இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


வேனிற்காதை

Venir Kaathai encompasses narratives set in forested or wilderness areas, often exploring themes related to nature, adventure, or the mystical aspects of the forest. These stories may involve characters who navigate the complexities of forest life, face challenges, or encounter mystical elements associated with the wilderness. The tales often reflect the beauty and dangers of the natural world, offering insights into the human connection with nature and the symbolic significance of forests in cultural and literary contexts.


சிலப்பதிகாரம் - வேனிற்காதை

அஃதாவது - கோவலனுக்கு முற்பிறப்பிற் செய்த பழவினை மாதவி பாடிய யாழிசைமேல் வைத்து வந்துருத்ததாகலின் அவ்வுவ வுற்ற திங்கண் முகத்தாளை வெறுத்துத் தன் ஏவலருடன் போயபின்னர் அப்பருவம் தானும் வேனிற் பருவமாகலின் காதலனுடனன்றித் தமியளாய் ஆயத்தோடு தன் மனைபுகுந்த மாதவி அவனது பிரிவாற்றாமையாலே பட்ட துன்பத்தையும் அதனை ஆற்றியிருத்தற்கு அவள் செய்த செயல்களையும் கூறுகின்ற பகுதி என்றவாறு.

(நிலைமண்டில ஆசிரியப்பா)

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின் 5

மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்என
வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை 10

புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற,
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள்
கோவலன் ஊடக் கூடாது ஏகிய 15

மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி
வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில் பள்ளி ஏறி மாண்இழை
தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும்
தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் 20

கொங்கை முன்றில் குங்கும வளாகத்து
மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி
அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினள் மயங்கி,
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி 25

நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி,
வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி
இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச்
செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே
வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து, 30

பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை
உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி,
இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின்
இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக்
குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும் 35

வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும்
குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும்
அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் 40

நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி,
மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்
திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப்
புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி,
சண்பகம் மாதவி தமாலம் கருமுகை 45

வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை
எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு
விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட 50

ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,
அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது
பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு, 55

மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும் 60

தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்
இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என
எண்எண் கலையும் இசைந்துஉடன் போக
பண்ணும் திறனும் புறங்கூறு நாவின் 65

தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,
பசந்த மேனியள் படர்உறு மாலையின்
வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம் 70

கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎன
மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்
கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப,
திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட 75

மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்,
புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்
கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்
பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய 80

நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்,
அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச்
சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக் 85

கிளிபுரை கிளவியும் மடஅன நடையும்
களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச்
செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி ஆடலும்,
சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் 90

கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும்
புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்,
கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும் 95

மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச்
சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப்
புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின்
இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித்
தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல் 100

கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும்,
பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகி
என்உறு கிளைகட்குத் தன்உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும்,
வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக் 105

கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்,
அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும்
எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்,
ஆடல் மகளே ஆதலின் ஆயிழை.
பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்குஎன, 110

அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய,
மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப
மாலை வாரார் ஆயினும் மாண்இழை. 115

காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.

(வெண்பா)

செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்துஒழுக
மைந்தார் அசோகம் மடல்அவிழக் - கொந்தார்
இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று
வளவேல்நற் கண்ணி மனம்.

ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
கானற்பா ணிக்குஅலந்தாய் காண்.

உரை

வேனில் வரவு

1-7 : நெடியோன் ............ வந்தனனிவனென

(இதன்பொருள்:) நெடியோன் குன்றமும் தொடியோள் பவுவமும் தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு - வடக்கின் கண் திருமால் எழுந்தருளிய வேங்கடமலையும் தெற்கின்கண் குமரிக்கடலும் (கிழக்கின்கண்ணும் மேற்கின்கண்ணும் ஒழிந்த கடல்களுமே) தமிழ்மொழி வழங்குகின்ற நாட்டிற்கு எல்லையாம் என்று சான்றோரால் அறுதியிடப்பட்ட மூவேந்தருடைய குளிர்ந்த புனலையுடைய நல்ல நாட்டிடத்தே; மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும் - மாடங்களாற் சிறந்த மதுரையும் பெருமை பொருந்திய உறந்தையும் மறவரின் ஆரவாரமுடைய வஞ்சியும் முழங்குகின்ற காவிரி நீரையும் கடல் நீரையுமுடைய பூம்புகாரும் என்னும் நான்கு தலைநகரங்களினும்; அரைசு வீற்றிருந்த - தனது ஆணையைச் செலுத்தி அரசனாக வீற்றிருந்த; உரைசால் சிறப்பின் மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய - புகழமைந்த சிறப்பினையுடைய மன்னனாகிய காமவேள் மகிழ்தற்குக் காரணமான துணைவனாகிய; இன் இளவேனில் இவண் வந்தனன் என - இன்பந்தரும் இளவேனில் என்னும் இளவரசன் இப்பொழுது இவ்விடத்தே வந்து விட்டான் என்று; என்க.

(விளக்கம்) நெடியோன் என்றது நெடுமையால் உலகளந்த பெருமானாகிய திருமாலை. அவன் எழுந்தருளியிருக்கும் குன்றுமாவது திரு வேங்கடம். கிழக்கினும் மேற்கினும் கடல்களே எல்லையாகலின் அவற்றைக் கூறிற்றிலர். பனம்பாரனாரும் வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் எனவே ஓதுதலும் உணர்க. இவ்விரண்டினையும் கூறியதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் ஈண்டுணரற்பாற்று. அது வருமாறு : - நிலங்கடந்த நெடு முடியண்ணலை நோக்கி உலகந்தவஞ் செய்து வீடுபெற்ற மலையாதலானும் எல்லாரானும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினர். குமரியுந் தீர்த்தமாகலின் எல்லையாகக் கூறினர். இவ்விரண்டினையும் காலையே ஓதுவார்க்கு நல்வினை யுண்டாமென்று கருதி இவற்றையே கூறினார். இவையிரண்டும் அகப்பாட்டெல்லையாயின. குமரியாற்றின் தெற்கு நாற்பத்தொன்பது நாடு கடல் கொண்டதாகலின் கிழக்கும் மேற்கும் கடல் எல்லையாக முடிதலின் வேறெல்லை கூறாராயினர் எனவரும்.

இனி குமரியாற்றின் தெற்கு நாற்பத்தொன்பது நாடு கடல் கொண்டது என்னும் வரலாற்றைக் குறிப்பை ஈண்டு அடியார்க்குநல்லார் கூறும் விளக்கத்தால் அறிதல் இன்றியமையாதாம் அது வருமாறு.

தொடியோள் - பெண்பாற் பெயராற் குமரி என்பதாயிற்று : ஆகவே தென்பாற்கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியும் என்னாது பவுவமும் என்றது என்னை? யெனின், முதலூழியிறுதிக்கண் தென்மதுரை யகத்துத் தலைச் சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு இரீயினார் காய்சின வழுதி முதற் கடுங் கோனீறாகவுள்ளார் எண்பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமாகீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீயினான். அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்று மாற்றிற்கும் குமரி யென்று மாற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ் தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும் ஏழ் முன்பாலைநாடும் ஏழ் பின்பாலைநாடும் ஏழ் குன்றநாடும் ஏழ் குணகரைநாடும் ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியுந் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும். கடல்கொண்டொழிதலாற் குமரியாகிய பவுவமும் என்றார் என்றுணர்க. இஃதென்னை பெறுமாறெனின் வடிவே லெறிந்த வான்பகை பொறாது -பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள (11 : 18 -20) என்பதனானும் கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரை யானும் பிறவாற்றானும் பெறுதும் எனவரும்.

3. மதுரையை நான்மாடக் கூடல் என்பதுபற்றி மாடமதுரை என்றார். பீடு -பெருமை. 4. கலி-ஆரவாரம். புனல் - காவிரிப் புனலும் கடலும் என்க. 5. உரை - புகழ். 6. மன்னனாகிய மாரன். வேனில், தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியாகலின் பால்பிரிந்து வந்தனன் என உயர்திணை முடிபேற்றது. வந்தது என்பதும் பாடம்.

வந்தனன் என்பது வருவான் என்னும் எதிர்காலச் சொல்லை விரைவு பற்றி இறந்த காலத்தாற் கூறியபடியாம். இதனை,

வாராக் காலத்து நிகழுங் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள வென்மனார் புலவர் (வினை 44)

எனவரும் தொல்காப்பியத்தான் உணர்க.

அடியார்க்குநல்லார் - காமனுக்குத் தேர் தென்றலும் புரவி கிள்ளையும் யானை அந்தியும் சேனை மகளிருமாதலால் தேர் தென்னர் காவலும் புரவி கிள்ளி காவலும் யானை சேரமான் காவலுமாக்கித் தானும் தன்சேனையும் புகாரில் வீற்றிருந்தான் என்பது கருத்து என்று கூறி இதற்கு :

திண்பரித் தென்றலந் தேரும் தார்புனை
வண்பரிக் கிள்ளையு மாலை யானையும்
கண்கடைப் படுகொலைக் காமர் சேனையும்
எண்படப் புகுந்தன னிரதி காந்தனே

என, ஒரு பழம்பாடலையும் எடுத்துக் காட்டினர்.

இதுவுமது

8-13 : வளங்கெழு ........... கூற

(இதன்பொருள்:) வளம் கெழு பொதியில் மாமுனி பயந்த இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின் - செந்தமிழ் வளமும் சந்தன வளமும் பொருந்திய பொதிய மலைக்கண் எஞ்ஞான்றும் வீற்றிருந்த குறுமுனிவன் ஈன்ற இளமையுடைய தென்றல் என்னும் தூதுவன் வந்து கூறினன். ஆதலாலே; கொடி மிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன் - பூங் கொடிகள் செறிந்த தேமாஞ்சோலையாகிய பாசறைக் கண்ணிருந்த குயிலோன் என்கின்ற படைத்தலைவன் சிறுக்கன் அத்தென்றற் றூதன் அருளிச்செய்த ஆணைக்கிணங்க; மகர வெல் கொடி மைந்தன் சேனை புகார் அறுங்கோலம் கொள்ளும் என்பது போல் - நம் மன்னனாகிய மகரமீன் கொடியுயர்த்த வலிமைமிக்க காமவேளின் படையிலுள்ளீரெல்லாம் குற்றந்தீரப் போர்க் கோலங் கொள்ளுங்கோள் என்றறிவிப்பான் போல; பணிமொழி கூற-யாண்டுங் கூவியறிவியா நிற்ப; என்க.

