இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


வேட்டுவ வரி

Vettuva Vari consists of poetic verses that explore themes related to hunting, wildlife, and the natural environment. These lines often depict the challenges and experiences associated with hunting, reflecting on the skills required, the relationship between hunters and nature, and the broader cultural significance of hunting practices. The verses may also convey the beauty and danger of the wilderness, capturing the essence of the hunt and its impact on the human experience.


சிலப்பதிகாரம் - வேட்டுவ வரி

அஃதாவது - வேட்டுவர்கள் கொற்றவையை வழிபாடு செய்து வாழ்த்திய வரிப்பாடல் என்னும் இசைத்தமிழ்ப் பாடல்களையுடைய பகுதி என்றவாறு. இதன்கண் கொற்றவையின் புகழ்பாடும் மறவர்கள் கூத்துமாடிப் பாடுதலாலே இது வரிக்கூத்து என்னும் நாடகத் தமிழுமாம் என்க.

இனி, இதன்கண் கோவலன் கண்ணகி கவுந்தியடிகள் ஆகிய மூவரும் இளைப்பாறி யிருத்தற் பொருட்டு அப் பாலைப் பரப்பில் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் நடுவணமைந்த கொற்றவை கோட்டம் புகுந்து ஆங்கொரு சார் இருந்தபொழுது அப்பாலைப் பரப்பில் வாழும் எயினர் சாலினியைக் கொற்றவைக்குரிய கோலங் கொள்வித்து அக் கோட்டம் புகுவாராக; தேவராட்டியாகிய சாலினிமேல் தெய்வம் ஏறி அடிபெயர்த்தாடிக் கண்ணகிமுற் சென்று அவனைப் பாராட்டுதலும் எயினர்கள் அத் தெய்வத்தைப் பரவிப்பாடும் இசைப்பாடல்களும் கற்போர்க்குக் கழிபேரின்பஞ் செய்வனவாம்.

கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி
ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப
நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த் தாங்கு
ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை
வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால் 5

வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப்
பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி
தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப
இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும் 10

நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக்
கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன
வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன
மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது
அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும் 15

கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்
மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின்
கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு
இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது 20

சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச்
சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக்
குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி
இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து
வளைவெண் கோடு பறித்து மற்றது 25

முளைவெண் திங்க ளென்னச் சாத்தி
மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி
வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து
உரிவை மேகலை உடீஇப் பரிவொடு 30

கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப்
பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக்
கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும்
பந்துங் கழங்குந் தந்தனர் பரசி 35

வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர
ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும் 40

கோடும் குழலும் பீடுகெழு மணியும்
கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக்
கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி
இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் 45

கணவனோ டிருந்த மணமலி கூந்தலை
இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய
திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப் 50

பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று
அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப
மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் 55

பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூல மேந்தி 60

கரியின் உரிவை போர்த் தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன் 65

தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற் கிளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை 70

ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை
தமர்தொழ வந்த குமரிக் கோலத்து
அமரிளங் குமரியும் அருளினள்
வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே;
- உரைப்பாட்டுமடை.

வேறு

நாகம் நாறு நரந்தம் நிரந்தன 1
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்
பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே;

செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ் 2
கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந்
திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே;

மரவம் பாதிரி புன்னை மணங்கமழ் 3
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே;

வேறு

கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப் 4
பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ
பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த
விற்றொழில் வேடர் குலனே குலனும்;

ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப் 5
பையர வல்குல் தவமென்னை கொல்லோ
பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த
எய்வில் எயினர் குலனே குலனும்;

பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ் 6
ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ
ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த
வேய்வில் எயினர் குலனே குலனும்;

வேறு

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக் 7
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்;

வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக் 8
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்
அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்;

சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச் 9
செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால்
கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்;

வேறு

ஆங்குக், 10
கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த
துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு
அசுரர் வாட அமரர்க் காடிய
குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே;

வேறு

ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப 11
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும்
மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின்
காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும்;

உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலை 12
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்;

கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப் 13
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும்
புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்

வேறு

இளமா எயிற்றி இவைகாண் நின் னையர் 14
தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள்
கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல
நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன;

முருந்தேர் இளநகை காணாய்நின் னையர் 15
கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்
கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன்
புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன;

கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர் 16
அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள்
நயனில் மொழியின் நரைமுது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன;
- துறைப்பாட்டுமடை.

வேறு

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் 17
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்
அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது
மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே;

அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு 18
மணியுரு வினைநின மலரடி தொழுதேம்
கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிது
நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே;

துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய 19
வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்
அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு
படுகடன் இதுவுகு பலிமுக மடையே;

வேறு

வம்பலர் பல்கி வழியும் வளம்பட 20
அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய்
சங்கரி அந்தரி நீலி சடாமுடிச்
செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்;

துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு 21
கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய்
விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்;

பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும் 22
அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்
மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச
உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்;

வேறு

மறைமுது முதல்வன் பின்னர் மேய 23
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்
கட்சியும் கரந்தையும் பாழ்பட
வெட்சி சூடுக விறல்வெய் யோனே.

உரை

1-5: கடுங்கதிர் .............. இருந்தனர்

(இதன்பொருள்.) கடுங்கதிர் திருகலின் - கடிய வெப்பமுடைய கதிரவன் வான்மிசை ஏறுதலாலே கதிர்கள் முறுகிப் பெரிதும் வருத்துதலாலே; நறும்பல் கூந்தல் ஆறு செல் வருத்தத்துச் சீறடி சிவப்ப நறிய பலவகைப்பட்ட கூந்தலையுடைய கண்ணகி அதுகாறும் வழிநடந்த துன்பத்தோடே தன் சீறடிகளும் கொப்புளங் கொண்டு சிவத்தலாலே; குறும்பல் வுயிர்த்து குறியனவாகப் பலகாலும் உயிர்த்து வல்லாநடை யுடையளாதல் கண்டு; வருந்து நோய் தணிய - அவள் வருந்துதற்குக் காரணமான அத்துன்பந் தணிதற்பொருட்டு; ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை இருந்தனர் - முற்கூறப்பட்ட கொற்றவை கோயிலினுட் புகுந்து ஆங்குப் பலரும் தம்மைக் காணவியலாது தனித்ததொரு பக்கத்தே அமர்ந் திளைப்பாறி யிருந்தனராக என்க.

(விளக்கம்) முன்னைக் காதையில் வெங்கதிர் வெம்மையிற் றொடங்கத் தீதியல் கானம் செலவரி தென்றுட்கொண்டு ஐயைதன் கோட்டம் புக்கனர் என்றறிவுறுத்த அடிகளார் ஈண்டு அக் கடுங்கதிர் திருகலோடன்றி அதுகாறும் வழி நடந்தமையால் கண்ணகியின் வருத்தம் இங்ஙனமிருந்ததென ஆங்குச் சென்றிருத்தல் இன்றியமையாமையையும் விதந்தோதுவாராயினர். 3. உயிர்த்து - உயிர்ப்ப, அதுகண்டு.... இருந்தனர் என்க.

4. எய்யாத என்னும் பெயரெச்சத்து ஈறு கெட்டது. பலரும் தம்மைக் காணவொண்ணாத ஒரு மறைவிடத்தே என்க; பலரும் புகுந்தறியாத வோரிடம் என்பது பொருந்தாது. என்னை? அத்தகைய விடமாயின் இவரும் புகுத நினையாராகலின் என்க. இருந்தனர் என்னும் பயனிலைக்கு எழுவாய் அதிகாரத்தாற் பெற்றாம்.

நடுவூர் மன்றத்தே சாலினி தெய்வ மேறப்பெற்று ஆடுதல்

5 - 11: உப்பால் ................ அடிபெயர்த்தாடி

(இதன்பொருள்.) உப்பால் இனி உங்கே எயினர் ஊரிடத்தே; வில் வழங்கு தடக்கை மறக்குடித் தாயத்து - வில்லிடத்தே அம்புகளைத் தொடுத்து மாற்றார்க்கும் வழங்கும் வள்ளன்மை சான்ற பெரிய கையினையுடைய மறவர் தம்குடியிற் பிறந்த உரிமை யுடைமையாலே; பழங்கடன் உற்ற முழங்குவாய்ச் சாலினி - கொற்றவைக்குத் தான் முன்பு நேர்ந்த கடனைச் செலுத்திவந்த முழங்குகின்ற வாயையுடைய சாலினி என்பவள்; தெய்வம் உற்று - ஞெரேலெனத் தெய்வத்தன்மையுற்று; மெய்ம்மயிர் நிறுத்துக் கையெடுத்து ஓச்சி மெய்ம்மயிர் சிலிர்த்து மூரிநிமிர்த்த கைகளை ஒற்றையும் இரட்டையும் ஆக்கி விட்டெறிந்து; கானவர் வியப்ப எயினர்கள் வியப்புறும்படி; முள் இடு வேலி ஊர் எயினர் கூட்டு உண்ணும் முள்ளிட்டுக் கட்டிய வேலியையுடைய அவ்வூரின்கண்ணுள்ள எயினர்கள் தாம் ஆறலைத்துக்கொண்ட பொருளை யெல்லாம் ஒருங்கேகூடிப் பகிர்ந்துண்டற்கிடனான; ஊர் நடு மன்றத்து ஊரினது நடுவணமைந்த மன்றத்தின் கண்ணே; அடி பெயர்த்து ஆடி - தாளத்திற் கொப்பத் தன் அடிகளைப் பெயர்த்திட்டு ஆடி என்க.

(விளக்கம்) ஐயை கோட்டத்தே இங்ஙனம் இருப்ப இனி அவ்வூரின் மற்றோரிடத்தே என்பார் உப்பால் (- உங்கே) என்றவாறு. மறக்குடிப் பிறந்த இவர் ஆறலைத்துப் பிறர்பொருள் கவர்தலன்றி அவர் வழங்குவதும் உண்டு. அஃதென்னையோ எனின் தமது வில்லில் வேண்டுமளவு அம்பு தொடுத்துத் தம் மாற்றார்க்கும் வழங்குவர் என்பார், வழங்குவில் தடக்கை என அவர் கைக்கும் வள்ளன்மையை ஏற்றிக் கூறினர். கொற்றவை ஏறுதற்கியன்ற தகுதி கூறுவார், மறக்குடித் தாயத்துச் சாலினி என்றார். சாலினி - தேவராட்டி. மெய்ம்மயிர் நிறுத்தல் கையெடுத் தோச்சுதல் அடி பெயர்த்தாடுதல் வாய் முழங்குதல் இவை தெய்வமுற்றோர் மெய்ப்பாடுகள்.

