Digital Library
Home Books
அயோத்தி அரசன் அனரண்யன் கை கால்கள் முறிய ரதத்திலிருந்து கீழே விழுந்து ராவணனிடம் பேச ஆரம்பித்தான். என்னை வெற்றி பெற்றதாக எண்ணி பெருமைப்பட்டுக் கொள்ளாதே ராவணா. உன்னிடம் நான் புற முதுகு காட்டி ஓடவில்லை. நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்து உன்னால் தோற்கடிக்கப் பட்டேன். இங்கிருந்து ஓடிப்போய் எனது உயிரை என்னால் இப்போதும் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால் அதற்கு நான் விரும்பவில்லை. என் இக்ஷ்வாகு குலப் பெருமையை நிலை நிறுத்த விரும்புகிறேன். நான் செய்த தான தர்மங்கள் ஏதேனும் இருந்தால், பூஜைகள் யாகங்கள் செய்த பலன்கள் ஏதேனும் இருந்தால், என் மக்களை நான் நல்ல முறையில் பாதுகாத்து வந்தது உண்மையானால் என் குலத்தில் பிறந்து வரும் ஒருவன் உன்னை அழிப்பான் என்று சொல்லி அனரண்யன் தன் உடலை விட்டு சொர்கத்திற்கு சென்றான். அந்த சமயம் இடி இடிப்பது போல தேவ துந்துபிகள் முழங்கியது. ராவணன் இதனைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அங்கிருந்து சென்றான்.
அயோத்தியில் இருந்து கிளம்பிய ராவணன் பூமியில் இருந்த அரசர்கள் அனைவரையும் தேடித் தேடி சென்று துன்புறுத்தினான். ஒரு இடத்திற்கு புஷ்பக விமானத்தில் செல்லும் போது மேகக் கூட்டத்திற்கு இடையில் நாரதரை சந்தித்தான். அவரை வணங்கி அவருக்கேற்ற மரியாதை செய்தான் ராவணன். மரியாதையை எற்றுக் கொண்ட நாரதர் ராவணனிடம் பேச ஆரம்பித்தார். ராவணா நீ செல்லும் இடங்களிலெல்லாம் வெற்றி பெற்று உன் சுற்றத்தாரையும் உற்றாரையும் நல்ல நிலைமையில் காத்து வருவதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி நான் உன்னிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும். நீ அதனை கேட்க வேண்டும் என்று விரும்பினால் கவனமாக கேட்டுக்கொள் என்று பேச ஆரம்பித்தார்.
தேவர்கள் தானவர்கள் தைத்யர்கள் யட்சர்கள் கந்தர்வர்கள் ராட்சசர்கள் ஆகிய இவர்களின் கையால் மரணம் அடையாமல் இருக்க வரம் பெற்றிருக்கிறாய். அதனால் அவர்களை எதிர்த்து யுத்தம் செய்து வதைக்கிறாய் துன்புறுத்துகிறாய். இப்போது அவர்கள் மரணத்தின் பிடியில் இருப்பது போல இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் வருத்துகிறாய் உனது பார்வையில் சரி என்று வைத்துக் கொள்வோம். ஆனால் மனித குலம் அப்படி அல்ல எப்பொழுதும் செல்வத்தின் மீது பற்று வைத்து போகத்தில் கிடந்து பல கஷ்டங்களை தாங்களே வரழைத்து அனுபவித்து வருகிறார்கள். இது தவிர முதுமை மற்றும் உடலில் பல வியாதிகள் அவர்களை அரித்தெடுக்கின்றன. பசி மற்றும் தாகத்தால் வேறு துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் செயல்களால் துக்கத்தை வரவழைத்துக் கொண்டு பல விதங்களில் வருந்தும் இந்த மனிதர்களை மேலும் ஏன் துன்புறுத்துகிறாய் ராவணா? மனிதனுக்கு மகிழ்ச்சி அதிகமாகி விட்டால் வாத்யங்கள் வாசித்தும் நடனமாடியும் பொழுதைக் கழிப்பார்கள். மற்றவர்கள் ஏதோ சொல்லி விட்டால் அதற்கு காரணம் காட்டி கண்ணீர் விட்டபடி வருந்தியபடி அழுத முகமாகவே காணப்படுகிறார்கள். தாய் தந்தை மகன் என்று பற்று வைத்து என் மனைவி என் மக்கள் என்று மோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். தாங்கள் அனுபவிப்பது வெறும் துக்கமே என்பதைக் கூட அறியாமல் இருக்கிறார்கள். ஏற்கனவே தாங்க முடியாத சோக பாரத்தை சுமப்பவர்களை நீ மேலும் வருத்தாதே என்று ராவணனிடம் நாரதர் கேட்டுக் கொண்டார். இந்த உலகை துன்புறுத்தியது போதும். மனித குலத்தை நீ வெற்றி பெற்றதாகவே வைத்துக் கொள். நீ எதுவும் செய்யாவிட்டால் கூட இவர்கள் ஒரு நாள் யமலோகம் சென்று விடுவார்கள். உன் புஜபலம் வலிமை எப்படிப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். அதனை வலிமை இல்லாத மனிதர்களிடம் காண்பிக்காதே. வலிமையுள்ள எமனை நீ வெற்றி பெற்று விட்டால் மற்ற அனைவரும் அதனுள் அடங்கி விடுவார்கள். அதனால் எமனுடன் யுத்தம் செய்து உனது வலிமையைக் காண்பி என்று ராவணனிடம் நாரதர் சொல்லி முடித்தார்.
நாரதர் சொன்ன அனைத்தையும் கேட்ட ராவணன் தன் வலிமையின் மீது உள்ள கர்வத்தால் பெரிதாக சிரித்து அவரிடம் பேச ஆரம்பித்தான். மகரிஷியே அனைத்து லோகத்திற்கும் செல்லும் தாங்கள் சொல்வது சரியே. இதோ இப்போதே நான் கிளம்புகிறேன். யுத்தம் செய்து வெற்றியோடு வருவேன். மூவுலகையும் வெற்றி பெற்று தேவர்களையும் கந்தர்வர்களையும் நாகர்களையும் என் வசத்தில் கொண்டு வருகிறேன் என்றான். அதற்கு நாரதர் எம லோகம் செல்வது மிக கடினம். எமபுரி தகர்க்க முடியாத பாதுகாப்புகளை உடையது என்றார். இதைக் கேட்ட ராவணன் இடி இடிப்பது போல சிரித்து நான் எம புரியை வெற்றி பெற்றதாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போதே நான் எமனை வெற்றி பெற தென் திசை நோக்கி செல்கிறேன். எமபுரி சென்று ஜீவன்களை தன் பாசத்தால் கட்டி இழுத்து எமனுக்கும் எமனாகிறேன் என்று முழக்கமிட்ட ராவணன் நாரதரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு தன் படைகளுடன் மகிழ்ச்சியாக தென் திசை நோக்கிச் சென்றான்.
