இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


வேயுறுதோளி பங்கன்

வேயுறுதோளி பங்கன்

பின்னணி;

திருமறைக்காடு தலத்தினில் திருஞானசம்பந்தரும் அப்பர் பிரானும், இணைந்து இறைவனை வழிபட்டு வந்த நாளில், பாண்டிய நாட்டிலிருந்த வந்த தூதுவர்கள் மூலம், பாண்டிய நாட்டு அரசியார் மங்கையர்க்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும், திருஞானசம்பந்தர் மதுரை நகருக்கு வருகை தந்தருள வேண்டும் என்று விரும்பியதையும், சமணர்களின் முறையற்ற செயல்களால் சைவமதம் வலிமை குன்றிய நிலையில் இருப்பதையும் அறிந்து கொண்டார்.இதன் பின்னர், திருஞானசம்பந்தர் அருகிருந்த அப்பர் பிரானிடம், தான் பாண்டிய நாடு செல்ல இருப்பதாக கூறினார். சமணர்கள் தனக்கு இழைத்த பல சூழ்ச்சிகளை நினைவு கூர்ந்த அப்பர் பிரான், வஞ்சக சமணர்கள் அதிகமாக வாழும் பாண்டிய நாட்டிற்கு சிறு குழந்தையாகிய திருஞான சம்பந்தர் செல்வதற்கு உடன்பாடு இல்லாதவராக, நாளும் கோளும் சரியில்லாத இந்த தருணத்தில் வஞ்சகம் புரியும் சமணர்கள் இருக்கும் செல்வதை தவிர்ப்பது நன்று எனது தனது கருத்தினை கூறினார்.

இறைவன் அடியார்களுக்கு துணையாக இருக்கும் தன்மையை நன்கு அறிந்தவர் அப்பர் பிரான்; எனினும் திருஞானசம்பந்தர் பால் அவர் வைத்திருந்த பாசத்தின் காரணமாக, மேற்கண்டவாறு அவர் கூறினார். அதனைக் கேட்ட, திருஞானசம்பந்தர், தனது உள்ளத்தில் இறைவன் உறைகின்றார் என்பதால், தனக்கு எல்லாம் நல்லவையாகவே நடக்கும் என்று உணர்த்தும் வண்ணம் அருளிய பதிகம் இந்த பதிகம்.இந்த பதிகத்தை முறையாக ஓதினால், நாம் மேற்கொள்ளும் பயணத்திற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாது என்றும், வழித்துணையாக இறைவன் இருப்பான் என்றும், நாள்கள் மற்றும் கோள்களால் விளையும் தீங்குகள் நம்மை பாதிக்காத வண்ணம் இறைவன் பாதுகாப்பான் என்றும் நம்பப்படுகின்றது.இந்த காரணம் பற்றியே இந்த பதிகம் கோளறு திருப்பதிகம் என்று அழைக்கப்படுகின்றது. அம்பிகை பற்றிய குறிப்புடன் தொடங்கப்பெறும் அரிய பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்று. இந்த பதிகத்தின் சிறப்பு கருதி அகத்தியர் தேவாரத் திரட்டில் இந்த பதிகம் சேர்க்கப்பட்டுள்ளது.

பாடல் 1:

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

விளக்கம்:

வேயுறு=மூங்கிலின் இரு கணுக்களுக்கும் இடையே உள்ள பகுதி; மென்மை மற்றும் அழகு பற்றி இந்த உவமை இங்கே சொல்லப் படுகின்றது. விடம் உண்ட செயல், வீணை வாசிக்கும் செயல் மற்றும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்ட செயல் ஆகிய மூன்று செயல்களும் பெருமானின் கருணைத் திறத்தினை உணர்த்தும் செயல்கள்; அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் தனது உள்ளத்தில் இருப்பதால், தனக்கு நல்லனவே விளையும் என்று கூறுகின்றார். பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் தத்தம் உடல்களை விட்டு நீங்கி இறைவனிடம் ஒடுங்குகின்றன. இவ்வாறு ஒடுங்குவதால், எண்ணற்ற பிறவிகள் எடுத்துக் களைத்த உயிர்களுக்கு தேவையான இளைப்பாற்றல் கிடைக்கின்றது. இது இறைவன் உயிர்கள் பால் கொண்ட கருணையால் நிகழ்கின்றது. இவ்வாறு இளைப்பாறி புத்துணர்ச்சி பெற்ற உயிர்களில் பெரும்பாலானவை மலத்துடன் பிணைந்து இருப்பதால்,அந்த மலத்தினை உயிர்கள் நீக்கிக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பதற்கு திருவுள்ளம் கொண்டவனாக உல்கத்தைத் தோற்றுவிப்பதற்கும் மலங்களுடன் பிணைந்துள்ள உயிர்களை தகுந்த உடலுடன் சேர்ப்பதற்கும் இறைவன் நினைக்கின்றான். அவனது நினைப்பு, திருவருள் சக்தியால் செயலாக்கப் படுகின்றது. இதுவும் இறைவன் உயிர்கள் பால் கொண்டுள்ள கருணையின் அடிப்படையில் நிகழ்வதே. இவ்வாறு நினைக்கும் சமயத்தில் வீணை வாசிக்க, அந்த நாதத்திலிருந்து ஆகாயம் தோன்றுகின்றது; பின்னர் ஆகாயத்திலிருந்து முறையே மற்ற பூதங்களும், இந்த பூதங்களின் கலவையாக அனைத்து உலகப் பொருட்களும் தோன்றுகின்றன. மாசறு திங்கள் என்று இங்கே குறிப்பிடுகின்றார். இறைவனுடன் சேர்ந்த எந்த பொருளும் தூய்மை அடைகின்றன. மிகுந்த அகம்பாவத்துடன் பூமியையே புரட்டிப் போடும் நோக்கத்துடன் வானத்திலிருந்து கீழே இறங்கிய கங்கை நதி, கர்வபங்கம் அடைந்து தன்னில் நீராடும் மாந்தர்களின் பாவத்தைத் தீர்க்கும் புண்ணிய நதியாக மாறியது போன்று, குற்றம் உடைய சந்திரனும் தூய்மைத் தன்மை அடைந்தான் என்பதை உணர்த்த, மாசறு என்று குறிப்பிட்டார் போலும். ஆசு=குற்றம்; வியாழம்=பிரகச்பதி; வெள்ளி=சுக்கிரன்: பாம்பு=இராகு கேது; இதன் மூலம் ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நலத்தையே அடியார்களுக்கு விளைவிக்கும் என்று கூறுகின்றார். நான்கு முறை நல்ல என்று குறிப்பிட்டு இறுதியில் மிகவே என்று குறிப்பிடுவதன் மூலம், மிகுதியான நன்மைகளையே இந்த் கோள்கள் செய்யும் என்று உறுதிபட கூறுகின்றார். இறைவன் எனது உளமே புகுந்த அதனால் ஒன்பது கோள்களும் நல்லனவே செய்யும் என்று திருஞானசம்பந்தர் கூறுவது, தற்போதம் அற்ற நிலையை அவர் அடைந்த தன்மையை நமக்கு உணர்த்துகின்றது. நடப்பது அனைத்தும் இறைவன் செயல் என்றும் அவனது அருளால் நல்லனவையே நடக்கும் என்றும் நமக்கு உணர்த்துகின்றார்.திருஞானசம்பந்தர் புராணத்தின் முதல் பாடலில், சேக்கிழார், வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க பூத பரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்தழுத திருஞானசம்பந்தர் என்று குறிப்பிடுவதன் மூலம், திருஞானசம்பந்தரின் அவதார நோக்கமே, சமண சமயத்தவரின் ஆதிக்க வலிமையை குறைத்து சைவசமயத்தை நிலைநாட்டுவது என்பதால், தனது முயற்சிகளுக்கு இறைவனின் அருள் சிறந்த துணையாக இருக்கும் என்று அவர் உணர்ந்ததை,வெளிப்படுத்தும் பதிகமாக அமைந்துள்ளது. மிக நல்ல வீணை தடவி என்ற தொடர் சங்காரம் மற்றும் புனருற்பவம் ஆகிய இரண்டையும், (முற்றழிப்பு மற்றும் மீண்டும் தோற்றுவித்தல்) உணர்த்துகின்றது. இவை முறையே இனிவரும் நாட்களில் சமண சமயத்தாரின் கொட்டம் முற்றிலும் அழிக்கப்படுவதையும், சைவ சமயம் புது மறுமலர்ச்சி பெறுவதையும் முன்னதாகவே திருஞானசம்பந்தர் உணர்த்துவதாக சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். உடனே ஆசறு என்ற தொடர் மூலம், வரும் தீங்குகள் அனைத்தும், ஒன்றன் பின் ஒன்றாக அல்லாது, ஒருங்கே அழியும் என்பது உணர்த்தப்பட்டது; ஆசறும்=சமணர்கள் இட்ட தீ எவருக்கும் கெடுதல் செய்யாது அழிந்தது; விளந்தன நல்லவைகள்= மூன்று வாதங்களிலும் சமணர்கள் தோற்றமை, வேந்தன் திருநீறணிந்தது மற்றும் அதன் பொருட்டு மக்கள் சைவ சம்யத்திற்கு மாறியது, அரசியார் அமைச்சர் மற்றும் மன்னன் ஆகிய மூன்று அடியார்களை சைவ உலகம் கண்டு கொண்டது என்பன;