தெய்வ மேறப்பெற்ற சாலினி கூற்று

12-19: கல்லென்............கடந்தரும் எனவாங்கு

(இதன்பொருள்.) கல் என் பேரூர்க் கண நிரை சிறந்தன - எயினர்காள்! நுங்கள் மாற்றாருடைய கல்லென முழங்குகின்ற பெரிய ஊர்களிடத்தே அவர்தம் செல்வமாகிய திரண்ட ஆனிரைகள் பெரிதும் சிறப்புறுவனவாயின; வல்வில் எயினர் மன்று பாழ்பட்டன - வலிய விற்படைகளை யுடையீரா யிருந்தும் எயினர்களாகிய நுங்கள் மன்றங்கள் எல்லாம் பாழ்பட்டுக் கிடவா நின்றன; எயினரும் -நந்தம் மெயினர் தாமும்; மறக்குடித் தாயத்து வழி வளம் சுரவாது-தாம் பிறந்த மறக்குடிக்குரிய ஆறெறி சூறையும் ஆகோளுமாகிய வழிகளிலே தமக்கியன்ற வளங்குன்றி; அறக்குடிபோல் அவிந்து அடங்கினர் - அறக்குடிப் பிறந்த மக்கள் போன்று செருக்கழிந்து மறப்பண்பின்றி ஒடுங்கினர்; இவ்வாறு கேடுற்றமைக்குக் காரணமும் உண்டு கண்டீர்; கலையமர் செல்வி - நங் குல தெய்வமாகிய கலைமான் மிசை அமரும் செல்வ மிக்கவளாகிய கொற்றவைதானும்; கடன் உணின் அல்லது - அவள் கொடுத்த வெற்றிக்கு விலையாகிய உயிர்ப்பலியை நீயிர் அவட்குக் கொடுப்ப உண்டாக்காலல்லது; சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள் - நீங்கள் நுமது வில்லினாற் செய்யும் கொடுப்போள் அல்லள் - நீங்கள் நுமது வில்லினாற் செய்யும் போரின்கண் நுமக்கு வெற்றியைக் கொடுப்பாளொருத்தி அல்லள்காண்! மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிராயின் நீங்கள் நாள் முழுதும் கள்ளுண்டு களித்தற்கியன்ற வளமான வாழ்க்கையை விரும்புவீராயின்; கட்டுஉண்மாக்கள் கடம் தரும் என - களவுசெய்து அதன்பயனை உண்ணுகின்ற பாலைநில மாக்களே! நீயிர் அத் தெய்வத்திற்குச் செலுத்தக் கடவ பலியைச் செலுத்துமின்! என்று கூறாநிற்ப என்க.

(விளக்கம்) 12. கல்லென் : ஒலிக்குறிப்பு. ஊர் - கரந்தையார் ஊர். இவர் ஆக் கொள்ளுமிடத்தே அவ்வூரார் கல்லென்னும் ஆரவாரம்பட எழுவர் ஆகலின் அவரூரைக் கல்லென்பேரூர் என்றார். இதனைக் கரந்தை யரவம் எனவே புறப்பொருள் வெண்பாமாலை (22) கூறுவது முணர்க. சிறந்தன என்றது எயினர் அடங்கியதனால் அவை வளமுற்றுப் பெருகிவிட்டன என்பதுபட நின்றது. வல்வில் எயினர் என்றது இகழ்ச்சி. 14. மறக்குடித் தாயத்துவழி வளம் என்றது, ஆறெறி சூறையும் ஆ கோளுமாகிய பொருட்பேறுகளை. 16. கடன்-பராவுக் கடனுமாம். 17. சிலையமர் - விற்போர். 18. மட்டு - கள். கட்டு -களவு செய்து. தரும் - தாரும் என்பதன் விகாரம். இவை முன்னிலைப் புறமொழிகள். ஆங்கு : அசை.

சாலினிக்குக் கொற்றவை கோலம் புனைதல்

20 - 30: இட்டுத்தலை .......... உடீஇ

(இதன்பொருள்.) இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது சுட்டுத்தலை போகாத் தொல்குடிக் குமரியை - தாம் சுட்டிய பகைவர் தலையைத் தாமே அறுத்து வைத்து எண்ணுவதல்லது தம்மாற் சுட்டப்பட்ட தலை தப்பிப் போகாமைக்குக் காரணமான மறப் பண்புமிக்க எயினர்களது பழைய மறக்குடியிலே பிறந்த இளைமையுடைய சாலினிக்கு; குறுநெறிக் கூந்தல் சிறுவெள் அரவின் குருளை நாண் சுற்றி நெடுமுடி கட்டி - அவளது குறிய நெறிப்புடைய கூந்தலைச் சிறிய வெள்ளியாலியன்ற பாம்பின் குருளையாகிய கயிற்றினாலே சுற்றி நெடிய முடியாகக் கைசெய்து கட்டி; இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து வளை வெள் கோடு பறித்து மற்றது - காவற்காடு சூழ்ந்த தமது தோட்டப்பயிரை அழித்த பன்றியினது வளைந்த வெள்ளிய மருப்பைப் பறித்து அதனை; முளை வெள் திங்கள் எனச் சாத்தி - செக்கர் வானத்தே தோன்றுகின்ற வெள்ளிய இளம்பிறை என்னும்படி அணிந்து; மறம் கொள் வயப்புலி வாய் பிளந்து பெற்ற வெண்பல்மாலை நிரை தாலி பூட்டி - தறுகண்மையுடைய வலிய புலியினது வாயைப் பிளந்து அதன் பற்களை உதிர்த்துக் கைக்கொண்ட வெள்ளிய பல் லொழுங்கை நிரைத் தாலியாகக் கட்டி; வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து உரிவை மேகலை உடீஇ - அப் புலியினது வரிகளும் புள்ளிகளும் விரவிய பெரிய புறந்தோலை அவட்கு மேகலையாக வுடுத்தி என்க.

(விளக்கம்) 20-21. தாம் சுட்டிய பகைவர் தலையை என்க. சுட்டுதலாவது இன்னவன் தலையை யான் அறுப்பேன் எனச் சுட்டிச் சூள் கூறுதல். சுட்டியவாறே செய்து முடிப்பதல்லது அத் தலை தப்பிப் போக விடாதவர் என அவர்தம் மறமிகுதி கூறியபடியாம். இனி, தந்தலையைப் போர்க்களத்தே பகைவர் அரிந்து வைக்க வைக்க எண்ணுவதல்லது வாளா இறந்து தந்தலை ஈமத்தே சுட்டழிக்கப்படாமைக்குக் காரணமான மறப்பண்பு மிக்கவர் எனலுமாம். 22. சிறு வெள்ளரவின் குருளை நாண் என்றது பாம்பின் குருளை வடிவாகச் செய்த சிறிய பொன் ஞாண் என்றவாறு. வெள்ளரவின் குருளை என்றமையால் வெண் பொன்னாலியன்ற நாண் எனலுமாம். 24. இளை - காவற்காடு; முள் வேலியுமாம். இழுக்குதல் - அழித்தல். 26. கொற்றவைக்கு முடியில் பிறையும் அரவும் உண்மையின் பன்றிக் கொம்பினைப் பறித்துப் பிறையாக அணிந்தார் என்க. முளை வெண் திங்கள் என்றது இளம்பிறையை. 28. நிரைத்தாலி - ஓர் அணிகலம். 29-30. வான் புறத்து உரிவை பெரிய புறந்தோல். 30. மேகலை - மேலாடை.

இதுவுமது

30 - 35: பரிவொடு ................ பரசி

(இதன்பொருள்.) கரு வில் பரிவொடு வாங்கிக் கையகத்துக் கொடுத்து - புறக்காழ் முதிர்ந்த வலிய வில்லை வருத்தத்தோடு வளைத்து நாண் கொளீ இ அவள் கையிற் கொடுத்து; திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி - முறுக்கேறிய கொம்புகளையுடைய கலைமான் ஊர்தியிலே எழுந்தருளச்செய்து; பாவையும் கிளியும் தூவி அம் சிறைக் கானக்கோழியும் நீல்நிற மஞ்ஞையும் பந்தும் கழங்கும் தந்தனர் பாசி - விளையாட்டுப் பாவையும் கிளியும் தூவியையும் அழகிய சிறகுகளையுமுடைய காட்டுக்கோழியும் நீல நிறமுடைய மயிலும் பந்தும் கழங்குமாகிய இவற்றைக் கையுறையாகக் கொணர்ந்து திருமுன் வைத்துநின்று வழிபாடுசெய்து, பின்னர்; என்க.

(விளக்கம்) கருவில் - வயிரம் பாய்ந்த மூங்கிலாலியன்ற வில். அதன் வலிமை மிகுதியாலே வருந்தி வளைத்து என்றவாறு. பரிவு - வருத்தம். வளைத்து நாண் கொளீஇக் கொடுத்தென்க. திரிதரு கோட்டுக்கலை என்றது ஈண்டுச் சிற்பத்தாலியன்ற கலைமான் வாகனத்தை என்க. பாவை - மதனப்பாவை முதலியன (பொம்மைகள்.) தந்தனர்-தந்து.

