2.80 வரிய மறையார் கடவூர் மயானம் பண்:காந்தாரம்
பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருப்புகலூர் சென்ற திருஞானசம்பந்தர், ஆங்கே திருநாவுக்கரசரை சந்திக்கின்றார். பின்னர் இருவரும் ஒன்றாக அம்பர் பெருங்கோயில், அம்பர் மாகாளம், திருக்கடவூர், கடவூர் மயானம் ஆகிய தலங்கள் தொடங்கி பல தலங்கள் ஒன்றாக சென்று பெருமானைப் பணிந்து பல பதிகங்கள் பாடியதாக பெரிய புராணம் நமக்கு உணர்த்துகின்றது. நெல்வாயில் அரத்துறை தலம் செல்லும் வழியில், பெருமான் தனக்கு அளித்த முத்துப் பல்லக்கில் அமர்ந்த வண்ணம் பல தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், அப்பர் பிரான் தன்னுடன் வருவதால், பல்லக்கினை விடுத்து,அவருடன் நடந்து செல்வது என்று முடிவு செய்தார். ஆனால் அப்பர் பிரானோ, பெருமான் அளித்த பல்லக்கில் செல்வதை விடுத்து, திருஞான சம்பந்தர் நடந்து செல்வது தவறு என்று சொல்ல, அவரது சொல்லினை ஏற்றுக் கொண்ட திருஞானசம்பந்தரும், தனக்கு முன்னே நடைப்பயணம் மேற்கொண்ட அப்பர் பிரானைப் பின் தொடர்ந்து பல்லக்கில் செல்லலானார். அவ்வாறு சென்று பதிகங்கள் பாடிய தலங்களில் இந்த தலமும் ஒன்று. இந்த பதிகம் அகத்தியர் தேவாரத் திரட்டு தொகுப்பினில் சேர்க்கப் பட்டுள்ளது. பெருமானின் திருவுருவத் தன்மையை உணர்த்தும் பதிகமாக இந்த பதிகம் கருதப்படுகின்றது.திருமணத்தடை நீக்கும் பதிகமாகவும் பிரிந்து வாழ்வோரை ஒன்றுசேர வைக்கும் பதிகமாகவும் கருதப்படுகின்றது. இந்த பதிகத்தின் மூன்றாவது மற்றும் கடைப் பாடல் தவிர்த்து மற்ற ஒன்பது பாடல்களிலும் பெருமான் இடபத்தின் மீது அமர்ந்த வண்ணம் உலா வரும் கோலம் சித்தரிக்கப் படுவதால், இந்த பதிகம் இறைவன் ரிஷபாரூடராக உலா வரும் தருணங்களில் இசைக்க வேண்டிய பாடலாக கருதப்படுகின்றது. பொதுவாக இடப வாகனத்தின் மீது அமர்ந்தவராகத் தானே பெருமான் உலா வருகின்றார்.
பாடல் 1:
வரியமறையார் பிறையார் மலையோர்சிலையா வணக்கி
எரியமதில்கள் எய்தார் எறியுமுசலம் உடையார்
கரியமிடறு முடையார் கடவூர்மயான மமர்ந்தார்
பெரியவிடைமேல் வருவார் அவரெம்பெருமா னடிகளே
விளக்கம்:
வரிய=இசையினை உடைய; சிலை=வில் மற்றும் மலை என்ற இரண்டு பொருளை உடைய சொல்; வணக்கி=வளைத்து; முசலம்=தண்டு; தலத்து இறைவனின் பெயர் பெருமானடிகள்; மிடறு= கழுத்து; இசைப்பாடல்களை வரி என்று அழைப்பது இலக்கிய் மரபு; கானல் வரி, வேட்டுவ வரி, என்பவை பாடல் தொகுப்புகளின் பெயராக சிலப்பதிகாரம் இலக்கியத்தில் வருகின்றன.
பொழிப்புரை:
இசைப் பாடல்களாக அமைந்துள்ள வேதங்களை அருளீயவரும், ஒற்றைப் பிறைச்சந்திரனைத் தனது சடையில் அணிந்தவரும், மேருமலையினை வில்லாக வளைத்து திரிபுரத்து அர்க்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை ஒரு அம்பினை எய்தி வீழ்த்தி எரித்தவனும், பகைவரை அழிக்க பயன்படும் தண்டாயுததை உடையவனும், ஆலகால நஞ்சினை தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனும், பெரிய புகழினை உடைய விடை மீது அமர்ந்து வருபவனும் ஆகிய பெருமான், பெருமான் அடிகள் என்ற திருநாமத்துடன் கடவூர் மயானம் தலத்தினில் அமர்ந்துள்ளார்.
