பதிக எண்: 1.122 திருவிடைமருதூர் வியாழக்குறிஞ்சி
பின்னணி:
தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாவடுதுறை தலம் சென்ற திருஞான சம்பந்தர் அந்த தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து சில பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். திருவிடைமருதூர் தலத்தில் உள்ள திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் ஓடே கலன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடிய வண்ணம் சென்ற திருஞான சம்பந்தர், அந்த தலத்தினில் சில நாட்கள் தங்கியிருந்ததாக பெரிய புராணம் உணர்த்துகின்றது. இந்த தலத்தின் மீது, திருஞானசம்பந்தர் மொத்தம் ஆறு பதிகங்கள் அருளியுள்ளார். மேலும் இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய ஐந்து பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் கிடைத்துள்ளன. திருஞானசம்பந்தர் அருளிய ஆறு பதிகங்களில் ஒன்றாகிய விரிதரு புலியுரி என்று தொடங்கும் பதிகத்தினை நாம் இந்த பதிவினில் சிந்திக்கின்றோம்.
சேக்கிழார், பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில் விரவுவார் திருப்பதிகம் பல பாடி பெருமானது திருப்பாதங்களைத் தொழுத வண்ணம் திருஞானசம்பந்தர் மேலும் பல நாட்கள் இந்த தலத்தினில் தங்கி இருந்தார் என்று கூறுவதால், ஒடேகலன் என்று தொடங்கும் பதிகம் மற்றும் பொங்குநூல் மார்பினர் என்று தொடங்கும் பதிகம் ஆகிய இரண்டு பதிகங்களை தவிர்த்து, மற்றைய நான்கு பதிகங்களும் பின்னர் அருளப்பட்ட பதிகங்களாக கருதப் படுகின்றன. விரவுதல்= கலத்தல்; தனது மனதினில் விருப்பம் உடையவராக திருஞானசம்பந்தர் பதிகம் பாடினார் என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த தலத்தினில் தங்கியிருந்த போது, திருஞானசம்பந்தர் தலத்து அடியார்களுடன் கலந்திருந்தார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில்
விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண்மதியோடு
அரவு சடைக்கு அணிந்தவர் தம் தாள் போற்றி ஆர்வத்தால்
உரவு திருத்தொண்டருடன் பணிந்தேத்தி உறையுநாள்
பாடல் 1:
விரிதரு புலியுரி விரவிய வரையினர்
திரிதரும் எயிலவை புனை கணையினில் எய்த
எரிதரு சடையினர் இடைமருது அடைவு நல்
புரிதரு மனனவர் புகழ் மிக உளதே
விளக்கம்:
பெருமான் புலித்தோலை அணிந்து கொண்டுள்ளதாக இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. தாருக வனத்து முனிவர்கள், சிவபெருமானின் மீது கோபம் கொண்டவர்களாக அவரை அழிப்பதற்காக அபிசார ஹோமத்திலிருந்து ஒரு புலியை எழுப்பி, சிவபெருமான் மீது புலியை ஏவுகின்றனர். தன்னைத் தாக்கவந்த புலியை அடக்கிய சிவபெருமான், அதன் தோலினை உரித்து தனது இடுப்பினில் ஆடையாக அணிந்து கொள்கின்றார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த நிகழ்ச்சி பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை, திருஞானசம்பந்தர் அருளிய சில பாடல்களை நாம் இங்கே காண்போம். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் பெருமான் புலித்தோல் அணிந்தவராக காட்சி தரும் நிலை உணர்த்தப் படுகின்றது. புலித்தோல் என்பது பல பாடல்களில் புலியதள் என்று குறிப்பிடப்படுகின்றது. அப்பர் பெருமான் அருளிய அத்தகைய பாடல்களை நாம் வேறோர் தருணத்தில் சிந்திப்போம்.
திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.10.8) திருஞானசம்பந்தர், ஒளிவீசும் புலித்தோலினைத் தனது ஆடையாகக் கொண்டுள்ள பெருமான் என்று கூறுகின்றார். ஒளிறூ=ஒளிவீசும்; வாரணம்=யானை; பிளிறு, வெளிறு, அளறு என்ற சொற்கள் எதுகை கருதி நீண்டன. அளறு=சேறு;கயிலாய மலையின் கீழே அகப்பட்டு தவித்த அரக்கன் இராவணனின் உடலிலிருந்து வெளிப்பட்ட இரத்தம் மண்ணுடன் கலந்து சேறாகும் வண்ணம்,அரக்கனை கயிலாய மலையின் கீழே அமுக்கிய சிவபெருமான் என்று, பெருமானின் கால் விரல் அழுத்தத்தினால் இராவணனுக்கு நேரவிருந்த அபாயகரமான நிலையை இங்கே உணர்த்துகின்றார். பிளிறூ குரல்=யானை பிளிரும் குரல்; வதனம்=முகம், இங்கே யானையின் முகம், மத்தகம்; தன்னை எதிர்த்து வந்த மதயானையின் மத்தகத்தை பிளந்து அதன் உடலைக் கிழித்த செய்கை இங்கே குறிப்பிடப் படுகின்றது. வெளிறு என்ற சொல் பொதுவாக வெண்மை நிறத்தை குறிக்கும் என்றாலும், இங்கே எளிதாக என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. யானையின் தோலினை உரித்த செயல் மிகவும் எளிதான விளையாட்டாக பெருமானுக்கு இருந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. யானையின், இரத்தப்பசை மிகுந்த தோலினை, தனது உடலின் மீது பெருமான் போர்த்துக் கொள்ளும் செய்கை, வேறு எவரும் செய்யத்துணியாத செயலாக இருப்பதால், அத்தகைய செயலைப் புரிந்த பெருமானை விகிர்தர் என்று பொருத்தமாக அழைக்கின்றார். விகிர்தர் என்றால் ஏனையோரிடமிருந்து வித்தியாசமானவர் என்று பொருள். வேறு பல தெய்வங்கள் செய்ய முடியாத செயல்களை மிகவும் எளிதாக சிவபெருமான் செய்ததால், பல திருமுறைப் பாடல்கள் அவரை விகிர்தர் என்று குறிப்பிடுகின்றன.
ஒளிறூபுலி அதளாடையன் உமை அஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம் பிடித்துரித்து
வெளிறூ பட விளையாடிய விகிர்தன் இராவணனை
அளிறூ பட அடர்த்தான் இடம் அண்ணாமலை அதுவே
கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடலில் (1.19.6) திருஞான சம்பந்தர், தனது இடுப்பினில் புலித்தோலை ஆடையாக பொருத்தியவன் என்று பெருமானை அழைக்கின்றார். வருவினை என்ற சொல்லைத் தொடர்ந்து பொடியாக மாறிவிடும் என்று கூறுவதன் மூலம், பொதுவாக நீக்குவதற்கு மிகவும் அரிதாக உள்ள வினைகளும் பொடிபொடியாக மாறி வலிமை இழந்துவிடும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பாக உணர்த்துகின்றார்.மலையில் தோன்றும் அருவிகள் பல கற்களுடன் மோதி அவற்றை உடைத்து மணல் பொடிகளாக கடலின் அருகே கொண்டு வந்து சேர்க்கும் தன்மை,திருஞானசம்பந்தர்க்கு பெருமானின் திருவடிகள் வினைகளை பொடியாக்கும் தன்மையை நினைவூட்டியது போலும். இயற்கையாக நடைபெறுகின்ற எந்த செயலைக் கண்டாலும், அருளாளர்களின் மனம் அத்தகைய செயல்களில் இறைவனின் தன்மையை காண்பது நமக்கு நெகிழ்ச்சி ஏற்படுத்துகின்றது. இதே பதிகத்தின் முந்தைய பாடலில் பெருமானின் வல்லமையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் அந்த வல்லமை நம்மை முக்தி உலகுக்கு அழைத்துச் செல்லும் என்று கூறுகின்றார். பருகொரு கடல் என்று அனைத்து நதிகளின் நீரும் இறுதியில் கடலினைச் சென்று அடையும் நிலையை குறிப்பிடுகின்றார்.
வரை பொருது இழி அருவிகள் பல பருகொரு கடல் வரி மணலிடை
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன்
அரை பொரு புலியதள் உடையினன் அடியிணை தொழ வருவினை எனும்
உரை பொடிபட உறுதுயர் கெட உயருலகு எய்தலொரு தலைமையே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.22.2) திருஞானசம்பந்தர், கொலைத் தொழிலில் வல்லமை பெற்றுத் திகழ்ந்த புலியினைக் கொன்று அதன் தோலினை ஆடையாக அணிந்துள்ளார் என்று கூறுகின்றார். ஆடையாக புலித்தோலை அணிந்துள்ள பெருமான், தனது உடலில் கைகள் தொடங்கி பல அவயவங்களில் ஆபரணமாக பல இடங்களில் பாம்பினை அணிந்துள்ளார் என்றும் இந்த பாடல் குறிப்பிடுகின்றது. பண்டைய இலக்கியங்கள் ஆண்கள் அணியும் ஆபரணங்களை பட்டியல் இடுகின்றன. காப்பு கடகம் வளையல் வங்கி என்பன ஆண்கள் தங்களது கைகளில் அணியும் நகைகள்;வீரக்கழல் மற்றும் தண்டை என்பன ஆண்கள் தங்களது காலில் அணியும் நகைகள்; கணையாழி என்பது அரச குடும்பத்தினரும் உயர் பதவிகளில் இருப்போரும் விரலில் அணியும் நகை; இப்போது மோதிரமாக மாறி விட்டது. அரைஞாண் அரையணி பவளவடம் என்பன இடுப்பில் அணிவன; கடுக்கன்,குண்டலம், என்பன காதில் அணிவன; நெற்றிப் பட்டம் நெற்றியில் அணிவது; வாகுவலயம் பதக்கம் என்பன கழுத்தில் அணிவன. இத்தகைய அணிகலன்களாக தனது உடலெங்கும் வரன்முறையாக அணிந்து கொள்வதற்கு பதிலாக, பெருமான் பாம்பினை தனது உடல் உறுப்புகள் பலவற்றில் அணிந்துள்ளார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அடல் வலி=கொல்லும் தன்மை கொண்ட வலிமை; இமையவர் புரம் எழில் பெற வளர் மரம் என்று கற்பக மரம் உணர்த்தப் படுகின்றது. தனது நிழலில் அமர்வோர் நினைக்கும் பொருளினை அளிக்கும் கற்பக மரம் போன்று, தங்களை நாடிவரும் இரவலர்கள் வேண்டுகின்ற பொருளினை அளித்த கொடையாளர்கள் வாழ்ந்த நகரம் திருமறைக்காடு என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். இந்த் பதிகத்தின் பாடல்கள் அனைத்தும், கடை வரியில் உள்ள கடைச் சொல் தவிர்த்து வேறெங்கும் நெடில் எழுத்து வாராத வண்ணம் இயற்றப் பட்ட பாடல். இதற்கு ஒப்ப, மறைக்காடு, வேதவனம் என்ற பெயர்கள் தவிர்க்கப்பட்டு. தலம் மறைவனம் என்று அழைக்கப்படுவது,திருஞானசம்பந்தரின் தமிழ் ஆளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. .
கரமுத லியவவ யவமவை கடுவிட வரவது கொடுவரு
வரன்முறை அணிதரும் அவனடல் வலிமிகு புலியத ளுடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை யிமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடைமனி தர்கள்பயில் மறைவன மமர்தரு பரமனே
புறவம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.74) திருஞானசம்பந்தர், பெருமானது உடை,புலியின் உரிதோலாடை என்று கூறுகின்றார். உரவன்=வலிமை உடையவன்; விகிர்தன் என்பதற்கு எவராலும் தோற்றுவிக்கப் படாமல் தானே தோன்றியவன் என்றும் ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன் என்று இரண்டு பொருள்கள் கூறப்படுகின்றன. இரண்டுமே இறைவனுக்கு பொருந்தி இருப்பதை நாம் உணரலாம்.
உரவன் புலியின் உரி தோலாடை உடை மேல் பட நாகம்
விரவி விரி பூங் கச்சா அசைத்த விகிர்தன் உகிர் தன்னால்
பொரு வெங் களிறு பிளிற உரித்துப் புறவம் பதியாக
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே
இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.110.2) திருஞானசம்பந்தர், பெருமானை. கொல் புலித்தோல் அசைத்தவன் என்று குறிப்பிடுகின்றார். தோற்றவன்= தோற்றுவிப்பவன்; கேடவன்=அழியும் வண்ணம் கெடுப்பவன்; உயிர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாக இருப்பவன் பெருமான் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், உலகில் உள்ள பொருட்கள் தோன்றுவதற்கும் ஒடுங்கி அழிவதற்கும் காரணமாக உள்ளவன் பெருமான் என்று இங்கே குறிப்பிடுகின்றார். தோற்றவன் கேடவன் என்ற தொடருக்கு உயிர்களின் தோற்றத்திற்கும் அழிவிற்கும் காரணமானவன் இறைவன் என்று பொருள்
தோற்றவன் கேடவன் துணை முலையாள்
கூற்றவன் கொல்புலித் தோல் அசைத்த
நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே
கடைமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.111.2) திருஞானசம்பந்தர் பெருமானை, அரை பொரு புலியதள் அடிகள் என்று அழைக்கின்றார்.திரை=அலைகள்; பொருதல்=மோதுதல், பொருந்துதல்; விம்மும்=பெருகுதல்; திருக்கோயிலுக்கு தெற்கே சுமார் அரை கி.மீ. தொலைவில் காவிரிநதி ஓடுகின்றது.
திரை பொரு திருமுடி திங்கள் விம்மும்
அரை பொரு புலியதள் அடிகள் இடம்
திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்
கரை பொரு வளநகர் கடைமுடியே
திருப்பறியலூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.134.10) பெருமானை, புலியின் உரிதோல் உடையன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமைக்கு உரிய மகன் என்ற பொருளை உணர்த்தும் பெருமகன் என்ற சொல்லின் திரிபு தான் பெருமான், பெம்மான் என்ற சொற்கள்;சமணர் மற்றும் புத்தர் ஆகியோருக்கு அருள் புரிவதற்கு மனமற்றவன் என்பதால் அவர்கள் பால் அன்பு இலாதவன் என்று கூறுகின்றார்.
சடையன் பிறையன் சமண் சாக்கியரோடு
அடை அன்பிலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரி தோலரை மேல்
விடையன் திருப்பறியல் வீரட்டத்தானே
பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.40.8) திருஞானசம்பந்தர், உரித்த வரித் தோலுடையான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். தக்கார்=உயர்ந்த பண்புகளை உடையவர்; பெருமானின் திருவடிகளைச் சென்று சேர்தல் தக்காரின் இலக்கணம் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. எரித்த மயிர்=எரித்தது போன்று கருமையான முடி; தனது உடலில் வரிகள் (கோடுகள்) கொண்ட விலங்கு புலி.
எரித்த மயிர் வாளரக்கன் வெற்பு எடுக்கத் தோளோடு தாள்
நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான்
உரித்த வரித் தோலுடையான் உறை பிரமபுரம் தன்னைத்
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே
நாலூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.46.4) திருஞானசம்பந்தர் கொல்புலித் தோலாடையான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். கோலம்=அழகு; நீலத்தார்=நீல நிறம் பொருந்திய; தொல்வினை=எண்ணற்ற பழைய பிறவிகளாக தொன்று தொட்டு தொடர்ந்து வரும் சஞ்சித வினைகள்; இந்த பாடலில் மிகவும் பொருத்தமாக, சூலத்தான் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பெருமான் மூவிலைச் சூலம் வைத்திருப்பதே, தனது அடியார்களின் தொல்வினைகளை முற்றிலும் அறுத்து எரிப்பதற்காக என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
கோலத்தார் கொன்றையான் கொல்புலித் தோலாடையான்
நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார் பால் சூழாவாம் தொல்வினையே
கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.68.2) பாம்பு மற்றும் ஆமையோட்டினை அணிகலனாகப் பூண்டுகொண்டுள்ள பெருமான அழகிய புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமானின் திருப்பாதங்களைத் தொழுவது மறுமையில் நிரந்தரமாகிய இன்பம் அளிக்கும் வீடுபெற்றினை மிகவும் எளிதாக பெற்றுத் தரும் என்று இந்த பதிகத்த்தின் முந்தைய பாடலில் கூறிய திருஞானசம்பந்தர் இந்த பாடலில்,பெருமானைத் தொழுதால் இம்மையிலும் இன்பம் பயக்கும் என்று கூறுகின்றார். அம் துகில்=அழகிய துகில்; துகில்=புடவை; வேங்கை=புலி; விரவும்=கலந்து;கலந்து நிற்பவை எவை என்று சம்பந்தர் இங்கே கூறவில்லை எனினும், பல பாடல்களில் குறிப்பிடும் கங்கை கொன்றை மலர்கள் தலைமாலை என்பதையும் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறே பரவும் என்ற சொல்லுக்கும் முன்னர் அடியார்கள் என்று இணைத்துப் பொருள் கொள்ளவேண்டும்.புடவையும் புலித்தோலும் பூண்டவன் என்று குறிப்பிட்டு, மாதோர் பாகனாக இறைவன் விளங்கும் தன்மையை திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.அந்துகில் வேங்கை அதள் என்ற தொடருக்கு அழகிய புலித்தோலாடை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஆண்கள் அணிந்து கொள்ளும் வேட்டி என்ற ஆடையும் பண்டைய நாளில் புடவை என்றே அழைக்கப்பட்டது என்பதை நாம் சேக்கிழார் வாயிலாக அறிந்து கொள்கின்றோம். பாடலிபுத்திரம் சமணப்பள்ளியிலிருந்து இரவோடு இரவாக எவரும் அறியாத வண்ணம் வெளியேறிய அப்பர் பிரான், வெண்புடைவை மெய் சூழ அணிந்து சென்றார் என்று பெரிய புராணப் பாடலில் கூறுகின்றார். புடை என்றால் முற்றிலும் சூழ்ந்து என்று பொருள். உடல் முழுவதும் மறைக்கப்படும் வண்ணம் அணியப்படும் ஆடை என்பதால் ஆண்கள் அணியும் ஆடையும் புடைவை என்று அழைக்கப்பட்டது போலும். அண்மைக் காலத்தில் வாழ்ந்த இராமலிங்க அடிகளார், தனது உடல் முழுவதையும் வெண்ணிற ஆடை கொண்டு மறைத்து அணிந்ததை நாம் அறிகின்றோம்.
அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும்
விரவும் திருமுடி தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பிப்
பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள்ளேற்று அண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அதுவாமே
அகத்தியான்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.76.3) திருஞானசம்பந்தர், பெருமான் உடுத்தது புலித்தோல் என்று கூறுகின்றார். கடுத்த வந்த=மிகுந்த கோபத்துடன் வந்த இயமன்; அடுத்தல்=கொல்லுதல், இங்கே காலனை கீழே வீழ்த்தியது என்று பொருள்.
உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந்து உண்பதும்
கடுத்து வந்த கழற்காலன் தன்னையும் காலினால்
அடுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகளாகவே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.91.2) வரித்தோலுடை ஆடை என்று புலித்தோலாடையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கூன்=வளைந்த; இளம்பிறை= வளராத ஒற்றைப் பிறைச் சந்திரன்; பஞ்ச கவ்யத்தில் கலக்கப்பட்டு இறைவனுக்கு நீராட்ட பயன்படுத்தப் படுவதால், பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களும், பால் தயிர் நெய் கோமியம் கோசலம் ஆகிய ஐந்து பொருட்களூம் சிறந்தவையாக கருதப்படும் தன்மை, அம் கிளர் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. ஆடுதல்=நீராடுதல்; கொடுவரி=வளைந்த கோடுகள்; புலியின் உடலிலுள்ள கோடுகள் குறிப்பிடப் படுகின்றன.
கூனிளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடையாடை
ஆனில் ஐங்கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பது அரவம்
கானலங் கமழ் கழியோதம் கரையொடு கதிர்மணி ததும்பத்
தேனலங்கமழ் சோலைத் திருமறைக்காடு அமர்ந்தாரே
அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.103.2) திருஞானசம்பந்தர், பாம்பினைத் தனது விருப்பம் போல் பிடித்தாட்டும் பெருமான்,தனது அழகிய ஆடையாக புலித்தோலினைக் கொண்டுள்ளார் என்று கூறுகின்றார். பூத கணங்கள் அவரது சரித்திரத்தின் பல நிகழ்ச்சிகளை இசைப் பாடல்களாக பாடுகின்றன என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். மரவம்= வெண்கடம்ப மரம்; பயன்றலை=தலையாய பலன்; சிறந்த பலன்;
அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள் அங்கையில் அனலேந்தி
இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைகள் இசைவன பலபூதம்
மரவம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
பரவியும் பணிந்து ஏத்த வல்லாரவர் பயன்றலைப் படுவாரே
விற்குடி வீரட்டம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.108.1) திருஞானசம்பந்தர், பெருமானின் உடை புலியதள் என்று குறிப்பிடுகின்றார்.கொடியினர்=அழகிய பூங்கொடி போன்ற உமையன்னையை உடையவர்; மது=தேன்; அருவினை=விலக்கிக் கொள்வதற்கு அரிய வினைகள்; பொதுவாக நமது உயிருடன் பிணைந்துள்ள வினைகளை, நாம் நுகர்ந்து தான், அத்தகைய வினைகளால் விளையும் இன்ப துன்பங்களை அனுபவித்துத் தான் கழிக்க முடியும். ஆனால் இறைவனின் அருளினை உதவியாக கொண்டு, நாம் மலபரிபாக நிலையினை அடைந்தால், இறைவன் நமது உயிருடன் பிணைந்துள்ள அரிய வினைகளையும் நீக்கி விடுவார் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையம் சடையினர் கொடியினர் உடைபுலி அதள் ஆர்ப்பர்
விடையதேறும் எம்மான் அமர்ந்து இனிதுறை விற்குடி வீரட்டம்
அடியாராகி நின்று ஏத்த வல்லார் தமை அருவினை அடையாவே
நாகைக்காரோணம் தலத்து பதிகத்தின் பாடலில் (2.116.6) திருஞானசம்பந்தர், பெருமானை வேங்கை விரிதோல் உடையார் என்று குறிப்பிடுகின்றார்.பாம்பினைத் த்னது உடலின் ப்ல இடங்களிலும் அணிந்துள்ள பெருமான், ஏனைய தெய்வங்களினின்றும் வித்தியாசமானவர் என்பதை உணர்த்த,பெருமானை விகிர்தர் என்று திருஞானசம்பந்தர் இங்கே அழைக்கின்றார்.
விடையதேறிவ் விடவர வசைத்த விகிர்தரவர்
படைகொள் பூதம் பல பாட ஆடும் பரமரவர்
உடைகொள் வேங்கை உரிதோல் உடையார்க்கு இடமாவது
கடைகொள் செல்வம் கழிசூழ் கடல் நாகைக் காரோணமே
புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.3.6), வேங்கையின் தோலினை ஆடையாக அணிந்தவர் பெருமான் என்று, திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அரிமா=சிங்கம்; தகுவாய்=தகுந்த பயன்களைத் தருவாய்; அடை அரிமா= குகையிலே சென்று அடையும் சிங்கம்; சிங்கத்தின் பொதுத் தன்மையாக குகையில் சென்று அடைவது குறிப்பிடப் பட்டாலும், சிங்கம் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நரசிங்கத்தை என்று உரை ஆசிரியர்கள் கருதுகின்றனர். இரணியனது இரத்தம் குடித்த நரசிம்மர், அதனால் வெறி அதிகமாகி திரிந்த போது, நரசிம்மரது ஆவேசத்தை அடக்கி அவரது தோலை சட்டையாக தரித்து அவரின் எலும்பை கதையாக மாற்றிகொண்ட வடுகநாதரின் உருவம் தான் சீர்காழி திருக்கோயிலில் உள்ள சட்டநாதர் உருவம். புடைபட=பொருந்தும் வண்ணம்; படையுடை நெடு மதில்=படையாக திகழ்ந்த மதில்கள், மூன்று கோட்டைகள்.வேறு எந்த படையும் தேவைப்படாத வண்ணம் மூன்று பறக்கும் கோட்டைகளே படையாகவும் அரணாகவும் திரிபுரத்தவர்களுக்கு அமைந்திருந்த நிலை படையுடை என்ற சொல் மூலம் குறிப்பிடப் படுகின்றது. விகிர்தன்=ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவன்; பரமன்=அனைவர்க்கும் மேலானவன்;பரிசு=தன்மை;
அடை அரிமாவொடு வேங்கையின் தோல்
புடைபட அரை மிசைப் புனைந்தவனே
படை உடை நெடு மதில் பரிசு அழித்த
விடை உடைக் கொடி மல்கு வேதியனே
விகிர்தா பரமா நினை விண்ணவர் தொழப் புகலித்
தகுவாய் மடமாதொடும் தாள் பணிந்தவர் தமக்கே
அரதைப்பெரும்பாழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.30.1) திருஞானசம்பந்தர், புலித்தோலும் கோவணமும் ஆடையாக அணிந்தவர் பெருமான் என்று கூறுகின்றார். பைத்த= நச்சுப் பையினை உடைய; பைத்த என்ற சொல்லுக்கு படமெடுத்து ஆடும் தன்மை கொண்ட பாம்பு என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது புலி=புலித்தோல்; நித்தமாக=இடையூறு ஏதுமின்றி, இடைவிடாது என்றும் தொடர்ந்து புரியும் நடனம்; இறைவனது ஐந்தொழில் நடனம் இடைவிடாமல் நடைபெறுகின்ற தன்மை இங்கே குறிப்படப் படுகின்றது. இந்த பாடலில் பெருமானை பித்தர் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். பல திருமுறைப் பாடல்களில் பெருமானைப் பித்தர் என்று குறிப்பிடும் அருளாளர்கள், பித்தர் என்று தாங்கள் கருதுவதன் காரணத்தையும் கூறுகின்றனர். பொதுவாக நடனக் கலைஞர்கள், நகரத்தின் மையத்தில் இருக்கும் அரங்கத்தில், பலரும் காணும் வண்ணம் நடனமாடுவதையே விரும்புவார்கள்; மேலும் பலவிதமான நகைகளை அணிந்து கொண்டு, பகட்டான ஆடைகளை அணிந்து கொண்டு நடனம் ஆடுவர்; ஆனால் பெருமானோ,பாம்பினை ஆபரணமாகக் கொண்டு கோவணமும் புலித்தோலும் அணிந்தவராக பேய்கள் சூழ்ந்து நிற்க, பேய்களின் முழக்கமே பின்னணியாக இருக்க,சுடுகாட்டுச் சாம்பலைத் தனது திருமேனியில் பூசியவராக நடனம் ஆடுகின்றார். ஒரு நாளல்ல, பல நாட்கள் தொடர்ந்து இவ்வாறு நடனம் ஆடுபவரை பித்தர் என்று தானே சொல்ல வேண்டும்.
பைத்த பாம்போடு அரைக் கோவணம் பாய்புலி
மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டிடை
நித்தமாகந் நடமாடி வெண்ணீறு அணி
பித்தர் கோயில் அரதைப் பெரும்பாழியே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.34.3) திருஞானசம்பந்தர் பெருமானை, கொல்புலித் தோலினார் என்று குறிப்பிடுகின்றார்.தேறல்=தேன்; மிசை=மேல்; இடப வாகனத்தில் ஏறும் பெருமானார், தேவர்கள் தொழுது போற்றும் வண்ணம் உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ளார். அவர், கொல்லும் தன்மை உடைய புலியின் தோலினைத் தனது ஆடையாக அணிந்துள்ளார். தனது உடல் முழுவதும் திருநீற்றினை அணிந்துள்ள பெருமான், நிறைந்த நீரினை உடைய கங்கை நதியைத் தனது சடையினில் மறைத்து வைத்துள்ளார். இத்தகைய தன்மையை உடைய பெருமான் உறையும் இடம் தேன் நிறைந்த மலர்கள் கொண்ட சோலைகள் சூழ்ந்து அழகு செய்யும் திருமுதுகுன்றம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஏறினார் விடை மிசை இமையவர் தொழ உமை
கூறனார் கொல் புலித்தோலினார் மேனி மேல்
நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம்
தேறலார் பொழில் அணி திருமுதுகுன்றமே
வெண்டுறை தலத்து பதிகத்தின் பாடலில் (3.61.3) திருஞானசம்பந்தர், பெருமானை உடை நவிலும் புலித்தோல் உடை ஆடையினான் என்று அழைக்கின்றார். நவிலும்=கொண்டுள்ள; கடிய=விரைந்து செல்லும்; கடை=பாவம்; தகுந்த காரணமேதும் இன்றி, பல உயிர்களையும் தங்களது பறக்கும் கோட்டைகளின் கீழ் சிக்கவைத்து கொன்ற திரிபுரத்து அரக்கர்களின் செயல் பெரிய பாவமாக கருதப்படுகின்றது.
படைநவில் வெண்மழுவான் பல பூதப் படையுடையான்
கடைநவில் மும்மதிலும் எரி ஊட்டிய கண்ணுதலான்
உடை நவிலும் புலித்தோல் உடையாடையினான் கடிய
விடை நவிலும் கொடியான் விரும்பும் இடம் வெண்டுறையே
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.68.1) திருஞானசம்பந்தர், புலியின் உடலிலிருந்து கிழிக்கப்பட்ட தோலினை ஆடையாக உடுத்திய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கீளது=கிழிக்கப்பட்ட; கீளதுரி=கிழிக்கப்பட்ட தோல்; வாளவரி=ஒளி பொருந்திய கோடுகள் உடைய உடல்:கோள=கொலைத் தொழில் புரியும்; தாள்=திருப்பாதம்; பாதம் வரை தொங்கும் வண்ணம் புலித்தோலாடையை பெருமான் அணிந்திருப்பதாக சொல்லப்படுகின்றது. வேளநகர்=வேள்+அநகர்; வேள்=காண்போர் வியக்கும் வண்ணம் அழகு உடையவர்; தன்னைக் காண்போர் மயங்கும் வண்ணம் அழகு உடையதால் தான் மன்மதனுக்கு வேள் என்ற பெயர் வந்தது. அழகே வடிவமாக உள்ள முருகப்பெருமானையும் முருகவேள் என்று அழைப்பார்கள். முருகு என்றால் அழகு என்று பொருள். அநகர்=தூயவன்; போள=கிழிக்கும் வண்ணம்; அயில= கூர்மையான; எதிர்ப்படும் விலங்குகளை கிழிக்கும் கூர்மையான பற்கள்; கரும்பு போன்ற கடினமான பொருட்களையும் கடித்து பொடியாக மாற்றும் வல்லமை கொண்ட பற்கள்; களிறாளி= களிற்றினை, மதம் கொண்ட ஆண் யானையை அடக்கி ஆண்டவர்; வில் தோள்=மேரு மலையினை வில்லாக வளைத்து ஏந்திய தோள்; அமரர் என்ற சொல்லுக்கு அமரர் தலைவர் என்று பொருள் கொள்ளவேண்டும். கூளி-பூத கணங்கள்; மதர்=செருக்கு; தாளமதர்=சிவபெருமான் நடனமாட அந்த நடனத்திற்கு ஏற்ப தாளமிடும் வாய்ப்பு கிடைத்தமையால், பெருமிதம் கலந்த செருக்கு உடையதாக விளங்கிய பூதகணங்கள்; மீளி=நடனமாடும் வல்லமை படைத்தவர்; மிளிர்= பிரகாசிக்கும்;தூளி=திருநீறு; கீள=துரத்தும், ஓட்டும்; கயிலாய மலையின் பொன்னொளி கருத்த மேகங்கள் சூழ்ந்து ஏற்படுத்திய இருளினை துரத்துகின்றது என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
வாளவரி கோளபுலி கீளதுரி தாளின்மிசை நாளுமகிழ்வர்
ஆளுமவர் வேளநகர் போளயில கோள களிறாளி வரவில்
தோளமரர் தாளமதர் கூளியெழ மேளிமிளிர் தூளிவளர் பொன்
காளமுகில் மூளுமிருள் கீளவரி தாள கயிலாயமலையே
மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.70.1) திருஞானசம்பந்தர், உழுவை அதள் ஆடையான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.ஏன எயிறு=பன்றிக் கொம்பு; என்பு= எலும்பு; வரி ஆமை=வரிகள் உடைய ஆமை; கான வரி நீடு உழுவை=காட்டில் வாழ்வதும் நீண்ட கோடுகளை உடையதும் ஆகிய புலி; காணி=உரிமையான இடம்; இந்த தலத்து அந்தணர்கள் செய்கின்ற வேள்வியிலிருந்து எழுகின்ற ஆகுதிப் புகைகள் மேலே எழுந்து சென்று தேவ லோகத்தில் உள்ள கற்பகச் சோலைகளில் படர்ந்து மாசு விளைவிக்கின்றன என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
ஏனவெயிறு ஆடரவோடு என்புவரி ஆமை இவை பூண்டு இளைஞராய்
கானவரி நீடுழுவை அதளுடைய படர்சடையர் காணியெனலாம்
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகியழகார்
வானமுறு சோலை மிசை மாசுபட மூசு மயிலாடுதுறையே
திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.92.5) திருஞானசம்பந்தர் பெருமானை, கொல்புலித் தோலுடையார் என்று குறிப்பிடுகின்றார்.பெருமானை பஞ்சகவ்யம் கொண்டு நீராட்டப்படுவதற்கு பயன்படுவதால், பசு அளிக்கும் பால் தயிர் நெய் கோமியம் கோசலம் ஆகிய ஐந்தும் நன்மை பயக்கும் பொருட்களாக கருதப்பட்டு, ஆனின் நல் ஐந்து என்று சிறப்பிக்கப்படுகின்றன.
ஏன வெண் கொம்பொடும் எழில்திகழ் மத்தமும் இளவரவும்
கூனல் வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோல் உடையார்
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில் வண்டமர் பொழில் திருநெல்வேலி உறை செல்வர் தாமே
வெங்குரு (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.94.10) திருஞானசம்பந்தர் அரை மல்கு புலியதளீர் என்று பெருமானை அழைக்கின்றார். விரை=நறுமணம்; மல்கு=பொருந்திய; நறுமணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த வெங்குரு தலத்தில் நிலையாக பொருந்தி உறையும் பெருமானே, இடுப்பினில் புலித்தோலாடை பொருந்தும் வண்ணம் உடுத்தியவரே, இடுப்பினில் புலித்தோலாடையை உடுத்திய உமது இணையான திருவடிகளைப் புகழ்ந்து உரைக்கும் அடியார்கள் வாழ்வினில் உயர்வினை அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
அரை மல்கு புலி அதளீரே
அரை மல்கு புலி அதளீர் உமது அடியிணை
உரை மல்கு புகழவர் உயர்வே
அரை=இடுப்பு: திரிதரும் எயில்=வானில் எப்போதும் திரிந்து கொண்டிருந்த பறக்கும் கோட்டைகள்; புனை=பொருத்தப்பட்ட; கணை=அம்பு;புரிதரும்=எண்ணம் கொள்ளும்; அடைவு=சென்றடைய; அடைவுனல்=அடையவேண்டும் என்று நினைத்தல்; நினைக்க முக்தி என்று திருவண்ணாமலை தலத்தினை பெரியோர்கள் குறிப்பிடுவார்கள்; அத்தகைய பெருமையை உடையது இடைமருது தலம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் இடைமருது ஈசனைத் தொழும் அடியார்களின் தன்மையை, இறைவனின் அருளால் அடியார்கள் பெறுகின்ற நன்மைகளை குறிப்பிட்டு, நாமும் இடைமருது ஈசனைத் தொழுது அத்தகைய நன்மைகளை அடையுமாறு திருஞான்சம்பந்தர் நம்மை வழிநடத்துகின்றார்.
பொழிப்புரை:
விரிந்த புலித்தோலை தனது இடுப்பினில் ஆடையாக உடுத்தியவரும், எப்போதும் வானில் திரிந்து கொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும், மேரு மலையினை வில்லாக வளைத்து அதனில் பொருத்தப்பட்ட அம்பினால் எரித்து அழித்தவரும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தினில் சிவந்த சடையினை உடையவரும் ஆகிய பெருமான் உறைகின்ற இடைமருது தலத்தினைச் சென்றடைந்து பெருமானைத் தொழுது வணங்கவேண்டும் என்று எண்ணுகின்ற நல்ல மனம் உடைய அடியார்கள், நாளும் பெருகும் புகழ் உடையவர்களாக திகழ்வார்கள்.
பாடல் 2:
மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரும் இடைமருது எனும் அவர்
செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்
பிறிதிரை பெறுமுடல் பெறுகுவது அரிதே
விளக்கம்:
மறி திரை=ம்டிந்து வரும் அலைகள்; மிடறு=கழுத்து; எறி திரை=வீசி எறியும் அலைகள்; தான் அடித்துக் கொண்டு வரும் பல பொருள்களையும் இரண்டு கரைகளிலும் வீசியெறியும் அலைகள் கொண்ட காவிரி நதி; செறி திரை=நெருங்கிய சுருக்கங்கள்; வயது முதிர்வதன் காரணமாக நமது உடலைப் போர்த்துள்ள தோல் சுருங்குவதும் அதனால் வரிவரியாக, தொடர்ந்து வருகின்ற அலைகள் போன்று, கோடுகள் தோன்றுவதும், இந்த சுருக்கத்தின் காரணமாக உடல் குன்றி காணப்படுவதும் இயற்கை. அதே சமயத்தில் தலைமுடி நரைத்தல் நடைபெறுவதையும் நாம் காண்கின்றோம். இத்தகைய மாற்றங்கள், அதாவது நரையும் திரையும், பெருமானின் அடியார்களை சென்று அடையா என்றும் கூறுகின்றார். பிறிதிரை=பிறிது இரை; பிறிதிரை பெறும் உடல்=உடலை வளர்ப்பதற்காக உணவு உட்கொள்ளும் வாழ்க்கை; பெருமானின் அடியார்களுக்கு மறுபிறவி ஏற்படாது என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு திருஞான சம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு அப்பர் பிரானின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது.
சாக்கிய நாயனார் மீண்டும் பிறவியெடுத்து சோறு உண்ணாத வண்ணம், அவருக்கு முக்திநிலை அளித்தவர் சிவபெருமான் என்று குறுக்கை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.48.6) அப்பர் பெருமான் கூறுகின்றார். எல்லி=மகா சங்கார நேரத்தில் இருக்கும் இருண்ட நிலை; இரவு;சல்லி=கற்கள் கஞ்சி தாமுணும்=புத்தர்கள் கஞ்சி உட்கொள்ளும் பழக்கம் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. சோறுணாமே=உட்கொள்ள இருந்த, உணவினை விட்டுவிட்டு வந்தவர், பெருமானின் காட்சி கிடைக்கபெற்று முக்தி பெற்றமையால், மறுபடியும் இல்லத்திற்குச் சென்று உணவு உட்கொள்ளவில்லை. மேலும் அடுத்த பிறவியெடுத்து உணவு உட்கொள்ளும் நிலையும் தவிர்க்கப் படுகின்றது. இதனை உணர்த்தும் முகமாக சோறு உணாமே என்று குறிப்பிடுகின்றார்.குறுக்கை வீரட்டனாரைப் புகழும் அப்பர் பிரானுக்கு அதிகை வீரட்டானாரின் நினைவு வந்தது போலும். சூலை நோய் தன்னை வருந்தியபோது,கூற்றாயினாவாறு என்று தொடங்கும் பதிகத்தினை கொல்லிப் பண்ணில் பாடிய தனக்கு அருள் புரிந்த பின்னர், சொல்வளம் நிறைந்த பாடலை பாடிய திருநாவுக்கரசே எழுந்திரு, உனது பெயர் ஏழு உலகங்களிலும் நிலை பெற்று விளங்கும் என்று அழைத்த சிவபிரான், தனது பாடலை விருப்பமுடன் கேட்டு மகிழ்ந்த செயல் நினைவுக்கு வரவே, கொல்லியாம் பண் உகந்தார் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். நேரிசைப் பதிகங்களை கொல்லி பண்ணில் பாடுவதும் உண்டு.