வழிபாட்டுப் பொருள்கள்

36 - 44: வண்ணமும் ............ கைதொழு தேத்தி

(இதன்பொருள்.) வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும் - குங்குமக் குழம்பு முதலிய வண்ணங்களையும் பொற் சுண்ணத்தையும் குளிர்ந்த நறிய சந்தனத்தையும்; புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் - அவரை துவரை முதலியவற்றின் அவியலும் எட்கசியும் நிணங்கலந்து துழந்தட்ட சோறும் மலர்களும் அகிற்புகையும் இவற்றோடு கூடிய பிற மணப் பொருள்களும் ஆகியவற்றையும்; ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர - ஏவல் செய்யும் எயினமகளிர் ஏந்திக்கொண்டு பின்னர்ச் செல்லாநிற்ப; ஆறு எறி பறையும் சூறைச்சின்னமும் கோடும் குழலும் பீடுகெழு மணியும் கணங்கொண்டு துவைப்ப - வழிப்போக்கரை அலைத்து அவர் பொருளைக் கவரும்பொழுது கொட்டும் பறையும் களவுகொள்ளும்பொழுது ஊதுகின்ற சின்னமும் துத்தரிக் கொம்பும் குழிக்குழலும் பெருமை பொருந்திய ஒலியையுடைய மணியும் ஆகிய இசைக்கருவிகள் தம்முட் கூடி முழங்காநிற்ப; அணங்கு முன் நிறீஇ - இவ்வனைத்தையும் சாலினியாகிய அக் கொற்றவை திருமுன்னர் நிறுத்த; விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகை பரிக்கலை ஊர்தியை - அச் சாலினிதானும், எயின்மறவர் தாமெய்திய வெற்றிக்குக் கைம்மாறாகக் கொடுக்கும் உயிர்ப்பலியை உண்ணுமிடமாகிய அகன்ற பலிபீடத்தை முற்படத் தொழுது பின்னர்க் கோட்டத்துள் எழுந்தருளியிருக்கும் விரைந்த செலவினையுடைய கலைமானை ஊர்தியாகக்கொண்ட கொற்றவையையும் கைகுவித்துக் கும்பிட்டு வாழ்த்திப் பின்னர்; என்க.

(விளக்கம்) புழுக்கல் - அவரை துவரை முதலியவற்றின் அவியல். நோலை - எட்கசி; ஆவது எள்ளினாற் சமைத்ததொரு தின்பண்டம். விழுக்கு - ஊன். மடை சோறு. புகை - அகிற்புகை. சாந்தம் - சந்தனம். நிறீஇ - நிறுத்த எனத் திரித்துக்கொள்க. அணங்கு - சாலினி; அணங்கேறிய சாலினி எனினுமாம். விலையாகிய பலி என்க. சின்னம் - காளம் என்னும் ஒருவகைத் துளைக்கருவி. நாகசின்னம் என்னும் வழக்குண்மையும் உணர்க. மணி - ஒலிக்கும்; மணி, வழிபாட்டுக் கருவிகளில் இது தெய்வத்திற்குச் சிறப்புடையதாதலின் பீடுகெழு மணி என்றார். பீடு - பெருமை. துவைத்தல் - முழங்குதல். பரி - விரைந்த செலவு. பரிக்கலை என மாறுக. சாலினி கலையூர்தியை ஏத்த என்க.

சாலினியின் மேலுற்ற கொற்றவை கண்ணகியைப் பாராட்டல்

45-50: இணைமலர்............உரைப்ப

(இதன்பொருள்.) தெய்வம் உற்று இணைமலர்ச் சீறடி இணைந்தனள் வருந்திக் கணவனோடு இருந்த மணமலி கூந்தலை - அச் சாலினியின் மேல் கொற்றவையாகிய அத் தெய்வம் ஏறி இணைந்த தாமரை மலர்கள்போன்ற தன் சீறடிகள் வழிநடை வருத்தத்தால் சிவந்து கொப்புளங் கொண்டமையாலே பெரிதும் வருந்தித் தன்னரும் பெறற் கணவனோடு அக் கோயிலில் ஒருபாலிருந்த கண்ணகியை அணுகச் சென்று தன் கையால் அவளை எயினர்க்குச் சுட்டிக்காட்டிக் கூறுபவள்; இவள் கொங்கச் செல்வி குடமலையாட்டி தென் தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்து - நமரங்காள்! உங்கிருக்கும் இவளைக் காண்மின்! இவள் கொங்க நாட்டினை ஆளும் அரசிகாண்! அத்துணையோ? நந் தென்னகத்துச் செந்தமிழ்த் தெய்வஞ் செய்த தவத்தின் பயனாகத் தோன்றியவளும் இவளொருத்தியே காண்! உலகிற்கு ஒருமாமணியாய் ஓங்கிய திருமாமணி என உரைப்ப - தமிழ் செய்த தவப்பயன் இவளென்றலும் சாலாது கண்டீர்! இவள்தான் பல்வேறு மொழிகளையுடைய இப் பேருலகத்தே எந்த நாட்டினும் பெண்பிறந்தோர் எல்லோரும் எந்தக் காலத்தும் தத்தமக்கு அணியாகக் கொள்ளத் தகுந்ததோர் உயரிய அழகிய முழுமாணிக்கம் என்பேன்! என்று நெஞ்சாரப் புகழ்ந்து பாராட்டா நிற்ப; என்க.

(விளக்கம்) இதன்கண் கொற்றவை கண்ணகியின் சிறப்பெல்லாம் கருத்திற்கொண்டு அவள் நலம்பாராட்டினமை நுண்ணிதின் உணர்க. மனையறம்படுத்த காதையில் கண்ணகியை நலம்பாராட்டிய கோவலன் இத்தகைய நலமெல்லாம் பாராட்டினன் அல்லன் ஆகலின் அடிகளார் அவனது உரையைக் குறியாக் கட்டுரை என்றோதினார் என்றாம். ஈண்டு இத் தெய்வம் கூறும் நலம்பாராட்டே குறிக்கொண்ட கட்டுரை ஆவதுமறிக.

இனி, கண்ணகி மக்களுட் டோன்றித் தன் கற்பொழுக்கத்தாலே தெய்வமும் தொழத்தகும் தெய்வமாயுயர்ந்து தன்னை வழிபடுவார்க்கெல்லாம் மழைவளந்தந்து பாதுகாப்பவள் ஆகுவள் எனக் கண்ணகியின் எதிர்கால நிகழ்ச்சியைக் கொற்றவை இவ்வாறு வியந்து கூறினள் என்க.

இனி, இத்தகைய கற்புடையாளைப் பிறநாட்டுக் காப்பியங்களினும் காண்டல் அரிதாகவே இவளைத் தலைவியாகக் கொண்டு காப்பியஞ் செய்த தமிழ்த் தெய்வம் செய்த தவப்பயனே இவள் என்பாள் தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து என்றாள். மற்று இச் சிறப்புஞ் சாலாதென்னும் கருத்தாலே உலகிற்கே ஒருமணியாய் ஓங்கிய திருமணி என்றாள். இஃதென் சொல்லியவாறோ வெனின் இப் பேருலகத்தே மாதராய்ப் பிறந்தவர் எல்லாம் தம்மனத்தே பூண்டு கொள்ளற் கியன்ற ஒரு முழுமாணிக்கமே இவள் என்றவாறு.

கண்ணகி நாணிநிற்றல்

51-53: பேதுறவு ............... நிற்ப

(இதன்பொருள்.) மூதறிவாட்டி பேதுறவு மொழிந்தனள் என்று இங்ஙனம் அச் சாலினி தன்னைச் சுட்டிக் கூறுதல் கேட்ட கண்ணகி அதனைப் பொறாமல் பேரறிவுடைய இத் தேவராட்டி தெய்வ மயக்கத்தாலே ஏதேதோ கூறினள் என்றுட்கொண்டு; அரும் பெறல் கணவன் பெரும்புறத்து ஒடுங்கி - பெறுதற்கரியவனாகிய தன் கணவன் முன்னரே எழுந்து நின்றவனுடைய பெரியபுறத்தே ஒடுங்கி அவளது பேதைமையை எண்ணிப் புதியதொரு புன்னகையோடு நிற்ப என்க.

(விளக்கம்) 51. மூதறிவாட்டி - இகழ்ச்சி. இல்லது புகழ்வாளாக வுட்கொள்ளலின் இஃதிகழ்ச்சிக்குறிப்பாயிற்றென்க. பலரறியத் தன்னைச் சுட்டிப் புகழ்தலின் நாணினள். அவள் பேதைமை கண்டு எள்ளுங்கருத்தால் அவள் நகையை விருந்தின் மூரல் என்றார். கணவன் புறத்தே ஒடுங்கிநிற்ப என்றமையாலே தெய்வம் தன்னைச் சுட்டிக் கூறத் தொடங்கியவுடன் இருவரும் எழுந்து நின்றமையும் பெற்றாம்.

கொற்றவையின் சிறப்பு

54 - 64: மதியின் .......... கொற்றவை

(இதன்பொருள்.) மதியின் வெள் தோடு சூடும் சென்னி - திங்களாகிய வெண்டாமரை மலரின் வெள்ளிய இதழாகிய பிறையை அணிந்த முடியையும்; நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து நெற்றியைக் கிழித்துக் காமவேளின்மேல் சினந்து விழித்த இமைத்தலில்லாத நெருப்புக் கண்ணையும் உடையவளும்; பவள வாய்ச்சி - பவளம் போன்று சிவந்த திருவாயினையும்; தவளவாள் நகைச்சி வெள்ளி ஒளியுடைய பற்களையும் உடையவளும்; நஞ்சு உண்டு கறுத்த கண்டி திருப்பாற் கடலிலே வாசுகி யுமிழ்ந்த நஞ்சை உண்டமையாலே கரிய நிறமுடையதாகிய மிடற்றினை யுடையவளும் வெஞ்சினத்து அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் - வெவ்விய சினத்தையுடைய வாசுகியாகிய பாம்பை நாணாகப் பூட்டி நெடிய மேருமலையை வில்லாக வளைத்தவளும், துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி - நஞ்சு பிலிற்றுந் துளைகளமைந்த பற்களையுடைய பாம்பாகிய கச்சணிந்த முலையினையுடையவளும்; வளையுடைக் கையில் சூலம் ஏந்தி வளையலணிந்த கையினால் சூலத்தை ஏந்தியவளும்; கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய அரியின் உரிவை மேகலையாட்டி யானையின் தோலைப் போர்த்துப் பிறவுயிர்கட்கு வருத்தந் தருவதாகிய அரிமானின் தோலை மேகலையாக வுடுத்தவளும்; சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி இடப்பக்கத்தே சிலம்பும் வலப்பக்கத்தே வீரக்கழலும் ஒலிக்குச் சிறிய அடிகளையும் உடையவளும்; வலம்படு கொற்றத்து வாய்வாள் கொற்றவை மேலான வெற்றியையுடைய வாள்வென்றி வாய்ப்புப் பெற்றவளுமாகிய கொற்றவை என்னும் திருப்பெயரை யுடையவளும் என்க.