பொழிப்புரை:

இரு கணுக்களுக்கு இடையே உள்ள மூங்கில் போன்று அழகும் மென்மையும் உடைய தோள்கள் கொண்ட உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆலகால விடத்தைத் தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனும் ஆகிய இறைவன், இன்னிசை எழுப்பும் வீணை வாசிப்பவனாக, குற்றமற்ற பிறைச் சந்திரனையும் கங்கை நதியையும் தனது சடையில் அணிந்தவனாக எனது உள்ளத்தில் புகுந்து உறைகின்றான்.அதனால், ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி இராகு கேது ஆகிய ஒன்பது கோள்களும், எந்தவிதமான குற்றமும் இல்லாத நன்மையையே எனக்கு புரியும். இவ்வாறு எனக்கு குற்றமற்ற நன்மைகளைப் புரியும் கோள்கள், அடியார்கள் அனைவருக்கும் மிகவும் நன்மை பயப்பனவாகவே விளங்கும்.

பாடல் 2:

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

விளக்கம்:

மிகுந்த கருணை உள்ளம் கொண்டவனாக பதிகத்தின் முதல் பாடலில் பெருமானை சித்தரித்த திருஞானசம்பந்தர், இந்த பாடலில் அவனது எல்லையற்ற ஆற்றலை குறிப்பிடுகின்றார். வெறும் கருணை மட்டும் இருந்து, தேவையான ஆற்றல் இல்லாவிடில் அடியார்களின் இடர்களைக் களைய முடியாது அல்லவா.எனவே அவனது ஆற்றலை குறிப்பிட்டு அடியார்கள் எதிர்கொள்ள இருந்த இடர்களையும் வாராமல் தடுப்பவன் பெருமான் என்று உணர்த்துகின்றார். அப்பர் பிரான், நாளும் கோளும் சரியில்லை என்று குறிப்பிட்டதற்கு விடை சொல்லும் முகமாக, பதிகத்தின் முதல் பாடலில் கோள்களை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் பல நட்சத்திர நாள்களை குறிப்பிட்டு, நாட்களும் நல்லனவே செய்யும் என்று அப்பர் பிரானின் கவலையைக் களையும் நேர்த்தியை நாம் உணரலாம். எலும்பு மாலை அணிவதன் மூலம் பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் தத்தம் உடல்களை விட்டு நீங்கிய நிலையில்,உயிரற்ற உடலின் எலும்புகளை மாலையாக பூண்டு கொண்டு, தான் ஒருவனே என்றும் அழிவற்றவனாக விளங்குபவன் என்பதை பெருமான் நமக்கு உணர்துகின்றார். கொம்பு=பன்றிக்கொம்பு; ஆமை= ஆமையோடு; பன்றியாகவும் ஆமையாகவும் அவதாரம் எடுத்து தேவர்களுக்கு உதவிய திருமால், அந்தந்த அவதாரங்களின் நோக்கம் நிறைவேறிய பின்னர், தனது ஆற்றலின் மீது கர்வம் கொண்டவராக, செருக்குடன் திரிந்த போது, அதனால் பயமடைந்த தேவர்களின் அச்சத்தை நீக்கும் வண்ணம் பெருமான் ஆமையாகவும் பன்றியாகவும் திரிந்த திருமாலின் செருக்கை அடக்கினார். அதன் அடையாளமாக பன்றிக் கொம்பையும் ஆமை ஓட்டினையும் தனது மார்பில் அணிகலனாக அணிந்துள்ள தன்மை, மிகவும் அதிகமான ஆற்றல் கொண்ட திருமாலையும் ஆற்றலில் மிஞ்சியவர் சிவபெருமான் என்பதை உணர்த்துகின்றது. தனது அருட்சக்தியாகிய பார்வதி தேவியுடன் தனது உள்ளத்தில் புகுந்த பெருமான் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். ஒன்பதோடு ஒன்றொடேழு பதினெட்டோடு ஆறும் உடனாய நாட்கள் என்று பொதுவாக தீங்கு பயக்கும் நாள்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்பதோடு=ஒன்பதாவது ஆயில்யம்; ஒன்பதோடு ஒன்று=பத்தாவது; அச்வினி தொடங்கி பத்தாவது நாள் மகம்; ஒன்பதோடேழு= பதினாறு, விசாகம்; பதினெட்டு=கேட்டை; ஆறு=திருவாதிரை; உடனாய=மற்ற நாட்கள்; பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை, சுவாதி,பூராடம், பூரட்டாதி என்பன; பரணி ஆரல் ஆயில்யம் முப்பூரம் கேட்டை தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம் ஆகிய ஈராறு மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார் பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின் வாய்த் தேரை தானே எனும் சோதிடநூல் பாட்டு, பரணி, கார்த்திகை, திருவாதிரை,ஆயில்யம், மகம், பூரம், விசாகம், சித்திரை, கேட்டை, சுவாதி, பூராடம், பூரட்டாதி, என்பனவே இந்த மிகுதியான நாட்கள் என்பதை உணர்த்துகின்றன;அசுவனியை முதலாகக் கொண்டு, நட்சத்திரங்கள் இங்கே கணக்கிடப் பட்டுள்ளன. சிலர் திருவாதிரை முதலாகக் கொண்டு கணக்கிடுகின்றனர், அப்போதும் இதே பன்னிரண்டு நட்சத்திரங்கள் வருகின்றன. என்பு என்பதற்கு பிரளயத்தில் அழிந்து பட்ட திருமால் மற்றும் பிரமனின் உயிரற்ற உடல்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

