பதிக எண்: 1.72 திருக்குடந்தைக் காரோணம் தக்கேசி
பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக வலஞ்சுழி சென்ற திருஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு பழையாறை, சத்திமுற்றம், பட்டீச்சரம்,இரும்பூளை முதலான தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், பின்னர் அரதைப் பெரும்பாழி தலம் செல்கின்றார். அதன் பின்னர் திருச்சேறை, திருநாலூர்,குடவாயில், நறையூர் சித்தீச்சரம், தென்திருப்புத்தூர் (அரிசிற்கரைப் புத்தூர்) மற்றும் சிவபுரம் ஆகிய தலங்கள் சென்றதாக பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். சிவபுர நகரத்தில் சில நாட்கள் தங்கி பதிகங்கள் பல பாடிய திருஞானசம்பந்தர், பின்னர் உலகத்தவர் கொண்டாடும் குடமூக்கு தலம் சென்றதாக சேக்கிழார் கூறுகின்றார். இந்த தலத்தில் வாழ்ந்து வந்த மறையோர்கள், திருஞானசம்பந்தர் தங்கள் நகரத்திற்கு வருவதை அறிந்து, ஒரு மன்னரை வரவேற்பதை போன்று, மங்கல வாத்தியங்களின் பின்னணியில் நான்மறைகளும் ஓதி ஞானசம்பந்தரை வரவேற்று, அவரை பண்டைய நாளில் குடமூக்கு என்று அழைக்கப்பட்ட திருக்கோயிலுக்கு (இந்நாளில் கும்பேசர் திருக்கோயில் என்று அழைக்கப் படுகின்றது) அழைத்துச் சென்றனர். ஆங்கே பெருமானைக் கண்ட திருஞானசம்பந்தர், உள்ளம் மகிழ்ந்து மனம் உருகி அரவிரி கோடல் நீடு என்று தொடங்கும் பதிகம் பாடினார். இந்த குடந்தை தலத்தினில் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்கள் மூன்று உள்ளன. குடந்தைக் கீழ்க்கோட்டம் மற்றும் குடந்தைக் காரோணம் என்பன மற்ற இரண்டு தேவாரத் திருத்தலங்கள். இந்த இரண்டு தலங்களுக்கும் திருஞானசம்பந்தர் சென்றார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. எனினும் குடந்தைக் கீழ்க்கோட்டம் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய திருத்தாண்டகப் பாடல் மட்டும் நமக்கு கிடைத்துள்ளது. குடந்தைக் காரோணத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகம் ஒன்று மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. இந்த திருக்கோயிலுக்கு திருஞானசம்பந்தர் சென்றதை குறிப்பிடும் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம். இந்த திருக்கோயில் மகாமகம் குளத்தின் கரையில் அமைந்துள்ளமையால், மாமகத்தன்று நீராட வரும் அடியார்கள் வழிபடும் சிறப்பு உடைய திருக்கோயிலாகத் திகழ்கின்றது.
வந்தணைந்து திருக்கீழ்க் கோட்டத்திருந்த வான்பொருளைச்
சிந்தை மகிழ்வுற வணங்கித் திருத்தொண்டருடன் செல்வார்
அந்தணர்கள் புடை சூழ்ந்து போற்றிசைப்ப அவரோடும்
கந்தமலர்ப் பொழில் சூழ்ந்த காரோணம் சென்றடைந்தார்
இந்த திருக்கோயில் காசி விசுவநாதர் திருக்கோயில் என்றும் சோமேசம் என்றும் காரோணம் என்றும் அழைக்கப்படுகின்றது. கும்பகோணம் மகாமகக் குளத்தின் வடக்கு கரையில் உள்ள இந்த கோயில். காயா ரோகணம் என்று அழைக்கப்பட்ட திருக்கோயில் ஆகும். ஆனால் இந்த பெயர் நாளடைவில் காரோணம் என்று மருவி விட்டது. காயம் என்றால் உடல் என்று பொருள். ஆரோஹணம் என்றால் தழுவிக் கொள்ளுதல் என்றும் தழுவிக் கொண்டோரின் உடலில் ஒரு அம்சமாக விளங்குதல் என்றும் பொருள். தமிழ் நாட்டினில் புகழ் பெற்ற காயா ரோகணம் திருக்கோயில்கள் காஞ்சிபுரம், கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று தலங்களில் உள்ளன, காஞ்சியில் உள்ள காரோணம் எந்த தேவாரப் பதிகத்திலும் இடம்பெறவில்லை. குடந்தையில் உள்ள இந்த கோயில் சம்பந்தர் அருளிய பதிகத்தில் இடம் பெற்றுள்ளது. நாகையில் உள்ள கோயில் மீது மூவர் பெருமானார்கள் பாடிய பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன. நாகைக் காரோணம் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இரண்டு பதிகங்களும் அப்பர் பிரான் அருளிய நான்கு பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் நமக்கு கிடைத்துள்ளன. திருமுறை பாடல்களில் இடம் பெற்றுள்ள இந்த இரண்டு தலங்களில், குடந்தை தலத்தில் உள்ள இறைவன் காரோணர் என்று சம்பந்தரால் அழைக்கப்படுகிறார். நாகை தலத்தில் உள்ள இறைவன் காரோணர் என்று அப்பர் பிரானால் அழைக்கப்படுகிறார்.குடந்தைக் காரோணத்தில் சிவபெருமான் இராமபிரானைத் தழுவிக் கொண்டார் என்றும் நாகையில் புண்டரீக முனிவரைத் தழுவிக் கொண்டார் என்று தல புராணங்கள் உணர்த்துகின்றன. பிரளய காலத்தின் முடிவினில் திருமாலும் பிரமனும், ஒருங்கே இறந்துவிடும் நேரத்தில் அவர்களது உயிர்கள் சிவபெருமானின் உடலில் ஒடுங்குவதால், காயாரோகணம் என்று அழைக்கப்படும் திருக்கோயில், காஞ்சி நகரத்தில் உள்ளது. காஞ்சி புராணத்தில் காயாரோகணப் படலம் என்றே ஒரு அத்தியாயம் உள்ளது. இந்த படலத்தின் பாடலில் இருவரும் ஒருங்கே இறவரும் காலை எந்தையே ஒடுக்கி ஆங்கவர் தம் உருவம் மீதேற்றிக் கோடலால் காயாரோகணப் பெயர் அதற்கு உறுமால், என்று தலத்தின் பெயர்க் காரணத்தை விளக்குகின்றது. இந்த தகவல், ரா. பி.சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய தமிழகம் ஊரும் பேரும் என்ற நூலில் காணப்படுகின்றது. இந்த தலம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ளது. இலக்குமி தேவி வழிபாட்டு, திருமாலைத் தனது கணவனாக பெறுகின்ற பாக்கியத்தைப் பெற்றார். மற்றும் தேவகுரு பிரஹஸ்பதி இயமன் ஆகியோர் வழிபாட்டு பலன் அடைந்த தலம்.
இறைவனின் திருநாமம் காயாரோஹணர், விஸ்வநாதர், சோமேசர், சிக்கேசர், இறைவியின் திருநாமம் தேனார் மொழியாள், விசாலாக்ஷி; சோமசுந்தரி;இராம பிரான், இலக்குவன், சந்திரன், நவநதிகள், தேவகுரு ப்ரஹச்பதி ஆகியோர் வழிபட்ட தலம். சந்திரன் செய்த வழிபாட்டினை குறிக்கும் வகையில் கோயிலின் திருக்குளம் சந்திர தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. ஒன்பது நதிகளும் கன்னியர் வடிவத்தில் இந்த தலத்து இறைவனை வழிபாடு செய்ததாக நம்பப் படுகின்றது. நுழைவாயிலுக்கு எதிரே காவிரி நதியின் சிலையும், எட்டு நதிகளின் சிலைகள் காவிரி நதியின் சிலைக்கு இரு பக்கத்திலும் இருப்பதை காணலாம். ஒன்பது நதிகளும் காசியில் உள்ள விஸ்வநாத பெருமானை வழிபட்டு தங்களுடன் குடந்தை வருமாறு வேண்டவே, காசி விஸ்வநாதர் இந்த தலத்தில் குளத்தின் கரையில் எழுந்து அருளியதாக கூறுவர்.
ஒன்பது புண்ணிய நதிகளும், மக்கள் நதிகளில் நீராடி தங்களது பாவத்தினை போக்கிக் கொள்வதால், அந்த பாவங்கள் நதிகளை அடைந்து விடுகின்றன என்றும், இவ்வாறு நாளுக்கு நாள் பாவங்கள் சேர்ந்து கொண்டே வருவதால் தங்களது தெய்வத் தன்மை குறைந்து வருகின்றது என்பதால் சிவபிரானை வணங்கி இந்த பாவங்களை போக்கிக் கொள்ள வழி வேண்டினர். சிவபிரானும் அவர்களை காவிரிக் கரையில் இருக்கும் இந்த மகாமக குளத்திற்கு குரு பகவான் சிம்ம ராசியில் இருக்கும் போது வர சொல்கிறார். அவ்வாறு அந்த ஒன்பது நதிகளும் வந்த நாள் மாசித் திங்கள் மக நட்சத்திர நாள் ஆகும். அன்று அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவபிரானை வேண்டி தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டனர். அதனால் ஒவ்வொரு மகா மகம் நாளிலும் இந்த ஒன்பது நதிகள் குளத்தில் கலந்து இருப்பதாக நம்பப்படுகின்றது. அதனால் அன்று இந்த குளத்தினில் குளிப்பது ஒன்பது நதிகளிலும் குளிப்பதற்கு சமமாக கருதப்படுகின்றது. குளத்தின் நடுவில் ஒன்பது கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளில் இந்த ஒன்பது நதிகளும் மகாமக தினத்தன்று எழுவதாக நம்பிக்கை.பிரளய காலத்தில் மிதந்து வந்த கலசம் சிவபிரானால் அம்பு எய்தி உடைக்கப்பட்ட பின்னர் அந்த கலசத்தில் இருந்த அமுதம் வழிந்து இந்த குளத்திலும் பரவியது என்பர். மாசி மகம் மற்றும் ஆடிப் பூரம் விழாவின் போது குடந்தையில் உள்ள அனைத்து சிவன் கோயில்களின் உத்சவ மூர்த்திகளும் இந்த கோயிலில் உள்ள மண்டபத்தில் வைக்கப்படும்.
இராமபிரானும் இலக்குவனும் சீதையை தேடிக்கொண்டு சென்றபோது இந்த தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டனர். இராவணனுடன் செய்யப்போகும் சண்டையில் தான் வெற்றி பெறுவதற்காக, தன்னுடைய உடலில் சிவனின் அம்சம் இருக்க வேண்டும் என்று இராமபிரான் விரும்பியதாகவும், அதற்காக சிவபிரானை வேண்டி பின்னர் சிவபிரானின் உடலை தழுவிக் கொள்ளவே சிவபிரானுக்கு காயா ரோஹணர் என்ற பெயர் வந்தது. இதனால் இராமபிரானின் உடலில் சிவாம்சம் பொருந்தியது என்றும் அந்த தன்மை இராவணனை வெற்றி கொள்ள உதவியது என்றும் கூறுவார்கள். மகாசங்கார காலத்தில் அனைத்து ஆன்மாக்களும் இறைவனின் உடலில் ஒடுங்குவதால் காயாரோஹணம் என்றும் காரோணம் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர். இந்த தலத்தில் அம்பிகை இறைவனின் திருமேனியை தழுவிய காரணத்தால் காயாரோஹணம் என்றும் காரோணம் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர். பிரளய காலத்தில் மிதந்து வந்த அமுத கலசத்தை கட்டியிருந்த உறி இந்த தலத்தில் விழுந்து லிங்கம் ஆனது. அந்த லிங்கம் தான் சோமேசம் என்று அழைக்கப்படுகின்றது. சிக்கம் என்றால் உறி என்று பொருள். அதனால் சிக்கேசம் என்றும் கூறுவர். சந்திரனுக்கு அருள் புரிந்தமையால் சோமேசர் என்ற பெயர் வந்தது.
ஐந்து நிலை இராஜகோபுரம் கொண்ட திருக்கோயில். மூலவர் மேற்கு திசையை நோக்கி இருக்கின்றார். குட்டையான சிறிய பாணம். சுயம்பு மூர்த்தம்.பாண மூர்த்தத்தில் கண்கள் காதுகள், மூக்கு போன்ற அவயவங்கள் இருப்பது போன்ற தோற்றத்தை நாம் காணலாம். கருவறை கோஷ்டத்தில் துர்க்கை,பிரமன், லிங்கோத்பவர், தென்முகக் கடவுள் ஆகியோரை நாம் காணலாம். கருவறையின் வலது புறத்தில் சண்டீசர் சன்னதி உள்ளது. அம்பிகை தெற்கு பார்த்த சன்னதி. வெளி மண்டபத்தில் நவகிரக சன்னதி உள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர்,கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. இதே மண்டபத்தின் வலது புறத்தில் நவகன்னியர் சன்னதி உள்ளது. வாயிலில் திருமுறை கோயில் உள்ளது. திருச்சுற்றின் பின்புறத்தில், பைரவர், சூரியன், சனீஸ்வரன், சந்திரன், பிராமி மகேஸ்வரி கௌமாரி வைஷ்ணவி வராகி இந்திராணி சாமுண்டி ஆகிய சப்த மாதாக்கள் சன்னதிகள் உள்ளன. ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தை ஒட்டிய பத்து நாட்களில் திருவிழா நடைபெறுகின்றது. தலமரமாகிய வேப்பமரத்தின் கீழே காணப்படும் சற்று உயரமான இலிங்கம், இராமபிரான் வழிபட்ட இலிங்கம் என்று கூறுவார்கள். பொதுவாக வேப்பமரத்தின் கீழே விநாயகர் சிலையையோ அம்பிகை உருவத்தையோ தான் நாம் பல திருக்கோயில்களில் காண்கின்றோம். இந்த நகரத்தில் உள்ள சோலையப்பன் தெருவில் மற்றொரு காசி விஸ்வநாதர் திருக்கோயிலும் உள்ளது.
பாடல் 1:
வாரார் கொங்கை மாதோர் பாகமாக வார்சடை
நீரார் கங்கை திங்கள் சூடி நெற்றி ஒற்றைக்கண்
கூரார் மழு ஒன்று ஏந்தி அந்தண் குழகன் குடமூக்கில்
காரார் கண்டத்து எண்தோள் எந்தை காரோணத்தாரே
விளக்கம்:
குழகன் குழகன் என்று குடமூக்கு தலத்தினில் குடிகொண்டிருக்கும் இறைவனை, குடமூக்குத் திருப்பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் குறிப்பிட்ட திருஞானசம்பந்தரின் மனதினை விட்டு அந்த அழகனின் நினைவுகள் அகலவில்லை போலும். குடமூக்கிலிருந்து அடுத்த தலமாகிய குடந்தைக் காரோணம் வந்த பின்னரும், அந்த அழகனின் இனிய நினைவுகள் நிறைந்து இருந்தமையால், குடமூக்கு குழகனை இந்த பதிகத்தின் முதல் பாடலிலும் குறிப்பிடுகின்றார் போலும். இந்த பாடலில் எண்தோள் எந்தை என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.
புறவம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பாடலில் (1.74.8) திருஞானசம்பந்தர், பெருமானை எண்தோளுடையான் என்று குறிப்பிடுகின்றார். வியனார்=அகலமுடைய; மிகுந்த ஆரவாரத்துடன் இராவணன் கயிலை மலையினை நோக்கிச் சென்றதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மேலும் பெருமான் சிறிதே ஊன்றினான் என்று கூறுகின்றார். இவ்வாறு சிறிதே ஊன்றிய போதே, அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் உலகெங்கும் கேட்கும் வண்ணம் உரத்த குரலில் அழுத இராவணன், இறைவன் தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது சற்று பலமாக ஊன்றியிருந்தால் அரக்கன் என்னவாகி இருப்பான் என்பதை நமது கற்பனைக்கு சம்பந்தர் விட்டு விடுகின்றார்.
விண் தான் அதிர வியனார் கயிலை வேரோடு எடுத்தான் தன்
திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய
புண் தான் ஒழிய அருள் செய்தான் புறவம் பதியாக
எண் தோளுடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.102.2) திருஞானசம்பந்தர், பெருமானின் கழுத்து கண்கள் மற்றும் தோள்களின் தன்மை எவ்வாறு ஏனையோரிடமிருந்து மாறுபட்டு உள்ளது என்று குறிப்பிடுகின்றார். கருமை நிறம் படர்ந்த கழுத்து, எட்டு தோள்கள், நெற்றியில் கண் ஆகியவை கொண்டு பெருமான் ஏனையோரிலிருந்து மாறுபட்டு நிற்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது. யானையின் மதநீரை மொய்க்கும் வண்டுகள் என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நால்வாய்=தொங்கும் தன்மை கொண்ட யானையின் வாய், துதிக்கை; யானையின் துதிக்கை போன்று நீண்டு தொங்கும் வாழைக்குலைகள் என்று சீர்காழியின் நிலவளம் இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமானின் திருநாமங்களை, மைசேர் கண்டன், எண்தோளன்,முக்கண்ணினன், மறையோன், தலைவன் என்று குறிப்பிட்டு போற்றும் அடியார்களை அல்லல்கள் அடையா என்று கூறுகின்றார்.
