இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


வானார்சோதி மன்னு

வானார்சோதி மன்னு

பதிக எண்: 1.73 - திருக்கானூர் - தக்கேசி

பின்னணி:


தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு சென்ற திருஞானசம்பந்தர் அதன் பின்னர், பெரும்புலியூர் நெய்த்தானம் மழபாடி ஆகிய தலங்கள் செல்கின்றார். மழபாடியில் சில நாட்கள் தங்கிய பின்னர், அங்கிருந்து கானூர் அன்பிலாலந்துறை மாந்துறை ஆகிய தலங்கள் சென்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. அதன் மருங்கு என்று மழபாடி தலம் குறிக்கப் படுகின்றது. இறைவனின் அருளினால் திருக்கானூர் பணிந்து ஏத்தி என்று சேக்கிழார் குறிப்பிடுவதை நாம் உணரலாம். இறைவன் உறையும் திருத்தலங்கள் சென்று அவனைக் கண்டு களிப்பதும், அவனது அருள் இருந்தால் தான் நடைபெறும். ஆனால் அடிப்படையாக உயிர்கள் அவ்வாறு பல தலங்கள் செல்ல வேண்டும் என்று விரும்பவேண்டும். ஆன்ற=பல நற்குணங்கள் பொருந்திய; முதல் சைவர்=ஆதி சைவர்; கரடம்=அருவி; மதநீர் அருவி போன்று பெருகிப் பாயும் மதயானை; பல பதிகள் என்று சேக்கிழார் குறிப்பிடும் தலங்கள் யாது என்று அறிய முடியவில்லை; அந்த தலங்களுக்கு உரிய தேவாரப் பதிகங்களும் கிடைக்கவில்லை.. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய ஒரு பதிகமும் அப்பர் பிரான் அருளிய ஒரு பதிகமும் நமக்கு கிடைத்துள்ளன. சுந்தரர் அருளிய பதிகம் ஏதும் கிடைக்கவில்லை. எனினும் சுந்தரர் இந்த தலத்து இறைவனை கானூர் கட்டியே என்று ஊர்த்தொகை பதிகத்தினில் அழைக்கின்றார்.

அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ

முதல் மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனைத் தொழுது போற்றிப்

பத நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் பல பதிகள் பணிந்து பாடி

மத கரட வரை உரித்தார் வடகரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர்

இந்த திருத்தலம் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி நகரத்திற்கு ஐந்து கி.மீ வடக்கே, உள்ள விஷ்ணம்பேட்டை ஊருக்கு அருகில் (இரண்டு கி.மீ தொலைவில்) உள்ளது. மணல்மேடு என்று அழைக்கப் படுகின்றது. இறைவனின் திருநாமம் செம்மேனி நாதர், கரும்பேஸ்வரர்; அம்பிகையின் பெயர் சிவயோக நாயகி, மற்றும் சவுந்தரநாயகி. கொள்ளிடக் கரையில் உள்ள இந்த திருக்கோயில் முழுதும் மணலால் மூடப்பட்டு இருந்தது. 1924ம் வருடம் கொள்ளிடத்தில் வந்த வெள்ளம் வடிந்த பின்னர், ஒரு கரும்பு முளைத்து எழுந்திருந்ததைக் கண்ட மக்கள், அந்த இடத்தை தோண்டி பார்க்க, மணல் குன்றின் அடியே திருக்கோயில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. மூலவர் சுயம்பு. அம்பிகை விக்ரம் சாளகிராமத்தால் ஆனது. பாவநாசப் பதிகத்தினில் அப்பர் பிரான் கானூர் முளைத்த கரும்பு என்று குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் பாடியதற்கு ஏற்ப இறைவன் ஒரு கரும்பின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள திருவுள்ளம் கொண்டான் போலும். பின்னர் கோயிலினை அகழ்ந்தெடுத்து குடமுழுக்கு செய்தனர். கோயில் குடமுழுக்கு செய்யப்பட்ட போது,காஞ்சி மகாசுவாமிகள் இங்கே தங்கியிருந்தார். கிழக்கு நோக்கிய மூன்று நிலை கோபுரத்துடன் ஒரே ஒரு பிராகாரம் கொண்ட சிறிய திருக்கோயில். பங்குனி மாதத்தின் நடுவில் மூன்று நாட்களில், சூரியனின் கதிர் மூலவர் மீது படிவதை, சூரியன் இறைவனுக்கு செய்யும் வழிபாடாக கருதுகின்றனர். மூலவர் கருவறை விமானம் உருண்டை வடிவில், அரைக்கோள வடிவினில் உள்ளது, அம்பிகை சிவபெருமானை நோக்கி தவம் இருந்த போது, இறைவன் அவருக்கு அக்னிப் பிழம்பாக காட்சி அளித்ததை குறிப்பிடும் வகையில் சுவாமி செம்மேனிநாதர் என்று அழைக்கப் படுகின்றார். அம்பிகை கிரீடமின்றி ஜடாமகுடத்துடன் இருப்பதை காணலாம். அம்பிகை இங்கே தவம் புரிந்ததை உணர்த்தும் வகையில் அம்பிகையின் திருநாமம் சிவயோக நாயகி என்று வந்தது. பரசுராமர், வேதங்கள், சூரியன், உமையன்னை, அக்னி ஆகியோர் வழிபட்ட தலம். தலமரம்=வன்னி, வில்வம்; கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரமன் ஆகியோரை காணலாம். பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமணியர், சண்டேஸ்வரர், நாகர்,திருமால், ஐயனார், சூரியன், சந்திரன், நால்வர் ஆகிய சன்னதிகளை காணலாம். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர்,உடல்நலம் குன்றியவர்கள், கருத்து வேறுபாடு கொண்டுள்ள கணவன் மனைவியர் ஆகியோர் இந்த தலத்தில் வழிபட்டு தங்களது குறைகளை தீர்த்துக் கொள்ளலாம். கரிகாற்சோழன் சிறுவனாக இருந்த போது வளர்ந்த தலம் என்று சொல்லப் படுகின்றது. பல மன்னர்களை கொன்ற பாவத்தினை, பரசுராமர்,இந்த தல வழிபாட்டின் மூலம் நீக்கிக் கொண்டார் என்று கூறுகின்றனர்.

பாடல் 1:


வானார் சோதி மன்னு சென்னி வன்னி புனங் கொன்றை

தேனார் போது தானார் கங்கை திங்களொடு சூடி

மானேர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார்

கானூர் மேய கண்ணார் நெற்றி ஆனூர் செல்வரே

விளக்கம்:

வானார்=வானில் பொருந்திய; மன்னு=நிலையாக பொருந்திய; போது=மலர்; புனம்=காடு; மாலை ஆடுவார் என்று மாலை நேரத்தில் பெருமான் நடனம் ஆடியதை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினை உண்டு தங்கள் அனைவரையும் காப்பாற்றிய பெருமானுக்கு நன்றி சொல்வதற்கு ஒரு நாள் மாலை நேரத்தில் தேவர்களும் அனைவரும் சென்று அவரை வணங்கினார்கள். அதனால் மகிழ்ச்சி அடைந்த பெருமான், நந்திதேவரின் இரு கொம்புகளின் இடையே நின்ற வண்ணம் நடனம் ஆடினார். உமையன்னை முதலாக அனைவரும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். தேவியின் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருந்தது; ஆலகால விடம் உட்கொண்ட பின்னரும் பெருமானின் உடலுக்கு எந்த விதமான கேடும் நேராமல் இருந்தது மற்றும் மிகவும் அழகான நடனத்தினை தான் காணும் வாய்ப்பினை பெற்றது. ஆகிய இரண்டுமே தேவியின் உவப்பிற்கு காரணங்கள். தினமும் மாலை நேரம் பிரதோஷ காலமாக கருதப்பட்டு திருவாரூரில் சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன. இந்த நடனமே இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. மருண்ட பார்வை மானுக்கு தனி அழகினை சேர்க்கின்றது. அத்தகைய பார்வை உடையவள் பிராட்டி என்று குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

திருவீழிமிழலை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்து அருளிய பதிகத்தின் பாடலில் (1.4.4) திருஞான சம்பந்தர் பிராட்டியை, மான்விழி மங்கை என்று அழைக்கின்றார். நாக பணம்=நாகத்தின் படம்; நுதல்=நெற்றி; நன்னுதல்=அழகிய நெற்றி; பூகம்=கமுகு; ஏக=ஒற்றை, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி தனிச்சிறப்புடன் விளங்கும் தன்மை; பெருந்தகை=பெருமை வாய்ந்த தகுதி; பெம்மான்=பெருமான் என்பதன் திரிபு; உரிஞ்சு=தோய்ந்த; எயில்=மதில்; படமெடுத்து ஆடும் பாம்பு போன்று விரிந்த வயிறும் அழகிய நெற்றியும் மான் போன்று மருண்ட பார்வையும் உடைய பார்வதி தேவியுடன், கமுகு மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்து அழகும் குளிர்ச்சியும் பொருந்தி காணப்படுவதும் புகலி என்று அழைக்கப் படுவதும் ஆகிய சீர்காழி தலத்தினில் உறைபவனும் புண்ணியமே வடிவமாக அமைந்தவனும் ஆகிய பெருமானே, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்கும் பெருமையினை உடைய பெருமானே, எமது இறைவனே, மேகங்கள் தோயும் வண்ணம் உயர்ந்து காணப்படும் மதில்களால் சூழப்பட்ட வீழிமிழலை தலத்தில் உள்ளதும் வானிலிருந்து திருமாலால் கொண்டு வரப்பட்ட விமானத்தை உடையதும் ஆகிய திருக்கோயிலை விரும்பி ஆங்கே உறைவதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராகஎன்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் முதல் பாடலிலும் பிராட்டியை மான்விழி மங்கை என்று திருஞான சம்பந்தர் அழைக்கின்றார்.

நாகபணம் திகழ் அல்குல் மல்கு நன்னுதல் மான்விழி மங்கையோடும்

பூகவனம் பொழில் சூழ்ந்த அந்தண் புகலி நிலாவிய புண்ணியனே

ஏக பெருந்தகையாய் பெம்மான் எம்மிறையே இதுவென் கொல் சொல்லாய்

மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

திருவீழிமிழலை தலத்தின் அருளிய பதிகத்தின் பாடலில் (1.11.1) திருஞான சம்பந்தர் பிராட்டியை, மடமான் விழி மாது என்று அழைக்கின்றார். மேலும் பெருமானை, இடுப்பிலிருந்து சரிந்து தொங்கும் கோவண ஆடை உடையர் என்று கூறுகின்றார். மாதிடம்=மாது இடம்; இந்த பாடலில் திருஞானசம்பந்தர், பெருமானை, தன்னை உடையான் என்று குறிப்பிட்டு, பெருமான் தன்னை ஆட்கொண்ட தன்மையை சொல்கின்றார். தனது சடைமுடியில் கங்கை நதியினை பொருத்தியவரும், இடுப்பினில் சரிந்து தொங்கும் கோவண ஆடையினை உடையவரும், மழுப் படையை ஏந்தியவரும், பூதப் படைகளால் சூழப் பட்டவரும் ஆகிய பெருமான், மான் போன்று மருண்ட பார்வையை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் கொண்டவர் ஆவார். அவரே என்னை ஆட்கொண்ட தலைவர் ஆவார்; அவர் இடபக் கொடியை ஏந்தியவராக வீழிமிழலை தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சடையார் புனல் உடையான் ஒரு சரி கோவணம் உடையான்

படையார் மழு உடையான் பல பூதப் படை உடையான்

மடமான் விழி உமை மாதிடம் உடையான் எனை உடையான்

விடையார் கொடி உடையான் இடம் வீழிமிழலையே

பேணுப் பெருந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.42.1) அழகிய மானின் பார்வையை உடையவள் பிராட்டி என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் திருஞான சம்பந்தர் பெருமானை செல்வர் என்றும் பிராட்டியை அரிவை என்றும் அழைக்கின்றார். பொதுவாக, அடுத்தவரிடம் பிச்சை ஏற்போர், ஒரு விதமான தயக்கம், வெட்கம் காரணமாக உடலும் உள்ளமும் குறுகிய தன்மை உடையவர்களாக, தமக்கு ஏதும் கிடைக்காதா என்ற நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் இருப்பதை காண்கின்றோம். ஆனால் பிச்சை ஏற்கும் பெருமானோ இறுமாப்புடன் இருப்பதாகவும், பிச்சை இடுவீர்களாக என்று கட்டளை இடுபவராகவும் இருக்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். மேலும் பெருமான், தான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் தங்களது மலங்களை பிச்சையாக இடும் உயிர்களுக்கு, செல்வத்தை அளிக்கும் செல்வந்தர் என்பதை செய்தொழில் பேணி ஓர் செல்வர் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். முக்திச் செல்வத்தை தனக்கென்று மட்டும் வைத்துக் கொள்ளாமல் தன்னைப் பேணி போற்றும் அடியார்களுக்கு அருளும் செல்வர் அல்லவா பெருமான். பெய்தல்= இடுதல்; செய் தொழில் பேணி=தாங்கள் செய்ய வேண்டிய தொழில்களை போற்றி கொண்டாடி செய்பவர்கள்; பிறவி எடுத்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை, உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானைப் போற்றிப் புகழ்ந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற முயற்சியில் ஈடுபடுவது தானே. அம்மான்=அழகிய; நோக்கி=மான் போன்ற மருண்ட பார்வை உடைய பார்வதி தேவி; தொல் புகழ்=பண்டைய நாளிலிருந்து அழியாமல் நிலைத்து நிற்கும் புகழினை உடையவர்;

பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றி வெண் கொம்பு ஒன்று பூண்டு

செம்மாந்து ஐயம் பெய்கென்று சொல்லிச் செய் தொழில் பேணி ஓர் செல்வர்

அம்மான் நோக்கிய அந்தளிர் மேனி அரிவை ஓர் பாகம் அமர்ந்த

பெம்மான் நல்கிய தொல் புகழாளர் பேணுப் பெருந்துறையாரே

சேய்ஞலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.48.3) பிராட்டியை, மானடைந்த நோக்கி என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார். நோக்கி=நோக்கம் உடையவள்; பொதுவாக மருண்ட பார்வை பெண்களுக்கு அழகினை அளிக்கும் என்று கூறுவார்கள். மருண்ட பார்வைக்கு மானின் பார்வையை உதாரணமாக சொல்வது இலக்கிய மரபு. தருமபுர ஆதீனத்தின் வலைத்தளத்தில் மான்னோக்கி என்ற தொடருக்கு சுவையான விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. மான், பார்வையை கற்றுக் கொள்வதற்காக உமையன்னை அருகே வந்து, அன்னையின் பார்வை அழகினை பார்த்து கற்றுக் கொள்வதாக உரையாசிரியர் கூறுகின்றார். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகியவை பெண்களுக்கு உரிய நான்கு சிறந்த குணங்களாக பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன. வரவிருக்கும் அபாயம் குறித்தும் எந்த அவப்பெயரும் தனக்கு தனது வாழ்வினில் வாராமல் வாழவேண்டும் என்ற எண்ணத்தினாலும் பெண்களுக்கு ஏற்படும் ஒருவகையான மனக் கலக்கம் அச்சம் என்று சொல்லப் படுகின்றது. தனக்கு தெரிந்த விஷயத்தையும் நாலு பேர் முன்னிலையில் தனக்கு தெரிந்ததாக காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக இருத்தல் மடம் என்று சொல்லப் படுகின்றது. வெட்கம் என்ற பண்பே நாணம் என்று சொல்லப் படுகின்றது. கணவனைத் தவிர்த்து வேறொரு ஆண்மகனின் தொடுதல் ஏற்படுத்தும் ஒருவகையான கூச்சம் பயிர்ப்பு என்று சொல்லப் படுகின்றது.

ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து

கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே

மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரியாடல் என்னே

தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே

பேய்களுடன் இணைந்து நடனம் ஆடுவது, காட்டினில் நடனம் ஆடுவது, கையினில் தீப்பிழம்பு ஏந்தி நடனம் ஆடுவது ஆகிய மூன்றுமே எவருக்கும் அச்சமூட்டும் காட்சிகள் ஆகும். அத்தகைய காட்சியினை பொதுவாக மென்மையான உள்ளம் கொண்ட பெண்கள் காண்பது வியப்புக்கு உரியது. மேலும் அந்த பெண்மணியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த நடனத்தை காண்பது பெரும் வியப்பினை ஏற்படுத்தும் அல்லவா. இறைவனின் நடனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையும் அன்னைக்கு எந்த சூழ்நிலையும் தடையாக இருக்க முடியாது அல்லவா. இருப்பினும் அச்சமூட்டும் சூழ்நிலையில் நடனம் ஆடுவது ஏன் என்ற கேள்வியை திருஞான சம்பந்தர் இங்கே பெருமானை நோக்கி கேட்கின்றார். மகிழ்ந்த செயலை இறைவன் பால் ஏற்றி, நடனமாடும் இறைவன் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் பொருள் கொள்ளலாம். இறைவனின் மகிழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தனது நடனத்தை பிராட்டி கண்டு மகிழ்வது; இரண்டாவது அழிந்து பட்ட உயிர்களில் பலவும் மலங்களுடன் பிணைந்து இருப்பதை கருத்தில் கொண்டு, அந்த உயிர்கள் தங்களது மலங்களை கழித்துக் கொள்ள மீண்டும் வாய்ப்பு அளிக்க திருவுள்ளம் கொள்வது. உலர்ந்து வெண்ணிற நிறத்துடன் இருப்பதும் தசைகள் ஒட்டி இருப்பதும் ஆகிய பிரமனின் தலையினை கையில் ஏந்தியவாறு பலி ஏற்பதற்கு பல இடங்களில் திரிவதும். காட்டில் வாழும் பேய்கள் மற்றும் பூத கணங்களோடு கலந்து நடனமாடுவதும், அந்த நடனத்தை மருண்ட பார்வையினை உடைய பார்வதி அன்னை காணும் வண்ணம் ஆடுவதும், அவ்வாறு நடனம் ஆடும் சமயத்தில் தனது உள்ளங்கையினில் தீப்பிழம்பு ஏந்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் ஆடுவதும் ஆகிய பொதுவாக வேறு எவரும் செய்யாத செயல்களை பெருமானே நீ செய்வதன் காரணம் யாது. இவ்வாறு வியப்புறும் வண்ணம் நடனம் ஆடும் பெருமான் தேன் நிறைந்த மலர்கள் கொண்ட சோலைகள் நிறைந்த சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஈங்கோய்மலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.70.1) திருஞானசம்பந்தர் பிராட்டியை மான் விழியாள் என்று அழைக்கின்றார். கானம்=காடு, இங்கே சுடுகாடு; இரவில் நடனம் ஆடும் பெருமான் என்று குறிப்பிடுவது நமக்கு நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே என்னும் திருவாசகத் தொடரினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. பயிலுதல் என்றால் ஒரு செயலைத் தொடர்ந்து செய்தல் என்று பொருள். ஒவ்வொருவரும் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் தொடர்ந்து ஏதேனும் புதியதாக கற்றுக் கொண்டே வருவதால் தான், கல்வி பயிலுதல் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பெருமான் இடைவிடாமல் நடனம் ஆடுவதால் நட்டம் பயின்றாடும் நாதன் என்று மணிவாசகர் உணர்த்துகின்றார். எனவே இங்கே, நள்ளிருள் என்பதற்கு பிரளய காலத்தில் உலகம் உள்ள நிலை என்று பொருள் கொள்ள வேண்டும். பெருமானின் இந்த நடனம், பிறப்பு இறப்பினைக் கடந்த நிலையையும் ,அனைத்து உயிர்களும் அனைத்து உலகப் பொருட்களும் அழிந்த நிலையிலும் பெருமான் அழியாமல் நிலையாக இருப்பதையும், ஐந்து தொழில்களையும் பெருமான் இயற்றுவதையும் குறிப்பிடுவதால் உலகம் பெருமானின் நடனத்தைப் புகழ்வது இயற்கையே. ஏனம்=பன்றி; இழிதல்=கீழே இறங்குதல். பெருமான் நடனம் ஆடுவதை உலகம் புகழ்ந்து போற்றுவதாக திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வானில் உலவும் பிறைச் சந்திரன் தோயும் தனது சடையில் ஊமத்தை மலரினைச் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், தேனைப் போன்று இனிய மொழியினை உடையவளும் மானினைப் போன்று மருண்டு அழகாக காணப்படும் கண்கள் உடையவளும் ஆகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டு, சுடுகாட்டினில் நள்ளிரவில் நடனம் ஆடும் பெருமானை, தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தி ஆடும் பெருமானை, உலகம் புகழ்ந்து போற்றுகின்றது. அத்தகைய புகழ் வாய்ந்த இறைவன், பன்றிகள் வேகமாக கீழே வந்து இறங்கும் சாரலை உடைய ஈங்கோய்மலையில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடித்

தேன் ஒத்தன மென்மொழி மான் விழியாள் தேவி பாகமாக்

கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த

ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய் மலையாரே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.120.5) திருஞான சம்பந்தர் பிராட்டியை, மானன மென் விழி மங்கை என்று அழைக்கின்றார். மானன=மான் போன்ற; புல்கு=பொருந்திய; அந்தண்=அழகும் குளிர்ச்சியும் பொருந்திய; வானில் உலவும் சந்திரன் பொருந்திய சடையின் இடையே பாம்பினை வைத்துக் கொண்டுள்ள பெருமான், தேன் நிறைந்த கொன்றை மலர் மாலைகள் திகழும் மார்பினை உடையவன் ஆவான். அவன் தனது உடலினில் ஒரு பாகத்தில் மான் போன்ற மென்மையான பார்வையினை கொண்ட பார்வதி தேவியை வைத்துக் கொண்டுள்ளான். அத்தகைய இறைவன் உறைகின்ற இடம் அழகும் குளிர்ச்சியும் ஒருங்கே பொருந்திய ஐயாறு தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வானமர் மதி புல்கு சடையிடை அரவொடு

தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்

மானன மென் விழி மங்கை ஒர் பாகமும்

ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.123.1) திருஞான சம்பந்தர், பிராட்டியை, கணை எதிர் விழி உமையவள் என்று குறிப்பிடுகின்றார். பூவியல்=பூக்கள் அணிந்த கூந்தல்; புரி குழல்=சுருண்ட கூந்தல்; வரி சிலை=நாண் இழுத்து கட்டப்பட்ட வில்; நிகர்=ஒத்த; நுதல்=நெற்றி; ஏவியல் கணை=வில்லினில் பொருத்தப்பட்டு செலுத்தப்படும் அம்பு; பெண்களின் கண்கள் அம்பின் தன்மைக்கு ஒப்பிடப் படுவது இலக்கிய மரபு. பெண்களின் கண்கள் தாம் காணும் ஆடவரின் மனதினை தைத்து, காதல் நோய் உண்டாக்குவதால், இவ்வாறு சொல்லப் படுகின்றது. பிணை=பெண் மான்; பிராட்டியின் கண்கள் அம்பின் முனை போன்று நுனியில் கூர்மையாகவும் மானின் மருண்ட பார்வையினை உடையதாகவும் உள்ள தன்மை இங்கே சொல்லப் படுகின்றது. விரை=நறுமணம்; மாவியல்=மாமரங்கள் அடர்ந்து நிறைந்த சோலை; மேவிய=பொருந்திய;

பூவியல் புரி குழல் வரி சிலை நிகர் நுதல்

ஏவியல் கணை பிணை எதிர் விழி உமையவள்

மேவிய திருவுரு உடையவன் விரை மலர்

மாவியல் பொழில் வலிவலம் உறை இறையே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.50.4) திருஞான சம்பந்தர், பிராட்டியை மான்விழித் திருமாது என்று குறிப்பிடுகின்றார். திரு=அழகிய; சேல்=மீன்; சேலின் நேரன=மீனை ஒத்த கண்கள்; மீன் போன்ற கண்களை உடையவள் என்ற பொருள் பட, அம்பிகையை மீனாட்சி என்று அழைக்கின்றனர். கருணை பொங்கும் விழிகள் கொண்ட அம்பிகை என்பது இதன் பொருள். திருவிளையாடல் புராணப் பாடல் ஒன்றினில், பரஞ்சோதி முனிவர், அம்பிகையை மீனாட்சி என்று அழைப்பதன் காரணத்தை விளக்குகின்றார். முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனத்தைச் சார்ந்தது மீன்; நீரினில் வாழும் மீன், இடுகின்ற முட்டைகள் நீரினில் தானே மிதக்கும். அந்த முட்டைகள் பொரிவதற்கான வெப்பம் எங்கிருந்து கிடைக்கும் என்ற ஐயம் நமக்கு எழலாம். மீன் தனது கண்கள் வழியாக வெப்பத்தைப் பாய்ச்சி, அந்த முட்டைகளை பொரியச் செய்கின்றன. அதே போன்று தேவியும் தனது கண்களால் உயிர்களை நோக்கி, உயிர்களை பல விதமான இடர்களிலிருந்து பாதுகாப்பதால் மிகவும் பொருத்தமாக மீனாட்சி என்று அழைக்கப் படுகின்றாள் என்பதே அந்த விளக்கம். ஏல=சிறந்த; உலகிலேயே சிறந்த தவசியாக கருதப் படுபவன் சிவபெருமான். எப்போதும் மங்கையோடு இருந்தாலும் போக வாழ்க்கை வாழாமல், யோகத்தில் ஆழ்ந்திருக்கும் ஆற்றல் வாய்ந்தவன் பெருமான் என்பதால், அவனே சிறந்த யோகி. மங்கையோடு இருந்தே யோகு செய்வான் என்ற கருவூர்த் தேவர் வாய்மொழி நமது நினைவுக்கு வருகின்றது. இந்த பாடலில் திருஞான சம்பந்தர் பெருமானே, பாதி மாதுடன் இருக்கும் நீர் கொண்டுள்ள தவ வேடம் பொருத்தமான வேடமா என்ற கேள்வியை கேட்கின்றார்.

சேலின் நேரன கண்ணி வெண்ணகை மான் விழித் திருமாதைப் பாகம் வைத்து

ஏல மாதவா நீ முயல்கின்ற வேடமிது என்

பாலின் நேர் மொழி மங்கைமார் நடமாடி இன்னிசை பாட நீள் பதி

ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.57.4) திருஞானசம்பந்தர் பிராட்டியை மானமரும் மென் விழியாள் என்று அழைக்கின்றார். மானின் கண்கள் பொருந்தியது போன்று தேவியின் கண்கள் உள்ளன என்று கூறுகின்றார். கூன்=வளைந்த; வளைந்த ஒற்றைப் பிறைச் சந்திரனையும் கங்கை நதியினையும் தனது சடையில் ஏற்றுக் கொண்ட தன்மை உடைய பெருமானே, மான் போன்ற மருண்ட பார்வையினைக் கொண்டுள்ள பார்வதி தேவியை உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள பெருமையை உடையவராக நீர் விளங்குகின்றீர். பசுமையான சோலைகளில் உள்ள மலர்களில் தேன் நிறைந்து காணப்படுவதால் சூழ்ந்த வண்டுகள் இசை பாடும் திருநல்லூர் தலத்தினில் உள்ள வானளாவும் திருக்கோயிலினை, தலைவனாகிய நீர் தங்கும் இடமாக, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளீர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கூனமரும் வெண் பிறையும் புனலும் சூடும் கொள்கையீர்

மானமரும் மென் விழியாள் பாகமாகும் மாண்பினீர்

தேனமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திருநல்லூர்

வானமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

அரசிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.95.5), திருஞானசம்பந்தர், தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக வைத்தவராக பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்றார் என்று கூறுகின்றார். மானின் கண்கள் மருட்சி மிகுந்தவை; மருட்சியில் தனது கண்களை விடவும் பிராட்டியின் கண்கள் மருட்சி மிகுந்து அழகாக காணப்பட்டதை கண்ணுற்ற மான், பிராட்டி என்ன காரணத்தினால் அச்சம் கொண்டுள்ளாள் என்று புரியாததால் மான் அச்சம் கொண்டுள்ளது என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொதுவாக, சங்க இலக்கியங்கள் அந்த காலத்து பெண்களை, வீரம் மிகுந்தவர்களாகவும் புலமையும் அறிவும் உடையவர்களாக இருந்த தன்மையை குறிப்பிட்டாலும், அதே சமயத்தில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய குணங்கள் உடையவர்களாகவும் பெண்களை சித்தரிக்கின்றது. மேலும் குறிப்பாக, களவியலில் ஈடுபட்ட தலைவிகள், தங்களது தலைவன், தங்களின் அருகில் இருக்கும் போது, அச்சம் நாணம் முதலான நான்கு குணங்களை வெளிப்படுத்தி, தலைவனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டதாக பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. பிராட்டியும் பெருமானும் களவியலில் ஈடுபடவில்லை எனினும், அவர்களின் இடையே இருந்த அன்பு மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தது என்பதால், காதல் வயப்பட்ட பெண்கள் போன்று அச்சம் உடையவளாக பிராட்டி காணப்பட்டாள் என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உண்மையில் வீரமகள் என்று புகழ்ந்து குறிப்பிடும் வகையில், பிராட்டி இருந்த தன்மையை பல புராணங்கள் எடுத்துரைக்கின்றன. சிவபெருமான் தங்களுடன் போர் புரிய வருகின்றார் என்பதை அறிந்த பின்னரும், அச்சம் ஏதுமின்றி அவரை எதிர்கொள்ளத் துணிந்த திரிபுரத்து அரக்கர்களின் தன்மையை, தானஞ்சா என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். வான்= வானவர்கள்; இந்த பாடலில் திரிபுரத்தவர்களுடன் போருக்கு சென்ற போது, பெருமானுடன் சென்ற பிராட்டி அச்சம் கொண்டதால், என்ன நேரிடுமோ என்று மான்கள் அச்சம் கொண்டதாக திருஞான சம்பந்தர் கூறுகிறார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மிகுந்த கோபத்துடன் பெருமான் திரிபுரத்தவர்களுடன் போரிடச் சென்றதைக் கண்ட பிராட்டி அச்சம் கொண்டாள் போலும். மானும் கண்டு அச்சம் கொள்ளும் வண்ணம், மருண்ட பார்வையும் இளமையான தோற்றமும் உடைய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகமாக கொண்டவனாக, பெருமான், அச்சம் ஏதும் இன்றி தன்னை எதிர்த்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளும் எரிந்து அழியும் வண்ணம் அம்பினை விடுத்த, பெருமான், வானவர்களை அச்சுறுத்திய ஆலகால விடத்தை உண்டவன் ஆவான்; அவன் சிறந்த மறைகளை ஓதுபவனாகவும் பசுவிடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பமுடன் நீராடுபவனாகவும் உள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவித்

தான் அஞ்சா அரண் மூன்றும் தழலெழச் சரம் அது துரந்து

வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மாமறை ஓதி

ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே

திருப்பாதிரிப்புலியூர் (தற்போது கடலூர் என்று அழைக்கப்படும் தலம்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.3) பிராட்டியை மானின் பிணை என்று திருஞான சம்பந்தர் அழைக்கின்றார். மருளின் நல்லார்=மருள் இல் நல்லார், உலகப் பொருட்களால் ஏற்படும் மயக்கத்தில் சிக்காத ஞானிகள்; தன்னை நோக்கி வீசப்பட்ட மழுவாளை மிகவும் இலாவகமாக பிடித்து, பெருமான் அதனை செயலிழக்கச் செய்த செய்தியை குறிப்பிடும் வண்ணம், மழுவினை ஆண்டு வெற்றி கொண்டவர் என்ற பொருள் பட, மழு ஆளர் என்று கூறுகிறார். பொருளின் நல்லார்=பொருள் இல் நல்லார், தனக்கு மேல் ஒரு பொருள் இல்லாத பெருமான்; தன்னை விடவும் உயர்ந்தவர் எவரும் இல்லாத பெருமான் என்ற விளக்கம் தருமபுரம் ஆதீனத்தின் வலைத் தளத்தில் சொல்லப் படுகின்றது. பயில் பாதிரிப்புலியூர் உளான் என்று சொல்லி இருப்பதால், பொருளின் நல்லார் பயில் என்ற தொடர், அந்த தலத்தில் வாழும் சான்றோர்களை குறிப்பதாக பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. பொருள்=உண்மையான மெய்ப்பொருள்; பொருளின் நல்லார்=உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்த சான்றோர்கள்; வெருளின்=வெருண்ட பார்வை உடைய; பிணை=பெண் மான்; வெறி=காதல் வெறி; பிராட்டியை பெருமான் நோக்கியதால், பிராட்டி பெருமான் பால் கொண்டிருந்த காதல் மேலும் பெருகி வெறியாக மாறியது என்று குறிப்பிடுகிறார் போலும். அத்தகைய காதல் வெறி தானே பிராட்டியை, பெருமான் உடலில் தானும் ஒரு பாகமாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் கொள்ள உந்தியது. இந்த தலத்தினில் பிராட்டி கடுமையான தவம் செய்து பெருமானை அடைந்ததாக தல புராணம் உணர்த்துகின்றது. பெருமானின் சன்னதியில் திருச்சுற்றில் அருவமாக பிராட்டி இன்றும் தவம் செய்து கொண்டிருப்பதாக கருதப் படுகின்றது. பிராட்டியின் இந்த சன்னதி அருந்தவ நாயகி சன்னதி என்று அழைக்கப் படுகின்றது. ஆகம்=உடல்;

மருளின் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல்

பொருளின் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான்

வெருளின் மானின் பிணை நோக்கல் செய்து வெறி செய்த பின்

அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகாகவே

சிற்றேமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.42.5) திருஞானசம்பந்தர் பிராட்டியை, மானார் விழி நன்மாது என்று அழைக்கின்றார். வாண் முகம்=ஒளி பொருந்திய முகம்; வார் சடை=.நீண்ட சடை; கூனார்=வளைந்த; இடைவிடாது தொடர்ந்து நடனம் ஆடுவதை பெருமான் தனது கொள்கையாக வைத்துக் கொண்டுள்ளான் என்று கூறுகின்றார். பெருமான் நடனம் ஆடுவதால் தானே உலகம் இயங்குகின்றது. தேனார்=தேன் நிறைந்த; திருவாரும்=செல்வம் மல்கிய; மைந்தன்=வலிமை வாய்ந்தவன்; வானில் உலவும் சந்திரனைப் போன்ற ஒளி பொருந்திய முகத்தினை உடைய உமை அன்னை பாட, தனது நீண்ட சடையினில் வளர்ந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைச் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், தொடர்ந்து நடனம் ஆடுவதையே தனது கொள்கையாகக் கொண்டு உள்ளான். அத்தகைய பெருமான், மான் போன்ற மருண்ட பார்வையினை உடைய பிராட்டியோடும் மகிழ்ந்து உறைகின்ற பெருமான், மிகவும் வல்லமை வாய்ந்தவனாக, தேனை அருந்திய வண்டுகள் பாடும் சிற்றேமம் தலத்தினில், செல்வ வளம் பொருந்திய தலத்தில் உறைகிறான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வானார் திங்கள் வாண் முக மாதர் பாட வார் சடைக்

கூனார் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான்

தேனார் வண்டு பண் செயும் திருவாரும் சிற்றேமத்தான்

மானார் விழி நன்மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.44.2) திருஞான சம்பந்தர் பிராட்டியை மானலம் மட நோக்கு உடையாள் என்று குறிப்பிடுகின்றார். அலங்கல்=மாலை; கான்=கானகம், காடு; இலங்க=பிரகாசித்து விளங்க; மானலம் என்ற சொல்லினை மான்+நலம் என்றும் மா+நலம் என்றும் இரண்டு விதமாக பிரித்து வேறுவேறு பொருள், பெரியோர்கள் காண்கின்றனர். மானைப் போன்று மருண்ட பார்வை உடையவள் என்பதும் உலகினுக்கு பெரிய நலன்கள் அருளுபவள் என்பதும் இந்த இரண்டு வேறுவேறு விளக்கங்கள். பிரகாசத்துடன் வானில் உலவும் பிறைச் சந்திரனைத் தலைமாலையாக விரும்பி ஏற்றுக் கொண்ட தலைவராகிய சிவபெருமான், கடற்கரை சோலைகள் விளங்கும் கழிப்பாலை தலத்தினில், மானைப் போன்று மருண்ட பார்வையினை உடைய உமா தேவியுடன் வீற்றிருந்து அருள் புரிகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வானிலங்க விளங்கும் இளம் பிறை

தான் அலங்கல் உகந்த தலைவனார்

கான் இலங்க வரும் கழிப்பாலையார்

மானலம் மட நோக்கு உடையாளொடே

சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (3.58) இருமலர்க் கண்ணி தன்னோடும் உடனாவது என்றும், கொடியன சாயலாளோடு கூடுவது என்றும், மானன நோக்கி தன்னோடு உடனாவது என்றும் புற்றரவு அல்குலாளோடு உடனாவது என்றும் பந்தணவு விரலாளோடு உடனாவதும் என்றும் மங்கை பாகம் நிலை என்றும் உமையையொர் பாகம் வைத்த நிலை என்றும் விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும் வேண்டினை என்றும், பெண்ணொர் பாகம் ஈரெழில் கோலமாகி உடனாவது என்றும் மங்கையோடு ஒன்றி நின்று என்றும் மாதொரு பாகனாக பெருமான் உள்ள நிலை குறிப்பிடப் படுகின்றது. இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலை நாம் இங்கே காண்போம். இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெருமானை, நூல் நலம் தங்கு மார்பினர் என்று குறிப்பிடுகின்றார். சாத்தமங்கை என்பது தலத்தின் பெயர். அயவந்தி என்பது திருக்கோயிலின் பெயர். மானன நோக்கி=மான் போன்று மருண்ட பார்வை உடைய பிராட்டி. ஆ நலம்=பசுவிடமிருந்து கிடைக்கும் நலம் மிகுந்த பொருட்களாகிய பால் தயிர் நெய் கோசலம் கோமியம் ஆகியவை கலந்த பஞ்சகவ்யம். நுகர்=பூசிக் கொண்ட; தோய்ந்த=நீராடும்; நல்ல முப்புரி நூல் அணிந்த மார்பினில் வெண்ணீறு பூசியவராக காணப்படும் பெருமான், மான் போன்று மருண்ட பார்வையினை உடைய பிராட்டியுடன் இடபத்தின் மீது அமர்ந்தவராக காட்சி தருகின்றார். மழை பொழிந்து உலகினுக்கு நன்மை பயக்கும் மேகங்களைத் தொடும் வண்ணம் உயர்ந்த சோலைகள் உடைய சாத்தமங்கை தலத்தின் அயவந்தி திருக்கோயிலில், பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள் கொண்டு நீராடும் பெருமான், மிகுந்த விருப்பமுடன் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நூல் நலம் தங்கு மார்பின் நுகர் நீறு அணிந்து ஏறதேறி

மானன நோக்கி தன்னொடு உடனாவதும் மாண்பதுவே

தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை

ஆ நலம் தோய்ந்த எம்மான் அயவந்தி அமர்ந்தவனே

திருவக்கரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.60.5) திருஞான சம்பந்தர், பிராட்டியை மானன மென் விழியாள் என்று அழைக்கின்றார். கூன்=வளைந்த ஒற்றைப் பிறைச் சந்திரன்; தக்கனிடம் பெற்ற சாபத்தினால் நாளுக்கு ஒரு பிறையாக தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் இருந்த சந்திரன், பெருமானுடன் இணைந்த பின்னர் வளரும் பிறைச் சந்திரனாக மாறியதால், கூனிள வெண்பிறை என்று கூறுகின்றார். ஏனம்=பன்றி; பன்றியாக அவதாரம் எடுத்த திருமாலின் அகந்தையை சிவபெருமான் அடக்கியதை உலகத்தவர் அனைவர்க்கும் உணர்த்தும் வண்ணம், பன்றிக் கொம்பினை, பெருமான் ஆபரணமாக அணிய வேண்டும் என்ற திருமாலின் வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட பெருமான், பன்றியின் கோரைப் பல்லினை ஒடித்து தனது மார்பினில் அணிகலனாக அணிந்து கொண்ட தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. அவ்வாறே ஆமையாகத் திரிந்த திருமாலின் அகம்பாவத்தை சிவபெருமான் அடக்கிய செய்தியும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. தானவர்=அரக்கர்கள்;

ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு உகந்து

கூனிள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல

மானன மென் விழியாளொடும் வக்கரை மேவியவன்

தானவர் முப்புரங்கள் எரி செய்த தலை மகனே

வேட்டக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.66.7) திருஞானசம்பந்தர் பிராட்டியை மானின் விழி மலைமகள் என்று அழைக்கின்றார். கைதல்=தாழை; கழி=உப்பங்கழி; கானல்= சோலை; தேனிலவு=தேன் பொருந்திய; பானிலவு=பாலின் நிறம் பொருந்திய; பங்கயம்=தாமரை; பைங்கானல்= பசுமையான கடற்கரைச் சோலை; குருகு=பறவைகள்; வெண்குருகு=அன்னம்; கானல்=கடற்கரைச் சோலை; கைதல்=தாழை; இந்த பாடலில் மலைமகளை விட்டு பிரிந்தறியாதவர் பெருமான் என்று கூறுகின்றார். தனது உடலின் இடது பாகத்தில் பிராட்டியை நிலையாக பெருமான் ஏற்றுக் கொண்டுள்ள செய்தி இங்கே சொல்லப் படுகின்றது.

பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண் குருகு

கானிலவு மலர்ப் பொய்கைக் கைதல் சூழ் கழிக் கானல்

மானின் விழி மலைமகளொடு ஒரு பாகம் பிரிவறியார்

தேனிலவு மலர்ச் சோலைத் திருவேட்டக் குடியாரே

இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.101.6) திருஞானசம்பந்தர் பிராட்டியை பிணை நோக்கி என்று குறிப்பிடுகிறார். பிணை=பெண்மான்; கணை பிணை=அம்புகள் பொருந்திய; வெஞ்சிலை=கொடிய வில்; காமன் தனது செயலில் எப்போதும் வெற்றியே காண்பதாலும், காமனின் அம்பால் தைக்கப் பட்டவர்கள் காதல் நோயால் வாடுவதாலும், வெஞ்சிலை என்று கூறினார் போலும். இணை=இணையான;அணை=ஒன்றோடொன்று சேர்த்து; புல்கு=கட்டப்பட்ட; மான் போன்ற மருண்ட பார்வை கொண்ட கண்கள் உடைய பிராட்டியுடன் நடனம் ஆடும் இயல்பினை உடையவர் பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (3.10.3) திருஞான சம்பந்தர் சீதா பிராட்டியை, மானன நோக்கி என்று அழைக்கின்றார்.

கணை பிணை வெஞ்சிலை கையில் ஏந்திக் காமனைக் காய்ந்தவர் தாம்

இணை பிணை நோக்கி நல்லாளோடும் ஆடும் இயல்பினராகி நல்ல

இணை மலர் மேலன்னம் வைகு கானல் இராமேச்சரம் மேயார்

அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.95.1) அப்பர் பிரான், பிராட்டியை மான் பெட்டை நோக்கி என்று குறிப்பிடுகின்றார். சட்ட=முழுவதும்; அட்டுதல்=இடுதல்: பெண்களின் பார்வையில் ஒரு விதமான அச்சம் கலந்து இருப்பதால், பெண்களின் பார்வைக்கு மானின் மருண்ட பார்வையை ஒப்பாக கூறுவது இலக்கிய மரபு. அந்த மரபினைப் பின்பற்றி அப்பர் பிரான், மான் போன்ற மருண்ட பார்வை உடைய உமை அம்மை என்று இங்கே கூறுகின்றார். பெட்டை மான்=பெண் மான்; இந்த பாடலில் அப்பர் பிரான், இறக்கும் சமயம் என்று குறிப்பிடவில்லை. பொதுவாக நான் உன்னை மறக்கினும் நீர் என்னை குறிக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையே விடுக்கின்றார். கூற்றாயினவாறு என்ற பதிகம் பாடிய பின்னர், அப்பர் பிரானின் சிந்தனையில் சிவபெருமானின் நினைவுகளே எப்போதும் நிறைந்து இருந்தன என்பதை நாம் அவரது பெரிய புராண சரித்திரத்திலிருந்து அறிகின்றோம். எனவே அப்பர் பிரான் சிவபெருமானை மறக்கவே இல்லை. எனவே இந்த பாடல், தான் வாழும் நாளில் இறைவனை தான் மறந்தாலும் அப்போதும் இறைவனின் கருணை தன் பால் இருக்கவேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுவதாக அமைந்துள்ளது என்று கூறுவது பொருத்தம் அன்று.

வான் சொட்டச் சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலே

தேன் சொட்டச் சொட்ட நின்றட்டுத் திருக் கொன்றை சென்னி வைத்தீர்

மான் பெட்டை நோக்கி மணாளீர் மணிநீர் மிழலையுளீர்

நான் சட்ட உம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே

வானத்திலிருந்து தனது ஒளியினை சொட்டு சொட்டாக மண்ணில் வீழ்த்தும் நிலவினை, பிறையாகச் சடையில் அணிந்து, அந்த சந்திரனின் அருகில் தேன் சொட்டும் கொன்றை மலர்களை அணிந்துள்ள இறைவனே, பெண் மானைப் போன்ற மருண்ட பார்வையினை உடைய உமை அம்மையின் கணவரே, பளிங்கு போன்று தெளிந்த நீரினை உடைய மிழலைத் தலத்தில் உறைபவரே, அடியேன் நான் இறக்கின்ற தருணத்தில் உம்மை முழுவதும் மறந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் உமது கருணைப் பார்வை என் மீது விழவேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.1.3) அப்பர் பிரான், பிராட்டியின் பார்வைக்கு மானின் பார்வையை ஒப்பிடுகின்றார். கருமான்=யானை; அதள்=தோல்; வீக்கி=கட்டி; கனை கழல்=ஒலி எழுப்பும் கழல்கள்; கழல்கள் காலில் அணியும் ஒரு ஆபரணம் ஆகும். மானம்=பெருமை; மடித்து என்ற சொல் மட்டித்து என்று மருவியது; மானேர் நோக்கி=மானைப் போன்ற மருண்ட பார்வையினை உடைய பார்வதி தேவி; இந்த பாடல் சிவபெருமானது ஆடல் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றது. வாண்முகம்=வாள்முகம்=வாள் போன்று ஒளியினை வீசும் முகம். தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையை அடக்கி, அதன் தோலை உரித்து, அந்த தோலை மேலாடையாகத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டு, தனது காலில் அணிந்திருக்கும் கழல்கள் எழுப்பும் ஒலி மற்ற ஒலிகளுடன் கலக்குமாறும், கையில் அனல் ஏந்தியும், பெருமைக்குரிய தோள்கள் மடிந்து அசையுமாறும், வளர்கின்ற பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தும் சிவபெருமான் நடனம் ஆடுகின்றான். மானைப் போன்று மருண்ட பார்வையை உடையவளும், ஒளி வீசும் முகத்தைக் கொண்டவளும் ஆகிய பார்வதி தேவி, இந்த அழகிய நடனத்தைக் கண்டு ரசிக்கின்றாள். இவ்வாறு நடனம் ஆடும் பெருமானை, தேவர் கணங்கள், தங்களது தலையைத் தாழ்த்தி வணங்குகின்றார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த நடனம் ஆடும் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாட்கள் எல்லாம் வீணாகக் கழிக்கப்பட்ட நாட்கள் ஆகும்; அந்த நாட்களை வாழ்ந்த நாட்களாக கருதுவது தவறு என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கருமானின் உரி அதளே உடையா வீக்கிக் கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி

வருமானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர்மதியம் சடைக்கு அணிந்து மானேர் நோக்கி

அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற

பெருமானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

அடிகளாகிய அடிகள் என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (7.33.4) சுந்தரர், பிராட்டியை மானை மேவிய கண்ணினாள் என்று அழைக்கின்றார். பால் நெய் தேன் முதலிய பல பொருட்கள் கொண்டு பெருமானை நீராட்டும் வழக்கம் இங்கே குறிப்பிடப் படுகின்றது. பானெய்=பால் நெய்; அடிகள்=தலைவர்; செய்யர்=சிவந்த திருமேனி உடையவர்; பொன்னார் திருமேனி மேல் வெண்மை நிறம் கொண்ட திருநீற்றினை பூசிக் கொண்டுள்ள பெருமான், பொன் மலையின் மீது பொருந்தி இருக்கும் வெள்ளிக் குன்று போன்று விளங்குகின்றார் என்ற அப்பர் பிரானின் திருவாய்மொழி நமது நினைவுக்கு வருகின்றது.

தேனை ஆடு முக்கண்ணரோ மிகச் செய்யரோ வெள்ளை நீற்றரோ

பானெய் ஆடலும் பயில்வரோ தமைப் பற்றினார்கட்கு நல்லரோ

மானை மேவிய கண்ணினாள் மலை மங்கை நங்கையை அஞ்சவோர்

ஆனை ஈருரி போர்ப்பரோ நமக்கு அடிகளாகிய அடிகளே

திருக்கச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.41.8) சுந்தரர், பிராட்டியை, மட மென்னோக்கி என்று அழைக்கின்றார். புரையும்=போன்ற; புலி சிங்கம் போன்ற மற்ற விலங்குகளின் பார்வை போன்று காண்போருக்கு அச்சம் ஊட்டாமல் நட்பினை வெளிப்படுத்தும் பார்வை மானின் பார்வை. அதே போன்று பிராட்டியின் கருணை விழிப் பார்வையும் எவர்க்கும் அச்சம் ஊட்டாது, காண்போருக்கு அஞ்சல் என்று சொல்லி அபயம் அளிக்கும் விதமாக அமைந்து உள்ளது என்பதை சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். செடியேன்=பாவம் செய்தவன்; முற்பிறவிகளில் தீய செயல்கள் செய்து பாவத்தை சேர்த்துக் கொண்ட உயிர்கள் தான் இந்த பிறவியில் இறைவனை நினைக்காது இருக்கும் நிலையில் உள்ளன என்பதை சுந்தரர் இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார்.

ஊனைப் பெருக்கி உன்னை நினையாது ஒழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்

கானக் கொன்றை கமழ மலரும் கடிநாறு உடையாய் கச்சூராய்

மானைப் புரையும் மட மென்னோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட

ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே

திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.55.8) சுந்தரர் மான் போன்ற மருண்ட பார்வை உடைய பார்வதி தேவி மகிழும் வண்ணம் பெருமை வாய்ந்த நடனம் புரிந்தவன் பெருமான் என்று கூறுகின்றார். இந்த நடனத்தின் போது, திரிபுரத்தில் வாழ்ந்த வந்த அடியார்களில் ஒருவர் முழவு வாத்தியத்தை இயக்கும் பேற்றினைப் பெற்றார் என்று கூறுகின்றார்.

மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்

காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்காக

மானை நோக்கியோர் மாநடம் மகிழ மணிமுழா முழக்க அருள் செய்த

தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே

திருப்பனையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.86.6) சுந்தரர் பிராட்டியை, மான் தோல்வியடைந்து ஓடும் வண்ணம் அழகிய பார்வை கொண்டவள் என்று கூறுகின்றார். மா= விலங்கு; இங்கே மானை குறிக்கும். மாவிரி=மா இரி என்று பிரித்து பொருள் கொள்ள வேண்டும். இரிதல்=தோல்வி அடைந்து ஓடுதல்;

காவிரி புடை சூழ் சோணாட்டவர் தாம் பரவிய கருணையங் கடல்

பா விரி புலவர் தாம் பயிலும் திருப்பனையூர்

மா விரி மட நோக்கி அஞ்ச மதகரி உரி போர்த்து உகந்தவர்

ஆவில் ஐந்து உகப்பார் அவரே அழகியரே

திருவாசகம் திருச்சதகம் பதிகத்தின் பாடலில் (8.5.38) மணிவாசக அடிகளார், பிராட்டியை, மான் அன நோக்கி என்று குறிப்பிடுகின்றார். பிராட்டி அழகில் மான் போன்ற சாயலை உடையவள் என்று கூறுகின்றார். தேறல்=கரும்பின் தெளிந்த சாறு; தேன் உடல் நலத்தையும் இதயத்திற்கு உரத்தையும் தரவல்லது. பசு நெய் அறிவினை வளர்க்க உதவும்; கருப்புச் சாறு உடலுக்கு குளிர்ச்சியும் ஊக்கமும் தரவல்லது. பெருமான் இந்த மூன்று பலன்களையும் தரும் வல்லமை படைத்தவன் என்பதால், தேன் பசுவின் நெய், கரும்புச் சாறு என்று பெருமானை அழைக்கின்றார். இந்த மூன்று பொருள்களும் கலந்த கலவை தனிச்சுவை உடையதாகவும் விளங்குகின்றது. திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் இருந்த பெருமானை அடிகளார் கண்ட போது, அவருடன் பல சீடர்களும் இருந்தனர். பெருமானிடம் திருவடி தீட்சை பெற்ற அடிகளார் சிறிது நேரம் சமாதியில் ஆழ்ந்து விடுகின்றார். சமாதி நிலையிலிருந்து அடிகளார் விழித்தெழுந்த போது, அந்தணராக வந்த சிவபெருமானும் இல்லை, மற்ற சீடர்களும் இல்லை. தான் மட்டும் தனியே விடப்பட்ட நிலையை உணர்ந்த அடிகளார், அந்த நிலையை இங்கே உணர்த்துகின்றார். சிவபெருமான் தன்னுடன் அந்த சீடர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றதை குறிப்பிடும் அடிகளார், தான் எய்தாத அந்த பேற்றினை குறிப்பிட்டு வருந்துகின்றார். உடல் வருத்தத்தையும் பாராமல், பல வகையான இறை பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாது, உடல் வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு தான் வாழ்வதாக கூறுகின்றார். இவ்வாறு தான் வாழ்வதால், உயிருக்கு தான் எந்த விதமான நன்மையும் செய்யாமல், உயிருக்கு கெடுதியை செய்வதாக கூறுகின்றார்.

ஏனை யாவரும் எய்திடல் உற்று மற்று இன்னதென்று அறியாத

தேனை ஆன் நெய்யைக் கரும்பின் இன் தேறலைச் சிவனை என் சிவலோகக்

கோனை மான் அன நோக்கி தன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம்

ஊனை யான் இருந்து ஓம்புகின்றேன் கெடுவேன் உயிர் ஓயாதே

திருவாசகம் திருச்சதகம் அனுபோகசுத்தி பதிகத்தின் பாடலில் (8.5.55) மணிவாசக அடிகளார் பிராட்டியை மானேர் நோக்கி என்று அழைக்கின்றார். திருப்பெருந்துறை தலத்தினில் குருந்த மரத்தடியில் கீழே அந்தணனாக இருந்து தன்னை ஆட்கொண்டவர் சிவபெருமான் என்றும், அவர் தனது அருட் சக்தியாகிய பிராட்டி உடனாக வந்தார் என்பதையும் தான் புரிந்து கொண்டதை அடிகளார் இங்கே உணர்த்துகின்றார். உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு முக்தி உலகம் வந்தடைய வேண்டும் என்பதே பெருமானின் விருப்பமாக உள்ளது. அந்த விருப்பத்தையே, இங்கே பெருமானின் திருக்குறிப்பு என்று குறிப்பிடுகின்றார். அதனை உணர்ந்து கொண்டு, தங்களது மலங்களைக் கழித்துக் கொண்ட உயிர்கள் முக்தி உலகம் சென்றடைந்து, பெருமானின் திருப்பாதங்களைச் சார்ந்து வாழ்கின்றனர் என்று குறிப்பிடும் அடிகளார், தான் அவ்வாறு இல்லாத காரணத்தால், மீண்டும்மீண்டும் பிறப்பெடுத்து வேறுவேறு உடல்களுடன் சேர்ந்து வாழ்கின்றேன் என்று கூறுகின்றார்.

மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங்கு ஆட்கொண்ட

தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென் தில்லைக்

கோனே உன்றன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட

ஊனார் புழுக்கூடு இது காத்து இங்கு இருப்பது ஆனேன் உடையானே

திருவாசகம் திருச்சதகம் ஆனந்த பரவசம் பதிகத்தின் ஒரு பாடலில் (8.5.85) மணிவாசக அடிகளார் பிராட்டியை, மானேர் நோக்கி உடையாள் என்று குறிப்பிடுகின்றார். ஈறு=முடிவான பொருள்; மறை ஈறு=வேதங்களின் முடிவான பொருளாக கருதப்படும் உபநிடதங்கள்; வேதங்களும் உபநிடதங்களும் அறிய முடியாத பொருளாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. வேதங்களே அறிய முடியாத தன்மையில் இருக்கும் பெருமானை, சிந்தனைக்கு அரியாய் என்று குறிப்பிடுகின்றார். மருந்துடன் கலந்து கொடுக்கப் படும் தேன் உடற்பிணியை போக்குகின்றது. அமுதம் உட்கொண்டதால் தேவர்கள் மூப்பினை அடையாதவர்களாக விளங்குகின்றனர் என்று கருதப் படுகின்றனர். எனவே இவை இரண்டும் அனைவராலும் விரும்பப்படும் பொருட்களாக உள்ளன. பெருமான் தேன் போன்றும் அமுதம் போன்றும் தனக்கு இனியவனாக இருப்பதால், தான் பெருமானை விரும்புவதாக அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். நாமும் அவ்வாறு இறைவனை விரும்பி அவன் பால் அன்பு பாராட்ட வேண்டும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. உலகமும் உலகப் பொருட்களும் உலகத்திலுள்ள உயிர்களும் மாயையின் வயப்பட்டவை, எனவே அவை நிலையற்றவை. நிலையான இறைவனை மட்டுமே மெய்ப்பொருளாக கருதும் பெரியோர்கள், மாயையின் காரியங்கள் அனைத்தையும் பொய்யாக கருதுகின்றனர். அத்தகைய பொய்யான பொருட்களைச் சார்ந்து தான் இருப்பதால், அடிகளார், தான் பெருமானிடமிருந்து விலகி இருப்பதாக தன்னை கருதுகின்றார். இந்த பொய்யான பொருட்கள் அனைத்தும் பாசம் என்று ஒரு தொகுப்பாக சொல்லப் படுகின்றன. பாசத்தின் வலையிலிருந்து விடுபட்ட பெரியோர்கள், உண்மையான மெய்ப் பொருளை புரிந்து கொண்டு, அதனை நாடத் தலைப்படுவதால், அவர்கள் சிவமாநகர் என்று சொல்லப்படும் முக்தி உலகம் சென்றனர் என்றும் குறிப்பிடும் அடிகளார், தான் சார்ந்துள்ள பொய்யின் காரணமாக தான், முக்தி உலகத்தின் வெளியே இருப்பதாக புலம்புகின்றார். புறமே=முக்தி உலகத்தின் வெளியே; உயிர் தனது வினைகளின் தகுதிக்கு ஏற்ப தகுந்த உடலுடன் பிணைக்கப்பட்டு கருவி கரணங்கள் பொருத்தப் படுவதன் நோக்கமே, உடலுடன் பிணைந்த உயிர் இன்ப துன்பங்களை நுகர்ந்து தனது வினைகளை சிறிது சிறிதாக கழித்துக் கொண்டு, மெய்ப் பொருளை நாடத் தலைப்பட வேண்டும் என்பது தான். அதனை உணர்ந்து செயல்படுத்தாத எந்த உயிரும், தமக்குத் தாமே கொடுமைகள் புரிந்து கொள்ளும் உயிர்களாகவே கருதப் படுகின்றன. அத்தகைய கொடுமையை தானும் புரிந்து கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைய முடியாமல் இருக்கும் அவல நிலையை, கொடுமை பறைந்தேன் என்று அடிகளார் இங்கே உணர்த்துகின்றார். எனவே தான் பாசத்தை நீக்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தை இங்கே அடிகளார் வலியுறுத்துகின்றார்.

மானேர் நோக்கி உடையாள் பங்கா மறை ஈறு அறியா மறையோனே

தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும்

கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவமா நகர் குறுகப்

போனார் அடியார் யானும் பொய்யும் புறமும் போந்தோமே

திருவாசகம் குயிற்பத்து பதிகத்தின் பாடலில் (8.18.4) மணிவாசக அடிகளார், பிராட்டியை மானைப் பழித்து ஆண்ட மென்னோக்கி என்று குறிப்பிடுகின்றார். மானின் பார்வையினை வெற்றி கொண்டதாக பிராட்டியின் அழகிய பார்வை உள்ளது என்று கூறுகின்றார். பயிலும்=இடைவிடாது பழகும்; பெருமான் விண்ணுலகத்தில் இருப்பதை விடுத்து, மண்ணுலகில் பல தலங்களில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள் புரியும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. வானுலகம் போக பூமி; போகத்தை அனுபவிக்கும் தேவர்களுக்கு இறை சிந்தனை தோன்றுவதில்லை. வானவர்கள் தாங்கள் இடர்ப்படும் போது தான் இறைவனைப் பற்றி நினைக்கின்றனர். ஆனால் நிலத்தில் வாழும் அடியார்கள் பலரும் எப்போதும் இறைவனை நினைக்கும் தன்மை உடையவர்களாக இருக்கின்றனர். எனவே இறைவன், வானுலகத்தை இகழ்ச்சிக்கு உரியதாக கருதி, மண்ணுலகத்தை அதனினும் உயர்ந்ததாக கருதி, நிலவுலகில் உறைகின்றான். இந்த அரிய வாய்ப்பினை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையும் இங்கே சொல்லப் படுகின்றது. உயிர் கொண்டுள்ள சிவானுபவம் மேன்மேலும் முதிர்ச்சி அடைய, தனது உடலில் புகுந்த இறைவன் சித்தத்தில் புகுந்துள்ளான் என்பதை உயிர் உணர்கின்றது. சித்தம் தானே உடல் உறுப்புகளை செயல் படுத்துகின்றது. சித்தத்தில் புகுந்த இறைவன் தான் வேறு உயிர் வேறு என்ற நிலையில் இல்லாமல், இரண்டறக் கலந்து விட்டதை குறிப்பிடும் வகையில், தனது உணர்வாகவே சிவம் மாறி விட்டதை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார்.

தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ

வான் பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்

ஊன் பழித்து உள்ளம் புகுந்தென் உணர்வது ஆய ஒருத்தன்

மான் பழித்து ஆண்ட மென்னோக்கி மணாளனை நீ. வரக் கூவாய்

திருவாசகம் அடைக்கப் பத்து பதிகத்தின் பாடலில் (8.24.5) மணிவாசக அடிகளார் பிராட்டியை, மான் அன்ன நோக்கி என்று குறிப்பிடுகின்றார். கூழை=கூந்தல்; சுருள் புரி கூழையர்=சுருண்ட கூந்தலை உடைய மகளிர்; இருள்=அறியாமை; ஆக்கை=உடல்; எய்த்தல்=இளைத்தல்; வெருள்= வெருட்சி, அச்சம்; திறம்=பெருமான் நமக்கு புரிந்த பல விதமான நன்மைகள்; இல்லற சுகத்தில் ஆழ்ந்து பெருமானை, பெருமானது கருணைத் திறத்தினை, தான் மறந்ததாக அடிகளார் இந்த பாடலில் குறிப்படுகின்றார். திருப்பெருந்துறை தலத்தில் பெருமானால் ஆட்கொள்ளப் பட்ட பின்னர், அடிகளார் எப்போதும் பெருமானை நினைத்தவராக வாழ்ந்ததை நாம் அறிவோம். எனவே இந்த பாடலில் குறிப்பிடப் பட்டுள்ள தன்மை, நம்மைப் போன்றவர்களுக்கே பொருந்தும். இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் பலரும், பெருமானின் கருணைத். திறத்தினை அறியாதவர்கள் அல்லர். எனினும் உலகியல் வாழ்க்கையில் அவர்கள் காணும் சிற்றின்பங்கள், இறைவனின் தன்மையை அவர்கள் மறக்குமாறு செய்கின்றது. இருட்டறையில் உள்ளவர்களுக்கு அந்த அறையில் உள்ள பொருட்கள் புலப்படாமல் போவது போன்று, உடலில் புகுந்த உயிர்களுக்கு உடலின்பம் தவிர வேறேதும் தெரிவதில்லை. இருட்டறையில் இருளன்றி வேறேதும் காணப்படாதது போன்று, உடலில் புகுந்த உயிருக்கு அறியாமை ஆகிய இருள் தவிர்த்து வேறேதும் காணப்படுவதில்லை. இந்த தன்மையைத் தான், இருள் புரி யாக்கையில் கிடந்து எய்த்தேன் என்று அடிகளார் உணர்த்துகின்றார். இந்த அவல நிலையிலிருந்து தன்னைக் காப்பாற்றும் ஆற்றல் உள்ளவர் பெருமான் ஒருவர் தான் என்பதால், பெருமானே நீயே எனக்கு உற்ற துணை என்று குறிப்பிட்டு, உன்னிடம் அடைக்கலமாக புகுகின்றேன், அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார்.

சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு உன் திறம் மறந்திங்கு

இருள் புரி ஆக்கையிலே கிடந்து எய்த்தனன் மைத்தடங் கண்

வெருள் புரி மான் அன்ன நோக்கி தன் பங்க விண்ணோர் பெருமான்

அருள் புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

திருவாசகம் குழைத்த பத்து பதிகத்தின் பாடலில் அடிகளார் (8.33.4) பிராட்டியை மானேர் நோக்கி என்று அழைக்கின்றார். ஊனே புக என் தனை நோக்கி உழலப் பண்ணுவித்திட்டாய் என்று, தான் இந்தப் பிறவி எடுக்க நேரிட்டதை மணிவாசகர் குறிப்பிடுவதால், சென்ற பிறவியின் நினைப்பு அவருக்கு உள்ளது என்று நாம் கொள்ளலாம். சென்ற பிறவியில் உனது புகழைப் பாடிக் கொண்டு இருந்த என்னை, உனது பெருமையை மறக்கச் செய்து, இந்தப் பிறவி எடுக்குமாறுச் செய்தவனே என்று இறைவனை அழைக்கின்றார். சென்ற பிறவியில் நான் உன்னை மறக்குமாறு செய்ததால், எனது அறியாமையை நீ அறிந்திருக்க வேண்டும் (நீ ஏற்படுத்திய அறியாமை அல்லவா). எனவே அந்த அறியாமையை நீக்கி, கன்று தனது தாய்ப் பசுவை அடையாளம் கண்டு கொள்வது போல், நான் உன்னை அடையாளம் காண, தாய்ப்பசு கன்றினை அழைப்பது போல் நீ என்னை அழைக்கவேண்டும் என்று இங்கே மணிவாசகர் வேண்டுகின்றார். அறியாமையை விளைவிக்கும் உடலினுள் உயிர் புகுந்ததால், தான் சென்ற பல பிறவிகளில் நினைத்திருந்த இறைவனை, இப்போது நினைக்காத நிலைக்கு தள்ளப்பட்டேன் என்று அடிகளார் கூறுகின்றார். இவ்வாறு தன்னை தள்ளியது பெருமான் தான் என்பதால், பெருமான் தான், தன்னை, அந்த பள்ளத்திலிருந்து வெளியே வருவதற்கு கை கொடுத்து தூக்கி விட வேண்டும் என்று வேண்டுகின்றார். பெருமானின் அருள் இன்றி, அந்த பள்ளத்திருந்து வெளியே வர முடியாமல் தான் தவிப்பதை பெருமான் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பெருமான் தான் தன்னை அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இறைஞ்சுகிறார். அந்த நாள் எந்நாளோ என்று ஏங்குவதாகவும் கூறுகின்றார். அத்தகைய ஏக்கத்தை நாமும் வளர்த்துக் கொண்டு பெருமானின் அருளுக்கு காத்திருக்க வேண்டும் என்பதே இந்த பாடலின் மையக் கருத்து. போற்றித் திருவகவலில் மானேர் நோக்கி மணாளா என்று பெருமானை அடிகளார் அழைக்கின்றார்.

மானேர் நோக்கி மணவாளா முன்னே நின் சீர் மறப்பித்து இவ்

ஊனே புக என்றனை நூக்கி உழலப் பண்ணுவித்திட்டாய்

ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள் செய்து

கோனே கூவிக் கொள்ளும் நாள் என்றென்று உன்னைக் கூறுவதே

திருக்கோவையார் பாங்கற் கூட்டம் அதிகாரத்தின் பாடலில் மணிவாசக அடிகளார் பிராட்டியை மான் மட நோக்கி என்று குறிப்பிடுகின்றார். கோம்பி=பச்சோந்தி; ஒதுங்கி=பயந்து கொண்டு; மேயா=வெளியே வாராது பதுங்கும்; மஞ்ஞை=மயில்; குஞ்சரம்=யானை; கோள்=தீங்கு; பணை= பருத்த; தேம்பல்=மெலிந்த; யானைக்கும் தீங்கு இழைக்கும் வல்லமை வாய்ந்த பாம்பினைக் கொத்திக் கிழிக்கும் ஆற்றல் வாய்ந்த மயில், பச்சோந்திக்கு பயந்து கொண்டு ஒளிந்து கொள்கின்றது. அதே போன்று, பருத்த முலைகளின் தன்மையால் ஒடுங்கி நிற்கும் தலைவியின் மெலிந்த இடையின் அழகால் கவரப்பட்ட தான், பெருமானின் திருவடித் தாமரைகளை நினைக்கும் ஆற்றல் இழந்து விட்டேன் என்று தலைவன் சொல்வதாக அமைந்த பாடல். தலைவியின் அழகு, தன்னை அனைத்தையும் மறக்கச் செய்ததாக கூறுகின்றார். சிவத்தைக் கண்ட ஆன்மா, தான் அனைத்தையும் மறந்த நிலையில் இருப்பதாக கூறுகின்றது என்பதே இந்த பாடலின் உட்கருத்து.

கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை குஞ்சரம் கோள் இழைக்கும்

பாம்பைப் பிடித்து படம் கிழித்தாங்கு அப் பணை முலைக்கே

தேம்பல் துடி இடை மான் மட நோக்கி தில்லைச் சிவன் தாள்

ஆம் பொன் தடமலர் சூடும் என் ஆற்றல் அகற்றியதே

திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.20.4) கண்டராதித்தச் சோழர், பிராட்டியை, மானைப் புரையும் மட மென்னோக்கி என்று அழைக்கின்றார். புரையும்=போன்ற; இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சிற்றம்பலத்துக் கோனை கூடும் நாள் எந்நாளோ என்று தனது ஏக்கத்தை சோழர் தெரிவிக்கின்றார்.

மானைப் புரையும் மட மென்னோக்கி மாமலையாளோடும்

ஆனஞ்சு ஆடும் சென்னி மேலோர் அம்புலி சூடும் அரன்

தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக்

கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவது என்று கொலோ

பொழிப்புரை:

வானில் உலவும் சூரியன் சந்திரன் போன்று நிலையான ஒளி வீசும் சென்னியில் வன்னி, காடுகளில் வளர்வதும் தேன் நிறைந்ததுமான கொன்றை மலர்கள், தானே வந்து விழுந்த கங்கை நதி, ஒற்றைப் பிறைச் சந்திரன் ஆகியவற்றை தனது சடையினில் சூட்டிக் கொண்டுள்ள இறைவன், மான் போன்று மருண்ட பார்வை கொண்ட பார்வதி தேவி கண்டு உவக்கும் வண்ணம் மாலை நேரத்தில் நடனம் ஆடுகின்றார். இத்தகைய பண்புகள் கொண்ட பெருமான், தனது நெற்றியில் கண் உடையவரும், முக்திச் செல்வத்தை உடையவரும், எருதினைத் தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களிலும் திரிபவரும் ஆகிய பெருமான் கானூர் தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.

பாடல் 2:

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 1 தொடர்ச்சி மற்றும் பாடல் 2(திதே 0754)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0755)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 2 தொடர்ச்சி மற்றும் பாடல் 3 (திதே 0756)

நீத்தலாகா வெள்ளம் மூழ்கு நீள்சடை தன் மேலோர்

ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆரப்

போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போலாம்

காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே

விளக்கம்:

இந்த பதிகத்தின் சில பாடல்கள் அகத்துறை வகையில் அமைந்த பாடல்களாக உள்ளன. தாருகவனத்து மகளிரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த பாடல்கள் என்று கூறுவார்கள். பிச்சைப் பெருமானாக, தனது கையினில் ஓட்டினை ஏந்தியவராக பலியேற்க தாருகவனம் சென்ற பெருமானின் அழகினால் கவரப்பட்டு, முனிவர்களின் மனைவியர் பலரும், தங்களையும் அறியாத நிலையில், தாங்கள் இல்லத்தில் செய்து கொண்டிருந்த வேலைகளை பாதியிலே விட்டுவிட்டு, பெருமானின் பின்னே தொடர்ந்து சென்றதாக புராணம் கூறுகின்றது. அன்று, தாங்கள் வாழ்ந்து வந்த இல்லங்களின் வழியே வீதிவலம் வந்த பெருமானின் கோலத்தினை, தனது அழகிய வாயினால் இனிமையான சொற்கள் கொண்டு பலி இடுவீர்களாக என்று கேட்டதை நினைக்கும் தாருகவனத்து மகளிரின் தன்மையை எடுத்துரைக்கும் பாடலாக உள்ளது.

பைஞ்ஞீலி தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகத்தின் (7.36) பாடல்களும் இவ்வாறே அமைந்துள்ளன. நீந்தலாகா வெள்ளம்=நீந்திக் கடக்க முடியாத அளவு பெருகிய வெள்ளம்; மூழ்கு=மூழ்கி மறைந்த; ஏய்ந்த=பொருந்த; போந்த=வாயிலிருந்து வெளிவந்த; மைந்தர்=ஆண்மகன்; கோணல்=வளைந்த; வெகு நாட்களாகத் தன்னை விட்டு பிரிந்திருக்கும் தலைவனின் வருகையை ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிற்கும் தலைவி, கடந்த நாட்களில் தலைவனுடன் தான் சேர்ந்திருந்த இனிமையான பொழுதுகளை நினைத்து அசை போடும் தலைவியின் தன்மையை குறிப்பிடும் சங்க இலக்கியப் பாடல்களைப் போன்று இந்த பாடல் அமைந்துள்ள விதம் ரசிக்கத் தக்கது. தனது உள்ளம் கவர்ந்த தலைவன் பெருமான் தான் என்பதை சுட்டிக் காட்டும் வண்ணம் பெருமானின் சடையில் உள்ள பொருட்கள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. இந்த பாடல் போன்றே வரும் பாடல்களிலும் இறைவனின் அடையாளத்தினை சுட்டிக் காட்டும் சம்பந்த நாயகி, இறைவனை தனது உள்ளம் கவர்ந்த கள்வன் என்று கூறுகின்றாள். எப்படியெல்லாம் தனது உள்ளம் கவரப்பட்டது என்பதை விரிவாக கூறும் நோக்கம் தான் என்னே. அந்த அடையாளங்கள் கொண்ட இறைவனை நாம் கண்டு சம்பந்த நாயகியுடன் சேர்த்து வைத்து அவளின் துயர நிலையினை மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.

பைஞ்ஞீலி தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகத்தின் நான்காவது பாடலில் (7.36.4), பெருமான் தனது கையில் வைத்திருக்கும் பாம்பு தன்னை சங்கடத்தில் ஆழ்த்துகின்றது என்று மற்றொரு பெண் கூறுவதாக அமைந்துள்ளது. பெருமான் தனது கையினில் அணிந்துள்ள பாம்பு படம் எடுத்து ஆடுவதால், அவரை நெருங்கி பலி இடுவதற்கு தனக்கு அச்சமாக உள்ளது என்றும், அதே சமயத்தில் செந்தமிழில் வல்லவராக இருக்கும் பெருமானுக்கு பலி இடாமல் செல்வதற்கு மனது ஒப்பவில்லை என்றும் கூறும் பெண் தனது சங்கடத்திற்கான காரணத்தை இந்த பாடலில் தெரிவிக்கின்றாள். ஆடியும் பாடியும் பிச்சை கேட்டு வந்த பெருமானின் அழகில் மயங்கிய பெண்மணி, நீர் இயல் இசை நாடகம் ஆகிய மூன்று தமிழிலும் வல்லவரோ, எங்கள் மனதினைகொள்ளை கொண்டு விட்டீரே என்று கேட்பதாக அமைந்த பாடல். பெருமான் மட்டுமா ஆடுகின்றார், அவருடன் சேர்ந்து அவரது கையில் இருக்கும் பாம்பும் படம் எடுத்து ஆடுகின்றது என்று பலியிட வந்த பெண்மணி உணர்த்தும் பாடலாக அமைந்துள்ளது.

செந்தமிழ் திறம் வல்லிரோ செங்கண் அரவம் முன் கையில் ஆடவே

வந்து நிற்கும் இது என் கொலோ பலி மாற்ற மாட்டோம் இடகிலோம்

பைந்தண் மாமலர் உந்து சோலைகள் கந்த நாறு பைஞ்ஞீலியீர்

அந்தி வானமும் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடல் புராணம் வளையல் விற்ற படலத்தில், தாருகவனத்து மகளிர் தாம் செட்டிப் பெண்களாக பிறந்து மதுரையில் வளர்ந்து, பெருமானிடம் வளையல் பெற்றனர் என்று கூறுகின்றார். இந்த படலத்தின் முதல் பகுதியில், பெருமானுக்கு பிச்சையிட வந்த மகளிர், பெருமானின் அழகிய வடிவத்தைக் கண்டு தாம் கொண்டிருந்த காதல் நிறைவேறாத ஏக்கத்தால் உடல் மெலியவே, தாம் பெருமானுக்கு பிச்சை இட்ட போது, சோறுடன் கலந்து தமது வளையும் பெருமானின் கபாலத்தில் விழுந்தது என்றும், அதனை மீண்டும் தருவீராக என்று கேட்டதாகவும் பரஞ்சோதி முனிவர் ஒரு பாடலில் கூறுகின்றார். இந்த கூற்று உணர்த்தும் கருத்து யாதெனின், பெருமான் மீது கொண்ட காதல் நிறைவேறாத ஏக்கத்தால் உடல் மெலிந்து விழுந்த வளையல்கள், தங்களது கையில் மீண்டும் சரியாக பொருந்துமாறு தமது உடல் மகிழ்ச்சியால் பூரிக்கும் வண்ணம், தங்களது விருப்பம், பெருமானுடன் சேர வேண்டும் என்ற விருப்பம் ஈடேற வேண்டும் என்று இறைஞ்சினர் என்பதே ஆகும். மேலும் தங்களது மனைவியரின் செயலால் கோபம் கொண்ட தாருகவனத்து முனிவர்கள், பெருமானிடம் தமது மனதினை பறி கொடுத்த அவர்கள், அடுத்த பிறவியில் செட்டிப் பெண்களாக பிறக்க வேண்டும் என்று சாபம் அளித்தனர் என்றும் கூறுகின்றார். சென்ற பிறவியில் தாம் பறித்துக் கொண்ட வளையல்களை மீண்டும் அந்த மகளிருக்கு அளிக்கும் நோக்கத்துடன், பெருமான் வளையல் வாணிகராக வந்தார் என்றும் கூறுகின்றார். திருவாசகம் சென்னிப்பத்து பதிகத்தின் மூன்றாவது பாடலில் (8.42.3) மணிவாசக அடிகளார், மங்கைமார் கையில் வளையும் கொண்டெம் உயிரும் கொண்டெம் பணி கொள்வான் என்று இந்த செய்தியை குறிப்பிட்டார் போலும்.