எலும்பு மாலை, பன்றிக்கொம்பு, ஆமையோடு முதலியன மார்பில் அணிந்து கொண்டவனாக, எருதின் மீது அமர்ந்த வண்ணம் பார்வதி தேவி உடனாக,பொன்மேனியில் பொதிந்த ஊமத்தை மாலை, சடையில் அடங்கிய கங்கை நதி முதலிய அடையாளங்களுடன் எனது மனதிலே பெருமான் புகுந்து கொண்டமையால், பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், சித்திரை, கேட்டை, சுவாதி, பூராடம், பூரட்டாதி ஆகிய நாட்கள்,பொதுவாக தீதுறு நாட்களாக கருதப் பட்டாலும், அவை அனைத்தும் அன்பு பாராட்டி நல்லனவே செய்யும்; இவ்வாறு எனக்கு அன்பாக இருக்கும் நாட்கள் மற்ற அடியார்களுக்கும் மிகவும் நன்மை பயப்பனவாகவே விளங்கும்

பாடல் 3:

உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

விளக்கம்:

திருமகள்=இலக்குமி தேவி; கலையதூர்தி=துர்க்கை, செயமாது=செயமகள்; திசை தெய்வம்=எண் திசைக்காவலர்கள் நெதி=நியதி என்ற சொல்லின் மருவு;முருகு=அழகு; பூக்களுக்கு அழகு நறுமணம் என்பதால் நறுமணம் நிறைந்த என்று பொருள் கொள்ளவேண்டும்; அலர்=மலர்;

பொழிப்புரை:

நாளுக்கு நாள் அழகு கூடும் பவளம் போன்ற திருமேனியில், ஒளி வீசும் திருநீற்றினை அணிந்தவனாக, உமையன்னை உடனாக, வெண்மை நிறம் கொண்ட இடபத்தின் மேல் ஏறியவனாக, நறுமணம் மிகுந்த கொன்றை மலர்கள் மற்றும் ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனாக, பெருமான் எனது உள்ளத்தின் உள்ளே புகுந்துள்ளான்; இதனால், திருமகள், துர்க்கை, செயமகள், பூமகள், திசைச் தெய்வங்கள் முதலிய பல தெய்வங்களும் எனக்கு நல்ல முறையில் செயல்பட்டு, தீமை கலவாத நல்ல பலன்களையே நல்கும். இவ்வாறு எனக்கு நல்லன புரியும் இந்த சிறு தெய்வங்கள் அனைத்தும், மற்ற அடியார்களுக்கும் மிகவும் நன்மை பயப்பனவாகவே விளங்கும்.