மொய் சேர் வண்டு உண் மும்மத நால்வாய் முரண் வேழக்
கை போல் வாழை காய் குலை ஈனும் கலிக்காழி
மை சேர் கண்டத்து எண்தோள் முக்கண் மறையோனே
ஐயா என்பார்க்கு அல்லல்களான அடையாவே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.130.10) திருஞானசம்பந்தர் பெருமானை எண்தோளர் முக்கண்ணர் என்று குறிப்பிடுகின்றார்.செண்டு=மலர்க் கொத்துகள்; குற்றுடுக்கை=உடலில் மார்பின் மேல் உடுத்தும் பாய். மிண்டு=குறும்பு; மிண்டாடு=குறும்புத் தனமாக பேசப்படும் சொற்கள்;மேவி=விரும்பி; குண்டாடு=இழிந்த செயல்களை ஈடுபாட்டுடன் செய்யும் குண்டர்கள்;
குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா
மிண்டாடு மிண்டர் உரை கேளாதே ஆளாமின் மேவித் தொண்டீர்
எண் தோளர் முக்கண்ணர் எம் ஈசர் இறைவர் இனிது அமரும் கோயில்
செண்டாடு புனல் பொன்னிச் செழுமணிகள் வந்து அலைக்கும் திருவையாறே
திருவையாறு தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (2.06.11) திருஞானசம்பந்தர் எண்தோள் முக்கண்ணினான் என்று குறிப்பிடுகின்றார்.உழல்வார்=திரிபவர்; ஐயம்=பிச்சை; தேர்ந்து=தேர்ந்தெடுத்து, ஆன்மாவின் பக்குவ நிலை கண்டறிந்து, அத்தகைய ஆன்மாக்கள் பிச்சையாக இடும் மலங்களை ஏற்றுக்கொண்டு அருள் புரிதல்; ஐயம் என்ற சொல்லுக்கு சந்தேகம் என்று பொருள் கொண்டு, நமது உள்ளத்தில் உள்ள தடுமாற்றம் சந்தேகம் ஆகியவற்றை தீர்த்து தெளிவான நிலை ஏற்பட அருள் புரிபவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஆல மரத்தின் நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை போக்கி, வேதத்தின் பொருளை தெளிவாக அறிந்து கொள்வதில் அவர்களுக்கு உதவிய பெருமான், நம்மைப் போன்ற உயிர்களின் மனதினிலும் சஞ்சலம் அற்ற தெளிவான நிலை ஏற்படுத்துகின்றான் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுவது, இறைவன் உயிர்கள் பால் கொண்டிருக்கும் அளவற்ற கருணையை உணர்த்துகின்றது.
கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையால்
மெய்யைப் போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய்யல
மைகொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே
புகலி (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பாடலில் (2.54.3) திருஞானசம்பந்தர் எண்தோளீர் என்று பெருமானை அழைத்து, புகலி தலத்தில் அமைந்துள்ள அழகான திருக்கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர் என்று கூறுகின்றார். அழி=மிகுதி;அடைவு=சார்வு, பெருமானின் சடையில் இடங்கொண்டு பெருமானைத் சார்ந்து இருந்த தன்மை; கறை=நஞ்சின் கருமை நிறத்துக் கறை;
அழிமல்கு பூம்புனலும் அரவும் சடை மேல் அடைவெய்த
மொழிமல்கு மாமறையீர் கறையார் கண்டத்து எண்தோளீர்
பொழில் மல்கு வண்டினங்கள் அறையும் கானல் பூம்புகலி
எழில் மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே
நல்லூர்ப் பெருமணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.125.7) திருஞானசம்பந்தர், பெருமானை எண்தோளன் என்று குறிப்பிடுகின்றார்.திருஞானசம்பந்தரின் திருமணம் நடைபெற்ற தலம்; திருமணத்திற்கு வந்திருந்த அனைவர்க்கும், உமையன்னை வெண்ணீறு அளித்ததாக கூறுவார்கள்.அதனால் தான் தலத்து அம்பிகை வெண்ணீற்றுமை நங்கை என்று அழைக்கப் படுகின்றாள் என்றும் கூறுவார்கள். இந்த பாடலில் இறைவன் போகத்தவனாகவும் அதே சமயத்தில் யோகத்தைப் புரிபவனாகவும் இருக்கும் நிலையும் உணர்த்தப் படுகின்றது. எப்போதும் உமை அன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்திருப்பதால் இறைவன் போகத்தனாக காட்சி தரும் நிலை இங்கே கூறப்பட்டுள்ளது. பந்தித்த=கச்சாக கட்டிய;நாகத்தன்=பாம்பினை உடையவன்.
மேகத்த கண்டன் எண்தோளன் வெண்ணீற்று உமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்த நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல
போகத்தான் யோகத்தையே புரிந்தானே
அங்கமாலை பதிகத்தின் பாடலில் (4.09.02), எட்டு தோள்களையும் வீசி நடனமாடுபவன் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபிரானின் நடனக் காட்சியைக் காணுமாறு கண்களை பணிக்கும் பாடல் இது. நஞ்சு உண்ட பின்னரும், இறவாமல் இருந்த காரணத்தால், பிறப்பு இறப்புகளைக் கடந்த இறைவன் சிவபெருமான் என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான் நம்மை, சிவபிரானது நடனக் கோலத்தை கண்டு களிக்குமாறு அறிவுறுத்துகின்றார். ஏதாவது ஒரு தொழிலினைச் செய்துகொண்டு நடனம் ஆடுவதே கடினம். ஆனால் சிவபெருமான் அல்லும் பகலும் இடைவிடாமல் நடனம் ஆடிக் கொண்டு இருந்தாலும், ஐந்து தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருக்கின்றார். அவர் செய்யும் ஐந்து தொழில்களையும் உணர்த்துவதே இந்த நடனக் கோலம். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளால் என்பதே அந்த ஐந்து தொழில்கள்.
கண்காள் காண்மின்களோ – கடல்
நஞ்சுண்ட கண்டன் தன்னை
எண்தோள் வீசி நின்றாடும் பிரான் தன்னைக்
கண்காள் காண்மின்களோ
பெருமான் ஐந்து முகங்களைக் கொண்டிருந்தாலும் நான்கு திசைகளை நோக்கிய வண்ணம் உள்ள முகங்களே தோள்களுடன் இணைந்திருக்கின்றன.எனவே தான் எண்தோள்களை உடையவனாக பெருமானை பல திருமுறைப் பாடல்கள் சித்தரிக்கின்றன. விடம் தீர்த்த பதிகத்தின் எட்டாவது (4.18.8)பாடலில் அப்பர் பிரான் எட்டு கொலாம் அவர் தோள் இணையாவன என்று கூறுகின்றார். இந்த பாடலில் இணையற்ற எட்டு குணங்களை உடைய பெருமானை, எட்டு மலர்களை விரும்புபவன் என்றும் எண்தோள்கள் உடையவன் என்றும் எட்டு திசைகளை ஆக்கியவன் என்றும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சிவபெருமானை வழிபடுவதற்கு சிறந்த மலர்களாக கருதப் படுபவை, புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, குவளை.பாதிரி, அலரி, மற்றும் செந்தாமரை ஆகிய எட்டு மலர்கள் ஆகும். கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு மற்றும் அறிவு ஆகிய எட்டு குணங்களைக் கொண்டவராக இருந்து (அக மலர்கள்) இறைவனை வழிபடுதல் சிறந்த வழிபாடாக கருதப்படுகின்றது.
எட்டு கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்
எட்டு கொலாம் அவர் சூடும் இன மலர்
எட்டு கொலாம் அவர் தோள் இணையாவன
எட்டு கொலாம் அவர் திசை ஆக்கினதாமே
திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.63.1) துளங்கும் எண்தோள் சுடர்மழுப் படையினான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஓதி என்று வாயினால் தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைத் தொழுததையும், மலர்கள் தூவி என்று கையினால் மலர்கள் எடுத்து இறைவன் மேல் தூவி வழிபட்டதையும். நினையுமா நினைவு என்று இறைவனை எப்போதும் நினைத்து இருக்கும் தன்மையையும் இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இவ்வாறு மனம், மொழி, மெய்களால் அப்பர் பிரான், அன்புடன் இறைவனை வழிபட்டமை இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது, நாமும் அவ்வாறு இறைவனைத் தொழவேண்டும் என்பதே இந்த பாடலின் மையக் கருத்தாகும். பெருமானே, முறையாக உன்னை வழிபடுவதைத் தவிர்த்து வேறு எந்த நினைவுகளும் தனக்கு இல்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். .
ஓதி மாமலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்தோள் சுடர்மழுப் படையினானே
ஆதியே அமரர் கோவே அணி அணாமலை உளானே
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே
நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.14.8) பெருமானை எண்தோள் கொண்டவர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.குலங்கள்=கூட்டங்கள்; உலம் கிளரும்=திரண்ட கல் போல் உயர்கின்ற, பாற்கடல் கடையப்பட்ட போது கயிறாக பயன்பட்ட வாசுகிப் பாம்பின் உருவத்திற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது. மேரு மலையினைச் சுற்றி வடமாகக் கட்டப்பட்ட கயிறு வலிமையுடன் இருந்தால் தானே பாற்கடலை, தொடர்ந்து கடையும் செயலைச் செய்யமுடியும். அனிலம்=காற்று; மிசை=மேல்; இந்த உலகத்தில் பல மலைகளையும் கடல்களையும் வைத்தவர் சிவபெருமான்; இரத்தினங்களை உடைய பாம்பினை தனது உடலில் வைத்தவர்; பிக்ஷாடனர், காபாலி, அர்த்தநாரி, தக்ஷிணாமூர்த்தி, பாசுபதர் போன்ற பல வேடங்களை கொண்டவர்;திரண்ட கல் போன்று வலிமை கொண்ட வாசுகிப் பாம்பின் உச்சியிலிருந்து வெளிப்பட்ட விடத்தை உண்டு, உலகினையும் அனைத்து உயிர்களையும் காத்து அருளியவர்; எட்டு தோள்களைக் கொண்டுள்ளவர்; நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை அமைத்தவர், நான் சத்திமுற்றத்தில் விடுத்த வேண்டுகோளை நினைவில் வைத்துக் கொண்டு, நலங்கள் பல அருளும் தந்து திருவடியை எனது தலை மேல் வைத்த சிவபெருமான் மிகவும் நல்லவர் ஆவார் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குருமணி சேர் அரவு வைத்தார் கோலம் வைத்தார்
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டருளி விடம் வைத்தார் எண்தோள் வைத்தார்
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இந்நாள்
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே
கருகாவூர் மீது அப்பர் பிரான் அருளிய குருகாம் வயிரமாம் என்று தொடங்கும் பதிகத்தின் (6.15) ஒன்பதாவது பாடலில், சிவபெருமான் எண்தோளான் என்று குறிப்பிடப்படுகின்றார். விட்டுருவம்=தனது உருவத்தை விட்டு நீங்கி; சூழல்=நிலை; பாணி=தாளம், பட்டுருவ தோல்=பட்டு போன்று மென்மையான தோல்;கீண்டான்=கிழித்தவன்; கட்டுருவம்=அழகான உருவம் கொண்ட மன்மதன்; கடியான்=கடிந்தவன், கோபித்தவன், கண்=வழிகாட்டி. பல வல்லமைகள் படைத்து இருந்தாலும். அடியார்களுக்கு மிகவும் எளியானாக, அவர்களுக்கு வழிகாட்டியாக சிவபெருமான் விளங்குகின்றான் என்று இங்கே அப்பர் பெருமான் கூறுகின்றார்.
விட்டுருவம் கிளர்கின்ற சோதியானாம் விண்ணவர்க்கும் அறியாத சூழலானாம்
பட்டுருவ மால் யானைத் தோல் கீண்டானாம் பலபலவும் பாணி பயின்றான் தானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம் என்னுச்சி மேலானாம் எம் பிரானாம்
கட்டுருவம் கடியானைக் காய்ந்தானாகும் கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
திருப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.76.2) அப்பர் பிரான், எண்தோளன் என்று பெருமானை அழைக்கின்றார். வார்=மார்புக் கச்சை;வாராரும்=கச்சை பொருந்திய; காராரும்=கருமை நிறம் பொருந்திய; கண்டன்=கழுத்தினை உடையவன்; கூரார்=கூர்மையான பகுதியை உடைய;கொழுந்து விட்டெரியும் தீச்சுடர் எப்போதும் முக்கோண வடிவத்தில், கூர்மையான பகுதி மேல் பாகத்தில் இருப்பதை காணலாம்.
வாராரும் முலைமங்கை பாகத்தான்காண் மாமறைகளாயவன் காண் மண்ணும் விண்ணும்
கூரார் தழலவனும் காற்றும் நீரும் குலவரையும் ஆயவன் காண் கொடு நஞ்சுண்ட
காராரும் கண்டன் காண் எண்டோளன் காண் கயிலை மலைப் பொருப்பன் காண் விருப்போடு என்றும்
தேராரும் நெடுவீதித் திருப்புத்தூரில் திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே
செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.84.1) எண்தோளினை வீசி நின்றாடும் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருந்தகை=பெருமையான தன்மை உடையவன்; பேணி=அன்பு பூண்டு; பூ=இதயத்தாமரை; மன்னி=நிலைபெற்று இருத்தல்;அருந்திறல்=அரிய திறமை. நினைத்து எழுவார் மனம்=தூக்கத்திலிருந்து எழும் போதும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் துயிலெழும் அடியார்கள். இந்த பாடலில் அரிய ஆற்றல் மிகுந்த கூத்தினை ஆடுபவன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எண்தோள் வீசி நடனமாடும் பெருமான், தனது உள்ளங்கை ஒன்றினில் தீப்பிழம்பை ஏந்தியுள்ளார். தோள்களை வீசி நடனமாடிய போதிலும், கையினில் இருக்கும் தீப்பிழம்பினை கீழே விழாமல் தாங்கி நிற்கவும்,இடைவிடாது நடனம் ஆடுவதற்கும் தனித் திறமை வேண்டும் அல்லவா. மேலும் ஐந்தொழிகளையும் தொடர்ந்து செய்தவாறே நடனம் ஆடுகின்றார் அல்லவா.அதனால் தான் அருந்திறல் நடம் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். பூமேல் எழுந்தருளி இருந்தானை என்பதற்கு நிலவுலகில் உள்ள பல்வேறு தலங்களில் எழுந்தருளி இருப்பவர் என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. பூ என்பதற்கு அடியார்களின் இதயக்கமலம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
பெருந்தகையை பெறற்கரிய மாணிக்கத்தைப் பேணிநினைந்து எழுவார்தம் மனத்தே மன்னி
இருந்த மணிவிளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண்தோள் வீசி
அருந்திறல் நடமாடும் அம்மான் தன்னை அங்கனகச் சுடர் குன்றை அன்று ஆலின் கீழ்த்
திருந்து மறைப் பொருள் நால்வர்க்கு அருள் செய்தானைச் செங்காட்டங்குடி அதனில் காண்டேன் நானே
கருப்பறியலூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (7.30.10) சுந்தரர், பெருமானை எண்தோளெம் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். குண்டாடும்=கீழ்மைத் தொழில் புரியும்; சிவபெருமானை குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லி, பெருமானின் புகழினை குறைப்பதற்கு சமணர்களும் புத்தர்களும் முயற்சி செய்தமை இங்கே குறிப்பிடப்படுகின்றது.
பண்டாழின் இசை முரலப் பன்னாளும் பாவித்துப் பாடியாடிக்
கண்டார் தம் கண் குளிரும் கலிக் கமுகம் பூஞ்சோலைக் கருப்பறியலூர்
குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம் கூறும் கொகுடிக் கோயில்
எண்தோளெம் பெருமானை நினைந்த போது அவர் நமக்கு இனியவரே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.38.7) சுந்தரர், பெருமானின் கருமை நிறத்து கறை படிந்த கழுத்தினையும் எட்டு தோள்களையும் குறிப்பிடுகின்றார். திருவதிகை அருகே உள்ள சித்தவடம் மடத்தில் ஒரு இரவுப் பொழுதினில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்த சுந்தரரின் அருகில் வந்து படுத்த ஒரு முதியவரின் கால் சுந்தரரின் தலை மற்றும் முகத்தின் மீது படுகின்றது. அதனால் உறக்கம் கலைந்த சுந்தரர், தன்னருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த முதியவரைக் கண்ட பின்னர், முதியவரின் உடல் தளர்ச்சியால் ஏற்பட்ட நிகழ்ச்சி என்று கருதி, தனது நிலையினை மாற்றி,முதியவரின் தலையின் அருகே தனது தலையும் இருக்கும் வண்ணம் படுக்கின்றார். ஆனால், சிறிது நேரம் கழித்து விழித்தெழுந்த முதியவர், தனது நிலையினை மாற்றிக் கொண்டு படுக்கவே மீண்டும் முதியவரின் கால் சுந்தரரின் முகத்தின் மீது படுகின்றது. இரண்டாவது முறையாக தனது உறக்கம் கலையவே, விழித்தெழுந்த சுந்தரர் முதியவரைப் பார்த்து கோபமும் இகழ்ச்சியும் கலந்து தோன்ற, யார் நீ என்று கேட்கின்றார். என்னைத் தெரியவில்லையா என்று கேட்டவாறு முதியவர் மறையவே, வந்தவர் பெருமான் தான் என்பதை சுந்தரர் உணர்கின்றார். பெருமானின் திருவடிகள் தனது தலை மீது பதியவேண்டும் என்று பலநாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த தான், தன்னருகே வந்து படுத்துக்கொண்ட பெருமானை அறியாமல் இருந்ததும் அல்லாமல் அவரை மிகவும் இகழ்வாக தான் நினைத்தது பெரிய தவறு என்பதை உணர்த்தும் முகமாக, பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இனியும் பெருமானை சிறிதும் இகழமாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். இந்த பாடலில், வினைக் கடலில் தடுமாறும் உயிர்களுக்கு அருள் புரிந்து வீடுபேறு அளிக்கும் வல்லமை உடையவர் சிவபெருமான் என்று சுந்தரர் கூறுகின்றார்.
வெய்தாய வினைக் கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள் புரிந்து வீடுபேறு ஆக்கம்
பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலும் கண்டத்து எண்தோள் எம் பெருமானைப் பெண்பாகம் ஒரு பால்
செய்தானைச் செக்கர்வான் ஒளியானைத் தீவாய் அரவாடு சடையானைத் திரிபுரங்கள் வேவ
எய்தானை எறிகெடில வடவீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போலியானே
எண்தோள்களையும், மூன்று கண்களையும் உடைய சிவபெருமான், தன்னை ஆட்கொண்டு தனது உடல், பொருள், ஆவி மூன்றினையும் தனதாக்கிக் கொண்டமையால், தனக்கு ஏதும் இடையூறு இனி இல்லை என்று கூறும் மணிவாசகர், தனக்கு நன்மை, தீமை, எது ஏற்பட்டாலும் தனக்கு அதனால் ஏதும் பாதிப்பு இல்லை என்றும் கூறுகின்றார்.
அன்றே என் தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்கு உண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே
பொழிப்புரை:
கச்சணிந்த மார்பங்களை உடைய மங்கை பார்வதி தேவியினைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்ட பெருமான், தனது நீண்ட சடையினில் நீர் நிறைந்த கங்கை நதியையும் ஒற்றைப் பிறைச் சந்திரனையும் உடையவராக, தனது நெற்றியில் ஒரு கண் உடையவராக, கூர்மை வாய்ந்த மழுப் படையினை ஏந்தியவராக, குளிர்ந்த குடமூக்கு தலத்தினில் குழகராக, அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவராக, காட்சி அளித்த எமது தந்தையாகிய பெருமான்,கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவராக, எட்டு தோள்கள் உடையவராக, காரோணத்தராக, குடந்தைக் காரோணம் தலத்தினில் காட்சி தருகின்றார்.
