Books / மஹா புராணங்கள்


விஷ்ணு புராணம்

ஐந்தாவது அம்சம் (பகுதி-1)


1. திருமண ஊர்வலமும் தேவர்களின் பிரார்த்தனையும்

மைத்ரேயர்! பராசர முனிவரை நோக்கி, குருவே! அரசர்களின் வம்சங்களைப் பற்றி விளக்கமாகச் சொன்னீர்கள்! யது குலத்தில் சர்வ வியாபகனாகிய ஸ்ரீமந் நாராயணன், பரிச்சேதப்பட்டுக் காண்பதால் அமிசம் என்று சொல்லத்தக்கதாய் எந்த அவதாரத்தைச் செய்து அருள் புரிந்தானோ, அந்த கிருஷ்ண அவதாரத்தைப் பற்றி அடியேனுக்கு விவரமாகக் கூறவேண்டுகிறேன். புரு÷ஷாத்தமனான பகவான், இந்தப் பூவுலகில் அம்சத்திலும் அம்சம் என்று எண்ணும்படியாக அவதரித்து என்னென்னவெல்லாம் செய்தருளினானோ, அவற்றையெல்லாம் திருவாய் மலர்ந்து கூறியருள வேண்டும்! என்று பிரார்த்தித்தார். பராசர முனிவர் அருள் கூர்ந்து சொல்லலானார்.

மைத்ரேயரே! நீங்கள் கேட்டது போலவே, ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணாவதாரத்தையும் சரிதத்தையும் சொல்கிறேன். முன்பு தேவகனின் குமாரியாகவும் தேவ கன்னியருக்கு ஒப்பானவளுமான தேவகி என்பவளை வசுதேவர் திருமணஞ்செய்து கொண்டபோது மணப்பெண்ணின் சகோதரனான கம்சன், மணமக்களைக் கல்யாண ரதத்தில் ஏற்றித் தானே அந்தத் தேரை ஓட்டி ஊர்வலமாகச் சென்றான். அப்போது, ஆகாயத்தில் ஓர் அசரீரி கம்சனைத் தான் சொல்வதைக் கேட்கும் படி விளித்து, அட மூடா! நீ எந்தத் தங்கையை அவளது புருஷனோடு தேரில் ஏற்றிச் சென்று மிகவும் பிரியமாய் நடத்துகின்றாயோ, அந்தத் தங்கையின் எட்டாவது பிள்ளையே உன் உயிரை போக்கும்! என்று கம்பீரத்தொனியில் கூறியது. அதைக் கேட்டதும் கம்சன், தன் உடைவாளை உருவித் தன் தங்கை தேவகியை கொல்லத் துணிந்தான். அப்போது தேவகியின் புத்திளம் கணவரான வசுதேவர் தம் மைத்துனனான கம்சனை நோக்கி, நீ இந்த அபலையைக் கொல்ல வேண்டாம். இவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளையெல்லாம் நான் உனக்குத் தந்துவிடுகிறேன், நீ அவர்களை உன் இஷ்டப்படிச் செய்து கொள்! என்றார். அதற்கு இளகிய கம்சன், அப்படியே ஆகட்டும்! என்று ஒப்புக்கொண்டு தேவகியைக் கொல்லவில்லை. அந்தக் காலத்திலே பூமிதேவியானவள் பூபாரம் தாங்கமாட்டாமல், துன்பமடைந்து மகாமேரு பருவதத்தில் கூடிய தேவசபைக்குச் சென்று, பிரமதேவன் முதலிய தேவர்களை வணங்கி முறையிடலானாள்.

தேவர்களே! பொன்னுக்குப் பிதா அக்கினி! பசுக்களுக்குச் சூரியன் தந்தை! எனக்கும் சர்வ உலகங்களுக்கும் ஸ்ரீமந் நாராயணனே பிதா! பிரஜாபதிகளுக்கெல்லாம் பதியாகவும் முந்தியோருக்கு முந்தியவராயுமுள்ள நான்முகரும், கலை, காஷ்டை, நிமிஷம் முதலிய ரூபமோடுதோன்றாததான காலமும், ஆதித்தர், சாத்தியர், மருத்துக்கள், உருத்திரர், வசுக்கள், அசுவினி, தேவதைகள், அக்கினிகள், இயக்கர், அரக்கர், தைத்தியர், பைசாசர், நாகர், தானவர், கந்தர்வர் என்ற யாவருக்கும் அவ்வெம் பெருமானாகிய ஸ்ரீ விஷ்ணுவின் ரூபங்களல்லவா? ஆகாயமும், தீயும், தண்ணீரும், காற்றும், நானும், சப்தம் ஸ்பரிசம், கந்தம், ரூபம், ரசம் என்ற விஷயங்களும் அந்த ஸ்ரீமந் நாராயணனுடைய திருமேனியே! இவையெல்லாம் கடலில் உண்டாகும். அலைகளைப் போல் ஒன்றோடொன்று பாதிப்பனவாகவும் பாதிக்கப்படுவனவாகவும் உள்ளன. இப்போது காலநேமி முதலான அசுரர்கள் பூவுலகில் பிறந்து இரவும் பகலும் பிரஜைகளைத் துன்புறுத்துகிறார்கள். முன்பு விஷ்ணுவினால் சங்கரிக்கப்பட்ட காலநேமி என்பவன் இப்போது உக்கிரசேனன் மகனாக, கம்சன் என்ற பெயரோடு பிறந்து விட்டான். இதுபோலவே, அரிஷ்டன், தேனுகன், கேசி, பிரலம்பன்! நரகன்! சுந்தன், பாணன் முதலியவர்களும் அரச குலங்களில் பிறந்தும் கொடுமை செய்து திரிகிறார்கள். அவர்களை எண்ணக் கூட எனக்குச் சக்தியில்லை, தேவர்களே! முன்பு கொன்ற அரக்கப் பிறவியரின் சேனைகள் மிகவும் அதிகரித்திருப்பதால் என்னால் பூபாரச் சுமையையும் பாபிகளின் சுமையையும் சுமக்க முடியவில்லை. ஆகையால் நான் மிகவும் பலவீனமடைந்து பாதாளம் போய்ச் சேராதவாறு நீங்கள் தான் என்மீது அன்பு கூர்ந்து என் சுமையைக் குறைக்க வேண்டும்! என்று பூமிதேவி இறைஞ்சினாள். அப்போது பிருமதேவன் தேவர்களே: பூமிதேவி சொன்னவை உண்மை தான் நானும் உருத்திரனும் நீங்களும் ஸ்ரீமந் நாராயணனுடைய சரீரங்களாகவே இருக்கிறோம். பகவானின் விபூதிகள் எவையுண்டோ. அவற்றின் உயர்வும் தாழ்வும் ஒன்றையொன்று பாதிப்பதற்கும் பாதிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றன. ஆகையால் நாம் திருப்பாற் கடற்கரைக்குச் சென்று, ஸ்ரீயப்பதிக்குத் தண்டம் சமர்ப்பித்து, இவற்றையெல்லாம் விண்ணப்பம் செய்வோம். அப்படிச் செய்தால் சர்வஸ்வரூபியான பகவான் பூமி நிமித்தம் சாத்வீக அவதாரஞ் செய்து தருமத்தை நிலைநாட்டி அருள்வார்! என்று சொல்லி தேவர்களை அழைத்துக் கொண்டு திருப்பாற் கடற்கரையை அடைந்தார். அங்கே யோக நிஷ்டையிலிருந்த கருடத் துவஜனான மகாவிஷ்ணுவைத் தோத்திரஞ் செய்யலானார்.

சுவாமி! வேதங்களுக்கும் எட்டாதவனே! பிரம்ம விஷயமான, விவேகத்தால் உண்டாகும் ஞானமும் நீயே! சப்தப் பிரம்ம விஷயமான ஆகமத்தில் உண்டான பரமென்று அபரம் என்றும் சொல்லப்பட்டுள்ள இரு வித்தைகளும் நீயே! உபநிஷத்துக்களில் கூறப்படுபவைகளாய், ரூபப்பட்டதும் படாததுமாக இருக்கின்ற இரண்டுபிரமம் என்று சொல்லப்பட்ட பிரகிருதி புருஷங்களும் உனது ரூபங்களேயாகும்! ஸ்தூல சூஷ்மங்களுக்கு ஆன்மாவாக இருப்பவனே! சர்வ சொரூபியே! யாவும் அறிந்தவனே! ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களும் சிøக்ஷ, கல்பம், நிருத்தம், சந்தம், ஜோதிடம், வியாகரணம் என்ற வேதாங்கங்களுக்கும், இதிகாச புராணங்களும், தர்க்கம், மீமாம்சை, தர்ம சாஸ்திரம் என்பவைகளும் நீயே! ஓ அதோஷஜனே! கண் முதலியவற்றால் உணரக்கூடாததும், ஒன்றிற்குச் சமமானதாகக் காட்டக்கூடாததும், இப்படிப்பட்டதென்று மனத்தால் நினைக்கக்கூடாததும், தேவாதி நாமங்களும் சுக்லாதி வர்ணங்களும், கை கால் முதலிய அவயவங்களில்லாததும் கிலேச, கர்மாதிகளற்றவையுமான முக்தஸ்வரூபம் யாதுண்டோ அது நீயே! பரம சொரூபம் என்பதும் நீயே! நீ காதின்றிக் கேட்கிறாய்! கண் இல்லாமலே பார்க்கிறாய் ரூபமில்லாமலேயே இஷ்டமான அநேக ரூபங்களையெடுத்துக் கொள்கின்றாய்! ஒருவராலும் அறியப்படாமல் யாவற்றையும் அறிந்து கொள்கிறாய்? பரமாத்மாவே அணுவுக்கு அணுவாய் காணக்கூடாத சொரூபமுள்ளவனான உன்னைக் காண்பவனுக்கு அஞ்ஞான நிவர்த்தி அதிகப்படுகின்றது. இவ்விதமான உபாசகனுடைய புத்தியானது உனது மேன்மையான ரூபத்தையன்றி மற்றொன்றையும் கிரஹிப்பதில்லை. நீயே யாவற்றுக்கும் ஆதார பூதன் நீயே உலகங்களைக் காப்பவன். சகல பூதங்களும் உனக்குள் அடங்கியுள்ளன. உண்டானதும் உண்டாவதும் எதுவோ, அணுவுக்கும் அணுவாக இருப்பது எதுவோ, பிரகிருதிக்கு மேற்பட்ட புருஷன் எவனோ, இவையாவும் நீ ஒருவனேயன்றி வேறல்ல. எவன் ஒருவனாக இருந்தும் நால்வகைபட்டவனாகி, உலகிற்குத் தேஜஸையும் செல்வத்தையும் அளிக்கின்றானோ, அந்த அக்கினியும் நீயே! எல்லாப் புறங்களிலும் பார்வையுடையவனும் அளவில்லாத சொரூபமுடையவனுமான பகவானே! நீ திரிவிக்கிரம அவதாரஞ்செய்து மூவுலகங்களிலும் உன் திருவடியை வைத்தாய் சுவாமி! அக்கினியானது ஒன்றாக இருந்தும் ரூபம் மாறாமலே, அநேக வஸ்துக்களில் பற்றி அநேக ரூபமாய் விளங்குவதைப்போல், நீயும் எங்கும் வியாபித்த ஒரே சொரூபியாக இருந்தும் சகல சொரூபங்களிலேயும் பற்றியவற்றைப் பெருமையாக வளர்க்கிறாய் பிரகிருதி சம்பந்தமில்லாததும் ஒப்பற்றதும் ஒன்றேயாயுமுள்ள உனது மேன்மையான சொரூபம் யாதுண்டோ, ஞானத்தினாலேயே அறியத்தக்க அந்தச் சொரூபத்தை ஞானியரே காண்கின்றனர்.

முக்காலப் பொருள்களிலும் உன்னைவிட வேறானது ஒன்றும் இல்லை, காரணகாரிய ரூபங்களாய், சமஷ்டி வியஷ்டி என்று சொல்லப்பட்ட அவியக்தமும் வியக்தமுமான சொரூபமுடையவன் நீயே! சகல வியூகாதிகளுக்கும் காரணமாய் சமஷ்டி என்று சொல்லப்பட்ட வாசுதேவ மூர்த்தியாகவும் காரியமாய் வியஷ்டி என்று சொல்லப்பட்ட சங்கர்ஷண, அதிருத்த பிரத்தியும்ன மூர்த்தியாகவும் நீயே இருக்கிறாய்! யாவையும் அறிந்தவன் நீ; எல்லாவற்றிலும் பொருந்தியவன் - நீ எல்லாஞ் செய்யவல்ல சக்தி நீ! ஞான, பலாதிசய மேன்மையுடையவன் - நீ! வளர்ச்சியும் தேய்வும் இல்லாதவன்-நீ! ஒருவர்க்கும் உள்ளடங்காமல் சுவாதீனமாக இருப்பவன் - நீ ஆதியந்த சூனியனாகவும் யாவற்றையும் தன் வசத்தில் கொண்டவனாகவும் நீயே இருக்கின்றாய்! வாட்டம், சோம்பல், அச்சம், குரோதம், காமம் முதலிய துர்க்குணங்களுடன் நீயே கூடாமல் இருக்கின்றாய்! எம்பெருமானே! நீ யாதொரு குற்றம் இல்லாதவனாகவும், உன் கிருபையின்றி அடையக் கூடாதவனாகவும், எந்தவோர் ஆதாரம் இல்லாதவனாகவும் நித்தியனாகவும் தடையற்ற உற்சாகமுடையவனாகவும் இருப்பவன் நீயே! யாவற்றுக்கும் ஈச்வரனாயும் முக்கிய ஆதாரமாயும் தேஜசுகளுக்குத் தேஜசாக இருப்பவன் நீ! பிரகிருதி முதலிய ஆவரணங்களாலும் கர்மங்களினாலும் மூடப்படாதவனே! வேறு உபாயம் இல்லாதவராலே பாவிக்கக் கூடியவனே! திரிபாத்விபூதியில் எழுந்தருளியிருப்பவனே! புரு÷ஷாத்தமா! உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன் ஓ... ஸ்ரீயப்பதியே! நீ பலவிதமாய் செய்தருளும் அவதாரங்கள் யாவும் தருமத்தை நிலைப்பிக்கும் பொருட்டு, சுயேச்சையாலே உண்டாகின்றவையே தவிர, நரகானுபவஞ் செய்பவனின் துக்கானுபவத்திற்கும் அல்ல; சொர்க்கானுபவஞ் செய்பவரின் சுகானுபவத்திற்காகவும் அல்ல! பூமியில் உள்ளவர்களின் சுகதுக்க அனுபவத்திற்காகவோ, அல்லது தர்மாதர்களால் உண்டானவைகளோ அல்ல! என்று பிரமதேவர் துதித்தார்.

பிரம்மாவின் ஸ்தோத்திரத்தை ஸ்ரீயப்பதியானவர் திருவுளம் பற்றி மகிழ்ந்து, விஸ்வரூபங்காட்டி, நான்முகனே! தேவர்களுடன் சேர்ந்து எதை என்னிடத்தில் பெறவேண்டும் என்று நீ கருதினாயோ அதைச் சொல்வாயாக அது கிடைத்ததாகவே நினைப்பாயாக! என்று கூறியருளினார், அப்போது, பிரம்மா முதலிய தேவர்கள் சுவாமியின் விசுவரூபத்தைச் சேவித்தார்கள். மீண்டும் பிரம்மதேவர் எம்பெருமானைத் துதித்தார். அசுரர்கள் மனிதப் பிறவிகள் எடுத்து, தேவர்களுக்கும் மூவுலகத்தாருக்கும் துன்பம் இழைக்கிறார்கள் அதற்குச் செய்ய வேண்டியதெதுவோ அதனை நியமித்து அருள் செய்யவேண்டும்! என்று பிரம்மா பிரார்த்தித்தார். அப்போது எம்பெருமான் தமது திருமேனியினின்றும் வெண்மையும் கருமையுமான ரோமங்கள் போலக்காணப்பட்ட தேஜசுகளை எடுத்து, வானவரே! இந்த எனது தேஜசுகள் பூமியில் அவதரித்துப் பூமிக்குப் பாரத்தால் உண்டான துன்பத்தை நீக்கும் இத்தேவர்களும் தங்கள் அம்சத்தாலே; பூமியிற் பிறந்து முன் பிறந்த துஷ்ட அசுரர்களோடு நமக்கு லீலாசாதனமாகப் போர் செய்யக் கடவார்கள்! இதனால் அசுர அமிசத்தோடு பிறந்தவர்கள் நாசமடைவார்கள். இப்போது தேவர்களுக்கும் அசாத்தியமான அசுரர்கள் யாவரும் பூமியில் அழியும் காலம் ஆகும். இப்போது வசுதேவருடைய பத்தினியான தேவகி என்பவளின் எட்டாவது கர்ப்பத்தில் அவதரிக்கும் என்னுடைய தேஜசின் கடைக்கண் பார்வையிலே அசுரர்கள் பலவீனப்பட்டு சூர்ணமாவார்கள். இதை அறிவீர்களாக என் தேஜசு அவ்வாறு அவதரித்து, கம்சனாகப் பிறந்திருக்கும் காலநேமியைச் சங்கரிக்கும்! என்று நியமித்து ஸ்ரீபகவான் மறைந்தார். மைத்ரேயரே! இவ்வாறு கூறி மறைந்துபோன எம்பெருமானுக்குத் தண்டம் சமர்ப்பித்து, அமரர்கள் அனைவரும் மேருபர் வதத்தில் தங்கள் இருப்பிடங்களுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். பிறகு, இப்படியிருக்கப் நியமனப்படி, பூமியில் அவதரித்தார்கள். இப்படியிருக்கப் பூமியைத் தாங்கிக் காப்பாற்றுகின்ற சுவாமியானவர் தேவகியின் எட்டாங்கர்ப்பத்தில் அவதரிக்கப்போகிறார் என்பதை நாரதமுனிவர் வந்து கம்சனுக்குத் தெரிவித்தார். இதைக் கேட்டவுடனேயே, கம்சன் மிகவும் சினங்கொண்டு தேவகியையும் வசுதேவரையும் சிறையில் தள்ளிப் பலமான காவலும் போட்டு விட்டான்.

எம்பெருமானோ சகல லோகங்களையும் மோகிக்கத்தக்க யோக நித்திரை என்ற தமது மாயையைப் பார்த்து ஓ, மாயா! பாதாளத்தில் இருக்கிற இரண்ய கசிபுவின் குமாரர்கள் அறுவரையும் முறையே தேவகியின் கர்ப்பத்தில் சேர்ப்பாயாக. அந்த அறுவரும் சங்கரிக்கப்பட்டவுடன் எனது அம்சமாக இருக்கும் ஆதிசேஷன் தேவகியின் ஏழாவது கர்ப்பத்தில் பிறப்பான். வசுதேவனின் பத்தினியான ரோகிணி என்பவள் ஒருத்தி நந்தகோபனுடைய கோகுலத்தில் இருக்கிறாள். அவளுடைய வயிற்றில் இருக்கும் வாயுரூபமான ஏழு மாதத்திய கர்ப்பத்தைக் கலைத்து விட்டு தேவகியின் வயிற்றில் இருக்கும் சேஷ அம்சமான ஏழு மாதத்துக் கர்ப்பத்தைக் கொண்டுபோய், ரோகிணியின் கர்ப்பத்திற் சேர்த்துவிடு! அப்போது சிறைக்காவலில் இருக்கும் பலத்தால், தேவகியின் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று உலகம் சொல்லிக் கொள்ளும். ரோகிணியின் கர்ப்பத்தில் அவதரிக்கும் அவர் வெள்ளிமலைச் சிகரம் போல விளங்கிய வண்ணம் கர்ப்பத்தினின்றும் இழுக்கப்பட்டதால் சங்கர்ஷணன் என்னும் பெயரைப் பெறுவார். உடனே நான் தேவகியின் கர்ப்பத்தில் பிரவேசிப்பேன் நீயும் உடனடியாக நந்தனுடைய பத்தினியையான யசோதையின் வயிற்றில் பிரவேசிக்கவேண்டும். கேள் பெண்ணே மழைக் காலத்தில் ஆவணி மாதத்தில் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி யிரவில் தேவகியிடம் நான் அவதரிப்பேன். நீயும், அந்த இரவிலேயே நவமியில் யசோதையிடம் ஜனிப்பாயாக. அப்போது என் சக்தியால் தூண்டப்பட்ட புத்தியுடன் வசுதேவன் என்னை யசோதையின் படுக்கையிலும் உன்னை தேவகியின் படுக்கையிலும் கொண்டுபோய் மாற்றி வைத்து விடுவான். உடனே, தேவகியின் தமையன் கம்சன் தன்னைக் கொல்லப்போகும் குழந்தையைக் கொல்ல வருவான். வந்ததும் உன்னைப் பிடித்துத் தூக்கி, பாறாங்கல்லின்மேல் போட்டு உன்னை வெட்ட முயற்சிப்பான்.

