பதிக எண்: 2.86 - திருநாரையூர் - பியந்தை காந்தாரம்
பின்னணி:
நெல்வாயில் அரத்துறை இறைவனின் அருளால் முத்துச் சிவிகை, முத்துக் குடை மற்றும் ஊதுகொம்பு பெற்ற திருஞானசம்பந்தர், அதன் பின்னர் நெல்வெண்ணெய், பழுவூர், விசயமங்கை, புறம்பயம், வைகா, சேய்ஞலூர், பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம்புலியூர், வாழ்கொளிபுத்தூர் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் கடம்பூர் தலம் வந்து அடைகின்றார். கடம்பூர் சென்ற திருஞானசம்பந்தர், பெருமானைப் புகழ்ந்து வானமர் திங்களும் நீரும் என்று தொடங்கும் பதிகம் (2.68) பாடிய பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருநாரையூர் தலம் செல்கின்றார். காம்பினை வென்ற மென் தோளி என்று தொடங்கும் பதிகத்தின் (3.102) பாடல்களில் நலம் தாங்கு நாரையூர் என்றும் நலமோங்கு நாரையூர் என்றும் இந்த தலத்தை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அருளாளர்களின் வாக்கு மெய்வாக்கு என்பதை உணர்த்தும் பொருட்டு, இந்த தலத்து பதிகங்கள் சம்பந்தர் பாடிய பின்னர் சுமார் முன்னூறு ஆண்டுகள் கழித்து, நாரையூர் தலத்தில் அவதரித்த நம்பியாண்டார் நம்பி அவர்களின் மூலம் தேவாரப் பாடல்களை வெளிக் கொணர்வதற்கு இறைவன் திருவுள்ளம் கொண்டதை நாம் அறிவோம். நலம் திகழ் நாரையூர் என்ற தொடரை உள்ளடக்கிய பெரிய புராண பாடலில், சம்பந்தர் திருநாரையூர் சென்றதை சேக்கிழார் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காண்போம்.
நம்பரை நலந்திகழ் நாரையூரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய
வம்பலர் செந்தமிழ் மாலை பாடி நின்று
எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்
இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்களும் (2.86, 3.102, 3.107) அப்பர் பிரான் அருளிய இரண்டு பதிகங்களும் (5.55, 6.74) கிடைத்துள்ளன. உரையினில் வந்த பாவம் என்று தொடங்கும் இந்த பதிகத்தின் பாடல்களில் நாரையூர் நம்பனைத் தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. பதிகத்தின் முதல் பத்து பாடல்களும் நாரையூர் கை தொழவே என்று முடிகின்றன.
இந்த தலம் சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி செல்லும் பாதையில் பதினெட்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் பெயர் சௌந்தரேஸ்வரர், நாரையூர் நம்பி; இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி; தலத்து விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர் தான் இன்றைய சைவ உலகம் தேவாரப் பதிகங்களை அறிந்து கொள்வதற்கு பிள்ளையார் சுழி இட்டவர். தேவாரப் பதிகங்கள் தில்லைச் சிற்றம்பலத்து பிராகாரத்தில் இருக்கும் இடத்தை, நம்பியாண்டார் நம்பிக்கு சுட்டிக் காட்டியவர் இவரே. இவரை பொள்ளாப் பிள்ளையார் என்று அழைக்கின்றனர். பொள்ளாத என்றால் உளியால் செதுக்கப் படாத என்று பொருள். பிள்ளையார் சன்னதியில் திருமுறை கண்ட வரலாறு வண்ணப்பட சித்திரங்களாக உள்ளன. இந்த தலத்து விநாயகர், ஆறு படை வீடுகளில் ஒன்றாக கருதப் படுவதில் வியப்பு ஏதுமில்லை. முருகனுக்கு இருப்பது போன்று விநாயகருக்கும் ஆறு படை வீடுகள் உள்ளன. நாரையூர், அண்ணாமலை, முதுகுன்றம், கடவூர், மதுரை மற்றும் காசி. அண்ணாமலையில் செந்தூரப் பிள்ளையார், முதுகுன்றத்து ஆழத்துப் பிள்ளையார், கடவூரின் கள்ள வாரணப் பிள்ளையார், மதுரை தலத்தின் முக்குறுணிப் பிள்ளையார், காசியின் துண்டீர விநாயகர் மற்றும் நாரையூரின் பொள்ளாப் பிள்ளையார் ஆகியோர்களை இணைத்துக் கூறும் ஒரு பழைய தமிழ் பாடல் உண்டு. தில்லைச் சிதம்பரம் நடராஜப் பெருமானின் திருக்கோயிலில் மேற்கு உள் பிராகாரத்தில், திருமுறை காட்டிய விநாயகர் சன்னதி உள்ளது.
கூறு திருவருணை கூப்பா முதுகுன்றம்
வீறு கடவூர் விண் முட்டும் தேரு தமிழ்
மாமதுரை காசி மருவு திருநாரையூர்
வேழமுகத்து ஆறு படைவீடு.
முகப்பு வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர் அழகிய வண்ணச் சுதையில் காட்சி தருகின்றார். கிழக்கு நோக்கிய திருவாயிலைத் தாண்டியதும் உள்ள கோபுரம்மூன்று நிலைகளை கொண்டது. கொடிமரம் இல்லை. மூலவர் சுயம்பு மூர்த்தம். தாமரை மலர் அமைப்பில் உள்ள பீடத்தில் அமைந்துள்ள சதுரவடிவு ஆவுடையாரின் மீதுள்ள சிறிய இலிங்கம். மூலவர் சுயம்பிரகாச ஈச்வரர் என்றும் அழைக்கப் படுகின்றார். மூலவரின் கோட்டத்தில் தென்முகக் கடவுள்,லிங்கோத்பவர், பிரமன், துர்கை ஆகியோரை மண்டபங்களுடன் காணலாம். உள் பிராகாரத்தில் சந்தானக் குரவர்கள் சன்னதியும் அதனை அடுத்து நால்வர்சேக்கிழார் சன்னதிகளும் உள்ளன. அகத்தியரை அடுத்து பொள்ளாப் பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் திருமுறை கண்ட வரலாறுசித்திரமாக தீட்டப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகர். நம்பியாண்டார் நம்பி மற்றும் இராஜராஜச் சோழனின் உருவச் சிலைகள் உள்ளன. அடுத்துசுப்பிரமணியர் கஜலட்சுமி திருமூலநாதர், சண்டீசர், நவகிரகம், பைரவர், சனி பகவான், சூரியன் மற்றும் சந்திரன் சன்னதிகள் உள்ளன. ஒரே சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு சண்டிகேசுவரரை காணலாம். மூலவருக்கு ஒருவர் என்றும் திருமூலநாதருக்கு ஒருவர் என்றும் இரண்டு சண்டிகேசுவரர்கள் இருப்பதாக கூறுகின்றனர். அதனை அடுத்துள்ள மண்டபத்தில் நமக்கு வலதுபுறத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. மண்டபத்தின் இடது புறத்தில் நம்பியாண்டார் அருளிய இரட்டை மணிமாலை மற்றும் தேவாரப் பதிகங்கள் பதிக்கப் பட்டுள்ளன. துவார பாலகர்களைத் தாண்டி உள்ளே சென்றால் உற்சவ மூர்த்தங்களைகாணலாம். நாரை, பொள்ளாப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, இராஜராஜச் சோழன், சந்திரசேகரர், நால்வர் முக்கியமானவை. கோஷ்ட மூர்த்தங்களில்தட்சிணாமூர்த்தி மற்றும் துர்க்கை தனி சன்னதிகளாக மண்டபங்களுடன் உள்ளன. ஒரே சன்னதியில் மூன்று பைரவர்களையும் காணலாம். மூலவர் அழகானசிவலிங்கத் திருமேனி. சூரியன், நம்பியாண்டார் நம்பி மற்றும் நாரை வழிபட்டு பயனடைந்த தலம். இந்த திருக்கோயிலில் இறைவனின் சன்னதியின் மேல்இரண்டு கலசங்கள் இருப்பதை காணலாம். ஒரே சன்னதியில் இரண்டாவது கலசம் பொருத்தப்பட்டு உள்ளதன் காரணம், அம்மையைத் தனது உடலுடன்இணைத்துக் கொண்ட இறைவன், அம்மையுடன் இங்கே கருவறையில் உடனுறைவதாக கருதப்படுகின்றது. அப்பன் அருவுருவமகவும் (இலிங்கம்) அம்மைஅருவமாகவும் (உருவமற்ற நிலை) இருப்பதாக ஐதீகம். திருச்சிக்கு அருகே உள்ள நெடுங்களம் தலத்திலும் இதே போன்ற அமைப்பை நாம் காணலாம். மூலவரின் கோயிலுக்கு வெளியே பிராகாரத்தின் வடகிழக்கு பகுதியில் தெற்கு நோக்கிய வண்ணம் அம்பிகைக்கு தனி சன்னதியும் உள்ளது. வைகாசித் திங்கள் புனர்பூசம் நாளில் நம்பியண்டார் நம்பிக்கு குருபூஜை விழா, சிறந்த திருவிழாவாக கொண்டாடப் படுகின்றது. முனிவர் பகர், மார்க்கண்டேயர்,அகத்தியர், பாண்டவர்கள் கபிலதேவ நாயனார் ஆகியோர் வழிபட்ட தலம். தலமரம் புன்னை; தீர்த்தம் செங்கழுநீர், காருண்ய தீர்த்தம்.