பாடல் 2:
முடியார் மன்னர் மடமான் விழியார் மூவுலகும் ஏத்தும்
படியார் பவள வாயார் பலரும் பரவிப் பணிந்து ஏத்தக்
கொடியார் விடையார் மாடவீதிக் குடந்தை குழகாரும்
கடியார் சோலைக் கலவ மயிலார் காரோணத்தாரே
விளக்கம்:
குடந்தைக் காரோணத்தில் உறையும் பெருமானை எந்தை என்று குறிப்பிட்டு தான் பணிவதை முதல் பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் பலரும் பெருமானைப் பணிந்து வணங்குதை உணர்த்துகின்றார். மன்னர்களும் மகளிரும் நிலவுலகம் வானுலகம் பாதாளம் ஆகிய மூன்று உலகத்தவர்களும் பெருமானை வணங்கும் தன்மையை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். படி=தன்மை; பவள வாயார் என்பதற்கு அரம்பையர்கள் என்றும் விளக்கம் சொல்லப் படுகின்றது.
பொழிப்புரை:
முடி சூடிய மன்னர்கள், மானினைப் போன்று மருண்டு காணப்படும் அழகிய கண்களை உடைய மகளிர், நிலவுலகம் வானுலகம் மற்றும் பாதாளம் ஆகிய மூன்று உலகங்களிலும் உள்ளவர்கள், பல வகையான தன்மை படைத்தவர்கள், செம்பவளம் போன்று அழகிய உதடுகள் கொண்ட அழகியர்கள், ஆகிய பலராலும் பணிந்து புகழப்படும் பெருமான், இடபக்கொடியை உடையவர் குடமூக்கு குழகர் உறைகின்ற குடந்தை நகரம் அழகிய மாட வீதிகளும் தோகைகளை விரித்து நடனமாடும் மயில்கள் திரியும் நறுமணம் வாய்ந்த சோலைகளும் உடைய நகரமாகும். இந்த தலத்தினில் குடந்தைக் காரோணம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் காரோணரும் உறைகின்றார்.
உ
திருச்சிற்றம்பலம்
வாரார் கொங்கை மாதோர்

பாடல் 3:
மலையார் மங்கை பங்கர் அங்கை அனலர் மடலாரும்
குலையார் தெங்கு குளிர் கொள் வாழை அழகார் குடமூக்கில்
முலையார் அணிபொன் முளை வெண் நகையார் மூவா மதியினர்
கலையார் மொழியார் காதல் செய்யும் காரோணத்தாரே
விளக்கம்:
மடல்=தென்னை ஓலைகள்; அங்கை=உள்ளங்கை என்றும் அழகிய கை என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டும் இங்கே பொருத்தமாக உள்ளன. மூவா மதி=முற்றாத சந்திரன், வளராத சந்திரன், பிறைச் சந்திரனைப் போன்று அழகாக வளைந்த நெற்றியினை உடைய மகளிர்; பலராலும் போற்றப்படும் பெருமான் என்று முந்திய பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த தலத்தின் அழகிய மகளிர் பெருமான் பால் காதல் கொண்டு, அவரை காதலிக்கும் தன்மையை உணர்த்துகின்றார். தலத்து மகளிர் ஆடல் பாடல் ஆகிய கலைகளில் தேர்ந்தவராக இருக்கும் தன்மையும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.
பொழிப்புரை:
இமயமலைச் சாரலில் வளர்ந்த மங்கையாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ள பெருமான், தனது அழகிய கையினில் தீப்பிழம்பை ஏந்திய வண்ணம் நடனமாடுபவராக உள்ளார். மட்டைகளும் குலைகளும் நிறைந்த தென்னை மரங்கள், மற்றும் குளிர்ந்த தன்மை உடைய வாழை மரங்களும் சூழ்ந்து அழகு செய்யும் குடந்தை தலத்தினில், பொன் ஆபரணங்கள் பூண்ட மார்பகங்களும் வெண்ணிற பற்களையும் வளைந்த இளம்பிறை போன்று அழகிய நெற்றியும் இனிய இசை சேர்ந்தது போன்று இனிய மொழிகளையும் உடைய மகளிர், ஆடல் பாடல் ஆகிய கலைகளில் தேர்ச்சி பெற்றவராக விளங்கும் மகளிர், காரோணம் தலத்தினில் உறையும் பெருமான் மீது மிகுந்த அன்பு கொண்டு அவரை காதலிப்பவராக விளங்குகின்றனர்.
பாடல் 4:
போதார் புனல்சேர் கந்தம் உந்திப் பொலியவ் வழகாரும்
தாதார் பொழில் சூழ்ந்து எழிலார் புறவில் அந்தண் குடமூக்கில்
மாதார் மங்கை பாகமாக மனைகள் பலி தேர்வார்
காதார் குழையர் காளகண்டர் காரோணத்தாரே
விளக்கம்:
இந்த பாடலில் பார்வதி தேவியைத் தன்னுடலில் ஒரு பாகமாக வைத்தவராக, மாதொருபாகனின் கோலத்துடன் பெருமான் பலியேற்கச் சென்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மாதொரு பாகனாக, என்றும் பிராட்டியை விட்டு பிரியாமல் இருக்கும் பெருமான், தான் பலியேற்கச் சென்றபோதும் பிராட்டியுடன் சென்றது இயற்கையே. மேலும் உயர்ந்த நோக்கத்துடன், உயிர்களுக்கு உதவும் எண்ணத்துடன் பலி ஏற்பது பெருமைக்கு உரிய செயல் தானே. எனவே அதற்காக வெட்கம் கொண்டு, தேவியை உடன் அழைத்துக் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை அல்லவா. பல திருமுறை பாடல்களில் இறைவன் தேவியுடன் பலியேற்கச் செல்வதாக கூறப்படுகின்றது. அத்தகைய பாடல்களில் சிலவற்றை நாம் இங்கே காண்போம். புகலி தலத்தின் மீது அருளிய பாடல் (1.30.4) ஒன்றினில் கயல்மீன் போன்று அகன்ற கண்களைக் கொண்ட தேவியுடன், எருதின் மீது ஏறி அமர்ந்தவராக பெருமான் தாருகவனத்து முனிவர்களின் இல்லங்களுக்கு பலி ஏற்கச் சென்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அயலார் என்ற சொல் தாருகவனத்து முனிவர்களை குறிப்பிடுகின்றது. கடை= மனைவாயில்; இயலால்=அழகோடு
கயலார் தடங்கண்ணியொடும் எருது ஏறி
அயலார் கடையில் பலி கொண்ட அழகன்
இயலால் உறையும் இடம் எண்திசையோர்க்கும்
புயலார் கடல் பூம்புகலி நகர் தானே
உமை அன்னையை மட்டும் அழைத்துச் செல்லாமல், கங்கை நங்கையையும் தனது சடை மேல் ஏற்றவனாக பெருமான் பலியேற்கச் சென்றார் என்று புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.43.2) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தேர்ந்து=தேர்ந்தெடுத்து; தலத்து இறைவனின் திருநாமம் வைத்தியநாதர். அந்த பெயரினுக்கு ஏற்ப உயிருடன் பிணைந்துள்ள மலமாகிய நோயினைத் தீர்த்து இன்பம் அளிப்பவன் பெருமான்.இந்த தன்மையை கருத்தினில் கொண்டு ஐயம் தேர்ந்தெடுத்து என்ற தொடரின் பொருளினை நாம் உணரவேண்டும். பெருமான் பிச்சை ஏற்பதன் நோக்கமே,தங்களது மலத்தினைக் கழித்துக் கொள்ள விரும்பும் உயிர்கள் தங்களது மலத்தினை பெருமானின் பிச்சை பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்பதாகும். அந்தணர்=அம்+தணர்; குளிர்ந்த நெஞ்சம் உடையவர்; உயிர்களின் பால் எல்லையற்ற கருணையும் அன்பினையும் வைத்துள்ள பெருமானின் நெஞ்சம் அவனது கருணை இரக்கம் அன்பு காரணமாக ஈரமாக உள்ளது என்பதை குறிப்பிடும் வண்ணம் பெருமானை அந்தணர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பக்குவம் அடைந்த உயிர்கள் தாமே, முக்தி நிலையினை அடைவதற்கு தகுதி படைத்தவர்கள். எனவே அத்தகைய உயிர்களை தேர்ந்தெடுக்கும் பெருமான், அவர்களை அணுகி, அவர்கள் தங்களது மலங்களை பிச்சையாக இடவேண்டும் என்று பலி கேட்கின்றார் என்று பொருள் கொள்ளவேண்டும். ஈடு=பெருமை. பண்டைய நாளில் போரிடும் வீரர்கள், தங்களது உயிர் நிலையினை அடுத்தவருக்கு சொல்லிவிட்டு போராடுவதை சிறப்பாக கருதினர் போலும். ஜடாயு தனது உயிர்நிலை தனது சிறகுகளில் உள்ளது என்று சொல்ல, அரக்கன் இராவணனோ, தனது உயிர்நிலை தனது தலையில் உள்ளது என்று சொல்லி போரிட்டதாக இராயணம் காவியம் உணர்த்துகின்றது. இதனால் தான், ஜடாயு மீண்டும் மீண்டும் அரக்கனின் தலையை தனது அலகால் கொத்தி போராடியது போலும். அரக்கனின் கிரீடங்கள் பேர்த்து எறியப்பட்டு கீழே விழ, பின்னர் அந்த இடத்திற்கு வந்த இராமரும் இலக்குவனும் அந்த கிரீடத்தை பார்க்கின்றனர். அரக்கன் தந்து உயிர்நிலை குறித்து சொன்னது பொய். ஜடாயு சொன்னது மெய். இந்த தகவல் தான் கீழ்க்கண்ட பாடலில் உணர்த்தப் படுகின்றது.
தையலாள் ஒரு பாகம் சடை மேலாள் அவளோடும்
ஐயம் தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையும் இடம்
மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்துப்
பொய் சொல்லாது உயிர் போனான் புள்ளிருக்குவேளூரே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.130.2), திருஞானசம்பந்தர் பெருமான், தேவியுடன் பலிக்கு சென்றதாக குறிப்பிடுகின்றார்.விடலேறு படம்=விடத்தை மேல் கொண்டுள்ள படம்; விடலம்=நஞ்சு; விடலம் என்ற சொல் விடல் என்று குறைந்தது. விடல் என்ற சொல்லுக்கு வலிமை என்று பொருள் கொண்டு மற்ற உயிர்களை கொல்லும் வல்லமை உடைய பாம்பு என்று சொல்வதும் பொருத்தமே. சுரி சங்கு=கூர்மையான வளைந்த மூக்குகளை உடைய சங்கு; அஞ்சொல்=அம்+சொல், அழகிய சொற்களை உடைய மகளிர்; இங்கே தாருகவனத்து மகளிரை குறிப்பிடுகின்றது.திடல்=மணல்மேடு; கங்குல்=இரவு; காவிரியின் மணல் திடலில் முத்துகள் காணப்படும் செல்வச் செழிப்பு மிகுந்த நகரம் ஐயாறு என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
விடலேறு படநாகம் அரைக்கு அசைத்து வெற்பரையன் பாவையோடும்
அடலேறு ஒன்று அது ஏறி அஞ்சொலீர் பலி என்னும் அடிகள் கோயில்
கடலேறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகித்
திடல் ஏறி சுரி சங்கம் செழுமுத்து அங்கு ஈன்று அலைக்கும் திருவையாறே.
ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.50.9) திருஞானசம்பந்தர், பார்வதி தேவி உடனாக இருக்கையில் பலி ஏற்பதற்கு மிகுந்த இச்சை கொண்டவராக பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். வெற்றிமை=வென்ற தன்மை; பிரமன் திருமால் ஆகிய இருவரும் நீண்ட நெருப்புப் பிழம்பாக நின்ற தனது அடியையும் முடியையும் காண்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை வென்று, அவர்கள் இருவரும் காண முடியாமல் இருந்த தன்மை;இச்சை= விருப்பம்; தயங்கு=வெளிப்பட்டு தெரியும் வண்ணம், விளங்குகின்ற; தயங்கு என்ற சொல்லினை தோல் என்ற சொல்லுடன் இணைத்து, அசைகின்ற தோல் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். அரை=இடுப்பு; ஆர்த்த=இறுகக் கட்டிய; ஐயம்=பிச்சை;
செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மாலடி தேட நீண்முடி
வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமை என்
தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு
ஐயம் ஏற்று உகந்தார் ஆமாத்தூர் அம்மானே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.75.2) திருஞானசம்பந்தர், மடவாளொடும் சென்று பலி ஏற்பதை விரும்பியவன் என்று குறிப்பிடுகின்றார். பரமேட்டி=தனக்கு மேலாக எவரும் இல்லாதவன்; மடவாள்=உமை அன்னை; கலி=வறுமை முதலிய துன்பங்கள்; நம்பன்=விருப்பனாக இருக்கும் தன்மை; நலிய=துன்பம் அடைந்து மனம் வருந்தும் வண்ணம்; பல துன்பங்களை அளித்து நமது மனதினை நலியச் செய்யும் வினைகளை தீர்க்கும் பரமன், நமது விருப்பத்திற்கு உகந்தவனாக இருப்பது இயற்கை தானே.
வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும்
பலி விரும்பியதொர் கையினான் பரமேட்டியான்
கலியை வென்ற மறையாளர் தம் கலிக் காழியுள்
நலிய வந்த வினை தீர்த்துகந்த எம் நம்பனே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.45.6) உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டுள்ள கோலத்துடன் பெருமான், பல ஊர்களுக்கும் சென்று பிச்சை ஏற்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆர்கணாக என்ற சொல் ஆர்கணா எனக் குறைந்துள்ளது. கொள் என்ற சொல் முதலாவது மற்றும் மூன்றாவது அடிகளில் கொண் என புணர்ச்சி விதியின் படி மாறியுள்ளது. தான் மற்ற தெய்வங்களை விலக்கி பெருமானை ஒருவனைத் தானே பற்றுக்கோடாகக் கொண்டுள்ளேன், அவ்வாறு இருக்கையில் பெருமான் இன்னும் தனக்கு அஞ்சேல் என்று சொல்லி ஆறுதல் கூறாதது ஏன் என்ற கேள்வியை திருஞானசம்பந்தர் திருவாரூர் தலத்து அடியார்களை நோக்கி கேள்வி கேட்கும் பாடல். இங்கே பிச்சை கொள் உத்தமன் என்று கூறுகின்றார். பலரும் தன்னைப் பழிப்பதையும் பொருட் படுத்தாமல், பக்குவம் அடைந்த உயிர்களுக்கு வீடுபேறு அளித்து உய்விக்கும் வண்ணம் தொடர்ந்து பிச்சை ஏற்கும் பெருமானை மிகவும் பொருத்தமாக உத்தமன் என்று அழைக்கின்றார்.
வார்கொண் மென் முலையாள் ஒரு பாகமா
ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்
சீர்கொண் மாடங்கள் சூழ் திருவாரூரான்
ஆர்கணா எனை அஞ்சல் எனாததே
வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.6) மாதொரு பாகனாக விளங்கும் தோற்றத்துடன், பிச்சை இடுவீராக என்று பல இல்லங்கள் சென்று பெருமான் பலியேற்கின்றார் என்று கூறுகின்றார். கருமான்=கரிய உருவம் கொண்ட விலங்கு, யானை; ஐயம்=பிச்சை; மட மங்கை=இளமை பொருந்திய உமையன்னை; வையம்=உலகத்தில்; விலை மாறிடினும்=பஞ்சத்தின் காரணமாக பண்டங்களின் விலை கூடிய போதிலும்; வெய்ய=கொடிய;தண் புலவர்=இனிய சொற்களை உடைய புலவர்கள்; கடுமையான சொற்களை நெருப்புக்கு ஒப்பிட்டு வெய்ய என்று கூறிய ஞானசம்பந்தர், இனிய மொழிகளை குளிர்ந்த சொற்கள் என்று குறிப்பிடும் நயத்தை நாம் உணரலாம். தலத்து மாந்தர்களின் கொடைத் தன்மை இந்த பாடலில் எடுத்துரைக்கப் படுகின்றது. பஞ்சத்தின் காரணமாக பொருட்களின் விலை கூடினும், பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படினும், இல்லையெனாது இனிய மொழிகள் கூறி புலவர்களுக்கு உதவி செய்யும் தன்மையர் என்று இந்த தலத்து மக்களை குறிப்பிடுகின்றார். பெருமான் திருநீற்றினைப் பூசிக் கொண்டுள்ள தன்மை, தான் ஒருவனே என்றும் அழியாத உண்மையான மெய்ப்பொருள் என்பதை உயிர்களுக்கு உணர்த்துகின்றது. கருமை நிறம் கொண்ட யானையின் தோலைக் கிழித்த செய்கை, உயிர்களை அறியாமையில் ஆழ்த்தும் அஞ்ஞானத்தை, அறியாமை எனப்படும் ஆணவ மலத்தினைக் கிழிக்கும் பெருமானின் ஆற்றலை உணர்த்துகின்றது. தேவி உடனிருக்கும் தன்மை, உயிர்களுக்கு அருள் வழங்கவும் ஞானம் அளிக்கவும் பெருமான் தயார் நிலையில் இருப்பதை உணர்த்துகின்றது. தேவி ஞான வடிவாகவும் அருள் வடிவாகவும் இருப்பவள் அல்லவா. இந்த வாய்ப்பினை உயிர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தானே ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று பெருமான் உணர்த்தும் பொருட்டு பலியேற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் அறிவுறுத்தும் பாடல் இது. இந்த செயல் உயிர்கள் பால் இறைவன் வைத்துள்ள கருணையை உணர்த்துகின்றது.
செய்ய திருமேனி மிசை வெண்பொடி அணிந்து கருமான் உரிவை போர்த்து
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடமாம்
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவிலாத வகையார்
வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே
வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பாடலில் (3.106.2) வாரணி கொங்கை நல்லாள் தன்னுடன் ஊரூராக சென்று பெருமான் பலி ஏற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, பெருமானைச் சென்றடைந்து, என்றும் அழியாத நிலையான ஆனந்தத்தில் திளைக்கவேண்டும் என்று உயிர்கள் கொண்டுள்ள விருப்பத்தினை விடவும், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள மலங்களை முற்றிலும் கழித்துக் கொண்டு தன்னை வந்தடைய வேண்டும் என்று பெருமான் கொண்டுள்ள விருப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. அதனால் தான், பக்குவமடைந்த உயிர்கள் தன்னைத் தேடிவரும் வரையில் காத்திராமல், தானே அந்த உயிர்கள் இருக்கும் இடம் சென்றடைந்து, அந்த உயிர்களின் மலங்களை, பிச்சையாக ஏற்றுக் கொள்ள,மிகுந்த துடிப்புடன் பெருமான் செயல்படுகின்றார். ஆனால் நம்மில் பெரும்பாலோர் இதனை உணர்வதில்லை.
