாகராகிய மருதர் அழகிய தோற்றத்துடன் விளங்குகின்றார் என்றும், அவரைத் தொழுது பணியும் அடியார்களை விட்டு, அந்நாள் வரை அவர்களை வருத்திய வினைகள் நீங்கிவிடும் என்று கூறுகின்றார். பிரார்த்தம் ஆகாமியம் சஞ்சிதம் என்பன மூன்று வகையான வினைகள். பிராரத்தம் என்பது அந்தந்த உயிர்களின் தன்மைக்கு ஏற்ப, இந்த பிறவியில் நுகர்ந்து கழிப்பதற்காக ஒதுக்கப்பட்ட வினைகளின் தொகுதி. இந்த வினைகள், நமக்கு புலப்படாவண்ணம்,உடலில் உயிர் உள்ளளவும் செயல் படும் தன்மை உடையன. இவற்றை நுகர்ந்து கழிக்கும் தருணத்தில், நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களின் தன்மைக்கு ஏற்ப மனம் சலனமடைந்து தான் செய்யும் செயல்களுக்கு ஏற்ப, ஆகாமிய வினைகளை தேடிக் கொள்கின்றது. எண்ணற்ற பல பிறவிகளில் நாம் ஈட்டிய வினைகளில், இந்த பிறவிக்கு என்று இறைவனால் ஒதுக்கப்பட்ட வினைகள் போக எஞ்சிய வினைகள், சஞ்சித வினைகளாக நாம் இனி எடுக்கவிருக்கும் பிறவிகளுக்காக காத்து நிற்கின்றன. இந்த ஆகாமிய வினைகள், இந்த உயிரின் சஞ்சித வினைகளுடன் சேர்ந்து அந்த வினைகளை மேலும் அதிகரித்து, நாம் எடுக்கவிருக்கும் பிறவிகளின் தன்மையையும் எண்ணிக்கையையும் மேன்மேலும் அதிகரிக்கின்றன. எனவே நாம் முதலில் ஆகாமிய வினைகளை தவிர்க்கவேண்டும். அவற்றைத் தவிர்க்க, நாம் பழைய வினைகளின் தாக்கத்தால் ஏற்படும் இன்ப துன்பங்களை, மனச் சலனம் ஏதுமின்றி, இன்ப துன்பங்களை ஒன்று போல் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு செயல்படுவதால், நாம் ஆகாமிய வினைகளை தவிர்ப்பதும் அன்றி, நமது உயிர், மேன்மேலும் பல பிறவிகளில் எதிர்கொள்ளும் வினைகளை, மனச் சலனமின்றி சந்திக்கும் பக்குவத்தை அடைந்து விடுகின்றது. இத்தகைய பக்குவம் அடைந்த உயிரினுக்கு, மேலும் பல பிறவிகள் கொடுத்து அந்த பிறவிகளில் வினைகளை நுகரச் செய்வதால், உயிர்கள் தனது போக்கினில் எந்த விதமான மாறுதலும் அடைவதில்லை என்பதால், பெருமான் சஞ்சித வினைகளை மொத்தமாக நீக்கி, இனி வரவிருக்கும் பிறவிகளையும், அந்த உயிர்களுக்கு தடுத்து விடுகின்றான். இத்தகைய பக்குவத்தை அடைவதற்கு, நமது ஞானம் விரிவடைவதற்கு, இறைவனின் அருள் கைகூட வேண்டும். அந்த ஞானம் பெற்று நமது புத்தி விரிவடைவதற்கு மருத வாணரை சிந்தனை செய்யவேண்டும் என்று இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் அந்த ஞானத்தின் உதவி கொண்டு, இறைவனின் அருளால், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, நம்மை வருத்தும் வினைகளிலிருந்து விடுதலை அடையலாம் என்று வழிகாட்டுகின்றார்.
கழலும் சிலம்பும் ஆர்க்கும் எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க்கு உழலும் வினை போமே
பெருமான் தனது கால்களில் கழலும் சிலம்பும் அணிந்திருப்பதாக சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.117.7)திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சொற்களை இடம் மாற்றி வைத்து அருளிய பதிகம் என்பதால் மொழிமாற்றுப் பதிகம் என்று அழைக்கப்படுகின்றது. காலது கழல் சிலம்பு, கங்கை கற்றைச் சடை உள்ளால், மாலது பாகம், மழுவது ஏந்தல், வளர் கொழுங்கோட்டு ஆலது இருப்பர், அடல் ஏறு ஊர்வர், என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். கொழுங்கோடு=செழிப்பாக உள்ள மரக்கிளை; ஏறு=எருது; ஊர்தல்=எருதினை வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கு செல்லுதல்; சேல்=மீன்; கண்ணி=கண்ணினை உடைய உமையன்னை; மீன் போன்று அழகிய கண்களை உடையவள் என்று பொருள்படும்படி, மதுரை தேவியை அங்கயற்கண்ணி என்று அழைப்பார்கள்.
காலது கங்கை கற்றைச் சடையுள்ளால் கழல் சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர் கொழுங்கோட்டு
ஆலது ஊர்வது ஆடல் ஏற்று இருப்பர் அணிமணி நீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே
திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.4.2) திருஞானசம்பந்தர், கழலும் சிலம்பும் ஆர்க்க வல்லீர் என்று பெருமானை அழைத்து,சிவந்த வண்ணத்தில் திருமேனி கொண்டிருப்பதன் காரணம் யாது என்று கேட்கின்றார். சந்து=சந்தனம்;
சந்து உயர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டு தம்
சிந்தை செய்து அடியார் பரவும் திருவான்மியூர்ச்
சுந்தரக் கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆக்கிய வண்ணமே
திருக்களர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.51.3) திருஞானசம்பந்தர், கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் நடமாடும் வல்லமை பெற்றவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். மைந்தர்=மக்கள்; சேடர்=ஒழுக்கத்தில் சிறந்த பெரியோர்கள்; நிமலன்=மலங்களின் சேர்க்கை அற்றவன்;நீடவல்ல=நீண்ட காலமாக எழுந்தருளியுள்ள; இந்த பாடலில், அடியார்களின் சார்பாக, திருஞானசம்பந்தர், அடியார்களுக்கு பெருமான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுவதை நாம் உணரலாம்.
பாடவல்ல நன் மைந்தரோடு பனிமலர் பல கொண்டு போற்றிச்செய்
சேடர் வாழ் பொழில் சூழ் செழுமாடத் திருக்களருள்
நீடவல்ல நிமலனே நிறை கழல் சிலம்பு ஆர்க்க மாநடம்
ஆட வல்லானே அடைந்தார்க்கு அருளாயே
கோட்டாறு தலத்தின் மீது அருளிய பாடலில் (2.52.5) சம்பந்தர், பேய்க் கணங்கள் புகழும் வண்ணம் கானகத்தில், வளமான சிலம்பும் கழலும் ஒலிக்க நடனமாடும் அழகிய பெருமான் என்று கூறுகின்றார். எழுவார்=பஞ்சாக்கர மந்திரத்தை சிந்திந்து எழும் சித்தர்கள்;
பழைய தம் அடியார் துதி செயப் பாருளோர்களும் விண்ணுளோர் தொழக்
குழலும் மொந்தை விழாவொலி செய்யும் கோட்டாற்றில்
கழலும் வண் சிலம்பும் ஒலி செயக் கானிடைக் கணம் ஏத்த ஆடிய
` அழகனென்று எழுவார் அணியார் வானவர்க்கே
குடவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.58.2), தனது திருவடிகளில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம், பெருமான் பலியேற்கச் செல்கின்றார் என்று திருஞானசம்பந்தர கூறுகின்றார். செடியார்ந்த=முடை நாற்றம் கொண்ட; குடியார்ந்த=குடியாக உள்ள;குலாவி=கொண்டாடி; படியார்ந்த=படிகள் நிறைந்த; இந்த தலத்தில் உள்ள பெருமான் சன்னதிக்கு செல்வதற்கு படிகள் ஏறிச் செல்ல வேண்டிய நிலையை உணர்த்துகின்றார். படியார்ந்த கோயில் என்று குறிப்பிட்டு, ஈசன் உலகநாதனாக விளங்கி அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் தன்மையை, படியார்ந்த என்ற சொல் நமக்கு நினைவூட்டுகின்றது என்று பொருள் கொள்வதும் சிறப்பே. படி என்ற சொல்லுக்கு உலகம் என்று பொருள் கொண்டு, உலகம் சிறப்புடன் போற்றும் வண்ணம் திகழ்ந்த கோயில் என்ற விளக்கமும் பொருத்தமானதே. பைங்கழல்=பசும் பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல்; சிலம்பு என்பது பெண்கள் அணியும் அணிகலன். சிலம்பும் கழலும் அணிந்தவர் என்று குறிப்பிடுவதன் மூலம் மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனாக பெருமானை சித்தரிப்பதில் பெருமகிழ்ச்சி அடைபவர் திருஞானசம்பந்தர். தோடும் குழையும் அணிந்தவனாகவும், சிலம்பும் கழலும் அணிந்தவனாகவும், சடையும் கூந்தலும் உடையவனாகவும், பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவனாகவும், எண்ணற்ற பாடல்களில் அவர் குறிப்பிடுகின்றார்.
அடியார்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப அங்கையில்
செடியார்ந்த வெண்டலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர்
குடியார்ந்த மாமறையோர் குலாவி ஏத்தும் குடவாயில்
படியார்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே
திருவடிகளில் பொருந்திய பசும்பொன் கழலும் சிலம்பும் ஒலித்து ஆரவாரம் செய்ய, தனது அழகிய கையினில் முடை நாற்றம் கொண்டதும் உலர்ந்து வெண்மையாக காணப்படுவதும் ஆகிய பிரமகபாலத்தை ஏந்திய வண்ணம் பலியேற்பதற்காக உலகம் எல்லாம் திரிபவரும் ஆகிய பெருமான், சிறந்த மறையோர்கள் குடிகளாக வாழ்ந்து பெருமானைப் புகழ்ந்து கொண்டாடும் குடவாயில் தலத்தினில் யானை ஏறிச் செல்ல முடியாத வண்ணம் படிகள் நிறைந்த மாடக்கோயிலினை, இறைவனாகிய தான் உறையும் கோயிலாக பாவித்து தொடர்ந்து உறைகின்றார் என்பதே மேற்கண்ட பாடலின் திரண்ட பொழிப்புரையாகும்.
நறையூர் சித்தீச்ச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.87.8) திருஞானசம்பந்தர் பெருமானை கழலும் சிலம்பும் அணிந்தவனாக சித்தரிக்கின்றார். அரையன்=அரசன்; தனது தவறினை உணர்ந்து, இறைஞ்சிய அரக்கன் நலன்கள் பல பெறுகின்ற வண்ணம் அருள் புரிந்த பெருமானை,நம்பன் என்று அழைப்பது பொருத்தம் தானே. அவ்வாறே நாமும் நமது தவறுகளை உணர்ந்து பெருமானிடம் இறைஞ்சி வேண்டினால் நம்மையும் ஆட்கொண்டு பெருமான் அருள் புரிவார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுவதை நாம் உணரலாம். நடலை=துன்பம்; கழல்களும் சிலம்பும் அணிந்த பெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் எதிரும் சிலம்பு என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். மாதொரு பாகனாக விளங்கும் பெருமான், தனது வலது காலில் கழலும் இடது காலில் சிலம்பும் அணிவதை நாம் அறிவோம். இவ்வாறு இரு வேறு கால்களில் கழல்கள் மற்றும் சிலம்பு அணிந்துள்ள கோலத்தை இங்கே குறிப்பிடுகின்றார். எதிரே என்ற சொல் மூலம், கழல்கள் பூண்டுள்ள காலினுக்கு எதிரே உள்ள காலில், சிலம்பினை அணிந்துள்ளார், என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
அடல் எருது ஏறுகந்த அதிரும் கழற்கள் எதிரும் சிலம்பொடு இசையக்
கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன்
உடலோடு தோள் அனைத்து முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள்
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆளவல்ல நறையூரின் நம்பன் அவனே
கடிக்குளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.104.1) திருஞானசம்பந்தர், குரைகழல் சிலம்பார்க்க நிற்பவர் சிவபெருமான் என்று கூறுகின்றார்.இந்த தலத்து இறைவனின் திருநாமம், கற்பகநாதர் என்பது, கற்பகம் என்று இந்த பதிகத்து பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. முன்வினை=பழைய பல பிறவிகளில் ஈட்டப்பட்ட வினைகள்; பழைய பல பிறவிகளில் நாம் சேர்த்துக் கொண்ட வினைகள் தாமே, நாம் இனி எடுக்கவிருக்கும் எண்ணற்ற பிறவிகளுக்கு காரணமாக இருந்து நம்மைத் தொடர்ந்து வருகின்றன. கடிக்குளத்து கற்பகத்தை தலை சாய்த்து வணங்கும் அடியார்களை இந்த வினைகள் மூடாது, அதாவது தொடராது என்று கூறுகின்றார். வினைகள் நம்மைத் தொடராது நம்மை விட்டு அகன்றுவிட்டால், நாம் வினைகள் அற்றவர்களாக மாறி,பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்றோம் அல்லவா.
பொடிகொள் மேனி வெண்ணூலினர் தோலினர் புலியுரி அதளாடை
கொடிகொள் ஏற்றினர் மணி கிணின் என வரு குரை கழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தைத் தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே
வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.4) திருஞானசம்பந்தர், ஒலிக்கும் வீரக்கழலும் சிலம்பும் ஆரவாரம் செய்யும் வண்ணம் பெருமான் நின்று ஆடும் அற்புதம் அதிசயம் என்று கூறுகின்றார். கதிர்=சூரியன்; அறத்திறம்=தருமத்தின் பல வகைகள் மற்றும் வேதங்கள் ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ள நுண்ணிய கருத்துக்கள்; மருந்துமாக நின்று உயிர்களை காக்கும் தன்மையன் என்று இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நெஞ்சின் தாக்கத்தினால் உலகம் அழியாத வண்ணம், அந்த விடத்தினை உட்கொண்ட செய்தி,கறைகொள் கண்டத்தர் என்ற தொடரினால் உணர்த்தப் படுகின்றது. காலை மாலை நேரங்களில் சிவந்த வண்ணத்துடன் காணப்படும் சூரியன், பகல் பொழுதினில் வெண்மை நிறத்துடன் காணப் படுகின்றான். சிவந்த திருமேனியை உடைய இறைவன், தனது உடலின் மீது திருநீற்றினை பூசியவண்ணம் வெண்மை நிறத்துடனும் காணப்படுகின்றான். வலஞ்சுழி தலத்தினில் மகிழ்ச்சியுடன் உறையும் பெருமான், அனைத்து உடல்களும் உயிரிலிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் உலகமே சுடுகாடாக காட்சி தரும் நிலையில், அந்த காண்பதற்கு அரிய அந்த காட்டினில், உலகத்தை மீண்டும் தோற்றுவித்து உயிர்களுக்கு தங்களது மலங்களைக் கழித்துக் கொள்ள ஒரு வாய்ப்பினை அளிக்கும் எண்ணம் கொண்டு இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடையும் பெருமான், தான் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஆரவாரம் செய்யும் வண்ணம் நடனமாடும் அற்புதத்தை நாம் அறியோம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். .
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கு அன்று
இறைவர் ஆலிடை நீழலிலிருந்து உகந்து இனிது அருள் பெருமானார்
மறைகள் ஓதுவர் வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து
அறை கழல் சிலம்பார்க்க நின்றாடிய அற்புதம் அறியோமே
கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.107.3) திருஞானசம்பந்தர், தனது உடலின் ஒரு பாகத்தில் தேவியை ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், தனது கால்களில் அணிந்துள்ள சிலம்பும் கழலும் ஒலிக்கும் வண்ணம், பல இல்லங்களுக்கும் பலியேற்கச் செல்கின்றார் என்று கூறுகின்றார்.தான் பிச்சையாக ஏற்கும் உணவினை மிகுந்த விருப்பத்துடன் உட்கொள்ளும் எண்ணத்துடன், பெருமான் பிச்சை ஏற்பதாக இந்த பாடலில் கூறுகின்றார்.பிச்சை ஏற்கும் நாடகத்தில், பெருமான் உண்மையாக விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வது, பக்குவமடைந்த அடியார்கள் தங்களிடமிருந்து பிரித்துக் கொடுக்கும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களைத் தானே.
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பு ஆர்க்க
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவார் அகந்தொறும் இடு பிச்சைக்கு
உண்ணலாவதோர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து
அண்ணல் நண்ணு கேதீச்சரம் அடைபவருக்கு அருவினை அடையாவே
புகலி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.3.4) திருஞானசம்பந்தர், தனது பாதங்களில் திகழும் கழலும் சிலம்பும் ஆரவாரத்துடன் ஒலிக்க,முழவத்தின் பின்னணியில் மிகவும் அரிதான நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். நிழல்=ஒளி; முருகு=நறுமணம்; அலம்ப=ஆரவாரத்துடன் ஒலிக்க;
நிழல் திகழ் மழுவினை யானையின் தோல்
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே
கழல் திகழ் சிலம்பொலி அலம்ப நல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே
முடிமேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி
அடியார் அவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.57.6) திருஞானசம்பந்தர் பொறுமையாக இருக்கும் பெருமான் என்று குறிப்பிட்டு, அவர் கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் அணிந்துள்ளார் என்று கூறுகின்றார். பொறுமையாக இருப்பவர் சிவபெருமான் என்று ஏன் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. அவரே அதற்கு இந்த பாடலின் இரண்டாவது அடியில் விளக்கம் அளிப்பதை நாம் உணரலாம்.கங்கை நதி, பிறைச் சந்திரன் மற்றும் பாம்பினை சுமந்து கொண்டிருக்கும் சடையில், விரிந்த கொன்றை மலர்களையும் சுமந்து கொண்டிருந்தாலும், அந்த சுமையினை பொருட்படுத்தாதமல் அமைதியாக பெருமான் திகழ்கின்றார் என்று கூறுகின்றார் போலும். கமை=பொறுமை; அமையொடு= அமைதியாக
கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப
சுமையொடு மேலும் வைத்தான் விரிகொன்றையும் சோமனையும்
அமையொடு நீண்ட திண்தோள் அழகாய பொற்றோடு இலங்க
உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே
திருக்கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.79.6) திருஞானசம்பந்தர், பெருமான் தனது கழல்களில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்க பலிக்கு வருகின்றார் என்று கூறுகின்றார். இந்து சமயங்களின் ஆறு பிரிவுகளாக கருதப்படுவன, சைவம், வைணவம், சாக்தம், ச்காந்தம்,காணாபத்தியம் மற்றும் சௌரம் என்பன. இவற்றுள் காணாபத்தியம் (கணபதி), ச்காந்தம் (முருகன்) வைணவம் (திருமால்) சாக்தம் (உமை அன்னை)சௌரம் (சூரியன்) ஆகிய ஐந்து சமயக் கடவுளர்களும் சிவத்தின் அம்சமாக கருதப் படுவதால், அந்த சமயத்தவர்கள் செய்யும் வழிபாடும் சிவபெருமானையே சென்று அடைவதாக திருஞானசம்பந்தர் கருதுவது இங்கே வெளிப் படுகின்றது. எனவே மேற்கண்ட சமயத்தவர்கள் அனைவரும் இறுதியில் அடைவது சிவானந்தம் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. வேறு இரதி=உலக இன்பங்களிலிருந்து வேறான சிவானந்தம்; கம்பம்=நடுக்கம், சிவானந்த மேலீட்டல் பெறுகின்ற உடல் நடுக்கம். மெய் தான் விரும்பி விதிர்விதிர்த்து என்றும் ஆகம் விண்டு கம்பம் என்றும் திருவாசகத்தில் குறிப்பிடப் படுவது, இத்தகைய நடுக்கமே ஆகும். இத்தகைய தன்மை படைத்த அடியவர்கள் வாழும் தலம் கோகரணம் என்று கூறுகின்றார்.
நீறு திருமேனி மிசை ஆடி நிறை வார்கழல் சிலம்பு ஒலி செய
ஏறு விளையாட இசை கொண்டு இடுபலிக்கு வரும் ஈசன் இடமாம்
ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் நாமம் மிகக்
கூறு மனம் வேறு இரதி வந்தடியர் கம்பம் வரு கோகரணமே
திருக்கோணமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.123.1) திருஞானசம்பந்தர் பெருமானை, நிரைகழல் அரவம் சிலம்பொலி அலம்பும் நிமலர் என்று குறிப்பிடுகின்றார். நிரை= வரிசை: பெருமான் தனது வலது திருவடியில் வரிசையாக அமைந்துள்ள கழல்களையும் இடது திருவடியில் சிலம்பும் அணிந்துள்ளார் என்றும் அவைகள் அனைத்தும் அவர் நடனமாடும்போது ஒலிக்கின்றன என்றும் கூறுகின்றார். கெழு=ஒதுக்கப்ப்ட்டு வளரும்; வரை கெழு மகள் என்று இமயமலைச் சாரலில் உள்ள ஒரு தடாகத்தில், தாமரை மலர் மீது குழந்தையாக தோன்றி, இமவானால் கண்டெடுக்கபட்டு உமையன்னை வளர்ந்த தன்மையை உணர்த்துகின்றார்.