பாடல் 4;

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

விளக்கம்:

வடபால்=வடக்கில் உள்ள கயிலாய மலை; வடவால் என்பதும் பாடம்; வடவால்=கல்லால மரம்; கல்லால மரத்தின் கீழே இருந்த வண்ணம் பெருமான் சனகாதி முனிவர்களுக்கு, தென்முகக் கடவுளின் வடிவத்தில் உபதேசம் செய்வதையே நாம் பல திருக்கோயில்களிலும் காண்கின்றோம். எனினும் அன்னையை விட்டு இறைவன் எப்போதும் பிரிவதில்லை என்பதாலும், அவனது அருட்சக்தியாக அம்பிகை எப்போதும் அவனுடன் திகழ்கின்றாள் என்பதாலும், அம்பிகை உடனாக இருக்கையில் பெருமான் உப்தேசம் செய்தார் என்று கொள்வதில் தவறேதும் இல்லை. இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.32.1) கல்லால் நிழற்கீழ் வாடாமுலை மங்கையும் தானும் மகிழ்ந்து ஈடா உறைகின்ற இடைமருது என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. சென்ற பாடலில் பொதுவாக மக்களுக்கு நன்மை புரியும் சிறு தெய்வங்களை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் மிகுதியாக கெடுதல் புரியும் சிறு தெய்வங்களை குறிப்பிடுகின்றார். மதி நுதல்=பிறைச் சந்திரன் போன்று வளைந்த நெற்றி; கொதி=கோபம்; மிகுந்த கோபத்துடன் இயமனும் இயமனது தூதர்களும் உயிர்களை அணுகுவது அந்தந்த உயிர்களுக்கு அச்சம் ஊட்டும் பொருட்டே; அங்கி=தீக்கடவுள்;

பொழிப்புரை:

பிறைச்சந்திரன் போன்று அழகாக வளைந்த நெற்றியினை உடைய தேவியுடன், வடக்கு திசையில் உள்ள கயிலாய மலையில் அமர்ந்த வண்ணம் நான்மறைகளயும் ஓதும் எங்கள் பரமன், கங்கை நதி, கொன்றை மாலை ஆகியவற்றைத் தனது சடையில் அணிந்தவனாக எனது உள்ளத்தில் புகுந்துள்ளான்.இந்த தன்மையால், சினம் மிகுந்த காலன், தீக்கடவுள், இயமன், இயமனது தூதர்கள், கொடிய நோய்களுக்கு அதிபதியாகிய சிறு தெய்வங்கள் முதலிய அனைத்தும், தங்களது கொடிய குணங்களை விட்டொழித்து மிகுதியான நல்ல குணம் உடையவர்களாக மாறி எனக்கு நல்லனவே செய்யும். இவ்வாறு எனக்கு நல்லனவாக செயல் புரியும் இந்த சிறு தெய்வங்கள் அனைத்தும், மற்ற அடியார்களுக்கும் மிகவும் நன்மை பயப்பனவாகவே விளங்கும்.

பாடல் 5;

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

விளக்கம்:

பதிகத்தின் நான்காவது பாடலில் சில தீய சக்திகளை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் மேலும் சில தீய சக்திகளை குறிப்பிடுகின்றார்.அவுணர்=அரக்கர்; அடுத்தவருக்கு துன்பம் செய்வதில் மகிழ்ச்சி அடைவோரை பொதுவாக அரக்கர்கள் என்று குறிப்பிடுவது வழக்கம்; இடி, மின்னல்,ஆகியவை நமது கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை; மடவாள்=இளமையும் அழகும் ஒருங்கே பொருந்திய பார்வதி தேவி; துஞ்சிருள்=வன்னி மரத்தின் இலைகள் மிகுந்தும் அடர்த்தும் இருப்பதால் சூரியனின் ஒளிக்கதிர்களை புகவிடாமல் தடுத்து இருளை நிலவும் தன்மை: உரும் இடி=பலமான சத்தத்துடன் இடிப்பது; மிகையான=தங்களது அளவில் நில்லாது கொடிய செயல்களை செய்தல்; பரமன்=மேலானவன்;

பொழிப்புரை:

நஞ்சினைத் தேக்கியதால் மாணிக்க மணி பதித்தது போன்று கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனும், என்றும் இளமையாகவும் அழகுடனும் விளங்கும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்திருப்பவனும், இடபத்தை வாகனமாகக் கொண்டவனும், நம் அனவராலும் மேலானவன் என்று கொண்டாடப்படுபவனும், ஆகிய பெருமான், அடர்ந்தும் மிகுந்தும் வளர்ந்து இருளைப் பரப்பும் வன்னி இலைகள் மற்றும் கொன்றை மலர்களைத் தனது சடையின் மீது அணிந்தவனாக எனது உள்ளத்தில் புகுந்துள்ளான். அதனால், மிகுந்த சினம் கொண்டு செயல்படும் அவுணரும், பலத்த சத்ததுடன் தோன்றும் இடி மின்னல் போன்றவையும், செருக்குடன் திரியும் பூதங்கள் ஆகியவை பொதுவாக தத்தம் அளவினில் நில்லாது பலருக்கும் தீங்கு செய்யும் இயல்பினை உடையன; எனினும் அவை அனைத்தும் என்னிடம் அச்சம் கொண்டு எனக்கு நல்லனவே செய்யும்; இவ்வாறு என்னிடம் அச்சம் கொண்டு நல்லனவாக செயல் புரியும் இவை அனைத்தும், மற்ற அடியார்களுக்கும் மிகவும் நன்மை பயப்பனவாகவே விளங்கும்.