காரணி வெள்ளை மதியம் சூடிக் கமழ்புன் சடை தன்மேல்
தாரணி கொன்றையும் தன்னெருக்கும் தழைய நுழைவித்து
வாரணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர்
ஊரணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே
பருப்பதம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.58.1) அப்பர் பிரான், உமை அன்னையுடன் ஒன்றியவராக சிவபெருமான் ஊர் பலி ஏற்கச் சென்றார் என்று கூறுகின்றார். கன்றினார்= பகைத்தவர்; நின்றதோர் உருவம்=பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்ற கோலம்; நீர்மை= வலிமை; நிறை=கற்பு;பிச்சைப் பெருமானாக, தங்களது இல்லத்தின் வாயின் முன்னே நின்று பலியேற்ற பெருமானின் அழகினைக் கண்ட தாருகவனத்து மாதர்களின் கற்பு நிலை குன்றியது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தங்களது மனைவியரின் கற்பு தாருகவனத்து முனிவர்களுக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. அந்த கற்புநிலை குன்றிய பின்னர் அவர்களது வலிமையையும் குறைந்தது என்று இங்கே கூறுகின்றார்.
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரியாகச் சீறி
நின்றதோர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு
ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும்
பன்றிப் பின் வேடராகிப் பருப்பதம் நோக்கினாரே
செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில் (5.36.4) அப்பர் பிரான் இருவராக, பலி ஏற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். கீறு=கிழித்த;அருவராதது=அருவருக்கத் தகாதது; இருவராய்=சக்தியும் சிவமுமாக இருவராய்; கடை=வீட்டு வாயில்; உழலுதல்=திரிதல். இந்த பாடலில் வெறுக்கத் தகாததோர் வெண்தலை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபிரானுடன் தொடர்பு கொண்ட காரணத்தினால், விலை மதிப்பில்லாத தன்மையை அந்த மண்டையோடு பெறுகின்றது. மேலும் உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை அந்த மண்டையோட்டில் இட்டு உய்வினை அடைவதற்கு உதவுதலால், நாம் அந்த மண்டையோட்டினை மற்ற மண்டையோடு போன்றது என்று கருதி வெறுக்கக் கூடாது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடல் உணர்த்தும் உட்கருத்து, பெருமான் மண்டையோட்டினை ஏந்தி திரியும் நோக்கத்தை உணர்ந்துகொண்டு, நமது மூன்று வகையான மலங்களையும் அவரது உண்கலத்தில் இட்டு நாம் உய்வினை அடையவேண்டும் என்பதே ஆகும்.
அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து
இருவராய் இடுவார் கடை தேடுவார்
தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார்
ஒருவர் தாம் பல பேருளர் காண்மினே
பருப்பதம் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.68.6) அப்பர் பிரான் கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடைதோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும் பெருமான் என குறிப்பிடுகின்றார். கழல் என்று பெருமான் அணியும் வீரக்கழலும் கைவளை என்று பிராட்டி அணியும் வளையல்களும் குறிப்பிடப்பட்டு, மாதொருபாகனாக பெருமான் பலிக்கு சென்ற கோலம் இங்கே உணர்த்தப் படுகின்றது. விகிர்தன்=மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன்:கடை=கடைவாயில், வாயிற்படி; இந்த பாடலில் ஆகாயத்தின் பண்பு ஒலி என்பதை குறிப்பிடும் வண்ணம் விண்ணொலி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆகாயத்தின் பண்பு ஒலி எனப்படும் குணம் ஒன்று தான். காற்று ஒலி மற்றும் ஊறு ஆகிய இரண்டு பண்புகளையும், தீ ஒலி, ஊறு மற்றும் உருவம் ஆகிய மூன்று பண்புகளையும், தண்ணீர் ஒலி ஊறு உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு பண்புகளையும் நிலம் ஒலி ஊறு உருவம் சுவை மற்றும் வாசனை ஆகிய ஐந்து பண்புகளையும் உடைத்ததாக விளங்குகின்றன.
புகழொளியை புரம் எரித்த புனிதன் தன்னைப் பொன்பொதிந்த மேனியானைப் புராணன் தன்னை
விழவொலியும் விண்ணொலியும் ஆனான் தன்னை வெண்காடு மேவிய விகிர்தன் தன்னைக்
கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக் கடைதோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும்
திகழொளியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.6.6) சுந்தரர், பிராட்டியுடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். கூறுபட்ட கொடியும் நீரும் என்று சுந்தரர் குறிப்பிடுவதால், மாதொரு பாகன் கோலத்துடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக உணர்த்துகின்றார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானை காட்டு யானை என்பதை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். மாறுபட்ட=பெருமானை எதிர்த்து வந்த தன்மை சொல்லப் படுகின்றது. தன்னை எதிர்த்து வந்த மதயானையைக் கொன்ற பின்னர் அந்த யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட போதிலும் தனது உடலுக்கு எந்த விதமான கேடும் அடையாதிருந்த ஆற்றலை உடைய பெருமானின் தன்மைக்கு, பிறர் இடுகின்ற பிச்சையை நாடி அவர்களது இல்லத்திற்கு செல்லுதல், பெருமானின் பெருமைக்கு தகுந்த செயல் அல்ல என்று கூறுகின்றார்.
மாறுபட்ட வனத்தகத்தின் மருவ வந்த வன்களிற்றைப்
பீறி இட்டமாகப் போர்த்தீர் பெய்பலிக்கு என்று இல்லம் தோறும்
கூறு பட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றி அடர ஏறி
வேறுபட்டுத் திரிவதென்னே வேலை சூழ் வெண்காடனீரே
கச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது அருளிய பாடலில் (7.41.2) சுந்தரர், பசியால் வருந்திய தனக்கு, ஒரு அந்தணர் வேடம் தரித்தவராக பல இல்லங்கள் சென்று உணவினை பிச்சையாக கேட்டு வாங்கி வந்து தனக்கு அளித்த பெருமானின் கருணைச் செயலை நினைவு கூர்ந்த சுந்தரர், பிச்சைப் பெருமானின் திருக்கோலத்தை இந்த பாடலில் வடித்து மகிழ்கின்றார். தனது கால்களில் அணிந்திருந்த கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் சென்ற பெருமான் என்று குறிப்பிட்டு, மாதொருபாகனாக பெருமான் பலியேற்கச் சென்ற தன்மை குறிப்பிடப் படுகின்றது.
கச்சேர் அரவு ஒன்று அரையில் அசைத்துக் கழலும் சிலம்பும் கலிக்கப் பலிக்கென்று
உச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனை ஆள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே
தனது மனைவியுடன் பலி ஏற்கச் சென்றதாக சிவபெருமானை குறிப்பிடும் ஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரானின் பாடல்கள் நமக்கு, சுந்தரரின் பைஞ்ஞீலி பதிகத்துப் பாடல் ஒன்றினை (7.36.5) நினைவூட்டுகின்றது. இந்த பதிகம் தாருகவனத்து மகளிர் கூற்றாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம் என்று கூறுவார்கள். பெருமானுக்கு பிச்சை இடுவதற்காக வந்த ஒரு பெண், பெருமானின் திருமேனியில் வெண்முத்து போன்று பிரகாசிக்கும் திருநீற்றினைக் கண்டு வியக்கின்றாள். பெருமானின் திருமேனியை உற்று நோக்கிய அவளுக்கு, பெருமானின் இடது பாகத்தில் நீண்ட கண்களோடும் காணப்படும் உமை அம்மை கண்ணில் தெரிகின்றாள். அவளுக்கு உடனே கோபம் வருகின்றது. என்ன துணிச்சல் இருந்தால், தனது உடலில் ஒரு பெண்ணினை வைத்திருக்கும் கோலத்தோடு பிச்சை கேட்க பெருமான் தனது இல்லத்திற்கு வருவார் என்று எண்ணுகின்றாள். அந்த கோபம் பாடலாக வெளிப்படுகின்றது. பெருமானே நாங்கள் உமக்கு பலியிட மாட்டோம், நீர் இந்த விடத்தை விட்டு அகன்று செல்லலாம் என்று கூறுகின்றாள். அவ்வாறு சொன்ன பின்னர் அவளுக்கு வேறு ஒரு சந்தேகம் தோன்றுகின்றது. தனது உடலில் ஒரு பெண்கொடியை கொண்டுள்ள பெருமான் சடையிலும் கங்கையை வைத்துள்ளாரோ என்பது தான் அந்த சந்தேகம். கங்கை ஆற்றினை உமது சடையில் சூடியவாறு வந்தீரோ, சொல்வீராக என்று பெருமானை வினவுகின்றாள். பெருமானின் அழகில் மயங்கிய தாருகவனத்து பெண்மணிகள், அவர் இரண்டு மனைவியருடன் இருப்பதால் கோபம் கொண்டு பிச்சை இட மாட்டோம் என்று சொன்னதாக,சுவையான கற்பனை செய்த பாடல்.
நீறு நும் திருமேனி நித்திலம் நீள் நெடுங் கண்ணினாளொடும்
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடகிலோம் பலி நடமினோ
பாறு வெண்தலை கையில் ஏந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்
ஆறு தாங்கிய சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே
நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.46.6) பெருமான் பலி ஏற்பதையும், நஞ்சு உண்டதையும் மிகவும் நயமாக இணைத்து,பெருமானின் எல்லையற்ற கருணையை குறிப்பிட்டு, தனது கோரிக்கையை சுந்தரர் பெருமானிடம் சமர்பிக்கும் பாங்கினை நாம் உணரலாம்.இலவ=இலவம்பூ; பஞ்சு போன்று மென்மையான இதழ்கள் உடைய அன்னை என்று கூறுகின்றார். கலவ மயில்=தோகை உடைய மயில்; பல இல்லங்கள் சென்று பிச்சை எடுத்த பெருமான், தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்கி நஞ்சினையும் உட்கொண்டார் என்று கூறுகின்றார். தன்னிடும் முறையிடும் அடியார்களின் வேண்டுகோளைக் கேட்ட பின்னர், அவர்களுக்கு உதவி செய்யாமல் இருக்க இயலாத பெருமான், தனக்கு பட்டாடைகளும் வாசனைப் பொருட்களும் தாரமால் இருப்பது தவறன்றோ என்று சுந்தரர் முறையிடும் பாடல். எச்சும் போது= உச்சி வேளை, நண்பகல்; பிராட்டியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு எருது ஏறியவராக வேத கீதங்களைப் பாடிக் கொண்டு பலரும் இடுகின்ற பிச்சையை ஏற்பதற்காக பெருமான் உச்சிப் போதினில் பல இல்லங்கள் சென்றார் என்று இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார்.
இலவ இதழ் உமையோடு எருது ஏறிப் பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சும் போது
பல அகம் புக்கு உழிதர்வீர் பத்தோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச் செய்தது உமக்கு இருக்கொண்ணாது இடவே
கலவ மயில் இயலவர்கள் நடமாடும் செல்வக் கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.77.7) மலை மங்கையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்ட தோற்றத்துடன் உலகத்தின் பல இடங்களிலும் திரிந்து பெருமான் பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். ஒருபால்=ஒரு பாகத்தில்; சிலை=கல், இங்கே மேருமலை;எயில்=கோட்டை; பறக்கும் மூன்று கோட்டைகள்; தீர்த்தன்=உயிர்களின் பாவங்களை நீக்கி புனிதமாக்குபவன்;
மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்
சிலைக் கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய் தீர்த்தன் நீ
மலைக் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு
அழைக்கும் திரைக் காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகேளோ
கூடலையாற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.85.3) சுந்தரர், ஊர்தொறும் சென்று தான் வைத்திருந்த பிரம கபாலத்தில் பலி இடுவீர்களாக என்று கேட்ட பெருமான், தன்னுடன் பார்வதி தேவியையும் அழைத்துக் கொண்டு மழுப்படை ஏந்தியவராக சென்றார் என்று கூறுகின்றார்.ஆர்வன்=பேரன்பு உடையவன்; திருமுதுகுன்றம் செல்வதற்கு விருப்பம் கொண்டவராக, முதுகுன்றம் செல்வதற்கான வழி யாது என்று சுந்தரர், தனக்கு எதிர்ப்பட்ட ஒரு முதியவரிடம் வினவ, அந்த முதியவரோ தானும் அந்த வழியில் செல்வதாக உணர்த்தி, வேண்டுமென்றே கூடலையாற்றூர் அழைத்து வந்ததை குறிப்பிட்டு, அவ்வாறு தன்னுடன் வந்த அந்தணர் பெருமான் தான் என்பதை உணராமல் இருந்த பேதையேன் என்று தன்னை சுந்தரர் குறிப்பிடுகின்றார்.எனவே தான், தன்னுடன் நடந்து வந்த பெருமானின் செயலை அதிசயம் என்று இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் சுந்தரர் கூறுகின்றார். சுந்தரர் தனது வாழ்க்கையில், ஐந்து வேறு வேறு தருணங்களில் பெருமான் தனது முன்னே தோன்றியதை, முதலில் புரிந்து கொள்ளாமல் இருந்தார் என்பதை பெரியபுராணம் நமக்கு உணர்த்துகின்றது. முதியவராக வந்து அடிமை ஓலையை காட்டி நடக்கவிருந்த திருமணத்தை தடுத்தது, திருவதிகை சித்தவடம் மடத்தில் உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தின் மீது தனது காலை படுமாறு வைத்தது, குருகாவூர் வெள்ளடை செல்லும் வழியில் பந்தரின் கீழே அமர்ந்து தயிர் சாதமும் குளிர்ந்த நீரும் தந்து உபசரித்தது, கச்சூர் தலத்தினில் அருகில் இருந்த வீடுகளில் பிச்சை ஏற்று அந்த உணவினை சுந்தரருக்கு அளித்தது ஆகியவை மற்ற நான்கு நிகழ்ச்சிகள்;
ஊர்தொறும் வெண்டலை கொண்டு உண்பலி இடும் என்று
வார்தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே
கூர்நுனை மழுவேந்திக் கூடலையாற்றூரில்
ஆர்வன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே
மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலைக்கும், பலிக்கு செல்லும் போதும் பிராட்டியைத் தன்னுடன் பெருமான் அழைத்துச் செல்வதற்கும் ஒரு காரணத்தை கற்பனை செய்து ஞானசம்பந்தர் நகைச்சுவை ததும்ப உணர்த்தும் பாடலை நாம் இறுதியாக காண்போம். இந்த பாடல் தெளிச்சேரி தலத்தின் மீது அருளிய பாடல் (2.3.4). கச்சு அணிந்த மார்பகங்களைக் கொண்ட உமை அன்னையை பாதுகாப்பாக வைப்பதற்கு இடம் ஏதும் இல்லாத காரணத்தால்,பெருமானே நீர் பிராட்டியையும் உமது உடலில் ஏற்றுக்கொண்டு பலிக்கு செல்கின்றீரோ என்று நகைச்சுவை ததும்ப மாதொரு பாகனின் திருக்கோலத்தை உணர்த்தும் பாடல் தெளிச்சேரி தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடல் (2.3.4). ஏர் என்றால் எழுச்சி என்று பொருள்; அழகு என்ற பொருளும் பொருந்தும். பெருமான் பலிக்கு செல்வது, பக்குவபட்ட ஆன்மாக்கள் தங்களது மலங்களை, பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் என்பதால், அத்தகைய ஆன்மாக்கள் எழுச்சி பெற்று நிலையான ஆனந்தத்தில் ஆழ்த்தப்படுவதால்,ஏருலாம் பலி என்று கூறினார் போலும். ஏகிட=செல்ல;
காருலாம் கடல் இப்பி கண் முத்தம் கரைப்பெயும்
தேருலா நெடு வீதியதார் தெளிச்செரியீர்
ஏருலாம் பலிக்கு ஏகிட வைப்பிடம் இன்றியே
வாருலா முலையாளை ஒர் பாகத்து வைத்ததே
போது=மலர்கள்; புனல் சேர் போது என்று குறிப்பிடுவதால், நீரில் மலரும் தாமரை முதலிய மலர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். கந்தம்=நறுமணம்;தாது=மகரந்தப் பொடி; புறவு=காடு; காலம்=விடம்; காளகண்டர்=விடத்தை தேக்கியதால் கருமை நிறத்தில் படர்ந்த கரையினை கழுத்தில் உடையவன்;
பொழிப்புரை:
நீர்நிலைகளில் தோன்றும் தாமரை முதலான பூக்களின் நறுமணம் மேலோங்கி எங்கும் பரவ, அழகு மிகுந்த மகரந்த பொடிகள் நிறைந்த சோலைகளாலும் அழகிய காடுகளாலும் சூழப்பட்டதும் குளிர்ச்சி மிகுந்ததும் ஆகிய குடந்தை நகரத்தில் உள்ள காரோணம் தலத்தில் உறைகின்ற இறைவன், பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனாக பல இல்லங்கள் சென்று பலி ஏற்கின்றார். அவர் தனது காதினில் குழை ஆபரணத்தை அணிந்தவராக, தனது கழுத்தினில் விடத்தின் கறையாக கருமை நிறம் படர்ந்தவராக காணப்படுகின்றார்.
