இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


வாசி தீரவே

வாசி தீரவே திருவீழிமிழலை

பின்னணி:

திருஞானசம்பந்தரும் அப்பர் பிரானும் ஒன்றாக திருவீழிமிழலை தலத்தில் தங்கி இறைபணி செய்து வந்த சமயத்தில், ஒரு முறை பருவமழை குன்றவே,உயிர்கள் உணவின்றி வருந்தும் நிலை ஏற்பட்டது. இதனால் இறைவழிபாடும் தனது தன்மையில் குறைந்தது,. இந்த நிலை கண்டு வருத்தம் அடைந்த திருஞானசம்பந்தரும் அப்பர் பிரானும், திருநீற்றுச் சார்புடைய அடியார்களும் கவலை கொள்ளும் நிலை நேர்ந்ததே என்று வருந்தினர். இதே வருத்தத்தில் அவர்கள் இருவரும் ஒருநாள் தூங்கியபோது, இறைவன் அவர்களது கனவில் தோன்றி, பசி நோய் ஆகியவை உம் இருவரையும் அணுகாது எனினும்,உம்மைச் சார்ந்த தொண்டர்களின் வாட்டம் தீர்ப்பதற்கு, யாம் தினமும், திருக்கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு பலிபீடத்தில் பொற்காசு வைப்போம் என்று மொழிந்து அருளினார். அடுத்த நாள் இருவரும் திருக்கோயில் சென்ற போது, திருஞானசம்பந்தர் கிழக்கு திசையில் உள்ள பலிபீடத்தில் ஒரு பொற்காசினைக் கண்டார். அப்பர் பிரானுக்கும், மேற்கு திசையில் உள்ள பலிபீடத்தில் ஒரு பொற்காசு கிடைத்தது; இந்த பொற்காசுகளின் உதவியால் இருவரும், தாங்கள் இருந்த மடத்தில் அன்னதானம் செய்து அடியார்களுக்கு உதவி வந்தனர்.

இவ்வாறு இருந்த ஒரு நாளில், திருஞானசம்பந்தர் இருந்து வந்த மடத்தில் அன்னம் பாலிப்பு நடைபெறுவதற்கு தாமதம் ஆகியது. திருநாவுக்கரசர் மடத்தில் உச்சிப்போதுக்கு முன்பாகவே அன்னம் பாலிப்பு தொடங்கி நடைபெற்று வருவதையும், தான் இருந்த மடத்தில் அவ்வாறு தொடங்காமல் இருந்த நிலையையும் கண்டறிந்த திருஞானசம்பந்தர், காரணம் யாது என்று உடன் இருந்த அடியார்களிடம் வினவினார். அதற்கு அடியார்கள்,. தாம் எடுத்துச் சென்ற காசு சற்று தரம் குறைந்த காரணத்தால், வட்டம் தர வேண்டும் என்று வணிகர்கள் கூறுவதாகவும், அப்பர் பிரான் பெற்ற காசினை மிகவும் விருப்பத்துடன் ஏற்றுக் கொள்கின்றனர் என்றும் கூறினர். வட்டம் என்றால், குறை கருதி மாற்றாக குறைத்து கொடுக்கப்படும் பணத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வணிகர்கள் கூறினார்கள் என்று சொன்னார்கள். இதனைக் கேட்ட திருஞான சம்பந்தர், பெருமுனிவராகிய அப்பர் பிரான் பெற்ற காசு கைத்தொண்டிற்காக பெற்ற காசு என்பதால் வாசி படாமல் இருந்தது என்றும், தானும் இனிமேல் வாசிபடாத காசு பெறும் வண்ணம் இறைவனை பாடல் பாடி இறைஞ்சுவேன் என்று முடிவு செய்தார். வாசி என்றால் குறை என்று பொருள். அடுத்த நாள் திருக்கோயில் சென்ற திருஞானசம்பந்தர் பெருமானிடம் வாசி தீர்த்தருளும் என்ற பொருள்பட வாசிதீரவே என்று தொடங்கும் பதிகம் பாடி, வாசியற்ற காசினைப் பெற்றார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு பெற்ற காசினை வணிகர்களும் தயக்கம் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ள, திருஞானசம்பந்தரின் மடத்திலும் அன்றைய தினத்திலிருந்து அனைவர்க்கும் வேளையில் உணவு அளிக்கப்பட்டது. கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தின் முதல் அடியிலேயே அப்பர் பிரான் விலக்ககிலீர் என்று தனது வேண்டுகோளை உணர்த்தியது போன்று, இந்த பாடலில் திருஞானசம்பந்தர், வாசி தீரவே காசு நல்குவீர் என்று பாடலின் தொடக்கத்தில் உணர்த்தும் நேர்த்தியை நாம் கண்டு ரசிக்கலாம்.