(விளக்கம்) 54. இளம்பிறை என்பது தோன்ற மதிசூடும் சென்னி என்னாது மதியின் வேண்டோடு சூடும் சென்னி என்றார். நாள்தோறும் ஒவ்வொன்றாக விரிதலின் மதியாகிய மலர்க்குப் பிறை தோடாயிற்று. தோடு - இதழ். நுதலைத் திறந்து என்னாது நுதல் கிழித்து விழித்த என்றார், அதுதானும் அவள் சினந்துழித் தோன்றியதாகலின் -57. கண்டி - கண்டத்தை யுடையவள். நுதல் விழி- அவள் தீயோரை அழித்தற்றொழிற்கும் கறுத்த கண்டம் அடியாரைப் புரக்குந்தொழிலுக்கும் அறிகுறிகள் ஆகலின் அவற்றை விதந்தெடுத்தோதினர், அவள் இறைவனுக்கு இச்சாசத்தியாகலின் நெடுமலை வளைத்தமை அவள் செயல் என்பதுபட. 58. அரவு....வளைத்தோள் என்றார். 61. அணங்கு ஆகிய - பிறவுயிர்க்குத் துன்பமாகிய. இடப்புறத்துத் திருவடி இறைவியுடையதும் வலப்புறத்துத் திருவடி இறைவனுடையதும் ஆகலின், 63. சிலம்பும் கழலும் புலம்புஞ் சீறடி என்றார். இங்ஙனமே பின்னும் வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச்சிலம் பரற்றும் தகைமையள் என்பர் (கட்டுரை காதை 9-10)

ஈண்டுப் பெண்மைதானும் இக் கொற்றவையின் கூறாகலின் பெண்மையே உயிர்களைப் புரப்பதாயினும் உயிர்கள் முறைபிறழ்ந்துழி அவற்றைச் சினந்து கோறற்கு இங்ஙனம் அஞ்சத்தகுந்த உருவமும் கொள்ளும் என அடிகளார் இவ் வேட்டுவ வரியின்கண் பின்னர்க் கண்ணகியார் மதுரை எரியூட்டுதல் முதலிய கொடுஞ்செயற்கு அமைதி காட்டற்கு முன்மொழிந்து கோடல் என்னும் உத்திவகையாலே இறைவியை இங்ஙனம் இக் கொற்றவை யுருவிற் காட்டுகின்றனர் போலும்.

இதுவுமது

65 - 74: இரண்டு ................ வாய்ந்ததாலெனவே

(இதன்பொருள்.) இரண்டு வேறு உருவில் திரண்ட தோள் அவுணன் தலைமிசை நின்ற தையல் - தலை அஃறிணைக்குரியதாகவும் உடம்பு உயர்திணைக்குரியதாகவும் ஒன்றற்கொன்று பொருந்தாத வடிவத்தையும் திரண்ட தோள்களையும் உடைய மகிடாசுரனுடைய தலையின்மேல் நின்றவளும்; பலர் தொழும் அமரரும் முனிவரும் பிறருமாகிய பலரானும் வணங்கப் பெறுகின்ற, அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி தேவியும் கன்னிகையும் கவுரநிற முடையாளும் போர்க்களத்திற்குரியவளும் சூலப்படை யுடையாளும் நீல நிறத்தை யுடையவளும்; மாலவற்கு இளங்கிளை ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப் பாய்கலைப்பாவை - திருமாலின் தங்கையும் தெய்வங்கட்கெல்லாம் தலைவியானவளும், திருமகளும் வெவ்விய வாளையுடைய பெரிய கையினையும் பாய்கின்ற கலைமானூர்தியையும் உடையவளும்; ஆய் கலைப்பாவை - ஆராய்தற்குரிய கலைத் தெய்வமும்; அருங்கலப்பாவை ஏனைத் தெய்வங்கட்கெல்லாம் அருங்கலமாகியவளும்; தமர் தொழ வந்த குமரிக் கோலத்து அமர் - அவ்விடத்தே எயினராகிய தஞ்சுற்றத்தார் கைகுவித்துத் தொழத் தனது கொற்றவையாகிய தனது அணியை மேற்கொண்டு வந்த கன்னிகையாகிய அந்தச் சாலினியின் கோலத்திற்கேற்ப அவள் மேலமர்ந்த; குமரியும் அக் கொற்றவை தானும்; வரி உறு செய்கை வாய்ந்தது என இச் சாலினி கொண்ட கோலம் வாய்ப்புடைத்தென்று மகிழ்ந்து; அருளினள் அவ் வெயினர்க்கெல்லாம் திருவருள் சுரந்தனள்; என்க.

(விளக்கம்) இரண்டு வேறு உருவின் அவுணன் - தலை எருமைக் கடாவின் தலையாகவும் உடம்பு அசுரன் உடம்புமாய் அமைந்த வடிவினையுடையவன்; அவன், மகிடாசுரன் என்க.

65 - 6. அவுணன் தலையைத் துணித்து அதன்மிசை நின்ற தையல் என்றவாறு. 68. மாலுக்கு இளங்கிளை என்றது அவன் தங்கை என்றவாறு.

72. தமர் தொழவந்த குமரி என்றது சாலினியை. அவள் கோலத்து அமர் இளங்குமரி என்றது கொற்றவையை. இவள் எற்றைக்கும் குமரியாதலின் இளங்குமரி என்றார். வரி - வரிக்கூத்திற்கியன்ற கோலம். இதுகாறும் கூறியவை உரைப்பாட்டு மடை - அஃதாவது உரை நடைபோன்ற பாட்டு, அதனை இடையிலே மடுத்தலாவது இடையிடையே வைத்தல். இங்ஙனம் உரைப்பாட்டினை வைத்தல் நாடகத் தமிழ்க்குரியதொரு செய்கை என்க.

முன்றிற் சிறப்பு

அஃதாவது கொற்றவை கோயிலின் முன்றிலிலே வரிக்கூத்தாடத் தொடங்கும் எயினர்கள் முற்பட அக் கோயிலினது முற்றத்தின் சிறப்பைப் பாடுதல் என்க.

1 : நாகம் ........... முன்றிலே

(இதன்பொருள்.) கண்ணுதல் பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே -நெற்றிக் கண்ணனாகிய இறைவனுடைய திருவுடம்பிலே ஒரு பாதியை ஆளுகின்ற சிறப்பினையுடைய எங்கள் கொற்றவை பலி கொள்ளுதற்குரிய இத் திருக்கோயிலினது முற்றத்திலே; எங்கணும் - யாண்டும்; நாறும் மணம் பரப்புகின்ற; நாகம் நரந்தம் நிரந்தன - சுரபுன்னையும் நரந்தையும் நிரல்பட மலர்ந்தன; ஆவும் ஆரமும் ஓங்கின; ஆச்சா மரமும் சந்தன மரமும் வானுற வளர்ந்து நின்றன; சேவும் மாவும் செறிந்தன -சேமரமும் மாமரமும் செறிந்து நின்று மலர்ந்தன.

(விளக்கம்) இவ் வன்பாலையிலே இவை இங்ஙனம் வளம்பெற்று மலர்வதற்குக் காரணம் அவளது அருளன்றிப் பிறிதில்லை என்பது குறிப்பெச்சம். இவை பின்வருவனவற்றிற்கும் ஓக்கும்.

2 : செம்பொன் ........... முன்றிலே

(இதன்பொருள்.) இளந் திங்கள் வாழ்சடையாள் திரு மூன்றிலே இளம்பிறை என்றென்றும் இளம்பிறையாகவே நிலைபெற்று வாழுதற்கிடமான அழகிய சடையினையுடைய நங்கள் கொற்றவையினது அழகிய முற்றத்தே; வேங்கை செம்பொன் சொரிந்தன-வேங்கைமரங்கள் தாமும் அவட்குக் காணிக்கையாகச் செவ்விய பொன்களையே பூத்துச் சொரிந்தன; நல் இலவங்கள் கொம்பர் சேயிதழ் குவிந்தன- அழகிய இலவமரங்கள் தாமும் தம் கொம்புகளாகிய கைகளாலே சொரிந்த காணிக்கைகளாகிய சிவந்த மலர்கள் யாண்டும் குவிந்து கிடந்தன; புன்கு - புன்குகள்; பொங்கர் தம் கொம்புகளாகிய கைகளாலே எங்கள் கொற்றவைக்கு; பொரி சிந்தின - தம் மலர்களாகிய வெள்ளிய பொரிகளைச் சொரியாநின்றன; என்க.

(விளக்கம்) செம்பொன்: குறிப்புவமை, பொரியும் அது. வேங்கை முதலியன கொற்றவைக்குக் கையுறையாகச் செம்பொன் முதலியவற்றைச் சொரிந்து குவித்துச் சிந்தின என்க. குவித்தன, குவிந்தன என மெலிந்தது. பொங்கர்: கொம்பு. பொங்கர் வெண்பொரி - பொதுளிய (பருத்த) வெண்பொரி எனினுமாம்.

3 : மரவம்...........முன்றிலே

(இதன்பொருள்.) திருவ மாற்கு இளையாள் திருமுன்றிலே - திருமாலின் தங்கையாகிய நங்கள் கொற்றவையினது அழகிய முற்றத்திலே; மலர்ந்தன மரவம் பாதிரி புன்னை குரவம் கோங்கம் மணம்கமழ் கொம்பர் மேல் - மலர்ந்து நிற்பனவாகிய வெண்கடம்பும் பாதிரியும் சுரபுன்னையும் குராவும் கோங்குமாகிய இவையிற்றின் நறுமணங்கமழுகின்ற கொம்புகளிடத்தே; வண்டினம் உடன் ஆர்த்து யாழ் அரவம் செய்யும் - வண்டுகள் தம் பெடையோடு ஒருசேர முரன்று யாழினது இசைபோலப் பாடா நிற்கும்; என்க.

(விளக்கம்) திருவமால் என்புழி அகரம் இடைச்சொல். மலர்ந்தனவாகிய மரவ முதலியவற்றின் மணங்கமழ் கொம்பர் மேல் ஆர்த்து யாழரவஞ் செய்யும் எனக் கூட்டுக.

இம்மூன்றும் முன்றிற் சிறப்பு என்னும் ஒருபொருண்மேலடுக்கி வந்த வரிப்பாடல்கள்.

மறங்கடை கூட்டிய குடிநிலை

அஃதாவது வெற்றித் திருவாகிய கொற்றவையின் கோலங்கோடற்கு உரிமையுடைத்தாகிய மறக்குடியின் சிறப்புரைத்தல் என்க.

