1.133. வெந்தவெண்பொடி பூசு கச்சி ஏகம்பம் மேகராகக்குறிஞ்சி
பின்னணி:
தனது ஐந்தாவது தல யாத்திரையில் பல சோழநாட்டுத் தலங்களும், பாண்டி நாட்டுத் தலங்களும் சென்று பரமனைப் பணிந்து வணங்கி, பல பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், சீர்காழி தலம் திரும்பிய பின்னர், சில நாட்கள் கழித்து காஞ்சிபுரம் உள்ளிட்ட தொண்டை நாட்டுத் தலங்கள் செல்லும் விருப்பம் உடையவராக, தனது ஆறாவது தலயாத்திரையை தொடங்குகின்றார். காஞ்சிபுரம் செல்லும் வழியில், முதலில் தில்லைச்சிதம்பரம் சென்ற திருஞானசம்பந்தர், பின்னர் பல நடுநாட்டுத் தலங்கள் செல்கின்றார். நடுநாட்டுத் தல யாத்திரையின் கடைசியில் திருவண்ணாமலை தலம் சென்று,அண்ணாமலை அண்ணலை வழிபட்டு இரண்டு பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், தொண்டை நாடு புகுகின்றார். திருவோத்தூர் திருமாகறல் மற்றும் குரங்கணில்முட்டம் தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர் அதன் பின்னர் காஞ்சி மாநகரம் வருகின்றார். காஞ்சி நகரத்து மக்கள், அழகிய தோரணங்கள் வாழை மற்றும் பாக்கு மரங்கள் நட்டு நிறைகுடங்கள் மற்றும் பொன்விளக்குகள் கொண்டு அவரை ஊர் எலையில் வரவேற்றனர். திருஞானசம்பந்தர் காஞ்சி நகரத்தின் மதிலின் வெளியே நின்ற வண்ணம், மிகவும் பழமையான காஞ்சி நகரத்தை வணங்கினார். இந்த நிகழ்ச்சியிலிருந்து முக்தி நகரத்தில் ஒன்றாகிய காஞ்சி நகரத்தின் மீது அவர் வைத்திருந்த மதிப்பின் தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம். பின்னர் இவரது வருகையினால் மகிழ்ந்த அடியார்கள் புடை சூழ கச்சி ஏகம்பம் தலத்து இறைவனைப் பணிந்து மூன்று பதிகங்கள் பாடுகின்றார். வெந்த வெண்ணீறு என்று தொடங்கும் இந்த பதிகம் ஒன்றாகும். இந்த பதிகம் மழைவேட்டல் பதிகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. முதல் திருமுறையில் மேகராகக்குறிஞ்சி பண்ணில் இசைத்துப் பாடும் வண்ணம் திருஞானசம்பந்தர் அருளிய எட்டு பதிகங்களும் (1.129 முதல் 1.136 வரை) மழை வேட்டல் பதிகங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இந்த பதிகங்களை பக்தி உணர்வுடன் மனம் ஒன்றி முறையாக பாடினால் மழை பொழியும் என்று நம்பப்படுகின்றது.
பாடல் 1:
வெந்த வெண்பொடிப் பூசுமார்பின் விரிநூல் ஒரு பால் பொருந்த
கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல்புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடர் கெடுமே
விளக்கம்:
கந்தம்=நறுமணம்; இயற்கையாகவே நறுமணம் கமழும் கூந்தலை உடையவள் பிராட்டி என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன.குழலி=கூந்தலை உடையவள்; கடி=நறுமணம்; அந்தமில்=எல்லையற்ற நற்குணங்களை உடைய; அணங்கு=தெய்வத்தன்மை பொருந்திய மாது, இங்கே பார்வதி தேவி; மூன்று வயது குழைந்தையாக இருந்த போதே, தோடுடைய செவியன் என்றும் நறவநிறை வண்டு என்றும் தொடங்கும் பதிகங்களை பாடிய தனக்கு ஞானப்பால் அருளிய அன்னையையும், அதற்கு காரணமாக இருந்த தந்தையாரையும் நினைத்தவாறே அன்றிரவு உறங்கிய திருஞானசம்பந்தர் அடுத்த நாள் பொழுது விடிந்ததும் திருக்கோயிலுக்கு சென்று தனது தந்தையும் தாயும் ஆகிய பெருமானையும் பிராட்டியையும் வணங்கினார் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பின்னர் அவர்கள் இருவரையும் வணங்கிய பின்னர் அருகிலுள்ள திருக்கோலக்கா தலம் சென்று ஆங்குள்ள இறைவனை தரிசிக்க விருப்பம் கொண்டார். இந்த விருப்பம் இறைவனின் திருவருளால் தோன்றியது. சீர்காழி தலத்திலே நிலையாக தங்கியிராமல், பல தலங்களுக்கும் சென்று திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்கள் பாட வேண்டும் என்று இறைவன் திருவுள்ளம் கொண்டார் போலும். மேதகை=மேன்மை பொருந்திய; வெளியே=வெளிப்பட்டு; போத முலை=சிவஞானம் கலந்த பாலினைச் சுரந்த முலை; முன் வணங்கி போற்றி=கோலக்கா தலத்திற்கு செல்வதற்கு முன்னர் வணங்கி; திருக்கோலக்கா தலம் சென்றது திருஞான சம்பந்தரின் முதல் தலயாத்திரை. ஒவ்வொரு தலயாத்திரை மேற்கொள்ளும் முன்னரும், பயணத்தினை முடித்துக் கொண்டு திரும்பி வந்த பின்னரும், சீர்காழி தலத்து இறைவனையும் இறைவியையும் வணங்குவது திருஞானசம்பந்தரின் பழக்கமாக இருந்து வந்ததை இந்த பாடல் நமக்கு உணர்த்துகின்றது.
காதலுடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்றிருந்த தங்கள்
தாதையாரையும் வெளியே தாங்கரிய மெய்ஞானம் தம் பால் வந்து
போத முலை சுரந்தளித்த புண்ணியத் தாயரையும் முன் வணங்கிப் போற்றி
மேதகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார்.
இவ்வாறு சீர்காழி தலத்து அண்ணலையும் பிராட்டியையும் திருஞானசம்பந்தர் தந்தையாகவும் தாயாகவும் கருதினார் என்று சேக்கிழார் கூறுவது நமக்கு திருஞானசம்பந்தர் வலிவலம் தலத்தின் மீது அருளிய தேவாரப் பாடலை (1.50.7) நினைவூட்டுகின்றது. சிவஞானிகள் பலராலும் ஆராயப்படும் தன்மையினை உடைய பெருமானை அன்புடன் சிந்திக்க தனது மனம் பெருவிருப்பம் கொள்கின்றது என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மேலும் இறைவனை சிந்திக்கவொட்டாமல் ஐந்து பொறிகளும் செய்யும் மாயத்தைக் குறித்து தான் அஞ்சுவதாகவும் இந்த பாடலில் கூறுகின்றார். ஐந்து பொறிகளும் செய்யும் மாயத்தில் சிக்காமல் தான் இருப்பதற்கு இறைவனின் அருளினை வேண்டும் பாடல்.
தாயும் நீயே தந்தையும் நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே
பல திருமுறைப் பாடல்களில் அடியார்களும் தேவர்களும் பெருமானை எந்தை என்று அழைத்து கொண்டாடினார்கள் என்று சொல்லப் படுகின்றது.அனைத்து உயிர்களையும் படைத்து, அனைத்து உயிர்களுடன் உடனாக இருந்து அந்த உயிர்களை இயக்கியும் காத்தும் வரும் பெருமானை எந்தை என்று அழைப்பது பொருத்தம் தானே. நால்வர் பெருமானார்கள் பல பாடல்களில் பெருமானை தனது தந்தை என்றும் எந்தை என்றும் பெருமானை குறிப்பிட்டு மகிழ்கின்றனர்., அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
குரங்கணில்முட்டம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.31.2) திருஞானசம்பந்தர்
இந்த தலத்து பெருமான், தனது தந்தையாகவும் தலைவனாகவும் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். தந்தை என்று பெருமானை பாசத்துடன் குறிப்பிட்டாலும், தான் பெருமானின் அடிமை என்பதையும் அவர் பணிவுடன் உணர்த்துகின்றார். இதே பதிகத்தின் மூன்றாவது பாடலிலும், பெருமானை எந்தை பிரான் என்று குறிப்பிடுகின்றார்.
விடைசேர் கொடி அண்ணல் விளங்கு உயர் மாடக்
கடை சேர் கருமென் குளத்து ஓங்கிய காட்டில்
குடையார் புனல் மல்கு குரங்கணில் முட்டம்
உடையான் எனை ஆளுடை எந்தை பிரானே
இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.32.4) திருஞானசம்பந்தர் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். வேத முதல்வன் என்ற தொடரினை அந்தம் அறியாத என்ற தொடருடன் கூட்டி பொருள் காண வேண்டும். அருங்கலம்=அரிய ஆபரணங்கள்; அந்தம் அறியாத பெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் வெந்த பொடி பூசியவன் என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தனக்கு முடிவு என்பது என்றும் இல்லை என்றும் தன்னைத் தவிர்த்து அனைத்து உயிர்களும் அனைத்துப் பொருட்களும் ஒரு நாள் அழியக்கூடியவை என்பதை உணர்த்தும் பொருட்டே, பெருமான் சாம்பலைத் தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டுள்ளார். பிரளய காலத்தில் இறந்துபடும் உடல்கள் எரிந்த சாம்பலையே பெருமான் பூசிக் கொள்வதால், அந்த சாம்பல் வெந்த பொடி என்று சொல்லப்படுன்றது. நிலையாமை தத்துவத்தை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்ளும் முகமாக, நாம் திருநீறு அணிந்து கொள்கின்றோம். நமது வாழ்க்கையும், இந்த உலகியல் பொருட்கள் தருகின்ற இன்பமும் நிலையற்றவை என்பதை உணர்ந்து, நாம் நாட்களை வீணாக கழிக்காமல், இறை சிந்தனையில் ஈடுபட்டு, நிலையான இன்பம் தருகின்ற முக்தி உலகம் செல்ல தகுதி படைத்தவர்களாக நம்மை மாற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே நாம் அணிகின்ற திருநீறு நமக்கு நினைவூட்டுகின்றது. அருங்கலன் என்று விலையுயர்ந்த சந்தனக் கட்டைகள், அகில் கட்டைகள்,மாணிக்கம் முத்து போன்ற அரிய பொருட்கள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. அந்தமற்றவன் பெருமான் என்ற குறிப்பு, பெருமான் ஆதியும் இல்லாதவன் என்பதையும் உணர்த்துகின்றது
அந்தம் அறியாத அருங்கலம் உந்திக்
கந்தம் கமழ் காவிரி கோலக் கரைமேல்
வெந்த பொடி பூசிய வேத முதல்வன்
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ
அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.33.2) திருஞானசம்பந்தர் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். முதிரா மதி என்ற தொடர் மூலம், பெருமான் தனது சடையினில் ஏற்றுக் கொண்டுள்ள ஒற்றைப்பிறைச் சந்திரனின் தனமையை, வளராதும் தேயாதும் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். பெருமானைச் சார்ந்த பொருட்களும் பெருமானைப் போன்று என்றும் அழியாத தன்மையுடன் விளங்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. கிடை=கூட்டம்; கிள்ளை=கிளி; வேதம் பயிலும் சிறுவர்கள் கூட்டமாக இருந்து வேதமந்திரங்களை சொல்லி பழக்கப்படுத்திக் கொள்வதையும், அந்த ஒலிகளை கேட்கும் கிளிகள் இசையுடன் வேத மந்திரங்களைச் சொல்லும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. வேத மந்திரங்களை பிறர் சொல்லக் கேட்ட கிளிகளும், அந்த மந்திரங்களை சொல்லும் ஆற்றல் பெற்றன என்று குறிப்பிட்டு, இடையறாது இந்த தலத்தினில் வேதம் ஓதப்பட்ட தன்மையை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். இவ்வாறு பல தலங்கள் அந்நாளில் திகழ்ந்தமையை பல பதிகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அரவம்=ஒலி; ஓத்து அரவம்=வேதங்கள் ஓதப்படுவதால் எழும் ஒலி.
சடையார் சதுரன் முதிரா மதி சூடி
விடையார் கொடி ஒன்றுடை எந்தை விமலன்
கிடையார் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை
அடையார் பொழில் அன்பில் ஆலந்துறையாரே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.34.3) எருதினை தனது வாகனமாக உடைய எந்தை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.துன்னும்=நெருக்கமாக இருக்கும், இங்கே பெருமான் இந்த தலத்தினில் எழுந்தருளிய நிலை என்று பொருள் கொள்ளவேண்டும். பெருமானின் அடியார்கள் துன்பங்களால் விளையும் அவல நிலையை அடையமாட்டார்கள் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். முந்தைய பிறவிகளில் ஈட்டிய வினைகளின் பயனை இன்பமாகவும் துன்பமாகவும் நுகர்ந்து, அந்த வினைகளை நாம் சிறிது சிறிதாக குறைத்துக் கொள்கின்றோம். எனவே அவற்றை நம்மால் தவிர்க்க இயலாது.நமது வாழ்வினில் தாங்கள் எதிர் கொள்ளும் இன்பங்களையும் துன்பங்களையும் ஒன்றாக கருதும் பக்குவத்தினை, அத்தகைய இன்ப துன்பங்களால் மனம் சலியாதும் மகிழாதும் ஒரே நிலையில் இருக்கும் தன்மையை, பெருமான் தனது அடியார்களுக்கு அளிப்பதால், துன்பங்களால் மனம் தளரும் அவல நிலையை பெருமானின் அடியார்கள் அடையமாட்டார்கள் என்று பொருள் கொள்ளவேண்டும்.
இடியார் குரல் ஏறுடை எந்தை
துடியார் இடையாளொடு துன்னும்
கடியார் பொழில் சூழ்தரு காழி
அடியார் அறியார் அவலம்மே
இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.76.11) திருஞானசம்பந்தர், பெருமான் உறைகின்ற தலத்தினை எந்தையார் உறைகின்ற இலம்பையங்கோட்டூர் என்று கூறுவதை நாம் காணலாம். சீர்காழி நகரின் அருகே அமைந்துள்ள கடற்கரையினை நறுமணம் கமழும் கடற்கரை என்று குறிப்பிடுகின்றார். கழி=உப்பங்கழிகள்; நந்துதல் என்றால் குறைத்தல் என்று பொருள்; தனது அடியார்களின் வினைகளை முற்றிலும் குறைத்து,ஒன்றுமில்லாமல் செய்து விடுவதால், பெருமானை நந்தி என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நால்வர் பெருமானார்கள் நால்வரும் பெருமானை நந்தி என்று பல அழைக்கின்றனர். திருமந்திரம் நூலில் மிகவும் அதிகமான இடங்களில் பெருமானை நந்தி என்று திருமூலர் அழைக்கின்றார். தமிழ் மொழி சிறந்து வளர்வதற்கு தேவாரப் பாடல்கள் மூலம் தொண்டு செய்தமையின், தன்னை தமிழ் மொழிக்கு இனிய துணைவனாக விளங்கியவன் என்று பெருமையுடன் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தேவாரப் பாடல்கள் முக்கிய பங்கு ஆற்றிய தன்மை உணர்த்தும் வண்ணம், ஔவையார் மூவர் தமிழ் என்றே குறிப்பிடுகின்றார். தீந்தமிழ் தேவாரப் பாடல்களைப் பாடும் அடியார்கள், மறுமையில் சில காலம் விண்ணுலகில் வாழ்ந்து சுகபோகங்களை அனுபவித்த பின்னர், வீடு பேற்றினையும் பெறுவார்கள் என்று இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது.
கந்தனை மலிகனை கடலொலி ஓதம் கானலம் கழிவளர் கழுமலம் என்னும்
நந்தியார் உறைபதி நான்மறை நாவன் நற்றமிழ்க்கு இன்துணை ஞானசம்பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவரோடும் வீடு பெற்று இம்மையில் வீடு எளிதாமே
அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.83.1) திருஞானசம்பந்தர், பெருமானை, விடையார் கொடி எந்தை என்று குறிப்பிடுகின்றார்.ஒவ்வொரு கலையாக தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையிலிருந்த சந்திரன், பெருமானைச் சரண் அடைந்ததால், தக்கனால் தான் அடைந்த சாபம் நீங்கப் பெற்று, அழிவிலிருந்து தப்பி இன்பம் அடைந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. அதனைப் போன்று நாமும், பெருமானின் திருவடிகளில் சரண் அடைவதன் மூலம், கொடிய வினைகளிலிருந்து விடுபட்டு இன்பம் அடையலாம் என்று உணர்த்தப் படுகின்றது.
அடையார் புரம் மூன்றும் அனல் வாய் விழ எய்து
மடையார் புனல் அம்பர் மாகாளம் மேய
விடையர் கொடி எந்தை வெள்ளைப் பிறை சூடும்
சடையான் கழல் ஏத்தச் சாரா வினை தானே
சில பாடல்களில் பெருமானை, நம் அனைவர்க்கும் தந்தையாக விளங்குபவன் என்ற பொருள்பட, எந்தை என்றும் திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். நமது தந்தையாகிய பெருமானின் கழல்களை பணிந்து போற்றும் அடியார்களை துன்பம் வந்து அடையாது என்று அம்பர்மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.83.4) கூறுகின்றார். கொந்தண் பொழில்=கொத்து கொத்தாக பூக்கள் நிறைவாக பூக்கும் அழகிய சோலைகள்;கோலவரிவண்டு=கோடுகள் நிறைந்த அழகிய வண்டுகள்; மந்தம் மலி=தாழ்ந்த குரலில் உள்ள ரீங்காரம் நிறைந்த; கமழ் புன்சடை=இயற்கையாக நறுமணம் கமழும் அழகாக சுருண்ட சடை;
கொந்தண் பொழிற் சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலி அம்பர் மாகாளம் மேய
கந்தங் கமழ் கொன்றை கமழ் புன்சடை வைத்த
எந்தை கழல் ஏத்த இடர் வந்தடையாவே
நல்லம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.85.5) திருஞானசம்பந்தர், தனது திருவடிகளைத் தொழும் அடியார்களை ஆட்கொண்டு பெருமான் அருள் புரிவான் என்று கூறுகின்றார். துணிவார்=துணிந்த மனத்தவர்களாக; அப்பர் மற்றும் திருஞானசம்பந்தரின் காலத்தில், சமணம் மற்றும் புத்த சமயங்களின் ஆதிக்கம் மிகவும் அதிகமாக இருந்தமையால், மக்கள், பலரும் காணும் வண்ணம் பெருமானைத் தொழுவதற்கும் அச்சம் அடைந்தனர் போலும்.அதனால் தான், துணிவுடன் பெருமானை வழிபட்ட அடியார்கள் என்று கூறினார் போலும். நணியான்=அடியார்களை வந்தடைந்து அருள் புரியும் சிவபெருமான்;
மணியார் திகழ் கண்டம் உடையான் மலர் மல்கு
பிணிவார் சடை எந்தை பெருமான் கழல் பேணி
துணிவார் மலர் கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமை ஆள்வான் நல்ல நகரானே
திருவாலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.94.4) திருஞானசம்பந்தர், ஆலவாய் தலத்தினை எந்தை வாழ்கின்ற ஆலவாய் என்ற பொருள்பட, எந்தை ஆலவாய் என்று கூறுகின்றார். பந்த பாசங்களிலிருந்து இயற்கையாகவே விடுதலை பெற்றுள்ள பெருமானை பந்தியார் என்று குறிப்பிடுகின்றார். உலகப் பொருட்கள் மற்றும் உயிர்கள் மீது நாம் கொண்டுள்ள பாசம், மற்றும் அந்த பாசத்தினால் நாம் கட்டுண்டு இருக்கும் நிலையிலிருந்தும் விடுபட வேண்டும் என்று விரும்பினால், பாசங்களிலிருந்து விடுதலை அடைந்த பெருமானைத் தானே நாடவேண்டும். எனவே தான் பெருமானை சிந்தனை செய்து பயனடையுமாறு திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுறை கூறுகின்றார். பந்தியார்=இயல்பாகவே பாசங்களிலிருந்து விடுபட்ட பெருமான்;
அந்தமில் புகழ்
எந்தை ஆலவாய்
பந்தியார் கழல்
சிந்தை செய்மினே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.95.5) இந்த பாடலில் எமது தந்தை என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுன்றார். பிராட்டியின் வழியாக சிவஞானம் கலந்த ஞானப்பால் அளித்து மூன்று வயதிலிருந்தே தேவாரப் பதிகங்கள் பாடுமாறு அருள் புரிந்த பெருமானையும் பிராட்டியையும் தனது தந்தையாகவும் தாயாகவும் கருதி திருஞானசம்பந்தர் வளர்ந்தார் என்பதை நாம் பெரிய புராணத்தின் திருஞானசம்பந்தர் புராணத்திலிருந்து அறிந்து கொள்கின்றோம். தோடுடைய செவியன் என்றும் நறவநிறை வண்டு என்றும் தொடங்கும் பதிகங்களை பாடிய தனக்கு ஞானப்பால் அருளிய அன்னையையும், அதற்கு காரணமாக இருந்த தந்தையரையும் நினைத்தவாறே அன்றிரவு உறங்கிய திருஞானசம்பந்தர் அடுத்த நாள் பொழுது விடிந்ததும் திருக்கோயிலுக்கு சென்று தனது தந்தையும் தாயும் ஆகிய பெருமானையும் பிராட்டியையும் வணங்கினார் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பந்த விடை=கட்டுத் தறியில் கட்டப்பட்டு பாதுகாக்கப்படும் எருது; பெருமானின் வாகனமாகிய இடபம் கட்டப்படுவதில்லை; எனினும் எருதுகளின் பொதுத்தன்மை கருதி பந்த விடை என்று இங்கே கூறுகின்றார் என்ற விளக்கம் சிலரால் அளிக்கப்படுகின்றது.பந்த விடை என்ற தொடருக்கு, பெருமானின் வாகனமாகிய இடபம் தானே ஏற்படுத்திக் கொண்ட பந்தம் என்று பொருள் கொண்டு, வேறோர் சுவையான விளக்கமும் அளிக்கப்படுகின்றது. தருமதேவதை, தானே விரும்பி பெருமானின் வாகனமாக மாறியதை நாம் அறிவோம். இவ்வாறு பெருமானின் சேவையில் தன்னை பிணைத்துக் கொண்ட இடபம் என்பதை உணர்த்தும் வண்ணம், பந்த விடை என்று கூறுகின்றார் என்பதே அந்த சுவையான விளக்கம். மனம் புத்தி அகங்காரம் சித்தம் என்பன நான்கு அந்தக்கரணங்கள். இந்த நான்கு அந்தக்கரணங்கள் தாம், நம்மை செயல்படுத்துகின்றன. மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐந்து அறிவுக் கருவிகளும், தாம் அறிகின்ற பொருளை அறியமுடியாது. தான் பார்க்கும் பொருள் யாது என்பதை கண்ணால் உணர முடியாது; ஏன் அந்த பொருளைத் தான் பார்ப்பதையே கண்ணால் உணர முடியாது. கண் தான் காணும் பொருளின் தன்மையை செய்தியாக மனதினுக்கு அனுப்புகின்றது.அது போன்றே மற்ற புலன்களும் தங்களது செய்கை மூலம் அந்தந்த பொருளின் தன்மைகளை மனதினுக்கு அனுப்புகின்றன. மனம் தான் புலன்கள் மூலம் பற்றிய செய்திகளை ஆதாரமாகக் கொண்டு, புத்திக்கு அனுப்ப, புத்தி அந்த செய்திகளின் அடிப்படையை உணர்ந்து தான் அறிந்துகொண்ட பொருளினால் விளையும் நன்மை தீமைகளை ஆராய்கின்றது. இவ்வாறு செய்யப்படும் ஆராய்ச்சியின் தன்மை, அந்தந்த உயிர்களின் புத்தியின் தன்மையின் அடிப்படையில் நடைபெறுவதால், அந்த ஆராய்ச்சியின் முடிவும் உயிருக்கு உயிர் மாறுபடும் தன்மையில் உள்ளது. அகங்காரம், மனம் ஆராய்ந்து அறிந்து கொண்ட நன்மை தீமைகளை ஆராய்ந்து தனக்குத் தோன்றிய வண்ணம் புலன்கள் மூலம் அறிந்து கொண்ட பொருளை உயிர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை தீர்மானிக்கின்றது. அந்த தீர்மானத்தை சித்தம் தன்னிடம் தேக்கிக் கொண்டு, உயிருக்கு வேண்டிய சமயத்தில் நினைவூட்டுகின்றது. ஆனால் இந்த செயல்கள் அனைத்தும், உடனுக்குடன், அறிவுக் கருவிகள் தாம் அறிகின்ற பொருட்கள் பற்றிய செய்தியை மனதினுக்கு அனுப்பும் போதே நடைபெறுவதால்,நாம் நினைத்துப் பார்க்கவும் முடியாத வேகத்தில் நடைபெறுவதால், நாம் அந்தந்த புலன்கள் செயல்படுவதாக கருதுகின்றோம். மேற்கண்ட விவரங்களை சற்று ஆராய்ந்தால், ஒரு பொருளினை எவ்வாறு நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில் புத்தி மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது என்பதை நாம் உணரலாம். நமது சிந்தனைக்கு எட்டிய பொருளின் நன்மை தீமைகளை ஆராய்ந்து உயிர் முடிவெடுக்க உதவுவது புத்தியே. எனவே இந்த புத்தி,விரிவடைய வேண்டும், நல்ல கோணத்தில் எதனையும் ஆராயவேண்டும். இந்த கருத்தினை உள்ளடக்கியே, மருதவாணரை சிந்தனை செய்யும் உயிர்களின் புத்தி நல்ல தன்மையில் விளங்கும் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். நமது சிந்தனையில் உயிரினுக்கு உண்மையாக உதவும் எண்ணங்கள் இருப்பின், அந்த எண்ணங்களை ஆராய்ந்து செயல்படுத்தும் புத்தியும் உயிரினுக்கு உதவும் வகையில் தானே செயல்படும். எனவே தான் மருதரை சிந்தை செய்யும் உயிர்களின் புத்தி நல்ல தன்மையில் இருக்கும் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாடல்களில் குறிப்பிடப்பட்ட வண்ணம் பெருமானை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைய வேண்டும் என்று அறிவுரை கூறும் திருஞானசம்பந்தர், இறைவனை வழிபடுவதால் நாம் பெறவிருக்கும் நன்மையை இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
பந்த விடையேறும்
எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர்
புந்தி நல்லரே
அன்னியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.96.7) திருஞானசம்பந்தர், அன்னியூர் இறைவனை எந்தையே என்று பாவித்து வணங்கினால்,நம்மை பீடித்துள்ள பாசக்கட்டுகள் விலகிவிடும் என்று கூறுகின்றார். பந்தம்=மல மாயையால் விளைந்த பாசக்கட்டு; உலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் நிலையானவை என்று தவறாக நினைத்து அவற்றின் மீது உயிர்கள் வைக்கும் பாசக்கட்டு. வேதம் ஓதுதலும் வேதம் ஓதுவித்தலும் அந்தணர்களின் தொழிலாக பண்டைய நாளில் கருதப்பட்டு வந்தது. முதன் முதலாக வேதங்களை ஓதியவனும், வேதங்களுக்கு ஐயம் திரிபற விளக்கம் உரைத்தவனும் ஆகிய பெருமானை அந்தணாளர் தம் எந்தை என்று அழைப்பது பொருத்தம் தானே.
அந்தணாளர் தம்
தந்தை அன்னியூர்
எந்தையே என
பந்தம் நீங்குமே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.110.10) திருஞானசம்பந்தர் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார்.சிந்தையில்=சிந்தை இல்லாத; சிந்தனை அற்ற திறமை இல்லாத; பெருமானின் பண்புகளை சிந்தித்து சரியாக புரிந்து கொள்ளாமல், உண்மையை மறைத்து பெருமானை பழிக்கும் விதமாக கூறி வந்தமையால் சிந்திக்கும் திறன் அற்றவர்கள் சமணர்கள் என்று கூறினார் போலும். புந்தியில் உரை=புத்தி அற்ற சொற்கள்; ஓத்து=வேதம்; அரவம்=திருவிழாக்களால் எழுகின்ற ஆரவாரம் மிகுந்த ஓசை
சிந்தையில் சமணொடு தேரர் சொன்ன
புந்தியில் உரையவை பொருள் கொளாதே
அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா
எந்தை தன் வளநகர் இடைமருதே
நமது தந்தையாகிய இறைவனின் திருப்பாதங்களைச் சென்றடைந்து, அழிவற்ற இன்பத்தில் நாம் என்றும் ஆழ்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினால்,சந்தங்களுடன் பொருந்திய தேவாரப் பாடல்களைப் பாடி இறைவனைப் புகழவேண்டும் என்று திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.114.11) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். செந்திசை=செம்மையான சிறந்த இசை; அந்தமில்=காலத்தால் அழியாமல் இருக்கும்;
அந்தமில் ஞானசம்பந்தன் சொன்ன
செந்திசை பாடல் செய் மாற்பேற்றைச்
சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்தவல்லார்
எந்தை தன் கழலடி எய்துவரே
சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (1.125.11) திருஞானசம்பந்தர் எந்தை என்று பெருமானை குறிப்பிட்டு, எந்தையாகிய பெருமானை தான் புகழ்ந்து பாடிய பதிகத்தினை முறையாக ஓதும் அடியார்கள் தங்களது வினைகள் முற்றிலும் நீங்கப்பெற்று உயர்ந்த சிவகதியை அடைவார்கள் என்று கூறுகின்றார். புந்தியர்=அறிவினில் சிறந்தவர்கள்; வினை சிந்தி= பிணைந்துள்ள வினைகள் கழன்று விலக;
புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்
பந்தன தமிழ் கொடு சிவபுர நகர் உறை
எந்தையை உரை செய்த இசை மொழிபவர் வினை
சிந்தி முன் உற உயர் கதி பெறுவர்களே
தனது தந்தையாகிய பெருமானுக்கு ஏற்ற இடமாக விளங்குவது அனேகதங்காவதம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடலை (2.05.4) நாம் இங்கே காண்போம். தந்தத் திந்த தடம் என்ற தொடர், மலைச்சாரலில் அருவி நீர் விழுகின்ற போது எழுகின்ற ஒசைக்குறிப்பினை உணர்த்துகின்றது. பெருமானின் தன்மையை எவராலும் அளக்க முடியாது என்பதையும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
தந்தத் திந்தத் தடம் என்று அருவித் திரள் பாய்ந்து போய்ச்
சிந்த வெந்த கதிரோனொடு மாசறு திங்களார்
அந்தமில்ல அளவில்லவன் அனேகதங்காவதம்
எந்தை வெந்த பொடி நீறு அணிவார்க்கு இடமாவதே
திருமழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.09.07) திருஞானசம்பந்தர் பெருமானை எந்தையான் என்று குறிப்பிடுகின்றார். சந்தம்=அழகு;வார்=நீண்ட; மைந்தன்=வலிமை வாய்ந்தவன்; வார் பொழில்=நீண்ட சோலைகள்; இந்த பாடலிலும் பெருமானை மருந்து என்று குறிப்பிட்டு, இறைவனை வழிபடுவோரின் வினைகள் தேய்ந்து அழிந்து விடும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வினையிலாத நிலை தானே, உயிர்களை முக்தி உலகுக்கு அழைத்துச் செல்லும் என்பதால், வினைகளைத் தீர்க்கும் மருத்துவனாக பெருமான் செயல்பட்டு உயிர்களுக்கு முக்தி நிலை அளிப்பதை, இதே பதிகத்தின் நான்காவது பாடலில் உணர்த்தியது போன்று திருஞானசம்பந்தர் இந்த பாடலிலும் உணர்த்துகின்றார். இமையாத மூன்று கண்களை உடைய பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் இரண்டு கண்கள் எப்போதும் திறந்தே இருப்பதால் சூரிய சந்திரர்கள் ஒளியுடன் பிரகாசிக்க உலகமும் அதனால் நன்மை அடைகின்றது. மூன்றாவது கண் திறந்த போது, அதனின்று எழும் நெருப்புப் பொறிகளின் வெப்பத்தை உலகம் தாங்க முடியாது என்பதால் நெற்றிக்கண் எப்போதும் மூடியவண்ணம் உள்ளது. இவ்வாறு தங்களது நிலையிலிருந்து மாறாமல் இமைக்காமல் இந்த மூன்று கண்களும் உள்ள நிலை இமையா முக்கண் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. இமையாத கண்கள் இமைத்து நிலை மாறிய போது விபரீதங்கள் ஏற்பட்டதை நாம் புராணங்களிலிருந்து அறிகின்றோம்,. எப்போதும் மூடியிருக்கும் நெற்றிக் கண் திறந்ததால், மன்மதன் உடல் எரிந்ததை நாம் அனைவரும் அறிவோம்.சிவபிரானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்கள் என்று சொல்லப்படும். ஒருமுறை விளையாட்டாக, பார்வதி தேவி, சிவபிரானின் கண்களை மூட,அனைத்து உலகங்களும் இருளில் மூழ்கின என்பதை திருமுறைப் பாடல்களும் உணர்த்துகின்றன.
சந்த வார் குழலாள் உமை தன்னொரு கூறுடை
எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம் பிரான்
மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினைச்
சிந்தியா எழுவார் வினையாயின தேயுமே
திருமங்கலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (2.10.11) திருமங்கலக்குடி தலத்தில் நிலையாக வீற்றிருக்கும் எனது தந்தை என்று குறிப்பிடுகின்றார். மந்தம்=தென்றல்; காவலன்=தலைவன்; முந்தி ஏத்துதல்=முதன்மை கொடுத்து பாடுதல்; தேவாரப் பாடல்கள், நம்மை இறைவனின் திருவடிகளில் சேர்த்துவிடும் வல்லமை கொண்டவை என்று குறிப்பிட்டு, தேவாரப் பாடல்களை நாம் பாடவேண்டிய அவசியத்தை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
மந்தமாம் பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை எழிலார் பொழில் காழியர் காவலன்
சிந்தை செய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதலாவரே
திருக்காறாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.15.4) திருஞானசம்பந்தர், தந்தையின் தன்மைகள் உடையவன் பெருமான் என்று கூறுகின்றார். உயிர்களுக்கு, அவர்களது தாயும் தந்தையும் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுபவன் இறைவன் என்று இங்கே கூறுகின்றார்.அணியான்=அருகில் இருப்பவன்; சேயான்=தொலைவில் இருப்பவன்; தன் பால் அன்பு செலுத்தும் அடியார்களுக்கு மிகவும் அருகிலிருந்து உதவி புரியும் இறைவன், தன் பால் அன்பு கொள்ளாதவர்களுக்கு எட்ட நிற்கின்றான் என்றும் கூறுகின்றார். புகழ் வாய்ந்த திருக்காறாயில் தலத்தினில் பொருந்தி நிலையாக உறையும் இறைவனே என்று போற்றி வழிபடும் அடியார்களின் மேல்வினைகளைத் தீர்ப்பதன் மூலம், அத்தகைய அடியார்களை பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுவித்து முக்தி நிலை அளிப்பவன் பெருமான் என்பதையும் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள்
ஆயானே ஆய நல்லன்பர்க்கு அணியானே
சேயானே சீர் திகழும் திருக்காறாயில்
மேயானே என்பவர் மேல்வினை மேவாவே
நெல்லிக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.19.7) திருஞானசம்பந்தர் எந்தைப் பெம்மான் என்று இறைவனை அழைக்கின்றார்.நிலாவிய=நிலையாக பொருந்தி உறையும்; இறை= சிறிதும்; இறவா=அழிவற்ற: சென்னி=பொதுவாக தலை, இங்கே சடை என்று பொருள் கொள்வது சிறப்பு;பெம்மான்=பெருமைக்கு உரிய ஆண்மகன்; ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் இருந்த சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்த பெருமையும், என்றும் நிலையாக நிற்கும் கயிலாய மலையினை உடைய பெருமையும், கங்கை நதியினை ஒளித்து மறைத்த பெருமையும் உடைய பெருமான் என்று கூறுகின்றார்.
பிறை தான் சடை சேர்த்திய எந்தை பெம்மான்
இறை தான் இறவாக் கயிலைம் மலையான்
மறை தான் புனல் ஒண் மதிமல்கு சென்னி
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே
கருவூர் ஆனிலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.28.11) திருஞானசம்பந்தர் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். கந்தம்=நறுமணம்;பொழில்=சோலை; இந்த பதிகத்தினை முறையாக பாடும் அடியார்கள், தங்களது மனக் கவலை தீரப் பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுவது,நமக்கு தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்று திருவள்ளுவர் கூறுவதை நினைவூட்டுகின்றது. இதே பதிகத்தின் கடைப் பாடலில், எந்தையாகிய பெருமானைப் புகழ்ந்து பாடிய பாடல்களை சொல்லும் வல்லமை பெற்ற அடியார்களின் சிந்தை தூய்மையாக விளங்கும் என்றும் கூறுகின்றார்.
கந்தமார் பொழில் காழி ஞானசம்
பந்தன் சேர் கருவூருள் ஆனிலை
எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தையில் துயர் ஆய தீர்வரே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.32.2) திருஞானசம்பந்தர், எந்தையின் இடம் திருவையாறு என்று குறிப்பிடுகின்றார்.கந்து=பற்றுக்கோடு; அமர=பொருந்து; அப்பர் பெருமான் திருவையாறு அகலாத செம்பொற்சோதி என்று, அனைத்து சோதிகளிலும் உயர்ந்த சோதியாக பெருமான் விளங்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில், பெருமானாகிய சோதி எவ்வாறு மற்ற விளக்குகளினும் உயர்ந்தது என்பதை திருஞானசம்பந்தர் எடுத்துரைக்கின்றார். புகையினை வெளியிடாத சோதி என்றும் தூண்டுதல் தேவைப்படாத சோதி என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.உந்தல்=தூண்டுதல்; மின் விளக்கு உட்பட நாம் உலகினில் காணும் அனைத்து விளக்குகளுக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகின்றது. மின் விளக்காக இருந்தால், நாம் ஒரு விசை (ச்விட்ச்) மூலம் இயக்குகின்றோம். மற்ற விளக்குகளை வேறோர் நெருப்புச் சுடர் கொண்டு ஏற்றுகின்றோம். மேலும் மின்சாரம்,திரி, எண்ணெய், மெழுகு முதலியன இந்த விளக்குகள் ஒளிவிட்டு பிரகாசிக்க தேவைப் படுகின்றன. அந்த சாதனங்கள் துண்டிக்கப்ப்ட்டால், விளக்குகள் அணைந்து விடுகின்றன. அனைத்து விளக்குகளும், ஒளியினை வெளிப்படுத்தும் போது, வெப்பம் மற்றும் புகையை வெளியிடுகின்றன. ஆனால்,பெருமானாகிய சோதி, எந்த விதமான தூண்டுதலும் தேவைப் படாமல், தானே சுடர் விட்டெரிகின்றது; மேலும் வெப்பமோ புகையோ வெளிப்படுவதில்லை;எனவே, பெருமானாகிய சோதி அனைத்து சோதிகளிலும் உயர்ந்தது என்று இந்த பாடல் மூலம், திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். சந்த மலியும் தரு=அழகுடன் பொலியும் மரங்கள்; வளி=காற்று; நந்து=நந்தவனம்; வண் திருவையாறு= வள்ளல் தன்மை உடையவர்கள் வாழும் திருவையாறு.
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கேர்
இந்திரன் உணர்ந்து பணி யெந்தை இடம் எங்கும்
சந்தமலியும் தரு மிடைந்த பொழில் சார
வந்த வளி நந்தணவு வண் திருவையாறே
இரும்பூளை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.36.11) திருஞானசம்பந்தர், எந்தையாகிய பெருமானின் இருப்பிடம் இரும்பூளை என்று குறிப்பிடுகின்றார். ஈசன்=ஈசனை என்றும் ஈசன் என்று இருவகையாக பொருள் கொள்ளலாம். ஈசனை குறித்து திருஞானசம்பந்தர் செப்பிய மொழிகள்;தனதுரையாக ஈசன் ஞானசம்பந்தர் மூலம் செப்பிய உரைகள் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனின் அருள் தன்மைகளே இந்த பத்து பாடல்களிலும் உணர்த்தப் பெறுவதால், அதனை உணர்ந்து கொள்வது ஈசனை வழிபாடு செய்வதன் முதல் படி என்பதால், இந்த பாடல்களை ஓதும் அடியார்கள் உய்வினை அடைவார்கள் என்று குறிப்பிடுகின்றார். சந்தம் என்பது இங்கே சந்தத்துடன் ஓதப்படும் வேதங்களை குறிக்கும் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். சந்தம் என்பதற்கு ஓசைநயம் என்று பொருள் கொள்ளலாம். சந்தக்கவிக்கு அருணகிரியார் என்று சொல்லும் வண்ணம், சந்தம் நிறைந்த திருப்புகழ் பாடல்களை பாடி புகழ்பெற்ற அருணகிரியார், திருஞானசம்பந்தரை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர் ஆவார். முருகப் பெருமானின் அவதாரம் என்று பல பாடல்களில் திருஞானசம்பந்தரை குறிப்பிடும் அருணகிரியார், திருஞானசம்பந்தர் போன்று தனக்கு சந்தக்கவி பாடும் ஆற்றல் வாய்க்க வேண்டும் என்று பல திருப்புகழ் பாடல்கள் மூலம் கந்தப்பெருமானிடம் வேண்டுகின்றார். எனவே இந்த பின்னணியில் நோக்கும் போது, சந்தம் என்ற சொல்லுக்கு சந்தத்துடன் இணைந்த தேவாரப் பாடல்கள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. சந்தம் பயில் என்ற சொல்லினை சண்பை நகருடன் இணைத்து, வேதங்கள் பயிலும் சீர்காழி நகரத்து மக்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. செம்மை என்பதற்கு மனதினைச் செம்மைப் படுத்தி நன்னெறியில் அழைத்துச் செல்லும் பாடல்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
எந்தை இரும்பூளை இடம் கொண்ட ஈசன்
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந் தண்டமிழ் செப்பிய பத்து இவை வல்லார்
பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே
எந்தை என்று தனது தந்தையாக பெருமானை, பெருமையுடன் பல பாடல்களில் குறிப்பிட்ட, திருஞானசம்பந்தர், சூரியன் முதலாக எண்ணற்ற தேவர்கள் பெருமானை எந்தை என்று குறிப்பிட்டு, இறைஞ்சுவதாக முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.64.2) குறிப்பிடுகின்றார். குரங்கின் கையில் மலரோ மலர் மாலையோ கிடைத்தால், முதலில் குரங்கு அந்த மலரினையும் மாலையையும் பிய்த்து எரிவதை தான் நாம் காண்கின்றோம். இது இயற்கை. அதனால் தான் குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்ற பழமொழியும் எழுந்தது. ஆனால் திருஞானசம்பந்தர் கண்ட முதுகுன்றத்து குரங்குகள் சற்று வித்தியாசமானவை. அந்த குரங்குகள் தினமும் அடியார்கள் பூக்களை சுமந்து கொண்டு இறைவனின் சன்னதி சென்றடைந்து இறைவனின் திருமேனியின் மீது பூக்கள் தூவி வழிபடுவதை இந்த தலத்து குரங்குகளும் காண்கின்றன. மனிதன் செய்யும் பல செயல்களை உற்று கவனிக்கும் குரங்குகள்,தாங்களும் அந்த செயல்களை செய்ய முயற்சி செய்வதை நாம் கண்டிருக்கின்றோம். அத்தகைய இயல்பு கொண்ட குரங்குகள், முதுகுன்றத்து அடியார்கள் மலர்கள் கொண்டு இறைவனை வழிபடும் மனிதர்களைக் கண்டு, தாங்களும் மலர்கள் கொணர்ந்து இறைவனின் திருமேனி மேல் தூவியதை தான் கண்டதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முந்திச் சென்று குரங்குகள் தொழுது வணங்கியதாக சம்பந்தர் கூறுவது, அடியார்கள் செல்வதற்கு முன்னமே தினமும் குரங்குகள் திருக்கோயிலுக்கு சென்றதை உணர்த்துகின்றது போலும். இந்த குறிப்பு நமக்கு குரக்குக்கா தலத்தில் இன்றும் நடைபெறும் நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. சித்திரை வைகாசி மாதங்களில் இன்றும் குரங்குகள் கூட்டம் கூட்டமாக மலர்களுடன் வந்து குரக்குக்கா தலத்து இறைவனை வழிபடுவதை நாம் காணலாம்.
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வானை
மந்தி ஏறி இன மா மலர்கள் பல கொண்டு
முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.79.9) எந்தை உறைகின்ற திருவாரூர் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர், இந்த பிறவியில் நமக்கு தாய் தந்தையாக விளங்குவோர், நம்முடன் உடன் பிறந்தோர், மனைவி, நமது மகன் மகள் ஆகியோர், நாம் அவர்கள் மீது வைத்துள்ள பற்று/பாசம்/அன்பு மேன்மேலும் பெருகும் வண்ணம் செயல்படுகின்றனரே தவிர, நமது உயிர் உய்வினை அடையும் தன்மைக்கு எந்த விதத்திலும் உதவி செய்வதில்லை. மேலும் இத்தகையோருடன் நாம் கொண்டுள்ள இந்த உறவுப் பிணைப்பு, இந்த பிறவிக்கு மட்டுமே உரித்தானது.நாம் இதுவரை எடுத்துள்ள பல பிறவிகளில் இந்த உறவு இருந்ததில்லை, மேலும் இனியும் நாம் எடுக்க இருக்கும் பிறவிகளுக்கும் இந்த உறவு தொடரப் போவதில்லை. இந்த பிறவியிலும் இந்த உறவுகள் நமது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இருப்பதில்லை. எனவே இந்த உறவுகள் நிலையற்றவை. ஆனால் நமது தந்தையாக அனைத்துப் பிறவிகளிலும் இருந்து நம்மை காப்பற்றும் பெருமான், நமக்கு நிலையான உறவினராக உள்ளார் என்பதை உணர்த்தி,திருஞானசம்பந்தர், நம்முடன் நிலையான உறவு கொண்டுள்ள அந்த இறைவனைத் தொழுது, நாம் ஆழ்ந்துள்ள பந்தம் பாசம் எனும் மயக்கத்தைத் தீர்த்துக் கொண்டு, வாழ்வினில் உய்வினை அடையுமாறு அறிவுரை கூறுகின்றார். மேலும் அச்சம் ஏதுமின்றி வாழ்க்கையை நாம் எதிர்கொள்வதற்கும் பெருமானை வழிபடுவது நமக்கு உதவும் என்றும் கூறுகின்றார்.
தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கில்லை எனப் பற்றினாயே
வெந்த நீறாடி ஆதியார் சோதியார் வேத கீதர்
எந்தை ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே
எந்தை என்று குறிப்பிட்டு பெருமானின் ஆற்றலை உணர்த்தும் திருஞானசம்பந்தர், அந்த பெருமானை சரணடைந்தால் நமது வாழ்வினில் துன்பங்கள் ஏதும் இருக்காது என்று உறுதியாக கூறும் பாடல் தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (2.82.9). திண்=மிகவும் அதிகமான; திறல்=வலிமை;இரும்=பெரிய; களிறு=ஆண் யானை; செந்தினம்=ஒரு வகை பண், செந்து என்று குறிப்பிடப்படுகின்றது.; அறுபதம்=ஆறு கால்களைக் கொண்ட வண்டுகள்;
முந்திக் கண்ணனும் நான்முகனும் அவர் காணா
எந்தை திண் திறல் இருங் களிறு உரித்த எம் பெருமான்
செந்தினத்து இசை அறுபதம் முரல் திருத்தேவூர்
அந்தி வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
சுடுகாட்டினை இடமாகக் கொண்டு நடனமாடினாலும், பெருமானே தனது தந்தை என்று நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.84.5)திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கனல்=நெருப்பு; வீடு உடன் எய்துவார்கள்=பேரின்பம் தரும் முக்தி வீட்டினை இந்த பிறவி முடிந்தவுடனே அடையும் தகுதி படைத்தவர்கள்; வெறிநீர்=நறுமணம் உடைய நீர்; விதி=முறை; தினமும் பெருமானை நோக்கி செய்யப்படும் பூஜை முதலிய வழிபாடுகள் முடிந்த பின்னர்,மலர்கள் தோய்ந்து இருக்கும் நீருடன் சிறிது பாலையும் சேர்த்து, பூமியில் தெளித்து இதமர்க்யம் என்று மூன்று முறை சொல்லி முடிப்பார்கள். இந்த பழக்கத்தையே, விதி என்று வெறிநீர் என்று விரலால் தெளிப்ப என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது.அந்தணர் குலத்தில் அவதரித்த மூன்று வயதுக் குழந்தை, தனது தந்தையார் பூஜை செய்யும் முறையினை உற்று கவனித்து, தான் உணர்ந்த செய்திகளை இந்த பாடலில் கூறும் நயத்தை நாம் உணரலாம். தெளிந்த நீர்நிலைகளில் அந்தணர்கள் காலை, நண்பகல் மற்றும் மாலை நேரங்களில் சந்தியா வந்தனம் செய்வது வழக்கம். அத்தகைய நீர்நிலைகளில் மலர்ந்துள்ள மலர்களின் நறுமணம் நீருடன் கலந்து இருப்பதை வெறிநீர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றாரோ என்றும் தோன்றுகின்றது. மேலும் இந்த சந்தியாவனத்தின் ஒரு பகுதியாக சூரியனுக்கு அர்க்கியம் வழங்கி சூரியன் மூலமாக அனைத்து தேவர்களுக்கும் தினமும் அர்க்கியம் வழங்கும் முறையில், இரண்டு கைகளையும் இணைத்து நீரினை முகந்து, விரல்களின் நுனியால் அந்த நீரினை தெளிப்பது வழக்கம். எனவே இவ்வாறு செய்யப்படும் சந்தியாவந்தனம் இங்கே குறிப்பிடப்படுகின்றது என்ற விளக்கமும் பொருத்தம் ஆனதே. இந்த பாடலில் தோடும் குழையும் அணிந்த கோலத்தில், மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மையும் குறிப்பிடப்படுகின்றது. இந்த பதிகத்தின் ஆறாவது பாடலிலும், பெருமானை எந்தை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
தோடொரு காதனாகி ஓர் காது இலங்கு சுரி சங்கு நின்று புரளக்
காடு இடமாக நின்று கனலாடும் எந்தை இடமாய காதல் நகர் தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால்
நாடு உடனாடு செம்மை ஒலி வெள்ளம் ஆகும் நனிபள்ளி போலும் நமர்காள்
பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த கொடிய ஆலகால விடத்தினை உட்கொண்டு, அனைத்து உலகத்தவரையும் காப்பாற்றிய பெருமானை மிகவும் பொருத்தமாக, எந்தை என்று, கோளறு திருப்பதிகத்தின் பாடலில் (2.85.5), திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். துஞ்சிருள் வன்னி என்று வன்னி இலைகள் தங்களின் ஊடே வெளிச்சம் புகாத வண்ணம் நெருக்கமாக அடர்ந்து இருக்கும் நிலையினை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். சிவபெருமான், அடியார்களின் உள்ளத்தின் உள்ளே இருப்பதால், கொடிய அரக்கர்களும், கடுமையான இயற்கை உபாதைகளுக்கு காரணமாக விளங்கும் இடியும் மின்னலும், செருக்கு கொண்டு பலரையும் துன்புறுத்தும் பூதங்களும், அத்தைகைய அடியார்களைக் கண்டு அச்சம் கொண்டு,அவர்களுக்கு நல்ல செயல்களையே புரியும் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உறுதி அளிக்கின்றார்.
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிக் கொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (2.86.11) திருஞானசம்பந்தர் எந்தைப் பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.பொருபுனல்=கரையினில் மோதுகின்ற அலைகள் கொண்ட நீர்நிலைகள்; இந்த பாடலின் கடை அடியில் செம்மை என்ற சொல் இரண்டு முறை வருவதை நாம் உணரலாம். இந்த பதிகத்தினை ஓதும் அடியார்கள் இம்மை மற்றும் மறுமையிலும் சிறந்து விளங்கும் தன்மை இவ்வாறு குறிப்பிடப் படுகின்றது.செற்ற=வெற்றி கொண்ட: தீயினைப் போன்று சிவந்த வண்ணத்தை உடையவனும் எமது தந்தையும் ஆகிய பெருமானை மனதினில் தியானித்து நினையாத திரிபுரத்து அரக்கர்களின் நகரங்களை அன்று நெருப்பினில் எரிந்து அழியும் வண்ணம் அழித்து வெற்றி கொண்ட பெருமான் பொருந்தி உறைகின்ற செல்வம் வாய்க்கப் பெற்ற திருநாரையூர் தலத்தினை தொழுது வணங்கிய வண்ணம், கரையினில் மோதும் அலைகள் கொண்ட நீர்நிலைகளால் சூழப்பட்ட சீர்காழி நகரத்தைச் சார்ந்தவனும் மறைக் குலத்தில் வந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன், உரைத்த மாலையாகிய இந்த பத்து பாடல்களை ஓதும் அடியார்கள் இம்மையில் தங்களது செல்வம் வளரப் பெற்றும் மற்றும் மறுமையில் திருவருட்பேறு பெற்றும் சிறப்புடைய வாழ்வினை அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
எரியொரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார்
திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார்
திருவளர் செம்மையாகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே
தான் பயணம் செய்வதற்கு சிவிகை வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இறைவனிடம் வேண்டியதாக பெரிய புராணத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.எனினும் திருஞானசம்பந்தர் தந்தையாரின் தோளினில் ஏறிக் கொண்டு வாராமல் தானே நடந்து வந்ததைக் கண்ட பெருமான், தானே முன்வந்து அருள் புரிந்தமை இங்கே அருள் சென்று கைகூடியது என்று கூறுகின்றார். நமது தேவைகளை புரிந்து கொண்டு தந்தையார், நாம் கேட்காமல் இருந்த போதும்.தாமே வந்து நமது தேவைகளை நிறைவேற்றுவது போன்று, இறைவன் தானே முன்வந்து முத்துச்சிவிகை அளித்ததால் எந்தை என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் திருநெல்வாயில் அரத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடல் (2.90.1). திருஞானசம்பந்தருக்கு தந்தையாகவும் இறைவனாகவும் திகழ்ந்தவர் அல்லவா சிவபெருமான். ஏறு=இடபம்; அந்தண்= அழகு மற்றும் குளிர்ச்சி; ஈசன்=தலைவன்; கந்தம்=நறுமணம்;இறைவனின் புகழினை வாயினால் பாடி மனதினால் சிந்திக்கும் அன்பர்களுக்கு இறைவன் அருள் கைகூடும் என்றும் அல்லாதார்க்கு அவனது அருள் கைகூடாது என்பதையும் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் நிவா நதி குறிப்பிடப்பட்டு,தலத்தின் நீர்வளத்திற்கு இந்த நதி காரணம் என்பதும் உணர்த்தப் படுகின்றது. சென்று கைகூடுவது என்று திருவருள் தானே வந்தடைந்ததை பிள்ளையார் குறிப்பிடுகின்றார்.
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவா மல்கு கரை மேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
சிரபுரம் (சீர்காழி தலத்தின் ப்ன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.102.6) திருஞானசம்பந்தர், இமையோர்கள் எந்தை என்று பெருமானிடம் சரண் புகுந்தனர் என்று கூறுகின்றார். ஓட்டந்து=ஓட்டம் தந்து; ஆழி=கடல், இங்கே அருட்கடலாக பெருமான் விளங்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. அந்தம்=முடிவு; பிரளய வெள்ளத்தில் பூமி முழுவதும் மூழ்கிய போதிலும் சீர்காழி நகரம் மிதந்தது என்றும், பெருமான் உமையன்னையுடன், ஓம் எனப்படும் பிரணவ மந்திரத்தை தோணியாக மாற்றி, இந்த தலம் வந்தடைந்து தங்கி, மீண்டும் உலகினை படைத்தார் என்று சீர்காழி தலபுராணம் குறிப்பிடுகின்றது. இத்தகைய ஆற்றல் படைத்த பெருமானை வணங்கும் அடியார்களை விட்டு வலிமையான வினைகளும் நீங்கிவிடும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார், இன்பன்=இன்பமே வடிவானவன்; யாழின் நேர்மொழி ஏழை என்று உமையன்னையின் குரல் இனிமை இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது.
ஊழி அந்தத்தின் ஒலி கடல் ஓட்டந்து இவ்வுலகங்கள் அவை மூட
ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார் தாம்
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிதுறை இன்பன் எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரம் தொழ வல்வினை அடையாவே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.113.5) எனது தந்தையாகிய பெருமானின் இடம் சீர்காழி தலம் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். விருது=வெற்றி எனப்படும் பட்டம்; சரிதை=சரித்திரம்; பல வெற்றிகள் கண்டு சரித்திரம் படைத்தவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.கிள்ளை=கிளி; இந்த தலத்தினில் வாழும் கிளிகள், அடிக்கடி அந்தணர்கள் வேதம் ஓதுவதைக் கேட்டு பழகியதால், வேதம் பயில்கின்ற சிறுவர்கள் பிழை செய்வதை புரிந்து கொண்டு, அந்த பிழைகளை திருத்துவதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த குறிப்பு இந்த தலத்தினில் வாழ்ந்து வந்த அந்நாளைய அந்தணர்கள் இடையறாது தொடர்ந்து வேதங்கள் ஓதியதை உணர்த்துகின்றது.
விருதிலங்கும் சரிதைத் தொழிலார் விரிசடையினார்
எருதிலங்க பொலிந்தேறும் எந்தைக்கு இடமாவது
பெரிதிலங்கும் மறை கிளைஞர் ஒதப் பிழை கேட்டலால்
கருது கிள்ளைக் குலம் தெரிந்து தீர்க்கும் கடற் காழியே
திருக்கேதாரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.114.3), திருஞானசம்பந்தர், இந்த தலத்தினில் வாழ்ந்த முனிவர்கள் பலரும் பொழுது புலர்வதற்கு முன்னரே எழுந்து நீராடி, எந்தையே என்று பெருமானை அழைத்து வழிபட்டனர் என்று குறிப்பிடுகின்றார். புரோதயம்=பூர மற்றும் உதயம் என்ற இரண்டு வடமொழிச் சொற்கள் இணைந்த சொற்றொடர். பூர்வம் என்பது கிழக்கு திசையினை குறிக்கும். கிழக்கு திசையில் நிகழும் சூரிய உதயத்திற்கு முன்னர் என்று பொருள் கொள்ள வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்னர் உள்ள மூன்று நாழிகை நேரம் பிரம முகூர்த்தம் என்று அழைக்கப்படும், இந்த நேரத்தில் செய்யப்படும் நற்செயல்கள் பல மடங்கு பலன்களை தரும் என்று நம்பப் படுகின்றது. பண்டைய நாட்களில் முனிவர்கள் ஒன்று கூடி தவம் செய்த இடமாக திருக்கேதாரம் இருந்து வந்தது. குரங்குகள் குதித்து விளையாடுவதால், அசைகின்ற மலர்களிலிருந்து தேன்மழை பொழிகின்றது என்பதை உணர்த்தும் பொருட்டு சரேல் எனச் சொரிந்தது என்று கூறுகின்றார். முரிந்து=நெரிக்கப்பட்டு; கெந்தம்=கந்தம் என்ற சொல் எதுகை கருதி திரிந்தது;நறுமணம் என்று பொருள்.
முந்தி வந்து புரோதயம் மூழ்கி முனிகள் பலர்
எந்தை பெம்மான் என நின்றிறைஞ்சும் இடம் என்பரால்
மந்தி பாயச் சரேலச் சொரிந்தும் முரிந்து உக்கபூக்
கெந்த நாறக் கிளரும் சடை எந்தை கேதாரமே
திருக்கேதாரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.114.5) திருஞானசம்பந்தர், பல ஊழிகளையும் உணரும் அறிவினை உடைய சிவயோகிகள் சிறந்த பொருளினை உணர்த்தும் வேத மந்திரங்கள் கொண்டு, பெருமானை எந்தை என்று போற்றும் இடம் திருக்கேதாரம் என்று கூறுகின்றார்.மேழி=கலப்பை; பூழ்தி=புழுதி என்ற சொல் மருவியுள்ளது. கீண்ட=நகங்களால் கீற; மாணிக்கக் கற்கள் மிகவும் அதிகமாக புதைந்து கிடக்கும் கேதாரம் தலத்தில் உள்ள நிலத்தினை, உழ அந்த மாணிக்கக்கற்கள் வெளிப்படுகின்றன என்றும், பன்றிகள் தங்களது கால்விரல் நகங்களால் நிலத்தினை கீற,மாணிக்கக் கற்கள் தென்படுகின்றன என்றும் குறிப்பிடுகின்றார். ஒண்பொருள்=சிறந்த பொருள்;
ஊழியூழி உணர்வார்கள் வேதத்தின் ஒண் பொருள்களால்
வாழி எந்தை என வந்திறைஞ்சும் இடம் என்பரால்
மேழி தாங்கி உழுவார்கள் போலவ் விரை தேரிய
கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே
இரும்பை மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.117.3) திருஞானசம்பந்தர், எந்தை பெம்மானின் இடம் இரும்பை மாகாளம் என்று குறிப்பிடுகின்றார். இரும்பை என்பது தலத்தின் பெயர்; மாகாளம் என்பது திருக்கோயிலின் பெயர். பலவின் கனிகள் என்ற தொடருக்கு, பல விதமான கனிகள் என்று பொருள் கொள்வதை விடவும், பலாப்பழங்கள் என்று பொருள் கொள்வது பொருத்தம். தற்போதும் இந்த பகுதியில் பலா மரங்கள் மிகவும் அதிகமாக இருப்பதை நாம் காணலாம். இதே பதிகத்தின் பதினோராவது பாடலிலும் திருஞானசம்பந்தர் பெருமானை எந்தை எம்மான் என்று குறிப்பிடுகின்றார்.
வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடையூர்தியான்
எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை தனுள்
கந்தமாய பலவின் கனிகள் கமழும் பொழில்
மந்தி ஏறிக் கொணர்ந்துண்டு உகள்கின்ற மாகாளமே
திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.119.11) தேவாரப் பதிகங்களை முறையாக பாடும் அடியார்கள், எந்தையாகிய பெருமான் உறைகின்ற சிவலோகம் சென்று சேர்வார்கள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நந்தி என்பது இங்கே பெருமானை குறிப்பிடுகின்றது.நந்துதல் என்றால் படிப்படியாக குறைத்தல் என்று பொருள். நம்மைப் பிணித்துள்ள வினைகளை படிப்படியாக குறித்து முற்றிலும் ஒன்றும் இல்லாத தன்மை ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்த பெருமான் என்று பொருள். கந்தம்=நறுமணம்; உலகு=இங்கே சிவலோகம் என்று பொருள் கொள்ளவேண்டும்;
கந்த நாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல்
நந்தி சேரும் திருநாகேச்சரத்தின் மேல் ஞானசம்
பந்தன் நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய்
எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே
தன்னை பெருமான் பால் காதல் கொண்ட தலைவியாக உருவகித்து மூக்கீச்சரம் தலத்தின் (திருச்சி நகரத்தின் ஒரு பகுதியாகிய உறையூர்) மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.6) திருஞானசம்பந்தர், எந்தையாகிய பெருமானைச் சென்று அடையாததால், தான் படுகின்ற வேதனையை விவரிக்கின்றார்.ஏதம்=துன்பம்; மானதன்=பெருமை உடையவன்; பகைவரின் மானத்தை அழிப்பவன் என்றும் மானம் உடையவன் என்றும் இருவகையாக விளக்கம் கூறப்படுகின்றது. நேரியன்=நேர்மை உடையவன்; செம்பியன்=சோழன்; அந்தண் என்ற சொல்லினை அம் மற்றும் தண் என்று இரண்டு சொற்களாக பிரித்து உள்ளத்தில் குளிர்ச்சி உடையவன் என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த பாடலின் இரண்டாவது அடி, அகத்துறைப் பொருளைக் கொண்டது. பெருமான் பால் தீராத காதல் கொண்ட பெண்மணியின் கூற்றாக உள்ளது. தன்னை பெருமான் பால் காதல் கொண்டுள்ள பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டு திருஞானசம்பந்தர் சொல்லும் கருத்துகளை சம்பந்த நாயகியின் சொற்கள் என்று கி.வா.ஜா. அவர்கள் தனது திருமுறை மலர்கள் புத்தகத்தின் குறிப்பிடுகின்றார். பெருமான் பால் தீராத காதல் கொண்டுள்ள சம்பந்த நாயகி, பெருமானுடன் இணைய முடியாத ஏக்கத்தினால் வருத்தம் அடையவே,அவளது உடலும் கைகளும் இளைத்து விடுகின்றன; அதனால் அவளது கைகளில் அணிந்திருந்த வளையல்கள் தாமாகவே கழன்று விழுந்து விடுகின்றன.இந்த நிலைக்கு தனது உள்ளத்தைக் கொள்ள கொண்ட பெருமானே காரணம் என்பதால், தனது வளையல்களைத் தான் அறியாத வண்ணம் கழலும் வண்ணம் தன்னை மாற்றிய பெருமானை வளை கவர்ந்தவன் என்று சம்பந்தநாயகி குறிப்பிடுகின்றாள். மெய்=உடல்; வீங்கிருள்=நிறைந்த இருள்; இறைவன் பால் தீராத காதல் கொண்டு, அவன் பால் எல்லையற்ற அன்பினைப் பொழிந்து, மனம் வாக்கு காயங்களால் தன்னை முற்றிலும் இழந்த அடியார்களின் நிலையை, காதல் வயப்பட்டு தலைவனைப் பிரிந்த தலைவியின் இயல்புகளாகிய, பசலை கொள்ளுதல், உடல் இளைத்தல், பித்தரைப் போன்று இருத்தல் ஆகிய தன்மைகளுக்கு ஒப்பிடுதல் இலக்கிய மரபு. அருளாளர்கள் அடைகின்ற இந்த மாற்றம், உயிர்களை தன் பால் ஈர்த்து வளைத்து அவர்களை மெய்யுணர்வு கொள்ளச் செய்யும் பெருமானின் அருட்செயலை குறிப்பிடுவதாக ஒரு சுவையான விளக்கம் கூறப்படுகின்றது. திருநீற்றினைத் தனது உடல் முழுவதும் பெருமான் பூசிக்கொண்டுள்ள நிலை, தான் ஒருவனே என்றும் நிலையானவன் என்பதையும், ஏனைய உயிர்களும் பொருட்களும் ஒரு நாள் அழிந்து சாம்பலாக மாறக்கூடியவை என்பதையும் பெருமான் நமக்கு உணர்த்தும் பொருட்டே.
வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கிருள்
வந்து என் ஆரவ் வளை கொள்வதும் இங்கொரு மாயமாம்
அந்தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய
எந்தை மூக்கீீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் ஏதமே
தனது தந்தையார் வேள்வி செய்ய விரும்பியபோது, இறைவனிடம் அதற்காக பணம் வேண்டிய திருஞானசம்பந்தர், தனது விருப்பத்தை பதிகமாக தெரிவிக்கும் பதிகம் இடரினும் தளரினும் என்று தொடங்கும் பதிகம் (3.04). இந்த பதிகத்தின் ஆறாவது பாடலில் எந்தை என்றும் ஏழாவது பாடலில் அப்பா என்றும் திருஞானசம்பந்தர் இறைவனை குறிப்பிடுவதை நாம் உணரலாம். விரவி=கலந்து; வினைகளால் ஏற்படும் கடுந்துயரம் இங்கே நெருப்புடன் ஒப்பிடப்படுகின்றது. நெருப்பு போன்ற துன்பம் என்று கூறும் திருஞானசம்பந்தருக்கு, இறைவனின் நெற்றிக்கண்ணில் தோன்றிய நெருப்பு நினைவுக்கு வந்தது போலும். மன்மதனை எரித்த நிகழ்ச்சியை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒப்புடை ஒருவன்=தனக்கு நிகராக தன்னை மட்டும் கொண்ட தன்மை படைத்தவன். அழகில் தனக்கு நிகராக வேறு ஒருவரும் இல்லாத காரணத்தால், மன்மதனை, அவனுக்கு அழகில் நிகரான ஒருவன் அவன் ஒருவன் தான் என்று நயமாக கூறுவதை காணலாம். அப்படி என்ற சொல் வியப்புச் சொல்லாக இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
அப்பா உன் அடி அலால் அரற்றாது என் நா
ஒப்புடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
பூந்தராய் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.05.05) திருஞானசம்பந்தர், தன்னை வணங்கும் அடியார்களின் மேல்வினைகளை விடுவித்து, வீடுபேறு அருளும் வல்லமை வாய்ந்தவன் எந்தையாகிய ஈசன் ஒருவனே என்று உறுதியாக கூறுகின்றார்,மேல்வினை=இனியும் நாம் எடுக்கவிருக்கும் பிறவிகளில் அனுபவித்து கழிப்பதற்காக ஒதுக்கப் பட்டுள்ள வினைகள்; தனது அடியார்களைப் பற்றியிருக்கும் மேல் வினைகளை அழித்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து அவர்களை விடுவிக்கும் ஆற்றல் வாய்ந்தவன் பெருமான் என்றும் குறிப்பிடுகின்றார்.மேல்வினைகள் தாமே நாம் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுப்பதற்கு காரணமாக உள்ளன. எனவே அந்த மேல்வினைகள் நீக்கப்பட்ட பின்னர், அத்தகைய வினைகளால் விளைகின்ற பிறவிகளும் தவிர்க்கப் படுகின்றன. எண்ணற்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைகளை ஒரே பிறப்பினில் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுமானால், அந்த வினைகளை நுகர்ந்து கழிக்கும் தருணத்தில் விளையும் இன்ப துன்பங்களை தாங்கும் ஆற்றல் நமது உடலுக்கும் உயிருக்கும் இல்லை என்பதால், நம்பால் கருணை கொண்டு பெருமான், அந்த வினைகளின் ஒரு பகுதியை மட்டுமே இந்த பிறவிக்கு ஒதுக்கிவிட்டு, எஞ்சியவற்றை இனிமேல் நாம் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு ஒதுக்கி விடுகின்றார். இந்த மேலை வினைகளைக் கழித்துக் கொண்டு பிறப்பிறப்புச் சுழற்சியைத் தவிர்க்கும் வழியை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் நமக்கு கற்றுக் கொடுக்கின்றார்.
பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நுந்தம் மேல்வினை ஓட வீடுசெய்
எந்தையாய எம் ஈசன் தானே
இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.10.5) திருஞானசம்பந்தர் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். ஊரு=உணரும் சுவை;ஒளி ஒலி நாற்றம் சுவை ஊரு எனப்படும் ஐந்து குணங்களில் ஒன்று. பிரமனின் தலை பெருமானின் திருக்கைகளால் தொடப்பட்டு கிள்ளி எறியப்பட்டமையால், ஊறுடை வெண்டலை என சொல்லப்பட்டுள்ளது. ஊறுடை=கேடு அடைந்த; வீறு=வேறு ஒருவர்க்கு இல்லாத சிறப்பான அழகு;விறல்=வலிமை; ஆர்ந்த=பொருந்திய; பேறு=வீடுபேறு பேரும்=பெயர்ந்து விடும். முக்தி உலகத்தினை உடையவனாகிய பெருமானின் திருநாமங்களை சொல்லும் அடியார்கள், தங்களை பீடித்துள்ள பிறவிப்பிணி என்ற கொடிய நோய் நீக்கப்பட்டு, வீடுபேற்றினை அடைவார்கள் என்று கூறுகின்றார்.
ஊறுடை வெண்டலை கையில் ஏந்திப் பலவூர்தொறும்
வீறுடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி எந்தை மேய இராமேச்சுரம்
பேறுடையான் பெயர் ஏத்து மாந்தர் பிணி பேருமே
வைகல் மாடக்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.18.1) திருஞானசம்பந்தர், எந்தையாரிடம் வைகல் மாடக்கொயில் என்று கூறுகின்றார். துளமதி=துள்ள மதி என்ற தொடரின் இடைக்குறை. துள்ளிக்குதிக்கும் எண்ணம் கொண்டுள்ள மான் கன்று; உளமதி=உள்ளத்தில் ஞானம் உடைய சிவஞானிகள்; வளமதி=அழகிய சந்திரன்; சந்திரனைத் தொடும் அளவுக்கு உயர்ந்த மாடக் கோயில் என்று கடை அடியில் குறிப்பிடுகின்றார்.
துளமதி உடை மறி தோன்று கையினர்
இளமதி அணி சடை எந்தையாரிடம்
உளமதி உடையவர் வைகல் ஓங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே
திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.36.1) திருஞானசம்பந்தர், தனது தந்தையாகிய பெருமானின் திருவடிகள் தனது மனதினில் நிலையாக பொருந்தியுள்ளன என்று கூறுகின்றார். சந்தனம், அகில், ஆத்தி, தேக்கு, சாதிக்காய் மரங்களை பொன்முகலி ஆறு அடித்துக் கொண்டு வருவதாக குறிப்பிடுகின்றார். வண்=வள்ளல் தன்மை உடைய: அடியார்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்கள் கேட்காமலே அள்ளிக் கொடுக்கும் பெருமானை, வள்ளல் என்று மிகவும் பொருத்தமாக குறிப்பிடுகின்றார்.
சந்தமார் அகிலொடு சாதி தேக்கம்மரம்
உந்து மா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில் வளர் மல்கு வண் காளத்தி
எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே
பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடலில் (3.37.6) திருஞான சம்பந்தர் பிரமாபுரத்து வேதியனை எந்தை என்று ஏத்துமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். ஏடு= மலர்; மலரை ஒத்து குளிர்ச்சியை தருகின்ற சந்திரன் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சந்திரன் வெண்மை நிறம் உடையது. பொதுவாக பாம்பு கருமை நிறம் உடையது. எனவே சந்திரன் மெய்யடியார்களையும் பாம்பு பொய்யடியார்களையும் குறிப்பிடுகின்றன என்ற விளக்கம் அளித்து, சந்திரனையும் பாம்பினையும் ஒரு சேர ஏற்றுக்கொண்ட இறைவன், இருவகைப் பட்ட அடியார்களையும் ஏற்றுக்கொண்டு அருள் புரிகின்றான் என்ற சுவையான விளக்கமும் தருமபுர ஆதினத்து வலைத்தளத்தினில் அளிக்கப் படுகின்றது. உயிரின் விருப்பத்தோடு நெஞ்சத்தின் செயல்கள் எப்போதும் ஒத்துப் போவதில்லை. இவ்வாறு மாறுபட்டு செயல்பட்டு, நெஞ்சம் அடைகின்ற பயன் தான் யாது. மேலும் மேலும் வலிமையான வினைகளைச் சேர்த்துக்கொண்டு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து மீளாமல் உழல்வதைத் தவிர்த்து வேறெந்த எந்த பயனையும் நெஞ்சம் அடைவதில்லை. இந்த உண்மையைத் தான் திருஞானசம்பந்தர் கேள்வியாக, தனது நெஞ்சத்தினை நோக்கி, இந்த பாடல் மூலம் வினவுகின்றார். நெஞ்சமே என்று விளித்து,என்னுடன் பிணங்கி மாறுபட்டு நின்று நீ சாதிக்கப் போவது தான் யாது, மேலும் மேலும் வினைகளை சேர்த்துக் கொள்வதற்கு ஏன் துடிக்கின்றாய் என்று வினவி, தனது திருக்கரத்தினில் நெருப்பேந்தி நடனமாடும் பெருமானை, தனது அடியார்களுக்கு பேரின்பத்தை வழங்குவதை தனது கொள்கையாகக் கொண்டுள்ள பெருமானை, பிரமாபுரத்து வேதியனை, பிறைச் சந்திரனையும் பாம்பையும் தனது சடையில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமானை, எனது தந்தை என்று பாவித்து புகழ்ந்து போற்றி பலனடைவாயாக என்று அறிவுரை கூறுகின்றார். நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை சொல்லும் பாடல்.
ஊடினால் இனி யாவது என்னுயிர் நெஞ்சமே உறு வல்வினைக்கு
ஓடி நீ உழல்கின்றதென் அழல் அன்று தன் கையில் ஏந்தினான்
பீடு நேர்ந்தது கொள்கையான் பிரமாபுரத்து உறை வேதியன்
ஏடுநேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே
இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் சிவபெருமானை நோக்கி எனது தாயாகவும் தந்தையாகவும் மற்ற பொருட்களாகவும் இருக்கும் பெருமானே என்று போற்றும் அடியார்களுக்கு பெருமான் நலம் பல அருளுகின்றான் என்று கூறுகின்றார். மங்கையர் என்று தாருகவனத்து மகளிர் குறிப்பிடப் படுகின்றனர் என்ற விளக்கம் சான்றோர்களால் அளிக்கப் படுகின்றாது. இடைப்பொருள்=பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வந்து சேரும் செல்வம்; போய்போய் என்ற அடுக்குத்தொடர் பல இல்லத்தரசிகளின் இல்லத்திற்கு பலியேற்கச் சென்றதை உணர்த்துகின்றது.
வாயிடைம் மறையோதி மங்கையர் வந்திடப் பலி கொண்டு போய்
போயிடம் எரிகானிடைப் புரி நாடகம் இனிது ஆடினான்
பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்
தாயிடைப் பொருள் தந்தையாகும் என்று ஓதுவார்க்கு அருள் நன்மையே
சீர்காழி தலத்தின் மீது பதிகத்தின் பாடலில் (3.43.1) தனது தந்தையாகிய பெருமானின் திருவடிகள், தனது மனதினில் நன்கு பதிந்துள்ளன என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மெய்=உடல், இங்கே பெருமானின் திருமேனி; திருநீற்றினில் நீராடியது போன்று, பெருமானின் திருமேனி முழுவதும் திருநீற்றினில் மூழ்கியிருக்கும் தன்மையை, வெண்பொடி ஆடிய மெய்யனார் என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
சந்தமார் முலையாள் தன கூறனார்
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார்
கந்தமார் பொழில் சூழ் தரு காழியுள்
எந்தையார் அடி என் மனத்து உள்ளவே
திருப்புகலூர் தலத்தினில் அப்பர் பிரானும் திருஞானசம்பந்தரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போது அப்பர் பிரான், திருவாரூர் நகரத்து சிறப்பினையும் ஆங்கே திருவாதிரைத் திருநாள் விமரிசையாக கொண்டாடப் படுவதையும் திருஞானசம்பந்தருக்கு எடுத்துச் சொல்கின்றார். அதனைக் கேட்ட திருஞானசம்பந்தர் உடனே திருவாரூர் செல்கின்றார். அவ்வாறு திருவாரூர் சென்றபோது, அந்த தலத்து அடியார்கள் ஊர் எல்லையில் அவரை வரவேற்கின்றனர். அப்போது அந்த தலத்து அடியார்கள் ஆரூர்ப் பெருமானுடன் நெருக்கமாக இருக்கும் தன்மையை உணர்ந்த, திருஞான சம்பந்தர், அந்த அடியார்களிடம், தனது தந்தையாகிய பெருமான் தன்னை ஏற்றுக்கொள்வாரோ என்று வினவும் பாடல்கள் கொண்ட பதிகம் (3.45). ஒன்றினை அருளிச் செய்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காணலாம். இந்த பாடலில் இறைவனைத் தனது சிந்தையில் புகுந்தவன் என்றும் தனது தந்தை என்றும் குறிப்பிடும் திருஞானசம்பந்தருக்கு, பெருமான் தன்னை ஏற்றுக்கொள்ளும் தன்மையில் எந்தவிதமான ஐயப்படும் இருந்ததில்லை. நால்வர் பெருமானார்களுக்கும் சிவபெருமானுக்கும் இடையே இருந்த தன்மையை குறிப்பிடுகையில், மகன்மை நிலை என்று தானே திருஞானசம்பந்தரின் நிலையை குறிப்பிடுகின்றனர். எனினும் அத்தகைய ஐயம் தனக்கு உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, திருவாரூர் அடியார்களிடம் உதவி கேட்பது போன்று உணர்த்துவதன் மூலம், திருவாரூர் அடியார்களின் பெருமையை நமக்கு உணர்த்துகின்றார். திருவாரூர் அடியார்களும் திருஞான சம்பந்தரின் பெருமையையும், அந்நாள் வரை இறைவன் அவருக்கு ஞானப்பால் அளித்தும், பொற்றாளம் வழங்கியும், முத்துச் சிவிகை, முத்துக் குடை மற்றும் ஊதுகுழல் சின்னங்கள் அளித்தும், பூதகணம் மூலமாக பந்தல் விரித்து வரவேற்றும், உலவாக்கிழி அளித்தும் அருள் புரிந்த செயல்களை நன்கு அறிந்தவர்கள். எனவே திருஞானசம்பந்தருக்காக எவரும் இறைவனிடம் பரிந்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் நன்கு உணர்ந்தவர்கள்.
அந்தமாய் உலகு ஆதியும் ஆயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தையே புகுந்தான் திருவாரூர் எம்
எந்தை தான் எனை ஏன்று கொளும் கொலோ
திருக்கருகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.46.7) திருஞானசம்பந்தர், எந்தையாகிய பெருமானின் திருமேனி கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தில் உள்ளது என்று கூறுகின்றார். சுடுகாட்டினில் இட்டு சுடப்பட்ட உடல்களின் சாம்பலை, தனது திருமேனி மேல் பூசிய வேதியனாகிய பெருமான், அடியார்களின் சிந்தையுள்ளே நின்று அருள் புரியும் செல்வராக விளங்குகின்றார். நறுமணம் கமழும் முல்லை மலர்ந்து மணம் வீசும் திருக்கருகாவூர் தலத்தினில் உறையும் எமது தந்தையாகிய பெருமான், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் வண்ணத்தில் திருமேனி உடையவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல் கமழும் கருகாவூர் எம்
எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே
திருமழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.48.11) திருஞானசம்பந்தர், தனது தந்தையாகிய பெருமானைப் புகழ்ந்து, இனிய சந்தங்களுடன் பொருந்திய பாடல்களை, மிகுந்த மகிழ்ச்சியுடன் தான் பாடுவதாக குறிப்பிடுகின்றார். மந்தம்=தென்றல் காற்று; இந்தப் பதிகத்தினை நன்குக் கற்றுத் தேர்ந்து முறையாக பாடும் அடியார்கள், எத்தகைய பாவமும் இல்லாதவர்களாக விளங்குவார்கள் என்று கூறுகின்றார்.
மந்தம் உந்து பொழில் மழபாடியுள்
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான்
கந்தமார் கடல் காழியுள் ஞானசம்
பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை பாவமே
வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (3.54.3) திருஞானசம்பந்தர், தனது தந்தையாகிய பெருமானின் தன்மைகள் அளப்பதற்கு மிகவும் அரியது என்பதால், அவரது தன்மையை எவ்வகைக் கூற்றாலும் கூற இயலாது என்று வியப்பதை நாம் இந்த பாடலில் உணரலாம். தன்னை இடையறாது சிந்திக்கும் அடியார்களின் வினைகளை, பெருமான் தீர்க்கின்றார் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தையாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ
இதே பதிகத்தின் நான்காவது பாடலில் திருஞானசம்பந்தர், கோள்களாலும் தீய வினைகளாலும் விளைகின்ற துன்பங்கள், எந்தையாகிய பெருமானின் திருப்பாதங்களை வணங்கி அவனது புகழினைச் செவிமடுக்கும் அடியார்களை, சென்று அடையா என்று கூறுகின்றார். ஆட்பாலவர்= ஆட்கொண்டு அருள் புரிவதற்கு தகுதி வாய்ந்த அடியார்கள்; முக்தி நிலையை அடைவதற்கு தகுதி படைத்த பக்குவம் அடைந்த உயிர்கள்; ஆதி மாண்பு=தொன்றுதொட்டு உயிர்களுக்கு பலவகையில் பெருமான் அருள் புரிகின்ற பெருமை; கேட்பான் புகில்=சொல்லவும் கேட்கவும் தொடங்கினால்; கிளக்க=ஆராய; பெருமானின் அளவற்ற பெருமையை ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாது என்பதால், ஆராயவேண்டாம் என்று கூறுகின்றார்.
ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா
கோட்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை
தாட்பால் வணங்கித் தலை நின்று இவை கேட்கத் தக்கார்
பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.56.1) திருஞான சம்பந்தர் பெருமானை எந்தை என்று தேவர்கள் அழைத்து தொழுவதாக கூறுகின்றார். மேலும் இந்த பாடலில் பெருமானை வெண்தோடணி காதினன் என்று குறிப்பிடுகின்றார். ஆலகால விடத்தினால் விளைந்த ஆபத்து போன்று பல இடர்களிலிருந்து தங்களை காத்த இறைவனை, பெருமானைத் தங்களது தந்தையாக கருதி வானோர்கள், வழிபடுகின்றனர் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். காலத்தன்று என்று பண்டைய நாளில் இறைவன் வேதங்கள் அருளியமை இங்கே உணர்த்தப்படுகின்றது. மன்னு=நிலையாக பொருந்திய;
இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுதேத்த நின்ற
கறையணி கண்டன் வெண் தோடணி காதினன் காலத்தன்று
மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னிப்
பிறையணி செஞ்சடையான் பிரமாபுரம் பேணுமினே
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.68.11) திருஞானசம்பந்தர், இந்த பதிகத்தின் பாடல்களை, தனது தந்தையாகிய பெருமானின் திருவடிகளைப் போற்றி சந்த இசையுடன் செந்தமிழில் அருளிய பாடல்கள் என்று குறிப்பிட்டு, இந்த பதிகத்தை மனதினால் சிந்தித்து முறையான இசையுடன் பாடும் அடியார்களின் வினைகள் நலிந்துவிடும் என்றும், அதன் விளைவாக அந்த அடியார்கள் பரலோகம் அடைவது எளிது என்று கூறுகின்றார். சிந்தை செய்து பாடல்களை பாடவேண்டும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதால், தேவாரப் பாடல்களை பல முறை சிந்தித்து,பொருளினை புரிந்து கொண்டு, அந்த பொருளில் மனம் லயித்து அனுபவித்து பாடவேண்டும் என்று உணர்த்துகின்றார் என்பதை நாம் புரிந்துகொண்டு பாடல்களின் பொருளை புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்.
அந்தண் வரை வந்த புனல் தந்த சந்தனமொடு உந்தி அகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலிப்
பந்தன் உரை சிந்தை செய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே
திருவைகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.71.9) திருஞானசம்பந்தர், பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காணாது திகைத்த திருமாலும் நான்முகனும், பெருமானின் ஆற்றலை உணர்ந்தவர்களாக, பெருமானை எந்தை என்று அழைத்து தொழுதனர் என்றும், அப்பொது ஈசன் அவர்களுக்கு அருள் புரிந்தான் என்றும் குறிப்பிடுகின்றார். பெருமான்= பெருமையை உடையவன்; அந்தம் முதல் ஆதி என்று குறிப்பிட்டு பெருமானின் முழுமுதற் தன்மையையும் உலகின் ஒடுக்கத்திற்கும் தோற்றத்திற்கும் பெருமான் மூல காரணனாக இருக்கும் நிலையையும் திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பிரமனும் திருமாலும் திருவைகாவூர் தலத்தில் வாயில் காப்பாளராக இறைவனைத் தொழுத வண்ணம் இருப்பதை நாம் காணலாம்.அதனால் தான், வழக்கமாக பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி அலைந்த போதும் அவர்கள் காணாத வண்ணம் நெடுஞ்சுடராய் நின்ற பெருமான் என்று தனது ஒன்பதாவது பாடலில் குறிப்பிடும் சம்பந்தர் இங்கே அவர்கள் இருவரும் பெருமானைத் தொழுத வண்ணம் நிற்க பெருமான் அவர்களுக்கு அருள் புரிந்தார் என்று கூறுகின்றார். இறைவனைப் போன்று அடியார்களும் தங்களது உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டவர்களாக அன்றைய நாளில் இருந்த நிலையினை நாம் இந்த பாடல் மூலம் அறிகின்றோம்.
அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர் கோனை அயன் மாலும் இவர்கள்
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள் செய் ஈசன் இடமாம்
சிந்தை செய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள்
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே
தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.74.7) திருஞானசம்பந்தர் தனது தந்தைக்கும் தந்தையாக விளங்கியவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். தனக்கு மகப்பேறு வேண்டும் என்று விரும்பிய சிவபாத இருதயர், பெருமானை வேண்டி அந்த பேற்றினைப் பெற்றமையால், தனது தந்தைக்கும் தந்தையாக விளங்கியவர் சிவபெருமான் என்பதை உணர்த்த, இவ்வாறு கூறினார் போலும். கன்றியெழ=கோபத்துடன் பொங்கி எழுந்த; வென்றி நிகழ்=வெற்றி பெற்ற; அசுரர்களைத் தவிர்த்து மற்ற அனைவரையும் வெற்றி கொள்ளவேண்டும் என்ற வெறியுடன் திகழ்ந்து பலரையும் வெற்றி கொண்ட திரிபுரத்து அரக்கர்கள்; துன்று புரம்= ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருந்த மூன்று பறக்கும் கோட்டைகள்; தாங்கள் பெற்றிருந்த வரத்தின் துணையால் ஒன்றுக்கொன்று சிறந்த பாதுகாப்பாக திகழ்ந்த திரிபுரத்து கோட்டைகளின் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. அவிய=தீயினில் வெந்து சாம்பலாக மாறும் வண்ணம்; நிலை=நிலையான பற்றுக்கோடு; தனக்கு நிலையாகத் திகழ்ந்த பெருமான், தனது தந்தைக்கும் மகப்பேறு வரம் அருளி இன்பம் அடையச் செய்தான் என்று கூறுகின்றார். அமர்=விரும்பும்; முன்றில்=வீட்டின் முன்னே உள்ள முற்றம்; கறவைக் குருளைகள்=கறவைப் பசுக்களின் கன்றுகள்; வீட்டு முற்றத்தில் உள்ள பலா மரத்தின் கனிகளைத் தின்று துள்ளி விளையாடும் கன்றுகள் என்று தலத்தின் வளத்தை உணர்த்துகின்றார். இசைய=பொருந்த நின்ற;ஒன்ற=ஒருசேர;
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகை செய்
என்றனது சென்று நிலை எந்தை தன தந்தை அமர் இன்ப நகர் தான்
முன்றின் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவைக் குருளைகள்
சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே
கொச்சைவயம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.89.4) திருஞானசம்பந்தர் தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று, நமக்கு அறிவுரை கூறுகின்றார். தந்தையாகிய பெருமானின் திருவடிகளை சிந்தனை செய்து நாம் வாழ்வினில் உய்வினை அடையலாம் என்றும் நாம் கவலை அடைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறுகின்றார். பவர்=கொடி; காவிரி நதியின் நீர்வளத்தால் செழிப்புடன் விளங்கும் தலத்தின் தன்மையை இங்கே குறிப்பிடுகின்றார். மாடே=அருகே: பூங்கொத்துகள் நிறைந்ததும் நீண்டதும் ஆகிய கூந்தல் உடைய பெண்கள் குதித்துக் கொண்டு நீராடும் காவிரி நதி என்றும், நறுமணம் நிறைந்த தாழை மற்றும் சந்தனக் காடுகள், வாழை தோப்புகள், வள்ளிக் கொடிகள்,குவளை மலர்க் கொடிகள் ஆகியவற்றில் மோதி ஓடும் காவிரி நதி என்றும் குறிப்பிடுகின்றார். அளி=வண்டுகள்; அளிக்குவளை=வண்டுகள் மொய்க்கும் குவளை மலர்கள்;
கந்தமார் கேதகைச் சந்தனக் காடு சூழ் கதலி மாடே
வந்து மா வள்ளையின் பவர் அளிக் குவளையைச் சாடியோட
கொந்துவார் குழலினார் குதிகொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய
எந்தையார் அடி நினைந்து உய்யலாம் நெஞ்சமே அஞ்சல் நீயே
வடகுரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.91.2) திருஞானசம்பந்தர், தேவர்கள் எந்தையாகிய பெருமானின் திருவடிகளைத் தொழுதெழும் இயல்பினை உடையவர்கள் என்று குறிப்பிடுகின்றார்.