நீயோ வானத்தில் எழும்பி நிலை பெறுவாய். அப்போது ஆயிரக் கண்ணுடைய இந்திரன் என் மீதுள்ள பெருமையால், உனக்குத் தலை வணங்கிப் பிரணாமம் செய்து உன்னைத் தன்னுடன் பிறந்தவளாக ஏற்றுக்கொள்வான். நீயும் சும்ப நிசும்பாதி அரக்கர்களை வென்று சங்கரித்து, பெருமை பெற்று, விந்தியம் ஜாலந்தரம் முதலான யோக பீடங்களின் ஆலயங்களிலே ஆவிர்ப்பவித்து அந்தந்த ஸ்தானங்களால் பூமியையெல்லாம் சிறப்புற்று விளங்கச் செய்வாய் பூதி, சன்னதி க்ஷõந்தி காந்தி (தியௌ) எனப்பட்ட வானம், பூமி, திருதி, இலச்சை, புஷ்டி, உøக்ஷ முதலிய ஸ்திரீயம்சமானவையெல்லாம் உன் ஐஸ்வரியமாக விளங்கும். எவர் உன்னை ஆரியை என்றும் துர்க்கை என்றும் வேத கர்ப்பை என்றும் அம்பிகை, பத்திரைபத்திரகாளி ÷க்ஷமதை பாக்கியதை என்றும் உன் திருப்பெயர்களைச் சொல்லி காலையிலும் பகற்குப் பிறகும் மிகவும் வணக்கத்தோடு துதிக்கிறார்களோ அவர்களுடைய பிரார்த்தனைகளையெல்லாம் என் அனுக்கிரகத்தால் தப்பாமல் கைக்கூடச் செய்வேன். மேலும் மது மாமிசாதிகளினாலும், இன்னும் பலவித உணவுகளினாலும் சூத்திராதிகள் உன்னை ஆராதிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இஷ்டமான வரங்களைக் கொடுத்து வருவாயாக. இப்பொழுது நான் சொன்ன காரியங்களெல்லாம் என் அருளால் அப்படியே முடியும்! ஆகையால் நீ சந்தேகப்படாமல் போய் நடத்துவாயாக! என்று நியமித்தருளினார்.

2. தேவகியைத் தேவர் போற்றுதல்

இவ்வாறு எம்பெருமானால் நியமிக்கப்பட்ட யோக நித்திரையான மாயையானது அசுர அம்சமுடைய ஆறு கர்ப்பங்களையும் தேவகியின் உதரத்திற் சேர்த்துவிட்டு, ஏழாங் கர்ப்பத்தையும் இழுத்துக் கொண்டுபோய் ரோகிணியின் உதரத்திற் சேர்த்துவிட்டாள். தந்தை வசுதேவரும் முன்பு தன் மைத்துனன் கம்சனுக்கு வாக்குத் தத்தம் செய்தபடியால் தம் மனைவி தேவகியிடம் ஜனித்த ஆறு குழந்தைகளையும் கம்சனிடம் கொடுத்தார். கம்சன் அவற்றை வாங்கி வெட்டிப்போட்டான் ரோகிணியின் வயிற்றில் ஏழாவது கர்ப்பஞ்சேர்ந்தவுடன் சகல லோக ரக்ஷணார்த்தமாக ஸ்ரீஹரிபகவான் தேவகியின் கர்ப்பத்தில் எழுந்தருளினார். சுவாமியின் நியமனப்படி யோகநித்திரையும் யசோதையின் கர்ப்பத்தில் பிரவேசித்து, அவர் அவதரித்தத் தினத்திலேயே பிறந்தான். மகா விஷ்ணுவின் அம்சம் பூவுலகத்தில் சேர்ந்தவுடனே சூரியாதி கிரகங்கள் ஆகாயத்தில் விளக்கமாய்ச் சஞ்சரித்தன. வசந்தாதி ருதுக்களும் நன்றாக விளங்கின. மிகுந்த தேஜசினால் சூழப்பட்ட தேவகியைக் கண்களால் காண யாவரும் சக்தியற்றிருந்தார்கள். ஸ்ரீபகவானைத் தரிசித்து மேலான தேஜஸோடு விளங்கிய தேவகியை தேவதைகள் அங்கிருந்த புருஷர்களும் ஸ்திரீகளும் காணாதவாறு துதித்தனர்.

எப்படியெனில் ஓ, தேவகித் தாயே! நீ பூர்வகத்தில் மகத்துவத்தைக் கருப்பத்திற்கொண்டிருந்த சூக்ஷ்மப் பிரகிருதியாக இருக்கிறாய்! பிறகு சகல வேதங்களையும் கர்ப்பத்தினுடைய பிரணவ ரூபமான லோகநாதனுடைய சூக்தியாக இருக்கிறாய். படைக்கப்படும் சொரூபங்களை கர்ப்பத்தினுடைய சிருஷ்டியாயும், யாவற்றுக்கும் காரணமாய் யக்ஞங்களை கர்ப்பத்தில் வைத்துக் கொண்டிருக்கும் வேதமாகவும், பயனைக் கருக்கொண்டுள்ள பூஜையாயும், அக்கினியைக் கருக்கொண்ட அரணியாயும் தேவதைகளைக் கருவில் தரித்த அதிதியாயும், அசுரரைக் கர்ப்பத்தில் தரித்த தீதீயாயும், பகலைக் கருப்பத்தில் உடைய பின் மாலையாயும் ஞானத்தையுள்ளே கொண்டுள்ள பெரியோர்களின் பணி விடையாயும், நியாயத்தை உட்கொண்ட நீதியாயும், வணக்கத்தையுடைய லஜ்ஜையாயும், ஆசைப்படத்தக்க, பொருளை உட்கொண்டுள்ள ஆசையாயும், சந்தோஷத்தை உள் வைத்திருக்கிற திருப்தியாயும், அறிவை உட்கொண்டுள்ள புத்தியாயும், சஞ்சலமின்மையை உள்ளே தரித்திருக்கும் புத்தி நிலையாயும், கிரக நட்சத்திராதிகளையுள்ளே பொதிந்து கொண்டுள்ள ஆகாசமாகவும் இருக்கிறாய்! சகலமும் உன்னுள்ளே இருக்கின்றன! நீயே சுவாகை; சுவதை! நீயே வித்தை, நீயே சுதை! நீ ஆகாயத்தில் இருக்கும் அதிதி என்ற ஜோதியல்லவா? சகல லோக ரக்ஷண்யத்துக்காகப் பூமியில் அவதரித்தாய். தாயே! நீ அடியேங்களிடத்தில் அனுக்கிரகமுடையவளாய் உலகுக்கு நன்மை செய்தருள வேண்டும். மேலும் சகலலோகங்களையும் தரித்திருக்கும் எம்பெருமானை நீ உவப்போடுதரிக்க வேண்டும்.

3. கிருஷ்ணாவதாரம்

தேவர்களால் பலவாறும் துதிக்கப்பட்ட தேவகியானவள்; தாமரைக் கண்ணனாகிய எம்பெருமானை உலக ரக்ஷணைக்காகத் தன் கர்ப்பத்தில் தரித்திருந்தாள். பிறகு முன்பே சங்கல்பித்த விதமாக ஆவணி மாதத்தில், அமர பக்ஷத்தில், அஷ்டமி கூடிய ரோகிணியில் இரவில் உலகங்களாகிய தாமரைகள் யாவும் மலரும் பொருட்டு, சிறையிலுள்ள தேவகியிடம் ஸ்ரீமந் நாராயணனாகிய- சூரியன் உதித்தருளினான். சுவாமி அவதரித்தருளிய நாளானது சகல திசைகளும் நிர்மலமாகப் பெற்றதாய் சந்திரனது நிலவைப்போல யாவர்க்கும் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. சுவாமி அவதரித்தருளியதால் சத்புருஷர்கள் மகிழ்ந்தனர். உக்கிரமான காற்றுகள் தணிந்தன, நதிகள் தெளிந்தன, கந்தர்வர் பாடினர். அரம்பையர் ஆடினர். தேவர்கள் மலர் மழை பொழிந்தனர். இவ்விதமான லோகஹிதமாய் கருநெய்தல் பூப்போன்ற திருமேனியும் நான்கு திருத்தோளும் லச்சம் என்ற மறுப்பொருந்திய திருமார்புமாக அவதரித்த ஸ்ரீயப்பதியைவசுதேவர் சேவித்தார். பிறகு கம்சனைப்பற்றிய அச்சத்தால் சுவாமி! தேவதேவாதிபதியே! அடியேனது பாக்கியவசத்தால் இங்கு அவதரித்தருளினீர்கள் ஆயினும் திருவாழி, திருச்சங்கு முதலிய திவ்ய லட்சணங்களுடன் கூடிய இந்தத் திவ்ய ரூபத்தை அடியேனிடத்தில் அனுக்கிரகத்தினாலே, மறைத்தருள வேண்டும் ஏனெனில், இந்த மாளிகையில் தேவரீர் இப்படி அவதரித்ததை அறிந்தால் கம்சன் உடனே வந்து எங்களைக் கொல்வான். ஆகையால் இந்த ஸ்வரூபத்தை மறைத்துக்கொள்ளவேண்டும் என்று வசுதேவர் விண்ணப்பஞ் செய்தார். உடனே தேவகியும் பிரார்த்திக்கலானாள். சுவாமி! முடிவில்லாத சொரூபத்தை யுடையவராகவும், சகலலோகங்களையும் ரூபமாகக் கொண்டவராகவும், என் கர்ப்பத்தில் இருக்கும்போது சகலலோகங்களையும் திருமேனியாலே தாங்கிக் கொண்டிருப்பவராகவும் விளங்கும். நீங்கள் இம்மாயை என்கின்ற ஆச்சரியச்சக்தியினாலே பாலகனாய் அவதரித்தருளினீர்கள்! அடியாளுக்கு அனுக்கிரகஞ் செய்தருளவேண்டும்! என் தமையனான கம்சன் ஈவிரக்கமற்ற அசுரன், ஆதலால் அவனறியாதவண்ணம் நான்கு திருத்தோள் முதலிய லக்ஷணங்களுள்ள இந்தச் சொரூபத்தை மறைத்தருள வேண்டும், என்று தேவகியும் பிரார்த்தித்தாள். அவளை பகவான், பார்த்து, நீ பூர்வத்தில் புத்திரன் வேண்டும் என்று துதித்ததையே அதற்குப் பயனாக நான் உன் வயிற்றில் பிறந்து காட்டினேன், என்று கூறி அந்த ஸ்வரூபத்தை விட்டுச் சாதாரண பாலன் வடிவில் தோற்றமளித்தார்.

அதன் பிறகு வசுதேவர் தம்முடைய சிறைச்சாலையிலிருந்து அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். சிறைக் காவலாட்களெல்லாம் யோக நித்திரையால் மதிமயங்கிச் சும்மாயிருந்தார்கள். அப்படியே, அந்த மதுரா பட்டணத்து வாயிற்காப்போரும் மயங்கிக் கிடந்தார்கள். குழந்தையை எடுத்துக் கொண்டு வசுதேவர் போகும்பொழுது உண்டான மழையை திருவனந்தாழ்வான் தன் திருமுடிகளால் தடுத்துக் கொண்டே கூட எழுந்தருளினான். அப்பொழுது சுழிந்து ஓடுகின்ற ஆழமான தண்ணீருள்ள யமுனா நதியும் குழந்தையான பகவானைத் தூக்கிச்செல்லும் வசுதேவருக்கு முழங்காலளவாக இருந்தது. அந்த யமுனைக் கரையில் கம்சனுக்குக் கப்பங்கட்ட வந்திருந்த நந்தகோபர் முதலியோரை வசுதேவர் பார்த்தார். அந்தக் காலத்தில் நந்தருடைய பத்தினியாகிய யசோதையும் யோக நித்திரையின் அம்சமான ஒரு பெண்ணைப் பெற்றும், அந்த யோக நித்திரையால் மயக்கமுற்றுப் பிறந்த குழந்தை இன்ன குழந்தை என்று அறியாமல் இருந்தாள். அங்கிருந்த அனைவரும் அப்படியே மயங்கியிருந்தார்கள். ஆகையால், வசுதேவர் அங்கு தடையின்றிச் சென்று தமது பாலகனை யசோதையின் படுக்கையில் விட்டு, அவளது பெண்குழந்தையை எடுத்துக் கொண்டு தம்முடைய சிறைச்சாலைக்கு வந்து சேர்ந்தார்.

பிறகு யசோதையானவள், மயக்கந் தெளிந்து, தன் அருகில் இருக்கும் ஆண் குழந்தையைக் கண்டு, தனக்கு மகன் பிறந்தான் என்று மிகவும் மகிழ்ந்தாள். மதுரையில் சிறைச்சாலைக்குத் திரும்பிவந்த வசுதேவரோ தாம் தூக்கிவந்த யசோதையின் பெண்குழந்தையைத் தேவகியின் படுக்கையில் விட்டவுடன், அது அழத் துவங்கியது. அதன் குரல் ஓசையைக் கேட்ட சிறைக் காவலர்கள் எழுந்தோடி தேவகிக்குப் பிள்ளை பிறந்தது என்று கம்சனுக்கு அறிவித்தார்கள். உடனே, கம்சனும் குரோத வெறியோடும் கொலை வெறியோடும் பரபரப்பாக ஓடிவந்தான். தேவகி துடிதுடித்து கம்சனை நோக்கி, அண்ணா! இது பெண் குழந்தையாயிற்றே! இதனால் உனக்கென்ன தீமை வரும்? ஒன்றும் வராது! இதையாவது விட்டுவிடு! கொன்றுவிடாதே! என்று கதறியழுதாள். ஆனால் தங்கை எவ்வளவுதான் அழுது கெஞ்சியும் கம்சன் கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல் அந்தப் பெண் குழந்தையைத் தூக்கி ஒரு பாறாங்கல்லின்மேல் போட்டு, வெட்டமுயன்றான். ஆனால் கல்லின் மேல் போட்டவுடனேயே பெண் குழந்தை எழும்பி வானத்திற்குப் பறந்துசென்று, ஆயுதங்களுடன் கூடிய எட்டுக் கைகளோடு ஒரு ரூபமெடுத்து வான வெளியில் நின்று, உரத்த குரலில் கோபத்துடன் சிரித்து கம்சனை நோக்கி, அடா மூடா! என்னைக் கல்லின் மேல் எறிந்து கொல்வதால் உனக்குப் பயன் என்ன? உன்னைக் கொல்பவன் பிறந்துவிட்டான். அவன் யாரென்று கேட்கிறாயா? அவன் சகல தேவதைகளுக்கும் சகல பாக்கியம் போன்ற மேன்மையாளன். அவன் தான் உன் முற்பிறப்பிலும் உனக்குப் பகைவன், இதை நீ அறிந்து, உனக்கு நன்மை எதுவோ அதைச் செய்துகொள்! என்று சொல்லிவிட்டு, சித்தர் முதலான தேவகணங்களால் பூஜிக்கப்பட்டு, கம்சனது கண்ணெதிரிலேயே ஆகாயமார்க்கமாகப் போய் மறைந்துவிட்டாள்.

4. கம்சனின் கட்டளை

தன்னைக் கொல்ல ஒருவன் பிறந்துவிட்டான் என்பதை அறிந்ததும் கம்சனுக்குத் திகில் பிடித்தது. அவன் உடனே பிரலம்பன், கேசி முதலிய மகா அசுரர்களை அழைத்து, பெரும் புஜங்களைக் கொண்ட பிரலம்பனே; கேசியே தேனுகனே; அரிஷ்டனே! நீங்கள் அனைவரும் நான் சொல்வதைக் கேளுங்கள். துராத்மாக்களான தேவர்கள் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். ஆயினும் என் பராக்கிரம அக்கினியில் வெந்திருக்கும் அவர்களை மகா வீரனாகிய நான் லக்ஷ்யம் செய்யவில்லை ஏனென்றால் தேவர்களில் தேவேந்திரனோ அற்ப வீரன்! சிவனோ தவசி! சோர்வுற்ற சமயந்தேடி அசுரரைக் கொல்லும் சூரனான விஷ்ணு தான் என்னை என்ன செய்யமுடியும்? இவர்களே இப்படியானால் இவர்களைவிடக் குறைந்த பலமுடைய ஆதித்தன், வசுக்கள் முதலியவர்களால் என்ன சாதிக்க முடியும்? அவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு வந்தாலும் என்ன செய்ய முடியும்? இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்; கேளுங்கள். முன்பு ஒரு சமயம் தேவர்களோடு நான் போர் செய்தபோது, அவர்களுடைய தலைவனாகிய இந்திரன், நான் எய்த அம்புகளில் ஒன்றையாகிலும் தனது மார்பினால் தாங்கமாட்டாமல், முதுகினால் தாங்கிக் கொண்டு ஓடி ஒளிந்தான்! அதை நீங்கள் அறிவீர்கள். இந்திரன் என் ராஜ்யத்தில் மழை பெய்யாமல் நிறுத்தியபோது, நான் என் பாணங்களால் மேகங்களைப் பிளந்து மழையைப் பெய்வித்தேன். இது உங்களுக்குத் தெரியாதா? என் மாமன் ஜராசந்த மகாராசனைத் தவிர, மற்றெந்த அரசர்கள் தான் எனது புஜ பலத்திற்குப் பயந்து வணங்காமல் இருக்கிறார்கள்? ஆகவே இந்தத் தேவர்கள் எனக்கு அலட்சியமாகத் தோன்றுகிறார்கள். ஆனாலும் நாம் ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும். அந்தப் பகைவர்களானத் தேவர்களுக்கு நாம் செய்யவேண்டிய அபகாரம் என்ன தெரியுமா? பூமியில் விசேஷதான சீலராகவும் யாக சீலராயும் இருப்பவர்கள் யாராயிருந்தாலும் சரி. அவர்களையெல்லாம் நாம் துன்புறுத்தி வதைக்கவேண்டும். அவ்வாறு நாம் செய்தால், விருத்தியில்லாமையால் தேவர்கள் தாமே அழிந்து போவார்கள். அசுரர்களே! இன்னும் ஒன்று சொல்கிறேன். தேவகியின் வயிற்றில் பிறந்த பெண், உனக்கு யமன், முன்னமே பிறந்துவிட்டான்? என்று சொல்லியிருக்கிறதல்லவா? ஆகையால் இந்தப் பூமியில் பிறந்திருக்கிற பாலகர் விஷயத்திலும் நாம் எத்தனஞ் செய்ய வேண்டும், அதாவது, எந்தப் பாலகனிடத்திலே விசேஷமான பலமும் சாமர்த்தியமும் காணப்படுகிறதோ; அந்தப் பாலனைத் கண்டுபிடித்து எப்படியாகிலும் அவனைக் கொன்றுவிட வேண்டும்! என்று கட்டளையிட்டுவிட்டுத் தன் அரண்மனை சென்றான்.

பிறகு அவன் தங்கை தேவகியையும் மைத்துனன் வசுதேவரையும் சிறைக் காவலிலிருந்து விடுதலை செய்து, அவர்களை நோக்கி, உங்களுடைய குழந்தைகளையெல்லாம் நான் வீணாகக் கொன்றேன். கடைசியில் எனக்கும் எமனாக எவனோ ஒருவன் எப்படியோ பிறந்து எங்கோ இருக்கிறான்! உங்களுக்குப் பிறந்த குழந்தைகள் போய்விட்டதே என்று நீங்கள் வருந்த வேண்டாம். குழந்தைகள் அப்படிச் சாகவேண்டும் என்று விதியிருந்து அதன்படியே நடந்தது! மேலும் உங்களுடைய பாப பயனாகவும் அக்குழந்தைகள் கொல்லப்பட்டன! என்று சமாதானம் கூறி, அவர்களுக்கு விடை கொடுத்து, அச்சத்துடன் தன் தனிமாளிகைக்குச் சென்றான்.

5. பூதகியின் வதம்

இவ்வாறு, கம்சனால் விடுதலை செய்யப்பட்ட வசுதேவர் விரைந்து சென்று இடையர் குலத்தலைவரான நந்தகோபனுடைய வண்டி வீட்டை அடைந்தார். தனக்குப் புத்திரன் பிறந்தான் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த நந்தகோபனை அவர் சந்தித்து, நந்தகோபா! பகவத் சங்கல்பத்தால் உமக்குப் புத்திர சந்தானம் உண்டாயிற்றே? அது பாக்கியம், மஹா பாக்கியம்! உமக்கு இந்த வார்த்திகத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இது பலரின் கண்ணேறு படத்தக்கது. நீங்கள் அரசனுக்குச் செலுத்த வேண்டிய கப்பம் எல்லாம் செலுத்திவிட்டீர்கள் அல்லவா? இனி மேல் நீங்கள் இங்கிருப்பது நல்லதல்ல. ஏனெனில் பொருள் உள்ளவர்கள் துஷ்டஅரசர்களின் அருகே இருப்பது எப்போதும் அபாயமேயாகும்! ஆகையால் நீங்கள் வந்த காரியம் முடிந்து விட்டது. ஆகவே இனிமேல் இங்கு தாமதிக்காமல் உடனடியாக உங்களுடைய கோகுலத்திற்குப் போய்ச் சேருங்கள். எனக்கு ரோகிணியின் வயிற்றில் பிறந்த குழந்தை ஒன்று அங்கே இருக்கிறது. அதை உங்கள் பிள்ளையைப் போலவே நீங்கள் பாதுகாத்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தம் இருப்பிடம் சென்றார். நந்தகோபர் தம் கூட்டத்துடன் வண்டிகளில் சாமான்களை ஏற்றிக்கொண்டு கோகுலம் போய்ச் சேர்ந்தார்.