ஒரு சமயம் துர்வாச முனிவர் ஆழ்ந்த தவத்தினில் இருந்த போது, ஆகாய வழியில் சில கந்தர்வர்கள் சென்றனர். அவர்களில் ஒருவனான தேவதத்தன்என்பவன் பழங்களை உண்ட பின்னர் கீழே துப்பிய கொட்டைகள் துர்வாசர் மீது விழவே, பறவைகள் போன்று, உட்கொண்ட பழத்தின் கொட்டையை கீழேஉதிர்த்த தேவதத்தன் நாரையாக பிறக்கவேண்டும் என்று சாபம் கொடுத்தார். மேலும் முனிவர் கங்கை நீரைக் கொண்டு இந்த தலத்து இறைவனுக்குஅபிஷேகம் செய்தால் சாப விமோசனம் பெறலாம் என்றும் கூறினார். நாரையும் தினமும் அவ்வாறே செய்து வந்தது. ஒரு நாள் கடும் புயலின் காரணமாகபறக்க முடியாமல் தவித்த நாரையின் சிறகுகள் காற்றின் வேகத்தால் பிய்ந்து விழுந்தன. அவ்வாறு சிறகுகள் விழுந்த இடம் சிறகிழந்த நல்லூர் என்றுஅழைக்கப் படுகின்றது. இந்த தலம் திருநாரையூரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. சிறகிழந்த நிலையிலும் தவழ்ந்து வந்த நாரை பெருமானைவழிபட்டு சாப விமோசனம் பெற்றது. நாரை சாப விமோசனம் பெற்றதால் தலம் நாரையூர் என்று அழைக்கப் படலாயிற்று.
பாடல் 1:
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம்ம செயல் தீங்கு குற்றம் உலகில்
வரையில் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினைமின்
வரை சிலையாக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவத்
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே
விளக்கம்:
இறைவன் உயிர்களை அவற்றின் வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப தகுந்த உடல்களுடன் இணைக்கின்றான். அவ்வாறு இணைக்கப்படும் உடல்களில் மனித உடல் உட்பட பல்வேறு ஜீவராசிகளின் உடல்கள் அடக்கம். இவ்வாறு இருக்கையில், மனித உடலைப் பெற்று வாழும் நாம் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் மனித உடலுக்கு தான் இறைவன் முப்பத்தாறு தத்துவங்கள் எனப்படும் கருவிகள் அளித்து உயிர்கள் உய்யும் வழியினைத் தேடிக்கொள்ள வழி வகுத்துள்ளான். ஆனால் இந்த கருவிகளின் உதவியுடன் மெய்ப்பொருளை உணர்ந்து மேலும் வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து நமது பழைய வினைகளைக் கழித்து வீடு பேற்றை அடைவதை நமது குறிக்கோளாக கொண்டு நாம் செயல்படுவதில்லை. வாக்கினால் வேண்டாத தீமைகளைப் பேசி, மனத்தினால் தீய எண்ணங்களை நினைத்து, உடல் உறுப்புகளால் பல பாவங்களைச் செய்து வினையை பெருக்கிக்கொண்டு, பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை பெற முடியாமல் தவிக்கின்றோம். இவ்வாறு அல்லற்படும் மனிதனுக்கு சம்பந்தர் இந்தப் பதிகத்தின் முதல் பாடலில் அறிவுரை கூறுகின்றார். நாரையூர் பெருமானை ,மனதினால் நினைத்து, வாக்கினால் துதித்து, கைகளால் தொழுது நாம் உய்யும் வகையைக் காட்டும் பாடல் இது. எந்த முக்கரணங்கள் (வாய், மனம், உடல்) தீயனவற்றைச் செய்து வினையை பெருக்கிக் கொள்கின்றதோ, அந்தக் கரணங்கள் தங்களது செயல்களுக்கு பரிகாரம் தேடும் முகமாக என்ன செய்ய வேண்டும் என்று அழகாக கூறும் பாடல் இது.
உரையினில் வந்த பாவம்=பொய்யான சொற்களை பேசுதல், பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் சொற்களை பேசுதல், கடுமையான சொற்களை பேசுதல், பயனற்ற சொற்களை பேசுதல் என்பன நமது மொழியால் வரும் பாவங்களாக கருதப் படுகின்றன. உணர்=உணர்தற்கு உரிய கருவியாகிய மனம்; உணர் நோய்=மனதினில் தோன்றும் தீய எண்ணங்கள்; மனதினில் தோன்றும் எண்ணங்களே நமது செயல்களாக வடிவம் பெறுகின்றன. சில தீய எண்ணங்களை செயலாக மாற்றும் திறன் இல்லாமையால் நாம் அந்த செயல்களை செய்யாத போதிலும் அத்தகைய தீய எண்ணங்கள் பாவமாக கருதப் படுகின்றன. செயல் தீங்கு குற்றம் என்பதை தீங்கு செயல் குற்றம் என்று மாற்றி வைத்து, பொருள் கொள்ள வேண்டும். உம்ம என்ற சொல்லினை இந்த மூன்று வகையான குற்றங்களுக்கும் பொதுவானதாக கருதி பொருள் கொள்ளவேண்டும்.
இந்த பாடலில் பெருமான் நஞ்சு உண்டதைக் கண்டு அம்பிகை அச்சமுற்றதாக சம்பந்தர் கூறுகின்றார். அச்சம் கொண்டதன் காரணம் நஞ்சு உட்கொண்டதால் பெருமானுக்கு கேடு ஏதேனும் ஏற்படுமோ என்ற எண்ணத்தால் அல்ல; பெருமான் உட்கொள்ளும் நஞ்சு பின்னாளில் அவரது வயிற்றினில் ஒடுங்க இருக்கும் உயிர்களுக்கு கேடு ஏதும் விளைவிக்க கூடாது என்ற எண்ணத்தினால் தான். பதினோராம் திருமுறையில் கபில தேவர் அருளிய சிவபெருமான் இரட்டை மணிமாலை என்ற பதிகத்தின் பாடலில், பெருமானுக்கு கேடு ஏதும் விளைவிக்க இயலாத நஞ்சம் என்பதால் பார்வதி தேவி விடம் உட்கொள்வதை தடுக்க வில்லை என்று கூறுகின்றார். கபில தேவ நாயனார் தான் அருளிய சிவபெருமான் இரட்டை மணிமாலை (பதினோராம் திருமுறை) பதிகத்தில் இறைவனை வெண்காட்டு கரும்பு என்று குறிக்கின்றார். சிவபிரானின் வயிற்றினுள் அண்ட சராசரங்கள் அடங்கியுள்ள காரணத்தால், அவற்றை காப்பாற்றும் பொருட்டு, உமையம்மை தனது மென்மையான கரங்களால், சிவபிரானின் கழுத்தினை, அவர் நஞ்சுண்ட போது பிடித்து நஞ்சு கழுத்திலே தங்குமாறு செய்தார்கள் என்று கூறி உமையம்மையின் கருணை இந்தப் பாடலில் விளக்கப்படுகின்றது.
மிடறு தாழ் கடல் நஞ்சம் வைக்கின்ற ஞான்று மெல்லோதி நல்லாள்
மடல் தாமரைக் கைகள் காத்திலவே மழுவாள் அதனால்
அடல் தாதையை அன்று தாள் எறிந்தார்க்கு அருள் செய்த கொள்கைக்
கடல் தாழ் வயல் செந்நெல் ஏறும் வெண்காட்டு எம் கரும்பினையே
பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சினை சிவபிரான் உட்கொண்ட பின்னர், நஞ்சின் வெம்மையினை குறைப்பதற்காக, அம்பிகை எண்ணெய் அபிஷேகம் செய்ததாக நனிபள்ளி தல வரலாறு கூறுகின்றது. கோயிலின் குளத்திற்கு வடக்கே கருங்கல் செக்கு உள்ளது. இந்த செக்கில் தான் பார்வதி தேவி எண்ணெய் ஆட்டி, அதனைக் கொண்டு இறைவனை நீராட்டியதாக நம்பப்படுகின்றது. சில வருடங்கள் முன்பு கூட இந்த செக்கு பயன்படுத்தப் பட்டு அந்த எண்ணெயைக் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தனர், ஆனால் தற்போது அவ்வாறு செய்வதில்லை. அந்த செக்கினை பயன்படுத்தாது வேறு எண்ணெய் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் தற்போது நடைபெறுகின்றது. இறைவனின் திருமேனியின் மீது விடப்படும் எண்ணெய் மொத்தமும், இலிங்கத் திருமேனியால் உறிஞ்சப்பட்டு, ஒரு சொட்டு எண்ணெய் கூட கீழே சிந்தாத அதிசயத்தை நாம் இன்றும் காணலாம். எண்ணெய் நீராட்டத்திற்கு பின்னர் சுவாமியின் திருமேனிக்கு இளஞ்சூடு கொண்ட வெந்நீர் தான், இறைவனை நீராட்டப் பயன்படுத்தப் படுகின்றது. மேலும் இறைவனுக்கு நைவேத்தியமாக, மிளகு சீரகம். மற்றும் பசுநெய் கலந்த அன்னம் படைக்கப்படுகின்றது. அம்மையே தைல அபிஷேகம் செய்வதாக கருதப் படுவதால், எண்ணெய்க் கிண்ணம் முதலில் அம்மன் சன்னதியில் வைக்கப்பட்டு, பின்னரே இறைவனை நீராட்ட பயன்படுத்தப் படுகின்றது. மேலும் மொத்த எண்ணெயில் பாதி பங்கு இறைவியின் நீராட்டத்திற்கும் பயன்படுத்தப் படுகின்றது.
