பதிக எண்: 2.73 திருப்பிரமபுரம் காந்தாரம்
பின்னணி:
தனது நான்காவது மற்றும் ஐந்தாவது தல யாத்திரைகளுக்கு இடையே பல நாட்கள் சீர்காழி நகரில் தங்கிய திருஞானசம்பந்தர், சீர்காழி தலத்தின் மீது பல வகையான பாடல்களை பாடுகின்றார். அத்தகைய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக விளங்கின என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். மொழிமாற்று, மாலைமாற்று, திருவெழுகூற்றிருக்கை. ஏகபாதம், ஈரடி மேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, திருவிருக்குக்குறள், ஈரடி, முடுகு இராகம் ஆகிய வகைகளில் பல பதிகங்கள் இயற்றினார். இந்த பதிகங்களில் பல பதிகங்களை நாம் இதுவரை சிந்தித்தோம். சுரருலகு நரர்கள் என்று தொடங்கும் பிரமாபுரத்து பதிகம், வழிமொழி இராகம் என்று குறிப்பிடப் படுகின்றது. விண்ணவர் தொழுதெழு என்று தொடங்கும் பதிகம் முக்கால் என்று குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு பல வித்தியாசமான பதிகங்கள் திருஞானசம்பந்தர் பாடியதை குறிப்பிடும் சேக்கிழாரின் பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம்.
நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்
சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக
மூல இலக்கியமாக எல்லாப் பொருட்களும் உற்ற
ஞாலத்து உயர் காழியாரைப் பாடினர் ஞானசம்பந்தர்
வடமொழியில் சக்கர பந்தம் என்று அழைக்கப்படும் வகையைச் சார்ந்த பதிகம். தமிழ் மொழியில் சக்கரமாற்று என்றும் சக்கர பந்தம் என்றும் அழைக்கின்றனர். திருஞானசம்பந்தர் இந்த பதிகத்தினை சக்கரம் என்று அழைப்பதை நாம் பதிகத்தின் கடைக் காப்பினில் காணலாம். இந்த பதிகமும் மற்ற மிறைக் கவிகள் போன்று பன்னிரண்டு பாடல்கள் கொண்டது. தலத்தின் பன்னிரண்டு பெயர்களும் ஒவ்வொரு பாடலிலும் வருகின்றன. சுழலும் வண்டிச் சக்கரத்தின் சட்டங்கள் மாறிமாறி நமது கண்ணின் முன்னே தோன்றுவது போன்று தலத்தின் பெயர்கள் சுழன்றுசுழன்று முன்னும் பின்னுமாக வருதலால் சக்கரம் என்று திருஞானசம்பந்தரால் அழைக்கப்பட்டது போலும். பிரமனூர் என்று தொடங்கும் பதிகமும் சக்கரமாற்று வகையில் அமைந்துள்ள பதிகமாகும். இந்த பதிகம் (2.70), பாண்டிய மன்னன் ஞானசம்பந்தரை நோக்கி உமது பதி யாது என்று வினவிய போது, அந்த கேள்விக்கு விடையாக சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் குறிப்பிட்டு சீர்காழியின் சிறப்பினை உணர்த்திய பதிகமாகும்.
இந்த பதிகத்தினை மற்ற மிறைக் கவிகளுடன் சேர்த்து ஆதி விகற்பம் என்று சேக்கிழார் கூறுகின்றார். விகற்பம் என்றால் மாறுபட்டது என்று பொருள். பெரும்பான்மையான பதிகங்களின் அமைப்பிலிருந்து மாறுபட்டதால் சேக்கிழார் இவ்வாறு அழைத்தார் போலும். பல்பெயர்ப் பத்து என்று அழைக்கப்படும் எரியார் மழு ஒன்று என்று தொடங்கும் பதிகமும் பூமகனூர் புத்தேளுக்கு என்று தொடங்கும் கோமுத்திரி அந்தாதி பதிகமும் இந்த ஆதி விகற்பங்கள் வகையைச் சார்ந்தவை என்று சேக்கிழார் கருதும் பதிகங்களில் அடங்கியவை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பெருமான் உறையும் தலங்களின் பெயர்களும் பெருமானின் திருநாமங்கள் போன்று புனிதமான மந்திரங்கள் என்று கருதப்படுவதால், தலத்தின் பெயர்களை பலமுறை திரும்பத் திரும்பச் சொல்வது மந்திர ஜெபம் செய்வதற்கு ஒப்பாகும். அதனால் தான் திருஞான சம்பந்தரும் இந்த பதிகத்தை ஓதுவோர் தவம் செய்தவராவர் என்று பதிகத்தின் கடைக்காப்புப் பாடலில் கூறுகின்றார்.
பாடல் 1:
விளங்கிய சீர்ப் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை
வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல்
களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன
இளம் குமரன் தன்னைப் பெற்று இமையவர் தம் பகை எறிவித்த இறைவன் ஊரே
விளக்கம்:
சீர்=பெருமை; விளங்கிய சீர்=பெருமையுடன் விளங்கும்; மேல் சோலை=உயர்ந்து ஓங்கி வளர்ந்த மரங்கள் கொண்ட சோலை: களங்கமில் ஊர்=உயிரினுக்கு களங்கம் எனப்படும் ஆணவ மலத்தினை இல்லை என்று சொல்லும் வண்ணம் அடக்க உதவும் ஊர்; இளங்குமரன்=முருகப் பெருமான்; பகை=சூரபதுமன்; எறிவித்தல்=எறிதல், அடித்தல், முரித்தல். வீசுதல் என்று பல பொருள்களைத் தரும். இந்த சொல் இங்கே அழித்தல் என்ற பொருளைத் தருகின்றது. வண்=வளமை மிகுந்த; புகலி என்பது சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. தேவர்கள் இறைவனிடம் புகலடந்தமையால் ஏற்பட்ட பெயர். அவ்வாறு தன்னிடம் புகலடைந்த தேவர்களின் துயரத்தினை நீக்கும் பொருட்டு முருகப் பெருமானை தோற்றுவித்த இறைவனின் செயல் இங்கே குறிப்பிடப்படுவது மிகவும் பொருத்தமாக உள்ளது. முருகப் பெருமானைத் தோற்றுவித்த காரணத்தை குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காணலாம்.
இராமனதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.115.3) திருஞானசம்பந்தர், முருகப்பெருமானை தழைத்த பீலியை உடைய மயிலினைத் தனது வாகனமாகக் கொண்டவன் என்றும் சிவபெருமானை முருகரின் தந்தை என்றும் குறிப்பிடுவதை நாம் உணரலாம். இழையவன்=முப்புரி நூல் அணிந்தவன்; இலங்கும்=திகழும்;
தழைமயில் ஏறவன் தாதையோ தான்
மழை பொழி சடையவன் மன்னு காதில்
குழையது விலங்கிய கோலமார்பின் பின்
இழையவன் இராமனதீச்சரமே
பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.117.8) திருஞானசம்பந்தர் இறைவனை, மாமுருகன் தந்தையார் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் சொற்களை இடம் மாற்றி அமைக்கப் பட்டிருப்பதால், இந்த பதிகம் மொழிமாற்றுப் பதிகம் என்று அழைக்கப் படுகின்றது. நெருப்புறு மேனியர், வெள்விடை ஏறுவர், நெற்றியின் கண் கண்ணர், மருப்பு உருவன் தாதை, மாமுருகன் விருப்புறு தந்தையார், பாம்புக்கு மெய்யைக் காட்டுவர் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். நெருப்புறு=நெருப்பினைப் போன்ற; வெள்விடை= வெண்மை நிறமுடைய இடபம்; மருப்பு=தந்தம்; மருப்புருவன்= தந்தம் ஒரு உறுப்பாக கொண்டுள்ள யானை முகத்தினை பெற்றுள்ள கணபதி; விறல்=வலிமை பொருப்பு=மலை; தென்=அழகிய. தாதையை என்ற சொல்லில் உள்ள ஐகாரத்தை மெய் என்ற சொல்லுடன் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். இந்த பாடலில் கணபதி மற்றும் முருகப் பெருமான் ஆகிய இருவர் பற்றிய குறிப்புகளும் காணப் படுகின்றன. திருமுறைப் பாடல்களில் கணபதி மற்றும் முருகன் பற்றிய குறிப்பு பல பாடல்களில் காணப்பட்டாலும், இருவரையும் ஒரே பாடலில் குறிப்பிடும் பதிகங்கள் மிகவும் அரிதானவை.
நெருப்பு உறு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண்
மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மாதவர் வாழ்
பொருப்புறு மாளிகைத் தென் புறவத்து அணி புண்ணியரே
திருமீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.1) திருஞானசம்பந்தர் முருகப் பெருமான், மாமரமாகி மாயமாக நின்ற சூரபத்மனை கொன்றதை இந்த குறிப்பிடுகின்றார். மைந்தன்= வலிமை வாய்ந்தவன்; காயம்=உடல்; செவ்வி=அழகிய; அழகிய உடலை படைத்த மன்மதன் என்று முருகப் பெருமானுக்கு அடைமொழி கொடுக்கின்றார். மீயச்சூர் தலத்தைத் தொழுவதால் நாம் நமது வினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றார். வீட்டும்=அழித்துவிடும்.
காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையில் பதித்த பரமேட்டி
மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தன் தாதை தன்
மீயச்சூரே தொழுது வினையை வீட்டுமே
அரிசிற்கரைப் புத்தூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (2.63.6) திருஞானசம்பந்தர், பெருமானை, குமரன் தாதை என்று குறிப்பிடுகின்றார். வள்ளியம்மையின் மார்பினைத் தழுவும் முருகப் பெருமானின் தந்தையும், வானளாவ உயர்ந்த வெள்ளி மலையாகிய கயிலாய மலை போன்று கம்பீரமாகவும் வெண்மை நிறத்தில் காணப்படுவதும் ஆகிய விடையினைத் தனது வாகனமாக உடையவனும் ஆகிய சிவபெருமான் பொருந்தி உறையும் ஊர் அரிசிற்கரைப்புத்தூர் தலமாகும். தெளிந்த நீருடன் பாயும் அரிசில் ஆற்றின் தென் கரையில், சிறைகளை விரித்து பறக்கும் வண்டுகளும் பறவைகளும் நிறைந்து வாழ்வதும் அழகிய நீர்நிலைகளும் உடையதும் ஆகிய தலம் அரிசிற்கரைப்புத்தூர் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வள்ளி முலை தோயும் குமரன் தாதை வான் தோயும்
வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர்
தெள்ளி வருநீர் அரிசில் தென் பால் சிறை வண்டும்
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே
மதுரையில் பாண்டிய மன்னனின் அவையில் அருளிய பதிகத்தின் பாடலில் (2.74.6) முருகப் பெருமானை தோற்றுவித்து தேவர்களின் பகையை (சூரபதுமன் மற்றும் அவனது படை) கெடுத்த இறைவன் என்று சிவபெருமானை, திருஞா சம்பந்தர் குறிப்பிடுகின்றார். காய்ந்த=சினத்துடன் வந்த; சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர வந்த இயமன், சிறுவன் சிவபெருமானை வழிபாடு செய்வதைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டதை இங்கே குறிப்பிடுகின்றார். இருங் கமலம்=சிறந்த தாமரைப்பூ. சேந்தன்=முருகப் பெருமான்; பயந்து=பெற்றெடுத்து;
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலமாத் தோணிபுரம் சீர்
ஏய்ந்த வெங்குருப் புகலி இந்திரனூர் இருங் கமலத்து அயனூர் இன்பம்
வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள் தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே
நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.87.2) திருஞானசம்பந்தர், முருகப் பெருமானை மடமயில் ஊர்தி என்றும் சிவபெருமானை மடமயில் ஊர்தி தாதை என்றும் குறிப்பிடுகின்றார். பொருள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கடுமயில் என்ற தொடர் கடும் அயில் என்று இங்கே பிரிக்கப் பட்டுள்ளது. நான்கு அடிகளிலும் முதற்சீர், இடமயில், கடுமயில், மடமயில், நடமயில் என்று இருப்பதை நாம் உணரலாம். நான்கு அடிகளிலும் மயில் என்ற சொல் கையாளப் பட்டுள்ள நயத்தினை நாம் உணரலாம். திருஞானசம்பந்தரின் கவிதை நயத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்த பாடல் உள்ளது.
இட மயில் அன்ன சாயல் மடமங்கை தன் கை எதிர் நாணி பூண வரையில்
கடும் அயில் கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன்
மடமயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும்
நடமயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரின் நம்பன் அவனே
புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.115.6) திருஞானசம்பந்தர் முருகப் பெருமானை சாமி என்று குறிப்பிட்டு, இறைவனை சாமியின் தாதை என்று கூறுகின்றார். ஆமிதென்று தகைந்து=அன்னமாகவும் பன்றியாகவும் உருவெடுத்து பெருமானின் முடியையும் அடியையும் தேடுதல் தங்களுக்கு பொருந்தும் வழி என்று முடிவு செய்து;
நேமியானும் முகநான்கு உடையந் நெறி அண்ணலும்
ஆம் இதென்று தகைந்து ஏத்தப்போய் ஆரழல் ஆயினான்
சாமி தாதை சரணாகும் என்று தலை சாய்மினோ
பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே
திட்டை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.35.6), திருஞானசம்பந்தர், முருகப் பெருமானின் தந்தையார் சிவபெருமான் என்று கூறுகின்றார். ஊறினார்=அனைத்துப் பொருட்களிலும் ஊறி நிற்பவர்; பொய்யகத்து ஐ உணர்வு என்று பிரித்து பொருள் கொள்ள வேண்டும். நிலையற்ற பொய்யான, உலகத்து பொருட்களின் மீது பற்று (ஆசை) வைக்காதவர்கள்; அமர்தரும்=அமர்ந்து உறையும்; அனைத்துப் பொருட்களிலும் ஊறி நின்று நிறைந்து இருப்பவரும் எல்லா விதமான ஓசைகளிலும் ஒன்றியவரும் திருமாலை தனது உடலின் ஒரு கூறாகக் கொண்டுள்ளவரும் குமரவேளின் தந்தையும் ஆகிய பெருமான் விருப்பத்துடன் அமர்ந்து உறையும் ஊர் தென்குடித்திட்டை. இந்த தலத்தினில் வாழும் அடியார்கள், காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் என்ற ஆறு குற்றங்களைக் களைந்தவர்களாக, நிலையற்ற உலகப் பொருட்களின் மீது ஆசை அற்றவர்களாக, மனதினை ஐந்து பொறிகளின் வழியே செலுத்தாமல் அடக்கியவர்களாக சிவபெருமான் ஒருவரே உண்மையான மெய்ப்பொருள் என்பதை உணர்ந்தவர்களாக, பெருமானை வழிபாட்டு வருகின்றனர் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால்
கூறினார் அமர் தரும் குமரவேள் தாதை ஊர்
ஆறினார் பொய்யகத்தை உணர்வு எய்தி மெய்
தேறினார் வழிபடும் தென்குடித் திட்டையே
சுரருலகு என்று தொடங்கும் சீர்காழி பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.67.3) தேவர்களின் பகையினைக் களையும் வகையில் ஆறுமுகப் பெருமானை தோற்றுவித்து தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன்னை வழிபடச் செய்த இறைவன் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தனது ஐந்து முகங்களோடு அதோமுகம் என்று மேலும் ஒரு முகத்தினைச் சேர்த்து முருகப் பெருமானை படைத்த தன்மை, மிக அருள என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. நிகழ்=போன்ற; நகமணி=நாகமணி; முகை=மொட்டு; முகைமலர்=அன்று வரை மொட்டாக இருந்து அப்போது தான் மலர்ந்த மலர், நாண்மலர்; பகவன்=சிவபெருமான்; முகம்=திருவருள் நோக்கம்; பகை=தேவர்களின் பகைவராகிய அசுரர்கள்; மிக அருள=மிகுந்த கருணையுடன் தர; நிகரில் இமையோர்=அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்த தேவர்கள்; புக=சரண் புக; அகவு=விருப்பம்;
பகலொளி செய் நகமணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு
அகல மலி சகல கலை மிக உரை செய் முகமுடைய பகவன் இடமாம்
பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள நிகரில் இமையோர்
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே
கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.113.1), திருஞானசம்பந்தர், சிவபெருமான் முருகப்பெருமானை பெற்றெடுத்ததை நினைத்து உகந்து அணைத்துக் கொண்டதாக கூறுகின்றார். உற்று=பிரியாது; காமனை=தனக்காக காத்திருக்கும் மனைவி மக்கள் முதலியோர்; அற்றம்=மறைக்க வேண்டிய பாகம்; உமையன்னை பிரியாது இருப்பது பெருமானின் உடலை, சான்றோர்கள் உணர்வது உண்மையான கடவுளாகத் திகழும் பெருமானை, கற்றவர்கள் வெறுப்பது மனைவி மக்கள் ஆகியோரால் ஏற்படும் பாசக்கட்டினை, பெருமானின் நெற்றிக்கண் எரித்து அழித்தது காமனை, பெருமான் தனது இடுப்பினில் அணிந்து கொண்டுள்ள பாம்பு அவரது இடுப்பினைச் சார்ந்த அங்கத்தினை மறைக்கின்றது, தேவர்கள் பெருமானுக்கு பணிவிடை செய்கின்றனர், தான் பெற்றெடுத்த முருகப் பெருமானின் உச்சியை முகர்ந்து பெருமான் மகிழ்கின்றார், பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தினில் உறைவதை பெருமான் மிகவும் விரும்புகின்றார் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.
உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே கனல்விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே
பெற்று முகந்தது கந்தனையே பிரமபுரத்தை உகந்தனையே
விடம் தீர்த்த பதிகத்தின் ஆறாவது பாடலில் (4.18.6) அப்பர் பிரான் சிவபெருமானின் மகன் முருகன் என்று குறிப்பிட்டு அவரது கண்களும் ஆறு என்று கூறுகின்றார். இந்த பாடலில் ஆறு என்ற எண்ணின் சிறப்பு சொல்லப் படுகின்றது. சிவபிரான் படைத்த வேதத்தின் அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகிய ஆறு. அவரது மகனார் முருகனின் முகங்கள் ஆறு. அவர் சூடியிருக்கும் மாலையைச் சூழும் வண்டுகளின் கால்கள் ஆறு. அவரால் ஏற்படுத்தப்பட்ட சுவைகள், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என்னும் ஆறு வகையில் அடங்குவன.
ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன
ஆறு கொலாம் அவர் தம் மகனார் முகம்
ஆறு கொலாம் அவர் தார் மிசை வண்டின் கால்
ஆறு கொலாம் சுவை ஆக்கினதாமே
கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.43.2) பெருமானை, கடம்பன் தாதை என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். கடம்பன் என்பது முருகப் பெருமானின் திருநாமங்களில் ஒன்று. மால்=மேகம்; மாலன=மேகத்தின் கருமை நிறத்தினை ஒத்த; மாயன்=திருமால்; ஏலம்= நறுமணம் மிகுந்த; மேகத்தினைப் போன்று கருமை நிறத்து மேனியை உடைய திருமாலைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்று மகிழ்ந்தவர் சிவபெருமான்; அனைத்து உயிர்களுக்கும் முன்னமே இருந்த பழையவராகவும், அனைத்து உயிர்களும் இறந்த பின்னரும் இருக்கப் போகின்ற புதியவராகவும் உள்ள பெருமான் அனைத்து உயிர்களுக்கும் தலைவராவார். பால் போன்ற வெண்மை நிறத்தில் உள்ள திருநீற்றினைத் தனது உடல் முழுவதும் பூசியுள்ள பெருமான், இயமனைத் தனது காலால் உதைத்து வென்றவர் ஆவார். நறுமணம் மிகுந்த கடம்ப மாலையினைச் சூடும் முருகனின் தந்தையாகிய பெருமான், காஞ்சி மாநகரத்தில் விளங்கித் தோன்றும் மேற்றளியைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலும் அப்பர் பிரான், பெருமானை, சேந்தனை மகனாக் கொண்டார் என்று கூறுகின்றார். சேந்தன் என்றால் முருகப் பெருமான் என்று பொருள்.