நிரைகழல் அரவம் சிலம்பொலி அலம்பும் நிமலர் நீறணி திருமேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்தும் காரகில் பிளவும் அளப்பரும் கனமணி வரன்றிக்
குரைகடல் ஒதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே
சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (4.08.06) கழலையும் சிலம்பினையும் அழகுற அணிந்தவர் சிவபெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கணித்தல்=குறிப்பிடுதல்: வேப்ப மரம் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் பூக்கும் தன்மை உடையது. வேப்ப மரம் பூக்கும் காலமும் திருமணங்கள் நடைபெறும் காலமும் ஒன்றாக இருப்பதால், திருமண காலத்தை வேப்ப மரங்கள் பூத்து கணிப்பதாக குறிப்பிட்டு, கணிவளர் வேங்கை என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. அவள் வண்ணம் வண்ணம் அவர் வண்ணம் வண்ணம் அழலே என்ற தொடர் மூலம் பெருமான் மாதொரு பாகனாக திகழும் தன்மையை நேரிடையாக குறிப்பிடுவதையும் நாம் உணரலாம்.
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகார்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ண இயலார் ஒருவர் இருவர்
மணி கிளர் மஞ்ஞை ஆல மழையாடு சோலை மலையான் மகட்கும் இறைவர்
அணிகிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ணம் வண்ணம் அழலே
பெருமானின் திருவடிகளின் சிறப்பினை உணர்த்தும், இன்னம்பர் தலத்து பதிகப் பாடல் ஒன்றினில் (4.100.6) சிலம்பும் கழலும் முறையாக பொருந்திய திருவடிகள் பெருமானின் திருவடிகள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கீண்டும்=கிழித்தும்: கிளர்ந்தும்=நிலத்தை கிளறித் தோண்டியும்:ஆரணங்கள்=வேதங்கள்; ஈண்டும்=பொருந்திய, வந்தடைந்த;
கீண்டும் கிளர்ந்தும் பொற்கேழல் முன் தேடின கேடுபடா
ஆண்டும் பல பல ஊழியும் ஆயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு
ஈண்டும் கழலின இன்னம்பரான் தன் இணை அடியே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.101.1) அப்பர் பிரான், பெருமானை சிலம்பு அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். இதன் மூலம் மற்றொரு காலில் கழல் அணிந்தவன் என்பது சொல்லாமலே உணர்த்தப்படுகின்றது. குலம்=கூட்டம்; பாவரு= பெருகிய, குண்டர்=மூர்க்கர்;அலம்புதல்=ஆர்ப்பரித்தல், ஆரவாரம் செய்தல், பெருத்த ஓசையுடன் ஒலித்தல்; அம்பு=நீர், புலம்பு அலம்பு=பெருமானை நினைத்து உருகுவதால் கண்களில் பெருகும் கண்ணீர். பெருமானிடம் வைத்துள்ள அன்பு ஒரு நிலையினைக் கடக்கும் போதும் அழுகையாக மாறுகின்றது என்று பல திருமுறை பாடல்களில் கூறும் அருளாளர்கள் அத்தகைய அழுகையால் விளைகின்ற பயனையும் நமக்கு உணர்த்துகின்றனர். அழுதால் அவனைப் பெறலாமே என்று தானே நமக்கு திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. பலவிதங்களிலும் தன்னைக் கொல்வதற்கு சூழ்ச்சிகள் செய்த சமணர்களின் கூட்டத்தின் முன்னே, பெருமானின் திருவருளால் காப்பாற்றப் பட்ட தான், சிவபெருமானின் அடியார்களுக்கு அடியவனாக இருக்கும் தன்மை சமணர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும் என்ற தனது ஆசையினை இந்த பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமானின் சன்னதியாகிய திருமூலட்டானைத்தில் அவனது பேரருளினை தங்களது கண்களில் கண்ணீர் வழிய எண்ணி உருகி வழிபடும் அடியார்களுக்கு அடியேனாக இருக்கும் நல்வினைப் பேற்றினை அடியேன், உடல் வலிமை உள்ளவர்களாகவும் கூட்டமாக திரிபவர்களாகவும் உள்ள சமணர்கள் காணும் வகையில் பெறுவேனோ என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தி,பெருமானே, அவ்வாறு பெறுவதற்கு நீரே அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் பெருமானிடம் விண்ணப்பம் வைக்கின்றார். .
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு கொலோ
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பு அலம்பா வரு சேவடியான் திரு மூலட்டானம்
புலம்பு அலம்பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
பெருமானின் திருவடிகளின் சிறப்பினை உணர்த்தும், திருவதிகை வீரட்டானம் பதிகத்தின் பாடலில் (6.06.5), பெருமானின் திருவடிகள் கழலும் சிலம்பும் அணிந்துள்ள தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொருகழல், அனைவரையும் வெற்றி கொள்ளும் வீரம் உடைய பெருமான் அணிந்துள்ள வீரக்கழல் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். ஒரு காலத்து ஒன்றாக நின்ற அடி=ஏகபாத திரிமூர்த்தியாக இறைவன் இருக்கும் நிலை. முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றை கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில்,மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை, இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் பிரிவது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில், அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம்.பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் ஆனைக்காவிலும் குடவாயில் திருக்கோயிலிலும் உள்ளது. பிரமனாகவும் திருமாலாகவும் உள்ள நிலையைக் குறிப்பிடும் பாடலில், மாதொரு பாகனின் நிலை உணர்த்தப்படுவது பாடலின் நயம்.
ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி ஊழி தோறூழி உயர்ந்த அடி
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி
இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம் செல்வன் அடி
நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.42.6) அப்பர் பிரான், தனது கால்களில் ஒலிக்கும் சிலம்பும் கழலும் அணிந்து உலகம் அதிரும் வண்ணம் நடமாடும் பெருமான் என்று கூறுகின்றார். மிறை=துன்பம்; பழைய வினைகளின் பயனால் நாம் துன்பங்கள் மட்டுமன்றி இன்பங்களையும் நுகர்கின்றோம்; ஆனால் அத்தகைய இன்பங்களில் ஆழ்ந்து மகிழும் நாம் நம்மை மிகவும் உயர்வாக நினைத்துக் கொள்கின்றோம். அத்தகைய தருணங்கள் தான், நாம் அகந்தை கொண்டு இறைவனை மறக்கும் தருணங்களாக மாறுகின்றன. எனவே தான். இன்பம் நுகரும், நேரங்களிலும் நம்மை உயர்வாக எண்ணிக் கொள்ளமால், அடக்கத்துடன் தாழ்மையாக நினைத்து இறைவனை வணங்க வேண்டும். அவ்வாறு இருப்பவரின் நெஞ்சத்தில் இறைவன் உறைவான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். வியவேல்=மகிழாமல் இருத்தல்; நிறைவுடையான் என்ற தொடரினை அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற என்ற தொடருடன் இணைத்து, ஊழிக்காலத்தில் மன நிறைவுடன் நடனம் ஆடும் இறைவன் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர்.ஊழிக்காலம் முடிந்த பின்னர், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை நீக்கிக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு,உலகத்தை தோற்றுவிக்க எண்ணம் கொள்ளும் பெருமான், அந்த எண்ணத்தினால் மனநிறைவு அடைகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றாரோ என்று தோன்றுகின்றது
மிறைபடும் இவ்வுடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி
வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை கூத்தாடும் குணம் உடையான் கொலை வேல் கையான்
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற
நிறைவுடையான் இடமாம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
ஆமயம் தீர்த்து என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.96.3) சிலம்பும் கழலும் ஆர்ப்ப முயலகனை அழுத்தியவாறு இறைவன் காணப்படுகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடலில் கூத்தபிரான் தனது காலின் கீழே வைத்து அடக்கிய முயலகனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முயலகனை பற்றிய குறிப்புகள் காணப்படும் திருமுறை பாடல்கள் மிகவும் அரியதாக காணப்படுகின்றன. முடி=சடைமுடி;முளை=முளைத்த; அலம்பு= ஒலிக்கின்ற; ஆர்க்க=ஒலி செய்ய; மூசு=மொய்க்க, தனது படத்தினால் மறைக்க; வடி=கூர்மை. மாதொருபாகனாக விளங்கும் பெருமான் சங்கரநாராயணராகவும் விளங்குகின்றார் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் சொல்வதை நாம் உணரலாம். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்ட தன்மையை அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இளநாகம் உடனாக் கொண்டார்
அடி கொண்டார் சிலம்பலம்பு கழலுமார்ப்ப அடங்காத முயலகனை அடிக்கீழ் கொண்டார்
வடி கொண்டு ஆர்ந்து இலங்கு மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவக் கொண்டார்
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே
கச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பாடலில் (7.41.2) பசியால் வாடிய தனக்கு உணவு அளிக்கும் பொருட்டு, பெருமான் பிச்சை ஏற்ற அதிசயத்தைக் குறிப்பிடும் சுந்தரர், கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் உச்சிப் போதினில் பல இல்லங்கள் சென்று பிச்சை எடுத்த பெருமானே என்று குறிப்பிட்டு உருகுவதை நாம் உணரலாம். பெருமான் அந்த தலத்தில் வாழும் அந்தணர் போன்று பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்றார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். எனினும் பெருமானே சென்றார் என்பதை வலியுறுத்தும் வண்ணம் சுந்தரர் தனது பாடலில், பாம்பு அணிந்தவராகவும் கழலும் சிலம்பும் அணிந்தவராகவும் பெருமான் பிச்சை ஏற்கச் சென்றார் என்று குறிப்பிட்டார் போலும். கலிக்க=ஒலிக்க; பெருமானின் செய்யும் செயல்களின் பின்னணியை எவரும் அறிய முடியாது என்பதை இச்சை அறியோம் என்ற தொடர் கொண்டு சுந்தரர் குறிப்பிடுகின்றார். எளியவனாகிய அடியேன் பொருட்டு பிச்சை எடுத்த செயல் கண்டால் மற்ற அடியார்கள் மனம் பதைபதைத்து உருகுவார்கள் என்று சுந்தரர் கூறுகின்றார்.
கச்சேர் அரவு ஒன்று அரையில் அசைத்துக் கழலும் சிலம்பும் கலிக்கக்
உச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனை ஆள்வாய்
அச்சமில்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே
திருக்கோலக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.62.7) சுந்தரர், பெருமானை பைங்கழல் சிலம்பார்த்த சோதி என்று குறிப்பிடுகின்றார்.சிலம்பு என்பது பொதுவாக பெண்கள் அணியும் ஆபரணம். ஒரு காலில் சிலம்பு அணிந்தவன் என்று குறிப்பிட்டு மற்றொரு காலில் கழல் அணிந்த தன்மையும் உணர்த்தப்படுகின்றது. பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை, பரமன் கிள்ளி எறிந்த பின்னர், செருக்கு நீங்கப்பெற்ற பிரமன், தனது செருக்கினை பெருமான் நீக்கியதை என்றும் அனைவரும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அந்த தலையினில் பலி ஏற்க வேண்டும் என்று வேண்டியதாக கந்தபுராணம் கூறுகின்றது. துன்று பைங்கழல்=பசும்பொன் மிகுதியாகக் கொண்டு செய்யப்பட்ட: மின் மற்றும் தங்கிய என்ற சொற்கள் இணைந்து மின்றங்கிய என்ற தொடர் உருவாகி உள்ளது.
அன்று அயன் சிரம் அரிந்ததில் பலி கொண்டு அமரர்க்கு அருள் வெளிப்படுத்தானைத்
துன்று பைங்கழலில் சிலம்பு ஆர்த்த சோதியைச் சுடர் போல் ஒளியானை
மின்றங்கிய இடைமடமங்கை மேவும் ஈசனை வாசமா முடிமேல்
கொன்றை அஞ்சடை குழகனை அழகார் கோலக்காவினில் கண்டு கொண்டேனே
பாதச்சிலம்பொலி காட்டிய பண்பு என்று குறிப்பிட்டு பெருமான் தான் அணிந்திருந்த சிலம்பிலிருந்து எழுகின்ற ஒலியை தான் உணரும் வண்ணம் அருள் புரிந்தவன் பெருமான் என்று கீர்த்தித் திருவகவலில் மணிவாசக அடிகளார் கூறுகின்றார். தெள்ளேணம் பதிக்த்தின் கடைப் பாடலில் (8.11.20) சிலம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ என்று பெருமான் அணிந்துள்ள சிலம்பின் பெருமையை பாடும் வண்ணம் அடிகளார் ஊக்குவிக்கும் பாடல் இது.அரிசியில் கலந்துள்ள கல்லினை பிரிப்பதற்கு, அரிசியை முறத்தில் கொட்டி, இடமும் வலமுமாக புடைத்து அசைத்தலை தெள்ளுதல், கொளித்தல் என்று கூறுகின்றனர். பெண்கள் ஒன்றாக கூடி இந்த செயலில் ஈடுபடுவது வழக்கம். அந்த சமயத்தில் அவர்கள் அனைவரும் இறைவனின் புகழினைப் பாடியவாறு தங்களது செயலில் ஈடுபடுமாறு அடிகளார் தூண்டுகின்றார். சிவபெருமானை வணங்கும் தேவர்கள் கூட்டத்தினை, அவர் அணிந்துள்ள கொக்கின் இறகினை, அவரின் மணாட்டியாகிய உமையம்மையின் சிறப்புகளை, அவர் நஞ்சுண்ட திறத்தினை, அவர் நடமாடும் அழகினை, நடமாடும்போது அசையும் அவரது கால் சிலம்பினை, பாடி தெள்ளேணம் கொட்டுவோமாக என்று இந்த பாடல் கூறுகின்றது. குலம் பாடி என்று பல தேவர்கள் உள்ளிட்ட பெருமானின் அடியார்களின் பெருமையை பாடிய பின்னர், பெருமானின் பெருமையை பாட வேண்டும் என்று இந்த பாடலில் உணர்த்துகின்றார். பெருமானை விடவும் பெருமானின் அடியார்களுக்கெ முதலிடம் என்பதை அடிகளார் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். குலம் என்பது இங்கே கூட்டம் என்ற பொருளில் வருகின்றது. சாதி குலங்களைக் கடந்தவன் பெருமான் என்பதை நாம் அறிவோம்.
குலம் பாடிக் கொக்கிறகும் பாடிக் கோல்வளையாள்
நலம் பாடி நஞ்சுண்டவா பாடி நாள்தோறும்
அலம்பார் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
பெருமான் நடனம் ஆடும்போது எழுகின்ற சிலம்பொலியை கேட்பதற்கு தீராத ஆசை கொண்டவன் என்று மணிவாசக அடிகளார் தன்னைக் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். இந்த குறிப்பு நமக்கு, சேரமான் பெருமாள் நாயனாரின் வழிபாட்டினை நினைவூட்டுகின்றது. சேரமான் பெருமாள் நாயனார், தினமும் பெருமானுக்கு பூசை செய்து முடித்த பின்னர், தான் இருந்த இடத்தில் இருந்த படியே, எப்போதும் நடனமாடுகின்ற சிதம்பரம் பெருமானின் பாதச் சிலம்பொலியை கேட்கும் பேறு உடையவராக இருந்தார் என்பதை நாம் அறிவோம். பெருமானின் பாதச் சிலம்பொலியை கேட்கும் வாய்ப்பினைப் பெற்ற அடிகளார், எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இன்பம் அளிக்கும் ஒலி என்று இங்கே குறிப்பிடுகின்றார். இத்தகைய அருமையான ஒலியை எழுப்பும் நடனத்தின் சிறப்பினைப் புகழ்ந்து பாடியவாறே, நாம் இறைவனுக்கு பணிவுடன் அளிக்க இருக்கும் மலர்களை கொய்வோம் என்று பாடலை முடிக்கின்றார்.
சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத்
தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய்
பேரானந்தம் பாடிப் பூவல்லிக் கொய்யாமோ
அற்புதப்பத்து பதிகத்தின் பாடலில் பெருமானின் சேவடிச் சிலம்பு ஒலிப்பதை அடிகளார் குறிப்பிடுகின்றார். திரு (திருவருள்) என்பது இங்கே பெருமானுடன் என்றும் பிரியாது விளங்கும் அருள் சக்தியாகிய பிராட்டியை குறிக்கும். உலகினில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிர்க்கும் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது.அந்த இறப்பின் பின்னர், உயிர்கள் சேர்த்துக் கொண்டுள்ள வினைகளின் தகுதிகளுக்கு ஏற்ப, பல பிறவிகள் காத்திருக்கின்றன. அத்தகைய பிறவிகள் உயிருக்கு எண்ணற்ற துன்பங்களையும் ஈட்டித் தருகின்றன. இந்த தன்மையை புரிந்து கொள்ளும் உயிர்கள், மேலும் வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆனால், தானோ அத்தகைய முயற்சிகள் ஏதும் செய்யாமல், வஞ்சனையான பல செயல்களைச் செய்து காலத்தைக் கழிக்கும் நிலையில் இருப்பதாக அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஏறுண்டு=தாக்கப்பட்டு; மேலும் இளைய மாதர்களின் கண் வலையில் சிக்கி கலங்கி, இன்ன செய்வது என்று அறியாத வண்ணம் திகைத்து நிற்பதாகவும் கூறுகின்றார். இத்தகைய இழிந்த நிலையில் இருக்கும் தன்னையும் ஏற்றுக்கொண்டு, தனக்கு துணைவனாக நின்று இறைவன் ஆட்கொண்டு அருள் புரிவது அற்புதம் என்று குறிப்பிடும் அடிகளார், அந்த அற்புதத்தின் பெருமையை தான் முழுவதுமாக அறிந்து கொள்ளவில்லை என்றும் கூறுகின்றார்.
பொருந்தும் இப்பிறப்பு இறப்பிவை நினையாது பொய்களே புகன்று போய்
கருங்குழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத்
திருந்து சேவடிச் சிலம்பவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே
அரும் துணைவனாய் ஆண்டு கொண்டருளிய அற்புதம் அறியேனே
குழலும் சடையும் உடைய்வன் என்று குறிப்பிட்டு பல திருமுறைப் பாடல்களில் பெருமானின் மாதொரு பாகனின் திருக்கோலம் உணர்த்தப்படுகின்றது.அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். இராமனதீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.115.5) திருஞானசம்பந்தர், தாழ்ந்த சடையையும் கூந்தலையும் உடைய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஏய்ந்தவன்= பொருந்தியவன்;
தாழ்ந்த குழல் சடை முடியதன் மேல்
தோய்ந்த இளம்பிறை துலங்கு சென்னிப்
பாய்ந்த கங்கையொடு படவரவம்
ஏந்தவன் இராமனதீச்சரமே
கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.105.6) திருஞானசம்பந்தர் பெருமானை கொத்துலாவிய குழல் திகழ் சடையன் என்று குறிப்பிடுகின்றார். கொத்து=பூங்கொத்து; ஒரு புறம் பூங்கொத்துகள் பொருந்திய கூந்தலையும் மற்றொரு புறத்தில் சடையையும் உடைய பெருமான் என்று குறிப்பிட்டு, மாதொரு பாகனின் தோற்றத்தை உணர்த்துகின்றார். பித்து=திருவடி மீது பற்று; அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு மூல காரணமாக இறைவன் இருக்கும் நிலை, வித்து என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.