திருஞான சம்பந்தர் அருளிய பதிகங்களில் இரண்டே இரண்டு பதிகங்களில் தான் தனது உள்ளக் கிடக்கையை பதிகத்தின் முதல் பாடலின், முதல் அடியில் தெரிவிக்கின்றார். ஒன்று இந்த திருப்பதிகம். மற்றொன்று கல்லூர் பெருமணம் என்று தொடங்கும் திருப்பதிகம் (3.125). திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதில் சிறிதும் நாட்டம் இல்லாதிருந்த திருஞான சம்பந்தர், திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாடிய பதிகம் என்பதால், தனது விருப்பத்தை பதிகத்தின் முதல் அடியிலேயே தெரிவித்தார் போலும். பெருமானும் உடனே அசரீரி வாயிலாக, தான் உடனே திருஞானசம்பந்தருக்கும் அவரைச் சார்ந்தார்க்கும் முக்தி அளிக்கும் தன்மையை உறுதிப் படுத்துகின்றார். அதே போன்று இந்த தருணத்திலும், வாசியற்ற காசு பெறுவதில் தாமதம் ஏதேனும் ஏற்பட்டால், அடியார்களுக்கு அன்னம் பாலிப்பதில் விளையும் தாமதத்தை தவிர்க்கும் முகமாக, உடனே தனக்கு வாசியற்ற காசு வேண்டும் என்று தெரிவிக்கும் நோக்கத்துடன், இந்த பதிகத்தை வாசிதீரவெ என்று தொடங்கினார் போலும். இந்த பதிகத்தை முறையாக ஓதும் அடியார்கள், கடினமான வழக்குகளில் வெற்றி பெறுவார்கள் என்றும், அவர்கள் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும், அவர்களது மூத்த சகோதரர்களின் உடல் நலத்துடன் நன்றாக வாழ்வார்கள் என்றும் நம்பப்படுகின்றது.

இந்த பதிகத்தினை இருக்குக்குறள் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். குறள் என்றால் சிறியது என்று பொருள். சிறிய அடிகளைக் கொண்ட பாடல் என்பதை உணர்த்தும் வண்ணம் குறள் என்று அழைக்கப் படுகின்றது. ஒவ்வொரு அடியிலும் இரண்டே இரண்டு சீர்களைக் கொண்ட பாடல். மந்திரம் என்ற சொல், சொல் சுருக்கம் உள்ளது என்ற பொருளினைத் தரும். இருக்கு வேதத்தில் உள்ள மந்திரங்கள் அளவில் சிறியதாக இருக்கும் நிலை பற்றி இந்த பாடலையும் இருக்குக்குறள் என்று பெயரிட்டு சேக்கிழார் அழைத்தார் போலும். மந்திரங்கள் தன்னை எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றும் வல்லமை கொண்டது போன்று இந்த பதிகமும் அமைந்துள்ளது என்று தண்டபாணி தேசிகர் அவர்கள் கூறுவார்கள். சம்பந்தர் பதிகங்கள் அனைத்துமே இருக்கு வேதத்தின் சாரமாக கருதப் படுவதாக சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் கூறுகின்றார். முதுகுன்றத்து பதிகத்தை குறிப்பிடும் பாடலில் சேக்கிழார் இருக்குக் குறள் துணை மலர் என்று குறிப்பிடுகின்றார். ஒன்றுக்கொன்று துணையாக உள்ள இரண்டு சீர்கள் கொண்ட அடிகள் என்பதை உணர்த்தும் வண்ணம் சேக்கிழார் இவ்வாறு கூறுகின்றார். எனவே இந்த பதிகங்கள் நான்கு அடிகள் கொண்ட பாடல்களே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் பல பதிப்புகளில் இரண்டு அடிகள் கொண்ட பாடலாக இந்த பதிகங்கள் அச்சிடப் பட்டுள்ளன. சில பதிப்புகளில் இரண்டு அடிகளாக இருந்தாலும்,இடையில் கமா எனப்படும் நிறுத்தக் குறியுடன் அச்சிட்டு நான்கு அடிகள் கொண்ட பாடல்கள் என்று உணர்த்துவதையும் நாம் காணலாம்.

