பதிக எண்: 2.02 - திருவலஞ்சுழி - இந்தளம்
பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி சென்ற திருஞான சம்பந்தர், அந்த ஊரிலிருந்த மூன்று தேவாரத் தலங்களுக்கும் (மூக்கீச்சரம், சிராப்பள்ளி, ஆனைக்கா) சென்று, இறைவனைப் பணிந்து வணங்கி பதிகங்கள் பாடிய பின்னர், பாற்றுறை, நெடுங்களம், காட்டுப்பள்ளி, ஆலம்பொழில், பூந்துருத்தி, கண்டியூர், சோற்றுத்துறை, வேதிகுடி, வெண்ணியூர் சக்கரப்பள்ளி, புள்ளமங்கை, நல்லூர், திருக்கருகாவூர் அவளிவணல்லூர் பரிதிநியமம் பூவனூர் ஆவூர் பசுபதீச்சரம் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் திருவலஞ்சுழி சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். வலஞ்சுழி வந்தடைந்த ஞானசம்பந்தரை, தலத்து அடியார்கள் ஒன்றுகூடி வரவேற்று திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். பொன்மயமாக ஒளிவீசும் கோபுரத்தை வணங்கிய ஞானசம்பந்தர், பின்னர் கோயில் பிராகாரத்தை வலம் வந்து மணிகண்டரைப் புகழ்ந்து பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இந்த தலத்தில் ஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் ஒன்றும் இரண்டு திருத்தாண்டகப் பதிகங்களும் கிடைத்துள்ளன. அந்த இரண்டு திருத்தாண்டகப் பதிகங்களில், ஒன்று கொட்டையூர் வலஞ்சுழி ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்து குறிப்பிடுகின்றன. இங்கே விளக்கம் அளிக்கப்படும் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் திருஞானசம்பந்தர் தாருகவனத்தில் முனிவர்களின் இல்லங்களுக்கு சென்று, அவர்களது மனைவியரிடம் பலியேற்றதை குறிப்பிடுகின்றார். பொடியுடை மார்பினர் என்று தொடங்கும் வாழ்கொளிபுத்தூர் பதிகத்தின் (1.40) முதல் பத்து பாடல்கள் மற்றும் எரியார் மழுவொன்று என்று தொடங்கும் பிரமபுரத்து பதிகத்தின் (1.63) முதல் பதினோரு பாடல்களிலும் தாருகவனத்தில் பெருமான் பலியேற்ற நிகழ்ச்சி குறிப்பிடப்படுகின்றது. இந்த பதிகத்தின் மற்றொரு சிறப்பு, பதிகத்தின் முதல் பத்து பாடல்கள் பெருமானை நோக்கி, தாருகவனத்தில் பலியேற்றதின் காரணம் யாது என்று கேள்வி கேட்பதாக அமைந்துள்ள தன்மை மற்றும் பதிகத்தின் கடைப் பாடலில் அதற்கான விடையும், மறைமுகமாக கொடுக்கப் பட்டுள்ள நேர்த்தி என்பதை நாம் உணரவேண்டும்.
கும்பகோணத்திலிருந்து ஆறு கி.மீ. தூரத்தில், சுவாமிமலை செல்லும் வழியில் அமைந்துள்ள திருத்தலம். பண்டைய நாளில் ஒரு பள்ளத்தினில் புகுந்து மறைந்த காவிரி நதி, பின்னர் வலமாக சுழித்துக் கொண்டு வெளிப்பட்டமையால் வலஞ்சுழி என்று இந்த தலம் அழைக்கப் படுகின்றது. திருவிடைமருதூர் தலத்திற்கு உரிய பரிவாரத் தலங்களில் விநாயகருக்கு உரிய தலமாக கருதப் படுகின்றது. இந்த தலத்தின் விநாயகர் மிகுந்த புகழினை உடையவர். பெரும்பாலோர் இந்த திருக்கோயிலை விநாயகர் கோயிலாக கருதி, நுழைந்தவுடன் கண்ணில் படும் விநாயகரை வழிபட்டுவிட்டு திரும்பிவிடுகின்றனர். சுவேத விநாயகர் என்று அழைக்கப்படும் இவர், எவ்வாறு தோன்றினார் என்பதை நாம் காண்போம். பாற்கடலில் மந்தர மலையாக மத்தாக வைத்து கடைந்த போது முதலில் விடம் தோன்றவே, அனைவரும் விடத்தின் தாக்கத்திற்கு பயந்து ஓடினார்கள். பின்னர் இந்த விடத்தை சிவபிரான் உட்கொண்டு அவர்களின் இடரினை தீர்த்த பின்னர், மறுபடியும் தேவர்களும் அசுரர்களும் மீண்டும் கடலை கடையத் தொடங்கினர். ஆனால் களைப்பு மேலிட்டு கடையும் செயலை தொடர முடியாமல் வருந்தியபோது இந்திரனுக்கு விநாயக பெருமானை வழிபடாமல் பாற்கடல் கடைய ஆரம்பித்தது நினைவுக்கு வரவே, கடல் நுரையை எடுத்து விநாயகர் உருவம் அமைத்து வழிபட்ட பின்னர் பாற்கடல் கடையும் வேலையினை தொடங்க, அதன் பின்னர் வெற்றியும் கிடைத்தது. இதனால் இந்த விநாயகருக்கு வெள்ளை விநாயகர், ச்வேத விநாயகர், கடல் நுரை விநாயகர் என்று பெயர்கள் ஏற்பட்டன. இந்த பிள்ளையாரை இந்திரன் தேவலோகத்தில் வைத்து தினமும் வழிபாடு செய்து கொண்டு இருந்தான். அகலிகை நிகழ்ச்சியால் ஏற்பட்ட சாபத்தை போக்கிக் கொள்வதற்காக பூவுலகம் வந்த இந்திரன் அப்போது இந்த விநாயகரையும் கொண்டு வந்தான். திருவலஞ்சுழி எனும் இந்த இடத்தில் வைத்து வழிபட்ட பின்னர், இந்த சிலையை எடுக்க முயற்சி செய்தபோது அவனால் எடுக்க முடியவில்லை; சிலை பூமியில் கெட்டியாக ஒட்டிக்கொண்டு விடவே வேறு வழியின்றி இந்த தலத்திலேயே விட்டுவிட்டு இந்திரலோகம் சென்றான். ஹேரண்ட முனிவரும் இந்த விநாயகரை வழிபட்டு இருக்கிறார்.
இந்த சுவேத விநாயகப் பெருமான் முதலில் திருக்கயிலாயத்தில் வைத்து ஆராதிக்கப்பட்டவர் ஆவார். பின்னர் க்ருத யுகத்தில் வைகுந்தத்தில் திருமாலாலும் இலக்குமியாலும் பூஜிக்கப்பட்டது. த்ரேதா யுகத்தில் சத்திய லோகத்தில் பிரமன் மற்றும் சரஸ்வதியால் பூஜிக்கப்பட்ட இந்த மூர்த்தம், த்வாபர யுகத்தில் துருவலோகம், தபோலோகம் முதலான பல உலகங்களில் பூஜிக்கப்பட்ட பின்னர் தேவலோகத்தில் இந்திரனால் வழிபடப்பட்டது. இந்த மூர்த்தத்தை பூவுலகத்து மக்கள் கலியுகத்தில் வழிபட்டு பலனடையவேண்டும் என்று சிவபிரான் திருவுள்ளம் கொண்டார். திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீசப் பெருமானை இந்திரன் வழிபடவந்த போது இந்த மூர்த்தத்தையும் கொண்டு வந்ததை சிவபெருமான் அறிந்தார். இந்திரன் முன்னர் ஓர் அந்தணச் சிறுவனாக சிவபெருமான் தோன்றினார். இந்த மூர்த்தத்தை தரையில் வைக்கக் கூடாது என்று திருமால் கூறியிருந்த படியால், தான் தனது நித்திய கர்மாக்களை முடிக்கும் வரையில், இந்த மூர்த்தத்தை தரையில் வைக்காமல் கையில் வைத்துக்கொண்டு பின்னர் தன்னிடம் தருமாறு, தனது முன்னே இருந்த சிறுவனிடம் இந்திரன் வேண்டினான். மூர்த்தத்தை தான் வாங்கிய பின்னர் அந்த அந்தணச் சிறுவன் தான் மூன்று முறை அழைப்பதற்குள் இந்திரன் வந்து அதனைப் பெற்றுக் கொள்ளாவிடில் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினான். வேறு வழி தோன்றாததால் இந்திரனும் அதற்கு ஒப்புக்கொண்டு குளித்து அதன் பின்னர் கபர்தீசப் பெருமானை வழிபடச் சென்றான். இதனிடையில் சிறுவன் மூன்று முறை இந்திரனை அழைக்க, இந்திரன் வருவதற்கு தாமதமாகவே மூர்த்தத்தை தரையில் வைத்துவிட்டான். இந்திரன் எவ்வளவு முயற்சி செய்தும் எடுக்க முடியாமல் போகவே, இங்கே விட்டுவிட்டு இந்திரலோகம் சென்றான். அசரீரியாக விநாயகப் பெருமான், கலியுகத்தில் பூவுலக மக்கள் தன்னை வழிபடுவதற்காக மேற்சொன்ன நிகழ்ச்சி நடந்தது என்று கூறவே இந்திரனும் சமாதானம் அடைந்தான்.