கொத்துலாவிய குழல் திகழ் சடையனைக் கூத்தனை மகிழ்ந்து உள்கித்
தொத்துலாவிய நூல் அணி மார்பினர் தொழுதெழு கீழ்வேளூர்
பித்துலாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக்கோயில் மன்னு
முத்துலாவிய வித்தினை ஏத்துமின் முடுகிய இடர் போமே
கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.105.7) திருஞானசம்பந்தர் பெருமானை நிறை நிலாவிய ஈசன் என்றும் சடையிடைப் பின்னல் உடையவன் என்றும் அழைக்கின்றார். நிலாவி=நிலையாக இருத்தல்; என்றும் நிலையாக குறைவிலா நிறைவாக இருப்பவன் பெருமான் என்று இங்கே குறிப்பிடுகின்றார். துன்னாரும்=நெருக்கமாக திகழ; பெருமான் மிகுந்த விருப்பத்துடன் கீழ்வேளூர் தலத்தில் உறைவது, அந்த தலம் மறை வல்ல அந்தணர்கள் உறைகின்ற அந்த தலத்தில் இருந்தால் அந்தணர்கள் சொல்லும் நான்மறை கீதங்களை தான் கேட்கலாம் என்ற ஆசையினால் தான், என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
பிறை நிலாவிய சடையிடைப் பின்னலும் வன்னியும் துன்னாரும்
கறை நிலாவிய கண்டர் எண்டோளினர் காதல் செய் கீழ்வேளூர்
மறை நிலாவிய அந்தணர் மலி தரு பெருந்திருக்கோயில் மன்னு
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே
கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் மற்றொரு பாடலில் (2.105.11) திருஞானசம்பந்தர், பெருமானை குழலும் சடையும் உடைய குழகன் என்று குறிப்பிடுகின்றார். தேவாரப் பதிகப் பாடல்களை கற்று வல்லவராக திகழும் அடியார்கள் சிவகதி பெறுவது நிச்சயம் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.தெருண்ட=தெளிந்த; இருண்ட மேதி=கருமை நிறம் உடைய எருமை மாடுகள்; குருண்ட வார்குழல்=சுருண்டு நீண்டு காணப்படும் சடை;
குருண்ட வார்குழல் சடை உடைக் குழகனை அழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறையவர் தொழும் பெரும் திருக்கோயில் எம் பெருமானை
இருண்ட மேதி இன மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன்
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடமாமே
ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.29.6) அப்பர் பிரான், பெருமானை குழலும் கொன்றையும் கூவிளமும் ம்த்தமும் தாங்கினான் என்று குறிப்பிடுகின்றார். கொன்றை மற்றும் ஊமத்தை மலர்கள் வில்வ இலைகள் ஆகியவை பெருமான் தனது சடையில் சூட்டிக் கொள்பவை. அவற்றை குறிப்பிட்டு, பெருமானின் சடையை உணர்த்துகின்றார். இவ்வாறு குழலும் சடையும் உடைய்வன் என்று சொல்லி, பெருமானின் மாதொரு பாகனின் திருக்கோலத்தை அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இறைவனுடன் சேராது ஏக்கத்தில் இருக்கும் தனது மகள், அந்த ஏக்கத்தினால் உடல் மெலிந்து தனது கை வளையல்கள் கழன்று வருந்தும் நிலை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. குழல்=சுருண்ட முடியினை உடைய சடை தையல்=பெண், இங்கே பார்வதி தேவி;
குழலும் கொன்றையும் கூவிள மத்தமும்
தழலும் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழகன் ஆவடு தண்டுறையா எனக்
கழலும் கைவளை காரிகையாளுக்கே
ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.44.7) அப்பர் பிரான், பெருமானின் சடையை குழற் கோலச்சடை என்று குறிப்பிடுகின்றார்.நீற்றினார்=திருநீறு பொருந்திய: நேரிழை=அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்மணி, இங்கே பார்வதி அம்மையை குறிக்கின்றது.: கோலம்=அழகிய:அணி=அழகு நிறைந்த; ஏற்றினான்=எருதினை வாகனமாக உடையவன்:
நீற்றினார் திருமேனியன் நேரிழை
கூற்றினான் குழல் கோலச் சடையில் ஓர்
ஆற்றினான் அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றினான் எமை ஆளுடை ஈசனே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.31.5) அப்பர் பிரான் பெருமானை குழற் சடை எங்கோன் என்று அழைக்கின்றார். மேலும் பிறவிப் பெருங்கடலை நாம் தாண்டுவதற்கு நாம் செய்யவேண்டியதை உணர்த்தும் பாடலில், அப்பர் பிரான் நாம் பலவாறும் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும் என்றும் நாம் செய்த பிழைகளை பொறுத்து அருள் புரியாய் என்று இறைவனிடம் வேண்ட வேண்டும் என்றும் கூறுகின்றார். இழைத்த நாள்=ஒருவனுக்கு விதியால் முன்னமே தீர்மானிக்கப்பட்ட வாழ்நாள். அந்த நாள் என்னவென்று நமக்குத் தெரியாது; எனினும் அத்தகைய நாள் ஒன்று உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அரணம்=பாதுகாப்பு. அடியேன் உன் அரணம் கண்டாய் என்ற தொடரை. இறுதி அடியில் குற்றமில்லை என்ற சொல்லின் முன்னர் சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறும் பாடலாக அமைந்திருப்பினும், உலகத்தவர்க்கு கூறும் அறிவுரையாகவே நாம் இந்த பாடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இழைத்த நாள் எல்லை கடப்பதென்றால் இரவினோடு நண்பகலும் ஏத்தி வாழ்த்திப்
பிழைத்தது எல்லாம் பொறுத்தருள் செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும்
அழைத்தலறி அடியேனன் அரணம் கண்டாய் அணியாரூர் இடம் கொண்ட அழகா என்றும்
குழற்சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றமில்லை என் மேல் நான் கூறினேனே
திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.18.10) அப்பர் பிரான், பெருமான் தனது குழலில் கொன்றை கூவிளம் மதமத்தம் ஆகியவற்றை அணிந்துள்ளார் என்று குறிப்பிட்டு, குழல் பெருமானின் சடையின் ஒரு பாகமாக திகழும் தன்மையை உணர்த்துகின்றார். அலர்=மலர், இங்கே கொன்றை மாலை; கூவிளம்=வில்வம்; மத்தம்=ஊமத்தை; பூங்கணை வேள்=பூக்களைக் கணையாகக் கொண்ட மன்மதன்; குழல் என்ற சொல் ஆடவர்களின் தலைமுடிக்கும் பொருந்தும் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். தான் தனது தலையில் சூடியிருந்த கொன்றை மாலையினை சண்டீசருக்கு அருளிய செய்கை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. சண்டீசருக்கு முக்தி அளித்தது போல் பல அடியார்களுக்கும் முக்தி அளிக்கும் தன்மை படைத்தவர் என்று சொல்லி,நாம் எல்லாம் சிவபிரானை வழிபடத் தூண்டுகின்றார். அன்போடு அணுகும் அடியார்க்கு முக்தி அளிக்கும் சிவபெருமான், அவரது செயல்களுக்கு இடையூறு செய்ய நினைத்தால், நாம் அழிந்து போவோம் என்ற எச்சரிக்கையும் இங்கே. மன்மதன் அழிந்த வரலாறு குறிப்பிடப்பட்டு நமக்கு உணர்த்தப் படுகின்றது.
ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன்முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசும் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமும் மதமத்தமும் குழற்கு அணிந்த கொள்கையோடு கோலம் தோன்றும்
பூங்கணை வேளுருவு அழித்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
பெருமானை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்த அப்பர் பிரான், தனது கனவிலும் பெருமான் தோன்றியதாக குறிப்பிட்டு, தான் கண்ட காட்சியை எடுத்துரைக்கும் பாடல் அண்டம் கடந்த சுவடும் உண்டோ என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலாகும் (6.97.6). நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் என்று திருஞானசம்பந்தர் கூறுவது போன்று அப்பர் பிரானும் வாழ்ந்தமை இந்த பாடலில் வெளிப்படுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், தனது நெற்றியில் பட்டமும் காதினில் தோடும் பூண்டவராக பெருமானை கண்டதாக குறிப்பிடுகின்றார்.பார் திகழ, பெருமான் பலி ஏற்பதாக இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பார் திகழ என்பதற்கு, சேக்கிழார் உலகுய்ய பெருமான் பலி ஏற்கின்றார் என்று கூறுவது போன்று, உலகினில் உள்ள பக்குவப்பட்ட உயிர்கள் முக்தி உலகம் சென்றடைந்து இன்பமுடன் வாழும் பொருட்டு பெருமான் பலி ஏற்கின்றார் என்று பொருள் கொள்ளவேண்டும்.
பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன் பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டி நின்று இலயங்கள் ஆடக் கண்டேன் குழை காதிற் பிறைச் சென்னி இலஙகக் கண்டேன்
கட்டங்கக் கொடி திண்டோள் ஆடக் கண்டேன் கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவாலவாயிற் கண்டேன் தேவனைக் கனவில் நான் கண்டவாறே
திருவையாறு தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலிலும் (4.98.2) பாடக அணியினை குறிப்பிட்டு, பெருமானின் திருப்பாதத்தை பாடகக்கால் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கழல்=வீரக்கழல்; உக்க=சிந்திய; அந்தி=அந்தி மாலை நேரம்; பரிதி=சூரியன்; கணம்=கூட்டம்; காடகக் கால்=காட்டில் நடந்த கால்; ஆடகம்=பொன்; அந்தி நாடகம்=இரவில், நள்ளிரவில் ஆடப்படும் கூத்து; அடி தேர=தேடித் தெரிந்து கொள்ள முயற்சி செய்யப்பட்ட திருவடிகள்; ஐயாற்றன=ஐயாறனது; அரி தேர் வலவன் ஐயாற்றனவே என்பது பாட பேதம். திருமாலால் தேடப்பட்ட வல்லமை வாய்ந்தது என்று பொருள்; ஒரு காலில் பாடக ஆபரணமும் மற்றொரு காலில் வீரக்கழலும் அணிந்த கால்கள் என்று குறிப்பிட்டு, பெருமான் மாதொரு பாகனாக இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப்படுகின்றது. அந்தி என்ற சொல்லினை பரிதிக்கதிர் உக்க என்ற தொடருக்கும் நாடகக்கால் என்ற தொடருக்கும் பொதுவாக கொண்டு பொருள் கொள்ள வேண்டும். இந்த பாடலில் பெருமானின் திருவடிகளின் தன்மை குறிப்பிடப்படுகின்றன.
பாடககால் கழற்கால் பரிதிக் கதிர் உக்க அந்தி
நாடகக்கால் நங்கை முன் செங்கண் ஏனத்தின் பின்னடைந்த
காடக்கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால்
ஆடகக்கால் அன்றோ அரி மால் தேர வல்லன ஐயாற்றனவே
சுண்ண வெண் சந்தனச் சாந்தும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.2.3) முத்துவடக் கண்டிகையும் உருத்திர பட்டமும் அணிந்த பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முளைத்தெழு சூலம்=எரியப்படாமல் எப்பொழுதும் சிவபிரானது கையை விட்டு நீங்காமல் இருப்பதால், அவரது கையில்இருந்து முளைத்தது போல் தோன்றுகின்றது. மேல் பாகத்தில் மூன்று இலைகள் போன்ற அமைப்பையும் கீழே ஒரு தண்டு போன்ற அமைப்பையும்கொண்டிருப்பதால் முளைத்து எழுகின்ற சூலம் என்று கூறப்பட்டுள்ளது. சித்தமடம்=அதிகையின் புறத்தே உள்ள ஒரு மடம். இளநாகம்=என்றும் இளமையாககாணப்படும் பாம்பு. பாம்பு தனது தோலினை அடிக்கடி உரித்து விடுவதால் தோல் சுருங்குவதில்லை. நரை, திரை இல்லாத காரணத்தால் என்றும்இளமையாக காணப்படும். இளநாகம் என்று சம்பந்தரின் முதல் பதிகத்திலும் மற்றும் பல தேவாரப் பதிகங்களிலும் கூறப்படுகின்றது. முத்துவடக் கண்டிகைஎன்பதை, முத்து மாலையும் கண்டிகையையும் அணிந்தவர் என்று விளக்கம் கூறி, முத்துமாலையினை அம்பிகைக்கு உரிய அணிகலனாகவும் உருத்திராக்கமாலையை சிவபிரானுக்கு உரிய அணியாகவும் கூறி உமையம்மையுடன் இணைந்து இருக்கும் கோலத்தை குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்வார்கள்.
ஒத்த வடத்து இளநாகம் உருத்திரபட்டம் இரண்டும்
முத்து வடக் கண்டிகையும் முளைத்தெழு மூவிலை வேலும்
சித்த வடமும் அதிகைச் சேணுயர் வீரட்டம் சூழ்ந்து
தத்தும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
வெந்த வெண்ணீறு அணிந்து என்று தொடங்கும் (1.107) திருப்பதிகம் கொடிமாடச் செங்குன்றூர் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளியது. இந்த தலத்தினில் மூலவராக எழுந்தருளி இருப்பவரே மாதொருபாகன் தான். இந்த நிலைக்கு பொருத்தமாக, திருஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் முதல் ஐந்து பாடல்களில் பிராட்டி பெருமானுடன் இணைந்திருக்கும் கோலத்தினை குறிப்பிடுகின்றார். திரு மார்பின் நல்ல பந்தணவு விரலாள் ஒரு பாகம் அமர்ந்து என்றும், ஆகம் மலைமகள் கூறுடையான் என்றும், திருமார்பில் பல்வளைக்கை நல்ல ஏலமலர்க் குழலாள் ஒரு பாகம் அமர்ந்து என்றும், வாருறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பு என்றும் மார்பில் பணைத்தோளியோர் பாகமாக என்றும் மாதொரு பாகனாக பெருமான் திகழும் நிலை குறிப்பிடப் படுகின்றது.பூந்தராய் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.13) பாடல்களில் அன்னமன்ன நடை அரிவை பங்கர், பாகமார் மொழியுமை பங்கர், அங்கயல் அன கணி அரிவை பங்கர், எழில் பெரும் அரிவை கூறர், கொத்தணி குழலுமை கூறர், குழலுமை நங்கை பங்கர் என்று மாதொருபாகனாக உள்ள நிலை ஆறு பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. எஞ்சிய ஐந்து பாடல்களில் குழலுமை கணவர், குழலுமை தலைவர், குழலி தன் மணாளர், என்று பிராட்டி பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.
சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (3.58) இருமலர்க் கண்ணி தன்னோடும் உடனாவது என்றும், கொடியன சாயலாளோடு கூடுவது என்றும்,மானன நோக்கி தன்னோடு உடனாவது என்றும் புற்றரவு அல்குலாளோடு உடனாவது என்றும் பந்தணவு விரலாளோடு உடனாவதும் என்றும் மங்கை பாகம் நிலை என்றும் உமையையொர் பாகம் வைத்த நிலை என்றும் விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும் வேண்டினை என்றும், பெண்ணொர் பாகம் ஈரெழில் கோலமாகி உடனாவது என்றும் மங்கையோடு ஒன்றி நின்று என்றும் மாதொரு பாகனாக பெருமான் உள்ள நிலை குறிப்பிடப் படுகின்றது. பெருமானின் திருவுருவமும் பிராட்டியின் திருவுருவமும் எழில் வாய்ந்தவை. எனவே இருவரும் இணைந்த திருக்கோலம் வேறுவேறு தன்மையில் உள்ள எழில்கள் இணைந்த கோலம் என்பதை புலப்படுத்தும் வண்ணம் ஈரெழிற்கோலம் என்று குறிப்பிடுகின்றார். மிகவும் அருமையான் சொல்லாட்சி.
பேரெழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண்ணோர் பாகம்
ஈரெழெற் கோலமாகி உடனாவதும் ஏற்பதொன்றே
காரெழில் வண்ணனோடு கனகம் அனையானும் காணா
ஆரழல் வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே
அவளிவணல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.82.3) திருஞானசம்பந்த்ர், கூறுடைய வேடமொடு கூடி அழகாயதொரு கோலம் என்று மாதொரு பாகனின் திருக்கோலத்தை குறிப்பிடுகின்றார், நிலை செய்து=பிரியாமல் என்றும் நிலையாக வைத்துக் கொண்டு; ஏறுடையர்= ஏற்றம் மிகவும் உடையவர், சிறப்புகள் பல உடையவர்; ஏனும் என்ற சொல் ஏறுடையர் என்ற சொல்லினைத் தொடர்ந்து வருவதால் எருதினை வாகனமாக உடையவர் என்ற பொருள் இங்கே பொருத்தமாக காணப்படவில்லை; சிறப்பு வாய்ந்த அழகிய மாதொருபாகன் கோலத்தினை உடையவராக இருந்தாலும், சுடுகாட்டின் சூழ்நிலையை பொருட்படுத்தாமல் நடனம் ஆடுபவர் என்று பொருள் கொள்ளவேண்டும். வார்=நீண்ட; ஆறு=கங்கை நதி; சுடுகாட்டின் சூழ்நிலையை இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் உணர்த்திய ஞானசம்பந்தருக்கு அத்தகைய சூழலில் பெருமான் நடனமாடுவது பொருத்தமான செயலா என்ற ஐயத்தினை தீர்க்கும் வண்ணம், மீண்டும் இந்த பாடலில் வலியுறுத்துகின்றார் போலும். செல்வ வளம் கொழிக்கும் கோலக்கா தலத்திலும் எளிமையான தோற்றத்தில் காணப்படும் பெருமான் என்று பாடியவர் அல்லவா.
நீறுடைய மார்பில் இமவான் மகளொர் பாகநிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடி அழகாயதொரு கோலம்
ஏறுடையர் ஏனும் இடுகாடு இரவில் நின்று நடமாடும்
ஆறுடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.103.1) அடியார் இசைந்து ஏத்தும் வண்ணம், பெருமான் துடியிடியாளை ஓர் பாகமாக துதைந்தார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இசைந்து=மனமொன்றி, கூடி; துதைந்து=பிரியாமல் எப்போதும் கூடியே இருத்தல்; வடிவு=அழகு;இடிபட=பேரொலி எழும் வண்ணம்; ஊடுருவ=கோட்டைகளை துளைத்துக் கொண்டு; ஊடுருவிச் சென்ற; ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளையும் துளைத்து எரித்தால் தான் அந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்பது திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வரம்; முதலில் தென்படும் கோட்டையை எரித்த அம்பு அங்கேயே தங்கி விட்டால், அடுத்த கோட்டையை அழிக்க முடியாது அல்லவா. எனவே தான் முதல் கோட்டையைத் துளைத்துச் சென்று இரண்டாவது கோட்டையை அடைந்து அந்த கோட்டையையும் துளைத்து எரித்து மூன்றாவது கோட்டையை அம்பு சென்று அடையும் வண்ணம் வல்லமை படைத்த அம்பினை எய்து மூன்று கோட்டைகளையும் எரிக்க வேண்டிய நிலை பெருமானுக்கு ஏற்பட்டது. எனவே தான் மூன்று கோட்டைகளையும் ஊடுருவிச் சென்று அழிக்கும் வல்லமை படைத்த அம்பினை தேர்ந்தெடுத்து பெருமான் அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார் என்பதை இந்த பாடல் உணர்த்துகின்றது. சிலை=வில்; குனி=வளைத்த, மேருமலை வில்லாக வளைக்கப்பட்ட நிலையினை இந்த பாடல் குறிப்பிடுகின்றது.வெஞ்சிலை=கொடியவில்; துடி=உடுக்கை; மேதி=எருமைகள்; நீர்வளம் மிகுந்ததால் செழிப்பாக வளர்ந்து எருமைகளும் அழகாக காணப்பட்டன என்று கூறுகின்றார். மதில் என்றால் நகரத்திற்கு அரணாக விளங்கும் மதிற்சுவர் என்று பொருள். ஆனால் மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கொட்டினில் வரும் தருணத்தில் தான் இந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்பதால், ஒவ்வொரு கோட்டையும் மற்ற இரண்டு கோட்டைகளுக்கு வலிமை வாய்ந்த அரணாக திகழ்ந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.
கொடியுடை மும்மதில் ஊடுருவக் குனி வெஞ்சிலை தாங்கி
இடி பட எய்த அமரர் பிரான் அடியார் இசைந்து ஏத்தத்
துடி இடையாளை ஒர் பாகமாகத் துதைந்தார் இடம் போலும்
வடிவுடை மேதி வயல் படியும் வலம்புர நன்னகரே
சுமார் ஆயிரம் தேவாரப் பாடல்களில் சிறப்பித்து சொல்லப்படும் மாதொரு பாகனின் திருக்கோலத்தை, ஈரெழிற் கோலத்தை தியானம் செய்யும் அடியார்கள் தங்களது வினைகள் முற்றிலும் நீங்கப் பெறுவார்கள் என்று சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.வினை நீங்கலுற்றார் என்று இறந்த காலத்தில் சொல்லி, இத்தகைய அழகிய திருக்கோலத்தை தியானிக்கும் செயலைத் தொடங்கும் போதே, அவ்வாறு சொல்லத் தொடங்கும் அடியார்களின் வினைகள் நீங்கிவிடும் என்று உணர்த்தி, எவ்வளவு விரைவாக பெருமான் செயலாற்றுகின்றார் என்பதை விளக்குகின்றார். நாடு முழுவதும் ஒளிவீசி நலனுடன் புகழுடன் இருக்க வேண்டும் என்று பரந்த உள்ளத்துடன் இறைவனை வேண்டும் நல்லவர்கள் நிறைந்த தலம் சீர்காழி என்பதை கூறுகின்றார்.
நாடெலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார்பொழில்
காடெலாம் மலர் தேன் துளிக்கும் கடற்காழித்
தோடுலாவிய காது உளாய் சுரிசங்க வெண் குழையான் என்றென்று உன்னும்
வேடம் கொண்டவர்கள் வினை நீங்கல் உற்றாரே
குடமூக்கு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.59.7) பெருமான் கொண்டுள்ள மாதொருபாகனின் திருக்கோலம், உலகம் உய்வதற்காக பூண்ட திருக்கோலம் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பலாக்கனிகள் தாமாகவே மரங்களிலிருந்து விழுகின்ற நிலையினை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பறிப்பவர் எவரும் இல்லாத நிலையில் தானே, மரங்களிலிருந்து கனிகள் தாமே கீழும் விழுகின்ற நிலை ஏற்படும்.இந்த நிலை மிகவும் அதிகமான பலா மரங்கள் இந்த தலத்தினில் செழித்து வளர்வதால், இனிய பலாக் கனிகளை பறிப்பதும் அலுப்பு தரும் செயலாக தலத்து மக்களுக்கு மாறிவிட்டது போலும். இந்த தன்மை தலத்தின் செழிப்பினை உணர்த்துகின்றது. மலைமலி மங்கை=மலைச் சாரலில் வளர்ந்த பார்வதி தேவி; உலகம் உய்ய=உலகத்தவர்கள் மகிழ்ந்து வாழ என்றும் உலகத்து உயிர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று முக்திநிலை அடைய என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தகுந்த உடல்களுடன் உயிர்கள் உலகம் உய்ய என்ற தொடரினை, திரிபுரங்களை எரித்த செயலுடன் இணைத்துக் கொண்டு, திரிபுரங்களை எரித்து உலகத்தவரை வாழ வைத்தார் என்றும் பொருள் கொள்ளலாம், முந்திய இரண்டு விளக்கங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளன. தகுந்த மனித உடலுடன் சேர்ந்தால் தான், உயிரும் தனது வினைகளைக் கழித்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை பெற்று முக்தி நிலை பெரும் முயற்சியில் முன்னேறலாம்.
மலைமலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய
சிலை மலி வெங்கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும்
குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா
இலைமலி சூலம் ஏந்தி இருந்தான் அவன் எம் இறையே
பெருமான் உமை அன்னையுடன் கூடி வாழ்வதற்கு ஒரு காரணம் புராணங்களில் சொல்லப் படுகின்றது. படைத்தல் தொழிலில் ஈடுபட்ட பிரமன், தனது மானச புத்திரர்களை இல்லற வாழ்வினில் ஈடுபட்டு இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்லியபோது, அவர்கள் அனைவரும் இல்லறத்தில் ஈடுபட தயக்கம் கொண்டனர். தங்களது இறைவனாகிய பரமன், யோகியாக இருந்து தவம் செய்வது போன்று, தாங்களும் தவம் செய்யவே விரும்பினர். எனவே மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து இல்லறத்தில் ஈடுபடுவது போன்றும் போகத்தில் ஆழ்ந்திருப்பது போன்றும், பெருமான் நடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் இன்பம் துய்க்காமல் யோகியராக மாறினால், அவர்களால் ஏற்படவிருந்த இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும்.இனப்பெருக்கம் தடைப்பட்டால் வினைகளுடன் பிணைந்திருக்கும் உயிர்கள் மீண்டும் பிறப்பெடுத்து தங்களது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ள தேவையான உடல்கள் இல்லாமல் போய்விடும். எனவே உடல்களை தோற்றுவிக்கும் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எனவே தான் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, மனிதர்கள் இன்பம் துய்க்கும் வழியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக, இறைவனும் தான் போகம் துய்ப்பது போன்று காட்சி அளிக்கின்றான். மனிதப் பிறவி தான் அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்தது என்று சொல்வதன் காரணம், மனிதப் பிறவி தான்,உயிர் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொண்டு உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைய வழி வகுக்கும் பிறவியாகும்.இந்த மனிதப் பிறவியின் பெருக்கம் தடைப்பட்டால், எண்ணற்ற உயிர்கள் என்றென்றும் மலங்களுடன் பிணிக்கப்பட்டு விடுதலை அடைய முடியாமல் போய்விடும். மேலும் உயிர்கள் முக்தி நிலை அடைந்து தன்னுடன் வந்து இணைந்து என்றென்றும் பேரின்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பமும் ஈடேறாமல் போய்விடும். எனவே, அத்தகைய உயிர்கள் பொருத்தப் படுவதற்கான தகுந்த உடல்கள் இனப்பெருக்கத்தின் மூலம் தான் உருவாக்கப் பட முடியும் என்பதால், உயிர்கள் போகிகளாக வாழ்ந்து இன்பம் துய்க்கவேண்டிய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் இறைவன் பிராட்டியுடன் கூடியிருந்து, உலகம் தொடர்ந்து வளரும் பொருட்டு நமக்கு முன்மாதிரியாக விளங்குகின்றான் என்ற செய்தி மேற்கண்ட திருவாசகப் பாடலிலிலும் மற்ற திருமுறைப் பாடல்களிலும் உணர்த்தப் படுகின்றது. இந்த தன்மை மிகவும் அழகாக திருவாசகம் திருச்சாழல் பதிகத்து பாடலில் உணர்த்தப் படுகின்றது. உயிர்களுக்கு போகம் அளிக்க வேண்டி சிவபிரான் உமை அன்னையுடன் இருக்கின்றான் என்று மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமான் அன்னையைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டிராவிடில் உலகத்து உயிர்கள் எல்லாம் துறவு மேற்கொண்டு யோகத்தில் புகுவர்;அதனால் உலகம் வளராது நிற்கும். எனவே போகத்தில் ஆழ்ந்திருப்பது போன்று தோற்றத்தை நமக்கு பெருமான் நல்குகின்றான் என்பதே இந்த தேவாரப் பாடல் உணர்த்தும் செய்தியாகும். இதனுடன் பொருந்தும் கருத்தினை வெளிப்படுத்தும் திருவாசகம் திருச்சாழல் பாடலையும் நாம் இங்கே காணலாம்.
தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி
பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ
இந்த பதிகத்தின் முதல் பாடல், அம்பிகையின் திருநாமத்துடன் தொடங்குகின்றது. சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகம் (1.09) வண்டார் குழல் அரிவை என்றும் செம்பொன்பள்ளித் திருப்பதிகம் (1.25) மருவார் குழலி என்றும் திருநள்ளாறு திருப்பதிகம் (1.49) போகமார்த்த பூண் முலையாள் என்றும் திருமறைக்காட்டுப் பதிகம் (5.10) பண்ணின் நேர் மொழியாள் என்றும் திருச்சிராப்பள்ளி திருப்பதிகம் (5.85) மட்டுவார் குழலாள் என்றும் திருமறைக்காட்டு திருப்பதிகம் (7.71) யாழைப்பழித்தன்ன மொழிமங்கை என்றும் அம்பிகையின் பலவேறு திருநாமங்களுடன் தொடங்குகின்றன. திரு மாமணி=அழகிய பெரிய மணிகள்; மண்ணார்ந்தன=நிலத்தை நோக்கி மிகவும் வேகமாக ஆரவாரத்துடன் கீழே இறங்கும்; திரள்=கூட்டம்; மழலை=இனம் புரியாத சொற்கள்,பொருளற்ற ஓசை;
பொழிப்புரை:
உண்ணாமுலை உமையாள் என்ற திருநாமத்துடன் திகழும் உடனாக உறைபவனும், ஒப்பற்ற ஒருவனும் ஆகிய பெருமான், தனது உடலின் இடது பாகத்தில் உமை அன்னையை ஏற்றுக் கொண்டவன் ஆவான். அத்தகைய பெருமான் வீற்றிருக்கும் மலையானது, அழகிய பெரிய மணிகளை அடித்துக் கொண்டு திரளாக வரும் அருவிகள், இனம் புரியாத ஓசையுடன் கீழே இறங்கும் அருவிகள், நிலத்தை நோக்கி மிகுந்த வேகத்துடன் இறங்கி வருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த அண்ணாமலையை, மிகுந்த விருப்பத்துடன் தொழும் அடியார்களின் வினைகள், அந்த அடியார்களுடன் தொடர்ந்து பிணைந்து நில்லாமல்,தங்களது நிலை கெட்டு, அகன்று விடும்.
பாடல் 2:
தேமாங்கனி கடுவன் கொள விடுகொம்பொடு தீண்டி
தூமாமழை துறுகல் மிசை சிறு நுண்துளி சிதற
ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே
விளக்கம்:
கடுவன்=ஆண் குரங்கு; தே=இனிய; விடுகொம்பு=மாங்கனிகளை பறித்த பின்னர் குரங்குகளால் விடப்பட்ட கிளைகள்; மழை=மழை தரும் மேகங்கள்;துறுகல்=பாறை, மலைப்பாறை; மிசை= மேல்: ஆமாப் பிணை என்ற சொல் ஆமாம்பிணை என்று, எதுகை கருதி மருவியது. ஆமாப்பிணை=காட்டுப் பசுக்கள்; பொழில்=மர நிழல்; அண்ணல்=தலைவன்; பூமாங்கழல்=பூ போன்ற அழகியதும் மிருதுவானதும் ஆகிய பெருமானின் திருப்பாதங்கள்;புனை=அணிந்த; நினைத்தாலே முக்தி தரும் தன்மை தருவது அண்ணாமலை தலம். உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை முற்றிலும் நீக்கிக்கொண்டால் தான், அவை முக்தி நிலை அடைவதற்கு தகுதி படைத்தவையாக மாறமுடியும் என்பதால், பெருமான், இந்த தலத்தை நினைக்கும் அடியார்களது வினைகளை முற்றிலும் களைந்து விடுகின்றார். இந்த கருத்து தான் இந்த பாடலில் சொல்லபப்டுகின்றது. பிறக்க முக்தி அளிக்கும் தலம் திருவாரூர், வசிக்க முக்தி தரும் தலம் காஞ்சிபுரம், காண முக்தி தரும் தலம் சிதம்பரம், நினைக்க முக்தி தரும் தலம் திருவண்ணாமலை இறக்க முக்தி தரும் தலம் காசி என்று கூறுவார்கள். இங்கே குறிப்பிடப்படும் தலங்களில் உறைகின்ற இறைவனை, நினைக்க, காண, வசித்து வழிபட முக்தி கிடக்கும் என்று பொருள் கொள்ளவேண்டும். திருவாரூர் தலத்தில் பிறக்கும் அனைவரும் சிவபூத கணங்களாக கருதப் படுவதால் அவர்கள் இயற்கையாகவே பரமனைத் தொழும் தன்மையில் இருப்பார்கள். காசியில் இறக்கும் உயிர்களை, பிராட்டி தனது தொடையில் அமர்த்திக் கொள்ள, இறைவன் அவர்களது காதினில் பஞ்சாக்கர மந்திரத்தை ஓதுவதாக நம்பப் படுகின்றது. தனது வாழ்நாள் இறுதியில் பஞ்சாக்கர மந்திரத்தை ஓதும் அடியார்களும், கேட்கும் அடியார்களும்,முக்தி நிலை அடைவார்கள் என்று நம்பப்படுகின்றது. அதனால் தான், அப்பர் பிரான் தான் இறக்கும் தருவாயில் நமச்சிவாய மந்திரத்தை சொல்லும் வல்லமையை இறைவன் தந்தருள வேண்டும் என்று வேண்டுகின்றார்.
இறக்கும் தருவாயில், பெரும்பாலோருக்கு புலன்கள் தங்களது செயலிழந்து நிற்க, மெல்ல மெல்ல உணர்வுகள் இழக்கும் நிலை ஏற்படும். நமது உடல் பூரண நலத்துடன் இருக்கையிலே, நாம் சிவபிரானை நினைப்பதற்கு அவனது அருள் தேவைப் படுகின்றது. அவ்வாறு இருக்கையில், நமது இறுதிக் காலத்தில், உடலும் மனமும் நம்முடன் ஒத்துழைக்காத போது, இறைவனை நினைப்பதென்பது மிகவும் அரிதான செயலாக அனைவர்க்கும் மாறிவிடுவது இயற்கையே. அதனால் தான், உடலும் மனமும் தனக்கு வஞ்சனை செய்யும் இறுதி நாளில், இறைவனின் நினைவு தோன்றவேண்டும் என்றால் ஐயாறன் அருள் வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல் (4.27.3) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கயம்=ஆழமுடைய நீர்நிலை: வான் சுழி=பெரிய சுழி: நீர்நிலை என்பதால் சுழி என்று இறுதி கால நிலையை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.
நெஞ்சம் என்பதோர் நீள் கயம் தன்னுள்ளே
வஞ்சம் என்பதோர் வான்சுழிப் பட்டு நான்
துஞ்சும் போழ்து நின் நாமத் திருவெழுத்து
அஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே
பெருமானின் திருநாமத்தின் பெருமையை நன்கு உணர்ந்திருந்த காரணத்தால் தான், அப்பர் பிரான், தான் சாகும் நேரத்திலும் நமச்சிவாய என்று பெருமானின் திருநாமத்தை சொல்வற்கு பெருமான் உதவ வேண்டும் என்று அப்பர் பிரான் நாகைக் காரோணம் பதிகத்தின் ஒரு பாடலில் (4.103.3)கூறுகின்றார். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்த எழுந்த தீப்பிழம்பில் தான் அழிந்து பட்டாலும், மன்மதன் எந்த நோக்கத்திற்காக இறைவனின் தவத்தினை கலைக்க முயற்சி செய்தானோ, அந்த நோக்கம் நிறைவேறியது: அதாவது உமையம்மையை இறைவன் திருமணம் செய்து கொண்டார் என்று உணர்த்தும் பொருட்டு, திருமணச் சடங்குகளில் நடைபெறும் வேள்வி இங்கே குறிப்பிடப்படுகின்றது. சங்கரன் என்றால் நன்மைகளைச் செய்பவன் என்று பொருள். உயிரின் உண்மையான ஆசை, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைவது தானே. இறக்கும் தருவாயில் உயிர்,இறைவனை நினைந்து அதன் மூலம் உயிர் உய்வினை அடையும் என்றால், அதனினும் பெரிய உதவி என்ன இருக்க முடியும். அதனால் தான் இத்தகைய பெரிய உதவியினைப் புரிய வேண்டி சங்கரனே என்று இங்கே அப்பர் பிரான் அழைக்கின்றார்
தூமென் மலர்க்கணை கோத்துத் தீ வேள்வி தொழிற்படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக் காரோண நின்
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்
சாம் அன்று உரைக்கத் தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே
இறக்கும் தருவாயில் பெருமானின் திருநாமத்தை சொல்வதால் என்ன பலன் கிடைக்கும் என்று ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.47.3) அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். வரை=மலை, இங்கே இமயமலை; கழல்=கழலை அணிந்த பெருமானின் திருவடிகள்; அரையன்=அரசன்;தான் இறக்கும் தருவாயில் பெருமானின் திருநாமங்களைச் சொல்லும் வல்லமை தனக்கு இருக்குமாயின், எத்துணை வலிய நோயும் தனக்கு எந்த கெடுதலையும் செய்யாது என்று கூறுகின்றார். நோய் என்று உடலுக்கு வரும் நோயினை மட்டும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடவில்லை. இறக்கும் சமயத்தில் உடலுக்கு எந்த விதமான நோய் வந்தாலும் அதனால் பெரிய மாற்றம் ஏதும் விளையாது அல்லவா. அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவது, பழைய பிறவிகள் முதலாக அந்த பிறவி வரை ஈட்டிய வினைத் தொகைகளையே நோயாக, உயிரினைப் பற்றும் நோயாக குறிப்பிடுகின்றார். அந்த வினைக் குவியல்கள் தானே, இறந்த பின்னர் அந்த உயிருக்கு அடுத்த பிறவி உள்ளதா, இருந்தால் அந்த பிறவி எத்தகையதாக இருக்கும் என்பதை தீர்மானிக்கின்றது. இந்த கருத்தினை உள்ளடக்கியே, தான் இறக்கும் சமயத்தில் இறைவன் அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் என்றும், இறக்கும் சமயத்தில் அவனது திருநாமங்களைச் சொல்லும் வண்ணம் தான் இருக்க வேண்டும் என்றும் அப்பர் பிரான் பல பாடல்களில் வேண்டுகின்றார்.
வரையார் மடமங்கை பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்றன் நாமம்
உரையா உயிர் போகப் பெறுவேனாகில் உறுநோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே
கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக் காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு
அரையா அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே
பொழிப்புரை:
இனிய மாங்கனிகள் உடைய கிளைகளை மிகுந்த வேகத்துடன் பிடித்து இழுத்து கனிகளை பறித்து உண்ணும் ஆண் குரங்குகளால் விடுவிக்கப்படும் உயர்ந்த கிளைகள், வேகத்துடன் மேலெழும்பி மழை பொழியும் தகுதி படைத்த கருமேகங்களை சென்றடைந்து தீண்டுவதால், அந்த மேகங்கள் மலைப் பாறைகளில் நுண்ணிய மழைத் துளிகளை சிதறுகின்றன. அவ்வாறு சிதறப்படும் நீர்த் திவலைகளை மழை என்று கருதி காட்டுப்பசுக்கள், நிழலுக்காக சென்று தங்கும் மரங்கள் நிறைந்த சோலைகள் உடைய அண்ணாமலை தலத்தின் தலைவனாகிய பெருமானின், அழகிய மலர்கள் போன்று மென்மையானதும் வீரக்கழல்கள் அணியப்பெற்றதும் ஆகிய சிறப்பினை உடைய திருப்பாதங்களை நினைக்கும் அடியார்கள், தங்களது வினைகள் முற்றிலும் தீர்க்கப்பெற்று, முக்தி உலகம் சென்று அடையும் தகுதி படைத்தவர்களாக விளங்குவார்கள்.
பாடல் 3:
பீலிம்மயில் பெடையோடுறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலிம்மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல்
ஆலிம்மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே
விளக்கம்:
பீலி=தோகை; கழை=மூங்கில்; மூங்கில் முதலான இருபது பொருட்களில் முத்து கிடைப்பதாக நம்பப்படுகின்றது. ஆனால் கடலில் முத்து கிடைக்கும் என்பது மட்டுமே விஞ்ஞானிகளால் ஒப்புக் கொள்ளப் படுகின்றது. யானைத் தந்தம் முத்து விளையும் இடம் என்று காளிதாசனின் ரகுவம்சம் நூலும் மாளவிகாக்னிமித்ரம் நூலும், பகவத் கீதையும் குறிப்பிடுகின்றன. திருமுருகாற்றுப்படை, மலைபடுகடாம், கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து,நற்றினை, அகநானூறு, குறிஞ்சிப் பாட்டு ஆகிய சங்க இலக்கியங்கள், யானைத் தந்தம் மற்றும் முற்றின மூங்கில் ஆகியவை முத்து கிடைக்கும் இடங்கள் என குறிப்பிடுகின்றன. சூல்=கரு; ஆலி=நீர்த்துளி; எத்துணை வலிமை படைத்தவராயினும், அவரது வாழ்நாள் முடிவடையும் நாளில், காலன் அவரது உடலிலிருந்து உயிரினை பிரிக்க முயற்சி செய்கையில் காலன் அவர்களை அணுகும் போது, அவர்களால் காலனை வெல்ல முடியாது. அத்தகைய வலிமை பெற்ற காலனின் வலிமையை தொலைவித்த திருவடிகள் என்று அடியார்கள் போற்றுவதாக கூறுகின்றார்.
பொழிப்புரை:
தோகைகளுடன் கூடிய ஆண்மயில்கள் தங்களது துணையுடன் உறைகின்ற சோலைகளால் சூழப்பட்டதும், முற்றின மூங்கில்கள் தங்களிடை கருக்கொண்டு வளர்ந்த முத்துக்களை மிகுதியாக நிலத்தின் மீது சொரிவதும் ஆகிய விரிந்த மலைச்சாரல்கள் கொண்டதும், நீர்த்திவலைகளுடன் கூடிய மழை மேகங்கள் தவழும் சோலைகள் நிறைந்ததும் ஆகிய அண்ணாமலையின் தலைவன் பெருமான். அத்தகைய பெருமனின் திருவடிகளை காலனின் வலிமையை அடக்கிய திருவடிகள் என்று புகழும் அடியார்கள் மேன்மேலும் புகழ் அடைவார்கள்.