4 : கொற்றவை .......... குலனே குலனும்

(இதன்பொருள்.) கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இப் பொன்தொடி மாதர் தவம் என்னை கொல்லோ எம் குல தெய்வமாகிய கொற்றவை அணியாகக் கொண்டவற்றை யெல்லாம் அணிந்துகொண்டு அக் கொற்றவைபோலவே ஈண்டு நிற்கின்ற இச் சாலினிதான் இப்பேறு பெறுதற்கு அவள் முற்பிறப்பிலே செய்த நோன்புதான் எத்தகைய சிறப்புடைத்தோ? பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த வில் தொழில் வேடர் குலனே குலனும் - பொன் வளையலையுடைய இச் சாலினி பிறந்த மறக்குடியிற் பிறந்த வில்லேருழவராகிய இம் மறவர்தங்குலமே இவ்வுலகிற் றலைசிறந்த குலமாகும்; என்றார் என்க.

5 : ஐயை .............. குலனும்

(இதன்பொருள்.) ஐயை திருவின் அணிகொண்டு நின்ற இப் பை அரவு அல்குல் தவம் என்னை கொல்லோ? எங்குல முதல்வியாகிய இந்தக் கொற்றவையினது அழகிய அணிகலன்களை அணிந்துகொண்டு நின்ற அரவினது படம்போன்ற அல்குலையுடைய இச் சாலினி இப்பேறு பெறுதற்கு அவள் முற்பிறப்பிலே செய்த நோன்புதான் எத்தகைய சிறப்புடையதோ? பையரவு அல்குல் பிறந்த குடிப்பிறந்த எய் வில் எயினர் குலனே குலனும் - இவள் பிறந்த குடியிலே பிறந்த எய்யும் வில்லையுடைய எயினர் குலமே உலகின்கட் சிறந்த குலமாம் என்றார்; என்க.

6 : பாய்கலை ............. குலனும்

(இதன்பொருள்.) பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்ற இவ் ஆய்தொடி நல்லாள் தவம் என்னை கொல்லோ விரைந்து செல்லும் கலைமானை ஊர்தியாகவுடைய எங்கள் கொற்றவை அணியும் சிறப்புடைய அணிகலன்களை யணிந்துகொண்டு அவள்போல நிற்கின்ற அழகிய வளையலை யணிந்த இச் சாலினிதானும் இப்பேறுபெறுதற்கு முற்பிறப்பிலே எத்தகைய கடிய நோன்பு செய்தனளோ? ஆய் தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த வேய் வில் எயினர் குலனே குலனும் - அவள் பிறந்த குடியிலே பிறந்த மூங்கிலாலியன்ற வில்லையுடைய இவ் வெயினர் குலமே இம் மாயிரு ஞாலத்திற் றலையாய குலமாம், இதில் ஐயமில்லை! என்றார்; என்க.

(விளக்கம்) இவை மூன்றும் ஒருபொருண்மேலடுக்கி வந்தன. இவை, கூத்தாடுகின்ற மறவர்கள் தங்குடிச் சிறப்புக் கூறுமாற்றால் குறிப்பாகக் கொற்றவையையே புகழ்ந்தவாறாம். இவற்றை வள்ளிக் கூத்தென்பாருமுளர். அவர், இதற்கு,

மண்டமர் அட்ட மறவர் குழாத்திடைக்
கண்ட முருகனுங் கண்களித்தான் - பண்டே
குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப்
பிறமகள் நோற்றாள் பெரிது

என்னும் வெண்பாவை எடுத்துக் காட்டுவர்.

இனி இவற்றை வெட்சித்திணையின்கண்,

மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே

எனவரும் நூற்பாவினால் இரண்டு துறைகளையும் இணைத்து அடிகளார் இங்ஙனம் ஓதினர் எனக் கோடலே சிறப்புடைத்தாம். இதன்கண் மறக்குடிச்சிறப்பும் அக் குடியின் தெய்வமாகிய கொற்றவையின் சிறப்பும் இணைந்துவருதலு முணர்க. இதனை வள்ளிக்கூத் தென்னல் ஈண்டைக்கு யாதுமியைபின்மையின் பொருந்தாதென்க குடிநிலை என்றதனால் இஃது ஆடவர்க்கும் மகளிர்க்கும் பொதுவாதலும் உணர்க. தொல்- இளம்பூரணம். புறத்திணையியல் 62 ஆம் நூற்பாவுரையினையும் நோக்குக.

1 - பொற்றொடி மாதர் - ஈண்டுச் சாலினி.
2 - ஐயை - முதல்வி. பையரவல்குல்: அன்மொழித்தொகை.
3 - பாய்கலைப்பாவை - கொற்றவை. வேய் - மூங்கில்.

கொற்றவை நிலை

7 : ஆனைத்தோல் ............ நிற்பாய்

(இதன்பொருள்.) வானோர் வணங்க மறைமேல் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கு இன்றியே நிற்பாய் - அமரர்கள் வணங்கா நிற்ப; நான்கு மறைகட்கும் அறிய வொண்ணாது மறைந்த பொருளாகி மெய்யுணர்வில் தோன்றும் பொருளாகி அசைதலின்றி நிலைத்து நிற்கும் சிறப்புடைய நீ; புலியின் உரி உடுத்து ஆனைத்தோல் போர்த்து கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால் புலியினது தோலை அரைக்கண் உடுத்துக் காட்டகத்தே எருமைக்கடாவினது கரிய தலையின்மேல் நின்றனை. இஃதென்ன மாயமோ? அறிகின்றிலேம் என்றார் என்க.

8 : வரிவளை ............... நிற்பாய்

(இதன்பொருள்.) அரி அரன் பூமேலோன் அகமலர் மேல் என்னும் விரிகதிர் அம் சோதி விளக்கு ஆகி நிற்பாய் - நீதானும் திருமாலும் சிவபெருமானும் தாமரை மலர் மேலுறையும் பிரமனும் ஆகிய முப்பெருங் கடவுளர் தம் நெஞ்சத்தாமரையின் மேலே எஞ்ஞான்றும் நிலைபெறுகின்ற விரிந்த கதிர்களையுடைய அழகிய ஒளியையுடைய அறிவு விளக்காக நிற்குமியல்பினை யுடையை யல்லையோ அத்தகையோய்; வரிவளைக்கை வாள் ஏந்தி மாமயிடன் செற்றுக் கரிய திரிகோட்டுக் கலைமிசை மேல் நின்றாயால் - வரிகளையுடைய வளையலணிந்த பெண்ணுருவமுடையையாகி அக் கையின்கண் வாட் படையையும் ஏந்தி நின்று பொருது பெரிய மகிடாசுரனையும் கொன்றொழித்துக் கரிய முறுக்கேறிய கொம்பையுடைய கலைமான்மீது வீற்றிருந்தருள்கின்றனை இஃதென்ன மாயமோ? என்றார் என்க.

9 : சங்கமும் ........... நிற்பாய்

(இதன்பொருள்.) முடிக்குக் கங்கை அணிந்த கண் நுதலோன் பாகத்து மங்கை உருவாய் விடைமேல் மறை ஏத்தவே நிற்பாய் - தனது சடை முடியின்மிசைக் கங்கையை அணிந்துள்ள நெருப்புக் கண்ணையுடைய நெற்றியை உடையவனாகிய இறைவனுடைய ஒரு பாதித் திருமேனியில் பெண்ணுருவமாகி மறைகள் வழிபாடு செய்தற்பொருட்டு அவை புகழ்ந்து தொழுமாறு அருட்டிருமேனி கொண்டு எருதின்மேல் நிற்கும் நீ; சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி செங்கண் சின அரிமான்மேல் நின்றாயால் - இப்பொழுது சங்கு சக்கரம் என்னுமிவற்றை நினது செந்தாமரை மலர் போன்ற அழகிய கைகளிலே ஏந்திக்கொண்டு சினத்தாலே சிவந்த கண்களையுடைய சிங்கத்தின் மேலே நின்றனை இஃதென்ன மாயமோ? என்றார் என்க.

(விளக்கம்) இம்மூன்றும் மருட்கை என்னும் ஒருபொருண்மேல் அடுக்கி வந்தன. 7. இதன்கண் அவள் அருவநிலையையும் உருவநிலையையும் பற்றி மருட்கை பிறந்தபடியாம். மறைகட்கும் அறியப்படாமையால் மறைமேன் மறையாகி நின்றாய் என்றும், மெய்யுணர்விற்குப் புலப்படுதல் பற்றி ஞானக் கொழுந்தாய் நின்றாய் என்றும், யாண்டும் வியாபகமாய் நிற்றல்பற்றி நடுக்கின்றியே நிற்பாய் என்றும் கூறியவாறாம். இஃது அருவத்திருமேனி - இத்தகையவள் (ஏகதேசமாய்) ஓரிடம்பற்றி ஆனைத்தோல் போர்த்துப் புலித்தோல் உடுத்து எருமைத் தலைமேல் நிற்றல் வியத்தற் குரித்தாயிற்று என்க. ஏனையவற்றிற்கும் இங்ஙனமே கூறிக்கொள்க.

8. வரிவளைக்கை ஏந்தத்தகாத வானை ஏந்தி என்பது கருத்து. மயிடன் - மகிடாசுரன். மா - கருமையுமாம்.

அன்பராயினார் நினைந்த வடிவத்தே அவர்தம் நெஞ்சத்தே தோன்றும் அருவுருவத் திருமேனியை, அரி யான் பூமேலோன் அகமலர் மேன் மன்னும் விரிகதிர் அஞ்சோதி விளக்கு என்று விதந்தார். இதன்கண் அவர் செய்யும் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலும் நின்னருள் கொண்டே அவரால் நிகழ்த்தப்படுகின்றன என்பது குறிப்புப் பொருள் என்க.

9. சினச் செங்கண் எனவும் கண்ணுதலோன் பாகத்து விடைமேல் நின்றாயால் எனவும் பிரித்துக் கூட்டிக் கொள்க. இனி அரிமான் விடை எனக் கோடலுமாம்; இதற்கு விடை என்றது ஊர்தி என்னும் பொருட்டு. அன்றியும், குரங்கின் ஏற்றினை... கடியலாகா கடனறிந்தோர்க்கே (தொல்.மரபியல் -68) என்புழி கடியலாகா என்றதனால் அரிமானின் ஆண் என்பதுணர்த்தற்கு விடை என்றவாறுமாம். என்னை? வெருக்கு விடையன்ன வெருணோக்குக் கயந்தலை (புறம். 324) என்றாற்போல என்க. கண்ணுதலோன் பாகத்துமங்கை யுருவாய் மறையேத்த வேநிற்பாய் என்றது உருவத்திருமேனியை. இவை மூன்றும் முன்னிலைப் பரவல்.