மந்தமா இழி மதக் களிற்றிள மருப்பொடு பொருப்பின் நல்ல
சந்தமார் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி
உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
எந்தையார் இணையடி இமையவர் தொழுதெழும் இயல்பினரே
கலிக்காமூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.105.10) திருஞானசம்பந்தர், எந்தை பெருமானை நினைத்து தொழும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும் என்று கூறுகின்றார். பிறக்கிய=மிகுவித்த, விளங்கும்; மீசு=மேல்; தோற்றம் என்பதற்கு தன்மை மற்றும் பெருமை என்று பொருள் கொள்வது பொருத்தமே. காசினி=உலகம்; நீராடுவதை தவிர்ப்பதால் மிகுந்த அழுக்குடன் விளங்கிய மேனி படைத்த சமணர்களும் துவராடையைத் தங்களது உடலின் மீது போர்த்துக் கொண்ட புத்தர்களும், சிவபெருமானது, எவராலும் தோற்றுவிக்கப் படாமல் தானே தோன்றிய தன்மையையும் பெருமையையும் உணரமாட்டார்கள். இந்த உலகத்தினில், எங்கும் நீர்வளம் கொண்டதாக விளங்கும் கலிக்காமூர் தலத்தில் உறையும் ஈசனை, எந்தை பெருமானை நினைத்து அவரது புகழினைப் பாடி தொழும் அடியார்களைப் பற்றியுள்ள வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம்
காசினி நீர்த் திரள் மண்டி எங்கும் வளமார் கலிக்காமூர்
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே
குருகாவூர் வெள்ளடை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3,124.5) திருஞானசம்பந்தர், பெருமானை எந்தை பிரான் என்று அழைக்கின்றார். சுரி குழல்=சுருண்ட கேசம்; சுருண்ட குழலையும், அழகிய உடுக்கை போன்ற இடையினையும் உடையவளாக விளங்கும் பார்வதி தேவியுடன், வெப்பத்தின் மிகுதியால் பொறிந்த மரங்கள் நிறைந்த சுடுகாட்டின் இடையே நடனம் ஆடுகின்ற பெருமானே, விரிந்த பசுமையான சோலைகள் சூழ்ந்த வெள்ளடை தலத்தில், நெருப்புப் பிழம்பினையும் மழுப் படையினையும் ஏந்திய வண்ணம், நீர் காட்சி தருகின்றீர் என்று பெருமானை நோக்கி பாடும் பாடல்.
சுரி குழல் நல்ல துடியிடையோடு
பொரி புல்கு காட்டிடை ஆடுதிர் பொங்க
விரி தரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரி மழுவாட் படை எந்தை பிரானே
தசபுராணத் திருப்பதிகத்தின் பாடலில் (4.14.10) அப்பர் பிரான் பெருமானை எந்தை என்று குறிப்பிட்டு பெருமான் திருமாலுக்கு அருள் புரிந்த தன்மையை உணர்த்துகின்றார். சுடர் அடியால் முயன்று சுழல்வித்த ஆழி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சலந்தரனைக் கொன்ற சம்பவம் கந்த புராணத்தில்கூறப்பட்டுள்ளது. எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்ட சலந்தரனுக்கு அஞ்சி, திருமால், பிரமன், இந்திரன் முதலான தேவர்கள் ஓடியபோது,சிவபெருமான் ஒரு வயோதிக அந்தணர் வேடத்தில் அவன் எதிரே சென்றார். தனது கால் பெருவிரலினால் ஒரு வட்டத்தை பூமியில் கிழித்தார். அந்தவட்டமான பகுதியை எடுத்துக் கொடுக்குமாறு, சலந்திரனிடம் கூறவே, அரக்கனும் குனிந்து தனது கைகளால் அதனை எடுத்தான். எடுத்த நிலப் பகுதியைஅவன் தனது தலையின் மீது வைத்து, அருகில் இருந்த அந்தணனரிடம் தருவதற்கு முனைந்த போது, அந்த சக்கரம் போன்ற பகுதி அவனது உடலினை இருகூறாகக் கிழித்தது. மிகவும் கூர்மையான முனைகளைக் கொண்ட சக்கரம் என்பதால், செய்வதற்கு மிகவும் அரியதாக இந்த ஆழிப்படை கருதப்பட்டது.தடமலர்கள்=பெரிய மலர்கள்: ஆழி=கடல், சக்கரம்: எந்தையாகிய பெருமானே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்கும் தலைவன் என்று கூறுகின்றார்.
தடமலர் ஆயிரங்கள் குறைவு ஒன்றதாக நிறைவு என்று தன் கண் அதனால்
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும்
சுடர் அடியால் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவனா நமக்கொர் சரணே
ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் (4.15.11) அப்பர் பிரான், பெருமானை எந்தை என்று குறிப்பிட்டு, எந்தைப் பெம்மான் என்னம்மான் என்று இறைவனைத் தொழும் அடியார்களின் பாவம் நாசமாகிவிடும் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில், சிவபெருமானைத் தனது மனதினில் விருப்பத்துடன் வைத்ததாகவும், தான் இனி சிவபெருமானை மறவேன் என்றும், சிவபெருமானை நினைத்ததால் தனது நெஞ்சம் நிறைந்தது என்றும், சிவபிரானைத் தான் சென்று அடைந்தேன் என்றும், உடலும் உள்ளமும் குளிரத் தொழுதேன் என்றும், தனது அன்பினால் இறைவனை அணைத்தேன் என்றும், கூறிய அப்பர் பெருமான், எவ்வாறு இறைவனை நாம் வழிபடவேண்டும் என்று நமக்கு இங்கே அறிவுறுத்துகின்றார். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் இறை வழிபாட்டில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதை, இறைவனை நமது சிந்தையில் இருத்தி சிந்தையின் எண்ணங்களால் அவனை நீராட்டி,சொல்மாலைகளால் அவனைப் புகழ்ந்து பாடி, மலர்களை அவனது திருவடியில் சேர்த்து வழிபடவேண்டும் என்று கூறுகின்றார்.
முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளேறு ஊர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல் மாலை அடிச்சேர்த்தி
எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவநாசமே
தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.23.4) அப்பர் பிரான், எந்தை என்று பெருமானை அழைத்து, பெருமானுக்கு பணிவிடை செய்ய தான் மிகவும் விரும்புவதாகவும் பெருமான் தன்னை ஏற்றுக்கொண்டு அருள் புரிய வேண்டும் என்றும் இறைஞ்சுகின்றார். ஓவாது=இடைவிடாது. செந்தீ என்பது எதுகை கருதி செந்தி என குறுகியது. செறிவு=நிறைந்த அலசுதல்=வருந்துதல், சோர்வு அடைதல். சிவபிரானது திருப்பாதங்களை நினைப்பதற்கும் அவனது திருவருள் கூட வேண்டும் என்று மணிவாசகப் பெருமான் திருவாசகம். (அவன் அருளாலே அவன் தாள் வணங்கி) சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.அப்பர் பிரானே தனது வாழ்வில் சிவனருள் கூடாத போது நடந்ததையும், பின்னர் அவனருள் கூடியபோது நடந்த நிகழ்சிகளையும் நினைத்துப் பார்க்கின்றார்.அதனால் சிவபிரான் அருள் செய்யாவிடில் தான் செய்யக்கூடியது ஏதும் இல்லை என்ற முடிவினுக்கு வந்தவராக, உனக்கு அடிமையாக இருக்க நான் விரும்புகின்றேன்; நீ அதற்கு அருள் புரிய வேண்டும் என்று இங்கே இறைஞ்சுகின்றார்.
சிந்தையைத் திகைப்பியாதே செறிவுடை அடிமை செய்ய
எந்தை நீ அருளிச் செய்யாய் யாது நான் செய்வது என்னே
செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசும் கொல்லோ
செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.29.4) அனைவர்க்கும் தந்தையாகவும் தாயாகவும் இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தானவன்=தானம் வழங்குபவன், கொடை வள்ளல்: திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் சிவபெருமான், அனைவர்க்கும் தந்தையாகவும் தாயாகவும், அவர்கள் வேண்டுவதை அளிக்கும் கொடை வள்ளலாகவும், ஞான வடிவினராகவும் விளங்குகின்றார். மேம்பட்ட தேவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, இருக்கு முதலாய நான்கு வேதங்களை முறையாக சொல்லி, பெருமானே, நாங்கள் உன்னிடம் சரணடைகின்றோம் என்று சிவபெருமானை புகழ்ந்து வணங்க, அவர்களின் சிந்தையில் சிவமாக, திருச்செம்பொன்பள்ளியில் உறையும் பெருமான் விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தந்தையும் தாயும் ஆகி தானவன் ஞானமூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச்
சிந்தையுள் சிவமதானார் திருச்செம்பொன் பள்ளியாரே
பயற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.32.8) உலகத்தவர் அனைவர்க்கும் தந்தையாக இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். உள்குதல்=நினைத்தல், தியானித்தல்; பெருமானே தனது தாய் தந்தை, உலகத்தில் தனக்குள்ள பற்று எல்லாம் என்ற முடிவுடன் இறைவனை தியானித்து வந்த அப்பர் பெருமானது சிந்தைனையே சிவமாக மாறிய தன்மை இங்கே நமக்கு உணர்த்தப் படுகின்றது. தன்னடக்கம் காரணமாக, தனது சிந்தனை அவ்வாறு மாறியது என்று கூறாமல் இறைவனை எப்பொழுதும் உள்ளத்தில் தியானிப்பவரின் சிந்தை என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமானை விடவும் பெரிய உறவு நமக்கில்லை. எனவே அவனே நமக்குத் தாய், தந்தை மற்றுள்ள சுற்றம் என்று கொள்வது அருளாளர்களின் பண்பாக இருப்பதை நாம் காண்கின்றோம்.
தந்தையாய்த் தாயுமாகித் தரணியாய்த் தரணியுள்ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழுலகு உடனும் ஆகி
எந்தை எம் பிரானே என்றென்று உள்குவார் உள்ளத்து என்றும்
சிந்தையும் சிவமும் ஆனார் திருப்பயற்றூரனாரே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.35.2) அப்பர் பிரான் பெருமானை எந்தையார் என்று குறிப்பிடுகின்றார்.முந்தையார்=முன்னே தொன்றியவர்கள், பிரமன் மற்றும் திருமால் ஆகியோர்; முன்னே தோன்றியவர்களுக்கும் முன்னோனாக இருக்கும் தன்மை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுவது, நமக்கு மணிவாசகரின் திருவெம்பாவை பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள் என்று இறைவனை மணிவாசகர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உலகத்தில் தோன்றும் எந்த பொருளுக்கும் அழிவு என்பது நிச்சயம். எனவே இன்றோ அல்லது நாளையோ அல்லது அதற்கு பின்னரோ தோன்றும் எந்த பொருளும், அவை தோன்றும் சமயத்தில் புதியது என்ற உணர்வினை நம்மிடம் ஏற்படுத்தும். எனினும் அத்தகைய பொருட்கள் அழிந்த பின்னரும், இருப்பவன் இறைவன் என்பதால், இறைவனே என்றும் புதியவனாக, இனிமேல் தோன்ற இருக்கும் பொருட்களுக்கும் புதியவனாக இருக்கின்றான் என்று மணிவாசகர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.மூவர்க்கும் முதல்வர்=அரி, அயன், அரன் ஆகிய மூவர்க்கும் முதலாக இருப்பவர் சிவபெருமான். சந்தி=இரண்டு பொழுதுகள் சேரும் சமயம், இரவு முடித்து பகல் தோன்றும் சமயமாகிய காலை நேரம், நண்பகல் முடிந்து பின்பகல் தோன்றும் உச்சி நேரம், பகல் முடிந்து இரவு தோன்றும் சமயமாகிய மாலை நேரம்.இந்த மூன்று நேரங்களிலும் சந்தியாவந்தனம் செய்து இறைவனை தியானிப்பது அந்தணர்கள் வழக்கம். அந்த மூன்று நேரங்களாகவும், சந்தியாவந்தனம் செய்யும் அந்தணர்களின் மனதினில் உள்ளவராகவும் இறைவன் இருக்கும் தன்மை, சந்தியார் சந்தியுள்ளார் என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது. சந்தியா வந்தனம் செய்வோர்கள், உடலால் பல செயல்கள் செய்வது மட்டுமன்றி மந்திரங்களையும் ஓதுவார்கள். எனவே இவர்கள், சந்தியாவந்தனம் மூலமாக இறைவனை வழிபடுவது சரியை மற்றும் கிரியை மூலம் வழிபடுவதாக கருதப்படுகின்றது. தவநெறி தரித்துள்ள முனிவர்கள் வழிபடுவது யோக முறையினையும்,யோகத்தால் அவர்கள் அடையும் ஞானம் ஞான நெறியை உணர்த்துகின்றது. இவ்வாறு நான்கு நெறிகளிலும் வழிபடும் அடியவர்கள் நெஞ்சினில் இறைவன் இருப்பது இந்த பாடலில் உணர்த்துப் படுகின்றது.
முந்தையார் முந்தியுள்ளார் மூவர்க்கு முதல்வர் ஆனார்
சந்தியார் சந்தியுள்ளார் தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார் சிந்தையுள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார்
எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம் கொண்டாரே
சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.41.5) பெருமானை எந்தையே என்று அழைத்து வழிபடாமல் காலத்தை வீணே போக்கியதாக அபப்ர் பிரான் வருத்தப்படுகின்றார். பொந்தை=ஓட்டை, இங்கே ஓட்டைகள் கொண்ட உடல் என்று பொருள் கொள்ள வேண்டும் பொருக்கென=விரைவாக:தேறல்=தேன்; ஓட்டைகள் உடைய உடலினை நிலையான பொருளாக எண்ணி, நிலையான பொருளாகிய சிவபிரானை எண்ணாது எனது காலத்தை நான் வீணே கழித்து விட்டேன்; காலமும் வேகமாக கழிந்து விட்டது; எனது தந்தையே, தனிப் பெரும் தெய்வமே என்று உன்னை ஏத்தாது இத்தனை நாட்கள் நான் இருந்து விட்டேன்; தனு, கரண, புவன போகங்களைத் தந்து உலகப் பொருட்களுடன் நம்மை பிணைக்கும் பந்தமாகவும், அந்த பந்தத்திலிருந்து விடுபட்டால் நாம் அடையும் வீடுபேற்று இன்பமாகவும் விளங்குபவனும் ஆகிய சிவபிரான் சோற்றுத்துறையில் உறைகின்றான். நாம் அவனை தியானித்தால் நமது சிந்தனையில் தேன் போன்று இனிப்பான். இந்த உண்மையை அறியாது நான் எனது காலத்தை வீணாக காலத்தைக் கழித்து விட்டேன் என்று குறிப்பிட்டு அப்பர் பிரான் வருந்தும் பாடல்.
பொந்தையைப் பொருளா எண்ணி பொருக்கெனக் காலம் போனேன்
எந்தையே ஏகமூர்த்தி என்று நின்று ஏத்த மாட்டேன்
பந்தமாய் வீடுமாகிப் பரம்பரமாகி நின்று
சிந்தையுள் தேறல் போலும் திருச்சோற்றுத்துறையனாரே
இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் அப்பர் பிரான், இறைவனைப் புகழ்ந்து போற்றாது காலத்தைக் கழித்தற்காக தனது வருத்தத்தை தெரிவிக்கின்றார்.சிவபிரானின் திருநாமங்களைச் சொல்லி நாம் உய்வடையலாம் என்று இந்த பதிகத்தின் ஆறாவது பாடலில் கூறிய அப்பர் பிரான், அவ்வாறு கூறாமல் பெண்களைப் புகழ்வதன் மூலம் பயன் ஏதும் இல்லை என்று இந்த பாடலில் கூறுகின்றார். பெரிய புராணத்தில் கூறப்படும் அப்பர் பிரானின் வாழ்க்கையை அறிந்தவர்கள், அப்பர் பிரான் எப்போதும் துறவு நிலையை மேற்கொண்டு இருந்தவர் என்பதை நன்கு அறிவார்கள். எனவே இந்த பாடல், அவர் தனது நிலையை கருத்தில் கொண்டு இயற்றப் பட்ட பாடல் அல்ல. பெண்கள் தரும் இன்பமே பெரிது எனக் கருதி, இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு இறை உணர்வு கொள்ளாமல் வாழ்க்கையை வீணே கழிக்கும் மனிதர்களுக்காக இயற்றப்பட்ட பாடல். முந்து அரா அல்குலாள் என்று உமை அம்மையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். முந்து என்ற அடைமொழியை அல்குலாள் என்ற சொல்லுடன் இணைத்து பொருள் கொள்ளவேண்டும். சிவபிரானின் கருணை வடிவாக உமையம்மையை கருதுவார்கள். எனவே சிவபிரான் அடியார்களுக்கு அருள் புரியும்போது உமையம்மை தான் முந்து வந்து அருள் பொழிகின்றாள் என்பதை உணர்த்தும் விதமாக, முந்தி வரும் அல்குலாள் என்ற பொருள் பட முந்து அரா அல்குலாள் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். கொந்தார் பூ=கொத்தாக மலரும் பூக்கள்; அரா=பாம்பு; செந்தாது=சிவந்த மகரந்தங்கள்;
கொந்தார் பூங்குழலினாரைக் கூறியே காலம் போன
எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோ
முந்து அரா அல்குலாளை உடன் வைத்த ஆதி மூர்த்தி
செந்தாது புடைகள் சூழ்ந்த திருச்சோற்றுத்துறையனாரே
இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.61.6) அப்பர் பிரான், பெருமானை செஞ்சடை எந்தை என்று குறிப்பிட்டு, அவன் பால் சென்றடை மட நெஞ்சமே என்று கூறுகின்றார். மட நெஞ்சம்=அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் நெஞ்சம். அப்பர் பிரான் தெளிவடைந்த மனத்தராக திகழ்ந்து தேவாரப் பதிகங்கள் பாடியதை நாம் அறிவோம். நம்மைப் போன்று அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் மனிதர்களுக்கு உணர்த்தும் அறிவுரை.ஆர்வல=யார் வல்லவர், நம்மை விடவும் வலிமை வாய்ந்தவர் வேறு எவரும் இல்லை என்ற எண்ணத்துடன்; பொருத=போரிட; வீட்டி= அழித்து; நம்மை விடவும் வல்லமை வாய்ந்தவர் இந்த உலகில் வேறு எவரும் இல்லை என்ற இறுமாப்புடன் ஒன்று கூடி போர் செய்த அரக்கர்களை அழித்து அவர்களது வலிமை வாய்ந்த தேர்ப்படையினையும் வென்ற திருமாலாகிய இராமன், பெருமானை வழிபடும் பொருட்டு கட்டிய திரு இராமேச்சரம் திருக்கோயிலை, அறியாமையில் ஆழ்ந்திருக்கும் மனமே நீ சென்று அடைந்து, ஆங்குள்ள செஞ்சடைப் பெருமானை பணிந்து நற்கதியை சார்வாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஆர் வல நம்மின் மிக்கார் என்ற அவ்வரக்கர் கூடிப்
போர் வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை வீட்டித்
தேர் வலம் செற்ற மால் செய் கோயில் திருவிராமேச்சுரத்தைப்
சேர் மட நெஞ்சமே நீ செஞ்சடை எந்தை பாலே
விழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.64.7) அப்பர் பிரான், வழிவழியாக தங்கள் குடிப்பிறந்தோர் அனைவரும் பெருமானை தந்தையாக கருதியதாக கூறுகின்றார். சந்தணி கொங்கை=சந்தனம் பூசப்பட்ட மார்பு: உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்ட செய்கை, மற்றவர்களிடமிருந்து மாறுபட்டது. பசுவிடமிருந்து கிடைக்கப்பெறும் நெய் கொண்டே வேள்விகள், ஹோமங்கள் செய்யவேண்டும் என்பதை அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். ஆனால் இந்நாளில் சுத்தமான பசு நெய் கிடைப்பது அரிதென்று பலரும், இவ்வாறு செய்ய முடிவதில்லை.
சந்தணி கொங்கையாளோர் பங்கினர் சாம வேதர்
எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர்
அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆனெய்யால் வேட்கும்
வெந்தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே
கூற்றுவனே நேரில் தோன்றி வருத்துவதைப் போன்று தன்னை வருத்திய சூலை நோயினை எவ்வாறு போக்கிக் கொள்வது என்று தெரியாமல் தவித்த தனது சூலை நோயினை போக்கிய பெருமானை, சமணர்களின் சூழ்ச்சியிலிருந்து தன்னை மீட்ட பெருமானை, தனது தாய் என்றும் தந்தை என்றும் அப்பர் பிரான் குறிப்பிட்டு, திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தினை (4.94.01) தொடங்குவது நமது நினைவுக்கு வருகின்றது. தனக்கு நல்ல வழி காட்டிய தமக்கையார் திலகவதியார், தனக்கு மறுபிறவி அளித்தது போல் உதவி செய்தார் என்பதை உணர்ந்ததால், அப்பர் பிரான் தனது தமக்கையாரையும் இங்கே உடன் தோன்றினராய் என்று குறிப்பிடுகின்றார். தாய், தந்தை, தமக்கை இவர்கள் மூவரும் அவருக்கு கண் முன்னே தோன்றி பலவகையிலும் அவரை நன்னெறிப் படுத்தியவர்கள். ஆனால் சிவபிரான் தானே, உண்மையாக அனைவருக்கும் துணையாக இருந்து உதவுகின்றான். எனவே, பெருமான் தனக்கு முன்னே தோன்றாவிடினும், தனக்கு பல வகையிலும் உதவி செய்த துணைவனை தோன்றாத் துணைவன் என்று இங்கே அழைக்கின்றார். தோன்றாத்துணை நாதன் என்பது தலத்து இறைவனின் திருநாமம்.
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.104.1) அப்பர் பிரான் பெருமானை எந்தை என்று குறிப்பிடுகின்றார். மாசில்=குற்றம் ஏதும் இல்லாத; கூர்மை குறைவது வாளின் குற்றம்; மறியும்=மடிந்து வரும், மடங்கி வரும்; அரிசில் ஆற்றின் நீரலைகளின் மேல் மிதந்து வரும் அன்னங்கள்,ஊஞ்சலில் ஆடுவது போன்று மேலும் கீழுமாக செல்கின்றன என்றும் அந்த அன்னங்கள் தூக்கத்தில் ஆழும் வண்ணம் நீல மலரின் தேனை உண்ட களிப்பில் வண்டுகள் மிருதுவான குரலில் பாடுகின்றன என்றும் அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடலைக் கேட்டு மகிழும் கெடில நதி, பரிசாக உயர்ந்த மணிகளை வீசுகின்றது என்றும் அழகாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார்.
மாசில் ஒள் வாள் போல் மறியும் மணிநீர்த் திரைத் தொகுதி
ஊசலை ஆடி அங்கு ஒண்சிறை அன்னம் உறங்கலுற்றால்
பாசறை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு
வீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே
இதே பதிகத்தின் மூன்றாவது பாடலிலும் அப்பர் பிரான் எந்தை என்று பெருமானை குறிப்பிடுகின்றார். அம்மலர்=அழகிய மலர்கள்; அஞ்சனம்=மை;செந்துவர்=பவளம் போன்று செம்மை நிறம்; இளையார்=இளைய பெண்டிர்; வெம்முலை=விரும்பும் மார்பகம்; விலை பெறு=விலை மதிப்பு உடைய மாலைகள்; மருங்குல்=இடுப்பு; தடந்தோள்=அகன்ற தோள்கள்; விம்மு=ஒலிக்கும்; புனல்= வெள்ளம்; நதியினில் குடைந்து வெகுநேரம் நீந்துதல் சிறந்த உடற்பயிற்சி என்பதையும் அத்தகைய பயிற்சிகள் உடலை மெலிவிக்கும் என்பதையும் நாம் அறிவோம். பருத்த மார்பங்களை உடைய இளமகளிர், தமது இடைக்கு அவை பாரமாக இருக்குமே என்பதை பொருட்படுத்தாமல் இரக்கம் அற்றவர்களாக இருக்கின்றனர் என்று நகைச்சுவையாக அப்பர் பிரான் கூறுகின்றார்.
அம்மலர்க் கண்ணியர் அஞ்சனம் செந்துவர் வாய் இளையார்
வெம்முலைச் சாந்தம் விலை பெறு மாலை எடுத்தவர்கள்
தம் மருங்குற்கு இரங்கார் தடந்தோள் மெலியக் குடைவார்
விம்மு புனற் கெடிலக் கரைத்தே எந்தை வீரட்டமே
கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.106.2) அப்பர் பிரான் பெருமானை கழிப்பாலை எந்தை என்று குறிப்பிடுகின்றார். வரை பொரு கரை=மலையை ஒக்கும் கரை; கடல் அலைகளால் அடித்துக் கொண்டு வரப்படும் மணி, முத்து, பவளம் ஆகியவை சேர்வதால் கரை மலை போன்று உயர்ந்து காணப்படுகின்றது என்று கூறுகின்றார். எற்றுதல்=மோதுதல்; பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு ஆட்கொண்ட தன்மையை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.
பருமா மணியும் பவள முத்தும் பரந்து உந்தி வரை
பொருமால் கரை மேல் திரை கொணர்ந்து எற்றப் பொலிந்து இலங்கும்
கருமா மிடறு உடைக் கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை
பெருமான் அவன் என்னை ஆளுடையான் இப்பெரு நிலத்தே
ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் (4.113.1) அப்பர் பிரான் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். பவளத்துடன் தொடர்பு கொண்ட பொருட்களை,பவள மேனியனாகிய சிவபெருமானுடன் இணைத்துப் பாடும் பாடல். சிவபிரானின் சடை செம்மை நிறத்தது என்று பல தேவாரப் பாடல்களில்கூறப்படுகின்றது. சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட தேவாரப் பாடல்களில் செஞ்சடை என்ற சொல் இடம் பெறுகின்றது. வால மதி=பிள்ளை மதி: பிறைகள்தேய்ந்து காணப்படுவதால் இளமதி என்றும் பிள்ளை மதி என்று, பெருமானின் சடையில் உள்ள சந்திரனைக் குறிப்பிடுவது திருமுறை மரபு. பவள மலைகள்போன்று காட்சி தரும் சிவபெருமானின் பருத்த தோள்களின் மேல் படிந்துள்ள சடைக் கற்றைகள் பவள இழைகள் போல் காட்சி தருகின்றன. செம்பவளநிறத்துச் சடையின் மேல் காணப்படும் பாம்பு, பவளக் கொடியில் காணப்படும் கொழுந்து போன்று தோற்றம் அளிக்க, பவளக் கொடியில் காணப்படும் பூபோன்ற பிறைச் சந்திரன் பெருமானின் சடையில் அழகான பூவாக மிளிர்கின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பவளத் தடவரை போலும் திண்தோள்கள் அத்தோள் மிசையே
பவளக் குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அச்சடை மேல்
பவளக் கொழுந்து அன்ன பைம்முக நாகம் அந்நாகத்தொடும்
பவளக்கண் வாலமதி எந்தை சூடும் பனிமலரே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.10.7) அப்பர் பிரான், எந்தை என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலில் ஆட்கொள்ளப்பட்ட அடியானாகிய தான் நேரில் காணும் பொருட்டு கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று வேண்டிய அப்பர் பிரான், இந்த பாடலில் பல அடியார்களும் அவ்வாறு வேண்டுவதாக கூறுகின்றார். கோயில் திருக்கதவுகள் மூடிக்கிடப்பது, கோயிலின் பிணியாக இந்த பாடலில் கருதப்படுகின்றது.
வெந்த வெண்பொடி பூசும் விகிர்தரோ
அந்தம் இல்லி அணி மறைக்காடரோ
எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட
இந்த மாக்கதவம் பிணி நீக்குமே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.14.8) அப்பர் பிரான் பெருமானை, எந்தை இடைமருது ஈசன் என்று அழைக்கின்றார்.கந்தம்=வாசனை; வெந்த வெண்பொடி=முற்றூழிக் காலத்தில் அனைத்து உயிர்களும் தாங்கள் பொருந்தியிருந்த உடலினை விட்டு ஒருங்கே விலக,அவ்வாறு உயிரற்ற உடல்கள் எரிந்த சாம்பல்; விகிர்தன்=மாறுபட்டவன்; அனைத்து உயிர்களும் தன்னிடம் ஒடுங்க, அனைத்துப் பொருட்களும் அனைத்து உடல்களும் அழிந்த பின்னரும் எஞ்சியிருக்கும் இறைவனின் தன்மை மற்றவரிடமிருந்து மாறுபட்ட தன்மை என்பதால் அப்பர் பிரான், இந்த பாடலில் இறைவனை விகிர்தன் என்று குறிப்பிடுகின்றார்.
வெந்த வெண்பொடி பூசும் விகிர்தனார்
கந்த மாலைகள் சூடும் கருத்தனார்
எந்தை என் இடைமருதினில் ஈசனைச்
சிந்தையால் நினைவார் வினை தேயுமே
திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.35.6) அப்பர் பிரான் பெருமானை எந்தை தாய் தந்தை எம் பெருமான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். மந்தமாக=மெதுவாக; சந்தம்=மாலை; உலகப் பொருட்கள் மீதும் உலகில் உள்ள உயிர்கள் மீதும் நாம் வைத்துள்ள பற்றுதலை அறுத்தால், அவர்களுக்கு தாய் போன்றும் தந்தை போன்றும் இறைவன் உதவி செய்வான் என்ற செய்தியும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. ஒவ்வொரு பிறவியிலும் வேறு வேறு மனிதர்களை உறவினராக கொள்ளும் உயிருக்கு நிரந்தரமான உறவினன் இறைவன் ஒருவன் தானே. எனவே தான் அந்த இறைவனை தாய், தந்தை, தலைவன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தான் அவ்வாறு கருதுவதை நமக்கும் உணர்த்தி, நாமும் அவ்வாறே இறைவனை நமது தாயாகவும், தந்தையாகவும், தலைவனாகவும் கருதி அவன் மீது நாம் கொண்டுள்ள பற்றினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த பாடலின் மையக் கருத்தாகும்.
மந்தமாக வளர்பிறை சூடியோர்
சந்தமாகத் திருச்சடை சாத்துவான்
பந்தமாயின தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய் தந்தை எம் பெருமானுமே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.48.5) அப்பர் பிரான், எந்தையாகிய ஏகம்பனைத் தொழுவாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று, அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக உள்ள பெருமானை நாம் புகழ்ந்து வணங்கவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.புந்தி=அறிவு; அந்தி=அந்திக் காலம்; சிவம்=இன்பம்; தன்னை நினைக்கும் அடியார்களின் சிந்தையில் சிவமாக நின்று இன்பம் அளிக்கும் பெருமான், அந்தி வானத்து நிறத்தில் திருமேனி உடையவன்; அவன் நெருப்பாகவும், நீராகவும், ஆகாயமாகவும் மற்றுமுள்ள இரண்டு பூதங்களாகவும் இருக்கின்றான். அவனே தன்னை நினைத்து வணங்கும் அடியார்களின் அறிவாகவும் அவர்களது உள்ளத்தில் புகுந்து நிறைந்து நிற்கின்றான். இவ்வாறு தனது அடியார்களின் உள்ளத்தில் நிறைந்து நிற்கும் பெருமானை, எனது தந்தையாகிய கச்சி ஏகம்பத்து இறைவனை, நீங்கள் புகழ்ந்து தொழுவீர்களாக என்று தனது நெஞ்சத்தை நோக்கி கூறுவதாக அமைந்த பாடல்
சிந்தையுள் சிவமாய் நின்ற செம்மையோடு
அந்தியாய் அனலாய் புனல் வானமாய்ப்
புந்தியாய்ப் புகுந்து உள்ள நிறைந்த எம்
எந்தை ஏகம்பம் ஏத்தி தொழுமினே
கடுவாய்க்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.62.6) அப்பர் பிரான், எந்தை ஈசன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.மைந்தன்=வல்லமை மிகுந்தவன்; மிகவும் வலிமையாக நமது உயிருடன் பிணைந்திருக்கும் பந்த பாசங்களை, அறுத்தெறிவது நம்மால் இயலாத காரியம்.இறைவனின் அருளுடன் தான் நாம் அதனை செய்ய முடியும். இவ்வாறு நம்மால் முடியாத ஒரு செயலைச் செய்வதற்கு உதவும் இறைவனை வல்லவன் என்று அழைப்பது பொருத்தம் தானே. மணவாளன் என்று எப்போதும் மணக்கோலத்துடன் இருப்பவன் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு அன்னைப் பத்து பதிகத்தில் மணிவாசகர், நித்த மணாளர் நிரம்ப அழகியர் என்று கூறுவதை நினைவூட்டுகின்றது.
பந்தபாசம் அறுத்தெனை ஆட்கொண்ட
மைந்தனை மணவாளனை மாமலர்க்
கந்த நீர்க் கடுவாய்க் கரைத் தென்புத்தூர்
எந்தை ஈசனைக் கண்டு இனிது ஆயிற்றே
பூவனூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.65.2) அப்பர் பிரான், பெருமானை எந்தை, என் ஆருயிர் என்று மிகவும் உயர்வாக குறிப்பிடுகின்றார்.இயற்கை=இயல்பு; என்னன்=எனக்கு உற்ற துணையாக இருப்பவன்; தன்னன்=தனக்குத் தானே உவமையாக இருப்பவன், தனக்கு நேராக எவரும்இல்லாதவன்; பல நிலைகளிலும் இருந்து இறைவன் இருந்து தனக்கு உதவுவதாக அப்பர் பிரான் சொல்வது நமக்கு அவர் அருளிய அப்பன் நீ என்றுதொடங்கும் பதிகத்தின் (6.95) முதல் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. எனக்கு உற்ற துணையாக இருக்கும் இறைவனே, நீ எனதுமனையாளாக இருந்து எனது தேவைகள் அனைத்தையும் கவனித்து நிறைவேற்றுகின்றாய்; எனது தந்தை என்னை பாதுகாத்தது போன்று என்னைபாதுகாக்கும் நீ, எனது ஆருயிராக விளங்குகின்றாய். தனக்குத் தானே உவமையாக விளங்குபவனாகிய நீ, தனக்கு ஒப்பார் எவரும் இல்லாத நீ, என்னைஉனது அடியானாக ஏற்றுக் கொண்டாய்; எனக்கு பொன் போன்று மிகவும் உயர்ந்த செல்வமாக உள்ளவன் நீயே; பூவனூர் தலத்தில் பொருந்தி உறையும்இறைவனாகிய பெருமான், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களாக இருப்பது மட்டுமன்றி, இன்னவென்று அறிய முடியாத தன்மையுடன் இருப்பதுஇறைவனின் இயற்கையாக உள்ளது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
என்னன் என் மனை எந்தை என் ஆருயிர்
தன்னன் தன் அடியேன் தனமாகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
இன்னன் என்று அறிவொண்ணான் இயற்கையே
ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (5.96.4) எந்தை பிரான் என்று பெருமானை குறிப்பிடும் அப்பர் பிரான், பெருமானின் ஆற்றலை புகழ்ந்து பேசுகின்றார்.மாதவர்=சிறந்த தவம் செய்யும் முனிவர்கள், இங்க தாருகவனத்து முனிவர்களை குறிப்பிடுகின்றது. மால்=மயக்கம், தவறான எண்ணம்; தாங்கள் செய்யும் வேள்வி முதலான கர்மங்களே அனைத்துப் பலன்களையும் அளிக்கும் என்ற தவறான எண்ணத்துடன், பெருமானை புறக்கணித்து வாழ்ந்த முனிவர்களின் தவறான கருத்தினை நீக்கி, அவர்களும் தன்னை வழிபடச் செய்தவன் பெருமான். கோளரவு=தனது கண்ணினில் படும் இரையினை உட்கொள்ளும் பாம்பு;ஆனால் அந்த பாம்பு, தனதருகில் உள்ள சந்திரனுக்கு ஏதும் துன்பம் விளைவிக்காத வண்ணம் அடக்கி, அவர்களுக்குள்ளே இருந்த பகைமை உணர்வினை நீக்கி, இருவரையும் தனது சடையினில் வைத்தவன் பெருமான். பகைவர்கள் இருவரும் தம்மிடையே இருக்கும் பகையினை பொருட்படுத்தாமல் ஒரே இடத்தில் அடக்கி வைப்பதற்கு தனியான ஒப்பற்ற ஆற்றல் வேண்டும் அல்லவா. அதே போன்று பெருமானை வழிபடுவதில் சிறிதும் நம்பிக்கை அற்றவர்களாய் வாழ்ந்து வந்த தாருகவனத்து முனிவர்களின் தன்மையை மாற்றி அவர்களும் பெருமானை வழிபடும் வண்ணம் மாற்றுவதற்கு சிறந்த ஆற்றல் வேண்டும் அல்லவா. மேலும் முதலில் பெருமான் மீது கோபம் கொண்ட முனிவர்கள் ஏவிய மதயானை, புலி, முயலகன், வெறியூட்டப்பட்ட மான்கன்று ஆகிய அனைத்தையும் அடக்கிய பெருமானின் ஆற்றல் சிறப்பு வாய்ந்தது அல்லவா. எனவே தான் இந்த இரண்டு செயல்களையும் குறிப்பிட்டு, பெருமானே உனது ஆற்றலுக்கு நாம் வேறு ஏதேனும் சொல்ல வேண்டுமோ என்று பாடலை அப்பர் பிரான் முடிக்கின்றார்.
மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக்கு
உறையும் ஆயினை கோளரவோடு ஒரு
பிறையும் சூடினை என்பது அலால் பிறிது
இறையும் சொல்லில்லை எந்தை பிரானிரே
ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் (5.95.8) அப்பர் பிரான் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். வெந்த நீறு-திருநீறு; கந்த மாமலர்=நறுமணம் வீசும் மலர்கள்; இந்த பதிகத்தின் ஏழாவது பாடலில் திருவடிகளை குறிப்பிட்டு திருமுடியையும் உணர்த்திய அப்பர் பிரான், இந்த பாடலில் திருமுடியை குறிப்பிட்டு திருவடியையும் உணர்த்தும் நயத்தை நாம் காணலாம். அந்தம் என்று அனைத்தையும் கடந்து நிற்கும் திருமுடி உணர்த்தப் படுகின்றது. பிரமனும் திருமாலும்,தங்களது நெற்றியிலும் திருமேனியிலும் ஒருபோதும் திருநீறு அணிந்தாரில்லை; அவர்கள் நறுமணம் கமழும் மலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து இறைவனுக்கு சாற்றினரில்லை; ஆனால் எமக்குத் தந்தையாக திகழ்பவனும், எருதினைத் தனது வாகனமாக விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டவனும்,தீப்பிழம்பின் நிறத்தில் திருமேனியை உடையவனும் ஆகிய பெருமானின் திருமுடியையும் திருவடியையும் காண்பதற்கு அவர்கள் இருவரும் முயற்சி செய்து,தங்களது முயற்சியில் தோல்வி கண்டனர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வெந்த நீறு விளங்க அணிந்திலர்
கந்த மாமலர் இண்டை புனைந்திலர்
எந்தை ஏறு உகந்து ஏறு எரி வண்ணனை
அந்தம் காணல் உற்றார் அங்கு இருவரே
ஒரு பொதுப்பதிகத்தின் முதல் பாடலில் (5.96.1) அப்பர் பிரான் எந்தை பிரான் என்று குறிப்பிட்டு பெருமான் தனது உள்ளத்தில் உள்ள இருளை நீக்கவேண்டும் என்று வேண்டுகின்றார். அந்த சிந்தனையே எப்போதும் தனது மனதினில் இருப்பதாக இந்த பாடலில் கூறுகின்றார். பொன்னுள்ள என்ற சொல்லுக்கு இரண்டு விதமாக பொருள் கூறப்படுகின்றது. பொன்னால் செய்யப்பட்டது போன்ற சுருண்ட முடிகளைக் கொண்ட சடை என்பது ஒரு பொருள்.பொன்னுள்ள என்ற சொல்லுக்கு பொன்னின் உள்ளம் என்று பொருள் கொண்டு பொன் தனது உள்ளத்தில் பெருமானின் புரிசடையை நினைப்பதாக விளக்கம் அளிக்கின்றனர். பெருமானின் அழகிய சடை, பொன்னின் உள்ளத்தில் பொறாமை உணர்வினை கிளறியது என்று கற்பனை செய்து, பெருமானின் சடை பொன்னினை விடவும் உயர்ந்தது என்று கூறுகின்றனர். அழகான கற்பனை. மின்னுள்ள= மின்னலைப் போன்ற ஒளி கொண்டுள்ள; இறை=சிறிது நேரம்;
பொன்னுள்ளத் திரள் புன்சடையின் புறம்
மின்னுள்ளத் திரள் வெண்பிறையாய் இறை
நின்னுள்ளத்து அருள் கொண்டு இருள் நீங்குதல்
என்னுள்ளத்துளது எந்தை பிரானிரே
ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் (5.97.8) அப்பர் பிரான் பெருமானை, எந்தையே எம்பிரானே என உள்கிச் சிந்திப்பார் அவர் தீவினை தீரும் என்று கூறுகின்றார். உள்கி=நினைத்து; அந்தம்=முடிவான பொருள்; வேதங்கள் மற்றும் சிவாகமங்கள் உணர்த்தும் உண்மைப் பொருளினை அறிந்து கொள்ள இறைவன் அருள் வேண்டும் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. முந்தைய பாடலில் பெருமானைச் சாராதார்க்கு, தீயவை, தங்களது தன்மை மாறாமல் தீய விளைவுகளை பயக்கும் என்று கூறிய அப்பர் பிரான், இந்த பாடலில் இறைவனைச் சிந்திப்பவர்க்கு அவர்களது தீவினைகளை இறைவன் நீக்கி விடுவான் என்று உணர்த்துகின்றார்.
எந்தையே எம் பிரானே என உள்கிச்
சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்
வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
அந்தமா அளப்பார் அடைந்தார்களே
மற்றொரு பொதுப்பதிகத்தின் பாடலில் (5.98.2) அப்பர் பிரான், எந்தையாகிய பெருமானை தனது உள்ளம் கண்டுகொண்டது என்று கூறுகின்றார்.பொந்தை=பொத்தைகள் உடைய உடல், ஓட்டைகள் உடைய உடல்; மேனி=திருமேனி உடையார்; புக்கு=கட்டு; புக்கு என்ற சொல்லுக்கு புகுந்து என்று பொருள் கொண்டு, பெருமான் தனது உடலில் புகுந்ததே, இந்த உடலுடன் பிணைக்கப்பட்டுள்ள உயிருக்கு விடுதலை அளித்து பிறவாமைத் தன்மையை அருளும் வண்ணம் என்று அப்பர் பிரான் கருதுவதாக மற்றோர் விளக்கமும் அளிக்கப் படுகின்றது. இந்த விளக்கமும் பொருத்தமாக உள்ளது. என்னைத் தனது கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருக்கும் ஒன்பது ஓட்டைகள் கொண்ட அடியேனது உடலின் உள்ளே புகுந்த பெருமான், எனது கட்டினை நீக்கி எனது உடலின் பிடியிலிருந்து எனது உயிரினை விடுவிக்கின்றான். இவ்வாறு எனக்கு உதவி செய்யும் பெருமானை, எனது தந்தை போன்று எனக்கு அருமையானவனை, கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தில் திருமேனி உடையவனை, எனது தெளிவான சிந்தையாக உள்ளவனை, எனது சிந்தையில் தெளிவினை ஏற்படுத்தியவனை, எனது தந்தையாகிய பெருமானை, எனது உள்ளம் கண்டு கொண்டது என்பதாக அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.
பொந்தையைப் புக்கு நீக்கப் புகுந்திடும்
தந்தையைத் தழல் போல்வதோர் மேனியைச்
சிந்தையைத் தெளிவைத் தெளிவாய்த்ததோர்
எந்தையைக் கண்டு கொண்டது என் உள்ளமே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.3.9) அப்பர் பிரான் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். நிறைவார்ந்தநீர்மை=குறை ஏதும் இல்லாத நிறைவான தன்மை. இவ்வாறு அப்பர் பிரான் சொல்வது நமக்கு, குறைவிலா நிறைவே என்று சுந்தரரும் மணிவாசகரும்அழைப்பதை நினைவூட்டுகின்றது. இதே பதிகத்தின் மூன்றாவது பாடலிலும் பெருமானை எந்தை என்று அப்பர் பிரான் அழைக்கின்றார்.
நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான்தன்னை நெற்றிமேல் கண் ஒன்று உடையான் தன்னை
மறையானை மாசொன்றிலாதான் தன்னை வானவர்மேல் மலரடியை வைத்தான்தன்னைக்
கறையானைக் காதார் குழையான் தன்னைக் கட்டங்கம் ஏந்திய கையினானை
இறையானை எந்தை பெருமான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.7.10) அப்பர் பிரான், எந்தை என்று பெருமானை குறிப்பிடுகின்றார். அயோகந்தி மற்றும் ஆன்பட்டி வைப்புத் தலங்கள். இந்த பதிகத்தின் பாடல்களில் பல தலங்கள் குறிப்பிடப்பட்டு, அந்த தலங்கள் அனைத்திலும் பெருமான் நிலையாக உறைவதால், அந்த தலங்கள் பெருமானை காக்கின்ற இடங்களாக கருதப்படுகின்றன.
சிந்தும் புனல் கெடில வீரட்டமும் திருவாஞ்சியமும் திருநள்ளாறும்
அந்தண் பொழில் புடைசூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்
எந்தம் பெருமாற்கு இடமாவதாம் இடைச்சுரமும் எந்தை தலைச்ங்காடும்
கந்தம் கமழும் கரவீரமும் கடம்பூர்க் கரகோயில் காப்புக்களே
கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.12.2) அப்பர் பிரான் பெருமானை எந்தை என்று குரிப்பிடுகின்றார். முறை ஆர்ந்த=மதில்களுக்கு உரிய இலக்கணத்துடன் கட்டப்பட்ட மதில்கள்; பிணக்கம்=பகைமை; முன்னுமாய் பின்னுமாய்=ஆதியாய் அந்தமாய் இருக்கும் நிலை; அனைத்துப் பொருட்களுக்கும் உயிர்களுக்கும் முந்தையவனாகவும், அனைத்துப் பொருட்களும் உயிர்களும் அழிந்த பின்னரும் இருப்பவனாக இறைவன் இருக்கும் தன்மை பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. இந்த பாடலில் நஞ்சு அடங்கக் கண்ட பெருமான் என்று கூறுகின்றார். பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த நஞ்சு அனைத்து இடங்களிலும் பரவத் தொடங்கியது. அதனை ஒருங்கே திரட்டி பெருமான் உண்டு தனது கழுத்தினில் அடக்கியதால், அனைத்து உலகங்களும் தப்பின. இதனை உணர்த்தும் வண்ணம், நஞ்சு அடங்கக் கண்ட பெருமான் என்று கூறுகின்றார். பெருமான் வேதங்களாகவும் ஆகமங்களாகவும் அமைந்த தமது சொற்களால், நாம் மாயையால் ஆகிய நமது உடலினை விடுத்து, உய்வடைந்த உயிர் வீடுபேறு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக என்று அறிவுரை கூறும் பாடல். இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலும் அப்பர் பிரான் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார்.