(விளக்கம்) 8. வளம் - மொழிவளமும்சந்தன முதலிய பொருள் வளமும் என்க. மாமுனி - அகத்தியன். 9. இளங்காலாகிய தூதன் - மெல்லிய தென்றலாகிய தூதன். காற்றூதன் - காலினால் விரைந்து செல்லும் தூதன் எனவும் ஒருபொருள் தோன்றிற்று. இத்தகைய தூதனை ஓட்டன் என்பர். மரக வெல்கொடி மைந்தன் - காமவேள் - அவன் வலிமை மிக்கவன் ஆதலின் அப்பொருள் தோன்ற மைந்தன் என்றார். மைந்து - வலிமை. மைந்தன் சேனை என்றது மகளிரை. அவர் கோலங் கோடலாவது - பட்டுநீக்கித் துகிலுடுத்துப் பேரணிகலன் அகற்றி மெல்லணி யணிந்து கூந்தற்குக் கமழ்புகை யூட்டுதல் முதலியன செய்து தங் காதலரோடு நிகழ்த்தும் கலவிப்போர்க்கு அமைதல். இரவிற்கோர் கோலங் கொடியிடையார் கொள்ள என்றவாறு. அக்காலத்திற்கு ஏற்பனவுடுத்து முடித்துப் பூசிப் பூணுதல் என்பார் அடியார்க்குநல்லார். சேனை என்றமையால் கோலம் என்பது போர்க்கோலம் என்பதுபட நின்றது. சோலை - மாஞ்சோலை; அஃதீண்டுப் பாசறை என்பதுபட நின்றது. படையுள்படுவோன் என்றது படைத்தலைவன் கட்டளையை மறவர்க்கு அறிவிக்கும் தொழிலையுடையோன்; அவனைப் படைக்கிழவன் சிறுக்கன் என்பர். இவன் அறிவிக்குங்கால் சின்னம் என்னும் ஒருதுளைக் கருவியை ஊதுமாற்றால் அறிவிப்பன் ஆதலின் இவனுக்குச் சின்னமூதி, காளமூதி என்னும்பெயர்களும் வழங்கும். பணித்தல் - கட்டளையிடுதல்.

மாதவியின் செயல்

14 - 26 : மடலவிழ் ........... இருக்கையளாகி

(இதன்பொருள்) மடல் அவிழ்கானல் கடல் விளையாட்டினுள் - இதழ் விரிகின்ற மலர்கணிரம்பிய கடற்கரைச் சோலையையுடைய கடல் விளையாட்டு நிகழுமிடத்தே; கோவலன் ஊட - மாயத்தாள் பிறிதொன்றன்மேல் மனம் வைத்துப் பாடினள் என்று கருதிக் கோவலன் தன்னோடு ஊடிப்பிரிந்து போனமையின்; கூடாது ஏகிய - அவனைக் கூடும் செவ்வி பெறாது தமியளாய்த் தன் மனைபுகுந்த; மாமலர் நெடுங்கண் மாதவி - கரியமலர் போலும் நெடிய கண்ணையுடைய மாதவி; விரும்பி - குயிலோன் கூறிய பணிமொழியை விரும்பி; வான் உற நிவந்த மேல்நிலை மருங்கின் வேனில் பள்ளி ஏறி - வானிடத்தே மிகவும் உயர்ந்துள்ள மேனிலை மாடத்தின் கண்ணமைந்த ஒரு பக்கத்தமைந்த நிலாமுற்றத்தின் கண் ஏறி; மாண் இழை தென்கடல் முத்தும் தென்மலைச் சந்தும் தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் - மாண்புடைய அணிகலன்களும் கொற்கை முத்தும் பொதியிற் சந்தனமும் அவ்வேனில் வேந்தனுக்குத் தான் இறுக்கும் கடமைப் பொருள்களாகலின்; கொங்கை குங்கும வளாகத்து முன்றில் மை அறு சிறப்பின் கை உறை ஏந்தி - அவ்வேனில் வேந்தன் வீற்றிருக்கும் தனது முலைமுற்றத்தே குங்குமக் கோலமிடப்பட்ட பரப்பிலே அவையிற்றை அவ் வேந்தனுக்குக் காணிக்கையாக ஏந்தி அவையிற்றைச் செலுத்திப் பின்னர்த் தொழுது தன் கையில் வாங்கி; ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விரத்தி நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி - ஒன்பது வகைப்பட்ட இருப்பினுள் முதற் கண்ணதாகிய தாமரை யிருக்கையென்னும் நல்ல கூறுபாடமைந்த இருக்கையை உடையளாகி; அதிரா மரபின் யாழ் கை வாங்கி - கோவை குலையாத முறைமையினையுடைய தனது யாழினைக் கைக்கொண்டு; மதுரகீதம் பாடினள் மயங்கி - முந்துற மிடற்றினாலே இனிய பண்ணைப் பாடினளாக அதுதான் மயங்குதலாலே என்க.

(விளக்கம்) 16. விளையாட்டே வினையாயிற்று என்னும் பழமொழி பற்றி கடல் விளையாட்டினுள் கோவலன் ஊட என்றார். ஊழ்வினை விளையாட்டையே வினையாக்கி விடுவதனை இராமன் உண்டைவில் விளையாட்டே வினையானமையானும் உணர்க. 15. கூடாதேசிய என்றது கூடுதற்குச் செவ்வி பெறாது சென்ற என்றவாறு. 16. மாதவி குயிலோன் கோலங்கொள்ளும் என்பதுபோற் கூற அங்ஙனம் அவ்வேனிலரசனைக் கோலங்கொண்டு வரவேற்க விரும்பி என்க. 17-18. வேனில்வேந்தனை எதிர்கொள்ளுமிடம் மேனிலை மருங்கில் வேனிற் பள்ளி யாதலின் அதன்கண் ஏறினள் என்க. மாணிழை என்பதனை அன்மொழித் தொகையாக் கொண்டு மாதவி என்றனர் பிறரெல்லாம். மாட்சிமையுடைய அணிகலன்களும் இன்றியமையாமையின் எம் கருத்தே சிறப்புடைத்தாம். மாணிழையும் எனல் வேண்டிய எண்ணும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. 19. சந்து - சந்தனம். 20. தன்கடன் - தான்வேனில் வேந்தனுக்கிறுக்கக் கடவதாகிய கடமைப்பொருள்.

வேனில் வேந்தன் வீற்றிருக்கும் அரண்மனை கொங்கை யாகலின் அதன் முன்றிலிலே இவற்றை ஏந்தினள் என்றவாறு. ஏந்தினள் என்றது இவற்றை முலைக்கண் அணிந்து பூசி என்பதுபட நின்றது. அங்ஙனம் செய்தலே அவனுக்குத் தன்கடன் இறுத்தவாறாம் என்க.

22. கையுறை - காணிக்கை. காணிக்கை செலுத்துவோர் பெறுவோர் முன்றிலிற் கொணர்ந்து செலுத்துவராதலின் கொங்கை முன்றிலில் ஏந்தி என்றார். முலை - வேனிலரசன் வீற்றிருக்கும் அரண்மனை. மார்பு - அதன் முற்றம்.

24. அதிரா மரபின் .... மயங்கி என்னுந் தொடரை, 26. இருக்கையளாகி என்பதன் பின்னாகக் கூட்டுக. 25. விருத்தி - இருக்கை. இருக்கை பல வகைப்படும். அவை திரிதரவுடையனவும் திரிதரவில்லனவும் என இருவகைப்படும். அவற்றுள் திரிதரவுடையன : யானை தேர் புரவி பூனை முதலியனவாம். ஈண்டுக் கூறப்பட்ட ஒன்பது வகை இருக்கையும் திரிதரவில்லனவாம். அவையாவன: பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்பன. பதுமுகம் எனினும் பதுமாசனம் எனினும் தாமரையிருக்கை எனினும் ஒக்கும்.

தலைக்கண் விருத்தி என்றது பதுமுகத்தை. இவ்விருக்கை யாழ்வாசிப்போர்க்கு நன்மையுடைய பகுதியை யுடையதாதலின் நன்பாலமைந்த இருக்கையள் என்றார். 23. அதிராமரபு - கோவை குலையாத முறைமை. பிரிவாற்றாமையால் மிடற்றாற் பாடிய இசை மயங்கியது. அதுகண்டு பின்னர் யாழ் இசைக்கத் தொடங்கினள் என்க.

இனி ஈண்டு அடியார்க்குநல்லார் பதுமாசனமாக விருந்தவள் தனக்கு நாயகன் இன்மையில் தியாந நாயகனாக மானதத்தால் நோக்கி எதிர்முகமாக விருந்து வாசித்தலைக் கருதினாள் என்னும் விளக்கம் போலி என்றொழிக. கோவலனிருக்கவே மாதவிக்கு நாயகனில்லை என்றிவர் கூறுவது வியப்பேயாம்.

மாதவி யாழிசைத்தல்

27 - 35 : வலக்கை .......... கேட்டனள்

(இதன்பொருள்) வலக்கை பதாகை கோட்டொடு சேர்த்தி - தனது வலக்கையைப் பெருவிரல் குஞ்சித்து ஒழிந்த விரல் நான்கையும் நிமிர்த்துப் பதாகைக் கையாக்கி யாழினது கோட்டின் மிசைவைத்து அக் கையால் கோடு அசையாதபடி பிடித்து; இடக்கை நால்விரல் மாடகம் தழுவி - இடக்கையினது நான்கு விரலானும் மாடகத்தை உறப்பிடித்து; செம்பகை ஆர்ப்புகூடம் அதிர்வு வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து - செம்பகையும் ஆர்ப்பும் கூடமும் அதிர்வும் ஆகிய வெவ்விய பகைகள் நீங்குதற்குரிய விரகைக் கடைப்பிடித்து அறிந்து; பிழையாமரபின் ஈரேழ் கோவையை - அணியு முறைமையிற் பிழைபடாத நரம்பினாலே பதினான்கு நரம்புகளையும்; உழைமுதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி - உழை நரம்பு முதலாகவும் கைக்கிளை நரம்பு இறுதியாகவும் கட்டி: இணை கிளை பகை நட்பு என்று இந்நான்கின் - இணை நரம்பும் கிளை நரம்பும் பகை நரம்பும் நட்பு நரம்பும் என்று கூறப்படும் இந்த நான்கின் வழிகளிலே; இசை புணர் குறிநிலை எய்த நோக்கி - இசைபுணரும் குறிநிலையைப் பொருந்த நோக்கி; குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் - குரல் நரம்பினையும் யாழிற்கு அகப்பட்ட நரம்பாகிய இளிநரம்பையும் ஆராய்ந்து செவியால் ஓர்ந்து தீதின்மை அறிந்தாள் என்க.

(விளக்கம்) 27. பதாகைக்கையாவது - எல்லா விரலும் நிமிர்த்து இடை இன்றிப் பெருவிரல் குஞ்சித்தல் பதாகையாகும் என்பதனான் அறிக. இதனியல்பு அரங்கேற்று காதையுள் (18) பிண்டிக்கை விளக்கத்துங் கூறப்பட்டது கோடு - யாழின் தண்டு. 28 மாடகம் - நரம்பை வீக்கும் கருவி. (ஆணி). 29 - 30. செம்பகை - தாழ்ந்த இசை. ஆர்ப்பு - தனக்கியன்ற மாத்திரை யிறந்த இசை. அஃதாவது மிக்கிசைத்தல். கூடம் - பகைநரம்பின் இசையினுள் மறைந்து தனதிசை புலப்படாமை. அஃதாவது ஓசை மழுங்குதல். அதிர்வு - இசை சிதறுதல். இவற்றை,

இன்னிசை வழியதன்றி யிசைத்தல் செம்பகையதாகும்
சொன்னமாத் திரையி னோங்க விசைந்திடுஞ் சுருதியார்ப்பே
மன்னிய இசைவ ராது மழுங்குதல் கூட மாகும்
நன்னுதால் சிதறவுந்தல் அதிர்வென நாட்டி னாரே

எனவரும் செய்யுளானுணர்க. இந்நான்கு குற்றங்களும் மரக்குற்றத்தாற் பிறக்கும். மரக்குற்றமாவன: நீரிலே நிற்றல் அழுகுதல் வேதல் நிலமயக்குப் பாரிலே நிற்றல் இடிவீழ்தல் நோய்மரப்பாற்படல் கோண் நேரிலே செம்பகை ஆர்ப்பொடு கூடம் அதிர்வு நிற்றல் சேரினேர் பண்கள் நிறமயக்குப்படும் சிற்றிடையே என்பதனான் அறிக.