நாரதர் சிறிது யோசிக்க ஆரம்பித்தார். எமன் நற்காரியங்களுக்கும் தீய காரியங்களுக்கும் பயன் தரும் நீதிபதியாக இருக்கிறான். அவனிடம் மூவுலகும் சரணடைந்து இருக்கிறது. அந்த எமனிடம் ராவணன் எப்படி வெற்றி பெருவான். எமனும் ராட்சசர்களும் போர் புரிவதை நேரில் பார்க்க வேண்டும் என்று எமபுரிக்கு தெற்கு நோக்கி கிளம்பினார் நாரதர். அங்கு வந்த நாரதர் நடந்ததை எமனிடம் சொல்லி அவருக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று எமன் இருக்குமிடம் வந்தார். நாரதர் வருவதைப் பார்த்த எமன் அவருக்கு தகுந்த மரியாதை செய்த பின்பு அவரின் பேச ஆரம்பித்தான். எங்கும் நலம் தானே மகரிஷியே. தாங்கள் இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தர்மத்திற்கு கெடுதல் எதுவும் வந்து விடவில்லையே இவ்வளவு தூரம் தாங்கள் வரக் காரணம் என்ன என்று கேட்டான். அதற்கு நாரதர் ராவணனை கண்டது முதல் நடந்தவற்றை முழுமையாகக் கூறினார். யுத்தம் செய்ய ராவணன் இங்கு விரைவில் வந்து விடுவான். அதனால் என்ன செய்ய வேண்டுமோ அதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள். இதைச் சொல்லத்தான் நான் ஓடி வந்தேன் என்றார்.
நாரதர் சொல்லி முடித்ததும் உதய சூரியன் போல பிரகாசமாக ராவணனின் புஷ்பக விமானம் எமபுரிக்குள் நுழைந்தது. ராவணன் எமபுரியை சுற்றிலும் பார்த்தான். நல்லவர்கள் தங்களின் செயல்களுக்கு ஏற்ப நற்கதியையும் தீமை செய்தவர்கள் தங்களுக்கு ஏற்ற துன்பங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். தண்டனை அனுபவிக்கும் ஜீவன்கள் அலறுவதும் காது கொண்டு கேட்க முடியாத பயங்கரமான கதறலும் ராவணனை திடுக்கிடச் செய்தது. ஒரு சிலர் மட்டும் நல்ல வீடுகளில் பாட்டும் வாத்ய இசையும் கேட்க மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக இருப்பதை ராவணன் கண்டான். தங்களின் நற்செயல்களின் பலனாக இந்த உயர்வை இவர்கள் அடைந்ததாக தெரிந்து கொண்டான். தங்கள் தீய செயல்களின் பலனாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ஜீவன்களை ராவணன் தன் பலத்தால் விடுவித்தான். ராவணனால் விடுவிக்கப் பட்டவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நினைத்துக் கூட பார்க்காத சுகத்தை அனுபவித்தார்கள். ராவணன் தன் பலத்தால் இவர்களை விடுவித்தவுடன் எம தூதர்களும் காவல் வீரர்களும் தங்கள் ஆயுதங்களால் ராட்சச வீரர்களை அடித்தனர். ராவணனின் படை வீரர்களும் பதிலுக்கு தங்கள் சக்திக்கு ஏற்ப ஆயுதங்களால் தாக்கினார்கள். ராவணன் தன் புஷ்பக விமானத்தை விட்டு இறங்கி கோபத்துடன் சிவன் கொடுத்த உயர்ந்த அஸ்திரத்தை பிரயோகம் செய்தான். புகையில்லாத நெருப்புடன் அந்த அஸ்திரம் வனத்தை அழிக்கும் காட்டுத் தீ போல பரவிச் சென்றது. இந்த அஸ்திரத்தின் பலத்தால் எமனின் வீரர்கள் காட்டுத் தீயில் மடிந்து விழுந்த யானைகள் போல எரிந்து சாம்பலானார்கள். இதைக் கண்ட ராவணன் தன் மந்திரிகளுடன் சேர்ந்து சிரித்து மகிழ்ந்தான்.
நாரதருக்கும் எமதர்ம ராஜனுக்கும் ராட்சசர்களின் வெற்றி முழக்கம் கேட்டது. தனது படைகளை அழித்து ராவணன் வெற்றி பெற்று பெற்று விட்டான் என்பதை அறிந்த எமன் கோபத்துடன் தனது ரதத்தைக் கொண்டு வருமாறு தனது சாரதிக்கு உத்தரவிட்டான். மூவுலகத்தையும் தன் பாசக்கயிறால் கட்டி இழுத்துச் செல்லும் எமன் ராவணன் முன் நின்றான். எமனின் தாக்குதலில் தாக்குப் பிடிக்க முடியாமல் ராட்சச படைகள் ஓட்டம் பிடித்தனர். எமனைக் கண்டு ராவணன் பயப்படாமல் நின்றான். எமராஜன் ராவணனை தன் ஆயுதங்களால் அடித்தான். ராவணன் அசையாமல் மலை போல நின்று எதிர்த்து யுத்தம் செய்தான். ஏழு இரவுகள் தொடர்ந்து யுத்தம் நடந்தது. இருவருமே நல்ல பலசாலிகள். இருவருமே வெற்றி பெறத் துடித்தனர். இந்த யுத்தத்தைக் காண தேவர்களும் கந்தர்வர்களும் சித்தர்களும் ரிஷிகளும் இந்த யுத்தத்தைக் காண வந்தார்கள். இருவரும் சலிக்காமல் யுத்தம் செய்தார்கள். வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எமராஜன் தன்னுடைய கால தண்டத்தால் ராவணனை தாக்க முடிவு செய்தார். அப்போது பாவக அசனி போன்ற முக்கரம் என்ற ஆயுதமும் எமனின் கைகளில் வந்து நின்றது. இந்த ஆயுதங்களைக் கண்ணால் கண்டாலே பிராணிகள் உயிரை விட்டுவிடும். ராவணனின் மீது விழுந்தால் என்ன ஆகும் என்று பார்த்துக் கொண்டிருந்த மற்ற அனைவரும் அந்த இடத்தை விட்டே பயந்து அலறிக் கொண்டு ஓடினார்கள். எமராஜனால் கால தண்டம் உயர்த்தப் பட்டதைக் கண்டு தேவர்களும் நடுங்கினர். ராவணன் மீது கால தண்டம் விழப் போகிறது ராவணன் அழியப்போகிறான் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிரம்மா வந்து எமராஜனை தடுத்தார்.
பிரம்மா எமதர்ம ராஜனிடம் பேச ஆரம்பித்தார். இந்த ராவணனை உன் கால தண்டத்தால் அடிக்காதே. இந்த கால தண்டம் முன் ஒரு சமயம் என்னால் உண்டாக்கப்பட்டது. நான் ராவணனுக்கு வரம் கொடுத்திருக்கிறேன். என் வாக்கை நீ பொய்யாக்கி விடாதே என் வாக்கு பொய்யானால் அது மூவுலகையும் பாதிக்கும். உலகில் சத்யமே இல்லை என்றாகும். தனக்கு பிடித்தவனோ பிடிக்காதவனோ நல்லவனோ கெட்டவனோ யாராக இருந்தாலும் பிராணிகளை சம்ஹாரம் செய்ய மூவுலகிற்கும் பயத்தை தரும் இந்த கால தண்டத்தை நான் சிருஷ்டி செய்தேன். இதைக் கொண்டு இந்த ராட்சசனை தற்சமயம் கொல்லாதே. கால தண்டம் ராவணன் மேல் விழுந்தால் அவன் உயிருடன் இருக்க மாட்டான். ராவணன் அழிந்தால் பிரம்மா கொடுத்த வரம் பொய்யாகும். நான் அவனுக்கு கொடுத்த வரத்தினால் அவன் ஏதேனும் ஒரு வகையில் அழியா விட்டால் காலதண்டம் பாரபட்சம் பார்க்காமல் உயிரை பறிக்கும் என்பது பொய்யாகும். இரண்டில் எது நடந்தாலும் சத்யத்திற்கு சோதனையே என்று பிரம்மா எமனிடம் கூறினார்.