வைகுந்தத்தில் திருமால் விநாயகரை குறித்து தியானத்தில் இருந்த போது, அவரது கண்களிலிருந்து ஒரு பெண் தோன்றினாள். கண்களில் இருந்து தோன்றியதால் கமலாம்பாள் என்றும் சித்தி என்றும் இந்த பெண் அழைக்கபட்டாள் பிரமன் சத்யலோகத்தில் விநாயகரை குறித்து தியானத்தில் இருந்தபோது அவரது வாக்கிலிருந்து ஒரு பெண் தோன்றவே அந்த பெண் வாணி என்றும் புத்தி என்றும் அழைக்கப்பட்டாள் இந்த இரு பெண்களும் மணப்பருவம் அடைந்த பின்னர் விநாயகப் பெருமானை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கவே, திருமாலும் பிரமனும், இங்கே வந்து விநாயகரை நோக்கி தவம் இருந்தனர். தவத்தின் முடிவில் விநாயகர் அவர்களுக்கு காட்சி கொடுத்து அவர்களின் மகள்களை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். இச்சா சக்தியின் ரூபமாக விநாயகப் பெருமானும், ஞான சக்தியின் உருவமாக வாணியும் (புத்தி), க்ரியா சக்தியின் உருவமாக கமலையும் (சித்தி) கருதப்படுவதால் நாம் சித்தி புத்தி சமேத சுவேத விநாயகரை வணங்கினால் நாம் வாழ்வில் மன அமைதி, கல்வி, செல்வம், தேக ஆரோக்கியம் முதலிய அனைத்து நன்மைகளையும் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது,
இங்கே சன்னதியின் மையத்தில் இரண்டு தூண்களுக்கு இடையில் விநாயகப் பெருமான் காட்சி அளிக்கின்றார். இந்த சன்னதியின் தெற்கு வடக்குச் சுவர்களில் இரண்டு முனிவர்களின் உருவங்களை காணலாம். கணகபுராணம், முத்கல புராணம் எனும் புராணங்களை எழுதிய கணகர், முத்கலர் என்ற இந்த முனிவர்கள் அனுதினமும் சுவேத விநாயகரை வழிபட்டவண்ணம் இருப்பதாக கருதப்படுகின்றது. மிக சிறிய உருவத்தில் இருக்கும் இந்த விநாயகர் கடல் நுரையால் செய்யப்பட்டது என்பதால் அபிஷேகம் கிடையாது. பச்சைக் கற்பூரத் தூள்கள் தான் இந்த மூர்த்தத்தின் மீது தூவப்படும். விநாயகர் சன்னதியைச் சுற்றிலும் அமைந்திருக்கும் மண்டபம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த மண்டபம் கலைச் சிறப்பு கொண்டது. இந்திரனால் அமைக்கப்பட்ட மண்டலாம் என்று கூறுவார்கள். கல் குத்துவிளக்கும் சித்திர தூண்களும் பிரசித்தி பெற்றவை. பலகணியிலும் தூண்களிலும் உள்ள வேலைப்பாடுகள் தற்காலத்தில் புடவைகளில் காணப்படும் வேலைப்பாடுகளை விடவும் பல மடங்கு உயர்ந்து நேர்த்தியாக காணப்படுகின்றன. இந்த சன்னதி இரத வடிவத்தில் அமைக்கப்பட்டு, தென்புறத்தில் சக்கரங்கள், அச்சு, கடையாணி, குதிரைகள் பூட்டிய வண்ணம் மிகவும் அழகாக அமைக்கப் பட்டுள்ளது. இங்குள்ள உற்சவர் விநாயகர் உருவத்தில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம், விநாயகர் இரண்டு முழுத் தந்தங்களுடன் இருப்பதாகும். புராண காலத்திற்கு முற்பட்ட விநாயகராக இருப்பதால், மகாபாரதம் எழுதுவதற்காகவும் கஜமுகாசுரனை கொல்வதற்காகவும் தனது தந்தத்தை ஒடித்துக் கொள்வதற்கு முன்னால் இருந்த உருவமாக, ஓடிக்கப்படாத கூர்மையான தந்தங்களுடன் காணப்படுகின்றது. இவ்வாறு முழுமையான தந்தங்களுடன் நாம் விநாயகரை வேறெங்கும் பார்ப்பது மிகவும் அரிதாகும். வைவச்வதருக்கும் காமதேனுக்கும் மகனான சித்ரகுப்தன், எமனால் கணேச மந்திரம் உபதேசம் செய்து வைக்கப்பட்டார். பின்னர் சித்ரகுப்தன் வலஞ்சுழி விநாயகரை வழிபட்டு, ஞானமும் எழுத்தாணியும் பெற்று, எமதர்மனிடம் கணக்கராக பணியாற்றும் வாய்ப்பினை பெற்றார். வராக அவதாரம் எடுத்த போது திருமாலுக்கு கதாயுதம் கொடுத்து ஹிரண்யாக்ஷனை வெல்வதற்கு விநாயகர் உதவினார். திருமாலால் சபிக்கப்பட்ட பிருகு முனிவர் ஞானத்தை இழந்தார். தட்ச யாகத்தில் சிவபிரானை அணுகி அவர் ஆலோசனை கேட்டபோது, அவரின் ஆலோசனையின் பேரில் வலஞ்சுழி விநாயகரை வணங்கி, ஞானம் பெற்று, கணேச புராணம், பார்கவ புராணம் எழுதினார். கிருஷ்ண த்வைபாயனர், கணேசப் பெருமானை வணங்கி, வேதாந்த ஞானம் பெற்று, பின்னர் வேதங்களை பிரிக்கும் ஆற்றலைப் பெற்றார். பிரம்ம சூத்திரம் அவரால் தான் எழுதப்பட்டது. வேதங்களை பிரித்தமையால் அவருக்கு வேத வியாசர் என்ற பெயரும் ஏற்பட்டது. அர்ஜுனன் கணேச மந்திரத்தை பல முறை ஜபித்து அவர் அருளால் ஞானம் பெற்று நிவாத கவசர்களை வெல்லும் வல்லமை பெற்றான். பிரம்மோத்சவம் விநாயக பெருமானுக்கே நடக்கும்.
அண்ணாமலையில் ஜோதிப் பிழம்பாகத் தோன்றிய சிவனின் முடியைத் தான் கண்டதாக பொய் கூறியதால், பிரமன் ஞான மந்திரத்தை மறந்து படைக்கும் தொழிலை செய்யும் திறம் அற்றவராகத் திகழ்ந்தார். இங்குள்ள விநாயகரை வழிபட்ட பின்னர் அவர் திரும்பவும் ஞானம் பெற்று படைக்கும் தொழில் செய்யும் திறமை பெற்றார். ஒருவருக்கொருவர் தங்களில் யார் பெரியவர் என்ற வாதத்தில், தங்களுக்கு மேல் பெரியவரான சிவபிரான் இருப்பதை நினையாமல் இருந்ததற்காக திருமால் நூறு பிறவிகள் எடுக்க வேண்டி இருந்தது. இங்குள்ள விநாயகரை வழிபட்டு திருமால் நூறு பிறவிகள் எடுக்க வேண்டிய நிலையை பத்து பிறவிகளாக குறைத்துக் கொண்டார். பரமசிவனும் பார்வதி தேவியும் ஒரு முறை கயிலாயத்தில் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்த போது, சிவபிரானின் கை தாழ்ந்து இருந்ததைக் கண்ட திருமால், சிவபிரானுக்கு கோபம் வந்தால் ஏற்படும் விளைவுகளை எண்ணி, சிவபிரான் வென்றதாகவும் பார்வதி தேவி தோற்றதாகவும் அறிவித்தார். இதனால் கோபம் கொண்ட தேவி திருமாலுக்கு, கண் இல்லாத குருட்டு மலைப் பாம்பாக மாறுமாறு சாபம் கொடுத்தாள் ஒரு மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி தினமும் சதயம் நட்சத்திரமும் கூடிய நாளில் விநாயகரை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார். இன்றும் மார்கழி மாதத்தின் மேற்படி தினம் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. முருகப்பெருமான் வலஞ்சுழி விநாயகரை வணங்கி, தாரகாசுரனை வெல்லும் வலிமையையும், சுக்ராச்சாரியார் செய்யும் ஹோமங்களால் விளையும் இடையூறுகளைத் தவிர்க்கும் திறனும், பராசத்தி அளித்த சக்தி ஆயுதத்தை பயன்படுத்தும் ஆற்றலையும் பெற்றார். பிரமதேவன் ஒரு முறை தனது மனைவி சரசுவதி தேவியை விடுத்து காயத்ரி தேவியை உடன் வைத்துக் கொண்டு வேள்வி செய்ததால் கோபமுற்ற சரசுவதி, நீ வேத ஞானத்தை விடக் கடவாய் என்று சாபம் கொடுத்தாள். வலஞ்சுழி விநாயகரை வழிபட்டு பிரமதேவன் ஞானத்தை திரும்பவும் பெற்றார். ஒரு முறை கயிலை சென்ற குபேரன், பார்வதி தேவியை மதிக்காமல் சிவபிரானை மட்டும் வணங்கியதால் கோபமுற்ற பார்வதியின் சாபத்தால் குபேரன் தனது செல்வத்தை இழந்தான்; மேலும் கண்களில் நோயும் அடையப் பெற்றான். பின்னர் வலஞ்சுழி விநாயகரை வழிபட்டு கண் நோய் தீரப்பெற்று, இழந்த செல்வமும் திரும்பப் பெற்றான். விநாயகரை வழிபட்ட சாஸ்தா, கமலாசுரனை யுத்தத்தில் வெல்லும் ஆற்றலைப் பெற்றார். மன்மதன் விநாயகரை வழிபட்டு புஷ்ப பாணம். கரும்பு வில் முதலியன பெற்று இரதி தேவியை மனைவியாகவும் பெற்றான். அக்னி தேவன் விநாயகரை வழிபட்டு, சப்த ரிஷிகளின் சாபத்தால் தான் இழந்த தேஜசை திரும்பவும் பெற்றான். சுக்கிரன் இந்த தலத்து விநாயகரை வழிபட்டு, கல்வி ஞானமும் மந்திர சித்தியும் அடையப் பெற்றார். விநாயகரின் நடனக் காட்சியைக் காணும் ஆவல் கொண்ட நடராஜப் பெருமான், இந்த தலத்தில் நர்த்தன கணபதியாக விநாயகர் ஆடிய காட்சியைக் கண்டார்.
பாடல் 1:
விண்டு எலாம் மலரவ் விரை நாறு தண் தேன் விம்மி
வண்டெலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழித்
தொண்டெலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர்
பண்டெலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே
விளக்கம்:
விண்டு=விரிந்து, விரிதலால்; விரை=நறுமணம்; விம்மி=தொடர்ந்து, இடைவிடாமல்; நசை=ஆசை; தொண்டு=தொண்டர்கள்; பிச்சை எடுப்பவர்கள் தங்களது வருகையை அறிவிக்கும் முகமாக குரல் கொடுப்பதை நாம் இந்நாளிலும் காண்கின்றோம். அவ்வாறு தனது வருகையை அறிவிக்கும் முகமாக பெருமான் வேத கீதங்கள் பாடியவாறு பலிக்கு செல்கின்றார். பெருமானின் திருமேனி சுடர் போன்று ஒளிவீசி பிரகாசிப்பதால், அந்த ஒளியே பெருமானின் வருகையை சுட்டிக் காட்டும் வண்ணம் இருப்பதால், பெருமான் எதற்காக பாடவேண்டும் என்று ஞானசம்பந்தர் வினவியதாக சிலர் விளக்கமாக அளிக்கின்றனர். ஆனால் இந்த பதிகத்தின் மற்ற பாடல்கள் உணர்த்தும் பொருளுடன் ஒப்பிட்டு பார்க்கையில், மேற்கண்ட விளக்கம் பொருத்தமற்றது என்று தோன்றுகின்றது. பெருமானை நோக்கி பலி ஏற்கச் சென்றதன் நோக்கம் யாது என்று ஞானசம்பந்தர் கேட்பதாக பொருள் கொள்வதே பொருத்தமாக உள்ளது. ஒலிபாடல் என்ற தொடரை வினைத்தொகை என்று அடையாளம் கொண்டு, ஒலித்த பாடல், ஒலிக்கும் பாடல், ஒலிக்கவிருக்கும் பாடல் என்று பொருள் கொண்டு, பண்டைய நாளில் பாடி பலியேற்ற பெருமான், இன்றும் அவ்வாறு பாடுகின்றார் என்றும் நாளையும் அவ்வாறு பாடியவண்ணம் பலியேற்பார் என்று ஞானசம்பந்தர் உணர்த்துவதாக விளக்கம் அளிப்பது பொருத்தமாக உள்ளது.
