இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


வரம் தரு காதை

Varam Tharu Kaathai involves stories that focus on the granting of boons, blessings, or favors, often highlighting the interactions between deities, rulers, or influential figures and those seeking their favor. These narratives typically explore themes related to the fulfillment of desires, the consequences of receiving blessings, and the impact of such gifts on individuals' lives. The tales may depict the process of asking for, granting, or receiving boons, and the resulting transformations or challenges that arise. Through engaging storytelling, Varam Tharu Kaathai examines the significance of blessings and the dynamics of giving and receiving in various contexts.


சிலப்பதிகாரம் - வரம் தரு காதை

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது-கண்ணகியாகிய திருமா பத்தினித் தெய்வம் செங்குட்டுவனை உள்ளிட்ட அரசர் பலர்க்கும் அவரவர் விரும்பிய வரத்தை ஈந்தருளிய செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு இக் காதையின்கண் இடைப்பிறவரலாகக் கண்ணகியின் தோழியாகிய தேவந்தி செங்குட்டுவனுக்கு மணிமேகலை துறவின் வரலாறு கூறதலும், தேவந்தியின்மேல் சாத்தன் என்னும் தெய்வம் ஏறி ஆடுதலும், அத் தெய்வம் தீர்த்தம் தெளிக்கச் செய்தலும் அவ்வழி அரட்டன் செட்டியின், இரட்டைப் பெண்களும் தம் முற்பிறப்புத் தோன்ற அரற்றுதலும் சேடக் குடும்பியின் சிறிமியும் அவ்வாறு அரற்றுதலும் மாடலன் அரசனுக்குத் தேவந்தியின் வியத்தகு வரலாறு விளம்புதலும், இந்நிகழ்ச்சிகளின் வாயிலாய் மாடலன் அறிவுரை பல அரசனுக்கு அறிவுறுத்தலும் சாலவும் இன்பமும் பயனும் உடையனவாம் இவற்றின் மேலும் இக் காப்பியத் திறுதியின்கண் இளங்கோவடிகளார் இக் காப்பியத்தின் பயனாக நம்மனோர் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் இவை என அறிவுறுத்துதல் மாபெரும் பயன் தரும் தன்மைத்து.

வட திசை வணங்கிய வானவர் பெருந்தகை
கடவுள் கோலம் கண்-புலம் புக்க பின்,
தேவந்திகையைச் செவ்விதின் நோக்கி,
வாய் எடுத்து அரற்றிய மணிமேகலை யார்?
யாது அவள் துறத்தற்கு ஏது? இங்கு, உரை என- 5

கோமகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி,
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய
மணிமேகலை-தன் வான் துறவு உரைக்கும்
மை ஈர் ஓதி வகை பெறு வனப்பின் 10

ஐ-வகை வகுக்கும் பருவம் கொண்டது;
செவ் வரி ஒழுகிய செழுங் கடை மழைக் கண்
அவ்வியம் அறிந்தன; அது தான் அறிந்திலள்;
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த
நித்தில இள நகை நிரம்பா அளவின; 15

புணர் முலை விழுந்தன; புல் அகம் அகன்றது;
தளர் இடை நுணுகலும், தகை அல்குல் பரந்தது;
குறங்கு இணை திரண்டன; கோலம் பொறாஅ
நிறம் கிளர் சீறடி நெய் தோய் தளிரின;
தலைக்கோல் ஆசான் பின் உளனாக, 20

குலத் தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார்;
யாது நின் கருத்து? என் செய்கோ? என,
மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப-
வருக, என் மட மகள் மணிமேகலை! என்று,
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு 25

விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய,
கோதைத் தாமம் குழலொடு களைந்து,
போதித்தானம் புரிந்து, அறம்படுத்தனள்-
ஆங்கு, அது கேட்ட அரசனும் நகரமும்
ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர்- 30

தம்மில் துன்பம் தாம் நனி எய்த,
செம்மொழி மாதவர், சேயிழை நங்கை
தன் துறவு எமக்குச் சாற்றினள் என்றே
அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர்
பருவம் அன்றியும் பைந் தொடி நங்கை 35

திரு விழை கோலம் நீங்கினள் ஆதலின்,
அரற்றினென் என்று, ஆங்கு, அரசற்கு உரைத்தபின்-
குரல் தலைக் கூந்தல் குலைந்து பின் வீழ;
துடித்தனள் புருவம்; துவர் இதழ்ச் செவ் வாய்
மடித்து, எயிறு அரும்பினள்; வரு மொழி மயங்கினள்; 40

திரு முகம் வியர்த்தனள்; செங்கண் சிவந்தனள்;
கைவிட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள்
பலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்
உலறிய நாவினள்; உயர் மொழி கூறித்
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான்- 45

கொய் தளிர்க் குறிஞ்சிக் கோமான்-தன் முன்
கடவுள்-மங்கலம் காணிய வந்த
மடமொழி நல்லார் மாண் இழையோருள்,
அரட்டன் செட்டி-தன் ஆய்-இழை ஈன்ற
இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும், 50

ஆடகமாடத்து அரவு-அணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறு மகள் ஈங்கு உளள்
மங்கல மடந்தை கோட்டத்து-ஆங்கண்
செங் கோட்டு உயர் வரைச் சேண் உயர் சிலம்பில்,
பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை, நிரம்பிய 55

அணி கயம் பல உள; ஆங்கு அவை இடையது,
கடிப்பகை நுண் கலும், கவிர் இதழ்க் குறுங் கலும்,
இடிக் கலப்பு அன்ன இழைந்து உகு நீரும்,
உண்டு ஓர் சுனை; அதனுள் புக்கு ஆடினர்
பண்டைப் பிறவியர் ஆகுவர்; ஆதலின், 60

ஆங்கு-அது கொணர்ந்து, ஆங்கு, ஆய்-இழை கோட்டத்து
ஓங்கு இருங் கோட்டி இருந்தோய்! உன் கை,
குறிக்கோள் தகையது; கொள்க எனத் தந்தேன்;
உறித் தாழ் கரகமும் உன் கையது அன்றே;
கதிர் ஒழிகாறும் கடவுள் தன்மை 65

முதிராது; அந்நீர் முத் திற மகளிரைத்
தெளித்தனை ஆட்டின், இச் சிறு குறுமகளிர்
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்;
பாசண்டன் யான்; பார்ப்பனி-தன்மேல்,
மாடல மறையோய்! வந்தேன் என்றலும்- 70

மன்னவன் விம்மிதம் எய்தி, அம் மாடலன்-
தன் முகம் நோக்கலும்-தான் நனி மகிழ்ந்து,
கேள் இது, மன்னா! கெடுக நின் தீயது!
மாலதி என்பாள் மாற்றாள் குழவியைப்
பால் சுரந்து ஊட்ட, பழ வினை உருத்து, 75

கூற்று உயிர் கொள்ள, குழவிக்கு இரங்கி,
ஆற்றாத் தன்மையள், ஆர் அஞர் எய்தி,
பாசண்டன்பால் பாடுகிடந்தாட்கு,
ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி
வந்தனன்; அன்னை! நீ வான் துயர் ஒழிக என, 80

செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி,
பார்ப்பனி-தன்னொடு பண்டைத் தாய்பால்
காப்பியத் தொல் குடிக் கவின் பெற வளர்ந்து,
தேவந்திகையைத் தீவலம் செய்து,
நால்-ஈர்-ஆண்டு நடந்ததன் பின்னர், 85

மூவா இள நலம் காட்டி, என் கோட்டத்து,
நீ வா என்றே நீங்கிய சாத்தன்,
மங்கலமடந்தை கோட்டத்து ஆங்கண்,
அங்கு உறை மறையோனாகத் தோன்றி,
உறித் தாழ் கரகமும் என் கைத் தந்து, 90

குறிக்கோள் கூறிப் போயினன்; வாரான்
ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின்,
ஈங்கு இம் மறையோள்-தன்மேல் தோன்றி,
அந் நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன்-
மன்னர் கோவே! மடந்தையர்-தம்மேல் 95

தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப-
ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின்,
புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின்
இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய்;
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு தனி, 100

காதலன்-தன்னொடு கடுந் துயர் உழந்தாய்;
யான் பெறு மகளே! என் துணைத் தோழீ!
வான் துயர் நீக்கும் மாதே, வாராய்!-
என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை-
தன்னோடு இடை இருள் தனித் துயர் உழந்து, 105

போனதற்கு இரங்கிப் புலம்புறும் நெஞ்சம்;
யான் அது பொறேஎன்; என் மகன், வாராய்!-
வரு புனல் வையை வான் துறைப் பெயர்ந்தேன்;
உருகெழு மூதூர் ஊர்க் குறுமாக்களின்
வந்தேன் கேட்டேன்; மனையில் காணேன்; 110

எந்தாய்! இளையாய்! எங்கு ஒளித்தாயோ?-
என்று, ஆங்கு, அரற்றி, இனைந்துஇனைந்து ஏங்கி,
பொன் தாழ் அகலத்துப் போர் வெய்யோன் முன்,
குதலைச் செவ் வாய்க் குறுந் தொடி மகளிர்
முதியோர் மொழியின் முன்றில் நின்று அழ- 115

தோடு அலர் போந்தைத் தொடு கழல் வேந்தன்
மாடல மறையோன்-தன் முகம் நோக்க,
மன்னர் கோவே, வாழ்க! என்று ஏத்தி,
முந்நூல் மார்பன் முன்னியது உரைப்போன்;
மறையோன் உற்ற வான் துயர் நீங்க, 120

உறை கவுள் வேழக் கைஅகம் புக்கு,
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி-தன்மேல் காதலர் ஆதலின்,
மேல்நிலை உலகத்து அவருடன் போகும்
தாவா நல் அறம் செய்திலர்; அதனால், 125

அஞ் செஞ் சாயல் அஞ்சாது அணுகும்
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின்,
பொன்-கொடி-தன்மேல் பொருந்திய காதலின்,
அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி
மட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின் 130

உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர்-
ஆயர் முதுமகள் ஆய்-இழை-தன்மேல்
போய பிறப்பில் பொருந்திய காதலின்,
ஆடிய குரவையின், அரவு-அணைக் கிடந்தோன்
சேடக் குடும்பியின் சிறு மகள் ஆயினள்- 135

நல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்,
அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்,
அறப் பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்,
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்,
புதுவது அன்றே; தொன்று இயல் வாழ்க்கை- 140

ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி,
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்,
செய் தவப் பயன்களும், சிறந்தோர் படிவமும்,
கை அகத்தன போல், கண்டனை அன்றே;
ஊழிதோறு உழி உலகம் காத்து, 145

நீடு வாழியரோ, நெடுந்தகை! என்ற
மாடல மறையோன்-தன்னொடும் மகிழ்ந்து-
பாடல்சால் சிறப்பில் பாண்டி நல் நாட்டுக்
கலி கெழு கூடல் கதழ் எரி மண்ட
முலைமுகம் திருகிய மூவா மேனி 150

பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து,
நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி,
பூவும், புகையும், மேவிய விரையும்,
தேவந்திகையைச் செய்க என்று அருளி,
வலமுறை மும் முறை வந்தனன் வணங்கி, 155

உலக மன்னவன் நின்றோன் முன்னர்-
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,
குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும், 160

எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின்
நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்
வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட-
தந்தேன் வரம்! என்று எழுந்தது ஒரு குரல்-
ஆங்கு, அது கேட்ட அரசனும், அரசரும், 165

ஓங்கு இருந் தானையும், உரையோடு ஏத்த,
வீடு கண்டவர்போல், மெய்ந் நெறி விரும்பிய
மாடல மறையோன்-தன்னொடும் கூடி,
தாழ் கழல் மன்னர் தன் அடி போற்ற,
வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின்- 170

யானும் சென்றேன்; என் எதிர் எழுந்து,
தேவந்திகைமேல் திகழ்ந்து தோன்றி,
வஞ்சி மூதூர் மணி மண்டபத்திடை
நுந்தை தாள் நிழல் இருந்தோய்! நின்னை
அரைசு வீற்றிருக்கும் திருப் பொறி உண்டு என்று, 175

உரைசெய்தவன் மேல் உருத்து நோக்கி,
கொங்கு அவிழ் நறுந் தார்க் கொடித் தேர்த் தானைச்
செங்குட்டுவன்-தன் செல்லல் நீங்க,
பகல் செல் வாயில் படியோர்-தம்முன்,
அகலிடப் பாரம் அகல நீக்கி, 180

சிந்தை செல்லாச் சேண் நெடுந் தூரத்து,
அந்தம் இல் இன்பத்து, அரசு ஆள் வேந்து என்று-
என் திறம் உரைத்த இமையோர் இளங்கொடி-
தன் திறம் உரைத்த தகைசால் நல் மொழி
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!- 185

பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்; 190

செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
பொய்க் கரி போகன்மின்; பொருள்-மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்; 195

அற மனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்
இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது; 200

செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்.