அபிராமி அந்தாதி ஐந்தாவது பாட்டினில் அபிராமி பட்டர் வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை என்று கூறுகின்றார். இந்த பாடலுக்கு விளக்கம் கூறிய கி.வா.ஜ. அவர்களின் உரையின் ஒரு பகுதியை நாம் இங்கே காண்போம். ஆலால சுந்தரர் கொண்டு வந்த நஞ்சினை வாங்கிக் கொண்ட இறைவன், தனது வாயின் அருகே நஞ்சை எடுத்துச் சென்ற போதும் உமையம்மை ஏதும் செய்யவில்லை; இறைவன் பருகிய பின்னர், அந்த நஞ்சு உள்ளே செல்லலாகாது என்ற எண்ணத்துடன், இறைவன் நஞ்சை விழுங்கத் தொடங்கியவுடன், பார்வதி அன்னை இறைவனது கழுத்தினை தனது கைகளால் அணைத்துக் கொள்ள, அந்த கொடிய நஞ்சு கழுத்திலே தங்கிவிட்டது. அம்பிகை தனது திருக்கரத்தினால் தடுத்து நிறுத்திய போது, அவளது கை பரிசத்தினால் (ஸ்பரிசம்) நஞ்சு எந்தவிதமான தீங்கினையும் செய்யாமல், அமுதமாக அங்கே தங்கிவிட்டது என்று கி.வா.ஜ. விளக்கம் அளிக்கின்றார். அம்புயம்=தாமரை: அந்தரி=பராகாச வடிவினளாகிய அம்பிகை: பொருந்திய முப்புரை=திரிபுர சுந்தரி: மருங்குல்=இடை: திருந்திய=அமர்ந்த:
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே
சுந்தரர் திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலிலும் (7.99.1), பெருமான் விடம் உட்கொண்டபோது தேவி அச்சம் கொண்டதாக கூறுகின்றார். பேழ்க்கணிக்க=அச்சம் கொள்ள; வாள்=ஒளி வீசும்; நுதல்=நெற்றி’ பிறையணி=பிறைச் சந்திரன் அணிந்தது போன்று; நிறையணி=உறுதி படைத்த அனுங்க=கலங்க;
பிறையணி வாள் நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே
குறையணி கொல்லை முல்லை அளைந்து குளிர் மாதவி மேல்
சிறையணி வண்டுகள் சேர் திருநாகேச்சரத்தானே
திருவாய்மூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (2.111.5), ஞானசம்பந்தர் பெருமான் விடம் உட்கொண்ட போது தேவி அஞ்சியதாக குறிப்பிடுகின்றார். அஞ்சனம்=மை, மை போன்று கருமை நிறத்து மணி; திமிலம்=பேரொலி;
அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகமிடறு அணி கொள உடல் திமில
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறுநுதல் உமை நடுங்க
வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுறப் போர்த்த நிறமும் அஃதே
வஞ்சனை வடிவினொடு இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
கங்குல்=இருள்; வளர் கங்குல்=அடர்ந்த இருளின் நிறத்தில், அடர்ந்த கருமை நிறத்தில்; வெருவ=அச்சம் கொள்ள; திரை ஒலி=பேரொலி செய்யும் அலைகளிலிருந்து எழுந்த; செல்வச் செழிப்பு மிகுந்த நகரமாக நாரையூர் காணப்பட்டது என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சிவன் மேய என்ற தொடரினை அடுத்து செல்வ என்ற சொல் வருவதால், சிவபெருமான் அமர்ந்துள்ள நிலையினை சிறந்த செல்வம் என்று கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. வரை=மலை; சிலை=வில்;
பொழிப்புரை:
உமது வாக்கினால் வந்த குற்றங்கள், உமது மனதினில் எழுந்த தீய எண்ணங்கள், உமது தீய செயல்களால் விளையும் வினைகள் என்று பலவகையாக குற்றங்கள் செய்து அளவிடமுடியாத வண்ணம் சேர்த்துக் கொண்டுள்ள பாவங்கள் தீர வேண்டும் என்றால் நீங்கள் பெருமானை தினமும் நினைத்து புகழ்ந்து வணங்க வேண்டும். மேரு மலையினை வில்லாக வளைத்து பண்டைய நாளில் வானில் திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் எரித்தவனும், அடர்ந்த இருள் போன்று கருமை நிறத்துடன், ஆரவாரம் மிகுந்த அலைகளிலிருந்து எழுந்த நஞ்சினை உமையம்மை அச்சம் கொள்ளும் வண்ணம் உட்கொண்டவனும் ஆகிய பெருமான் பொருந்தி அமர்கின்ற செல்வச் செழிப்பு மிகுந்த திருநாரையூர் நகரத்தினை கை தொழுது வணங்கினால், உங்களது பாவங்கள் அனைத்தும் தீரும்.
பாடல் 2:
ஊன் அடைகின்ற குற்றம் முதலாகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும்
வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதியான வேத விகிர்தன்
கானிடை ஆடி பூதப் படையான் இயங்கு விடையான் இலங்கு முடிமேல்
தேனடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திருநாரையூர் கை தொழவே
விளக்கம்:
முந்தைய பாடலில் மனம் மொழி மெய்களால் விளையும் பாவங்களுக்கு காரணமாகிய குற்றம் பிணி நோய் ஆகிய மூன்றும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றன. உயிரின் குற்றமே மலங்களுடன் பிணைந்து இருப்பதே. அந்த மலங்களின் சேர்க்கையால் ஏற்படும் வினைகளின் காரணமாகத் தானே பிறவிகள் எழுகின்றன. பிறப்பு எடுத்த பின்னர், பழைய வினைகளை நுகரும் நாம் மேலும் பல குற்றங்களை செய்து பாவ வினைகளை சேர்த்துக் கொள்கின்றோம். இந்த வினைகளை தீர்த்துக் கொண்டு தனது நிலையினை உயர்த்திக் கொள்ளவே உயிர் விரும்புகின்றது. அந்த விருப்பத்தினை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வது என்பதை சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒருங்கும்=கெடும்; ஊன்=உடல்; இயங்கு விடையான்=விடையின் மீது அமர்ந்து பல இடங்கள் செல்பவன். விதி=வாழ்க்கை நெறிமுறைகள்; ஆடி என்ற சொல் இங்கே பெயர்ச் சொல்லாக வந்துள்ளது. ஆடி=ஆடுபவன்;
பொழிப்புரை:
உயர்ந்த வானில் உலவும் வெள்ளை மதியினைத் தனது தலையில் சூடியவனும் வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துரைக்கும் வேதங்களை அருளி அதனில் வல்லவனாக திகழ்பவனும். காட்டில் நடம் ஆடுபவனும், பூத கணங்களைத் தனது படையாக உடையவனும், இடபத்தை வாகனமாகக் கொண்டு பல இடங்கள் செல்பவனும், ரீங்காரம் இட்டுக் கொண்டு தேனைத் தேடிக் கொண்டு வரும் வண்டுகள் வந்தடையும் மலர்கள் சூடிய சடையினை உடையவனும், நமக்குத் தலைவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருநாரையூர் தலத்தினை கை தொழுதால், உயிர்கள் மீண்டும் மீண்டும் உடல்களை சென்று அடையும் குற்றமும், பிறவி எடுப்பதால் உயிர்களுக்கு மனம் மொழி மெய்களால் சேர்கின்ற தீய வினைகளும் முற்றிலும் அழிந்து விடும்.