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார்
நெல்லினால் சோறு உணாமே நீள்விசும்பு ஆளவைத்தார்
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டமாடிக்
கொல்லியாம் பண் உகந்தார் குறுக்கை வீரட்டனாரே
இடைமருது தலம் சென்றடைய வேண்டும் என்று தங்களது மனதினால் நினைக்கும் அடியார்கள் முக்திநிலை அடைவார்கள் என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த பாடலில், இடைமருது என்று இந்த தலத்தின் திருப்பெயரை சொல்லும் அடியார்கள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று கூறுகின்றார். இதன் மூலம் காசி அண்ணாமலை ஆகிய தலங்களுக்கு இணையாக முக்தி தரும் தலமாக இந்த தலம் கருதப் படுவதன் காரணம் நமக்கு உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
மடிந்து விழும் அலைகள் தொடர்ந்து வரும் கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால விடம் தேக்கப்பட்ட கழுத்தினை உடையவராகிய சிவபெருமான் உறைகின்ற இடம், தான் அடித்துக் கொண்டுவந்த விலை மதிப்பற்ற பொருட்களை இரு கரைகளிலும் மோதி வீசியெறியும் காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள இடைமருது தலமாகும். இந்த இடைமருது தலத்தின் திருப்பெயரை உச்சரிக்கும் அடியார்கள், தோலில் சுருக்கத்தை ஏற்படுத்தும் திரைகளும் நரை முடிகளும் அணுக முடியாதவர்களாக என்றும் இளமையுடன் மூப்பினை நீத்தவர்களாக திகழ்வார்கள். மேலும் மீண்டும் மண்ணுலகில் உணவு உட்கொண்டு உடலினை வளர்க்கும் நிலைக்கு ஆளாகாமல், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைவார்கள்.
பாடல் 3:
சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய உடலினர் நிறை மறை மொழியினர்
இலரென இடுபலி அவர் இடைமருதினை
வலமிட உடன் நலிவிலது உள வினையே
விளக்கம்:
சலசல=ஒலிக்குறிப்பு; மிகுந்த வெள்ளப் பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதி; நிலவிய=விளங்கிய: நிறை மறை=ஒழுக்கமான வாழ்க்கைக்குத் தேவையான வழிமுறைகள் அனைத்தையும் உணர்த்தும் வேதங்கள்; இலரென=உணவின்மையால் பசியால் வாடுபவர் என்ற எண்ணத்துடன்; பிச்சைப் பெருமானாக உலகெங்கும் திரியும் பெருமான் திருக்கோலம், எத்துணை பொருத்தமாக இருந்தது என்றால், தாருக வனத்து மகளிர் அனைவரும், பெருமான் உண்மையாகவே பசியால் வாடுவதாக அவர்கள் நினைத்துக் கொண்டு அவருக்கு பிச்சையிட வந்தனர் என்று திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.பாடலின் கடைசி வரியை உள வினையால் உடல் நலிவு உளதிலையே என்று மாற்றி வைத்து பொருள் கொள்ள வேண்டும். அதாவது வினகளின் பயனால் அடியார்கள் மனவருத்தமடைந்து உடல் நலியாத வண்ணம் பெருமான் அடியார்களுக்கு மனப்பக்குவத்தை தருவார் என்பதே நமக்கு உணர்த்தப்படும் செய்தியாகும். அந்தந்த பிறவிகளுக்கு ஒதுக்கப்பட்ட வினைகளை ஒவ்வொருவரும் அனுபவித்துக் கழிக்க வேண்டும் என்பதே எழுதாத சட்டம். எனவே பெருமானின் அடியார்களாக இருந்தாலும் அவர்களும் தங்களது வினைகளை நுகர்ந்து கழிக்கவேண்டிய நிலை உள்ளது. எனினும், பெருமானின் அடியார்களின் மனம், இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக பாவிக்கும் அளவுக்கு பக்குவப்பட்டு இருப்பதால், அவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களால் மனம் வாடாது இருப்பர் என்பதே இங்கே உணர்த்தப்படும் செய்தியாகும். புனல்=கங்கை நதி:
பிச்சைப் பெருமானாக வந்த பெருமானின் மிகவும் பொருத்தமாக இருந்தது என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு, அப்பர் பிரான் காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலை (6.8.1) நமக்கு நினைவூட்டுகின்றது. நல்கூர்ந்தான்=வறுமை உடையவன்: உணவு ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவை. எனவே தான் உணவுக்காக நம்மிடம் உள்ள எந்த பொருளையும் விற்பதற்கு தயாராக எவரும் இருப்பதை நாம் உலகினில் காண்கின்றோம். இறைவன் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை; மேலும் உலகனைத்தும் தன்னுடையதாக கொண்டுள்ள இறைவனிடம் இல்லாத செல்வம் வேறு எவரிடத்தில் உள்ளது. இருந்தாலும் இறைவனையும் நம்முள் ஒருவனாக கருதி, அருளாளர்கள் தமது கருத்தினை இறைவன் பால் ஏற்றிச் சொல்வது பழக்கம். பிச்சைப் பெருமானாக சென்ற இறைவன், தனது உணவுத் தேவைக்காக பலியேற்கவில்லை; எனினும் அவன் உணவுக்காக பிச்சை ஏற்றதாக கற்பனை செய்து பல அருளாளர்களும் பாடியுள்ளனர். பெருமான் அணிந்திருந்தது நாகம், பன்றிக் கொம்பு. எலும்பு மாலை முதலியன.இவற்றை விற்றால் வாங்குவார் யார். எனவே தான், தனது உணவுக்காக விற்கக்கூடிய நிலையில் தன்னிடம் பொருள் ஏதும் இல்லாத வறியவன் என்று அப்பர் பிரான் இங்கே பெருமானை குறிப்பிடுகின்றார். சதுரன்=வல்லமை உடையவன், சாமர்த்தியம் உடையவன். சதுரன் என்று இறைவனை குறிப்பிடுவதன் மூலம்,இறைவன் உண்மையில் வறியவன் அல்லன், வறியவனாக நடித்தவன் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துவதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.பொழில்=சோலைகள் சூழ்ந்த ஏழு உலகங்கள்; பொய்யாது=இடைவிடாது; மாசு ஒன்றில்லா=அழியும் தன்மையாகிய குற்றம் இல்லாத; தாங்குதல்=உலகம் இயங்குமாறு தாங்குதல்;
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சிக் கம்பன் காண் பிச்சை அல்லால்
மற்று ஊண்ஒன்று இல்லாத மாச்சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்றில்லா
பொற்றூண் காண் மாமணி நற்குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற
கற்றூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண்ணுளானே
மறை மொழியினர் என்று பெருமான் தனது வாயால் வேதங்களை முதன்முதலாக அருளியவன் என்பதை இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.வேதநாவன், வேதமொழியர், மறை நாவன், வேதம் ஓதிய வாயான், என்று பலவிதமாக திருமுறைப் பாடல்கள் பெருமானை குறிப்பிடுகின்றன. திருமருகல் மற்றும் செங்காட்டங்குடி தலங்களை இணைத்து அருளிய பதிகத்தின் பாடலில் (1.6.9) திருஞானசம்பந்தர் பெருமானை மந்திர வேதங்கள் ஓதும் நாவர் என்று குறிப்பிடுகின்றார். திருமருகல் தலத்தினில் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த காலத்தில், செங்காட்டங்குடி தலத்தில் இருந்து சில அன்பர்கள் திருமருகல் வந்தடைந்து, திருஞானசம்பந்தர் தங்களது தலத்திற்கு வரவேண்டும் என்று விண்ணப்பம் வைத்தனர். அடுத்த நாள் திருஞான சம்பந்தர் திருமருகல் திருக்கோயிலுக்கு சென்ற போது, ஆங்கே செங்காட்டங்குடியில் இருந்த வண்ணம் பெருமான் காட்சி கொடுக்கவே, பெருமானின் திருவுள்ளம் தான் இன்னும் சில நாட்கள் திருமருகலில் தங்க வேண்டும் என்று உணர்த்துவதை புரிந்து கொண்டு மேலும் சில நாட்கள் கழித்தே திருஞானசம்பந்தர் செங்காட்டங்குடி சென்றதாக பெரிய புராணம் கூறுகின்றது. இவ்வாறு பெருமான் தான் செங்காட்டங்குடி தலத்தில் இருந்த வண்ணம், திருமருகலில் காட்சி கொடுத்ததை, இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அவர் உணர்த்துகின்றார். இந்த காரணம் பற்றியே, இந்த பதிகம் இந்த இரண்டு தலங்களுக்கும் பொதுவான பதிகமாக கருதப் படுகின்றது. திருமருகலில் உறைகின்ற பெருமானே, யாது காரணம் பற்றி நீர், கணபதியீச்சரம் என்று அழைக்கப்படும் செங்காட்டங்குடி தலத்தில் உள்ள திருவுருவத்தின் பால் காதல் கொண்டவராக, அந்த திருக்கோலத்துடன் திருமருகலில் காட்சி கொடுத்தீர் என்பதாக இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் குறிப்பிடுகின்றார்.
அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவணையானும் அறிவரிய
மந்திர வேதங்கள் ஓது நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர்கொள் செங்காட்டங்குடி அதனில்
கந்தம் அகிற்புகையே கமழும் கணபதியீச்சரம் காமுறவே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.53.6) திருஞானசம்பந்தர், வேதம் மொழிந்த வாயான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.ஐம்புலனும் அழிந்த சிந்தை= புலனைந்தின் வழி அடக்கி; அந்தணாளர்=துறவோர்; தொல்லரா=தொல்+அரா, பழமையான பாம்பு; இதழி=கொன்றை மலர்;சழிந்த=நெருங்கி கிடக்கும்; தான் நினைந்து என்ற தொடருக்கு பதிலாக தாள் இணைந்து என்ற பாடபேதம் சில பதிப்புகளில் காணப் படுகின்றது. தாள் இணைந்து என்பதற்கு தங்களது இரு கால்களையும் இணைத்து பல விதமான யோகாசனங்கள் செய்யும் முனிவர்கள் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது.ஆனால் சைவ வேடம் தான் நினைந்து என்ற தொடர் அளிக்கும் ஆழமான கருத்து மிகவும் பொருத்தமாக இருப்பதால் அதனை ஏற்றுக் கொள்வதே பொருத்தமாக உள்ளது, தான் நினைந்து என்பதற்கு பதிலாக தாள் நினைத்து என்று வைத்து, பெருமானின் திருவேடத்தையும் அவரது திருவடிகளையும் நினைத்த முனிவர்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. தோய்ந்த என்ற சொல்லினை தொய்ந்த என்ற சொல்லின் திரிபாக கருதி,தக்கனது சாபத்தினால் தனது கலைகள் அழிந்து தளர்வடைந்த நிலையில் இருந்த சந்திரன் என்றும் பொருள் கூறுகின்றனர். வேறுவேறு முனிவர்களுக்கு வெவ்வேறு முகம் கொண்டு வேதங்களை மொழிந்தவன் பெருமான் என்று புராணங்கள் உணர்த்துகின்றன. வடகிழக்கை நோக்கி உள்ள பளிங்கு நிறமான ஈசான முகத்தில் இருந்து சிவ ஆகமங்களும், கிழக்கு நோக்கிய தத்புருஷ முகத்தில் இருந்து இருபத்தியொரு சாகைகள் கொண்ட இருக்கு வேதமும்,தெற்கு நோக்கிய கருநிற அகோர முகத்தில் இருந்து நூறு சாகைகள் கொண்ட யஜுர் வேதமும், வடக்கு நோக்கிய செம்மை நிற வாமதேவ முகத்தில் இருந்து ஆயிரம் சாகைகள் கொண்ட சாம வேதமும், மேற்கு நோக்கிய சத்தியோஜாதம் முகத்தில் இருந்து ஒன்பது சாகைகள் கொண்ட அதர்வண வேதமும் தோன்றியது என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தின் பாடல் ஒன்றினில் குறிப்பிடுகின்றார்.
சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்லரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவ வேடம் தான் நினைந்து ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே
சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.38.7) திருஞானசம்பந்தர் பெருமானை வேத நாவினர் என்று குறிப்பிடுகின்றார்.ஓதம்=இரைச்சலை எழுப்பும் அலைகள் கொண்ட கடல்; மாதர் வண்டு=பெண் வண்டு; வேதங்கள் ஓதும் நாவினை உடையவரும், வெண்மையான பளிங்கினால் செய்யப்பட்ட குழை ஆபரணத்தை அணிந்தவரும், இடைவிடாது இரைச்சலிடும் அலைகள் கொண்ட கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உட்கொண்டு தனது கழுத்தினில் தேக்கி மகிழ்ந்தவரும் ஆகிய பெருமான் உறைவது சாய்க்காடு திருக்கோயிலாகும். பெண் வண்டு தனது விருப்பத்திற்கு உரிய ஆண் வண்டுடன் விளையாடியும், புன்னை மலர்களின் தாதுகளை உட்கொண்டும், பின்னர் அருகிலுள்ள சோலைகளில் மறைந்து ஊடியும் விளையாடும் பொழில்கள் கொண்டது சாய்க்காடு தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வேத நாவினர் வெண் பளிங்கின் குழைக் காதர்
ஓத நஞ்சு அணி கண்டர் உகந்து உறை கோயில்
மாதர் வண்டு தன் காதல் வண்டாடிய புன்னைத்
தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே
நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.84.9) திருஞானசம்பந்தர் பெருமானை வேதநாவன் என்று குறிப்பிடுகின்றார். நீர்மை=இயல்பு,குணம், தன்மை; சீர்மை=சிறப்பு; அறவுறு வேதம்=அறம் பொருந்திய வேதங்கள்; புற=புறவம், தோட்டம்; துன்று=அடர்ந்து; பொதுளி=நெருங்கி; செம்மை நிறமும் நெருப்பும் ஒன்று சேர்ந்து உயர்ந்து தங்களிடையே நின்ற உருவத்தின் தன்மையையும் பெருமையையும் உணர முடியாத வண்ணம், அறங்களை உணர்த்தும் வேதங்களை ஓதும் பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் எதிரே நின்ற சிவபெருமான் உறையும் நகரம் நனிபள்ளி; முல்லை, மௌவல், குளிர்ந்த அசோக மலர்கள், புன்னை, பெருமான் புனையும் கொன்றை ஆகிய மலர் கொடிகளும் செடிகளும் அடர்ந்தும் நெருங்கியும் வளர்வதால் அந்த மலர்கள் விரிந்து மகரந்தங்களை உதிர்த்து புதிய நறுமணங்களை பரப்பும் சோலைகள் நிறைந்த தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக என்று தன்னுடன் வந்த தொண்டர்களுக்கு திருஞானசம்பந்தர் சொல்லும் பாடல். இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், திருஞானசம்பந்தர் பெருமானை,வேதம் நான்கும் விரிவித்த நாவன் என்று கூறுகின்றார்.
நிறவுரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்ற தொகுநீர்மை சீர்மை நினையார்
அறவுறு வேத நாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர் தான்
புறவிரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி
நறவிரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள்
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.86.6) திருஞானசம்பந்தர் மறைவளர் நாவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.மா=விலங்கு, இங்கே யானையை குறிக்கின்றது; ஊன்=தசை, இங்கே தசையுடன் கூடிய உடலினை குறிக்கின்றது. திறை=குறுநில மன்னர்கள் செலுத்தும் கப்பம், இந்த பாடலில் தேவர்கள் தங்களை இறைவனுக்கு முழுதுமாக அர்ப்பணித்துக் கொண்டு, தங்களையே திறைப் பொருளாக பாவித்து, இறைவனுக்கு தொண்டு செய்கின்றார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உணர்வாக்கும் உண்மை என்ற தொடரினை உண்மை உணர்வாக்கும் என்று மாற்றி வைத்து பொருள் கொள்ளவேண்டும். உறை=உறைவிடம்; நிற்கும் வண்ணம்=பெருமானின் திருவடிகளில் நிலை பெற்று நிற்கும் வண்ணம்;மெய்யன்=உடலினை உடையவன்; உடலினை உறைவிடமாகக் கொண்டுள்ள உமது உயிர் பெருமானின் திருவடிகளில் நிலை பெற்று நிற்க வேண்டும் என்றும், உண்மையான மெய்ஞானப் பொருளினை உமது உள்ளம் உணர வேண்டும் என்றும், தாம் பல நற்குணங்கள் இன்றி பல செல்வங்கள் இன்றி குறைகளை உடையவர்களாக இருக்கின்றோமே என்ற உங்களது குறை தீர வேண்டும் என்றால், நிறைவினை உடைய நெஞ்சம் கொண்டு அனைத்து உயிர்களின் மீதும் இறைவன் மீது அன்பு நிறைந்தவர்களாக திகழ வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால்; புகழ் வளரும் வேதங்கள் ஓதும் நாவினை உடையவனும், மதயானையின் தோலை உரித்து அந்த தோலைத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவனும், பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக இறுகக் கட்டிக் கொண்டவனும், அனைவர்க்கும் தலைவனாக இருப்பவனும் ஆகிய இறைவனது அருள் வேண்டும் என்ற நோக்கத்துடன் அவனுக்கு தாங்கள் செலுத்தும் கப்பமாக நினைத்து தங்களை முழுவதுமாக அர்ப்பணித்து தேவர்கள் திருப்பணி செய்ய நிற்பவனும் ஆகிய பெருமான் உறையும் திருநாரையூர் தலத்தினை உங்களது கைகளால் தொழுது வணங்குவீர்களாக என்று அறிவுரை வழங்கும் பாடல். .
உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வாக்கும் உண்மை உலகில்
குறை உளவாகி நின்ற குறை தீர்க்கு நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும்
மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே
திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திருநாரையூர் கை தொழவே
தென் திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.88.5) திருஞான சம்பந்தர் பெருமானை மறைநாவன் என்று சொல்கின்றார்.பூங்கொம்பு உமை அன்னைக்கும் மின்னல் அம்மையின் இடுப்பிற்கும் உவமையாக சொல்லப் படுகின்றது. அம்பன்ன ஒண் கண்= அம்பு போன்று ஒளி பொருந்திய கண்கள்; கண் அவர்=கண்களை உடைய மகளிர்; ஒளி வீசும் கண்களை உடைய மகளிர்; செம்பொன்ன செவ்வி=செம்மையான பொன் போன்று அழகாக திகழும்
கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன் விடை நாளும் ஏறும் குழகன்
நம்பன் எம் அன்பன் மறைநாவன் வானின் மதியேறு சென்னி அரனூர்
அம்பன்ன ஒண்கண் அவர் ஆடரங்கின் அணி கோபுரங்கள் அழகார்
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லை வாயில் அதுவே
விற்குடி வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.108.4) திருஞானசம்பந்தர் பெருமானை வேதம் ஓதிய நாவுடையான் என்று குறிப்பிடுகின்றார்.
பூதம் சேர்ந்திசை பாடலர் ஆடலர் பொலிதர நலமார்ந்த
பாதம் சேரிணைச் சிலம்பினர் கலம் பெறு கடலெழு விடமுண்டார்
வேதம் ஓதிய நாவுடையானிடம் விற்குடி வீரட்டம்
சேரு நெஞ்சினர்க்கு அல்லது உண்டொ பிணி தீவினை கெடுமாறே
கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.30.10) அப்பர் பிரான் பெருமானை வேதநாவன் என்று குறிப்பிடுகின்றார்.மாலினாள்=பெருமானிடம் அதிகமான விருப்பம் உடையவள்; வேலினான்=வேல் ஏந்திய வீரன்; நூலினான்=வேத நூல்களை அருளிய பெருமான்; மதில்களை உடைய இலங்கைக்கு அரசனும், வேல் ஏந்திய வீரனும் ஆகிய அரக்கன் இராவணன் தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி கயிலாய மலையினை மிகுந்த கோபத்துடன் பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, கயிலை மலையில் ஏற்பட்ட அசைவினால், பெருமானிடம் மிகுந்த விருப்பம் கொண்டவளாகிய உமை நங்கை அச்சம் கொண்டாள். இந்த நிலையைக் கண்ட, வேத நூல்களை அருளியவனாகிய சிவபெருமான், சிரித்தவாறே, ஒரு நொடிப் பொழுதில் அரக்கன் இராவணன் தனது ஆற்றலிழந்து கீழே விழுமாறு கயிலாய மலையினைத் தனது கால் பெரு விரலினால் அழுத்தினார். இத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் கழிப்பாலைத் தலத்தில் கடற்கரைச் தலைவராக விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மாலினாள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பதோர் அளவில் வீழக்
காலினால் ஊன்றி இட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.90.9) அப்பர் பிரான், பெருமானை மறைவிரி நாவன் என்று குறிப்பிடுகின்றார். செய்ய கமலம்=செந்தாமரை மலர்கள்; வெண்மழு= வெண்மையாக ஒளி திகழும் மழுப்படை; தூய்மையானது என்பதை குறிக்க வெண்மை என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. விழுமிய=சிறந்த; ஆலகால விடத்தை தேக்கியதால் கருமை நிறம் படிந்த கழுத்தினை உடையவனும், திருநீறு அணிவதை பெருமையாக கருதி விருப்பமுடன் தனது திருமேனி முழுவதும் வெண்ணீறு பூசியவனும் ஆகிய இறைவன், சிறந்ததும் தூய்மையும் உடைய மழுப் படையை உடையவனாக திகழ்கின்றான். செந்தாமரை மலர்களின் நறுமணம் மிகுந்த வேதிகுடி தலத்தில் உறையும் பெருமானை, தெவிட்டாத அமுதம் போன்ற நமது தலைவனை நாம் சென்று அடைந்து பணிந்து அவனது அருள் வெள்ளத்தில் மூழ்கி நீராடுவோம். என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மையணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணம் கமழும் திருவேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே
பூவனூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.65.7) அப்பர் பிரான், பெருமானை வேதநாவன் என்று அழைக்கின்றார்.அர்ச்சிதன்=அர்ச்சனை செய்யப்படுபவன் வெற்பு= மலை, இங்கே இமயமலையினை குறிக்கும். அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் ஆதியான பெருமான், பலராலும் அர்ச்சிக்கப் படுகின்றான். வேதங்களை எப்போதும் ஓதிக்கொண்டு இருக்கும் பெருமான், இமவானின் புதல்வியாகிய பார்வதி தேவியைத் தனது உடலில் பாதி இடத்தில் கொண்டவன் ஆவான். பலவிதமான பரந்த படைக்கலங்களை உடைய பெருமான், பூத கணங்களுக்கு தலைவனாக விளங்குகின்றான். இத்தகைய பண்புகளை உடைய இறைவன், தென்னாட்டில் உள்ள பூவனூர் தலத்தின் நாதனாக, உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஆதி நாதன் அமரர்கள் அர்ச்சிதன்
வேத நாவன் வெற்பின் மடப் பாவையோர்
பாதியானான் பரந்த பெரும்படைப்
பூதநாதன் தென் பூவனூர் நாதனே
திருவலஞ்சுழி தலதின் மீது அருளிய பதிகத்த்தின் பாடலில் (5.66.4) அப்பர் பிரான் பெருமானை மறைகொள் நாவன் என்று குறிப்பிடுகின்றார்.மாணி=பிரம்மச்சாரி, சிறுவன் மார்க்கண்டேயன்; குறைவிலா=தனது வலிமையில் என்றும் குறையாத; நறை=தேன். என்று கொல் காண்பதே என்று இறைவனை காண வேண்டும் என்ற தனது ஏக்கத்தினை வெளிப்படுத்தும் அப்பர் பிரான், இனி என்ற சொல்லினை பயன்படுத்தி இருப்பதால், மறுபடியும் வலஞ்சுழி வாணனை காணவேண்டும் என்று எண்ணும் அளவுக்கு, அப்பர் பிரானின் கருத்தினை, வலஞ்சுழி வாணன் கவர்ந்தார் போலும்.
தேன் நிரம்பிய பூக்களும் நீரும் கொண்டு தன்னை வழிபட்ட சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த, குறைவில்லாத வலிமையினை உடைய கூற்றுவனை உதைத்து, சிறுவனின் உயிரை காத்தவன் சிவபெருமான். வேதங்கள் ஓதும் நாவினை உடைய பெருமானை, வலஞ்சுழி தலத்தில் பொருந்தி உறையும் இறைவனை, அடியேன் மறுபடியும் காண்பது எந்நாளோ, என்று அப்பர் பிரான் வலஞ்சுழி வாணனை மீண்டும் தான் காண்வேண்டும் என்று தனது ஏக்கத்தை அப்பர் பிரான் தெரிவிக்கும் பாடல். தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் இத்தகைய குறிப்பு காணப்படுகின்றது.தில்லைச் சிதம்பரம் தலம் போன்று திருவலஞ்சுழி தலமும் அப்பர் பிரானின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது போலும்.
நறை கொள் பூம்புனல் கொண்டு எழு மாணிக்காய்க்
குறைவிலாக் கொடும் கூற்று உதைத்திட்டவன்
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவனை இனி என்று கொல் காண்பதே
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் சுந்தரர் (7.91.6) வேதநாவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். தன்னிடம் சரண் அடைந்தவர்களின் வினைகளை பெருமான் அறுப்பான் என்று சுந்தரர் கூறுகின்றார்.
படையார் மழுவன் பால்வெண்ணீற்றன்
விடையார் கொடியன் வேதநாவன்
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றியூரே
அன்னைப்பத்து பதிகத்தின் பாடலில் மணிவாசக அடிகளார், இறைவனை வேத மொழியினர் என்று அழைக்கின்றார். நாதப் பறையினர்=நாதப் பிரம்மம், நாத தேவதை; தனது மகளின் அன்றாட நடவடிக்கையில் பல மாற்றங்களை உணர்கின்ற தாய், அந்த மாற்றங்களுக்கான காரணங்களை அறிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றாள். அதற்காக தனது மகளின் தோழியின் உதவியை அவள் நாட, தோழி தலைவியின் அன்னைக்கு பதில் சொல்லும் முகமாக அமைந்த அகத்துறைப் பாடல். எப்போதும் சிவபெருமானின் பெருமையையும் அவனது திருநாமங்களையும் சொன்ன வண்ணம் தலைவி இருப்பதை குறிப்பிடும் தோழி, அதன் மூலம், தலைவி சிவபெருமான் மீது தீராத காதல் கொண்டிருப்பதை தலைவியின் அன்னைக்கு உணர்த்துகின்றாள்.
வேத மொழியர் வெண்ணீற்றர் செம்மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர் எந்நாதனார் அன்னே என்னும்
பொழிப்புரை:
சலசல என்று பெரிய ஆரவாரத்துடன், மிகுந்த வெள்ள நீர்ப் பெருக்குடன் வேகமாக கீழே இறங்கி வந்த கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்றுத் தேக்கிக்கொண்டவனும், மலைமகள் தனது உடலில் ஒரு பாகமாக எப்போதும் விளங்கும் தன்மையுடன் இருப்பவனும், ஒழுங்கான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான நெறிமுறைகளை உணர்த்தும் நான்கு மறைகளையும் மொழிந்த திருவாயினை உடையவனும், ஆகிய பெருமான் பிச்சைப்பெருமான் கோலத்துடன் தாருக வனத்து மகளிரின் இல்லங்களை அணுகினார். அவ்வாறு அவர் சென்ற போது அவர் ஏற்றுக் கொண்டிருந்த திருக்கோலம் எத்தனை பொருத்தமாக இருந்தது என்றால், தங்களது இல்லம் நாடி வந்த பிச்சைப் பெருமான், உண்மையாகவே பசியால் வாடி வருந்துவர் போன்று காணப்பட்டதால்,தாருக வனத்து மகளிர், அவருக்கு பிச்சையிட, அதனை ஏற்றுக்கொண்டவர் பெருமான். அத்தகைய பெருமான் விருப்புடன் உறைகின்ற இடைமருதூர் தலத்தினை வலம் வரும் அடியார்களுக்கு, அவர்களது உடல் நலியும் வண்ணம் மனவருத்தம் எதனையும், அவர்களுடன் பிணைந்துள்ள வினைகள் விளைவிக்காது.
பாடல் 4:
விடையினர் வெளியதோர் தலை கலன் என நனி
கடைகடை தொறு பலி இடுகென முடுகுவர்
இடைவிடல் அரியவர் இடைமருது எனு நகர்
உடையவர் அடியிணை தொழுவது எம் உயர்வே
விளக்கம்:
வெளியதோர்=வெள்ளை நிறம் படைத்த; தசைகள் உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் பிரம கபாலம்; கலன்=உண்கலன்: நனி=மிகுந்த, பல;முடுகுதல்=விரைந்து செல்லுதல்; மிகவும் அதிகமான இல்லங்களுக்கு, விரைந்து சென்று பெருமான் பிச்சை ஏற்கின்றார் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த குறிப்பு, மேன்மேலும் பல உயிர்கள் தங்களது மலங்களைத் தான் ஏற்றுக்கொண்டு திரியும் கலனில் பிச்சையாக இட்டு உய்வினை அடைய வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக பெருமான் விளங்குகின்றார் என்பதை உண்ர்த்துகின்றது. இவ்வாறு உயிர்கள் பெருமானைச் சென்றடைய வேண்டும் என்று தாங்கள் கொண்டுள்ள விருப்பத்தினை விடவும், உயிர்கள் தன்னை வந்தைடைய வேண்டும் என்ற பெருமானின் விருப்பம் மிகவும் அதிகமாக உள்ளது என்பதை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். இந்த குறிப்பு, பெருமானின் உயிர்கள் பால் கொண்டுள்ள எல்லையற்ற கருணையை நமக்கு உணர்த்துகின்றது. இடைவிடல்=விட்டு விடுதல்; பெருமான் பால் ஒரு முறை அன்பு செலுத்தி அவரை வழிபடும் அடியார்கள், மீளா அடிமைகளாக மாறிவிடும் வண்ணம் அவர்களை ஆட்கொண்டு அருள் புரிபவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த தன்மையில் பெருமானை நாம் வழிபட வேண்டும் என்று தேவார ஆசிரியர்கள் பல பாடல்களில் உணர்த்துகின்றனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
திருவையாறு தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.40.7) மீளாத அடிமையாக இருந்து பெருமானுக்கு பணிவிடை செய்வதைத் தவிர்த்து, நமக்கு பல விதங்களிலும் உதவி புரிகின்ற பெருமானுக்கு நாம் செய்ய இயலும் சிறந்த கைம்மாறு வேறேதும் இல்லை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கீள்=கோவணம் கட்டித் தொங்கவிட உதவும் பொருட்டு, கிழிந்த துணியினை இடுப்பினில் கட்டிக் கொள்வது; கிளர் பொறி=ஒளி வீசும் புள்ளிகள். பெருமானை வீரத்தில் ஒப்பாரும் மிக்காரும் எவரேனும் இருந்தால், அவர்களை பெருமான் தனது துணையாக அழைத்துக் கொள்ளலாம். அவ்வாறு எவரும் இல்லாததால், பெருமானுக்கு துணை வீரம் மிகுந்த அவரது தோள்களைத் தவிர வேறு ஏதும் இல்லை என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.தொத்து=பூங்கொத்துகள்; அலரும்=மலரும்; வேனில்=இளவேனில் காலம்; வேள்= தலைவன்; தலைவனாகிய ஐயாறனாருக்கு கீளும் அதனில் கட்டி தொங்கவிடப்படும் கோவணமும் தவிர வேறு உடைகள் ஏதுமில்லை; ஒளி வீசும் புள்ளிகள் உடைய பசுமையான நாகத்தினைத் தனது தோள்களில் அணிகலனாக அணிந்த பெருமானுக்கு, அந்த தோள்களைத் தவிர துணையாக வேறு ஒருவருமில்லை; பூங்கொத்துகள் மலர்கின்ற வசந்த காலத்தின் தலைவனாகிய மன்மதனைத் தவிர வேறு எவரும் பெருமானது நெற்றிக் கண்ணால் காயம் அடையவில்லை; என்றும் மீளாத அடிமையாக இருந்து அவருக்கு திருத்தொண்டு செய்வதைத் தவிர, அவருக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு வேறு எதுவும் இல்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கீள் அலாது உடையும் இல்லை கிளர்பொறி அரவம் பைம்பூண்
தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில்
வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா
ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே
பட்டி என்ற சொல்லுக்கு மீளா அடிமை என்று பொருள். சோற்றுத்துறை மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (5.33.3) தனது நெஞ்சத்திற்கு, பட்டியாய் சிவபெருமானுக்கு பணி செய் மட நெஞ்சமே என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இது நமக்கு உணர்த்தும் அறிவுரையாகும். தனது நெஞ்சத்திற்கு சொல்வது போல் நமக்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி. நமது உயிருடன் ஒட்டி இருக்கும் பிறவிப்பிணி எனப்படும் நோயினையும் உயிருடன் பிணைந்து இருக்கும் வினைகளையும், நாம் கழிக்க வேண்டும் என்று விரும்பினால், பெருமானின் திருவடிகளை மனதினால் தொட்டு இறைவனுக்கு அடிமையாக மாறி அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.
ஒட்டி நின்ற உடலுறு நோய் வினை
கட்டி நின்ற கழிந்து அவை போயறத்
தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே
பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே
பெருமானுக்கு மீளா அடிமையாக மாறி அவனுக்கு ஆட்படாத உயிர்களின் இழிந்த நிலையினை மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.90.3) அப்பர் பிரான் விளக்குகின்றார். ஆளாதல்=சிவபிரானுக்கு அடியவராக இருத்தல். மீளா ஆள்=என்றும் மாறாத அடிமைத் திறம்.மெய்ம்மை=உண்மையான பரம்பொருள். தோளாத=உட்குழி இடப்படாத சுரைக் குடுக்கை. தொழும்பர்=அடிமை, இங்கே அடிமை நிலையில் இருக்கும் இழிந்தவர் என்ற பொருளில் வருகின்றது. வாளா=பயன் அற்று, வீணாக. கழிதல்=இறத்தல். அறிவில் முழு வளர்ச்சி அடைந்து தனது காலில் நிற்கும் திறமை பெற்ற மனிதனை ஆள் என்று அழைக்கின்றோம். அப்பர் பிரான் சிவபிரானின் தொண்டர்கள் அல்லாதவரை ஆள் என்று கருதவில்லை என்றும் நாம் பொருள் கொள்ளலாம். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத்திறம் நமது வாழ்நாள் முழுவதும், அதனின்று மீளாமல் இருக்க வேண்டும். சிவபிரான் ஒருவரைத் தவிர உலகத்தில் தோன்றும் அனைத்துப் பொருட்களும், மாயையின் வண்ணமே; அந்த பொருட்களைப் போல் நமது உடலும் நிலையானதன்று. சிவபிரான் ஒருவரே நிலையான, உண்மையான பொருள் என்பதால் அவரை மெய்ப்பொருள் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே
கயிலைத் திருத்தாண்டகத்தின் முதல் பாடலில் (6.55.1) மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி என்று இறைவனை அப்பர் பிரான் போற்றுகின்றார்.சிவபிரானிடம் இருந்து மீண்டு வேறு எந்த தெய்வங்களையும் தான் நாட வேண்டிய அவசியம் இல்லாமல் தன்னை ஆட்கொண்ட சிவபிரான் என்று அப்பர் பிரான் இங்கே இறைவனை குறிப்பிடுகின்றார். வேற்று=வேறு என்ற சொல்லின் திரிபு. தன் முன்னர் ஒரு முனிவனாய்த் தோன்றி பின்னர் விண்ணில் மறைந்ததால், சிவபெருமானை விண்ணாகி நின்றாய் என்று அப்பர் பெருமான் குறிப்பிடுகின்றார். விண்ணாக மட்டும் அல்லாமல், எஞ்சிய நான்கு பூதங்களுமாக (நிலம், நீர், காற்று, தீ) சிவபிரான் இருக்கும் காரணத்தால், வேறு மற்ற பூதங்களுமாக இருப்பவன் சிவபிரான் என்பதை குறிக்கும் பொருட்டு வேற்றாகி விண்ணாகி நின்றாய் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் என்பதற்கு வேறு விதமாகவும் பொருள் கூறுவார்கள்.தனது உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில், உருண்டும், தரையில் புரண்டும் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் திகைத்த நிலையில், முனிவராகத் தோன்றிய சிவபிரான் மறைந்து விண்ணிலிருந்து நாவுக்கு அரசனே எழுந்திரு என்று குரல் கொடுத்த போது, அப்பர் பிரான், முனிவராக வந்தவர் சிவபிரான் தான் என்பதனை உணர்ந்தார்; தான் கயிலைக் காட்சியைக் காண்பதற்கு சிவபிரானின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. மாளும் இந்த உடல் கொண்டு, சிவபிரான் கயிலையில் இருக்கும் கோலம் கண்டால் அல்லது மீளேன் என்று தனது உறுதியான முடிவினை செவிமடுத்த சிவபிரான்,தனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை மிகுந்தமையால், தான் கயிலைக் காட்சியினைக் காணமல் ஏமாற்றம் அடைந்து தமிழகம் திரும்பிச் செல்வதைத் தடுத்த பிரான் என்பதனை, மீளாமே ஆட்கொண்ட பிரான் என்று கூறுவதாகவும் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
அனைத்து உயிர்களிலும் இறைவின் உறைந்திருக்கின்றான். அவனிடத்தில் பக்தி செய்து அவன் நம் உள்ளத்தில் உறைவதை தெரிந்து கொண்டால், நமக்கு இன்பம் பெருகும். அதனால் தான் தனது மனதினில் ஒளிந்திருக்கும் இறைவனை அடையாளம் கண்டுகொண்ட அப்பர் பிரானுக்கு அவன் இன்ப ஊற்றாகத் திகழ்ந்தான். புறக் கண்ணுக்குப் புலப்படாமல் அகக்கண்ணுக்கு மட்டும் தெரிந்த காரணத்தால் ஒளித்தாய் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தன் எதிரே முனிவராக காட்சி அளித்த சிவபெருமான், காற்றில் கரைவது போல் திடீரென்று மறைந்து விட்டமையால், காற்றாகி எங்கும் கலந்தவனே என்று அப்பர் பிரான், வேற்றாகி என்று காற்றாக இறைவன் இருப்பதை முன்னமே சுட்டிக் காட்டி இருந்தாலும், மறுபடியும் குறிப்பிடுகின்றார்.விண்ணுக்கு உரிய குணம் ஒலி. அந்த ஒலியாக நின்றவன் இறைவன் என்று கூறி, வந்த முனிவர் விண்ணில் மறைந்தது உணர்த்தப்படுகின்றது.
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
திருநாரையூர் பதிகத்தின் கடைப் பாடலிலும் (6.74.10) அப்பர் பிரான் தன்னை மீளாத ஆள் என்று குறிப்பிடுகின்றார். வெளி செய்த வழிபாடு என்றால் அறிவொளியால் செய்த வழிபாடு என்று பொருள். தனது தோள்களின் வலிமை மீது மிகுந்த கர்வம் கொண்டவனாக திகழ்ந்த அரக்கன் இராவணனின் குறைத்த பெருமான் என்று இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
மீளாத ஆள் என்னை உடையான் தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை
மாளாமை மறையவனுக்கு உயிரும்வைத்து வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான்தன்னை
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தொலைவித்து ஆங்கே
நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தினை பாடி, இறைவனது அருளால் எவராலும் தீர்க்க முடியாத நிலையில் இருந்த கொடிய சூலை நோயினைத் தீர்த்துக் கொண்ட அப்பர் பிரானின் தன்மை, தாங்கள் அந்நாள் வரை கொண்டிருந்த செல்வாக்கினை வெகுவாக குறைத்துவிடும் என்று அஞ்சிய சமண மத குருமார்கள், அப்பர் பிரானுக்கு தீங்கு செய்து சைவ மதத்தினை இழிவு படுத்த வேண்டும் என்று திட்டமிட்டனர். சமண மதத்தினை மிகவும் இழிவாக அப்பர் பிரான் பேசினார் என்று வீண்பழி சுமத்திய சமண குருமார்கள், அவரை அரசன் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று பல்லவ மன்னனிடம் கோரினார்கள்.அப்பர் பிரானை விசாரணைக்கு அழைத்து வர படை வீரர்களும் மந்திரியும் அனுப்பப்பட்டனர். அப்போது அவர்களுக்கு விடையாக நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் பதிகத்தினை (6.98) அப்பர் பிரான் பாடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலில், பெருமானுக்கு மீளா அடிமையாக தான் மாறிய காரணத்தால், தன்னிடம் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கின்றார். திருநாவுக்கரசர், சிவபிரானுக்கு ஆட்பட்ட காரணத்தால் வேறு எவருக்கும் ஆட்படமாட்டோம், வேறு எவர்க்கும் குடியல்லோம் என்று இங்கே கூறுகின்றார். நியாயம் இல்லாத அரசனின் ஆணை தன்னைக் கட்டுபடுத்தாது என்று அரசனை எதிர்த்து குரல் கொடுத்த புரட்சிக் கவியாக அப்பர் பெருமான் திகழ்வதை நாம் இங்கே காணலாம். இயமனுக்கே அஞ்சமாட்டோம் என்று கூறுவதன் மூலம் அரசன் எம்மாத்திரம் என்று முழங்குவதையும் நாம் உணரலாம். அரசனை தெய்வமாக மதித்த காலம் என்பதால் அரசனின் ஆணைக்கு கட்டுபடாதவர்க்கு நரகம் உண்டு என்ற நம்பிக்கை இருந்தது. சிவபிரானின் அருளைப் பெற்றதால் தனக்கு அந்த விதிமுறை செல்லாது என்பதையும் இங்கே தெளிவுபடுத்துகின்றார்.
நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடி குறுகினோமே
தான் இறைவன் பால் வைத்திருந்த அன்பு மீளா அன்பு என்பதை உணர்த்தி, பெருமான் தனக்கு வலது கண்ணின் பார்வையை மீட்டுக் கொடுத்து உதவி புரிய வேண்டும் என்று உரிமையுடன் சுந்தரர் கேட்பதை நாம், அவர் திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.95.1) உணரலாம். இந்த பாடலில்,மற்ற தெய்வங்களைத் தான் வேண்டாது இருந்த நிலையினையும், தனக்கு எத்தனை இடர்கள் வந்த போதிலும் சிவபெருமானுக்கு அடிமையாக இருந்த தனது நிலையிலிருந்து தான் மீளாது இருந்த தன்மையையும் சுந்தரர் கூறுகின்றார். தனது கண்பார்வையை இறைவன் பறித்ததால் தனது நெஞ்சம் மிகவும் வருந்துவதையும், அதனால் முகம் மிகவும் வாடி இருப்பதையும் குறிப்பிடும் சுந்தரர், தான் ஏதும் கூறாமலே சிவபிரான் தனது வருத்தத்தின் காரணத்தை புரிந்துகொண்டு ஆவன செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததால் (தோழமை நிமித்தம்) தான் தனது குறையை சொன்ன பின்னரும் சிவபிரான் ஏதும் செய்யாமல் இருந்த நிலை சுந்தரரை மிகவும் கோபம் கொள்ளச் செய்கின்றது போலும். இந்த நிலை இன்றும் நிலவுவதை நாம் உலகினில் காண்கின்றோம்,உணருகின்றோம். நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்று ஒருவரை கருதி மிகுந்த நம்பிக்கையுடன், நாம் உதவிக்காக அவரை அணுகும் போது, நமக்கு உதவக்கூடிய நிலையில் இருந்தும் அவர் நமக்கு உதவி செய்ய மறுத்தாலோ, தாமதம் செய்தாலோ, நாம் அவர் பால் கோபம் கொண்டு, நீர் எனக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, நன்றாக வாழுங்கள் என்று நாம் பல சமயங்களில் கோபத்துடன் கூறுகின்றோம் அல்லவா. இதே மன நிலையில் இருந்த சுந்தரர், சிவபெருமானை, எமக்கு உதவி செய்யாத நீர் வாழ்ந்து போதீரே என்று சொல்கின்றார்.
மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே
மானிட வாழ்க்கையின் பயன், சிவபெருமானை வழிபட்டு, அவரது அருளின் உதவியால் உலக மாயைகளிலிருந்து விடுபட்டு வீடுபேற்றினை அடைவதாகும்.சிவபிரானை வழிபடாவிடில் வீடுபேறு கிடைக்காது; எனவே சிவபிரானை வழிபடாதவர்களின் வாழ்க்கை பயன் ஏதும் இல்லாமல் போகின்றது. நமக்கு வாய்த்த மனிதப் பிறவியை எவ்வாறு மதித்து நாம் வாழ வேண்டும் என்று அப்பர் பிரான் கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இந்தப் பாடலில் (4.81.5) தில்லைச் சிற்றம்பலவனுக்கு நாம் அடிமையாக வாழ்வது நமது கடமை என்றும் அவ்வாறு வாழ்வதே நமது வாழ்க்கையை நாம் மதிக்கும் விதமாகும் என்றும் இங்கே கூறுகின்றார்.
வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்
பார்த்தர்க்குப் பாசுபதம் அன்று அருள் செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரம் தீவளைத்தான் தில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம் தம் கூழைமையே
பொழிப்புரை:
இடபத்தைத் தனது ஊர்தியாக உடையவரும், தசைகள் உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரம கபாலத்தைத் தனது உண்கலனாக உடையவரும்,மிகவும் அதிகமான இல்லங்கள் விரைந்து சென்று, உயிர்கள் இடுகின்ற பிச்சையை, பக்குவப்பட்ட உயிர்கள் பிச்சையாக இடுகின்ற ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை ஏற்றுக்கொண்டு, அந்த உயிர்களை மலமற்ற உயிர்களாக மாற்றி உய்வினை அளிக்கும் கருணை உள்ளத்தவராக இருப்பவரும் ஆகிய பெருமான் பால் ஒருமுறை அன்பு வைத்து வழிபடும் அடியார்கள், அந்த தன்மையிலிருந்து மீளாமல் எப்போதும் பெருமான் பால் அன்பு கொண்டவர்களாக விளங்குவார்கள்; இத்தகைய மாற்றத்தை தனது அடியார்களிடம் ஏற்படுத்தி ஆட்கொள்ளும் பெருமான், இடைமருது என்ற நகரத்தினை உடையவர் ஆவார்.அத்தகைய பெருமானின் திருவடிகளைத் தொழுகின்ற அடியார்கள் வாழ்வினில் மேன்மேலும் உயர்வினை அடைவார்கள்;
பாடல் 5:
உரை அரும் உருவினர் உணர்வரு வகையினர்
அரை பொரு புலியதள் உடையினர் அதன் மிசை
இரை மரும் அரவினர் இடைமருது என உளம்
உரைகளது உடையவர் புகழ் மிக உளதே
விளக்கம்:
உரை அரும்=சொல்வதற்கு அரிய; பெருமானின் அழகினை முழுவதுமாக உணர்த்துவதற்கு சொற்கள் போதாது என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். காண்போரை சொக்க வைக்கும் அழகு உடையவர் என்பதால் தானே, அவரை சுந்தரர் என்றும் சொக்கர் என்றும் அழைக்கின்றனர். பொதுவாக வளைந்த பிறையினை உடைய சந்திரன், பாம்பு, மண்டையோடு, ஆமையோடு, எலும்பு ஆபரணம், பன்றியின் பல் முதலியன எவருக்கும் அழகினை சேர்க்காது என்பதால் பலராலும் விரும்பப் படுவதில்லை; ஆனால் பெருமான் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் மிகவும் விரும்பி அணிந்து கொள்கின்றார். இந்த பொருட்களும் அவருக்கு மேலும் அழகு சேர்க்கின்றது என்று அப்பர் பிரான் திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில் கூறுகின்றார். அந்த தன்மை தனக்கு மிகவும் வியப்பளிப்பதாக கருதும் அப்பர் பிரான், இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களையுன் அம்ம அழகிதே என்று முடிக்கின்றார். அம்ம என்பது வியப்பினை வெளிப்படுத்தும் குறிச்சொல்.
பெருமானை அழகர் என்று குறிப்பிடும் ஒரு சில பாடல்களை நாம் இங்கே காண்போம். திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.27.5)திருஞானசம்பந்தர் பெருமானை அழகர் என்று அழைக்கின்றார். புன்சடை=செம்பட்டை நிறத்தில் அமைந்துள்ள சடை; சொக்க வைக்கும் அழகு உடைய பெருமானை, பொருத்தமாக மதுரை தலத்தில் சொக்கன் என்று அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது.
பவள வண்ணர் பரிசார் திருமேனி
திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர்
அழகர் என்னும் அடிகள் அவர் போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே
பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.44.7) அழகாய குழகர் என்று பெருமானை, திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். குழகன் என்றால் அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவர் என்று பொருள். ஏகவடம்=ஒற்றைச்சர மாலை; பாம்பினை பெருமான் தனது கழுத்தினில் மாலையாக அணிந்திருப்பது பெருமான் ஒற்றை வடச் சங்கிலி அணிந்திருப்பது போல் உள்ளது என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொங்கிள நாகம்=கடுஞ்சினம் கொண்டு படமெடுத்து ஆடும்; கொங்கு=தேன்; கொங்கிள மாலை=தேன் நிறைந்து புது நறுமணம் கமழும் மலர்கள் கொண்ட மாலை;உமையன்னை பால் கருணை கொண்டு அன்னைக்குத் தனது உடலின் ஒரு பாகத்தை அளித்த கருணையாளனாகிய பெருமான், மழவன் மகளை வாட வைப்பது தவறு அல்லவா என்று நயமாக கேள்வி எழுப்பப் படுகின்றது. இந்த பாடலில் குறிப்பிடப்படும் பல பொருட்கள், பாம்பு, ஆமையோடு, கொன்றை ஆகிய எவையும் அழகு சேர்க்கும் பொருட்களாக கருதப்படுவதில்லை. எனினும், இவற்றைப் பூண்டுள்ள பெருமான் அழகுடன் மிளிர்கின்றார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.
பொங்கிள நாகம் ஓர் ஏக வடத்தோடு ஆமை வெண்ணூல் புனை கொன்றை
கொங்கிள மாலை புனைந்து அழகாய குழகர் கொலாம் இவர் என்ன
அங்கு இள மங்கையோர் பங்கினர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வோ
அன்னியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.96.2) திருஞானசம்பந்தர், பெருமானை குழகன் என்றும் அழகன் என்றும் அழைக்கின்றார்.வம்=வம்மின், வாருங்கள்; பழகும்=சிவநெறியில் பழகும்; குழகன்=இளமையாக இருப்பவன்; இறைவன் பால் மனம் ஒன்றி சிவநெறியில் பழகும் தொண்டர்களே, அனைவரும் வருவீர்களாக. அழகும் இளமையும் இணைந்த அன்னியூர்ப் பெருமானின் சிறந்த திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக என்று நம்மை அழைக்கும் பாடல்.
பழகும் தொண்டர் வம்
அழகன் அன்னியூர்
குழகன் சேவடி
தொழுது வாழ்மினே
குடவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.22.7) குறையா அழகன் என்று திருஞானசம்பந்தர், இறைவனை குறிப்பிடுகின்றார். அறை=ஒலி;இயல் என்பது இங்கே இசையியலை குறிப்பிடுகின்றது. ஒலி செய்யும் வீரக்கழல்களை அணிந்த திருப்பாதங்களை உடையவனும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தில் திருமேனி உடையவனும், இசைமரபில் போற்றப்படும் பறை யாழ் முழவம் ஆகிய இசைக்கருவிகளும் வேதங்களும் ஒலிக்கும் பின்னணியில் நடனம் ஆடுபவனும், குறையேதும் இல்லாத அழகினை உடையவனும் ஆகிய பெருமான் குடவாயில் தலத்தில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் நிலையாக வீற்றிருக்கின்றான், என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அறையார் கழலன் அழலன் இயலின்
பறை யாழ் முழவும் மறை பாட நடம்
குறையா அழகன் குடவாயில் தனில்
நிறையார் பெருங்கோயில் நிலாயவனே
பெருமான் பால் தீவிர காதல் கொண்ட தனது பெண், எப்போதும் பெருமானின் திருநாமங்களை பிதற்றியவாறு இருக்கும் தன்மையை உணர்த்தும் தாயின் கூற்றாக அமைந்துள்ள அகத்துறை பாடலில் (2.23.1) அழகன் என்ற திருநாமம் குறிப்பிடப்படுகின்றது. மழை என்பது மழை பொழியும் மேகத்தினை குறிக்கும். கைம்மாறு கருதாது மழை பொழிவது போன்று, இறைவனும் பல விதமான உதவிகளை அனைத்து உயிர்களுக்கும் செய்து கொண்டே இருக்கின்றான். இந்த உதவிகளுக்காக அவன் கைம்மாறு ஏதும் எதிர்ப்பார்ப்பதில்லை. மிடறு=கழுத்து; உழை=மான்; கரவா=கரத்தினை உடையவன்;விழவாரும்=திருவிழாக்கள் மலிந்த; ஆயிழை=ஆராய்ந்து செய்யப் பட்ட நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட நகைகள்; இந்த பதிகத்தின் பாடல்கள்,உமை அன்னை இறைவனை வழிபடும் தன்மையை குறிக்கும் பாடல்கள் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். உமையாள் கணவா என்ற தொடர் இந்த பாடலில் இருப்பதால், இந்த பாடலில் உள்ள சொற்களை உமையன்னையின் கூற்றாக நாம் கொள்வது பொருத்தமற்றது என்பதை நாம் உணர்கின்றோம்.சிவக்கவிமணியாயர் தனது பெரிய புராண விளக்கம் புத்தகத்தில், தலைவனிடம் தனது மனதைப் பறிகொடுத்த தலைவியின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்த தாயின் கூற்றாக கருதி இந்த பாடல்களின் பொருளை உணரவேண்டும் என்று கூறுகின்றார். தனது மகளின் நிலையை உணர்த்தி, தனது மகள் மீது கருணை கொண்டு பெருமான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று பெண்ணின் தாய் வேண்டுகோள் விடுப்பதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். தன்னையும் மறந்த நிலையில், தனது மகள் எவ்வாறு பெருமானின் நாமத்தை சொல்லியவாறு இருக்கின்றாள் என்பதை அவளது தாய் உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ள பாடல். பெருமானின் திருநாமத்தை நாம் எப்போதும் சொல்லிக் கொண்டே இருந்தால், நிச்சயமாக ஒரு நாள் நமக்கு பெருமானின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தலைவி சொல்கின்றாள் என்று திருஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார்.
மழையார் மிடறா மழுவாள் உடையாய்
உழையார் கரவா உமையாள் கணவா
விழவாரும் வெண் நாவலின் மேவிய எம்
அழகா எனும் ஆயிழையாள் அவளே
தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.35.7), திருஞானசம்பந்தர் பெருமானை எரியாடும் அழகன் என்று குறிப்பிடுகின்றார்.பிரளய காலத்தில் ஊழித்தீயினில் பெருமான் நடனமாடும் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. நெருப்பு நமது உடலைத் தீண்டினாலே, நமது உடல் கருகி, விகாரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கின்றது. ஆனால் பெருமான் நெருப்பினில் நின்று நடனமாடினாலும், அவரது உடல் எந்த விதமான மாற்றத்தையும் அடையாமல் அழகாக விளங்குகின்றது என்று திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். அனைத்து சோதிகளிலும் சிறந்த சோதியாக விளங்கும் பெருமானை, ஊழித்தீ என்ன செய்துவிட முடியும். மேலும் தீயினுக்கு வெம்மை என்ற குணத்தினை அளித்தவரே பெருமான் தானே. பழகும் வினை,பழைய பிறவிகளில் உயிர் சேர்த்துக்கொண்ட வினைகள் குறிப்பிடப் படுகின்றன. அயில்=கூர்மை; வலன்=வலது கை; முழங்கெரி=தன்னுள் அகப்பட்ட பொருட்களை எரித்து வெடிக்கச் செய்யும் தன்மை உடைய தீ;
பழகும் வினை தீர்ப்பவன் பார்ப்பதியோடும்
முழவம் குழல் மொந்தை முழங்கு எரியாடும்
அழகன் அயில் மூவிலை வேல் வலனேந்தும்
குழகன் நகர் போல் குரங்காடுதுறையே
கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.52.5) திருஞானசம்பந்தர் பெருமானை அழகன் என்று அழைத்துத் தொழுதெழும் அடியார்கள்,வானுலகில் தேவர்கள் புடைசூழ வீற்றிருந்து அவர்களுக்கு அணிகலனாகத் திகழ்வார்கள் என்று கூறுகின்றார். எழுவார் என்ற சொல்லுக்கு, தரையில் விழுந்து பெருமானை வணங்கித் தொழும் அடியார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.
பழைய தம் அடியார் துதி செயப் பாருளோர்களும் விண்ணுளோர் தொழக்
குழலும் மொந்தை விழாவொலி செய்யும் கோட்டாற்றில்
கழலும் வண்சிலம்பும் ஒலி செயக் கானிடைக் கணம் ஏத்த ஆடிய
அழகன் என்று எழுவார் அணியாவர் வானவர்க்கே
பற்கள் ஏதும் இல்லாத பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம் பலிக்குச் செல்லும் பெருமான், ஆடியும் பாடியும் பிச்சை ஏற்கின்ற துன்பம் உடைய வாழ்க்கை வாழ்பவர் ஆயினும், அவரது தோற்றம் மிகவும் அழகியதாகவே காணப்படுகின்றது என்று திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில்(2.91.6) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு எந்த நிலையிலும் தான் அழகராகத் திகழ்வதை பெருமான் அறிவார் என்றும் திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். புல்லம்=புல்லினை மேய்ந்து உட்கொள்ளும் எருது; உழிதருதல்=திரிதல்;
பல்லில் ஓடு கை ஏந்திப் பாடியும் ஆடியும் பலி தேர்
அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள்
புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழி தருவர்க்கு இடமாம்
மல்கு வெண் திரை ஓதம் மாமறைக்காடு அது தானே
திருக்கோவலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.100.9) திருஞானசம்பந்தர், பெருமானை, கங்கை ஆறு தங்கிய மென்சடையை உடைய அழகன் என்று குறிப்பிடுகின்றார். உண்மையான அன்புடன் தன்னைத் தொழும் அடியார்களின் சிந்தையில் உறைபவன் பெருமான் என்பதை அந்தணர் தம் சிந்தையான் என்றும் மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான் என்றும் இறைவனை அடியார்களுடன் ஒன்றி இருக்கும் தன்மையை பல அருளாளர்களும் உணர்த்துகின்றனர். இந்த பின்னணியில், இருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான் என்று பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் சிந்தனையில் புகாத பெருமான் என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும். தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் கண்டு, தாமே அடுத்தவரை விடவும் பெரியவர் என்று நிரூபிக்கவேண்டும் என்ற முனைப்பு அவர்கள் இருவரின் சிந்தைனையில் ஓங்கி இருந்தமையால், அவர்கள் இருவரும் தங்கள் முன்னே தீப்பிழம்பாக எழுந்தது இறைவன் என்பதையும் உணரமுடியாத நிலையில் அவர்கள் முதலில் இருந்தனர். இந்த தன்மையைத் தான் வேறுபட்ட சிந்தையான் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
ஆறுபட்ட புன்சடை அழகன் ஆயிழைக்கொரு
கூறுபட்ட மேனியான் குழகன் கோவலூர் தனுள்
நீறு பட்ட கோலத்தான் நீலகண்டன் இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே
இரும்பை மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.117.8) திருஞானசம்பந்தர், பெருமானை அழகாக இருப்பவன் என்று குறிப்பிடுகின்றார்.நரியாடும் கானகம் என்று குறிப்பிட்டு பிணங்கள் இடப்படுகின்ற சுடுகாட்டில் நடமாடும் இறைவன் என்றும் அட்ட மூர்த்தமாக இருப்பவன் என்றும் அழல் உருவமாக இருப்பவன் என்றும் இறைவனை குறிப்பிடும் திருஞான சம்பந்தர், அத்தகைய இறைவன் அழகுடன் பொலிந்து மிகுந்த விருப்பமுடன் வீற்றிருக்கும் இடம் இரும்பை மாகாளம் என்று கூறுகின்றார். அந்த இறைவனை வலம் வந்து தொழும் அடியார்களின் பிணியினை தீர்ப்பவன் சிவபெருமான் என்றும் இந்த பாடலில் உணர்த்துகின்றார். அருளாளர்கள் பிணி என்று குறிப்பிடுவது, மிகுந்த திறமை வாய்ந்த மருத்துவர்களாலும் நீக்குதற்கு அரிய பிறவிப்பிணி என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். கானத்து எரியாடுவான் என்ற தொடர், பெருமான் ஊழிக்காலத்தில், உலகினில் உள்ள அனைத்துப் பொருட்களும் உடல்களும் பிரளயத் தீயினால் பொசுக்கப்பட்டு உலகமே சுடுகாடாக காட்சி தரும் வேளையில், அந்த நெருப்பினில் நின்று பெருமான் நடம் ஆடும் தன்மையை குறிப்பிடுகின்றது. நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று திருவாசகத் தொடரும் இந்த தன்மையைத் தானே உணர்த்துகின்றது.
நட்டத்தோடு நரியாடு கானத்து எரியாடுவான்
அட்டமூர்த்தி அழல் போலுருவன் அழகாகவே
இட்டமாக இருக்கும் இடம் போல் இரும்பை தனுள்
வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே
திலதைப்பதி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.118.1) திருஞானசம்பந்தர், அடியார்கள் தொழுதேத்த நின்ற அழகன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். அடிகளார என்ற தொடருக்கு அடியார்கள் மனமாரத் தொழுது ஏத்தினர் என்று பொருள் கொள்ளவேண்டும். விடியற்காலைப் பொழுதினில் எழுந்து நீராடி தங்களது நியமங்களை முடித்த பின்னர், இறைவனைத் தொழுவது சாலச் சிறந்தது என்ற அறிவுரை இங்கே உணர்த்தப்படுகின்றது.
பொடிகள் பூசிப் பல தொண்டர் கூடிப் புலர் காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம்
கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள் சோலைம் மலர் மணம் கமழும் மதிமுத்தமே
புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.7.4) அழகாக கங்கை நதியினைத் தனது சடையினில் சூட்டிக்கொண்ட பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
அங்கையில் அங்கழல் ஏந்தினானும் அழகாகாவே
கங்கையை செஞ்சடை சூடினானும் கடலின் இடைப்
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலிந் நகர்
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே
திருக்கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.12.2) திருஞானசம்பந்தர் ஆல நீழலில் இருந்து அறம் சொன்ன அழகன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஏலம்=மயிர்ச் சாந்து; பால்=பக்கத்தில், மேனியின் இடது புறத்தில் என்று பொருள் கொள்ளவேண்டும்.
ஏலமலர்க் குழல் மங்கை நல்லாள் இமவான் மகள்
பாலமரும் திருமேனி எங்கள் பரமேட்டியும்
கோலமலர்ப் பொழில் சூழ்ந்தெழிலார் திருக் கோட்டாற்றுள்
ஆலநீழற் கீழிருந்து அறம் சொன்ன அழகனே
அம்பர் திருக்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.19.11) திருஞானசம்பந்தர், பெருமானை அழகர் என்றும் அடிகள் என்றும் அம்பர் மேவிய நிழல்திகழ் சடைமுடி நீலகண்டர் என்றும் குறிப்பிட்டு, இந்த பதிகத்தை ஓதி சிவகதி அடையுமாறு அடியார்களுக்கு அறிவுரை கூறுகின்றார்.கொண்மின் என்ற சொல்லுக்கு முன்னர் சிவகதி என்ற சொல்லை சேர்த்துக் கொள்ள வேண்டும். உமிழ் திரை உலகு=அலைகள் நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகம்;
அழகரை அடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி நீலகண்டரை
உமிழ் திரை உலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ் செய் மாலையே
திருக்கருகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.46.3) திருஞானசம்பந்தர், பெருமானை அழகர் என்று குறிப்பிட்டு, அவரது வண்ணம் அழல் வண்ணம் என்று கூறுகின்றார். கழல் கொள் பாடல்=பெருமானின் திருப்பாதங்களின் சிறப்பினை கருத்தாகக் கொண்ட பாடல்; இந்த பாடலில் சிறுத்தொண்டர் என்ற அடியாரைப் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. அவரது பாடலுக்கு மயங்கி இறைவன் காட்சி கொடுத்ததாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆனால் இந்த அடியவரைப் பற்றிய செய்திகள் வேறு ஏதும் தெரியவில்லை. இந்தத் தலத்தில் வாழ்ந்து வந்த அடியவர் ஒருவரின் இசைக்கு மயங்கி இறைவன் சுயம்புவாக காட்சி கொடுத்ததாக ஒரு செவி வழிச்செய்தி இங்கே நிலவுகின்றது. தனக்கு திருத்தொண்டுகள் புரியும் அடியார்களுக்கு அமுதமாக இனிக்கும் பெருமான் என்று இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், தன்னைக் குறித்து இன்னிசைப் பாடல்கள் பாடும் அடியார் ஒருவருக்கு அளித்த இன்பத்தை இங்கே சுட்டிக் காட்டுகின்றார். பெருமானை குறித்த பாடல்களை எவ்வாறு பாட வேண்டும் என்றும் திருஞானசம்பந்தர் இங்கே நமக்கு உணர்த்துகின்றார். நமது அகம் குழைய, அதாவது உள்ளம் கசிந்து, நாம் பெருமான் பால் வைத்துள்ள அன்பு வெளிப்படும் வண்ணம் ஓத வேண்டும் என்று கூறுகின்றார். பாட இயலாதவர்களும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க அவனது திருநாமத்தை ஓதும் அடியார்கள் என்று பின்னாளில் குறிப்பிட்டவர் அல்லவா ஞானசம்பந்தர். பழகவல்ல என்ற தொடருக்கு அடிமைத் தன்மையில், பெருமானை ஆண்டானாக ஏற்றுக்கொண்டு அவருக்கு திருப்பணிகள் செய்யும் தொண்டர்கள் என்று விளக்கம் அளிக்கின்றார்.
பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை
குழகர் என்று குழையா அழையா வரும்
கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம்
அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.38.3) திருஞானசம்பந்தர், தனது உடல் முழுவதும் சாம்பல் பொடியினை பூசிக்கொண்டிருந்த போதிலும், இறைவன் மிகவும் அழகராக காணப்படுகின்றார் என்று கூறுகின்றார். படி=உலகம்; பொற்பு=தன்மை; தனது உடல் முழுவதும் திருநீற்றினை பூசிக்கொண்டு காட்சி அளிக்கும் பெருமானின் தன்மையின் காரணம் யாது என்று கேட்கின்றார். உலகம் முழுதும் அழிந்து,உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் தாங்கள் குடி கொண்டிருந்த உடலினை விட்டுப் பிரிந்த பின்னரும், அந்த உடல்கள் எரிந்த சாம்பலை பூசிக் கொண்டு, தான் ஒருவனே என்றும் அழியாமல் நிலைத்து நிற்பவன் என்பதை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் பெருமான் சாம்பலை தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டு இருக்கின்றார் என்பதை அருளாளர்கள் மூலம் நாம் அறிந்துகொண்டுள்ளோம். அந்தணர் வேடத்தினை பெருமான் தாங்கும் காரணம் யாது என்ற வினா இங்கே எழுப்பபடுகின்றது. வேதம் ஓதுதலும் வேதம் ஓதுவித்தலும் அந்தணர்களின் கடமை என்று வகுத்த பெருமானே அந்த விதியை மீறலாகாது அல்லவா. எனவே வேதத்தை முதன்முதலில் உலகுக்கு உரைத்தவனும், வேதங்களின் பொருளை உமையன்னை, சனகாதி முனிவர்கள், கண்வர் முதலான முனிவர்கள் ஆகியோருக்கு விளக்கிய பெருமான், அந்தணர் கோலத்தில் இருப்பதே தானே முறைமை. இந்தப் பதிகம் வினாவுரைப் பதிகம் என்று அழைக்கப்படுகின்றது. பெருமானின் தன்மைகளின் காரணத்தை கேள்வியாக எழுப்பி, அந்த கேள்விகளுக்கான விடையினை நாம் சிந்திக்குமாறு செய்து திருஞானசம்பந்தர் மகிழும் பதிகம் இந்த பதிகம்.
அடியர் ஆயினீர் சொல்லுமின் அறிகின்றிலேன் அரன் செய்கையைப்
படி எலாம் தொழுதேத்து கண்டியூர் வீரட்டத்து உறை பான்மையான்
முடிவுமாய் முதலாய் இவ்வையம் முழுதுமாய் அழகாயதோர்
பொடியதார் திருமார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பதே
மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பாடலிலும் (3.70.2) திருஞானசம்பந்தர் அழகர் என்று பெருமானை குறிப்பிடுவதை நாம் உணரலாம். சிவந்த சடையினில் அழகிய கொன்றை மாலையையும் ஒளிவீசும் பிறைச் சந்திரனையும் அணிந்த அழகர் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
அந்தண்மதி செஞ்சடையார் அங்கண் எழில் கொன்றையொடு அணிந்த அழகராம்
எந்தம் அடிகட்கு இனிய தானமது வேண்டில் எழிலார் பதியதாம்
கந்தமலி சந்தினோடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்
வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்து மயிலாடுதுறையே
அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.93.6) திருஞானசம்பந்தர் பெருமானை, காளி ஏத்தும் அழகனார் என்று குறிப்பிடுகின்றார்.தோற்றவர் எவருக்கும் தம்மை வென்றவர் மீது கோபமும் வெறுப்பும் ஏற்படுவது இயற்கையே. இந்த இயற்கைக்கு மாறாக, பெருமானிடம் நடனப் போட்டியில் தோல்வி அடைந்த காளியன்னை, பெருமானை புகழ்ந்தனள் என்று குறிப்பிட்டு, போட்டியிட்ட காளிதேவியும் புகழும் வண்ணம் பெருமானின் நடனம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று நமக்கு உணர்த்துகின்றார். அம்பர் மாகாளம் தலத்தில் உள்ள காளிதேவி சன்னதி மிகவும் ப்ரசித்தி பெற்றது. திருக்கோயிலின் தெற்கு பகுதியில் காளிதேவி சன்னதி உள்ளது. அம்பன் அம்பாசுரன் ஆகிய இரண்டு அரக்கர்களை கொன்ற பாவம் தீர, காளிதேவி இறைவனை வழிபட்டதாக தலபுராணம் குறிப்பிடுகின்றது.
பழக மாமலர் பறித்தி இண்டை கொண்டு இறைஞ்சுவார் பால் செறிந்த
குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற
கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும்
அழகனார் அரிவையோடு இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே
அழகிய சிவந்த திருமேனி உடைய எவரும், தனது உடலினை கருநிறம் கொண்ட ஆடையை உடுத்திக் கொண்டு மறைத்தால், அவரது அழகு கெட்டுவிடும் அல்லவா. ஆனால் சிவந்த திருமேனி உடைய பெருமான், தனது உடலினை, கருமையான யானைத் தோல் கொண்டு போர்த்து மறைத்த போதிலும் அழகுடன் விளங்குகின்றார் என்று அப்பர் பிரான், கோடிகா தலத்து பாடலில் (4.51.10) குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் (4.51.10) அப்பர் பிரான், உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்று அனைவராலும் அச்சம் கொண்டு தவிர்க்கப் படுவதும், கரிய நிறத்தில் உள்ளதுமான யானையின் தோலை தனது உடல் மீது போர்த்துக் கொண்ட போதிலும், பெருமானது உடல் எந்த விதமான கேடு விளைவிக்கும் மாற்றமும் அடையாமல் இருந்ததால் தொடர்ந்து அழகனாக பெருமான் திகழ்கின்றார் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். குழகன்=அழகன், இளைஞன்; பசுபதி=ஆன்மாக்களின் தலைவன்; உதிரம் சொட்டும் நிலையில் உள்ள யானையின் ஈரத் தோல், அதனை உடலில் போர்த்துக் கொள்வோரின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது சீவக சிந்தாமணியில் கூறப்படும் செய்தி. எனவே தான், உமை அம்மை யானையின் தோலை உரித்த இறைவன் அந்த தோலினைத் தனது உடல் மீது போர்த்ததைக் கண்டு அச்சம் அடைகின்றாள்.
பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா
மழகளி யானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே அரக்கன் திண் தோள் அருவரை நெரிய ஊன்றும்
குழகனே கோல மார்பா கோடிகா உடைய கோவே
ஆன்மாக்களின் தலைவனாக விளங்கும் இறைவனே, பாவங்களைப் போக்குபவனே, உனக்கு அடிமைத் தொண்டு புரிவதற்கு நான் என்னை பழக்கப் படுத்திக் கொண்டு தொடர்ந்து உனக்கு பல விதமான பணிவிடைகள் செய்தவாறு இருப்பேன். இறைவனே நீ என்னை உனது அடிமையாக ஏற்றுக் கொள்வாயாக.இளமையானதும் மதமயக்கம் உடையதும் ஆகிய யானையினை அதன் தோலை உரித்துக் கொன்ற பின்னர், அந்த ஈரப்பசை உடைய தோல் உனது உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும் பொருட்படுத்தாமல், யானையின் தோலினைப் போர்த்தவனே, கரிய நிறத்தை உடைய தோலினைப் போர்த்த பின்னரும் அழகான தோற்றத்துடன் என்றும் இளமையுடன் காட்சி அளிப்பவனே, அரக்கன் இராவணனின் வலிமையான தோள்கள் நொறுங்குமாறு, உனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றி, அரக்கனை மலையின் கீழ அடர்த்த குழகனே, பன்றிக் கொம்பு பூண்டு அழகுடன் விளங்கும் மார்பினை உடையவனே நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய் என்று பெருமானை அப்பர் பிரான் போற்றும் பாடல்.
ஆலவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.62.7) அப்பர் பிரான், மாற்று குறையாத தங்கம் போன்ற அழகன் என்று பெருமனை குறிப்பிடுகின்றார். ஆலவாயில் தலத்து இறைவனின் திருநாமங்களில் சொக்கன் என்பதும் ஒன்று. சொக்கன் என்ற சொல்லுக்கு அழகு, பொன், மயக்கம் என்று வேறு வேறு பொருட்கள் உண்டு. ஆலவாயிலில் உறையும் பெருமானுக்கு இந்த மூன்று பொருட்களும் பொருந்துவதை நாம் உணரலாம்.சொக்கத்தங்கம் என்றால் மாற்று குறையாத தங்கம் என்று பொருள். இந்த பாடலில் அப்பர் பிரான், மாத்தாய், மாற்று குறையாத தங்கமே என்று பெருமானை அழைப்பதை நாம் காணலாம். மாற்றிலா=இதனை விட உயர்ந்ததை காணமுடியாத நிலை: குழகன்=இளமையான அழகன்: வில்லீ=வில்லினை உடையவன்:கோல வில்லீ என்றால் அழகாக வில்லினை ஏந்தியவன் என்று பொருள். தெண்திரை=தெளிந்த நீரினை உடைய கடல், இங்கே பாற்கடலைக் குறிக்கும்.வழுவிலாது=எந்த விதமான கேடும், பாதகமும் இன்றி வழிபடுதல்:
வழுவிலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன்
செழுமலர்ப் பாதம் காணத் தெண் திரை நஞ்சம் உண்ட
குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள
அழகனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
மேற்கண்ட பாடலில் நஞ்சம் உண்ட குழகனே (அழகனே) என்று அப்பர் பிரான் கூறுகின்றார். திருமால் பிரமன் உட்பட அனைத்து தேவர்களும் அசுரர்களும்,திரண்டெழுந்த நஞ்சின் நெடியினைத் தாங்க முடியாமல் ஓடியபோது, அந்த நஞ்சினை உட்கொண்ட பின்னரும் உயிருடன் இருந்தது மட்டுமல்லாமல்,நஞ்சினை உட்கொண்டதால் சிறிதும் தளர்ச்சியோ, வாட்டமோ இல்லாமல் இருந்தவர் சிவபெருமான். தளர்ச்சி இருந்தால், அவரது முகம் வாட்டம் இருந்திருந்தால், அவரது அழகு குறைந்திருக்கும். நஞ்சம் உண்ட பின்னரும், பெருமான் அழகு ஏதும் குறையாமல் இருந்தார் என்பதை உணர்த்தும் பொருட்டு நஞ்சம் உண்ட குழகனே என்று குறிப்பிட்டு, நஞ்சினை உண்டதால் சிறிதும் தளர்ச்சி அடையாமல் சிவபெருமான் இருந்தார் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லும் அப்பர் பிரானின் நயம் ரசிக்கத்தக்கது. மாத்தாய்=ஒப்பு இல்லாதது, குறையேதும் இல்லாத செம்பொன்; இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு திருமாற்பேறு தலத்து பாடலை நினைவூட்டுகின்றது. இடபத்தின் மேல் வரும் இறைவனின் திருப்பாதங்களை புகழ்ந்து பாடினால் நமது குறைகளை நீக்கி, கூற்றுவன் நம்மை அணுகாதவாறு அருள் புரிவான் என்று கூறுகின்றார். பிறப்பு என்று ஒன்று எடுத்தபின்னர், இறப்பு நிச்சயம். இங்கே கூற்றுவன் அணுகாத நிலை என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, இந்த பிறப்பினைக் கடந்த நிலை. அதாவது பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து, பிறப்பு என்பது இல்லாமையால், கூற்றுவன் நம்மை அணுக வேண்டிய அவசியம் இல்லாத நிலை.
சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்
ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்
கூற்றை நீக்கி குறைவு அறுத்து ஆள்வதோர்
மாற்றிலாச் செம்பொன் ஆவர் மாற்பேறரே
அழகுடன் மிளிரும் எந்த பொருளைக் கண்டாலும், அந்த அழகிய தோற்றம் நமது மனதினில் சிறிது நேரம் நிலைத்து நின்று நமக்கு இனிய உணர்வினைத் தருவதை நாம் நமது அனுபவத்தில் உணர்கின்றோம். ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.74.8) அப்பர் பிரான், அழகனாகிய பெருமானை நினைத்ததால்,தனது நெஞ்சமும் அழகுடன் விளங்குகின்றது என்று கூறுகின்றார். பழகன்=பழகுவதற்கு மிகவும் இனியவன்; பருப்பன்=பெரிய வடிவினன்; பொருப்பு=மலை;குழவித் திங்கள்=பிள்ளை மதி, வளர்ந்து கொண்டிருக்கும் இளைய பிறைச் சந்திரன்; பொதுவாக சந்திரன் குளிர்ச்சியை தருவதாக கூறுவார்கள்; அந்த குளிர்ச்சித் தன்மையை சந்திரனுக்கு அளித்தவன் பெருமான் என்று திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. மதியினில் தண்மை வைத்தோன் என்று தானே மணிவாசகர் கூறுகின்றார். சந்திரனைத் தனது சடையினில் பெருமானின் சடை குளிர்ந்து காணப்பட்டது என்பதை உணர்த்த, தனது குளிர்சடையில் திங்களை மருவ வைத்த பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
பழகனை உலகுக்கெல்லாம் பருப்பனைப் பொருப்போடு ஒக்கும்
மழகளி யானையின் தோல் மலைமகள் நடுங்கப் போர்த்த
குழகனைக் குழவித் திங்கள் குளீர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே
ஆருயிர் திருவிருத்தம் என்று அழைக்கப்படும் பொது பதிகத்தின் கடைப் பாடலில் (4.84.11), அப்பர் பிரான் அழகனாகிய பெருமானின் திருவடி நிழலில் தனது ஆருயிர் இருப்பதாக கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், பெருமானின் திருவடி நிழலில், தனது ஆருயிர் இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறுகின்றார். பழக=உடைய: பாரிடம்=பூத கணங்கள்: பாணி செய்ய= தாளமிட: கிழவன்=உரிமையாளன்: இந்த பாடலில் அரக்கனின் இருபது தோள்கள் நெருக்கிய நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டாலும், அரக்கனுக்கு பெருமான் புரிந்த அருள் குறிப்பிடப்படவில்லை. திருவடியின் விரல் ஒன்றினால் நெருக்குண்ட அரக்கன் பெற்ற அருளினை விட, திருவடிக்கீழ் எப்போதும் நிலையாக இருக்குமாறு தான் பெற்ற அருள் பெரியது என்று நினைத்த அப்பர் பிரான், இராவணன் பெற்ற அருளினை விடுத்து தான் பெற்ற அருளினை உணர்த்தினார் போலும்.