இதற்கிடையே அரக்கன் கம்ஸனால் ஏவப்பட்ட பூதனை என்ற அரக்கி ஒருத்தி நல்லதொரு பெண் உருவமெடுத்து, இரவிலே ஆங்காங்கே சிறு குழந்தைகளுக்கு முலைப்பால் கொடுத்துக் கொன்றுகொண்டே, கோகுலத்துக்கு வந்து நந்தகோபனின் மாளிகையில் தூங்கிக்கொண்டிருந்த யசோதையின் குழந்தையான பாலகிருஷ்ணனை எடுத்து முலைப்பாலூட்டினாள். அவள் எந்தெந்தக் குழந்தைகளுக்கு முலைப்பால் ஊட்டுவாளோ அந்தக் குழந்தைகள் உடனே ரத்த மாமிசமெல்லாம் சுண்டிப்போய் மரணமடையும் ஆனால் கிருஷ்ண பகவானான இந்தக் குழந்தையோ அந்த அரக்கியின் முலைகளைத் தன் கைகளாலே இறுகப்பிடித்து, பாலை அவளோடு உயிரோடு சேர்த்து உறிஞ்சியது. அவ்வாறு உறிஞ்சியவுடன், பூதகி தன் சுபாவமான உரத்தக் குரலில் பேரிரைச்சலிட்டுக் கதறியழுது, சுய ரூபத்தோடு தரையில் விழுந்து இறந்தாள். அந்த இரைச்சலைக் கேட்டு இடையர்கள் அனைவரும் திகைத்து எழுந்து, அங்கு ஓடி வந்து பார்த்தார்கள். அங்கு அந்தப் பூத அரக்கியின் மடியில் குழந்தை இருப்பதையும் அரக்கி செத்துக் கிடப்பதையும் கண்டார்கள். யசோதையும் பரபரப்போடு ஓடிவந்து குழந்தையை எடுத்துப் பசுவின் வாலைச் சுற்றி, அந்தப் பூதகியால் உண்டான பாலதோஷத்தைப் போக்கினாள். நந்தகோபரும் அங்கு வந்து, குழந்தையை வாரியெடுத்து கோமய சூரணத்தை அதன் உச்சந்தலையில் காப்பாக வைத்தார். என் அருமைக் குழந்தையே! எவனுடைய நாபீ கமலத்தினின்றும் இந்த உலகங்கள் யாவும் உண்டாயிற்றோ, அத்தகைய சகல உற்பத்திக்கும் காரண பூதனான, ஸ்ரீ ஹரி பகவான் உன்னைக் காப்பானாக! எவனது வராகக் கொம்பின் நுனியில் இந்தப் பூமியானது தாங்கப்பட்டு, சகல பிரபஞ்சத்தையும் தரித்திருக்கின்றதோ, அந்த மகாவராக ரூபமுள்ள பகைவரின் மார்பைப் பிளந்த அந்த நரசிம்ம ரூபியான ஜனார்த்தனன் எங்கும் உன்னைக் காப்பானாக! முன்பு சின்னஞ்சிறு வாமன உருவமாக இருந்து, ஒரு கணத்திலே மூவடி மூன்று காலடிகளினால் முறையே மூன்று உலகங்களையும் அளந்து ஆக்கிரமித்து, திருக்கைகளிலே அநேக திவ்ய ஆயுதங்களுடன் பிரகாசிக்கும் பகவான் உன்னை எப்போதும் பாதுகாப்பானாக உன் சிரசைக் கோவிந்தன் காக்க உன் கண்டத்தைக் கேசவன் காக்க, உன் குறியுட்பட்ட வயிற்றின் இடத்தையெல்லாம் ஸ்ரீவிஷ்ணு காக்க முழந்தாள், பாதங்கள் இவற்றை ஜனார்த்தனான் காக்க; முகத்தையும் கரங்களையும் அவற்றின் கீழ்புறங்களையும் மனத்தையும் மற்றுமுள்ள புலன்களையும் ஸ்ரீமந்நாராயணன் காக்கட்டும்! உனக்குப் பகைவராயுள்ள பிரேத கூசுமாண்ட ராக்ஷசாதிகள் சங்கு சக்கரம் கதை முதலிய திவ்விய ஆயுதங்களைத் திருக்கைகளில் ஏந்திய எம்பெருமானின் திருச்சங்கின் ஓசையினால் அதஞ் செய்யப்பட்டு, நாசமாவார்களாக! வைகுண்டநாதன் திசைகளிலே உன்னைப் பாதுகாப்பானாக! மூலைகளில் மதுசூதனன் காப்பானாக வானத்தில் ரிஷிகேசன் ரட்சிப்பானாக பூமியிலே தரணிதரன் காப்பானாக! என்று கூறி நந்தகோபர் தம் குழந்தைகளுக்கு சாந்திக் கிரியைகளைச் செய்தார். பிறகு, குழந்தையைச் சகட்டின் கீழ்ப்புறத்தில் தொட்டிலில் வளர்த்தினார் அங்கு விழுந்து கிடக்கும் பூத அரக்கியின் பெருத்த பயங்கர உடலைக் கண்டு அங்கு வந்த இடையர் அனைவரும் பயந்து, திகைத்து வியந்தார்கள்.

6. சகடயமளார்ச்சுன பங்கம்

சகட்டின் கீழ்ப்புறத்தில் குழந்தையான கிருஷ்ண பகவான் பள்ளிகொண்டிருந்தபோது ஒரு நாள் அச்சகட்டில் அசுரன் ஒருவன் வந்து அவேசித்தான். அதையறிந்த கண்ணன் முலைப் பாலுக்கு அழுகின்ற பாவனையால், சிறிய திருவடிகளை மேலே தூக்கி உதைத்தான் அந்தத் திருவடிகளால் உதைபட்ட மாத்திரத்திலே சகடானது திருப்பப்பட்டு அதன் மேலிருந்த கும்பம் முதலானவைகள் உடையக் கீழே விழுந்தது. உடனே இடையர் இடைச்சியர் அங்கு ஓடி வந்து பார்த்தார்கள். அங்கே மல்லாந்து படுத்திருக்கும் குழந்தையையும் கீழே விழுந்து கிடந்த சகட்டையும் பார்த்து திடுக்கிட்டு யார் இந்தச் சகட்டை இப்படித் திருப்பியது? என்று கேட்டார்கள், அதற்கு அங்கிருந்த சிறுவர்கள் இந்தக் குழந்தைதான் அழுது கொண்டே காலைத் தூக்கியது. அதன் தாக்குதலில் இந்தச் சகடு திரும்பிக் கீழே விழுந்தது. நாங்கள் அதை எங்கள் கண்களாலேயே கண்டோம்! என்றார்கள்.

அதைக்கேட்ட யாதவர்கள் ஆச்சரியமடைந்தனர். நந்தகோபரும் வியப்போடு குழந்தையை எடுத்துக் கொண்டார். யசோதையும் சகட்டின் மேலேயிருந்து கீழே விழுந்து உடைந்த பாண்டங்களின் ஓடுகளையும் அந்தச் சகட்டையும் தயிர், மலர், அட்சதை முதலியவற்றால் பூஜித்தார்கள். வசுதேவர், கர்க்கர் என்ற தமது புரோகிதரை அழைத்து வரச் செய்தார். மகாஞானியான அம்மாமுனிவர் வந்ததும் கோகுலத்தில் யாருக்கும் தெரியாத ஏகாந்தமான ஓர் இடத்தில் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதகருமம் முதலிய சடங்குகளைச் செய்து ரோகிணி வயிற்றில் பிறந்த மூத்த குழந்தைக்கு ராமன் (பலராமன்) என்றும் யசோதையின் குழந்தைக்குக் கிருஷ்ணன் என்றும் திருப்பெயர் சூட்டினார்கள். மைத்ரேயரே! பிறகு அந்த இரண்டு பாலகரும் முழங்கால்களையும் கைகளையும் ஊன்றித் தவழ்ந்து விளையாடிக் கொண்டே வரும்போது கோமயம், சாம்பல் இவற்றைத் தங்கள் திருமேனியில் பூசிக்கொண்டும், ஒரு கணமாவது ஓரிடத்திலும் நிற்காமல், மாட்டுத் தொழுவிலிருந்து கன்றுத் தொழுவிற்கும், கன்றுத் தொழுவிலிருந்து மாட்டுத் தொழுவிற்கும் ஓடுவதும்; பசுவின் வால், கன்றின் வால் இவற்றை இழுப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்பாலகரின் விளையாட்டுக் குறும்புத் தனங்களைத் தடைப்படுத்த ரோகிணியாலும் யசோதையாலும் முடியவில்லை. இப்படி யாராலும் தடுக்கக் கூடாமல் இருந்ததால் யசோதையானவள் பாலகிருஷ்ணனின் இடுப்பிலே ஒரு கயிற்றைக் கட்டி, ஓர் உரலிலே அக்கயிற்றைப் பிணைத்து வைத்துவிட்டு குழந்தையை நோக்கி குறும்புக்காரனே! மிகச் சஞ்சலமான சேஷ்டைகளையெல்லாம் செய்யும் விஷமக்காரனே! இனிமேல் ஓடு பார்ப்போம்! என்று சொல்லிவிட்டு தனது வேலைகளில் ஈடுபட்டிருந்தான்.

அவ்வாறு வேறு வேலைகளில் தாய் ஈடுபட்டிருக்கும்போது குழந்தை கண்ணன் அந்த உரலை இழுத்துக் கொண்டு, அங்கேயிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே புகுந்தான். அப்போது அந்த உரல் மரத்தின் குறுக்காய் நின்று இழுக்கப்பட்டதால், அநேக பெருங் கிளைகளோடு கூடிய அந்த, மருத மரம்முறிந்து விழுந்தது. அது விழும்போது உண்டாகிய கடகடா என்ற பெரும் சப்தத்தைக் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தார்கள். பெரிய மரம் ஒன்று இரு பிளவாக முறிந்து விழுந்திருப்பதையும் அவற்றின் இடையே, குழந்தை கிருஷ்ணன் உரலோடு கட்டுண்ட நிலையில் தவழ்வதையும் புதிதாய் முளைத்த சிறு பற்களின் வெண்மையொளி வீசப் புன்னகை செய்வதையும் பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டு நின்றார்கள். இதனால் சுவாமிக்குத் தாமோதரன் என்ற திருநாமம் உண்டாயிற்று. பிறகு, நந்தகோபர் முதலியவர்கள் இத்தகைய உற்பாதங்களைக் கண்டு பயந்து திகிலடைந்து ஆலோசிக்கத் துவங்கினார்கள். பூதகி வந்து பாலூட்டிச் செத்ததும், சகடு மாறி விழுந்ததும், புயற்காற்று முதலிய உபத்திரவங்கள் இல்லாதிருக்கும்போதே பெரிய மருத மரம் முறிந்து விழுந்ததும் போன்ற உற்பாதங்கள் அநேகம் காணப்படுகின்றன. ஆகையால் நாம் இந்த இடத்தை விட்டு வேற்றிடத்துக்கு உடனே சென்றாக வேண்டும். அப்படிச் செய்யாமற் போனால் இத்தகைய பூமி சம்பந்தப்பட்ட மகோத் பாதங்களில் நமது ஆயர்சேரிக்கே தீங்குகள் ஏற்படக்கூடும். ஆகையால் நாம்இதைவிட்டுப் போகவேண்டும் என்று ஆலோசித்து நந்தகோபர் தம் கூட்டத்தினருக்குக் கட்டளையிட்டார். அந்தந்தத் தலைவர்கள் அவரவரது கூட்டத்தினரை நோக்கி, சீக்கிரம் பிரயாணத்துக்குத் தயார் ஆகுங்கள் என்று கட்டளையிட்டார்கள். பிறகு அந்தந்தக் கூட்டத்தார், அவரவரது வண்டிகளின்மேல் சாமக் கிரியைகளைப் போட்டுக்கொண்டு புறப்பட்டார்கள். மாடு மேய்ப்போர் மாடுகளையும் கன்று மேய்ப்போர் கன்றுகளையும் ஓட்டிக் கொண்டு பிருந்தாவனம் என்னும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் சென்ற பிறகு பிருகத்வனமானது நெல் சோறு தயிர் முதலியவை சிந்தப் பெற்று, காக்கை முதலிய குரூரப் பறவைகள் நிறைந்ததாய் விகாரமாகப் பட்டுப் போயிற்று அவர்கள் புதிதாய்ப் புகுந்த பிருந்தாவனமோ நற்செயல் புரியவல்ல கண்ணனால், புதுப் பொலிவு பெற்றது. பசுக்கள் விருத்தியடைந்து செழிக்கும் வண்ணம் கண்ணன் குளிர்ந்த திருவுள்ளத்தோடு அருள்புரிந்ததால் மிகவும் கொடிய கோடையிலும் மழைக் காலத்தில் உண்டாவது போன்ற இளம் புற்கள் செழிப்புற வளரப்பெற்றிருந்தது. ஆயர்கள் எல்லாம் அந்தப் பிருந்தாவனத்தில் அரைச்சந்திர வடிவில் குடியிருப்புகளை அமைத்து அதன் ஓரமெல்லாம் வண்டிகளை நிறுத்தும் இடம் உண்டாக்கிக் கொண்டு அங்கே குடியிருந்தார்கள்.

சிறிது காலம் சென்றது. பலராமன் பால கிருஷ்ணன் இருவரும் கன்று மேய்க்கும் பருவத்தை அடைந்து காக பக்ஷங்களைத் தரித்துக்கொண்டு அக்கினி குமாரர்களான சாகன் விசாகன் என்பவர்களைப் போல் விளக்கமுற்று மயிற் பீலியை முடியிலும் காட்டு மலர்களைக் காதிலும் அணிந்துகொண்டும் இடையருக்கு உரிய புல்லாங் குழல்களினாலும் இலைகளினாலும் பல வாத்திய ஓசைகளை எழுப்பிக் கொண்டும், கைகொட்டியும் சிரித்தும் ஓடியும் ஒருவரையொருவர் சுமந்தும் கன்றுகளைமேய்த்தும் ஒருவரோ டொருவர் இணைபிரியாமல் ஓரிடத்திலேயே விளையாடிக் கொண்டும் இருந்தார்கள். மைத்ரேயரே இந்த மாயா லீலையைப் பார்த்தீரா சகல லோகங்களையும் காப்பவர் கன்று காலிகளைக் காப்பவரானார். இவ்வாறு அவர்கள் விளையாடித் திரிந்து வரும்போது மேகக் கூட்டங்களினால் வானம் முழுதும் மறைத்துக் கொண்டு, நீர்த்தாரைகளினால் திசைகளையெல்லாம் ஒன்றாக்குவதைப் போல் மழைக்காலம் வந்தது. அந்த மழைக் காலத்தில் புதிய புற்கள் நிறைய முளைத்திருந்ததாலும், அதன் மேல் ஆங்காங்கே தம் பலப் பூச்சிகள் வியாபித்திருந்தாலும் பூமியானது பச்சைக்கல்லினால் செய்யப்பட்டு இடையிடையே பதுமராகம் இழைத்தது போல் இருந்தது. புதிதாய்ச் செல்வம் அடைந்த காலத்தில் அடக்கமும் ஒழுக்கமும் இல்லாதவர்களின் மனங்கள் எப்படி யாகுமோ அதுபோல் அந்தக் காலத்தில் தண்ணீரானது வழி முறைகளை நோக்காமல் இசைந்தவாறெல்லாம் ஓடிக்கொண்டிருந்தது. விவேகமில்லாத அரசனின் ஆசிரிய பலத்தினால் குணஹீனனான ஒருவன் ஒரு பெரும் பதவியில் நிலைபெற்றது போல குணஹீனமான இந்திர வில் ஆகாயத்தில் நிலைபெற்று இருந்தது. வான மேகங்களுக்குக் கீழே நிர் மலமான நாரைகளின் வரிசையானது அபகாரம் செய்தல் முதலிய தீயஒழுக்க முடையவனிடத்திலும் நற்குலத்தான் செய்யும் நற்செய்கையைப் போல் மிகவும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. உத்தமனிடத்திலே கெட்டவன் நட்புக் கொள்வது போல் வானத்தில் மின்னலானது தோன்றி மறைந்து நிலையற்றிருந்தது மிகவும் மூடர்கள் தாம் நினைத்த கருத்து விளங்கும்படிப் பேசத் தெரியாமல் வாய்க்கு வந்தபடி யெல்லாம் பேசும் பேச்சுக்கள் வேறு பொருளைக் காட்டி விளங்காமற் போவது போல் அக்காலத்தில் புல் பூண்டுகள் முதலிய வற்றால் பாதைகள் மூடப்பட்டு விளங்காமலிருந்தன. அத்தகைய இடத்தில் மயில்களும் மான்களும் நிறைந்திருந்தன. அங்கு ராமன் கிருஷ்ணன் இருவரும் காட்டில் இடைப் பிள்ளைகளுடன் கூடி மிகவும் மகிழ்ச்சியாகச் சஞ்சரித்துக்கொண்டு இருந்தார்கள். அங்கு அவர்கள் நடத்திய திருவிளையாடலைக் கேளும்.

அவர்கள் ஓரிடத்தில் பசுக்களுடன் கானம் பாடிக்கொண்டும் ஓரிடத்தில் மிகவும் குளிர்ச்சியான மரநிழல்களில் உலவிக் கொண்டு மிருந்தார்கள் ஓரிடத்தில் கடப்பம் பூமாலைகளையும் மயில் தோகை மாலைகளையும் சாத்திக்கொண்டு, பலநிற மலைத்துகள்களை திருமேனியிற் பூசிக்கொண்டு ஆடினார்கள். மற்றோர் இடத்தில் தழைகளினால் படுக்கை போட்டு, அதில் படுத்து கண் அயர்ந்திருந்தார்கள். இன்னுமோரிடத்தில் சிறுவர்களுடன் பாடிக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் மயில்கள் கூவுவதைக் கேட்டு, அவை போலத்தங்கள் குழல்களையும் ஊதினார்கள். இவ்வளவு அநேகவிதமான பாவனைகளான திருவிளையாடல்களினால் ராமகிருஷ்ணர்களான அண்ணன் தம்பி இருவரும் மிகவும் நேசத்தோடும் மகிழ்ச்சியோடும் பிறரை மகிழ்வித்துத் தாமும்மகிழ்ந்து வந்தார்கள். இரவிலுங்கூடச்சிறிது நேரம்பசுக்களோடும் இடையச் சிறுவரோடும் விளையாடிவிட்டுத் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து சேர்வார்கள். மைத்ரேயரே! இவ்வாறு அக்குமாரர்கள் இருவரும், காந்தி, பலம் முதலியவற்றில் தேவாமிசம் தோன்றும்படி, நந்தகோபனது திருமாளிகையில் வளர்ந்து வந்தார்கள்.

7. காளிய மர்த்தனம்

ஒருநாள் கிருஷ்ணன் தன் அண்ணனான பலராமனை விட்டுத் தனியாகக் காட்டுக்குச் சென்று, அங்கிருந்த இடைப் பிள்ளைகளுடன் காட்டு மலர்களை அணிந்து உலாவிக்கொண்டிருந்தான். அப்போது பேரலைகளோடு பெருகிவரும், யமுனை நதியின் அருகே வந்தான். அந்நதியில் விஷாக்கினியினாய் கொதிப்படைந்த நீருடன் மிகவும் பயங்கரமாயிருந்த காளிய மடுவையும், அதன் விஷவேகத்தால் கரையிலுள்ள மரங்கள் எரிக்கப்பட்டிருப்பதையும், காற்றில் அகப்பட்ட நீர்த் துளிகளின் ஸ்பரிசத்தினாலே வானத்தில் பறக்கும் பறவைகளுங்கூட எரிந்து போவதையும் கண்டு, இந்த மடு கொடிய மிருத்யுவின் வாய்போல் இருக்கிறதே! பரம துஷ்டனாயும் விஷத்தையே ஆயுதமாகக் கொண்டவனுமான காளியநாதன் இந்த மடுவில் இருக்கிறான் அன்றோ? இவனை நாம் வென்றால், இந்த மடுவை விட்டு அவன் கடலுக்குப் போவான். இந்த மடுவில் காளிய சர்ப்பம் இருப்பதால், யமுனை நதியானது கடல் எட்டும்வரை கொடுக்கப்பட்டு, நீர் வேட்கையுள்ள மனிதருக்கும் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பானயோக்கிய மின்றி இருக்கிறது. ஆகையால் இந்தக் கொடிய சர்ப்பத்தைத் தண்டித்தே ஆகவேண்டும். அதனால் இந்த ஆயர்பாடியில் இருப்பவரனைவரும் பயமின்றி இந்த நதியின் நன்னீரைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வழி தவறிய துஷ்டர்களை நிக்கிரகிக்கத்தானே நாம் அவதரித்தோம்? ஆகவே, நதிக்கரையில் உள்ள இந்தக் கடப்ப மரத்தின்மேல் ஏறி காளிய சர்ப்பம் இருக்கும் மடுவில் குதிப்போம் என்று பாலகிருஷ்ணன் எண்ணமிட்டுத் தன் திருப்பரிவட்டத்தை நன்றாக இழுத்துக் கட்டிக்கொண்டு மரத்தின்மேல் ஏறி, அதிலிருந்து வேகமாய் அந்த மடுவில் குதித்தான். அப்படி சுவாமி குதித்ததால், மடுநீர் அலைந்தது. நீர் பரவியதால் தூரத்திலிருந்த மரங்கள் நனைந்தன. அம்மரங்கள் சர்ப்ப விஷாக்கினிச் சுவாலையினால், கொதித்த நீர் பட்டதுமே தீ மூட்டியது போல நாற்புறங்களிலும் சுவாலைகள் பரவி எரிந்து போயின. பாலகிருஷ்ணனோ காளியமடுவிற் குதித்தவுடனேயே தன் தோள்களைப் பலமாகத் தட்டினான். கண்ணன் தோள் தட்டிய ஓசையைக் கேட்டவுடனே காளியன் என்னும் சர்ப்பராஜன் கோபத்தினால் கண்கள் எல்லாம் சிவக்க; முகங்களில் விஷச் சுவாலைகள் மிகுந்தவனாய், மகாவிஷமுள்ள பல்வேறு பாம்புக் கூட்டங்களுடன் மடுவை விட்டு வெளியே வந்தான். அவனுடைய அநேக நாக பத்தினிகளும் அழகிய முத்து மாலைகளை அணிந்து உடம்பையசைப்பதால் காதுகளிலே அசையும் குண்டலங்கள் காந்திவீச, வெளியே வந்தனர்.