வென்றிக் கூத்து

10 : ஆங்கு ................ கூத்துன்படுமே

(இதன்பொருள்.) ஆங்கு - அன்பராயினாரைத் காத்தற் பொருட்டு உருவத் திருமேனி கொண்டு சங்கமும் சக்கரமும் தனது தாமரைக் கையின் ஏந்தியவிடத்தே; கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்தமலர் துன்று பிணையல் தோள்மேல் இட்டு - கொன்றை மலரையும் துளபத்தையும் கலந்து தொடுக்கப்பட்ட மலர் செறிந்த மாலையைத் தனது திருத்தோளிலே அணிந்து கொண்டு; ஆங்கு - அசுரர் தம் போர்முனைக் கண்ணே; அசுரர் வாட - தீவினையே நயந்து செய்யும் அசுரர்கள் வாடும்படி; அமரர்க்கு ஆடிய குமரிக்கோலத்து - அமரரைப் பாதுகாத்தற் பொருட்டுத் தான் மேற்கொண்ட அக் குமரிக் கோலத்தோடே; கூத்துள்படும் - வாளமலை முதலிய வென்றிக் கூத்தினை ஆடத் தொடங்குவாள் என்றார் என்க.

(விளக்கம்) ஆங்கு என்றது - முன்னர் (9) சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திய பொழுது என்றவாறு. இக் கோலம் அசுரரை அழித்தற்கும் அமரரைக் காத்தற்கும் ஆகக்கொண்ட கோலமாதலின் அழித்தற்குரிய கடவுளாகிய அரனுக்குரிய கொன்றையையும் காத்தற் கடவுளாகிய திருமாலுக்குரிய துளபத்தையும் குழுமத் தொடுத்த பிணையல் தோள் மேலிடல் வேண்டிற்று என்க. அமரர்க்கு ஆடிய குமரிக்கோலத்து - அமரர் பொருட்டு மேற்கொண்ட குமரிக்கோலத்தோடே. கோலமாடுதல் - கோலம் கோடல். இக் கருத்துணராதார் ஈண்டுக் கூறும் உரை போலி.

கொற்றவை ஆடிய கூத்தின் சிறப்பு

11 : ஆய்பொன் ................... காட்டும் போலும்

(இதன்பொருள்.) நங்கை - நந்தம் கொற்றவை நங்கைதான் கூத்தியற்றுங் காலத்தே; ஆய் பொன் அரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப அழகிய பொன்னாலியன்ற பரல்கள் பெய்யப்பட்ட சிலம்பும் சூடகமும் தாளத்திற்கியையப் பலகாலும் முரலா நிற்பவும்; மாயம் செய் வாள் அவுணர் வீழ - வஞ்சனையாலே போர்க்களத்தே எதிர்த்தலாற்றாமையாலே அசுரர்கள் வஞ்சனையாலே வெல்லக் கருதித் தன்மேல் பாம்பும் தேளும் இன்னோரன்ன பிறவுமாய் உருக்கொண்டு வந்துழி அவரெல்லாம் நசுங்கி மாயும்படி; மரக்கால் மேல் வாள் அமலை ஆடும் போலும் - மரத்தாலியன்ற காலின் மேலே நின்று வாளேந்தி நின்று ஆடா நிற்கும்; மாயம் செய் வாள் அவுணர் வீழ் நங்கை மரக்கால் மேல் வாளமலை ஆடுமாயின்; நங்கை இவ்வண்ணம் வாட்கூத்தை ஆடுமிடத்தே; காயா மலர் மேனியேத்தி வானோர் கைபெய் மலர் மாரிகாட்டும் போலும் காயாம் பூப்போன்ற அவளுடைய அவ்வருட்டிரு மேனியைப் புகழ்ந்து அமரர்கள் தம் கையாலே அத் திருமேனிமிசைச் சொரியும் கற்பக மலர்கள் காண்போர்க்கு மலர் மழை பெய்தல்போன்று தோன்றும் என்றார் என்க.

(விளக்கம்) ஆய் - ஆராய்ந்தெடுத்த பொன் எனினுமாம். அரிபரல். சூடகம் -வளை. ஆர்ப்ப ஆர்ப்ப என்பது மிகுதிபற்றிய அடுக்கு. வாளவுணர் என்றது இகழ்ச்சி. வீழ என்றது மரக்காலின் மிதியுண்டு அழிய என்றவாறு. வாள் - அமலை - வாள்மறவர் வெற்றியாற் செருக்கி வாளைச் சுழற்றி ஆடும் கூத்து; இது. அமலை - அமலுதல் (நெருங்குதலாகலின்) பகைவரை நெருங்கி நின்றாடுங் கூத்திற்கும் பெயராயிற்று. ஆசிரியர் தொல்காப்பியனாரும் பட்டவேந்தனை அட்டவேந்தன் வாளோர் ஆடும் அமலையும் (தொல் . புறத்திணையியல் -17) என்றோதுதலுமுணர்க. பகைவர் அழிவுகண்டு மகிழ்ந்த அமரர் அவள் காயாம்பூ மேனியை ஏத்தி மலர் சொரிவர் என்க. அம் மலரின் மிகுதி கூறுவார் மாரி காட்டும் என்றார். ஈரிடத்தும் போலும் - ஒப்பில்போலி. மேல் வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.

12 : உட்குடை .................... போலும்

(இதன்பொருள்.) உட்கு உடைச் சீறூர் ஒரு மகன் ஆன்நிரை கொள்ள உற்ற காலை - பகைவர்க்கு அச்சந் தருதலையுடைய கரந்தையாருடைய சீறூரினிடத்தே சென்று, ஒப்பற்ற மறவன் ஒருவன் அவர்தம் ஆத்திரளைக் கைப்பற்றத் தலைப்பட்ட விடத்தே; வெட்சிமலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டும் போலும் - அவனுக்கு அப் போர்க்குரிய வெட்சி மலரைச் சூட்டுதற்கு வெள்ளிய வாளோர் உழத்தியாகிய எம்மிறைவியினது திருவருள் தானும் இன்றியமையாது வேண்டப்படும்; வெட்சி மலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டின் - அங்ஙனம் இன்றியமையாத அவளருள் வேண்டப்பட்டபொழுது; வேற்றூர்க் கட்சியில் காரி கடிய குரல் இசைத்துக் காட்டும் போலும் - பகைவர் ஊரைச் சூழ்ந்துள்ள காட்டிடத்தே கருங்குருவி என்னும் பறவை தனது கடிய குரலாலே கலுழ்ந்து அவர்க்குப் பின்வரும் கேட்டினை அறிவிக்கும்; இது தேற்றம் என்றார் என்க.

(விளக்கம்) உட்கு - அச்சம். சீறூர் - ஈண்டுக் கரந்தையார் ஊர். இது - வெட்சி.

(வெட்சிதானே) வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்

என வரும் தொல்காப்பியத்தானும் (புறத்திணை 1-2;) உணர்க. ஒருமகன் - ஒப்பற்ற போர்மறவன். வாள் ஏருழத்தி எனற்பாலது வாளுழத்தி என நின்றது விகாரம். உழத்தியும் வேண்டும் என்றது அனளருளும் இன்றியமையாது வேண்டப்படும் என்பதுபட நின்றது. வேண்டின் என்றது வேண்டி அவளருள் பெற்றபொழுது என்பதுபட நின்றது. காரி - கருங்குருவி. கடிய குரல் - தீநிமித்தம் தோன்ற இசைக்கும் குரல். வெட்சி மறவர் தன்னை வணங்கி ஆகோள் கருதிய வழி கொற்றவை அம் மறவர்க்கு முன்சென்று வெற்றியும் தருவாள் ஆதலின் கரந்தையார் ஊரில் அவர்க்குத் தீநிமித்தமாகக் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் என்றவாறு. இதனை,

நெடிபடு கானத்து நீள்வேன் மறவர்
அடிபடுத் தாரதர் செல்வான் - துடிபடுத்து
வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுட் காரி கலுழ்ம் (வெட்சி 2)

எனவும்,

ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளி மலிபடைக் கொற்றவை - மீளி
அரண்முருங்க ஆகோள் கருதின் அடையார்
முரண்முருங்கத் தான்முந் துறும் (வெட்சி 9)

எனவும், வரும் புறப்பொருள் வெண்பாமாலையானும் உணர்க.

13 : கள்விலையாட்டி ............ போலும்

(இதன்பொருள்.) கள்விலையாட்டி மறுப்பப் பொறாமறவன் - கள் விற்குமவள் இவன் பழங்கடன் கொடாமையாலே கள் கொடுக்க மறுத்தாளாக, அதனைப் பொறாத அம் மறவன்றான்; புள்ளும் வழிப்படரக் கைவில் ஏந்திப் புல்லார் நிரை கருதிப் போகும் போலும் - கழுகும் பருந்தும் ஆகிய பறவைகள் தன்னைப் பின்பற்றிப் பறந்து வாரா நிற்பத் தனது கைக்கியைந்த வலிய வில்லை ஏந்திப் பகைவருடைய ஆனிரைகோடலைக் கருதிச் செல்லா நிற்பன்; புள்ளும் வழிப்படரப் போகுங்காலை - அங்ஙனம் அவன்றான் ஆகோள் கருதிப் போகும்பொழுது; கொற்றவை கொள்ளும் கொடியெடுத்துக் கொடுமரம் முன் செல்லும் போலும் - நங்கள் கொற்றவைதானும் தான் கைக்கொள்ளும் ஆளிமணிக் கொடியை யுயர்த்து அம் மறவன் வில்லின் முன்னே சென்று அவனுக்கு வெற்றி தருவாள் அன்றோ! என்றார்; என்க.

(விளக்கம்) இதனோடு அறாஅ நிலைச்சாடி ஆடுறு தேறல் மறாஅன் மழைத்தடங் கண்ணி - பொறாஅன், கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை, நெடுங்கடைய நேரார் நிரை எனவரும் புறப்பொருள் வெண்பாமாலையையும் (2) நோக்குக. இதனை - மன்னுறு தொழில் தன்னுறு தொழில் என்னும் இருவகையினுள் தன்னுறு தொழில் என்பர்.