பழக ஒர் ஊர்தி அரன் பைங்கண் பாரிடம் பாணி செய்யக்
குழலும் முழவொடு மாநடம் ஆடி உயர் இலங்கைக்
கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த
அழகன் அடிநிழல் கீழது அன்றோ எனது ஆருயிரே
வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.13.8) அப்பர் பிரான், பெருமானை அழகனே என்று அழைக்கின்றார். கழகு=படை; கழகின் மேல் வைத்த என்ற சொற்றொடர், பெருமானின் இலிங்கத் திருவுருவத்தை கட்டிக்கொண்டிருந்த சிறுவனின் மேல் பாசக் கயிற்றினை வீசி அவனின் உயிரைக் கவர முயற்சி செய்ததை உணர்த்துகின்ற தொடர். பெருமானின் திருவடிகளை தினமும் வழிபட்டு சிறுவன் மார்க்கண்டேயன் வணங்கிய தன்மை, பழகி நின்னடி சூடிய பாலன் என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. சாடிய=உதைத்த; கழகு என்பதற்கு வஞ்சனை என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர்.குறித்த காலத்தில் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனின் செயலில் வஞ்சனை இருப்பதாக தோன்றவில்லை. ஒருகால், பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த அடியானின் உயிரினை கவர்வதற்கு முன்னர், இயமன் பெருமானின் அனுமதியை பெறாத செய்கையை வஞ்சனை என்று கருதுகின்றனர் போலும். கழகு என்ற சொல் படையுடன் தொடர்பு கொண்டுள்ளதாக சிவக்கவிமணி தனது பெரிய புராண விளக்கத்தில் கூறுகின்றார்.தன்னை குறியாகக் கொண்டு பெருமான் காத்தருள வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் வேண்டுகின்றார்.
பழகி நின்னடி சூடிய பாலனைக்
கழகின் மேல் வைத்த காலனைச் சாடிய
அழகனே அணி வீழிமிழலையுள்
குழகனே அடியேனை குறிக்கொளே
இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.14.6) அப்பர் பிரான், பெருமானை ஆறு செஞ்சடை வைத்த அழகன் என்று குறிப்பிடுகின்றார்.இறையுணர்வு தனது உள்ளத்தில் ஊறி, உள்ளம் நெகிழ்ந்து உருக வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுவது, நமக்கு மணிவாசகரும் திருஞானசம்பந்தரும் அருளிய சில பாடல்களை நினைவூட்டுகின்றன. கூறுவார்=ஈசனாரின் திருநாமத்தை பன்முறையும் உச்சரிக்கும் அடியார்கள்;
ஏறது ஏறும் இடைமருது ஈசனார்
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்
ஊறிஊறி உருகும் என் உள்ளமே
திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.25.3), அப்பர் பிரான், எவரும் விரும்பாத கொன்றை மலரையும் பாம்பினையும் கோணலாக வளைந்த பிறைச் சந்திரனையும் தனது சடையில் பெருமான் சூட்டிக்கொண்ட நிலையிலும், கழுத்தினில் கருமை நிறத்தினில் கறை படர்ந்து இருந்த போதிலும், மண்டையோடு ஏந்தியவராக இருந்த போதிலும், இந்த பொருட்கள் அவரது அழகினை எந்த விதத்திலும் குறைக்காததால், அவர் அழகராக காணப்படுகின்றார் என்று சொல்கின்றார்.
நாறு கொன்றையும் நாகமும் திங்களும்
ஆறும் செஞ்சடை வைத்த அழகனார்
காறு கண்டத்தர் கையதோர் சூலத்தர்
பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.29.6) அப்பர் பிரான், தனது உடலின் ஒரு பாகத்தில் பெண்ணின் உருவத்தோடு திகழ்ந்த போதிலும், தனது சடையினில் எளிய மலராகிய கொன்றையையும் வில்வ இலைகளையும் அனைவராலும் தவிர்க்கப்படும் ஊமத்தை மலரையும் தாங்கியதுடன், தீச்சுடரை ஏந்திய வண்ணம் இருந்த போதிலும், அவரது அழகு சிறிதும் குறையாமல் காணப்படுகின்றது என்று அப்பர் நாயகி குறிப்பிட்டு வியக்கும் பாடல். இந்த பாடல் அகத்துறை வகையைச் சார்ந்தது. இறைவனுடன் சேராது ஏக்கத்தில் இருக்கும் தனது மகள், அந்த ஏக்கத்தினால் உடல் மெலிந்து தனது கை வளையல்கள் கழன்று வருந்தும் நிலை உணர்த்தப் படுகின்றது. குழல்=சுருண்ட முடியினை உடைய சடை தையல்=பெண், இங்கே பார்வதி தேவி; தனது பெண்ணின் ஏக்கத்தைத் தீர்த்து உடல் நலத்துடன் இருக்கும் வண்ணம் பெருமான், தனது மகளுக்கு அருள் புரிய வேண்டும் என்று அவளது தாயார் இறைஞ்சும் பாடல்.
குழலும் கொன்றையும் கூவிள மத்தமும்
தழலும் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழகன் ஆவடு தண்டுறையா எனக்
கழலும் கைவளை காரிகையாளுக்கே
திருப்பராய்த்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.30.11) அப்பர் பிரான், பெருமானை அழகன் என்று குறிப்பிடுகின்றார். பரக்கும்=எங்கும் பரந்து பாயும்; இருக்கை= இருப்பிடம்; பொருக்க=விரைந்து; பெருமானைக் குறித்து செய்யப்படும் வழிபாடு தங்களது வினைகளை அறுத்து ஒழிப்பதை அடியார்கள் உணரலாம் என்று மிகுந்த உறுதியுடன் அப்பர் பிரான் கூறுகின்றார்.
அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்
பரக்கு நீர்ப் பொன்னி மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய ஈசனை ஏத்துமின்
பொருக்க நும் வினை போயறும் காண்மினே
பெருமானின் அழகினால், பண்பினால் கவரப்பட்ட அப்பர் நாயகி அழகனே என்றும் அண்ணலே என்றும் இறைவனை அழைத்து, தன்னை இகழாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கெஞ்சுவதாக, பெண்ணின் தாயார் கூறுவது போன்று அமைந்த அகத்துறை பாடல், கழிப்பாலை தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பாடலாகும் (5.40.3). காதல் வயப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் அனைவருக்கும் தங்களது பெண் ஒன்றுமறியாத சிறிய பெண் என்று தோன்றுவது உலக இயற்கை. அப்பர் நாயகியின் தாயும் அவ்வாறே நினைப்பதை நாம் இந்த பாடலில் காணலாம். சற்றே மிகைப் படுத்தி, .தனது பெண்ணின் வயது மழலை மொழி மாறாத வயது என்றும், திருத்தமான சொற்களைப் பேசத் தெரியாத பெண் என்றும், தனது பெண்ணை, அப்பர் நாயகியின் தாய் குறிப்பிடுகின்றாள். ஏதும் அறியாத பெண்ணை, சிவபெருமான் மயக்கி அவளது மனத்தினைக் கொள்ளை கொண்டுவிட்டான் என்பது தாயின் குற்றச்சாட்டு. அகப்பொருள் வகையில் அமைந்த பாடல் என்றாலும், தங்களது ஆன்மாவினை பெண்ணாக உருவகித்து, அனைவருக்கும் ஆண்மகனாக திகழும் சிவபெருமானின் பால் காதல் கொண்டுள்ள ஆன்மாவின் நிலை இத்தகைய பாடல்கள் மூலம் உணர்த்தப்படுகின்றது. சிவபெருமானே என்னை நீ இகழலாமோ என்று அப்பர் நாயகி கேட்பதாக இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபெருமானின் பண்புகளால், அழகால் கவரப்பட்டு அவன் மீது காதல் கொண்டு, தங்களை சிவபெருமானுக்கு அர்ப்பணித்த ஆன்மாக்கள் மிகவும் அதிகமாக இருப்பதாலும், அந்த வரிசையில் தான் இப்போது தான் சேர்ந்ததால், மிகவும் புதியதாக வந்த தன்னை இகழ்ந்து சிவபெருமான் புறக்கணிப்பானோ என்ற அச்சம் நாயகியின் மனதில் தொனிப்பதை நாம் இந்த பாடலில் காணலாம்.
மழலை தான் வரச் சொல் தெரிகின்றிலள்
குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ
அழகனே கழிப்பாலை எம் அண்ணலே
இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே
பெருமானுடன் சேர்ந்த பொருட்கள் அனைத்தும், அதற்கு முன்னர் எந்த நிலையினில் இருந்தாலும், பெருமானுடன் சேர்ந்த பின்னர் அழகுடன் பொலிவதாக அப்பர் பிரான் உணர்த்தும் திருநாரையூர் பதிகம் நமது நினைவுக்கு வருகின்றது. இந்த தலத்து இறைவனின் திருநாமம் சௌந்தர்யநாதர், அழகியநாதர் பெருமானின் அழகினில் மெய்ம்மறந்த அப்பர் பிரான், இந்த பெயரினுக்கு ஏற்ப தலத்து இறைவனுடன் சேர்ந்த பொருட்கள் அனைத்தும் அழகுடன் விளங்கி பெருமானுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக வியந்து, இந்த பதிகம் (5.55) பாடியுள்ளார். அம்ம என்பது வியப்பினை குறிக்கும் சொல். இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் அம்ம அழகிதே என்று முடிகின்றன. மடந்தை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு கூறாக கொண்டிருந்தாலும், வளைந்த ஒற்றைப் பிறையினை சூடியிருந்தாலும், கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றிருந்தாலும், புலித்தோலை ஆடையாக உடுத்திருந்தாலும், உடலெங்கும் திருநீற்றினைப் பூசி இருந்தாலும், நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறத்தில் கறை கொண்ட கழுத்தினை உடையவராக இருந்தாலும்,அருவருக்கத் தக்க காய்ந்த வெண்மை நிறம் உடைய மண்டையோட்டினை தனது கையில் தாங்கியிருந்தாலும், கொக்கின் இறகினை அணிந்திருந்தாலும்,தலைமாலையுடன் காணப் பட்டாலும், விரித்த சடையினை உடையவராக இருந்தாலும், வில்வ இலைகளை மாலையாக ஏற்றிருந்தாலும், எலும்பு மாலையை பூண்டிருந்தாலும், அழகேதும் அற்ற வேடுவக் கோலம் பூண்டிருந்தாலும், கூர்மையான மழு சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தியிருந்தாலும், எருதினை வாகனமாக கொண்டிருந்தாலும், நண்பகலில் பலிக்கு திரிந்தாலும், பெருமானின் திருக்கோலம் மிகவும் அழகாக காணப் படுகின்றது என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தின் பாடல்களில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. பெருமை பொருந்திய இமயமலைக்கு அரசனாகிய, இமவானின் மகளாகிய பார்வதி தேவியினைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டவனும், வளைந்த பிறையினைத் தனது சடையில் சூட்டிக் கொண்டவனும், நறுமணம் வீசும் சோலைகள் சூழ்ந்த நாரையூர் நகரில் வீற்றிருக்கும் நம்பனும் ஆகிய சிவபெருமான், தனது சடையில் கங்கை ஆற்றினையும் தரித்துள்ளான்; ஆயினும் அவனது திருமேனி மிகவும் வியப்பூட்டும் விதமாக அழகு பொருந்தியதாக விளங்குகின்றது என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.
வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு
ஆறு சூடலும் அம்ம அழகிதே
திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.52.8) அப்பர் பிரான், தனது உடல் முழுவதும் சாம்பல் பூசிக் கொண்டவராக காணப்பட்டாலும், பெருமான் அழகராகவே திகழ்கின்றார் என்று கூறுகின்றார். சாந்தம்=சந்தனம்; ஏனையோர் நறுமணம் வீசும் சந்தனத்தை விரும்பி உடல் முழுவதும் பூசிக் கொள்வது போன்று, திருநீற்றினை இறைவன் தனது உடல் எங்கும் பூசிக் கொள்ளும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. பாடம் கேட்ட சனகாதி முனிவர்கள் முதியவராக காணப்பட, அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் பெருமான் மிகவும் இளையவராக இருக்கும் நிலையை நாம் பல திருக்கோயில்களில் காண்கின்றோம், இந்த நிலையை உணர்த்தும் பொருட்டு, இளமையுடன் அழகாக விளங்கும் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.
கழல் கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்
தழல் கொள் மேனியர் சாந்த வெண்ணீறு அணி
அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய
குழகர் போல் திரு நாகேச்சரவரே
குரக்குக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.75.7) அப்பர் பிரான், பெருமானை அழகனார் என்று அழைக்கின்றார். மஞ்ஞை=மயில்;மயில்களின் குரல் கேட்பதற்கு இனிமையக இருக்காது என்பதால் ஆடும் என்ற சொல் ஆலும் எனத் திரிந்ததாகப் பொருள் கொள்வது பொருத்தம். பாலர் என்ற சொல்லுக்கு அடைந்தவர் என்று பொருள் கொண்டு, குரக்குக்கா தலத்தை அடைந்து பெருமானை வழிபடும் அடியார்களுக்கு பெருமான் பரிந்து உதவி செய்வார் என்று பொருள் கொள்ளவேண்டும்.
ஆல நீழல் அமர்ந்த அழகனார்
காலனை உதை கொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்
பாலருக்கு அருள் செய்வர் பரிவொடே
திருச்சேறை பதிகத்தின் பாடலில் (5.77.9) அப்பர் பிரான், பெருமானை அழகனார் என்று குறிப்பிட்டு, அழகனாகிய பெருமான் இருக்கையில் நாம் நமது வாழ்க்கையில் எதற்கும் அஞ்ச வேண்டாம் என்று கூறுகின்றார். அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதுமில்லை என்று முழங்கியவாறு, சமண குருமார்களின் சூழ்ச்சிகளை பெருமானின் துணையொடு எதிர்கொண்டு மீண்டவர் அல்லவா. நம்மையும் அவ்வாறு இறைவன் மீது நம்பிக்கை வைத்து,இறைவனை வழிபட்டு, எந்நாளும் துன்பமற்ற இன்பமான வாழ்க்கை வாழுமாறு வழிநடத்தும் பாடல். பண்டுள சுற்றம்=தொன்மையான சுற்றம்;விழவிடல்=ஒதுக்குதல்; வேண்டிய=வாழ்வதற்கு தேவையான; பழகுவதால் ஏற்பட்ட நண்பர்களும், தொன்மையாக நாம் பிறந்த நாளிலிருந்து நமக்கு சுற்றமாக இருக்கும் உறவினர்களும், உங்களால் பயன் ஏதும் இனிமேல் விளையாது என்று அறிந்தால் உங்களை விட்டு விலகி விடுவார்கள் என்பதால்,வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை எவ்வாறு அடைவது என்று நீர் கவலை கொள்ள வேண்டாம். பெருமை நிறைந்த திருச்சேறை தலத்தில் உள்ள செந்நெறி திருக்கோயிலில் பொருந்தி உறைகின்ற அழகனாகிய பெருமான் உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றான். எனவே நீங்கள் அச்சம் ஏதும் கொள்ள வேண்டியதில்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பழகினால் வரும் பண்டுள சுற்றமும்
விழவிடாவிடில் வேண்டிய எய்தொணா
திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய
அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே
ஆமாத்தூர் தலத்து இறைவனுக்கு அழகிய நாதர் என்பதே திருநாமம். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களையும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே என்று தொடருடன் அப்பர் பிரான் முடிக்கின்றார். சிவபிரானின் அழகில் மயங்கி, சிவபிரான் பால் ஈடுபட்டு, பசுத்தன்மை இழந்த உயிரின் உயர்ந்த நிலையினைக் குறிக்கும் பாடலாக சிவக்கவிமணி சுப்பிரமணியம் இந்த பாடலை கருதுகின்றார். சிவபிரானின் அழகில் மயங்கி அவரிடத்தில் தனது மனதைப் பறிகொடுத்த பெண்மணி, எப்போதும் சிவபிரானின் நினைவாகவே இருந்ததால் கனவிலும் சிவபிரானையே காண்கின்றாள்.தான் கனவில் கண்ட காட்சிகளையும், அப்போது அடைந்த உணர்வுகளையும் கூறுவது போல் அமைந்த அகத்துறைப் பாடல் என்றும் கூறுவதுண்டு.ஆமாத்தூர் அழகர், பிச்சை ஏற்கச் சென்ற போது, அவருக்கு பிச்சையிடச் சென்ற பெண்மணி, அவரை நேரில் கண்டு அவரது அழகில் மயங்கி, அவர் பால் தீராத காதல் கொண்டு, அவரே தனக்கு உரிய மணாளர் என்று நினைக்கின்றாள். ஆனால் சிவபெருமான், அவளை விட்டு நீங்கிச் செல்லவே,வருத்தமடைந்து, தனது எண்ண ஓட்டங்களை மற்றவர்களிடம் சொல்லி, தன்னை சிவபெருமானுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தும் பதிகம். தன்னை விட்டுவிட்டுச் சென்று விட்டாரே என்ற வருத்தத்தையும் மீறி, வந்து சென்றவர் மிகவும் அழகியவர், என்று ஒவ்வொரு பாடலிலும் கூறுவதிலிருந்து, பெருமானின் அழகு, அப்பர் நாயகியின் மனதினில் ஏற்படுத்திய தாக்கத்தை நாம் உணர முடிகின்றது. தாருகாவனத்து இல்லத்தலைவிகள், சிவபிரான் பிச்சைப் பெருமானாகச் சென்றபோது அவரது அழகில் மயங்கி, அவரைப் பின்தொடர்ந்துச் சென்றது அப்பர் பிரானின் நினைவுக்கு வந்தது போலும். பிச்சைப் பெருமானின் (பிக்ஷாடனர்) அழகிய கோலத்தையும், தாருகாவனத்துப் பெண்கள் தங்களை மறந்த நிலையில் சிவபெருமானை பின்தொடர்ந்த நிலையையும் மனக்கண்ணால் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான், அவர் பால் காதல் கொண்ட தலைவியாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு, தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அழகிய பதிகம். அப்பர் பிரான் உருவாக்கிய நாயகியை நாம் அப்பர் நாயகி என்றே அழைக்கலாம். அப்பர் நாயகியின் எண்ண ஓட்டங்கள், மிகவும் சுவையாக இந்த பதிகத்தின் பாடல்களில் கூறப்பட்டுள்ளன. இந்த பதிகத்தின் முதல் பாடலை நாம் இங்கே காண்போம்.
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மைக்
கண் அம்பால் நின்று எய்து கனலப் பேசிக் கடியதோர் விடையேறிக் காபாலியார்
சுண்ணங்கள் தாம் கொண்டு துதையப் பூசித் தோலுடுத்து நூல் பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே
வண்ணங்கள்=தாளத்தோடு பொருந்தப் பாடும் இசைகள்; வலிசெய்து=வலிமை காட்டி, இங்கே ஆடற்கலையின் தனக்கிருந்த திறமை காட்டி என்று கொள்ள வேண்டும். வளை கவர்ந்தார்= காதலன் சிவபெருமான் வளைகளைக் கவர்ந்தார்; காதலன் பால் கொண்ட அன்பால், அவன் பிரிவு வெகுவாக தலைவியை பாதிக்க, அவளது உடல் மிகவும் மெலிந்து விடுகின்றது. உடல் இளைத்தது மட்டுமல்லாமல், கைகளும் மெலியவே தலைவி தனது கைகளில் அணிந்திருந்த வளையல்கள் நில்லாமல் கழன்று விடுகின்றன. இந்த நிலைக்குத் தான் தள்ளப்பட்டதற்கு, தன்னை புறக்கணித்த காதலனே காரணம் என்பதால், அவனை வளையல் கவர்ந்த கள்வனாக கருதுவது சங்க இலக்கியங்களின் மரபு. இதே மரபு தேவாரப் பாடல்களிலும் பின்பற்றப் பட்டுள்ளது.
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.17.1) தனது உள்ளங்கையில் தீச்சுடரை ஏந்தியும் கோவணம் உடுத்தியும் மண்டையோட்டினை பிச்சைப் பாத்திரமாக ஏந்தியும் காட்சி தரும் பெருமான் அழகராக திகழ்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கோடல=கோள்+தால; தனது கையினில் பிரம கபாலத்தை ஏந்தியவராக இருப்பினும் பெருமான் அழகியர் என்று கூறுகின்றார்.
ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர் அழகர் படையுடையர் அம் பொற்றோள் மேல்
நீறு தட வந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம்
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்
ஈறும் நடுவும் முதலுமாவார் இடைமருது மேவி இடம் கொண்டாரே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.29.6) அப்பர் பிரான், அழகன் என்று குறிப்பிட்டு, அந்த அழகனை அறியாது தான் தனது வாழ்வினில் பெரும் பகுதியை வீணாக கழித்து விட்டேன் என்று வருந்துகின்றார். விழவன்=கோயில் திருவிழாக்களை விரும்புபவன்; பழகிய வினைகள்=முந்திய வினைகளை நுகரும் சமயத்தில், அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவிக்கும் போது நமது பழக்கத்தினால் நாம் சேர்த்துக் கொள்ளும் வினைகளை ஆகாமிய வினை என்று வடமொழியில் சொல்வது வழக்கம். வினைகளால் ஏற்படும் இன்ப துன்பங்களை ஒன்று போல் கருதி,இன்பத்தினால் மகிழ்ச்சியும் துன்பத்தினால் வருத்தமும் அடையாமல், அனைத்தும் இறைவன் செயல் என்று கருதும் பக்குவம் இருவினையொப்பு என்று அழைக்கப் படும். இந்த பக்குவம் இறைவனின் அருளால் தான் நமக்கு ஏற்படும். இந்த நிலையை அப்பர் பிரான் அடைந்த தன்மையை நாம் அவரது சரித்திரத்தில் காண்கின்றோம். இந்த நிலை அடைந்தவர்கள், தாங்கள் நுகரும் வினைகளால் எந்த மாற்றமும் அடையாமல் இருப்பதால் அவர்களுக்கு,மேலும் வினைகள் (ஆகாமிய வினைகள்) சேர்வதில்லை. இவ்வாறு அத்தகைய உயிர்களுக்கு அருள் புரிபவன் சிவபெருமான் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பாவகன்=அனைவராலும் தலைவனாக பாவிக்கப் படுபவன்;
பழகிய வல்வினைகள் பாற்றுவானைப் பசுபதியைப் பாவகனைப் பாவம் தீர்க்கும்
குழகனைக் கோளரவு ஒன்றாட்டுவானைக் கொடுகொட்டி கொண்டதோர் கையான் தன்னை
விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை
அழகனை ஆரூரில் அம்மான் தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.31.5) அப்பர் பிரான், அழகா என்று இறைவனை அழைத்து, பயனடையுமாறு தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுகின்றார். இழைத்த நாள்=ஒருவனுக்கு விதியால் முன்னமே தீர்மானிக்கப்பட்ட வாழ்நாள். அந்த நாள் என்னவென்று நமக்குத் தெரியாது;எனினும் அத்தகைய நாள் ஒன்று உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அரணம்=பாதுகாப்பு. அடியேன் உன் அரணம் கண்டாய் என்ற தொடரை.இறுதி அடியில் குற்றமில்லை என்ற சொல்லின் முன்னர் சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். தான் உணர்ந்த உண்மையினை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆசானாக அப்பர் பிரான் திகழ்வதை, அவரே உணர்த்துவதை நாம் இங்கே காணலாம். பிஞ்ஞகன்=அழகாக பின்னப்பட்ட தலைமுடியை உடையவன். நெஞ்சமே, உனக்கு குறிக்கப்பட்டுள்ள வாழ்நாள் முடிவதன் முன்னம், நீ பிறவிப் பெருங் கடலைத் தாண்டவேண்டும். அது எவ்வாறு இயலும் என்பதை நான் உனக்கு சொல்லிக் கொடுக்கின்றேன்; இரவும் பகலும் எமது பெருமானைத் துதித்து, வாழ்த்தி, நான் செய்த எல்லாத் தவறுகளையும் பொறுத்து அருளும் பெருமானே என்றும், தலைமுடியை மிகவும் அழகாக பின்னியிருப்பவனே என்றும், நீலகண்டனே என்றும், சுருண்ட சடையை உடைய தலைவனே என்றும், ஆரூரில் உறையும் அழகனே என்றும் பலமுறை அழைத்து கூப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொள். உனக்குப் பாதுகாவலாக இருக்கும் நான், நீ என்ன செய்யவேண்டும் என்பதனை உணர்த்திவிட்டேன். குற்றம் ஏதும் என்மேல் இனி இல்லை. நீ மேற்சொன்னவாறு செயற்படாமல் இருந்தால் குற்றம் உன்னுடையது தான், இதனை உணர்ந்து உடனே செயலில் இறங்குவாயாக என்பதே இந்த பாடலில் நமக்கு உணர்த்தப்படும் அறிவுரை..
இழைத்த நாள் எல்லை கடப்பதென்றால் இரவினோடு நண்பகலும் ஏத்தி வாழ்த்திப்
பிழைத்தது எல்லாம் பொறுத்தருள் செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும்
அழைத்தலறி அடியேனுன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம் கொண்ட அழகா என்றும்
குழற்சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றமில்லை என் மேல் நான் கூறினேனே
வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.48.10) அப்பர் பிரான், பெருமானை குழகனும் அழகனுமாக விளங்கும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பாலன்=சிறுவன், இங்கே வாமன அவதாரம் எடுத்து சிறுவனாக மகாபலியை அணுகி தானம் கேட்ட திருமாலை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பாலனாக இருந்தவன் தானே, மூன்றடி மண்ணினை தானமாக பெற்ற பின்னர் மூன்று அடிகளால் அளப்பதற்கு திரிவிக்ரமனாக மாறினான்.அவ்வாறு நெடிதுயர்ந்த திருமாலும் காணாத வகையில் தீப்பிழம்பாக தோன்றியவன் என்பதை உணர்த்தும் பொருட்டு, இங்கே திருமால் உலகளந்த செய்கை குறிப்பிடப் படுகின்றது. பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காணும் முயற்சியில் தோல்வி அடைந்த பிரமனும் திருமாலும், பெருமானின் திருவடியையும் திருமுடியயும் கண்டளக்கும் முயற்சியில் தோல்வி அடைந்த பின்னர், பெருமானின் உண்மை தன்மையை அறிந்து கொண்ட பின்னர்,தங்களது தலையின் மீது கைகளை தூக்கியவாறு பெருமானைப் பணிந்து வணங்கினார்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
பங்கயத்து மேலானும் பாலனாகி உலகளந்த படியானும் பரவிக் காணாது
அங்கை வைத்த சென்னியார் அளக்க மாட்டா அனலவன் காண் அலைகடல் சூழ் இலங்கை வேந்தன்
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன்காண் அழகன்காண் கோலமாய
மங்கையர்க்கோர் கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.53.1) அப்பர் பிரான், பெருமானை ஆனேறது ஏறும் அழகர் என்று குறிப்பிடுகின்றார்.வரை=மலை; மால்வரை=பெரிய மலை, இங்கே மேரு மலையினை குறிக்கின்றது. கால் வளை=இரண்டு முனைகளும் வளையுமாறு; கான்=காடு; கரி=ஆண் யானை; துடி=இடையில் சுருங்கி காணப்படும் உடுக்கை எனப்படும் இசைக்கருவி; இதழி=கொன்றை மலர்; அடிகள் என்பதற்கு தலைவர் என்று பொருள்.சுவாமி என்ற வடமொழிச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல். கட்டங்கம்=மழு ஆயுதம்;
மானேறு கரமுடைய வரதர்போலும் மால்வரை கால் வளை வில்லா வளைத்தார்போலும்
கானேறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கைக்கொண்டார் போலும்
தேனேறு திரு இதழித் தாரார் போலும் திருவீழிமிழலை அமர் செல்வர் போலும்
ஆனேறது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.54.6) அப்பர் பிரான், பெருமானை, அம்பலத்துள் நடமாடும் அழகன் என்று குறிப்பிடுகின்றார். ஏழ் பொழில்=ஏழ் உலகங்கள்: அறையார்=ஒலிக்கும் தன்மை கொண்ட; கறையார்=விடம் பூசப்பட்ட; அம்பின் நுனியிலும் மற்ற ஆயுதங்களின் நுனியிலும் நஞ்சு கலந்த பூச்சு பூசப் படுவது பண்டைய வழக்கம். ஒலிக்கும் கழல்கள் என்று அப்பர் பெருமான் குறிப்பிடுவது நமக்கு,நடராஜப் பெருமான் தனது காலில் அணிந்துள்ள கழல்கள் எழுப்பிய ஒலியினை சேரமான் பெருமாள் நாயனார் கேட்குமாறு அருள் புரிந்ததை நினைவூட்டுகின்றது. இந்த செய்தியை சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். முறைப்படி தினமும் பூஜை செய்து பெருமானை வழிபட்ட,சேரமான் பெருமாள் நாயனாருக்கு, பெருமான் தனது திருவடிச் சிலம்பின் ஒலியினை கேட்கச் செய்தார் என்று ஒரு பெரிய புராணப் பாடலில் சேக்கிழார் கூறுகின்றார்.
அறையார் பொற்கழல் ஆர்ப்ப அணியார் தில்லையம்பலத்துள் நடமாடும் அழகன்தன்னைக்
கறையார் மூவிலை நெடுவேல் கடவுள் தன்னைக் கடல்நாகைக் காரோணம் கருதினானை
இறையானை என்னுள்ளத்து உள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.67.3) அப்பர் பிரான் பெருமானை அழகன் என்று குறிப்பிடுகின்றார். அளைவாயில்=புற்று உள்ள இடம்; ஆதரிக்கும்=விரும்பும்; வித்தகன்=திறமை உடையவன்; உளைதல்=வருந்துதல், இங்கே அவர்களது நிலை கண்டு வருந்தி இரங்குதல்; உலப்பு-அழிவு;கிளைத்தல்=நோண்டி எடுத்தல்; புற்றில் உள்ள பாம்பினை அணிந்த அழகனாகத் திகழ்பவனும், தன்னை விரும்பும் அடியார்களுக்கு என்றும் அன்பனாக இருப்பவனும், மெய்ஞானப் பொருளாக இருப்பவனும், திறமை உடையவனும், சிறிதளவேனும் பக்தி இருந்தாலும் அந்த பக்தியை ஒரு பொருட்டாக கருதி அடியார்களின் நிலை கண்டு வருத்தமுற்று அவர்கள் பால் இரக்கம் கொண்டு அவர்களது துன்பங்களைத் தீர்ப்பவனும், பக்தி இல்லாதார்கள் பால் இரக்கம் இல்லாதவனும், அழிவு இல்லாமல் என்றும் நிலைத்து நிற்பவனும், எனது மனதினுள்ளே புகுந்து நின்று எனது மனதின் மாசுகளை நோண்டியெடுத்து களைபவனும் ஆகிய பெருமானை, கீழ்வேளூரை ஆளும் அரசனாக அந்த தலத்தில் குடிகொண்டிருக்கும் கேடிலிப் பெருமானை நாடிச் சென்று அவனை வழிபடும் அடியார்கள், தாங்கள் இறந்த பின்னர் மறுபடியும் பிறத்தலாகிய கேட்டினை நீக்கியவர்களாக விளங்குவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை..
அளைவாயில் அரவசைத்த அழகன் தன்னை ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும்
விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளானானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு
உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள்புக்கு என் மனத்துமாக
கிளைவானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே
பொதுவாக கருமை நிறம் அழகினை அளிக்காது என்றும் அழகினை கெடுக்கும் என்றும் கருதப்படுகின்றது. ஆலகால நஞ்சினை பெருமான் தனது கழுத்தினில் தேக்கியதால், கருமை நிறம் உடைய கறையாக ஆலகால நஞ்சு பெருமானின் கழுத்தினில் படர்ந்து விடுகின்றது. இவ்வாறு நஞ்சினால் ஏற்பட்ட கருநீலக் கறை, பெருமானின் சிவந்த திருமேனியில் பதிக்கப்பட்ட கருமை நிறம் கொண்ட மாணிக்கக் கல் பதிக்கப்பட்டது போன்று அழகாக காணப் படுகின்றது என்று அப்பர் பிரான் வலஞ்சுழி மற்றும் கொட்டையூர் தலங்களை இணைத்து அருளிய பதிகத்தின் பாடலில் (6.73.1) கூறுகின்றார். வரு பொன்னி என்று பிலத்துவரத்திலிருந்து வெளியே சுழித்து வந்த காவிரி நதி என்று தலத்துடன் இணைந்த சம்பவத்தை குறிப்பிடுவதாக சிவக்கவிமணி திரு சி.கே.சுப்பிரமணியம் அவர்கள் பெரியபுராண விளக்கம் புத்தகத்தில் கூறுகின்றார். ஈசன், ஈஸ்வரன் என்றால் தலைவன் என்று பொருள், பரமேஸ்வரன் என்று தலைவர்களுக்கும் தலைவனாக பெருமானே விளங்கும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. மாதேவன் என்று இந்த சொல் மிகவும் அழகாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. குருமணி=அழகான நிறம் உடைய மணி;, பாடலின் நான்காவது அடியில் உள்ள கோமான் என்ற சொல்லினை அழகமரும் என்று சொல்லுடனும் சேர்த்து பொருள் கொள்ளவேண்டும். கோமான்=தலைவன். இதே பதிகத்தின் எட்டாவது பாடலில், நெருப்பினில் நின்று நடனம் ஆடிய போதும், பெருமான் அழகுடன் திகழ்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய் பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்
வருமணி நீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே
மணிமாலை அழகு தருவது போன்று எலும்பு மாலை எவருக்கும் அழகினைத் தராது என்பதை நாம் அறிவோம். மணி மாலை போன்று எலும்பு மாலையும் மிகுந்த அழகுடன் பெருமானின் திருமேனியின் மீது திகழ்வதாக அப்பர் பிரான், திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.74.7)குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் முருகன் மற்றும் விநாயகர் ஆகிய இருவரும் குறிப்பிடப் படுகின்றார்கள். பல திருமுறைப் பாடல்களில் முருகன் மற்றும் விநாயகர் பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும், இவர்கள் இருவரும் ஓரே பாடலில் இடம் பெறுவது அரிதாகும்.
தக்கனது வேள்வி கெடச் சாடினானைத் தலை கலனாப் பலியேற்ற தலைவன் தன்னை
கொக்கரைச் சச்சரி வீணைப் பாணியானைக் கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன்தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்தன்னை
நக்கனைக் வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்ற பெருமானின் அழகினில் மயங்கிய இல்லத்தரசிகள், பெருமானை பின் தொடர்ந்து சென்றது அப்பர் பிரானது நினைவுக்கு வந்தது போலும். குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.75.2) பலி திரியும் அழகர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். கலி=எழுச்சி, ஊக்கம், துடிப்பு; தேனல் இளம் துவலை=இளம் தேன் துவலை, சிறிய அளவிலான தேன் துளிகள்; அர்ஜுனனின் முதுகினில் மச்சம் இருந்ததாகவும், போரில் எப்போதும் வெற்றி கொள்பவனாக விளங்கி புறமுதுகிட்டு ஓடாதவனாக இருந்ததால் அவனது முதுகில் இருந்த மச்சத்தினை எவரும் காணும் வாய்ப்பு அமையவில்லை என்று கூறுவார்கள். இவ்வாறு போர்க் கலையில் புகழ் பெற்றிருந்த விஜயனின் போர்த் திறமையை, மிகவும் முக்கியமாக அவனது முதுகில் இருந்த மச்சத்தை, அன்னை பார்வதி தேவி காண விரும்பியதால், அவனை வலிய சண்டைக்கு அழைத்து அவனது வீரத்தினை பார்வதி தேவி காணுமாறு சிவபெருமான் செய்தார் என்று கூறுவார்கள். இந்த போரினில் தோற்ற அர்ஜுனன், புறமுதுகிட்டு ஓடவில்லை; தன்னை தோற்கடித்தது இறைவன் என்பதை புரிந்து கொள்ளும் அவன், இறைவனது திருவடியில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக மகாபாரதம் குறிப்பிடுகின்றது.வேட்களம் தலத்தில் உள்ள அர்ஜுனனின் சிலையில், முதுகு பாகத்தில் மச்சம் போன்று தழும்பு உள்ளது என்பர். விஜயனைக் கொல்ல வந்த பன்றியை கொன்ற பின்னர், பெருமான் நேரில் தோன்றி வரங்கள் வழங்காமல் இருந்ததும், உடன் பார்வதி தேவியை அழைத்து வந்ததும், வலிய சண்டைக்கு இழுத்ததும் மேலே குறிப்பிட்ட காரணத்தினால் தானோ என்று தோன்றுகின்றது.
கானல் இளம் கலி மறவனாகிப் பார்த்தன் கருத்தளவு செருத் தொகுதி கண்டார் போலும்
ஆனல் இளம் கடுவிடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும்
தேனல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம்பாளை விரி தேறல் நாறும்
கூனல் இளம்பிறை தடவு கொடிகொள் மாடக் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே
ஐந்து தொழில்களையும் புரிந்து கொண்டு பெருமான் எப்போதும் நடனம் ஆடுவதை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய நடனத்தை பெருமான் மிகவும் விரும்பி ஆடுகின்றார் என்று அப்பர் பிரான் இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.89.5) கூறுகின்றார். ஏழு பிறப்பும் அறுப்பவர் சிவபெருமான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தாங்கள் ஈட்டி சேமித்து வைத்துள்ள வினைத் தொகைகளுக்கு ஏற்ப, அனைத்து உயிர்களும் மறுபிறப்பு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளன. பிறவிகளை ஏழு வகைப் பிரிவுகளாக பெரியோர்கள் பிரிக்கின்றனர். தாவரம், நீரில் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள் மற்றும் தேவர்கள் என்பன இந்த ஏழுவகைப் பிறவிகள் ஆகும். தேவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியவர்கள் என்பதால், அவர்களையும் பிறப்பு வகைகளில் ஒன்றாக குறிப்பிடுகின்றார்கள். பெருமானின் அருளால் நமக்கு முக்திநிலை வாய்க்குமானால் நாம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஏழு வகைப் பிறவிகளில் ஒன்றாக பிறப்பதை தவிர்க்க இயலும். இந்த செய்தியை, அப்பர் பிரான், ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் என்று குறிப்பிடுகின்றார். பல வருடங்கள் சமண சமயத்தைத் சார்ந்து இழிந்த மனத்தவனாக தான் இருந்த தன்மையை அப்பர் பிரான், தாழ்வின் மனத்தேன் என்று குறிப்பிடுகின்றார் போலும். சூழும்=நம்மை வளைத்துச் சூழ்ந்து கொண்டு வினைகள் நமக்கு அளிக்கும் துயரங்கள்
சூழும் துயரம் அறுப்பார் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும்
தாழ்வின் மனத்தேனை ஆளாக் கொண்டு தன்மை அளித்த தலைவர் போலும்
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே
நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து, அடிமை ஓலை காட்டி, ஆட்கொள்ள வந்த பெருமானை புரிந்து கொள்ளாமல், அந்தணர்கள் எவருக்கும் அடிமை ஆவதில்லை என்று வாதிட்ட சுந்தரர், பின்னர், திருவெண்ணெய்நல்லூர் வழக்காடு மன்றத்தின் தீர்ப்பின் வழியே அடிமை ஓலை காட்டிய முதியவருக்கு அடிமையாக இருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. தான் வாழும் இடத்திற்கு தனது அடிமையாகிய சுந்தரரை கூட்டிச் செல்வேன் என்று வழக்காடு மன்றத்தில் உரைத்த முதியவர், திருவெண்ணெய் நல்லூர் திருக்கோயில் சென்றடைந்த பின்னர் மறைந்து விடுகின்றார். தனது உரிமையாளராகிய முதியவரை காணாமல் திகைத்த சுந்தரருக்கு பெருமான், விடையின் மீது அமர்ந்தவராக பெருமான் காட்சி தந்து, முதியவராக வந்தது தானே என்பதையும்,இல்லற வாழ்க்கையில் புகவிருந்த சுந்தரரை தான் தடுத்து ஆட்கொண்டது, கயிலாயத்தில் சுந்தரர் விடுத்த வேண்டுகோளுக்கு இசைந்த தான் அந்த வாக்குறுதியை நிறைவேற்றிய தன்மையையும் பெருமான் உணர்த்துகின்றார். நடந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் இருந்த பெருமானின் கருணையை உணர்ந்த சுந்தரர், இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானுக்கு அடிமையல்ல என்று தான் முன்னர் சொன்னது தவறு என்பதை உணர்ந்தவராக,அடிமை அல்லேன் என்று தான் இனிமேல் சொல்ல மாட்டேன் என்று இந்த பதிகத்தின் பாடல்களில் கூறுகின்றார். பதிகத்தின் பாடல்களில் பெருமானின் பல திருநாமங்களை குறிப்பிடும் சுந்தரர், பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (7.1.9) பெருமானை அழகா என்று அழைக்கின்றார்.