பிரம்மா சொன்னதைக் கேட்டதும் எமன் தன் கையில் இருக்கும் கால தண்டத்தை கீழே இறக்கி பிரம்மாவிடம் பேச ஆரம்பித்தார். என் மரியாதைக் குரியவர்கள் நீங்கள். உங்கள் சொல்லை நான் மதிக்கிறேன். யுத்த பூமியில் வந்து நின்ற பின் வெற்றி பெறுவதற்காக நான் கால தண்டத்தை எடுத்தேன். தாங்கள் கொடுத்த வரத்தைச் சொல்லி நான் இவனை அடிக்கக் கூடாது என்று என்னை தடுத்து விட்டீர்கள். எனவே இந்த ராட்சசர்களின் கண்களுக்கு தெரியாமல் நான் மறைந்து கொள்கிறேன் என்று அங்கிருந்து தன்னை யார் கண்ணுக்கும் தெரியாமல் தன்னை எமராஜன் மறைத்துக் கொண்டார். அவரின் குதிரைகளும் ரதங்களும் மறைந்து போனது. இதனைக் கண்ட ராவணன் தான் வெற்றி பெற்றதாக உரத்த குரலில் அறிவித்துக் கொண்டான். ஓடிச் சென்ற ராட்சச படைகள் திரும்பவும் வந்து ராவணனை வாழ்த்தி கோசமிட்டார்கள். ராவணன் அங்கிருந்து வெளியேறினான்
பிரம்மாவிடம் பெற்ற வரத்தினால் எமராஜனை வென்ற களிப்புடன் எமபுரத்தில் இருந்து கிளம்பிய ராவணன் மேலும் யுத்தம் செய்யும் ஆவலுடன் இருந்தான். உடல் முழுவதும் காயத்துடன் இருந்த ராவணன் இந்த நிலையிலும் யுத்தம் செய்யும் ஆர்வத்துடன் இருப்பதைப் பார்த்த அவனது படை வீரர்களும் மந்திரிகளும் ஆச்சர்யமடைந்தார்கள். இது என்ன யுத்த வெறி இன்னும் யுத்தம் செய்ய வேண்டுமா என்று அவனை தயக்கத்துடன் பார்த்தார்கள். அனைவரின் தயக்கத்தையும் புரிந்து கொண்ட ராவணன் அவர்களை உற்சாகப் படுத்தினான் அனைவரும் அங்கிருந்து கிளம்பி வருணன் பாதுகாத்து வரும் வாசுகியின் ஆதிக்கத்தில் இருந்த போகவதியை அடைந்தான். அங்கிருந்த நாகர்களை வெற்றி பெற்ற பின் மணிமயம் என்ற நகரை அடைந்தார்கள். அந்நகரத்தில் காற்று கூட புக முடியாத கவசங்களுடன் பிரம்மாவிடம் வரம் பெற்ற நிவாதகவசர்கள் என்ற அசுரர்கள் சுகபோகத்துடன் வாழ்ந்து வந்தார்கள். ராவணன் தன்னிடம் உள்ள ஆற்றலாம் அந்த நகரத்தில் நுழைந்து அவர்களை சூழ்ந்து கொண்டு போருக்கு அழைத்தார். நிவாதகவச அசுரர்கள் நல்ல பலசாலிகள். பிரம்மாவிடம் வரமும் பெற்றிருக்கிறார்கள். பலவிதமான ஆயுதங்களையும் உபயோகிக்கத் தெரிந்தவர்கள். உடனே சம்மதித்து யுத்தத்திற்கு தயாரானார்கள். இருவரும் சூலம் திரிசூலம் குலிசங்கள் பட்டச கத்தி பரஸ்வதம் போன்ற ஆயுதங்களால் ஒருவரையொருவர் குத்தியும் அடித்தும் தள்ளியும் சண்டையிட்டார்கள். இரு தரப்பினரும் சளைக்காமல் தொடர்ந்து யுத்தம் செய்தார்கள். பெரும் போர் ஆரம்பித்து வெற்றி தோல்வி இன்றி ஒரு வருடம் சென்றது. யுத்தத்தில் வெற்றி பெருவதில் இரு தரப்பினரும் மும்முரமாக இருந்தனர். பிரம்மா அங்கு இருதரப்பினருக்கும் காட்சி கொடுத்தார். பிரம்மாவின் தரிசனத்தால் யுத்தம் நின்றது.
பிரம்மா நிவாதகவச அசுரர்களிடம் பேச ஆரம்பித்தார். தேவர்களும் நீங்களும் ஒன்று கூடி யுத்தம் செய்தாலும் ராவணனை உங்களால் வெல்ல முடியாது. அது போல் தேவர்களும் ராட்சசர்களும் ஒன்று சேர்ந்து யுத்தம் செய்தாலும் உங்களை வெல்ல முடியாது. இருவரும் தவங்கள் செய்து தெய்வ வரங்களைப் பெற்று தோல்வி இல்லாத சிறப்பு நிலையில் இருக்கிறீர்கள். யுத்தம் செய்து ஏன் வீணாக காலத்தை கடத்துகிறீர்கள். இருவரும் நட்பு கொள்ளுங்கள் அதுவே உங்களுக்கு நன்மை தரும். எல்லா விதமான செல்வங்களையும் பிரிக்காமல் சேர்த்து அனுபவியுங்கள். நட்பின் இலக்கணம் இது தான் என்று பிரம்மா பேசி முடித்தார். பிரம்மாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட இருவரும் அக்னியை சாட்சியாக வைத்து நட்புக் கொண்டார்கள். ராவணன் அவர்கள் செய்த உபசாரங்களை ஏற்றுக் கொண்டு ஒரு வருட காலம் அவர்களுடன் வசித்து மகிழ்ச்சியுடன் திருப்தியாக இருந்தான். தன் சொந்த நகரத்தில் இருப்பது போலவே அங்கு அனைத்து சுகங்களும் ராவணனுக்கு கிடைத்தது. இந்த ஒரு வருட காலத்தில் அசுரர்களிடம் இருந்து நூறு வகையான மாய வித்தைகளை தெரிந்து கொண்டான் ராவணன். பின்னர் கால கேயர்கள் வாழ்ந்து வந்த அச்ம நகரம் (கல்லால் ஆன ஊர்) என்ற இடத்தை அடைந்தான். மிகுந்த உடல் பலமும் கர்வமுமாக இருந்த காலகேயர்களை அழித்து வென்றான். அடுத்ததாக அங்கிருந்து தைத்யர்கள் இருப்பிடம் சென்றான். அச்சமயம் சூர்ப்பனகையின் கணவன் வித்யுத்ஜிஹ்வன் ராவணனை வஞ்சனை செய்து கொன்று அரசனாக திட்டமிட்டான். இதனை அறிந்த ராவணன் வித்யுத்ஜிஹ்வனை அடித்துக் கொன்றான். தைத்யர்களையும் வென்ற ராவணன் அங்கிருந்து வருண லோகம் சென்று வருணனையும் அவனது மகன்களையும் வெற்றி பெற்று மூன்று உலகத்தையும் வென்ற மகிழ்ச்சியில் இலங்கைக்கு திரும்பினான்.