31. ஈரேழ் கோவை - பதினான்கு நரம்பு தொடுக்கப்பட்ட யாழ். இதனைச் சகோடயாழ் என்பர் அடியார்க்குநல்லார். சகோடயாழ் என்னும் வழக்கு இளங்கோவடிகளார் காலத்தில்லை என்பதனை முன்னுரையிற் காண்க. அரும்பதவுரையாசிரியர் ஈரேழ் கோவை என்பதற்குப் பதினாலு நரம்பு என்றே குறிப்பிட்டனர்.

மெலிவிற் கெல்லை மந்த வுழையே (குரலே ?) என்பதனால் உழைகுரலான மந்தமும், வலிவிற் கெல்லை வன்கைக் கிளையே øக்கிளை யிறுவாயான வலிவும் ........... பார்த்து கட்டப்பட்ட தென்பர் அரும்பதவுரையாசிரியர். இனி அடியார்க்குநல்லார், இக்குரல் முதல் ஏழினும் முன்தோன்றியது தாரம்;

தாரத்துட் டோன்றும் உழையுழையுட் டோன்றும்
ஒருங்குரல் குரலினுட் டோன்றிச் - சேருமிளி
யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட்
கைக்கிளை தோன்றும் பிறப்பு

என்பதனால் தாரத்தின் முதற்பிறப்பதாகிய உழை குரலாய்க் கைக்கிளை தாரமாகிய கோடிப்பாலை முதற்பிறக்கக் கட்டி யென்க என்பர்.

35. குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் என்பதற்குப் பழைய வுரையாசிரியர் இருவரும் குரல்முதலாக எடுத்து இளிகுரலாக வாசித்தாள் எனவே கூறினர். கூறவே மாதவி, உழை முதலாகக் கைக்கிளை இறுவாயாகக் கட்டிய இவ்வீரேழ் கோவையில் முதன் முதலாகக் குரல் குரலாகிய செம்பாலை என்னும் பண்ணை யிசைக்கத் தொடங்கிப் பின்னர்த் தாரத்தாக்கஞ் செய்து இடமுறை திரியும் பண்களை இசைத்தாள் எனக் கருதி அடியார்க்குநல்லார் ஈண்டுக் கூறும் விளக்கம் கூர்ந்துணரற்பாலதாம். அது வருமாறு: இனி வட்டப் பாலை இடமுறைத்திரிபு கூறுகின்றார். குன்றாக் குரற்பாதி தாரத்தில் ஒன்று - நடுவண் இணை கிளையாக்கிக் - கொடியிடையாய் தாரத்தில் ஒன்று விளரிமேல் ஏறடவந் நேரத்தில் அதுகுரலாம் நின்று (இஃது) என்னுதலிற்றோ வெனின், உழை குரலாகிய கோடிப்பாலை நிற்க - இடமுறை திரியுமிடத்துக் குரல் குரலாயது செம்பாலை; இதனிலே குரலிற் பாதியும் தாரத்தில் ஒன்றும் இரண்டின் அந்தரத்திலே கிளையாக்கித் தாரத்திலே நின்ற ஓரலகை விளரியின் மேலேறட விளரி குரலாய்ப் படுமலைப்பாலையாம்; இம்முறையே துத்தம் குரலாயது செவ்வழிப்பாலையாம். இளி குரலாயது அரும்பாலையாம்; கைக்கிளை குரலாயது மேற் செம்பாலையாம். தாரம் குரலாயது விளரிப்பாலையாம்; என அந்தரம் ஐந்தும் நீக்கி உறழ்ந்து கண்டுகொள்க. இவ்விடத்தில் தார நரம்பின் அந்தரக்கோலைத் தாரமென்றது தன்னமுந் தாரமுந் தன்வழிப் படர என்னுஞ் சூத்திரவிதியா னென்க. இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்றுமூன்று பண்ணும் பிறக்கும். அவற்றுட் செம்பாலையுட் பிறக்கும் பண்கள்: பாலையாழ், நாகராகம், ஆகரி, தோடி, கௌடி, காந்தாரம், செந்துருத்தி, உதயகிரி யெனவிவை. பிறவும் விரிப்பின் உரை பெருகுமாதலின் அவற்றை வந்தவழிக் கண்டுகொள்க. நாற்பெரும் பண்ணுஞ் சாதி நான்கும், பாற்படு திறனும் பண்ணெனப் படுமே என்றார்? எனவரும்.

ஈண்டு அடியார்க்குநல்லார் இனி, வட்டப்பாலை இடமுறைத் திரிபு கூறுகின்றார் என்று தொடங்கிக் கூறும் விளக்கம் இடமுறைப்பாலைக்குப் பெரிதும் பொருந்திய வுரையேயாம். மற்று ஈண்டுக் கூறப்படும் பாலைகள் அரங்கேற்று காதைக்கண் கூறப்படும் அவர் உரைக்கே மாறுபடுகின்றது என்பாரும் பாடந்திருத்துவோரும் இவ்வுரையைக் கூர்ந்து நோக்கியதாகத் தோன்றவில்லை. மற்று ஈண்டுக் உழைமுதலாகக் கோடிப் பாலை முதலிற் பிறக்கக் கட்டப்பட்டமையேயாம். அரங்கேற்றுபாதையில் இளிமுதலாகக் கோடிப்பாலை பிறக்கக் கட்டிய யாழிற்குக் கூறியபடியால் மாறுபட்டுத் தோன்றுகின்றன. இஃது அறியாமல் மயங்கினவர் கூற்றே அஃதென்க.

இனி, அரும்பதவுரையாசிரியர் குறிப்பில் இக் கருத்துளதாகத் தோன்றவில்லை. அவர் (31) பிழையா மரபின் ஈரேழ் கோவையை (32) உழைமுதற் கைக்கிளை யிறுவாய் கட்டி என்றது. உழை முதலாகக் கைக்கிளை யீறாகப்பண்ணி என்றவாறு. இளி விளரி தாரம் குரல் துத்தம் கைக்கிளை உழையே ஏழு நரம்பியன்ற பின்னர் கண்ணிய கீழ்மூன்றாகி மேலும் நண்ணல் வேண்டும் ஈரிரண்டு நரம்பே குரலே துத்தம் இளியிவை நான்கும், விளரி கைக்கிளை மும்மூன்றாகித் தளராத் தாரம் உழையிவை யீரிரண் டெனவெழு மென்ப வறிந்திசி னோரே என்பர்.

மேலும் அரும்பதவுரையாசிரியர், குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் என்பதற்கு, விளக்கம் கூறுமிடத்து, குரல்நரம்பினையும் யாழிற்கு அகப்பட்ட நரம்பாகிய இளிநரம்பையும் முற்பட ஆராய்ந்து இசையோர்த்து அதன் முறையே அல்லாத நரம்புகளையும் ஆராய்ந்து இசையோர்த்துத் தீதின்மையைச் செவியாலே ஓர்ந்தாள் என்பர். இங்ஙனம் செய்வதனையே வண்ணப்பட்டடை, யாழ்மேல் வைத்தல் என அரங்கேற்றுகாதைக்கண் கூறப்பட்டதென் றுணர்க.

35 - 42 : அன்றியும் ........ கழிப்பி

(இதன்பொருள்) அன்றியும் - அங்ஙனம் அறிந்ததோடல்லாமல்; வரன்முறை மருங்கின் - இசைநூல் வரலாற்று முறைமைப்படி ஐந்தின் (உம்) ஏழினும் - ஐந்தாம் நரம்பாம் முறைமையினாலே இளி குரலாக ஏழு நரம்புகளினும் வாசித்தாள்; எங்ஙனம் வாசித்தனளோவெனின்; உழைமுதலாகவும் உழையீறு ஆகவும் குரல் முதல் ஆகவும் குரல் ஈறு ஆகவும் - உழை குரலாகவும் உழை தாரமாகவும், குரலே குரலாகவும் குரலே தாரமாகவும், நிரலே; அகநிலை மருதமும் புறநிலை மருதமும் அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி- அகநிலை மருதம் புறநிலை மருதம் அருகியல் மருதம் பெருகியல் மருதம் என்று கூறப்படுகின்ற நால்வகைச் சாதிப்பண்களையும் அழகும் இனிமையுமாகிய நன்மையுண்டாக இசைத்துப் பார்த்து; மூவகை இயக்கமும் முறையுளி கழிப்பி - வலிவும் மெலிவும் சமனும் என்னும் மூவகைப்பட்ட இசையியக்கங்களையும் வரலாற்று முறையானே இசைத்து அத்தொழிலைக் கழித்தென்க.

(விளக்கம்) 36. வரன்முறை - இசைத்தமிழின் வரலாற்று முறைமை. ஐந்தினும் ஏழினும் என்புழி, ஈரிடத்தும் உம்மை இசை நிறை.

37 - 40. உழைகுரலாகிய அகநிலை மருதமும்; உழைதாரமாகிய (அஃதாவது கைக்கிளை குரலாகிய) புறநிலை மருதமும். குரல் குரலாகிய அருகியன் மருதமும் குரல்தாரமாகிய (அஃதாவது தாரம் குரல் ஆகிய) பெருகியன் மருதமும் என நிரனிறையாகக் கொள்க. இவற்றை அடியார்க்குநல்லார் நிரலே கோடிப்பாலை, மேற்செம்பாலை, செம்பாலை, விளரிப்பாலை எனக் கூறி இவற்றை சாதிப் பெரும் பண்கள் என்றும் ஓதுவர்.

இனி, அரும்பதவுரையாசிரியர் இவற்றிற்குக் கூறும் விளக்கம் வருமாறு:

அகநிலை மருதமாவது: ஒத்த கிழமை யுயர்குரல் மருதம், துத்தமும் விளரியும் குறைவுபெறல் நிறையே - இதன் பாட்டு,

ஊர்க திண்டே ரூர்தற் கின்னே
நேர்க பாக நீயா வண்ணம்

நரம்புக்கு மாத்திரை பதினாறு.

புறநிலை மருதம்: குரல் உழை கிழமை துத்தம் கைக்கிளை குரலாமேனைத் தாரம் விளரி யிளி நிறைவாகும். இதன் பாட்டு,

அங்கட் பொய்கை யூரன் கேண்மை
திங்க ளோர்நா ளாகுந் தோழி.

நரம்பு (க்கு மாத்திரை) பதினாறு.

அருகியன் மருதம்: குரல் கிழமை கைக்கிளை விளரி யிளிகுரல் நிறையா மேனைத் துத்தந் தாரம் இளியிவை, நிறையே. இதன் பாட்டு,

வந்தா னூரன் மென்றோள் வளைய
கன்றாய் போது காணாய் தோழி.

நரம்பு ............ பதினாறு.

