இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


வேதமோதி வெண்ணூல்

வேதமோதி வெண்ணூல்

பதிக எண்: 1.67 - திருப்பழனம் - தக்கேசி

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவியலூர், திருந்துதேவன்குடி, இன்னம்பர், வடகுரங்காடுதுறை முதலிய பல தலங்கள் சென்று இறைவனைப் புகழ்ந்து பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், அடுத்து திருப்பழனம் தலம் சென்றதாக பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பங்கயம்=தாமரை பூக்கள்; அழல் நக்க பங்கயப் பூக்கள்= கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பின் நிறத்தையும் பழித்து தோற்கடிக்கும் வண்ணம் சிவந்த செந்தாமரை பூக்கள்; விழை=விழையும், விரும்பும்; வாவி=குளம்;

பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில்

உடை புக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையாராகி

விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார்

அழல் நக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார்

இந்த தலம் கும்பகோணம் திருவையாறு சாலையில் திருவையாற்றிலிருந்து நான்கு கி.மீ, தூரத்தில் உள்ளது. பழனம் என்றால் வயல் என்று பொருள். அழகிய வயல்கள் நிறைந்த தலம் என்பதால் பழனம் என்பதே ஊரின் பெயராக அமைந்துவிட்டது என்று கூறுவார்கள். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஒன்றும், அப்பர் பிரான் அருளிய ஐந்து பதிகங்களும் இதுவரை நமக்கு கிடைத்துள்ளன. ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம். கொடிமரம் இல்லை; இறைவனின் பெயர் ஆபத்சகாயேச்வரர், அமுத லிங்கேஸ்வரர், சுதாலிங்கமூர்த்தி, சோதி வானவன்; அம்பிகையின் திருநாமம் பெரியநாயகி. இறைவன் சுயம்பு லிங்கம். உயர்ந்த பாணம் கொண்ட அழகிய மூர்த்தம். சந்திரன், கௌசிக முனிவர், குர்ச முனிவர், திருமகள், திருமால், சூரியன், சிறுவன் சுசரிதன், தருமசர்மா ஆகியோர் வழிபட்டு பயனடைந்த தலம். கௌதம முனிவர் தனக்கு கிடைத்த அமுதத்தால் செய்யப்பட்ட இலிங்கத்திற்கு அமுதலிங்கம் என்று பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். கௌசிக முனிவர் வைத்திருந்த அமுதத்தினை கொள்ளையடிக்க அசுரர்கள் முயற்சி செய்ததாகவும், பெருமான் காளி மற்றும் ஐயனாரை அனுப்பி அரக்கர்களை அழித்து அமுதத்தை பாதுகாத்ததால் மகிழ்ந்த முனிவர், அமுதம் கொண்டு இறைவனை தோற்றுவித்தார் என்று கூறுவார்கள். பங்குனி மற்றும் புரட்டாசி மாதங்களில், பௌர்ணமி தினத்திற்கு முன்தினம் மற்றும் அடுத்த நாளில் சந்திரனின் கதிர்கள் மூலவர் மீது விழுவதை சந்திரன் செய்யும் வழிபாடு என்று கூறுவார்கள். சந்திரன் வழிபட்டமையால் பிறையானேசுவரர் என்று அழைக்கப்பட்ட திருநாமம், பிரயாணேசுவர் என்று மாறியதாகவும் கூறுகின்றனர். பிராகாரத்தில் சப்த மாதாக்கள், விநாயகர், வேணுகோபாலன், காமதேனு பால் பொழிந்து வழிபடும் பசுபதிச்சுரர், ஏழூர் திருக்கோயில்களின் இலிங்கங்கள், திருமால் வழிபட்ட இரட்டை லிங்கங்கள் முதலான பல இலிங்கங்கள், நடராஜ சபை, பைரவர் மற்றும் நவகிரக சன்னதிகள் காணப் படுகின்றன. மங்கள தீர்த்தம், காவிரி தீர்த்தம், அமுத தீர்த்தம், முனி தீர்த்தம், தேவ தீர்த்தம்; தலமரம் வாழை, வில்வம்; கோஷ்ட மூர்த்தங்களின் மேல் தளத்தில் பெருமான் பிராட்டியுடன் காட்சி தருகின்றார். கோஷ்டத்தில், வீணாதார தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர் மற்றும் பிரமனை காணலாம். மேலும் தென்முகக் கடவுளின் அருகே தவக்கோலத்தில் இருக்கும் பெருமானையும் கஜசம்ஹார மூர்த்தியையும் காணலாம். முன்மண்டபத்தில் அதிகார நந்தி, கூப்பிய கரங்கள் மற்றும் உடைவாளுடன், தென் திசை நோக்கிய வண்ணம் காட்சி தருகின்றார். பொதுவாக முருகன் காணப்படும் இடத்தில், மூலவரின் பின் புறத்தில், வேணுகோபாலர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு முன்னர் சுந்தர நாயகி என்ற பெயருடன் ஒரு அம்பிகை சன்னதி உள்ளது. அம்பிகை பெரிய நாயகி என்ற பெயருடன் வெளிப் பிராகாரத்தில் மூலவருக்கு இடது பக்கத்தில் தனிக் கோயிலில் அருள் பாலிக்கின்றார். சோழர்கள் மற்றும் விசயநகரம் மன்னர்கள் காலத்தைய கல்வெட்டுகள் உள்ளன. பல அழகிய சிற்பங்கள் நிறைந்த திருக்கோயில். அப்பூதி அடிகள் வாழ்ந்த திங்களூர் அருகில் உள்ளது. முதலாம் ஆதித்த சோழன் மற்றும் முதலாம் பராந்தகன் சோழன் ஆகியோரால் கட்டப்பட்டது. பிராகாரத்தில் அப்பூதி அடிகளாரின் சிலையையும் காணலாம்.

சுசரிதன் எனும் சிறுவன் தனது சிறுவயதில் பெற்றோர்களை இழந்தான். அவனது தாய் இறக்கும் சமயத்தில், தனது மகனின் தொடையில் தலை வைத்து படுத்துக் கொண்டு இருந்த போது, மகனை நோக்கி இனிமேல் சிவபெருமான் தான் அவனுக்கு தாயும் தந்தையுமாய் இருந்து காப்பாற்றுவார் என்று உணர்த்தி, பல சிவ தலங்கள் சென்று இறைவனைப் பணிந்து வணங்குமாறு ஆலோசனை கூறினாள். தாயின் சொற்படி பல தலங்கள் சென்று வணங்கிய சுசரிதன், ஒரு நாள் திருப்பழனம் வந்தடைந்தான். இறைவனைக் கண்டு வணங்கிய பின்னர் இந்த தலத்தில் தங்கி உறங்கினான். நடு இரவில் யாரோ கதவு தட்டும் ஓசை கேட்கவே, சிறுவன் எழுந்து கதவைத் திறந்த போது, அவன் எதிரே காலதேவன் இருப்பதைக் கண்டான். கன்னங்கரிய உடலுடன், மடித்த உதடுகளுடன் அனல் கக்கும் விழிகளுடன் தோன்றிய, இயமன், சிறுவனிடம் சிறுவனது ஆயுட்காலம் அடுத்த ஐந்து நாட்களில் முடிவடைந்துவிடும் என்று கூறினான். இயமனைக் கண்டு அச்சம் கொள்ளாமல், அவனது சொற்களைக் கேட்ட சிறுவன், தனக்கு மரணம் நேரிடும் என்ற வார்த்தையைக் கேட்ட போது வருந்தினான். அவனது வருத்தம் இறப்பினைப் பற்றி அறிந்ததால் அல்ல. தனது தாய் அறிவுரை கூறிய வண்ணம், சிவபெருமான் உறையும் பல தலங்களை காணாமல், இறந்து விடுகின்றோமே என்பது தான். பெருமானைத் தவிர்த்து தனக்கு உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு வேறு எவரும் இல்லாததால், இறைவனிடம் சென்று முறையிட விரும்பினான். மறுநாள் காலை எழுந்தவுடன், பழனத்தில் உள்ள திருக்கோயில் சென்று, தனது மன வருத்தத்தை இறைவனிடம் சொல்லி அந்த சிறுவன் அழுததை, செவி சாய்த்த பெருமான், சிறுவனிடம் திருவையாறு சென்று ஐயாரப்பரை வழிபடுமாறும், தக்க சமயத்தில் தான் தோன்றி காப்பதாகவும் சிறுவனுக்கு ஆறுதல் கூறினார். திருவையாறு தலத்திற்கு பயணம் செய்யுமாறு பணித்த இறைவனை, தான் தக்க சமயத்தில் தோன்றி காப்பாற்றுவதாக வாக்கு அளித்த இறைவனை, பிரயாண நாதேசுவரர் என்றும் ஆபத்சகாயர் என்றும் அழைக்கின்றனர். சோதி வடிவத்தில் அந்த சிறுவனுக்கு, திருப்பழனம் மற்றும் திருவையாறு தலங்களில் காட்சி கொடுத்தமையால், இறைவனுக்கு சோதி வானவர் என்ற பெயரும் வந்தது.

இறைவனின் கட்டளைப் படியே, சிறுவன் சுசரிதன் திருவையாறு சென்று தெற்கு கோபுர வாயிலில் அமர்ந்து சிவபெருமானின் திருநாமங்களை எப்போதும் தியானம் செய்த வண்ணம் இருந்தான். முன்னமே சொல்லிய வண்ணம் ஐந்தாவது நாள் இரவு நேரத்தில், இயமன் திருவையாறு அடைந்து சிறுவனின் உயிரைக் கவர நினைத்த போது, சிவபெருமான் அப்போது தோன்றி இயமனை காலால் உதைத்து சிறுவன் பல்லாண்டுகள் வாழும் வண்ணம் அருள் புரிந்தார். சிறுவனும் பல தலங்கள் சென்று இறைவனை வழிபட்டு மகிழ்ந்தான். திருவையாறு கோயிலில் தெற்கு வாயிலில் உள்ள மூர்த்தத்திற்கு ஆட்கொண்டார் என்று பெயர். அமுதம் உட்கொள்வோரின் ஆயுளை நீட்டிப்பதைப் போன்று சிறுவனின் ஆயுட்காலத்தை நீட்டித்ததால், இறைவனுக்கு அமுத லிங்கேஸ்வரர் என்ற பெயரும் சுதாலிங்க மூர்த்தி என்ற பெயரும் வந்ததாக கூறுவார்கள்.

தான் மரணத்தை எதிர்நோக்கிய தருணத்திலும், மரணம் ஏற்படுவதையும் பொருட்படுத்தாமல் இடைவிடாது பெருமானின் திருநாமத்தைச் சொல்லியவாறு இருந்ததால், சுசரிதன் என்ற சிறுவனுக்கு பெருமானின் அருள் கிடைத்ததைப் போன்று தனக்கும் பெருமானின் அருள் கிட்ட வேண்டும் என்ற ஆசையுடன், அப்பர் பிரான், பல பாடல்களில் தான் இறக்கும் தருவாயில் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கும் வண்ணம் பெருமான் அருள் புரியவேண்டும் என்று வேண்டுகின்றார். அத்தகைய பாடல் ஒன்று இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகம் ஒன்றினில் காணப்படுவது பொருத்தமாக உள்ளது. இறக்கும் காலம் என்பதனை கண் துஞ்சி மறையும் காலம் என்று மங்களகரமாக கூறுகின்றார். உயிர் போகும் தருவாயில் அனைத்து அங்கங்களும் ஒடுங்கிய நிலையில், எவரும் அந்நாள் வரை செய்து வந்த வழிபாட்டினைத் தொடர முடியாமல் போவது உலக இயற்கை. ஆனால் அப்பர் பிரான் அந்த தருணத்திலும், தான் சிவபெருமானைத் தொழவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி, அந்த ஆசையினையே தனது வேண்டுகோளாக இறைவனிடம் சமர்பிப்பிக்கும் அழகினை இந்த பதிகத்தின் (4.12) பாடலில் நாம் காணலாம். அன்றாடம் சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபடும் வழக்கம் கொண்ட அடியார்கள், பூஜை முடிந்த பின்னர் சிவபெருமானை பெட்டகத்தில் வைக்கும் போது ஓதவேண்டிய பாடலாக இந்த பாடல் கருதப் படுகின்றது. தீர்த்த=புனிதம் உடைய; மா தீர்த்த=மிகவும் புனிதமான; இசை பாடும் என்ற வினைச் சொல்லை, அப்பனை என்ற பெயர்ச் சொல்லுடன் சேர்த்து, பண் பொருந்த இசை பாடும் இறைவன் என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கும், தூய்மையான வேதியர்களுக்கும், மற்றும் விண்ணுலகத்தில் வாழும் தேவர்களுக்கும் முக்தி நிலை அளிக்கக்கூடிய சிவபெருமானை, அவனது அடியார்கள் பண்ணோடு பொருந்திய பாடல்களைப் பாட அதனைக் கேட்டு இன்பமுறும் பழனத்து அப்பனை, நான் இறக்கும் தருவாயில் நினைக்காமல் போய் விடுவேனோ என்று அஞ்சுகின்றேன். அவ்வாறு ஏதும் ஏற்படாதவாறு, நான் அந்த சமயத்திலும் உன்னை நினைக்குமாறு நீ அருள் புரிய வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும்

விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை

பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என்

கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ.

பாடல் 1:


வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்

பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரி தோலார்

நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று

பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே

விளக்கம்:

இந்த பாடலில் திருஞானசம்பந்தர் நம்பன் என்று இறைவனை அழைக்கின்றார். நம்பன் என்றால் விரும்புவதற்கு உரிய தகுதி படைத்தவன் என்று பொருள். இறைவன் நமக்கு பல விதங்களிலும் நன்மை செய்தும், நமது பல வேண்டுகோளை நிறைவேற்றியும் அருள் புரிவதால், நாம் விருப்பம் கொள்வதற்கு அவனை விடவும் அதிகமான தகுதி படைத்தவர் வேறு எவரும் இல்லை அல்லவா. இந்த பாடலில் நாதா என்றும் நம்பா என்றும் நக்கா என்றும் தன்னை அழைத்து, தனது திருவடிகளைத் தொழுது நிற்கும் அடியார்களின் பாவங்களை முற்றிலும் தீர்த்து நன்மை புரிபவர் பழன நகரத்தின் இறைவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நம்பான் என்றும் நம்பா என்றும் இறைவனைக் குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

ஈங்கோய்மலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.70.7) திருஞானசம்பந்தர், பெருமானை மதியம் சூடும் நம்பான் என்று அழைக்கின்றார். எண்ணற்ற பல பிறவிகளில் செய்த செயல்கள் காரணமாக, உயிர்கள் சேர்த்துக் கொண்டுவரும் வினைகளை, வலிமையாக உயிருடன் பற்றியுள்ள வினைகளை, உயிர்கள் நுகர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் மீண்டும்மீண்டும் பிறவிகள் எடுத்து அந்த வினைகளை நுகர்ந்து கழிக்கும் முயற்சியில், உயிர்கள் மேலும் பல புதிய வினைகளை (ஆகாமிய வினைகள் என்று சொல்வார்கள்) சேர்த்துக் கொள்வதால், புதியதாக சேர்ந்த அந்த வினைகளை கழிக்கும் முயற்சியில் மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றன. இவ்வாறு பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீளமுடியாமல் தவிக்கும் உயிர்கள் தங்களின் வினைகளை எளிதில் தீர்த்துக் கொள்வதற்கு உள்ள ஒரே வழி சிவபெருமானை வழிபடுவது தான் என்பதால், உயிர்கள் விரும்புவதற்கு உரியவனாக சிவபெருமான் இருக்கின்றார் என்று உணர்த்தும் பாடல் ஈங்கோய் மலை தலத்தின் மீது அருளப்பட்ட பாடலாகும் (1.70.7). வேறு எவராலும் தீர்க்கமுடியாத வினைகளை தீர்க்கும் வல்லமை வாய்ந்தவர் சிவபெருமான் என்பதால், அவரை விகிர்தா என்றும் நம்பான் என்றும் திருஞான சம்பந்தர் இங்கே அழைக்கின்றார். விகிர்தர் என்றால் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர் என்று பொருள். தனையார்= பூக்களில் சிறந்த பூவாக இருப்பதால், தலைமையான பூ என்று தாமரை மலரை குறிப்பிடுகின்றார். மறுவாழ்வு அளித்தமையால் சந்திரன் விரும்பும் தன்மையில் உள்ள பெருமான், தீர்க்க முடியாத வலிய வினைகளைத் தீர்ப்பதால், உயிர்கள் விரும்பும் தகுதி படைத்தவனாக உள்ளான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பக்குவபட்ட உயிர்களின் வினைகளைத் தீர்த்து அருள் புரிந்து, மற்ற தெய்வங்களிலிருந்து வேறுபட்டு இருக்கும் இறைவன் சிவபெருமான், தழைத்து விரிந்த கொன்றை மலர்கள் மற்றும் அரும்புகள் சூடிய சடையின் மேல் பிறைச் சந்திரனை ஏற்றவனாக, அனைத்து உயிர்களும் விரும்பும் வண்ணம் உள்ளவனும் பல நலன்கள் உடையதாக பூக்களில் தலை சிறந்ததாக விளங்கும் தாமரை மலையினில் உறையும் பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைத் தனது கையில் உணவு உட்கொள்ளும் பிரம கபாலமாகக் கொண்டவனும், தீப்பிழம்பினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் நடனம் ஆடுபவனும், என்னை ஆளுடைய பெருமானும் ஆகிய சிவபெருமான், உமை அன்னையுடன் சேர்ந்து உறையும் தலம் ஈங்கோய் மலையாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வினை ஆயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி கொன்றை

நனையார் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நல மல்கு

தனையார் கமல மலர் மேல் உறைவான் தலையோடு

எனை ஆளுடையான் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே

அனைவரும் விரும்புவதற்கு தகுதி வாய்ந்தவராக விளங்கும் பெருமானின் தன்மையை புரிந்து கொள்ளாமல், அவரை விரும்பித் தொழுவதற்கு பதிலாக,சிரித்து ஏளனம் செய்யும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் பரிதாப நிலையினை இந்த பாடலில் (1.82.10) திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். இந்த பாடலிலும் பெருமானை நம்பான் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். சிக்கார்=சிக்கு பிடித்த உடை; தட்டு= ஓலைத் தடுக்கு; சிறிய ஓலைத் தடுக்கையே தங்களது உடையாகக் கொண்ட சமணர்கள்; பெருமானின் தன்மையை புரிந்து கொண்டு, மறைகளை ஓதி, வேள்விகள் செய்தும் மிகுந்த விருப்பத்துடன் பெருமானை வழிபடும் வீழி மிழலை அந்தணர்கள், தகுதி வாய்ந்தவர்களாக உலகினில் மேம்பட்டவர்களாக வாழும் நிலையும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. அலர்=வீண்பழி;

சிக்கார் துவராடைச் சிறுதட்டு உடையாரும்

நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில்

தக்கார் மறை வேள்வித் தலையாய் உலகுக்கு

மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே

அனைவரின் விருப்பத்துக்கு உரியவனாக விளங்கும் பெருமானின் திருவடிகளின் சிறப்பினை நாள்தோறும் சொல்லாத மனிதர்களின் குற்றங்கள் தீரா என்று அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றில் (1.83.3) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உயிரின் குற்றமாக கருதப் படுவது, உயிருடன் பிணைந்துள்ள வினைகளும் அவற்றின் தன்மையால் மீண்டும்மீண்டும் பிறவி எடுக்கும் நிலையும் தான். எனவே பிறவிப் பிணியினைத் தீர்த்துக் கொள்வதற்கு நாம் வழிபட வேண்டியது சிவபெருமான் தான் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. ஊனம் என்பதற்கு பழி பாவம் என்று பொருள் கொண்டு, சந்திரன் சிவபெருமானை வழிபட்டு, தனது பாவங்களைத் தீர்த்துக் கொண்டது போன்று நாமும் பயனடைய வேண்டும் என்று திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. குற்றம் நீங்கிய சந்திரனை செல்வ மதி என்று கூறுகின்றார். நரையார் விடை=வெண்மையான இடபம்;

திரையார் புனலொடு செல்வ மதி சூடி

விரையார் பொழில் அம்பர் மாகாளம் மேய

நரையார் விடையூரும் நம்பான் கழல் நாளும்

உரையாதவர்கள் மேல் ஒழியா ஊனமே

நம்பான் மேய நன்னகர் போலும் குற்றாலம் என்று உணர்த்தும் பாடல் மூலம் (1.99.1), நமது நம்பிக்கைக்கு உரியவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வம்பு= புதுமை; எத்தனை முறை கண்டாலும் புதுமையுடன் விளங்கும் குற்றாலம் என்று கூறுகின்றார். வம்பு என்பதற்கு நறுமணம் என்று பொருள் கொண்டு, நறுமணம் கமழும் குற்றாலம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கொம்பு=கிளைகள், இங்கே வேங்கை மரத்தின் கிளைகள். அம் என்ற சொல்லினை ஆடல் என்ற சொல்லுடன் பொருத்தி, அழகிய நீராடல் என்று பொருள் கொள்ள வேண்டும். கோல வண்டு=அழகிய வண்டுகள்; இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் பெருமானை, திருஞானசம்பந்தர் நம்பான் என்று அழைக்கின்றார். குறும்பலா என்று குறிப்பிட்டு குற்றாலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.71) இரண்டு பாடல்களிலும், பெருமானை நம்பான் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார்.

வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர் வேங்கைக்

கொம்பார் சோலைக் கோல வண்டு யாழ் செய் குற்றாலம்

அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை

நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்

கள்ளில் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.119.6) ஒன்றினில், பெருமானை நம்பான் என்று அழைக்கும் திருஞானசம்பந்தர், பெருமான் ஏற்கும் பலியினை மக்களுக்கு நலம் பயக்கும் பலி என்று குறிப்பிடுகின்றார். சிவபெருமான் பலி ஏற்பது நம்மிடம் உள்ள தீய குணங்களை, மலங்களை அவனது பிச்சை பாத்திரத்தில் இட்டு நாம் தூய்மை அடைவதற்காகத் தான். இந்த கருத்தினை உள்ளடக்கி, மக்களுக்கு நன்மைகள் ஏற்பட பலியேற்கும் கொள்கை உடையவன் சிவபெருமான் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் நன்மை புரிய காத்திருக்கும் சிவபெருமானை நமது விருப்பத்திற்கு உரியவன் என்று அழைத்து நாம் அவனை ஏன் விரும்பவேண்டும் என்பதையும் நமக்கு திருஞானசம்பந்தர் உணர்த்துகிறார். தன்னை அடைய விரும்பி தவம் புரிவோர்க்கு சிவபெருமான் அத்தகைய அடியார்களின் மலங்களை நீக்குவான் என்றும் இங்கே கூறுகின்றார்.