பிரம்ம தேவரின் வரத்தால் மூன்று உலகத்தையும் நமது ராட்சச குலம் வென்று விட்டது என்று இலங்கை மக்களுக்கு அறிவித்தான் ராவணன். அவனை மக்கள் வாழ்த்தி ஆடிப்பாடி வரவேற்றார்கள். அரண்மனைக்கு திரும்பிய ராவணனின் முன்பு சூர்ப்பனகை அழுதபடி வந்து நின்றாள். தங்கையின் கணவர் என்று ஒரு முறையாவது யோசித்து செயல்பட்டிருக்கலாமே உன்னால் நான் இப்போது விதவையாகி விட்டேன். எனது கணவரை ஏன் கொன்றாய் என்று அழுது தீர்த்தாள் சூர்ப்பனகை. ராவணன் அவளுக்கு அறுதல் அளிக்கும் விதமாக பேச ஆரம்பித்தான்.
பிரம்மாவிடம் வரம் பெற்றதும் மூன்று உலகத்தையும் நமது ராட்சச குலம் வென்று இந்த உலகத்தையே நாம் ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இத்தனை ஆண்டு காலம் யுத்தம் செய்தேன். உனது கணவன் என்னை எதிர்த்ததினால் கொன்றேன். யுத்தத்தில் இருக்கும் போது என்னை எதிர்த்தவர்கள் மட்டுமே எனது கண்களுக்கு தெரிந்தார்கள். அவர்களில் என்னைச் சார்ந்து இருப்பவனா உறவினனா மாற்றானா என்று நான் பார்க்கவில்லை. பாணங்களை மழையாக பொழிவதிலேயே கவனமாக இருந்த பொழுது இறந்தவர்கள் யார் விழுந்தவர்கள் யார் அடிபட்டவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. அப்போது அது பற்றி விவாதிக்கவும் நேரமில்லை உன் கணவனை நான் வேண்டுமென்று கொல்லவில்லை. உனது கணவனுக்கு ஈடாக நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்ன வேண்டுமோ கேள் என்று சூர்ப்பனகைக்கு ஆறுதலாக பேசினான். சகோதரியே நான் இருக்கும் வரை நீ எதற்கும் பயப்படாதே. எதற்கும் வருந்தாதே. நான் உன்னை கௌரவமாக மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வேன். எப்பொழுதும் நீ வேண்டியதை என்னிடம் பெறலாம். இதோ கரன் இருக்கிறான். நம் தாயின் சகோதரி மகன் நமக்கும் சகோதரனே. இவனை நான் தண்டகாரண்யம் வனத்தை ஆட்சி செய்ய அனுப்புகிறேன். ஆயிரமாயிரம் ராட்சசர்களின் பலம் கொண்டவன் இவன். பதினான்காயிரம் ராட்சசர்கள் கொண்ட படை இவனுடையது. தூஷணன் இவன் படைத் தலைவனாக பதவி வகிப்பான். இருவரும் உன் கட்டளைப் படி நடப்பார்கள். கரனுடன் தண்டகாரண்ய வனத்திற்கு சென்று உன் விருப்பப்படி உருவத்தை எடுத்துக் கொண்டு நீ அசைப்பட்ட வாழ்வை வாழ்ந்துகொள். உனக்குக் கீழ் வேலை செய்யும் ராட்சசர்கள் பலர் இருப்பர்கள் என்று ஆறுதல் சொல்லி சூர்ப்பனகையை தண்டகாரண்ய வனத்திற்கு ராவணன் அனுப்பி வைத்தான். சூர்ப்பனகையை சமாதானப்படுத்திய மகிழ்ச்சியில் தன் அடியாட்கள் படை சூழ இலங்கைக்குள் இருக்கும் நிகும்பிளா என்ற இடத்திற்கு சென்றான் ராவணன்.
மகேஸ்வரருக்கு யாகம் செய்யும் இடம் இது. அழகிய நாற்கால் மண்டபத்தில் யாகம் செய்து கொண்டிருந்த தன் மகன் மேக நாதனை ராவணன் கண்டான். கருப்பு மான் தோல் உடுத்தி ஜடா முடியுமாக இருந்த தன் மகனைப் பார்த்து வியந்த ராவணன் ஏன் இந்த வேடம் மேகநாதா என்று கேட்டான். அதற்கு யாகம் நடந்து முடிந்தால் தானே அருளும் பொருளும் பெற முடியும் என்று அங்கிருந்த அசுர குருவான சுக்ராச்சாரியார் ராவணனிடம் பேச ஆரம்பித்தார். அக்னிஷ்டோமோ, அஸ்வமேதம், பஹு சுவர்ணக, ராஜசூயம், கோமேதோ, வைஷ்ணவம் என்ற மிகப் பெரிய ஏழு மகேஸ்வர யாகங்களை உன் மகன் செய்து விட்டான். மிக அரிதான இந்த யாகத்தை செய்யும் பொழுது மகேஸ்வரனே நேரடியாக தரிசனத்தை கொடுத்து உன் மகனுக்கு வரங்களைக் கொடுத்தார். இந்த வரங்களின் படி உன் மகன் அவன் விருப்பப்படி எங்கும் பறந்து செல்லக்கூடிய ரதத்தை பெற்றிருக்கிறான். பல மாயா சக்திகளை பெற்றிருக்கிறான். விரும்பும் நேரத்தில் இவனைச் சுற்றி இருட்டை இவனால் வர வழைத்துக் கொள்ள முடியும். எதிரிகள் புரிந்து கொள்ள முடியாத இந்த மாயா ஜாலங்களால் உன் மகன் செய்யும் யுத்தங்களில் வெற்றியை சுலபமாக அடைந்து விடுவான். மேலும் யாருக்கும் கிடைக்காத பல அரிய சக்திகளை பெற்று குறைவில்லாத அம்புகளை கொண்ட தூணியுடன் சுதுர்ஜயம் எனும் வில்லையும் பல வகையான அஸ்திரங்களையும் பெற்றிருக்கிறான். இந்த அஸ்திரங்கள் விரைவில் எதிரிகளை அழிக்கக் கூடியது. இவை அனைத்தையும் வரமாக பெற்ற உன் மகன் இன்று யாக முடிவில் இருக்கிறான் நீயும் வந்து சேர்ந்தாய் என்றார்.
மகேஸ்வரர் என் மகனுக்கு தரிசனம் கொடுத்து பல வரங்களை கொடுத்திருக்கிறாரா என்ற ராவணன் சுக்ராச்சாரியாரிடம் என்னை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறீர்கள் என்று கூறினான். தன் மகனிடம் நல்ல காரியம் செய்தாய் நாம் மாளிகைக்குப் போவோம் வா மகனே என்ற ராவணன் தன் மகனுடனும் அரண்மனைக்கு திரும்பினான்.