புள்ளும் வழிப்படர என்பதற்குப் புள்நிமித்தமும் தன் கருத்திற் கேற்பச் சேரலின் என்பர் அடியார்க்கு நல்லார். தன்னுறு தொழிற்கு அவ்வுரை பொருந்தாது. இனி, யாம் கூறியாங்கே கொடுவி லிட னேந்திப் பாற்றினம் பின்படர.... ஏகினார் எனவரும் புறப்பொருள் வெண்பா மாலையினும் கூறியதுணர்க. (4) புல்லார் - பகைவர்; கரந்தையார்; கொடுமரம் - வில்.

கொடை

14 : இளமா ......... நிறைந்தன

(இதன்பொருள்.) இளமா எயிற்றி - மாமை நிறத்தையுடைய எயினர் மகளே! நின் ஐயர் தலைநாளை வேட்டத்துத் தந்த ஆனிரைகள் நின் தமையன்மார் நெருநற் சென்று கவர்ந்து கொணர்ந்த ஆத்திரள்கள்; கொல்லன் துடியன் கொளை புணர்சீர்வல்ல நல் யாழ்ப்பாணர்தம் முன்றில் நிறைந்தன - வேல் வடித்துக் கொடுத்த கொல்லனும் துடி கொட்டும் புலையனும் பாடவும் புணர்க்கவும் அடைக்கவும் வல்ல யாழ்ப்பாணரும் என்னும் இவரது முற்றங்களிலே நிறைந்து நின்றன; இவை காண் - இவற்றையெல்லாம் நீ காண்பாயாக! என்க.

15 : முருந்தேர் ....... நிறைந்தன

(இதன்பொருள்.) முருந்து ஏர் இளநகை - முருந்து போலும் முற்றாத பற்களையுடையோய்; நின் ஐயர் கரந்தை அலறக் கவர்ந்த இன நிரைகள் - நின் தமையன்மார் நெருநல் கரந்தையார் அலறும்படி கவர்ந்து கொணர்ந்த ஆனினங்கள்தாம்; கள்விலையாட்டி நல்வேய் தெரிகானவன் புள்வாய்ப்புச் சொன்ன கணி முன்றில் நிறைந்தன - கள் விற்குமவளும் நல்ல ஒற்றுத் தொழில் தெரிந்த மறவனும் புள் நிமித்தம் தெரிந்து கூறும் கணிவனும்; என்று கூறப்பட்ட இவர்களுடைய முற்றங்களிலே நிறைந்துள்ளன காணாய் - நீ இவற்றைக் காண்பாயாக ! என்க.

16 : கயமலர் ............ நிறைந்தன

(இதன்பொருள்.) கயமலர் உண் கண்ணாய் - பெரிய நீல மலர் போலும் அழகிய மையுண்ட கண்ணையுடையோய் ; நின் ஐயர் - நின் தமையன்மார்; அயலூர் அலற எறிந்த நல் ஆன் நிரைகள் - தமது பகைவரூரின்கண் வாழ்வோர் அஞ்சி அலறும்படி நெருநல் கவர்ந்து கொணர்ந்த ஆத்திரள்கள் தாம்; நயன் இல் மொழியின் - நரை முதுதாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன- நயமில்லாத மொழியையும் நரைத்து முதிர்ந்த தாடியையுமுடைய முதிய எயினரும் எயிற்றியரும் ஆகிய இவர்களுடைய முற்றங்களிலே நிறைந்து நின்றன; காணாய் - அவற்றை நீ காண்பாயாக! என்க.

(விளக்கம்) 14. இளமா - மாந்தளிர். மாந்தளிர் போன்ற நிறமுடைய எயிற்றி என்றவாறு. ஐயர் - தமையன்மார். தலைநாள் முதனாள். கொளை - பண். 15. முருந்து - மயிலிறகின் அடிப்பகுதி. ஏர்: உவமவுருபு. கரந்தை - கரந்தை சூடிய மறவர். வேய் ஒற்று. புள் வாய்ப்பு - நன்னிமித்தம், கணி - கணிவன்: (சோதிடன்). 16. கய - பெருமை; உரிச்சொல்; உண்கண் - கண்டோர் மனமுண்ணும் கண்ணுமாம்.

இவை மூன்றும் வஞ்சித்திணையின் துறைபற்றி வந்தன. ஆதலால் இவற்றைத் துறைப்பாட்டுமடை என்பர். அஃதாவது துறைப் பாட்டுகளை இடையே மடுத்தல் என்க. இம் மூன்றும் வெட்சித்திணைக் கண் கொடை என்னும் ஒருதுறைப் பொண்மேல் அடுக்கி வந்தன.

பலிக்கொடை

17 : சுடரொடு ............... அமரரும்

(இதன்பொருள்.) சுடரொடு திரிதரும் முனிவரும் அமரரும் இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம் - கதிரவன் வெப்பம் உலகத் துயிர்களை - வருத்தாவண்ணம் அதனைத் தாமேற்று அக்கதிரவனோடு சுழன்று திரிகின்ற முனிவரும் தேவர்களும் எய்தும் இடர்கள் தீரும்படி திருவருள் வழங்குகின்ற நின்னுடைய திருவடிகளை ஆற்றவும் எளியேமாகிய யாங்களும் கைகுவித்துத் தொழுகின்றேம்; அடல் வலி எயினர் நின் அடிதொடு - கொலையையும் வலிமையையும் உடைய எயினரேமாகிய அடியேங்கள் நின்னுடைய திருவடியை நெஞ்சத்தாலே நினைந்து செய்த; கடன் நிணன் உகு குருதி கொள் - பராவுக் கடனாகிய பலிப் பொருள் ஆகிய எமது மிடற்றினின்றும் சொரிகின்ற குருதியாகிய இப் பலியினை ஏற்றருள்வாயாக; இது விறல் தரு விலை - மற்றிது தானும் நீ எமக்கருளிய வெற்றிக்கு யாங்கள் கொடுக்கின்ற விலையேகாண்; என்க.

18 : அணிமுடி ..................... விலையே

(இதன்பொருள்.) அமரர் தம் அணிமுடி அரசொடு பணிதரும் மணி உருவினை நின் அமரர்கள் தாம் அழகிய முடியையுடைய தங்கள் கோமானோடு வந்து வணங்கும் சிறப்புடைய நீலமணி போலும் நிறத்தினையுடையோய் நின்னுடைய; மலர் அடி தொழுதேம் -உலகமெலாம் மலர்ந்தருள்கின்ற திருவடிகளை ஆற்றவும் எளியேமாகிய எயினரேமாகிய அடியேம் கைகுவித்துத் தெழுதேம்; கணநிரை பெறுவிறல் எயின் இடு கடன் பகைவரது ஆனிரையைக் கைப்பற்றிக் கோடற்குக் காரணமான வெற்றிக்கு விலையாகச் செலுத்துகின்ற பராவுக்கடனாகிய நிணன் உகு குருதி கொள் - எமது மிடற்றினின்றும் சொரிகின்ற இக் குருதிப்பலியை ஏற்றுக்கொண்டருள்க; இது அடு நிகர் விலையே - இப் பலிதானும் யாங்கள் எம் பகைவரைக் கொல்லுதற்குக் காரணமான நினதருட்குச் சமமான விலையாகும்; என்க.

19 : துடி ............. மடையே

(இதன்பொருள்.) குமரி - மூவாநலமுடைய எங்களிறைவியே! துடியொடு சிறுபறை வயிரொடு வெடிபடத் துவை செய வருபவர் - துடியும் சிறுபறையும் கொம்பும் செவிகள் பிளந்து செவிபடுமாறு முழங்கும்படி வருபவரும்; அரை இருள் அடுபுலி அனையவர் - நள்ளிரவிலே வேட்டம்புகுந்து களிறு முதலியவற்றைக் கொன்றுண்ணும் புலியே போலும் ஊக்கமும் தறுகண்மையுமுடையவரும் ஆகிய; எயினர்கள் பாலை நில மாக்களாகிய அடியேங்கள்; நின் அடி தொடு கடன் நின் றிருவடிகளைத் தொட்டுச் செய்த வஞ்சினம் பொய்யாமல் பகை வென்று கொண்ட எமது வெற்றிக்கு விலையாகச் செலுத்தும் கடனாகும்; பலிமுக மடை இது பலி - எம்மிடற்றினின்றும் சொரிகின்ற குருதி விரவிய நிணச்சோறு ஆகிய இப்பலி, இதனை ஏற்றருள்வாயாக! என்பதாம்.

(விளக்கம்) 17. சுடரொடு திரிதரும் முனிவரும் என்பதனோடு நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் காலுணவாகச் 9- ரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும் எனவரும் புறநானூறும் (45) விண்செலன் மரபின் ஐயர்க் கேந்திய தொருகை எனவரும் திருமுருகாற்றுப்படையும் (107) ஒப்பு நோக்கற்பாலன.

18. நின இணையடி என்புழி (நின் - 8) அகரம் ஆறாவதன் பன்மையுருபு. எயின் - எயினர். அடியைத் தொட்டுச்செய்த வஞ்சினத்திற் றப்பாது பகை வென்றுபெற்ற வெற்றிக்கு விலையாகிய கடன் என்பது கருத்து. மிடறுகு குருதி - என்றமையால் இதனை அவிப்பலி என்பாருமுளர். அஃதாவது தந்தலையைத் தாமே அரிந்து வைக்கும் பலி. இதனியல்பினை இந்திரவிழாவெடுத்த காதையினும் விளக்கினாம். ஆண்டுக் காண்க. (88) நிணன் - நிணம்; போலி.

19. துவைசெய: ஒருசொல். குமரி - மூவாமையுடையவள். மடை - பலிச்சோறு.

பலிக்கொடை யீந்து பராவுதல்

20 : வம்பலர் ........... சேர்த்துவாய்

(இதன்பொருள்.) சங்கரி அந்தரி நீலி சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் - சங்கரீ ! அந்தரீ! நீலீ! சடைமுடியிடத்தே சிவந்த கண்ணையுடைய பாம்பினைப் பிறைத்திங்களுடனே ஒருசேரச் சேர்த்து அணிகின்ற இறைவீ! இது அம்பு உடை வல்வில் எயின் கடன் இக் குருதிப் பலிதானும் அம்பினையுடைய வலிய வில்லினையுடைய நின்னடியேமாகிய எயினரேம் நினக்குச் செலுத்தும் எளிய பலியேயாகும்; உண்குவாய் - ஏற்றுக் கொள்ளுதி; வம்பலர் பல்கி வழியும் வளம்பட எற்றுக்கெனின் எமது பாலைநெறியிடத்தே ஆறு செலவோர் மிகுமாற்றால் அங்நெறிகள் வளுமுடையன ஆதற் பொருட்டேகாண்! என்றார்; என்க.