பாடல் 5:
பூவார் பொய்கை அலர் தாமரை செங்கழுநீர் புறவெல்லாம்
தேவார் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்றக்
கூவார் குயில்கள் ஆலும் மயில்கள் இன்சொற் கிளிப்பிள்ளை
காவார் பொழில் சூழ்ந்து அழகார் குடந்தை காரோணத்தாரே
விளக்கம்:
தேவார்=தெய்வத் தன்மை பொருந்திய; வேதங்களை ஓதுவதாலும், வேதங்களில் சொல்லப் பட்டுள்ள வாழ்க்கை நெறி முறைகளை கடைப்பிடிப்பதாலும்,அந்தணர்களை தெய்வத்தன்மை வாய்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார் போலும். தேவர் சிந்தை என்ற தொடருக்கு, தெய்வங்களைப் பற்றிய சிந்தனை கொண்ட அந்தணர்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. புறவு= முல்லை; பூவார்=அழகிய: சீர்=சிறப்பு;
பொழிப்புரை:
அழகிய பொய்கைகளில் பூத்த தாமரை செங்கழுநீர் மலர்கள் மற்றும் முல்லை மலர்கள் கொண்டு, இந்த தலத்தில் வாழ்பவர்களும் தெய்வ சிந்தனை உடையவர்களும் ஆகிய அந்தணர்கள் சிறப்பான முறையில் பெருமானின் திருவடிகளை போற்றுகின்றனர். கூவுகின்ற குயில்கள், ஆடுகின்ற மயில்கள்,இனிய சொற்களை பேசும் கிளிகள் ஆகிய பறவைகள் நிறைந்ததும், பணியாளர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதும் ஆகிய சோலைகள் சூழ்ந்த அழகிய குடந்தைக் காரோணம் தலத்தினில், மேலே குறிப்பிட்ட வண்ணம் அந்தணர்களால் போற்றப்படும் திருவடிகளை உடைய பெருமான் உறைகின்றார்.
பாடல் 6:
மூப்பூர் நலிய நெதியார் விதியாய் முன்னே அனல் வாளி
கோப்பார் பார்த்தன் நிலை கண்டருளும் குழகர் குடமூக்கில்
தீர்ப்பார் உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமைக்
காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே
விளக்கம்:
தனது அடியார்களை காலன் அடையாத வண்ணம் சிவபெருமான் காப்பார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இதன் மூலம்,சிவனடியார்களை மரணம் நெருங்காது என்று தவறாக பொருள் கொள்ளலாகாது. பிறப்பெடுத்த எவரும் இறப்பிலிருந்து தப்ப முடியாது. உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர் என்ன நடைபெறும் என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு உயிரும், அவரது உடலிலிருந்து பிரிக்கப் பட்ட பின்னர், அவரது உயிரினைத் தாங்கிய சூக்கும உடல் நரகத்திற்கும் சொர்கத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு, அந்த பிறவியில் சேர்த்துள்ள வினைகளின் ஒரு பகுதியின் பயனை நுகர நேர்கின்றது. அவ்வாறு நரகத்தில் கழிக்க வேண்டிய வினைகளின் தன்மைக்கு ஏற்ப இயமன், தனது பணியாட்கள் மூலம் அந்த தண்டனைகளை செயல்படுத்துகின்றான். இயமனையோ அவனது தூதர்களையோ, அடியார்கள் பால் நெருங்க இயலாத வண்ணம் பெருமான் காப்பதால்,பெருமானின் அடியார்களுக்கு மரணம் ஏற்படாது என்று தவறாக பொருள் கொள்ளக் கூடாது. அவர்களது உயிர் உடலிலிருந்து பிரியும் தருணத்தில்,பெருமானின் கணங்கள், அந்த அடியார்களை அழைத்துச் சென்று பெருமானின் திருவடிக்கீழ் சேர்ப்பார்கள். அத்தகைய அடியார்கள், இயமனால் அழைத்து செல்லப்பட்டு நரகம் சொர்க்கம் ஆகியவற்றில் ஆழ்ந்து துன்பம் அடையார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த தன்மையே இந்த பாடலில் காலன் அடையா வண்ணம் என்று குறிப்பிடப் படுகின்றது. அதாவது நரக வேதனைகளிலிருந்து தப்பிக்கலாம் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட்கொள்வான் என்று கூறுகின்றார். அந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலை நாம் இங்கே காண்போம். இடிபோல் முழங்கி சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனை உருண்டு ஓட உதைத்த இறைவன், தனது அடியார்களை இயமனின் தூதுவர்கள் செக்கில் இட்டு தண்டிக்கும் போது, அந்த தண்டனையைத் தடுத்து ஆட்கொள்பவன் இறைவன் என்று இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார். இவ்வாறு அருள் புரியும் தில்லைச் சிற்றம்பலத்து இறைவனை நாம் அடைந்த பின்னர், இந்த உலகத்தில் நாம் பெற வேண்டியது ஏதும் உள்ளதோ, ஏதுமில்லை என்று உணர்த்தும் சுந்தரரின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
கருமானின் உரியாடைச் செஞ்சடை மேல் வெண்மதியக் கண்ணியானை
உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்து உகந்து உலவா இன்பம்
தருவானைத் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட்கொள்வான்
பெருமானார் புலியூர் சிற்றம்பலத்து எம் பெருமானைப் பெற்றாம் அன்றே
திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.7.9) சிவபெருமானின் திருவடிகளை அடைந்த அடியார்களை காலன் நெருங்கமாட்டான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அத்தகைய அடியார்களின் அடியார்களைக் கண்டு கூற்றுவன் அகன்று சென்று விடுவான் என்றும், பக்குவமடைந்த உயிர்களுக்கு புகலிடமாகிய சிவகதி அவர்களை சென்றடையும் என்றும் கூறுகின்றார். அடியார்களின் அடியார்களுக்கே மேலே குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும் என்றால், அடியார்களுக்கும் அத்தகைய பலன் கிடைக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ. செடிகொள் நோய்=துன்பம் தரும் நோய்கள்;திறம்பார்=தீய வினைகளின் தாக்கத்தால் ஏற்படும் துன்பங்களால் மனம் மாறுபடாமல் தொடர்ந்து இறைவனையே துதிப்பார்கள்; செறும் தீவினை=வருத்தும் தீய வினைகள்;
செடிகொள் நோயின அடையார் திறம்பார் செறு தீவினை
கடிய கூற்றமும் கண்டகலும் புகல் தான் வரும்
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திருவாஞ்சியத்து
அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.48.5) திருஞானசம்பந்தர், நீலகண்டரின் (ஆல மிடற்றான்) அடியார்கள் என்றால் இயமனது தூதர்களை, அத்தகைய அடியார்களைத் தொடர்வதற்கு அச்சம் கொள்வார்கள் என்று கூறுகின்றார். வேலை=கடல்; கானல்=கடற்கரை சோலை; .தண்=குளிர்ந்த; மலி=நிறைந்த; விள்ளுதல்=உடைத்தல்; அடர்த்தல்= கொல்லுதல், உயிரைக் கவர்தல்; வெம் காலன்=கொடிய காலன்; காலன் உயிரினை பறிக்க வரும்போது, பாலன் என்றோ இளையவன் என்றோ நோய்வாய்ப்பட்டவன் என்றோ பாராது இரக்கம் ஏதுமின்றி, தனது கடமையை செய்வதால் கொடிய காலன் என்று திருஞானசம்பந்தர் அவனை அழைக்கின்றார். பெருமானின் அடியார்களை நீலகண்டரின் அடியார்கள் என்று சம்பந்தர் கூறுவதில் ஒரு நயம் இருப்பதை நாம் உணரலாம். பிரமன் திருமால் உட்பட தேவர்கள் அனைவரையும் அச்சுறுத்தி பல திசைகளிலும் நிலை குலைந்து ஓடச் செய்த நஞ்சு,பெருமான் உட்கொண்ட பின்னர் தனது வலிமையை, உட்கொண்டவரின் உயிரினை மாய்க்கும் தன்மையை இழந்தது போன்று, பெருமானின் அடியார்களை நெருங்கும் இயமனின் தூதுவர்கள் தங்களது வலிமை இழந்து விடுவதால் அச்சம் கொள்கின்றனர் என்ற செய்தி மிகவும் அழகாக இங்கே உணர்த்தப் படுகின்றது. சுவேதகேது என்ற சிறுவனின் உயிரைப் பறிக்க வந்த இயமனின் தூதர்களை, பெருமான் தண்டித்து அந்த சிறுவனுக்கு நீண்ட ஆயுள் கொடுத்தார் என்று தல புராணம் உணர்த்துகின்றது.
வேலைமலி தண் கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலை மலி வண் சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்
மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர்
ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே
இந்த செய்தியையே ஒரு எச்சரிக்கையாக மாற்றி, அப்பர் பிரான் கண்டு கொள்ளரியானை (5.92) என்று தொடங்கும் பதிகத்தின் மூலம் பெருமானது அடியார்களின் அருகில் நீங்கள் செல்ல வேண்டா என்று இயமனின் தூதுவர்களுக்கு கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில், பெருமானின் அடியார்களை இயமனது தூதர்களுக்கு அடையாளம் காட்டும் பொருட்டு அவர்களது தன்மைகளை அப்பர் பிரான் சுட்டிக் காட்டுகின்றார். அடியார்களின் உருவத்தையும் செய்கைகளையும் இந்த பதிகத்தில் பட்டியல் இட்டு உணர்த்தும் அப்பர் பிரான். சிவபிரானின் பெருமைகளை பாடலாக பாடுவது, அவ்வாறு பாடப்படும் பாடல்களுக்கு ஏற்ப கொடுகொட்டி, கைத்தாளம் முதலிய கருவிகளை இசைப்பது, சிவபிரானின் திருநாமத்தை பிதற்றுவது, சிவபிரானின் திருவடிகளைப் போற்றி வழிபாடு செய்வது, திருநீற்றினை அணிந்து இருப்பது, சிவபெருமானை வழிபடுவதற்காக, தூபம், தீபம், மலர் மாலைகள் ஏந்திச் செல்லுதல், முதலிய தன்மைகளை அடியார்களின் அடையாளங்களாக கூறுகின்றார். அடியார்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது மட்டுமன்றி,அவர்களைப் போற்றியும், பேணியும் பாதுகாப்பது அவர்களின் கடமை என்று இயமனின் தூதர்களுக்கு உணர்த்தும் அப்பர் பிரான், பதிகத்தின் கடைப் பாடலில், அடியார்களுக்கு இன்னல் விளைவித்தால் என்ன நடக்கும் என்பதையும் எச்சரிக்கையாக விடுப்பதையும் நாம் உணரலாம். இந்த எச்சரிக்கையை பொருட் படுத்தாது, இயமனின் தூதர்கள் அவர்களது பாசக் கயிற்றினை சுருக்காக அடியார்களின் திருமேனியின் மீது வீசி அவர்களது உயிரினைக் கவர முயற்சி செய்தால், பெருமானது திருவடிகள் அவர்களை சுட்டுவிடும் என்று கூறுகின்றார். எனவே பெருமானது அடியார்கள் உங்களின் எதிரே வந்தாலும்,இயமனின் தூதர்களே நீங்கள் விலகிச் செல்வது உங்களுக்கு நல்லது என்ற அறிவுரை இந்த பாடல் மூலம், அப்பர் பிரானால் அவர்களுக்கு வழங்கப் படுகின்றது.
அரக்கன் ஈரைந்தலையுமோர் தாளினால்
நெருக்கி ஊன்றி இட்டான் தமர் நிற்கிலும்
சுருக்கெனாது அங்குப் பேர்மின்கண் மற்று நீர்
சுருக்கெனில் சுடரான் கழல் சுடுமே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.59.7) திருஞானசம்பந்தர், பெருமானின் திருநாமங்களை சொல்லி பக்தியுடன் பெருமானைத் தொழுதேத்தும் அடியார்கள் பால் கொடிய கூற்றுவன் சென்றடையமாட்டான் என்று கூறுகின்றார். புயல்=மேகம், மழை; புயலார் பூமி= மேகங்கள் பொழியும் மழையால் வளம் பெறுகின்ற பூமி; புயல் என்பது எப்போதோ ஒரு முறை நிகழ்கின்ற நிகழ்ச்சி என்பதால், இங்கே புயல் என்று பொருள் கொள்ளுதல் பொருந்தாது. கயலார் கண்ணார்=மீன் போன்று அழகிய கண்களை உடைய மகளிர்; பண்ணார் ஒலி=பண்ணுடன் பொருந்திய பாடல்கள்; எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்யுதல் பயிலுதல் என்று சொல்லப் படுகின்றது. நிலவுலகினில் உள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் பெருமான் தொடர்ந்து உறைவதால், பயில்வான் என்று குறிப்பிடப்படுகின்றார். இந்த பதிகம் சீர்காழி தலத்தின் மீது பாடிய பதிகம் என்பதால் காழிப் பயில்வான் என்று கூறுகின்றார்.
புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ் மல்கக்
கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழி
பயில்வான் தன்னைப் பத்தி ஆரத்தொழுது ஏத்த
முயல்வார் தம் மேல் வெம்மைக் கூற்றம் முடுகாதே
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (2.86.8) திருஞானசம்பந்தர் காலன் நம்மைக் கண்டு அஞ்ச வேண்டும் என்று நாம் விரும்பினால்,நாம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். ஒவ்வொரு உயிரும் வாழவேண்டிய நாளின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் இறைவன், அவ்வாறு குறிப்பிடப்பட்ட நாளில் நாள் அந்த உயிரையும் உடலையும் பிரிக்கும் கடமையை இயமனிடம் ஒப்படைக்கக்கின்றான். இந்த கடமையை அஞ்சாமல் செயல்படுவதற்கான ஆற்றலும் இயமனுக்கு அளிக்கப் படுகின்றது. இவ்வாறு தனது கடமையை நிறைவேற்றுவதில் அஞ்சாமல் செயல்படும் காலன்,சிவனடியார்களின் அருகில் வருவதற்கு அஞ்சுவான் என்று இந்த பாடலில் கூறப் படுகின்றது. முன்னமே வாழ்க்கை முடிவடையும் என்று இறைவன் விதித்த நாளில், இயமனின் தூதுவர்களுக்கு பதிலாக சிவகணங்கள் வந்து உடலிலிருந்து உயிரினை பிரித்து சிவலோகம் அழைத்துச் செல்வார்கள் என்று பொருள் கொள்ளவேண்டும், இழிபாடு=அழிவு; எனவே நீங்கள் நறுமணம் மிகுந்த மலர்களைத் தூவி பெருமானை வழிபட்டு, கூற்றுவன் உங்களை அழைத்துச் சென்றால் நீங்கள் எதிர்கொள்ள இருந்த நரக வேதனையிலிருந்து விடுதலை பெறுவீர்களாக என்று உலகத்தவர்களுக்கு திருஞானசம்பந்தர் அறிவுரை கூறும் பாடல். உரு வரைகின்ற நாள்=உடலும் உயிரும் ஒன்று சேர்ந்து இருக்கும் காலம்;
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சுமாதல் உற நீர்
மருமலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்மின் இழிபாடு இலாத கடலின்
அருவரை சூழ் இலங்கை அரையன் தன் வீரம் அழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே
மாந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.110.9) திருஞானசம்பந்தர், பெருமானைப் புகழ்ந்து பாடி, வணங்கினால் கூற்றுவன் நம்மை வருத்த மாட்டான் என்று கூறுகின்றார். நித்திலம்=முத்து; தொத்து=கொத்து; நிறை=வரிசை; ஆலியா=ஆரவாரம் செய்து; நிரந்து வந்து= நிறைவாக வந்து;கோலம்=சிவக்கோலம்; திருநீறு அணிந்து உருத்திராக்கம் தரித்தவாறு இருத்தல்; நலிதல்=வருத்துதல்; இந்த பாடலில் திருமால் பிரமன் ஆகிய இருவரும் இறைவனின் திருவடிகளைத் தேடியும் காணமுடியாமல் திகைத்ததாக சொல்லப் படுகின்றது. பிரமனைப் பற்றிய குறிப்பும் இந்த பாடலில் இருப்பதால்,பிரமன் இறைவனின் திருமுடியைக் காண முடியாமல் வருந்தியதையும் குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும்.
நீலமாமணி நித்திலத் தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணை நாளும்
கோலம் ஏத்தி நின்று ஆடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே
திருவைந்தெழுத்துப் பதிகத்தின் நான்காவது பாடலிலும் (3.22.4), நரக வேதனையிலிருந்து நம்மைக் காப்பாற்றும் ஆற்றல் கொண்டது ஐந்தெழுத்து மந்திரம் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நமன் தமர்=இயமனின் தூதுவர்கள்; இயமனின் தூதுவர்கள் கொண்டு செல்லும் இடம் நரகம். ஒருவரது உயிர் அவரது உடலிலிருந்து பிரிக்கப் பட்ட பின்னர், அவரது உயிரினைத் தாங்கிய சூக்கும உடல் நரகத்திற்கும் சொர்கத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு,அந்த பிறவியில் சேர்ந்துள்ள வினைகளின் ஒரு பகுதியின் பயனை நுகர நேர்கின்றது. இந்த செய்தியையே சம்பந்தர் இங்கே நமன் தமர் கொண்டு போமிடத்து வரும் அல்லல் என்று குறிப்பிடுகின்றார். அத்தகைய நரகவேதனையை தடுக்கும் ஆற்றல் வாய்ந்த அஞ்செழுத்து, நல்லவர் தீயவர் என்ற பாகுபாட்டினை பார்ப்பதில்லை என்றும் அஞ்செழுத்தினை தியானம் செய்வோர் எவராயினும் அவர்களுக்கு அந்த உதவியைச் செய்யும் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச் சிவமுக்தி காட்டுவ
கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே
ஏழு நரகங்கள் செல்லவேண்டிய பாவங்கள் புரிந்தவராயினும் அவர்களுக்கும் நமச்சிவாய மந்திரம் நன்மையை அளிக்கும் என்று கூறும் திருஞானசம்பந்தப் பெருமானின் பாடலும் இங்கே நினைவு கூரத் தக்கது. இந்த பாடல் திருஞானசம்பந்தர் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடல் (காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் பதிகம்–3.49.7) ஆகும்
நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரை செய்வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே
கலிக்காமூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.105.4) திருஞானசம்பந்தர், பெருமானின் அடியார்களைத் தங்களது மனதினில் நினைத்துப் போற்றாத மனிதர்கள், இயமனின் தூதர்களுக்கு அடிமைகளாக மாறி அவர்களது கட்டளைகளுக்கு அடிபணிந்து நரகத்தில் பல துன்பங்களையும் அனுபவிப்பார்கள் என்று கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம், பெருமானின் அடியார்களை நாம் மதித்து போற்ற வேண்டும் என்றும், அவ்வாறு போற்றுவதன் மூலம், நரக தண்டனைகளிலிருந்து தப்பிக்கலாம் என்றும் உணர்த்தப் படுகின்றது. மேலும் பெருமானின் அடியார்கள் பெறவிருக்கும் பேறும் சொல்லாமல் சொல்லப்படுகின்றது. ஊழி என்ற சொல்லுக்கு நெடுங்காலம் என்று பொருள் கொண்டு, மிகவும் பழமையான தலம் கலிக்காமூர் என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
குன்றுகள் போல் திரை உந்தி அந்தண் மணியார் தர மேதி
கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவினார் கலிக்காமூர்
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி
நின்று உணர்வாரை நினைய கில்லார் நீசர் நமன் தமரே
ஆகாயம் வரை மிகவும் உயரமாக கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குவியல் ஆயினும், ஒரு தீப்பொறி அந்த அடுக்கினில் படர்ந்துப் பற்றிக் கொண்டால் அனைத்து கட்டைகளும் சாம்பலாக மாறி ஒன்றும் இல்லாத நிலை ஏற்படுவது போல், நாம் இந்த உலகினில் தொடர்ந்து செய்த பாவங்கள் எத்தனை ஆயினும் அவை அனைத்தையும் சுட்டெரிக்கும் தன்மை வாய்ந்தது நமச்சிவாய என்னும் திருநாமம் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தின் (4.11.3) பாடலாகும்.