விபீஷணன் அரண்மனையில் இருந்த ராவணனைப் பார்த்துச் பேச ஆரம்பித்தான். நமது குலத்தை நாசம் செய்யும் பல காரியங்களை நீ செய்கிறாய். அதன் விளைவாக நீ இல்லாத நேரத்தில் மது என்பன் நமது குலத்தை சேர்ந்த கும்பீனஸி என்ற பெண்ணை தூக்கிச் சென்று விட்டான் என்றான். அதற்கு ராவணன் கும்பீனஸி என்பவள் யார் அவள் என்று கேட்டான். அதற்கு விபீஷணன் நம் தாய் வழி பட்டனார் சுமாலியின் மகனுடைய மகளின் மகள் கும்பீனஸி என்பவள். நம் அனைவருக்கும் சகோதரியே உன் மகன் யாகத்தில் அமர்ந்து விட்டான். நான் நீரில் மூழ்கி தவத்தில் இருந்தேன். கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான் நீயும் இல்லை. அந்த நேரம் அரண்மனைக்குள் நுழைந்த மது எனும் ராட்சசன் நமது காவலர்களை தோற்கடித்து பலாத்காரமாக அவளை தூக்கிச் சென்று விட்டான். சில நாட்கள் கழித்து தான் இந்த செய்தி எனக்கு தெரியவந்தது. பெண்களை மணம் செய்து கொடுக்கும் கடமை சகோதரர்களுக்கு உண்டு. அதனால் நாங்கள் மதுவை எதுவும் செய்யவில்லை. இதேல்லாம் உன் பாப காரியங்களின் பலனே என்றான் விபீஷணன். இதைக் கேட்ட ராவணன் தன்னை விபீஷணன் குற்றம் சொல்வதை பொறுக்க மாட்டாதவனாக கோபத்துடன் பொங்கி எழுந்தான். என் ரதத்தை ஏற்பாடு செய்யுங்கள். நமது படைகள் தயாராகட்டும் பலவிதமான ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மதுவை இன்றே அழித்து விடுகிறேன் என்று கிளம்பினான் ராவணன். மதுபுரத்தை நோக்கி படைகள் புறப்பட்டன. மதுபுரத்தில் ராவணனை கண்ட கும்பீனஸி கை கூப்பி வணங்கியபடி ராவணன் பாதங்களில் விழுந்தாள். அவளைத் தூக்கிய ராவணன் மதுவை என்ன செய்ய வேண்டும் சொல் என்றான். அதற்கு கும்பீனஸீ நான் அவரை கணவனாக ஏற்றுக் கொண்டேன் ஆகையால் அவரைக் கொல்லாதீர்கள் என்றாள். உன் மீது வந்த கருணையால் மதுவை வதம் செய்யாமல் விடுகிறேன் என்று அங்கிருந்து கிளம்பினான் ராவணன். இலங்கைக்கு செல்லும் முன்பு சூரியன் அஸ்தமனம் ஆனதால் தங்குவதற்கு ஓர் இடத்தை தேர்ந்தெடுக்க விபீஷணனிடம் உத்தரவிட்டான் ராவணன்.
விபீஷணன் சந்திரன் போல் பளபளத்த ஓர் மலைப் பிரதேசத்தை தேர்ந்தேடுத்தான். அங்கு அனைவரும் தங்கினார்கள். அந்த மலைப் பிரதேசத்தில் கின்னரர்களின் மதுரமான குரலில் பாடும் சங்கீதம் ராவணனுக்கு கேட்டது. அந்த சங்கீதத்தின் இனிமையில் ராவணனுக்கு மனம் நிறைந்தது. கின்னரர்கள் பாடிக் கொண்டும் பெண்களுடன் விளையாடிக் கொண்டும் இருந்தனர். சங்கீதத்தாலும் வாசனை நிறைந்த புஷ்பங்கள் நிறைந்து மனதை மயக்கியதாலும் குளிர்ந்த இதமான காற்றாலும் சந்திரனின் குளுமையான பிரகாசமும் சேர ராவணனின் மனம் கிளர்ச்சி அடைந்தது. இந்த சமயம் அங்கு திவ்யமான ஆபரணங்கள் அணிந்து லட்சுமி தேவியேப் போல் அழகுடன் ரம்பா என்ற பெண் சென்று கொண்டிருந்தாள். மனக் கிளர்ச்சியுடன் இருந்த ராவணனின் கண்களில் அவள் பட்டாள். அவளின் கைகளைப் பிடித்து இழுத்து பேச்சுக் கொடுத்தான் ராவணன். அழகியே யார் நீ எங்கு போகிறாய்? சொர்க்க லோகமே நீ தான் என்று எண்ணும் படி என் மனம் மயக்குகிறது. மூவுலகிலும் எனக்கு மிஞ்சிய தகுதியுடையர்கள் யாரும் இல்லை. மூவுலகிற்கும் அரசன் நான் எனது பெயர் ராவணன் என்னை ஏற்றுக் கொள் என்றான். இதைக் கேட்ட ரம்பா நடுங்கி நின்றாள்.
ரம்பா ராவணனிடம் கை கூப்பியபடி பேச ஆரம்பித்தாள். சத்யமாக சொல்லுகிறேன் உன் சகோதரன் குபேரனுடைய மகன் நளகூபரன் மனைவி நான். அவரைக்காண நகைகளால் அலங்கரித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறேன். அவரைத் தவிர வேறு யாரையும் மனதால் கூட நினைத்து பார்க்க மாட்டேன். நான் உனது மருமகள் ஸ்தானத்தில் இருக்கிறேன். நீ இது போல என்னிடம் பேசுவது சரியல்ல. வேறு யாராவது என்னிடம் தகாத வார்த்தைகள் பேசினால் என்னை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருப்பவன் நீ என்றாள். நான் வருவேன் என்று எனக்காக உனது மகன் ஸ்தானத்தில் இருப்பவன் காத்திருப்பான் என்னை தடுக்காதே என் கையை விடு என்றாள்.
ரம்பா பேசியதை கேட்ட ராவணன் அவளிடம் பேச ஆரம்பித்தான். நீ என்னுடைய மருமகள் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என்று இருப்பது மானிட குலப் பெண்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் நீ தேவலோகத்துப் பெண் உனக்கு இது போல் எந்த ஒரு நியதியும் கிடையாது. அதனால் நான் உன்னை விரும்புவதில் தவறில்லை என்று அவளது அனுமதி இல்லாமல் அவளை பலவந்தமாக அடைந்தான். அவள் அணிந்திருந்த ஆபரணங்களும் உடைகளும் நிலை குலைய தன் தலை கேசம் அவிழ்ந்து யானை புகுந்து கலக்கிய நதி போல ஆனாள் ரம்பா. தன்னுடைய எண்ணம் நிறைவெறியதும் ரம்பாவைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் அங்கிருந்து கிளம்பினான் ராவணன். தன் கை கால்கள் நடுங்க தடுமாறியபடியே அழுத முகத்துடன் நளகூபரன் இருக்கும் இடம் வந்து அவனது காலில் விழுந்து அழுது புலம்பினாள் ரம்பா. அவளிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்ட நளகூபரன் கோபத்தில் ராவணனுக்கு கடுமையான ஒரு சாபத்தை கொடுத்தான். ராவணன் விருப்பம் இல்லாத பெண்ணை நெருங்கியதால் இனி ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளை ராவணன் தொட்டால் அவனது தலை ஏழு துண்டுகளாக வெடித்து சிதறும் என்ற சாபத்தை கொடுத்தான். அச்சமயம் ஆகாயத்தில் தேவ துந்துபிகள் முழங்கின. அனைத்து தேவர்களும் மகிழ்ந்தனர். இந்த பயங்கர சாபத்தைக் கேட்ட ராவணன் இனி எந்த பெண்களின் அனுமதி இல்லாமல் நெருங்கக் கூடாது என்று முடிவெடுத்தான். இந்த சாபத்தால் உலகம் முழுவதையும் வெல்ல யுத்தம் செய்த போது ராவணனால் அபகரிக்கப்பட்டு சிறை வைக்கப்பெற்றிருந்த பெண்களும் நிம்மதியடைந்தனர். நளகூபரன் கொடுத்த சாபம் அவர்களுக்கு விடுதலை அளிப்பதாக அமைந்தது.