பெருகியன் மருதம் பேணுங் காலை அகநிலைக்குரிய நரம்பின திரட்டி, (முப்பத்திரண்டு) நிறை குறை கிழமை பெறுமென மொழிப, இதன் பாட்டு,

மல்லூர் ......... நோவ வெம்முன்
சொல்லற் பாண செல்லுங் காலை
எல்லி வந்த நங்கைக் கெல்லாம்
சொல்லுங் காலைச் சொல்லு நீயே

நரம்பு முப்பத்திரண்டு.

அகநிலை மருதத்துக்கு நரம்பணியும்படி - உழை இளி விளரி உழை கைக்கிளை குரல் உழை குரல் தாரம் இளி தாரம் துத்தம் இளி உழை இவை உரைப்பிற் பெருகும் எனவரும்.

42. மூவகை யியக்கம் : வலிவு மெலிவு சமம் என்பன.

இனி, ஈரிருபண்ணும் எழுமூன்று திறனும் (பிங்கலந்தை) என்பவாகலின், ஈண்டுச் சாதிப் பெரும்பண்கள் நான்கற்கும் இருபத்தொரு திறங்கள் அமைந்துள்ளன. இவற்றினுள் பாலை யாழ்த்திறன் ஐந்து குறிஞ்சி யாழ்த்திறன் எட்டு மருத யாழ்த்திறன் நான்கு, செவ்வழியாழ்த்திறன் நான்கு ஆக இருபத்தொன்றாகும்.

இனி, இவைதாம் அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் என வகைக்கு நான்காகி எண்பத்து நான்காம், பெரும்பண் நான்கும் அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் என்னும் இவற்றாற் பெருக்கப் பதினாறாம். அவையாவன,

ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும்
ஆகின் றனவிவை யிவற்றுட் பாலையாழ்
தேவதாளி நிருப துங்க ராகம்
நாகராகம் இவற்றுட் குறிஞ்சியாழ்
செந்து மண்டலி யாழரி மருதயாழ்
ஆகரி சாய வேளர் கொல்லி
கின்னரம் செவ்வழி வேளாவளி சீராகம்
சந்தி இவை பதினாறும் பெரும்பண்

எனவரும் (பிங்கலந்தை - 1380).

பெரும்பண் பதினாறும் முற்கூறப்பட்ட எண்பத்துநான்கு திறனும் தாரப்பண்டிறம் (1) பையுள்காஞ்சி (1) படுமலை (1) ஆகப் பண்கள் நூற்றுமூன்றும் எனவும் பிறவாறும் கூறுவாரும் உளர். இவையெல்லாம் இன்னும் ஆராய்ந்து காண்டற்குரியனவேயாம். இசைத் தமிழ் பற்றிய இலக்கண நூல்கள் பல இறந்தொழிந்தமையால் இவற்றை ஆராய்ந்து துணிதலும் செயற்கரிய செயலென்றே தோன்றுகின்றது.

43 - 44 : திறந்து .......... மயங்கி

(இதன்பொருள்) திறத்து வழிப்படுஉம் தெள் இசைக் கரணத்து - திறம் என்னும் பண்கள் பாடுதற்குரிய நெறியிலிசைத்தற்குக் காரணமான தெளிந்த இசையை எழுப்புகின்ற செய்கையின்கண்; ஒரு புறப்பாணியில் - பிறிதொரு பாட்டுவந்து விரவப்பட்டு; பூங்கொடி - பூங்கொடி போல்வாளாகிய மாதவி; மயங்கி - மனமயங்கி; என்க.

(விளக்கம்) முற்கூறிய நால்வகைப் பெரும்பண்களைப் பாடி முடித்துப் பின்னர், திறப்பண்களைப் பாடத் தொடங்கியவள் தான் கருதிய திறத்திற்குப் புறம்பான இசைவந்து விரவுதலாலே மாதவி மயங்கினள் என்க. இம்மயக்கத்திற்குக் காரணம் கோவலன் பிரிவாற்றாமை என்பது கூறாமலே அமையும். ஆற்றாமை மிகுதியாலே அவள் அவ்விசைத் தொழிலைக் கோவலனுக்கு மேலே முடங்கல் வரையத் தொடங்குகின்றாள்.

இனி, புறத்தொரு பாணியில் மயங்கி என்பதற்குப் புறநிலையாகிய மருதப்பண்ணை வாசித்தலிலே மயங்கி என்றும், புறநீர்மை என்னும் திறத்தில் மயங்கி என்றும் உரைப்பாருமுளர்.

மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைதல்

45-53 : சண்பகம் ........... செவ்வியளாகி

(இதன்பொருள்) விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட ஒரு தனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின் - மணங்கமழுகின்ற மலர்க்கணைகளாலேயே பெரிய நிலவுலகத்தில் வாழ்கின்ற எல்லா வுயிரினங்களையும் அடக்கித் தன்னடிப்படுத்து ஆட்சி செய்த ஒப்பில்லாத தனிச் செங்கோலையுடைய ஒப்பற்ற வேந்தனாகிய காமவேளினது கட்டளையாலே; ஒருமுகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் திருமுகம் - ஒரு திசையன்றி நாற்றிசையினுமுள்ள நாட்டில் வாழ்வோரெல்லாம் கைகுவித்து வணங்கி ஏற்றுக் கொள்ளுதற்குரிய அவனது அழைப்பிதழாகிய முடங்கலை; போக்கும் செவ்வியள் ஆகி - வரைந்து தானே போக்குதற்குரியதொரு நிலையினை எய்தியவளாகி; சண்பகம் மாதவி தமாலம் கருமுகை மல்லிகை வெண்பூ வேரொடு மிடைந்த அம் செங்கழு நீர் ஆய்இதழ் எதிர் கத்திகை - சண்பகப்பூவும் குருக்கத்திப்பூவும் பச்சிலையும் பிச்சிப்பூ மல்லிகையினது வெள்ளிய பூ வெட்டிவேர் என்னும் இவற்றோடு செறித்த அழகிய செங்கழுநீர் மலரில் ஆராய்ந்தெடுத்த இதழ்களையும் உடைத்தாய்த் தான் அணிந்திருந்த கத்திகை என்னும் மலர் மாலையினது; இடைநிலத்து யாத்த - நடுவிடத்தே வைத்துக் கட்டப்பட்ட; எதிர் பூஞ் செவ்வி முதிர்பூ தாழை வெள்தோட்டு முடங்கல் - மேலே கூறப்பட்ட மலர்மணங்களோடு மாறுபட்ட மணத்தையுடைய பருவம் முதிர்ந்ததொரு தாழையினது பூவினது வெள்ளிய இதழாகிய ஏட்டின்கண்; என்க.

(விளக்கம்) 45-6. சண்பக முதலியன ஆகுபெயர். (அவற்றின் மலர்கள்) வேர் - வெட்டிவேர். மிடைந்த - செறிந்த. இங்ஙனம் பல்வேறுவகை மலர்கள் விரவித் தொடுத்த மலர்மாலைக்குக் கத்திகை என்பது பெயர் என்பதும் இதனாற் பெற்றாம். ஆயிதழ் - ஆராய்ந்தெடுத்த இதழ். பூஞ்செவ்வி எதிர் தாழைப்பூ எனினுமாம். முடங்கல் - ஏடு என்னும்பொருட்டு. ஓலையில் எழுதிச் சுருட்டப்படுதலின் திருமுகத்திற்கு முடங்கல் என்பது பெயராயிற்று. முடங்குதல் - சுருளுதல்.

இசை பாடியவள் ஆற்றாமையால் மயங்கிப் பின்னர்த் திருமுகம் போக்கும் செவ்வியளாகி எழுதுவதற்குரிய ஏடு ஆராய்பவள், தான் அணிந்த மாலையின் நடுவிடத்தே கட்டப்பட்டிருந்த தாழை மலரின் வெண் தோட்டை முடங்கலாகக் கொண்டனள் என்க. காமக் குணத்தின் தூண்டுதலாலே எழுதப்படுதலின் இதனைக் காமனுடைய திருமுகம் என்றே ஓதினர். அரசர் கட்டளை வரையும் ஏட்டிற்கே திருமுகம் என்பது பெயராம். இதுவும் காமவேந்தன் கட்டளையாதலின் திருமுகம் எனப்பட்டது. ஏனையோர் எழுதின் வாளா முடங்கல் என்றே பெயர் பெறும் என்க.

53 - செவ்வியளாகி - 45 - சண்பக ............ வெண்தோட்டு என மாறிக் கூட்டுக.

இதுவுமது

54-67 : அலத்தக ............ எழுதி

(இதன்பொருள்) அயலது பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு - அதற்கு அயலதாகியதொரு பிச்சியினது வளவிய நாளரும்பை எழுத்தாணியாகக் கையிற் கொண்டு; அலத்தகக் கொழுஞ் சேறு அளைஇ - அதனைச் செம்பஞ்சின் வளமான குழம்பின்கண் தோய்த்து உதறி எழுதுகின்றவள்; மன் உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன் இளவேனில் (அரசன்) இளவரசன் - உலகின்கண் உடம்பொடு தோன்றி நிலைபெற்ற உயிரினங்களை எல்லாம் தாந்தாம் புணர்ந்து மகிழ்தற்குக் காரணமான காதற்றுணையோடு புணர்விக்குந் தொழிலையுடைய இளவேனிற் பருவத்து அரசன்றானும் (அறனறிந்த மூத்த அறிவுடை யரசனல்லன் விளைவறியாத) இளவரசனாவான். ஆதலால், அவன் நெறியறிந்து செய்யான்; அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன் - அவ்விளவரசனுக்குத் துணையாக அந்திமாலை என்னும் கரிய யானையினது ஏறுதற்கரிய பிடரின்கண் ஏறியூர்ந்துவந் துலகில் தோன்றிய திங்களாகிய செல்வன்றானும் நடுநிலையுடையன் அல்லன்; ஒருதலையா யுட்கோட்ட முடையன் கண்டீர் ஆதலால்; புணர்ந்த மாக்கள் பொழுது இடைப் படுப்பினும் தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும் - தம்முட் காதலாலே கூடியிருக்கின்ற காதலர்தாமும் தம்முள் ஊடி அது காரணமாகச் சிறிது பொழுது இடையிலே பயனின்றிக் கழிப்பினும் அன்றி ஓதன் முதலிய காரணம் பற்றிப் பிரிந்த காதலர் தாமும் தாம் மேற்கொண்ட காரியத்தின் மேற் கருத்தூன்றித் தம்தம் துணையை மறந்தொழியினும்; நறும்பூ வாளியின் நல் உயிர் கோடல் இறும்பூது அன்று இஃது அறிந்தீமின் என - அவ்விளவேனிலரசன் தன் படைக்கலமாகிய நறிய மரலம்புகளாலே தனித்துறைவாருடைய இன்பம் நுகர்தற்குரிய உயிரைக் கைக்கொண்டு விடுதல் அவனுக்குப் புதிய செயலன்று இதனைப் பெருமானே! அறிந்தருள்க! என்று; எண் எண்கலையும் இசைந்து உடன் போக - அறுபத்து நால்வகைக் கலைகளும் மேண்மையுடைய வாய்த் தனக்குப் பொருந்தித் தன்னோடு நடவா நிற்பவும்; அவற்றுள், பண்ணும் திறனும் புறங்கூறும் நாவின் - பண்களும் அவற்றோடியைபுடைய திறங்களுமே உட்பகையாகிப் புறங்கூறுதற்குக் காரணமான தனது நாவினாலே; தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து - நிறை என்னும் கட்டுத் தன்னிடத்தினின்றும் நெகிழ்ந் தொழிந்தமையாலே தன் வரைத்தன்றித் தனிமையுற்று நெஞ்சைச் சுட்டுருக்குங் காமங் காரணமாக விளையா மழலையின் விரித்து உரை எழுதி - முதிராத தனது மழலைச் சொற்களாலே அவ் வேண்டுகோட் பாடலைப் பேசிப் பேசி எழுதி என்க.