பாடல் 2:
மங்கைமணந்த மார்பர் மழுவாள்வலனொன் றேந்திக்
கங்கைசடையிற் கரந்தார் கடவூர்மயான மமர்ந்தார்
செங்கண்வெள்ளே றேறிச் செல்வஞ்செய்யா வருவார்
அங்கையேறிய மறியார் அவரெம்பெருமா னடிகளே
விளக்கம்:
செய்யா=செய்து; அடியார்களுக்கு செல்வம் கொடுத்து; செல்வம்=சிவனருளாகிய செல்வம்; மறி= மான் கன்று; அங்கை=அழகிய கை; மார்பு என்பது இங்கே இதயத்தை குரிப்பிடுகின்றது. இதயம் நம் அனைவர்க்கும் இடது பக்கத்தில் இருப்பதை நாம் அறிவோம். இடது பக்கத்தில் இருக்கும் இதயத்தை குறிப்பிட்டு,பெருமானின் இடது பாகத்தில் தேவி இருப்பதை உணர்த்துகின்றார். வலன்=வலது கை; கரத்தல்=மறைத்தல், கரந்தார்=மறைத்தவர்; பெருமான் திருக்காட்சி தருவது செல்வம் என்று குறிப்பிடப்படுவதாக தருமபுர ஆதீனக் குறிப்பு உணர்த்துகின்றது. பெரிய புராணத்தில் பெரும்பாலான அடியார்களுக்கு பெருமான் விடையின் மீது அமர்ந்தவராக காட்சி கொடுத்த செய்தி சேக்கிழாரால் குறிப்பிடப்படுகின்றது.
பொழிப்புரை:
தான் மணந்த உமாதேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுகொண்டவரும், தாருக வனத்து முனிவர்கள் தன் மீது ஏவிய மழுப்படையை தனது வலது கையில் ஏந்தி செயலறச் செய்தவரும், மிகுந்த வேகத்துடன் வானிலிருந்து கீழெ இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு மறைத்தவரும், கடவூர் மயானம் தலத்தில் உறைபவரும், சிவந்த கண்களை உடையதும் வெண்மை நிறத்தில் இருப்பதும் ஆகிய எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டு பல இடங்களுக்கும் செல்பவரும், விடையின் மீது அமர்ந்தவராக பல அடியார்களுக்கு காட்சி கொடுத்தவரும், தாருக வனத்து முனிவர்கள் தன்மீது ஏவிய முரட்டு குணம் கொண்ட மான் கன்றின் தன்மையை மாற்றி தனது அழகிய கையினில் ஏந்தியவரும் ஆகிய பெருமான், பெருமான் அடிகள் என்ற திருநாமத்தை உடையவர் ஆவார். விடை வாகனராக பெரும் தரும் காட்சி, அடியார்களால் கிடைத்தற்கரிய சிறந்த செல்வமாக மதிக்கப்படுகின்றது.
பாடல் 3:
ஈடலிடப மிசைய வேறிமழுவொன் றேந்திக்
காடதிடமா வுடையார் கடவூர்மயான மமர்ந்தார்
பாடலிசைகொள் கருவி படுதம்பலவும் பயில்வார்
ஆடலரவ முடையார் அவரெம்பெருமா னடிகளே
விளக்கம்:
ஈடல்=ஒப்பில்லாத; இசைய=விருப்பதுடன்; பயில்வார்=தொடர்ந்து ஒரு செயலைச் செய்தல்; இங்கே இசைக்கும் இசைக்கருவிகளின் பின்னணியில் பாடுவதும் படுதம் எனப்படும் கூத்தினை ஆடுவதும்; படுதம் என்பது கூத்தில் ஒரு வகை, சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையில் இந்த நடனத்திற்கு விளக்கம் அளிக்கப்ப்டுகின்றது.