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே
நனிபள்ளி தலத்தின் மீது அருளியுள்ள பாடலில் (4.70.7) அப்பர் பிரான், தனக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டு தொண்டு செய்யும் அடியார்கள் நரகத்தில் வீழ ஒட்டாமல் காக்கின்றார் என்று கூறுகின்றார். அரவித்து=மிகுந்த ஒலியுடன், ஆரவாரத்துடன். வீடிலாத் தொண்டர்=விடுதல் இல்லாத தொண்டர்:சிவபிரானின் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுச் செல்ல விருப்பமின்றி என்றும் அவருக்குத் தொண்டராக வாழும் அடியார்கள்:
அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார்
விரவித் தம் அடியராகி வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.92.15) அப்பர் பிரான், பெருமான் தனது திருத்தொண்டு செய்யும் அடியார்கள் மீது அன்பு கொள்வதால், அத்தகைய அடியார்களை இயமனின் தூதர்கள் நெருங்கினால், அவர்களை துரத்தி ஓடச் செய்யும் என்று கூறுகின்றார். மாதிரம்=திசை:முகடு=தலை, உச்சி; ஆதரம்=அன்பு; வீக்குதல்=கட்டுதல்: அதாவது, பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து, இயமனின் தூதுவர்கள் நம்மை நெருங்க வேண்டிய அவசியம் இல்லாமல் செய்வன என்று இங்கே உணர்த்தப் படுகின்றது.
மாதிரம் மாநிலம் ஆவன வானவர் மா முகட்டின்
மீதன மென்கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார்
தூதரை ஓடத் துரப்பன துன்பறத் தொண்டு பட்டார்க்கு
ஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே
சமணர்களின் சூழ்ச்சியால் கல்லுடன் பிணைக்கப்பட்டு நடுக்கடலில் தள்ளிவிடப்பட்ட அப்பர் பிரான், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தினை பாட, அவருடன் பிணைக்கப்பட்டிருந்த கல்லே தெப்பமாக மாற, கடலில் மூழ்காமல் அந்த கல்லின் மீது அமர்ந்தவாறு திருப்பாதிரிப் புலியூர் தலத்தின் அருகே கரையேறுகின்றார். அதற்கு முன்னர் சமணர்கள் தன்னைக் கொலை செய்வதற்கு செய்த சூழ்ச்சிகளிலிருந்து,நீற்றறையில் அடைக்கப் பட்டது, தலையினை இடறித்தள்ள யானையை ஏவியது, விடம் ஊட்டியது ஆகிய சூழ்ச்சிகளால், தனது உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாமல் காத்து அருள் புரிந்த இறைவனின் கருணையை நினைத்த வண்ணம் ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகத்தினை பாடுகின்றார்.இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் (4.94.3) இறைவன் மிகுந்த விருப்பத்துடன் தனது உள்ளத்தில் உறைகின்ற காரணத்தால், தன்னை எந்த துன்பமும் அணுகாது என்றும் தான் இயமனுக்கும் அஞ்சாத நிலையில் இருப்பதாகவும் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகின்றார். பெருமான் பால் அவர் வைத்திருந்த அளவற்ற பற்று அவரிடம் எத்தைகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை நாம் உணரலாம். விடையான்=நந்தியை வாகனமாகக் கொண்ட சிவபெருமான்.அடியார்க்கடியேன் என்ற பொருளில் அடியார் அடியோம் என்று தன்னைக் குறிப்பிடுவது, சுந்தரரின் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று தொடங்கும் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தை நமக்கு நினைவூட்டுகின்றது. அருளாளர்கள் எவ்வளவு அடக்கமாக, மற்ற அடியார்களின் அடியார்களுக்கும் அடியானாக இருக்கும் தன்மையை விரும்புகின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அடியார்களின் அடியார்களுக்கும் இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. இதன் மூலம், அடியார்களையும் அவர்களது அடியார்களையும் நாம் போற்றவேண்டும் என்ற செய்தியும் உணர்த்தப் படுகின்றது.
விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தா னினிநமக்கிங்
கடையா வவல மருவினை சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்
உடையா னடிய ரடியடி யோங்கட் கரியதுண்டே.
தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.1.6) அப்பர் பிரான் தேவர்களும், ஞானிகளும், சிவபிரானைத் தொழுது தங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்ளும் இடம் தில்லைச் சிற்றம்பலம்; தங்களது பண்பினாலும் சிவபிரானுக்குச் செய்யும் தொண்டினாலும்,மேலோர்களாகக் கருதப்படும் தில்லை வாழ் அந்தணர்கள் வாழும் இடம் தில்லைச் சிற்றம்பலம்; இத்தகைய சிறப்பு வாய்ந்த சிற்றம்பலத்தில், நடனம் ஆடும் சிவபிரானது திருவடிகளைத் தொழுவதற்காக செல்லும் மேன்மை பொருந்திய அடியார்களை, காலன் அணுக மாட்டான் என்று கூறுகின்றார். சிட்டர் என்ற சொல் பல பொருள் பட இங்கே ஆட்கொள்ளப் பட்டுள்ளது. சித்தர் ஞானிகள் என்று ஒரு பொருள். முதன்மையானவர் என்ற பொருள் கொண்ட ச்ரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபாக, இரண்டாவது அடியிலும் மூன்றாவது அடியிலும் வருகின்றது. மெய்ஞானிகள் என்ற பொருளில் நான்காவது அடியில் காணப்படுகின்றது.
சிட்டர் வானவர் சென்று வரம் கொளும்
சிட்டர் வாழ் தில்லைத் சிற்றம்பலத்து உறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச்
சிட்டர் பால் அணுகான் செறு காலனே
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.24.3) இயமனின் தண்டனைகளிலிருந்து தங்களது உயிர் விடுதலை பெற வேண்டும் என்று விரும்புவோர் பெருமானை வணங்க வேண்டுமென்று அப்பர் பிரான் கூறுகின்றார். கூற்றுத்தண்டம்=உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப,இயமன் உயிர்களுக்கு விதிக்கும் தண்டனை; ஆற்றுத் தண்டம்=நீதிநெறி நூல்களில் சொல்லப்பட்டுள்ள வழியின் படி நடக்காது வாழ்க்கையை நடத்தும் தீயவர்களை இறைவன் அடக்கி திருத்தும் முறை; ஆற்றுத் தண்டத்தை அடக்கும் என்ற தொடருக்கு வேறுவிதமாக சிவக்கவிமணி பொருள் கூறுகின்றார்.ஆற்றுத் தண்டம் என்பதற்கு இயமன் ஆற்றவிருக்கும் தண்டனை என்று பொருள் கொண்டு, அத்தகைய இயம வேதனையை மாற்றும் இறைவனின் தன்மை என்று விளக்கம் அளிப்பதும் பொருத்தமாகவே உள்ளது. ஊற்றுத் தண்டு=ஊன்றுகோல் என்பது ஒரு பொருள்; இனிப்பு ஊரும் கரும்புத் தண்டு என்பது மற்றொரு பொருள். நீற்றுத் தண்டம்=திருநீறு பூசிக்கொண்டு இறைவனை வணங்கும் அடியார்கள்; கூற்றுவன் அளிக்க இருக்கும் தண்டனைகளுக்கு பயப்படும் மனிதர்களே நீங்கள் குறிக்கொள்ள வேண்டியது யாரை என்பதை சொல்லுகின்றேன் கேட்பீர்களாக. அறத்தின் வழியாக அனைத்தையும் இயக்குபவனும், தீயவர்களை அறவழியில் தண்டித்து திருத்துபவனும் ஆகிய சிவபெருமானை, நீங்கள் திருநீறு பூசியவராக, மறவாமல் நினைத்து வழிபடுவீர்களாக. இவ்வாறு ஆற்றல் மிகுந்தவனாக காணப்படும் இறைவன் தன்னை வழிபடும் அடியார்கள் எதிர் கொள்ள இருக்கும் நரக வேதனைகளையும் தவிர்க்கும் கருணை உள்ளம் கொண்டவனாக இருக்கும் ஒற்றியூர் இறைவன், கட்டிக் கரும்பு போல் இனியவர் என்பதே இந்த பாடலின் திரண்ட கருத்து.
கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின்
ஆற்றுத் தண்டத்தை அடக்கும் அரனடி
நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு எலாம்
ஊற்றுத் தண்டு ஒப்பர் போல் ஒற்றியூரரே
மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.39.4) அப்பர் பிரான், மயிலாடுதுறை தலத்தினில் உறையும் இறைவனின் அருள் இருந்தால்,அந்த அருளின் துணை கொண்டு, நம்மை நோக்கி காலன் விரைந்து வருவதை தடுக்கலாம் என்றும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நாம் விடுதலை பெறலாம் என்றும் கூறுகின்றார். அஞ்சொலாள்=அழகிய சொற்களை உடைய உமை அன்னை, அதாவது கேட்பதற்கு இனிய மொழிகளை உடையவள்;அஞ்சிறப்பு=அஞ்சத்தக்க இறப்பு; இறப்பு மீண்டும் பிறப்பதற்கு அடிகோலுவதால், அஞ்சத்தகும் இறப்பு என்று கூறினார் போலும்.
வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்க னருளிலே
இதே கருத்து அப்பர் பிரானின் திருமாற்பேறு பதிகத்தின் பாடலிலும் (5.60.6) காணப் படுகின்றது. சாற்றி சொல்லுவன்=பலரும் அறிய உரக்க சொல்லுவேன்;தரணி=உலகம்; மாற்றிலாச் செம்பொன்=இதை விடவும் உயர்ந்த செம்பொன் இல்லாத நிலையில், மாற்று காண முடியாத தரமான பொன். இறைவனைப் புகழ்ந்தால், இறைவன் இயமனைத் தடுத்து, தன்னைப் புகழும் அடியார்களின் குறைகளை நீக்குவான் என்று கூறுகின்றார். நம்மிடம் உள்ள குறைகளால் தான், நாம் பலவிதமான தீய செயல்களை செய்து அதற்குரிய தண்டனைகளை நரகத்தில் அனுபவிக்க வேண்டி உள்ளது. நமது குறைகள் நீங்கி விட்டால்,நாம் தீய செயல்கள் செய்வது தடுக்கப்படும் போது, நாம் அந்த செயல்களுக்கு உரிய நரக தண்டனைகளிலிருந்து தப்பிக்கின்றோம் அல்லவா. இவ்வாறு நம்மை நரக வேதனைகளிலிருந்து இறைவன் காப்பாற்றுவதை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்
கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வதோர்
மாற்றிலாச் செம்பொன் ஆவர் மாற்பேறரே
நாகைக்கரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.85.10) அப்பர் பிரான், பொதுவாக உயிர்களுக்கு துன்பம் தருகின்ற காலன், பெருமானை நெருங்கித் தொழுகின்ற அடியார்களைத் தொடர்ந்து அவர்களின் பின்னே சென்று அவர்களின் உயிரைக் கவர்வதற்கும் அதன் பின்னர் அவர்களை வருத்துவதற்கும் அச்சம் கொண்டு அத்தகைய செய்கைகளை தவிர்ப்பான் என்று கூறுகின்றார். கடல் கழி=கடலின் அருகே காணப்படும் உப்பங்கழிகள்;தழி=தழுவுதலை உடைய; வடவரை=இந்திய நாட்டின் வடக்கே உள்ள கயிலை மலை; அணை தர=நெருங்கித் தொழ; துயக்கு=துன்பம்;
கடல் கழி தழி நாகைக் காரோணன் தன்
வடவரை எடுத்து ஆர்த்த அரக்கனை
அடர ஊன்றிய பாதம் அணை தரத்
தொடர அஞ்சும் துயக்கறும் காலனே
இந்த பாடலில் அப்பர் பிரான் காலன், பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொண்ட அடியார்களைத் தொடர அஞ்சுவான் என்று கூறுவது, காலனின் கோபத்தை தவிர்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் பாடலை (5.91.6) நமக்கு நினைவூட்டுகின்றது. வழிபாட்டிற்கு தகுதி பெற்றுள்ள, கற்றைச் சடையானாகிய சிவபெருமான் உள்ளான், அவனை வழிபட உயிர்களாகிய நாம் உள்ளோம்: அவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஐந்தெழுத்து மந்திரங்களையும் அவனது புகழ்களையும், கற்றுக் கொள்வதற்கு நமக்கு வாயும் நாக்கும் உள்ளன: மேலும் அவனை நீராட்ட நீரும்,அழகாக அலங்கரிக்க மலர்களும் உள்ளன. இவ்வாறு இறைவனை வழிபட அனைத்து வசதிகளும் உள்ள போது, அதனை பயன்படுத்திக் கொண்டு,இறைவனை வழிபடுவதை விட்டு விட்டு, எதற்காக இயமனின் கோபத்திற்கு நாம் ஆளாக வேண்டும். எனவே மனிதர்களே, நமக்கு அருள் வழங்க காத்திருக்கும் பெருமானை வழிபட்டு, அவனது அருளுக்குப் பாத்திரமாகி இயமனின் கோபத்தை தவிர்த்து விடுங்கள் என்பதே அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் நமக்கு வழங்கும் அறிவுரையாகும். .
கற்றுக் கொள்ள வாயுள நாவுள
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடையான் உளன் நாம் உளோம்
எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே
தமது இறுதிக் காலம் நெருங்கி விட்டது என்பதை உணரும் எவர்க்கும், நாம் நரகத்தில் எதிர்கொள்ள இருக்கும் நிலையினை நினைக்கும் போது நடுக்கம் ஏற்படுவது இயற்கை. அந்த நடுக்கத்தினைப் போக்குவதற்கு உள்ள ஒரே வழி, நரகத்திற்கு செல்லாமல் நாம் சிவலோகம் செல்லக் கூடிய வழியினை பின்பற்றுவது தானே. எனவே தான் இயமனின் செய்கைகள் பற்றி சிறிதும் கவலைப் படாமல் இருப்பதற்கு வழி காட்டும் பாடலாக கீழ்க்கண்ட பாடலை(5.75.5) அப்பர் பிரான் அமைத்துள்ளார். செந்நெறிச் செல்வனார் என்பது திருச்சேறை பெருமானின் திருநாமம். அதற்கு ஏற்ப நாம் அஞ்சாமல் இருக்க அவர் உதவி புரிவர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன்
துண்ணென் தோன்றில் துரக்கும் வழி கண்டேன்
திண்ணன் சேறை திருச்செந்நெறி உறை
அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே
எரி அயில்=நெருப்பு போன்று கூர்மையை உடைய வேல். எண்ணி நாளும்=நாள்தோறும் உயிர்களின் வாழ்நாட்களை எண்ணி கணக்கிட்டு, வாழ்நாள் முடிவடையும் தருணத்தில் உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதை நாட்களை எண்ணும் கூற்றுவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். நமது வாழ்நாள் எப்போது முடியும் என்பதை நாம் அறிய முடியாதவர்களாக இருப்பதால், அந்த தருணத்தில் இயமன் வருவதை உணரும் நாம், திடீரென்று அவன் வந்ததாக கருதுகின்றோம். துண்ணென் தோன்றில்=நடுக்கம் உண்டாகும் வகையில் முன்னே தோன்றினால்; துரக்கும் வழி=ஓட்டும் வழி; இயமன் நம்மை அழைத்துச் சென்றால், நாம் நமது வினைத் தொகையின் ஒரு பகுதியை கழிக்கும் தன்மையில் நமது உயிர் நரகத்தில் ஆழ்த்தப்பட்டும் சொர்க்கத்தில் இருத்தப்பட்டும்,அதன் பின்னர் அடுத்த பிறவியை எதிர்கொள்ளும் நிலையினை அடைகின்றது. இயமன் நம்மை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, சிவபெருமான் நம்மை சிவலோகம் அழைத்துக் கொண்டு சென்ற பின்னர் நம்மை இயமனின் தூதுவர்கள் என்ன செய்ய முடியும். நம்மை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்லும் பெருமான், நமது வினைகள் அனைத்தையும் கழித்து விடுவதால், நாம் பிறவிச் சுழலிலிருந்து விடுதலையும் அடைகின்றோம். இதே கருத்து சுந்தரர் அருளிய தில்லைப் பதிகத்தின் (7.90) அனைத்துப் பாடல்களிலும் கொடுக்கப் பட்டுள்ளது.
தனது தொண்டர்கள் நரகத்தினை பாராத வண்ணம் அருள் புரிபவன் என்று ஓமாம்புலியூர் தலத்து பாடலில் (6.88.5) அப்பர் பிரான் கூறுகின்றார்.