இந்திரலோகத்தை வெற்றி பெற முடிவெடுத்த ராவணன் தன் மகன் மேகநாதனுடன் இந்திரலோகம் வந்து சேர்ந்தான். ராவணன் வந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேட்டதும் நடுங்கிய இந்திரன் தன் படைகளை யுத்தத்திற்கு தயாராக இருக்குமாறு சொல்லி விட்டு விஷ்ணுவிடம் உதவி கேட்டு வந்தான். விஷ்ணு இந்திரனிடம் பேச ஆரம்பித்தார். பிரம்மா கொடுத்த வரத்தின் பலத்தால் ராவணன் நிமிர்ந்து நிற்கிறான். பிரம்மா இவனுக்கு கொடுத்த வரங்களும் மாற்ற முடியாதவை. வரத்தின் மகிமை அவனுக்கு அபரிமிதமான சக்தியைக் கொடுத்திருக்கிறது. ராவணனை சுலபமாக வெல்ல முடியாது. ராவணன் தன் மகன் மேகநாதனுடன் வந்திருக்கிறான். மேகநாதன் பிறப்பிலேயே பலசாலி தற்போது மேலும் யாகங்கள் பல செய்து மகேஸ்வரனிடம் வரமும் பெற்றிருக்கிறான். நான் இந்த ராட்சசர்களை அழிக்க சரியான நேரம் வரவில்லை. சரியான நேரம் வரும் போது இந்த ராட்சசர்களை அழித்து அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பேன். இப்போது நீ பயப்படாதே. உன்னால் முடிந்த வரை யுத்தம் செய் என்றார். விஷ்ணு கொடுத்த தைரியத்தில் யுத்தம் செய்ய முடிவு செய்த இந்திரன் அங்கிருந்து கிளம்பினான்.
இந்திரலோகத்திற்கு திரும்பி வந்த இந்திரன் ஜராவதம் வெள்ளை யானையில் சென்று தன் படைகளுடன் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்ய ஆரம்பித்தான். யுத்தம் கடுமையாக இருந்தது. ராவணனின் பக்கத்தில் இருந்த ராட்சச வீரர்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்கள். ராவணனின் மகன் மேகநாதன் தன் மாயா சக்தியால் அந்த இடத்தை சுற்றி இருட்டை உண்டாக்கி அனைவருக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தினான். அனைவரும் தடுமாறிக் கொண்டிருந்த போது தன் உடலை மறைத்துக் கொண்டு இந்திரனை கட்டி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான். இந்திரனுடன் ராவணனிடம் வந்த மேகநாதன் இந்திரன் நம் பிடியில் சிக்கிக் கொண்டான் இனி யுத்தம் செய்ய வேண்டியதில்லை. மூவுலகையும் உங்கள் விருப்பம் போல் ஆட்டுவிக்கலாம் என்றான். தன் மகன் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த ராவணன் நீ ஒருவனாகவே இந்திரனை வெற்றி பெற்று விட்டாய் யுத்தத்தில் நாம் வெற்று பெற்று விட்டோம் என்று அறிவித்து விட்டு யுத்தத்தை நிறுத்தி இந்திரனுடன் இலங்கைக்கு செல்ல தன் படை வீரர்களுக்கு உத்தரவிட்டான் ராவணன்.
பிரம்மாவிடம் சென்ற தேவர்கள் இந்திரனை ராவணன் தூக்கிச் சென்று விட்டான். ராவணனிடமிருந்து இந்திரனை விடுவித்துக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பிரம்மா ராவணனிடம் சென்று பேச ஆரம்பித்தார். நீயும் உன் மகனும் போரில் காட்டிய திறமையைக் கண்டு திருப்தி அடைந்தேன். உன் மகனின் ஆற்றல் உன்னை விடவும் பல மடங்கு உயர்வாக இருக்கிறது. உன் மகன் மேகநாதன் இந்திரனை வென்றதால் இன்று முதல் இந்திரஜித் என்று அழைக்கப்படுவான். உங்களது ஆற்றலால் மூவுலகையும் வெற்றி பெற்று விட்டாய். உனது ஆசை பூர்த்தியடைந்து விட்டது. அதனால் இந்திரனை விட்டு விடு என்றார். அதற்கு ராவணன் இந்திரனை வென்று தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் இந்திரஜித் அவனிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்றான். பிரம்மா இந்திரஜித்திடம் இந்திரனை விட்டு விடு அதற்கு பதிலாக உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். அதற்கு இந்திரஜித் எனக்கு இறப்பில்லா அமரத்துவம் வேண்டும். அதனை நீங்கள் வரமாக தந்தால் இந்திரனை விட்டு விடுவிக்கிறேன் என்றான். அதற்கு பிரம்மா அமரத்துவம் என்பது உயிரினங்களுக்கு கிடையாது. ஏதோ ஒரு விதத்தில் மரணம் நிச்சயமாக வந்தே தீரும். ஏதேனும் ஆற்றல் மிகுந்த பிராணியிடம் உன் மரணத்தை ஏற்றுக் கொள் என்றார். உடனே இந்திரஜித் தன் நிபந்தனையை பிரம்மாவிடம் கூறினான். நான் யாகம் வளர்த்து பூஜைகள் செய்து பின் யுத்தத்தில் இறங்கினால் என்னை யாராலும் வெற்றி முடியாது என்ற வரத்தை கொடுங்கள். யாகம் வளர்த்த அக்னியில் இருந்து எனக்கு குதிரையுடன் கூடிய ரதம் வர வேண்டும் அந்த வாகனத்தில் நான் இருக்கும் போது எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தையும் கொடுங்கள் இப்போதே இந்திரனை விட்டு விடுகிறேன். அந்த யாகத்தை நான் செய்து முடிக்கும் முன் யாராவது அந்த யாகத்தை தடுத்து என்னை வெற்றி பெற்றால் எனக்கு முடிவு வரட்டும் என்றான்.