மழுவாள் வலனேந்தி மறையோதீ மங்கைபங்கா
தொழுவார் அவர் துயராயின தீர்த்தல் உன தொழிலே
செழுவார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அழகா உனக்கு ஆளாய் இனி அல்லேன் என்லாமே
பாம்பு பொதுவாக அனைவரையும் நடுங்க வைக்கும்; ஐந்து தலை நாகம் என்றால் கேட்கவே வேண்டாம். அதனால் அனைவராலும் வெறுக்கப்படுவது பாம்பு.பெருமான் அணிந்திருக்கும் சந்திரனோ வளைந்து ஒற்றைப் பிறையுடன் காணப்படுவது. எனினும் ஐந்தலைப் பாம்பினையும் பிறைச் சந்திரனையும் தனது சடையில் வைத்துள்ள பெருமான், அழகியவராகவே காணப் படுகின்றார் என்று சுந்தரர், நாட்டியத்தான்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.15.7) கூறுகின்றார். பெருமான் தன்னை விரும்பாவிடினும் தான் தொடர்ந்து பெருமானை தொடர்ந்து விரும்புவேன் என்றும், எவ்வாறேனும் பெருமானை அடைவதற்கு முயற்சி செய்வேன் என்றும் சுந்தரர் கூறுவது, அவரது உறுதிப்பாட்டினை நமக்கு உணர்த்துகின்றது.
ஐவாய் அரவினை மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதர நினைந்தேன் உள்ளம் உள்ளளவும்
உய்வான் எண்ணி வந்து உன்னடி அடைந்தேன் உகவாய் ஆகிலும் உகப்பன்
நைவான் அன்று உனக்கு ஆட்பட்டதடியேன் நாட்டியத்தான்குடி நம்பீ
ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் (7.47.2) சுந்தரர், தனது கையினில் தீப்பிழம்பினை ஏந்திய வண்ணம் இருந்த போதிலும் பெருமான் அழகுடன் திகழ்கின்றார் என்று கூறுகின்றார். அவியா= என்றும் அணையாது தொடர்ந்து எரியும் தீப்பிழம்பு; குரக்குத்தளி கொங்கு நாட்டில் உள்ள வைப்புத் தலம்.
கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
மங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
கங்குற் புறங்காட்டாடீ அடியார் கவலை களையாயே
பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடலில் (7.48.6) பெருமானை, சுந்தரர் ஆடுபாம்பது அரைக்கசைத்த அழகன் என்று அழைக்கின்றார். தன்னைச் சரண் அடைந்தவர்களை காப்பாற்றும் தன்மை உடையவன் பெருமான் என்பதை, அழியும் நிலையில் இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது தலையில் சூட்டிக்கொண்டு காத்த நிகழ்ச்சியின் மூலம் சுந்தரர் உணர்த்துகின்றார். சேஷம் என்றால் எஞ்சியிருப்பது என்று பொருள்;பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்கிய பின்னரும், பெருமான் எஞ்சியிருக்கும் தன்மையால் சேடன் என்று அழைக்கப்படுகின்றார்.
ஏடு வான் இளந்திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின் மேல்
ஆடு பாம்பது அரைக்க்சைத்த அழகனே அந்தண் காவிரிப்
பாடு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
திருத்தினைநகர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.64.1) சுந்தரர் பெருமானை, ஆறு தாங்கிய அழகன் என்று குறிப்பிடுகின்றார்.கொள்கை=கருத்து, விருப்பம்; சிவம்=மங்கலம், நன்மை; இந்த தலத்து இறைவனின் திருநாமம் சிவக்கொழுந்து ஈசன்;
நீறு தாங்கிய திருநுதலானை நெற்றிக் கண்ணனை நிரை வளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையினானைக் குற்றமில்லியை கற்றை அஞ்சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரார்க்கு அரிய சோதியை வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத்தினை நகருள் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
முதுகுன்றம் தலம் செல்லவேண்டும் என்ற விருப்புடன், முதுகுன்றம் செல்லும் வழி யாது என்று வினவிய சுந்தரருக்கு, கூடலையாற்றூர் செல்லும் வழியை காண்பித்து அந்த வழியில் தானும் உடன் நடந்து சென்ற முதியவர் சிவபெருமான் தான் என்பதை அறியாதவராக முதலில் சுந்தரர் இருந்தார்.கூடலையாற்றூர் தலத்தின் அருகே சென்றதும் உடன் வந்த முதியவர் மறைந்து விடவே, தன்னுடன் வந்தவர் சிவபெருமான் தான் என்பதை சுந்தரர் புரிந்து கொள்கின்றார். இவ்வாறு தன்னுடன் வந்த முதியவர் மிகவும் அழகாக இருந்த தன்மையை, அழகன் என்று சுந்தரர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.இவ்வாறு பெருமான் தன்னுடன் வந்து வழி காட்டிய தன்மையை அதிசயம் என்று குறிப்பிட்டு மனம் நெகிழ்கின்றார். அந்த அதிசயத்தை தான் முன்னமே அறியாது இருந்த பேதமையும் இங்கே குறிப்பிடப்படுகின்றது.
மழைநுழை மதியமொடு வாளரவும் சடை மேல்
இழைநுழை துகில் அல்குல் ஏந்திழையாளொடும்
குழையணி திகழ் சோலைக் கூடலையாற்றூரில்
அழகன் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே
மிகவும் அழகாக நடனம் ஆடும் பெருமானை, இலயங்கள் வெளிப்படும் வண்ணம் மிகவும் நளினமாக நடமாடும் பெருமானை, தாள ஒற்றுக்கு தகுந்தவாறு பிழையேதுமின்றி நடனமாடும் பெருமானை மிகவும் பொருத்தமாக அழகா என்று சுந்தரர் அழைக்கும் பாடல் திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பாடலாகும் (7.69.2). ஜதி என்ற வடமொழிச் சொல் சதி என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் சொற்றமிழ் பாடுக என்று இறைவன் பணித்த வண்ணம் பல தலங்கள் சென்று பதிகங்கள் பாடிய தான், தனது கண் பார்வையை இழந்த பின்னரும் தொடர்ந்து வெண்பாக்கம், திருமுல்லைவாயில், தக்கோலம் ஆகிய தலங்கள் செல்கின்றார். இறைவன் தன்னை பணித்த வண்ணம் அந்த தலங்களில் பதிகங்கள் பாடிய போதும், இறைவனை காண முடியாமல் இருந்த நிலை தனக்கு மிகுந்த வருத்தம் தந்ததால், அந்த நிலையை தன்னை வருத்தும் துன்பம் என்று இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார்.
கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே
உலகத்தவர் அனைவரும் பொன்னை மிகவும் சிறந்த பொருளாகவும் அழகிய பொருளாகவும் கருதுகின்றோம். பொன்னார் மேனியனாகத் திகழும் பெருமான்,பொன்னை விடவும் சிறந்த அழகியவராக பெருமான் விளங்குவதால், பெருமானின் திருமேனி அவரது திருமேனி பொன்னின் புகழினை அழித்த திருமேனி என்று குயிற்பத்து பதிகத்தின் பாடலில், மணிவாசக அடிகளரால் சொல்லப் படுகின்றது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் மிகவும் பழமையான குலமாக பாண்டிய குலமும் இறுதியாகத் தோன்றிய குலமாக சோழர் குலமும் கருதப்படுகின்றன. எனவே தான் பாண்டியர் சேரர் சோழர் என்று அடிகளார் இங்கே வரிசைப்படுத்தி கூறுகின்றார்.
உன்னை உகப்பன் குயிலே உன் துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்த நன்மேனிப் புகழில் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்கன் வரக் கூவாய்
திருவாசகம் அன்னைப்பத்து பதிகத்தின் பாடலில், மணிவாசகர் நிரம்ப அழகியர் என்று பெருமானை, பெருமான் பால் தீராத காதல் கொண்ட பெண் குறிப்பிடுவதாக அவளது தோழி கூறுவதாக அமைந்துள்ளது. நிரம்ப அழகியர் என்று சொல்வதன் மூலம், பெருமானின் அழகினை உணர்த்த அளவுகோல் ஏதும் பயன்படாது என்றும் எப்போதும் அழகிய திருக்கோலம் உடைய இறைவனையே தான் நினைத்துக் கொண்டு இருப்பதால், தனது மனம் ஆனந்தத்தில் திளைப்பதாகவும் இங்கே, மணிவாசக நாயகி கூறுகின்றாள்.
நித்த மணாளர் நிரம்ப அழகியர்
சித்தத்து இருப்பரால் அன்னே என்னும்
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர் ஆனந்தரால் அன்னே என்னும்
சென்னிப்பத்து பதிகத்தின் பாடலில் பெருமானை அழகன் என்று மணிவாசக அடிகளார் அழைக்கின்றார். தான் எப்போதும் இறைவனின் திருவடிகளைப் பணிந்த வண்ணம் இருப்பேன் என்பதை, பெருமானின் சிவந்த திருவடியின் கீழே தனது தலை நிலை பெற்று நின்று பொலிவுடன் விளங்கும் என்று இந்த பதிகத்தின் பாடல்களில் அடிகளார் கூறுகின்றார். சிட்டன்= மேலானவன்: வட்ட மாமலர்=தாமரை மலர்; மட்டு=தேன்; சேவகன்=தலைவன்
அட்ட மூர்த்தி அழகன் இன்னமுதாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய்ச் சிவலோக நாயகன் தென் பெருந்துறை சேவகன்
மட்டுவார் குழல் மங்கையாளையோர் பாகம் வைத்த அழகன்றன்
வட்ட மாமலர்ச் சேவடிக் கண் நம் சென்னி மன்னி மலருமே
களந்தை ஆதித்தேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.9.4) கருவூர்த் தேவர், பெருமானை ஒழுகு நீர் கங்கை அழகர் என்று குறிப்பிடுகின்றார். பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து தொண்டு செய்து வரும் அடியார்களுக்கு எளியவராக இருந்து அருள் புரியும் பெருமான்,மிண்டர்களுக்கு அரியவராக விளங்குகின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். ஒழுகுநீர் கங்கை என்ற தொடர் மூலம், கங்கை நதியினைத் தனது சடையிலிருந்து, பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்க, விடுவித்தவர் பெருமான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. மிண்டர்=மூர்க்கர்;
பழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணி பொறுத்தருளும் பிச்சரே நச்சரா மிளிரும்
குழையராய் வந்தென் குடி முழுதாளும் குழகரே ஒழுகுநீர் கங்கை
அழகரே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே
ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை திருக்கோயில் உள்ள பெருமானை, காண்போரின் மனதினை சொக்கவைக்கும் அழகுடைய பெருமானை சொக்கன் என்றே, அழைப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், திருஞானசம்பந்தர் சொக்கன் என்றே (3.39.11)அழைக்கின்றார். எக்கர்=செருக்கு உடையவர். கையர்=வஞ்சக எண்ணம் உடைய கீழோர்; வாய்=வாய்மை; தான் அருளிய இந்த பதிகம், உண்மையை அடிப்படையாகக் கொண்ட பதிகம் என்று உணர்த்துகின்றார். இந்த பதிகம், மதுரையில் பாண்டிய மன்னனின் அவையில் அருளிய பதிகமாகும்.சமணத்துறவிகள் பலரும் சூழ்ந்து கொண்டு, சிறிய குழந்தையாகிய ஞானசம்பந்தரை அச்சுறுத்தும் வகையில் நெருங்கிய போது, குண்டர்களாகிய சமணத் துறவிகளால் ஞானசம்பந்தருக்கு தீங்கு ஏதும் ஏற்படுமோ என்று பாண்டிய அரசி கலக்கம் அடைந்தபோது, அவரை தேற்றும் வகையில் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், சொக்கேசன் தன்னுள் இருப்பதால், தான் சமணர்களுக்கு எளீயவன் அல்லேன் என்றும் அரசியார் வீணாக கவலை கொள்ளவேண்டாம் என்று அவரை தேற்றும் வண்ணம் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
எக்கராம் அமண் கையருக்கு எளியேன் அலேன் திருவாலவாய்ச்
சொக்கன் என்னுள் இருக்கவே துளங்கும் முடித் தென்னன் முன்னிவை
தக்க சீர்ப் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய்
ஒக்கவே உரை செய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே
தொண்டர்களுடன் தான் தங்கியிருந்த மடத்திற்கு, சமணர்கள் நள்ளிரவில் தீ வைத்த போது, தனது அடியார்களை, அஞ்சேல் என்று காப்பாற்றவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிய பாடலில் (3.51.3) திருஞானசம்பந்தர் இறைவனை சொக்கன் என்று அழைக்கின்றார். நான்மறைகளில் சொல்லப்பட்டுள்ள வழிமுறையை போற்றி பின்பற்றாது, அவற்றுக்கு மாறாக செய்த தக்கனது யாகத்தினை அழித்த பெருமான், நான்மறைகளை பழித்துப் பேசும் சமணர்களின் தீய செயல்களையும் முறியடிக்க வேண்டும் என்று மிகவும் பொருத்தமாக வேண்டும் நயத்தினை இந்த பாடலில் நாம் உணரலாம். இந்த குறிப்பு நான்மறைகளின் தன்மையை பேணி பாதுகாப்பதில் இறைவனுக்கு உள்ள ஆர்வம் உணர்த்தப் படுகின்றாது. அந்த வஞ்சக சமணர்களுக்கு துணையாக இருந்த பாண்டிய மன்னனைச் சென்று, சமணர்கள் இட்ட தீ பற்ற வேண்டும் திருஞானசம்பந்தர் சொல்லிய வண்ணம், பாண்டிய மன்னனை வெப்பு நோய் பற்றியது சரித்திரம். இவ்வாறு பாண்டிய மன்னனைப் பற்றும், வெப்பு நோய் அந்த மன்னனை அழிக்கலாகாது என்பதையும் உணர்த்தும் வண்ணம் பையவே (மெதுவாகவே) சென்று பாண்டியர்க்கு ஆகவே என்று இந்த பதிகத்தின் மற்றொரு பாடலில் குறிப்பிடுகின்றார். பாண்டிய நாட்டில் சமண் சமயத்தை ஒடுக்கி,மீண்டும் சைவ சமயத்தை தழைக்கச் செய்வதே திருஞானசம்பந்தரின் நோக்கமாக இருந்ததை நாம் உணரலாம்.
தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
சொக்கனே அஞ்சல் என்று அருள் செய்யெனை
எக்கராம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று பாண்டியர்க்கு ஆகவே
வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.5) திருஞானசம்பந்தர் பெருமானை சொக்கர் என்று அழைக்கின்றார். திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளும், ஒரே நேர்கோட்டில் வாராத வண்ணம் இயங்கிக் கொண்டு இருந்தமையால், ஒன்றுக்கொன்று துணையாக இருந்த தன்மையை,துணை மிக்க எயில் என்று இங்கே குறிப்பிடுகின்றார். எயில்= கோட்டை; உக்கற=எரிந்து சாம்பல் பொடியாக மாறி அழிய; முனிந்து=கோபம் கொண்டு;திரிபுரங்களில் வாழ்ந்து வந்த தனது தொண்டர்கள் மூவர்க்கும் பெருமான் அருள் புரிந்து, தன்னருகே, வாயில் காப்பாளராகவும் குடமுழா வாசிப்பவராகவும் வைத்துக் கொண்ட செய்தி இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. கொக்கரவம்=அரவம் மிகுந்த மாமரச் சோலைகள்; மகளிர் விளையாடுவதால் அரவம் மிகுந்த நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. நிழல்=ஒளி; விளையாடும் மகளிரின் மேனி ஒளி. மாந்தளிர்களின் ஒளியை விடவும் மிகவும் அதிகமாக இருந்த நிலை குறித்து வண்டுகள் பாடுகின்றன என்றும் தன்னை அடைந்து வழிபடும் அடியார்களின் அச்சமும் துன்பமும் போகும் வண்ணம் அருள் புரியும் தலைவன் உறையும் இடம் என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்
சொக்கர் துணை மிக்க எயில் உக்கற முனிந்து தொழு மூவர் மகிழத்
தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கு நகர் தான்
கொக்கரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டிசை குலாம்
மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடம் போக நல்கு வேதிகுடியே
பெருமானின் திருமேனி நிறம் மிகவும் அழகியதாகவும் ஒளிச் சுடர் விடும் தன்மையிலும் காணப் படுகின்றது என்று அப்பர் பிரான் லிங்க புராணக் குறுந்தொகை பதிகத்தின் முதல் பாடலில் (5.95.1) சொல்கின்றார். புக்கு=சென்று அடைந்து; நாம் காணும் பொருட்களில் எல்லாம் இறைவன் கலந்து இருந்தாலும், அவ்வாறு இறைவன் இருப்பதை நம்மால் உணரமுடிவதில்லை. எனவே தான் இறைவனைத் தொழுவதற்காக திருக்கோயில்கள் அமைந்துள்ளன. எங்கும் கலந்து பரந்து நிற்கும் இறைவனின் தன்மையை, காணும் உயிர்களில் எல்லாம் இறைவன் கலந்து இருக்கும் தன்மையை, அப்பர் பிரான் போன்ற அருளாளர்கள் தான் உணர முடியும். அவர்களும் இறைவன் உறையும் பல திருக்கோயில்கள் சென்று இறைவனை வணங்கி வழிபட்டு பதிகங்கள் பாடியதை நாம் அறிவோம். எனவே இறைவனைத் தொழுவதற்கு முதலில் நாம் அவன் உறையும் திருக்கோயிலுக்கு செல்லவேண்டும். எனவே தான் நாம் தொழுவதில் முதல் படியாக, இறைவன் இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். அடுத்து அவனது தன்மையை புரிந்து கொண்டு, நம்பிக்கையுடன் திருக்கோயில் செல்லவேண்டும். அப்போது தான், உள்ளன்புடன் நாம் இறைவனைத் தொழ முடியும்.எனவே தான், இறைவன் இருக்கும் சென்றால் மட்டும் போதாது, முதலில் அவனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.இறைவனைத் தொழச் செல்லும் நாம் புதிய மலர்களை பறித்து எடுத்துச் செல்ல வேண்டும். பின்னர் இறைவனுக்கு மிகவும் அருகில் சென்று அவனை தரிசித்து வணங்கி நாம் எடுத்துச் சென்ற மலர்களை அவனது திருவடியில் சமர்பிக்க வேண்டும்.
ஆனால் இந்த செயல்களில் ஒன்றையும் செய்யாது, திருமாலும் பிரமனும் இருந்தனர். தங்களுக்குள் யார் பெரியவன் என்ற வாதத்தில் ஈடுபட்ட அவர்கள்,வேதங்களும் மற்ற தேவர்களும், சிவபெருமானே அனைவருக்கும் பெரியவன்; எனவே அவனைத் தொழுது வணங்க வேண்டும் என்று உணர்த்தியதையும் பொருட்படுத்தாது, தொடர்ந்து தங்களின் வாதத்தில் ஈடுபட்டனர். தழற்பிழம்பாக தங்களின் எதிரே பெருமான் தோன்றிய போதும், அதனை அவர்கள் இருவரும் உணரவில்லை. அதற்கு மாறாக தங்களது வலிமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டு, தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண்பதற்கு முயற்சி செய்தனர். எனவே தான் அவர்களால் இறைவனை உணரவும் முடியவில்லை, இறைவனது அடியையும் முடியையும் காணவும் முடியவில்லை. நக்கு=மகிழ்ந்த மனத்துடன்; அணைந்து=மிகவும் அருகில் சென்று; சொக்கு=அழகு;
புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்
நக்கு அணைந்து நறுமலர் கொய்திலர்
சொக்கு அணைந்த சுடரொளி வண்ணனை
மிக்கு காணல் உற்றார் அங்கு இருவரே
சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.87.2) அப்பர் பிரான், பெருமானை சொக்கன் என்று அழைக்கின்றார். சொக்கன் என்பது மதுரை ஆலவாய் திருக்கோயில் உள்ள இறைவனின் திருநாமங்களில் ஒன்று. சுந்தரேச்வரன் என்று இறைவனின் வடமொழி திருநாமமாக விளங்குகின்றது. சுந்தரன் என்றால் அழகு வாய்ந்தவன் என்று பொருள். சொக்க வைக்கும் அழகுடைய பெருமானை, சொக்கன் என்று திருஞானசம்பந்தரும் அப்பர் பிரானும் அழைத்து மகிழ்கின்றார்கள். சொக்கன்=கண்டார் மயங்கி விழும்படியான பேரழகு உடையவன்.
நக்கன் காண் நக்கரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூதகணம் நடமாட ஆடும்
சொக்கன் காண் கொக்கிறகு சூடினான் காண் துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வதாகவும்
பொக்கன் காண் பொக்கணத்த வெண்ணீற்றான் காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன் காண் செக்கரது திகழு மேனிச் சிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே
பொக்கணம்=திருநீறு வைக்கப்படும் சம்படம், ஒரு வகை பாத்திரம்; திக்கு=புகலிடம்; திக்கன்=புகலிடமாக உள்ளவன்; நக்கன்=குறைந்த ஆடைகளை உடையவன், கோவணம் மட்டுமே ஆடையாக கொண்டவன்; நக்க அரவம்=ஒளியை உடைய பாம்பு, பாம்பின் கழுத்தில் மாணிக்க கல் இருப்பதாக பண்டைய நாட்களில் கருதப்பட்டது.; பொக்கன்=பொலிவு உடையவன் சிறந்த அழகு படைத்த உமையம்மைக்கு தகுந்த மணவாளனும் கண்கவர் அழகனாக தானே இருப்பது தானே பொருத்தம். அவ்வாறு காண்போர் சொக்கும் அழகு வாய்ந்தவன் இறைவனை என்பதை இதே பாடலின் இரண்டாம் அடியில் உணர்த்திய அப்பர் பிரான், உமை அம்மையின் அழகிய மார்பகத்தைச் சேர்வதற்கு பொருத்தமான பொலிவினை உடைய பெருமான் என்று மூன்றாவது அடியினில் உணர்த்துகின்றார்.
ஒளிவளர் விளக்கே என்று தொடங்கும் திருவிசைப்பா (ஒன்பதாம் திருமுறை) பாடலில் திருமாளிகைத் தேவர், பொன்னம்பலத்தாடும் சொக்கன் என்று இறைவனை அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். இறைவனைப் பின்பற்றி தனது வாழ்க்கையை நடத்துவதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்று தேவர் இறைஞ்சும் பாடல்
தக்கன் நல் தலையும் எச்சன் வன் தலையும் தாமரை நான்முகன் தலையும்
ஒக்க விண்டு உருள ஒண் திருப்புருவம் நெறித்து அருளிய உருத்திரனே
அக்கு அணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆடப் பொன்னம்பலத்து ஆடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வு அறியாயைத் தொண்டனேன் தொடருமா தொடரே
பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.117.5) திருஞானசம்பந்தர் பெருமானை சுந்தரர் என்று அழைக்கின்றார். கொட்டுவர் தக்கை, அக்கு அரை ஆர்ப்பது, குறுந்தாளன பூதம், விட்டுவர் என்பு, கலப்பிலர் இன்புகழ், உலகின் மட்டு வருந்தழல் ஏந்துவர்,சூடுவர் மத்தமும் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். தக்கை=ஒரு வகை வாத்தியம்; அக்கு=சங்குமணி; அக்கு என்பதற்கு எலும்பினால் ஆன மாலை என்றும் பொருள். ஆனால் இங்கே சங்குமணி என்பதே பொருத்தமாக உள்ளது. வீட்டுதல்=கொல்லுல்; விட்டுவர் என்ற சொல்லினை வீட்டுவர் என்று நீட்டி பொருள் கொள்ள வேண்டும். என்பு என்ற சொல்லுக்கு புலி என்ற பொருளும் உள்ளது. கலப்பிலர்=தானே சென்று கலக்கும் தன்மை அற்றவர்; பெருமானை புகழ் சென்று அடைகின்றதே தவிர, பெருமான் புகழினை நாடி எந்த ஒரு செயலும் செய்வதில்லை. தாள்=கால்;குறுந்தாள் அன=குட்டையான கால்களை உடைய; மற்றவர் நம்மை புகழ்வது கேட்பதற்கு எப்போதும் இனியவாக இருக்கும் அதனால் தான் இன்புகழ் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உலத்தல்=குறைத்தல், அழித்தல்; உலவின்=உலகினை அழிக்கும் பொருட்டு வரும் பிரளயாக்னி; மட்டு=வளைத்து;திரைலோக்கி என்று அழைக்கப்படும் திருவிசைப்பா தலத்தின் இறைவன் திரைலோக்கிய சுந்தரன் என்று அழைக்கப்படுவதும் நமது நினைவுக்கு வருகின்றது.
கொட்டுவர் அக்கு அரை ஆர்ப்பது தக்கை குறுந்தாளன
விட்டுவர் பூதம் கலப்பிலர் இன்புகழின் என்பு உலவின்
மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான்
தொட்டுவரும் கொடித் தோணிபுரத்து உறை சுந்தரரே
கழுமலம் என்று அழைக்கப்ப்டும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.113.6) திருஞானசம்பந்தர் பெருமானை சுந்தரர் என்று அழைக்கின்றார். புகை தங்கும் நெருப்பினைத் தனது கையில் ஏந்தி நடமாடும் பெருமானின் கழல்களை தேவர்கள் புகழ்ந்து தொழுகின்றனர். தன்னை இகழ்ந்தும் தன் மீது பகை கொண்டு, தன் மேல் வெறி கொண்ட மானை தாருகவனத்து முனிவர்கள் ஏவிய போது, அந்த மானின் குணத்தினை மாற்றித் தனது இடது கையில் ஏந்திக் கொண்டவர் சிவபெருமான்; பக்குவப்பட்ட ஆன்மாக்களாகிய சனகாதி முனிவர்களுக்கு மானிட வடிவில் வந்து உபதேசம் செய்தவன் பெருமான். மின்னல் போன்று ஒளியுடன் மிளிரும் பெருமானின் சடை, மிகுந்த வெள்ளத்துடன் வந்த கங்கை நதியை தன்னில் மறைத்து வைத்துள்ளது.தகுந்த விரதம் மேற்கொள்ளும் அழகியராகிய பெருமான், எக்காலத்தும் அழியாது நிலைத்து நிற்கும் பூந்தராய் எனப்படும் தலத்தினில் சுந்தரராக உறைகின்றார்.
திகழ் கையதும் புகை தங்கழலே தேவர் தொழுவதும் தங்கழலே
இகழ்பவர் தாமொரு மானிடமே இரும் தனுவோடு எழில் மானிடமே
மிகவரு நீர்கொளும் அஞ்சடையே மின்னிகர்கின்றது அஞ்சடையே
தகவிரதம் கொள்வர் சுந்தரரே தக்க தராயுறை சுந்தரரே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.33.1) அப்பர் பிரான் பெருமானை, சுந்தரமானார் என்று குறிப்பிடுகின்றார்.வேதங்களில் காணப்படும் துதிகளை மந்திரங்கள் என்று கூறுவார்கள், வேத மந்திரங்களை தியானம் செய்தால், பலன்கள் உண்டு என்று நம்பப் படுகின்றது.பெருமானின் திருநாமத்தை தியானம் செய்வதால் பல நற்பலன்களை அடையலாம் என்பதால், பெருமானை மந்திரம் ஆனார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். எனவே வேதங்களாக உள்ள பெருமானை மந்திரம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ரிஷி என வடமொழிச் சொல் இருடி என்று தமிழாக்கப்பட்டுள்ளது. திருமாலின் பன்னிரண்டு திருநாமங்களில் ஒன்றான ரிஷிகேசன் என்பதை நாலாயிர திவ்யப்ரபந்த பாசுரங்கள் இருடிகேசன் என்று குறிப்பிடுகின்றன. சுந்தரம்=அழகு;
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரமானார் போலும் துதிக்கலாம் சோதி போலும்
சந்திரனோடு கங்கை அரவையும் சடையில் வைத்து
மந்திரம் ஆனார் போலும் மாமறைக்காடனாரே
வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.17.10) அப்ப்ர் பிரான் பெருமானை சுந்தரன் என்று குறிப்பிடுன்றார். சூலுதல்=தோண்டுதல்;வஞ்சனை சூல வல்ல என்று சொற்களை மாற்றி அமைத்துப் பொருள் கொள்ள வேண்டும். வஞ்சனை என்பதை நாம் அடியார்களுக்குச் செய்யப்படும் வஞ்சனை என்று பொருள் கொள்ளவேண்டும். பதிகத்தின் ஐந்தாவது பாடலில் இடர்கள் நீக்கியவன் என்று, இறைவன் தனது இடர்களை நீக்கி அருள் புரிந்ததை குறிப்பிடும் அப்பர் பிரான், வஞ்சனை செய்து தன்னை கொல்ல முயற்சி செய்த சமணர்களின் சூழ்ச்சிகளை இறைவன் முறியடித்த செய்கைகளை குறிப்பிடுகின்றார். நஞ்சு கலந்த சோறு ஊட்டப் பட்டதையும், கல்லுடன் கட்டப்பட்டு கடலில் தள்ளப்பட்டதையும் சமணர்கள் செய்த சூழ்ச்சி என்று தனது தேவாரப் பதிகங்களில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்
சூல வஞ்சனை வல்ல எம் சுந்தரன்
கோலமா அருள் செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச உதைத்து இருள் கண்டமாம்
வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய திருத்தாண்ட்கப் பதிகத்தின் பாடலில் (6.20.4) அப்பர் பிரான், பெருமானை சுந்தரர் என்று குறிப்பிடுகின்றார்.சுட்டங்கம்=இறந்தால் சுட்டு எரிக்கப்பட்ட உடல்கள்; சாம்பல் பூசியவனாக இருந்தாலும் பெருமானின் அழகு சிறிதும் குறையவில்லை என்பதை உணர்த்தும் முகமாக, சுந்தரன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். விடு தோடு=ஒளி விடும் தோடு என்றும் தொங்கும் தோடு என்றும் இரண்டு விதமாக பொருள் கூறப்படுகின்றது. பட்டங்கம்=இறந்து பட்ட உடலின் எலும்புகள் மற்றும் தலைகள்; கட்டங்கம் என்ற படையினை கையில் பற்றியவனும், கையில் கங்கணம் ஏந்தியவனும், ஒளி வீசும் தோட்டினை காதினில் அணிந்தவனும், எரிக்கப்பட்ட உடல்களின் சாம்பலைத் தனது உடல் முழுவதும் நிறைவாக பூசியவனும்,உடலில் சாம்பல் பூசிய பின்னரும் அழகனாக காட்சி தருபவனும், கையினில் சூலம் ஏந்தியவனும், இறந்து பட்ட உடல்களின் அங்கங்களாகிய எலும்புகள் மற்றும் தலை ஆகியவற்றை மாலையாக நிறைவாக அணிந்தவனும், பூத கணங்களுடன் கூடி பரந்த சுடுகாட்டினில் நடனம் ஆடுபவனும், திருநள்ளாறு தலத்தில் உறைவானும் ஆகிய இறைவனை அடியேன் தியானித்து வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்பதே இந்த பாட்லின் பொழிப்புரை.
கட்டங்கம் ஒன்று கையில் ஏந்திக் கங்கணமும் காதில் விடு தோடும் இட்டுச்
சுட்டங்கம் கொண்டு துதைய பூசிச் சுந்தரனாய்ச் சூலம் கை ஏந்தினானைப்
பட்டங்க மாலை நிறையச் சூடிப் பல்கணமும் தாமும் பரந்த காட்டில்
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.58.8) அப்பர் பிரான், பெருமானை பல இடங்களுக்கும் சுந்தரனாகச் செல்பவர் என்று கூறுகின்றார். மல்லார்=வளம் பொருந்திய; அடிகளே உமது ஊர் யாது என்று அப்பர் நாயகி கேட்டதற்கு, பெருமான், ஓர் ஊரினைக் குறிப்பிடாமல் பல இடங்களை குறிப்பிட்டது, பெருமான் தன்னைத் தவிர்ப்பதற்காகத் தான் என்பதை புரிந்து கொண்ட நாயகி, பெருமான் வலம்புரத்தில் உறைவதை தான் அறிந்து கொண்டதை உணர்த்தும் பதிகம். பல வகையான மனிதர்களும் தொடர்ந்து தன்னை வணங்கி வழிபடும் தலமாகிய பழனம் தனது பதி என்றும்,பழனம் மிகவும் பழமையான தலம் என்று குறிப்பிட்டு தானங்கே பண்டைய நாளிலிருந்தே உறைவதாக கூறிய பெருமான், பாசூர் தலமும் தனது பதி என்றார்.ஆனால் இந்த இரண்டு இடங்களுக்கும் செல்லாமல், இன்று நனிபள்ளி சென்று தங்கிவிட்டு அடுத்த நாள் அங்கிருந்து நள்ளாறு சென்று சேர்வதாக கூறினார். இவ்வாறு எந்த ஒரு இடத்தையும் தனது ஊராக குறிப்பிட்டுச் சொல்லாத பெருமான், தனது தோள்களையும் கைகளையும் அகல வீசியவராய்,அழகான கோலத்துடன், தனது மேனியெங்கும் திருநீறு பூசியவராய், வளம் நிறைந்த வயல்கள் சூழ்ந்ததும் மாட வீதிகள் நிறைந்ததும் ஆகிய வலம்புரம் தலம் வந்தடைந்து, ஆங்கே நீங்காது உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பல்லார் பயில் பழனம் பாசூர் என்று பழனம் பதி பழமை சொல்லி நின்றார்
நல்லார் நனிபள்ளி இன்று வைகி நாளைப் போய் நள்ளாறு சேர்தும் என்றார்
சொல்லார் ஒரு இடமாத் தோள் கை வீசிச் சுந்தரராய் வெந்த நீறாடி எங்கும்
மல்லார் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே
நாகைக்காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.46.4) சுந்தரர், பெருமானை சுந்தரர் என்று குறிப்பிடுகின்றார். சேரமான் பெருமாள் நாயனார் தன்னைக் காண்பதற்காக திருவாரூர் வருகின்றார் என்பதை அறிந்துகொண்ட சுந்தரர், சேர மன்னனுக்கு பெருமை அளிக்கும் வகையில் தான் நடந்து கொள்ளவேண்டும் என்றும் அதற்காக இறைவன் தனக்கு மிகுந்த செல்வம் அளிக்கவேண்டும் என்றும் இறைவனிடம் முறையிடுகின்றார்.அடிமையாகிய தனது நலம் கருதி தனது பெருமையை நிலைநாட்டும் வழியில் பெருமான் செயல்படாமல் இருப்பதை குறிப்பிடும் சுந்தரர், பெருமானை நோக்கி எதற்காக தன்னை அடிமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேள்வி கேட்கின்றார். கொடுமையான பேய்களால் சூழப்பட்டு நடனம் ஆடும் பெருமான், தூய்மையான சந்திரனைத் தனது தலையில் சூட்டிக் கொண்டுள்ள தன்மை பொருத்தமாக இல்லை என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் சுந்தரன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.
விட்டதோர் சடை தாழ வீணை விடங்காக வீதிவிடை யேறுவீர் வேணடிமை உகந்தீர்
துட்டராயின பேய்கள் சூழ நடமாடச் சுந்தரராய்த் தூமதியம் சூடுவது சுவண்டே
வட்டவார்குழல் மடவார் தம்மை மயல்செய்தல் மாதவமோ மாதிமையோ வாட்டமெலாம் தீரக்
கட்டி எமக்கு ஈவது தான் எப்போது சொல்லீர் கடல்நாகைக் காரோணம் மேவி இருந்தீரே
இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெருமானை புலித்தோலாடை அணிந்தவர் என்று குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் முதல் பாடலிலும் அவ்வாறு இறைவனை திருஞானசம்பந்தர் அழைத்ததை நாம் கண்டோம். அந்த பதிகத்தின் விளக்கத்தில், பெருமான் புலித்தோலாடை அணிந்ததன் பின்னணியையும்,இத்தகைய குறிப்பு கொண்ட திருஞானசம்பந்தர் பதிகங்களையும் நாம் சிந்தித்தோம். இப்போது நாம், அப்பர் பிரான் குறிப்பிடும் சில பாடல்களை சிந்திப்போம். சமணர்களின் ஆலோசனை வழியே செயல்பட்ட பல்லவ மன்னன், அப்பர் பிரானின் தலையை இடறித் தள்ளும் பொருட்டு, அவர் மீது ஒரு மதயானையை ஏவ, அப்போது அப்பர் பிரான் சிறிதும் கலங்காத நிலையில் தான் எவரால் ஆட்கொள்ளப்பட்டவன் என்பதை உணர்த்தும் பொருட்டு,சிவபெருமானின் அடையாளங்களை குறிப்பிடும் பதிகத்தின் பாடலில் (4.02.71) கொலைவரி வேங்கை அதள் உடையவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். அதள்=தோல். குவவு=திரட்சியாக உள்ள தோள். விலை பெறு=மிகுந்த மதிப்பினை உடைய. விலையில்=விலை மதிப்பில்லாத. ஒரு காதினில் தோட்டினையும் மற்றொரு காதினில் குழையினையும் அணிந்த உருவமாக சிவபிரானை அப்பர் பிரான் காண்பதை நாம் இந்தப் பாடலில் உணரலாம்.
கொலை வரி வேங்கை அதளும் குவவோடு இலங்கு பொன் தோடும்
விலை பெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் முதல் பாடலில் (4.08.1) அப்பர் பிரான், பெருமானின் ஆடை அதளாடை என்று கூறுகின்றார்.பெற்றி=வேடம்: நீர்மை=அருள் தன்மை: அதள்=தோல்: கரிகாடு=சுடுகாடு: கலன்=உண்கலம் அகம்=உள்ளம்: நேர்தல்=அர்ப்பணித்தல்:அறையோ=அறைகூவல் விடுத்தல்: சிவபிரானின் திருநாமமே, அடியார்களுக்கு முக்திப் பேற்றினை வழங்கும் வல்லமை படைத்தது என்பதால், அதனை விட உயர்ந்த செல்வம் அளிக்கக்கூடிய சொல் வேறு ஏதும் இல்லை என்ற அறைகூவலுடன் அப்பர் பிரான் இந்த பதிகத்தைத் தொடங்குகின்றார். அத்தகைய உயர்ந்த செல்வத்தை உடைய சிவபிரானை, அணுகமுடியுமா என்ற சந்தேகம் நமக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக சிவபிரான் மிகவும் எளியவன் என்று அவனது எளிமைத் தன்மையையும் நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இவ்வாறு அப்பர் பிரான் அறை கூவியதை, உணர்த்தும் விதமாகத் தான் சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் (7.39) திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கு அரையன் என்று குறிப்பிடுகின்றாரோ என்று நமக்குத் தோன்றுகின்றது. .
சிவனெனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே
அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடையாவது அதன் மேல் ஓர் ஆடல் அரவம்
கவண் அளவு உள்ள உண்கு கரி காடு கோயில் கலனாவது ஓடு கருதில்
அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டு அகம் நேர்வார் தேவர் அவரே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.38.8) அப்பர் பிரான், ஐய்யன் ஐயாறனார் கொல்புலித் தோலும் வைத்தார் என்று கூறுகின்றார்.அரை=இடுப்பு; புலித்தோலும் என்று உம்மைத் தொகையை பயன்படுத்தியுள்ளதால், யானைத் தோலை போர்வையாகவும் மான் தோலைத் தனது ஆசனமாகவும் இறைவன் வைத்துள்ள தன்மை புலப்படுகின்றது. தான் விருப்பத்துடன் ஊர்ந்து செல்லும் வண்ணம், இடபத்தினைத் தனது வாகனமாக வைத்தவர் சிவபெருமான். இடைமருது தலத்தை தான் உறையும் இடமாக வைத்தவர் சிவபெருமான். அவர் நறுமணம் கமழும் கொன்றை பூவை சூடியுள்ளார்,நாகத்தை தனது இடுப்பினில் கச்சாக இறுகக் கட்டியுள்ள பெருமான், தனது உடலின் ஒரு பாகத்தில் உமை அன்னையை வைத்துள்ளார். அவர் கொல்லும் குணமுடைய புலித்தோலை ஆடையாகவும், யானையின் தோலை போர்வையாகவும் மான் தோலை ஆசனமாகவும் வைத்துள்ளார். கங்கை நதியினைத் தனது சடையில் வைத்துள்ள பெருமான் நமது தலைவனாகிய ஐயாறனார் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் பாய்புலித் தோலும் வைத்தார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.