பாங்குடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை
பாங்கிலா நரகு அதனைத் தொண்டரானார் பாராத வகை பண்ண வல்லான் தன்னை
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும்
தீங்கில் திரு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே
அப்பன் நீ அம்மை நீ என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (6.95.2) அப்பர் பிரான், வினைகளும் இயமனும் தங்களுக்கே உரிய வகையில்,வேறு வேறு வழியினில் உயிர்கள் துன்பம் அனுபவிப்பதற்கு காரணமாக இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். வெம்ப=நாம் வருந்தும்படி;வெய்ய=கொடிய, வருத்தம் செய்விக்கும், நமது வாழ்நாள் எப்போது முடியவேண்டும் என்று முன்னமே குறித்த காலத்தில் மிகவும் விரைவாக வந்து துன்பம் தருபவன் கூற்றுவன்; உடனிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக நம்மைத் துன்புறுத்துவது வினைகள். இவ்வாறு தங்களுக்கே உரித்த வேறு வேறு வகையில் நம்மை துன்புறுத்தும், கூற்றம் மற்றும் வினைகளிலிருந்து நம்மைக் காப்பவன் சிவபெருமான் ஒருவன் தான் என்பதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இந்த பாடலில் தன்னைக் குறிப்பிடும் இடங்களில், நான் என்பதைத் தவிர்த்து நாம் என்று அப்பர் பிரான் கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். சிவபெருமான் தனது சிந்தையில் புகுந்ததால் தன்னிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கூறும் அப்பர், அந்த மாற்றங்களால் மற்றவர்களை விட தான் ஒரு உயர்ந்த நிலையில் இருப்பதை உணர்த்தும் வகையில் நாம் என்று தன்னை இறுமாப்புடன் கூறுகின்றார். இந்த பாடலில் பைய நையும் வினைப்பகை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எண்ணற்ற, பழைய பிறவிகளில் நாம் சேர்த்துள்ள வினைகளை ஒரே பிறவியில் கழிக்க வேண்டும் என்றால் அது முடியாத காரியம். மேலும் அவ்வாறான நிலை ஏற்பட்டால், அந்த வினைப் பயன்களான இன்ப துன்பங்களைத் தாங்கவும் நமது உயிருக்கும், அந்த உயிர் தங்கும் உடலுக்கும் ஆற்றல் இல்லை. எனவே தான் நம் மீது கருணை கொண்டுள்ள இறைவனால், இந்த வினைகள் மூன்றாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதியின் பயனை உயிர் உடலினை விட்டு பிரிந்த பின்னர் சொர்க்க நரகங்களில் அனுபவிக்கின்றது, மற்றொரு பகுதி அந்த பிறவியில் அனுபவிக்கப்பட்டு கழிக்கப்டுகின்றது;மூன்றாவது பகுதி சஞ்சித வினையாக பின்னர் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
வெம்ப வருகிற்பதன்று கூற்றம் நம்மேல் வெய்ய வினைப் பகையும் பைய நையும்
எம்பரிவும் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கெழிலென் ஞாயிறு எளியோம் அல்லோம்
அம்பவள செஞ்சடை மேல் ஆறு சூடி அனலாடி ஆன் அஞ்சும் ஆட்டுகந்த
செம்பவள வண்ணர் செங்குன்ற வண்ணர் செவ்வான வண்ணர் என் சிந்தையாரே
சமணத் துறவிகளின் பொய்யான பேச்சுகளில் மயங்கிய பல்லவ மன்னன், அப்பர் பிரானை அழைத்து அவரை, சமண மதத்தை இழித்து பேசிய குற்றத்திற்காக விசாரிக்க முற்படுகின்றான். அவரை அழைத்து வருவதற்காக, மந்திரிகள் சேனை வீரர்களுடன் சென்ற போது, அப்பர் பிரான் அவர்களுக்கு மறுமொழியாக விடை அளித்த பதிகத்தின் முதல் பாடலில் (6.98.1), பெருமானுக்கு தான் அடிமையாக மாறிய காரணத்தால், தான் இயமனிடம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், தனக்கு நரகத்தில் துன்பமடையும் நிலை ஏற்பாடாது என்றும் மிகுந்த உறுதியுடன் அப்பர் பிரான் கூறுகின்றார்.நடலை=பொய்; ஏமாப்பு=மகிழ்வுடன் இருத்தல்; குறுகுதல்=அடைதல். கோமான்=அரசர்க்கு அரசன். சிவபிரானுக்கு அடிமையாக தன்னை கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் அறிவித்துக் கொண்ட திருநாவுக்கரசர், சிவபிரானுக்கு ஆட்பட்ட காரணத்தால் வேறு எவருக்கும் ஆட்படமாட்டோம், வேறு எவர்க்கும் குடியல்லோம் என்று இங்கே கூறுகின்றார். நியாயம் இல்லாத அரசனின் ஆணை தன்னைக் கட்டுபடுத்தாது என்று அரசனை எதிர்த்து குரல் கொடுத்த புரட்சிக் கவியாக அப்பர் பெருமான் திகழ்வதை நாம் இங்கே காணலாம். இயமனுக்கே அஞ்சமாட்டோம் என்று கூறுவதன் மூலம் அரசன் எம்மாத்திரம் என்று முழங்குவதையும் நாம் உணரலாம். அரசனை தெய்வமாக மதித்த காலம் என்பதால் அரசனின் ஆணைக்கு கட்டுப்படாதவர்க்கு நரகம் உண்டு என்ற நம்பிக்கை இருந்து வந்தது. சிவபிரானின் அருளைப் பெற்றதால் தனக்கு அந்த விதிமுறை செல்லாது என்பதையும் இங்கே அப்பர் பிரான் தெளிவுபடுத்துகின்றார்.
நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடி குறுகினோமே
இதே பதிகத்தின் கடைப்பாடலில் (6.98.10) பெருமானின் அடியானாக விளங்கும் தான், பெருமானைப் போன்று ஒப்பற்ற எட்டு குணங்கள் உடையவனாக இருப்பதால், இயமன் தன்னெதிரே தோன்றி, இதனைச் செய் அதனைச் செய் என்று ஆணையிட்டாலும், அந்த ஆணையினை பொருட்படுத்த மாட்டேன் என்று அப்பர் பிரான் உறுதியாக கூறுகின்றார். இதன் மூலம், பெருமானின் அடியார்கள் தேவைப்பட்டால் இயமனை எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள் என்று உணர்த்தப் படுகின்றது. தென்திசைக் கோன்=இயமன். நாணற்றார்=நாணம் இல்லாத சமணர்கள். உடை இல்லாமல் எங்கும் திரிந்தாலும் அதற்காக வெட்கப்படாத சமணர்கள். கோ ஆடி=தலைமைத் தன்மையை உரைத்து. நள்ளாமே விள்ளப் பெறுதல்=விரும்பாது விலகும் நிலை. எமது நாவார, அதாவது நாக்கு இன்பம் பெற, சிவபெருமானது புகழினைப் பாடப் பெற்றோம்; அதனால் நாணம் ஏதும் இன்றி உடையில்லாமல் திரியும் சமணர்கள் எம்மை விரும்பாது விலகினார்கள்; ஆனால் அமரர் தலைவனாகிய சிவபெருமான் என்னை ஆட்கொள்வான்;பிரமனும், திருமாலும் அறிதற்கு அரிய வகையில், அனற்பிழம்பாகத் தோன்றியவனும், தேவர்க்குத் தேவனும் ஆகிய சிவபெருமான், எனது சிந்தையில் நீங்காது இருந்தமையால், யாம் அவனுடன் வேறறக் கலந்து நின்று அவனைப் போன்று எண்குணங்கள் உடையவனாக மாறிவிட்டோம்; எனவே தென்திசைக்கு அதிபதியாகிய இயமனே நேரில் வந்து, தனது தலைமைத் தன்மைகளை எனக்கு உணர்த்தி, தனக்கு குற்றேவல் செய்க என்றாலும் நாம் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
நாவார நம்பனையே பாடப் பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம்
ஆவா என்றெமை ஆள்வான் அமரர் நாதன் அயனொடு மாற்கு அறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும் குணமாகக் கொள்ளோம் எண் குணத்துளோமே
உயிர்கள் அழிவற்றவை என்பது சைவ சித்தாந்தக் கருத்து. முற்பிறவிகளில் ஈட்டிய வினைகளின் தன்மைக்கேற்ப உயிர்கள் வெவ்வேறு உடல்களுடன் பொருத்தப்படுகின்றன. அவ்வாறு பொருத்தப்படும் உயிர்கள், மெய்ப்பொருளின் தன்மையை உணர்ந்து தங்களின் அறிவை மறைத்திருக்கும் ஆணவ மலத்திலிருந்து விடுபட்டு, மலநீக்கம் பெற்றுத் தன்னை வந்தடைந்து என்றும் அழியாத பேரின்பம் பெறவேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். இது தான் ஆன்மாவின் உண்மையான விருப்பம். இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள உயிர்களுக்கு இறைவன் முப்பத்தாறு தத்துவங்களை (ஐம்பூதங்கள்,சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகள், மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகள், கை, கால், நாக்கு, எருவாய்,கருவாய் எனப்படும் ஐந்து கன்மேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம் அகங்காரம் எனப்படும் நான்கு அகக் கருவிகள், காலம், நியதி, கலை, வித்தை, அராகம்,புருடன், மாயை எனப்படும் ஏழு வித்தியா தத்துவங்கள், சுத்தவித்தை, ஈசுரம், சதாசிவம், சத்தி, சிவம் ஆகிய ஐந்து சிவத்தத்துவங்கள்) அளிக்கின்றான்.இவைகளை முறையாக பயன்படுத்தி, சிவபிரானின் தன்மையை முறையாக ஒரு குரு மூலம் கேட்டறிந்து, தனது சந்தேகங்களை தெளிவித்துக் கொண்டு,சிவனை எப்போதும் சிந்தித்தல் உயிரின் நிலையை படிப்படியாக முக்தி அடையும் வழிக்கும் உயர்த்தும். இந்த நிலைகள் பத்தாக வகுக்கப்படுகின்றன.அதனில் ஒன்பதாவது நிலை சிவக்கலப்பு என்பதாகும். இந்த நிலையில் உயிர், உடலுக்கு எத்தகைய துன்பங்கள் வரினும் அவற்றைத் துன்பங்களாக உணராது அவற்றின் மெய்த்தன்மையை உணர்ந்து, உலகியல் பொருட்கள் மேல் பற்று கொள்ளும் உயிரின் இயல்பையும், உயிர்க்கு மேலான இறைவனின் அருளினையும், அனைத்து நிகழ்வுகளுக்கும் சிவமே காரணம் என்பதை உணர்ந்து, உயிருக்கு மேலாக விளங்கும் சிவத்தை பற்றி நின்று, சிவத்தோடு வேறறக் கலந்து நிற்கும் நிலை சிவக்கலப்பு எனப்படும். தனது பக்தியின் நிலையால் இந்த நிலையினை அடைந்த அப்பர் பெருமான், தானும் சிவபெருமானைப் போல் எண்குணங்கள் கொண்டவன் என்று கூறுகின்றார்.
மணிவாசகப் பெருமானும் இதே கருத்தை வலியுறுத்தி, மூவேழ் சுற்றம் முரண் உரு நரகிடை இடை ஆழாமே அருள் அரசே போற்றி என்று சிவபிரானை போற்றுகிறார். மேலும் மணிவாசகர் கண்டப்பத்து பதிகத்தின் முதல் பாடலில், ஐம்புலன்களின் சேர்க்கையால் மயங்கி இருந்து நரகத்தில் விழ இருந்த தனது சிந்தை தெளிவித்து சிவபிரான் ஆட்கொண்ட தன்மையை குறிப்பிடுகின்றார்.
இந்திரிய வய மயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்து போய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தை தனை தெளிவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட
அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே
மூப்பூர்=முதுமைப் பருவம் அடையும் நிலை;; மூப்பூர்=மூப்பு நிலை ஊர்ந்து வந்து நம்மை அடையும் நிலை; ஊர்தல் என்பது மெதுவாக சென்றடையும் தன்மையை உணர்த்துகின்றது. எவரும் ஒரே நாளில் மூப்பு நிலையை அடைவதில்லை. நாம் உணரமுடியாத நிலையில், சிறிது சிறிதாக மூப்புத் தன்மை ஒவ்வொரு உயிரையும் சென்றடைகின்றது. இந்த தன்மை தான் இங்கே குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு முதுமைக் காலம் நம்மை வந்தடைந்து நமது உடல் நலியும் போது நம்மை காப்பவர் சிவபெருமான் என்று சிலரால் விளக்கம் அளிக்கப்படுகின்றது. ஆனால் சிவபெருமான் நாம் மூப்படையும் போது மட்டும் தானா, நமக்குத் துணையாக இருந்து காப்பற்றுகின்றார். மணிவாசகர், திருவாசகம் போற்றித் திருவகலில் குறிப்பிட்ட வண்ணம், நாம் கருவில் உருவாகத் தொடங்கும் நாளிலிருந்து, சிறந்த குழந்தையாக இருந்த போதும், காளைப் பருவம் அடைந்த போதும், இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் போது, மற்ற பல தருணங்களிலும் நம்மை பலவித ஆபத்துகளிலிருந்தும் காத்துக் கொண்டிருப்பவர் சிவபெருமான் அல்லவா. பெருமான் உள்ளிருந்து இயக்குவதால் தானே அனைத்து உயிர்களும் இயங்குகின்றன. எனவே வயது முதிர்ந்த போது இறைவன் நம்மை காப்பற்றுகின்றான் என்ற விளக்கம் அவ்வளவு பொருத்தமாக இல்லை, மூப்பூர் என்ற சொல்லுக்கு சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் வானில் ஊர்ந்து கொண்டிருந்த மூன்று திருபுரத்தவர்களின் கோட்டை என்று பொருள் கூறுகின்றார். எப்போது கீழே இறங்கி எந்த ஊரினை நசுக்கி அழிக்கலாம் என்ற எண்ணத்துடன் செயல்படுவதால் இந்த கோட்டைகள் மெதுவாக பறந்து செல்கின்றன என்று கூறினார் போலும். நெதி=நியதி; நெதியார் விதி=நியதியின் வழியின் நடக்கும் செயல்கள்; எந்த முறையில் கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்று அவர்கள் வரம் பெற்றிருந்தார்களோ அதே வழியில்; முன்னே=பண்டைய காலத்தில்; வாளி=காற்று; வளி என்ற சொல் வாளி நீண்டது. பார்த்தன் என்பது அர்ஜுனனின் பத்து பெயர்களில் ஒன்று; தீர்ப்பார் என்ற சொல்லினை அடுநோய் அவலம் என்ற சொல்லின் பின் வைத்து பொருள் கொள்ளவேண்டும். அடுதல்=கொல்லுதல்; அடுநோய்= உடலினை வருத்தி கொல்லும் நோய்;
பொழிப்புரை:
வானில் ஊர்வது போன்று மிகவும் மெதுவாக பறந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், எந்த முறையில் அந்த கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்று திரிபுரத்து அரக்கர்கள் வரம் கேட்டுப் பெற்றார்களோ, அதே முறையில், அந்த மூன்று கோட்டைகளையும் ஒரே நேர்கோட்டினில் வரச் செய்த பெருமான், அக்னி காற்று திருமால் ஆகிய மூவரும் பொருத்தப்பட்ட அம்பினை தான் ஏந்தியிருந்த வில்லினில் கோத்து, அந்த அம்பினை விடுத்ததன் மூலம் அந்த கோட்டைகளை எரித்து அழித்தவர் பெருமான். அவர் பாசுபதம் அத்திரம் வேண்டி தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனின் வலிமையை பரிசோதித்த பின்னர் அவனுக்கு பாசுபத அத்திரம் கொடுத்து அருளினார். இவ்வாறு ஆற்றலும் கருணையும் ஒருங்கே உடைய பெருமான், அழகும் இளமையும் பொருந்தியவராக உறைகின்ற குடந்தை நகரினில் உள்ள, குடந்தைக் காரோணம் என்ற தலத்திலும் உறைகின்றார். அவர் தன்னைப் பணிந்து வணங்கும் அடியார்களை வருத்தி கொல்லும் தன்மை வாய்ந்த கொடிய நோய்கள் அணுகாத வண்ணமும் வினைகள் அவர்களை வருத்தி கீழ்மை நிலையில் ஆழ்த்தாத வண்ணமும் காலன் அவர்களைச் சென்றடைந்து துன்பம் இழைக்காத வண்ணமும் காப்பாற்றுகின்றார். அவரே காரோணத்தார் என்று அழைக்கப் படுகின்றார்.
பாடல் 7:
ஊனார் தலை கையேந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை
மானார் தோலார் புலியின் உடையர் கரியின் உரி போர்வை
தேனார் மொழியார் திளைத்தங்கு ஆடித் திகழும் குடமூக்கில்
கானர் நட்டம் உடையார் செல்வக் காரோணத்தாரே
விளக்கம்:
தேனார் மொழியாள் என்பது இந்த தலத்து இறைவியின் திருநாமம். ஊனார் தலை=நன்கு உலர்ந்த தசைத் துண்டுகள் ஒட்டிக்கொண்டிருந்தும் பிரமகபாலம்; குடமூக்கு என்பது தலத்தின் பெயராகவும் கும்பேசர் திருக்கோயிலின் பெயராகவும் பண்டைய நாளில் இருந்தது என்பதை நாம் இந்த பதிகத்திலிருந்து அறிகின்றோம். பல இல்லங்களுக்கும் சென்று பலி ஏற்கும் கோலத்திற்கு ஏற்ப விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து கொள்ளாமல், மான் தோல் மற்றும் புலித்தோலை உடுத்தியவராக, யானைத் தோலினை உடலில் போர்த்தவராக பெருமான் உள்ள நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது.உடலுக்கு கேடு விளைவிப்பதால் அனைவராலும் அச்சம் கொண்டு ஒதுக்கப் படும் யானைத் தோலினை, போர்த்தவராக உள்ள நிலையும், பெருமான் பிச்சை ஏற்கும் கோலத்திற்கு பொருத்தமாகவே உள்ளது. தான் ஏற்றுக்கொண்டுள்ள வேடத்திற்கு ஏற்ப எளிய கோலத்துடன் பெருமான் இருந்தாலும், அவர் மிகப் பெரிய செல்வர் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திளைத்து=கூடி;
பொழிப்புரை:
நன்கு உலர்ந்த தசைத் துண்டங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம் உலகெங்கும் திரிந்து பல இல்லங்களுக்கு சென்று பலியேற்று வாழும் வாழ்க்கை வாழும் பெருமான், தனது உடலில் மான் தோல் மற்றும் புலித்தோலினை ஆடையாக அணிந்துள்ளார்.மேலும் யானையின் தோலையும் தனது உடலின் மீது போர்த்தவராகவும் காணப் படுகின்றார். இங்கே குறிப்பிடப்படும் கோலம், பகட்டான ஆடைகள் ஏதுமின்றி, தோல் ஆடையும் தோல் போர்வையும் கொண்டுள்ள நிலை, அவரது பிச்சை ஏற்கும் செயலுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. அவர், தேனார் மொழியாள் என்று அழைக்கப்படும் பிராட்டியுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கும் பெருமான், குடமூக்கு என்று அழைக்கப்படும் கும்பகோணம் தலத்தில் நடமாடிய வண்ணம் உறைகின்றார். சுடுகாட்டினில் நடனம் ஆடும் தன்மையாக இருப்பினும், பெருமான் அனைவரிலும் மிகப் பெரிய செல்வந்தர் ஆவார். இத்தகைய பண்புகளை உடைய பெருமான், குடந்தைக் காரோணம் தலத்தினில் உறைகின்றார்.