நலனாய பலி கொள்கை நம்பான் நல்ல

வலனாய மழுவாளும் வேலும் வல்லான்

கலனாய தலை ஓட்டான் கள்ளின் மேயான்

மலனாய தீர்த்து எய்து மாதவத்தோர்க்கே

தன்னை அணுகும் அடியார்களின் வினைகளை நாசம் செய்யும் பெருமானை நம்பான் என்று அழைப்பது தானே பொருத்தம். நமது வினைகளை நாசம் செய்யும் பெருமான், நமக்கு செய்யும் மற்ற உதவிகளையும் குறிப்பிட்டு, பெருமானை ஏன் நாம் நம்பான் என்று அழைக்க வேண்டும் என்பதை சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.11.7) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நம்மை திருத்தும் வண்ணம் பல துன்பங்களை நமக்கு அளித்து நம்மை நல்வழிப்படுத்தி திருத்தியும், நாம் துயரடையும் தருணங்களில் நமது துன்பங்களைத் தீர்த்தும் அருள் புரியும் இறைவன் இன்ப வடிவினாகவும் அன்பு வடிவினனாகவும் இருக்கின்றார். அவர், ஏழிசையின் நுணுக்கங்களை அறிந்து பாடல்களுக்கு உரிய பண்ணுடன் இசைத்துப் பாடிப் போற்றும் அடியார்களை பேணி பாதுகாக்கின்றார் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

துன்பானைத் துன்பம் அழித்து அருளாக்கிய

இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார்

அன்பானை அணிபொழில் காழி நகர் மேய

நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே

நாலூர் மயானம் என்ற தலத்தின் மீது பாடிய பாடல் ஒன்றிலும் (2.46.5) பெருமானை நம்பான் என்று குறிப்பிட்டு, அவனது திருவடிகளையே நினைத்து மயங்கும் அடியார்கள் மேல் பிறவி என்ற குற்றம் படியாது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பால் ஊரும்=பக்கத்தினில் ஊர்ந்து செல்லும்; மேலூரும்=மேலே பொருத்தப்பட்ட; மால்=மயக்கம்; பெருமான் பால் நாம் வைத்துள்ள அன்பு மயக்கமாக மாற வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இந்த பாடலில் நாலூர் மயானத்து நம்பான் அடியை நினைத்து நெஞ்சம் உருகி வழிபடும் அடியார்கள் பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவார்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். நமது சிந்தை மயக்கம் அடையும் வண்ணம், எப்போதும் பெருமானின் திருவடிகளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமானைத் தவிர்த்து வேறு எந்த நினைவும் சிந்தனையில் இருக்கலாகாது என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். குளிர்ந்த பிறைச் சந்திரனையும் ஊமத்தை மலரினையும் தாங்கியுள்ள பெருமானின் செஞ்சடையில் அருகே மலைப்பாம்பும் ஊர்ந்து செல்கின்றது. இத்தகைய செஞ்சடையை உடைய பெருமான், வெண்ணூலைத் தனது மார்பினில் அணிந்தவனாக நாலூர் மயானம் தலத்தில் காட்சி அளிக்கின்றான். அடியார்களுக்கு பல விதங்களிலும் உதவி புரிந்து, அவர்களின் நம்பிக்கைக்கு உரியவனாக விளங்கும் பெருமானின் திருவடிகளையே எப்போதும் நினைத்த வண்ணம் மயங்கும் அடியார்களுக்கு மறுபிறப்பு என்ற தன்மை வந்து பொருந்தாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாலூரும் மலைப் பாம்பும் பனி மதியும் மத்தமும்

மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல் சேர் மார்பினான்

நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து

மால் ஊரும் சிந்தையர் பால் வந்து ஊரா மறுபிறப்பே

நமது விருப்பத்திற்கு உரியவன் சிவபெருமான் என்பதை உணர்ந்து, அவனை நம்பா என்று அழைத்தால், நமக்கு பல விதங்களிலும் அருள் புரிபவன் சிவபெருமான் என்று உணர்த்தும் பாடல் முதுகுன்றம் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பாடலாகும் (2.64.6). வம்பு= நறுமணம்; மொய்ம்பு=நெருக்கம்; நறுமணம் நிறைந்த கொன்றை வன்னி ஊமத்தை முதலிய மலர்களை தனது திருமேனியின் மீது தூவி, நம்பா என்று தன்னை அழைத்து தொழும் அடியார்களுக்கு தனது அருளினை நல்கும் பெருமானாகிய இறைவன் உறையும் திருக்கோயில் உடைய தலம், கிளைகளை உடைய குரா மரமும் கொகுடி முல்லை கொடிகளும் எங்கும் பரந்து வளர்வதால் நெருக்கமாக உள்ளதும் வண்டுகள் இடைவிடாது பாடுவதும் ஆகிய சோலைகள் உடையதும் ஆகிய முதுகுன்றம் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வம்பார் கொன்றை வன்னி மத்த மலர் தூவி

நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில்

கம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்

மொய்ம்பார் சோலை வண்டு பாடு முதுகுன்றே

குற்றாலம் தலத்தில் காணப்படும் குறும்பலா மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.71.2) திருஞானசம்பந்தர் இறைவனை, நம்மை ஆட்கொண்டருளும் நம்பான் என்று அழைக்கின்றார். பெருமானால் ஆட்கொள்ளப் படுவதற்கு நாம் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும் என்று அருளாளர்கள் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. அத்தகைய பேறு பெற்றவர்கள், இறைவனை விரும்புவது இயற்கை தானே. அதனால் தான் அவ்வாறு ஆட்கொள்ளப்பட்ட பல மனிதர்களின் நம்பான் என்று இங்கே கூறுகின்றார். நாட்பலவும் சேர் மதியம்=பதினாறு நாட்கள், நாளுக்கு ஒரு கலையாக வளரக் கூடிய சந்திரன்; ஆட்பலவும்=பல வகையிலும் நாம் ஆட்கொண்டு அருள் புரியும் வல்லமை வாய்ந்த; அம்மான்=தாயைப் போன்று கருணை உள்ளம் கொண்ட தலைவன்; அந்தண்=அழகும் குளிர்ச்சியும் உடைய; கீட்பலவு=கிழித்து உண்ணக் கூடிய பலாக்கனி; கிளை=சுற்றம்; கோள்=குலை; கடுவன்=ஆண் குரங்கு. இதே பதிகத்தின் கடைப் பாடலிலும் நம்பான் என்று திருஞானசம்பந்தர் இறைவனை குறிப்பிடுகின்றார்.

நாட்பலவும் சேர் மதியம் சூடிப் பொடி அணிந்த நம்பான் நம்மை

ஆட்பலவும் தானுடைய அம்மான் இடம் போலும் அந்தண் சாரல்

கீட்பலவும் கீண்டு கிளை கிளையன் மந்தி பாய்ந்துண்டு விண்ட

கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே

மேற்கண்ட பாடல்கள் உணர்த்தும் வண்ணம், நாம் விரும்புவதற்கு தகுதி படைத்தவனாக விளங்கும் பெருமானை, தான் நனவிலும் கனவிலும் மனம் ஒன்றி விரும்பி வழிபட்டு மறவாது இருந்த நிலையினை திருவாவடுதுறை தலத்து பாடல் ஒன்றில் (3.4.3) திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். மனவினும்=மனம் ஒன்றி; தனது தந்தையார் வேள்வி செய்வதற்காக வேண்டிய பொருளை நாடி இறைவனிடம் திருஞானசம்பந்தர் விண்ணப்பம் வைக்கும் பதிகம் இந்த பதிகம். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், பெருமானின் அருளினைப் பெறுவதற்கு தான் தகுதி வாய்ந்தவன் என்பதை குறிப்பிடுகின்றார்.

நனவினும் கனவினும் நம்பா உன்னை

மனவினும் வழிபட மறவேன் அம்மான்

புனல் விரி நறுங்கொன்றை போது அணிந்த

கனல் எரி அனல் புல்கு கையவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதில் திருஞானசம்பந்தருக்கு நாட்டம் இல்லாமல் இருந்தது. எனினும், வேதநெறி தழைத்து ஓங்க அவதாரம் செய்த அவர், வேதநெறியில் குறிப்பிடப்படும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வது தவறு என்று அவரது தந்தையாரும் மற்ற பெரியோர்களும் குறிப்பிட்டு வற்புறுத்தவே, தனக்கு முழு விருப்பம் இல்லாத போதிலும், திருமணம் செய்து கொள்வதற்கு திருஞானசம்பந்தர் இசைகின்றார். நல்லூர் பெருமணம் என்று அழைக்கப்பட்ட தலத்தில் (இன்றைய பெயர் ஆச்சாள்புரம்) திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. திருமண நாளன்று, திருஞானசம்பந்தர் இறைவனை நோக்கி, இறைவனே உன்னிடம் நான் எப்போதும் மணவாழ்க்கை அமையவேண்டும் என்று வேண்டவில்லையே, எனது பதிகங்கள் எனது உண்மையான விருப்பத்தை உனக்கு தெரிவிக்கவில்லையா, ஏன் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து செய்யப்படும் திருமண வாழ்க்கையை எனக்கு நேரிடும் வண்ணம் செய்தாய் என்று இறைவனிடம் தனது கோரிக்கையை விடுக்கின்றார். தனது விருப்பங்கள் (பிறரின் நலனுக்காக விடுத்த வேண்டுகோள் பலவற்றையும் நிறைவேற்றிய பெருமானை நம்பானே என்று இந்த பாடலில் அழைக்கின்றார். நம்பனே என்ற சொல் நம்பானே என்று நீண்டது. கல்லூர்ப் பெருமணம் என்று தொடங்கும் இந்தப் பதிகம் (3.125) பாடி முடிக்கப் பட்ட பின்னர் வானிலிருந்து எழுந்த ஒரு அசரீரி வாயிலாக பெருமான், திருஞானசம்பந்தர் விடுத்த வேண்டுகோளினை ஏற்று கொண்டதை தெரிவிக்கின்றார். திருமணம் முடிந்ததும், திருக்கோயிலில் தோன்றும் ஒரு சோதியின் வழியே உட்புகுந்து, தன்னை வந்து அடையுமாறு ஞானசம்பந்தரை பணிக்கின்றார். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் முன் செல்ல, ஞானசம்பந்தர் தனது மனைவியுடன் அந்த சோதியின் உள்ளே புகுந்து, சிவலோகம் சென்றடைந்தார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு அடியார்கள் விடுக்கும் வேண்டுகோளினை நிறைவேற்றும் பெருமானை, விரும்புவதற்கு உரியவன் என்று அழைப்பது தானே பொருத்தம்.

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்

பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய் ஆய்த்தில

சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்

நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.13.3) அப்பர் பிரான் இறைவனை நம்பான் என்று அழைக்கின்றார். நணியான்=அருகில் இருப்பவன்: சேயான்=தொலைவில் இருப்பவன்; சிவபெருமான் அவரது அடியார்களுக்கு மிகவும் அருகில் இருப்பவராகவும் ஏனையோருக்குத் தொலைவில் இருப்பவராகவும் உள்ள தன்மை இங்கே கூறப்பட்டுள்ளது சமணர்கள் இழைத்த பல கொடுமைகளிலிருந்தும் தன்னைக் காத்த பெருமானை, தீர்க்க முடியாத கொடிய சூலை நோயிலிருந்து காப்பாற்றிய பெருமானை, கயிலைக் காட்சி அளித்தது போன்று பல விதங்களிலும் அருள் புரிந்த பெருமானை, அப்பர் பிரான் விரும்பியது இயற்கை தானே. தான் சைவ மதத்திற்கு திரும்பி வந்த பின்னரே, வாழ்வினில் உய்வினை அடைந்ததாகவும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். அன்பு நிறைந்த மனத்துடன் உன்னை வழிபடும் அடியார்க்கு மிகவும் அருகிலும் ஏனையோருக்கு தொலைவிலும் உள்ள பெருமானே, விரும்பத் தக்கவனே, பொன்மயமான ஆடையை அணிந்தவனே, தோலாடை உடையவனே, வெண்மை நிறத்துடன் காணப்படும் திருநீற்றினைப் பொடியாக உடலில் பூசியவனே, மணி போன்று அரியவனே, மானிடர்களுக்கு மட்டுமன்றி தேவர்களுக்கும், அவர்களது பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருத்துவனாய் அவர்களுக்கு நெருங்கி இருப்பவனே, ஐயாற்றுத் தலைவனே, நான் உனக்கு அடிமையாக மாறி உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்

துணியானே தோலானே சுண்ண வெண்ணீற்றானே

மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணி தீர்க்கும்

அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

திருவாரூர்ப் பெருமானைக் காண்பதே தனது கருத்தாக இருந்தது என்று உணர்த்தும் பதிகத்தின் பாடலின் (4.20.10) நம்பான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பிரமனும் திருமாலும் காணமாட்டாத தழலாக விளங்கிய பெருமானை நாம் எங்கு காண முடியும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் தெரிவிக்கின்றார். சிவபெருமானைப் புகழ்ந்து இசைப் பாடல்கள் பாடும் அடியார்களின் சித்தத்தினுள்ளே இறைவன் இருப்பதைத் தான் தேடிக் கண்டு கொண்டதாக இங்கே கூறுகின்றார். இறைவன் பேரில் பல பதிகங்கள் பாடிய அப்பர் பிரான், தன்னுள்ளே இறைவன் இருப்பதை, அனுபவ பூர்வமாக உணர்ந்ததை பல பாடல்களில் தெரிவித்துள்ளார். தங்களது அறிவு ஆற்றல் ஆகியவை மீது நம்பிக்கை வைத்து நாடினால் காண முடியாத, பெருமான் பால் மிகுந்த அன்பு வைத்து நாம் அழைத்தால் அவன் அருள் புரிவான் என்பதால் பல அடியார்களும் அவனைப் புகழ்ந்து போற்றி பல்லாண்டு பாடுகின்றனர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இறைவனுக்கு பல்லாண்டு பாடுவது என்பது பண்டைய நாட்களில் இருந்த வந்த பழக்கம் என்று இந்த பாடல் மூலம் நமக்குத் தெரிய வருகின்றது. இறைவனை தங்களுக்குள் ஒருவனாக, தங்களுக்கு நெருங்கியவராக கருதி பல்லாண்டு இசைப்பது அருளார்களின் மரபு, சேந்தனார் சிவபெருமானுக்கு பல்லாண்டுப் பதிகம் பாடியது போன்று பெரியாழ்வார் திருமாலுக்கு பல்லாண்டுப் பாசுரம் பாடியுள்ளார். மணிவாசகரும் இறைவனுக்கு பல்லாண்டு பாடும் பழக்கம் உள்ளதை தனது பொற்சுண்ணம் பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடுகின்றார்.

நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன்

நாடிக் காண மாட்டாத் தழலாய நம்பானைப்

பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்குத்

தேடிக் கண்டு கொண்டேன் திருவாரூர் அம்மானே

தாமரை மலரில் உறையும் பிரமதேவனும், அரக்கன் இரணியனின் உடலைக் கிழித்த வல்லமை படைத்த திருமாலும், சிவபெருமானை அறிய கடுமையான முயற்சிகள் செய்தும் செந்தழலாக ஓங்கி நின்ற சிவபெருமானது அடியையும் முடியையும் காண முடியவில்லை; அத்தகைய அரிய, சிவபெருமான், மிகவும் எளியவனாக, அவனைப் பணியும் பக்தர்கள், புகழ்ந்து பல்லாண்டு இசை பாடும் அடியார்கள் ஆகியோரின் மனதினில் புகுந்து இருப்பதை, பல இடங்களிலும் சிவபெருமானைத் தேடி அலைந்த நான் கண்டுகொண்டேன். அடியார்களுக்கு எளியவனாகவும், ஏனையோருக்கு அரியவனாகவும் காணப்படும் சிவபெருமான், திருவாரூரில் உறைகின்றான் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.5.6) அப்பர் பிரான் நாகம் அரைக்கசைத்த நம்பா என்று இறைவனை அழைக்கின்றார். விடுவார் என்ற சொல் எதுகை நோக்கி வீடுவார் என மாறியது. விடுவார்=பந்த பாசங்களை, உலகப் பற்றுகளை விட்டு ஒழித்தவர்; நாடுவார்=தங்களது முயற்சியை மட்டும் நம்பி பெருமானை அடைய முயற்சி செய்பவர்கள். அவனது அருள் இருந்தால் தான், இறைவனை நம்மால் நினைக்கவும், ஆராயவும் முடியும். தங்களது வல்லமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டு பெருமானது அடியையும் முடியையும் அறிய முயன்று, தோல்வி கண்ட பிரமனும் திருமாலும், இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்கள். அதனால் தான் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகப் பெருமான் திருவாசகம் சிவபுராணத்தில் பாடுகின்றார் இந்த பாடலில் பற்றினை விட்ட பக்குவம் அடைந்த உயிர்களுக்கு வீடுபேறு அருளும் பரமன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தாருகவனத்து முனிவர்கள் முதலில் பெருமான் மீது கோபம் கொண்டு அவரை அழிக்க மதயானை, பாம்புகள் ஆகியவற்றை ஏவிய போதும், யானையின் தோலைக் கிழித்து தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்டும், பாம்புகளை அடக்கி தனது உடலின் பல இடங்களிலும் அணிகலனாக பூண்டு கொண்டும், தங்களது முயற்சிகளை பெருமான் முறியடித்த பின்னர் பெருமானின் பெருமையை தாருகவனத்து முனிவர்கள் புரிந்து கொண்டனர். பெருமான் பால் விருப்பம் கொண்டு அவரைப் புகழ்ந்து பாடத் தொடங்கவே, பெருமானும் தாருகவனத்து முனிவர்கள் தங்களது கொள்கையிலிருந்து மாறியது கண்டு, ஆனந்தக் கூத்து ஆடியதை புராணங்கள் உணர்த்துகின்றன. இவ்வாறு தாருகவனத்து முனிவர்கள் பெருமானை விரும்பிய வரலாறு இங்கே உணர்த்தப் படுகின்றது.

பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி பழையாற்றுப் பட்டீச்சரத்தாய் போற்றி

வீடுவார் வீடு அருள வல்லாய் போற்றி வேழத்து உரி வெருவப் போர்த்தாய் போற்றி

நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி நாகம் அரைக்கு அசைத்த நம்பா போற்றி

ஆடும் ஆனைந்தும் உகப்பாய் போற்றி அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி

உன்னை விரும்பிப் பாடும் அடியார்களின் பாடல்களை விரும்பி கேட்பவனே போற்றி, பழையாறு, பட்டீச்சரம் ஆகிய தலங்களில் உறையும் இறைவனே போற்றி, உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பற்றினை அறவே நீக்கிய அடியார்களுக்கு வீடுபேறு அருளும் பெருமானே போற்றி, உமையம்மை அஞ்சுமாறு மதயானையின் தோலை உரித்து, அந்த தோலினை போர்வையாக போர்த்தவனே போற்றி, தங்களது முயற்சியால் உன்னை அடையலாம் என்று எண்ணி உன்னை அடைய நினைப்பவர்கள் ஆராய்ந்து அறிவதற்கு அரியவனே போற்றி, பாம்பினை இடையில் சுற்றியவனே போற்றி, பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் ஐந்து பொருட்களின் (பால், தயிர், நெய், கோசலம் மற்றும் கோமியம்) அபிடேகத்தை மிகவும் விரும்புவனே போற்றி. அலைகள் நிறைந்த கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டும் பாடல்.

திருவெண்ணெய் நல்லூரில் தன்னை ஆட்கொண்ட இறைவன், விரும்பத் தக்கவன் என்று, தான் இரண்டு கண்களின் பார்வையை இழந்து கோலை ஊன்றி நடந்த நிலையிலும் சுந்தரர் அழைப்பதை நாம் திருமுல்லைவாயில் பதிகத்தில் (7.69.8) காணலாம். சம்பு என்ற வடமொழி சொல்லுக்கு இன்பம் உண்டாக்குபவன் என்று பொருள். நச்சரவு ஆட்டிய நம்பன் என்று மணிவாசகர் திருவண்டப்பகுதி அகவலில் குறிப்பிடுகின்றார்.

நம்பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட

சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா

செம்பொன் மாளிகை சூழ் திருமுல்லை வாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட

பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (7.47.6) சுந்தரர் நல்லூர் நம்பானே என்று இறைவனை அழைக்கின்றார். திருக்கயிலாயத்தில் பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக பணி புரிந்த போது செய்த சிறிய பிழையின் காரணமாக, ஆலால சுந்தரர், நம்பி ஆரூரராக பூவுலகில் பிறக்க நேரிடுகின்றது. நிலவுலகம் செல்லுமாறு இறைவனால் பணிக்கப்பட்ட போது, சுந்தரர் இறைவனிடம், தான் பூவுலக மாயையில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் இறைவன் தன்னை தக்க தருணத்தில் ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றார். நிலவுலகில் பிறந்த பின்னர், இவை அனைத்தும் சுந்தரருக்கு மறந்து விடுகின்றது. ஆனால் இறைவன், தனது வாக்கினை நிறைவேற்றும் பொருட்டு, சுந்தரர் பால் கருணை கொண்டு, அவருக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி, அவரை திருவெண்ணெய் நல்லூர் தலத்திற்கு அழைத்துக் கொண்டு சென்று, அடிமை ஓலை காட்டி அவரை ஆட்கொண்டு அருள் புரிந்த பின்னர், சுந்தரருக்கு அனைத்தும் நினைவுக்கு வருகின்றன. இறைவனின் கருணையை நினைத்து மனம் நெகிழ்ந்து பலவாறும் வியந்து அவரைப் புகழ்ந்து பாடுகின்றார். அதன் பின்னர், பல தலங்கள் சென்று பதிகங்கள் பாடியபோது பொன்னும் மணியும் அளித்து இறைவன் அருள் புரிந்ததை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். எனவே சுந்தரர் பெருமானை பெரிதும் விரும்பியதில் வியப்பு ஒன்றுமில்லை. தான் பெருமானை விரும்பியதை நல்லூர் நம்பான் என்ற தொடர் மூலம் சுந்தரர் இந்த பாடலில் தெரிவிக்கின்றார்.

தாங்கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே

வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே

நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே

பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே

திருவிசைப்பா பாடல் ஒன்றினில் வேணாட்டடிகள், இறைவனை நம்பா என்று அழைக்கும் பாடலை (9.21.1) நாம் காண்போம். இந்த பாடலில், தனது அடிமை இழிவான செயலைச் செய்தாலும் அதனை பொருட்படுத்தாது விரும்பும் உரிமையாளர் போன்று, தனது தலைவனாகிய பெருமான் அடிமையாகிய தான் செய்த இழிவான செயல்களைப் பொறுத்துக் கொள்கின்றார் என்று கூறுகின்றார். அடிகளார் இந்த செயலுக்கு ஒரு உதாரணத்தை தருகின்றார். கச்சல் வாழைக் காயையும் வேப்பங் கொழுந்தினையும் கறி சமைத்து உண்பது போல் தனது தவறுகளை பொறுத்துக் கொள்ளும் பெருமான் என்று கூறுகின்றார். தனக்கு வேறு எந்த பற்றுக்கோடும் இல்லை என்பதை உணர்ந்த பின்னரும் தனது தொண்டினை பெருமான் விரும்பி ஏற்றுக் கொள்ளாதது ஏன் என்று பெருமானை நோக்கி கேள்வி கேட்கும் பாடல் இது. இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களிலும் பெருமானை நம்பானே என்று வேணாட்டடிகள் அழைக்கின்றார்.