(விளக்கம்) 56. மன்னுயிர் - உடம்பொடு தோன்றித் தத்தமக்கு வரைந்த வாழ்நாள் காறும் உலகத்திலே நிலைபெறுகின்ற உயிர்கள். உயிர் ஈண்டு இயங்கியல் உயிரினத்தின் மேற்று. என்னை? துணையோடு புணர்வன அவையேயாகலின். உயிரெல்லாம் என்றாள் அவனது ஆட்சிப் பரப்பின் பெருமை தோன்ற. துணையொடு புணர்ந்து மகிழ வேண்டும் என்பதே அவன் கட்டளை. இதனைப் பிழைப்பின் அவன் வாளியாலே அவர் தம்முயிரைக் கொள்வன் என்றவாறு. இத்தொழில் அவனுக்கு எஞ்ஞான்றும் உரித்தாகலின் அஃது இறும்பூதன்று என்றாள். எனவே, நீயிர் வந்து துணையாகாதொழியின் யான் உயிர் வாழ்தல் சாலாது என்பது குறிப்புப் பொருளாயிற்று.

57. இன்னிளவேனிலரசன் இளவரசன் என்றொரு சொல் வருவித்து அவ்வரசன் இளவரசன் ஆதலின் அவன் நல்லுயிர் கோடல் இறும்பூதன்றென உயிர் கோடற்கு அவன் இளமையை ஏதுவாக்குக.

58. அந்தியில் திங்கள் தோன்றுதலின் வேனிலரசனுக்குத் துணையாக வருதல் பற்றித் திங்களைப் போர் மறவனாக உருவகித்த அடிகளார் அந்தி மாலையை யானையாக உருவகித்தார். அந்திப் போதகத்து அரும்பிடர்த்தோன்றிய திங்களஞ் செல்வன் என்பதற்கு அடியார்க்கு நல்லார் அந்திப் போதகம் என்பதனை யானையாக்கி அதன் புறக் கழுத்திலே திங்களெனிற் பிறையாம் ஆகவே, நாடுகாண் காதையுள் வைகறை யாமத்து, மீன்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக், காரிருள் நின்ற கடை நாட்கங்குல், ஊழ்வினை கடைஇ உள்ளந் துரப்ப... நெடுங்கடை கழிந்து என்பதனோடு மாறு கொள்ளும் என்பர். தானாட்டித் தனாது நிறுத்தல் பற்றி அவர் இவ்வாறு கூறல் வேண்டிற்று. இவ்வுரை வேண்டாகூறலாம். என்னை? அடிகளார் ஈண்டு, அந்தியைச் சிலேடை வகையால் யானை என்னும் பொருட்டாகவன்றே பிறசொல்லானன்றி அந்திப் போதகத்து என்றார். அச் சொல் பொழுதின் கண் எனவும் யானையினது எனவும் பொருள் தருதலும் உணர்க. யானை என்புழி யானையில் வருவோர் அதன் பிடரில் ஏறி வருதல் இயற்கையாதலின் அரும்பிடர்த் தோன்றி என்றார். இதுதானும் அடியார்க்கு நல்லார் கூறியாங்கு அந்திப்பொழுதகத்து அரும்பும் இடர்த்தலை என்னும் பொருள்படுதலாயிற்று. பிறையாக அன்றி நிறைமதியாக இரண்டும் அந்திப் போதகத்துத்தோன்றுவனவே ஆகலின், அந்திப்பொழுதகத்தே தோன்றுவது பிறையே ஆதல் வேண்டும் என்று அவர் கூறியது போலியே என்க. அஃதொக்கும் அடியார்க்கு நல்லார் ஆடித்திங்கட் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமிஞான்று...... உரையுமுண்டு என்பதனோடும் மாறுகொள்ளும் என்பதோ எனின் அக்கருத்து நூலாசிரியர் கருத்தென்று கொள்ளல் மிகை என்பார்க்கும் நிறைமதியென்றே கொள்வார்க்கும் அஃது கடாவன்றென விடுக்க.

59. செவ்வியனல்லன் என்பது கோட்டமுடையான் எனப் பொருள் பயந்து அது தானும் கொடியவன் எனச் சிலேடை வகையாலும் பிறிதொரு பொருள் பயந்து நின்றமை யுணர்க.

63. அறிந்தீமின் - அறிமின்; வினைத்திரிசொல். நாடக மகளிர் அறுபத்து நான்கு கலையும் கற்றுத் துறைபோதல் வேண்டும் ஆதலின் இவளும் அங்ஙனம் கற்றுத் துறைபோயவள் என்று அடிகளார் அவட்கு இரங்குவார் எண்ணென் கலையும் ...... நாவின் என்றார். நாடக மகளிர்க்கு அறுபத்து நான்கு கலைகளும் உரியன என்பதனை அடிகளாரே பண்ணுங் கிளியும் பழித்த தீஞ்சொல் எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும் எனவும் (14 : 166-7) எண்ணான் கிரட்டி யிருங்கலை பயின்ற பண்ணியன் மடந்தையர், எனவும், (22: 138 -9) ஓதுதலானும் உணர்க.

65 : பண்ணுந் திறனும் இவள் நாவின் மழலைச் சொற்கு ஒவ்வா ஆதலின் அவை அதனைப் புறங்கூறும் என்றவாறு. இனி, பண்ணையும் திறத்தையும் பழிக்கும் நாவின் மழலை எனினுமாம். 66 தளைவாய் அவிழ்ந்த காமம்; தனிப்படு காமம் எனத் தனித்தனி இயையும் தளை ஈண்டு நிறை. வாயவிழ்தல் - பூட்டுவிட்டுப் போதல். தனிப்படுகாமம் - சிறந்தார்க்கும் உரைக்கலாவதன்றாய் அரிதாய் அகத்தே சுட்டுருக்கும் காமம் (அடியார்க்) தனிமையுற்ற காமம் எனினுமாம். மழலையின் விரித்து என்றதனால் பேசிப் பேசி எழுதி என்பது பெற்றாம்.

மாதவி கோவலனுக்குத் திருமுகமுய்த்தல்

68 - 74: பசந்த ............ அளிப்ப

(இதன்பொருள்) பசந்த மேனியள் - பிரிவாற்றாது பசலை பாய்ந்து ஒளி மழுங்கிய நிறத்தையுடையளாகிய அம்மாதவி தனிமைத் துயர் மிகுகின்ற அவ்வந்திமாலைப் பொழுதிலேயே; வசந்த மாலையை வருக எனக் கூஉய் - தன்னுசாத்துணைத் தோழியாகிய வசந்த மாலையை இங்கு வருக! என்று அழைத்து, தூமலர் மாலையில் துணிபொருள் எல்லாம் கோவலற்கு அளித்து - இந்தத் தூய மலர் மாலையில் யான் வரைந்துள்ள சொற்களாலே தெளியப்படும் பொருளை யெல்லாம் கோவலன் உளங்கொள்ளுமாறு எடுத்துச்சொல்லி; ஈங்குக் கொணர்க என - இங்கு அழைத்துக் கொணர்க! என்று ஏவுதலாலே; மாலை வாங்கிய வேல் அரிநெடுங்கண் - அம்மாலையைத் தன் கையிலேற்றுக் கொண்ட குருதி தோய்ந்த வேல் போலும் செவ்வரியோடிய நெடிய கண்ணையுடைய அவ்வசந்த மாலைதானும்; கூல மறுகில் கோவலற்கு அளிப்ப - விரைந்து போய்க் கூலக் கடைவீதியிடத்தே அவனைக் கண்டு அம்மாலை முடங்கலையும் அதன்கட் பொறித்த செய்திகளையும் அக்கோவலன் மனங்கொள்ளுமாறு கூறிக் கொடா நிற்ப என்க.

(விளக்கம்) 68- பசந்த மேனியள் என்றது - அப்பொழுதே அவள் ஆற்றாமை மிக்கமையை உணர்த்தற் பொருட்டு. மேலும் அவளது தனிப்படர் மிகுதி கூறுவார் மாலை என்னாது படர் உறு மாலை என்றார். படர் - நினைவின் பின்னினைவாகத் தொடர்ந்து வரும் துன்ப நினைவுகள் - அவையாவன அவன் மீண்டு வருவானோ? வாரானோ? வாரானாயின் யாம் என் செய்வேம் என்றார் போல்வன. உறு - மிகுதி : உரிச்சொல். படர் மிகுதலாலே அப்பொழுது அம் முடங்கலை உய்த்தல் வேண்டிற்று என்பது தோன்ற, படர் உறுமாலை என்று அதனை விதந்தார். கூல மறுகிற் கோவலற்கு என்றது - கூலமறுகிடத்தே காணப்பட்ட கோவலனுக்கு என்றவாறு. இங்ஙனமன்றிக் கூலமறுகினையுடைய கோவலன் எனல் இச் செவ்விக் கேலாமையுணர்க கோவலனை அழைக்கத் தூது செல்வாளும் அத் தொழிற்றகுதி யுடையளே என்றுணர்த்தற்கு, வேலரி நெடுங்கண் என அவளது உருவச் சிறப்பையே விதந்து கூறினார். கோவலன் மீளாமைக்குத் தூதின் பிழையில்லை அவன் ஊழே அங்ஙனம் செய்தது என்பது இதனாற் போந்த குறிப்புப் பொருள். தூதர்க்குரிய சிறந்த பண்புகளுள் உருவச் சிறப்பும் ஒன்றாம். இதனை - அறிவுஉருவு ஆராய்ந்த கல்வியிம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு எனவருந் திருக்குறளானும் உணர்க. இவளுடைய அறிவுடைமையும் கல்வியும் துணிபொருளெல்லாம் அளித்துக் கொணர்க என்று மாதவியால் ஏவப்பட்டமையாற் பெற்றாம்.

கோவலன் அத்திருமுகத்தை ஏலாது மறுத்து மாதவியைப் பழித்தல். 74 - திலகமும் என்பது தொடங்கி 110 - பைந்தொடி தனக்கு என்னுந் துணையும் கோவலன் கூற்றாய் ஒரு தொடராம்.

இதன்கண் - வயந்த மாலாய்! கேள்! அவள்தான் பிரிவாற்றாமையால் பெரும் பேதுறுகின்றனள் ஆதலால் யான் - இன்னே வந்து அளி செய்தல் வேண்டுமென்று என்னை அழைக்கின்றாய்! இன்று மட்டும் அன்று பண்டுதொட்டும் அவள் என்பால் நடந்த நடையெல்லாம் வாய்மையல்ல, வெறும் நடிப்புக்களே என்று யான் இப்பொழுது தான் உணர்கின்றேன். அங்ஙனம் அவள் நடித்த நாடகத்திற் சில கூறுவல் கேட்பாயாக! என்பது வயந்த மாலைக்குப் புலப்படும்படி கோவலன் கூறுகின்றான் என்றுணர்க.