பாடல் 6;

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

விளக்கம்:

இந்த பாடலில் தீங்கு செய்யும் காட்டு விலங்குகள் பற்றி குறிப்பிடுகின்றார். வாள்வரி=ஒளியுடன் கூடிய வரிகள் பொருந்திய புலித்தோல்; பெருமானின் அடியார்களை காட்டு விலங்குகள் ஒன்றும் செய்யாது என்பதை குறிப்பால் உணர்த்தும் முகமாக, புலியை கொன்று அதன் தோலை உரித்து ஆடையாகக் கட்டிய பெருமானின் வீரச் செயலுடன் பாடலை தொடங்குகின்றார். அதளதாடை= தோலாடை; வரி கோவணம்=வரிந்து கட்டிய கோவணம்;நாண்மலர்=அன்றலர்ந்த புது மலர்கள்; நதி=கங்கை நதி; கோளரி=வலிமையான குரங்கு; ஆளரி=மற்ற விலங்குகளை ஆட்சி செய்யும் வலிமை வாய்ந்த சிங்கம்; உழுவை=புலி; கேழல்=பன்றி;

பொழிப்புரை:

ஒளி பொருந்திய கோடுகளை உடைய புலித்தோல் ஆடையுடன் வரிந்த கட்டப்பட்ட கோவண ஆடையையும் அணிந்த பெருமான், இளமையும் அழகும் பொருந்திய பார்வதி தேவியுடன், அன்றலர்ந்த வன்னி கொன்றை மலர்கள் மற்றும் கங்கை நதி ஆகியவற்றைத் தனது சடையில் சூட்டிக்கொண்டவராக எனது உள்ளத்தில் புகுந்து கொண்டுள்ளார். இதன் காரணமாக வலிமை கொண்ட குரங்குகள், புலி, கொலைத் தன்மை கொண்ட காட்டு யானை, பன்றி, நாகம்,கரடி, தனது வலிமையினால் மற்ற விலங்குகளை ஆட்சி செய்யும் சிங்கம் ஆகிய அனைத்தும் எனக்கு நல்லனவே செய்யும். இவ்வாறு எனக்கு நல்லனவாக செயல் புரியும் இந்த விலங்குகள் அனைத்தும், மற்ற அடியார்களுக்கும் மிகவும் நன்மை பயப்பனவாகவே விளங்கும்.

பாடல் 7;

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

விளக்கம்:

இந்த பாடலில் இயற்கை சக்திகளை குறிப்பிட்டு, அதனால் தனக்கு தீங்கு நேரா வண்ணம் இறைவன் பாதுகாப்பான் என்று கூறுகின்றார். உடலுக்குத் தேவையான வெப்பம், தண்மை, பித்தம் ஆகிய மூன்றும் குறிப்பிட்ட அளவில், நமது உடலில் எப்போதும் இருக்கவேண்டும். அந்த அளவிலிருந்து குறைந்தோ மிகுத்தோ மாறுபட்டால் உடலில் நோய்கள் உண்டாகும். அந்த தன்மை தான் இங்கே குறிப்பிடப்படுகின்றது. முக்தி எனப்படும் செல்வத்தை, வேறெவரிடமும் இல்லாத செல்வம் உடைய பெருமானை, செல்வன் என்று மிகவும் பொருத்தமாக அழைக்கின்றார். அடைவார்=தன்னை வந்தடைந்த; வாதம்=காற்று;

பொழிப்புரை:

செப்புக் கிண்ணம் போன்று வடிவான அழகுடன் விளங்கும் நன்மங்கையாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனாக, இடபத்தின் மேலேறி உலவும் பெருமான், சிறந்த செல்வனாகிய பெருமான், தன்னை வந்தடைந்த ஒப்பற்ற இளம் பிறைச்சந்திரன் மற்றும் கங்கை நதி முதலியவற்றைத் தனது சடையில் அணிந்தவனாக எனது உள்ளத்தில் புகுந்து கொண்டு உறைகின்றான். எனவே வெப்பம், குளிர், வாதம், பித்தம் ஆகியவை வினைப்பயனின் காரணமாக தத்தம் அளவில் மாறுபட்டு என்னை வருத்தாமல், எப்போதும் தேவையான அளவில் எனது உடலில் இருந்து நல்லனவே செய்யும். இவ்வாறு எனக்கு நல்லனவாக செயல் புரியும் வெப்பம் குளிர் வாதம் பித்தம் ஆகிய அனைத்தும், மற்ற அடியார்களுக்கும் மிகவும் நன்மை பயப்பனவாகவே விளங்கும்.