ஏறுகந்து ஏற வைத்தார் இடைமருது இடமும் வைத்தார்
நாறு பூங்கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார்
கூறு உமை பாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறும் ஓர் சடையில் வைத்தார் ஐயன் ஐயாறனாரே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.56.2) அப்பர் பிரான், பெருமானை கொல்புலித் தோலர் என்று குறிப்பிடுகின்றார்.மடந்தை=உமையம்மை: சேக்கிழார் பெரிய புராணப் பாடலில் குறிப்பிட்டது போன்று, சிவபெருமான் பசுவுக்கு இங்கே அருள் புரிந்தார். அதனால் ஆவடுதுறை என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் கயிலையில் சொக்கட்டான் ஆட்டம் ஆடிய போது ஏற்பட்ட பிணக்கால். உமை அம்மை பசுவாக இந்த தலம் வந்து சேர்ந்ததாகவும் கூறுவர். ஈசன் அம்பிகைக்கு காட்சி கொடுத்து அணைத்து எழுந்த கோலத்தில் இருந்ததால் அணைத்து எழுந்த நாயகர் என்றும் பசுவுக்கு முக்தி கொடுத்து உமை அம்மை சுயரூபம் பெற்றமையால் கோமுக்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகை பசுவாக இந்தத் தலம் வந்து வழிபட்டமையால் கோகழி என்றும் இந்த தலம் அழைக்கப்படுகின்றது. இந்த தலத்தில் அணைத்து எழுந்த நாயகராக அருள் புரிந்தவர், கச்சி ஏகம்பத்தில் தழுவக் குழைந்த நாதராக வெளிப்பட்டவர், அண்ணாமலையில் உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகத்தில் ஏற்று அருள் புரிகின்றார். உடலில் சரி பாதியை அளித்து, தனக்குச் சமமாக அம்மையை உயர்த்தியதை விட பெரிய பேறு ஏதும் இல்லை என்பதால், அம்மைக்கு அருள் புரிந்த தலத்துப் பாடலில்,மடந்தை பாகத்தர் என்று இறைவனின் பேரருளை அப்பர் பிரான் குறிப்பிட்டார் போலும். குழகர்=அழகர்; இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் அப்பர் பிரான் பெருமானின் உடை, பாயுபுலித் தோலாடை என்று கூறுகின்றார்.
மடந்தை பாகத்தர் போலும் மான்மறிக் கையர் போலும்
குடந்தையில் குழகர் போலும் கொல்புலித் தோலர் போலும்
கடைந்த நஞ்சு உண்பர் போலும் காலனைக் காய்வர் போலும்
அடைந்தவர்க்கு அன்பர் போலும் போலும் ஆவடுதுறையனாரே
இன்னம்பர் தலத்தின் மீது அருளிய் பதிகத்தின் பாடலில் (4.72.4) அப்பர் பிரான் பெருமானை, பாய் புலித்தோலர் என்று அழைக்கின்றார். கடவு=செலுத்தும்;இடர்=பந்த பாசங்கள்; விடம் தங்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவர் சிவபெருமான்; அவர் வேதங்களில் சொல்லப்பட்டுள்ள முறைக்கு மாறாக தக்கன் செய்த வேள்வியினை அழித்தவர்; விரைந்து செல்லக்கூடிய அழகிய எருதினை வாகனமாக உடைய அவர், ஒரு சமயம் கூற்றுவனை கோபித்து உதைத்தவர் ஆவார்; படம் எடுத்தாடும் ஐந்தலை நாகத்தினை அணிகலனாக பூண்டுள்ள அவர், பாயும் இயல்பினை உடைய புலியைக் கொன்று அதன் தோலை உடையாக அணிந்துள்ளார்; அடியார்கள் கொண்டுள்ள பந்த பாசங்களை அறவே களைந்து, அவர்கள் முக்தி நிலையினை அடைவதற்கு வழி வகுக்கும் பெருமான் இன்னம்பர் தலத்தில் தலைவனாக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விடமலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும்
கடவு நல் விடையர் போலும் காலனைக் காய்வர் போலும்
பட மலி அரவர் போலும் பாய்புலித் தோலர் போலும்
இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே
தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.81.7) அப்பர் பிரான், பாய்புலித் தோலுடன் உள்ள பெருமானின் திருக்கோலம் தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டதாகவும், தனது மனதினில் நிலையாக நிற்பதாகவும் கூறுகின்றார். இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (குனித்த புருவமும் என்று தொடங்கும் பாடல்) நடராஜப் பெருமானின் திருவுருவத்தை நமது கண் முன்பு நிறுத்துவது போல் விவரித்து மகிழ்ந்த அப்பர் பிரான் தனது மனதினில் இறைவனின் திருவுருவம் எவ்வாறு பதிந்துள்ளது என்பதை இந்த பாடலில் கூறுகின்றார். இத்தகைய அழகுடைய சிவபிரானை, கருணை கொண்டு தனது உள்ளத்தில் புகுந்துள்ள சிவபிரானை நினையாமல் சமண சமயத்தில் பல வருடங்கள் கழித்ததற்கு வருந்தி, தன்னை பாவியேன் என்று அழைப்பதையும் நாம் இங்கே உணரலாம். பாவியாகிய தனது நெஞ்சினில் இவ்வாறு சிவபிரானது திருவுருவம் பதிந்தது ஒரு அதிசயமாக அப்பர் பிரானால் கருதப் படுகின்றது. பாவியாகிய எனது நெஞ்சினில், சிவபிரானின் தலையில் அணிந்துள்ள ஊமத்தைப் பூவும், மூன்று கண்களின் பார்வையும், கண்களில் தென்படும் புன்சிரிப்பும், ஒலிக்கும் உடுக்கையை ஏந்திய திருக்கரமும், மேனியில் முழுதும் பூசிய வெண்ணீறும், சுருண்ட கூந்தலைக் கொண்ட பார்வதி தேவியை தனது உடலில் கொண்டுள்ள பாங்கும், இடையில் உடுத்திய புலித் தோலும், ஒலிக்கும் கழல்களை அணிந்த திருவடிகளும் நிலையாக இடம் பெற்றுள்ளன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்க முறுவலிப்பும்
துடி கொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித் தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்கூத்தன் குரைகழலே
சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.85.5) அப்பர் பிரான், பெருமான் அணிந்துள்ள புலித்தோல் ஆடையின் தன்மையை குறிப்பிடுகின்றார். தோலாடை திருநீற்றில் துதைந்து உள்ள நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. துதைந்து=நெருங்கி இருந்து; பெருமான் தனது உடலின் மீது பூசிக்கொண்டுள்ள திருநீறு, புலிதோலாடையின் மீதும் பதிந்துள்ளது என்றும் கூறுகின்றார். உழுவை=புலி: ஆற்றில்=கங்கையில்:கோளரவு=கொலைத் தொழில் பூண்ட பாம்பு: கூற்றுவன் எதிர்கொண்ட போது அவனைக் கடந்து, அவனது வலிமையை வென்றவர் எவரும் இல்லை. சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவரும் பொருட்டு கூற்றுவன் வந்த போது, அவனைக் காலால் உதைத்து, அவனை கீழே வீழச் செய்தவர் சிவபெருமான் என்பதை உணர்த்தும் வகையில், கூற்றினை கடந்தவர் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
கூற்றைக் கடந்ததும் கோள் அரவு ஆர்த்ததும் கோளுழுவை
நீற்றில் துதைந்து திரியும் பரிசதும் நாம் அறியோம்
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும்
சோற்றுத்துறை உறைவார் சடை மேலதொர் தூமதியே
நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.89.7) அப்பர் பிரான், பெருமானை புலியுரித் தோலுடையன் என்று அழைக்கின்றார். படுத்த புலி=கொன்றதால் கீழே விழுந்து படுத்த புலி; முற்றிய=வாழ்நாள் முற்றியதால் அழியும் நிலையில் இருந்த கோட்டைகள்; சுற்றிய= தன்னைச் சூழ்ந்து இருந்த;செற்று=அழித்து, கொன்று; பாம்பினைத் தனது கையினால் பற்றியவனாய், தன்னால் கொல்லப்பட்டு கீழே விழுந்த புலியை உரித்து அதன் தோலினை ஆடையாக உடுத்தியவனாய் விளங்கும் சிவபெருமான், தாங்கள் அந்நாள் வரை செய்த அளவுகடந்த தீமைகளினால் வாழ்நாள் முடியும் நிலைக்கு தள்ளப்பட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் நெருப்பு மூட்டி எரித்து அறுத்து எறிந்தான்; தன்னைச் சுற்றி பூதப்படையினை உடைய பெருமான், சூலம் மான் கன்று மற்றும் மழு ஆயுதம் ஆகியவற்றைத் தனது கையில் ஏந்தியுள்ளான் அவன் நமது தீயவினைகளை அழித்து ஓழிப்பவனாக நெய்த்தானம் தலத்தில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான்
சுற்றிய பூதப் படையினன் சூல மழு ஒரு மான்
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே
ஒரு பொதுப் பதிகத்தின் கடைப் பாடலில் (4.111.11) அப்பர் பிரான் தனது இடுப்பினில் இருந்து தொங்கிய நிலையில் இருந்த புலித்தோலாடையுடன் பெருமான், தனது நெஞ்சத்தில் இருக்கின்றார் என்று கூறுகின்றார். விவந்து=மாறுபாடு உற்று: காளிதேவியின் நடனத்தை விடவும் தனது நடனம் சிறந்து விளங்கும் என்று மாறுபாடு கொண்டு ஆடிய நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப்படுகின்றது தனது ஒரு காதினில் இருந்த குழை ஆபரணத்தை கீழே விழச் செய்து,பின்னர் அதனை கால் விரல்களால் பற்றி, காலைத் தூக்கிய நிலையில் வலது கைக்கு மாற்றி, பின்னர் குழையினை காதினில் பொருத்தி, இந்த மூன்று செயல்களும் நடனத்தின் ஒரு அம்சமாக பொருந்துமாறு ஆடிய கூத்து, வேறு எவரும் அதுவரை ஆடாத கூத்து அல்லவா. எனவே மாறுபட்டு ஆடிய கழல்கள் என்று கூறுவது பொருத்தமாக உள்ளது. விவந்து என்பதற்கு வெளிப்பட்டு என்று சிவக்கவிமணி பொருள் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில் சிவபெருமானது பல்வேறு அங்கங்களையும், சிவபெருமானைச் சார்ந்த பல்வேறு பொருட்களையும் குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில் சிவபெருமானின் கழல்களை குறிப்பிடுகின்றார். சிவபிரானின் கழல்களைத் தவிர, கழல்கள் அணிந்துள்ள ;திருப்பாத்ங்களைத் தவிர, நமக்கு வேறு ஒரு பற்றுக்கோடு இல்லை என்பதை சுட்டிக் காட்டும் வண்ணமாக இந்த குறிப்பு உள்ளது போன்று நமக்குத் தோன்றுகின்றது. ஒப்பில்லாத தனது ஆசையை வெளிப் படுத்தும் அப்பர் பிரானின் உணர்ச்சி வெள்ளம், பதிகத்திற்கு பத்து பாடல் என்ற எல்லையையும் தாண்டியதை நாம் இங்கே உணரலாம். இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் பெருமானை புலித்தோல் ஆடையன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார்.
விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு
தவம் தான் எடுக்கத் தலை பத்து இறுத்தனை தாழ் புலித்தோல்
சிவந்து ஆடிய பொடி நீறும் சிரமாலை சூடி நின்று
தவம் தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே
மேலே குறிப்பிட்ட பதிகங்களின் பாடல்களில் சிவபெருமானுடன் என்றும் இணைந்திருக்கும் பல பொருட்களை அந்த பொருட்கள் வைக்கப்படும் சரக்கறையாக தனது மனம் இருக்க்வேண்டும் என்று வேண்டுகின்றார். இந்த பதிகத்தின் கடைப்பாடலில் அத்தகைய பொருட்களுடன் சிவபெருமானின் திருப்பாதங்களும் அந்த சரக்கறையில் இருக்க வேண்டும் என்று வேண்டுவதை நாம் விவரமாக சிந்தித்தோம். அவ்வாறு தனது நெஞ்சமாகிய சரக்கறையில் இருக்க் வேண்டிய பொருட்களில் ஒன்றாக பாய் புலித்தோலும் இருக்க் வேண்டும் என்பதை குறிப்பிடும் பாடல் பதிகத்தின் பத்தாவது பாடல் (4.111.10).வேதித்த=தண்டித்த: சாதித்து=விளங்கி: சோதித்து இருக்கும்=ஒளி விடும், பாதிப் பிறை என்று அப்பர் பிரான் குறிப்பிட்டாலும் நாம் அளவில் குறைந்து தேய்ந்து சிவபிரானிடம் அடைக்கலம் வேண்டி சடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறைச் சந்திரன் என்று பொருள் கொள்ள வேண்டும். பகைவர்களுக்கு தண்டனை அளிக்கும் வகையில் அவர்களது உடலைப் பிளக்கும் கூறிய மழுவாளினை உடையவனே, உன்னிடம் எனக்கு ஒரு விண்ணப்பம் உள்ளது.பிரகாசமான ஒளியுடன் விளங்கும் சூளாமணியையும், சுடுகாட்டு சாம்பலையும், சிறிய பிறைச் சந்திரனையும், உடல்களிலிருந்து துண்டிக்கப்பட்ட மண்டை ஓடுகளையும், உனது தலையில் ஏற்றுள்ள நீ, மேற்கண்ட பொருட்களையும் நீ உடுக்கும் புலித்தோலையும் சேகரித்து வைக்கும் சரக்கறையாக எனது நெஞ்சத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு நீ அருள் செய்து எனது நெஞ்சத்தினை ஒப்பற்ற தனி நெஞ்சமாக மாற்றவேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இந்த பதிகத்தின் முதல் பாடலிலும் அப்பர் பிரான், பெருமானின் பாய்புலித் தோலாட இருக்கும் சரக்கறையாக தனது மனம் இருக்க வேண்டும் என்று வேண்டுகின்றார்.
வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு
சோதித்து இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும்
பாதிப் பிறையும் படுதலைத் துண்டமும் பாய் புலித்தோல்
சாதித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.24.4) அப்பர் பிரான் பெருமானை, பாய்புலித் தோலினர் என்று அழைக்கின்றார். சுற்றும்=சுற்றிலும்; எரி பற்றி=தனது கையினில் தீப்பிழம்பினை ஏந்தி; தம்மைச் சுற்றிலும் பேய் கணங்கள் சூழ, சுடுகாட்டில் உறையும் பெருமான், தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு நடனம் ஆடுகின்றார். அவர் பாயும் குணத்தினைக் கொண்ட புலியின் தோலினைத் தனது உடலில் அணிந்தவராக காணப்படுகின்றார். அவர் பலியேற்பதற்கு பல ஊர்களுக்குச் சென்றாலும் இறுதியில் வந்து சேர்ந்து உறைவது திருவொற்றியூர் நகரமே என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சுற்றும் பேய் சுழலச் சுடுகாட்டெரி
பற்றியாடுவர் பாய்புலித் தோலினர்
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய்
ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே
திருமணஞ்செரி தலத்தின் மீது அருளிய பதிகத்த்தின் பாடலில் (5.87.1) அப்பர் பிரான் பெருமானை பாய்புலித் தோலினர் என்று அழைக்கின்றார். பட்ட நெற்றியர்=பட்டம் அணிந்த நெற்றியினை உடையவர்; வட்ட வார் சடை=வட்டமாக கட்டிய நீண்ட சடை; வண்ணம்=தன்மை; சிட்டர்=சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். உயர்ந்தவர்கள், மேன்மையானவர்கள் என்று பொருள். இந்த பாடலில், நாள்தோறும் நடனம் ஆடுபவர் என்று சிவபெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமான், இடைவிடாது நடனம் ஆடுவதை குறிக்கும் வண்ணம் நடராஜப் பெருமானின் உருவச்சிலை அமைக்கப் பட்டுள்ளதை நாம் உணரலாம். அவரது கச்சின் ஒரு முனையும், சடை முடிகளும், பெருமானின் திருவுருவத்தைத் சுற்றியுள்ள திருவாசியைத் தொடுவதை நாம் காணலாம். எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் தான், கச்சும் சடைமுடிகளும் இவ்வாறு காணப்படும். அல்லையேல் அவை இரண்டும், புவியீர்ப்பு விதியின் படி, தொங்கிக் கொண்டு தானே இருக்க வேண்டும். பெருமான் இவ்வாறு தொடர்ந்து நடனம் ஆடிக் கொண்டே இருப்பதால் தான், உலகமும், உலகப் பொருட்களும், உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இயங்குகின்றன என்று கூறுவார்கள். உலகப் பொருட்கள் அழிந்து, உலகமும் அனைத்து உயிர்களும் பெருமானிடம் ஒடுங்கிய நிலையில், அதாவது முற்றூழிக் காலத்தில், பெருமான் ஆடும் நடனம் சங்காரக் கூத்து என்று அழைக்கப்படுகின்றது.
பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாடொறும்
சிட்டர் வாழ் திருவார் மணஞ்சேரி எம்
வட்ட வார் சடையார் வண்ணம் வாழ்த்துமே
தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.2.10) அப்பர் பிரான், பெருமானை புலித்தோல் வீக்கியவன் என்று குறிப்பிடுகின்றார்.வீக்கி என்றால் கட்டி என்று பொருள். ஏதங்கள்=துன்பங்கள்; தனது அடியார்கள் எந்த பிறவி எடுத்தாலும் அவர்களை ஆட்கொண்டு அருள் புரிபவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். இந்த பதிகத்திற்கு புக்கத் திருத்தாண்டகம் என்று பெயர். இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் தில்லைச் சிக்ற்றம்பலமே புக்கார் தாமே என்று முடிகின்றன. அனைத்து திருக்கோயில்களில் உள்ள பெருமானின் கலைகள் அனைத்தும், அர்த்தஜாம பூஜையின் பின்னர் தில்லைச் சிதம்பரம் சென்று அடைவதாக நம்பப் படுகின்றது. அந்த தன்மையைத் தான் அப்பர் பிரான் இந்த பதிகத்தின் பாடல்களில் அப்பர் பிரான் குறிப்பிடுவதாக பெரியோர்கள் கருதுகின்றனர்.
பாதங்கள் நல்லார் பரவியேத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழுபிறப்பும் ஆளுடைய ஈசனார் தாம்
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடையொன்று தாமேறி வேதகீதர்
பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப் புலியூர் சிற்றம்பலமே புக்கார் தாமே
அடையாளத் திருத்தாண்டகம் பதிகத்தின் கடைப்பாடலில் (6.4.11) அப்பர் பிரான் கொல்வேங்கை அதளனாக இருப்பது பெருமானின் அடையாளங்களில் ஒன்று என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானின் பல அடையாளங்களை உணர்த்துவதால், இந்த பதிகத்திற்கு அடையாளத் திருத்தாண்டகம் என்ற பெயர் வந்தது. நெடியான்=நீண்ட திருவிக்ரமனாக உருவம் எடுத்து மூவுலகையும் தனது இரண்டு அடிகளால் அளந்த திருமால்:நெடிது வளர்ந்த திருமாலாலும் காண முடியாத வகையில், பாதாளத்தையும் ஊடுருவி, விண்ணையும் கடந்து நின்ற சோதியின் தன்மை, நெடியான் என்ற சொல்லால் உணர்த்தப்படுகின்றது. புவலோகம்= பூவுலகுக்கு மேல் உள்ள உலகம்: ஒரு உலகத்தை குறிப்பிட்டு அனைத்து உலகங்களையும் அப்பர் பிரான் உணர்த்துவதாக நாம் கொள்ள வேண்டும். பொடி=திருநீறு: பெருமானின் அடியார்கள் தேவருலகம் ஆள்வதற்கான தகுதியை அடைவார்கள் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே நேர் ஒருவர் இல்லாதானே
கொடியேறு கோல மாமணி கண்டனே கொல்வேங்கை அதளனே கோவணவனே
பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப் புவலோகம் திரியுமே புரி நூலானே
அடியாரை அமருலகம் ஆள்விக்குமே அவனாகில் அதிகை வீரட்டனாமே
ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.09.5) அப்பர் பிரான், பெருமானை புலித்தோல் ஆடையாக உடையவர் என்று கூறுகின்றார்.உருள்=சக்கரம்; கோதை=மாலையின் ஒரு வகை. சக்கரங்களை உடைய தேர், குதிரை, யானை போன்றவற்றை குறைவறப் பெற்றிருப்பினும் தனது வாகனமாக வெண்மை நிறம் கொண்ட காளையையே, ஈசன் பயன்படுத்துகின்றார். நஞ்சம் உண்டதால் கறுத்த கண்டத்தை உடைய இவர், செந்தீயின் வண்ணத்தவர். வானோர்கள் தொழுதேத்தும் இவர், தான் பலி தேடிப் போனாலும், தனது அடியார்களுக்கு அவர்கள் வேண்டுவன கொடுப்பதால், இவரை பொருள் உள்ளவர் என்றும் சொல்ல முடிவதில்லை, பொருள் அல்லாதவர் என்றும் சொல்ல முடிவதில்லை. புலித்தோலை ஆடையாகக் கொண்டுள்ள இவரை பூதங்கள் சூழ்ந்து இருக்கின்றார்கள். அடியார்களுக்கு அருளும் தன்மை படைத்த ஆமாத்தூர் தலைவர், தனது மார்பினில், கோதை எனப்படும் வகையைச் சார்ந்த மாலையினை அணிந்து மிகவும் அழகியவராக காணப்படுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
உருளுடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவில்லை ஊர்தி வெள்ளேறு
இருளுடைய கண்டத்தர் செந்தீவண்ணர் இமையவர்கள் தொழுதேத்தும் இறைவனார் தாம்
பொருளுடையர் அல்லர் இலரும் அல்லர் புலித்தோல் உடையாகப் பூதம் சூழ
அருளுடைய அம் கோதை மாலை மார்பர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே
பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.10.3) அப்பர் பிரான், பெருமானை புலித்தோல் உடையினார் என்று அழைக்கின்றார்.வேதத் தொழிலார்=வேதம் ஓதுதலைத் தொழிலாகக் கொண்ட அந்தணர்கள்; பண்டைய இலக்கியங்கள் அந்தணர்களை அறுதொழிலர் என்று குறிப்பிடுகின்றன. வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், தானம் வாங்குதல் மற்றும் தானம் கொடுத்தல் என்பனவே அந்த ஆறு தொழில்கள் ஆகும். அத்தகைய அந்தணர்கள் வேதத்தில் விதிக்கப்பட்ட நெறியின் வழியே வேள்விகள் செய்து, வேள்வியின் முதல்வனாக சிவபெருமானை கருதி அவருக்கு ஆகுதிகள் வழங்க, அவற்றை ஏற்கும் பெருமான், அந்தணர்கள் விரும்புவதை அளிக்கின்றார். இவ்வாறு பெருமான் அருள் புரிவதை, அப்பர் பிரான் வேதத்தொழிலார் விரும்ப நின்றார் என்று கூறுகின்றார். போரேறு என்ற சொல்லுக்கு போர்க்குணம் கொண்ட எருது என்றும் போரினில் பயன்படுத்திய எருது என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தருமதேவதை சிவபெருமானை வேண்டி அவரது வாகனமாக அமர்ந்ததை,அறவிடை என்றும் திருமால் திருபுரத்து அரக்கர்களுடன் போர் செய்த போது தாங்கியதை மறவிடை, போர்விடை என்றும் குறிப்பிடுவார்கள். எனவே போர்விடை என்று இங்கே கூறுவதை, மறவிடையாக பொருள் கொள்வதும் பொருத்தமே ஓதம்=அலைகள்;
பூதப் படை உடையார் பொங்கு நூலார் புலித்தோல் உடையினார் போர் ஏற்றினார்
வேதத் தொழிலார் விரும்ப நின்றார் விரிசடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி
ஓதத்து ஒலி கடல்வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம்பொன் உலகம் ஆண்டு
பாதத்தொடு கழலார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே
புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.̀13.5) அப்பர் பிரான், பெருமான் புலித்தோல் வீக்கிக்கொண்டு புத்தகம் கையில் ஏந்தியவாறு புறம்பயம் தனது ஊர் என்று சொல்லிய வண்ணம் சென்றதாக, அப்பர் நாயகி சொல்வதாக கூறுகின்றார். புத்தகத்தை கையில் ஏந்தி இருத்தல் ஆசிரியனது கோலம். பெருமான் தென்முகக் கடவுளாக இருக்கும் கோலம் இங்கே குறிப்பிடப் படுகின்றது. இந்த ஆசிரியக்கோலம் பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது.
செத்தவர் தம் தலை மாலை கையில் ஏந்திச் சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி
அத்தவத்த தேவர் அறுபதின்மர் ஆறு நூறாயிரவர்க்கு ஆடல் காட்டிப்
புத்தகம் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே
ஆக்கூர் தான்தோன்றிமாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.21.5) அப்பர் பிரான், பெருமானை புலித்தோலை ஏகாசமாக உடையவன் என்று குறிப்பிடுகின்றார். ஏகாசம்=மேலாடை; மேகாசம்=மேகத்தின் சிரிப்பு; ஹாஸ்யம் என்ற வடமொழிச்சொல் இங்கே ஆசம் என்று திரிந்தது; மின்னலை மேகத்தின் சிரிப்பு என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மிகவும் அழகான கற்பனை; கட்டழித்த=பெருமையினை மிஞ்சிய; மேகத்தின் நடுவே தோன்றும் மின்னல் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் விளங்குவதை நாம் காண்கின்றோம். அந்த அழகான ஒளியை மிஞ்சும் வகையில் பெருமான் தனது சடையில் அணிந்துள்ள வெண்மையான மலர்மாலைகள் விளங்குவதாக அப்பர் பிரான் கூறுகின்றார். மாகம்=ஆகாயம்; மேகத்தின் சிரிப்பாக மின்னலை உருவகித்த அப்பர் பிரான், ஆகாயத்தின் நகையாக மழை நீரினை குறிப்பிடுகின்றார்.
ஏகாசமாம் புலித்தோல் பாம்பு தாழ இடு வெண்தலை கலனா ஏந்தி நாளும்
மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனலார் சடைமுடி மேல் புனைந்தார் போலும்
மாகாசம் ஆய வெண்ணீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாசம் என்று இவையும் ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.28.1) அப்பர் பிரான் பெருமானை, கொல்புலித் தோலாடை உடையவன் என்று குறிப்பிடுகின்றார்.பெருமான் திருநீற்றினை, சுடலைப் பொடியினை தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டதாக பல திருமுறை பாடல்கள் கூறுகின்றன. நிலையற்று ஒருநாள் அழியக் கூடிய உலகத்தினில் தான் ஒருவனே நிலையானவன் என்பதை உணர்த்தும் பொருட்டு தனது மேனி முழுவதும் திருநீறு அணிந்தவனாக பெருமான் உள்ள நிலை பொதுவாக கூறப்படுகின்றது. ஆனால் நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் என்று இந்த பதிகத்தினை அப்பர் பிரான் தொடங்குகின்றார். தனது நெற்றியில் மூன்று கோடுகளாக பெருமான் திருநீறு அணிந்துள்ள கோலம் சொல்லப்படும் பாடல்கள் மிகவும் அரியவை. அத்தகைய பாடல்களில் இந்த பாடல் ஒன்றாகும்.
நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும் நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலும்
காற்றினையும் கடிதாக நடந்தார் போலும் கண்ணின்மேல் கண் ஒன்று உடையார் போலும்
கூற்றினையும் குரைகழலால் உதைத்தார்போலும் கொல்புலித் தோலாடைக் குழகர்போலும்
ஆற்றினையும் செஞ்சடை மேல் வைத்தார் போலும் அணியாரூர் திருமூலட்டனானாரே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய மற்றோர் பதிகத்தின் பாடலில் (6.29.7) அப்பர் பிரான், பெருமானை கொல்புலித் தோலாடைக்குழகன் என்று குறிப்பிடுகின்றார். நாள்வாய்=நாளும் தங்களது வாயினால் இறைவனைப் புகழ்ந்து பாடும்; இறைவனை நாள்தோறும் புகழ்ந்து பாடும் அடியார்களின் மனதினில் இறைவன் இருப்பதாக அப்பர் பிரான் கூறுவது, நமக்கு அவரது தில்லைப் பதிகத்தினை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் (6.01) அனைத்துப் பாடல்களிலும் இறைவனைப் புகழ்ந்து பேசாத நாட்கள் பிறவாத நாட்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
சூளாமணி சேர் முடியான் தன்னைச் சுண்ணவெண்ணீறு அணிந்த சோதியானைக்
கோள் வாய் அரவம் அசைத்தான் தன்னைக் கொல்புலித் தோலாடைக் குழகன் தன்னை
நாள் வாயும் பத்தர் மனத்துளானை நம்பனை நக்கனை முக்கண்ணினானை
ஆள்வானை ஆரூரில் அம்மான் தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய போற்றித் திருத்தாண்டகத்தின் பாடலில் (6.32.2) அப்பர் பிரான், பெருமானை கொல்புலித் தோலாடைக் குழகன் என்று அழைக்கின்றார். வங்கம்=அலை; கொங்கு=தேன்; குழகன்=அழகன்; அங்கணன்=அழகிய நெற்றிக் கண்ணை உடையவன்; அலைகள் நிறைந்த கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டவனே, மத யானையின் ஈரப்பசுமை கெடாத தோலினைப் போர்த்தவனே, தேன் நிறைந்த கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனே, கொல்லும் குணமுடைய புலித்தோலை ஆடையாக உடுத்த அழகனே, அழகிய நெற்றிக் கண்ணை உடையவனே, தேவர்களின் இறைவனே, ஆலமரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்தவனே, அழகிய பொன் குன்றினை ஒத்தவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன் என்று சொல்லி பெருமானைப் போற்றுகின்றார்.
வங்கமலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மதயானை ஈர் உருவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி கொல்புலித் தோலாடைக் குழகாபோற்றி
அங்கணனே அமரர்கள் தம் இறைவா போற்றி ஆலமரம் நீழல் அறம் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.35.4) அப்பர் பிரான், பெருமானை புலித்தோல் உடையா புகுந்து நின்றார் என்று குறிப்பிடுகின்றார். ஆகம்=உடல்: பாகு=உணவு: பாவியேன்=சிவபெருமானை அடைய முடியாத பாவியேன்; இந்த பாடலிலும் சிவபிரானின் மாறுபட்ட தன்மை, பெண்ணினை உடலின் ஒரு பாகத்தில் கொண்டது, பாம்பினை இடையில் கட்டிக் கொண்டது, எருதினை வாகனமாகக் கொண்டது மற்றும் புலித்தோலினை உடையாக அணிந்தது ஆகிய தன்மைகள் இங்கே குறிப்பிடப்பட்டு, பெருமானை விகிர்தா என்று அழைப்பதற்கு காரணம் உணர்த்தப்படுகின்றது. இந்த பாடல் அகத்துறை வகையினைச் சார்ந்த பாடலாகும். சிவபெருமானின் மீது தீராத காதல் கொண்ட அப்பர் நாயகி, பூதங்கள் சூழ தனது இல்லத்திற்கு பெருமான் பிச்சை ஏற்க வந்ததாக கற்பனை செய்கின்றாள். அந்த கற்பனையில் தான் கண்ட பெருமானது உருவத்தை நமக்கு பாடலின் முதல் இரண்டு அடிகளில் உணர்த்துகின்றாள். பரிசு=தன்மை; இங்கே அடக்கம் என்ற தன்மை. கன்னிப் பெண்ணாகிய தான் எவரையும் நோக்காமல் அடக்கத்துடன் இருப்பதற்கு பதிலாக, அடக்கத்தினை இழந்து, பிச்சை ஏற்க வந்த பெருமானின் அழகினில் தனது உள்ளத்தினை இழந்ததை தனது பரிசு அழிந்ததாக கூறுகின்றாள். தன்னை உற்று நோக்கிய பெருமான், தன்னுடன் கூடாமல் இருந்த நிலையை நினைத்து மனம் வருந்தி உடல் இளைத்ததால், வளைகள் கையில் நில்லாமல் கீழே விழுந்ததற்கு காரணம் பெருமான் என்பதால், வளை கவர்ந்தவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றாள்.பெருமான் பால் அன்பு கொண்டுள்ள உயிர்கள், தனது நிலைமையை மறந்து பெருமானையே நினைந்து உருகும் தன்மை இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது.
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐவாய் அரவு அசைத்து அங்கு ஆனேறு ஏறிப்
போகம் பல உடைத்தாய்ப் பூதம் சூழ புலித்தோல் உடையாப் புகுந்து நின்றார்
பாகு இடுவான் சென்றேனைப் பற்றிநோக்கிப் பரிசழித்தென் வளை கவர்ந்தார் பாவியேனை
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே
திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.36.1) அப்பர் பிரான் பெருமானை, கொல்வேங்கைத் தோலொன்று அசைத்தார் என்று அழைக்கின்றார். உடுத்திக்கொண்டுள்ள உடை காற்றில் அசைவதை, கொல்வேங்கைத் தோல் அசைத்தார் என்று குறிப்பிடுகின்றார். அசைத்தார் என்ற சொல்லுக்கு கட்டினார் என்று தருமை ஆதீனக்குறிப்பு உணர்த்துகின்றது. தேர்ந்து=ஆராய்ந்து, தேடி என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தும்.;பக்குவமடைந்த உயிர்களைத் தேடிச்சென்று அவர்களிடமிருந்து, மலங்களை பிச்சையாக பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு முக்தி நிலை அருளும் செய்கை இங்கே உணர்த்தப்படுகின்றது.
அலையார் கடல் நஞ்சம் உண்டார் தாமே அமரர்களுக்கு அருள் செய்யும் ஆதி தாமே
கொலையாய கூற்றம் உதைத்தார்தாமே கொல்வேங்கைத் தோலொன்று அசைத்தார் தாமே
சிலையால் புரமூன்று எரித்தார் தாமே தீநோய் களைந்து என்னை ஆண்டார் தாமே
பலி தேர்ந்து அழகாய பண்பர் தாமே பழன நகரெம் பிரானார் தாமே
மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.39.4) கொல்வேங்கைத் தோலொன்று உடுத்தான் என்று பெருமானின் செய்கையை அப்பர் பிரான் உணர்த்துகின்றார். உயிர்களை கொலை செய்து உடலிலிருந்து வேறுபடுத்துவது காலனின் தொழில். தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கொலைத் தொழிலைச் செய்யும் இயமனை, எவரும் வெற்றி கொள்ள முடியாத வண்ணம் ஆற்றல் படைத்தவன் இயமன்; எனவே தான், விதிப்படி வாழ்நாள் முடிந்த மார்க்கண்டேயனின் உயிரை கவர்வதற்காக இயமன் சென்றான். ஆனால், அந்த தருணத்தில் சிறுவன் பெருமானை வழிபாடு செய்து கொண்டிருக்கவே,அந்த வழிபாட்டினுக்கு இடையூறு செய்யும் வகையில் சிறுவனது உயிரினைப் பறிக்க நினைத்த இயமன் மீது பெருமானுக்கு கோபம் வந்தது. அதனால் தான் எவரிடமும் தோற்காது கொலைத் தொழில் புரியும் ஆற்றல் கொண்ட இயமனும் மயங்கி கீழுமாறு சிவபெருமான் உதைத்தார். இதனை உணர்த்தும் வண்ணம் கொலயான கூற்றம் குமைத்தான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். சிலை=மலை;
அலை ஆர்ந்த புனல்கங்கைச் சடையான்கண்டாய் அண்டத்துகப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றம் குமைத்தான்கண்டாய் கொல்வேங்கைத் தோல் ஒன்றுடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழுமா மதி சென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே
ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.46.8) அப்ப்ர் பிரான் பெருமானை, பாய்புலித் தோலுடையான் என்று குறிப்பிடுகின்றார்.வெள்ளிடை=வெற்றிடம்; மெய்ப்பொருளாகத் திகழ்பவனும், வஞ்சகரோடு கலவாது இருப்பவனும், ஏதும் இல்லாத வெற்றிடத்திலும் பரவி இருப்பவனும்,குளிர்ந்த நிழல் வெம்மையிலிருந்து காப்பது போன்று அடியார்களைத் துன்பங்களிலிருந்து காப்பவனும், மிகுந்த வெப்பம் கொண்ட தீயினைக் கையினில் ஏந்தியவனும், காமனின் உடலை எரித்த கண்ணினை உடையவனும், மூன்று கண்களை உடையவனும், படம் எடுத்தாடும் பாம்பினையும் சந்திரனையும் அவர்களுக்கு இடையே இருந்த பகைமையைத் தீர்த்துத் தனது சடையில் ஒருங்கே வைத்தவனும், கொல்லும் நோக்கத்துடன் பாய்ந்து வந்த புலியினைக் கொன்று அதன் தோலினைத் தனது உடையாக அணிந்தவனும், எல்லோருக்கும் தலைவனாகத் திகழ்பவனும் ஆகிய திகழும் பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து,வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மெய்யானைப் பொய்யரொடு விரவாதானை வெள்ளிடையைத் தண்ணிழலை வெந்தீஏத்தும்
கையானைக் காமனுடல் வேவக்காய்ந்த கண்ணானைக் கண் மூன்றுடையான் தன்னைப்
பையாடரவ மதியுடனே வைத்த சடையானைப் பாய்புலித் தோல் உடையான் தன்னை
ஐயானை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.51.5) அப்பர் பிரான், உடை சூழ்ந்த புலித்தோலர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.கலிக்கச்சி=ஆரவாரம் மிகுந்த; கடை= இல்லங்களின் வாசல்; தேரும்=நாடிச் செல்லும்; கங்காளர்=பிரளய முடிவினில் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளின் மீது போட்டுக் கொண்ட பெருமான்; தார்=மாலை; பெருமான் எப்போதும் வெற்றியையே கண்டமையால்,வெல்கொடியார் என்று அழைக்கின்றார்.