முறை ஆர்ந்த மும்மதிலும் பொடியாச் செற்றுமுன்னுமாய்ப் பின்னுமாய் முக்கண் எந்தை
பிறை ஆர்ந்த சடைமுடிமேல் பாம்புகங்கை பிணக்கம் தீர்த்து உடன்வைத்தார் பெரிய நஞ்சு
கறை ஆர்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை கழிப்பாலை மேய கபாலப்பனார்
மறை ஆர்ந்த வாய்மொழியான் மாய யாக்கை வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும்நாமே
திருநாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.22.10) அப்பர் பிரான் பெருமானை எந்தை என்று குறிப்பிடுகின்றார். இந்தபதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களிலும் பல தலங்களிலும் உறையும் பெருமானை, திருநாகைக் காரோணத்தில் காணலாம் என்று கூறிய அப்பர் பிரான்,எத்தகைய அடியார்களால் இறைவனைக் காண முடியும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். மனக்குண்டர்=அறிவிலிகள்; சீவரத்தர்=சீவர ஆடையை,துவராடையை அணிந்த புத்தர்கள்; சினை=உடல்; பனை=பனை மரத்தின் தண்டு போன்று வலிமையான துதிக்கையை உடைய யானை; கனை கடல்=ஓயாமல் ஒலிக்கும் அலைகளை உடைய கடல்; பதிகத்தின் மற்ற பாடல்களில், பல தலங்களை குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில், நாகைக் காரோணம் தவிர்த்து வேறு எந்த ஒரு தலத்தையும் குறிப்பிடவில்லை; பனைமரத்தின் தண்டு போன்று வலிமையாக உள்ள துதிக்கையினை உடைய யானையின் தோலை உரித்து தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட பெருமானின் திருவடிகளை பற்றிக் கொள்வதையே, நமது உற்ற துணையாக கருதினால் தான், ஓயாமல் ஒலிக்கும் அலைகளை உடைய கடலினால் சூழப்பட்ட, குளிர்ந்த உப்பங்கழிகள் சூழ்ந்த நாகை தலத்தில் உள்ள திருநாகைக் காரோணம் திருக்கோயிலில், பெருமானை நம்மால் எப்போதும் காணமுடியும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
மனைதுறந்த வல்லமணர் தங்கள்பொய்யும் மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யும்
சினை பொதிந்த சீவரத்தார் தங்கள் பொய்யும் மெய் என்று கருதாதே போத நெஞ்சே
பனையுரியைத் தன்னுடலில் போர்த்த எந்தை அவன்பற்றை பற்றாகக் காணின்அல்லால்
கனைகடலின் தெண் கழி சூழ் அந்தண்நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணலாமே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.27.4) அப்பர் பிரான் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். தலைப்படுவேன்=அடைவேன்.துலைப்படுத்தல்=பிடிப்பினில் இருத்தல்; மன்னுருவம்=மயக்கம் அளிக்கும் உருவம். நமது உடலில் உள்ள ஐம்பொறிகளும், சுவை, ஒளி, ஊரு, ஓசை, நாற்றம் எனப்படும் ஐந்து தன்மாத்திரைகளால் ஆளப்பட்டு அவற்றின் வழியே சென்று பல துன்பங்களை உயிருக்கு ஈட்டித் தருகின்றன. மின்னே என்று அழைத்து மின்னலைப் போன்று அழகிய அரம்பையர்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். உடலில் உள்ள பொறிகளை எல்லாம் கவரும் வகையில் அரம்பையர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை சேக்கிழாரின் பெரியபுராணப் பாடல் நமக்கு உணர்த்துகின்றது. ஆடியும் பாடியும், நறுமணம் கொண்ட மலர்களைப் பொழிந்தும், தங்கள் குழல் அவிழுமாறும் இடை துவளுமாறு ஓடியும், உடைகள் நெகிழுமாறு அசைந்தும் அவர்கள் செய்த செய்கைகள் மன்மதனை துணைக்கு கொண்டுள்ளது போன்ற தன்மையை உணர்த்தியது என்று சேக்கிழார் பெரிய புராணத்துப் பாடல் ஒன்றில் கூறுகின்றார். இறைவனின் அழகுக்கு முன்னர், வேறு எவரது அழகும் எடுபடாது என்பதை உணர்த்தும் வகையில், சிவபெருமான் உறைவதால் தான் உலகத்திற்கே அழகு கூடியது என்றும் இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். அத்தகைய எழில் வடிவம் தனது நெஞ்சினில் புகுந்துள்ள காரணத்தால், வேறு எந்த அழகும் தன்னைக் கவராது என்பதை அரம்பையர்களுக்கு உணர்த்தும் நயத்தையும் நாம் இங்கே காணலாம்.
உன்னுருவில் சுவை ஒளி ஊறு ஓசைநாற்றத்து உறுப்பினது குறிப்பாகும் அமைவீர்நுங்கள்
மன்னுருவத்து இயற்கைகளால் வைப்பீர்க்கையோ வையகமேபோதாதே யானேல்வானோர்
பொன்னுருவைத் தென் ஆரூர் மன்னு குன்றைப் புவிக்கு எழிலாம் சிவக்கொழுந்தைப் புகுந்து என் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை எந்தை தன்னைத் தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே
நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.41.9) அப்பர் பிரான், பெருமானை நோக்கி எந்தாய் எம்பெருமான் ஆனாய் நீயே என்று கூறுகின்றார். தனக்கு தந்தை தாய் இல்லாதான் என்று, பெருமான் தானே தோன்றிய நிலையினை அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இந்த கூற்று நமக்குதிருவாசகம் திருச்சாழல் பதிகத்தை நினைவூட்டுகின்றது. தான் வசிப்பதற்கு பெரிய அரண்மனை இல்லாமல் சுடுகாட்டில் வசிப்பவனை, நல்ல பட்டாடைகள்அணியாமல் தோலாடை அணிந்தவனை, தனக்கு தாய் தந்தையர் இல்லாமையால் தனது தாய் தந்தையர் மூலம் அரசு முதலிய செல்வங்களைப்பெறாதவனை, படைகள் ஏதும் இல்லாமல் தனியாக இருப்பவனை, எவ்வாறு தலைவன் என்று ஏற்றுக்கொள்வது என்று முதல் பெண்மணி கேட்க, அதற்குஇரண்டாவது பெண்மணி பதில் அளிக்கும் விதமாக அமைந்த பாடல். தனக்கு தாய் தந்தையர் எவரும் இல்லாவிடினும், தனக்கு ஒப்பு எவரும் இல்லாமையால்தனியாக இருப்பவனும் ஆகிய சிவபெருமான் கோபித்தால், உலகு அனைத்தும் தூள் தூளாக மாறிவிடும். எனவே அத்தகைய வல்லமை வாய்ந்த அவனைத்தவிர வேறு எவருக்கு தலைவனாக இருக்கும் தகுதி உள்ளது என்று அடுத்தவள் பதில் அளிக்கின்றாள் என்பதே கோயில் சுடுகாடு என்று தொடங்கும் திருச்சாழல் பதிகத்து பாடலின் பொருள். மூவலூர், தேனூர் என்பன வைப்புத்தலங்கள்.
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலையார் கயிலாயன் நீயே என்றும்
எந்தாய் எம் பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும்
முந்திய முக்கணாய் நீயே என்றும் மூவலூர் மேவினாய் நீயே என்றும்
சிந்தையாய்த் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.46.2) அப்பர் பிரான் பெருமானை எந்தை என்றும் பல்லுயிர்கோர் தந்தை என்றும் குறிப்பிடுகின்றார். மின்னானை=மின்னலாக இருந்து ஒளி தருபவன்; உருமு=இடி; ஒளியின் வேகத்தை விடவும் ஒலியின் வேகம் குறைவு என்பதால் நாம்மின்னலை முன்னர் காண்கின்றோம், அதன் பின்னரே இடியின் ஓசையைக் கேட்கின்றோம். எனவே இந்த வரிசை முறையை பின்பற்றி மின்னலும் முன்னமும்இடியை பின்னரும் வைத்து அப்பர் பிரான் பாடியுள்ளார். வெண்முகிலாய் மழை பொழிவான் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு சற்றே வியப்பினைத்தரலாம். நீர்த்திவலைகளை அதிகமாக உள்ளடக்கியதால் மேகங்கள் கருத்து காணப் படுவதையும், அத்தகைய மேகங்கள் ஒன்றோடு ஒன்று இடித்து மழைபொழிவதையும் நாம் அறிவோம். அப்படி இருக்கையில் வெண்முகில் என்று சொல்வதேன். நம்மைச் சற்று சிந்திக்க வைக்கும் தொடர் இது. கருமேகங்களாக இருப்பினும், ஒன்றுடன் ஒன்று இடிப்பதால் ஏற்படும் மின்னல் ஒளியின் பின்னணியில், மேகங்கள் வெண்மை நிறத்துடன் காணப்படுவதைஇங்கே குறிப்பிடும் வண்ணம் மழை பொழியும் வெண்முகில் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இறைவனின் கருணையை மழைக்கு ஒப்பிடுவது அருளாளர்கள் வழக்கம். என்னானை=எனக்கு உரியவனை; என்னானை என்ற தொடருக்கு எனக்கு ஆனை போன்றவன் என்று பொருள் கொண்டு விளக்கம் கொள்வதும் ;பொருத்தமே. யானை, தன்னைப் பிணைக்கும் சங்கிலியை தானே எடுத்து பாகனிடம் கொடுத்து, அந்த சங்கிலியைக் கொண்டு தன்னை தூணுடன் பிணைக்குமாறு செய்யும். அது போல் இறைவனும் அன்பு என்ற பண்பினை உயிர்களுக்கு அளித்து, அந்த அன்புச் சங்கிலி கொண்டு உயிர்கள் தன்னை அவற்றுடன் பிணைத்துக் கொள்ள வாய்ப்பினை அளிக்கின்றான் என்று சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இறைவனின் கருணையை மழைக்கு ஒப்பிடுவது அருளாளர்கள் வழக்கம். என்னானை=எனக்கு உரியவனை;
மின்னானை மின்னிடைச் சேரும் உருமினானை வெண்முகிலாய் எழுந்து மழைபொழிவான் தன்னைத்
தன்னானைத் தன் ஒப்பார் இல்லாதானைத் தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தையாகி
என்னானை எந்தை பெருமான் தன்னை இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே
அன்னானை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்துய்ந்தேனே
திருக்கயிலாயத்துத் திருத்தாண்டகப் பாடல் ஒன்றில் (6.57.4) அப்பர் பிரான் பெருமானை, எனது தாயே எனது தந்தையே என்று அழைக்கின்றார். முனி என்றசொல் முன்னி என்று திரிந்ததாக கூறுவார்கள்; என்னியாய்=எனது ஆய், எனது தாய்; தனது சிறிய வயதில் தாயையும் தந்தையையும் இழந்த அப்பர் பிரான்,தாயாகவும் தந்தையாகவும் இருந்து இறைவன் வழிகாட்டியதாக இங்கே குறிப்பிடுகின்றார்.
முன்னியாய் நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி உடையாய் போற்றி
என்னியா எந்தை பிரானே போற்றி ஏழின் இசையே உகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.62.1) அப்பர் பிரான் பெருமானை அத்தா என்று அழைக்கின்றார். அத்தா என்றால் தந்தை என்று பொருள். எத்தாயார்=எத்துணை மேம்பட்ட தாயார்; மாடு=செல்வம்; சும்மாடு=சுத்தமான செல்வம், நமது செல்வங்களையும் நமது உறவுகளையும் குறிப்பிட்டு, அவற்றில் உண்மையாக நமக்கு உதவக் கூடியது யாது என்ற கேள்வியை அப்பர் பிரான் இந்த பாடலில் எழுப்புகின்றார். நமக்கு என்று அவர் குறிப்பிடுவது நமது உயிரைத் தான். உயிர் தனது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ளவும், உண்மையான மெய்ப் பொருளை அறிந்து கொள்ளவும் உதவும் பொருட்டு, இறைவன் நமக்கு கருவி கரணங்களை அளித்துள்ளார். அந்த கருவிகள் இல்லாமல் நாம் எதனையும் அறிய முடியாது. உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர், அந்த கருவி கரணங்களால் எந்த உதவியும் உயிருக்கு செய்ய முடியாது. எனவே உடலை விட்டு பிரிந்த உயிருக்கு உதவி தேவைப்படுகின்றது. ஈட்டிய வினைகளின் ஒரு பகுதியை சூக்கும் உடல் அனுபவித்து கழிக்கும் போதும், அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமையவும்,முடிந்தால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதல் பெறவும் உயிர் விரும்பும் போது, உதுவுவார் யார். இந்த பிறவியில் நமக்கு வாய்த்த தாய் தந்தையாரோ சுற்றத்தாரோ உதவ முடியுமா, அவர்கள் எவராலும் உதவ முடியாது. நாம் ஈட்டிய செல்வத்தால் ஏதேனும் உதவியை விலைக்கு வாங்க முடியுமா அதுவம் நடக்காது என்பதே நிதர்சமான உண்மை. இந்த உண்மை தான் இங்கே உணர்த்தப் படுகின்றது. செத்த பிறகு அந்த உயிர்க்கு உதவி தேவைப்படும் போது,யார் உதவி செய்ய வல்லவர், எந்த செல்வம் உதவக் கூடியது என்ற கேள்வியை அப்பர் பிரான் இங்கே கேட்கின்றார் இறைவன் ஒருவனே நமக்கு அந்த தருணத்தில் துணையாக இருந்து உதவி செய்வான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. எத்தந்தை என்று ஒருமையில் குறிப்பிட்ட அப்பர் பிரான் எத்தாயர் என்று பன்மையில் குறிப்பிட்டதை நாம் உணரலாம். ஒருவனை ஈன்ற தாயைத் தவிர, வேறு நான்கு பேரையும் தாயாருக்கு சமமாக கூறுவதுண்டு.அரசனின் மனைவி குடிமக்கள் அனைவர்க்கும் தாய், குருவின் மனைவி சீடர்கள் அனைவர்க்கும் தாய், அண்ணனின் மனைவி, அந்த குடும்பத்தில் மற்ற அனைவர்க்கும் தாய், தாயை ஈன்றவளும் தனது பேரக் குழந்தைகள் அனைவர்க்கும் தாயாக மதிக்கப் படுகின்றாள். செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை என்று நமது உறவினர்களை குறிப்பிட்ட அப்பர் பிரான், அவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் இங்கே கூறுகின்றார். சிறு விறகால் தீமூட்டி செல்லா நிற்பர் என்று கூறுகின்றார். சடலத்திற்கு இறந்தவரின் மூத்த மகன் கொள்ளி வைத்த பின்னர் சுற்றியிருக்கும் ஏனையோரும் சிறிய விறகு கட்டைகளை தீ மூட்டி, சடலத்தின் மீது போடுவது வழக்கம். அவ்வாறு போட்ட பின்னர் உடனே அந்த இடத்திலிருந்து நகர்ந்தால், மற்றவர்கள் தன்னைத் தவறாக நினைப்பாரோ என்ற எண்ணத்தில், தயக்கத்துடன் பலர் இருப்பதையும் அந்த தருணத்தில் நாம் காணலாம். இந்த நிலைமைத் தான் சிறு விறகால் தீ மூட்டி செல்லா நிற்பர் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த செயல் இது உயிரினுக்கு செய்யும் உதவி அல்ல. உயிர் பிரிந்த உடல் முற்றிலும் எரிந்து சாம்பலாக மாற வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் செயல்.
எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக்கா உடைய செல்வா என்றன்
அத்தா உன்பொற்பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டடியேன் என்செய்கேனே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.65.9) அப்பர் பிரான் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். இந்த பாடலில்முருகனுக்கும் விநாயகனுக்கும் தந்தையாக இருப்பவன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்களில் முருகப் பெருமானும் கணபதியும்குறிப்பிடப் பட்டாலும் இருவரையும் சேர்த்து ஒரே பாடலில் குறிப்பிடும் பாடல்கள் சற்று அரிதாகும். முந்தை=அனைத்து உயிர்களுக்கும் முன்னமேதோன்றியவன், சிவன்= இன்ப வடிவினன்; சிந்தாத=இறைவனைப் பற்றிய சிந்தனை தவிர புறப் பொருட்களில் தங்களது கவனத்தை சிதறவிடாத; மால் என்றசொல்லுக்கு பெருமை என்ற பொருள் கொண்டு, சிவந்த கண்களை உடையதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகிய எருதினை வாகனமாக கொண்டவன் என்றுபொருள் கொள்வதும் பொருத்தமே.
முந்தைகாண் மூவரிலும் முதலானான்காண் மூவிலை வேல் மூர்த்திகாண் முருகவேட்குத்
தந்தைகாண் தண் கடமா முகத்தினாற்குத் தாதைகாண் தாழ்ந்தடியே வணங்குவார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத்தார்க்குச் சிவனவன்காண் செங்கண்மால் விடை ஒன்றேறும்
எந்தை காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே
கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.81.3) அப்பர் பிரான் பெருமானை எந்தை என்று குறிப்பிடுகின்றார். அலையார்ந்த=அலைகள் நிறைந்த; மட மங்கை=அழகும் இளமையும் ஒருங்கே பொருந்திய பார்வதி தேவி; பெருமானின் திருவடிகள் மீது தங்களது தலையை பதித்து பெருமானை வணங்குவதால், பெருமானின் திருவடிகள் வானோர்களின் தலைக்கு அணிகலனாக இருப்பதாக இந்த பாடலில் கூறுகின்றார். குஞ்சரம்=யானை;கொலையார்ந்த=கொலைத் தொழிலில் தேர்ந்த;
அலையார்ந்த புனற்கங்கைச் சடையான்கண்டாய் அடியார்கட்கு ஆரமுதமானான் கண்டாய்
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய்
இலையார்ந்த திரிசூலப்படையான் கண்டாய் ஏழுலகமாய் நின்ற எந்தை கண்டாய்
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான்கண்டாய் கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே
ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் (6.93.10) அப்பர் பிரான் பெருமானை எந்தை என்று குறிப்பிட்டு அவரது திருநாமமாகிய நமச்சிவாய என்பதை சொல்லியவாறு துயிலெழும் அடியார்கள் மிகவும் அகன்ற முக்தி உலகில் இருக்கலாம் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தில் முதல் பத்து பாடல்களில் பல திருத்தலங்கள் சென்று, ஆங்கே உறையும் இறைவனை வணங்கி வழிபட்டு, தலத்தின் பெயரைச் சொல்வதால் ஏற்படும் பலன்களை கூறி வந்த அப்பர் பிரான்,இந்த பாடலில் நமச்சிவாய மந்திரத்தைச் சொல்வதால் நமக்கு கிடைக்கும் பலனை எடுத்துரைக்கின்றார். மேலும் இந்த பிறவியில் நமக்கு வாய்த்துள்ள பல்வேறு உறவினர்களும் நிலையான உறவு அல்ல என்பதும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. எனவே இந்த உயிருக்கு நிலையான உறவாக,அனைத்துப் பிறவிகளிலும் திகழும் பெருமானை நமது நிலையான உறவாக கருதி அவரை போற்றி வணங்கி மகிழ வேண்டும் என்று உணர்த்துகின்றார்.திளைத்தல்=நட்பு கொண்டு விளையாடி மகிழ்தல்; இருவிசும்பு=சிவலோகம்
தந்தையார் தாயார் உடன் பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே
வந்தவாறு எங்ஙனே போமாறேதோ மாயமாம் இதற்கு ஏதும் மகிழ வேண்டா
சிந்தையீர் உமக்கொன்று சொல்லக்கேண்மின் திகழ்மதியும் வாளரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கலாமே
நின்ற திருத்தாண்டகத்தின் பாடலில் (6.94.5) அப்பர் பிரான், பெருமான் அனைத்து உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் பற்றுகோடாகவும் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். திண்மை என்பது நிலத்தின் குணம். தீ, நீர் என்று இரண்டு பூதங்களின் பெயரைக் குறிப்பிடும் அப்பர் பிரான் நிலத்தின்தன்மையைக் குறிப்பிட்டு நிலமாக இறைவன் இருக்கும் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார். சார்பு=துணை; தாரகை=விண்மீன், நட்சத்திரம்;நுகர்வான்=துய்ப்பவன், அனுபவிப்பவன்; நேர்மை=நுண்மை, நுண்ணிய தன்மை; அப்பர் பிரான் இந்த பாடலில், ஐம்பூதங்களில் மூன்று பூதங்களைக்குறிப்பிட்ட காரணத்தால், எஞ்சிய இரண்டு பூதங்களின் தன்மையும், குறிப்பால் உணர்த்துவதாக நாம் கொள்ளவேண்டும். நீ, நான் என்று தன்மை, முன்னிலைஆகிய இரண்டு நிலைகளை குறிப்பிட்டமையால், அவன் என்ற படர்க்கை நிலையையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தீயாகி நீராகித் திண்மையாகித் திசையாகி அத்திசைக்கோர் தெய்வமாகித்
தாயாகித் தந்தையுமாய்ச் சார்வுமாகித் தாரகையும் ஞாயிறும் தண்மதியுமாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானேயாகி
நீயாகி நானாகி நேர்மையாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்றவாறே
ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் (6.95.1) பெருமானை அப்பன் நீ அம்மை நீ என்றே அழைக்கின்றார். ஐயன்=தலைவன், குரு, முன்னோன்;ஒப்புடைய மாதர்=நம்முடன் ஒத்த கருத்து கொண்டு பலவிதங்களிலும் நம்முடன் ஒத்துழைத்து இல்லறம் நடத்தும் மனைவி; ஒண்பொருள்=இல்லற வாழ்க்கையின் பயனாக நாம் அடையும் மக்கட்செல்வம் மற்றும் அறநெறியால் வந்த செல்வம்; துய்ப்பன=நாம் அனுபவிக்கும் இன்பங்கள்; உய்ப்பன=நாம் இன்பம் அனுபவிக்க உதவும் கருவிகள், வாகனம் முதலியன;
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ துணையா என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே
எதிர்கொள்பாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.7.9) சுந்தரர், பெருமானை எந்தை என்று குறிப்பிட்டு, அவர் உறைகின்ற எதிர்கொள்பாடி தலம் சென்றடைந்து பெருமானை பணிந்து வழிபடுவோம் என்று கூறுகின்றார். தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று சுந்தரர் நமக்கு அறிவுரை கூறுகின்றார். தவ்வை=தமக்கை; நமக்கு எவ்வளவு நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், அவர்கள் நமக்கு உண்மையான துணையாக இருக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார். நமது உடலுக்குத் துணையாகத் தானே, நமது பிறப்பின் காரணமாக நமக்கு உறவினர்கள் இருக்கின்றார்கள், அவர்களால் உயிருக்கு உற்ற துணையாக இருந்து, உயிர்களை வருத்தும் வினைகளிலிருந்தும் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் தன்மையிலிருந்தும் உயிர்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டவன் பெருமான் ஒருவன் தானே. உயிருக்கு பெருமான் செய்யும் உயர்ந்த உதவியை, வானநெறி காட்டுதல் என்று சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார். எனவே தான் உறவினர்களை எள்ளளவும் அவர்கள் நமக்கு துணையாக இருக்கமாட்டார்கள் என்று கூறுகின்றார்.அளாவி=அளவளாவி,
தந்தையாரும் தவ்வையாரும் எட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோடு உள்ளளாவி வான் நெறி காட்டும்
சிந்தையீரே நெஞ்சினீரே திகழ்மதியம் சூடும்
எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
திருநாவலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.17.7) சுந்தரர், தனக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் பெருமான், தன்னை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்து தனக்கு இனிமேல் வேறெவரும் தாயாகவும் தந்தையாகவும் இல்லாத வண்ணம் அருள் புரிந்தான் என்று கூறுகின்றார். வேயவனார்=மூங்கில் காட்டில் சுயம்புவாக தோன்றியவர்; திருநெல்வேலி தலத்தின் தலபுராணம் குறிப்பிடும் செய்தி; பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்த பெருமான், தனது (பெருமானது) பொன்னார் திருவடியை விட்டு தான் அகலாதவாறு தன்னை பொருத்திக் கொண்டுள்ளார் என்றும் கூறுகின்றார்.
தாயவளாய்த் தந்தை ஆகிச் சாதல் பிறத்தலின்றிப்
போயகலாமைத் தன் பொன்னடிக்கு என்னைப் பொருந்த வைத்த
வேயவனார் வெண்ணெய்னல்லூரில் வைத்தெனை ஆளும் கொண்ட
நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே
அற்புதமான பழைய ஆவணம் காட்டி, தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு, தான் கயிலாயத்தில் அணுக்கத் தொண்டனாக ஆலால சுந்தரனாக பணியாற்றிய போது சமர்ப்பித்த விண்ணப்பத்தை நினைவில் வைத்துக்கொண்டு, திருவெண்ணெய் நல்லூரில் நடைபெறவிருந்த தனது திருமணத்தை தடுத்த பெருமானை, தனது தந்தையாக கருதுவதாக காஞ்சி திருமேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (7.21.01) சுந்தரர் குறிப்பிடுகின்றார். நொந்தா ஒண்சுடர்= பிரகாசம் குன்றாத விளக்கு; தனது மனதினில் புகுந்த பெருமான், என்றும் தன்னை விட்டு நீங்காது இருப்பதாகவும், தனது தந்தையாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தான் புகழமாட்டேன் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.
நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்து இருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற
சிந்தாய் எந்தை பிரான் திருமேற்றளி உறையும்
எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே
இடையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.31.1) சுந்தரர் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். அடியார்களின் சிந்தையைத் தனது இருப்பிடமாகக் கொண்டு உறைபவன் பெருமான் என்பதை, சிந்தையூர் நன்று சென்றடைவான் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். நன்று என்ற சொல்,அவ்வாறு அடியார்களின் சிந்தையின் உள்ளே புகுகின்ற பெருமான், அந்த அடியார்களின் சிந்தைனையை நல்வழியில் செலுத்தி நன்னெறி காட்டுவான் என்பதை உணர்த்துகின்றது. பந்தையூர் என்று மகளிர் பந்து விளையாடுகின்ற தலம் என்று கூறுகின்றார். முதுகுன்றம் மிகவும் பழைமை வாய்ந்த தலம் என்பதை குறிப்பிட, முந்தையூர் என்று கூறுகின்றார். எய்த=சென்றடைந்த;
முந்தையூர் முதுகுன்றம் குரங்கணில்முட்டம்
சிந்தையூர் நன்று சென்றடைவான் திருவாரூர்
பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி
எந்தையூர் எய்தமான் இடையாறு இடைமருதே
திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.34.1) சுந்தரர் பெருமானை, புகலூர் எந்தை என்று குறிப்பிடுகின்றார். இச்சையே பேசுதல்=தமது கருத்து எதுவாயினும் அதனை வெளிப்படுத்தாமல், அவர்கள் விரும்பும் வண்ணம் புகழ்ந்து பாடுதல்; கூறை=உடை; எவருக்கும் உணவும் உடையும் தாமே, அவர்களது இன்றியமையாது தேவைப்படும் பொருட்களாக உள்ளன். சார்கினும்=வேறெந்த பற்றுக்கோடு இன்றி சார்ந்து இருக்கினும்;கொடை அளிப்பவர்கள், இரப்போர்க்கு வேண்டிய அளவு பொருள் கொடுக்க வேண்டும். அவ்வாறு வேண்டும் அளவு கொடுக்காவிடின், அந்த கொடையால் எந்த வித பயனும் இரப்போர்க்கு விளையாது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்; எந்தை புகலூர் என்ற தொடருக்கு எமது தந்தையாகிய புகலூர்ப்பெருமான் என்றும் எமது தந்தையாகிய பெருமானின் ஊராகிய புகலூர் என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். பண்டைய நாளில் புலவர்கள், புரவலரைத் தேடிச் சென்று அவர்களது நாட்டின் சிறப்பு, நகரத்தின் சிறப்பு ஆகியவற்றை பாடி மகிழ்விப்பது பழக்கம். இறைவனைப் புகழ்ந்து பாடினால் இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டினும் பலன் பெறலாம் என்று சுந்தரர் இந்த பதிகத்தின் பாடல்களில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே என்றும் கூறுகின்றார். சிவலோகத்தை ஆள்பவன் சிவபெருமான் என்பதால், நமக்கு எவ்வாறு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற சந்தேகம் நமக்கு எழலாம். சிவலோகத்தில் அடியார்கள் அடையக் கூடிய பதவிகள் சாலோகம், சாமீபம், சாரூபம் மற்றும் சாயுஜ்யம் என்பன. இவற்றுள் மிகவும் உயர்ந்ததாக கருதப்படுவது சாயுஜ்யப்பதவி. சாயுஜ்யம் என்றால் பெருமானுடன் ஒன்றறக் கலந்து இணைந்து பெருமானாகவே மாறிவிடுவது. அவ்வாறு பெருமானாகவே மாறும் உயிர்கள் சிவலோகத்தை ஆட்சி செய்யும் தன்மையை குறிப்பிடுகின்றார் போலும். இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் எந்தை புகலூர் என்று குறிப்பிடுகின்றார்.
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்கினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தைப் புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே
புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.35.7) சுந்தரர் இந்த தலத்தினை எந்தை தந்தையூர் என்று கூறுகின்றார். இளமை நிலையாமை,யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை பற்றி கூறும் சுந்தரர், முன்னை வினைகளின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்றால், புறம்பயத்து இறைவனைத் தொழவேண்டும் என்று நமக்கு தீர்வினை இந்த பாடலில் சொல்லிக் கொடுக்கின்றார். பழைய பிறவிகளில் செய்த வினைகள், இந்த பிறப்பினில் வந்து நம்மை சூழ்ந்து கொள்ளும் என்பது உண்மை, என்பதால், அத்தகைய வினைகள் நம்மை வந்து சூழ்ந்து நம் அனைவர்க்கும் தந்தையாகிய பெருமான் வாழ்கின்ற புறம்பயம் தலம் சென்றடைந்து இறைவனை வணங்க செல்வோம், நெஞ்சமே கலங்காமல் புறப்படுவாயாக என்று தனது நெஞ்சத்தை பார்த்து சொல்லும் விதமாக அமைந்த பாடல். நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை சொல்லும் பாடல். அதாவது முந்தைய பிறவிகளில் சேர்த்த வினைகள் நம்மைத் தாக்கும் என்ற கவலையில் ஆழாமல், கலக்கம் ஏதும் இல்லாமல் பெருமானை வணங்கச் செய்வாயாக என்று கூறுகின்றார்.
முன்னைச் செய்வினை இம்மையில் வ்ந்து மூடும் ஆதலின் முன்னமே
என்னை நீ தியக்காது எழு மட நெஞ்சமே எந்தை தந்தை ஊர்
அன்னச் சேவலோடு ஊடி பேடைகள் கூடிச்சேரும் அணி பொழில்
புன்னைக் கன்னி கழிக்கண் நாறும் புறம்பயம் தொழப் போதுமே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.38.3) தனது தந்தையாகிய பெருமான் உறைகின்ற தலம் திருவதிகை வீரட்டானம் என்று கூறுகின்றார். கங்கை நங்கை, பாம்பு மற்றும் பிறைச்சந்திரன் ஆகிய மூன்றையும் பெருமான் தனது சடையில் வைத்துள்ள தன்மையை நாம் அனைவரும் அறிவோம். இந்த பாடலில் சுந்தரர், அந்த மூன்றையும் சடையில் பொருத்திய வண்ணம், தூங்க வைத்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.தனது உடலின் ஒரு பாதியில் ஏற்றுக் கொண்ட பார்வதி தேவி அறியாத வண்ணம், கங்கை நதியை மறைத்தவன் பெருமான் என்று நகைச் சுவையாக திருஞானசம்பந்தரும் அப்பர் பெருமானும் குறிப்பிடும் பாடல்களை நாம் ஏற்கனவே பல முறை சிந்தித்துள்ளோம். அவர்களைப் போன்று, புலவர்களுக்கான உரிமையை பயன்படுத்தி கங்கை சடையில் இருப்பதை அறியாதவளாக அன்னை பார்வதி தேவி இருக்கும் நிலையையும், இயற்கையாகவே ஒன்றுக்கொன்று பகைமை பூண்ட சந்திரனும் பாம்பும் ஒரே இடத்தில் அமைதியாக இருப்பதற்கு காரணம், பெருமான் இந்த மூவரையும் துயிலில் ஆழ்த்தி தனது சடையில் கொண்டிருப்பது தான் காரணம் என்று நகைச்சுவையாக இந்த பாடலில் சொல்கின்றார். திருவதிகை அருகே உள்ள சித்தவடம் மடத்தில் ஒரு இரவுப் பொழுதினில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்த சுந்தரரின் அருகில் வந்து படுத்த ஒரு முதியவரின் கால் சுந்தரரின் தலை மற்றும் முகத்தின் மீது படுகின்றது.அதனால் உறக்கம் கலைந்த சுந்தரர், தன்னருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த முதியவரைக் கண்ட பின்னர், முதியவரின் உடல் தளர்ச்சியால் ஏற்பட்ட நிகழ்ச்சி என்று கருதி, தனது நிலையினை மாற்றி, முதியவரின் தலையின் அருகே தனது தலையும் இருக்கும் வண்ணம் படுக்கின்றார். ஆனால், சிறிது நேரம் கழித்து விழித்தெழுந்த முதியவர், தனது நிலையினை மாற்றிக் கொண்டு படுக்கவே மீண்டும் முதியவரின் கால் சுந்தரரின் முகத்தின் மீது படுகின்றது.இரண்டாவது முறையாக தனது உறக்கம் கலையவே, விழித்தெழுந்த சுந்தரர் முதியவரைப் பார்த்து கோபமும் இகழ்ச்சியும் கலந்து தோன்ற, யார் நீ என்று கேட்கின்றார். என்னைத் தெரியவில்லையா என்று கேட்டவாறு முதியவர் மறைந்த பின்னரே, வந்தவர் பெருமான் தான் என்பதை சுந்தரர் உணர்கின்றார்.பெருமானின் திருவடிகள் தனது தலை மீது பதியவேண்டும் என்று பலநாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த தான், தன்னருகே வந்து படுத்துக் கொண்டு திருப்பாதத்தை தனது தலையில் மீது பதித்த பெருமானை அறியாமல் இருந்ததும் அல்லாமல் அவரை மிகவும் இகழ்வாக தான் நினைத்தது பெரிய தவறு என்பதை உணர்த்தும் முகமாக, பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இனியும் பெருமானை சிறிதும் இகழமாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். இந்த பாடலில், நாய் தனது எஜமானனை, அவன் எந்த வேடத்தில் வந்தாலும் அடையாளம் கண்டுகொள்கின்றது. ஆனால் தானோ, முதியவராக வந்து எனது தலை மீது தனது திருவடியை பதித்தது பெருமான் என்பதை உணராமல், நாயினும் கீழாக தான் இருந்த தன்மையை நினைத்து சுந்தரர் இந்த பதிகத்தின் முதல் பாடலில் வருந்துகின்றார். நாய்க்கும் இருக்கும் அறிவு கூட தனக்கு இல்லையே என்று அங்கலாய்க்கும் பாடல் இந்த பதிகத்தின் முதல் பாடல். பெருமானின் திருவடிகள் தனது தலை மீது படாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பின்னணியில், பெருமானின் திருவடிகள் தனது தலை மீது படர்ந்த போது, அதனை உணராது இருந்த தனது மடமையை குறிப்பிட்டு அதற்கான காரணத்தையும் இந்த பாடலிலும் தெரிவித்து வருத்தம் அடைகின்றார். பெருமானின் திருவடி தனது தலை மீது பதியவேண்டும் என்று விரும்பிய போதிலும், தனது விதியின் தன்மையால் அந்த விருப்பம் நிறைவேறிய சமயத்தில், அதனை உணராத பேதையாக தான் இருந்த தன்மையை இந்த பாடலின் முதல் அடியில் குறிப்பிடுகின்றார்.
விரும்பினேற்கு எனதுள்ளம் விடகிலா விதியே விண்ணவர் தம் பெருமானே மண்ணவர்
நின்றேத்தும்
கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கிக் காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும் புனலும் சடைக்கணிந்து வளராத பிறையும் வரியரவும் உடன் துயில வைத்தருளும்
எந்தை
இரும்புனல் வந்தெறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போலியானே
திருப்பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது தான் அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடலில் (7.48.4) சுந்தரர், பெருமானை எந்தை தம்பிரான் என்று கூறுகின்றார். கல்லை=மலையில் கிடைக்கும் மலைப்பண்டங்கள்; இழி=கீழே இறங்குதல்; எல்லையற்ற புகழினை உடைய பெருமானே, எமது தலைவனே,எனது தந்தைக்கும் தலைவனாக விளங்குபவனே, பொன் போன்றும் மணி போன்றும் உயர்வாக கருதப்படுபவனே, மலையில் கிடைக்கும் மலைப் பண்டங்களை தள்ளிக்கொண்டு கீழே இறங்கி வந்து, செல்வம் கொழிக்கச் செய்யும் காவிரி நதியின் கரையில் இருப்பதும், நல்லவர்களால் வணங்கி துதிக்கப்படுவதும் ஆகிய சிறப்பு வாய்ந்த கறையூர் தலத்தினில் உள்ள பாண்டிக்கொடுமுடி திருக்கோயிலில் உறைபவனே, வல்லவனே, உன்னை அடியேன் மறக்கினும், எனது நா உனது திருநாமத்தை இடையறாது சொல்லும் என்று சுந்தரர் கூறும் பாடல். இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் பெருமானை எந்தை தம்பிரான் என்று சுந்தரர் கூறுகின்றார்.
எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன் மாமணி
கல்லை உந்தி வளம் பொழிந்திழி காவிரி அதன் வாய்க்கரை
நல்லவர் தொழுது ஏத்தும் சீர்க்கறையூரில் பாண்டிக் கொடுமுடி
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.52.6) சுந்தரர் எந்தாய் எந்தை பெருமானே என்று அழைக்கின்றார். எயில்=மதில்;எண்ணார்=வேதநெறியை, சிவநெறியை எண்ணாமல் வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்கள்; திருத்தல் ஆகாதாய் என்று எந்தவிதமான திருத்தமும் தேவைப்படாத நிலையில் பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். அனைத்து நற்குணங்களும் உடையவனாக, எந்த விதமான குற்றமும் இல்லாதவனாக விளங்கும் பெருமானுக்கு எந்த விதமான திருத்தமும் தேவைப்படாது அல்லவா. கர்த்தா என்ற வடமொழிச் சொல் கருத்தா என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகத்து பொருட்களையும் உயிர்களையும் படைத்தும் காத்தும் இயக்கியும் செயல்புரியும் பெருமான், உலகத்தில் நடைபெறுகின்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கும் தன்மை இந்த சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. கருத்தன் என்ற சொல்லுக்கு கருத்தாக இருப்பவன் என்று பொருள் கொண்டு, மெய் அடியார்களின் கருத்தாக இருக்கும் பெருமான் என்றும் சிறப்பாக பொருள் கொள்ளலாம்.
எண்ணார் தங்கள் எயில் எய்த எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகம் காக்கின்ற கருத்தா திருத்தல் ஆகாதாய்
ப்ண்ணார் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே
திருக்கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.53.3) உலகத்தின் உயிர்கள் அனைத்திற்கும் பெருமான் தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றார் என்று சுந்தரர் கூறுகின்றார். காயும்=சினம் கொள்ளும் இயல்பினை உடைய; அதள்=தோல்; கண்டர்=கழுத்தினை உடையவர்; பெருமானின் கழுத்து மற்றவர்களின் கழுத்தினின்றும் மாறுபட்டு, ஆலகால விடத்தை தேக்கிய சிறப்பினை உடையது;
காயும் புலியின் அதள் உடையர் கண்டர் எண்தோள் கடவூரர்
தாயும் தந்தை பல்லுயிர்க்கும் தாமேயாய தலைவனார்
பாயும் விடை ஒன்றதுவேறிப் பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே
திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.55.1) சுந்தரர், எந்தை என்று அடியார்கள் இறைவனை போற்றி பாராட்டினால், அத்தகைய அடியார்களை இயமனின் ஏவலர்கள் துன்புறுத்த வந்தால், அவர்களை எனது அடியான் என்று சொல்லி, தனது அடியார்களை இயமனின் ஏவலர்கள் துன்புறுத்தாத வண்ணம் விலக்குவான் என்று இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார். அந்த காரணம் பற்றியே தான் இறைவனின் திருவடிகளில் சரணடைந்ததாக கூறுகின்றார். மேலும் இந்த பாடலில், தன்னை வழிபட்டுக்கொண்டிருந்த சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் காக்கும் பொருட்டு,இயமனது உயிரையும் பறித்த பெருமானின் ஆற்றலையும் குறிப்பிடுகின்றார்.
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரணமாக
வந்த காலன் தன் ஆருயிர் அதனை வவ்வினாய்க்கு உன்றன் வன்மை கண்டு அடியேன்
எந்தை நீ எனை நமர்தமர் நலியில் இவன் மற்று என்னடியான் என விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி அடைந்தேன் செழும்பொழில் திருப்புன்கூர் உளானே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.59.4) சுந்தரர், பெருமானை, எந்தை பிரான் என்று அழைக்கின்றார். இந்த திருப்பதிகம் கொடுங்கோளூர் தலத்தில் அருளியது என்றாலும் திருவாரூர் தலத்திற்கு உரிய பதிகமாகவே கருதப்படுகின்றது. முதல் முறையாக சேரமான் பெருமாள் நாயனாரின் விருந்தினராக கொடுங்கோளூர் சென்றிருந்த சுந்தரருக்கு சில நாட்கள் கழிந்த பின்னர், திருவாரூர்ப் பெருமானின் நினவு வந்தது. தான் இத்தனை நாட்களாக திருவாரூர்ப் பெருமானை மறந்திருந்த தன்மைக்கு வருத்தம் தெரிவித்து, ஆரூரானை மறக்கலும் ஆமே என்று பாடல் தோறும் குறிப்பிட்டு பாடிய பதிகம். பின்னர் இந்த கருத்தினை தனது நண்பராகிய சேரமான் பெருமாள் நாயனாருக்கும் தெரிவித்து, அவரது அனுமதியுடன், அவரிடம் விடைபெற்று செல்கின்றார். வாழும் காலத்தில், பெருமானை எப்போதும் பணிந்து வணங்கி வழிபடும் அடியார்கள், பெருமானின் திருவருளால், பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக்கொண்டு முக்தி உலகம் சென்றடைந்து என்றும் அழியாத பேரானந்தத்தில் ஆழ்கின்றனர். கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கிடைத்தும்,அதனைப் பயன்படுத்திக் கொண்டு உய்வினை அடையாத மனிதர்கள் இறந்தால், அந்த மனிதனின் பிணத்தைக் காணும் உறவினரும் நண்பர்களும், முக்தி அடையும் வழியை நாடாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்காக இறந்து விட்டானே என்று ஏளனமாக சிரிப்பார்கள். அவ்வாறு பலர் சிரிக்கும் நிலைக்கு ஆளாகாமல், வாழ்நாளில் பெருமானை வழிபட்டு உய்வினை அடையவேண்டும் என்று சுந்தரர் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.
செத்த போதினில் முன்னின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தையுண்டே மனமுண்டே மதியுண்டே விதியின் பயனுண்டே
முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறுடையானை
அத்தன் எந்தை பிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலுமாமே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.60.1) சுந்தரர் பெருமானை எந்தை என்று குறிப்பிடுகின்றார். நகைப்பர் என்ற சொல்லின் முதற்குறை கைப்பர் என்ற சொல். தான் சுமந்து செல்வது இன்னது என்று அறியாமல் இருக்கும் கழுதை குங்குமப் பொதி சுமந்தாலும், அந்த செய்கையால் கழுதைக்கு எந்த பெருமையும் ஏற்படாது. ஏனெனில் தான் சுமந்து செல்லும் பொருளுக்கு ஏற்ப, தனது நிலையை உயர்த்திக் கொள்ள கழுதைக்கு தெரியாது. எனவே கழுதை, தான் குங்குமம் சுமந்து செல்வதை அறிந்து பெருமை கொண்டாலும் பலரும் அதனைக் கண்டு நகைக்கவே செய்வர். அது போன்று தானும் பெருமானுக்கு தொண்டு செய்வதில் ஈடுபட்டு இருந்தாலும் தனது மனம் தான் செய்யும் தொண்டினில் முழுதும் ஈடுபடாத காரணத்தால்,ஆற்று வெள்ளத்தில் உள்ள சுழியில் அகப்பட்ட துரும்பினைப் போன்று உலக மாயையில் அகப்பட்டு வெளீயேற முடியாமல் தான் தவிப்பதாக இந்த பாடலில் சுந்தரர் கூறினாலும் இந்த அறிவுரை நமக்காக அளிக்கப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இழிதையேன்=கீழ்ப்பட்ட நிலையில் உள்ளவன்;இறைவனின் திருநாமத்தை சொல்லாமல் இருந்துவிட்டு, தாம் உயர்ந்த நிலையை அடையவில்லையே என்று வருந்துவதில் பயனேதும் இல்லை என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் பத்து பாடல்களிலும் பெருமானை இடைமருதுறை எந்தை பிரான் என்றே சுந்தரர் அழைக்கின்றார்.
கழுதை குங்குமம் தான் எய்த்தால் கைப்பர் பாழ்புக மற்றது போல
பழுது நான் உழன்று உள் தடுமாறி படுசுழித் தலைப்பட்டனன் எந்தாய்
அழுது நீ இருந்தென் செய்தி மனனே அங்கணா அரனே என மாட்டா
இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருதுறை எந்தை பிரானே
இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் சுந்தரர் பெருமானை எந்தை பிரான் என்று குறிப்பிடுகின்றார். புரவு=புரத்தல், அடிமை கொண்டு ஆளுதல்;ஆசற=தங்களது விருப்பத்திற்கு குறையேதும் இல்லாத வகையில்; கால் பெய்து=காலின் கீழே வைத்துத் தேய்த்து; ஐம்புலன்களுக்கு இன்பம் அளிக்க முடியாத வண்ணம் உடல் தளர்ந்தமை; கடைமுறை=வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில்; பொறை=சுமை; உடல் தளர்ந்த பின்னர், அந்நாள் வரையில் இறைவனை நினையாது வாழ்ந்த தன்மையையும், அதனால் தான் இழந்ததையும் எண்ணி வருத்தமடையும் மனிதர் பலரையும் நாம் காண்கின்றோம். அந்த தன்மையில் தான் இருந்ததாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். சுந்தரர் அவ்வாறு இருந்தவரல்ல; எனினும் திருஞானசம்பந்தர் போன்று மூன்று வயதிலிருந்தே பல தலங்கள் சென்று இறைவனைப் பணிந்து வணங்கி பதிகம் பாடாது இருந்த நிலைக்கு சுந்தரர் வருந்தினார் போலும்., என்று தருமபுர ஆதீனக் குறிப்பு விளக்கம் அளிக்கின்றது. இந்த பதிகத்தின் பத்தாவது பாடலிலும் சுந்தரர், பெருமானை இடைமருதுறை எந்தை பிரான் என்று குறிப்பிடுகின்றார்.