மாலன மாயன் தன்னை மகிழ்ந்தனர் விருத்தராகும்
பாலனார் பசுபதியார் பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலால் செற்றார் காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
ஏலநல் கடம்பன் தந்தை இலங்கு மேற்றளியானாரே
பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.60.3) அப்பர் பிரான், பெருமானை, குமரவேள் தாதை என்று குறிப்பிடுகின்றார். குறவி=குறத்தியாகிய வள்ளி அம்மை; வள்ளியம்மையின் தோள்களைப் புணர்ந்து தனது அன்பினை வெளிப்படுத்தியவன் என்று முருகனைக் குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, உமையம்மைக்குத் தனது உடலின் ஒரு பாகத்தைக் கொடுத்து தனது அன்பினை வெளிப்படுத்திய பெருமானின் செய்கை நினைவுக்கு வந்தது போலும். நங்கையோர் பாகத்தன் என்று பெருமானை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். முருகனைப் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே திருமுறை பாடல்களில் காணப்படுகின்றன. பதினோராம் திருமுறையில் உள்ளதும் நக்கீரர் அருளியதும் ஆகிய திருமுருகாற்றுப்படை, மற்றும் திருவிடைக்கழி தலத்தின் மீது கருவூர்த் தேவர் (ஒன்பதாம் திருமுறை) அருளிய பதிகம் ஆகிய இரண்டும் முழுக்கமுழுக்க முருகப்பெருமானைப் பற்றி கூறுவனவாகும். முருகப் பெருமான் சிவபெருமானை வணங்கிய தலங்களில் இந்த தலமும் ஒன்று. வேள் என்று அழைக்கப்படும் முருகன் வணங்கியதால் வேளூர் என்று அழைக்கப்பட்ட தலத்தின் பெயர், அருகில் உள்ள கீழ்வேளூர் தலத்திலிருந்து வேறுபடுத்தி காட்டும் வண்ணம் பெருவேளூர் என்று மாறியதாக கூறுவார்கள். முருகப் பெருமான் இந்த தலத்தில் இறைவனை வணங்கியதை நமக்கு நினைவூட்டும் வகையில் முருகப் பெருமானை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. குறத்திப் பெண் வள்ளியம்மையின் தோள்களை மணந்த செல்வனாகிய குமரனின் தந்தையும், என்றும் நறுமணம் வீசுவதும் மென்மையானதும் ஆகிய கூவிளம் பூக்களைத் தனது கூந்தலில் சூடிய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், பிறவிப் பிணியினை நீக்கி இனிமேல் பிறவாத தன்மை அளிக்க வல்லவனும், பெருவேளூர் தலத்தினை மிகவும் விரும்பி உறைபவனும் ஆகிய பெருமானை, அடியேன் அவனுடன் கொண்டுள்ள உறவின் அடிப்படையில் மற்றவருக்கு உணர்த்தும் வல்லமை பெற்றதால், நான் உணர்ந்த வண்ணம் உங்களுக்கு உணர்த்துவேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்றும்
நறவு இள மென்கூந்தல் நங்கையோர் பாகத்தானைப்
பிறவியை மாற்றுவானைப் பெருவேளூர் பேணினானை
உறவினால் வல்லனாகி உணருமாறு உணர்த்துவேனே
தொண்டனேன் பட்டதென்னே என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (4.75.4) அப்பர் பிரான், பெருமானை கடம்பமர் காளை தாதை என்று குறிப்பிடுகின்றார். கடம்பு என்பது முருகப் பெருமானுக்கு மிகுந்த விருப்பமான மரம். இடும்பன் காவடியாகக் கொண்டு வந்த இரண்டு மலைகளில் ஒன்றாகிய சக்திகிரியில் கடம்ப மரங்கள் அதிகமாக இருந்ததைக் கண்ட குமரன், கடம்ப மர நிழலில் அமர்ந்தான் என்று புராணம் கூறுகின்றது. சங்க இலக்கியங்கள் பலவும் முருகனை கடம்பமர் காளை என்று குறிப்பிடுகின்றன. தியானத்தின் மூலம் எவ்வாறு இறைவனை நாம், நமது மனக் கண்ணால் காணமுடியும் என்பதை விளக்கும் பாடல். இந்த பாடல் நமக்கு அப்பர் பிரானின் அனுபவத்தை உணர்த்துகின்றது. தகளி=அகல்; உடல் என்னும் வீட்டில் உள்ள உள்ளத்தை அகலாக நினைத்து, இறையுணர்வு என்ற நெய்யினை அந்த அகலில் நிரப்பி, உயிராகிய திரியை அந்த அகலில் வைத்து சிவஞானம் எனப்படும் தீயினால் அந்த திரியை ஏற்றி, அந்த ஞான ஒளியில் இலயித்திருந்து பார்த்தால், கடம்ப மலர் மாலையை விரும்பி அணியும் முருகனுடைய தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளை நாம் காணலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
உடம்பெனும் மனை அகத்து உள்ளமே தகளியாக
மடம் படு உணர் நெய் அட்டி உயிரெனும் திரி மயக்கி
இடம் படு ஞானத் தீயால் எரி கொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே
அதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய திருவிருத்தப் பாடல் ஒன்றினில், (4.104.5) சூரபதுமனைக் கொன்ற முருகவேளின் தந்தை என்று அப்பர் இறைவனை குறிப்பிடுகின்றார். முருகப் பெருமானிடம் தோற்றுக் களைத்த நிலையில், ஏதும் செய்ய இயலாத சூரபதுமன் மாயமாக மறைந்து போய் கடலின் நடுவே மாமரமாக நின்ற நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. விரிநீர்ப் பரவை சூர் என்ற தொடர் மூலம் இந்த நிலை உணர்த்தப் படுகின்றது. அதிகை வீரட்டத்துப் பெருமானை வணங்காவிடின் என்ன ஏற்படும் என்பதை அப்பர் பிரான் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். வறுமையின் காரணமாக இரந்து வாழ்ந்தாலும் சிலர் அனைவரையும் அணுகி உதவி கோருவதில்லை. தரம் வாய்ந்து ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் சிலரையே அவர்கள் அணுகுவதை நாம் இன்றும் காண்கின்றோம். ஆனால் வறுமையின் கொடுமையால் தேர்ந்தெடுத்த ஒரு சிலரிடம் உதவி கோராமல் அனைவரிடமும் இரக்கும் நிலை பலருக்கும் இருப்பதை நாம் காண்கின்றோம். இந்த நிலைக்கு காரணம் யாது என்பதை அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். சென்ற பல பிறவிகளில் வீரட்டத்துப் பெருமானை வணங்காமல் இருந்ததே, இந்த பிறவியில் அத்தகையோர், தகுதி படைத்தோர் ஏனையோர் என்று ஆராய்ந்து பார்க்காமல் அனைவரின் இல்லங்களின் முன்னே சென்று வீடு வீடாக திரிந்து இரந்து உண்கின்றனர்; இந்த நிலை அவர்களின் வாழ்நாள் முழுவதும் வேரூன்றி நிலையாக அவர்களுடன் நிற்கின்றது; இத்தகைய நிலை, பெருமானைத் தொழாமல் நின்ற பாவத்தால் வரும் வேதனை, மறுமையில் உங்களுக்கு ஏற்படுவதை தவிர்க்க விரும்பினால் பெருமானைத் தொழுது அந்த நிலையினை தவிர்ப்பீர் என்று அப்பர் பிரான் உலகினுக்கு உணர்த்தும் பதிகம். அகம் அகவன் திரிந்து=பல வீடுகள் முன்னே சென்று நின்று; பரவை=கடல்
ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம் அகவன் திரிந்து
வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர்ப் பரவை
சூர் அட்ட வேலவன் தாதையைச் சூழ் வயலார் அதிகை
வீரட்டத்தானை விரும்பா வரும் பாவ வேதனையே
பேரெயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.16.7) அப்பர் பிரான், பெருமானை, முருகனின் தந்தை என்று குறிப்பிடுகின்றார்.முன்னையார்=அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் முன்னம் தோன்றியவர்; தன்னையார்-தன் ஐயார், தனது தந்தையார்; பின்னையார்=பின்னும் இருப்பவர்; உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றியவரும் முருகப் பெருமானின் தந்தையாக இருப்பவரும் யார் என்று வினவினால், அவர் தான் அனைவர்க்கும் ஒப்பற்ற தலைவராக விளங்கும் சிவபெருமான் ஆவார்; என்னை ஆட்கொண்டு எனது தலைவராக ஆட்சி புரியும் பெருமானார், உலகிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் புதியவராக, அவை அழிந்த பின்னரும் விளங்கும் பெருமான் ஆவார். இத்தகைய பண்புகளை உடைய பெருமான் பேரெயில் தலத்தின் தலைவராக விளங்குகின்றார் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
முன்னையார் மயிலூர்தி முருகவேள்
தன்னை யார் எனின் தானோர் தலைமகன்
என்னை ஆளும் இறைவன் எம்பிரான்
பின்னையார் அவர் பேரெயில் ஆளரே
கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.19.9) அப்பர் பிரான், பிராட்டியை, முருகப் பெருமானைப் பெற்றவள் என்று குறிப்பிடுகின்றார். கடம்பன்=கடம்ப மாலை சூடியவன், முருகப் பெருமானை நம் கடம்பன் என்று உரிமையாக அழைப்பதன் மூலம், முருகப் பெருமான் தமிழ்க் கடவுளாக கருதப்பட்டதை, அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். அப்பர் பிரான் தனது வாழ்வின் இலட்சியத்தை வெளிப்படுத்தும் பாடல் இது. பெருமானுக்கு திருப்பணி செய்வதே தனது கடமை என்று தான் கூறுவதற்கு காரணம் என்ன என்பதையும் இந்த பாடலில் அப்பர் பிரான் தெளிவுபடுத்துகின்றார். பெருமான் தன்னைத் தாங்கியதை எண்ணிப் பார்க்கும் அப்பர் பிரான், அவ்வாறு தன்னைத் தாங்கிய பெருமானுக்கு பணிவிடை செய்வது தான் சிறந்த கைம்மாறு என்று கருதினார் போலும். அப்பர் பிரான் சரிதத்தை உணரும் நமக்கு, பெருமான் அவரை எப்படியெல்லாம் காப்பாற்றினார் என்பதை நினைத்தால், நமக்கே மலைப்பு வரும். அவ்வாறு இருக்கையில், பெருமானின் கருணைக் கரங்கள் அணைத்த தன்மையை நேரில் அனுபவித்த அப்பர் பிரான், பெருமான் தன்னைக் காத்த விதத்தை எப்படி வியந்து நினைத்திருப்பார் என்பதை நம்மால் உணர முடியும். சைவ சமயத்திற்கு மறுபடியும் வரவழைக்க, தருமசேனர் என்ற பெயரில் சமணர்களுடன் வாழ்ந்து வந்த அப்பர் பிரானுக்கு கொடுக்கப்பட்டது சூலை நோய். எனவே அப்பர் பிரான் சைவ சமயத்திற்கு திரும்பிய பின்னர், அந்த நோயிலிருந்து அவருக்குத் தீர்வு அளித்தல், பெருமானின் கடமையாக மாறிவிடுகின்றது. எனவே பெருமானின் இந்த செயலில், வியப்பதற்கு ஒன்றுமே இல்லை. ஆனால் அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள், சுண்ணாம்புக் காளவாயில் ஏழு நாட்கள் வைக்கப் பட்ட பின்னரும், அப்பர் பிரானின் உடலுக்கு எந்த விதமான கேடும் விளையாமல் பாதுகாத்தல். கொடிய நஞ்சு கலந்த சோற்றினை உண்ட பின்னரும் உட்கொண்ட நஞ்சின் தாக்கத்திலிருந்து காப்பாற்றுதல், மதம் கொண்ட கொலை யானை அப்பர் பிரானின் மீது ஏவி விடப் பட்ட பின்னர், யானையின் போக்கினை மாற்றுதல், கல்லுடன் கட்டப்பட்டு நடுக்கடலில் தள்ளப்பட்ட பின்னர் கல்லுடன் சேர்ந்து கடலில் மூழ்கி விடாமல் கல்லினை மிதக்கச் செய்தது, பழையாறை வடதளி திருக்கோயில் சமணர்களால் மறைக்கப் பட்டிருந்த நிலையினை அறிந்து திருக்கோயில் மறைப்பு நீக்கப்படும் வரையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட அப்பர் பிரான், தான் கொண்ட உண்ணா விரதத்தால் உயிர் நீக்காத வண்ணம், பல்லவ மன்னனின் கனவில் தோன்றி கோயிலை மூடியிருந்த முட்புதர்களை அகற்றி, அப்பர் பிரானின் உயிரினைக் காத்தது, உடற்கட்டு தளர்ந்து ஒரு அடி கூட மேலே எடுத்து வைக்க முடியாமல், தனது கயிலைப் பயணத்தில் அப்பர் பிரான் வருந்திய போது வேதியனாக அவர் முன்னே தோன்றி, கயிலைப் பயணத்தைத் தொடரவிடாமல் தடுத்து அவரது உயிரினை காத்தது, ஆகிய செய்கைகள் சிவபெருமான் அப்பர் பிரானை காத்த நிகழ்ச்சிகள். இவை அனைத்தும் பெருமான் எவ்வாறு அப்பர் பிரானைத் தாங்கினார் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. தமிழ் மக்களாகிய நம்மால் விரும்பி போற்றப்படும், கடம்ப மாலை அணிந்தவனாகிய முருகப் பெருமானைப் பெற்ற அன்னை பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பங்காக ஏற்றவன் சிவபெருமான். எனக்கு நேர்ந்த பல விதமான இன்னல்களிலிருந்து என்னைக் காப்பாற்றிய பெருமான், வரவிருக்கும் நாட்களில் எதிர்கொள்ளும் இடர்களிலிருந்தும் என்னை காப்பாற்ற வேண்டும். அவ்வாறு என்னை காப்பற்றுவது அவனது கடமையாகும். இந்த சிவபெருமானுக்கு அடிமைப்பணி செய்வதை நான் எனது கடமையாக கருதுகின்றேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திருக்கரக் கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே
கோழம்பம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.64.10) அப்பர் பிரான் போரினில் வல்ல சூரபதுமனைக் கொன்ற வேலினை உடைய முருகப் பெருமானின் தந்தை என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். சமரன்=போரில் வல்லவன்; தடிந்த= கொன்ற;
சமர சூரபன்மாவைத் தடிந்த வேல்
குமரன் தாதை நல் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக்கு அன்புடைத் தொண்டர்கள்
அமரலோகம் அது ஆளுடையார்களே
பூவனூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலில் (5.65.10) அப்பர் பிரான் கணபதியும் முருகப் பெருமானும் வணங்கும் பெருமான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். நாராயணன். நான்முகன், இந்திரன், கணபதி, முருகன் ஆகியோர் வணங்கும் திருப்பாதங்களை உடையவன் சிவபெருமான் என்று இங்கே கூறுவதை நாம் உணரலாம். வாரணம்=யானை, இங்கே யானை முகத்தினை உடைய கணபதியை வாரணன் என்று குறிப்பிடுகின்றார். உலகம் தோன்றுவதற்கு காரணமாக இருந்த பெருமானை காரணன் என்று இங்கே அப்பர் பிரான் அழைக்கின்றார்.
நாரணன்னொடு நான்முகன் இந்திரன்
வாரணன் குமரன் வணங்கும் கழல்
பூரணன் திருப்பூவனூர் மேவிய
காரணன் என்னை ஆளுடைக் காளையே
காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.84.6) அப்பர் பிரான், பெருமானை, கடம்பன் தாதை என்று குறிப்பிடுகின்றார். கடம்பன்=கடம்ப மலர் மாலையைச் சூடிய முருகப் பெருமான். முருகன் தமிழ் கடவுளாக கருதப் படுவதை நாம் பண்டைய சங்க இலக்கியங்களிலும் மற்ற இலக்கியங்களிலும் காணலாம். அத்தகைய முருகனின் தந்தை என்று குறிப்பிட்டு சிவபெருமானும் தமிழர்களின் கடவுளாக இருந்த நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. உடம்பினார்= உடலுடன் கூடி வாழும் உயிர்கள்; அடும்பு=அடம்ப மலர்; துடும்பல்=நிறைந்து காணப்படும்; அடம்ப மலரும் கொன்றை மலரும் வன்னி மற்றும் ஊமத்தை மலர்களும் நிறைந்து காணப்படும் சடையினை உடையவனும், தூய்மையான மணி போன்று ஒளி வீசுபவனும், கடம்பன் என்று அழைக்கப்படும் முருகப் பெருமானின் தந்தையும் ஆகிய பெருமானை கருதி வழிபடும் உடலினை உடைய அடியார்களுக்கு உற்ற துணையாக இருப்பவன் பெருமான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும்
துடும்பல் செய் சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதும் காட்டுப்பள்ளி
உடம்பினார்க்கு ஓரு உறுதுணை ஆகுமே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.5,10) அப்பர் பிரான், பெருமானை, மூருகவேள் தன்னைப் பயந்தவன் என்று குறிப்பிடுகின்றார். தக்கணா=தென் திசை நோக்குபவன்: தென் திசையை நோக்கி அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் தக்ஷிணாமூர்த்தி என்றும், தென்திசை நோக்கி நடமாடும் நடராஜப் பெருமான் என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம். இரண்டுமே பொருத்தமாக உள்ளது. தொக்கணா=தொக்கு+அணா: தொக்கு= கூடி, அணா என்ற சொல் அண்ணா என்ற சொல்லின் திரிபு, அண்ணலே; கண்=களை கண், பற்றுக்கோடு: வேறு எந்த பற்றுக்கோடும் தனக்கு இல்லை என்று கூறுவதன் மூலம், சிவபெருமான் ஒருவன் தான் தனக்கு பற்றுக்கோடு என்பதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். மூன்று கண்களை உடைய பெருமானே போற்றி, பல வகைகளிலும் அனைவர்க்கும் முதல்வனாகத் திகழ்பவனே போற்றி, முருகப் பெருமானை மகனாகப் பெற்று தேவர்களின் இடர் களைந்தவனே போற்றி, தென்திசைக் கடவுளே போற்றி, தருமத்தின் வடிவாக உள்ளவனே போற்றி, உண்மையான மெய்ப்பொருளே போற்றி, எனது தந்தையே போற்றி, பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் கூடி நின்று எமது அண்ணலே என்று உன்னை, தங்களது கைகளைத் தங்களது தலையின் மேல் உயர்த்தி துதிக்க, அசையாது நீண்ட ஒளிப் பிழம்பாக நின்ற இறைவனே போற்றி, எனது தலைவனே போற்றி, அலைகள் வீசும் கெடில நதிக்கரையில் அமைந்துள்ள அதிகை வீரட்டத்து இறைவனே போற்றி, உன்னை அல்லால் வேறு பற்றுக்கோடு எதுவும் எனக்கில்லை, எனவே நீ தான் என்னை காக்க வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.
முக்கணா போற்றி முதல்வா போற்றி முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி
தொக்கணா என்று இருவர் தோள் கை கூப்பத் துளங்காது எரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணும் கண்ணிலேன் எந்தாய் போற்றி எறிகெடில வீரட்டத்து ஈசா போற்றி
புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.13) பத்தாவது பாடலில், பெருமானைப் போற்றிப் புகழ்வோரின் பட்டியலில், முருகப் பெருமானையும் கணபதியையும் அப்பர் பிரான் சேர்த்திருப்பதை நாம் காணலாம். விநாயகப் பெருமானின் இடர் களையும் தன்மை இங்கே விக்கின விநாயக என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. சிவபிரான் பால் ஆழ்ந்த காதல் கொண்ட தலைவி, பெருமான் தன்னை விட்டுப் பிரிந்து போனதை நினைத்து வருந்தும் பாடல்கள் கொண்ட அகத்துறை வகையைச் சார்ந்த பதிகம் இது.
கோவாய இந்திரன் உள்ளிட்டாராகக் குமரனும் விக்கின விநாயகன்னும்
பூவாய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றிசைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடி ஆடிப் பாரிடமும் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை வண்டார்க்கப் புறம்பயம் நம்மூர் என்று போயினாரே
முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் ஒரு பாடலில் (6.23.4), அப்பர் பிரான் வள்ளி மணாளற்கு தாதை என்று பெருமானை குறிப்பிடுகின்றார். செந்தில் என்று திருச்செந்தூர் தலத்தினை, இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். திருச்செந்தூர் தலம் தேவார முதலிகளின் காலத்தில், பிரபலமாக இருந்தது இந்த பாடலிலிருந்து தெரிகின்றது. சங்க இலக்கியமாக கருதப்படும் திருமுருகாற்றுப்படை நூலில் திருச்செந்தூர் தலம் பற்றிய குறிப்பு காணப் படுகின்றது. கள்ளி முதுகாடு என்று, கள்ளிச் செடிகள் வளர்கின்ற சுடுகாட்டினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் காலனையும் காலால் கடந்தான் கண்டாய்
புள்ளி உழைமானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடைப் புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர்பிறை முடிமேல் சூடி கண்டாய் வெண்ணீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய
வள்ளி மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டுறையும் மணாளன் தானே
நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.42.6) அப்பர் பிரான் பெருமானை, குமரன் தாதை என்று குறிப்பிடுகின்றார். மிறை=துன்பம்; பழைய வினைகளின் பயனால் நாம் துன்பங்கள் மட்டுமன்றி இன்பங்களையும் நுகர்கின்றோம்; ஆனால் அத்தகைய இன்பங்களில் ஆழ்ந்து மகிழும் நாம் நம்மை மிகவும் உயர்வாக நினைத்துக் கொள்கின்றோம். அத்தகைய தருணங்கள், நாம் அகந்தை கொண்டு இறைவனை மறக்கும் தருணங்களாக மாறுகின்றன. எனவே தான். இன்பம் நுகரும், நேரங்களிலும் நம்மை உயர்வாக எண்ணிக் கொள்ளமால், அடக்கத்துடன் தாழ்மையாக நினைத்து இறைவனை வணங்க வேண்டும். அவ்வாறு இருப்பவரின் நெஞ்சத்தில் இறைவன் உறைவான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். வியவேல்=மகிழாமல் இருத்தல்; நிறைவுடையான் என்ற தொடரினை அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற என்ற தொடருடன் இணைத்து, ஊழிக்காலத்தில் மன நிறைவுடன் நடனம் ஆடும் இறைவன் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். ஊழிக்காலம் முடிந்த பின்னர், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை நீக்கிக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, உலகத்தை தோற்றுவிக்க எண்ணம் கொள்ளும் பெருமான், அந்த எண்ணத்தினால் மனநிறைவு அடைகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றாரோ என்று தோன்றுகின்றது. உலகத்தவர்களே, பல வகையான துன்பங்களுக்கும் காரணமாக விளங்கும் இந்த உடலுடன் வாழும் வாழ்க்கையை நிலையானது என்ற எண்ணத்துடன், பழைய நல்வினைகளின் பயனாக வரும் இன்பங்களை நுகர்ந்து, அந்த இன்பங்கள் தரும் மகிழ்ச்சியில் ஆழாமல் இருப்பீர்களாக; அத்தகைய இன்பங்களில் ஆழ்ந்து தங்களது உண்மை நிலையை மறந்து நில்லாமல், அதற்கு பதிலாக தங்களது குறைகளை உணர்ந்து அடக்கத்துடன் வாழும் அடியார்களின் நெஞ்சத்தில் இறைவன் உறைகின்றான்; முருகனுக்கு தந்தையாகவும், எப்போதும் நடனமாடுவதை தனது குணமாக கொண்டவனும், கொல்லும் தன்மை கொண்டதும் மூன்று இலைகளை உடையதுமாகிய சூலத்தினை கையில் ஏந்தியவனும், தனது கால்களில் கழலும் சிலம்பும் ஒலிக்க உலகம் அதிரும் வண்ணம் நடனம் ஆடுபவனும், குறை ஏதும் இன்றி நிறைந்த மனத்தினை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற நெய்த்தானம் நன்னகரத்தில் அமைந்துள்ள திருக்கோயிலை, மனதில் நினைத்து வணங்கினால் நீர், வாழ்வினில் உய்வினை அடையலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மிறைபடும் இவ்வுடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை கூத்தாடும் குணம் உடையான் கொலை வேல் கையான்
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற
நிறைவுடையான் இடமாம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.53.2) அப்பர் பிரான், பெருமானை, குமரனையும் மகனாக உடையார் என்று குறிப்பிடுகின்றார் சமரம்=போர்; குறைத்த=அழித்த; நமன்=இயமன்; தனக்கு இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் பயந்து ஓடியதால் தன்னை எதிர்த்து போரிடுவார் எவரும் இல்லாத நிலையில், தனது தோள் தினவு காரணமாக, சிவபெருமானுடன் போர் செய்ய வேண்டும் என்று திரிந்தவன் அரக்கன் சலந்தரன். இதனை உணர்த்தும் வண்ணம் போர் வேண்டினான் என்று அரக்கனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். குழகர்=இளமையும் அழகும் பொருந்தியவர். பல போர்களில் வெற்றி கொண்டவனாய், தன்னை எதிர்த்து போரிடுவார் எவரும் இல்லாத நிலையில், சிவபெருமானுடன் போர் புரியும் எண்ணத்துடன் அவரைத் தேடி அலைந்தவன் அரக்கன் சலந்தரன். அத்தகைய வலிமை வாய்ந்த அரக்கனை எதிர்கொண்டு அவனது உடலை சக்கரத்தால் பிளந்தவர் சிவபெருமான்; சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனை, தனது காலால் உதைத்து அழித்தவர் சிவபெருமான்; திருமாலைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டவர் சிவபெருமான்; குமரனை தனது மகனாக உடையவரும், அடர்ந்த சோலைகள் நிறைந்து குளிர்ச்சியுடன் காணப்படும் திருவீழிமிழலையின் திருக்கோயிலில் அமர்ந்துள்ள குழகரும், பின்னால் தோன்றப் போகும் அமுதத்தை அமரர்கள் உண்ணவேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்கு முன்னே பொங்கி எழுந்த நஞ்சினை உண்டவரும் ஆகிய இறைவன் அடியேனை ஆட்கொண்டு அருள் புரிந்தவர் ஆவார் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும்
நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும் நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும்
குமரனையும் மகனாக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும்
அமரர்கள் பின் அமுது உண நஞ்சுண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் ஒரு பாடலில் (6.65.9) முருகவேளுக்கும் யானை முகத்தவனுக்கும் தந்தையாகிய பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மும்மூர்த்திகளும் தோன்றுவதற்கு காரண புருடனாக இருந்தவன் சிவபெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார் சிவன் என்றால் இன்ப வடிவானாவன் என்று பொருள். சிந்தாத சிந்தையர் என்று சிவபெருமான் பால் வைத்த சிந்தை, மற்ற எந்த பொருட்களின் மீதும் சிதறாதவாறு உறுதியுடன் இருக்கும் அடியார்களை இங்கே குறிப்பிடுகின்றார்.
முந்தைகாண் மூவரினும் முதலானான்காண் மூவிலைவேல் மூர்த்திகாண் முருகவேட்குத்
தந்தைகாண் தண் கடமாமுகத்தினாற்குத் தாதைகாண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச்
சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்குச் சிவனவன் காண் செங்கண்மால் விடை ஒன்றேறும்
எந்தை காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் சிந்தையானே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.74.7) அப்பர் பிரான் பெருமானை, ஆறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் முருகன் மற்றும் விநாயகர் ஆகிய இருவரும் குறிப்பிடப் படுகின்றார்கள். பல திருமுறைப் பாடல்களில் முருகன் மற்றும் விநாயகர் பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும், இவர்கள் இருவரும் ஓரே பாடலில் இடம் பெறுவது அரிதாகும். அத்தகைய தேவாரப் பாடல்கள், மேற்கண்ட பாடலைத் தவிர்த்து ஐந்து பாடல்கள் உள்ளன.
தக்கனது வேள்வி கெடச் சாடினானைத் தலை கலனாப் பலியேற்ற தலைவன் தன்னை
கொக்கரைச் சச்சரி வீணைப் பாணியானைக் கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன் தன்னை
நக்கனைக் வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
குடந்தைக் கீழ்க்கோட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.75.7) அப்பர் பிரான் பெருமானை குமரன் தாதை என்று அழைக்கின்றார். கார்=மேகம்; காரணர்=படைப்புத் தொழில் செய்யும் பிரமன்; சுருதி=இசையுடன் இசைக்கப்படும் வேதங்கள். மேகம் போன்ற நிறத்தில் திருமேனியை உடைய திருமாலும், தாமரை மலரில் அமர்ந்தவாறு படைப்புத் தொழிலினை மேற்கொண்டுள்ள பிரமனும், தனது அடியையும் முடியையும் காண முடியாத வண்ணம், புகழ் மிக்க நெருப்பு உருவத்தில் நீண்ட தழல் பிழம்பாக நின்றவர் சிவபெருமான். மேரு மலையினை வில்லாக வளைத்து திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்தவர் அவரே. உலகமாகவும், நீராகவும், நெருப்பாகவும், காற்றாகவும், மற்ற நான்கு பூதங்களினும் மேம்பட்ட ஆகாயமாகவும், சூரியன் சந்திரன் எனப்படும் சுடர்களாகவும், இசையுடன் ஓதப்படும் வேதங்களாகவும், உலகெங்கும் பரந்து நிற்பவர் சிவபெருமான். கூர்மையான வேலினை உடைய முருகப் பெருமானுக்கு தாதையாகிய அவர் குடந்தை நகரின் கீழ்க்கோட்டம் திருக்கோயிலில் கூத்தனாக உறைகின்றார்
கார் இலங்கு திருவுருவத்தவற்கும் மற்றைக் கமலத்தில் காரணற்கும் காட்சி ஒண்ணாச்
சீர் இலங்கு தழல் பிழம்பில் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும்
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பரிதி மதி சுருதியுமாய்ப் பரந்தார் போலும்
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே
இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.89.2) அப்பர் பிரான், பெருமானை, கோழிக் கொடியோன் தாதை என்று குறிப்பிடுகின்றார். கோழி என்பது பொதுப் பெயராக சேவலையும் சேர்த்துக் குறிக்கும். சேவலைத் தனது கொடியின் சித்திரமாக முருகப்பெருமான் கொண்டுள்ளதால், கோழிக் கொடியோன் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. ஆழி=பரந்த ஆழித் தேர்=பரந்த உலகம்; வித்தகன்=திறமை உடையவன். ஆழி என்பதற்கு சக்கரம் என்ற பொருளும் உள்ளது. சூரியனையும் சந்திரனையும் கொண்டு கணிக்கப்படும் காலத்தை இயக்கும் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கோழிக் கொடியினை ஏந்தியுள்ள முருகப் பெருமானின் தந்தையாக விளங்கும் பெருமான், பூங்கொம்பு போன்ற உருவத்தினை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து மகிழ்ந்து இருக்கின்றார், பல ஊழிக் காலங்கள் தோன்றுவதற்கு காரண கர்த்தராக, முதல்வராக இருப்பவர் சிவபெருமான்; அவர் தன்னை நினைக்கும் அடியார்களின் உள்ளத்திலிருந்து நீங்காமல் இருக்கின்றார். பரந்த உலகத்தினை இயக்கும், செலுத்தும் திறமையாளனாக உள்ளவர் பெருமான்; தனது திருப்பாதங்களைச் சரணாக அடைந்த அன்பர்களுக்கு அன்பராய் இருப்பவர் சிவபெருமான். நாம் எடுத்துள்ள இந்த பிறவியை கழித்த பின்னர், நமது வினைத் தொகைகளின் தகுதிகளுக்கு ஏற்ப ஏழு வகையான பிறவிகளுக்குள் ஒரு பிறவி வாய்க்குமாறு செய்யும் பெருமான், இன்னம்பர் திருத்தலத்தில் தான்தோன்றி ஈசனாக எழுந்தருளி உள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கோழிக் கொடியோன் தன் தாதை போலும் கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வரும் தாமே போலும் உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும்
ஆழித் தேர் வித்தகரும் தாமே போலும் அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்கும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே
ஓணகாந்தன்தளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.5.) இரண்டாவது பாடலில் சுந்தரர் பெருமானுடன் தொடர்பு கொண்டுள்ள கங்கை நங்கை, பார்வதி தேவி, கணபதி, முருகன் ஆகியோர், எவ்வாறு தனக்கு உதவாமல் இருக்கின்றார்கள் என்று நகைச்சுவையாக கூறுகின்றார். இந்த பாடலிலும் முருகப் பெருமான் மற்றும் விநாயகர் ஆகிய இருவரும் குறிப்பிடப் படுகின்றனர். கங்கை, உமையம்மைக்கு அஞ்சி ஏதும் வாய் திறவாமல் இருப்பதாலும்,. கணபதி தனது வயிற்றினையே பிரதானமாக கருதுவதாலும், குமரன் சிறு பிள்ளையாக இருப்பதாலும், உமையம்மை கணவனின் கருத்தினை மீறி அடியார்க்கு அருள் செய்யாமல் இருப்பதாலும், தனக்கு அவர்கள் நால்வரும் உதவுவதில்லை என்று கூறும் சுந்தரர், பெருமானும் தனக்கு உதவவில்லை என்றால், எவ்வாறு அவருக்குத் தான் தொண்டு செய்வது என்ற கேள்வியை இங்கே கேட்கின்றார். கோல் தட்டி=ஆணையை மீறி;
திங்கள் தங்கு சடையின் மேலோர் திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கோல் தட்டி ஆளார்
உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம் ஓணகாந்தன்தளி உளீரே
திருத்துருத்தி மற்றும் வேள்விக்குடி ஆகிய தலங்களை இணைத்துப் பாடிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.18.6) சுந்தரர் குறவர் குலத்துப் பெண்ணினை மணவாட்டியாக பெற்ற முருகனின் தந்தை என்று இறைவனை குறிப்பிடுகின்றார். முருகனார் மட்டுமா மாயம் செய்து வேடனாக தோன்றி வள்ளியை மணந்தார்; பெருமானும் மாயம் செய்தவராக வேடுவக் கோலம் தாங்கி பன்றியின் பின்னே ஓடினார் என்று மகாபாரத நிகழ்ச்சியை சுந்தரர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். கொல்லை மறவனார் என்று கொலைத் தொழில் புரியம் வேடுவக் கோலத்தை சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார். வேடுவக் கோலம் புரிந்த பெருமான் நால்வர்க்கு அறமும் உரைத்தார். இவ்வாறு பல வேடங்கள் தாங்கி மாயம் புரிவதை அறிந்த நாம் இவர்க்கு அடிமைப் படுவோமா என்று இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் கடைப் பாடலில் ஆட்படுமாறு சொல்லிய பாடல்கள் என்று பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களை குறிப்பிட்டு சுந்தரர், இறைவனின் திறத்தை அறிந்த நாம் அவருக்கு ஆட்படுவோம் என்று உணர்த்துகின்றார்.