இனி, இளங்கோவடிகளார் இக்கதை நிகழ்ச்சியை ஏதுவாகப் படைத்துக் கொண்டு ஈண்டுக் கோவலன் கூற்றாக வரிக்கூத்துக்களின் இயல்பினை நன்கு விளக்கும் திறம் வியந்து பாராட்டற்குரியதாம். அது வருமாறு :

(1) கண்கூடுவரி

74 - 7 : திலகமும் .............. கண்கூடுவரியும்

(இதன்பொருள்) திலகமும் அளகமும் சிறு கருஞ்சிலையும் குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட மாதர் வாள் முகத்து - ஏடி! வயந்த மாலாய்! கேள்! அவள் தான் திலகத்தையும் கூந்தலையும் சிறிய கரிய இரண்டு விற்களையும் இரண்டு குவளை மலர்களையும் ஒரு குமிழமலரையும் இரண்டு கொவ்வைக் கனிகளையும் தன்பாற் கொண்ட அழகிய ஒளியுடைய முகத்தோடும்; மதைஇய நோக்க மொடு - மதர்த்த நோக்கத்தோடும்; காதலின் தோன்றிய கண் கூடு வரியும் - யான் அவள் மனைபுகுந்த பொழுது யான் அழையாமலே முதன்முதலாக என்மேற் காதலையுடையாள் போலே என்முன் வந்து தோன்றி நின்று நடித்த கண்கூடுவரி என்னும் நடிப்பும்; என்க.

(விளக்கம்) வரிக்கூத்து என்பது - அவரவர் பிறந்த நிலத் தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற்றன்மையுந் தோன்ற நடித்தல் என்பர். அவ்வரிக்கூத்து எட்டு வகைப்படும். அவையாவன - கண்கூடு வரி, காண் வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சி வரி, காட்சி வரி, எடுத்துக்கோள் வரி எனுமிவைகளாம்.

இவற்றுட் கண்கூடு வரி என்பது - காதலுடையாள் ஒருத்தி தன்னாற் காதலிக்கப்பட்டவன் முன்னர்ப் பிறராற் கூட்டப்படாது தனது காதன் மிகுதி காரணமாகத் தானே வந்து நிற்கும் நிலைமை என்ப; இதனை -

கண்கூ டென்பது கருதுங் காலை
இசைப்ப வாராது தானே வந்து
தலைப்பெய்து நிற்குந் தன்மைத் தென்ப

எனவரும் நூற்பாவானறிக.

ஈண்டுக் கோவலன் மாதவியின் மாலையை ஆயிரத்தெண் கழஞ்சு பொன் கொடுத்து வாங்கிக் கூலியைப் பின் தொடர்ந்து சென்று மாமலர் நெடுங்கண் மாதவி மணமனை புகுந்தபொழுது அம்மாதவி தானும் கோவலன்பாற் கழிபெருங் காதலுடையவளாகவே அவனை ஆர்வத்தோடு வரவேற்றற் பொருட்டு அவனெதிர் சென்று நின்றனள். அந்நிகழ்ச்சியையே ஈண்டு ஊழ்வினை வலைப்பட்டு நிற்கும் கோவலன் நடிப்பு என்கின்றான்மன். இங்ஙனமே பின்வருவனவற்றையும் கருதுக.

74. திலகம் - பொட்டு. கருஞ்சிலை - கரிய புருவங்கள். 75. குவளை - கண். குமிழ் - மூக்கு. கொவ்வை - உதடுகள்; 76. மாதர் - அழகு. மதைஇய - மதர்த்த.

(2) காண்வரி

78 - 83 : புயல் ............... காண்வரிக் கோலமும்

(இதன்பொருள்) கருநெடுங்கண்ணி புயல் சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக் கயல் உலாய்த் திரிதரும் காமர் செவ்வியில் - பின்னும் கரிய நெடிய கண்ணையுடைய அம் மாதவிதான் தனது கூந்தலாகிய முகிலைச் சுமந்து அப்பொறை யாற்றாது வருந்தி நிலாக்கதிர்களைப் பொழிகின்ற தனது முகமாகிய முழுத் திங்களிடத்தே தன் கண்களாகிய கயல்மீன்கள் மதர்த்துத் திரிகின்ற அழகிய செவ்வியுடையளாய்; பாகு பொதி பவளம் திறந்து - தனது வாலெயிற்றூறுகின்ற நீராகிய தேன் பாகினைப் பொதிந்து கொண்டுள்ள தனது வாயிதழாகிய பவளப் பேழையைச் சிறிதுச் திறந்து; நிலா உதவிய நாகு இள முத்தின் நகை நலம் காட்டி - ஒளியைத் தருகின்ற பெரிதும் இளமையுமுடையனவாகிய எயிறுகளாகிய முத்துக்களின் பாற்றவழும் புன்முறுவலினது பேரழகைச் சிறிது காட்டி; வருக என வந்து - யான் வருக! என்றழைத்த பொழுதெலாம் காலந்தாழ்த்தலின்றி வந்தும்; போக எனப் போகிய - சூழ்நிலை காரணமாக யான் செல்க என்று கூறியவுடனே தடையேதுமின்றிச் சென்றும் அவள் நடித்த; காண்வரிக் கோலமும் - காண்வரி என்னும் கோலம் பூண்ட நடிப்பும் என்க.

(விளக்கம்) 79 - புயல் - முகில் - இது கூந்தலை உருவகித்தது - இங்ஙனமே நிரலே மதியம் முகத்தையும், கயல், கண்களையும் 80 - பாகு - வாயூறலையும், பவளம் - உதடுகளையும், முத்து, பற்களையும் உருவகித்தபடியாம். 79 -காமர் செவ்வி - காமம் வருவதற்குக் காரணமான செவ்வியுமாம். இதற்குக் காமம் வரும் என்பது காமர் என மரீஇயவாறாம். 80-பாகு-தேன்பாகு. நாகிள முத்து: மீமிசைச் சொல், பெரிதும் இளமையுடைய முத்து. ஈண்டு இளமை - புதுமை மேற்று. நகை - புன்முறுவல். நலம் - அழகு, இன்பமுமாம். வருக என வருகெனவும், போக என - போகெனவும், நிலைமொழி ஈறு கெட்டன. போகென என்பது சில செவ்வியில் போக என என்பதுபட நின்றது அத்தகைய செவ்வியாவது நண்பர் ஏதிலார் வரவு முதலியன. மாதவி கோவலன் வருகென அழைத்த பொழுதெல்லாம் புன்முறுவல் தவழ வந்ததும் போகெனப் போனதுமெல்லாம் அன்புச் செயல்களேயாகவும் ஊழ்மயக்குற்ற கோவலன் அவற்றைக் காண்வரி என்னும் நடிப்பு என்கின்றான்.

காண்வரியாவது - காண்வரி என்பது காணுங்காலை - வந்த பின்னர் மனமகிழ் வுறுவன தந்து நீங்குந் தன்மைத் தென்ப என்னும் நூற்பாவான் உணர்க. கோவலன் கூறிய மாதவி செயல் இவ்வரிக் கூத்திற் கியன்றன போலுதலறிக. பிறவும் இங்ஙனமே ஊகித்துணர்க.

(3) உள்வரி

84 - 89 : அந்தி .......... உள்வரியாடலும்

(இதன்பொருள்) அந்திமாலை வந்ததற்கு சிந்தை இரங்கி நோய் கூரும் என் சிறுமை நோக்கி - யான் ஊடிப்பிரிந்து பின்னர் அந்தி மாலைப்பொழுது வந்துறும்போது என் நெஞ்சம் பிரிவாற்றாது வருந்துமாறு காமநோய் மிகா நிற்றலாலே எனது ஆற்றாமையே வாயிலாக மீண்டும் அவள் மனைபுக்கு ஏக்கற்றிருக்கின்ற எனது சிறுமையை அவள் அறிந்துகொண்டு; என்னை அசதியாடி நகைத்தற் பொருட்டு; கிளிபுரை கிளவியும் மட அனநடையும் களிமயில் சாயலும் கரந்தனளாகி - தனக்குரிய கிளிமொழி போன்ற மழலைச் சொல்லையும்; இளவன்னத்தின் நடைபோன்ற அழகிய நடையையும், முகிலைக் கண்டுழிக் களித்தாடுகின்ற மயில்போன்ற தனது சாயலையும் துவர மறைத்தவளாய்; செரு வேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து - போர்வேல் போன்ற நெடிய கண்னையுடைய ஏவன் மகளிர் கோலத்தைக் கொண்டு; ஒரு தனிவந்த - தான் தமியளாய் என்முன் வந்து நின்று நடித்த; உள்வரி யாடலும் - உள்வரி என்னும் நடிப்பும்; என்க.

(விளக்கம்) கோவலன் மாலைப்பொழுதில் தனது பிரிவாற்றாது பெரிதும் வருந்தித் தனது வரவு நோக்கி ஏக்கறவு கொண்டிருந்ததனை அறிந்த மாதவி அவனை அசதியாடி நகைத்தலைக் கருதி ஏவன்மகள் போலக் கோலம்பூண்டு அவனெதிர்வந்து ஏதிலாள்போல நின்றாள் என்றும் அவளை ஏவற் பெண்ணாகவே கருதிக் கோவலன் பின்னரும் மாதவி வருகைக்கு ஏக்கறவு கொள்வது கண்டு தன்னுள் மகிழ்ந்து தன்னுருவம் காட்டி அசதியாடி அவனைத் தழுவிக்கொண்டதொரு நிகழ்ச்சியை ஈண்டு அவன் கூற்றாலேயே அறிகின்றாம். இந்நிகழ்ச்சி அவன் இன்பத்தைப் பன்மடங்கு மிகச் செய்திருக்கும் என்பது தேற்றம். ஆயினும் அதனையும் நடிப்பென்றே அவன் இப்பொழுது நினைத்துக் கூறுகின்றான் என்க.

உள்வரியாவது - வேற்றுருக்கொண்டு நடித்தல். இதனை உள்வரி யன்ப துணர்த்துங் காலை மண்டல மாக்கள் பிறிதோருருவம், கொண்டுங் கொள்ளாதும் ஆடுதற் குரித்தே எனவரும் நூற்பாவானுணர்க.

(4) புறவரி

90 - 93 : சிலம்புவாய் ......... புன்புறவரியும்

(இதன்பொருள்) கலம் பெறா நுசுப்பினள் சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் - தனக்கியன்ற அணிகலன்களையும் புனைய இடம்பெறாத நுண்ணிடையை யுடையாளாகிய அம்மாதவி தன் சிலம்புகள் வாய்விட்டரற்றவும் மேகலை அணி ஆரவாரிப்பவும்; காதல் நோக்கமொடு - வாய்மையான காதலுடையாள் போல நோக்கும் நோக்கத்தோடு என் பக்கலிலே வந்து; திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும் - யான் தனது பிரிவாற்றாமையாலே தன்மை திரிந்து மெய்வேறுபட்டுள்ள எனது துன்பத்தைக் கண்கூடாகக் கண்டு வைத்தும்; புறத்து நின்று ஆடிய புன்புற வரியும் - என்னை முயங்குதலின்றி ஏதிலாள் போன்று புறத்தே நின்று நடித்த புன்மையுடைய புறவரி என்னும் நடிப்பும் என்க.