துச்சான செய்திடினும் பொறுப்பர் அன்றே ஆள் உகப்பார்

கைச்சாலும் சிறு கதலி இலை வேம்பும் கறி கொள்வார்

எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனது பணி

நச்சாய் காண் திருத்தில்லை நடம் பயிலும் நம்பானே

பொழிப்புரை:

வேதங்களை ஓதிக் கொண்டும் மார்பினில் வெண்ணூல் அணிந்து கொண்டும் வெள்ளை எருதினைத் தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்லும் பெருமான், பூதங்கள் தன்னைச் சூழ்ந்து வரும் வண்ணம் பொலிவுடன் செல்கின்றார். அவர், தாருகவனத்து முனிவர்களால் தன் மீது ஏவப்பட்ட புலியினைக் கொன்று, அதன் தோலினைத் தனது ஆடையாக உடுத்தியுள்ளார். எங்களது தலைவனே என்றும், குறைந்த உடையணிந்து எளிமையுடன் திகழும் நக்கா என்றும், நாங்கள் விரும்பும் பெருமானே என்றும் மனம் ஒன்றி அழைத்து, தனது திருவடிகளைத் தொழும் அடியார்களின் பாவங்களை தீர்க்கும் பெருமான் பழன நகரினில் உறைகின்றார்.

பாடல் 2:

வேதமோதி வெண்ணூல் (1.67) பாடல் 1 தொடர்ச்சி மற்றும் 2, 3 (திதே 0604)

கண் மேல் கண்ணும் சடை மேல் பிறையும் உடையார் காலனைப்

புண் ஆறு உதிரம் எதிர் ஆறு ஓடப் பொன்றப் புறந்தாளால்

எண்ணாது உதைத்த எந்தை பெருமான் இமவான் மகளோடும்

பண்ணார் களி வண்டறை பூஞ்சோலைப் பழன நகராரே

விளக்கம்:

புண் ஆறு=புண் வழியாக; எண்ணாது=ஒரு பொருட்டாக மதிக்காது; பொன்ற=இறக்க; புண் ஆர் உதிரம்=புண்ணின் வழியாக வெளிவந்த இரத்த ஆறு; சிறுவன் சுசரிதனுக்காக காலனை உதைத்த செயல் என்று பெரியோர்களால் விளக்கம் அளிக்கப் படுகின்றது. இந்த நிகழ்ச்சி ஆபத்சகாயர் என்று இந்த தலத்து பெருமானுக்கு பெயர் வந்த காரணத்தை உணர்த்தும் நிகழ்ச்சியாகும். கண் மேல் கண்=அனைவர்க்கும் இயல்பாக உடைய இரண்டு கண்களுக்கு மேலாக நெற்றிக் கண் ஒன்றினை உடைய பெருமான்;

பொழிப்புரை:

அனைவர்க்கும் இயல்பாக உடைய இரண்டு கண்களுக்கு மேலாக நெற்றியில் ஒரு கண்ணினை உடையவனும், தனது சடையில் பிறைச் சந்திரனை அணிந்தவனும் ஆகிய பெருமான், சிறுவன் சுசரிதனின் உயிரைக் கவர வந்த காலனை, ஒரு பொருட்டாக மதியாது, புறந்தாளால் உதைத்து, அவனது காயத்திலிருந்து இரத்தம் ஆறாக ஓடும் வண்ணம் செய்து, அவனை அழித்தவர் ஆவார். இத்தகைய ஆற்றல் உடையவரும் எமது தந்தையும் ஆகிய பெருமான், இமவானின் மகளாகிய பார்வதி தேவியுடன் சேர்ந்து எழுந்தருளும் தலம், மது உண்ட களிப்பினில் வண்டுகள் பண்ணுடன் ரீங்காரம் இடும் சோலைகள் நிறைந்த பழன நகராகும்.

பாடல் 3:

வேதமோதி வெண்ணூல் (1.67) பாடல் 1 தொடர்ச்சி மற்றும் 2, 3 (திதே 0604)

வேதமோதி வெண்ணூல் (1.67) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் பாடல் 4 (திதே 0605)

பிறையும் புனலும் சடை மேல் உடையார் பறை போல் விழிகள் பேய்

உறையும் மயானம் இடமா உடையார் உலகர் தலைமகன்

அறையும் மலர் கொண்டு அடியார் பரவி ஆடல் பாடல் செய்

பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே

விளக்கம்:

பறை போல் விழி=ஆந்தை போன்று உருண்டு திரண்ட; ஓவா=இடைவிடாது; அறையும்= ஒலிக்கின்ற; பலி=பெருமானுக்கு அளிக்கப்படும் நைவேத்திய பிரசாதங்கள்; ஆறு காலங்களிலும் முறையாக பூஜை செய்யப்பட்டு இந்த தலத்து பெருமானுக்கு நைவேத்தியம் அளிக்கப் பட்டமை இங்கே திருஞானசம்பந்தரால் உணர்த்தப் படுகின்றது. இந்த பாடலில் சங்கின் ஒலி இடையறாது ஒலிக்கும் தலம் என்று குறிப்பிடப் படுகின்றது. சங்கு ஊதி ஒலி எழுப்புவது, பண்டைய நாட்களில் மங்கல வழக்காக கருதப்பட்டு வந்தது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு ஒலி எழுப்பி, மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்து, அனைவரையும் திருக்கோயில் வழிபாட்டிற்கும், திருவிழா வைபவத்திற்கும் அழைப்பது இதன் நோக்கமாக இருந்தது போலும். நாளடைவில் சங்கு ஊதுவதன் நோக்கத்தினை நாம் மறந்து, மங்கல நிகழ்ச்சிகளில் சங்கினால் ஒலி எழுப்புவதை நாம் நிறுத்தி விட்டோம். ஆனால் இன்றும் பிரதோஷம் போன்ற நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் சிங்கப்பூர் கோயில்களில் வெண் சங்குகள் ஊதப்பட்டு அப்பர் பிரானின் பாடல் நினைவூட்டப் படுகின்றது. தமிழ்நாட்டிலும், பல இடங்களில் திருமுறை முற்றோதல் நடைபெறும் போது சங்குகள் முழங்குகின்றன. ஆதிரைத் திருநாள் வைபவத்தின் சிறப்பினை உணர்த்தும் பாடலில் (4.21.3) அப்பர் பிரான், சங்குகள் ஒலிக்கப் பட்டன என்று சொல்வது நமது நினைவுக்கு வருகின்றது.

நில வெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்

பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்தெங்கும்

கலவ மஞ்ஞை கார் என்றெண்ணிக் களித்து வந்து

அலமர் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்

கலவம்=தோகை: மஞ்ஞை=மயில்: நிற்கில்லா=நில்லாமால், நிறுத்தாமல்: கல்ல வடங்கள்= காலில் கட்டிக் கொள்ளும் சதங்கை: கார்=மழை, இங்கே மழைக்கு முன்னர் அடையாளமாகத் தோன்றும் இடியினைக் குறிக்கும்: அலமர்=அலமரும் என்ற சொல் சுருக்கப் பட்டுள்ளது. அலமரும்=வருந்தும்,துன்பப்படும்: ஆதிரைத் திருநாளின் ஆரவாரத்தை குறிப்பிடும் அப்பர் பிரான், விழாவினில் ஏற்படும் ஆரவாரத்தை, வானில் தோன்றும் இடியின் முழக்கம் என்று மயில்கள் தவறாக நினைத்து, மழை வரும் என்று மகிழ்ச்சியில் நடமாடுவதாக இங்கே கூறுகின்றார். நிலவைப் போன்று வெண்ணிறம் கொண்ட சங்குகள், பறை எனப்படும் தோல் இசைக் கருவிகள், எழுப்பும் ஓசையினோடு, பல மங்கையர்கள் இடைவிடாது ஆடுவதால், அவர்கள் காலில் கட்டிய சலங்கைகள் எழுப்பும் ஒலியும் இணைந்து தோன்றும் ஒலி, மேகங்கள் உண்டாக்கும் இடியோசை போல் ஒலிப்பதால், மழை வரும் என்று எதிர்பார்த்து மகிழ்வுடன் தங்களது தோகையை விரித்து நடனமாடும் மயில்கள், மழை ஏதும் இல்லாததால், ஏமாற்றம் அடைந்து வருந்துகின்றன. இவ்வாறு, ஆரவாரம் மிகுந்து, மங்கையர்களின் நடனமும் மயில்களின் நடனமும் நடைபெறும் ஆரூர் ஆதிரைத் திருவிழாவின் அழகு காண்போர் உள்ளத்தில் நிலைபெற்று நிற்கின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பராய்த்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.135.6) திருஞானசம்பந்தர், இந்த தலத்தில் பறையும் சங்கும் பேரொலி எழுப்ப, பெருமான் எழுந்தருளியுள்ளார் என்று கூறுகின்றார். அறைய=பேரொலி எழுப்ப; எப்போதும் மறையோதும் பரமனாக விளங்கும் பெருமான், தேவைப்பட்ட நேரத்தில் தனது ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மையாளராக விளங்குகின்றார் என்பதை குறிக்கும் வண்ணம், உம்மைத் தொகை மறையுடன் இணைந்துள்ளது. துள்ளி விளையாடும் மான் கன்றினை பெருமான் தனது கையில் ஏந்திய நிகழ்ச்சியும் இந்த தலத்தினில் நடைபெற்றது தான். மறையும் என்ற சொல்லில் உள்ள உம்மைத் தொகை, ஆகமங்களை அருளிய பெருமான் வேதங்களையும் அருளினார் என்பதை உணர்த்துகின்றது என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. அறை என்ற சொல்லுக்கு மந்திரச் சொல் என்ற பொருளும் பொருந்தும். எனவே மந்திரச் சொற்களாக உள்ள பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. சொற்றுணை வேதியன் என்று வேதங்களில் உள்ள சொற்களுக்கு துணையாக இருப்பவன் சிவபெருமான் என்று உணர்த்தும் அப்பர் பிரான் அருளிய நமச்சிவாயப் பதிகம் நமது நினைவுக்கு வருகின்றது. வேதங்களை எப்போதும் ஓதிக் கொண்டு இருக்கும் பெருமான், தன் மீது ஏவப்பட்ட வெறி ஊட்டப்பட்ட மான் கன்றினை அடக்கி, துள்ளித் திரியும் சாதுவான கன்றாக மாற்றி, தனது கையினில் ஏற்றுக் கொண்டவர் ஆவார். மானின் தன்மையை மாற்றியது போன்று, ஆலகால விடத்தின் தன்மையையும் மாற்றி, அந்த விடத்தினால் எவருக்கும் எந்த விதமான கேடும் விளையாத வண்ணம் தனது கழுத்தினில், அந்த விடத்தின் கறை கருமணி போல் தோன்றும் வண்ணம் தேக்கிக் கொண்டவர் சிவபெருமான்; அவர், பறை சங்கு போன்ற இசைக்கருவிகள் பேரொலி எழுப்பும் வண்ணம் இசைக்கப்படும் திருவிழாக்கள் நிறைந்த பராய்த்துறை தலத்தினில் அடிகளாக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்

கறை கொள் கண்டம் உடையவர்

பறையும் சங்கும் ஒலி செய் பராய்த்துறை

அறைய நின்ற அடிகளே

மாகறல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.72.3) திருஞானசம்பந்தர், இந்த தலத்தினில் ஆரவாரத்துடன் சங்கு முதலான கருவிகள் ஒலிக்கப் பட்டன என்று கூறுகின்றார். பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் தலத்தின் செல்வச் செழிப்பையும் ஆரவாரம் மிகுந்த நிலையையும் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் அந்த ஆரவாரம் பெருமானை வழிபடும் பாங்கினால் விளைந்தது என்று குறிப்பிடுகின்றார். பெருமானை வழிபடும் அடியார்களை மாதவர் என்று குறிப்பிடுகின்றார். பாலை அன-பால் போன்று வெண்மை நிறத்தில்; பறையும்=நீங்கும்: காமருவு சீர்=பாதுகாப்பு கருதி செய்யப்படும் சிறந்த வழிபாடு; கா=பாதுகாப்பு. உலகிலுள்ள உயிர்கள் தங்களது பாதுகாப்பு கருதி இறைவனை வழிபட வேண்டியது அவைகளின் கடமையாகும். தங்களது கடமையை செவ்வனே நிறைவேற்றும் பொருட்டே இறைவன் உயிர்களுக்கு கருவி கரணங்களை அளித்துள்ளான். உயிர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டு அதனின்று விலக முடியாமல் வருந்தி தவிக்கும் நிலையிலிருந்து, மீண்டும்மீண்டும் பிறப்பெடுக்க முடியாத முக்தி நிலை சென்றடைவது உயிர்களுக்கு சிறந்த பாதுகாப்பினை அளிக்கும் அல்லவா. எனவே தான் அத்தகைய உணர்வுடன், பாதுகாப்பு கருதி உயிர்கள் செய்யும் வழிபாடு, பெறுகின்ற பலனின் காரணமாக சிறப்பாக கருதப்படுகின்றது. இந்த தன்மையே காமருவு சீர் வழிபாடு என்று குறிப்பிடப் படுகின்றது. காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களையாய் கறைக்கண்டா என்று சுந்தரர் பாடுவது நமது நினைவுக்கு வருகின்றது. அனுதினமும் காலை மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும், பெருமானை வழிபடுவதால் சிறந்த தவம் செய்தவர்களாக விளங்கிய அடியார்கள், துந்துபி சங்கு குழல் யாழ் முழவு முதலிய வாத்தியங்கள் முழங்க, இறைவனை வழிபட, அவர்களின் வழிபாட்டினை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் தலம் மாகறல் ஆகும். இவ்வாறு ஆரவாரத்துடன் அடியார்களால் வழிபடப்படும் பெருமான், தோலாடையை விரும்பி அணிபவனாக, அந்த தோலாடையின் மேல் ஒளிவீசும் நாகத்தை இறுகக் கட்டியவாறு, தனது திருமேனி மேல் அழகாக பால் போன்ற திருநீற்றினை பூசியவனாக காணப்படுகின்றான். அவனது திருவடியை வணங்கிப் புகழும் அடியார்களை பிணைந்துள்ள வினைகள் யாவும் உடனே நீங்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காலையொடு துந்துபிகள் சங்கு குழல் யாழ் முழவு காமருவுசீர்
மாலை வழி பாடு செய்து மாதவர்க ளேத்தி மகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர் சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே

இலிங்க புராணக் குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.95.10) அப்பர் பிரான், பிரமனும் திருமாலும் செய்யத் தவறிய செயல்களை குறிப்பிடுகையில், சங்கு ஊதி பெருமானை வழிபடவில்லை என்று கூறுகின்றார். கண்டி=உருத்திராக்க மாலை; விண்ட=விரிந்த; வான்= சிறப்புத் தன்மை வாய்ந்த; கெண்டி=கிளறி, தோண்டி, அகழ்ந்து; விம்ம=ஒலிக்க; பிரமன் திருமால் ஆகிய இருவரும் ஒருநாளும் உருத்திராக்கம் அணிந்தாரில்லை, தங்களது கையினில் கபாலம் ஏந்தினாரில்லை, தங்களது வாயினை விரித்து அதனில் வெண் சங்கினைப் பொருத்தி, ஒலி எழுப்பினாரில்லை; ஆனால், அண்டங்களுக்கு எல்லாம் தலைவராக விளங்கும் பெருமானது, தீயின் வண்ணத்தில் திருமேனியை உடையவனது, திருவடியையும் திருமுடியையும், பூமியைக் கிளறித் தோண்டியும் வானில் பறந்து சென்றும் காண்பதற்கு பெருமுயற்சிகள் செய்த போதிலும், அவர்களது முயற்சி எந்த பலனையும் அளிக்கவில்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை

கண்டி பூண்டு கபாலம் கைக் கொண்டிலர்

விண்ட வான் சங்கம் விம்ம வாய் வைத்திலர்

அண்ட மூர்த்தி அழல் நிற வண்ணனைக்

கெண்டிக் காணல் உற்றார் அங்கு இருவரே

பெருமானின் சன்னதியில் மங்கல அடையாளமாக சங்குகள் ஊதப்பட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும் வண்ணம், வெண்சங்குகள் ஊதப்படாத ஊர்கள், ஊர்களல்ல காடு என்று உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (6.95.5) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் நாளடைவில் சங்கு ஊதுவதன் நோக்கத்தினை நாம் மறந்து, மங்கல நிகழ்ச்சிகளில் சங்கினால் ஒலி எழுப்புவதை நிறுத்தி விட்டோம். ஆனால் இன்றும் பிரதோஷம் போன்ற நிகழ்ச்சிகளிலும், திருவிழாக்களிலும் சிங்கப்பூர் கோயில்களில் வெண்சங்குகள் ஊதப்பட்டு அப்பர் பிரானின் பாடல் நினைவூட்டப் படுகின்றது. தமிழ்நாட்டிலும், பல இடங்களில் திருமுறை முற்றோதல் நடைபெறும் போது சங்குகள் முழங்குகின்றன. திருவிலூர்= திரு+இல்+ஊர், செல்வம் இல்லாத ஊர்கள், பரு=பருத்த உடல். கோடி=வளைத்து. உடலை வளைத்து, தரையில் விழுந்து சிவபெருமானை வணங்கி: பத்திமை=பக்தி; அருப்பு, அரும்பு என்பதன் திரிபு; மலர இருக்கும் மொக்கு; பாங்கு=அழகு; தளி=கோயில்; விதானம்=பந்தல்; அடவி காடே=அடர்ந்த காடு

திருக்கோயில் இல்லாத திருவிலூரும் திருவெண்ணீறு அணியாத திருவிலூரும்

பருக்கோடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினோடு பல தளிகள் இல்லா ஊரும்

விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும்

அருப்போடு மலர் பறித்திட்டு உண்ணாவூரும் அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. நாம் வாழும் ஊரில் கோயில் இருந்தால் மட்டும் போதாது, அந்த கோயிலை நாம் ஒழுங்காக பாதுகாப்பது நமது கடமை என்ற கருத்து இங்கே வலியுறுத்தப் படுகின்றது. அழகாக கோயில்கள் இருக்க வேண்டும்; ஒவ்வொரு ஊரிலும் பல கோயில்கள் இருக்க வேண்டும்; கோயில் விழாக்களை பந்தல், கொடிகள் கட்டி கொண்டாட வேண்டும் என்றெல்லாம் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நமது உண்மையான செல்வம் கோயில்கள் தானே. எனவே தான் கோயில்கள் இல்லாத ஊரினை, செல்வம் இல்லாத ஊர் என்ற பொருளில் திரு இல்லாத ஊர், திரு இல் ஊர் என்று சாடுவதை நாம் உணரலாம். கோயில் வழிபாட்டின் போது சங்கு ஊதுதல் மங்கல வழக்கு. பாடலில் குறிப்பிடப்படும் ஊர்கள், நகரங்கள், அடர்ந்த காடு என்று கூறி, அங்கே வாழ்வோர், காட்டில் வாழும் விலங்குகள் தாம், மனிதர்கள் அல்ல என்பதையும் நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இவ்வாறு நாம் விலங்குகளாக இல்லாமல், மனிதர்களாக இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பது இங்கே தெளிவாக உரைக்கப் பட்டுள்ளது. நாம் தினமும் இறைவனை, மலர் தூவி வழிபட்ட பின்னர் உணவு உட்கொள்ள வேண்டும் என்பதும் இங்கே கூறப்படுகின்றது. திருக்கோயில்கள் இல்லாத ஊரும்; வெண்ணீறு அணியாத மனிதர்கள் வாழும் ஊரும்; தங்களது உடலினை வளைத்து இறைவனை வணங்கி பக்தியுடன் அவனைப் புகழ்ந்து பாடல்கள் பாடாத மாந்தர்கள் வாழும் ஊரும்; அழகான பல கோயில்கள் இல்லாத ஊரும், கோயில் வழிபாட்டின் போது விருப்பத்துடன் சங்கநாதங்கள் முழங்காத ஊரும் கோயில் விழாக்களை பந்தல்கள் எடுத்து கொடிகள் கட்டி அலங்கரித்து கொண்டாடாத ஊர்களும், தாங்கள் உணவு உட்கொள்வதன் முன்னர் இறைவனை மலர் தூவி வழிபடும் மாந்தர்கள் இல்லாத ஊரும், ஊர்களே அல்ல; அவை கொடிய விலங்குகள் வாழும் அடர்ந்த காடுகளே. அங்கு வாழும் மனிதர்களும் மனிதர்கள் அல்லர்; அவர்களும் விலங்குகளே என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடலில் (8.20.3) சங்குகள் ஒலிக்கின்றன என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். குருகுகள்=பறவைகள்; இயம்பின=ஒலித்தன; ஓவின= நீங்கின; தேவனே, திருப்பெருந்துறை உறை சிவபெருமானே, யாவரும் அறிதற்கு அரியவனே, எங்களுக்கு எளியவனே, எமது தலைவனே., அழகிய குயில்கள் கூவின, கோழிகள் கூவின, பறவைகள் ஒலித்தன, சங்குகள் முழங்கின, நடசத்திரங்களின் ஒளி மங்கியது, உதய காலத்து வெளிச்சம் தோன்றுகின்றது. எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டுவாயாக, பள்ளி எழுந்தருள்வாயாக என்று பெருமானிடம் மணிவாசகர் வேண்டுகின்றார்,

கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின யியம்பின சங்கம்

ஓவின தாரகை ஒளியொளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்

தேவ நற் செறி கழல் தாளிணை காட்டாய் திருப்பெருந்துறை சிவபெருமானே

யாவரும் அறிவரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

ஆதி நாதத்தின் ஒலி, பல சங்குகள் ஒன்று சேர்ந்து ஒரே சீராக ஒலிக்கும் ஓசையை ஒத்து இருக்கும் என்று மணிவாசகர் சங்கிலிருந்து எழும் ஓசையின் மங்கலத் தன்மையை, தனது திருப்படையாட்சி பதிகத்தின் கடைப்பாடலில் குறிப்பிடுகின்றார்.

சங்கு திரண்டு முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே

சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே

அங்கிது நன்றிது நன்றெனும் மாயை அடங்கிடும் ஆகாதே

ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே

செங்கயல் ஒண்கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே

சீரடியார்கள் சிவானுபவங்கள் தெரிந்திடும் ஆகாதே

எங்கும் நிறைந்து அமுது ஊரும் பரஞ்சுடர் எய்துவது ஆகாதே

ஈறு அறியா மறையோன் எனை ஆள எழுந்தருளப் பெறிலே

ஆதி அந்தம் இல்லாத மறையோனாகிய சிவபெருமான் நம்மை ஆட்கொள்வதற்காக நம் முன்னே எழுந்தருளினால் என்னவெல்லாம் நிகழும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. அப்போது ஆயிரக் கணக்கான சங்குகள் ஒன்று சேர்ந்து ஒரே சுருதியுடன் முழங்கும் ஓசையினை ஒத்த ஆதி நாதத்தின் ஒலி கேட்கப்பட்டு நம்மை ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தும்; அவரவர்கள் பிறந்த சாதியினால் ஏற்பட்டு என்றும் நீங்காது நிற்கும் குணங்கள் நம்மை விட்டு நீங்கிவிடும்; அவரவர்கள் சிந்தனைக்கு ஏற்ப, மற்றவர்கள் நன்மை விளைவிக்கும் பொருட்களை நாம் தீயனவாகவும், மற்றவர்கள் தீயவை என்று கருதும் பொருட்களை நாம் நல்லவை என்றும் கருதும் தன்மை விலகி அனைத்துப் பொருட்களையும் சமநோக்குடன் பாவிக்கும் குணம் நம்மில் தோன்றும்: நம்மிடம் உள்ள பலவிதமான ஆசைகள் மறைந்து, அடியார்களுக்கு அடியோம் என்ற உணர்வு நிறைந்து மற்ற ஆசைகள் அடங்கி விடும்; சிற்றின்பத்தை நாடிச் செல்லும் நமது சிந்தை மாறிவிடும்; மற்ற அடியார்கள் பெற்ற சிவானுபவங்கள் நமக்கும் தெரிந்திடும்; மேலும் எங்கும் நிறைந்து, நமக்கு அமுதமாக இருக்கும் பரஞ்சுடரினை நமது அகக் கண்களால் காணமுடியும் என்றும் மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார்.