குறவனார் தம் மகள் தம் மகனார் மணவாட்டி கொல்லை
மறவனராய் அங்கோர் பன்றிப் பின் போவது மாயம் கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதியராய் அங்கோர் சோர்வு படா
அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே
திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.38.8) சுந்தரர், பெருமானை மயிலூர்தி முருகவேள் தாதை என்று குறிப்பிடுகின்றார். பொன்னானை என்று விநாயகப் பெருமானை குறிப்பிடுகின்றார். நெடுமாறன்=நின்ற சீர் நெடுமாற நாயனார்; பொடியாடு நெடுமாறன் என்று திருஞானசம்பந்தரால் பாண்டிய மன்னன் சைவ மதம் திரும்பிய செய்தி உணர்த்தப் படுகின்றது. தென்னான்=தென்னாடு என்று அழைக்கப்படும் பாண்டிய நாட்டுக்கு உரியவன்; நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் என்று சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இந்த மன்னனை குடபால், வடபால் மற்றும் குணபால் சேராத சிந்தையான் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். குடபால், வடபால் மற்றும் குணபால் என்று கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு திசைகளும் அந்த திசைகளில் உள்ள நாடுகளும் உணர்த்தப் படுகின்றன. இந்த மன்னன் மண்ணாசை அற்றவனாக இருந்த தன்மை இந்த தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. புதுக்கோட்டைக்கு அருகில் இருந்த நெய்வேலி என்ற இடம் தான் நெல்வேலி என்று குறிப்பிடப் படுகின்றது என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இரண்டாம் புலிகேசி இறந்த பல ஆண்டுகள் பின்னர் ஆட்சிக்கு வந்த சளுக்கிய மன்னன், ஶ்ரீவல்லபவிக்ரமாதித்தன், பழி தீர்க்கும் நோக்கத்துடன் காஞ்சி மீது படையெடுத்தான். காஞ்சியின் சிற்பங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் பரமேசுவர பல்லவன் காஞ்சி நகரத்தை விட்டு வெளியேறவே, காஞ்சி நகரினை மிகவும் எளிதாக கைப்பற்றிய சளுக்கிய மன்னன், சோழர்களை வெற்றி கொண்டு உறையூரையும் கைப்பற்றிய பின்னர், பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க முயற்சி செய்தான்; அந்த படைகளை நெல்வேலியில் எதிர் கொண்ட, பாண்டிய மன்னன் சளுக்கியப் படைகளை வெற்றி கொள்ள, சளுக்கிய மன்னன் விக்ரமாதித்தன் திரும்ப முயற்சி செய்தான் என்றும் பின்னர் பல்லவப் படைகளால் தோற்கடிக்கப் பட்டான் என்றும், சரித்திரம் உணர்த்துகின்றது. பாண்டிய மன்னன் நெடுமாறன் எங்கும் படையெடுத்துச் சென்றதாக சரித்திரம் உணர்த்தவில்லை. இந்த தன்மையைத் தான் மண்ணாசை அற்றவன் என்று சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். கருமான்=தாருகவனத்து முனிவர்கள் பெருமான் மீது ஏவிய மத யானை; மீண்டும் சைவ மதம் திரும்பிய பாண்டிய மன்னன், எப்போதும் தனது சிந்தையில் சிவபெருமானின் நினைவுகளை சுமந்தவனாக இருந்தமை முடிமேல் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு பாண்டிய மன்னனின் சிறப்பை குறிப்பிடும் சுந்தரர், திருவதிகை சித்தவடம் மடத்தில் தன்னருகே படுத்தவாறு, முதியவராக வந்த பெருமான், தனது திருவடிகளை எனது தலையில் மீது வைத்ததை அறியாது கோபித்துக் கொண்ட பாவி என்று தனது செய்கையை குறித்து வெட்கம் அடைந்தவராக வருந்துவதை நாம் இந்த பாடலில் உணரலாம். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில், பிராட்டியை சேந்தர் தம் தாய் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார்.
பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி
அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமான் உரியானை அதிகை மாநகருள் வாழ்பவனை
என்னானை எறிகெடில வடவீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போலியானே
நாகைக் காரோணம் பதிகத்தின் ஒரு பாடலில் (7.46.9), அன்னை பார்வதி தேவி, விநாயகப் பெருமான் மற்றும் முருகப்பெருமான் ஆகியோரிடத்தில் எதுவும் வேண்ட மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் ஆட்சி செய்யும் உன்னிடம் தான் எதுவும் வேண்டுவேன் என்று கூறுகின்றார். நீர் எனக்கு ஏதும் தாராது இருந்தால், நாம் உமது திருமேனியை விடாமல், கெட்டியாகப் பற்றிக் கொள்வேன். அதற்காக நீர் என்னை, கொடுமைக்காரன் என்று பழிக்கக் கூடாது என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.
மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன்
எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்றறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள் செய்யீர்
திண்ணென என்னுடன் விருத்தி தாரீரேயாகில் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே
பொன்னும் மெய்ப்பொருளும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் சுந்தரர் (7.59.10) தேவர்கள் பால் வைத்திருந்த அன்பின் காரணமாக முருகப் பெருமானை தோற்றுவித்து அவனுக்கு தந்தையாக பெருமான் விளங்கினார் என்று கூறுகின்றார். ஒட்டி=வழக்கு தொடுத்து; திருமணம் புரிந்து கொள்ளவிருந்த தன்னை அடிமை என்று வழக்கு தொடுத்து ஆட்கொண்ட பெருமான், வழக்கினில் வென்ற பின்னர் எதிரே தோன்றாமல் மறைந்து விட்டார் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். உச்சிப் போதன்=நண்பகல் போன்று ஒளிவீசுபவன்; பட்டியை=பட்டாடை உடையவன்; பெருமான் தான் அணிந்துள்ள பட்டாடையின் மேல் நாகத்தை கச்சாக இறுகக் கட்டியுள்ளார் என்று திருமுறைப் பாடல்கள் கூறுகின்றன. செட்டி என்பது முருகப் பெருமானை குறிக்கும் செட்டியப்பன்= சிவபெருமான்.
ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப் போதனை நச்சரவு ஆர்த்த
பட்டியைப் பகலை இருள் தன்னைப் பாவிப்பார் மனத்து ஊறும் அத் தேனை
கட்டியைக் கரும்பின் தெளி தன்னைக் காதலால் கடற் சூர் தடிந்திட்ட
செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே
திருக்கோலக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.62.4) சுந்தரர், பிராட்டியை, அமரர் நாதனைக் குமரனைப் பயந்தவள் என்று குறிப்பிடுகின்றார். ஆத்தம்=நெருக்கம்; தயங்கிய= பொருந்திய; மட மான்=இளம் மான் கன்று போன்று அழகிய உமை அன்னை; மிசை=உள்ள; வான் மிசை=பகீரதனின் தவத்தினால் நிலவுலகினில் பாய்ந்த கங்கை நதி அதற்கு முன்னர், வானுலகில் இருந்த தன்மை உணர்த்தப் படுகின்றது. தீர்த்தன்=தூயவன்; கங்கை நதியைக் கரந்த செயல் பெருமானுக்கு எந்த விதத்திலும் இழிவினை ஏற்படுத்தவில்லை என்பதை குறிப்பிட, தீர்த்தன் என்றார் போலும். புண்ணிய தீர்த்தம் என்று கருதப்படும் தன்மைக்கு கங்கை நதியை உயர்த்திய தன்மை கருதி, தீர்த்தன் என்று குறிப்பிட்டார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
ஆத்தம் என்றெனை ஆள் உகந்தானை அமரர் நாதனைக் குமரனைப் பயந்த
வார்த் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்தனைச் சிவனை செழுந்தேனைத் தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும்
கூத்தனைக் குருமாமணி தன்னைத் கோலக்காவினில் கண்டு கொண்டேனே
திருத்தினைநகர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.64.6) சுந்தரர் பெருமானை, சேந்தர் தாதை என்று குறிப்பிடுகின்றார். அம் கை=அழகிய கை; பாந்தள்=பாம்பு; கடற் சூர்=கடலில் மாமரமாக நின்ற சூரபதுமன்; சிவக்கொழுந்து என்ற சொல்லுக்கு நன்மையின் மேலெல்லை என்று தருமபுர ஆதீனம் வலைத்தளம் விளக்கம் அளிக்கின்றது. தடிந்திட்ட=இரு கூறாக பிளந்த; எத்துணை அதிகாரத்துடன் பெருமிதத்துடன் வாழ்ந்த வாழ்க்கையாயினும், அந்த வாழ்க்கைக்கு ஒரு நாள் முடிவு வரும் என்பதை இந்த பாடலில் சுந்தரர் உணர்த்துகின்றார்.
வேந்தராய் உலகாண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இவ்வுடலிது தன்னைத்
தேய்ந்து இறந்து வெந்துயர் உழந்திடும் இப்பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானைப் பரமனைக் கடற்சூர் தடிந்திட்ட
சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.68.7), சுந்தரர் குறவர் மங்கை தன் கேள்வன் என்று முருகப் பெருமானை குறிப்பிடுகின்றார். முருகப் பெருமான் சூரபதுமனுடன் போருக்கு சென்ற அமரர் சேனைக்கு தலைவனாக இருந்த செய்தியும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. மறவன்=வேடன்; நறை=நறுமணம்; முருகனைப் பெற்ற தலைவன் என்று இங்கே இறைவனை சுந்தரர் குறிப்பிடுகின்றார். பெருமானின் கண்களிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் ஆறு முகங்களாக மாற, ஆறு முகங்களும் ஒன்று இணைந்த முருகப் பெருமான் தோன்றினான் என்று கந்தபுராணம் கூறுகின்றது. ஏனையோர் போன்று தாயின் கருவில் உதித்தவன் அல்ல முருகப் பெருமான். தந்தையின் அம்சமாக, தந்தையின் கண்களில் வெளிப்பட்ட தீப்பொறிகளில் தோன்றியவன் முருகப் பெருமான். இந்த செய்தியை கிருபானந்த வாரியார் அவர்கள் மிகவும் வேடிக்கையாக, முருகன் ஒருவனே ஆண்மகன் (ஆணுக்கு பிறந்த மகன்) ஏனையோர் அனைவரும் பெண்மகன் (தாயின் வயிற்றினில் உதித்தவர்கள்) என்று கூறுவார்.
மறவனை அன்று பன்றிப் பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த
அறவனை அமரர்க்கு அரியானை அமரர் சேனைக்கு நாயகனான
குறவர் மங்கை தன் கேள்வனைப் பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறை விரியும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
பொழிப்புரை
பெருமையுடன் விளங்கும் பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, உயர்ந்து ஓங்கி வளர்ந்த மரங்கள் கொண்டதும் செழுமை நிறைந்ததும் ஆகிய தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வளமை மிகுந்த புறவம், நிலவுலகத்தில் உயிரினுக்கு களங்கத்தை விளைவிக்கும் ஆணவ மலத்தினை அடக்கி இல்லாதது போன்று செய்யும் சண்பை, நறுமணம் கமழும் காழி, கொச்சைவயம், கழுமலம் என்று பன்னிரண்டு பெயர்களை உடைத்த இந்த தலம், முருகப் பெருமானைத் தோற்றுவித்து தேவர்களின் பகையாகிய சூரபதுமன் அவனது தம்பியர்கள் மற்றும் அவனைச் சார்ந்த அரக்கர் கூட்டத்தினை அழித்த இறைவன் உறையும் தலமாகும்.
பாடல் 2:
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல் 2 (திதே 0344)
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0345)
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0346)
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல் 2 தொடர்ச்சி, 3, 4, 5 (திதே 0347)
திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன் ஊர் அயனூர் தெய்வத்
தரு வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தரு சண்பை ஒண்பா
உரு வளர் வெங்குருப் புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர்
வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே
விளக்கம்:
அயன்=பிரமன்; அயனூர்=பிரமபுரம்; திரு=செல்வம், அழகு; சுவர்பானு என்ற அரக்கன், பாற்கடலிலிருந்து பொங்கி வந்த அமுதத்தை, மோகினியாக வந்த திருமால், வஞ்சகமாக தேவர்களுக்கு மட்டும் அளித்து வந்ததைக் கண்டு, தானும் தேவர்களின் நடுவே அமர்ந்து அமுதம் பெறுவதற்கு முயற்சி செய்தான். தங்களின் இடையே அமர்ந்து அவன் அமுதம் பெற்றதை உணர்ந்து, சூரியனும் சந்திரனும், திருமாலிடம் அவன் வரிசை மாறி அமர்ந்ததை சுட்டிக் காட்டி உணர்த்தியதால், திருமால் அவனது தலையினை வெட்டினார். ஆனால் அமுதம் உள்ளே சென்றதால் சுவர்பானு உடனே இறக்கவில்லை. அவனது தலை சீர்காழி சென்று இறைவனிடம் இறைஞ்சி முறையிட, அரக்கனது உடலுடன் பாம்பின் தலையை பொருத்தியும், அரக்கனது தலையுடன் பாம்பின் உடலை பொருத்தியும் பெருமான் வாழ்வளித்தார். அவர்கள் இருவரும் முறையே இராகு என்றும் கேது என்று அழைக்கப் பட்டனர். இந்த சுவர்பானு எனப்படும் அரக்கனே சிலம்பன் என்று தேவாரப் பாடல்களில் அழைக்கப் படுகின்றான். சுவர்பானுவின் தலை சென்று இறைவனை வழிபட்டமையால் சிரபுரம் என்ற பெயரும் தலத்திற்கு வந்தது. இராகு என்ற பாம்பு வழிபட்டமையால், நாகநாதன் என்று பெருமானும் அழைக்கப் படுகின்றார். எனவே சிலம்பன் என்ற சொல் பெருமானை வழிபட்டு அருள் பெற்ற சுவர்பானுவை குறிப்பதாகவும், நாகநாத சுவாமி என்ற பெயரினை பெற்ற பெருமானை குறிப்பதாகவும் இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. இந்த பாடலில் சிரபுரம் என்ற சொல் இல்லாமல் இருப்பதன் பின்னணியில், சிலம்பனூர் என்ற சொல்லுக்கு சிரபுரம் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. தெய்வத்தரு=கற்பக மரம். கற்பக மரம் தனது நிழலில் அமர்வோர் நினைத்ததை அளிக்கும் என்று கூறுவார்கள். சீர்காழி தலத்தில் உள்ள மரங்கள் செழிப்புடன் வளர்ந்து மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதால், கற்பக மரங்களுக்கு ஒப்பாக இங்கே குறிப்பிடப் படுகின்றன. வேணுபுரம் என்ற பெயர் இந்திரன் வந்து பெருமானை வழிபட்டதால் வந்த பெயர். எனவே தேவேந்திரன் ஊர் என்று வரும் இடங்களில் வேணுபுரம் என்று பொருள் கொள்வது பொருத்தம். ஒண்பா=சிறந்த பாடல்கள்; உருவளர்=புகழ் வளரும்; சான்றோர்கள் மேலும்மேலும் இறைவனைப் புகழ்ந்து பாடுவதால், பெருமானின் சிறப்பும் தலத்தின் சிறப்பும் மேலும்மேலும் வளர்கின்றது என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உயர்ந்த தேவர்=பிரமன் திருமால் இந்திரன் உள்ளிட்ட உயர்ந்த தேவர்கள்; வெருவளர்=அச்சம் வளரும் நிலை; தெய்வத் தரு வளர் புறவம் என்பதற்கு தெய்வத் தரு என்று பெருமானை குறிப்பிட்டதாக பொருள் கொண்டு, தனது அடியார்கள் வேண்டுவன எல்லாம் அளிக்கும், கற்பக மரம் போன்ற கொடையாளனாகிய பெருமான் உறைகின்ற தலம் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. பெருமானை கற்பக மரம் என்று குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம்,
தனது திருவடி நிழலில் அமரும் அடியார்கள் நினைப்பன எல்லாம் தரும் பெருமான், என்பதை உணர்த்தும் வண்ணம், கடிக்குளம் தலத்தின் பெருமானை கற்பக நாதர் என்றே அழைக்கின்றனர். திருஞானசம்பந்தர் தான் இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒன்பது பாடல்களில் (2.104) கடிக்குளத்து உறையும் கற்பகம் என்றே பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் கற்பகம் என்ற பெருமானின் திருநாமம் குறிப்பிடப்படவில்லை; எனினும் இந்த பாடலில் அரக்கன் இராவணனுக்கு அவன் நினைத்தும் பார்த்திராத வரங்களை கொடையாக அருளிய பெருமான் என்று குறிப்பிட்டு, இந்த பெயருக்கு ஏற்ற வண்ணம் பெருமான் அருள் புரிந்ததை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார், இந்த பதிகத்தின் நான்காவது பாடலை நாம் இங்கே காண்போம். நிகரில்லா என்ற சொல்லினை பவளத்தை என்ற சொல்லின் முன்னே வைத்து பொருள் காணவேண்டும். செல்வம்=திருவருள்; பெருமானின் திருவருளைப் புகழ்ந்து ஏத்தும் அடியார்களின் வினைகள் முற்றிலும் தேய்ந்தழிய அவர்கள் வினை அற்றவர்களாக மாறிவிடுவார்கள் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.
நீர்கொள் சடை முடியனை நித்திலத் தொத்தினை நிகரில்லாப்
பார்கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தைப் பசும்பொனை விசும்பாரும்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகம் தன்னைச்
சீர்கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணமாமே
பாவநாசத் திருப்பதிகத்தின் பாடலில் (4.15.6) அப்பர் பிரான் பெருமானை கருகாவூரின் கற்பகம் என்று குறிப்பிடுகின்றார். மருகல் தலத்தில் உறையும் இறைவனின் பெயர் மாணிக்க வண்ணர். தேவலோகத்தில் உள்ள கற்பகமரம், அதன் நிழலில் நிற்போர்க்கு அவர்கள் நினைப்பதை எல்லாம் அளிக்க வல்லது என்று கூறுவார்கள். சிவபெருமான் தன்னை உண்மையான அன்புடன் வழிபடுவோர்க்கு, அவர்கள் வேண்டியதை அருளுவதால் கருகாவூர் கற்பகம் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மருகல் தலத்தில் உறையும் மாணிக்க வண்ணரை, வலஞ்சுழி தலத்தில் அடியார்கள் பாடிய தமிழ்ப் பாமாலைகளை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்பவனை, அடியார்கள் வேண்டுவதை அளிக்கும் கற்பகமாக கருகாவூர் தலத்தில் திகழ்பவனை, காண்பதற்கு அரிய ஒளியாக உள்ளவனை, பெருவேளூரில் அமர்ந்து இருக்கும் பிறவா யாக்கைப் பெரியோனை, விரும்பித் தொழுபவர்கள் பிரிந்து செல்ல மனம் உடையாதவர்களாய் இருக்கும் திருவாஞ்சியத்துச் செல்வனை, அடியேன் எனது மனதினில் நிலையாக வைத்துள்ளேன் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல்.
மருகலுறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையைக்
கருகாவூரில் கற்பகத்தைக் காண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூரெம் பிறப்பிலியைப் பேணுவார்கள் பிரிவரிய
திருவாஞ்சியத்தெம் செல்வனைச் சிந்தையுள்ளே வைத்தேனே
தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.81.1) அப்பர் பிரான், பெருமானை கற்பகம் என்றே குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் இரண்டு வகையான நடனங்கள் குறிப்பிடப் படுகின்றன. ஊழிக் காலத்தில் ஆடும் பெரு நடனமும், தில்லையில் ஆடும் நித்திய நடனமும் கூறப்பட்டுள்ளன. தேவர்களைக் காப்பதற்காக விடம் உண்டதால் நிலையான கருமை நிறத்தைத் தனது கழுத்திலே பெற்று நீலகண்டனாய்த் திகழும், உலகங்களுக்கு தலைவனும், தனது அடியார்கள் வேண்டுவன எல்லாம் வழங்கும் கற்பகமாக உள்ளவனும், தாங்கள் பெற்ற வரத்தினைக் கொண்டு போரில் ஈடுபட்ட திரிபுரத்து அரக்கர்களை அழிக்க வல்லவனும், ஊழிக் காலத்தில் ஊழித்தீ முழங்கி ஒலிக்கும் போது ஆனந்த நடனம் ஆடுபவனும் ஆகிய, தில்லை நகருக்குத் தலைவனான, சிற்றம்பலத்தில் பெருமை மிக்க நடனம் ஆடும் சிவபெருமானை வானவர் தலைவன் என்று வாழ்த்துவேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தை
செருநட்ட மும்மதில் எய்ய வல்லானை செந்தீ முழங்க
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச் சிற்றம்பலத்து
பெருநட்டம் ஆடியை வானவர் கோன் என்று வாழ்த்துவனே
அண்டத்தானை என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (5.94.2) அப்பர் பிரான், பெருமானை, முளைத்தெழு கற்பக வித்து என்று குறிப்பிடுகின்றார். தொத்து=திரண்ட குவியல்; தனது நிழலில் நிற்பவர், நினைக்கும் பொருட்கள் அனைத்தையும் கொடுக்கும் கற்பக மரம் தேவலோகத்தில் உள்ளது என்று கூறுவார்கள். அந்த கற்பக மரத்தினுக்கு ஆதாரமாக உள்ள விதையினைப் போன்று, தனது திருவடி நிழலில் சரணடைந்து நிற்கும் அடியார்கள் வேண்டுவதை தர வல்லவன் பெருமான் என்பது இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. முத்து என்று குறிப்பிடுவதன் மூலம் இறைவனது தூய்மையும், கற்பகம் என்று குறிப்பிடுவதன் மூலம் அடியார்கள் விரும்புவதை இறைவன் வழங்கும் அருளும், விளக்கு என்று குறிப்பிடுவதன் மூலம் உயிர்களின் அறியாமையை நீக்கி ஞானத்தை வழங்கும் தன்மையும், பவளம் என்பதன் மூலம் அவனது திருமேனி அழகும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றன. முத்து போன்று அரிய பொருளாக இருப்பவனும், தனது நிழலில் நிற்போர் நினைக்கும் பொருட்களை கொடுக்கும் கற்பக மரத்தினுக்கு ஆதாரமாக அதன் விதை போன்று செயல்படுவானும், தனது திருவடி நிழலில் சரணடையும் அடியார்கள் வேண்டுவதை தரும் வல்லமை படைத்தவனும், விளக்கின் இடையே தோன்றும் ஒளியாக இருப்பவனும், ஒளி வீசும் பவளக் குவியலைப் போன்ற திருமேனியை உடையவனும் ஆகிய பெருமானே தொழத் தக்கவன்; எனவே உலகத்தவர்களே அவனைக் கண்டு பணிந்து வணங்கித் தொழுவீர்களாக என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.