இந்த பதிகத்தின் பாடல்களில் ஞானசம்பந்தர் கேட்கும் கேள்விக்கு விடை, பல திருமுறைப் பாடல்களிலும் புராணங்களிலும் பொதிந்துள்ளன. அந்த தகவல்களை நாம் தேவையான இடத்தில் பொருத்திக் கொண்டு விடை காணவேண்டும். தாருகவனத்து முனிவர்கள், வேதங்களில் சொல்லப் பட்டுள்ள கர்ம காண்டத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்களாக, தாங்கள் செய்யும் செயல்களே தகுந்த பலனை அளிக்கும் என்ற கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக, வாழ்ந்து வந்தனர். நாம் செய்யும் செயல்கள் தகுந்த பலன்களை அளிப்பதற்கு மூல காரணமாக விளங்குபவன் இறைவன் என்பதை சிந்தியாமல், நாம் நற்பலன்களைப் பெறுவதற்கு இறைவனின் திருவருளும் வேண்டும் என்பதை மறந்தவர்களாக வாழத் தொடங்கினார்கள். இத்தகைய மனநிலை உள்ளவர்களிடம், தான் நேரில் தோன்றி உண்மையை உணர்த்தினாலும், பலனேதும் இருக்காது என்பதை உணர்ந்த பெருமான், புரிந்த திருவிளையாடலே தாருகவனத்து நிகழ்ச்சி ஆகும். இந்த பதிகத்தின் கடைப் பாடலில், இறைவன் பால் நம்பிக்கை வைக்காமல் செய்யப்படும் விரதங்கள், ஞானத்தையும் வீடுபேற்றினையும் பெறுவதற்கு வழி வகுக்காது என்று ஞானசம்பந்தர் உணர்த்துவதை நாம் காணலாம். எனவே தாருகவனத்து இல்லத்தரசிகளிடம் பெருமான் பலியேற்றுச் சென்றது, தாருகவனத்து முனிவர்கள் கொண்டிருந்த தவறான கொள்கையை மாற்றுவதற்காக என்பதை நாம் விடையாக கொள்ளவேண்டும்.
பொழிப்புரை:
சோலைகளின் அரும்புகள் எல்லாம் விரிந்து மலர்ந்து எங்கும் நறுமணத்தை பரப்புவதால், அந்த நறுமணத்தின் மூலம் மலர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் வண்டுகள், அந்த மலர்கள் இருக்கும் இடத்தினை நாடி வந்து, அந்த மலர்களில் உள்ள குளிர்ந்த தேனைப் பருகும் விருப்பத்துடன் நெருங்குகின்றன. அத்தகைய களிப்பின் மிகுதியால் இடைவிடாமல் தொடர்ந்து இசை பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகள் உடையது திருவலஞ்சுழி தலமாகும். இந்த தலத்தினில், தொண்டர்கள் புகழ்ந்து போற்றும் வண்ணம் வீற்றிருப்பவரும் ஒளிவீசும் திருமேனியை உடையவரும் ஆகிய இறைவனே, பண்டைய நாளில் தாருகவனத்தில் தேர்ந்தெடுத்த வேத கீதங்களை பாடியவாறு, ஆங்கே இருந்த இல்லத்தரசிகளிடம் பலி ஏற்பதற்கு சென்ற காரணம் யாதோ, நீர் சொல்வீராக.
பாடல் 2:
பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும்
வாரல் வெண் திரை வாய் இரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறுவல் மொய்யொளியீர் சொலீர்
ஊரல் வெண்தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே
விளக்கம்:
பாரல்=பரவிப் பரந்து சென்று இரை தேடும் தன்மை; பாரல் என்ற சொல்லுக்கு நீண்ட கழுத்தினை உடைய கொக்குகள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே பகுவாய்=பிளந்த வாய்; வாரல்= வருகின்ற; தேரும்=தேடும்; மூரல் முறுவல்=புன்முறுவல்; ஊறல்=சுடுகாட்டில் உருளும் தன்மையினை உடைய; மண்டையோட்டில் ஒட்டிக் கொண்டிருக்கும் சதைத் துணுக்குகளை கொத்தித் தின்னும் கழுகுகளால் புரட்டித் தள்ளப்படும் தலைகள் என்பதை குறிப்பிடும் வண்ணம் உருளும் தலைகள் என்று கூறுகின்றார். பெருமான் தலைமாலையாக சூட்டிக் கொண்டுள்ள பிரமன் திருமால் மற்றுமுள்ள தேவர்களின் உயிரற்ற உடல்களிலிருந்து பிரிக்கப்பட்ட தலைகள் அவ்வாறு தரையில் உருளவில்லை எனினும், மண்டையோடுகளின் பொதுத்தன்மை கருதி உருளும் என்று குறிப்பிடுகின்றார். சோலைகள் நிறைந்த தலம் என்று தலத்தின் நிலவளத்தை முந்திய பாடலில் உணர்த்திய ஞானசம்பந்தர், இந்த பாடலில் தலத்தின் நீர்வளத்தினை உணர்த்துகின்றார். பதிகத்தின் முதல் பாடலில் நேற்றும் இன்றும் நாளையும் அதாவது எப்போதும் பெருமான் பலியேற்றுத் திரிவதாக குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உலகெங்கும் திரிவதாக குறிப்பிடுகின்றார். இவ்வாறு பெருமான் தொடர்ந்து பலி ஏற்பதாக பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன.
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.56.5), இறைவன் ஒவ்வொரு நாளும் பலி ஏற்கின்றான் என்று சம்பந்தர் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
நச்சரவச் சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு
அச்சம் எழ விடை மேல் அழகார் மழு ஏந்தி நல்ல
இச்சை பகர்ந்து மிக இடுமின் பலி என்று நாளும்
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே
செம்பொன்பள்ளி பதிகத்தின் முதல் பாடலில் (5.36.1) பலி ஏற்கும் கொள்கையிலிருந்து தவறாமல் பலி ஏற்கின்றான் என்று நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். கான்=நறுமணம்: வெண் தலை=தசை நீங்காத தலை; அறாத=நீங்காத
கான் அறாத கடி பொழில் வண்டினம்
தேன் அறாத திருச்செம்பொன்பள்ளியான்
ஊன் அறாததோர் வெண் தலையில் பலி
தான் அறாததோர் கொள்கையன் காண்மினே
பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான். இந்த நிலை வாழ்க்கைக்கு அப்பர் பிரான் ஒரு சிறந்த உதாரணம். சமணர்கள் கொடுமைகளால், பல துன்பங்கள் அனுபவித்த போதும், எல்லாம் ஈசன் செயல் என்று ஏற்றுக் கொண்ட அவர், இன்பங்களை அனுபவித்த போதும் ஈசனது செயல் என்றே செயல்பட்டார். புகலூரில் உழவாரப் பணி செய்து வருகையில், தரையில் கிடந்த விலை மதிப்பில்லாத மணிகளையும் குப்பைகளாக கருதி, கல்லுடன் மண்ணுடன் கலந்து அவற்றையும் அப்புறப் படுத்தினார். மேலும் அரம்பையர்கள் அவரின் முன்னே வந்து நடனமாடி, அவரது கவனத்தைத் தங்கள் பால் ஈர்க்க முயற்சி செய்த போதும், மனம் பேதலிக்காமல், அவர்களை எனது வழியிலிருந்து விலகிச் செல்லுங்கள், அல்லையேல் திருவாரூர் பெருமான் உங்களை தண்டிப்பார் என்று எச்சரிக்கை விடுத்து, அகன்றார்.
பரந்து உலகேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்
நிரந்தரமாக நினையும் அடியார்
இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே
இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். பெருமான் பலி ஏற்பது நமக்கு அருள் புரிவதற்காக என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுவது, திருமூலரின் கருத்தினை பின்பற்றியே.
ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்
ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்
பொதுவாக பிச்சை ஏற்பவர் பெறும் பயன், பிச்சை இடுவோர் பெறும் பயனை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் சிவபெருமான் பிச்சை ஏற்பது, தான் பயன் அடைவதற்காக அல்ல. அவருக்கு பிச்சை இடுவோர்கள் தங்களது அகங்காரம் (மலங்கள்) அழியப் பெற்று நலம் பெறுவதற்குத் தான். இந்த உண்மை அப்பர் பெருமானால் கீழ்க்கண்ட திருவாரூர் தலத்து பாடலில் (4.53.6) விளக்கப்படுகின்றது. பிச்சை ஏற்கும் பெருமான் உண்பது நஞ்சு என்று பாடலின் மூன்றாவது அடியில் கூறும் அப்பர் பிரான், சிவபெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்பதையும் தெளிவு படுத்துவதை நாம் இங்கே காணலாம். இந்த பாடலில் குறிப்பிடப்படும் பிச்சை ஏற்கும் நிகழ்ச்சியை, தாருகவனத்து நிகழ்ச்சியாக கருதி, தாருகவனத்து மகளிரின் கர்வமும், பெண்மைக்குரிய இயல்புகளும் ஒழிந்து போகுமாறு, சிவபெருமான் பிச்சைப் பெருமானாக வலம் வந்தார் என்றும் விளக்கம் அளிப்பதும் பொருத்தமே. தானகம் என்ற சொல்லினை தான் அகம் என்று பிரித்து, அடியார்களது அகங்காரம் அழியும் பொருட்டு இறைவன் பலி ஏற்கின்றார் என்பதை உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
வானகம் விளங்க மல்கும் வளம்கெழு மதியம் சூடித்
தானகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்
ஊனகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆனகத்து அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே
இந்நாளிலும் பெருமான் பலி ஏற்பதை நமது ஊனக் கண்களால் அறியமுடியாது. நமது மலங்களை நீக்கி, யான் எனது என்ற பற்றற்ற நிலையை அடைந்து நம்மை எதிர்கொள்ளும் வினைகளை இன்பமாயினும் துன்பமாயினும் ஒன்றாக பாவித்து அந்த இன்பதுன்பங்களால் எந்தவிதமான சலனமும் அடையாமல் அனுபவித்து, ஆகாமிய வினைகளை தவிர்க்கும் நிலையினை நாம் அடைந்தால், நாமும் அறியாத வண்ணம் பெருமான் நமது வினைகளை நீக்கி மலங்களையும் களைவான். இந்த நிலையே அவனது பிச்சைப் பாத்திரத்தில் நாம் நமது மலங்களை பிச்சையாக இடுவதற்கு தயாராக உள்ள நிலையாகும். இந்த கருத்தினை உள்ளடக்கி, மக்களுக்கு நன்மைகள் ஏற்பட பலியேற்கும் கொள்கை உடையவன் சிவபெருமான் என்று ஞானசம்பந்தர் கீழ்க்கண்ட பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் நன்மை புரிய காத்திருக்கும் சிவபெருமானை நம்பன் என்று அழைத்து நாம் அவனை நம்பவேண்டும் என்பதை நமக்கு ஞானசம்பந்தர் உணர்த்துகினார். தன்னை அடைய விரும்பி தவம் புரிவோர்க்கு சிவபெருமான் அத்தகைய அடியார்களின் மலங்களை நீக்குவான் என்றும் இங்கே கூறுகின்றார்.