உடனே, காளியனும் மற்றையச் சர்ப்பங்களும் தங்களது உடல்களினால் கண்ணனை இறுகப்பிணைத்துக்கொண்டு கடித்தன. இவ்விதமாக அந்த மடுவில், சர்ப்பங்களினாலே சுற்றப்பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணனை இடைப்பிள்ளைகள் பார்த்ததும் பயந்தார்கள். அவர்கள் ஆயர்பாடிக்கு ஓடிச்சென்று ஐயோ! நம்முடைய கிருஷ்ணன் மோகத்தால் காளியமடுவில் விழுந்து மூழ்கிப் போய் காளியனால் விழுங்கப்படுகிறான், ஓடி வாருங்கள், என்று கூவினார்கள். இடி விழுந்தது போன்ற அந்தப் பேச்சைக் கேட்டு, அங்கிருந்த தாய் யசோதையும் மற்றுமுள்ள கோபாலர்களும் ஐயோ! கிருஷ்ணன் எங்கே? எப்படியிருக்கிறான்! என்று கதறிக்கொண்டு ஒன்றுந் தோன்றாமல் பரவசராய்க் கால்திடற, அந்த மடுவின் அருகே ஓடி வந்தார்கள். அதுபோலவே தந்தை நந்தகோபரும் தமையன் பலராமனும் பரபரப்புடன் ஓடி வந்தார்கள். யமுனை நதியில் பாம்புகளால் பிணைக்கப்பட்டு அசைய மாட்டாமற் கிடக்கும் கண்ணபிரானைப் பார்த்ததும் தம் கண்களில் தாரை தாரையாய் நீர்வடிய எல்லோரும் கதறி யழுது கொண்டு நின்றார்கள். நந்தகோபரும் யசோதையும் கண்ணன் திருமுக மண்டலத்திலேயே கண்களை வைத்து லயித்தவர்களாய், ஒரு செயலும் இன்றி மரம்போல் அசைவற்று நின்றார்கள். கண்ணனுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்குவது அரிது என்ற அதைரியமும் பயமும் பற்றியவர்களாக அவர்கள் நாவுலர்ந்து வாய் குளற அழுதார்கள். அவர்கள் அழுதுகொண்டே, நாமெல்லாம் யசோதையுடன் இந்த காளியமடுவில் விழுந்து விடுவோம். இனி ஆயர்பாடிக்குப் போகக் கூடாது. ஏனெனில் சூரியனில்லாத பகல் எதற்கு? கிருஷ்ணன் இல்லாத திருவாய்ப்பாடி நமக்கு எதற்கு? ஆகையால் நாம் அங்கே மறுபடியும் போவது தகுதியன்று கண்ணனை விட்டுத் தண்ணீரில்லாத குளம் போல அழகற்றதும் சுக ஹேதுவாகாததுமான இடைச்சேரிக்குப் போக மாட்டோம். எங்கே கருநெய்தல் மலர்போன்ற கண்ணன் இல்லையோ, அது தாய்வீடானாலும் அந்த வாசத்தினால் மகிழ்ச்சி உண்டாக மாட்டாது! என்று இடையர்கள் பிரலாபித்தார்கள். தந்தை நந்தகோபரும் தாய் யசோதையும் மயங்கியிருந்தனர். அப்போது பலபத்திரனான பலராமன் தன் தம்பி கிருஷ்ணனோடு தங்களுக்குரிய சங்கேத வார்த்தகைளினால் இவ்வாறு கூறலானான்.

பிரும ருத்திராதியருக்கும் அதிபதியானவனே! சுவாமி! நீ ஏன் அனந்தனான உன் சொரூபத்தை மறந்து மனுஷியனாக இருக்குந் தன்மையைக் காட்டுகிறாய்? சக்கரத்தின் அரங்களுக்கு நடுமயம் போல் உங்களுக்கெல்லாம் நீயே ஆதாரமாக இருக்கிறாய். மேலும் படைப்பவனும் அழிப்பவனும் காப்பவனும் நீ! சிந்திக்கக் கூடாத சொரூபமுடையவனே! சகல வேத சொரூபியும் நீ! ஜகந்நாதா! நீ பூபாரத்தை நீக்குவதற்காக மனித அவதாரம் செய்தருளினாய். உனது விபூதியான நானும் உன் தமையனாகப் பிறந்தேன். பகவானே! நீ மனுஷ்ய லீலையை அனுசரித்து எழுந்தருளியிருப்பதனாலே, சகல தேவதைகளும் இங்கே அவதரித்துள்ளனர். எம்பெருமானே! உன் லீலைக்கு உபயோகமாக ஆயர்பாடியில் தெய்வப் பெண்களை முன்னதாக அவதரிக்கச் செய்து அதன் பிறகு நீ அவதரித்தாயல்லவா? இவ்விதம் அவதரித்த உமக்கும் எனக்கும் உன் சங்கல்பத்தினால் பிறந்த கோபாலரும் கோபியருமல்லவோ உறவினர் ஆகிறார்கள்? அப்படியிருக்க மிகவும் விசனமடைந்துள்ள இவர்களை ஏன் உபேக்ஷிக்கிறாய்? ஓ, கிருஷ்ணா! இதுவரை நீ மனுஷ்ய பாவனையைக் காட்டியதும் பாலகனாக இருப்பதின் லீலையைக் காட்டியதும் போதும் இனிவிரைவாக மகா துஷ்ட சொரூபமாகவுள்ள அந்தப் பாம்பை அடக்கி அருள்வாயாக! என்று பலபத்திரன் (பலராமன்) நினைப்பூட்டினான்.

பாலகிருஷ்ணன் புன்னகையுடன் காளியன் என்ற அந்தப் பாம்பை ஒரு அறை அறைந்து அதன் உடலின் பிணைப்பிலிருந்து தன்னை விடுத்துக் கொண்டான். பிறகு கண்ணன் தன் இரண்டு திருக்கைகளாலும் காளியனின் நடுத்தலையை அமுக்கி அதன்மேல் ஏறி நர்த்தனம் ஆடினான். இவ்வாறு தன் திருவடிகளால் துவைத்ததால், சர்ப்ப ராஜனின் பிராணங்கள் எல்லாம் படத்திலே வந்தன துவைக்கப்படாத மற்றொரு படத்தையும் சர்ப்பராஜன் தூக்கியெடுத்தான். அதையும் கண்ணன் தன் திருவடிகளால் வணங்கியருளினான். இதனால் நசுக்குண்ட பாம்பரசன் உதிரத்தையும் நஞ்சையும் கக்கினான் அவன் சோர்வடைந்ததைப் பார்த்ததும் அவனுடைய நாகபத்தினிகள் ஸ்ரீகிருஷ்ணனின் திருவடிகளில் சரண்புகுந்து, தேவதேவேசுவரனே! நாங்கள் உன்னை அறிந்தோம். நீ சர்வ யக்ஞனாகவும் உத்தமரில் உத்தமனாயும், மனம் வாக்குக்கு எட்டாத பரஞ்சோதியென்று சொல்லப்படும் பிரம்மத்தின் திருவவதாரமாக இருப்பவன் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதமயமான பிரபஞ்சங்கள் எல்லாம் எவனது சொரூபத்தின் அமிசத்தின் அமிசத்திலும் அமிசமோ, அப்படிப்பட்டவனை நாங்கள் எப்படித் துதிப்போம் அணுவுக்கு சூட்சும மாயும் ஸ்தூலங்களுக்கும் பெரியதாகவும் இருக்கிறஎவனுடைய பரமார்த்தமான சொரூபத்தை யோகியருங்கூட அறிய மாட்டார்களோ, அத்தகைய உன்னை நாங்கள் சரணடைகிறோம் சுவாமி! தேவரீருக்குக் கொஞ்சமேனும் கோபம் என்பதில்லை. ஆயினும் இந்தக் காளியனைத் தண்டித்தது ஏனென்றால் லோக மரியாதையை நிலை நிறுத்துவதற்குத்தான் என்பதை அறிந்தோம். இனி எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருள்வீராக.

பெண்கள் திறத்திலும், பேதைகள் திறத்திலும் பெரியோர்கள் இரங்க வேண்டுமன்றோ? ஆகையால் மெலிந்து இளைத்த எங்கள் நாயகனான காளியன்மீது இரக்கம் காட்டவேண்டும். பொறுமையுடையவரில் நீர் சிறந்தவரல்லவா? சகல உலகங்களுக்கும் ஆதாரமாகிறவன் நீர்! இந்த நாகனோ அற்ப பயமுடையவன் இவன் உனது திருவடியினால் துவைக்கப்பட்டதால் அரைமுகூர்த்தத்தில் உயிரை இழப்பான் எம்பெருமானே! அற்ப வீரியனான இந்த சர்ப்பராஜன் எங்கே? உலகங்களுக்கெல்லாம் இருப்பிடமான நீர் எங்கே? எங்களுக்குப் பதிப்பிøக்ஷ தந்தருள வேண்டும். சகல லோகநாதனே! சகல ஆத்மநாதனே! இந்த நாகன் உயிரை இழக்க இருக்கிறான். எங்களுக்கு மாங்கல்யப் பிøக்ஷ தந்தருளவேண்டும் என்று நாக கன்னியர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அதனால் திருவுள்ளம் பற்றிய ஸ்ரீகிருஷ்ணன் தன் திருவடிகளால் துவைப்பதை நிறுத்தியதால், காளிங்கன் மிகவும் மெலிந்து இருந்துங்கூட சிறிது தைரியமடைந்து இளைப்பு நீங்கி, தேவதேவர்களுக்கு அதிபதியே! அருள் செய்ய வேண்டும் என்று மெல்ல மெல்ல விண்ணப்பிக்கலானான்.

எம்பெருமானே! அணிமாவாதி! எண்குணங்களையுடைய ஐசுவரியமானது எப்படி இயல்பாயும் மேலானதாயும் ஒப்பில்லாததாயும் இருக்கின்றதோ அப்படிப்பட்ட உன்னை எப்படித் துதிப்பேன்? நீ பிரகிருதிக்கு மேற்பட்ட ஆன்ம சொரூபியாயும் அவனுக்கு மேற்பட்ட முக்த சொரூபியாயும் இருக்கிறாய் பக்தன் முக்தன் மேலானவன் என்று சொல்லப்பட்டவனும் நீயே! ஆதலின் உன்னை எப்படித் துதிப்பேன்? எவனிலிருந்து பிரமனும் உருத்திரனும், இந்திரன், சந்திரன், மருத்துக்கள், அவிசுகள், வசுக்கள், ஆதித்தர் முதலானவர்களும் உண்டானார்களோ, அப்பேர்ப்பட்ட உன்னை நானெப்படித் துதிப்பேன்? மூர்த்தமாயும் அமூர்த்தமாயுமுள்ள ரூபியான எவனுடைய பரமார்த்த சொரூபத்தைப் பிருமா முதலிய தேவர்களும் அறியமாட்டார்களோ, அவனை நான் எங்ஙனம் துதிப்பேன்? யோகியரெல்லாம் சகல இந்திரியங்களையும் விஷயங்களினின்றும் திருப்பிச் செய்யுந் தியான யோகத்தினாலே எவனை அர்ச்சிக்கின்றார்களோ, அவனை நான் எப்படி அர்ச்சிப்பேன்? சணகாதி மகாயோகியரெல்லாம் எவனுடைய சொரூபத்தைத் தியானத்தாலே தங்கள் இதயங்களிலே நிறுத்தி, அஹிம்சை முதலிய மலர்களினாலே அர்ச்சிக்கின்றார்களோ, அவனை நான் எப்படி அர்ச்சிப்பேன்; ஓ தேவ தேவேசனே! இவ்வளவு அற்பனாகிய நான் அவ்வளவு மேன்மையுள்ள உன்னை அர்ச்சிக்கவும் துதிக்கவும் பணியவும் வல்லமையுடையவனல்லேன்! ஆயினும் உன் கிருபையினாலேயே அடியேனை அனுக்கிரகிக்க வேண்டும். ஸ்ரீகேசவா! அடியேன் பிறந்தது கொடி சர்ப்ப ஜாதியல்லவா? அதனால் என் இயல்பு இப்படி இருக்கிறதேயல்லாது அடியேனிடத்தில் அபராதம் ஒன்றுமில்லை அச்சுதா! நீயே சகல உலகங்களையும் படைத்து, அழிக்கிறாய் ஆகையால் அந்தந்தப் பொருள்களின் ஜாதிரூப சுபாவங்களும் உன்னாலேயே உண்டாக்கப்படுகின்றன. எந்த இயல்பினால் நான் படைக்கப்பட்டேனோ, அதன் நடத்தையே என்னிடம் உள்ளது இதுதான் உண்மை! நீ படைத்த ஜாதி முதலானவைகளுக்கு மாறாக நான் நடப்பேனாகில் உன் கட்டளைக்கு மாறாக நடத்த குற்றம் செய்தவனாவேன் அடியேனை நீ தண்டிப்பதும் நியாயம். உன் சூக்தியும் அப்படித் தானன்றோ இருக்கிறது? ஆயினும் மூடனான அடியேனை தண்டனை செய்தருளினாய். இது அடியேனுக்கு கொடுமை தீர்ப்பதாக இருந்ததால், கொண்டாடும் படியான வரமாகின்றது! இது மற்றொருவரால் கிடைக்குமானால் அது சிறப்புடையதாகாது. பகவானே, பிராணன் ஒன்றுதான். அதைப் போக்காமல் தந்தருள வேண்டுகிறேன். இனிமேல் அடியேன் செய்யத்தக்கது இன்னதென்று நியமித்து அருள் செய்யவேண்டும் என்று காளியங்கன் பிரார்த்தித்தான். அப்போது கிருஷ்ணபகவான் கருணை கூர்ந்து, ஓ சர்ப்பராஜனே! இனி நீ இந்த யமுனை நதியிலே ஒரு கணமும் இருக்கவேண்டாம்; உன் புத்திர களத்திராதி பரிவாரங்களோடு கூட சமுத்திரத்தில் சேர்வாயாக. நீ கருடனுக்குப் பயப்படவேண்டாம். உன் சிரசில் என் திருவடியின் அடையாளம் இருப்பதைக் கண்டு உன்னைக் கருடன் எதுவும் செய்யமாட்டான் என்று கூறியருளி காளிங்கனை விட்டு விட்டார்.

பிறகு காளிங்க நாகன், சுவாமியின் திருவடித் தாமரைகளில் விழுந்து வணங்கி, தன் புத்திரக் களத்திராதியுடன் கூடி யாவரும் பார்த்துக்கொண்டேயிருக்க அந்த மடுவை விட்டுக் கிளம்பிச் சென்ற பிறகு, கரையேறிவந்த கண்ணனை இறந்து மீண்டுவந்தவனைக் கண்டதைப் போலக் கண்டு, நந்தகோபர் முதலியோரெல்லாம் மிகவும் அன்போடு பாலகிருஷ்ணனை கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர்விட்டு நனைத்தார்கள். மற்றுமுள்ள யாதவர்கள் கண்ணனின் மேன்மையையும் அந்த யமுனையாற்று நீர் தூய்மைப்பட்டு விட்டதையும் கண்டு மகிழ்ந்தனர். அதன் பிறகு கண்ணன் யாதவக் கூட்டத்துடன் திருவாய்ப்பாடிக்கு எழுந்தருளினார்.

8. தேநுகாசுரன் வதம்

பலராமன் கிருஷ்ணன் இருவரும் சேர்ந்து மாடு மேய்த்துக் கொண்டே, ரமணீயமான ஒரு பனங்காட்டிற்குச் சென்றார்கள். அந்தப் பனங்காட்டிலே தேநுகன் என்ற ஓர் அசுரன் கழுதை வடிவெடுத்து மிருகங்களின் இறைச்சியை ஆகாரமாகக் கொண்டு வசித்து வந்தான். அங்கு மனிதர்களின் நடமாட்டம் இல்லாததால் அநேகமாய் பனம்பழங்கள் நன்றாகப் பழுத்து குமுகுமுவென்று வாசனை வீசிக் கொண்டிருந்தன. இடையர் குலச் சிறுவர்கள் எல்லாம் அப்பனம் பழங்களை விரும்பி, ஓ, பலராமா ஓகிருஷ்ணா! இந்தக் காடு தேநுகன் என்ற அசுரனின் நடமாட்டத்தால் எப்போதுங் காக்கப்பட்டு வருகிறது. அதனால் இங்கு நன்றாகக் கனிந்த பழங்கள் குலைகுலையாகத் தொங்குகின்றன. அக்கனிகளை நாங்கள் விரும்புகிறோம். உங்களுக்குச் சம்மதமிருந்தால் இவற்றை உதிர்த்துத் தள்ளுங்கள். நீங்கள் பலசாலிகளாகையால் விண்ணப்பம் செய்தோம்! என்று கூறினார்கள்.

உடனே பலபத்திரனும் கிருஷ்ணனும் மரங்களில் ஏறிப் பழங்களை உதிர்த்துத் தள்ளினார்கள். இவ்விதம் அவர்கள் இருவரும் பழங்களை உதிர்க்க, அவை விழுகின்ற ஓசையைக் கேட்டு, துஷ்ட அசுரனான தேநுகன் கோபங்கொண்டு ஓடிவந்தான். கழுதை வடிவமாகவேவந்த அவ்வசுரன் தனது பின்னங் கால்கள் இரண்டினாலும் பலராமனது மார்பில் உதைத்தான். உடனே பலராமன் அதிலாவகமாய் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்து அந்த அசுரக் கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படி ஒரு பனைமரத்தின்மீது ஓங்கி வீசினான். அதனால் பெருங்காற்றானது மேகங்களை வீழ்த்துவது போல், அசுரக் கழுதை பல பழங்களை உதிரும்படிச் செய்து, தானும் தரையில் வீழ்ந்து உயிர்விட்டது. பிறகு அந்த அசுரனைச் சேர்ந்த கழுதை வடிவு கொண்ட அசுரர்கள் பலர் ஓடிவந்து ராமகிருஷ்ணர்களுடன் போரிட்டனர். தம்பி கிருஷ்ணன் சிலரையும் மூத்தவன் சிலரையும் பிடித்துச் சுழற்றித் தேநுகனை எறிந்ததைப் போலவே சுழற்றி வேடிக்கையாகப் பனைமரங்களின் மீது எறிய, அவர்களும் பழங்களுடன் விழுந்து உயிரிழந்தனர். அப்போது அந்த நிலம் முழுவதும் பனம்பழங்களும் கழுதையுடல்களும் நிறைந்து விளங்கியது. பின்னர் யாதவர் அனைவரும் பழங்களை வேண்டுமளவு புசித்து மகிழ்ந்து ராமகிருஷ்ணர்களைத் துதித்தனர் பசுக்களும் இனிய பசும் புற்களை மேய்த்து மகிழ்ந்தன.