முத்து ஒப்பானை முளைத்தெழு கற்பக
வித்து ஒப்பானை விளக்கிடை நேரொளி
ஒத்து ஒப்பானை ஒளி பவளத்திரள்
தொத்து ஒப்பானைக் கண்டீர் தொழற்பாலதே
திருநாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.22.6) அப்பர் பிரான், பெருமானை, பூம்புகார் கற்பகம் என்று குறிப்பிடுகின்றார். புலம்=வயல்; நிலபுலன்கள் என்ற சொல் இன்றும் கிராமப் புறங்களில் வழக்கில் இருப்பதை நாம் காணலாம். புகலி சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. தேறல்=தேன்; பூந்தேறல்=தேன் நிறைந்த பூக்கள்; அலங்கல்= அசைதலை உடைய; அவிர்சடை=ஒளிவீசும் சடை; அம்மான்=தாயாக விளங்கும் தலைவன்; ஏகாசம்= மேலாடை; வயல்களின் இடையே முளைத்துள்ள செடிகளில் தேன் நிறைந்து காணப்படும் பூக்கள் தோன்றும் புகலி நகரத்தின் தலைவனும், அடியார்கள் வேண்டுவதை தரும் கற்பகமாக பூம்புகார் தலத்தில் உறைபவனும், அசைகின்ற நெற்கதிர்களை உடைய வயல்கள் நிறைந்த திருப்புன்கூர் தலத்தில் உறைபவனும், கங்கை நதியினை ஒளி வீசும் தனது சடையில் மறைத்து வைத்து பின்னர் தாயுள்ளத்துடன் பகீரதனுக்கு அருளும் பொருட்டு சிறிது சிறிதாக கங்கை நதியை வெளியேற்றியவனும், தலைமாலை அணிந்தவனும், பாம்பினை உடலில் மேலாடை அணிவது போன்று மார்பினில் அணிந்தவனும் ஆகிய சிவபெருமானை, மரக்கலங்கள் நிறைந்த கடலால் சூழப்பட்டு காணப்படும் திருநாகை தலத்தில் உள்ள காரோணம் திருக்கோயிலில் நாம் எப்போதும் காணலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
புலங்கள் பூந்தேறல் வாய் புகலிக் கோனைப் பூம்புகார் கற்பகத்தைப் புன்கூர் மேய
அலங்கலம் கழனி சூழ் அணி நீர்க் கங்கை அவிர்சடை மேல் ஆதரித்த அம்மான் தன்னை
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன் தன்னைக்
கலங்கள் கடல் புடை சூழ் அந்தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணலாமே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.27.8) அப்பர் பிரான், பெருமானை, கற்பகம் என்று அழைக்கின்றார். நல்குரவு=ஏழ்மை நிலை, வறுமை; வறுமை நிலை வந்தால் மனிதன் தனது நல்ல குணங்களை ஒவ்வொன்றாக இழத்தல் இயற்கை. எனவே விரைந்து ஆளும் நல்குரவு என்று கூறுகின்றார். வெகுட்சி=சினம், கோபம்; கரைந்து ஓடுதல்=ஓலமிட்டு ஓடுதல். தற்பரம்=உயிரினும் மேம்பட்ட பொருள். பரிந்து=விரைந்து; பகட்டல்=வெருட்டல், அச்சம் ஊட்டுதல்; அடியார்கள் நினைத்த மாத்திரத்தில் அவர்களது குறையினைத் தீர்க்கும் இறைவன் என்பதால் சிவபெருமானை கற்பகம் என்று குறிப்பிடுகின்றார். தேவலோகத்தில் உள்ள கற்பக மரத்தின் நிழலில் இருப்பவர்கள் நினைத்த காரியும் முடியும் என்று நம்பிக்கை உள்ளது. ஆனால் அடியார்களாக இருப்போர் கற்பக மரத்தினைத் தேடிச் செல்லாமல், தாங்கள் இருந்த இடத்திலே நினைத்தாலே, அவர்களின் விருப்பத்தை ஈடேற்றும் சிவபெருமானை கற்பகம் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. ஆட்பட்டவரை விரைந்து ஆட்கொள்ளும் திறமை படைத்த வறுமை, செல்வம், சினம், வெறுப்பு ஆகிய குணங்களே, நீங்கள் அனைவரும் கூடி இந்த உலகத்தை அரித்துத் தின்பதால் பெற்ற இன்பம் உங்களுக்கு போதவில்லையா? ஏன் என்னை ஆட்கொள்ள முயற்சி செய்கின்றீர்கள்? பாற்கடலில் இருந்து எழுந்த நஞ்சின் வெம்மை தாள முடியாமல், தேவர்கள் அனைவரும், ஓலமிட்டு ஓடியபோது, அவர்களைப் காப்பதற்காக அந்த நஞ்சினை உண்ட சிவபெருமானை, தேவர்கள் சிவபெருமான் தங்களை காக்கவேண்டும் என்ற நினைத்த போதே அந்த கணத்தில் நஞ்சினை அருந்தி, நினைத்ததை அளிக்கும் கற்பகமரம் போன்று செயல்பட்ட தலைவனை, எனது உயிரினும் மேம்பட்ட பொருளை, திருவாரூரில் உள்ள மேன்மையான சோதி வடிவத்தானை காண்பவன் நான். எனவே உங்களது திறமையான வலையில் நான் சிக்கமாட்டேன்; நீங்கள் விரைந்து ஓடி வந்து என்னை அடைந்து என்னை அச்சுறுத்த முயற்சி ஏதும் செய்யாதீர்கள் என்று அப்பர் பிரான் அரம்பையர்களுக்கு எச்சரிக்கை விடும் பாடல். புகலூர் தலத்தினில் அப்பர் பிரான் உழுவாரப் பணி செய்து கொண்டிருக்கையில், அந்த திருப்பணிக்கு இடையூறு செய்யும் வகையில், ஆங்கே வந்து நடனமாடிய அரம்பையர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு முதலில் அப்பர் பிரான் வேண்டுகின்றார். ஆனால் அவர்கள் அவ்வாறு செல்லாமல், தொடர்ந்து நடனம் ஆடிக் கொண்டிருந்ததால், கோபம் கொண்ட அப்பர் பிரான், பெருமானிடம் அவர்களைப் பற்றி முறை இடுவேன் என்று அவர்களுக்கு அச்சமூட்டி விரட்டி அடித்த பாடல்.
விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா வெருட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரைந்து ஓடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர்
கரைந்தோட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவாரூரில்
பரஞ்சோதி தனிக் காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்தோடி ஓட்டந்து பகட்டன் மின்னே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (6.29.8) அப்பர் பிரான் பெருமானை, கற்பகக் கொழுந்து என்று குறிப்பிடுகின்றார். முத்து, மணி, மாணிக்கம், கற்பக கொழுந்து, வைரம் ஆகியவை மிகவும் அரிய பொருட்களாக கருதப் படுவது போன்று இறைவனும் மிகவும் அரியவன் என்பதை உணர்த்தும் முகமாக அத்தகைய பொருட்களுடன் ஒப்பிடப் படுகின்றான். பத்தன்=அன்பு உடையவன்; முத்து, மணி, மாணிக்கம், என்றும் மூப்பு அடையாத கற்பகக் கொழுந்து, வைரம் ஆகிய அரிய பல பொருட்கள் சேர்த்து கோர்க்கப்பட்ட மாலை போன்றவனும், முல்லை நிலத்தில் காணப்படும் எருதினை வாகனமாகக் கொண்டு பல இடங்களும் திரிபவனும், கொலைக் குணம் கொண்ட கொடிய பாம்பினைத் தனது இடுப்பினில் கட்டி ஆட்டுபவனும், இளமையும் அழகும் உடையவனும், எல்லோரிடமும் அன்பு உடையவனும், சிறந்த பத்து புற குணங்களையும் பத்து அக குணங்களையும் உடையவர்களாக விளங்கும் அடியார்களின் மனதில் உறைபவனும், சூரியனின் கதிர்கள் போன்று ஒளி வீசும் திருமேனியை உடையவனும், அனைவர்க்கும் தலைவனாக விளங்குபவனும் ஆகிய ஆரூர் பெருமானை அறியாது, அவனை மறந்து நாயினும் கீழான அடியேன் எனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்தது மிகவும் வருந்தத்தக்க செயலாகும் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடலாகும்.
முத்தினை மணி தன்னை மாணிக்கத்தை மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக்
கொத்தினை வயிரத்தைக் கொல்லேறு ஊர்ந்து கோளரவு ஒன்றாட்டும் குழகன் தன்னைப்
பத்தனைப் பத்தர் மனத்துளானைப் பரிதி போல் திருமேனி உடையான் தன்னை
அத்தனை ஆரூரில் அம்மான் தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே
எம்பந்த வல்வினை நோய் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில், திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.30.4) அப்பர் பிரான், கற்பகமாக இருக்கும் இறைவனை காண்பாய் என்று தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். கானேறு= காட்டில் திரிகின்ற; நாட்டில் வளர்க்கப்படும் யானை ஒரு கட்டுப்பாட்டுடன் இயங்கும். ஆனால் காட்டில் திரியும் யானைகள் அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வளர்வதால் மூர்க்க குணம் அதிகமாக உடையதாக இருக்கும். தாருகவனத்து முனிவர்கள் பெருமானின் மேல் ஏவிய யானை மூர்க்க குணம் உடையதாகவும் மதம் கொண்டதாகவும் இருந்ததை உணர்த்தும் பொருட்டு கானேறு களிறு என்று அப்பர் பிரான் குறிப்பிட்டார் போலும். காட்டில் திரிகின்ற யானை போன்று மூர்க்க குணம் கொண்டதும் மதம் உடையதாக விளங்கிய யானை தன்னை எதிர்த்து வந்த போது அதனை அடக்கி, அதன் தோலினை உரித்து போர்வையாக தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவனும், நினைத்தை அளிக்கும் கற்பக மரம் போன்று தனது அடியார்கள் வேண்டுவன எல்லாம் தரும் கொடையாளியாக விளங்குபவனும், தன்னை வழிபாடு செய்து கொண்டிருந்த சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனைத் தனது காலால் உதைத்து வீழ்த்தியவனும், புலால் நாற்றம் கமழும் மண்டை ஓட்டினில் பலி ஏற்பவனும், உத்தமனும், ஒற்றியூர் தலத்தில் உறைபவனும், காளையைத் தனது வாகனமாகக் கொண்டு அதன் மேல் ஏறுபவனும், அனைவர்க்கும் தலைவனாக விளங்குபவனும், தக்க யாகத்தில் பங்கேற்ற சூரியனை தண்டிக்கும் முகமாக அவனது பற்களைத் தகர்த்தவனும், அனைத்து உயிர்களுக்கும் அனைத்து பொருட்களுக்கும் ஆதியாக விளங்குபவனும் ஆகிய பெருமானே, தேன் நிறைந்த மலர்ச் சோலைகள் உடைய திருவாரூர் நகரத்து திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் எமது செல்வன் ஆவான் என்று அப்பர் உணர்த்தும் பாடல்.
கானேறு களிற்று உரிவைப் போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதை செய்தான் காண்
ஊனேறு முடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண்
ஆனேறு ஒன்றது ஏறும் அண்ணல் தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதி தான் காண்
தேனேறு மலர்ச்சோலை திருவாரூரில் திருமூலட்டானத்து எம் செல்வன் தானே
இடர் கெடுமாறு எண்ணுதியேல் என்று தொடங்கும் திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.31.2) கற்பகமே என்று பெருமானின் திருநாமத்தைச் மீண்டும்மீண்டும் சொல்லி கதற வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். செடி=துன்பம்; புரந்தரன்=இந்திரன்; கடிநாறு பொழில்= நறுமணம் கமழும் சோலைகள்; சிந்தித்தேல் நெஞ்சமே=நெஞ்சமே நீ சிந்திப்பாயானால்; சிந்தித்தேன் நெஞ்சமே என்று பிரித்து, அப்பர் பிரான் தான் சிந்தித்து இந்த அறிவுரையினை நமக்கு வழங்குகின்றார் என்றும் பொருள் கொள்வதும் சிறப்பே. சிவபிரானின் திருவடி நீழலில் சேர்ந்தவர்க்கு அவர்கள் வேண்டுவன கிடைப்பதால், இறைவனை கற்பகமே என்று அப்பர் பிரான் இங்கே அழைக்கின்றார். கருகாவூர், கற்குடி (உய்யக்கொண்டான் மலை), வலஞ்சுழி, கடிக்குளம், கஞ்சனூர் போன்ற தலங்களில் இறைவனுக்கு கற்பகநாதர் என்ற பெயர் உள்ளது. இதே ஆரூர் தலத்தில் உறையும் இறைவனது பெயர் தியாகராஜன் என்பதால் பொருத்தமாக ஆரூர் அரசே என்று அப்பர் பிரான் இங்கே அழைக்கின்றார். பதிகத்தின் முதல் பாடலில் நமது பிறவிப் பிணியைத் தீர்க்க வல்லவன் சிவபெருமான் என்பதை உணர்த்திய அப்பர் பிரான் இங்கே, நாம் நினைத்ததை எல்லாம் கொடுக்க வல்லவன் சிவபெருமான் என்பதை உணர்த்தும் வகையில் கற்பகம் என்று கூறுகின்றார். உயிரின் உண்மையான விருப்பமான பிறவிப் பிணி நீக்கத்தை நாம் விரும்பி வேண்டாமல், நாம் நிலையில்லாத உலக இன்பங்களுக்கு ஏதுவாக பல வேண்டுகோள் இறைவனிடம் விடுக்கின்றோம் அல்லவா. அத்தகைய விருப்பத்தையும் நிறைவேற்றி வைப்பவன் சிவபெருமான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. நெஞ்சமே, உன்னைப் பற்றி இருக்கும் தீவினைகள் திண்ணமாகத் தீர வேண்டும் என்று நீ விரும்பினால், நீ செய்ய வேண்டியதை நான் சொல்கின்றேன், கேட்பாயாக. திருநீறு அணிந்த திருமேனி உடையவனே என்றும், இந்திரனின் தோளைத் துண்டித்த புனிதனே என்றும், அடியேனை ஆளாகக் கொண்டவேனே என்றும், தலைவனே என்றும், ஆரூர் அரசே என்றும், நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த காஞ்சி மாநகரத்தில் உறையும் ஏகம்பனே என்றும், கற்பகமே என்றும் பலமுறை அவனது திருநாமங்களை உரக்கச் சொல்லி அழைப்பாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை வழங்கும் பாடல். இதே பதிகத்தின் எட்டாவது பாடலையும் அப்பர் பிரான், கற்பகமே என்றென்றே கதறா நில்லே என்று முடிக்கின்றார்.
செடியேறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தேல் நெஞ்சமே திண்ணமாகப்
பொடியேறு திருமேனி உடையாய் என்றும் புரந்தரன் தன் தோள் துணித்த புனிதா என்றும்
அடியேனை ஆளாகக் கொண்டாய் என்றும் அம்மானே ஆரூர் எம் அரசே என்றும்
கடிநாறு பொழில் கச்சிக் கம்பா என்றும் கற்பகமே என்றென்றே கதறா நில்லே
திருவாரூர் அரநெறி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.33.2) அப்பர் பிரான், பெருமானை கற்பகமாக இருப்பவன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானும் தனது அடியார்கள் விரும்புவன அனைத்தையும் அளிக்க வல்லவர் என்பதால் கற்பக மரத்துடன் பெருமான் ஒப்பிடப் படுகின்றார். தொடர்ந்து ஒரு காரியத்தைச் செய்தல் பயிலுதல் என்று கூறப்படுகின்றது. நாம் நமது வாழ்க்கையில் கற்கும் கல்வி பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ முடிவதில்லை. இறுதி வரை நாம் தினமும் ஏதவாது ஒரு புதிய உண்மையை, செய்தியை அறிந்து கொண்டு வாழ்கின்றோம். எனவே தான் கல்வி பயிலுதல் என்று கூறப்படுகின்றது. உலகினில் தொடர்ந்து இனப்பெருக்கம் நடைபெற்றால் தான் வினைகளால் கட்டுண்ட உயிர்கள் புகுவதற்கு பொருத்தமான உடல்கள் கிடைக்கும். இந்த தேவையை நிறைவேற்றும் பொருட்டு தனது திறமையால் உயிர்களின் மனதினில் காம இச்சையைத் தூண்டி விடும் மன்மதனும் அந்த செயலைத் தொடர்ந்து செய்கின்றான். எனவே தான் விற்பயிலும் மதன் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொற்பு=பொலிவு, அழகு; அற்புதன்=அல்+புதன், இருளாக இருப்பவன்; அல்=இரவு, இருள்; புதன்=ஞானம், புதன் கோள் ஞானத்திற்கு அதிபதியாக கருதப்படுவதால் புதன் என்ற சொல் ஞானத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. அற்புதன் என்ற சொல்லுக்கு இன்ன தன்மையன் என்று அறிய முடியாதவன் என்று சிவக்கவிமணி திரு சி.கே. சுப்பிரமணியம் பெரிய புராண விளக்கம் நூலில் கூறுகின்றார். சிவநெறியில் பொருந்தாதார் மனம் ஞானம் இன்றி இருளாக இருக்கும் நிலையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. வேண்டுவார்க்கு வேண்டுவதை அளிக்கும் கற்பகமாகத் திகழ்பவனும், சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடர்களாக விளங்கி உலகினுக்கு ஒளி அளிப்பவனும், கயிலை மலை மற்றும் காளத்தி மலை ஆகிய தலங்களில் உறைபவனும், உலகினில் தொடர்ந்து இனப்பெருக்கம் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்ததுடன் தனது தொழிலைத் தொடர்ந்து செய்யும் மன்மதனின் உடல் அழியும் வண்ணம் நெற்றிக் கண்ணை விழித்தவனும், வேடுவக் கோலம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனன் முன்னே நின்றவனும், அழகு பொலியும் சோலைகள் நிறைந்த ஆரூர் நகரத்து மூலட்டானத்தில் பொருந்தி உறைகின்ற பெருமானும், சிவநெறியில் பொருந்தாத மனிதர்களின் சிந்தைக்கு பொருந்தாமல் அவர்களது மனதினில் இருள் நிறைந்திருக்குமாறு செய்பவனும், ஆரூர் அரநெறி தலத்தில் அரநெறியப்பன் என்ற பெயருடன் விளங்குபவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை சரண் அடைந்து, அடியேன் தீர்க்கமுடியாத எனது வினைகளை நீக்கிக் கொண்டேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
கற்பகமும் இரு சுடரும் ஆயினானைக் காளத்தி கயிலாய மலையுளானை
விற்பயிலும் மதனழிய விழித்தான் தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னைப்
பொற்பமரும் பொழிலாரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானைப் பொருந்தார் சிந்தை
அற்புதனை அரநெறியில் அப்பன் தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (6.34.7) அப்பர் பிரான் பெருமானை கற்பகம் என்று அழைக்கின்றார். நிலந்தரம்=நிலம்+அந்தரம்’ உயிர்களை காக்கும் பொருட்டு திருமாலை படைத்த செய்தி இங்கே காரணத்தால் நாரணனை கற்பித்து என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. அசுரர்கள் தேவர்களுக்கு இழைத்த துன்பங்களை நீக்கும் பொருட்டு திருமாலை படைத்தார் என்றும் விளக்கம் கூறுவதுண்டு. தாவரங்கள் மற்ற உயிர்கள் அனைத்தையும் ஒரே தொகுப்பாக சராசரம் என்று வடமொழியில் கூறுவார்கள். சரம் என்றால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது; அசரம் அதற்கு எதிர்மறை. இந்த சொல்லுக்கு அழகான மாற்றுச் சொல்லாக நிற்பனவும் நடப்பனவும் என்று அப்பர் பிரான் கையாண்டுள்ளது அவரது புலமையை நமக்கு உணர்த்துகின்றது. மண்ணுக்கும் விண்ணுக்குமாக நெடிது உயர்ந்த தழற்பிழம்பாக தோன்றியவனே, ஓரே இடத்தில் நிலை பெற்று நிற்கும் தாவரங்களாகவும், இடம் பெயர்ந்து செல்லும் மற்ற உயிரினங்களாகவும், அனைத்து உயிர்களாகவும் இருப்பவனே, நினைத்ததை அளிக்கும் கற்பகமரம் போன்று அடியார்கள் வேண்டுவதை அளிக்கும் கொடையாளி என்று அனைவராலும் ஒன்று கூடி பெருமையாக புகழப் படுபவனே, தேவர்களுக்கு தீங்கு விளைவித்த அசுரர்களின் வலிமையை அடக்கும் வண்ணம் திருமாலைப் படைத்து சக்கரப்படை முதலானவை கற்பித்தவனே, பாற்கடல் கடையப்பட்ட போது தனக்கு ஏற்பட்ட துன்பம் தாளாமல் வாசுகி பாம்பு வெளியிட்ட ஆலகால விடத்தினை உண்டு உலகை காத்தவனே, வானவர்களின் துன்பம் தீரும் பொருட்டு அரக்கன் சலந்தரனை கொன்ற பெருமானே, இந்த செயல்களை எல்லாம் செய்வதற்கு முன்னோ பின்னோ நீ திருவாரூர் தலத்தினை உறைவதற்கு உகந்த இடமாக ஏற்றுக் கொண்டுள்ளாய். இதனை அடியேனால் அறிய முடியாது என்று அப்பர் பிரான், திருவாரூர் தலத்தின் தொன்மையை வியக்கும் பாடல்.
நிலந்தரத்து நீண்டு உருவமான நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகிக்
கலந்து உரைக்கக் கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று
வலம் சுருக்கு வல்லசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்யச்
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.38.6) அப்பர் பிரான், பெருமானை, கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். வள்ளுவப் பெருந்தகை கூறுவது போல், நாம் கற்ற கல்வியின் உண்மையான பயன் இறைவனைத் தொழுதல் தான். அதனால் தான் பல பாடல்களில் அருளாளர்கள் இறைவனை தொழுது ஏத்துபவர்களை கற்றவர்கள் என்றும் மற்றவரை கல்லாதவர் என்றும் குறிப்பதை காணலாம். எனவே தான் அப்பர் பிரான் கற்றவர் என்று இங்கே இறைவனை தொழுபவர்களை குறிப்பிட்டு, அவர்களுக்கு சிவபெருமான் கற்பகமாய் இருப்பான், அதாவது வேண்டுவன எல்லாம் தருவான் என்று கூறுகின்றார். உற்றிருந்த= உணர்வதற்கு உதவி புரியும் தன்மைகள்; உற்றவர்=அடைந்த அடியார்கள்; பொருட்களை உணர்ந்து கொள்வதற்கு உதவி புரியும் அவற்றின் தன்மைகளாக இருப்பவன் நீயே என்றும், உன்னை சரணடைந்த அடியார்களின் சுற்றமாக இருந்து அவர்களுக்கு உதவி புரிபவன் நீயே என்றும், கற்கும் கல்வியாகவும் அந்த கல்வியால் விளையும் ஞானமாகவும் இருப்பவன் நீயே என்றும், உனது பெருமைகளை நன்கு உணர்ந்த கற்றவர்கள் வேண்டியதை அளிக்கும் கற்பகமாய் நிற்பவன் நீயே என்றும், பெற்ற தாயினை விடவும் உயிர்களுக்கு அதிகமாக பரிந்து உதவி செய்பவன் நீயே என்றும், தலைவனாக எனது விருப்பத்தை ஈடேற்றும் வண்ணம் தனது திருவடிகளை அடியேனது தலை மேல் வைத்தவன் நீயே என்றும், பாற்கடலிலிருந்து எழுந்த கொடிய நஞ்சின் தன்மையை அடக்கி மாற்றி தனது கழுத்தினில் அடக்கியவன் நீயே என்றும், திருவையாறு தலத்தினை விட்டு அகலாத செம்பொற் சோதியாகிய இறைவனே உன்னை அடியேன் பலவாறாக அழைத்து வணங்குகின்றேன் என்று சொல்லி அப்பர் பிரான் பெருமானை வணங்கும் பாடல்.
உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீலகண்டன் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ
இந்தக் கருத்தை உள்ளடக்கி, சேந்தனார் தமது, வீழிமிழலை திருவிசைப்பா பதிகத்தில், சிவபிரானை கற்றவர்களுக்கு கற்பக கனியாகவும், மற்றவர்கள் அறிய முடியாத மாணிக்க மலையாகவும் இருப்பவன் சிவபிரான் என்று கூறுகின்றார்.
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை கரை இலாக் கருணை மா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கை
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத் திருவீழிமிழலை வீற்று இருந்த
கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே
நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் (6.41.3) பெருமானை, காளத்திக் கற்பகம் என்று குறிப்பிடுகின்றார். அல்=இரவு: செல்வாய்=நடப்பித்தல்; பொருளால் தான் உலகில் அனைத்தும் இயங்குகின்றன என்பதை உணர்த்தும் பொருட்டு செல்வாய்த் திரு என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பகலாகவும் இரவாகவும் இருப்பவனும், தொன்மை வாய்ந்த கயிலாய மலையில் உறைபவனும், கல்லால மரத்தின் கீழே அமர்ந்து நால்வர்க்கு அறம் உணர்த்தியவனும், திருக்காளத்தி தலத்தில் அடியார்கள் வேண்டும் வரமனைத்தும் அளிக்கும் கற்பகமாக இருப்பவனும், சொற்களாகவும் சொற்கள் உணர்த்தும் பொருளாகவும் இருப்பவனும், சோற்றுத்துறை தலத்தில் உறைபவனும், உலகினில் பல செயல்களும் நடப்பதற்கு மூல காரணமாக உள்ள செல்வமாக இருப்பவனும் ஆகிய பெருமானாகிய நீ, நெய்த்தானம் தலத்தில் நிற்கின்றாய். நீ எனது நெஞ்சினில் நிறைந்து நிற்கின்றாய் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.
அல்லாய்ப் பகலானாய் நீயே என்றும் ஆதிக்கயிலாயன் நீயே என்றும்
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்திக் கற்பகமும் நீயே என்றும்
சொல்லாய்ப் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறையாய் நீயே என்றும்
செல்வாய்த் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே
சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.44.3) அப்பர் பிரான், பெருமானை, கற்பகக் கொழுந்து ஒப்பானே என்று அழைக்கின்றார். உற்றார்=பிறப்பினால் உறவாக வந்தவர், தந்தை, தாய், அண்ணன், தம்பி, தங்கை, தாத்தா, பாட்டி போன்றவர்கள்; பிறவாத தன்மை உடைய சிவபெருமான் அத்தகைய உறவினர்கள் எவரும் இல்லாதவர் அல்லவா. சிவபெருமானே நீ எனது அபயம் என்று கூறும் அப்பர் பிரானுக்கு, அவர் முதன் முதலில் பெருமானிடம் சரணம் அடைந்ததும், அந்த தருணத்தில் தீவினையாகத் தன்னைப் பற்றிய சூலை நோயினை பெருமான் தீர்த்து அருள் புரிந்ததும் நினைவுக்கு வந்தது போலும். தீவினையைக் கண்டு போக தீர்த்தவன் என்றும் இதே பதிகத்தின் முதல் பாடலிலும், கல்லாதேன் தீவினையைக் கண்டு போகச் செற்றவன் என்றும் இந்த பாடலிலும் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு பிறையாக தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் சரண் அடைந்த சந்திரனைத் தனது சடையில் சூடி அடைக்கலம் அளித்தவனே, முளைத்து வெளிப்படும் கற்பக மரத்தின் தளிரினைப் போன்று என்றும் இளமையாக இருப்பவனே, பிறப்பினால் தனக்கு உறவினராக எவரும் இல்லாததால் உறவின் அடிப்படையில் வேண்டுபவர் வேண்டாதார் என்று எவரும் இல்லாதவனே, உலகினைப் பாதுகாக்கும் பெருமை வாய்ந்த சுடரே, அனைத்து வேதங்கள் மற்றும் கலைகள் ஆகியவற்றை கல்லாமலே அறிந்தவனே, சிவபெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள் எதனையும் கற்காமல் அறிவிலியாக இருந்த அடியேனை தீய வினைகள் சூழ்ந்து இருப்பதைக் கண்டு, என் மேல் இரக்கம் கொண்டு, அந்த தீவினைகளை வென்று நீக்கியவனே, சந்திரன் சூரியன் ஆகிய அனைத்து ஒளிகளுக்கும் மூல காரணமாக திகழும் ஒளியே, சோற்றுத்துறை இறைவனே, சிவபெருமானே, அடியேன் உன்னை சரணடைந்து உனக்கு அடைக்கலப் பொருளாக மாறியுள்ளேன் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல்.