நலனாய பலி கொள்கை நம்பான் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலை ஓட்டான் கள்ளின் மேயான்
மலனாய தீர்த்து எய்து மாதவத்தோர்க்கே
மேற்குறிப்பிட்ட விளக்கங்களின் உதவி கொண்டு, பெருமான் உலகெங்கும் திரிந்து பலியேற்பது, தற்போதம் நீங்கி பக்குவமடைந்த உயிர்களின் மலங்களை, பிச்சையாக ஏற்றுக்கொண்டு, அத்தகைய உயிர்களுக்கு முக்தி நிலை அளித்து, என்றும் அழியாத ஆனந்தத்தில் ஆழ்த்தும் பொருட்டே என்பதே நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதுதான் இந்த பாடலில் எழுப்பப்பட்டுள்ள கேள்வியின் விடையாகும்.
பொழிப்புரை:
பரந்த பல இடங்களுக்கும் பறந்து சென்று இரை தேடும் தன்மை உடையதும், நீண்ட கழுத்தினை உடையதும் ஆகிய வெண் கொக்குகளும் பிளந்த வாயினை உடைய நாரைகளும், வெண்மையான அலைகளுடன் பாய்ந்து வரும் நதியின் நீரை ஆராய்ந்து இரை தேடும் காட்சிகள் நிறைந்தது வலஞ்சுழி தலமாகும். ஒளிவீசுகின்ற வெண்மையான பற்கள் தெரியும் வண்ணம் புன்முறுவல் பூத்த வண்ணம், செறிந்த ஒளிப்பிழம்பு வாய்ந்த திருமேனி உடையவராக வலஞ்சுழி தலத்தினில் விளங்கும் பெருமானே, சுடுகாட்டினில் தரையினில் உருளும் தன்மை கொண்ட தலைகளை, ஊழிக்கால முடிவினில் இறந்துபடும் பிரமன் திருமால் மற்றுமுள்ள தேவர்களின் உயிரற்ற உடல்களிலிருந்து பிரிக்கப்பட்ட தலைகள் கோர்க்கப்பட்ட தலை மாலையை தனது தலையில் அணிந்தவனாக உலகம் முழுதும் சென்று பலியேற்கும் பெருமானே, நீ அவ்வாறு திரிவதன் காரணம் தான் யாது சொல்வாயாக.
பாடல் 3:
கிண்ண வண்ண மலரும் கிளர் தாமரைத் தாது அளாய்
வண்ண நுண்மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டு மெய் பூச வல்லீர் சொலீர்
விண்ணவர் தொழ வெண்தலையில் பலி கொண்டதே
விளக்கம்:
கிண்ண வண்ணம்=கிண்ணம் போன்று விரிந்து மலரும்; தாது=மகரந்தம்; வைகும்=தங்கும்; கிளர்=விளங்கும்: அளாய்=கலந்து; அனம்=அன்னம் என்பதன் இடைக்குறை; பாடலின் கடை அடிக்கு, தேவர்கள் தொழும் வண்ணம் உள்ள பெருமான் ஏன் பலி கொள்கின்றார், என்றும் விண்ணவர் தொழுமாறு ஏன் பலி கொள்கின்றார் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். பெருமான் பலிக்காக பல இடங்களிலும் திரிவதை தேவர்கள் ஏன் புகழ்கின்றனர் என்பதை நாம் முதலில் சிந்திப்போம். தேவர்கள் போகவுலகினில் வாழ்வதால், எந்த குறையும் இல்லாதவர்கள் போன்று தோன்றினாலும், அவர்களது போக வாழ்க்கை, நல்வினைகளின் இருப்பு பற்றியே நீடிக்கும். நல்வினைகளின் பயனை, போக வாழ்க்கையாக நுகரும் அவர்களுக்கு அந்த வாழ்க்கை தாற்காலிக வாழ்க்கை என்பது நன்றாகவே தெரியும். அதன் பின்னர் அவர்கள், தங்களது எஞ்சிய வினைத் தொகுதிக்கு ஏற்ப பிறப்பெடுத்து வினைகளை நுகர்ந்து கழிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். போக வாழ்க்கையினும் உயர்ந்த வாழ்க்கையாகிய முக்தி நிலையினை பெறுவதற்கு விருப்பம் கொண்டுள்ள அவர்களுக்கு, பெருமான் தானே முன்வந்து உலகெங்கும் திரிந்து பலியேற்பது நம்பிக்கை ஊட்டுகின்றது. போகவாழ்க்கை முடிந்து நிலவுலகில் பிறக்கவிருக்கும் தங்களுக்கும் முக்திநிலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது. எனவே அவர்கள் பெருமான் பல இடங்களிலும் திரிந்து பலியேற்பதை அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். தன்னைப் புகழ்ந்து வணங்கும் தேவர்கள் பலரும் தான் இட்ட கட்டளையைத் தங்களது சிரமேற்கொண்டு நிறைவேற்ற தயாராக இருப்பினும், தனக்குள்ள விருப்பத்தின் காரணமாக, பெருமான் பக்குவப்பட்ட ஆன்மாக்களின் மலங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வேறு எவரையும் அனுப்பாமல், தானே வாங்கிக் கொள்கின்றார் என்பது இரண்டாவது விளக்கம். பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் தங்களது உடலிலிருந்து பிரிந்து, உடல்கள் அழிந்த பின்னரும், எந்தவிதமான மாற்றமும் தான் அடையாமல் இறைவன் இருக்கும் நிலை, தனது உடல் முழுவதும் திருநீற்றினை பூசிக்கொண்டு அவர் இருக்கும் தன்மையினால் உணர்த்தப் படுகின்றது. இத்தகைய ஆற்றல் பெற்ற பெருமான், உயிர்கள் மீது தான் கொண்டுள்ள கருணையின் பொருட்டு, எளியவனாக பிச்சை ஏற்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
கிண்ணம் போன்று சீரான வட்ட வடிவினில் மலர்ந்து விரியும் சிவந்த தாமரை மலர்களின் மகரந்தத் தூள்களை தங்களது உடலினில் கலந்து கொண்டும் திரியும் அன்னங்கள் தங்கும் நுண்ணிய மணல் பரப்புகளை உடைய திருவலஞ்சுழி தலத்தினில் உறைபவரும், தனது திருமேனி மேல் திருநீற்றுப் பொடியினை சந்தனமாக கருதி பூசிக் கொள்பவரும் ஆகிய பெருமானே, விண்ணவர்கள் தொழும் வண்ணம் தாங்கள் எதற்காக, வாடி உலர்ந்து வெண்மை நிறத்துடன் காட்சி தரும் பிரமகபாலத்தில் பலி ஏற்கின்றீர், சொல்வீராக.
பாடல் 4:
கோடெலாம் நிறையக் குவளைம் மலரும் குழி
மாடெலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழிச்
சேடெலாம் உடையீர் சிறுமான் மறியீர் சொலீர்
நாடெலாம் அறியத் தலையில் நறவு ஏற்றதே
விளக்கம்:
கோடு=கரை; குழி=கரைகளில் உள்ள பள்ளங்கள்; மாடு=அருகே; சேடு=பெருமை; மான்மறி= மான்கன்று; நறவு=பிச்சையாக தரும் உணவுப்பொருள்; நறவு என்ற சொல்லுக்கு இழந்த பொருள், பழையது, எஞ்சியது என்று பொருள். இரவினில் பிச்சையேற்று வருவோருக்கு, இல்லத்தார்கள் தாம் உட்கொண்டதன் பின்னர் எஞ்சியிருக்கும் உணவினைத் தரும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. அது போன்று, பக்குவப்பட்ட உயிர்களும், தங்களுடன் பிணைந்துள்ள இழிவான மலங்களை பிச்சையாக பெருமானிடம் இட, பெருமானும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. நாடு=நாட்டிலுள்ளோர்கள்; பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தங்களது மலங்களை இறைவன் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு பயனடையவேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவன் எங்கும் திரிகின்றான். ஆனால் இறைவன் இவ்வாறு திரிவதை அத்தகைய ஆன்மாக்கள் அறிந்தால் அல்லவா, இறைவனிடம் தங்களது மலங்களை சமர்ப்பித்து, உய்வினை அடையமுடியும். எனவே தான் அத்தகைய உயிர்கள் அறியும் பொருட்டு, தான் உலகெங்கும் திரிந்து பலியேற்பதை இறைவன், அருளாளர்களின் மொழிகள் மற்றும் பாடல்கள் மூலம் நமக்கு உணர்த்துகின்றான். இவ்வாறு அவன் உணர்த்துவதையே நாடெலாம் அறிய இறைவன் பிச்சை ஏற்பதாக ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்திய வண்ணம், வேத கீதங்களைப் பாடியவாறு செல்லும் பெருமான், அத்தகைய பாடல்கள் மூலம் தனது வருகையை உணர்த்துகின்றார். மேலும் தான் செய்வது பெருமையற்ற செயலாக இருந்தால், மற்றவர்கள் அறியாமல் ஒருவன் செய்யவேண்டும். ஆனால் பெருமை உடைய செயலை, பலருக்கும் பலனளிக்கும் செயலை செய்யும் பெருமான், வெட்கம் அடையத் தேவையில்லை; எனவே தான் அனைவரும் அறியும் வண்ணம் அவர் பலி ஏற்கின்றார்.
பொழிப்புரை:
காவிரிநதியின் இரண்டு கரைகளிலும் உள்ள பள்ளங்கள் நிறையும் வண்ணம் பூத்துள்ள குவளை மலர்களின் நறுமணம், நதியின் நீரிலும் பரவி நறுமணம் கமழ்கின்ற வலஞ்சுழி தலத்தினில், உறையும் பெருமானே, பல விதமான பெருமைகள் உடையவரே, சிறிய மான்கன்றினை தனது கையில் ஏந்தியதன் மூலம் அலைபாயும் மனதினை நிலைநிறுத்தும் ஆற்றல் கொண்டவன் தான் ஒருவன் தான் என்பதை உணர்த்தும் பெருமானே, நீர் எதற்காக உலகத்தவர் அறியும் வண்ணம் பிரம கபாலத்தில் பிச்சை ஏற்கின்றீர், சொல்வீராக.