(விளக்கம்) கலம் பெறா நுசுப்பு என்றது, அணிகலத்தை ஏற்றுக் கோடற்கு வேண்டிய இடம் தன்பால் இன்மையால் அவற்றை ஏலாத நுசுப்பு என்றவாறு. புலம்பவும் ஆர்ப்பவும் வந்து என ஒருசொல் வருவித்துக் கொள்க. ஆற்றவும் நுண்ணிதாகலின் நின்னிடை முரியும் ஆதலாலே இயங்காதே கொள்! என்பன போலச் சிலம்பு புலம்பவும்மேகலை ஆர்ப்பவும் நடந்து வந்து என்பது கருத்து.

மாதவி, ஊடியவன் ஊடல் தீர்ந்ததோ இல்லையோ என்றையுற்றுத் தன்பாற் காதல் நோக்கத்தோடு வந்து ஆராய்ந்து நின்றனளாக அதனை புறவரி என்கின்றான் கோவலன். புறவரியாவது - புறவரி என்பது புணர்க்குங் காலை இசைப்ப வந்து தலைவன் முற்படாது புறத்து நின்றாடி விடை பெறுவதுவே என்பதனாலறிக.

(5) கிளர்வரி

94 - 101 : கோதை .............. கிளர்வரிக் கோலமும்

(இதன்பொருள்) நல்நுதல் - அழகிய நுதலையுடையாள்; கோதையும் குழலும் தாதுசேர் அளகமும் ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும் மின்இடை வருத்தத் தோன்றி - யான் ஊடியிருந்தேனாக அப்பொழுது தனது மலர்மாலையும் குழலாகவும் பூந்துகள்படிந்த அளகமாகவும் கை செய்யப்பட்ட கூந்தற் பகுதிகளும் ஒற்றையாகிய முத்துவடமும் அழகிய தன் முலைகளுமே மின்னல் போன்ற தனது நுண்ணிடைக்குப் பொறையாகி வருத்தாநிற்பவும் புறவாயிலிலே வந்து என்னெதிர்தோன்றி; சிறுகுறுந்தொழிலியர்-சிறிய குறியவாகிய குற்றேவற் றொழில்களைச் செய்யும் ஏவன் மகளிரே மறுமொழி உய்ப்ப - அவள் கூறும் மொழிகளை எனக்குக் கூற யான் அவற்றிற்கு முன்னிலைப் புறமொழியாகக் கூறுகின்ற மறுமொழிகளை அவட்குக் கூற; புணர்ச்சி உள் பொதிந்த கலாம் தரு கிளவியின் - எனது புணர்ச்சி வேட்கையைக் குறிப்புப் பொருளாகத் தம்முட் கொண்டுள்ள என்னூடல் காரணமாக யான் கூறிய அம் மறுமொழியின்கண்; இருபுறம் மொழிப் பொருள் கேட்டனள் ஆகி - இரண்டுபாலோர்க்கும் ஏற்பக் கூறும் பொருளையுடைய மொழியாக வைத்து அதன்கண் தன் கருத்திற்கேற்ற பொருளைக் கேட்டனள் போலக் காட்டி; கிளர்ந்து வேறு ஆகிய அப்பொருள் காரணமாக என்னோடு புலந்து கூடாது மாறுபட்டுப்போன; தளர்ந்த சாயல் தகை மெல்கூந்தல் - தளர்ந்த சாயலையும் அழகிய கூந்தலையும் உடையாளாய் நடித்த; கிளர்வரிக் கோலமும் - கிளர்வரி என்னும் நடிப்பும் என்க.

(விளக்கம்) 94-96. கோதை முதலியனவே பெருஞ்சுமையாகி இடையை வருத்தும்படி நடந்து வந்த நன்னுதல் என்க. நன்னுதல்: அன்மொழித்தொகை. குழல் அளகம் என்பன கூந்தலைக் கை செய்யப்பட்ட இருபகுதிகள். அங்ஙனம் வந்தவள் தனக்கு முகங்கொடாது தோழிக்குக் கூறுவாளாய் வினவ, அவ்வினாவிற்கு யானும் அவட்கு முகங்கொடாது, சிலதியர் வாயிலாய் மறுமொழி கொடுப்ப அம்மொழிக்கு அவள் வேறு பொருள் கொண்டாள் போன்று காட்டி என்னோடு பின்னும் ஊடிப்போனாள் என்றவாறு.

97 - சிறுகுறுந்தொழிலர் - குற்றேவன்மகளிர். 99 - இருபுற மொழிப் பொருள் - வினவுவோர் கருத்திற் கேற்பவும் இறுப்போர் கருத்திற் கேற்பவும் இரு வேறு பொருள் பயக்கும் சொல். எனது மறுமொழிக்கு யான் வேண்டிய பொருள் கொள்ளாமல் தான் ஊடிப்போதற் கேற்ற பொருளைக் கொண்டு ஊடிப்போயினள் என்றவாறு.

கிளர்வரியாவது நடுநின்றார் இருவருக்கும் சந்து சொல்லக் கேட்டு நிற்பது என்பர். இதனை - கிளர்வரி என்பது கிளக்குங் காலை ஒருவருய்ப்பத் தோன்றி யவர்வாய் இருபுற மொழிப்பொருள் கேட்டுநிற் பதுவே என்பதனாலறிக.

(6) தேர்ச்சிவரி

102 - 104 : பிரிந்துறை .......... அன்றியும்

(இதன்பொருள்) பிரிந்து உறை காலத்து - யான் அவனைப் பிரிந்து பொய்ப் பிறிதோரிடத்தில் வதிய நேர்ந்த காலத்திலே; பரிந்தனள் ஆகி - தான் அப்பிரிவாற்றாது பெரிதும் வருந்துவாள் போன்று காட்டி ; என் உறு கிளைகட்கு - என் நெருங்கிய சுற்றத்தார்க்கு; தன் உறுதுயரம் - தான் படுகின்ற மிக்க துன்பத்தை; தேர்ந்து தேர்ந்து உரைத்த தேர்ச்சிவரியும் - தன் மயக்கத்தாலே ஆராய்ந்து ஆராய்ந்து சொல்வாள் போன்று நடித்த தேர்ச்சிவரி என்னும் நடிப்பும் என்க.

(விளக்கம்) கோவலன் யாதானுமொரு காரணம்பற்றி அணுக்கனாகவே பிரிந்துறைய நேர்ந்த பொழுதெல்லாம் மாதவி வாய்மையாகவே அச்சிறுபிரிவினையும் ஆற்றாளாகி அவ்வாற்றாமையைக் கோவலனுக் கணுக்கராகிய கிளையினர் பாற் சொல்லிச் சொல்லி வருந்தும் இயல்பினளாக இருந்தனள் என்பதும் அவ்வருத்தம் கேட்ட கிளையினர் அவள் நிலையை அவனுக்குக் கூறுவர் என்பதும் ஈண்டுக் கோவலன் கூற்றாற் பெற்றாம். அந்நிகழ்ச்சி அன்பின் செயலேயாகவும் ஈண்டுக் கோவலன் அம்மாசில் மனத்து மாதவிக்கு மாசுபட அதுவும் ஒரு நடிப்பேகாண் என்று கூறுகின்றான் என்றறிக.

இனி, தேர்ச்சிவரி என்னும் வரிக் கூத்தின திலக்கணத்தை,

(தேர்ச்சி யென்பது தெரியுங்காலை)
கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முன்
பட்டது முற்றது நினைஇ யிருந்து
தேர்ச்சியோ டுரைப்பது தேர்ச்சிவரி யாகும்

எனவரும் நூற்பாவானுணர்க.

(7) காட்சிவரி

105 - 106 : வண்டலர் ........... வரியும்

(இதன்பொருள்) வண்டு அலர் கோதை - வண்டுகள் கிண்டியலர்த்துதற்கியன்ற முல்லையினது நாளரும்புகளாற் புனைந்த மாலையினையுடைய அம்மாதவி; மாலையுள் மயங்கி - காமநோய் மலருகின்ற அந்திமாலைப் பொழுதினூடே அந்நோயாற் பெரிதும் மயங்கினாள் போல; கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும் - என் கிளைஞராய்த் தான் கண்டோரெவர்க்கும் அத்துயரத்தைக் கூறி நடித்த காட்சிவரி என்னும் நடிப்பும் என்க.

(விளக்கம்) வண்டால் அலர்த்தப்படும் அரும்புமாலை என்க. மாலை என்றமையாலும் அவள் தானும் கற்புடையாள் ஆதலானும், அதுமுல்லையரும்பு என்பதும் பெற்றாம். மாலை என்பது காமநோய் மலரவரும் மாலை என்பதுபட நின்றது.

காட்சிவரியின் இலக்கணத்தை , காட்சிவரி என்பது கருதும் காலை கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முனர்ப் - பட்ட கூறிப் பரிந்துநிற் பதுவே எனவரும் நூற்பாவானறிக.

(8) எடுத்துக் கோள்வரி

107 - 108 : அடுத்தடுத்தவர் ............. வரியும்

(இதன்பொருள்) அவர் முன் - எனக்கு அணுக்கராகிய என் கிளைஞர் முன்பு; அடுத்து அடுத்து - மேன்மேலும்; மயங்கிய மயக்கம் - என் பிரிவாற்றாது காமநோய் மிக்கு மயங்கி வீழ்வாள் போன்று வீழ்ந்து நடித்த பொய்யாய மயக்கத்தை; அவர் எடுத்துத் தீர்த்த - அக்கிளைஞர் மெய்யாகக் கருதி அவட்குப் பரிந்து எடுத்துத் தீர்த்த; எடுத்துக் கோள் வரியும் - எடுத்துக் கோள் வரி என்னும் நடிப்பும்; என்க.

(விளக்கம்) எடுத்து மயக்கம் தீர்த்தலால் அப்பெயர்த் தாயிற்று. அஃதாவது, கூத்தி தான் பிரிவாற்றாது மயங்கி வீழ்வாளாக நடித்து வீழ அவளைப் பிறர் (கூத்தர்) கையாற்றழுவி எடுத்துக் குளிர்ந்த சந்தனம்நீர் சிவிறி முதலியவற்றால் அம்மயக்கத்தைத் தெளிவிப்பார் போன்று நடிப்பது எடுத்துக் கோள்வரி என்னும் கூத்தியல்பு என்றவாறு. இதனை,

எடுத்துக் கோளை யிசைக்குங் காலை
அடுத்தடுத் தழிந்து மாழ்கி யயலவர்
எடுத்துக் கோள்புரிந்த தெடுத்துக் கோளே

எனவரும் நூற்பாவானுணர்க.

ஈண்டுத் திருமுகம் கொண்டு சென்ற வயந்தமாலை என்பாள் கோவலனை அழைத்துக் கொடு போதற்கு மாதவி நின் பிரிவாற்றாது நோய் கூர்ந்து அடுத்தடுத்து மயங்கி வீழ்கின்றாள் நின் பிரிவு நீடினால் அவள் இறந்து படுவாள் என்று மாதவியின் நிலையைப் பட்டாங்குக் கூற அது கேட்ட கோவலன் இவ்வாறு அவள் செய்யும் செயலெல்லாம் அவள் பயின்றுள்ள நாடகமாகிய நடிப்புகளே அன்றி வாய்மையல்ல என்று மறுப்பவன் இனம் பற்றி ஏனையவற்றையும் எடுத்தோதியவாறாம்.