பாடல் 1:

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே

விளக்கம்:

வாசி=வட்டம், குறை, தரம் குறைந்த நிலை; ஏசல்=இகழுதல்; ஒருவருக்கு வாசியற்ற காசு தந்து மற்றவருக்கு வாசியுடன் கூடிய காசு தந்தமையால்,உலகத்தவர் ஏசுவார்கள் என்றும், அந்த ஏசலைத் தவிர்க்கும் முகமாக, தனக்கும் வாசியற்ற காசினைத் தரவேண்டும் என்றும் உணர்த்துகின்றார். மாசு=குற்றம்;இந்த பாடலில் தான் பெருமானை ஏசுவதாக திருஞானசம்பந்தர் அவர் சொல்லவில்லை; மற்றவர்கள் ஏசிவதையே அவர் குறிப்பிடுகின்றார் என்று நாம் உணர வேண்டும். மற்றவர்கள் பெருமானை ஏசாது இருக்கவேண்டும் என்பதே அவரது கவலையாக உள்ளது. எனவே அத்தகைய ஏசலை பெருமான் தவிர்க்கவேண்டும் என்றும் இங்கே வேண்டுகின்றார்.

பொழிப்புரை:

குற்றமற்ற வீழிமிழலையில் எழுந்தருளியுள்ள இறைவரே, அடியேனுக்கு வழங்கும் காசினில் குற்றம் ஏதும் இல்லாதவாறு நல்குவீராக; ஒரே சமயத்தில் காசு கொடுக்கும் இருவரில் ஒருவருக்கு வாசியற்ற காசும், மற்றொருவருக்கு வாசியுடைய காசும் அளித்தால், உலகத்தவர் உம்மை ஏசுவார் அல்லவா.

பாடல் 2:

இறைவ ராயினீர், மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே

விளக்கம்:

இறைவராயினீர் என்ற தொடர் மூலம், அப்பர் பிரான் மற்றும் தனக்கும் இறைவராக இருக்கும் தன்மையால், இருவருக்கும் ஒரே முறையில் அருள் செய்யவேண்டும் என்ற குறிப்பு இந்த பாடலில் அடங்கியுள்ளது. கறை=வாசி எனப்படும் குறை; முறைமை=குறையேதும் இல்லாமல் முழுமையான காசு;தில்லை மூவாயிரவர் என்பது போல வீழிமிழலை ஐந்நூற்று அந்தணர்கள் என்று சிறப்பித்து சொல்லப்படுகின்றன்ர்.

பொழிப்புரை:

எல்லொருக்கும் இறைவராக திகழும் பெருமானே, வேதங்களின் ஒலி நிறைந்த வீழிமிழலையில் எழுந்தருளியுள்ள பெருமானே, நீவிர் அளிக்கும் காசினில் உள்ள கறையினை நீக்கி, குற்றத்தைக் களைந்து, முறையாக முழுமையாக அமைந்துள்ள காசினை அளித்து அருள் புரிவீராக.