பாடல் 4:
உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா உலகெல்லாம்
எதிரும் பலி உணலாகவும் எருதேறுவதல்லால்
முதிருஞ் சடை இள வெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிரும் கழல் அடிகட்கிடம் அண்ணாமலை அதுவே
விளக்கம்:
உதிரும் மயிர்=சதை நீக்கப்ப்ட்டதால் முடிகள் உதிர்ந்த பிரம கபாலம்; எதிரும் பலி=பலரும் வந்து இடுகின்ற பலி; உண்ணல் என்ற சொல் உணல் என்று திரிந்துள்ளது. பண்டைய நாட்களில் பிச்சை ஏற்போர் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல், இல்லத்து மகளிர் தாமே அவர்களை எதிர்கொண்டு பிச்சை இடுவது வழக்கமாக இருந்தது போலும். அதனைக் குறிப்பிடும் முகத்தான், எதிரும் பலி என்று கூறினார் போலும். அதே போன்று பக்குவப்பட்ட உயிர்களும், தாமே தமது மூன்று மலங்களையும் பெருமானிடம் சமர்ப்பிக்கின்றன என்பதை உணர்த்தும் திருஞானசம்பந்தர் அத்தகைய பலிகளை மிகுந்த விருப்பத்துடன் பெருமான் ஏற்றுக்கொள்கின்றான் என்பதை, எதிரும் பலி உணலாக என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியவன் பெருமான் என்பதால், அவனது சடையும் முதிர்ந்ததாக உள்ள நிலை இங்கே சொல்லப்படுகின்றது. பெருமானிடம் ஒற்றைப் பிறையுடன் சரணடைந்த சந்திரன், தேய்ந்து அழியாமல் நாளுக்கு நாள் வளர்ந்து முழுநிலவாக மாறிய தன்மை இளவெண்பிறை என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. முதிரும் சடை மேல் இள வெண்மதி என்று ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு நிலைகள் நயமாக இணைக்கப்பட்டுள்ளன.அதிரும் கழல்=ஆரவார்த்துடன் ஒலிக்கும்; கழல் அதிரும் வ்ண்ணம் நடனமாடும் பெருமான் என்று உணர்த்தப்படுகின்றது. அடிகள்=தலைவர்;
பொழிப்புரை:
சதை நீக்கப்பட்டதால் உதிர்ந்த முடிகளை உடையதும் உலர்ந்து வெண்மை நிறம் கொண்டதும் பிரமகபாலத்தைத் தனது உண்கலனாக ஏற்றுக்கொண்டு உலகெங்கும் பலியேற்கத் திரியும் பெருமானின் வரவினை எதிர்நோக்கி இடப்படும் பலியை விருப்பத்துடன் உணவாக ஏற்றுக் கொள்பவன் பெருமான்.அவன் எருதினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளான். அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக, முதிர்ந்தவனாக இருக்கும் பெருமான் தனது முதிர்ந்த சடையினில் வளராது இளமையுடன் விளங்கும் ஒற்றைப்பிறைச் சந்திரனைத் தாங்கியவனாக உள்ளான். நிலம் அதிர தனது காலில் அணிந்துள்ள கழல் ஒலிக்கும் வண்ணம் நடமாடும் தலைவர்க்கு உரிய இடம் திருவண்ணாமலையாகும்.
பாடல் 5:
மரவம் சிலை தரளம் மிகு மணி உந்து வெள்ளருவி
அரவம் செய முரவம் படும் அண்ணாமலை அண்ணல்
உரவம் சடை உலவும் புனல் உடனாவதும் ஓரார்
குரவம் கமழ் நறுமென் குழல் உமை புல்குதல் குணமே
விளக்கம்:
மரவம்=வெண் கடம்ப மரம்; சிலை=ஒரு வகை மரம் என்றும் சிறு கற்கள் என்று இரண்டு வேறு வேறு விதமாக பொருள் கொள்ளலாம். உந்து=அடித்துக் கொண்டு வரும்; அரவம்=ஆரவாரமான ஓசை; முரவம்=பறை; உரவம்=உரகம் என்பதன் திரிபு, பாம்பு என்று பொருள். ஏர்=அழகு; ஏரார்= அழகு பொருந்திய;புல்குதல்=தழுவுதல்; ஓராமல்=ஆராயாமல்; பெருமான் சற்று ஆராய்ந்திருந்தால் அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்திருக்கும் தன்மையைக் கருத்தில் கொண்டு, தனது சடையில் பாம்பினையும் கங்கை நதியினையும் ஏற்றுக்கொள்வதை தவிர்த்திருப்பார் என்று நகைச்சுவை ததும்ப குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அவ்வாறு செய்யாமல் இருந்த தன்மை நன்றோ என்ற கேள்வியை எழுப்புகின்றார். கணவன் மனைவியர் ஒருவருக்கொருவர் தழுவிக் கொள்வது தனிமையில் இருக்கும் போது நடப்பது தான் உலக வழக்கு. ஆனால் பெருமானோ, பார்வதி தேவியை, கங்கை நதி தனது தலையில் இருக்க, பல பாம்புகள் உடலில் இருக்க பிராட்டியைத் தழுவிக் கொள்ளலாமா என்று கேட்பதாகவும் விளக்கம் அளிக்கப்படுகின்றது.பெருமான் உலகியல் மாந்தர்களைப் போன்று காமத்தால் உந்தப்பட்டு தனது மனைவியைத் தழுவிக் கொள்ளவில்லை. அவர் காமம் குரோதம் ஆகிய குணங்களை வென்றவர். எனினும், உலகத்து உயிர்கள் போகத்தில் ஈடுபடுவதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் பொருட்டு, அவர் அன்னையைத் தழுவிக் கொள்வது போல் நடிக்கின்றார் என்பதே இந்த பாடலில் சொல்லப்படும் செய்தி.
இவ்வாறு இறைவன் பார்வதி தேவியுடன் எப்போதும் கூடியிருக்கும் தன்மையை மிகவும் அழகாக, மங்கையோடிருந்தே யோகு செய்வான் என்று,கருவூர்த்தேவர் கங்கைகொண்ட சோளேச்சரம் தலத்து பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இல்லறமும் துறவும் ஒன்றுக்கொன்று எதிரான நெறிகள், முரண்பட்ட நெறிகள் என்று பலரும் சொல்வதால் எவ்வாறு, இந்த இரண்டு கோலங்களும் இணைந்தவராக பெருமான் இருக்க முடியும் என்ற சந்தேகம் நமக்கு எழுவது இயற்கையே. இயல்பாகவே ஐந்து புலன்களையும் அடக்கி வென்ற பெருமானுக்கு இல்லறம் துறவறம் இரண்டையும் ஒன்றாக கடைப்பிடிப்பது எளிதான காரியம் தானே. இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதை கருவூர்த் தேவர் ஒரு திருவிசைப்பா பாடலில் விளக்குகின்றார்.
மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளம் திங்களை முடிமேல்
கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட சோளேச்சரத்தானை
அங்கை ஓடு ஏந்திப் பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவனருள் கடலே
ஏன் பற்றற்றவனாக இருக்கும் பெருமான் இவ்வாறு தேவியுடன் எப்போதும் இணைந்து இருப்பவராக காட்சி தருகின்றார் என்ற நமது ஐயத்தினை போக்கும் வண்ணம், திருச்சாழல் பதிகத்தினில் மணிவாசகர் ஒரு பாடலை அருளியுள்ளார். அருணை வடிவேல் முதலியார் அவர்கள், உயிர்கள் போகத்தை விரும்பி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெருமான் போகவடிவம் கொண்டு போகி போல் நிற்கின்றாரே அன்றி அவர் உண்மையில் போகம் அனுபவிப்பவர் அல்லர் என்று விளக்கம் கூறுவார். இதே கருத்து திருச்சாழல் பதிகத்தில் மணிவாசகரால் உணர்த்தப் படுவதையும் நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.பெருமான் பெண்ணைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டிராவிடில் உலகத்து உயிர்கள் எல்லாம் துறவு மேற்கொண்டு யோகத்தில் புகுவர்; அதனால் உலகம் வளராது நிற்கும். எனவே போகத்தில் ஆழ்ந்திருப்பது போன்று தோற்றத்தை நமக்கு பெருமான் நல்குகின்றான் என்பதே இந்த பாடல் உணர்த்தும் செய்தியாகும்.
தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண் பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி
பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ
மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் இன்பம் துய்க்காமல் யோகியராக மாறினால், அவர்களால் ஏற்படவிருந்த இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும்.இனப்பெருக்கம் தடைப்பட்டால் வினைகளுடன் பிணைந்திருக்கும் உயிர்கள் மீண்டும் பிறப்பெடுத்து தங்களது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ள தேவையான உடல்கள் இல்லாமல் போய்விடும். எனவே உடல்களை தோற்றுவிக்கும் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எனவே தான் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, மனிதர்கள் இன்பம் துய்க்கும் வழியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக, இறைவனும் தான் போகம் துய்ப்பது போன்று காட்சி அளிக்கின்றான். மனிதப் பிறவி தான் அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்தது என்று சொல்வதன் காரணம், மனிதப் பிறவி தான்,உயிர் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொண்டு உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைய வழி வகுக்கும் பிறவியாகும்.இந்த மனிதப் பிறவியின் பெருக்கம் தடைப்பட்டால், எண்ணற்ற உயிர்கள் என்றென்றும் மலங்களுடன் பிணிக்கப்பட்டு விடுதலை அடைய முடியாமல் போய்விடும். மேலும் உயிர்கள் முக்தி நிலை அடைந்து தன்னுடன் வந்து இணைந்து என்றென்றும் பேரின்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பமும் ஈடேறாமல் போய்விடும். எனவே, அத்தகைய உயிர்கள் பொருத்தப் படுவதற்கான தகுந்த உடல்கள் இனப்பெருக்கத்தின் மூலம் தான் உருவாக்கப் பட முடியும் என்பதால், உயிர்கள் போகிகளாக வாழ்ந்து இன்பம் துய்க்கவேண்டிய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் இறைவன் பிராட்டியுடன் கூடியிருந்து, உலகம் தொடர்ந்து வளரும் பொருட்டு நமக்கு முன்மாதிரியாக விளங்குகின்றான் என்பதே மேற்கண்ட திருவாசகப் பாடலில் கூறப்படுகின்றது.
பாம்பு உலாவும் சடையினை உடைய பெருமானே, நீர் உமது உடலின் ஒரு பாகத்தில் அன்னை பார்வதி தேவியை, வைத்துக் கொண்டிருப்பது முறையா,நல்ல குணமாகுமா என்று கேள்வி கேட்பது போல் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த கருத்து காரைக்கால் அம்மையாரின் பாடல் ஒன்றினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. பெருமானே, உமது சடையில் உலவும் பாம்பு; தகவு=தகுதி, நடு நிலைமை; பிறர்க்கு வரும் தீங்கையும் தமக்கு வந்ததாக கருதி தவிர்த்தல்; அனைத்து உயிர்கள் மீதும் அன்பு பூண்டுள்ள பெருமான், தன்னைச் சார்ந்த பிராட்டிக்கு தீங்கு ஏதும் நிகழாமல் இருப்பதற்கு பாம்பினைத் தனது மார்பில் அணியாமல் இருக்கவேண்டும் அல்லவா என்று கேட்பது போன்று அமைந்த பாடல். பொல்லாது=தீங்கு; அடர=தீங்கு செய்தல்;தார்=கொன்றைத்தார்; கொன்றை மலர் மாலை; அந்த பாம்பினால் பிராட்டிக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், பெருமானுக்கு பெண் பாவம் ஏற்படுமே என்று கவலை கொள்ளும் தாயுள்ளத்தின் கருணை இங்கே வெளிப்படுகின்றது. பாம்பினால் பிராட்டிக்கோ பெருமானுக்கோ எந்த விதமான தீங்கும் எப்போதும் நேராது என்பதை நன்கு அறிந்தவர் தான் காரைக்கால் அம்மையார். எனினும் பெருமான் பால் அம்மையார் கொண்டிருந்த பக்திப் பரவசம், தாயின் கருணை உள்ளம் இரண்டும் சேர்ந்து இவ்வாறு சொல்லத் தூண்டியது போலும். பெருமானால் அம்மையே என்று அழைக்கப் பட்ட அம்மையார், பெருமான் மற்றும் பிராட்டி ஆகிய இருவரையும், குழந்தைத் தன்மையில் காண்பது பொருத்தம் தானே. இவ்வாறு பெருமானை நகையாடுவது போல், அம்மையார் புகழ்கின்றார்.
தகவுடையார் தாம் உளரேல் தாரகலம் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் — மிக அடர
ஊர்ந்திடுமா நாகம் ஒரு நாள் மலைமகளைச்
சார்ந்திடும் மேலே பாவந்தான்
பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்துள்ள இறைவன், கங்கை நதியைத் தனது சடையில் மறைத்து வைத்துள்ள காரணம் கருதி கள்வன் என்று திருஞானசம்பந்தர் பெருமானை அழைக்கும் பாடல் பல்லவனீச்சரம் தலத்துப் பாடலாகும் (1.65.3). வாள்நிலவு=ஒளி பொருந்திய பிறைச் சந்திரன்;வார் சடை=நீண்ட சடை; இந்த பாடலில் சம்பந்தர் இறைவனை கள்வன் என்று கூறுகின்றார். தான் திருடிய பொருளினை மற்றவர் அறியாத வண்ணம் ஒளித்து வைப்பது கள்வனின் செயல் என்பதை நாம் தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தின் விளக்கத்தில் கண்டோம். அந்த பாடலில் தனது உள்ளத்தை கொள்ளை கொண்டதால் கள்வன் என்று கூறிய சம்பந்தர், கங்கை நதியினை தனது சடையினில் மறைத்து தேக்கி வைத்ததால் இறைவனை கள்வன் என்று நயமாக கூறுகின்றார். அயம்=பள்ளம்; புணரி=கடல்; பங்கயம்=தாமரை மலர்கள்; உயர் பொய்கை=கடலில் நீர் மிகுந்த காணப்படுவதால் நீர்நிலைகளிலும் தண்ணீர் மேல் உயர்ந்து காணப் படுகின்றது என்று கூறுகின்றார்.
கங்கையை வாழவைத்த கள்வன் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். வால்மீகி இராமயணத்தில் கங்கை நதி பூமிக்கு வந்த வரலாற்றினை விஸ்வாமித்திரர் இராமபிரானுக்கு சொல்வதாக அமைந்துள்ளது. அயோத்தி நகரை ஆண்டு வந்த சகரன் என்ற மன்னன் அஸ்வமேத யாகம் செய்ய நினைத்து,தனது பட்டத்து குதிரையை பல நாடுகளுக்கும் அனுப்பினான். பல நாட்கள் சென்ற பின்னரும் பட்டத்து குதிரை திரும்பி வராததைக் கண்ட சகரன் தனது அறுபதினாயிரம் மகன்களை குதிரையைத் தேடிக் கொண்டு வருமாறு பணித்தான். அஸ்வமேத யாகம் தடையேதும் இன்றி முடிந்தால், தன்னை விடவும் சகரன் மிகுந்த புகழினை அடைந்து விடுவான் என்று எண்ணிய இந்திரன், குதிரையை திருடிக்கொண்டு போய், பாதாள உலகினில் மறைத்து வைத்தான்.குதிரையை தேடிக் கொண்டு பாதாள உலகம் சென்ற சகரனின் மைந்தர்கள், குதிரை பாதாளத்தில் திரிந்து கொண்டிருப்பதையும் அதன் அருகினில் நாராயணனின் அம்சமாகிய கபில முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதையும் கண்டனர். கபில முனிவர் தான், குதிரையை கடத்திக் கொண்டு சென்று,பாதாளத்தில் ஒளித்து வைத்த பின்னர், தவம் செய்வது போன்று நடிக்கின்றார் என்று தவறாக நினைத்த அவர்கள், முனிவரை தாக்க நினைத்தனர். தனது தவம் கலைந்ததால் கோபத்துடன் விழித்த முனிவரின் கண்களிலிருந்து பொங்கி வந்த கோபம், அறுபதினாயிரம் பேரையும் சுட்டெரித்து சாம்பலாக மாற்றியது.தனது புத்திரர்கள் வராததைக் கண்ட சகர மன்னன், தனது பேரன் அம்சுமானை குதிரையை தேடி மீட்டு வர அனுப்பினான். அறுபதினாயிரம் பேர் சென்ற வழியில் சென்ற அம்சுமான் பாதாளத்தில் அறுபதினாயிரம் பேரும் சாம்பலாக இருப்பதையும் அந்த சாம்பல் குவியலின் அருகே குதிரை திரிந்து கொண்டு இருப்பதையும் கண்டான். அப்போது அங்கே தோன்றிய கருடன், நடந்ததை விவரித்ததும் அன்றி, தேவலோகத்தில் இருக்கும் கங்கை நீரினால் இறந்தவர்களின் சாம்பல் கரைக்கப்பட்டால் அவர்கள் நற்கதி அடைவாரகள் என்றும் கூறியது. குதிரையை மீட்டுச் சென்ற அம்சுமான், அனைத்து விவரங்களையும் தனது பாட்டனாராகிய மன்னனிடம் கூறினான். சகரன், அம்சுமான், அவனது மகன் திலீபன் ஆகியோர் எத்தனை கடுந்தவம் செய்தும் அவர்களால் கங்கையை கீழே கொண்டு வர முடியவில்லை. திலீபனின் மகன் பகீரதன்.
பகீரதன் பிரமனை நோக்கி தவம் செய்து, கங்கை நதியினை வானிலிருந்து கீழே வரவழைத்து, சாம்பல் குவியலாக மாறி இருக்கும் தனது மூதாதையரின் மீது பாயவைத்து அவர்கள் நற்கதி அடையச் செய்ய வேண்டும் என்று விரும்பினான். கங்கை நதிக்கு பூலோகம் இறங்கி வர விருப்பம் இல்லாததால், வேகத்துடன் கீழே இறங்கி வரும் தன்னைத் தாங்கும் வல்லமை படைத்தவர் வேண்டும் என்ற சாக்கு சொல்லவே, பகீரதன் பெருமானை நோக்கி தவமியற்றி, பெருமான் கங்கை நதியைத் தாங்குவதற்கு ஏற்பாடு செய்தான். இதனால் கங்கையின் கோபம் மேலும் பெருகியது; சிவபெருமானையும் அடித்துக் கொண்டு,பூவுலகினையும் அடித்துக் கொண்டு பாதாளத்தில் சென்று சேர்க்கும் நோக்கத்துடன் மிகவும் வேகமாக கீழே இறங்கியது. அவ்வாறு இறங்கிய கங்கையை பெருமான் தனது சடையினில் தாங்கி அடக்கியது பல தேவாரப் பாடல்களில் கூறப் படுகின்றது.
மங்கை அங்கோர் பாகமாக வாள் நிலவு வார் சடை மேல்
கங்கை அங்கே வாழ வைத்த கள்வன் இருந்த இடம்
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்
பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
உமையன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்துள்ள பெருமான், கங்கை நதியைத் தனது சடையில் மறைத்த காரணம் தான் யாது என்று திருமறைக்காடு தலத்து பதிகத்தின் பாடலில் (2.37.2) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வங்கம்=கப்பல்; கப்பல்கள் உலவுவதால், வங்காளப் பெருங்கடல் என்ற பெயர் வந்ததோ என்று தோன்றுகின்றது. எற்றும்=எறியும். சங்குகளையும் முத்துக்களையும், தனது அலைக் கரங்கள் கொண்டு கரையில் வீசி எறிகின்ற கடல் என்று குறிப்பிடுகின்றார்.
சங்கத் தரளம் அவை தான் கரைக்கெற்றும்
வங்கக் கடல் சூழ் மறைக்காட்டுறை மைந்தா
மங்கை உமை பாகமுமாக இதுவென்கொல்
கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே
கங்கை நங்கையைத் தனது சடையினில் வைத்துக் கொண்டு பெருமான் தேக்கியது, கங்கை நங்கையின் மீது பெருமான் விருப்பம் கொண்டதால் அல்ல என்பதை நாம் அறிவோம். பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி பெருமான் தனது சடையினில் கங்கையை ஏற்றதை உமையம்மையும் அறிவாள். எனினும் புலவர்களுக்கு உரிய சுதந்தரத்தை பயன்படுத்திக் கொண்டு, திருஞானசம்பந்தர், பெருமானுக்கு பிராட்டிக்கும் இடையில் ஊடல் நிகழ்ந்ததாகவும், அந்த ஊடலுக்கு காரணம், பெருமான் கங்கையைத் தனது சடையில் அடக்கி மறைத்த செய்கை என்று திருஞானசம்பந்தர் கற்பனை செய்கின்றார். அந்த கற்பனை மிளிரும் பாடல் ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பாடலாகும் (2.50.7), இந்த பாடலில், தனது நறுமணம் கமழும் சடையில் பெருமான் கங்கை நதியை மறைத்து வைத்ததாக சம்பந்தர் கூறுகின்றார்.
மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடியூட மணம் கமழ் சடைக்
கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை கொலாம்
பங்கயம் மது உண்டு வண்டு இசை பாட மாமயில் ஆட விண் முழவு
அங்கையில் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே
திருச்சி நகரின் ஒரு பகுதியாகிய மூக்கீச்சரம் (உறையூர்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.4) திருஞானசம்பந்தர், கங்கை நதியைத் தனது சடையில் வைத்துள்ள பெருமான், பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்திருப்பதன் காரணத்தை எவரும் அறிய முடியாத மாயம் என்று குறிப்பிடுகின்றார். சாயல்=போன்ற; மாயம்=காரணம் அறிந்து சொல்ல முடியாத செயல்கள்; கோழி=கோழியூர் என்ற பெயர் கொண்டுள்ள உறையூர்; உலகில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ஈசனின் திருவுள்ளக் குறிப்பின் படியே நடைபெறுவதால், அதனை நாம் எவரும் சரியாக புரிந்து கொள்ள முடியாது என்பதையும் உணர்த்தும் வண்ணம், அடிகள் செய்கின்றதோர் மாயம் என்று குறிப்பிடும் விளக்கம், ஈசனே உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முழுமுதற் காரணமாக உள்ள நிலையை எடுத்துரைக்கின்றது. மும்மலங்களில் ஒன்றாக கருதப்படும் மாயை வேறு, இங்கே குறிப்பிடப்படும் மாயம் வேறு, கங்கை நதியையும் உமை அன்னையையும் பெருமான் ஏற்றுக் கொண்ட காரணம் இந்த பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்தப் பட்டுள்ளது.
அன்னம் அன்ன நடைச் சாயலாளோடு அழகு எய்தவே
மின்னை அன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம்
தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்
மன்னன் மூக்கீீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மாயமே
கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.38.2) திருஞானசம்பந்தர், இந்த தலத்தின் அடியார்களை நோக்கி, தவம் செய்து தன்னையடைந்த பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக்கொண்டுள்ள பெருமான், கங்கை நதியைத் தனது சடையில் தாங்கிய காரணத்தைச் சொல்வீராக என்று கேட்கின்றார். மிகு மங்கையாள்=தவத்தினில் மேம்பட்ட பார்வதி தேவி; உமையன்னைக்கும் கங்கைக்கும் உள்ள வேறுபாடு மிகவும் அழகாக இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமானையே மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தவம் செய்து தனது அன்பினால் பெருமானைக் கவர்ந்து அவனது உடலில் இடம் பெற்றவள் உமையன்னை. கங்கையின் நிலையோ வேறு; அவளது செருக்கினை அடக்கும் பொருட்டு, தனது சடையினில் கங்கை நதியினை சிறை வைக்கின்றார் பெருமான். மேலும் பெருமான் கங்கை நதியைத் தனது சடையில் தாங்கிய செய்கை,உமையன்னை உட்பட அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படையாக செய்யப்பட்ட செயல். மேலும் இந்த பாடலில் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான் கங்கை நதியை ஏற்றதன் காரணம் யாது என்றும் கேட்கின்றார். சந்திரன் தனது அழிவிலிருந்து விடுபடும் வண்ணம், பெருமானை சரணடைந்தவன். எனவே அவனது நிலைக்கு இரங்கி அவனுக்கு அருள் புரிந்தமை நம்மால் உணர முடிகின்றது. கங்கையோ செருக்குடன் பெருமானையும் சேர்த்து அடித்துச் சென்று விடும் நோக்கத்துடன் வந்தவள். எனவே கங்கை பெருமானிடம் ஏதும் வேண்டவில்லை. எனினும் பெருமான் தனது சடையினில் கங்கை நதியினை ஏற்றுக்கொண்டதற்கு காரணம் பகீரதன் பால் பெருமான் வைத்த கருணையே. பிள்ளை=இளம்
உள்ளவாறு எனக்கு உரை செய்ம்மின் உயர்வாய மாதவம் பேணுவீர்
கள்ளவிழ் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை காதலான்
பிள்ளை வான்பிறை செஞ்சடைம் மிசை வைத்ததும் பெரு நீரொலி
வெள்ளம் தாங்கியது என் கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே
இவ்வாறு கங்கை நதிக்கும் பிராட்டிக்கும் இடையே இருந்த வேறுபாட்டினை உணர்த்தும் முகமாக, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி பாடலில், பார்வதி தேவியைத் தனது உடலில் பெருமான் ஏற்றுக்கொண்டது, பார்வதி தேவியின் தகுதிக்கும் பெருமைக்கும் உரிய செயல் என்று கூறுகின்றார். இருவரையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட பெருமானே, உமை நங்கை மற்றும் கங்கை ஆகிய இருவரில் அன்பு மிகுதியால் உன்னுடன் உறவு கொண்டவர் யார் என்று வினவுதல், மிகவும் நயமாக உள்ளது. சலம் என்றால் வஞ்சனை என்று பொருள். எனவே, சலமகள் என்று குறிப்பிட்டு, கங்கை நதி தேவலோகத்திலிருந்து கீழே இறங்குகையில் வஞ்சக எண்ணத்துடன் கீழே இறங்கினாள் என்று கூறுகின்றார். எனவே சலமகள் எவ்வாறு அன்பு மிகுதி உடையவளாக இருக்கமுடியும் என்பதை சொல்லாமல் சொல்லும் நேர்த்தி ரசிக்கத்தக்கது.
அவளோர் குலமங்கை பாகத்து அகலாள்
இவளோர் சலமகளும் ஈதே — தவள நீறு
என்பணிவீர் என்றும் பிறந்தறியீர் ஈங்கு இவருள்
அன்பணியார் சொல்லுமின் ஈங்கு ஆர்
ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.52.2) பிராட்டியைத் தனது உடலில் பொருத்திக் கொண்டுள்ள பெருமான், தனது தலை உச்சியில் வேறொருத்தியை வைத்துக் கொண்டு இருக்கும் கருணைத்தன்மையை எம்மால் எடுத்தியம்ப முடியாது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.கொட்டு=பறை எனப்படும் இசை வாத்தியம்; எட்டிசைந்த மூர்த்தி=அட்ட மூர்த்தியாக விளங்கும் நிலை; நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆன்மா, ஆகிய எட்டுடன் இணைந்து அவற்றை இயக்கும் தன்மையும் அதே சமயத்தில் அவைகளால் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் அவற்றினின்று வேறுபட்டு இருக்கும் தன்மையும் உடையவனாக பெருமான் இருப்பது இங்கே உணர்த்தப்படுகின்றாது.
பட்டிசைந்த அல்குலாள் பாவையாளோர் பாகமா
ஒட்டிசைந்தது அன்றியும் உச்சியுள் ஒருத்தியாக்
கொட்டிசைந்த ஆடலாய கூடல் ஆல்வாயிலாய்
எட்டிசைந்த மூர்த்தியாய் இருந்தவாறு இது என்னையே
சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.58.10) திருஞானசம்பந்தர், பெருமானை நோக்கி, கங்கை நதியினைத் தலையில் தாங்கிகொண்டும் பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்துக் கொண்டும் இருப்பதை அறிவுடையோர்கள் செயல் என்று புகழ்ந்து சொல்ல முடியுமா என்ற கேள்வியை கேட்கின்றார். ஆனால் அத்தகைய ஐயப்பாடு ஏதுமின்றி, சாத்தமங்கை தலத்து அந்தணர்கள் பெருமானைத் தொழுகின்றனர் என்று கூறுகின்றார். பொதுவாக தனது ப்திகத்தின் பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்கள் பற்றிய குறிப்பினை உணர்த்தும் திருஞான சம்பந்தர், இந்த பாடலில் அத்தகைய குறிப்பினை கொடுக்கவில்லை. ஐயப்பாடு என்று சொல்வது அந்நாளில் சமணர்கள் மற்றும் புத்தர்கள் பெருமானின் மாதொருபாகனின் கோலத்தை பரிகாசம் செய்ததை குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் மாதொரு பாகனின் திருக்கோலத்தை ஈரெழிற்கோலம் என்று குறிப்பிட்டு மகிழ்கின்றார். பிச்சைப் பெருமானின் திருக்கோலமும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. சங்கை=ஐயப்பாடு; சென்னி=பிரம கபாலம்; சாத்தமங்கை என்ப்து தலத்தின் பெயர். அயவந்தி என்பது திருக்கோயிலின் பெயர்.
கங்கையோர் வார்சடை மேல் அடையப் புடையே கமழும்
மங்கையோடு ஒன்றி நின்ற அம்மதி தான் சொல்லல் ஆவ்தொன்றே
சஙகியில்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை
அங்கையில் சென்னை வைத்தான் அயவந்தி அமர்ந்தவனே
அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.93.4) திருஞானசம்பந்தர், கங்கை நதியினை பெருமான் தனது சடையில் ஏற்றுகொண்டதற்காக பிராட்டி கோபம் கொண்டதாக குறிப்பிடுகின்றார். நிமலர்-இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர், அடியார்களின் மலங்களை நீக்கும் ஆற்றல் உடையவர்; கூற்றினர்=திரிபுரத்து அரக்கர்களுக்கு கூற்றுவனாக விளங்கி அவர்களை அழித்தவர்; முனிவுற=கோபம் கொள்ள, பிணங்க; குலவு கங்கை=மிகுந்த மகிழ்ச்சியுடன் சடையில் சேர்ந்த கங்கை நதி. கங்கை நதி விருப்பம் ஏதுமின்றி பெருமானின் சடையில் சேர்ந்தது என்பதை நாம் அறிவோம்.மேலும் பெருமானின் சடையிலிருந்து எளிதில் விடுபட்டு வெளியேறிவிடலாம் எனவும் எண்ணியது. ஆனால் கங்கை நதியின் எண்ணம் பலிக்கவில்லை. எனவே கங்கை நதி மகிச்ச்சியுடன் பெருமானின் சடையில் சேரவில்லை என்பது புலனாகின்றது. எனினும் புலவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி, கங்கை நதி குலாவி பெருமானின் சடையில் தங்கியதாகவும், அதனால் பிராட்டி கோபம் கொண்டதாகவும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பகீரதனின் தான் செய்த தவத்தின் பயனை அடைய வேண்டும் என்பதற்காகத் தானே, பெருமான் கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டார் என்பதையும் நன்றாக அறிந்தவள் பிராட்டி. எனவே உண்மையில் பிராட்டி கோபம் அடையவில்லை, பெருமானுடன் ஊடலும் கொள்ளவில்லை. எனினும் பாடலில் நயம் சேர்க்கும் பொருட்டு இத்தகைய கற்பனகள் மூவர் பெருமானார்களால் செய்யப்படுகின்றன.
நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை
ஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும்
கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவரும் குலவு கங்கை
ஆற்றினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே
கங்கை நதியினைத் தனது சடையில் மறைத்து வைத்துள்ள பெருமான், உமை அன்னையைத் தழுவுதல் குணமா என்ற கேள்வியினை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் எழுப்புவது, நமக்கு அப்பர் பிரானின் திருநாகைக் காரோணத்தின் பாடலை (4.103.8) நினைவூட்டுகின்றது. வங்கம்= கப்பல்கள்:நாயகன்=மணாளன்: இந்த பாடல், சிவபெருமான் மீது காதல் கொண்ட நாயகியின் கூற்றாக அமைந்த அகத்துறைப் பாடலாகவும் கருதப்படுகின்றது. உமை நங்கை இருக்கையில், கங்கையைத் தனது சடையில் ஏற்ற சிவபிரான் ஏதேனும் சங்கடத்திற்கு ஆளானாரா அல்லவா என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல், அப்பர் நாயகிக்கும் இருக்கின்றது. எதனால் அத்தகைய ஆவல்? இந்நாள் வரை கங்கை நங்கையை ஏற்றுக் கொண்டதை, உமையம்மை அறியாதவாறு சாமர்த்தியமாக மறைத்து இறைவன் இருந்திருந்தால், தன்னையும் அவ்வாறு ஏற்றுக் கொண்டு இருக்கலாமே என்ற ஏக்கம் அப்பர்நாயகிக்கு ஏற்பட்டது இங்கே வெளிப்படுகின்றது. கப்பல்கள் நிறைந்த கடற்கரை என்று நாகப்பட்டினத்தைக் குறிப்பதன் மூலம். அப்பர் காலத்தில், நாகை கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய நிலை நமக்கு புலனாகின்றது. அதனால் தான் கடலுடன் இணைத்து கடல் நாகை என்றே இந்த பதிகத்தில் குறிப்பிடப் படுகின்றது. கங்கை நதியைத் தனது சடையில் சிவபெருமான் ஏற்றது, வானத்திலிருந்து வேகமாக இறங்கி வந்த கங்கை நதியால், பூமிக்கும் பூமியில் உள்ள உயிரினங்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது இருக்கவேண்டும் என்பதற்காகத் தானே. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் தனது கற்பனையைக் கலந்து,பெருமானிடம் விளக்கம் கேட்பது போன்று உள்ள அப்பர் பிரானின் பாடல் மிகவும் நயமானது.
வங்கமலி கடல் நாகைக் காரோணத்து எம் வானவனே
எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டது கேட்டு அருளீர்
கங்கை சடையுள் கரந்தாயக் கள்ளத்தை மெள்ள உமை
நங்கை அறியில் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே
நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.57.8), கயிலாய மலையினை அரக்கன் இராவணன் எடுத்து அசைத்த போது பிராட்டி நடுங்கியதைக் கண்ட பெருமான், பெருமான் மகிழ்ச்சி கொண்டதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு அவர் குறிப்பிடுவது, சிந்தனைக்குரியது. தனது கால் பெருவிரலை ஊன்றி அன்னை கொண்டிருந்த அச்சத்தை தவிர்த்ததாக மிகவும் அதிகமான திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. இந்த விளக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு அவ்வாறு பிராட்டி கலங்கிய போது, இவ்வாறு மகிழ்ந்தது பெருமானின் திருவிளையாடல்களில் ஒன்று என்று சான்றோர்கள் பொருள் கண்டனர். கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்ற செயலுக்கு கோபம் கொண்ட பார்வதி அன்னையின் கோபத்தினை தணிப்பதற்காக, பெருமான் இந்த திருவிளையாடலை புரிந்தாரோ என்று நமக்கு தோன்றுகின்றது. இத்தகைய கற்பனை ஒன்றினை உள்ளடக்கி அப்பர் பிரான் பாடிய பாடலை நாம் இங்கே காண்பது பொருத்தமாகும், கயிலை மலையினை அரக்கன் அசைத்த போது, பார்வதி தேவி கொண்ட அச்சத்தினைநீக்கிய பெருமான், அதனை ஒரு வாய்ப்பாக கருதி தேவி தன்னிடம் கொண்டிருந்த ஊடலைத் தீர்த்தான் என்று சுவையாக தனது கற்பனையை ஏற்றி அப்பர்பிரான் பாடிய பாடல் மறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.34) கடைப் பாடலாகும். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அரக்கன்இராவணனின் கயிலை நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. கங்கை நங்கையை பெருமான் தனது சடையில் மறைத்ததை காரணமாக கொண்டு தேவி ஊடல்செய்ததாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். உருவம் வேறுவேறாக திகழ்ந்தாலும், பெருமானும் பிராட்டியும் இணைந்தே செயல்படுவதாக சைவசித்தாந்தம் சொல்கின்றது. பெருமானின் கருணை தான் தேவி. எனவே அவர்களுக்குள்ளே ஊடல் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனினும் புலவர்களுக்குஉள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி, அப்பர் பிரான், ஒரு கற்பனை நிகழ்ச்சியை புகுத்தி, தேவாரப் பாடலுக்கு நயம் சேர்ப்பதை நாம் இந்த பாடலில்காணலாம். கங்கை நங்கையைத் தனது தலையில் மறைத்து வைத்ததால் தேவிக்கு கோபம் ஏற்படுகின்றது. அந்த கோபம் ஊடலாக மாறுகின்றது. அரக்கன்இராவணன் கயிலை மலை அசைத்ததால் ஏற்பட்ட அசைவு, அன்னைக்கு அச்சத்தை ஏற்படுத்த, அந்த அச்சத்தை தீர்க்கும் முகமாக, அன்னையிடம் அஞ்சேல்என்று சொல்லிய பெருமான், தனது கால் பெருவிரலால் மலையினை அழுத்தி, மலையின் ஆட்டத்தை நிறுத்துகின்றார். தேவியின் அச்சம் மட்டுமாமறைகின்றது. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஊடலும் மறைந்து விடுகின்றது என்பதை சொல்லாமல் சொல்லி விளக்கும் நயமான பதிகம்.
கங்கை நீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத்
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான் மலையை
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட
அங்கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடு தானே
உலகியலில் வாழும் நாம், எத்தனை கருத்தொத்த தம்பதியராக இருப்பினும் அவர்களின் இடையே, சிறுசிறு விஷயங்களில், கருத்து ஒவ்வாது இருப்பதையும்,அந்த வேறுபாடு காரணமாக ஊடல்கள் ஏற்படுவதையும் காண்கின்றோம். சங்க இலக்கியங்களில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் ஊடல் வெகுவாகவிவரிக்கப் படுகின்றது. திருக்குறளிலும் ஊடல் காதலுக்கு மேலும் சுவை ஊட்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு ஊடலுவகை என்று தனி அதிகாரம்கொடுக்கப்பட்டு பத்து பாடல்கள் உள்ளன. அந்த ஊடல் அதிக நேரம் நீடிப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் உண்மையான பாசமும் நேசமும் கொண்டுதம்பதியர் திகழ்வதால், அவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறிய இடர் நேர்ந்தாலும், அடுத்தவர் அந்த இடரினைக் களையும் போது, அந்நாள் வரைஅவர்களின் இடையே இருந்த ஊடல் காணமல் போய்விடுகின்றது. இதனை உலக வாழ்க்கையில் அடிக்கடி காண்கின்றோம். அத்தகைய நிகழ்ச்சியாக,இராவணன் கயிலை மலையினை அசைத்த போது தேவி கொண்ட அச்சத்தை பெருமான் களைந்த விதத்தினை அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார்.இறைவனின் செயல் வடிவமே சக்தி. சக்திக்கும் சிவத்திற்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. சிவபிரானின் எண்ணத்திற்கு ஏற்ப செயல் படும் சக்திக்கும் சிவத்திற்கும் வேறுபாடு இல்லாத போது, அவர்களிடையே ஊடல் வருவதற்கான வாய்ப்பு அறவே இல்லை. ஆனாலும், அவர்களுக்கு ஊடல் ஏற்பட்டது போன்று அப்பர் பிரான் கற்பனை செய்து அந்த ஊடல் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
அதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய ஒரு நேரிசைப் பதிகத்தின் (4.27) இரண்டாவது பாடலில், கங்கை நதி தலையில் சூட்டிக் கொண்டபோது ஏற்பட்ட ஆரவார ஓசையினால், பார்வதி தேவி நடந்ததை அறிந்து ஊடல் கொண்டதாகவும், அந்த ஊடலைத் தீர்ப்பதற்காக சிவபிரான் சாமவேதம் பாடி, அந்த பாடலின் தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடியதாகவும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நடக்காத ஊடலை நடந்ததாக கற்பனை செய்து பாடியதால் ஊடல் தீர்க்கப்பட்டதை அப்பர் பிரான் குறிப்பிடவில்லை போலும். ஊடலை ஒழிக்க வேண்டி என்று குறிப்பிட்டிருப்பதால் ஊடல் தீர்ந்தது என்று நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். துழனி=ஆரவாரம்: பாணி=தாளம். துழனி=ஆரவாரம். பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி கங்கை நதி தேவ லோகத்திலிருந்து கீழே இறங்கி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், தனது நீர்ப் பெருக்கில், வல்லமையில் செருக்கு கொண்டிருந்த கங்கை மிகுந்த ஆரவாரத்துடன் கீழே இறங்கினாள். பூமியையே கரைத்து, கடலில் சேர்த்து விடுவது போன்று மிகுந்த ஆவேசத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியை பரமசிவன் தனது சடையில் தாங்குகின்றார்.
சூடினார் கங்கையாளைச் சூடிய துழனி கேட்டு அங்கு
ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே
ஆடினார் கெடில வேலி அதிகை வீரட்டனாரே
கங்கை நதியைத் தனது சடையில் மறைத்து வைத்தும் பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்தும் பெருமான் இருக்கும் தன்மையை, மிகவும் நயமாக, ஒருத்திக்கும் நல்லவனாக பெருமான் இல்லாத நிலையை உணர்த்துகின்றது என்று திருவொற்றியூர் தலத்து பதிகத்தின் பாடலில் (4.45.6) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மற்றொருத்தி (பார்வதி தேவி) அறியாதவாறு, ஒருத்தியை (கங்கையை) தனது சடை முடியில் சிவபிரான் ஒளித்து வைத்துள்ளான்.ஆனால் இந்த உண்மையான காரணத்தை உணராமல், உலகம் அவனை கங்கையை சடையில் ஏற்றதற்காக புகழ்கின்றது. மற்றவள் ஆகிய பார்வதி தேவியை, கங்கை அறியாதவாறு தனது உடலின் இடது பாகத்தில் மறைத்து வைத்துள்ளான். இவ்வாறு ஒருவரை மற்றொருவர் அறியாதவாறு மறைத்து வைத்துள்ளதால், இதனை இருவரும் எப்போது அறிந்து கொள்வார்களோ என்ற ஐயத்துடன் உலாவும் சிவபெருமான், இவ்வாறு இருவரில் ஒருத்திக்கும் நல்லவனாக இல்லாத தன்மை வெளிப்படுகின்றது. இவன் தான் ஒற்றியூர் தலத்தில் உறைகின்ற சிவபிரான் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரையாகும்.
ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான் உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லனாகி மறுப்படுத்து ஒளித்து மீண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி
ஒருத்திக்கு நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே
சிவபிரான் மீது தீராத காதல் கொண்டுள்ள தனது மகளிடம் அவளது தாய் கூறுவதாக அமைந்துள்ள ஒரு குறுந்தொகைப் பாடலில் (5.45.6) ஏற்கனவே இரண்டு மனைவிகளைக் கொண்டுள்ள சிவபிரான் உனக்கு நல்லவராக இருக்க மாட்டார் என்று கூறும் நயமான பாடலை நாம் காணலாம். இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் இமவான் மகளை உடலிலே வைத்துக் கொண்டு எங்கும் திரிவதாகவும், நான்காவது பாடலில் கங்கையை தாழ்ச்சடையில் வைத்து இருப்பதாகவும் கூறும் இந்த தாய், எவ்வாறு இந்த இரண்டு மனைவிகளிடம் பிரியமாக உள்ளார் என்பதை மகளிடம் எடுத்துரைக்கும் பாங்கு ரசிக்கத் தக்கது.
முல்லை வெண் நகை மொய்குழலாய் உனக்கு
அல்லன் ஆவது அறிந்திலை நீ கனித்
தொல்லையார் பொழில் தோணிபுரவர்க்கே
நல்லை ஆயிடுகின்றனை நங்கையே
கங்கை நங்கை மற்றும் பார்வதி தேவி உள்ளிட்ட சிறந்த ஏழு பொருட்கள் ஏன் பெருமானை மட்டும் சென்றடைந்து, மற்றவரை சென்றடையாமல் உள்ளன என்பது தனது சிற்றறிவுக்கு எட்டவில்லை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் திருவலஞ்சுழி த்லத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (3.106.4). கங்கை நங்கை மற்றும் உமையன்னை ஆகிய இருவரும் குறிப்பிடப்படும் அரிய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. இந்த பாடலில் இடபம்,கங்கை, சடைமுடி, உமாதேவி, உயிர்களுக்கு முக்தி நிலை அளித்து அருள் புரியும் திருவடி, சிலம்பு, வலஞ்சுழி ஆகிய ஏழு அம்சங்களின் மேன்மை உணர்த்தப் படுகின்றது. இவை அனைத்தும் பெருமானையே சார்ந்து நின்றமையும், வேறு எவரையும் சாராது இருக்கும் நிலையையும் நாம் உணரவேண்டும்.இதன் மூலம் பெருமானின் தனிச்சிறப்பு உணர்த்தப் படுகின்றது. சிவபெருமானுக்கு அருகே ஒரு பக்கத்தில் இடப வாகனம் உள்ளது. சடையின் ஒரு பக்கத்தில், பெருமானை விரும்பி வந்தடைந்த மெல்லியலாள் கங்கை ஒரு புறம் உள்ளாள். விரிந்து பரந்த சடை ஒரு புறம் இருக்க, தாழ்ந்த குழலை உடைய பிராட்டி பெருமானின் உடலின் ஒரு பாகத்தில் பொருந்தி இருக்கின்றாள். இத்தகைய கோலம் கொண்டுள்ள பெருமான், பெருமை மிகுந்த நடை நடக்கும் திருவடியும் சிலம்பணிந்த திருவடியும் கொண்டவராக விளங்குகின்றார். இங்கே குறிப்பிடப்பட்ட தன்மைகள் சென்று அடையும் வண்ணம் திருவலஞ்சுழி பெருமான் விளங்குகின்றார். இத்தகைய தன்மைகள் ஏன் பெருமானை மட்டும் சென்றடைந்து மற்றவரை சென்றடையாமல் நிற்கின்றன என்பது எங்களது சிற்றறிவுக்கு எட்டவில்லை என்று திருஞானசம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.
விடை யொருபால் ஒரு பால் விரும்பு மெல்லியல் புல்கியதோர்
சடை ஒருபாலொடு பால் இடம் கொள் தாழ்குழல் போற்றிசைப்ப
நடை ஒரு பாலொரு பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர்
அடை ஒரு பாலடையாத செய்யும் செய்கை அறியோமே
பொழிப்புரை:
வெண்கடம்பமரம், சிறு கற்கள், முத்துக்கள், உயர்ந்த மாணிக்ககற்கள் ஆகியவற்றை அடித்துக் கொண்டு வருவதும் வெண்மை நிறத்தில் காணப்படுவதும் ஆகிய மலையருவிகள், பறை இசைக்கருவி போன்று ஆரவாரத்துடன் கீழே இறங்கி வரும் அண்ணாமலை தலத்தின் தலைவனாகிய சிவபெருமான், தனது சடையில் பாம்பும் கங்கை நதியும் பொருந்தி உலாவுதலை பொருட்படுத்தாமல், குரவ மணம் கமழும் மென்மையான் கூந்தல் உடைய உமை அன்னையைத் தழுவுதல் நன்றோ, பெருமானே அடியேனுக்கு சொல்வீராக.
பாடல் 6:
பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சைப்
பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகிக்
கருகும் மிடறுடையார் கமழ் சடையார் கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே
விளக்கம்:
பிறை சேர் கடல்=சந்திரன் தோன்றிய பாற்கடல்; இலக்குமி தேவி தோன்றுவதற்கு முன்னர் பாற்கடலிலிருந்து சந்திரன் தோன்றியமையால், இலக்குமி தேவியை சந்திர சகோதரி என்று அழைப்பார்கள். தேவர்களையும் அசுரர்களையும் திசைக்கு ஒருவராக ஓடச்செய்த ஆலகால விடத்தினை மிகவும் துணிவுடன் பெருமான் உட்கொண்டதாக இந்த பாடலில் கூறுகின்றார். மிகவும் கடுமையான இந்த விடத்தின் தன்மையையும் அந்த விடம் அனைவரையும் அச்சுறுத்திய தன்மையையும் மிகவும் அழகாக அப்பர் பிரான் தசபுராணத் திருப்பதிகத்தின் முதல் (4.14.1) பாடலில் குறிப்பிடுகின்றார். பருவரை=மந்தரமலை:பிதிகாரம்=பிரதிகாரம் எனும் வடமொழியின் திரிபு, கழுவாய்: அரவம் கைவிட்ட இமையோர்=கடையப்பட்டதால் ஏற்பட்ட துன்பம் தாளாத வாசுகி பாம்பு விடத்தை வெளியிட, அதனால் பயந்து பாம்பினைப் பிடித்துக் கொண்டிருந்த கைகளை எடுத்து ஓடிய வானவர்கள்: பாம்பின் வாலினைத் தங்கள் கைகளால் பிடித்துக் கொண்டு தாங்கள் கடைந்து கொண்டிருந்ததை விட்டுவிட்டு ஓடிய வானவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். எரியாமல்=தேவர்கள் கடுமையான விடத்தால் எரிந்து போகாமல் தடுத்த: நெடுமால் நிறத்தை, திருமாலின் நிறம் என்றும் திருமாலின் மேனி என்றும் இருவிதமாக பொருள் கொண்டு விளக்கம் கூறுவார்கள். கரிய நிறம் கொண்ட திருமாலின் நிறத்தை தோற்கடிக்கும் பொருட்டு மிகவும் கருமையான நிறம் கொண்ட ஆலகால விடம் என்றும்,திருமாலின் மேனி நிறத்தை அழிக்கும் வண்ணம் பொங்கி எழுந்த வந்த விடம் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இந்த பாடலில் அப்பர் பிரான் சிவபெருமானை அண்டர் அரசே, உலகுக்கெல்லாம் அரசே என்று அழைக்கின்றார். அரசனுக்கு உள்ள முக்கியமான கடமை, தனது குடிமக்களுக்கு வரும் பகையினைத் தடுத்து, அவர்களைக் காப்பாற்றுதல் ஆகும். பெரிய புராணத்தில் மனுநீதிச் சோழனின் வரலாற்றில், மன்னன் எத்தகைய இடையூறுகளிலிருந்து மக்களது உயிரினைப் காப்பாற்ற வேண்டும் என்று சேக்கிழார், மனுநீதிச் சோழன் வாக்காக, கூறுகின்றார். அரசனால் ஏற்படும் ஆபத்து, அரசு பணியாளர்களால் ஏற்படும் ஆபத்து, மற்றும் தனது பகைவர்கள், கள்வர்கள் மற்ற உயிர்கள் இவைகளால் ஏற்படும் ஆபத்துகள், என்று ஐந்து விதமாக மக்களின் உயிர்களுக்கு வரும் இடையூறுகளை குறிப்பிடுகின்றார். எனவே தான் வானவர்களுக்கு ஆலகால விடத்தினால் அவர்களது உயிர்களுக்கு வந்தஆபத்தினைத் தடுத்த சிவபெருமான், அண்டர் அரசே என்று அழைக்கப்படுகின்றார்.
பருவரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர் இரிந்து பயமாய்த்
திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்ப்
பெருகிட மற்று இதற்கோர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும்
அருள் கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர் அரசே
பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட விடத்தால் தேவர்கள் எரிந்து போகாமல் உயிருடன் இருப்பதற்காக, தான் நஞ்சினை உண்டு அருள் புரிந்த சிவபிரான் என்று இங்கே அப்பர் பிரான் கூறுவது, சம்பந்தரின் சீர்காழிப் பதிகத்தின் பாடல் ஒன்றினை (1.74.7) நினைவூட்டுகின்றது. உண்ணுதற்கு அரிய நஞ்சினைத் தான் உண்டு, தேவர்கள் விண்ணில் பொலிந்து வாழுமாறு அருள் புரிந்தவன் சிவபெருமான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தோழம்=கூட்டம்: சிவபிரான் அன்று விடத்தை உண்ணாமல் இருந்திருந்தால், தேவர் எவரும் அமுதத்தினை பருகுவதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. அதனால் தான் அமுதம் அளித்த பிரான் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உண்ணற்கு அரிய நஞ்சு=பிறரால் உண்ண முடியாத நஞ்சு. புறவம் என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. அக்னித்தேவன், புறா வடிவில் வந்து, சிபிச் சக்ரவர்த்தியை சோதனை செய்த பாவம் தீர, வழிபட்ட தலம் என்பதால் புறவம் என்ற பெயர் வந்தது.
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர்
விண்ணில் பொலிய அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல்
பண்ணில் சிறை வண்டறை பூஞ்சோலைப் புறவம் பதியாக
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே
திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.98.6) திருஞானசம்பந்தர், பெருமான் நஞ்சு உண்ட செயலை, எவரும் செய்யத் துணியாத செயல் என்று குறிப்பிடுகின்றார். பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுகொண்டது மற்றும் பிரம கபாலத்தில் பலி ஏற்றது ஆகிய இரண்டு செயல்களும், இந்த செயலுடன் சேர்த்து சொல்லப்பட்டு, செயற்கரிய செயல்கள் என்று உணர்த்தப்படுகின்றன.
வெய்ய தண் சாரல் விரிநிற வேங்கைத் தண் போது
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்
தையலோர் பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலையோட்டில்
ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே
வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.123.3.) உல்கத்தில் உள்ள அனைத்து உயிர்களும் அஞ்சும் வகையில் எழுந்த ஆலகால விடம் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றர். வெளிமலை=வெள்ளிமலை; வெள்ளிமலை போன்ற கழுத்தினில் கருமணி போன்று அமர்ந்த விடம் என்று கூறுகின்றார். வெருவுறு=அச்சம் கொள்ளும் வகையில்; மிடைதரு=நெருங்கிய; மரு= மணம்; களம்=கழுத்து;
உருமலி கடல் கடை உழி உலகு அமருயிர்
வெருவுறு வகை எழு விடம் வெளிமலை அணி
கருமணி நிகர் களம் உடையவன் மிடைதரு
மருமலி பொழில் வலிவலம் உறை இறையே
மை படர்ந்தது போன்று மிகவும் கருமையான நிறத்துடன் ஆலகால நஞ்சு எழுந்தது என்று புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.92.7) திருஞான சம்பந்தர் கூறுகின்றார். தென்சொல்=தமிழ் மழை; வடசொல்=வடமொழி; திசைமொழி=பல்வேறு திசைகளிலும் பழக்கத்தில் இருந்த மற்ற மொழிகள்; விஞ்சுதல்=மிகுதல், இங்கே மற்றும் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. இறைவனின் புகழினை எடுத்துரைக்கும் பாடல்கள்,எந்த மொழியில் இருந்தாலும், அந்த பாடல்களைப் பாடுவோரின் நெஞ்சத்து இருளை நீக்கும் தன்மை வாய்ந்தது என்று இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. அஞ்சனம்=மை;
தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்துத்
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல் புகலூரில்
அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலைகடல் கடைய அன்று எழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே
வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (3.54.10) திருஞானசம்பந்தர், தேவர்களை அந்த இடத்தினில் நிற்கவிடாமல் கடுமையான நெடியுடன் திசைக்கு ஒருவராக விரட்டி அடித்த மிகவும் கொடிய விடம் என்று தெரிந்தும் அந்த விடத்தினை, தாமதம் செய்யாமலும், விருப்பத்துடனும் பெருமான் தானே உட்கொண்ட செய்கையை குறிப்பிடுகின்றார். இந்த செயல் மிகவும் பெரிய தியாகமாக கருதப்படுகின்றது என்று சேக்கிழார் பெரிய புராணப் பாடலில் கூறுகின்றார். அதனால் தானே, மிகுந்த தியாகத்தைச் செய்தவன் என்ற பொருள் பட, தியாகராஜன் என்று பெருமான் அழைக்கப் படுகின்றார். பேரருள் உடைமை என்பது பெருமானின் சிறந்த எட்டு குணங்களில் ஒன்று என்பதை நாமறிவோம். ஏலுதல்=பொருந்துதல்; ஒரே இடத்தில் பொருந்தி நில்லாத வண்ணம் ஆலகால விடம் தேவர்களை விரட்டியடித்த தன்மை உணர்த்தப் படுகின்றது. பகர்தல்=சொல்லுதல்; பகரிலா=சொல்ல முடியாத, மிகவும் அரிதான; முந்நீர்=மூன்று வகையான நீர்கள் கலக்கும் கடல, ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் ஆகியவை;
மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே
ஒளியுடன் திகழ்ந்த தேவர்களின் மேனி கருகும் வண்ணம், ஆலகால விடம் அவர்களைத் தாக்கியது என்று திருஞானசம்பந்தர குறிப்பிடும் பாடல் பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (3.121.4). முருகு=அழகு; முருகினார்=அழகிய; மொய்த்த=நெருங்கி வந்த;கணங்கள்=தேவகணங்கள்; அமுதம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்த பாற்கடலிலிருந்து ஆலகாலம் விடம் பொங்கி வந்த போது அந்த விடத்தின் தாக்குதலை தாங்க முடியாமல் பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் பல திசைகளிலும் பரவி ஓடினார்கள். அப்படியும் விடத்தின் தாக்கத்தினால் அவர்களது உடல் கருகியது என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். கடலுள் நஞ்சு அமுதமா வாங்கிப் பருகின்றார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். திருமால் உள்ளிட்ட பல தேவர்களும் அஞ்சியோடும் படி பொங்கியெழுந்த நஞ்சினை அமுதம் உண்பது போன்று மிகவும் எளிதாக பெருமான் உண்டார். பல திருமுறைப் பாடல்களில் மீதம் ஏதும் வைக்காமல் நஞ்சினை உண்டார் என்றும் தாமே விருப்பத்துடன் உண்டார் என்றும், தயக்கம் ஏதும் இன்றி உண்டார் என்றும் தாமதம் செய்யாமல் உண்டார் என்றும் பெருமான் நஞ்சு உண்ட தன்மை குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக அமுதத்தை தானே, அவ்வாறு தயக்கமின்றி தாமதம் செய்யாமல் மீதம் ஏதும் வைக்காமல் விருப்பமுடன் எவரும் உண்பர்.எனவே தான் நஞ்சினை அமுதமாக வாங்கி உண்டார் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் மிகவும் பொருத்தமாக குறிப்பிடுகின்றார். உறுதி போந்து என்று சிறிதும் தயக்கம் இன்றி நஞ்சினை உண்ட செய்கையை குறிப்பிடுகின்றார்.
முருகினார் பொழில் சூழ் உலகினார் ஏத்த மொய்த்த பல் கணங்களின் துயர் கண்டு
உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளிதிகழ் மேனி
கருகினார் எல்லாம் கை தொழுது ஏத்தக் கடலுள் நஞ்சு அமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.33.6) அப்பர் பிரான், பின்னர் எழுந்த அமுதினைத் தேவர்களின் பங்காக வைத்துவிட்டு,முன்னம் எழுந்த நஞ்சினைத் தனது பங்காக எடுத்துக்கொண்ட பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து ஆலகால விடமும் பொங்கி எழுந்தது, பின்னர் அமுதமும் பொங்கி எழுந்தது. அமுதத்தை தேவர்களின் பங்காக வைத்துவிட்டு தனது பங்காக நஞ்சினை எடுத்துக் கொண்ட செயல்,நயமாக இங்கே குறிப்பிடப் படுகின்றது. இத்தகைய தெய்வத்தைத் தான் எங்கும் கண்டதிலை என்று அப்பர் பிரான் வியந்து கூறுகின்றார். ஆதி அந்தம் இல்லாத இறைவனுக்கு, தனது வாழ்நாளை நீட்டிக் கொள்வதற்கு அமுதம் தேவையில்லை; மேலும் பல ஊழிகள் தாண்டி இருப்பவனை நஞ்சு தான் என்ன செய்யமுடியும். தொங்கி=துவங்கி; தங்கி=மனம் ஒன்றுபட்டு;
பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினைப்
பங்கி உண்டதோர் தெய்வம் உண்டோ சொலாய்
தொங்கி நீ என்றும் சோற்றுத் துறையர்க்கே
தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே
உலகம் அழிந்துவிடாமல் உறுதியான நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமான் நஞ்சினை உட்கொண்டார் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் (6.45.1), திருவொற்றியூர் தலத்தின் மீது அருளப்பட்டது. பெருமானையே எப்போதும் நினைத்திருந்த அப்பர் பிரான் கனவினில் பெருமானின் நடனக் காட்சியைக் கண்டார் போலும் மிகவும் வேகமாக நடனம் ஆடிய பெருமானின் நடனக் காட்சி, அவருக்கு எண்ணற்ற தோள்கள் உடையவராக பெருமானின் தோற்றம் இருந்ததாக உணர்த்தியது போலும். சர்வ வியாபியாக பெருமான், தனது கைகள் அண்டத்தின் திசைகளை தொடுமாறு ஆடிய காட்சியை இங்கே, பெருமான் பால் காதல் கொண்ட பெண்ணின் வாய்மொழியாக இங்கே விவரிக்கின்றார். கடும் பிணி=பிரிவாற்றாமையால் ஏற்பட்ட கொடிய நோய்; சுடும் தொழில்=காதலனைப் பிரிந்த ஏக்கத்தில், பொதுவாக குளிர்ச்சி ஊட்டும் நிலவு போன்ற பொருட்களும் சுடும் தன்மை உடைய பொருட்களாக தோன்றும் தன்மை. மேலே குறிப்பிட்ட பாடலில் கடும் பிணி. சுடும் தொழில் என்ற தொடர்களுக்கு, அகத்துறை வழியாக பொருள் காணாமல்,வேறு விதத்தில் பொருத்தமாக பொருள் காண்பதையும் நாம் இங்கே சிந்திக்கலாம். கடும் பிணி=பிறவிப் பிணி; சுடும் தொழில்=இறந்த பின்னர் உடலை சுடுகாட்டில் வைத்து எரிக்கும் நிலை. இறைவனை, தனது கனவில் கண்ட ஆன்மா, தான் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று வாழ்வினில் உய்வினை அடைந்ததையும், அதனால் பிறவிப்பிணி என்கிற கடும் நோய் தீர்ந்ததையும், இனிமேல் எடுக்கவிருந்த பிறவிகளில் இணையும் உடல்கள் இறந்து பட்ட பின்னர் சுடுகாட்டில் இடப்பட்டு எரிக்கப்படும் நிலையிலிருந்து விடுதலை அடைந்ததையும், மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றது.