உரை

செங்குட்டுவன் தேவந்திகையை வினாதல்

1-5: வடதிசை............உரையென்

(இதன் பொருள்) வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை-வடநாட்டு மன்னர்களை வென்று தன் அடிப்படுத்த சேரர் குலத்தோன்றலாகிய பெருந்தகைமை மிக்க செங்குட்டுவனுடைய கண்புலம் கடவுட் கோலம் புக்க பின்-கண்ணறிவிற்குக் கண்ணகியினுடைய தெய்வத்திருவுருவம் தோற்றமளித்த பின்னர் அம் மன்னவன்; தேவந்திகையைச் செவ்விதின் நோக்கி-தேவந்திகை என்னும் பார்ப்பன் மகளை நன்கு பார்த்து; வாயெடுத்து அரற்றிய மணிமேகலை யார்? அவள் துறத்தற்கு ஏது யாது ஈங்கு உரையென-அன்னையே! இம் மூதாட்டி இப்பொழுது மணிமேகலை துறவும் கேட்டாயோ தோழீ! என்று வாய்விட்டு அழுவதற்குக் காரணமான அந்த மணிமேகலை என்பவள் யார்? அவள் தானும் துறவி ஆதற்குக் காரணம் தான் யாது? இவற்றை இப்பொழுது எனக்குக் கூறுவாயாக என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) வாயெடுத்தரற்றியது அடித்தோழி ஆதலின் இம் மூதாட்டி என வருவித்துக் கூறிக் கொள்க. வானவர்-சேரர். கடவுட் கோலம்-கண்ணகியார் வானத்தின்கண் திருவுருக்கொண்டு காட்டிய காட்சி. கட்புலம்-கண்ணறிவு. அரற்றுதல்-புலம்புதல் ஏது-காரணம்.

தேவந்திகை சேரனுக்கு மணிமேகலையின் வரலாறு செப்புதல்

6-9: கோமகன்..........உரைக்கும்

(இதன் பொருள்) நாடுபெருவளம் சுரக்க என்று ஏத்தி-அதுகேட்ட தேவந்திகை மன்னனை நோக்கி வேந்தர் பெருமானே! நின்னுடைய ஆட்சியிலமைந்த நாடு மிகுந்த வளங்களைத் தருவதாக என்று சொல்லி அரசனைப் பாராட்டிப் பின்னர்; அணிமேகலையார் ஆயத்து ஓங்கிய மணிமேகலை தன் வான்துறவு உரைக்கும்-அழகிய மேகலை முதலிய அணிகலன்களையுடையவராகிய தோழியர் கூட்டத்தினுள் இருக்கும் பொழுதும் உயர்ந்த தனித்தன்மையுடன் விளங்குகின்ற மணிமேகலையினது தூய துறவுக் கோலத்தின் வரலாற்றினைப் பின் வருமாறு கூறுவாள் என்க.

(விளக்கம்) அரசனுக்கு ஏதேனும் சொல்லத் தொடங்குபவர் வாழ்த்தித் தொடங்குதல் மரபு. அணி-அழகு; அணிகின்ற மேகலை எனினுமாம். மேகலையாராகிய ஆயம் என்க. ஆயம்-மகளிர் குழாம். ஓங்கிய தோற்றத்தால் உயர்ந்து தோன்றுகின்ற என்றவாறு. துறவு துறவிற்குரிய காரணம்.

இதுவுமது

10-23: மையீரோதி.............உரைப்ப

(இதன் பொருள்) மாதவி நற்றாய்-வேந்தே! மணிமேகலை என்பவள் மாதவிக்கும் கோவலனுக்கும் மகளாவாள். கோவலனுக்குற்றது கேட்டு மாதவி துறவு பூண்டாள். அதன் பின்னர் அம் மாதவியின் தாயாகிய சித்திராபதி என்னும் முதிய கணிகை மாதவியின்பாற் சென்று அம் மணிமேகலையின்கண் நிலைமை கூறுபவள் மகளே! கேள் நின் மகள் மணிமேகலைக்கு மைஈர்ஓதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது-அவளது கரிய நெருப்புடைய கூந்தல் கூறுபடுத்துதலாலே உண்டாகும் அழகிற்கேற்ப ஐந்து வகையாக வகுக்கும் பருவத்தை யெய்தியது; செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலன் -அவளது செவ்வரி படர்ந்த வளமான குளிர்ந்த கண்ணினது கடைப்பகுதி கண்டோரை மயக்கும் செயலை அறிந்து கொண்டன, அச் செயலை அம் மணிமேகலை இன்னும் அறியாதிருக்கின்றனள்; பவளத்துள் ஒளி ஒத்து ஒளிர் சிறந்த நித்தில இளநகை நிரம்பா அளவின்-இதழ்களாகிய பவளச் செப்பினுள்ளே ஒளியானும் நிரலானும் தம்முள் ஒத்து விளங்குகின்ற முத்துகளைப் போன்ற இளமையுடைய பற்கள் இன்னும் முழுதும் நிரம்பாத அழகினை உடையனவாயின: புணர்முலை விழுந்தன-புணர்தற்குக் காரணமான முலைகள் அடியுற் றெழுந்தன; புல் அகம் அகன்றது தளர் இடை நுணுகலும் தகை அல்குல் பரந்தது-தழுவுதற்குரிய மார்பிடம் விரிந்தது அதற்கேற்பத் தளருகின்ற அவளுடைய இடை பின்னும் நுண்ணிதாகலும் அழகிய அவளுடைய அல்குற் பரப்பும் விரிவதாயிற்று; குறங்கு இணைதிரண்டன கோலம் பொறா-அவளுடைய அல்குற் பரப்பும் விரிவதாயிற்று; குறங்கு இணைதிரண்டன கோலம் பொறா-அவளுடைய தொடைகளிரண்டும் திரண்டன ஆயினும் அணிகலன்களைப் பொறுக்க மாட்டாவாயின; நிற்கிளர் சீறடி அடிகள் நெய் தோய்க்கப் பெற்ற மாந்தளிர் போல்வனவாயின; தலைக்கோல் ஆசான் பின் உளனாகக் குலத்தலை மாக்கள் கொள்கையிற் கொள்ளார்-அவளுக்குப் பயிற்றுவிக்கும் ஆடலாசிரியன் முன் வாராமையாலே அவளை உயர்குடியினராகிய நகரமாந்தர் சிறந்த கணிகையாக ஏற்றுக் கொள்கிலர்; இங்ஙனம் ஆதலின்; நின் கருத்து யாது? அவளைப் பற்றிய நின்னுடைய எண்ணந்தான் என்னையோ? என் செய்கு என மாதவிக்குரைப்ப-அவளை ஈன்ற தாயாகிய நீ செய்யக் கடவன செய்யாதொழியின் மிகவும் முதியவளாகிய நான் என் செய்ய மாட்டுவேன், என்று இரங்கி அம் மாதவிக்குக் கூறா நிற்ப என்க.

(விளக்கம்) மாதவி நற்றாய் என(23) என்பதனை மையீரோதி (10) என்பதன்முன் கூட்டுக. ஆண்டு இசையெச்சத்தால் கூற வேண்டுவன பலவும் கூறிக் கொள்க. அவ்வியம்-வஞ்சம் முதலிய தீக் குணங்கள். அவள் கண்கள் தம்மைக் கண்டோரை வஞ்சித்து மயக்கும் தன்மையுடையனவாய் விட்டன. அத்தன்மையை அவள் இன்னும் அறிந்திலள் என்றவாறு. பவளம்-வாய் இதழ்களுக்குக் குறிப்புவமம். முலை விழுந்தன என்றது அவை அடியிட்டு எழுந்தன என்றவாறு. மாதர்க்குக் கண்ணும் தோளும் அல்குலும் பெருகியிருத்தல் வேண்டுமென்பர். குறங்கு தொடை. தமது மென்மையால் அணிகலன்களை அத் தொடைகள் பொறா என்றவாறு. தலைக்கோலாசான் என்றது ஆடலாசிரியனை தாயாகிய நீ இங்ஙனம் இருத்தலின் ஆசிரியன் முன் வரத் தயங்கிப் பிண்ணிடுகின்றான் என்பாள் தலைக்கோலாசான் பின்னுளன் ஆக என்றாள். குலத்தலை மாக்கள் என்றது உயர்குடிப் பிறப்பாளராகிய செல்வர் மக்களை. ஆடல் முதலிய கலைப் பயிற்சியுடைய கணிகை மகளிரே சிறந்தோர் என்று உலகம் கொள்ளுதலுண்மையின் நின் மகளை அவ்வாறு உயர்ந்தவளாகக் கருத மாட்டார் என்றவாறு. நின் கருத்து யாது என்றது துறந்தவளாகிய உன்னுடைய கருத்து அவளைப் பற்றி எங்ஙன முளது என்று மணிமேகலைக்கு இரங்கிக் கூறியவாறு. என் செய்கு-யான் என் செய்வேன். தான் மிகவும் முதியவளாதலின் அவட்கு யான் ஏதும் நலன் செய்ய வல்லேனல்லேன் என்று இரங்குவாள் என் செய்கு? என்றாள். இத்துணையும் தேவந்தி மணிமேகலையின் இயல்பு கூறுபவன் அவளைப் பற்றிச் சித்திராபதி கூறியவற்றைக் கூறிய படியாம்.

தேவந்திகை மாதவியின் செயல் கூறியது

24-28: வருக........படுத்தனள்

(இதன் பொருள்) என் மடமகள் மணிமேகலை வருக என்று-அரசே! மாதவி தன் தாயாகிய சித்திராபதி கூறியவை கேட்டு அவள் பேததைமைக் கிரங்கியவளாய் என்னுடைய இளமை ததும்பும் மகளாகிய அம் மணிமேகலை என்பாள் ஈங்கு வருவாளாக வென்றழைத்து; உருவிலாளன் ஒரு பெருஞ் சிலையொடு விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய-உருவமில்லாதவனாகிய காமவேள் தன்னுடைய ஒப்பற்ற பெரிய கருப்பு வில்லோடு மணமுடைய மலராகிய அம்புகளையும் வறிய நிலத்தின்மேல் வீசி விட்டு வருந்தும்படி; கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித்தானம் புரிந்து அறம் படுத்தனள்-அம் மணிமேகலையினுடைய மலர் மாலை மணிமாலை முதலிய மாலைகளை அவளது அழகிய கூந்தலோடே களையும்படி செய்து புத்தப்பள்ளியில் விடுத்து விரும்பி அப் புத்தர் அறத்தை மேற்கொள்வித்தனள் என்றாள் என்க.

(விளக்கம்) உருவிலாளன்-அனங்கள்; காமவேள். சிலை-ஈண்டுக் கருப்பு வில். காமவேள் இவளைக் கருவியாகக் கொண்டு தன்னாலே வெல்லுதற்குரிய துறவோர் பலரையும் வெல்லக் கருதியிருந்தானாதலால் அவள் துறவு பூண்டமையால் பெரிதும் வருந்தி வில் முதலியவற்றை வீசியெறிந்தான் என்பது கருத்து போதித்தானம்-பவுத்தப்பள்ளி அறம் படுத்தல்-வைராக்கியம் சொல்லுதல்.