பாடல் 8;

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

விளக்கம்:

விழி செய்து=நெற்றிக்கண்ணை விழித்து; அரக்கர்கள் எவராலும் தனக்கு தீங்கு நேரா வண்ணம் இறைவன் பாதுகாப்பான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். சிவனடியார்கள் செய்யும் தவத்தினை கெடுக்க முயற்சி செய்வது தவறு என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டும் மன்மதனை எரித்து அழித்த குறிப்புடன் இந்த பாடல் தொடங்குகின்றது. இந்த குறிப்பு, பின்னாளில் திருஞான சம்பந்தருக்கு கேடு செய்ய நினைத்த சமணர்கள் எதிர் கொண்ட அழிவினை முன்னமே உணர்த்துவது போன்று அமைந்துள்ளது. வேள்=மன்மதன்; வாண்மதி=ஒளி பொருந்திய சந்திரன்; தக்கனது சாபத்தின் பயனாக நாள்தோறும் ஒரு கலையை இழந்து வந்த சந்திரன் கவலையினால் ஒளி குன்றிய நிலையில் பெருமானிடம் சரணடைந்தான்; பெருமான் அந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்ட பின்னர், சந்திரனின் கவலைகள் விலகியதால், அவன் ஒளி நிறைந்த முகத்துடன் காணப்பட்டான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. இதன் மூலம் இறைவனது அருள் பெற்ற எவரும் முகமலர்ந்து ஒளியுடன் இருப்பார்கள் என்று உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

சிவனடியார்கள் செய்யும் தவத்தினை கெடுக்க முயற்சி செய்வது தவறு என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டும் முகமாக மன்மதனை, எப்போதும் மூடிய நிலையில் காணப்படும், நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்து எரித்தவன் பெருமான். அவன் இடபத்தின் மீது அமர்ந்தவனாக, அழகும் இளமையும் ஒருங்கே பொருந்திய உமையன்னையுடன் கூடியவனாக, ஒளி பொருந்திய ஒற்றைப் பிறைச் சந்திரன், வன்னி மற்றும் கொன்றை மலர்களைத் தனது சடையில் சூட்டிக் கொண்டவனாக எனது உள்ளத்தில் புகுந்து கொண்டுள்ளான். எனவே, ஏழ்கடலால் சூழப்பட்ட இலங்கைக்கு மன்னனாகிய இராவணன் மற்றும் அவனைப் போன்ற மற்ற அரக்கர்களால் எத்தகைய இடரும் என்னை வந்து வருத்தாது; ஆழ்ந்த கடலும் எனக்கு நல்லனவே செய்யும். எனக்கு இடர் புரியாமல் அரக்கர்கள் ஒதுங்குவது போன்று, மற்ற அடியார்களுக்கும் அரக்கர்களும் ஆழ்ந்த கடலும் நல்லனவே செய்யும்.

பாடல் 9;

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

விளக்கம்:

அரக்கர்களை சென்ற பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் தேவர்களால் எந்த விதமான தீங்கும் நேராமல் இறைவன் பாதுகாப்பான் என்று கூறுகின்றார். பலபல வேடங்களை எடுக்கும் பரமன் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தனது அடியார்களை பாதுகாக்கும் பொருட்டும் அருள் புரியும் பொருட்டும், பெருமான் நிலைமைக்கு ஏற்றவண்ணம் வேறுவேறு வேடங்கள் எடுக்கும் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.நாரிபாகன்=மாதொரு பாகன்; எருதினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள தன்மை பசுவேறும் பாகன் என்று திணை மயக்கத்துடன் சொல்லப் பட்டுள்ளது.பசுவேறி என்று சில தேவாரப் பாடல்கள் இறைவனை குறிப்பிடுகின்றன (3.07.02, 3.08.03, 5.49.02, 6.39.9, 6.45.2, 6.47.9, 6.79.4, 6.04.1).