இந்த பாடலில் இனிமையான மொழிகளை பேசியவாறு இடுமின் பலி என்று பெருமான் கேட்டதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அத்தகைய திருமுறை பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.13.3) திருஞான சம்பந்தர், தாருகவனம் சென்று பெருமான் பிச்சை ஏற்றதை குறிப்பிடுகின்றார். பெய்தல்=இடுதல்; வரை=மலை, இங்கே குடகு மலை; உரை=சொற்கள், புகழ்ச் சொற்கள்; மடவார்=பெண்கள், இங்கே தாருகவனத்து முனிவர்களின் மனைவிகள்; உம்=ஒலிக்குறிப்பு; தாருக வனத்து முனிவர்களின் இல்லங்கள் சென்று அவர்களது மனைவியரிடம் பெருமான் பிச்சை ஏற்ற நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப் படுகின்றது. இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும் இந்த நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. சிவந்த நிறத்தில் உள்ளதும் மென்மையானதும் ஆகிய சடைகள் தாழும் வண்ணம் காட்சியளித்த பெருமான், வேதங்களின் பாடல்களை இசையுடன் பாடிய வண்ணம், தாருகவனத்து முனிவர்களின் இல்லங்கள் தோறும் சென்று பலி இடுவீர்களாக என்று கேட்டு அருள் புரிந்த பெருமான், உறையும் இடம் திருவியலூர் ஆகும். இந்த தலம், உம் என்ற ஒலியுடன் குடகு மலைச்சாரலில் எழும் அருவிகள் ஒன்று திரண்டு காவிரி நதியாக வர, அந்த நீரினால் பலரும் புகழ்ந்து பேசும் வண்ணம் செழித்து வளரும் வயல்கள் பொருந்திய நீர் வளம் மிகுந்த வியலூர் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செம்மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை தோறும்

பெய்ம்மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடமாம்

உம்மென்று எழும் அருவித் திரள் வரை பற்றிட உரை மேல்

விம்மும் பொழில் கெழுவும் வயல் விரிநீர் வியலூரே

புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.97.4) பெருமான் தொடர்ந்து பலியேற்கின்றார் என்பதை குறிப்பிட,பன்னாள் இடுமின் பலி என்று பெருமான் பல இடங்களிலும் திரிகின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். துன்னார்= பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்கள்; துணி செய்து=துண்டித்து; அரவும் மதியும் விளையாட என்ற தொடர் மூலம், பாம்பும் சந்திரனும் தங்களின் இடையே உள்ள பகையை மறந்து இருப்பதாக கூறுகின்றார். பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் பிரமனின் தலையையும் துண்டித்த பெருமான், மின்னல் போன்று ஒளிவீசும் தனது சடையினில் பாம்பும் சந்திரனும் தங்களின் இடையே உள்ள பகையினையும் மறந்து விளையாடும் வண்ணம், அவை இரண்டையும் தனது சடையில் பொருத்திக் கொண்டுள்ளார். அத்தகைய பெருமான், எனக்கு பலி இடுவீர்களாக என்று தாருக வனம் சென்றடைந்த பெருமான், வாழும் தலம், பொன் போன்று சிறந்ததாக மதிக்கப் படும் முப்புரி நூலினை அணிந்த அந்தணர்கள் வாழ்கின்ற புறவம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

துன்னார் புரமும் பிரமன் சிரமும் துணி செய்து

மின்னார் சடை மேல் அரவும் மதியும் விளையாட

பன்னாள் இடுமின் பலி என்று அடைவார் பதி போலும்

பொன்னார் புரி நூல் அந்தணர் வாழும் புறவம்மே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (1.97.3) திருஞான சம்பந்தர், பெருமான், தான் உலகத்தவர் அனைவர்க்கும் பற்றுக் கோடாக இருப்பதை உணர்த்திய வண்ணம் பலி கேட்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் இந்த தன்மையை புரிந்து கொள்ளும் நாம், நமது மலங்களை அவரது பிச்சைப் பாத்திரத்தில் இடுவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. என்றும் வற்றாத கங்கை நதி மற்றும் பிறைச் சந்திரன் பொதிந்து விளங்கும் சடையினில், புற்றினில் வாழும் இயல்பினை உடையதும் படமெடுத்து ஆடுவதும் ஆகிய பாம்பினை பெருமான் வைத்துக் கொண்டுள்ளார். அத்தகைய ஆற்றல் வாய்ந்த பெருமான், உங்களது மலங்களை என்னிடம் பிச்சையாக இட்டு எனது திருப்பாதங்களைப் பற்றிக் கொள்வீர் என்று உணர்த்தியவாறு நிலவுலகம் வந்தடைந்து உறைகின்ற தலம் சீர்காழி என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வற்றா நதியும் மதியும் பொதியும் சடை மேலே

புற்றார் அரவின் படமாடவும் இப்புவனிக்கோர்

பற்றாய் இடுமின் பலி என்று அடைவார் பதி போலும்

பொற்றாமரையின் பொய்கை நிலாவும் புறவம்மே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.56.5), இறைவன் ஒவ்வொரு நாளும் பலி ஏற்கின்றான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. எனவே பலி ஏற்பது அவனது தன்மை என்பதை நாம் உணர்கின்றோம். பெருமான் இன்றும் பலியேற்பதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நாம் நமது ஊனக் கண்களால் இறைவன் இவ்வாறு வருவதை காணமுடியாது: எனினும் இறைவன் வருவார் என்பதை எதிர்பார்த்து, விருப்பு வெறுப்பு ஏதுமின்றி நாம் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை ஒரே மாதிரியாக பாவித்து, நமது பழைய மலங்களை அவரிடம் சமர்ப்பிப்பதற்கு தயாராக இருந்தால், அவர் நமது பழைய வினைகளை முற்றிலும் கழித்து, நம்மைப் பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுவிப்பார் என்ற செய்தி இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. பிச்சை எடுப்பது என்பதே வேறு வழி இல்லாத காரணத்தினால் என்பதால், பிச்சை வேண்டுவோர் அப்போது பேசும் மொழிகளில் ஒரு வகையான வெறுப்பு கலந்திருக்கும். ஆனால், பெருமானோ, விருப்பத்துடன் பிச்சை எடுப்பதால் அவர் பேசும் மொழிகளும் இனிய மொழிகளாக இருக்கும் என்று பிரமபுரம் தலத்தின் மீது அருளிய இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நளிர்=குளிர்ந்த; உடலின் பல இடங்களில் பாம்பினையும் தனது கையில் மழுப்படையையும் ஏந்தியவனாக, அச்சம் தரும் கோலத்துடன் பிச்சை ஏற்கச் செல்லும் பெருமான், தனது இனிய மொழிகளால் அந்த அச்சத்தை நீக்கும் வண்ணம் செயல்படுகின்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார் போலும். மிகுந்த விருப்பத்துடன் பெருமானுக்கு பிச்சை அளிக்க வேண்டும் என்று சொல்வதன் மூலம், நாம் முழு மனதுடன் நமது மலங்களை பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் இட வேண்டும் என்று உணர்த்துகின்றார்

நச்சரவச் சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு

அச்சம் எழ விடை மேல் அழகார் மழு ஏந்தி நல்ல

இச்சை பகர்ந்து மிக இடுமின் பலி என்று நாளும்

பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஏழாவது பாடலில் (3.85.7) கரும்பு போன்று இனிய மொழிகளை பேசிய வண்ணம் பெருமான் பலி ஏற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றர். இக்கு=கரும்பு; இக்‌ஷு என்ற வடமொழிச் சொல் இக்கு என்று தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. இக்கு உக=கரும்பின் சுவை சொட்டச் சொட்ட; மிகுதலை=பெருமானின் கையிலிருந்து நீங்காத பிரம கபாலம்; சரிதையர்=பண்பினை உடையவர்; பாம்பினைத் தனது இடுப்பினிலும் ஆமை ஓட்டினைத் தனது மார்பினிலும் அழகுற பூண்டு கொண்டுள்ள பெருமான், கரும்பு போன்ற இனிய மொழியினை பேசியவராக, மண்டை ஓட்டினை ஏந்தியவராக பலி ஏற்கின்றார். அவர், கொக்கரை முழவம் குழல் ஆகிய இசைக்கருவிகள் இசைக்கப்படும் திருவிழாக்களை மிகவும் விரும்பும் பண்பினராக வீழிமிழலை தலத்தினில், நறுமணம் கமழும் தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அக்கினோடு அரவரை அணி திகழ் ஓளியதோர் ஆமை பூண்டு

இக்கு உக மலி தலை கலனென இடு பலி ஏகுவர்

கொக்கரை குழல் முழ விழவொடும் இசைவதோர் சரிதையர்

மிக்கவர் உறைவது விரை கமழ் பொழில் வீழிமிழலையே

ஆமயம் தீர்த்தென்னை என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (6.96.2) தனக்கு பலி இடவந்த பெண்களது அன்பையும் கொண்டவர் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு மூலம், தாருகவனத்து மகளிர் பெருமான் பால் தீராத காதல் கொண்டனர் என்பதை உணர்த்துகின்றார். வரை=மலை; வரை மார்பு=மலை போன்று பரந்தும் வலிமையுடனும் காணப்படும் மார்பு; முயங்க=பொருந்த; முது கேழல்=பெரிய பன்றி; மருப்பு=விலங்கின் கொம்பு; பூண்=ஆபரணம்; சுரி சங்கு=குவிந்த முகப்பினை உடைய சங்கு; துப்புரவார்=தூய்மை நிறைந்த, ஒளிவீசும் கிரீடங்ளை தங்களது தலையில் தாங்கிய தேவர்கள் பெருமானை வழிபட்டமை இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. செப்பு=அழகிய கிண்ணம்; அப்பலி=பண்டைய நாளில் தாருக வனத்து முனிவர்களின் மனைவியர் அளித்த பிச்சை; பன்றியாக அவதாரம் எடுத்து, ஒளித்து வைக்கப்பட்டு இருந்த பூமியினை மீட்டுத் தனது இரண்டு கொம்புகளின் இடையிலே தாங்கி வந்த திருமாலின் கொம்புகள் மிகுந்த வலிமை வாய்ந்தாகத் தானே இருக்க வேண்டும். அரக்கனின் உதிரத்தை குடித்ததால் மிகுந்த வெறி கொண்டு திரிந்த பன்றியை அடக்கி, தான் திருமாலை வென்றதன் அடையாளமாக பன்றியின் வலிமையான கொம்பினை ஒடித்தவர் சிவபெருமான். முப்புரி நூல்=மூன்று இழைகள் கொண்ட பூணூல். மூன்று பூணூல்களை அணிந்தவராக பெருமானை திருமுறை பாடல்கள் சித்தரிக்கின்றன. முப்புரி நூல் என்று சொல்லப்படும் பூணூலைத் தனது மார்பினில் பொருத்தியவர் பெருமான்; பெரிய பன்றியாக வடிவெடுத்த திருமால் வெறியுடன் திரிந்த போது அந்த பன்றியை அடக்கிய பெருமான், அந்த பன்றியின் உடலில் முளைத்த கொம்பினை ஒடித்துத் தனது மார்பினில் ஆபரணமாக அணிந்து கொண்டவர் ஆவார். அழகிய கிண்ணம் போன்ற வடிவுடன் அமைந்த மார்பகங்களைக் கொண்டவளும் இமயமலைச் சாரலில் வளர்ந்தவளும் ஆகிய உமையன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்; சிவந்த நிறத்தில் அமைந்துள்ள தனது திருமேனியின் மேல், வெண்ணீற்றினை பூசிக் கொண்டுள்ள பெருமான் தூய்மையான சுரி சங்கினால் செய்யப்பட்ட தோட்டினை காதினில் அணிந்தவர் ஆவார்; ஒளிவீசும் மணிமுடிகளை அணிந்துள்ள தேவர்கள் ஒன்று கூடி பெருமானைத் தொழுகின்றார்கள். பிச்சை ஏற்கச் சென்ற இடத்தில், தனக்கு பிச்சையிட வந்த தாருகவனத்து இல்லத்தரசிகளின் அன்பையும் கவர்ந்த பெருமான், அடியேனைத் தன்னுடைய அடிமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்று மிகுந்த பெருமையுடன் அப்பர் பிரான் குறிப்பிடும் பதிகம். பன்றியின் கொம்பு என்பதற்கு பன்றியின் கோரைப் பல் என்று பொருள் கொள்ள வேண்டும்.

முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார் முதுகேழல் முளை மருப்பும் கொண்டார் பூணாச்

செப்புருவமுலை மலையாள் பாகம் கொண்டார் செம்மேனி வெண்ணீறு திகழக்கொண்டார்

துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார் சுடர்முடி சூழ்ந்தடி அமரர் தொழவும் கொண்டார்

அப்பலி கொண்டு ஆயிழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆளுடைய அடிகளாரே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (6.96.6) அப்பர் பிரான், வாரடங்கு வன முலையார் மையலாகி வந்திட்ட பலியும் கொண்டார் வளையும் கொண்டார் என்று கூறுகின்றார். பளிங்கு= ஈசான முகத்தின் நிறம் என்றும் திருநீற்றின் வெண்மை என்றும் கூறலாம். ஈசனின் ஐந்து முகங்களும் ஐந்து நிறத்தில் அமைந்திருப்பதாக சொல்வார்கள்; கிழக்கு நோக்கி உள்ள முகமாகிய தத்புருஷம் பொன்னின் நிறத்திலும், தெற்கு முகமாக உள்ள அகோரம் கருமை நிறத்திலும் மேற்கு நோக்கிய சத்யோஜாதம் வெண்மை நிறத்திலும் வடக்கு நோக்கி உள்ள வாமதேவம் சிகப்பு நிறத்திலும் மேல்நோக்கி காணப்படும் ஈசான முகம் பளிங்கு நிறத்திலும் இருப்பதாக கூறுகின்றனர். இதனையே நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் என்று மணிவாசகப் பெருமான் சிவபுராணத்தில் கூறுகின்றார். பாரிடங்கள்=பூத கணங்கள்; கருவி= இசைக்கருவி; ஒற்றியூர்= அடமானம் வைக்கப்பட்ட ஊர்; தன்னைச் சூழ்ந்துள்ள பூத கணங்கள் பல வகையான இசைக் கருவிகளை தொடர்ந்து இசைக்க, செம்பவள திருமேனியில் பளிங்கு நிறத்தில் உள்ள திருநீற்றினை பூசிய பெருமான், கங்கை நங்கை அடங்கியுள்ள சடைமுடியில் பிறைச் சந்திரனைக் கொண்டுள்ளார். தனது அழகான மிடற்றினில், நீல நிறம் மிளிருமாறு நஞ்சினைத் தேக்கியுள்ள பெருமானார், தனக்கு பிச்சையிட்ட தாருகவனத்து இல்லத்தரசிகள், கச்சையால் இழுத்து கட்டப்பட்ட மார்பகங்களை உடையவர்களாய் பலி கொண்டு வந்து இட்ட போது, தனது அழகினால் அவர்களது மனதினைக் கவர்ந்ததுமன்றி, தன் மீது அவர்கள் கொண்டிருந்த காதலால் உடல் இளைத்து அவர்களது வளையல்கள் கழன்று விழுமாறு செய்தார்; பல தலங்களைத் தனது ஊராக கொண்டுள்ள பெருமான், அடமானம் வைக்கப்பட்ட ஊர் என்ற பொருளில் அமைந்த திருவொற்றியூரையும் தனது ஊராகக் கொண்டு ஆட்சி செய்கின்றார். அவர் தாம் எனது உடலுக்கு உற்ற சூலை நோயினைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவராவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் பத்தாவது பாடலிலும் கடை முன்றில் பலி கொண்டார் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முன்றில்=முற்றம்; கடை=வீட்டு வாயில்;

பாரிடங்கள் பல கருவி பயிலக் கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார்

நீரடங்கு சடைமுடிமேல் நிலாவும் கொண்டார் நீலநிறம் கோல நிறை மிடற்றில் கொண்டார்

வாரடங்கு வன முலையார் மையலாகி வந்திட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார்

ஊரடங்க வொற்றி நகர் பற்றிக்கொண்டார் உடலுறுநோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே

கூடலையாற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.85.3) சுந்தரர், ஊர்தொறும் சென்று தான் வைத்திருந்த பிரம கபாலத்தில் பலி இடுவீர்களாக என்று கேட்ட பெருமான், தன்னுடன் பார்வதி தேவியையும் அழைத்துக் கொண்டு மழுப்படை ஏந்தியவராக சென்றார் என்று கூறுகின்றார். ஆர்வன்=பேரன்பு உடையவன்; திருமுதுகுன்றம் செல்வதற்கு விருப்பம் கொண்டவராக, முதுகுன்றம் செல்வதற்கான வழி யாது என்று சுந்தரர், தனக்கு எதிர்ப்பட்ட ஒரு முதியவரிடம் வினவ, அந்த முதியவரோ தானும் அந்த வழியில் செல்வதாக உணர்த்தி, வேண்டுமென்றே கூடலையாற்றூர் அழைத்து வந்ததை குறிப்பிட்டு, அவ்வாறு தன்னுடன் வந்த அந்தணர் பெருமான் தான் என்பதை உணராமல் இருந்த பேதையேன் என்று தன்னை சுந்தரர் குறிப்பிடுகின்றார். எனவே தான், தன்னுடன் நடந்து வந்த பெருமானின் செயலை அதிசயம் என்று இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் சுந்தரர் கூறுகின்றார். சுந்தரர் தனது வாழ்க்கையில், ஐந்து வேறுவேறு தருணங்களில் பெருமான் தனது முன்னே தோன்றியதை, முதலில் புரிந்து கொள்ளாமல் இருந்தார் என்பதை பெரிய புராணம் நமக்கு உணர்த்துகின்றது. முதியவராக வந்து அடிமை ஓலையை காட்டி நடக்கவிருந்த திருமணத்தை தடுத்தது, திருவதிகை சித்தவடம் மடத்தில் உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தின் மீது தனது காலை படுமாறு வைத்தது, குருகாவூர் வெள்ளடை செல்லும் வழியில் பந்தரின் கீழே அமர்ந்து தயிர் சாதமும் குளிர்ந்த நீரும் தந்து உபசரித்தது, கச்சூர் தலத்தினில் அருகில் இருந்த வீடுகளில் பிச்சை ஏற்று அந்த உணவினை சுந்தரருக்கு அளித்தது ஆகியவை மற்ற நான்கு நிகழ்ச்சிகள்;

ஊர்தொறும் வெண்டலை கொண்டு உண்பலி இடும் என்று

வார்தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே

கூர்நுனை மழுவேந்திக் கூடலையாற்றூரில்

ஆர்வன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே

இவ்வாறு இனிய மொழியில் பலி இடுவீர் என்று கேட்டவராக தாருகவனத்தில் பெருமான் உலவிய தன்மை, தாருகவனத்து மகளிரின் உள்ளங்களை கொள்ளை கொண்டது என்று திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.92.3) திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நெறிபடு குழலி=தழைந்த சடையினை உடைய கங்கை நதி; போழ்ந்த=பிளவு பட்ட; மிசை=மேலே; சுலவி=சுற்றி வைத்து; செறி பொழில்=அடர்ந்து விளங்கிய சோலை; புள்ளிகள் கொண்ட பாம்பும் பிளவுபட்ட கூறாக விளங்கிய பிறைச் சந்திரனையும் சுருண்டு அழகுடன் விளங்கிய கூந்தலை உடைய கங்கை நதியையும் தனது சடையின் மேலே வைத்துக் கொண்டு திருநீறு பூசிய திருமேனியுடன் நடந்த பிச்சைப் பெருமான், நல்ல கிளி போன்று இனிய மொழிகளைப் பேசிய தாருக வனத்து மகளிரின் உள்ளங்களைக் கவர்ந்தார்; அத்தகைய அழகும் பண்பும் கொண்ட பெருமான், அடர்ந்த சோலைகள் உடைய திருநெல்வேலி தலத்தில் உறைகின்ற செல்வர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. செல்வர் என்று பெருமானை குறிப்பிடும் திருஞான சம்பந்தர், பிச்சைப் பெருமானாக வேடம் தரித்து வருவது, உயிர்களை உய்விக்கும் பொருட்டு என்பதையும், தனது உணவுத் தேவைக்காக பிச்சை ஏற்க வேண்டிய அவசியம் பெருமானுக்கு இல்லை என்பதையும் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

பொறி கிளர் அரவமும் போழிள மதியமும் கங்கை என்னும்

நெறி படு குழலியைச் சடை மிசைச் சுலவி வெண்ணீறு பூசிக்

கிறி பட நடந்து நற்கிளி மொழியவர் மனம் கவர்வார் போலும்

செறி பொழில் தழுவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே

பொழிப்புரை:

நீந்திக் கடக்க முடியாத வண்ணம் பெருவெள்ளத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி, தன்னைத் தாங்குவதற்காக சடையினை விரித்த வண்ணம் நிற்கும் பெருமானின் சடையினையும் கடந்து உலகினையே மூழ்கடித்து பாதாளத்துக்கு அடித்துச் நோக்கத்துடன் வேகமாக கீழே இறங்கி பாய்ந்து வந்த கங்கை நதி, வளைந்த ஒற்றைப் பிறைச் சந்திரன், பாம்பு, கொன்றை மலர்கள் ஆகியவற்றைத் தனது நீண்ட சடையில் தாங்கிய பெருமான், அழகான தோற்றத்துடன் வீதிவுலா வந்த பெருமான் அழகிய இனிமையான சொற்களைப் பேசி இன்பம் பயந்தார். அனைவரிலும் அதிகமான வல்லமை உடையவராக விளங்கும் பெருமான், திருநீற்றினை நறுமணம் தரும் சந்தனமாக கருதி தனது மேனி முழுவதும் பூசிக் கொள்கின்றார். அவரது இருப்பிடம் காந்தள் சடைகள் தழைத்து வளர்ந்து பூத்து நறுமணம் கமழும் கானூர் தலமாகும்.

பாடல் 3:

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 2 தொடர்ச்சி மற்றும் பாடல் 3 (திதே 0756)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0757)

சிறையார் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர்க் கொன்றை

மறையார் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார்

இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார்

கறையார் சோலைக் கானூர் மேய பிறையார் சடையாரே

விளக்கம்:

இறைவனே நேரில் தனது இல்லத்திற்கு வந்தார் என்று சம்பந்த நாயகி சொல்வதாக இந்த பாடல் அமைந்துள்ளது. பக்குவப்பட்ட ஆன்மாக்களைத் தேடி அவர்களின் அருகே சென்று, அவர்களது மலங்களைத் தனது கலத்தினில் பிச்சையாக ஏற்று அவர்களுக்கு முக்தி நிலை அருள்வது இறைவனுக்கு மிகவும் பிடித்த செய்கை அல்லவா. தனது இல்லம் இருக்கும் வீதிக்கு பெருமான் வந்ததை சென்ற பாடலில் குறிப்பிட்ட சம்பந்த நாயகி இந்த பாடலில் தனது இல்லத்திற்கு இறைவன் வந்ததாக குறிப்பிட்டு, இறைவன் பால் தீராத காதல் கொண்ட தன்னுடன் இறைவன் சேராமையால், தான் ஏக்கம் கொண்டு தனது அழகினை இழந்து நிற்கும் தன்மையை குறிப்பிடுகின்றாள். இந்த பாடலில் இறைவன் மறைகள் ஓதிய வண்ணம் வந்ததாக சம்பந்த நாயகி கூறுகின்றாள். மறைகள் ஓதி வந்தமையால் தனது கருத்தினைக் கவர்ந்த தலைவன், வஞ்சனை ஏதும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கை தனக்கு பிறந்ததாக உணர்த்தும் தலைவி, தனது அழகு குறைந்தது என்று குறிப்பிட்டு, தலைவனுடன் சேராத காரணத்தால் தான் ஏக்கம் கொண்டு உடலிளைத்தாக குறிப்பிட்டு, தனது அழகு குறைந்தது என்று கூறுகின்றாள். தனது அழகு குறைந்ததற்கு காரணம் இறைவன் என்பதால், இறையார் வந்து என் இல் புகுந்து எழில் நலமும் கொண்டார் என்று கூறுகின்றாள். விம்மு=நிறைந்து ததும்பும்; ஆர்=பொருந்திய; மால்= சிறப்பு வாய்ந்த; விடை=இடபம்; கறை=இருள்; செழித்து வளர்ந்த மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று பின்னைப் பிணைந்து இருப்பதால், சூரியனின் ஒளிக் கதிர்கள் ஊடுருவிச் செல்ல முடியாமல் இருள் சூழ்ந்து காணப்படும் சோலை என்பதனை உணர்த்த கறையார் சோலை என்று கூறுகின்றார். இந்த குறிப்பு மூலம் தலத்தின் நீர்வளமும் நிலவளமும் உணர்த்தப் படுகின்றது.

தேவார முதல்வர்கள் வாழ்ந்து வந்த காலத்தில், அந்தணர்கள் வேதங்களை முறையாக கற்று, தெளிவான பொருளுடன் மற்றவர்க்கு கற்பித்தும், வேத மந்திரங்களை ஓதி இறைவனைப் புகழ்ந்து வழிபட்டவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் வாழ்ந்து வந்த தன்மை பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. இந்த சூழ்நிலையில் வளர்ந்த சம்பந்த நாயகியும் இறைவன் வேதங்களை ஓதியவாறு தனது இல்லம் வந்தார் என்று கற்பனை செய்கின்றாள். அந்த சமயத்தில் அவரது சொற்களிலும் பண்பிலும் திருமேனி அழகிலும் தனது மனதினை பறிகொடுத்தாக கற்பனை செய்யும் தலைவி, இறைவன் தனது விருப்பத்தினை புரிந்து கொண்டு தனது காதலை ஏற்றுக்கொண்டு, தன்னை அவனுடன் இணைத்துக் கொண்டு அருள் புரிவார் என்று நம்பினாள். ஆனால் தனது எண்ணம் ஈடேறாமல் போகவே, வேதங்கள் ஓதிய இறைவன், தன்னை ஏமாற்றியதை குறித்து தனது ஏக்கத்தை தெரிவிக்கும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. உலகினில் இறைவன் ஒருவன் தானே ஆண்மகன்; அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்கும் அவரது திருவடிகளைச் சென்று அடைந்து, அவரிலிருந்து என்றும் பிரியாமல் இணைந்து வாழ வேண்டும் என்பது தானே அருளாளர்களின் விருப்பமாக மிளிர்ந்ததை நாம் பல பாடல்களில் காண்கின்றோம் அல்லவா. அந்த விருப்பம் தானே அனைத்து உயிர்களின் விருப்பமாகவும் இருக்க வேண்டும். இந்த விருப்பத்தினை வெளிப்படுத்தும் பாடலாக, தன்னை இறைவன் பால் தீராத காதல் கொண்ட பெண்ணாக உருவகித்துக் கொண்டு, திருஞானசம்பந்தர் அருளிய பாடல் இது. இந்த கருத்தினை ஒட்டி அல்லவா பசுபதி என்று நாம் அவனை அழைக்கின்றோம். பசு என்ற சொல் அனைத்து உயிர்களையும் குறிக்கும் சொல். பதி என்றால் கணவன் என்றும் தலைவன் என்றும் பொருள்.

அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.33.3) திருஞான சம்பந்தர், பாடிச் சென்றே பலி கேட்ட பெருமான் என்று கூறுகின்றார். சோலைகள் நிறைந்த தலம் என்று தலத்தின் நிலவளத்தை இதே பதிகத்தின் முந்தைய பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர் இந்த பாடலில் தலத்தின் நீர்வளத்தை உணர்த்துகின்றார். புற்றினில் பதுங்கி இருக்கும் காலம் தவிர்த்து எங்கும் ஊர்ந்து திரிந்து கொண்டிருக்கும் பாம்பினை, பெருமான் தனது சடையில் பொருந்தும் வண்ணம் வைத்திருக்கின்றார் என்று சொல்வதன் மூலம், பல இடங்களிலும் திரியும் அடியார்களின் மனதினை ஒரே இடத்தில் நிலையாக இருக்கும் வண்ணம் செய்யும் ஆற்றல் உடையவர் பெருமான் என்பதை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். எனவே நமது மனம் அலைபாயாது ஒரே இடத்தில் இருக்கச் செய்வதும் பெருமானின் கருணையால் தான் என்பது மிகவும் நயமாக உணர்த்தப் படுகின்றது. ஒலி பாடும் என்ற தொடருக்கு சான்றோர்கள் பெருமானின் கையில் இருக்கும் துடிக்கருவி எழுப்பும் ஒலி என்று உணர்த்துகின்றனர். துடியிலிருந்து பிறந்தது நாதம். அவ்வாறு பிறக்கும் நாதம் இருவகையாக செயல்படுவதாக கூறுகின்றனர். இறைவனின் அடியார்களுக்கு அந்த ஒலி நாதமாகவும், அல்லாதாருக்கு அந்த ஒலி நடுக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறுவார்கள். ஒலி என்பதற்கு வேதவொலி என்று பொருள் கொண்டு, பலியேற்கச் செல்லும் போது, பெருமான் வேத கீதங்கள் பாடிக் கொண்டு செல்வதை குறிப்பிடுவதாக பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. ஆர் பொழில்=நெருக்கமாக வளர்ந்து அடர்ந்து காணப்படும் சோலை; ஊர்ந்து பல இடங்களுக்கும் செல்லும் பாம்பினை ஒரே இடத்தில் பொருந்தும் வண்ணம் தனது சடையில் நிலை நிறுத்திய பெருமான், அனைவரிலும் உயர்ந்தவராகிய பரமர், உலகம் முழுதும் சென்று, வேத கீதங்களை ஓதியவாறு பல இடங்களுக்கும் சென்று, உயிர்கள் உய்யும் பொருட்டு, பலி ஏற்கின்றார். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான், நீரில் வாழ்ந்து நீரின் வழியே உணவு உட்கொள்ளும் கயல் மீன்களை, வயலில் உள்ள வாளை வரால் மீன்கள் உண்ணும் வண்ணம் நீர்வளம் நிறைந்த நிலங்களை உடைய அன்பில் ஆலந்துறை தலத்தில் பெருமான் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஊரும் அரவம் சடை மேல் உற வைத்துப்

பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்

நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு

ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.40.1) திருஞானசம்பந்தர், பெருமானை, வேதங்கள் ஓதியவாறு பலிக்கு சென்றார் என்று கூறுகின்றார். பொடி=திருநீறு; கொடியுடை=அழகிய கொடிகள் நிறைந்த; மிடறு=கழுத்து; கடி=நறுமணம்; வாகனத்தில் ஏறி பலர் புடை சூழ செல்வதால், பெருமான் பிச்சை ஏற்பது அவரிடம் ஏதும் இல்லாத காரணத்தால் அல்ல என்பதும், பெருமான் பிச்சை ஏற்றாலும் தலைவனாக உள்ளார் என்பதும் உணர்த்தப் படுகின்றது. தனது திருமேனி முழுவதும் திருநீறு பூசியவரும் போர்க்குணம் கொண்டுள்ள எருதினைத் தனது வாகனமாகக் கொண்டு பூத கணங்கள் புடை சூழ, செடிகொடிகள் நிறைந்த பல ஊர்கள் சென்று வேதங்களை சொல்லியவாறு பிச்சை ஏற்கச் செல்பவரும், அழகிய உருவமும் வாள் போன்று நீண்டு கூர்மையாக உள்ள கண்களும் கொண்டுள்ள உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவரும் ஆகிய பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று, உலகத்தவர் வாழும் பொருட்டு பாற்கடலில் இருந்து எழுந்த நஞ்சினை உண்டு அதனைத் தனது கழுத்தினில் தேக்கி கருமை நிறத்து கறை தெரியும் வண்ணம் தோற்றம் அளிக்கும், இறைவனின் திருப்பாதங்களில் நறுமணம் மிகுந்த சிறந்த மலர்களை தூவி, அவனது திருவடிகளை பணிந்து வணங்கி காண்போமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொடியுடை மார்பினர் போர் விடை ஏறிப் பூதகணம் புடை சூழக்

கொடியுடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு பலபல கூறி

வடிவுடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்க்

கடிகமழ் மாமலர் இட்டுக் கறை மிடற்றான் அடி காண்போம்

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.2.1) திருஞான சம்பந்தர், பலி ஏற்கச் சென்ற போது, தொடர்ந்து பாடல்கள் பாடியவாறு சென்றார் என்று கூறுகின்றார். விண்டு=விரிந்து, விரிதலால்; விரை=நறுமணம்; விம்மி=தொடர்ந்து, இடைவிடாமல்; நசை=ஆசை; தொண்டு= தொண்டர்கள்; பிச்சை எடுப்பவர்கள் தங்களது வருகையை அறிவிக்கும் முகமாக குரல் கொடுப்பதை நாம் இந்நாளிலும் காண்கின்றோம். அவ்வாறு தனது வருகையை அறிவிக்கும் முகமாக பெருமான் வேத கீதங்கள் பாடியவாறு பலிக்கு செல்கின்றார். பெருமானின் திருமேனி சுடர் போன்று ஒளி வீசி பிரகாசிப்பதால், அந்த ஒளியே பெருமானின் வருகையை சுட்டிக் காட்டும் வண்ணம் இருப்பதால், பெருமான் எதற்காக பாடவேண்டும் என்று திருஞானசம்பந்தர் வினவியதாக சிலர் விளக்கம் அளிக்கின்றனர். ஆனால் இந்த பதிகத்தின் மற்ற பாடல்கள் உணர்த்தும் பொருளுடன் ஒப்பிட்டு பார்க்கையில், மேற்கண்ட விளக்கம் பொருத்தமற்றது என்று தோன்றுகின்றது. பெருமானை நோக்கி பலி ஏற்கச் சென்றதன் காரணம் யாது என்று திருஞான சம்பந்தர் கேட்பதாக பொருள் கொள்வதே பொருத்தமாக உள்ளது. ஒலிபாடல் என்ற தொடரை வினைத்தொகை என்று அடையாளம் கொண்டு, ஒலித்த பாடல், ஒலிக்கும் பாடல், ஒலிக்கவிருக்கும் பாடல் என்று பொருள் கொண்டு, பண்டைய நாளில் பாடி பலியேற்ற பெருமான், இன்றும் அவ்வாறு பாடுகின்றார் என்றும் நாளையும் அவ்வாறு பாடிய வண்ணம் பலியேற்பார் என்று திருஞானசம்பந்தர் உணர்த்துவதாக விளக்கம் அளிப்பது பொருத்தமாக உள்ளது. சோலைகளின் அரும்புகள் எல்லாம் விரிந்து மலர்ந்து எங்கும் நறுமணத்தை பரப்புவதால், அந்த நறுமணத்தின் மூலம் மலர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் வண்டுகள், அந்த மலர்கள் இருக்கும் இடத்தினை நாடி வந்து, அந்த மலர்களில் உள்ள குளிர்ந்த தேனைப் பருகும் விருப்பத்துடன் நெருங்குகின்றன. அத்தகைய களிப்பின் மிகுதியால் இடைவிடாமல் தொடர்ந்து இசை பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகள் உடையது திருவலஞ்சுழி தலமாகும். இந்த தலத்தினில், தொண்டர்கள் புகழ்ந்து போற்றும் வண்ணம் வீற்றிருப்பவரும் ஒளிவீசும் திருமேனியை உடையவரும் ஆகிய இறைவனே, பண்டைய நாளில் தாருகவனத்தில் தேர்ந்தெடுத்த வேத கீதங்களை பாடியவாறு, ஆங்கே இருந்த இல்லத்தரசிகளிடம் பலி ஏற்பதற்கு சென்ற காரணம் யாதோ, நீர் சொல்வீராக என்று பெருமானை நோக்கி திருஞான சம்பந்தர் கேள்வி கேட்பதாக அமைந்த பாடல்.

விண்டு எலாம் மலரவ் விரை நாறு தண் தேன் விம்மி

வண்டெலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழித்

தொண்டெலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர்

பண்டெலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே

திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.4) திருஞான சம்பந்தர், பெருமானை மறை ஓதியவாறு பலி கேட்பவர் என்று குறிப்பிடுகின்றார். போது=மலர்கள்; புகை=ஓமம் வளர்த்து செய்யப்படும் வேள்விகள்; தூபம் காட்டி வழிபடுதல் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே, உய்த்தே=வாழ்வினில் உய்வினை அடையும் நோக்கத்தோடு; போதினாலே வழிபாடு=காலம் தவறாமல் செய்யப்படும் வழிபாடு; நாலும்=தொங்கும் கயிறு; உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது கொண்டுள்ள பாசம் எனப்படும் பிணைப்பு தான், நாம் செய்யும் பல தீய செயல்களுக்கு மூல காரணமாக உள்ளது. எனவே இவற்றை நீக்கிக் கொள்ள வேண்டி சான்றோர்களும் முனிவர்களும் கடுமையான முயற்சி மேற்கொண்டு அவற்றை நீக்கிக் கொள்கின்றனர். ஆனால் இயற்கையாகவே பாசங்களிலிருந்து நீங்கிய பெருமான் என்பதால், அவன், அத்தகைய முயற்சிகள் ஏதும் தேவைப் படாதவனாக விளங்குகிறான். இந்த தன்மை தான் இங்கே நாலும் அவலம் இலாத அடிகள் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. பாசமெனும் திண் கயிறு என்று பெரியோர்கள் சொல்வது நினைவுக்கு வருகின்றது.

போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம்

போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தனுள்

ஆதி நாலும் அவலம் இலாத அடிகள் மறை

ஓதி நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு உணப்பாலதே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.50.9) திருஞானசம்பந்தர், பார்வதி தேவி உடனாக இருக்கையில் ஐயம் ஏற்பதற்கு மிகுந்த இச்சை கொண்டவராக பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். இந்த விருப்பம் நிறைவேறுவதால் பெருமான் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆடியும் பாடியும் பிச்சைக்கு செல்கின்றார். வெற்றிமை=வென்ற தன்மை; பிரமன் திருமால் ஆகிய இருவரும் நீண்ட நெருப்புப் பிழம்பாக நின்ற தனது அடியையும் முடியையும் காண்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை தாண்டிய நிலையில், அவர்கள் இருவரும் காண முடியாமல் இருந்த தன்மை; இச்சை=விருப்பம்; தயங்கு=வெளிப்பட்டு தெரியும் வண்ணம், விளங்குகின்ற; தயங்கு என்ற சொல்லினை தோல் என்ற சொல்லுடன் இணைத்து, அசைகின்ற தோல் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். அரை=இடுப்பு; ஆர்த்த=இறுகக் கட்டிய; ஐயம்= பிச்சை; செய்ய=சிவந்த; வெய்ய=வெப்பம் மிகுந்த; தயங்கு=பொருந்திய; அரை=இடுப்பு; உகத்தல்= மகிழ்தல்;

செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மாலடி தேட நீண் முடி

வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமை என்

தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு

ஐயம் ஏற்று உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே

புனவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.11.1) பெருமான் நான்மறைகள் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பலிக்கு சென்ற திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமான் எடுக்கச் சென்றதோ மற்றவர்களை உய்விக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட பிச்சை. ஏனையோர் எடுப்பதோ தங்களது உணவுத் தேவைக்காக எடுக்கப்படும் பிச்சை. தங்களது இயலாமை காரணமாக ஒருவர் பிச்சை ஏற்கும் போது, அவர்கள் தங்களது நிலை குறித்து வெட்கம் அடைந்து தலை குனிய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே அவர்கள் வெட்கம் கொள்வதும் தயக்கம் கொள்வதும் இயற்கை. ஆனால் பெருமானோ பக்குவப்பட்ட உயிர்களுக்கு, வேறெவரும் அளிக்க முடியாத முக்திச் செல்வத்தை அளிப்பதற்காக பிச்சை எடுக்கிறான். எனவே அவன் மிகுந்த பெருமையுடன் அந்த செயலில் ஈடுபடுகின்றான். அந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் ஆடல் பாடலாக வெளிப்படுகின்றன. இந்த பாடலில் திருஞான சம்பந்தர் பிராட்டியை திருஞானசம்பந்தர், அன்னம் அன்ன நடையாள் என்று அழைக்கின்றார். விரி நூலினன்=விரிந்த மார்பினில் முப்புரி நூல் உடையவன்; பெருமான் அடிக்கடி நான்கு வேதங்களையும் ஓதுபவனாக உள்ள தன்மை பன்னிய என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

மின்னியல் செஞ்சடை வெண்பிறையன் விரி நூலினன்

பன்னிய நான்மறை பாடியாடிப் பல ஊர்கள் போய்

அன்னம் அன்ன நடையாளொடும் அமரும் இடம்

புன்னை நன்மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.19.7) திருஞான சம்பந்தர், பெருமானை. பகலிடம் பலி கொள பாடி ஆடுவர் என்று குறிப்பிடுகின்றார். இலங்க=விளங்கித் தோன்ற; இகல்=வலிமை; வீசி=தோள்களை அதிர வீசி; அகலிடம்=அகன்ற பூமி; அம்பர் தலத்தின் புகழ் உலகெங்கும் பரவி இருந்ததாக கூறுகின்றார். வம்பு=நறுமணம், தெய்வீக மணம் என்று பொருள் கொள்வது சிறப்பு. புகுதல்=இந்த தலத்தில் பெருமான் பொருந்தி வீற்றிருத்தல்; பகலிடம் பலி கொள்கின்ற பெருமான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பண்டைய நாளில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாமையால், பிச்சை எடுக்க செல்லும் எவரையும் பிறர், அடையாளம் கண்டு கொள்வது எளிதாக இல்லாத தன்மையை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. எனவே இரவில் பிச்சை எடுப்பதையே பலரும் தேர்ந்து எடுத்தனர் போலும். ஏனைய பிச்சைக் காரர்களிலிருந்து மாறுபட்ட பெருமான், தன்னை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வாரோ என்று நாணம் கொள்ள வேண்டிய அவசியம் அற்றவர். எனவே பகலில் பலரும் காணும் வண்ணம் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பெருமான் பலி ஏற்பதற்காக சென்றார் என்பதை திருஞான சம்பந்தர் உணர்த்துகிறார் போலும்.

இகலுறு சுடர் எரி இலங்க வீசியே

பகலிடம் பலி கொள பாடி ஆடுவர்

அகலிடம் மலி புகழ் அம்பர் வம்பவிழ்

புகலிடம் நெடுநகர் புகுவர் போலுமே

பரிதிநியமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.104.7) திருஞானசம்பந்தர் வெண்ணீறு தனது திருமேனி முழுதும் பூசியவராக வேத கீதங்கள் பாடியவராக தனது இல்லம் தேடி பலி ஏற்பதற்கு பெருமான் வந்ததாக கற்பனை செய்யும் சம்பந்த நாயகி, தன்னை விட்டு பெருமான் பிரிந்து விட்டார் என்றும், அந்த பிரிவினால் வருத்தம் அடைந்த தனது உடல் இளைத்து, முன் கை மிகவும் மெலிந்து தனது வளையல்கள் கழன்று விட்டதாகவும் குறிப்பிட்டு, தனது வளையல்களைக் கவர்ந்த பெருமான் என்று இறைவனை குற்றம் சாட்டுகின்றாள்; பின் தயங்க= பின்புறம் விளங்கித் தொங்க; இறை=முன்கை;தயங்க=தாழ்ந்து தொங்க; தாருகவனத்து முனிவர்கள் பெருமான் மீது ஏவிய மழு ஆயுதத்தை, பெருமான் செயலறச் செய்த பின்னர் அதனை தனது கையில் ஏந்திக் கொண்டார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே, தாருகவனத்தில் நடந்த நிகழ்ச்சி தனது வாழ்வினிலும் நடைபெற்றதாக சம்பந்த நாயகி கற்பனை செய்கின்றாள் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. தொங்கிய சடையுடன் திருநீறு அணிந்த திருமேனியுடன் வேதங்கள் ஓதியவராக பெருமான் தாருகவனம் சென்ற காட்சி இங்கே குறிப்பிடப் படுகின்றது. பிறைச் சந்திரனை அணிந்த செஞ்சடை பின்புறம் தொங்க, பெரிய மழுவினைத் தனது கையில் ஏந்தியவாறும், தனது திருமேனியில் வெண்ணீறு பூசியவராகவும் வேத கீதங்கள் ஓதியவராக, பெருமான் பல இல்லங்களுக்கும் பலி ஏற்பதற்காக செல்கின்றார். அவரது அழகிய தோற்றத்தினால், அவர் மீது நான் கொண்டுள்ள தீவிரமான காதலினால், அவருடன் இணைய முடியாத நிலையை நினைத்து வருந்துவதால், அந்த ஏக்கத்தில் எனது உடல் மெலிந்து எனது முன்கையில் இருந்த வளையல்கள் நழுவி விட்டன; மேலும் எனது உடலும் மெலிந்ததால் எனது அழகும் குன்றியது. இந்த நிலைக்கு பெருமானே காரணம். அவரே எனது கைவளையல்கள் மற்றும் அழகினைக் கவர்ந்த கள்வர் ஆவார். இத்தகைய கள்வர் உறையும் இடம், பறையொலி மற்றும் சங்கொலி முழங்க திருவிழாக்கள் ஆரவாரமாக நடைபெறும் பரிதிநியமம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பிறை வளர் செஞ்சடை பின் தயங்கப் பெரிய மழு ஏந்தி

மறையொலி பாடி வெண்ணீறு பூசி மனைகள் பலி தேர்வார்

இறைவளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்

பறையொலி சங்கொலி யாழ் விளங்கும் பரிதிந் நியமமே

வெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.35.7) அப்பர் பிரான், அப்பர் நாயகி வேதம் ஓதும் வெண்காடு விகிர்தனார், பால் போன்ற இனிமையான மொழிகளை பேசி தனது தன்மை அழியும் வண்ணம் செய்தார் என்று தனது தோழியிடம் பெருமான் குறித்து குற்றம் சாட்டுகின்றாள் என்று கூறுகின்றார். இந்த பாடல் தனது தோழியிடம், தலைவி கூறுவதாக அமைந்த அகத்துறை பாடலாகும். கோணாகம்=வளைந்த நாகம் என்றும் கொடிய நஞ்சினை உடைய நாகம் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். பாலைப் பரிசு அழிய=பாலின் இனிய தன்மையும் தோற்று அழியுமாறு இனிய வார்த்தைகள் பேசுதல்; பேணா வாழ்க்கை= விரும்பாத வாழ்க்கை; சிவபெருமான் வாழும் வாழ்க்கை பெண்கள் விரும்பாத வாழ்க்கை என்று அப்பர் நாயகியின் வாக்காக இந்த பாடலில் கூறப்படுகின்றது. .சிவபெருமானின் உறவுகளாக, அவனை எப்போதும் சூழ்ந்து இருப்பன பேய்க் கணங்கள்; அவனது உண்கலனோ, உலர்ந்த மண்டையோடு; அவனது இருப்பிடமோ சுடுகாடு;. அவனது உடலில் ஒரு பாகத்தில் இருப்பதோ பார்வதி. இவ்வாறு காணப்படும் சிவபெருமானைக் காணும் எந்த பெண் அவன் மீது காதல் கொள்வாள் என்று கேட்கின்றாள்; இருப்பினும் தான் அவனது இனிய பேச்சினில் மயங்கி அவன் பால் தீராத காதல் கொண்டதாக அப்பர் நாயகி கூறுகின்றாள். பெருமானது பல தன்மைகளை, அவனது குறையாக குறிப்பிட்ட பின்னரும் தான் அவன் பால் தீராத காதல் கொண்டுள்ளதாக அப்பர் நாயகி குறிப்பிடுகின்றாள் என்றால், பெருமான் எத்தனை அழகியராக விளங்குகிறார் என்பதையும் அவரது பேச்சு எத்தனை இனிமையாக இருந்தது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

பெண்பால் ஒரு பாகம் பேணா வாழ்க்கைக் கோணாகம் பூண்பனவும் நாணாம் சொல்லார்

உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றேல் ஓவி உண்ணார்

பண்பால் விரிசடையர் பற்றி நோக்கிப் பாலைப் பரிசு அழியப் பேசுகின்றார்

விண் பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே

மேற்கண்ட பாடலில் விகிர்தனார் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். விகிர்தர் என்றால் ஏனையோரிலிருந்து மாறுபட்டவர் என்று பொருள். இந்த பாடலில் உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் என்று பெருமானை அப்பர் நாயகி உணர்த்துகின்றாள்; உண்பதும் உறங்குவதுமே வாழ்க்கையாக கொண்டுள்ள உலக மக்களிடமிருந்து வேறுபட்டவர் பெருமான் என்பது இங்கே உணர்த்தப்பட்டு விகிர்தர் என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கப் படுகின்றது. ஏனையோர் வாழ்வதோ பல வளங்களும் பொருந்திய வீடு, சிவபெருமான் வாழ்வதோ சுடுகாடு; ஏனையோர் இணைந்து வாழ்வது நன்மக்களுடன், பெருமான் இணைந்து இருப்பதோ பூத கணங்களுடன்; ஏனையோர் உண்பதோ அறுசுவை உணவு; பெருமான் உண்பதோ நஞ்சு; ஏனையோர் இரப்பதற்கு, பிச்சை எடுப்பதற்கு கூசுவார்கள், பெருமானோ விருப்பத்துடன் பிச்சை எடுக்கின்றார்; ஏனையோர் உடலில் பூசுவது நறுமணம் கமழும் வாசனைப் பொடி, சிவபெருமான் பூசுவதோ மயானத்து சாம்பல், ஏனையோர் அணிவது நுண்ணிய பருத்தியாடை மற்றும் பட்டாடை, சிவபெருமான் அணிவதோ யானைத்தோல் மற்றும் புலித்தோல்; ஏனையோர் அணிவதோ அழகான அணிகலன்கள், பெருமான் அணிவதோ பாம்பு, பன்றிக் கொம்பு, ஆமையோடு, ஏனையோர் ஆண் வேறு பெண் வேறு என்று உருவத்தில் இருப்பார்கள் பெருமான் இருப்பதோ ஆண் பெண் இரண்டும் கலந்த உருவத்தில்; ஏனையோர் தீயினைக் ஆண்டு அஞ்சுவார்கள், பெருமானோ தீயினைக் கையில் ஏந்தியவாறு நடனம் ஆடுகின்றார். இவ்வாறு பெருமானுக்கும் ஏனையோருக்கும் உள்ள வேறுபாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம். விளக்கம் மேலும் விரிவடையும் என்று அஞ்சி, இத்துடன் நிறுத்தப் பட்டுள்ளது. இந்த பண்புகளை சுருக்கமாக ஒவ்வா என்ற சொல்லினை பயன்படுத்தி, அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். பெண்ணைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் வாழும் வாழ்க்கை, எந்த பெண்ணும் விரும்பாத வாழ்க்கை; கொடிய நாகத்தை அணிகலனாக பூண்டுள்ள அவர், நான் நாணப்படும் வண்ணம் என்னை புகழ்ந்து பேசுகின்றார்; உண்பதும் உறங்குவதுமே வாழ்க்கையாக கருதி வாழும், உலக மாந்தர்களின் வாழ்க்கையிலிருந்து, அவரது வாழ்க்கை பெரிதும் வேறுபட்டதாகும். நஞ்சினைத் தவிர வேறு எதையும் விரும்பி உண்ணாதவர் சிவபெருமான். அழகாக காணப்படும் அவர் விரிந்த சடையினை உடையவராக விளங்குகின்றார். இத்தகைய பண்புகளை உடைய அவர், பாலினும் இனிய மொழிகளைப் பேசி, எனது அடக்கமான தன்மையை அழித்து விடுகின்றார். நங்கையே, இவ்வாறு எனது தன்மையை மாற்றி, நான் அவரிடம் காதல் கொள்ளுமாறு செய்த பெருமான், வானத்தில் உலவும் சந்திரனைத் தனது சடையில் சூடியவராய், வேதங்கள் ஓதியவாறு, வெண்காடு தலத்திற்கு சென்று ஆங்கே பொருந்தி உறைகின்றார் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

அப்பர் பிரான், தன்னை இறைவன் பால் தீராத காதல் கொண்ட தலைவியாக உருவகித்துக் கொண்டு, தனது அருகில் வந்த பெருமான், வாக்கால் மறை விரித்துப் பேசிய பெருமான், மாயமாக தன்னை விட்டு பிரிந்து விட்டாரே என்று ஏங்குவதாக, வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.58.3) கூறுகின்றார். தீக்கூரும்=நெருப்பு மிகுந்து எரிவது போன்று தோன்றும்; அரி=திருமால்; தன்னிடம் ஆக்கூர் செல்வதாக கூறிய பெருமான், அந்த இடத்திற்கு செல்லாமல் வலம்புரம் தலத்திற்கு சென்றதாக அப்பர் நாயகி இந்த பாடலில் கூறுகின்றாள். தான் செல்வதாக சொன்ன இடத்திற்கு செல்லாமல், வேறு ஒரு இடத்திற்கு சென்ற பெருமான் வஞ்சகம் புரிந்ததாகவும் மாயம் பேசியதாகவும் குற்றம் சாட்டுகின்றாள். இவ்வாறு பெருமான் செய்த வஞ்சகச் செயல், அவரது வேடத்திற்கு சற்றும் பொருந்தாத செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், அவரது கோலத்தினை இந்த பாடலின் மூன்றாவது மற்றும் நான்காவது அடிகளில், அப்பர் நாயகி குறிப்பிடுகின்றாள். நெருப்பு மிகுந்து எரிவது போன்ற சிவந்த நிறத்தை உடலின் ஒரு பகுதியிலும், திருமாலின் நிறத்தை உடலின் மற்றோர் பாகத்திலும் கொண்டு திகழும் பெருமான், என் கண் முன்பாக ஆக்கூரில் உள்ள தான்தோன்றி மாடக் கோயிலுக்குச் செல்வது போன்று போக்கு காட்டிய பின்னர், நான் அந்த இடத்தை விட்டு மறைந்த பின்னர் வேறு எங்கும் நோக்காமல், வலம்புரம் சென்று விட்டார். பூணூலும் மான்தோலும் மார்பில் பொருந்தியவராய், தனது உடலெங்கும் வெண்ணீறு பூசியவராய், தனது வாயால் வேதங்கள் பேசிய பெருமான் தனது தோற்றத்திற்கு பொருந்தாத வகையில் மாய வார்த்தைகள் பேசி, வலம்புரம் திருக்கோயிலின் உள்ளே சென்று அங்கே நிலையாக தங்கிவிட்டார் என்று அப்பர். நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.

தீக்கூரும் திருமேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்

ஆக்கூரில் தான்தோன்றிப் புகுவார் போல் வருவினையேன் செல்வதுமே அப்பால் எங்கும்

நோக்கார் ஒரு இடத்து நூலும் தோலும் துதைந்து இலங்கும் திருமேனி வெண்ணீறாடி

வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

பொழிப்புரை:

சிறகுகளுடன் கூடிய வண்டுகள் விரும்பி உட்கொள்ளும் தேன் நிறைந்து ததும்பும் கொன்றை மலர்களைத் தனது சடையினில் அணிந்துள்ள பெருமான், வேதங்களில் பொருந்தியுள்ள கீதங்களை பாடியவாறும் அந்த பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடியவாறும், எனது இல்லம் வந்தார். அவர் சிறந்த இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளார். எனது இல்லம் புகுந்த இறைவரின் அழகில் மயங்கி அவர் பால் அடியேன் காதல் கொண்டேன். அவரும் என்னை விரும்பி அடியேன் பால் காதல் கொண்டவராக இருந்ததால் தான் எனது இல்லத்தின் உள்ளே வந்தார் என்று எண்ணிய நான், அவர் செல்லும்போது என்னையும் அழைத்துக் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்; ஆனால் அவரோ என்னை அழைத்துச் செல்லாமல் விட்டுவிட்டுச் சென்ற படியால், நான் மிகுந்த ஏக்கம் கொண்டேன். அந்த ஏக்கத்தினால், எனது உடலின் நிறம் மாறி; எனது உடல் மெலிய, உடல் நலம் குறைய, எனது அழகும் குறைந்தது;இவ்வாறு எனது உள்ளத்தையும் உடல் எழிலும் நலமும் கொள்ள கொண்ட இறைவர், தனது சடையினில் ஒற்றைப் பிறைச் சந்திரனை அணிந்த இறைவர், செழித்து வளர்ந்த மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று பிணைந்து சூரியனின் கதிர்கள் ஊடுருவதை தடுப்பதால் இருண்டு காணப்படும் சோலைகள் நிறைந்த கானூர் தலத்தில் பொருந்தி உறைகின்றார்.

பாடல் 4:

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 4 (திதே 0758)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 4 தொடர்ச்சி மற்றும் பாடல் 5 (திதே 0759)

விண்ணார் திங்கள் கண்ணி வெள்ளை மாலை அது சூடித்

தண்ணார் அக்கோடு ஆமை பூண்டு தாழ் புன் சடை தாழ

எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வ நோய் செய்தான்

கண்ணார் சோலைக் கானூர் மேய விண்ணோர் பெருமானே

விளக்கம்:

விண்ணார்=விண்ணில் பொருந்திய; வானில் உலவும்; கண்ணி=தலை மாலை; தண்ணார்=குளிர்ச்சி பொருந்திய; அக்கு=எலும்பு; எண்ணா=எண்ணாமல் இருந்த நிலை; அறியாமை காரணத்தினால் ஆன்மா இறைவனை எண்ணாது இருந்த நிலை; எவ்வம்=மிகுந்த துன்பம்; விரகதாபம்; தலைவனைப் பிரிந்த தலைவி அடையும் வருத்தம்; கண் என்ற சொல்லுக்கு இடம் என்று பொருள் கொண்டு, கண்ணார் சோலை இறைவன் உறையும் இடம் சோலைகள் பொருந்திய தலம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பாடலில் ஆன்மா எண்ணாது இருந்த போதே இறைவன் வந்ததாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். தனது விருப்பத்தின் படியே இறைவனைச் சென்று அடைவதற்கும் அவனுடன் கலந்து இருப்பதற்கும் அவனை விட்டுப் பிரிவதற்கும் சுதந்திரம் அற்றது ஆன்மா. இதனை உணர்த்தும் வண்ணம் ஆன்மா எண்ணாது இருந்த போது இறைவன் வந்ததாக திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

இதனையே திருமூலர் தனது முதல் தந்திரத்தில் (உபதேசம் என்று சொல்லப்படும் அதிகாரத்தில்) கூறுகின்றார். மேலும் பசு (உயிர்கள்) பதியினை (இறைவனை) அணுகும் தன்மை உடையன என்றாலும், அந்த உயிருடன் பிணைந்துள்ள பாசம், உயிர்கள் பதியினை அணுக ஒட்டாது தடுக்கும் என்றும், உயிர்கள் தங்களது முயற்சியால் பாசத்தை அடக்கி பதியினை அணுக முயற்சி செய்தால், பாசம் உயிரினைப் பற்றி நில்லாது அதனை விட்டு நீங்கும் என்றும் கூறுகின்றார். பாசம் பதியினைச் சென்று அணுகாது என்றும் இங்கே கூறப்படுகின்றது. இந்த மூன்றையும் இறை உயிர் தளை என்றும் கூறுகின்றனர். பாசத்திற்கு அடையாளமாக இருப்பது ஆணவம், கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்கள். இந்த பாடலில் மூன்றாவது அடியில், பதியினைச் சென்று பசுவும் பாசமும் அணுக முடியாது என்று திருமூலர் கூறுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இறைவன் உயிரினை வந்து அணுகுவதற்கும் இறைவனின் அருள் தேவைப் படுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உயிர்களும் அழிவதில்லை என்பதால் அநாதி என்று கூறுகின்றார். பிரளய காலத்திலும் இறைவனது உடலில் உயிர்கள் ஒடுங்குகின்றனவே அன்றி அழிவதில்லை. ஆணவ மலமும் அழிவதில்லை; நெல்லுக்கு உமி போன்றும் செம்புக்கு களிம்பு போன்றும், உயிருடன் என்றும் இணைந்து பிரியாது இருப்பது ஆணவ மலம். ஆணவ மலத்தினை அழிக்க முடியாது, அதன் சக்தியை அடக்கி செயலற்று இருக்கச் செய்ய முடியும்.

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு பாசம் அனாதி

பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்

பதி அணுகில் பசு பாசம் நில்லாவே

இந்த பாடலில் பலியேற்க வந்த தான் சிவபெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம், அக்கும் ஆமையும் பூண்டவராக, பிறைச் சந்திரனை அணிந்தவராக பெருமான் தாருகவனம் சென்றார் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பலிக்கு சென்றபோது சிவபெருமான் கொண்டிருந்த கோலத்தை உணர்த்தும் சில திருமுறைப் பாடல்களையும் பலி ஏற்பதற்காக பெருமான் பல இல்லங்கள் சென்றதாக குறிப்பிடும் சில பாடல்களையும் நாம் இங்கே காண்போம்.

தெளிச்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.3.5) திருஞானசம்பந்தர் பெருமானை, நக்கராய் உலகெங்கும் பலிக்கு நடந்தார் என்று கூறுகின்றார். பெருமானுக்கு சமமாக பெருமானின் திருமேனியில் ஒரு பாதியில் இடம் பெற்றிருந்தாலும், பிராட்டி, பெருமானை தனது மனதினில் தியானித்து வணங்குவதாக திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார். செக்கர்=சிவந்த திருமேனி உடையவர்; சந்திரனைத் தொடும் வண்ணம் உயர்ந்த மதில்கள் கொண்ட நகரம் தெளிச்சேரி என்று கூறுகின்றார். மிகவும் குறைந்த ஆடையுடன் எளியவராக பெருமான் பலியேற்க சென்ற போதிலும், அவரது அழகு தாருகவனத்து இல்லத்தரசிகளின் மனதினைக் கவர்ந்து அவர்கள் பெருமான் பால் காதல் மயக்கம் கொள்ளும் வண்ணம் செய்தது என்று கூறுகின்றார்.

பக்கம் நும் தம்மை பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும்

செக்கர் மாமதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர்

மைக்கொள் கண்ணியர் கை வளை மால் செய்து வௌவவே

நக்கராய் உலகெங்கும் பலிக்கு நடப்பதே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.7.6) நாணம் ஏதும் இல்லாதவராக பெருமான் பல இல்லங்கள் சென்று பலி ஏற்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பொதுவாக பிச்சை ஏற்பவர்கள், நாணம் கொண்டு, தங்களது உடல் குறுக பிச்சை ஏற்பதை நாம் காண்கின்றோம். பிச்சை ஏற்றாலும் அவர்கள் முழு மனதுடன் அந்த செயலில் ஈடுபடுவதில்லை. தங்களது இயலாமை காரணமாக, வேறுவழி இல்லாமல் பிச்சை எடுப்பதால், அவர்கள் நாணம் கொள்கின்றனர். ஆனால் பெருமானோ தனது இயலாமை காரணமாக பலி ஏற்பதில்லை; பக்குவப்பட்ட உயிர்கள் தங்களது மலங்களை, பிச்சையாக இறைவனிடம் அளித்து, வாழ்வினில் உய்வினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், பெருமான் பிச்சை ஏற்கின்றார். எனவே தான் அவர் நாணம் கொள்ள வேண்டிய அவசியமின்றி, பலி ஏற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பெருமானின் திருநாமத்தைச் சொல்லி, அவனது புகழினை குறிப்பிடும் அடியார்களின் வினைகள் உடனே தீர்க்கப்படும் என்று கூறுகின்றார். பெருமானின் திருநாமங்கள், அவனது பண்பையும் அவனது கருணைச் செயல்களையும் குறிப்பிடுவதால், நாம் தனியாக பெருமானைப் புகழ வேண்டிய அவசியம் இல்லை; பெருமானின் விரிந்த புகழினை அறியாதவர்களாக நாம் இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம்; அவனது நாமங்களைச் சொல்வதே, அவன் புகழினை நாம் பாடுவதாக மாறிவிடும். மைந்தர்=வலிமை வாய்ந்தவர்; தனது காலில் அணிந்துள்ள சிலம்பு ஒலிக்கும் வண்ணம் பெருமான் பலியேற்கச் சென்றார் என்று கூறுகின்றார். இந்த செய்தி அவர் மாதொரு பாகனாக பலி ஏற்கச் சென்றார் என்பதை உணர்த்துகின்றது.

அரவம் பூண்பர் அணியும் சிலம்பு ஆர்க்க அகம் தொறும்

இரவின் நல்ல பலி பேணுவர் நாணிலர் நாமமே

பரவுவார் வினை தீர்க்க நின்றார் திருவாஞ்சியம்

மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.32.6) திருஞானசம்பந்தர் பெருமானை, மகளிர் இடும் பலி கொள்பவன் என்று கூறுகின்றார். பை=நச்சுப் பை; பை அரவு= நச்சுப் பைகள் கொண்ட பாம்பு; படி என்ற சொல்லுக்கு படம் என்று பொருள் கொண்டு படமெடுத்தாடும் பாம்பு என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமான் தனது பாதம் முதல் முடி வரையில் பல இடங்களிலும் பாம்புகளை அணிகலனாக அணிந்திருக்கும் தன்மை இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. கால்களில் கழலாகவும், கோவண ஆடையின் மேல் இடுப்புக் கச்சாகவும், முன்கையினில் கங்கணமாகவும், தோள்களில் வளையமாகவும், மார்பினிலும் கழுத்தினிலும் சடையிலும் மாலையாகவும், காதினில் குண்டலமாகவும் பெருமான் பாம்பினை அணிந்துள்ள செய்தி பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. வண்=வளமை வாய்ந்த; மாதவி=குருக்கத்திச் செடிகள்; பரன்=மேலானவன்; கோதையர்=அழகிய கூந்தல் கொண்ட தாருகவனத்து இல்லத்தரசிகள்; பெறுத்தி=பெறச் செய்து;

பூதமொடு பேய்கள் பல பாட நடமாடிப்

பாதம் முதல் பை அரவு கொண்டு அணி பெறுத்திக்

கோதையர் இடும் பலி கொளும் பரமனிடம் பூ

மாதவி மணம் கமழும் வண் திருவையாறே

ஆமை ஓடு பூண்டவனாக பெருமான் பலியேற்ற கோலம் கீழ்க்கண்ட பாடலிலும் உணர்த்தப் படுகின்றது. திருமூலர் கூறிய வண்ணம் பெருமான் பிச்சை எடுப்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல. எனினும் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திய வண்ணம் அவர் திரிவதால், அவர் பிச்சையெடுத்து உண்கின்றார் என்று பொதுவாக சொல்லப் படுகின்றது. இதன் அடிப்படையில் பிரமகபாலத்தில் பலியேற்று உண்ணும் கொள்கை உடையவன் என்று திருஞானசம்பந்தர், சோபுரம் பதிகத்துப் பாடல் (1.51.7) ஒன்றினில் கூறுகின்றார். துற்றல்=உண்ணுதல்; குணமும் நீ குற்றமும் நீ என்று உன்னை பணிந்து வணங்கும் அடியார்களுக்கு பெருமான், அவர்கள் கற்பதன் விளைவாக கேட்பதன் விளைவாக பெரும் ஞானமாக பெருமான் விளங்குகின்றான் என்று கூறுகின்றார். பெருமானே உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் குற்றமாகவும் குணமாகவும் இருப்பதாக கருதும் அடியார்கள் இறைவனைத் தவிர்த்து வேறெதையும் கற்பதில் நாட்டம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் பழகும் மனிதர்களும் அவ்வாறே இருப்பதால் அவர்கள் கேட்கும் உரைகளும், பசுஞானமாகவோ பாசஞானமாகவோ இல்லாமல், பதிஞானத்துடன் தொடர்பு கொண்டவையாகவே இருக்கும். எனவே, அவர்கள் உண்மையான மெய்ஞானம் அடைவதில் வியப்பு ஏதும் இல்லை. இந்த உண்மை தான் இங்கே உணர்த்தப் படுகின்றது.

குற்றமின்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார்

கற்ற கேள்வி ஞானமான காரணம் என்னை கொலாம்

வற்றலாமை வாளரவம் பூண்டு அயன் வெண் தலையில்

துற்றலான கொள்கையானே சோபுரம் மேயவனே

தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.35.4) திருஞானசம்பந்தர், பலரும் பழித்துரைக்கினும், பெருமான் அதனை பொருட்படுத்தாமல் பலி ஏற்கின்றார் என்று கூறுகையில் நெற்றிக்கண் உடைய பெருமான் பிறைச் சந்திரனை அணிந்து கொண்டு சென்றார் என்று கூறுகின்றார்.. விழிக்கும் நுதல்=விழித்துப் பார்க்கும் கண் உடைய நெற்றி; தெழிக்கும்= ஒலிக்கும்; புறங்காடு=சுடுகாடு; ஊருக்கு வெளியே அமைந்திருக்கும் சுடுகாடு; தெழிக்கும் புறங்காடு=பிணங்கள் எரியும் போது, எலும்புகள் சடசட என ஒலிக்கும் ஓசை நிறைந்த சுடுகாடு; பரிசு=தன்மை; ஊழிக்காலத்தில் உலகமே சுடுகாடாக இருக்கும் தன்மையும், வடவாக்னியால் அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாக மாறும் தன்மையும் இங்கே குறிப்பிடப் படுகின்றது; விழித்துப் பார்த்து எதிர்ப்படும் பொருளை எரித்து அழிக்கும் ஆற்றல் வாய்ந்த நெற்றிக் கண்னை உடைய நெற்றியின் மேல் ஒரு வெண்பிறை சூடியவனும், பூத கணங்களின் ஆரவாரம் ஒலிக்கும் பிரளய காலத்து சுடுகாட்டினில் தீயினில் நின்று நடனமாடுபவனும், பலரும் பழிக்கும் வண்ணம் பல ஊர்கள் திரிந்து பலியேற்க அலைபவனும் ஆகிய சிவபெருமான் உறைவது பொன் கொழிக்கும் செல்வ வளம் வாய்ந்த தென் குரங்காடுதுறை தலமாகும்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விழிக்கும் நுதல் மேல் ஒரு வெண்பிறை சூடித்

தெழிக்கும் புறங் காட்டிடைச் சேர்ந்து எரியாடிப்

பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன் ஊர் பொன்

கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.37.6) திருஞானசம்பந்தர், பெருமானை நோக்கி, வேதங்களால் வழிபாடு செய்யப்படும் பெருமை உடைய பெருமானே, ஏழு உலகங்களையும் தனது உடமையாகக் கொண்டுள்ள பெருமானே, எதற்காக பண்டைய நாளில் தாருகவனம் சென்று வீடுகள் தோறும் பலி ஏற்றாய் என்ற கேள்வியை கேட்கின்றார். பெருமான் பிச்சை ஏற்றது தனது உணவுத் தேவைக்கு அல்ல என்றாலும், பொதுவாக உணவினை பிச்சையாக ஏற்போர் அவ்வாறு பிச்சை ஏற்ற உணவினை உட்கொள்வதால், பெருமானும் தான் பிச்சை ஏற்ற உணவினை உண்டதாக கூறுகின்றார். முன் என்று பண்டைய நாளில் பெருமான் பலியேற்றதை குறிப்பிடுவதால், தாருகவனம் நிகழ்ச்சி என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம். வேதங்கள் பெருமானை போற்றி வணங்கிய தலங்களின் தன்மையை, தங்களது பெயரால் குறிப்பிடும் தலங்கள், திருமறைக்காடு, திருவோத்தூர் மாறும் திருவேற்காடு. திருவேற்காடு தலத்தில் கருவேல மரங்களாக மாறி இறைவனை வேதங்கள் வழிபட்டதாக கூறுவார்கள்.

பல காலங்கள் வேதங்கள் தங்கள் பாதங்கள் போற்றி

மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா

உலகு ஏழு உடையாய் கடை தோறும் முன் என் கொல்

தலை சேர் பலி கொண்டு அதில் உண்டது தானே

திருநணா என்று அழைக்கப்பட்ட பவானி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.72.7) பிரம கபாலத்தில் உணவு உட்கொள்வதை பெருமான் உகக்கின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தாருகவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து எழுப்பிய காட்டு யானை, என்பதால் காடுகளில் திரியும் யானை என்று இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. அரை=இடுப்பு; ஊன்=தசை; பெருமான் தனது உணவுத் தேவைக்காக பிச்சை ஏற்பதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும் உபசார வழக்காக, கையினில் கபாலத்தை ஏந்திய வண்ணம் வீடுவீடாக செல்வதால் பிச்சை உணவு ஏற்கின்றார் என்றும் அதனை உண்கின்றார் என்றும் பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. நானாவிதத்தால் ஏத்தி வாழ்த்தி என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். நானாவிதம் என்று சரியை கிரியை ஞானம் யோகம் ஆகிய நான்கு வழிகளில் பெருமானை வழிபடுவது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மெய்யடியார்கள் தங்களது நிலை மறந்து ஆடியும் பாடியும் அழுதும் நகைத்தும் கீழே வீழ்ந்து புரண்டு அலறியும் ஓலமிட்டும் பெருமானை வாழ்த்துகின்றனர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாகும். நன்னாமம் என்பதற்கு பிறவிப் பிணியைத் தீர்த்து நன்மை புரியும் ஐந்தெழுத்து மந்திரம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. நானாவிதத்தால் நாமம் ஏத்தி என்ற தொடருக்கு, நூறு, ஆயிரம், இலட்சம், கோடி என்று பல்வேறு கணக்கினில் பெருமானின் திருநாமத்தை சொல்லும் பழக்கம் குறிப்பிடப் படுகின்றது என்றும் பொருள் கொள்ளலாம். தாருகவனத்து முனிவர்கள் அபிச்சார வேள்வி செய்து எழுப்பிய வலிமை மிகுந்த காட்டானை மதம் கொண்டு தன்னை எதிர்த்து வந்த போது, அதனை அடக்கி அதன் தோலை உரித்து, தனது உடல் மேல் அந்த இரத்தப்பசை மிகுந்த தோலினை போர்வையாக போர்த்து கொண்ட வீரச்செயல் புரிந்த சிவபெருமான், படமெடுத்து ஆடிச் சீறும் பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக கட்டி, தனது விருப்பம் போன்று அந்த பாம்பை ஆட்டுவிகின்றான். தசை மிகுந்த பிரம கபாலத்தில் பிச்சை ஏற்று பெற்ற உணவினை மிகுந்த களிப்புடன் ஏற்றுக்கொள்ளும் பெருமான் விருப்பத்துடன் உறையும் இடம் யாதெனில் அது திருநணா ஆகும். இந்த தலத்தினில் அடியார்கள் பலவிதமாக அவனது திருநாமங்களை கூறியும், தேன் நிறைந்த மலர்களை அவனது திருவடிகளில் தூவியும், பணிந்து வணங்குகின்றனர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கானார் களிற்று உரிவை மேல் மூடி ஆடரவம் ஒன்று அரை மேல் சாத்தி

ஊனார் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும்

நானாவிதத்தால் விரதிகள் நல் நாமமே ஏத்தி வாழ்த்தத்

தேனார் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திருநணாவே

திருநணா என்று அழைக்கப்படும் பவானி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.72.9) திருஞான சம்பந்தர், தாருகவனத்து இல்லங்கள் தோறும் சென்று பெருமான் பலியேற்றதை குறிப்பிடுகின்றார். பலி ஏற்ற கள்வன் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பல பாடல்களில் நால்வர் பெருமானார்கள், பெருமான் பால் தீராத காதல் கொண்ட தலைவியாக தங்களை உருவகித்து, தங்களது மனதினைக் கொள்ளை கொண்ட கள்வன் என்று கூறுவதையும் நாம் உணர்கின்றோம். தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன் என்று தனது முதல் பதிகத்தை தொடங்கிய திருஞானசம்பந்தருக்கு பெருமானை கள்வன் என்று அழைப்பது மிகவும் விருப்பம் போலும். தாருகவனம் சென்ற பெருமான், ஆடியும் பாடியும் பிச்சை ஏற்பவர் போன்று சென்றாலும், அவரது நோக்கம் தாருக வனத்து முனிவர்களின் சிந்தனையை மாற்றுவதே ஆகும். இவ்வாறு தனது நோக்கத்தை மறைத்துக் கொண்டு செயல்பட்ட பெருமானை கள்வர் என்று அழைக்கின்றார் போலும். மேலும் எப்போதும் பலி ஏற்பதற்கு தனது உண்கலனை ஏந்திச் செல்லும் பெருமான், பிச்சை எடுப்பது போன்று தோன்றினாலும், உண்மையில் தனது உணவுத் தேவைக்கு பிச்சை எடுப்பதில்லை அல்லவா. எனவே இந்த செயல் புரியும் பெருமானை கள்வர் என்று அழைப்பது பொருத்தம் தானே. பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால விடத்தை உட்கொண்டு தேக்கியதால், தனது கழுத்தினில் கருமை நிறத்து மணி பதிக்கப்பட்டது போன்ற கழுத்தினை உடையவனும், மங்கை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், பல இல்லங்களின் வாயில் முன்னே நின்று பிச்சை ஏற்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும் கள்வனும் ஆகிய பெருமான் உறையும் இடம் திருநணா ஆகும். என்றும் பொய்க்காத செய்திகளை உடைய மறையினை எப்போதும் ஓதிக் கொண்டு படைத்தல் தொழிலைச் செய்யும் பிரமனும், நெடிய திருமாலாக வளர்ந்து மண்ணையும் விண்ணையும் ஈரடியால் தாவி அளந்த திருமாலும், பெருமானது திருப்பாதங்களைத் தேடிக் காணும் முயற்சியில் தோல்வி அடைந்த பின்னர், தங்களது தவறினையும் ஆற்றல் இல்லாத தன்மையையும் உணர்ந்த பிரமன் மற்றும் திருமால் நிலத்தில் விழுந்து வணங்கி போற்றும் வண்ணம், நிலை பெற்று செம்மை நிறத்துடன் நீண்ட எரியாக உருவம் எடுத்த பெருமான் உறையும் இடம் திருநணா ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. கையால் என்ற சொல் எதுகை நோக்கி கையார் என்று திரிந்தது போலும்.

மையார் மணி மிடறன் மங்கையோர் பங்குடையான் மனைகள் தோறும்

கையார் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடிப்

பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னிச்

செய்யார் எரியா உருவம் உற வணங்கும் திருநணாவே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.6.6) சுந்தரர், பிராட்டியுடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். கூறு பட்டகொடியும் நீரும் என்று சுந்தரர் குறிப்பிடுவதால், மாதொரு பாகன் கோலத்துடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக உணர்த்துகின்றார் என்பதை நாம்புரிந்து கொள்ள முடிகின்றது. தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானை காட்டு யானை என்பதை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். மாறுபட்ட=பெருமானை எதிர்த்து வந்த தன்மை சொல்லப் படுகின்றது. தன்னை எதிர்த்து வந்த மதயானையைக் கொன்ற பின்னர் அந்த யானையின்தோலைப் போர்த்துக் கொண்ட போதிலும் தனது உடலுக்கு எந்த விதமான கேடும் அடையாதிருந்த ஆற்றலை உடைய பெருமானின் தன்மைக்கு, பிறர்இடுகின்ற பிச்சையை நாடி அவர்களது இல்லத்திற்கு செல்லுதல், பெருமானின் பெருமைக்கு தகுந்த செயல் அல்ல என்று கூறுகின்றார்.