கோவலன் திருமுகம் ஏற்க மறுத்துக் கூறல்

109 - 110 : ஆடல்மகளே .......... தனக்கென

(இதன்பொருள்) ஆயிழை - ஆயிழாய்! அப் பைந்தொடி ஆடல் மகளே யாதலின் தனக்குப் பாடு பெற்றன - பசிய பொன்வளையலணிந்த அம் மாதவிதான் பிறப்பினாலும் சிறப்பினாலும் நாடகமேத்துமொரு கூத்தியே ஆதலின் அவள்பால் இந் நடிப்பெல்லாம் வாய்மைபோலவே பெருமை பெற்றனகாண்! என்று இகழ்ந்துகூறி மாலையாகிய அத்திருமுகத்தை ஏலாது மறுப்ப; என்க.

(விளக்கம்) 109 - ஆடல் மகள் - கூத்தி. அப்பைந் தொடி என்றது கோவலன் நெஞ்சம் அம்மாதவியை ஏதிலாளாகக் கொண்டமை குறிப்பாற்றோற்றுவித்தல் நுண்ணுணர்வாலுணர்க. வயந்த மாலை கொடுத்த திருமுகத்தை ஏலாமை குறிப்பெச்சப் பொருள். அதனை மேலே 112 திருமுகம் மறுத்ததற்கிரங்கி என்பதனால் வெளிப்படையானும் பெறுதும்.

வயந்தமாலை மாதவிக்குக் கூறுதலும் மாதவி ஏக்கறவும்

111 - 118 : அணித்தோட்டு ....... மாதவிதானென்

(இதன்பொருள்) அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய மணித் தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு - அழகிய பொற்றோடணிந்த திருமுகத்தையும் ஆராய்ந்தணிந்த அணிகலன்களையும் உடைய மாதவி அன்பு ததும்பத் தன் கையினாலேயே எழுதிய அழகிய தாழந் தோட்டு முடங்கலை இவ்வாறு கோவலன் மறுத்ததனாலே; தோடு அலர் கோதைக்கு இரங்கி - இதழ் விரிகின்ற முல்லை நாண் மலர் மாலையணிந்த தன் தலைவியாகிய மாதவிதான் என் செய்தாற்றுவளோ? என்று இரங்கி; வாடிய உள்ளத்து வயந்த மாலை - வாட்டமெய்திய நெஞ்சத்தையுடைய அவ்வயந்த மாலை தானும்; துனைந்து சென்று உரைப்ப - அச்செய்தியை விரைந்து போய் மாதவிக்குக் கூறா நிற்ப; மாமலர் நெடுங்கண் மாதவிதான் - அதுகேட்ட கரிய குவளை மலர் போன்ற நெடிய கண்ணையுடைய அம் மாதவிதான்; கையறு நெஞ்சமொடு - செய்வதொன்றும் தோற்றாது திகைக்கின்ற நெஞ்சத்தையுடையளாய் வயந்த மாலையை நோக்கி; மாண்இழை - ஏடி வயந்த மாலாய்! மாலை வாரார் ஆயினும் - அவர் அங்ஙனம் கூறினும் இம்மாலைப் பொழுதிலேயே இங்கு வருகுவர் காண்! ஒரோவழி இம்மாலைப் பொழுதில் வாரா தொழியினும்; காலை காண்குவம் என - அவரை நாளைக் காலைப் பொழுதிலேயே ஒருதலையாக ஈண்டுக் காண்பேம் காண்! என்று கூறி; பூமலர் அமளி மிசைப் பொருந்தாது வதிந்தனள் - தானிருந்த நாளரும்புகள் கட்டவிழ்ந்து மலர்கின்ற அம்மலர்ப் படுக்கையிலேயே தன் கண்ணிமைகள் பொருந்தாமல் தமியளாய்க் கிடந்தனள் என்பதாம்.

(விளக்கம்)111-112 : அணித்தோட்டுத் திருமுகம்.......மணித் தோட்டுத் திருமுகம் - என்புழி அழகிய எதுகைநலந்தோன்றிச் செய்யுளின்பம் மிகுவதுணர்க. மறுத்ததற்கு மாதவியின் பொருட்டு இரங்கி வாடிய உள்ளம் என்க. 114 - துனைந்து - விரைந்து.

115. மாலை வாராராயினும் காலை காண்குவம் என்னும் மாதவியின் நம்பிக்கையே அவள் உயிர் துறவாது இருத்தற்குப் பற்றுக் கோடாயிற்று. இத்தொடர் அவள் காதலன்பிற்குச் சிறந்த அறிகுறியாகவும் அவளது ஏக்கறவு முழுவதையும் நம்மனோர்க் குணர்த்துவதாகவும் அமைந்து அடிகளாருடைய புலமைக்கும் ஓர் எடுத்துக் காட்டாகவும் திகழ்தல் உணர்க.

இனி, இதனை - இன்னிளவேனில் வந்தனன் இவண் எனத் தூதன் இசைத்தனன் ஆதலின் படையுள் படுவோன் கூற மாதவி விரும்பி ஏந்தி வாங்கிப் பாடினள் மயங்கிச் சேர்த்தித் தழீஇ அறிந்து கட்டி, கேட்டனள், அன்றியும் ஐந்தினும் ஏழினும் நோக்கிக் கழிப்பி மயங்கிச் செவ்வியளாகி அறிந்தீமின் என எழுதிக் கூஉய்க் கொணர்க என வேலரி நெடுங்கண் அளிப்ப ஆடன்மகளே ஆதலின் பாடு பெற்றன என மறுத்ததற்கிரங்கிச் சென்றுரைப்பக் காண்குவம் என மாதவி வதிந்தனள் என வினையியைபு காண்க.

இது, நிலைமண்டில ஆசிரியப்பா:

வெண்பாவுரை

1. செந்தாமரை ............. மனம்

(இதன்பொருள்) கொந்து ஆர் இளவேனில் - பொழில்களிடத்தே பூங்கொத்துக்கள் நிறைதற்குக் காரணமான இளவேனில் என்னும் பெரும் பொழுது; செந்தாமரை விரியத் தேமாங் கொழுந்து ஒழுக - நீர்நிலைகளிலே செந்தாமரை மலர்கள் இதழ் விரிந்து மலரவும் இனிய மாமரங்களிலே அழகிய தளிர்கள் தூங்கவும்; மைந்து ஆர் அசோகு மடல் அவிழ - அழகு பொருந்திய அசோக மலர்கள் இதழ் விரிந்து மலரவும்; வந்தது - உலகின்கண் வந்துற்றது; இன்று வளவேல் நல் கண்ணி மனம் என் ஆம்கொல் - இற்றைநாள், வளவிய வேல் போலும் அழகுடைய கண்களையுடைய மாதவியின் நெஞ்சம் எந்நிலையினது ஆகுமோ யான் அறிகிலேன்; என்பதாம்.

(விளக்கம்) இஃது வயந்தமாலை மாதவியின் முடங்கல் கொண்டு செல்லும்பொழுது தன்னுள்ளே சொல்லியது; என்ப. கோவலனுக்குச் சொல்லிய தெனினுமாம்.

பெரும் பொழுதுகள் தோன்றும்பொழுது காலை என்னும் சிறுபொழுதே யாகலின் அப்பொழுது மலரும் செந்தாமரையை முற்படக் கூறினள். கொந்து - கொத்து; விகாரம். மைந்து - அழகு. வேனல் - வேனில். கண்ணி - மாதவி.

2. ஊடினீர் ........... காண்

(இதன்பொருள்) ஊடினீர் எல்லாம் - இவ்வுலகின்கண் காதல் வாழ்வு தலைப்பட்டு ஒருவர்க்கொருவர் துணையாவார் தம்முள் இப்பொழுது ஊடியிருப்பீர்கள் எல்லீரும்; கூடுமின் - ஊடலை விடுத்துக் கூடக்கடவீராக; உருவிலான் தன் ஆணை என்று இஃது உருவமில்லாத காமவேள் என்னும் அரசன் கட்டளையாகும் என்று; குயில் கூவ - அவன் படைச் சிறுக்கனாகிய குயிலோன் கூவி அறிவியா நிற்ப; நீடிய வேனல் பாணி - உலகில் வந்துற்ற நெடிய இவ்விளவேனிற் பொழுதின்கண்; கலந்தாள் - நின்னொடு கூடி மகிழ்ந்திருந்த மாதவியினது; மெல்பூந் திருமுகத்தை - மெல்லிய தாழம்பூத் தோட்டில் எழுதப்பட்ட முடங்கலை; கானல் பாணிக்கு அலந்தாய் காண் - அவள் பாடிய கானல்வரிப் பாட்டின் பொருட்டு ஊடிப் பிரிந்து வந்தோங் கண்ணுற்றருள்க ! என்பதாம்.

(விளக்கம்) இது வயந்தமாலை கோவலன்பால் ஓலை கொடுக்கும் பொழுது கூறியதாம். பாணி - பொழுது; பாட்டு. அலந்தாள் திருமுகம் எனக் கோடலுமாம். மென்பூந் திருமுகத்தை என்பது மாதவியின் முகத்தையும் முடங்கலையும் உணர்த்துதலுணர்க.

வேனிற் காதை முற்றிற்று.


"Venir Kaathai" ("வேணிர் கதை") is a specific narrative within Tamil classical literature, often referred to as a type of story or poem that focuses on themes related to "Venir" (which translates to "Venir" or "Vinegar"). In Tamil literature, "Venir" can symbolize something sour or bitter, often reflecting on themes of suffering, hardship, or emotional distress.

Overview of "Venir Kaathai"

1. Context in Tamil Literature:

- Genre and Style: "Venir Kaathai" may not refer to a specific classical text but rather a narrative style or theme found within Tamil poetry or literature. It often deals with themes of bitterness or sorrow.

- Usage: It could be used metaphorically to describe stories or poems that convey a sense of hardship, emotional turmoil, or societal issues.

2. Themes and Significance:

- Bitterness and Suffering: The term "Venir" (vinegar) symbolizes something sour or unpleasant. Stories or poems under this theme often explore themes of personal or societal suffering and adversity.

- Emotional Depth: Such narratives typically delve into the emotional experiences of the characters, highlighting their struggles and challenges.

3. Examples and References:

- Classical Texts: While specific references to "Venir Kaathai" might not be prominent in classical texts, similar themes can be found in Tamil Sangam literature and other classical works where emotional and societal struggles are depicted.

- Modern Interpretations: In modern Tamil literature, the term may be used to describe works that explore complex emotional and social themes, often reflecting on the harsh realities of life.

4. Literary and Cultural Impact:

- Expression of Realities: "Venir Kaathai" contributes to the portrayal of real-life struggles and emotional experiences, providing a more profound understanding of the human condition.

- Cultural Reflection: The use of bitterness as a metaphor reflects cultural attitudes towards suffering and resilience, emphasizing the importance of addressing and reflecting on life's challenges.

"Venir Kaathai" highlights the use of bitter or sour imagery in Tamil literature to explore deeper themes of hardship and emotional distress. It underscores the significance of reflecting on personal and societal struggles through literary expression.



Share



Was this helpful?