பாடல் 3:

செய்ய மேனியீர், மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர், உய்ய நல்குமே

விளக்கம்:

செய்ய=சிவந்த; உய்ய=காலம் தாழ்வின்றி அடியார்கள் அமுதுண்டு உலகம் உய்ய; பை=படம்; மெய்=உண்மைத் தன்மை; மெய்ம்மைத் தன்மை பொருந்திய மனிதர்கள் வாழும் மிழலையீர் என்று குறிப்பிடுவது, மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை என்ற திருஞானசம்பந்தர் வாய்மொழியை (1.4.1) நமக்கு நினைவூட்டுகின்றது. காலம் தாழ்த்தி உணவு வழங்கப்படுவதால், அடியார்களுக்கு நேரத்தில் உணவு படைக்கவில்லையே என்ற கவலை அடியேனை வருத்துவதால். இந்த வருத்தத்திலிருந்து அடியேனை விடுவித்து உய்வினை அடையச் செய்வீராக என்ற கருத்துடன், உய்ய நல்குமே என்று கூறுகின்றார்,செய்ய என்பதற்கு செம்மையான என்ற பொருளும் பொருந்தும். செம்மையான திருமேனியை உடைய பெருமான், அடியேன் செய்கின்ற பணி, அன்னம் பாலிக்கும் பணி செவ்வனே இருப்பதற்கு பெருமான் உதவவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார். மெய்கொள் என்ற தொடருக்கு உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானைப் போற்றும் வீழிமிழலை தலத்து மக்கள் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.

பொழிப்புரை:

சிவந்த திருமேனி உடைய பெருமானே, உண்மையான மெய்ப்பொருளாகிய நும்மை போற்றிக் கொண்டாடும் வீழிமிழ்லை தலத்தில் வீற்றிருக்கும் பெருமானே, பட்ம் கொண்டாடும் பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் ஏற்றுக்கொண்டுள்ள பெருமானே, அடியேன் உணவு அளிப்பதில் காலம் தாழ்த்தினேன் என்ற பழியிலிருந்து தப்பி உய்வினை அடையும் பொருட்டு, வாசியற்ற காசினை நல்குவீராக.

பாடல் 4:

நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறு மருளுமே

விளக்கம்:

பேறு=காலத்தில் உணவு அளிக்கும் தன்மை; பேறு என்ற சொல் பொதுவாக வீடுபேற்றினை குறிக்கும் என்றாலும், இங்கே இடம் பொருள் ஏவல் கருதி நற்பேறு, நல்ல பெயர் என்று பொருள் கொள்வது சிறப்பு. கூறு மிழலை=பலரும் புகழ்ந்து பேசும் வீழிமிழலை;

பொழிப்புரை:

தனது உடல் முழுவதும் வெண்ணீற்றினை பூசிக்கொள்ளும் பெருமானே, எருதினை வாகன்மாகக் கொண்டவரே, பலரும் புகழ்ந்து பேசும் வீழீமிழலை தலத்தினில் எழுந்தருளிய பெருமானே, உணவு அளிப்பதில் காலம் தாழ்த்துவதால் வருகின்ற அவப்பெயரினைத் தவிர்த்து காலத்தில் உணவு அளித்து நற்பெயர் பெருவதற்கு வழிவகுக்கும் வண்ணம் குறைற்ற காசினை நல்குவீராக.