பாடல் 5:
கொல்லை வென்ற புனத்தில் குருமாமணி கொண்டு போய்
வல்லை நுண்மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண்முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர்
சில்லை வெண்தலையில் பலி கொண்டு உழல் செல்வமே
விளக்கம்:
கொல்லை=முல்லை நிலம்; குரு=நிறம்; வல்லை=விரைவு; சில்லை=சிறுமை; உழல்=திரிதல்; இந்த பாடலில் தான் ஏற்கும் பலியை சிறந்த செல்வமாக பெருமான் கருதுவது ஏன் என்ற கேள்வியை திருஞானசம்பந்தர் எழுப்புகின்றார். உயிரின் உண்மையான விருப்பம், தன்னுடன் பிணைந்துள்ள வினைத் தொகுதிகள், மீண்டும் மீண்டும் தான் பிறப்பெடுத்து துன்பம் அடைவதற்கு வழி வகுப்பதால், இந்த வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதாகவே உள்ளது. உயிர்களை விடவும், உயிர்கள் முக்திநிலை அடைந்து தன்னுடன் வந்து சேர்வதை, பெருமான் மிகவும் அதிகமாக விரும்புகின்றான். எனவே தான் அதற்கு வழி வகுக்கும் மலங்களற்ற நிலையினை உயிர்கள் அடைவதை பெரிதும் விரும்பும் இறைவன், தனது பிச்சைப் பாத்திரத்தில் உயிர்கள் இடும் ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மூன்று மலங்களை, மிகவும் பெரிய செல்வமாக கருதுகின்றான்.
பொழிப்புரை:
முல்லை நிலத்தின் செழிப்பினை வென்ற காட்டு நிலங்களில் கிடைக்கும் அழகிய மணிகளை, பல நிறங்களில் காணப்படும் மணிகளை, விரைவாக எடுத்துச் சென்று சேர்க்கும் அன்னங்கள் தங்கும் நுண்ணிய மணற்பரப்புகளை உடைய வலஞ்சுழி தலத்தில் இறைவன் எழுந்தருளுகின்றார். முல்லை அரும்புகள் போன்று வெண்மையான புன்சிரிப்பினை சிறந்த நகையாக பெற்றுள்ள உமை அன்னையைத் தனது ஒளிவீசும் திருமேனியில் வைத்துக் கொண்டுள்ள பெருமானே, பல இடங்களிலும் திரிந்து, இழிந்த தன்மையை உடைய பிரமகபாலத்தில், நீர் பெறுகின்ற பலியை சிறந்த செல்வமாக மதிப்பதன் காரணம் யாதோ, சொல்வீராக.
பாடல் 6:
பூசநீர் பொழியும் புனல் பொன்னியில் பன்மலர்
வாசநீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழித்
தேச நீர் திருநீர் சிறுமான் மறியீர் சொலீர்
ஏச வெண்தலையில் பலி கொள்வது இலாமையே
விளக்கம்:
தேச நீர்=உலகமாக நீர் இருக்கின்றீர்; திரு=தெய்வம்; உலகமாகவும் உலகநாதனாகவும் இருக்கும் தன்மை; ஏச=பழித்துக் கூறும் வண்ணம்; பக்குவப்பட்ட உயிர்களிடமிருந்து பலி ஏற்பதை பலரும் பழித்த போதிலும் தொடர்ந்து பலியேற்கும் பெருமானே, ஏன் இவ்வாறு செய்கின்றீர் உமது வறுமை தான் இதற்கு காரணமா என்று ஞானசம்பந்தர் இங்கே கேள்வி கேட்கின்றார். உலகத்தையும் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தனது உடைமையாக கொண்டுள்ள பெருமான், வறியவர் அல்ல என்பதை நாம் அறிவோம். எனினும் தான் கொண்டுள்ள உயர்ந்த நோக்கத்தின் காரணமாக பிச்சையேற்கும் பெருமான், தான் செய்யும் செயலுக்கு பொருந்தும் வண்ணம் எளிமையாக, வறிய கோலத்துடன் காட்சியளிக்கின்றார் என்பதை உணர்த்தும் வண்ணம், இல்லாமை காரணமாக பெருமானே பலி ஏற்கின்றாரோ என்று ஞானசம்பந்தர் இங்கே கேள்வி கேட்கின்றார். தான் ஏற்கும் பலி குறித்து மற்றவர்கள் கூறும் பழியினையும் பொருட்படுத்தாமல் பெருமான் பிச்சை ஏற்கின்றார் என்று திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.98.8) ஞானசம்பந்தர் கூறுகின்றார்.
மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன் தன்
தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழி ஓரார்
சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சிலவல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே
பெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதை உணராத சிலர் பெருமான் பிச்சை ஏற்பதை இழித்துக் கூறினும், அத்தகைய பழிச் சொற்களை பொருட்படுத்தாமல், பிச்சை ஏற்பதன் மூலம் பல பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு உய்வினை அளிப்பதை தொடர்ந்து இறைவன் செய்து வருகின்றார். இந்த தன்மையே இங்கே உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு இறைவன் தொடர்ந்து பலி ஏற்கின்றார் என்று உணர்த்தும் இரண்டு தேவார பாடல்களை நாம் இங்கே காண்போம்.
எல்லோரும் தன்னை இகழ்வதையும் பொருட்படுத்தாமல் இறைவன் பண்டைய நாளிலும் பலியேற்றார் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் (6.86.7) ஆலம்பொழில் தலத்து மீது அருளப்பட்டது. குற்றங்கள் மிகுந்த எனது உடலில் புகுவதற்கு தீர்மானம் செய்த பெருமான், பல சோதனைகளை அளித்து என்னை சோதித்து எனது மனிதினை தூய்மை செய்தவன் தூய்மையே வடிவமான பெருமான் ஆவான். எல்லோரும் தன்னை இகழ்ந்ததையும் பொருட்படுத்தாமல் அந்நாளில், பலி இடுவீர்களாக என்று தாருகாவனத்து முனிவர்களின் இல்லங்களுக்கு சென்று திரிந்தவனும், தனது புகழினையும் திருநாமத்தையும் சொல்லாத மாந்தர்களை நினையாதவனும், தொடர்ந்து தனது பொன்னான திருவடிகளைப் பேணும் அடியார்களுக்கு பரிசாக, அவனது அருளால் அன்றி வேறு எவராலும் செல்ல முடியாத முக்தி நிலைக்குத் தனது அடியார்கள் செல்லுமாறு உதவி செய்பவனும், ஆலம்பொழில் என்ற இடத்தில் உள்ள திருக்கோயிலில் உறைபவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ சிந்திப்பாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு உணர்த்தும் பாடல் இது. .
பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னைப் புறம்புறமே சோதித்த
புனிதன் தன்னை
எல்லாரும் தன்னை இகழ அந்நாள் இடு பலி என்று அகம் திரியும்
எம்பிரானைச்
சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானைத் தொடர்ந்து தன்
பொன்னடியே பேணுவாரைச்
செல்லாத நெறி செலுத்த வல்லான் தன்னைத் திருவாலம்பொழிலானை
சிந்தி நெஞ்சே
கயிலாயம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.68.10) சமணர்களும் சாக்கியர்களும் தன்னை இகழ்ந்து கூறும் சொற்களை பொருட்படுத்தாமல், பிச்சை ஏற்கும் பெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பொருது=போர், இங்கே சொற்போர்; பண்டைய நாளில் சமணர்கள், வேறு மதத்தவரை வாதுக்கு அழைத்து, அவர்களை வாதினில் தோற்கடித்து, அவரையும் அவரது தொண்டர்களையும் தங்களது மதத்தில் இணைத்துக் கொள்வது பழக்கமாக இருந்ததை நாம் நாவுக்கரசரின் வரலாற்றிலிருந்து அறிகின்றோம். அத்தகைய வாதங்களில் சிவபெருமானைக் குறித்து இழிவாக பேசியமை இங்கே உணர்த்தப் படுகின்றது.
விருது பகரும் வெஞ்சொல் சமணர் வஞ்சச் சாக்கியர்
பொருது பகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய்
எருது ஒன்று உகைத்திங்கு இடுவார் தம் பால் இரந்துண்டு இகழ்வார்கள்
கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே
பிச்சை ஏற்பதையே தனது வாழ்க்கையாக கொண்டுள்ளவர் பெருமான் என்று கொடிமாட செங்குன்றூர் தலத்து பாடல் ஒன்றினில் ஞானசம்பந்தர் (1.107.7) கூறுகின்றார். சேடன்=சிரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு, சிறந்த ஞானம் உடையவன்; கோடல்=செங்காந்தள் மலர்கள்; குறிஞ்சி நிலத்திற்கு உரிய பூக்கள். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாக கருதப்படுகின்றன. புறவு=நிலம்;
நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ வெள்ளை
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே
இந்த குறிப்பு நமக்கு அப்பர் பிரான் அருளிய செம்பொன்பள்ளி தலத்து பாடலை (5.36.1) நினைவூட்டுகின்றது. பலி ஏற்கும் கொள்கையிலிருந்து தவறாமல் பலி ஏற்கின்றான் என்று நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். கான்=நறுமணம்: வெண் தலை=தசை நீங்காத தலை; அறாத=நீங்காத
கான் அறாத கடி பொழில் வண்டினம்
தேன் அறாத திருச்செம்பொன்பள்ளியான்
ஊன் அறாததோர் வெண் தலையில் பலி
தான் அறாததோர் கொள்கையன் காண்மினே
திருமூலர் கூறிய வண்ணம் பெருமான் பிச்சை எடுப்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல. எனினும் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திய வண்ணம் அவர் திரிவதால், அவர் பிச்சையெடுத்து உண்கின்றார் என்று பொதுவாக சொல்லப் படுகின்றது. இதன் அடிப்படையில் பிரமகபாலத்தில் பலியேற்று உண்ணும் கொள்கை உடையவன் என்று திருஞானசம்பந்தர், சோபுரம் பதிகத்துப் பாடல் (3.51.7) ஒன்றினில் கூறுகின்றார். துற்றல்=உண்ணுதல்; குணமும் நீ குற்றமும் நீ என்று உன்னை பணிந்து வணங்கும் அடியார்களுக்கு பெருமான், அவர்கள் கற்பதன் விளைவாக கேட்பதன் விளைவாக பெரும் ஞானமாக பெருமான் விளங்குகின்றான் என்று கூறுகின்றார். பெருமானே உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களின் குற்றமாகவும் குணமாகவும் இறைவனே இருப்பதாக கருதும் அடியார்கள் இறைவனைத் தவிர்த்து வேறெதையும் கற்பதில் நாட்டம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் பழகும் மனிதர்களும் அவ்வாறே இருப்பதால் அவர்கள் கேட்கும் உரைகளும், பசுஞானமாகவோ பாசஞானமாகவோ இல்லாமல், பதிஞானத்துடன் தொடர்பு கொண்டவையாகவே இருக்கும். எனவே, அவர்கள் உண்மையான மெய்ஞானம் அடைவதில் வியப்பு ஏதும் இல்லை. இந்த உண்மை தான் இங்கே உணர்த்தப் படுகின்றது.