பொழிப்புரை:

பிறைச் சந்திரனையும் கங்கை நதியினையும் தனது சடை மேல் உடையவனும், ஆந்தை போல் உருண்டு திரண்ட விழிகளை உடைய பேய்கள் வாழும் மயானத்தைத் தனது இருப்பிடமாக உடையவனும் ஆகிய சிவபெருமான், உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவர் ஆவார். இத்தகைய தன்மைகள் உடைய பெருமானின் திருவடிகளில், தனது நறுமணத்தால் வண்டுகளைக் கவர்ந்து வண்டுகள் இசைத்துப் பாடி சூழ்ந்திருக்கும் நல்ல மலர்களை அடியார்கள் தூவி ஆடியும் பாடியும் இறைவனைப் போற்ற, அந்த பாடல்களின் பின்னணியில் இடைவிடாது சங்குகள், பறை, வாத்தியங்கள் ஒலிக்க, ஆறு காலங்களிலும் பெருமானுக்கு முறையாக பூஜை செய்து நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப்படும் பழனம் தலத்தினில் பெருமான் உறைகின்றார்.

பாடல் 4.

வேதமோதி வெண்ணூல் (1.67) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் பாடல் 4 (திதே 0605)

வேதமோதி வெண்ணூல் (1.67) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0606)

வேதமோதி வெண்ணூல் (1.67) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0607)

வேதமோதி வெண்ணூல் (1.67) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0608)

வேதமோதி வெண்ணூல் (1.67) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0609)

வேதமோதி வெண்ணூல் (1.67) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0610)

உரம் மன்னு உயர் கோட்டு உலறு கூகை அலறும் மயானத்தில்

இரவில் பூதம் பாட ஆடி எழிலார் அவர் மேலைப்

பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும்

பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே

விளக்கம்:

நறவம்=குருதி, இரத்தம்; பரமன்=கடந்தவன்; பகவன்=ஆறு இறை குணங்கள் உடையவன்; பகவன் என்ற சொல்லுக்கு ஆறு விதமான குணங்களை உடையவன் என்று சிவக்கவிமணி விளக்கம் அளிக்கின்றார். ஐஸ்வர்யம், வீரம், புகழ், செல்வம், ஞானம், வைராக்கியம் ஆகிய குணங்களின் தொகுப்பு பகம் என்று அழைக்கப் படுகின்றது, இந்த ஆறு குணங்களை உடைய இறைவன் பகவன் என்று அழைக்கப் படுகின்றான் பரமேச்சுவரன்=அனைத்து தேவர்களுக்கும் தலைவன்; உரம்=வலிமை; உலறு கோட்டு=வற்றிய கிளைகள்; சுடுகாட்டில் உள்ள மரம் உலர்ந்து காணப்படும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. நறவம் என்ற சொல் பொதுவாக கள், தேன் ஆகியவற்றை குறிப்பிடும் என்றாலும், இங்கே பெருமான் ஏற்கும் உணவினை, அதாவது பலியை குறிப்பிடும் வண்ணம் கையாளப் பட்டுள்ளது. .

பகவன் என்ற இந்த சொல் பகவான் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். .பகவான் என்று கீதையில் வரும் சொல்லுக்கு பராசர முனிவர் ஆறு சிறந்த குணங்கள் உடையவன் என்று பொருள் கூறுகின்றார். முழு வலிமை, முழுவதுமான புகழ், முழுமையான செல்வம், முழுமையான அறிவு, முழுமையான அழகு மற்றும் முற்றும் துறந்த தன்மை என்பவையே அந்த ஆறு குணங்கள் என்று கூறுவார்கள். தன்வயத்தன் ஆதல், முதல் இல்லாது ஆதியாக இருத்தல், உருவம் அற்றவனாக இருத்தல், எல்லா நலன்களும் உடையவனாக இருத்தல், எங்கும் பரவி இருத்தல், உலகில் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக இருத்தல் ஆகிய இந்த ஆறு செயல்களை உடையவன் என்றும் கூறுவார்கள். இந்த ஆறு செயல்களின் தன்மையை நாம் உணர்ந்தால், இந்த ஆறு தன்மைகள் கொண்டவன் பெருமான் ஒருவனே என்பதை நாம் அறிந்து கொள்வோம். எனவே பகவன் என்ற சொல் பெருமான் ஒருவனுக்கே உரிய பெயர் என்பதை நாம் உணர்வோமாக.

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.121.1) ஒன்றில் திருஞான சம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். நடைமரு திரிபுரம்=இயங்கும் தன்மை கொண்ட கோட்டைகள், பறக்கும் கோட்டைகள்; பொதுளிய=செறிந்த, அடர்ந்த; தீயினை உமிழும் படைக்கலம் என்று பெருமானின் மழுப்படையினை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மேகங்கள் தவழும் வண்ணம் மருதமரங்கள் உயர்ந்து காணப்படுகின்றன என்று குறிப்பிட்டு திருஞான சம்பந்தர் தலத்தின் நீர் வளத்தினையும் நில வளத்தினையும் இங்கே கூறுகின்றார். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பறந்து செல்லும் ஆற்றல் உடையதாக, பலருக்கும் தீங்கு இழைத்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயினில் சிக்கி வெந்து அழியும் வண்ணம், சிரித்தவன் சிவபெருமான். அவன் நெருப்பு போன்று கொடிய விளைவுகளை விளைவிக்கும் மழுப் படையை தனது வலது கையில் உடையவன்; அவன் தனக்கே உரிய ஆறு சிறந்த குணங்களை உடையவன் என்பதால் பகவன் என்று அழைக்கப் படுபவன்; அத்தகைய இறைவன் இடைமருது தலத்தினில் மேகங்கள் தழுவும் வண்ணம் செழித்து வளர்ந்து அடர்ந்து காணப்படும் உயர்ந்த மருத மரங்களால் சூழப்பட்ட திருக்கோயிலில் உறைகின்றான். இந்த திருக்கோயில் சென்றடைந்து அவனை வணங்கினால் நமது துன்பங்களை தீர்த்துக் கொள்வது மிகவும் எளிதான செயலாக மாறிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நடைமரு திரிபுரம் எரி உண நகை செய்த

படை மரு தழல் எழ மழு வல பகவன்

புடை தரு மருது இளமுகில் வளம் அமர் பொதுளிய

இடைமருது அடைய நம் இடர் கெடல் எளிதே

இரும்பை மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.117) பாடலில் திருஞான சம்பந்தர் இறைவனை பகவன் என்று அழைக்கின்றார். பிறைமதியைச் சூடிய வண்ணம் கூத்தாடும் பெருமான் வினைகளை அழிக்கும் வல்லமை உடையவர் என்றும், அனைவர்க்கும் மேலானவன் என்றும் தூய்மையான ஆறு குணங்களை உடையவன் என்றும் கூறும் திருஞான சம்பந்தர், இரும்பை மாகாளத்தில் உள்ள மறையவர்கள் இறைவனைத் தொழுது வணங்கியதையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். குறைவதாய=கலைகள் குறைந்த; குனித்தான்=கூத்தாடிய பெருமான்; பறைவது=அழிப்பது; இந்த பாடலில் திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்றும் அழைக்கின்றார்.

குறைவதாய குளிர் திங்கள் சூடிக் குனித்தான் வினை

பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை

இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை மாகாளம்

மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே

பூந்தராய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.1.11) இறைவனை பகவனார் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இறைவனைப் போற்றி பாடிய இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் பாட வல்ல அடியார்கள் தங்களின், தீவினைகள் அகன்று நல்வினைகள் கூடப் பெறுவார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல் வாய்ப்

புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய்ப்

பகவனாரைப் பரவு சொன்மாலை பத்தும் வல்லார்

அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவாரே

கொச்சைவயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.83.5), பகவன் என்று குறிப்பிடும் திருஞான சம்பந்தர் இனியன அல்லாதவற்றையும் இனியதாக ஏற்றுக்கொள்ளும் பெருமான் என்று கூறுகின்றார். இந்த தன்மைக்கு ஆலகால விடத்தை உட்கொண்டதும், பாம்பினை அணிகலனாக ஏற்றதும் சான்று ஆகும். இந்த பாடலில் குபேரனை தோழனாக இறைவன் கொண்டுள்ள தன்மை குறிப்பிடப் படுகின்றது. அந்நாளில் சீர்காழி நகரில் இருந்த மறையவர்கள் வளர்த்த வேள்வியிலிருந்து எழுந்த புகை வானளாவச் சென்று வானையும் சந்திரனையும் மறைத்ததாக கூறுகின்றார். குனிமதி=வளைந்த பிறையை உடைய சந்திரன்.

பனிவளர் மாமலைக்கு மருகன் குபேரனோடு தோழமைக் கொள் பகவன்

இனியன அல்லவற்றை இனிதாக நல்கும் இறைவன் இடம் கொள் பதிதான்

முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவிக்

குனிமதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே

பிரமபுரத்தின் மீது அருளிய பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.67) திருஞானசம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். நிகழ்=போன்ற; நகமணி=நாகமணி; முகை= மொட்டு; முகைமலர்=அன்று வரை மொட்டாக இருந்து அப்போது தான் மலர்ந்த மலர், நாண்மலர்; பகவன்=சிவபெருமான்; முகம்=திருவருள் நோக்கம்; பகை=தேவர்களின் பகைவராகிய அசுரர்கள்; மிக அருள=மிகுந்த கருணையுடன் தர; நிகரில் இமையோர்=அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்த தேவர்கள்; புக=சரண் புக; அகவு=விருப்பம்; சிவபெருமான் தனது ஐந்து முகங்களோடு அதோமுகமும் கொண்டு குமாரக் கடவுளை தோற்றுவித்த தன்மையை உணர்த்தும் வண்ணம், ஒரு முகம் மிகுந்த நிலையினை குறிப்பால் சுட்டிக்காட்டும் வண்ணம் மிக அருளி என்று திருஞானசம்பந்தர் கூறியதாக அறிஞர்கள் விளக்கம் கூறுகின்றனர். முகம் என்ற சொல் பார்வை என்ற பொருளில் இங்கே வருகின்றது. பெருமான் வாய் திறந்து ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தவாறே தனது திருவருள் நோக்கத்தால் அருள் புரிந்து சனகாதி முனிவர்களுக்கு வேதங்களுக்கு விளக்கம் அளித்தார் என்று கூறுகின்றார். பகலில் ஒளிரும் சூரியன் போன்று பிரகாசம் உடைய நாகமணிகள் போன்று ஒளிவீசுவதும், அன்றலர்ந்த செந்தாமரை மலர் போன்று மென்மையாக இருப்பதும் ஆகிய இறைவனின் திருப்பாத கமலங்களை, மிகுந்த விருப்பத்துடன் வணங்கிய சனகாதி முனிவர்களுக்கு, விரிவான கலைகள் அனைத்தையும் தெளிவுடன் உணரும் வண்ணம் தனது திருவருளால் நோக்கி அருளிய பெருமான் ஆறு சிறந்த குணங்களை உடையவன் ஆவான். அவன் வீற்றிருந்து அருள் புரியும் இடம் சீர்காழி ஆகும். இவ்வாறு முனிவர்களுக்கு அருளிய பெருமான் தேவர்களுக்கும் அருளியவன் ஆவான். தேவர்களின் பகையாக விளங்கிய சூரபதுமனையும் அவனுடன் இருந்த அரக்கர்களையும் வேரோடு களையும் வகையில் ஆறுமுகம் கொண்ட முருகப் பெருமானை இறைவன் தோற்றுவிக்க, அதனால் மிகவும் மகிழ்ந்த தேவர்கள், முருகப் பெருமானின் தோற்றத்திற்கு முன்னம் சரண் அடைவதற்கு தகுந்த இடமாக, புகழ் மிகுந்ததும் அழகு வாய்ந்ததுமாக விளங்கியது சீர்காழி நகரம், தேவர்கள் புகல் அடைந்தமையால் புகலி நகர் என்ற பெயரினைப் பெற்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பகலொளி செய் நகமணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு

அகல மலி சகல கலை மிக உரை செய் முகமுடைய பகவன் இடமாம்

பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள நிகரில் இமையோர்

புக உலகு புகழ எழில் திகழும் அலர் பெருகு புகலி நகரே

சண்பை நகர் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.5) திருஞானசம்பந்தர் பெருமானை பகவன் என்று குறிப்பிடுகின்றார். பார்வதி தேவியின் அழகினை இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில் விவரித்த திருஞானசம்பந்தர், இந்த பாடலில் தேவியை தெய்வத் தன்மை பொருந்திய பெண் என்று கூறுகின்றார். கெழுவு= பொருந்திய, அம்=அழகிய; பணம்=பண்+அம்; பண்ணுக்கு அழகு இனிமை; பரமேட்டி= மேலானவர்கள் என்று கருதப்படும் தேவர்களால் பெரிதும் விரும்பப் படுபவன்; புறாக்கள் உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சியுடன் உலாவுகின்றன என்ற குறிப்புக்கு ஒரு சுவையான விளக்கமும் தரப் படுகின்றது. சிபிச் சக்ரவர்த்தியை சோதிக்க புறா வடிவினில் வந்த அக்னி, தான் செய்த தவறினுக்கு வருந்தி புறா வடிவினில் பெருமானை வழிபட்டு பயன் அடைந்ததை நினைத்து, தங்களது இனத்தில் ஒரு புறாவுக்கு இறைவன் அருள் புரிந்த இடம் என்று புறாக்கள் பெருமையுடன் மகிழ்வதாக இந்த விளக்கம் அமைந்துள்ளது. இனிமை பொருந்திய பண்களுடன் கலந்து பாடுவதும் ஆடுவதும் இடைவிடாது செய்யும் பெருமான் மேலானவர்கள் என்று கருதப்படும் தேவர்களால் பெரிதும் விரும்பப் படுபவன். அவன் சிறந்த ஆறு குணங்களை உடையவன். தெய்வத் தன்மை பொருந்திய பிராட்டியைத் தனது உடலின் ஒரு அங்கமாக உடையவனும் தனது அடியார்களுக்கு அருள் புரிந்து அன்பராக விளங்குபவனும் ஆகிய பெருமான் உறையும் இடம் சண்பை நகரம் என்று அழைக்கப் படும் சீர்காழி தலமாகும். சிறப்பினில் ஒன்றினோடு ஒன்று ஒத்து விளங்கும் கொடிகள் பறக்கும் மாடங்களும்,உயர்ந்த மதில்களும் கலந்ததும், நறுமணம் கமழ்வதும் ஆகிய சண்பை நகரினில் உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சியுடன் புறாக்கள் உலாவுகின்றன; மேலும் குளிர்ச்சி பொருந்திய இதழ்கள் உடைய தாமரை மலர்களின் மேல் அன்னப் பறவைகள் தவழ்ந்து வளர்கின்றன. இத்தகைய செழிப்பு வாய்ந்த நகரமே பெருமான் உறையும் இடமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பணம் கெழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன்

அணங்கு எழுவு பாகம் உடையாக முடை அன்பர் பெருமானது இடமாம்

இணங்கெழுவி ஆடு கொடி மாட மதில் நீடு விரையார் புறவு எல்லாம்

தணம் கெழுவி ஏடலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே

தில்லைச் சிதம்பரத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் கடைப் பாடலில் (6.2) அப்பர் பிரான் பகவனார் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். பாரிடங்கள்=பூத கணங்கள்; பெருமான் இடையில் தான் உடுத்தியுள்ள பட்டாடையின் மேல் கச்சாக பாம்பினை இறுகக் கட்டிக் கொண்டும், பூத கணங்கள் சூழவும், தீயினைக் கையில் ஏந்தியவாறும், நடனக் கலையில் வல்லவராக நடனம் செய்கின்றார் என்று பாடலின் முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், அந்த பெருமானை தில்லை நகர் சென்று காணுமாறு நம்மை பணிக்கின்றார். அவ்வாறு நடனம் ஆடும் பெருமானை தேடிக் கொண்டு செல்லும் நாம் அவனை அடையாளம் கண்டு கொள்வதற்காக, அவனது அடையாளங்களை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒளியுடன் விளங்கும் சூலம், மார்பினில் திகழும் வெண்ணூல், ஓதும் வேதம், கையில் வீணை மற்றும் கட்டங்கம் என்று குறிப்பிட்டு இறுதியில் வேறு எவருக்கும் இல்லாத நீலக்கறை படிந்த கழுத்து என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். விட்டு= ஒளிவீசும்; சிட்டர்=மேலானவர், நடனக் கலையில் வல்லவர் என்று பொருள் கொள்ள வேண்டும். அருவுருவமாக, இலிங்க வடிவத்தில் அனைத்து தலங்களிலும் காட்சி அளிக்கும் பெருமானின் அடையாளங்கள் எதற்காக திருமுறை பாடல்களில் குறிப்பிடப் படுகின்றன என்ற ஐயம் நமக்கு எழலாம். இந்த அடையாளங்கள், பெருமானின் கருணை, வீரச்செயல்கள் மற்றும் அவரது தன்மை ஆகியவற்றை நமக்கு உணர்த்துவதால், அந்த அடையாளங்களை நமது மனக் கண்ணினால் கண்டு, பெருமானின் தன்மையை நாம் சரிவர புரிந்துகொள்ள வேண்டும் என்பதே நால்வர் பெருமானர்களின் விருப்பம்.

பட்டுடுத்து தோல் போர்த்துப் பாம்பு ஒன்று ஆர்த்துப் பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம்

சிட்டராய் தீ ஏந்திச் செல்வார் தம்மைத் தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இந்நாள்

விட்டு இலங்கு சூலமே வெண்ணூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே

கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே

கொட்டையூர் மற்றும் வலஞ்சுழி தலங்களின் மீது அருளிய பதிகத்தின் (6.73) பாடலில் அப்பர் பிரான், பெருமானை பகவன் என்று குறிப்பிடுகின்றார். அணவுதல்=எட்டுதல், எட்டுதற்கு அரியவனாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பணம்=பாம்பின் படம். அவனது அருளின் உதவியாலன்றி எட்டுதற்கு அரியவனாக உள்ளவனும், இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கியவனும், என்றும் அழியாத தன்மை உடையவனும், உலகங்கள் எங்கும் பரந்து நிற்பவனும், அழகான படத்தையும் பெரிய மணியினையும் கொண்டுள்ள பாம்பினை அணிகலனாக உடையவனும், பண்டரங்க கூத்து எனப்படும் கூத்தினை ஆடுபவனும், அளவற்ற செல்வம் முதலான ஆறு தன்மைகளை கொண்டவனும், மணலினை வாரிக் கொண்டு வரும் பொன்னி நதியின் கரையில் அமைந்த வலஞ்சுழி தலத்தின் இறைவனும், திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பும் அதிகாரத்தினை வரமாக அருளுபவனும், நற்குணங்கள் வாய்க்கப் பெற்ற அடியார்கள் வாழும் கொட்டையூர் தலத்தில் கோடீச்சரம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் தலைவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ காண்பாயாக, என்று தனது நெஞ்சத்திற்கு கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பதிகம்.

அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவினாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய்

பணமணி மாநாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்

மணல் வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்

குணமுடை நல்லடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே

திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.92.2) அப்பர் பிரான் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். பல்லாடு தலை=பற்கள் வெளியே தோன்றும் பிரம கபாலம்; என்பறாக் கோலம்=எலும்பு மாலைகள் நீங்காமல் எப்போதும் அணிந்திருக்கும் தன்மை;

பல்லாடு தலை சடை மேல் உடையான் தன்னைப் பாய்புலித் தோல் உடையானைப் பகவன் தன்னை

சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னைச் சுடருருவில் என்பறாக் கோலத்தானை

அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுது ஆனானை

கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது பாடிய பதிகத்தில் கருவூர்த் தேவர் பெருமானை பகவன் என்று குறிப்பிடும் பாடலை (9.13.5) நாம் இங்கே காண்போம். சுருதி= வேதம்; பருதி=சூரியன்; வேதங்கள் ஓதும் பிரமனாகவும், திருமாலாகவும், சுவர்க்க லோகத்தை ஆளும் இந்திரனாகவும், வானில் உலவும் சூரியனாகவும், உள்ள பெருமான், மூன்று கண்களை உடையவனாக, சிறந்த ஆறு குணங்களை உடையவனாக, அனைத்து உடலிலும் உள்ளே இருக்கும் உயிரினுக்கு அமுதம் போன்று இனியவனாகவும் இருப்பதாக இங்கே கருவூர்த் தேவர் கூறுகின்றார். இவ்வாறு இருக்கும் பெருமான், கருதுவார் கருதும் உருவமாகவும் இருக்கின்றான் என்று பாடலை முடிக்கின்றார்

சுருதி வானவனாம் திருநெடுமாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம்

பருதி வானவனாம் படர்சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம்

எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனாம் பின்னும்

கருதுவார் கருதும் உருவமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே

திருமந்திரம் நான்காவது தந்திரத்தின் வயிரவி மந்திரம் அதிகாரத்தில் வரும் பாடலில், திருமூலர், பெருமானை பகவன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலின் கருத்து, திரிபுரையாகிய வயிரவியை தியானிப்பவன் சிவத்தோடு ஒக்க போற்றப் படுவான் என்பதாகும். தென்னன்=சிவன், அழகன்; தென்=அழகு; சேவகன்=வீரன்: பொன்னங்கிரி=மேரு மலை; பரி பிடி=பரிந்த பிடி; அன்புடைய பெண் யானை; அந்தம் பகவன்=அனைத்து உலகையும் சங்காரம் செய்யும் பகவன்; உன்னும்=தியானிக்கப்படும்; திரிபுரை=திரிபுரா மந்திரம்; வேதங்களால் சொல்லப் படுபவளும், பரிவினை உடைய பெண் யானை போல்பவரும், அனைத்து உயிர்களுக்கும் இறுதியை விளைவிக்கும் சிவத்தோடு சேர்ந்து அடியார்களால் தியானிக்கப் படுபவளும், ஆகிய திரிபுரையை, இந்த வயிரவி மந்திரம் கொண்டு தியானிக்கும் அடியார்கள், மேரு மலையில் வீற்றிருக்கும் அழகனும் நமது வினைகளை குறைத்து அருள் புரிபவனும் சிறந்த வீரனும் ஆகிய சிவபெருமானோடு வைத்து இந்த உலகத்தவர் போற்றுவர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும். கிரி என்ற சொல் கீரி என்று விரிந்தது.

தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்

பொன்னங் கீரியில் பூதலம் போற்றிடும்

மன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு

உன்னும் திரிபுரை ஓதி நின்றார்க்கே

திருமந்திரம் ஆதார ஆதேயம் அதிகாரத்தில், பெருமானை பகவன் என்று குறிப்பிடும் திருமூலர், பிராட்டி என்றும் பகவானுடன் பிரியாது நிற்கும் நிலையினை உணர்த்துகின்றார். அத்தகைய சக்தியை, தமது உள்ளத்தில் நிலை நிறுத்தி வழிபடும் அடியார்களின் உள்ளங்கள் அழுக்கு நீங்கிய நிலையில் உள்ள வெண்ணிற ஆடையினைப் போன்று, ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மூன்று மலங்களும் நீங்கப் பெற்று தூய்மையாக விளங்கும் என்று கூறுகின்றார்.

மாது நல்லாளும் மணாளன் இருந்திடப்

பாதி நல்லாளும் பகவனும் ஆனது

சோதி நல்லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்

வேதனை தீர்தரும் வெள்ளடையாமே

மாகேசுர பூஜை என்ற அதிகாரத்தில் வரும் பாடலில் திருமூலர் பெருமானை பகவன் என்று குறிப்பிடுவதை நாம் இங்கே காண்போம். தமது உள்ளமே பெருங்கோயிலாக திகழ்வதை உணர்ந்து கொண்டு, தமது உள்ளத்தில் உள்ள சிவனை போற்றி வழிபாடு செய்யும் அடியார்கள் நடமாடும் கோயிலாகத் திகழ்கின்றனர் என்றும், அத்தகைய அடியார்களை நோக்கி செய்யப்படும் வழிபாடு இறைவனைச் சென்று சாரும் என்றும் இங்கே திருமூலர் குறிப்பிடுகின்றார். ஆனால் திருக்கோயிலில் உள்ள பெருமானுக்கு செய்யப்படும் வழிபாடு, நடமாடும் உயிர்களின் உள்ளே இருக்கும் சிவனைச் சென்று சாராது என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் அடியார்களை நோக்கி செய்யப்படும் வழிபாடு பெருமானை நோக்கி செய்யப்படும் வழிபாட்டினும் சிறந்தது என்பதை திருமூலர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். படமாடக் கோயில்=கொடிகள் ஆடும் திருக்கோயில்கள்; நடமாடும் கோயில்=நடமாடும் உயிர்களின் உள்ளத்தில் இணைந்து நிற்கும் பெருமான் உள்ள இடம்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்

படமாடக் கோயில் பகவற்கு அதாமே

இதே அதிகாரத்தின் மற்றொரு பாடலிலும் திருமூலர், பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் திருமூலர், ஆசாரமும் சீலமும் இலராயினும் இறைவனை எப்போதும் தியானித்துத் தம் உலக கன்மங்களிலிருந்து விடுபட்டவர் சிவஞானியர் என்று திருமூலர் கூறுகின்றார். அதாவது சில ஞானியரை அதிவர்ணாசிரமிகள் என்று கூறுவார்கள். ஶ்ரீரமண பகவான் இத்தகைய ஞானிக்கு ஒரு உதாரணம் என்றே கூறலாம். அவர்கள் கன்ம அனுட்டானங்களை விட்ட உலகத்தவர் போன்று காட்சி அளிப்பார்கள். இதனை உணர்த்தும் முகமாக பண்பிலர் என்று இங்கே குறிப்பிடுகின்றார். புகும் மத்தர்=சித்தத்தை சிவன் பாலே செலுத்துவதில் உறுதியாக நிற்பவர்; மதம்=உறுதியான பிடிவாதம்; அகம் அத்தர்=கருவி கரணங்கள் வழியே செல்லாமல் இறைவனின் வழியே எப்போதும் செல்பவர்; ஆய்ந்து= இறைவனின் அருளில் தோய்ந்து; ஒழிந்தார்=உலக பாசங்களிலிருந்து விடுபட்டவர்;

பகவற்கேது ஆகிலும் பண்பிலராகிப்

புகு மத்தராய் நின்று பூசனை செய்யும்

முகமத்தோடு ஒத்து நின்று ஊழி தோறூழி

அகமத்தராகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே

திருமந்திரம் எட்டாம் தந்திரம் முப்பரம் அதிகாரத்தின் ஒரு பாடலிலும் திருமூலர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். 36 தத்துவங்களையும் தாண்டி அப்பால் நிற்கும் பரம்பொருள் உபதேசத்தை சொல்லாமல் சொல்லும் பாடல் இந்த பாடல். அதாவது சின்முத்திரை மூலம் குறிப்பால் உணர்த்துதல்;சுட்டுணர்வுக்கு எட்டாது யாங்கும் பிரிவின்றி நிறைந்து விளங்கும் பதியாகிய பெருமானையும், பசு பாசங்களையும் சின்முத்திரையால் சுட்டிக் காட்டி உணர்த்துவதும் சிவபரம்பொருளே. இந்த செயல் உயிர்கள் பால் பெருமான் கொண்டுள்ள கருணையால் நிகழ்வதாகும். இது நமக்கு கிடைத்தற்கரிய பெரும் பேறாகும். இந்த பரம்பொருளை தியானித்து, நமது ஆனந்தத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறும் பாடல்.

ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்பரம்

கூறா உபதேசம் கூறில் சிவபரம்

வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்

பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே

இதே தந்திரத்தின் முக்குண அவத்தை அதிகாரத்தின் மற்றொரு பாடலிலும் பெருமானை பகவன் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பல்லூழி பண்பன்=பல ஊழிக் காலங்களை தோற்றுவிக்கும் ஆற்றல் படைத்த இறைவன்; பகலோன்=ஆணவ மலமாகிய இருளை நீக்கும் ஆற்றல் கொண்ட சூரியன்; நல்லூழி ஐந்து=நிவர்த்திக்கலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை மற்றும் சாந்தியதீதகலை என்பன; இந்த ஊழிகளின் உள்ளே பல ஊழிகள் உள்ளன என்று கூறுவார்கள். அத்தகைய ஊழிகள் முடிந்த பின்னரும், அவற்றின் மாயையில் அனைத்து உலகங்களும் ஒடுங்கிய பின்னரும், தான் ஒடுங்காது உச்சியில் நிற்பவன் இறைவன் என்று திருமூலர் கூறுகின்றார்.

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்

நல்லூழி ஐந்தினுள்ளே நின்ற ஊழிகள்

செல்லூழி அண்டத்துச் சென்ற அவ்வூழியுள்

அவ்வூழி உச்சியுள் ஒன்றில் பகவனே

பகவான் என்ற சொல் திருமுறை பாடல்களில் காணப்படவில்லை, அதற்கு பதிலாக பகவன் என்ற சொல்லே காணப்படுகின்றது. நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (2.24.4) திருஞானசம்பந்தர், பகவா என்று அழைத்து இறைவனைப் போற்றினால், நம்மைப் பற்றியிருக்கும் வலிமையான வினைகள் நீங்கிவிடும் என்று கூறுகின்றார். நகு=விளங்கும்; தகு=தகுந்த; வார் சடை=நீண்ட சடை; நகுவார் பொழில்=பல்லைக் காட்டி சிரிப்பது போன்று வெண்மையான இதழ்கள் விரிந்து பூத்த மலர்கள் கொண்ட சோலைகள்; தளவம்=பிச்சிப்பூ என்றும் செம்முல்லை என்றும் அழைக்கப்படும் மலர்;

நகுவான் மதியோடு அரவும் புனலும்

தகுவார் சடையின் முடியாய் தளவம்

நகுவார் பொழில் நாகேச்சுர நகருள்

பகவா என வல்வினை பற்று அறுமே

இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெருமானை, பரமன் என்று குறிப்பிடுகின்றார். பரமன் என்றால் மேலானவன், அனைத்து உயிர்களையும் பொருட்களையும் கடந்தவன் என்று பொருள். பெருமானை பரமன் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.2.11) திருஞானசம்பந்தர், பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார்.ஆர்த்தல்=இறுகக் கட்டுதல்; பெருமான் அணியும் பாம்பு, புற்றில் பதுங்கும் இயல்பினை உடையதல்ல. எனினும் பாம்புகளின் பொது இயல்பு குறித்து, புற்றில் வாழும் அரவம் என்று சொல்லப் படுகின்றது. தேவாரப் பாடல்களை பாடும் அடியார்கள், பரமனின் திருவடி நீழலைச் சென்றடைந்து குற்றமோ குறையோ அற்ற புகழுடன் பொலிவார்கள் என்று கூறுகின்றார்.

புற்றில் வாழும் அரவம் அரை ஆர்த்தவன் மேவும் புகலூரைக்

கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை

பற்றி என்றும் இசை பாடிய மாந்தர் பரமன் அடி சேர்ந்து

குற்றம் இன்றிக் குறைபாடு ஒழியாப் புகழ் ஓங்கிப் பொலிவாரே

புளமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.16.1) திருஞானசம்பந்தர் பெருமானை, பரமன் என்று குறிப்பிடுகின்றார். பால் உந்துறு திரள்=பாலைக் கடைய கிடைக்கும் வெண்ணெய் மற்றும் நெய் போன்று இனிமையானவர். பொதுவாக இறைவனை பால் போன்றும் தேன் போன்றும் இனியவன் என்று சொல்வது வழக்கம். வெண்மை நிறம் தூய்மைக்கு அடையாளமாக கருதப் படுகின்றது. அதனால் தூய்மையே உருவமாக உள்ள இறைவனை பாலுக்கு ஒப்பிடுவது பொருத்தமே. மேலும் அனைத்து பருவத்தினருக்கும் பால் உணவாக பயன்படுவது போன்று, இறைவன் அனைத்துப் பருவத்தினரும் வணங்கி பயன்படும் வண்ணம் அருள் புரிகின்றார். பாலினும் அதன் திரட்சியான வெண்ணெய் உண்பதற்கு மிகவும் இனியது. பாலின் திரட்சியாகிய வெண்ணெய் போன்று நமக்கு இனியவனாக இருக்கும் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இவ்வாறு அனைவர்க்கும் பொதுவாக அருள் புரியும் இறைவன், தனது அடியார்களுக்கு எவ்வாறு உள்ளான் என்பதை இந்த பதிகத்தின் முதல் அடி உணர்த்துகின்றது. பெருமான் பால் அன்பு வைத்துள்ள அடியார்கள், தங்களது உள்ளம் கசிந்து வழிபட, பெருமான் அவர்களுக்காக நெய்யாக மாறுகின்றான். நமக்கு வெளிப்படையாக கண்ணுக்கு தெரிவது பால்;பாலின் உள்ளே நெய் மறைந்து இருந்தாலும் நாம் அதனை உணர முடிவதில்லை. பக்குவப்பட்ட அடியார்கள் ஆகிய புளமங்கை அந்தணர்கள், பாலின் உள்ளே நெய் இருப்பதை உணர்வது போன்று, அனைத்துப் பொருட்களிலும் இறைவன் கலந்திருப்பதை உணர்கின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார் என்று பொருள் கொள்வது சிறப்பான விளக்கம். திறல்=தன்மை, திறமை; பொழில்=சோலை; அறச் சாடிய=குன்றும் வண்ணம் உதைத்த; தலத்தின் பெயர் புளமங்கை; திருக்கோயிலின் பெயர் ஆலந்துறை; பிரமன் எப்போதும் வேதங்களை ஓதிக் கொண்டே படைப்புத் தொழில் செய்வதால், வேதங்களில் வல்லவராக கருதப் படுகின்றார். பிரமன் போன்று இந்த தலத்து அந்தணர்களும் வேதங்களில் வல்லவர்களாக இருந்த தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பரமன்=அனைவரிலும் மேலானவன்;

பக்குவப்பட்ட அடியார்கள் தங்களது தீவிர முயற்சியால், இடைவிடாமல் ஒன்றிய மனத்துடன் இறைவனை தியானம் செய்து, அனைத்துப் பொருட்களிலும் கலந்து நிற்கும் இறைவனை அவர்கள் கண்டு உணரும் வண்ணம் அருள் புரியும் சிவபெருமான் அனைத்து தெய்வங்களிலும் மேம்பட்டவர் ஆவார். பிரமனைப் போன்று வேதங்களில் வல்லவர்களாக விளங்கும் அந்தணர்கள் பலர் வாழும் புளமங்கை தலத்தினில், சோலைகள் சூழ்ந்த புளமங்கை தலத்தினில் உறைபவர் சிவபெருமான். அவர் இயமனின் வலிமையை அடக்கி, அவனை காலால் உதைத்து வீழ்த்தியவர் ஆவார். புளமங்கை தலத்தினில் ஆலந்துறை என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் அவரை நினைத்து, அவரைத் தொழும் அடியார்களை வினைகள் சென்று அடையா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான்

போலும் திறல் அவர் வாழ்தரு பொழில் சூழ் புளமங்கை

காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்

ஆலந்துறை தொழுவார் தமை அடையா வினை தானே

இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.32.2) திருஞானசம்பந்தர், பெருமானை, பாம்பரை ஆர்த்த பரமன் என்று குறிப்பிடுகின்றார். தடம்=குளம்; இந்த பாடலில் பெருமான் தனது முடியின் மீது தாமரை மலர் அணிந்துள்ளதாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு பெருமானை தாமரை மலர் அணிந்தவனாக குறிப்பிடும் தேவாரப் பாடல்கள் மிகவும் அரிது. ஆக்கூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் அப்பர் பிரான் முடித் தாமரை அணிந்த மூர்த்தி என்று குறிப்பிடுகின்றார். தடாகத்திலிருந்து பறிக்கப்பட்ட பெரிய தாமரை மலர் சூட்டப்பட்டதும், பொன்னின் நிறத்தில் மின்னும் சடைக் கற்றைகள் கொண்டதும் ஆகிய சடைமுடியின் மீது, குடங்களில் கொண்டுவரப் பட்ட குளிர்ந்த நீர் கொண்டு அடியார்கள் பெருமானை நீராட்டுகின்றனர். இந்த பெருமான், படம் எடுத்தாடும் பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டியுள்ளான். இத்தகைய பெருமான், தனது இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருளி இருக்கும் இடம் இடைமருது தலம் தானோ என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தடங் கொண்டதோர் தாமரைப் பொன்முடி தன்மேல்

குடங் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்தாட்டப்

படங் கொண்டதோர் பாம்பு அரை ஆர்த்த பரமன்

இடங் கொண்டிருந்தான் தன் இடைமருது ஈதோ

அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.33.7) திருஞானசம்பந்தர் பெருமானை, பரமன் பரமேட்டி என்று குறிப்பிடுகின்றார். செடி=முடை நாற்றம்; பெருமான் பலியேற்கச் செல்வது, பக்குவமடைந்த ஆன்மாக்கள் தங்களது மலங்களை இறைவன் ஏந்தியிருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் என்பது பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. எனவே எவரேனும் தங்களது மலங்களை அந்த பிச்சைப் பாத்திரத்தில் இட்டால், மிகவும் மகிழ்ச்சி அடைவது சிவபெருமான் தான். இந்த செய்தி தான் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமான் வைத்திருப்பது பிச்சைப் பாத்திரம் என்பதாலும், அவர் பலி ஏற்கச் செல்கின்றார் என்று சொல்வதாலும், அடியார்கள் அந்த பாத்திரத்தில் சமர்ப்பிக்கும் ஆணவம் கன்மம் மாயை முதலான மலங்கள் உணவாக உருவகப்படுத்தப் பட்டு பெருமான் மகிழ்ச்சியுடன் உண்கின்றார் என்று சொல்லப் படுகின்றது. முடை நாற்றம் உடைய பிரமனின் தலையினைத் தனது கையில் ஏற்றவராக பலிக்கு செல்லும் பெருமான், அந்த பிச்சைப் பாத்திரத்தில் இடப்படும் ஆணவம் முதலான மலங்களை மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு இன்பம் அடைகின்றான். மேற்கண்ட கருணைச் செயலால் அனைவராலும் விரும்பப் படுபவனும், அனைவரிலும் மேலானவனும் ஆகிய பெருமானின் புகழினை ஏத்தும் அடியார்கள், நறுமணம் கொண்ட மலர்களை அவனது திருப்பாதங்களில் தூவி, தொழுது வழிபடுகின்ற தலம் அன்பில் ஆலந்துறையாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செடியார் தலையில் பலி கொண்டு இனிதுண்ட

படியார் பரமன் பரமேட்டி தன் சீரைக்

கடியார் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும்

அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே

பனையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.37.9) திருஞானசம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். உன்னி=நினைத்து; தன்னைப் பணிந்து வணங்கும் அடியார்களுக்கு தவறாமல் வரம் அளிப்பவன் சிவபெருமான். எனவே அவனைப் பணிந்து வணங்கச் செல்லும் அடியார்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பெருமானது பெருமையை புரிந்து கொண்டு, அவனை நமது சிரம் தாழ்த்தி வணங்க வேண்டும். அத்தகைய பணிவுடன் பெருமானை, அணுகாததால் தானே, பிரமனும் திருமாலும் அவனது திருவடியையும் திருமுடியையும் காண முடியாமல் தவித்தனர்.

வரம் உன்னி மகிழ்ந்து எழுவீர்காள்

சிரம் முன் அடி தாழ வணங்கும்

பிரமன்னொடு மால் அறியாத

பரமன் உறையும் பனையூரே

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.38.2) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். உர=வலிமை வாய்ந்த; தாருகவனத்து முனிவர்கள் பெருமான் மீது ஏவிய யானை, வலிமை மிகுந்ததாகவும் மதம் கொண்டிருந்த காரணத்தால், மிகவும் கோபம் உடையதாகவும் இருந்தது என்று கூறுகின்றார். பெருமான் மிகுந்த விருப்பத்துடன் அணிந்து கொள்ளும் குரவம், சுரபுன்னை, வன்னி மரங்கள் செறிந்த தலம் என்று குறிப்பிட்டு, தலத்தின் பெருமையை உணர்த்துகின்றார். மருவும்=பொருந்தும்;

உர வெங்கரியின் உரி போர்த்த

பரமன் உறையும் பதி என்பர்

குரவம் சுரபுன்னையும் வன்னி

மருவும் மயிலாடு துறையே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.46.7) திருஞான சம்பந்தர், பெருமானை, பரமன் என்று அழைக்கின்றார். உமையன்னை கீதம் பாட பெருமான் நடமாடுபவராக இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பரமேட்டி=அனைவரிலும் மேலானவன்; தன்னால் தொழப்படும் தகுதி படைத்தவர் எவரும் இல்லாத தன்மையன்; பரமேச்வரன் என்ற சொல்லும் இந்த பொருளையே உணர்த்துகின்றது. உயர்ந்தவர்களாக கருதப்படும் அனைவருக்கும் தலைவனாக உள்ள பெருமான் என்பதே அந்த பொருள். பல திருமுறைப் பாடல்களில் பரமேட்டி என்று இறைவன் அழைக்கப் படுகின்றான். அனைவரிலும் உயர்ந்தவராக இருப்பவரும், தன்னால் தொழப்படுபவர் எவரும் இல்லாத உயர்ந்த நிலையில் இருப்பவரும் ஆகிய பெருமானின் திருப்பாதங்களை பலரும் தொழுகின்றனர். அவர், பூத கணங்கள் புடை சூழ, புலித்தோலை ஆடையாக உடுத்தியவராக, உமை அன்னை பாடுவதற்கு ஏற்ப நடனம் ஆடுகின்றார். கெடில நதியின் வடகரையில் உள்ள திருவதிகை வீரட்டம் தலத்தினில், வேத முதல்வனாகிய பெருமான் நடனம் ஆடுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி

பூதம் புடை சூழப் புலித்தோல் உடையாகக்

கீதம் உமை பாடக் கெடில வடபக்கம்

வேத முதல்வன் நின்றாடும் வீரட்டானத்தே

குற்றாலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.99.9) திருஞானசம்பந்தர் பெருமானை, பரமன் என்று அழைக்கின்றார். பாம்பின் வாயில் அமைந்த முள் போன்று கூரிய முனை கொண்ட பற்களை ஒத்த அரும்புகள் உடைய குரவ மரங்களின் பாவை மலர்களின் நறுமணம் தங்கியுள்ள சோலைகள் நிறைந்த குற்றாலம் தலத்தினில், பிரமன் மால் அறியாத பெரியோனாகிய பெருமான் பொருந்தி உறைகின்றான். அந்த பெருமானை பணிந்து வணங்குவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. குரவ மரத்தின் மலர்கள் பாவை என்று அழைக்கப்படும்.

அரவின் வாயில் முள்ளெயிறு ஏய்ப்ப அரும்பு ஈன்று

குரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம்

பிரமன்னொடு மால் அறியாத பெருமை எம்

பரமன் மேய நன்னகர் போலும் பணிவீர்காள்

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.105.4) திருஞானசம்பந்தர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். கறையற்ற வெண் மழு என்று குறிப்பிட்டு, எவர் மீதும் எய்யப்படாத மழு ஆயுதம் என்று குறிப்பிடும் சம்பந்தர், வெந்துறு வெண்மழு என்று குறிப்பிடுவது முன்னுக்குப் பின் முரணாக இருப்பது போன்று தோன்றுகின்றது அல்லவா. மழு ஆயுதம் எவர் மீதும் வீசப் படாததால் கறையேதும் இன்றி காணப்பட்டாலும், அடியார்களுடன் பிணைந்துள்ள வினைகள் அனைத்தும் வெந்து அழியும் வண்ணம், அழிப்பதால், வெந்துறு வெண்மழு என்று அழைக்கப் படுகின்றது. இந்த காரணம் பற்றியே பெருமான் மழுப்படை தாங்கி காணப்படுகின்றார் என்று அறிஞர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஐந்தலை அரவத்தை தனது இடுப்பினில் கட்டி தனது விருப்பம் போன்று பெருமான் அசைக்கும் தன்மை, அடியார்களின் ஐந்து பொறிகளையும் தத்தம் வழிகளில் செல்ல விடாது தடுத்து ஆட்கொள்ளும் தன்மையை உணர்த்துகின்றது என்று பொருள் கொள்வது சிறப்பு.