பல தேவாரப் பாடல்களில் பெருமான் இந்த கூத்து ஆடும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. பலியேற்கச் செல்லும் போது பாடியும் ஆடியும் செல்வது பெருமானின் பழக்கம். பக்குவப்ப்ட்ட உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை பிச்சையாக அளிப்பதை எதிர்பார்த்து மிகவும் மகிழ்வுடன் பெருமான் செல்வதால், அந்த மகிழ்ச்சி ஆடலாகவும் பாடலாகவும் வெளிப்படுகின்றது. ஆடலன் அழனாகம் அரைக்கிட்டு அசைந்தாட, பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான், மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள், வேடம் பல வல்லான் ஆடும் வீரட்டானத்தே (திருவதிகை வீரட்டானம் 1.46.3) திருவதிகை வீரட்டானம் தலத்தில், பெருமான் தனது நடனக்காட்சியை திருஞானசம்பந்தருக்கு காட்டி அருள் புரிந்த போது, அதனை ரசித்து திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் இந்த பதிகம். பறியலூர் வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பாடலிலும் (1.134.5) இந்த கூத்தினை படுதம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி, புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும், தெரிந்தார் மறையோர் திருப்பறியலூரில்,விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத்தானே, என்பது இந்த பாட்ல். திருமீயச்சூர் தலத்தின் மீது அருளிய பாடலிலும் பெருமான் உமை அன்னையுடன் இணைந்து இந்த கூத்தினை ஆடுவதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வேக மத நல்லியானை வெருவ உரி போர்த்து, பாகம் உமையோடாக படிதம் பல பாட, நாகம் அரைக்கசைத்து நடமாடிய நம்பன், மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே என்பது அந்த பாடல். தாளத்திற்கு ஏற்ப தனது கால்களைப் பெயர்த்து பெருமான் படுதம் எனப்படும் நடனம் ஆடுவதாக அப்பர் பிரான் பேரெயில் தலத்து பதிகத்தின் பாடலில் குறிப்பிடுகின்றார். பாணியார் படுதம் பெயர்ந்து ஆடுவர், தூணியார் விசயர்க்கு அருள் செய்தவர், மாணியாய் மண் அளந்தவன் நான்முகன், பேணியார் அவர் பேரெயில் ஆளரே என்பது இந்த பாடல். மாணி என்று பிரமச்சாரி சிறுவனாக, வாமனனாக திருமால் எடுத்த அவதாரம் இங்கே உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
ஒப்பற்ற இடபத்தின் மீது மிகுந்த விருப்பமுடன் செல்லும் விகிர்தனார், தனது கையில் மழு ஒன்றினை ஏந்திய வண்ணம் காட்சி தரும் இறைவனார்,காட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள இறைவனர், கடவூர் மயானத்தில் உறைகின்றார். இசைக்கருவிகளுக்கு ஏற்ப தொடர்ந்து பாடியும் படுதம் எனப்படும் கூத்தினை ஆடியும் செல்லும் இறைவர், படம் எடுத்தாடும் பாம்பினைத் தந்து உடலின் பல இடங்களில் பொருத்தியவராக காணப்படுகின்றார்.அவரே பெருமான் அடிகள் என்று அழைக்கப்படும் எமது தலைவராவார்.
பாடல் 4:
இறைநின்றிலங்கு வளையா ளிளையாளொருபா லுடையார்
மறைநின்றிலங்கு மொழியார் மலையார்மனத்தின் மிசையார்
கறைநின்றிலங்கு பொழில்சூழ் கடவூர்மயான மமர்ந்தார்
பிறைநின்றிலங்கு சடையார் அவரெம்பெருமா னடிகளே
விளக்கம்:
மலையார்=மலைப்பின்றி உறுதியாக இருப்பவர்; உலகம் மற்றும் உலகப் பொருட்கள் அளிக்கும் மாயையில் சிக்காமல், தொடர்ந்து பெருமானை வழிபடும் தமது கொள்கையில் நிலையாக இருக்கும் சிவஞானிகள்; கறை=கருமை நிறத்து நிழல்; சோலைகளில் உள்ள மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு அடர்த்தியாக இருப்பதால், சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்ல முடியாமல், இருள் படர்ந்து காணப்படும் மர நிழல்கள்; இறை=முன்கை, மணிக்கட்டு; வளையாள்=வளையல்கள் அணிந்த பார்வதி தேவி; இலங்கு= பொருந்தும்;
பொழிப்புரை:
வளையல்கள் பொருத்தப்பட்ட முன்கை உடையவளும் என்றும் இளமையும் அழகும் பொருந்தி விளங்குபவளும் ஆகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ளவரும், வேத மந்திரங்கள் பொலிவுடன் விளங்கும் மொழியுடையவரும், உலகம் மற்றும் உலகப் பொருட்கள் அளிக்கும் மாயையில் சிக்காமல், தொடர்ந்து பெருமானை வழிபடும் தமது கொள்கையில் நிலையாக இருக்கும் சிவஞானிகளின் மனதினில் நிலையாக தங்குபவரும்,தேய்ந்து அழிந்த நிலையில் பெருமானிடம் சரணடைந்த ஒற்றைப் பிறைச்சந்திரன் பெருமானின் அபயம் பெற்றமையால் பொலிந்து விளங்கும் சடையை உடையவரும் ஆகிய பெருமான் கடவூர் மயானம் தலத்தில் பொருந்தி உறைகின்றார். செழித்து அடர்ந்து வளர்ந்த மரங்களின் கிளைகளின் ஊடே சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக்கதிர்கள் புகா வண்ணம் கிளைகள் பிணைந்து காணப் படுவதால் இருள் படர்ந்திருக்கும் நிழல் உடைய சோலைகள் நிறைந்த தலமாக கடவூர் மயானம் காணப்படுகின்றது. இந்த தலத்தின் இறைவரும் எமது தலைவரும் ஆகிய பெருமான், பெருமான் அடிகள் என்று அழைக்கபப்டுகின்றார்.