பிரம்மா அப்படியே ஆகட்டும் என்று வரத்தை அளித்தார். இந்திரஜித் இந்திரனை விடுவித்தான். மூவுலகையும் வென்ற ராவணன் இலங்கைக்கு சென்று அங்கிருந்த படியே மூவுலகையும் ஆட்சி செய்தான். இந்திரன் தன் மதிப்பை இழந்ததால் பேசாமல் மௌனமாக இருந்தான். பிரம்மா இந்திரனின் மன நிலையை உணர்ந்து அவனுக்கு ஆறுதல் வார்த்தைகளை பேசினார். நீ அகலிகையை அடைய முயற்சி செய்த போது கௌதம மகரிஷி உனக்கு பல சாபங்களை கொடுத்தார். (பாலகாண்டம் பகுதி 13 14 இல் உள்ளது) அதில் எதிரிகளிடம் சிக்கிக் கொள்வாய். இந்திர பதவி உனக்கு நிரந்தரமாக இருக்காது என்று சாபமிட்டிருந்தார். அந்த சாபத்தின்படி இப்போது ராவணனிடம் சிக்கினாய். உனது பதவியும் பறிபோனது. அவரது சாபமும் நிறைவேறி விட்டது. ஆகையால் கவலைப்படாதே நீ செய்த தவறான காரியத்தின் பலனாக இவற்றை எல்லாம் நீ அனுபவித்தாய். இனி வரும் காலத்தில் மனதை ஒருமுகப்படுத்தி யாகம் செய். அந்த யாகத்தின் பலனாக நீ தூயவனாகி இந்திர பதவியை மீண்டும் பெறுவாய் என்றார். பிரம்மாவின் பேச்சில் திருப்தி அடைந்த இந்திரனும் யாகங்கள் பல செய்ய ஆரம்பித்தான். பிரம்மா ராவணனுக்கும் இந்திரஜித்துக்கும் கொடுத்த வரத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் ராமனாகிய நீ ராவணனையும் இந்திரஜித்தையும் அழித்து மூன்று உலகத்தையும் ராட்சசர்களிடம் இருந்து விடுவித்து விட்டாய். இந்திரனும் தனது நிரந்தர பதவியை பெற்று விட்டான். இவ்வாறு அகத்தியர் ராமரிடம் ராவணன் மற்றும் இந்திரஜித்தின் வரலாற்றை சொல்லி முடித்தார்.
ராமர் அகத்தியரிடம் மேலும் சில கேள்விகளை கேட்டார். தேவர்கள் கந்தர்வர்கள் என்று மேலுலகத்தில் இருந்தவர்கள் யாராலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று பிரம்மாவிடம் ராவணன் வரம் வாங்கியிருந்தான். அதனால் அவனை யாராலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இந்த பூலோகத்தில் வாழும் மனிதர்களையும் மிருகங்களையும் ராவணன் ஒரு பொருட்டாகவே எண்ணியதில்லை. ஆகையால் வரம் கேட்கும் போது மனிதர்கள் மற்றும் மிருகங்களால் தனக்கு தனக்கு அழிவு வரக்கூடாது என்று அவன் வரம் கேட்கவில்லை. இந்த பூலோகத்தில் பல அரசர்கள் இருந்திருப்பார்கள். இவர்களில் ஒருவரால் கூட ராவணனை வெல்ல முடியவில்லையா என்று கேட்டார்.
ராமரின் கேள்விக்கு அகத்தியர் பதில் கூற ஆரம்பித்தார். ராவணன் பல அரசர்களை துன்புறுத்தியபடி மாஹிஷ்மதி என்ற ஊரை அடைந்தான். அந்த ஊர் சொர்கபுரி போல் இருந்தது. வசுரேதஸ் என்ற அரசன் அதை ஆண்டு வந்தான். அவனுக்கு கார்த்த வீர்யார்ஜூனன் என்ற பெயரும் உண்டு. அவனை எதிர்க்க ராவணன் முடிவு செய்து அந்த அரசனை சீக்கிரம் என் முன் வரச்சொல்லுங்கள் அவனுடன் நான் யுத்தம் செய்ய வேண்டும் என்று தன் மந்திரிகளுக்கு உத்தரவிட்டான். மந்திரிகள் விசாரித்து இந்த ஊரில் தற்போது அரசன் இல்லை அவன் விந்திய மலையில் இருக்கிறான் என்றார்கள். ராவணன் விந்திய மலைக்கு புறப்பட்டான். தன்னுடன் யுத்தம் செய்ய ராவணன் வருகிறான் என்று தெரிந்த கார்த்த வீர்யார்ஜூனன் தனது கதை ஆயுதத்துடன் வந்தான். கருநீல மலை போல் உருவத்தையும் அவனது ஆயிரம் கைகளையும் பார்த்த ராட்சச வீரர்கள் பயந்து ஓடி ஒளிந்தார்கள். ராவணனுக்கும் கார்த்த வீர்யார்ஜூனனுக்கும் யுத்தம் நடந்தது. இருவரும் தங்களது கதை ஆயுதத்தால் யுத்தம் செய்தார்கள். ஆயிரம் கைகள் கொண்ட கார்த்த வீர்யார்ஜூனனை இருபது கைகள் கொண்ட ராவணனால் வெல்ல முடியவில்லை. கார்த்த வீர்யார்ஜூனன் தனது கதை ஆயுதத்தால் ராவணனனை அடித்து வெற்றி பெற்று அவனைப் பிடித்துக் கட்டி தனது நாட்டிற்கு இழுத்துச் சென்றான். இதனை அறிந்த தேவர்கள் இக்காட்சிக்காண ஆகாயத்தில் குவிந்தார்கள்.
தேவர்கள் கார்த்த வீர்யார்ஜூனன் மீது பூக்களை தூவி வாழ்த்தினார்கள். கார்த்த வீர்யார்ஜூனனை எதிர்த்து ராவணனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இதனை அறிந்த ராவணனின் தந்தையின் தந்தை புலஸ்திய முனிவர் தன் பேரன் மேல் கொண்ட பாசத்தால் மாஹிஷ்மதி அரசனான கார்த்த வீர்யார்ஜூனனைக் கண்டு பேச வந்தார். புலத்திய முனிவருக்கு உரிய மரியாதை கொடுத்து அவரை வரவேற்ற கார்த்த வீர்யார்ஜூனன் தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அதற்கு புலத்தியர் ராவணனை பிடித்து வந்து விட்டாய் என்ற செய்தி அறிந்து வந்திருக்கிறேன். யாராலும் வெல்ல முடியாத ராவணனை நீ வென்று விட்டாய். உன் பலம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று பாராட்டினார். அவன் எனது பேரன் அவனை உன்னிடம் நான் யாசிக்கிறேன். என் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து அவனை விடுதலை செய்து அவனுடன் நட்பு கொள் என்று கேட்டுக் கொண்டார். புலத்தியரின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாமல் ராவணனை அப்போதே விடுதலை செய்தான் கார்த்த வீர்யார்ஜூனன். புலத்தியரின் சொல்படி ராவணனும் கார்த்த வீர்யார்ஜூனனும் அக்னி வளர்த்து நட்புடன் இருப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இலங்கை திரும்பிய ராவணன் கார்த்த வீர்யார்ஜூனனிடம் தோற்றதை எண்ணி பெரும் வெட்கம் அடைந்தான். புலஸ்தியர் வந்து விடுவித்தது ராவணனின் தன்மானத்தை பெரிதும் பாதித்தது. சில காலம் சென்ற பின் அனைத்தையும் மறந்த ராவணன் தன்னை விட பலவான்கள் யாரும் இருக்கக்கூடாது என்று மறுபடியும் அரசர்களை துன்புறுத்த ஆரம்பித்து அகங்காரத்துடன் பூமியை வலம் வந்தான்.