பாடல் 5:

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேம நல்குமே

விளக்கம்:

தூமம்=புகை, புகைக்கு காரணமாகிய தீ; நாமம்=பெருமை; சேமம்=க்‌ஷேமம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம், நலமாக இருத்தல், இங்கே நற்பெயர் கெடாமல் பாதுகாத்தல் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது; பசிப்பிணியிலிருந்து விடுதலை;

பொழிப்புரை:

தான் செய்து கொண்டிருந்த தவத்தினை கெடுப்பதற்கு முயற்சி செய்த காமன் வெந்து அழியும் வண்ணம் தீயினை எழுப்பிய நெற்றிக் கண் உடையவரே, புகழ் மிகுந்த திருவீழிமிழலையில் வீற்றிருந்து அருள் புரியும் தன்மை உடையவரே, அடியேன் காலம் தாழ்த்தி அடியார்களுக்கு உனவு வழங்குவதால் விளைந்த அவப்பெயரை நீக்கி, அடியேனின் புகழினை பாதுகாப்பீராக.

பாடல் 6:

பிணிகொள் சடையினீர், மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர், பணிகொண் டருளுமே

விளக்கம்:

பணி கொண்டருளுமே=பணியாக ஏற்றுக்கொண்டு அருள் புரிவீர்; கைத்தொண்டு செய்த காரணத்தால் அப்பர் பிரானுக்கு வாசியற்ற காசு கிடைத்தது என்று தான் கருதியதால், தான் பெருமான் மீது பாடிய பாடல்களையும் தான் செய்த தொண்டாக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை இங்கே விடுக்கப்படுகின்றது. பிணி கொள்=பிணைத்துக் கட்டப்பட்ட;

பொழிப்புரை:

பிணித்துக் கட்டப்பட்ட சடையை உடைய பெருமானே, மாணிக்கம் பதிக்கப்பட்டது போன்று கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடைய பெருமானே,அழகு பொருந்திய வீழிமிழலையைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பெருமானே, அடியேன் உம்மைப் புகழ்ந்து பாடுவதை, உமக்கு செய்யும் தொண்டாக ஏற்றுக்கொண்டு குறையற்ற காசினை அளித்து அருள் புரிவீராக.

பாடல் 7:

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே

விளக்கம்:

துங்கை=பெரியது, உயர்வு; சங்கை=சந்தேகம்; ஐயப்பாடு; பெருமான் அடியார்களுக்கு அருள் புரிவதில் எந்த விதமான வேறுபாடும் பொதுவாக இருப்பதில்லை என்பதை நாங்கள் அறிவோம் எனினும் இருவருக்கு இரு வேறுவேறு தன்மை பொருந்திய காசினை அளித்தமையால் எமக்கு சந்தேகம் எழுகின்றது. அந்த சந்தேகத்தை தவிர்க்கும் வண்ணம் இருவருக்கும் ஒரே மாதிரியான காசினை அளித்து அருள் புரியவேண்டும் என்ற கோரிக்கை இங்கே விடுக்கப்படுகின்றது. இந்த பாடலில் பார்வதி தேவி மற்றும் கங்கை மங்கை ஆகிய இருவருக்கும் அருள் புரிந்த தன்மை சொல்லப் பட்டுள்ளது.வேறுபாடின்றி இருவரையும் எப்போதும் தமது அருகிலே வைத்துக் கொண்டு அருள் புரிவது போன்று, அப்பர் பிரானுக்கும் தனக்கும் ஒரே தன்மை உடைய காசினை அருளவேண்டும் என்று உணர்த்தும் வண்ணம் அமைந்த பாடல்.

பொழிப்புரை:

உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்ட பெருமானே, புகழில் உயர்ந்த வீழிமிழலையில் எழுந்தருளியுள்ள பெருமானே, கங்கை நதி தங்கிய சடையினை உடையவரே, இருவருக்கும் வேறுவேறு தன்மை உடைய காசு கிடைத்ததால் எமக்கு ஏற்பட்ட சந்தேகத்தினை தவிர்த்து,இருவருக்கு ஒத்த தன்மை உடைய காசினை அளித்து அருள் புரிவீராக.