21 : துண்ணென் .............. செய்குவாய்

(இதன்பொருள்.) விண்ணோர் அமுது உண்டும் சாவ - அமரர்கள் திருப்பாற்கடலிலே எழுந்த அமிழ்தத்தை உண்டுவைத்தும் தத்தமக்கியன்ற கால முடிவிலே இறந்தொழியா நிற்பவும்; ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய் - நீதான் அங்குத் தோன்றிய யாரும் உண்ணாத நஞ்சினை உண்ட பின்னரும் ஒருசிறிதும் ஏதமின்றி அழிவின்றியிருந்து மன்னுயிர்க்குத் திருவருள் வழங்கும் ஒருத்தியல்லையோ? துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரும் கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் - கேட்டோர் நெஞ்சம் துண்ணென அஞ்சுதற்குக் காரணமான ஒலியையுடைய துடிமுழக்கத்தோடே சென்று எல்லோரும் உறங்குகின்ற நள்ளிரவிலே பகைவர் தம்மூருட் புகுந்து அங்குள்ளாரைக் கொன்று கொள்ளைகொள்ளும் கண்ணோட்டமில்லாத எயினரேமாகிய அடியேம் செலுத்துகின்ற இப் பலியையும் ஏற்றுக்கொள்வாயாக! என்றார்; என்க.

22 : பொருள்கொண்டு ............... செய்குவாய்

(இதன்பொருள்.) நின் மாமன்செய் வஞ்சம் மருதின் நடந்து - நின்னுடைய மாமனாகிய கஞ்சன் வஞ்சத்தாலே தோன்றிய இரட்டை மருதமரத்தினூடே நின்னிடையிற் கட்டப்பட்ட உரலோடே நடந்து சாய்த்தும்; உருளும் சகடம் உதைத்து - உருண்டு நின்மேலே ஏறவந்த சகடத்தை உதைத்து நுறுக்கியும் அவ் வஞ்சத்தைத் தப்பி என்றென்றும் நிலைத்திருந்து; அருள் செய்குவாய் - உயிர்கட்கு வேண்டுவன வேண்டியாங்கு திருவருள் வழங்கும் எம்மன்னையே! பொருள்கொண்டு புண்செயின் அல்லதை அடியேங்கள் ஆறலைத்துப் பொருள்பறிப்பதூஉமன்றி அவ்வம்பலர் உடம்பில் புண்செய்யும் செயலையன்றி; யார்க்கும் அருள் இல் எயினர் எவரிடத்தும் சிறிதும் அன்புசெய்தலறியாத எயினரேம்; இடு கடன் உண்குவாய் - ஆயினும் யாங்கள் செலுத்துகின்ற இப் பலிக் கடனையும் ஏற்றுக்கொள்வாயாக! என்றார் என்க.

(விளக்கம்) சாலினியின் மேலுற்ற தெய்வம் கலையமர் செல்வி கடன் உணின் அல்லது சிலையமர் வென்றி கொடுப்போனல்லள், மட்டுண் வாழ்க்கை வேண்டுதிராயின் கட்டுண்மாக்கள் கடந்தரும் எனப் பணித்தமைக்கிணங்கி மேற்கூறியாங்குத் தம் கடனாகிய குருதிப் பலியீந்த எயினர் அக்கொற்றவை முன்னர் மட்டுண் வாழ்க்கைக்கு வேண்டிய வளந்தரும்படி கொற்றவையை இரக்கின்றனர் என்றுணர்க.

19. வம்பலர் - வழிப்போக்கராகிய புதியவர், அவர் மிக்கவழி ஆறலைத்துக்கொள்ளும் பொருள்களும் மிகுமாதலின் வம்பலர் மல்க வேண்டும் என்றிரந்தபடியாம்.

20. தீயவர்க்கும் நல்லோர்க்கும் ஒருசேர அருள் வழங்குதல் இறைவியினியல்பென்பது தோன்ற செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் என்றார். விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய் என்பது மருட்கை யணி. இது தரும் இன்பம் எல்லையற்றதாத லறிக.

29. இறைவனுடைய காத்தற் சத்தியையே திருமால் எனக் கொள்வர் ஒரு சமயத்தினர். அங்ஙனம் கூறினும் அதுவும் இறைவனுடைய சத்தியேயாம். திருமால் என்பது ஒரு தனி முதல் இல்லை என்பது தத்துவ நூலோர் கருத்தாம். இக் கருத்தை முதலாகக் கொண்டு இறைவியைத் திருமாகலின் தங்கை என்பர் பவுராணிகர். இவ்விருவர் மதங்களையும் மேற்கொண்டு ஈண்டு அடிகளார் திருமாலின் செயலை இறைவியின் செயலாகவே ஓதும் நலமுணர்க. அது மருதின் .......... செய்குவாய் என்பதாம்.

23 : மறை ............... வெய்யோனே

(இதன்பொருள்.) மறை முது முதல்வன் பின்னர் மேய - மறைகளைத் திருவாய்மலர்ந்தருளிய பழம்பொருட் கெல்லாம் பழம் பொருளாகிய இறைவனுக்குத் தம்பி எனத் தகுந்த தமிழ் முதல்வன் அகத்தியன் அவ்விறைவன் ஏவலாலே எழுந்தருளி இருத்தலாலே; பொறை உயர் பொதியில் - பொறையானும் ஏனைய சிறப்புகளானும் பெரிதும் உயர்ந்த பொதியில் என்னும் பெயரையுடைய; பொருப்பன் சிறந்த மலையையுடையவனும்; விறல் வெய்யோன் - வெற்றியையே விரும்பு மியல்புடையவனுமாகிய பாண்டிய மன்னன்; கட்சியும் கரந்தையும் பாழ்பட - பகைவருடைய முனையிடமாகிய காடும் அவர்தம் ஆனிரைகாக்கும் கரந்தை மறவரிருப்பிடங்களும் பாழிடமாகும்படி; வெட்சி சூடுக - எஞ்ஞான்றும் எயினரேம் ஆகிய யாங்கள் ஆக்கமெய்து மாறு வெட்சிமாலையைச் சூடுவானாக! என்றார்; என்க.

(விளக்கம்) 23. மறைமுது முதல்வன் என்றது சிவபெருமானை. அவன்பின்னர் என்றது அவனுக்கு அடுத்து முதல்வன் எனத் தகுந்த சிறப்புடையவன் என்றவாறு. அவனாவான் அகத்திய முனிவன். அவன் மேய பொதியில் என்க. அவன் மேயதனால் பொறையான் உயர்ந்த பொதியில் எனினும் பொருந்தும். பொறையானுயர்தலாவது - இறைவனிருந்த இமயத்தோடு சமவெடையுடையதாய் உயர்தல். இறைவனை மறைமுது முதல்வன் என்றமையால் அவன் பின்னராகிய அகத்தியனைச் செந்தமிழ் முதுமுதல்வன் எனவும் கூறிக்கொள்க.

பொதியிற் பொருப்பன் என்றது பாண்டியனை. அவன் வெட்சி சூடினால் தமக்கு ஆகோள் வளம் கைவருதல் ஒருதலை என்னுங் கருத்தால் எங்கள் மன்னனாகிய பொதியிற் பொருப்பனும் வெட்சி சூடுக! எனக் கொற்றவையை எயினர் பரவியவாறாம். என்னை?

வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பன் மேவற்றா கும் (தொல் . புறத்திணை - 2)

என்பவாகலின். பாண்டியன் பகைவரைப் பொருதக் கருதியவழி அப் பகைவர் தம் நாட்டு ஆக்களைக் களவிற் கொணரத் தம்மையே உய்ப்பன், அங்ஙனம் உய்த்தவிடத்தே தமக்கு வளமும் அரசற்கு விறலும் சேர்வது தேற்றம் என்பதுபற்றிப் பாண்டியனை விறல் வெய்யோன் என்றே கூறினர். மற்றிதுவே அரச வாழ்த்துமாயிற்று.

பா - பஃறாழிசைக் கொச்சகக்கலி

வேட்டுவரி முற்றிற்று.


"வேட்டுவ வரி" ("Vēṭṭuva Vari") refers to a specific style of verse or poetic form in Tamil literature, often associated with the literary tradition of Sangam poetry. In the context of Tamil classical literature, "வேட்டுவ" (Vēṭṭuva) can be understood as relating to themes of hunting or searching, and "வரி" (Vari) means "line" or "verse."

Overview of "வேட்டுவ வரி" (Vēṭṭuva Vari)

1. Meaning and Context:

- Vēṭṭuva: The term "Vēṭṭuva" is derived from "vēṭṭu," meaning "hunting" or "searching." It may also refer to themes related to pursuit or quest.

- Vari: This translates to "verse" or "line," indicating a specific style or type of poetic expression.

2. Themes and Usage:

- Hunting and Searching: In Tamil literature, particularly in Sangam poetry, hunting often serves as a metaphor for various types of quests or searches, whether for love, truth, or personal goals. The "Vēṭṭuva Vari" might describe or reflect these themes through poetic lines.

- Literary Style: This verse style can include imagery and metaphors related to hunting, exploration, and the pursuit of goals, blending descriptive language with deeper philosophical or emotional themes.

3. Examples in Literature:

- Sangam Poetry: While specific references to "Vēṭṭuva Vari" might not be widely documented, themes of hunting and searching are prevalent in Sangam literature. Poems often use hunting imagery to explore concepts of love, separation, and personal quest.

- Classical Texts: Works like "Akananooru", "Purananuru", and "Kurunthogai" may include verses reflecting similar themes, using hunting as a metaphorical or descriptive element.

4. Cultural and Literary Impact:

- Symbolism: The use of hunting as a theme symbolizes the pursuit of ideals or goals, making it a powerful metaphor in poetry. It reflects the values and concerns of ancient Tamil society.

- Expression: "Vēṭṭuva Vari" contributes to the rich tradition of Tamil poetic expression, showcasing the interplay between literal and metaphorical meanings in classical literature.

"Vēṭṭuva Vari" highlights the use of hunting imagery in Tamil poetry, reflecting deeper themes of pursuit and quest. It adds to the diverse range of poetic styles and themes in Tamil classical literature, enriching the tradition of poetic expression.



Share



Was this helpful?