முற்றாத பால்மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண்சுடரே ஓதும் வேதம்
கற்றானே எல்லாக் கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போகச்
செற்றானே திருச்சோற்றுத்துறை உளானே திகழொளியே சிவனே உன் அபயம் நானே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.46.1) அப்பர் பிரான், பெருமானை, கற்பகமா அடியார்கட்கு அருள் செய்வான் என்று குறிப்பிடுகின்றார். நம்பன்=நம்மால் விரும்பப் படுபவன்; கம்பன்=காஞ்சி நகரத்தில் உறையும் ஏகம்பப் பெருமான்; நன்மை=நன்மைக்கு இருப்பிடமாக இருக்கும் தன்மை; கற்பகம்=வேண்டுவார்க்கு வேண்டுவதை ஈயும் தன்மை; முக்தித் தன்மை அளிக்கும் ஆவடுதுறை தலத்து இறைவனை வணங்கும் அப்பர் பிரானுக்கு, மற்றொரு முக்தித் தலமாகிய காஞ்சி நகரம் நினைவுக்கு வந்தது போலும். காஞ்சியில் வாழ்பவர் முக்தி அடைவார்கள் என்று கூறுவார்கள். காண முக்தி அளிக்கும் தலம் சிதம்பரம், பிறக்க முக்தி அளிக்கும் தலம் திருவாரூர், இறக்க முக்தி அளிக்கும் தலம் காசி, நினைக்க முக்தி அளிக்கும் தலம் திருவண்ணாமலை, இருக்க முக்தி தலம் காஞ்சி என்று முக்தித் தலங்களின் தன்மையை கூறுவார்கள். கற்றோர்களின் சிறப்பே, அந்த கல்விச் செல்வத்தை அடுத்தவர்க்கு அளித்து மகிழ்வது தான். எல்லை இல்லாத அறிவினை தன்னிடம் வைத்துள்ள இறைவன், நான்கு வேதங்களை அருளி உலகத்தவர்க்கு நன்மை பயந்ததும் அன்றி, வேதங்களின் பொருளை தெளிவாக புரிந்து கொள்ள முடியாமல் தன்னை அணுகிய சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் தெளிவான உபதேசம் செய்தது அவனுக்கு மேலும் சிறப்பினைச் சேர்ப்பதாக உள்ளது. இதனை உணர்த்தும் பொருட்டு ஞானப் பெருங்கடல் என்றும் கல்லால் இருந்தான் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். நமக்கு பலவிதமான நன்மைகள் புரிவதால் நம்மால் பெரிதும் விரும்பப் படுபவனும், நான்கு வேதங்களையும் கரை கண்டவனாக விளங்குபவனும், அறிவுக் கடலாக இருப்பவனும், நன்மைகளுக்கு இருப்பிடமாக உள்ளவனும், இருக்க முக்தி அளிக்கும் வல்லமை பெற்ற கச்சி நகரத்தில் உள்ள ஏகம்பம் என்று அழைக்கப்படும் தலத்தில் ஏகம்பனாக உறைபவனும், கல்லால மரத்தின் கீழே சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் உபதேசம் செய்தவனும், கற்பக மரம் போன்று தன்னை விரும்பும் அடியார்களுக்கு அவர்கள் வேண்டுவன அனைத்தும் ஈபவனும், செம்பொன், பவளம், திரண்ட முத்து போன்று மிகவும் அரியவனும், தீ, நீர் முதலிய ஐம்பூதங்களாகவும் திங்களாகவும் ஞாயிறாகவும் திகழ்பவனும், சிறப்பானதும் அழகு உடையதாகவும் உள்ள பொன்னாகவும் திகழும் பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.
நம்பனை நால்வேதம் கரை கண்டானை ஞானப் பெருங்கடலை நன்மை தன்னை
கம்பனைக் கல்லால் இருந்தான் தன்னைக் கற்பகமா அடியார்கட்கு அருள் செய்வானை
செம்பொன்னைப் பவளத்தைத் திரளும் முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை
அம்பொன்னை ஆவடு தண்துறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (6.47.1) அப்பர் பிரான், பெருமானை கற்பகமே என்று அழைக்கின்றார். எனது உறவு, ஊன், ஊனின் உள்ளம், உள்ளத்தின் கரு, கற்பகம், கண், கண்ணின் கருமணி, மணியாடு பாவாய் என்று சொல்லி, இறைவன் தனக்கு எத்தனை அருமையானவன் என்று அப்பர் பிரான் சொல்லுகின்றார். இவ்வாறு சொல்வதன் மூலம் நாமும் இறைவனை அவ்வளவு அருமையானவனாக கருத வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல். அருவாய வல்வினை=காண்பதற்கு அரிதாகிய வலிய வினைகள். வினைகள் தாமே பிறவிப் பிணிக்கு வித்தாக அமைகின்றன. எனவே வினைகளை நோய் என்று அழைக்கின்றார். நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்ற வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப, தன்னைப் பிணித்துள்ள பிறவிப் பிணிக்கு காரணம் வல்வினைகள் என்பதை தெரிந்து கொண்ட அப்பர் பிரான், வல்வினைகளை நீக்கும் திறன் பெருமான் ஒருவனுக்கே உண்டென்பதால், பிறவிப் பிணியினை நீக்கும் வைத்தியனாகிய பெருமானை, தனது வல்வினைகள் நீக்க வேண்டும் என்று வேண்டுகின்றார். சென்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைத் தொகைகளின் இயல்பு காரணமாக, நாம் எடுத்துள்ள இந்த பிறவியில் நமக்கு இன்ப துன்பங்கள் நேரிடுகின்றன. நல்வினைகளின் பயனாக நமக்கு செல்வமும் வருகின்றது. அத்தகைய நல்வினையையும் அதனால் வரும் செல்வத்தையும் நாம் நமக்கு அருமையான பொருட்களாக கருதுகின்றோம். எனவே இந்த நல்வினையையும் நல்வினையின் பயனாக வரும் செல்வத்தையும், தான் அருமையாக கருதும் பொருட்களுடன் சேர்த்து அப்பர் பிரான் பட்டியல் இடுகின்றார். திரு=நல்வினை; செழுஞ்சுடர்=ஞானச் சுடர்; நல்வினைகள், நல்வினைகளின் பயனாக விளையும் செல்வம், தேன், எனது உருவம், எனது உறவுகள், எனது உடல், எனது உடலினுள்ளே உள்ள உள்ளம், எனது உள்ளத்தினுள்ளே இருக்கும் உணர்வுகள், வேண்டியதை ஈயும் கற்பக மரம், எனது கண், கண்ணின் கருமணி, கருமணியின் பாவை எனப்படும் பொருட்கள் போன்று எனக்கு மிகவும் அரியவனும், வானோர்க்கு ஆற்றலை அருளும் ஞானமாக உள்ளவனும், அடியார்களுக்கு காட்சி தரும் பெரிய சுடராக உள்ளவனும், நீர்வளம் மிகுந்து குளிர்ந்த ஆவடு துறை தலத்தில் உறைபவனாகவும் ஆக இருக்கும் அமரர்கள் தலைவனே, நீ தான் கண்ணால் காண்பதற்கு மிகவும் அரியதாக உள்ள, என்னை பீடித்துள்ள பிறவிப் பிணிக்கு காரணமாக இருக்கும் கொடிய வலிமை மிகுந்த வல்வினைகள் என்னை வந்து சாரா வண்ணம் காக்க வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுவதாக அமைந்த பாடல்.
திருவே என் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற்சோதி மிக்க
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தினுள் நின்ற
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே
கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான் பெருமானை கற்பகம் என்று குறிப்பிடுகின்றார். கற்குடியில் விழுமியானை கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே என்று இந்த பதிகத்தின் பாடல்கள் முடிவடைகின்றன. இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலை (6.60.3) இங்கே காண்போம். ஒளிர்கின்ற நெருப்பு என்பதைக் குறிக்க வயங்கு எரி என்று கூறப்பட்டுள்ளது. வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை நம்மால் அறிய முடியாது அல்லவா. அத்தகைய விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமான திருநாமங்களை உடையவன் பெருமான் என்பதை உணர்த்தும் முகமாக தாரகைகள் தம்மின் மிக்க எண் என்று இறைவனை அப்பர் பிரான் இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார். ஐம்பூதங்களின் தன்மை விளக்கப்படும் பாடல். பரந்த வெளியிலிருந்து நாதம் பிறந்தமையால், ஆகாயத்தின் குணம் ஒலி என்று கூறுவார்கள். வீசும் காற்றில் ஒலி மற்றும் தொடு உணர்வு (ஊறு) ஆகிய இரண்டு பண்புகள் இருப்பதை நாம் உணர்கின்றோம். தீ, ஒலி கொண்டு உணரப் படுவதாகவும், தொடு உணர்வினால் அறியப் படுவதாகவும் விளங்குவதுடன், ஒளியுடனும் திகழ்கின்றது. நீருக்கு, ஒலி, ஊறு, ஒளி, மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்கள் உள்ளன. நிலத்திற்கு, நீரின் நான்கு குணங்களுடன் வாசனை ஆகிய ஐந்தாவது குணமும் உள்ளது. மேற்கண்ட குணங்களாக இறைவனே இந்த ஐந்து பூதங்களிலும் பரவி இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். பூமியின் ஐந்து பண்புகளாகவும் (ஒலி ஊறு ஒளி சுவை மற்றும் வாசனை) நீரினில் நான்கு பண்புகளாகவும் (ஒலி ஊறு ஒளி மற்றும் சுவை) ஒளிரும் நெருப்பினில் மூன்றாகவும் (ஒலி ஒளி மற்றும் ஊறு) வீசும் காற்றினில் இரண்டாகவும் (ஒலி மற்றும் தொடு உணர்வு) ஆகாயத்தில் ஒன்றாகவும் (ஒலி) கலந்து திகழ்பவன் இறைவன். அவன் கதிரவனாகவும் குளிர்ச்சி தரும் சந்திரனாகவும் நட்சத்திரங்களாகவும் விளங்குவதுமன்றி எண்ணிக்கையற்ற தாரகைகளிலும் மிகுதியான திருநாமங்களை உடையவனாகவும் விளங்குகின்றான். எண்ணாகவும் எழுத்தாகவும் ஏழிசையாகவும் விளங்கும் இறைவன் மன்மதனின் அழகான உடல் அழியும் வண்ணம், எப்போதும் மூடியிருக்கும் தனது நெற்றிக் கண்ணினை திறந்து நெருப்புக் கற்றையை வெளிப்படுத்தி சாம்பல் பொடியாக்கினான். இவ்வாறு அனைவர்க்கும் மேலானவனாக திகழும் இறைவன் கற்குடி தலத்தில் கற்பகமாக எழுந்தருளி இருப்பதை அடியேன் எனது கண்களால் கண்டு உய்ந்தேன் என்று அப்பர் பிரான் தெரிவிக்கும் பாடல்.
மண்ணதனில் ஐந்தை மாநீரில் நான்கை வயங்கெரியில் மூன்றை மாருதத்து இரண்டை
விண்ணதனில் ஒன்றை விரிகதிரைத் தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தை ஏழிசையைக் காமன் எழில் அழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.81.7) அப்பர் பிரான், பெருமானை, காளத்தி கற்பகமே என்று அழைக்கின்றார். உழை=மான் கன்று; கழை=மூங்கில்; கழையாடு=மூங்கில் அசைந்து ஆடும் வயல்கள் நிறைந்த; ஒற்றி=பொருந்தி இருக்கும்; இழை=பூணூல்;
உழையாடு கரதலம் ஒன்றுடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய்
கழையாடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்திக் கற்பகமா நின்றான் கண்டாய்
இழையாடும் எண்புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய்
குழையாட நடமாடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே
கஞ்சனூர் தலத்தின் இறைவியின் திருநாமம், கற்பக நாயகி. கற்பக நாயகி வழிபட்டு போற்றும் கற்பகநாதன் என்று பெருமானை குறிப்பிடும் முகமாக, இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் (6.90) அப்பர் பிரான், பெருமானை கற்பகம் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம். இந்த பாடலில் அக்னி தேவன் இறைவனைப் போற்றிய செயல் குறிப்பிடப் படுகின்றது. அக்னி, பெருமானை பணிந்து வணங்கிப் போற்றியதை உணர்த்தும் முகமாக தலத்து இறைவன் அக்னீஸ்வரர் என்று அழைக்கப் படுவதை நாம் காண்கின்றோம். வேள்விகளில் அளிக்கப்படும் ஆகுதிகளை, மற்ற தேவர்களின் சார்பாக அக்னி பெறுவதாக வேதங்கள் கூறுகின்றன. இவ்வாறு ஆகுதிகளைப் பெறும் அக்னி, ஒரு முறை அளவு கடந்த நெய்யினையும் சேர்த்து உண்டதால், அவனுக்கு சோகை நோய் ஏற்பட்டது. இந்த நோயினை போக்கிக் கொள்ள, அக்னி இந்த தலத்தில் சிவபெருமானை வழிபட்டார் என்பது தல வரலாறு. மூன்று சுடர்க் கண்ணினான் என்று, சூரியன் சந்திரன் மற்றும் அக்னி இறைவனின் கண்களாக இருக்கும் நிலை இந்த பாடலில் கூறப்படுகின்றது. நாவலன்=புலவன். வேதங்களை அருளிய பெருமான் என்பதால் புலவன் என்றும், தருமிக்கு பொற்கிழி அளிக்க உதவும் வண்ணம் பாட்டு எழுதியமையால் புலவன் என்றும், பாண பத்திரர்க்கு உதவும் வண்ணம் கவிதை எழுதி சேரமான் பெருமாள் நாயனாருக்கு அளித்தமையால் (பதினோராம் திருமுறை முதல் பதிகம், மதிமலி புரிசை என்று தொடங்கும் பதிகம்) புலவன் என்றும் இறைவனை அழைத்தார் அப்பர் பிரான் என்று விளக்கம் கூறுவதுண்டு. மூன்று இலைகளைக் கொண்டதும், உலகத்திற்கு நன்மை புரிவதும் ஆகிய சூலத்தைத் தனது வலது கையினில் ஏந்தியவனும், சூரியன் சந்திரன் மற்றும் அக்னி எனப்படும் மூன்று சுடர்களைத் தனது மூன்று கண்களாக உடையவனும், அனைவர்க்கும் தலைவனாக உள்ளவனும், நாவன்மை பொருந்திய புலவனாக உள்ளவனும், நரை போன்ற வெண்மை நிறத்தினை உடைய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவனும், நான்கு வேதங்களாகவும் ஆறு அங்கங்களாகவும் திகழ்பவனும், பசு தரும் ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பத்துடன் நீராடுபவனும், தேவர்களுக்குத் தலைவனும், திருமால் பிரமனாக இருந்து அவர்களின் செயல்களைச் செய்பவனும், அக்னியால் போற்றப் பட்டவனும், உலகுக்கு காவலாக இருப்பவனும், கஞ்சனூர் தலத்தை ஆளும் இறைவனாக இருப்பவனும் ஆகிய கற்பகத்தை அடியேன் எனது கண்கள் குளிரக் கண்டு உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.
மூவிலை நற்சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால்வேதம் ஆறங்கம் ஆயினானை
ஆவினில் ஐந்துகந்தானை அமரர்கோவை அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும்
காவலனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேனே
கழுக்குன்றம் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தில் (6.92) இரண்டு பாடல்களே நமக்கு கிடைத்துள்ளன. அந்த இரண்டு பாடல்களிலும் அப்பர் பிரான் கழுக்குன்றம் அமர்ந்த கற்பகம் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். எந்த இடம் அழிந்தாலும், தான் அழியாது தொன்றுதொட்டு இருந்து வரும் இடம் என்பதால் முதுகாடு என்று சுடுகாடு அழைக்கப் படுகின்றது. புணர்வதற்கு அரிய= நெருங்குவதற்கு அரிய; திருமாலும் நான்முகனும், பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண முடியாமல் திகைத்த நிலை உணர்த்தப் படுகின்றது. அமர்தல்=விரும்பி உறைதல்;
அப்பன் நீ அம்மை நீ என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (6.95.4) அப்பர் பிரான், தனது உடம்பின் உள்ளே புகுந்து நின்ற கற்பகமே என்று பெருமானை அழைக்கின்றார். நற்பதத்தார்= ஞானிகள்; சிவநெறியில் நிற்கும் ஞானிகள், நற்பதமாகிய வீடுபெற்றினை அடைய தகுதி படைத்தவர். சொற்பதம்=வேதாந்தம். இறைவனை தான் அனுபவித்த நிலையை இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். நிற்பது ஒத்து நிலையிலா நெஞ்சம்=ஒரு பொருளில் நிலையாக நிலைத்து நிற்பது போன்று பாவனை காட்டி, எந்த பொருளிலும் நிலையில்லாத நெஞ்சம் என்று அலை பாயும் மனித நெஞ்சத்தின் இயல்பினைக் கூறுகின்றார். நிலாவாத புலால் உடம்பு என்று உடலின் நிலையில்லாத தன்மையும் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு தகுதியற்ற உடலிலும் நெஞ்சிலும் சிவபிரான் புகுந்து நின்ற கருணை அப்பர் பிரானால் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. கற்பகமே யான் உன்னை விடுவேன் அல்லேன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுவது, மணிவாசகரின் பிடித்தபத்து பதிகத்தினை நினைவூட்டும். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் மணிவாசகர், சிவபெருமானை நோக்கி உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே என்று கூறுகின்றார். வீடுபேற்றினை அடையும் தகுதி படைத்த ஞானிகளுக்கு, வீடுபேறாய் (முக்தி) இருக்கும் இறைவனே, ஞான வடிவினனே, நான்கு வேதங்களின் பொருளையும் நன்றாக உணர்ந்து, தெளிவைடைந்து, அந்த வேதங்களின் பொருட்களையும் கடந்து அப்பால் நிற்கும் அபரமுக்தர்களின் சொற்களையும் கடந்து நிற்கும் தன்மை படைத்தவனே, எந்த ஒரு பொருளிலும் நிலைத்து நில்லாமல், ஆனால் உறுதியாக இருப்பது போல் தோன்றும் எனது நெஞ்சினுள்ளும், புலால் நாற்றம் வீசும் நிலையிலாத எனது உடலினுள்ளும் புகுந்து நின்று எல்லாப் பயன்களையும் அளிக்கும் கருணையாளனே, பொன்னும் மாணிக்கமும் ஒத்த நிறத்தை உடைய கடவுளே, நான் உன்னை வெளியே விடுவதாக இல்லை என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ நலஞ்சுடரே நால்வேதத்து அப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் இது உன் தன்மை
நிற்பது ஒத்து நிலையிலா நெஞ்சம் தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யான் உன்னை விடுவேன் அல்லேன் கனகமாமணி நிறத்து எம் கடவுளானே
கற்குடி தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகத்தின் சில பாடல்களிலும் இறைவனை கற்பகம் என்று அழைக்கப் படுவதை நாம் காணலாம். அந்த பதிகத்தின் ஏழாவது பாடல் (7.27.7) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது வளி=காற்று; புலனே=ஐம்புலன்களின் வடிவமாக நிற்பவனே; புண்டரீகம்=தாமரை மலர்; இதே பதிகத்தின் பத்தாவது பாடலிலும் சுந்தரர், பெருமானை கற்குடி கற்பகம் என்று குறிப்பிடுகின்றார்.
நிலனே நீர் வளி தீ நெடுவானகமாகி நின்ற
புண்டரீகத்து அயன் மால் போற்றிச் செய்யும்
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னி நின்ற
அனல் சேர் கையினனே அடியேனையும் அஞ்சல் என்னே
வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.67.6) சுந்தரர் பெருமானை, கற்பகக் கடல் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் தனது அடியார்கள் வேண்டுவதை எல்லாம் அளித்து அருள் புரிகின்ற இறைவன் என்று குறிப்பிடுகின்றார். இவ்விவ=இத்தகைய; எங்கும்=எந்த இடத்தில் நின்று வேண்டினாலும்
எவ்வெவர் தேவர் குடிகள் மன்னர் எண்ணிறந்தார்கள் எங்கும் நின்றேத்த
அவ்வவர் வேண்டியதே அருள் செய்து அடைந்தவர்க்கே இடமாகி நின்றானை
இவ்விவ கருணை எம் கற்பகக் கடலை எம்பெருமான் அருளாய் என்ற பின்னை
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம் தன்னில் வந்து கண்டேனே
தான் நினைத்தது அனைத்தும் சிவபெருமானின் கருணையால் அடைந்த சுந்தரர். அவர் திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (7.68.6) சிவபெருமானை கற்பகம் என்று குறிப்பிடுகின்றார். எழுதாத ஆவணத்தைத் தயாரித்து, அதனை பழைய ஆவணம் போல் தோற்றம் அளிக்கச் செய்தமையால், வேதியராக வந்து திருமணத்தினை நிறுத்திய சிவபெருமான் கொண்டு வந்த ஆவணத்தினை, அடிமை ஓலையினை, அற்புதப் பழ ஆவணம் என்று கூறுகின்றார். தனது தவத்தினைக் கலைத்த மன்மதன் மீது கோபம் கொண்ட சிவபெருமானை காமகோபன் என்று சுந்தரர் இங்கே குறிப்பிட்டுள்ளார்.
கற்பகத்தினை கனக மால் வரையைக் காமகோபனை கண்ணுதலானை
சொற்பதப் பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய் நல்லூரில்
அற்புதப் பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட
நற்பதத்தினை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
வெஞ்சமாக்கூடல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.42.5) சுந்தரர், பெருமானை, கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகம் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் சுந்தரர் வெண் தோடும் குழையும் தனது காதுகளில் அணிந்த பெருமான் என்று குறிப்பிட்டு அவரது காதில் இருந்த குழையணி அசைந்தது என்று கூறுகின்றார். குழைக்கும் தோட்டினுக்கும் உள்ள அமைப்பு வேறுபாட்டினை உணர்த்தும் வண்ணம், துளை உடைய குழை என்று இங்கே கூறுகின்றார். பெருமானின் காதுகள் நீண்டு, அவரது தோள்களைத் தொட்ட நிலையினை தூங்கும் காது என்று உணர்த்துகின்றார். கள்ளையே, பிள்ளை, வெள்ளை என்ற சொற்கள் எதுகை கருதி களையே, பிளை, வெளை என்று இடையெழுத்து குறைந்து காணப் படுகின்றன. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், இறைவன் தனது சீரிய அடியார்களுள் ஒருவனாக தன்னையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தினை வைக்கின்றார்.
துளை வெண் குழையும் சுருள் தோடும் தூங்கும் காதில் துளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுதற்கு அரியாய்
வெளை மால்விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
தில்லைச் சிதம்பரம் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.1.7) திருமாளிகைத் தேவர் பெருமானை கற்பகக் கொழுந்தே என்று அழைக்கின்றார். சூலபாணி=சூலத்தைத் தனது கையில் ஏந்திய பெருமான். தண்டபாணி, கோதண்டபாணி, சாரங்கபாணி, சக்கரபாணி என்ற பெயர்கள் நமது நினைவுக்கு வருகின்றன. தனதன்=செல்வத்திற்கு அதிபதியாகிய குபேரன்; திருவிளையாடல் புராணம், தடாதகை பிராட்டி திருமணப் படலத்தில், மணமகன் சிவபெருமானின் தோழனாக குபேரன் சென்றமை உணர்த்தப் படுகின்றது. அனகன்=பாவம் இல்லாதவன்; சேகரன்=தலைவன்’ பெருமானின் திருவடிகளை தனது உள்ளத்தில் இனிமையாக நிலைநிறுத்தி அனுபவித்து வழிபடும் வண்ணம் பெருமான் திருவுள்ளம் கொண்டு செயல்பட வேண்டும் என்று திருமாளிகைத் தேவர் இறைவனிடம் வேண்டுகின்றார்.
தனதன் நற்றோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனே
கனக நற்றூணே கற்பகக் கொழுந்தே கண்கள் மூன்றுடைய கரும்பே
அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே
நுன கழலிணை என் நெஞ்சினுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா நுகரே
கருவூர்த் தேவர், அன்போடு அஞ்செழுத்து ஓதினால் இறைவன் நமக்கு அளிக்கும் பல பேறுகளை குறிப்பிட்டு, அவரினும் அற்புதத் தெய்வம் வேறு எவரும் இல்லை என்று சொல்லும் பாடல், ஒன்பதாம் திருமுறையில் உள்ள கங்கை கொண்ட சோளேச்சரத்து பதிகத்தின் மூன்றாவது பாடல் (9.13.3). மலைகள் போன்ற பொற்குவியல்கள், மாளிகைகள், பலவிதமான செல்வங்கள், அழகிய இளம் மகளிருடன் இணையும் வாய்ப்பு, கற்பகச் சோலை என்று நாம் பெறவிருக்கும் பேறுகளை அடுக்குகின்றார்.
அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண்திசைக் கனகம்
பற்பதக் குவியும் பைம்பொன் மாளிகையும் பவளவாயவர் பணைமுலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே
திருப்பல்லாண்டு பதிகத்தின் பாடலில் (9.29.5) சேந்தனார், பெருமானை கற்பகன் என்று அழைக்கின்றார். மற்ற உயிர்களுக்கு தன்னை மறைத்துக் கொள்ளும் பெருமான், தனது அடியார்களுக்கு தன்னை மறைத்துக் கொள்ளாதவன் என்பதை உணர்த்தும் வண்ணம் கரந்தும் கரவாத கற்பகன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். செருக்கு காரணமாக, இந்திரன், பிரமன் திருமால் ஆகியோர் தங்களில் யார் பெரியோர் என்பதில் ஒருவருக்கொருவர் மாறுபட்டு வாதம் செய்து கொண்டிருந்தார்களே தவிர, பெருமானை சரணடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாக இருந்தமையால், அவர்களால் பெருமானை நெருங்க முடியவில்லை என்று கூறுகின்றார். இதற்கு மாறாக அடியார்கள் இருந்த நிலையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. தமது உயிரை ஆட்கொண்ட, தலைவனாகிய பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, தாம் என்ன செய்ய இயலும் என்றவாறு ஏங்கித் தவிக்கும் அடியார்களுக்கு, தன்னை மறைத்துக் கொள்ளாமல் காட்சி தருபவன் பெருமான் என்று கூறுகின்றார். அடியார்களுக்கு எளியவனாக காட்சி கொடுக்கும் இறைவன், உண்மையில் எத்துணை பெரியவன் என்பதை, பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கர் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார், பாங்கர்=பாங்கினை உடையவர்; பாங்கு=மேலான தன்மை என்று இங்கே பொருள் கொள்ள வேண்டும்.
புரந்தரன் மால் அயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகல் அரிதாய்
இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும்
கரந்தும் கரவாத கற்பகனாகிக் கரையில் கருணைக் கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே
பெருமானை கற்பகம் என்று அருளாளர்கள் அழைப்பது நமக்கு அப்பர் பிரானின் மறைக்காடு திருத்தாண்டகத்தின் முதல் பாடலை (6.23.1) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் வேண்டுவார் வேண்டுவதை ஈபவன் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மாண்மை=சிறப்பு, மாட்சிமை; மாண்ட மனத்தார்=மாட்சிமை பொருந்திய மனதினை உடையவர்கள்; விரதம் என்பது நீக்க வேண்டியவற்றை நீக்கி கொள்ள வேண்டியவற்றை கொண்டு, ஒழுக்கத்துடன் நடத்தல். இவ்வாறு நடப்பதற்கு திடமான மனம் வேண்டும் என்பதால், அத்தகைய மனத்திட்பம் உடையவர்களை மாண்ட மனத்தார் என்று அப்பர் பிரான் சிறப்பித்து கூறுகின்றார். திருமறைக்காடு தலத்தில், சுவாமி சன்னதியில், மூலவருக்கு பின்னால் சுவற்றில் பெருமானின் திருமணக் காட்சி பதித்து இருப்பதை நாம் காணலாம். அகத்தியருக்கு திருமணக் காட்சி அருளிய தலங்களில் இந்த தலமும் ஒன்றாக கருதப் படுகின்றது. எனவே தான் பெருமானை மணாளன் என்று அழைத்து, அகத்தியருக்கு அருள் புரிந்ததை அப்பர் பிரான் நமக்கு நினைவூட்டுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் மணாளன் தானே என்று முடிகின்றன.
தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளாமணி தான் கண்டாய்
காண்டற்கு அறிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டுறையும் மணாளன் தானே
பொழிப்புரை;
செல்வ வளம் கொழிக்கும் கழுமலம், கொச்சைவயம், தேவேந்திரன் ஊர் என்று அழைக்கப்படும் வேணுபுரம், பிரமபுரம், கற்பக மரத்தினை ஒத்தது போன்று பல விதமான வளங்களை மக்களுக்கு அளிக்கும் சோலைகள் சூழ்ந்த புறவம், சிலம்பனூர் என்று அழைக்கப்படும் சிரபுரம், காழி, தகுதியை உடைய சண்பை, அடியார்கள் பெருமானைப் புகழ்ந்து பாடும் சிறந்த பாடல்களால் மேலும் மேலும் புகழ் வளர்க்கின்ற வெங்குரு, புகலி, உயர்ந்த தலமாக ஓங்கி நிற்கும் பூந்தராய், தோணிபுரம் ஆகிய பெயர்களுடன் விளங்கும் சீர்காழி நகரம், திருமால் பிரமன் இந்திரன் உள்ளிட்ட உயர்ந்த தேவர்கள் அஞ்சும் வண்ணம் பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உட்கொண்டு, அந்த விடத்தினை தேக்கியதால் ஏற்பட்ட கருமை நிறத்து கறையினை தனது கழுத்திற்கு அணிகலனாக வைத்துக் கொண்டுள்ள நீலகண்டனாக விளங்கும் இறைவன் விரும்பும் ஊராகும்.
பாடல் 3:
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல் 2 தொடர்ச்சி, 3, 4, 5 (திதே 0347)
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழூர்
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன்
வேய்ந்த மதில் கழுமலம் விண்ணோர் பணிய மிக்க அயனூர் அமரர் கோன் ஊர்
ஆய்ந்த கலையார் புகலி வெங்குரு அது அரன் ஆளும் அமரும் ஊரே
விளக்கம்:
சிலம்பன்=நாகநாதர்; சிலம்பன் வாழூர்=நாகநாதர் வாழும் சிரபுரம்; அமரர் கோனூர்=வேணுபுரம்; இறை=தலைமைத் தன்மை; மறை வளரும்=நாளும் மறைகள் ஓதப்படும் தலம்;
பொழிப்புரை;
புகழ் வாய்ந்த நான்மறைகள், தலத்து மக்களால் போற்றப்பட்டு வளர்க்கப்படும் தோணிபுரம், பூந்தராய், நாகநாதப் பெருமான் வாழும் சிரபுரம், புகழ் பெற்ற புறவம், பெருமையுடன் விளங்கித் திகழும் சண்பை, அழகுடன் விளங்கும் காழி, பல தலங்களுக்கு தலைமையாக விளங்கும் புகழினை உடைய கொச்சைவயம், அழகிய பொன்னால் வேயப்பட்ட மதிலினை உடைய கழுமலம், விண்ணோர்கள் பணிவதால் மிகுந்த சிறப்புடன் விளங்கும் பிரமபுரம், வேணுபுரம், பல கலைகளையும் ஆராய்ந்து அறியும் வல்லமை படைத்த சான்றோர்கள் வாழும் புகலி மற்றும் வெங்குரு என்ற பெயர்களை உடைய சீர்காழி நகரம் பெருமான் எழுந்தருளி ஆளும் தலமாகும்.
பாடல் 4:
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல் 2 தொடர்ச்சி, 3, 4, 5 (திதே 0347)
மாமலையாள் கணவன் மகிழ் வெங்குரு மாப் புகலி தராய் தோணிபுரம் வான்
சேமம் மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன் ஊர் சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம் விரல் சிலம்பனூர் காழி சண்பை
பா மருவு கலை எட்டெட்டு உணர்ந்து அவற்றின் பயன் நுகர்வோர் பரவும் ஊரே
விளக்கம்:
பூமகன்=பிரமன்; பூமகனூர்=பிரமபுரம், மாமலையாள்=இமயமலையில் வளர்ந்த பார்வதி தேவி; சேமம்=காவல்; விறல்=வலிமை; பாமருவு=பாடல்களில் பொருந்திய; உணர்ந்து அவற்றின் பயன் நுகர்வோர்=அறுபத்து நான்கு கலைகள் மூலம் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதை உணர்ந்து, முக்தி நிலை அளித்து என்றும் அழியாத இன்பம் அளிக்கவல்ல பெருமான் அவன் ஒருவனே என்பதை தெரிந்து கொண்டு, அவனை வழிபட்டு அந்த பயனை நுகர்தல்; மா=பெருமையினை உடைய;
பொழிப்புரை;
மலைகளில் தலை சிறந்த மலையாக கருதப்படும் இமயமலைச் சாரலில் வளர்ந்த பார்வதி தேவியின் கணவனாகிய பெருமான் மகிழ்ந்து உறையும் வெங்குரு, பெருமையினை உடைய புகலி, பூந்தராய், தோணிபுரம், வானளாவ உயர்ந்து நின்று நகரத்திற்கு சிறந்த காவலாக உடைய மதில்கள் கொண்ட கழுமலம், கொச்சைவயம், வேணுபுரம், தாமரைப் பூவில் உறையும் பிரமன் வழிபட்ட பிரமபுரம், அழகுடன் பொலியும் புறவம், வலிமை உடைய இராகு கோள் வழிபட்ட சிரபுரம், காழி, சண்பை ஆகிய பன்னிரண்டு பெயர்களைக் கொண்ட சீர்காழித் தலம், சிறந்த நூல்கள் எடுத்து உரைக்கும் அறுபத்துநான்கு கலைகளையும் நன்கு கற்று அந்த கலைகள் மூலம் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதை உணர்ந்து, அவனை வழிபட்டு கலைகளின் பயனை நுகரும் சான்றோர்கள் பெருமானைப் புகழ்ந்து பாடும் ஊராகும்.
பாடல் 5:
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல் 2 தொடர்ச்சி, 3, 4, 5 (திதே 0347)
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0348)
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல் 5 தொடர்ச்சி, 6 (திதே 0349)
தரைத் தேவர் பணி சண்பை தமிழ்க் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல்
விரை சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர் தம் கோன் ஊர் வென்றித்
திரை சேரும் புனல் புகலி வெங்குருச் செல்வம் பெருகு தோணிபுரம் சீர்
உரைச் சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில் உயர்ந்த ஊரே
விளக்கம்:
தயங்கு=அசைந்தாடும்; விரை=நறுமணம்; பிரமன் வழிபட்டமையால் இந்த தலத்திற்கு பிரமனூர் என்று பெயர் வந்ததை நாம் அறிவோம். தனது படைப்புத் தொழில் சரிவர நடக்கவேண்டும் என்றால் அதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்ற உண்மையை உணர்ந்த பிரமன் என்பதை குறிப்பிடும் வகையில் மெய் உணர்ந்த அயன் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வென்றி=வெற்றி; தரைத் தேவர்=பூசுரர் என்ற வடமொழிச் சொல்லின் பொருள்; நிலவுலகினில் தேவர்கள் போன்று சிறப்புடன் வாழும் அந்தணர்கள் மற்றும் சான்றோர்கள்; ஒழுக்கத்திலும் இறை வழிபாட்டிலும் சிறந்த அந்தணர்கள்,தேவர்கள் போன்று உயர்ந்தவர்களாக அந்நாளில் மதிக்கப் பட்டனர் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேள்விகள் செய்தல், வேள்விகள் செய்வித்தல், தானம் பெற்றுக் கொள்ளுதல், தானம் அளித்தல் என்பன அந்தணர்களின் ஆறு கடமைகளாக கருதப் படுகின்றன. இவ்வாறு வாழ்ந்து வந்த அந்தணர்களை, மக்களும் மன்னரும் பொருள் கொடுத்து ஆதரித்து வந்தனர். ஆகம விதிகளில் தேர்ந்தவர்களாக இருந்த பல அந்தணர்கள், திருக்கோயிலில் முறையாக இறைவனுக்கு ஆறு காலங்களிலும் வழிபாடுகள் நடை பெறுவதற்கு ஆதாரமாக இருந்து வந்தனர். இதனால் நாட்டு மக்கள் நலமாக வாழ, நாடும் வளத்துடன் திகழ்ந்தது. எனவே தான் அவர்களை நிலத்தில் வாழும் தேவர்கள் என்று மக்களும் உயர்வாக போற்றினார்கள். இந்த காரணம் பற்றியே மதுரையில் சமணர்களுடன் நடைபெற்ற புனல் வாதத்தில் இடப்பட்ட ஓலையில் எழுதப்பட்ட பதிகத்தினை வாழ்க அந்தணர் என்று திருஞான சம்பந்தர் தொடங்கினார் போலும். இந்த கடமைகளை அந்நாளில் தங்களது கடமைகளை ஒழுங்காக செய்து வந்த அந்தணர்களை பூசுரர் என்று குறிப்பிடும் திருமுறைப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். ஏகபாதம் பதிகத்தின் ஆறாவது பாடலில் (1.127.6) திருஞான சம்பந்தர் பூசுரர் சேர் பூந்தராய் என்று கூறுகின்றார்.
சேய்ஞலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.48.8) திருஞானசம்பந்தர் பூசுரர் என்று அந்த தலத்து அந்தணர்களை குறிப்பிடுகின்றார். தாமரை மலரில் உறையும் பிரமன் போன்ற அந்தணர்கள் என்று இங்கே கூறுகின்றார். சே=இடபம்; மா=குதிரை; பொதுவாக தேர்கள் என்றால் குதிரைகளால் இழுக்கப்படும் என்பதை நாம் அறிவோம். இராவணன் பயன்படுத்திய தேர், புட்பக விமானம், வானில் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தது என்பதால் குதிரைகள் தேவைப்படாத தேராக விளங்கியது. என்றாலும் தேரின் பொதுத் தன்மை கருதி மா அடைந்த தேர் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தேர்ப்படை குதிரைப்படை உடையவனாக விளங்கினான் என்று உணர்த்தும் வண்ணம் மாவடைந்த தேர் என்று குறிப்பிட்டார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன் தன்
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்
சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே
வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.6) திருஞானசம்பந்தர், அந்தணர்களை பூசுரர் என்று அழைக்கின்றார். இரவின் இருளைத் துரத்தி ஒளி வீசும் வண்ணம் கடற்கரையில் ஒதுக்கப்படும் முத்துகள் மிளிர்கின்ற சீர்காழி தலத்தின், பகலில் அந்தணர்கள் செய்கின்ற வேள்விப்புகை ஆகாயம் வரை சென்று ஒளிவீசும் ஆகாயத்தை மறைக்கின்றன என்று நயமாக கூறுகின்றார். உலகத்தவர்க்கு, மழை பொழிவிப்பது போன்ற பல நலங்களையும் அளிப்பதால், நலங்கொள் வேள்வி என்று குறிப்பிடுகின்றார். புரை=உயர்வு; பொரு=இடைவிடாது போராடுவது போன்று மோதும்; கங்குல்=இருள்; வைகி=தங்கி;
கரை பொரு கடலில் திரையது மோதக் கங்குல் வந்தேறிய சங்கமும் இப்பி
உரையுடை முத்தம் மணலிடை வைகி ஓங்கு வான் இருளறத் துரப்ப எண்டிசையும்
புரைமலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலங்கொள் ஆகுதியின் நிறைந்த
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.97.10) திருஞானசம்பந்தர், இந்த தலத்தினை, பொய்யகம் இல்லாப் பூசுரர் வாழ் புறவம் என்று குறிப்பிடுகின்றார். அத்தி நாத்தி (அஸ்தி நாஸ்தி) என்பது சமணர்களின் கொள்கையாக இருந்தது என்று சுருக்கமாக கூறுவார்கள். தங்களது எந்த கொள்கையையும், இரண்டு விதமாக, இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று பேசுவது அவர்களது வழக்கமாக இருந்த தன்மையை, உண்டு என்றும் இலை என்றும் அவர்கள் கூறுவதை, உண்டிலை என்றே தம் கையில் உண்போர் என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உண்மை அல்லாதவற்றைப் பேசும் புத்தர்கள் என்று குறிப்பிடும் அதே பாடலில், உள்ளத்தில் பொய்யற்றவர்களாக விளங்கும் அந்தணர்கள் என்று திருஞான சம்பந்தர் சொல்வது நயமாக உள்ளது.
வையக நீர் தீ வாயுவும் விண்ணும் முதலானான்
மெய்யல தேரர் உண்டிலை என்றே நின்றே தம்
கையினில் உண்போர் காண வொணாதான் நகர் என்பர்
பொய்யகம் இல்லாப் பூசுரர் வாழ் புறவம்மே
அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது பாடிய பாடல் ஒன்றினில் (2.63.2) திருஞானசம்பந்தர் பூசுரர் நாள்தோறும் இறைவனை பூவும் நீரும் கொண்டு, அவனது திருநாமங்களைச் சொல்லிப் போற்றி வழிபடுகின்றனர் என்று கூறுகின்றார். மேவா=பொருந்தாத, அறநெறியில் பொருந்தாத சிவநெறியில் பொருந்தாத என்று பொருள் கொள்ள வேண்டும்.
மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால்
ஏவார் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர்
நாவால் நாதன் நாமம் ஓதி நாடோறும்
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே
பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.5.4) திருஞானசம்பந்தர் பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய் என்று குறிப்பிடுகின்றார். நிலவுலகில் வாழும் தேவர்கள் என்று சிறப்பித்து சொல்லப்படும் அந்தணர்கள் போற்றிப் புகழும் பூந்தராய் நகரத்தில் பொருந்தி உறையும் பெருமானை, சந்திரனைத் தனது சடையில் தரித்த எமது இறைவனை, புகழ்ந்து பாடினால் நமது மனதினை வருத்தும் சிந்தனைகளும் உடலை வருத்தும் நோய்களும் முற்றிலும் அழியும் வண்ணம் இறைவன் அருள் புரிவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிடச்
சிந்தை நோய் அவை தீர நல்கிடும்
இந்து வார்சடை எம் இறையே
பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.13.8) திருஞானசம்பந்தர், பூசுரர் பொலிதரு பூந்தராய் நகர் என்று கூறுகின்றார். வரை=மலை, இங்கே கயிலாய மலை. தான் செல்லும் வழியில் குறுக்கே நின்று தனது பயணத்தைத் தடை செய்த மலை என்று நினைத்ததால்,மிகுந்த கோபம் கொண்டவனாக, அந்த மலையினைப் பேர்த்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு, தனது பயணத்தைத் தொடர வேண்டும் என்று அரக்கன் இராவணன் முடிவு செய்ததை, மா சின அரக்கன் என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். காசை=காயாம் பூ. காயாம் பூவினைப் போன்று கரிய நிறம் கொண்ட கூந்தலை உடைய உமையன்னை என்று குறிப்பிடுகின்றார். எயில்=கோட்டை; காய்சின=பிற உயிர்கள் மீது கோபம் கொண்டு, அந்த உயிர்களை தாம் பறந்து சென்று கொண்டிருந்த கோட்டைகளின் கீழே அமுக்கி நசுக்கிய திரிபுரத்து அரக்கர்கள் என்று கூறுகின்றார்.
மாசின அரக்கனை வரையின் வாட்டிய
காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்தராய் நகர்க்
காசை செய் குழலுமை கணவர் காண்மினே
தென்குடித் திட்டை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.35.9) வேதம் ஓதி அந்தணர்கள் பெருமானின் திருவடிகளைத் தொழுவதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆரணம்= வேத மொழிகள்; அணங்கு=தெய்வத் தன்மை உடைய; காரணன்=உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பவன். சீரணங்கு=தனது சிறப்புகளால் தெய்வத் தன்மை உடைய இறைவன்
நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்
காரணன் அடி முடி காணவொண்ணான் இடம்
ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழும்
சீர் அணங்கும் புகழ்த் தென்குடித் திட்டையே
தண்டலை நீணெறி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.50.2) திருஞானசம்பந்தர் பூசுரர் நிகழும் தண்டலை நீணெறி என்று கூறுகின்றார். இமயனின் நெஞ்சத்திலும் தனது நெஞ்சத்திலும் பெருமான் இடம் பெற்றிருப்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். எப்போதும் சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த சிறுவன் மார்க்கண்டேயன் என்பதால், அவனது உயிரினைக் கவர்வதற்காக தனது தூதர்கள் எவரையும் அனுப்பாமல், தானே நேரில் சென்றதிலிருந்து, இயமனது மனதினில் அச்சம் இருந்தமை புலனாகின்றது. இந்த செய்தியைத் தான் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தான் இறைவன் பால் மிகுந்த அன்பு கொண்டிருந்தமையால், இறைவன் தனது உள்ளத்தில் இருப்பதாக திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இதே பாடலில் இகழும் காலன் என்றும் குறிப்பிடுவதை நாம் சிந்திக்க வேண்டும். சிறுவன் மார்க்கண்டேயேர், பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்ததைக் கண்டவுடன், இயமன் சிவபெருமானைப் பணிந்து வணங்கி, தனது கடமையை நிறைவேற்றுவதற்கு பரமனின் உதவியை நாடியிருக்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல், தனது வலிமையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவனாக, காலன் பெருமானின் உதவியை நாடுவதைத் தவிர்த்தான். பெருமான் முன்னமே குறிப்பிட்டு இருந்த நாளில் தானே, தான் சிறுவனின் உயிரைக் கவர்வதற்கு முயற்சி செய்கின்றோம் என்பதால், பெருமான் தனது முயற்சிக்கு இடையூறாக இருக்க மாட்டார் என்று காலன் நினைத்தான் போலும். தனது அடியார்கள் பால் பேரன்பு வைத்திருக்கும் பெருமான் தனது அடியானுக்காக எதையும் செய்வார் என்பதை எதிர்பார்க்காது இருந்த தன்மையை, காலன் பெருமானை இகழ்ந்ததாக, இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் போலும். பெருமானின் வழிபாட்டில் சிறுவன் மார்க்கண்டேயன் முற்றிலுமாக மனம் ஒன்றிய நிலையில் ஈடுபட்டிருந்த போதிலும், சிவபெருமானுக்கு செய்யப்படும் வழிபாட்டினுக்கு இடையூறு விளைவிப்பது பெரிய தவறு என்பதையும் கருதாமல், சிறுவனது உயிரினைக் கவர்ந்தே தீருவன் என்று முனைந்த காலனின் செயலை, பெருமானை இகழ்ந்ததாக குறிப்பிடுகின்றார் என்று கருதுவதும் பொருத்தமே. சேவடி=சிவந்த திருவடி; தங்களது உயர்ந்த ஒழுக்கத்தின் காரணமாக புகழுடன் விளங்கிய சீர்காழி தலத்து அந்தணர்கள், இறைவனது அருளால் சிறந்த செல்வத்தையும் பெற்றிருந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. நிகழும்=வாழும்;
இகழும் காலன் இதயத்தும் என்னுளும்
திகழும் சேவடியான் திருந்தும் இடம்
புகழும் பூமகளும் புணர் பூசுரர்
நிகழும் தண்டலை நீணெறி காண்மினே
புறவம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.84.10) திருஞானசம்பந்தர் சீர்காழியில் வாழும் அந்தணர்கள் தொடர்ந்து ஓதும் மறையின் ஒலி நகரம் எங்கும் நிறைந்து காணப்பட்டதாக கூறுகின்றார். கோ=நீர்; சரம்=அதனில் இயங்கும்; நுகர்பவர்=உண்பவர்; கோசரம்=நீரில் வளரும் மீன்கள்; திருஞான சம்பந்தர் காலத்தில் சமணர்கள் மீன்களை உட்கொள்பவர்களாக இருந்தனர் போலும்; கொழுகிய=தோய்ந்த; புத்தர்கள் துவராடை அணிந்த நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பாசுரம்=பாடல்கள்; பளகர்கள்=பாவிகள்
கோசரம் நுகர்பவர் கொழுகிய துவர் அன துகிலினர்
பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியிவர்
நீசரை விடும் இனி நினைவுறு நிமலர் தம் உறை பத்தி
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.119.6) திருஞானசம்பந்தர், சீர்காழி நகரத்து அந்தணர்களை பூசுரர் என்றும் பிரமனைப் போன்ற வேதியர்கள் என்றும் குறிப்பிடுகின்றார். திருமாலையும் பிரமனையும் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள ஏகபாத திரிமூர்த்தியாக பெருமான் விளங்கும் தன்மை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. ஆதியாய் நடுவாய் அந்தமாய் என்ற தொடர் மூலம், உயிர்களின் தோற்றம் மற்றும் ஒடுக்கம் ஆகவும், தோற்றம் மற்றும் ஒடுக்கத்திற்கு இடைப்பட்ட நிலையாகவும் பெருமான் இருக்கும் தன்மையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. தேவதேவர் என்பது பெருமானின் திருநாமம். அமரர்கட்கு அமரர் என்று அந்த திருநாமம் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. புரூரவச் சக்ரவர்த்தி திருப்பணி செய்த திருக்கோயில் என்ற தகவலும் இந்த பாடலில் கொடுக்கப் பட்டுள்ளது.
பாதியோர் மாதர் மாலுமோர் பாகர் பங்கயத்து அயனுமோர் பாலர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட்கு அமரர்
போது சேர் சென்னிப் புரூரவாப் பணி செய் பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத்தொலி அறா வீழிமிழலயான் என வினை கெடுமே
திருவாரூர் தலத்தில் வாழும் அனைவரையும் அவர்களது சிறப்பினை கருதி பூசுரர் என்று அப்பர் பெருமான் திருவாரூர் பதிகத்தின் பாடலில் (4.101.4) குறிப்பிடுகின்றார். தேசன்=தேஜஸ் உடையவன்; தேஜஸ் என்ற வடமொழிச் சொல் தேசு என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. வன்கண்ணர்= கொடிய பார்வையினைக் கொண்டவர்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, சமணர்களின் உள்ளத்தில் இருந்த வஞ்சம் அவர்களது பார்வையில் வெளிப்பட்டதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார் போலும். இரக்கம் இல்லாத மனதினை உடையவர்கள்; மொண்ணரை=வழுக்கை; ஏசறுதல்=இடைவிடாது கவலைப்பட்டு ஏங்குதல்;
மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரை விட்டு
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு கொலோ
தேசனை ஆரூர்த் திருமூலட்டானனை சிந்தை செய்து
பூசனைப் பூசுரர் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் சேந்தனார் (9.6.1) ஆயிரம் பூசுரர் என்று அந்நாளில் இந்த தலத்தில் வாழ்ந்து வந்த அந்தணர்களை குறிப்பிடுகின்றார். சாந்தை என்று அருகில் உள்ள சாத்தனூர் குறிப்பிடப் படுகின்றது. இந்த அந்தணர்களை உண்மையான புகழுக்கு உரியவர்கள் என்று கூறுகின்றார். இந்த பாடல் அகத்துறை வகையைச் சார்ந்தது. பெருமான் பால் தீராத காதல் கொண்டு எப்போதும் பெருமானின் திருநாமங்களைச் சொல்லி அவனை அழைத்துக் கொண்டிருக்கும் தனது மகளின் குரலுக்கு மறுமொழி சொல்லாது இருப்பது பெருமானே உனக்கு பெருமை சேர்க்கும் செயல் அல்ல என்று தலைவியின் தாய் சொல்வதாக அமைந்த பாடல்.
பொய்யாத வேதியர் சாந்தை மெய்புகழாளர் ஆயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரிக் கரை மேய
ஐயா திருவாவடுதுறை அமுதே என்று உன்னை அழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே
எப்போதும் வேதம் ஓதிக்கொண்டே படைப்புத் தொழிலில் ஈடுபடுவதால், பிரமனை தலை சிறந்த அந்தணர் என்று கூறுவார்கள். சிறந்த அந்தணர்களை பிரமனுடன் ஒப்பிட்டு, திருஞானசம்பந்தர் பல பாடல்களில் குறிப்பிடுகின்றார். புளமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் பிரமன் போலும் திறமை உடைய அந்தணர்கள் என்று கூறுகின்றார். பிரமன் போன்று இந்த தலத்து அந்தணர்களும் வேதங்களில் வல்லவர்களாக இருந்த தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பரமன்=அனைவரிலும் மேலானவன்; பால் உந்துறு திரள்=பாலைக் கடைய கிடைக்கும் வெண்ணெய் மற்றும் நெய் போன்று இனிமையானவர். பொதுவாக இறைவனை பால் போன்றும் தேன் போன்றும் இனியவன் என்று சொல்வது வழக்கம். வெண்மை நிறம் தூய்மைக்கு அடையாளமாக கருதப் படுகின்றது. அதனால் தூய்மையே உருவமாக உள்ள இறைவனை பாலுக்கு ஒப்பிடுவது பொருத்தமே. மேலும் அனைத்து பருவத்தினருக்கும் பால் உணவாக பயன்படுவது போன்று, இறைவன் அனைத்துப் பருவத்தினரும் வணங்கி பயன்படும் வண்ணம் அருள் புரிகின்றார். பாலினும் அதன் திரட்சியான வெண்ணெய் உண்பதற்கு மிகவும் இனியது. பாலின் திரட்சியாகிய வெண்ணெய் போன்று நமக்கு இனியவனாக இருக்கும் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இவ்வாறு அனைவர்க்கும் பொதுவாக அருள் புரியும் இறைவன், தனது அடியார்களுக்கு எவ்வாறு உள்ளான் என்பதை இந்த பதிகத்தின் முதல் அடி உணர்த்துகின்றது. பெருமான் பால் அன்பு வைத்துள்ள அடியார்கள், தங்களது உள்ளம் கசிந்து வழிபட, இறைவன் அவர்களது கண்களுக்கு நெய்யாக தோன்றுகின்றான். நமக்கு வெளிப்படையாக கண்ணுக்கு தெரிவது பால்; பாலின் உள்ளே நெய் மறைந்து இருந்தாலும் நாம் அதனை உணர முடிவதில்லை. பக்குவப்பட்ட அடியார்கள் ஆகிய புளமங்கை அந்தணர்கள், பாலின் உள்ளே நெய் இருப்பதை உணர்வது போன்று, அனைத்துப் பொருட்களிலும் இறைவன் கலந்திருப்பதை உணர்கின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார் என்று பொருள் கொள்வது சிறப்பான விளக்கம். திறல்=தன்மை, திறமை; பொழில்=சோலை; அறச் சாடிய=குன்றும் வண்ணம் உதைத்த; தலத்தின் பெயர் புளமங்கை; திருக்கோயிலின் பெயர் ஆலந்துறை;
பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான்
போலும் திறல் அவர் வாழ்தரு பொழில் சூழ் புளமங்கை
காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்
ஆலந்துறை தொழுவார் தமை அடையா வினை தானே
சீர்காழி மற்றும் வீழிமிழலை ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்துப் பாடிய பதிகத்தின் பாடலில் (1.004.07), நான்முகன் போன்ற சிறப்பினை உடைய அந்தணர்கள் புகழ்ந்து பாட புகலி தலத்தினில் பொருந்தியிருக்கும் புண்ணியன் என்று பெருமானை திருஞான சம்பந்தர் கூறுகின்றார். காம்பு=மூங்கில்; மரு=பொருந்தி உறையும்; ஈமவனம்=சுடுகாடு; ஆட்டுகந்த=நின்று ஆடுவதை விரும்பும்; வீ=மலர்கள்; காமனை எரித்தழித்த பெருமான் பிராட்டியுடன் கலந்து நிற்கும் தன்மை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. உலகத்து உயிர்கள் தமது துணையுடன் கலந்து இருக்கும் தன்மை காமத்தால் விளைவது. இறைவன் பிராட்டியுடன் கலந்து இருப்பது, உயிர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து உயிர்கள் போகத்தை அனுபவிக்கத் தூண்டுவதற்கே என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். தான் செய்து கொண்டிருந்த தவத்தைத் கலைப்பதற்கு முயற்சி செய்த மன்மதனின் உடல் எரிந்து அழியும் வண்ணம் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அடர்ந்த தீச்சுடர்களை வெளிப்படுத்தி மன்மதனை நோக்கிய பெருமான், கணுக்களுக்கு இடையே உள்ள மூங்கில் போன்று மிருதுவான அழகுடன் விளங்கும் தோள்களை உடைய பார்வதி தேவியுடன் உடனாக, சிறந்த தாமரை மீது அமரும் நான்முகன் போன்று வேதங்களில் தேர்ச்சி பெற்ற அந்தணர்கள் புகழ்ந்து போற்றும் வண்ணம் புகலி தலத்தில் புண்ணியமே வடிவமாக உறைபவனே, அனைத்து உலகப்பொருட்களும் எரிந்து அழிந்த நிலையில் உலகமே ஒரு சுடுகாடாக காட்சி அளிக்கும் பிரளய காலத்தில் ஊழித் தீயினில் நடனமாடுபவனே, எமது பெருமானே, மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட வீழிமிழலை தலத்தில் உள்ளதும் வானிலிருந்து திருமாலால் கொண்டு வரப்பட்ட விமானத்தை உடையதும் ஆகிய திருக்கோயிலை விரும்பி ஆங்கே உறைவதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக என்று இறைவனை நோக்கி திருஞான சம்பந்தர் வினவும் பாடல்.