9. பிரலம்பாசுரன் வதம்

தேநுகாசுரன் மாண்ட பிறகு, அவன் வசித்த பனங்காடு இடையர் குலச் சிறுவர்கள் விளையாடும் இடமாக மாறிவிட்டது. பிறகு வசுதேவரின் குமாரர்கள் ராமகிருஷ்ணர் இருவரும் பாண்டீரம் என்ற ஆலமரத்தின் அருகே சென்று, தோளில் அணைக் கயிற்றையும் மார்பில் வனமாலையும் அணிந்து, இளங்கொம்புள்ள காளைகளைப் போல் மகிழ்ந்து தங்கள் தோழர்களோடு விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் சிங்கநாதம் செய்வதும், சிலர் பாடுவதும், மரங்களை ஏறத் தேடுவதும் பசுக்களை அவற்றின் பெயரைக் கூப்பிட்டு அழைப்பதுமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். ராமகிருஷ்ணர்களில் மூத்தவனான பலராமன் மைப்பொடி யூட்டிய ஆடையையும் இளையவனான கிருஷ்ணன் பொற்பொடி யூட்டிய ஆடையையும் தரித்து வானவில்லோடு வெண்மையும் கருமையுமாகப் பிரகாசிக்கும் மேகங்களைப்போல் தோற்றமளித்தார்கள். இத்தகைய அலங்காரத்துடன் சகலலோக நாதருக்கும் நாதர்களாயிருக்கும் அவ்விரு பாலகரும் பூவுலகுக்கு ஏற்ப மனிதத் தன்மையோடு, மனித பாவனையோடு, லோகத்திலுண்டான பல விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்தனர். இருவர் கைகளைத் தண்டிகை போல் வைக்க, அதில் ஒருவர் தொங்கலாடுவதாலும் மரத்தின் விழுதுகளை முடிந்து அதில் உட்கார்ந்து வீசி ஊஞ்சலாடுவதாலும், ஆந்தோளிகைகளினாலும், ஒருவரோடு ஒருவர் கைச்சண்டையிடுவதனாலும் கட்டைகளையும் கற்களையும் சுழற்றுவது போன்ற குறளிச் செய்கைகளினாலும் இன்னும் பல விளையாடல்களினாலும் மற்றைய இடையச் சிறுவர்களோடு அவ்விருவரும் மகிழ்ந்திருந்தனர்.

அவ்வாறு அவ்விருவரும் விளையாடி வரும் நாட்களில் இவ்விருவரையும் பிடித்துக் கொண்டுபோகவேண்டும் என்பதற்காக பிரலம்பன் என்ற அசுரன் ஒருவன் ஆயச் சிறுவனைப் போல் வேடமெடுத்து வந்து இடையர் குலப்பிள்ளைகளில் ஒருவனாக விளையாட்டில் கலந்துகொண்டான். அவன் ஸ்ரீ கிருஷ்ணனை வெல்லக்கூடாத வகையை நினைத்து, பலராமனைக் கொல்ல நினைத்தான். அங்கிருந்த சிறுவர்கள் அனைவரும் ஹரீணாக் கிரீடனம் என்ற சிறுவர் விளையாட்டு ஒன்றை விளையாடத் துவங்கினார்கள். அதற்காக யாவரும் இரட்டை இரட்டையாக நின்றார்கள். அவர்களுக்குள்ளே தாமா என்பவனோடு கண்ணனும் பிரலம்பன் என்பவனோடு பலராமனும் கூடி நின்று குதித்து வரும்போது தாமாவைக் கண்ணனும் பிரலம்பனை பலராமனும் ஜயித்ததனால், தோல்வியுண்ட இருவரும் தங்களை ஜயித்த இருவரையும் தங்கள் தோள்மீது ஏற்றிச் சுமந்துகொண்டு பாண்டீரம் என்ற ஆலமரத்தடிக்கு வந்து மறுபடியும் அங்கிருந்து திரும்பினார்கள். அப்போது பிரலம் பாசுரன் பலராமனைத் தன் தோள்மேல் ஏற்றிக்கொண்டு, சந்திரனை ஏந்திய மேகம் போல் குபீரெனக் கிளம்பி ஆகாயத்தில் எழும்பினான். அதைக் கண்டு பலராமன் தன் உடலைப் பாரமாக்கினான். அந்தப் பாரத்தைச் சுமக்கமாட்டாமல் அசுரன் தன் உடலையும்பெரிதாக வளர்த்திக் கொண்டு; மழைக்கால மேகம்போல் வளர்ந்தான், எரிந்த மலை போன்ற உடம்பும் குறுகிய கீரீடமும் கவிழ்ந்த தலையும் தொங்குகின்ற மாலை ஆபரணங்களும், வண்டிச் சக்கரம் போன்ற கண்களும் பயங்கர வடிவும், பூமி நடுங்கத்தக்க நடையும் கொண்ட அந்த அசுரன் சிறிதும் அச்சமின்றித் தன்னைத் தூக்கிக்கொண்டு எழும்புவதை பார்த்து பலராமன் தன் தம்பியைக் கூவியழைத்து, ஓ கிருஷ்ணா! ஓ கிருஷ்ணா! மலை போன்ற தேகங்கொண்டு இடையப்பிள்ளை போன்ற ரூபங்தரித்த அசுரன் ஒருவனாலே நான் தூக்கிக்கொண்டு போகப்படுகிறேன்! மதுசூதனா! இப்போது நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்! இந்த துராத்துமா வெகு வேகமாக ஓடுகிறான் என்று கூறினான்.

அதைக்கேட்டதும் பாலகிருஷ்ணன், புன்னகையினால் இதழ்கள் மலரக் கூறலானான். ஓ, சர்வாத்துமகனாயும், சகல சூஷ்மங்களுக்கும் காரணனாயும் இருப்பவனே! பிரளயத்திலும் மிகுந்திருக்கும் படியான நித்தியனான நீ ஏன் மானுடத் தன்மையை மெய்யாகவே பற்றுகின்றாய் நீயே சகலலோக காரணங்களுக்குக் காரணமாய், வியக்கப் பிரபஞ்சத்துக்கு முன்பே இருப்பவனும் சகலமும் கடலினாலே மூழ்கடிக்கப்பட்டு, ஏகார்ணவமாக இருக்கும்போது, மிகுந்திருக்கிறவனுமாக இருக்கிறாய். இத்தகைய உன் தன்மையை நினைத்துக்கொள் மேலும் நாம் இருவரும் இந்தப் பூமியின் பாரத்தைப் போக்குவதற்கே அவதரித்திருக்கிறோம் என்பதை நீ அறிவாயோ? ஓ! அனந்தனே! ஆகாயம் உன் திருமுடி! மேகங்கள் உன் கேசங்கள், பூமி, உன் திருவடி அக்கினி உன் திருமுகம்! சந்திரன் உன் மனம் வாயு உன் மூச்சு நான்கு திக்குகளும் உன் நான்கு திருத்தோள்கள்! நீ ஆயிரம் திருமுகங்களும் ஆயிரம் திருக்கைகளும் ஆயிரம் திருப்பாதங்களும் கொண்டவனாய், ஆயிரம் பிரம்மாக்களுக்கும் உற்பத்தி ஸ்தானமான முதல்வனாக இருக்கிறாய்! உன் திவ்ய ரூபத்தை ஒருவனும் அறியமாட்டான். தேவதைகளும் உன் திருவவதார ரூபத்தையே அர்ச்சிக்கின்றனர். இந்த உலகம் யாவும் முடிவில் உன்னிடத்திலேயே லயமடைகின்றன. இந்தப் பூமி உன்னால் தாங்கப்பட்டன்றோ சராசர மயமான பிரபஞ்சத்தைத்தாங்குகின்றது? ஓ, உற்பத்தி விநாசங்கள் இல்லாதவனே! நீயே காலரூபமாய் யாவற்றையும் விழுங்கி விடுகின்றாய். தண்ணீரானது வடவாக்கினியினால் உண்ணப்பட்டுக் காற்றால் எறியப்பட்டு இமயமலையிலே பனியாய் நின்று, சூரிய கிரணங்களின் சம்பந்தத்தால் உருகி, மறுபடியும் தண்ணீராவதுபோல் சங்கார காலத்தில் உன்னால் விழுங்கப்பட்ட பிரபஞ்சமெல்லாம் உன் ஆதீனமாகவே இருந்து, மீண்டும் படைக்க எத்தனிக்கின்ற உனது சங்கற்பத்தினால் முன்போலவே அந்தந்த உருக்கொண்டு பிரபஞ்சமாகத் தோன்றுகின்றன. ஈசுவரனே! கல்பந்தோறும் இப்படியே சிருஷ்டிப் பிரளயங்கள் நிகழ்கின்றன; நீயும் நானும் சேர்ந்து, இந்த உலகங்களுக்கு ஏக காரணமாக இருந்து, இந்தப் பூமியின் சுமையைக் குறைக்கப் பேத ரூபமாக அவதரித்தோம் அன்றோ? இவற்றையெல்லாம் நீ நினைத்துக்கொண்டு, இந்த மனுஷ்ய பாவனையைவிடாமல், அந்த அசுரனை சம்ஹாரம் செய்து, பந்துக்களுக்கு நன்மை செய்வாயாக! என்றான் கண்ணன்.

அதைக்கேட்டதும் பலராமன் சிரித்தான். பிறகு அவன் கண்கள் சிவக்க, தன் கைப்பிடியால் அந்த அசுரனின் தலைமீது அடித்தான். அந்த இடிபட்டவுடனேயே பிரலம்பாசுரனின் கண்கள் பிதுங்கின. கபாலமுடைந்து உதிரங் கக்க அவன் தரையில் விழுந்துமடிந்தான். இவ்விதமாகப்பிரலம்பனைச் சங்கரித்ததனால் யாதவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஸ்ரீ சங்கர்ஷணரான பலராமன் மறுபடியும் கண்ணனுடன் சேர்ந்துகொண்டு ஆயர்பாடிக்குச் சென்றான்.

10. கோவர்த்தன ஆராதனம்

ராமகிருஷ்ணர்கள் இருவரும் திருவாய்ப்பாடியில் விளையாடிக்கொண்டிருக்கும் காலத்தில், மழைக்காலம் நீங்கியது. தாமரைகள் மலர்ந்து விளங்கும் சரத்காலம் வந்தது. அப்போது சிறிய குளங்களிலிருந்த மீன்கள், புத்திர ÷க்ஷத்திராதிகளிலே பற்றிருத்தலினால் இல்லறத்தான் தாபமடைவது போல், அவை தாபமடைந்தன. சம்சாரம், அசாரம் என்பதை அறிந்த யோகியர் அதில் பற்றற்று மவுனமாக இருப்பதைப்போல் காட்டிலிருந்த மயிலினங்கள் மதம் நீங்கி, மவுனமாயிருந்தன. ஞானம் கைவந்தவர்கள் தங்கள் அகங்காரத்தோடு பொருள் முதலானவற்றை விட்டுச்சுத்த சத்வ குணமுடையவராய் சமுத்திரத்தைத் துறந்திருப்பதைப் போல் மேகங்கள் தம்மிடமிருந்த தண்ணீரையெல்லாம் விட்டுவிட்டு நிர்மலமாயும் வெண்மையான மேனியையுடையவனாகவும் வானத்தை விட்டு நீங்கியவை போலவும் விளங்கின. வறண்ட இருதயமுடையவரைப்போல குளங்களெல்லாம் சூரிய கிரணங்களால் வறண்டிருந்தன. நக்ஷத்திரங்களினாலே நிர்மலமாய் இருக்கும் வானவீதியில், பூரண மண்டலத்தோடு கூடிய சந்திரன் எழுந்து விளங்கினான். நல்ல குலத்திலே ஒரு யோகியானவன் பிறந்து முக்திபெறத் தக்க திருமேனியோடு விளங்குவது போலவே அச்சந்திரன் விளங்கினான். மந்திரம் முதலான யோக முறைகளினாலே மகாயோகத்தை அடைந்து ஒரு யதியானவன் எப்படி நிச்சலனாக இருப்பானோ அவ்வாறு சமுத்திரமானது தண்ணீர் நிறைந்து ததும்பலின்றி நிச்சலமாக இருந்தது. அகங்காரத்தினால் உண்டான துக்கத்தை மகத்தான விவேகம் போக்குவது போல், சூரிய கிரணங்களினால் உண்டான தாபத்தையெல்லாம் சந்திரன் போக்கடித்தான் ஆபரண, ரேசக, கும்பம் என்கின்ற வாயுவை நிறுத்துதல், நிலைப்பித்தல் விடல் முதலானவற்றால் பிராணாயாமம் பயில்வதுபோல் தடாகங்களின் தண்ணீர் வாய்க்கால் முதலானவைகளில் நிறைக்கப்படுதலும் பின்பு ஓரிடத்தில் நிறுத்தப்படுதலும், வேண்டுங் கழனிகளுக்கு விடப்படுதலாகிய செயல்களால் பிராணாயாமம் செய்வன போலிருந்தன! இத்தகைய சரத்காலம் வந்தபோது, இந்திரனைப் பூசிப்பதற்காக ஒரு உற்சவம் நிகழ்ந்தது. அதில் அதிக ஆசையுடைய ஆயர்கள் குதூகலமாக ஈடுபட்டிருந்தனர்.
அவர்களில் மூப்பர்களாக இருந்தவர்களிடம் கிருஷ்ணன் பின் வருமாறு கேட்டான். பெரியோர்களே நீங்கள் அனைவரும் களிக்கும்படியான இந்திர விழா என்பது என்ன? அதன் சொரூப அனுஷ்டானப் பயன்களை எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டான். அதற்கு தந்தை நந்தகோபரே பதில் கூறலானார். குழந்தாய்! தேவேந்திரன் என்பவன் ஜனங்களுக்கும் மேகங்களுக்கும் அதிபதியாக இருக்கிறான். அவன் கட்டளையிட்டால் மேகங்கள் மழை பொழிகின்றன. அந்த மழையினால் விளையும் பயிர்களைத்தான் நாமும் மற்றவர்களும் பயன்படுத்திக்கொண்டு தேவதைகளை ஆராதிக்கிறோம். மேலும் மழையினால் வளரும் பசும் புற்களினால் நம்முடைய மாடுகள் யாவும் நன்றாக வளர்க்கப்பட்டு புஷ்டியாகி நல்ல கன்றுகளை ஈன்று பால் நிறைய கறந்துகொண்டு மகிழ்ந்து திரிகின்றன. எங்கு மழை உண்டோ அங்குள்ள பூமி பயிர் நிறைந்தும் புல் நிறைந்தும் இருக்கும். அங்குள்ள பிரஜைகள் பசி வருத்தமின்றி இருப்பார்கள். இந்தப் பூமியிலுள்ள நீரைச் சூரியன் தனது கிரணங்களினாலே கிரஹித்து மேகங்களில்விட, அவற்றை மேகாதிபதியான இந்திரன் உலக நன்மைக்காக மழையாகப் பெய்விக்கிறான். ஆகையால்தான் அரசர்கள், மழைக்காலம் முடிந்தவுடன் மகிழ்ச்சியோடு யாகங்களினால் இந்திரனைப் பூசித்து வருகிறார்கள். அதுபோலவே நாமும் செய்து வருகிறோம்! என்றார். அதைக்கேட்டதும் கண்ணன் இந்திரனின் செருக்கு அழியும் பொருட்டுப் பின்வருமாறு கூறலானான்.

ஐயா! நான் சொல்வதைச் சற்றுக் கேட்க வேண்டுகிறேன். ஆயர் குலத்தினரான நாம் பயிர் செய்பவர்களல்லர் வாணிபத்தாலும் நாம் ஜீவிப்பதில்லை. நாம் காட்டில் திரிந்து மாடு மேய்த்துப் பிழைப்பவர்கள். ஆகையால் நமக்குப் பசுக்களே தெய்வம்! உலகத்தில் முக்கியமான நான்கு வித்தைகள் உண்டு. அவை ஆன்வீக்ஷகி என்ற தர்க்க வித்தை, இருக்கு முதலிய பிரிவுகளைக் கொண்டதால் திரயீ என்ற வேதம், வார்த்தை எனப்படுகின்ற பயிரிடுதல் பற்றிய சாஸ்திரம், தண்டநிதி என்கின்ற ராஜநீதி நூல் இந்த நான்கிலும் இப்போது வார்த்தா சாஸ்திரத்தை விவரிக்கின்றேன், அதைக் கேட்பீராக கிருஷி, (பயிரிடுதல்) வணிஜயா (வாணிகம்) பசுபாலனம் (மாடு மேய்த்தல்) ஆகிய இந்த மூன்றும் பிழைப்பாக இருப்பது வார்த்தை என்ற வித்தையாகும். உழவர்களுக்குப் பயிரிடுதல் ஜீவனமாகும். கடைத்தெரு வியாபாரிகளுக்கு வணிஜயா ஜீவனமாகும். நமக்கோ பசு மாடுகளே முக்கிய ஜீவனமாக உள்ளது. ஆகையால் எவன் எந்த வித்தைக்கு உரியவனோ, அவனுக்கு அதுவே தெய்வமாதலின் அதையே நாம் கந்த புஷ்பாதிகளினாலே அர்ச்சித்துப் பூஜிக்க வேண்டும். ஏனென்றால் அந்த வித்தையின் மூலமாகவன்றோ சுவாமி நமக்கு உபகாரஞ் செய்தருளினார்? மேலும் எவன் எதன் பயனை அனுபவித்துக் கொண்டு மற்றொன்றை பூஜிக்கிறானோ, அவன் இம்மையிலும் மறுமையிலும் சுகமடைவதில்லை. உலகத்தின் எல்லை, பயிரிடும் நிலம் வரைக்கும் உள்ளது. காடு என்பது அவ்வெல்லைக்குப் புறத்தேயுள்ளது. மலைகள் என்பவை காட்டின் புறத்தே இருப்பவை. அந்தக் காட்டில் வசிக்கும் நமக்கு மலைகளே முக்கியமானவை. வாயில்களும் கதவடைப்புகளும் இன்றி, நிலவுடைமைக்காரராக இல்லாத மக்களே, எவ்வுலகிலும் வண்டியில் ஏறி இஷ்டமான இடத்தில் சஞ்சரிக்கிறார்கள். அவர்கள் நம்மைப் போல சுகமுடையவர்களாக இருப்பார்கள். மேலும் இந்த வனத்தில் மலைகள் எல்லாம் தமக்கு விருப்பமான ரூபமெடுக்க வல்லவைகள் என்றும், அந்தந்த உருக்கொண்டு தத்தமது சாரல்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றன என்றும் நாமும் கேள்விப்படுகிறோம். இதற்கு உதாரணம், காட்டில் வாசஞ்செய்கின்றவர்கள் அந்த மலைகளுக்கு அபராதப்பட்டுவிட்டால் அவர்களை அந்தப் பர்வதங்கள் சிங்கம் முதலிய ரூபங்களைக் கொண்டு கொல்கின்றன. ஆகையால் நமக்கு உபகாரியாக இருக்கும் மலைகளையும் பசுக்களையும் குறித்து யாகங்களைச் செய்யவேண்டும். நமக்கு இந்திரன் ஏன்? பிராமணர்களுக்கு மந்திர யக்ஞம் முக்கியமானது. உழவர்களுக்குக் கலப்பையைப் பற்றிய யக்ஞம் முக்கியம்!

ஆனால், மலைகளையும் காட்டையும் பற்றியிருக்கும் நமக்கோ கோபர்வத யக்ஞங்கள் முக்கியமானவை. ஆகவே இந்த கோவர்த்தன கிரியை நீங்கள் பலவகை உபசாரப்பொருள்களைக் கொண்டு, விதிப்படி பசுவாலம்பனஞ் செய்து பூஜிக்க வேண்டும் இதற்காக எதுவும் ஆலோசிக்காமல் இந்த இடைச் சேரியிலுள்ள தயிர், பால், வெண்ணெய் முதலிய யாவற்றையும் எடுத்துப் பிராமணர்களுக்கும் அன்னத்தை வேண்டியவரும் பிறருக்கும் வழங்கி திருப்திப்படுத்தவேண்டும். நாம் இவ்விதம் செய்தவுடன், சரத்காலத்து மலர்களினால் கொம்புகள் அலங்கரிக்கப்பட்ட பசுக்கள் எல்லாம் வலம் வரவேண்டும். கோபாலர்களே! இதுதான் என்னுடைய மதம். நீங்கள் இதை விருப்பத்தோடு ஏற்றுச் செய்வீர்களானால் பசுக்களுக்கும் மலைகளுக்கும் எனக்கும் பிரீதியாக இருக்கும்! என்று கண்ணன் கூறினான். அதனால் நந்தகோபர் முதலிய யாதவ மூப்பர்கள் மகிழ்ந்தனர். நந்தகோபர் தம் தனயனான கிருஷ்ணனை, நோக்கி, குழந்தாய்! நீ சொன்னவை மிகவும் நேர்த்தியானவை. எங்கள் மனதுக்கும் பிடித்திருக்கிறது. ஆகையால் அப்படியே கிரியக்ஞம் ஆரம்பிப்போம்! என்றார்.

பிறகு, யாதவர்கள் அனைவரும் பர்வத யாகத்தை ஆரம்பித்தனர். கந்த, புஷ்ப, தூப, தீப, ஆராதனைகளினாலே பூஜித்து, ஓமம் செய்து, தயிர், பாயசம், இறைச்சி முதலியவற்றால் அந்தப் பர்வதத்திற்குப் பலி பிண்டங்களைச் செய்து போட்டு, பிராமணர் பலருக்கும் போஜனம் செய்வித்து, பசுக்களையும் பூஜித்தனர். பிறகு நன்றாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களும் கன்றுகளும் அந்த மலையை வலம் வந்தன. அது போலவே ரிஷபங்களும் (காளைகளும்) நீர் நிறைந்த மேகங்களைப்போல் கர்ஜித்துக் கொண்டு வலம் வந்தன. இவ்விதமாக மலை ஆராதனை செய்யும் போது கண்ணன் ஒரு தேவ ரூபமாய் அந்த கோவர்த்தன மலையின் சிகரத்தில் வீற்றிருந்து நான்தான் இந்தப் பர்வத தேவதை! என்று கோபாலர்கள் போட்ட அன்ன பலிகளையெல்லாம் அமுது செய்தருளினான். கீழேயிருந்து தானே அதை யாவருக்கும் காட்டிப் புன்முறுவல் செய்து, அவர்களுடன் கூட தானும் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அந்தத் தன் சொரூபத்தையும் அர்ச்சித்துப் பணிந்தான்! இவ்வாறு, யாதவர் அனைவரும் பருவதயாகத்தை நிறைவேற்றி, பகவத் கடாக்ஷத்தால் விரும்பிய வரங்களைப் பெற்று மகிழ்ந்தனர். மலைச் சிகரத்தில் இருந்த அந்தச் சொரூபம் மறைந்தவுடன் அவர்கள் தங்கள் ஆயர்பாடிக்குச் சென்றார்கள்.