பாடல் 5:
வெள்ளையெருத்தின் மிசையார் விரிதோடொருகா திலங்கத்
துள்ளுமிளமான் மறியார் சுடர்பொற்சடைகள் துளங்கக்
கள்ளநகுவெண் டலையார் கடவூர்மயான மமர்ந்தார்
பிள்ளைமதிய முடையார் அவரெம்பெருமா னடிகளே
விளக்கம்:
விரி தோடு=ஒளியுட்ன் மிளிரும்; தெளிவான சிந்தை உடைய சிவஞானிகளின் மனதினில் உறையும் பெருமான் என்று சென்ற பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தருக்கு, அத்தகைய தெளிவினை அளித்த பெருமானது தன்மை நினைவுக்கு வந்தது போலும். துள்ளும் இள மான் மறியார் என்ற தொடர் மூலம் அந்த தன்மையை குறிப்பிடுகின்றார். முரட்டுத் தன்மை வாய்ந்த காட்டு மானை, தாருக வனத்து முனிவர்கள் ஏவிய போது, அந்த மானை துள்ளி விளையாடும் மான் கன்றாக மாற்றி த்னது கையில் ஏந்தியவர் பெருமான். இளங்கன்று பயமறியாது என்ற முதுமொழிக்கு ஏற்ப, துள்ளி விளையாடும் மான் கன்றினை ஒரே இடத்தில் நிலையாக நிறுத்தி வைப்பது எத்துணை கடினமான செயல் என்பதை நாம் அறிவோம். எதற்காக பெருமான் இந்த காட்சியை பெருமான் நமக்கு வழங்குகின்றார் என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும்; ஒரே சமயத்தில் பல இடங்களிலும் அலை பாயும் மனதினை கட்டுப்படுத்தி மனமொன்றி ஒரு செயலில் ஈடுபடுவது மிகவும் கடினமாக காரியம். அந்த செயலைச் செய்வதற்கு பெருமானின் அருள் வேண்டும். ஏனெனில் அவன் ஒருவனுக்குத் தானே அந்த ஆற்றல் இயற்கையாகவே அமைந்துள்ளது. அந்த ஆற்றலைத் தான் கொண்டுள்ள தன்மயையே, துள்ளித்திரியும் மான் கன்றினைத் தனது கையில் நிலையாக ஏந்தியுள்ள தன்மை மூலம் பெருமான் நமக்கு உணர்த்துகின்றான். விரிதோடு ஒரு காதிலங்க என்ற தொடரின் மூலம்,ஒரு காதினில் தோடும், மற்றொரு காதினில் குழையும் அணிந்தவனாக, மாதொரு பாகனின் தோற்றத்தை நினைவூட்டும் வகையில் பெருமான் உள்ள நிலை உணர்த்தபப்டுகின்றது. பிள்ளை மதி=வளராக ஒற்றைப் பிறைச் சந்திரன்; கள்ள நகு வெண்டலையார் என்று பெருமான் தனது தலையில் சூட்டிக் கொண்டுள்ள மண்டையோடு கள்ளச் சிரிப்பு சிரிப்பதாக இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். நிலையற்ற உலகம், என்றேனும் ஒரு நாள் அழியும் நிலையில் உள்ள உலகப்பொருட்கள், இந்த உலகத்தில் உள்ள உயிர்களும் பொருட்களும் தருகின்ற நிலையற்ற சிற்றின்பம் ஆகியவற்றை நிலையாக கருதி வாழும் மனிதர்களின் மடமை கண்டு ஏளனமாக சிரிப்பதாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். வாய் பிளந்த நிலையில் மண்டையோடு இருப்பதை,சிரிப்பதாக திருஞானசம்பந்தர் இங்கே கற்பனை செய்கின்றார். மான் ஏந்திய கரம், அவந்து அருளால் மட்டுமே நாம் நம்து மனதினை ஒரு நிலையில் நிறுத்த முடியும் என்பதையும், தலைமாலையின் கள்ளச்சிரிப்பு வாழ்க்கை நிலையாமையையும், ஒற்றைப் பிறைச் சந்திரன் தன்னிடம் அடைக்கலம் புகுந்தோரை அழிவிலிருந்து காக்கும் பெருமானின் ஆற்றலையும், மாதொரு பாகனின் தோற்றம் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதையும் உணர்த்துவதால், பெருமானின் தோற்றமே, நமக்கு பல முக்கியமான செய்திகளை அளிப்பதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
வெண்மை நிறம் கொண்ட எருதினைத் தனது வாகனமாகக் கொண்ட பெருமான், ஒரு காதினில் ஒளிவீசும் கதிர்கள் கொண்ட தோட்டினை அணிந்துள்ளார்.அவர், துள்ளித் திரியும் இயல்பினை உடைய மான் கன்றினை ஒரே இடத்தில் பொருந்தி இருக்கும் வண்ணம் செய்து தனது கையில் ஏந்தியுள்ளார்; பொன் போன்ற நிறத்தில் இருக்கும் அவரது சடை ஒளியுடன் மிளிர, அந்த சடையில் உள்ள வெண்மை நிறத்து தலைமாலை கள்ள நகை புரிந்து, நாம் அறியாமையில் ஆழ்ந்திருக்கும் தன்மையை உணர்த்துகின்றது. தக்கனது சாபத்தினால், தனது பிறைகள் ஓவ்வொன்றாக தேய்ந்து அழியும் தன்மையில் தன்னிடம் சரணடைந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக்கொண்டு அபயம் அளித்த பெருமான், கடவூர் மயானம் தலத்தில் உறைகின்றார். எமது தலைவராக விளங்கும் அவர், பெருமான் அடிகள் என்று அழைக்கப் படுகின்றார்.