அழிப்பர் ஐவர் புரவுடையார்கள் ஐவரும் புரவு ஆசற ஆண்டு
கழித்துக் கால் பெய்து போயின பின்னைக் கடைமுறை உனக்கே பொறையானேன்
விழித்துக் கண்டனன் மெய்பொருள் தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை ஈதாகில்
இழித்தனேன் தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே
தில்லைச் சிதம்பரம் தலத்தினில் பெருமான் ஆடல் கண்டு அகமகிழ்ந்து, ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாக குணமொரு மூன்றும் திருந்து சாத்துவீகமேயாக, இந்துவாழ் சடையானின் நடனக் கோலத்தைக் கண்டு ஆனந்த வெள்ளத்தில் திளைத்து மாறிலா மகிழ்ச்சி கொண்ட சுந்தரரை திருவாரூர் செல்லுமாறு இறைவன் பணிக்கின்றார். இறைவனின் கட்டளையை தலைமேற் கொண்டு திருவாரூர் சென்றடைந்த சுந்தரரை, அந்த தலத்து அடியார்கள் ஊர் எல்லையில் எதிர்கொண்டு வரவேற்றனர். சுந்தரரும் அந்த அடியார்களை பணிந்து வணங்கிய பின்னர், ஆருர்ப் பெருமான் தன்னையும் ஆட்கொண்டு அருள வேண்டும் என்று தனது சார்பில் ஆரூர் அடியார்கள் பெருமானிடம் வேண்டவேண்டும் என்று அந்த அடியார்களிடம் விண்ணப்பிக்கும் பாடல்கள் அடங்கிய பதிகம். மேலும் அந்த அடியார்கள் பெருமானின் திருவுள்ளத்தைக் கேட்டறிந்து தனக்கு சொல்லவேண்டும் என்றும் கூறுகின்றார். பெருமானை அரையன் என்றும், இனியன் என்றும், எல்லை என்றும், இறைவன் என்றும், ஆதி என்றும், அருத்தன் என்றும், எந்தை என்றும், அண்டன் என்றும் அமரன் என்றும் ஈசன் என்றும் சுந்தரர் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் ஏழாவது மற்றும் பதினோராவது பாடல்களில் பெருமானை எந்தை என்று குறிப்பிடுகின்றார். பெருமானைப் புகழ்ந்து இன்னிசைப் பாடல்கள் பாடாதவனாகவும், பெருமானின் அடியார்களின் திருவடிகளைச் சாராமலும், இருந்தவன் என்று சுந்தரர் குறிப்பிட்டுத் தாழ்த்திக் கொள்கின்றார். திருவெண்ணெய்நல்லூர் தலத்தினில் பெருமானால் அடிமையாக ஆட்கொள்ளப்பட்ட பின்னர், பெருமானின் வாய்மொழியாலே இசைப் பாடல்கள் பாடும்படி பணிக்கப்பட்டவரும், பல தலங்கள் சென்று பெருமானைப் பணிந்து பதிகங்கள் பாடியவரும், தனது பாடல்களின் தொகுப்பு இசைப்பாட்டு என்று அழைக்கப்பட்டவரும் ஆகிய சுந்தரரின் வாழ்க்கையை நன்கு அறிந்த நாம், சுந்தரர் தன்னைப் பற்றி இந்த பாடலில் கூறியவை அவருக்கு பொருந்தாது என்பதை நாம் அறிவோம். தன்னைச் சுட்டிக் காட்டி நமக்கு அவர் அறிவுரை வழங்கும் பாடல் (7.73.7)
சந்தம் பல அறுக்கில்லேன் சார்ந்தவர் தம் அடி சாரேன்
முந்திப் பொருவிடை ஏறி மூவுலகும் திரிவானே
கந்தம் கமழ் கொன்றை மாலைக் கண்ணியன் விண்ணவர் ஏத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்
பெருமான் சுந்தரரை தமர் நமர் என்று, திருக்கயிலாயத்தில் உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்திய போதிலும், சுந்தரர் எங்கும் தன்னை பெருமானின் நண்பன் என்று குறிப்பிட்டுக் கொள்ளவில்லை. பல இடங்களில் பெருமானின் தொண்டன் என்றும் பெருமானுக்கு அடியான் என்றும் அடியார்களுக்கு அடியான் என்றும் குறிப்பிடுகின்றார். பல பாடல்களில் பெருமானை தனது எந்தை என்றும் குறிப்பிடுகின்றார். திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.75.3) செஞ்சடை எந்தை என்று குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். ஏலுதல்=பொருந்துதல்; பெருமானை இடைவிடாது நினைத்தலே பெருமானுடன் பொருந்தும் செயலாகும். மங்கை என்பது இங்கே கங்கையை குறிக்கும். பெருமானை எப்போதும் தியானித்து அவனுடன் பொருந்தும் தன்மை உடைய அடியார்கள், தன்னையும் அடிமையாக ஏற்றுக்கொண்டு ஆளும் தன்மை உடையவர்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். இதே பதிகத்தின் நான்காவது பாடலில், எந்தை என்று பெருமானை அழைத்து, அவனது திருவடிகளைச் சார்ந்து நிற்கும் அடியார்களுக்கு தான் அடிமையாக இருப்பேன் என்று கூறுகின்றார். இந்த பாடலில் பெருமான் உலகத்தவர் அனைவர்க்கும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றார் என்று கூறுகின்றார்.
நீல வண்டறை கொன்றை நேரிழை மங்கை ஓர் திங்கள்
சால வாளரவங்கள் தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
ஏலுமாறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே
திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.81.5) சுந்தரர், இந்த தலத்தினை எந்தை பிரானிடம் என்று குறிப்பிடுகின்றார்.புலைகள்=கீழ்மைத் தன்மைகள், உயிரின் உட்பகைகளாக விளங்கும் ஆறு குற்றங்கள் (காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம்) உயிருடன் பிணைந்துள்ள வினைகள் மற்றும் மலங்கள் என்பன; முசு=குரங்கு என்று பொதுவாக சொல்லப்ப்ட்டாலும், இங்கே பெண் குரங்குகளை குறிப்பிடுகின்றது.கலை=ஆண் குரங்கு; புறவு=காடு; தண்=குளிர்ச்சி பொருந்திய;
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப்படையன் எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவுக் குட்டியொடு முசுக்
கலைகள் பாயும் புறவில் தண் கழுக்குன்றமே
கானப்பேர் (தற்போது காளையார்கோயில் என்று அழைக்கப்படும் தலம்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.84.6) சுந்தரர், பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். பண்ணுதல்= யாழை முறையாக வாசித்து இனிய பண்ணினை எழுப்பும் அடியார்கள்: நீடுதல்=நிற்றல், தாங்கள் இறைவனைப் புகழ்ந்து பாடுகின்ற பாடல்கள் சொல்லப்படும் கருத்துகளின் வழியே நின்று வாழ்க்கை நடத்துதல்; பெருமான் ஒருவனே வீடுபேறு அளிப்பவன் என்பதை உணர்ந்து துயிலெழும் அடியார்கள் என்று கூறுகின்றார்.
பண்ணுதலைப் பயனார் பாடலும் நீடுதலும் பங்கய மாதனையார் பத்தியும் முத்தி அளித்து
எண்ணுதலைப் பெருமான் என்று எழுவார் அவர் தம் ஏசறவும் இறையாம் எந்தையையும் விரவி
நண்ணுதலைப் படுமாறு எங்ஙனம் என்று அயலே நையுறும் என்னை மதித்து உய்யும் வணம் அருளும்
கண்ணுதலைக் கனியைக் காண்பதும் என்று கொலோ கார்வயல்சூழ் கானப்பேர் உறை
காளையையே
திருவாசகம் திருச்சதகம் சுட்டறுத்தல் பதிகத்தின் பாடலில் (8.5.24) மணிவாசக அடிகளார் எந்தாய் பெருமானே என்று மெய்யடியார்கள் கொண்டாடுகின்றனர் என்று கூறுகின்றார். பின்றா= பின்னடையாத; இந்த பாடலில் மற்ற அடியார்களின் தன்மையை குறிப்பிடும் அடிகளார், தான் அவ்வாறு இல்லாத போதிலும் இறைவன் தன்னை ஆட்கொண்ட தன்மையை குறிப்பிட்டு மனம் நெகிழ்கின்றார். ஈசனே, எமது தந்தையே, பெருமானே என்று பெருமானை அழைத்தும், தமது உடலில் திருநீற்றை நிறையப் பூசியும் வாழும் வாழ்க்கை நெறியிலிருந்து பின்னடையாது வாழும் அடியார்கள், பெருமான் பால் அன்பு வைத்துள்ள தன்மையால் அவனது அருள் பெற்று பிறப்பிறப்பை கடந்தவர்களாக விளங்குகின்றார் என்று அடிகளார் கூறுகின்றார். அத்தகைய அடியார்களிலிருந்தும் தான் மாறுபட்ட தன்மையை, ஆசை என்னும் பெருவெள்ளத்தில் தான் ஆழ்ந்திருப்பதாக, அடிகளார் கூறுகின்றார். அவ்வாறு இருந்த போதிலும் பெருமான் தன்னை ஆட்கொண்டதாக கூறி மகிழ்ச்சி அடைகின்றார்.
பேசில் தாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்றென்றே பேசிப்பேசி
பூசில் தாம் திருநீறே நிறையப்பூசி பொற்றி எம்பெருமானே என்று பின்றா
நேசத்தால் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை ஆண்டானே அவா வெள்ளக் கள்வனேனை
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே
திருவாசகம் திருச்சதகம் ஆத்துமசுத்தி பதிகத்தின் பாடலில் (8.5.32) மணிவாசக அடிகளார், தனது சிந்தைனையை திருத்திய பெருமான் என்று குறிப்பிட்டு எந்தை என்று அழைக்கின்றார். மேல்நெறி=உயர்ந்த நெறி, வீடுபேறு அளிக்கும் உயர்ந்த நெறி; புலம்=பண்பட்ட நிலம்; பயிர் நன்றாக விளைந்து வளர வேண்டும் என்றால், நிலத்தை பண்படுத்த வேண்டும்; அது போன்று மெய்ஞ்ஞானம் என்ற அறிவு வளர வேண்டும் என்றால், மனதிலுள்ள மாசுகள் களையப்பட வேண்டும்; அந்த மாசினைக் களைந்து சிந்தையைத் திருத்தி, உலகப்பொருட்கள் மீது தான் கொண்டிருந்த பாசத்தினை அறுத்தெறிந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அன்பினை வளர்ப்பவள் தாய் என்றும் அறிவினை வளர்ப்பவர் தந்தை என்றும் சொல்வது உலகவழக்கு. அதற்கேற்ப தனது சிந்தனையை திருத்தி மெய்ஞானத்தை வளர்த்த பெருமானை, எந்தை என்று மிகவும் பொருத்தமாக கூறுகின்றார். உண்மையான மெய்ஞ்ஞானத்தை அருளிய பெருமான்,அந்த மெய்ஞ்ஞானத்தை பயன்படுத்தி மேலே செல்ல வேண்டிய உய்யும் நெறியை பெருமான் உண்ர்த்திய பின்னரும், அந்த வழியில் செல்லாத தனது நெஞ்சத்தை பிண நெஞ்சம் என்று அழைக்கின்றார்.
அறிவிலாத எனைப் புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி மேல்
நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையை பந்தனை அறுப்பானைப்
பிறிவு இலாத இன்னருள்கள் பெற்றிருந்தும் மாறாடுதி பிண நெஞ்சே
கிறி எலாம் மிகப் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே
திருவாசகம் திருச்சதகம் பதிகத்தின் மற்றொரு பாடலில் (8.5.36) மணிவாசக அடிகளார் தனது தந்தையும் தலைவனும் ஆகிய பெருமானின் திருப்பாதங்கள் பால் அன்பு செலுத்தி மனம் கசிந்து உருகாத நிலையில் தான் இருப்பதாக குறிப்பிட்டு வருந்துகின்றார். போதரவு=மீட்சி; பொன்னகர்= சிவபுரி;உகுவது=சுழல்வது; நெகுதல்=உருகுதல்; போதரவு அற்ற பொன்னகர் என்று இங்கே கூறுகின்றார். மீண்டு வாரா வழியாகிய முக்தி உலகம் செல்லும் வழி இங்கே குறிப்பிடப் படுகின்றது. முக்தி நிலை அடையும் உயிர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவதால், முக்தி நெறி செல்லும் வழி போதரவு இல்லது என்று சொல்லப் படுகின்றது. பெருமானின் திருவடிகளை அமுதம், தேன், பால் கட்டி என்ற பொருட்களுடன் ஒப்பிட்டு, அவற்றினும் மேலானது என்று கூறுகின்றார். என்றும் அழியாத வீடுபேறு இன்பத்தைப் பெற்றுத் தருவதால், அமுததிற்கு ஒப்பிடப் படுகின்றது. தேன், உட்கொள்ளும் போது இனிய சுவை அளிப்பதுடன் பின்னர் மருந்தாகவும் பயன்படுகின்றது. பெருமானின் திருவடிகள் பால் அன்பு வைக்கும் போது இனிய உணர்வுகளைத் தரும் திருவடிகள்,பிறவிப்பிணிக்கு மருந்தாகவும் செயல்படுகின்றன. பாலில் நெய் மறைந்திருப்பது போன்று பெருமானின் திருவடிகளில் வீடுபேறு மறைந்துள்ளது. பாலில் படு நெய் போல் என்ற அப்பர் பிரானின் வாய்மொழி நமது நினைவுக்கு வருகின்றது. கரும்பினைச் சாறு பிழிந்து, தீயிலிட்டு காய்ச்ச நமக்கு கட்டி கிடைக்கின்றது. அதைப் போன்று தங்களது உடலை பல விதத்திலும் வருத்திக் கொண்டு வீடுபேறு அடைய பலரும் முயல்கின்றனர். முனிவர்கள் காடு சென்று கடுமையான தவமிருந்து வீடுப்பேற்றினை அடைகின்றனர்; மற்றும் பலர் விரதம் நோன்பு ஆகிய சடங்குகள் கடைப்பிடித்து வீடுபேறு அடைய முயற்சி செய்கின்றனர். ஆனால் பெருமானின் அடியார்களோ, பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொள்வதால், தங்களை எந்த விதத்திலும் வருத்திக் கொள்ளாமல், வீடுபேறு அடைவதால், கரும்பின் கட்டிக்கு ஒப்பிடுகின்றார். ஆனால் இந்த உவமைகள் அனைத்தும் ஓரளவுக்கே பொருந்தும் என்பதால்,மிகுவதாவதும் என்று குறிப்பிட்டு, இவை அனைத்தினும் சிறந்தது பெருமானின் திருவடிகள் என்று குறிப்பிடுகின்றார்.
புகுவதாவதும் போதரவு இல்லதும் பொன்னகர் புகப் போதற்கு
உருவதாவதும் எந்தை எம்பிரான் என்னை ஆண்டவன் கழற்கு அன்பு
நெகுவதாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால் கட்டி
மிகுவதாவதும் இன்றி எனின் மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே
திருவாசகம் திருச்சதகம் கைம்மாறு கொடுத்தல் பதிகத்தின் ம்ற்றொரு பாடலில் (8.5.46) எள்ளில் எண்ணெய் இருப்பது போன்று அனைத்துப் பொருட்களிலும் எந்தையாகிய பெருமான் கலந்திருந்தாலும் மறைந்து நிற்பதாக கூறுகின்றார். கொள்ளும் கில் எனை=என்னை ஏற்றுக் கொள்வானோ;நள்ளும்=நெருங்கும்; பெருமானின் திருவடிகளைச் சென்றடைய விருப்பம் கொண்டுள்ள தன்னை, மற்ற அன்பர்களை கூவி அழைத்துக் கொள்வது போன்று தன்னையும் பெருமான் அழைத்துக் கொள்வானோ என்று தான் ஏங்குவதாக அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார்.
கொள்ளும் கில் எனை அன்பரில் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறா மலர்க் கொன்றையான்
நள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே
மேற்கண்ட பாடலுக்கு அடுத்த பாடலில் (8.5.47) தான் தந்தையாக கருதும் பெருமான், தானே வந்து தனதுள்ளம் புகுந்ததாக அடிகளார் கூறுகின்றார்.தனக்கு மட்டுமன்றி உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் பெருமான் தந்தையாகவும் தலைவனாகவும் விளங்குகின்றான் என்றும் கூறுகின்றார். எவராலும் தோற்றுவிக்கப் படாமல் பெருமான் இருக்கும் தன்மையை, தந்தை தாய் அஃதிலான் என்ற தொடர் மூலம் குறிப்பிடும் அடிகளார் சொற்களையும் எண்ணங்களையும் கடந்தவன் பெருமான் என்றும் கூறுகின்றார். அவன் அருள் இல்லையேல் அவனைப் பற்றி நாம் சிந்தனை செய்ய முடியாது என்பதால்,சிந்தையாலும் அறிவரும் செல்வன் என்று கூறுகின்றார்.
எந்தையாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃதிலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தையாலும் அறிவரும் செல்வனே
திருவாசகம் திருச்சதகம் அனுபோகசுத்தி பதிகத்தின் முதல் பாடலில் மணிவாசகர், எந்தை பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பிறவிநாசன் என்று பெருமானை அழைக்கின்றார். மனிதர்களில் பெரும்பாலோர் நல்லவர்கள். அந்த தன்மைக்கு மாறுபடுவோரை பொல்லாதவர் என்று சொல்கின்றோம். அதே போன்று தனது இனத்திற்கு உரிய நல்ல குணமாகிய நன்றியற்ற நாயினை பொல்லா நாய் என்று அழைக்கின்றார். மனிதப்பிறவி எடுத்ததன் நோக்கமே பிறவிநாசனின் தன்மையை உணர்ந்து அவனை தியானித்து பிறவிப்பிணியை நீக்கிக் கொள்வது தான்; அந்த வழியில் செல்லாததால், நீசன் என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்றார். தேசன்= ஒளி வடிவம் கொண்டவன்; அம்பலவன்=அம்பலத்தில் கூத்தாடுபவன்;
ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என் பிறவி
நாசனே நான் யாதுமொன்று இல்லாப் பொல்லா நாயான
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே
நேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே
திருவாசகம் திருச்சதகம் ஆனந்தத்து அழுந்தல் பதிகத்தின் முதல் பாடலில் (8.5.71) மணிவாசக அடிகளார் பெருமானை எந்தை என்று குறிப்பிடுகின்றார்.புணர்ப்பது=சேர்த்துக் கொள்வது; புங்கம்= உயர்வு; அம் கணாள=அழகிய கண்களை உடையவன்; கருணைக் கடைநோக்கு உடையவன் பெருமான்; அந்த கருணைத் தன்மை பெருமானின் கண்களுக்கு அழகு சேர்க்கின்றது என்று கூறுகின்றார். பெருமான் தனது அருட்கண்ணால் தன்னை (அடிகளாரை)நோக்கியபோதும் அந்த அருளை பயன்படுத்திக் கொள்ளும் பக்குவம் அற்றமையால், பெருமான் மற்றும் தான் ஆகிய இருவரும் பயனடையாமல் விளங்கிய தன்மை இங்கே சொல்லப் படுகின்றது. பெருமானின் திருவருள் பயன் அளிக்க வேண்டும் என்றால், பெருமானின் திருவடிகள் பால் அன்பு செலுத்த வேண்டும் என்றும், அத்தகைய அன்பு தான் செலுத்த முடியாமல் தான் இருந்த்தால் தனக்கு பெருமான் அருள் பயனேதும் விளைவிக்கவில்லை என்றும் கூறுகின்றார்.எனவே பெருமான் பால் தான் அன்பு கொள்ளும் பொருட்டு, தனது மனதினை பெருமான் மாற்றி அருள் புரியவேண்டும் என்றும் கோருகின்றார்.
புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பது அன்று இது என்ற போது நின்னொடு என்னொடு என்னிது ஆம்
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின் கழற்கணே
புணர்ப்பது ஆக அங்கணாள புங்கம் ஆன போகமே
இதே பதிகத்தின் மற்றொரு பாடலிலும் (8.5.79) பெருமானை எந்தை என்று மணிவாசக அடிகளார் அழைக்கின்றர். முந்தையான காலம் என்று திருப்பெருந்துறை நிகழ்வுக்கு முன்னம் கழித்த நாட்களை குறிப்பிடுகின்றார். அந்நாள் வரையில் அமைச்சராக இருந்த அடிகளார் தனது அமைச்சுப் பணியில் முழு கவனம் செலுத்தி வந்தமையால் சாதாரண மனிதர்களைப் போன்று இறை சிந்தனையில் காலத்தைக் கழிக்காமல் இருந்ததை, முந்தையான காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன் என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொள்கின்றார். இளமைக் காலத்தை, கல்வி கற்பதிலும் பொருள் சேர்ப்பதிலும் காலத்தை கழிப்பது மனித இயல்பு; அப்போது வாழ்க்கையின் பிரதான நோக்கமாக அவை இருப்பதால், இறை சிந்தனையில் மனித மனம் அதிகமாக நாட்டம் செலுத்துவதில்லை; அவ்வாறு காலத்தை கழிப்பது வீண் என்பதையும் உணருவதில்லை. மனம் பக்குவப்பட்ட பின்னர், இறை அனுபவத்தை உணர்ந்த பின்னரே, அந்நாள் வரையில் இன்ப உணர்ச்சி தருகின்ற இறை அனுபவத்தை உணராமல் இருந்ததை நினைத்து மனம் வருத்தம் அடைகின்றது.அந்த தன்மை தான் இங்கே குறிப்பிடப்படுகின்றது. சிந்தை செய்கை கேள்வி வாக்கு என்ற தொடர், இறை உணர்வில் ஈடுபட்டு செய்யும் செயல்கள்,இறைவனின் புகழை காதார கேட்டு மகிழ்தல், இறைவனின் புகழை வாயார பேசுதல், இறைவனின் திருநாமங்களை கூறுதல், இறைவனின் புகழினை உணர்த்தும் பாடல்களை பாடுதல் ஆகிய செய்கைகளை உணர்த்துகின்றார். பெருமானே தன்னை நாடி வந்து திருப்பெருந்துறையில் அருள் புரிந்த பின்னர்,பெருமானின் தன்மையை புரிந்து கொண்ட தான், இனிமேல் பெருமானை அடையும் வழிகளில் உறுதியாக நின்று வாழ்வேன் என்று அடிகளார் கூறுகின்றார்.
சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீரில் ஐம்புலன்களால்
முந்தையான காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்
வெந்து ஐயா விழுந்திலேன் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தையாய நின்னை இன்னம் எய்தலுற்று இருப்பனே
திருவாசகம் நீத்தல் விண்ணப்பத்தின் பதினைந்தாவது பாடலில் (8.6.15) மணிவாசக அடிகளார் பெருமானை எளிவந்த எந்தை எம்பிரான் என்று அழைக்கின்றார். திருப்பெருந்துறையில் பெருமானைக் கண்டவுடன், தனது மனதினில் ஆனந்த பரவசத்தை உணர்ந்த தான், அந்த ஆனந்த பரவசத்தை நிலையாக நிறுத்திக்கொள்ள இயலாதவனாக இருந்ததால், பெருமான் தன்னை விட்டு பிரிந்ததாக குறிப்பிட்டு அடிகளார் வருத்தம் அடைகின்றார்.மெய்ச்சுடருக்கு எல்லாம் ஒளி வந்த பூங்கழல் என்று குறிப்பிட்டு, சூரியன் சந்திரன் தாரகைகள் அனைத்திற்கும் ஒளி தருபவனாக இறைவன் விளங்கும் தன்மை உணர்த்தப்படுகின்றது. மிகவும் எளிமையான கோலத்தில், அந்தண குருநாதராக நிலவுலகம் வந்து பெருமான் அருள் புரிந்த தன்மையை குறிப்பிடுகின்றார். வெளி வந்திலேன் என்று உலகப் பொருட்களின் மாயையில் மயங்கி, அவற்றிலிருந்து வெளிவராத தனமையை உணர்த்துகின்றார்.
களிவந்த சிந்தையொடு உன்கழல் கண்டும் கலந்தருள
வெளி வந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச்சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூங்கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே
எளிவந்த எந்தை பிரான் என்னை ஆளுடை என் அப்பனே
திருவாசகம் திருதோணோக்கம் பதிகத்தின் பாடலில் (8.15.9) மணிவாசக அடிகளார் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். இந்த பாடலில் அடிகளார்,திரிபுரத்தில் வாழ்ந்து வந்த அடியார்கள் மூவர் தீயினில் எரியாமல் பிழைத்து, பெருமானின் அருகே இருந்து பணிவிடை செய்யும் வாய்ப்பினை பெற்றார்கள் என்று கூறுகின்றார். இந்த நிகழ்ச்சி நடந்தது பண்டைய நாளில் என்பதை உணர்த்தும் பொருட்டு, இந்த நிகழ்ச்சி நடந்தேறிய பின்னர் எண்ணற்ற இந்திரர்களும் பிரமர்களும் திருமாலும் மாண்டனர் என்று கூறுகின்றார்.
எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரி பிழைத்துக்
கண்ணுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதற்பின்
எண்ணில் இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோணோக்கம்
திருவாசகம் கோயில் திருப்பதிகம் பதிகத்தின் கடைப்பாடலில் (8.22.10) மணிவாசக அடிகளார் பெருமானை எந்தையே ஈசா என்று அழைக்கின்றார். இந்த பாடலில் அடிகளார் தனக்கும் பெருமானுக்கும் இடையே இருந்த பண்டமாற்று வாணிபத்தை குறிப்பிடுவதை நாம் உணரலாம். தன்னைக் கொடுத்து இறைவனை அடிகளார் பெற்றுக் கொண்ட தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. எப்போதும் பெருமானை நினைத்து உருகிய அடிகளார் பெருமானின் சிந்தையில் புகுகின்றார். அதன் விளைவாக பெருமான் அடிகளாரின் சிந்தையினில் புகுகின்றார். பெருமானின் தன்மை யாது என்பதை சற்று சிந்திப்போம்.ஒப்பற்ற எட்டு குணங்களை உடையவர் பெருமான். ஒரே நேரத்தில் உலகில் நடக்கும் அனைத்தையும் உணரும் ஆற்றலும், தான் நினைக்கும் எதையும் செய்யவல்ல ஆற்றலும், இயல்பாவே பாசநீக்கமும் உடையவராக இருத்தலும், ஐந்து புலன்களின் ஆட்சிக்கு உட்படாமல் இருத்தலும், பெருமானின் குணங்களாக திகழ்கின்றன. இந்த குணங்களுக்கு நேர் எதிர்மாறான குணங்களை உடையது மனித ஆன்மா. எனவே அடிகளார் இழந்ததை விடவும் பெற்றது அதிகமாக இருப்பதால் தான் பெருமானை விடவும் சதுரனாக தான் திகழ்வதை மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டுகின்றார். இவை அனைத்தும் எதனால் நிகழ்ந்தது என்பதை அடிகளாரே இந்த பாடலில் உணர்த்துகின்றார். .தனது சிந்தனையை, பெருமான் தான் உறையும் கோயிலாக ஏற்றுக் கொண்டு புகுந்தமையால் தான் என்று அடிகளாரே இந்த பாடலில் உணர்த்துவதை நாம் காணலாம். அதன் விளைவாக ஏற்பட்ட அந்தமிலா ஆனந்தத்தையும் அடிகளார் குறிப்பிடுகின்றார். இந்த அந்தமிலா ஆனந்தத்தை பெருமான் பால் தீவிர பக்தி கொண்டுள்ள அடியார்கள் அனைவரும் உணர்ந்தனர் என்று அருளாளர்கள் நமக்கு பல பாடல்களில் உணர்த்துகின்றனர்.
தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை சங்கரா ஆர் கொலோ சதுரர்
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டே யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே
திருவாசகம் அதிசயப்பத்து பதிகத்தின் பாடலில் (8.26.3) மணிவாசக அடிகளார் பெருமானை எந்தை என்று அழைக்கின்றார். தேவர்கள் காண முடியாமல் அரியவனாக இருக்கும் பெருமான், தனக்கு எளியவனாக தானே முன்வந்து திருப்பெருந்துறையில் காட்சி நல்கியது ஒரு அதிசயம்; பொதுவாக நுகர்ந்து கழிக்க வேண்டிய வலிமை வாய்ந்த வினைகளை ஒரு வினாடியில் போக்கியது மற்றொரு அதிசயம் என்று குறிப்பிடும் அடிகளார், அடியார்களுடன் தன்னைச் சேர்த்ததும் அதிசயம் என்று குறிப்பிடுகின்றார். திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையே ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் எரித்து அழித்தவனாகிய எனது வினைகளை அழிப்பதும் மிகவும் எளிய காரியம் என்று உணர்த்தும் முகமாக, முக்கண் எந்தை என்று கூறுகின்றார். விழித்தே முப்புரங்களை எரித்தான் என்றும் கூறுவர். தனது குழந்தை எத்தனை தவறுகள் செய்திருப்பினும் தாயுள்ளம் அந்த தவறுகளை பொருட்படுத்தாது அரவணைக்கும் தன்மை உடையது. அது போன்று பெரிய தவறுகள் செய்த சந்திரனை மன்னித்து வாழ்வு தந்த பெருமானின் உள்ளத்தை தாயுள்ளம் என்று உணர்த்த, பெருமானை அன்னை என்று கூறுகின்றார்.
முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண்ணது உடை எந்தை
தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் எளியவன் அடியார்க்கு
பொன்னை வென்றதோர் புரிசடைமுடி தனில் இளமதி அது வைத்த
அன்னை ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே
திருவாசகம் திருவார்த்தை பதிகத்தின் பாடலில் (8.43.6) மணிவாசக அடிகளார் பெருமானை எந்தை பெருந்துறை ஆதி என்று அழைக்கின்றார்.பெருமானின் செயல்களின் பின்னணியை அறிந்து அவற்றின் பெருமையை உணர்ந்த அடியார்கள், தனது தலைவன் என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். ஏ=அம்பு; பாசுபத அத்திரம் பெறுவதற்காக அர்ஜுனன் தவமிருந்த போது, அவனை கொல்வதற்காக பன்றியாக வந்த மூகாசுரன் என்ற அரக்கன் மீது பெருமான் அம்பு எய்தி கொன்றதன் மூலம் அந்த பன்றிக்கு வீடுபேறு கிடைத்தது என்று அடிகளார் கூறுகின்றார். பன்றி என்பது இழிந்த பிறவியாக கருதப்பட்டாலும், பெருமான், தாய் இழந்து வருந்திய பன்றிக் குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பொருட்டு, தாய்ப்பன்றியாக உருவெடுத்த திருவிளையாடல் இங்கே சொல்லப் படுகின்றது. குருவித்துறை என்ற ஊரினில் ஒரு சமயத்தில் சகலன் சகலை என்ற வேளாள குலத்து தம்பதியர் வாழ்ந்தனர். அவர்களுக்கு பன்னிரண்டு பிள்ளைகள் இருந்தனர். செல்வந்தர்களாக இருந்த காரணத்தால், தவறு செய்த போதிலும் பிள்ளைகளை கடிந்து கொள்ளாமல் அவர்கள் வாழ்ந்ததால், பிள்ளைகள் நல்லது தீயது தெரியாமல் வளர்ந்தனர். சிறு வயதினில் தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள் காட்டிற்கு சென்று வேட்டையாடும் சமயத்தில், ஆங்கே தவம் செய்து கொண்டிருந்த வியாழ பகவானை கண்டனர். அவர் மீது கற்களை வீசியெறிந்து அவரை வருத்தினார்கள். அவரது தவத்தையும் கலைத்தனர். தனது தவம் கலைந்ததால் கோபம் கொண்ட வியாழன், பன்னிரண்டு சகோதரர்களையும் பன்றிக் குட்டிகளாக பிறந்து சிறு வயதில் தாயினையும் தந்தையையும் இழந்து வருந்துமாறு சாபம் கொடுத்தார். சாபம் பெற்ற பின்னர், தாங்கள் செய்த தவறினை உணர்ந்த பன்னிருவரும் முனிவரைப் பணிந்து தங்களது சாபம் நீங்கும் வழியினை காட்டுமாறு வேண்டினர். முனிவரும் அவர்களை இப்பிறவியின் எஞ்சிய நாட்களில் பெருமானின் திருநாமத்தை உரைத்து அவனை வழிபடுமாறு கூறினார். பன்னிருவரும் அவ்வாறே செய்தனர். அடுத்த பிறவியில் ஒரு காட்டுப் பன்றியின் வயிற்றில் பிறந்தனர். பன்னிரு பன்றிக் குட்டிகளும் மிகவும் சிறிய குட்டிகளாக இருந்த போதே, வேட்டையாட வந்த பாண்டிய மன்னனின் அம்புக்கு இரையாகி, தாய்ப் பன்றியும் தந்தைப் பன்றியும் மாண்டன. தாயை இழந்த குட்டிகள் பசியால் தவித்து வாடிய போது, பெருமான் ஒரு தாய்ப் பன்றியின் வடிவில் தோன்றி, பன்றிக் குட்டிகளுக்கு பால் கொடுத்தார். இறைவன் அளித்த தாய்பால் அவர்களது பசியை மட்டுமா நீக்கியது. அந்த குட்டிகள் ஞானம், நற்குணங்கள், வலிமை ஆகியவை பெற உதவியது; மேலும் அந்த பன்றிகள் மானிட வடிவம் பெற்று, தாங்கள் பெற்றிருந்த ஞானத்தால், பாண்டிய மன்னனின் மந்திரிகளாகவும் பணி புரிந்து பின்னர் சிவபதமும் அடையவும் பெருமான் அருள் புரிந்தார். இந்த திருவாசகப் பாடலில் பன்றி வடிவில் வந்த மூகாசுரன் அரக்கனுக்கும், தாயை இழந்த பன்றிக் குட்டிகளுக்கும் பெருமான் அருள் புரிந்து வீடுபேறு அளித்த கருணைச் செயல் குறிப்பிடப் படுகின்றது. ஏ=அம்பு; கிராத மூர்த்தியாக வந்த பெருமான் எய்த அம்பினால் கொல்லப்பட்ட பன்றி என்று உணர்த்தப்படுகின்றது.
வேவத் திரிபுரம் செற்ற வில்லி வேடுவனாய்க் கடி நாய்கள் சூழ
ஏவல் செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான் தான் இயங்கு காட்டில்
ஏ உண்ட பன்றிக்கு இரங்கி ஈசன் எந்தை பெருந்துறை ஆதி அன்று
கேவலம் கேழலாய்ப் பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே
முகத்தலை தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.11.9) கருவூர்த்தேவர், பெருமான் தனக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்ததாக கூறுகின்றார். அம்பரம்=வானம்; அனிலம்=காற்று; புவி=நிலம்; அம்பு=நீர்; இந்து=சந்திரன்; இரவி=சூரியன்; அட்ட மூர்த்திகளில் ஏழு குறிப்பிடப் பட்டிருப்பதால், எட்டாவதாகிய ஆன்மாவையும் சேர்த்துக்கொண்டு, அட்ட மூர்த்தமாக இருப்பவன் பெருமான் என்பதை உணர்த்துவதாக பொருள் கொள்ள வேண்டும்; மொய்ம்பு= வலிமை; உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானை உணர்ந்த முகத்தலை தலத்து சான்றோர்கள், உறுதி படைத்த மனத்தராய்,அனைவர்க்கும் நலம் பயக்கும் மெய்ப்பொருளின் தன்மையை பலருக்கும் உரைக்கின்றனர் என்று கருவூர்த்தேவர் கூறுகின்றார்.
அம்பரா அனலா அனிலமே புவி நீ அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண்சுடரே
மொய்ம்பராய் நலம் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே
எம்பிரானாகி ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயும் ஆயினையே
தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது புருடோத்தம நம்பி அருளிய பதிகத்தின் பாடலில் (9.27.6) அனைவர்க்கும் தந்தையாக விளங்குபவர் பெருமான் என்று சொல்லப்பட்டுள்ளது. வான்வர்= உயர்ந்தவர்; பெருமான் உயர்ந்தவர்களுக்கும் உயர்ந்தவராக இருக்கும் தன்மை இங்கே சொல்லப் பட்டுள்ளது.
ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால்
தாயிவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால்
தேய்மதியம் சூடிய தில்லைச் சிற்றம்பலவர்
வாயின கேட்டறிவார் வையகத்தார் ஆவாரே
திருப்பல்லாண்டு பதிகத்தின் கடைப்பாடலில் (9.29.13) சேந்தனார், பெருமான் தனக்கு தாயாகவும், தந்தையாகவும், சுற்றமாகவும் இருக்கின்றார் என்றும் முழு அமுதமாக இருக்கின்றார் என்று பல அடியார்கள் கருதுகின்றனர் என்று கூறுகின்றார். அடியார்களின் திருவடிகளைத் தான் வழிபடுவதாக குறிப்பிட்டு அடியர்களை நாம் எவ்வாறு போற்றவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். பெருமானின் திருவருளால். அதுகாறும் உலகப் பொருட்கள் மீது தான் கொண்டிருந்த பாசத்தை நீக்கிக்கொள்ள முடிந்தது என்று கூறுகின்றார்.
எந்தை எந்தாய் சுற்றம் முற்றும் எமக்கமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார் அடி நாய் செப்புரை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப் புகுந்தாண்டு கொண்டு ஆருயிர் மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே
திருமூலர் ஒரு திருமந்திரப்பாடலில், திருமால், தக்க யாகத்தை அழிக்க வந்திருந்த வீரபத்திரரை தந்தையே என்று அழைத்து, யாம் தக்கனைப் போன்று சிவநிந்தனை செய்தவர் அல்ல என்று கூறி, அவரது பாதங்களில் விழுந்து துதிக்க, பெருமானும் அவர் மேல் இரக்கம் கொண்டு, திருமாலை தண்டிக்காது இருந்தார் என்று கூறுகின்றார். இவன்=தக்கன்; பந்தம் செய்=நிலத்தில் பதிந்த;
சந்தி செயக்கண்டு எழுகின்ற அரி தானும்
எந்தை இவன் அல்லம் யாமே உலகினில்
பந்தம் செய் பாதத்து வீழ்ந்து தவம் செய்ய
அந்தமிலானும் அருள் புரிந்தானே
பொழிப்புரை:
ஊழிக்காலத்தில் இறந்துபட்ட உடல்கள் எரிந்த சாம்பலைத் தனது உடலெங்கும் பூசிக்கொண்டு, அனைத்து உயிர்களும் தத்தம் உடல்களை விட்டுப் பிரிந்த பின்னரும் அழியாமல் என்றும் நிலையாக இருப்பவன் தான் ஒருவனே என்பதை உணர்துகின்ற பெருமான், தனது விரிந்த மார்பினில் முப்புரி நூல் பொருந்தியவராகவும், தனது உடலின் ஒரு பாகத்தில் பிராட்டியை பொருத்தியவராகவும், நறுமணம் வீசும் சோலைகள் நிறைந்த காஞ்சி மாநகரில் வீற்று இருக்கின்றார். எல்லையற்ற நற்குணங்கள் பொருந்தியவராக இந்த தலத்தில் வாழும் அடியார்கள் போற்ற, தெய்வப் பெண்ணாகிய பார்வதி தேவி உடன் பொருந்தியவராக பெருமான் நடனம் ஆடுபவரும் எமது தந்தையும் ஆகிய பெருமான் எழுந்தருளிய ஏகம்பம் திருக்கோயிலைத் தொழுது போற்ற எமது இடர்கள் முற்றிலும் கெட்டுவிடும்.
பாடல் 2:
வரம் திகழும் அவுணர் மாநகர் மூன்றுடன் மாய்ந்தவியச்
சரம் துர்ந்து எரி செய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
குருந்த மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மரவம்
திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே
விளக்கம்:
வரம் திகழும் அவுணர்=தாங்கள் பெற்றிருந்த வரத்தின் தன்மையால், மிகுந்த வலிமை வாய்க்கப் பெற்ற திரிபுரத்து அரக்கர்கள்; சரம்=அம்பு; ஏகம்பம் சேர இடர் கெடுமே என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். முக்தித் தலங்களில் ஒன்றாக கருதப்படும் காஞ்சி நகரத்தில் வசிக்கும் மனிதர்கள் முக்தி அடைவார்கள் என்று நம்பப்படுகின்றது. எனவே அந்த நகரத்தைச் சென்றடைந்து சில நாட்கள் வசித்து அதன் பயனாக முக்தி அடையுமாறு நமக்கு அறிவுறை கூறுகின்றார். உயிரின் இடர்கள் அனைத்திற்கும் காரணம், உயிருடன் பிணைந்துள்ள மலங்களும் அந்த மலங்களின் விளைவாக, உயிர்கள் எண்ணற்ற பழைய பிறவிகளில் சேர்த்துக் கொண்டுள்ள வினைகளும் தாம். ஏகம்பம் சென்றேத்தி இறைவனைத் தொழுதேத்த உயிர்களின் இடர்களும் அந்த இடர்களை விளைவிக்கும் வினைகள் மற்றும் மலங்கள் அனைத்தும் கெடும் என்று இந்த பாடலில் உணர்த்துகின்றார்.இவ்வாறு தங்களின் வினைகள் களையப்படும் உயிர்கள் முக்தி உலகம் சென்றடைந்து என்றும் அழியாத ஆனந்தத்தில் திளைப்பதால், அத்தகைய நிலைக்கு மூல காரணமாக விளங்கும் பெருமானே, அந்த இன்பத்திற்கு காரணமாக விளங்குகின்றான். பெருமான் புரிகின்ற இந்த கருணைச் செயலை உணர்த்தும் வண்ணம், பெருமானை இன்பம் அளிப்பவன் என்ற பொருள் பட, மிகவும் பொருத்தமாக சங்கரன் என்று அழைக்கின்றார். தேவர்களுக்கும் மனிதர்களுக்கு பண்டைய நாளில் இன்பம் அளித்த செய்கை, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் அழித்த செய்கை பாடலில் முதல் இரண்டு அடிகளில் குறிப்பிடப் படுகின்றது.
பொழிப்புரை:
தாங்கள் பெற்றிருந்த வரத்தின் விளைவாக மிகுந்த வலிமை வாய்ந்தவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் உடனே ஒருங்கே நெருப்பில் எரிந்து வெந்து அழியும் வண்ணம் அம்பினை எய்தவனும், தாழ்ந்த சடையை உடையவனும், உயிர்களுக்கு இன்பம் அளிப்பதால் சங்கரன் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய பெருமான், பொருந்தி உறையும் இடம் கச்சி ஏகம்பம் ஆகும். குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குரா மற்றும் கடம்ப மரங்களால் சிறந்து விளங்கும் பசுமையான சோலைகள் நிறைந்த காஞ்சி நகரில் உள்ள ஏகம்பம் திருக்கோயில் சென்றடைந்து இறைவனைத் தொழுது வணங்கினால், உயிர்களைப் பற்றி இருக்கும் பெரிய இடராகிய, பிறப்பிறப்புச் சங்கிலியுடன் பிணைந்துள்ள தன்மை, கெட்டுவிடும்.
பாடல் 3:
வண்ண வெண்பொடிப் பூசு மார்பில் வரியரவம் புனைந்து
பெண் அமர்ந்து எரியாடல் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்
திண்ணமாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர இடர்கெடுமே
விளக்கம்:
பிஞ்ஞகன்=அழகிய தலைக்கோலம் உடையவன்; தாழ்ந்து தொங்கும் நீண்ட சடையை உடையவனாக இருந்தாலும் அந்த கோலம் பெருமானுக்கு அழகினைத் தருகின்றது என்பதை உணர்த்தும் வண்ணம் பெருமானை பிஞ்ஞகன் என்று திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். நெடுங்களம் தலத்தின் மீது அருளீய இடர்களையும் பதிகத்தின் முதல் பாடலில் (1.52.1) திருஞானசம்பந்தர் பெருமானை பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். ஓராய்=மன்னித்து அருள் புரிவாய்; திருஞானசம்பந்தர் உலகிலுள்ள மனிதர்களை இரண்டு வகையாக பிரிக்கின்றார். பெருமானின் பெருமைகளை குறிப்பிட்டு அவனை வாழ்த்தி வணங்கும் அடியார்கள் ஒரு பிரிவினர். மற்றொரு பிரிவினர், பெருமானை வாழ்த்தி வணங்காத மனிதர்கள். பின்னவர், உலகெலாம் படைத்து நம்மையும் தோற்றுவித்து அருள் புரியும் பெருமானை வணங்காத குற்றம் செய்ததனால் குறை உடையவர்கள். அந்த குறையேதும் ஏதும் இல்லாமல் நிறைந்த குணம் உடையவர்களாக இருப்பவர்கள் முன்னவர்கள். முன்னவர்களை நிறை உடையவர்கள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இரு வகையினருக்கும் அருள் புரியுமாறு பெருமானை திருஞானசம்பந்தர் வேண்டுகின்றார். அவரவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு எவ்வாறு அருள் புரிவது என்பதையும் அவரே குறிப்பிடுகின்றார். குறை உடையவர்களின் குற்றத்தை பொறுத்தருள வேண்டும் என்றும்,நிறை உடையவர்களுக்கு, அவர்கள் தொடர்ந்து இறைவனை வழிபடும் பொருட்டு எந்த இடர்ப்பாடும் நேராமல் இருக்க வேண்டும் என்று வேண்டுகின்றார்.இவ்வாறு அனைவர்க்கும் அருள் புரிய வேண்டும் என்று திருஞானசம்பந்தர் வேண்டுவது அவரது பரந்த உள்ளத்தை நமக்கு காட்டுகின்றது. இந்த உலகில் பெருமானை வழிபடாத பலரும் நலமுடன், பல வகையான செல்வங்கள் பெற்று இருப்பதை நாம் காண்கின்றோம். அத்தகையவர்கள் சென்ற பிறவிகளில் செய்த நற்செயல்களின் விளைவுகள் ஒரு புறம் இருந்தாலும், திருஞானசம்பந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி பெருமான் அவர்களின் குற்றங்களை மன்னிப்பதே காரணம் என்பது இந்த பாடலின் மூலம் உணர்த்தப் படுகின்றது போலும். மேலும் நிறை உடையவர்களின் உயர்ந்த கொள்கை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கது. சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தொழாமல் இருப்பதே அவர்களின் உயர்ந்த கொள்கையாகும்.