இதுவுமது

29-37: ஆங்கது..........உரைத்தபின்

(இதன் பொருள்) ஆங்கு அது கேட்ட அரசனும் நகரமும்-அப் பொழுது மாதவி மணிமேகலையைத் துறவறம் புகுத்த அச் செய்தியைக் கேள்வியுற்ற சோழ மன்னனும் அப் புகார் நகரத்து வாழ்கின்ற மக்களும்; ஓங்கிய நல்மணி உறுகடல் வீழ்த்தோர் தம்மின் தாம் துன்பம் நனி எய்த-உயர்ந்த சிறந்த மாணிக்கத்தைப் பெரிய கடலின் நடுவே வீழ்த்தி விட்டவர் போன்று தமக்குள்ளே பெருந் துன்பத்தைப் பெரிதும் எய்தா நிற்ப; செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தன் துறவு எமக்குச் சாற்றினர் என்றே-நடுவு நிலைமை உடைய மொழியையுடைய பெரிய தவத்தையுடைய அறவணவடிகளார் சிவந்த அணிகலனை அணிதற்கியன்ற மகளிருள் சிறந்த மணிமேகலை தனது துறவற உறுதி மொழியை எம் முன்னிலையிற் சொல்லினள் என்று அரசர் பெருமானே! அவ்வறவண அடிகளார் தாமே; அன்பு உறு நல்மொழி அருளொடுங் கூறினர்-அன்புமிக்க இந்த நல்ல செய்தியை என்பால் அருளுடைமையால் சொல்லினர் என்று அரசற்கு கூறி அத் தேவந்திகை பின்னரும்; ஆங்கு அரசற்கு பருவம் அன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கினளாதலின் அரற்றினென் என்று உரைத்த பின் மீண்டும் அச் செங்குட்டுவனுக்குப் பெருமானே! துறவு பூண்பதற்குரிய பருவம் இல்லாமலேயே பசிய வளையலையணிந்த அம் மணிமேகலை திருமகளும் விரும்புதற்குக் காரணமான தனது பேரழகைத் துறந்தாளாதலாலே அந் நிகழ்ச்சியை நினைந்து அடியேன் அழுதேன் என்று கூறிய பின்னர் என்க.

(விளக்கம்) அது-அச் செய்தி அரசன்: சோழ மன்னன். நகரம்-நகர் வாழ் மக்கள்: ஆகுபெயர் வீழ்த்தோர் தம்மின் வீழ்த்தவரைப் போல மாதவர்: அறவணவடிகள். மாதவர், நங்கை எமக்குத் துறவு சொன்னாள் என்று கூறினர் எனக் கூட்டுக. பருவம்-துறத்தற்குரிய பருவம். அஃதாவது காமம் சான்ற கடைக்கோள்காலை திரு-திருமகள் அதனை நினைந்து அரற்றினேன் என்றவாறு.

தேவந்திகை மேல் தெய்வம் ஏறி ஆடுதல்

38-45: குரற்றலை............தான்

(இதன் பொருள்) குரல்தலைக் கூந்தல் குலைந்து பின்வீழ-இவ்வாறு செங்குட்டுவனுக்கு மணிமேகலையின் திறம் உரைத்து நின்ற பொழுது கதுமெனக் கொத்துகளைத் தன்னிடத்தேயுடைய தனது கூந்தல் தானே அவிழ்ந்து முதுகிலே சரியா நிற்ப அத் தேவந்திகை; புருவந் துடித்தனள் துவர் இதழச் செவ்வாய் மடித்து எயிறு அரும்பினள் வருமொழி மயங்கினள்-தன் புருவங்களிரண்டும் துடிக்கப் பெற்றனள், பவளம் போன்ற இதழ்களையுடைய தனது சிவந்த வாயை மடித்துப் புன்முறுவல் பூத்தனள்; தானே புறப்படுகின்ற மொழிகள் மயங்கப் பெற்றனள்; திருமுகம் வியர்த்தனள் செங்கண் சிவந்தனள்-தனது அழகிய முகத்தில் வியர்வை துளிக்கப் பெற்றனள்-இயல்பாகவே சிவந்த தன் கண்கள் மேலும் சிவப்பேறப் பெற்றனள்; கைவிட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள்-தன் கைகளை ஒற்றையும் இரட்டையுமாகித் திசைகளிலே விட்டெறிந்தனள், கால்களை நின்ற நிலையினின்றும் பெயர்த்து ஆடினள்; பலர் அறிவாரா தெருட்சியள் மருட்சியள் உலறிய நவினள் உயர் மொழி கூறி-அங்கு நின்ற மக்கள் பலரும் அறிய வொண்ணாத தெளிவும் மயக்கமும் உடையவளாய் நீர் வற்றிய நாவினை உடையவளாய் உயர்ந்த மொழிகளைக் கூறிக் கொண்டு; தெய்வம் உற்று எழுந்த தேவந்திகைதான்-தெய்வமேறப் பெற்று எழுந்தாடிய அத் தேவந்திகை என்னும் பார்ப்பனி தானும் என்க.

(விளக்கம்) குரல்-கொத்து. எயிறு அரும்புதல்-புன்முறுவல் பூத்தல். தெய்வத்தினருளால் தானே தோன்றும் மொழி என்பார். வருமொழி என்றார். இப் பகுதியில் தெய்வம் ஏறி ஆடுவோர் இயல்பை இயற்கை நவிற்சியாக அடிகளார் ஓதியிருத்தலுணர்க. இதனோடு தெய்வ முற்றே னவிநயஞ் செப்பிற் கைவிட் டெறிந்தகலக்க முடைமையு மடித்தெயிறு கவுவிய வாய்த்தொழி லுடைமையும் துடித்த புருவமுந் துளங்கிய நிலையும் செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும் எய்து மென்ப வியல்புணர்ந் தோரே என வரும் அடியார்க்கு நல்லார் மேற்கோள் ஒப்ப நோக்கற்பாலது.

தேவந்திகை செங்குட்டுவனுக்கு முன்பு மாடலனுக்குக் கூறுகின்ற தெய்வ மொழிகள்

46-52: கொய்தவிர்............ஈங்குளள்

(இதன் பொருள்) கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் தன்முன்-கொய்துகட்டிய தளிர் விரவிய குறிஞ்சிப் பூமாலையையுடைய அரசர் பெருமானாகிய சேரன் செங்குட்டுவன் முன்னிலையிலே மாடலனைநோக்கிக் கூறுபவன் மாணிழையோருள்-கற்புடைக் கடவுளாகிய கண்ணகியின் மங்கல விழாக் காண வந்த அழகிய மொழியையுடைய மாட்சிமையுடைய அணிகலனணிந்த இம் மகளிர் கூட்டத்தினுள்; அரட்டன் செட்டி தன் ஆயிழை ஈன்ற இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும்-அரட்டன் செட்டி என்னும் வணிகனுடைய மனைவி ஈன்ற இரட்டையாகப் பிறந்த அழகிய பெண்களிருவரும் இருக்கின்றனர் அவர்களையல்லாமலும்; ஆடக மாடத் தரவணைக்கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குள்ள-திருவனந்தபுரத்தின்கண் அரவணையின்மிசை அறிதுயில் கொண்டு கிடந்தருளிய திருமாலுக்குத் திருத்தொண்டு புரிகின்ற குடும்பத்தலைவனது இளமகள் ஒருத்தியும் இங்கு வந்திருக்கின்றனள் என்றாளென்க.

(விளக்கம்) இவை செங்குட்டுவன் முன்னிலையிலே தேவேந்திகை என்னும் பார்ப்பனியின் மேலேறிய தெய்வத்தின் மொழிகள். கொய்தற்குரிய தளிரையுடைய குறிஞ்சி தழைத்துள்ள மலை நாட்டுக் கோமான் எனினுமாம். கடவுள்-கண்ணகிக் கடவுள். அரட்டன்: பெயர். ஆயிழை, மனைவி என்னும் பொருட்டு இரட்டைப் பெண்கள்-ஒரே கருவிலிருந்து பிறந்த இரண்டு பெண்கள். ஆடகமாடம் என்பது திருவனந்தபுரத்துத் திருமால் கோயிலை குடும்பி-குடும்பத்தையுடையவன். சிறுமகள்-ஆண்டிளையாள்.

இதுவுமது

53-60: மங்கல..........ஆகுவர்

(இதன் பொருள்) மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண்-மங்கலா தேவியின் கோயிலமைந்துள்ள அவ்விடத்தே செங்கோட்டு உயர் வரைச் சேண் உயர் சிலம்பின்-செங்குத்தாக உயர்ந்துள்ள குவடுகளையும் உயர்ந்து வளர்ந்த மூங்கிலையும் உடைய தாய் மிகவும் உயர்ந்திருக்கின்ற மலையின்கண்! பிணிமுக நெடுங்கல் பிடர்த்தலை-மயில் போன்ற உருவமைந்ததொரு பாறையின்மேல்; நிரம்பிய அணி கயம் பலவுள-நீரான் நிரம்பிய அழகிய சுனைகள் பலவுள்ளன; ஆங்கு அவை இடையது கடிப்பகை நுண்கலுங் கவிர் இதழ்க் குறுங்கலும் இடிக்கலப்பு அன்ன இழைந்துகு நீரும் உண்டோர் சுனை-அவ்விடத்தே அச் சுனைகளின் நடுவண் உளதாய் வெண் முருக்கம்பூவினது இதழ்களைப் போன்ற குறிய செந்நிறக் கற்களும் பன்னிற மாவுகளையும் விரவினாற் போன்ற நிறமுடையதாய் நெகிழ்ந்து வீழ்கின்ற நீரினையும் உடையதாய் உளது ஒரு சுனை; அதன் உள் புக்காடினர் பண்டைப் பிறவியராகுவர்-அச் சுனையின்கண் புகுந்து நீராடியவர்கள் பழைய பிறப்பினது நினைவினை உடையராகிவிடுவர் என்றாள் என்க.

(விளக்கம்) மங்கல மடந்தை என்பதற்கு அரும்பதவுரையாசிரியர் மங்கலாதேவி என்று பொருள் கூறினர். எனவே இத் தெய்வம் பிறிதொரு தெய்வம் என்றே கொள்ளற்பாலது. இத் தெய்வத்தைக் கண்ணகி என்று கொள்வாருமுளர். அவர் உரை பொருந்தாமை தேவந்திகையின் மேலேறிய சாத்தன் என்னுந் தெல்வம் ஈண்டுக் கூறுஞ் செய்திகள் இறந்த காலத்தன், ஆதலினாலென்க. கோட்டம் கோயில். செங்கோடு-செங்குத்தாக வுயர்ந்த குவடு. பிணிமுகம்-மயில் கயம்-சுனை. கடிப்பகை-வெண் சிறுகடுகு. கவிரிதழ்-முருக்கம் பூவின் இதழ். இது வண்ணமும் வடிவமும் பற்றி உவமை. பண்டைப் பிறவியர்-முற்பிறப்பின் நினைவுகளை உடையவர்.

இதுவுமது

60-70: ஆதலின்.............என்றலும்

(இதன் பொருள்) ஆதலின் ஆங்கு அது கொணர்ந்து-அங்ஙன மாதலின் அவ்விடத்துள்ள அச் சுனைநீரைக் கொண்டுவந்து; ஆங்கு ஆயிழை கோட்டத்து ஓங்கு இருங்கோட்டி இருந்தோய்- அப்பொழுது அம் மங்கலாதேவியின் கோயிலினது உயர்ந்த பெரிய மாட வாயிலின்கண் நீ இருந்தனையாதலின்; உன் கைக்குறிக்கோள் தகையாது கொள்க எனத் தந்தேன்-உன்னுடைய கையில் கொடுத்த யான் இந்நீர் தெய்வத் தன்மையுடையதாதலின் நின்னால் குறிக்கொண்டு போற்றி வைத்துக் கொள்ளும் தன்மையது என்று சொல்லி இதனைக் கொள்வாயாக என்று கொடுத்தேன் அல்லனோ! அந் நீரையுடைய; உறித்தாழ் கரகமும் உன் கையது அன்றே-உறியின்கண் வைக்கப்பட்ட அந் நீர்க் கரகமும் இப்பொழுது உன் கையின்கண் உளதன்றோ; கதிர் ஒழி காறும் கடவுள் ஆட்டின்-ஞாயிறும் திங்களும் அழிந்தொழியுங்காறும் அந் நீரினது கடவுட்டன்மை முதிர்ந்தொழியாது அற்றை நாள்போலவே இருப்பதாம், அத்தகைய அந்த நீரை யான் முன் கூறிய அரட்டன் செட்டியின் இரட்டைப் பெண்களும் சேடக் குடும்பியின் சிறு மகளுமாகிய அம் மூன்று மகளிரின் தலையில் தெளித்து நீராடினால்; இச்சிறு குறுமகளிர் ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்-இம்மூன்று சிறிய குறிய மகளிரும் முற்பிறப்பின் உணர்ச்சியை உடையராகுவர். இவ்வுண்மையை நீ அங்ஙனம் செய்து காண்பாயாக!; மாடல மறையோய் யான் பாசண்டன் பார்ப்பனி தன்மேல் வந்தேன் என்றலும்-மாடல மறையோனே! யான் பாசண்டச் சாத்தன் என்னும் தெய்வம் காண்! என்னோடு தொடர்புடைய இந்தத் தேவந்தியாகிய பார்ப்பனியின் மேல் வந்துள்ளேன் என்று தேவந்திகையின் மேல் வந்த அத் தெய்வம் கூறுதலும் என்க.