பாடல் 3:
ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயர் உற்ற தீங்கு விரவிப்
பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும்
போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும்
தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திருநாரையூர் கை தொழவே
விளக்கம்:
ஊர்=உடல்; உயிர் நின்று வாழும் இடம் உடல் ஆதலால், இங்கே உடலை உணர்த்தும் வண்ணம் ஊர் என்ற சொல் கையாளப் பட்டுள்ளது. ஒருவரது ஆயுட்காலம் என்ன என்பதும் அந்த பிறவியில் அவர் நுகர வேண்டிய வினைகளின் தன்மையும் அளவும் இறைவனால் நிர்ணயிக்கப் படுகின்றன. அவ்வாறு குறிப்பிடப்பட்ட நாளில், உயிர்களிலிருந்து உடலை பிரிப்பது இறைவனால் இயமனுக்கு அளிக்கப்பட்ட பணி. ஆனால் நாம் இந்த உண்மையை புரிந்து கொள்வதில்லை. இந்த பாடலில் காலன் இறைவனை வழிபட்டு, கோடிக் கணக்கான உடல்களிலிருந்து உயிரினைப் பிறப்பதால் தனக்கு ஏற்படும் பழிச் சொல்லினை போக்கிக் கொள்வதற்காக இறைவனை வணங்கி அவனது அருள் பெற்றான் என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி நமக்கு திருவாஞ்சியம் தலத்து புராணத்தை நினைவூட்டுகின்றது. இயமன், தான் உயிரை உடலிலிருந்து பிரிக்கும் பணியைச் செய்வதால் அனைவராலும் வெறுக்கப் படுவதையும், தனது பணியின் காரணமாக தான் அடையும் பழியினை தாங்க முடியாமல் மனவருத்தம் அடைவதையும் திருவாரூர் தியாகேசப் பெருமானிடம் முறையிட்டான். அவனுக்கு அருள் புரிய திருவுள்ளம் கொண்ட பெருமான், அவனை திருவாஞ்சியம் தலம் சென்று வழிபடுமாறு ஆலோசனை கூறினார். இயமனும் அவ்வாறே செய்ய, அன்று முதல் இயமனும் பழிச் சொல்லிலிருந்து தப்பினான் என்று கூறுவார்கள். நாமும் அன்றாட வாழ்க்கையில் இதனை காண்கின்றோம். இறந்தவரின் வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்தால் எவரும் அவரது காலம் முடிந்து விட்டது என்றோ இயமன் உயிரைப் பறித்தான் என்றோ கூறுவதில்லை. ஏதோ ஒரு நோயின் பெயரினை குறிப்பிட்டு அதனால் இறந்தார் என்றோ நேற்று வரை நன்றாக தான் இருந்தார், என்ன காரணம் தெரியவில்லை இன்று இறந்துவிட்டார் என்றோ தான் பொதுவாக கூறுகின்றனர். திருவாஞ்சியம் தலத்தில் வேறு எங்கும் இல்லாத வண்ணம் இயமனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ஞான்று என்ற சொல் நாள் அன்று என்ற தொடரின் மருவு. இந்த பாடலின் இரண்டாவது அடியில், இயமனுக்கு உற்ற பழிச்சொல் நீங்கியது போல அகலும் என்று சம்பந்தர் கூறுகின்றார். என்ன அகலும், எதனால் அகலும் என்பது இந்த அடியில் குறிப்பிடப்படவில்லை எனினும், நாரையூர் கை தொழ அகலும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். முதல் இரண்டு பாடல்களின் தொடர்ச்சியாக இந்த பாடலை நாம் கருதினால் தான், எவை அகலும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். முதல் இரண்டு பாடல்களில் குறிப்பிட்ட மூன்று வகையான வேறு வேறு வழிகளில், மனம் வாக்கு செய்கை மூலம் நாம் சேர்த்துக் கொள்ளும் பாவங்கள் அகலும் என்பதையே சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்பதை நாம் உணரலாம்.
முதல் இரண்டு அடிகளுக்கு, இறைவனை வணங்கி இயமன் தனது பழியினைத் தீர்த்துக் கொண்டான் என்பதற்கு பதிலாக வேறொரு விளக்கமும் தரப்படுகின்றது. காலன் துயருற்ற தீங்கு என்பதற்கு காலனால் உயிர்களுக்கு ஏற்படும் துயரம் என்று பொருள் கொண்டு இந்த விளக்கம் அளிக்கப் படுகின்றது. உடலாகிய ஊரின் கண் நின்று வாழும் உயிரினை தகுந்த நேரத்தில் காலன் வந்து கவரும் தருணத்தில் காலனால் ஏற்படும் தீங்கினையும், உலகத்தவர் ஒன்று கூடி பழிக்கும் வார்த்தைகளையும் ஒழிக்க வேண்டும் என்று விரும்பினால் திருநாரையூர் தலத்தினை தொழுவீர்களாக என்பதே இந்த விளக்கம்.
பொழிப்புரை:
உடலாகிய ஊரினில் நின்று பல காலம் வாழ்கின்ற உயிரினை பிரிப்பதால் தன்னை வந்து அடைந்த பழிச்சொற்களும், அந்த பழிச்சொற்களால் தான் அடைந்த மன வருத்தமும் தாளாமல், இயமன் இந்த மண்ணுலகம் வந்து இறைவனை வழிபட்டு வருத்தத்தையும் தான் உற்ற பழியினையும் போக்கிக் கொண்டான். அதே போன்று மனம் மொழி மெய் ஆகியவற்றின் செய்கைகளால் நீங்கள் சேர்த்துக் கொள்ளும் பாவங்களை முற்றிலும் நீக்க வேண்டும் என்று விரும்பினால், திரிபுரத்தவர்களுடன் போருக்கு சென்று அவர்களது மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்த பண்டைய நாளில் புகழத் தக்க தேவர்கள் பலரும் (வேதங்கள், பூமி, ஆகாயம், பிரமன், திருமால், அக்னி, வாயு, சூரியன் சந்திரன் முதலானோர்) ஒன்று கூடி அமைத்த தேரினில் அமர்ந்தவனும் எனது தந்தையும் ஆகிய பெருமான் உறையும் திருநாரையூர் தலத்தினை தொழுது பயன் அடைவீர்களாக.
பாடல் 4:
தீ உறவாய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின்
தாயுறு தன்மையாய தலைவன் தன் நாமம் நிலையாக நின்று மருவும்
பேய் உறவாய கானில் நடமாடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல்
தேய் பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே
விளக்கம்:
இந்த பாடலில் சம்பந்தர் தாயின் தன்மையை உடைய இறைவன் என்று கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு ஈன்றாளுமாய் (4.94.1) என்று அப்பர் பிரான் அழைத்ததை நினைவுக்கு கொண்டு வருகின்றது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற மொழியினுக்கு ஏற்ப ஈன்றாள் என்று தாயினை முன்னே சொல்லி பின்னர் தந்தையை குறிப்பிடுகின்றார். கூற்றுவனே நேரில் வந்து வருத்துவதைப் போல் தன்னை வருத்திய சூலை நோயினைத் தான் போக்கிக் கொள்ளத் தெரியாமல் தவித்த போது, தனக்கு நல்ல வழி காட்டிய தமக்கையார் திலகவதியார், தனக்கு மறுபிறவி அளித்தது போல் உதவி செய்தார் என்பதை உணர்ந்ததால், அப்பர் பிரான் தனது தமக்கையாரையும் இங்கே உடன் தோன்றினராய் என்று குறிப்பிடுகின்றார். தாய், தந்தை, தமக்கை இவர்கள் மூவரும் அவருக்கு கண் முன்னே தோன்றி பலவகையிலும் அவரை நன்னெறிப் படுத்தியவர்கள். ஆனால் சிவபிரான் தானே உண்மையாக அனைவருக்கும் துணையாக இருந்து உதவுகின்றான். மேலும் நாயனாரின் வாழ்க்கையில், சமணர்களின் சூழ்ச்சிகளிலிருந்து அவர் தப்பியதற்கு சிவபிரானின் கருணை தானே காரணம். எனவே தான், தனக்கு முன்னே தோன்றாவிட்டாலும், தனக்கு பல வகையிலும் உதவி செய்த துணைவனை தோன்றாத் துணைவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். ஏன்றுதல்=தாங்கிக் கொள்ளுதல்.
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே
இறைவனை தனது தந்தை தாய் என்று பல அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தனது தமக்கையார் தனக்கு செய்த உதவியினை நினைத்து சிவபிரானைத் தனது சகோதரியாகவும் அப்பர் பிரான் காண்கின்றார். துறவுநிலை பூண்டதால் சுற்றம் ஏதும் இல்லாத அப்பர் பிரான், சிவபிரானையே தனக்கு அனைத்துச் சுற்றங்களாக காண்பதை கீழ்க்கண்ட பாடலில் (6.95.1) நாம் காணலாம். தான் அனுபவிக்கும் போகமாகவும், தன்னை உய்விக்கும் பொருளாகவும், தனக்குத் துணையாகவும், தனது செல்வங்களாகவும் சிவபிரானையே அப்பர் பிரான் காண்கின்றார். துறப்பித்தல் என்றால் உலகச் சுற்றங்களைத் துறக்கச் செய்தல் என்று பொருள்.
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சத்து துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே
பெற்ற தாயினும் நல்லவனாக சிவபெருமானை திருமூலர் கருதுகின்றார். இந்த பாடலில் திருமூலர் தாயினும் நல்லன் தாழ்சடையோன் என்று கூறுகின்றார். உயிர்களுக்கு தேவையான வெப்பத்தை அளிப்பதில் கதிரவனை விடவும் சிறந்தவன் என்றும் உயிர்களுக்கு தேவையான சமயத்தில் குளிர்ச்சியை அளிக்கும் சந்திரனை விடவும் சிறந்தவனாக விளங்கும் பெருமானின் அருள் புரியும் தன்மையை எவரும் அறியாமல் இருக்கின்றனரே என்று திருமூலர் இந்த பாடலில் வருந்துகின்றார்.
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ் சடையோனே
இதே கருத்தை தான் மணிவாசகரும் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து அருள் புரிபவன் சிவபெருமான் என்று பிடித்த பத்து பதிகத்தின் ஒரு பாடலில் கூறுகின்றார். இந்த பாடலில் அவர், தக்க நேரத்தில் தனது குழந்தைக்கு பாலினை நினைந்து ஊட்டும் தாயினும் மேலாக பரிந்து உதவி செய்பவன் சங்கரன் என்று கூறுகின்றார். குழந்தையின் உடல் உரம் பெறுவதற்காக தாய், தனது குழந்தைக்கு காலம் தவறாமல் பால் அளித்து வளர்க்கின்றாள். அழியக் கூடிய உடலினை விடவும் அழியாத தன்மை படைத்த உயிர் முக்கியம் வாய்ந்தது அல்லவா. அதனால் தான், உயிருக்குத் தேவையான ஞானத்தைத் தரும் பெருமானை, தாயினும் சாலப் பரிந்து உதவி செய்யும் பெருமான் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். தனது உயிர் உரம் பெறுவதற்காக இறைவன் தனது உள்ளத்தில் இருந்த இருளினை அகற்றி ஞானத்தை ஏற்படுத்தி ஒளி பெருக்கியதாக மணிவாசகர் இங்கே கூறுகின்றார். சிவபெருமான் உள்ளொளி மட்டுமா பெருக்கினான், அவரது ஊனினை உருக்கினான், உள்ளத்தில் அழிவில்லாத ஆனந்தம் ஊறி தேன் போன்று தித்திக்குமாறும் செய்தான். இவ்வாறு அருள் புரிந்த பெருமான், தான் செல்லுமிடமெல்லாம் வந்ததாக மணிவாசகர் கூறுகினார். இவ்வாறு பக்குவபடுத்தப் பட்ட மணிவாசகரின் உள்ளம், அந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றதா என்பதை கண்காணிக்க அவருடனே திரிந்த சிவபெருமானை தான் கண்டு கொண்டு அவரை இறுகப் பிடித்து கட்டியதாக இந்த பாடலில் கூறுகின்றார். சிவபுராணத்தில் தாயினும் சிறந்த தயா ஆன தத்துவனே என்று குறிப்பிடுவதும் நாம் இங்கே சிந்திக்கத் தக்கது.