குற்றமின்மை உண்மை நீ என்று உன் அடியார் பணிவார்
கற்ற கேள்வி ஞானமான காரணம் என்னை கொலாம்
வற்றலாமை வாளரவம் பூண்டு அயன் வெண் தலையில்
துற்றலான கொள்கையானே சோபுரம் மேயவனே
சீர்காழி தலத்தின் மீது(2.75.3) அருளிய பாடல் ஒன்றிலும் பிரமகபாலத்தில் உணவு உட்கொள்வதை தனது கொள்கையாகக் கொண்டவன் சிவபெருமான் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். மற்றயங்கு=மல்+தயங்கு; மல்=வலிமை; வலிமை தாங்கும் தோள்கள், வலிமையான திரண்ட தோள்கள்; மைந்தன்=வல்லமை உடையவன்;
சுற்றுலா நற்புலித் தோல் அசைத்து அயன் வெண் தலைத்
துற்றலாயதொரு கொள்கையான் சுடு நீற்றினான்
கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலிக் காழியுள்
மற்றயங்கு திரள் தோள் மைந்தன் அவன் நல்லனே
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (5.55.3) அப்பர் பிரான், மண்டை ஓட்டினில் தங்கிய உணவினை உட்கொள்வதை தனது கொள்கையாகக் கொண்டவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். பொதுவாக வேடம் தரிப்பவர்கள் தங்களது அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் வேடங்களையே விரும்பி ஏற்பார்கள். ஆனால் பெருமானோ வேடுவக் கோலத்தை விரும்பி ஏற்றவராக உள்ளார். அவரது உண்கலனோ காய்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும், அருவருக்கத் தக்க மண்டையோடு; எனினும் அவரது கோலம் வியப்பூட்டும் வண்ணம் அழகாக உள்ளது என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
வேடு தங்கிய வேடமும் வெண்தலை
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூரான் நடம்
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே
திருநாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.46.3) சுந்தரர், எவரும் விரும்பாத கோலத்தை ஏற்றவராக, பிச்சைப் பெருமானாக, அனைவரும் காணும் வண்ணம் இசை பாடி பிச்சை ஏற்கும் கொள்கையினை தவிர்க்காமல் பெருமான் இருக்கின்றார் என்று கூறுகின்றார். மேலும் அவ்வாறு பிச்சை ஏற்கச் சென்ற இடத்தில், வீண் வம்பு பேசி, பிச்சையிட வரும் மாதர்களின் வளையல்களைக் கவர்ந்தால், உமையன்னையின் மனம் கவலைப்படுமே வருத்தம் அடைகின்றார்.
பூண்பதோர் இளவாமை பொருவிடை ஒன்றேறிப் பொல்லாத வேடம்
கொண்டு எல்லாரும் காண
பாண்பேசிப் படுதலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர்சடை
மேல் மதி வைத்த பண்பீர்
வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால் வெற்பரையன்
மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்
காண்பினிய மணிமாட நிறைந்த நெடுவீதிக் கடல்நாகைக் காரோணம்
மேவி இருந்தீரே
பொழிப்புரை:
தைப்பூசத் திருநாளில், பல வகையான மலர்களை அடித்துக் கொண்டு வெள்ளப் பெருக்குடன் வருவதால், நறுமணம் வீசும் காவிரி நதியின் நீரினில் குடைந்து நீராடும் அடியார்களின் இடர்களைத் தீர்த்தருளும் வலஞ்சுழி வாணரே, ஒளிவீசும் திருமேனி உடையவரே, அழகிய மான் கன்றினைத் தனது கையினில் ஏந்தியவரே, பலரும் இகழும் வண்ணம் நீர் எதற்காக, உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் மண்டையோட்டினில் பலி ஏற்கின்றீர், வறுமையால் ஏற்பட்ட இயலாமை காரணமாகவா, சொல்வீராக.
பாடல் 7:
கந்த மாமலர் சந்தொடு காரகிலும் தழீஇ
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்தநீர் முதல்நீர் நடுவாம் அடிகேள் சொலீர்
பந்த நீர் கருதாது உலகில் பலி கொள்வதே
விளக்கம்:
பந்தம்=கீழ்மை, இழிந்த தன்மை; கந்தம்=நறுமணம்; சந்து=சந்தனக் கட்டைகள்; ஏற்பது இகழ்ச்சி என்பது சான்றோர் வாக்கு. எனினும் பெருமானின் இந்த செயலால் விளையும் நன்மை கருதி, பெருமான் பிச்சை புகினும் அவர் செய்வது நன்றே என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். பெருமான் பலி ஏற்பதன் உயர்ந்த நோக்கத்தினை புரிந்து கொள்ளாமல், பலரும் கேலி செய்து இழிவாக பேசினாலும், உயிர்களுக்கு நன்மை விளைவிக்கும் பலி என்று அப்பர் பிரான் கூறுவதை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். அப்பர் பிரான் சிவபிரான் பலி ஏற்பது நம்மிடம் உள்ள தீய குணங்களை, மலங்களை அவனது பிச்சை பாத்திரத்தில் இட்டு நாம் தூய்மை அடைவதற்காகத் தான். இந்த கருத்தினை உள்ளடக்கி, மக்களுக்கு நன்மைகள் ஏற்பட பலியேற்கும் கொள்கை உடையவன் சிவபெருமான் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் நன்மை புரிய காத்திருக்கும் சிவபெருமானை நமது விருப்பத்திற்கு உரியவன் என்று அழைத்து நாம் அவனை ஏன் விரும்பவேண்டும் என்பதையும் நமக்கு சம்பந்தர் உணர்த்துகின்றார். தன்னை அடைய விரும்பி தவம் புரிவோர்க்கு சிவபெருமான் அத்தகைய அடியார்களின் மலங்களை நீக்குவான் என்றும் இங்கே கூறுகின்றார்.
நலனாய பலி கொள்கை நம்பான் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலை ஓட்டான் கள்ளின் மேயான்
மலனாய தீர்த்து எய்து மாதவத்தோர்க்கே
பெருமான் அனைத்துப் பொருட்களுக்கும் அந்தமாகவும், ஆதியாகவும், நடுவாகவும் இருப்பவர் என்று ஞானசம்பந்தர் உணர்த்துவது, நமக்கு திருவாசகம் சிவபுராணத்தின் தொடர், ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே என்ற தொடரை நினைவூட்டுகின்றது. அன்றாட வாழ்க்கையில் நாம் பல உயிர்களும் பல பொருட்களும் அழிவதைக் காண்கின்றோம். அத்தகைய அழிவு நமக்கு ஏற்படும் என்பதையும் நாம் உணர்கின்றோம். அதைப் போன்றே பல பொருட்களும் உயிர்களும் தோன்றுவதையும் நாம் காண்கின்றோம். இந்த அழிவுக்கும் ஆக்கத்திற்கும் இடையே அந்த உயிர்கள் பாதுகாக்கப்படுவதையும் நாம் உணர்கின்றோம். இந்த அழிவாகவும், ஆக்கமாகவும், இடையே உள்ள பாதுகாப்புத் தன்மையாகவும் இருப்பவன் இறைவன் என்பதை ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். இவ்வாறு அனைத்து உயிர்களுக்கு பொருட்களுக்கும் ஆக்கமாகவும் அழிவாகவும் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பாதுகாப்பாகவும் இருக்கும் ஆற்றல் படைத்த இறைவன், பலராலும் இழிவாக கருதப்படும் பிச்சை ஏற்கும் செயலை இழிவாக கருதாமல் ஏன் தொடர்ந்து பிச்சை ஏற்கின்றான் என்பதே இந்த பாடலில் எழுப்பப்படும் கேள்வி. பக்குவமடைந்த உயிர்கள் தவிர்த்து வேறு எவரும், பெருமானின் இந்த செயலால் பயன் அடைவதில்லை. எனவே பெரும்பாலான உயிர்கள் பெருமான் பலியேற்பதால் விளைகின்ற நன்மையை உணர்வதில்லை. இந்த நிலையே அவர்கள் இகழ்வதற்கு காரணமாக உள்ளது. ஆனால் பெருமானுக்கு தனது செய்கையின் பலன் புரிவதாலும், அவனது விருப்பம் பல உயிர்களும் உய்வினை அடைந்து தன்னை வந்துச் சாரவேண்டும் என்று விரும்புவதாலும், பலரும் இகழ்வதை அவன் பொருட்படுத்துவதில்லை.
பொழிப்புரை:
நறுமணம் வீசும் சிறந்த மலர்களுடன், சந்தனக் கட்டைகள், கருமை நிறம் கொண்ட அகில் கட்டைகள் முதலிய பொருட்களைத் அடித்துத் தள்ளிக் கொண்டு வரும் காவிரி நீரினில் நீராடும் அடியார்களின் இடர்களைத் தீர்க்கும் பெருமான் வலஞ்சுழி தலத்தினில் உறைகின்றார். அவர், உலகம், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்கள், உலகில் உள்ள அனைத்து உயிர்கள் ஆகியவை தோன்றுவதற்கும் அழிவதற்கும் காரணமாகவும், அத்தகைய தோற்றம் அழிவுக்கு இடைப்பட்ட காலத்தில் அவை அனைத்திற்கும் பாதுகாப்பாகவும் இருக்கும் வல்லமை வாய்ந்தவராக உள்ளார். இத்தகைய அறிய ஆற்றல் கொண்ட இறைவனே, பலராலும் இழிவாக கருதப்படும் பிச்சை ஏற்கும் செயலினை நீர் அவ்வாறு இழிவாக கருதாமல் தொடர்ந்து பிச்சை ஏற்பதன் காரணம் தான் யாதோ.
பாடல் 8:
தேனுற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழிக்
கானுற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர்
ஊனுற்ற தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே
விளக்கம்:
வான்=உயர்ந்த; வானுற்ற=உயர்ந்த இசை; நசை=விருப்பம்; களிறு=ஆண் யானை; கான்=காடு; உலகொக்க=உலகெலாம்; பெருமானே நீர் பலியேற்பதற்கு மண்டையோட்டினைத் தவிர்த்து வேறு உயர்ந்த உண்கலன் ஏதும் கிடைக்கவில்லையா என்று பெருமானை நோக்கி கேள்வி கேட்பதாக இந்த பாடல் அமைந்துள்ளது. எவ்வாறேனும் திருமாலை விடவும் தான் உயர்ந்தவன் என்பதை மெய்ப்பிக்கும் பொருட்டு, தான் பெருமானின் திருமுடியைக் கண்டதாக பொய் சொல்லிய பிரமன், தனக்கு சாட்சியாக பெருமானின் சடையிலிருந்து கீழே விழுந்த தாழம்பூவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்தார். உலகில் நடப்பதை முற்றிலும் அறியும் முற்றறிவு படைத்த பெருமான், பொய் சொன்ன தலையை கிள்ளி எறிந்தார். பொய் பேசியதுடன் நில்லாமல், அந்த தலை சிவபெருமானை இகழ்வாகவும் பேசியது. இவ்வாறு ஆணவத்துடன் திரியும் எவரும் இறுதியில் தண்டனை அடைவார்கள் என்பதை அனைவர்க்கும் உணர்த்தும் வண்ணம் இறைவன் பிரமகபாலத்தைத் தனது பிச்சைப் பாத்திரமாக வைத்துக் கொண்டுள்ளார். கந்தபுராணத்தில் உள்ள விவரங்களின் படி, பிரமனே, தனது கபாலத்தினை பிச்சைப் பாத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு பரமனிடம் வேண்டியதாக சொல்லப்படுகின்றது.