(விளக்கம்) அது-அந்நீர். ஆயிழை என்றது மங்கலா தேவி யென்னும் தெய்வத்தை. கோட்டத்துக் கோட்டி-கோயில் வாயில். ஞாயிறும் திங்களும் என்பார் கதிர் எனப் பொதுமையில் ஓதினர் மூன்று மகளிரும் மூவகைத் தனித் தன்மையுடையராதலின் முத்திற மகளிர் எனப்பட்டனர். ஒளித்த பிறப்பு-மறைந்த பிறப்பு. அஃதாவது முற்பிறப்பு. காணாய் என்றது அங்ஙனம் செய்து காண்பாயாக என்றவாறு. பாசண்டன்-பாசண்டச் சாத்தன் என்னுந் தெய்வம். பார்ப்பனி என்றது என்னோடு தொடர்புடைய பார்ப்பனி என்பதுபட நின்றது.

மாடலன் அத் தெய்வக் கூற்றினை மன்னனுக்கு விளக்குதல்

71-80: மன்னவன்.............ஒழிகென

(இதன் பொருள்) மன்னவன் விம்மிதம் எய்தி அம் மாடலன் தன்முக நோக்கலும்-தேவந்திகையின் தெய்வ மொழி கேட்ட செங்குட்டுவன் பெரிதும் வியப்படைந்து அம் மாடல மறையோனுடைய முகத்தை நோக்குதலும்; தான் நனி மகிழ்ந்து இது கேள் மன்னா நின் தீயது கேடுக-அரசனுடைய குறிப்பறிந்த மாடல மறையோன் பெரிதும் மகிழ்ந்து இச் செய்தியை யான் கூறுவேன் கேட்டருள்க! அரசே! நினக்குத் தீமை ஒழிவதாக; மாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப் பால் சுரந்து ஊட்டப் பழவினை யுருத்துக் கூற்று உயிர்கொள்ள-பூம்புகார் நகரத்திலே மாலதி என்னும் பெயரையுடைய பார்ப்பனி ஒருத்தி தன் மாற்றாளுடைய மகவின் பால் அன்புடையளாய் இருந்தமையால் அவள் கொங்கைகளிலே பால் சுரப்ப அதனை அம் மகவிற்கு ஊட்டா நிற்ப அம் மகவினது ஊழ்வினை வந்து உருத்துதலாலே கூற்றுவன் அக் குழவி பால் விக்கின்மை ஏதுவாக அதன் உயிரைக் கவர்ந்து கொள்ளாநிற்றலால் அம் மாலதி என்பாள், குழவிக்கு இரங்கி ஆற்றாத் தன்மையளாய் ஆர் அஞர் எய்தி-இறந்துபோன அம் மகவின் பொருட்டு எய்திய துன்பம் ஆற்றொணாத தன்மை உடையவளாய்ப் போக்குதற்கரிய பெருந்துன்பத்தை அடைந்து பிறர் அறியாமல் அம் மகவினைக் கைக்கொண்டு சென்று; பாசண்டன்பால் பாடு கிடந்தாட்கு-பாசண்டச் சாத்தன் கோயிலிற் சென்று அக் குழந்தை உயிர் பெற வரம் வேண்டி நோன்பு கிடந்தாளுக்கு இரங்கி; ஆசுஇல் குழவி அதன் வடிவாகி-அப் பாசண்டச் சாத்தன் தானே குற்றமற்ற அம் மகவினது உருவத்தைக் கொண்டு; அன்னை வந்தனன் நீ வான்துயர் ஒழிக என-தாயே இதோ யான் வந்தேன் நீ நினது பெரிய துன்பத்தை விடுக என்று கூறி என்க.

(விளக்கம்) ஈண்டுக் கூறிய வரலாற்றினைக் கனாத்திறம் உரைத்த காதையின்கண் விளக்கமாகக் காணலாம். மாலதி மகப் பேறற்றவள்; அவள் மாற்றாள் குழவியினிடத்து அன்பு மிகுதி கொண்டமையால் அவள் கொங்கையில் பால் சுரப்பதாயிற்று எனவும் அப் பாலினை அக் குழவிக்கு ஊட்டுங்கால் ஊழ்வினை காரணமாக பால் விக்கி அக் குழவிமரித்தது எனவும் கொள்க. அன்புடைமையாலும் பழிக்கு அஞ்சியும் இரங்கிப் பெருந்துயரெய்தினளென்க. பாடு கிடத்தல்-வரம் வேண்டிப்பட்டினி கிடத்தல். காசு-குற்றம். வான் துயர்-பெருந்துன்பம்.

இதுவுமது

81-94: செந்திறம்............கூறினன்

(இதன் பொருள்) செந்திறம் புரிந்தோன்-இவ்வாறு செவ்விய அருளைச் செய்த அச் சாத்தன்; செல்லல் நீக்கி-அப் பார்ப்பனியின் துயரத்தைப் போக்கி; பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்ப்பால் காப்பியத் தொல்குடிக் கவின் பெற வளர்ந்து-அம் மாலதியாகிய பார்ப்பனியோடும் இறந்த குழவியின் பழைய தாயாகிய அம் மாற்றாளிடத்துச் சென்று காப்பியக்குடி யென்னும் சிறப்புப் பெயர் பெற்ற அப் பழைய குடி தன்னாலே அழகுறும்படி வளர்ந்து; தேவந்திகையைத் தீவலஞ் செய்து நால் ஈர் ஆண்டு நடந்ததன் பின்னர்-தேவந்திகை என்னும் இப் பார்ப்பனியை மறைவிதப்படி தீவலஞ் செய்து மணந்துகொண்டு இல்லறம் மேற்கொண்டு எட்டாண்டுகள் கழிந்த பின்னர்; மூவா இளநலங் காட்டி நீ என் கோட்டத்து வா என்றே நீங்கிய சாத்தன்-ஒருநாள் தேவந்திகைக்குத் தனக்கியல்பான மூவரமையும் இளமையுமுடைய அழகினைத் தனித்துக் காட்டி இனி நீ என் கோயிலில் வந்து என்னைக் காண்பாயாக! என்று சொல்லி அம் மானிட உருவத்தை நீங்கி மறைந்துபோன அச் சாத்தன் என்னுந் தெய்வம்; மங்கலமடந்தை கோட்டத்து ஆங்கண் அங்கு உறை மறையோனாகத் தோன்றி-அரசே! பண்டொருநாள் யான் மங்கலாதேவியின் கோயில் வாயிலில் இருக்கும்பொழுது அவ்விடத்தே வாழும் ஒரு பார்ப்பனன்போல வடிவுகொண்டு என் கண்முன் தோன்றி; உறித்தாழ்க் கரகமும் என் கைத்தந்து-உறியின்கண் வைக்கப்பட்ட தெய்வத் தன்மையுடைய அந் நீர்ப்பாண்டத்தையும் என் கையிற் கொடுத்து; குறிக்கோள் கூறி கோயினன் வாரான்-அதனைக் குறிக்கொண்டு போற்றிக்கொள்ளும்படியும் சொல்லி மறைந்து போயினன் மீண்டும் வந்தலன் யானும்; ஆங்கு அது கொண்டு போந்தேன் ஆதலின்-அவ்விடத்தே அதனை ஏற்றுக்கொண்டு அதனோடு இங்கு வந்துளேன் ஆதலால்; அறிந்தோன் ஈங்கு இம் மறையோன் தன்மேல் தோன்றி அந்நீர் தெளி என்று கூறினன்-முழுதும் அறிந்தவனாகிய சாத்தன் என்னும் அத் தெய்வமே இவ்விடத்தே அவனுக்கு மனைவியாம் உரிமையுடைய இப் பார்ப்பனியின் மேலேறி அத் தெய்வத் தன்மையுடைய நீரினை அம் மகளிர் மேல் தெளித்திடுமாறு கூறினான் என்றான் என்க.

(விளக்கம்) செந்திறம் புரிந்தோன் என்பதற்கு மிக்க கல்விகளையும் கேள்விகளையும் கற்றும் ஒழுகியும் துறைபோய்ச் செவ்விய பண்புடையோன் ஆகிய சாத்தன் எனினுமாம். செல்லல்-துன்பம். பண்டைத் தாய் என்றது இறந்த குழவிக்குத் தாயாகிய மாற்றானை. காப்பியக் குடியாகிய தொல்குடி எனக் குடியை முன்னும் கூட்டுக. இனி, தொல்காப்பியக் குடி எனக் கொண்டு அப் பெயருடைய ஒரு குடி பண்டைக் காலத்துப் புகார் நகரத்திலிருந்தது எனக் கோடலுமாம். ஒரோவழி ஆசிரியர் தொல்காப்பியனார் இக் குடியிற் பிறந்தவர் எனக் கருதுதலும் கூடும். தீவலஞ்செய்து என்றது திருமணஞ் செய்து கொண்டு என்றவாறு. மூவா இளநலம் என்றது தெய்வத்திற்குரிய அழகினை, மங்கல மடந்தை கோட்டத் தாங்கண் உறை மறையோனாகத் தோன்றி என்றமையால் மங்கல மடந்தை கண்ணகியல்லாமை காண்க, அறிந்தோன் என்றது முழுதும் அறிந்தவனாகிய சாத்தன் என்றவாறு.

மாடலன் அம் மகளிர்மேல் நீர் தெளித்தலும் அம் மகளிர் முற்பிறப் புணர்ச்சியுடைய ராதலும்

95-97: மன்னர்...........ஆதலின்

(இதன் பொருள்) மன்னர் கோவே மடந்தையர் தம்மேல் தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப-வேந்தர் பெருமானே; அம் மகளிரின் மேல் அத் தெய்வத் தன்மையுடைய நீரினைத் தெளித்து இவ்விடத்தே அதன் தெய்வத்தன்மையை யாமும் அறிவோமாக என்று சொல்லி அம் மாடல மறையோன் அம் மகளிரின் மேல் அந் நீரைத் தெளியா நிற்ப; ஒளித்த பிறப்பு வந்து உற்றதை யாதலின்-அந் நீரின் சிறப்பினால் அம் மகளிர்க்கு முற்பிறப்பின் உணர்ச்சி வந்து எய்தியது ஆதலாலே என்க.

(விளக்கம்) மடந்தையர் என்றது, ஈண்டுப் பருவம் குறியாமல் மகளிர் என்னும் பொருட்டாய் நின்றது. அவன்-அம் மாடல மறையோன். ஒளித்த பிறப்பு-மறைந்த பிறப்பு. அஃதாவது முற்பிறப்பு உற்றதை என்புழி ஐகாரம் சாரியை.

அம் மகளிர் பழம்பிறப் புணர்ச்சியோடே அரற்றுதல்

98-103: புகழ்ந்த..............வாராய்

(இதன் பொருள்) புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் நிகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய்-உலகத்தாரால் புகழப்பெற்ற நின்னுடைய கணவனாருடைய சான்றோர் போற்றுதலில்லாத தீய ஒழுக்கம் காரணமாக நினக்கு நிகழ்ந்த துன்பத்தை நோக்கி நின் பொருட்டு வருந்தியிருக்கும் என்னையும் நோக்கினாயில்லை; ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு தனி-தொடர்பில்லாத பிற நல்ல நாட்டிடத்தே துணையாவார் ஒருவரும் இல்லாத மிக்க தனிமையையுடைய; நின் காதலன் தன்னொடு கடுந்துயர் உழந்தாய்-நின் காதலனோடு வந்து கடிய துன்பத்தை எய்தினாய்; யான் பெறுமகளே-எளியேன் தவம் செய்து பெற்ற அரும் பெறல் மகளே! என் துணைத்தோழீ-எனக்குத் துணையாயிருந்த தோழியைப் போன்றவளே; வான்துயர் நீக்கும் மாதே வாராய்-எனது மகப்பேறில்லாத பெருந்துயரத்தை நீக்கிய என் மகளே என்முன் வரமாட்டாயோ என் செய்வேன் என்று அழுதாள் அவருள் ஒருத்தி என்க.