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருகி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே
தாயினும் சிறந்து இறைவன் விளங்கும் தன்மை திருவாசகம் பிடித்த பத்து பதிகத்தின் மற்றொரு பாடலிலும் உணர்த்தப் படுகின்றது. தாய் தந்தையர் தந்த உடலைக் கொண்டு வாழும் இவ்வாழ்க்கை, வினையின் வயப்பட்டது. இறைவன் நம்மை ஆட்கொண்டு முக்தி அளிக்கும் வாழ்க்கை, வினைத் தொகுதிகளின் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கை. அத்தகைய வாழ்வினை அளிக்கும் வல்லமை படைத்த இறைவனை அம்மை என்றும் அப்பன் என்றும் அடிகளார் இந்த பாடலில் அழைக்கின்றார். நாம் அவனது திருவடி பால் வைக்கும் அன்பே சிவானந்தமாக மிளிர்கின்றது என்பதை மணிவாசக பெருமானார் இந்த பாடலில் கூறுகின்றார். அன்பினில் விளைந்த ஆரமுது என்று இறைவனை இந்த பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் நமக்கு ஆரமுதமாக இனிக்கவேண்டும் என்றால், நாம் சிவபிரான் பால் அன்பு கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக அன்பினில் விளைந்த ஆரமுது என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். பெருமானிடத்தில் நாம் வைக்கும் அன்பு முதிர்ந்த நிலை அடையும் போது சிவானந்தம் விளையும். அந்த சிவானந்தத்தை ஆரமுது என்று மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார். பொய்ம்மை=பொய்யான, நிலையில்லாத பொருட்கள் நிறைந்துள்ள உலக வாழ்க்கை; சுருக்கும்=வீணாக்கும்: பெருமானை நினையாமல், நிலையில்லாத உலக இன்பங்களில் வீழ்ந்து கிடக்கும் நிலையினை பொழுதினை வீணாகக் கழித்தல் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. அழுக்குகள் நிறைந்த, மலங்கள் சூழ்ந்த உடலினை உடைத்த தன்னை, புழுத்தலைப் புலையன் என்று மிகவும் தாழ்வாக கூறிக்கொள்வதை நாம் உணரலாம்.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே
தேவர்களும் காண்பரிய விளங்கும் சிவபெருமான், தானே வந்து தாய் போல் கருணைச் செயல் புரிந்ததாக மணிவாசகர் கூறும் பாடல், திருவாசகம் திருவம்மானை பதிகத்தில் வருகின்றது. கான் நின்று வற்றி=தவம் செய்ய காட்டில் புகுந்து உடல் இளைத்து; புற்று எழுந்து=உடல் முழுதும் புற்றால் மூடப்பட்டு; வான் வந்த=சிறப்பு வாய்ந்த; தானே வந்து கருணை கொண்டு பெருமான் செய்த செயல், தனது திருவடிகளை காட்டியது, தனது உடல் மயிர் கூச்செறியும் வண்ணம் பரவசம் அளித்தது என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார்.
வான் வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும்
கான் நின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்பரிய
தான் வந்து நாயேனைத் தாய் போல் தலையளித்திட்டு
ஊன் வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பு எய்து
தேன் வந்து அமுதின் தெளிவின் ஒளி வந்த
வான் வந்த வார் கழலே பாடுதும் காண் அம்மானாய்
மூன்று வயதுக் குழந்தையாக இருந்த போதே தோணிபுரத்து கோபுரத்தை பார்த்து அம்மையே அப்பா என்று அழுது பெருமானை அழைக்க, அம்மையால் ஞானப் பால் ஊட்டப்பட்ட ஞானசம்பந்தர், தாயினும் மேலாக பெருமானை கருதுவதில் வியப்பு ஏதும் இல்லை. சிவபிரானை தனது தந்தையாகவும் உமையம்மையை தனது தாயாகவும் வரித்துக் கொண்ட ஞானசம்பந்தர் வலிவலம் தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் (1.50) ஏழாவது பாடலில் தாயும் நீயே தந்தை நீயே என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பல சிவஞானிகள் ஆராய்ந்து உணரும் பெருமான் பால் செல்ல வேண்டும் என்று தனது உள்ளம் விரும்பினாலும், உள்ளத்தை அவ்வாறு செல்ல ஒட்டாமல் தனது உடலில் இருக்கும் ஐந்து புலன்களும் ஒன்று சேர்ந்து தடுக்கும் மாயத்திற்கு தான் அஞ்சுவதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.
தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆய மாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே
அருளாளர்கள் பெருமானை தங்களுக்கு மட்டும் தாயாக இருப்பவன் என்று கூறுவதில்லை. வீழிமிழலை பதிகத்தின் பாடலில் (6.50.4) பெருமானை எவ்வுயிர்க்கும் துணையாய் நின்ற தாயான் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். சேயான்=தொலைவில் உள்ளவன். சங்கரன் என்ற சொல்லுக்கு இன்பம் அளிப்பவன் என்று பொருள்.
தூயானைச் சுடர்ப் பவளச் சோதியானைத் தோன்றிய எவ்வுயிர்க்கும் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னைச் சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து உளானை வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச்
சேயானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
திருமருகல் தலத்தில் சடையாய் எனுமால் என்று தொடங்கும் பதிகத்தை ஞான சம்பந்தர் பாடியதை விவரிக்கும் சேக்கிழார், எவ்வுயிர்க்கும் தாயானான் என்று பதிகத்தில் உள்ளடக்கி பாடியதாக குறிப்பிடுகின்றார். இறைவன் தாய் போல் நின்று நமக்கு அருள் புரிந்தால் விளைவது இன்பம் தானே. இதனை குறிப்பிடும் வண்ணம் தாயான சங்கரன் என்று இங்கே கூறுகின்றார். சாபத்தால் தனது கலைகள் அனைத்தும் இழந்த சந்திரனுக்கே மறு வாழ்வு அளித்த பெருமானுக்கு, தன்னையே முப்பொழுதும் தொழுது கொண்டிருந்த அடியாளுக்கு அருள் புரிவது எளிமையான செயல் தானே. எனவே சசி கண்ட மவுலியான் என்று பிறைச் சந்திரனை சடையில் வைத்துள்ள இறைவனே என்று அழைக்கின்றார்.
சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானைச் சங்கரனைச் சசிகண்ட மவுலியானை
விடையானை வேதியனை வெண்ணீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பணையில் துயின்றானும் பரவும் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்ளிழையாள் உண்மெலிவு என்று எடுத்துப் பாட
இந்த பாடலில் தேய்பிறை வைத்துகந்த சிவன் என்று கூறுகின்றார். ஒற்றைப் பிறையுடன் தான் அழியும் நிலையில் சரணடைந்த சந்திரன் என்பதை உணர்த்தும் வண்ணம் இவ்வாறு கூறுகின்றார். தீ உறவாகிய=தீய வினைகளுடன் உறவு கொண்டுள்ள; ஆக்கை=உடல்; செற்ற=நெருங்கிய, பிணைந்துள்ள; உற்ற என்ற சொல்லினை உலகின் என்ற சொல்லுக்குப் பின்னர் வைத்துப் பொருள் கொள்ளவேண்டும்.
பொழிப்புரை:
தீய வினைகளோடு உறவு கொண்டுள்ள உடலும், அந்த உடலினை ஆதாரமாகக் கொண்டுள்ள வினைகளும் நெருங்கி அடர்ந்துள்ள உலகினையும் அந்த உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் தாயாகிய தன்மையுடன் பாதுகாக்கும் தலைவனாகிய இறைவனின் திருநாமம் நிலையாக நின்று பொருந்தியிருக்கும் திருநாரையூர் தலத்தினை, உங்களது கைகளை தூக்கித் தொழுவீர்களாக. பேய்கள் நெருங்கியுள்ள காட்டினில் நடமாடுபவனும், தான் உட்கொண்ட விடத்தினை கழுத்தினில் அழகிய மணி போன்று தேக்கிக் கொண்டவனும், தனது சடைமுடியில் அழிந்து தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் சரண் அடைந்த சந்திரனை ஏற்றுக்கொண்டு அபயம் அளித்து, வளரும் சந்திரனாக மாற்றியவனும் ஆகிய பெருமான் பொருந்தி உறையும் தலம், செல்வச் செழிப்பு வாய்ந்த திருநாரையூர் தலமாகும்.