11. கோவர்த்தன கிரியைக் குடையாகப் பீடித்தல்

மைத்ரேயரே! இவ்விதம் சுவாமீ இந்திரனுக்குச் செய்ய வேண்டிய யாகத்தைத் தடுத்ததால், இந்திரன் மிகவும் கோபங்கொண்டான். உடனே அவன் சம்வர்த்தகம் என்ற மேகக் கூட்டத்தை அழைத்து, மேகங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். என் கட்டளையை உடன் ஏற்றுத் தடையின்றி நிறைவேற்றுங்கள் நந்தகோபன் என்ற இடையன் புத்தி கெட்டு கிருஷ்ணன் என்கின்ற ஒரு சின்னப் பையனின் பலத்தைப் பெரிதாக எண்ணிக் கர்வங்கொண்டு, மற்ற இடையர்களையும் சேர்த்துக்கொண்டு, எனக்கு வழக்கமாகச் செய்து வரும் யாகத்தை நிறுத்திவிட்டான். ஆகையால் அகோரமான, பெருமழையைப் பெய்வித்து அந்த இடையருக்குப் பிழைப்பாகவுள்ள மாடுகளையெல்லாம் அழித்து விடுங்கள். நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்களுக்குச் சகாயமாக நான் மலைச் சிகரம் போன்றுள்ள பெரிய யானை மீது ஏறிக்கொண்டு, வாயுவையும் தண்ணீரையும் விடும் உதவியைச் செய்கிறேன்! என்று கட்டளையிட்டான்.

அதற்கிணங்கி வானத்து மேகங்கள் யாவும், ஆயர்பாடி முழுவதும் நாசமாகும்படிப் பெருங்காற்றுடன் பெருமழையைப் பெய்தன அப்படி மழை பெய்த ஒரு கணத்தில் பூமியும் ஆகாயமும் திசைகளும் மழைத்தாரைகள் நிறைந்து ஒன்றாகக் காணப்பட்டன. மின்னல்களும் இடிகளும் கசையடிகளாகத் தாக்க, அந்த அடிக்கும் பயந்தவைபோல் மேகங்கள் திக்குகள் அதிரும்படிக் கர்ச்சித்து மிகவும் கனமான தாரைகளைப் பெய்தன இவ்விதம் ஒழிவில்லாமல் மழை பெய்து கொண்டிருந்ததால் உலகம் எல்லாம் இருள் மூடியது. உலகம் கீழும் மேலும் பக்கங்களிலும் ஜலமயமானது போலத் தோன்றியது. அப்பொழுது பசுக்கள் மகா வேகமாக வீசிய காற்று மழையிலே அலைக்கப்பட்டு இடுப்பும், தொடைகளும், கழுத்தும் சுருங்கி, மாண்டன போன்று மூர்ச்சித்து விழுந்தன. மாடுகளில் பல, தமது இளங்கன்றுகளை வயிற்றில் அணைத்துக்கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தன பலமாடுகள், கன்றுகள் விழுவதைக் கண்டு, கதறியழுதன. சில கன்றுகள் காற்றினாலும் குளிரினாலும் உடம்பெல்லாம் சோர்வடைந்து நடுங்கி அற்பத் தொனியுடன் கூவியதைக் கண்டால், அவை கண்ணனை நோக்கி, கண்ணா! நீயே எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தீனக் குரலில் வேண்டுவதுபோல் ஒலித்தன.

மைத்ரேயரே! இவ்விதம் கோபியரும், கோபாலரும் நிறைந்த அந்தக் கோகுலம் எல்லாம் இத்தகைய பெருமழையினால் மிகவும் துன்பப்பட்டு நடுங்குவதை கண்ணபிரான் கண்டதும் இந்திரன் தனக்குப் பூஜை நடக்கவில்லையே என்ற கோபத்தால் இப்படிச் செய்கிறான். ஆகையால் நாமே இந்தக் கோகுலத்தைப் பாதுகாப்பது அவசியம்! அதற்காகப் பெரிய கற்பாறைகள் நிறைந்த இந்தப் பர்வதத்தை அடியோடு பெயர்த்து இந்த இடைச் சேரிக்கே ஒரு பெருங்குடையாகப் பிடித்துக் காப்பேன்! என்று திருவுள்ளம் பற்றி, அந்தமலையைப் பெயர்த்து, ஒரே திருக்கையால் விளையாட்டுப் பொருளைத் தூக்குவது போல அதைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு கோபாலரையெல்லாம் கூவியழைத்து, சிரித்துக்கொண்டே, நீங்கள் யாவரும் உங்கள் குழந்தை குட்டிகளோடும், பசுக்களோடும் இந்த மலையின் அடியில் வந்து சேருங்கள். இந்தக் காற்றுக்கும் மழைக்கும் அஞ்சவேண்டாம். அதை நான் தடுத்துவிட்டேன். இதனடியில் உள்ள நல்ல இடங்களில் அவரவர் விருப்பம் போலச் சுகமாக இருக்கலாம். மலையானது மேலே விழுந்துவிடும் என்று பயப்படவேண்டாம். இதை நான் ஒரு சிறு பந்தைப் போல் எளிதாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்! என்று கூறிப் புன்முறுவல் பூத்தான்.

இவ்விதம் ஸ்ரீகிருஷ்ணபகவான் கூறியருளியதைக் கேட்டதும் இடையர் அனைவரும் தமது வண்டிகளில் தத்தமது பொருள்களை ஏற்றிக்கொண்டு, மாடுகளையும் கன்றுகளையும் ஓட்டிக் கொண்டு, அந்த மலையின் அடியில் வந்து சேர்ந்தனர். இடையரும், இடைச்சியரும் மகிழ்ந்தனர். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணபகவானின் மகிமையைத் துதித்துப் பாடிக்கொண்டிருக்க, பகவானும் அந்த மலையை ஆடாமல் அசையாமல் ஒரே கையால் தாங்கிக் கொண்டிருந்தான். இதுபோல் ஏழு தினங்கள் ஓயாமல் மழை பெய்ய சுவாமியும் அந்தப் பருவதத்தை குடைபோல ஏந்தி ஆயர்களையெல்லாம் காத்தருளினான். அதைக் கண்ட தேவேந்திரன் தன் முயற்சி வீணாயிற்றே என்று நினைத்து மேகங்களின் செயல்களை நிறுத்தினான்; இவ்வாறு இந்திரன் நிறுத்தி விட்டதால், ஆகாயம் நிர்மலமாயிற்று திசைகள் தெளிவடைந்தன. ஆயர்கள் அனைவரும் மலையடியிலிருந்து புறப்பட்டு பழையபடி சந்தோஷத்தோடு பாடிக்கொண்டே, ஆயர்பாடியை அடைந்தார்கள். பிறகு கிருஷ்ணபகவான் அவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டேயிருக்க, அந்தக் கோவர்த்தன கிரியை அது இருந்த இடத்திலேயே மறுபடியும் வைத்தருளினான்!

12. ஸ்ரீகோவிந்தப் பட்டாபிஷேகம்

கேட்டீரோ, மைத்ரேயரே! இவ்விதமாக கிருஷ்ண பெருமான் கோவர்த்தனகிரியை எடுத்துக் கோகுலத்தைக் காத்ததைக் கண்டு, தேவேந்திரன் வெட்கமடைந்தான், அவன் தன் ஐராவதமென்னும் யானை மீது ஏறிக்கொண்டு, கோவர்த்தன கிரியின் அருகே வந்தான். அங்கே சகல லோகங்களையும் காக்கும் எம் பெருமான் கோபால வேடம் பூண்டு யாதவப் பிள்ளைகளோடு கோக்களைக் காத்து நிற்பதையும் அந்த ஸ்வாமியின் திருமுடிக்கு நேர் மேலாக கருடன் என்னும் பெரியத் திருவடி தன் சிறகுகளால் வெய்யிற்படா வண்ணம் நிழல் செய்துகொண்டு பிறர் கண்களுக்குப் புலனாகாமல் இருப்பதையும் இந்திரன் கண்டான். உடனே அவன் யானை மீதிருந்து கீழே இறங்கி, ஏகாந்தத்தில் பகவானை வணங்கி அந்த மகிழ்ச்சியில் விழிகள் மலர, புன்னகையுடன் விண்ணப்பஞ் செய்யலானான்.

சுவாமீ ! ஸ்ரீகிருஷ்ண பகவானே! அடியேனது விண்ணப்பத்தைக் கேட்டு அருள் செய்யவேண்டும். உன் சன்னதிக்கு அடியேன் வந்தது விரோத புத்தியால் என்று எண்ணவேண்டாம், கிருபா மயமான உன் சங்கல்பத்தினாலேயே துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனங்களைச் செய்து, இந்தப் பூமியின் பாரத்தை நீக்குவதற்காக இங்கு அவதரித்தாய் என்பதை நான் அறிவேன். ஆயினும் எனக்குச் செய்யும் யாகத்துக்கு பங்கம் நேரிட்டதே என்பதால், தெரியாத்தனமாகக் கோபங்கொண்டு மேகங்களை ஏவி, கோகுலத்தை நாசஞ் செய்யும்படிக் கட்டளையிட்டேன். மஹாசக்தியுடைய நீ, குன்றெடுத்து கோகுலத்தைக் காத்த இந்த அற்புதமான திருவிளையாடலைக் கண்டு நான் பெரிதும் மகிழ்ந்தேன். நான் உன் சன்னதிக்கு வந்த முக்கிய காரியத்தைக் கேட்டருள வேண்டும். கோலோகத்தில் இருக்கும் பசுக்கள் எல்லாம் தங்கள் சந்ததியை நீ நன்றாகக் காத்து ரட்சித்ததற்காக உனக்கு ஒரு சத்காரம் செய்யவேண்டும் என்று என்னிடம் கூறின அவற்றின் வாக்கியப்படி உன்னை கோக்களின் இந்திரனாகப் பட்டம் சூட்டி, பட்டாபிஷேகம் செய்கிறேன். அதைத் திருவுள்ளம் பற்றி ஏற்றருளவேண்டும். அதனால் நீ கோவிந்தன் என்ற திருப்பெயர் பெறுவாய்! என்று தேவேந்திரன் விண்ணப்பஞ் செய்து, தனது வாகனமான ஐராவதத்தின் மேலிருந்து தீர்த்த கலசத்தை எடுத்து வந்து, தனக்கும் மேலாய்ச் சத்திய லோகத்துக்கும் மேலேயிருக்கும் கோலோகத்துக் கோக்களுக்கு இந்திரனாகையால் உபேந்திரன் நீ என்று பட்டாபிஷேகம் செய்தான்.

இவ்விதமாக ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றபோது, பசுக்கள் எல்லாம் தங்கள் மடிகளில் அளவின்றிச் சுரந்து பெருகிய பாலினால் பூமியை நனைத்தன. உபேந்திரன் என்றும் ஸ்ரீகோவிந்தன் என்றத் திருப்பெயர்கள் வழங்கி கிருஷ்ணபெருமானுக்கு பட்டாபிஷேகம் செய்த தேவராஜன் தலை வணங்கி மற்றொரு விண்ணப்பஞ் செய்தான். ஸ்ரீகிருஷ்ண பகவானே! பசுக்களின் வேண்டுதலை ஏற்ற வேணுகோபாலா! மற்றுமொரு விண்ணப்பம் உள்ளது. அதையும் திருவுள்ளம்பற்ற வேண்டும். அதாவது உனக்குத் துணையாக இருக்கும் கைங்கரியத்தின் ஆசையினால் என்னுடைய அமிசத்தைக்கொண்டு, பூமியில் அர்ச்சுனன் என்பவனை உண்டாக்கியிருக்கிறேன். அவன்பூபாரம் நீக்குவதில் உனக்குச் சகாயமாக இருக்கும்படி திருவுள்ளம்பற்றி அவனை உன்னைப்போலவே காத்தருளவேண்டும். அவனை நீ எப்போதும் ரக்ஷிக்க வேண்டும்! என்றான். அதைக் கேட்டதும் கண்ணபிரான் புன்முறுவலுடன், இந்திரா! பாரத குலத்தில் உனது அம்சத்தினால் அர்ச்சுனன் பிறந்திருக்கிறான் என்பதை நான் அறிவேன்! நான் பூவுலகத்தில் இருக்கும் வரையில் அவனைக் காப்பாற்றுகிறேன்! இந்த உலகத்தில் நான் எவ்வளவு காலம் இருப்பேனோ அவ்வளவு காலம்வரை அவனை ஒருவனும் ஜயிக்கமாட்டான். இந்த உலகத்தில் மிகவும் பலசாலிகளான கம்சன், அரிஷ்டன், கேசி, குவாலயாபீடம், நாகன் ஆகிய அநேக அசுரர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஹதம் செய்யப்பட்ட பிறகு பாரதயுத்தம் என்ற ஒரு மகாயுத்தம் நடக்கும், அதனால் பூமியின் பாரம் தீரும். ஆகையால் உன் புத்திரனான அர்ச்சுனனுக்காக நீ கவலைப்படவேண்டாம். எனக்கு எதிரில் அர்ச்சுனனுக்குப் பகைவன் என்று ஒருவன் தலையெடுக்க மாட்டான் பாரத யுத்தம் நடந்தபிறகு அந்த அர்ச்சுனனுக்காகவே யுதிஷ்டிரன் முதலியோரையும் ஆயுதத் துன்பம் ஒன்றும் இல்லாமல் காத்து ரட்சிப்பேன்! என்று கூறியளினான். வானவர்க்கரசன் சுவாமியை ஆலிங்கனம் செய்து, பணிந்து ஐராவதத்தின்மேல் ஏறி இந்திரலோகம் சென்றான். பிறகு ஸ்ரீகிருஷ்ணன் ஆயர்களோடும் பசுக்களுடனும் கோகுலத்துக்கு எழுந்தருளினான்.

13. ராஸக் கிரீடை

இந்திரன் வணங்கிச்சென்ற பிறகு கோபாலர்கள் வந்து கோவர்த்தன பர்வதத்தையெடுத்த ஸ்ரீகிருஷ்ணனை நோக்கி, அப்பா கிருஷ்ணா! இப்போது நேரிட்ட பெருமழையிலிருந்து எங்களையும் பசுக்களையும் காத்தாய்! உன் செயல்கள் அற்புதமானவை! ஏனென்றால் கோவர்த்தன மலையை நீ குடையாகப் பிடித்திருக்கிறாய். உனது பிறப்போ தாழ்ந்த இடைக்குலம் தண்ணீரில் காளிங்க சர்ப்பராஜனை அடக்கியதும் பனங்காட்டில் தேநுகாசுரனை அழித்ததும் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்ததுமாகிய உனது பாலிய லீலைகள் எங்கள் இதயங்களில் சந்தேகம் ஏற்படுத்தியுள்ளன மிகவும் பராக்கிரமமுள்ளவனே! சத்தியம், சத்தியம்! ஸ்ரீ ஹரியின் திருவடிகளின் மேல் ஆணை! நீ மனிதனல்ல? ஓ கிருஷ்ணா! பெண்டுகள் சிறுவர்கள் முதலிய இந்த ஆய்ப்பாடியில் இருப்பவர்கள் யாவருமே உன்மீது அன்பு கொண்டிருப்பதும், சகல தேவர்களும் ஒன்று கூடிச் செய்தாலும் செய்யமுடியாத உன் காரியங்களும் பாலியத்திலேயே இத்தகைய வீரம் இருப்பதும் இழிவான எங்கள் குலத்தில் உனது பிறப்பும் எங்களுக்குச் சந்தேகத்துக்கு ஏதுவாக இருக்கின்றன. நீ தேவனோ, தானவனோ, யக்ஷனோ, கந்தர்வனோ, யாரோ தெரியவில்லை யாராயிருந்தால் என்ன? நீ எங்களுக்கு உறவுமுறையானவன் உனக்குத் தண்டமிடுகிறோம் என்று வணங்கினார்கள்.

கிருஷ்ணன் சிறிது நேரம் மவுனமாக இருந்தான். பிறகு அவன் நட்புக்கோபத்துடன் ஓ, கோபாலரே! உங்களுக்கு ஏன் இந்த விசாரணை? என்னிடத்தில் அன்பிருந்தால், நான் உங்களுக்குக் கொண்டாடத் தக்கவனாக இருந்தால் நீங்கள் உறவினனாக நினையுங்கள்! நான் தேவனுமல்ல; கந்தர்வனுமல்ல நான் உங்கள் உறவினனாகப் பிறந்தவனேயன்றி வேறன்று ஆகையால் நீங்கள் வேறுவிதமாக சிந்திக்கவேண்டாம்! என்றான். அதன்பிறகு ஆயர்கள் மவுனமாகச் சென்றனர். பிறகு கண்ணன் அந்தக் கூதிர்ப் பருவத்தில் வானம் நிர்மலமாக இருப்பதையும், பாலைப் பொழிவது போல நிலவு காய்வதையும், திசைகள் யாவும் மணம் கமழும் மலர்கள் மலர்ந்திருப்பதையும் கடாட்சித்து, முன்பு தான் வரமளித்தவாறு கோபியரோடு சேர்ந்து கிரீடிப்பதற்குத் திருவுள்ளம் கொண்டு, தமையனோடு செல்லாமல் தனியாகவே வனத்துக்குச் சென்றான். பெண்களின் மனதைக் கவரும் விதமாகவும் இன்னது என்று சொல்லவுங்கூடாத இனிய தொனியோடு தாரமும் மந்திரமுமான ஓசை வேற்றுமைகளின் முறைப்பாடுடைய புல்லாங்குழலை எடுத்துக்கண்ணன் ஊதினான். அந்த வேணுகானத்தைக் கேட்டு ஆய்ச்சியர் அனைவரும் பரவசமடைந்து மாளிகைகளைத் துறந்து பரபரப்புடன் ஸ்ரீகிருஷ்ணன் இருக்குமிடந்தேடி விரைந்து சென்றார்கள். அவர்களில் ஒருத்தி கண்ணனின் குழலிசையை உற்றுக்கேட்டு, அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி அருகில் சென்று கிருஷ்ணா கிருஷ்ணா! என்று ஆவலோடு அழைத்துக்கொண்டும் வேறொன்றும் பேசமுடியாமல் நாணத்தோடு நின்றாள். வேறு ஒருத்தி கிருஷ்ணனிடம் கொண்ட அன்பு மிகுதியினாலே, ஒன்றும் தெரியாதவளாய் பக்கம் நின்றாள்.

ஒரு பெண், தன் மாளிகையிலிருந்து வெளியே வரும்போது அங்கே தன் மாமனாரைப் பார்த்தாள். பயந்தாள். கண்ணனிடம் போகமுடியாததால் கண்களை மூடிக்கொண்டு, தன்மயமாய், அந்தக் கோவிந்தனைத் தியானஞ் செய்து கொண்டிருந்தாள். மற்றொருத்தி கண்ணனிடத்திலேயே சித்தம் பற்றியிருப்பதாலுண்டான ஆனந்தத்தால், புண்ணியங்களும் அவளையடையாமற் போனது பற்றிய பெருந் துக்கத்தால் பாவங்களும் மாளப்பெற்றவளாய் பரப்பிரம்ம சொரூபியாய், ஜகத்காரணமான அவனையே சிந்தித்து, மூச்சடக்கி முக்தியை அடைந்தாள். இவ்விதமாகத் தன்னைச் சூழ்ந்த கோபியர்களுடன் ராஜ கோபாலன் ராஸக்கிரீடை என்ற உற்சவத்தில் குதூகலமாய் இருந்தான். அதற்கு ஏற்றாற்போல சரத்கால நிலவும் பொழிந்து கொண்டிருந்தது. இவ்விதமாக கண்ணன் ராஸக்கிரீடை செய்தருளி வேறொரு இடத்திற்கு எழுந்து சென்றபோது யாதவக் கன்னியரெல்லாம் கூட்டமாகக் கூடி, கண்ணனின் திருவிளையாடல்களிலேயே மனம் லயிக்க அந்தப் பிருந்தாவனத்தின் நடுவில் திரிந்து ஒருத்தியிடம் மற்றொருத்தி பிதற்றிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி தோழியரே! கேளுங்கள்! நான்தான் ஸ்ரீ கிருஷ்ணன் ஆதலால் நான் லலிதமாய் நடக்கிறேன் பாருங்கள் என்று நடந்து காட்டினாள். மற்றொருத்தி நீயல்லடி கண்ணன்! நானே கண்ணன். என்னுடைய பாடலைக்கேள்! என்றாள். வேறு ஒருத்தி ஏ துஷ்டனான காளியனே; ஓடாதே நான் கிருஷ்ணன். உன்னைப்பிடிக்கிறேன் என்று தன் தோள்களைத் தானே தட்டித் தன் கையையே சர்ப்பத்தைப் போல் பிடித்து நின்றாள் மற்றொருத்தி நீங்கள் மழைக்கு அஞ்சவேண்டாம். இதோ இந்தக் கோவர்த்தனகிரியை நான் குடையாகப் பிடிக்கிறேன் என்றாள்.