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்று உனைப் பேசின் அல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
கள்ளில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.119.3) திருஞானசம்பந்தர் பிஞ்ஞகன் என்றும் இமையா முக்கண் உடையவன் என்றும் குறிப்பிடுகின்றார். கண்=அழகு; கண்ணார் நீறு=அழகு தரும் திருநீறு;
எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண்
பண்ணார் நான்மறை பாடும் பரமயோகி
கண்ணார் நீறணி மார்பன் கள்ளில் மேயான்
பெண் ஆணாம் பெருமான் எம் பிஞ்ஞகனே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.32.7) திருஞானசம்பந்தர் பெருமானை பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். துன்னு குழல்=அடர்ந்த கூந்தல்; சுளிவெய்த=சினம் கொள்ள; பெருமான் தவம் செய்ததற்காக பிராட்டி பெருமான் மீது கோபம் கொண்டதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தக்கனது யாகத்தில், சிவபெருமானை மிகவும் இழிவாக பேசியதால், மனம் வருந்திய தாட்சாயணி, தக்கனால் வளர்க்கப்பட்ட உடலுடன் வாழவேண்டாம் என்ற முடிவுடன் தனது உடலை மாய்த்துக் கொண்ட பின்னர், இமயமலைச் சாரலில் சிறு குழந்தையாக தோன்றி, இமவானால் பார்வதி என்ற பெயருடன் வளர்கின்றாள். தேவி தான் பார்வதி தேவியாக வளர்கின்றாள் என்பதை பெருமான் உட்பட அனைத்து தேவர்களும் அறிந்திருந்தனர். அதனால் தான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்வதில் பெருமானுக்கு நாட்டம் ஏற்படவேண்டும் என்று மன்மதன் மூலமாக முயற்சி செய்கின்றனர். இவ்வாறு இருக்கையில் பெருமான், தானே வலியச் சென்று பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும் அல்லவா. ஆனால் அவ்வாறு செய்யாமல் அவர் தொடர்ந்து தவம் செய்து கொண்டிருந்தது தான் பிராட்டியின் கோபத்திற்கு காரணம் போலும். பெருமானை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் தேவி தவம் செய்ததும், அந்த தவத்தின் தன்மையையும் பெருமான் பால் பிராட்டி கொண்டிருந்த தீவிரமான அன்பையும், உலகுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் பெருமான், ஒரு முதிய அந்தணராக, அன்னை தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு சென்றார் என்று புராணங்கள் உணர்த்துகின்றன.தவம் செய்து கொண்டிருந்த அன்னையை சந்திக்க பெருமான் சென்றதன் காரணம் மற்றொன்றும் உள்ளது என்பதை நாம் இந்த பாடல் மூலம் தெரிந்து கொள்கின்றோம். பிராட்டி தன் மீது கொண்டிருந்த கோபத்தைத் தவிர்ப்பதற்காக இந்த சந்திப்பையும் பெருமான் பயன்ப்டுத்திக் கொண்டார் என்பதை நாம்,இந்த பாடல் மூலம், உணர்கின்றோம். சதி=பதிவிரதை; தனது கணவனை அடுத்தவர் இழிவாக பேசியதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் தானே,பிராட்டி, தக்கன் வளர்த்த யாக குண்டத்தில் குதித்து தனது உயிரினை மாய்த்துக் கொள்கின்றாள். பிராட்டியின் கோபத்தை தணிக்கும் பொருட்டு, என்ன சதி என்று பெருமான் வினவியதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அங்கணன்=அழகு மிகுந்த கண்கள், கருணையே கண்களுக்கு அழகு தருவதாக பெரியோர்கள் கருதுகின்றனர். மன்னு கொடையாளர்=தொடர்ந்து வள்ளல் தன்மையுடன் விளங்கிய மக்கள்; வண்=சிறப்பு வாய்ந்த;
துன்னு குழல் மங்கை உமை நங்கை சுளிவெய்த
பின்னொரு தவம் செய்துழல் பிஞ்ஞகனும் அங்கே
என்ன சதி என்றுரை செய் அங்கணன் இடம் சீர்
மன்னு கொடையாளர் பயில் வண் திருவையாறே
பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.40.5) திருஞானசம்பந்தர் பெருமானை, பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். கமழ்=நறுமணம் கமழ்கின்ற; இதம்=நன்மை; ஹிதம் என்ற வடமொழிச் சொல்லும் நன்மை என்ற பொருள் உடையது; நுதலுதல்=கருதுதல்;செல்வத்தை இயல்பாக அறிந்தோமே என்ற தொடர் மூலம், வீடுபேறு அழியாத பேரின்பத்தைத் தரும் வல்லமை உடையது என்ற இயல்பினை உடையது என்று அறிந்து கொண்டவர் பெருமானின் அடியார்கள் என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். செல்வம் என்பதற்கு பெருமானை வணங்குவதே சிறந்த செல்வம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பிராட்டியைத் தனது உடலில் பெருமான் ஏற்றுக்கொண்டுள்ள தன்மை பிராட்டிக்கு நன்மை பயக்கின்றது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சிவபிரானின் தீவிர அடியாராக விளங்கிய பிருங்கி முனிவர், பிராட்டியை வணங்காமல் பெருமானை மற்றும் பணிந்து வணங்கியதைக் கண்ட பிராட்டி, வருத்தம் அடைந்து, இனிவரும் நாட்களில் தன்னை எவரும் புறக்கணிக்கலாகாது என்று விருப்பம் கொண்டார். அந்த விருப்பம் ஈடேறும் வண்ணம் பெருமான், தனது உடலில் தன்னை (பிராட்டியை) ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினார். பெருமானும் பிராட்டி பால் தான் கொண்டிருந்த அன்பினையும் மதிப்பினையும் உலகுக்கு உணர்த்த எண்ணி, பிராட்டியைத் தனது உடலில் ஏற்றுக்கொண்டுள்ள தன்மை, தேவிக்கு இறைவன் செய்த நன்மையாக திருஞானசம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது.
கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ் சடையான் விடையேறி
பெண் இதமாம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான்
விண் நுதலாத் தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி
எண்ணுதலாம் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே
புறவார் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்த்தின் பாடலில் (2.53.1) திருஞானசம்பந்தர், பெருமானை பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் திருஞானசம்பந்தர், பெருமானே அடியார்களுக்கு அருள்வாயாக என்று வேண்டுகின்றார். கலந்தார், அடைந்தார்,தாளையே பரவும் தவத்தார், அடி பரவும் தவத்தார், அடியார், சீரினால் வணங்கும் திறத்தார், பொய்யிலா அடிமை புரிந்தார், எம் பெருமான் என்பவர், தவத்தார்,உகப்பார் என்று அடியார்களை குறிப்பிடுகின்றார். விண்ணமர்ந்தன=ஆகாயத்தில் பொருந்தியவை; நுதல்=நெற்றி; நெற்றிக்கண் உடையவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.
விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய் விரி
பண்ணமர்ந்து ஒலி சேர் புறவார் புனங்காட்டூர்ப்
பெண் அமர்ந்தொரு பாகமாகிய பிஞ்ஞகா பிறைசேர் நுதலிடைக்
கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே
அறையணி நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.77.3) திருஞானசம்பந்தர் பெருமானை பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார்.என்பினார்=எலும்பு மாலை அணிந்தவர்; கனல் சூலத்தார்=நெருப்புப் பொறியினை வெளிப்படுத்தும் சூலம் ஏந்தியவர்; பின் பினால்=பின் புறத்தில்;முன்பினார்=மற்ற உயிர்களுக்கு முன்னமே இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட மும்மூர்த்திகள், பிரமன், திருமால் மற்றும் உருத்திரன்; பிறங்கும்=விளங்கும்;
என்பினார் கனல் சூலத்தார் இலங்கு மாமதி உச்சியான்
பின் பினால் பிறங்கும் சடைப் பிஞ்ஞகன் பிறப்பிலி என்று
முன்பினார் மூவர் தாம் தொழும் முக்கண் மூர்த்தி தன் தாளுக்கு
அன்பினார் அறையணி நல்லூர் அங்கையால் தொழுவார்களே
தேவூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (2.82.4) பெருமானை பிஞ்ஞகன் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், மிகவும் குறைவாக இடப்படும் பலிக்காக பல ஊர்கள் திரிவதால் பெருமானை பித்தன் என்று அழைக்கின்றார். உலகில் உள்ள எண்ணற்ற உயிர்களில், ஒரு சிலர் தானே, பற்றவர்களாக விளங்கி,தங்களது மலங்களை பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு, உய்வினை அடையும் பக்குவம் உடையவர்களாக உள்ளனர்; எனவே பலி மிகவும் குறைவாகவே கிடைக்கின்றது. எனினும் பெருமான் தனது முயற்சியில் தளராதவராக தொடர்ந்து பலி ஏற்பதால், அவரை பித்தன் என்று அழைத்தார் போலும்.முத்தன் என்று, இயல்பாகவே பாசங்களிலிருந்து பெருமான் விடுபட்ட தன்மையை குறிப்பிடுகின்றார். தனது அடியார்களின் சித்தத்தில் எழுந்தருளும் பெருமான் என்று இங்கே கூறுகின்றார். திருஞானசம்பந்தரின் அறிவுரையின் படி, நாமும் பெருமானின் திருவடிகளை அடைந்து நமது அல்லல்களைத் தீர்த்துக் கொள்வோம்.
முத்தன் சில்பலிக்கு ஊர் தொறும் முறைமுறை திரியும்
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன அடியார்கள்
சித்தன் மாளிகை செழுமதி தவழ் பொழில் தேவூர்
அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே
பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.5.6) திருஞானசம்பந்தர், வார்சடைப் பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். பில்கு=ஒழுகும்; புனல் பில்கு= கங்கை நீர் ஒழுகும்; தனது சடையில் தேக்கிவைக்கப் பட்ட கங்கை நீரினை பெருமான் சிறிது சிறிதாக வெளியிட்ட செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. நளிர்=குளிர்ந்த; நவிலுதல் என்ற சொல்லுக்கு, சொல்லுதல், கற்றல், உரத்த குரலில் ஒலித்தல்,பாடுதல், செய்தல், பழகுதல், தாங்குதல், விரும்புதல், குறித்தல், மிகுதல் என்று பல பொருள்கள் சொல்லப்படுகின்ற்ன. இங்கே புகழ் பாடுதல் என்று கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். வார்சடை=நீண்ட சடை; இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலிலும் பெருமானை பிஞ்ஞகன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே
மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.28.2) திருஞானசம்பந்தர், பெருமானை பிஞ்ஞகன் என்று குறிப்பிடுகின்றார். மழபாடி தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் என்று பதிகத்தின் முதல் பாடலில் அறிமுகம் செய்து வைத்த, திருஞானசம்பந்தர் அந்த இறைவன் எவ்வாறெல்லாம் தனது அடியார்களுக்கு கருணை புரிந்துள்ளார் என்பதை, அவரது கருணைச் செயலை உணர்த்தும் பல நாமங்களை குறிப்பிட்டு, நமக்கு உணர்த்துகின்றார்.கறையணி மிடறு என்ற தொடர், ஆலகால விடத்தினை உட்கொண்ட பெருமான், அந்த விடம் தனது வயிற்றில் சென்று தங்கினால், பிரளய காலத்தில் தன்னுள் ஒடுங்கவிருக்கும் உயிர்களின் நன்மை கருதி, தனது கழுத்திலே என்றும் தங்கியிருக்கும் வண்ணம் தேக்கியுள்ளார் என்பதை உணர்த்துகின்றது.கண்ணுதல் என்ற தொடர், சூரபதுமனின் கொட்டத்தை அடக்கி ஒழிக்க முருகப் பெருமானைத் தோற்றுவித்த செய்தியை குறிப்பிடுகின்றது. பிறையணி என்ற தொடர், தனது கலைகள் அனைத்தும் தேய்ந்து அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன் இருந்த சந்திரன் அழியாத வண்ண காப்பாற்றிய கருணைச் செயலை உணர்த்துகின்றது. பிஞ்ஞகம் என்ற சொல்லுக்கு மயில்தோகை என்ற பொருளும் உள்ளது. அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளுவதற்காக வேடுவக் கோலத்துடன் சென்ற பெருமான், மயிற்பீலியையும் அணிந்து சென்றார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. உலகத்தவர்க்கு வாழும் வழியினை உணர்த்தும் வேதங்களை அருளிய பெருமான் என்பதை குறிப்பிடும் வண்ணம் மறையணி நாவினான் என்ற நாமும் இங்கே சொல்லப் பட்டுள்ளது.குருகு=நீர்த்துறைகளில் வாழும் நாரை முதலான வெண்மை நிறத்து பறவைகள்;
கறையணி மிடறு உடைக் கண்ணுதல் நண்ணிய
பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணும் ஊர்
துறையணி குருகினம் தூமலர் துதையவே
மறையணி நாவினான் மாமழபாடியே
பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.37.1) திருஞானசம்பந்தர் பெருமானை பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். பரமன்=அனைவர்க்கும் மேலானவன்; மலர் என்றால் பொதுவாக தாமரை மலரையே குறிக்கும். பெருமானின் திருமேனி மீது நீரும் மலரும் தூவி வழிபடும் கைகளை, தாமரை மலர் என்று குறிப்பிட்டு சிறப்பிக்கின்றார். சீர்காழி தலத்திற்கு பல பெயர்கள் இருக்கும் தன்மையை, பரமனூர் பல பேரினால் பொலி என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார்.பயில்=தொடர்ந்து ஒரு செயலைச் செய்தல்: இங்கே பெருமானை தொடர்ந்து வழிபடுதல் என்று பொருள் கொள்ளவேண்டும்; உன்னுதல்=நினைத்தல்; தனது அடியார்கள் தங்களது மனதினில் நினைக்கும் வரங்களை அருளும் தன்மை உடையவன் என்று கூறுகின்றார். அடியார்கள் முறையிட வேண்டிய தேவையே இல்லாமல், அவர்களது உள்ளக் கருத்தினையும் தேவைகளையும் புரிந்து கொண்டு அருள் புரியும் வல்லமை உடையவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஐயன்=தலைவன்; இதே பதிகத்தின் ஐந்தாவது மற்றும் பத்தாவது பாடல்களிலும் பெருமானை பிஞ்ஞகன் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார்.
கரமுனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்துமின்
பரமனூர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள் தாம் பயில்
வரம் உன்னவ் வருள் செய்ய வல்ல எம் ஐயன் நாடொரும் மேய சீர்
பிரமனூர் பிரமாபுரத்துறை பிஞ்ஞகன் அருள் பேணியே
சிற்றேமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.42.10) திருஞானசம்பந்தர் பெருமானை பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். ஒப்பிலாக் கள்ளத்தார் என்று சமணர்களை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வஞ்சகமாக நடந்து கொள்வதில் சமணர்களுக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று கூறுகின்றார்.பெரிய புராணத்தில் குறிப்பிடப்படும் சமணர்களின் செயல்கள் பல அவர்களது வஞ்சகத் தன்மையை உணர்த்துவதை நாம் அறிவோம். பிள்ளைத் திங்கள்=முதிராத பிறைச் சந்திரன்; உமையம்மை பாட பெருமான் நடமாடுவதாக இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. வாண்முகம்=வாள் முகம்=ஒளிவீசும் முகம்; வெண்மை நிறத்து சந்திரன் போல் பிராட்டியின் முகம் ஒளி வீசுகின்றது என்று சொல்கின்றார். வீழ்சடை=தாழ்சடை;
வெள்ளைத் திங்கள் வாண்முக மாதர் பாட வீழ்சடைப்
பிள்ளைத் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார் சிற்றேமத்தான் உருவார் புத்தர் ஒப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே
ஆலவாய் என்று அழைக்கப்படும் ம்துரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.52.6) திருஞானசம்பந்தர் பெருமானை பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். மேலும் பெருமான் ஆடுகின்ற நடனக் கோலத்தை நினைத்து இன்புற்று இருப்பதே, உயிர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியமம் என்றும் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பொன் தயங்கு=பொன் போல் மிளிரும்; பின் தயங்க= பின்னால் தாழ்ந்து தொங்கும்; பிஞ்ஞகன்=அழகிய தலைக் கோலம் உடையவன்; இலங்கு= பிரகாசிக்கும்; அம்முடி=அழகிய முடி;
பொன் தயங்கு இலங்கொளிந் நலம் குளிர்ந்த புன்சடை
பின் தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
கொன்றை அம்முடியினாய் கூடலால வாயிலாய்
நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே
பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.64.2) திருஞானசம்பந்தர் பெருமானை பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். கருமான்=யானை;மானில் ஒரு வகையான கருமை நிறத்து மான் என்றும் பொருள் கூறுகின்றனர். கரிகாடர்=ஊழித்தீயின் வெப்பத்தில் கருகி கருமை நிறத்தில் காணப்படும் நிலம்; பொரு மான விடை=போர்க்குணம் உடையதும், பெருமை படைத்ததும் ஆகிய இடபம்;
கருமானின் உரி உடையர் கரிகாடர் இமவானார்
மருமானார் இவரென்று மடவாளோடு உடனாவர்
பொரு மான விடை ஊர்வது உடையார் வெண்பொடி பூசும்
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே
குருகாவூர் வெள்ளடை என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.124.1) திருஞான சம்பந்தர், பெருமானை பிஞ்ஞகன் என்று குறிப்பிடுகின்றார்.கணம்=கூட்டம்; எண்ணரும் பல் கணங்கள் புகழ பெருமான் நடனமாடுகின்றார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பதினெண் கணங்கள், பூத கணம், பேய்க்கணம், முனிவர் கணம், உருத்திர கணங்கள் என பலரும் பெருமானின் நடனத்தை கண்டு களிப்பதால் இவ்வாறு கூறுகின்றார்.
சுண்ண வெண்ணீறு அணி மார்பில் தோல் புனைந்து
எண்ணரும் பல் கணம் ஏத்த நின்றாடுவார்
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனி எம் பிஞ்ஞகனாரே
கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.6.4) அப்பர் பிரான் பெருமானை பிஞ்ஞக வேடத்தான் என்று அழைக்கின்றார்.இரும்பார்ந்த=இரும்பினால் செய்யப்பட்ட: கரும் பானல்=கருங்குவளை மலர்கள்: பெரும் பாலன்=மனதினை கொள்ளை கொள்ளும் அழகினை உடைய பாலகன் உருவம். இரும்பினால் செய்யப்பட்ட சூலத்தினையும், வெண்மழுவையும் ஏந்தியவன் என்றும், வண்டுகளால் சூழப்பட்ட கொன்றை மாலையை அணிந்தவனே என்றும், திருநீற்றை அணிந்தவனே என்றும், தாருகவனத்து பெண்களின் மனதினை கொள்ளை கொண்ட இளமையான தோற்றத்தை உடையவனே என்றும், பின்னப்பட்ட சடையுடனும் தோன்றியவனே என்றும், என் மகள் ஓயாது கூவிக் கொண்டே இருக்கின்றாள். அவள் கருங்குவளை மலர்கள் பூக்கும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை கண்டாள் போலும் என்று அப்பர் நாயகியின் தாயின் கூற்றாக அமைந்த பாடல்.
இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தி ஓர் வெண்மழுவன் என்கின்றாளால்
சுரும்பார் மலர்க் கொன்றைச் சுண்ண வெண்ணீற்றவனே என்கின்றாளால்
பெரும்பாலன் ஆகியொர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால்
கரும்பானல் பூக்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.7.4) அப்பர் பிரான் பெருமானை, பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். இறைவன் மீது பாடப்படும்பாடல்களை சொல்மாலை என்று அழைப்பது வழக்கம். இறைவனும் தன்னை புகழ்ந்து பாடப்படும் பாடல்களை மிகவும் மகிழ்ந்து ஏற்கின்றான் என்பதை நாம்சுந்தரமூர்த்தி நாயனார் சரித்திரத்திலிருந்து அறிகின்றோம். வயதான அந்தணர் வேடத்தில் வந்து, நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து, நம்பி ஆரூரரைஆட்கொண்ட பெருமான், திருவெண்ணெய்நல்லூர் கோயிலுக்கு அழைத்துச் சென்று, சுந்தரருக்கும் மற்றவர்களுக்கும் தான் யார் என்பதைஉணர்த்துகின்றார். அப்போது சுந்தரரை நோக்கி பெருமான், செந்தமிழ்ப் பாடல்களே தமக்கு மிகவும் உகந்த வழிபாடு ஆகும் என்று சொல்லி, பதிகம்பாடுமாறு பணிக்கின்றார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். பெய்பொருள்=அடைய விரும்பும் பொருள்: பிஞ்ஞகன்=பின்னப்பட்ட சடையை உடையவன்: இண்டை=முட்கொடிகளில் பூக்கும் ஒருவிதமான மலர் என்றும் தலைமாலை என்றும் இரண்டு பொருட்கள் கூறுவார்கள். ஐம்பூதப் பிண்டம்=ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டாகும் உடல் உறுப்புகள்/பாகங்கள்: நமது உடலின் பல பாகங்கள் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டாவதாக கருதுவார்கள். நிலத்தின் சேர்க்கையால், எலும்பு, தசை, உரோமம், தோல் மற்றும் நரம்புகளும், நீரின் சேர்க்கையால் இரத்தம், விந்து, சிறுநீர்,வியர்வை மற்றும் உமிழ்நீரும், தீயின் சேர்கையால் பசி, தாகம், தூக்கம் மற்றும் சோம்பல் எனப்படும் உணர்வுகளுடன் உடல் அழகும், காற்றின் சேர்க்கையால் பத்து விதமான காற்றுகள் தோன்றி உடலில் சுருக்கம், விரிவு மற்றும் அசைவு ஆகிய செயல்களையும், ஆகாயத்தின் சேர்க்கையால் வயிறு, இதயம், கழுத்து மற்றும் தலை ஆகிய இடங்களில் வெற்றிடங்களும் உண்டாகின்றன. இவ்வாறு பிண்டமாகிய நமது உடலுக்கு கருப்பொருளாக விளங்கும் ஐம்பூதங்களாக இருப்பவன் சிவபெருமான் என்பது இங்கே குறிப்பிடப்படுகின்றது.
அண்டமாய் ஆதியாய் அருமறையொடு ஐம்பூதப்
பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை
தொண்டர் தாம் மலர் தூவிச் சொன்மாலை புனைகின்ற
இண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.28.2) அப்பர் பிரான், பெருமானை பிறைச் சென்னியன் என்றும் பிஞ்ஞகன் என்றும் அழைக்கின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான், தான் இறந்த பின்னர் தனது உயிர் தகுந்த உடலுடன் பிணைக்கப்பட்டு மீண்டும் பிறப்பெடுக்கும் தன்மையை விளைவிக்கும் இயமனின் வரவு குறித்து அச்சம் கொண்டு, கடல் நீரில் தீர்த்தமாடியும் மலையுச்சியில் தவம் இருந்தும் முயற்சி செய்ததாகவும், அத்தகைய முயற்சிகளால் தன்னால் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் புலம்புகின்றார். பெருமானின் திருநாமத்தைச் சொல்வது ஒன்று தான், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி என்பதை உணர்த்தும் முகமாக, கறைப் பெரும் கண்டத்தானே, பிறைப் பெரும் சென்னியானே, பிஞ்ஞகா என்று இறைவனின் திருநாமங்களை குறிப்பிடுகின்றார்.
திருக்கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.31.7) அப்பர் பிரான், பெருமானை பிஞ்ஞகா என்று அழைக்கின்றார். கூகை=பகலில் வெளிவராது இரவில் உலவும் ஆந்தை: மாயம்=மாயமான உலகப் பொருட்களின் உண்மையான தன்மை: நேயம்=அன்பு: காயம்= உடல்; நிலையில்லாத மாயப் பொருட்கள் அடங்கிய உலகத்தின் உண்மையான தன்மையை நான் அறியாமல் இருந்து விட்டேன்: அதனால் பொய்ம்மை உடைய அந்த பொருட்கள் தரும் மயக்கத்தில் திளைத்த மனத்தனாக நான் இருந்து விட்டேன்: இவ்வாறு மயக்கத்தில் ஆழ்ந்து இருந்த என்னைக் கண்டு அனைவரும் அஞ்ச, நானும் பேய் போல் திரிந்தேன்: பகலில் வெளியே வராது இரவில் உலவும் ஆந்தை போன்று, உண்மை ஒளியினை நோக்கிச் செல்லாது இருளில் திரிந்தேன்: அழகான தலைக்கோலம் அணிந்தவனே, பிறப்பில்லாத ஆதியே, உன்பால் அன்பு வைத்து உன்னை நினைக்காமல் இருந்த, இழிந்த கீழோனாகிய நான், இந்த உடலும் உடலில் உள்ள பொறிகளும் தரும் சிற்றின்பத்தை இழக்க விரும்பாமல் இருக்கின்றேன். கடவூர் வீரட்டம் தலத்தில் உறையும் இறைவனே, நீ தான் எனது இழிந்த நிலையை மாற்றவேண்டும் என்று அப்பர் பிரான் அரற்றும் பாடல்.
மாயத்தை அறிய மாட்டேன் மையல் கொள் மனத்தனாகிப்
பேய் ஒத்துக் கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பொன்று இல்லீ
நேயத்தால் நினைய மாட்டேன் நீதனேன் நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர் வீரட்டனீரே
பயற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.32.6) அப்பர் பிரான், பேயறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன் என்று பெருமானை அழைக்கின்றார்.எண்திசைக் காவலர்களில் ஆறு பேரை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஆறு பேரை குறிப்பிட்டமையால், எஞ்சியுள்ள இருவரையும் சேர்த்துக்கொண்டு எண்திசைக் காவலர்களாக பெருமான் இருப்பதாக நாம் பொருள் கொள்ளவேண்டும். திப்பிய சாந்தன்=அனைவரிலும் மேம்பட்ட சாந்த வடிவினன் ஆகிய ஈசானன். இந்த பட்டியலில் விடுபட்ட இருவர் இந்திரன் (கிழக்கு திசைக்கு அதிபதி) மற்றும் குபேரன் (வடக்கு திசைக்கு அதிபதி).மணிவாசகர் திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒன்றினில், அருணன் இந்திரன் திசை அணுகினான் என்று சொல்வது இங்கே நினைவு கூரத்தக்கது. நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் பதிகத்தின் கடைப் பாடலில், இயமனை தென்திசைக் கோமான் என்று அப்பர் பிரான் அழைப்பதும் நமது நினைவுக்கு வருகின்றது. ஞாயிறு, சோமன் (சந்திரன்) ஆகிய இருவரும் இரண்டு சுடர்கள். நேர்த்திசைகளில் தென்திசைக் காவலனாகிய இயமனும் மேற்கு திசைக் காவலானகிய வருணனும் இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள அக்னி, நிருதி, வாயு, ஈசானன் ஆகியோர் முறையே தென்கிழக்கு,தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு திசைக் காவலர்கள், அப்பர் பிரான் அழகாக வரிசைப் படுத்தியுள்ளதை நாம் உணரலாம். வேள்விகள் செய்யும்போது இந்த திசைக்காவலர்களுக்கு வணக்கம் செலுத்தும் முறை வேதங்களில் உணர்த்தப் படுகின்றது. ஹோமம் வளர்த்துச் செய்யப்படும் சடங்குகளில் எட்டு திசைகளிலும் இந்த திசைக்காவலர்களின் பெயரைச் சொல்லி, அட்சதை தூவுவதை நாம் காண்கின்றோம். அப்பர் பிரான் வடமொழியில் பெற்றிருந்த புலமையும், வேள்வி செய்யப்படும் முறையையும் அறிந்திருந்தமை நமக்கு இந்த பாடல் மூலம் புலனாகின்றது.
ஞாயிறாய் நமனுமாகி வருணனாய் சோமனாகித்
தீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்தனாகிப்
பேயறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலும் திருப்பயற்றூரனாரே
பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.58.8.) அப்பர் பிரான் பெருமானை, பேரிடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் என்று குறிப்பிடுகின்றார்.பாரிடம்=பூதகணம்; பாணி செய்ய= தாளமிட; கார்=மேகம்; காருடைக் கண்டர்=மேகம் போன்று கரிய நிறத்தினை உடைய கழுத்தினைக் கொண்ட பெருமான்; உயிருக்கு ஏற்படும் பெரிய துன்பமும் தீர்க்க முடியாத நோயாகவும் திகழும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்க வல்ல பெருமான்,அழகிய தலைக் கோலத்தை உடைய சிவபெருமான் ஆவார். எனக்கு தந்தையாக விளங்கும் பெருமான், நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் மேகம் போன்று கருமை நிறத்தில் கழுத்தினை உடையவர் ஆவார். தனது கையினில் கபாலம் ஏந்தியவராக ஊரெங்கும் திரியும் பெருமான், சிறப்பு வாய்ந்ததும் செம்மை நிறத்தில் கண்களை உடையதும் ஆகிய இடபத்தின் மீது ஏறி தான் விரும்பிய இடத்திற்கு செல்கின்றார். வேறு எவரிடமும் இல்லாத முக்திச் செல்வத்தை உடைய செல்வர் சிவபெருமான். அத்தகைய இறைவனார் பருப்பதத்தை நோக்கி அதனை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பேரிடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்டராகிக் கபாலம் ஓர் கையில் ஏந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளேறு ஏறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே
பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.60.4) அப்பர் பிரான் பெருமானை பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். மைஞ்ஞவில்=மை+நவில்,கருமை நிறம் படர்ந்த; கைஞ்ஞவில்= கை+நவில், கையில் பழகிய, பொருந்தியுள்ள; அந்தண்=அம்+தண், அழகும் குளிர்ச்சியும் உடைய;பொய்ஞ்ஞெக=பொய்+நெக, பொய்கள் நீங்கி; விடத்தை தேக்கியதால் கருமை நிறம் அடர்ந்து படர்ந்த கழுத்தினை உடையவனும், வலது கையில் மழுவினையும், இடது கையில் நீண்ட நாட்களாக பழகி பொருந்தி இருக்கும் மான் கன்றினை ஏந்தியவனும், ஒளிவீசும் தீயின் இடையே நின்று ஆடுபவனும்,அழகிய தலைக் கோலம் உடையவனும், அழகும் குளிர்ச்சியும் உடைய பெருவேளூர் தலத்தினில் மிகுந்த விருப்பத்துடன் உறைபவனும் ஆகிய பெருமானை,எனது மனதினுள்ளே இருந்த வஞ்சகங்களை நீக்கி, நினையாமல் இருக்கின்றேன். பெருமானை உணர்வதற்கு உதவி புரியும் பொறிகள் இருந்தும் அவற்றை பயன்படுத்தி பெருமானை அறியாமல் அடியேன் இருப்பது மிகவும் பரிதாபமான நிலை. பெருமானே நீ தான் இந்த நிலையிலிருந்து என்னை விடுவித்து உன்னை நினைக்குமாறு அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.
மைஞ்ஞவில் கண்டன் தன்னை வலங்கையில் மழு ஒன்று ஏந்திக்
கைஞ்ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானைப்
பிஞ்ஞகன் தன்னை அந்தண் பெருவேளூர் பேணினானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப் பொறியிலா அறிவிலேனே
திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.63.5) அப்பர் பிரான் பெருமானை பிஞ்ஞகா என்று அழைக்கின்றார். வாமதேவம் என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்று. நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோயிலின் மூலவர் ஐந்து முகங்களைக் கொண்டவராக விளங்குகின்றார். ஐந்து முகங்களாவன, ஈசானம் (கிழக்கு நோக்கியது: ஸ்படிக நிறம்), தத்புருடம் (உச்சியில் உள்ளது: பொன்னிறம்),அகோரம் (தெற்கு நோக்கியது: நீலநிறம்), வாமதேவம் (வடக்கு நோக்கியது: செம்மை நிறம்), சத்யோஜாதம் (மேற்கு நோக்கியது: வெண்மை நிறம்;
பிறையணி முடியினானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறை வலா இறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா
அறை கழல் அமரர் ஏத்து அணி அணாமலை உளானே
இறைவனே உன்னை அல்லால் யாது நான் நினைவு இலேனே
நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.97.8) அப்பர் பிரான், பெருமானை, பிறை மல்கு செஞ்சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். அறை=ஓசை; மல்கு= மிக்க; பைங்கழல்=புதியதாகத் தோற்றம் அளிக்கும், புது மெருகு குலையாத; நறை=தேன்; நறை மல்கு கொன்றை=தேன் சிந்தும் கொன்றை மலர்கள்; தார்=மாலை: பறை=தோலால் செய்யப்பட்ட இசைக்கருவி; பரிசு=தன்மை; அடக்கமாக இருந்து ஆண்களை ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பது பெண்களின் தன்மை. இந்த அடக்க குணத்தைத் தான் கைவிட்டு, தலைவன் பால் காதல் வயப்பட்டதை இங்கே தனது பரிசு அழிக்கப்பட்டதாக அப்பர் நாயகி கூறுகின்றாள். தான் தனது நிலையிலிருந்து மாறியதற்கும் தலைவனே காரணம் என்று பழிக்கவும் செய்கின்றாள்.
அறை மல்கு பைங்கழல் ஆர்ப்ப நின்றான் அணியார் சடை மேல்
நறை மல்கு கொன்றை அம் தாருடையான் நல்லூர் அகத்தே
பறை மல்கு பாடலன் ஆடலனாகிப் பரிசு அழித்தான்
பிறை மல்கு செஞ்சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.99.4) அப்பர் பிரான், பெருமானை, காஞ்சி எம் பிஞ்ஞகனே என்று அழைக்கின்றார். பெரும் காஞ்சி என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுவதால், அந்நாளில் காஞ்சிபுரம் பெரிய காஞ்சிபுரம் என்றும் சின்ன காஞ்சிபுரம் என்றும் அழைக்கப்பட்டதோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால் சமணர்கள் தங்கியிருந்த காஞ்சி ஜைன காஞ்சி என்றும், சைவர்கள் பெருவாரியாக வாழ்ந்த இடம் சிவகாஞ்சி என்றும் அழைக்கப்பட்டதாக சரித்திரம் கூறுகின்றது. எனவே பெரும் காஞ்சி என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது பெரும் புகழைப் படைத்த காஞ்சி என்று கூறுவதாகவே நாம் கொள்ளவேண்டும். வைகல் வைகல்=நாள்தோறும்: சூல்வித்தல்=தோண்டி எடுத்தல்: நிறை=நெஞ்சில் நிறுத்திய உறுதி:இண்டை=வட்டமாக கட்டப்பட்ட மாலை: ஒரு வகை மலர் என்று கூறுவதுண்டு. பெரும்புகழ் பெற்ற காஞ்சி நகரில் உறையும் சிவபெருமானே, நன்றாக பின்னப்பட்ட சடையை உடையவனே, தினமும் ஆயிரம் செந்தாமரை மலர்கள் தூவி, மற்றும் வட்டமாக கட்டப்பட்ட மாலையை உனது முடியில் சார்த்தி,உன்னை வழிபடுவதே குறிக்கோளாகக் கொண்டிருந்த திருமாலின், உறுதியை அழிப்பது போல், நீலகண்டரே, நீர் ஒரு நாள் திருமால் வைத்திருந்த பூவினில் ஒரு பூ குறையுமாறு செய்தாய். ஒரு பூ குறைந்ததை உணர்ந்த திருமால், குறைந்த ஒரு பூவினை ஈடுகட்டும் வகையில், தனது கண்ணினை தோண்டி எடுத்து,அதனையே பூவாக பாவித்து உன்னை வழிபடுமாறு செய்து மகிழ்ந்தாய் பெருமானே என்று கூறுகின்றார்.
குறிக் கொண்டிருந்து செந்தாமரை ஆயிரம் வைகல் வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான்
கறைக் கண்ட நீ ஒரு பூக் குறைவித்துக் கண் சூல்விப்பதே
பிறைச் துண்ட வார் சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே
ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் (4.113.8) அப்பர் பிரான், வார்சடைப் பிஞ்ஞகனின் பேரை, தான் அடுத்த பிறவியில் மறந்து விடுவேனோ என்று தனது கவலையை தெரிவித்து, அடுத்த பிறவி என்பது இல்லாமல் செய்து பெருமான் தனக்கு அருள் புரியவேண்டும் என்று வேண்டுகின்றார். இருவிசும்பு=பெரிய வானுலகம், இங்கே சொர்கத்தை குறிக்கின்றது: மறுகுதல்=வருந்துதல்: துறக்கப் படாத=உலகப் பற்றுகளை விட முடியாமல் தவிக்கும் உடல்: நாம் இறந்த பின்னர் நமது உயிர்க்கு ஏற்படும் நிலையினை இந்த பாடல் உணர்த்துகின்றது. நாம் இறந்த பின்னர், நமது வாழ்நாளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்றவாறு, நமது பூதவுடல் சொர்கத்திலும் நரகத்திலும் கழிக்க நேரிடுகின்றது. ஆனால், நமது மொத்த தீவினைகளும் இவ்வாறு கழிக்கப் படுவதில்லை. ஏனெனில், நமது தீவினைகள் அனைத்தையும் கழிக்க வேண்டும் என்றால் நமது பூதவுடல் தாங்காது என்பதால், இறைவன் நம் மீது கருணை கொண்டு ஒரு பகுதி வினைகளின் பயனையே நரகத்திலும் சொர்கத்திலும் கழிக்குமாறு செய்கின்றான். எஞ்சிய வினைகளுக்கு ஏற்ப, தகுந்த உடலுடன் உயிர் பொருத்தப்பட்டு அடுத்த பிறவியில் நாம் வினைகளை, இன்ப துன்பங்கள் துய்ப்பதன் மூலம் கழிக்கின்றோம். அவ்வாறு கழிக்க இயலாத வினைத் தொகுதிகள், மற்றும் அடுத்த பிறவியில் நாம் ஈட்டும் வினைகள், ஒரு பகுதி சொர்க்க நரகங்களில் கழிக்கப்பட்டு எஞ்சியவை, அதற்கும் அடுத்த பிறவிக்கும்,தேவைப்பட்டால் அடுத்து வரும் பல பிறவிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறு தான் அனைத்து உயிர்களும் தொடர்ந்து பிறப்பு இறப்புச் சுழற்சியில் சிக்குண்டு கிடக்கின்றன. இதைத் தான் அப்பர் பிரான், தான் சொர்க்கம் நரகம் சென்று வினையின் ஒரு பகுதியின் பயனை அடைந்த பின்னர்,மறுபடியும் பிறப்பன் என்று இங்கே கூறுகின்றார். இந்த பிறவியில், இறை உணர்வுடன் பல உழவாரத் திருப்பணிகள் செய்து அதன் மூலம் ஆனந்தம் அடைந்த அப்பர் பிரானுக்கு, அடுத்த பிறவியில் இறைவனின் திருப்பெயரினை மறக்காமல் தான் இருக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. அந்த சந்தேகத்தால் தான் கவலை கொள்வதாக இறைவனிடம் தெரிவித்து, தனது கவலையை போக்க வேண்டும் என்று இங்கே வேண்டுகின்றார். அப்பர் பிரான் தெரிவிக்கும் இந்த கவலை நமக்கு காரைக்கால் அம்மையாரின் வேண்டுகோளை நினைவூட்டுகின்றது. மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் என்று பெருமானிடம் முறையிட்டது தான் இந்த வேண்டுகோள். அப்பர் பிரானும் புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி மறவாதிருக்க வரம் தர வேண்டும் என்று தானே வேண்டுகின்றார்.
துறக்கப் படாத உடலைத் துறந்து வெம் தூதுவரோடு
இறப்பன் இறந்தால் இருவிசும்பு ஏறுவன் ஏறி வந்து
பிறப்பன் பிறந்தால் பிறையணி சடைப் பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே
திருவாவடுதுறை தலத்தின் மிது அருளிய பதிகத்தின் பாடலில் (5.29.2) பிளவு பட்ட ஒற்றைப் பிறைச் சந்திரனை சூட்டிக்கொண்ட பிஞ்ஞகன் என்று அப்பர் பிரான் பெருமானை அழைக்கின்றார். தவளம்=வெண்மை: களவு=களவியல் ஒழுக்கம்; சங்க நூல்கள், காதலை களவியல் கற்பியல் என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கின்றன. தலைவனும் தலைவியும் ஏனையோர் அறியாதவாறு சந்தித்துக் கொள்ளுதல் களவியல் ஒழுக்கமாக கருதப்படுகின்றது. அவ்வாறு சந்தித்த இனிமையான நிகழ்வுகளை மனதினில் நினைத்து மகிழும் தலைவியின் நிலை இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. எவரும் அறியாதவாறு சந்தித்தனர் என்பதால், அந்த இன்ப நினைவுகளை, தனக்கு நெருக்கமான தோழிகளிடம் கூட பகிர முடியாமல், தனக்குத் தானே அந்த நினைவுகளை அசை போட்டவாறு நினைத்து ரசிக்கும் இன்பம், அந்த இன்பத்தினால் முகத்தில் மலரும் உணர்ச்சிகள் போன்ற மாற்றங்களை கவனித்த தலைவியின் தாய் கூறும் முகமாக அமைந்த பாடல். இந்த பதிகத்தின் முதல் பாடலில், தனது தலைவனாகிய இறைவனுடன் சேருவதற்கான பக்குவத்தை அடையாத பெண் என்று குறிப்பிட்ட தாய், இந்த பாடலிலும் இறைவனின் முழு அன்பின் அளவினைக் காணாத மகள் என்று கூறுகின்றாள். தனது மனம் கவர்ந்த தலைவனாகிய இறைவனுடன் இணையா விட்டாலும், அவனுடன் இணைந்தது போன்று இனிய கற்பனைகளை மனதினில் வளர்த்துக் கொண்டு அந்த கற்பனைகளை அசை போட்டபடி முக மலர்ச்சியுடன் இருந்த நிலையினை, அப்பர் நாயகியின் தாய் குறிப்பிடுகின்றாள். இறைவனின் பூரணமான அன்புக்கு பாத்திரமாகும்அளவுக்குத் தான் தூய்மையானவன் அல்லன் என்ற உணர்ச்சி (முதல் பாடலில் வெளிப்படுத்திய கருத்து), தனது அடி மனதினில் இருந்த போதிலும்,இறைவனுடன் சேர வேண்டும் என்ற ஆர்வத்தின் மிகுதியால், தனது ஆன்மா இறைவனுடன் சேரும் நிலையை கற்பனை செய்வதாக அப்பர் பிரான் இந்தபாடல் மூலம் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. இந்த குறிப்பு மூலம் ஒவ்வொரு உயிரும் அத்தகைய ஆசையினை வளர்த்துக் கொண்டு, அந்த ஆசையினை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதையே அறிவுரையாக நமக்குத் தருகின்றார்.
தவள மாமதிச் சாயலோர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை
அளவு கண்டிலள் ஆவடு தண்டுறை
களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே
ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.9.4) அப்பர் பிரான், பெருமானை பிஞ்ஞகன் என்று குறிப்பிடுகின்றார். பசைந்த=விருப்பம் உடைய; பிசைந்த=வடிவமைத்த; இமையா முக்கண்ணினர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நெற்றியில் இருக்கும் கண் எப்போதும் மூடியே இருக்கும்; மற்ற இரண்டு கண்கள் எப்போதும் திறந்தே காணப்படும். இமையாத கண்கள் இமைத்து நிலை மாறிய போது விபரீதங்கள் ஏற்பட்டதை நாம் புராணங்களிலிருந்து அறிகின்றோம்,. எப்போதும் மூடியிருக்கும் நெற்றிக் கண் திறந்ததால், மன்மதன் உடல் எரிந்ததை நாம் அனைவரும் அறிவோம்.சிவபிரானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்கள் என்று சொல்லப்படும். ஒருமுறை விளையாட்டாக, பார்வதி தேவி, சிவபிரானின் கண்களை மூட,அனைத்து உலகங்களும் இருளில் மூழ்கின, உலகில் மொத்த இயக்கமும் நின்று போனது. தனது தவற்றினை உணர்ந்த பார்வதி தேவி, உடனே சிவபிரானின் கண்களை மறைத்த தனது கைகளை எடுத்துவிட்டார். பார்வதி தேவி தனது கண்களை மறைத்திருந்த கணப்பொழுதில் ஏற்பட்ட உலகத்தின் இருளைப் போக்குவதற்காக தனது நெற்றிக் கண்ணை, சிவபிரான் திறந்ததாக அப்பர் பிரான் கூறுகின்றார்.. தனது தவறினுக்கு வருந்திய பார்வதி தேவி, திருப்பாம்புரம் தலத்திற்கு வந்து, அங்கே தவம் செய்து ஒரு சிவராத்திரி நாள் அன்று, இறைவனின் தரிசனம் கிடைக்கப் பெற்றார். இந்த தகவல் அப்பர் பிரானால்,தசபுராணப் பதிகத்தில் (4.14.8) கூறப்படுகின்றது.
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் படநாகக் கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு
இசைந்ததோர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால்வேதத்தர்
பிசைந்த திருநீற்றினர் பெண்ணோர் பாகம் பிரிவறியா பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே
திருமங்கலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.31.5) அப்பர் பிரான், பெருமானை, பின்னுவார்சடைப் பிஞ்ஞகன் என்று குறிப்பிடுகின்றார்.உன்னுதல்=மனத்தால் நினைத்தல்; உரைத்தல்=வாயினால் இறைவன் புகழ் உணர்த்தும் பாடல்களை பாடுதல்; துன்னுதல்=நெருங்குதல், இறைவனின்சன்னதியை நெருங்கி, சன்னதியை வலம் வந்து, நமது உடல் தரையில் படுமாறு கீழே விழுந்து வணங்குதல். இவ்வாறு மனம், வாக்கு, காயம் ஆகியமூன்றினால் செய்யப்படும் வழிபாடு இந்த பதிகத்தில் உணர்த்தப் படுகின்றது. அவ்வாறு வழிபடும் அடியார்கள் நன்னெறியாகிய சிவநெறியில் ஈடுபடுவார்கள்என்பதும் இங்கே கூறப்படுகின்றது.
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன் பெயர்
உன்னுவாரும் உரைக்க வல்லார்களும்
துன்னுவார் நன்னெறி தொடர்வு எய்தவே
திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.74.2) அப்பர் பிரான் பெருமானை செஞ்சடைப் பிஞ்ஞகன் என்று குறிப்பிடுகின்றார்.பிறங்கு=விளங்கும்; கறங்கு=சுழலும், ஓரிடத்தில் நில்லாமல் சுற்றித் திரியும்; சீர்=புகழ் பேணும்=விரும்பும்; தலத்து இறைவியின் திருநாமம் நறுங்குழல்நாயகி. அதனை சற்றே மாற்றி நறுங்குழல் மடவாள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணு சீர்க்
கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்
நறுங்குழல் மடவாளொடு நாள் தொறும்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் (5.97.7) அப்பர் பிரான் பெருமானை, பிறை சூடிய பிஞ்ஞகா என்று அழைக்கின்றார். இறைவனின் திருப்பாதங்களைதொழாத அடியார்களைப் பற்றும் தீயனவாகிய துன்பங்கள் தீயனவாகவே இருக்கும் என்று கூறுவதால், அடியார்களைப் பற்றும் தீயன நல்லவையாகமாறிவிடும் என்பது குறிப்பால் உணர்த்தப் படுகின்றது. மற்றவர்கள் போன்று ஓர் ஊரினைத் தனது ஊராகக் கொள்ளாது உலகனைத்தும் தனது ஊராகபெருமான் கொண்டுள்ள தன்மை ஊரிலாய் என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது. எண்ணற்ற பெயர்களை உடையவன் என்பதால் ஒரே பெயருடன்இல்லாதவன் என்று கூறுகின்றார். கார்=கருமை கண்டம்=கழுத்து.