புடை சூழ்ந்த பூதங்கள் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே நடமாடுவார்
உடை சூழ்ந்த புலித்தோலர் கலிக்கச்சி மேற்றளியுளார் குளிர்சோலை ஏகம்பத்தார்
கடை சூழ்ந்த பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலியோடும்
விடை சூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.65.10) புலித்தோலாடை உடையவர் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொன் இசை, மின் இசை ஆகிய சொற்களில் உள்ள இசை என்ற சொல் உவமை உருபு; பொன் போன்று என்றும் மின் போன்றும் பொருள் கொள்ளவேண்டும்.பொன் போன்று ஒளிவீசும் முறுக்குண்ட சடையினை உடையவனும், தூயவனும், பூத கணங்களின் தலைவனும், புலித்தோல் ஆடையின் மீது பொருந்துமாறு அழகிய பாம்பினை சுற்றியவனும், சங்க வெண்குழையை தனது காதினில் அணிந்தவனும், மிகுந்த திறமை உடையவனும் ஆவான் சிவபெருமான். மின்னல் போன்று வெண்மையான ஒளி வீசும் பற்களைக் கொண்ட அரக்கன் இராவணன் தான் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்று கருதி மிகுந்த கோபத்துடன் கயிலாய மலையை பேர்த்து எடுக்கும் முயற்சியில் அதனை அசைக்க, பெருமான் தனது திருவடியை மலையின் மீது ஊன்றினார். பெருமானின் கால் விரலின் அழுத்தத்தை தாங்க முடியாமல் மலையில் கீழே அமுக்குண்டு நசுங்கிய அரக்கன், இன்னிசையுடன் சாமகீதம் பாடினான். அரக்கன் வாயிலிருந்து வெளிப்பட்ட இன்னிசையை கேட்டு மகிழ்ந்த பெருமான், அரக்கன் மீது இரக்கம் கொண்டு அவனை விடுவித்ததும் அன்றி, ஒளி வீசும் சந்திரகாசம் என்ற வாளினை ஈந்தார். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பொன் இசையும் புரிசடை எம் புனிதன் தான்காண் பூதகண நாதன்காண் புலித்தோலாடை
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண்குழைக் காதில் சதுரன் காண்
மின்னிசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன் தன் வாயில்
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே
கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.67.8) அப்பர் பிரான், பெருமானை புலியதளோடு அக்கும் பாம்பும் உடுத்தான் என்று குறிப்பிடுகின்றார். மாணி=பிரம்மச்சாரி சிறுவன், இங்கே மார்க்கண்டேயரைக் குறிக்கும்; பொன்ற=அழிய; அதள்=தோல்; உள்குதல்=நினைத்தல்;மடுத்தல்=உண்ணுதல்; மிடறு=கழுத்து; தன்னை வழிபாடு செய்து கொண்டிருந்த பிரம்மச்சாரி சிறுவன் மார்க்கண்டேயரின் உயிரினைக் கவர முயற்சி செய்த காலனை, காலால் உதைத்து அவனை வீழ்த்தி அவனது செய்கையைத் தடுத்தவனும், புலித்தோலுடன் எலும்பு மாலையையும் பாம்பினையும் தனது உடலில் உடுத்தியவனும், தன்னை நினைக்கும் அடியார்களின் உள்ளத்தில் உள்ளவனும், அனைவரையும் அச்சுறுத்தி ஓடச் செய்த கொடிய ஆலகால நஞ்சினை உண்டு அதன் பின்னர் அந்த நஞ்சு தனது கழுத்திலே தங்கும்படி நிறுத்தியவனும், கூடியிருந்த தேவர்கள் அனைவரும் எந்த விதமான உதவியும் தக்கனுக்கு செய்ய இயலாத வகையில் தக்கன் நடத்திய வேள்வி முற்றுப்பெறாமல் அழித்தவனும் ஆகிய பெருமானை, கீழ்வேளூரை ஆளும் அரசனாக அந்த தலத்தில் குடிகொண்டிருக்கும் கேடிலிப் பெருமானை நாடிச் சென்று அவனை வழிபடும் அடியார்கள், தாங்கள் இறந்த பின்னர் மறுபடியும் பிறத்தலாகிய கேட்டினை நீக்கியவர்களாக விளங்குவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.1) அப்பர் பிரான் பெருமானை, கொல்வேங்கை அதளான் என்று அழைக்கின்றார்.கருமணி=கண்ணின் கருமணியைப் போன்று மிகவும் அருமையானவன். கோவணவன் தன்னை என்றும் ஒரு பாடம் உள்ளது. கோளரவு= கொடிய பாம்பு:அதள்=தோல்; ஆற்ற=மிகவும்: கனகம்=பொன்; திருமணி=திருவினை உடைய மணி, வீடுபேறு ஆகிய செல்வத்தை உடைய மணி; குருமணி=நல்ல நிறமுடைய மாணிக்கக் கல்; குருமணி என்பதற்கு சிறந்த ஆசிரியன் என்று பொருள் கொள்ளலாம். கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க என்று திருவாசகம் சிவபுராணத்தில் மணிவாசகப் பெருமான் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. கருமணி என்பதற்கு சிவக்கவிமணி திரு சி.கே.எஸ்.அவர்கள், தனது பெரியபுராண விளக்கம் புத்தகத்தில், ஒரு அருமையான விளக்கத்தை அளித்துள்ளார். முற்றூழிக் காலத்தில், உயிர்கள் அனைத்தும் இறைவனிடம் ஒடுங்குவதையும், அவ்வாறு ஒடுங்கும் உயிர்களை பின்னர் இறைவன் விடுவிப்பதையும் நாம் அனைவரும் அறிவோம். எனவே அத்தனை உயிர்களையும் ஈன்ற பெருமானை கருவினை ஈன்றவன் என்ற பொருள் பட கருமணி என்று அழைப்பது பொருத்தம் தானே..
கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானைக் கருதுவார்க்கு ஆற்ற எளியான் தன்னைக்
குருமணியைக் கோளரவு ஒன்று ஆட்டுவானைக் கொல் வேங்கை அதளானைக்
கோவணன்னைக்
அருமணியை அடைந்தவர்கட்கு அமுதொப்பானை ஆனஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன்றுடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
திருவலஞ்சுழி மற்றும் கொட்டையூர் தலங்களை இணைத்துப் பாடிய பதிகத்தின் பாடலில் (6.73.8) அப்பர் பிரான், அரை அதனில் புள்ளி அதள் ஆடையன் என்று குறிப்பிடுகின்றார். விரை=நறுமணம்; வேதங்கள் தொழ நின்ற நாதன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு சிவபுராணத்தில், வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே என்ற திருவாசகத் தொடரினை (சிவபுராணம்) நினைவூட்டும். மறைக்காடு, ஓத்தூர், வேற்காடு ஆகிய தலங்களில் வேதங்கள் இறைவனை வழிபாடு செய்தமை, தலபுராணங்களில் கூறப்படுகின்றது. நறுமணம் கமழும் கொன்றை மலர் மாலைகளை அணிந்தவனும்,வேதங்கள் தொழ நின்ற நாதனாக இருப்பவனும், வேதங்களால் தங்களது தலைவனாக கருதப்பட்டு வணங்கப் படுபவனும், தனது இடுப்பினில் புள்ளிகள் நிறைந்த புலித் தோலினை ஆடையாக அணிந்தவனும், முற்றூழி காலத்தில் நெருப்பினில் நின்று ஆடுபவனும், அழகனாக விளங்குபவனும், அலைகள் தொடர்ந்து வரும் நீர்ப் பெருக்கினை உடைய காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள வலஞ்சுழி தலத்தின் இறைவனும், வஞ்சக நெஞ்சம் கொண்டவர்கள் அறிய முடியாத வல்லமை உடையவனும், குரா மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த கொட்டையூர் தலத்தில் கோடீச்சரம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் தலைவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ காண்பாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விரைகமழும் மலர்க்கொன்றைத் தாரான்கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன்கண்டாய்
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்
வருதிரை நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தர்க்கரிய மைந்தன்கண்டாய்
குரவமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே
தலையாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.79.7) அப்பர் பிரான் பெருமானை, உரிதோலே ஆடையாக உகந்தான் என்று குறிப்பிடுகின்றார். கடை தோறும்=வீட்டின் வாயில்கள் தோறும்; பலி=பிச்சை; முடை நாற்றம்=இறந்த உடல்களிலிருந்து எழும் நாற்றம்; முதுகாடு=சுடுகாடு;முன்னான் பின்னான் இன்னாளான் என்று மூன்று காலமுமாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது.
விடை ஏறிக் கடை தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண்ணீற்றானை
முடை நாறு முதுகாட்டில் ஆடலானை முன்னானைப் பின்னானை அந்நாளானை
உடை ஆடை உரிதோலே உகந்தான் தன்னை உமைஇருந்த பாகத்துள் ஒருவன் தன்னைச்
சடையானைத் தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே
ஆலம்பொழில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.86.2) அப்பர் பிரான், பெருமானை புலியதளே தரித்தான் என்று குறிப்பிடுன்றார். களிறு=ஆண் யானை; ஆழி=சக்கரம்; சிரித்தான்= மகிழ்ச்சியின் வெளிப்பாடாக சிரித்தான்; பரித்தான்=தாங்கிக் கொண்டு நின்றவன்;
உரித்தானை களிறதன் தோல் போர்வையாக உடையானை உடை புலி அதளேயாகத்
தரித்தானைச் சடையதன் மேல் கங்கை அங்கைத் தழலுருவை விடம் அமுதாவுண்டு இதெல்லாம்
பரித்தானைப் பவளமால்வரை அன்னானைப் பாம்பணையான் தனக்கன்று அங்காழி நல்கிச்
சிரித்தானைத் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம்பொழிலானை சிந்தி நெஞ்சே
ஆலம்பொழில் தலத்தின் மீது அருளிய பதிகத்த்தின் பாடலில் (6.86.5) அப்பர் பிரான், அரை ஆர்த்த புலித்தோல் மேல் அரவம் ஆர்த்த பெருமான் என்று குறிப்பிடுன்றார். ஆர்ந்த=தங்கி வளர்ந்த, பொருந்திய; புரை=உயர்வு; மலையினில் தங்கி வளர்ந்த அழகிய மங்கை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், தேவர்களுக்கும் தேவனாக விளங்குபவனும், மணியைப் போன்றும் முத்தினைப் போன்று சிறந்த பொருளாக அனைவராலும் மதிக்கப் படுபவனும், இடுப்பினில் பொருந்திய புலித்தோல் ஆடையின் மேல் பாம்பினை பொருத்திய தலைவனும், அடியார்களால் என்றும் தங்களது தலைவன் என்று கருதப்படுபவனும், மேன்மையான சிறப்பு வாய்ந்த கோவண ஆடையினை உடைய புனிதனும், பூந்துருத்தி புகலூர் ஆகிய தலங்களில் உறைபவனும்,தென்பரம்பைக்குடி எனப்படும் ஊரினில் உள்ள ஆலம்பொழில் என்ற இடத்தில் உள்ள திருக்கோயிலில் உறைபவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ சிந்திப்பாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.
வரை ஆர்ந்த மடமங்கை பங்கன் தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை
அரை ஆர்ந்த புலித்தோல்மேல் அரவமார்த்த அம்மானைத் தம்மானை அடியார்க்கென்றும்
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன் தன்னைப் பூந்துருத்தி மேயானைப் புகலூரானைத்
திரை ஆர்ந்த தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம்பொழிலானை சிந்தி நெஞ்சே
திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (.6.92.2) அப்பர் பிரான் பெருமானை, பாய்புலித் தோலுடையான் என்று அழைக்கின்றார்.இந்த பாடலில் அப்பர் பிரான் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். பல்லாடு தலை=பற்கள் வெளியே தோன்றும் பிரம கபாலம்; என்பறாக் கோலம்=எலும்பு மாலைகள் நீங்காமல் எப்போதும் அணிந்திருக்கும் தன்மை;
பல்லாடு தலை சடை மேல் உடையான் தன்னைப் பாய்புலித் தோல் உடையானைப் பகவன் தன்னை
சொல்லோடு பொருளனைத்தும் ஆனான்தன்னைச் சுடருருவில் என்பறாக் கோலத்தானை
அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுதானானை
கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
நின்ற திருத்தாண்டகத்தின் பாடலில் (6.94.7) அப்பர் பிரான், கொல்புலித்தோல் ஆடைக் குழகன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். புலித்தோலினை ஆடையாகப் போர்த்துக் கொண்டுள்ள பெருமான் அழகு மிகுந்து காணப்படுகின்றார் என்று இங்கே கூறுகின்றார். யாதானும் நினைந்தார்=எந்த நிலையில் இருந்தாலும் தன்னை நினைத்தவர்கள்; பாடலின் இரண்டாவது அடியில் மலர்கள் கொண்டு இறைவனைப் போற்றி வழிபடும் பக்தர்கள் என்று குறிப்பிட்ட அப்பர் பிரான், அந்த நிலையினையும் கடந்து, தனக்கு என்ன நேர்ந்தாலும் கவலைப் படாமல், இறைவன் பால் முழு நம்பிக்கை வைத்து, இறைவனையே நினைக்கும் அடியார்களுக்கு மிகவும் எளியவனாக இறைவன் இருப்பான் என்று அப்பர் கூறுகின்றார். இதற்கு அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளே எடுத்தக்காட்டு. கடலில் கட்டி விடப்பட்ட போது, எப்பரிசு ஆயினும் ஏத்துவன் இறைவனை, என்று நமச்சிவாயப் பதிகம் அருளி இறைவனையே நினைத்திருந்த அப்பர் பிரான், கடலில் மூழ்காமல் காப்பாற்றப்பட்டது இறைவனால் தானே.
மாதா பிதாவாகி மக்களாகி மறிகடலும் மால்விசும்பும் தானேயாகி
கோதாவிரியாய்க் குமரியாகிக் கொல்புலித் தோலாடைக் குழகனாகிப்
போதாய மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பறுக்கும் புனிதனாகி
யாதானுமென நினைந்தார்க்கு எளிதேயாகி அழல் வண்ண வண்ணர் தாம் நின்றவாறே
ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (6.96.7) அப்பர் பிரான், புலித்தோலை உடையாகக் கொண்டவர் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார்.கோடி=எண்ணற்ற; கோடிக்கரை என்ற தலத்தினை குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். அணி தில்லை=அழகிய தில்லை நகரம். மால் விடை=சிறப்பு வாய்ந்த இடபம்; கணி வளர்=அழகு மிகுந்த; தார்=பூ; காதலார் கோடி கலந்து இருக்கை கண்டார் என்ற தொடர், கோடிகா தலத்தினை, அந்த தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை குறிக்கின்றதோ என்று தோன்றுகின்றது. தூர்வாச முனிவர் தன்னைப் பின்பற்றிய மூன்று கோடி முனிவர்களுக்கும் பஞ்சாக்கர மந்திரத்தை உபதேசம் செய்து பெருமானை வழிபடுமாறு கூறினார். மாமுனிவரின் சொற்படி மூன்று கோடி முனிவர்களும் பஞ்சாக்கர் மந்திரம் சொல்லி இறைவனை வழிபட, அந்த வழிபாட்டினால் மகிழ்ந்த இறைவன், அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளினார். பின்னர் தூர்வாச முனிவர் தலத்து குளத்தின் நீரினை அந்த முனிவர்களின் மீது தெளிக்க, அப்போது தோன்றிய பெரிய ஜோதியில் முனிவர்கள் அனைவரும் கலந்து இறைவனுடன் ஐக்கியம் ஆகி முக்தி பெற்றனர் என்பது, கோடிகா தலத்தின் வரலாறு. கோடிகா என்ற தலத்தில் மிகுந்த விருப்பத்துடன் பெருமான் கலந்து உறைகின்றார் என்று சிலர் இந்த தொடருக்கு விளக்கம் கூறுகின்றனர்.
அணிதில்லை அம்பலம் ஆடரங்காக் கொண்டார் ஆலால அருநஞ்சம் அமுதாக் கொண்டார்
கணி வளர் தார்ப் பொன்னிதழிக் கமழ் தார் கொண்டார் காதலார் கோடி கலந்து இருக்கை கண்டார்
மணி பணத்த அரவம் தோள் வளையாக் கொண்டார் மால்விடை மேல் நெடுவீதி போகக் கொண்டார்
துணி புலித்தோலினை ஆடை உடையாக் கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனைக் கொண்டாரே
அண்டங் கடந்த சுவடும் உண்டோ என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (6.97.5) அப்பர் பிரான், கொல்புலித் தோலுடை தான் பெருமானின் உடை என்று குறிப்பிடுகின்றார். இலயம்= கூத்து; இதே பதிகத்தின் கடைப்பாடலில் அப்பர் பிரான், பெருமானின் தோற்றத்தில், புலித்தோல் ஆடையைக் கண்டதாக குறிப்பிடுகின்றார்.
நீறுடைய திருமேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ
கூறுடைய கொடுமழுவாள் கையில் உண்டோ கொல்புலித் தோல் உடை உண்டோ கொண்ட வேடம்
ஆறுடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதனருகே பிறையுண்டோ அளவிலாத
ஏறுடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எவ்வகை எம்பிரானாரைக் கண்ட்வாறே
பொழிப்புரை:
சொற்களால் விளக்கிக் கூற முடியாத வண்ணம், சொற்களுக்கு அரியதாக, சொற்களைக் கடந்த அழகினை உடையவரும், எவரும் தங்களது சிந்தனையால் உணர்வதற்கு அரிய தன்மைகள் உடையவரும், எவராலும் கற்பனை செய்யவும் இயலாத பண்புகள் கொண்டவரும், இடுப்பினில் பொருந்திய புலித்தோல் ஆடையினை உடையவரும், அந்த புலித்தோல் ஆடையின் மேல் தனது இரையினை விழுங்க காத்திருக்கும் பாம்பினை இறுகக் கட்டியவரும் ஆகிய பெருமான் இடைமருது தலத்தினில் உறைகின்றார். அத்தகைய சிவபெருமானின் புகழினை பலகாலும் புகழ்ந்து போற்றும் மனிதர்கள் மிகுந்த புகழ் உடையவர்கள்.
பாடல் 6:
ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும்
அழகிய முடியுடை அடிகளது அறைகழல்
எழிலினர் உறை இடமருதினை மலர்கொடு
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே
விளக்கம்:
ஒழுகிய புனல்=வழிந்தொழுகும் கங்கை நதி; சடையில் அடக்கிவைத்துக் கொள்ள முடியாமல் கங்கை நதி வழிந்தோடியது என்று நாம் பொருள் கொள்வது தவறு. பகீரதனின் வேண்டுகோளுக்கு இரங்கிய பெருமான் தனது ஒரு சடையினை சற்றே தளர்த்தியதால் சிவபெருமானின் சடையிலிருந்து கங்கை நதி வெளியே வந்த செய்தியை இந்த பாடல் நமக்கு உணர்த்துகின்றது. வால்மீகி இராமயணம் சிவபெருமான், பகீரதனுக்கு இரண்டு முறை அருள் புரிந்த விவரத்தை உணர்த்துகின்றது. வானிலிருந்து மிகவும் வேகமாக கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையினில் தாங்கி, பாய்ந்து வந்த கங்கை நதியால் பாரத நாடு அழியாத வண்ணம் காத்தது முதலில் புரிந்த அருட்செயல்; இந்த செயல் மிகவும் அதிகமாக திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது.இவ்வாறு சிவபெருமான், கங்கை நதியினைத் தனது சடையில் தாங்காமல் இருந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்பதை மிகவும் அழகாக திருவாசகம் திருச்சாழல் பாடல் எடுத்துரைக்கின்றது. பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி கங்கை நதி தேவ லோகத்திலிருந்து கீழே இறங்கி வர வேண்டியகட்டாயம் ஏற்பட்டாலும், தனது நீர்ப் பெருக்கில், வல்லமையில் செருக்கு கொண்டிருந்த கங்கை மிகுந்த ஆரவாரத்துடன் கீழே இறங்கினாள். தனக்கு விருப்பம் இல்லாத செயலில் ஈடுபடுத்தப்பட்டதால், மிகுந்த கோபத்துடன், பூமியையே கரைத்து, கடலில் சேர்த்து விடுவது போன்று மிகுந்த ஆவேசத்துடன்கீழே இறங்கிய கங்கை நதியை பரமசிவன் தனது சடையில் தாங்குகின்றார். பெருமானது சடையில் அடக்கப்பட்ட பின்னரும், கங்கையின் ஆரவாரம்குறையவில்லை. அந்த ஆரவாரத்தை பெருமானின் உடலின் இடது பாகத்திலிருந்த பார்வதி தேவியும் கேட்டதாக தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன்.
மலைமகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன் சடையில் பாயும் அது என்னேடி
சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம்
பில முகத்தே புகப் பாய்ந்து பெரும் கேடாம் சாழலோ
பகீரதனை குறிப்பிடும் திருமுறைப் பாடல்கள் மிகவும் அரிது. அத்தகைய பாடல்களை நாம் இங்கே காண்போம். காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.69.6) பாரத நாட்டில் சிறந்து விளங்கிய பகீரதன் தனது முன்னோர்கள் நற்கதி அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் மிகவும் அரிய தவம் செய்து வானுலகில் இருந்த கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்த போது அந்த நதியினை சடையினில் ஏற்றும் பின்னர் சிறிது சிறிதாக வெளியேற்றியும் அருள் புரிந்த பரமன் உறையும் தலம் திருக்காளத்தி என்று கூறுகின்றார். வாரதர்=வார்+அதர், நெடிய வழிகளை உடைய; இரும்=பெரிய;சேவலின்=தங்கியிருக்கும் குடிசை; விசும்பு= ஆகாயம்
பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணி கண்டு
ஆரருள் புரிந்து அலை கொள் கங்கை சடையேற்ற அரன் மலையை வினவில்
வாரதர் இருங்குறவர் சேவலின் மடுத்து அவர் எரித்த விறகில்
காரகில் இரும்புகை விசும்பு கமழ்கின்ற காளத்திமலையே
அநேக காலம் தவம் செய்த பகீரதன் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் திருச்சேறை பதிகத்தின் பாடலாகும் (4.73.4). முதலில் தேவலோகத்தில் இருந்த கங்கை நதியை பூமிக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரமனை நோக்கித் தவம் செய்த பகீரதன், பின்னர் பிரமனின் ஆலோசனைப் படி, கீழே இறங்கும் கங்கையைத் தாங்கவேண்டும் என்று சிவபிரானை நோக்கித் தவம் செய்தான், பின்னர் சிவபிரானின் தலையில் சிக்குண்ட கங்கை நீரை மெல்ல விடுவிக்கவேண்டும் என்று மறுபடியும் சிவபிரானை நோக்கித் தவம் செய்தான். சிவபிரானின் சடையில் இருந்த இறங்கிய கங்கை, தான் செல்லும் வழியில்,ஜஹ்னு என்ற முனிவரின் ஆசிரமத்தை அழித்துவிட, கோபம் கொண்ட முனிவர் கங்கை நதியை, ஒரு சிறு துளியாக மாற்றி குடித்து விட்டார். பின்னர் அவரையும் வேண்டி கங்கை நதியை பகீரதன் வெளிக்கொணர்ந்து, பாதாள லோகம் வரை அழைத்துச் சென்று, தனது மூதாதையர்கள் சாம்பலை கங்கை நீரில் கரைத்து அவர்களுக்கு விமோசனம் அளித்தான். இந்த வரலாறு, வால்மீகி இராமயணத்தில் மிகவும் விவரமாக, விஸ்வாமித்திரர் இராமருக்கு கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு பலமுறை, தவம் செய்த பகீரதனை அநேக காலம் வஞ்சனை இல்லாத தவங்கள் செய்தான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தனது ஐந்து புலன்களையும் அடக்கி, ஐந்து தீக்களை வளர்த்து அதனிடையே நின்று பல ஆண்டுகள், வஞ்சனை ஏதும் இல்லாமல், தனது மூதாதையர்கள் கடைத்தேற வேண்டும் என்ற ஓரே நோக்கத்துடன் தவம் செய்த பகீரதனின் தவத்தினால் தேவலோகத்திலிருந்து கீழே கங்கை நதி பாய்ந்தது. ஆனால் தேவலோகத்தை விட்டுத் தன்னை பிரித்ததால் ஏற்பட்ட கோபத்துடன், பல கிளைகளாகப் பிரிந்த கங்கை மிகுந்த வேகத்துடன்,பூமியையே கரைத்து, பாதாள லோகத்திற்கு அடித்துச் செல்வது போல் கீழே இறங்கியது. இவ்வாறு மிகுந்த வேகத்துடன் இறங்கிய கங்கை நதியை தனது சடையில் ஏற்ற சிவபெருமான், கங்கை நதி சீராக மண்ணுலகில் பாயுமாறு செய்தார். இவ்வாறு எவர்க்கும் துன்பம் ஏற்படாத வண்ணம் கங்கை நதியை வழி நடத்தியவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.
அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம்
வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்களாகி விசையொடு பாயும் கங்கை
செஞ்சடை ஏற்றார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (4.65.7) அப்பர் பிரான் பகீரதனின் தவம் பற்றி குறிப்பிடுகின்றார். மை=குற்றம்; மையறு=குற்றமற்ற;குற்றமற்ற தவங்கள் செய்தவன் பகீரதன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டவர்களாக, மிகுந்த வேகத்துடன் பாயும் கங்கை நதியின் வேகத்தை அடக்கும் ஆற்றல் பெருமானுக்கு உண்டு என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக, தேவர்கள் இருந்தமை இங்கே ஐயமில் அமரர் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. கங்கை நதியினை தாங்கும் ஆற்றல் பெருமான் ஒருவருக்கு மட்டுமே உண்டு என்று பகீரதனுக்கு உணர்த்தியது பிரமன் தானே. நெளிய=பூமி புரட்டி செல்லப்படும் வண்ணம் வேகமாக பாய்ந்த கங்கை நதி.
மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகமதாகி
வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை என்னும்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே
மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதி பெருமானின் சடையில் ஒரு பனித்துளி போன்று காணப்பட்டது என்று வீழிமிழலை பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.50.10) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமானின் விசுவரூபத்தின் முன்னே, அனைத்து அண்டங்களும் சிறிய தூசி போன்று தென்படுவதாக, திருவண்டப்பகுதி அகவலில் மணிவாசக அடிகளார் குறிப்பிட்டுகின்றார். அவ்வாறு இருக்கையில் கங்கை நதி பனித்துளி போன்று பெருமானின் ஒட்டிக்கொண்டு இருப்பதாக அப்பர் பிரான் கூறுவது, இயல்பான தன்மையைத் தானே உணர்த்துகின்றது.
அறுத்தானை அயன்தலைகள் அஞ்சில் ஒன்றையஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை எழுநரம்பின் இசை கேட்டானை இந்துவினைத் தேய்த்தானை இரவி தன் பல்
பறித்தானைப் பகீரதற்காய் வானோர்வேண்டப் பரந்திழியும் புனல் கங்கை பனி போலாங்குச்
செறித்தானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே
பெருமானே, பண்டைய நாளில் உன்னைப் பணிந்து வணங்கிய பார்த்தன் பகீரதன் பல பத்தர்கள் மற்றும் சித்தர்களுக்கு அருளிய பெருமானே, நீ எனக்கும் அருள் புரிய வேண்டும் என்று சுந்தரர் கூறும் பாடல் வீழிமிழலை பதிகத்தின் பாடலாகும் (7.88.7). வான்=உயர்வு
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்
திணிந்த மாடம் தோறும் செல்வம் மல்கு திருமிழலைத்
தணிந்த அந்தணர் சந்தி நாள்தொறும் அந்தி வான் இடு பூச் சிறப்பவை
அணிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளிதிரே
திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.55.7) சுந்தரரும், பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி கங்கையைத் தனது சடையில் ஏற்ற பெருமான் என்று கூறுகின்றார். போர்த்த=பெருமை மிகுந்த; நீள் செவி=சனகாதி முனிவர்கள் பெருமானின் உப்தேசத்தைக் கேட்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் இருந்த தன்மை நீள்செவி என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. கங்கை நங்கை கொண்டிருந்த செருக்கினை நீக்கி, புனிதத் தன்மை அளித்து புண்ணிய தீர்த்தமாக பெருமான் மாற்றிய தன்மை தீர்த்தன் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.
போர்த்த நீள்செவியாளர் அந்தணர்க்குப் பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசைக் கரந்த
தீர்த்தனே நின் தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே
பகீரதன் கடுந்தவம் புரிந்ததே, தனது மூதாதையர் சகர புத்திரர்களுக்கு நற்கதி அளிக்க வேண்டும் என்ற நோக்கம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.தேவலோகத்திலிருந்த கங்கை நதியை பூமிக்கு வரவழைத்து அதன் பின்னர் பாதாளத்தில் சாம்பற்குவியலாக இருந்த தனது மூதாதையர்களுக்கு (சகர புத்திரர்கள்) நற்கதி அளிக்கவேண்டும் என்பதற்காக, கங்கை நதி சகரபுத்திரர்களின் சாம்பல் மீது பாயவேண்டும் என்பதே பகீரதனின் நோக்கம் என்பதால்,சிவபெருமானின் சடையில் சிக்கிக்கொண்ட கங்கை நதி, பெருமானின் சடையிலிருந்து விடுபட்டு பூமியில் ஓடவேண்டும் என்பதற்காக பெருமானை பகீரதன் சிவபெருமானிடம் வேண்டுகின்றார். பகீரதனுக்கு அருள் புரிய திருவுள்ளம் கொண்ட பெருமான், தனது ஒன்பது சடைகளின் ஒன்றினை சற்றே தளர்த்த, கங்கை நதி துளித்துளியாக விடுபட்டு ஓடத்தொடங்க, கங்கை நதி வங்காளம் வரை சென்று கடலில் கலந்து பாதாளத்தில் புகுந்து சகர புத்திரர்களுக்கு நற்கதி அளித்தது என்று இராமயணம் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு கங்கை நதி விடுவிக்கப்ப்ட்ட செய்தி, ஒழுகிய புனல் என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது.
இவ்வாறு கங்கை நதியினை பெருமான் பாரத நாட்டில் ஓடவைத்த செய்தி பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பாடல்களையும் நாம் இங்கே காண்போம். ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.122.3) திருஞானசம்பந்தர் பகீரதனுக்கு அருள் புரிந்து சிவபெருமான், கங்கை நதியினை ஓடச்செய்தார் என்று கூறுகின்றார் பாங்குடை=சிறந்த தவத்தினை உடைய; தராதலம்=பூமி; தத்துவன்=மேலானவன்;இந்த பாடலில் பெருமான் பகீரதனுக்கு அருள் புரியும் வண்ணம் கங்கை நதியை சிறிது சிறிதாக வெளியிட்ட செய்தி சொல்லப்படுகின்றது. தாங்குதல் தவிர்த்து என்ற தொடர் மூலம், கங்கை நதி பெருமானால் விடுவிக்கப் பட்ட செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது.
பாங்குடை தவத்துப் பகீரதற்கு அருளிப் படர்சடைக் கரந்த நீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்துத் தராதலத்து இழித்த தத்துவன் உறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அங்கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.3) தாழுநதி என்று கங்கை நதியினை திருஞானசமபந்தர் குறிப்பிடுகின்றார். தாழுநதி என்ற தொடர், பெருமானின் சடையிலிருந்து விடுபட்டு பூமியில் இறங்கி கங்கை நதி ஓடிய வரலாறு உணர்த்துகின்றது என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. பிராட்டியின் கூந்தல் மற்றும் முகத்தின் அழகினை முதல் இரண்டு பாடல்களில் கூறும் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கண்களின் அழகினை, மாவடு போன்று கண்கள் என்று குறிப்பிடுகின்றார். பெண்களின் கண்களுக்கு மாவடுவினை உவமையாக சொல்வது இலக்கிய வழக்கு; போழும்=பிளந்த, வட்டத்தின் ஒரு பகுதியாக பிளந்த சந்திரன்; தாழுநதி=தாழ்ந்து கீழே பாய்ந்து இறங்கிய கங்கை நதி; பொங்கரவு=சீறும் பாம்பு; புன்சடை=செம்பட்டை நிறத்தில் உள்ள சடை; புரி=முறுக்கிய; மாழை=மாவடு; தாழை முகிழ்=தாழையின் மொக்கு;ஞாழல்=புலிநகக் கொன்றை; மன்னு= நிலையாக விளங்கும்; புனை=புன்னை மரங்கள்; மாடு=அருகே; வுந்துதரு=தலையில் சூட்டிக் கொள்ளாமல் அலட்சியம் செய்யும்; ஏழை=தனியாக தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இறைவனது எண்ணங்களை செயல்படுத்தும்; தாழுநதி என்ற சொல் தண்ணீரின் தன்மையை, மேடான இடத்தில் நில்லாமல் கீழே பாயும் தன்மையை உணர்த்துவதாகவும் பொருள் கூறுவார்கள். உயர்ந்த சடையில் தேக்கிவைக்கப் பட்ட கங்கை நதி கீழே வாராமல் நிறுத்திய பெருமானின் வல்லமை மலைப்புக்கு உரியது.
போழு மதி தாழு நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன்
யாழின் மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதி தான்
வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடலார்
தாழை முகிழ் வேழ மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.5.11) சேந்தனார் வளங்கிளர் நதி என்று கங்கை நதியை குறிப்பிடுகின்றார். பெருமானின் சடையில் தொடர்ந்து சிறைப்பட்டிருந்தால் கங்கை நதியின் வளங்கொழிக்கும் தன்மை எவரும் அறிந்திருக்க முடியாது அல்லவா. பெருமானை விடவும் வல்லவர்கள் எவரும் இல்லாததால், பெருமான் வைத்திருந்த சிறையில் இருந்து கங்கை நதியை விடுவிக்கும் ஆற்றல் எவருக்கும் இல்லை என்பது சொல்லாமலே விளங்கும். எனவே பெருமானே விடுவித்திருந்தால் அல்லவா கங்கை நதி, பெருமானின் சடையிலிருந்து விடுபட்டு நிலத்தினில் ஓடி தான் பாயும் இடங்களை வளம் கொழிக்க்ச் செய்திருக்க முடியும். எனவே வளங்கிளர் நதி என்ற தொடர் மூலம், பெருமான் கங்கை நதியினை விடுவித்த செய்தியும் உணர்த்தப் படுகின்றது என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம். ஆந்தனை=ஆம்+தனை= இயன்ற அளவு; உளம் கொள-உயிர்களின் உள்ளம் நிறையும் வண்ணம். மதுரம்=இனிமை; சேந்தன்=முருகன்; களம் கொள=என் முன்னே வந்து தோன்றுமாறு; கைக்கொண்ட=பற்றி நின்ற;
உளங்கொள் மதுரக் கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி மழவிடை மேல் வருவானை
விளங்கொளி வீழிமிழலை வேந்தன் என்று ஆந்தனை சேந்தன் தாதையை யான்
களங்கொள அழைதால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனககற்பகமே
களந்தை ஆதித்தேச்சரம் தலத்தின் மீது கருவூர்த்தேவர் அருளிய பதிகத்தின் பாடலில் (9.9.4) ஒழுகு நீர் கங்கை என்று குறிப்பிடுகின்றார். ஒழுகு நீர் கங்கை என்ற தொடர் மூலம், பெருமான் சிறிது சிறிதாக கங்கை நீரினைத் தனது சடையிலிருந்து விடுவித்து வெளியேற்றிய செய்தி குறிப்பிடப்படுகின்றது.மிண்டர்=முரடர்கள்;
பழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணி பொறுத்தருளாப் பிச்சரே நச்சரா மிளிரும்
குழையராய் வந்தென் முடி முழுதாளும் குழகரே ஒழுகு நீர்க் கங்கை
அழகரே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே
இந்த பாடலில் பெருமானின் சடைமுடியை அழகிய சடைமுடி என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கசிந்து ஒழுகும் கங்கை நதி ஒரு புறமும்,வளைந்த பிறைச் சந்திரன் ஒரு புறமும், படமெடுத்தாடும் பாம்பு ஒரு புறமும் இருந்த போதிலும் பெருமானின் சடைமுடி மிகவும் அழகாக இருப்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு பெருமானின் உடல் உறுப்புகள் அழகாக இருப்பதை குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்பது பொருத்தம்.
திருவாசகம் குயிற்பத்து பதிகத்தின் பாடலில் (8.18.10) பெருமானின் திருவடியை அழகிய சேவடி என்று மணிவாசக அடிகளார் குறிப்பிடுகின்றார்.கொந்து=பூங்கொத்துகள்; கூங்குயில்=கூவுகின்ற குயில்; தமர்=தொண்டன்; தமர் என்ற சொல்லுக்கு உறவினர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே;அணவும்=பொருந்திய; திருப்பெருந்துறை தலத்தினில் குருந்த மரத்தின் அடியே, அந்தணர் கோலத்தில் பெருமான் வீற்றிருந்த வண்ணம் தனக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்ததை அடிகளார் இங்கே உணர்த்துகின்றார்.
கொந்தணவும் பொழிற் சோலைக் கூங்குயிலே இது கேள் நீ
அந்தணனாகி வந்திங்கே அழகிய சேவடி காட்டி
எந்தமராம் இவன் என்றிங்கு என்னையும் ஆட்கொண்டருளும்
செந்தழல் போல் திருமேனித் தேவர்பிரான் வரக் கூவாய்
கீழ்க்கோட்டூர் மணியம்பலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.10.10) கருவூர்த் தேவர் பெருமானின் சடையினை அழகிய சடை என்று குறிப்பிடுகின்றார். மாலை நேரத்தில் தோன்றும் சிவந்த வானத்தின் பின்னணியில் உதயமாகும் பிறைச் சந்திரன் போன்று பெருமானின் சிவந்த சடையின் பொருந்தியுள்ள பிறைச் சந்திரனுடன் பெருமானின் சடை மிகவும் அழகாக காட்சி அளிக்கின்றது என்று இங்கே கருவூர்த் தேவர் கூறுகின்றார். தனது சிந்தை பெருமானிடம் சென்று விட்டதால், தனது சிந்தை காணாமல் போயிற்று என்று நயமாக கூறுகின்றார். கந்தியா என்ற சொல் கெந்தியா என்று திரிந்தது. கந்தியா=மணம் வீசும்; அலங்கல்=மாலை; புண்டரீகம்= தாமரை மலர்; உகளும்=கிழிக்கும்; நீர்நிலையில் உலவும் கெண்டை மீன்கள் அங்குமிங்கும் ஓடியாடி தாமரை மலர்களை கிழிக்கின்றன என்று தலத்தின் நீர்வளம் சொல்லப் படுகின்றது. பெருமான் பால் காதல் கொண்ட பெண் தனது நிலையினை வெளிப்படுத்தும் அகத்துறை பாடல். பெருமானை தான் முதன்முதலாகக் கண்ட நாளே தனது மனம் மாற்றம் அடைந்துவிட்டது என்றும் அந்த மனம் மாறிய காரணத்தையும் நிலையினையும் பெருமான் ஒருவனே அறிவான் என்று கருவூர் நாயகி கூறுவதாக அமைந்த பாடல்.
அந்தி போல் உருவும் அந்தியிற் பிறை சேர் அழகிய சடையும் வெண்ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையும் காணேன் செய்வதென் தெளிபுனல் அலங்கல்
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண்பணை செய் கீழ்க்கோட்டூர்
வந்த நாள் மணியம்பலத்துள் நின்றாடும் மைந்தனே அறியும் என் மனமே
கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் கருவூர்த்தேவர் (9.13.4) பெருமானின் நெற்றி மற்றும் விழிகள் மிகவும் அழகாக இருப்பதாக கூறுகின்றார். வாணுதல்=வாள்=நுதல்; ஒளி பொருந்திய; ஐய=அழகிய; சைவம்=சிவ வேடம்; சைவம் விட்டிட்ட= சைவ வேடத்திற்கு பொருந்தும்;உருத்திராக்கம், வெண்ணீறு அணிந்த மேனி மற்றும் சடை ஆகியவை சைவ வேடத்திற்கு அடையாளங்களாக கருதப் படுகின்றன. மொய்கொள்=சூழ்ந்து இருக்கும்; பெருமானின் விசுவரூபத் திருக்கோலம், எங்கும் பரவி பரந்து இருப்பதால், எட்டு திசைகளும் பெருமானின் திருமேனியை சூழ்ந்து இருப்பதாக கூறுகின்றார். தரங்கம்=அலைகள்; எட்டு திசைகளையும் ஆடையாக அணிந்தவன் என்பது பெருமானின் திருநாமங்களில் ஒன்றாகும். இத்தகைய திருவுருவத்தை, அழகிய பொட்டு இடப்பட்டதும் ஒளிவீசுவதும் ஆகிய அழகிய நெற்றி, அழகிய மூன்று கண்கள், சைவ வேடத்தை உணர்த்தும் சடைமுடியும்,சடையின் மேல் அலைகளுடன் புரளும் கங்கை நதியும், நடனமாடும் கால்களில் அணிந்துள்ள சதங்கை மற்றும் சிலம்பு, ஆகியவை உடையதும் எட்டு திசைகளும் சூழ்ந்திருக்கும் வண்ணம் பரந்திருக்கும் உனது திருமேனியைக் காணும் அடியார்கள் தங்களது முகம் மலர, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக கைகள் கூப்பியவண்ணம் தம்மை மறந்து நிற்பதன் காரணம் யாது, கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்து இறைவனே சொல்வாயாக என்று பெருமானை நோக்கி கருவூர்த் தேவர் கேள்வி கேட்கும் பாடல். இவ்வாறு அடியார்கள் பெருமான் பால் அன்பு வைத்து மெய்ம்மறந்து வழிபடுவதன் காரணம்,அவர்கள் முந்தைய பிறவிகளில் செய்த புண்ணியத் தவமே காரணம் என்பதே இந்த கேள்விக்கு விடையாகும்.