மாறுபட்ட வனத்தகத்தின் மருவ வந்த வன்களிற்றைப்

பீறி இட்டமாகப் போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம் தோறும்

கூறு பட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி

வேறுபட்டுத் திரிவதென்னே வேலை சூழ் வெண்காடனீரே

பெருமான் பால் தீவிர காதல் கொண்டுள்ள தாருகவனத்துப் பெண்மணி, பெருமானை காதல் செய்வதால் தனக்கு என்ன கிடைக்கும் என்பதை சற்று நினைத்துப் பார்க்கின்றாள். அவர் உறைகின்ற இடம் காடாகவும், அவர் தனது கையில் வைத்துக் கொண்டுள்ளது மண்டையோடாக இருப்பதாலும் அவரை காதலிப்போர் அடையக் கூடியது ஏதும் உருப்படியாக இல்லை என்று கருதுவதை, பைஞ்ஞீலி தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகத்தின் ஏழாவது பாடல் (7.36.7) தெரிவிக்கின்றது. அதே சமயத்தில் பெருமானது அழகு தன்னை மயக்கி, அவர் பால் காதல் கொள்ளச் செய்தது என்பதையும் அந்த பெண் உணர்த்தும் பாடல். மேலும் எலும்பு மாலையினை அணிவதால், பெருமான் பெறுகின்ற பயன் யாது எனவும் வினவுகின்றாள். பெருமான் எலும்பு மாலையினை அணிவதே, உலகம் முற்றிலும் அழிந்து அனைவரும் இறந்த பின்னரும் எஞ்சியிருப்பது தான் ஒருவன் மட்டுமே என்பதால், என்றும் நிலையாக இருப்பவன் தான் ஒருவனே என்பதை நமக்கு உணர்த்தும் பொருட்டு தானே. பெருமானே, உமது காதலிக்கு கொடுக்கும் சிறந்த செல்வம் ஏதும் உம்மிடம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, உமது காதலியை மகிழ்விக்கும் வண்ணம் ஆடல் பாடல்களில் திறமை பெற்றவரா நீர் என்ற கேள்வியும் இந்த பாடலில் கேட்கப் படுகின்றது.

ஏடுலா மலர்க் கொன்றை சூடுதிர் என்பெலாம் அணிந்து என் செய்வீர்

காடு நும் பதி ஓடு கையது காதல் செய்பவர் பெறுவதென்

பாடல் வண்டிசை ஆலும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்

ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் மற்றொரு பாடலில் (7.36.8) சுந்தரர், பெருமான் தனது தலையில் கொக்கின் இறகினை சூட்டிக் கொண்டுள்ள நிலையை குறிப்பிடுகின்றார். இரத்தம் ஒழுகியவாறு இருக்கும் யானையின் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால், யானையின் ஈருரி போர்த்தவாறு வந்து நின்று பிச்சை கேட்பதேன் என்று, தாருகவனத்து மங்கை ஒருத்தி கேட்பதாக அமைந்த பாடல். உமக்கு பிச்சை இடுவதற்கு எங்களுக்கு விருப்பம் இருந்தாலும், யானையின் ஈருரி போர்த்த உமது அருகில் வந்து பிச்சையிட அச்சமாக உள்ளது என்று உணர்த்தும் பாடல். சிவபெருமான் தனது சடையில், கொன்றை மலர், ஊமத்தை மலர், வன்னி இலைகள், கங்கை நதி, சந்திரன், கொக்கின் இறகு, வெள்ளெருக்கு ஆகியவற்றை நெருக்கமாக அணிந்துள்ளார் என்று பிச்சை இடுவதற்காக வந்த ஒரு மங்கை கூறுவதாக அமைந்த பாடல்.

மத்த மாமலர்க் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும்

மொய்த்த வெண்டலை கொக்கு இறகொடு வெள்ளெருக்கமும் சடையதாம்

பத்தர் சித்தர்கள் பாடி ஆடு பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்

அத்தி ஈருரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே

இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில், பலி இடுவதற்காக வந்த பெண், பெருமானை நோக்கி, பெருமானே நீர் பலிக்கு வரும் போது உமது கையில் பாம்பு வேண்டாமே, நான் பலி இடுவதற்காக உமது அருகில் வரும்போது மூசுமூசு என்று பாம்பு சீறுவது எனக்கு அச்சத்தை உண்டாக்குகின்றது என்று கூறுவதாக அமைந்த பாடல். சிவந்த நெருப்பு போன்று கொடியதாக உள்ள விடத்தைத் தனது வாயினில் கொண்டுள்ள பாம்பு என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். மேலும் சிவந்த கண்களுடன், முழக்கம் இட்ட வண்ணம், உற்று நோக்கும் இடபமும் தனக்கு அச்சத்தை உண்டாக்குவதாக இந்த பெண்மணி கூறுகின்றாள் என்று சுந்தரர் கற்பனை செய்கின்றார்.

சிலைத்து நோக்கும் வெள்ளேறு செந்தழல் வாய பாம்பு அது மூசெனும்

பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே

மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு காரகில் சண்பகம்

அலைக்கும் பூம்புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே

இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் (7.36.3) மற்றொரு தாருகவனத்துப் பெண்மணி, பெருமானே உமது அழகுக்கு பொருத்தமான உடை அணிந்து வாராமல் கோவண ஆடையுடன் வருகின்ற நீர் பித்தரோ என்று கேள்வி கேட்பதாக சுந்தரர் கூறுகின்றார். தூய்மையாக ஒளிவீசும் கண்களும், தூய்மையான திருவாயும் திருமேனியும் கொண்டுள்ள பெருமான், எதற்காக பேய்கள் புடை சூழ நடனமாடிக் கொண்டு வர வேண்டும் என்ற கேள்வியும் இங்கே கேட்கப் படுகின்றது. தூயவர் என்ற சொல்லுக்கு அழகியர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமானது அழகுக்கு பொருத்தமாக அவர் அணியும் உடையும், அவருடன் வருவோரும் இருப்பது தானே பொருத்தம் என்பதே அந்த பெண்மணியின் கருத்தாக உள்ளது என்று சுந்தரர் கூறுகின்றார்.

தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில்

பேயோடு ஆடலைத் தவிரும் நீர் ஒரு பித்தரோ எம் பிரானிரே

பாயும் நீர்க்கு இடம் கார் கமலமும் பைந்தண் மாதவி புன்னையும்

ஆய பைம்பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.36.10) தாருகவனத்து பெண்மணி ஒருத்தி பிச்சை ஏற்கும் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை பெருமானே நீர் சொல்வீராக என்று கேட்கும் வகையில் அமைந்துள்ளது. உடலின் பல இடங்களில், கையிலொரு பாம்பு, இடுப்பினில் ஒரு பாம்பு, கழுத்தினில் ஒரு பாம்பு, தாழ்ந்து தொங்கும் சடையினில் ஒரு பாம்பு என்று அணிந்து கொண்டு வரும் பெருமானே, நீர் வேதங்கள் ஒதியவாறும் உடல் முழுவதும் திருநீறு பூசியவாறும் வருகின்றீர்; இவற்றில் எந்த கோலமும் பிச்சை எடுப்போருக்கு பொருந்தாமையால் இந்த கேள்வி கேட்கப் படுகின்றது போலும். இந்த பதிகத்தின் கடைப் பாடலில், பிச்சைப் பெருமானை பார்த்த மங்கைமார் பலர் பெருமான் பால் தாங்கள் கொண்டிருந்த காதலின் விளைவாக, சொன்ன மொழிகள் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார்.

கையோர் பாம்பு அரை ஆர்த்தொர் பாம்பு கழுத்தோர் பாம்பவை பின்பு தாழ்

மெய்யெலாம் பொடிக் கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும்

பையவே விடங்காக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்

ஐயம் ஏற்கும் இது என் கொலோ சொலும் ஆரணீய விடங்கரே

தனது மனைவியுடன் பலி ஏற்கச் சென்றதாக சிவபெருமானை குறிப்பிடும் திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரானின் பாடல்கள் நமக்கு, சுந்தரரின் பைஞ்ஞீலி பதிகத்துப் பாடல் ஒன்றினை (7.36.5) நினைவூட்டுகின்றது. இந்த பதிகம் தாருகவனத்து மகளிர் கூற்றாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம் என்று கூறுவார்கள். பெருமானுக்கு பிச்சை இடுவதற்காக வந்த ஒரு பெண், பெருமானின் திருமேனியில் வெண்முத்து போன்று பிரகாசிக்கும் திருநீற்றினைக் கண்டு வியக்கின்றாள். பெருமானின் திருமேனியை உற்று நோக்கிய அவளுக்கு, பெருமானின் இடது பாகத்தில் நீண்ட கண்களோடும் காணப்படும் உமை அம்மை கண்ணில் தெரிகின்றாள். அவளுக்கு உடனே கோபம் வருகின்றது. என்ன துணிச்சல் இருந்தால், தனது உடலில் ஒரு பெண்ணினை வைத்திருக்கும் கோலத்தோடு பிச்சை கேட்க பெருமான் தனது இல்லத்திற்கு வருவார் என்று எண்ணுகின்றாள். அந்த கோபம் பாடலாக வெளிப்படுகின்றது. பெருமானே நாங்கள் உமக்கு பலியிட மாட்டோம், நீர் இந்த விடத்தை விட்டு அகன்று செல்லலாம் என்று கூறுகின்றாள். அவ்வாறு சொன்ன பின்னர் அவளுக்கு வேறு ஒரு சந்தேகம் தோன்றுகின்றது. தனது உடலில் ஒரு பெண் கொடியை கொண்டுள்ள பெருமான் சடையிலும் கங்கையை வைத்துள்ளாரோ என்பது தான் அந்த சந்தேகம். கங்கை ஆற்றினை உமது சடையில் சூடியவாறு வந்தீரோ, சொல்வீராக என்று பெருமானிடம் வினவுகின்றாள். பெருமானின் அழகில் மயங்கிய தாருகவனத்து பெண்மணிகள், அவர் இரண்டு மனைவியருடன் இருப்பதால் கோபம் கொண்டு பிச்சை இட மாட்டோம் என்று சொன்னதாக, சுவையான கற்பனை செய்த பாடல்.

நீறு நும் திருமேனி நித்திலம் நீள் நெடுங் கண்ணினாளொடும்

கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடகிலோம் பலி நடமினோ

பாறு வெண்தலை கையில் ஏந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்

ஆறு தாங்கிய சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே

பொழிப்புரை:

வானில் உலவும் வெண்மை நிறத்து பிறைச் சந்திரனை, தனது தலையில் தலைமாலையாக சூடிய இறைவன், குளிர்ச்சி பொருந்திய எலும்பு மாலை ஆமையோடு ஆகியவற்றை அணிந்தவனாக தாழ்ந்து தொங்குவதும் செம்பட்டை நிறத்தில் உள்ளதுமாகிய சடையுடன் விளங்கிய பெருமான், நான் அவனை எண்ணாது இருக்கும்போதே அவன் எனது இல்லம் வந்த பெருமான், பின்னர் எனது இல்லத்தை விட்டு சென்றதால், பிரிவுத் துயரில் மூழ்கிய நான், மிகுந்த துன்பம் அடைந்தேன். இவ்வாறு என்னை வருத்தியவன், காணும் கண்கள் மகிழும் வண்ணம் செழித்து காணப்படும் சோலைகள் நிறைந்த கானூர் தலத்தில் உறைபவனும் தேவர்களுக்கு தலைவனும் ஆகிய பெருமான் ஆவான்.

பாடல் 5:

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 4 தொடர்ச்சி மற்றும் பாடல் 5 (திதே 0759)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0760)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0761)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0762)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0763)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0764)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0765)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0766)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0767)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0768)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0769)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0770)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0771)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0772)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0773)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0774)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி மற்றும் பாடல்கள் 6 7 8(திதே 0775)

தார்கொள் கொன்றைக் கண்ணியோடும் தண் மதியம் சூடி

சீர்கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து

ஊர்கள் தோறும் ஐயம் ஏற்று என்னுள் வெந்நோய் செய்தார்

கார்கொள் சோலைக் கானூர் மேய கறைக் கண்டத்தாரே

விளக்கம்:

தார்=மாலை; கார்=மேகம்; கார் கொள்=மேகம் போன்று கருமை நிறம் பொருந்திய; சேடர்=சிறந்த ஒழுக்கம் உடையவர், சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்; வெந்நோய்=கொடிய நோய்; பல ஊர்களுக்கும் சென்று பிச்சை ஏற்ற பெருமான், தனக்கு கொடிய நோய் உண்டாக்கியதாக சம்பந்த நாயகி கூறுவது பற்றி நாம் சற்று சிந்திக்க வேண்டும். பல ஊர்களுக்கும் சென்ற பெருமான் தனது இல்லத்திற்கும் வந்தார் என்பதையும், அவ்வாறு வந்த அவரின் அழகினில் மயங்கிய தனக்கு, அவரது பிரிவு வருத்தத்தையும், வருந்திய உள்ளத்தில் காதல் நோயினையும் ஏற்படுத்தியது என்பதையும் சம்பந்த நாயகி உணர்த்துவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். கடந்த மூன்று பாடல்களின் பின்னணியில் இந்த பாடலையும் நாம் கருதினால், மேற்குறிப்பிட்ட செய்தி நமக்கு புலப்படும். இந்த செய்தி நமக்கு திருவாசகம் அன்னைப் பத்து பதிகத்தின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. பிச்சை ஏற்பதற்காக தலைவியின் இல்லத்தினுள் புகுந்த பெருமான், பிச்சை மட்டுமா ஏற்றுக்கொண்டு சென்றார்; தலைவியின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டதால் தான், அவர் சென்றதை நினைத்து தலைவி, அவரை மீண்டும் காண்பது எப்போது என்ற ஏக்கத்துடன் உள்ளம் நைந்தவளாக காணப் படுகின்றாள் என்று தலைவியின் தோழி தலைவியின் அன்னைக்கு உணர்த்தும் பாடல் இது.

தையல் ஓர் பங்கினர் தாபத வேடத்தர்

ஐயம் புகுவரால் அன்னே என்னும்

ஐயம் புகுந்து அவர் போதலும் என் உள்ளம்

நையும் இது என்னே அன்னே என்னும்

தாபத வேடம்=தவ வேடம்; இந்த பாடலில் உமை அன்னையுடன் கூடி இருந்து இல்லறம் நடத்தும் பெருமான் தவ வேடத்துடன் இருப்பதாக மணிவாசகர் கூறுகின்றார். இல்லறமும் துறவும் ஒன்றுக்கொன்று எதிரான நெறிகள், முரண்பட்ட நெறிகள் என்று பலரும் சொல்வதால் எவ்வாறு, இந்த இரண்டு கோலங்களும் இணைந்தவராக பெருமான் இருக்க முடியும் என்ற சந்தேகம் நமக்கு எழுவது இயற்கையே. இயல்பாகவே ஐந்து புலன்களையும் அடக்கி வென்ற பெருமானுக்கு இல்லறம் துறவறம் இரண்டையும் ஒன்றாக கடைப்பிடிப்பது எளிதான காரியம் தானே. இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதை கருவூர்த் தேவர் ஒரு திருவிசைப்பா பாடலில் விளக்குகின்றார்.

மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளம் திங்களை முடிமேல்

கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட சோளேச்சரத்தானை

அங்கை ஓடு ஏந்திப் பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்

செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவனருள் கடலே

ஏன் பற்றற்றவனாக இருக்கும் பெருமான் இவ்வாறு தேவியுடன் எப்போதும் இணைந்து இருப்பவராக காட்சி தருகின்றார் என்ற நமது ஐயத்தினை போக்கும் வண்ணம், திருச்சாழல் பதிகத்தினில் மணிவாசகர் ஒரு பாடலை அருளியுள்ளார். அருணை வடிவேல் முதலியார் அவர்கள், உயிர்கள் போகத்தை விரும்பி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெருமான் போகவடிவம் கொண்டு போகி போல் நிற்கின்றாரே அன்றி அவர் உண்மையில் போகம் அனுபவிப்பவர் அல்லர் என்று விளக்கம் கூறுவார். இதே கருத்து திருச்சாழல் பதிகத்தில் மணிவாசகரால் உணர்த்தப் படுவதையும் நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். பெருமான் பெண்ணைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டிராவிடில் உலகத்து உயிர்கள் எல்லாம் துறவு மேற்கொண்டு யோகத்தில் புகுவர்; அதனால் உலகம் வளராது நிற்கும். எனவே போகத்தில் ஆழ்ந்திருப்பது போன்று தோற்றத்தை நமக்கு பெருமான் நல்குகின்றான் என்பதே இந்த பாடல் உணர்த்தும் செய்தியாகும்.

தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்

பெண் பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி

பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்

விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ

மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் இன்பம் துய்க்காமல் யோகியராக மாறினால், அவர்களால் ஏற்படவிருந்த இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும். இனப்பெருக்கம் தடைப்பட்டால் வினைகளுடன் பிணைந்திருக்கும் உயிர்கள் மீண்டும் பிறப்பெடுத்து தங்களது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ள தேவையான உடல்கள் இல்லாமல் போய்விடும். எனவே உடல்களை தோற்றுவிக்கும் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எனவே தான் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, மனிதர்கள் இன்பம் துய்க்கும் வழியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக, இறைவனும் தான் போகம் துய்ப்பது போன்று காட்சி அளிக்கின்றான். மனிதப் பிறவி தான் அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்தது என்று சொல்வதன் காரணம், மனிதப் பிறவி தான்,உயிர் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொண்டு உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைய வழி வகுக்கும் பிறவியாகும். இந்த மனிதப் பிறவியின் பெருக்கம் தடைப்பட்டால், எண்ணற்ற உயிர்கள் என்றென்றும் மலங்களுடன் பிணிக்கப்பட்டு விடுதலை அடைய முடியாமல் போய்விடும். மேலும் உயிர்கள் முக்தி நிலை அடைந்து தன்னுடன் வந்து இணைந்து என்றென்றும் பேரின்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பமும் ஈடேறாமல் போய்விடும். எனவே, அத்தகைய உயிர்கள் பொருத்தப் படுவதற்கான தகுந்த உடல்கள் இனப்பெருக்கத்தின் மூலம் தான் உருவாக்கப் பட முடியும் என்பதால், உயிர்கள் போகிகளாக வாழ்ந்து இன்பம் துய்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் இறைவன் பிராட்டியுடன் கூடியிருந்து, உலகம் தொடர்ந்து வளரும் பொருட்டு நமக்கு முன்மாதிரியாக விளங்குகின்றான் என்ற செய்தி மேற்கண்ட திருவாசகப் பாடலில் உணர்த்தப் படுகின்றது.

எந்த கோலத்துடன் பெருமான் பிச்சை ஏற்பதற்காக தனது இல்லம் வந்தார் என்று தலைவியின் கூற்றாக அன்னைப்பத்து பதிகத்தில் உணர்த்திய மணிவாசகர், அவ்வாறு பிச்சை கேட்டு தனது இல்லம் வந்த பெருமான், தனது இல்லத்திலிருந்து வெளியே சென்ற பின்னர், தனது உள்ளம் நைந்து போனதின் காரணம் தனக்கு புரியவில்லை என்று கூறுவதாக சொல்கின்றார். பெருமானின் அழகினில், நற்பண்புகளில், ஆற்றலில் தனது மனதினை பறிகொடுத்த தலைவி, வெகு விரைவில் பெருமானுடன் இணையவேண்டும் என்று விரும்புவதே காரணம் என்று தேவார திருவாசக நூல்களில் காணப்படும் அகத்துறை பாடல்கள் நமக்கு விளக்குகின்றன. நாமும், இந்த பாடல்களில் சுட்டிக் காட்டப்படும் தலைவி போன்று, பெருமான் பால் தீவிரமான காதல் கொண்டு, அவனை அடைவதற்கு விருப்பம் கொள்ள வேண்டும் என்பதையே இந்த பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்த பாடலில் திருஞானசம்பந்தர் ஊர்கள் தோறும் சென்று பெருமான் பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். பல ஊர்களுக்கும் பல இல்லங்களுக்கும் சென்று மேலும்மேலும் மிகவும் அதிகமான ஆன்மாக்களிடமிருந்து பலி பெற்று அவர்களை உய்விக்க வேண்டும் என்பதே பெருமானின் விருப்பமாக இருக்கின்றது என்பதை உணர்த்தும் பாடல்களை நாம் இங்கே காண்போம். தான் அருளிய முதல் பதிகத்தின் பத்தாவது பாடலில் (1.1.10), பெருமான் பல இடங்களுக்கும் சென்று பலி தேர்பவன் என்பதை உணர்த்தும் பொருட்டு, உலகெங்கும் பலி தேர்பவன் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பொறியில்=அறிவற்ற; இந்த பாடலில் பித்தர் என்று இறைவனை திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். சுந்தரரும் இறைவனை பித்தா என்று தனது முதல் பதிகத்தில் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் எவரும் அதனை அணிய மாட்டார்கள். ஆனால் பெருமான், ஏனையோரிடமிருந்து மாறுபட்டு யானைத் தோலை அணிந்து கொண்டதை குறிப்படும் வண்ணம் பித்தர் என்று திருஞான சம்பந்தர் அழைத்தார் போலும். பெருமான் பலி ஏற்கும் நோக்கத்தை அறியாதவர்களாக பெருமானின் பெருமைக்கு சிறிதும் பொருந்தாத சொற்களை புத்தரும் சமணரும் கூறிய போதிலும், அந்த சொற்களை பொருட் படுத்தாமல் பெருமான், உலகத்தவர் தனக்கு பிச்சையிட்டு உய்வதற்கு வாய்ப்பினை தொடர்ந்து அளிக்கும் வண்ணம் பிச்சை ஏற்கின்றார் என்பதை இங்கே திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். அறிவற்ற சமணர்களும் புத்தர்களும் பெருமானின் பெருமைக்குரிய செயல்களை (பலி ஏற்பது போன்ற செயல்கள்) சரியாக புரிந்து கொள்ளாமல், பிழைபட்ட கருத்துக்களை சொல்லி வந்த போதும், அத்தகைய சொற்களால் மயங்கி தங்களது மனம் போன போக்கில் உலகத்தவர் பலரும் பழித்து கூறிய போதிலும், அத்தகைய சொற்களை பொருட் படுத்தாது உலகத்தவருக்கு உய்யும் வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு பெருமான் தொடர்ந்து உலகெங்கும் திரிந்து பலி ஏற்கின்றார். இத்தகைய பண்பினை உடைய பெருமான், எனது உள்ளத்தைக் கவர்ந்து விட்டார். தன்னை தாக்கும் நோக்கத்துடன் தன்னை நாடி வந்த மதயானை மருளும் வண்ணம் அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது பெருமான் போர்த்துக் கொண்டதைக் கண்ட அனைவரும், யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறியாமல் போர்த்துக் கொள்ளும் இவர் என்ன பித்தரா என்று எண்ணினராகிலும், யானையின் பசுந்தோலால் பெருமானுக்கு கேடு ஏதும் விளையாததைக் கண்டு ஈது என்ன மாயம் என்று வியந்தனர். இத்தகைய ஆற்றல் உடைய பெருமான், பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் உறைகின்றார். அவரே எனது உள்ளம் கவர்ந்தவரும் எனது பெருமைக்குரிய தலைவரும் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா

ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்

மத்த யானை மறுக உரி போர்த்ததோர் மாயம் இது என்னப்

பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

வலிதாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.3.2) திருஞானசம்பந்தர், பல இல்லங்களின் கடை வாயில் சென்று பலி ஏற்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். படையிலங்கு கரம் எட்டுடையான் என்று பெருமானை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். எண்தோளன் என்று பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்படும் பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்றபோது தனது எட்டு கைகளிலும் எட்டு ஆயுதங்களை ஏந்திச் சென்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. தக்கயாகத்தை அழிக்கச் சென்ற வீரபத்திரரும் தனது கைகளில் எட்டு வேறுவேறு ஆயுதங்களை ஏந்திச் சென்றார் என்று, ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாக பரணி நூல் கூறுகின்றது. பொதுவாக மழுவும் சூலமும் ஏந்தியவன் என்று பெருமானை பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிட்டாலும், பெருமானின் மற்ற படைகளும், ஆங்காங்கே தேவாரப் பாடல்களால் உணர்த்தப் படுகின்றன. கட்டங்கம் என்பது எலும்புத் தண்டின் நுனியில் கபாலம் பொருத்தப்பட்ட ஆயுதம். வில்லும் அம்பும் ஏந்தியவனாக பெருமான் திரிபுரம் எரித்த வீரச்செயலை நாம் அனைவரும் அறிவோம். பினாகம் என்றும் சிவதனுசு என்றும் பெருமானின் வில் அழைக்கப் படுகின்றது. சந்திரஹாசம் எனப்படும் வாள், அரக்கன் இராவணனுக்கு பெருமானால் அளிக்கப்பட்ட ஆயுதம். பாசுபதம் மற்றும் சக்கரப்படை முறையே அர்ஜுனனுக்கும் திருமாலுக்கும் அளிக்கப்பட்ட ஆயுதங்கள்; எனவே இந்த மூன்று ஆயுதங்களும் பெருமானின் கரங்களை அலங்கரித்த ஆயுதங்கள் என்பது நமக்கு புலனாகின்றது. வேல் வலன் ஏந்திய கையான் என்று பல தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. கையலகு என்பது பெருமான் ஏந்திய ஆயுதமாக கருதப்படுகின்றது. கையலகு என்பதற்கு சிறுவாள் என்றும் குறுவாள் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. பாசம் என்பதும் சிவபெருமானின் படையாக கருதப்படுகின்றது. முசலம் என்று மழுப்படை உணர்த்தப் படுகின்றது. தஞ்சை பெரிய கோயிலின் உட்புறத்து விமானச் சுவற்றின் வடபகுதியில், காணப்படும் சோழர்கள் காலத்து சிற்பம் ஒன்று, திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போருக்குச் சென்ற கோலத்தை சித்தரிக்கின்றது. இந்த ஒவியத்தில் பெருமானின் எட்டு கரங்களிலும் எட்டு ஆயுதங்கள் வரையப் பட்டுள்ளன. எல்லோரா குகைச் சிற்பம் ஒன்றிலும் பெருமான் தனது எட்டு கைகளில் எட்டு ஆயுதங்கள் தாங்கிய வண்ணம் காட்சி தரும் சிற்பம் உள்ளது. இலங்கு=பொருந்திய; கடை=வீட்டின் வாயில்; மடை=நீர் வரும் வழிகள்; நிழல்=ஒளி; பதிகத்தின் முதல் பாடலில் வலிதாயம் தலத்தினை நினைக்கும் அடியார்கள் மேல் துன்பங்களும் பிறவிப்பிணி நோயும் படராது என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் வலிதாயம் தலம் சென்றடையும் அடியார்களை துன்பங்களும் அதனால் விளையும் துயரங்களும் அணுகாது என்று கூறுகின்றார். கள்வன் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் இறைவனை அழைக்கின்றார். தனது திறமை, ஆற்றல் முதலியவற்றை மறைத்துக் கொண்டு பிச்சைப் பெருமானாக கோலம் கொண்டு உலகெங்கும் பலியேற்றுத் திரியும் பெருமானை கள்வன் என்று அழைப்பது பொருத்தம் தானே. படிறு=வஞ்சகம், பொய்; படைகள் பொருந்திய எட்டு கரங்களை உடையவனாகிய சிவபெருமான், தனது ஆற்றலையும் கோலத்தையும் வஞ்சனையாக மறைத்துக் கொண்டு, பிச்சைப் பெருமானின் வேடத்தை ஏற்றுக் கொண்டு பல வீடுகளின் வாயில்கள் சென்றடைந்து பலியேற்கின்றான். இத்தகைய கள்வன் உறைகின்ற திருக்கோயில் வலிதாயம் தலத்தில் உள்ளது. நீர் நிறைந்த வாய்க்கால்களால் சூழப்பட்ட சோலைகளில் காணப்படும் ஒளிவீசும் மலர்களில் உள்ள தேன் மணம் கமழும் தலமாகிய வலிதாயம் தலம் சென்றடைந்து, ஆங்குறையும் இறைவனைச் சரணடைந்து தொழும் அடியார்களை வினைகளால் விளைகின்ற துன்பங்களும் துயரங்களும் அணுகாது என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

படை இலங்கு கரம் எட்டுடையான் படிறாகக் கலனேந்திக்

கடை இலங்கு மனையில் பலி கொண்டுணும் கள்வன் உறை கோயில்

மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலிதாயம்

அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர் தானே

வியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.13.4) மடவார் இடு பலியை ஏற்பவன் என்று பெருமானை, திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். கழை=மூங்கில்; நன்கு முற்றிய மூங்கில், பாம்பின் கழுத்து, யானையின் மத்தகம் ஆகிய இடங்கள் முத்துகள் தோன்றும் இடம் என்று கூறுவார்கள்; அடைவு=முறை என்று சிலரால் பொருள் கூறப்பட்டாலும் சரணடைதல் என்ற பொருள் மிகவும் பொருத்தமாக உள்ளது. கடையார்=உழவர்கள்; கடையார் என்ற சொல்லுக்கு அழகிய கடைகள் என்று பொருள் கொண்டு, இந்த தலத்து கடைகளில் அகில் கட்டைகள் மற்றும் முத்துகள் விற்கப் பட்டன என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். பிரம கபாலத்தில் தாருகவனத்து மகளிர் இட்ட பலியை விரும்பி ஏற்றுக் கொண்ட பெருமான், தனது அடியார்கள் சரணம் என்று தனது திருவடிகளைப் பணிந்து தொழ உறைகின்ற இடம் வியலூர் தலம் ஆகும். காவிரி நதி அடித்துக் கொண்டு வரும் அகில் கட்டைகள் சேரும் வயல்களில் உழவர்கள் வரிசையாக நட்ட மூங்கில் மரங்கள் வெடித்து அதிலிருந்த முத்துகள் வரிசையாக சிந்தி நெருங்கிய மரங்களின் இடையே காட்சி அளிக்கும் சோலைகள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து காணப்படும் தலம் வியலூர் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அடைவாகிய அடியார் தொழ அலரோன் தலை அதனில்

மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடமாம்

கடையார் தரு அகிலார் கழை முத்தம் நிரை சிந்தி

மிடையார் பொழில் புடை சூழ் தரு விரிநீர் வியலூரே

இடும்பாவனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.17.7) திருஞான சம்பந்தர், பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்தியவாறு உலகெங்கும் சென்று பெருமான் பலி ஏற்கிறார் என்று கூறுகின்றார். பாறு=பருந்து; பெருமானின் கையிலிருக்கும் மண்டையோட்டின் தசைத் துணுக்குகளை கொத்தித் தின்பதற்கு எந்த பருந்தும் துணியாது. எனினும் மண்டையோட்டின் பொதுத் தன்மை கருதி, பிரம கபாலத்தில் தசைத் துண்டுகள் ஒட்டிக் கொண்டு இருப்பதாகவும் அந்த துணுக்குகளை கொத்தித் தின்பதற்காக பருந்து வருவதாகவும் கூறுகின்றார். கூறு ஏறிய= பெருமானின் உடலில் ஒரு பாகமாக பொருந்திய பிராட்டி; ஏறு=எருது, இடபம்; ஏறிய=மிகுந்த; பாறு=பருந்து; நிலவிய=விளங்கும்; நீறணிந்த மேனியராய், விளங்கும் பெருமான், உலகமெங்கும் திரிந்து சென்று, பருந்து கொத்தித் தின்னவரும் தசைத் துணுக்குகளை உடைய தன்மை கொண்ட மண்டை ஓட்டினைத் தனது கையில் ஏந்தியவாறு, பக்குவம் அடைந்த உயிர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்றுக்கொள்ளும் பெருமான், உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டு மகிழ்கின்றான். அவன் எருதினைத் தனது வாகனமாகக் கொண்டு உலகெங்கும் திரிகின்றான். அத்தகைய பெருமான் உறைகின்ற தலம் இடும்பாவனம் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நீறு ஏறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம்

பாறு ஏறிய படு வெண்டலை கையில் பலி வாங்காக்

கூறேறிய மடவாள் ஒரு பாகம் மகிழ்வெய்தி

ஏறேறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.29.1) திருஞான சம்பந்தர் பெருமானை, ஊருலாவு பலி கொண்டவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். உலகேத்த என்ற சொல், பலி ஏற்கும் செயல் மற்றும் கங்கை நதியை சடையில் ஏற்றுக் கொண்ட செயல் ஆகிய இரண்டு செயல்களுக்கு இடையே குறிப்பிடப் படுவதால், இரண்டு செயல்களுக்கு உரிய அடைமொழியாக கருதுவது சிறப்பு. ஊருலாவு=பல ஊர்கள் சென்று; தான் இதற்கு முன்னம் சென்ற தலைச்சங்காடு, வெண்காடு, குடவாயில் முதலான பல தலத்து அந்தணர்களை சிறப்பித்து உணர்த்திய திருஞானசம்பந்தர், இந்த தலத்து அந்தணர்களையும் சிறப்பித்து இந்த பதிகத்தை தொடங்குகின்றார். அந்நாளில் பல தலங்களில் அந்தணர்கள், பெருமானை போற்றி வழிபாடு செய்த நிலையை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. அண்ணல்=தலைவன்; பல ஊர்கள் சென்று திரிந்து பலியேற்கும் சிவபெருமானை, வானிலிருந்து கீழே வேகமாக இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றுக் கொண்ட தலைவனாகிய சிவபெருமானை உலகம் புகழ்ந்து போற்றுகின்றது. கங்கை நதி உலாவுகின்ற பெருமானின் புன்சடை நிமிர்ந்து நிற்கின்றது. அனைவர்க்கும் தலைவராக விளங்கும் பெருமான் எழுந்தருளியுள்ள சித்தீச்சரம் தலத்தினை, சிறப்பு வாய்ந்த மறையோர்கள் வாழும் சித்தீச்சரம் தலத்தினை, நெஞ்சமே நீ சென்றடைந்து, அந்த தலத்தினில் உறையும் பெருமானை வணங்கி வழிபடுவாயாக என்று தனது நெஞ்சினுக்கு கூறுவது போன்று, நமக்கு திருஞான சம்பந்தர் அறிவுரை கூறும் பதிகம்.

ஊருலாவு பலி கொண்டு உலகு ஏத்த

நீருலாவு நிமிர் புன்சடை அண்ணல்

சீருலாவு மறையோர் நறையூரில்

சேரும் சித்தீச்சரம் சென்றடை நெஞ்சே

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.29.2) பெருமான் பல காடுகளும் நாடுகளும் சென்று பலி ஏற்கின்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். காடும் நாடும் கலக்க என்ற தொடரினை கங்கை நதிக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக கருதி, காட்டிலும் நாட்டிலும் ஓடும் கங்கை நதி என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது. ஆனால் இதனை விடவும் சிறந்த விளக்கங்களும் சான்றோர்களால் அளிக்கப் படுகின்றது. காடும் நாடும் கலக்க என்ற தொடருக்கு சிவக்கவிமணியார் ஒரு வித்தியாசமான விளக்கம் தருகின்றார். பிரளய காலத்தில், உயிரிலிருந்து பிரிக்கப்பட்ட உடல்கள் எங்கும் சிதறி சுடுகாடு போன்று காணப்படும் இடங்கள், பெருமான் மீண்டும் உலகினைத் தோற்றுவிக்க திருவுள்ளம் கொள்ளும் போது நாடாகவும் நகரங்களாகவும் மாறி விடுகின்றன அல்லவா, அந்த தன்மையையே காடும் நாடும் கலக்கச் செய்கின்றவன் இறைவன் என்று உணர்த்தப் படுகின்றது என்று கூறுகின்றார். காடும் நாடும் என்ற தொடருக்கு, காடுகளில் உள்ள, முனிவர்கள் வாழ்கின்ற இல்லங்களும் நாட்டினில் உள்ள வேறு பல இல்லங்களும் சென்று, பல இடங்களும் கலந்து சென்று பலி ஏற்கும் இறைவன் என்றும் பலராலும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. தாருகவனம் சென்று ஆங்கே உள்ள முனிவர்களின் இல்லங்களில் பலியேற்ற பெருமான் அல்லவா. எனவே நாட்டில் வாழும் மனிதர்களும் பயனடைய வேண்டி, நாட்டிலும் பலி ஏற்கின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமாகவும் உள்ளது. பக்குவம் அடைந்த உயிர்கள் எங்கிருந்தாலும் அங்கே சென்று பெருமான் அவர்களது மலங்களை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு முக்தி உலகினை பரிசாக அளிக்கின்றான். வீடுமாக=வீடுபேற்றினை விரும்பியவர்களாக; காடு நாடு ஆகிய பல இடங்களுக்கும் கலந்து சென்று, காட்டில் உள்ள முனிவர்களின் இல்லங்கள் மற்றும் நாட்டில் உள்ள இல்லறத்தாரின் இல்லங்கள் ஆகிய பல இடங்களிலும் பலி ஏற்கின்ற பெருமான், மிகுந்த நீர்ப்பெருக்கின் காரணத்தால் விரிந்து ஓடும் தன்மை வாய்ந்த கங்கை நதியைத் தனது ஒளி மிகுந்த புன்சடையில் தேக்கி வைத்துக் கொண்டுள்ள பெருமான், அந்த சடை தாழும் வண்ணம் நடனம் ஆடும் பெருமான், வீடுபேற்றினைத் தவிர்த்து வேறு எதனிலும் ஆர்வம் கொள்ளாத மறையோர்கள் வாழ்கின்ற நறையூரில் உள்ள நீண்ட புகழினை உடைய சித்தீச்சரம் திருக்கோயிலில் உறைகின்றார். அந்த பெருமானை, நெஞ்சமே நீ நினைவாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காடு நாடும் கலக்கப் பலி நண்ணி

ஓடு கங்கை ஒளிர் புன்சடை தாழ

வீடுமாக மறையோர் நறையூரில்

நீடும் சித்தீச்சரமே நினை நெஞ்சே

புகலி தலத்தின் மீது அருளிய பாடல் (1.30.4) ஒன்றினில் கயல்மீன் போன்று அகன்ற கண்களைக் கொண்ட தேவியுடன், எருதின் மீது ஏறி அமர்ந்தவராக பெருமான் தாருகவனத்து முனிவர்களின் இல்லங்களுக்கு பலி ஏற்கச் சென்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அயலார் என்ற சொல் தாருகவனத்து முனிவர்களை குறிப்பிடுகின்றது. கடை=மனைவாயில்; இயலால்=அழகோடு; தடம்=அகன்ற; பூம்புகலி=அழகிய புகலி நகரம்; மீன் போன்று அழகியதும் அகன்றதும் ஆகிய கண்களை உடையவராக அழகுடன் விளங்கும் தேவியுடன் பெருமான் இடபத்தின் மீது அமர்ந்து கொண்டு, அயலிடமாகிய தாருகவனத்து இல்லங்களின் வாயில் சென்று பலி ஏற்றார். அழகியராகிய. பெருமான், இயல்பாக உறைகின்ற இடம், எட்டு திசைகளிலும் உள்ள அடியார்கள் வந்து சேரும் அழகிய புகலி நகரமாகும்;

கயலார் தடங்கண்ணியொடும் எருது ஏறி

அயலார் கடையில் பலி கொண்ட அழகன்

இயலால் உறையும் இடம் எண்திசையோர்க்கும்

புயலார் கடல் பூம்புகலி நகர் தானே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.32.1) திருஞானசம்பந்தர் பெருமான் உண்பது ஊரிடு பிச்சை என்று குறிப்பிடுகின்றார். ஓடு=பிரம கபாலம்; உண்கலனை ஏந்திய வண்ணம் பல இடங்களுக்கும் பிச்சைக்காரர்கள் தான் செல்வார்கள் என்பதால் பெருமானை பிச்சைக்காரன் என்றும் அவன் பிச்சை எடுத்து உண்கின்றான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆனால் உண்மையில் பெருமான் அனைத்து உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டவன்: பசி தூக்கம் கோபம் தாபம் ஆகியவை அவனுக்கு இல்லை; எனவே அவன் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை; பிரம கபாலத்தைத் தனது உண்கலனாக ஏந்திய வண்ணம் ஊரூராகச் சென்று பிச்சை எடுத்து உண்பவனும், சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டு வாழ்பவனும், கல்லால நிழல் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்தவனும் ஆகிய பெருமான், என்றும் இளமையாக உள்ள மார்பகங்களுடன் விளங்கும் உமை அன்னையுடன் மகிழ்ந்து பெருமையோடு வீற்றிருக்கும் இடம் இடைமருது தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஓடே கலன் உண்பது ஊரிடு பிச்சை

காடே இடமாவது கல்லால் நிழற்கீழ்

வாடா முலை மங்கையும் தானும் மகிழ்ந்து

ஈடா உறைகின்ற இடைமருது ஈதோ

கலன்=உண்கலன், ஓடு=பிரம கபாலம்; காடு=சுடுகாடு; உலகினில் உள்ள அனைத்துப் பொருட்களும் அழிந்த நிலையில், அனைத்து உடல்களிலிருந்தும் உயிர்கள் பிரிந்த நிலையில், உயிரற்ற உடல்களுடன் உலகமே ஒரு சுடுகாடாக காட்சி அளிக்கும் நிலையில், அழியாமல் எஞ்சி இருப்பவர் பெருமான் ஒருவரே. அந்த நிலையில் அனைத்து உயிர்களையும் இளைப்பாற்றி, அந்நாள் வரை எண்ணற்ற பிறவிகள் எடுத்து களைத்த உயிர்கள் ஒய்வு பெறுகின்ற நிலையை நினைத்து பெருமான் மகிழ்ச்சி அடைகின்றார். அந்த மகிழ்ச்சி நடனமாக வெளிப்படுகின்றது. இதனையே நள்ளிருளில் ஆடும் நட்டம் என்றும் காட்டினில் ஆடும் நடனம் என்றும் கூறுகின்றனர். இந்த தன்மையே காட்டில் வாழ்வதாகவும் பல பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. அம்பிகையின் திருநாமம் பெருநல முலையம்மை; அந்த திருநாமம் தான் வாடாமுலை அம்மை என்று சற்று மாற்றப் பட்டுள்ளது. ஈடு=பெருமை; உமை அன்னையுடன் சேர்ந்திருக்கும் பெருமான், பெருமையுடன் வீற்றிருப்பதாக இங்கே சொல்லப் படுகின்றது. தனது எண்ணங்கள் அனைத்தையும் செயலாக்கும் துணைவி இருப்பது, எவர்க்குமே பெருமை அளிக்கும் அல்லவா. மிகவும் எளியவனாக பல் இல்லங்கள் திரிந்து பிச்சை ஏற்பவனாகவும் காட்டினில் வாழ்பவனாகவும் தோற்றம் அளித்தாலும், பெருமானின் ஆற்றல் எந்தவிதத்திலும் குறைந்து விடவில்லை என்பதை மிகவும் அழகாக ஞானகுருவாக பெருமான் விளங்கும் தன்மையை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார்.

உண்பது ஊரிடு பிச்சை என்று வேட்களம் தலத்து பதிகத்தின் பாடலிலும் (1.39.2) திருஞான சம்பந்தர் கூறுகின்றார். ஏற முடித்து=மேலே எடுத்திக் கட்டி, மேலே பொருந்த; சரிந்து=கீழே தாழ்ந்து; பாரிடம்=பூதம்; போதருமாறு=நிலை; இதே பதிகத்தின் முதல் பாடலில், இறைவன் புரியும் ஐந்து தொழில்களை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இறைவன் உயிர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, உயிர்கள் தங்களது வினைகளை கழித்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, மீண்டும்மீண்டும் உலகத்தையும் உலகப் பொருட்களையும் படைப்பதை நமக்கு இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார். இந்த பாடலில் உலகத்தவர் இடும் பிச்சையை ஏற்பதற்காக பெருமான் பல இடங்களுக்கும் செல்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். இதுவும் இறைவன் உயிர்களுக்கு செய்யும் கருணைச் செயலே ஆகும். மேலும் சங்க வெண்தோடு இலங்க என்று குறிப்பிட்டு மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலையும் உணர்த்தப் படுகின்றது. தாழ்ந்து தொங்கும் தனது சடைமுடியினை எடுத்துக் கட்டி, சங்கினால் செய்யப்பட்ட குழை ஆபரணத்தையும் வெண்மை நிறத்துடன் மிளிரும் தோட்டினையும் தனது காதினில் தொங்கும் வண்ணம், பூத கணங்கள் தன்னைச் சூழ்ந்து வரவும், பல இடங்களுக்கும் செல்பவர் சிவபெருமான். தனது உடலில் நான்கு விரல்கள் அளவு அகலமுடைய கோவண ஆடையினை அணிந்தவராக, ஊரார் இடும் பிச்சையை தான் உண்ணும் உணவாக ஏற்றுக் கொள்பவராக, வெள்ளை எருதினை விருப்பத்துடன் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவராக, மிகவும் எளிய கோலத்தில் காணப்படும் பெருமான், வேட்கள நன்னகரில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சடை தனை தாழ்தலும் ஏற முடித்துச் சங்க வெண் தோடு சரிந்து இலங்கப்

புடை தனில் பாரிடம் சூழப் போதருமாறு இவர் போல்வார்

உடை தனில் நால் விரல் கோவண ஆடை உண்பது ஊரிடு பிச்சை வெள்ளை

விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன்னகராரே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.40.9) திருஞான சம்பந்தர், பெருமானை, ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று அழைக்கின்றார். சார்ந்து இருப்போம் என்று ஈ பதிகத்தின் எட்டாவது பாடலில் கூறிய திருஞான சம்பந்தர்க்கு, பெருமானின் திருவடிகளைச் சார்ந்து இருப்பது எத்தைகைய பெரும் பேறு என்பதை அடியார்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது போலும். பொதுவாக பிரமனும் திருமாலும் காண முடியாத திருவடிகள் என்று கூறும் திருஞான சம்பந்தர் இந்த பதிகத்து பாடலில், அவர்கள் இருவரும் காண முடியாத திருவடிகள், சார முடியாத திருவடிகள் என்று கூறுகின்றார். இத்தகைய பெருமை வாய்ந்த திருவடிகளைச் சார்ந்து இருப்பதை ஒரு பெருமையாக கருதி, ஆர்வத்துடன் அந்த திருவடிகளைச் சார வேண்டும் என்ற அறிவுரை இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. கரியவன் என்று அழைக்கப்படும் திருமால் மற்றும் பிரமன் தங்களது கைகளால் தொழுது ஏத்தும் வண்ணம், அவர்களால் காணவும் முடியாமால் சாரவும் முடியாமல் நீண்ட நெருப்புப் பிழம்பாக நின்றவனே என்றும் பல ஊர்களிலும் இடப்படும் பிச்சையையும் பலியையும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு உண்பவனே என்றும் புகழ்ந்து, கோடுகள் உடைய பாம்பின் படம் போன்று புடைத்து எழுந்துள்ள மார்பகத்தினை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் நன்கு விரிந்து மலர்ந்த சிறந்த மலர்களை தூவி, ஏனைய தேவர்களிலிருந்து மாறுபட்டுள்ள பெருமானது திருவடிகளை பணிந்து வணங்கி சேர்வோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கரியவன் நான்முகன் கை தொழுது ஏத்தக் காணலும் சாரலும் ஆகா

எரி உருவாகி ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி

வரி அரவு அல்குல் மடந்தையொர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்

விரிமலர் ஆயின தூவி விகிர்தன சேவடி சேர்வோம்

இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் (1.40.4) திருஞானசம்பந்தர் பெருமானை ஊரிடு பிச்சை கொள் உண்டி என்று கூறுகின்றார். காரிடு மாமலர்=கார் காலத்தில் பூக்கும் கொன்றைப் பூ; ஊரார்கள் இடும் பிச்சையை சிறந்த செல்வமாக மதிப்பவன் பெருமான் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சென்ற பாடலின் விளக்கத்தில், பெருமான் பிச்சையாக ஏற்று உலகத்தவரை உய்விப்பது, அவர்களின் ஆணவம் முதலாகிய மலங்கள் என்பதை நாம் கண்டோம். உயிர்கள் தங்களது மலங்களைக் கழித்துக் கொண்டு பெருமானைச் சென்றடைந்து நிரந்தரமான இன்பத்தை அடைவதை விரும்புவது போன்று, பெருமானும் உயிர்கள் தன்னை வந்தடைய வேண்டும் என்று விரும்புகின்றான். எனவே தான், உயிர்கள் தனது பிச்சைப் பாத்திரத்தில் மலங்களை இட்டு உய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் இறைவன், அவ்வாறு இடப்படும் மலங்களை பெரிய செல்வமாக மதித்து மகிழ்ந்து ஏற்றுக் கொள்கின்றான் என்பதே இந்த பாடலின் உட்கருத்தாக நாம் கொள்ள வேண்டும். கொன்றை மாலையையும் வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும் தனது தாழ்ந்த சடையின் மீது சூடியவனும், ஊரார்கள் இடும் பிச்சையினை பெரிய செல்வம் என்றும் தனக்கு தகுந்த உணவு என்று பலவாறும் குறிப்பிட்டு மகிழ்பவனும், கச்சணிந்த மென்மையான மார்பகங்களை உடையவளாகிய உமை மாதினை ஒரு பாகமாகத் தனது உடலில் ஏற்றவனும் ஆகிய பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் கார்க் காலத்தில் தோன்றும் சிறந்த கொன்றை மலர்களை தூவி, தனது கழுத்தினில் நஞ்சினைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்ட கறையினை உடைய பெருமானது திருவடிகளை பணிந்து வணங்கி காண்போமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தாரிடு கொன்றை ஒர் வெண்மதி கங்கை தாழ்சடை மேல் அவை சூடி

ஊரிடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி

வாரிடு மென் முலை மாதொரு பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்க்

காரிடு மாமலர் தூவிக் கறை மிடற்றான் அடி காண்போம்

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (1.40.3) திருஞானசம்பந்தர், பெருமானை, ஊர் ஐயம் உண்டி என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பிச்சை ஐயம் என்ற இரண்டு சொற்களையும் திருஞான சம்பந்தர் பயன்படுத்தி இருப்பதை நாம் காணலாம். இரண்டும் ஒரு பொருளை உணர்த்துவது போல் தோன்றினும் சிறிய மாறுபாடு உள்ளது. ஐயம் என்பது பிச்சை இடுவோர் இரப்போரைத் தேடிச் சென்று இடுவது. பலி என்பதும் இதே பொருளில் வருகின்றது. பிச்சை என்பது இரப்போர் இடுவோரைத் தேடிச் சென்று பெற்றுக் கொள்வது. ஔவையார் இந்த மாறுபாட்டினை மிகவும் அழகாக உணர்த்துகின்றார். ஐயம் இட்டுண் என்று, தாங்கள் இடும் பிச்சை பெறுகின்ற ஆட்களைத் தாங்களே தேடிக் கொண்டு இடுவோர் செல்ல வேண்டும் என்று உணர்த்துகின்றார். பிச்சை புகினும் கற்கை நன்றே என்று, ஏழையாக இருப்போர் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு, தாங்களே தங்களுக்கு உதவி செய்வோர்களைத் தேடிக் கொண்டு செல்ல வேண்டும் என்று உணர்த்துகின்றார். அதனால் தான் பிச்சை என்பது சற்று இழிவாகவும் ஐயம் என்பது உயர்ந்ததாகவும் கருதப் படுகின்றது. பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப் பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. நீண்ட பாம்பினை அணிகலனாக உடலில் அணிந்தவனும், அனலைத் தனது கையில் ஏந்தி நடனம் ஆடுபவனும், பொய் சொன்னதால் இழிந்த தன்மை அடைந்த பிரமனது தலையினைத் தனது கையில் ஏந்தி ஊரூராகச் சென்று திரிந்து மக்கள் இடும் உணவினை பிச்சையாக ஏற்றுக் கொள்பவனும், அவ்வாறு ஏற்றுக் கொண்ட பிச்சையை தனது உணவு என்றும் மக்கள் தனக்களித்த பிட்சை என்று பலவாறு கூறுபவனும் ஆகிய பெருமானை, வாள் போன்று நீண்டு கூர்மையாக உள்ள கண்கள் கொண்டுள்ள உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டு பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று அவன் திருப்பாதங்களில் நீண்ட சிறந்த மலர்களை தூவி, அவனது திருவடிகளை பணிந்து அந்த தலைவனது திருவடிகளே பற்றுக்கோடு என நினைத்து அதனைக் சார்ந்து நிற்போமாக என்று நமக்கு திருஞான சம்பந்தர் அறிவுரை கூறும் பாடல்.

பூண் நெடு நாகம் அசைத்து அனல் ஆடிப் புன் தலை அங்கையில் ஏந்தி

ஊண் இடு பிச்சை ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி

வாள் நெடுங்கண் உமை மங்கை ஓர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்த்

தாள் நெடு மாமலர் இட்டுத் தலைவன தாள் நிழல் சார்வோம்

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.43.6) திருஞான சம்பந்தர் பெருமானை ஊரிடு பிச்சையர் என்று அழைக்கின்றார். உலந்தவர்=இறந்து போனவர்கள்; விலங்கல்=மலை, இங்கே மேரு மலை; கனல்=தீக்கடவுளை தனது முனையாகக் கொண்ட அம்பு; எயில்=கோட்டை; மூ எயில்=மூன்று பறக்கும் கோட்டைகள்; முனிதல்=கோபம் கொள்ளுதல்; திரிபுரத்தை எரித்த செய்த செய்கை பிச்சையராகி என்ற தொடருக்கு அடுத்து கூறப்படுவதன் காரணம் சிந்திக்கத் தக்கது. பொதுவாக பிச்சை ஏற்பவர்கள் ஆற்றல் ஏதும் இல்லாதவர்களாக, தங்களுக்குத் தேவையான உணவினையும் மற்ற பொருட்களையும் தாங்களே தேடிக் கொள்ளும் ஆற்றல் அல்லாதவர்களாக இருப்பதை நாம் காண்கின்றோம். ஆனால் இறைவன் பிச்சை ஏற்றது அவனது திறமையற்ற நிலை காரணமாக அல்ல என்பதை உணர்த்தும் வண்ணம், திரிபுரத்தை எரித்த ஆற்றல் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே இறந்து போன தேவர்களின் எலும்புகளை ஆபரணமாக அணிந்து கொண்ட தன்மையோ, பல இல்லங்கள் தோறும் சென்று பிச்சை ஏற்கும் தன்மையோ பெருமானின் இயலாமையை குறிக்கவில்லை. மாறாக அவனது ஒப்பற்ற தன்மையையே குறிக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும் என்பதே இந்த பாடலில் உணர்த்தப்படும் கருத்தாகும். திருமால் பிரமன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் அழிந்த பின்னர், ஊழிக் காலத்தின் முடிவினில், பெருமான் அவர்களது எலும்பினை மாலையாக அணிந்து கொண்டு, எக்காலத்தும் தான் ஒருவனே நிலையாக அழிவின்றி இருப்பவன் என்பதை உணர்த்துகின்றான். அது போன்றே ஊரூராக திரிந்து சென்று பிச்சை எடுப்பதன் மூலம், தான் ஒருவனே உயிர்களின் மலங்களை ஏற்றுக்கொண்டு அவர்களது வினைகளை முற்றிலும் அழித்து, அதற்கு பதிலாக வீடுபேற்றினை பரிசாக தரும் ஆற்றல் கொண்டவன் என்பதையும் உணர்த்துகின்றான்.

உலந்தவர் என்பு அது அணிந்தே ஊரிடு பிச்சையராகி

விலங்கல் வில் வெம் கனலாலே மூ எயில் வேவ முனிந்தார்

நலம் தரு சிந்தையராகி நா மலி மாலையினாலே

கலந்தவர் காதலில் வாழும் கற்குடி மாமலையாரே

நாமலி மாலை=பாமாலை; நலம் தரு சிந்தையர்=அனைவருக்கும் எப்போதும் நன்மைகளை விளைவிக்கும் சிந்தனையுடன் இருக்கும் சான்றோர்கள்; காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய ஆறு குணங்கள், மனதின் குற்றமாக கருதப் படுகின்றன. இந்த ஆறு குணங்களால் வரும் சிந்தனைகள், மற்ற உயிர்களுக்கு நாம் தீங்கிழைக்க காரணமாக உள்ளன. எனவே இந்த ஆறு குற்றங்களை நீக்கிய சான்றோர்கள், அடுத்தவர்க்கு தீங்கு செய்யும் சிந்தை அற்றவர்களாக, அனைவர்க்கும் நலம் தரும் சிந்தனைகளை உடையவர்களாக உள்ளனர்; மேலும் நாமலி மாலையினாலே கலந்தவர் என்பதன் மூலம், இறைவனின் புகழினைக் குறித்து பாடப்படும் பாடல்கள் மற்றும் தோத்திரங்கள் ஆகியவற்றின் பொருளை முழுதுமாக உணர்ந்தவர்களாக இருப்பதால், அவர்களது மனம் அவர்கள் பாடும் பாடல்களுடன் ஒன்றி இருக்க, இறைவனைப் புகழ்ந்து பாடும் போதும் வணங்கும் போதும், மனம் ஒன்றிய மனத்தவராக அவர்கள் விளங்குகின்றனர். இவ்வாறு மனம் ஒன்றி தன்னை வழிபடும் மனிதர்களின் அன்பினை பெருமான் மிகவும் விரும்புவதால், அத்தகைய மனிதர்களின் அன்பினில் பெருமான் வாழ்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இறந்து போன தேவர்களின் எலும்புகளைத் தனது உடலில் அணிந்தவராக, தான் ஒருவனே என்றும் அழியாமல் நிலைத்து நிற்பவர் என்பதை இறைவன் நமக்கு உணர்த்துகின்றார். மேலும் ஊரூராகத் திரிந்து பலரும் இடும் அவர்களது மூன்று மலங்களாகிய பிச்சையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வீடுபேற்றினை பரிசாக இறைவன் அளிக்கின்றார். இத்தகைய பெருமான், திரிபுரத்து அரக்கர்கள் மீது கோபம் கொண்டவராக, மேருமலையை வில்லாக வளைத்து, தீக்கடவுளை முனையாகக் கொண்ட அம்பினை அந்த வில்லினில் பூட்டி எய்து, மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயினில் வெந்து அழியச் செய்தார். தங்களது மனதினில் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் காமம், குரோதம்,மோகம், உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய தீய குணங்கள் அற்றவர்களாக அனைத்து உயிர்களுக்கும் நலம் பயப்பவர்களாக இருப்பார்கள்; அத்தகைய அடியார்கள், தாங்கள் சொல்லும் தோத்திரங்கள் மற்றும் பாடல்களின் பொருள்களை முழுதும் உணர்ந்தவர்களாக, மனம் ஒன்றி இறை சிந்தனை தவிர்த்து வேறெந்த சிந்தனையும் அற்றவர்களாக, இறைவன் பால் செலுத்தும் அன்பினில் வாழும் சிவபெருமான், கற்குடி மலையில் உறைகின்றார் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.44.1) திருஞானசம்பந்தர், பெருமானை, ஆரிடமும் பலி தேர்வார் என்று குறிப்பிடுகின்றார். ஆரிடம்=அனைவரிடமும்; துளங்குதல்=அசைதல், நிலை கலங்கி வருத்துதல்; சுடர்ச்சடை=ஒளி மிளிரும் சடை; இந்த தலத்தில் உள்ள பெருமானின் சடை படர்ந்து இராமல், சுற்றி முடிக்கப்பட்ட நிலையில் காணப்படும், இதனை உணர்த்தும் முகமாக சடை சுற்றி முடித்து என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த நிலை, நமக்கு திருத்தினை நகரில் உள்ள நடராஜப் பெருமானை நமக்கு நினைவூட்டுகின்றது. பணி=பாம்புகள்; பணி வளர்=பாம்புகள் தங்கும்; கோலம் செய்தல்=அழகிய உடலும் அங்கங்களும் நமக்கு கொடுத்த இறைவன்; துணி=துண்டிக்கப்பட்ட, கீற்று; துணி என்பதற்கு ஒளி என்ற பொருளும் பொருந்தும். பெருமான் அருள் புரிந்து, தேய்ந்து அழிந்து விடும் நிலையில் சரணடைந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக் கொண்ட பின்னர், அழிவதற்கு மாறாக சந்திரன் நாளொரு கலையாக வளர்ந்த தன்மை குறிக்கப் படுகின்றது. பாரிடம்=பூத கணங்கள்; அணி வளர்=நாளுக்கு நாள் வளர்கின்ற அழகு; மணி வளர் கண்டர் என்று, ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கி, விடத்தின் தன்மையை மாற்றிய பெருமான் என்று குறிப்பிட்டு, கொடிய விடத்தின் தன்மையையே மாற்றிய பெருமானுக்கு, முயலக நோயினால் வருந்தும் பெண்ணின் வினையின் தன்மைகளை மாற்றுதல் மிகவும் எளிதான செயல் என்பதை குறிப்பிட்டு, அவ்வாறு செய்யாமல் இருக்கலாமா என்ற கேள்வியை திருஞான சம்பந்தர் இங்கே எழுப்புகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் வரும் கடைச் சொல்லினை எதிர்மறை ஏகாரமாக கொண்டு பொருள் கொள்ள வேண்டும். அணிவளர் கோலம் எலாம் செய்து என்ற தொடரினை மங்கையை என்ற சொல்லுடன் இணைத்து, அழகிய உடலினை மழவன் மகளுக்கு தந்த பெருமான், அந்த மங்கையை முயலகன் நோயினால் வாடும் வண்ணம் செய்வது தகுமா என்று திருஞான சம்பந்தர் கேட்பதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. மணிகண்டர் என்பது தலத்து இறைவனின் திருநாமங்களில் ஒன்று. பாற்கடலிலிருந்து பொங்கிய ஆலகால விடத்தைத் தனது கழுத்தினில் தேக்கியதன் விளைவாக, பெருமானின் கழுத்தினில் கருமை நிறம் போன்ற கறை ஏற்பட்டதால் பெருமானுக்கு நீலகண்டர், மணிகண்டர் என்ற பெயர்கள் வந்தன. முழு நிலவிலிருந்து துண்டிக்கப் பட்டது போன்று, தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் தன்னை வந்து சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்து ஒளியுடன் திகழ்ந்து வளரும் வண்ணம் தனது சடையில் ஏற்றுக் கொண்ட பெருமான், தனது சடையினை ஒன்றாக சேர்த்து முடித்த வண்ணம் பாச்சிலாச்சிராமம் தலத்தில் காணப்படுகின்றார். இத்தகைய பெருமான் பாம்புகளை தனது உடலின் பல பகுதிகளிலும் அணிவதைத் தனது கொள்கையாக உடையவராக, பூத கணங்கள் தன்னைப் பின் தொடர்ந்து வர, அனைத்து இடங்களுக்கும் சென்று, இன்னார் என்று கருதாமல் அனைவரிடமும் பலியேற்கின்றார். அழகிய தோற்றத்துடன் காட்சி அளிக்கும் பெருமான், ஆலகால விடத்தின் தன்மையை மாற்றி நீலமணி போன்று தனது கழுத்தினில் அணிந்து கொண்டுள்ள பெருமான், முயலகன் நோயால் வருந்தி தவிக்கும் கொல்லி மழவனின் பெண்ணை, அவளை வருத்தி வாட்டும் நோயினைத் தீர்க்காமல் வாடச் செய்வது அவரது பெருமைக்கு உகந்த செயல் அல்ல என்று திருஞான சம்பந்தர் சுட்டிக் காட்டும் பாடல்.

துணி வளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச் சடை சுற்றி முடித்துப்

பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ ஆரிடமும் பலி தேர்வர்

அணி வளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற

மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே

திருவோத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.54.6) பெருமான் பால் அன்பு மிக்க அடியார்கள் மிகுந்த விருப்பத்துடன் பெருமானுக்கு பலி இடுகின்றனர் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். மிக்கார்=அன்பு மிக்கார்; நக்கீரே=மகிழ்ந்து இருப்பவர்; சிரிப்பினால் தமது மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் பெருமான். இந்த பாடல் தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. தாருகவனத்து முனிவர்களின் இல்லங்களுக்கு பலியேற்று பெருமான் சென்றபோது, அடுக்களையிலிருந்த மகளிர் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளை மறந்தவர்களாக, வெளியே வந்து பெருமானை பார்த்த பின்னர், அவரது அழகினில் மயங்கி அவரைப் பின் தொடர்ந்தனர். தங்களது கூந்தல் அவிழ்ந்து புரள்வதையும் தங்களது உடை நழுவுவதையும் பொருட்படுத்தாதவர்களாக அவர்கள் பெருமானைப் பின்தொடர்ந்தனர் என்று கந்த புராணம் குறிப்பிடுகின்றது. தாங்கள் செய்வது இன்னதென்பதை புரிந்து கொள்ளவும் சக்தி அற்றவர்களாக அவர்கள் பண்டைய நாளில் பெருமானை பின்தொடர்ந்தது போன்று, பெருமான் பலியேற்க வந்தால், தங்களது இல்லத்து பெண்பிள்ளைகளும் மாறிவிடுவார்களொ என்று கவலை கொள்ளாதார் இருப்பரோ என்று பெருமானை பார்த்து கேள்வி கேட்பதாக அமைந்த பாடல். மக்கள் என்பது இங்கே பெண்மக்களை குறிக்கும். காண்போரின் மனதினைக் கவரும் அழகு படைத்தவர் பெருமான் என்பதை அனைவரும் உணர்கின்றனர் என்றும் அவ்வாறு உணர்ந்ததன் காரணமாகவே, அத்தகைய அழகினில் மயங்காத பெண்பிள்ளை எவரும் இருக்க முடியாது என்பதாக இந்த பாடல் உணர்த்துகின்றது. பெருமானைத் தவிர்த்து அனைத்து உயிர்களையும் பெண்களாகத் தானே, பெருமானைச் சென்றடைய விரும்பும் பெண்களாகத் தானே, சான்றோர்கள் கருதுகின்றனர். தக்கார்=தகுந்தவர்; பெருமானின் அழகில் மயங்காமல், அவருக்கு பிச்சையிடுகின்ற ஆற்றல் படைத்தவர். உட்காதார்=எதுகை கருதி உள்காதார் என்பதன் திரிபு பெருமான் பால் வைத்துள்ள மிகுதியான அன்பின் காரணமாக, விருப்பத்துடன் அவருக்கு பிச்சை அளிக்கச் சென்ற பெண்பிள்ளைகளில், பெருமானின் அழகினில் மயங்கி தன்வசமிழந்து பெருமானைத் தொடர்ந்து செல்லாமல் இருக்கும் ஆற்றல் படைத்தவரும் உளரோ என்று கலக்கத்துடன் நினைத்து பார்க்காத தாய் தந்தையர் எவரேனும் உள்ளாரோ, திருவோத்தூர் தலத்தினில் உறைகின்ற பெருமானே, காண்போரை மயக்கும் சிரிப்புடன் விளங்கும் பெருமானே, எமக்கு அருள் புரிந்து சொல்வீராக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்

தக்கார் தம் மக்களீர் என்று

உட்காதார் உளரோ திருவோத்தூர்

நக்கீரே அருள் நல்குமே

சிரபுரம் என்று அழைக்கப்படும் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.47.3) திருஞான சம்பந்தர், ஊரார் இடுகின்ற பலியை ஏற்றுக் கொள்பவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். காமரம் பண் சிறுபாணாற்றுப்படை இலக்கியத்தில் குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில் திருஞானசம்பந்தர், நீர்வளத்தினால் செழித்து வளர்ந்த சோலைகளில் பூக்கும் மலர்களை சூழ்ந்து கொள்ளும் வண்டுகள் காமரம் பண் இசைத்த வண்ணம் தேன் பருகுவதாக கூறுகின்றார். சீரடைந்த செல்வம்=சிறப்பான வழியில், அறநெறியில், ஈட்டிய செல்வம்; கார் என்றால் பொதுவாக மேகம் என்று பொருள்; இங்கே மேகத்தால் விளையும் மழை நீர் என்று பொருள் கொள்ள வேண்டும். சீகாமரம் பண்ணினை காமரம் என்று தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

நீரடைந்த சடையின் மேலோர் நிகழ்மதி அன்றியும் போய்

ஊரடைந்த ஏறது ஏறி உண்பலி கொள்வதென்னே

காரடைந்த சோலை சூழ்ந்த காமரம் வண்டிசைப்பச்

சீரடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே

பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.63.2) திருஞான சம்பந்தர், தாருகவனம் சென்று பலியேற்ற பெருமான், தாருகவனத்து இல்லத்து அரசிகளின் உள்ளத்தைக் கவர்ந்ததன் மூலமாக, அவர்களை தூக்கமிழக்கச் செய்தார் என்று கூறுகின்றார். பெருமானது அழகில் மயங்கிய தாருகாவனத்து மகளிர், பெருமான் மீது காதல் கொள்கின்றனர். தங்களது தீவிரமான காதல் நிறைவேறாத காரணத்தால், தங்களது தூக்கத்தை இழக்கும் வண்ணம் அவர்கள் கவலை அடைந்தனர் என்று உணர்த்தும் திருஞான சம்பந்தர், அந்த மகளிரின் மனம் மற்றும் தூக்கம் ஆகிய இரண்டையும் கவர்ந்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பெயல்=கங்கை நதி; அயல்=வேறான இடம்; அஞ்சொல்=அழகிய சொற்கள்; சொற்களுக்கு அழகு பயப்பது, இனிமை என்பதால், அஞ்சொல் என்ற சொல்லுக்கு, இனிமையான சொற்கள் என்று பொருள் கொள்வது பொருத்தம். தாருக வனத்து மகளிரை, மீன் போன்று அழகிய கண்கள் உடையவர்கள் என்றும், இனிமையான சொற்களை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகின்றார். இயலால்=முறையாக; நடாவி=நடத்தி; சூரபதுமனுக்கு பயந்து கொண்டு இந்திரன் சீர்காழி மூங்கில் வனத்தில் ஒளிந்து கொண்டு இருந்ததை இகழ்ச்சியாக, சீர்காழி மண்ணை ஆண்டவன் என்று கூறுகின்றார். வியல்=அகன்ற; மூங்கில் காடுகளில் இந்திரன் மறைந்து கொண்டு இருந்ததால் வேணுபுரம் என்ற பெயர் வந்தது என்பர்.

பெயலார் சடைக்கோர் திங்கள் சூடிப் பெய்பலிக்கு என்று அயலே

கயலார் தடங்கண் அஞ்சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே

இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல்

வியலார் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே

இந்த பதிகத்தின் பன்னிரண்டு பாடல்களிலும் சீர்காழியின் பன்னிரண்டு பெயர்கள் குறிப்பிடப்பட்டு, அதற்கான காரணமும் சொல்லப் படுகின்றது. மேலும் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் தாருகவனத்து மகளிரின் கருத்தை, பிச்சைப் பெருமான் கவர்ந்த தன்மை உணர்த்தப் படுகின்றது. இதே பதிகத்தின் முதல் பாடலில் (1.63.1) தனக்கு ஐயம் இட்ட மகளிரின் மாநலத்தை திருடிய பெருமான் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஒரு கையினில் மழுவினையும் மற்றொரு கையினில் பிரம கபாலத்தையும் ஏந்திக் கொண்டு தாருகவனம் சென்ற பெருமான், தாருகவனத்து மகளிர் அளித்த பிச்சையை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களது கற்பினை திருடியது பெருமானுக்கு உகந்த செயலா என்ற கேள்வி இங்கே திருஞானசம்பந்தரால் கேட்கப் படுகின்றது. சரியா நா என்று உச்சரிப்பு தவறாமல் வேதங்களை ஓதும் பிரமனின் ஆற்றல் உணர்த்தப் படுகின்றது. சீர்காழி நகரம் வந்தடைந்து ஆங்கே தங்கியிருந்து பெருமானை பிரமன் வழிபட்ட செய்தி, பிரமன் பேணியாண்ட என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது. தான் மேற்கொண்டுள்ள படைத்தல் தொழில் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உபநிடதங்களை முறையாக ஓதி பிரமன் வரம் பெற்றதால் இந்த தலத்திற்கு பிரமபுரம் என்ற பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகின்றது. தாருக வனத்து மகளிருக்கு அவர்களின் கற்பு மிகச் சிறந்த அணிகலனாகவும், அவர்களது கணவர்களின் வலிமைக்கு காரணமாகவும் விளங்கியது. அவர்களது கற்பு பறிபோவதற்கு காரணமாக இருந்த பெருமானை வரியார் வளையார் மாநலம் வவ்வியவன் என்று குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும், அங்கோல் வளையார் ஆனலம் வவ்வுதியே என்று, திருஞான சம்பந்தர், தாருக வனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார்.

எரியார் மழு ஒன்று ஏந்தி அங்கை இடுதலையே கலனா

வரியார் வளையார் ஐயம் வவ்வாய் மாநலம் வவ்வுதியே

சரியா நாவின் வேத கீதன் தாமரை நான்முகத்தன்

பெரியான் பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே

இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் (1.63.3) திருஞான சம்பந்தர், தாருகவனத்து மகளிரின் ஆடைகளை திருடியவன் பெருமான் என்று கூறுகின்றார். இந்த பாடலில் பகலில் பலி ஏற்பது போன்று வந்த பெருமான், தனக்கு பலியிடவந்த மாதர்களின் மனதினை கொள்ளை கொண்டார் என்று கூறுகின்றார். இந்த பாடல் தாருகவனத்து மகளிர், தங்களது ஆடை நழுவுதையும், முடித்து கட்டப்பட்ட கூந்தல் அவிழ்ந்து தொங்குவதையும் உணராதவர்களாக, தங்களை மறந்து, தாங்கள் செய்து கொண்டிருந்த செயல்களை அப்படியே பாதியில் விட்டுவிட்டு பெருமானை பின் தொடர்ந்து வந்த தன்மையை உணர்த்தும் பாடல். இவ்வாறு தாருகவனத்து மகளிரின் ஆடைகள் நழுவுவதற்கு பெருமான் காரணமாக இருந்ததால், அவர்களது ஆடைகளை திருடியவன் பெருமான் என்று கூறுகின்றார். கலை=ஆடை; நகல்=சிரித்தல்; நகலார் தலை=சிரிக்கும் மண்டை ஓடு; வாய் பிளந்து பற்கள் இல்லாமல் காணப்படும் மண்டையோடு சிரிக்கும் தன்மையில் உள்ளது போன்று காட்சியளிக்கின்றது. நளிர்சடை=குளிர்ந்த சடை; வவ்வுதல்=கவர்தல்; பாய்கலை= பரந்த ஆடை; ஐயம்=பிச்சை; அயல்=அடைக்கலம்; அயல் இன்மையால்=அடைக்கலம் புகுவதற்கு வேறு தகுந்த இடம் இல்லாததால்; அடைக்கலம் புகுவதற்கு வேறு இடம் இல்லாமல் தேவர்கள் அடைக்கலம் புகுந்த தலம் புகலி என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் திருஞான சம்பந்தர் மடவார் பெய் கலை வவ்வுதியே என்று தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். பெய் கலை=உடுத்திக் கொண்ட ஆடை;

நகலார் தலையும் வெண் பிறையும் நளிர்சடை மாட்டு அயலே

பகலா பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் பாய்கலை வவ்வுதியே

அகலாது உறையும் மாநிலத்தில் அயல் இன்மையால் அமரர்

புகலான் மலிந்த பூம்புகலி மேவிய புண்ணியனே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (1.63.6) திருஞான சம்பந்தர், தாருகவனத்து மகளிரின் ஆனலம் வவ்வியவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஆதி வராகமான திருமால், இரண்யாக்கனைக் கொன்ற பழியினை தீர்த்துக் கொள்வதற்காக சிவபெருமானை வழிபட்ட தலம் என்பதால் பூந்தராய் என்ற பெயர் வந்ததை இங்கே குறிப்பிடுகின்றார். பூண் அரையர்=தங்களது இடுப்பினில் ஆபரணம் அணிந்த மன்னர்கள்; குடி மக்களைக் காக்கின்ற கடமை உள்ளவர்கள் மன்னர்கள்; அனைத்து உயிர்களையும் காக்கின்ற திருமால், அந்த மன்னர்களையும் விடவும் மிகவும் வலிமை வாய்ந்தவராக இருப்பதால், அந்த மன்னர்களின் மன்னராக கருதப் படுகின்றார். அடல்=வலிமை; தவர்=தவம் செய்கின்ற முனிவர்; இந்த பாடலில் தாருகவனத்து மகளிர் இட்ட பிச்சையை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களது மேன்மையான அணிகலனாகிய கற்பினை கவர்ந்த பெருமான் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். தாங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளையும் மறந்து, தாங்கள் உணராத வகையில் பெருமானின் அழகில் மயங்கியவர்களாக, தங்களது உடைகள் நழுவதையும் உணராதவர்களாக, பெருமானின் பின்னே சென்ற தாருகவனத்து மகளிர், தங்களது கற்பினை இழந்தவர்களாக கருதப்பட்டனர். மாட்டு-அருகே; தாருகவனத்து முனிவர்களின் இல்லங்களில் இருந்த மகளிர் பலரும், சிவபெருமானின் அழகில் மயங்கி, அவருக்கு பலியிட வந்ததாக குறிப்பிடுகின்றார். பூம்பலி=சுவை நிறைந்த உணவு வகைகள்; அயலே=அருகே; ஆநலம்=அழகு; பூம்பலி=அழகிய பலி; உணவுக்கு அழகு அதன் சுவை என்பதால், சுவையான உணவு என்று பொருள் கொள்ள வேண்டும். இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும், காரிகையாரின் ஆநலம் வவ்வியவன் பெருமான் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

கவர் பூம்புனலும் தண்மதியும் கமழ் சடை மாட்டு அயலே

அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய் ஆனலம் வவ்வுதியே

அவர் பூண் அரையர்க்கு ஆதியாய அடல் மன்னன் ஆள் மண் மேல்

தவர் பூம்பதிகள் எங்குமெங்கும் தங்கு தராயவனே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் (1.63.7) திருஞான சம்பந்தர், தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிட்டு, பெருமானை தாருகவனத்து மகளிரின் நலம் வவ்வினாய் என்று கூறுகின்றார். முலை=முல்லை என்பதன் இடைக்குறை; முல்லை தலத்திற்கு உரிய இசைக்கருவி யாழ்; முன்கடை=முன் வாயில்;நிலையற்ற பலி என்ற பொருள் பட நிலையாப் பலி என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அரக்கன் சுவர்பானுவின் தலையை மோகினி, வெட்டிய பின்னரும் அமுதம் உட்கொண்ட தலை என்பதால் உயிருடன் விளங்கிய அந்த தலை, சீர்காழி தலம் வந்தடைந்து பெருமானைப் பணிந்ததாக இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. பெருமானின் கருணையால், கோளாக கருதப்படும் நிலைக்கு உயர்ந்த இராகுவும் கேதுவும், சூரியன் முதலான மற்று ஏழு கோள்கள் போன்று, அனைத்து உயிர்களையும் ஆட்சி செய்யும் நிலைக்கு உயர்ந்தன என்பதை தன்னதோர் ஆணை நடத்தின என்று குறிப்பிடுகின்றார். சிலம்பன் வில் வீரனாக விளங்கியதால் சிலையால் மலிந்த சிலம்பன் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் ஏற்ற பலியினை நிலையா பலி என்று குறிப்பிடுகின்றார். ஒரே ஆன்மாவிடம் பெருமான் பிச்சை ஏற்பதில்லை. பெருமானுக்கு ஒரு முறை தனது மலங்களை பிச்சையாக அளித்த உயிர், உய்வினை அடைந்து உயர்ந்த முக்தி நிலைக்கு சென்று விடுவதால், அந்த உயிரினை பெருமான் மீண்டும் அணுக வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. மேலும் தாருகவனத்திற்கு பெருமான் ஒரு முறை தானே சென்றார். அதுவும் முனிவர்களின் தவறான கொள்கையை அவர்களுக்கு சுட்டிக் காட்டி, அவர்களைத் திருத்தும் பொருட்டு, பெருமான் பிச்சை ஏற்றதால், நிலையற்ற பலி என்று குறிப்பிட்டார் போலும். இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் பெருமானை, மடவார் கண் துயில் வவ்வினாய் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இதே பதிகத்தின் பத்தாவது பாடலில் தாருகவனத்து மகளிரின் வளையல்களை திருடியவன் பெருமான் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமானின் அழகால் கவரப்பட்ட தாருகவனத்து மகளிர், பெருமானை அடைய முடியாத நிலையால் வருத்தம் அடைந்து உடல் மெலிந்ததால், அவர்களது கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழுந்தன என்று குறிப்பிடும் திருஞான சம்பந்தர், இந்த நிலைக்கு பெருமானே காரணம் என்பதால், பெருமானை வளையல்கள் திருடியவர் என்று கூறுகின்றார்.

முலை யாழ் கெழுவ மொந்தை கொட்ட முன்கடை மாட்டயலே

நிலையாப் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் நீ நலம் வவ்வுதியே

தலையாய்க் கிடந்து இவ்வையம் எல்லாம் தன்னதோர் ஆணை நடாய்ச்

சிலையால் மலிந்த சீர்ச் சிலம்பன் சிரபுர மேயவனே

பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.63.11) திருஞான சம்பந்தர், நல்லொழுக்கம் உடையவர்களைத் தேடிச் சென்று பெருமான் பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். கட்டார் துழாயன்=துளசி மாலை அணிந்த திருமால்; துழாய்=துளசி; சிட்டர் என்ற சொல் சிட்டார் என்று நீண்டது; ஒழுக்கம் உடையவர்கள் என்று பொருள்; செய்கலை=உடுப்போருக்கு அழகு சேர்க்கும் உடைகள்; நட்டாறு என்ற சொல் எதுகை கருதி நட்டார் என்று திரிந்தது. நட்டார்=ஆற்றின் நட்ட நடுவே; நந்தன்=பிரமனின் மகனாகிய பராசர முனிவர்; ஆள=மீனவப்பெண் மச்சகந்தியை ஆட்கொண்ட; நல்வினை=தனது பழியினைத் தீர்த்துக் கொள்வதற்காக சீர்காழியில் செய்த தவம்; கொட்டாறு=மயிர்ச் சாந்து போன்ற நறுமணம் மற்றும் நல்லொழுக்கம்; மச்சகந்தி பரிமள கந்தியாக மாறிய தன்மையும் அவள் நல்லொழுக்கத்துடன் விளங்கியதும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. ஒரு சமயம் பராசர முனிவர், மச்சகந்தி என்ற மீனவப் பெண்ணின் உதவியுடன் படகில் ஏறி கங்கையைக் கடக்க நேரிடுகின்றது. அப்போது அந்த பெண்ணின் அழகால் கவரப்பட்ட முனிவர், அந்த பெண்ணுடன் சேர்ந்து இன்பம் துய்க்க விரும்புகின்றார். நேரத்தை சிறிதும் வீணாக்காமல், தாங்கள் சென்று கொண்டிருந்த படகில் முனிவர் இன்பம் துய்க்க விரும்ப, ஆற்றின் நடுவே பலரும் காண இணைவதற்கு, அந்த பெண் தயக்கம் கொள்கின்றாள். அப்போது அந்த முனிவர், தனது தவ வலிமையை பயன்படுத்தி, அந்த படகினைச் சுற்றி, திரை போன்ற அமைப்பினை எழுப்ப, தனது தயக்கம் நீங்கிய நிலையில் அந்த பெண் முனிவருடன் கூடினாள் என்றும், அதன் பயனாக வியாசர் பிறந்தார் என்றும் மகாபாரதம் உணர்த்துகின்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், வெகு நாட்கள் மச்சகந்தி திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தாள் என்றும் புராணம் கூறுகின்றது. மேலும் அந்த மீனவப் பெண்ணின் உடல் நறுமணம் வீசும் வண்ணம் முனிவர் மாற்றியதால், அந்த பெண்ணின் பெயரும் பரிமளகந்தி என்றும் மாறியது. இவ்வாறு பராசர முனிவர் அந்த பெண்ணை ஆட்கொண்டதும், அந்த பெண் உயர்ந்த நிலையை அடைந்ததும் இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. கொச்சையான இந்த செயலை செய்ததால் தனக்கு ஏற்பட்ட பழியினை போக்கிக் கொள்வதற்காக பராசரர் சீர்காழி தலம் வந்தடைந்து பெருமானைப் பணிந்து வணங்கி பழியினை நீக்கிக் கொண்டார் என்றும் அதன் காரணமாக இந்த தலம் கொச்சை வயம் என்று அழைக்கப் படுகின்றது என்றும் கூறுவார்கள்.

கட்டார் துழாயன் தாமரையான் என்றிவர் காண்பரிய

சிட்டார் பலி தேர்ந்து ஐயம் வவ்வாய் செய்கலை வவ்வுதியே

நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையால் உயர்ந்த

கொட்டாறு உடுத்த தண்வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே

குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.6) திருஞான சம்பந்தர், பெருமானை, மனைகள் தோறும் பலி தேர்வார் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பார்வதி தேவியைத் தன்னுடலில் ஒரு பாகமாக வைத்தவராக, மாதொரு பாகனின் கோலத்துடன் பெருமான் பலியேற்கச் சென்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மாதொரு பாகனாக, என்றும் பிராட்டியை விட்டு பிரியாமல் இருக்கும் பெருமான், தான் பலியேற்கச் சென்ற போதும் பிராட்டியுடன் சென்றது இயற்கையே. மேலும் உயர்ந்த நோக்கத்துடன், உயிர்களுக்கு உதவும் எண்ணத்துடன் பலி ஏற்பது பெருமைக்கு உரிய செயல் தானே. எனவே அதற்காக வெட்கம் கொண்டு, தேவியை உடன் அழைத்துக் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை அல்லவா. போது=மலர்கள்; புனல் சேர் போது என்று குறிப்பிடுவதால், நீரில் மலரும் தாமரை முதலிய மலர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். கந்தம்=நறுமணம்; தாது=மகரந்தப் பொடி; புறவு=காடு; காளம்=விடம்; காளகண்டர்=விடத்தை தேக்கியதால் கருமை நிறத்தில் படர்ந்த கறையினை கழுத்தில் உடையவன்; நீர்நிலைகளில் தோன்றும் தாமரை முதலான பூக்களின் நறுமணம் மேலோங்கி எங்கும் பரவ, அழகு மிகுந்த மகரந்த பொடிகள் நிறைந்த சோலைகளாலும் அழகிய காடுகளாலும் சூழப்பட்டதும் குளிர்ச்சி மிகுந்ததும் ஆகிய குடந்தை நகரத்தில் உள்ள காரோணம் தலத்தில் உறைகின்ற இறைவன், பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனாக பல இல்லங்கள் சென்று பலி ஏற்கின்றார். அவர் தனது காதினில் குழை ஆபரணத்தை அணிந்தவராக, தனது கழுத்தினில் விடத்தின் கறையாக கருமை நிறம் படர்ந்தவராக காணப்படுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

போதார் புனல்சேர் கந்தம் உந்திப் பொலியவ் வழகாரும்

தாதார் பொழில் சூழ்ந்து எழிலார் புறவில் அந்தண் குடமூக்கில்

மாதார் மங்கை பாகமாக மனைகள் பலி தேர்வார்

காதார் குழையர் காளகண்டர் காரோணத்தாரே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் (1.72.7) திருஞான சம்பந்தர், பெருமானை, உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை வாழ்பவர் என்று குறிப்பிடுகின்றார். தேனார் மொழியாள் என்பது இந்த தலத்து இறைவியின் திருநாமம். ஊனார் தலை=நன்கு உலர்ந்த தசைத் துண்டுகள் ஒட்டிக் கொண்டிருக்கும் பிரம கபாலம்; குடமூக்கு என்பது தலத்தின் பெயராகவும் கும்பேசம் என்பது திருக்கோயிலின் பெயராகவும் பண்டைய நாளில் இருந்தது. பல இல்லங்களுக்கும் சென்று பலி ஏற்கும் கோலத்திற்கு ஏற்ப விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து கொள்ளாமல், மான் தோல் மற்றும் புலித்தோலை உடுத்தியவராக, யானைத் தோலினை உடலில் போர்த்தவராக பெருமான் உள்ள நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. உடலுக்கு கேடு விளைவிப்பதால் அனைவராலும் அச்சம் கொண்டு ஒதுக்கப் படும் யானைத் தோலினை, போர்த்தவராக உள்ள நிலையும், பெருமான் பிச்சை ஏற்கும் கோலத்திற்கு பொருத்தமாகவே உள்ளது. தான் ஏற்றுக் கொண்டுள்ள வேடத்திற்கு ஏற்ப எளிய கோலத்துடன் பெருமான் இருந்தாலும், அவர் மிகப் பெரிய செல்வர் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திளைத்து=கூடி; நன்கு உலர்ந்த தசைத் துண்டங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம் உலகெங்கும் திரிந்து பல இல்லங்களுக்கு சென்று பலியேற்று வாழும் வாழ்க்கை வாழும் பெருமான், தனது உடலில் மான் தோல் மற்றும் புலித்தோலினை ஆடையாக அணிந்துள்ளார். மேலும் யானையின் தோலையும் தனது உடலின் மீது போர்த்தவராகவும் காணப் படுகின்றார். இங்கே குறிப்பிடப்படும் கோலம், பகட்டான ஆடைகள் ஏதுமின்றி, தோல் ஆடையும் தோல் போர்வையும் கொண்டுள்ள நிலை, அவரது பிச்சை ஏற்கும் செயலுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. அவர், தேனார் மொழியாள் என்று அழைக்கப்படும் பிராட்டியுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கும் பெருமான், குடமூக்கு என்று அழைக்கப்படும் கும்பகோணம் தலத்தில் நடமாடிய வண்ணம் உறைகின்றார். சுடுகாட்டினில் நடனம் ஆடும் தன்மையராக இருப்பினும், பெருமான் அனைவரிலும் மிகப் பெரிய செல்வந்தர் ஆவார். இத்தகைய பண்புகளை உடைய பெருமான், குடந்தைக் காரோணம் தலத்தினில் உறைகின்றார்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஊனார் தலை கையேந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை

மானார் தோலார் புலியின் உடையர் கரியின் உரி போர்வை

தேனார் மொழியார் திளைத்தங்கு ஆடித் திகழும் குடமூக்கில்

கானார் நட்டம் உடையார் செல்வக் காரோணத்தாரே

புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.74.6) திருஞான சம்பந்தர், பெருமான் மகளிர் மனைகள் தோறும் சென்று பலி ஏற்றார் என்று கூறுகின்றார். கேழல் எயிறு=பன்றியின் கொம்பு; பிறழ=விளங்க; பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்ற பெருமான் பன்றியின் கொம்பினை அணிந்தவாறு சென்ற போதிலும், ஆங்கிருந்த முனிவர்களின் மனைவியர், வந்தவர் சிவபெருமான் என்பதை உணர முடியாமல் பெருமானது அழகில் அவர்கள் மயங்கிய நிலை, இங்கே அழகுடன் பலி தேர்ந்து என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. மடல்=தாழைமடல்; இறைவனின் அழகு தாருகவனத்து இல்லத்தரசிகளை ஈர்த்தது போன்று, இறைவனின் கருணை உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஈர்க்கும் வல்லமை கொண்டது என்ற கருத்து இங்கே உணர்த்தப் படுகின்றது. பின்னப்பட்ட தனது சடைகள் தாழுமாறும், மார்பினில் தான் அணிந்திருந்த பன்றியின் கொம்பு விளங்கிச் தோன்றுமாறும் தாருகவனம் சென்ற பெருமான், ஆங்கிருந்த அன்னம் போன்று நடை உடையவர்களாக விளங்கிய முனிவர்களின் மனைவியர் இருந்த இல்லங்கள் தோறும் தனது அழகான உருவத்துடன் சென்று பிச்சை கேட்டார். இந்த பெருமான் புன்னை மற்றும் தாழை மடல்கள் நிறைந்த சோலைகள் உடைய அழகான நகரமும், புறவம் என்று அழைக்கப் படுவதும் ஆகிய சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றான் இவரே என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பின்னு சடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய்

அன்ன நடையார் மனைகள் தோறும் அழகார் பலி தேர்ந்து

புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகார் புறவம் பதியாக

என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.5) தாருகவனம் சென்ற பிச்சைப் பெருமானின் திருக்கோலத்தை திருஞான சம்பந்தர் விவரிக்கின்றார். பொக்கணம்=துணி மூட்டை; தக்கை=இசைக் கருவி; நீண்ட சடையினை உடையவராக, மேனி எங்கும் திருநீறு பூசிக் கொண்டு தாருகவனம் சென்ற பெருமான், தக்கை இசைக் கருவியினை, ஒரு துணி மூட்டையில் வைத்து மறைத்தவராக சென்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். தக்கை இசைக் கருவியை திறம் பட வாசிப்பவர் பெருமான் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர் என்பதால், அந்த இசைக் கருவியை மறைத்து தனது அடையாளத்தையும் மறைத்துக் கொண்டு பெருமான் சென்றதாக குறிப்பிடுகின்றார் போலும். பெருமானது அழகினில் தாருகவனத்து மகளிர் மயங்கிய செய்தியும் இங்கே சொல்லப் படுகின்றது. இட்டு=தோளில் தொங்கவிட்டுக் கொண்டு;

சடையினர் மேனி நீறது பூசித் தக்கை கொள் பொக்கணம் இட்டு உடனாகக்

கடை தொறும் வந்து பலியது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகாக

படையது ஏந்திப் பங்கயற் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள் செய்து

விடையொடும் பூதம் சூழ்தரச் சென்று வெங்குரு மேவியுள் வீற்று இருந்தாரே

இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.76.10) சமணர்களும் புத்தர்களும் அறிய முடியாத சிறப்புகள் உடைய பெருஞ்செல்வன் என்று இறைவனை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில், இறைவன் தனது மொழிகளை எனது உரையாக வெளிப்படுத்தியுள்ளான் என்று குறிப்பிட்டு, தேவாரப் பாடல்கள் வேதங்களின் சாரம் என்று திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். உரிஞ்சன கூறை=ஆடைகள் உரித்து விடப்பட்டது போன்று, உடைகள் ஏதுமின்றி அம்மணமாகத் திரியும் சமணர்கள்; பெருமானிடம் தனது மனதினை பறிகொடுத்த திருஞான சம்பந்தர், தன்னை ஒரு பெண்ணாக உருவகித்துக் கொண்டு தனது அழகினை பெருமான் கவர்ந்து கொண்டார் என்று இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் கூறுகின்றார் என்பதால் இந்த பதிகத்தை அகத்துறை சார்ந்த பதிகம் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். பெருமான் பிச்சை ஏற்பதால் அவனை பெருமை அற்றவன் என்று தவறாக நினைத்து விடக் கூடாது என்பதை உணர்த்தும் பொருட்டு, பெரியவன் பெருமான் என்று திருஞான சம்பந்தர் உணர்த்துவதை நாம் இந்த பாடலில் காணலாம்.

உரிஞ்சன கூறைகள் உடம்பினராகி உழி தரு சமணரும் சாக்கியப் பேய்கள்

பெருஞ் செல்வன் எனதுரை தனதுரையாகப் பெய் பலிக்கென்று உழல் பெரியவர் பெருமான்

கருஞ்சினை முல்லை நன் பொன்னடை வேங்கை கழி முக வண்டொடு தேனினம் முரலும்

இருஞ்சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என்னெழில் கொள்வது இயல்பே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் பெருமான் பலி ஏற்பதே தனது அடியார்களுக்கு அருள் புரிவதற்காக என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். மனமுலா அடியவர்=தங்களது மனதினில் பெருமானை நிலைநிறுத்திய அடியார்கள்; தங்களது மனதினில் இறைவனை உலாவச் செய்யும் அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு, பெருமான் பலியேற்றுத் திரிகின்றான் அன்றி தனது உணவுத் தேவைக்காக பலி ஏற்பவன் அல்லன் பெருமான். தனம்=செல்வம்; வீடுபேறாகிய சிறந்த செல்வத்தைத் தவிர்த்து வேறு செல்வம் இல்லாதவன் பெருமான்; தனது உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தியவன் பெருமான்; தாழ்ந்து தொங்கும் தனது சடையின் மீது ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தாங்கியவன் பெருமான் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இருவி=தினைக் கதிர்களின் அடிப்பகுதி; இனம்=இடம்;

மனமுலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி திரிந்து உண்பிலான் மற்றோர்

தனமிலான் எனது உரை தனது உரையாகத் தாழ் சடை இளமதி தாங்கிய தலைவன்

புனமெலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணிகொழித்தீண்டி வந்தெங்கும்

இனமெலாம் அடை கரை இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என் எழில் கொள்வது இயல்பே

இடைச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.78.9) பல இல்லங்களில் இடப்படும் பிச்சை ஏற்கின்ற இறைவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இலங்கு=விளங்கும்; பல இல்லங்கள் சென்று மகளிர் இடுகின்ற உணவினை தமது கையில் ஏற்பவரும், பலவாறாக விரிந்த புகழினைத் தவிர்த்து பழி ஏதும் இல்லாதவரும், ஒளிவீசும் நீண்ட மகுடங்களை தரித்த பத்து தலைகளை உடைய அரக்கன் இராவணனின் நீண்ட கைகளை நெரித்த வலிமை உடையவரும் ஆகிய பெருமான், மலையில் விளங்கும் அருவிகள் திருமணத்தில் முழங்கும் முழவு போன்ற ஒலியுடன் ஆரவாரத்துடன் கீழே இறங்கும் காட்சியை உடையதும், இள மயில்கள் நிறைந்ததும், மேகங்கள் தவழ்வதும், ஏலம் இலவங்கம் ஆகியவற்றின் நறுமணம் கமழ்வதும் ஆகிய மலைச் சாரலை உடைய இடைச்சுரத்தில் பொருந்தி உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பல இலம் இடு பலி கையில் ஒன்று ஏற்பர் பல புகழ் அல்லது பழியிலர் தாமும்

தலை இலங்கு அவிரொளி நெடுமுடி அரக்கன் தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை உடையர்

மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல்

இலை இலவம் கமுகு ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே

கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.79.10) திருஞானசம்பந்தர், தையலார் இடும் பலி ஏற்கச் சென்றவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் சமணர்கள் செய்யும் தவத்திற்கும் முனிவர்கள் செய்யும் தவத்திற்கும் உள்ள வேறுபாட்டினை திருஞானசம்பந்தர் விளக்குகின்றார். ஆம்பல தவம் என்று சமணர்கள் செய்து வந்த தவத்தினை குறிப்பிடுகின்றார். அதாவது தங்களால் இயன்ற வரையில் உடலை வருத்திக் கொள்ளும் தவம்; தங்களது உணவுத் தேவையைக் குறைத்துக் கொள்ளாமல், ஐந்து புலன்களை அடக்காமல் செய்யப்படும் தவம். ஆனால் முனிவர்கள் செய்து வந்த தவமோ, உணவையும் வெறுத்து தங்களது உடலினை பல வகையிலும் வருத்திக் கொண்டு, இறைவனைப் பற்றிய நினைப்பைத் தவிர்த்து வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் செய்யப்படும் தவமாக விளங்கியதை நாம் புராணங்கள் மூலம் அறிகின்றோம். கணிசேர்=எண்ணத்தகுந்த; நோம் பல தவம்= துன்பங்களைத் தரும் தவம்;

ஆம்பல தவம் முயன்று அறவுரை சொல்லும் அறிவிலாச் சமணரும் தேரரும் கணிசேர்

நோம்பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனிச்

சாம்பலும் பூசி வெண்டலை கலனாகத் தையலார் இடும் பலி வையகத்து ஏற்றுக்

காம்பன தோளியொடு இனிதுறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசறுமே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.86.3) திருஞான சம்பந்தர், பெருமானை, ஊருர் இடு பிச்சை நாடும் நெறியான் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் அடியார்கள் பாவம் அறியார்கள் என்றும் அவர்களைக் குற்றங்கள் சென்று அடையா என்றும் பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் உணர்த்திய திருஞானசம்பந்தர், அத்தகைய அடியார்களை பாவங்கள் சென்று அடையா என்று இந்த பாடலில் கூறுகின்றார். சிவசிந்தனை மேலோங்கி இருப்பதால், பண்பட்ட உள்ளத்துடன் குற்றங்கள் நீங்கிய உள்ளத்துடன் இருக்கும் அடியார்கள் தீயசெயல்களை இயல்பாகவே தவிர்ப்பார்கள் என்பதால் அவர்களை பாவங்கள் சென்று அடையாது அல்லவா. பிச்சை நாடும் நெறியான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தங்களது மலங்களைக் கழித்துக் கொள்வதற்கும் வினைகளை முற்றிலும் நீக்கிக் கொள்வதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு தங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளதை உயிர்கள் அனைத்தும் உணர்ந்து, செயல்பட்டால் தான், அவைகளால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வெளியே வரமுடியும், அனுபவித்துத் தான் வினைகளை கழித்துக் கொள்ள வேண்டும் என்றால், நாம் இதுவரை சேர்த்துள்ள வினைகளை கழிப்பதற்கே எண்ணற்ற பிறவிகள் நமக்கு தேவைப்படும் இந்த நிலையில், நாம் இந்த பிறவிகளில் மேலும் சேர்த்துக் கொள்ளும் வினைகள் நாம் எடுக்க வேண்டிய பிறவிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து விடுகின்றன. இவ்வாறு தான் நமது வினைகளைக் கழித்துக் கொள்ளும் நாள் எட்டாத கானல் நீராக நம்மிடமிருந்து மேலும்மேலும் விலகிச் செல்லும் நிலையில், பிச்சை பெருமானாக நம் முன்னே வந்து நின்று, நமது மலங்களைத் தான் தனது கையில் வைத்திருக்கும் பிரம கபாலத்தினில் நாம் அனைவரும் இட்டு உய்வினை அடைவதற்கு ஏதுவாக, பெருமான் உலகெங்கும் திரிவதை நாம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் நன்னெறி அடைவதற்காக பெருமான் பிச்சை ஏற்பதால், பிச்சை நாடும் பெருமான் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தனது சடையினில் இளம் பிறையினைச் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், பொன் போன்று ஒளி வீசும் தாழ்ந்த சடைகள் உடையவனாக, பிரமனின் கபாலத்தைத் தனது உண்கலனாக ஏந்திய வண்ணம், பல இடங்களுக்கும் சென்று ஊரார் இடும் பிச்சையை நாடும் உயர்ந்த தன்மை உடையவனாக திகழும் பெருமானை, நல்லூர் தலத்தினில் குடி கொண்டிருக்கும் பெருமானை, போற்றி வணங்கி அவனது புகழினைப் பாடும் அடியார்களை பாவங்கள் சென்று அடையா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சூடும் இளந் திங்கள் சுடர் பொன் சடை தாழ

ஓடு உண்கலனாக ஊரூர் இடு பிச்சை

நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்

பாடும் அடியார்கட்கு அடையா பாவமே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.104.3) திருஞான சம்பந்தர் பகலில் பல இடங்களுக்கும் சென்று பெருமான் பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். ஆறு=கங்கை நதி; நீறணி என்று சொல்லினை திரிபுரங்கள் மற்றும் பெருமான் ஆகிய இரண்டுடன் இணைத்து, வேறுவேறு விதமாக பொருள் காணலாம். திரிபுரங்கள் மூன்றினையும் எரித்த பெருமான், அந்த கோட்டைகளுக்கு அணிகலனாக சாம்பலை வைத்தார் என்பது ஒரு பொருள். திருநீற்றினை நறுமணம் வாய்ந்த சந்தனமாக பாவித்து பெருமான் தனக்கு அணிகலனாக ஏற்றுக் கொள்கின்றார் என்பது மற்றொரு பொருள். வேறணி கோலத்தினான் என்று, ஏனையோரிலிருந்து மாறுபட்டு தனித்த அழகுடன் பெருமான் விளங்குகின்றார் என்று கூறுகின்றார்.

ஆறணி செஞ்சடையான் அழகார் புரம் மூன்று அன்று வேவ

நீறணியாக வைத்த நிமிர் புன்சடை எம் இறைவன்

பாறணி வெண்டலையில் பகலே பலி என்று வந்து நின்ற

வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே

இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.110.3) திருஞான சம்பந்தர், பெருமானை, பலி ஏற்பதற்காக ஞாலமெல்லாம் உழல்பவன் என்று கூறுகின்றார். பால் வெண்ணீறு என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பால் மற்றும் திருநீறு ஆகிய இரண்டுமே வெண்மை நிறம் கொண்டவை. பால் அனைவரும், அனைத்து பருவத்தினரும் பருகுவதற்கு இனியது. திருநீறும் பூசிக்கொள்வோர் எவராயினும் அவர்களுக்கு நன்மை பயக்க வல்லது. பால் பருகுவோருக்கு மருந்தாக பயன்படுவதுமன்றி, அவர்களது உடல் வலிமையையும் வளர்க்கின்றது. திருநீறும் பூசிக் கொள்வோருக்கு மருந்தாக பயன்படுவதுமன்றி, அவர்களுக்கு பொலிவினையும் அளிக்கின்றது. பால் திருநீறு ஆகிய இரண்டுமே இறைவன் உகந்து நீராடும் பொருட்களாக உள்ளன. இரண்டுமே மிகவும் எளிதில் கிடைக்கும் பொருட்கள். பால் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிப்பது போன்று திருநீறும் பூசிக் கொள்வோருக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கின்றது. திருநீறு அளிக்கும் பயனின் தன்மைகள் குறித்து திருஞானசம்பந்தர் மந்திரமாவது நீறு என்று தொடங்கும் ஒரு பதிகமாகவே பாடியுள்ளார். இந்த காரணம் பற்றியே பால் வெள்ளை நீறு என்றும் பால் வெண்ணீறு என்றும் பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. சிறந்த மழுப்படையினை உடையவனும், பால் போன்று பல நலங்களைத் தருகின்ற திருநீற்றனைத் தனது திருமேனியின் மீது பூசியவனும், அழகிய நடையினை உடைய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவனும், உடைந்த மண்டையோட்டினைத் தனது கையில் ஏந்தியவனாக உலகெங்கும் திரிந்து பலியேற்பவனும் எமது தலைவனும் ஆகிய சிவபெருமான், மிகவும் மகிழ்ந்து உறைவது திருவிடைமருதூர் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

படையுடை மழுவினன் பால் வெண்ணீற்றன்

நடை நவில் ஏற்றினான் ஞாலமெல்லாம்

உடை தலை இடுபலி கொண்டு உழல்வான்

இடைமருது இனிதுறை எம் இறையே

திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.114.2) திருஞான சம்பந்தர், பெருமான் வேட்கையுடன் பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். பாறு=கழுகுகள்; மண்டை ஓட்டினை, அதனில் ஒட்டிக் கொண்டு இருக்கும் தசைத் துணுக்குகளுக்காக கழுகுகள் நாடுவது இயற்கை. மண்டை ஓட்டின் அந்த பொதுத் தன்மையே, இந்த பாடலில் பாறணி வெண்டலை என்று குறிப்பிடப் படுகின்றது. எனவே பெருமானின் கையில் இருக்கும் ஓட்டினை கழுகுகள் நெருங்காது என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. அணி=அழகு; வேறணி=வேறு விதமான அழகு. ஏனைய உயிர்களிலிருந்து மாறுபட்டு தனித்துவம் வாய்ந்த அழகு; மேன்மேலும் மிகவும் அதிகமான உயிர்கள் முக்தி அடைந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதில் மிகுந்த இச்சை கொண்டவனாக, தீராத வேட்கை உடையவனாக பெருமான் இருப்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.

பாறணி வெண்டலை கையில் ஏந்தி

வேறணி பலி கொளும் வேட்கையனாய்

நீறு அணிந்து உமை ஒரு பாகம் வைத்த

மாறிலி வளநகர் மாற்பேறே

இராமனதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.115.1) திருஞானசம்பந்தர், தாருக வனத்து மங்கையர்களின் இல்லங்களுக்கு பலியேற்கச் சென்றவன் பெருமான் என்று கூறுகின்றார். சங்கொளிர் முன் கையர்=சங்கு வளையல்கள் தமது முன்கைகளில் அணிந்த மகளிர், தாருகவனத்து முனிவர்களின் மனைவியர்; பொங்கரவு=சினத்தினால் பொங்கி படமெடுத்தாடும் பாம்பு; அத்தகைய பாம்பினைத் தனது இடுப்பினில் கட்டிக் கொண்டும், உடலின் பல்வேறு இடங்களில் அணிந்து கொண்டும், தனது விருப்பம் போன்று ஆட்டும் இறைவன்; புவனி ஓங்க=உலகத்தவர் உய்யும் பொருட்டு;மன்=நிலையாக இருக்கும்; உலகத்தவர் உய்யும் பொருட்டு, உலகின் பல தலங்களில் உள்ள திருக்கோயில்களில் பெருமான் நிலையாக இருப்பதாக உணர்த்துகின்றார்.

சங்கொளிர் முன் கையர் தம்மிடையே

அங்கிடு பலி கொளும் அவன் கோபப்

பொங்கரவு ஆடலோன் புவனி ஓங்க

எங்கும் மன் இராமனதீச்சரமே

இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.122.4) திருஞான சம்பந்தர், பெருமானை, பல இல்லங்கள் சென்று பலி கேட்பவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். வெளியதோர்=வெள்ளை நிறம் படைத்த; தசைகள் உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் பிரம கபாலம்; கலன்=உண்கலன்: நனி=மிகுந்த, பல; முடுகுதல்=விரைந்து செல்லுதல்; மிகவும் அதிகமான இல்லங்களுக்கு, விரைந்து சென்று பெருமான் பிச்சை ஏற்கின்றார் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த குறிப்பு, மேன்மேலும் பல உயிர்கள் தங்களது மலங்களைத் தான் ஏற்றுக்கொண்டு திரியும் கலனில் பிச்சையாக இட்டு உய்வினை அடைய வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக பெருமான் விளங்குகின்றார் என்பதை உணர்த்துகின்றது. இவ்வாறு உயிர்கள் பெருமானைச் சென்றடைய வேண்டும் என்று தாங்கள் கொண்டுள்ள விருப்பத்தினை விடவும், உயிர்கள் தன்னை வந்தடைய வேண்டும் என்ற பெருமானின் விருப்பம் மிகவும் அதிகமாக உள்ளது என்பதை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். இந்த குறிப்பு, பெருமான் உயிர்கள் பால் கொண்டுள்ள எல்லையற்ற கருணையை நமக்கு உணர்த்துகின்றது. இடைவிடல்=விட்டு விடுதல்; பெருமான் பால் ஒரு முறை அன்பு செலுத்தி அவரை வழிபடும் அடியார்கள், மீளா அடிமைகளாக மாறிவிடும் வண்ணம் அவர்களை ஆட்கொண்டு அருள் புரிபவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இடபத்தைத் தனது ஊர்தியாக உடையவரும், தசைகள் உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரம கபாலத்தைத் தனது உண்கலனாக உடையவரும், மிகவும் அதிகமான இல்லங்கள் விரைந்து சென்று, உயிர்கள் இடுகின்ற பிச்சையை, பக்குவப்பட்ட உயிர்கள் பிச்சையாக இடுகின்ற ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை ஏற்றுக்கொண்டு, அந்த உயிர்களை மலமற்ற உயிர்களாக மாற்றி உய்வினை அளிக்கும் கருணை உள்ளத்தவராக இருப்பவரும் ஆகிய பெருமான் பால் ஒருமுறை அன்பு வைத்து வழிபடும் அடியார்கள், அந்த தன்மையிலிருந்து மீளாமல் எப்போதும் பெருமான் பால் அன்பு கொண்டவர்களாக விளங்குவார்கள்; இத்தகைய மாற்றத்தை தனது அடியார்களிடம் ஏற்படுத்தி ஆட்கொள்ளும் பெருமான், இடைமருது என்ற நகரத்தினை உடையவர் ஆவார். அத்தகைய பெருமானின் திருவடிகளைத் தொழுகின்ற அடியார்கள் வாழ்வினில் மேன்மேலும் உயர்வினை அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விடையினர் வெளியதோர் தலை கலன் என நனி

கடைகடை தொறு பலி இடுகென முடுகுவர்

இடைவிடல் அரியவர் இடைமருது எனு நகர்

உடையவர் அடியிணை தொழுவது எம் உயர்வே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.123.7) திருஞானசம்பந்தர், பெருமானை பலி ஏற்பதற்காக மகளிரின் இல்லம் புகுபவன் என்று கூறுகின்றார். மடவரலியர்=மகளிர்: நலி தரு தரை வர மடவரலியர்=தரையில் நடப்பதால் தங்களது மென்மையான பாதங்கள் வருந்துமே என்ற அச்சம் கொண்டு நடை பயிலும் மகளிர் என்று தாருகவனத்து இல்லத்தரசிகளை குறிப்பிடுகின்றார். தாருக வனத்து இல்லங்கள் அனைத்தும் சென்று பெருமான் பிச்சை கேட்டதாக கூறுகின்றார்.

நலி தரு தரை வர நடை வரும் இடையவர்

பொலி தரும் மடவரலியர் மனையது புகு

பலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர்

வலிவரும் மதில் வலிவலம் உறை இறையே

பெருமான் ஏன் தொடர்ந்து பல இடங்களுக்கும் பலி ஏற்பதற்காக செல்கின்றார் என்பதற்கு விடை அளிக்கும் பாடல், கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (1.126.2). இந்த பாடல் தாருகவனத்து மகளிர், பெருமானின் பாடலில் மயங்கி நின்ற நிலையை குறிப்பிடுகின்றது. வசிவலன்=தனது அழகால் வசீகரிக்கும் ஆற்றல் வாய்ந்த பெருமான்; பிசைந்து அணிந்த=நீரில் குழைத்து திருநீற்றினை அணிந்து கொண்ட தன்மை; பீடார்=பெருமை மிகுந்த; மாடார்=அருகில் இருந்த, இடது பாகத்தில் பொருந்தியிருந்த; மாடு=அருகே; பிறை நுதல்=பிறைச் சந்திரன் போன்று அழகாக வளைந்த; நச்சி=விரும்பி; உச்சத்தான்=உச்சிப் போதினில்; வெங்கண் ஏறு=கோபத்தை வெளிப்படுத்தும் வண்ணம் சிவந்த கண்களை உடைய இடபம்; வச்சத்தால்=வைத்ததால்; வடம்=வரிசையாக அமைந்த முத்து மாலை; வாரா=பின் தொடர்ந்து வந்து; மாலாகும்=மயக்கம் கொண்டு; விருப்பத்துடன் பெருமான் பிச்சை ஏற்கச் செல்வதாக இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. மேன்மேலும் பல உயிர்கள் முக்தி உலகம் வந்தடைய வேண்டும் என்று பெருமான் திருவுள்ளம் கொண்டுள்ள தன்மையே இந்த விருப்பத்திற்கு மூல காரணம் என்பதை விளக்கும் பல திருமுறை பாடல்களை நாம் இந்த பதிகத்து விளக்கத்தில் சிந்தித்து உள்ளோம்.

பிச்சைக்கே இச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப் பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்

உச்சத்தான் நச்சிப் போது அடர்ந்த வெங்கணேறு ஊராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலி செய் இசை

வச்சத்தான் அச்சுச் சேர் வடங்கொள் கொங்கை மங்கைமார் வாராநேரா மாலாகும் வசிவல அவனது இடம்

கச்சத்தான் மெச்சிப் பூக் கலந்திலங்கு வண்டினம் காரார்காரார் நீள் சோலை கழுமல வளநகரே

பிரமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.127.8) திருஞானசம்பந்தர், தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். இந்த பாடல் ஏகபாதம் என்ற வகையைச் சார்ந்த பாடல். ஒரே தொடர் நான்கு அடிகளிலும் காணப்பட்டாலும், ஒவ்வொரு அடியும் வேறுவேறு பொருள் தரும் வண்ணம் சொற்களைப் பிரித்து பொருள் காணும் வண்ணம் அமைந்தது. முதல் அடி; பொன் நடி மாது அவர் சேர் புறவத்தவன்; பொன்=பொன் போன்று பொலிவினை உடைய; நடி=கூத்தினை உடைய; மாது=காளி; அவர்=பூதகணங்கள்; சேர்=சென்று அடைந்து தங்கும்; புறவம்=ஊருக்கு புறத்தே உள்ளே சுடுகாடு; புறவத்தவன்=சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாக உடையவன்; சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான் என்று உணர்த்துகின்றார். இரண்டாவது அடி; பொன் அடி மாதவர் சேர் புறவம் தவன்; பொன்=தூய்மையான; அடி=வழி, முறையில்; மாதவர்=சிறந்த தவத்தினை புரியும் முனிவர்கள்; சேர்=திரண்டு சேரும்; புறவம்= முல்லை நிலம்; தவன்=தவத்தினை புரியும் சிவபெருமான்; தவம் புரியும் முனிவர்களிலும் சிறந்தவனாக சிவபெருமான் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தவம் செய்யும் அனைவரும் சடையினை உடையவர்களாக இருந்தாலும் சிவபெருமான் ஒருவனைத் தானே சடையான் என்று தேவாரப் பதிகங்கள் குறிப்பிடுகின்றன. அனைவரிலும் சிறந்த தவம் புரிபவன் சிவபெருமான் என்பதைத் தானே சடையான் என்ற இந்த சொல் நமக்கு உணர்த்துகின்றது. மூன்றாவது அடி: பொன் அடி மாது அவர் சேர்புற அவத்தவன்; பொன் என்ற சொல் செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படும் இலக்குமி தேவியை குறிக்கும். அடி=அழகிய ஆபரணங்கள்; மாது அவர்=தாருக வனத்து முனிவர்களின் மனைவிகள்; சேர்பு உறு=வந்து அணைந்த, பிச்சை இடுவதற்காக பெருமானை நாடிச் சென்ற; அவம்=பாவம் அவத்தவன்=பாவச் செயல் புரிந்தவன்; அந்நாள் வரை கற்பு குலையாமல் இருந்த தாருகவனத்து இல்லத்தரசிகள், பிச்சை ஏற்று வந்த பெருமானின் அழகினில் மயங்கி தாங்கள் செய்வது இன்னதென்று உணராமல், பெருமானின் பின்னே பின் தொடர்ந்ததை, கற்பு குலைந்த செயலாக புராணங்கள் கருதுகின்றன. இவ்வாறு அவர்கள் மாறுவதற்கு பெருமானின் அழகு காரணமாக இருந்தமையால் அவர்களது கற்பு நிலை குலைவதற்கு காரணமாக இருந்தவன் பெருமான் என்று குறிப்பிட்டு, அத்தகைய பாவம் புரிந்தவன் பெருமான் என்று தாருகவனத்து முனிவர்கள் கருதியதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தங்களது மனைவியர்களின் நிலையை மாற்றிய பெருமானை, தங்களது பகைவனாக நினைத்து அவனை அழிப்பதற்கு பலவாறும் முயற்சி செய்தமையும், இறுதியில் பெருமானின் பெருமைகளை உணர்ந்துகொண்டு அவனது அடியார்களாக தாருகவனத்து முனிவர்கள் மாறியதும் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள். தாருகவனத்து முனிவர்களின் நிலையினை மாற்றி அவர்களையும் தனது அடியார்களாக மாற்றுவதற்கு பெருமான் செய்த திருவிளையாடலின் ஓர் அங்கம் தான், பிச்சைப் பெருமானாக சென்று, தனது அழகினால் முனிவர்களின் மனைவிகள் மயங்கும் வண்ணம் நடந்தது. இந்த செயல் முனிவர்களின் கண்ணோட்டத்தில் பாவமாக கருதப் பட்டதால், பாவம் புரிந்தவன் பெருமான் என்று இங்கே திருஞான சம்பந்தர் கூறுகின்றார். நான்காவது அடி: பொன் அடி மாதவர் சேர் புறவத்தவன்; பொன்னடி=பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்கள்; அடி=பாதம்; மாதவர்=கன்னியர்; சேர்=சேர்ந்து ஒரு இனமாக இருத்தல்; புறவத்தவன்=புறவம் என்று அழைக்கப்படும் பதியில் உறைபவன். இந்த அடியில் உள்ள சொற்களை சற்று மாற்றி அமைத்து, மாதவர் சேர் பொன்னடி புறவத்தவன் என்று கூட்டி, சிறந்த தவ முனிவர்கள் சேரும் பொன் போன்று பொலியும் திருவடிகளை உடைய பெருமான், புறவம் திருத்தலத்தில் உறைபவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பொன் போன்று பொலிவினை உடைய கூத்தினை ஆடும் மாதாகிய காளிதேவியும், பூத கணங்களும் சென்று அடைந்து தங்கும் சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான்; தூய்மையான முறையில் சிறந்த தவம் செய்யும் முனிவர்கள் திரண்டு சேரும் முல்லை நிலத்தில் தானும் தவம் செய்பவனாக விளங்கி அவர்கள் அனைவராலும் சிறந்த தவசியாக மதிக்கப் படுபவன் சிவபெருமான்; அழகிய ஆபரணங்கள் அணிந்து இலக்குமி தேவியைப் போன்று அழகுடன் விளங்கிய தாருகவனத்து இல்லத்தரசிகள், தனது அழகில் மயங்கி தாங்கள் (தாருகவனத்துப் பெண்கள்) செய்வது இன்னதென்று அறியாமல் தன்னைப் பின்தொடர்ந்து வரும் வண்ணம், அவர்களின் முன்னே பிச்சைப் பெருமானாக தோன்றி, அவர்களது கற்பு நிலை குலையச் செய்தவன் பெருமான். பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்த பாதங்களை உடைய மகளிர், கூட்டமாக சேர்ந்து வணங்கும் இறைவன், புறவம் தலத்தில் உறைபவன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.130.4) திருஞான சம்பந்தர் பெருமானை, ஊரூரின் பலிக்கு உழல்பவர் பெருமான் என்று அழைக்கின்றார். ஊன் பாயும்=ஊன் உலர்ந்து பரவிய; முடை=முடை நாற்றம்; உடை=உடைந்த; தேன் பாயும்=தேன் ஒழுகும்; சங்கரன் என்றால் நலம் செய்பவர் என்று பொருள். பெருமான் ஊர் தோறும் சென்று பலி ஏற்பது உயிர்களுக்கு நன்மை புரியும் நோக்கத்துடன் தான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. ஊன் உலர்ந்து துர்நாற்றம் வீசும் பிரம கபாலத்தைத் தனது கையினில் ஏந்தியவாறு ஊர்கள் தோறும் சென்று பலி ஏற்பதற்காக திரிபவரும், உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவரும் பாய்ந்து செல்லும் ஆற்றலை உடைய இடபத்தைத் தனது வாகனமாகவும் உடையவரும் ஆகிய சங்கரனார் தங்கும் திருக்கோயில் உடைய தலம் திருவையாறு ஆகும். மான்கள் துள்ளித் திரியும் சோலைகளில் அருகே உள்ள வயலோரங்களில் உள்ள மரங்கள் மீது குரங்குகள் குதித்து பாய்வதால், மலர்களில் உள்ள தேன் மடுக்களில் சிந்துவதைக் காணும் மீன்கள் துள்ளி குதிப்பதால் ஏற்படும் அதிர்வுகள் மொட்டாக உள்ள தாமரை மலர்களை மலரச் செய்கின்றன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஊன் பாயும் முடை தலை கொண்டு ஊரூரின் பலிக்கு உழல்வார் உமையாள் பங்கர்

தான் பாயும் விடை ஏறும் சங்கரனார் தழல் உருவர் தங்கும் கோயில்

மான் பாய வயல் அருகே மரம் ஏறி மந்தி பாய் மடுக்கள் தோறும்

தேன் பாய மீன் பாயச் செழுங்கமலம் மொட்டு அலரும் திருவையாறே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.2.2) திருஞான சம்பந்தர், பெருமான் உலகு முழுவதுமாக பல இடங்களுக்கு சென்று பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். ஒக்க=ஒரு சேர, முழுவதுமாக; பாரல்=பரவிப் பரந்து சென்று இரை தேடும் தன்மை; பாரல் என்ற சொல்லுக்கு நீண்ட கழுத்தினை உடைய கொக்குகள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே பகுவாய்= பிளந்த வாய்; வாரல்=வருகின்ற; தேரும்=தேடும்; மூரல்முறுவல்=புன்முறுவல்; ஊரல்= சுடுகாட்டில் உருளும் தன்மையினை உடைய; மண்டையோட்டில் ஒட்டிக் கொண்டிருக்கும் சதைத் துணுக்குகளை கொத்தித் தின்னும் கழுகுகளால் புரட்டித் தள்ளப்படும் தலைகள் என்பதை குறிப்பிடும் வண்ணம் உருளும் தலைகள் என்று கூறுகின்றார். பெருமான் தலைமாலையாக சூட்டிக் கொண்டுள்ள பிரமன் திருமால் மற்றுமுள்ள தேவர்களின் உயிரற்ற உடல்களிலிருந்து பிரிக்கப்பட்ட தலைகள் அவ்வாறு தரையில் உருளவில்லை எனினும், மண்டையோடுகளின் பொதுத் தன்மை கருதி உருளும் என்று குறிப்பிடுகின்றார். சோலைகள் நிறைந்த தலம் என்று தலத்தின் நிலவளத்தை முந்திய பாடலில் உணர்த்திய திருஞான சம்பந்தர், இந்த பாடலில் தலத்தின் நீர்வளத்தினை உணர்த்துகின்றார். பதிகத்தின் முதல் பாடலில் நேற்றும் இன்றும் நாளையும் அதாவது எப்போதும் பெருமான் பலியேற்றுத் திரிவதாக குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உலகெங்கும் திரிவதாக குறிப்பிடுகின்றார். பெருமான் உலகெங்கும் திரிந்து பலியேற்பது, தற்போதம் நீங்கி பக்குவமடைந்த உயிர்களின் மலங்களை, பிச்சையாக ஏற்றுக்கொண்டு, அத்தகைய உயிர்களுக்கு முக்தி நிலை அளித்து, என்றும் அழியாத ஆனந்தத்தில் ஆழ்த்தும் பொருட்டே என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இது தான் இந்த பாடலில் எழுப்பப் பட்டுள்ள கேள்வியின் விடையாகும்.

பாரல் வெண் குருகும் பகுவாயன நாரையும்

வாரல் வெண் திரை வாய் இரை தேரும் வலஞ்சுழி

மூரல் வெண் முறுவல் மொய்யொளியீர் சொலீர்

ஊரல் வெண்தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே

பரந்த பல இடங்களுக்கும் பறந்து சென்று இரை தேடும் தன்மை உடையதும், நீண்ட கழுத்தினை உடையதும் ஆகிய வெண் கொக்குகளும் பிளந்த வாயினை உடைய நாரைகளும், வெண்மையான அலைகளுடன் பாய்ந்து வரும் நதியின் நீரை ஆராய்ந்து இரை தேடும் காட்சிகள் நிறைந்தது வலஞ்சுழி தலமாகும். ஒளி வீசுகின்ற வெண்மையான பற்கள் தெரியும் வண்ணம் புன்முறுவல் பூத்த வண்ணம், செறிந்த ஒளிப்பிழம்பு வாய்ந்த திருமேனி உடையவராக வலஞ்சுழி தலத்தினில் விளங்கும் பெருமானே, சுடுகாட்டினில் தரையினில் உருளும் தன்மை கொண்ட தலைகளை, ஊழிக்கால முடிவினில் இறந்துபடும் பிரமன் திருமால் மற்றுமுள்ள தேவர்களின் உயிரற்ற உடல்களிலிருந்து பிரிக்கப்பட்ட தலைகள் கோர்க்கப்பட்ட தலை மாலையை தனது தலையில் அணிந்தவனாக உலகம் முழுதும் சென்று பலியேற்கும் பெருமானே, நீ அவ்வாறு திரிவதன் காரணம் தான் யாது சொல்வாயாக என்பதே இந்த பாடலில் எழுப்பப்படும் கேள்வி.

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (2.2.7) திருஞான சம்பந்தர், பலி ஏற்பதை இழிவான செயலாக கருதாது பெருமான், உலகெங்கும் சென்று பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். பந்தம்=கீழ்மை, இழிந்த தன்மை; கந்தம்=நறுமணம்; சந்து=சந்தனக் கட்டைகள்; ஏற்பது இகழ்ச்சி என்பது சான்றோர் வாக்கு. எனினும் பெருமானின் இந்த செயலால் விளையும் நன்மை கருதி, பெருமான் பிச்சை புகினும் அவர் செய்வது நன்றே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெருமான் பலி ஏற்பதன் உயர்ந்த நோக்கத்தினை புரிந்து கொள்ளாமல், பலரும் கேலி செய்து இழிவாக பேசினாலும், உயிர்களுக்கு நன்மை விளைவிக்கும் பலி என்று திருமுறைப் பாடல்களை சொல்வதை நாம் உணர வேண்டும். பெருமான் அனைத்துப் பொருட்களுக்கும் அந்தமாகவும், ஆதியாகவும், நடுவாகவும் இருப்பவர் என்று திருஞானசம்பந்தர் உணர்த்துவது, நமக்கு திருவாசகம் சிவபுராணத்தின் தொடரினை, ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே என்ற தொடரை நினைவூட்டுகின்றது. அன்றாட வாழ்க்கையில் நாம் பல உயிர்களும் பல பொருட்களும் அழிவதைக் காண்கின்றோம். அத்தகைய அழிவு நமக்கும் ஏற்படும் என்பதையும் நாம் உணர்கின்றோம். அதைப் போன்றே பல பொருட்களும் உயிர்களும் தோன்றுவதையும் நாம் காண்கின்றோம். இந்த அழிவுக்கும் ஆக்கத்திற்கும் இடையே அந்த உயிர்கள் பாதுகாக்கப் படுவதையும் நாம் உணர்கின்றோம். இந்த அழிவாகவும், ஆக்கமாகவும், இடையே உள்ள பாதுகாப்புத் தன்மையாகவும் இருப்பவன் இறைவன் என்பதை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் பொருட்களுக்கும் ஆக்கமாகவும் அழிவாகவும் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பாதுகாப்பாகவும் இருக்கும் ஆற்றல் படைத்த இறைவன், பலராலும் இழிவாக கருதப்படும் பிச்சை ஏற்கும் செயலை இழிவாக கருதாமல் ஏன் தொடர்ந்து பிச்சை ஏற்கின்றான் என்பதே இந்த பாடலில் எழுப்பப்படும் கேள்வி. பக்குவமடைந்த உயிர்கள் தவிர்த்து வேறு எவரும், பெருமானின் இந்த செயலால் பயன் அடைவதில்லை. எனவே பெரும்பாலான உயிர்கள் பெருமான் பலியேற்பதால் விளைகின்ற நன்மையை உணர்வதில்லை. இந்த நிலையே அவர்கள் இகழ்வதற்கு காரணமாக உள்ளது. ஆனால் பெருமானுக்கு தனது செய்கையின் பலன் புரிவதாலும், அவனது விருப்பம் பல உயிர்களும் உய்வினை அடைந்து தன்னை வந்துச் சாரவேண்டும் என்று இருப்பதாலும், பலரும் இகழ்வதை அவன் பொருட்படுத்தாமல் அவன் தொடர்ந்து பலி ஏற்கின்றான்.

கந்த மாமலர் சந்தொடு காரகிலும் தழீஇ

வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி

அந்தநீர் முதல்நீர் நடுவாம் அடிகேள் சொலீர்

பந்த நீர் கருதாது உலகில் பலி கொள்வதே

நறுமணம் வீசும் சிறந்த மலர்களுடன், சந்தனக் கட்டைகள், கருமை நிறம் கொண்ட அகில் கட்டைகள் முதலிய பொருட்களைத் அடித்துத் தள்ளிக் கொண்டு வரும் காவிரி நீரினில் நீராடும் அடியார்களின் இடர்களைத் தீர்க்கும் பெருமான் வலஞ்சுழி தலத்தினில் உறைகின்றார். அவர், உலகம், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்கள், உலகில் உள்ள அனைத்து உயிர்கள் ஆகியவை தோன்றுவதற்கும் அழிவதற்கும் காரணமாகவும், அத்தகைய தோற்றம் மற்றும் அழிவுக்கு இடைப்பட்ட காலத்தில் அவை அனைத்திற்கும் பாதுகாப்பாகவும் இருக்கும் வல்லமை வாய்ந்தவராக உள்ளார். இத்தகைய அரிய ஆற்றல் கொண்ட இறைவனே, பலராலும் இழிவாக கருதப்படும் பிச்சை ஏற்கும் செயலினை நீர் அவ்வாறு இழிவாக கருதாமல் தொடர்ந்து பிச்சை ஏற்பதன் காரணம் தான் யாதோ என்பதே இந்த பாடல் மூலம் திருஞான சம்பந்தர் பெருமானை நோக்கி கேட்கும் கேள்வி.

கடை வாயில் தோறும் சென்று பெருமான் பலி ஏற்கின்றார் என்று குறிப்பிடும் பாடலில் பெருமான் பலி ஏற்பது, உயிருடன் இணைந்துள்ள, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று பொருட்களை பெறுவதற்காக என்று கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.12.5) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கடை=வாயில்; உடையான் என்று உயிர்களைத் தனது உடைமையாக கொண்டுள்ள பெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். கம்பை நதிக் கரையில் காஞ்சி நகரம் அமைந்துள்ளது. சிவபெருமானைத் தவிர்த்து தனது உள்ளம் வேறு ஒருவரையும் நினைக்காது என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

சடையானைத் தலை கையேந்திப் பலி தருவார் தம்

கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள்

புடையே பொன் மலரும் கம்பைக் கரை ஏகம்பம்

உடையானை அல்லாது உள்காது என் உள்ளமே

மருகல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.18.4) திருஞான சம்பந்தர் பெருமானை, பலி ஏற்பதற்காக உலகம் திரிபவர் என்று கூறுகின்றார். மெலி நீர்மையள்=மெலிந்து இருக்கும் தன்மையள். காதலனை இழந்த காரணத்தால் உடல் மெலிந்து இருக்கும் பெண் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மிகுந்த ஆரவாரத்துடன் வேகமாக இறங்கி வந்த கங்கை என்பதைக் குறிக்க ஒலி நீர் என்று கூறப்பட்டுள்ளது. இறைவன் பிட்சாடனர் கோலத்தில் பிச்சை ஏற்றது தாருகவனத்து முனிவர்களின் செருக்கினை அழிக்கும் நோக்கத்துடன் என்பதால், சிவபெருமான் ஏற்ற பிச்சை இழிவாக கருதப்படுவது இல்லை. அவ்வாறு இருக்கையில் இந்தப் பெண்ணை இந்த பரிதாபமான நிலைக்கு ஆளாக்கி ஏன் வீண் பழியை தேடிக் கொள்கிறாய் என்ற கேள்வியை, சொல்லாமல் கேட்கும் நயத்தை நாம் இந்தப் பாடலில் காணலாம். கங்கை நதியை தனது சடையில் மறைக்கும் வல்லமை படைத்த சிவபெருமானே, நீ உலகெங்கும் திரிந்து பிச்சை ஏற்றாலும் அதனை ஒரு குற்றமாக கருதாமல் உலகம் உன்னை புகழ்கின்றது. நீர்வளம் நிறைந்த மருகல் தலத்தில் மகிழ்வுடன் வீற்றிருக்கும் இறைவனே, வருத்தத்தால் இந்த பெண்மணி உடல் மெலியுமாறு ஏன் திருவுள்ளம் கொண்டாய் என்று பெருமானை நோக்கி, திருஞானசம்பந்தர் கேள்வி கேட்கும் பாடல்.

ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வாய் இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே

நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.24.7) பல இல்லங்களில் உள்ளவர் பலி அளிக்க ஏற்றுக்கொள்ளும் பெருமான் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். கடையார்= இல்லத்தின் வாயில்கள்; காரணன்=முழுமுதற் காரணமாக விளங்குபவன், உலகத்தின் தோற்றத்திற்கும், உலகம் தனது தோற்றம் மற்றும் அழிவு ஆகிய தன்மைகளுக்கு இடையே நிலைத்து நிற்பதற்கும், அழிவதற்கும் மூல காரணமாக இருக்கும் தன்மை; நடை=ஒழுக்கம்; முடையார்=முடை நாற்றம் வீசும்; தவம் செய்த முனிவர்கள் பலரும் சடை வளர்த்ததை நாம் புராணங்களிலிருந்து அறிந்து கொள்கின்றோம். இந்நாளில், பலரும் சடை வளர்ப்பதையும் நாம் காண்கின்றோம். சடை என்பது துறவோர்களின் அடையாளமாக கருதப்படுகின்றது. எனினும் அவர்கள் எவரையும் சடையா என்று நாம் அழைப்பதில்லை. சிவபெருமான் ஒருவரையே சடையா என்று அழைக்கின்றோம். துறவிகளில் முதன்மையான துறவியாக விளங்கும் பெருமான், இயல்பாகவே பாசங்களைத் துறந்த பெருமான் என்பதால், சடையா என்று அழைக்கப் படுவதற்கு பொருத்தமாக பெருமான் விளங்குகின்றார். இந்த பின்னணியில் தான் பெருமானின் சடை, அவரது ஞானத்தை உணர்த்துவதாக பெரியோர்கள் கூறுகின்றனரோ. தசைகள் உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படுவதும், முடை நாற்றம் உடையதும் ஆகிய பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம், உலகிலுள்ள பல இல்லங்களின் வாயில் சென்று பலி ஏற்கும் பெருமானே, உலகம், உலகிலுள்ள பொருட்கள், உலகத்து உயிர்கள் ஆகிய அனைத்தும் தோன்றுவதற்கும் அழிவதற்கும் அத்தகைய தோற்றத்திற்கும் அழிவுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிலைத்து நிற்பதற்கும் முழுமுதற் காரணனாக செயல்படும் பெருமானே, ஒழுக்கம் நிறைந்த அடியார்கள் வாழும் நாகேச்சர தலத்தின் தலைவனே, தலை சிறந்த துறவியாக வாழும் தன்மையை உணர்த்தும் சடையானே என்றெல்லாம் இறைவனைப் புகழ்ந்து வணங்கும் அடியார்களுடன் வலிமையாக பிணைந்துள்ள வினைகளும் கெட்டு, அத்தகைய அடியார்களை விட்டு நீங்கிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

முடையார் தரு வெண்டலை கொண்டு உலகில்

கடையார் பலி கொண்டு உழல் காரணனே

நடையார் தரு நாகேச்சுர நகருள்

சடையா என் வல்வினை தான் அறுமே

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.38.5) திருஞான சம்பந்தர், பெருமானை, ஏழைமார் கடை தோறும் இடுபலிக்கு சென்ற பெருமான் என்று குறிப்பிடுகிறார். ஏழைமார்=மகளிர்; பொதுவாக உடல் வலிமையில் ஆண்களை விடவும் குறைந்தவர்களாக இருப்பதால் மகளிரை ஏழை என்று குறிப்பிடுவார்கள். இங்கே தாருகவனத்து மகளிர் என்று பொருள் கொள்ள வேண்டும். கடை=வாயில்; கூழை=கடைப் பகுதியில்; இங்கே வால் பகுதி என்று பொருள் கொள்ள வேண்டும் பாம்பு தலைப் பகுதியில் சற்று பருத்தும் கீழே செல்லச் செல்ல, உடல் மெலிந்து வால் பகுதியில் மிகவும் மெலிந்து காணப்படும் நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. மாழை=ஒளி வீசும்; நுளைச்சியர்=நெய்தல் நிலத்து மகளிர் நுளைச்சியர் என்றும் ஆண்கள் நுளையர் என்றும் அழைக்கப் படுவார்கள். நெய்தல் என்பது கடலும் கடலைச் சார்ந்த இடமாகும். வண்=செழுமை மிகுந்த, மாழை என்ற சொல்லுக்கு மான் என்று பொருள் கொண்டு, மான் போன்று மருண்ட பார்வையினை உடைய கண்களைக் கொண்ட மகளிர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தாருகவனத்து மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்களின் இல்லத்தின் வாயிலில் நின்று, பிச்சை இடுவீர்களாக என்று கேட்டபடியே, ஒளிவீசுவதும் வால் பகுதியில் மிகவும் மெலிந்தும் காணப்படுவதும் ஆகிய பாம்பினை தனது விருப்பப்படி ஆட்டுவிக்கும் பெருமான் உறைகின்ற இடம் சாய்க்காடு தலத்தில் உள்ள கோயிலாகும். ஒளி வீசும் கண்களையும், ஒளி வீசும் வளையல்களை அணிந்த கைகளையும் உடைய நெய்தல் நிலத்து மகளிர்கள் செழிப்பாக வளர்ந்த தாழை வெண் மடல்களை கொய்து மகிழும் இடம் சாய்க்காடு ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஏழைமார் கடை தோறும் இடு பலிக்கென்று

கூழை வாளரவு ஆட்டும் பிரான் உறை கோயில்

மாழை ஒண் கண் வளைக்கை நுளைச்சியர் வண் பூந்

தாழை வெண் மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.44.10). பலரும் பிச்சை அளித்ததை ஏற்றுக் கொள்ளும் தலைவனாக பெருமான் இருப்பதாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் இறைவனை நினைத்து உருகாத மாந்தர்களின் ஞானத்தை மதிக்க மாட்டோம் என்று திருஞான சம்பந்தர் கூறுவது, அவர் அருளிய ஆமாத்தூர் பதிகத்தின் பாடலை (2.44.10) நமக்கு நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் திருஞான சம்பந்தர், ஈசனைத் தினமும் நினையாதார்களின் நெஞ்சம் நெஞ்சமாக கருதப்படாது என்று கூறுகின்றார். நித்தல் என்ற சொல் எதுகை கருதி நிச்சல் என்று மருவியுள்ளது. பெய்தல்=இடுதல்; பின் சார்தல்=பின்னே வருதல். கொச்சை= இழிவான; பிச்சைப் பெருமானாக (பிக்ஷாடனர்) வேடம் தரித்து தாருகாவனம் சென்ற சிவபிரானின் பின்னர், முனிவர்களின் மனைவியர் தொடர்ந்து வந்த செய்தி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. புலால் நாற்றம் வீசிய தோல் என்று குறிப்பதன் மூலம் அப்போது தான் உரித்த தோல் என்று உணர்த்தப் பட்டுள்ளது. யானையின் பச்சைத் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நம்பப் படுகின்றது. ஆனால் சர்வ வல்லமை படைத்த ஈசனை எந்த கேடும் அணுக முடியாது. மதயானையின் தோல் உரிக்கப் படுவதை நேரில் கண்ட உமாதேவி அச்சம் அடைந்த நிகழ்ச்சியும் இங்கே கூறப்பட்டுள்ளது.

பிச்சை பிறர் பெய்யப் பின் சாரக் கோசாரக்

கொச்சை புலால் நாற ஈரிருவை போர்த்து உகந்தான்

அச்சம் தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்

நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே

களர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.51.1) திருஞானசம்பந்தர் பெருமானை, ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவன் என்று குறிப்பிடுகின்றார். மறுகு=தெரு; இந்த பதிகத்தின் அனைத்து பாடல்களிலும், தன்னைச் சரண் அடைந்த அடியார்கள் அனைவர்க்கும் பெருமான் அருள் புரிய வேண்டும் என்று திருஞானசம்பந்தர் நம் சார்பினில் வேண்டுவதை உணரலாம். திருஞான சம்பந்தர் வேண்டியது அனைத்தையும் தருபவர் சிவ பெருமான் என்பதால், சிவபெருமானிடம் சரண் அடைந்தால் நாமும் அவரது அருள் பெறுவது திண்ணம்.

நீருளார் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மாவயல் ஈண்டு மாமதில்

தேரினார் மறுகில் விழா மல்கு திருக்களருள்

ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செஞ்சடை மதி

ஆர நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.54.2), திருஞான சம்பந்தர் பெருமானை, ஊரார்ந்த சில் பலியீர் என்று அழைக்கின்றார். சில் பலியீர் என்ற தொடருக்கு சி.கே. சுப்ரமணியம் அவர்கள் சிறந்த விளக்கம் அளிக்கின்றார். அளவில் மிகவும் சிறியதான பலி என்பதே இதன் பொருள். ஒரே இடத்தில் அதிகமாக பலி ஏற்றுக் கொண்டு தனது பிரம கபாலத்தை நிறைத்துக் கொள்ளாமல், பல இடங்களிலும் சென்று சிறிது சிறிதான அளவில் பலி ஏற்றுக் கொண்டு, மிகவும் அதிகமான ஆன்மாக்களை உய்விக்க வேண்டும் என்பதே பெருமானின் விருப்பமாக உள்ளது என்று விளக்கம் கூறுகின்றார், பல திருமுறைப் பாடல்கள் சில்பலி என்று குறிப்பிடுகின்றன. உலகினில் வாழும் எண்ணற்ற உயிர்களில் ஒரு சில உயிர்களே பக்குவப்பட்ட உயிர்களாக விளங்குவதால் ஒரு சில இடங்களில் மட்டுமே பெருமானுக்கு பலி கிடைக்கின்றது என்பது மற்றொரு விளக்கம். இவ்வாறு ஒரு சில இடங்களில் மட்டுமே தனக்கு பலி கிடைத்தாலும், அதனை பொருட்படுத்தாமல், பல இடங்களில் பலி ஏற்க பெருமான் திரிகின்றார் என்று கூறுகின்றனர். உழை=மான்; போரார்ந்த=போருக்கு செல்வது போன்று உயர்ந்து வரும் அலைகள் வந்தடையும் கடற்கரைச் சோலை; நிரை=வரிசை; நிரையார்=வரிசையாக அமைந்த; சீரார்ந்த=சிறப்பு வாய்ந்த;

நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார் கழல் சேர் பாதத்தீர்

ஊரார்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர்

போரார்ந்த தெண்டிரை சென்று அணையும் கானல் பூம்புகலிச்

சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே

பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.65.3) திருஞான சம்பந்தர் பெருமானை, பலி ஏற்பதற்காக பல தேசங்கள் திரிந்தவர் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் எதிர்மறையாக சொன்னவற்றை நாம் உடன்பாடாக மாற்றிக் கொண்டு பொருள் காண வேண்டும். திருநீறு பூசி, பாம்பினை அணிகலனாக அணிந்து, கோவணம் மற்றும் புலித்தோல் ஆடையாகக் கொண்டு பெருமான் திகழும் திருக்கோலத்தினை பித்த வடிவம் என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகிறார். கதம்=கோபம்; மிகுந்த ஆரவாரத்துடன் திரிந்த காளி தேவியின் ஆவேசத்தை அடக்கிய நிகழ்ச்சியும், தனது கண்ணினை நோண்டி எடுத்து அர்ப்பணித்த திருமாலுக்கு சக்கரம் அளித்த நிகழ்ச்சியும் இங்கே குறிப்பிடப் படுகின்றன.

சித்த வடிவிலர் போலும் தேசம் திரிந்திலர் போலும்

கத்தி வரும் காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்

மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும்

பித்த வடிவிலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே

தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.82.4) திருஞானசம்பந்தர், மிகவும் குறைவாக இடப்படும் பலிக்காக பல ஊர்கள் திரிவதால் பெருமானை பித்தன் என்று அழைக்கின்றார். உலகில் உள்ள எண்ணற்ற உயிர்களில், ஒரு சிலர் தானே, பற்றவர்களாக விளங்கி, தங்களது மலங்களை பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு, உய்வினை அடையும் பக்குவம் உடையவர்களாக உள்ளனர்; எனவே பல இடங்கள் திரிந்த போதிலும் பெருமானுக்கு பலி மிகவும் குறைவாகவே கிடைக்கின்றது. எனினும் பெருமான் தனது முயற்சியில் தளராதவராக தொடர்ந்து பலி ஏற்பதால், அவரை பித்தன் என்று அழைத்தார் போலும். முத்தன் என்று, இயல்பாகவே பாசங்களிலிருந்து பெருமான் விடுபட்ட தன்மையை குறிப்பிடுகின்றார். தனது அடியார்களின் சித்தத்தில் எழுந்தருளும் பெருமான் என்று இங்கே கூறுகின்றார். திருஞான சம்பந்தரின் அறிவுரையின் படி, நாமும் பெருமானின் திருவடிகளை அடைந்து நமது அல்லல்களைத் தீர்த்துக் கொள்வோம்.

முத்தன் சில்பலிக்கு ஊர் தொறும் முறைமுறை திரியும்

பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன அடியார்கள்

சித்தன் மாளிகை செழுமதி தவழ் பொழில் தேவூர்

அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.87.1) திருஞான சம்பந்தர் பெருமானை, ஊரியல் பிச்சை பேணுபவர் என்று அழைக்கின்றார். நேரியன்=நுண்ணியன்; ஆகுமல்லன் என்ற தொடரை நேரியன் என்ற சொல்லுடன் மீண்டும் இணைத்து, நேரியன் ஆகுமல்லன் என்று சொற்களை அமைத்துப் பொருள் கொள்ள வேண்டும். மிகவும் நுண்ணியனாக இருக்கும் பெருமான், அளவிடமுடியாத பெரிய உருவம் எடுப்பவனாகவும் உள்ளான் என்பதையே இந்த தொடர் உணர்த்துகின்றது. நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணியனே என்ற திருவாசகத் தொடர் நமது நினைவுக்குவருகின்றது. முனாய=முன்+ஆய; அனைத்து உயிர்களுக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் முன்னே தோன்றிய ஆதி மூர்த்தி; கால்=காற்று; உறு தீ=மிகுதியாக எரியும் தீ; இயல் கால்=இயங்குகின்ற காற்று; ஊர் இயல்=ஊரார் இயல்பாக, தாங்களாகவே முன்வந்து இடுகின்ற பிச்சை; நேரியன் என்ற சொல்லுக்கு அனைத்தும் பொருந்தியவன் என்றும் அல்லன் என்ற சொல்லுக்கு ஏதும் இல்லாதவன் என்றும் பொருள் கொண்டு ஒரு சிறப்பான விளக்கம் அளிக்கப் படுகின்றது. அனைத்து உலகங்களும் அவனது உடைமை என்பதால், சிவபெருமான் அனைத்தையும் உடையவனாக இருக்கின்றான்; அதே சமயத்தில் எந்த பொருளின் மீதும் பற்று அற்றவனாக இறைவன் இருக்கும் தன்மை அல்லன் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. அனைத்துச் செல்வங்களும் பெற்றிருந்த போதும், எந்த விதமான பொருளின் மீது பற்றற்றவனாக இருப்பதும் இறைவனின் சிறந்த குணங்களில் ஒன்றாகும். இந்த பாடலில் மூன்றாவது அடியில் உள்ள நலகண்டு என்ற தொடருக்கு பதிலாக நல்குண்டு என்ற தொடர், கங்கை பதிப்பகத்து தேவாரம் உள்ளிட்டு பல நூல்களில் காணப்படுகின்றது. ஆறுமுக விலாஸ் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்ட பதிப்பினில் நலகண்டு என்ற தொடரே காணப்படுகின்றது. சிவக்கவிமணியார் தொகுத்த பெரிய புராணம் விளக்கம் நூலிலும், நலகண்டு என்ற தொடரே காணப்படுகின்றது. நலகண்டு=நலம்+கண்டு, நலன்கள் பல கண்டவனாக, தான் பலி ஏற்பதன் மூலம், பக்குவப்பட்ட பல உயிர்கள் உய்வினை அடைவதால், நலங்கள் பல உயிர்களுக்கு நிகழ, அந்த நலன்களைக் கண்டு மகிழ்பவனாக இறைவன் இருக்கின்றான் என்ற விளக்கம், மிகவும் பொருத்தமாக அமைந்திருப்பதால், நலகண்டு என்ற தொடர் மிகவும் பொருத்தமாக உள்ளது என்று தோன்றுகின்றது. இதற்கு மாறாக, நல்குண்டு (நல்குண்டு=நல்கு உண்டு) என்ற தொடர், நன்றாக உட்கொண்டு என்ற பொருளைத் தருகின்றது; பிறப்பையும், இறப்பையும், முதுமை மற்றும் நோய்களைக் கடந்த இறைவனுக்கு உணவுத் தேவை ஏற்படாது அல்லவா. எனவே இந்த தொடர் பொருத்தம் உடையதாகத் தோன்றவில்லை. உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது பெருமானின் திருநடனம் என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. தொன்மைக் கோலம் என்று அருளாளர்கள் பலராலும் போற்றப் பட்ட திருக்கோலம், மாதொரு பாகனின் திருக்கோலம் என்பதை உணர்த்தும் முகமாக, பண்டைய நாளிலிலிருந்தே தொடர்ந்து வரும் கோலம் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முனாய ஒளியான்

நீரியல் காலுமாகி நிறை வானுமாகி உறு தீயும் ஆய நிமலன்

ஊரியல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நலகண்டு பண்டு சுடலை

நாரியோர் பாகமாக நடமாட வல்ல நறையூரின் நம்பன் அவனே

உலகினில் உள்ள அனைத்து பொருட்களினும் மிகவும் நுண்ணியவனாகவும், அதே சமயத்தில் உலகிலுள்ள அனைத்துப் பொருட்களினும் மிகவும் பெரிய உருவத்துடன் இருப்பவனும் ஆகிய இறைவனின் திருமேனியின் தன்மையை எவராலும் அறியமுடியாது. அவன் அனைத்துப் பொருட்களுக்கும், அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றியவன்; சோதி வடிவமாக உள்ள இறைவன், நீர், இயங்கும் காற்று, நிறைந்த வானம், மிகுதியாக எரிகின்ற தீ மற்றும் உலகம் ஆகிய ஐந்து பூதங்களாக இருப்பவனும், இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து விலகியவனும் ஆகிய இறைவன், ஊரார் இயல்பாக, தாங்களே மனமுவந்து முன்வந்து தருகின்ற பிச்சையை மதித்து ஏற்றுக் கொள்கின்றான். இவ்வாறு பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தருகின்ற பிச்சையாகிய மலங்களை ஏற்றுக்கொள்ளும் பெருமான், தனக்கு இடப்பட்ட பிச்சைக்கு பதிலாக முக்தி நிலையினை அந்த ஆன்மாக்களுக்கு வழங்குவதை உணரும் உலகம் போற்றுகின்றது. பண்டைய நாளில், அனைத்து உலகங்களும் அழிந்த நிலையில், உயிரற்ற உடல்கள் எங்கும் பரவிக் கிடந்து, மொத்த உலகமும் சுடுகாடாக காட்சி அளித்த நிலையில், தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டு மாதொருபாகனாக, நடமாடும் வல்லமை வாய்ந்த பெருமான் நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.89.5) திருஞான சம்பந்தர், பெருமானை, வையகம் இடுபலிக்கு உழல்வார் என்று குறிப்பிடுகின்றார். ஆடல் மாமதி=வானவெளியில் திரியும் சந்திரன்; பாரிடம்=பூதம்; வையகம்=பூமி; உழலுதல்=திரிதல்; மஞ்ஞை=மயில்;. ஆடல் மஞ்ஞை=தோகை விரித்தாடும் ஆண் மயில்; மட மஞ்ஞை=இளமை வாய்ந்த மயில்கள்; மா=சிறந்த; பேடை=பெண் மயில்கள்;

ஆடல் மாமதி உடையார் ஆயின பாரிடம் சூழ

வாடல் வெண்டலை ஏந்தி வையகம் இடுபலிக்கு உழல்வார்

ஆடல் மாமட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடிக்

கூடு தண் பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே

கயிலாய மலை மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.68.4) திருஞான சம்பந்தர் பெருமானை, சில்பலி ஏற்பவர் என்று குறிப்பிடுகின்றார். பிடியதொரு=கையில் பிடிப்பதற்கு வாட்டமாக உள்ள; வடிய=கூர்மையாக வடிக்கப் பட்ட; செடிய=செடி போன்று அடர்ந்துள்ள என்றும் கொடிய என்றும் இரண்டு விதமாக பொருள் சொல்லப் படுகின்றது; பொய் பேசிய பிரமனின் தலை என்பதால் கொடிய என்று சொன்னார் போலும். வெடிய=வெறுக்கத் தக்க; வினை=தொழில்; வெடிய வினை=வெறுக்கத்தக்க கொலைத் தொழிலைச் செய்யும்; கொடியர்=கொடியோர்; நொடிய=சில வார்த்தைகளை பேசவும்; அசுரர்களை அழிப்பதிலும், பலி ஏற்க சில வார்த்தைகள் பேசுவதிலும் மகிழ்ச்சி அடைகின்ற பெருமான் என்று உணர்த்துகின்றார். துடி அடி=யானைக் கன்று;

முடிய சடை பிடியதொரு வடிய மழு உடையர் செடி உடைய தலையில்

வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடமாம்

கொடிய குரல் உடைய விடை கடிய துடி அடியினொடும் இடியின் அதிரக்

கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் கொள் கயிலாய மலையே

தோணிபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.100.03) சில்பலிக்கு செல்லும் பெருமான் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். தோணிபுரம் என்பது சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. இந்த பாடலில் திருஞானசம்பந்தர், யானைத் தோலைத் தான் போர்த்துக் கொண்ட போது உமையன்னை கொண்டிருந்த அச்சத்தை பெருமான் எவ்வாறு போக்கினார் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். பெருமானின் நடனத்தை அருகில் இருந்து ரசித்து பார்க்கும் குணம் உடையவள் பிராட்டி. எனவே கலக்கம் அடைந்திருந்த பிராட்டியின் சிந்தனை தெளிவடையும் வண்ணம் பெருமான் நடனம் ஆடினார் என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பேதுறுதல்=அச்சம் கொள்ளுதல்; மத்த=மதம் கொண்ட; களிறு=ஆண் யானை; சித்தம்=மனதினில் கொண்டிருந்த அச்சம் நீங்க; ஏறூர்=எருதினை வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்லும் தன்மை; சில்பலி=சிறு பிச்சை; துத்தம்=ஏழிசைகளில் ஒன்று; ஒன்றினைக் குறிப்பிட்டு மற்று ஆறு இசை வகைகளையும் உணர்த்தி, ஏழிசையில் வண்டுகள் ரீங்காரம் புரிகின்றன என்று கூறுகின்றார். பெருமான் பால் காதல் கொண்டு, அந்த காதல் நிறைவேறாத நிலையில், வருத்தம் கொண்டுள்ள தலைவியின் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. ஒத்தபடி என்று பிச்சை ஏற்பதற்கு உரிய கோலத்துடன் பெருமான் வந்த செய்தியை இங்கே குறிப்பிடுகின்றார்.

மத்த களிற்று உரி போர்க்கக் கண்டு மாதுமை பேதுறலும்

சித்தம் தெளிய நின்றாடி ஏறூர் தீவண்ணர் சில் பலிக்கென்று

ஒத்தபடி வந்து என் உள்ளம் கொண்ட ஒருவர்க்கு இடம் போலும்

துத்த நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம் தானே

காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.8.8) அப்பர் பிரான், பெருமான் ஏற்பது சில் பலி என்று கூறுகின்றார். சில்பலி=சிறிய அளவிலான பிச்சை; ஒரே இடத்தில் அதிகமான அளவினில் பிச்சை ஏற்றால் அடுத்த பல இல்லங்களுக்குச் செல்ல முடியாது என்பதால், பலரையும் உய்விக்கும் எண்ணத்துடன், சிறிய அளவில் பலி ஏற்கின்றார் போலும். மல்லாடு=வலிமை பொருந்திய; ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் பல இல்லங்களுக்குச் செல்லும் பெருமான், ஒவ்வொரு இல்லத்திலும் சிறிய அளவிலான பிச்சையை ஏற்கின்றான். தேவர்களால் தொழப்பட்டு வேண்டி வணங்கப் படுபவனும், கையினில் வில்லினை ஏந்தி கானகத்தில் அர்ஜுனனைக் கொல்ல வந்த பன்றியின் பின்னே ஓடியவனும், வெண்மை நிறைந்த பூணூலை தனது அகலமான மார்பில் அணிந்தவனும், வலிமை மிகுந்ததும் திரண்டு காணப்படுவதும் ஆகிய தோளின் மேல் மழுவாட் படையை தாங்குபவனும், மலைமகளாகிய பார்வதி தேவியின் மணாளனாக திகழ்பவனும், பண்டைய நாளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து தென்முகக் கடவுளாக நால்வர்க்கு அறம் உரைத்தவனும் திருக்காளத்தி தலத்தில் காணப்படும் காளத்தியானும் ஆகிய இறைவன் எனது மனக் கண்களில் நிறைந்துள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இல்லாடி சில்பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண்

வில்லாடி வேடனாய் ஓடினான் காண் வெண்ணூலும் சேர்ந்த அகலத்தான் காண்

மல்லாடு திரள் தோள்மேல் மழுவாளன் காண் மலைமகள்தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்னாள்

கல்லாலின் கீழ் இருந்த காபாலி காண் காளத்தியான் அவன் என் கண்ணுளானே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (6.9.3) அப்பர் பிரான், சில்பலி என்று கூறுகின்றார். கட்டங்கம்=மழு; இட்டங்கள்=விருப்பத்தை ஏற்படுத்தும் மொழிகள்; பட்டிமை= நெறியற்ற சொற்கள்; படிறு=வஞ்சனை; பரிசு=தன்மை; நிறை=அடக்கமான குணம்; பெண்களுக்கு அழகு அவர்களது அடக்கமான குணம். சிவபெருமானைக் காணும் வரை, இந்தப் பெண்மணியும் அவ்வாறே, எந்த ஆடவரையும் ஏறெடுத்துப் பார்க்காமல், இருந்து வந்தாள். ஆனால் சிவபெருமானைக் கண்ட பின்னர், அவரது அழகினில் தனது மனதினைப் பறிகொடுத்த இந்த அப்பர் நாயகி, தனது அடக்க குணத்தைக் கைவிட்டு, சிவபிரானை ஏறிட்டுப் பார்த்தாக அவளே சொல்கின்றாள். கட்டங்கம் எனப்படும் மழுப்படையைக் கையில் ஏந்தி, விரைந்து செல்லும் இடபத்தின் மேல் ஏறிக்கொண்டு வந்த காபாலியார், எனது இல்லம் புகுந்தார்; அவ்வாறு புகுந்த அவர், நான் அளித்த உணவினை ஏற்றுக் கொள்ளாது இருந்தார்; ஆனால் அவர் எனது வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லாமல், எனக்கு அவர் பேரில் விருப்பம் ஊட்டும் சொற்களைப் பேசியவராக இருந்தார். இவ்வாறு நெறியற்ற சொற்களையும், வஞ்சனையான சொற்களையும் பேசிய அவர் நின்ற தோரணை மிகவும் அழகாக, அவரை பார்க்கும் பெண்கள் தங்கள் அடக்க குணத்தைக் கைவிட்டு, அவர் மீது காதல் கொள்ளும்படிச் செய்வதாக இருந்தது. நான் அவருக்கு அளித்த உணவுகளைத் தொடாமலே இருந்த அவர், தனது மனக்கருத்து என்ன என்பதையும் சொல்லாதவராக இருந்த, ஆமாத்தூர் அழகியர் மிகவும் அழகியரே என்று அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.

கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்திக் கடிய விடையேறிக் காபாலியார்

இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இடக் கொள்ளார் போவார் அல்லர்

பட்டிமையும் படிறுமே பேசா நின்றார் பார்ப்பாரைப் பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம்

அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.59.7) அப்பர் பிரான், பெருமானை சில் பலிக்கு ஊரூர் திரிவான் என்று குறிப்பிடுகின்றார். மட்டு=தேன்; அம் தார்=அழகிய மாலை; மடவாள்=அழகிய பெண், பார்வதி தேவி; சிட்டம் என்றால் ஞானம் என்று பொருள். சிட்டம் என்ற சொல் சிட்டு என்று இங்கே திரிந்தது. உருவம் ஏதும் இல்லாத இறைவன், மற்றவர்களுக்கு ஞானம் அளிப்பதற்காக பல வேடங்கள் ஏற்கின்றான். காலன்=மற்றவர்களுக்கு காலத்தை வரையறுத்து, அவர்களின் உயிரினை குறித்த நேரத்தில் கவர்வதால், இயமனுக்கு காலன் என்ற பெயர் ஏற்பட்டது. அத்தகைய காலனின் காலத்தை முடித்தவர் என்று இயமனை உதைத்து வீழ்த்திய நிகழ்ச்சி, இங்கே நயமாக உணர்த்தப் படுகின்றது. இலங்குதல் என்ற சொல்லுக்கு ஒளி வீசுதல் என்ற பொருளும் பொருந்தும். மின்னும் தன்மையினை உடைய குழை ஆபரணம் இங்கே கூறப்பட்டுள்ளது. உலகத்தவரின் மலங்களை ஏற்று, அவர்களை உய்விக்கும் வண்ணம் பெருமான் ஊரூராக திரிந்து பிச்சை ஏற்றாலும் மிகவும் குறைவான ஒரு சிலரே அந்த நோக்கத்தை புரிந்து கொண்டு, தங்களது மலங்களை இறைவனிடம் சமர்ப்பித்து உய்வினை அடைவதால், சில்பலி என்று குறிப்பிட்டு, ஒரு சிலரே அளிக்கும் பிச்சை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

மட்டிலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்திச்

சிட்டிலங்கு வேடத்தராகி நாளும் சில் பலிக்கு என்று ஊரூர் திரிதர்வாரும்

கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த காலன் தன் காலம் அறுப்பார் தாமும்

விட்டிலங்கும் வெண்குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனாரே

தேன் பொருந்தியதும், மிகவும் அழகாக விளங்குவதும் ஆகிய கொன்றை மாலையினை அணிந்துள்ள இறைவன், எப்போதும் உமையம்மையுடன் கூடி இருக்கின்றார். அவர் தனது கையினில் மான் கன்றினை ஏந்தியவாறு காட்சி அளிக்கின்றார். தனக்கென தனியாக உருவம் ஏதும் இல்லாத பெருமான், தனது அடியார்களுக்கு அருள் புரிவதற்காக, அவர்களுக்கு ஞானம் வழங்கும் வண்ணம் பல வேடங்களைத் தரிக்கின்றார். தான் பிச்சை எடுக்கும் நோக்கத்தை புரிந்து கொண்டு, மிகவும் குறைவான ஒரு சிலரே தங்களது மலங்களை பிச்சையாக இட்டாலும், அதனைப் பெறுவதற்காக ஊரூராகத் திரிபவர் சிவபெருமான்; தனது செய்கையில் என்றும் தவறாது செயல்படும் பாசக் கயிற்றினை வீசி, அனைவரின் காலங்களையும் நிர்ணயிக்கும் காலனின் காலனை உதைத்து கீழே விழச் செய்து அவனது காலத்தை முடித்தவர் பெருமான்; மின்னல் போன்று விட்டுவிட்டு மிளிரும் குழையினைத் தனது காதில் அணிந்தவரும், தனது செய்கை மற்றும் பண்புகளால் மாறுபட்டு விளங்குபவரும் ஆகிய பெருமான் வெண்ணி என்று அழைக்கப்படும் தலத்தில் உறைகின்றார் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.9.1) சுந்தரர் பெருமான் சில்பலி ஏற்பதாக குறிப்பிடுகிறார். வரு முப்புரங்கள்=தங்களது இடத்திலிருந்து பெயர்ந்து வந்து ஒரே நேர்க்கோட்டில் பொருந்திய மூன்று பறக்கும் கோட்டைகள்; சே=எருது; சிலைக்கும்=முழங்கும், உரத்த குரலில் முழக்கம் இடும்; கொலைச் சே=கொல்லும் குணமுடைய இடபம்; பெருமான் எருதினைத் தவிர்த்து வேறு எதனையும் தனது வாகனமாக ஏற்றுக் கொள்ளாத தன்மை, ஏறொழியீர் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. சில்பலிகள் ஏற்பதற்கு பல இல்லங்கள் செல்வதை தொடர்ந்து இடைவிடாமல் செய்பவர் பெருமான். கரி=ஆண் யானை; மறுப்பு= பொதுவாக கொம்பு, இங்கே யானைத் தந்தம்; கலவம்=மயில்;

மலைக்கும் மகள் அஞ்ச மதகரியை உரித்தீர் எரித்தீர் வரு முப்புரங்கள்

சிலைக்கும் கொலைச் சேவுகந்து ஏறொழியீர் சில்பலிக்கு இல்கள் தோறு ஒழியீர்

கலைக் கொம்பும் கரி மருப்பும் இடறிக் கலவம் மயிற்பீலியும் காரகிலும்

அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகார் திருப்புத்தூர் புனிதனீரே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் சில்பலி இடுவீர்களாக என்று பல இல்லங்கள் சென்று பெருமான் இரப்பதாக சுந்தரர் கூறுகின்றார். காஞ்சியில் தவம் புரிந்த போது, காமாட்சி அன்னை அறுபத்து நான்கு அறங்கள் புரிந்ததாக புராணம் உணர்த்துகின்றது. இவ்வாறு அறம் புரிவதற்கு மிகுந்த செல்வம் உடையவளாக அன்னை இருக்கையில், பெருமானே நீர் எதற்காக பிச்சை எடுக்கின்றீர் என்று சுந்தரர் கேள்வி கேட்பதாக அமைந்த பாடல். செட்டி= அளவறிந்து வாழ்பவள் என்று பொருள். தனது நிதி நிலைக்கு தக்கவாறு செலவு செய்தல்; முட்டுதல்=எதிர்ப்படுதல்; எதிரே நின்று வணங்குதல் என்று பொருள் கொள்ள வேண்டும்.

செட்டி நின் காதலி ஊர்கள் தோறும் அறம் செய

அட்டுமின் சில்பலிக்கு என்று அகம் கடை நிற்பதே

பட்டி வெள்ளேறு உகந்து ஏறுவீர் பரிசு என் கொலோ

முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.45.5) சுந்தரர் பெருமானை சில்பலிக்கு பல தெருக்கள் சென்றவன் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் மீது தான் கொண்டிருந்த விரோதம் காரணமாக, பெருமானைப் புறக்கணித்து உலகினுக்கு ஒரு முன் மாதிரியாக திகழ வேண்டும் என்று தக்கன் முயற்சி செய்தான். வேத நெறிக்கு முரணாக செய்யப்பட்ட அந்த வேள்வி முற்றுப் பெறாத வண்ணம் அந்த வேள்வியினை அழித்ததன் மூலம், தக்கனின் முயற்சியை வீணாக அடித்ததுடன், அந்த வேள்வியில் பங்கு கொண்டு அதனை வெற்றிகரமாக முடிய உதவவிருந்த தேவர்களின் செயலையும் பெருமான் முறியடிக்கிறான். இந்த செயலை விண்ணவர் தங்களை வேள்வியில் வென்றவன் என்று இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். தன்னைச் சரணடையும் அடியார்களுக்கு சிறிதும் தாமதம் செய்யாமல் அன்றே அருள் செய்யும் கருணையாளன் பெருமான் என்று இந்த பாடலில் கடை அடியில் சுந்தரர் உணர்த்துகின்றார்.

வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களைச்

சென்றவன் சென்றவன் சில்பலிக்கு என்று தெருவிடை

நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர் தங்கள் பால்

அன்றவன் செய்யருள் ஆமாத்தூர் ஐயனே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (7.63.6) சுந்தரர், பெருமானை சில்பலிக்கு என்று அகம் தோறும் சென்றவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நம்பி என்றால் ஆண்களில் சிறந்தவன் என்று பொருள். பலி ஏற்கச் சென்ற பெருமான், அந்த நிலைக்கு பொருத்தமான வேடத்துடன் சென்றார் என்று சுந்தரர் கூறுகின்றார். எரித்த=அச்சம் கொண்டு ஓடச் செய்த; சூரியன் சந்திரன் அக்னி ஆகியோர் பெற்ற தண்டனையைக் கண்டு அச்சம் கொண்ட இந்திரன், குயிலாக மாறி பறந்து சென்றதாகவும், பல தேவர்கள் திசைக்கு ஒருவராக ஓடியதாகவும் திருவாசகம் திருவுந்தியார் சொல்வது நமது நினைவுக்கு வருகின்றது. மானிடப் பிறவி எடுத்து வாழும் நாம், அடுத்து நாம் எந்த பிறவி எடுப்போம் என்பதை அறிய மாட்டோம். பொதுவாக பிறவிகளை ஏழு வகையாக பிரிக்கின்றனர். தாவரம், நீரில் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, பறப்பன, நாற்கால் விலங்குகள், மனிதன், தேவர் என்பன அந்த ஏழு பிறவிகள். இந்த ஏழு பிறவிகளில் எதுவாகப் பிறந்தாலும், தான், பெருமானையே தனது தலைவனாக கொண்டு தொழுவேன் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகிறார். தன்னை கை தொழுது வணங்கும் அடியார்களின் உடற் பிணியையும் பிறவிப் பிணியையும் அரித்து ஒழிப்பவனும், அண்டத்தில் நெருங்கி காணப்படும் அனைத்து உலகங்களையும் தோற்றுவித்து காப்பவனும், இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டவனும், சில்பலி ஏற்கும் பொருட்டு பல இல்லங்கள் செல்ல பொருத்தமான வேடத்தை தரிப்பவனும், பல சமயங்களுக்கும் தலைவனும், தக்கனது வேள்வியில் பங்கேற்ற தேவர்கள் பலரையும் அச்சமூட்டி ஓடச் செய்தவனும், என்னை ஆட்கொண்டவனும் ஆகிய பெருமானை, தான் எந்த பிறவி எடுத்தாலும் தொடர்ந்து பணிந்து வணங்குவேன் என்று சுந்தரர் கூறும் பாடல்.

அரித்த நம்பி அடி கை தொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள்

தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில்பலிக்கு என்று அகம் தோறும் மெய் வேடம்

தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன் தன் வேள்வி புக்கு இமையோரை

இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே

இவ்வாறு பல ஊர்கள் திரிந்து பெருமான் பலி ஏற்பதைக் காணும் தாருகவனத்து மகளிர் ஒருத்தி, பெருமான் பால் பரிவு கொண்டு, பெருமானே நீர் எதற்காக பல இடங்கள் திரிந்து பிச்சை ஏற்கின்றீர்; ஒரே இடத்தில் பலி ஏற்றால் என்னே என்று கேட்பதாக அமைந்த பாடலை நாம் இங்கே காண்பது பொருத்தம். பெருமான் மேலும்மேலும் அதிகமான பக்குவப்பட்ட ஆன்மாக்களிடம் பலியேற்று, அவர்களை உய்விக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஊரூராக திரிந்து பல இல்லங்களிலும் பலி தேருகின்றார் என்ற கருத்து பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. அவ்வாறு எதற்காக பல இடங்களிலும் திரிய வேண்டும், நான் ஒருத்தியே நுமக்கு தேவையான அளவுக்கு பலி அளிக்கின்றேன், வேறெங்கும் செல்ல வேண்டாம் என்று தாருகவனத்து பெண்மணி ஒருத்தி கூறுவதாக, சுந்தரர் அருளிய பைஞ்ஞீலி பதிகத்தின் முதல் பாடல் (7.36.1) அமைந்துள்ளது. மேலும் பெருமானே நீர் மாலையாக அணிந்து கொள்வதற்கு பாம்பு தான் கிடைத்ததா, வேறேதும் உயர்ந்த பொருள் கிடைக்கவில்லையா என்று கவலையுடன் கேட்பதாகவும் இங்கே சொல்லப் படுகின்றது.

காருலாவிய நஞ்சை உண்டிருள் கண்டர் வெண்டலை ஓடு கொண்டு

ஊருலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓரிடத்திலே கொள்ளும் நீர்

பாரெலாம் பணிந்து நும்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்

ஆரமாவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.94.1) திருஞான சம்பந்தர், பெருமானை ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார் என்று குறிப்பிடுகின்றார். சாகை=பகுதிகள்; சாமவேதத்தில் ஆயிரம் பகுதிகள் ஒரு காலத்தில் இருந்ததாக கூறப் படுகின்றது. ஆனால் இப்போது இரண்டு சாகைகளே வழக்கத்தில் உள்ளன. கௌதம சாகை மற்றும் ஜைமினி சாகை என்பவையே அந்த இரண்டு சாகைகள்; வேதங்களின் பல பிரிவுகளாக இருப்பதும் பெருமான் என்பதே இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமான் தான் முதல் முதலில் வேதங்களை அருளியவர் என்பதால் ஆயிரம் சாகை கொண்ட சாம வேதத்தை உடையவர் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். சாமமும் என்று சிறப்பு உம்மைத் தொகையாக இங்கே வருவதால், சாம வேதத்துடன் சேர்த்து மற்ற மூன்று வேதங்களையும் உடையவராக பெருமான் விளங்குகின்றார் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். கடை=வீட்டின் முன் வாயில். பொதுவாக பிச்சை எடுப்பவர்களை கீழ்நிலையிலும் பிச்சை இடுபவர்களை மேல்நிலையிலும் கொள்வதும் வழக்கம். ஆனால் பெருமான் பலியேற்பதன் உயர்ந்த நோக்கத்தினை கருதி, பிச்சை என்று குறிப்பிடாமல் பலி என்று உயர்வாக குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இந்த பாடலில் இறைவன் பலியேற்கும் செயலை இரப்பது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். எனவே தான் பலி அளிப்பவர்களை உயர்வாக ஈகையார் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஈகையார்=கொடை அளிப்பவர்கள். பிராட்டியின் அழகினுக்கு தோகை உடைய மயில் உதாரணமாகவும் பிராட்டியின் இடை மெலிந்து காணப்படும் நிலைக்கு துடி இசைக் கருவியை உதாரணமாகவும், இங்கே திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நுண் துளி=நுண்ணிய துளிகளாக உள்ள மகரந்தப் பொடிகள். அவை காற்றினில் பறந்து வருவதால், நுண்துளி வீசுவதாக கூறுகின்றார். ஆயிரம் சாகைகள் கொண்ட சாமவேதத்தை உடையவராக விளங்கும் பெருமான், சாம வேதத்தை ஓதுபவராக உள்ளார்; தங்களது மலங்களை, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களை, பெருமானிடம் சமர்ப்பிக்கும் பக்குவம் வரப்பெற்ற பற்பல அடியார்களின் இல்லங்களுக்கும் சென்று இரப்பதை தனது செயலாகக் கொண்டுள்ளவர் சிவபெருமான்; தோகை உடைய மயில் போன்று அழகினையும் நடுவினில் மெலிந்து காணப்படும் துடி இசைக்கருவி போன்று மெலிந்த இடையினையும், உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர் சிவபெருமான். அவர், தங்களது மகரந்தப் பொடிகளை காற்றினில் வீசும் வாகை மரங்கள் நிறைந்த வாழ்கொளிபுத்தூர் தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சாகை ஆயிரம் உடையார் சாமமும் ஓதுவது உடையார்

ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார்

தோகை மாமயில் அனைய துடியிடை பாகமும் உடையார்

வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே

அரசிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.95.4) திருஞான சம்பந்தர் பெருமான், பல ஊர்கள் புகுந்து பிச்சை ஏற்கின்றார் என்று கூறுகின்றார். தவளம்=வெண்மை நிறம்; மிக்க காலன்= மேன்மை பொருந்திய இயமன், பாகுபாடு ஏதுமின்றி குறித்த காலத்தில் அந்தந்த உயிர்களின் உயிரினை உடலிலிருந்து பிரித்தெடுக்கும் இயமன்; வீட்டி=அழித்து; பலரது உயிர்களைக் கவரும் வல்லமை வாய்ந்த காலனது உயிரினையும் மாய்க்கும் ஆற்றல் கொண்டவன் பெருமான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. மெய்=உடல்; காமனது உடலினை மட்டும் அழித்து, அவன் உயிருடன் உலாவும் வண்ணம் பெருமான் அருள் புரிந்த கருணைச் செயல் இங்கே உணர்த்தப் படுகின்றது. வேதங்களை கோவணமாக அணிந்துள்ள பெருமான், வேதாந்தத்தையே முப்புரி நூலாக அணிந்து கொண்டுள்ளான் என்று கூறுவார்கள். அதனை உணர்த்தும் பொருட்டே தகுதி வாய்ந்த முப்புரி நூல் என்ற பொருள் பட, தக்க நூல் திகழ் மார்பு இன்று குறிப்பிடுகின்றார். அக்கு=எலும்பு; அக்கின் ஆரம்=எலும்பு மாலை; அடிகள்=தலைவர்;

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.96.3) திருஞான சம்பந்தர் பெருமானை, இல் பலிக்கு ஏகும் செழுஞ்சுடர் என்று குறிப்பிடுகின்றார். கரி=ஆண் யானை; ஏகுதல்=செல்லுதல்; சரியின் முன்கை மாதர்=முன் கைகளில் சரிந்து விழும் வளையல்கள் கொண்ட மகளிர்; சதி பட=கால்கள் பொருத்தமாக தாளமிட;

கரியின் மாமுகம் உடைய கணபதி தாதை பல் பூதம்

திரிய இல் பலிக்கு ஏகும் செழுஞ்சுடர் சேர் தரு மூதூர்

சரியின் முன்கை நன் மாதர் சதி பட நடமாடி

‘ உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன்னகரே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.105.4) திருஞானசம்பந்தர், பெருமானை, நாடு உலாவி பலி கொள்ளும் நாதன் என்று கூறுகின்றார். சேடு=பெருமை; சேடு உலாவிய= பெருமை உடைய; பீடு=பெருமை, வலிமை; நிலை மிக=நிலையான பேரின்பம், முக்தி உலகம்; பெருமை மிகுந்த கங்கை நதியினைத் தனது சடையில் தேக்கி வைத்த பெருமான், அழகிய தோற்றத்துடன் நாடு முழுவதும் சென்று பலி ஏற்கும் நாதராகவும், கீழ்வேளூர் தலத்தின் தலைவராகவும் விளங்குகின்றார். இடைவிடாது அவரை வழிபடும் அடியார்கள், நிலையான பேரின்ப வாழ்வினை பெறுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சேடு உலாவிய கங்கையைச் சடையிடை தொங்க வைத்து அழகாக

நாடு உலாவிய பலி கொளு நாதனார் நல மிகு கீழ்வேளூர்

பீடு உலாவிய பெருமையை பெருந் திருக்கோயிலுள் பிரியாத

நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிகப் பெறுவாரே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.6) திருஞானசம்பந்தர் பெருமானை, அகம் தோறும் பலிக்கு செல்பவர் என்று குறிப்பிடுகின்றார். மேலும் பெருமானை விருப்பு வெறுப்பு கடந்தவர் என்பதை உணர்த்தும் வண்ணம், அருவருப்பு ஏதும் இன்றி, பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்தி பலியேற்கச் செல்கின்றார் என்று கூறுகின்றார். இந்த பாடல் அகத்துறை கூற்றாக அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், தன்னை பெருமான் பால் காதல் கொண்டுள்ள தலைவியாக உருவகித்து, தனது கவனத்தை ஈர்த்து தன்பால் காதல் கொள்ளச் செய்த பெருமான், தனது வளையும் கவர்ந்த கள்வராகத் திகழ்கின்றார் என்று கூறுகின்றார். பெருமான் பால் தீராத காதல் கொண்டுள்ள தலைவி, பெருமானுடன் தான் சேர முடியாத ஏக்கத்தினால் மனம் வருந்தி, தனது கை வளையல்கள் கழன்று விழும் வண்ணம் உடல் இளைத்து இருப்பதாக கூறுகின்றாள். இவ்வாறு தான் உடல் மெலிந்ததற்கு காரணம் பெருமான் பால் தான் கொண்டுள்ள காதல் நிறைவேறாத ஏக்கம் என்று உணர்த்தும் தலைவி, தனது வளையல்கள் கழலும் வண்ணம் செய்த பெருமானை கள்வர் என்று குற்றம் சாட்டுகின்றாள். இருவர் ஆதரிப்பார் என்று கங்கை நதியினைத் தனது சடையில் வைத்தும், உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தும் பெருமான், அவர்கள் இருவரையும் ஆதரிக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு மூலம், பெருமான் அவ்வாறு தன்னையும் ஆதரிக்கலாகாதா என்ற தனது ஏக்கத்தை சம்பந்த நாயகி வெளிப்படுத்துகின்றாள். இறைவனின் திருமேனிக்கு ஒப்பாக கூறுவதற்கு எந்த உயிரும் எந்த பொருளும் இல்லை என்பதால், எவராலும் ஒப்பிட முடியாத திருமேனியை உடையவர் சிவபெருமான். இளமையும் அழகும் சேர்ந்த மாதர்கள் இருவரை, கங்கை நங்கையையும் உமை அன்னையையும், முறையே தனது சடையிலும் உடலிலும் வைத்து ஆதரிப்பவர் சிவபெருமான்; பல பூதங்களும் பேய்களும் எப்போதும் அவரைச் சூழ்ந்து கொண்டு தாமே அவரது அடையாளம் என்பது போன்று அவரை விட்டு என்றும் பிரியாமல் இருக்கின்றனர். விருப்பு வெறுப்பு ஆகிய குணங்களைக் கடந்த பெருமான் அருவருப்பு ஏதும் இன்றி, உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம் பல இல்லங்களுக்கும் சென்று பலியேற்கும் பெருமான் திருவலஞ்சுழி தலத்தினில் உறைகின்றார். அவரே, என்னை தீராத காதலில் ஆழ்த்தி, பிரிவாற்றாமையால் நான் உடல் மெலிந்து வருந்தும் வண்ணம் செய்து, எனது கை வளையல்கள் நழுவும் வண்ணம் உடல் மெலிய, எனது வளையல்களை கவர்ந்த கள்வர் ஆவார் என்று சம்பந்த நாயகி உணர்த்தும் பாடல்.

ஒருவரால் உவமிப்பதை அரியதோர் மேனியர் மட மாதர்

இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம்

அருவராததோர் வெண் தலை கை பிடித்து அகம் தோறும் பலிக்கென்று

வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரிவளை கவர்ந்தாரே

கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.107.3) வீடுகள் தோறும் இடும் பிச்சையை மிகுந்த விருப்பத்துடன் உண்பவர் என்று சிவபெருமானை திருஞானசம்பந்தர் உணர்த்துவதை நாம் காணலாம். மேலும்மேலும் உயிர்கள் தன்னை வந்தடைய வேண்டும் என்று விரும்பும் பெருமான், பல வீடுகளுக்கு பிச்சையேற்கச் செல்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். சுண்ணம்=திருநீறு; உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், ஒற்றைப் பிறைச் சந்திரன் தனது சடையில் தவழும் வண்ணம் காட்சி அளிக்கின்றார். அவர் திருநீற்றினைத் தனது உடல் முழுவதும் மிகுந்த விருப்பத்துடன் பூசிக் கொண்டவர் ஆவார். அவர் தான் அணிந்துள்ள வீரக் கழல்கள் அதிர்ந்து ஓசை எழுப்பும் வண்ணம் ஆடிக்கொண்டே பாடுகின்றார். தான் பிச்சையாக ஏற்கும் உணவினை விருப்பத்துடன் உட்கொள்பவர் போல இல்லங்கள் தோறும் பலி ஏற்பதற்காக திரிகின்றார். இத்தகைய பண்புகளை உடைய பெருமானார், உயர்ந்த மாதோட்ட நகரினில் விளங்கும் கேதீச்சரம் திருக்கோயிலில் உறைகின்றார். அந்த திருக்கோயிலை அடைந்து, பெருமானைச் சரணடைந்து வணங்கும் அடியார்களை, துன்பம் மற்றும் இன்பம் ஆகியவற்றை பயப்பிக்கும் இரு வகையான வினைகளும் அணுகாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பெண்ணொர் பாகத்தர் பிறை தவழ் சடையினர் அறை கழல் சிலம்பு ஆர்க்கச்

சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவார் அகந்தொறும் இடும் பிச்சைக்கு

உண்ணலாவதோர் இச்சையின் உழல்பவர் உயர் தரு மாதோட்டத்து

அண்ணல் நண்ணு கேதீச்சரம் அடைபவருக்கு அருவினை அடையாவே

திருவாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.111.2) திருஞானசம்பந்தர் பெருமானை, கோவண உடையர் என்றும் பலபல கடைதோறும் சென்று பலி தேர்பவர் என்றும் அழைக்கின்றார். தழல் போன்ற மேனியராய், திருநீறு பூசியவராய், நால் வேதங்களாக விரியும் கோவண ஆடையின் மேலோர் பாம்பினை இறுகக் கட்டியவராக, பல இல்லங்களின் வாயிலில் சென்று நின்று, பலி தேரும் பெருமான், தனது சிந்தையில் புகுந்து அருள் புரிந்தார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அத்தகைய அருளினால் தான், தான் பெருமானை வழிபடுவதாக கூறுகின்றார்.

வெந்தழல் வடிவினர் பொடிப் பூசி விரி தரு கோவண உடை மேலோர்

பந்தம் செய்து அரவசைத்து ஒலி பாடிப் பலபல கடைதொறும் பலி தேர்வார்

சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செஞ்சுடர் வண்ணர் தம் அடி பரவ

வந்தனை பல செய இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

புன்முறுவலுடன் பெருமான் தாருகவனத்து மகளிர் இட்ட பலியினை ஏற்றுக் கொண்டதாக வாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.111.7) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர், பெருமானின், பாம்பணிந்த திருமார்பு பொன் போல மிளிர்கின்றது என்று கூறுகின்றார். பொன் என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருளும் உள்ளது. கடிபடு=நறுமணம் கமழும்; கண்ணியர்=மாலையை சடையில் அணிந்தவர், பில்கும்= சிதறும்; கனமணி=பருத்த ரத்தினக் கற்கள்; மறுகு=வீதி; வடி=கூர்மை; பொடி=திருநீறு; பெருமானின் திருவடிகளில் தங்களின் தலைகளை வைத்து தேவர்கள் வணங்கும் போது, அந்த திருவடிகளின் ஒளியின் முன்னே எடுபடாது தேவர்களின் முடிகளில் உள்ள பலவகையான கற்களின் ஒளிகள் சிதறுகின்றன என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். மறுகின் நல்லார் என்று தாருக வனத்து வீதிகளில் இருந்த இல்லத்தரசிகளை குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில், பலபல கடிதொறும் பலி தேர்பவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கனமணி சேர்

முடிபில்கும் இறையவர் மறுகின் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார்

பொடியணி வடிவொடு திருவகலம் பொன்னென மிளிர்வதோர் அரவினொடும்

வடிநுனி மழுவினொடு இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலும் தாருகவனத்து நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. பட்டு இணை=பட்டாடைகளுடன் இணைந்த; அகல் அல்குல்=அகன்ற மார்பகம் உடைய மகளிர்; வட்டணை ஆடல்=வட்டமாக சுற்றிக் கொண்டே ஆடும் நடனம்; புதிய கொன்றை மலர் மாலைகளை அணிந்தவராக, வீணை வாசித்துக் கொண்டு, உமை அம்மை தனக்குத் துணையாக வர, பெருமான் உறைகின்ற இடம் திருவாய்மூர் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த பெருமான் தான் முன்னர் ஒரு நாள் பட்டாடை அணிந்த தாருகவனத்து மகளிரிடம் பலியேற்றார் என்றும் அவ்வாறு பலியேற்கச் செல்லும் போது, வட்டமாக சுற்றிச் சுற்றி நடனமாடினார் என்றும் கூறுகின்றார். எட்டுணை=எண்+துணை, தனது எண்ணத்தை செயலாக செய்து முடிப்பதன் மூலம் தனக்குத் துணையாக உள்ள உமை அன்னை; பெருமானின் திருவுள்ளக் கருத்தினை உணர்ந்து கொண்டு அவற்றை செயலாக செய்து முடிப்பவள், கிரியா சக்தியாக இயங்கும் பிராட்டி தானே. இந்த பதிகத்தின் பத்தாவது பாடலிலும் தாருகவனத்து மகளிர் பற்றிய குறிப்பு காணப் படுகின்றது.

கட்டிணை புது மலர்க் கமழ் கொன்றைக் கண்ணியர் வீணையர் தாமும் அஃதே

எட்டுணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவதோர் இடம் வினவில்

பட்டிணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய

வட்டணை ஆடலொடு இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

இந்த பதிகத்தின் பத்தாவது பாடலில் (2.111.10) திருஞான சம்பந்தர், தாருகவனத்து மகளிரை நல்லார் என்று அடைமொழி கொடுத்து குறிப்பிடுகின்றார். தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை மதிக்காதவர்களாக இருந்த பின்னணியில் பெருமானை மதித்து பிச்சையிட வந்த முனிவர்களின் மனைவியர், நல்லார் என்று மிகவும் பொருத்தமாக அழைக்கப் படுகின்றனர். தான் கொண்ட வேடத்திற்கு ஏற்ப, பெருமான் தனக்கு உணவு தேவை என்று கேட்டதற்கு இணங்கி பிச்சை அளிக்கப் பட்டதாக திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். கோடல்=காந்தள்; முகிழ்=அரும்பு; மகளிரின் விரல்களுக்கு காந்தள் மலர்களை உவமையாக கூறுவது இலக்கிய மரபு. பசைந்து=பற்றி; நம்மை விடவும் உயர்ந்தவர்களுக்கு பிச்சை அளிக்கும் போது, பணிவுடன் அளிக்க வேண்டும் என்பதே முறை. பெருமானின் தன்மையை சரியாக புரிந்து கொண்ட தாருகாவனத்து மகளிர், பணிவுடன் பலி அளித்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெய்ய=இடுதல்

சூடல் வெண் பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண்ணீற்றினர் சுடர் மழுவர்

பாடல் வண்டிசை முரல் கொன்றை அந்தார் பாம்பொடு நூலவை பசைந்து இலங்க

கோடல் நன் முகிழ் விரல் கூப்பி நல்லார் குறையுறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய

வாடல் வெண்டலை பிடித்து இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.122.2) திருஞான சம்பந்தர், பெருமான் உலகெங்கும் திரிந்து பலி ஏற்பதாக கூறுகின்றார். மேலும் இந்த தலத்தில் வாழும் கிளிகள் பேசக் கற்றுக் கொள்வதே மறையோர்கள் ஓதும் வேதத்தில் இருந்து என்று குறிப்பிட்டுசீர்காழி நகரினில் வேதம் ஓதப்பட்ட சிறப்பினை திருஞானசம்பந்தர் கூறுகிறார். பண்டைய நாளில் பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினை உட்கொண்டு தேவர்களை காத்த பெருமான், பக்குவப் பட்ட உயிர்களை உய்விக்க வேண்டி தொடர்ந்து பலி ஏற்கின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

வேலை தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார்

ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது

சால நல்லார் பயிலும் மறை கேட்டுப் பதங்களை

சோலை மேவும் கிளி தான் சொற் பயிலும் புகலியே

கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.8.6) திருஞான சம்பந்தர், பெருமான், நான்மறைகள் பாடியும் ஆடியும் பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். பண்பொலி நான்மறை=பண்ணுடன் இணைத்துப் பாடப்படும் நான்மறைகள்; உழலுதல்=திரிதல்;

பண்பொலி நான்மறை பாடி ஆடிப் பல ஊர்கள் போய்

உண் பலி கொண்டு உழல்வானும் வானின் ஒளி மல்கிய

கண் பொலி நெற்றி வெண் திங்களானும் கடவூர் தனுள்

வெண் பொடிப் பூசியும் வீரட்டானத்து அரன் அல்லனே

இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.10.5) திருஞான சம்பந்தர், பல ஊர்கள் செல்லும் பெருமான், அழகுடைய மங்கையர்கள் அளிக்கும் பலியை பெற்றுக் கொள்கின்றார் என்று கூறுகின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். ஊறுடை=கேடு அடைந்த; பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்று பெருமானால் கிள்ளப்பட்ட தன்மை இங்கே, கேடு அடைந்த தலை என்று குறிப்பிடப் படுகின்றது. வீறு=வேறு ஒருவர்க்கு இல்லாத சிறப்பான அழகு; விறல்=வலிமை; ஆர்ந்த=பொருந்திய; பேறு=வீடுபேறு பேரும்=பெயர்ந்து விடும். முக்தி உலகத்தினை உடையவனாகிய பெருமானின் திருநாமங்களை சொல்லும் அடியார்கள், தங்களை பீடித்துள்ள பிறவிப்பிணி என்ற கொடிய நோய் நீக்கப்பட்டு, வீடுபேற்றினை அடைவார்கள் என்று கூறுகின்றார்.

ஊறுடை வெண்டலை கையில் ஏந்திப் பலவூர் தொறும்

வீறுடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்ததோர்

ஏறுடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம்

பேறுடையான் பெயர் ஏத்து மாந்தர் பிணி பேருமே

சக்கரப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.27.2) திருஞான சம்பந்தர், பெருமானை, பலி இடுவோரை நாடிச் சென்றார் என்று கூறுகின்றார். இடுபலி நாடினார் என்று இறந்த காலத்தில் சொல்லப் பட்டுள்ளதால், தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. பனிமதி=குளிர்ந்த சந்திரன்; படுதலை=இறந்து பட்டோரின் தலை; பிரளய காலத்தில் திருமால் பிரமன் இந்திரன் ஆகியோரின் இறந்த உடல்களிலிருந்து பிரிக்கப்பட்டு தலை மாலையாக அணிந்த நிலை; துன் எருக்கு=நெருங்கிய எருக்கு; நண்ணிய காலன்=சிறுவன் மார்க்கண்டேயன் சிவபூஜையில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட பின்னரும், அவனது உயிரினைக் கவரும் நோக்கத்துடன் நெருங்கிய இயமன்; சாடுதல்=உதைத்தல்; அரிய நான்கு வேதங்களையும் ஓதி அருளியவரும், குளிர்ந்த பிறைச் சந்திரனைத் தனது சடையின் மேலே சூட்டிக் கொண்டவரும், பிரளய காலத்தில் உயிரைப் பிரிந்து அழிந்துபடும் திருமால் பிரமன் இந்திரன் ஆகியோரின் தலைகளை மாலையாக அணிந்து கொண்டு அதன் அருகே நெருக்கமாக எருக்கம் மலர்களை அணிந்து கொள்பவரும் ஆகிய பெருமான், தாருகவனத்து மகளிர்களின் இல்லங்களை தேடிச் சென்று தனது கையில் வைத்திருந்த பிரமகபாலத்தில் அவர்கள் இட்ட பிச்சையினை ஏற்றவர் ஆவார். சிவபூஜை செய்து கொண்டிருந்த சிறுவன் என்றும் பாராமல், சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்வதற்காக நெருங்கிய இயமன் மீது கோபம் கொண்டு, தனது காலால் அவனை உதைத்து வீழ்த்திய ஆற்றல் கொண்ட பிரான், வளமையான சக்கரப்பள்ளி தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாடினார் அருமறை பனிமதிச் சடை மிசைச்

சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும்

நாடினார் இடு பலி நண்ணியோர் காலனைச்

சாடினார் வளநகர் சக்கரப்பள்ளியே

அரதைப் பெரும்பாழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.30.2), பெருமானுக்கு பிச்சையிட வந்த தாருகவனத்து மகளிர், பெருமானின் அழகில் மயங்கி,. அவர் பால் தீராத காதல் கொண்டு, அந்த காதல் நிறைவேறாத நிலையில் பசலை நோய் அடைந்து வாடினர் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். கயல சேல=கயல் போன்ற, சேல் போன்ற; பயல=பசலை நோய்; இயலை=நினைந்து; தாருகவனத்து இல்லத்தரசிகள் பெருமானின் அழகில் மயங்கி, பெருமான் பால் தீவிரமான காதல் கொண்டு, அந்த காதல் நிறைவேறாத காரணத்தால் பயலை நோய் கொண்டு வாடி வருந்திய தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இதே பதிகத்தின் முதல் பாடலில், பெருமானின் எளிமையான திருக்கோலம் விவரிக்கப் பட்டுள்ளது. இந்த எளிய கோலமே, பலரையும் கவரும் வண்ணம் மிகவும் அழகு பொருந்திய கோலமாக இருந்த தன்மை, இரண்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. கயல் மீன் போன்றும் சேல் மீன் போன்றும் அழகிய கருமையான கண்களை உடைய தாருகவனத்து இல்லத்தரசிகள் தன் பால் ஆழமான காதல் கொண்டு ஏங்கும் வண்ணம், அழகிய உருவத்துடன் நாள்தோறும் தாருகவனம் சென்று பிச்சை ஏற்கும் கோலத்துடன் திரிந்தவன் சிவபெருமான். பெருமானுடன் சேர முடியாத ஏக்கத்தில் தாருகவனத்து மகளிர் பயலை நோயால் வருந்தினர். இவ்வாறு எண்ணற்ற தன்மைகளை உடையவனாக விளங்கும் பெருமான், அந்தந்த தன்மைகளுக்கு ஏற்ப எண்ணற்ற திருநாமங்களை உடையவன் ஆவான். அவனது இத்தகைய தன்மைகள் வானோர்களாலும் அவனது அடியார்களாலும் எண்ணுதற்கு மிகவும் அரியதாக உள்ளன. இத்தகைய பெருமான் உறைகின்ற இடம் அரதைப் பெரும்பாழி தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கயல சேல கருங் கண்ணியர் நாள்தொறும்

பயலை கொள்ளப் பலி தேர்ந்து உழல் பான்மையார்

இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும்

பெயரர் கோயில் அரதைப் பெரும்பாழியே

பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.37.5) திருஞான சம்பந்தர், பெருமான் தாருகவனத்து மகளிர் இட்ட பிச்சையை பிரம கபாலத்தில் ஏந்தியவன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானே, தாயாகவும் தந்தையாகவும் மற்ற அனைத்துப் பொருட்களாகவும் இருந்து நமக்கு உதவி புரிகின்றான் என்பதை உணர்ந்து, அவனைப் பணிந்து வணங்கும் அடியார்களுக்கு அவன் பல விதங்களிலும் அருள் புரிவான் என்று சொல்கின்றார்.

வாயிடைம் மறையோதி மங்கையர் வந்திடப் பலி கொண்டு போய்ப்

போயிடம் எரி கானிடைப் புரி நாடகம் இனிது ஆடினான்

பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்துறை பிஞ்ஞகன்

தாயிடைப் பொருள் தந்தையாகும் என்று ஓதுவார்க்கு அருள் தன்மையே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.43.7) திருஞான சம்பந்தர், பெருமானை, முற்றும் ஊர் திரிந்து பலி முன்னுவர் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் தனது திருக்கரத்திலே மானும் மழுவும் அழகுடன் ஏந்தியவராக, ஊர் முழுவதும் திரிந்து பலி ஏற்கின்றார். வேதங்களை நன்கு கற்ற பெருமையினை உடைய அந்தணர்கள் வாழ்கின்ற சீர்காழி தலத்தினில், இடபத்தினைத் தனது வாகனமாக விரும்பி ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. பெற்றம்=பசு; பெற்றம் ஏறு=பசுவின் பெண்பாலாகிய இடபம்; கற்ற மறையவர் என்ற குறிப்பு, சிவபெருமானது பெருமையினை கற்றவர்கள் என்பதை உணர்த்துகின்றது.

பற்றும் மானும் மழுவும் அழகுற

முற்றும் ஊர் திரிந்து பலி முன்னுவர்

கற்ற மா நான் மறையவர் காழியுள்

பெற்றம் ஏறது உகந்தார் பெருமையே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.45.4) திருஞானசம்பந்தர் பெருமானை, பல்லில் ஓடு கையேந்தி பலி திரிபவன் என்று குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தர் திருவாரூர் வருவதை அறிந்த அந்த நகரத்து அடியார்கள், நகரத்து எல்லையில் கூடி திருஞானசம்பந்தரை பணிந்து வரவேற்கின்றனர். அப்போது அவர்களை தானும் பணிந்த திருஞானசம்பந்தர், அவர்களை நோக்கி, தன்னை அஞ்சேல் என்று சொல்லி அபயம் அளித்து ஆரூர்ப் பெருமான் காப்பாற்றுவாரா என்று கேட்கின்றார். ஆரூர்ப் பெருமானை தினமும் தவறாது வழிபடும் அடியார்கள் என்பதால், ஆரூர்ப் பெருமானது திருக்குறிப்பினை அறியும் ஆற்றல் அந்த அடியார்களுக்கு இருப்பதை இந்த பதிகத்தின் பாடல்கள் தோறும் உணர்த்துகின்றார். பல்லில் ஓடு=பற்கள் அற்ற பிரம கபாலம்; எல்லி=இரவு, இங்கே பிரளய காலத்து இருள் என்று பொருள் கொள்ள வேண்டும். அல்லல் என்று இங்கே பிறவிப்பிணி உணர்த்தப்படுகின்றது. திருவாரூர் முக்தித் தலங்களில் ஒன்று என்பதை நாம் அறிவோம்.

பல்லில் ஓடு கையேந்தி பலி திரிந்து

எல்லி வந்து இடுகாட்டெரி யாடுவான்

செல்வம் மல்கிய தென் திருவாரூரான்

அல்லல் தீர்த்தெனை அஞ்சல் எனும் கொலோ

திருவக்கரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.60.9) திருஞான சம்பந்தர், பெருமான், பலி ஏற்பதற்காக வெண்டலை கொண்டு பல வீதிகள் திரிகின்றார் என்று கூறுகின்றார். பிண்டி= அசோக மரம்; அசோக மரத்தின் மீது பற்று கொண்ட சமணர்கள் பிண்டியர் என்று அழைக்கப் படுகின்றனர். சமணர்கள் மற்றும் பௌத்தர்கள் வணங்கும் அருக தேவனும் புத்தர் பிரானும், பெருமானை வணங்கியதாக திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். கரிகாடு=சுடுகாடு; பிரளய காலத்தில் பிரளயத் தீயினில் எரிந்து எங்கும் கருகிய நிலையில் இருக்கும் உலகம்;

மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர்கள் என்று இவர்கள்

தேடிய தேவர் தம்மால் இறைஞ்சப் படும் தேவர் பிரான்

பாடிய நான்மறையன் பலிக்கென்று பல் வீதி தொறும்

வாடிய வெண்டலை கொண்டு உழல்வான் இடம் வக்கரையே

பிரமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.56.3) திருஞானசம்பந்தர் பெருமானை, ஊர்கள் பல சென்று பிச்சை ஏற்று உண்பதைத் தனது இயல்பாகக் கொண்டு இருப்பவன் என்று குறிப்பிடுகின்றார். மேலும் இந்த பாடலில் பெருமானை, காளி காண ஆடல் கொண்டான் என்று குறிப்பிடுகின்றார். மாணி=பிரம்மச்சாரி சிறுவன், இங்கே மார்க்கண்டேயர்; செற்று=வெற்றி கொண்டு; மாய் தர=மடியும் வண்ணம் உதைத்து; காணிய=காணும் வண்ணம்; ஊண்=உண்ணுதல்;

மாணியை நாடு காலன் உயிர் மாய் தரச் செற்றுக் காளி

காணிய ஆடல் கொண்டான் கலந்தூர் வழி சென்று பிச்சை

ஊணியல்பாகக் கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும்

பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணுமினே

பெருமானுக்கு நாம் இடும் பலி, அறம் வேண்டி (புண்ணியம் கருதி) இடப்படுவதால் இதனை அறப்பலி என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் கூறும் பாடல் (3.63.9) செங்காட்டங்குடி தலத்து பதிகத்தில் உள்ளது. இந்த பாடலில் உலகெலாம் திரிந்து பெருமான் பலி ஏற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடல் அகத்துறை வகையில் அமைந்த பாடல். நறவு=தேன் நறப்பொலி=தேன் நிறைந்த; நவில்-வாழ்கின்ற; குருகு=பறவை; உழல்வார்=திரிபவர்; அலர்=பழிச்சொல்; தான் பழிச்சொல்லுக்கு ஆளாகும் வகையில் பெருமான் தன்னுடன் இணையாமல் இருப்பது பெருமானுக்கு அழகா என்ற கேள்வியை இந்த பாடலில் தலைவி எழுப்புகின்றாள். தான் பெருமானிடம் ஆழமான காதல் கொண்டிருப்பதை அனைவரும் அறிந்த நிலையில், தான் பெருமானுடன் இணையாமல் இருந்தால் ஊரார் தன்னை தூற்றுவார்கள் என்றும் அந்த நிலை ஏற்படும் முன்னமே பெருமான் தனது காதலை ஏற்றுக்கொண்டு பெருமான், தன்னை அவனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சம்பந்த நாயகியின் கூற்றாக அமைந்த பாடல் இது. பிறப்பிலியாகிய பெருமானின் நாமத்தை எப்போதும் பிதற்றும் தான் பெருமைக்குரிய நலன்களை இழப்பது தகுமா என்று தலைவி இறைவனை நோக்கி கேள்வி கேட்பதாக அமைந்த பாடல். இந்த பாடலின் உட்கருத்து, தலைவியாக உருவகப் படுத்தப் பட்டுள்ள உயிர், பெருமானுடன் தான் இணையவேண்டும் என்ற விருப்பத்தை வெளியிடுகின்றது.

நறப்பொலி பூங்கழிக் கான் நவில் குருகே உலகெல்லாம்

அறப்பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே

சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய

பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ எம் பெருநலமே

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.70.5) திருஞானசம்பந்தர், மகளிரின் வீடுகள் தோறும் சென்று பெருமான் பலியேற்றார் என்று குறிப்பிடுகின்றார். கதுப்பு=கூந்தல்; விரிந்து மலர்ந்த பூக்களை கொண்ட கூந்தல் உடைய இளமை வாய்ந்த மங்கையர் என்று தாருகவனத்து மகளிரை குறிப்பிடுகின்றார். மட மங்கையர்=இளம் பெண்கள்; பழமை=பழம்பதி; மது=தேன் கூடுகள்; வெள்ளப் பெருக்குடன் வரும் காவிரி நதி, தனது அலைக் கரங்களால் இரண்டு கரையிலும் மணிகளை வாரி இறைக்க, அந்த ஒளி வீசும் மணிகள் கண்டு அச்சம் கொள்ளும் குரங்குகள் குதித்து பாய்வதால்,மாமரங்களில் உள்ள தேன் கூடுகள் கிழிந்து சிந்தும் தேனை, வண்டுகள் கவர்ந்து உண்கின்றன என்று தலத்தின் நீர் வளத்தையும் நில வளத்தையும் குறிப்பிடுகின்றார்.

பூவிரி கதுப்பின் மட மங்கையர் அகம் தொறும் நடந்து பலி தேர்

பாவிரி இசைக்குரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனலாம்

காவிரி நுரைத்து இரு கரைக்கு மணி சிந்த வரி வண்டு கவர

மாவிரி மதுக் கிழிய மந்தி குதி கொள்ளும் மயிலாடு துறையே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.76.1) திருஞானசம்பந்தர், காட்டினில் நடமாடியவாறு, பெருமான் தாருகவனத்து மகளிரின் இல்லங்கள் புகுந்து பலி ஏற்றார் என்று கூறுகின்றார். வேதவனம் என்று இந்த தலம் இந்த பாடலில் அழைக்கப் படுகின்றது. இற்பலி=இல்+பலி; சுரம்=வெப்பம் மிகுந்து பாலைவனம் போன்று காணப்படும் இடம்; கற்பொலி= பருக்கைக் கற்கள் மிகுந்த; மற்பொலி=மல்+பொலி, வளம் மிகுந்த; கலிக் கடல்=ஆரவாரம் செய்யும் கடல்: குவடு=சிகரம்; கொழித்த=குவியலாக குவிக்கும்; விற்பொலி=வில்லினைப் போன்று வளைந்து அழகுடன் காட்சி தரும்; நுதல்=நெற்றி;

கற்பொலி சுரத்தின் எரி கானினிடை மாநடமது ஆடி மடவார்

இற்பலி கொளப் புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல்

மற்பொலி கலிக் கடன் மலைக் குவடு எனத் திரை கொழித்த மணியை

விற்பொலி நுதற் கொடி இடைக் கணிகைமார் கவரும் வேதவனமே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.76.4) திருஞானசம்பந்தர் பல ஊர்கள் சென்று பிச்சையெடுத்து உண்பதில் மிகுந்த விருப்பம் உடையவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். மிசைத்து=மேலதாக; தடவி=பூசி; பல வேறு திசைகளிலிருந்து வந்த வெளி நாட்டவர்கள், இனிய தமிழ் மொழியில் பேசும் இளம் மாதர்களுடன் உரையாடும் நோக்கத்துடன், தமிழ்ச் சொற்களை கற்றுக் கொள்கின்றனர் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

நீறு திருமேனியின் மிசைத்து ஒளி பெறத் தடவி வந்து இடபமே

ஏறி உலகங்கள் தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதியாம்

ஊறு பொருள் இன்தமிழின் இயல் கிளவி தேரும் மடமாதர் உடனார்

வேறு திசை ஆடவர்கள் கூற விசை தேரும் எழில் வேதவனமே

மாணிகுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.77.2) திருஞானசம்பந்தர், இசைப் பாடல்களை பாடியவாறும் வசியப்படுத்தும் சொற்களை பேசியவாறும், தெருக்களில் உள்ள ஒவ்வொரு இல்லமும் சென்று ஆங்கிருந்த மகளிரிடம் பெருமான் பலியேற்றார் என்று தாருக வனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். ஒளி வீசும் திருநீற்றினைத் தனது மேனியெங்கும் பூசிக்கொண்டு தோலாடை அணிந்தும் பெருமான் சென்றார் என்று பிச்சைப் பெருமானின் திருக்கோலம் இங்கே விவரிக்கப் படுகின்றது.

சோதி மிகு நீறது மெய் பூசி ஒரு தோலுடை புனைந்து தெருவே

மாதர் மனை தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம்

தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழன மிக்கு

ஓத மலி வேலை புடை சூழுலகின் நீடுதவி மாணிகுழியே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.3) திருஞான சம்பந்தர், பெருமானை, மாதர் இமையோர் சூழும் இரவாளர் என்று கூறுகின்றார். பெருமானின் தன்மையை புரிந்து கொண்ட, மாதர்களும் இமையோர்களும், ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பெருமானுக்கு பலியிட முன் வருவதால், மாதர் இமையோர் சூழும் இரவாளர் என்று குறிப்பிட்டார் போலும். பெருமானின் திருவடிகளை அடைய விரும்பும் அனைத்து உயிர்களும் பெண்களாகத் தானே அருளாளர்களால் உருவகிக்கப் படுகின்றன. போழும்=பிளவுபட்ட, முழு மதியாக இல்லாமல் அதன் ஒரு பகுதியாக இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரன்; துன்று= நெருக்கமாக; வென்றி=வெற்றி கொண்ட; கங்கை நதியினைத் தனது மூதாதையர்கள் சாம்பலாக குவிந்து கிடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றி கொண்ட பகீரதன்; புக= ஆகாயத்தை விட்டுவிட்டு பூமியில் புகும் வண்ணம்; மேல் வாழு=மேலே ஆகாயத்தில் இருந்த; தாழும்=பூமியில் பாயும் வண்ணம்; இருள்=கருமை மிடறு=கழுத்து; இரத்தல்=வேண்டுதல்; இரவாளர்= இரப்போர்களை ஆட்கொள்பவர்;வரி=வரிவரியாக கோடுகள் உடைய புலித்தோல்; வேழம்= யானை; மேவும் பதி=பொருந்தி உறையும் பதி. மாதர் இமையோர் என்று சேர்த்து சொல்லி இருப்பதால், தேவர்கள் தங்களது துணையுடன் பெருமானை சூழ்ந்து கொண்டு, பணிந்து வணங்கி தங்களது குறைகளை சொல்லி, அவரது கருணையை இரந்து பெறுகின்றனர் என்று பொருள் கொள்வது பொருத்தம். முழு மதியாக இல்லாமல் பிளவுபட்ட ஒற்றைப் பிறைச் சந்திரனையும், பாம்பினையும் நெருக்கமான கொன்றை மலர்களையும் தனது சடையில் அணிந்து கொண்டுள்ள பெருமான், கடுமையான தவத்தில் ஈடுபட்டு வெற்றி அடைந்த பகீரதனுக்கு உதவும் பொருட்டு, மேலே வானத்திலிருந்து கீழே இறங்கிய கங்கை நதியினை, தனது சடையில் தாங்கி அடக்கிய பின்னர் சிறிது சிறிதாக பூமியில் பாயும் வண்ணம் அருள் புரிந்தவர் ஆவார். ஆலகால விடத்தை தேக்கியதால், கருமை நிறத்துடன் விளங்கும் கழுத்தினை உடைய பெருமான், தேவர்கள் அனைவரும் தங்களது துணைவியாருடனும் இணைந்து தன்னைச் சூழ்ந்து கொண்டு, தங்களது குறைகளைச் சொல்லி வேண்ட, அவர்களது குறைகளைத் தீர்த்து அருள் புரிகின்றார். அவர் தனது மார்பினில் ஒளிவீசும் முப்புரி நூலினை அணிந்து கொண்டவராக, வரிவரியாக கோடுகள் கொண்ட புலித் தோலினை ஆடையாக உடுத்தியவராக, அதன் மேல் யானைத் தோலினை போர்த்தியவராக காணப்படுகின்றார். அவர் பொருந்தி உறைகின்ற தலம் திருவேதிகுடி ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

போழும் மதி பூணரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல்

வாழு நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர்

சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல்

வேழ உரி போர்வையினார் மேவு பதி என்பர் வேதிகுடியே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.6) மாதொரு பாகனாக விளங்கும் தோற்றத்துடன், பிச்சை இடுவீராக என்று பல இல்லங்கள் சென்று பெருமான் பலியேற்கின்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். கருமான்=கரிய உருவம் கொண்ட விலங்கு, யானை; ஐயம்=பிச்சை; மட மங்கை=இளமை பொருந்திய உமையன்னை; வையம்=உலகத்தில்; விலை மாறிடினும்=பஞ்சத்தின் காரணமாக பண்டங்களின் விலை கூடிய போதிலும்; வெய்ய=கொடிய; தண் புலவர்=இனிய சொற்களை உடைய புலவர்கள்; கடுமையான சொற்களை நெருப்புக்கு ஒப்பிட்டு வெய்ய என்று கூறிய திருஞானசம்பந்தர், இனிய மொழிகளை குளிர்ந்த சொற்கள் என்று குறிப்பிடும் நயத்தை நாம் உணரலாம். தலத்து மாந்தர்களின் கொடைத் தன்மை இந்த பாடலில் எடுத்துரைக்கப் படுகின்றது. பஞ்சத்தின் காரணமாக பொருட்களின் விலை கூடினும், பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படினும், இல்லையெனாது இனிய மொழிகள் கூறி புலவர்களுக்கு உதவி செய்யும் தன்மையர் என்று இந்த தலத்து மக்களை குறிப்பிடுகின்றார். பெருமான் திருநீற்றினைப் பூசிக் கொண்டுள்ள தன்மை, தான் ஒருவனே என்றும் அழியாத உண்மையான மெய்ப்பொருள் என்பதை உயிர்களுக்கு உணர்த்துகின்றது. கருமை நிறம் கொண்ட யானையின் தோலைக் கிழித்த செய்கை, உயிர்களை அறியாமையில் ஆழ்த்தும் அஞ்ஞானத்தை, அறியாமை எனப்படும் ஆணவ மலத்தினைக் கிழிக்கும் பெருமானின் ஆற்றலை உணர்த்துகின்றது. தேவி உடனிருக்கும் தன்மை, உயிர்களுக்கு அருள் வழங்கவும் ஞானம் அளிக்கவும் பெருமான் தயார் நிலையில் இருப்பதை உணர்த்துகின்றது. தேவி ஞான வடிவாகவும் அருள் வடிவாகவும் இருப்பவள் அல்லவா. இந்த வாய்ப்பினை உயிர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தானே ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று பெருமான் உணர்த்தும் பொருட்டு பலியேற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் அறிவுறுத்தும் பாடல் இது. இந்த செயல் உயிர்கள் பால் இறைவன் வைத்துள்ள கருணையை உணர்த்துகின்றது.

செய்ய திருமேனி மிசை வெண்பொடி அணிந்து கருமான் உரிவை போர்த்து

ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடமாம்

வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவிலாத வகையார்

வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.83.7) திருஞான சம்பந்தர், உலகின் பல இடங்களுக்கும் சென்று பெருமான் பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். அங்கம்=எலும்பு; ஞாலம்=உலகம்; தங்கரவம்=தங்கு+அரவம்; பொருந்திய ஆரவாரத்துடன்; உழிதந்து=பல இடங்களிலும் திரிந்து: மெய்=உடல்; வதி=சேறு; சினம் பொங்க படமெடுத்தாடும் இயல்பினை உடைய பாம்பு, எலும்பு மாலை ஆகிய பொருட்களைத் தனது உடலின் மீது அணிந்து கொள்ளும் பெருமான், உலகத்தவர் இடுகின்ற பிச்சையினை ஏற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் ஆரவாரத்துடன் திரிகின்றார். அவர் தனது உடல் முழுவதும் திருநீற்றை பூசிக் கொண்டவராக காட்சி தருகின்றார். தங்களின் இடையே பகைமை கொண்டுள்ள கங்கை நதி, பாம்பு, பிறைச் சந்திரன் ஆகிய மூன்றையும் தனது சடையில் ஓரே இடத்தில் வைத்துக் கொண்டுள்ள பெருமான் உறைகின்ற இடம் யாதென்று கேட்பீராகில், சொல்கின்றேன் கேட்பீர்களாக. செம்மீன்கள் சேற்றில் குதித்து விளையாடும் வண்ணம் நீர்வளம் பொருந்திய நல்லூர் தலமே, பெருமான் உறையும் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. தங்கரவமாக என்ற தொடருக்கு தம் கரவமாக என்று பிரித்து, தம்மை, தனது தன்மையை மறைத்துக் கொண்டு பெருமான் பிச்சை ஏற்கின்றார் என்ற விளக்கம் செங்கல்வராயப் பிள்ளை அவர்களால் அளிக்கப் படுகின்றது.

பொங்கரவம் அங்கம் உடல் மேல் அணிவர் ஞாலம் இடு பிச்சை

தங்கரவமாக உழி தந்து மெய் துலங்கிய வெண்ணீற்றர்

கங்கை அரவம் விரவு திங்கள் சடை அடிகள் இடம் வினவில்

செங்கயல் வதிக் குதி கொளும் புனலதார் திரு நலூரே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.85.5) திருஞானசம்பந்தர், பெருமான், பலி ஏற்பதற்காக எங்கும் திரிபவர் என்று கூறுகின்றார் மேலும் இந்த பாடலில் தன் பால் மிகுந்த அன்பு வைத்துள்ள அடியார்களும் தேவர்களும், முறையாக தொடர்ந்து, தனது திருவடிகளை தொழுதெழ விளங்கும் பெருமான் என்று கூறுகின்றார். அங்கணர்=அன்பு மிகுந்த அடியார்கள்; அழகிய கண் உடையவர் என்று பொருள் கொண்டு, அழகிய நெற்றிக் கண் உடையவர் என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது. பைங்கண்=பசுமையான கண், இளமை வாய்ந்த கண்; மழலை=சிறிய குரலில் முழங்கும் எருது; உழிதர்தல்=திரிதல்;

பைங்கணதொரு பெரு மழலை வெள்ளேற்றினர் பலி எனா

எங்கணும் உழி தர்வர் இமையவர் தொழுதெழும் இயல்பினர்

அங்கணர் அமரர்கள் அடியிணை தொழுதெழ வாரமா

வெங்கண் அரவினர் உறை தரு பதி வீழிமிழலையே

தான் ஏந்தியுள்ள ஓட்டினில் அளிக்கப்படும் பிச்சையை மிகவும் இனியது என்று மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளும் பெருமான் என்று வீழிமிழலை பதிகத்து பாடலில் (3.85.10) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமான் பிச்சையேற்கும் நோக்கத்தினை அறியாத சமணர்களும் புத்தர்களும், அவரது பெருமையை அறியாதவர்களாக இருப்பதால் பெருமானை தூற்றுகின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இச்சையர்=விருப்பம் உடையவர்; மொச்சைய=நீராடுவதை தவிர்ப்பதால் துர்நாற்றம் வீசும் உடலினை உடையவர்; விச்சை=வித்தை செய்பவர்;

இச்சையர் இனிது என இடுபலி படுதலை மகிழ்வதோர்

பிச்சையர் பெருமையை இறை பொழுது அறிவென உணர்விலர்

மொச்சைய அமணரும் முடைபடு துகிலரும் அழிவதோர்

விச்சையர் உறைவது விரை கமழ் பொழில் வீழி மிழலையே

திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.86.3) திருஞானசம்பந்தர், தாருகவனத்து மகளிர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெருமானுக்கு பிச்சை அளித்தனர் என்று குறிப்பிடுகின்றார். வளையினர் மனை தோறும் திரிதரு என்று சொற்களை வரிசைப் படுத்தி பொருள் காண வேண்டும். புரிசடை=முருக்குண்ட சடை; அரை=இடுப்பு; பொடி=நீறு, சாம்பல்; பொடி புல்கும் எரி=நீறு பூத்த நெருப்பு; ஈடுலா=முன்கையில் சரிந்து விழும் வளையல்கள்; இந்த பாடலில் தாருகவனத்து மகளிரின் நிலை குறிப்பிடப் படுகின்றது. வரிதரு=கோடுகள் உடைய; பெருமான் தாருகவனம் சென்றபோது, ஆங்கிருந்த முனிவர்கள் முதலில், பெருமானின் வரவினை விரும்பவில்லை; தாங்கள் செய்து கொண்டிருந்த கடமைகளுக்கு இடையூறாக பெருமான் வந்ததாக அவர்கள் கருதியதே இதற்கு காரணம். ஆனால் பெருமான் தாருக வனத்து இல்லங்களுக்கு பிச்சை ஏற்கச் சென்ற போது, தாருகவனத்து முனிவர்களின் மனைவியர், அழகிய தோற்றத்துடன் தங்களது இல்லங்கள் தேடி வந்த பிச்சைப் பெருமானுக்கு பிச்சையிடுவது தங்களது பாக்கியம் என்று கருதி மகிழ்ந்தனர் என்று, முனிவர்களுக்கும் அவர்களது மனைவியருக்கும் இடையே இருந்த வேறுபாட்டினை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார் போலும். சரிதை=இயல்பு; முறுக்குண்ட சடைமுடியை உடைய பெருமான், தனது இடுப்பினில் புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளார். செம்பவளத்தின் நிறத்தில் அமைந்துள்ள அவரது திருமேனி மீது திருநீறு பூசப்பட்டுள்ள தன்மை நீறு பூத்த நெருப்பு போன்று உள்ளது. அவர் இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவர்; தங்களது முன்கைகளில் சரிந்த, கோடுகள் கொண்டுள்ள வளையல்களை அணிந்த தாருகவனத்து இல்லத்தரசிகள் மனம் மகிழும் வண்ணம், அவர்களின் இல்லங்கள் தோறும் சென்று பிச்சையேற்று திரியும் இயல்பினை உடையவராக திகழ்ந்தவர் சிவபெருமான். அத்தகைய பெருமான் உறைகின்ற இடம், வளம் மிகுந்த திருச்சேறை தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புரிதரு சடையினர் புலியதள் அரையினர் பொடி புல்கும்

எரிதரும் உருவினர் இடபமது ஏறுவர் ஈடுலா

வரிதரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை தொறும்

திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே

விளமர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.88.2) திருஞானசம்பந்தர், அழகிய பொடியினர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பெருமான், மரப் பாதுகைகளை அணிந்தவர் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் சொல்கின்றார். பட்டிலகிய=பட்டாடை மூடிய மார்பகங்கள்; அரிவை=இளமை வாய்ந்த தாருகவனத்து மகளிர்; ஒட்டிலகு=தாருக வனத்து மகளிர் இடுகின்ற பிச்சையை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு; தாருக வனத்தில் பலிக்கு செல்லும் போதும், உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டு பெருமான் சென்றார் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சிட்டிலகிய பொடி= ஞானத்தை வழங்கும் திருநீறு; வெண்ணீறு அணிந்த பெருமானின் திருக்கோலத்தைக், காணும் போது, அந்த தோற்றம், நமக்கு பெருமான் ஒருவனே என்றும் நிலையானவன்; பெருமானைத் தவிர்த்த அனைத்து பொருட்களும் உயிர்களும் ஒரு நாள் அழியக் கூடியவை என்ற ஞானத்தை நமக்கு உணர்த்துகின்றது. எனவே தான் சிட்டிலகிய பொடி என்று கூறுகின்றார். விட்டிலகிய= விவரிக்க முடியாத; அழகொளி=தோற்றப் பொலிவு;

பட்டிலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி

ஒட்டிலகிய இணை மர அடியினர் உமை உறு வடிவினர்

சிட்டிலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வதோர்

விட்டு இலகு அழகொளி பெயர் அவர் உறைவது விளமரே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (3.88.6) திருஞான சம்பந்தர் பெருமானை, மனைகள் தொறும் இடுபலி அது கொள்வர் என்று குறிப்பிடுகின்றார். பொதி=பொதிந்த; கனை கடல்=தனது அலைக் கரங்களால் எப்போதும் ஆரவாரம் இடுகின்ற கடல்; இங்கே ஆலகால விடத்துடன் தொடர்பு கொண்ட கடல் என்று சொல்லப் படுவதால், பாற்கடல் என்று பொருள் கொள்வது பொருத்தம். அடுதல்=கொல்லுதல்; அடுவிடம்=எதிர்ப்பட்ட ஆளைக் கொல்லும் தன்மை வாய்ந்த கொடிய ஆலகால விடம்; மிடறு=கழுத்து; முனைதல்=முயற்சி செய்தல்; பெருமானின் தன்மையை உணராது பெருமானுடன் போர் செய்ய முனைந்த திரிபுரத்து அரக்கர்கள்; பரவுதல்=போற்றிப் புகழ்ந்து பாடுதல்; தனது திருவடிகளை வணங்கும் அடியார்களின் வினைகளைக் கெடுப்பதே பெருமானின் தொழில் என்று கூறுகின்றார்.

மனைகள் தொறும் இடுபலி அது கொள்வர் மதி பொதி சடையினர்

கனை கடல் அடு விடம் அமுது செய் கறை அணி மிடறினர்

முனை கெட வரு மதிள் எரி செய்தவர் கழல் பரவுவார்

வினை கெட அருள் புரி தொழிலினர் செழுநகர் விளமரே

திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.92.2) திருஞானசம்பந்தர் செடிச்சியர் மனை தோறும் பலி கொள்வதும் பெருமானது இயல்பு என்று குறிப்பிடுகின்றார். செடிச்சியர் என்றால் வேடர் குலத்தைச் சார்ந்தவர்கள் என்று பொருள். இதன் மூலம் பெருமான், பக்குவம் அடைந்த ஆன்மாக்கள் எந்த குலத்தைச் சார்ந்தவராக இருப்பினும் அவர்களது மலங்களை பிச்சையாக ஏற்றுக் கொண்டு அதற்கு பதிலாக முக்தி நிலையினை அருளும் தன்மை வாய்ந்தவர் என்று உணர்த்துகின்றார். கேதகைப் போது=தாழை மடல்:

என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறதேறிச்

சென்று தாம் செடிச்சியர் மனை தொறும் பலி கொளும் இயல்பதுவே

துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகைப் போது அணைந்து

தென்றல் வந்து உலவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே

பரிதிநியமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.104.6) திருஞான சம்பந்தர், பெருமானை, பல திசைகளிலும் சென்று பலி ஏற்பவர் என்ற பொருள் பட, திசையார் பலி தேர்வார் என்று குறிப்பிடுகின்றார். வெங்கடும்=கடுமையான வெப்பம் உடைய; சங்கு=சங்கு வளையல்கள்; சாயல்=அழகு; தலைவியின் உடல் மெலிந்து அழகு குன்றிய தன்மையை மட்டும் இதே பதிகத்தின் முதல் ஐந்து பாடல்களில் குறிப்பிட்டு வந்த திருஞானசம்பந்தர், இந்த பாடலில் தலைவியின் உடல் மெலிந்ததால் அவளது கைகளில் இருந்த சங்கு வளையல்கள் கழன்று விழுந்ததையும் இங்கே குறிப்பிடுகின்றார். தனது வளையல்கள் கழன்றதற்கும் இறைவனே காரணமென்பதால், இறைவனே தனது சங்கு வளையல்களையும் கவர்ந்தவன் என்று சம்பந்த நாயகி குறிப்பிடுகின்றார். புறவு=முல்லை நிலம்; சைவ மதத்தின் தலைவன் என்பதால் பெருமானையே சைவன் என்று இங்கே அழைக்கின்றார். பல திருமுறை பாடல்கள் பெருமானை சைவன் என்று குறிப்பிடுகின்றன. கடுமையான வெப்பம் உடைய சுடுகாட்டினில், தனது விரிந்த புன்சடை தாழ்ந்து தொங்கும் வண்ணம் ஆர்வத்துடன் நடனம் புரியும் பெருமான், பிறைச் சந்திரனை தனது திருமுடியில் பொருந்தி விளங்கும் வண்ணம் சூட்டிக் கொண்டுள்ளார். அவர் அனைத்து திசைகளிலும் திரிந்து பலி ஏற்கின்றார். இந்த பெருமானுடன் சேர முடியாத ஏக்கத்தினால், எனது உடல் மெலிந்து நான் எனது கைகளில் அணிந்திருந்த சங்கு வளையல்கள் கழன்று விட்டன; மேலும் எனது உடலின் அழகும் மங்கிவிட்டது. இவ்வாறு எனது கை வளையல்களையும் எனது அழகினையும் கவர்ந்த சைவராகிய பெருமான் உறையும் இடமாவது, பசுமையான முல்லைக் கொடி படர்கின்ற முல்லை நிலங்கள் கொண்ட பரிதிநியமம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெங்கடும் காட்டகத்து ஆடல் பேணி விரிபுன் சடை தாழத்

திங்கள் திருமுடி மேல் விளங்கத் திசையார் பலி தேர்வார்

சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம் போலும்

பைங்கொடி முல்லை படர் புறவில் பரிதிந் நியமமே

பரிதிநியமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.104.7) திருஞானசம்பந்தர், பல மனைகள் சென்று பெருமான் பலி தேர்வதாக குறிப்பிடுகின்றார். இறை=முன்கை; இந்த பாடலிலும் சம்பந்தநாயகி தனது வளையல்களையும் அழகினையும் கவர்ந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றாள். தயங்க=தாழ்ந்து தொங்க; தாருகவனத்து முனிவர்கள் பெருமான் மீது ஏவிய மழு ஆயுதத்தை, பெருமான் செயலறச் செய்த பின்னர் அதனை தனது கையில் ஏந்திக் கொண்டார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே, தாருகவனத்தில் நடந்த நிகழ்ச்சி தனது வாழ்வினிலும் நடைபெற்றதாக சம்பந்த நாயகி கற்பனை செய்கின்றாள் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. தொங்கிய சடையுடன் திருநீறு அணிந்த திருமேனியுடன் வேதங்கள் ஓதியவராக பெருமான் தாருகவனம் சென்ற காட்சி இங்கே குறிப்பிடப் படுகின்றது. பிறைச் சந்திரனை அணிந்த செஞ்சடை பின்புறம் தொங்க, பெரிய மழுவினைத் தனது கையில் ஏந்தியவாறும், தனது திருமேனியில் வெண்ணீறு பூசியவராகவும் வேத கீதங்கள் ஓதியவராக, பெருமான் பல இல்லங்களுக்கும் பலி ஏற்பதற்காக செல்கின்றார். அவரது அழகிய தோற்றத்தினால், அவர் மீது நான் கொண்டுள்ள தீவிரமான காதலினால், அவருடன் இணைய முடியாத நிலையை நினைத்து வருந்துவதால், அந்த ஏக்கத்தில் எனது உடல் மெலிந்து எனது முன்கையில் இருந்த வளையல்கள் நழுவி விட்டன; மேலும் எனது உடலும் மெலிந்ததால் எனது அழகும் குன்றியது. இந்த நிலைக்கு பெருமானே காரணம். அவரே எனது கைவளையல்கள் மற்றும் அழகினைக் கவர்ந்த கள்வர் ஆவார். இத்தகைய கள்வர் உறையும் இடம், பறையொலி மற்றும் சங்கொலி முழங்க திருவிழாக்கள் நடைபெறும் பரிதிநியமம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலும் மனைகள் பலி தேர்வார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

பிறை வளர் செஞ்சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி

மறையொலி பாடி வெண்ணீறு பூசி மனைகள் பலி தேர்வார்

இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்

பறையொலி சங்கொலியால் விளங்கும் பரிதிந் நியமமே

இவ்வாறு ஊரூராக உலகெங்கும் திரிந்து பலியேற்பதால் பெருமான் அடைகின்ற மகிழ்ச்சியின் தன்மையை நாம் அறிந்து கொள்ள இயலாது என்று திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.2) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, பெருமானைச் சென்றடைந்து, என்றும் அழியாத நிலையான ஆனந்தத்தில் திளைக்க வேண்டும் என்று உயிர்கள் கொண்டுள்ள விருப்பத்தினை விடவும், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள மலங்களை முற்றிலும் கழித்துக் கொண்டு தன்னை வந்தடைய வேண்டும் என்று பெருமான் கொண்டுள்ள விருப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. அதனால் தான், பக்குவமடைந்த உயிர்கள் தன்னைத் தேடிவரும் வரையில் காத்திராமல், தானே அந்த உயிர்கள் இருக்கும் இடம் சென்றடைந்து, அந்த உயிர்களின் மலங்களை, பிச்சையாக ஏற்றுக் கொள்ள, மிகுந்த துடிப்புடன் பெருமான் செயல்படுகின்றார். நம்மில் பெரும்பாலோர் இதனை உணர்வதில்லை. வானில் உள்ள கரிய மேகங்களுக்கு அணிகலன் போன்று திகழும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், தனது சுருண்ட சடையினை அழகு செய்யும் வகையில் கொன்றை மாலையையும் குளிர்ந்த எருக்கு மாலையையும் தழைந்து தொங்கும் வண்ணம் அணிந்துள்ளார். அவர், மார்பினில் கச்சணிந்தவளும் நல்லாள் என்று அழைக்கப் படுபவளும் ஆகிய உமையன்னை உடனாக திருவலஞ்சுழியில் பொருந்தி உறைகின்றார். ஊர்கள் தோறும் சென்று பலியேற்று, அவர் அடைந்த உவகையின் தன்மையை, எங்களால் அறிய முடியவில்லை என்று திருஞான சம்பந்தர் சொல்வதாக அமைந்த பாடல்.

காரணி வெள்ளை மதியம் சூடிக் கமழ் புன் சடை தன் மேல்

தாரணி கொன்றையும் தண்ணெருக்கும் தழைய நுழைவித்து

வாரணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்

ஊரணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.114.2), திருஞானசம்பந்தர், பெருமான் மிகுந்த விருப்பத்துடன், வீடுகள் தோறும் சென்று பிச்சை ஏற்கின்றார் என்று கூறுகின்றார். இரண்டாவது அடியில் இரண்டாவதாக வரும் சூலமது என்பதை சூல் அம் அது என்று பிரித்து பொருள் காண வேண்டும். சூல் என்றால் தோண்டி எடுத்தல் என்று பொருள். மீனாக அவதரித்த திருமாலின் கண்ணினை தனது கையால் நோண்டி எடுத்த பெருமான், அந்த கண்ணினைத் தனது கை விரலில் மோதிரமாக அணிந்து கொண்ட செயலை குறிப்பிடுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இந்த செய்தி, மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் வாட்போக்கி கலம்பகம் என்ற நூலில் குறிப்பிடப் படுகின்றது. அங்கை என்ற சொல் இங்கே விரலை குறிப்பிடுவதாக பொருள் கொள்ள வேண்டும். கம்பம் என்று திருவேகம்பம் குறிப்பிடப் படுகின்றது.

சடை அணிந்ததும் வெண்டலை மாலையே தம் உடம்பிலும் வெண்டலை மாலையே

படை இலங்கையில் சூலமது என்பதே பரந்து இலங்கையில் சூலமது என்பதே

புடை பரப்பன பூத கணங்களே போற்றி இசைப்பன பூத கணங்களே

கடைகள் தோறும் இரப்பதும் இச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே

ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.115.9) திருஞான சம்பந்தர் செங்கயல் கண்ணினார்கள் இடுகின்ற பிச்சையைப் பெற்றுக் கொள்ளும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நேடிட=தேடிட; திருமாலொடு தாமரை மலரினைத் தனது இருப்பிடமாகக் கொண்ட நான்முகனும் பெருமானின் திருவடியையும் திருமுடியையும் தேடிக் காண முடியாமல் களைத்து மயக்கத்தில் ஆழும் வண்ணம் உயர்ந்த நல்ல தீப்பிழம்பாக உருவான பெருமான் என்று இந்த பாடலின் முதல் அடியில் கூறுகின்றார். துங்க=நெடிது உயர்ந்த; தூய பாடல்களாகிய வேத கீதங்களை தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கும் பெருமான் தான் தீப்பிழம்பாக நின்றது என்று கூறுகின்றார். சிவந்த கயல் மீன்கள் போன்ற கண்களை உடைய தாருகவனத்து மகளிர் இட்ட பிச்சையை ஏற்றுக் கொண்ட பெருமான், பேசிய சொற்களைக் கேட்ட மகளிர் பெருமான் பால் பித்து கொண்டவர் போன்று அவரைத் தொடர்ந்து சென்றனர் என்று மூன்றாவது அடியில் கூறுகின்றார். இடக்கை என்ற சொல் இடது கை மற்றும் இருப்பிடம் என்ற இரண்டு பொருள்கள் தரும் வண்ணம் நான்காவது அடியில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அங்கி=அக்னி;

பங்கயத்துள நான்முகன் மாலொடே பாத நீள்முடி நேடிட மாலொடே

துங்க நற்றழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே

செங்கயல் கணினார்கள் இடு பிச்சையே சென்று கொண்டு உரை செய்வது பிச்சையே

அங்கியைத் திகழ்விப்பது இடக்கையே ஆலவாய் அரனது இடக்கையே

ஓமமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.122.4) திருஞான சம்பந்தர், பெருமானை, ஊரூராக சென்று பலி ஏற்றுக் கொள்ளும் பிரான் என்று குறிப்பிடுகின்றார். கருத்தினார்=கருத்தினை உணர்ந்தவர்கள்; பெய்தல்=விடுதல், வார்த்தல், அளித்தல்; புற்றரவு=புற்றில் பதுங்கி வாழும் பாம்பு; பெற்றம்=இடபம்; அருத்தி=அன்பு; புற்றினில் பதுங்கி வாழும் குணம் உடைய பாம்பினைத் தனது உடலினில் அணிகலனாக அணிந்தும் உடல் முழுதும் திருநீறு பூசியும் பூத கணங்கள் சூழ்ந்து வர பல ஊர்களுக்கு இடபத்தின் மீதேறி, உலகத்தவர் அளிக்கும் பலியினைப் பெற்றுக் கொள்ள திரிபவனும் ஆகிய தலைவன் உறையும் இடம் யாது என்று நீங்கள் வினவுவீராயின் சொல்கின்றேன் கேட்பீர்களாக; தாங்கள் கற்றுக் கொண்ட நான்கு வேதங்கள் மற்றும் ஆறு அங்கங்களின் பொருளினை உணர்ந்தவர்களாய் அன்புடன் திகழ்வோரும், அவ்வாறு அறிந்ததால் ஏற்பட்ட புகழினை உடையவர்களும் ஆகிய அந்தணர்கள் வாழும் ஓமமாம்புலியூர் தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயில் தான் பெருமான் உறையும் இடம் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புற்றரரவு அணிந்து நீறு மெய் பூசிப் பூதங்கள் சூழ் தர ஊரூர்

பெற்றம் ஒன்று ஏறிப் பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில்

கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினால் அருத்தியால் தெரியும்

உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே

திருக்கோணமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.123.9) திருஞான சம்பந்தர், அகம் தோறும் பிச்சைக்கு பெருமான் செல்கின்றார் என்று கூறுகின்றார். முடை நாற்றம் எடுக்கும் பிரம கபாலத்தை, அருவருப்பு ஏதும் கொள்ளாமல், தனது உன் கலனாக கையில் ஏந்திய வண்ணம் பெருமான் பலி ஏற்கச் செல்கின்றார் என்று கூறுகின்றார். குருவர்=குரு; நீர்மை=தன்மை; பெருவராய்=பெருவர் ஆய்; பெருமை பொருந்தியவராக, பாற்கடல்; சீர்மை=சிறந்த; ஒள்ளெரி=சிறந்த தீப்பிழம்பு; குருவராய் நின்றார் என்ற தொடர் மூலம், திருமால் திருவீழிமிழலை தலத்தில் பெருமானை வழிபட்ட நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது.

அருவராது ஒரு கை வெண்டலை ஏந்தி அகம் தோறும் பலி உடன் புக்க

பெருவரா உறையும் நீர்மையார் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்

இருவரும் அறியா வண்ணம் ஒள்ளெரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நன் மாற்கும்

குருவராய் நின்றார் குரை கழல் வணங்கக் கோணமாமலை அமர்ந்தாரே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடலில் (4.41.3) அப்பர் பிரான், செல்வராக உள்ள பெருமான், பற்கள் இல்லாத வெண் தலையினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் பல இல்லங்கள் சென்று பிச்சை எடுக்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். கல்=மேரு மலை; மேரு மலையை வில்லாக வளைத்து திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற நிகழ்ச்சி குறிப்பிடப் பட்டுள்ளது. இலம்=இல்லம் என்பதன் திரிபு. சொல்=வேதங்கள்: வேதங்களில் காணப்படும் சொல்லாகவும் அந்த சொற்களின் பொருளாகவும் உள்ள தன்மை

கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே

எல்லியும் பகலும் முன்னே ஏகாந்தமாக ஏத்தும்

பல்லில் வெண்தலை கையேந்திப் பல் இலம் திரியும் செல்வர்

சொல்லு நன் பொருளும் ஆவார் திருச்சோற்றுத் துறையனாரே

கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.43.1) அப்பர் பிரான், பெருமானை, பிச்சைக்கு என்று அகம் திரிவார் என்று குறிப்பிடுகின்றார். அகம்=இல்லம். பெய்வளை=கைகளில் நெருக்கமாக வளையல்கள் அணிந்த பெண்மணி; இங்கே கங்கை நதியை குறிக்கும். இலங்கும்= விளங்கித் தோன்றும்; தளி=கோயில்; இறை என்பதற்கு தலைவன் என்று பொருள் கொண்டு, காஞ்சி மாநகரத்தை உடையவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. வேதங்கள் ஓதுதல், பிறைச் சந்திரனைத் தனது சடையில் தரித்தல், கங்கை நதியைத் தனது சடையில் அடக்கியது, தேவர்களை காக்கும் பொருட்டு நஞ்சினை உண்டது, அவ்வாறு உண்ட நஞ்சு, ஊழிக்காலத்தில் தனது வயிற்றினில் அடங்கப் போகும் உயிர்களுக்கு கேடு செய்யாத வண்ணம், நஞ்சினை தனது கழுத்தினில் நிறுத்தியமை ஆகியவை பெருமைக்கு உரிய செயல்கள் என்பதில் எவருக்கும் ஐயம் ஏதும் இல்லை. ஆனால் வீடுகள் தோறும் சென்று பிச்சை எடுப்பது அத்தகைய பெருமைக்கு உரிய செயல் தானா என்பதில் நமக்கு ஐயம் எழலாம். அந்த செய்கை அனைத்துச் செய்கைகளிலும் மிகுந்த பெருமையை உடையது என்பதை நாம் கீழ்க்கண்ட விளக்கத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபெருமானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்ற கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான். எனவே தான் பெருமான் அகம் தோறும் திரிந்து பலி ஏற்பதை, அப்பர் பிரான் பெருமைக்குரிய செயலாக கருதி இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மேலும் மறைகளை ஓதிக் கொண்டு பெருமான் பலி ஏற்கச் செல்வதாக பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. வேதங்கள் ஓதுவது எத்துணை பெருமையான செயலாக கருதப் படுகின்றதோ, அத்துணை பெருமையினை உடையது பெருமான் பலி ஏற்பது என்பதை நாம் உணரும் பொருட்டு, வேதங்கள் ஓதுவதையும் பலி ஏற்பதையும் ஒரே அடியில் அப்பர் பிரான் கூறும் நயம் மிகவும் இரசிக்கத் தக்கது

மறையது பாடி பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்

பிறையது சடைமுடி மேல் பெய்வளையாள் தனோடும்

கறையது கண்டம் கொண்டார் காஞ்சி மாநகர் தன்னுள்ளால்

இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியானாரே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.44.5) அப்பர் பிரான், பெருமானை இல்லங்கள் தோறும் சென்று பலி தேர்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் முந்தைய இரண்டு பாடல்களில் தலையால் வணங்குவார் பெரும் பயனையும், தான் வாயினால் வாழ்த்தாமல் இருந்ததற்கு வருத்தமும் தெரிவித்த அப்பர் பிரான், கைகள் கூப்பி இறைவனை வணங்கும் அடியார்கள் பெறுகின்ற நன்மையை உணர்த்துகின்றார். கடை=வீட்டு வாயில்: கடு வினை=கொடிய வினைகள்; குவளை மலர் போன்று நீண்டும், மை பூசப்பட்டதாகவும் உடைய கண்களைக் கொண்ட பார்வதி தேவியாரைத் தனது உடலில் ஒரு பாகத்தில் ஏற்றவரும், கையில் ஒரு கபாலம் ஏந்தி வீடுகள் தோறும் சென்று பிச்சை ஏற்பவரும் ஆகிய சிவபெருமான், தான் விடுத்த அம்பினால் அர்ஜுனனைக் கொல்ல வந்த பன்றியை விரட்டி அவனுக்கு அருள் புரிந்தார். இந்த பெருமான் கச்சி ஏகம்பத்து திருக்கோயிலில் உறைகின்றார். தங்களது கைகளை கூப்பி அந்த பெருமானைத் தொழும் அடியார்கள், தங்களது தீவினைகளைப் போக்கிக் கொள்ளலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மையினார் மலர் நெடுங்கண் மங்கை ஓர் பங்கராகி

கையிலோர் கபாலம் ஏந்திக் கடை தொறும் பலி கொள்வார் தாம்

எய்வதோர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரைக்

கையினால் தொழ வல்லார்க்குக் கடுவினை களையலாமே

உயிர்களுக்கு இருக்கும் தான் என்ற அகந்தையை கழிக்கும் பொருட்டு இறைவன் பலி ஏற்கின்றார் என்று அப்பர் பெருமான் சொல்லும் பாடலை (4.53.6) நாம் இங்கே காண்போம். பெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்று தெளிவு படுத்தும் அப்பர் பிரான், நகைச்சுவையாக பெருமானது உணவு எது என்பதை குறிப்பிடுவதையும் நாம் இந்த பாடலில் காணலாம். நஞ்சு தான் அவர் விரும்பி உண்ணும் உணவு என்று இங்கே கூறுகின்றார். பொதுவாக பிச்சை ஏற்பவர் பெறும் பயன், பிச்சை இடுவோர் பெறும் பயனை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் சிவபெருமான் பிச்சை ஏற்பது, தான் பயன் அடைவதற்காக அல்ல. அவருக்கு பிச்சை இடுவோர்கள் தங்களது அகங்காரம் (மலங்கள்) அழியப் பெற்று நலம் பெறுவதற்குத் தான். பிச்சை ஏற்கும் பெருமான் உண்பது நஞ்சு என்று பாடலின் மூன்றாவது அடியில் கூறும் அப்பர் பிரான், சிவபெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்பதையும் தெளிவு படுத்துவதை நாம் இங்கே காணலாம். இந்த பாடலில் குறிப்பிடப்படும் பிச்சை ஏற்கும் நிகழ்ச்சியை, தாருகவனத்து நிகழ்ச்சியாக கருதி, தாருகவனத்து மகளிரின் கர்வமும், பெண்மைக்குரிய நாணம் என்ற இயல்பும் ஒழிந்து போகுமாறு, சிவபெருமான் பிச்சைப் பெருமானாக வலம் வந்தார் என்றும் விளக்கம் அளிப்பதும் பொருத்தமே. தானகம் என்ற சொல்லினை தான் அகம் என்று பிரித்து, அடியார்களது அகங்காரம் அழியும் பொருட்டு இறைவன் பலி ஏற்கின்றார் என்பதை உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடித்

தானகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்

ஊனகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம்

ஆனகத்து அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.58.1) அப்பர் பிரான், உமை அன்னையுடன் ஒன்றியவராக சிவபெருமான் ஊர் பலி ஏற்கச் சென்றார் என்று கூறுகின்றார். கன்றினார்=பகைத்தவர்; நின்றதோர் உருவம்=பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்ற கோலம்; நீர்மை=வலிமை; நிறை=கற்பு; பிச்சைப் பெருமானாக, தங்களது இல்லத்தின் வாயின் முன்னே நின்று பலியேற்ற பெருமானின் அழகினைக் கண்ட தாருகவனத்து மாதர்களின் கற்பு நிலை குன்றியது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தங்களது மனைவியரின் கற்பு தாருகவனத்து முனிவர்களுக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. அந்த கற்பு நிலை குன்றிய பின்னர் அவர்களது வலிமையையும் குறைந்தது என்று இங்கே கூறுகின்றார். தன்னுடன் பகைமை கொண்ட திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றும் நெருப்பினில் வெந்து அழியுமாறு மிகுந்த சீற்றத்துடன் நோக்கியவர் சிவபெருமான். பிச்சைப் பெருமான் கோலம் ஏற்று தாருகாவனம் சென்ற பெருமானின் அழகில் மயங்கிய இல்லத்தரசிகள், பெருமானின் பின்னே சென்றமையால் அவர்களது கற்பு அழிந்தது. மேலும் தங்களது மனைவிமார்களின் கற்பின் நிலை குன்றியதால் முனிவர்களின் ஆற்றலும் குறைந்தது. இவ்வாறு முனிவர்களின் மனைவியரின் கற்பையும் முனிவர்களின் ஆற்றலையும் பறித்த கோலம் சிவபெருமானின் பிச்சைப் பெருமானின் திருக்கோலம். உமை அம்மையைத் தனது உடலினில் ஏற்றுள்ள பெருமான், அதே கோலத்தில் ஊரூராக பலி ஏற்பதற்காகச் செல்கின்றார். மேலும் உமையம்மை உடன்வர வேடுவக் கோலத்தில் கானகம் சென்ற பெருமான், தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனைக் கொல்ல வந்த பன்றியைப் பின் தொடர்ந்து அதனைக் கொன்று அர்ஜுனனையும் காப்பாற்றினார். அத்தகைய இறைவனார் பருப்பதத்தை நோக்கி அதனை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரியாகச் சீறி

நின்றதோர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு

ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும்

பன்றிப் பின் வேடராகிப் பருப்பதம் நோக்கினாரே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.58.8) அப்பர் பிரான், செல்வராகிய பெருமான் வெள்ளை விடையின் மீது ஏறியவராக பல இல்லங்கள் சென்று, தனது கையில் கபாலம் ஏந்தி பிச்சை கேட்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். பாரிடம்=பூதகணம்; பாணி செய்ய=தாளமிட; பிஞ்ஞகன்=அழகிய தலைக் கோலம் உடையவன். கார்=மேகம்; காருடைக் கண்டர்=மேகம் போன்று கரிய நிறத்தினை உடைய கழுத்தினைக் கொண்ட பெருமான்; உயிருக்கு ஏற்படும் பெரிய துன்பமும் தீர்க்க முடியாத நோயாகவும் திகழும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்க வல்ல பெருமான், அழகிய தலைக் கோலத்தை உடையவர் ஆவார். எனக்கு தந்தையாக விளங்கும் பெருமான், நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் மேகம் போன்றுகருமை நிறத்தில் உள்ள கழுத்தினை உடையவர் ஆவார். தனது கையினில் கபாலம் ஏந்தியவராக ஊரெங்கும் திரியும் பெருமான், சிறப்பு வாய்ந்ததும்செம்மை நிறத்தில் கண்களை உடையதும் ஆகிய இடபத்தின் மீது ஏறி தான் விரும்பிய இடத்திற்கு செல்கின்றார். வேறு எவரிடமும் இல்லாத முக்திச்செல்வத்தை உடைய செல்வர் சிவபெருமான். அத்தகைய இறைவனார் பருப்பதத்தை நோக்கி அதனை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பேரிடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்

காருடைக் கண்டராகிக் கபாலம் ஓர் கையில் ஏந்திச்

சீருடைச் செங்கண் வெள்ளேறு ஏறிய செல்வர் நல்ல

பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே

பெருமான் பிச்சை ஏற்பது, தனது உணவுத் தேவைக்காக அல்ல என்பதையும் பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தங்களது மலங்களை பெருமான் ஏற்றுள்ள பிச்சைப் பாத்திரத்தில் இட்டு கழித்துக் கொண்டு தாங்கள் முக்தியுலகம் செல்வதற்கு தகுந்தவர்களாக தங்களை மாற்றிக் கொள்ளும் பொருட்டு என்பதும் பல திருமுறை பாடல்களில் கூறப்படுகின்றது. பல இல்லங்கள் சென்று ஐயம் ஏற்ற பெருமான், அந்த பிச்சையை எப்போதும் உண்டதில்லை என்றும், பெருமான் உண்டது நஞ்சு தான் என்றும் நகைச்சுவையாக அப்பர் பிரான் கூறும் பாடல் (4.62.5), திருவாலவாய் (மதுரை) தலத்தின் மீது அருளியது. தனது வாழ்க்கையின் முற்பகுதியில் சிவபெருமானை நினைக்காது, அப்பர் பிரான், தான் சமண சமயம் சார்ந்திருந்ததை எண்ணி வருத்தம் தெரிவிக்கும் பாடல் இது. பளகு என்றால் குற்றம் என்று பொருள். சமண சமயம் சார்ந்திருந்ததை குற்றம் என்று ஒப்புக்கொண்டு அப்பர் பிரான் இறைஞ்சுகின்றார். அவ்வாறு இருந்ததற்காக சிவபெருமான் தன்னை புறக்கணித்து விட்டு அருள் செய்யாமல் இருக்கக் கூடாது என்ற வேண்டுகோள் தொனிக்கும் பாடல். ஆலவாயிலில் உறையும் அப்பனே, பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி ஊர் ஊராகச் சென்று பிச்சை கேட்கின்றாய்; ஆனால் அவ்வாறு பிச்சையாக பெற்ற பொருளை நீ என்றும் உண்டதில்லை. நீ உண்டதோ பாற்கடலில் பொங்கி வந்த விடத்தைத் தான். இவ்வாறு விந்தையான குணத்தினைக் கொண்ட உன்னை, நான் எனது வாழ்நாளின் முற்பகுதியில், உன் மீது பெருவிருப்பம் கொண்டு எனது உள்ளம் உனது நினைவால் நிறையுமாறு, நினைக்காமல் இருந்தேன். எல்லா உலகங்களுக்கும் தலைவனே, நான் உன்னை நினையாமல் பண்டைய நாளில் இருந்ததை பொருட்படுத்தாமல், எனக்கு நீ அருள் புரிய வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும்

உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு தன்னைப்

பண்டுனை நினைய மாட்டாப் பளகனேன் உளமது ஆர

அண்டனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

கடும் பகல் நட்டமாடி என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.77.1) பலிக்காக இல்லம் தோறும் திரிகின்ற பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கொடிய பகல் வேளையில், நடனம் ஆடிக்கொண்டே ஒரு கையினில் கபாலம் ஏந்தி தாருகவனத்து மகளிர் இல்லங்களுக்கு பிச்சைப்பெருமானாக திரிந்த இறைவனே, சிறந்த அணிகலன்களை அணிந்தும், சுருண்ட மெல்லிய கூந்தலைக் கொண்டவளாகவும், வளைந்த காதணிகளைஉடையவளாகவும் விளங்கிய இமவான் மகளாகிய பார்வதி தேவி, உமது மனைவியாக உமது வாழ்க்கையில் புகுந்த போதும் நீர் கோவணத்துடன் காட்சிஅளித்தீரோ, அந்த விவரத்தை எனக்கு சொல்வீராக என்று அப்பர் பிரான் பெருமானிடம் விளக்கம் கேட்கும் விதமாக அமைந்த பாடல்.

கடும் பகல் நட்டம் ஆடிக் கையிலோர் கபாலம் ஏந்தி

இடும் பலிக்கு இல்லம் தோறும் உழிதரும் இறைவனீரே

நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென்கூந்தல்

கொடுங் குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.86.4), பெருமான் தானே விரும்பி, பல மகளிரின் இல்லங்கள் சென்று பலி ஏற்பதாக அப்பர் நாயகி உணர்த்துகின்றாள். போனகம்=உணவு: சுடுகாட்டினை தான் விரும்பி நடமாடும் அரங்காக ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்: வீடு தோறும் சென்று பலி ஏற்கும் போது, தன்னைத் தேடி வந்து பிச்சையாக இடப்படும் உணவினை, சிவபெருமான் தசை உலர்ந்து முடை நாற்றும் வீசும் தலையோட்டில் தான் ஏற்றுக் கொண்டார்.. அவர் தான், தேன் நிறைந்ததும் நறுமணம் வீசுவதும் ஆகிய பூக்கள் அதிகமாக காணப்படும் திருவொற்றியூரில் உறைகின்றார். அவர் தன்னிச்சைப்படி, வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்டுத் திரிபவராக திகழ்கின்றார் என்று அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.

தான் அகம் காடு அரங்கா உடையது தன்னடைந்தார்

ஊன் அக நாறு முடை தலையில் பலி கொள்வதும் தான்

தேன் அக நாறும் திருவொற்றியூர் உறைவார் அவர் தாம்

தான் அகமே வந்து போனகம் வேண்டி உழி தர்வரே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.97) முதல் பாடலில் அப்பர் பிரான், வீடுகள் தோறும் பிச்சை எடுக்கச் செல்லும் சிவபெருமான், பிச்சையிடும் மகளிரின் வளையல்கள் கழன்று விழுமாறு, அவர்கள் தன் மீது பிரேமை கொள்ள வைத்து அவர்களை ஏங்கச் செய்வது எதற்காக என்று கேள்வி கேட்பதை நாம் உணரலாம். இந்த பாடல், தாருகவனத்து மகளிரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைந்த பாடல் என்று கூறுவார்கள். அட்டுமின்=இடுமின்; கடை=முற்றம், முன் வாயில்: வளை கொள்ளுதல்= சிவபெருமானுக்கு பலியிட வந்த பெண்கள், அவர் மீது தாங்கள் கொண்ட காதல் கைகூடாத காரணத்தால், உடல் இளைத்து கைகள் மெலிய, தங்களது கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்: அந்த நிலைக்கு சிவபெருமானே காரணம் என்பதால் அவர் வளையல்கள் கொண்டதாக கூறுதல், சங்க இலக்கியங்களின் மரபை பின்பற்றியது. மட்டு=கள், தேன்; மட்டவிழும் குழலார்=தேன் சிந்தும் நறுமணம் மிக்க புதிய மலர்களை கூந்தலில் அணிந்துள்ள மகளிர்; கொட்டிய பாணி=ஒலிக்கப்பட்ட தாளங்கள்; கோளரவு=கொலைத் தொழிலை புரியும் பாம்பு; கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி சிவபெருமான் தனது இல்லம் வந்ததாக, இந்த பதிகத்தின் பல பாடல்களில் கற்பனை செய்யும் அப்பர் நாயகி, முதல் பாடலில் தாருகாவனத்து மகளிர் இல்லங்களுக்கு சிவபெருமான் பிச்சை ஏற்றுச் சென்றதை நினைத்துப் பார்க்கின்றாள். தங்களது நிலையினை மறந்து, சிவபெருமானின் பின்னே தாருகவனத்து மகளிர் சென்ற காட்சி அவளது மனக்கண்ணில் விரிகின்றது. ஆனால், ஏன் அவ்வாறு நடந்தது என்று அவளுக்கு புலப்படவில்லை. ஒலிக்கும் தாளங்களுக்கு ஏற்ப, நடனம் ஆடும் போது எடுத்த பாதங்களையும், கொலைத் தொழிலைச் செய்யும் பாம்பினை அணிகலனாகவும், உடையவராய், எப்போதும் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் பெருமான், நல்லூரில் உறைகின்றார். தேன் ஒழுகும் நறுமணம் மிகுந்த புதிய மலர்களைத் தங்களது கூந்தலில் சூடிய தாருகாவனத்து மகளிர்களின் இல்லங்கள் தோறும், பிச்சை கேட்டுச் சென்றதன் காரணம் யாதோ? நான் அறியேன். சிவபெருமானை நினைந்து, தாருகாவனத்து மகளிர் தங்களது கைகளில் இருந்த வளையல்கள் கழன்று விழுமாறு உடல் மெலிய வருத்தமுற்றது ஏனோ என்ற கேள்வியை பெருமானிடம் அப்பர் பிரான் கேட்கும் பாடல்.

அட்டுமின் இல்பலி என்று அகம் கடை தோறும் வந்து

மட்டவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என் கொலோ

கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோளரவும்

நட்ட நின்றாடிய நாதர் நல்லூர் இடம் கொண்டவரே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.103.7) மகளிர் இடும் பிச்சைக்கு ஊர் ஊராகத் திரிவது, பெருமானே உமக்கு பெருமை தரும் செயலா என்ற கேள்வி கேட்கப் படுகின்றது. சீர்மலி=சிறப்பு மிக்க செல்வம்: சுலவு=சூழ்ந்த: மாதிமை=பெருமை. சிறப்பு மிக்க செல்வத்தை மிகுதியாக உடைய செம்பொன் மாமலை போன்றவனே, செழிப்பு மிகுந்த சோலைகளால் நிறைந்த கடல் நாகைக் காரோணனே, தங்களது மார்பினை அழகான கச்சுகளால் இறுகக் கட்டிய மாதர்கள் வந்து பிச்சை இடுமாறு ஊர் தோறும் சென்று பிச்சை ஏற்று அந்த உணவினை உண்பது உமது பெருமைக்கு உரிய செயலாகுமா, ஏன் நீர் அவ்வாறு பிச்சை ஏற்க உலகெங்கும் திரிகின்றீர்? நீரே எனக்கு தெளிவுபடுத்துவீராக என்று அப்பர் பிரான் பெருமானிடம் கேட்பதாக அமைந்த பாடல்.

சீர்மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மாமலையே

கார்மலி சோலை சுலவு கடல் நாகைக் காரோணனே

வார்மலி மென்முலையார் பலி வந்திடச் சென்று இரந்து

ஊர்மலி பிச்சை கொடு உண்பது மாதிமையோ உரையே

பவளத் தடவரை என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.113.6) அப்பர் பிரான், பெருமானை, பல கடை தோறும் பலி திரிபவன் என்று குறிப்பிடுகின்றார். உன்மத்தக மலர்=ஊமத்தம் பூ: பன்மத்தகம்=பல்+மத்தகம், பல்லை உடைய மண்டையோடு: கடை=வீட்டு வாயில்: மத்தகம்=தலை: சங்கரன் என்ற சொல்லுக்கு இன்பம் அளிப்பவன் என்று பொருள். வீடுகள் தோறும் சென்று பலி கேட்டாலும், பலி கேட்பதன் நோக்கம், தமது மலங்களை பிச்சையாக இறைவனுக்கு அளித்து, மலங்கள் நீங்கப் பெற்று மக்கள் உய்ய வேண்டும் என்ற நோக்கத்தினை உடையது என்பதால், இறைவன் பிச்சை ஏற்கும் செயலும் அடுத்தவருக்கு இன்பம் அளிக்கும் என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. ஊமத்தை மலரைச் சூடியவனும், உலகத்தவர் அனைவரும் தொழுமாறு, ஊழிக் காலத்தையும் கடந்து, தலைமாலை அணிந்து கொண்டு நடமாடும் இறைவனாகிய சிவபெருமான், பல வீடுகள் தோறும் சென்று வாயிலில் நின்று பிச்சை ஏற்கின்றான், அத்தகைய இறைவன் எனது தலை மீது, இரவும் பகலும் என்னை பிரியாது, குடி கொண்டுள்ளான். அவன் தான் தனது தலையில் ஒரு இளம் பிறையினைச் சூடிய சங்கரன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை

உன்மத்தக மலர் சூடி உலகம் தொழச் சுடலைப்

பன்மத்தகம் கொண்டு பல்கடை தோறும் பலி திரிவான்

என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அறியான்

தன் மத்தகத்தோர் இளம்பிறை சூடிய சங்கரனே

திருவண்ணாமலை தலத்து பதிகத்தின் பாடலில் (5.5.1), இட்டமாக இரந்து உண்பவன் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடல் தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என்று கூறுவார்கள். இலம்=இல்லம்: இல்லம் என்ற சொல்லின் இடைக்குறை, எவராலும் அடக்க முடியாத காளையினை வாகனமாகக் கொண்டு, அதன் மீது ஏறி, தனது விருப்பம் போல் பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்று உண்பவனாகிய சிவபெருமான் அட்டமூர்த்தியாக விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். பட்டி=அடக்க முடியாத காளை, பண்டைய நாட்களில் கிராமங்களில், தங்களிடம் உள்ள ஒரு காளை மாட்டினை இறைவனுக்கு என்று நேர்ந்து, அதனை கோயிலில் சேர்த்து விடுவார்கள். அந்த மாடு, தங்களது வயல்களில் அல்லது தோட்டத்தில் மேய்ந்தாலும் அதனை மிரட்டாமலும் அடிக்காமலும் வெளியேற்றுவார்கள். இவ்வாறு தனது விருப்பம் போல் திரிந்து, வேலை ஏதும் செய்யாமல் வாழும் காளை மாட்டினை பட்டிமாடு என்றும் பொலி எருது என்றும் அழைப்பார்கள். வலிமை மிகுந்து காணப்படுவதால், இந்த மாட்டினை எளிதில் அடக்குவதும் கடினம். இந்த மாட்டினைப் போன்று எவர்க்கும் அடங்காத நந்தி என்பதால் பட்டி என்று இங்கே கூறப்பட்டுள்ளது. எவராலும் அடக்க முடியாத காளையினை வாகனமாகக் கொண்டு, அதன் மீது ஏறி, தனது விருப்பம் போல் பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்று உண்பவனாகிய சிவபெருமான் அட்டமூர்த்தியாக விளங்குகின்றான். அவனது அட்ட மூர்த்தி வடிவங்களில் ஒன்றாக வெளிப்பட்ட அண்ணாமலையை தொழுதால், நமது வினைகள் கெட்டுப் போய் விடும். இதனை நீங்கள் கண்கூடாக காண்பீராக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை

பட்டி ஏறுகந்தேறி பல இலம்

இட்டமாக இரந்து உண்டு உழிதரும்

அட்டமூர்த்தி அண்ணாமலை கை தொழ

கெட்டுப் போம் வினை கேடில்லை காண்மினே

இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலிலும் பெருமான் தாருகவனம் சென்ற நிகழ்ச்சி சொல்லப் படுகின்றது. உணங்கல்=சோறு, பலி, உலர வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்: இந்த பாடல் தாருகாவனத்து முனிவர்கள் மனைவியர்களின் உள்ளங்களைக் கவர்ந்த செய்கையை குறிப்பிடுகின்றது. தசைகள் உலர்ந்து பற்கள் உதிர்ந்த பிரம கபாலம் என்பதைக் குறிக்க பல்லில்லாத மண்டையோடு என்று இங்கே கூறப்படுகின்றது. முந்தைய பாடலில், அண்ணாமலையினைத் தொழுவார், தவம் மற்றும் ஞானம் அடையப் பெறுவார்கள் என்று கூறிய அப்பர் பிரான், இந்த பாடலில் அத்தகைய தவத்தின் பயனாகிய நல்ல நன்மைகளை பெறுவார்கள் என்று கூறுகின்றார். இம்மைக்கு உரிய நன்மைகளை விளைவிக்கும் நல்வினைகள் என்றும் பிறவாமைக்கு ஏதுவாகிய பற்றற நிற்கும் தன்மையும், நல்லன என்ற சொல் மூலம் குறிக்கப் படுகின்றன. பற்கள் உதிர்ந்த, தசைகள் உலர்ந்த மண்டையோட்டினைத் தனது கையில் பாத்திரமாக ஏந்தி, தாருகாவனம் சென்ற பிச்சைப் பெருமான், அங்கே பல இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ள பெண்டிர்களிடம் பிச்சை ஏற்றதுமன்றி, தனது அழகால் அவர்களது உள்ளங்களையும் கவர்ந்தார். அத்தகைய அழகு வாய்ந்த பெருமான், அடியார்களின் அல்லல்களையும் தீர்ப்பவராவார். அவர் விரும்பி உறையும் இடமாகிய, அண்ணாமலையைத் தொழுதால், நமக்கு பல நன்மைகள் வந்தடையும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பல் இல் ஓடு கையேந்திப் பல இலம்

சென்று உணங்கல் கவர்வார் அவர்

அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கை தொழ

நல்லவாயின நம்மை அடையுமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.6.3) அப்பர் பிரான், பெருமானை, அகம் பலி தேரும் குழகனார் என்று குறிப்பிடுகின்றார். விண்ட=கிள்ளி எறியப்பட்ட பிரமனின் தலை; வாணர் வாழ்நர் என்ற சொல்லின் மருவு. அண்டம் என்பதற்கு மேலுலகம் என்று இங்கே பொருள் கொண்டு தேவர்களுக்கு அருளும் இறைவன் என்று புரிந்து கொள்ள வேண்டும். பிரமனின் ஐந்து தலைகளிலிருந்து கிள்ளப் பட்டதும், தசை நரம்பு ஆகியவை உலர்ந்து வெண்மை நிறத்துடன் காட்சி அளிப்பதும் ஆகிய தலையினை தான் உணவு உட்கொள்ளும் கலனாக ஏற்றுக் கொண்டு வீடுகள் தோறும் பலியேற்கச் செல்லும் இறைவன் மிகவும் அழகியவராக காணப் படுகின்றார். அவர், தேய்ந்து துண்டிக்கப் பட்டது போன்று காணப்படும் பிறையினைத் தனது சடையில் அணிந்தவர்; மேலுலகத்தில் வாழ்கின்ற தேவர்களுக்கும் அருள் புரியும் இறைவனாக விளங்கும் அவர் திருவாரூரர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும் பெருமானை கடைகள் தோறும் திரியும் எம் கண்ணுதல் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

விண்ட வெண் தலையே கலனாகவே

கொண்டு அகம் பலி தேரும் குழகனார்

துண்ட வெண்பிறை வைத்த இறையவர்

அண்ட வாணருக்கு அருளும் ஆரூரரே

சித்தக் குறுந்தொகை என்று அழைக்கப் படும் பதிகத்தின் பாடலில் (5.97.14) அப்பர் பிரான், பெருமானை, பல இல்லங்கள் சென்று பலி தேர்பவன் என்று குறிப்பிடுகின்றார். அக்கு=சங்கு மணி; எலும்பு என்ற பொருளும் பொருந்தும்; நீர்கள் என்று இழிவுக் குறிப்பு தோன்ற கள் விகுதி சேர்க்கப் பட்டுள்ளது. ஆயுத எழுத்தாகிய ஃ என்பதை முதல் எழுத்தாக கொள்ள முடியாது என்பதால், அந்த எழுத்தினை உணர்த்தும் சொல்லினை நயமாக அப்பர் பிரான் இங்கே பயன்படுத்தியுள்ளார். ஆத்திச்சூடியிலும் அஃகம் சுருக்கேல் என்று கூறப்படுகின்றது. அஃகம் என்றால் எடை மற்றும் அளவு என்று பொருள். வணிகர்களுக்கு ஔவை கூறும் அறிவுரை, (எடையையும் அளவினையும் குறைக்காமல் வாணிபம் செய்ய வேண்டும்) இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தின் பல பாடல்களில் (நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில்) பெருமானின் பண்புகளையோ தன்மையையோ செயல்களையோ ஏளனம் செய்யாது தேவர்கள் பெருமானை போற்றுவதை அப்பர் பிரான் குறிப்பிட்டார். தேவர்கள் பெருமானின் தன்மையை சரியாக புரிந்து கொண்டது போன்று நாமும் புரிந்து கொண்டு, அவனை ஏளனம் செய்யாமல் வணங்க வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அதற்கு மாறாக ஏளனம் செய்தால், நாம் நரகத்தில் தள்ளப் படுவோம் என்ற எச்சரிக்கையும் இங்கே விடுக்கப் படுகின்றது. எலும்பு மாலையை பூண்டவனாக ஆமை ஓட்டினை அணிந்தவனாக. கையினில் தீச்சுடரினை ஏந்தியவனாக, பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்பவனாக இருக்கும் பெருமானை, அவனது தன்மையை புரிந்து கொள்ளாமல் நீங்கள் ஏளனம் செய்து சிரித்தால் நீங்கள் நரகம் புகுவது நிச்சயம். எனவே நீங்கள், அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றியவனும் கூட்டமாக தேவர்களால் தொழப்படுபவனும் ஆகிய இறைவனைப் பழிப்பதை ஒழிப்பீர்களாக. தேவர்களை பின்பற்றி, ஏளனத்தை தவிர்த்து, இறைவனின் செய்கைகள் உணர்த்தும் பின்னணியையும் பெருமானின் பெருமைகளையும் ஒழுங்காக புரிந்து கொண்டு, அவனைப் பணிந்து வணங்கி வழிபடுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல்

புக்கு பல் பலி தேரும் புராணனை

நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ

தொக்க வானவரால் தொழுவானையே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (5.97.6) அப்பர் பிரான் பெருமான் வெண்டலை ஏந்தி பிச்சை ஏற்பதற்காக பல இல்லம் புகுகின்றார் என்று கூறுகின்றார். உச்சி=முடி மீது; ஊன் அறாத=பச்சைத் தசை நீங்காத; தங்களுக்கு இடர் வந்த பல தருணங்களில் தேவர்கள் பெருமானே எங்களது அச்சத்தை தீர்த்து அருள் புரிவாய் என்று வேண்டியதை அப்பர் பிரான் இங்கே நினைவு கூர்கின்றார். ஆலகாலம் விடம் பொங்கி வந்த போது, சூரபத்மனால் துன்பங்கள் அடைந்த போது, திரிபுரத்து அரக்கர்களின் ஆற்றலுக்கு பயந்த போது, என்று பல தருணங்கள் இருந்ததை புராணங்கள் உணர்த்துகின்றன. தனது தலையின் உச்சியில் தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் இருந்த சந்திரனை அணிந்ததும், தசைகள் விலக்கப் படாது பசுமைத் தன்மை நீங்காத மண்டை ஓட்டினை கையில் ஏந்தியவாறு, பல இல்லங்களுக்கு பிச்சை ஏற்பதற்காக பெருமான் சென்றதும் அவனது இயலாமையால் அல்ல என்பதை புரிந்து கொண்ட வானவர்கள், வல்லமை வாய்ந்த பெருமானை நோக்கி தங்களது அச்சத்தை தீர்த்து அருள வேண்டும் என்று அவனைப் புகலடைகின்றனர். தேவர்களைப் போன்று நாமும், இறைவனின் பெருமையினை புரிந்து கொண்டு அவனை வணங்கி வழிபட வேண்டும் என்பதே இந்த பாடலில் கூறப்படும் அறிவுரை.

உச்சி வெண்மதி சூடிலும் ஊன் அறாத

பச்சை வெண்தலை ஏந்திப் பல இல்லம்

பிச்சையே புகும் ஆகிலும் வானவர்

அச்சம் தீர்த்து அருளாய் என்று அடைவரே.

நீறு அலைத்ததோர் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலிலும் (5.98.5) பெருமானை, பல இல்லம் தலை ஏந்திச் செல்பவர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கூறேறும்=உடலில் ஒரு கூறாக பொருந்திய; பாறு=மண்டையோடு; பால்=பக்கம்; பாலர்=ஒரு பக்கத்தில் உடையவர்; பாறு=பருந்து, கழுகு; பாறேறு=ஒட்டியிருக்கும் சதைகளை கொத்தித் தின்பதற்காக பருந்துகள் அமரும் தலை; தனது உடலின் ஒரு கூறாக பொருந்திய உமை அம்மையைத் தனது உடலின் இடது பாகத்தில் கொண்டுள்ளவரும்: கங்கை ஆற்றினைத் தேக்கி அடக்கிய சடையை உடையவரும்: அத்தகைய சடையின் மீது பிறைச் சந்திரனை சூட்டிக் கொண்டுள்ளவரும்: ஒட்டிக் கொண்டுள்ள சதைகளை கொத்தித் தின்ன வரும் பருந்துகள் அமரும் மண்டை ஓட்டினை, பிரமனின் உடலிலிருந்து கிள்ளிப் பிரிக்கப்பட்ட தலையினை தனது உண்கலனாக கையில் ஏந்திய வண்ணம் பல இல்லங்களுக்கும் பிச்சை ஏற்கச் செல்பவனும், எருதினை வாகனமாக ஏற்றவனும், எனது தந்தையும் ஆகிய இறைவனை எனது உள்ளம் கண்டு கொண்டது என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

கூறேறும் உமை பாகமோர் பாலராய்

ஆறேறும் சடை மேல் பிறை சூடுவர்

பாறேறும் தலை ஏந்திப் பல இலம்

ஏறேறும் எந்தையைக் கண்டது என் உள்ளமே

புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.13.8) அப்பர் பிரான், நிறை வளையார் பலி பெய்ய அவர்களது நிறையைக் கொண்ட பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நிரை வளையார்=கைகளில் வளையல்களை நிறைவாக அணிந்த மகளிர்; தனது அழகினால், மொழியின் இனிமையால் பல மகளிரது மனதினைக் கவர்ந்த பெருமானை பொல்லாத வேடத்தர் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பெருமான் தாருகாவனம் சென்று ஆங்கிருந்த முனிவர்களின் மனைவியர் கற்பினை அழித்த திறம் கூறப் படுகின்றது. பண்டைய நாளில். தனது கணவன் அல்லாத வேற்று ஆடவனின் அழகினை நினைத்து மயங்கினால், கற்பு நிலையிலிருந்து தவறியதாக கருதப்பட்டது. தாருகவனத்து முனிவர்களின் மனைவிகள், பிச்சை ஏற்றுக் கொள்ள வந்த பிச்சைப் பெருமானின் அழகில் மயங்கி, தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டு, தங்களது உடைகள் நழுவுவதையும் உணராதவர்களாக பெருமானின் பின்னே சென்றதை, அந்த பெண்களின் கற்பினை பெருமான் அழித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த நிகழ்ச்சி இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. நல்லாள்=நல்ல ஆட்கள்; ஓரிடத்தில் நில்லாது பல ஊர்களுக்கும், பிச்சை எடுக்கச் சென்ற பெருமான், வரிசையாக வளையல்களை தங்களது கையில் அணிந்த தாருகவனத்து மகளிர்கள் இட்ட பிச்சையை ஏற்றுக் கொண்டதும் அன்றி, தனது அழகால் அவர்களை மயக்கி அவர்களது கற்பினையும் கவர்ந்து கொண்டார்; தனது வாகனமாக கொலைத் தொழில் புரியும் காளையைக் கொண்டுள்ள பெருமான், தான் பயன்படுத்தும் கொக்கரை கொடுகொட்டி ஆகிய இசைக் கருவிகளை குடந்தை தலத்தில் விட்டுவிட்டு நல்லூர் சென்றார். குளிர்ந்த பொய்கைகளும் நல்ல ஆடவர்களையும் உடைய நல்லூர் மற்றும் நறையூர் ஆகிய தலங்களிலிருந்து நீங்காமல் இருப்பேன் என்று கூறினாலும், தன்னைக் காணும் மகளிரின் கருத்தைக் கவரும் வண்ணம் அழகாக விளங்கிய பொல்லாத வேடத்தை உடைய பெருமான், மேற்கூறிய தலங்களில் தங்காமல், பூதங்கள் தன்னை பின்தொடர்ந்து சூழ்ந்து வர புறம்பயம் தனது ஊர் என்று சொல்லிக் கொண்டு ஆங்கே சென்று விட்டார். அவ்வாறு புறம்பயம் சென்ற பெருமான் என்னுடைய உள்ளத்தையும் கவர்ந்து சென்று விட்டார் என்று அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.

நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி நிரைவளையார் பலி பெய்ய நிறையும் கொண்டு

கொல்லேறும் கொக்கரையும் கொடுகொட்டியும் குடமூக்கில் அங்கொழியக் குளிர் தண் பொய்கை

நல்லாளை நல்லூரே தவிரேன் என்று நறையூரில் தாமும் தவிர்வார் போலப்

பொல்லாத வேடத்தர் பூதம் சூழப் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே

இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.17.7) அப்பர் பிரான், இல்லம் தோறும் பிச்சை கொள்வதற்காக பெருமான் செல்கின்றார் என்று கூறுகின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான் இறைவனை பச்சை நிறம் உடையர் என்று குறிப்பிடுகின்றார். பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்று பல்லாண்டு பதிகத்தில் கூறுவது போன்று அப்பர் பிரான், பெருமான் என்றும் உள்ளார் என்று இந்த பாடலில் இறைவனின் அழியாத தன்மையை குறிப்பிடுகின்றார். பல இல்லங்கள் தேடிச் சென்று பிச்சை எடுத்தாலும், பெருமை குறையாதவர் பெருமான் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பச்சை நிறம் என்பது பிராட்டியின் நிறமாக கருதப் படுகின்றது. பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் பெருமான் ஏற்றுக் கொண்டதால், பெருமான் பச்சை நிறம் உடையர் என்று குறிப்பிடப் படுகின்றார்.

பச்சை நிறம் உடையர் பாலர் சாலப் பழையர் பிழை எலாம் நீக்கி ஆள்வர்

கச்சைக் கதநாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கையேந்தி இல்லம் தோறும்

பிச்சை கொள நுகர்வர் பெரியார் சாலப் பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர்

இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம் கொண்டாரே

ஒவ்வொரு வீட்டு வாயிலின் முன்னே நின்ற வண்ணம் பெருமான் பிச்சை ஏற்றார் என்று திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.51.5) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கலிக்கச்சி=ஆரவாரம் மிகுந்த; கடை=இல்லங்களின் வாசல்; தேரும்=நாடிச் செல்லும்; கங்காளர்=பிரளய முடிவினில் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளின் மீது போட்டுக் கொண்ட பெருமான்; தார்=மாலை; பெருமான் எப்போதும் வெற்றியையே கண்டமையால், வெல் கொடியார் என்று அழைக்கின்றார்.

புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலமே நடமாடுவார்

உடை சூழ்ந்த புலித் தோலர் கலிக்கச்சி மேற்றளியுளார் குளிர் சோலை ஏகம்பத்தார்

கடை சூழ்ந்த பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழுமலர்த் தார்க் குழலியோடும்

விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே

வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.59.5) அப்பர் பிரான், பெருமானை, கடை தோறும் பலி கொள்பவர் என்று குறிப்பிடுகின்றார்.ஐம்பூதங்களின் குணங்களாய் பெருமான் இருக்கும் நிலை குறித்து அப்பர் பிரான் கூறுவது நமக்கு திருவாசகம் திருவண்டப் பகுதி அகவலின் வரிகளை நினைவூட்டுகின்றது. தீயினில் வெப்பத்தையும், ஆகாயத்தில் கலக்கும் தன்மையையும், காற்றினில் அசையும் தன்மையையும், நீரினில் குளிர்ச்சியையும், நிலத்தில் திண்மையையும் வைத்தவன் சிவபெருமான் என்று கூறுவது இங்கே ஒப்பு நோக்கத் தக்கது. ஒலி என்பது ஆகாயத்திற்கு உரிய குணமாகும். காற்று தொடு உணர்வு (ஊறு) மற்றும் ஒலி ஆகிய இரண்டு பண்புகளை உடையது. அடுத்த பூதமாகிய தீயின் குணங்கள், உருவம், தொடு உணர்வு மற்றும் ஒலியாகும். நீர், சுவை, ஊறு, உருவம் மற்றும் ஒலி ஆகிய நான்கு பண்புகளை உடையது. நிலமாகிய ஐந்தாவது பூதம், வாசனை (நாற்றம்), சுவை, ஊறு, உருவம் மற்றும் ஒலி ஆகிய ஐந்து பண்புகளை உடையது ஆகும். இலங்கு=இயைந்து இருக்கும் நிலை; கால்=காற்று: கடை=வீட்டு வாயில்; இயைந்து என்ற சொல் நீர், தீ, காற்று, மற்றொரு பூதமாகிய ஆகாயம் ஆகிய அனைத்துக்கும் பொருந்தும் என்பதால், மண் என்ற சொல்லுக்கு முன்னே வைத்து, அனைத்து பூதங்களுடன் இணைத்து பொருள் கொள்ள வேண்டும். ஐந்து பூதங்கள் மற்றும் சூரியன் சந்திரன் ஆன்மா ஆகிய எட்டு பொருட்களுடன் இறைவன் இணைந்து இருக்கும் தன்மை அட்டமூர்த்தி என்ற தொடரால் பல தேவார பதிகங்களில் குறிக்கப் படுகின்றது. அனைத்து உலகங்களையும் உலகப் பொருட்களையும் தோற்றுவித்து, உலகத்துச் செல்வங்களுக்கு உண்மையான உரிமையாளனாக இருந்தாலும், ஊரூராக சென்று பிச்சை எடுக்கும் பெருமானின் செயல், விகிர்தர் என்று பெருமானை அப்பர் பிரான் அழைக்கத் தூண்டியது போலும்.

மண்ணிலங்கு நீர் அனல் கால் வானுமாகி மற்றவற்றின் குணம் எலாமாய் நின்றாரும்

பண்ணிலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும்

கண்ணிலங்கு நுதலாரும் கபாலம் ஏந்திக் கடைதோறும் பலி கொள்ளும் காட்சியாரும்

விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணியாரும் வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனாரே

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களுடன் இணைந்து, அந்த ஐந்து பூதங்களின் பண்புகளாக இருப்பவன் பெருமான்; பண்ணுடன் இணைந்த பாடல்கள் இசைக்கப்பட அத்தகைய பாடல்களுக்கு ஏற்ப ஆடப்படும் கூத்து நிகழ்கின்ற, பருப்பதம் மற்றும் பாசூர் ஆகிய தலங்களில் நிலையாக உறைபவன் சிவபெருமான். மூன்றாவது கண் இணைந்த நெற்றியினைக் கொண்டுள்ள பெருமான், தனது கையினில் கபாலம் ஏந்தி இல்லங்கள் தோறும் சென்று பலி ஏற்கின்றான். வானில் உலவும் பிறைச் சந்திரனைத் தனது தலையில் மாலையாக அணிந்துள்ள பெருமான், மற்றவரிடமிருந்து மாறுபட்ட விகிர்தனாக விளங்கும் பெருமான், வெண்ணி என்று அழைக்கப் படும் தலத்தில் உறைகின்றான் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.65.7) தனது வறுமை காரணமாக பெருமான் பல இல்லங்கள் சென்று பலி ஏற்கின்றான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பிச்சைப் பெருமானின் கோலத்திற்கு ஏற்ப வறியவனாக சென்ற பெருமான், உண்மையில் வறியவன் அல்லன், சிறந்த செல்வன் என்பதை கயிலைச் செல்வன் என்ற தொடர் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். உழலும்=திரியும்; தத்துவன்=மேம்பட்டவன்; நல்குரவு=வறுமை; சைவத்தின் ஆறு உட்பிரிவுகள், பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமம், பைரவம், சைவம் இந்த ஆறும் வெவ்வேறு சமயங்கள் போல் தோன்றினாலும், இந்த ஆறு சமயங்களும் பெருமானையே தலைவனாக ஏற்றுக் கொள்கின்றன. தனக்குத் தானே நிகரான உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் சேர்த்தவனும், ஆரவாரத்துடன் கீழே இறங்கி வந்த கங்கையைத் தனது சடையில் அடக்கிய பின்னர் பகீரதன் வேண்டிய போது மிகுந்த விருப்பத்துடன் சிறிது சிறிதாக வெளியேற்றியவனும், வடக்கில் இமயமலையில் உள்ள கயிலை மலையில் உறையும் செல்வனும், அளவற்ற செல்வங்களை உடையவனாய் இருந்தும் வறியவன் போன்று வீடுகள் தோறும் பிச்சைக்கு அலைபவனும், ஆறு வகையான சைவ சமயங்களுக்கும் தலைவனாக இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் மேம்பட்டவனாக இருப்பவனும், உத்தமனாக இருப்பவனும். தனக்குத் தானே நிகரான தலைவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

உமையவளை ஒரு பாகம் சேர்த்தினான் காண் உகந்து ஒலிநீர்க் கங்கை சடை ஒழுக்கினான் காண்

இமய வடகயிலைச் செல்வன் தான் காண் இல் பலிக்குச் சென்று உழலும் நல்கூர்ந்தான் காண்

சமயம் அவை ஆறினுக்குத் தலைவன் தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானேயாய

இமையவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

தலையாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.79.7) அப்பர் பிரான், வீடுகள் தோறும் சென்று பெருமான் பலி ஏற்றார் என்று கூறுகின்றார். கடை தோறும்=வீட்டின் வாயில்கள் தோறும்; பலி=பிச்சை; முடை நாற்றம்=இறந்த உடல்களிலிருந்து எழும் நாற்றம்; முதுகாடு= சுடுகாடு; முன்னான் பின்னான் இன்னாளான் என்று மூன்று காலமுமாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இடபத்தின் மீதேறி சென்று பல வீட்டின் வாயில்கள் தோறும் நின்று பிச்சை ஏற்பவனும், அட்ட வீரட்டத் தலங்களில் நிலையாக உறைபவனும், தனது திருமேனியில் வெண்ணீறு அணிபவனும், இறந்த உடல்களிலிருந்து எழுகின்ற நாற்றம் மிகுந்த சுடுகாட்டில் நடனம் ஆடுபவனும், இறந்த காலம் எதிர்காலம் மற்றும் நிகழ் காலம் ஆகிய மூன்று காலங்களாக இருப்பவனும், புலியின் தோலை உரித்து ஆடையாக மிகுந்த மகிழ்ச்சியுடன் அணிபவனும், உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்திருக்கும் ஒப்பற்றவனும், சடைமுடியை உடையவனும், ஆகிய தலையாலங்காட்டில் உறையும் தலைவனைச் சார்ந்து வாழாமல், எனது வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக கழித்து விட்டேன் என்று தனது இளமைக் காலத்தை நினைத்து அப்பர் பிரான் வருந்தும் பாடல்.

விடை ஏறிக் கடை தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண்ணீற்றானை

முடை நாறு முதுகாட்டில் ஆடலானை முன்னானைப் பின்னானை இந்நாளானை

உடை ஆடை உரிதோலே உகந்தான் தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன் தன்னைச்

சடையானைத் தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே

ஆலம்பொழில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.86.7) அப்பர் பிரான், பலரும் தன்னை இகழ்ந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் பல இல்லங்கள் சென்று தொடர்ந்து பெருமான் பிச்சை ஏற்கின்றான் என்று கூறுகின்றார். தான் சமண மதத்தில் இருந்த நாளில், தன்னைக் குறித்து கவலை கொண்ட தனது தமக்கையார் திலகவதியார் நாள்தோறும் இறைவனிடம் தனது தம்பி மனம் திருந்தி சைவ சமயத்திற்கு திரும்ப வரவேண்டும் என்று வேண்டிய காலத்தில், ஒரு நாள் சிவபெருமான் அவரது கனவில் தோன்றி, உனது தம்பி முன்னமே என்னை அடைய தவம் செய்தான், யான் அவனுக்கு சூலை நோய் கொடுத்து ஆட்கொள்வேன் என்று கூறியதை, அப்பர் பிரான், தனது தமக்கையார் தன்னிடம் கூற கேட்டிருந்தார் போலும். இதனைத் தான் இங்கே, பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்று இறைவன் தன்னை ஆட்கொள்வதற்கு முடிவு செய்ததை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் போலும். தூய்மையே வடிவமாக உள்ள இறைவன், தூய்மையான இடத்தைத் தானே விரும்புவான். தமது மனத்தினை பெருமான் உறைவதற்கு தகுதியாக தூய்மை செய்யும் வண்ணம் பெருமான் தன்னை சோதித்தாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். அவர் வாழ்வில் எதிர் கொண்ட சோதனைகள் தாம் அப்பர் பிரானை புடம் போட்ட பொன்னாக மாற்றியது என்றால் மிகையாகாது. குற்றங்கள் மிகுந்த எனது உடலில் புகுவதற்கு தீர்மானம் செய்த பெருமான், பல சோதனைகளை அளித்து என்னை சோதித்து எனது மனதினை தூய்மை செய்தவன் தூய்மையே வடிவமான பெருமான் ஆவான். எல்லோரும் தன்னை இகழ்ந்ததையும் பொருட்படுத்தாமல் அந்நாளில், பலி இடுவீர்களாக என்று தாருகாவனத்து முனிவர்களின் இல்லங்களுக்கு சென்று திரிந்தவனும், தனது புகழினையும் திருநாமத்தையும் சொல்லாத மாந்தர்களை நினையாதவனும், தொடர்ந்து தனது பொன்னான திருவடிகளைப் பேணும் அடியார்களுக்கு பரிசாக, அவனது அருளால் அன்றி வேறு எவராலும் செல்ல முடியாத முக்தி நிலைக்குத் தனது அடியார்கள் செல்லுமாறு உதவி செய்பவனும், ஆலம்பொழில் என்ற இடத்தில் உள்ள திருக்கோயிலில் உறைபவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ சிந்திப்பாயாக என்று தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னைப் புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை

எல்லாரும் தன்னை இகழ அந்நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானைச்

சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானைத் தொடர்ந்து தன் பொன்னடியே பேணுவாரைச்

செல்லாத நெறி செலுத்த வல்லான் தன்னைத் திருவாலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

பெருமான் இடும் பணியை தங்களது தலையால் செய்வதற்கு எண்ணற்ற தேவர்களும், பூத கணங்களும் காத்துக் கொண்டு இருக்கையில், பெருமான் தானே பலி ஏற்கச் செல்கின்றார் என்று அப்பர் பிரான் கஞ்சனூர் தலத்து பதிகத்தின் பாடலில் (6.90.7) கூறுகின்றார். அடியார்கள் தான் ஏந்திச் செல்லும் பிச்சைப் பாத்திரத்தில் தங்களுடைய மலங்களை பிச்சையாக இட்டால் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களை உய்விக்கும் திறன் படைத்தவன் அவன் ஒருவன் தான் என்பதால், இந்த பணிக்கு வேறு எவரையும் நியமிக்காமல் தானே இறைவன் செல்கின்றான் என்பது பெரியோர்களின் விளக்கம். இந்த செய்கை உயிர்களின் பால் பெருமான் கொண்டுள்ள கருணையினையும், உயிர்கள் தங்களது மலங்களைக் களைந்து வீடுபேறு பதவியைப் பெற்று நிலையான இன்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்பதில் பெருமான் கொண்டுள்ள அக்கறையினையும் வெளிப் படுத்துகின்றது. பெருமான் பலியேற்க வருவதை நமது ஊனக் கண்களால் நாம் காணமுடியாது. எனவே, நாம் இடவிருக்கும் பலியினை ஏற்றுக் கொள்வதற்கு, அவர் நம்மைத் தேடி வருவதாக நாம் கற்பனை செய்து கொண்டு, யான் எனது என்ற செருக்கினையும், நம்மை பீடித்துள்ள மூன்று மலங்களையும் அவனது திருப்பாதங்களில் சமர்ப்பித்து, உய்வினை அடைவோமாக.

நாரணனும் நான்முகனும் அறியாதானை நால்வேதத்து உருவானை நம்பி தன்னைப்

பாரிடங்கள் பணி செய்யப் பலி கொண்டுண்ணும் பால்வணனைத் தீவணனைப் பகலானானை

வார் பொதியும் முலையாளோர் கூறன் தன்னை மான் இடம் கை உடையானை மலிவார் கண்டம்

கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேனே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.6.6) சுந்தரர், பிராட்டியுடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். கூறுபட்ட கொடியும் நீரும் என்று சுந்தரர் குறிப்பிடுவதால், மாதொருபாகன் கோலத்துடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக உணர்த்துகின்றார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானை காட்டு யானை என்பதை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். மாறுபட்ட=பெருமானை எதிர்த்து வந்த தன்மை சொல்லப் படுகின்றது. தன்னை எதிர்த்து வந்த மதயானையைக் கொன்ற பின்னர் அந்த யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட போதிலும் தனது உடலுக்கு எந்த விதமான கேடும் அடையாதிருந்த ஆற்றலை உடைய பெருமானின் தன்மைக்கு, பிறர் இடுகின்ற பிச்சையை நாடி அவர்களது இல்லத்திற்கு செல்லுதல், பெருமானின் பெருமைக்கு தகுந்த செயல் அல்ல என்று கூறுகின்றார்.

மாறுபட்ட வனத்தகத்தின் மருவ வந்த வன்களிற்றைப்

பீறி இட்டமாகப் போர்த்தீர் பெய்பலிக்கு என்று இல்லம் தோறும்

கூறு பட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி

வேறுபட்டுத் திரிவதென்னே வேலை சூழ் வெண்காடனீரே

அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.9.3), தனது கையில் மண்டை ஓட்டினை ஏந்தியவாறு, மகளிர் தங்களது கைகளை சாய்த்து இடுகின்ற பிச்சையை ஏற்றுக் கொள்ள திரிவது, உண்ணும் உணவினுக்கு வழியற்ற வறியவர் போலத் திரிவது, அட்ட மூர்த்திகளாக விளங்கி உலகின் அனைத்து உயிர்களையும் பொருட்களையும் இயக்கும் ஆற்றல் படைத்த பெருமானின் பெருமைக்கு தக்க செயல் அல்ல என்று சுந்தரர் கூறுகின்றார். சவிதா= சூரியன்; இயமானன்=ஆன்மா;

தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனீர்

சரிக்கும் பலிக்குத் தலை அங்கை ஏந்தித் தையலார் பெய்யக் கொள்வது தக்கது அன்றால்

முரிக்கும் தளிர்ச் சந்தனத்தோடு வேயும் முழங்கும் திரைக் கைகளால் வாரி மோதி

அரிக்கும் புனல் சேர் அரிசிற்றென் கரை அழகார் திருப்புத்தூர் அழகனீரே

திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.19.7) சுந்தரர், பெருமானை, தலை ஓட்டில் பொருந்துகின்ற பிச்சையை வேண்டி இல்லங்கள் தோறும் திரிகின்ற தன்மை உடைய செல்வர் என்று கூறுகின்றார்,

தலையிடையார் பலி சென்று அகந்தோறும் திரிந்த செல்வர்

மலையுடையாள் ஒரு பாகம் வைத்தார் கல் துதைந்த நன்னீர்

அலையுடையார் சடை எட்டும் சுழல அருநடம் செய்

நிலையுடையார் உறையும் இடமாம் திருநின்றியூரே

கச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.41.2) சுந்தரர், பசியால் வருந்திய தனக்கு, ஒரு அந்தணர் வேடம் தரித்தவராக பல இல்லங்கள் சென்று உணவினை பிச்சையாக கேட்டு வாங்கி வந்து தனக்கு அளித்த பெருமானின் கருணைச் செயலை நினைவு கூர்ந்த சுந்தரர், பிச்சைப் பெருமானின் திருக்கோலத்தை இந்த பாடலில் வடித்து மகிழ்கின்றார். தனது கால்களில் அணிந்திருந்த கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் சென்ற பெருமான் என்று குறிப்பிட்டு, மாதொருபாகனாக பெருமான் பலியேற்கச் சென்ற தன்மை குறிப்பிடப் படுகின்றது.

கச்சேர் அரவு ஒன்று அரையில் அசைத்துக் கழலும் சிலம்பும் கலிக்கப் பலிக்கென்று

உச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே

இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனை ஆள்வாய்

அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.46.6) பெருமான் பலி ஏற்பதையும், நஞ்சு உண்டதையும் மிகவும் நயமாக இணைத்து, பெருமானின் எல்லையற்ற கருணையை குறிப்பிட்டு, தனது கோரிக்கையை சுந்தரர் பெருமானிடம் சமர்பிக்கும் பாங்கினை நாம் உணரலாம். இலவ=இலவம்பூ; பஞ்சு போன்று மென்மையான இதழ்கள் உடைய அன்னை என்று கூறுகின்றார். கலவ மயில்=தோகை உடைய மயில்; பல இல்லங்கள் சென்று பிச்சை எடுத்த பெருமான், தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்கி நஞ்சினையும் உட்கொண்டார் என்று கூறுகின்றார். தன்னிடும் முறையிடும் அடியார்களின் வேண்டுகோளைக் கேட்ட பின்னர், அவர்களுக்கு உதவி செய்யாமல் இருக்க இயலாத பெருமான், தனக்கு பட்டாடைகளும் வாசனைப் பொருட்களும் தாரமால் இருப்பது தவறன்றோ என்று சுந்தரர் முறையிடும் பாடல். எச்சும் போது= உச்சி வேளை, நண்பகல்; பிராட்டியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு எருது ஏறியவராக வேத கீதங்களைப் பாடிக் கொண்டு பலரும் இடுகின்ற பிச்சையை ஏற்பதற்காக பெருமான் உச்சிப் போதினில் பல இல்லங்கள் சென்றார் என்று இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார்.

இலவ இதழ் உமையோடு எருது ஏறிப் பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சும் போது

பல அகம் புக்கு உழிதர்வீர் பத்தோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ

உலவுதிரை கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட உண்டருளிச் செய்தது உமக்கு இருக்கொண்ணாது இடவே

கலவமயில் இயலவர்கள் நடமாடும் செல்வக்கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.46) முதல் பாடலில் பத்தூர் புக்கு இரந்து உண்ணும் பெருமான், பாவையரிடம் வஞ்சகமான வார்த்தைகள் பேசுவதாக சுந்தரர் கூறுகின்றார். தன்னிடம் உள்ள செல்வத்தை மறைத்து வைத்து விட்டு, தம்மிடம் ஏதும் அணிகலன் இல்லாதவர் போன்று இறந்தவர்களின் எலும்புகளை அணிந்து கொண்டுள்ள பெருமானே, உமது செல்வத்தை எங்கே மறைத்து வைத்துள்ளீர் என்று கேட்கின்றார். கிறி= பொய்யான வார்த்தைகள்; படிறு=வஞ்சகம்; சே=எருது, இடபம்; சேரமான் பெருமாள் நாயனார் தன்னைக் காண்பதற்கு திருவாரூர் வருவதை அறிந்து கொண்ட சுந்தரர், தனது நண்பர் சேரமான் நாயனாரை தகுந்த முறையில் வரவேற்பதற்கும் அவருக்கு இணையான முறையில் தனது தரத்தை உயர்த்திக் கொள்வதற்கும் தேவையான ஆடை ஆபரணங்கள் முதலான பொருட்கள் பொன் ஆகியவற்றை பெருமான் தர வேண்டும் என்று வேண்டும் பாடல். தன்னிடம் மிகுந்த செல்வம் இருந்தும், அடுத்தவருக்கு கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டு பெருமான் ஆடுகின்ற நாடகமே எலும்பு மாலையை அணிகலனாக அணிந்த நிலை என்று குறிப்பிடும் சுந்தரர், இவ்வாறு நாடகமாடுவது பெருமானுக்கு புதியதல்ல என்பதை உணர்த்தும் பொருட்டு தாருக வனத்து நிகழ்ச்சியை முதல் அடியில் குறிப்பிடுகின்றார். பல ஊர்கள் சென்று பாமாலைகள் பாடிய வண்ணம் திரிந்து இரந்த பெருமான், எதிர்பட்ட பெண்மணிகளிடம் பொய்யான சொற்களைப் பேசியும், தனது தன்மையை மறைத்துக் கொண்டும் வஞ்சமாக நடந்து கொண்டார் என்று கூறுகின்றார்.

பத்தூர் புக்கு இரந்துண்டு பல பதிகம் பாடி பாவையரைக் கிறி பேசி படிறாடித் திரிவீர்

செத்தார் தம் எலும்பணிந்து சே ஏறித் திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கொரு நாள் இரங்கீர்

முத்தாரம் இலங்கி மிளிர் மணி வயிரக் கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும்

கத்தூரி கமழ் சாந்து பணித்தருள வேண்டும் கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.57.2) சுந்தரர், பிச்சை ஏற்கும் தொழிலை காதலித்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.

படைக்கண் சூலம் பயில வல்லானைப் பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானைக்

கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானைக் காமன் ஆகம் தனை கட்டழித்தானைச்

சடைக்கண் கங்கையை தாழவைத்தானைத் தண்ணீர் மண்ணிகரையானைத் தக்கானை

மடைக்கண் நீலம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே

நன்னிலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.98.1) சுந்தரர், பண் போன்ற இனிய மொழிகளை உடைய பெண்மணிகள் இருக்கும் இடங்களில் திரிந்து பலி ஏற்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பெருமானை, பண்டரங்கன் என்று அழைக்கின்றார். தண்ணியல் வெம்மையினான் என்ற தொடர் மூலம் அறக்கருணை மற்றும் மறக்கருணையால் உயிர்களுக்கு அருள் புரிபவன் பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். உயிர்களின் தன்மைக்கு ஏற்றவாறு பெருமானின் கருணைத் திறம் மாறுபடுகின்றது.

தண்ணியல் வெம்மையினான் தலையிற் கடை தோறும் பலி

பண்ணியன் மென்மொழியார் இடம் கொண்டுழல் பண்டரங்கன்

புண்ணிய நான்மறையோர் முறையாலடி போற்றிசைப்ப

நண்ணிய நன்னிலத்துப் பெருங் கோயில் நயந்தவனே

ஊர் தோறும் பலி கொண்டு உயிர்களை உய்விக்கும் பெருமான் என்று சேக்கிழார் பெரிய புராணத்து பாடலில் கூறுகின்றார். இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். பெருமான் பலி ஏற்பது நமக்கு அருள் புரிவதற்காக என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுவது, திருமூலரின் கருத்தினை பின்பற்றியே.

ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே

பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்

சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்

ஆர் தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில் . .

பொழிப்புரை:

மாலையாக கோர்க்கப்பட்ட கொன்றை மலர்களையும் குளிர்ந்த பிறைச் சந்திரனையும் தனது தலைமாலையாக சூட்டிக் கொண்ட இறைவன், சிறப்பு மிக்க பாடல்களை பாடியவராக அதற்கேற்ப சிறந்த நடனம் ஆடியவராக, ஒழுக்க சீலராக பெருமான் எனது இல்லம் வந்தார். பல ஊர்களும் சென்று பிச்சை ஏற்ற பெருமான் எனது இல்லம் வந்த போது, நான் அவரது அழகினில் நற்பண்புகளில் ஆற்றலில் மயங்கி அவர் பால் தீராத காதல் கொண்டேன். எனது காதல் ஈடேறாத காரணத்தால், எனக்கு காதல் நோய் வாய்த்தது. இந்த நிலைக்கு காரணமாக உள்ள பெருமான், தனது கழுத்தினில் ஆலகாலம் உட்கொண்டதால் கருமை நிறம் பதித்து காணப்படும் பெருமான், அடர்ந்து நெருங்கி வளர்ந்து இருளுடன் காணப்படும் சோலைகள் நிறைந்த கானூர் தலத்தினில் உறைகின்றார்.

பாடல் 6:

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி மற்றும் பாடல்கள் 6 7 8(திதே 0775)

முளி வெள்ளெலும்பு நீறு நூலும் மூழ்கு மார்பராய்

எளி வந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ளத்

தெளிவு நாணும் கொண்ட கள்வர் தேறலார் பூவில்

களி வண்டு யாழ் செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே

விளக்கம்:

முளி=காய்ந்த; தேறல்=தேன்; எளி வந்தார்=இரக்கத்திற்கு உரியவர்; இந்த பாடலில் இறைவனை, சம்பந்த நாயகி கள்வர் என்று குறிப்பிட்டு, தான் அறியாமலே தனது கற்பினையும் நாணத்தையும் திருடிக் கொண்ட பெருமான் என்பதை உணர்த்துகின்றாள். தெளிவு=உள்ளத் தெளிவு; மிகவும் எளியவராக, இரக்கத்திற்கு உரியவராக, பிச்சை கேட்டு வந்தவர் என்பதால், தான் அவரை தனது இல்லத்தின் உள்ளே வருமாறு அழைத்ததாக கூறும் சம்பந்த நாயகி, உள்ளே வந்தவர், தான் நினைத்ததற்கு மாறாக தனது உள்ளத்தில் கலக்கத்தை உண்டாக்கிய பெருமான், தனது கற்பினையும் நாணத்தையும் நாணும் குணத்தையும் கொள்ளை கொண்டதாக கூறுகின்றாள். பொதுவாக அயல் ஆண்களைக் கண்டால் நாணம் கொள்வது உயர்ந்த குணமுடைய பெண்களின் பண்பு. எனவே அயலவரைப் பார்ப்பதையும் அவர்களை இல்லத்திற்குள்ளே அனுமதிப்பதும் அத்தகைய பெண்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் பிச்சை எடுக்கும் நோக்கத்துடன் வந்த பெருமான் என்று கருதியதாலும், முப்புரி நூல் தரித்து திருநீறு உடலெங்கும் பூசி வந்தமையாலும், பலியேற்க வந்தவர் பால் இரக்கம் கொண்டு இல்லத்தின் உள்ளே வர அனுமதி தந்தாள் போலும். மேலும் எந்த விதமான அணிகலனும் இன்றி காய்ந்த எலும்புகள் மட்டுமே ஆபரணமாக கொண்டுள்ள இறைவனை எளிய கோலத்தவர் என்று தானே எவருக்கும் நினைக்கத் தோன்றும். இறைவனை, சேடர் என்று குணசீலராக காட்சியளித்த பெருமான் என்று இதே பதிகத்தின் முந்திய பாடலில் குறிப்பிட்டதன் பின்னணியில், இல்லத்தின் உள்ளே வர சம்பந்த நாயகி அனுமதி அளித்தாள் என்று கருதுவதும் பொருத்தமே. இல்லத்தின் உள்ளே அவர் வரும் வரை சம்பந்த நாயகியின் மனதினில் தெளிவு இருந்தது. ஆனால் பெருமான் உள்ளே வந்த பின்னர், அவரது அழகினில் பண்புகளில் தனது மனதினை பறிகொடுத்த நாயகிக்கு உள்ளத்தில் கலக்கம் ஏற்பட்டதை, இங்கே தெளிவும் கொண்ட கள்வர் என்று குறிப்பிடுகின்றாள். மேலும் அயலவரை நேரில் நிமிர்ந்து பார்ப்பதை தவிர்ப்பதை வழக்கமாக கொண்டிருந்த அவள், தனது மன கலக்கத்தின் காரணமாக, வந்தவரை உற்று பார்த்ததை நாணும் கொண்ட கள்வர் என்ற தொடரால் குறிப்பிடுகின்றாள். பண்டைய நாளில் அதன் முன்னர் அறிமுகம் ஆகாத ஆடவரை நினைத்தாலே பெண்கள், தங்களது கற்பு பறிபோயிற்று என்ற எண்ணம் கொண்டிருந்தனர். வந்தவரின் அழகு தந்த மயக்கத்தில், அவரை உள்ளே வரவழைத்தன் பயனாக, தனது நாணம் தெளிவு, கற்பு ஆகிய பண்புகளை இழந்த தலைவி, தனது மாறிய தன்மைக்கு வந்தவர் தான் காரணம் என்று அவரை கள்வர் என்று பழிக்கின்றாள். கண்டவுடன் தான் காதல் கொள்ளும் அளவுக்கு பெருமான் மிகுந்த அழகுடன் நல்ல பண்புகளுடன் திகழ்ந்தார் என்பதை தலைவி உணர்த்துவதாக உள்ள பாடல்.

இந்த பாடலிலும் சித்தாந்த கருத்து உணர்த்தப் படுவதை நாம் அறியலாம். மனதினில் தெளிவுடன் இருந்த ஆன்மா, இறைவன் தனது உள்ளத்தினில் புகுந்த பின்னர் தனது நிலையில் மாற்றம் அடைகின்றது. அந்நாள் வரை உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது கொண்டிருந்த ஆசை, பற்று, குறைந்து பாசத்திலிருந்து விடுபடுவதற்கு முயற்சி செய்கின்றது. இந்த நிலையே தெளிவு கொண்டார் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. நிலையற்ற உலகத்துப் பொருட்கள் மீது பாசம் வைத்து வாழ்வதே மனித உயிரின் பண்பு என்பதால், அந்த நிலையினை தெளிவு என்று கேலியாக குறிப்பிட்டார் போலும். உயிர் தனது உண்மையான விருப்பமான வீடுபேற்றினை அடைவதற்கு தகுதி பெறவேண்டும் என்றால், இந்த நிலையிலிருந்து மாறவேண்டும் என்பதால், இறைவனே ஆன்மாவின் உள்ளத்தில் புகுந்து, உலகப் பொருட்கள் மீது பாசம் வைத்துள்ள தெளிவான நிலையை மாற்றி, பாசமற்ற நிலையினை உருவாக்குவார் என்ற கருத்து இங்கே கூறப்படுகின்றது.

பொழிப்புரை:

காய்ந்த எலும்புகளை உடலில் ஆபரணமாக அணிந்து, மிகவும் எளிய கோலத்தவராக, உடல் முழுதும் திருநீறு பூசியவராக, முப்புரி நூல் மார்பினில் அணிந்தவராக, பிச்சை என்று கேட்டு வந்த பெருமான் எனது இல்லத்தின் உள்ளே புகுந்தார். அவரைக் கண்ட நான், அவரது அழகினில் நற்பண்புகளில் எனது மனதினை பறிகொடுத்ததன் விளைவாக, எனது மனதினில் அதுவரை இருந்த தெளிவு மறைந்து கலக்கம் ஏற்பட்டது. அந்நாள் வரை அயல் ஆடவரை பார்ப்பதையும் தவிர்த்து வந்த நான், அவரது தோற்றத்தில் மயங்கி, எனது நாணத்தையும் கற்பையும் இழந்தேன்; எனது மனத் தெளிவு, நாணம் கற்பு ஆகிய பண்புகளை கொள்ளை கொண்ட கள்வர், வெண் பிறைச் சந்திரனை அணிந்தவரும் கானூர் தலத்தில் உறைபவரும் ஆகிய பெருமான் ஆவார். தேன் நிறைந்த பூக்களில் உள்ள தேனை உண்டு களிப்புடன் திகழும், தங்களது இன்பக் களிப்பினை யாழின் இசை போன்று இனிய ரீங்காரம் மூலம் வெளிப்படுத்தும் வண்டுகள் திரியும் சோலைகள் நிறைந்த தலமாகும்.

பாடல் 7:

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி மற்றும் பாடல்கள் 6 7 8(திதே 0775)

மூவா வண்ணர் முளை வெண் பிறையர் முறுவல் செய்திங்கே

பூவார் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசிப்

போவார் போல் மால் செய்து உள்ளம் புக்க புரி நூலர்

தேவார் சோலைக் கானூர் மேய தேவதேவரே

விளக்கம்:

மூவா=மூப்படையாது; முளைத்த=முளை விட்டெழுந்த, முளைத்தெழுந்த; தனது கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து முற்றிலும் அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன் பெருமானை சரணடைந்த சந்திரன், அழியும் நிலையிலிருந்து மாற்றப்பட்டு, அன்றிலிருந்து வளரத் தொடங்கியதால், அழியும் வெண் பிறை முளை வெண் பிறையாக மாறியதை இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பொக்கம்=பொய்; மால்=மயக்கம்; தேவார்=தெய்வத்தன்மை பொருந்திய; புரிநூலர் என்பதால் ஒழுக்க சீலராக இருப்பார் என்று தான் நம்பிய பெருமான், அதற்கு மாறாக பொய் பேசுபவராகவும், தனது சிரிப்பினால் என்னை மயக்குபவராகவும் இருந்தார் என்று சம்பந்த நாயகி இந்த பாடலில் கூறுகின்றாள், சம்பந்த நாயகியின் கூற்று அனைத்தும் கற்பனை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பெருமான் தன்னை மயக்கியதாகவும், தான் பெருமான் பால் காதல் கொண்டதாகவும் கற்பனை செய்து, அந்த கற்பனைக்கு ஏற்றவாறு பல நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு மகிழ்தல், பெருமான் பால் தீராத காதல் கொண்ட தலைவியாக தன்னை பாவிக்கும் அருளாளர்கள் விரும்பிச் செய்யும் செயல்கள். மூவா என்ற சொல்லுக்கு மங்காத என்று பொருள் கொண்டு ஒளிவீசும் வண்ணக் கலவையாக பெருமானின் திருமேனி விளங்கியதை உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. செம்மேனி நாதர் என்பது தலத்து இறைவனின் திருநாமம். இந்த திருநாமத்தை பவளவண்ணர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் இதே பதிகத்தின் அடுத்த பாடலில் காணலாம். பவளத்தின் நிறம் போன்று மேனி, செம்பட்டை நிறத்தினில் சடை,வெண்மையான பிறைச் சந்திரன், சிவந்த கொன்ற மலர்கள், என்று அழகிய வண்ணக் கலவையாக பெருமான் விளங்குவதைக் காண்பதற்கு கோடிக் கண்கள் இருந்தாலும் போதாது அல்லவா.

பிச்சை ஏற்றுக் கொண்ட பின்னர் வெளியே போகின்றவர் போல் பாசாங்கு செய்து, தன்னை மயக்கும் சிரிப்பினோடும் தனது இல்லத்திலே பெருமான் தங்கியதாக சம்பந்த நாயகி கற்பனை செய்வது போன்று அப்பர் நாயகி கற்பனை செய்வதாக சுவையான கற்பனை கொண்ட பாடல் (6.35.5) வெண்காடு தலத்தின் மீது அப்பர் பிரானால் அருளப்பட்டுள்ளது. மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கும் குழை அணியை காதில் அணிந்தவராய், குட்டையான உருவத்துடனும் பருத்த உடலுடனும் அவருடன் வந்த பூதங்கள் கொடுகொட்டி என்ற இசைக் கருவியை இசைத்தும் பாடியும் அவரைச் சூழ்ந்து வர, அந்த பாடலுக்கும் இசைக்கும் ஏற்றவாறு நடனம் ஆடி வந்த பெருமான், எனது உள்ளத்தினை கொள்ளை கொள்ளும் நோக்கத்துடன் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தார். இவ்வாறு என்னைச் சுற்றித் திரிந்த பெருமானின் நோக்கத்தினை அறியாத நான் திரும்பிப் பார்த்தபோது, அவரது கள்ள விழிப் பார்வை என்மேல் படுவதைக் கண்டேன்; என்னை நேராக பார்க்காமல் அரைக் கண்ணால் பார்க்கும் அவர், ஒரு சமயம் எனது கண்களுக்குள்ளே அகப்படுவார் போல் தோன்றினாலும் அடுத்த கணமே எனது கண் பார்வையிலிருந்து அகன்று விடுகின்றார். ஆனாலும் அவரது உருவம் எனது உள்ளத்தில் நிலையாக பதிந்து இருப்பதால் எனது அகக்கண்ணால் நான் அவரை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். இவ்வாறு எனக்கு போக்கு காட்டிய பெருமான், வெள்ளத்தைத் தனது சடை முடியில் அடக்கியவர், எப்போதும் வேதங்கள் ஓதும் நாவினை உடையவராக இருப்பவர். அவர் தான் வெண்காடு தலத்தினை விரும்பியேற்று, அதனில் உறைகின்ற விகிர்தனார் ஆவார் என்பதே இந்த பாடலில் பொழிப்புரை ஆகும்.

கொள்ளைக் குழைக் காதில் குண்டை பூதம் கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட

உள்ளம் கவர்ந்திட்டுப் போவார் போல உழிதருவர் நான் தெரிய மாட்டேன் மீண்டேன்

கள்ள விழி விழிப்பர் காணாக் கண்ணால் கண்ணுள்ளார் போலே கரந்து நிற்பர்

வெள்ளச் சடைமுடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே

பொழிப்புரை:

மூப்பு அடையாது என்றும் அழகாக விளங்கும் திருமேனியை உடையவனும் முளைத்து எழுந்து வளர்கின்ற நிலையில் உள்ள ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனும் ஆகிய பெருமான், புன்முறுவல் செய்தவாறு தனது சடையினில் கொன்றை மலர்களை சூடியவாறு எனது இல்லத்திற்கு வந்தார். இல்லத்திலிருந்து வெளியே போவார் போல் பாசாங்கு செய்து வெளியே போகாமல் எனது இல்லத்தில் இருந்தும் பல பொய்யான வார்த்தைகளை பேசி என்னை மயக்கியும் எனது உள்ளத்தில் இடம் கொண்ட அவர், முப்புரி நூல் அணிந்தவராக இருந்தார்; இவ்வாறு எனது இல்லம் புகுந்ததுமன்றி, என்னையும் அறியாமல் எனது உள்ளத்திலே புகுந்த அவர், தெய்வத்தன்மை வாய்ந்த சோலைகள் நிறைந்த கானூர் தலத்தில் பொருந்தி உறையும் தேவதேவர் ஆவார்.

பாடல் 8:

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 5 தொடர்ச்சி மற்றும் பாடல்கள் 6 7 8(திதே 0775)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 8 தொடர்ச்சி மற்றும் பாடல் 9 (திதே 0776)

தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல

முழவ மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்

குமிழின் மேனி தந்த கோல நீர்மை அது கொண்டார்

கமழும் சோலைக் கானூர் மேய பவள வண்ணரே

விளக்கம்:

நீர்மை=இனிமை; தமிழ் மொழியில் புலமை பெற்றவன் என்று பல பாடல்களில் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் திருஞானசம்பந்தர் தான் தமிழ்மொழி பால் கொண்டுள்ள பற்றினை, அன்பினை, வெளிப்படுத்தும் வண்ணம் தமிழ் மொழி இனிமையானது என்று இந்த பாடலில் கூறுகின்றார். இடம் என்பது இங்கே நாயகியின் இல்லத்தை குறிக்கின்றது. பெருமானின் சொற்கள் தமிழ் மொழியினைப் போன்று இனிமையாக இருந்ததாக நாயகி இங்கே கூறுகின்றாள். குமிழின் மேனி=குமிழம்பூ நிறத்தில் உள்ள திருமேனி; குமிழம்பூ என்பது பாலை நிலத்தில் பூக்கும் ஒரு பூ வகை. பெண்களின் கூறிய மூக்கினுக்கு உவமையாக பல இலக்கியங்களிலும் சொல்லப் படுவது. பொன்னின் நிறத்திலும் மங்கிய சிவப்பு (Rose) வண்ணத்திலும் காணப்படுகின்றது. இங்கே பசலை பூத்த தனது மேனியின் நிறத்திற்கு உவமையாக குமிழம்பூ நிறத்தினை தலைவி குறிப்பிடுகின்றாள். கோல=அழகு; கோல நீர்மை=அழகின் தன்மை;

இல்லத்தின் உள்ளே வந்த பெருமான், அந்த இடத்தினை விட்டு பெயராமல் சிறிது நேரம் இருந்தார் என்று கூறும் தலைவி, பெருமான் அவ்வாறு இருந்ததை. தான் அவர் பால் காதல் கொண்டிருந்தது போல் அவரும் என் பால் கொண்டுள்ள காதலால் தன்னை விட்டு பிரியாமல், தனது இல்லத்தில் நீண்ட நேரமாக இருக்கின்றார் என்று எண்ணினாள் போலும். ஆனால் அவ்வாறு எண்ணிய மாத்திரத்தில், பெருமான் திடீரென்று மறைந்து விடவே, அவர் மறைந்ததால் ஏற்பட்ட ஆற்றாமையால் தனது மேனி இளைத்தது, உருவத்தின் அழகு குறைந்தது, தனது உடலில் பசலை படர்ந்து உடலின் நிறமே மாறியது. என்று கூறுகின்றாள்.

வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.2) திருஞான சம்பந்தர், பெருமான் பண்ணுடன் பொருந்திய பாடல்களை பாடியும் ஆடியும் பலி கொள்வதாக குறிப்பிடுகின்றார். பண்ணுடன் இசைத்துப் பாடப்பட்ட வேத கீதங்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மாதொரு பாகனாக, பிறையும் அரவும் சடையில் அணிந்தவராக பெருமான் பலியேற்கச் செல்கின்றார் என்றும் கூறுகின்றார். மறி திரை=மடிந்து வரும் அலைகள்; முகடு=உச்சி; வான்=உயர்ந்த; பரிசுகள் என்று இந்த பாடலில் மகளிர் இடுகின்ற பிச்சைகள் குறிப்பிடப் படுகின்றது. வானளாவ உயர்ந்து அலைகள் ஊழிக் காலத்தில் பொங்கி உலகினை மூழ்கடித்த போதிலும், அந்த அலைகளின் உச்சியில் மிதந்த தலம் சீர்காழி என்று சொல்லப் படுகின்றது.

பெண்ணினைப் பாகம் அமர்ந்து செஞ்சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்தழகாகப்

பண்ணினைப் பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி

மண்ணினை மூடி வான் முகடேறி மறி திரை கடல் முகத்து எடுப்ப மற்று உயர்ந்து

விண்ணளவு ஓங்கி வந்திழி கோயில் வெங்குரு மேவியுள் வீற்று இருந்தாரே

கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.79.1) பெருமான் ஆடியும் பாடியும் பலி ஏற்கச் செல்வதாக திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அயிலுறு படை=கூர்மையான சூலப்படை; விரவிய=கலந்த; வளைந்த பிறைச் சந்திரன் மற்றும் பாம்பினை தனது சடையில் வைத்துக் கொண்டிருந்த போதிலும், மிகவும் அழகாக காணப்படும் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் அரவமும் மதியமும் விரவிய அழகர் என்று குறிப்பிடும் திருஞான சம்பந்தர், அழகனுக்குத் துணையாக இருக்கும் பிராட்டியும் அழகியவள் என்பதை உணர்த்தும் வண்ணம் மயிலுறு சாயல் வனமுலை என்று கூறுகின்றார். ஆலகால விடத்தை தனது கழுத்தினில் தேக்கியதால், பெருமானது கழுத்தினில் கருமை நிறத்து கறை படர்ந்தது என்பதை முகில் புல்கு மிடறர் என்று குறிப்பிடுகின்றார். முகில்=கருமேகம்; புல்கு=பொருந்திய; சரிதையர்=புராணங்களில் சொல்லப்படும் பல நிகழ்ச்சிகளுக்கு உரிமையாளர்;பயில்வுறு=தொடர்ந்து, மிகவும் அதிகமாக என்று பொருள் கொள்ள வேண்டும். வலி சேர்=வலிமை வாய்ந்த; பெருமான் பாடியும் ஆடியும் பலியேற்கச் செல்வதாக இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். உண்பதற்கு ஏதும் இல்லாமல், தனது உணவுத் தேவைக்காக பிச்சை ஏற்கச் செல்வோர், தாழ்வு மனப்பான்மையுடன் செல்வதால், அவர்கள் ஆடிப்பாடி மகிழும் தன்மையில் இருப்பது மிகவும் அரிது. ஆனால் பெருமானோ தனது உணவுத் தேவைக்காக பலி ஏற்கச் செல்வதில்லை; மேலும் பலி ஏற்கும் போது, பக்குவப்பட்ட உயிர்கள் பிச்சையாக இடுகின்ற மலங்களை ஏற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக அவர்களுக்கு முக்தி நிலையை அளிப்பதால், பெருமான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றார். அந்த மகிழ்ச்சி தான் ஆடலாகவும் பாடலாகவும் வெளிப்படுகின்றது. இதனைத் தான் திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

அயிலுறு படையினர் விடையினர் முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்

மயிலுறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர் வானிடை முகில் புல்கு மிடறர்

பயில்வுறு சரிதையர் எருது உகந்தேறிப் பாடியும் ஆடியும் பலி கொள்வர் வலிசேர்

கயிலையும் பொதியிலும் இடமென உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசறுமே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (1.79.5) ஊர் மக்கள் வரவேற்று இடுகின்ற பலியைப் பெற்றுக் கொள்ளும் பரமன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். விரை=நறுமணம்; படவரவு=படம் எடுத்தாடும் பாம்பு; கரிசு=தீமை; கழுமலம் தலத்தை நினைத்து தொழும் அடியார்களின் தீய வினைகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று கூறுகின்றார். பக்குவப்பட்ட அடியார்கள், தங்களது மலங்களை பெருமானிடம் பிச்சையாக அளித்து உய்வது எந்நாளோ என்று அனுதினமும் எதிர்பார்த்து காத்திருப்பதால், பெருமான் பலியேற்க வருவதை அவர்களால் உணர முடிகின்றது. அந்நாளில் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெருமானை எதிர்கொண்டு தங்களது மலங்களை, பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு பயனடைவது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

ஊர் எதிர்ந்து இடு பலி தலை கலனாக உண்பவர் விண் பொலிந்து இலங்கிய உருவர்

பார் எதிர்ந்து அடிதொழ விரை தரு மார்பில் பட அரவாமை அக்கு அணிந்தவர்க்கு இடமாம்

நீர் எதிர்ந்து இழி மணி நித்திலம் முத்தம் நிறை சுரி சங்கமொடு ஒண் மணி வரன்றிக்

கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசறுமே

எருக்கத்தம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.89.6) திருஞான சம்பந்தர், பெருமான், பல வகையான பாடல்கள் பாடி பிச்சை ஏற்கச் சென்றார் என்று கூறுகின்றார். அயம்= ஐயம், பிச்சை; அயம் பெய்ய=பெண்கள் பிச்சை இடும் பொருட்டு; ஐயம் என்ற சொல் திரிந்து அயம் என வந்தது; தகைந்து=பொருந்தி; தொகுவன்=கூர்ந்து வெளிப்பட நிற்பவர்; வாய் பிளந்த நிலையில் இருக்கும் பிரமகபாலத்தை, நகு வெண்தலை என்று நகைச்சுவை தோன்ற திருஞான சம்பந்தர் கூறுகின்றார். வாய் பிளந்த நிலையில் சிரிப்பது போல் தோன்றும் பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம், பல விதமான பாடல்களை பாடியவாறு, மகளிர் இடும் பிச்சையை ஏற்பதற்காக செல்லும் இறைவன், புலித்தோலை தனது தோள்கள் மீது அணிந்துள்ளான். அவன் தகுதி வாய்ந்த எருக்கத்தம்புலியூர் தலத்தில் பொருத்தி உறைகின்றான். இவ்வாறு இந்த தலத்தில் நிலையாக அனைவரும் காணும் வண்ணம் உறையும் பெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருப்பாதங்களைப் புகழ்ந்து பாடும் அடியார்களை வினைகள் பின்பற்றி செல்லாது விலகி நிற்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடிப்

புகுவான் அயம் பெய்யப் புலித்தோல் பியற்கு இட்டுத்

தகுவான் எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே

தொகுவான் கழல் ஏத்த தொடரா வினை தானே

பரிதிநியமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.104.9) திருஞான சம்பந்தர், பெருமான் ஆடலராகி நாளும் பலி தேர்வார் என்று கூறுகின்றார். நயந்து=நயமாக; பெருமானின் புகழினை குறிப்பிட்டு பணிந்து தொழ, பெருமானின் திருவடிகளையும் திருமுடியையும் தேடிக் காணுமாறு எவரும், திருமால் மற்றும் பிரமனிடம் சொல்லவில்லை. அவர்கள் இருவரும் அவர்களாகவே, தங்களது ஆற்றல் அடுத்தவரை விடவும் மேலானது என்பதை நிலைநாட்டும் பொருட்டு, பெருமானது திருவடியையும் திருமுடியையும் நாடினார்கள் என்பதை உணர்த்தும் வண்ணம், நாடினர் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். தங்களின் முன்னே எழுந்த நெருப்புத் தூண் என்று நினைத்துக் கொண்டு தான், அந்த தழற்பிழம்பின் அடியையும் முடியையும் காண்பதற்கு அவர்கள் முயற்சி செய்தனரே தவிர, பெருமான் தான், தங்களின் முன்னே அவ்வாறு தழற்பிழம்பாக நின்றார் என்பதையும் அவர்கள் முதலில் உணரவில்லை. ஏடு=இதழ்கள்; கூடலர்= காணக் கூடாதவர்; பிரமனும் திருமாலும் காண முடியாத வண்ணம், நெருப்புத் தூணாக நின்ற தனது உருவத்தை நீட்டிக் கொண்டவர் பெருமான் என்று உணர்த்தப் படுகின்றது. குழகர்= இளமையும் அழகும் ஒருங்கே பொருந்தியவர்; சோர=சோர்ந்து காணப்படும் வண்ணம்; ஆடல்= திருவிளையாடல்; மேலே குறிப்பிட்ட வண்ணம் நீண்ட தழலாக பெருமான் நின்ற தன்மை, உண்மையை அவர்கள் இருவருக்கு உணர்த்தும் பொருட்டு பெருமான் செய்த திருவிளையாடல். பெருமானது திருவடிகளையும் திருமுடியையும் கண்டுவிட வேண்டும் என்ற முடிவோடு, அவற்றை நாடிய திருமாலும் பிரமனும் அவற்றை காண முடியாமல் முதலில் திகைத்தனர். பின்னர் இறைவனின் ஆற்றலை உணர்ந்த அவர்கள் இருவரும், பெருமானின் புகழ் வாய்ந்த தன்மைகளை குறிப்பிட்டு பெருமானை துதித்து வணங்கினர். பிரமனும் திருமாலும் உண்மையை அறியும் பொருட்டு பெருமான் செய்த திருவிளையாடல் தான், அவர்கள் இருவரும் காணக் கூடாதவர்களாக நீண்ட தோற்றத்துடன் நின்ற தன்மை. இளமையும் அழகும் ஒருங்கே உடையவராக விளங்கும் பெருமான் தினமும் பலி ஏற்பவராக திகழ்கின்றார். இதழ்கள் உடைய தாமரை மலர் போன்று அழகுடன் விளங்கும் எனது முகம், அவருடன் இணைய முடியவில்லையே என்ற ஏக்கத்தினால் சோர்ந்து காணப்படுகின்றது. இவ்வாறு எனது முகத்தின் அழகினைக் கவர்ந்த கள்வராகிய பெருமான் உறைகின்ற இடம், பாடல்கள் பாடியும் ஆடியும் அடியார்கள் பெருமானை வணங்கும் பரிதிநியமம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்தக்

கூடலர் ஆடலராகி நாளும் குழகர் பலி தேர்வார்

ஏடலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்

பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிந் நியமமே

இதே பதிகத்தின் முதல் பாடலில் (3.104.1) பெருமானை, திருஞானசம்பந்தர் தாருகவனத்து மகளிரின் அழகினை கவர்ந்தவர் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் பெருமான் பலியேற்ற கோலத்தை உணர்த்துகின்றன. விண் கொண்ட=ஆகாயத்தை இடமாகக் கொண்டு; தூமதி=களங்கம் உடையவனாக தக்கனின் சாபத்தைப் பெற்று அழியும் தருவாயில் இருந்த சந்திரன், சாபம் தீர்க்கப் பெற்று தூய்மை உடையவனாக மாறிய தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது, பெருமானிடம் சரணம் அடைந்த சந்திரன் தனது களங்கம் நீக்கப் பெற்றது போன்று, இந்த தலத்தினில் செய்யப்படும் வழிபாட்டின் மூலம், உயிர்களும் தங்களது குற்றங்கள் களையப் பெற்று மாசற்று விளங்கும் என்பது குறிப்பால் உணர்த்தப் படுகின்றது. எனவே உயிர்கள் இறைவன் பால் அன்பு கொண்டு, அவனை அடைவதற்கு தங்களால் இயன்ற செயல்களை செய்யவேண்டும் என்பதே இந்த பாடல் உணர்த்தும் செய்தி. பேணார்=பெருமையாக கருதாமல், இழிவாக கருதப்படும் செயல்; பிச்சை எடுப்பதை எவரும் பெருமையாக கருதுவதில்லை என்ற செய்தி இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. சாயல்=தோற்றம்; கண் கொண்ட சாயல்=கண்ணைக் கவரும் அழகிய தோற்றம்; ஏர்=அழகு; பெருமான் தன்னுடைய அழகைக் கவர்ந்ததாக சம்பந்த நாயகி இந்த பாடலில் கூறுகின்றாள்; தனது தலைவனுடன் சேர முடியாத ஏக்கத்தினால் தலைவி, தனது உடல் மெலிந்து பொலிவிழந்து இருக்கும் நிலையை, தலைவியின் அழகை தலைவன் கவர்ந்ததாக சொல்வது இலக்கிய வழக்கு. தலைவனுடன் கூடி இருக்கும் தலைவியின் உடல் பொலிவடைந்து அழகுடன் மிளிரும் அல்லவா.

விண் கொண்ட தூமதி சூடி நீடு விரி புன்சடை தாழப்

பெண் கொண்ட மார்பில் வெண்ணீறு பூசிப் பேணார் பலி தேர்ந்து

கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கிடம் போலும்

பண் கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதிந் நியமமே

பைஞ்ஞீலி தலத்தின் மீது பாடிய பாடல் ஒன்றினில் (7.36.9), சுந்தரர் பல இசைக் கருவிகளை குறிப்பிட்டு, அவற்றை இயக்கும் திறமை உடையவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பல இசைக் கருவிகளை இசைக்க வல்லவராக இருக்கும் பெருமான், நாட்டியம் ஆடிக்கொண்டு பலியேற்கும் நோக்கத்துடன் பல இல்லங்கள் செல்லும் போது, நல்ல ஆடையையும் அணிகலனையும் அணியாது எலும்பு மாலையையும் ஆமை ஓட்டினையும் அணிந்து செல்வது பொருத்தமா என்று கேள்வி கேட்கும் பாடல்.

தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச் சங்கிணை சல்லரி

கொக்கரை குடமுழவின் ஓசை கூடி பாடி நின்று ஆடுவீர்

பக்கமே குயில் பாடும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிறால்

அக்கும் அமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே

பொழிப்புரை:

தமிழ் மொழி போன்று இனிமையான சொற்களைப் பேசியும் முழவு மொந்தை தாளம் ஆகிய இசைக் கருவிகளுடன் வீணை மீட்டி வாசித்தும் பாடல்களைப் பாடியவாறு எனது இல்லத்தின் உள்ளே வந்த பெருமான், தான் இருந்த இடத்தினை விட்டு அகலாமல் சிறிது நேரம் நின்றார். அவ்வாறு பெருமான் நின்றதன் காரணம், நான் அவர் பேரில் காதல் கொண்டு அவரை மீண்டும் மீண்டும் பார்க்கத் துடிப்பது போன்று அவரும் என் பால் காதல் கொண்டுள்ளமை என்று நான் நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில், திடீரென்று அவர் மறைந்து விட்டார். அவரின் பிரிவால் நான் தாங்கவொண்ணாத் துயரம் அடைந்தேன்; உடலும் மெலிந்து எனது அழகும் கெட்டது. எனது உடல் நலனையும் அழகினையும் கொள்ளை கொண்ட எனது தலைவர், பவளத்தின் நிறத்தினில் திருமேனி உடைய பெருமான் நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்த கானூர் தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.

பாடல் 9:

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 8 தொடர்ச்சி மற்றும் பாடல் 9 (திதே 0776)

அந்தமாதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவரியான்

சிந்தை உள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான்

வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான்

கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே

விளக்கம்:

அந்தம் ஆதி=அனைத்து உயிர்களுக்கும் முடிவாகவும் தோற்றமாகவும் இருக்கும் இறைவன்; இந்த பாடலில் திருஞானசம்பந்தர், பெருமான் தன்னை முழுமையாக ஆட்கொண்டதை உணர்த்துகின்றார். சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னிய ஈசன் என்று குறிப்பிட்டு, தனது நாவிலிருந்து வரும் சொற்களும், அந்த சொற்களுக்கு அடித்தளமாக உள்ள சிந்தனையும் ஈசனது வடிவம் என்று குறிப்பிட்டு, தேவாரப் பாடல்களில் உள்ள கருத்துகள் அனைத்தும் பெருமான் அருளியவை என்று நமக்கு உணர்த்துகின்றார். தனது சிந்தனையில் உறைந்துள்ள ஈசனை, தான், காலையும் மாலையும் அகவழிபாடு செய்த தன்மையையும் நமக்கு இங்கே உணர்த்துகின்றார். நால்வர் பெருமானார்கள் அனைவரும் பெருமானின் திருவுள்ளக் கருத்தையே தாங்கள் பாடல்களாக வடித்ததாகவும், அவ்வாறு தம்மை பாடச் செய்தவர் பெருமான் தான் என்பதையும் தங்களது பாடல்களில் உணர்த்துகின்றனர்.

இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தில், திருஞான சம்பந்தர், எனது உரை தனது உரையாக என்ற தொடரினை பதிகத்தின் (1.76) முதல் பத்து பாடல்களிலும் அடக்கி, சிவபெருமானின் உரை தான் தனது வாய்மொழியாக தேவாரப் பாடல்களாக வந்தன என்ற உண்மையை நமக்கு உணர்த்துகின்றார். இந்த பதிகம் அகத்துறை கருத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. தனது உரையினை எனது உரைகளாக வெளிப்படுத்தி அருளியவன் என்று சிவபெருமானை இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசிலாச் சீர் மறைக்காடு நெய்த்தானம்

நிலையினான் எனது உரை தனது உரையாக நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்

கலையினார் மடப்பிணை துணையொடும் துயில கானல் அம் பெடை புல்கிக் கணமயில் ஆலும்

இலையினார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி என் எழில் கொள்வது இயல்பே

பொழிப்புரை:

அனைத்து உயிர்களின் முடிவுக்கு காரணமாக இருப்பவனும், அந்த உயிர்களின் தோற்றத்திற்கு காரணமாக இருப்பவனும் ஆகிய இறைவன், திருமாலும் பிரமனும் அறிய முடியாமல் திகைக்கும் வண்ணம் நீண்ட நெடிய தழற்பிழம்பாக நின்ற இறைவன், எவரும் அறிவதற்கு அரியவனாகத் திகழ்கின்றான். எனது இல்லம் வந்த அவன், எனது மனதினைக் கவர்ந்த அவன், எனது சிந்தையில் புகுந்த அவன், எனது நாவினிலும் தலை மீதும் பொருந்தி உறைகின்றான். அவன் எனது உள்ளத்தில் பொருந்தியுள்ள இறைவன் காலையிலும் மாலையிலும் நடனம் ஆடுகின்றான். எந்தையாக உள்ள பெருமான், நறுமணம் கமழும் கானூர் தலத்தினில் பொருந்தி உறைகின்றான்.

பாடல் 10:

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 10 (திதே 0777)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 10 தொடர்ச்சி (திதே 0778)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 10 தொடர்ச்சி (திதே 0779)

ஆமை அரவோடு ஏன வெண் கொம்பு அக்கு மாலை பூண்டு

ஆமோர் கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார்

ஓம வேத நான்முகனும் கோணாகணையானும்

சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே

விளக்கம்:

ஏனம்=பன்றி; அக்கு=எலும்பு; வெள்ளர்=வெள்ளை உள்ளம் கொண்டவர்; எளிய பொருட்களை, எவரும் பொதுவாக தவிர்க்கும் பொருட்களை, அணிந்து கொண்டு வெள்ளை உள்ளம் கொண்டவர் போல் காட்சி அளித்த பெருமான் தனது கோலத்திற்கு பொருந்தாத வண்ணம் கள்வராக செயல்பட்டு தனது உள்ளத்தை கொள்ளை கொண்டதாக சம்பந்த நாயகி இங்கே குற்றம் சாட்டுகின்றாள். சேமம்=பாதுகாப்பு; கோணாகம்=வளைந்த பாம்பு; பொதுவாக திருஞானசம்பந்தரின் பதிகங்களில் எட்டாவது பாடலில் இராவணனுடன் தொடர்பு கொண்ட கயிலை நிகழ்ச்சியும் ஒன்பதாவது பாடலில் அரியும் அயனும் பெருமானை காண முடியாமல் திகைத்த செய்தியும், பத்தாவது பாடலில் சமணர்கள்/புத்தர்கள் பற்றிய குறிப்பு காணப்படும். இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் இராவணன் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. பதிகத்தின் பத்தாவது பாடலில் சமணர்கள் பற்றிய குறிப்பும் காணப்படவில்லை. ஆனால் ஒன்பதாவது பாடலில் அயனுக்கும் மாலுக்கும் அறிவரியான் என்ற குறிப்பு காணப்படுகின்றது. இவ்வாறு அண்ணாமலை சம்பவம் பற்றிய குறிப்புகள் மட்டுமே உடைய திருஞானசம்பந்தர் பதிகங்கள் மிகவும் அரிது. கானூர் தவிர்த்து அத்தகைய மற்ற பதிகங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.

தலம் பதிகத்தின் தொடக்கச் சொற்கள்

பெரும்புலியூர் மண்ணுமோர் பாகம் உடையார்

பாற்றுறை காரார் கொன்றை கலந்த

விளநகர் ஒளிரிளம் பிறை சென்னி

திருவாரூர் பவனமாய் சோடையாய்

திருவாய்மூர் தளிரிள வளரென

திருவாடானை மாதோர் கூறுகந்து

வடுகூர் சுடுகூர் எரிமாலை

இந்த பாடலில் பலியேற்க வந்தவன் சிவபெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம், பெருமானின் பல அடையாளங்களை குறிப்பிட்டு, பெருமான் பலி ஏற்கச் சென்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகிறார். அத்தகைய சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம். புகலி தலத்தின் மீது அருளியபதிகத்தின் பாடல் (1.30.4) ஒன்றினில் கயல்மீன் போன்று அகன்ற கண்களைக் கொண்ட தேவியுடன், எருதின் மீது ஏறி அமர்ந்தவராக பெருமான் தாருகவனத்து முனிவர்களின் இல்லங்களுக்கு பலி ஏற்கச் சென்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அயலார் என்ற சொல் தாருகவனத்து முனிவர்களை குறிப்பிடுகின்றது. சிவநெறியைச் சாராமல் கர்ம காண்டத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவர்களாக திகழ்ந்த தாருகவனத்து முனிவர்களை அயலார் என்று அழைத்தார் போலும். கடை=மனைவாயில்; இயலால்=அழகோடு

கயலார் தடங்கண்ணியொடும் எருது ஏறி

அயலார் கடையில் பலி கொண்ட அழகன்

இயலால் உறையும் இடம் எண்திசையோர்க்கும்

புயலார் கடல் பூம்புகலி நகர் தானே

சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.47.2) திருஞானசம்பந்தர், மாதொரு பாகமாக பலிக்கு செல்லும் பெருமான், பல இடங்களிலும் திரிந்து அல்லல் படுகின்ற பலி ஏற்கின்ற வாழ்க்கையை மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்டதன் காரணம் தான் யாது என்ற கேள்வியை எழுப்புகின்றார். இதற்கான பதிலை விளக்கும் பல திருமுறைப் பாடல்கள் இந்த விளக்கத்தில் அளிக்கப் பட்டுள்ளதால், இங்கே அந்த விளக்கம் தவிர்க்கப் படுகின்றது. கொல்லை முல்லை நகையினாள்=முல்லை அரும்பு போன்ற அழகிய பற்களை உடைய உமையன்னை; ஆதரவு=விரும்புதல்; சொல்ல நீண்ட=சொல்லச் சொல்ல நீளும் பெருமை; செல்ல நீண்ட=எத்தனை கொடை வழங்கினாலும் குறையாத செல்வம்; இத்தகைய அல்லல் தரும் வாழ்க்கையினை, பெருமானே ஏன் விரும்புகின்றாய் என்ற கேள்வி, சோபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.51.4) கேட்கப் படுகின்றது.

கொல்லை முல்லை நகையினாளோர் கூறது அன்றியும் போய்

அல்லல் வாழ்க்கைப் பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னை கொலாம்

சொல்ல நீண்ட பெருமையாளர் தொல் கலை கற்று வல்லார்

செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.53.3) திருஞானசம்பந்தர், மாதொரு பாகனாக பலிக்குச் செல்லும் பெருமான், தான் பெறுகின்ற பலியை சிறந்த செல்வமாக பெருமான் மதிக்கின்றார் என்று கூறுகின்றார். வாரி=கடல், கடல் போன்று பெருகி வந்த கங்கை நதி; மாகம்= ஆகாயம்;வைகு=பொருந்தும்; பெருமான் பலி கொள்வது வறுமை காரணமாக அல்ல என்பதை உணர்த்தும் பொருட்டு, செல்வன் என்று பெருமானை, திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்ததும் வேறு எவரிடமும் இல்லாத முக்தி நிலையினை உள்ளவனை பெருஞ் செல்வன் என்று தானே அழைக்க வேண்டும். இந்த பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் சர்வ வியாபியாக எங்கும் நிறைந்து இருக்கும் பெருமானின் தன்மையை உணர்த்திய திருஞான சம்பந்தர், இந்த பாடலில் அவனது பல வீரச் செயல்களையும் கருணைச் செயல்களையும் உணர்த்துகின்றார். கடல் போன்று பெருகி வந்த கங்கை ஆற்றினைத் தனது சடையில் அடக்கியதும், விடமுடைய பாம்பின் தன்மையை மாற்றி கச்சையாக அணிந்து கொண்டதும், பிரமனின் தலையை நகத்தால் கிள்ளியதும், வலிமை வாய்ந்த யானையின் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்டதும் வீரச் செயல்கள். அழியும் நிலையில் இருந்த திங்களை சடையில் அணிந்து கொண்டு காப்பாற்றியதும், பிராட்டியைத் தனது உடலில் ஒரு பாதியாக ஏற்றுக் கொண்டதும், உயிர்களை உய்விக்கும் நோக்கத்துடன் உயிர்களின் மலங்களை ஏற்றுக் கொள்ள பலி ஏற்பதும் கருணைச் செயல்கள். மூரி=வலிமை வாய்ந்த; நாகம்=யானை; சீரிதாக=சிறப்பாக; செற்றலும்=கோபம் கொண்ட குணத்துடன்; பலிகொள் செல்வர் என்ற தொடருக்கு, பலி ஏற்பதை செல்வமாக கருதி மகிழும் பெருமான் என்று பொருள் கொண்டு பலியேற்பதில் பெருமானுக்கு இருக்கும் ஆர்வத்தை குறிப்பிடுவதாக பொருள் கொள்வதும் சிறப்பே. வாழ்நாள் தோறும் செல்வத்தை தேடி வாழ்வதே வாழ்க்கை எனக் கொண்டு வாழும் அனைத்து மனிதர்களும் தமக்கு கிடைக்கும் செல்வத்தை மிகவும் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வதை நாம் அன்றாட வாழ்க்கையில் காண்கின்றோம். மிகவும் அதிகமான உயிர்கள் முக்தி உலகம் வந்தடைவதை விரும்பும் பெருமான், அவ்வாறு முக்தி உலகம் செல்வதற்கு தடையாக உள்ளவை மலங்கள் என்பதை புரிந்து கொள்ளும் பக்குவப்பட்ட உயிர்கள் தங்களது மலத்தினை பிச்சையாக பெருமானின் உண்கலத்தினில் இடுவதை பெருமான் சிறந்த செல்வமாக ஏற்றுக்கொண்டு மகிழ்கின்றான். ஏனெனில் உயிர்களால் கழித்து விலக்கப்படும் மலங்கள், அந்த உயிர்கள் முக்தி உலகம் சென்றடையும் தகுதியை பெறுவதற்கு உதவுவதால், அவற்றை சிறந்த செல்வமாக பெருமான் கருதுகின்றான். கடல் போன்று பெருகி வந்த கங்கை நதியைத் தனது சடையில் ஏற்று அடக்கியவனும், அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன் இருந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு சந்திரனை அழியாமல் காத்தவனும், தனது இடுப்பினில் ஒளி பொருந்திய பாம்பினை கச்சாக இறுகக் கட்டியவனும், தனது மனைவி பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக விரும்பி ஏற்றவனும், தாமரை மலர் மேல் உறையும் நான்முகனின் தலையில் சிறப்பான நோக்கத்துடன் பக்குவமடைந்த உயிர்கள் அளிக்கும் பலியை ஏற்றுக்கொண்டு, அந்த உயிர்கள் முக்தி உலகம் செல்வதற்கு வழிவகுத்து உய்விப்பவனும், மிகவும் பெரிய செல்வத்தை உடையவனும், தாருகவனத்து முனிவர்களால் மிகுந்த கோபத்துடன் தோற்றுவிக்கப்பட்ட வலிமை உடைய யானையை அடக்கி அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்டவனும் ஆகிய பெருமான் பொருந்தி உறைவது முதுகுன்றம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வாரி மாகம் வைகு திங்கள் வாளரவம் சூடி

நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன் தன் தலையில்

சீரிதாகப் பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியதோர்

மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே

குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.04) திருஞானசம்பந்தர் மாதொரு பாகனின் கோலத்துடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனாக, என்றும் பிராட்டியை விட்டு பிரியாமல் இருக்கும் பெருமான், தான் பலியேற்கச் சென்ற போதும் பிராட்டியுடன் சென்றது இயற்கையே. மேலும் உயர்ந்த நோக்கத்துடன், உயிர்களுக்கு உதவும் எண்ணத்துடன் பலி ஏற்பது பெருமைக்கு உரிய செயல் தானே. எனவே அதற்காக வெட்கம் கொண்டு, தேவியை உடன் அழைத்துக் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை அல்லவா. போது=மலர்கள்; புனல் சேர் போது என்று குறிப்பிடுவதால், நீரில் மலரும் தாமரை முதலிய மலர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். கந்தம்=நறுமணம்; தாது=மகரந்தப் பொடி; புறவு=காடு; காளம்=விடம்; காளகண்டர்= விடத்தை தேக்கியதால் கருமை நிறத்தில் படர்ந்த கரையினை கழுத்தில் உடையவன்; நீர்நிலைகளில் தோன்றும் தாமரை முதலான பூக்களின் நறுமணம் மேலோங்கி எங்கும் பரவ, அழகு மிகுந்த மகரந்த பொடிகள் நிறைந்த சோலைகளாலும் அழகிய காடுகளாலும் சூழப்பட்டதும் குளிர்ச்சி மிகுந்ததும் ஆகிய குடந்தை நகரத்தில் உள்ள காரோணம் தலத்தில் உறைகின்ற இறைவன், பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனாக பல இல்லங்கள் சென்று பலி ஏற்கின்றார். அவர் தனது காதினில் குழை ஆபரணத்தை அணிந்தவராக, தனது கழுத்தினில் விடத்தின் கறையாக கருமை நிறம் படர்ந்தவராக காணப்படுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

போதார் புனல்சேர் கந்தம் உந்திப் பொலியவ் வழகாரும்

தாதார் பொழில் சூழ்ந்து எழிலார் புறவில் அந்தண் குடமூக்கில்

மாதார் மங்கை பாகமாக மனைகள் பலி தேர்வார்

காதார் குழையர் காளகண்டர் காரோணத்தாரே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.83.2) திருஞானசம்பந்தர், ஊனார் தலை தன்னில் பலி கொண்டுழல் வாழ்க்கை வாழ்பவனாக இருப்பினும், பெருமானின் திருப்பாதங்களைப் புகழ்ந்து பாடும் அடியார்களை, பிறப்பிறப்புச் சுழற்சி எனும் துன்பத்திலிருந்து விடுவித்து, பெருமான் வீடுபேறு அளிக்கின்றான் என்று உணர்த்துகின்றார். இவ்வாறு உணர்த்துவதன் மூலம், பெருமான் பலியேற்பதன் நோக்கத்தை நமக்கு தெளிவாக திருஞான சம்பந்தர் எடுத்துரைக்கின்றார். பல இல்லங்கள் திரிந்து அல்லற் படுவதை பொருட் படுத்தாமல் பெருமான் பலி ஏற்கின்றார் என்று சொல்வதன் மூலம், பெருமான் உயிர்கள் பால் கொண்டுள்ள கருணையும், பக்குவப்பட்ட உயிர்கள் மிகவும் விரைவாக தன்னை வந்தடைய வேண்டும் என்று விரும்புவதையும் நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

தேனார் மதமத்தம் திங்கள் புனல் சூடி

வானார் பொழில் அம்பர் மாகாளம் மேய

ஊனார் தலை தன்னில் பலி கொண்டுழல் வாழ்க்கை

ஆனான் கழல் ஏத்த அல்லல் அடையாவே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.86.3) திருஞானசம்பந்தர், பெருமானை, பிச்சை நாடும் நெறியான் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பிறைசூடியாக பெருமான் பலி ஏற்ற கோலம் குறிப்பிடப் படுகின்றது. தங்களது மலங்களைக் கழித்துக் கொள்வதற்கும் வினைகளை முற்றிலும் நீக்கிக் கொள்வதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு தங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளதை உயிர்கள் அனைத்தும் உணர்ந்து, செயல்பட்டால் தான், அவைகளால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வெளியே வரமுடியும், அனுபவித்துத் தான் வினைகளை கழித்துக் கொள்ள வேண்டும் என்றால், நாம் இதுவரை சேர்த்துள்ள வினைகளை கழிப்பதற்கே எண்ணற்ற பிறவிகள் நமக்கு தேவைப்படும் இந்த நிலையில், நாம் இந்த பிறவிகளில் மேலும் சேர்த்துக் கொள்ளும் வினைகள் நாம் எடுக்க வேண்டிய பிறவிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து விடுகின்றன. இவ்வாறு தான் நமது வினைகளைக் கழித்துக் கொள்ளும் நாள் எட்டாத கானல் நீராக நம்மிடமிருந்து மேலும்மேலும் விலகிச் செல்லும் நிலையில், பிச்சை பெருமானாக நம் முன்னே வந்து நின்று, நமது மலங்களைத் தான் தனது கையில் வைத்திருக்கும் பிரம கபாலத்தினில் நாம் அனைவரும் இட்டு உய்வினை அடைவதற்கு ஏதுவாக, உலகெங்கும் பெருமான்திரிவதை நாம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் நன்னெறி அடைவதற்காக பெருமான் பிச்சை ஏற்பதால், பிச்சை நாடும் பெருமான் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமானின் அடியார்கள் பாவம் அறியார்கள் என்றும் அவர்களைக் குற்றங்கள் சென்று அடையா என்றும் இந்த பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் உணர்த்திய திருஞானசம்பந்தர், அத்தகைய அடியார்களை பாவங்கள் சென்று அடையா என்று இந்த பாடலிலும் கூறுகின்றார். சிவசிந்தனை மேலோங்கி இருப்பதால், பண்பட்ட உள்ளத்துடன் குற்றங்கள் நீங்கிய உள்ளத்துடன் இருக்கும் அடியார்கள் தீயசெயல்களை இயல்பாகவே தவிர்ப்பார்கள் என்பதால் அவர்களை பாவங்கள் சென்று அடையாது அல்லவா.

சூடும் இளந் திங்கள் சுடர் பொன் சடை தாழ

ஓடு உண்கலனாக ஊரூர் இடு பிச்சை

நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்

பாடும் அடியார்கட்கு அடையா பாவமே

ஏற்பது இகழ்ச்சி என்பது முதுமொழி. ஆனால் சிவபெருமான் தன் பொருட்டு பலி ஏற்காமல் மக்களை உய்விப்பதற்காக பலி ஏற்பதால், அவன் எடுக்கும் பிச்சை இகழ்ச்சிக்கு உரியது அல்ல. இதனை புரிந்து கொள்ளாமல் பலர் பெருமான் பிச்சை எடுப்பதை இகழ்வாக கூறினாலும், பெருமான் அதனை பொருட்படுத்துவதில்லை. ஒராது=பொருட்படுத்தாது; உயிர்கள் தங்களது மலங்களை பெருமான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைவதற்கு ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, பிறரது பழிச் சொற்களை புறக்கணித்து பிச்சை எடுக்கின்றான் என்பதை உணர்த்தும் வண்ணம், பழி ஓராது பெருமான் பலி ஏற்கின்றார் என்று திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.98.8) திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பல செய்திகளையும் தத்துவங்களையும் விளக்கமாக உரைக்கும் வேதங்களும், அருளாளர்கள் இயற்றிய பாடல்களும், பெருமானின் ஒரு சில செய்கைகளையே சொல்ல முடிகின்றது என்று உணர்த்தி, பெருமானின் பெருமை சொற்களையும் கடந்தது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன் தன்

தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழி ஓரார்

சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்

சில வல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே

இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் (1.98.9) திருஞானசம்பந்தர் பெருமானை நோக்கி, செல்வந்தராக இருக்கும் நீர் மனைதோறும் சென்று இரந்தால், உமது தன்மையை அறியாதவர்கள் உம்மை இகழ்வார்களே என்று கேட்கின்றார். திருஞான சம்பந்தரின் குழந்தை உள்ளம், பெருமானை மற்றவர் இகழ்வதை தாங்கமுடியாமல் வருந்தியது போலும், அதனால் தான் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி, பெருமானை பார்த்து மற்றவர் இகழ்வதை தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அதற்காக ஆவன பெருமான் செய்ய வேண்டும் என்று வேண்டுகின்றார் போலும்..

அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்

கரப்புள்ளி நாடிக் கண்டிலர் ஏனும் கல் சூழ்ந்த

சிரப்பள்ளி மேய வார்ச்சடைச் செல்வர் மனை தோறும்

இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே

கொடிமாட செங்குன்றூர் என்று அழைக்கப்படும் திருச்செங்கோடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.107.7) திருஞானசம்பந்தர், தொடர்ந்து பலி ஏற்பதையே தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டவராக, கொன்றை மாலை அணிந்தவராக சிவபெருமான் இருக்கின்றார் என்று கூறுகின்றார். சேடன்=சிரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு, சிறந்த ஞானம் உடையவன்; கோடல்=செங்காந்தள் மலர்கள்; குறிஞ்சி நிலத்திற்கு உரிய பூக்கள். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாக கருதப்படுகின்றன. புறவு=நிலம்; மாலை போன்று நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களுடன் கூடிய நீண்ட புன்சடை தாழ்ந்து தொங்க, தனது கையினில், தசைகள் வாடி உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் பிரமனின் மண்டையோட்டினை பிச்சை பாத்திரமாக ஏற்று பல இடங்களிலும் திரிந்து பலி ஏற்பதை தனது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள பெருமான், செங்காந்தள் மலர்கள் நிறைந்த வளம் பொருந்திய வயல்களை உடைய கொடிமாட செங்குன்றூர் தலத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றான். தலை சிறந்த ஒழுக்கம் உடையவனாகத் திகழும் பெருமானின் திருப்பாதங்களைத் தொழும் அடியார்களின் வினைகள் முற்றிலும் தேய்ந்து அழிந்துவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. நின்ற கோலம் என்று இந்த பாடலில் குறிப்பிடுவதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த தலம் ஒன்றில், மாதொரு பாகனாக காட்சி அளிக்கும் வண்ணம் பெருமான் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். இந்த கோலமே இங்கே உணர்த்தப் படுகின்றது.

நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ வெள்ளை

வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்க்

கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.130.2), திருஞானசம்பந்தர் பெருமான், தேவியுடன் பலிக்கு சென்றதாக குறிப்பிடுகின்றார். விடலேறு படம்=விடத்தை மேல் கொண்டுள்ள படம்; விடலம்=நஞ்சு; விடலம் என்ற சொல் விடல் என்று குறைந்தது. விடல் என்ற சொல்லுக்கு வலிமை என்று பொருள் கொண்டு மற்ற உயிர்களை கொல்லும் வல்லமை உடைய பாம்பு என்று சொல்வதும் பொருத்தமே. சுரி சங்கு=கூர்மையான வளைந்த மூக்குகளை உடைய சங்கு; அஞ்சொல்=அம்+சொல், அழகிய சொற்களை உடைய மகளிர்; இங்கே தாருகவனத்து மகளிரை குறிப்பிடுகின்றது. திடல்=மணல்மேடு; கங்குல்=இரவு; காவிரியின் மணல் திடலில் முத்துகள் காணப்படும் செல்வச் செழிப்பு மிகுந்த நகரம் ஐயாறு என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

விடலேறு படநாகம் அரைக்கு அசைத்து வெற்பரையன் பாவையோடும்

அடலேறு ஒன்று அது ஏறி அஞ்சொலீர் பலி என்னும் அடிகள் கோயில்

கடலேறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகித்

திடல் ஏறி சுரி சங்கம் செழுமுத்து அங்கு ஈன்று அலைக்கும் திருவையாறே

உமை அன்னையை மட்டும் அழைத்துச் செல்லாமல், கங்கை நங்கையையும் தனது சடை மேல் ஏற்றவனாக பெருமான் பலியேற்கச் சென்றார் என்று புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.43.2) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தேர்ந்து=தேர்ந்தெடுத்து; தலத்து இறைவனின் திருநாமம் வைத்தியநாதர். அந்த பெயரினுக்கு ஏற்ப உயிருடன் பிணைந்துள்ள மலமாகிய நோயினைத் தீர்த்து இன்பம் அளிப்பவன் பெருமான். இந்த தன்மையை கருத்தினில் கொண்டு ஐயம் தேர்ந்தெடுத்து என்ற தொடரின் பொருளினை நாம் உணர வேண்டும். பெருமான் பிச்சை ஏற்பதன் நோக்கமே, தங்களது மலத்தினைக் கழித்துக் கொள்ள விரும்பும் உயிர்கள் தங்களது மலத்தினை பெருமானின் பிச்சை பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்பதாகும். அந்தணர்=அம்+தணர்; குளிர்ந்த நெஞ்சம் உடையவர்; உயிர்களின் பால் எல்லையற்ற கருணையும் அன்பினையும் வைத்துள்ள பெருமானின் நெஞ்சம் அவனது கருணை இரக்கம் அன்பு காரணமாக ஈரமாக உள்ளது என்பதை குறிப்பிடும் வண்ணம் பெருமானை அந்தணர் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பக்குவம் அடைந்த உயிர்கள் தாமே, முக்தி நிலையினை அடைவதற்கு தகுதி படைத்தவர்கள். எனவே அத்தகைய உயிர்களை தேர்ந்தெடுக்கும் பெருமான், அவர்களை அணுகி, அவர்கள் தங்களது மலங்களை பிச்சையாக இடவேண்டும் என்று பலி கேட்கின்றார் என்று பொருள் கொள்ள வேண்டும். ஈடு=பெருமை. பண்டைய நாளில் போரிடும் வீரர்கள், தங்களது உயிர் நிலையினை அடுத்தவருக்கு சொல்லிவிட்டு போராடுவதை சிறப்பாக கருதினர் போலும். ஜடாயு தனது உயிர்நிலை தனது சிறகுகளில் உள்ளது என்று சொல்ல, அரக்கன் இராவணனோ, தனது உயிர்நிலை தனது தலையில் உள்ளது என்று சொல்லி போரிட்டதாக இராயணம் காவியம் உணர்த்துகின்றது. இதனால் தான், ஜடாயு மீண்டும்மீண்டும் அரக்கனின் தலையை தனது அலகால் கொத்தி போராடியது போலும். அரக்கனின் கிரீடங்கள் பேர்த்து எறியப்பட்டு கீழே விழ, பின்னர் அந்த இடத்திற்கு வந்த இராமரும் இலக்குவனும் அந்த கிரீடத்தை பார்க்கின்றனர். அரக்கன் தனது உயிர்நிலை குறித்து சொன்னது பொய். ஜடாயு சொன்னது மெய். இந்த தகவல் தான் கீழ்க்கண்ட பாடலில் உணர்த்தப் படுகின்றது.

தையலாள் ஒரு பாகம் சடை மேலாள் அவளோடும்

ஐயம் தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையும் இடம்

மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்துப்

பொய் சொல்லாது உயிர் போனான் புள்ளிருக்குவேளூரே

தனது உடல் மீது யானைத் தோலை போர்த்தவராக பெருமான் பலி ஏற்பது புள்ளிருக்கு வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.43.7) சொல்லப் படுகின்றது. அத்தி=யானை; பசி, தாகம், தூக்கம் ஆகியவற்றைக் கடந்த பெருமான், தான் உயிர் வாழும் வண்ணம் உதவி புரியும் உணவினுக்காக பிச்சை எடுப்பது போன்ற தோற்றத்தை தருவதால், அவரை பித்தர் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். யானையின் பசுமைத் தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனைவரும் அதனைத் தவிர்ப்பார்கள். ஆனால் பெருமானோ யானையின் தோலை தனது உடல் மீது போர்த்துக் கொண்டதும் அன்றி, எரியும் தீப்பிழம்பினை ஏந்தி நடனம் ஆடுகின்றார். இவ்வாறு அனைவரும் தவிக்கும் மூன்று செயல்களை செய்யும் பெருமானை மிகவும் பொருத்தமாக பித்தர் என்று திருஞானசம்பந்தர் அழைப்பதை நாம் உணரலாம். பத்தி= பக்தி; உகந்தான்=உயர்ந்த நிலையினை அடைந்து மகிழ்ச்சியுடன் இருந்தான். தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து, அந்த ஈரப்பசை மிகுந்த தோலினைத் தனது உடல் மீது போர்த்தவனும், மிகுந்த அழகுடன் தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தி நடனம் ஆடுபவனும், தனக்கு உணவு ஏதும் தேவைப்படாத நிலையிலும் பித்தர் போன்று பலியேற்று உலகெங்கும் திரிபவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் பேணி பாதுகாத்து உறையும் இடம் புள்ளிருக்குவேளூர். பல காலம் தவம் செய்து அடைந்த ஞானம் கொண்டு, மிகுந்த பக்தியுடன் தனது மனம் ஒன்றி பெருமானை வழிபட்டதால் உய்வினை அடைந்து மகிழ்ச்சியுடன் இருந்த ஜடாயுவும் சம்பாதியும் பெருமானை வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் என்பதாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அத்தியின் ஈருரி மூடி அழகாக அனல் ஏந்திப்

பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணுமிடம்

பத்தியினால் வழிபட்டுப் பலகாலம் தவம் செய்து

புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.75.2) திருஞானசம்பந்தர், மடவாளொடும் சென்று பலி ஏற்பதை விரும்பியவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பரமேட்டி=தனக்கு மேலாக எவரும் இல்லாதவன்; மடவாள்=உமை அன்னை; கலி=வறுமை முதலிய துன்பங்கள்; நம்பன்=விருப்பனாக இருக்கும் தன்மை; நலிய=துன்பம் அடைந்து மனம் வருந்தும் வண்ணம்; பல துன்பங்களை அளித்து நமது மனதினை நலியச் செய்யும் வினைகளை தீர்க்கும் பரமன், நமது விருப்பத்திற்கு உகந்தவனாக இருப்பது இயற்கை தானே.

வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும்

பலி விரும்பியதொர் கையினான் பரமேட்டியான்

கலியை வென்ற மறையாளர் தம் கலிக் காழியுள்

நலிய வந்த வினை தீர்த்துகந்த எம் நம்பனே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.86.10) திருஞானசம்பந்தர் மழுவாட் படையை ஏந்தியவராக பெருமான் பலிக்கு சென்றார் என்று கூறுகின்றார். மிடை=இடையே; உன்னி=தியானம் செய்து; ஒலி பாடி ஆடி=வாய்விட்டு கீதங்களை பாடியவாறு ஆடிய பெருமான்; படை=மழுவாட்படை; உன்னி உணரும் என்ற தொடரினை இரண்டாவது அடியில் உள்ள பெருமை என்ற சொல்லுக்கு பின்னர் வைத்து பொருள் உணர வேண்டும். இந்த பாடலில் திருஞான சம்பந்தர் சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்கள் மாயும் வண்ணம் செய்யும் பெருமான் என்று கூறுகின்றார். அப்பர் பிரான் மற்றும் திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்தில், சமணர்களும் புத்தர்களும் பொருளற்ற பல பழிச்சொற்களை பெருமான் பால் சொல்லி மக்களை மயக்கி வந்தனர். அப்பர் பிரானின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகள் மூலம் பெருமானின் பெருமையை உணர்ந்து கொண்ட பல்லவ மன்னன், சமணர்களின் மொழி பொய்மொழி என்பதை உணர்ந்தான் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். காடவன்=பல்லவ மன்னன்; மேலும் தனது அவதார நோக்கத்தினை உணர்ந்திருந்த திருஞானசம்பந்தர், பின்னாளில் மதுரையில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகளையும் முன்னமே அறியும் வல்லமை பெற்றிருந்தார் போலும். அப்பர் பிரான் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய இருவரும், அனைத்தும் இறைவனின் அருளாலே நிகழ்ந்தன என்ற உணர்வோடும் தங்களது வாழ்க்கையை கழித்தவர்கள். எனவே தான் சமணர்கள் மற்றும் புத்தர்களின் உரைகள் பொய்மொழிகள் என்று அனைவரும் உணரும் வண்ணம் இறைவன் செய்தான் என்று கூறுகின்றனர். உமது வாழ்க்கையின் இடையில் அனுபவிக்கும் துன்பங்கள் இன்பங்களாக மாறவேண்டும் என்றும், உமது உள்ளம் இறைவன் நடமாடும் வெளியாக மாற வேண்டும் என்றும் நீங்கள் விரும்புவீராயின், மழுப்படையினை கையில் ஏந்தியவாறு பலி கொள்ளும் நோக்கத்துடன் உரத்த குரலுடன் கீதங்கள் பாடிய வண்ணம் நடனமாடிக் கொண்டு சென்ற பெருமானின் பெருமைகளை, உலகத்தவரே, மனதினில் நினைத்து உணர்வீர்களாக. மேலும் உடையினை விட்டொழித்த சமணர்களும் துவராடையினை போர்த்துக் கொள்ளும் புத்தர்களும் பேசும் வீணான பழிச் சொற்கள் கெட்டு அழியும் வண்ணம் திருவிளையாடல் புரிந்து மகிழும் பெருமான் உறையும் செல்வச் செழிப்பு வாய்ந்த திருநாரையூர் தலத்தினை கைகளால் தொழுது வணங்குவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மிடைபடு துன்பம் இன்பம் உளதாக்கும் உள்ளம் வெளியாக்கும் உன்னி உணரும்

படை ஒரு கையில் ஏந்திப் பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை

உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை மாயும் வண்ணம் அழியச்

செடிபட வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.87.5) பெருமான் இடபத்தின் மீது அமர்ந்தவனாக பல இல்லங்கள் சென்று பலி ஏற்கின்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். நெதி=நிதி என்ற சொல்லின் திரிபாக கருதப்பட்டு செல்வம் என்றும் நன்மை என்றும் இரண்டு விதமாக பொருள் சொல்லப் படுகின்றது. மெய் என்பதற்கு உண்மை என்றும் மெய்ப்பொருள் என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். சிவபெருமானிடம் உள்ள முக்திச் செல்வமே, அனைத்துச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாக கருதப்படுகின்றது. வேறு எவரிடமும் இல்லாத, வேறு எவரும் அளிக்க முடியாத இந்த செல்வத்தை உடையவன் சிவபெருமான் ஒருவனே, என்பதால், அவனே உண்மையான செல்வனாக கருதப்படுகின்றான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நெதி என்ற சொல்லுக்கு நன்மை என்று பொருள் கொண்டு, அனைத்து உயிர்களுக்கும் பல விதமான நன்மைகளை அளிக்கும் உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மூன்றாவது அடியில் வரும் படு என்ற சொல், இருக்கும் என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. ஒருத்தன்=ஒப்பற்ற தலைவன்; எமர்=எங்கள், இங்கே அடியவர்கள் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம். சிறந்த செல்வமாகிய முக்திச் செல்வத்தை தனதாகக் கொண்டுள்ள, உண்மையான செல்வனாகிய எமது தலைவன், நிறைந்த சோலைகளால் சூழப்பட்டுள்ள சிதம்பரம் தலத்தில் உள்ள சிற்றம்பலம் என்று அழைக்கப்படும் அரங்கினில், அதிரும் வண்ணம் நடனம் ஆட வல்ல பெருமான் தொடர்ந்து நடனம் ஆடுகின்றான். அவன் தேவர்களின் ஒப்பற்ற தலைவனாகவும் அடியார்களாகிய எங்களுக்கு சுற்றமாகவும் விளங்குகின்றான், பிறைச் சந்திரன் பொருந்தி விளங்கும் சடை தாழ்ந்து தொங்க, தனது இடப வாகனத்தின் மீது ஊர்பவனாக, பல இல்லங்கள் சென்று பலி ஏற்கின்றான். காவிரி நதியின் நீர்ப் பெருக்கால் அடித்துக் கொண்டு வரப்படும் வாளை மீன்கள் நீருடன் கலந்து பாய்கின்ற நறையூர் நகரத்தில், மேலே குறிப்பிடப்பட்ட தன்மைகளை உடைய பெருமான், அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான்.

நெதிபடு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே

அதிர்பட ஆட வல்ல அமரரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றமாய இறைவன்

மதிபடு சென்னி மன்னு சடை தாழ வந்து விடையேறி இல்பலி கொள்வான்

நதிபட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரின் நம்பன் அவனே

பற்கள் ஏதும் இல்லாத பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம் பலிக்குச் செல்லும் பெருமான், ஆடியும் பாடியும் பிச்சை ஏற்கின்ற துன்பம் உடைய வாழ்க்கை வாழ்பவர் ஆயினும், அவரது தோற்றம் மிகவும் அழகியதாகவே காணப்படுகின்றது என்று திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.91.6) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு எந்த நிலையிலும் தான் அழகராகத் திகழ்வதை பெருமான் அறிவார் என்றும் திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். புல்லம்=புல்லினை மேய்ந்து உட்கொள்ளும் எருது; உழிதருதல்=திரிதல்;

பல்லில் ஓடு கை ஏந்திப் பாடியும் ஆடியும் பலி தேர்

அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள்

புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழி தருவர்க்கு இடமாம்

மல்கு வெண் திரை ஓதம் மாமறைக்காடு அது தானே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.44.6) திருஞான சம்பந்தர் பெருமானை, ஊரார் இடுகின்ற பிச்சையை ஏற்றுக் கொள்ளும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கொள்வனார் என்ற சொல்லினை பலி என்ற சொல்லுடன் இணைத்து பொருள் காண வேண்டும். இந்த பாடலில் கள்வனார் என்று இறைவனை திருஞான சம்பந்தர் அழைக்கின்றார். தனது முதல் பதிகத்தில், உள்ளம் கவர் கள்வன் என்று பெருமானை அழைத்த திருஞான சம்பந்தருக்கு பெருமானை கள்வன் என்று அழைப்பதில் மிகவும் விருப்பம் போலும். தான் உணவு உட்கொள்வதற்காக பிச்சை எடுப்பது போன்று பெருமான் ஊரூராக திரிந்தாலும், பெருமான் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை, தான் திரியும் நோக்கத்தை மறைத்துக் கொண்டு உணவுப் பிச்சை எடுப்பது போன்று தோற்றம் தரும் பெருமானை கள்வனார் என்று அழைக்கின்றார். அவரது நோக்கத்தின் உயர்ந்த தன்மை குறித்து அவருக்கு மதிப்பு கொடுத்து மரியாதையாக கள்வனார் என்று அழைப்பதையும் நாம் உணரலாம். துள்ளியோடும் தன்மையை உடைய மான்கன்றினைத் தனது கையினில் ஏந்தியவராக இருக்கும் பெருமான் ஊரூராக திரிந்து, தான் கையில் கொண்டுள்ள வெண் தலையோட்டினில் பலி ஏற்கின்றார். தான் பலியேற்பதன் நோக்கத்தினை வெளிப்படையாக உணர்த்தாமல் பெருமான் பலியேற்பதால், தனது நோக்கத்தை மறைத்து செயல்படும் கள்வராக அவர் திகழ்கின்றார். கழிப்பாலைத் தலத்தினில் உறையும் பெருமானின் நோக்கத்தை புரிந்து கொண்டு, அவரை தியானித்து, அவரது பிச்சைப் பாத்திரத்தில் நமது மூன்று மலங்களையும் சமர்ப்பித்து வணங்கினால் நமது வினைகள் முற்றிலும் ஒழிந்து விடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

துள்ளு மான்மறி அங்கையில் ஏந்தி ஊர்

கொள்வனார் இடு வெண் தலையில் பலி

கள்வனார் உறையும் கழிப்பாலையை

உள்ளுவார் வினை ஆயின ஓயுமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.45.6) உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டுள்ள கோலத்துடன் பெருமான், பல ஊர்களுக்கும் சென்று பிச்சை ஏற்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆர்கணாக என்ற சொல் ஆர்கணா எனக் குறைந்துள்ளது. கொள் என்ற சொல் முதலாவது மற்றும் மூன்றாவது அடிகளில் கொண் என புணர்ச்சி விதியின் படி மாறியுள்ளது. தான் மற்ற தெய்வங்களை விலக்கி பெருமானை ஒருவனைத் தானே பற்றுக்கோடாகக் கொண்டுள்ளேன், அவ்வாறு இருக்கையில் பெருமான் இன்னும் தனக்கு அஞ்சேல் என்று சொல்லி ஆறுதல் கூறாதது ஏன் என்ற கேள்வியை திருஞானசம்பந்தர் திருவாரூர் தலத்து அடியார்களை நோக்கி கேள்வி கேட்கும் பாடல். இந்த பாடலில் திருஞான சம்பந்தர் பிச்சை கொள் உத்தமன் என்று பெருமானை அழைக்கின்றார். பலரும் தன்னைப் பழிப்பதையும் பொருட் படுத்தாமல், பக்குவம் அடைந்த உயிர்களுக்கு வீடுபேறு அளித்து உய்விக்கும் வண்ணம் தொடர்ந்து பிச்சை ஏற்கும் பெருமானை மிகவும் பொருத்தமாக உத்தமன் என்று அழைக்கின்றார்.

வார்கொண் மென் முலையாள் ஒரு பாகமா

ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்

சீர்கொண் மாடங்கள் சூழ் திருவாரூரான்

ஆர்கணா எனை அஞ்சல் எனாததே

திருக்கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.79.6) திருஞானசம்பந்தர், பெருமான் தனது கழல்களில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்க பலிக்கு வருகின்றார் என்று கூறுகின்றார். இந்து சமயங்களின் ஆறு பிரிவுகளாக கருதப்படுவன, சைவம், வைணவம், சாக்தம், ச்காந்தம், காணாபத்தியம் மற்றும் சௌரம் என்பன. இவற்றுள் காணாபத்தியம் (கணபதி), ச்காந்தம் (முருகன்) வைணவம் (திருமால்) சாக்தம் (உமை அன்னை) சௌரம் (சூரியன்) ஆகிய ஐந்து சமயக் கடவுளர்களும் சிவத்தின் அம்சமாக கருதப் படுவதால், அந்த சமயத்தவர்கள் செய்யும் வழிபாடும் சிவபெருமானையே சென்று அடைவதாக திருஞானசம்பந்தர் கருதுவது இங்கே வெளிப் படுகின்றது. எனவே மேற்கண்ட சமயத்தவர்கள் அனைவரும் இறுதியில் அடைவது சிவானந்தம் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. வேறு இரதி=உலக இன்பங்களிலிருந்து வேறான சிவானந்தம்; கம்பம்=நடுக்கம், சிவானந்த மேலீட்டல் பெறுகின்ற உடல் நடுக்கம். மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து என்றும் ஆகம் விண்டு கம்பம் என்றும் திருவாசகத்தில் குறிப்பிடப் படுவது, இத்தகைய நடுக்கமே ஆகும். இத்தகைய தன்மை படைத்த அடியவர்கள் வாழும் தலம் கோகரணம் என்று கூறுகின்றார்.

நீறு திருமேனி மிசை ஆடி நிறை வார்கழல் சிலம்பு ஒலி செய

ஏறு விளையாட இசை கொண்டு இடுபலிக்கு வரும் ஈசன் இடமாம்

ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் நாமம் மிகக்

கூறு மனம் வேறு இரதி வந்தடியர் கம்பம் வரு கோகரணமே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.6) திருஞான சம்பந்தர், பெருமான் தேவியுடன் பலிக்கு செல்கின்றார் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் தலத்தில் உள்ள மகளிரின் தன்மையை வியந்து கூறிய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் தலத்து மாந்தர்களின் கொடைத் தன்மையை எடுத்து உரைக்கின்றார். கருமான்=கரிய உருவம் கொண்ட விலங்கு, யானை; ஐயம்=பிச்சை; மட மங்கை=இளமை பொருந்திய உமையன்னை; வையம்=உலகத்தில்; விலை மாறிடினும்=பஞ்சத்தின் காரணமாக பண்டங்களின் விலை கூடிய போதிலும்; வெய்ய=கொடிய; தண் புலவர்=இனிய சொற்களை உடைய புலவர்கள்; கடுமையான சொற்களை நெருப்புக்கு ஒப்பிட்டு வெய்ய என்று கூறிய திருஞானசம்பந்தர், இனிய மொழிகளை குளிர்ந்த சொற்கள் என்று குறிப்பிடும் நயத்தை நாம் உணரலாம். பஞ்சத்தின் காரணமாக பொருட்களின் விலை கூடினும், பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படினும், இல்லையெனாது இனிய மொழிகள் கூறி புலவர்களுக்கு உதவி செய்யும் தன்மையர் என்று இந்த தலத்து மக்களை குறிப்பிடுகின்றார். தனது சிவந்த திருமேனி மீது வெண்மை நிறத்தில் உள்ள திருநீற்றினை பூசிக் கொண்டும் தனது உடலின் மீது யானைத் தோலை போர்வையாக போர்த்துக் கொண்டும் வீடுவீடாக சென்ற பெருமான், ஐயம் இடுவீர்களாக என்று அந்த இல்லங்களில் இருந்த தாருக வனத்து மகளிரிடம் கேட்டதாக திருஞான சம்பந்தர் இந்த பாடலில் சொல்கின்றார்.

செய்ய திருமேனி மிசை வெண்பொடி அணிந்து கருமான் உரிவை போர்த்து

ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடமாம்

வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவிலாத வகையார்

வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே

பெருமான் திருநீற்றினைப் பூசிக் கொண்டுள்ள தன்மை, தான் ஒருவனே என்றும் அழியாத உண்மையான மெய்ப்பொருள் என்பதை உயிர்களுக்கு உணர்த்துகின்றது. கருமை நிறம் கொண்ட யானையின் தோலைக் கிழித்த செய்கை, உயிர்களை அறியாமையில் ஆழ்த்தும் அஞ்ஞானத்தை, அறியாமை எனப்படும் ஆணவ மலத்தினைக் கிழிக்கும் பெருமானின் ஆற்றலை உணர்த்துகின்றது. தேவி உடனிருக்கும் தன்மை, உயிர்களுக்கு அருள் வழங்கவும் ஞானம் அளிக்கவும் பெருமான் தயார் நிலையில் இருப்பதை உணர்த்துகின்றது. தேவி ஞான வடிவாகவும் அருள் வடிவாகவும் இருப்பவள் அல்லவா. இந்த வாய்ப்பினை உயிர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தானே ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று பெருமான் உணர்த்தும் பொருட்டு பலியேற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் அறிவுறுத்தும் பாடல் இது. இந்த செயல் உயிர்கள் பால் இறைவன் வைத்துள்ள கருணையை உணர்த்துகின்றது. சிவந்த திருமேனியின் மீது வெண்ணிறம் கொண்ட திருநீற்றினை அணிந்து கொண்டுள்ள பெருமான், தன்னை எதிர்த்து வந்த கருமை நிறம் கொண்ட விலங்காகிய யானையின் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்டவர் ஆவார், தன்னுடன் தனது இளமை வாய்ந்த உமையன்னையையும் அழைத்துக் கொண்டு செல்லும் தலைவராகிய பெருமான், பிச்சை இடுவீர்களாக என்று கேட்டவாறே வீடுகள் தோறும் செல்கின்றார். உயிர்கள் பால் அன்பு கொண்டு இத்தகைய கருணைச் செயலை புரியும் இறைவன், வேதிகுடி தலத்தினில் உறைகின்றார். பஞ்சத்தினால் பொருட்கள் விலையேறி கிடைப்பதற்கு அரிதாக இருந்த தருணத்திலும், நாள்தோறும் வளரும் மிகுந்த புகழும் குறையற்ற பண்பும் உடைய இந்த தலத்து மக்கள், தங்களது கொடைத் தன்மையில் மாறாமல், இனிய மொழிகளை பேசும் புலவர்களுக்கு கடுமையான சொற்கள் எதனையும் பேசாமல், கொடை அளிக்கின்றனர். இத்தகைய புகழ் வாய்ந்த தலம் தான் வேதிகுடி தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் மாதொரு பாகனாக பெருமான் பலி ஏற்பது உணர்த்தப் படுகின்றது. இந்த பாடலில் (3.106.6) பெருமான் நாணம் ஏதும் கொள்ளாது பலி ஏற்கின்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் தனக்கு இடப்படும் பலியை, மிகுந்த விருப்பத்துடன், வெட்கம் ஏதும் கொள்ளாமல் ஏற்றுக் கொள்பவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இது தான் நாம் பொதுவாக காணும் பிச்சைக்காரர்களுக்கும் பெருமானுக்கும் உள்ள வேறுபாடு; பெருமான் ஏற்கும் பலி பலருக்கும் பலன் அளிப்பதால், அவர் தனது செயலைக் குறித்து நாணம் அடையத் தேவையில்லை. தொண்டு=தொண்டு புரியும் அடியார்கள்; துதைந்து=இணைந்து; தனக்குத் திருத்தொண்டு புரியும் அடியார்களுடன், தன்னை நினைத்து மனம் ஒன்றி வழிபடும் அடியார்களுடன் பெருமானே இணைந்து நிற்கின்றார் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. தழைய=ஒளிமிகுந்த; பெருமான், ஒளிவீசும் தண்டு சூலம் ஆகிய ஆயுதங்களை ஏந்திய வண்ணம், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். தான் வருவதை அடையாளம் கண்டு கொண்டு, தன்னிடம் பிச்சையாக அளிக்கப்படும் மலங்களை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளும் பெருமான், அந்த செயலை நினைத்து வெட்கம் கொள்வதோ நாணம் அடைவதோ இல்லை. ஏனெனில் பலருக்கும் உதவும் பொருட்டு செய்யப்படும் செய்கை குறித்து நாணம் அடையத் தேவையில்லை; அவர், தன்னை எதிர்த்து வந்த மதயானையை அடக்கி, அதன் தோலை உரித்து போர்வையாக போர்த்துக்கொண்ட ஆற்றல் உடையவர்; வண்டுகள் ஒன்று கூடி மொய்க்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த மாடங்கள் நிறைந்த வலஞ்சுழி தலத்தினில் நிலையாக வீற்றிருப்பவர். அவர், தனக்கு திருத்தொண்டு புரியும் அடியார்களுடன் நெருக்கமாக கூடி நின்று அருள் புரிகின்றார். அவ்வாறு தொண்டர்களுக்கு அருள் புரியும் தன்மையை உணர்ந்த நாமும், அவருக்கு பல விதமான திருத்தொண்டுகள் செய்து, அவரது தொடர்பினைப் பெற்று வாழ்வினில் உய்வோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தண்டொடு சூலம் தழைய ஏந்தித் தையலொரு பாகம்

கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர்

வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னி அவர்

தொண்டோடு கூடித் துதைந்து நின்ற தொடர்பைத் தொடர்வோமே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.115.6) திருஞானசம்பந்தர் பெருமான், குறைந்த ஆடைகளுடன், பல நாடுகளுக்கும், மிகவும் எளிமையான கோலத்தில் பலி ஏற்கச் செல்வதாக குறிப்பிடுகின்றார். நக்கர் என்றால் குறைந்த ஆடைகளை உடையவர், கோவணம் அணிந்து செல்பவர்; ஏகுதல்=செல்லுதல்; மாசுணம்=பாம்பு; தக்க=தகுதிக்கு ஏற்ப; பூ=சிறந்த; சுற்ற= அடியார்கள் சூழ்ந்து கொண்டழைக்க; கருள்=இருள் சூழ்ந்த இரவு நேரத்து கனவு; திருக்கோயிலின் வெளியே நின்று கொண்டு தரிசனம் செய்த, திருநீலகண்ட யாழ்ப்பாணரை, உள்ளே அழைத்து வருமாறு அடியார்களை, அவர்களது கனவில் தோன்றி பணித்த பின்னர், திருக்கோயில் தரையின் குளிர்ச்சி காரணமாக பாணரின் யாழின் நரம்புகள் கெடாமல் இருக்கும் பொருட்டு பொற்பலகை அருளிய பெருமானின் செயலும் குறிப்பிடப் படுகின்றன. தாரம்=உயர்ந்தது, உயர்ந்த பொற்பலகை; தென்னவன் தேவி=மங்கையர்க்கரசியார்; குலப் பெண்கள் மிகவும் உயர்வாக கருதுவது தங்களது கழுத்தினில் மங்கல நாண் எப்போதும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே. பாண்டிய மன்னன் வெப்பு நோய்க்கு ஆளான போது, அவனது நோயினை தீர்த்து அவனது உயிரினையும், திருஞான சம்பந்தர் மூலமாக, பெருமான், பாதுகாத்து செய்கை இங்கே குறிப்பிடப் படுகின்றது. அணியை= நெருக்கமாக அருகில் உள்ளவர்; அக்கு=எலும்பு மாலை; குறைந்த ஆடையுடன் எளிமையான திருக்கோலத்தில் பல நாடுகளுக்கும். ஊர்களுக்கும் பலி ஏற்கச் செல்லும் பெருமானின் திருமேனி மீது பாம்பு ஊர்கின்றது. திருக்கோயிலின் வெளியே இருந்த வண்ணம் தன்னைப் பணிந்து வணங்கிய திருநீலகண்ட யாழ்ப்பாணரை, அடியார்களின் கனவில் உணர்த்தியதன் மூலம், திருக்கோயிலின் உள்ளே வரவழைத்து உயர்ந்த பொற்பலகையும் அளித்தவர் சிவபெருமான்; பாண்டிய அரசியார் மங்கையர்க்கரசியாருக்கு சிறந்த அணிகலனாகிய மங்கல நாண் நிலைத்து நிற்கும் வண்ணம் அருள் புரிந்த பெருமான், தனது தொண்டர்களின் அருகில் இருக்கின்றார்; எலும்பு மாலையை அணிந்த பெருமானின் உண்கலன் மண்டையோடு; அவர் ஆலவாய் தலத்தில் உறைவது உமை அன்னையுடன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நக்கம் ஏகுவர் நாடுமோர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே

தக்க பூ மனை சுற்றக் கருளொடே தாரம் உய்த்தது பாணர்க்கு அருளொடே

மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே

அக்கின் ஆரமுது உண்கலன் ஓடுமே ஆலவாய் அரனார் உமையோடுமே

பொதுவாக பிச்சை ஏற்பவர் பெறும் பயன், பிச்சை இடுவோர் பெறும் பயனை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் சிவபெருமான் பிச்சை ஏற்பது, தான் பயன் அடைவதற்காக அல்ல. அவருக்கு பிச்சை இடுவோர்கள் தங்களது அகங்காரம் (மலங்கள்) அழியப் பெற்று நலம் பெறுவதற்குத் தான். இந்த உண்மை அப்பர் பெருமானால் கீழ்க்கண்ட திருவாரூர் தலத்து பாடலில் (4.53.6) விளக்கப் படுகின்றது. இந்த பாடலில் மதிசூடியாக பெருமான் பிச்சை ஏற்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பிச்சை ஏற்கும் பெருமான் உண்பது நஞ்சு என்று பாடலின் மூன்றாவது அடியில் கூறும் அப்பர் பிரான், சிவபெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்பதையும், நகைச்சுவை உணர்வுடன் கலந்து, தெளிவு படுத்துவதை நாம் இங்கே காணலாம். இந்த பாடலில் குறிப்பிடப்படும் பிச்சை ஏற்கும் நிகழ்ச்சியை, தாருகவனத்து நிகழ்ச்சியாக கருதி, தாருகவனத்து மகளிரின் கர்வமும், பெண்மைக்குரிய இயல்புகளும் ஒழிந்து போகுமாறு, சிவபெருமான் பிச்சைப் பெருமானாக வலம் வந்தார் என்றும் விளக்கம் அளிப்பதும் பொருத்தமே. தானகம் என்ற சொல்லினை தான் அகம் என்று பிரித்து, அடியார்கள் தங்களது அகங்காரம் அழியும் பொருட்டு இறைவன் பலி ஏற்கின்றார் என்பதை உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடித்

தானகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்

ஊனகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம்

ஆனகத்து அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.36.4) அப்பர் பிரான் இருவராக, பலி ஏற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். கீறு=கிழித்த; அருவராதது=அருவருக்கத் தகாதது; இருவராய்= சக்தியும் சிவமுமாக இருவராய்; கடை=வீட்டு வாயில்; உழலுதல்=திரிதல். இந்த பாடலில் வெறுக்கத் தகாததோர் வெண்தலை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபெருமானுடன் தொடர்பு கொண்ட காரணத்தினால், விலை மதிப்பில்லாத தன்மையை அந்த மண்டையோடு பெறுகின்றது. மேலும் உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை அந்த மண்டையோட்டில் இட்டு உய்வினை அடைவதற்கு உதவுதலால், நாம் அந்த மண்டையோட்டினை மற்ற மண்டையோடு போன்றது என்று கருதி வெறுக்கக் கூடாது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடல் உணர்த்தும் உட்கருத்து, பெருமான் மண்டையோட்டினை ஏந்தி திரியும் நோக்கத்தை உணர்ந்து கொண்டு, நமது மூன்று வகையான மலங்களையும் அவரது உண்கலத்தில் இட்டு நாம் உய்வினை அடைய வேண்டும் என்பதே ஆகும்.

அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து

இருவராய் இடுவார் கடை தேடுவார்

தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார்

ஒருவர் தாம் பல பேருளர் காண்மினே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.6) அப்பர் பிரான் கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடைதோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் பெருமான் என குறிப்பிடுகின்றார். கழல் என்று பெருமான் அணியும் வீரக்கழலும் கைவளை என்று பிராட்டி அணியும் வளையல்களும் குறிப்பிடப்பட்டு, மாதொருபாகனாக பெருமான் பலிக்கு சென்ற கோலம் இங்கே உணர்த்தப் படுகின்றது. விகிர்தன்=மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன்: கடை=கடைவாயில், வாயிற்படி; இந்த பாடலில் ஆகாயத்தின் பண்பு ஒலி என்பதை குறிப்பிடும் வண்ணம் விண்ணொலி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆகாயத்தின் பண்பு ஒலி எனப்படும் குணம் ஒன்று தான். காற்று ஒலி மற்றும் ஊறு ஆகிய இரண்டு பண்புகளையும், தீ ஒலி, ஊறு மற்றும் உருவம் ஆகிய மூன்று பண்புகளையும், தண்ணீர் ஒலி ஊறு உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு பண்புகளையும் நிலம் ஒலி ஊறு உருவம் சுவை மற்றும் வாசனை ஆகிய ஐந்து பண்புகளையும் உடைத்ததாக விளங்குகின்றன.

புகழொளியை புரம் எரித்த புனிதன் தன்னைப் பொன்பொதிந்த மேனியானைப் புராணன் தன்னை

விழவொலியும் விண்ணொலியும் ஆனான் தன்னை வெண்காடு மேவிய விகிர்தன் தன்னைக்

கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக் கடைதோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும்

திகழொளியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.6.6) சுந்தரர், பிராட்டியுடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். கூறுபட்ட கொடியும் நீரும் என்று சுந்தரர் குறிப்பிடுவதால், மாதொரு பாகன் கோலத்துடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக உணர்த்துகின்றார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானை காட்டு யானை என்பதை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். மாறுபட்ட=பெருமானை எதிர்த்து வந்த தன்மை சொல்லப் படுகின்றது. தன்னை எதிர்த்து வந்த மதயானையைக் கொன்ற பின்னர் அந்த யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட போதிலும் தனது உடலுக்கு எந்த விதமான கேடும் அடையாதிருந்த ஆற்றலை உடைய பெருமானின் தன்மைக்கு, பிறர் இடுகின்ற பிச்சையை நாடி அவர்களது இல்லத்திற்கு செல்லுதல், பெருமானின் பெருமைக்கு தகுந்த செயல் அல்ல என்று கூறுகின்றார்.

மாறுபட்ட வனத்தகத்தின் மருவ வந்த வன்களிற்றைப்

பீறி இட்டமாகப் போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம் தோறும்

கூறு பட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றி அடர ஏறி

வேறுபட்டுத் திரிவதென்னே வேலை சூழ் வெண்காடனீரே

தனது மனைவியுடன் பலி ஏற்கச் சென்றதாக சிவபெருமானை குறிப்பிடும் திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரானின் பாடல்கள் நமக்கு, சுந்தரரின் பைஞ்ஞீலி பதிகத்துப் பாடல் ஒன்றினை (7.36.5) நினைவூட்டுகின்றது. இந்த பதிகம் தாருகவனத்து மகளிர் கூற்றாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம் என்று கூறுவார்கள். பெருமானுக்கு பிச்சை இடுவதற்காக வந்த ஒரு பெண், பெருமானின் திருமேனியில் வெண்முத்து போன்று பிரகாசிக்கும் திருநீற்றினைக் கண்டு வியக்கின்றாள். பெருமானின் திருமேனியை உற்று நோக்கிய அவளுக்கு, பெருமானின் இடது பாகத்தில் நீண்ட கண்களோடும் காணப்படும் உமை அம்மை கண்ணில் தெரிகின்றாள். அவளுக்கு உடனே கோபம் வருகின்றது. என்ன துணிச்சல் இருந்தால், தனது உடலில் ஒரு பெண்ணினை வைத்திருக்கும் கோலத்தோடு பிச்சை கேட்க பெருமான் தனது இல்லத்திற்கு வருவார் என்று எண்ணுகின்றாள். அந்த கோபம் பாடலாக வெளிப்படுகின்றது. பெருமானே நாங்கள் உமக்கு பலியிட மாட்டோம், நீர் இந்த விடத்தை விட்டு அகன்று செல்லலாம் என்று கூறுகின்றாள். அவ்வாறு சொன்ன பின்னர் அவளுக்கு வேறு ஒரு சந்தேகம் தோன்றுகின்றது. தனது உடலில் ஒரு பெண்கொடியை கொண்டுள்ள பெருமான் சடையிலும் கங்கையை வைத்துள்ளாரோ என்பது தான் அந்த சந்தேகம். கங்கை ஆற்றினை உமது சடையில் சூடியவாறு வந்தீரோ, சொல்வீராக என்று பெருமானை வினவுகின்றாள். பெருமானின் அழகில் மயங்கிய தாருகவனத்து பெண்மணிகள், அவர் இரண்டு மனைவியருடன் இருப்பதால் கோபம் கொண்டு பிச்சை இட மாட்டோம் என்று சொன்னதாக, சுவையான கற்பனை செய்த பாடல்.

நீறு நும் திருமேனி நித்திலம் நீள் நெடுங் கண்ணினாளொடும்

கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடகிலோம் பலி நடமினோ

பாறு வெண்தலை கையில் ஏந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்

ஆறு தாங்கிய சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.77.7) மலை மங்கையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்ட தோற்றத்துடன் உலகத்தின் பல இடங்களிலும் திரிந்து பெருமான் பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். ஒருபால்=ஒரு பாகத்தில்; சிலை=கல், இங்கே மேருமலை; எயில்=கோட்டை; பறக்கும் மூன்று கோட்டைகள்; தீர்த்தன்=உயிர்களின் பாவங்களை நீக்கி புனிதமாக்குபவன்;

மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்

சிலைக் கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய் தீர்த்தன் நீ

மலைக் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு

அலைக்கும் திரைக் காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ

மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலைக்கும், பலிக்கு செல்லும் போதும் பிராட்டியைத் தன்னுடன் பெருமான் அழைத்துச் செல்வதற்கும் ஒரு காரணத்தை கற்பனை செய்து திருஞான சம்பந்தர் நகைச்சுவை ததும்ப உணர்த்தும் பாடலை நாம் இறுதியாக காண்போம். இந்த பாடல் தெளிச்சேரி தலத்தின் மீது அருளிய பாடல் பதிகத்தின் (2.3.4). கச்சு அணிந்த மார்பகங்களைக் கொண்ட உமை அன்னையை பாதுகாப்பாக வைப்பதற்கு இடம் ஏதும் இல்லாத காரணத்தால், பெருமானே நீர் பிராட்டியையும் உமது உடலில் ஏற்றுக்கொண்டு பலிக்கு செல்கின்றீரோ என்று நகைச்சுவை ததும்ப மாதொரு பாகனின் திருக்கோலத்தை உணர்த்தும் பாடல்; ஏர் என்றால் எழுச்சி என்று பொருள்; அழகு என்ற பொருளும் பொருந்தும். பெருமான் பலிக்கு செல்வது, பக்குவப் பட்ட ஆன்மாக்கள் தங்களது மலங்களை, பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் என்பதால், அத்தகைய ஆன்மாக்கள் எழுச்சி பெற்று நிலையான ஆனந்தத்தில் ஆழ்த்தப் படுவதால், ஏருலாம் பலி என்று கூறினார் போலும். ஏகிட=செல்ல;

காருலாம் கடல் இப்பி கண் முத்தம் கரைப்பெயும்

தேருலா நெடு வீதியதார் தெளிச்சேரியீர்

ஏருலாம் பலிக்கு ஏகிட வைப்பிடம் இன்றியே

வாருலா முலையாளை ஒர் பாகத்து வைத்ததே

பொழிப்புரை:

ஆமையின் ஓடு, பாம்பு, பன்றியின் வெள்ளைக் கொம்பு, எலும்பு மாலை ஆகிய எளிய பொருட்களை அணிகலனாகப் பூண்டு வெள்ளை உள்ளத்தவராக காட்சி அளித்த போதிலும், பெருமான் நடந்து கொண்ட விதம் ஒரு கள்வரைப் போன்று இருந்தது; ஒரு பொருளின் உரிமையாளர் அறியாத வண்ணம் அந்த பொருளினைத் திருடும் கள்வர் போன்று, எப்படித் திருடினார் என்று நான் அறியாத வண்ணம், எனது உள்ளத்தை கொள்ளை கொண்டவர் சிவபெருமான். எனது உள்ளத்தை அவரிடம் இழந்ததால், நான் காதல் நோய்ப்பட்டு வருந்துகின்றேன். வேள்விகளை முறையாக செய்யும் நெறியினை உணர்த்தும் வேதங்களை ஓதும் பிரமனும், வளைந்த நாகத்தை தனது படுக்கையாகக் கொண்ட திருமாலும், தங்களின் பாதுகாப்புக்கு உரியவராக கருதும் செல்வரும் ஒழுக்க சீலரும் ஆகிய பெருமான் பொருந்தி உறையும் தலம் கானூர் ஆகும்.

பாடல் 11:

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 11 (திதே 0780)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 11 தொடர்ச்சி (திதே 0781)

வானார் சோதி மன்னு (1.073) பாடல் 11 தொடர்ச்சி (திதே 0782)

கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானைப்

பழுதில் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே

தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்து நின்று

அழுது நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே

விளக்கம்:

கழுது=பேய்கள்; துஞ்சுதல்=தூங்குதல்; கங்குல்=நள்ளிரவு; இந்த பாடலில் அழுதும் சிரித்தும் பெருமான் பால் அன்பு செய்யும் தொண்டர்கள் தங்களது துன்பங்கள் இறைவனால் அறுக்கப்பட்டு இன்பம் அடைவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு மணிவாசகர் அருளிய திருவாசகம் திருச்சதகம் முதல் பாடலை நினைவூட்டுகின்றது. இறைவனைத் தொழும் நிலையில் நமது உடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மணிவாசகர் திருச்சதகம் பதிகத்தின் முதல் பாடலில் சொல்வதைப் போன்று பொருத்தமாக வேறு எவராலும் சொல்ல இயலாது. கைகள் கூப்பி, வாயினால் தோத்திரங்களை உச்சரித்தாலும், நமது மனம் நமது கட்டுப்பாட்டில் இராமல் எங்கோ சஞ்சரித்தால், நாம் செய்யும் வழிபாட்டில் உருக்கம் ஏற்படாது. மனம் ஒன்றி செய்யப்படும் வழிபாடு தான், மனதினை நெகிழ்வித்து உள்ளம் உருகும் நிலைக்கு வழி வகுக்கும். அந்த நிலையில் உடலில் பல மாறுதல்கள் ஏற்படும், உடல் புளகாங்கிதம் அடைதல், கண்ணீர் ததும்புதல், பேச்சு எழாத நிலை ஏற்படுதல், உடல் நடுங்குதல், பொய்யான வெளித் தோற்றங்களைத் தவிர்த்தல், முதலானவை அந்த மாறுதல்கள். இத்தகைய மாறுதல்கள் ஏற்படும் வண்ணம், தான் உள்ளம் உருகி இறைவனை வழிபடுவதாக குறிப்பிடும் மணிவாசகர், இவ்வாறு வழிபடும் தன்னை இறைவன் அடிமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்த பாடலில் இறைஞ்சுகின்றார். அரும்பி=புளகாங்கிதம் கொண்டு, விரை=நறுமணம்; ததும்பி=இமைகள் வழியாக வழியும் அளவு நிரம்பி; உடையாய்= என்னை அடிமையாக உடையவனே; கண்டு கொள்ளே=எனது இயல்பினை கண்டு அடிமையாக ஏற்றுக் கொள்வாயாக

மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர் கழற்கு என்

கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்

பொய் தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும்

கை தான் நெகிழ விடேன் உடையாய் என்னை கண்டு கொள்ளே

மிகுதியான அன்பின் வெளிப்பாடு அழுகை. நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் (3.49.1) பெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டு உள்ளம் கசிந்து கண்ணீர் மல்க ஓத வேண்டிய திருநாமம் நமச்சிவாய மந்திரம் என்று தானே திருஞான சம்பந்தர் கூறுகின்றார். திருநாமம்= அஞ்செழுத்து;திருவைந்தெழுத்தை ஓதி பயன் பெற விரும்புவோர் மனம் மொழி மெய் என்ற மூன்றாலும் பெருமானுடன் ஒன்றி நிற்கும் நிலை இங்கே சொல்லப் பட்டுள்ளது. மல்கி=மிகுந்து; நமச்சிவாய மந்திரம் மனம் கசிந்துருகி, கண்ணீர் மல்கி, வாயினால் ஓதப்பட வேண்டும் என்று குறிப்பிடப் படுகின்றது. நன்னெறி=சிவநெறி; நன்னெறியாவது நமச்சிவாயவே என்ற அப்பர் பிரானின் வாய்மொழி (4.11.9) நமது நினைவுக்கு வருகின்றது. சிவநெறியாவது சரியை, கிரியை யோகம் மற்றும் ஞானம் எனப்படும் நான்கு வழிபாட்டு முறைகள்; உய்த்தல்=துணையாக நின்று செலுத்துதல்; இந்த தன்மையே நற்றுணையாவது நமச்சிவாயவே என்று சொற்றுணை வேதியன் பதிகத்தின் முதல் பாடலில் (4.11.1) அப்பர் பிரானால் சொல்லப் படுகின்றது. நான்கினும் மெய்ப்பொருள் என்று வேதங்களின் இருதயமாக நமச்சிவாய மந்திரம் இருக்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது. என்றும் குறையாது நாளுக்கு நாள் வளரும் அன்பே, அன்பின் மேலீடே காதல் என்று அழைக்கப் படுகின்றது. ஈசனே தனக்கு உறுதுணையாக விளங்கும் தலைவன் என்ற உணர்வும், அவரையன்றி வேறு எவராலும் தனக்கு நன்மை செய்ய இயலாது என்ற உறுதிப்பாடும், உயிரினும் மேலதாக அவரை பேணுவதாலும், அன்பின் பெருக்கு காதலாக மாறிவிடுகின்றது. ஈசன் பால் இத்தகைய அன்பு கொண்டுள்ள உயிர்கள், பெருமானின் திருநாமத்தை நினைத்த அளவில் அன்பின் பெருக்கினால் ஆனந்தக் கண்ணீர் பெருக்குகின்றது. நாம் எடுக்கும் பிறவி வினையின் வழி பெறப்பட்டது; எனினும் நமச்சிவாய மந்திரத்தை சாதனமாகக் கொண்டு நாம் இறைவனை வழிபட, அவனது கருணையால் பிறவாமையை அடையும் நோக்கத்தில் நம்மை உந்துவது நன்னெறி என்று சொல்லப் படுகின்றது. எனவே இந்த உண்மையை நன்கு கருத்தினில் கொண்டு, நமச்சிவாய மந்திரத்தை ஓதி, ஈசனின் திருவடிப் பேறாகிய முக்தி இன்பத்தை நாம் அடைய வேண்டும் என்பதே இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. ஈசனாரின் திருநாமமாகிய நமச்சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை, அன்பின் மேலிட்டு மனதினில் பதித்து, கசிந்துருகி கண்ணீர் மல்கி, மீண்டும்மீண்டும் ஓதும் அன்பர்களுக்கு நன்னெறி வாய்க்கப் பெறும். இந்த மந்திரம் நான்கு வேதங்களிலும் சொல்லப்படும் மெய்ப்பொருளாக விளங்குகின்றது என்பதே இந்த பாடலின் [பொழிப்புரை.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே

தங்களது நகங்கள் தேயும் அளவுக்கு மலர்கள் கொய்து, அந்த மலர்களைத் தூவி, தங்கள் முகத்தினில் கண்ணீர் மல்க, இறைவனை வழிபடும் தொண்டர்களின் உள்ளம் இறைவன் உறையும் திருக்கோயில் என்று திருவையாறு பதிகத்தின் பாடல் (4.40.8) ஒன்றினில் அப்பர் பிரான் கூறுகின்றார், உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு அடிமை என்றும், அவரன்றி வேறு துணை எவருக்கு இல்லை என்றும் இந்த பாடலில் அவர் கூறுகின்றார். தான்=சிவபெருமான். அகம்=மனது; தனக்கு இணையாகவும் தன்னை விடவும் மிக்காராகவும் வேறு எவரும் இல்லாததால் பெருமானுக்கு துணையாக, அவருக்கு உதவும் நிலையில் வேறு எவரும் இல்லை. இந்த தன்மை பற்றியே, பெருமான் வேறு எவரையும் தனது இரண்டு கைகளையும் சேர்த்து வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்த்தும் பொருட்டு, சேர்ந்தறியா கையான் என்று மணிவாசகர் திருவம்மானை பதிகத்தில் குறிப்பிடுகின்றார். நமது தலைவனாகிய ஐயாற்று பெருமானுக்கு, உலகத்தில் உள்ள உயிர்கள் தவிர வேறு எவரும் அடிமைகள் இல்லை. தன்னைத் தவிர, தனக்கு துணையாக நின்று உதவி செய்பவர் எவரும் பெருமானுக்கு இல்லை. தங்களது நகங்கள் தேயுமாறு அன்று மலர்ந்த புது மலர்களை பறித்து இறைவனின் திருமேனி மேல் தூவி, அவனைத் தொழுது வணங்கி, தங்களது முகங்களில் கண்ணீர் வழிந்து ஒழுகும் வண்ணம் அவனது சன்னதியில் நின்று பணிந்து வணங்கும் தொண்டர்களின் உள்ளத்தைத் தவிர வேறு எதனையும் தான் உறையும் கோயிலாக இறைவன் கொள்வதில்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை

நகம் எலாம் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி

முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர்

அகம் அலால் கோயில் இல்லை அய்யன் ஐயாறனார்க்கே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.53.3) அப்பர் பிரான், பெருமானை தன்னை நினைத்து அழும் தொண்டர்களின் மனதினில் புகுந்து நிற்பவன் என்று கூறுகின்றார். தொட்டிமை=ஒற்றுமை, ஓத்த தன்மை: சிவபெருமானை பணிந்து வழிபடுவதில் தங்களுக்குள் ஒத்த தன்மை கொண்ட அடியார்கள். வேலி என்பது முந்தைய காலத்தில் இருந்த நிலப்பரப்பை அளக்கும் ஒரு அளவை. ஒரு வேலி என்பது சுமார் 6.17 ஏக்கருக்கு சமம். திருவாரூர் கோயில், குளம், மற்றும் ஓடை ஆகியவை ஒவ்வொன்றும் ஐந்து வேலி பரப்புடையதாக அந்நாளில் இருந்தது என்பர். தொட்டிமை உடைய தொண்டர்கள் என்ற தொடருக்கு, இமைகள் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளும் அளவுக்கு கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்து சிவபெருமானை மனதினில் நினைத்து வழிபடும் தொண்டர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். சிவபெருமானைத் தொழுது வணங்குவதில், திருவாரூரில் வாழும் அடியார்கள்அனைவரும் தங்களுக்குள் ஒத்த கருத்தினை உடையவர்களாக திகழ்ந்தார்கள். அழுதவாறு, தங்களது மனம் குழைந்த நிலையில் இறைவனைத் தொழுது வணங்கிய அந்த அடியார்களின் மனதினில் புகுந்த இறைவன் அவர்களாகவே மாறி, அவர்களின் நடுவே நிற்கின்றான். அவன் தான் ஐந்து வேலி பரப்புடைய பூஞ்சோலையின் நடுவே திகழும் மூலத்தானத்தில் உறைபவனும், முத்துக்களையும் பிறையையும் தனது சடையில் சூடியவாறு காட்சி அளிக்கும் பிரான் ஆவான்

தொழுது அகம் குழைய மேவித் தொட்டிமை உடைய தொண்டர்

அழுது அகம் புகுந்து நின்றார் அவரவர் போலும் ஆரூர்

எழிலக நடு வெண் முத்தம் அன்றியும் ஏர் கொள் வேலிப்

பொழிலகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.56.4) அப்பர் பிரான், பெருமானை அழுமவர்க்கு அன்பர் என்று குறிப்பிடுகின்றார். எழுநுனை=கூரிய நுனி: சிவபெருமானின் புகழினைக் கேட்கும் போதும், சொல்லும் போதும் வாய் விட்டு அழுதல் என்பது சிறந்த அடியார்களின் குணங்களில் ஒன்றாகும். நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி சிவபெருமானின் திருநாமத்தை ஓதும் அடியார்கள் நன்னெறியை அடைவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இறைவனை நாம் அதிகமாக தொழத்தொழ, நமக்கு இறைவனிடத்தில் அன்பு அதிகமாகின்றது. அந்த இறையன்பு வலுப்பெறும்போது அது அழுகையாக வெளிப் படுகின்றது. தனது கையில் மழுப்படை ஏந்தியவரும், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவரும் ஆகிய சிவபெருமான், கூரிய நுனியை உடைய சூலத்தைக் கையில் கொண்டுள்ளார். எலும்பு மாலையை அணிந்துள்ள அவர், தன்னை கீழே விழுந்து தொழுது எழுந்து, ஆடியும் பாடியும், அழுதும் தோத்திரம் சொல்லியும் வணங்கும் அடியார்களுக்கு அன்பராக இருக்கின்றார். அவர் தான் ஆவடுதுறை தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மழுவமர் கையர் போலும் மாது அவள் பாகர் போலும்

எழுநுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும்

தொழுது எழுந்தாடிப் பாடி தோத்திரம் பலவும் சொல்லி

அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே

இறைவன் பால் அதிகமான அன்பு கொண்டு, அழுதவாறு இறைவனின் திருநாமங்களை இடைவிடாது அரற்றும் அன்பர்களை இறைவன் குறித்துக் கொள்கின்றார் என்று அப்பர் பிரான் இன்னம்பர் தலத்து பதிகத்தின் பாடல் (5.21.8) ஒன்றினில் கூறுகின்றார். கீழ்க்கணக்கு=சிறு வரிகளால் எழுதப்படும் குறிப்பு. இன்னம்பர் தலத்தில் உறையும் இறைவனுக்கு கீழ்க்கணக்கர் என்பது ஒரு திருநாமம். இந்த பாடலில் மனம், மொழி மற்றும் மெய்யினால் செய்யப்படும் வழிபாடு உணர்த்தப் படுகின்றது. மனத்தினால் இறைவன் பால் அன்பு கொண்டு, உடலால் தொழுதும் மலர்கள் தூவியும், வாயினால் அழுதும் அவனது திருநாமங்களை அரற்றியும் வழிபாடு செய்ய வேண்டும் என்று அப்பர் பெருமான் கூறுகின்றார். தூய்மையான மலர்களைத் தூவி, இறைவனின் புகழினைக் கூறும் பாடல்களைப் பாடித் தொழுது, அளவு கடந்த அன்பினால் தாங்கள் இறைவன் மீது வைத்துள்ள பற்று அழுகையாக வெளிப்படுமாறு தொழும் அடியார்களையும், இறைவனின் புகழினைப் பேசாது, அவனைத் தொழாது வீணாக காலத்தைக் கழித்துக் கொண்டு, இறைவனை புறக்கணிக்கும் மனிதர்களையும் அடையாளம் கண்டு கொள்ளும் சிவபெருமான், அனைவரது செயல்களையும் குறித்துக் கொள்கின்றான். இவ்வாறு கீழ்க்கணக்கராக விளங்கும் இறைவன் இன்னம்பர் தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தொழுது தூமலர் தூவித் துதித்திடும்

அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே

குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.63.8) அப்பர் பிரான், ஆடியும் அழுதும் பரமனைத் தொழுமாறு அடியார்களுக்கு அறிவுரை கூறுகின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான், சிவபெருமானின் அடியார்களை தனது சுற்றம் என்று அழைக்கின்றார். தொண்டர்களே, நீங்கள் அனைவரும், சிவபெருமான் இருக்கும் இடமாகிய குரங்காடு துறையினை அடைந்து, ஆங்கே அனைவரும் ஒன்று சேர்ந்து சிவபெருமானின் புகழைப் பாடிக் கொண்டே ஆடுமின், அழுமின், அவனது திருப்பாதங்களைத் தொழுமின் என்று கூறுகின்றார். எதற்காக, அழுதால் அவனைப் பெறலாம் என்பதற்காக.

நாடி நம் தமர் ஆயின தொண்டர்கள்

ஆடுமின் அழுமின் தொழுமின் அடி

பாடுமின் பரமன் பயிலும் இடம்

கூடுமின் குரங்காடு துறையையே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.25.2) அப்பர் பிரான், வானவர்கள் அழுது அரற்றி பெருமானை வழிபடுவதாக கூறுகின்றார். எழுது கொடி இடையார்= சித்திரங்களில் தீட்டப்படும் அளவுக்கு அழகான இடையை உடைய பெண்கள்; நமது இளமைக் காலத்தில் நம்மை விரும்பும் பெண்கள், நாம் முதுமை அடைந்த பின்னர் நம்மை இகழ்வார்கள் என்று கூறி, வயது முதிர்ந்த பின்னர் நமது உடல் செயலற்று இருக்கும் தன்மையை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். அவ்வாறு உடல் செயலற்று இருக்கும் சமயத்தில், உற்சாகத்துடன் இறைப்பணியில் ஈடுபட்டுச் செய்வது கடினம் என்பதால் நாம் இளமையாக இருக்கும்போதே, இறைவனை வழிபட வேண்டும் என்று இங்கே நமக்கு அறிவுரை கூறுகின்றார். தனது நெஞ்சினை நோக்கி, பெருமானைத் தவிர்த்து வேறு எதையாவது நினைத்து பழுதுபட்டு போகாதே என்று அறிவுரை கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

எழுது கொடியிடையார் ஏழை மென்தோள் இளையார்கள் நம்மை இகழா முன்னம்

பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டு தான் என்னோடு பகை தான் உண்டோ

முழுதுலகில் வானவர்கள் முற்றும் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி

அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர் தானே

உயிர் விரும்பும் செய்கையை, இறைவனை வழிபடுவதை, விரும்பாமல் நெஞ்சம் உயிரினை வேறு வழிக்கு அழைத்துச் செல்லும் தன்மை எதனால் ஏற்பட்டது என்று நெஞ்சத்தை நோக்கி அப்பர் பிரான் வினவுவதாக அமைந்த பாடல். நெஞ்சமே உனக்கும் எனக்கும் முந்தைய பகை ஏதேனும் உண்டோ, ஏன் என்னுடன் நீ ஒத்துழைக்க மறுக்கின்றாய் என்று உயிர் வினவுவது போன்று அமைந்த பாடல். தீவினைகள் கொண்ட நெஞ்சமே, உனக்கும் எனக்கும் முந்தைய பகை ஏதேனும் உண்டோ? அவ்வாறான பகை ஏதும் இல்லையே. முதுமைக் காலம் அடைந்து, சித்திரத்தில் எழதப்பட்ட அழகான இடையையும் மெல்லிய தோள்களையும் கொண்ட மாதர்கள், நீ முதுமை அடைந்து விட்டாய் என்று சொல்லி உன்னை இகழ்வதன் முன்னர், நீ பயனுள்ள செயல்களைச் செய்வாயாக. முதுமை அடைந்த போது உன்னால் பயனுள்ள செயல்களைச் செய்ய முடியாமல் நேரலாம். உலகில் உள்ள தேவர்கள் எல்லோரும் கூடி, தங்களது தலையால் முழுமையாக வணங்கி, அழுது அரற்றி வழிபடுமாறு, சிவபெருமான் திருவாரூரில் கோயில் கொண்டுள்ளான். நீ அவனை நினையாது வேறு எதனையும் நினைத்து பழுதுபட்டு போகாதே, என்பதே இந்த பாடலில் திரண்ட கருத்து.

ஆவடுதுறை அரன், தேவர்களுக்கு மட்டுமா தலைவன், அவனை நினைத்துநினைத்து உருகி, கண்களில் நீர் மல்க, அவன் பால் மிகுதியான அன்பு வைத்து அவனது திருவடிகளைப் புகழ்ந்து போற்றும் அடியார்களுக்கும் அவன் தலைவன் என்று கூறும் திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.47.3) அப்பர் பிரான், பெருமானை நினைத்து அடியார்கள் அழுவதாக கூறுகின்றார். தான் இறக்கும் தருணத்தில் இறைவனின் திருநாமத்தை சொல்லும் வாய்ப்பு தனக்கு கிட்டுமாயின், அந்த நேரத்தில் எத்தனை கொடிய நோய்கள் வந்து வருத்தினாலும் தான் அவற்றால் மனத்துன்பம் அடைய மாட்டேன் என்று உறுதியாக அப்பர் பிரான் கூறுவதை நாம் உணரலாம். இறக்கும் சமயத்தில் இறைவனின் திருநாமத்தை உரைப்பார்க்கு பிறவிப்பிணி நீங்குதல் திண்ணம் என்பதால், அந்த ஆனந்தத்தில் வேறு எந்த துன்பமும் தோன்றாது என்பதை இங்கே உணர்த்துகின்றார். வரை=மலை, இங்கே இமயமலை; கழல்=கழலை அணிந்த பெருமானின் திருவடிகள்; அரையன்=அரசன்; இந்த பாடலில் தான் இறக்கும் தருவாயில் பெருமானின் திருநாமங்களைச் சொல்லும் வல்லமை தனக்கு இருக்குமாயின், எத்துணை வலிய நோயும் தனக்கு எந்த கெடுதலையும் செய்யாது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நோய் என்று உடலுக்கு வரும் நோயினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடவில்லை. இறக்கும் சமயத்தில் உடலுக்கு எந்த விதமான நோய் வந்தாலும் அதனால் என்ன மாற்றம் நேரிடப் போகின்றது. அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவது, பழைய பிறவிகள் முதலாக அந்த பிறவி வரை ஈட்டிய வினைத் தொகைகளையே நோயாக, உயிரினைப் பற்றும் நோயாக குறிப்பிடுகின்றார். அந்த வினைக் குவியல்கள் தானே, இறந்த பின்னர் அந்த உயிருக்கு அடுத்த பிறவி உள்ளதா, இருந்தால் அந்த பிறவி எத்தகையதாக இருக்கும் என்பதை தீர்மானிக்கின்றது. இந்த கருத்தினை உள்ளடக்கியே, தான் இறக்கும் சமயத்தில் இறைவன் அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் என்றும், இறக்கும் சமயத்தில் அவனது திருநாமங்களைச் சொல்லும் வண்ணம் தான் இருக்க வேண்டும் என்றும் அப்பர் பிரான் பல பாடல்களில் வேண்டுகின்றார். மலைமகளாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனே, கங்கை நதியைத் தனது சடையில் தரித்த மணவாளனே, உனது திருநாமங்களை நான் சொல்லிக் கொண்டு இருக்கையில் எனது உயிர் போகும் என்றால், எத்துணை வலிமை மிக்கதாக இருப்பினும் அந்த நோய் என்னை எவ்வாறு தீண்ட முடியும். உள்ளம் கசிந்துருகி கரையுமாறு, கண்களில் நீர் பெருகி, மிகுந்த அன்புடன், உனது திருவடிகளை எப்போதும் நினைத்து வழிபடும் அடியார்களுக்கு அரசனாக விளங்கும் பெருமானே, நீர்வளம் மிகுந்து குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் அமரர்கள் தலைவனே, அஞ்ச வேண்டாம் என்று அடியேனுக்கு ஆறுதல் சொல்வாயாக என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டும் பாடல்.

வரையார் மடமங்கை பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்றன் நாமம்

உரையா உயிர் போகப் பெறுவேனாகில் உறுநோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே

கரையா நினைந்து உருகிக் கண்ணீர் மல்கிக் காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு

அரையா அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.48.3) அப்பர் பிரான், மெய்யரும்பி அழுவார் தங்கட்கு வாயவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஏயவன்=நடத்துபவன்; இயல்பு=இயக்கம், நடை; தத்துவன்=உயர்ந்த பொருள்; அனைத்துப் பொருட்களையும் நடத்துபவனும், அனைத்து உயிர்களின் இயக்கமாக உள்ளவனும், துன்பக் கலப்பு ஏதும் இல்லாமல் இன்பம் உடையவனாக இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருப்பவனும், உலகினில் தனக்கு ஒப்பாக வேறொருவர் இல்லாத உயர்ந்த பொருளாக இருப்பவனும், உத்தமனாக இருப்பவனும், உலகெங்கும் பரவி இருப்பவனும், அனைத்து அண்டங்களுக்கும் அப்பாற்பட்டவனும், மனம் உருகி உடலின் உரோமங்கள் மயிர்க்கூச்செறிய அழுது வணங்கித் தொழும் அடியார்களின் வாயிலிருந்து வரும் மொழிகளாக இருப்பவனும், வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும், வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது மனதினில் நிலையாக உள்ளான் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பானான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண்

தாயவன் காண் உலகுக்கோர் தன்னொப்பில்லாத் தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும்

ஆயவன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் அகம் குழைந்து மெய்யரும்பி அழுவார் தங்கள்

வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவனென் மனத்துளானே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.64.10) அழுதால் அவனைப் பெறலாமே என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான் பெருமானை அற்புதன் என்று கூறுகின்றார். இங்கே உலகங்களைத் தாங்கும் அதிசயமான செயலை புரிபவன் என்ற பொருளில், அற்புதன் என்ற சொல் கையாளப் பட்டுள்ளது. உழுவை=புலி; அதள்=தோல்; விம்மா நின்று அழுவார்=குரல் தழுதழுக்க அழும் அடியார்கள். மானம் மிக்கதும், தனது கண்ணில் படும் விலங்குகளை அடித்து வீழ்த்தும் கொடிய குணமும் உடையதாகிய புலித்தோலினைத் தனது மேலாடையாக போர்த்தவன் என்றும், வேதத்தின் பொருளாக இருப்பவன் என்றும் சொல்லி, அவன் பால் கொண்டுள்ள மட்டற்ற அன்பின் காரணமாக குரல் தழுதழுத்து அழுது தொழும் அடியார்களுக்கு தனது அருளினை வழங்குபவனும், காளையைத் தனது வாகனமாகக் கொண்டு திரிபவனும், கூத்தாடும் பூதங்களின் தலைவனும், அகன்று பரந்த உலகங்களை தாங்கும் அற்புதச் செயலை புரிபவனும், சொற்களைக் கடந்து நின்ற புகழினை உடையவனும், எமது தலைவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெம்மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி

விம்மா நின்று அழுவார்கட்கு அளிப்பான் தான் காண் விடையேறித் திரிவான் காண் நடம் செய் பூதத்து

அம்மான் காண் அகலிடங்கள் தாங்கினான் காண் அற்புதன் காண் சொற்பதமும் கடந்து நின்ற

எம்மான் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

அளவு கடந்த அன்பு கொண்டவர்களாக கண்ணீர் பெருக்கித் தன்னை தொழும் அடியார்கள் செய்யும் அனாசாரத்தை பொறுத்து அருளும் இறைவன் என்று அப்பர் பிரான் மாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.80.5) குறிப்பிடுகின்றார். நமக்கு பெரிய புராணத்தில் குறிப்பிடும் இரண்டு நாயன்மார்களின் சரித்திரங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒருவர் கண்ணப்ப நாயனார். மற்றொருவர் நீலநக்கர். இருவரின் வாழ்க்கையிலும் நிகழ்ந்த அனாசாரங்கள் இறைவனால், உண்மையான அன்பின் வெளிப்பாட்டு செயல்களாக பெரிதும் மதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப் படுவதை நாம் காண்கின்றோம். நினைவு=மீண்டும் உலகத்தையும் உலகப் பொருட்களையும் தோற்றுவிக்கும் எண்ணம். உலகத்தை அழிப்பதும் மீண்டும் தோற்றுவிப்பதும் இறைவனின் சித்தத்தால் நிகழ்கின்றன என்பதை உணர்த்தும் பாடல். பிரளய காலத்தில் உயிர்கள் அனைத்தும் இறைவனது வயிற்றில் ஒடுங்குகின்றன. அவ்வாறு ஒடுங்கும் உயிர்களுடன் அந்தந்த உயிர்களுக்கு உரிய மலமும் ஒடுங்குகின்றது. அவ்வாறு இணைந்து ஒடுங்கும் மலங்களை கழிப்பதற்கு அனைத்து உயிர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க திருவுள்ளம் கொள்ளும் பெருமான், மீண்டும் உலகத்தை படைக்க எண்ணம் கொள்கின்றார். அவ்வாறு அவர் எண்ணம் கொள்ளும் மாத்திரத்தில் உலகமும் உலகப் பொருட்களும், தங்களது வினைக்குத் தகுந்த உடல்களோடு பொருத்தப்பட்டு உயிர்களும் தோன்றுகின்றன. நீறு என்று உலகம் ஒடுங்கிய நிலையில் இருப்பதையும், நெருப்பு என்று உலகத்தையும் உலகப் பொருட்களையும் ஒருசேர அழிக்கும் இறைவனது ஆற்றலையும், நினைவு என்று உலகத்தினை மீண்டும் படைக்கத் திருவுள்ளம் கொள்ளும் சங்கற்பத்தையும், கூறாகி என்று தனது எண்ணத்தை தொழில் படுத்தும் நிலையும், கூற்றாகி என்று உயிர்களுடன் வினைகளை கூட்டுவித்தலையும் குறிப்பிடுவதாக பெரியோர்கள் கூறுகின்றனர். கூற்றுவன் என்பதற்கு, பக்குவம் அடைந்த உயிர்களை, இனி என்றும் உடல்களுடன் சேராத வண்ணம் பிரித்து முக்தி நிலை அளிப்பது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு சுந்தரர், திருக்கயிலாயம் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (7.100.1) ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமன் என்று கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது.

நீறாகி நீறுமிழும் நெருப்புமாகி நினைவாகி நினைவினிய மலையான் மங்கை

கூறாகிக் கூற்றாகிக் கோளுமாகிக் குணமாகிக் குறையாத உவகைக் கண்ணீர்

ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அனாசாரம் பொறுத்தருளி அவர் மேல் ஒன்றும்

சீறாத பெருமானைத் திருமாற்பேற்று எம் செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன் நானே

மகாசங்கார காலத்தில் உலகத்தை அழிக்கும் நெருப்பாகவும், அந்த நெருப்பினால் தோன்றும் சாம்பலாகவும், உயிர்களுக்கு தங்களுடன் இணைந்து நிற்கும் மலங்களை கழித்துக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் கருணை உள்ளம் கொண்டு உலகத்தைத் தோற்றுவிக்கும் எண்ணம் கொண்டவனாகவும், அந்த படைப்புத் தொழிலில் அவனுக்கு உதவும் சக்தியாகவும், அந்த சக்தியைத் தனது உடலில் ஒரு கூறாக ஏற்றுக் கொண்டுள்ளவனாகவும், உயிர்களைத் தகுந்த காலத்தில் பறிக்கும் கூற்றுவனாகவும், உயிர்களுடன் இணைந்து நிற்கும் நல்வினை மற்றும் தீவினைகளாகவும், இருப்பவன் இறைவன். அத்தகைய இறைவன், தன் பால் மிகுந்த அன்பு கொண்டு தன்னை நினைக்கும் தருணங்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கும் அடியார்கள் அன்பு மேலீட்டினால் செய்த அனாசாரங்களை, சீற்றம் ஏதும் கொள்ளாமல் இறைவன் பொறுக்கின்றார். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை, சிவந்த பவளக் குன்று போன்ற திருமேனியை உடையவனும் ஆகிய இறைவனை அடியேன் திருமாற்பேறு தலம் சென்றடைந்து கண்டு களித்தேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. தனது அடியார்களின் அனாசாரம் பொறுத்து அருளும் பெருமான் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. கண்ணப்பரின் செய்கைகள் சிவகோசரியாரால் அனாசாரம் என்று கருதப் பட்டது. நீல நக்கர் தனது மனைவியின் செயலை அனாச்சாரம் என்று கருதி கோபம் கொண்டார். ஆனால் பெருமான் இவர்கள் இருவரது செய்கையையும் அன்பின் வெளிப்பாடாக கருதி ஏற்றுக் கொண்டதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிந்து கொள்கின்றோம்.

ஆடியும் பாடியும் அழுதும், தங்களுக்கு உன் மீது அடியார்கள் வைத்துள்ள அன்பினை நினைத்து பார்க்காது, அவர்களுக்கு அருள் புரியாமல் நீ இருத்தல் அழகோ என்று இறைவனை நோக்கி சுந்தரர் கேள்வி கேட்கும் பாடல் ஓணகாந்தன்தளி தலத்து பாடலாகும் (7.5.5). அடியார்களுக்கு அருள் புரியாமல் இருப்பது ஏனோ என்று சுந்தரர் வினவினாலும், தனக்கு பொன் கொடுக்காமல் இறைவன் இருக்கும் நிலையை உணர்த்தும் பாடல்களாக இந்த பதிகத்தின் பாடல்கள் அமைந்துள்ளன என்று கூறுவார்கள். குறை ஏதும் இல்லாத வகையில் தாளத்துடன் பொருத்தி தான் பாடல்கள் பாடியதாக சுந்தரர் கூறுகின்றார். மேலும் ஊரூராக திரிந்து அவரைத் தேடும் தன் பால் பெருமான் கருணை காட்டாமல் இருக்கின்றார் என்றும், தான் அவரைத் தேடிய அனைத்துக் கோயில்களிலும் அவர் இருந்தாலும் தனக்கு எந்தவிதமான பற்றுக்கோடும் தாராமல் இருக்கின்றார் என்றும் அவரை குறை செய்வது போன்று, அவரது கருணையை வேண்டும் பாடல்.

கூடிக் கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறை படாமே

ஆடிப் பாடி அழுது நெக்கு அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்

தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்

ஓடிப் போகீர் பற்றும் தாரீர் ஓணகாந்தன்தளி உளீரே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.23.4) கண்ணீர் வழிந்தோட தம்மை மறந்து பெருமானைத் தொழும் அடியார்களை, பெருமானும் மிகவும் விரும்பியவனாக அவர்கள் பால் அன்பு செலுத்துகின்றான் என்று சுந்தரர் கூறுகின்றார். சுரும்பு=வண்டுகளில் ஒரு வகை; அப்போது தான் வண்டுகளால் விரித்து மலர்விக்கப்பட்ட மலர்களைத் தூவி தமது கண்களில் ஆனந்தக் கண்ணீர் அரும்பியவர்களாக, விரும்பித் தொழும் அடியார்கள் பால் மிகுந்த அன்பு செலுத்தி ஆட்கொள்பவன் சிவபெருமான். அத்தகைய பெருமானை தானும் விரும்புவேன் என்று சொல்லும் சுந்தரர், அவரைத் தவிர்த்து வேறு ஒருவரையும் தனது மனத்தாலும் நினைக்க மாட்டேன் என்று சொல்கின்றார். கரும்பாரும்=கரும்புகள் நிறைந்த;

சுரும்பார் விண்ட மலர் அவை தூவித் தூங்கு கண்ணீர்

அரும்பா நிற்கும் அனைத்து அடியாரொடும் அன்பு செய்வன்

விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால்

கரும்பு ஆரும் கழனிக் கழிப்பாலை மேயானே

திருவாசகம் போற்றித் திருவகவலில் மணிவாசக அடிகளார், அடியார்களின் தன்மையை குறிப்பிடுகையில், அழுதல் செயலை குறிப்பிடுகின்றார். நெருப்பு பட்ட மெழுகு போல மனம் உருகி, அழுது உடல் நடுக்கமடைந்து ஆடியும் அலறியும் பாடியும் வழிபட்டும், குறடும் மூடனும் பற்றிக் கொண்ட பொருளை விடாது கெட்டியாக பற்றிக் கொண்டது போன்று இடையறாத பக்தியுடன் பச்சை மரத்தில் அடிக்கப்பட்ட ஆணி போன்று உறுதியாக பற்றிக் கொண்டு உள்ளம் கசிந்துருகி, இறை சிந்தனையில் மனம் தோய்ந்து உடலுறுப்புகள் தன் வசமின்றி நிற்கும் நிலை கண்டு பேய் என்று உலகத்தவர் இழிப்பதையும் பொருட்படுத்தாமல், அதற்காக வெட்கம் கொள்ளாமல் அத்தகைய பழிப்புரைகளை மனம் கோணாமல் அணிகலனாக கருதி பெருமையுடன் ஏற்றுக்கொண்டு, தமது திறமை எதனையும் பெரிதாக கருதி பயன்படுத்தாமல் சிவஞானத்தால் அடைகின்ற அறிவையே பெரிய அதிசயமாக கருதி, கன்றினை உடைய பசு தனது கன்றினை நினைத்து கதறியும் பதறியும் இருப்பது போன்று இறைவன் குறித்த பல விடயங்களை சிந்தித்து கதறியும் பதறிப் பேசியும், சிவபெருமானைத் தவிர்த்து வேறெந்த தெய்வத்தையும் கனவிலும் நினையாது, அனைவர்க்கும் மேலானவனாக இருந்த போதிலும் மிகவும் எளியவனாக நிலவுலகில் எழுந்தருளி குருமூர்த்தியாக அருள் புரிந்ததை எளிமையாக எண்ணி அசட்டை செய்யாமல் பெருமானது இணையற்ற திருவடிகள் இரண்டையும் என்றும் பிரியாது, உடலுடன் ஒட்டி இருக்கும் நிழலைப் போன்று என்றும் பிரியாது, உள்ளத்தில் பக்தி எனும் ஆறு கரை புரண்டோட, ஐந்து புலன்களும் ஒன்றிய நிலையில் நாதனே என்று இறைவனை அழைக்க, சொற்கள் தடுமாறி உரோமம் சிலிர்க்கும் நிலையில் இதயத் தாமரை விரிய, கண்கள் களிப்புடன் விரிய கண்களில் ஓரத்தில் நுண்ணிய துளிகள் அரும்ப, தளராத பேரன்புடன் இறைவனை நினைக்கும் அன்பர்களை தாயாகி அவர்களை வளர்ப்பவன் இறைவன் என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார்.

தழலது கண்ட மெழுகது போலத்

தொழுது உளம் உருகி அழுது உடல் கம்பித்து

ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்

கொடிறும் பேதையும் கொண்டது விடாதெனும்

படியே ஆகி நல் இடையறா அன்பின்

பசுமரத்து ஆணி அறைந்தாற் போலக்

கசிவது பெருகிக் கடலென மறுகி

அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்

சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப

நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை

பூண் அதுவாகக் கோணுதல் இன்றிச்

சதுர் இழந்து அறி மால் கொண்டு சாரும்

கதியது பரமா அதிசயமாகக்

கற்றா மனமெனக் கதறியும் பதறியும்

மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது

அருபரத்து ஒருவன் அவனியில் வந்து

குருபரனாகி அருளிய பெருமையைச்

சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்

பிரிவினை அறியா நிழலது போல

முன் பின்னாகி முனியாது அத்திசை

என்பு நைந்து உருகி நெக்கு நெக்கேங்கி

அன்பெனும் ஆறு கரையது புரள

நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி

உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக்

கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்

கண் களி கூர நுண் துளி அரும்பச்

சாயா அன்பினை நாடொறும் தழைப்பவர்

தாயேயாகி வளர்த்தனை போற்றி

மணிவாசக அடிகளாரும், வினைகளால் சூழப்பட்டு, வினைகளின் கைதிகளாக இருக்கும் நாம், இறைவன் பால் அன்பு கொண்டு அழுதால் அவனது அருளினைப் பெறலாம் என்று உணர்த்தும் பாடல் திருச்சதகம் பதிகத்தில் (8.5.90) உள்ளது. அடியார்களின் அன்பின் வெளிப்பாடாக அழுகை இருக்கின்றது என்பதை நாம் மேற்கண்ட பாடல்களிலிருந்து உணரலாம். பெருமானின் திருவடிகளை நாம் சென்று சேர்வதற்கும் அவனது திருவருள் வேண்டும் என்பதால், பெருமானே அடியேன் உன்னை வந்து சேருமாறு அருள் புரிவாய் என்று அடிகளார் வேண்டுவதை நாம் உணரலாம்.

‘ யானே பொய். என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்

மானே அருளாய் அடியேன் உன்னை வந்து உறுமாறே

அன்னைப் பத்து பதிகத்தின் பாடலில் (8.17.2) மணிவாசக அடிகளார், மணிவாசக நாயகியின் மனதினில் புகுந்த பெருமான் அளித்த எல்லையற்ற ஆனந்தம், அந்த நாயகியின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது என்று கூறுகின்றார். தனது ஒரு கண்ணில் மையினை தீட்டிக் கொண்டு மாதொரு பாகனாக பெருமான் காட்சி தருகின்றார் என்று பொருள் கொள்வது ஒரு வகை. பெருமான் பால் நாயகி கொண்டுள்ள காதல், அவளை பால் மயக்கத்தில் ஆழ்த்தி, பெருமானையும் பெண்ணாக உருவகிக்கத் தூண்டியது என்று பொருள் கொள்வதும் சிறப்பே. உலப்பு=அழிவு; உலப்பிலா=அழிவற்ற;

கண் அஞ்சனத்தர் கருணைக் கடலினர்

உள் நின்று உருக்குவார் அன்னே என்னும்

உள் நின்று உருக்கி உலப்பிலா ஆனந்தக்

கண்ணீர் தருவரால் அன்னே என்னும்

திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடலில் பெருமானைத் தொழுகின்ற அடியார்களை பட்டியல் இடும் மணிவாசக அடிகளார், அழுகையர் என்று குறிப்பிடுகின்றார். திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் நான்காவது பாடலில், பெருமானை வழிபடும் பலவகை அடியார்களின் செய்கைகளை குறிப்பிடுகையில், இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால் என்று அடிகளார் குறிப்பிடுகின்றார். இருக்கு என்று ரிக் வேதம் முதலாகிய நான்கு வேதங்களையும் தோத்திரம் என்று தீந்தமிழ் வடமொழி உள்ளிட்டு பல மொழிகளில் உள்ள இறைவனைப் புகழும் பாடல்களையும் உணர்த்துகின்றார். இன்னிசை எழுப்பும் வீணை வாசிப்போர், யாழ் இசைக் கருவியில் பயிற்சி பெற்றோர், ரிக் முதலாகிய நான்மறை மந்திரங்கள் சொல்வோர், பல மொழியில் தோத்திரங்கள் சொல்வோர், நெருக்கமாக தொடுக்கப்பட்ட மாலைகளை தங்களது கைகளில் ஏந்தியோர், பெருமானைத் தொழுகின்ற அடியார்கள், பெருமான் பால் அன்பு வைத்து காதலுடன் கசிந்து கண்ணீர் மல்கும் அடியார்கள், பெருமானின் அருள் வேண்டிய பின்னரும் அவனது அருள் கிட்டாமையால் மனம் வருந்தி உடல் மெலிந்து உருகும் அடியார்கள், தங்களது கைகளை தலையின் மீது கூப்பி பெருமானை வணங்கும் அடியார்கள், என்று பலவகை அடியார்கள் திருப்பெருந்துறை பெருமானை வணங்குகின்றனர் என்று குறிப்பிடும் அடிகளார், அத்தகைய அடியார்களையும் தன்னையும் ஆண்டு கொண்டு அருள் புரியும் பொருட்டு, பெருமான் பள்ளி எழுந்தருள வேண்டும் என்று வேண்டுகின்றார்.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர்ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே

என்னையும் ஆண்டு கொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

திருவாசகம் கோயில் மூத்த திருப்பதிகத்தின் பாடலில் (8.21.4) மணிவாசக அடிகளார் பெருமானின் அருள் வேண்டி அழுவதைத் தவிர வேறேதும் செய்ய இயலாதவன் என்று தன்னை குறிப்பிடுகிறார். இந்த பாடலில், மூவர்க்கும் வழிமுதலாக இருப்பவன் என்றும் முழுமுதலாக இருப்பவன் என்றும் பெருமானை குறிப்பிடுகின்றார். அரசே என்ற சொல் அரைசே என்று திரிந்தது. மூவர்களுக்கும் தலைவனாக இருக்கும் சிவபெருமான், அந்த மூவர்கள், தங்களிடம் ஒப்படைக்கப் பட்ட படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் பணியினை சிறப்பாக செய்வதற்கு, அவர்களுடன் இணைந்து உதவி புரிகின்றான் என்று சிவபுரம் தலத்தின் மீது அருளிய முதல் மூன்று பாடல்களில் (1.21.1,2,3) திருஞான சம்பந்தர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. இந்த கருத்தினை உள்ளடக்கியே சிவபெருமான் அவர்கள் மூவருக்கும் வழிமுதலாக விளங்குகின்றான் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். அத்தகைய பெருமான், தனக்கும் வழிகாட்டியாக இருப்பதை மிகவும் பெருமையுடன் அடிகளார் குறிப்பிடுகின்றார். பெருமான் தனக்கு வழி காட்டிய போதிலும், அந்த வழியினில் செல்லக் கூடிய பக்குவம் அற்றவனாக தான் இருப்பதாக கருதும் அடிகளார், அந்த பக்குவத்தை பெருமான் தனக்குத் தந்தருள வேண்டும் என்றும், மற்ற அடியார்கள் போன்று தன்னையும் முக்தி உலகினுக்கு அழைத்துக் கொண்டு அருள் புரிய வேண்டும் என்றும் கூறுகின்றார். இவ்வாறு பெருமான் தனக்கு அருள் புரிய வேண்டும் என்று அவனிடம் விண்ணப்பித்து அழுவதைத் தவிர்த்து தன்னால் செய்யக்கூடிய செயல் ஏதுமில்லை என்றும் இங்கே அடிகளார் உணர்த்துகின்றார். அழுதால் அவனைப் பெறலாமே என்பது தானே திருவாசக மொழி.

முழு முதலே ஐம்புலனுக்கும் மூவர்க்கும் என் தனக்கும்

வழி முதலே நின் பழ அடியார் திரள் வான் குழுமிக்

கெழு முதலே அருள் தந்திருக்க இரங்கும் கொல்லோ என்று

அழும் அதுவே அன்றி மற்று என் செய்கேன் பொன்னம்பலத்து அரைசே

திருவாசகம் புணர்ச்சிப் பத்து பதிகத்தின் பாடலில் (8.27.8) மணிவாசகர், இறைவனை நினைத்து உருகித் தொழும் தருணத்தில், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் அடியார்கள் செய்யும் செய்கைகளை குறிப்பிட்டு, அவ்வாறு இறைவனைத் தொழுது இறைவனுடன் சேரும் நாள் எந்நாளோ என்று புலம்புவதை காணலாம். அழுதல், சிரித்தல், பல விதமாக கூத்து ஆடுதல், ஒரே நிலையில் இல்லாமல் நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் இருத்தல், சிலிர்சிலிர்த்தல் என்று அடியார்களின் பல செய்கைகளை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார்.

நெக்கு நெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்

நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தால் கூத்தும் நவிற்றிச்

செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப்

புக்கு நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே

இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் (8.27.6) மணிவாசக அடிகளார், தான் கண்ணீர் சொரிய பெருமானை நினைத்து உருகும் நாள் எந்நாளோ என்று ஏங்குவதை உணரலாம். இந்த பாடலில் தான் இவ்வாறு தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்று அடிகளார் குறிப்பிட்டு, அந்த பக்குவம் அடையும் நாள் எந்நாளோ என்று ஏங்குவதாக குறிப்பிடுகின்றார் என்றாலும், அடிகளார் அத்தகைய வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை நாம் அவரது பாடல்கள் மூலம் அறிந்து கொள்கின்றோம். எனவே இந்த குறிப்பு நமக்கு அறிவுரையாக சொல்லப் பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொண்டு பின்பற்ற வேண்டும். முதலில் அவ்வாறு வாழ வேண்டும் என்ற விருப்பத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த விருப்பம் ஈடேறாவிடின், ஏக்கம் கொண்டு அந்த விருப்பத்தை அடைகின்ற முயற்சிகள் தொடர்ந்து செய்ய வேண்டும். அந்த ஏக்கத்தைத் தீர்க்க, இறைவனின் உதவியை நாம் நாட வேண்டும். அப்போது இறைவன் மனம் கனிந்து, நாம் அந்த பக்குவத்தை அடையும் நிலைக்கு நம்மை, மாற்றுவான் என்பதே இந்த பாடல் உணர்த்தும் செய்தியாகும். அருமால்=பெரிய மயக்கம். உலகமும் உலகத்துப் பொருள்களும் விளைவிக்கும் மாயை. அந்த மாயையில் ஆழும் நாம், நாம் பிறப்பெடுத்த நோக்கத்தை மறந்து செயல் படுகின்றோம். இந்த அவல நிலையில் நாம் இருப்பதை உணர்ந்தவர்களாக, அந்த நிலையிலிருந்து மாற வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்களாக, இறைவன் பால் மிகுந்த அன்பினை வளர்த்துக் கொண்டு அவனது அருளுக்காக ஏங்கி நிற்க வேண்டும். நமது ஏக்கத்தை புரிந்து கொள்ளும் இறைவன், நமது கல்மனத்தினை கசியச் செய்து, நமது மனதினை அவனது கருணை வெள்ளத்தில் மூழ்கடிக்கிறான். அந்த சிவானந்ததை உணரும் உயிர், அவன் பால் மேன்மேலும் விருப்பம் கொள்ள, அந்த விருப்பம் அழுகையாக மாறுகின்றது; அவனைப் பற்றிய நினைவுகள் ஒரு விதமான ஆனந்த பரவசத்தை விளைவிக்க உடல் உறுப்புகள் செயலற்று விடுகின்றன. அத்தகைய நிலை வாய்க்க வேண்டும் என்பதே நமது விருப்பமாக இருக்க வேண்டும். இத்தகைய நிலையை மணிவாசக அடிகளார், திருப்பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டபோது உணர்ந்ததை, பண்டே அடியேற்கு அருள் செய்ய என்ற குறிப்பு மூலம் உணர்த்துகின்றார். அந்த நிலையிலிருந்து தான் பிரிந்ததால் ஏற்பட்ட ஏக்கத்தை இங்கே குறிப்பிடுகின்றார்.

பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற்கு அருள் செய்ய

பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமால் உற்றேன் என்றென்று

சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர் உரோமம் சிலிர்ப்ப உகந்து அன்பாய்ப்

புரிந்து நிற்பது என்று கொலோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே

இதே பதிகத்தின் அடுத்த பாடலிலும் இந்த ஏக்கத்தை அடிகளார் உணர்த்துவதை நாம் காணலாம். பிறர் உணர்ந்து நினைப்பதற்கு அரியவனாக இருப்பவன் இறைவன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பிறர் என்ற சொல், பெருமானின் அருள் பெறாத உயிர்களை குறிக்கின்றது. அவன் அருளாலே அவன் தாள் பணிந்து என்று குறிப்பிட்ட வண்ணம், அவனது அருள் இருந்தால் தான், உயிர்கள் இறைவனை நினைக்க முடியும். கால்=காற்று; சோதியாக இருக்கும் இறைவன் என்று குறிப்பிடும் அடிகளார், மற்ற நான்கு பூதங்களாக இறைவன் இருக்கும் நிலையினையும் இந்த பாடலில் உணர்த்துகின்றார். அவனைப் பற்றிய நினைப்பே மனதினில் இன்பத்தை விளைவிக்கும் என்பதை உணர்த்தும் அடிகளார் அத்தகைய ஆனந்த பரவசத்தை வேறெவரும் அளிக்க முடியாது என்பதை, தனை ஒப்பாரை இல்லாத் தனி என்ற தொடர் மூலம் கூறுகின்றார். விசும்பு=ஆகாயம்; பெருமான் பற்றிய நினைவுகள் மனதினை நிறைவிக்கும் என்றும், அந்த ஆனந்தம் உடலையும் பூரிக்க வைக்கும் என்பதை தழைத்து என்ற சொல் மூலம் உணர்த்துகின்றார். தழுதழுத்து என்ற சொல் தழுத்து என்று குறைந்தது. கடி மலர்=நறுமணம் மிகுந்த மலர்கள்; மெய் தான் அரும்பி என்று தொடங்கும் பாடலில், இறைவனை உணர்ந்ததால் தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை தெரிவித்த அடிகளார், அத்தகைய மாற்றம் ஏற்பட வேண்டும் என்று தான் ஏங்குவதை இங்கே குறிப்பிடுகின்றார். அந்த பரவச நிலையை ஏற்கனவே அடைந்தவர் அடிகளார் என்பதால், இங்கே குறிப்பிடப் படும் ஏக்கம், நாம் கொள்ள வேண்டிய ஏக்கம் என்பதை நாம் உணர வேண்டும். குரல் தழுதழுத்தல், கண்டம் விம்முதல், மயிர் கூச்செறிதல், கண்கள் அருவி போன்று நீர் பொழிதல், என்பன பெருமானின் அருள் விளைவிக்கும் ஆனந்த பரவசத்தால் ஏற்படும் மாற்றங்கள் என்று சொல்லப் படுகின்றது. புனைதல்=அணிவித்தல், அழகு செய்தல்;

நினையப் பிறருக்கு அரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத்

தனை ஒப்பாரை இல்லாத் தனியை நோக்கித் தழைத்து தழுத்த கண்டம்

கனையக் கண்ணீர் அருவி பாயக் கையும் கூப்பிக் கடிமலரால்

புனையப் பெறுவது என்று கொலோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே

திருமூலரும் ஒரு திருமந்திரப் பாடலில் சிவபெருமானது திருவடிகளை துதித்து, அலறி, அழுது அவற்றையே விரும்பி நாள்தோறும் நினைக்க வல்ல அடியார்களுக்கு தனது திருவடியை பற்றுக் கோடாக அளிப்பவன் பரமன் என்று கூறுகின்றார். மேலும் அந்த திருவடி பற்றிய நினைப்பில் அடங்கி, திருவடியில் ஒதுங்கும் அடியார்களுக்கு, திருவடிகள் விளங்கித் தோன்றுமாறு அருள் புரியும் பெருமான், அத்தகைய அடியார்களின் அறிவில் நிற்கின்றான் என்றும் கூறுகின்றார். உரன்=வலிமை

அரனடி சொல்லி அரற்றி அழுது

பரனடி நாடியே பாவிப்ப நாளும்

உரனடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு

நிரனடி செய்து நிறைந்து நின்றானே

பெருமானின் உண்மை நிலையினை எவ்வாறு கண்டு கொள்வது என்று உணர்த்தும் ஏழாம் தந்திரம் அருளொளி அதிகாரத்தின் திருமந்திரப் பாடலில், ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் சிவபெருமானை காண்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என்றும், அதன் பயனாக நாம் அவனது அருளினை முழுவதுமாக பெறலாம் என்றும், அத்தகைய அருளே அவன் நாம் அறிந்து கொள்வதற்கு உதவும் என்று திருமூலர் கூறுகின்றார். அப்போது உயிர் தனது அறிவு கொண்டு அவனை காண முயற்சி செய்வதை விட்டுவிட்டு, அவனது அருளினால் அவனைக் காணத் தொடங்குகின்றது. அப்போதும், இறைவன் உயிரிலிருந்து வேறுபடாமல் உயிருடன் இணைந்து இருக்கும் தன்மையைக் கண்டு புரிந்து கொள்ளும் என்று கூறுகின்றார். திருவருளை சக்தியின் அம்சமாக காண்பதால், ஊடுகின்றாள் என்று பெண்பாலாக கூறுகின்றார்.

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்

தேடியும் கண்டேன் சிவன் பெருந்தன்மையை

கூடியவாறே குறியாக் குறி தந்து என்

ஊடுகின்றாள் அவன் தன் அருள் உற்றே

திருமந்திரம் எட்டாம் தந்திரம் அவவேடம் அதிகாரத்தின் பாடலில் உடலை வளர்ப்பதையே பிரதானமாகக் கொண்டு வாழ்வோர், எவ்வளவு தேடினாலும் அவர்களுக்கு சிவபெருமான் அகப்பட மாட்டார் என்று திருமூலர் கூறுகிறார். அத்தகைய மனிதர்கள் பகட்டினை வெளிப்படுத்தும் முகமாக தவவேடம் தரித்து உலகத்தவரை ஏமாற்றி அச்சமூட்டி, ஆடியும் பாடியும் அழுது அரற்றியும் பெருமானது நாமங்களை சொன்னாலும் அவர்களுக்கு எந்த விதமான பயனும் கிட்டாது என்று கூறுகின்றார்.

ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்

வேடங்கள் கொண்டு வெறுத்திடும் பேதைகாள்

ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்

தேடியும் காணீர் சிவனவன் தாள்களே

பெருமானின் ஆனந்தக் கூத்தினை, தங்களது மனக் கண்களால் கண்டு உணரும் அடியார்களின் கண்களில் கண்ணீர் துளிர்க்கும் என்று திருமூலர் ஒன்பதாம் தந்திரம் அற்புதக் கூத்து அதிகாரத்தின் பாடல் ஒன்றினில் கூறுகின்றார். புனல்=நீர், இங்கே வாயில் ஊறும் உமிழ் நீர் என்பது பொருத்தமாக உள்ளது. ஒளி என்ற சொல் இங்கே சிவத்தை உணர்த்துகின்றது ஒளி என்ற சொல் இங்கே சிவத்தை உணர்த்துகின்றது நல்ல சுவையான உணவினைக் கண்ட போதே நமக்கு நம்மை அறியாமலே வாயினில் உமிழ் நீர் ஊறுவது போன்று, உண்மையான அடியார்களுக்கு அந்த ஆனந்த கூத்தின் தரிசனம், அவர்களது உள்ளத்தில் இனிய உணர்வினை ஊறச் செய்யும்; மேலும் அத்தகைய இன்பம் அனுபவிப்பதால் அதற்குரிய மாற்றங்களும் உடலில் ஏற்படும் என்று திருமூலர் கூறுகின்றார். பெருமானின் திருக்கூத்து பல வகையான குறிப்புகளை உணர்த்துகின்றது என்பதை நாம் அறிவோம். பெருமான் புரியும் ஐந்து தொழில்களையும், பக்குவம் அடைந்த உயிர்களுக்கு பெருமான் முக்திப் பேறு அளிக்கும் தன்மையையும் அவனது திருநாமத்தை உணர்த்தும் பஞ்சாக்கர மந்திரத்தையும், நாம் நமது வாழ்க்கையினை நடத்த வேண்டிய நெறிமுறையினையும் உணர்த்துகின்றது என்பதை அருளாளர்கள் பல பாடல்களில் விளக்கி உள்ளனர். அந்த குறிப்பினை உணராத அடியார்களாக இருப்பினும், பெருமானின் திருக்கூத்தினைக் காணும் அடியார்களின் உள்ளத்தில் சிவானந்தம் பெருக்கெடுக்கும் என்று கூறுகின்றார். அதன் விளைவாக, அவர்களது கண்கள் நீர் சொரிவது, மனம் கசிந்து உருகுவது முதலான மாற்றங்கள் ஏற்படும் என்று உணர்த்துகின்றார்.,

புளிக் கண்டவர்க்குப் புனல் ஊறுமா போல்

களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்

துளிக்கும் அருட் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும்

ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே

அப்பர் பிரானின் கோலத்தை பல இடங்களில் பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். அந்த பாடல்களில் ஒரு பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்தப் பாடலில் கண்ணீர் பொழிய அப்பர் பிரான் இருந்த நிலை குறிப்பிடப் பட்டுள்ளது. வார்தல் என்றால் இடையறாது பெருகுதல் என்று பொருள்.

மார்பாரப் பொழி கண்ணீர் மழைவாரும் திருவடிவும் மதுர வாக்கில்

சேர்வாரும் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும் தாளே

சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப்

பார் வாழத் திருவீதிப் பணி செய்து பணிந்தேந்திப் பரவிச் செல்வார்

திருவையாறு திருக்கோயிலில் கயிலாயக் காட்சியினை கண்ட அப்பர் பிரானின் செயல்கள் எவ்வாறு இருந்தன என்பதை உணர்த்தும் பாடலில் சேக்கிழார், ஆடினார் பாடினார் அழுதார் என்று கூறுகின்றார். நீரினை கைகளால் முகந்து அள்ளிக் குடிப்பது போன்று, ஆனந்தம் விளைவிக்கும் கடலினை கண்களால் முகந்து கொண்டார் என்று கூறும் சேக்கிழார், அப்பர் பிரான், தனது கைகளை தலை மேல் குவித்து இறைவனை வணங்கிய பின்னர் கீழே விழுந்து எழுந்தார் என்றும், என்ன செய்வது என்பதை அறியாதவராக ஆடினார் பாடினார் அழுதார் என்று கூறுகின்றார். ஆனந்தக் களிப்பினால் அப்பர் பிரானின் உள்ளத்தில் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை எவரும் சொல்ல இயலாத வண்ணம் இருந்தது என்றும் கூறுகின்றார்.

கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து

கொண்டு கைகுவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய

அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்

தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார்

பொழிப்புரை:

பேய்களும் தூங்கும் நள்ளிரவில் நடனம் ஆடுபவனும், கானூர் தலத்தில் பொருந்தி உறைபவனும், ஆகிய இறைவனை, குற்றமேதும் இல்லாத ஞானசம்பந்தர் சொன்ன பத்து பாடல்களை பாடித் தொழுதும், நாளின் மூன்று பொழுதினிலும் தோத்திரங்கள் சொல்லி இறைவனை துதித்தும் அழுதும் சிரித்தும் இறைவன் பால் அன்பு செய்யும் அடியார்களது துன்பங்களை, இறைவன் அறுத்து அவர்களுக்கு இன்பம் அளிப்பான்.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் உமையன்னை காண மாலை நேரத்தில் நடனம் ஆடுபவர் என்று பெருமானை நமக்கு, திருஞானசம்பந்தர் அறிமுகம் செய்கின்றார். பெருமானின் அழகிய திருவீதிக் கோலம் கண்டு மகிழ்ந்த சம்பந்த நாயகி, அந்த இனிய நினைவுகளில் மூழ்கி ஆனந்தம் அடைவதை நமக்கு உணர்த்தும் திருஞானசம்பந்தர், பெருமானின் திருக்கோலத்தை ஒரு முறை கண்ட எவரும், அந்த காட்சியை நினைவுறும் தருணங்களில் மகிழ்ச்சி அடைவார்கள் என்று இரண்டாவது பாடலில் கூறுகின்றார். மூன்றாவது பாடலில் வேத கீதங்களை பாடியவராக வந்த பெருமான் தனது இல்லம் புகுந்து தனது உள்ளம் கவர்ந்த பின்னர், பிரிந்து சென்று விட்டதாக சம்பந்த நாயகி கூறுகின்றாள் என்று சொல்கின்றார். அடுத்த ஐந்து பாடல்களில் மற்றும் பத்தாவது பாடலில் பிச்சை ஏற்பதற்காக தனது இல்லம் வந்த பெருமான் தனது கருத்தினை எவ்வாறு கவர்ந்தார் என்று கூறுகின்றாள். ஒன்பதாவது பாடலில் தனது சிந்தையிலும் நாவிலும் சென்னியிலும் பொருந்திய பெருமான், தனது உள்ளத்தில் அமர்ந்து காலையும் மாலையும் நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்து பாடல்களை பாடும் போதும் தோத்திரங்கள் சொல்லும் போதும் அழுதும் சிரித்தும் இறைவன் பால் மிகுந்த அன்பு வைக்கும் அடியார்களின் துன்பங்கள் இறைவனால் அறுக்கப்படும் என்று கூறுகின்றார். இந்த பாடலில் சம்பந்த நாயகி குறிப்பிடும் அனைத்து நிகழ்ச்சிகளும் அவளது கற்பனை என்பதை நாம் மறக்கலாகாது. மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையாகவே நடந்திருக்க கூடாதா என்ற தலைவியின் ஏக்கத்தினை வெளிப்படுத்தும் பாடல்களாக இவை அமைந்துள்ளன. பெருமான் பால் தீராத அன்பு கொண்ட தலைவியாக தன்னை உருவகப் படுத்திக் கொண்டு, தனது அன்பினை திருஞானசம்பந்தர் மிகவும் அழகாக இந்த பாடல்களில் வெளிப்படுத்துகின்றார். சங்க இலக்கியங்கள் போன்று காதற் சுவையை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் சிறுவன் சம்பந்தரின் வியக்கத்தக்க புலமை ரசிக்கத்தக்கது. பெருமான் மீது நாம் வைக்க வேண்டிய அன்பு, ஆழ்ந்த அன்பாக இருக்கவேண்டும் என்பதை இந்த பதிகத்தின் மூலம் உணரும் நாம், கானூர் தலம் சென்று இறைவனைப் பணிந்து இந்த பதிகம் பாடி அவனது அருள் பெற்று இம்மையும் மறுமையிலும் வளமாக வாழ்வோமாக.



Share



Was this helpful?