(விளக்கம்) இவை முற்பிறப்பிலே கண்ணகியின் தாயாய் இருந்து இப் பிறப்பிலே அரட்டன் செட்டியின் மகளாகியவள் கூற்று என்றுணர்க. மண் தேய்த்த புகழினான் ஆதலின் கோவலனைப் புகழ்ந்த காதலன் என்றாள். புகழ்ந்த-புகழப்பட்ட. போற்றா வொழுக்கம் என்றது, கோவலனுடைய பரத்தைமை ஒழுக்கத்தை. அது காரணமாக நிகழ்ந்தது என்றது கண்ணகி கணவனால் கைவிடப்பட்டு வருந்தி இருந்தமையை. நீ பேரன்புடையளாய் இருந்தும் நின்னைப் பிரிந்தால் யான் இறந்து படுவேன் என்று எண்ணாமல் பிரிந்து போயினை என்பாள் என்னையும் நோக்காய் என்றாள். நன்னாடு என்றது இகழ்ச்சி. கடுந்துயர் என்றது கணவன் கொலையுண்டமையால் கண்ணகி எய்திய துன்பத்தை. வான்துயர்-மிகப் பெருந்துயர். வராய்-வருகின்றிலை.

செட்டியின் மற்றொரு பெண் அரற்றுதல்

104-107: என்னோடு............வாராய்

(இதன் பொருள்) என் மகன்-என் மகனே!; என்னோடு இருந்த இலக்கு நங்கை தன்னோடு இடை இருள் தனித்துயர் உழந்து நீதான் நின் தாயாகிய என்னோடே இல்லத்திலிருந்த விளங்குகின்ற அணிகலன் அணிதற்குரிய மகளிருள் சிறந்தவளாகிய என் மருகியாகிய கண்ணகியோடே இடை யாமத்துப் பேரிருளிலே புறப்பட்டு ஒப்பற்ற துன்பம் எய்தி நகரத்தை விட்டு; போனதற்கு இரங்கிப் புலம்பு உறும் நெஞ்சம்-நீ எம்மைத் துறந்து போனதற்கு ஆற்றாமல் வருந்திப் புலம்பா நின்றது என்னுடைய நெஞ்சம்; யான் அது பொறேஎன்-யான் அத் துன்பத்தை ஆற்றுகிலேன்; வாராய்-என் நிலைமை கண்டு வைத்தும் நீதானும் என்பால் வருகின்றிலை என் செய்கேன் என்று மற்றொரு பெண் அரற்றினள் என்க.

(விளக்கம்) இது கோவலன் தாய் கூற்று. நங்கை என்றது கண்ணகியை. தனித்துயர்-ஒப்பற்ற பெருந் துன்பம். வாராய்-வருகின்றிலை. வர மாட்டாயோ எனினுமாம்.

சேடக் குடும்பியின் சிறுமகள் அரற்று

108-115: வருபுனல்.........நின்றழ

(இதன் பொருள்) வருபுனல் வையை வான் துறைப் பெயர்ந்தேன் வந்தேன்-இடையறாது வருகின்ற நீரினையுடைய வையைப் பேரியாற்றின் சிறந்த துறைக்கு நீராடுதற் பொருட்டுப் போனேன், நீராடி மீண்டு வந்தேன்; மனையிற் காணேன்-உன்னை என புதுமனையிடத்தே காணேனாய்ப் பின்னர்; உருகெழு மூதூர் குறுமாக்களின் கேட்டேன்-அழகு பொருந்திய பழைய நகரமாகிய மதுரை மாநகரத்தில் சிறுவர் வாயிலாய் நினக்குற்ற செய்தியைக் கேள்வியுற்றேன்; எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ-என் அப்பனே! இளமையுடையோனே! நீதான் எங்குச் சென்று மறைந்தாயோ அறிகிலேன்; என்று ஆங்கு அரற்றி என்று இன்னன கூறி அழுது; இனைந்து இனைந்து ஏங்கிக்குதலைச் செவ்வாய் குறுந்தொடி மகளிர்-வருந்தி வருந்தி ஏங்கி மழலை மாறாத சிவந்த வாயினையும் குறிய தொடியினைமுடைய அம் மகளிர் மூவரும்; பொன் தாழ் அகலத்துப் போர் வெய்யோன் முன்-திருமகள் வதிகின்ற மார்பினையும் போர்த் தொழிலின்கண் விருப்பத்தையுமுடைவனாகிய செங்குட்டுவனின் முன்னிலையிலே; முதயோர் மொழியின்-முதிய மகளிர் கூறுதற் கியன்ற மொழியைக் கூறி; முன்றில் நின்றழ-கண்ணகி கோயிலின் வாயிலின்கண் நின்று அழா நிற்ப என்க.

(விளக்கம்) வருபுனல்: வினைத்தொகை. வான் துறை-சிறந்த நீராடு துறை. உறு-அச்சமுமாம். குறுமாக்கள் என்றது சிறுவரை பொன்-திருமகள். வெய்யோன்-விருப்ப முடையோன். குதலை-மழலைச் சொல். முதியோர். முதிய மகளிர். முன்றில்-கோயில் வாயில்.

மாடலன் கூற்று

116-125: தோடலர்...............அதனால்

(இதன் பொருள்) தோடு அலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் தன் முகம் நோக்க-இதழ் விரிந்த பனம்பூ மாலையினையும் கட்டப்பட்ட வீரக்கழலினையும் உடைய வேந்தனாகிய செங்குட்டுவன் இந் நிகழ்ச்சியானும் பெரிதும் வியப்புற்றவனாய் மீண்டும் அம் மாடல மறையோனுடைய முகத்தை நோக்கா நிற்ப; முந்நூன் மார்பன் மன்னர் கோவே வாழ்க என்ற ஏத்தி-அதுகண்ட அம் மாடலன் அம் மன்னவன் குறிப்புணர்ந்து வேந்தர் வேந்தே! நீடு வாழ்வாயாக என்று அம் மன்னனை வாழ்த்தி; முன்னியது உரைப்போன்-அவ் வேந்தன் அறியநினைத்ததனைக் கூறுபவன் அரசே! மறையோன் உற்ற வான் துயர் நீங்க உறைகவுள் வேழக் கையகம் புக்கு வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற காதலி தன்மேல் காதலர் ஆதலின்-தன்பால் தானம் பெறுதற்பொருட்டு வந்து யானையால் பற்றப் பட்ட அந்தணன் எய்திய பெருந்துன்பம் நீங்கும்படி மதம் பெய்கின்ற கவுளையுடைய அந்த யானையின் கையகத்தில் தானே சென்று புகுந்து அவ்வந்தணனைப் பாதுகாத்த நல்வனை காரணமாகக் கொலையுண்ட பொழுதே அமரவடிவம் பெற்றவனாகிய கோவலனும் அவன் வாழ்க்கைத் துணைவியாகப் பெற்ற அன்புமிக்க கண்ணகியும் ஆகிய இருவர் மேலும் பெரும் பேரன்புடையராதலின்; அவருடன் மேனிலை உலகத்துப் போகும் தாவா நல் அறஞ் செய்திலர் அதனால்-அக் கோவலன் கண்ணகி என்னும் இருவருடனும் தாமும் வானுலகத்திற்குப் போதற்கு வேண்டிய கெடாத நல்ல அறத்தை இவர் செய்திலர் ஆதலால் முற்பிறப்பிலே அவ்வன்பு காரணமாக இறந்தொழிந்த இம் மகளிர் அதனால் என்க.

(விளக்கம்) முன்னியது-நினைத்தது. கோவலன் மறையோன் ஒருவனுடைய துயர் நீங்கும் பொருட்டு வேழத்தின் கையகம் புக்கமையை அடைக்கலக் காதையின்கண் காண்க. கொலையுண்ட பொழுதே கோவலன் அமரன் ஆவதற்குக் காரணம் இத்தகைய நல்வினைகளே ஆதலின் அவற்றுள் சிறப்புப்பற்றி ஒன்றனைக் கூறி ஏதுவாக்கினர். வானோர் வடிவம் பெற்றவன் மேலும் அவன் பெற்ற காதலி தன் மேலும் காதலர் என இயையும். மேனிலையுலகம் வானுலகம். அதனால் உயிர் துறந்த அம் மகளிர் என வருவித்தோதுக.

இதுவுமது

129-135: அஞ் செஞ்சாயல்...........ஆயினள்

(இதன் பொருள்) பொற்கொடி தன்மேல் பொருந்திய காதலின் அன்புளம் சிறந்து ஆங்கு-அம் மூவரும் கண்ணகி தன்பால் தமக்குண்டான அன்பு காரணமாக மேலும் அவள்பால் அவ்வன்புள்ளம் மிகுந்து அவ்வழி; அம் செம் சாயல் அஞ்சாது அணுகும் வஞ்சி மூதூர் மாநகர் மருங்கின்-அழகிய செவ்விய சாயலையுடைய அக் கண்ணகி வேற்றரசர் நாடெனச் சிறிதும் அஞ்சாது வந்தெய்திய இந் நாட்டின்கண் வஞ்சி என்னும் பழைமை மிக்க நமது பெரிய நகரத்தின்கண்ணே; அரட்டன் செட்டி மடமொழி நல்லாள் மனம் மகிழ்சிறப்பின் உடன் வயிற்றோராய் ஒருங்கு உடன் தோன்றினர்-அரட்டன்செட்டி என்னும் வணிகனுடைய மடப்பமுடைய மொழியையுடைய மனைவியானவள் மனம் மிகவும் மகிழ்தற்குக் காரணமான சிறப்போடே அவள் வயிற்றில் ஒரு கருப்பத்தினராய் ஒரு பொழுதிலே (கண்ணகியின் தாயும், மாமியும்) இரட்டைப் பெண்களாய்ப் பிறந்தனர் வேந்தே!; போய பிறப்பின் ஆயர் முதுமகள்-கழிந்த பிறப்பில் இடைக்குல மடந்தையாய் முதியளாய் இருந்த மாதிரி என்பவளும் அங்ஙனமே-ஆயிழை தன்மேல் அமைந்த அன்பு காரணமாகவும் அவள் அப் பிறப்பிலே ஆடிய குரவைக் கூத்துக் காரணமாகவும்; அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின் சிறுமகள் ஆயினள்-நின்னுடைய நாட்டின் கண் ஆடக மாடத்தின்கண் அரவப் பாயலின்கண் அறிதுயில் கொண்டு கிடந்த திருமாலின் அடித்தொண்டு பூண்ட குடும்பத் தலைவனுக்குச் சிறிய மகளாகத் தோன்றினாள் என்றான் என்க.

(விளக்கம்) அம் சாயல் செஞ்சாயல் எனத் தனித்தனி இயையும் பொற்கொடி: கண்ணகி. அற்புளம்-அன்புளம்: மென்றொடர் வேற்றுமைக்கண் வன்றொடராயிற்று. கண்ணகியின் தாயும் மாமியும் அரட்டன் செட்டி மனைவியின் வயிற்றில் இரட்டைப் பெண்களாய்ப் பிறந்தனர் என்பது கருத்து. ஒருங்குடன் தோன்றுதல்-ஒருங்கே இரட்டையராய்ப் பிறத்தல். ஆயர்முதுமகள்: மாதிரி போயபிறப்பு-கழிந்த பிறப்பு. மாதிரி கண்ணகியின்பால் அன்பு காரணமாக அவன் அணுகிய நாட்டின் கண்ணும் திருமாலுக்கு அன்புடையளாய்க் குரவைக்கூத்து எடுத்தமையால் மேலும் அத்திருமாலுக்குத் தொண்டு பூண்டு ஒழுகும் குடும்பத்தினும் தோன்றினாள் என்றவாறு.

இதுவுமது

135-147: ஆதலால்.............மகிழ்த்து

(இதன் பொருள்) நல்திறம் புரிந்தோர் பொன்படி எய்தலும்-வேந்தர் பெருமானே! இங்ஙனம் ஆதலாலே நல்லறங்களை விரும்பிச் செய்தவர் பொன்னுலகத்தை எய்துதலும்; அன்பு உளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்-ஒருவர்பால் அன்புள்ளத்தினாலே சிறந்தவர்கள் அவ்வன்பினாலே பற்றப்பட்டவர் சென்ற வழியிற்சென்று பிறத்தலும்; அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்-ஒருவர் செய்த நல்வினையின் பயன் அவருக்கே வந்து சேருதலும் அங்ஙனமே தீவினைப் பயனும் செய்தவர்பாலே வந்து சேருதலும் அங்ஙனமே தீவினைப் பயனும் செய்தவர்பாலே வந்து சேருதலும்; பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்-இந் நிலவுலகத்திலே பிறந்து வாழ்பவர் இறந்தொழிதலும் அவ்வாறே இவ்வுலகத்து இறந்தொழிந்தவர் மீண்டும் பிறத்தலும் ஆகிய இவையெல்லாம்; புதுவதன்றே தொன்றியல் வாழ்க்கை-உயிர்களுக்குப் புதியனவாகிய செய்கை அன்று, படைப்புக்காலம் தொடங்கி நிகழ்ந்து வருகின்றதொரு வாழ்க்கையே யாகும்; ஆன் ஏறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி மாநிலம் விளக்கிய மன்னவன் ஆதலின்-நீதான் காளையை ஊர்ந்து வருகின்ற இறைவனுடைய திருவருளாலே சேர மன்னவர் குடியில் தோன்றி இப் பெரிய நில வுலகத்தை அறத்தினாலே விளக்கமுறச் செய்த அரசனாதலால்; செய்தவப் பயன்களும் சிறந்தோர் படிவமும் கையகத் தன்போல் கண்டனை அன்றே-சான்றோர் செய்யும் தவத்தின் பயன்களையும் உயர்ந்தோருடைய உருவங்களையும் நின் அகங்கையில் உள்ள பொருள்களைக் காணுமாறே நன்கு அறிந்துகொண்டனையல்லையோ; நெடுந்தகை ஊழிதோறூழியுலகங் காத்து நீடு வாழியரோ யென்ற-வேந்தே! நெடுந்தகாய் பற்பல ஊழிகள் இருந்த இந் நிலவுலகத்தை நன்கு காவல் செய்து நீடு வாழ்வாயாக என்று வாழ்த்திய; மாடல மறையோன் தன்னொடு மகிழ்ந்து-மாடலன் என்னும் அவ்வந்தணனோடு பெரிதும் மகிழ்ந்து என்க.

(விளக்கம்) நற்றிறம்-நல்வினை. புதுவது: ஒருமைப் பன்மை மயக்கம். ஆனேறு ஊர்ந்தோன்-சிவபெருமான். கையகத்தன-கையின்கண் உள்ள பொருள். நெடுந்தகை: அன்மொழித்தொகை.

செங்குட்டுவன் செயல்

148-156: பாடல்..............முன்னர்

(இதன் பொருள்) பாடல் சால் சிறப்பில் பாண்டி நல் நாட்டுக் கலிகெழு கூடல் கதழ் எரி மண்ட-புலவர்கள் பாடுதற்கமைந்த பெருஞ்சிறப்பினையுடைய பாண்டியாகிய நல்ல நாட்டின் தலை நகரமாகிய ஆரவாரம் பொருந்திய மதுரை விரைகின்ற தீப்பிழம்புகள் பற்றி மிக்கெரியும்படி; முலை முகம் திருகிய மூவாமேனிப் பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து-தனது இடக்கொங்கையைத் திருகி வட்டித் தெறிந்த மூவாத தெய்வத்திருமேனியையுடைய திருமா பத்தினியாகிய கண்ணகித் தெய்வம் உறையும் கோயிலுக்கு வேண்டிய அருச்சனாபோகம் என்னும் பொருளைவரையறுத்துவைத்து அத் தெய்வத்திற்கு; நித்தல்விழா அணிநிகழ்க என்று ஏவி பூவும் புகையும் மேவிய விரையும் தேவந்திகையைச் செய்க என்று அருளி-நாள்தோறும் நிகழ்த்தும் திருவிழா வரிசையும் நிகழ்க என்று அதற்குரிய பணியாளர்களையும் ஏவிவிட்டுத் தெய்வத்திற்கு மலரணிதலும் நறுமணப்புகை எடுத்தலும் அதற்குரிய மணப்பொருட்களை அணிதலும் முதலிய அணுக்கத் தொண்டுகளை அத் தெய்வத்தின் திருமேனியைத் தீண்டித் தேவந்திகை என்னும் இப் பார்ப்பனியே செய்க என்று பணித்து; வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவன் நின்றோன் முன்னர்-அப் பத்தினிக் கோட்டத்தை வலமுறையாக மூன்றுமுறை சுற்றிவந்து வணங்கியவனாய் இந் நிலவுலகத்து மன்னவனாகிய அச் சேர மன்னன் நின்றானாக அங்ஙனம் நின்றவன் முன்பு என்க.

(விளக்கம்) பாடல்-புலவர் பாடும் பாட்டு. கலி-ஆரவாரம். கூடல்-நான்மாடக் கூடல் என்னும் மதுரை. கதழ்எரி-விரைந்து பற்றும் நெருப்பு. தெய்வத்திருமேனி பெற்றமை தோன்ற மூவாமேனிப் பத்தினி என்றார். படிப்புறம்-அருச்சனாபோகம் என்பர் அரும்பத உரையாசிரியர்; அஃதாவது கோயில் வழிபாடு முதலியவற்றிற்கு வேண்டிய பொருள் வருவாய்க்கு நில முதலியன விடுதல். நித்தல் விழா-நாள்தோறுஞ் செய்யுஞ் சிறப்பு. அச் சிறப்புகள் நிரல் படச் செய்தலின் விழாவணி என்றார். அணி-நிரல். வந்தனன் முற்றெச்சம். மன்னவன் நின்றானாக அவன் முன்னர் என்க.

கண்ணகி வரந் தருதல்

157-164: அருஞ்சிறை..............ஒருகுரல்

(இதன் பொருள்) அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைகோட்டம் பிரிந்த மன்னரும்-தாமே கடத்தற்கரிய சிறையினின்றும் விடுவிக்கப்பட்ட கனக விசயரையுள்ளிட்ட வடவாரிய மன்னரும் கண்ணகிக் கடவுள் மங்கலத்தின் பொருட்டுச் சிறை வீடு செய்தமையால் பெரிய சிறைக்கோட்டத்தினின்றும் வெளிவந்த பிறமன்னரும்; குடகக்கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்-செங்குட்டுவனாலே இம் மங்கல விழாவிற்கு அழைக்கப்பட்ட குடகநாட்டுக் கொங்கர்களும் மாளுவ நாட்டு மன்னர்களும் நாற்றிசையிலும் கடல் சூழப்பெற்ற இலங்கைத் தீவின் அரசனாகிய கயவாகு என்னும் அரசனும் அக் கற்புடைத் தெய்வத்தைக் கைகுவித்து வணங்கி; எம் நாட்டு ஆங்கண் இமயவரம்பன் இந் நல்நாள் செய்த நாளணிவேள்வியின் யாங்கள் எங்கள் நாடாகிய அவ்விடத்தே நினக்கெடுக்கும் திருக்கோயில்களினும் இமய மலையை எல்லையாகக் கொண்ட இச் செங்குட்டுவன் இந்த நல்ல நாளின்கண் நினக்கு நிகழ்த்திய இம் மங்கலமுடைய அழகிய இவ் வேள்வியின்கண் நீ எழுந்தருளி வந்தாற் போன்றே; வந்தீக என்றே வணங்கினர் வேண்ட-எழுந்தருளி வரவேண்டும் என்று வணங்கி வேண்டா நிற்ப அப்பொழுது; தந்தேன் வரம் என்று எழுந்தது ஒருநூல்-அங்ஙனமே தந்தேன் வரம் என்று வானத்தின்கண் எழுந்தது ஒரு தெய்வத் தீங்குரல் என்க.

(விளக்கம்) அருஞ்சிறை நீக்கிய ஆரிய மன்னர் என்றது முன்னர் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கி வேளாவிக்கோ மாளிகையில் வைத்துப் போற்றப்பட்டவரை. இதனை (நடுகல் 195-202 ஆரிய..................ஏவி) என்பதனாலுணர்க. பெருஞ்சிறைக்கோட்டம் பிரிந்த மன்னர் என்றது பண்டு பல்வேறு காலங்களில் சிறைக்கோட்டத்தினிடப்பட்டுக் கண்ணகி விழாவின்பொருட்டுச் சிறைவீடு செய்யப்பட்ட மன்னர்களை. குடகக்கொங்கரும் மாளுவவேந்தரும் கயவாகு வேந்தனும் சேரன் செங்குட்டுவன் அழைப்பிற்கிணங்கி வந்திருந்த அரசர்களென்றுணர்க. எம் நாட்டினிடத்தே யாம் நினக்குச் செய்யும் வேள்வியில் இற்றைநாள் செய்த இவ்வேள்வியில் நீ வந்தாற்போலவே வந்தருளுக என்று வேண்டியவாறாம். இமயவரம்பனிந் நன்னாட்செய்த என்புழி வரம்பன் இந் நல்நாள் செய்த எனக் கண்ணழித்துக் கொள்க. இதன்கண் (வரம்பனின்) சிறப்பு னகர மெய் பதிப்பித்திருத்தல் தவறு. அதனைப் பொதுநகரமெய்யாகத் திருத்திக்கொள்க. இதுவே பாடம் என்பதற்குச் செய்த நாளணி என இறந்த காலத்தாற் கூறியிருத்தலே சான்றாதல் உணர்க. நாளணி வேள்வியின்(ல்) என என்றும் பாடந் திருத்துக. இன் ஐந்தாவதன் உருபு. உறழ் பொருட்டு. வேள்வியில் வந்தாற்போல வருக என்பது கருத்து. இந் நுணுக்கம் உணராதார் இவற்றிற்குப் போலியுரை கூறியொழிந்தார்.

அரசர்கள் செங்குட்டுவனை வணங்குதல்

165-170: ஆங்கது..............போந்தபின்

(இதன் பொருள்) ஆங்கு அதுகேட்ட அரசனும் அரசரும் ஓங்கு இருந் தானையும் உரையோடு ஏத்த-அத் தெய்வத் தீங்குரலைச் செவியுற்ற செங்குட்டுவனும் ஆரிய மன்னரை உள்ளிட்ட அரசர்களும் புகழாலுயர்ந்த பெரிய படைத்தலைவரும் அத் தெய்வத்தைப் புகழோடே வாழ்த்தித்தொழா நிற்ப; வீடு கண்டவர்போல் அக் குரல் கேட்ட அம் மன்னவர்கள் அந்தமிலின்பத்து அழியாத வீட்டின்பத்தை யடைந்தவர்போல; மெய்ந்நெறி விரும்பிய மாடல மறையோன் தன்னொடும் மகிழ்ந்து-வாய்மை நெறியையே விரும்பும் இயல்புடைய மாடல மறையோன் என்னும் அந்தணனோடுங் கூடி மகிழ்ந்து; வேந்தன்-செங்குட்டுவன்; தாழ்கழல் மன்னர் தன்னடி போற்ற-வீரக்கழல் கட்டிய ஏனைய அரசரெல்லாம் தன் திருவடிகளைப் போற்றி வணங்கும்படி; வேள்விச் சாலையின் போந்தபின்-அத் திருக்கோயில் வாயிலினின்றும் வேள்விச்சாலையின்கண் அமைந்த தன் இருக்கைக்குச் சென்றபின் என்க.

(விளக்கம்) அது என்றது அக் குரலை. அரசனும் அரசரும் என்றது செங்குட்டுவனும் ஏனைய மன்னரும் என்றவாறு. தானை-தானைத் தலைவருக் காகுபெயர். உரை-புகழ். மன்னர் வீடுகண்டவர்போல மகிழ்ந்து என்க. மன்னர் தன் அடி போற்ற வேந்தன் மறையோனொடுங் கூடி வேள்விச் சாலையின் போந்தபின் என்று இயைத்துக் கொள்க.