காமன் எரிப்பிழம்பாக நோக்கிக் காம்பன தோளியொடும் கலந்து
பூமரு நான்முகன் போல்வர் ஏத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவனத்து எரி ஆட்டுகந்த எம்பெருமான் இதுவென்கொல் சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே
சேய்ஞலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.48.8), பிரமன் போல் பெருமானை கொண்டாடும் சேய்ஞலூர் தலத்து அந்தணர்கள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சே= இடபம்; மா=குதிரை; பொதுவாக தேர்கள் என்றால் குதிரைகளால் இழுக்கப்படும் என்பதை நாம் அறிவோம். இராவணன் பயன்படுத்திய தேர், புட்பக விமானம், வானில் பறந்து செல்லும் ஆற்றல் படைத்தது என்பதால் குதிரைகள் தேவைப்படாத தேராக விளங்கியது. என்றாலும் தேரின் பொதுத் தன்மை கருதி மா அடைந்த தேர் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தேர்ப்படை குதிரைப்படை உடையவனாக விளங்கினான் என்று உணர்த்தும் வண்ணம் மாவடைந்த தேர் என்று குறிப்பிட்டார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பூசுரர்=அந்தணர்; குதிரை பூட்டிய தேர்களை படையாக உடைய அரக்கன் இராவணனின் வலிமையை குறைத்து அடக்கிய பெருமான், பின்னர் அந்த அரக்கன் தனது வாயினால் சாமகீதம் இசைத்த போது அதனைக் கேட்டு மகிழ்ந்து, அவன் முன்னர் செய்த கொடிய செயலையும் பாராட்டாது (கயிலை மலையினை பேர்க்கத் துணிந்தது) மிகுந்த விருப்பத்துடன் அருள் புரிந்தது வியக்கத் தக்க செயலாகும். இவ்வாறு பகைவனுக்கும் அருள் புரிந்த இறைவன், தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்ட நான்முகன் போன்ற அந்தணர்கள் போற்றும் வண்ணம் இடபத்தை தனது வாகனமாகக் கொண்டவன், சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன் தன்
நா அடைந்த பாடல் கேட்டு நயந்து அருள் செய்தது என்னே
பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்
சே அடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே
புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.97.7) திருஞான சம்பந்தர் புண்டரிகத்தோன் போல் மறையவர் சேர் புறவம் என்று குறிப்பிடுகின்றார். புண்டரீகம்=தாமரை மலர்; புண்டரிகத்தோன்=தாமரை மலரைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமன்; கார் சேர் வரை=கருமை நிறத்து மலை;
எண்டிசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்னக்
கொண்டெழு கோல முகில் போல் பெரிய கரி தன்னைப்
பண்டுரி செய்தோன் பாவனை செய்யும் பதி என்பர்
புண்டரிகத்தோன் போல் மறையவர் சேர் புறவம்மே
புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.104.11) திருஞான சம்பந்தர், போதனைப் போல் மறையோர் என்று குறிப்பிடுகின்றார். போதன்=மலரினைத் தனது இருப்பிடமாக உடைய பிரமன்; மலர் என்றால் பொதுவாக தாமரை மலரை மலரைக் குறிப்பிடும். போதன் என்று பிரமனை திருஞான சம்பந்தர் நமச்சிவாயப் பதிகத்தின் பாடலில் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. பயிலும்=தொடர்ந்து போற்றும் என்ற பொருளில் வருகின்றது. வாணர்=வாழுநர் என்ற சொல்லின் திரிபு; வேதங்களையும் பல கீதங்களையும் உணர்ந்தவர்களாக வாழும் அடியார்கள்; உறு நோய்=அனைத்து நோய்களிலும் கொடியதாகிய பிறவிப் பிணி நோய்.
வேதமோர் கீதம் உணர் வாணர் தொழுதேத்த மிகு வாசப்
போதனைப் போல் மறையோர் பயிலும் புகலி தன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ் மாலை நாவில்
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.80.10) தலத்து அந்தணர்களை, திருஞான சம்பந்தர், அயன் அன்னவர்கள் என்று கூறுகின்றார். அயன்=பிரமன்; அன்னவர்கள்= போன்றவர்கள்; பொருள்=பயன்; அனைத்து தெய்வங்களிலும் தங்களது தெய்வம் உயர்ந்தது என்று சொல்லுவதால் மட்டும் எந்த பயனும் விளையாது என்று இங்கே கூறுகின்றார். சமணர்கள் பண்டைய நாளில் அவ்வாறு சொல்லி வந்ததை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். எண்ணற்ற பிறவிகள் எடுத்து துன்பத்தில் வாடும் உயிர்களுக்கு வீடுபேறு அளிக்கும் தெய்வம் தானே அனைத்து தெய்வங்களிலும் உயர்ந்தவராக இருக்க முடியும். வீடுபேறு அளிக்கும் தன்மை வாய்ந்த சிவபெருமானே அனைவரிலும் உயர்ந்தவர் என்பது உணர்த்தப் படுகின்றது. வெண்டரளம்=வெண் முத்து; வாணகை=வாள்+நகை, ஒளி வீசும் நகையினை வெளிப்படுத்தும் பற்கள்; நன் மாதர்=கற்பில் சிறந்தவர்கள்;
குண்டமணராகி ஒரு கோலமிகு பீலியொடு குண்டிகை பிடித்து
எண்டிசையும் இல்லதொரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருளாம்
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர்
வெண்டரள வாணகை நன் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே
திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.92.11) திருஞானசம்பந்தர், தலத்து மறையவர்களை அயன் அனையவர்கள் என்று கூறுகின்றார். பெருந்தண்=பெரியதும் குளிர்ச்சி பொருந்தியதும் ஆகிய தாமரை மலர்; திருந்து=பண்பட்ட, பக்குவம் அடைந்த;
பெருந்தண் மாமலர் மிசை அயன் அனையவர் பேணு கல்வித்
திருந்து மா மறையவர் திருநெல்வேலி உறை செல்வர் தம்மைப்
பொருந்து நீர்த் தடமல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடி ஆடக் கெடும் அருவினையே
பொழிப்புரை:
தங்களது ஒழுக்கம் மற்றும் இறையுணர்வு காரணமாக தேவர்களைப் போன்று சிறந்தவர்களாக மதிக்கப்படும் அந்தணர்கள் பணிந்து பெருமானை வணங்கும் சண்பை, தமிழ் வளர்க்கும் காழி, கொச்சைவயம், அசைந்தாடும் பூக்கள் வீசும் நறுமணம் கலந்த கழுமலம், தான் செய்யும் படைப்புத் தொழில் சரிவர நடக்க இறைவனின் அருள் தேவை என்பதை உணர்ந்த பிரமன் வழிபட்ட பிரமனூர், தேவர்களின் தலைவனாகிய இந்திரன் வழிபட்ட வேணுபுரம், கடலில் கிடைக்கும் அரிய பொருட்களை கரைக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் வெற்றியினை அடையும் அலைகள் ஏற்படுத்தும் நீர்ப்பெருக்கினை மிகுதியாக உடைய புகலி, வெங்குரு, செல்வம் மல்கும் தோணிபுரம், இறைவனைக் குறித்த புகழ்ச் சொற்கள் வந்தடையும் பூந்தராய், சிரபுரம், புறவம், என்று பன்னிரண்டு பெயர்களால் அழைக்கப் படும் சீர்காழி தலம், உலகினில் சிறந்த தலமாகும்.
பாடல் 6:
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல் 5 தொடர்ச்சி, 6 (திதே 0349)
புண்டரீகத்து ஆர் வயல் சூழ் புறவ மிகு சிரபுரம் பூங்காழி சண்பை
எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய் தோணிபுரம் சீர்
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நற்கொச்சை வானவர் தம் கோன் ஊர்
அண்ட அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே
விளக்கம்:
புண்டரீகம்=தாமரை மலர்கள்; ஆர்=நிறைந்த; மிகு=புகழினால் மிகுந்த; அண்ட=அண்டங்களை படைக்கும்; அரும்=வெல்வதற்கு அரிய; பூங்காழி=அழகு நிறைந்த காழி;
பொழிப்புரை:
தாமரை மலர்கள் நிறைந்த கழனிகளால் சூழப்பட்ட புறவம், புகழினால் மிகுந்த சிரபுரம், அழகு நிறைந்த காழி, சண்பை நகரம், உலகின் எட்டு திசைகளிலும் உள்ளவர்களால் வணங்கப் படும் வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம், சிறந்த வண்டுகள் வந்து சேரும் அழகிய சோலைகள் மலிந்து நிறைந்த கழுமலம், அடியார்களுக்கு நன்மை பயக்கும் கொச்சைவயம், இந்திரன் வழிபட்ட வேணுபுரம், பல உலகங்களையும் படைக்கும் பிரமன் வழிபட்ட பிரமாபுரம், என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய தலமாகிய சீர்காழி தலம், தனது அடியான் சிறுவன் மார்க்கண்டேயனுக்காக இயமனை உதைத்தவனும், நம் அனைவர்க்கும் தந்தையும் ஆகிய இறைவன் உறையும் தலமாகும்.
பாடல் 7:
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல் 7 (திதே 0350)
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல்கள் 7 தொடர்ச்சி, 8, 9, 10, 11, 12 (திதே 0351)
வண்மை வளர் வரத்து அயனூர் வானவர் தம் கோனூர் வண் புகலி இஞ்சி
வெண்மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன் காழி கொச்சை
கண் மகிழும் கழுமலம் கற்றோர் புகழும் தோணிபுரம் பூந்தராய் சீர்ப்
பண் மலியும் சிரபுரம் பார்புகழ் புறவம் பால்வண்ணன் பயிலும் ஊரே
விளக்கம்:
வண்மை=கொடைத் தன்மை, உண்மை, வளமை, புகழ், வலிமை என்று பல பொருள் கொண்ட சொல்; வரத்து=மேன்மை உடைய;; இஞ்சி=மதில்சுவர்; பால் வண்ணன்=திருமேனி முழுதும் வெண்ணீறு பூசியமையால் பால் போன்று வெண்மை நிறத்துடன் விளங்கும் மேனியை உடைய சிவபெருமான்; மிக்கோர்=மேம்பட்டவர், கல்வி, கேள்வி, ஞானம், கொடை, தவம், தொண்டு, சிவநெறி ஆகியவற்றில் மேம்பட்டோர்; வியன்=பரந்த; இங்கே பரந்த பெருமையினை உடைய என்று பொருள் கொள்ள வேண்டும்; கண் மகிழும்=கண்களுக்கு இனிய காட்சியினை நல்கும்; பண் மலியும்= பெருமானின் புகழ் குறித்த பாடல்கள் இடைவிடாது ஒலிக்கும்; பயிலுதல்=தொடர்ந்து ஒரு செயலைச் செய்தல்.
கற்றவர்கள் என்று உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். நிலையான மெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவனே என்று உணர்ந்தோர் அவனை வழிபட்டு பயனடைவார்கள். பல திருமுறைப் பாடல்களில் கற்றவர்கள் பெருமானை வழிபடுவது குறிப்பிடப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (1.129.11) கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்து ஈசன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நல்லோர்களுக்கு துணையாக தேவாரப் பதிகங்கள் அமையும் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன் தன் கழல் மேல் நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்து சொன்ன
சொற்றுணை ஓர் ஐந்தினோடு ஐந்து இவை வல்லார் தூமலராள் துணைவராகி
முற்றுலகம் அது ஆண்டு முக்கணான் அடி சேர முயல்கின்றாரே
கீழைத் திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.5.9), திருஞானசம்பந்தர் பெருமானை, கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றவன் என்று குறிப்பிடுகின்றார். பெற்றம்=இடபம்; பெருமானின் புகழினைத் தவிர்த்து வேறு எந்த பேச்சினையும் தான் பேசுவதில்லை என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அரணம்=கோட்டை; உற்றவர்=மெய் உணர்வு உற்று சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று உணர்ந்தவர்கள்; உம்பர்= தேவர்கள்;
செற்றவர் தம் அரணம் அவற்றைச் செவ்வழல் வாய் எரி ஊட்டி நின்றும்
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற
பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்றோர் பேச்சு இலோமே
கண்ணார்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.101.4) திருஞானசம்பந்தர் பெருமானைப் பணிந்து வணங்கும் மனிதர்களையே கற்றோர் என்று குறிப்பிடுகின்றார். பெருமானை வழிபடும் அடியார்கள் தாம் தங்களது பிறவிப் பிணியைக் களைந்து கொள்ள முடியும் என்பதை நாம் அறிவோம். உயிரின் உண்மையான விருப்பம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவது தான். எனவே அந்த வழியில் செல்பவர்களைத் தானே, வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவர்கள் என்ற பொருள் பட கற்றோர் என்று சொல்ல முடியும். எனவே ஏனையோரை திருஞானசம்பந்தர் கற்றவராக மதிக்கவில்லை என்பது இதனின்று புலனாகின்றது. தரு=மரங்கள்; தருவளர்=மரங்கள் வளர்கின்ற; கானம்=காடு; துங்க=உயர்ந்த; வேழம்=யானை;உருவளர் ஆல்= உயர்ந்து வளரும் ஆலமரம்; கரு=புகழ், மேன்மை; மருவளர்=நறுமணம் வளர்கின்ற; இயல்பாகவே தேவியின் கூந்தல் நறுமணம் உடையது என்று திருஞாசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இயல்பாகவே நறுமணம் உடைய கூந்தல் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. பல தேவாரப் பாடல்களில், பிராட்டியின் கூந்தல் இயற்கையாகவே நறுமணம் வாய்ந்தது என்று சொல்லப் படுகின்றது. மரங்கள் அடர்ந்த கானகத்தில் வாழ்வதும் சிறந்ததும் பெரியதும் ஆகிய யானையின் தோலை உரித்து அதனை, உமையன்னை அஞ்சும் வண்ணம் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட பெருமான், சனகர் சனந்தனர் சனத்குமாரர் சனாதனர் ஆகிய நான்கு முனிவர்க்கும், உயர்ந்து வளரும் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்த வண்ணம், வேதங்களின் பொருளாகிய அறத்தினை உணர்த்தினார். இத்தகைய பெருமையை உடைய பெருமான் உறைவதும், நாளும் புகழ் வளர்ந்து திகழ்வதும் ஆகிய கண்ணார்கோயில் திருக்கோயிலை அடைந்து பெருமானைப் பணியும் மனிதர்களே, கற்றவர்களாக கருதப் படுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்
மரு வளர் கோதையை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு
உரு வளர் ஆலநீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே
கற்றவர் வாழும் திருவல்லம் என்று, திருவல்லம் தலத்து பதிகத்தினில் (1.113.11) திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஈசனின் பொற்பாதங்களை பற்றிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் செய்ய வேண்டியது திருமுறை பாடல்களை பாடுவது தான் என்று திருஞான சம்பந்தர் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்.
கற்றவர் திருவல்லம் கண்டு சென்று
நற்றமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூற வல்லார்
பற்றுவர் ஈசன் பொற்பாதங்களே
பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.74.3) கற்றோர் ஏத்தும் சிறப்பினை உடைய பூந்தராய் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். கதுவ= பற்ற; ஊர்மதி=விண்ணில் ஊர்ந்து செல்லும் சந்திரன், கார்=மேகங்கள்; வானில் ஊர்ந்து செல்லும் சந்திரனைப் பற்றும் வண்ணம் உயர்ந்த மதில்களை உடைய சண்பை என்றும், ஒளியுடன் திகழும் காழி என்றும், கொச்சை வயம் என்றும், மேகங்கள் தவழும் அழகிய சோலைகளால் சூழப்பட்ட கழுமலம் என்றும், பிரளய வெள்ளத்தில் மூழ்கி அழியாமல் மிதந்து நிலையாக நின்ற தோணிபுரம் என்றும், கற்றோர்கள் புகழும் சிறப்பினை உடைய பூந்தராய் என்றும், சிரபுரம் என்றும், என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் புறவம் என்றும், அயன் என்று அழைக்கப்படும் பிரமனின் ஊர் என்பதை உணர்த்தும் பிரமனூர் என்றும், அழகிய கற்பக மரங்களை உடைய இந்திரன் வழிபட்ட வேணுபுரம் என்றும், புகலி என்றும், வெங்குரு என்றும் அழைக்கப்படும் சீர்காழி நகரம், கங்கை நதியினைத் தனது சடையினில் மறைத்த சிவபெருமானின் ஊர் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை
ஊர் மதியைக் கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய்த் தோணிபுரம் கற்றோர் ஏத்தும்
சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய்ப் புறவம் அயனூர் பூங்கற்பகத்
தார் மருவும் இந்திரன் ஊர் புகலி வெங்குருக் கங்கை தரித்தோன் ஊரே
சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.58.4) திருஞானசம்பந்தர் கற்றவர்கள் நிறைந்த தலம் என்று குறிப்பிடுகின்றார். மற்றவில்=எதிரிகளின் வில்லுக்கு மாற்றாக, அவற்றை வெல்கின்ற தன்மை கொண்ட வில்; மால் வரை=பெரிய மலை, மேரு மலை; பொற்பு=அழகு; கல்விக்கு அழகு கசடற மொழிதல் என்பது முதுமொழி. பெருமான் ஒருவனே உண்மையான மெய்ப்பொருள் என்பதும், அவனே ஒருவனே முக்தி நிலையை அளிக்கும் ஆற்றல் வாய்ந்தவன் என்பது தானே என்றும் மாறாமல் நிலையாக இருக்கும் கருத்து. எனவே இந்த கருத்தினை உணர்ந்தவர்களாக, சிவநெறியை பின்பற்றி வாழ்ந்து வந்த தலத்து மக்களை, கற்றவர்கள் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சாத்தமங்கை என்று தலத்தின் பெயரையும் அயவந்தி என்று திருக்கோயிலின் பெயரையும் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமானைத் தங்களது கைகள் கூப்பித் தொழுகின்ற தலத்து மாந்தர்கள், பாவம் அற்றவர்களாக இருக்கும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
மற்றவில் மால் வரையா மதில் எய்து வெண்ணீறு பூசிப்
புற்றரவு அல்குலாளோடு உடனாவதும் பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச் செய்த பாவம்
அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.68.2) திருஞானசம்பந்தர், கற்றவர்கள் போற்றி துதிப்பதால் ஞான ஒளி பெற்ற சிறப்பினை உடையது கயிலாய மலை என்று கூறுகின்றார். செற்றது=அழித்தது; உற்றது=பிரியாமல் தனது உடலில் பொருத்தியது; அற்றவர்கள்=பற்று அற்றவர்கள், யான் எனது எனப்படும் அகப்பற்று மற்றும் புறப்பற்றினை விட்டவர்கள்; உற்ற நகர்=தலமாக உறைகின்ற நகரம்; எற்றென=எதனால்; வினாய்=வினவினால்; கயிலாய மலையின் ஒளி, அந்த மலையில் மலிந்து கிடக்கும் இரத்தினங்கள் மற்றும் மணிகளின் ஒளியை தோற்கடித்து மங்கச் செய்வது ஏன் என்ற கேள்வி இங்கே கேட்கப் படுகின்றது. தன்னைச் சுற்றியுள்ளவர்களை காப்பது தானே சான்றோர்களின் கடன்; அவ்வாறு இருக்கையில் தன்னைச் சார்ந்தோரின் ஒளியை மங்கச் செய்வது குற்றமாகுமே என்ற கருத்தின் அடிப்படையில் இவ்வாறு கேட்கப்படுகின்றது. சொற்றொகை=சொல்+தொகை;
புற்றரவு பற்றிய கை நெற்றியது மற்றொரு கண் ஒற்றை விடையன்
செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நற்றுணைவன் உற்ற நகர் தான்
சுற்று மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றமிலது எற்றென வினாய்
கற்றவர்கள் சொற்றொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே
ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.56.3) அப்பர் பிரான், கற்றவர்கள் புகழ்ந்து பாடும் பெருமான், ஆதரவற்றவரிடம் அன்பாக இருப்பார் என்று கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற பழமொழியை நினைவூட்டுகின்றது. உலகத்து உயிர்களும் பொருட்களும், பாசப்பற்றினில் உயிர்களை ஆழ்த்தி, பல விதமான வினைகளை சேர்த்துக் கொள்வதற்கு இடமாக விளங்குகின்றன என்பதையும் அந்த பற்றுகளை நீக்கும் தன்மையை நாம் சிவபெருமானின் அருளால் தான் பெறமுடியும் என்பதையும் உணர்ந்த அடியார்களை கற்றவர்கள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். உற்ற நோய்= உயிருக்கு உற்ற நோய், வினைத் தொகுதிகள் மற்றும் அவற்றால் விளையும் தொடர்ந்த பிறப்பு இறப்புகள்: செற்றவர்=பகைவர்: செறுதல்=வெல்லுதல்: கலந்து=உள்ளமும் உயிரும் இறை உணர்வுடன் கலத்தல்: உலத்தல்=பாசப் பற்றுகளை அறுத்தல்: அலத்தல்=பாசப் பற்றுகளால் துயர் உறுதல்: அற்றவர்=பாசப் பற்றுகளை அறவே ஒழித்து பக்குவம் அடைந்த அடியார்கள்: அலத்தல் என்பதற்கு விரதம் முதலியவற்றால், உடலை வருத்திக் கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம். உயிரினை, அதனை பீடித்துள்ள வினைத் தொகுதிகளின் பிடியிலிருந்தும் மூன்று மலங்களின் பிடியிலிருந்தும் மீட்டு, பிறப்பு இறப்புச் சுழற்சியில், மறுபடியும் சிக்காத வண்ணம் உயிருக்கு உறுதுணையாக இருந்து காக்கும் வல்லமை படைத்தவர். சிவபெருமான். அவர் தேவர்களுக்கு பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களை அவர்கள் வாழ்ந்து வந்த கோட்டைகளுடன் எரித்து வென்றவர். பாசப் பற்றுகளால் துயருற்று, படிப்பினையைப் கற்றுக் கொண்ட கற்றவர்கள், ஒன்று கூடி, தங்களது பாசப் பற்றுகளை முற்றிலும் அறுத்தும், தங்களது உள்ளமும் உயிரும் இறையுணர்வுடன் கலக்குமாறும், சிவபெருமானைத் தொழுது புகழ்ந்து பாடுகின்றார்கள். அவ்வாறு பாசப் பற்றுகளை விட்டொழித்த அடியார்களுக்கு அன்பராக, ஆவடுதுறையில் உறையும் இறைவன் திகழ்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை ஆவர் போலும்
செற்றவர் புரங்கள் மூன்றும் தீயெழச் செறுவர் போலும்
கற்றவர் பரவி ஏத்திக் கலந்து உலந்து அலந்து பாடும்
அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே
தொடர்ந்து கல்வி பயிலும் அடியார்கள் பெருமானைப் புகழ்ந்து பாடும் நாகைக்காரோணம் தலம் என்று அப்பர் பிரான் அந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.71.8) குறிப்பிடுகின்றார். தெற்றினர்=மாறுபட்ட திரிபுரத்து அரக்கர்கள்: செற்ற=அழித்த: இந்த பாடலில் அப்பர் பிரான், நாகைக் காரோணத்து சிவபெருமானை புகழ்ந்து வழிபடாதவர், பிறந்தவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று கூறுகின்றார். நாம் பிறந்ததன் நோக்கமே உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானைக் கும்பிட்டு, நமது வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு இறைவனது திருவடிகளைச் சென்று சார்ந்து,பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக் கொள்வது தானே. எனவே தான், அவ்வாறு திகழாமல் இருப்பவர்களை பிறந்த பயனை அடையாதவர்கள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சைவ ஆகம நெறியிலிருந்து மாறுபட்ட திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றினையும் ஒரே அம்பினால் எரித்து அழியச் செய்த, வல்லமை கொண்ட வில்லினைக் கையில் ஏந்தியவர் சிவபெருமான்: அவர் வஞ்சனை உடையவர்களின் உள்ளத்தில் பொருந்தாதவர்: தொடர்ந்து கல்வி பயிலும் சான்றோர்கள் பலரும், நாகைக் காரோணத்தில் உறையும் சிவபெருமானை வழிபட்டு புகழ்ந்து பாடுகின்றார்கள். அவ்வாறு சிவபெருமானை விருப்பத்துடன் பாடும் வாய்ப்பினைப் பெற்றவர்கள், பிறவிப் பயனை அடைந்தவர்கள், ஏனையோர் பிறந்தும் பிறவாதவர்களாக கருதப் படுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால்
செற்ற வெம் சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்விலாதார்
கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே
காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.84.5) அப்பர் பிரான் இந்த தலத்தினை கற்றவர் கருதேத்தும் காட்டுப்பள்ளி என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் நான்கு பாடல்களில் செல்வம் நிலையானது அல்ல, உற்றார் நிலையான துணை அல்ல என்பதை அப்பர் பிரான் உணர்த்தியதை நாம் அறியும் போது, நமக்கு ஓரு ஐயம் எழலாம். நமக்கு உற்ற துணை யாது, நிலையான செல்வம் எது என்பதே அந்த ஐயம். அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளி என்று குறிப்பிட்டு, சான்றோர்கள் உணர்ந்து அறிந்ததை நமக்கு இந்த பாடல் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அற்ற போது=உயிர் நீங்கிய காலத்து; நமது உடலிலிருந்து உயிர் பிரிந்த விட்ட பின்னர், அந்த பிணத்துடன் சுற்றமும் துணையாகிய மனைவியும், இல்லற வாழ்க்கையால் நமக்கு ஏற்பட்ட பிள்ளைச் செல்வங்களும் அருகில் இருக்க மாட்டார்கள் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுவது நமக்கு கவியரசு கண்ணதாசனின் பிரபலமான திரைப்பாடல், வீடு வரை உறவு என்று தொடங்கும் பாடலை நினைவூட்டும். ஆனால் இந்த கருத்து கண்ணதாசனுக்கு முன்னர் பல அருளாளர்கள் அருளியது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எனவே பெருமான் ஒருவனே எப்போதும் நமக்குத் துணையாக இருப்பவன் என்பதை உணர்த்தும் பாடல்.
சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும்
அற்ற போது அணையார் அவர் என்றென்றே
கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப்
பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே
கற்றவர்கள் என்றால் மெய்ப்பொருளை உண்மையாக உணர்ந்தவர்கள்; உண்ணுதல்=அனுபவித்தல்; கனி=பயன், அற்றவர்கள்=சிவபிரானைத் தவிர வேறு எந்தப் பற்றும் இல்லாதவர்கள்’ கதி=முக்திப் பேறு; கற்றவர்கள் உண்டு அனுபவிக்கும் கனியாக பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல், ஒரு திருவாரூர் திருத்தாண்டகத்தின் முதல் பாடலாகும் (6.32.1). உண்மையான மெய்ப்பொருளாக உன்னை உணர்ந்தவர்கள் உன்னை நினைத்து அதன் பயனாக வீடுபேறு நிலையினை அடைய உதவுபவனே, உனது திருவடிகளைச் சார்ந்தவர்கள் அடையும் முக்தி என்னும் நற்பேற்றினை அடையுமாறு செய்யும் பெருமானே, உன்னை அல்லாமல் வேறு அனைத்துப் பற்றுக்களையும் துறந்தவர்களுக்கு இனிக்கும் அமுதமே, எனது துயரங்களைத் தீர்த்து ஆட்கொண்ட ஆண்டவனே, வேறு எவரும் உனக்கு ஒப்பாக இல்லாதவனே, வானவர்கள் போற்றும் மருந்தே, பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களின் நகரங்களை எரித்த சிவபிரானே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன் என்று அப்பர் பிரான் பெருமானை போற்றும் பாடல்..
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதமானாய் போற்றி அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்று ஒருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர் தம் புரம் எரித்த சிவனே போற்றி திருமூலட்டானனே போற்றிபோற்றி
கற்றவர்க்கு கற்பகமாய் நிற்பவன் என்று திருவையாறு பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வள்ளுவரும் கல்வி கற்பதன் பயனே இறைவனைத் தொழுவது தான் என்பதை உணர்த்துகின்றார். அதனால் தான் பல பாடல்களில் அருளாளர்கள் இறைவனை தொழுது ஏத்துபவர்களை கற்றவர்கள் என்றும் மற்றவரை கல்லாதவர் என்றும் குறிப்பதை காணலாம். அப்பர் பிரான் கற்றவர் என்று இங்கே இறைவனை தொழுபவர்களை குறிப்பிட்டு,அவர்களுக்கு சிவபிரான் கற்பகமாய் இருப்பான், அதாவது வேண்டுவன எல்லாம் தருவான் என்று கூறுகின்றார். உற்றிருந்த=உணர்வதற்கு உதவி புரியும் தன்மைகள்; உற்றவர்=அடைந்த அடியார்கள்;
உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீலகண்டன் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ
இந்தக் கருத்தை உள்ளடக்கி, சேந்தனார் தமது, வீழிமிழலை திருவிசைப்பா பதிகத்தில், சிவபிரானை கற்றவர்களுக்கு கற்பக கனியாகவும், மற்றவர்கள் அறிய முடியாத மாணிக்க மலையாகவும் இருப்பவன் என்று கூறுகின்றார்.
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை கரை இலாக் கருணை மா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கை
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத் திருவீழிமிழலை வீற்று இருந்த
கொற்றவன் தன்னைக் கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே
இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.89.7) அப்பர் பிரான், பெருமானை, கற்றவர்கள் ஏதம் களைபவன் என்று கூறுகின்றார். பற்கள் நிறைந்த பிரமனின் மண்டையோட்டில் பலி ஏற்று உண்பவரும், தனது அடியார்களின் சித்தத்தில் இருப்பவரும், உண்மையான மெய்ந் நூல்களை கல்லாதவர்கள் காண்பதற்கு மிகவும் அறியவராக விளங்குபவரும், அத்தகைய நூல்களைக் கற்று உணர்ந்தவர்களின் துன்பங்களை களைபவரும், கொடுமை மிகுந்த பூதப் படைகளை உடையவரும், அலைகள் நிறைந்த ஏழு கடல்களாகவும் ஏழு மலைகளாகவும் இருப்பவரும், உலகத்தவர் அனைவராலும் புகழப் படுபவரும் ஆகிய இறைவன் இன்னம்பர் திருத்தலத்தில் தான்தோன்றி ஈசனாக எழுந்தருளி உள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை
பல்லார் தலையோட்டில் ஊணார் போலும் பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும் கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்
பொல்லாத பூதப் படையார் போலும் பொருகடலும் ஏழ்மலையும் தாமே போலும்
எல்லாரும் ஏத்தத் தருவார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே
சுந்தரர் கருப்பறியலூர் தலத்தினை கற்றவர் தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் என்று அந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.30.11) குறிப்பிடுகின்றார். மலிந்த=நிறைந்த, போன்ற;
கலை மலிந்த தென் புலவர் கற்றோர் தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர்
குலை மலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் பூஞ்சோலைக் கொகுடிக் கோயில்
இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண்டமிழ்களே
சுந்தரரும் தனது நமச்சிவாயப் பதிகத்தில் கற்றவர் தொழுது ஏத்தும் நற்றவா என்று சிவபிரானை அழைக்கின்றார். நமச்சிவாய என்று தொடர் மொழியாய் சொல்லும்போது, சிவனுக்கு வணக்கம் என்று ஒரு பொதுவான பொருளினைத் தருவதால் இந்த ஐந்தெழுத்து தூல பஞ்சாக்கரம் என்று சொல்லப்படுகின்றது
மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.61.11) சுந்தரர், கற்றவர்களால் புகழ்ந்து போற்றப்படுபவன் பெருமான் என்று கூறுகின்றார். பெற்றம்=இடபம், எருது; கச்சி ஏகம்பம் தலத்தில், தனது இடது கண் பார்வை மீண்டும் வரப்பெற்றதை நினைத்து மகிழ்ந்து சுந்தரர் பாடிய பதிகம் இந்த பதிகம். திருவொற்றியூர் தலத்தை விட்டு நீங்கிய பின்னர், தனது கண்களின் பார்வையை இழந்த பின்னர், சுந்தரர் வெண்பாக்கம், திருவாலங்காடு, திருமுல்லைவாயில் மாற்பேறு ஆகிய தலங்கள் சென்ற சுந்தரர், அந்த தலங்களில் உறைகின்ற பெருமானை நேரில் காணமுடியாமல் மிகவும் வருந்திய தன்மை, இங்கே கச்சி ஏகம்பத்து பெருமானை நேரில் கண்டபோது மகிழ்ந்தேன் என்றும் அத்தகைய மகிழ்ச்சி பெறுதற்கரிய பேறு என்றும் உணர்த்தும் குறிப்பு மூலம் உணரப்படுகின்றது.
பெற்றம் ஏறுகந்து ஏற வல்லானைப் பெரிய எம்பெருமான் என்று எப்போதும்
கற்றவர் பரவப்படுவானைக் காணக் கண் அடியேன் பெற்றதென்று
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக் குளிர்பொழில் திரு நாவலாரூரன்
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார் நன்னெறி உலகு எய்துவர் தாமே
திருமூலரும், திருமந்திரப் பாடல் ஒன்றில், அனைத்து உலகங்களுக்கும் முதற்பொருளாக இருக்கும் சிவபிரான், அனைத்து உயிர்கட்கும் உயிராக இருக்கின்றார் என்றும், அந்த சிவபிரானை உணர்த்தும் நமச்சிவாய என்னும் சொல்லாகிய கனியை உண்ட தான், அந்த கனி இனிப்பாக இருந்ததை உணர்ந்தேன் என்றும் கூறுகின்றார். இவ்வாறு இறைவனையும் இறைவனது நாமத்தையும் பழத்திற்கு உருவகப்படுத்தி, இறைவனை உணரும் அடியார்கட்கும் அந்த நினைப்பே இனிப்பாக உள்ளதாக பல அருளாளர்கள் கூறியுள்ளார்கள்.
ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும்
ஒன்று கண்டீர் உலகுக்கு உயிராவது
நன்று கண்டீர் இனி நமச்சிவாயப் பழம்
தின்று கண்டேற்கு இது தித்தவாறே
பொழிப்புரை:
கொடைத் தன்மை, வளமை, உண்மை, புகழ் மற்றும் வலிமை கொண்ட சான்றோர்கள் வாழ்வதால் மேன்மையடைந்து, மேலும்மேலும் கீர்த்தியுடன் வளரும் பிரமபுரம், வேணுபுரம், செழிப்புடன் விளங்கும் புகலி, சந்திரனை நெருங்கும் வண்ணம் உயர்ந்த மதில்கள் கொண்ட வெங்குரு, உயர்ந்தவர்கள் இறைவனை வேண்டி வழிபடும் சண்பை, அகன்ற புகழினை உடைய காழி, கொச்சைவயம், செழிப்புடன் பசுமையாக விளங்குவதால் காண்போர் கண் மகிழும் வண்ணம் அமைந்துள்ள கழுமலம், கற்றவர்கள் பெருமானை புகழும் தோணிபுரம், பூந்தராய், சிறந்த பண்களுடன் பொருந்திய பாடல்கள் இடைவிடாது பாடப்படும் சிரபுரம், உலகம் புகழும் புறவம் என்று பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலம், உடல் முழுதும் திருநீறு பூசியமையால் பாலின் நிறத்தில் திருமேனியை உடைய சிவபெருமான் தொடர்ந்து உறையும் தலமாகும்.
பாடல் 8:
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல்கள் 7 தொடர்ச்சி, 8, 9, 10, 11, 12 (திதே 0351)
மோடி புறம் காக்கும் ஊர் புறவம் சீர்ச் சிலம்பனூர் காழி மூதூர்
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமல நீடு
கூடியவன் ஊர் வளர் வெங்குருப் புகலி தராய் தோணிபுரம் கூடப் போர்
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலைச் சிலையன் ஊரே
விளக்கம்:
மோடி=காளி; சிலையன்=வில்லினை உடையவன்; அருளி=அருள்பவன்; மலைச் சிலையன்= மேரு மலையினை வில்லாக வளைத்த பெருமான்; நீடு இயலும்=நீண்ட காலமாக, பல ஊழிகளைக் கடந்தும், நிலைத்து நிற்கும்; கமல நீடு கூடியவன்=நீண்ட காலமாக தாமரையில் வாழும் பிரமன்; வளர்=நாள்தோறும் புகழுடன் வளரும்; கூடப் போர் தேடி உழல்=போர்களைத் தேடித் திரிந்த திரிபுரத்து அரக்கர்கள்; போர் கூட என்று மாற்றி வைத்து பொருள் கொள்ள வேண்டும். பறக்கும் கோட்டைகளில் திரிந்த வண்ணம் தாம் விரும்பிய இடங்களில் கீழே இறங்கி, ஆங்கிருந்த மக்களை அழித்த செய்கை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இந்த மூன்று அரக்கர்களும் பெற்றிருந்த வல்லமை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி ஓடியதால், அவர்களைத் தேடி போர் புரிய எவரும் வராத நிலையில், அவர்களே போரினைத் தேடிச் சென்ற நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமான் ஒருவனே திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்றவன். அவுணர்=அரக்கர்கள்; உழலுதல்=திரிதல்; செற்ற=வெற்றி கொண்ட;
பொழிப்புரை:
பெருமானிடம் நடனப் போட்டியில் தோற்று ஊருக்கு வெளிப்புறம் சென்று அமர்ந்து காளிதேவி காவல் காக்கும் புறவம், புகழ் நிறைந்த சிரபுரம், தொன்மையான காழி, பல ஊழிகளைக் கடந்தும் நிலையாக நிற்கும் சண்பை, கழுமலம், கொச்சைவயம், வேணுபுரம், தாமரைப் பூவினில் நெடுங்காலமாக அமர்ந்து உறையும் பிரமன் வழிபட்ட பிரமனூர், நாள்தோறும் புகழில் வளரும் வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம் என்று பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலமாவது, தம்மை எதிர்த்து போரிட வல்லவர் எவரும் இல்லாத நிலையில் தாங்களே தேடிச் சென்று வலிய போர் தொடுக்க வானில் திரிந்த திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் வெற்றி கொள்ளும் பொருட்டு மேரு மலையை வில்லாக வளைத்த பெருமான் உறையும் பதியாகும்.
பாடல் 9:
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல்கள் 7 தொடர்ச்சி, 8, 9, 10, 11, 12 (திதே 0351)
இரக்கம் உடை இறையவன் ஊர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் தன்னூர்
நிரக்க வரு புனல் புறவ நின்ற தவத்து அயனூர் சீர்த் தேவர் கோனூர்
வரக் கரவாப் புகலி வெங்குரு மாசிலாச் சண்பை காழி கொச்சை
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே
விளக்கம்:
வரம் கரவா என்ற தொடர் எதுகை நோக்கி வரக்கரவா என்று திரிந்தது. விறல்=வலிமை; அறா=இடைவிடாமல்;
பொழிப்புரை:
அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டுள்ள இறைவனது ஊர் தோணிபுரம், பூந்தராய், சிலம்பன் என்ற அரக்கன் வழிபட்டு பயன் அடைந்த சிரபுரம், நிறைந்தும் விரைந்தும் வரும் நதியின் அருகே உள்ள புறவம், பெருமானை நோக்கி நிலையான தவத்தைப் புரிந்து பயனடைந்த பிரமன் வழிபட்ட பிரமபுரம், சிறப்பு வாய்ந்த தேவர்களின் தலைவன் இந்திரன் வழிபட்ட வேணுபுரம், தனது அடியார்களுக்கு மறைக்காது கேட்ட வரத்தினை அருளும் இறைவன் உறையும் புகலி, வெங்குரு, குற்றமற்ற சண்பைநகர், காழி, கொச்சைவயம், என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழித் தலம், நான்கு வேதங்களும் இடைவிடாது அந்தணர்களால் ஓதப்படும் சிறப்பினை உடையதும், கயிலாய மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த அரக்கன் இராவணின் வலிமையை அடக்கிய பெருமான் உறைகின்ற சிறப்பினை உடையதும் ஆகிய தலமாகும்.
பாடல் 10:
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல்கள் 7 தொடர்ச்சி, 8, 9, 10, 11, 12 (திதே 0351)
மேல் ஓதும் கழுமல மெய்த்தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை
நூலோதும் அயன் தனூர் நுண்ணறிவார் குருப் புகலி தராய் தூநீர் மேல்
சேலோடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செருச் செய்து அன்று
மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே
விளக்கம்:
மேல்=மேலோர்; மெய்ந்நூல்=வேதங்கள்; மெய்த்தவம்=உண்மையான தவம்; குரு=வெங்குரு; செருச் செய்து அன்று என்ற தொடர் மூலம், பிரமனும் திருமாலும் தங்கள் இருவரில் எவர் உயர்ந்தவர் என்று ஒருவருக்கொருவர் இடைவிடாது வாதம் செய்த நாளினை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை;
உயர்ந்தவர்கள் போற்றும் கழுமலம், உண்மையான தவத்தில் ஆழும் தவசிகள் அதிகமாக வாழும் கொச்சைவயம், வேணுபுரம், உண்மையை உரைக்கும் வேதங்களை நாள்தோறும் ஓதும் பிரமன் வழிபட்ட பிரமபுரம், நுண்ணிய அறிவினை உடைய சான்றோர்கள் வாழும் வெங்குரு, புகலி, பூந்தராய், தூய்மையான நீரினை உடைய நீர்நிலைகளில் மீன்கள் துள்ளித் திரியும் தோணிபுரம், புகழுடன் திகழும் புறவம், சிலம்பன் வழிபட்ட சிரபுரம், தம்மில் யார் பெரியவன் என்று ஒருவருக்கொருவர் மாறுபட்ட பிரமனும் திருமாலும் வாதம் செய்த நாளன்று அவர்களின் எதிரே நீண்ட நெருப்புப் பிழம்பாகத் தோன்றி அவர்கள் இருவரும் அடியையும் முடியையும் காணாத வண்ணம் நின்ற பெருமான் உறையும் காழி, சண்பை என்று பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலமாவது, உலகத்தவர் அனைவரும் வாழ்த்தும் ஊராகும்.
பாடல் 11:
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல்கள் 7 தொடர்ச்சி, 8, 9, 10, 11, 12 (திதே 0351)
ஆக்கமர் சீரூர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர்
ஓக்கம் உடைத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவ நண்பார்
பூக்கமலத்தோன் மகிழூர் புரந்தரனூர் புகலி வெங்குருவும் என்பர்
சாக்கியரோடு அமண் கையர் தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே
விளக்கம்:
அன்பான் ஊர்=அன்பே உருவமாக உடைய சிவபெருமான் உறையும் இடம்; ஆக்கு=ஆக்கம்; நண்பு என்ற சொல் இங்கே பக்தியை குறிக்கின்றது. ஓக்கம்=உயர்வு; அன்பே உருவமாக உள்ள பெருமான் உறைவதால் உயர்வாக கருதப்படும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண்=ஒளி மிகுந்த; புரந்தரன்=இந்திரன்; புரந்தரன் ஊர்=வேணுபுரம்
பொழிப்புரை:
செல்வங்களை படைக்கும் சிறப்பு வாய்ந்த சண்பை, காழி, புகழும் பெருமையும் அமர்கின்ற கொச்சைவயம், கழுமலம், அன்பே உருவமாக அமர்ந்து அனைவரிலும் உயர்வாக உள்ள பெருமான் உறையும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒளி மிகுந்த புறவம், தாமரை மலரில் உறையும் பிரமன் பக்தியுடன் வழிபட்டு பயனடைந்து மகிழ்ந்த பிரமன் வழிபட்ட பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழித் தலம்,புத்தர்களும் சமணர்களும் அறியாத வகையில் நிற்கும் இறைவன் சிவபெருமான் தங்கும் ஊராகும்.
பாடல் 12 :
விளங்கிய சீர் பிரமனூர் (2.073) பாடல்கள் 7 தொடர்ச்சி, 8, 9, 10, 11, 12 (திதே 0351)
அக்கரம் சேர் தருமனூர் புகலி தராய் தோணிபுரம் அணி நீர்ப் பொய்கை
புக்கரம் சேர் புறவம் சீர்ச் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல்லூர்
மிக்கரம் சீர்க் கழுமலமே கொச்சைவயம் வேணுபுரம் அயனூர் மேவிச்
சக்கரம் சீர்த் தமிழ் விரகன் தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே
விளக்கம்:
தரிப்போர்=மனதினில் தரிப்பவர்கள், நினைவு கொள்வோர்; அக்கரம்=அக்ஷரம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்; க்ஷரம்=அழிவு, அக்ஷரம்=அழிவின்மை; உயிர்கள் செய்த தவற்றினுக்கு ஏற்ப நரகத்தில் தண்டனை விதிக்கும் ஆற்றலை இயமன், சீர்காழி தலத்தில் இறைவனை நோக்கி தவமிருந்து பெற்றதால், வெங்குரு என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகின்றது. பிறிதொரு பதிகத்தில் வெங்கோத் தருமன் பேணியாண்ட வெங்குரு என்று திருஞானசம்பந்தர் கூறுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. தருமனூர்=வெங்குரு; புக்கரம்=தாமரை மலர்; புக்கரம் என்ற சொல்லினை புஷ்கரம் (புண்ணிய தீர்த்தம்) என்ற வடமொழிச் சொல்லின் திரிபு என்றும் கூறுவார்கள்; மிக்கரம் சீர்=மிக்கு+அரன்+சீர்;
பொழிப்புரை:
தருமனூர் என்று அழிவற்ற தன்மை உடைய வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம், புண்ணிய தீர்த்தங்களையும் பொய்கைகளையும் தனக்கு அணிகலனாகக் கொண்டு நீர்வளத்துடன் திகழும் புறவம், சிறப்பு வாய்ந்த சிரபுரம், புகழ் வாய்ந்த காழி, தொன்மை வாய்ந்த சண்பை, பழமையானதும், பெருமானது பெருமை மிகுதியாக உள்ளதும் ஆகிய கழுமலம், கொச்சைவயம், வேணுபுரம், பிரமபுரம், ஆகிய பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலத்தின் மீது சக்கரமாக தலத்தின் பெயர்கள் சக்கரத்தின் சட்டங்கள் போன்று மாறிமாறி வரும் வண்ணம், தமிழில் புலமை கொண்ட ஞானசம்பந்தன் சொன்ன இந்த பதிகத்தின் பாடல்களை அன்புடன் மனதினிலும் நாவிலும் தரித்து ஓத வல்லார்கள் சிறந்த தவம் செய்தவர்களுக்கு சமமாக கருதப் படுவார்கள்.
முடிவுரை:
பெரிய புராணம் திருஞானசம்பந்தர் புராணத்தின் பாடலில் சேக்கிழார் இந்த தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் குறிப்பிடுகின்றார். இந்த பெயர்கள் அனைத்தும் சிவபெருமானின் அருளால் நடைபெற்ற நிகழ்ச்சிகளை உணர்த்துவதால், திருப்பெயர் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். மேலும் இந்த பன்னிரண்டு பெயர்களையும் மந்திரமாக சொல்லிப் போற்றுதல் சிவபெருமானின் அருளினைப் பெறுவதற்கு உரிய சாதனமாக விளங்குகின்றன என்பதும் உணர்த்தப் படுகின்றது. பொருவில் தோணிபுரம் என்று குறிப்பிட்டு, ஏனைய தலங்கள் பலவும் ஊழி வெள்ளத்துள் அமிழ்ந்து அழிந்த போதிலும், தான் அழியாமல் மிதந்த நகரம் என்பது உணர்த்தப் படுகின்றது. இந்த பன்னிரண்டு பெயர்களும் உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற காலத்தின் அடிப்படையில் இந்த பெயர்கள் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்
பொருவில் திருத்தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வரு புறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சைவயம்
பரவு திருக்கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்
பதிகத்தின் முதல் பாடலில் தேவர்களின் பகையாகிய சூரபதுமனை அழிப்பதற்கு முருகப் பெருமானை தோற்றுவித்தவன் என்றும், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உட்கொண்டு தேவர்களின் அச்சத்தை தீர்த்தவன் என்று இரண்டாவது பாடலிலும், சிறுவன் மார்க்கண்டேயனுக்காக இயமனை உதைத்து வீழ்த்தியவர் என்று பதிகத்தின் ஆறாவது பாடலிலும், தான் ஒருவனே நிலையானவன் என்பதை உணர்த்தும் வண்ணம் மேனி முழுவதும் திருநீறு பூசிய பெருமான் என்று ஏழாவது பாடலிலும், எவராலும் வெல்ல முடியாது என்று செருக்குடன் திரிந்த திரிபுரத்து அரக்கர்களை வென்றவன் என்று எட்டாவது பாடலிலும், இராவணனின் வலிமையை அழித்தவன் என்று ஒன்பதாவது பாடலிலும், பிரமனும் திருமாலும் உணர முடியாத வண்ணம் நெடிது உயர்ந்தவன் என்று பத்தாவது பாடலிலும் சமணர்களும் புத்தர்களும் அறிய முடியாத தன்மை உடையவன் என்று பதினோராவது பாடலிலும் பெருமானின் பெருமைகள் உணர்த்தப் படுகின்றன. மூன்றாவது நான்காவது மற்றும் ஐந்தாவது பாடல்களில் தலத்தில் வாழும் அடியார்களின் பெருமை உணர்த்தப்பட்டு, பெருமானை வழிபட்டு அவனது அருள் பெற்று நாமும் அத்தகைய பெருமைகளுடன் விளங்கலாம் என்பதும் உணர்த்தப் படுகின்றது.
தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் அனைத்துப் பாடல்களிலும் குறிப்பிடும் திருஞான சம்பந்தர், தலத்தின் பெருமைகளையும் ஆங்காங்கே உணர்த்துவது பாடலுக்கு மெருகூட்டுகின்றது. மேலும் பெருமானின் சிறந்த தன்மைகளும் செயல்களையும் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டு பெருமானின் புகழினை எடுத்துரைக்கும் தோத்திரப் பாடல்களாகவும் இந்த பதிகம் அமைந்துள்ளது. பன்னிரண்டு பெயர்கள் மாறிமாறி குறிப்பிடப் பட்டாலும் பாடலில் எதுகை நயம் சேர்க்கப் பட்டும், பண்ணுடன் இணைத்து பாடுவதற்கு ஏற்ப சந்த அமைப்புடன் பாடல்கள் அமைந்திருப்பது ஞான சம்பந்தரின் புலமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. பெருமான் உறையும் தலத்தின் பல பெயர்களை மந்திரம் போல் மீண்டும்மீண்டும் உரைப்பது தவத்திற்கு சமமானது என்று கடைப் பாடலில் உணர்த்தப்பட்டு பதிகம் ஓதுவோர் அனைவரையும் தவநெறியில் திருஞான சம்பந்தர் ஈடுபடுத்துகின்றார். நாமும் இந்த பதிகத்தை ஓதுவதன் மூலம், சிவபெருமானை குறித்து செய்யப்படும் தவத்தில் ஈடுபட்டு அந்த தவத்தின் பயனடைந்து இம்மையில் துன்பங்கள் தீர்ந்து மறுமையில் என்றும் அழியாத இன்பத்தினை பெறுவோமாக.