பொழிப்புரை:
தேனும் நறுமணமும் நிறைந்து காணப்படும் பெரிய மலர்கள் நிறைந்த சோலைகளில் திரியும் வண்டுகள், தேனினை உட்கொள்ளும் ஆசையால் உயர்ந்த இசையுடன் பொருந்திய ரீங்காரம் செய்த வண்ணம் சுற்றும் காட்சிகள் உடைய திருவலஞ்சுழி தலத்தினில் பெருமான் உறைகின்றார். காட்டு யானை போன்று வலிமை வாய்ந்த முரட்டு மதயானை தன்னை எதிர்த்து வந்த போது, அதனை அடக்கி, அதன் தோலினைத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட வல்லமை வாய்ந்த பெருமானே, நீர் எதற்காக சதைத் துணுக்குகள் ஒட்டியிருக்கும் மண்டை ஓட்டினை ஏந்தியவாறு உலகெங்கும் திரிகின்றீர் அதற்கான காரணம் யாது, சொல்வீராக.
பாடல் 9:
தீர்த்த நீர் வந்து இழிபுனல் பொன்னியில் பன்மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர்
சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே
விளக்கம்:
சீர்மை=பெருமை; தீர்த்தநீர்=புனிதமான நீர்; புண்ணிய நதிகளை, அதன் பெருமை கருதி மலர் தூவி வழிபடும் பண்பாடு தேவார முதலிகளின் காலத்தில் இருந்ததை இந்த பாடல் உணர்த்துகின்றது. இந்த செய்தியின் மூலம், புண்ணிய நதிகளில் நீராடத் தொடங்கும் முன்னர், அந்த நதியின் சிறப்பு கருதி, புண்ணிய தீர்த்தங்களை தொழவேண்டும் என்பது உணர்த்தப் படுகின்றது. குடைவார்= குடைந்து நீராடும் அடியார்கள்; ஆர்த்து வந்த=ஆரவாரம் செய்து வந்த; பலவிதமான பெருமைகள் உடையவர் என்று பதிகத்தின் நான்காவது பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், அந்நாள் வரை பலரையும் வெற்றி கொண்டு செருக்குடன் திரிந்து கொண்டிருந்த அரக்கன் இராவணனின் வலிமையை அடக்கிய பெருமையான செயலை இங்கே குறிப்பிடுகின்றார். அத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் இகழத் தக்க மண்டையோட்டில் பலியேற்பது அவரது பெருமைக்கு தகுதியானதா என்ற கேள்வியை இங்கே எழுப்புகின்றார். விருப்பு வெறுப்புகளை கடந்த பெருமான் தான் செய்யும் செயல்களின் விளைவாக தோன்றும் நன்மையை கருதுவாரே தவிர, அந்த செயல்களின் தகுதியை கருதுவதில்லை, என்பதே இந்த கேள்விக்கு விடையாகும். இந்த பதிகத்தின் பல பாடல்களில் பெருமான் தனது கையினில் ஏந்தியிருக்கும் மண்டையோட்டின் இழிந்த தன்மையை குறிப்பிடும் ஞானசம்பந்தர், இந்த பாடலில் பெருமை வாய்ந்த மண்டையோடு என்று குறிப்பிடுகின்றார். இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற பெருமை என்று குறிப்பிட்டார் போலும்.
பொழிப்புரை:
புனிதமான நீரினைத் தாங்கிக்கொண்டு வரும் காவிரி நதியில் பல வகையான மலர்களை தூவிப் போற்றிய பின்னர், அந்த நீரில் மூழ்கி குடைந்து நீராடுவோரின் துன்பங்களை நீக்குபவராக, வலஞ்சுழி தலத்தினில் பெருமான் எழுந்தருளுகின்றார். தனது பயணத்திற்கு இடையூறாக கயிலை மலை இருந்தது என்று கருதி, அந்த மலையினை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு, எனது பயணத்தை தொடர்வேன் என்று ஆரவாரமாக முழங்கிய வண்ணம், கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடல் நசுங்கும் வண்ணம் கயிலை மலை மீது தனது கைகால் பெருவிரலை ஊன்றிய பெருமானே, இகழத்தக்க மண்டையோட்டினில், தசைகள் உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் மண்டை ஓட்டினில் பலி கொள்வது உமது பெருமைக்கு அழகா, சொல்வீராக.
பாடல் 10:
உரம் மனும் சடையீர் உமது இன்னருள்
வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழிப்
பிரமனும் திருமாலும் அளப்பரியீர் சொலீர்
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே
விளக்கம்:
உரம்=பெருமை; பெருமை வாய்ந்த சடை என்று இங்கே கூறுகின்றார். கங்கை நதியைத் தாங்கிய சடை, பாம்பினையும் சந்திரனையும் தங்களுக்குள்ளே இருந்த பகையை மறந்து ஒருங்கே இருக்கும் வண்ணம் வைத்த சடை என்ற பெருமைகளை உடைய சடை பெருமானின் திருச்சடை. மனும், மன்னும் என்ற சொல்லின் திரிபு. நிலையான என்று பொருள்; பெருமான் தான் ஏற்கும் பலியினை செல்வமாக கருதியது குறித்து இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் விளக்கம் அளிக்கப் பட்டமையின், இங்கே செல்வம் என்று குறிப்பிட்டது பெருமான் வைத்திருக்கும் உண்கலன் என்று பொருள் கொள்ள வேண்டும். பெருமானுடன் இணையும் அனைத்துப் பொருட்களும் பெருமை அடைவது போன்று, பிரமகபாலமும் பெருமை அடைந்த தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பொதுவாக பதிகத்தின் எட்டாவது பாடலில் இராவணின் கயிலை நிகழ்ச்சியும் ஒன்பதாவது பாடலில் பிரமன் திருமால் ஆகிய இருவருக்கும் அரியவராக பெருமான்
இருந்த நிலையும் பத்தாவது பாடலில் சமணர்கள் பற்றிய குறிப்பும் ஞானசம்பந்தரால் குறிப்பிடப் படுகின்றன. ஆனால் இந்த பதிகத்தில் சமணர்கள் பற்றிய குறிப்பு எங்கும் காணப்படவில்லை. இராவணன் மற்றும் இவர்கள் பற்றிய முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் குறிப்பிடப் படுகின்றன. சமணர்கள் பற்றிய குறிப்பு இல்லாத இருபது பதிகங்களில் இந்த பதிகம் ஒன்றாகும்.
இந்த பாடலில் (2.2.10) பெருமான் பெறுகின்ற பலியை, வேண்டிய செல்வமே என்று பெருமான் அவற்றை செல்வமாக கருதுகின்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். வாழ்நாள் தோறும் செல்வத்தை தேடி வாழ்வதே வாழ்க்கை எனக் கொண்டு வாழும் அனைத்து மனிதர்களும் தமக்கு கிடைக்கும் செல்வத்தை மிகவும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்வதை நாம் அன்றாட வாழ்க்கையில் காண்கின்றோம். மிகவும் அதிகமான உயிர்கள் முக்தி உலகம் வந்தடைவதை விரும்பும் பெருமான், அவ்வாறு முக்தி உலகம் செல்வதற்கு தடையாக உள்ளவை மலங்கள் என்பதை புரிந்து கொள்ளும் பக்குவப்பட்ட உயிர்கள் தங்களது மலத்தினை பிச்சையாக பெருமானின் உண்கலத்தினில் இடுவதை பெருமான் சிறந்த செல்வமாக ஏற்றுக்கொண்டு மகிழ்கின்றான். ஏனெனில் உயிர்களால் கழித்து விலக்கப்படும் மலங்கள், அந்த உயிர்கள் முக்தி உலகம் சென்றடையும் தகுதியை பெறுவதற்கு உதவுவதால், அவற்றை சிறந்த செல்வமாக பெருமான் கருதுகின்றான்.
பொழிப்புரை:
பெருமை வாய்ந்த சடையினை உடைய பெருமானே, இடபத்தை வாகனமாகக் கொண்டவரே, உனது அடியார்கள் நிலையான வரங்களை பெரும் வண்ணம் வலஞ்சுழி தலத்தினில் இடம் கொண்டவரே, பிரமனும் திருமாலும் உம்மை அளந்து உமது திருவடியையும் திருமுடியையும் காண முடியாத வண்ணம் நீண்ட நெடும்பிழம்பாக நின்றவரே, பிரம கபாலத்தை செல்வமாக மதித்து அதனில் பலி ஏற்பதன் காரணத்தை கூறுவீராக.
பாடல் 11:
வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால்
வாடின் ஞானம் என்னாவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டிசை
பாடும் ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே
விளக்கம்:
தாருகவனத்து முனிவர்கள், தாங்கள் செய்யும் செயல்களே சிறந்த பயனைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் விரதங்கள் மேற்கொண்டு வேள்விகள் செய்வதை கடைப்பிடித்தனர்; விரதங்களின் பயனாகவும் வேள்விகளின் பயனாகவும் உள்ள பெருமானை வழிபடுவதை புறக்கணித்தனர். அதனால் அவர்களது உடல் மெலிந்ததே தவிர, தங்களின் செயல்களின் பயனாக அவர்கள் உண்மையான ஞானம் பெறவில்லை. தாருகவனத்து முனிவர்கள் பால் கருணை கொண்ட பெருமான், அவர்களுக்கு உண்மையை உணர்த்தும் பொருட்டு, பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்றார். முனிவர்களும் பெருமானே உண்மையான மெய்ப்பொருள் என்பதை உணர்ந்த பின்னர், தனது ஆனந்த நடனக் காட்சியையும் அளித்து அருள் புரிந்தார். இந்த தகவலே இங்கே குறிப்பிடப் படுகின்றது.
இவ்வாறு ஞானசம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் நேரிசைப் பாடல் ஒன்றினை (5.99.2) நினைவூட்டுகின்றது. புனித தீர்த்தங்களில் நீராடும்போது சிவசிந்தனையுடன் நீராடவேண்டும் என்று கூறுகின்றார். கொங்கு=மணம் நிறைந்த: புனித தீர்த்தங்களில் நீராடினாலும் அப்போது ஈசனின் கருணையைப் பெறுவதற்காக நீராடுகின்றோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். நாம் நீராடுவது நமது புற அழுக்கைப் போக்கிக் கொள்வதற்காகத் தானே. புற அழுக்கு மட்டும் நீக்கப்பட்டால் போதுமா. அக அழுக்கு நீக்கப்பட வேண்டாமா. அக அழுக்கினை நீக்கிக் கொள்ள உதவும் பெருமானின் திருநாமத்தைச் சொல்லி அக அழுக்கினையும் புற அழுக்கினையும் நீக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இந்த பாடலில் உள்ள செய்தி.
கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண் குமரித்துறை ஆடிலென்
ஓங்கு மாகடல் ஓதம் நீராடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே
மார்கழி நீராட்டத்திற்கு செல்லும் மகளிர் எவ்வாறு நீராடவேண்டும் என்று மணிவாசகர் திருவெம்பாவை பதிகத்தில் சொல்வதும் நமது நினைவுக்கு வருகின்றது. நீர்நிலையில் நாம் மறுபடியும் மறுபடியும் முங்கி குளிக்கும் போது, நமது கழுத்தும் அதற்கு மேற்பட்ட உறுப்புகளும் ஆடுவது இயல்பு. காதினில் அணிந்துள்ள குழை ஆடவும், பசும்பொன்னால் செய்யப்பட்ட மற்ற ஆபரணங்கள் ஆடவும், கூந்தலில் சூடியுள்ள மலர்மாலை ஆடவும், மகளிர் குளிக்கும் போது, பூமாலைகளைச் சுற்றி வந்த வண்டுகளும் சேர்ந்து ஆடுகின்றன. நீரில் மூழ்கிய கூந்தலில் உள்ள மாலை மேலே எழுந்து வரும் போது மலர்களிலுள்ள தேனைப் பருகக் காத்திருக்கும் வண்டுகள் என்பதால், மாலை நீரில் மூழ்கிய போதும், அந்த இடத்தை விட்டு அகலாமல் அங்கே இருக்கின்றன. நாம் எல்லோரும் இவ்வாறு குளிர்ந்த நீரினில் நீராடும்போது, சிற்றம்பலம் என்று அவன் நடமாடும் இடத்தைச் சொல்லி, வேதத்தின் பொருளாக உள்ள இறைவனைப் பாடி, அவன் சோதியாக உள்ள திறத்தினையும், அவனது சடையில் உள்ள கொன்றை மலரையும், ஆதியாகவும் அந்தமாகவும் அவன் இருக்கும் திறத்தினையும் பாட வேண்டும் என்று ஒருவருக்கொருவர் மார்கழி நீராடும் பெண்கள் கூறிக் கொள்கின்றார்கள். மேலும் சிவபெருமானின் கருணைத் திறமாகிய சக்தியையும் வியந்து பாடுவதையும் நாம் உணரலாம். பேதித்து என்றால் வேறுபடுத்தி என்று பொருள். உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப, வேறுவேறு விதமாக அவர்களை ஆட்கொள்ளும் திறமும் இங்கே உணர்த்தப்படுகின்றது.
காதார் குழை ஆட பைம்பூண் கலன் ஆட
கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆட
சீதப் புனல் பாடி சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருள் ஆமா பாடி
சோதித் திறம் பாடி சூழ் கொன்றைத் தார் பாடி
ஆதித் திறம் பாடி அந்தம் ஆமா பாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி பாடலேர் எம்பாவாய்
பொழிப்புரை:
உண்மையான மெய்ஞானமும் வீடுபேறு நிலையும் வேண்டும் என்று விரும்பும் மனிதர்களே, நீங்கள் அனுசரிக்கும் விரதங்களால் உங்களது உடல் மெலிவதைத் தவிர்த்து வேறு எந்த பயனையும் உங்களால் அடையமுடியாது. திருவலஞ்சுழி தலத்தினை நாடிச் சென்று, ஆங்கே வீற்றிருக்கும் எமது தந்தையாகிய பெருமானை, ஞானசம்பந்தன் அருளிய செந்தமிழ் பதிகங்களை இசையுடன் பாடுவதால் இறைவனின் அருளினால் ஞானம் பெற்ற அடியார்களின் திருவடிகளை வழிபடுவதே, ஞானம் பயக்கும்.
முடிவுரை:
இருபத்து நான்கு தூண்களை கொண்டுள்ள மண்டபம் (விநாயகர் சன்னதியைச் சுற்றி அமைந்துள்ளது) இருபது நான்கு எழுத்துகள் கொண்டுள்ள காயத்ரி மந்திரத்தின் பெயரால் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப் படுகின்றது. விநாயகர் சன்னதியைச் சுற்றியுள்ள ஒன்பது மாடங்களிலும் இரு பக்கங்களிலும் வெவ்வேறு விதமான வடிவங்களில் உள்ள ஜன்னல்கள் கருங்கல் வேலைப்பாடுகளுக்கு எடுத்துகாட்டாக அமைந்துள்ளது. வாயிலில் உள்ள இரு மாடங்களில் வீரன் அதிவீரன் எனப்படும் இரண்டு துவாரபாலகர்களும், மற்றைய மாடங்களில், ரம்பை, ஊர்வசி, மேனகை, சுமுகி, கார்முகி, காமவர்த்தினி, காமரூபிணி எனும் நாட்டிய மங்கைகளின் உருவங்கள் கலைநயத்தோடு அமைக்கப் பட்டுள்ளன. இவர்களின் சிகை அலங்காரங்கள், ஆடை அணிகலன்கள் முதலியன தற்கால முன்னேற்றம் அடைந்த நாகரீகத்தின் அடையாளங்களுக்கு எந்த விதத்திலும் குறைவின்றி காணப்படுகின்றன. இந்த காயத்ரி மண்டபத்தில் செய்யப்படும் ஜபங்கள், தவங்கள் பல மடங்கு பலன்களை அளிக்கும் என நம்பப்படுகின்றது. இந்த மண்டபத்தில் ஆறு கருங்கல் குத்துவிளக்குகள் உள்ளன. இங்குள்ள கருங்கல் பலகணிகளின் வேலைப்பாடுகள் எவ்வளவு கடினம் என்றும் நுண்ணிய திறமை கொண்டவர்கள் தான் செய்ய முடியும் என்பதை, பழங்காலத்தில் சிற்பிகள் எழுதும் ஒப்பந்தங்களில், திருவலஞ்சுழி பலகணி வேலைப்பாடுகள் நீங்கலாக என்று எழுதுவார்கள் என்னும் விவரத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த கருங்கல் பலகணி சிறந்த தத்வார்த்தங்கள் கொண்டதாகும். இந்த பலகணியில் நான்கு தூண்களும், நூற்று பதினொன்று துவாரங்களும், நாற்பத்து ஒன்பது மலர்களும், இருபத்து நான்கு கர்ண கூடங்களும் பத்து யாளிகளும் கொண்ட அமைப்பை உடையது. நீள வாட்டில் மூன்று கற்களை கொண்டது. நெடுக்கு வாட்டில் உள்ள மூன்று கற்கள் மும்மூர்த்திகளை குறிக்கும். நான்கு தூண்கள் நான்கு யுகங்களை (கருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம் கலி யுகம்) குறிக்கின்றன. நான்கு தூண்களில் உள்ள கர்ண நாளங்கள் இருபத்து நான்கும், அட்ட மூர்த்திகளையும், அட்ட ஐஸ்வர்ய சித்திகளையும் (அணிமா, மஹிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, ப்ராகாம்மியம், ஈசத்துவம், வசித்துவம்) எட்டு வசுக்களையும் குறிக்கும். கர்ண நாளங்களில் உள்ள 111 துவாரங்கள், பிரணவ மந்திரம், சாந்தியதீத கலை மந்திரங்கள் (11), வித்யா கலை மந்திரங்கள் (20), பிரதிஷ்டா கலை மந்திரங்கள் (21) நிவிருத்தி கலை மந்திரங்கள் (28) ஆகிய மொத்தம் எண்பத்தொன்று பத மந்திரங்களையும், மேலே குறிப்பிட்ட ஐந்து கலைகள், பஞ்ச பூதங்கள், பஞ்ச மூர்த்திகள் (சதாசிவம், மகேஸ்வரன், ருத்திரன், திருமால், பிரமன்), பஞ்ச மூர்த்திகளுக்கு உண்டான பஞ்சப்ரம்ம ஷடங்க மந்திரங்கள் அதாவது பதினொன்று மந்திரங்கள் (ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், இருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்ரம், அஸ்திரம்) மேலே கூறப்பட்ட பதினொன்று சம்ஹிதா மந்திரங்கள் அடங்கிய நான்கு வேதங்கள் ஆகிய முப்பதையும் கூட்டினால் நமக்கு 111 எனும் எண் கிடைக்கும். நாற்பத்தொன்பது மலர்கள், பதினெண் புராணங்கள், இருபத்தெட்டு ஆகமங்கள், இதிகாசம், கல்ப சூத்திரம், பிரபந்தங்கள் ஆகியவற்றை குறிக்கும். பத்து திசைகள் எட்டு திசைகளுடன், பாதாளம், ஆகாசம் ஆகியவற்றுக்கு உரிய பத்து திசை நாயகர்களைக் குறிக்கும். மொத்தத்தில் கருங்கல் பலகணி அழகிய மகாயந்திரமாக, விளங்குவதை காணலாம்.
பாடல் தோறும் பெருமான் பலியேற்ற/பலியேற்கும் தன்மையை குறிப்பிட்டு கேள்விகள் எழுப்பும் பெருமான் பலியேற்கும் செய்கையின் வெவ்வேறு அம்சங்களை குறிப்பிடுவதை நாம் உணரலாம். முதல் பாடலில் வேதங்களை பாடியவாறு சென்றது ஏன் என்றும், இரண்டாவது பாடலில் உலகம் முழுவதும் பலியேற்க திரிவது ஏன் என்றும், மூன்றாவது பாடலில் பலியேற்கும் செய்கையை விண்ணவர் போற்றுவது ஏன் என்றும், நான்காவது பாடலில் உலகத்தவர் அனைவரும் அறியும் வண்ணம் பலியேற்பது ஏன் என்றும், ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது பாடல்களில் இகழத்தக்க தன்மை வாய்ந்த மண்டை ஓட்டினில் பலியேற்பது ஏன் என்றும், ஆறாவது பாடலில் பலரும் ஏசிய போதிலும் பலியேற்பது ஏன் என்றும், ஏழாவது பாடலில் இகழ்வாகக் கருதாமல் பலியேற்பது ஏன் என்றும், எட்டாவது பாடலில் பிரம கபாலத்தில் பலியேற்பது ஏன் என்றும், பத்தாவது பாடலில் பிரம கபாலத்தை மிகவும் உயர்வாக மதிப்பது ஏன் என்றும் கேள்வி கேட்டு, பெருமான் பலி ஏற்கும் செய்கையில் அமைந்துள்ள நுண்ணிய விளக்கங்களை நாம் அறியும் வண்ணம் ஞானசம்பந்தர் பாடியுள்ளார். பதிகத்தின் கடைப் பாடலில் பெருமானை வழிபடுவது ஒன்றே வீடுபேறு நிலை அடைவதற்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் மூலம், பெருமான் ஏற்கும் பலியின் சிறப்பினை உணர்ந்த நாமும், நமது மூன்று மலங்களையும் பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் இடும் பக்குவத்தை அடைந்து, அந்த மூன்று மலங்களையும் பெருமானுக்கு சமர்ப்பித்து, வாழ்வினில் உய்வினை அடைவோமாக.