இளங்கோவடிகளார் தமியராய்ச் சென்று கண்ணகித் தெய்வத்தை வணங்குதலும் அத் தெய்வம் அவரைப் பாராட்டுதலும்

171-184: யானும்.................சென்றேன்

(இதன் பொருள்) யானும் அக் கண்ணகித் தெய்வத்தை வணங்கும் பொருட்டுத் தமியேனாய் அத் தெய்வத்திருமுன்னர்ச் சென்றேன். அங்ஙனம் சென்றுழி அத் தெய்வந்தானும்; தேவந்திகைமேல் திகழ்ந்து தோன்றி என் எதிர் எழுந்து-தன் தோழியாகிய தேவந்திகையின்மேல் ஏறி மெய்ப்பாடுகளுடனே விளங்கித் தோன்றி அவள் வாயிலாய் எனக்கு எதிரே எழுந்து வந்து என்னை நோக்கி; வஞ்சிமூதூர் மணிமண்டபத்திடை நுந்தைதாள் நிழல் இருந்தோய் நின்னை-நீ வஞ்சி நகரத்தில் அரண்மனையின்கண் அழகிய திருவோலக்க மண்டபத்தின்கண் நின் தந்தையாகிய சேரலாதனின் மருங்கே இருந்தோதியாகிய நின்னை ஒரு நிமித்திகன் நோக்கி, அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு என்ற உரை செய்தவன்மேல்-இவ்விளங்கோவிற்கு அரசுக்கட்டிலில் ஏறியிருந்து புகழ்பெறுவதற்குக் காரணமான சிறப்பிலக்கணம் உள்ளது என்று கூற அங்ஙனம் கூறிய அந் நிமித்திகன் முகத்தினை: உருத்துநோக்கி-நீ சினந்துநோக்கி; கொங்கு அவிழ் நறுந்தார்க் கொடித் தேர்த்தானை செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க-மணம் விரிந்த நறிய மாலையினையும் கொடியுயர்த்திய தேர் முதலிய படைகளையுமுடைய உன் தமையனாகிய செங்குட்டுவனுடைய மனத்துன்பம் நீங்கும்படி; பகல் செல் வாயிற் படியோர் தம்முன்-குணவாயிற் கோட்டத்தின் கண் இருந்த துறவோர்களின் முன்னிலையிலே; அகலிடப்பாரம் அகல நீக்கி-அகன்ற நிலவுலகத்தையாளும் பெருஞ்சுமை நின்னிடத்தினின்றும் அகலும்படி துறந்துபோய்; சிந்தை செல்லாச் சேண் நெடுந்தூரத்து அந்தம் இல் இன்பத்து அரசு ஆள்வேந்து என்று-உள்ளமும் செல்லமாட்டாத மிகவும் நெடுந்தொலைவிலுள்ள முடிவில்லாத இன்பமாகிய வீட்டுலகத்தை அரசாட்சி செய்திருக்கின்ற வேந்தன் ஆயினை நீ என்று; என் திறம் உரைத்த-எனது தன்மையை யெடுத்துக் கூறிய: இமையோர் இளங்கொடி தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி-தேவர்களின் மகளாகிய கண்ணகித் தெய்வத்தின் தன்மையைக் கூறிய அழகு பொருந்திய நல்லமொழிகளை (யுடைய இக் காப்பியத்தினை) என்க.

(விளக்கம்) யானும் சென்றேன் என்றது இளங்கோவடிகளார் தம்மையே குறித்த படியாம். முன்னர்ச் செங்குட்டுவன் முதலிய அரசர்களும் தானைத் தலைவரும் கோயில் முன்றிலின்கண் குழுமி நின்றமையின் அடிகளார் அக் கூட்டத்துடன் கலந்து கொள்ளாதவராய் அவர்கள் சென்றபின்னர்த் தாம் மட்டும் தமியராய்ச் செல்லல் வேண்டிற்று. துறவறம் போற்றுகின்ற அடிகளார்க்கு அங்ஙனம் தமித்துச் செல்லுதல் பொருத்தமாதல் உணர்க. தேவந்திகைமேல் கண்ணகித் தெய்வத்தின் ஆவியுருவம் ஏறி என் எதிர் எழுந்து வந்தது என்றவாறு. தெய்வம் ஏறினமைக்கு அறிகுறியான மெய்ப்பாடுகள் எல்லாம் தேவந்திகைமேல் காணப்பட்டமையின் தேவந்திகை மேல் திகழ்ந்து தோன்றி என்றார். (173) வஞ்சிமூதூர் என்பது தொடங்கி (182) அரசாள் வேந்து என்பது ஈறாகத் தேவந்திகையின் வாயிலாய் அக் கண்ணகித் தெய்வம் கூறியவற்றை அடிகளார் கொண்டு கூறிய படியாம். நுந்தை-உன் தந்தை இருந்தோயாகிய நின்னை என்க. திருப்பொறி-சிறந்த இல்க்கணம். திருவுண்டாக்கும் ஊழ்வினை எனினுமாம். உரைசெய்தவன்-நிமித்திகன். உருத்துநோக்குதல்-சினந்து நோக்குதல். மூத்தோன் இருக்க இளையோன் அரசாளல் கோத்தருமம் அன்மையின் செங்குட்டுவன் அந் நிமித்திகன் கூற்றைக் கேட்டு வருந்துவனல்லனோ! அவ் வருத்தம் நீங்கும்பொருட்டு என்பது படச் செங்குட்டுவன் தன் செல்லல் நீங்க என்றபடியாம் பகல்செல் வாயில் என்றது குணவாயில் கோட்டத்தை. படியோர்-நோன்புடையோர். அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டு என்று உரை செய்த நிமித்திகன் மொழியினை அந்தமில் இன்பத்து அரசு ஆள் வேந்தனாகும் ஆற்றல் மெய்ம்மையாக்கினை என அத் தெய்வம் பாராட்டினபடியாம். இளங்கொடி என்பது மகள் என்னும் பொருட்டாய் நின்றது. அவள் தன்றிறம். இக் கண்ணகியின் வரலாறு. தகைசால் நன்மொழி என்றது இக் காப்பியத்திற்கு ஆகுபெயர்.

இளங்கோவடிகளார் இக்காப்பியம் கேட்டமையின் பயன் இவையென அறிவுறுத்துதல்

185-202: தெரிவுற.................ஈங்கென்

(இதன் பொருள்) தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்-நன்கு பொருள் தெளிவுறும்படி கேட்டமையால் உண்டாகும் அறிவுச் செல்வத்தின் தகுதியைப் பெற்றுள்ள நன்மையுடையீரே!; பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்-போகூழ் காரணமாகப் பொருள் முதலியன இழப்பு நேருமிடத்தும் பிறரால் துன்பம் நேருமிடத்தும் பரிவுறுதலும் இடுக்கணுறுதலும் நுமக்கு அயலாகும்படி விலகிவிடுமின்; தெய்வந் தெளிமின்-தெய்வம் உண்டு என்பதனையும் அதன் நியதிப்படியே இவ்வுலகியல் நிகழ்கின்றது என்னும் உண்மையையும் ஐயந்திரிபறத் தெரிந்து கொள்மின்; தெளிந்தோர்ப் பேணுமின்-அவற்றைத் தெளிந்திருக்கின்ற பெரியோரைப் போற்றி அவர்தம் அறிவுரையின் படி ஒழுகுமின்; பொய்யுரை அஞ்சுமின்-எஞ்ஞான்றும் பொய் கூறுதற்கு அச்சம் கொள்ளுமின்; புறம்சொல் போற்றுமின்-புறங்கூறுதல் ஒழித்துக் தூயராகுமின்; ஊன் ஊண் துறமின்-ஊன் உண்ணுதலை விட்டொழியுங்கள்; உயிர்க்கொலை நீங்குமின்-உயிர்களைக் கொல்லுந் தொலினின்றும் விலகுமின்; தானம் செய்மின்-இயலுந்துணையும் வழங்குமின்; தவம்பல தாங்குமின்-நோன்புகள் பலவற்றையும் மேற்கொள்ளுங்கள்; செய்ந்நன்றி கொல்லன்மின்-பிறர் உமக்குச் செய்த நன்மையை மறந்து விடாதீர்கள்; தீநட்பு இகழ்மின்- கூடா நட்பினை இகழ்ந்து கைவிடுமின்; பொய்க்கரி போகன் மின்-பொய்ச்சான்று கூறுதற்கு அறங்கூறவையம் ஏறப் போகா தொழியுங்கள்; பொருள் மொழி நீங்கன்மின்-உறுதிப் பொருள் பயக்கும் அறவோர் மொழிக்கு மாறாக ஒழுகன்மின்; அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்-அறவோர்கள் குழுமியிருக்கின்ற அவையிடத்தை ஒருபொழுதும் அகலாமல் அணுகி இருமின்; பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர் மின்-தீவினையாளர் கூட்டத்தினின்றும் எங்ஙனமாயினும் தப்பிப் போய்விடுமின்; பிறர்மனை யஞ்சுமின் -பிறர்மனைவியை நோக்குதற்கும் அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்-துன்புறுகின்ற உயிரினங்களைப் பாதுகாவல் செய்மின்; அறமனை காமின்-அறத்தாற்றில் மணந்துகொண்ட மனைவியைக் கைவிடாது போற்றுமின்; அல்லவை கடிமின்-வரைவின் மகளிரை மருவுதல் முதலிய தீய ஒழுக்கங்களைக் கைவிடுமின்; கள்ளுங்களவும் காமமும் பொய்யும் வெள்ளைக்கோட்டியும் விரகினில் ஒழிமின்-கள்ளுண்ணுதலையும் களவுகொள்ளுதலையும் பிற மகளிரைக் காமுறுதலையும் பொய்மொழிதலையும் வறுமொழியாளரொடு கூடியிருத்தலையும் எவ்வகை உபாயத்தினாலேனும் ஒழித்து விடுமின்; மல்லல் மா ஞாலத்து வாழ்வீர்-வளம் பொருந்திய பெரிய இந்நிலவுலகத்திலே பெறுதற்கரிய மக்கள் யாக்கை பெற்று வாழ்கின்ற மாந்தர்களே நீவிர் எல்லாம்; ஈங்கு இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா-நீங்கள் பெற்றிருக்கின்ற இவ்வுடம்பும் அதன் இளமைப் பருவமும் இவற்றிற்கு இன்றியமையாத பொருள்களும் நும்மிடத்தே நிலைத்திருக்கமாட்டா, ஆதலாலே; உளநாள் வரையாது-நுமக்கென நுமது ஊழ்வினை வகுத்துள்ள நுமது வாழ் நாள்களை வீழ்நாளாகச் செய்யாமல்; ஒல்லுவது ஒழியாது-நும்மால் செய்யக்கடவ நல்லறங்களை இடையறாமல் செய்து; செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்-இவ்வுலகினின்றும் இறந்து இனி நீர் செல்லவிருக்கின்ற இடத்தின்கண் நுமக்கு மிக்க துணையாகின்ற அறத்தையே தேடிக்கொள்வீராக என்பதாம்.

(விளக்கம்) பரிதல்-இழப்பிற்கு வருந்துதல். இடுக்கண்-தாம் செய்யும் வினைக்குத் தடையுண்டாதல் முதலிய துன்பங்கள். பாங்கு பக்கம். இவற்றிற்கு உள்ளத்தில் இடங் கூடக் கொடுத்தல் வேண்டா என்பார் அவை நுமக்குப் பக்கத்திலே போம்படி அவற்றை நீங்கள் நீங்கிப்போமின் என்பது கருத்து. தெய்வம்-ஊழ்வினை. அது தெய்வத்தின் ஆணையேயாதலின் ஆகுபெயர். தெளிந்தோர்-மருளறு காட்சியுடைய மேலோர். புறஞ்சொல்லாமல் நும்மைப் போற்றிக்கொள்ளுமின் என்றவாறு. ஊன் உண்ணுதலும் கொலைக்குடன்படும் குற்றமாகலின் ஊனூண் துறமின் என்றார். தானம்-சான்றோர்க்கு வழங்குதல். இளம்பற்றி இரவலர்க்கு வழங்கும் ஈதலும் கொள்க. தவம் நோன்பு. அவை கொல்லாமை பொய்யாமை ஊனுண்ணாமை முதலியனவாகப் பலவகைப் படுதலின் தவம் பல தாங்குமின் என்றார். தாங்குதல்-மேற்கொள்ளுதல். செய்ந்நன்றி கொல்வார்க்கு உய்வின்மையின் செய்ந்நன்றி கொல்லன்மின் என்றார். தீ நட்பு-தீயோர் நட்பு. அது தீவினைக்குக் காரணமாதலின் துவர விடுமின் என்பார் இகழ்மின் என்றார். பொய்க்கரி-பொய்ச்சான்று. பொருள் மொழி-அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள் பயக்கும் மொழி. அறவோர்-எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர். மனம் தீவினை நயத்தலும் நல்வினை நயத்தலும் இனம்பற்றி வருதலின் அறவோர் அவைக்களம் அகலாதணுகுமின் எனவும் பிறவோரவைக் களம் பிழைத்துப் பெயர்மின் எனவும் அறிவுறுத்தினார். பிழையுயிர்-இன்னலுறும் உயிர். அவற்றை ஓம்புதலாவது உணவும் மருந்தும் வழங்கிக் காத்தல். அறமனை-அறத்தாற்றில் மணஞ்செய்து கொண்ட மனைவி. அல்லவை-அறமல்லாதவை. அவை வரைவின் மகளிர் முதலியோரைக் காமுறுதல் முதலியன. வெள்ளைக் கோட்டி- அறிவிலிகள் கூட்டம். தாம் விட்டொழித்தாலும் அவர் தாமே வந்து அணுகுதலும் உண்டாகலின் ஏதேனும் உபாயத்தால் அவர் கூட்டத்தைத் துவரக் கைவிட்டொழியும் என்பார் விரகினில் ஒழிமின் என்றார். விரகு-உபாயம். உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது என்பதற்கு அறுதியிட்டுள்ள வாழ்நாள் கழிதலைக் கைவிடாது சாரக்கடவதாய துன்பம் சாராது நீங்காது என்பாருமுளர். அவ்வுரை போலி நுமக்கென வரைந்த வாழ்நாளில் சிலவற்றை வரையாமலும் இயலும் அறத்தை ஒழியாமலும் செய்து செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின் என்க.