பாடல் 5:
வசை அபராதமாய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான்
மிசையவர் ஆதியாய திரு மார்பிலங்கு விரிநூலர் விண்ணு நிலனும்
இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர்
திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே
விளக்கம்:
நாரையூர் செல்வனைத் தொழுவதால், கடல் அளவு குற்றம் செய்திருப்பினும் அந்தக் குற்றங்களால் ஏற்படும் பழிகள் நீக்கப்பட்டுத் தவமான தன்மை ஏற்படும் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். உவரோதம் என்ற சொல்லை உவர் ஓதம் என்று பிரித்து (உவர்=உப்புத்தன்மை ஓதம்=கடல்) கடலளவு செய்த பாவம் என்றும் கூறுவர். உவரோதம் என்றால் இடையூறு என்றும் பொருள் உண்டு. நாம் செய்த பாவங்கள் நாம் தவநிலை அடைவதற்கு இடையூறாக இருப்பதால் அவற்றைக் களையும் இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம். இசைதல் என்றால் நிறைந்து என்று பொருள். விண்ணும் மண்ணும் நிறைந்து இருக்கும் நிலைமை இதனால் புலப்படுத்தப்படுகின்றது. வசை=பழி; அபராதம்=குற்றம்; ஆசி= வாழ்த்து; திசையவர்=அனைத்து திசைகளிலும் பரவியுள்ள உலகத்தவர்; அமையாத காதல்= எத்தனை புகழ்ச் சொற்களை சொல்லிப் புகழ்ந்தாலும் நிறைவு அடையாத மனம் உள்ள அடியார்கள். நமது எண்ணங்களையும் சொற்களையும் கடந்து நிற்கும் இறைவனை, நாம் எத்தனை புகழ்ந்தாலும் அவனது புகழுக்கு எல்லை காண இயலாது அல்லவா.
ஆசி சொல்ல என்று தொடர் மூலம், உலகத்தவர் இறைவனுக்கு பல்லாண்டு பாடிய வழக்கம் சம்பந்தர் காலத்தில் இருந்ததை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அப்பர் பிரானும் தான் அருளிய திருவாரூர் பதிகத்தின் பாடலில் (4.20.10) அடியார்கள் பல்லாண்டு இசை பாடினார்கள் என்றும், அத்தகைய அடியார்களின் சித்தத்தில் இறைவன் உறைகின்றான் என்று கூறுகின்றார்.
நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன்
நாடிக் காண மாட்டாத் தழலாய நம்பானைப்
பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்குத்
தேடிக் கண்டு கொண்டேன் திருவாரூர் அம்மானே
இறைவனுக்கு பல்லாண்டு பாடுவது என்பது பண்டைய நாட்களில் இருந்த வந்த பழக்கம் என்று இந்த பாடல் மூலம் நமக்குத் தெரிய வருகின்றது. இறைவனை தங்களுக்குள் ஒருவனாக, தங்களுக்கு நெருங்கியவராக கருதி பல்லாண்டு இசைப்பது அருளார்களின் மரபு, சேந்தனார் சிவபெருமானுக்குபல்லாண்டுப் பதிகம் பாடியது போன்று பெரியாழ்வார் திருமாலுக்கு பல்லாண்டுப் பாசுரம் பாடியுள்ளார். மணிவாசகரும் இறைவனுக்கு பல்லாண்டு பாடும்பழக்கம் உள்ளதை தனது பொற்சுண்ணம் பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடுகின்றார். திருமகளும், மலைமகளும், பூமகளும், கலைமகளும், இறைவனுக்குபல்லாண்டிசை பாடுவதற்காக வரவேண்டும் என்று மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார்.
முத்துநல் தாமம் பூமாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல்தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும் நாமகளோடு பல்லாண்டு இசைமின்
சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன் ஐயாறன் அம்மானைப் பாடி ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
சிவபெருமானுக்கு யாரெல்லாம் பல்லாண்டு பாடுகின்றார்கள் என்பதை ஒரு பட்டியல் இட்டு அப்பர் பிரான் ஒரு பாடல் பாடியுள்ளார் (பாடல் எண் 6.93.7). தண்டி, குண்டோதரன், பிருங்கி முனிவர், சங்குகன்னன், நந்தி, உலகத்தை படைத்த பிரமன், உலகத்தை அளந்த திருமால் என்று இந்த பட்டியல் நீளுவதைநாம் இந்த பாடலில் காணலாம். இருடி என்பது ரிஷி என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். பிருங்கி முனிவர் என்ற பொருளில் பிங்கிருடி என்ற சொல்பயன்படுத்தப் பட்டுள்ளது. எப்போதும் சிவபெருமானைச் சார்ந்து இருக்கும் பூத கணங்களும் பல்லாண்டு பாடுவதாக அப்பர் பிரான் இந்த பாடலில்கூறுகின்றார். கடுக=விரைவாக.
தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன்
பண்டை உலகம் படைத்தான் தானும் பாரை அளந்தான் தானும்.
திண்டி வயிற்றுச் சிறு கண் பூதம் சில பாட செங்கண் விடையூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீர் ஆகில் கடுக நும் வல்வினையைக் கழற்றலாமே
பொழிப்புரை:
உலகத்தவரே, உங்களைச் சாரும் பழிச் சொற்களும் இடையூறுகளும் நீங்கி, தவம் செய்யும் தன்மை உங்களை வந்தடைய வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களாயின், மேலான முக்தி உலகத்தில் இருப்பவனும், அனைவர்க்கும் முன்னே தோன்றியவனும், தனது திருமார்பினில் பொலிவுடன் திகழ்கின்ற முப்புரி நூலை அணிந்தவனும், விண்ணிலும் மண்ணிலும் உள்ளோர்களால் பல்லாண்டு பாடப்பட்டு வாழ்த்தப்படுபவனும், வானோர்களால் புகழப் படுபவனும், எத்தனை புகழ்ச்சொற்கள் கூறி புகழ்ந்தாலும் நிறைவு அடையாத மனத்தினை உடைய அடியார்கள் போற்ற நிற்பவனும் ஆகிய சிவபெருமான் பொருந்தி உறைவதும் செல்வச் செழிப்பு உடையதும் ஆகிய திருநாரையூர் தலத்தினை கை தொழுது வணங்குவீர்களாக.
பாடல் 6:
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வாக்கும் உண்மை உலகில்
குறை உளவாகி நின்ற குறை தீர்க்கு நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும்
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திருநாரையூர் கை தொழவே
விளக்கம்:
மா=விலங்கு, இங்கே யானையை குறிக்கின்றது; ஊன்=தசை, இங்கே தசையுடன் கூடிய உடலினை குறிக்கின்றது. திறை=குறுநில மன்னர்கள் செலுத்தும் கப்பம், இந்த பாடலில் தேவர்கள் தங்களை இறைவனுக்கு முழுதுமாக அர்ப்பணித்துக் கொண்டு, தங்களையே திறைப் பொருளாக பாவித்து, இறைவனுக்கு தொண்டு செய்கின்றார்கள் என்று சம்பந்தர் கூறுகின்றார். உணர்வாக்கும் உண்மை என்ற தொடரினை உண்மை உணர்வாக்கும் என்று மாற்றி வைத்து பொருள் கொள்ளவேண்டும். உறை=உறைவிடம்; நிற்கும் வண்ணம்= பெருமானின் திருவடிகளில் நிலை பெற்று நிற்கும் வண்ணம்; மெய்யன்=உடலினை உடையவன்;
பொழிப்புரை:
உலகத்தவரே, உடலினை உறைவிடமாகக் கொண்டுள்ள உமது உயிர் பெருமானின் திருவடிகளில் நிலை பெற்று நிற்க வேண்டும் என்றும், உண்மையான மெய்ஞானப் பொருளினை உமது உள்ளம் உணர வேண்டும் என்றும், தாம் பல நற்குணங்கள் இன்றி பல செல்வங்கள் இன்றி குறைகளை உடையவர்களாக இருக்கின்றோமே என்ற உங்களது குறை தீர வேண்டும் என்றும், நிறைவான நெஞ்சம் கொண்டு அனைத்து உயிர்களின் மீதும் கருணை கொண்டு செயல்படும் இறைவன் மீது அன்பு நிறைந்தவர்களாக திகழ வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால்; புகழ் வளரும் வேதங்கள் ஓதும் நாவினை உடையவனும், மதயானையின் தோலை உரித்து அந்த தோலைத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவனும், பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக இறுகக் கட்டிக் கொண்டவனும், அனைவர்க்கும் தலைவனாக இருப்பவனும், இறைவனது அருள் வேண்டும் என்ற நோக்கத்துடன் அவனுக்கு தாங்கள் செலுத்தும் கப்பமாக நினைத்து தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து தேவர்கள் திருப்பணி செய்ய நிற்பவனும் ஆகிய பெருமான் உறையும் திருநாரையூர் தலத்தினை உங்களது கைகளால் தொழுது வணங்குவீர்களாக.