ஊரிலாய் என்று ஒன்றாக உரைப்பதோர்
பேரிலாய் பிறை சூடிய பிஞ்ஞகா
காருலாம் கண்டனே உன் கழலடி
சேர்விலார்கட்கு தீயவை தீயவே
ஆரூர் அறநெறி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.29.5) அப்பர் பிரான், பெருமானை, பிஞ்ஞகன் என்று குறிப்பிடுகின்றார். பீடு=பெருமை;பிறநெறி=பிறக்கும் நெறி, பிறக்கும் வழி; உயிர்கள் தங்களது வினைகளை நீக்கிக் கொள்ளும் வாய்ப்பினை அளிக்கும் முகமாக, அந்தந்த உயிர்களின் வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப உடலையும் மெய்ப்பொருளை உணர்ந்து கொள்வதற்கு உதவியாக கருவி கரணங்களையும் பெருமான் அளிப்பது பிறக்கும் நெறி என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஓரி=நரி; ஓமம்=வேள்வி;
பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞகனுமாய்ப் பித்தனாய்ப் பத்தர் மனத்தினுள்ளே
உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில் ஓரிபல விட நட்டம் ஆடினானைத்
துறநெறியாய்த் தூபமாய்த் தோற்றமாகி நாற்றமாய் நன்மலர் மேல் உறையா நின்ற
அறநெறியை ஆரூரில் அம்மான் தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.31.5) அப்பர் பிரான் பெருமானை பிஞ்ஞகனே என்று அழைக்கின்றார். இழைத்தநாள்=ஒருவனுக்கு விதியால் முன்னமே தீர்மானிக்கப்பட்ட வாழ்நாள். அந்த நாள் என்னவென்று நமக்குத் தெரியாது; எனினும் அத்தகைய நாள் ஒன்று உண்டுஎன்பதை நாம் அனைவரும் அறிவோம். அரணம்=பாதுகாப்பு. அடியேன் உன் அரணம் கண்டாய் என்ற தொடரை. இறுதி அடியில் குற்றமில்லை என்றசொல்லின் முன்னர் சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். தான் உணர்ந்த உண்மையினை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆசானாக அப்பர்பிரான் திகழ்வதை, அவரே உணர்த்துவதை நாம் இங்கே காணலாம். நெஞ்சமே, உனக்கு குறிக்கப்பட்டுள்ள வாழ்நாள் முடிவதன் முன்னம், நீ பிறவிப் பெருங்கடலைத் தாண்டவேண்டும். அது எவ்வாறு இயலும் என்பதை நான் உனக்கு சொல்லிக் கொடுக்கின்றேன், கேட்பாயாக; இரவும் பகலும் எமது பெருமானைத்துதித்து, வாழ்த்தி, நான் செய்த எல்லாத் தவறுகளையும் பொறுத்து அருளும் பெருமானே என்றும், தலைமுடியை மிகவும் அழகாக பின்னியிருப்பவனேஎன்றும், நீலகண்டனே என்றும், சுருண்ட சடையை உடைய தலைவனே என்றும், ஆரூரில் உறையும் அழகனே என்றும் பலமுறை அழைத்து கூப்பிடவேண்டும்என்பதை தெரிந்து கொள். உனக்குப் பாதுகாவலாக இருக்கும் நான், நீ என்ன செய்யவேண்டும் என்பதனை உணர்த்திவிட்டேன். குற்றம் ஏதும் என்மேல் இனிஇல்லை. நீ மேற்சொன்னவாறு செயற்படாமல் இருந்தால் குற்றம் உன்னுடையது தான், இதனை உணர்ந்து உடனே செயலில் இறங்குவாயாக என்று அறிவுரை கூறும் பதிகம்.
இழைத்த நாள் எல்லை கடப்பதென்றால் இரவினோடு நண்பகலும் ஏத்தி வாழ்த்திப்
பிழைத்தது எல்லாம் பொறுத்தருள் செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும்
அழைத்தலறி அடியேன் உன்னரணம் கண்டாய் அணியாரூர் இடம்கொண்ட அழகா என்றும்
குழற்சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றமில்லை என் மேல் நான் கூறினேனே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.37.1) அப்பர் பிரான், பெருமானை, பிறை சூடும் பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார்.ஆரார்=பகைவர்கள்;அனலாடி=தீயில் கூத்து நிகழ்த்துபவன்; அனலாடி என்றும் ஆரமுதே என்றும் இங்கே முதலடியில் அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம்காணலாம். அனலும் அமுதமும் ஒன்றுக்கொன்று முரணான பொருட்கள். இவை இரண்டையும் ஒருங்கே வைத்து சொல்லி, பெருமான் அடியார்களுக்கும்மற்றவர்களுக்கும் வேறுவேறாக அருள் புரிவதை அப்பர் பிரான் உணர்த்துகின்றார். திரிபுரத்து அரக்கர்களுக்கு அனலாக விளங்கி அவர்களை அழித்தபெருமான், அதே திரிபுரத்து கோட்டைகளில் வாழ்ந்து வந்த சுதன்மன் சுசீலன் சுபுத்தி ஆகிய மூவருக்கும் அருள் புரிந்து காப்பற்றியமையும் உணர்த்தும்பொருட்டு அனலையும் ஆரமுதையும் அருகே வைத்து பாடினார் போலும். குறட்பூதம்=குள்ளமான பூதப் படைகள்; தெவிட்டாத ஆரமுதாக இறைவன் தனக்குஇருந்த நிலையை நினைத்து அப்பர் பிரான் உள்ளம் நெகிழ்ந்து பாடிய பாடல். உடல் முற்றிலும் பழுதடைந்து, கயிலை யாத்திரையினை மேற்கொண்டுதொடர முடியாத நிலையிலும், மனத் திண்மையுடன் தனது யாத்திரையை தான் தொடர்ந்த போது, கயிலை யாத்திரையை தொடர்ந்து மேற்கொள்வது கடினம்என்று உண்மை நிலையை உணர்த்தி, அதே சமயத்தில் தனது உடல் தளர்ச்சியை போக்கி, திருவையாற்றில் கயிலைக் காட்சி காண்பதற்கு அருள் செய்தபெருமானின் திறத்தினை நினைத்து ஆரா அமுதே என்று இறைவனை அப்பர் பிரான் அழைக்கின்றார்.
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனலாடி ஆரமுதே என்றேன் நானே
கூரார் மழுவாட் படை ஒன்றேந்திக் குறட்பூதப் படையாய் என்றேன் நானே
பேராயிரம் உடையாய் என்றேன் நானே பிறைசூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே
ஆரா அமுதே ஐயாறு அன்னே என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே
திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.63.4) அப்பர் பிரான், பெருமானை பிஞ்ஞகன் என்று குறிப்பிடுகின்றார். கார்-கருமை நிறம்;தார்=மாலை; பெருமானைத் தவிர ஞான வடிவமாக விளங்குபவர் வேறு ஒருவரும் இல்லை என்பதை உணர்த்தும் முகமாக, தானன்றி வேறொன்றும் இல்லா ஞானப் பேரான் என்று கூறுகின்றார். மணியார மார்பினன் என்று அப்பர் பிரான் கூறுவது திருவானைக்காவில் நடந்த பெருமானின் அருட்செயல் ஒன்றினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. உறையூரை தலைநகராக கொண்டு வந்த ஒரு சோழ மன்னன் (கோப்பெரு நற்கிள்ளி) ஒரு நாள் காவிரி நதியில் குளிக்கும் போது அவனது கழுத்தில் இருந்த விலையுயர்ந்த முத்துச்சரம் கழன்று நதியில் விழுந்து விட்டது. எவ்வளவு தேடியும் முத்து மாலை கிடைக்கவில்லை. முத்து மாலையை காணாமல் தவித்த மன்னன், சிவபிரானை அந்த முத்து மாலையை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். அன்று சிவபிரானை நீராட்ட காவிரி நதியிலிருந்து நீர் கொண்டுவந்த போது அந்த நீருடன் கலந்து வந்த முத்துச் சரம், இறைவனின் நீராடல் போது இறைவனின் மேல் விழுந்தது. மார்பினில் ஆரம் உடையவன் என்று இந்த நிகழ்ச்சியை சம்பந்தர் ‘வானைக்கவில் வெண் மதி மல்கு புல்குவார் சடை’ எனத் தொடங்கும் பதிகத்தின் (3.53) ஒரு பாடலில் நினைவு கூறுகின்கிறார். சுந்தரர் தனது பதிகத்தில் (7.75) இந்த நிகழ்ச்சியை முழுதுமாக வர்ணிப்பதை காணலாம்.திரிபுரத்து அரக்கர்களுடன் சிவபெருமான் போருக்குச் சென்றபோது அவருக்கு உதவும் பொருட்டு, பல தேவர்கள் முன்வந்தனர், எட்டு திசைகள் தூண்களாகவும், பூமி தேர்த் தட்டாகவும், ஆகாயம் தேரின் கூரையாகவும், சூரியன் சந்திரன் தேரின் சக்கரங்களாகவும் கொண்ட தேரினை விஸ்வகர்மா உருவாக்கினார். வேதங்கள் குதிரைகளாக நிற்க, பிரமன் சாரதியாக மாறினான். மேருமலை வில்லாகவும், வாசுகி பாம்பு நாணாகவும், திருமால் அம்பின் தண்டாகவும், அக்னி அம்பின் முனையாகவும், வாயு அம்பின் இறக்கைகளாகவும், பங்கு கொள்ள, பல தேவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கு கொண்டனர்.இவ்வாறு வேதங்கள் குதிரைகளாக நின்ற தன்மையை, தெய்வ நான்மறைகள் பூண்ட தேர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
காராரும் கறை மிடற்று பெருமான் தன்னைக் காதில் வெண்குழையானைக் கமழ் பூங்கொன்றைத்
தாரானைப் புலியதளின் ஆடையானைத் தானன்றி வேறொன்றும் இல்லா ஞானப்
பேரானை மணியார மார்பினானைப் பிஞ்ஞகனைத் தெய்வ நான்மறைகள் பூண்ட
தேரானைத் திருவானைக்கா உளானை செழுநீர் திரளைச் சென்று ஆடினேனே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.64.8) அப்பர் பிரான், பெருமானை பிஞ்ஞகனாம் வேடத்தான் என்று குறிப்பிடுகின்றார்.வன்கூற்று=கொடிய கூற்றுவன்; பிணையல்= சடையுடன் பிணைந்த; உரு=இடி; வன்கூற்றை என்ற சொல்லை முடித்தவன் என்ற சொல்லுடன் கூட்டி பொருள்கொள்ள வேண்டும். சாபம்=வில்; வில்லை பிடித்தவன் என்று கூறுவதன் மூலம், வில்லினை பயன்படுத்தாமல் மூன்று கோட்டைகளையும் பெருமான் அழித்தார்என்ற செய்தி உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு அம்பினையும் வில்லையும் பயன்படுத்தாமல் பெருமான் சிரித்தே மூன்று கோட்டைகளையும் எரித்தார் என்றசெய்தி சில புராணங்களில் காணப் படுகின்றது.
முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் வலியார் தம் புரம் மூன்றும் வேவச்சாபம்
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத்தான்காண் பிணையல் வெறிகமழ் கொன்றை அரவு சென்னி
முடித்தவன் காண் மூவிலை நல்வேலினான் காண் முழங்கி உருமெனத் தோன்றும் மழையாய் மின்னி
இடித்தவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய மற்றொரு திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.65.5) அப்பர் பிரான் பெருமானை பிஞ்ஞகன் என்று குறிப்பிடுகின்றார். வாதை=துன்பம்; பேதை=ஏதும் அறியாத அறிவிலி; காஞ்சி நகரில் அம்பிகை தவம் செய்ததை உணர்த்தும் பொருட்டு அருந்தவன் செய்தஆயிழையாள் என்று கூறுகின்றார். இன்றும் காஞ்சி காமகோட்டத்தில் அம்பிகை தவம் செய்வதாக கருதப் படுகின்றது. பேதையேன் வாதையுறு பிணியைத்தீர்க்கும் மருந்தவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் என்ற தொடர், அப்பர் பிரானின் வாழ்க்கையை குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். தருமசேனராக,சமண சமயத்து குருவாக வாழ்ந்து வந்த காலத்தில், அவர் சூலை நோய் வாய்ப்பட்டு துன்பம் அடைந்ததை நாம் அனைவரும் அறிவோம். அப்போதுஉடனிருந்த சமண குருமார்கள் தங்களுக்கு தெரிந்த மந்திரங்கள் தந்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, தருமசேனரது நோயினை தீர்க்க கடுமையாகமுயற்சி செய்தனர். ஆனால் அந்த சிகிச்சைகள் ஏதும் பயனளிக்காத நிலையில், திருவதிகைப் பெருமானை அணுகிய போது அவரது நோய் தீர்ந்தது. எனவேமருந்தாகவும் மந்திரங்களாகவும் செயல்பட்டு, தீர்க்க முடியாதது என்று கருதப்பட்ட சொல்லை நோயினை நீக்கியவன் சிவபெருமான் என்று நினைவுகூர்கின்றார் என்றும் கூறுவதும் பொருத்தமே.
பெருந்தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறைசூடி காண் பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண் மந்திரங்கள் ஆயினான்காண் வானவர்கள் தாம்வணங்கும் மாதேவன் காண்
அருந்தவன் காண் ஆயிழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த
இருந்தவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே
திருப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.76.9) அப்பர் பிரான் பெருமானை, பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். பற்றவன்=அனைத்து உயிர்களுக்கும் பற்றாக இருப்பவன். அனைத்து உயிர்களுக்கும் பற்றாக இருப்பதால் நாம் அவனது திருவடிகளைப் பற்றவேண்டும் என்பதால், நாம் பற்ற வேண்டியவன் என்று உணர்த்துவதாகவும் பொருள் கொள்வதும் பொருத்தமே.; கொற்றம்=வெற்றி; கோள்=கொள்கை; பராபரன்=உயர்ந்தவர்களுக்கும் உயர்ந்தவன்;
பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன் தன் வேள்வி செற்ற
கொற்றவன் காண் கொடும் சினத்தை அடங்கக் செற்று ஞானத்தை மேன்மிகுத்தல் கோளாக் கொண்ட
பெற்றியன்காண் பிறங்கருவிக் கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன்காண் பேரெழிலார் காமவேளைச்
செற்றவன்காண் சீர் மருவு திருப்புத்தூரில் திருத்தளியான்காண் அவனென் சிந்தையானே
திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.80.4) அப்பர் பிரான், பெருமானை, பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார்.உற்றவன்=உறவானவன்; அனைத்து உயிர்களுக்கும் உறவாக இறைவன் நிற்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பிறவி தோறும் உயிர்களுக்குதொடர்ந்து இறைவன் உற்றவனாக இருப்பதால் தான், இறைவனைத் தவிர நமக்கு நிலையான உறவினன் வேறு எவரும் இல்லை என்று அருளாளர்கள்கூறுகின்றனர். நமக்கு ஆவடுதுறை மீது சுந்தரர் அருளிய பதிகம் நினைவுக்கு வருகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், தனக்குஅமரர்களின் தலைவனாகிய இறைவனைத் தவிர வேறு எவரும் உறவல்ல என்று கூறுகின்றார். மேலும் இறைவன் ஒருவனே தனக்கு உறவு என்பதால் அவர்தனக்கு அஞ்சேல் என்று சொல்லி அருள் புரிய வேண்டும் என்றும் சொல்கின்றார். அனைத்து உயிர்களுக்கும் சிறந்த உறவாக திகழ்பவனும், அனைத்துஉடல்களிலும் உயிராக நிறைந்து நிற்பவனும், ஓங்காரத்தின் முழுப் பொருளாக இருப்பவனும், உமை அம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாகபெற்றவனும், அழகான தலைக் கோலத்தை உடையவனும், பிறவாமல் தோன்றியவனும், பெரியதும் அரியதும் ஆகிய அனைத்துப் பொருட்களையும்ஏனையோர் கற்பதற்கு முன்னமே கற்றவனும், கற்கப்படும் பொருள்கள் அனைத்துமாக இருப்பவனும், கச்சி ஏகம்பம் தலத்தில் வீற்றிருப்பவனும், சிறுவன்மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர வந்த காலன் கீழே விழுந்து மடியுமாறு கோபத்துடன் உதைத்தவனும், தூண்டப்படும் பொருள் ஏதுமின்றி தானேஒளியாக திகழ்பவனும், திருமாற்பேறு தலத்தில் உறைபவனும். சிவந்த பவளக் குன்று போன்ற திருமேனியை உடையவனும் ஆகிய இறைவனை அடியேன்திருமாற்பேறு தலம் சென்றடைந்து கண்டு களித்தேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
உற்றானை உடல் தனக்கு ஓர் உயிரானானை ஓங்காரத்து ஒருவனை உமையோர் பாகம்
பெற்றானைப் பிஞ்ஞகனைப் பிறவாதானைப் பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே
கற்றானைக் கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனைக் காலன் வீழச்
செற்றானைத் திகழொளியைத் திருமாற்பேற்று எம் செம்பவளக் குன்றினைச் சென்று அடைந்தேன் நானே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.38.7) சுந்தரர், பெருமானின் கருமை நிறத்து கறை படிந்த கழுத்தினையும் எட்டு தோள்களையும் பிஞ்ஞகன் ஆகிய கோலத்தையும் குறிப்பிடுகின்றார். திருவதிகை அருகே உள்ள சித்தவடம் மடத்தில் ஒரு இரவுப் பொழுதினில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்த சுந்தரரின் அருகில் வந்து படுத்த ஒரு முதியவரின் கால் சுந்தரரின் தலை மற்றும் முகத்தின் மீது படுகின்றது. அதனால் உறக்கம் கலைந்த சுந்தரர், தன்னருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த முதியவரைக் கண்ட பின்னர், முதியவரின் உடல் தளர்ச்சியால் ஏற்பட்ட நிகழ்ச்சி என்று கருதி, தனது நிலையினை மாற்றி, முதியவரின் தலையின் அருகே தனது தலையும் இருக்கும் வண்ணம் படுக்கின்றார். ஆனால், சிறிது நேரம் கழித்து விழித்தெழுந்த முதியவர், தனது நிலையினை மாற்றிக் கொண்டு படுக்கவே மீண்டும் முதியவரின் கால் சுந்தரரின் முகத்தின் மீது படுகின்றது. இரண்டாவது முறையாக தனது உறக்கம் கலையவே, விழித்தெழுந்த சுந்தரர் முதியவரைப் பார்த்து கோபமும் இகழ்ச்சியும் கலந்து தோன்ற, யார் நீ என்று கேட்கின்றார்.என்னைத் தெரியவில்லையா என்று கேட்டவாறு முதியவர் மறையவே, வந்தவர் பெருமான் தான் என்பதை சுந்தரர் உணர்கின்றார். பெருமானின் திருவடிகள் தனது தலை மீது பதியவேண்டும் என்று பலநாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த தான், தன்னருகே வந்து படுத்துக்கொண்ட பெருமானை அறியாமல் இருந்ததும் அல்லாமல் அவரை மிகவும் இகழ்வாக தான் நினைத்தது பெரிய தவறு என்பதை உணர்த்தும் முகமாக, பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இனியும் பெருமானை சிறிதும் இகழமாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். இந்த பாடலில், வினைக் கடலில் தடுமாறும் உயிர்களுக்கு அருள் புரிந்து வீடுபேறு அளிக்கும் வல்லமை உடையவர் சிவபெருமான் என்று சுந்தரர் கூறுகின்றார்.
வெய்தாய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்குமிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறுஆக்கம்
பெய்தானைப் பிஞ்ஞகனை மைஞ்ஞவிலும் கண்டத்து எண்தோள் எம் பெருமானைப் பெண்பாகம் ஒரு பால்
செய்தானைச் செக்கர்வான் ஒளியானைத்தீவாய் அரவாடுசடையானைத் திரிபுரங்கள்வேவ
எய்தானை எறிகெடில வடவீரட்டானத்துறைவானை இறைபோதும் இகழ்வன் போலியானே
ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.45.7) சுந்தரர் பெருமானை பிஞ்ஞகன் என்று குறிப்பிடுகின்றார். எண்ணவன்=கருத்தாக உடையவன்; அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால், பெருமானின் திருவுருவத்தை நாம் காணமுடியாது என்ற அப்பர் பிரானின் வாய்மொழி உணர்த்துவது போன்று, இந்த பாடலில் சுந்தரர், பெருமான் பால் மிகுந்த அன்பு கொண்டு அவனைக் காண விரும்பும் அடியார்களுக்கு கண்ணாக இருந்து பெருமான் செயல்படுவான் என்று கூறுகின்றார். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணவன்=பிறந்ததன் பயனை அடைவதற்காக் உயிர்கள் நெருங்கிச் சென்று அடைந்து, பயன் பெறுவதற்கு தகுதியாக விளங்குபவன்;
எண்ணவன் எண்ணவன் ஏழுலகத்துயிர் தங்கட்குக்
கண்ணவன் கண்ணவன் காண்டும் என்பார் தங்கட்குப்
பெண்ணவன் பெண்ணவன் மேனியோர் பாகமாம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத்தூர் எம் அடிகளே
நமச்சிவாயப் பதிகத்தின் பாடலில் (7.48.10) சுந்தரர் பெருமானை பிஞ்ஞகன் என்று குறிப்பிடுகின்றார். கோணிய=வளைந்த; பாம்பரை நாணன்=பாம்பினைத் தனது இடுப்பினில் அரை ஞாணாக கட்டியவன்; பண் என்ற சொல் பாண் என நீண்டது. தார்=மாலை; தாரன்=மாலையை அணிந்தவன்; வளைந்த ஒற்றைப் பிறைச் சந்திரனை, தனது சடையில் சூட்டிக்கொண்டவனும், கறையூர் தலத்தில் உள்ள பாண்டிக்கொடுமுடி திருக்கோயிலை விருப்பத்துடன் தனது இருப்பிடமாக ஏற்றுக் கொண்டவனும், அழகிய தலைகோலம் உடையவனும், தனது அடியார்களுக்கு எல்லையற்ற கருணையுடன் அருள் புரிபவனும்,பிறப்பின்றி தானே சுயம்புவாக தோன்றியவனும், இசைத்த வண்ணம் உலாவுவதும் உடலில் வரிகளை உடையதும் ஆகிய வண்டுகள் மொய்த்து ஒலிக்கும் கொன்றை மலர்மாலையை அணிந்தவனும், படம் எடுத்து ஆடும் பாம்பினைத் தனது இடுப்பினில் அரைஞாணாக இறுகக் கட்டியவனும் ஆகிய பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
கோணிய பிறை சூடியைக் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பில்லியை
பாணுலா வரிக் கொன்றைத் தாரனைப் படப் பாம்பரை
நாணனைத் தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே
திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.81.9) சுந்தரர், பெருமானை பின்சடைப் பிஞ்ஞகன் என்று குறிப்பிடுகின்றார்.வேய்=மூங்கில்; மழைகள்=மழை பொழியும் கருத்த மேகங்கள்; குழகன்=அழகும் இளமையும் ஒருங்கே உடையவன்: கலித்து=முழங்க; கழை=மூங்கில்;
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் தான் உறையும் இடம்
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை
கழைகொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே
திருவாசகம் திருவம்மானை பதிகத்தின் பாடலில் (8.8.19) மணிவாசக அடிகளார் பெருமானை பிஞ்ஞகன் என்று குறிப்பிடுகின்றார். முற்றுமாய்=அனைத்துப் பொருள்கட்கும்; முற்றுக்கும் என்ற சொல்லை, மூவர்க்கும் மற்றும் முற்றுமாய் என்ற இரண்டு சொற்களுக்கும் இணைத்துப் பொருள் காணவேண்டும். பிரமன் மால் உருத்திரன் என்ற ஆதி தேவர்களும் சர்வ சங்கார காலத்தில், மற்ற உயிர்களைப் போன்று பெருமானிடத்தில் ஒடுங்குவர் என்பதால், அவர்களுக்கும் அப்பாற்பட்டு நிற்பவன் பெருமான் என்று பொருள் கொள்ளவேண்டும். வானவன்=உயர்ந்தவன்; என்னான்= என்னவன், அன்பின் மிகுதியால் பெருமான் தனக்கு சொந்தம் என்று கூறுதல் அடியார்களின் பழக்கம். எனக்கு ஆனை போன்றவன் என்று பொருள் கொண்டு, ஆனை, சங்கிலியை பாகனின் கைகளில் எடுத்துக் கொடுத்து அந்த பாகனால் கட்டுண்டு நிற்பது போன்று, அன்பு என்ற சங்கிலியை அடியார்களின் கையில் கொடுத்து, அவர்களது பக்தி வலையில் படுவோனாக இறைவன் இருக்கும் தன்மையை உணர்த்துகின்றது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனை
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கக்கு இன்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதும் காண் அம்மானாய்
திருவாசகம் செத்திலாப் பத்து பதிகத்தின் பாடலில் (8.23.7) மணிவாசக அடிகளார் பிறைகுலாம் சடைப் பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார்.மறிகடல்-அலைகள் மடங்கி வரும் கடல்; தான் விடத்தை உட்கொண்டதால் ஏனையோர் விடத்தின் தாக்கத்தால் இறவாமல் காத்தது பொருட்டு அமுதமே என்று அழைக்கின்றார். தனது குறைபாடுகளை தானே முன்வந்து உணர்த்தும் அடிகளார். அந்த குறைகளை பொருட்படுத்தாமல், தன்னை அலறவிடாமல்,முக்திநெறியை காட்டுமாறு வேண்டுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஆறு பாடல்களில் தான் சாக வேண்டும் என்றும் சாவதற்கு ஒரு வழி காட்டாய் என்று புலம்பிய மணிவாசக அடிகளார், இந்த பாடலில் தனது அத்தகைய விருப்பத்திற்கான காரணத்தை கூறுகின்றார். மானிடப் பிறப்பின் நோக்கமே, மனம் மொழி மெய்களால் இறைவனைப் பணீந்து வணங்கி வாழ்வினில் உய்வினை அடைதல். அத்தகைய செயலைச் செய்யாதவன் என்று தன்னை அடிகளார் சொல்லிக் கொள்கின்றார். இருபத்து நான்கு மணி நேரமும் மெய்யடியார்களின் மனம் மொழி மெய் ஆகியவை இறைவனிடம் தோய்ந்து இருப்பினும்,அவ்வாறு இல்லை என்று அடக்கமாக சொல்லிக் கொள்வது தலை சிறந்த அடியார்களின் இலக்கணம். அடிகளாரும் அவ்வாறு இருப்பதை நாம் காண்கின்றோம். நமச்சிவாய என்று நினைக்காது இருந்ததாக சொல்கின்றார். அவனது திருநாமத்தை நினைப்பது முதற்படி, அந்த திருநாமத்தை சொல்வது இரண்டாவது படி; பெருமானை நினைக்காது இருந்தமையால், அவனது திருநாமத்தை சொல்லவும் இல்லை என்று உணர்த்துகின்றார். பெருமானின் திருவடிகளை பணியாதவன் என்று குறிப்பிட்டு, மனம் மொழி மெய்களால் இறைவனை தான் வணங்காதிருந்த தன்மையை இங்கே குறிப்பிடுகின்றார். மனம் மொழி மெய்களால் இறைவ்னை நினைக்காது இருப்போர், மனிதர் அல்ல, பேய் என்பதை உணர்த்த, தன்னையே பேயன் என்று இழிவாக சொல்லிக் கொள்கின்றார். பெருமான் தன்னை ஆட்கொண்டு, இறப்பினை நிகழ்வித்து தன்னுடன் சேர்த்துக் கொள்ளாத காரணத்தால், பெருமான் தனக்கு சேயானாகி விட்டார் என்று கூறுகின்றார். சேயன்=தொலைவில் உள்ளவன்; பெருமான் சேயனாக நின்றாதால் தான் பல இடங்களிலும் அலைந்து திரிந்து பெருமானின் அருள் எப்போது கிடைக்கும் என அலறுவதாக குறிப்பிட்டு, திருப்பெருந்துறையில் பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட உயிர் இவ்வாறு தவிப்பது,பெருமானுக்கு அழகு தரும் செயல் அல்ல என்றும் கூறுகின்றார்.
மாயனே மறிகடல் விடம் உண்ட வானவா மணிகண்டத்து எம் அமுதே
நாயினேன் உன்னை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன்னடி பணியாப்
பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய் பிறை குலாம் சடைப் பிஞ்ஞகனேயோ
சேயன் ஆகி நின்று அலறுவது அழகோ திருபெருந்துறை மேவிய சிவனே
திருவாசகம் பிடித்த பத்து பதிகத்தின் பாடலில் (8.37.6) மணிவாசக அடிகளார் பெருமானை பிஞ்ஞகன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் அடிகளார்,தனது மனதினை கோயிலா ஆண்டுகொண்டு ஆனந்தம் அருளிய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அறவையேன்= ஆதரவற்றவன்; உற்றாரும் நண்பர்களும் தனக்கு உற்ற துணையாகார் என்பதை உணர்ந்த அடிகளார், தான் பெருமானைத் தவிர்த்து வேறு எந்த ஆதரவும் இல்லாதவன் என்று குறிப்பிடுகின்றார்.பிஞ்ஞகன்=அழகிய தலைக்கோலம் உடையவன்; திறவு=திறந்த வெளி, திறப்பு;; இறவு=இறுதிக் காலம்; தனது உள்ளத்தில் பெருமான் இருந்து கொண்டு,சிவானந்தம் அளித்தமையால், தன்னை வினைகள் ஏதும் சூழாது என்பதை உணர்ந்த அடிகளார், வினைகளற்ற தன்மை உடையவனாக தான் மாற்றப்பட்டதால், தனது பிறவி வேரினை பெருமான் அறுத்தெறிந்து விட்டார் என்று கூறுகின்றார். பெருமானின் கருணையால் தான் உய்வினை அடைந்தது மட்டுமன்றி, தனது குடி முழுவதும் உய்வினை அடைந்ததாக கூறுகின்றார்.
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்தம் அருளிப்
பிறவி வேர் அறுத்து என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா பெரிய எம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே
பொழிப்புரை:
வெண்மை நிறம் உடைய திருநீறு பூசப்பட்ட மார்பினை உடையவனும், கோடுகளை தனது உடலில் கொண்டுள்ள பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் தரித்தவனும், உமை அன்னையைத் தனது உடலில் விரும்பி ஏற்றுக்கொண்டவனும், ஊழித்தீயினில் பொருந்தி நடனம் ஆடுபவனும், அழகிய தலைக்கோலம் உடையவனும் ஆகிய பெருமான், நிலையாக பொருந்தி உறைகின்ற இடம் கச்சி ஏகம்பமாகும். விண்ணளாவிய நெடிது உயர்ந்த மாட வீடுகள் விளங்கும் கச்சி மாநகரினில், செழித்து வளர்ந்து நிலையாக காணப்படும் சோலைகளால் சூழப்பட்டு விளங்கும் ஏகம்பம் திருக்கோயில் சென்றடைந்து பெருமானைப் பணிந்து வணங்க நமது இடர்கள் முற்றிலும் கெட்டுவிடும்.
பாடல் 4:
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண்ணீறு அணிந்து
காலன் மாள்வுறக் காலால் காய்ந்த கடவுள் கருதுமிடம்
மாலை வெண்மதி தோயும் மாமதில் கச்சி நகருள்
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் ஏத்த இடர்கெடுமே
விளக்கம்:
இந்த பாடலில் தோலும் நூலும் துதைந்த வரை மார்பர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது சற்று சிந்திக்கத்தக்கது. தற்காலத்தில் அந்தணச் சிறுவர்களுக்கு உபநயனச் சடங்கு நடைபெறும் போது, முப்புரி நூலுடன் (மூன்று இழைகள் கொண்ட நூல்) ஒரு சிறுதுண்டு மான் தோலையும் இணைத்துக் கட்டுவதை காண்கின்றோம். சில சிறுவர்களுக்கு ஒவ்வொரு வருடம் ஆவணி அவிட்டத்தின் போதும், புதியதாக அணிவிக்கப்படும் முப்புரி நூலுடன் சிறுதுண்டு மான் தோலையும் இணைப்பதும் வழக்கம். திருஞானசம்பந்தரின் வாழ்க்கையில், உபநயனச் சடங்கினில், இந்த பழக்கம் பின்பற்றப் பட்டதை நாம் அறிகின்றோம்.
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும் திருத்தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மலகுதிருப்பதிகங்கள் பலவும் பாடி மனமகிழ்ந்து போற்றிசைத்து வைகு நாளில்
ஒல்லைமுறை உபநயனப் பருவமெய்த உலகிறந்த சிவஞானம் உணரப் பெற்றார்
தொல்லைமறை விதிச்சடங்கு மறையோர் செய்யத் தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற
தோலும் நூலும் அணீந்த மார்பினனாக பெருமானை மூவர் பெருமானார்கள் தங்களது பாடல்களில் சித்தரித்துள்ளனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். திருமருகல் மற்றும் செங்காட்டங்குடி ஆகிய இரண்டு தலங்களை இணைத்து அருளிய பதிகத்தின் பாடலில் (1.6.3)திருஞானசம்பந்தர் தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர் என்று குறிப்பிடுகின்றார். தோலொடு=இடுப்பினில் புலித்தோல் ஆடையுடன்; மார்பு என்ற சொல்லுடன் இணைந்த தோல் என்று பொருள் கொண்டு யானைத்தோல் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நூலிழையுடன் சேர்ந்த தோல் என்று பொருள் கொண்டு மான் தோல் எனவும் பொருள் கொள்ளலாம். சிறிய மான் தோல் துண்டத்தை பூணூலுடன் இணைத்துக் கொள்வது பண்டைய நாளில் பழக்கமாக இருந்தது போலும். மால் புகை=பெருமை வாய்ந்த புகை மற்றும் கரிய புகை என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். அந்தணர்கள் செய்கின்ற வேள்வியிலிருந்து எழுப்பப்படும் ஆகுதி மேக மண்டலத்தைச் சென்றடைந்து மேகங்களை குளிர்வித்து மழை பொழியச் செய்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகின்றது. வேள்வி நற்பயன் வீழ்புனலாவது என்று சேக்கிழார், பெரிய புராணத்தில், வாழ்க அந்தணர் என்ற பதிகத்தினுக்கு விளக்கம் அளிக்கையில் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. எனவே வேள்விப்புகை பெருமை வாய்ந்ததாக கருதப்பட்டது போலும். சேல்=மீன்களில் ஒருவகை. தண்வயல்=நீர்வளம் நிறைந்து குளிர்ந்த வயல்; பைங்கழல்=பசும் பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல்; ஆர்க்க=ஒலிக்க; இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானை மைந்தன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மைந்தன் என்றால் வல்லமை வாய்ந்தவன் என்று பொருள்.பல வீரச் செயல்கள் புரிந்து தனது அடியார்களை பெருமான் அருள் புரிந்ததை நாம் பல்வேறு புராணங்களிலிருந்தும் அருளாளர்கள் அருளிய பாடல்களிலிருந்தும் அறிகின்றோம். பண்டைய நாள் தொட்டு தொடர்ந்து பெருமான் புரிந்து கொண்டிருக்கும் செயல் தனது அடியார்களின் மலங்களை போக்குவது தான். பதி பசு பாசம் அனாதி என்று திருமூலர் உணர்த்துவது போன்று பாசம் என்று குறிப்பிடப்படும் ஆணவ மலமும் என்றும் அழியாதது.செம்பினில் களிம்பு போன்று நெல்லுக்கு உமி போன்று உயிர்களுடன் ஒட்டி இருப்பது ஆணவ மலம். தான் இருப்பதையும் வெளிக்காட்டாது உயிர்களுடன் பிணைந்து இருக்கின்றது. ஆணவ மலத்தினை விலக்கிக் கொள்ள முடியாதது போன்று ஆணவ மலத்தால் விளைகின்ற வினைகளையும் உயிர்களால் தாமே நீக்கிக் கொள்ள முடியாது. தன்னுடன் பிணைந்துள்ள வினைகளை, உயிர்கள், அந்த வினைகளால் ஏற்படும் இன்ப துன்பங்களை நுக்ர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும். அத்தகைய வலிமையுடன் வினைகள் உயிர்களுடன் பிணைந்து இருப்பதால் தான், வலிய வினைகள் என்றும் வல்வினைக்ள் என்றும் கூறுகின்றனர். ஆனால் இத்தகைய வலிமை வாய்ந்த வினைகளையும் நீக்கும் வல்லமை வாய்ந்தவன் பெருமான் ஒருவன் தான், என்பதால் தான் மைந்தன் என்று பாடல் தோறும் உணர்த்துகின்றார். இத்தகைய மைந்தனின் உதவியுடன் நாம் நமது வினைகளை தீர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் இறைவனை நாம் நாள்தோறும் வணங்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும் வண்ணம் ஒவ்வொரு பாடலிலும் மைந்தன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் போலும்.
தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர் தொகுமறையோர்கள் வளர்த்த செந்தீ
மால்புகை போய் விம்மு மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலை சூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
கால் புல்கு பைங்கழல் ஆர்க்க ஆடும் ஏந்தி ஆடும் கணபதீயீச்சரம் காமுறவே
சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.28.2) திருஞானசம்பந்தர் பெருமானை தோலும் நூலும் துதைந்த வரை மார்பர் என்று குறிப்பிடுகின்றார். மால்=மயக்கம், பிரமிப்பு என்றும் பொருள் கொள்ளலாம். செழிந்து ஓங்கி வளர்ந்துள்ள நிலை நமக்கு வியப்பினை அளிக்கும் என்றும்,கிளைகள் நெருங்கி வளர்ந்துள்ள நிலை, சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் உள்ளே புகுவதைத் தடுத்து இருண்டு கிடக்கும் நிலை மயக்கத்தை உண்டாக்குகின்றது என்று இருவகையாக பொருள் கொள்ளலாம். பயின்று=தொடர்ந்து, இடைவிடாமல். துதைந்த=பொருந்திய; ஆலும்=ஒலிக்கும்; பால் தயிர் மற்றும் நெய் ஆகியவற்றால் தொடர்ந்து நீராட்டப்படும் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு, பால் நெய் தயிர் கோமியம் சாணம் ஆகியவை கொண்டு, உரிய முறையில் கலந்து, பஞ்சகவ்யம் தயாரித்து இறைவனை நீராட்டுவார்கள். அதை தவிர்த்து, பால் தயிர் நெய் ஆகியவற்றை கொண்டு தனித்தனியாகவும் இறைவனை நீராட்டுவது பழக்கம். இந்த இரண்டாவது தன்மை இங்கே சொல்லப் படுகின்றது என்று கூறலாம். பஞ்சக்கவ்யம் எனப்படும் கலவையின் மூன்று பொருட்கள் சொல்லப் பட்டமையால், எஞ்சிய இரண்டும் குறிப்பால் உணர்த்தப்பட்டு பஞ்சகவ்யத்தால் இறைவன் நீராட்டப்படுவதை உணர்த்துகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம்.
பாலும் நெய்யும் தயிரும் பயின்றாடித்
தோலும் நூலும் துதைந்த வரை மார்பர்
மாலும் சோலை புடை சூழ் மட மஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே
சீர்காழி தலத்தின் மீது அருளீய பதிகத்தின் பாடலில் (1.81.9) திருஞானசம்பந்தர் பெருமானை தோலும் புரிநூலும் துதைந்த வரை மார்பன் என்று குறிப்பிடுகின்றார். காழி நகரத்து மக்கள் இரந்தோர்க்கு, இன்று மாலை வா என்றோ நாளை வா என்றோ வேறொரு நாள் அல்லது காலத்தில் வா என்றோ சொல்லாதவர்கள் என்பதை காலம் பகராதார் என்று சிறப்பித்து சொல்கின்றார். ஏலும்=பொருந்தி உறைதல்:
மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் நூலும் துதைந்த வரை மார்பன்
ஏலும் பதி போலும் இரந்தோர்க்கு எந்நாளும்
காலம் பகராதார் காழிந் நகர் தானே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.120.1) பெருமானின் மார்பினை, தோலொடு நூல் துதை மார்பு என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் பெருமானின் மார்பினில் இணைந்துள்ள பொருட்கள் சொல்லப் படுகின்றன. பாம்பு, ஆமையோடு, முப்புரி நூல், முப்புரி நூலுடன் இணைந்த மான் தோல் ஆகியவை கூறப்பட்டுள்ளன. துணிந்தவன்=முடிவு செய்தவன்; பணிந்தவர்=பெருமானின் உயர்வினையும் தமது தாழ்மையான தன்மையையும் புரிந்து கொண்டவர்களாக, தாழ்ந்த நிலையில் நின்று பெருமானை வணங்கும் அடியார்கள்; அருவினை=நுகர்ந்து கழிப்பதைத் தவிர்த்து வேறு வகையில் எவராலும் நீக்க முடியாத அரிய வினைகள்; அந்தண்=அழகும் குளிர்ச்சியும் உடைய;
பணீந்தவர் அருவினை பற்று அறுத்து அருள் செயத்
துணிந்தவன் தோலொடு நூல் துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழில் ஆமை கொண்டு
அணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.89.2) திருஞானசம்பந்தர், பெருமானை, தோலொடு நூல்சேர் மார்பினர் என்று குறிப்பிடுகின்றார். கேள்வி=கேள்வி ஞானத்தால் கற்றுக்கொள்ளப் பட்ட வேதங்கள்; பூத கணத்தர் என்ற சொல் எதுகை கருதி பூத கண்ணத்தர் என்று விரிந்தது, பூத கணங்களை உடைய பெருமானார். துன்னிய=நெருங்கிய, அடர்ந்த; எண்ணிக்கையற்ற பூத கணங்கள் என்று உணர்த்துகின்றார். அறாத=தொடர்ந்து, இடையறாது, இடைவிடாது; சுண்ணம்=திருநீற்றுப் பொடி; கங்குல்=இரவு நேரம், பிரளய காலத்து இருள் நிறைந்த காலம்; மாலெரி=பெருமை வாய்ந்த வேள்விகள்; வண்ணத்த= தன்மை உடைய:
சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக்
கண்ணத்தர் வெங்கனல் ஏந்திக் கங்குல் நின்று ஆடுவர் கேடில்
எண்ணத்தர் கேள்வி நல்வேள்வி அறாதவர் மாலெரி ஓம்பும்
வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே
கடிக்குளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.104.1) திருஞானசம்பந்தர், குரைகழல் சிலம்பார்க்க நிற்பவர் என்றும் நூலினர் தோலினர் என்றும் சிவபெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் புலியுரி அதளாடை என்று தனியாக குறிப்பிடப்பட்டிருப்பதால், தோலினர் என்ற குறிப்பு, முப்புரி நூலில் சேர்க்கப்பட்ட மான் தோல் துண்டையே குறிக்கும் என்பது தெளிவாக நமக்கு புரிகின்றது. இந்த தலத்து இறைவனின் திருநாமம், கற்பகநாதர் என்பது,கற்பகம் என்று இந்த பதிகத்து பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. முன்வினை=பழைய பல பிறவிகளில் ஈட்டப்பட்ட வினைகள்; பழைய பல பிறவிகளில் நாம் சேர்த்துக் கொண்ட வினைகள் தாமே, நாம் இனி எடுக்கவிருக்கும் எண்ணற்ற பிறவிகளுக்கு காரணமாக இருந்து நம்மைத் தொடர்ந்து வருகின்றன.கடிக்குளத்து கற்பகத்தை தலை சாய்த்து வணங்கும் அடியார்களை இந்த வினைகள் மூடாது, அதாவது தொடராது என்று கூறுகின்றார். வினைகள் நம்மைத் தொடராது நம்மை விட்டு அகன்றுவிட்டால், நாம் வினைகள் அற்றவர்களாக மாறி, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்றோம் அல்லவா.
பொடிகொள் மேனி வெண்ணூலினர் தோலினர் புலியுரி அதளாடை
கொடிகொள் ஏற்றினர் மணி கிணின் என வரு குரை கழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தைத் தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.15.3) தோலொடு நூலிழை துதைந்த மார்பர் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். ஆலம்=கல்லால மரம் மற்றும் நஞ்சு என்று இரண்டும் பொருத்தமான பொருளே. பெருமானை நஞ்சு சென்று அமர்ந்த கழுத்தினை உடையவன் என்றும் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்தவன் என்றும் கூறலாம். நூலிழை=பூணூல்.மேலவர்=சிவஞானம் மிகுந்த அடியவர்கள். பலவும் ஆடுவர் என்பதற்கு, மற்ற பல பொருட்கள் என்று பொருள் கொண்டு, தேன் முதலியவற்றை குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்வார்கள். பதினொரு முறை ஸ்ரீருத்ரம் சொல்லி பெருமானை வழிபடும் முறையினில், பெருமானுக்கு எண்ணெய்க் காப்பிட்டு நீராட்டிய பின்னர், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், கருப்பஞ்சாறு, பழரசம், இளநீர் மற்றும் சந்தனம் கொண்டு அபிடேகம் செய்வதும் வழக்கம். அடிகள்=தலைவர்
பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர்
தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய
ஆலமது அமர்ந்த எம் அடிகள் அல்லரே
ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.8.4) தோலும் நூலும் அணிந்த பெருமான் என்று அப்பர் பிரான், பெருமானை குறிப்பிடுகின்றார். தோலும் நூலும் வளர என்ற தொடர் மூலம், நாளுக்கு நாள் மேன்மேலும் ஒளியுடன் திகழும் முப்புரிநூல் என்று உணர்த்தப் படுகின்றது. வளர் பொறி= பெரிய புள்ளிகள்; பெரிய புள்ளிகளை உடைய ஆமையின் ஓட்டினை அணிந்தவராகவும், நீண்ட கூந்தலை உடைய பார்வதி தேவியை உடலில் ஒரு பாகத்தில் ஏற்றவராகவும், அழகான மானின் தோலையும் ஒளிவீசும் முப்புரி நூலினை மார்பினில் அணிந்தவராகவும், ஒளிவீசி பிரகாசிக்கும் புள்ளிகளை உடைய பாம்பு படர்ந்திருக்கும் மார்பினை உடையவராகவும், உள்ள சிவபெருமான் காட்டினை நாடாக உணர்ந்து மகிழ்ந்து நடனம் ஆடுகின்றார். நெருங்கிய புள்ளிகளைக் கொண்ட மயில் போன்ற சாயலையும் இளமையான கொடி போன்ற தோற்றத்தையும் உடைய பார்வதி தேவியும், குளிர்ந்த சூழ்நிலையில் இருந்து கொண்டு ரீங்கார இசை பாடும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய கங்கையும், சிவபெருமானுடன் இணைந்து உள்ளார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை
வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலு நூலும் வளரக்
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடு நாடு மகிழ்வர்
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர்போன்று சாயல் அவளோடு அன்று வாய்மை பெருகிக்
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளன் போல் குலாவி உடனே
வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.57.5) சுந்தரர், பெருமானை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் என்று குறிப்பிடுகின்றார். வரை மார்பன்=மலை போன்ற வலிமை வாய்ந்த மார்பினை உடையவன்; அங்கம்=உடலில் ஒரு பாகமாகிய எலும்பு; எலும்பினை மாலையாகக் கோர்த்து அணியும் பொருட்டு, துளையிடப்பட்ட தகவல் இங்கே உணர்த்தப் படுகின்றது.
வளைக்கை முன்கை மலைமங்கை மணாளன் மாரனார் உடல் நீறெழச் செற்றுத்
துளைத்த அங்கத்தொடு தூமலர்க் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன்
திளைக்கும் தெவ்வர் திரிபுரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே
பொழிப்புரை:
மான் தோலுடன் இணைந்த முப்புரி நூல் பொருந்திய மார்பினில், மலை போன்று திண்மையுடன் காணப்படும் மார்பினில், ஊழிக்காலத்தில் அனைத்து உடல்களும் ஊழித்தீயினில் எரிந்து அழிந்து உலகமே சுடுகாடாக காட்சி அளிக்கும் தருணத்தில் கிடைக்கும் வெண்மை நிறத்து சாம்பலைத் தனது உடலில் அணிந்து கொண்டவரும், சிறுவன் மார்க்கண்டேயன் செய்து கொண்டிருந்த பூஜைக்கு இடையூறு விளைவிக்கத் துணிந்த இயமனை, மிகுந்த கோபத்துடன்,தனது காலால் உதைத்த கடவளும் ஆகிய பெருமான், தனது இருப்பிடமாக கருதும் இடம், கச்சி ஏகம்பம் ஆகும். மாலைப் பொழுதினில் உதிக்கும் வெண்மை நிறமுடைய சந்திரன் தோய்ந்து செல்லும் வண்ணம் உயர்ந்த மதில்களைக் கொண்ட காஞ்சி மாநகரினில், நறுமணம் வீசும் சோலைகள் சூழக் காணபப்டும் ஏகம்பம் திருக்கோயிலில் உறைகின்ற பெருமானைத் தொழுதால், நமது இடர்கள் முற்றிலும் கெட்டுவிடும்.
பாடல் 5:
தோடணி மலர்க்கொன்றை சேர் சடைத் தூமதியம் புனைந்து
பாடல் நான்மறையாகப் பலகணப் பேய்கள் அவை சூழ
வாடல் வெண்டலையோடு அனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி
சேடர் சேர் கலிகச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே
விளக்கம்:
தோடு=இதழ்கள்; இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெருமானை சேடர் என்று குறிப்பிடுகின்றார். சேஷம் என்ற வடமொழிச் சொல்லினை அடிப்படையாகக் கொண்ட தமிழ்ச்சொல். சேஷம் என்றால் எஞ்சியது, மிச்சம் என்று பொருள். ஊழிக்காலத்தின் முடிவில் உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அழிந்து,அனைது உயிர்களும் தத்தம் உடல்களை விட்டுப் பிரிந்து பெருமானின் வயிற்றில் ஒடுங்கிய பின்னர், உலகினில் அழியாமல் எஞ்சி இருப்பவன் பெருமான் ஒருவன் தானே. அந்த தன்மையை உணர்த்தும் பொருட்டு பெருமானை சேடர் என்று அழைக்கின்றார். பெருமானை சேடர் என்று குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.
திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.27.11) திருஞானசம்பந்தர் பெருமானை சேடர் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் கடைக்காப்பு மற்ற பதிகங்களிலிருந்து மாறுபட்டது. இந்த பாடலில் இந்த பதிகம் பாடுவதால் நாம் அடையவிருக்கும் பலன் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் பாடி வாழ்வீர்களாக என்று சம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் பெருமானின் தன்மைகளையும் பண்புகளையும் கருணைத் திறனையும் குறிப்பிட்ட சம்பந்தர், அந்த பாடல்கள் குறிப்பிடும் கருத்தினை உள்வாங்கி, அவற்றை பின்பற்றி, பெருமானை வணங்கித் தொழுது நாம் அனைவரும் வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று சம்பந்தர் விரும்புகின்றார் போலும். அதனால் தான் பதிகத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடி வாழ்வீர்களாக என்று கூறுகின்றார். நாடவல்ல=ஆராய்ந்து அறியும் வல்லமை வாய்ந்த;
மாடம் மல்கு மதில் சூழ் காழிமன்
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர்
நாட வல்ல ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே
திருப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (1.26.11) திருஞானசம்பந்தர் பெருமானை சேடர் என்று குறிப்பிடுகின்றார். சேடராகிய பெருமான், செல்வராகிய பெருமான் உறைகின்ற திருப்புத்தூர் தலத்தின் மீது தான் இயற்றிய பாடல்களை முறையாக ஓதும் அடியார்கள் தமது வாழ்க்கையில் துன்பம் ஏதும் இல்லாதவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றார். கேள்வி=சுருதி; கேள்வி ஞானத்தால் வளர்த்துக் கொண்ட வேதங்கள் பற்றிய அறிவு;அவலம்=வறுமை;
நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரும் அவலம் அடையாவே
நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.29.4) திருஞானசம்பந்தர் பெருமானை சேடர் என்று குறிப்பிடுகின்றார். பதிகத்தின் முதல் மூன்று பாடல்களில் தலத்து அந்தணர்கள் மற்றும் மக்களின் பெருமையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், தலத்துப் பெருமானும் சிறந்த பெருமையை உடையவர் என்று குறிப்பிடுகின்றார். சேடர்=பெருமை வாய்ந்தவர்; நீடவல்ல=மேலும் மேலும் நீண்டு வளரவல்ல; சேடர் என்ற சொல்லினை, முதல் மூன்று பாடல்களில் குறிப்பிட்டது போன்று, தலத்து மக்களின் தன்மையை குறிப்பிடுகின்றது என்று பொருள் கொள்வதும் சிறப்பே. சேடர் என்ற சொல்லுக்கு ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களும் பொருட்களும் அழிந்த பின்னரும், எஞ்சி நிற்கும் இறைவன் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.
நீடவல்ல நிமிர் புன்சடை தாழ
ஆடவல்ல அடிகள் இடமாகும்
பாடல் வண்டு பயிலும் நறையூரில்
சேடர் சித்தீச்சரமே தெளி நெஞ்சே
கரவீரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.58.11) திருஞானசம்பந்தர் பெருமானை சேடன் என்று அழைக்கின்றார். வீடிலான்=அழிவில்லாதவன்.காதலாகிக் கசிந்து பெருமானைத் தொழ வேண்டும் என்று பின்னாளில் பாடிய திருஞானசம்பந்தர், அத்தகைய காதல் கசியும் வண்ணம் பாடிய தமிழ்ப்பாடல் என்று இந்த பதிகத்துப் பாடல்களை குறிப்பிடுகின்றார்.
வீடிலான் விளங்கும் கரவீரத்தெம்
சேடன் மேல் கசிவால் தமிழ்
நாடு ஞானசம்பந்தன் சொல்லிவை
பாடுவார்க்கு இல்லை பாவமே
கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.73.11) திருஞானசம்பந்தர் பெருமானை சேடர் என்று குறிப்பிடுகின்றர். ஏனம்=பன்றி; அக்கு=எலும்பு;வெள்ளர்=வெள்ளை உள்ளம் கொண்டவர்; எளிய பொருட்களை, எவரும் பொதுவாக தவிர்க்கும் பொருட்களை, அணிந்து கொண்டு வெள்ளை உள்ளம் கொண்டவர் போல் காட்சி அளித்த பெருமான் தனது கோலத்திற்கு பொருந்தாத வண்ணம் கள்வராக செயல்பட்டு தனது உள்ளத்தை கொள்ளை கொண்டதாக சம்பந்த நாயகி இங்கே குற்றம் சாட்டுகின்றாள். சேமம்=பாதுகாப்பு; கோணாகம்=வளைந்த பாம்பு; ஆமையின் ஓடு, பாம்பு, பன்றியின் வெள்ளைக் கொம்பு, எலும்பு மாலை ஆகிய எளிய பொருட்களை அணிகலனாகப் பூண்டு வெள்ளை உள்ளத்தவராக காட்சி அளித்த போதிலும், அவர் நடந்து கொண்ட விதம் ஒரு கள்வரைப் போன்று இருந்தது; ஒரு பொருளின் உடமையாளர் அறியாத வண்ணம் அந்த பொருளினைத் திருடும் கள்வர் போன்று,எப்படித் திருடினார் என்று நான் அறியாத வண்ணம், எனது உள்ளத்தை கொள்ளை கொண்டவர் சிவபெருமான் என்று இங்கே சம்பந்த நாயகி கூறுகின்றாள்.மேலும் எனது உள்ளத்தை அவரிடம் இழந்ததால், நான் காதல் நோய்ப்பட்டு வருந்துகின்றேன் என்றும் கூறுகின்றாள். வேள்விகளை முறையாக செய்யும் நெறியினை உணர்த்தும் வேதங்களை ஓதும் பிரமனும், வளைந்த நாகத்தை தனது படுக்கையாகக் கொண்ட திருமாலும், தங்களின் பாதுகாப்புக்கு உரியவராக கருதும் செல்வரும் ஒழுக்க சீலரும் ஆகிய பெருமான் பொருந்தி உறையும் தலம் கானூர் ஆகும். சேடர் என்ற சொல்லினை சிரேஷ்டர் என்ற வடமொழிச்சொல்லின் திரிபாக கொண்டு, ஒழுக்கம் மிகுந்தவர் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. பெருமானது வேடம் ஒழுக்க சீலராக இருப்பது போன்ற வேடம் என்பதால், தான் ஏமாந்துவிட்டதாக சம்பந்த நாயகி சொல்கின்றாள் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் பெருமானை சேடர் என்று சம்பந்த நாயகி குறிப்பிடுகின்றாள்.
ஆமை அரவோடு ஏன வெண் கொம்பு அக்கு மாலை பூண்டு
ஆமோர் கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார்
ஓம வேத நான்முகனும் கோணாகணையானும்
சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே
திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.98.8) திருஞானசம்பந்தர் பெருமானை சிராப்பள்ளிச் சேடர் என்று அழைக்கின்றார்.மல்கு=பொருந்திய; இந்த பாடலில் பழியினையும் பொருட்படுத்தாமல் பெருமான் தொடர்ந்து பலி ஏற்கின்றான் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார்.பெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதை உணராத சிலர் பெருமான் பிச்சை ஏற்பதை இழித்துக் கூறினும், அத்தகைய பழிச் சொற்களை பொருட்படுத்தாமல், பிச்சை ஏற்பதன் மூலம் பல பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு உய்வினை அளிப்பதை தொடர்ந்து இறைவன் செய்து வருகின்றார். இந்த தன்மையே இங்கே உணர்த்தப் படுகின்றது. இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணாதவன் என்றும் சொற்களைக் கடந்தவன் என்று பெருமானின் இயல்புகள் பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டு வருகின்றது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நெறிகளையும் எடுத்துரைக்கும் வேதங்கள் சொல்லாத செய்தியே இல்லை என்று பொதுவாக கூறுவார்கள். ஆனாலும் பல செய்திகளையும் தத்துவங்களையும் விளக்கமாக உரைக்கும் வேதங்களும், அருளாளர்கள் இயற்றிய பாடல்களும், பெருமானின் ஒரு சில செய்கைகளையே சொல்ல முடிகின்றது என்று உணர்த்தி, பெருமானின் பெருமை சொற்களையும் கடந்தது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் அருட்செய்கைகளும் வீரச் செயல்களும், நாளாக நாளாக, பலவாக விரிந்து கொண்டே இருப்பதால், அவற்றை சொல்வதற்கு வேதங்களாலும் கீதங்களாலும் இயலவில்லை என்று உணர்த்துகின்றார்.
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன் தன்
தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழி ஓரார்
சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சிலவல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே
கொடிமாட செங்குன்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.107.7) திருஞானசம்பந்தர் பெருமானை சேடன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பிச்சை ஏற்பதையே தனது வாழ்க்கையின் நோக்கமாக கொண்டுள்ள பெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கோடல்=செங்காந்தள் மலர்கள்; குறிஞ்சி நிலத்திற்கு உரிய பூக்கள். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாக கருதப்படுகின்றன. புறவு=நிலம்;
நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ வெள்ளை
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே
வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலை (3.9.7) திருஞானசம்பந்தர் சேடர் என்ற திருநாமத்துடன் தொடங்குகின்றார்.தேவர்=உயர்ந்தவர்: விண்ணோர்களாலும் உயர்ந்தவராக கருதப்படுபவர் பெருமான் என்று கூறுகின்றார். மூவிரு தொன்னூல்=ஆறு அங்கங்களைக் கொண்ட பழமையான நான்கு வேதங்கள்; வீடர்=வீடுபேறு அருளும் ஆற்றல் வாய்ந்தவர்; நாடகம்=நடனம்;
சேடர் விண்ணொர்கட்கு தேவர் நன்மூவிரு தொன்னூலர்
வீடர் முத்தீயர் நால் வேதத்தர் வீழிமிழலையார்
காடரங்கா உமை காண அடத்து இமையோர் தொழ
நாடகமாடியை ஏத்த வல்லார் வினை நாசமே
திருவிற்கோலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.23.11) திருஞானசம்பந்தர், பெருமானை சேடன் என்று குறிப்பிடுகின்றார். கூகம் என்பது தலத்தின் பெயர்; விற்கோலம் என்பது திருக்கோயிலின் பெயர். தலத்தின் அருகில் கூவம் நதி ஓடுகின்றது. மேவிய=நிலையாக பொருந்திய;கோடல்=கோடுதல் உடைய, வளைந்த;
கோடல் வெண் பிறையனை கூகம் மேவிய
சேடன செழுமதில் திருவிற்கோலத்தை
நாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே
திருந்துதேவன்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலை (3.25.11) திருஞானசம்பந்தர் சேடர் என்றே தொடங்குகின்றார். சேடர் என்ற சொல்லினை, தலத்திற்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக கருதி, பெருமை மிகுந்த ஒழுக்கம் உடைய சான்றோர்கள் வாழும் திருந்து தேவன்குடி என்று பொருள் கொள்வதும் சிறப்பே. நாட=விரும்பி;
சேடர் தேவன்குடி தேவர் தேவன் தனை
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்
நாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லையாம் பாவமே
திருவேடகம் தலத்தினை சேடனூர் ஏடகம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடலை (3.32.3) நாம் இங்கே காண்போம். அலம்பும்=ஒலிக்கின்ற;செண்டு=வட்டமாக சுற்றி வரும் மாலை; இட்பத்தின் கழுத்தினில் உள்ள மாலையும் அதனில் இணைக்கப்பட்டுள்ள மணியும்; விடை= இடபம்;கழலுமே=கழன்று விடுமே; கவலை நோய்=மனக் கவலைகளால் வரும் நோய் என்றும் நோய்களால் வரும் மனக்கவலை என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.
குண்டலம் திகழ்தரு காதுடைக் குழகனை
வண்டலம்பும் மலர்க் கொன்றையான் மதியணி
செண்டு அலம்பும் விடைச் சேடனூர் ஏடகம்
கண்டு கை தொழுதலும் கவலை நோய் கழலுமே
திருவுசாத்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.33.1) திருஞானசம்பந்தர் பெருமானை சேடர் என்று குறிப்பிடுகின்றார். நீரிடைத் துயின்றவன்=இராம பிரானாக அவதாரம் எடுத்த திருமால், பாற்கடலில் பள்ளி கொள்பவன்; தம்பி=இலக்குவன்; சாம்புவான்=ஜாம்பவான்; சீர்=சிறப்பு; பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் அச்சுறுத்தி விரட்டியடித்த ஆலகால நஞ்சினை உட்கொண்டு தேவர்களைக் காத்த பெருமை உடையவன்;
நீரிடைத் துயின்றவன் தம்பி நீள் சாம்பவான்
போருடைச் சுக்கிரீவன் அநுமான் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்த எம்
சீருடைச் சேடர் வாழ் திருவுசாத்தானமே
திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.86.7) திருஞானசம்பந்தர், பெருமானை சேடர் என்று குறிப்பிட்டு, சேடராகிய பெருமான் வாழ்கின்ற வளநகர் சேறை என்று கூறுகின்றார். வாடினர்=வாட்டம் அடைந்த, வருந்திய, அலர்=மலர்; சேடர்=சிறந்த ஒழுக்கம் உடையவர் என்றும் பொருள் கொள்ளலாம். முறைமுறை=எந்த வகையில் பாட வேண்டுமோ அந்த வகையினில் முறையாகவும், பாடல்கள் தொகுக்கப்பட்ட வரிசையிலும்; பொருள்வரு நடம்= பொருளினை உணர்த்தும் நடனம், பெருமான் ஐந்தொழில்கள் புரிவதை உணர்த்தும் நடனம்; பெருமான் புரியும் செயல்களின் அடிப்படையில்,சிவபெருமான் ஆடும் நடனத்தை ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் உண்மை விளக்கம் சைவ சித்தாந்த நூலின் ஆசிரியர் மனவாசகம்கடந்தார் கூறுகின்றார்.
.
படைத்தல் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் நாதத்தை எழுப்பும் உடுக்கை ஏந்திய திருக்கரம் படைத்தல் தொழிலையும், அபயம் காட்டும் வலது திருக்கரம் காத்தல் தொழிலையும், தீச்சுடர் ஏந்திய திருக்கரம் அழித்தல் தொழிலையும், ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலையும், தூக்கிய திருவடி அருளும் தொழிலையும் குறிப்பதாக கூறுவார்கள். இந்த ஐந்து தொழில்களும் உயிர் தனது வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப ஒரு உடலுடன் பொருந்தி, வினைகளின் விளைவால் ஏற்படும் இன்பதுன்பங்களை அனுபவித்து, வினைகளை கழித்துக் கொள்ள வழி வகுப்பதால் இந்த நடனம் ஊன நடனம் எனப்படுகின்றது.இதனை விளக்கும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. திதி ஸ்திதி என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.; அங்கி=அக்னி; சங்காரம் என்றால் அழிக்கும் தொழில்;
தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் — ஊற்றமா
ஊன்று மலர்ப் பதத்தில் உற்ற திரோதம் முத்தி
நான்ற மலர்பதத்தே நாடு
இந்த நடனம் எவ்வாறு ஆன்மாக்கள் வீடுபேறு பெறுவதற்கு வழி வகுத்து, ஞான நடனமாக திகழ்கின்றது என்பதை அடுத்த பாடலில் ஆசிரியர் விளக்குகின்றார். உடுக்கை ஏந்திய திருக்கை மாயா மலத்தை உதறுகின்றது; தீச்சுடர் ஏந்திய திருக்கரம் கன்ம மலத்தை சுட்டு எரிக்கின்றது; ஊன்றிய திருவடி ஆணவ மலத்தின் வலிமையை அடக்கி அதை அழுத்தி செயலிழக்கச் செய்கின்றது; இவ்வாறு மலங்களின் பிடியிலிருந்த விடுபட்ட ஆன்மாவை,தூக்கிய திருவடி பேரானந்தத்தை அருள, அபயகரம் அந்த ஆன்மாவை பேரின்பத்தில் அழுத்துகின்றது. இவ்வாறு ஆன்மாவை பேரானந்தத்தில் ஆழ்த்தும் செயல் ஞான நடனம் என்று கருதப்படுகின்றது. சிவயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களும் ஐந்து பொருட்களை குறிக்கின்றன. சி என்ற எழுத்து சிவபிரானையும், வ என்ற எழுத்து அவனது அருட்சக்தியாகிய அம்மையையும், ய என்ற எழுத்து ஆன்மாவையும், ந என்ற எழுத்து திரோதான மலத்தையும் ம என்ற எழுத்து ஆணவ மலத்தையும் குறிக்கும். ய என்று உணர்த்தப்படும் ஆன்மா, சிவ எனப்படும் ஞான நடனத்தையும், நம எனப்படும் ஊன நடனத்தையும் நுகர்வதாக, பஞ்சாக்கர மந்திரம் உணர்த்துவதாக கூறுவார்கள்.
மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டு மலம்
சாய அமுக்கி அருள் தான் எடுத்து — நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான்
ஆன்மாக்கள் உலக இன்பங்களை நுகரும் பொருட்டு நடத்தப்படும் கூத்தினை ஊன நடனம் என்றும், ஆன்மாக்கள் வீடுபேறு பெறுவதற்கு உதவி செய்யும் நடனத்தை ஞான நடனம் என்றும் ஆசிரியர் கூறுகின்றார். பெருமானின் ஒரே நடனம் இந்த இரண்டு வகைகளில் செயல்படுவதால், நடனம் விளைவிக்கும் பயன் கருதி, ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் கருதப்படுகின்றது.
பாடினர் அருமறை முறைமுறை பொருள் என வருநடம்
ஆடினர் உலகிடை அலர் கொடும் அடியவர் துதி செய
வாடினர் படுதலை இடுபலி அதுகொடு மகிழ் தரும்
சேடர் தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.19.10) அப்பர் பிரான் சேடன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். தாள்=கால், இங்கே காலின் ஒரு பாகமாகிய முழங்கால் உணர்த்தப் படுகின்றது; முழங்காலினைத் தொடும் அளவுக்கு நீண்ட கைகளை உடையவன். இராமயணத்தில் பல இடங்களில் இராமபிரானது கைகள் நீண்டு முழங்காலினை தொடும் அளவுக்கு நீண்டு இருப்பதாக கூறப்படுகின்றது. ஆஜானுபாஹு என்று வடமொழியில் இந்த தன்மையை குறிப்பிடுகின்றனர். ஆடரவக் கிண்கிணிக் கால் என்பது தியாகேசரின் நடனம் ஆடும் பாதங்களை குறிப்பிடுகின்றது. கோடலா=கொள்ளத்தகாத;மற்றவர்கள் தரிக்க முடியாத; பெருமானின் பல வேடங்கள் அவரையன்றி ஏனையோர் ஏற்றுக் கொள்ள முடியாத வேடங்கள் என்று கூறுகின்றார்.
தாடழுவு கையன் தாமரைப் பூஞ்சேவடியான்
கோடலா வேடத்தான் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக் கிண்கிணிக் கால் அன்னதோர் சேடனை
ஆடும் தீக் கூத்தனை நான் கண்டது ஆரூரே
திருப்பராய்த்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.30.2) அப்பர் பிரான் சேடனார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையைக் கொன்றதும், அந்த வனத்திற்கு பலி ஏற்கச் சென்ற போது வேதங்களை இசைத்துக் கொண்டு சென்றதும் குறிப்பிடப் படுகின்றன. களி=மதம் கொண்டதால் வந்த செருக்கு; வினைகளை நீக்கும் வல்லமை படைத்த பெருமான் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் தெரிவித்த அப்பர் பிரான், தனது வினைகளை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அவரைத் தேடிக் கொண்டு செல்வேன் என்று இந்த பாடலில் சொல்கின்றார். இவ்வாறு சொல்வதன் மூலம் நாமும் அவரைத் தேடிச் சென்று வணங்கி. நமது வினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்குகின்றார். தன்னை மறைத்துக் கொள்வது இறைவனின் இயல்பு. அவனைச் சென்று அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்பது ஆன்மாவின் விருப்பம். எனவே ஆன்மா இறைவன் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்கின்றது. ஆன்மாவாக தன்னை பாவித்து, ஆன்மாவின் விருப்பத்த்தை அப்பர் பிரான் உணர்த்தும் பாடலாக இதனை பெரியோர்கள் கருதுகின்றனர். ஆன்மாவின் விருப்பத்தை உணர்ந்து கொள்ளாமல் செயல்படுவதை தவிர்க்க, ஆன்மாவின் விருப்பம் நமக்கு இங்கே கூறப்படுகின்றது.
மூடினார் களி யானையின் ஈருரி
பாடினார் நான்மறை நான்கினோடு ஆறங்கம்
சேடனார் தென்பராய்த்துறைச் செல்வனார்
தேடிக் கொண்டு அடியேன் சென்று காண்பனே
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.49.6) அப்பர் பிரான் சேடனார் சிவனார் என்று கூறுகின்றார். சிந்தை மேய=தனது அடியார்களின் சிந்தையில் உறையும்; உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து அருள் புரிந்த பெருமான், வேடன் உருவம் தாங்கி, தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை அணுகி அவனுக்கு பாசுபத அத்திரம் அருள் செய்தான். அனைத்து உலகங்களும் அழிந்த பின்னரும் எஞ்சி நிற்கும் பெருமை படைத்த அந்த இறைவன், தன்னை நினைந்துருகும் அடியார்களின் சிந்தனையில் உறைகின்றான். தான் மிகவும் பெரியவனாக இருந்தாலும்,அடியார்களுக்கு மிகவும் எளியவனாக உள்ள பெருமான் உறையும் வெண்காடு தலம் சென்று நெஞ்சமே, அவனை வழிபட்டு பயன் அடைவாயாக என்று அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.
கூடினான் உமையாள் ஒரு பாகமாய்
வேடனாய் விசயற்கு அருள் செய்தவன்
சேடனார் சிவனார் சிந்தை மேய வெண்
காடனார் அடியே அடை நெஞ்சமே
திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.77.4) அப்பர் பிரான், பெருமானை சேடர் என்று அழைக்கின்றார். மாடு=செல்வம்; நாம் முதலில் வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்காக செல்வத்தினை தேடுவதில் ஈடுபடுகின்றோம். நம்மில் பெரும்பாலோர் நிலையில்லாத செல்வத்தை நிலையாக எண்ணி செல்வத்தின் பால் பற்று வைத்து மயங்கி இருக்கும் நிலை இங்கே குறிப்பிடப்படுகின்றது., மனிதரை மயக்கும் தன்மை கொண்ட செல்வம் மேலும் மேலும் செல்வம் தேடுமாறு நம்மைத் தூண்டுகின்றது. நம்மில் பெரும்பாலோர் இந்த மயக்கத்தில் ஈடுபட்டு, மேலும் மேலும் செல்வத்தினை பெருக்கிக் கொள்ள முயற்சி செய்கின்றோம். இந்த முயற்சியில் நமது நேரத்தையும் கழிக்கும் நாம், வாழ்நாளின் இறுதியில், ஓடி ஓடி இளைத்து தேடிய செல்வத்தின் முழு பயனையும் அனுபவிக்காமல் இறக்கின்றோம். இந்த உண்மையை பலர் காலம் கடந்து உணர்கின்றோம், ஒரு சிலர் இறுதி வரையிலும் இதனை உணர்வதேயில்லை. இந்த உண்மையை உணர்த்தும் அப்பர் பிரான், செல்வம் தேடுவதில் நாம் செலவிடும் நேரத்தில் ஒரு பகுதியையாவது இறைவனை வழிபடுவதில் செலவழித்து பயன் அடையுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். செல்வம் என்பதை மயக்கம் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துவது, அந்த செல்வத்தை மகிழ்வுடன் தேடுதல் உலகவரின் இயல்பு என்று உணர்த்தும் பாடலை நமக்கு நினைவூட்டுகின்றது. எந்த பொருளையும் தேடும் முயற்சியில் ஈடுபடுவது நமக்கு மன வருத்தத்தை அளிக்கின்றது. ஆனால் செல்வத்தைத் தேடுவதில் தனது முயற்சியையும் நேரத்தையும் செலவிடும் மனிதன், அதற்காக வருத்தம் ஏதும் அடைவதில்லை. மாறாக மகிழ்ச்சி தான் அடைகின்றான். இதற்கு காரணம், செல்வம் நிலையானது என்று நாம் நம்புவது தான். எனவே இந்த செல்வத்தை தேடும் முயற்சியில் ஈடுபடும் நாம், எல்லா விதமாக பொய்களையும், நாணம் ஏதுமின்றி சொல்வதற்கு தயாராக உள்ளோம்.இவ்வாறு செல்வத்தை தேடும் பரபரப்பு வாழ்க்கையில் நாம் இறைவனை மறந்து விடுகின்றோம். அல்லது இறைவனை நினைப்பதற்கு நேரமில்லை என்ற சமாதானத்தை நமக்கு நாமே கூறிக்கொண்டு இறைவனை நினைக்காமல் இருக்கின்றோம்.. அவ்வாறு இல்லாமல், நமது உடற்கூட்டிலிருந்து உயிர் பிரிவதன் முன்னமாவது பெருமானின் திருவடிகளை சென்றுச் சரணடைவீர்களாக என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. சேடர் என்ற சொல்லினை, தலத்திற்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக கருதி பொருள் கொள்வதும் பொருத்தமே. சேடர்=உயர்ந்தவர்கள்; சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். சேடு என்பதற்கு ஒளி என்ற பொருளும் பொருந்தும், இங்கே அறிவினால் ஏற்படும் ஒளியினை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம். எனவே சேடர் என்ற சொல்லுக்கு அறிவில் சிறந்தவர்கள் என்ற பொருள் கொள்வதும் பொருத்தமே.
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்து நீர்
ஓடி எய்த்தும் பயனிலை ஊமர்காள்
சேடர் வாழ் சேறைச் செந்நெறி மேவிய
ஆடலான் தன் அடி அடைந்து உய்ம்மினே
நமச்சிவாயப் பதிகத்தின் பாடலில் (7.48.6) சுந்தரர் பெருமானை சேடன் என்று குறிப்பிடுகின்றார். பாடு=பெருமை; எலும்பு மாலை, புலித்தோல் மற்றும் பாம்பினைத் தனது திருமேனியில் அணிந்து கொண்ட போதும் அழகனாகத் திகழ்பவன் பெருமான் என்று கூறுகின்றார். பாடு=அருகில்; பூவின் இதழ் போன்ற ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக்கொண்டவனே, எலும்பு மாலை அணிந்தவனே, கொல்லும் தன்மை கொண்ட புலித்தோலை ஆடையாக உடுத்திக் கொண்டு, அதன் மேல் படமெடுத்தாடும் பாம்பினை கச்சாக அணிந்து கொண்டு, தனது விருப்பம் போன்று அந்த பாம்பை அசைக்கும் அழகனே, அழகும் குளிர்ச்சியும் பொருந்திய காவிரி நதியின் கரையில் உள்ள தலத்தில் பொருந்தி உறைகின்ற பெருமானே, அனைத்து ஒளிகளுக்கும் மேலான ஒளியாக விளங்குபவனே, பாண்டிக்கொடுமுடி இறைவனே, மகா சங்கார காலத்தில் அனைத்து உயிர்களும் தத்தம் உடல்களை விட்டு பிரிந்த பின்னரும் அழியாது நிலையாக இருப்பவனே, உன்னை அடியேன் மறந்தாலும், எனது நா உனது திருநாமத்தை, நமச்சிவாய என்ற திருநாமத்தை இடையறாது சொல்லிக்கொண்டே இருக்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஏடு வான் இளந்திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின் மேல்
ஆடு பாம்பது அரைக்கு அசைத்த அழகனே அந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடிச்
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது திருமாளிகைத் தேவர் அருளிய திருவிசைப்பா பதிக்த்தின் பாடலில் (9.4.6) பெருமான், சேடர் என்று குறிப்பிடப்படுகின்றார். திரு=பொதுவாக செல்வம் என்ற பொருளில் வந்தாலும், இங்கே நல்லூழ் என்று பொருள் கொள்வது பொருத்தம். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசக அடிகளார் கூறுவது போல, என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்று திருஞானசம்பந்தர் சொல்வது போல,என்ன மாதவம் செய்தனை என்று அப்பர் பிரான் வினவுவுது போன்று, சென்ற பிறவிகளில் ஈட்டிய நலவினைகளே, இந்த பிறவியில் நாம் இறைவனை வழிபடுவதற்கு காரணமாகத் திகழ்கின்றன. அத்தகைய பாக்கியம் இல்லாதவர்களை திருவிலா உருவினார் என்று தேவர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.சேடராகிய பெருமானின் திருவடிகளைத் தமது தலையில் மீது வைத்துக் கொண்டாடும் நற்பண்பு வாய்க்கப் பெறாது, உயிரற்ற உடலினை உடையவர்களை,தமது கண்கள் காணாது என்றும், அத்தகைய பேய்களோடு தனது வாய் உரையாடாது என்றும் கூறுகின்றார். சாண்கையர், சாண்மகன் என்பது இழிந்தோரை குறிப்பது; சாண் அளவே உள்ள வயிற்றினை நிறைத்து வாழ்வதே வாழ்க்கை என்று வாழும் மனிதர்களை உணர்த்துகின்றாது. மோடச் ச்ழக்கர்=முரட்டுத் தன்மை உடைய பொய்யர்கள்; பிட்டல்=ஒன்றை சிதைத்தல்; பிழைக்கப் பிட்க=தாம் தமது வயிறு வளர்ப்பதற்காக பிறிதோர் உயிரை சிதைப்போர்;பேடர்=ஆண்மையற்றவர்;
ஆடரவாட ஆடும் அம்பலத்தமுதே என்னும்
சேடர் சேவடிகள் சூடாத் திருவிலா உருவினாரைச்
சாடரைச் சாட்கை மோடச் சழக்கரைப் பிழைக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண் வாய் பேசாது அப்பேய்களோடே
பொழிப்புரை:
அழகிய இதழ்களுடன் கூடிய கொன்றை மலர் மாலைகள் சேர்ந்த சடையின் மீது தூய்மை அடைந்த ஒற்றைப் பிறைச் சந்திரனையும் சூட்டிக்கொண்டுள்ள பெருமான், நான்மறைப் பாடல்களை பாடிக்கொண்டு, பேய்க் கணங்கள் சூழ, தசை வற்றி வாடிய பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்தியவராக பல இடங்களும் திரிந்த போதிலும், இந்த பலியேற்கும் செய்கை மூலம் பக்குவம் அடைந்த உயிர்களுக்கு முக்தி நிலை அடைவதற்கு ஒரு வாய்ப்பு அளிப்பதால்,மிகுந்த மகிழ்ச்சி உடையவராக பிராட்டியுடன் சேர்ந்து நடனம் ஆடுகின்றார். இத்தகைய தன்மை உடைய பெருமான், ஊழிக்காலத்தில் அனைத்து உடல்களும் அழிந்த பின்னரும் தான் அழியாமல் எஞ்சி இருக்கும் ஆற்றல் பெற்ற பெருமான், எழுந்தருளும் இடம், ஆரவாரம் நிறைந்த காஞ்சி மாநகராகும்.இந்த காஞ்சி நகரில் உள்ள ஏகம்பம் திருக்கோயிலைச் சென்றடைந்து, பெருமானை தியானிக்க நமது இடர்கள் முற்றிலும் கெட்டுவிடும்.
பாடல் 6:
சாகம் பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாய எய்து
ஆகம் பெண்ணொரு பாகமாக அரவொடு நூலணிந்து
மாகம் தோய் மணிமாட மாமதில் கச்சி மாநகருள்
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த இடர் கெடுமே
விளக்கம்:
சாபம்=வில்: சாபம் என்ற சொல் எதுகை கருதி சாகம் என்று திரிந்தது. மேருமலை பொன்னிறம் கொண்டது என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.தானவர்=அசுரர், இங்கே திரிபுரத்து அரக்கர்கள்; சாய=விழுந்து அழிய; ஆகம்=உடல்; மாகம்=ஆகாயம்; சேவடி=திருத்தங்கள் தேவைப்படாத செம்மையான திருவடி; ஏத்த=புகழ்ந்து போற்ற;
பொழிப்புரை:
பொன்னிறம் வாய்ந்தது என்று சொல்லப்படும் மேருமலையினை வில்லாக வளைத்து அதனில் பொருத்தப்பட்ட கணை ஒன்றினால், அசுரர்கள் வாழ்ந்து வந்த மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்து வீழ்த்தி அழித்தவர் சிவபெருமான். அவர் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் பிராட்டியை ஏற்றுக் கொண்டவராகவும் தனது மார்பினில் முப்புரி நூலும் பாம்பும் அணிந்தவராக காட்சி தருகின்றார். அவர் உறைகின்ற இடம் காஞ்சி மாநகரில் உள்ள ஏகம்பம் திருக்கோயிலாகும். ஆகாயத்தைத் தொடும் வண்ணம் உயர்ந்ததும் அழகியதும் ஆகிய மாட வீடுகளையும் பெரிதாக உயர்ந்த மதிற்சுவர்களும் கொண்ட கச்சி மாநகரத்தில் உள்ள ஏகம்பம் திருக்கோயிலில் உறையும் நமது தலைவராகிய பெருமானின், திருத்தம் ஏதும் தேவைப்படாமல் சிறந்து செம்மையாக விளங்கும் சேவடிகளைப் போற்றி வணங்கினால் நமது துன்பங்களும் முற்றிலும் கெட்டு நாம் முக்தி நிலை அடையலாம்.
பாடல் 7:
பதிகத்தின் ஏழாவது பாடல் சிதைந்தது.
பாடல் 8:
வாணிலா மதி புல்கு செஞ்சடை வாளரவம் அணிந்து
நாணிடத்தினில் வாழ்க்கை பேணி நகுதலையில் பலி தேர்ந்து
ஏணிலா அரக்கன் தன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்
சேணுலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர்கெடுமே
விளக்கம்:
வாணிலா=ஒளி பொருந்திய நிலா, வாள்+நிலா; புல்கு=பொருந்திய; வாள்=ஒளி வீசும்; அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களும் பெண்களுக்கு, முக்கியமாக இல்லத்து அரசிகளுக்கு இருக்க வேண்டிய குணங்களாக பண்டைய நாளில் கருதப்பட்டு வ்ந்தது. அத்தகைய குணங்களுடன் உயர்ந்த இல்லத்தரசியாக பார்வதி தேவி விளங்கிய தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமானின் தலைமாலையில் இருக்கும் தலை,நகுதலை என்றும் நகு வெண்டலை என்றும் பல திருமுறை பாடல்களில் சொல்லப்படுகின்றது. வாய் பிளந்த நிலையில் பற்கள் வெளியே தெரியும் வண்ணம் உள்ள மண்டையோடு சிரிப்பது போன்ற தோற்றத்தை அளிப்பதை நாம் உணரலாம். உலகியலில் தாங்கள் அனுபவிக்கும் இன்பமும், உலகியல் வாழ்க்கையும் நிலையற்றது என்பதை உணராமல், அவற்றை நிலையானது என்று கருதி வாழும் மக்களின் அறியாமையை நினைத்து, பெருமானின் தலைமாலையில் உள்ள தலை சிரிக்கின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இந்த பாடலில் பெருமான் தனது கையில் நகுதலையை ஏந்திக்கொண்டு பலியேற்பதற்கு சென்றதாக திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். ஏண்=உறுதி, பெருமை; இரண்டுமே இங்கே அரக்கன் இராவணனின் தன்மைக்கு பொருந்துவதாக உள்ளன. மன உறுதியற்ற அரக்கன் இராவணன் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மன உறுதி அற்றவனாகத் திகழ்ந்தாதால் தானே, காமத்தின் வயப்பட்டவனாக அவன் விளங்கினான். அதற்காக அடுத்தவரின் மனைவியை திருடவும் துணிந்த செயல் பெருமைக்கு உரியது அல்ல என்பதால், பெருமையற்ற அரக்கன் என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
ஒளி பொருந்திய ஒற்றைப் பிறைச் சந்திரன் பொருந்திய தனது செஞ்சடையினில் பெருமான் ஒளியுடன் திகழும் பாம்பினையும் அணிந்து கொண்டு, நாணம் முதலிய குணங்கள் பொருந்தியவளாக சிறப்பான இல்வாழ்க்கை வாழ்கின்ற பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டும், சிரிக்கும் தோற்றத்துடன் வாய் பிளந்து காட்சி தரும் மண்டை ஓட்டினைத் தனது கையில் ஏந்திக்கொண்டு பல இடங்களிலும் திரிந்து பலியேற்பவன் சிவபெருமான்.பெருமையற்றவனாக, காமத்தை அடக்கும் மனவுறுதி அற்றவனாக வாழ்ந்து வந்த அரக்கன் இராவணனின் நீண்ட முடிகள் பத்தையும் நெரித்தவனாகிய சிவபெருமான், உறைகின்ற தலம் கச்சி மாநகரிலுள்ள திருவேகம்பம் திருக்கோயில். வானளாவிய சோலைகள் நிறைந்த கச்சி மாநகரம் சென்றடைந்து,ஆங்குள்ள ஏகம்பம் திருக்கோயில் சென்றடைந்து இறைவனைத் தொழுது வழிபட, நமது இடர்கள் முற்றிலும் கெட்டுவிடும்.
பாடல் 9:
பிரமனும் திருமாலும் கைதொழப் பேரழலாய பெம்மான்
அரவம் சேர் சடை அந்தணன் அணங்கினொடு அமருமிடம்
கரவில் வண் கையினார்கள் வாழ் கலிக் கச்சி மாநகருள்
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல்வினை மாய்ந்தறுமே
விளக்கம்:
அணங்கு=தெய்வத்தன்மை பொருந்திய; கரவு=மறைத்தல்; வண்=வள்ளல் தன்மை; தங்களிடம் உள்ள செல்வத்தை மறைத்து வைக்காமல், இரவலர்களுக்கு கொடையாக வழங்கும் தன்மை கொண்ட மக்கள்; மரவம்=மல்லிகை, குங்கும மரம் என்று பொருள் சொல்கின்றனர்; கலி= ஆரவாரம்;அந்தணன்=அம்+தணன்; அழகும் குளிர்ச்சியும் கொண்டவன்;
பொழிப்புரை:
பிரமனும் திருமாலும் தங்களின் முன்னே எழுந்த நெடிதுயர்ந்த தீப்பிழம்பின் முடியையும் அடியையும் காணாமல் திகைத்து, தீப்பிழம்பாக எழுந்தவன் பெருமான் என்று புரிந்து கொண்டு, அவர்கள் இருவராலும் வணங்கப்பெறும் பெருமை உடையவன் சிவபெருமான்; அவர், பாம்பினைத் தனது சடையில் அணிந்து கொண்டவரும், அழகும் குளிர்ந்த கருணைப் பண்பினையும் ஒருங்கே உடைய அந்தணனும் ஆகிய பெருமான், தெய்வத்தன்மை பொருந்திய பார்வதி தேவியுடன் இணைந்து அமர்கின்ற தலம் காஞ்சி மாநகரில் உள்ள திருவேகம்பம் திருக்கோயிலாகும். தங்களிடம் உள்ள செல்வத்தை மறைத்து வைக்காமல், இரப்போர்க்கு அள்ளியள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மை உடைய மக்கள் வாழ்கின்றதும், ஆரவாரம் நிறைந்ததும் ஆகிய காஞ்சி மாநகரில்,மல்லிகை கொடிகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவேகம்பத்தில் உறையும் பெருமானைத் தொழ, நம்முடன் பிணைந்திருக்கும் வலிமை வாய்ந்த வினைகளும் மாய்ந்து கெட்டுவிடும்.
பாடல் 10;
குண்டு பட்டு அமண் ஆயவரொடும் கூறைதம் மெய் போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரம்மூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக்
கண்டவன் கலிக் கச்சி ஏகம்பம் காண இடர் கெடுமே
விளக்கம்:
குண்டு பட்டு=உடல் பருத்து; கூறை=ஆடை; மிண்டர்=முரட்டுத் தன்மை உடையவர்கள்; கட்டுரை= உண்மைக்கு ஒவ்வாதவற்றை சேர்த்து உண்மையான செய்திகள் போன்று சொல்வது; விண்டவர்= வைதீக நெறியிலிருந்தும் சைவ நெறியிலிருந்தும் விலகி பலருக்கும் பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்கள்; வெங்கணை=வெப்பம் மிகுந்த அம்பு; அவிய=வெந்து அழிய;
பொழிப்புரை:
பருத்த உடல் கொண்ட சமணர்களும் துவராடையால் தமது உடலைப் போர்த்துக் கொள்ளும் புத்தர்களும் முரட்டுத்தன்மை உடையவர்களாக,உண்மைக்குப் புறம்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, உண்மையான செய்திகளாக இட்டுக்கட்டி சொல்லும் சொற்களைப் பொருட்படுத்தாமல்,உலகத்தவரே நீங்கள், விலக்குவீர்களாக; வேதநெறி மற்றும் சைவ நெறியிலிருந்து விலகி பலருக்கும் பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், வெம்மை மிகுந்த அம்பு ஒன்றினால், வெந்து அழியும் வண்ணம் அம்பெய்தி வெற்றி கண்டவன் சிவபெருமான். அவர் ஆரவாரம் மிகுந்த கச்சி மாநகரத்தில் உள்ள ஏகம்பம் திருக்கோயிலில் உறைகின்றார். அத்தகைய பெருமானை, கண்டு தொழுது வணங்க, நமது இடர்கள் முற்றிலும் கெட்டுவிடும்.
பாடல் 11;
ஏரினார் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனைக்
காரினார் மணிமாடமோங்கு கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்
சீரினார் புகழ் ஓங்கி விண்ணவரோடும் சேர்பவரே
விளக்கம்:
ஏர்=அழகு; மேயவன்=நிலையாக பொருந்தி இருப்பவர்; காரினார்=மேகங்கள் தங்கும்; பாரினார்= உலகில் உள்ளவர்களால் போற்றப்படும்; சீர்=சிறப்பு;
பொழிப்புரை:
அழகு நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட காஞ்சி மாநகரில் உள்ள திருவேகம்பம் கோயிலில் நிலையாக உறையும் பெருமானை, மேகங்கள் தவழும் அழகிய மாடவீடுகள் ஓங்கி விளங்கும் கழுமல நகரத்தில் வாழ்பவனும் உலகத்தவரால் புகழப்படுபவனும் ஆகிய ஞானசம்பந்தன், புகழ்ந்து பாடிய பத்து பாடல்களையும் முறையாகக் கற்றுத் தேர்ந்து இனிய இசையுடன் பொருத்தி பாடும் அடியார்கள், இம்மையில் சிறந்த புகழுடன் ஓங்கி வாழ்ந்து, மறுமையில் தேவர்களுடன் சேர்ந்து வாழும் நிலையை அடைவார்கள்.