பா. நிலைமண்டில ஆசிரியப்பா

கட்டுரை

முடி உடை வேந்தர் மூவருள்ளும்
குட திசை ஆளும் கொற்றம் குன்றா
ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும், 5

விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியின் செல்வமும், கூழின் பெருக்கமும்,
வரியும், குரவையும், விரவிய கொள்கையின்,
புறத் துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய 10

மறத் துறை முடித்த வாய் வாள் தானையொடு
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி,
கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று. 15

1-15: முடியுடை..............முற்றிற்று

(இதன் பொருள்) முடியுடைய வேந்தர் மூவருள்ளும்-வடவேங்கடம் தென் குமரி ஆயிடைக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகத்தை ஆளுகின்ற முடியுடைய வேந்தர்களாகிய சோழரும் பாண்டியரும் சேரரும் ஆகிய மூன்று மன்னர்களுள் வைத்து; குடதிசை யாளுங் கொற்றங் குன்றா ஆர மார்பிற் சேரர் குலத்து உதித்தோர்-மேற்றிசைக் கண்ணதாகிய சேரநாட்டினையாளும் வெற்றி குறையாத மணியாரம் அணிந்த மார்பினையுடைய சேரர் குலத்துப் பிறந்த வேந்தருடைய; அறனும் மறனும் ஆற்றலும்-அறப்பண்பாடும் மறச்சிறப்பும் இவற்றில் அவர்களுக்குரிய ஆற்றலும்; அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்-அச் சேரருடைய பழைய வெற்றியையுடைய பழைய நகரமாகிய வஞ்சி மாநகரத்தின் தலைமைப்பண்பு மேம்பட்டுத் திகழ்தலும் விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும்-அம் மாநகரின்கண் திருவிழாக்கள் மிக்குள்ள சிறப்பும் தேவர்கள் வருதலும்; ஒடியா இன்பத்து அவருறை நாட்டுக் குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும்-கெடாத இன்பங்களையுடைய அவர் வாழுகின்ற நாட்டின்கண் வழிவழியாக வாழ்ந்து வருகின்ற நற்குடிகளின் செல்வச்சிறப்பும் உணவுப் பொருள்களின் பெருக்கமும், ஆகிய இவற்றோடே; வரியுங் குரவையும் விரவிய கொள்கையின்-பாடலும் ஆடலும் தம்முள் விரவிய கோட்பாட்டினையுடைய; புறத்துறை மருங்கின்-புறத்திணைக்குரிய துறைகளுக்கேற்ப அறத்தொடு பொருந்திய மறத்துறை முடித்த-அறத்தோடு கூடிய போர்களைச் செய்து முடித்த; வாள்வாய் தானையொடு பொங்கு இரும்பரப்பின் கடல் பிறக்கோட்டி-வாள்வென்றி வாய்த்த படைகளோடே சென்று பொங்குகின்ற பெரிய பரப்பினையுடைய கடலில் வருகின்ற பகைவரொடு போர் செய்து புறங்கொடுத்தோடும்படி செய்து பின்னரும்; கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய-கங்கை என்னும் பேரியாற்றினது கரையின் வழியாக இமயமலை வரையில் போர் மேற்சென்ற செங்குட்டுவன் என்னும் சிறந்த மன்னனோடு; ஒரு பரிசு நோக்கிக்கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று-ஒரு தன்மையாக நோக்கும்படி கிடந்த வஞ்சிக் காண்டம் என்னும் இம் மூன்றாம் பகுதியும் முற்றிற்று என்க.

(விளக்கம்) இக் காண்டத்திற் கூறும் செய்தியெல்லாம் செங்குட்டுவனோடு தொடர்புபட்டுக் கிடத்தலின் செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக்காண்டம் என்றார். இச் சேரருடைய அறப் பண்பும் மறப்பண்பும் ஆற்றற்சிறப்பும் இக் காண்டத்தில் ஆங்காங்கு வருதல் காண்க. விழவு மலி சிறப்பு வாழ்த்துக் காதையால் உணர்க பிறவும் அன்ன.

வரந்தரு காதை முற்றிற்று

வஞ்சிக் காண்டம் முற்றிற்று

நூல் கட்டுரை

குமரி, வேங்கடம், குண குட கடலா,
மண் திணி மருங்கின் தண் தமிழ் வரைப்பில்,
செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின்,
ஐந்திணை மருங்கின், அறம், பொருள், இன்பம்,
மக்கள் தேவர் என இரு சார்க்கும் 5

ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர,
எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய
பாடலும், எழாலும், பண்ணும், பாணியும் 10

அரங்கு, விலக்கே, ஆடல், என்று அனைத்தும்
ஒருங்குடன் தழீஇ, உடம்படக் கிடந்த
வரியும், குரவையும், சேதமும், என்று இவை
தெரிவுறு வகையான், செந்தமிழ் இயற்கையில்,
ஆடி நல் நிழலின் நீடு இருங் குன்றம் 15
காட்டு வார்போற் கருத்துவெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதி காரம் முற்றும்.

1-18: குமரிவேங்கடம்...................முற்றும்

(இதன் பொருள்) குமரி வேங்கடம் குண குட கடலா மண் திணி மருங்கில் தண் தமிழ் வரைப்பில்-தென்றிசைக்கண் குமரித்துறையும் வடதிசைக்கண் திருவேங்கட மலையும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லையாக இவ்வெல்லைக்குள்ளமைந்த மண் திணிந்த நிலைப்பகுதியாகிய குளிர்ந்த தமிழ்மொழி வழங்குகின்ற இந் நாட்டின்கண்; செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிருபகுதியின்-செந்தமிழ் நாடும் கொடுந்தமிழ் நாடும் என்று இரு கூறு பட்ட நிலத்தின்கண்; ஐந்திணை மருங்கின்-குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து வகைப்பட்ட நிலங்களிலே வாழ்வார்க்கு; அறம் பொருள் இன்பம்-உறுதிப் பொருளாகிய அறமும் பொருளும் இன்பமுமாகிய மூன்றனையும்; மக்கள் தேவர் என இருசார்க்கும் ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர-உயர்திணை என்று கூறப்படுகின்ற மக்களும் தேவருமாகிய இருதிறத் தார்க்கும் பொருந்திய முறைமையோடே கூடிய ஒழுக்கத்தோடு சேரும்படி; எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்தில் எழுபொருளை எழுத்தும் அவ்வெழுத்துக்களோடு கூடிய சொல்லும் அச் சொற்களினின்றும் தோன்றுகின்ற பொருள்களும்; இழுக்கா யாப்பின்-வழுவில்லாத செய்யுளாலே; அகனும் புறனும் அகப்பொருளும் புறப்பொருளுமாகிய இருவகைப் பொருளும்; அவற்று வழிப் படூஉஞ் செவ்வி சிறந்து ஓங்கிய-அவ்விருவகைப் பொருள் வழிப்படுகின்ற அழகு சிறந்து உயர்ந்த; பாடலும் எழாலும் பண்ணும் பாணியும்-பாட்டும், யாழும், பண்ணும்; தாளமும், அரங்கு விலக்கு ஆடல் என்று அனைத்தும்-கூத்தாட்டரங்கமும், விலக குறுப்பும், கூத்தும் என்று கூறப்படுகின்ற இவையெல்லாம்; ஒருங்கு உடன் தழீஇ உடன்படக் கிடந்த-ஒருசேரத் தழுவிக் கொண்டு ஒன்றுபட்டுக் கிடந்த; வரியும் குரவையும் சேதமும் என்றிவை-வரிப்பாடலும், குரவைக் கூத்தும் சேதமும் என்னும் இவை எல்லாம்; தெரிவுறு வகையால்-யாவர்க்கும் விளங்கும் ஒரு முறைமையாலே; செந்தமிழ் இயற்கையின்-செந்தமிழுக்குரிய இலக்கணத்தோடே; ஆடி நன்னிழலின் நீடு இருங்குன்றம் காட்டுவார்போல்-கண்ணாடியின் தெளிந்த நிழலின்கண் உயர்ந்த பெரிய மலையின்துருவத்தை நன்கு காட்டுவார்போல்; கருத்து வெளிப்படுத்து-நூலாசிரியரின் கருத்துக்களையும் நன்கு வெளிப்படுத்திக் காட்டி; மணிமேகலை மேலுரைப் பொருண்முற்றிய-மணிமேகலை என்னும் மற்றொரு காப்பியத்திலே சென்று தான் உரைக்கவேண்டிய பொருள்களுள் இறுதியில் நின்ற வீடு என்னும் பொருள் முற்றுப்பெறுதற்குக் காரணமான; சிலப்பதிகார முற்றும்-இளங்கோவடிகளார் செய்த சிலப்பதிகாரமென்னும் இப் பெருங்காப்பியம் இனிது முற்றுப் பெற்றது.

(விளக்கம்) இக் கட்டுரை நூலாசிரியராலன்றிப் பிறராற் செய்யப் பட்டது. ஏனைக் காண்டங்களுக்கும் இங்ஙனம் வருகின்ற கட்டுரைகளும் நூல்முகப்பில் நின்ற உரைபெறு கட்டுரையும் பிறராற் செய்யப்பட்டன என்பதே எமது துணிவு. இவ்வாற்றால் இக் கட்டுரையின்கண் வரியும் குரவையும் சேதமும் என்பன போலப் பொருத்தமில்லாத தொடர்கள் வருதலும் காண்க. மேலும் இச் சிலப்பதிகாரத்திலேயே வீடுபேறும் கூறப்பட்டிருத்தலும் உணர்க. இதன் பொருள் மணிமேகலையிற் சென்று முற்றும் என்பது பொருந்தாக் கூற்று.

நூற் கட்டுரை முற்றிற்று.

சிலப்பதிகாரம் முற்றிற்று.


"வரம் தரு காதை" ("Varam Taru Kāṭai") refers to a Tamil literary composition focused on the theme of granting or bestowing blessings or boons. The term can be broken down as follows:

- "வரம்" (Varaṃ): This translates to "boon," "blessing," or "grant."
- "தரு" (Taru): This means "to give" or "to bestow."
- "காதை" (Kāṭai): This means "story" or "narrative."

Overview of "வரம் தரு காதை" (Varam Taru Kāṭai)

1. Context in Tamil Literature:

- Meaning of the Term:

- "Varaṃ" signifies a blessing or a boon, often associated with divine or benevolent gifts.
- "Taru" indicates the act of granting or giving.
- "Kāṭai" denotes a story or narrative.
- The term implies a narrative centered around the act of granting blessings or boons, often exploring themes of favor, grace, or divine intervention.

2. Themes and Content:

- Granting Boons: "Varam Taru Kāṭai" focuses on the theme of bestowing blessings or favors. The narrative may involve characters receiving divine or significant gifts, rewards, or favors that impact their lives.

- Divine and Human Interactions: The story might explore interactions between divine beings and humans, where blessings or boons are granted in response to prayers, devotion, or righteous behavior.

- Moral and Ethical Lessons: These narratives often carry moral or ethical lessons about the importance of virtue, devotion, and the consequences of receiving or granting blessings.

3. Examples in Tamil Literature:

- Classical Works: In classical Tamil literature, themes of blessings and boons can be found in various epics and devotional texts. These narratives often highlight the significance of divine favor and the impact of receiving blessings.

- Mythological Stories: Many Tamil mythological stories and epics include accounts of gods granting boons to humans, reflecting the cultural and religious values associated with blessings.

4. Literary and Cultural Impact:

- Inspirational Narratives: "Varam Taru Kāṭai" enriches Tamil literature by providing narratives that explore the concept of divine or significant gifts, contributing to the thematic depth of storytelling.

- Cultural Reflection: The focus on granting boons reflects cultural and religious beliefs about the role of divine favor and the importance of virtue and devotion in receiving blessings.

"Varam Taru Kāṭai" adds depth to Tamil literature by focusing on themes related to granting blessings and boons. It explores the interactions between the divine and human realms, offering narratives that reflect cultural and religious values surrounding favor and grace.



Share



Was this helpful?