பாடல் 7:
தனம் வரு நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வருதிக்கு உழன்ற உடலின்
இனம் வளர் ஐவர் செய்யும் வினயங்கள் செற்று நினைவொன்று சிந்தை பெருகும்
முனம் ஒரு காலம் மூன்று புரம் வெந்து மங்கச் சரம் முன்று எரிந்த அவுணர்
சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே
விளக்கம்:
முன்று=முன்னே, எதிரே; வினயங்கள்=மயக்கம் என்றும் வஞ்சனைச் செயல்கள் என்றும் இரு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமே;
பொழிப்புரை:
பண்டைய நாளில் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளும் தீயினில் வெந்து அழியும் வண்ணம் அம்பினை எய்து, அந்த நெருப்பினில் எரிந்த அசுரர்களின் சினத்தினை ஒரே சமயத்தில் அழித்த வல்லமை உடைய சிவபெருமான் பொருந்தி உறையும் செல்வச் செழிப்பு வாய்ந்த திருநாரையூர் தலத்தினை நீங்கள் உங்களது கைகளினால் தொழுது வணங்கினால், உங்களது செல்வம் பெருகும், நல்ல திருப்பங்கள் உங்களது வாழ்வினில் ஏற்படும், வாழ்வினில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பல திசைகளிலும் திரியும் உமது உடலில் பொருந்தியுள்ள ஐந்து கள்வர்கள் செய்யும் வஞ்சகச் செயல்களை நீர் அடையாளம் கண்டு கொண்டு வெற்றி கொள்ளலாம்; புலன்களின் வஞ்சகச் செயல்கள் தவிர்க்கப் படுவதால் பெருமான் பற்றிய சிந்தனைகள் உங்களது உள்ளத்தில் பெருகும்.
பாடல் 8:
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சுமாதல் உற நீர்
மருமலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்மின் இழிபாடு இலாத கடலின்
அருவரை சூழ் இலங்கை அரையன் தன் வீரம் அழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே
விளக்கம்:
உரு வரைகின்ற நாள்=உடலும் உயிரும் ஒன்று சேர்ந்து இருக்கும் காலம்; இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலின் விளக்கத்தில் காலன் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கும் நிலை, இறைவன் ஒவ்வொரு உயிர்க்கும் விதிக்கும் வாழ்நாட்களின் அளவு என்பது விளக்கமாக கூறப் பட்டுள்ளது. இவ்வாறு தனது கடமையை நிறைவேற்றுவதில் அஞ்சாமல் செயல்படும் காலன், சிவனடியார்களின் அருகில் வருவதற்கு அஞ்சுவான் என்று இந்த பாடலில் கூறப் படுகின்றது. இவ்வாறு சம்பந்தர் கூறுவது, நமக்கு அப்பர் பிரானின் காலபாசக் குறுந்தொகை பதிகத்தின் பாடல்களை நினைவூட்டுகின்றது. காலனின் தூதர்களை சிவபெருமானின் அடியார்களின் அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடும் அப்பர் பிரான், பெருமானின் அடியார்களை அவர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாக, அடியார்களின் உருவத்தையும் செய்கைகளையும் பட்டியல் இடுவதை நாம் இந்த பதிகத்தில் காணலாம். சிவபிரானின் பெருமைகளை பாடலாக பாடுவது, அவ்வாறு பாடப்படும் பாடல்களுக்கு ஏற்ப கொடுகொட்டி, கைத்தாளம் முதலிய கருவிகளை இசைப்பது, சிவபிரானின் திருநாமத்தை பிதற்றுவது, சிவபிரானின் திருவடிகளைப் போற்றி வழிபாடு செய்வது, திருநீற்றினை அணிந்து இருப்பது, சிவபெருமானை வழிபடுவதற்காக, தூபம், தீபம், மலர் மாலைகள் ஏந்திச் செல்லுதல், என்பவை அடியார்களின் அடையாளங்களாக இங்கே கூறப்படுகின்றது. அடியார்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது மட்டுமன்றி, அவர்களைப் போற்றியும், பேணியும் பாதுகாப்பது அவர்களின் கடமை என்று இயமனின் தூதர்களுக்கு உணர்த்தும் அப்பர் பிரான், பதிகத்தின் கடைப் பாடலில், அடியார்களுக்கு இன்னல் விளைவித்தால் என்ன நடக்கும் என்பதையும் எச்சரிக்கையாக விடுப்பதையும் நாம் உணரலாம்.
அரக்கன் ஈரைந்து தலையுமோர் தாளினால்
நெருக்கி ஊன்றி இட்டான் தமர் நிற்கிலும்
சுருக்கெனாது அங்குப் பேர்மின்கண் மற்று நீர்
சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே
சூடும்=சுடும் என்ற எழுத்து நீட்டல் விகாரம் அடைந்துள்ளது, மூன்றாவது அடியில் உள்ள சுருக்கு, விரைவாக அகலுதலைக் குறிக்கும். நான்காவது அடியில் உள்ள சுருக்கு, இயமனின் தூதர்களின் கையில் உள்ள பாசக் கயிற்றால், உயிர்களை சுருக்கிட்டு இழுக்கும் செயலைக் குறிக்கும். தனது வலிமையின் மீது கொண்டுள்ள செருக்கினால், கயிலாய மலையினை அசைக்க நினைத்த அரக்கன் இராவணனின் முயற்சி தோல்வி அடைந்ததைப் போன்று, உங்களது வலிமையினால் உங்களுக்கு ஏற்படும் செருக்கு கொண்டு, பெருமானின் அடியார்களை நீங்கள் அணுகினால், உங்களது செருக்கும் அடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கும் பாடல். அடியார்களை அணுகினால் என்ன நடக்கும் என்று குறிப்பினால் பதிகத்தின் முந்தைய பாடல்களில் உணர்த்திய அப்பர் பெருமான், இந்த பாடலில் நேரிடையாக, நீங்கள் சுட்டெரிக்கப் படுவீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கின்றார். பெருமானது திருவடி உங்களை சுட்டுவிடும் என்று பதிகத்தை முடிப்பதன் மூலம், சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர வந்த இயமனுக்கு நேர்ந்த கதி இங்கே உணர்த்தப் படுகின்றது.
கூற்றுவன் அடியார்களின் உயிரினை கவர்வதற்கு அஞ்சுவான் என்று இங்கே கூறுவதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்; கூற்றுவன் அஞ்சுவான் என்பதால் இறப்பு இல்லாத வாழ்க்கை அமையும் என்று தவறாக பொருள் கொள்ளக் கூடாது. இறைவன் முன்னமே வாழ்க்கை முடிவடையும் என்று விதித்த நாளில், இயமனின் தூதுவர்களுக்கு பதிலாக சிவகணங்கள் வந்து உடலிலிருந்து உயிரினை பிரித்து சிவலோகம் அழைத்துச் செல்வார்கள் என்று பொருள் கொள்ளவேண்டும், இழிபாடு=அழிவு;
பொழிப்புரை:
அழிவு இல்லாத கடலாலும் அரிய மலைகளாலும் சூழப்பட்டுள்ள இலங்கையின் தலைவனாகிய இராவணனின் வீரம் அழியும் வண்ணம் அவனது அகன்ற கைகளும் பத்து முடிகளும் நசுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை ஊன்றி மகிழ்ந்த சிவபெருமான் உறையும் செல்வச் செழிப்பு மிகுந்த திருநாரையூர் தலத்தினை நீங்கள் கைகளால் தொழுது வணங்குவீர்களாக. அப்படிச் செய்தால், உங்களது உடலுடன் உயிர் பொருந்தி இருக்கும் நாட்கள் என்று விதிக்கப்பட்ட காலம் முடிவுக்கு வரும் தருணத்தில், கூற்றுவன் உங்களது அருகில் வருவதற்கு அச்சம் கொள்வான்; அதற்கு பதிலாக, உமது வாழ்வு முடிவடையும் தருணத்தில் சிவகணங்கள் உம்மை நெருங்கி உம்மை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வர். எனவே நீங்கள் நறுமணம் மிகுந்த மலர்களைத் தூவி பெருமானை வழிபட்டு, கூற்றுவன் உங்களை அழைத்துச் சென்றால் நீங்கள் எதிர்கொள்ள இருந்த நரக வேதனையிலிருந்து விடுதலை பெறுவீர்களாக.
பாடல் 9:
வேறுயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில்
தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும்
சேறுயர் பூவின் மேய பெருமானும் மற்றைத் திருமாலும் நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகும் சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே
விளக்கம்:
வினைகள் உயிரின் விருப்பத்திற்கு மாறுபட்டு செயல்படுவதால் பகை என்று கூறுகின்றார். வேறுயர் வாழ்வு=பிறப்பிறப்புக்கு மாறுபட்டு பேரின்பம் தரும் முக்தி நிலை; கரவு=தன்னை மறைத்துக் கொண்டு இருக்கும் இறைவனின் தன்மை; திகழும்=இறைவனின் அருட்சக்தி வெளிப்பட்டு திகழும் நிலை;
பொழிப்புரை:
பிறந்து இறந்து மீண்டும் பிறந்து பிறப்பிறப்புச் சுழலில் சிக்கி வாழும் வாழ்க்கைக்கு மாறுபட்டு நிலையான பேரின்ப வாழ்வு பெறுவதற்கான தகுதியை பெற்று, உயிருடன் பிணைந்து உயிரின் விருப்பத்துக்கு மாறாக பகையாக செயல்பட்டு துக்கத்தினை விளைவிக்கும் வினைகளை ஒழித்து, தெளிவான சிந்தனை பெற்று மெய்ப்பொருளின் உண்மை நிலையினை உணர்ந்து, இறை உணர்வினை மறைக்கும் மாயையை ஒழித்து, இறைவனின் அருட்சக்தியை உணர வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், சேற்றிலிருந்து தோன்றும் தாமரையில் பொருந்தி விளங்கும் நான்முகனும் மற்றும் திருமாலும் தேடிய போது சீறியெழுந்து நீண்டு சிவந்த தழற்பிழம்பாக நின்றவனாகிய சிவபெருமான் உறையும் செல்வச் செழிப்பு வாய்ந்த திருநாரையூர் தலத்தினை கைகளால் தொழுது வணங்குவீர்களாக.