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மதமத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடமாடிச் சிவலோகனார்
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார்
கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டனவே
பொங்கி வந்த ஆலகால விடம் உலகத்தவரை அழிக்காமல் காப்பாற்றிய பெருமான், அந்த விடத்தின் தன்மையால் எவர்க்கும் எப்போதும் ஊறு நேராத வண்ணம் தனது கழுத்தினில் ஒளித்து வைத்து என்றென்றும் உயிர்களை காக்கும் தன்மை உடையவனாக, ஒரு தலைவனுக்கு உரிய பண்புடன் பெருமான் இருப்பதை உணர்த்தும் பாடல் கண்டியூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடலாகும் (4.93.10) மண்டி=நெருங்கி சென்று; தண்டி=சுற்றாக சுற்றி;நண்ண=அருகில் வந்து, வானவன்= தலைவன்.
மண்டி மலையை எடுத்து மத்தாக்கி அவ்வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த கடல்விடம் கண்டருளி
உண்ட பிரான் நஞ்சொளித்த பிரான் அஞ்சியோடி நண்ணக்
கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே
பொழிப்புரை:
பெருகி வரும் அருவி நீரினை உடைய அண்ணாமலை தலமானது, பாற்கடலிருந்து தோன்றிய சந்திரனின் பிறைகள் ஒவ்வொன்றாக அழிந்து ஒற்றைப் பிறையுடன் சரணடைந்த போது அந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு வாழவைத்த சிவபெருமான் உறைகின்ற தலமாகும்.அவர் பாற்கடலிலிருந்து அனைவரும் அச்சம் கொள்ளும் வகையில் பொங்கி எழுந்த ஆலகால விடத்தினை, சற்றும் தாமதம் செய்யாமல் மிகுந்த துணிவுடன் பருகியவர் ஆவார். மேலும் அந்த விடம் தனது வயிற்றினுள்ளே சென்றால், பிரளய காலத்தில் தன்னில் ஒடுங்கவிருக்கும் உயிர்களின் நலன் கருதி, தனது கழுத்தினில் தேக்கியதால் அவரது கழுத்து கருமை நிறம் படர்ந்து காணப்படுகின்றது. அவர் தனது திருமேனியின் மீது வெண்ணீறு பூசிக்கொண்டவர் மற்றும் நறுமணம் கமழ்கின்ற சடையை உடையவர் ஆவார். அத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமானின், வீரக்கழல்கள் அணிந்த திருப்பாதங்களை புகழ்ந்து பணிந்து வணங்கி மனம் உருகும் அடியார்களை, கொடிய நோய்கள் சென்று அணுகா.
பாடல் 7:
கரிகாலன குடர் கொள்வன கழுகாடிய காட்டில்
நரியாடிய நகு வெண்டலை உதை உண்டவை உருள
எரியாடிய இறைவர்க்கிடம் இன வண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே
விளக்கம்:
கழுதாடிய காட்டில் என்று சில பதிப்புகளில் காணபப்டுகின்றது. கழுது என்றால் பேய் என்று பொருள். பேய்கள் திரியும் காட்டினில் நடமாடும் பெருமான் என்று பெரும்பாலான தேவாரப் பாடல்களில் வருகின்ற தொடர் கருதி அவ்வாறு வெளியிட்டுள்ளனர் போலும். திருவண்ணாமலை ரமணாச்சிரமத்தில், ஸ்ரீ ரமண பகவான் பயன்படுத்திய தேவாரப் புத்தகத்தில் கழுதாடிய என்று அவரே தனது கைப்பட திருத்தியமை இங்கே நினைவு கூரத்தக்கது. உயிரற்ற உடல்கள் இடப்படும் காட்டினில் உள்ள பிணங்களின் தசைத்துண்டங்களை கொத்தித் தின்பதற்கு கழுகுகள் வருவது இயற்கை தானே. கரிகாலன குடர் கொள்வன என்ற விவரங்கள் கழுகுகளுக்கு பொருந்துவதை நாம் உணரலாம். பொதுவாக சுடுகாட்டில் உள்ள பிணங்களின் தலைகளை உருட்டி விளையாடுவதும், அந்த மண்டையோட்டில் ஒட்டியிருக்கும் தசைத்துணுக்குகளை உண்பதும் நரிகள் செய்யும் செய்கைகள். தசைத் துணுக்குகள் அற்று,பற்கள் வெளியே தெரியும் வகையில் காணப்படும் மண்டையோடுகளை நகு வெண்தலை என்று கூறுகின்றார். இவ்வாறு கழுகுகள் உலவுவதும் நரிகள் விளையாடுவதும் சுடுகாட்டின் பொதுத்தன்மை. பிரளய காலத்தில் உலகமே சுடுகாடாக காட்சி அளிக்கும் தருணத்தில், நரிகள் கழுகுகள் உட்பட அனைத்து உயிர்களும் இறந்த நேரத்தில், நரிகளும் கழுகுகளும் காணப்படா. எனினும் சுடுகாட்டின் பொதுத் தன்மை கருதி, நரிகள் மற்றும் கழுகுகள் உலவும் காடு என்று சொல்லப்படுகின்றது. எரியாடிய= ஊழித்தீயினில் நடமாடும் தன்மை; அரி=செவ்வரி; கண்களில் சிவப்பு நிறக் கோடுகள் காணப் படுவது, உடல் நலமாக இருப்பதன் அறிகுறிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு சமயத்தில் மருத்துவர்கள், நமது கண்களின் கீழிமையை இழுத்துப் பார்த்து, கண்களில் ஓடும் கோடுகளின் நிறத்தின் தன்மையை பார்ப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
பொழிப்புரை:
கரிய கால்களை உடையதும் உயிரற்ற உடல்களிலிருந்து குடர்களை இழுத்துத் தின்னும் தன்மை உடையதும் ஆகிய கழுகுகள் உலவுவதும், நரிகள் தசையுலர்ந்து வாய் பிளந்து நகைப்பது போன்று காட்சி தரும் மண்டையோடுகளை உருட்டியும் உதைத்தும் விளையாட, அந்த மண்டையோடுகள் உருளுகின்ற சுடுகாட்டினைப் போன்று, உயரற்ற உடல்கள் எங்கும் பரந்து காணப்படும் ஊழிக்காலத்தில் பிரளயத்தீயினில் நடனம் ஆடுகின்ற இறைவனது இடமாவது, வண்டுகள் கூட்டங்கூட்டமாக முரலும் சோலைகள் உடைய திருவண்ணாமலை தலமாகும். இந்த தலத்தினில் பெருமான், செவ்வரி படிந்த அழகிய கண்களை உடைய பிராட்டியுடன் உறைகின்றார்.
பாடல் 8:
ஒளிறூ புலி அதள் ஆடையன் உமை அஞ்சுதல் பொருட்டால்
பிளிறூ குரல் மதவாரண வதனம் பிடித்து உரித்து
வெளிறூ பட விளையாடிய விகிர்தன் இராவணனை
அளறூ பட அடர்த்தான் இடம் அண்ணாமலை அதுவே
விளக்கம்:
ஒளிறூ என்றால் ஒளி வீசும் என்று பொருள். பிளிறூகுரல் என்றால் யானை பிளிறும் ஒளி என்று பொருள். வெளிறு என்ற சொல் எதுகை கருதி வெளிறூ என்று நீட்டப்பட்டுள்ளது. வெளிறு என்றால் எளிமை என்று பொருள். பலம் வாய்ந்த யானையை எந்த விதமான முயற்சியும் இன்றி எளிதாக தோல் உரித்த செய்கையின் குறிப்பு தோன்ற வெளிறூ பட விளையாடி என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். மனதில் அச்சமோ அல்லது கள்ளமோ இல்லாமல் விளையாட்டாக யானையின் தோலை உரித்த செய்கை இங்கே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அளறு என்றால் சேறு என்று பொருள். சேறு போல் கூழாக மாறும் நிலைக்கு இராவணன் மலையின் கீழ் நசுக்குண்டதால் தள்ளப்பட்டான் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். சிவபிரான் செய்த வீரச் செயல்களில்,யானையின் தொலை உரித்தது தான் வீரமும் வேகமும் நிறைந்த செயலாக கருதப்படும். ஆனால் அந்தச் செயலையும் சிறுபிள்ளை விளையாட்டாகச் செய்த திறமை உடையவன் இறைவன் என்று அவனது திறம் இங்கே சுட்டிக் காட்டப் படுகின்றது. அதள்=தோல்; யானை குரல் கொடுப்பதை பிளிறுதல் என்று குறிப்பிடுவார்கள்; வாரணம்=ஆண் யானை; வதனம்=முகம் இங்கே யானையின் மத்தகம் என்று பொருள் கொள்வது பொருத்தம். விகிர்தன்=வேறு எவரிடமும் இல்லாத திறமை உடையவன். புலித்தோல் மற்றும் மான்தோல் ஆகியவற்றை பயன்படுத்தும் மனிதர்கள் எவரும் யானையின் தோலை பயப்படுத்துவதில்லை.மற்ற விலங்குகளின் தோலை விடவும் சற்று தடிமனாக இருப்பதால், யானையின் தோலை எவரும் பயன்படுத்துவதில்லை போலும். மேலும் இரத்தப்பசையுடன் இருந்த யானையின் தோலை தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவர் பெருமான். யானையின் தோல் உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்று சீவக சிந்தாமணி குறிப்பிடுகின்றது. இந்த காரணம் பொருட்டே உமையன்னை அச்சம் கொள்கின்றாள். எந்த பொருளும் பெருமானின் உடலுக்கு எந்த விதமான தீங்கினையும் ஏற்படுத்த முடியாது என்பதால், பெருமான் யானையின் தோலையும் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவனாக, மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்ட விகிர்தனாக, விளங்கும் தன்மை இந்த பாடலில் சொல்லப்படுகின்றது. அளறு=சேறு, கூழ் என்று பொருள் கொள்வது பொருத்தம். அரக்கன் இராவணன் இசைத்த சாமகானத்தைக் கேட்டு மகிழ்ந்த பெருமான், கயிலாய மலையின் மீது ஊன்றிய தனது கால் பெருவிரலின் அழுத்தத்தை தளர்த்தியிராவிட்டால், அரக்கனது உடல் தசையும் இரத்தமும் கலந்து கூழாக மாறி, சேறு போன்று காட்சியளித்திருக்கும் என்று உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
ஒளிவீசும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும். உமையன்னை அஞ்சும் வண்ணம் உரத்த குரல் கொடுத்து பிளிறும் தன்மை உடையதும் மதம் கொண்டதும் ஆகிய ஆண் யானை தன்னை எதிர்த்து வந்த போது, அதன் மத்தகத்தை பிடித்து கிழித்து அதன் தோலையும் உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவன் பெருமான். அந்த யானயின் தோலை, விளையாடுவது போன்று மிகவும் எளிதாக உரித்தவன் சிவபெருமான். அவன் மற்ற தெய்வங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டு, விகிர்தனாக விளங்குகின்றான். தனது இருப்பிடமாக கயிலாய மலையினைப் பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடல் நசுங்கி, அரக்கனது உடலின் சதையும் இரத்தமும் கலந்து கூழாக மாறும் தன்மைக்கு கயிலாய மலையின் மீழே அரக்கனை அழுத்திய சிவபெருமானின் உறைவிடமாகிய அண்ணாமலை எனப்படுவது அந்த மலையே.
பாடல் 9:
விளவார் கனி பட நூறிய கடல் வண்ணனும் வேதக்
கிளர் தாமரை மலர் மேலுறை கேடில் புகழோனும்
அளவா வணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்
தளரா முலை முறுவல் உமை தலைவன் அடி சரணே
விளக்கம்:
நூறுதல்=அழித்துக் கொன்ற; கண்ணனை அழிப்பதற்காக கம்சனால் ஏவப்ப்ட்ட கபித்தன் என்ற அரக்கன் ஒரு விளா மரத்தில், தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தான். அந்த சமயத்தில் வத்சாசுரன் என்ற அரக்கன் ஒரு கன்றுக்குட்டியாக மாறி, பசுக்கூட்டங்களில் கலந்து கண்ணனைக்
கொல்வதற்கு தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தான். இதனை அறிந்த கண்ணன், அந்த கன்றுக் குட்டியை விளா மரத்தின் மீது வீசியெறிந்து ஒரே சமயத்தில் இரண்டு அரக்கர்களையும் அழித்தான் என்று பாகவத புராணம் குறிப்பிடுகின்றது. இந்த நிகழ்ச்சி இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. கன்றால் விளவெரிந்தான் என்று பல தேவாரப் பாடல்களும் பல திவ்ய பிரபந்தப் பாடல்களும் குறிப்பிடுகின்றன. கேடில்=அழியாத; தளராமுலை=உண்ணாமுலை;தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் மார்பகம் தளர்வடைதல் உலக இயற்கை. அன்னை பார்வதி தேவி உண்ணாமுலையை உடையவள் என்பதை உணர்த்தும் பொருட்டு தளரா முலை என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
விளா மரத்தின் கனிகளை உதிர்ப்பது போன்று, அந்த மரத்தில் மறைந்திருந்த கபித்தன் என்ற அரக்கனை கொன்ற ஆற்றல் உடைய கண்ணனாக அவதரித்த கடலின் நீல நிறத்தில் உடலினை உடைய திருமாலும், நீரினில் கிளர்ந்து எழுகின்ற தாமரை மலர் மேல் உறைபவனும் வேதங்களில் புலமை பெற்றவனும்,அழியாத புகழை உடையவனும் ஆகிய பிரமனும், தங்களின் முன்னே தோன்றிய தழற்பிழம்பின் அடியையும் முடியையும் அளக்க முடியாத வண்ணம் நின்றவன் சிவபெருமான். அவனே அண்ணாமலை தலத்தில் அண்ணலாக உறைகின்றான். அவன், தளராத மார்பகங்களையும் அழகிய சிரிப்பையும் கொண்ட பார்வதி தேவியின் தலைவனாக விளங்குகின்றான். அவனது திருவடிகளை நாம் சரணடைவோமாக.
பாடல் 10:
வேர் வந்துற மாசூர் தர வெயில் நின்று உழல்வாரும்
மார்பம் புதை மலி சீவர மறையா வருவாரும்
ஆரம்பர் தம் உரை கொள்ளன்மின் அண்ணாமலை அண்ணல்
கூர் வெண்மழுப் படையான் நல்ல கழல் சேர்வது குணமே
விளக்கம்:
புத்தர்களையும் சமணர்களையும் ஆரம்பர் என்று குறிப்பிட்டு அவர்கள் இறைவனை பற்றிய சிந்தனையில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் என்று நமக்கு உணர்த்துகின்றார். எனவே போதிய பயிற்சிகள் இல்லாத அவரது உரைகளைக் கொள்ளவேண்டாம் என்று அறிவுரை இங்கே வழங்கப்படுகின்றது.வெய்யிலில் திரிவதால் ஏற்படும் வியர்வையையும் பொருட்படுத்தாமல் குளிப்பதைத் தவிர்ப்பார் என்பதால் மாசூர் தர உழல்வார் என்று சமணர்களை குறிப்பிடும் சம்பந்தர், மஞ்சள் ஆடையால் மார்பை மூடுபவர் என்று புத்தர்களைக் குறிக்கின்றார். சீவரம் என்றால் மஞ்சள் ஆடை என்று பொருள்.வேர்=வேர்வை; மாசூர்=மாசு ஊர்கின்ற உடல்;
பொழிப்புரை:
வெய்யிலில் வெளியே திரிவதால் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தையும், வெளிக் காற்றிலிருந்து உடலில் படிகின்ற மாசுகளையும், நீராடி களைந்து கொள்ளாமல் வெய்யிலில் திரியும் தன்மை உடைய சமணர்கள் மற்றும் தங்களது மார்பினை மறைக்கும் வண்ணம் மஞ்சள் ஆடையால் மூடிக் கொள்ளும் பழக்கம் உடைய புத்தர்கள் ஆகியோர், இறைவனது தன்மையை அறிந்து கொள்ளும் முறையான பயிற்சி அற்றவர்களாக ஆரம்ப நிலையில் உள்ளனர்.எனவே அவர்களது பக்குவமற்ற உரைகளை பொருட்படுத்தாது, உலகத்தவரே, விலக்குவீர்களாக. அவர்களின் சொற்களுக்கு மாறுபட்டு, திருவண்ணாமலை தலத்தில் உறைகின்ற தலைவனும், கூரியதும் வெண்மை நிறத்தில் காணப்படுவதும் ஆகிய மழுப்படையை உடையவனும் ஆகிய பெருமானது நன்மை பயப்பதும் வீரக்கழல்கள் விளங்குவதும் ஆகிய திருவடிகளைச் சார்ந்து நிற்பது மேலான குணமாகும்.
பாடல் 11:
வெம்புந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல்
அம்புந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனைக்
கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர் காழியுள் ஞான
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே
விளக்கம்:
அங்கு உள்ள குயில்கள், ஊதப்படும் கொம்பு வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு குரல் கொடுக்கும் தன்மை படைத்தன என்று கூறுகின்றார். தேவாரப் பாடல்களைப் பாடுவாரின் அடிகளைப் போற்றுதல் நமது தவம் என்றும் இங்கே கூறுகின்றார்.. வெம்பு என்றால் வெப்பம் என்று பொருள். கதிரவனின் ஒளிக் கதிர்கள் ஊடுருவிச் செல்லா வண்ணம் அடர்ந்த மரங்கள்;
மேற்கண்ட பாடல் நமக்கு வலஞ்சுழியின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலை நமக்கு நினைவூட்டும். இந்தப் பாடலில் ஞானசம்பந்தரது தேவாரப் பாடலைப் பாடுபவர்கள் மிகுந்த ஞானம் மிகுந்தவர்கள் என்றும் அத்தகைய அடியார்களின் திருவடிகளைத் தொழுவது தான் உண்மையான ஞானம் என்றும் இங்கே கூறப்படுகின்றது.
வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால்
வாடின் ஞானம் என்னாவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை
பாடும் ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே
பொழிப்புரை:
வெம்மை பயக்கும் கதிரவனின் கதிர்கள் ஊடுருவிச் செல்லாத வண்ணம் விலக்கும் தன்மை உடைய, செழித்து வளர்ந்து அடர்ந்த கிளைகள் உடைய மரங்கள் நிறைந்த விரிந்த மலைச் சாரலாகிய அண்ணாமலையை தனது இருப்பிடமாகக் கொண்டவனும், ஒரே அம்பினைச் செலுத்தி திரிபுரத்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்தவனும் ஆகிய அண்ணாமலை அண்ணலைப் புகழ்ந்து, கொம்பு எனப்படும் வாத்தியத்தின் இசையை கேட்டு எதிரொலிக்கும் குயில்கள் பாடுகின்ற குளிர்ந்த தலமாகிய சீர்காழி தலத்தைச் சார்ந்த ஞானசம்பந்தன் பாடிய தமிழ்ப் பாடல்களை முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்களின் திருவடிகளைப் போற்றி பேணுதல் தவமாகும்
The phrase "உண்ணாமுலை உமையாளொடும்" (Unnamulai Umayalodum) is a poetic description that refers to Lord Shiva in the context of his divine consort Goddess Parvati, who is also known by various names such as Uma and Unnamulai. Let's break down the key elements of the phrase:
உண்ணாமுலை (Unnamulai): This is one of the names of Goddess Parvati. Specifically, it is a reference to her form as Unnamulai Amman, worshipped in the temple town of Tiruvannamalai. The name "Unnamulai" can be translated as "the one with untouched breasts," symbolizing purity, motherhood, and nurturing qualities. In some interpretations, it reflects her role as the divine mother who nourishes the universe.
உமையாள் (Umayal): This refers to Uma, another name for Goddess Parvati, who is the consort of Lord Shiva. Parvati is also called Uma in many Tamil and Sanskrit texts, highlighting her gentle and nurturing aspects.
"உண்ணாமுலை உமையாளொடும்" can be translated as "along with Unnamulai (Parvati) and Uma (Parvati)." The phrase is a reference to Lord Shiva being accompanied by his consort, Goddess Parvati, in her various forms.
This phrase is often used in the context of worshipping Lord Shiva, particularly in the Arunachaleswarar Temple at Tiruvannamalai, where Shiva is worshipped as Arunachaleswarar and Parvati as Unnamulai Amman. The divine couple is considered the embodiment of the union of cosmic energies—Shiva representing consciousness and Parvati representing energy (Shakti).
In Tamil literature, such descriptions reflect the deep connection between Shiva and Parvati, where they are seen as inseparable, representing the balance of masculine and feminine, the material and the spiritual, or the cosmic forces of creation and dissolution.
This poetic expression underscores the eternal partnership between Shiva and Parvati, showing how the divine masculine and feminine energies coexist harmoniously, guiding and nurturing the universe together.