வெந்துறு வெண் மழுவாள் படையான் மணி மிடற்றான் அரையின்

ஐந்தலை ஆடரவம் அசைத்தான் அணி ஆரூர்ப்

பைந்தளிர் கொன்றை அந்தார்ப் பரமன் அடி பரவப் பாவம்

நைந்துறும் வந்து அணையும் நாள்தொறும் நல்லனவே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.29.2) திருஞானசம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். வண்டிரை=வண்+திரை, வலிமையான பெரிய அலைகள்; மிலைத்த=சூடிய; புனல்=கங்கை நதி; பண்டெரி=பழமையான தீ; ஊழிக்காலத்திற்கு பின்னர் உலகினை தோற்றுவிக்க பெருமான் திருவுள்ளம் கொள்ளும் போது, நாதத்திலிருந்து ஆகாயம் முன்னே தோன்ற, அதன் பின்னர் முறையாக காற்று, தீ, நீர் நிலம் ஆகியவை தோன்றுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த வரிசையில் நாம் பார்த்தால், தீ நீருக்கு முன்னமே தோன்றியதை உணர்த்தும் வண்ணம், பண்டெரி என்று கூறினார் போலும். மேலும் பெருமான் தனது சடையினில் கங்கையை ஏற்றது பகீரதன் தவம் செய்து வேண்டிய பின்னர் நடந்த நிகழ்ச்சி (திரேதா யுகம்) தானே. ஆனால் நடராஜப் பெருமானாக, தான் ஐந்து தொழில்கள் செய்வதை பெருமான் எப்போதும் உணர்த்திக் கொண்டு இருக்கின்றார் அல்லவா. எனவே இந்த அடிப்படையில் பார்த்தாலும் பண்டெரி என்று சொல்வது பொருத்தமாக உள்ளது. புண்டரீகம்=தாமரை மலர்; தாமரை மலரின் நறுமணம் தலத்தின் நீர் வளத்தையும் சோலைகள் தலத்தின் நில வளத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளன. வலிமையான அலைகள் பொருந்திய கங்கை நதியினை, பிறைச் சந்திரன் சூட்டப்பட்ட தனது சடையினில் வைத்தவராக காட்சி அளிக்கும் பெருமான், பழமையான தீயினைத் தனது கையினில் ஏந்திய வண்ணம் நடமாடும் தலம் யாது என்று கேட்கும் மனிதர்களே, தாமரை மலர்கள் வீசும் நறுமணம் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டதும் தெளிந்த நீரினை உடைய கடல் அலைகள் உலகத்தினை மூழ்கடித்த போதும், தான் அந்த வெள்ளத்தில் ஆழ்ந்து விடாமல் தோணியாக வெள்ளத்தில் மிதந்தது என்று சொல்லப்படும் புகலி எனப்படும் நகரமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல் சூடிப்

பண்டு எரி கையாடு பரமன் பதி அது என்பர்

புண்டரிக வாசம் அது வீச மலர்ச் சோலைத்

தெண்டிரை கடல் பொலி திருப்புகலியாமே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.33.10) திருஞானசம்பந்தர், பெருமானை, பரமன் என்று குறிப்பிடுகின்றார். சிந்தை மாறுபட்ட சமணர்கள் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். நேரான சிந்தை இல்லாமல், பெருமானை பழித்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் உண்மைகளை திரித்து சொல்லும் தன்மையராக திகழ்ந்த தன்மை, இங்கே திருகல் சிந்தை என்று உணர்த்தப் படுகின்றது. தேரர்=புத்தர்; பந்தம்=கட்டுப் பாடுகள்; தவம் என்ற பெயரினில், தேவையற்ற பல கட்டுப்பாடுகளுடன் சமணர்கள் வாழ்ந்த தன்மை; பல் துலக்காது இருத்தல், நீராடாமல் இருத்தல், உடையின்றி திரிதல், இரவில் உணவு உட்கொள்ளாது நோன்பு இருத்தல், தலை முடிகளை கொடுமையான முறையில் நீக்கிக் கொள்ளுதல் என்பன. தனது அடியார்கள் அத்தகைய பழக்கங்களை பின்பற்றாமல் இருக்கும் வண்ணம் அருள் புரிந்தவன் பெருமான் என்று கூறுகின்றார்.

சிந்தை திருகல் சமணர் தேரர் தவமென்னும்

பந்தனை அறுத்தருள நின்ற பரமன் ஊர்

மந்தம் முழவம் தரு விழா ஒலியும் வேதச்

சந்தம் விரவிப் பொழில் முழங்கிய நள்ளாறே

கோளறு பதிகத்தின் பாடலில் (2.85.4) திருஞானசம்பந்தர் பெருமானை, பரமன் என்று அழைக்கின்றார். வடபால்=வடக்கில் உள்ள கயிலாய மலை; வடவால் என்பதும் பாடம்; வடவால்=கல்லால மரம்; கல்லால மரத்தின் கீழே இருந்த வண்ணம் பெருமான் சனகாதி முனிவர்களுக்கு, தென்முகக் கடவுளின் வடிவத்தில் உபதேசம் செய்வதையே நாம் பல திருக்கோயில்களிலும் காண்கின்றோம். எனினும் அன்னையை விட்டு இறைவன் எப்போதும் பிரிவதில்லை என்பதாலும், அவனது அருட்சக்தியாக அம்பிகை எப்போதும் அவனுடன் திகழ்கின்றாள் என்பதாலும், அம்பிகை உடனாக இருக்கையில் பெருமான் உபதேசம் செய்தார் என்று பொருள் கொள்வதில் தவறேதும் இல்லை.

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் பெருமானை பரமன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் நான்காவது பாடலில் சில தீய சக்திகளை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் மேலும் சில தீய சக்திகளை குறிப்பிடுகின்றார். அவுணர்= அரக்கர்; அடுத்தவருக்கு துன்பம் செய்வதில் மகிழ்ச்சி அடைவோரை பொதுவாக அரக்கர்கள் என்று குறிப்பிடுவது வழக்கம்; இடி, மின்னல், ஆகியவை நமது கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை; மடவாள்=இளமையும் அழகும் ஒருங்கே பொருந்திய பார்வதி தேவி; துஞ்சிருள்=வன்னி மரத்தின் இலைகள் மிகுந்தும் அடர்த்தும் இருப்பதால் சூரியனின் ஒளிக்கதிர்களை புகவிடாமல் தடுத்து இருளை நிலவும் தன்மை: உரும் இடி=பலமான சத்தத்துடன் இடிப்பது; மிகையான=தங்களது அளவில் நில்லாது கொடிய செயல்களை செய்தல்; பரமன்=மேலானவன்; நஞ்சினைத் தேக்கியதால் மாணிக்க மணி பதித்தது போன்று கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனும், என்றும் இளமையாகவும் அழகொடும் விளங்கும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்திருப்பவனும், இடபத்தை வாகனமாகக் கொண்டவனும், நம் அனைவராலும் மேலானவன் என்று கொண்டாடப் படுபவனும், ஆகிய பெருமான், அடர்ந்தும் மிகுந்தும் வளர்ந்து இருளைப் பரப்பும் வன்னி இலைகள் மற்றும் கொன்றை மலர்களைத் தனது சடையின் மீது அணிந்தவனாக எனது உள்ளத்தில் புகுந்துள்ளான். அதனால், மிகுந்த சினம் கொண்டு செயல்படும் அவுணரும், பலத்த சத்தத்துடன் தோன்றும் இடி மின்னல் போன்றவையும், செருக்குடன் திரியும் பூதங்கள் ஆகியவை பொதுவாக தத்தம் அளவினில் நில்லாது பலருக்கும் தீங்கு செய்யும் இயல்பினை உடையன; எனினும் அவை அனைத்தும் என்னிடம் அச்சம் கொண்டு எனக்கு நல்லனவே செய்யும்; இவ்வாறு என்னிடம் அச்சம் கொண்டு நல்லனவாக செயல் புரியும் இவை அனைத்தும், மற்ற அடியார்களுக்கும் மிகவும் நன்மை பயப்பனவாகவே விளங்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிக் கொன்றை முடி மேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் திருஞானசம்பந்தர் பெருமானை, பரமன் என்று கூறுகின்றார். அரக்கர்களால் எந்த விதமான தீங்கும் நேராத வண்ணம் தனது அடியார்களை காப்பவன் பெருமான் என்று இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் தேவர்களால் எந்த விதமான தீங்கும் நேராமல் இறைவன் பாதுகாப்பான் என்று கூறுகின்றார். பலபல வேடங்களை எடுக்கும் பரமன் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தனது அடியார்களை பாதுகாக்கும் பொருட்டும் அருள் புரியும் பொருட்டும், பெருமான் நிலைமைக்கு ஏற்ற வண்ணம் வேறுவேறு வேடங்கள் எடுக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. நாரி பாகன்=மாதொரு பாகன்; எருதினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள தன்மை பசுவேறும் பாகன் என்று திணை மயக்கத்துடன் சொல்லப் பட்டுள்ளது. பசுவேறி என்று சில தேவாரப் பாடல்கள் இறைவனை குறிப்பிடுகின்றன. மாதொரு பாகனாக காட்சி தரும் பெருமான், அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு பல விதமான வேறுவேறு வேடங்களை எடுப்பவன் ஆவான். அவன் உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவன் ஆவான்; எருதினை தனது வாகனமாகக் கொண்டுள்ள பரமன், சலமகள் என்று அழைக்கப்படும் கங்கை நதி மற்றும் எருக்கினைத் தனது சடையில் அணிந்தவனாக எனது உள்ளத்தில் புகுந்துள்ளான். அதனால் தாமரை மலரைத் தனது இருக்கையாகக் கொண்ட பிரமனும், திருமாலும், நான்மறைகளும், மற்றுமுள்ள தேவர்களும், இனி வரவிருக்கின்ற காலங்களும் அலைகடலும் மலைகளும் நமக்கு நல்லனவாகவே அமையும். மேற்குறித்த இவை அனைத்தும் சிவனது அடியார்களுக்கு நல்லனவே செய்யும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.87.6) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார்.கணிகை=கங்கை நதி; மன்னு=பொருந்துகின்ற; மது=தேன்; துன்று=நெருக்கமாக; பல விதமான வேடங்களில் பெருமான் தனது அடியார்களின் முன்னே தோன்றுகின்றார் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தனது அடியார்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு, பெருமான் வேறுவேறு வேடங்களில் தோன்றி அருள் புரிந்ததை நாம் பெரிய புராணத்தில், பல நாயன்மார்களின் சரித்திரத்தில் காண்கின்றோம். அந்தந்த அடியார்களின் பக்குவத்திற்கு ஏற்ப, அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறு, வேறுபட்ட பல வேடங்களில் தோன்றும் வல்லமை கொண்டவன் சிவபெருமான். வேதங்கள் அனைத்தும், பெருமானது புகழினையே பாடுவதால், இவ்வாறு பெருமானின் பெருமையை எடுத்துரைத்து பெருமானை நெருங்கியதால், பெருமானை அணுகிய வேதங்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். கங்கை நதி பொருந்தி உறைகின்ற தனது சடையினில், தேன் நிறைந்த வன்னி மலர்கள், கொன்றை மலர்கள் நெருக்கமாக இருக்கும் வண்ணம், சிவபெருமான் தனது செஞ்சடையினில் சூட்டிக் கொண்டுள்ளான். அவன், தனது அடியார்கள் தன்னைப் பணிந்து வணங்கும் முன்னரே, சூழ்நிலைக்கு தக்கவாறு, பலவிதமான வேடங்களை எடுக்கும் ஆற்றல் கொண்டவனாக, தனது அடியார்களுக்கு அருள் புரிகின்றான். தனது புகழினை இனிய மந்திரங்களாக பாடி, தன்னை அணுகும் நான்கு வேதங்கள் மற்றும் அந்த வேதங்களை முறையாக தெரிந்து கொள்ள உதவும் ஆறு அங்கங்களின் பொருளாக இருக்கும் இறைவன், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக இருந்து அருள் புரிகின்றான். இந்த பெருமானின் அருள் வேண்டி, இவனது இருப்பிடம் வந்தடையும் தொண்டர்கள் மலர்கள் தூவி வழிபடுகின்றனர். இவ்வாறு பலராலும் வழிபடப்படும் பெருமான் நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கணிகையொர் சென்னி மன்னு மது வன்னி கொன்றை மலர் துன்று செஞ் சடையினான்

பணி கையின் முன்னிலங்க வருவேடம் மன்னு பலவாகி நின்ற பரமன்

அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான்

நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்து நறையூரின் நம்பன் அவனே

தென் திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.88.2) திருஞான சம்பந்தர், பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். பருவம்=தகுந்த சமயம்; உயிர்கள் இறைவனால் ஆட்கொள்ளப் படுவதற்கு தகுந்த சமயம்; இருவினையொப்பும் மலபரிபாகமும் சத்திநிபாதமும் நிகழப் பெற்று குருவின் திருவருளால் சிவஞானம் வளர்ந்து, பழமல பற்றுகள் முற்றிலும் அறுக்கப்பட்டு, சிற்றறிவு தீர்ந்து, இறைவனின் திருவடிகளைச் சென்று சாரும் பக்குவம் வரப்பெறும் தருணம். ஒருவன் தான் செய்த நல்வினையின் பயனாக அனுபவிக்கும் இன்பத்திலும் தீவினைப் பயனாகிய துன்பத்திலும் உள்ளம் வேறுபடாது இரண்டையும் சரிசமமாக பாவித்து நுகரும் நிலையே, அதாவது இன்பத்தில் விருப்பும் துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது நோக்கும் நிலையே, இருவினையொப்பு எனப்படும். ஓடும் செம் பொனும் ஒக்கவே நோக்குவார் என்று சேக்கிழார் இந்த தன்மையை குறிப்பிடுகின்றார். அரவத்தொடு அங்கம் அவை கட்டி என்ற தொடர் பாம்பினையும், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரது உடல்களையும் தனது தோளில் கங்காள வேடராய் தாங்கியதை குறிக்கின்றது என்பது ஒரு விளக்கம்.

பெருமானை குறித்த ஞானம் ஒன்றே வீடுபேறு அடைவதற்கு உரிய வழி. எனவே அந்த ஞானத்தை அடைவதற்கு உயிர் விருப்பம் கொள்ள வேண்டும். இவ்வாறு ஞான வேட்கை உடையவர்க்கே ஞானம் பயன் தரும். உயிர் ஞான வேட்கை அடையாத வண்ணம், ஆணவ மலம் தடுக்கின்றது. எனவே என்றும் அழியாது இருக்கும் ஆணவ மலத்தின் வலிமையை குறைத்து, புலன்களின் விருப்பத்தில் நாட்டம் கொள்ளாது, உண்மையான மெய்ப்பொருள் குறித்து அறிய, உயிர்கள் தலைப்பட வேண்டும். ஆணவ மலத்தின் வலிமையை உயிர்கள் குறைப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு, இறைவன் கன்மம் மாயை ஆகியவற்றை உயிர்களுடன் கூட்டி, இன்ப துன்பங்களை நுகரச் செய்கின்றான். இவ்வாறு நுகரும் தருணத்தில் உயிர்கள் இருவினையொப்பு நிலையினை அடைந்து மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆணவ மலத்தின் வலிமையை படிப்படியாக குறைத்து, அதன் வலிமையை மெலியச் செய்வதை மலபரிபாகம் என்று கூறுவார்கள்.

இவ்வாறு மலபரிபாகம் நிகழ்ந்து, இருவினையொப்பு நிலை ஏற்பட்டபின் நிகழ்வது சத்திநிபாதம். சத்தி என்பது இறைவனின் அருள். நிபாதம் என்றால் வீழ்ச்சி என்று பொருள். அந்நாள் வரை திரோதானமாக நின்று மறைப்பைச் செய்து வந்த இறைவனின் சக்தி, மலபரிபாகம் உற்ற நிலையில் அருட்சக்தியாக மாறி ஆன்மாவில் பதியும். இவ்வாறு பக்குவப்பட்ட உயிர்களுக்கு தக்க தருணத்தில் வந்து உதவி செய்து முக்தி நிலை அளிப்பதையே பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பண்பன்=பண்பினை உடையவன். அரவத்தொடு அங்கம்=தனது திருமேனி முழுவதும் பாம்பினை உடையவன்; கையினில் கங்கணமாக, தோளில் ஆபரணமாக, இடையினில் கச்சாக, காலினில் சலங்கையாக, கழுத்தினில் அணியாக, தலைக்கு மாலையாக பல இடங்களிலும் பெருமான் பாம்பினை அணிந்துள்ள கோலத்தினை அருளாளர்கள் தங்களது பாடல்களில் உணர்த்துகின்றனர். அரவிக்க= ஒலிக்க; புகழ்ந்து பேசப்பட; உருவத்தில் மிக்க=பெரிய அளவினில்; தெருவம்=தெருக்கள்; ஓதம்= அலைகள்; பயனுற்ற பண்பன் என்ற தொடருக்கு, பக்குவம் அடைந்த உயிர்களின் பக்குவத்திற்கு பரிசாக, தன்னைப் போன்று எண்குணங்கள் உடையவர்களாக மாற்றும் இறைவன் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. பக்குவம் அடைந்த அடியார்களுக்கு தக்க தருணத்தில் முக்தி உலகினைப் பரிசாகத் தந்து அருளும் பண்பினை உடையவனும், பிரமனைப் படைத்தவனும், பாம்புகளைத் தனது திருமேனியின் பல இடங்களிலும் பொருத்தியவனும், பலராலும் புகழ்ந்து பேசப் படுவானும் ஆகிய இறைவன் உறையும் ஊர் திருமுல்லைவாயிலாகும். உருவத்தில் பெரியதும் ஒளி வீசும் தன்மை படைத்ததும் ஆகிய சங்குகள் மற்றும் சிப்பிகள் கடலின் அலைகளால் மோதப்பட்டு, அச்சமடைந்து தங்களின் உள்ளே இருக்கும் செழுமையான முத்துக்களை வெளிக் கொணர்ந்து தள்ளும் தெருக்களை உடைய தலம் திருமுல்லைவாயில் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன்

அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர்

உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவித்

தெருவத்தில் வந்து செழு முத்து அலைக் கொள் திருமுல்லைவாயில் இதுவே

கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.83.3) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். பாம்பினைத் தனது முன் கையில் பெருமான் கங்கணமாக அணிந்து இருக்கும் தன்மை இங்கே சொல்லப் படுகின்றது. இடும்பை=துன்பம்; இந்த பாடலில் இடமுடை வெண் தலை என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கது எத்தனை பேர் பலியிட்டாலும் நிரம்பாத பாத்திரம் பெருமான் ஏற்றிருக்கும் பிச்சைப் பாத்திரம் என்பது உணர்த்தப் படுகின்றது. பெருமான் பலி ஏற்பதை மிகவும் விரும்புபவன் என்பதும் இங்கே இன்பன் என்ற சொல் மூலம் சொல்லப் படுகின்றது. பூவை=நாகணவாய்ப் பறவை; மஞ்ஞை=மயில்; ஓதும்=வேதங்கள் ஓதும்; மயில்கள் நடமாட வண்டுகள் மது உண்டு பாடும் குளிர்ந்த சோலைகளும் பொற் கலசங்கள் பொருந்திய கூடங்களில் நாகணவாய்ப் பறவைகள் வேதங்கள் ஓதும் நகரம் சீர்காழி என்று கூறுகின்றார். .

பட அரவாடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன்

இடமுடை வெண்தலைக் கை பலி கொள்ளும் இன்பன் இடமாய ஏர் கொள் பதி தான்

நடமிட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடு நளிர் சோலை கோலு கனகக்

குடமிடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறையோதும் கொச்சைவயமே

வெண்டுறை தலத்தின் (3.61.1) மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் பரமன் என்று இறைவனை அழைக்கின்றார். பரம்=மேலான பொருள்; பரமாபரமன்=மேலான பொருட்களுக்கு எல்லாம் மேலானவன்; மாதிமை=மிகுந்த அன்பு; பெருமான் நிலவுலகத்தில் உள்ள திருக்கோயில்களில் உறைவது மிகுந்த அன்புடன் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். உயிர்கள் உய்வினை அடையச் செய்வது பெருமானுக்கும் மிகவும் பிடித்த செயல் அல்லவா. அதனால் தான், உலகத்தவர்கள் தன்னை வணங்கிப் பயன் அடையும் வண்ணம், பெருமான் நிலவுலகத்தில் உள்ள திருக்கோயில்களில் உறைகின்றான்.

ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆரழகன்

பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்

போதியலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த

வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே

சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.6) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். அணவுதல்=நெருங்குதல், அணுகுதல்; பாற=அழிய; ஆலும்=நடமாடும்; இயலி=போன்று; அமர்வு எய்தும்=விருப்புடன் இருக்கையாக கொள்வது; கிண்டி=கிளறி; நறவு=தேன்; சாலி=ஒரு வகை நெல்; கோல=அழகு; உகளும்=துள்ளி குதிக்கும்; நீலம்=நீலோற்பலம்; இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில் பிராட்டியின் அழகினை பல விதமாக வர்ணித்த திருஞானசம்பந்தர், இந்த பாடலில் பிராட்டி மயில் போன்ற சாயலைக் கொண்டுள்ளாள் என்று கூறுகின்றார். சேல்=மீன்கள்; சிறுவன் மார்க்கண்டேயனை நெருங்கி அவனது உயிரினை கவர்வதற்கு முயற்சி செய்த இயமன் அழியும் வண்ணம் உதைத்த பெருமான், நடமாடும் மயில் போன்று சாயலை உடையவளும், தேர்ந்தெடுத்து அழகிய நகைகளை அணிபவளும் ஆகிய உமை அன்னையுடன் மிகுந்த விருப்போடு அமரும் இடம் சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும். இந்த தலத்தில் உள்ள ஏலம் நறுமணம் சோலைகளில் காணப்படும் மலர்களின் மீது வண்டுகள் கூட்டமாக அமர்ந்து அந்த மலர்களைக் கிளறி மலர்களில் நிறைந்துள்ள தேனை உண்ட களிப்பினில் இசை பாடுகின்றன. அருகில் உள்ள சாலி நெல் வயல்களில் அழகான மீன்கள் துள்ளி குதித்தாட, அவற்றின் அசைவால் நீலோற்பல மொட்டுகள் மலர்ந்து அழகாக காணப்படுகின்றன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதை செய்த பரமன்

ஆலும் மயில் போல் இயலி ஆயிழை தனோடு அமர்வு எய்தும் இடமாம்

ஏல மலி சோலை இன வண்டு மலர் கிண்டி நறவு உண்டு இசை செயச்

சாலி வயல் கோல மலி சேல் உகளும் நீலம் வளர் சண்பை நகரே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.83.1) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். இரிய=பறந்து சென்று அமர; விண்ட=விரிந்த, மலர்ந்த; மல்கு=நிறைந்த; பண்டு=பண்டைய நாளில், பண்டைய நாளிலிருந்தே நடராஜப் பெருமான் தனது கையினில் தீச்சுடர் ஏந்தி நடனம் ஆடுவதாக கருதப்படுகின்றது. பரமன்=அனைவர்க்கும் மேலானவர்; அயலே=அருகே; தேர=தேட: தெண்டிரை=தெண்+திரை, தெளிந்த நீரலைகள்; முத்தம்=முத்துகள்; வண்டுகள் அமர்வதால் விரிந்த மலர்கள் நிறைந்த சடை நீண்டு தொங்கும் வண்ணம் இடபத்தின் மீது அமர்ந்து பல இடங்களுக்கும் செல்லும் பரமனாகிய சிவபெருமான், பண்டைய நாளிலிருந்தே தனது கையினில் தீச்சுடரை ஏந்திய வண்ணம் நடனமாடுகின்றார். அத்தகைய பரமன் வாழும் பதி நல்லூர் என்று கூறுவார்கள். தனது அருகில் ஓடிய நண்டினைத் தனது உணவாக உட்கொள்வதற்காக நாரை நண்டினைத் தேடும் காட்சியும், மலை அருவிகளிலிருந்து விழும் முத்துக்களை அடித்துக் கொண்டு வரும் காவிரி நதியின் தெளிந்த நீரலைகள் இரண்டு கரைகளிலும் மோதுவதால் அரும்புகள் மலர்ந்து நறுமணம் வீசும் காட்சிகளும் நிறைந்த தலம் நல்லூர் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வண்டிரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடையேறிப்

பண்டெரிகை கொண்ட பரமன் பதியது என்பர் அதன் அயலே

நண்டிரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம்

தெண்டிரைகள் மோத விரி போது கமழும் திரு நலூரே

தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.63.8) அப்பர் பிரான், பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். தமர்=உறவினர்; பெருமானின் தொண்டர்கள் அனைவரும் தனக்கு உறவினர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். நாடி=நாடிச் சென்று; பெருமானின் புகழினை, அவனது அருட்செயல்களை பலரும் சொல்லக் கேட்டு, அவனை நாடி சென்று அவனுக்கு தொண்டர்களாக மாறி, எமக்கு உறவினராக இருக்கும் அடியார்களே, இந்த நிலையை நினைத்து மகிழ்ந்து கூத்தாடுவீராக; அவன் பால் மிகுதியான அன்பு வைத்து அழுவீராக, அவனைப் பணிந்து பலமுறையும் தொழுவீராக, அவனது திருவடிகளின் புகழினை பாடுவீராக, அவன் தொடர்ந்து உறைகின்ற குரங்காடுதுறை தலம் சென்றடைந்து மற்ற தொண்டர்களுடன் கூடுவீராக என்று பரமனின் பக்தர்கள் செய்ய வேண்டிய செயல்களை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்

நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்

ஆடுமின் அழுமின் தொழுமின் அடி

பாடுமின் பரமன் பயிலும் இடம்

கூடுமின் குரங்காடுதுறையே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.22.3) அப்பர் பிரான், பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். சிறையார் வரி வண்டு=சிறகுகளையும் புள்ளிகளையும் உடைய வண்டுகள், தேனே பாடும்=தேன் போன்று இனிமையாக ரீங்காரம் செய்யும்; மறை ஆன்ற=வேதங்கள் நிறைந்த; மன்னி=நிலையாக நின்று; கறையார்=கருமை நிறம் அடர்ந்து காணப்படும்; சிறகுகளையும் புள்ளிகளையும் உடைய வண்டுகள் தேன் போன்று இனிமையான குரலில் ரீங்காரம் இசைக்கும் திருமறைக்காடு தலத்தின் தலைவனும், சிவலோகத்தை தனது உலகமாக உடையவனும், வேத ஒலிகள் நிறைந்த திருவாய்மூர், கீழ்வேளூர், வலிவலம், தேவூர் ஆகிய தலங்களில் நிலை பெற்று இருப்பவனும், உத்தமனும், ஒற்றியூர் தலத்தின் மீது பற்று கொண்டு அதனை ஆளும் தலைவனாக உள்ளவனும் ஆகிய இறைவனை, அடர்ந்த கருமை நிறத்துடன் காணப்படும் கடலால் சூழப்பட்ட திருநாகைக் காரோணத்தில் நாம் எப்போதும் காணலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சிறையார் வரிவண்டு தேனே பாடும் திருமறைக்காட்டு எந்தை சிவலோகனை

மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே

உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன் தன்னைக்

கறையார் கடல் புடை சூழ் அந்தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணலாமே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.39.3) அப்பர் பிரான் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். மற்று என்ற சொல் எதுகைக்காக சேர்க்கப்பட்ட பொருளற்ற அசைச் சொல்லாக இங்கே வருகின்றது. தனி=ஒப்பற்ற; வேறு எவரும் நெற்றியில் கண் கொண்டவராக இல்லாததால், ஒப்பற்ற வகையில் நெற்றியில் கண் கொண்டுள்ளவன் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நேரிழை=சிறந்த நகைகளை அணிந்தவள், இங்கே பார்வதி தேவியை குறிக்கின்றது; படிறன்=வஞ்சகன்; பாம்பு வஞ்சக எண்ணம் உடையது; எதிர்பாராத சமயத்தில் கொத்தும் இயல்பினை உடையது. அத்தகைய வஞ்ச எண்ணம் கொண்ட பாம்பினையும் அடக்கி ஆள்வதால், பாம்பின் வஞ்சத்தையும் மிஞ்சிய வஞ்சம் உடையவன் பெருமான் என்று நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார். ஏற்பது இகழ்ச்சி என்பது சான்றோர் வாக்கு. ஆனால் சிவபெருமான், உலகத்தவர்களின் ஆணவம் முதலான மலங்களை பிச்சையாக ஏற்றுக் கொண்டு அவர்களை உய்விப்பதால், அவர் பிச்சை எடுப்பதை இகழ்ச்சியாக கருதக் கூடாது என்று உணர்த்தும் வண்ணம் பலி தேடும் பரமன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பரமன் என்றால் உயர்ந்தவன் என்று பொருள். தலைவர்களுக்கு எல்லாம் தலைவனாக இருப்பதால் தானே, அவனுக்கு பரமேஸ்வரன் என்று பெயர் வந்தது. ஒப்பற்ற முறையில் வேறு எவருக்கு இல்லாத வகையில் தனது நெற்றியில் கண் உடையவனும், சிறந்த நகைகளை தகுதியான முறையில் அணிந்துள்ள பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், வஞ்சனை நிறைந்த பாம்பினையும் தனது கையினில் பற்றிக் கொண்டு தனது விருப்பம் போன்று பாம்பினை ஆட்டுவிக்கும் ஆற்றல் படைத்தவனும், பல ஊர்களுக்கும் சென்று பலி ஏற்பவனும், பலி ஏற்றாலும் அனைவருக்கும் தலைவனாக இருப்பவனும், அனைவரையும் வெற்றி கொண்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் அழித்து திரிபுரத்து அரக்கர்களை வெற்றி கொண்டவனும், செழிப்புடன் விளங்கும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் வைத்தவனும், எந்த விதமான குற்றமும் இல்லாதவனும் ஆகிய பெருமான் மழபாடி தலத்தில் நிலையாக குடிகொண்டிருப்பதை அடியேன் கண்டேன். எனது நெஞ்சமே, நீயும் பெருமானின் திருவுருவத்தின் சிறப்புகளையும், சிறப்பான பண்புகளையும் உணர்ந்து கொள்வாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போல் அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

நெற்றித் தனிக் கண்ணுடையான் கண்டாய் நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்

பற்றிப் பாம்பாட்டும் படிறன் கண்டாய் பல்லூர் பலி தேர் பரமன் கண்டாய்

செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மாமதி சென்னி வைத்தான் கண்டாய்

மற்றொரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.52.6) அப்பர் பிரான், பெருமானை, பரமன் என்று அழைக்கின்றார். பள்ளி கொண்ட பெருமாளாக விளங்கும் திருமாலை, கண் துஞ்சும் நெடுமால் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். துஞ்சும்=தூக்கம் கொள்ளும்; பரமேட்டி=தனக்கு மேலாக வேறு ஒருவரும் இல்லாதவன். பாற்கடலில் பள்ளி கொள்பவனும் கரிய திருமேனியை உடையவனும் நெடிய உருவம் எடுத்து மூன்று உலகங்களை அளந்தவனும் ஆகிய திருமால், வக்கரனை கொல்வதற்காக வலிமையான ஆயுதம் பெற வேண்டி, குறைந்த மலருக்கு பதிலாக தனது கண்ணினை நோண்டி மலராக தனக்கு அர்ச்சனை மலராக படைத்ததைக் கண்ட பெருமான், திருமால் வெளிப்படுத்திய அன்பினுக்கு பரிசாக தான் வைத்திருந்த சக்கராயுதத்தை அருளினான். வண்டுகள் உண்ணும் தேனை உடைய கொன்றை மலர்கள், வன்னி. ஊமத்தை மலர்கள் அணியப் பெற்ற தனது சடையினில். வானில் இருந்து மிகவும் வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியை அடக்கி மறைத்தவன் சிவபெருமான். பண் போன்று இனிய சொற்களை உடைய பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும், அனைவர்க்கும் மேலான தலைவனாக விளங்குபவனும், தனக்கு மேலாக வேறு ஒருவரும் இல்லாதவனும், வெண்மை நிறத்து பிறைச் சந்திரனையும் பாம்பினையும் தனது சடையினில் ஒருங்கே வைத்துள்ளவனும் ஆகிய இறைவன் சிவபெருமான். அடர்ந்த சோலைகள் சூழ்ந்திருப்பதால் குளிர்ந்து காணப்படும் திருவீழிமிழலை தலத்தில், விண்ணுலகத்திலிருந்து திருமாலால் கொண்டுவரப் பெற்ற விமானத்தை உடைய திருக்கோயிலில் இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கண் துஞ்சும் கருநெடுமால் ஆழி வேண்டிக் கண் இடந்து சூட்டக் கண்டு அருளுவான் காண்

வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடைக் கரந்த மாதேவன் காண்

பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண்

வெண் திங்கள் அரவொடு செஞ்சடை வைத்தான் காண் விண்ணிழி தண்வீழி மிழலையானே

கொட்டையூர் மற்றும் வலஞ்சுழி தலங்களின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.73.1) அப்பர் பிரான், பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். வரு பொன்னி என்று பிலத்துவரத்திலிருந்து வெளியே சுழித்து வந்த காவிரி நதி என்று தலத்துடன் இணைந்த சம்பவத்தை குறிப்பிடுவதாக சிவக்கவிமணி திரு சி.கே. சுப்பிரமணியம் அவர்கள் பெரியபுராண விளக்கம் புத்தகத்தில் கூறுகின்றார். ஈசன், ஈஸ்வரன் என்றால் தலைவன் என்று பொருள், பரமேஸ்வரன் என்று தலைவர்களுக்கும் தலைவனாக பெருமானே விளங்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. மாதேவன் என்று இந்த சொல் மிகவும் அழகாக மொழிபெயர்ப்பு செய்யப் பட்டுள்ளது. குருமணி=அழகான நிறம் உடைய மணி; பாடலின் நான்காவது அடியில் உள்ள கோமான் என்ற சொல்லினை அழகமரும் என்று சொல்லுடனும் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். கோமான்=தலைவன். பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த விடத்தை தேக்கியதால் அழகிய கரிய நீல மணியின் நிறத்திற்கு மாறிய கழுத்தினை உடையவனும், கல்லால மரத்தின் நிழலின் கீழ் வீற்றிருந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் வேதங்களின் பொருளை விளக்கியவனும், பருத்த மணிகளை உடைய பெரிய நாகங்களை அணிகலனாக பூண்டவனும், பவளங்கள் சேர்த்து வைக்கப்பட்ட குன்று போன்று சிவந்த திருமேனியுடன் பெரிய உருவத்துடன் இருப்பவனும், வலமாக சுழித்து வெளியே வந்த காவிரி நதிக்கரையில் உள்ள வலஞ்சுழி தலத்தின் இறைவனும், தேவர்களுக்குத் தலைவனாக உள்ளவனும், அடியார்களுக்கு வேண்டும் வரம் அளிக்க வல்லவனும், அழகான நிறத்துடன் காணப்படும் மணி போன்று அழகு அமர்ந்த திருவுருவத்தினை உடையவனும், கொட்டையூர் தலத்தில் கோடீச்சரம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் தலைவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ காண்பாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்

பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய் பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்

வருமணி நீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்

குருமணி போல் அழகமரும் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே

கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.81.2) அப்பர் பிரான், பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். பண்டாடு=எண்ணற்ற பழைய பிறவிகளாகத் தொடர்ந்து வரும் வினைகள்; பரலோகம்=உயர்ந்த உலகமாகிய முக்தி உலகம்; முக்தி உலகம் செல்வதற்கான வழியை தனது அடியார்களுக்கு காட்டுபவனும், அந்த வழியினை பின்பற்றும் முக்தி உலகினுக்கு அழைத்துச் செல்பவனும் ஆகிய இறைவன் என்று குறிப்பிடுகின்றார். அவுணர்=திரிபுரத்து அரக்கர்கள்; எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர்களாகத் திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களை மிகவும் எளிதாக வீழ்த்திய செயல், விளையாட்டாக செய்த செயலாக கருதப்பட்டு, பூப்பந்து ஆடுவது போன்று செய்தான் என்று சொல்லப் படுகின்றது.

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்

பண்டாடு பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்

செண்டாடி அவுணர் புரம் செற்றான் கண்டாய் திருவாரூர் திருமூலட்டானன் கண்டாய்

கொண்டாடும் அடியவர் தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே

ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.88.5) அப்பர் பிரான், பரமன் என்று பெருமானை அழைக்கின்றார். ஓம்புதல் என்றால் பாதுகாத்தல் என்று பொருள். தினமும் நம்மைப் பாதுகாக்கும் இறைவன் உறையும் இடமாக விளங்குவதாலும் வியாக்ரபாத முனிவர் (புலிக்கால் முனிவர்) வழிபட்ட திருக்கோயில் என்பதாலும் ஓமாம்புலியூர் என்ற பெயர் வந்தது என்பர். தனது தொண்டர்கள் நரகம் என்பதனை காணாவண்ணம் உதவி செய்பவன் என்று பெருமான், நம்மை பாதுகாக்கும் தன்மையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். பாங்கு=நன்மை. எல்லாவற்றையும் அழிக்கும் திறன் கொண்ட அக்னி, பலராலும் இகழப் பட்டதால் மனம் வருந்திய அக்னி தேவன், இறைவனை வழிபட்டு, அடுத்தவர்கள் தன்னை இகழாத நிலையினைப் பெற்றான் என்று புராணங்கள் கூறுகின்றன. பல தலங்களில் இறைவனின் திருநாமம் அக்னீஸ்வரர் என்று உள்ள நிலை, அக்னி வழிபட்டதையும் அவன் அடைந்த நன்மையையும் நமக்கு உணர்த்துகின்றன. தான் இதற்கு முன்னம் செய்த நற்செயல்களின் பயனாக இறைவனை வணங்கும் பேற்றினை பெற்றதால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்ட, அழகிய வடிவினை உடைய அக்னித் தேவன் மேல் இரக்கம் கொண்ட சிவபெருமான் அவனுக்கு அருள்கள் பல புரிந்தார். மேலும் சிவபெருமான், தன்னைத் தொடர்ந்து வழிபடும் தொண்டர்கள், நரகத்தில் சென்று இடர் படாத வண்ணம், அவர்கள் நரகத்தைக் காண்பதையே தவிர்த்து அருள் புரியும் கருணை உள்ளம் கொண்டவர் ஆவார். அத்தகைய இறைவன், ஓங்கி உயர்ந்த மதில்களால் சூழப்பட்டதும், அழகு மிகுந்து காணப்படுவதும், உயர்ந்த புகழுடைய அந்தணர்கள் புகழ், உலகத்தவர்க்கு நன்மை பயக்கும் வகையில் வழிபாடுகளைச் செய்து வரும் நகரமாகிய ஓமாம்புலியூர் என்ற தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன் என்று தனது கடந்த கால வாழ்க்கையை குறிப்பிட்டு அப்பர் பிரான் வருத்தம் தெரிவிக்கும் பாடல்.

பாங்குடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை

பாங்கிலா நரகு அதனைத் தொண்டரானார் பாராத வகை பண்ண வல்லான் தன்னை

ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும்

தீங்கில் திரு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

திருப்பரங்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.2.11) சுந்தரர், தேவாரப் பாடல்களை பாடும் அடியார்கள் பரமனின் திருவடி நிழலில் குடியிருப்பார்கள் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் பெருமானின் திருக்கோலத்தை அஞ்சத்தக்க திருக்கோலம் என்று குறிப்பிடும் சுந்தரர், அதன் காரணமாக தான் அவருக்கு ஆட்படுவதற்கு அஞ்சுவோம் என்று சொல்கிறார். பாம்பினை அணிகலனாக அணிந்த தன்மை, கோவணமும் தோலாடையும் தரித்தல், மயானத்தை இழிவாக கருதாமல் சுடுகாட்டினில் உறைதல், கங்காளராக பிணத்தை சுமத்தல், நஞ்சு உட்கொள்ளல், அனைத்து உலகங்களையும் கடந்து தனியே இருத்தல், நல்லன மற்றும் தீயவை அறியாத பூதங்கள் சூழ இருத்தல், மண்டையோட்டுடன் எங்கும் திரிதல், எப்போதும் பெண்ணுடன் திரிதல், எவருக்கும் இல்லாத வகையில் நெற்றியில் கண்கள் உடையவராக இருத்தல், சிங்கத்தின் தோலை போர்த்துக் கொள்ளுதல், எதிரே வந்த காமனை எரித்து அழித்தல் ஆகிய பெருமானின் தன்மைகள் தனக்கு அச்சம் ஊட்டியதாக, இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் கூறுகின்றார். சேர நாட்டு மன்னனாகிய சேரமான் பெருமாள் நாயனாருடன் சுந்தரர் மதுரை மாநகரம் சென்ற போது, அவர்கள் இருவரையும் பாண்டிய மன்னன் வரவேற்றான். மேலும் சோழ மன்னனும் அப்போது மதுரை நகரம் சென்றான். இந்த மூன்று மன்னர்களும் ஒன்றாக திருப்பரங்குன்றம் தலம் சென்ற செய்தி இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.

அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும் என்று அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி

முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறுமோர் நான்கும் ஓர் ஒன்றினையும்

படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே

குடியாகி வானோர்க்கும் ஓர் கோவுமாகிக் குலவேந்தராய் விண் முழுது ஆள்பவரே

கலயநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (1.16.11) சுந்தரர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில், சுந்தரர், பெருமான் காமரம் பண்ணில் பொருந்துமாறு பாடல்கள் பாடியவாறு பலிக்கு உழல்கின்றார் என்று கூறுகின்றார். நண்புடைய என்ற சொல்லினை சிறுவன் நாவலர் கோன் என்ற தொடருடன் இணைத்து, பெருமான் தன்னை நண்பனாக கருதியதை சுந்தரர் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வது சிறப்பு.

தண்புனலும் வெண்மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனாக காமரம் முன் பாடி

உண்பலி கொண்டுழல் பரமன் உறையும் ஊர்நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூரதனை

நண்புடைய நன் சடையன் இசைஞானி சிறுவன் நாவலர் கோன் ஆரூரன் நாவின் நயந்து உரை செய்

பண் பயிலும் பாட்டும் இவை பத்தி செய்து நித்தம் பாட வல்லவர்கள் அல்லலோடு பாவம் இலர் தாமே

வேள்விக்குடி மற்றும் திருத்துருத்தி தலங்களை இணைத்துப் பாடிய பதிகத்தின் பாடலில் (7.18.10) சுந்தரர் பரமன் என்று பெருமானை குறிப்பிட்டு, பெருமானின் அடியார்களுக்கு தான், வழுவாது அடிமையாக இருப்பேன் என்று கூறுகின்றார். பண்டம் அன்றே=கடினமான காரியம் அல்ல; மிகவும் எளிதானது. கூடலர்=பகைவர்; பகைவர் அடி பணிவதால், கூடலர் மன்னன் என்று கூறுகின்றார் தேவாரப் பாடல்களைப் பாடும் அடியார்களுக்கு தான் ஆட்பட்டு அடிமையாக இருப்பேன் என்று கூறுவதன் மூலம் சுந்தரர், தேவாரப் பாடல்களின் சிறப்பினை உணர்த்துகின்றார்.

கூடலர் மன்னன் குல நாவலூர்க் கோன் நலம் தமிழைப்

பாட வல்ல பரமன் அடியார்க்கு அடிமை வழுவா

நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படுமாறு சொல்லிப்

பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே

திருநாட்டுத் தொகை என்ற பொது பதிகத்தின் பாடலில் (7.12.4) சுந்தரர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். தேங்கூர் மற்றும் நாங்கூர் வைப்புத் தலங்கள்; பாங்கூர்=அழகு நிறைந்த தலங்கள்; எமது தலைவனும் அனைவர்க்கும் மேலானவனும் அனைத்து ஒளிகளிலும் சிறந்தவனும் ஆகிய பெருமான், தொடர்ந்து நீங்காது உறைகின்ற தலங்கள், தேங்கூர், திருச்சிற்றம்பலம், சிராப்பள்ளி, கடம்பந்துறை, பூங்கூர், நாங்கூர் மற்றும் நறையூர் எனப்படும் அழகிய தலங்கள்.

தேங்கூரும் திருச்சிற்றம் பலமும் சிராப்பள்ளி

பாங்கூர் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை

பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர்

நாங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர் நாட்டு நறையூரே

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.52.10) சுந்தரர், பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். சித்தர்கள் பலரும் சுந்தரர் பெருமான் பால் வைத்துள்ள அன்பின் தன்மையை உணர்ந்தவர்களாக இருந்த தன்மை இங்கே சித்தர் சித்தம் வைத்த புகழ் சிறுவன் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. பெருமிழலைக் குறும்ப நாயனார், நாளும் நம்பி ஆரூரரின் திருநாமத்தை நியமத்துடன் தியானம் செய்து பலனடைந்த தன்மை நமது நினைவுக்கு வருகின்றது. மேலும் பெரிய புராணம் பாயிரத்தில், சுந்தரர் கயிலாய மலைக்கு திரும்புவதை கவனித்த உபமன்யு முனிவர், சுந்தரர் வரும் திசையை நோக்கி தொழுது வணங்கிய செயலும் நமது நினைவுக்கு வருகின்றது.

பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய

அத்தன் ஆலங்காடன் தன் அடிமைத் திறமே அன்பாகிச்

சித்தர் சித்தம் வைத்த புகழ் சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்

பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே

வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.86.5) சுந்தரர், பெருமானை, பரமன் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தினும், சுந்தரர், பெருமானை வழிபடாத மனிதர்களை இழித்து கூறுவதை நாம் காணலாம். உள்ளம் உருகித் தொழுதால் உடனாகும் தன்மை உடைய பெருமானை, பரவிப் புகழ்ந்து போற்றாத மனிதர்கள் வேறெதனைப் போற்றி பயனடைவார்கள் என்று இகழ்ச்சியாக கூறுகின்றார்.

உரம் என்னும் பொருளானை உருகில் உள் உறைவானைச்

சிரம் என்னும் கலனானைச் செங்கண் மால் விடையானை

வரம் முன்னம் அருள் செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்

பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவென்னே

திருவாசகம் திருவார்த்தை பதிகத்தின் பாடலில் (8.43.5) மணிவாசக அடிகளார் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். இலங்கை மன்னன் இராவணனின் மனைவி மண்டோதரிக்கு இறைவன் அருள் புரிந்த செய்கை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. இதே செய்தி குயிற்பத்து பதிகத்தின் இரண்டாவது பாடலிலும் சொல்லப் பட்டுள்ளது. மேலும் கருணைக் கடலாக விளங்கும் பெருமான் தனது அடியார்களின் பாசக் கட்டுகளை அறுத்து எறிகின்றான் என்றும் கூறுகின்றார்.

வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த மாகருணைக் கடலாய் அடியார்

பந்தனை விண்டற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்

உந்து திரைக்கடலைக் கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை அதனில்

பந்தணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே

திருவாலியமுதனார் தான் அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.24.8) பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். ஆரவாரம் செய்த அரக்கன் இராவணனின் உடல் நொறுங்குமாறு கயிலை மலை மீது தனது கால் விரலினை ஊன்றி வருத்திய இறைவனே என்று அழைத்து வேதியர்கள் வழிபடும் தில்லைச் சிற்றம்பலத்தில், சூரியனின் கதிர்கள் போன்று ஒளி வீசும் சிறந்த மணிகள் பதிக்கப்பட்ட அம்பலத்தில் பவளம் போன்ற திருமேனியை உடைய பரமன் நடமாடுகிறான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார்.

அதித்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருள் என்று

துதித்து மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம்பலம் தன்னுள்

உதித்த போழ்தில் இரவிக் கதிர் போல் ஒளிர் மாமணி எங்கும்

பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே

பிரமனும் திருமாலும் தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்து நின்றதை குறிப்பிடும் திருமந்திரப் பாடலில், பெருமானை பரமன் என்று திருமூலர் அழைக்கின்றார். இந்த பாடலிலும், தானே பெரியவன் என்று இருவரும் ஒருவருக்கொருவர் வாதம் செய்தது குறிப்பிடப் படுகின்றது. பேதமை என்று திருமால் மற்றும் பிரமனது அறிவற்ற செயல் உணர்த்தப் பட்டுள்ளது.

பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்

பிரமன் மால் தங்கள் தம் பேதமையாலே

பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க

அரனடி தேடி அரற்றி நின்றாரே

திருமந்திரம் மூன்றாம் தந்திரம் அட்டமாசித்தி அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். பதி=நிலைத்து வாழும் ஊர்; விதியது செய்து= அடக்கி ஆண்டு கட்டளையிடுதல்; இடது நாசி மற்றும் வலது நாசி வழியாக மூச்சுக் காற்றினை அடக்கி வழி நடத்தி பெருமானை தியானிக்கும் யோகிகளுக்கு, நிலையான இன்பம் தருகின்ற வீடுபேற்றினை காட்டி அருள் புரிபவன் சிவபெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்

துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள்

விதியது செய்கின்ற மெய் அடியார்க்குப்

பதியது காட்டும் பரமன் நின்றானே

திருமந்திரம் நான்காவது தந்திரம் பூரண சத்தி அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். சிவம் இருந்தபடி அசைவற்று இருக்கச் சக்தி ஒளிக்கொடி போல் அசைந்து மின்கொடி போல பிரிந்து தோன்றி, படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் செய்து உலகினை இயக்குகின்றாள். சக்தி பெருமானுடன் இணைந்தும் பிரிந்தும் இயங்கும் செய்கை இங்கே சொல்லப் படுகின்றது.

பைந்தொடியாளும் பரமன் இருந்திடத்

திண்கொடி ஆகித் திகழ்தரு சோதியாம்

விண் கொடியாகி விளங்கி வருதலால்

பெண் கொடியாக நடந்தது உலகே

திருமந்திரம் ஐந்தாவது தந்திரம் சத்திநிபாதம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். இரண்டு=இடைகலை மற்றும் பிங்கலை, இடைகலை=இடது நாசி வழியாக வரும் மூச்சு; பிங்கலை=வலது நாசி வழியாக வரும் மூச்சு; குண்டலினி சக்தியை மேற்கூறிய இரண்டு நாடிகளின் வழியே செலுத்தி புருவ மத்திக்கு எடுத்துச் செல்லும் பக்குவம் வாய்ந்தோர் தீபவொளி போன்ற காட்சியை காணலாம். பழமைக்கு பழமையாக இருக்கும் இறைவனிடத்தில் ஆன்மாக்களும் மற்ற பொருட்களும் ஒடுங்குகின்றன என்று கூறுகின்றார். நின்று காண்டல்=மனம் சலியாது தொடர்ந்து தியானித்து சமாதி நிலை கைகூடல்; இருள்=அறியாமை;

கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி

பண்டுபண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர்

வண்டு கொண்டாடும் மலர் வார் சடை அண்ணல்

நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே

திருமந்திரம் ஒன்பதாவது தந்திரம் அற்புதக் கூத்து அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பரமன் இருக்கும் இடம் சிற்றம்பலம் என்று கூறுகின்றார். நெற்றிக்கு கீழே இரண்டு புருவங்கட்கு இடையே உள்ள வெற்றிடம், ஞானாகாசம் என்று சொல்லப்படும் இடமே, அனைத்து உயிர்களும் பற்றிக் கொள்வதற்கு மிகுந்த விருப்புடன் இயங்கும் பற்றாக இருக்கும் சிவபெருமான் நடமாடுகின்ற சிற்றம்பலம் என்பதை தான் புரிந்து கொண்டதாக திருமூலர் இங்கே கூறுகின்றார்.

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி

உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்

பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்

சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே

பொழிப்புரை:

வலிமை பொருந்தியதும் உயரத்தே உள்ளதும், உலர்ந்ததும் ஆகிய மரக் கிளைகளில் அமர்ந்த வண்ணம் ஆந்தைகள் அலறும் மயானத்தில், நள்ளிருளில் பூதங்கள் பாடியும் ஆடியும் களிப்படையும் வண்ணம், அந்த பூதங்களின் பாடலுக்கு ஏற்ப நடமாடும் சிவபெருமான், அழகிய தாமரை மலர் மேல் அமரும் பிரமனின் மண்டையோட்டினில் பலி ஏற்பவராக பல இடங்களிலும் திரிகின்றார். இத்தகைய பெருமான், எம்மை ஆட்கொண்ட தலைவர் ஆவார்; அவர் ஆறு சிறந்த குணங்களை உடையவர்; அனைத்து தேவர்களுக்கும் மேலானவர்; அவர் பழன நகரத்தினில் உறைகின்றார்.

பாடல் 5.

வேதமோதி வெண்ணூல் (1.067) பாடல்கள் 5, 6, 7, 8, 9, 10 மற்றும் 11 (திதே 0611)

குல வெஞ்சிலையால் மதில் மூன்று எரித்த கொல்லேறு உடை அண்ணல்

கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி

நலம் அஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதி கொண்டு எதிர் உந்திப்

பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே

விளக்கம்:

குதி கொண்டு-குதிப்பது போன்று; குல=உயர்ந்த; கயிலாயம், மந்தரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம் ஆகியவை சிறந்த ஏழு மலைகளாக புராணங்களில் கருதப்படுகின்றன. மேருமலை இமய மலையின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. வெஞ்சிலை=கொடிய மலை; மேருமலை வில்லாக வளைக்கப்பட்டு திரிபுரத்து பறக்கும் கோட்டைகளை அழிப்பதற்கு பயன்படுத்தப் பட்ட செய்கை இங்கே குறிப்பிடப் படுகின்றது. கலவம்=தோகை; நலம்=மேன்மை, பெருமை; மனசு=அழகு;

பொழிப்புரை:

உயர்ந்த ஏழு மலைகளில் ஒன்றாக கருதப்படும் மேருமலையினை வில்லாக வளைத்து, நெருப்புப் பொறிகளை கக்கும் கொடிய அம்பினை அந்த வில்லினில் பூட்டி, எப்போதும் வானில் பறந்து திரிந்து கொண்டிருக்கும் மூன்று கோட்டைகளுக்கும் தீமூட்டி அழித்தவன் சிவபெருமான்; அவன் கொல்லும் தன்மை உடையதும் வீரம் மிகுந்ததும் ஆகிய காளையினை தனது வாகனமாகக் கொண்டுள்ள தலைவன் ஆவான்; தோகை உடைய மயில்கள் தொடர்ந்து ஆடியும், குயில்கள் இன்னிசை பாடியும் வாழும் தலமாக விளங்குவதும், கடல் போன்று அகன்ற நீர்ப்பரப்பினை உடைய காவிரி நதி, பெருமை உடையதும் அழகு நிறைந்ததும் நறுமணம் உடையதும் ஆகிய மாங்கனிகள் குதித்துகுதித்து வருவது போன்று அடித்துக் கொண்டு வந்து இரண்டு கரைகளிலும் சேர்க்கும் காவிரி நதி, பலாக் கனிகளையும் தனது அலைக் கரங்களில் ஏந்தி வருகின்றது. இவ்வாறு நீர்வளம் பொருந்திய காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள பழன நகரத்தில் சிவபெருமான் உறைகின்றார்.

பாடல் 6:

வேதமோதி வெண்ணூல் (1.067) பாடல்கள் 5, 6, 7, 8, 9, 10 மற்றும் 11 (திதே 0611).

வீளைக் குரலும் விளிச் சங்கொலியும் விழவின் ஒலி ஓவா

மூளைத் தலை கொண்டு அடியார் ஏத்தப் பொடியா மதிள் எய்தார்

ஈளைப் படுகில் இலையார் தெங்கில் குலையார் வாழையின்

பாளைக் கமுகின் பழம் வீழ்ச் சோலைப் பழன நகராரே

விளக்கம்;

இந்த பாடலில் திருக்கோயில்களில் சங்குகள் ஒலிக்கப் படுவதன் காரணம் சொல்லப் படுகின்றது. அடியார்களுக்கு திருக்கோயிலில் வழிபாடு நடைபெறுகின்ற நேரத்தினை நினைவூட்டி, அவர்களை வருகவருக என்று அழைக்கும் பொருட்டு சங்குகள் இசைக்கப் படுகின்றன என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் மூன்றாவது பாடலிலும் பறையும் சங்கும் ஒலியும் ஓவா பழன நகரம் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். வீளைக் குரல்= அழைக்கும் ஒலி; சீழ்க்கை ஒலி; விளித்தல்=அழைத்தல்; ஓவா=இடைவிடாது ஒலிக்கும்; மூளைத் தலை=மூளையோடு கூடிய பிரம கபாலம்; ஈளைப் படுகை=உலராத சேற்றுடன் கூடிய ஆற்றுப்படுகை;

பொழிப்புரை:

பருந்தின் குரல் போன்று கீச்சுக் குரலில் அமைந்த சீழ்க்கை ஒலியும், அடியார்களை வருகவருக என்று அழைக்கும் வண்ணம் எழுப்பப்படும் சங்கின் ஒலியும் கலந்து ஓயாது ஒலிக்க இரைச்சலுடன் திருவிழா ஆரவாரங்கள் நிறைந்த திருப்பழனம் தலத்தில் உறைபவனும், பிரமனின் உடலுடன் பொருந்தியிருந்த போது மூளையின் இருப்பிடமாக இருந்த மண்டையோட்டில் பலி ஏற்பவனும் ஆகிய இறைவனை, அடியார்கள் போற்றிப் புகழ்கின்றனர். அவர் பறக்கும் கோட்டைகளையும் சாம்பல் பொடியாக மாறும் வண்ணம், ஒரே அம்பினை எய்தி வீழ்த்தியவர்; காவிரியின் நீர் வளத்தினால் சேறாக காணப்படும் நிலத்தில் மட்டைகளுடன் பொருந்திய தென்னம் குலைகளும், வாழைக் குலைகளும், பாளைகளுடன் கூடிய பாக்கு பழங்களும் வீழ்ந்து காணப்படும் சோலைகள் நிறைந்த பழன நகரமே, இந்த இறைவனின் இருப்பிடமாகும்.

பாடல் 7.

வேதமோதி வெண்ணூல் (1.067) பாடல்கள் 5, 6, 7, 8, 9, 10 மற்றும் 11 (திதே 0611)

பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார் திருமேனி

செய்யார் கரிய மிடற்றார் வெண்ணூல் சேர்ந்த அகலத்தார்

கையாடலினார் புனலால் மல்கு சடை மேல் பிறையோடும்

பையாடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே

விளக்கம்:

பொய்யாமொழி=வேதங்கள்; கை ஆடலினார்=கை வீசு ஆடுபவர்; துடி அசைக்கும் கை என்றும் அனல் ஏந்திய கை என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே; உடனே=ஒருங்கே; மிடற்றார்= கழுத்தினை உடையவர்; பை=படம்; இயற்கையாக பகை கொண்டுள்ள சந்திரனையும் பாம்பினையும் ஒருங்கே வைப்பதன் மூலம் தனது சன்னதியில் பகை உணர்வுக்கு இடமில்லை என்று சிவபெருமான் உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

எப்போதும் உண்மையே பேசும் அடியார்களால் முறையாக பாடல்கள் பாடி புகழப்படும் இறைவன், சிவந்த திருமேனியை உடையவர்; அவர் தான் உட்கொண்ட விடத்தினைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவர்; தனது அகலமான மார்பினில் வெண்ணூல் அணிந்தவர்; அவர் தனது கைகளை வீசி நடனம் ஆடுகின்றார்; கங்கை நதியினை அடக்கியுள்ள சடையினில், பிறைச் சந்திரனையும் படம் எடுத்தாடும் பாம்பினையும் ஒருங்கே வைத்தவர் ஆவார்; இத்தகைய தன்மைகள் உடைய பெருமான் பழன நகரத்தில் உறைபவர் ஆவார்.

பாடல் 8.

வேதமோதி வெண்ணூல் (1.067) பாடல்கள் 5, 6, 7, 8, 9, 10 மற்றும் 11 (திதே 0611)

மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறா எடுத்தான் தோள்

அஞ்சோடு அஞ்சும் ஆறு நான்கும் அடர ஊன்றினார்

நஞ்சார் சுடலைப் பொடி நீறு அணிந்த நம்பான் வம்பாரும்

பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே

விளக்கம்:

நஞ்சார்=நைஞ்சார், நைந்தார் என்பதன் மருவு; பைந்தாமரை=பசுமையான தாமரை மலர்கள்; அஞ்சோடு அஞ்சும் ஆறு நான்கும்=இருபது; அடர=நெருங்க; மலையின் கீழே அமுக்குண்டு தோள்கள் குழைந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருக்கும் நிலை; மஞ்சு=மேகம், இங்கே மேகங்கள் பொருந்திய ஆகாயம்; மாறா=மாறுபட்டு; கயிலை மலையினைக் காணும் அனைவரும் அந்த மலையின் புனிதத்தைக் கருத்தில் கொண்டு, மலையை வலம் வந்து வணங்குவது வழக்கம். ஆனால் அரக்கன் இராவணனோ, தான் செல்லும் வழியில் குறுக்கிட்ட மலை என்று கருதி, அந்த மலையினை பேர்த்து வேறொரு இடத்தில் வைத்து விட்டுத் தனது பயணத்தைத் தொடரும் நோக்கத்துடன் அந்த மலையை பேர்க்க முயற்சி செய்தான். இந்த வேறுபாட்டினை குறிப்பிடும் வண்ணம் மாறா எடுத்தான் என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வம்பு=நறுமணம்; நஞ்சார்=நச்சுத் தன்மை பொருந்திய; சுடலை=சுடுகாடு; மஞ்சோங்கு உயரம் என்பதனை மலை என்ற சொல்லுடன் இணைத்து பொருள் கொள்ள வேண்டும்.

பொழிப்புரை:

மேகங்கள் படர்ந்த ஆகாயத்தை எட்டும் வண்ணம் உயர்ந்த கயிலாய மலையினை, அரக்கன் இராவணன், கயிலை மலையின் புனிதம் கருதி அதனை வணங்கி வலம் செய்யும் ஏனையோரின் இயல்புக்கு மாறுபட்டு, கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்தான்; அவ்வாறு முயற்சி செய்த அரக்கனின் இருபது தோள்களும் ஒன்றோடொன்று நெருங்கி கூழாக மாறும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான்; நச்சுத்தன்மை பொருந்திய சுடுகாட்டினில் உள்ள சாம்பல் பொடியைத் தனது திருமேனியெங்கும் பூசியவன் சிவபெருமான்; அவர் நறுமணம் நிறைந்த பசுமையான தாமரைகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பழனம் நகரத்தில் உறைகின்றார்.

பாடல் 9.

வேதமோதி வெண்ணூல் (1.067) பாடல்கள் 5, 6, 7, 8, 9, 10 மற்றும் 11 (திதே 0611)

கடியார் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ் புன்சடையார் விண்

முடியாப் படி மூவடியால் உலகம் முழுதும் தாவிய

நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காணாத

படியார் பொடியாடு அகலம் உடையார் பழன நகராரே

விளக்கம்:

படியார்=தன்மையினார்; கடியார்=நறுமணம் கமழும்; சுரும்பு=வண்டு; படி=உலகம்; முடி=உச்சி;

பொழிப்புரை:

நறுமணம் கமழ்வதும், வண்டுகளால் மொய்க்கப் படுவதும் ஆகிய கொன்றை மாலை திகழும் சுருண்ட சடையினை உடையவர் சிவபெருமான்; ஆகாயத்தைத் தனது உச்சியாக கொண்டுள்ள நிலவுலகத்தைத் தனது, மூன்று அடிகளில் ஓரடியாகத் தாவி அளந்த திரிவிக்ரமனாக அவதாரம் எடுத்த திருமாலும், தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமனும் தேடியும் காணாத வகையில் திருவடியையும் திருமுடியையும் உடையவன் சிவபெருமான். அவன் திருநீறு பூசிய அகன்ற மார்பினை உடையவன் ஆவான். இத்தகைய தன்மை உடைய பெருமான், திருப்பழனம் நகரினில் உறைகின்றார்.

பாடல் 10:

வேதமோதி வெண்ணூல் (1.067) பாடல்கள் 5, 6, 7, 8, 9, 10 மற்றும் 11 (திதே 0611)

கண் தான் கழுவா முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை

உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார் பாராட்ட

வண் தாமரையின் மேல் நறவம் மதுவாய் மிக உண்டு

பண் தான் கெழும வண்டி யாழ் செய்யும் பழன நகராரே

விளக்கம்:

இரவினில் தூங்கி காலையில் எழும்போது நமது கண்களில் காணப்படும் புளிச்சையில் உள்ள கிருமிகளை அகற்றவதால், ஒரு உயிரினுக்கு தீங்கு நேரிடும் என்பதால், சமணர்கள் தங்களது கண்களில் உள்ள புளிச்சையைக் களையாமல், பண்டைய நாட்களில் இருந்தனர் என்று கூறுவார்கள்; கலவை=கலந்த; நறவம்=தேன்; கெழும=பொருந்த;

பொழிப்புரை:

தங்களது கண்களையும் கழுவாமல், ஓடிப்போய் கலந்த கஞ்சியை தமது உணவாக உட்கொள்ளும் சமணர்களின் பொருளற்ற புன்மொழிகளை ஒரு பொருட்டாக கருதாத அடியார்கள் பாராட்டும் வண்ணம் பழன நகரத்தில் பெருமான் உறைகின்றார். வளம் மிகுந்த தாமரை மலர்கள் மேல் அமர்ந்த வண்ணம் தங்களது வாயினால் மலரில் உள்ள தேனை மிகவும் அதிகமாக உறிஞ்சிய மகிழ்ச்சியில் வண்டுகள், பண்ணுடன் பொருத்தி யாழின் இன்னிசை போன்று இசைக்கும் சோலைகள் நிறைந்த பழன நகரமே சிவபெருமான் வீற்றிருக்கும் நகரமாகும்.

பாடல் 11:

வேதமோதி வெண்ணூல் (1.067) பாடல்கள் 5, 6, 7, 8, 9, 10 மற்றும் 11 (திதே 0611)

வேய் முத்து ஓங்கி விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள்

நா உய்த்தனைய திறலான் மிக்க ஞானசம்பந்தன்

பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை

வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே

விளக்கம்:

வேய்=மூங்கில்; விரை=நறுமணம்; உய்த்தனைய=செய்யவல்ல, செலுத்தவல்ல; இங்கே நாவுடன் இணைந்து வருவதால் சொல்லவல்ல என்று பொருள் கொள்ளவேண்டும்.

பொழிப்புரை:

தன்னிடம் முத்துகள் கொண்ட மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்து நறுமணம் பரப்பும் வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் பிறந்தவனாகிய ஞானசம்பந்தன், தனது நாவினால் இனிய பாடல்களை பாடும் வல்லமை பெற்ற ஞானசம்பந்தன், திருப்பழனத்து தலத்தில் உறையும் பெருமானைப் புகழ்ந்து பாடிய இந்த பாடல்களை, ஓதுவதற்கு இனிய பாடல்களை, தனது வாயினால் மொழிந்த பத்து பாடல்களையும் முறையான இசையுடன் பாடும் வல்லமை பெற்ற அடியார்கள் நல்லவர்களாக விளங்குவார்கள்,

முடிவுரை:

பெருமானின் அடையாளங்களை குறிப்பிட்டு நமக்கு பெருமானின் தோற்றத்தினை பதிகத்தின் முதல் பாடல் மூலம் உணர்த்தும் திருஞானசம்பந்தர், பெருமானின் திருநாமங்களை சொல்லி அழைப்பதால், நமது பாவங்கள் முற்றிலும் தீர்ந்துவிடும் என்று அதே பாடலில் கூறுகின்றார். இரண்டாவது பாடல் மூலம், மரணம் நெருங்கிய தருணத்திலும் இடைவிடாது தன்னை தியானம் செய்த சிறுவனின் உயிரைக் கவர வந்த காலனை உதைத்து, சிறுவன் சுசரிதனுக்கு நீண்ட ஆயுள் கொடுத்தவர் சிவபெருமான் என்று நமக்கு, இந்த தலத்து பெருமான் அருள் புரிந்த தன்மையை உணர்த்துகின்றார். பாவங்களை தீர்த்தும், ஆயுளை நீட்டித்தும் அடியார்களுக்கு அருள் புரியும் பெருமான் தன்னையும் ஆட்கொண்டதாக, மூன்றாவது பாடலில் குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த குறிப்பு மூலம் நம்மையும் பெருமான் ஆட்கொள்ளவேண்டும் என்ற விருப்பத்துடன் அவனை பணிந்து வணங்க வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். ஐந்தாவது மற்றும் ஆறாவது பாடல்களில், திரிபுரங்களை எரித்த அவனது ஆற்றல் குறிப்பிடப் படுகின்றது. ஏழாவது பாடலில் பெருமான் சன்னதியில் பகை உணர்ச்சிக்கு இடமில்லை என்று உணர்த்தும் ஞானசம்பந்தர், எட்டாவது ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில், தனது வழக்கமான பாணியை பின்பற்றி, அரக்கன் இராவணனின் கயிலை நிகழ்ச்சி, அண்ணாமலை சம்பவம் மற்றும் சமணர்களின் தன்மை பற்றிய குறிப்பு என்பவற்றை கூறுகின்றார். இந்த பதிகத்தை முறையாக ஓதும் அடியார்கள், தங்களின் தீய குணங்களும் குற்றங்களும் நீங்கப்பெற்று, நல்லவர்களாக அனைவரும் புகழும் வண்ணம் வாழ்வார்கள் என்று கடைப்பாடலில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் மூலம் பெருமானின் பெருமையையும் கருணைச் செயல்களையும் உணர்ந்த நாம், திருப்பழனம் சென்று இந்த பதிகத்தை முறையாக ஓதி, உரிய பயனை அடைவோமாக.



Share



Was this helpful?