பாடல் 10:
மிடைபடு துன்பம் இன்பம் உளதாக்கும் உள்ளம் வெளியாக்கும் உன்னி உணரும்
படை ஒரு கையில் ஏந்திப் பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை
உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை மாயும் வண்ணம் அழியச்
செடிபட வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே
விளக்கம்:
மிடை=இடையே; உன்னி=தியானம் செய்து; ஒலி பாடி ஆடி=வாய்விட்டு கீதங்களை பாடியவாறு ஆடிய பெருமான்; படை=மழுவாட்படை; உன்னி உணரும் என்ற தொடரினை இரண்டாவது அடியில் உள்ள பெருமை என்ற சொல்லுக்கு பின்னர் வைத்து பொருள் உணர வேண்டும். இந்த பாடலில் சம்பந்தர் சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்கள் மாயும் வண்ணம் செய்யும் பெருமான் என்று கூறுகின்றார். அப்பர் பிரான் மற்றும் சம்பந்தர் வாழ்ந்த காலத்தில், சமணர்களும் புத்தர்களும் பொருளற்ற பல பழிச்சொற்களை பெருமான் பால் சொல்லி மக்களை மயக்கி வந்தனர். அப்பர் பிரானின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகள் மூலம் பெருமானின் பெருமையை உணர்ந்து கொண்ட பல்லவ மன்னன், சமணர்களின் மொழி பொய்மொழி என்பதை உணர்ந்தான் என்று சேக்கிழார் கூறுகின்றார். காடவன்= பல்லவ மன்னன்; மேலும் தனது அவதார நோக்கத்தினை உணர்ந்திருந்த சம்பந்தர், பின்னாளில் மதுரையில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகளையும் முன்னமே அறியும் வல்லமை பெற்றிருந்தார் போலும். அப்பர் பிரான் மற்றும் சம்பந்தர் ஆகிய இருவரும், அனைத்தும் இறைவனின் அருளாலே நிகழ்ந்தன என்ற உணர்வோடும் தங்களது வாழ்க்கையை கழித்தவர்கள். எனவே தான் சமணர்கள் மற்றும் புத்தர்களின் உரைகள் பொய்மொழிகள் என்று அனைவரும் உணரும் வண்ணம் இறைவன் செய்தான் என்று கூறுகின்றனர்.
வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின் கண் கண்ணுதற்குப்
பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்துக் கொணர்ந்து குணபரவீச்ச்சரம் எடுத்தான்
பொழிப்புரை:
உமது வாழ்க்கையின் இடையில் அனுபவிக்கும் துன்பங்கள் இன்பங்களாக மாறவேண்டும் என்றும், உமது உள்ளம் இறைவன் நடமாடும் வெளியாக மாற வேண்டும் என்றும் நீங்கள் விரும்புவீராயின், மழுப்படையினை கையில் ஏந்தியவாறு பலி கொள்ளும் நோக்கத்துடன் உரத்த குரலுடன் கீதங்கள் பாடிய வண்ணம் நடனமாடிக் கொண்டு சென்ற பெருமானின் பெருமைகளை மனதினில் நினைத்து உணர்வீர்களாக. மேலும் உடையினை விட்டொழித்த சமணர்களும் துவராடையினை போர்த்துக் கொள்ளும் புத்தர்களும் பேசும் வீணான பழிச் சொற்கள் கெட்டு அழியும் வண்ணம் திருவிளையாடல் புரிந்து மகிழும் பெருமான் உறையும் செல்வச் செழிப்பு வாய்ந்த திருநாரையூர் தலத்தினை கைகளால் தொழுது வணங்குவீர்களாக
பாடல் 11:
எரியொரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார்
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார்
திருவளர் செம்மையாகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே
விளக்கம்:
பொருபுனல்=கரையினில் மோதுகின்ற அலைகள் கொண்ட நீர்நிலைகள்; இந்த பாடலின் கடை அடியில் செம்மை என்ற சொல் இரண்டு முறை வருவதை நாம் உணரலாம். இந்த பதிகத்தினை ஓதும் அடியார்கள் இம்மை மற்றும் மறுமையிலும் சிறந்து விளங்கும் தன்மை இவ்வாறு குறிப்பிடப் படுகின்றது. செற்ற=வெற்றி கொண்ட:
பொழிப்புரை:
தீயினைப் போன்று சிவந்த வண்ணத்தை உடையவனும் எமது தந்தையும் ஆகிய பெருமானை மனதினில் தியானித்து நினையாத திரிபுரத்து அரக்கர்களின் நகரங்களை அன்று நெருப்பினில் எரிந்து அழியும் வண்ணம் வெற்றி கொண்ட பெருமான் பொருந்தி உறைகின்ற செல்வம் வாய்க்கப் பெற்ற திருநாரையூர் தலத்தினை தொழுது வணங்கிய வண்ணம், கரையினில் மோதும் அலைகள் கொண்ட நீர்நிலைகளால் சூழப்பட்ட சீர்காழி நகரத்தைச் சார்ந்தவனும் மறைக் குலத்தில் வந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன், உரைத்த மாலையாகிய இந்த பத்து பாடல்களை ஓதும் அடியார்கள் இம்மையில் தங்களது செல்வம் வளரப் பெற்றும் மற்றும் மறுமையில் திருவருட்பேறு பெற்றும் சிறப்புடைய வாழ்வினை அடைவார்கள்.
முடிவுரை:
பெருமான் உறைவதால் பெருமை பெற்ற தலம் என்பதை உணர்த்தும் பொருட்டு, சிவன் மேயச் செல்வத் திருநாரையூர் என்று பல பாடல்களில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாம் அனைவரும் நமது மனம் வாக்கு செயல்கள் கொண்டு செய்கின்ற பல வகையான பாவங்களையும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றுவிரும்பினால், நாம் திருநாரையூர் சென்று இறைவனை கைதொழுது வணங்க வேண்டும் என்று முதல் பாடல் மற்றும் மூன்றாவது பாடல்களில் அறிவுரைகூறும் ஞானசம்பந்தர், இரண்டாவது பாடலில் அத்தகைய பாவங்கள் நாம் இனிமேல் செய்யாமல் இருப்பதற்கு காரணமாக உள்ள நமது வினைகளையும்நீக்கிக்கொள்ள நாரையூர் நம்பனைத் தொழ வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். தாயாகிய தன்மையுடன் நமக்கு பரிந்து உதவி செய்பவன் இறைவன்என்று நான்காவது பாடலில் கூறுகின்றார். நாம் செய்துள்ள பாவங்கள் கடலளவு பெரிதாக இருப்பினும், அனைத்து பாவங்களையும் தீர்க்கும் ஆற்றல்கொண்ட பெருமான் நாரையூர் நம்பன் என்று ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். நமது மனம் எப்போதும் பெருமானின் திருவடிகளில் நிலைபெற்று இருக்கவேண்டும் என்றால் நாம் நாரையூர் இறைவனைத் தொழ வேண்டும் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். நமது புலன்கள் செய்யும் வஞ்சகச் செயல்களைஅடையாளம் கண்டு கொள்ளும் திறமை நமக்கு வாய்க்க வேண்டும் என்றால் நாரையூர் நல்லானைத் தொழவேண்டும் என்று ஏழாவது பாடலில் கூறுகின்றார். கூற்றுவனின் தூதுவர்கள் நமது உயிரைப் பிரித்து வருத்துவதைத் தவிர்த்து நமது உயிர் சிவலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படவேண்டும் என்றுவிரும்புவோர் நாரையூர் இறைவனைத் தொழுவீர்கள் என்று எட்டாவது பாடல் மூலம் அறிவுரை கூறுகின்றார். உயிரின் பகையாக விளங்கும் வினைகளைஒழிக்க, வினைகள் விளைவிக்கும் மாயையை வென்றிட, நாரையூர் இறைவனைக் குறித்து செய்யப்படும் வழிபாடு உதவும் என்று ஒன்பதாவது பாடலில்கூறுகின்றார். மேலே குறிப்பிட நன்மைகள் நமக்கு நிலையாக வாய்க்கவேண்டும் என்று விரும்பினால், பெருமானின் புகழினை உணர்த்தும் பாடல்களைபாடியும் ஆடியும் பெருமானின் பெருமைகளை எப்போதும் நினைக்க வேண்டும் என்று பத்தாவது பாடலில் கூறுகின்றார். கடைப்பாடலில் இந்தபதிகத்தினை பாடும் அடியார்கள் இம்மையிலும் மறுமையிலும் பெருமானின் அருட்செல்வம் பெறுவார்கள் என்று கூறுகின்றார். கை தொழுவோர்க்கு பல வகையான நலன்களும், பெருமானை வழிபடும் சிந்தனையும், நமது குறைபாடுகள் மற்றும் குற்றங்கள் நீங்கும் நிலையும், நமக்கு வரும் இடையூறுகளும் வீண் பழிச் சொற்களும் நீங்கும் நிலையும் பெற்றுத்தரும் திருநாரையூர் தலம் சென்று. தலத்தையும் பெருமானையும் வழிபட்டு இம்மை மற்றும் மறுமையில் உய்வினை அடைவோமாக.