பாடல் 8:

அரக்க னெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே

விளக்கம்:

கரக்கை=மறைத்தல்; வாசிபட்ட காசினை அளித்தமையால், உமது கொடைத்தன்மை சற்றே மறைக்கப்பட்டது என்று குறிப்பிடுகின்றார். கரக்கை தவிர்மினே என்ற தொடர் மூலம் உமது கொடைத் தன்மையை சிறிதும் மறைக்காமல், வாசியற்ற காசினை நல்கி, அருள் புரிவீர் என்ற கோரிக்கை விடுக்கப்படுகின்றது.தான் தவறு செய்ததால் கயிலாய மலையின் கீழே அமுக்குண்டு வருந்த வேண்டிய நிலை அரக்கன் இராவணனுக்கு ஏற்பட்டது. தவறு செய்த அரக்கன் மனம் வருந்திய போது அவனுக்கு அருள் புரிந்த நீர், குறைபாடுடைய காசு பெற்றதால் வருந்தும் அடியேனின் வருத்தத்தை போக்க வேண்டியது உமது கடமை என்று பெருமானுக்கு சுட்டிக் காட்டும் வகையில் அமைந்த பாடல். பரக்கு=பரந்த;

பொழிப்புரை:

தவறு செய்ததால், கயிலாய மலையின் கீழே அமுக்குண்டு நெருக்குண்ட அரக்கன் இராவணன், அழுது வருந்தியபோது, அரக்கன் மீது பெருமானே நீர் இரக்கம் கொண்டீர்; பரந்த புகழுடைய பெருமானே, கறை படிந்த காசினை அளித்தமையால் உமது கொடைத்தன்மை சற்று ம்றைக்கப்பட்டுள்ளது; நீர் உமது கொடைத்தன்மையை சிறிதும் மறைக்காமல் முறையான காசளித்து எமக்கு அருள் புரிவீராக.

பாடல் 9:

அயனு மாலுமாய், முயலு முடியினீர்
இயலு மிழலையீர், பயனு மருளுமே

விளக்கம்:

பயனும்=முழுமையான பயனும்; அமுதளித்தும் காலத்தோடு அளிக்காமையின் முழுமையான பயன் கிடைக்கவில்லை என்று உணர்த்துகின்றார்.முடி=தலைமைத்தன்மை; இயலும்=எல்லோரும் எளிதில் வழிபடும் வண்ணம்;

பொழிப்புரை:

பிரமனும் திருமாலும் முயன்று தேடிய போது, அவர்கள் காணமுடியாத வண்ணம் நின்று, அவர்கள் இருவருக்கும் தான் தலைவன் என்பதை உணர்த்திய பெருமானே, எல்லோரும் எளிதில் வழிபடும் வண்ணம் திருவீழிமிழலையில் வீற்றிருப்பவரே, அடியார்களுக்கு அன்னம் பாலிப்பதில் முழுப்பயனும் அடியேனுக்கு கிடைக்கும் வண்ணம் கறையற்ற காசளித்து அருள் புரிவீராக.

பாடல் 10:

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே

விளக்கம்:

பிறிவது=அருள் செய்யும் தன்மையிலிருந்து பிரிவது;

பொழிப்புரை:

ஒவ்வொன்றாக மயிர் பறிக்கப்பட்ட தலையினை உடைய சமணர்கள், அறிய வேண்டிய மெய்ப் பொருளாகிய உம்மை அறியாமல் இருக்கின்றனர். நறுமணம் கமழும் வீழிமிழலையில் உறைகின்ற பெருமானே, உம்மைப் பிரிந்து உமது அருளின்றி வாழ்வது எமக்கு மிகவும் அரிதான செயலாகும்.

பாடல் 11:

காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழு மொழிகளே

விளக்கம்:

தாழும்=விரும்பும்;

பொழிப்புரை:

சீர்காழி மாநகரத்தில் வாழும் ஞானசம்பந்தன், வீழிமிழ்லை தலத்தில் வாழும் பெருமான் மேல், மிகுந்த பணிவுடன் சொன்ன மொழிகளைக் கொண்ட பதிகம் இந்த பதிகமாகும். இந்த பதிகத்தை முறையாக ஓதுவோர் மேலானவர்கள்.



Share



Was this helpful?