ஐய பொட்டிட்ட அழகு வாணுதலும் அழகிய விழியும் வெண்ணீறும்
சைவம் விட்டிட்ட சடைகளும் சடைமேல் தரங்கமும் சதங்கையுஞ் சிலம்பும்
மொய்கொள் எண்திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இருகண் நீர் அரும்பக்
கைகள் மொட்டிக்கும் என் கொலோ கங்கை கொண்ட சோளேச்சரத்தானே
தஞ்சை இராசராசேசரம் திருக்கோயில் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.16.6) கருவூர்த் தேவர் அடியார்களை ஆட்கொண்டு அருள் புரியும் பெருமானின் கண்கள் மிகவும் அழகாக உள்ளன என்று கூறுகின்றார். அடிகள்=அனைவர்க்கும் தலைவராக இருக்கும் பெருமான்; குருள்= சுருண்ட; வார்=வார்சடை, நீண்ட சடை; தரள வான்=மலை போன்ற முத்துக்குவியல்; குயில்= குயில் போன்று இனிய குரலினை உடைய தனது மகள்; அடியார்களுக்கு முறையாக அருள் புரிந்து அவர்களை ஆட்கொள்ள வேண்டிய முறையில் ஆட்கொள்ளும் அழகிய கண்கள், சுருண்ட சடைமுடி, அழகிய காதுகள் இவற்றுடன் கூடிய தனது திருக்கோலத்தை காட்டி, எனது மகள் தன் மீது ஆழந்த காதல் கொள்ளும் வண்ணம் மயக்கிய பெருமானே, நீ செய்யும் செயல் அழகியதா என்று பெருமானை நோக்கி, பெருமான் பால் காதல் வயப்பட்ட பெண்ணின் தாய் கேள்வி கேட்பதாக அமைந்துள்ள அகத்துறை பாடல். இந்த செயலை புரியும் பெருமான் உறைகின்ற திருகோயில் தஞ்சை இராசராசேச்சரம் ஆகும். மலை போன்று பெரிய முத்தாக குளிர்விக்கும் நிலவொளி வீசும் மாடங்கள் நெருங்கி அமைந்துள்ளதும், ஒளி வீசும் தெருக்கள் உடையதும், உயர்ந்த மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய தஞ்சை நகரம் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள அடிகள் தம் அழகிய விழியும்
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ
தரள வான் குன்றில் தண்ணிலா ஒளியும் தருகுவால் பெருகு வான் தெருவில்
இருளெலாம் கிழியும் இஞ்சி சூழ் தஞ்சை இராராசேச்சரத்து இவர்க்கே
கோளிலி திருத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.62.8), திருஞானசம்பந்தர், பெருமானின் கால் பெருவிரலை சுந்தரத் திருவிரல், என்று குறிப்பிடுகின்றார். கொன் தரத்த என்று பிரித்து பெருமையுடைய என்ற பொருளும் சொல்லப் படுகின்றது. கொந்தரத்த=பூங்கொம்பு போன்று அழகுடன் திகழும்; கயிலாய மலையின் கீழே அரக்கன் இராவணனை, நெருக்கிய கால் பெருவிரல் இவ்வாறு இங்கே குறிப்பிடப்படுகின்றது.
அந்தரத்தில் தேர் ஊரும் அரக்கன் மலை அன்றெடுப்பச்
சுந்தரத் தன் திருவிரலால் ஊன்ற அவன் உடல் நெரிந்து
மந்திரத்த மறை பாட வாள் அவனுக்கு ஈந்தானும்
கொந்தரத்த மதிச் சென்னிக் கோளிலி எம் பெருமானே
மொழிமாற்றுப் பதிகத்தின் முதல் பாடலில் (1.117.1) திருஞானசம்பந்தர், பெருமானின் காதினை சுந்தரக் காது என்று குறிப்பிடுகின்றார். விளையாட்டாக சொற்களை மாற்றி வைக்கப்பட்டுள்ள இந்த பாடலின் பொருளை புரிந்து கொள்ள, காடது பதி, கார் அரவம் அணிகலம், காலதினில் தூச்சிலம்பர், சுந்தரக் காதினில் தோடது அணிகுவர், வேட உருவமது அணிவர், விசயற்கு வில்லும் கொடுப்பர் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும்.பீடு=மிகுந்த புகழ்; மாடம்=உயர்ந்த மாட மாளிகை; பதி=வாழும் இடம்; உமையம்மை அணியும் தோடும் சிலம்பும் குறிப்பிடப்பட்டு மாதொரு பாகனாகத் திகழும் இறைவனின் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தோடு அணியும் காது சுந்தரக்காது என்றும் சிலம்பு தூய சிலம்பு என்று அடைமொழி கொடுக்கப்பட்டு சிறப்பிடப்பட்டுள்ளதை உணரலாம். தோடுடைய என்று தனது முதல் பதிகத்தைத் தொடங்கிய திருஞானசம்பந்தருக்கு பெருமானின் திருக்காதினை சிறப்பித்து கூறுவதில் பெரு விருப்பம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
காடது அணிகலம் கார் அரவம் பதி காலதனில்
தோடது அணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர்
வேடது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர்
பீடது அணிமணி மாடப் பிரமபுரத்து அரரே
திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.4.2) திருஞானசம்பந்தர் பெருமான் அணிந்திருக்கும் வீரக்கழலை, சுந்தரக்கழல் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திருஞான சம்பந்தர், கழலும் சிலம்பும் ஆர்க்க வல்லீர் என்று பெருமானை அழைத்து, சிவந்த வண்ணத்தில் திருமேனி கொண்டிருப்பதன் காரணம் யாது என்று கேட்கின்றார். இவ்வாறு பெருமானின் கழலும் சிலம்பும் அணிந்திருப்பது பெருமான், தான், மாதொரு பாகத்தன் என்பதை உணர்த்தும் பொருட்டு என்பதை நாம் அறிவோம். இதனை திருஞான சம்பந்தரும் அறிந்தவரே. எனினும் இந்த காரணம் யாது என்பதை கேள்வியாக வினவி, அடியார்களின் வாய்மொழியாக அந்த பதிலை அறிந்து கொள்வதில் விருப்பம் உடையவராக அவர் காணப்படுகின்றார். பெருமான் குறித்த செய்திகளை ஆர்வத்துடன் அடுத்தவர் உரைப்பதை கேட்பதில் ஆசை கொண்டவர் அவர். சந்து=சந்தனம்;
சந்து உயர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டு தம்
சிந்தை செய்து அடியார் பரவும் திருவான்மியூர்ச்
சுந்தரக் கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆக்கிய வண்ணமே
திருநீற்றுப் பதிகத்தின் முதல் பாடலில், சுந்தரமாவது நீறு என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பாண்டிய மன்னனின் வெப்பு நோயினை தீர்ப்பதற்காக அவனது அரண்மனைக்கு சென்ற திருஞானசம்பந்தர், அடுத்தவர்களால் தீர்க்கமுடியாத நோய்களையும் தீர்க்கும் மருந்தாக செயல்படுவது பெருமான் அணிகின்ற திருநீறு என்பதை இந்த பாடலில் உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களை பாடியவாறு, திருஞானசம்பந்தர், மன்னனின் உடலில் திருநீற்றை த்டவிய பின்னர், மன்னனின் வெப்பு நோய் தீர்ந்த அதிசயம் நிகழ்ந்தது.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே
அப்பர் பெருமானாரும் பெருமான் அணியும் திருநீற்றை சுந்தரத்த பொடி என்று திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.28.8)குறிப்பிடுகின்றார். இந்திரம்=தலைமைப் பதவி; தோன்றல்=தலைவர்; தேவர்களுக்குத் தலைவனாக இருக்கும் இந்திர பதவியை தக்கவருக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் அளித்தவராகவும், திருமால் பிரமன் இந்திரன் உட்பட தேவர்கள் அனைவரும் வழிபடும் தலைவராக விளங்குபவராகவும், அழகிய திருநீற்றினைத் தனது மேனியில் பூசியவராகவும், மிகவும் தூய்மையான திருமேனியை உடைய தலைவராகவும். அடியார்களின் மனதினில் திருவைந்தெழுத்து மந்திரத்தை வைத்தவராகவும், சிறப்பு வாய்ந்த பெரிய பாம்பாகிய வாசுகியை தான் திரிபுரத்தவர்களுடன் போர் தொடுத்த தருணத்தில் பயன்படுத்திய வில்லினுக்கு ஏற்ற நாணாக வளைத்தவராகவும், தான் உட்கொண்ட நஞ்சினைத் தனது கழுத்தினில் அழகிய அணிகலனாக இருக்குமாறு ஏற்றவராகவும் அழகிய திருவாரூர் தலத்தின் மூலட்டானத்து பெருமான் எனது மனக்கண்ணுக்கு காட்சி அளிக்கின்றார்.
இந்திரத்தை இனிதாக ஈந்தார்போலும் இமையவர்கள் வந்திறைஞ்சும் இறைவர் போலும்
சுந்தரத்த பொடி தன்னைத் துதைந்தார் போலும் தூத்தூய திருமேனித் தோன்றல் போலும்
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் மாநாகம் நாணாக வளைத்தார் போலும்
அந்திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணியாரூர் திருமூலட்டனானாரே
பதிகத்தின் முதல் பாடலிலும் ஐந்தாவது பாடலிலும் அழகர் என்று பெருமானின் அழகினை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலிலும் பெருமானை எழிலினர் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் அழகு அவரது கண்களையும் மனதினையும் விட்டு அகலவில்லை போலும். அறை கழல்=ஒலிக்கின்ற வீரக்கழல்;
பொழிப்புரை:
சடையிலிருந்து சிறிது சிறிதாக வெளியேற்றப்படும் கங்கை நதி, அதன் அருகே சூட்டிக் கொண்டுள்ள வளைந்த பிறைச் சந்திரன் மற்றும் பாம்பு ஆகியவை இடம் பெறும் சடையாக இருப்பினும், பெருமானின் முடி மிகவும் அழகாக காணப்படுகின்றது. இவ்வாறு அழகிய சடையினை உடைய பெருமான், ஒலிக்கும் வீரக்கழல் அணிந்தவராக அழகுடன் இடைமருது தலத்தினில் விளங்குகின்றார். இந்த தலம் சென்றடைந்து மலர்கள் கொண்டு பெருமானைத் தொழுது வணங்கும் அடியார்கள் தங்களது வாழ்வினில் துயரம் அடையமாட்டார்கள்.
பாடல் 7:
கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமகள் உலவிய சடையினர்
மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவர் இடம் இடைமருதே
விளக்கம்:
கலைமலி விரலினர்=வீணையை மீட்டி இன்னிசை எழுப்பும் ஆற்றல் உடைய பெருமான்; கடியதோர்=கொடுமை வாய்ந்த; நளினமான இன்னிசை எழுப்பும் ஆற்றல் உடையவர் எனினும், தன் மீது ஏவப்பட்ட கொடிய மழு ஆயுதத்தை தாங்கிப் பிடித்து செயலிழக்கச் செய்யும் வீரம் கொண்டவராக பெருமான் இருக்கும் தன்மை மிகவும் நயமாக, அவரது நளினத்துட்ன் இணைந்த வலிமை இங்கே உணர்த்தப்படுகின்றது. மருவிய=முலைத் தழும்புகள் படிந்த; திரண்ட மலை போன்ற மார்பினை உடைய்வராக இருந்த போதிலும், தழுவக்குழைந்த நாதராக பெருமான் விளங்கும் தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.இந்த நிகழ்ச்சி கச்சி ஏகம்பம் தலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி மிகவும் விரிவாக, பெரியபுராணம் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் சேக்கிழாரால் சொல்லப் படுகின்றது. பதிகத்தின் முந்தைய பாடல்களில் பெருமான் அடியார்களுக்கு அருள் புரியும் தன்மைகளை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில், பெருமான் பிராட்டிக்கு அருள் புரிந்த தன்மையை குறிப்பிடுகின்றார்.
எண்ணற்ற ஆகமங்களை உலகினுக்கு அருளிய பெருமானின் விருப்பம் யாதென்று பிராட்டி, ஒரு தருணத்தில் பெருமானிடம் வினவிய போது, பெருமான் ஆகமங்களில் சொல்லிய வண்ணம் முறையாக தன்னை அடியார்கள் வழிபடுவதே தனக்கு மிகவும் விருப்பம் என்று விடை மொழிந்தார். இதனைக் கேட்ட பிராட்டியும் தானும் அவ்வாறு இறைவனை வழிபட்டு, அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்று விரும்பினார். இத்தகைய வழிபாட்டினை பிராட்டி மேற்கொள்வதற்கு தகுந்த இடம், தென்னாட்டில் உள்ள காஞ்சிபுரம் என்று இறைவன் சொல்ல பிராட்டியும் தனது தோழியர்களுடன் கச்சி மாநகரம் வந்தடைந்தார். ஆங்குள்ள பழமை வாய்ந்த மாமரத்தின் அடியில் தங்கி பிராட்டி தவம் செய்ய, பெருமானும் ஆங்கே தோன்றி பிராட்டிக்கு காட்சி கொடுத்தார். அதன் பின்னர் பிராட்டி மணலால் ஒரு லிங்கம் தாபித்து, கம்பை நதியிலிருந்து பெருமானை நீராட்ட தீர்த்தமும் பெருமானை அர்ச்சிக்க அம்பிகாவனத்திலிருந்து நறுமணம் மிகுந்த மலர்களும் கொண்டு வந்து ஆகமங்களில் சொல்லிய வண்ணம் பிராட்டி நாள்தோறும் வழிபட்டு வந்தாள்.வழிபட்டாள். இவ்வாறு பிராட்டி முறையாக இறைவனை வழிபட அதனால் மகிழ்ந்த பெருமான், ஒரு திருவிளையாடல் பரிந்து, பிராட்டிக்கு அருள புரிய திருவுள்ளம் கொண்டார். திடீரென்று ஒருநாள், கம்பை ஆற்றில் வெள்ளம் பெருகவே, அந்த வெள்ளத்தினால் தான் வழிபட்டு வந்த இலிங்கத்திற்கு ஊறு ஏதேனும் ஏற்படுமோ என்ற அச்சத்தில், பெருகி வந்த வெள்ளத்தைத் தனது கைகளால் பிராட்டி தடுக்க முயன்றாள். அவ்வாறு தடுத்தும் வெள்ளம் நில்லாமை கண்டு, வேறு எதுவும் செய்ய இயலாமல், அந்த இலிங்கத்தை இறுகத் தழுவிக் கொண்டு வெள்ளம் பெருமானின் திருவுருவத்தை பாதிக்காத வண்ணம் பிராட்டி பாதுகாத்தாள். அப்போது பிராட்டி தனது கைகளில் அணிந்திருந்த வளையல்களும் மார்பகங்களும் பெருமானின் திருமேனியில் அழுந்திய வண்ணம் படிந்தன. அதனால் ஏற்பட்ட அடையாளத்தை இன்றும் கச்சி ஏகம்பம் திருக்கோயிலில் பெருமானின் திருமேனி மீது நாம் காணலாம். இவ்வாறு பிராட்டி தழுவிக்கொண்டதை நமக்கு நினைவூட்டும் பெருமான் இருக்கும் நிலையினை, சேக்கிழார் மிகவும் நயமாக பெருமான் தனது திருமேனியை தேவிக்கு குழைந்து காட்டினார் என்று கூறுகின்றார். விழைந்த கொள்கையினார் என்று பிராட்டி பால் பேரன்பு கொண்டவராக பெருமான் திகழ்ந்த நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது. இதனைக் கண்ட உலகத்து உயிர்கள் எல்லாம், ஏகம்பர் என்றும் பிராட்டிக்கு மெல்லியரானார் என்று புகழ்ந்தன என்று அடுத்த பாடலில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இந்த நிகழ்வால் பெருமானுக்கு தழுவக்குழைந்த நாயகர் என்ற பெயர் வந்தது.
மலைக்குலக்கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவ நாயகரை
முலைக் குவட்டொடு வளைக்கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிடத் தழுவச்
சிலைத் தனித் திருநுதல் திருமுலைக்கும் செந்தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே
கொலைக் களிற்றுரி புனைந்த தம் மேனி குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார்
பல திருமுறைப் பாடல்களில் இந்த நிகழ்ச்சி உணர்த்தப்படுகின்றது. கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.114.7)திருஞானசம்பந்தர் இந்த நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். முதிரம் மங்கை=மேகம் போன்ற நிறத்தில் திருமேனி உடைய அன்னை பார்வதி தேவி; இந்த பாடலில், பெருமானை கணவராக அடையும் நோக்கத்துடன் கயிலாய மலையில் அன்னை பார்வதி தேவி செய்த தவமும், பின்னாளில் காஞ்சி மாநகரில் செய்த தவமும் குறிப்பிடப் படுகின்றன. கயிலையில் தவம் செய்த போது பெருமான், கிழ வேதியராக வந்து பிராட்டியை சோதனை செய்த பெருமான்,காஞ்சியில் தவம் செய்த போது, கம்பையாற்றில் வெள்ளத்தை பெருக்குவித்து சோதனை செய்கின்றார். பிராட்டியின் தன்மையை தான் அறிந்து கொள்ள வேண்டி பெருமான் சோதனை செய்ததாக நாம் தவறாக எடுத்துக் கொள்ளலாகாது. பிராட்டியின் தன்மையை மிகவும் நன்றாக அறிந்தவர் பெருமான்.எனினும் பிராட்டி தன்பால் வைத்துள்ள அன்பின் தன்மையை உலகம் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமான் ஆடிய திருவிளையாடல்கள் இவை. கம்பம் நதியில் பெருகிய வெள்ளத்தின் தன்மையை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்துகின்றார். வெதிர்=மூங்கில்;மூங்கில் மரங்களோடு அகில், சந்தனம் ஏனைய முரட்டு மரங்களையும் யானை முதலிய் பெரிய விலங்குகளையும் மிகுந்த ஆரவாரத்துடன் கம்பை வெள்ளம் உருட்டிக் கொண்டு வந்ததாக இந்த பாடலில் கூறுகின்றார். ஆனை=ஆன்+ஐ, பஞ்ச கவ்யம்; கம்பம்=தூண்; உறுதியாக தூண் இருப்பது போன்று, முலைத் தழும்புகள் பெருமானின் திருமேனியில் உறுதியாக பதிந்துள்ளது என்று கூறுகின்றார்.
முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பு மங்கை தவம் செய்த காலமே
வெதிர்களோடு அகில் சந்தம் உருட்டியே வேழமோடு அகில் சந்தம் உருட்டியே
அதிருவாறு வரத் தழுவத்தொடே யானையாடு வரத் தழுவத்தொடே
கதிர்கொள் பூண்முலைக் கம்பம் இருப்பதே காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.61.10) சுந்தரர், காமாட்சி அன்னை காஞ்சிபுரத்தில், மாமரத்தின் கீழே சுயம்புவாக தோன்றிய ஏகாம்பர நாதனை வழிபட்ட செய்தியை கூறுகின்றார். தேவி, தன் மீது வைத்திருந்த பக்தியின் தன்மையை உலகுக்கு எடுத்துக் காட்ட பெருமான் புரிந்த திருவிளையாடல் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமான் கம்பையாற்றில் பெருவெள்ளம் தோன்றச் செய்ய, அந்த வெள்ளத்தினால் தான் வழிபட்டுக் கொண்டிருந்த பெருமானின் உருவத்திற்கு ஏதேனும் கேடு நேருமோ என்ற அச்சம் கொண்ட தேவி, அந்த லிங்கத் திருவுருவத்தை தனது மார்புடன் சேர்த்துத் தழுவிக் கொண்டாள் என்று, தேவியின் அந்த செயலைக் கண்ணுற்ற பெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்றும் இந்த பாடலில் கூறப்படுகின்றது. பெருமானும் பிராட்டியும் பிரிக்க முடியாதவர்கள் என்பதையும் பிராட்டி பெருமானின் ஒரு கூறு என்பதையும் நாம் அறிவோம். அவ்வாறு இருக்கையில் பெருமானை தான் எதற்காக வழிபடவேண்டும் என்று இகழ்ச்சியோ தயக்கமோ கொள்ளாமல், பிராட்டி பெருமானை வழிபட்டாள் என்பதை எள்கல் இன்றி என்ற தொடர் மூலம் சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார்.
எள்கல் இன்றி இமையவர் கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளம்காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே
ஆக்கூர் தான்தோன்றிமாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.21.6) அப்பர் பிரான் மலைமகளை மார்பகத்து அணைத்தார் போலும் என்று குறிப்பிடுகின்றார். தலத்து இறைவியின் திருநாமம் வாள்நெடுங்கண்ணம்மை என்பதாகும். அதனை உணர்த்தும் வகையில், பிராட்டியின் கண்கள் வாள் போன்று நுனிகளில் கூர்மையாகவும், நீண்டும் காணப்படுகின்றன என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மாதூரும்=பெருமானிடம் தான் கொண்டுள்ள ஆழ்ந்த காதலை, தனது கண்களால் தெரிவிக்கும் அன்னை என்று கூறுகின்றார். மூதூர்=பழமையான உலகம்; முது திரை=முதிர்ச்சி அடைந்த பெரிய அலைகள்;தீதூர=தீய வினைகளை வெல்லும். மார்பகத்து அணைத்தார் என்ற் தொடர் மூலம் அப்பர் பிரான், காஞ்சியில் நடந்த நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார் என்று தோன்றுகின்றது. வெள்ளம் பெருமானின் திருவுருவ மேனியை பாழ் செய்து விடுமோ என்ற அச்சத்தில், பிராட்டி பெருமானை இறுகத் தழுவிக் கொண்டபோது, அந்த அணைப்பினை பெருமான் ஏற்றுக்கொண்டு தனது திருமேனியை குழைத்துக் காட்டிய தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.
மாதூரும் வாள் நெடுங்கண் செவ்வாய் மென்தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும்
மூதூர் முதுதிரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும்
தீதூர நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமேயாம் செல்வர் போலும்
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே
திருவாசகம் அருட்பத்து பதிகத்தின் பாடலில் (8.29.5) மணிவாசக அடிகளார் இந்த நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். துடிகொள் நேரிடை=உடுக்கை போன்று நுண்ணிய இடையினைக் கொண்ட பிராட்டி; பெருமானின் நீறு பூத்த பெருநெருப்பு போன்ற மார்பினில், இரண்டு புள்ளிகள் போன்று பிராட்டியின் முலைக்கண்கள் படிந்த சுவடு காணப்படுகின்றது என்று கூறுகின்றார். ஆதரித்து= அன்புடன்; தான் அன்புடன் பெருமானை அழைக்கையில், பெருமான்,உனது கவலைக்கு காரணம் யாது என்று வினவி அந்த துயரத்தைத் தீர்க்கவேண்டும் என்ற கருத்தினில், இந்த பதிகத்தின் பாடல்களில் அதெந்துவே என்று அருளாயே என்று அடிகளார் விண்ணப்பிக்கின்றார்.
துடிகொள் நேரிடையாள் சுரிகுழல் மடந்தை துணைமுலைக் கண்கள் தோய்சுவடு
பொடி கொள்வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கொளி தங்கு மார்பினனே
செடி கொள்வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தம் மேவிய சீர்
அடிகளே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்று அருளாயே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலிலும் (6.4.10) அப்பர் பிரான், பெருமானின் திருமார்பினில் பிராட்டியின் கொங்கைத் தடம் படிந்த செய்தியை உணர்த்துகின்றார். இதே பதிகத்தின் முந்தைய பாடலில் உமையம்மையின் காதல் மணவாளன் என்று குறிப்பிட்ட அப்பர் பிரான்,தேவி பால் எவ்வாறு பெருமானுக்கு காதல் ஏற்பட்டது என்பதை சுவையான சம்பவத்துடன் இங்கே விவரிக்கின்றார். காமக் கோட்டி=காமகோட்டம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் அன்னை. காஞ்சியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலின் பழைய பெயர் காம கோட்டம். இறைவனின் தவத்தை கலைக்க முயற்சி செய்து, அந்த முயற்சியில் தனது உடலை இழந்த மன்மதனின் ஆயுதங்கள் கரும்பு வில்லும் மலர்க் கணைகளும். காஞ்சி காமாட்சி அம்மையின் கையில் உள்ளவையும் கரும்பு வில்லும் மலர்க் கணைகளும் ஆகும். இவ்வாறு அம்பிகை காட்சி அளிப்பதற்கு, தெய்வத்தின் குரலில், காஞ்சி மகாபெரியவர், ஒரு சுவையான விளக்கம் அளித்துள்ளார். சூரபத்மனின் மரணம் நிகழவேண்டும் என்றால், சிவபெருமானின் சக்தியுடன் கூடிய பிள்ளை தோன்றவேண்டும். அவ்வாறு தோன்றுவதற்கு, தவம் செய்து கொண்டிருக்கும் சிவபெருமான் தனது தவத்திலிருந்து விடுபட்டு, அன்னை பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும். மன்மதன் தனது முயற்சியில் தோற்ற பின்னர், தேவி காமாட்சி அந்த முயற்சியில் ஈடுபடுகின்றாள். மன்மதன் பயன்படுத்திய அதே ஆயதங்களை அவளும் பயன்படுத்துகின்றாள், ஆனால் பயன்படுத்திய முறை தான் மாறுபடுகின்றது. இறைவனுடன் எடுத்தவுடன் போர் புரியாமல், முதலில் தேவி அந்த ஆயுதங்களை இறைவனிடம் அர்ப்பணிக்கின்றாள். காமாட்சி என்ற சொல்லுக்கு, அன்பு பொங்கும் கண்களை உடையவள் என்று பொருள். சிவபெருமான் பால் தனக்கிருந்த அன்பினை, பிரேமையை, அம்பிகை தனது கண்கள் மூலம் வெளிப்படுத்த, அந்த கண்கள் தொடுத்த போரினில், இறைவன் தோற்று விடுகின்றார். அவருக்கும் அம்பிகை மீது காதல் ஏற்பட, தவத்திலிருந்து விடுபட்டு, பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்ள விழைகின்றார். இது தான், தட்சிணாமூர்த்தியாக இருந்த பெருமானை கல்யாண சுந்தரராக, அம்பிகை மாற்றிய வரலாறு என்று தெய்வத்தின் குரலில் காஞ்சி மகா பெரியவர் மிகவும் நயமாக குறிப்பிடுகின்றார். இந்த வரலாறு தான் இங்கே அப்பர் பிரானால், காமகோட்டி அமர் பொருது கோலம் கொண்ட என்ற தொடரால் இங்கே குறிப்பிடப்படுகின்றது.
எழுந்த திரை நதித் திவலை நனைந்த திங்கள் இளநிலாத் திகழ்கின்ற வளர் சடையனே
கொழும் பவளச் செங்கனி வாய்க் காமக் கோட்டி கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட
தழும்பு உளவே வரைமார்பில் வெண்ணூலுண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்திய செந்திருவுருவில் வெண்ணீற்றானே அவனாகில் அதிகை வீரட்டனாமே
பொழிப்புரை:
வீணையை மீட்டி இனிய இன்னிசை எழுப்பும் ஆற்றல் கொண்ட விரல்களை உடையவனும், கொடுமை மிகுந்த மழு ஆயுதத்தை தனது கையில் நிலையாக வைத்திருப்பவனும், சலமகள் என்று அழைக்கப்படும் கங்கை நதியை தனது சடையினில் தேக்கியவனும்,. மலமகளின் முலைத் தழும்புகள் நிலையாக பொருந்திய திருமேனி உடையவனும் இலை போன்று கூரிய முனை உடைய முத்தலைச் சூலப்படை உடையவனும் ஆகிய இறைவன் உறைகின்ற இடம் இடைமருது ஆகும்.
பாடல் 8:
செருவடை இலவல செயல் செயத் திறலொடும்
அருவரையினில் ஒரு பது முடி நெரிதர
இருவகை விரல் நிறியவர் இடைமருதது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே
விளக்கம்:
செரு=சண்டை, போர்; அடையில=செய்யக்கூடாத முறையற்ற செயல்கள்; வல=வலிமை; திறல்= தன்மை; அருவரை=அரிய மலை; இருவகை=இரண்டு வகையான செயல்கள், கயிலாய மலையின் கீழே அழுத்திய வீரச்செயலும் இவ்வாறு கொடுத்த அழுத்தத்தை தவிர்த்து அதிகமான வாழ்நாள் சிறந்த வாட்படை மற்றும் இராவணன் என்ற நாமம் ஈந்த கருணைச் செயல்; இராவணனை அழிப்பது பெருமானின் திருவுள்ளம் அன்று; அவனது செருக்கினை அடக்க வேண்டும் என்பதே பெருமானின் திருக்குறிப்பாக இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். நிறியவர்= ஊன்றியவர்; ஒருவுதல்=நீங்குதல்;பெரிதே என்ற சொல்லினை அடுத்து கேள்விக்குறி சேர்த்துக்கொண்டு, பெரிதோ, அல்ல மிகவும் எளிதானது என்று பொருள் கொள்வது சிறப்பு.
பொழிப்புரை:
போரில் முறையற்ற செய்ல்கள் செய்து வெற்றி பெறுவதை பழக்கமாகக் கொண்ட அரக்கன் இராவணன், புனிதமான மலை என்றும் கருதாமல் கயிலாய மலையினைப் பேர்த்தெடுத்து வேறொர் இடத்தில் வைக்கும் தவறான செய்கையில் ஈடுபட்டபோது, அவனது பத்து தலைகளும் மலையின் கீழே அகப்பட்டு நொறுங்கும் வண்ணம் கயிலாய மலையின் மீது தனது கால் பெருவிரலை ஊன்றியவன் சிவபெருமான். அரக்கனை அழிக்காமல் அவனது செருக்கினை மட்டும் அடக்கத் திருவுள்ளம் கொண்ட பெருமான், அரக்கன் மீது கருணை கொண்டு அருள் புரிந்தான்; இவ்வாறு சினம் கருணை ஆகிய இரண்டு குணங்களையும் ஒரே சமயத்தில் வெளிப்படுத்திய இறைவன் உறைவது இடைமருது தலமாகும். இந்த தலத்து இறைவனைப் புகழ்ந்து வணங்கி வழிபடும் அடியார்களது அரிய வினைகள் தீர்வது மிகவும் எளிதான காரியமாகும்.
பாடல் 9:
அரியொடு மலரவன் என இவர் அடிமுடி
தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ
எரிதரும் இருவர் இடைமருது அடைவுறல்
புரிதரும் மனனவர் புகழ் மிக உளதே
விளக்கம்:
இந்த பதிகத்தின் பல பாடல்களில் இடைமருது இறைவ்னைத் தொழும் அடியார்கள் அடைகின்ற பலன்களை குறிப்பிட்ட திருஞான்சம்பந்தர் இந்த பாடலில்,இடைமருது ஈசனைத் தொழும் சிந்தனை உடையவர்கள் சிறந்த புகழ் உடையவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றார். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை தலத்தினைப் போன்று இடைமருது தலத்தினை நினைக்கும் அடியார்களும் சிறப்பினை பெறுவார்கள் என்று கூறுகின்றார்.திருவண்ணாமலை தலத்து நிகழ்ச்சியை, அடிமுடி காண முடியாத பெருமான் தழற்பிழம்பாக நின்ற தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தருக்கு,திருவண்ணாமலை தலத்தின் தன்மை, நினைப்போர்க்கு முக்தி அளிக்கும் தன்மையும் நினைவுக்கு வந்தது போலும். அத்தகைய பெருமை உடையது இடைமருது தலம் என்பதை இங்கே உணர்த்துகின்றார். இடைமருது தலத்தினை நினைக்கும் அடியார்கள் பெறவிருக்கும் பேற்றினை பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அதே கருத்தினை மீண்டும் வலியுறுத்தும் பொருட்டு, இந்த பாடலிலும் உணர்த்துகின்றார் போலும்.
பொழிப்புரை:
திருமாலும் மலரவனும், தனது திருவடியையும் திருமுடியையும் காண்பதற்கு முயற்சி செய்த போது, அவர்கள் இருவரும் தங்களது முயற்சியில் வெற்றி பெறமுடியாத வண்ணம் நீண்ட அழலாக நிமிர்ந்தவன் பெருமான். பின்னர் அவர்கள் இருவரும் பெருமானைத் தொழுது வணங்கிய போது, அவ்வாறு அழலாக தோன்றியவன் தானே என்பதை அவர்களுக்கு உணர்த்தி காட்சி கொடுத்து அருள் புரிந்தவன் சிவபெருமான். இத்தகைய பெருமை வாய்ந்த இடைமருது இறைவனைத் தொழ வேண்டும் என்ற சிந்தனை உடைய அடியார்களின் புகழ் பெருகும்.
பாடல் 10:
குடை மயிலன தழை மருவிய உருவினர்
உடை மரு துவரினர் பலசொல உறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமருது என மன நினைவதும் எழிலே
விளக்கம்:
எப்போதும் வெய்யிலில் திரிவதால் குடை எடுத்துச் செல்வது சமணத் துறவிகளின் பழக்கமாக இருந்ததை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.உறவு என்ற சொல் இங்கே நெருக்கம் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. நமது வாழ்வினில் கிடைத்தற்கரிய செல்வம் என்பது சிவபெருமானை வழிபடுவதே ஆகும். அத்தகைய செல்வத்தை பலரும் அடைவதற்கு அந்நாளில் தடையாக இருந்தவர்கள் சமணர்கள் மற்றும் புத்தர்கள்; சிவபெருமானின் பல செய்கைகளை சரியாக புரிந்து கொள்ளாமல், பெருமான் மீது வீணான பழிச்சொற்களை சுமத்தி, பலரையும் திசை திருப்பி, அவர்கள் பெருமானை வழிபட்டு அதன் பயனாக உய்வினை அடையாத வண்ணம் தடுத்தவர்கள் சமணர்கள் மற்றும் புத்தர்கள்:. எனவே சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்களை பொருட்படுத்தாது புறக்கணித்து தொடர்ந்து சிவபெருமானை வழிபட்ட அடியார்களை, பெருமானை வழிபடுவதால் செல்வம் அடையப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
குடையையும் மயிற்பீலிகளையும் தங்களது கைகளில் ஏந்திச் செல்லும் சமணர்கள் மற்றும் துவர்ச்சாயம் ஏற்றப்பட்ட ஆடைகளை உடுக்கும் புத்தர்கள் ஆகியோர் பலவகையிலும் சிவபெருமானையும் சைவ மதத்தையும் இழித்து பேசுவதால், அத்தகையவர்களுடன் தங்களுக்கு எந்தவிதமான உறவும் இல்லை என்று சொல்லி அவர்களது சொற்களை முற்றிலும் புறக்கணிக்கும் அடியார்கள், சிவநெறியாகிய செல்வம் வந்தடையப் பெற்றவர்களாக விளங்குகின்றனர்.அத்தகைய அடியார்களால் தொழப்படும் திருவடிகளை உடைய பெருமான் உறைகின்ற இடைமருது தலத்தினை நினைக்கும் மனிதர்கள் அழகுடன் விளங்குவார்கள்.
பாடல் 11:
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழில் இடைமருதினைப்
பரவிய ஒருபது பயில வல்லவர் இடர்
விரவிலர் வினையொடு வியன் உலகு உறவே
விளக்கம்:
பொரு கடல்=இடைவிடாது கரையில் மோதும் அலைகள் உடைய கடல்; விரவிலர்=கலந்து இருத்தல்; வியன்=அகன்ற; வியனுலகு=அகன்ற உலகம், முக்தி உலகம்; எத்தனை உயிர்கள் சென்றாலும் நிரம்பாத வண்ணம் அகன்ற முக்தி உலகம் என்று குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
இடைவிடாது கரையுடன் அலைகள் மோதும் கடலின் அருகில் உள்ள புகலி என்று அழைக்கப் படும் சீர்காழி நகரைச் சார்ந்தவனும் தமிழ் மொழியில் புலமை வாய்ந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன், விரிந்த சோலைகளால் சூழப்பட்ட இடைமருது தலத்தினில் உறையும் பெருமானைப் புகழ்ந்து பாடிய பத்து பாடல்களையும் முறையாக பயின்று ஓதும் வல்லமை பெற்ற அடியார்கள், தங்களது வாழ்வினில் தீய வினைகள் மற்றும் துன்பத்துடன் கலவாதவர்களாக வாழ்ந்து, மறுமையில் அகன்ற முக்தி உலகத்தினை அடைவார்கள்.
முடிவுரை:
இந்த பதிகத்தின் பாடல்களில் இடைமருது தலத்தினில் உறைகின்ற பெருமானைத் தொழும் அடியார்கள் அடையவிருக்கும் பலன்களை பாடல்தோறும் திருஞானசம்பந்தர் சொல்கின்றார். பதிகத்தின் முதல் பாடலில், இடைமருது சென்றடைந்து மருதீசனைப் பணிந்து வணங்க வேண்டும் என்ற எண்ணம் உடைய அடியார்கள் மிகுந்த புகழ் உடையவர்களாக இருப்பார்கள் என்று கூறும் திருஞானசம்பந்தர், பதிகத்தின் இரண்டாவது பாடலில் இடைமருது என்று இந்த தலத்தின் பெயரை சொல்லும் அடியார்கள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவார்கள் என்று கூறுகின்றார். இந்த தலத்தின் பெயரை நினைத்தாலும் சொன்னாலும் நாம் அடையக்கூடிய பலனை முதல் இரண்டு பாடல்களின் மூலம் உணர்த்திய திருஞானசம்பந்தர், பதிகத்தின் மூன்றாவது பாடலில், இந்த தலத்து இறைவனை வலம் வரும் அடியார்கள், இறைவனின் அருள் கைகூடுவதால், பக்குவம் அடைந்த மனத்தர்களாக திகழ்ந்து, கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராக விளங்கி, இருவினையொப்பு நிலையினை அடைவதால், வினைகளால் விளையும் துன்பங்களால் மனச்சோர்வு அடையாதவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றார். பதிகத்தின் நான்காவது பாடலில், பெருமானின் திருவடிகளைத் தொழுவதால், நாம் நமது வாழ்க்கையில் உயர்வினை அடையலாம் என்று உணர்த்துகின்றார். ஐந்தாவது பாடலில், இந்த தலத்தின் சிறப்பையும் பெருமானின் பெருமைகளையும் எடுத்துரைக்கும் அடியார்களின் புகழ் நாள்தோறும் பெருகும் என்று கூறுகின்றார். அடுத்த பாடலில், இடைமருது ஈசனை மலர்கள் தூவித் துதித்துத் தொழும் அடியார்களின் வாழ்வினில் துன்பம் அடைய மாட்டார்கள் என்று கூறுகின்றார். பதிகத்தின் முதல் ஆறு பாடல்களில் பெருமானின் அருளால் அடியார்கள் அடையவிருக்கும் நன்மைகள் பலவற்றை உணர்த்திய திருஞானசம்பந்தர், ஏழாவது பாடலில் பெருமான் பிராட்டிக்கு அருள் புரிந்த தன்மையை குறிப்பிடுகின்றார். எட்டாவது பாடல், பெருமானின் புகழினை குறிப்பிட்டு அவனைத் தொழும் அடியார்கள், தங்களது வினைகளை பெருமானின் துணையுடன் மிகவும் எளிதாக தீர்த்துக் கொள்வார்கள் என்று கூறுகின்றார். ஒன்பதாவது பாடல், இடைமருது தலத்தினை நினைக்கும் அடியார்களுக்கு புகழ் பெருகும் என்றும் பத்தாவது பாடலில் இடைமருது ஈசனைத் தொழவேண்டும் என்று நினைக்கும் அடியார்களின் சிந்தை அழகு பெற்று செம்மையாக விளங்கும் என்று குறிப்பிடுகின்றார், பதிகத்தின் கடைப்பாடலில், இந்த பதிகத்தை முறையாக ஓதும் அடியார்கள் இம்மையில் துன்பங்களற்ற வாழ்க்கை வாழ்ந்து மறுமையில் வீடுபேற்றினை அடைவார்கள் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் மூலம் இடைமருது ஈசனைத் தொழுவதால் நாம் அடையவிருக்கும் நன்மைகளை புரிந்து கொள்ளும் நாம், இந்த் தலம் சென்று இறைவனை வழிபட்டும், இந்த தலத்து பதிகங்கள் பாடி இறைவனையும் இந்த தலத்தினையும் நினைத்து வாழ்வினில் வளம் பெற்று, மறுமையில் வீடுபேறு நிலையினை அடைவதற்கு வழி வகுத்துக் கொள்வோமாக.