பாடல் 6:
பொன்றாதுதிரு மணங்கொள் புனைபூங்கொன்றை புனைந்தார்
ஒன்றாவெள்ளே றுயர்த்த துடையாரதுவே யூர்வார்
கன்றாவினஞ்சூழ் புறவிற் கடவூர்மயான மமர்ந்தார்
பின்றாழ்சடைய ரொருவர் அவரெம்பெருமா னடிகளே
விளக்கம்:
புனை=அழகுடன் பொருந்திய; புனைதல்=சூட்டிக்கொள்ளுதல்; புறவு=காடு; ஒன்றா=ஒப்புயர்வு அற்ற; உயர்த்தது=கொடியினில் எருதின் சித்திரத்தைத் தாங்கி எருதின் தன்மையை உயர்த்திய நிலை;
பொழிப்புரை:
பொன்னின் நிறத்தில் உள்ள மகரந்தப் பொடிகள் உதிர்வதும், நறுமணம் பொருந்தியதும் ஆகிய அழகிய கொன்றை மலர் மாலைகளைத் தனது சடையில் சூட்டிக்கொண்டவர் சிவபெருமான். அவர் ஒப்புயர்வற்ற இடபத்தினை தனது கொடியில் தாங்கி அதன் பெருமையை உயர்த்தியவர் ஆவார். அந்த எருதினையே தனது வாகனமாகக் கொண்டு அதனில் ஊர்ந்து செல்பவர் சிவபெருமான். அவர் கன்றுகளுடன் கூடிய பசுக்கள் மேயும் காடுகளை உடைய கடவூர் மயானம் தலத்தினில் உறைகின்றார். பின்னால் தாழ்ந்து தொங்கும் சடையை உடைய அவர் எனது தலைவராவார். அவரது திருநாமம் பெருமான் அடிகள் என்பதாகும்.
பாடல் 7:
பாசமான களைவார் பரிவார்க்கமுத மனையார்
ஆசைதீரக் கொடுப்பா ரலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போன் மிடற்றார் கடவூர்மயான மமர்ந்தார்
பேசவருவா ரொருவர் அவரெம்பெருமா னடிகளே
விளக்கம்:
பாசம்=உலகம் மற்றும் உலகினில் உள்ள உயிர்கள், உலகப் பொருட்கள் ஆகியவை மீது நாம் கொண்டுள்ள பற்று; பாசம் என்று உலகம், உலகினில் உள்ள உயிர்கள் மற்றும் உல்கப் பொருட்கள் ஆகியவற்றை திருமூலர் பதி பசு பாசம் என்று முப்பொருள் உணமையில் ஒன்றாக குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. நம்முடன் பிணைந்துள்ள ஐந்து மலங்களின் சேர்க்கையால் பாசம் விளைகின்றது. ஆணவம், கன்மம், மாயம், மாயேயம், திரோதாயம் ஆகிய ஐந்து மலங்களை குறிப்பிட்டு, மலங்கள் ஐந்தால் சுழல்வன் என்று திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் பாடலில் (எண் 29) மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.சுருக்கமாக யான் எனது என்ற பிணைப்பு என்றும் கூறுவார்கள். இந்த அகப்பற்றினையும் புறப்பற்றினையும் நாம் அறுத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்; இதனையே ஆசை அறுமின்கள் என்று திருமூலம் உணர்த்துகின்றார். ஆனால் இந்த ஆசையை அறுக்கும் பக்குவம் எளிதினில் உயிர்களுக்கு வாராது. இறைவனின் அருளால் தான் உயிர்கள் பக்குவப்பட முடியும். அதற்கு முதல் படியாக, இந்த ஆசையை அறுத்துக் கொள்ள வேண்டும் என்ற வேட்கை நம்மிடையே தோன்ற வேண்டும். அந்த விருப்பம் நாம் கொள்ளாத வண்ணம், நமது ஐந்து புலன்களும் செயல்படுகின்றன. எனவே புலன்கள் விளைவிக்கும் இந்த மாயையிலிருந்து விடுபட, நாம் புலன்களை அடக்க வேண்டும். இவ்வாறு புலன்களை அடக்கி, அந்த மாயையிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்ற வேட்கை நமக்கு ஏற்பட்டு, அதனை தீர்த்துக் கொள்ள இறைவனின் அருளை வேண்டினால், இறைவன் நமக்கு தேவையான் பக்குவத்தை அளிப்பார். இந்த தன்மையையே ஆசை தீர கொடுப்பார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அமுதத்தினை நாம் எவரும் உண்டதில்லை. புராணங்கள் மூலம், மேன்மேலும் உட்கொள்ள வேண்டும் என்ற ஆசையை விளைவிப்பது அமுதம் என்று நாம் தெரிந்து