வானரனான வாலி ஆண்டு வந்த கிஷ்கிந்தை நகரத்திற்கு வந்து சேர்ந்தான் ராவணன். பொன் மாலையணிந்த வாலியின் முன்பு சென்று யுத்தம் செய்தால் தன்னுடைய சக்தி பாதி வாலிக்கு சென்று விடும் என்று அறிந்த ராவணன் வாலியைப் பற்றி விசாரித்தான். அதிகாலையில் நான்கு திசைகளில் உள்ள கடல் பகுதிக்கு சென்று பூஜைகளும் ஜபமும் செய்யும் பழக்கமுடையவன் என்பதை அறிந்த ராவணன் ஒரு திட்டத்தை திட்டினான். அத்திட்டத்தின்படி வாலி அதிகாலை ஒரு திசையின் கடல் பகுதியில் தனது கண்களை மூடி ஜபம் செய்து கொண்டிருக்கும் போது ராவணன் வாலியின் பின்பக்கம் மெதுவாக தனது ஆயுதத்துடன் சென்றான். ராவணன் தாக்க வருவதை அறிந்து கொண்ட வாலி ராவணன் அருகில் வரும் வரை அமைதியாக அமர்ந்திருந்தான். ராவணன் அருகில் வந்ததும் ராவணனை பிடித்து தன் கைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டு நான்கு திசைகளிலும் உள்ள கடல் பகுதியிலும் தான் செய்ய வேண்டிய பூஜை ஜபத்தினை செய்து முடித்தான். கை கால்களை உதைத்துக் கொண்டு கருடன் வாயிலிருந்த தொங்கும் நாகம் போல ராவணனை துடித்தான். வாலியின் வலிமைக்கு முன் ராவணானால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பதை பலரும் கண்டார்கள்.
கிஷ்கிந்தைக்கு திரும்பி வந்த வாலி தனது உபவனத்தில் அமர்ந்து தன் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த ராவணனை விடுவித்து விட்டு இங்கே என்ன செய்கிறாய் ராவணா என்று சிரித்துக் கொண்டே கேட்டான். ராவணன் சிரமப்பட்டு வாலியிடம் பேச ஆரம்பித்தான் வானரங்களுக்கு அரசனான உன்னுடன் யுத்தம் செய்வதற்காகத் தான் திட்டமிட்டு வந்தேன். உனது பலத்தை நீ செயலிலேயே காட்டி விட்டாய். மூன்று உலகத்தையும் வெற்றி பெற்ற என்னை உன் கைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டு நான்கு சமுத்திரத்தையும் வலம் வந்து விட்டாய். நீ தாவிச் செல்லும் வேகம் மனம் காற்று கருடன் ஆகிய இவர்கள் மூன்று பேரும் செல்லும் வேகத்தில் நீ தாவிச் செல்கிறாய். உனக்கும் இந்த மூவரின் வேகம் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன். அதனால் உன்னுடன் நட்பு கொள்ள விரும்புகிறேன். நாம் இனி நண்பர்களாக இருப்போம் என்று சொல்லி அக்னியை மூட்டினான். வாலியும் ராவணனின் நட்பை ஏற்றுக் கொண்டான். இருவரும் இரண்டு சிங்கங்கள் போல சுற்றி நட்புடன் இருந்தார்கள். சில நாட்கள் கிஷ்கிந்தையில் வாலியின் உபசரிப்பை ஏற்றுக் கொண்ட ராவணன் பின்பு தனது இலங்கைக்கு திரும்பிச் சென்றான். அதன் பிறகு கார்த்த வீர்யார்ஜூனன் மற்றும் வாலி இருக்கும் திசைப் பக்கம் ராவணன் செல்லவில்லை. அந்த வலிமையுள்ள வாலியைத் தான் நீ கொன்றாய் ராமா என்று அகத்தியர் சொல்லி முடித்தார்.
ராமர் அகத்தியரிடம் பேச ஆரம்பித்தார். வாலி ராவணன் இருவருமே நல்ல பலசாலிகள் தான். இருந்தாலும் அனுமனுக்கு சமமாக மாட்டார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. பலம் தைரியம் அறிவு தர்ம உணர்வு என பல சிறப்பு தன்மைகள் அனுமனிடத்தில் குடி கொண்டுள்ளன. அனுமனின் உதவியால் நான் சீதையை பெற்றேன். தனி ஒருவனாக இருந்து நூறு யோசனை தூரத்தை கடந்து சென்று சீதையை கண்டு பிடித்து எதிர்த்தவர்களை அழித்து இலங்கையை எரித்து விட்டு வந்திருக்கிறான் அனுமன். நூறு யோசனை தூரத்தை ஒரே தாவலில் தாவுவது என்பது எவ்வளவு கடிமான செயல். கடினமான இந்த செயலை செய்ததோடு மட்டுமில்லாமல் இங்கு யுத்தம் வேறு செய்து வெற்றி பெற்று மீண்டும் நூறு யோசனை தூரம் தாவி திரும்பி வந்திருக்கிறான் அனுமன். இது சாதாரணமான செயல் இல்லை. தேவர்கள் கந்தர்வர்கள் என மூன்று உலகத்தில் இருப்பவர்களும் இப்படி ஒரு செயலை செய்து நான் அறிந்ததில்லை. அத்தனை வலிமையுள்ள அனுமன் ஏன் சுக்ரீவனுடன் வாலி சண்டையிட்ட போது வாலியை அடக்கி சுக்ரீவனுக்கு உதவவில்லை? அனுமனுக்கு தன் பலம் தெரியாமலேயே வளர்ந்திருக்கிறான் என்று நினைக்கிறேன். அனுமன் அந்த நேரத்தில் ஏன் தன் பலத்தை தெரிந்து கொள்ளாமல் இருந்தான் என்று கேட்டார்.
ராமரின் கேள்விக்கு அகத்தியர் பதில் கூற ஆரம்பித்தார். நீ சொல்வது முற்றிலும் சரிதான் அனுமனுக்கு சமமான பலசாலியோ அறிவாளியோ யாரும் இல்லை. குழந்தைப் பருவத்தில் அனுமனுக்கு தவிர்க்க முடியாத நிலையில் ஒரு முனிவர் சாபமிட்டார். அதன் காரணமாகத் தான் தன் பலத்தை தானே உணராதவனாக வளர்ந்தான் அனுமன். மிகவும் பலசாலியான அனுமன் குழந்தை பருவத்தில் ஒரு காரியம் செய்தான். அதை வர்ணிக்க இயலாது. அதனை முழுமையாக சொல்கிறேன் கேள் என்று அனுமன் சாபம் பெற்ற வரலாற்றை சொல்ல ஆரம்பித்தார் அகத்தியர். குழந்தையாக இருந்த போது ஒரு நாள் அனுமனுக்கு நன்றாக பசித்தது. தனது தாயே தேடினான். அவனது தாய் அஞ்சனாதேவி அனுமனின் உணவிற்காக பழங்கள் சேகரிக்க வெளியில் சென்றிருந்தாள். தாயாரைக் காணாமல் பசியும் வாட்ட பெரிதாக அழுதான் அனுமன். உணவிற்கு பழம் வேண்டும் என்ற எண்ணத்துடன் அண்ணாந்து மேலே பார்த்த அனுமனுக்கு சூரியன் பழம் போல காட்சியளித்தான். உடனே அதனை சாப்பிட வேண்டும் என்று எண்ணிய அனுமன் சூரியனைப் பிடிக்க ஆகாய மார்கமாக தாவினான். ஆகாயத்தில் தாவிய குழந்தையை தேவர்களும் தானவர்களும் ஆச்சர்யத்துடன் பார்த்து அதிசயித்தபடி நின்றனர்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |