பதிக எண்: 2.68 - திருக்கடம்பூர் - காந்தாரம்
பின்னணி:
தனது நான்காவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக நெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில், நெல்வாயில் அரத்துறை இறைவனின் அருளால் முத்துச் சிவிகை, முத்துக் குடை மற்றும் ஊதுகொம்பு பெற்ற திருஞானசம்பந்தர், அதன் பின்னர் நெல்வெண்ணெய், பழுவூர், விசயமங்கை, புறம்பயம், வைகாவூர், சேய்ஞலூர், பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம்புலியூர் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் வாழ்கொளிபுத்தூர் வந்து அடைகின்றார். வாழ்கொளிபுத்தூர் சென்று பொடியுடை மார்பினர் என்று தொடங்கும் பதிகம் (1.40) பாடி பெருமானின் பெருமையை உணர்த்தி அவனது திருவடிகளின் மீது மலர்கள் தூவி பணிந்து மகிழ்வோம் என்று பாடிய பின்னர், திருஞானசம்பந்தர் திருக்கடம்பூர் வந்து சேர்கின்றார். இந்த தலம் வந்தடைந்த பின்னரும் அவரது மனம் எவ்வாறு எல்லாம் பெருமானின் திருவடிகளைத் தொழுது உய்யலாம் என்பதை அடியார்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடனே இருந்தது போலும். இந்த தலத்து பதிகத்தின் முதல் பாடலில், அவனது திருப்பாதங்களைத் தொழுதால் வீடுபேறு அடைவது எளிதாகும் என்றும் இரண்டாவது பாடலில் அவனது திருவடிகளை இரவும் பகலும் தொழுதால் நமக்கு இன்பம் கிடைக்கும் என்றும், மூன்றாவது பாடலில் அவனைத் தொழுது அவனது பொற்கழல்களை நாம் போற்றுவோம் என்றும், ஏழாவது பாடலில் அவனது திருவடிகளை போற்றுதலே வாழ்க்கையின் பொருள் என்றும், கூறுகின்றார்.கடம்பை என்று குறிப்பிட்டு, இந்த தலம் திருஞானசம்பந்தர் சென்றதை, சேக்கிழார் பெரிய புராணப் பாடலில் குறிப்பிடுகின்றார். வார்புகழ்=நீண்ட புகழினை உடைய: கார்=மேகத்திற்கு உரிய கருமை நிறம்; கார்வளர் கண்டர்=நீலகண்டர்; கார் என்ற சொல் கருங்குவளை மலரையும் குறிக்கும். சீர்வளர் கோயில் என்று வாழ்கொளிபுத்தூர் திருக்கோயிலை சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இந்த பாடலுக்கு முந்தைய பாடலில் சேக்கிழார் வாழ்கொளிபுத்தூர் தலம் சென்றடைந்ததை குறிப்பிடுகின்றார். அந்த பாடலின் தொடர்ச்சியாக இந்த பாடலுக்கு நாம் பொருள் காண வேண்டும்.
சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர்
பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்புகழ் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்
இந்த தலம் காட்டுமன்னார்கோயிலுக்கு ஐந்து கி.மீ. மேற்கே உள்ளது. சிதம்பரத்திலிருந்து எய்யலூர் வழியாக காட்டுமன்னார்குடி செல்லும் பாதையில் 32 கி.மீ. தூரத்தில் உள்ளது. தற்போது மேலக்கடம்பூர் என்று அழைக்கப் படுகின்றது. கொடிமரம் இல்லை. கிழக்கு நோக்கிய மூன்று நிலை கோபுரம். கருவறையின் அடிப்பகுதி தேர் வடிவத்தில் குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது. தேரின் வடிவத்தில் அமைந்திருப்பது மட்டுமன்றி தேரில் அழகிய சிற்பங்கள் காணப்படுவது போன்று, கருவறைச் சுவர்களெங்கிலும் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறைக் கட்டமைப்பில் இடது பக்கத்தில் உள்ள சக்கரம் சற்று பூமியில் புதையுண்டு இருப்பதை காணலாம். இறைவன் பெயர் அமிர்தகடேசர்; இறைவியின் திருநாமம் சோதி மின்னமை. மூலவர் சற்று சாய்ந்தும் மேற்பகுதி கூராகவும் உள்ளார். மூலவர் சுயம்பு மூர்த்தம். பங்குனி மாதம் 3,4,5 தேதிகளில் காலை 6 மணி அளவில் சூரியனின் கதிர்கள் நேராக சென்று சன்னதியை அடைகின்றன. ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேக நாளன்று, சந்திரனின் கதிர்கள் நேராக சென்று கருவறையை அடைகின்றன. மணிவாசகர் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி என்று போற்றித் திருவகவலில் குறிப்பிடுகின்றார். மூலவர் வாரத்தின் ஏழு நாட்களிலும் அந்தந்த நாட்களுக்கு உரிய கிரகத்திற்கு உகந்த வண்ணத்தில் ஆடை அணிகின்றார்.
எனவே அனைத்து கிரகங்களுக்கும் பரிகாரத் தலமாகவும் கருதப் படுகின்றது. மூலவர் நவ பாஷாணத்தால் செய்யப் பட்ட உருவம் என்றும் சொல்லப் படுகின்றது. முருகப்பெருமான், இந்திரன், அங்காரகன், சூரியன், சந்திரன், பல சித்தர்கள், அகத்தியர், உரோமச முனிவர், பதஞ்சலி முனிவர், இமவான் ஆகியோர் வழிபட்ட தலம். முருகப் பெருமான் இந்த தலத்து இறைவனை வழிபட்டு வேல் பெற்றதாக சொல்லப் படுகின்றது. முருகப் பெருமான் வில் ஏந்தியவராக காணப்படுகின்றார். வில்லேந்திய வேலவனை நாம் காவிரிபூம்பட்டினம் மற்றும் கடவூர் மயானம் ஆகிய தலங்களிலும் காண்கின்றோம். முருகப் பெருமான் வழிபட்ட செய்தியை அறிந்த அப்பர் பிரான், அந்த முருகப் பெருமானை பெற்ற பெருமையை உடையவள் என்று பார்வதி தேவியை இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், நம் கடம்பனைப் பெற்றவள் என்று குறிப்பிடுகின்றார். கருவறையின் வெளிச் சுவர்களில் தென்முகக் கடவுள், திருமால், பிரமன், துர்க்கை மற்றும் ஆலிங்கன மூர்த்தி ஆகியோரை காணலாம். கோஷ்டத்தில் இருக்கும் திருமால், தனது கையில் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டு பூஜை செய்வதையும் அவரது அருகில் அனுமன் மற்றும் கருடன் இருப்பதையும் காணலாம். கோஷ்டத்தில் உள்ள பிரமன் சிவபெருமானை வழிபடும் கோலத்தில் காட்சி தருகின்றார். இவருக்கு இரு புறமும் நாம் எமதர்மன் மற்றும் சித்திரகுப்தரை காணலாம். அருகில் பதஞ்சலி முனிவரின் திருவுருவமும் உள்ளது. அவரது தலை மேலே நடராஜப் பெருமானின் நடனக் கோலம் காணப்படுகின்றது. நடராஜப் பெருமானின் நடனக் கோலத்தைக் கண்ட பரவசத்தில், பெருமானை தனது தலையின் மீது வைத்து முனிவர் கொண்டாடியதை உணர்த்துவதாக இந்த அமைப்பு அமைந்துள்ளது.
காளையுடன் நின்ற நிலையில் அர்த்த நாரீசுவரர் இருப்பதையும் துர்க்கையை சங்கு சக்கரம் ஏந்தியவளாக சிம்ம வாகனத்தில் நாம் காணலாம். துர்கையின் கீழே ஆதி சங்கரர் நிறுவிய சக்கரம் உள்ளது. இந்த கோஷ்டங்களை சிம்மத் தூண்கள் தாங்குகின்றன. இந்த தலத்து விநாயகரை ஆரவார விநாயகர் என்று அழைக்கின்றனர். இவர் சற்று சாய்ந்த வண்ணம் காணப்படுகின்றார். மூலத்தானத்தின் பிற்பகுதியில் ஆரவார விநாயகர் மற்றும் வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானின் சன்னதிகள் உள்ளன. இதனை அடுத்து நால்வர் சன்னதிகள், மீனாட்சி சமேத குற்றம் பொறுத்த நாதர் சன்னதி (பாப ஹரேசுவரர் சன்னதி. இந்திரன் செய்த குற்றத்தை பொறுத்த பெருமான்) இந்த சன்னதியின் இருபுறத்திலும் கலைமகள் மற்றும் துர்க்கை உருவங்களை காணலாம். அருகில் கஜலட்சுமி சன்னதி தனியாக உள்ளது. திருமஞ்சனக் கிணற்றின் அருகே காலபைரவரை நின்ற கோலத்தில் காணலாம். சூரியன் சந்திரன் ரிஷபாரூடர் சன்னதிகளும் அவற்றின் அருகே இந்திரன் இலிங்கத்தைப் பெயர்க்க செய்த முயற்சி சிற்பமாக வடிக்கப் பட்டுள்ளதையும் காணலாம். சனி பகவானை நாம் கழுகு வாகனத்துடன் இங்கே காணலாம். மகா மண்டபத்தின் வலது புறத்தில் அம்பிகை சன்னதியும் இடது புறத்தில் நடராஜர் சன்னதியும் உள்ளன. நடராஜர் மற்றும் சிவகாமி உருவங்கள் கல்லால் செய்யப் பட்டவை. பிராகாரத்தின் வடகிழக்கு பகுதியில் தெற்கு திசையை பார்த்த வண்ணம் அம்பிகை சன்னதி உள்ளது. காலையில் சரசுவதி தேவியாகவும் பகலில் இலக்குமி தேவியாகவும் மாலையில் சக்தியாகவும் அம்பிகை அருள் பாலிப்பதாக கருதப் படுகின்றது. இதன் பொருட்டே அம்பிகையை, வித்யா (சரசுவதி) ஜோதி(இலக்குமி தேவி) மற்றும் நாயகி (துர்கை) ஆகிய மூன்று அம்சங்களூம் பொருந்தியவள் என்று உணர்த்தும் விதமாக, வித்யாஜோதிநாயகி என்று அழைக்கின்றனர்.
இந்த சன்னதி கடந்த நூற்றாண்டில் தேவகோட்டை செட்டியார்கள் திருப்பணி செய்த போது புதுப்பிக்கப் பட்டது. அம்பிகை சன்னதி அருகே பள்ளியறை மற்றும் நவகிரக சன்னதிகளை காணலாம். இந்த கோயிலின் கருவறையின் அழகில் தனது மனதினை பறிகொடுத்த இந்திரன், இந்த கருவறையை பேர்த்து இந்திரலோகம் எடுத்துச் செல்ல விரும்பினான் என்றும், அப்போது இந்த தலத்து விநாயகர் ஆரவாரம் செய்தவாறு தனது வலது காலை தரையில் ஊன்றி இந்திரனின் முயற்சியை முறியடித்தார் என்றும், அவ்வாறு தனது வலது காலினை ஊன்றிய வண்ணம் சாய்ந்த நிலையில் இன்றும் காட்சி தருகின்றார் என்றும் தலத்து மக்கள் கூறுகின்றனர். அதனால் தான் இவர் ஆரவார விநாயகர் என்று அழைக்கப் படுகின்றார். ஆரவார விநாயகர் உருவச்சிலை வாதாபியிலிருந்து கொண்டு வந்ததாக கருதப் படுகின்றது. இந்திரன் அமுதம் வேண்டி இந்த பெருமானை வழிபட்டதாகவும் அப்போது இந்திரனால் ஏற்படுத்தப் பட்ட குளம் என்பதால், இந்திர தீர்த்தம் என்று அழைக்கப் படுவதாகவும் கூறுகின்றனர். இந்த கோயிலில் உள்ள மூலவர் இலிங்கத்தை, இந்திரன் தேவலோகம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று முயற்சி செய்ததாகவும், தனது கைகளால் இந்த இலிங்கத்தின் அடியை கண்டுபிடித்து பேர்த்து எடுக்க முயன்ற போது, நெடுந்தூரம் ஆழமாக தோண்டிய போதும், அடிபாகம் மேலும் ஊடுருவிச் சென்றதைக் கண்டு தனது முயற்சியை கைவிட்டான் என்றும் இவ்வாறு தனது கரங்களால் அகழ்ந்து செல்ல முயற்சி செய்ததால் கரக்கோயில் என்ற பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர். கருவறை விமானத்தில் தட்சிணாமூர்த்தி புல்லாங்குழல் மற்றும் வீணையுடன் இருப்பதை காணலாம். நான்கு யுகங்களைக் கடந்த பழமையான திருக்கோயிலாக கருதப் படுகின்றது. திரேதாயுகத்தில் உரோமசமுனிவர், சந்திரன் மற்றும்இந்திரனும் துவாபர யுகத்தில் எட்டு மலைகளுக்கு அதிபதிகளும், கலியுகத்தில் பதஞ்சலி முனிவர், திருமால், நான்முகன், அகத்திய முனிவர் ஆகியோர்வழிபட்ட திருக்கோயில்.
கடம்ப மன்னர்களின் தலைநகரமாக திகழ்ந்ததால் கடம்பூர் என்ற பெயர் வந்தது என்பதும் பொருத்தமே. இந்த தலத்து கால பைரவருக்கு தேய்பிறை அட்டமி நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. சதய நட்சத்திரத்து அன்பர்கள் வழிபட வேண்டிய கோயிலாக கருதப்படுகின்றது. பொன்னியின் செல்வன் நாவலில் இடம் பெறுகின்ற தலம். பண்டைய நாளில் இங்கே பெரிய அரண்மனை இருந்ததற்கு அடையாளங்கள் காணப்படுகின்றன. இந்த தலத்தில் செய்யப்படும் வழிபாடு கடன் நிவாரணம் பெற உதவும் என்றும் நம்பப் படுகின்றது. ஆயுள் பலம் தருபவர் அமிர்த கடேசுவரர் என்பதால், இந்த தலத்தினில் சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் செய்து கொள்வதற்கு உகந்த தலமாக கருதப் படுகின்றது.
அழகிய செப்பு மற்றும் பித்தளைச் சிலைகள் பலவற்றை நாம் இந்த கோயிலில் காணலாம். இந்த காரணம் பற்றியே திராவிட சிற்பங்களின் களஞ்சியம் என்று இந்த கோயில் கருதப்படுகின்றது. அர்த்த மண்டபத்தில் காணப்படும் அர்த்த நாரீசுவரர் சிலை மிகவும் அழகானது. இந்த சிலையின் இரு பக்கமும் விநாயகர் மற்றும் அகத்திய முனிவரின் சிற்பங்களை காணலாம். பிராகாரத்தில் வடக்கு வெளிச்சுவற்றில் காணப்படும் ஆலிங்கன மூர்த்தி சிற்பம் சிறந்த கலை நயம் வாய்ந்தது. பெருமான் தனது தொடையின் மீது பிராட்டியை அமரவைத்துக் கொண்டு அவளது கோபத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை காணலாம். தன்னுடன் ஊடல் கொண்டுள்ள அன்னையின் கோபத்தைத் தணிப்பதற்கு, பெருமான் செய்யும் முயற்சியை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் விதமாக இந்த சிற்பம் அமைந்துள்ளது. அம்பிகையின் புடவை மடிப்புகளும், பெருமானின் தோளில் பாம்பு அணிகலனாக இருப்பதும் சிறப்பாக வடிக்கப் பட்டுள்ளன. கோபம் தணியாத அம்பிகை, பெருமானின் கைகளிலிருந்து தனது முகத்தை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபடும் வகையில் அவரது கழுத்து மேல்நோக்கியநிலையில் இருப்பதை காணலாம். இதே கோயிலில் உள்ள மற்றொரு சிற்பத்தில், அம்பிகையும் சிவபெருமானும் நின்ற கோலத்தில் காணப்படும் சிற்பத்தில்,ஒரு புறத்தில் இருந்து பார்க்கும் போது, அன்னையின் முகத்தில் கோபம் பொங்குவதையும் மற்றொரு புறத்திலிருந்து பார்க்கும் போது அன்னையில் முகத்தில் சாந்தம் தவழ்வதையும் நாம் உணரமுடிகின்றது. சிவபெருமான் வேறு பிராட்டி வேறு என்று இல்லாத நிலையில், இருவரும் ஒருவராகவே காணப்படும் தன்மையில் அவர்களின் இடையே ஊடல் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனினும் மூவர் முதலிகள் கற்பனை செய்ததை ஒட்டி, பல சிற்பிகளும் பிராட்டியின் ஊடலைத் தணிப்பதற்கு பெருமான் முயற்சி செய்ததாக சிற்பங்களை வடித்துள்ளனர். இத்தகைய சிற்பங்கள் பல கோயில்களில் காணப் படுகின்றன. திருமீயச்சூர், கடம்பூர், தில்லைச் சிதம்பரம், வடுகூர் என்பன அவற்றுள் சில. ஆலிங்கன மூர்த்தி சிற்பத்திற்கு அருகில் கங்காதர மூர்த்தியையும் காணலாம். கங்கை நதியைத் தனது சடையில் பெருமான் ஏற்றுக் கொண்டதால் பிராட்டி கோபம் அடைந்ததாக கற்பனை செய்யும் தேவாரப் பாடல்கள் நமது நினைவுக்கு வருகின்றன. நாயன்மார்களின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் சிற்பங்களாக செதுக்கப் பட்டுள்ளன. தாராசுரம் கோயிலை நினைவூட்டும் வண்ணம் மிக நுண்ணிய சிற்பங்கள் கொண்டுள்ள திருக்கோயில். கருவறை புறச்சுவர் முழுவதும் நாட்டிய கரணங்களும், மாகேசுவர மூர்த்தங்களும்,தேவர்கள் பெருமானை வழிபடும் காட்சிகளும், இந்திரன் லிங்கத்தைப் பேர்த்தெடுக்கச் செய்த முயற்சியும்,. இராமாயணம் மற்றும் பாகவத நிகழ்ச்சிகளும் சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளன. தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி இந்த தலத்தில் காணப்படும் அரிய சிற்பங்களில் ஒன்று. செவ்வக பீடத்தில் மையமாக உள்ள தாமரை பீடத்தில் மேல்நோக்கி நிற்கும் காளையின் மேல் சதுர தாண்டவ கோலத்தில், வீசிய பத்து கரங்களில் வீரவெண்டயம், பிரம்மகபாலம், கேடயம், சூலம், அரவம், கட்டங்கம், தண்டம், குத்தீட்டி, ஏந்திட, வலக்கை கஜஹஸ்த அமைப்பிலும், இடக்கை பிரபஞ்சம் தாங்கியும், சிவபெருமான் நின்றாடுகிறார். அவர் காலடியில் திருமால் மத்தளமிசைக்க வீரபத்திரர் சூலமாட. பைரவர் கணங்கள். விநாயகர், பார்வதி பிருங்கி முனிவர், காரைக்கால் அம்மையார், மகாகாளர், நந்தி, நாட்டிய பெண்கள் சேர்ந்தாட முருகன் மயில் மேல் பறக்க, கந்தர்வர்கள் மலரிட, அனைத்தும் சேர்ந்திட்ட அற்புத கலைப் படைப்பு திருவாசியில் அக்கினிக்கு பதிலாக இங்கே போதி இலைகள் காணப்படுகின்றன. காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து கயிலாயம் செல்லும் காட்சியையும் இந்த சிற்பத்தில் நாம் காணலாம். வலது கைகளில் ஒன்று யானையின் தும்பிக்கை போன்று வளைந்திருக்க, இடது கைகளில் ஒன்றுஆகாயத்தை தாங்குவது போன்று அமைந்துள்ளது. தலைக்கு பின்புறத்தில் ஒளிவட்டமும் மணிமுடியும் வங்க தேச பாணியில் உள்ளது. இந்த சிலை முதலாம் இராஜேந்திரன், வங்க மன்னன் மகிபாலனை போரில் வென்ற போது அங்கிருந்து கொண்டு வந்ததாக கருதப் படுகின்றது. சோழர்களின் அரண்மனையில் இருந்த இந்த சிலை, முதலாம் குலோத்துங்கனின் காலத்தில் இந்த கோயிலில் நிறுவப்பட்டது என்று கூறுகின்றனர். செவ்வக பீடத்தில் மேல்நோக்கிபார்க்கும் காளையின் மேல் சதுர தாண்டவ கோலத்தில் உள்ள சிலை. வங்காள தேசத்தைச் சார்ந்த ஸ்ரீகண்டன் என்பவர் தனது இல்லத்தில் வழிபடுதெய்வமாக வைத்திருந்த சிலை என்று கூறுகின்றனர். இவர் முதலாம் குலோத்துங்கச் சோழனின் அவையில் இருந்தவர். இவரது மேற்பார்வையில் தான்இந்த திருக்கோயில் கட்டப்பட்டது என்றும், இவரது தனது திருப்பணியை முடித்து விட்டு வங்காள தேசம் செல்லும் போது இந்த சிலையை இங்கேவிட்டுவிட்டு சென்றார் என்றும் கூறுகின்றனர். தமிழ்நாட்டுக் கோயில்களில் இத்தகைய சிலை எங்கும் இல்லை. பிரதோஷ நாட்களில் மட்டுமே இந்த உருவத்தை நாம் தரிசனம் செய்ய இயலும். இச்சிற்பம் போல (புடைப்பு சிற்பங்களாக) கல்லில் வடிக்கப்பட்ட மூன்று சிலைகள் வங்கதேசம் டாக்கா தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளன. தனது பாவத்தை போக்கிக் கொள்ளும் பொருட்டு கோடி உருத்திரம் ஜெபம் செய்த இந்திரன், நிறுவி வழிபட்ட கோயில் இந்த கோயிலின் கிழக்கே ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது. ருத்ர கோடீசுவரர் கோயில் என்றே அழைக்கப் படுகின்றது. இந்த திருக்கோயில் அமைந்துள்ள பகுதி கீழக்கடம்பூர் என்று அழைக்கப் படுகின்றது.
கோயில் சுவர்களில் இந்த தலம் குறித்த இரண்டு தல புராண நிகழ்ச்சிகள் சித்திரமாக வரையப் பட்டு அருகில் விளக்கங்கள் அளிக்கப் பட்டுள்ளன. மோகினியின் உதவியால் அமுதம் கிடைக்கப் பெற்ற தேவர்கள், அமுதம் உண்ணத் தொடங்கிய போது, விநாயகப் பெருமானை அவர்கள் வழிபடத் தவறியதால் கோபம் கொண்ட விநாயகர், அந்த அமிர்த கலசத்தை எடுத்துக் கொண்டு போனதாகவும், அந்த கலசத்திலிருந்து சிந்திய ஒரு துளி இலிங்கமாக மாறவே அந்த இலிங்கம் அமிர்த கடேசுவரர் என்று அழைக்கப் பட்டதாகவும், அந்த இலிங்கத்தை இந்திரன் வணங்கி இறைவனின் அருளால் அமிர்தம் பெற்றான் என்றும் முதல் நிகழ்ச்சி குறிப்பிடுகின்றது. அமுதக்குடம் மறைத்து வைக்கப்பட்ட தலம் திருக்கடவூர். இதனை உணர்த்தும் வகையில் அங்குள்ளவிநாயகருக்கு கள்ளவாரணப் பிள்ளையார் என்றும் மூலவருக்கு அமிர்தகடேஸ்வரர் என்று பெயர். அமிர்தகடேஸ்வரரை தேவர்கள் வணங்கிய பின்னர், அமுதக்குடம் திரும்பவும் தேவர்களுக்கு வழங்கப் பட்டது என்று கூறுவார்கள்.
இந்திரனின் அன்னை அதிதி தினமும் இந்த திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டுக் கொண்டிருந்ததால், இந்திரன் இந்த கோயிலைத் தனது தேரினில் வைத்துஇந்திரலோகம் எடுத்துச் செல்ல முயன்றான். மூலத்தானத்தை ரதமாக மாற்றி இந்திரன் எடுத்துச் செல்ல முயன்ற போது, விநாயகர் அதனை தடுத்து, அந்த ரதத்தின் மீது தனது காலை விநாயகர் ஊன்றவே, அந்த மூலத்தானத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. தனது தவறினை உணர்ந்த இந்திரன், அந்த தவற்றினை விளைவை போக்கிக் கொள்ள பிராயச்சித்தம் செய்வதற்கு தயாராக இருந்த போது, விநாயகர், ஒரு இலிங்கத்தை பெயர்த்தெடுக்க முயன்ற குற்றத்திற்காக, கோடி இலிங்கங்கள் நிறுவ வேண்டும் என்றும் அவ்வாறு கோடி லிங்கங்கள் நிறுவிய பின்னர், தேரை ஓட்டிச் செல்லுமாறு கூறுகின்றார். தன்னால் அவ்வாறு செய்ய முடியும் என்ற ஆணவத்துடன் இந்திரன் முயற்சி செய்த போது, அவன் செய்த இலிங்கங்கள் அனைத்தும் சிதிலமாயின. ஏதும் செய்வதறியாது இந்திரன் திகைத்த போது, ஒரு அசரீரி வாயிலாக பெருமான், கோடி முறை உருத்திர ஜபம் செய்யுமாறு ஆலோசனை கூறவே, இந்திரனும் அவ்வாறே செய்து ஒரு இலிங்கத்தையும் நிறுவி வழிபட்டான். அந்த இலிங்கமே கீழ்க்கடம்பூரில் உள்ளது என்பதே இரண்டாவது சித்திரம் உணர்த்தும் நிகழ்ச்சியாகும். இந்திரன் அவ்வாறு செய்து முடித்ததும் நேரில் தோன்றிய பெருமான், தான் இந்த தலத்தினில் உறைவதையே விரும்புவதாக சொல்லி, அவனது அன்னைக்கு பதிலாக இந்திரனை தினமும் இங்கே வந்து வழிபடுமாறு ஆலோசனை கூறினார். தினமும் இந்திரன் வந்து வழிபடுவதாக நம்பப் படுகின்றது.
தேர் போன்ற அமைப்பினில் மண்டபங்கள் கொண்டுள்ள கோயில்கள், குடந்தை சாரங்கபாணி திருக்கோயில், குடுமியான்மலை சடைமுடியார்திருக்கோயில், குடந்தை நாகேஸ்வரர் ஆலயம், பழமலைநாதர் திருக்கோயில் விருத்தாசலம் மற்றும் திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் தாராசுரம்ஐராவதேஸ்வரர் திருக்கோயில் என்பன. தேர் போன்ற வகையில் சக்கரங்களுடன் கூடிய கருவறை, வட்டமான விமானம் உடைய கோயிலை விஜயம் என்று சிற்ப நூல்கள் பெயரிடுகின்றன. இதனையே கரக்கோயில் என்று அப்பர் பெருமான் ஒரு பொது பதிகத்தின் பாடலில் குறிப்பிடுகின்றார் என்று சிலர் கூறுகின்றனர். பல வகையான கோயில்களை அப்பர் பிரான் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். திருவானைக்கா தலத்தில் பெருமானுக்கு பந்தல் அமைத்து மகிழ்ந்த சிலந்தி அடுத்த பிறவியில் கோச்செங்கட்சோழனாக பிறந்த போது பெருமானுக்கு, யானைகள் உள்ளே வாரா வண்ணம் எழுபத்தெட்டு மாடக் கோயில்கள் கட்டியதாக பெரிய புராணம் உணர்த்துகின்றது. பல வகையான கோயில்கள் பெருமானுக்கு இருந்தமை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. ஞாழற்கோயில், மற்றும் இளங்கோயில் என்ற வைப்புத் தலத்தின் விவரங்கள் தெரியவில்லை. தற்போது மணிகிராமம் என்று அழைக்கப்படும் வைப்புத் தலம் மணிகோயில் சீர்காழி பூம்புகார் பாதியில் திருவெண்காடு தலத்திற்கு அருகில் உள்ளது. கடம்பூர் பதிகத்தில் அப்பர் பெருமான் தென்கடம்பை திருக்கரக் கோயிலான் என்று குறிப்பிடுகின்றார். அம்பர் தலத்திலுள்ள இரண்டு கோயில்களையும் குறிப்பிட்டு உணர்த்தும் வகையில் ஒன்று மாகாளம் என்றும் மற்றொன்று பெருங்கோயில் என்று தற்போது அழைக்கப் படுகின்றன. வெள்ளப் பெருக்குடன் கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் அணிந்துள்ள பெருமான் சேரும் எழுபத்தெட்டு பெருங் கோயில்கள், கடம்பூர் கரக்கோயில், நறுமணம் வீசும் சோலைகள் சூழ்ந்த ஞாழற்கோயில், கருப்பறியலூர் தலத்தில் மலை போன்று விளங்கும் கொகுடிக் கோயில், இருக்கு வேதத்தின் மந்திரங்களை ஓதி மறையவர்கள் வழிபட்டு போற்றும் இளங்கோயில், கச்சூர் ஆலக்கோயில், ஆகிய திருக்கோயில்களைச் சென்று அடைந்து, வலம் வந்து, தரையில் விழுந்து பெருமானை பணிந்தால் உங்களைப் பிடித்திருக்கும் தீயவினைகள் அனைத்தும் அன்றே அழிந்துவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பெருக்காறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில்ஆலக்கோயில்
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்சத் தீவினைகள்தீரும் அன்றே
இந்த தலம் கயிலை மலைக்கு ஒப்பானது என்பதை உணர்த்தும் வண்ணம், சுந்தரர் ஒரு பொது பதிகத்தின் பாடலில் (7.47.1) கடம்பூர் மலையே என்று அழைக்கின்றார் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பெருமானை கடலுக்கும் மலைக்கும் ஒப்பிடுவது அருளாளர்கள் வழக்கம். கடலின் ஆழத்தையும் அகலத்தையும் நம்மால் அளவிட முடியாது. அதைப் போன்றே இறைவனின் தன்மையையும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. கடலிலிருந்து விலையுயர்ந்த முத்தும் மணிகளும் கிடைப்பது போன்று, இறைவனின் அருளால் நாம், எளிதில் அடையமுடியாத பேற்றினையும் பெறலாம். தூரத்தில் இருந்து பார்க்கும் போது மலையின் முழு பரிணாமத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதே போன்று இறைவனிடமிருந்து விலகி இருந்தால், நம்மால் அவனது தன்மையை புரிந்து கொள்ள முடியாது. அவன் பால் அன்பு கொண்டு அவனை நெருங்க, நாம் இறைவனின் பல தன்மைகளை அறிந்து கொள்கின்றோம். மேலும் அசையாமல் எந்த விதமான சலனமும் இல்லாத மலை போன்று, எக்காலத்திலும் ஒரே நிலையில் இருப்பவன் இறைவன்; மேலும் மலையிலிருந்து நாம் எண்ணற்ற கொடைகளை, வற்றாத ஆறுகள், அரணாக இருக்கும் தன்மை, மேகங்களை தடுத்து மழைப் பொழியச் செய்தல், பிணி தீர்க்கும் மூலிகைகள், அரிய சந்தனம் அகில் முதலான கட்டைகள், இரத்தினக் கற்கள் முதலியன பெறுகின்றோம். அதே போன்று இறைவனின் அருளால் நாம் பல நன்மைகளை அடைகின்றோம். கொழுந்தே என்று சுயம்புவாய், தானே முளைத்தவனாக இறைவன் இருக்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது. இறைவனது ஆண்மை, எல்லையற்ற வீரம் கொல்லேறு என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. அறவா=புண்ணியமே உருவானவன்;
காட்டூர் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்
கோட்டூர் கொழுந்தே அழுந்தூர் அரசே கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட்டூரானே
மாட்டூர் அறவா மறவாது உன்னைப் பாடப் பணியாயே
அப்பர் பெருமானின் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட கோயிலாக இருந்த இந்த திருக்கோயில் பின்னர் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக மாற்றப்பட்டது. தேர் வடிவத்தில் உள்ள கருவறை முதலாம் குலோத்துங்கச் சோழனின் காலத்தில் கி.பி. 1113 கட்டப் பட்டதாக தெரிய வருகின்றது. ஒடிஷா மாநிலத்தில் உள்ள கொனாரக் கோயில் இந்த கோயிலை முன்மாதிரியாக கொண்டு கட்டப்பட்டது என்று கூறுவார்கள். கொனாரக் கோயிலைக் கட்டிய நரசிம்மன் முதலாம் குலோத்துங்கச் சோழனின் உறவினன் ஆவான். இங்குள்ள மூர்த்திகளின் பெயரும் சிற்பங்களின் விவரங்களும் கிரந்த மொழியில் எழுதப் பட்டுள்ளன. பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த விவரங்கள் அந்நாளில் கிரந்த எழுத்துகள் இந்த பகுதி மக்களிடையே பிரபலமாக இருந்தன என்பதை உணர்த்துகின்றது. இன்றும் கிரந்த லிபியில் அச்சிடப்பட்டுள்ள வடமொழி வேதங்கள், பல அந்தணர்களால் படிக்கப் படுவதை நாம் காண்கின்றோம். பல்லவ மன்னர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த எழுத்துகள் பல கல்வெட்டுகளில் இருப்பதையும் நாம் காண்கின்றோம். சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தைய பல கல்வெட்டுகள் மற்றும் பட்டயங்களில் வடமொழிக்கு பதிலாக கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவற்றை வட்ட எழுத்துக்கள் என்றும் கூறுவார்கள். மலையாள எழுத்துகள் பல கிரந்த எழுத்துகளை ஒத்துள்ளன. வடமொழியில் உள்ள நான்கு விதமான க, ச, ட, த, ப ஆகிய எழுத்துகளை சரியான முறையில் உச்சரிப்பதற்கு இந்த கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப் பட்டன.
இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகமும் அப்பர் பிரான் அருளிய இரண்டு குறுந்தொகைப் பதிகங்களும் கிடைத்துள்ளன. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அப்பர் பிரான் பாடிய பாடல் இந்த தலத்திற்கு உரியதாகும். சுந்தரர் ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் கடம்பூர் மலையே என்று இறைவனை குறிப்பிடுகின்றார். மாணிக்கவாசகர் தனது கீர்த்தித் திருவகவல் பதிகத்தில் கடம்பூர் தன்னில் இடம் பெற இருந்தும் என்று குறிப்பிடுகின்றார். அருணகிரி நாதர், இராமலிங்க சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் ஆகியோரின் பாடல்கள் பெற்ற தலம். இந்த தலத்தின் மீது அருளிய திருப்புகழ் பாடலில் அருணகிரி நாதர், சூரியன் தடையின்றி ஓடும் வண்ணம் சூரபத்மனை வேலெறிந்து கொன்றவனே என்று முருகப் பெருமானை குறிப்பிடுகின்றார் அசுரன் சூரபதுமனின் கட்டளைப் படி, சூரியன் வழிமாறிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வேலெறிந்து சூரனை அழித்ததன் மூலம், சூரியன் முன்பு போன்று நேரான வழியில் செல்லும் தன்மையை முருகப் பெருமான் உண்டாக்கினார் என்று அருணகிரி நாதர் உணர்த்துகின்றார். (சூரணங்கோடு ஆழி போய் கிடந்தே வாட சூரியன் தேரோட அயிலேவீ—அயில்=கூர்மையான வேல்). இந்த குறிப்பு நமக்கு, முருகப் பெருமான் இந்த தலத்தினில் சிவபெருமானின் அருளால் வேல் பெற்றதை உணர்த்துகின்றது. கடம்ப மரம் இந்த தலத்தின் மரம் கடம்பூர் என்ற பெயர் வந்தது. தீர்த்தம் சக்தி தீர்த்தம். இந்த திருக்கோயிலுக்கு அருகிலுள்ள கடம்பூர் இளங்கோயில் முற்றிலும் இடிந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த திருக்கோயில் அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில், வைப்புத் தலமாக காணப் படுகின்றது. மொகலாயப் படையெடுப்பிற்கு பிறகு கவனிப்பாரற்று சிதிலமடைந்து கிடந்தகோயிலை தேவகோட்டையை சார்ந்த அருணாசலம் செட்டியார் என்பவரின் பெருமுயற்சியால் இன்றுள்ள நிலையில் இந்த திருக்கோயிலை நாம்காணமுடிகின்றது. இறைவனே செட்டியாரின் கனவில் தோன்றி, இந்த திருக்கோயில் திருப்பணியை எடுத்துக் கொள்ளுமாறு பணித்ததாக கூறுகின்றனர்.
பாடல் 1:
வானமர் திங்களும் (2.068) முன்னுரை தொடர்ச்சி, பாடல்கள் 1, 2 (திதே 0168)
வானமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானைத்
தேனமர் கொன்றையினானைத் தேவர் தொழப் படுவானைக்
கானமரும் பிணை புல்கிக் கலை பயிலும் கடம்பூரில்
தானமர் கொள்கையினானைத் தாள் தொழ வீடு எளிதாமே
விளக்கம்:
வானில் இருந்து கீழே இறங்கிவந்த போது தானே, கங்கை நதி பெருமானின் சடையில் தேக்கி வைக்கப்பட்டு மறைந்தது. அதனை குறிப்பிடும் வண்ணம் வானமர் என்ற சொல்லினை திங்கள் மற்றும் கங்கை நதி இரண்டுக்கு பொதுவாக வைத்துள்ள நயம் ரசிக்கத் தக்கது. தக்கனின் சாபத்தினால் ஒவ்வொரு கலையாக தேய்ந்து முற்றிலும் அழியும் நிலையில் இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரன், பெருமானிடம் சரணடைய, அந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்ட பெருமான், சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்ததன் விளைவாக, சந்திரன் மீண்டும் வானில் உலவும் நிலையினை அடைந்தான். இவ்வாறு வானமர் சந்திரனாக அவன் மாறியது பெருமானின் அருளினால் தான், என்பதை உணர்த்தும் வண்ணம் வானமர் திங்கள் என்று இங்கே சொல்லப் பட்டுள்ளது. கலை=ஆண்மான்; பிணை= பெண்மான்; பயிலுதல்=தொடர்ந்து பழகுதல்; வார்சடை=நீண்ட சடை; அமர்=பொருந்திய; மருவிய=கலந்த; கான்=காடு; தேவர்கள் தொழப்படும் இறைவன் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முருகப் பெருமான், இந்திரன், செவ்வாய் ஆகியோர் இறைவனைத் தொழுது பயன் அடைந்ததாக தலபுராணம் கூறுகின்றது. முருகப் பெருமானுக்கு இறைவன் வேல் கொடுத்ததாக கூறுவார்கள். இந்திரன் இந்த தலத்து இறைவனை, தேவலோகம் கொண்டு செல்ல நினைத்து பூமியை மிகவும் ஆழமாக தோண்டியதாகவும், இலிங்கத்தின் அடிப்பகுதி அவனுக்கு எட்டாத வண்ணம் கீழே இருந்ததால் அச்சம் கொண்டு தனது முயற்சியை கைவிட்டுத் தேவலோகம் திரும்பியதாக கூறுவார்கள். இந்த செய்தியை தேவர் தொழப் படுவான் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார் போலும்.
பொழிப்புரை:
வானில் பொருந்திய பிறைச் சந்திரனும் கங்கை நதியும் கலந்து பொருந்திய நீண்ட சடையினை உடையவனும், தேன் பொருந்திய கொன்றை மலர்களை விருப்பத்துடன் சூடிக் கொள்பவனும், தேவர்களால் தொழப்படும் இறைவனும், காடுகளில் பொருந்தியுள்ள ஆண்மானும் பெண்மானும் கலந்து மகிழும் கடம்பூர் தலத்தில் தானே விரும்பி அமர்ந்து உறைபவனும் ஆகிய இறைவனின் திருப்பாதங்களைத் தொழ, வீடுபேறு அடைவது மிகவும் எளிதான செயலாக மாறிவிடும்.
பாடல் 2:
வானமர் திங்களும் (2.068) முன்னுரை தொடர்ச்சி, பாடல்கள் 1, 2 (திதே 0168)
அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும்
விரவும் திருமுடி தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பிப்
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள்ளேற்று அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அதுவாமே
விளக்கம்:
பெருமானின் திருப்பாதங்களைத் தொழுவது மறுமையில் நிரந்தரமான இன்பம் அளிக்கும் வீடுபெற்றினை மிகவும் எளிதாக பெற்றுத் தரும் என்று முந்தைய பாடலில் கூறிய சம்பந்தர் இந்த பாடலில், பெருமானைத் தொழுதால் இம்மையிலும் இன்பம் பயக்கும் என்று கூறுகின்றார். அம் துகில்=அழகிய துகில்; துகில்=புடவை; வேங்கை=புலி; விரவும்=கலந்து; கலந்து நிற்பவை எவையெவை என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறவில்லை எனினும், முந்தைய பாடலில் உணர்த்திய வண்ணம் கங்கை என்பதையும் கொன்றை என்பதையும் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறே பரவும் என்ற சொல்லுக்கும் முன்னர் அடியார்கள் என்று இணைத்துப் பொருள் கொள்ள வேண்டும். புடவையும் புலித்தோலும் பூண்டவன் என்று குறிப்பிட்டு, மாதோர் பாகனாக இறைவன் விளங்கும் தன்மையை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அந்துகில் வேங்கை அதள் என்ற தொடருக்கு அழகிய புலித்தோலாடை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
துகில் அணிந்த பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பாடலை நினைவூட்டுகின்றது. மாதொரு பாகன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பதினெட்டாவது பாடல் தான். மிகவும் தொன்மையான கோலம் என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல், குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும் சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைந்து குறிப்பிடப்படும் இனிமையான பாடல்.
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை
கோலமே நோக்கி குளிர்ந்தூதாய் கோத்தும்பீ
பொழிப்புரை:
பாம்பினோடு ஆமை ஓட்டினையும் அணிகலனாக அணிந்து அழகிய புலித்தோல் ஆடையை உடுத்தியவனும், கங்கை நதியும் கொன்றை மலரும் கலந்து பொருந்தி விளங்கும் சடை முடியில் பிறைச் சந்திரனை அணிந்தவனும் ஆகிய பெருமானை அடியார்கள் மிகுந்த விருப்பத்துடன் புகழ்ந்து தொழ, அவன் ஒப்பற்ற கடம்பூர் தலத்தில் வீற்றிருக்கின்றான். அத்தகைய பெருமானின், பசிய கண்களை உடைய வெள்ளை எருதின் மீது உலவும் அண்ணலின் திருப்பாதங்களை இரவும் பகலும் பணிந்து வணங்க நமக்கு இன்பம் ஏற்படும்.
பாடல் 3:
வானமர் திங்களும் (2.068) பாடல்கள் 3 மற்றும் 4 (திதே 0169)
இளிபடும் இன் சொலினார்கள் இருங்குழல் மேல் இசைந்து ஏறத்
தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழிலார் கடம்பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி ஒண்ணுதலோடு உடனாகிப்
புலி அதள் ஆடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே
விளக்கம்:
இளி=ஏழிசைகளில் ஒன்று, குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு இசைகள்; ஒண்ணுதல்=ஒளிவீசும் நெற்றி; தீத்தொழிலார்=வேள்வி புரியும் அந்தணர்கள்’; வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், தானம் பெற்றுக் கொள்ளுதல், தானம் வழங்குதல் ஆகிய ஆறும் அந்தணர்களின் தொழில்களாக பண்டைய நாட்களில் கருதப்பட்டன. காலப்போக்கில் இவை அனைத்தும் மாறி, அனைவரும் பொருள் ஈட்ட பலவிதமான அலுவல்களில் ஈடுபடுவதும் நமது கல்விமுறையும் அதற்கேற்ப மாறுபட்ட நிலையில் உள்ளதும் இன்றைய நிலை. எனவே இன்றைய நிலையின் பின்னணியில் அந்தணர்களுக்கு பண்டைய நாட்களில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நெறிகளை ஆராய்வது சற்று கடினமே. இந்த பாடலில் மகளிர் கூந்தலில் வேள்விப்புகை சென்று படிவதாக சம்பந்தர் கூறுகின்றார். இன்றும் நவகிரக வேள்விகள் செய்யும்போது இருபத்தேழு நட்சத்திரங்களின் பெயரைச் சொல்லி நெய்யும் சமிதும் இட்டு ஆகுதிகள் வழங்குவது பழக்கத்தில் உள்ளது. இருபத்தேழு நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவியராக கருதப் படுவதை நாம் அறிவோம். எனவே இந்த நட்சத்திரங்களை குறித்து வேள்விகள் செய்யப் பட்டதை குறிக்கின்றார் என்று பொருள் கொள்ளலாம்.
சாமவேதத்தைச் சார்ந்த அந்தணர்களுக்கு ஔபாசனம் என்று சொல்லப்படும் சடங்கினைச் செய்யும் தகுதி, அவர்களின் மனைவி அவர்கள் அருகே இருந்தால் தான் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களும், மனைவியை இழந்தவர்களும் இதனைச் செய்யக் கூடாது. மேலும் திருமணம் ஆனவர்களும் அவர்களது மனைவி அவரது அருகில் இருந்து, இருவரும் மணையில் அமர்ந்தால் தான் இதனைச் செய்ய இயலும். பல சுப அசுப காரியங்களுக்கு முன்னர் புண்யாவாசனம் மற்றும் ஔபாசனம் செய்த பின்னரே, அந்தந்த சடங்குகளை தொடங்க இயலும். இன்றும் இந்த வழிமுறை பின்பற்றப் படுகின்றது. தினமும் ஔபாசானம் செய்பவர்கள் ஒரு சிலர் இன்றும் உள்ளனர். இந்த வழிமுறை வேதங்களில் சொல்லப்பட்டு வருவதால், திருஞானசம்பந்தரின் காலத்திலும் பழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. இந்த வழக்கத்தையே சம்பந்தர் கூறுகின்றார் என்று சிலர் கருதுகின்றனர். இந்த விளக்கமும் மிகவும் பொருத்தமாக உள்ளது. தெளிபடு கொள்கை=தெளிவான கோட்பாடு. புனைதல்=அணிதல்; இருங்குழல் மேல் இசைந்து ஏற என்ற தொடருக்கு, மகளிரின் நீண்ட கூந்தல் போன்று வளைந்து வேள்வித் தீயின் புகை மேலெழுந்து எங்கும் பரவி விளங்கும் தலம் என்று சிலர் பொருள் கூறுகின்றனர்.
பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் பெருமானின் பொற்கழல்கள் நமக்கு மறுமையில் வீடுபேற்றினை அளித்தும் இம்மையில் இன்பம் அளித்தும் அருள் புரிகின்றன என்று உணர்த்தும் சம்பந்தர், இந்த பாடலில் அந்த திருவடிகளை நாம் போற்றி வணங்கி அந்த பயன்களை பெற வேண்டுமென்று அறிவுரை கூறுகின்றார்.
பொழிப்புரை:
இசை இனிமையும் சொல்லினிமையும் கலந்த சொற்களை பேசும் மகளிரின் கரிய கூந்தல்களில் வேள்விப் புகை ஏறும் வண்ணம் வேள்விகளைச் செய்யும் தெளிந்த கொள்கையராகிய அந்தணர்கள் நிறைந்த கடம்பூர் தலத்தில், ஒளி வீசும் வெண்மை நிறமுடைய பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனாக, ஒளி பொருந்திய நெற்றியினை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனாக, புலியின் தோலை ஆடையாக ஏற்று அணிந்தவனாக, திகழும் பெருமானின் பொற்கழல்களை நாம் போற்றுவோமாக.
பாடல் 4:
வானமர் திங்களும் (2.068) பாடல்கள் 3 மற்றும் 4 (திதே 0169)
பறையோடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர் நெடுமாடம்
கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர் கடம்பூரில்
மறையொலி கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும்
பிறையுடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே
விளக்கம்:
பறை=தோல் இசைக்கருவி; இயம்ப=ஒலிக்க; கண்களின் கீழ் பாகத்தில் சிகப்பு நிற கோடுகள் காணப்படுவது உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்தும். அத்தகைய செவ்வரிகளை வேலில் படிந்துள்ள இரத்தக் கறைகளுக்கு ஒப்பிட்டு, கறை படிந்த வேல் போன்று நீண்டு கூர்மையாக உள்ள கண்களை என்றும் செவ்வரி ஓடிய கண்களை உடைய மகளிர் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார் என பொருள் கொள்வது பாடலின் நயத்தை உணர்த்துகின்றது. கறை என்பதற்கு கண்களுக்கு மை தீட்டி அழகு செய்வதால் ஏற்படும் கறை என்றும் சிலர் பொருள் கொள்கின்றனர். ஆடல் பாடலில் ஈடுபடும் மகளிர், தங்களை அழகுபடுத்திக் கொள்வதை நாம் இன்றும் காண்கின்றோம் என்பதால் இந்த விளக்கமும் பொருத்தமே. பெருமானைப் பேணும் அடியார்கள் பெரியோர்களாக மதிக்கப் படுவார்கள் என்று கூறுவதன் மூலம், பெருமானைப் பேணி போற்றாத மனிதர்கள் பெரியோர்களாக மதிக்கப்பட மாட்டார்கள் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். இந்தக் கூற்று சம்பந்தர் அருளிய ஆமாத்தூர் தலத்து பதிகத்தின் பாடல்களை நினைவூட்டுகின்றது.
இந்த பதிகத்தின் முதல் பாடலில் (2.44.1), பெருமானின் திருவடிகளைப் போற்றி புகழாத மனிதர்களின் அழகும் ஒரு அழகோ என்று கேள்வி கேட்கின்றார். அம்=அழகிய; பொக்கம்=பொலிவு மற்றும் அழகு: பெய்=உடைய, துன்னம் பெய்=தைக்கப்பட்ட; பிறைச் சந்திரனைத் தனது சடையில் பெருமான் சூடிக் கொண்ட பின்னர், சந்திரன் தான் அழியும் நிலையிலிருந்து தப்பித்து, நாளும் ஒரு பிறை பெற்று வளர்ந்தமையை குறிப்பிட பிள்ளை மதி என்று இங்கே கூறுகினார்.
துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை
பின் அம் சடை மேலோர் பிள்ளை மதி சூடி
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான் தன்
பொன் அம் கழல் பரவா பொக்கமும் பொக்கமே
இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் திருஞானசம்பந்தர், ஆமாத்தூர் அடிகளின் திருப்பாதங்களை வணங்காதவர்களின் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையோ என்ற கேள்வியை எழுப்பி, அவர்களது வாழ்க்கை வாழ்க்கையாக மதிக்கப் படாது என்று உணர்த்துகின்றார். கருடனை ஊர்தியாகக் கொண்ட திருமாலும், தாமரையை ஆசனமாகக் கொண்ட பிரமனும் தங்களது மனதினில் தியானிக்கும் பெருமானது தன்மையை அளவிட முடியாது என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். அள்ளல்=சேறு; தலத்தின் நீர்வளமும் நிலவளமும் குறிப்பிடப் படுகின்றன.
புள்ளும் கமலமும் கைக் கொண்டார் தாமிருவர்
உள்ளும் அவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே
அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் என்
வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே
சுந்தரரும் வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில், பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்றும், பெருமானை உணராதவர்களின் உணர்வு உணர்வாக கருதப்படாது என்றும், பெருமான் குறித்து புகழ்ந்து பேசாதவர்களின் பேச்சு பேச்சாக கருதப்படாது என்றும், பெருமானை துதிக்காதவர்களின் துதி துதியாக கருதப்படாது என்றும், பெருமானை குறித்த செய்திகளை கல்லாதவர்களின் கல்வி கல்வியல்ல என்றும், பெருமானை நினையாதவர்களின் நினைவு நினைவல்ல என்றும், பெருமானை நினைத்து மனம் நெகிழாதவர்களின் உருக்கம் உருக்கமல்ல என்றும் கூறுகின்றார். இந்த பதிகத்தின் (7.86) ஒரு பாடலை நாம் இங்கே காண்போம். படிறன்=வஞ்சகன், கள்வன்; மற்றவர்களின் வாழ்நாளை நிர்ணயித்த நாளில், அறுக்கும் காலனின் வாழ்க்கையை அறுத்த இறைவன் என்று சுந்தரர் கூறுகின்றார்.
மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத முதல்வன்
கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் பனங்காட்டூர்
ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவு என்னே.
திருமணஞ்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.87.5) அப்பர் பிரான் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து வாழ்த்தி வாழும் மனிதர்களின் வாழ்க்கையே வாழ்வாக கருதப் படும் என்று கூறுகின்றார்.
துள்ளும் மான்மறி தூ மழுவாளினர்
வெள்ள நீர் சடை கரந்தார் மேலவர்
அள்ளலார் வயல் சூழ் மணஞ்சேரி எம்
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே
வேத ஒலிகளும் கீத ஒலிகளும் இசைக்க ஆடும் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு அவர் தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது.
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங் கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனிக்கால் கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே
பனிகால்=குளிர்ச்சியைத் தரும்; எம=எம்முடைய; நயத்தல்=விரும்புதல்; நாடுதல்=மனம் நாடுதல்; இந்த பாடலில் தில்லை அந்தணர்களுக்கும் பெருமானுக்கும் உள்ள நெருக்கத்தை கூற வந்த சம்பந்தர் அபிஷேகத்தையும் அந்தணர்களையும் பிரியாத சிற்றம்பலம் என கூறுகின்றார். சிவனை அபிஷேகப் பிரியர் என்று கூறுவர். அதே அளவுக்கு தில்லைவாழ் அந்தணர்களும் சிவபிரானுக்கு உகந்தவர் என்பதால் அபிஷேகத்தையும் அந்தணர்களையும் இணைத்து கூறுகிறார். இவ்வாறு கூறுவதன் மூலம் தில்லை வாழ் அந்தணர்களின் பெருமையை சம்பந்தர் உயர்த்துகிறார். சந்திரனின் கொடிய வினையையே தீர்த்த சிவபிரானுக்கு நமது வினைகளை போக்குவது எளிய செயல் அல்லவா. எனவே தான் சந்திரனுக்கு அருளிய தன்மை கூறப்பட்டுள்ளது. பால், நெய், தயிர் முதலியவற்றில் ஆடினாய் என்று சம்பந்தர், இறைவனை குறிப்பிடுகின்றார். பால், நெய், தயிர் என்ற இந்த மூன்றுடன் நிறுத்தி ஆனஞ்சு ஆடுபவன் என்று குறிப்பால் உணர்த்துவது, சைவ நூல்களில் பின்பற்றப்படும் மரபு. கோமயம், கோசலம் ஆகிய மற்ற இரண்டினை தனியாக திருமுறை பாடல்களில் குறிப்பிடுவது இல்லை. எனவே பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடும் பெருமான் என்று குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும்.
மூவாயிரம் தில்லை வாழ் அந்தணர்களில் பெருமானும் ஒருவராக கருதப் படுவதால், அந்த அந்தணர்களை விட்டு பெருமான் பிரியாது இருப்பவராக கருதப் படுகின்றார். எனவே தான் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் என்று கூறுவதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர். தொடர்ந்து அந்தணர்கள் பிரியாது பணி செய்யும் சிற்றம்பலத்தில் உறையும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பல்சடை=பல விதமான தன்மைகள் கொண்டுள்ள சடை. சுருண்டு கிடப்பதால் புன்சடை என்றும், நீண்டு இருப்பதால் நீள்சடை என்றும், பொன் போன்ற நிறத்தில் இருப்பதால் பொன்சடை என்றும், விரிந்து பரந்து இருப்பதால் விரிசடை என்றும், நிமிர்ந்து உயர்ந்து இருப்பதால் நிமிர்சடை என்றும் பெருமானின் சடை பலவிதமாக திருமுறைப் பாடல்களில் குறிக்கப் படுகின்றது. இதனை உணர்த்தும் வகையில் பல்சடை என்று சம்பந்தர் கூறுகின்றார். ஒன்பது சடைகளை உடைய பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் பல்சடை என்று கூறினார் என்றும் பொருள் கொள்ளலாம். பாடினாய் மறை என்பதற்கு சாம வேத கீதங்கள் பாடினார் என்று பொருள் கொள்ள வேண்டும். இசை வடிவத்தில் அமைந்துள்ள வேதம் சாமவேதம் ஒன்று தான் என்பதால் பாடினார் வேதம் என்று குறிப்பிடும் போது, சாமவேதத்தையும் ஓதினார் வேதம் என்று சொல்லும் போது நான்கு வேதங்களையும் குறிப்பிடுவதாக பொருள் கொள்ள வேண்டும்.
ஆடினாய் என்ற சொல்லுக்கு நடனம் புரிதல் மற்றும் நீராடுதல் என்று இரண்டு பொருள்கள் உள்ளன. இரண்டுமே பெருமானுடன் இணைந்த செயல்கள். ஆடவல்லானை குறிக்கும் இந்த பாடலை, ஆடினாய் என்ற சொல்லுடன் நயமாக தொடங்கி, பெருமான் பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடுவதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சம்பந்தரின் சொல்லாட்சியை நாம் இங்கே உணர்கின்றோம்.
பொழிப்புரை:
பறை மற்றும் சங்குகள் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, பல வகையான கொடிகள் கட்டப்பட்டு அழகு செய்யப்பட்ட மாட வீடுகளில், கறையினை உடைய வேல் போன்று செவ்வரிகளுடன் நீண்டு கூர்மையான நுனிகளுடன் உள்ள கண்களைக் கொண்டுள்ள மகளிர் ஆடுவதால் பாடுவதால் ஏற்படும் ஆரவார ஒலிகளுடன் மறையொலி மற்றும் பெருமானின் புகழ் குறித்த பாடல்களின் ஒலி கலந்து ஒலிக்க ஆடுதலை விரும்புகின்ற பெருமானை, பிறைச் சந்திரனை தனது நீண்ட சடையில் சூடியவனை, கடம்பூரில் உறைபவனை பேணவல்ல அடியார்கள் பெரியோர்களாக மதிக்கப் படுவார்கள்.
பாடல் 5:
வானமர் திங்களும் (2.068) பாடல்கள் 5, 6, 7, 8, 9, 10, 11 (திதே 0170)
தீ விரியக் கழல் ஆர்ப்பச் சேயெரி கொண்டு இடு காட்டில்
நாவிரி கூந்தல் நற்பேய்கள் நகை செய்ய நட்டம் நவின்றோன்
கா விரி கொன்றை கலந்த கண்ணுதலான் கடம்பூரில்
பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே
விளக்கம்:
தீ விரிய=செம்பட்டை நிறத்தில் உள்ள சடையினை தீச்சுடர்களுக்கு ஒப்பிடுவர். சேயெரி= சிவப்பு நிறத்தில் கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பு; நாவிரி கூந்தல்=வாய்க்கு வெளியே நீட்டிய நாக்கையும் பரந்த சடையையும்; நவிலுதல்=தொடர்ந்து நடனம் ஆடுதல்; கா=சோலை;
பொழிப்புரை:
தீக்கதிர்கள் போன்று சிவந்த நிறத்தில் உள்ள சடை விரியவும், காலில் அணிந்துள்ள கழல் ஒலிக்கவும், சிவந்த நிறத்தில் உள்ள தீயினைக் கையில் ஏந்திய வண்ணமும், இடுகாட்டில் உள்ள பேய்கள் தங்களது நாக்கினை தொங்கவிட்டுக் கொண்டும் கூந்தலை விரித்தும் நகை செய்தவாறு சூழ்ந்து நிற்க தொடர்ந்து நடனமாடும் பெருமான் சோலைகளில் விரிந்து மலர்ந்துள்ள கொன்றை மலர்களைத் தனது சடையினில் பிறைச் சந்திரன் மற்றும் கங்கை நதியுடன் கலந்து வைத்துள்ள பெருமான், தனது நெற்றியில் கண் உடையவன் ஆவான். இத்தகைய தன்மை வாய்ந்த பெருமானை, கடம்பூர் தலத்தில் உறைபவனை, ஓசையின்பம் உடைய பாடல்களை பயிற்சி செய்து பாடும் வல்லமை உடைய அடியார்கள், பழியும் பாவங்களும் தம்மைச் சாராத வண்ணம் வாழ்வார்கள்.
பாடல் 6:
வானமர் திங்களும் (2.068) பாடல்கள் 5, 6, 7, 8, 9, 10, 11 (திதே 0170)
தண் புனல் நீள்வயல் தோறும் தாமரை மேல் அனம் வைகக்
கண் புணர் காவில் வண்டு ஏறக் கள் அவிழும் கடம்பூரில்
பெண் புனை கூறுடையானைப் பின்னுசடைப் பெருமானைப்
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே
விளக்கம்:
தண்புனல்=குளிர்ந்த நீர்; அனம்=அன்னப்பறவை; புணர்தல்=அணைதல்; கண் புணர் கா= கண்கள் தாமே சென்று காணும் வண்ணம் அழகு நிறைந்த சோலைகள்; கண் கவரும் சோலைகள்; பண் புனை=பண்களுடன் இசைந்த; கள்=தேன்; அவிழும்=விரியும்;
பொழிப்புரை:
குளிர்ந்த நீரினை உடைய வயல்களில் தோன்றும் தாமரை மலர்கள் மேல் அன்னப் பறவைகள் தங்கி மகிழும் காட்சியும், கண் கவரும் வண்ணம் மிகுந்த அழகுடன் உள்ள சோலைகளில் வண்டுகள் ஏறி அமர்வதால் மலராக விரிந்து தேன் சொரியும் மொட்டுகள் நிறைந்து காணப்படும் காட்சியும் உடைய கடம்பூர் தலத்தில், பெண்ணைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும் பின்னப்பட்ட சடையை உடையவனும் ஆகிய பெருமானின் புகழினை, இனிய பண்களுடன் இணைத்து பாடும் வல்லமை பெற்ற அடியார்களை பாவங்கள் பற்றாது.
பாடல் 7:
வானமர் திங்களும் (2.068) பாடல்கள் 5, 6, 7, 8, 9, 10, 11 (திதே 0170)
பலி கெழு செம்மலர் சாரப் பாடலொடு ஆடல் அறாத
கலி கெழு வீதி கலந்த கார்வயல் சூழ் கடம்பூரில்
ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்ணுதலாள் உமை கேள்வன்
புலி அதள் ஆடையினான் தன் புனை கழல் போற்றல் பொருளே
விளக்கம்:
பலி என்ற சொல் இங்கே பூஜை என்ற பொருளில் வந்துள்ளது. செம்மலர்=செம்மையான மலர்கள், சிறந்த பூக்கள்; அறாத=நீங்காத; சார=அடைய; கலி=மகிழ்ச்சியால் பெருகும் ஒலி; கார்வயல்=நீர் நிறைந்த வயல்; ஒண்ணுதல்=ஒளி மிகுந்த நெற்றி; பெருமானைத் துதியாமல் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக கழித்ததாக அப்பர் பிரான் வருந்தும் பாடல் (5.90.7) நமது நினைவுக்கு வருகின்றது. சூழ்த்த=சூழ்ந்த, நறுமணம் மிக்க உடையதால் வண்டுகளால் சூழப்பட்ட மலர்கள், மாமலர்=ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்கள், வீழ்த்துதல்=வீணாக கழித்தல்; அனைத்து உயிர்களையும் பற்றியிருக்கும் ஆணவமலம் இறைவனைப் பற்றிய சிந்தனைகள் நாம் செய்யவிடாமல் தடுக்கின்றன. அதனால் அறியாமையில் மூழ்கியிருக்கும் நெஞ்சினை, மடநெஞ்சம் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நாம் இறைவனைப் பற்றி நினைத்தால், ஆணவ மலத்தால் ஏற்பட்டுள்ள அறியாமை அகலும். எனவே நமது நெஞ்சம் இறைவனை நினைக்க வேண்டும் என்று கூறுகின்றார்.
வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே
பொழிப்புரை:
பெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்காக செம்மையான மலர்கள் கொண்டு வரும் அடியார்கள் நிறைந்ததும், தலத்து மக்கள் பாடியும் ஆடியும் எழுப்பும் மகிழ்ச்சி ஒலிகள் நீங்காது ஒலிக்கும் வீதிகள் உடையதும், நீர் நிறைந்த வயல்கள் நிறைந்ததும் ஆகிய கடம்பூர் தலத்தில் வீற்றிருப்பவனும், பெருத்த ஒலியுடன் வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையினில் மறைத்தவனும் ஒளி வீசும் நெற்றியினை உடைய உமையன்னையின் கணவனும் புலித்தோல் உடுத்தவனும் ஆகிய பெருமானின் திருப்பாதங்களை, கழல்களால் அழகு பெற்று விளங்கும் திருவடிகளை போற்றுவதே பொருள் உடைய செய்கையாகும்.
பாடல் 8:
வானமர் திங்களும் (2.068) பாடல்கள் 5, 6, 7, 8, 9, 10, 11 (திதே 0170)
பூம்படுகில் கயல் பாயப் புள் இரியப் புறங்காட்டில்
காம்படு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில்
மேம்படு தேவியொர் பாகம் மேவி எம்மான் என வாழ்த்தித்
தேம்படு மாமலர் தூவித் திசை தொழத் தீய கெடுமே
விளக்கம்:
படுகில்=நீர் நிலைகளில்; பூம்படுகு=அழகிய நீர்நிலை; புள்=பறவை; இரிய=பறந்தோட; காம்பு= மூங்கில்; அடுதல்=கொல்லுதல், இங்கே வெற்றி கொள்ளல் என்ற பொருளில் வருகின்றது. காம்படு தோளியர்=அழகினில் மூங்கிலை வென்ற தோள்கள் உடைய பெண்கள்; மூங்கில் மகளிரின் தோள்களின் வனப்பிற்கு முன்னே தோல்வி அடைந்ததை குறிப்பிடும் சம்பந்தர், கடம்பூர் மகளிரின் கண்கள் மீன்களை விடவும் அழகாக இருந்ததை உணர்ந்தார் போலும். அவர்களின் கண்களின் முன்னே போட்டியிட முடியாமல், மீன்கள் நீர்நிலைகளில் பாய்ந்து மறைந்தது என்று கூறுகின்றார். தேம்படு=தேன் சொரிகின்ற;
பொழிப்புரை:
அழகிய நீர்நிலைகளில் மீன்கள் துள்ளி குதித்து பாய்வதால் ஏற்படும் இரைச்சலால் பயந்த பறவைகள் அங்கும் இங்கும் பறந்தோடும் காட்சி, மூங்கில்களின் வனப்பினை விஞ்சும் வண்ணம் தோள்கள் அமையப் பெற்ற தலத்து மகளிர்களின் கண்களைக் கவரும் வண்ணம் உள்ள கடம்பூர் நகரத்தில் உறையும் இறைவனை, அனைத்துப் பெண்களினும் மேம்பட்ட அழகினையும் குணத்தினையும் உடைய பார்வதி தேவியினைத் தனது உடலின் ஒரு பாகத்தில் பொருந்தியுள்ள இறைவனே என்று வாழ்த்தி, தேன் சொரிகின்ற சிறந்த மலர்களை தூவி அடியார்கள் வழிபடும் இறைவன் இருக்கும் திசையினைத் நோக்கித் தொழும் அடியார்களின் தீவினைகள் முற்றிலும் கெட்டு போகும்.
பாடல் 9:
வானமர் திங்களும் (2.068) பாடல்கள் 5, 6, 7, 8, 9, 10, 11 (திதே 0170)
திருமரு மார்பில் அவனும் திகழ் தரு மாமலரோனும்
இருவருமாய் அறிவொண்ணா எரி உருவாகிய ஈசன்
கரு வரை காலில் அடர்த்த கண்ணுதலான் கடம்பூரில்
மருவிய பாடல் பயில்வார் வானுலகம் பெறுவாரே
விளக்கம்:
வழக்கமாக தனது பதிகத்தின் எட்டாவது பாடலில் இராவணனின் கயிலை நிகழ்ச்சியை குறிப்படும் சம்பந்தர் இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் அவ்வாறு குறிப்பிடவில்லை. ஆனால் இந்த பாடலில் அண்ணாமலை நிகழ்ச்சியையும் இராவணனின் கயிலை நிகழ்ச்சியையும் சேர்த்து குறிப்பிடுகின்றார். திரு=திருமகள்; திருமரு=திருமகள் உறையும்’ நுதல்=நெற்றி.; கருவரை= கரிய மலை போன்ற உடலை உடைய அரக்கன் இராவணன். ஈசன்=தலைவன்;
பொழிப்புரை:
திருமகளைத் தனது மார்பில் கொண்டுள்ள திருமாலும், சிறந்த தாமரை மலரில் திகழும் பிரமனும் ஆகிய இருவரும் அறிய முடியாத வண்ணம், நெடிய தீப்பிழம்பாக தோன்றிய தலைவனும், கரிய மலை போன்ற உடலை உடைய அரக்கன் இராவணனை கயிலை மலையின் கீழே அடர்த்து நெருக்கியவனும் தனது நெற்றியில் கண் உடையவனும் கடம்பூர் தலத்தில் பொருந்தி இருப்பவனும் ஆகிய பெருமானை புகழும் பாடல்களை நல்ல பயிற்சி பெற்று பாடும் அடியார்கள் வானுலகம் சென்று அடைவார்கள்.
பாடல் 10:
வானமர் திங்களும் (2.068) பாடல்கள் 5, 6, 7, 8, 9, 10, 11 (திதே 0170)
ஆடை தவிர்த்து அறம் காட்டும் அவர்களும் அந்துவராடைச்
சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர்
வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேத முதல்வன்
காடதனின் நடம் ஆடும் கண்ணுதலான் கடம்பூரே
விளக்கம்:
அறம் காட்டும் அவர்கள்=தாம் தரும நெறியில் நிற்பது போன்று காட்டிக் கொள்ளும் சமணர்கள்; அவர்களது தோற்றம் புறத்தோற்றமே அன்றி அகத்தில் உண்மையில் தருமநெறியினை பின்பற்றாதவர்களாக சமணர்கள் அப்பர் மற்றும் சம்பந்தர் காலத்தில் இருந்தமை பெரிய புராணத்தில் பல இடங்களில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. சோடை=வறண்ட நிலை; பொருளற்ற பேச்சுகள்;
பொழிப்புரை:
ஆடைகளை தவிர்த்தவர்களும் தரும நெறியில் இருப்பது போன்று புறத்தோற்றம் உள்ளவர்களும் ஆகிய சமணர்களும், சிகப்புச் சாயம் ஊட்டப்பட்ட துவர் ஆடையினை அணியும் புத்தர்களும், பொருளற்ற வறண்ட சொற்களையே பேசுவார்கள்; மேலும் அவர்கள் நல்ல நெறியினை, உயிருக்கு இன்பம் விளைவிக்கும் முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும் நன்னெறியினை காட்ட மாட்டார்கள்; எனவே அவர்கள் பேசும் பேச்சுகளும் உண்மையான பேச்சுகள் அல்ல என்பதை உணர்வீர்களாக. அடியார்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப பல வேடங்களில் அடியார்களுக்கு காட்சி தருபவனும். ஏனைய தேவர்களிலிருந்து பல தன்மைகளில் மாறுபட்டு இருப்பவனும், வேதங்களில் உணர்த்தப் படும் முழுமுதற் கடவுளும் காட்டினில் நடனம் ஆடுபவனும், தனது நெற்றியில் கண் உடையவனும் ஆகிய பெருமான் கடம்பூர் தலத்தில் உறைகின்றான்.
பாடல் 11:
விடை நவிலும் கொடியானை வெண்கொடி சேர் நெடுமாடம்
கடை நவிலும் கடம்பூரில் காதலனைக் கடற்காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே
விளக்கம்:
நவிலும்=அறிவிக்கும்; கடை=கடைவாயில்; காதலன்=உயிர்கூட்டமாகிய பெண் இனத்திற்கு தலைவன்; நடை=நல்லொழுக்கம்; படை=கருவி; படை நவில் பாடல் என்ற தொடர் நயமாக இரு பொருள் தருவதை நாம் உணரலாம். பாடலை பாடும் அடியார்களுக்கு பழி மற்றும் பாவத்திலிருந்து காக்கும் படைக் கவசமாக திகழ்கின்றது என்பது ஒரு பொருள். பெருமானுக்கு படைக்கப்படும் பாடல் என்பது மற்றொரு பொருள்.
பொழிப்புரை:
இடபமே தனது சின்னம் என்பதை அறிவிக்கும் கொடியினை உடையவனை, வெண் கொடிகள் சேர்ந்த உயர்ந்த வாயில்களை கொண்ட வீடுகளை உடைய கடம்பூர் தலத்தில் உறைபவனை, அனைத்து உயிர்களும் காதல் கொள்ளத்தக்க தலைவனும் ஆகிய பெருமானை. கடல் சூழ்ந்த சீர்காழி நகரினைச் சார்ந்தவனும் நல்லொழுக்கம் உடையவனும் ஞானசம்பந்தன், ஓதுபவருக்கு நன்மை அளிக்கும் வண்ணம் பெருமானைப் புகழ்ந்து பாடிய பத்து பாடல்களும், சிறந்த சாதனமாக திகழ்ந்து, இந்த பாடல்களை பாடுவதில் தேர்ச்சி பெரும் அடியார்கள் பழியும் பாவமும் இல்லாதவர்களாக திகழ்வார்கள்.
முடிவுரை:
பதிகத்தின் முதல் மூன்று பாடலில் பெருமானைத் தொழுது வணங்கினால் மிகவும் எளிதாக வீடுபேறு அடையலாம் என்றும், இரண்டாவது பாடலில்பெருமானை இரவும் பகலும் தொழுது வணங்கும் அடியார்கள் இம்மையில் இன்பம் பெறுவார்கள் என்றும், உணர்த்திய சம்பந்தர் மூன்றாவது பாடலில்பெருமானின் பொற்கழல்களை தொழுது வணங்கி உரிய பயன்களை அடையும் வண்ணம் நம்மை ஊக்குவிக்கின்றார். இவ்வாறு பெருமானைப் போற்றிப்பேணும் அடியார்கள் பெரியோர்கள் என்று நான்காவது பாடலில் உணர்த்தி, ஐந்தாவது ஆறாவது மற்றும் பத்தாவது பாடல்களில், பெருமானின் புகழினைபாடும் அடியார்கள் பழியும் பாவமும் இல்லாதவர்களாக திகழ்வார்கள் என்று கூறுகின்றார்; பதிகத்தின் ஏழாவது பாடலில் பெருமானைப் புகழ்ந்துவணங்குவதே வாழ்க்கையின் நோக்கம் என்று குறிப்பிடும் சம்பந்தர், எட்டாவது பாடலில் கடம்பூர் தலம் இருக்கும் திசை தொழும் அடியார்களின் தீயவினைகள் கெட்டுவிடும் என்று கூறுகின்றார். பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் பெருமானைப் புகழ்ந்து பாடும் அடியார்கள் வானுலகம் சென்றுஅடைவார்கள் என்று கூறுகின்றார்; பெருமானின் திருவடிகளை வணங்குவதாலும் அவனது புகழினை உணர்த்தும் பாடல்களை பாடுவதாலும் நாம்அடையவிருக்கும் பயன்களை, திருஞானசம்பந்தரின் பதிகம் மூலம் உணர்ந்து கொண்ட நாம், கடம்பூர் பெருமானை குறிப்பிடும் பதிகத்தினை பாடி இம்மைமற்றும் மறுமையிலும் நல்ல பலன்களை பெறுவோமாக.