கொள்கின்றோம். எவ்வளவு உட்கொண்டாலும் அடங்காத ஆசை உண்டாக்கும் அமுதம் போன்று, மெய்யடியார்களுக்கு பெருமானின் புகழை எவ்வளவு நேரம் சொன்னாலும், கேட்டாலும் நிறைவு ஏற்படாது,மேலும் அந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றும். அத்தகைய அடியார்களை பரிவார் என்று குறிப்பிட்டு, இறைவன் பால் உணமையான அன்பு செலுத்தும் அடியார்களுக்கு மேன்மேலும் அவன் குறித்த சிந்தைனையில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும் தனமையை, பரிவார்க்கு அமுதம் அனையார் என்று குறிப்பிடுகின்றார். பரிவு=அன்பு; பாசமான களைவார் என்று பெருமான் நமது பந்த பாசங்களை நீக்கும் தன்மை, இந்த பாடலில் முதல் அடியில் சொல்லப்பட்டுள்ளதால், ஆசை என்பது அளவற்ற தன்மையில் தனது அடியார்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று இறைவன் கொண்டுள்ள ஆசை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. காசை மலர்=காயாம் பூ; அலங்கல்=மாலை; இடபத்தின் மீது அமர்ந்தவராக பல அடியார்களுக்கும் பெருமான் காட்சி கொடுத்த தனமையை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். பெருமான்=பெருமைக்கு உரியவர்;அடிகள்=தலைவர்; அலங்காரப்ரியன் என்று திருமாலை குறிப்பிடுவது போன்று பெருமானை தோத்திரப்ரியன் என்று கூறுவார்கள். தனது புகழினை எடுத்துரைக்கும் அடியார்கள் பால் அன்பு கொண்டு, அவர்களது தேவைகளை, நியாயமான ஆசைகளை, நிறைவேற்றும் பெருமானின் தன்மை குறிப்பிடப்படுகின்றது. ஆசை தீர என்ற தொடரை அடியார்களின் தன்மையை குறிக்கும் சொல்லாக கருதி, அடியார்களின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களது ஆசை முழுவதாக நிறைவேறும் வண்ணம், ஆசை தீரும் வண்ணம் அருள் புரிபவர் பெருமான் என்று உணர்த்துவதாக பொருள் கொள்வதும் சிறப்பே.
பொழிப்புரை:
உலகப்பொருட்க்ள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் மீது நாம் கொண்டுள்ள பற்றினை நாம் களைந்து கொள்ள நமக்கு உதவி புரிபவர் சிவபெருமான்.இறைவன் பால் உண்மையான அன்பு கொண்டு அவனை பணிந்து வணங்கும் அடியார்களுக்கு, அமுதம் போன்ற தன்மை உடையவ்னாக, அத்தகைய அடியார்கள் தன்னை மேன்மேலும் சிந்திக்கும் வண்ணம் அளவு கடந்த ஆர்வத்தினை ஏற்படுத்துபவர் சிவபெருமான். தனது அடியார்களுக்கு உதவ வேண்டும் என்று அளவு கடந்த ஆசை உடைய பெருமான், தனது ஆசை தீரும் வரை, அடியார்களுக்கு அருள் ;புரிந்துகொண்டே இருப்பார். தனது அடியார்களின் விருப்பம் அனைத்தையும் நிறைவேற்றி, அவர்களது ஆசை அடங்கும் வண்ணம் அருள் புரிபவர் சிவபெருமான். உயிர்கள் தாம், உலகப்பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்களின் மீது கொண்டுள்ள ஆசையை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து அறுத்துக் கொள்வதற்கு அருள் புரிபவர் சிவபெருமான். தனது அடியார்களுக்கு காட்சி தருவதற்காக மாலை அணிந்த இடபத்தின் மீது வருபவர் சிவபெருமான். அவர் காயாம்பூவின் கரிய நிறம் படர்ந்தது போன்ற கழுத்தினை உடையவர் ஆவார். அவர் கடவூர் மயானம் தலத்தினில் எழுந்தருளி உள்ளார். தனது புகழினைப் பேசும் அடியார்களுக்கு அருள் புரிவதற்காக வருபவர் சிவபெருமான். இத்தகைய பெருமைகள் வாய்ந்தவராக விளங்கும் எமது தலைவராகிய பெருமானின் திருநாமம் பெருமான் அடிகள் என்பதாகும்.