பொழிப்புரை:

மாதொரு பாகனாக காட்சி தரும் பெருமான், அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு பல விதமான வேறுவேறு வேடங்களை எடுப்பவன ஆவான். அவன் உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டவன் ஆவான்; எருதினை தனது வாகனமாகக் கொண்டுள்ள பரமன், சலமகள் என்று அழைக்கப்படும் கங்கை நதி மற்றும் எருக்கினைத் தனது சடையில் அணிந்தவனாக எனது உள்ளத்தில் புகுந்துள்ளான். அதனால் தாமரை மலரைத் தனது இருக்கையாகக் கொண்ட பிரமனும், திருமாலும், நான்மறைகளும், மற்றுமுள்ள தேவர்களும், இனி வரவிருக்கின்ற காலங்களும் அலைகடலும் மலைகளும் நமக்கு நல்லனவாகவே அமையும். மேற்குறித்த இவை அனைத்தும் சிவனது அடியார்களுக்கு நல்லனவே செய்யும்.

பாடல் 10;

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

விளக்கம்:

பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் உயிர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பல ஆபத்துகளை குறிப்பிட்டு, பெருமானின் அருள் துணையாக இருப்பதால் அனைத்து விதமான ஆபத்துகளும் விலகும் என்று உணர்த்திய திருஞானசம்பந்தர் இந்த பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்களை வாதில் வெல்வதற்கும் பெருமானின் அருள் துணையாக இருக்கும் என்று கூறுகின்றார். விசையன்=அர்ஜுனன்; வேட விகிர்தன்=வேடனாக மாறியவன்;

பொழிப்புரை:

பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலுடைய உமையன்னையுடன் வேடுவனாக சென்று, அர்ஜுனன் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று,அவனுக்கு தனது போரிடும் தன்மையையும் காட்டி, பின்னர் பாசுபத அத்திரம் கொடுத்து அருள் புரிந்தவன் பெருமான்; இவ்வாறு அருள் புரியும் தன்மை உடையவனாகிய பெருமான், ஊமத்தை மலர்கள் ஒற்றைப் பிறைச் சந்திரன் மற்றும் நாகம் ஆகியவற்றைத் தனது சடைமுடி மேல் அணிந்த வண்ணம் எனது உள்ளத்தில் புகுந்து உறைகின்றார். அதனால், பெருமான் அணிந்துள்ள திருநீறு, புத்தர்களையும் சமணர்களையும் உறுதியாக வாதினில் வென்று அழிக்கும் ஆற்றல் உடையதாக விளங்கி எனக்கு உதவியாக இருக்கும். மேலும் இத்தகைய வாதங்களால் எனக்கு வரும் தீமைகளையும் நீக்கும். இவ்வாறே மற்ற அடியார்களுக்கும் இடரைக் களையும் விதமாக திருநீறு செயல்படும்.

பாடல் 11;

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே

விளக்கம்:

தேனமர்=தேன் அமரும் மலர்கள்; ஆலை=கரும்பு; துன்னி=அடர்ந்து நெருங்கி; நிகழ=இருத்தல்; தானுறு=வினைப்பயன்கள் காரணமாக, தானே பல உயிர்களை வந்தடையும்;. வேயுறு தோளிபங்கன் என்று தொடங்கும் பொதுப் பதிகம் (2.85) காரைகள் கூகை முல்லை என்று தொடங்கும் நனிபள்ளிப் பதிகம்,(2.84) மடல்மலி கொன்றை என்று தொடங்கும் சீர்காழிப் பதிகம் (3.118) ஆகிய நான்கு பதிகங்களும் ஆணை நமதே என்ற சொல்லுடன் முடிவதால்,ஆணைப் பதிகங்களாக கருதப் படுகின்றன.

பொழிப்புரை:

தேன் நிறைவாக அமரும் மலர்கள் நிறைந்த சோலைகள் உடையதும், கரும்பு செந்நெல் ஆகியவை நிறைந்ததால், வளர்கின்ற செல்வத்தின் அடையாளமாக பொற்குவியல்கள் நிறைந்து காணப்படுவதும், நான்முகனால் ஆதிக்காலத்தில் தொழுது வணங்கப்பட்டதும் ஆகிய பிரமாபுரம் என்ற பெயரினை உடைய சீர்காழி நகரத்தில் தோன்றியவனும் மறைகளின் ஞானம் பெற்றதால் ஞானமுனிவன் என்று அழைக்கப்படுபவனும் ஆகிய ஞானசம்பந்தன்,வினைப்பயன்களின் காரணமாக தானே உயிர்களை வந்தடையும் நாளும் கோளும் அடியாரை வருத்தாத வண்ணம், பாடிய, சொற்களால் தொடுக்கப்பட்ட மாலையாகிய இந்த பதிகத்தை முறையாக ஓதும் அடியார்கள், வானுலகத்தில் இந்திரனாக அரசு புரியும் தனமையை அடைவார்கள்; இது நமது ஆணை.



Share



Was this helpful?