இவ்விதமாக இடைச்சியர் எல்லாம் கண்ணனின் திருவிளையாடல்களைச் செய்துகொண்டு மெய்மறந்த நிலையில் பிருந்தாவனத்தில் திரிந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பெண் தரையைப் பார்த்து, அங்கத்தில் புளகாங்கிதம் உண்டான, அருகில் இருந்தவர்களை நோக்கி, தோழியரே பாருங்கள்! இங்கே துவஜம், வஜ்ரம், கமலம் அங்குசம் முதலிய இரேகைகளையுடைய கண்ணனது திருவடித் தாமரைகளின் சுவடுகள் இருக்கின்றன, இவற்றைப் பார்க்கும்போது, அவன் விளையாட்டோடு விநோதமாக நடந்திருக்கிறான் என்று தோன்றியது. இன்னும் பாருங்கள், மகாபுண்ணியம் செய்த எவளோ ஒருத்தி அவனுடன் கூடச் சேர்ந்து, மதத்தினால் மெல்லச்சென்றிருக்கிறாள். ஏனென்றால் இதோ பக்கத்தில் அவனுடைய அடிச்சுவடுகளும் நெருங்கிச் சிறியவைகளாகக் காணப்படுகின்றன; அடியே, இங்கே கண்ணன் உட்கார்ந்து பூப்பறித்திருக்கிறான். அதனால் தான் அவனுடைய திருவடிகளின் நுனிமட்டும் இங்குப் பதிந்துள்ளன. இதோ பாருங்களடி! இங்கே கண்ணன் உட்கார்ந்து அம்மலர்களால் ஒருத்தியை அலங்கரித்திருக்கிறான். அவளோ முற் பிறவியில் ஸ்ரீமந் நாராயணனை நன்றாக ஆராதித்திருக்கிறாள். இதோ பாருங்கள்! இங்கே அவன் பூப்புணர்ந்தவளை விட்டுவிட்டு, இந்த வழியாகப் போயிருக்கிறான். இங்கே ஒருத்தியின் அடிச்சுவடுகள் நுனியழுந்தியவையாகக் காணப்படுகின்றன. ஆகையால் அவள் முன்னே சென்ற கண்ணனைச் சேரும் பொருட்டு நிதம்பபாரத்தால் வருந்தி விரைவாக நடந்திருக்கிறாள். பாங்கியரே! இங்கே ஒருத்தி அவன் கைமேல் கை வைத்துக்கொண்டு அவன் கூடவே நடந்திருக்கிறாள். அதனால்தான் இங்கே அந்த மங்கையின் காலடி வைப்புகள் நீண்டிராமல் சிறிது நெருங்கி அசுவாதீனமாக இருக்கின்றன. அடியே இங்கே பாருங்களடி அந்த வஞ்சகக் கண்ணன் அந்த மங்கையின் கையை ஸ்பரிசித்தது மாத்திரமேயன்றி, வேறு ஸ்பரிசம் எதுவும் செய்யாததால், அந்த மங்கை அவமானப்பட்டு ஆசையற்றுத் திரும்பி விட்டதாகக் காலடிச் சுவடுகள் எடுத்துக்காட்டுகின்றன. அடியே, இங்கே பாருங்களடி இங்கே கண்ணனின் காலடிச் சுவடுகள் மிக விரைவாக வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அவன் இங்கே யாரோ ஒருத்தியை, நீ இங்கேயே இரு! நான் சீக்கிரமாகப்போய் நாமிருவரும் கூடுவதற்கு ஏற்ற இடத்தைப் பார்த்துக்கொண்டு வந்து சேருகிறேன்! என்று சொல்லிவிட்டு நழுவிப் போயிருக்கிறான் என்று தோன்றுகிறது. பாங்கியரே ! இதற்குமேல் அவன் சுவடு காணப்படவில்லை. ஆகையால் அவன் மற்றையோர் புகமுடியாத இடத்துக்குப் போய் இருக்கிறான். ஆகையால் திரும்புங்களடி! என்று சொல்லி, கன்னியர் யாவரும் கண்ணனை இனிக் காண்பது அரிதென்று மனம் மயங்கி, யமுனையாற்றின் கரையில் உட்கார்ந்து அவனது சரிதங்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

அப்படிப்பட்ட சமயத்தில் கண்ணன் அங்கு வந்தான். அவன் வந்ததும் கன்னியரெல்லாம் களிப்படைந்தனர். அவர்களில் ஒருத்தி கிருஷ்ண கிருஷ்ண என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தாள். மற்றொருத்தி புருவங்களை நெறித்து கண்களாகிய வண்டுகளால் கண்ணனது முகாரவிந்தத்தைப் பானஞ் செய்தாள். வேறு ஒருத்தி கண்ணனைக் கண்டதும் கண்களை மூடிக்கொண்டு, அவனது திவ்விய ரூபத்தையே தியானித்துக் கொண்டிருந்தாள். இப்படியாகத் தன்னைக் காதலித்துப் பல வகையான சேஷ்டைகள் செய்தவண்ணம் தன்னைச் சூழ்ந்து நிற்கும் அப்பெணகளில் சிலரிடம் கண்ணன் இனிமையாகப் பேசியும் சிலரைக் கை தீண்டுவதாலும் சமாதானம் செய்தான். பிறகு கலக்கமின்றித் தெளிவுடன் இருந்த அப்பெண்களோடு ராஸக்கிரீடை செய்யலானான். அம்மங்கையர் அனைவரும் கண்ணனைவிட்டு அகலாமல் அருகிலேயே ஒட்டியொட்டி இருந்ததால், வட்டமாக அமையவேண்டி ராசமண்டல கோஷ்டி அமையவில்லை. எனவே கண்ணன் அப்பெண்கள் ஒவ்வொருத்தியின் கையைப் பிடிக்க அந்தச் சுகத்தில் பரவசமாய் ஒவ்வொருத்தியும் கண்களை மூடிய நிலையில் மெய்மறந்து நிற்கும் போது கண்ணன் அவளவள் கையை மற்றொருத்தியின் கையோடு சேர்த்து, அவர்களை வட்டமாக நிறுத்தினான். அப்போது எல்லாப் பெண்களும் ஆனந்தப் பரவசத்தால் கண்ணனுடைய கையைத் தான் பிடித்திருப்பதாக நினைத்தார்களே தவிர மற்றொரு பெண்ணின் கையைப் பிடித்திருப்பதாக நினைக்கவில்லை. கண்ணனோ, விரைவாகப்பாயும் லாகவத்தால், யாவருக்கும் அருகிலிருப்பது போலவே காணப்பட்டான். பிறகு சரத்கால வர்ணனைப் பாட்டும், அதற்குத் தாளமாக கன்னியரின் கைவளையல்களின் குலுக்கலும் சேர்ந்து ராஸக்ரீடை விளங்கியது. ஆயினும் கண்ணன் மட்டுமே சரத் காலத்துச் சந்திரனையும் நிலவையும் ஆம்பல் மலர்ந்த தடாகங்களையும் பாட கோபியர்கள் கண்ணனது திருநாமம் ஒன்றையே பாடினார்கள். இப்படிப் பாடிச் சுற்றிவரும்போது, ஒருத்தி கங்கணங்கள் ஒலி செய்யும் தன்கையை கண்ணனின் தோள்மீது பதித்தாள். மற்றொருத்தி, யானைத் துதிக்கை போன்ற தோளுடைய கண்ணனை இறுகக்கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். இன்னும் ஒருத்தி கண்ணனின் தலையோடு தன் தலையைச் சேர்த்து அவன் தோள்களைக் கட்டிக்கொண்டாள். இவ்விதம் ஒவ்வொருத்தியும் ஆனந்தித்த வண்ணம் கண்ணனைப் பிரியாமல் இருந்தார்கள். தன்னைப் பிரிந்தால் ஒரு கணமும் ஒரு கோடி வருடமும் போலத் தோன்றும்படி அப்பெண்களுக்கு ஆனந்தத்தை வளர்த்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணன் ராசக்ரீடை செய்தான். கோபிகா ஸ்திரீகள் அனைவரும் தன் தன் தாய்தந்தையராலும் உடன்பிறந்தாராலும் தடுக்கப்பட்டாலும் அவர்களை லட்சியம் செய்யாமல் இரவு நேரங்களில் கண்ணனிடம் வந்து சேர்ந்து அவனிடம் மிகவும் அன்போடு ரமித்திருந்தார்கள். கண்ணனும் மனுஷ்ய அவதாரத்துக்கேற்ப, இளமைக்குரிய சாபல்யத்தைப் பெருமைப்படுத்திக் கொண்டு, இரவுகள் தோறும் அக்கோபியருடன் ரமித்து வந்தான்.

மைத்ரேயரே! தருமத்தை ஸ்தாபிக்க அவதாரஞ் செய்த எம்பெருமான் தரும விரோதமான இத்தகைய காரியஞ் செய்யலாமா? இதனால் கோபிகா மங்கையருக்குப் பாதகம் உண்டாகாதோ என்று நீங்கள் கேட்பீர் எம்பெருமான், தன்னைச் சேர்ந்தோரின் சகல பாவங்களையும் போக்கடிக்கும் படியான தூய்மையோன் அந்த மங்கையரும், வேதாந்த நிர்ணயப்படி அன்பு செலுத்த வேண்டிய இடத்திலேயே தங்கள் அன்பைச் செலுத்தினார்கள். ஆகையால் அவர்களுக்கு சகல பாவ நிவர்த்தியுண்டாயிற்றே தவிர பாபம் சம்பவிக்கவில்லை. எம்பெருமானுக்கோ தேவர்களுக்கு உண்டாவது போன்ற பாவபந்தம் உண்டாவதில்லை. ஏனென்றால், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்கள் எப்படி எல்லாப் பிராணிகளிலும் வியாபித்துள்ளனவோ, அதுபோலவே அக்கோபிகா ஸ்திரீகளிடத்திலும் அவர்களின் கணவரிடத்திலும் ஏனைய ஆன்ம கோடிகளிடத்திலும் வியாபித்திருக்கும் பரமாத்மாவாகையால், கண்ணனுக்கும் புதியதொரு பந்தம் வந்ததில்லை என்பதை அறிவீராக!

14. அரிஷ்டாசுர வதம்

மைத்ரேயரே! ஒருநாள் மாலையில் கண்ணன் ராஸக்ரீடைக்குத் தயாராக இருந்தான். அப்போது அரிஷ்டன் என்ற ஓர் அசுரன் எருது வேடம் பூண்டு, இடைச்சேரியில் அட்டகாசம் செய்து பயப்படுத்திவந்தான். நீருண்ட கருமேகம் போன்ற உடலும், கூர்மையான கொம்புகளும், சூரியன் போன்ற சிவந்து பளபளப்பாக ஜொலிக்கும் கண்களும் திண்மையான கழுத்து முசுப்பும் அண்ட முடியாத பராக்கிரமமும் வாய்ந்த அவன் தன் குளம் புகளால் பூமியைப் பிளப்பவனைப் போல் இடித்துக் கொண்டும் உதடுகளை நாக்கினால் அடிக்கடி துழாவிக் கொண்டும் பரபரப்பாய் வாலைச் சுழித்து உதறிக் கொண்டும், பசுக்கள் எல்லாம் நடுங்கப் பாய்ந்து வந்தான். மாடுகளை முட்டிக் கருக்களை விழச்செய்தான்.

அத்தகைய கொடிய காளையைக் கண்ட இடைச்சிகள் கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறிக் கொண்டு கிருஷ்ணனைச் சரணடைந்தார்கள். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் கையைத் தட்டிச் சிங்கநாதம் செய்தான். அதைக் கண்டதும் விருஷப அசுரன் தன் கொம்புகளை நீட்டிக்கொண்டு கண்ணன் மீது பாய்ந்தான். கண்ணன் அதைக் கண்டு விலகாமல், இருந்த இடத்திலேயே சத்துருவை மடக்கினான். பிறகு விருஷப அசுரனின் கொம்புகளைப் பிடித்து அசையவொட்டாமற் செய்து, தன் முழங்காலினால் அவனது அடிவயிற்றில் இடித்து அவனது கர்வத்தையும் கொழுப்பையும் அடக்கி, அழுக்கு ஆடையைக் கசக்குவதைப் போல் அவனது கழுத்தைப் பிடித்துக் கசக்கி, அவனது கொம்புகளில் ஒன்றை முறுக்கி உடைத்து, அவனை அடித்தான். இதனால் அந்த அசுரன் உதிரத்தைக் கக்கிக்கொண்டு கீழே விழுந்தான். அதைக் கண்டு தேவர்கள் கண்ணனைத் துதித்தார்கள்.

15. அக்குரூரருக்குக் கம்சனின் கட்டளை!

அரிஷ்டன், தேநுகன், பிரலம்பன், முதலிய அசுரர்களை கண்ணன் அழித்ததையும், கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்ததையும் பூதகி கொல்லப்பட்டதையும் கலகக்காரரான நாரதமுனிவர் வந்து கம்சனிடம் கூறினார். தேவகியின் ஆண் குழந்தையான கிருஷ்ணனைக் கொண்டுபோய் இடைச்சேரியிலுள்ள யசோதையின், குழந்தையாக வைத்து விட்டு, யசோதையின் பெண் குழந்தையை இங்கு கொண்டு வந்து தேவகியின் குழந்தையாக மாற்றிவிட்டதுவரை யாவற்றையும் நாரதர் கூறியதும், கம்சன் வெகுண்டெழுந்து தன் மைத்துனரான வசுதேவர் மீது பொல்லாத கோபம் கொண்டான்.

உடனே கம்சன் தன் அரச சபையில் வசுதேவரை நிந்தனை செய்துவிட்டு சபையில் இங்கும் அங்கும் நடந்து இப்போது இளமைப் பருவத்தினராக இருக்கும் ராமகிருஷ்ணர்கள் பலப்படுவதற்கு முன்பே, அவர்களை அழித்து விட வேண்டும். இதற்கு மேல் வளரவிட்டால் அவர்கள் வெல்வதற்கு அசாத்தியராகி விடுவார்கள். ஆகையால், நம்மிடமுள்ள முஷ்டிகன் சாணுரன் என்ற மல்லர்களைக் கொண்டு, மல்யுத்தம் செய்வித்து அவ்விளைஞர்களைக் கொல்வோம். அதற்காக நாம் நடத்தும்வில் எய்யும் திருவிழாவொன்றைச் சாக்கிட்டு, ராமகிருஷ்ணர்கள் இருவரையும் இடையர் சேரியிலிருந்து இங்கே வரவழைத்து விரைவில் அவர்களை அழிக்கும் உபாயத்தைச் செய்யவேண்டும். அதற்கு சுவபல்க குமாரராகிய அக்குரூரனையே கோகுலத்துக்கு அனுப்ப வேண்டும் இல்லையென்றால் பிருந்தாவனத்தில் சஞ்சரிக்கும் கேசி என்பவனுக்குக் கட்டளையிட்டால், அவன் அங்கேயே அவர்களை சங்கரித்துவிடுவான். இல்லையெனில் குவலயாபீடம் என்ற என்னுடைய பட்டத்து யானை அவ்விடைப் பிள்ளைகள் இருவரையும் நாசஞ் செய்ய வல்லதாகும் என்று சிந்தித்தான். பிறகு ராம கிருஷ்ணர்களைக் கொல்வதற்காக அழைத்து வரும்படி அக்குரூரருக்கு கம்சன் கட்டளையிடலானான்.

ஓ தானபதியே! என் மகிழ்ச்சிக்காக என் கட்டளையைத் தடையின்றி நீயே நிறைவேற்றவேண்டும். அதாவது நீர் தேரில் ஏறி, இடையர்குலத் தலைவனான நந்தகோபனின் கோகுலத்துக்குப் போகவேண்டும். அங்கு விஷ்ணு அம்சமாகப் பிறந்ததாகச் சொல்லப்படும் வசுதேவரின் பிள்ளைகள் இருவர் ராமகிருஷ்ணர்கள் என்ற பெயர்களில் வளர்கிறார்கள் அல்லவா? அவர்களை வருகின்ற சதுர்த்தசியன்று இங்கு நடக்கவிருக்கும் தனுர்யாக மகோத்சவத்தில் நடக்கும் மல் யுத்தத்திற்கு வரும்படி அழைத்து வரவேண்டும். மல் யுத்தத்தில் வல்லவர்களாக என்னிடமுள்ள சாணுர முஷ்டிகர்களுடன் கூட அவர்கள் சண்டையிடுவதை இங்குள்ள யாவரும் வேடிக்கை பார்க்கட்டும். என்னுடைய குவலயா பீடம் என்ற யானை, மாவுத்தனால் தூண்டப்பட்டு, வசுதேவ குமாரர்களான அந்த துஷ்டச் சிறுவர்களைக் கொன்று விடும்! இவ்விதமாக அவர்கள் இருவரையும் வதைத்த பிறகு வசுதேவனையும், நந்தகோபனையும் துர்புத்தியுள்ள என் தகப்பன் உக்கிரசேனனையும் நான் கொன்றுவிடுவேன். பிறகு என்னைக் கொல்ல நினைத்த இடையருடைய மாடுகளையும் பொருள்களையும் பறித்துக்கொண்டு பிறகு உம்மைத் தவிர இதர யாதவர்களையெல்லாம் கொல்லும்படிக் கட்டளையிடுவேன். இப்படியெல்லாம் செய்து, இந்த ராஜ்யத்தில் யாதவப் பூண்டே இல்லாமலும்; பகைவரேயில்லாமலும் ஆள்வேன்; இதற்காக; அக்குரூரரே; நீர் ஆய்ப்பாடிக்குப் போய் வரவேண்டும். மேலும் அங்குள்ள இடையரிடத்தில்; எருமை நெய், தயிர், பால் இவற்றை விசேஷமாக நம் அரண்மனைக்குக் கொண்டு வரும் படிக் கட்டளையிட்டு வாரும்! என்று கம்சன் கூறினான். அதைக் கேட்டதும் மகா பாகவதரான அக்குரூரர்.. நாளைக்குக் கண்ணனை நாம் சேவிப்போமல்லவா? என்று தம் மனதிற்குள் மிகவும் மகிழ்ந்து கம்சனுக்கு அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தமது தேரில் ஏறிக்கொண்டு; மதுராபுரியிலிருந்து புறப்பட்டார்.

16. கேசி வதம்

பிருந்தாவனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த கேசி என்ற அசுரன், கம்சனுடைய தூதனால் ஏவப்பட்டு; ஸ்ரீகிருஷ்ணனைச் சங்கரிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் குதிரை வடிவம் கொண்டான். அவன் கிருஷ்ணன் இருக்குமிடத்திற்கு வந்து, குளம்புகளால் பூமியை இடித்துக்கொண்டும்; பிடரி மயிர்களின் நெறிப்பினால் மேகங்களைக் குத்தியும் குதித்தோடும் திறமையினால் சந்திர சூரிய மார்க்கங்களைத் தாவிக்கொண்டும் பெருங்கனைப்புச் செய்து, அங்கிருந்த ஆயர்களைத் துரத்தினான். அந்த அசுரக் குதிரையின் கனைப்பைக் கேட்ட ஆயரும் ஆய்ச்சியரும் நடுங்கிப் பயந்து, ஸ்ரீகிருஷ்ணனைச் சரணடைந்தார்கள். கண்ணா! காத்தருள்வாய்! கண்ணா காத்தருள வேண்டும் என்று கோபாலர்கள் கூவுவதைக்கேட்டதும் கண்ணபிரான் புன்முறுவலுடன் அவர்களை நோக்கி, கோபாலர்களே, நீங்கள் பயப்படவேண்டாம். அற்ப பலமுள்ள இந்தக் கேசிக்கு அஞ்சும் உங்களால், வீரருக்கு உண்டான சக்தியெல்லாம் போக்கடிக்கப்படுகின்றன. இந்த அற்பக் குதிரை சும்மா கனைத்து ஆரவாரம் செய்கிறதே தவிர வேறொன்றுமில்லை குதிரை வடிவமெடுத்து வந்து இங்கு ஆர்ப்பாட்டம் செய்யும் இவன் ஒரு பலமற்ற அசுரன் சும்மா குதித்து ஆட்டம் காட்டுகிறான். என்று கூறிவிட்டு கேசியை, நோக்கி, டே துஷ்டா! வா! வா! நான் கிருஷ்ணன்! முன்பு தக்ஷயக்ஞத்திலே பூஷா என்பவனின் பற்களை உருத்திரன் உதிர்த்ததைப் போல், இப்போது உன் பற்களையெல்லாம் நான் உதிர்த்துவிடுகிறேன்! என்று வீரமுழக்கம் செய்து கேசியிடம் சென்றான். கேசியெனும் அசுரக் குதிரையோ வாயைத் திறந்துகொண்டு கண்ணன்மீது பாய்ந்தது. அப்போது ஸ்ரீகிருஷ்ணன் தன் திருக்கையை நன்றாக நீட்டி அந்தக் குதிரையின் வாயினுள் கொடுக்க, அந்தக் கையைக் கடித்த அசுரக் குதிரையின் பற்கள் எல்லாம் தெறித்துக் கீழே விழுந்தன. உள்ளே நுழைந்த கை, வியாதியைப் போல வளர்ந்ததால், அசுரக் குதிரையின் வாய் கிழிந்தது கண்கள் பிதுங்கின. அது கால்களால் பூமியை உதைத்துக் கொண்டும் மல மூத்திரங்களை விட்டுக்கொண்டும் உடம்பு வியர்க்கப் பலமும் கர்வமும் ஒடுங்க நின்றது. கிருஷ்ணன் தன் கையைத் தளர்த்தி அந்தக்குதிரையை இரு பிளவுகளாகப் பிளந்தெறிந்தான். இவ்விதமாக கேசி என்ற அசுரனைக் கண்ணன் அழித்ததால் கோபாலர் துதித்து மகிழ்ந்தனர்.