பாடல் 8:
வரையார் திரள் தோள் மதவாளரக்கன் எடுப்ப மலை சேரும்
விரையார் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும்
உரையார் கீதம் பாடக் கேட்டங்கு ஒளிவாள் கொடுத்தாரும்
கரையார் பொன்னி சூழ் தண் குடந்தைக் காரோணத்தாரே
விளக்கம்:
விரை=நறுமணம்; விரை=சொற்கள், இங்கே புகழ்ச் சொற்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். உரையார் கீதம்=பலராலும் புகழப்படும் சாம வேத கீதங்கள்; மதம்=கர்வம்; வரை=மலை; பொதுவாக மலர்ப்பாதம் என்றே பல திருமுறைப் பாடல்களில் பெருமானின் திருப்பாதங்கள் குறிப்பிடப் படுகின்றன.தன்னை வணங்கும் அடியார்களுக்கு மலர்ப் பாதத்தை காட்டி அருள் புரியும் பெருமான், தீயவர்களுக்கு மிகுந்த அழுத்தம் தரும் பாதங்களாக விளங்கும் தன்மையை நாம் உணரவேண்டும். அப்பர் பிரான், சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் இறைவனால், தங்களின் தலை மீது, இறைவனின் திருப்பாதங்கள் பதிக்கப் பெற்றவர்கள். அவர்கள் அனைவரும் மலர் அனைய பாதம் என்றே குறிப்பிடுவதை நாம் அறிவோம்.
பொழிப்புரை:
மலை போன்ற திரண்ட தோள்களை உடையவனும் தனது வலிமையால் மிகுந்த கர்வம் கொண்டு திரிந்தவனும், வாட்போரினில் வல்லவனும், ஆகிய அரக்கன் இராவணன், தான் செல்லும் வழியில் தனக்கு இடையூறாக இருந்தது கயிலாய மலை என்ற எண்ணம் கொண்டவனாக, அந்த மலையினை பேர்த்து எடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு, தனது பயணத்தைத் தொடர முடிவு செய்தவனாக, அந்த மலையினை சென்றடைந்து மலையினை பேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். அப்போது பெருமான், நறுமணம் வாய்ந்த தனதுத் திருப்பாதத்தின் விரல் நுனியை, கயிலாய மலையின் மீது ஊன்ற, மலையின் கீழே அமுக்குண்ட அரக்கனது தலைகள் பத்தும் நொறுங்கும் தன்மையை அடைந்தன. அதனால் கலக்கமடைந்த அரக்கன், பலராலும் புகழப்படும் சாம வேத கீதங்களை பாட, அதனைக் கேட்டு மகிழ்ந்த பெருமான் ஒளி வீசும் சந்திரஹாசம் என்ற வாளினை, அரக்கனுக்கு பரிசாக கொடுத்து அருளினார். இத்தகைய பண்பினை உடைய பெருமான், இரண்டு கரைகளையும் தொடும் வண்ணம் பெருக்கெடுத்து ஓடிய பொன்னி என்று அழைக்கப்படும் காவிரி நதியால் சூழப்பட்டதும், குளிர்ந்தும் காணப்படுவதும் ஆகிய குடந்தை நகரத்தில் உள்ள குடந்தைக் காரோணம் தலத்தினில் காரோணராக உறைகின்றார்.
பாடல் 9:
கரிய மாலும் செய்ய பூமேல் அயனும் கழறிப் போய்
அரிய அண்டம் தேடிப் புக்கும் அளக்க ஒண்கிலார்
தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில்
கரிய கண்டர் காலகாலர் காரோணத்தாரே
விளக்கம்:
கழறுதல்=பேசுதல்; இங்கே ஏசிய வண்ணம் பேசுதல் என்று பொருள் கொள்ள வேண்டும். தன்னை விடவும் அடுத்தவர் சிறியவர் என்று ஒருவருக்கொருவர் ஏசிக் கொண்டு வாதம் புரிந்த நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் என்று திருவாசகத்தில் மணிவாசகர் குறிப்பிட்டது போன்று, கீழேழ் உலவுகலையும் கடந்து ஊடுருவிச் சென்ற திருப்பாதங்கள் பெருமானின் பாதங்கள். அனைத்துப் பொருள்களின் முடிவையும் தாண்டி ஓங்கி நிற்கும் திருமுடி என்பதால் மேலேழ் உலகங்களையும் கடந்து நின்றவர் பெருமான். இந்த தன்மையை உணர்த்தும் பொருட்டு, பல அரிய உலகங்களிலும் புகுந்து பிரமன் திருமால் ஆகிய இருவரும் தேடினார்கள் என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
கருமை நிறம் கொண்ட திருமாலும், சிவந்த வண்ணம் உடைய தாமரைப் பூவில் உறையும் பிரமனும் ஒருவருக்கொருவர் ஏசிக் கொண்டு வாதம் புரிந்த பின்னர், அந்த வாதத்திற்கு ஒரு முடிவு காணும் பொருட்டு, தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் முதலில் காண்பவர் எவரோ,அவரே தங்களில் உயர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்தவராக, பல அரிய உலகங்கள் புகுந்து, அடியையும் முடியையும் தேடியும், பெருமானை அளக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தனர். அவர்கள் இருவரும் தோல்வி அடையும் வண்ணம், நீண்ட நெடியவராக நின்றவர் பெருமான். தங்களது வல்லமையால் மட்டுமே இறைவனை அளந்து விடலாம் என்று நினைக்கும் எவராலும் காண முடியாதவராக திகழும் பெருமான், செல்வ வளம் மிகுந்த குடமூக்கு தலத்தினில்,கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவராகவும் காலனை உதைத்து வீழ்த்தி வெற்றி கொண்ட காலகாலராகவும் குடந்தைக் காரோணம் தலத்தினில் திகழ்கின்றார்.
பாடல் 10:
நாணார் அமணர் நல்லது அறியார் நாளும் குரத்திகள்
பேணார் தூய்மை மாசு கழியார் பேசேல் அவரோடும்
சேணார் மதிதோய் மாடம் மல்கு செல்வ நெடுவீதிக்
கோணாகரம் ஒன்று உடையார் குடந்தைக் காரோணத்தாரே
விளக்கம்:
கோணாகரம்=வளைந்த கடல் போன்று பெரிய நீர்நிலை; திருக்கோயிலை அடுத்துள்ள மகாமகக் குளத்தினை குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது.சேண்=ஆகாயம்; சேணார்=ஆகாயம் வரை உயர்ந்த மாடங்கள்; நாணார்=நாணம் இல்லாதவர்; நாணம் இல்லாதவர்களாக இருப்பதால் தான், உடை ஏதும் இல்லாதவர்களாக இருப்பினும், சிறிதும் தயக்கம் இன்றி, பல இல்லங்கள் சென்று ஆங்குள்ள மகளிரிடம் உணவு பெறுகின்ற பழக்கம் உடையவர்களாக அந்நாளில் சமணர்கள் திகழ்ந்தார்கள் அல்லவா. குரவர்கள் என்றால் துறவிகள் என்று பொருள். குரத்திகள் என்பது பெண்பால். சமணப் பெண் துறவிகள் என்று பொருள். ஆண் துறவிகள் போன்று பெண் துறவிகளும் நீராடாமல், தங்களது மாசினைக் கழிக்காமல் இருந்ததாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.இவ்வாறு நீராடாமல் இருந்த பெண்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுவது, அப்பர் பிரான் திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பாடலை (6.3.11)நமக்கு நினைவூட்டுகின்றது.
முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டித்
தலை பறிக்கும் தன்மையர்களாகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார்
மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதனழியச் செற்ற சேவடியினானை
இலை மறித்த கொன்றை அந்தாரான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
உடை உடுத்தாமல் இருத்தல் மற்றும் நீராடாமை சமணத் துறவிகளுக்கு உரிய நெறியாக கருதப் பட்டாலும், சமணப் பெண் துறவிகள் உடை அணிந்து வாழ்ந்தனர் என்பதை நாம் இந்த பாடலிலிருந்து அறிகின்றோம். சமணப் பெண் துறவிகள், ஆண் துறவிகளுக்கு சேவை செய்து வந்தனர். அத்தகைய சேவைகளில் ஒன்று தான் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. சமணசமய நூல்களைக் கற்றுத் தேர்ச்சி அடைவதால் மட்டுமே எவருமே சமண குருவாக மாற முடியாது. அவர்கள் பொறுமையின் எல்லையை சோதனை செய்து பார்த்த பின்னரே, அவர்கள் குருவாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். முடி பறித்தல் என்பது அத்தைகைய ஒரு சோதனை. தலையில் உள்ள முடிகள் ஒவ்வொன்றாக, அடுத்தவரால் பிடுங்கப்படும் போது ஏற்படும் வலியினைப் பொறுத்துக் கொண்டு கண்களில் நீர் வாராமல் இருக்கும் பக்குவத்தை அடைந்தவர்களே பொறுமையில் சிறந்தவர்களாக கருதப் படுவார்கள். கொன்றை மலர்கள் மலரும் பருவத்தில், அவை கொத்தாக மலர்ந்து மரத்தில் உள்ள இலைகளை மறைக்கும் அளவுக்கு, மிகவும் அதிக அளவினில் பூக்கும் என்ற செய்தியை, அப்பர் பிரான் இங்கே இலைகளை மறைக்கும் கொன்றை மலர்கள் என்று கூறுகின்றார். நீராடாமல் மாசு படிந்து காணப்படும் தங்களது உடலின் மார்பகங்களை உடையால் மறைக்கும் சமணப் பெண் துறவிகள், தாங்கள் பெரும் தெய்வமாக மதித்து கருதும் ஆண் துறவிகளின் தலையில் உள்ள முடியினை பறித்து சேவை செய்வார்கள். இந்தச் செயலைப் போன்று, பல செயல்களைத் தங்களது கொள்கைகளாக கருதி, தவம் செய்வதாக நினைத்து பாவச் செயல்களைச் செய்து வரும், சமணத் துறவிகள் சிவபெருமானின் பெருமைகளையும் அவரையும் சிந்திக்க மாட்டார்கள். தனது பயணத்திற்கு இடையூறாக இருந்தது என்று நினைத்து கயிலாய மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்த அரக்கன் இராவணனின் ஆற்றலினை அழித்தவனும், மரத்தில் உள்ள இலைகளை முற்றிலும் மறைக்கும் அளவுக்கு அடர்த்தியாக பூக்கும் கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும் ஆகிய, சிவபெருமானை, சமணர்கள் காட்டிய வழியிலே சென்ற நானும், பண்டைய நாட்களில் இகழ்ந்தேன். எனது அறிவீனமான செயல் பரிதாபத்திற்கு உரியது என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
பொழிப்புரை:
சிறிதும் நாணமின்றி உடையேதும் இல்லாத நிலையில் மகளிரிடம் சென்று தங்களின் கைகளை நீட்டி, அந்த மகளிர் இடும் பிச்சையை ஏற்றுக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள் சமணர்கள்; அவர்கள் நல்லது என்பதை அறியாதவர்கள்; சமணர்களின் ஆண் துறவிகள் மற்றும் பெண் துறவிகள் ஆகிய இருவரும் நாள்தோறும் நீராடி, தங்களது உடல் மாசினைக் கழித்துக் கொள்ளாமல், தூய்மை அற்றவர்களாக திகழ்கின்றனர். எனவே அவர்களுடன், உலகத்தவரே நீங்கள் ஏதும் பேசாமல் இருப்பீர்களாக. வானளாவ உயர்ந்து சந்திரன் உலவும் மாடங்கள் நிறைந்து செல்வச் செழிப்புடன் உள்ள நீண்ட வீதிகளும்,வளைந்து கடல் போன்று இருக்கும் பெரிய நீர்நிலை உடையதும் ஆகிய குடந்தைக் காரோணம் தலத்தில் உறைபவர் காரோணத்தார் ஆவர்.
பாடல் 11:
கருவார் பொழில் சூழ்ந்து அழகார் செல்வக் காரோணத்தாரை
திருவார் செல்வம் மல்கு சண்பைத் திகழும் சம்பந்தன்
உருவார் செஞ்சொல் மாலை இவை பத்தும் உரைப்பார் உலகத்துக்
கருவார் இடும்பைப் பிறப்பு அறுத்துக் கவலை கழிவாரே
விளக்கம்:
கருவார்=அடர்ந்து கருமை நிறத்தில் காணப்படும்; அடுத்தடுத்து உள்ள மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டு இருப்பதால்,சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக் கதிர்கள் உள்ளே புகமுடியாமல் இருப்பதால், இருண்டு காணப்படும் சோலைகள்; தான் மூன்று வயதுச் சிறுவனாக இருந்த போது, அம்பிகை அளித்த ஞானப்பாலினை தான் உட்கொள்ளும் வண்ணம் கருணை புரிந்து, அந்த பாலுடன் சிவஞானமும் கலந்து ஊட்டப்பட்ட செய்தியை இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கருவார் இடும்பை=கருவினில் புகுந்து இடர்ப்படும் தன்மை;
பொழிப்புரை:
அடுத்தடுத்து உள்ள மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டு இருப்பதால், சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக் கதிர்கள் உள்ளே புகமுடியாமல் இருப்பதால், இருண்டும் செழிப்புடன் வளர்ந்தும் காணப்படும் சோலைகள் சூழ்ந்து அழகாக விளங்கும் குடத்தை நகரத்தில் உள்ள குடந்தைக் காரோணம் திருக்கோயில் உறையும் செல்வராகிய காரோணத்தாரை, இறைவனின் கருணையால் விளைந்த சிவஞானம் ஆகிய கல்விச் செல்வத்தை பெற்றவனும் சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தினைச் சார்ந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் உருவாக்கிய செம்மையான தமிழ்ச் சொற்கள் அடங்கிய மாலையாகிய இந்த பத்து பாடல்களை பத்தியும் முறையாக ஓதும் அடியார்கள், மீண்டும் கருவினில் புகந்து இடர்ப்படும் தன்மையை எய்தாது தங்களது கவலைகள் நீங்கப் பெறுவார்கள். அதாவது பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்திநிலை அடைந்து, இறைவனுடன் இணைந்து என்றும் அழியாத பேரின்பத்தில் ஆழ்ந்து இருப்பார்கள்.
முடிவுரை:
பதிகத்தின் முதல் பாடலை உமையன்னையுடன் பொருந்தி இருக்கும் மாதொரு பாகனின் நிலை குறிப்பிட்டு தொடங்கும் திருஞானசம்பந்தர், கருணையே வடிவமான அன்னையுடன் எப்போதும் இறைவன் பொருந்தி இருப்பதால், உயிர்களுக்கு நன்மைகள் விளைவிப்பதே தனது கொள்கையாக கொண்டுள்ள பெருமான் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். மேலும் இந்த பாடலில், பெருமான், பாற்கடலிலிருந்து பொங்கியெழுந்த நஞ்சினை உட்கொண்டு, அந்த நஞ்சு உலகத்தவரை அழிக்காத வண்ணம் காப்பாற்றிய செய்கையும் சொல்லப் பட்டுள்ளது. இரண்டாவது பாடலில், பெருமானின் பெருமையை புரிந்து கொண்ட பலரும் பெருமானைப் பணிந்து வணங்குவதும் மூன்றாவது பாடலில் தலத்து மகளிர், பெருமான் பால் மிகுந்த அன்பு கொண்டவர்களாக இருக்கும் தன்மையும் உணர்த்தப் படுகின்றது. நான்காவது பாடலில் அருள் வடிவமான தேவியுடன் கூடியவராக, உலகெங்கும் பலி ஏற்பதற்காக திரியும் பெருமான்,அவ்வாறு பலி ஏற்பதன் மூலம் பக்குவமடைந்த உயிர்கள் தங்களது மலங்களைக் கழித்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை அளிக்கும் கருணைச் செயல் உணர்த்தப் படுகின்றது. ஐந்தாவது பாடலில் தலத்து அந்தணர்கள் முறையாக பெருமானின் திருவடிகளை வழிபடும் நிலை உணர்த்தப் படுகின்றது.இரண்டாவது மூன்றாவது மற்றும் ஐந்தாவது பாடல்களில் பல தரப்பினரும் இறைவனை அன்புடன் வழிபடுவதை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அத்தகைய அடியார்கள், கொடுமையான உயிர்க்கொல்லி நோய்களால் துன்பம் அடையாதவாறும் வினைகள் அவர்களை வருத்தாதவாறும் பாதுகாப்பதும் அன்றி, இயமன் அவர்களைச் சென்றடைந்து துன்புறுத்தாத வண்ணமும் பாதுகாக்கின்றார் என்று ஆறாவது பாடல் மூலம் உணர்த்துகின்றார். ஏழாவது பாடல், தொடர்ந்து நடனம் ஆடுவதன் மூலம் பெருமான் ஐந்தொழில்கள் இயற்றி உயிர்களுக்கு நன்மை புரிந்து கொண்டே இருக்கும் நிலை சொல்லப் பட்டுள்ளது. எட்டாவது பாடல், முதலில் பகைவனாகத் திகழ்ந்த அரக்கன் இராவணனுக்கும் நன்மை புரிந்த செயல் குறிப்பிடப்பட்டு அரக்கன் மனம் மாறிய தன்மை உணர்த்தப் படுகின்றது. ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரமனும் காண முடியாமல் திகைத்த நிலை, கொடிய நஞ்சு உண்ட பின்னரும் எந்த கேட்டினையும் அடையாமல் நின்ற நிலை, காலனுக்கு காலனாக விளங்கிய நிலை குறிப்பிடப்பட்டு, பெருமானது ஆற்றல் உணர்த்தப் படுகின்றது. பத்தாவது பாடல்,பெருமானைக் குறித்து இழிவாக பொய் பிரச்சாரம் செய்யும் மாற்று மதத்தவருடன் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்ற அறிவுரை நமக்கு சொல்லப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடல், இந்த பதிகத்தை முறையாக ஓதும் அடியார்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவார்கள் என்று உணர்த்துகின்றது. இந்த பதிகத்தின் மூலம், பெருமானது பெருமையையும் அவரது பல விதமான கருணைச் செயல்களையும் அறிந்து கொள்ளும் நாம், இந்த தலம் சென்றடைந்து காரோணரை வழிபாட்டு, அவரது பெருமைகளை உணர்த்தும் தேவார திருவாசக பதிகங்களை பாடி மகிழ்வித்து, அவனது அருள் பெற்று இம்மையிலும் மறுமையிலும் சிறப்புடன் வாழ்வோமாக.