பாடல் 8:
செற்றவரக்க னலறத் திகழ்சேவடிமெல் விரலாற்
கற்குன்றடர்த்த பெருமான் கடவூர்மயான மமர்ந்தார்
மற்றொன்றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார் அவரெம்பெருமா னடிகளே
விளக்கம்:
பெற்று=பெற்றம் என்ற சொல்லின் திரிபு, எருது; கற்குன்று=மலை, இங்கே கயிலாய மலை; செற்ற=கோபம் கொண்டு பலரையும் சண்டைக்கு இழுத்து வெற்றி கொண்ட: மெல்விரல்=மலர் போன்று மென்மையான பாதங்களை உடைய பெருமானின் கால்விரலும் மென்மை உடையதாகத் தானே இருக்க முடியும். அதிகமான அழுத்தம் கொடுக்காமல், வலிமையாக ஊன்றாமல், தனது கால் விரலை, மெல்லிய முறையில் ஊன்றினார் என்றும் பொருள் கொள்ளலாம். அப்பர் பெருமான் அருளிய திருக்கயிலாயப் பதிகம் (4.47) பாடல்கள் நமது நினைவுக்கு வருகின்றன. இந்த பதிகத்தின் பாடல்களில் அப்பர் பிரான், பெருமான் வலிமையாக ஊன்றியிருந்தால், அரக்கன் இராவணன் அப்போதே கூழாக மாறியிருப்பான் என்றும், எவரும் கயிலை நிகழ்ச்சிக்குப் பின்னர் அவனை காண்பதற்கு வாய்ப்பே இருந்திருக்காது என்றும் கூறுகின்றார். திகழும்=பொலிவுடன் திகழும்; மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிர மணிக் கனகம் ஒக்கும் திருவடி என்று அப்பர் பிரானின் வாய்மொழி நமது நினைவுக்கு வருகின்றது.
பொழிப்புரை:
கோபம் கொண்டு பலரையும் வலுச் சண்டைக்கு இழுத்து வெற்றி கண்ட அரக்கனாகிய இராவணன். கயிலாய மலையின் கீழே அகப்படடு வருந்தி அலறும் வண்ணம், ஒளி மற்றும் அழகுடன் பொலிந்து திகழும் தனது மென்மையான சேவடியின் விரலால், மெல்லியதாக கயிலை மலையை அழுத்திய பெருமான்,கடவூர் மயானம் தலத்தில் உறைகின்றார். உவமையாக சொல்வதற்கு வேறோர் மலை இல்லாத வண்ணம், குற்றம் ஏதும் இல்லாததும் திண்ணியதாக விளங்குவதும் பனி படர்ந்து வெள்ளி மலை போன்று காட்சியளிப்பதும் ஆகிய கயிலாய மலையின் மீது வீற்றிருக்கும் பெருமான், இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவராக பல இடங்களுக்கும் செல்கின்றார். அவரே எமது தலைவராவார். அவரது திருநாமம் பெருமான் அடிகள் என்பதாகும்.
பாடல் 9:
வருமாகரியி னுரியார் வளர்புன்சடையார் விடையார்
கருமானுரிதோ லுடையார் கடவூர்மயான மமர்ந்தார்
திருமாலொடுநான் முகனுந் தேர்ந்துங்காணமுன் னொண்ணாப்
பெருமானெனவும் வருவார் அவரெம்பெருமா னடிகளே
விளக்கம்:
வருமா கரி=தன்னை எதிர்த்து வந்த மதயானை; ஒண்ணா=முடியாத, ஒன்றாத; பல பாடல்களில் கருமான் என்று காட்டில் வாழும் யானை குறிப்பிடப்பட்டாலும், தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானை முதலடியில் குறிப்பிடப் பட்டு இருப்பதால், கருமான் என்று இரண்டாவது அடியில் சொல்லி இருப்பது, மானையே உணர்த்துகின்றது என்று பொருள் கொள்வதே பொருத்தம். தேர்ந்தும்=தேடியும்;
பொழிப்புரை:
தாருகவனத்து முனிவர்களால் ஏவப்பட்டு தன்னை கொல்லும் நோக்கத்துடன் எதிர்த்து வந்த மத யானையின் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்வையாக போர்த்துக் கொண்டவர் சிவபெருமான். அவர் என்றும் வளர்ந்து கொண்டிருக்கும் மென்மையான சடையை உடையவர்; இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவர்; கரிய மானின் உடலிலிருந்து உரிக்கப்பட்ட தோலைத் தனது ஆடையாக அணிந்த பெருமான், கடவூர் மயானம் தலத்தினில் உறைகின்றார். திருமாலும் நான்முகனும் தேடியும், தனது திருவடியையும் திருமுடியையும் அவர்கள் இருவரும் காண முடியாத வண்ணம், அவர்களின் முன்னெ நெடிய அனற்பிழம்பாக நின்றவர் பெருமான்; இத்தகைய பெருமைகளுக்கு உரியவரும் எமது தலைவரும் ஆகிய பெருமான், பெருமான் அடிகள் என்ற திருநாமம் கொண்டவர் ஆவார்.
பாடல் 10:
தூயவிடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள்
காயவேவச் செற்றார் கடவூர்மயான மமர்ந்தார்
தீயகருமஞ் சொல்லுஞ் சிறுபுன்றேர ரமணர்
பேய்பேயென்ன வருவார் அவரெம்பெருமா னடிகளே
விளக்கம்:
துன்னார்=அனைவர்க்கும் பகைவர்களாகிய விளங்கிய திரிபுரத்து அரக்கர்கள்; துன்னுதல்= நெருங்குதல், சிவநெறியை நெருங்கி பின்பற்றாமல் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள்; பெருமானை குறித்து வீண் பழிகளைச் சேர்த்து இழிவாக சொல்லுதல் தீய செயலாக கருதப்படும் தன்மை இந்த பாடலில் தீயகருமம் சொல்லும் என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. சிறுமை, புன்மை= இழிவாக கருதப்படும் தன்மை; தேரர்=புத்தர்; இறைவனை பணிந்து வணங்கத் தக்கவராக கருதாமல், பேயினை விலக்கி ஒதுக்கித் தள்ளுவது போன்று தீண்டத்தகாத பொருளாக சமணர் மற்றும் புத்தர் பெருமானை கருதும் தன்மையை, பேய் பேய் என்ன வருவார் என்று குறிப்பிடுகின்றார். தீய கருமம் என்று பல தீய செயல்களை நல்ல செயல்களாக கருதி சமணர்களும் புத்தர்களும் மற்றவர்கள் பின்பற்றவேண்டும் என்று சொல்வதை இங்கே குறிப்பிடுகின்றார். கொன்றதை தின்பது பாவம் அல்ல மற்றும் வேள்வியை இகழ்தல் என்ற புத்தர்களின் கொள்கையும், சமணர்களின் நின்ற தன்மையில் உணவு உட்கொள்ளல், பல் துலக்காது நீராடாது இருத்தல் என்பவை சில உதாரணங்கள்.
பொழிப்புரை:
தூய்மையான வெண்ணிறம் கொண்ட இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்பவர் சிவபெருமான்; சிவநெறியிலிருந்து விலகிச் சென்று பலருக்கும் பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயினில் வெந்து அழியுமாறு சினத்துடன் அம்பினை எய்த பெருமான் கடவூர் மயானம் தலத்தில் அமர்ந்து உள்ளார். பெருமானை இழிவாக உரைத்து தீயசெயல்கள் செய்யும் வண்ணம் பலரையும் தூண்டும் சமணர்களும் புத்தர்களும் சிறுமையான அறிவு உடையவர்களாக கீழ்மைத் தன்மையுடன் நடந்து கொள்கின்றனர். அவர்கள் பேய் பேய் என்று சொல்லி, சிவபெருமானை தீண்டத் தகாதவராக கருதி பயந்து ஒதுக்கி வாழ்கின்றனர். இத்தகைய தன்மை வாய்ந்த பெருமான், எமது தலைவராக விளங்கும் பெருமான், பெருமான் அடிகள் என்ற திருநாமத்துடன் திகழ்கின்றார்.
பாடல் 11:
மரவம்பொழில்சூழ் கடவூர் மன்னுமயான மமர்ந்த
அரவமசைத்த பெருமா னகலமறிய லாகப்
பரவுமுறையே பயிலும் பந்தன்செஞ்சொன் மாலை
இரவும்பகலும் பரவி நினைவார்வினைக ளிலரே
விளக்கம்:
அகலம்=தன்மை; மரவம்=ஆச்சாமரம், வெண்கடம்ப மரம்; இந்த பாடலில் மிகவும் அடக்கமாக தான் பெருமானின் பெருமையை முழுதும் அறியாத தன்மையில் இருப்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
பொழிப்புரை:
வெண் கடம்ப மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கடவூர் தலத்தினில் நிலை பெற்று விளங்கும் மயானம் தலத்தினில் உறைபவனும், தனது இடுப்பினில் பாம்பினை கச்சாக இறுக கட்டி தனது விருப்பம் போன்று அசைக்கும் பெருமானின் பெருமைகள் முழுவதையும் என்னால் அறிந்து சொல்லமுடியவில்லை; எனினும் தன்னால் இயன்றவரையில் அவரது புகழினை தொடர்ந்து பாடும் ஞானசம்பந்தன் சொல்லிய தமிழ் மாலையில் அமைந்துள்ள பாடல்களை இரவும் பகலும் பாடி, பெருமானை புகழினை நினைக்கும் அடியார்கள் தங்களது வினைகள் முற்றிலும் தீரப்பெற்றவர்களாக இருப்பார்கள்.