அப்போது ஆகாய மார்க்கமாக வந்த நாரத முனிவர் கேசியசுரன் பட்ட பாடுகளைக் கண்டு மகிழ்ந்து சுவாமிக்கு விண்ணப்பஞ்செய்ததாவது. ஓ ஜகந்நாதா! சகல தேவர்களுக்கும் துன்பஞ் செய்த கேசியை, விளையாட்டாகவே நீ சங்கரித்தது மிகவும் நன்று இதுவரை நடந்திராத இந்த நராசுவ யுத்தத்தைக் காண்பதற்கே நான் சொர்க்கத்திலிருந்து இங்கு வந்தேன். மதுசூதனா! இந்த அவதாரத்தில் நீ செய்த திருவிளையாடல்கள் சிறப்புடையன. அந்தக் குதிரையரக்கன் கனைப்பைக் கேட்டாலே இந்திரன் முதலிய தேவர்கள் நடுங்குவார்கள். அந்தத் துஷ்டாத்மாவான கேசியை நீ சங்கரித்து அருள் செய்ததாலேயே உனக்குக் கேசவன் என்ற திருப்பெயர் வழங்கட்டும்! நாளைக்கு நடக்கவிருக்கும் கம்ச யுத்தத்திற்கு நான் மீண்டும் வருவேன். உக்கிரசேனன் மகனாகிய கம்சனும் அவனைச் சார்ந்த மற்றவர்களும் சங்கரிக்கப்பட்ட பிறகு தான் பூமி பாரத்தைக் குறைத்தவனாவாய்! கோவிந்தா! செய்வதெல்லாம் தேவ காரியங்கள் அதெல்லாம் உனக்கே தெரியும்! நீ பல்லாண்டு வாழ்வாயாக! நான் விடை பெறுகிறேன்! என்று சொல்லி விட்டு நாரதர் சென்றார். ஸ்ரீகிருஷ்ணன் கோபிய கோபாலரோடு, திருவாய்ப்பாடிக்குச் சென்றான்.

17. அக்குரூரர் கண்ணனைக் காணுதல்

முன்பு கம்சன் இட்ட கட்டளைப்படி அக்குரூரர் மதுரையிலிருந்து ரதத்தில் ஏறி, கோகுலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தம் மனதில் சிந்தித்துக்கொண்டே வந்தார். இந்த உலகத்தில் என்னைவிடப் புண்ணியவான் வேறு யாருமில்லை. ஏனென்றால் அமிசத்தினாலே இங்கு அவதரித்துள்ள சக்கரபாணியின் திருமுகத்தைத் தரிசிக்கப் போகிறேன். செந்தாமரைக் கண்ணனின் திவ்வியத் திருமுக மண்டலத்தைக் காணப்போவதால், இப்போதே என் பிறவி சாபல்யமாயிற்று. நான் பாக்கியசாலி! எவனை இந்திரன் நூறு யாகங்களினால் ஆராதித்து சகல தேவதைகளுக்கும் அதிபதியாக இருக்கும் மேன்மையைப் பெற்றானோ, அந்த ஆதியத்யாந்த ரஹிதனான ஸ்ரீ கேசவனை நான் இந்தக் கண்களினாலேயே காண்பேனன்றோ! சர்வாத்மாவாய் எல்லாமறிந்தவனாய்; சகல சொரூபியாய், சர்வ பூதங்களிலுமுள்ளவனாய், இத்தகையவன் என்று நினைக்கக் கூடாதவனாய் எங்கும் வியாபித்தவனாய் விளங்கும் பகவான் என்னோடு பேசும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமல்லவா? எவன் அனந்த சொரூபியாக இருந்துகொண்டு தனது திருமுடியினினாலே இந்தப் பூமியை அசையாதிருக்கும்படித் தாங்குகிறானோ, பூமிக்காக இப்போது இங்கே அவதரித்தருளின அவன் என்னை அக்குரூரர் என்று அழைப்பானல்லவா? தந்தை என்றும் பிள்ளை என்றும் நண்பன் என்றும் சகோதரன் என்றும் தாய் என்றும் பந்துக்கள் என்றும் பலவகைப் பற்றாக நிற்கிற எவனுடைய இந்த மாயையைக் காப்பதற்கு உலகம் திறமுள்ளதன்றோ. அந்த எம்பெருமானுக்கு நமோ நம லோகாதாரனாக இருக்கும் அவனிடத்தில் சேதனாசேதன ஸ்வரூபமாக இருக்கும் இந்தப் பிரபஞ்சங்கள் யாவும் எல்லா விதத்தாலும் நிலைபெற்றிருக்கின்ற சத்தியத்தால், அந்த எம்பெருமான் என்னைக் கம்சனைச் சேர்ந்தவன் என்று திருவுள்ளஞ் சீறாமல் என்னிடம் சாந்தனாக இருக்கவேண்டும். எவனை நினைத்தவுடனேயே புருஷன் சகல நன்மைகளுக்கும் உரியவனாகி விடுவானோ அந்த அஜனாயும் நித்தியனாயும் இருக்கிற ஸ்ரீ ஹரியை நான் அடைக்கலமாக அடைகிறேன்! என்று அக்குரூரர் யோசித்துக்கொண்டே, தேரோட்டிச் சென்றார்.

சூரியன் அஸ்தமிக்கச் சிறிது நேரம் இருக்கும் நேரத்தில் இடையர் குலத்தினர் வசிக்கும் திருவாய்ப்பாடியை அக்குரூரர் அடைந்தார். அங்கே பசுக் கறக்குமிடத்தில் கன்றுகளின் நடுவில், அன்றலர்ந்த கரு நெய்தல் மலர் போன்ற காந்தியும் மலர்ந்த செந்தாமரை போன்ற திருவிழிகளும், ஸ்ரீவச்சம் என்னும் மறுப்பொருந்திய திருமார்பும், திரண்டு நீண்ட திருத்தோள்களும், பரந்தும் உயர்ந்தும் விளங்கும் திருமார்பும் நீண்டு உயர்ந்த கூர்மை நாசியும், வெகு விசாலமான மந்தஹாசமுள்ள திருமுகத்தாமரையும், உயர்ந்தும் சிவந்தும் உள்ள நகங்களுடன் கூடித் தரையில் பதிந்த திருவடித் தாமரைகளும், பொன் நிறமான திருப்பரிவட்டங்களும், வனமாலையும் சாற்றிக்கொண்டு, வெண்தாமரையை சேகரமாகத் திருமுடியில் அணிந்திருப்பதாலே சந்திரன் உதித்த நீலமலை போன்றவனான ஸ்ரீகிருஷ்ணனை முதலில் அக்குரூரர் கண்டார். பிறகு கண்ணனின் பக்கத்தில், அல்லி மலர் போன்ற திருமேனியுடன் நீலநிறத் திருப்பரிவட்டங்களையணிந்து கொண்டு உயரமாகவும்; தாமரை மலர் போன்ற முகமலருடையவருமான பலபத்திரரையும் கண்டார். ஞானியான அக்குரூரர், அம்மகா புருஷர்கள் இருவரையும் கண்ட உள்ளக் களிப்பின் மிகுதியினால், முகம் மலர்ந்து உடம்பெல்லாம் புளகாங்கிதம் அடையப்பெற்று, இதோ ஈருருவாய் பிரிந்துள்ள வாசுதேவ பகவானுடைய அம்சம் எதுவுண்டோ அதுதான் உத்தம தேஜசு அடையத்தக்க மேன்மையான பொருள் இதைக் கண்டதால் எனது கண்கள் இரண்டும், மிகவும் சாபல்யமாயின. இந்த உடலும் அந்த எம்பெருமானின் அனுக்கிரகத்தாலே தீண்டப்பெற்றுச் சாபல்யமாகுமோ? எந்தத் திருக்கையின் விரல்பட்டவுடனேயே புருஷர் சகல பாபங்களும் நசிக்கப்பெற்றுக் குற்றமற்ற சித்தியைப் பெறுவார்களோ அந்தத் திருக்கைத் தாமரையை ஸ்ரீமானான அவ்வனந்தன் என் முதுகின் மீது வைக்கப் பெறுவானோ? இந்தச் சுவாமி, சுபாவத்தில் குற்றமற்றவனாக இருக்கின்ற என்னைக் கம்சனது சார்பில் இருப்பதால் குற்றமுடையவனாக எண்ணுவாரோ தெரிவில்லையே! அப்படியானால் இந்தப் பிறவியைச் சுடவேண்டும். ஏனென்றால் யோக்கியரால் அங்கீகரிக்கப்படாமல் துறக்கப்படுகின்றவனுக்குப் பிறவி ஏன்? நாம் இப்படி எண்ணக் கூடாது. ஏனென்றால் ஞான சொரூபியாய், சுத்த சத்வமயனாய் ராகத்வேஷாதி தோஷங்களின்றி எப்பொழுதும் தன் சொரூபம் விளங்க சகல புருஷருடைய இதயத்திலும் எழுந்தருளுகின்ற எம்பெருமானுக்குத் தெரியாதது ஒன்று உண்டோ ஆகையால் எனது இதயத்தில் கவடிருப்பதும் இல்லாததும் அவன் அறிவான். ஆகையால் என்னைத் திரஸ்காரம் செய்யாமல் திருவுள்ளம் பற்றுவான் எனவே பிரம்ம ருத்திராதியருக்கும் ஈஸ்வரனாயும் புரு÷ஷாத்தமனாயும் இருக்கும் ஸ்ரீவிஷ்ணுவின் அம்சாவதாரமாய் ஆதிமத்யாந்தமில்லாதிருக்கும் இந்த ஸ்ரீகிருஷ்ணனை நான் பக்தியால் மனவணக்கத்தோடு நெருங்கப் பெறுவேனாக என்று மனதால் சிந்தித்தார் மகாஞானி அக்குரூரர்.

18. கண்ணனைப் பிரியும் கோபியரின் கலக்கமும் அக்குரூரர் கண்ட தெய்வீகக் காட்சியும்!

மைத்ரேயரே! இவ்விதமாக அக்குரூரர் தம் மனதில் நினைத்து கொண்டு, கண்ணன் அருகே சென்று அடியேன் அக்குரூரன் தண்டம் சமர்ப்பிக்கிறேன் என்று சிரம் வணங்கித் தண்டமிட்டார் ஸ்ரீ கிருஷ்ணனும் புனித ரேகைகளுடன் விளங்கிய தன் திருகைகளால் அவரைத்தீண்டி எடுத்து, வெகு பிரீதியோடு நெருங்கித் தழுவியருளினான். பிறகு மூத்தவரான பலராமனையும் அக்குரூரர் வணங்கினார். அதன் பிறகு அம்மகா புருஷர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அக்குரூரரைத் தங்கள் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அக்குரூரர், அவர்களால் ÷க்ஷமாதிகள் விசாரிக்கப்பட்டார். பிறகு அவர்களுடன் உணவருந்திவிட்டு அக்குரூரர் உட்கார்ந்திருக்கும்போது அசுராம்சமான கம்சன் தன் தங்கை தேவகியையும் வசுதேவரையும் நிந்தித்துக் கொடுமைப்படுத்தியதையும், அவனது தந்தையான உக்கிர சேனனிடம் கம்சன் மனப்பகைமை கொண்டிருப்பதையும் எதன் நிமித்தமாகத் தம்மை கம்ஸன் அனுப்பி வைத்தானோ, அதையும் அவர்களிடம் விண்ணப்பம் செய்தார். அதைக்கேட்டதும் ஸ்ரீகிருஷ்ணன் புன்முறுவலுடன் தானபதியே! நான் இவற்றை அறிவேன் இதற்குத் தக்கது எதுவோ அதைச் செய்யவும் நான் சித்தமாக இருக்கிறேன். மகாஞானியே! நீர் வேறு எதையும் நினைக்கவேண்டாம் இத்தோடு கம்சன் மடிந்தான் என்று நினையும் நானும் பலராமனும் நாளை உம்முடன் மதுரைக்கு வருகிறோம் யாதவரும் வேண்டும் உலுப்பைகளைக் கொண்டு நாளையே வருவார்கள். இன்றிரவு இங்கேயே தங்கியிருங்கள். இவ்விரவு முதல் மூன்று இரவுகளுக்குள்ளாக கம்சனையும் அவனைச் சார்ந்தோரையும் நாசஞ் செய்கிறேன்! என்று கூறியருளினான். பிறகு கோபால மூப்பர்களுக்கு அக்குரூரரைக்கொண்டும் தானும் கட்டளையிட்டு தமையனோடும் அக்குரூரரோடும் நந்தகோபனின் மாளிகையில் திருக்கண் வளர்த்தியருளினான். பிறகு பொழுது விடிந்ததும் பலபத்திரரும் கண்ணனும் அக்குரூரருடன் மதுரைக்குப் புறப்படத் தயாரானார்கள். அதைக்கண்ட கோபியரெல்லாம் மிகவும் கலங்கிக் கண்களில் கண்ணீர் ததும்ப கைகளில் கை வளைகள் நெகிழ, பெருமூச் செறிந்த வண்ணம் ஒருத்தியோடு ஒருத்தியாகப் பலவாறும் பேசிக்கொள்ளலானார்கள்.

ஓ தோழியரே, ஸ்ரீகோவிந்தன் மதுரைக்குப் போனால் மீண்டும் எப்போது இங்கு வருவான்? அந்த நகரத்திலுள்ள மங்கையரின் மதுரமான பேச்சுக்களாகிய அமுதத்தைப் பானஞ் செய்வானல்லவா? நகரப் பெண்களின் பேச்சைக் கேட்கும் அவன் மனம் மீண்டும் நாட்டுப்புறத்து கோபியரிடம் பற்றுமா? இந்த ஆயர்பாடிக்கே ஒரு சார வஸ்துவான இந்தக் கண்ணனை இங்கிருந்து நீக்கு கொடிய தெய்வம் கோபியரையெல்லாம் ஒருமிக்க மறுபடியும் ஓரடி அடித்ததென்றே நினைக்கவேண்டும். நகரப் பெண்களின் பேச்சிலே கருத்துக்கள் உள்ளடங்கிப் புன்னகையுடன் பொலிவுறும் அந்நகரத்துப் பெண்களின் நடையோ வெகு சுந்தரமாக இருக்கும். கடைக்கண் பார்வையோ மனதைக் கவர்வதாக இருக்கும். ஆகையால் இதுவரை அவற்றையெல்லாம் அறியாமல் நாட்டுப்புறத்தில் வாசஞ் செய்து கொண்டிருந்த இந்தக் கண்ணன் அங்கேபோன பிறகு, அந்நகரத்து நங்கையரின் மயக்க விலங்கினால் கட்டப்படுவானாதலால், மறுபடி அவன் இங்கே திரும்பி வருவானென்று எப்படிச் சொல்ல முடியும்? இதோ பாருங்கள்! அக்குரூரன் என்ற பெயரைக் கொண்ட இந்தக் கொடூரனாலே என்னமோ வஞ்சிக்கப்பெற்று, கண்ணன் தேர் ஏறி மதுரைக்குச் சென்றான். கொஞ்சமும் தயையில்லாத இந்தக் காதகன் நாம் எல்லாம் கண்ணனிடத்தில் அன்பினால் உருகுகிறோம் என்பதை அறியானோ அறிந்தவன் என்றால் நமது கண்களின் களிப்பாகிய கண்ணனை மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்வானா? அடி இந்தக் கிருஷ்ணன் நமதன்பைச் சிறிதேனும் பாராமல் பலராமரோடு தேரில் ஏறிச் செல்கிறான். அவன் மிகவும் இரக்கமற்றவனாக இருக்கிறான். அவவைப் போகவிடாமல் தடுக்கச் சீக்கிரம் ஏதாவது முயற்சி செய்யுங்கள். ஓ பெண்களே! மாமன் முதலானவர்களுக்கு எதிரில் இதைப்பற்றிப் பேச முடியாதே என்பீரானால் விரகத்தீயில் நாம் வெந்து போகும்போது அவர்கள் என்ன செய்யமுடியும்? நந்தகோபன் முதலியோர்களும் கண்ணனுடன் கூடப்போக முயல்கிறார்களே தவிர ஒருவரும் அவனைத் தடுக்க முயலவில்லையே! தோழிகளே! மதுரைப் பெண்களுக்கு இப்பொழுது நற்பொழுது விடிந்துள்ளது. ஏனென்றால் அவர்களது கண்கள் எனும் வண்டுகள் இன்று கண்ணனின் முகாரவிந்தத்தைப் பானம் பண்ணுமல்லவா? கண்ணனுடன் செல்பவர்கள் மகா புண்ணியஞ் செய்தவர்கள்!

ஏனென்றால் அவனுடைய வடிவழகைப் பார்த்துக் கொண்டே போய் தங்கள் தேகம் புளகாங்கிதமடைய அவர்கள் மகிழ்வார்களல்லவா? மதுரை நகரப் பெண்கள் எந்த நற்கனவைக் கண்டார்களோ? ஐயோ இரக்கமற்ற தெய்வம் இந்தக்கோபியருக்கு ஒரு மகாநிதியைக் காட்டிய பிறகு கண்களைப் பறித்துக்கொண்டதே! நம்மிடம் கண்ணனுக்கு அன்பு தளரத் தளர அவன் அன்பைப் பெறாத நமது கைகளில் அணிந்த வளையல்களும் கூட நம்மோடு இருக்க விரும்பாமல் தளர்கின்றன. அந்த அக்குரூரன் குரூர ஹிருதயமுடையவன் அதனால் தான் தேரை மெதுவாகச் செலுத்தாமல் வெகு வேகமாகச் செலுத்தி நம் கண்ணனை வெகுவேகமாகக் கொண்டுபோகிறேன். பாருங்கள்! இப்படிப் புலம்பும் நம்மிடத்தில் யாருக்குத்தான் இரக்கம் ஏற்படாது! என்ன செய்வோம் தோழியரே! சிறிது நேரம் கண்ணன் நம் கண்களுக்குப் காணப்பட்டுக் கொண்டிருந்தான். பிறகு அவன் ஏறியிருந்ததிருத்தேர் மட்டுமே காணப்பட்டது. இப்போது அந்தத் தேரின் சக்கரங்களால் எழும்பிய துகள் மட்டுமே காணப்படுகிறது. ஒருகணத்தில் இதுவும் மறைந்து போகும். கண்ணனோ வெகு தூரம் சென்றுவிட்டான்! என்று கோபிகைகள் அன்போடு அவன் சென்ற திசையையே பார்த்து, புலம்பிக்கொண்டிருக்கும் போது கண்ணனோ ஆய்ப்பாடியின் எல்லையைத் தாண்டி யமுனை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தான்.

அப்போது நண்பகல் அக்குரூரர், ராம கிருஷ்ணர்களை நோக்கி, அடியேன் இந்த நதிக்குச் சென்று மாத்தியான்னிக ஆராதனத்தைச் செய்து வருகிறேன். அதுவரையில் சுவாமிகள் இங்கேயே எழுந்தருளியிக்க வேண்டுகிறேன் என்று விண்ணப்பஞ்செய்தார். பிறகு அக்குரூரர் நதியில் நீராடி ஆசமனாதிகளைச் செய்து மந்திர ஜெபத்தோடு பரப்பிரம்மத்தைத் தியானஞ் செய்தார், அப்படித் தியானம் செய்யும்போது, பல பத்திரர் சஹஸ்ரபணா மண்டல மண்டிதராய் மல்லிகை மாலை போன்ற வெண்மையான திருமேனியோடும் மலர்ந்த தாமரை போன்ற திருவிழிகளோடும் பரிமள வனமாலையும் நீலப்பட்டாடைகளும் திவ்விய கிரீட குண்டலங்களும் தரித்துக்கொண்டு வாசுகி முதலிய சர்ப்பரசர்களால் சேவிக்கப்பட்டு, யமுனை ஜலத்தில் விளங்கினார். அவரது மடியிலே கண்ணன் நீலமேகசியாமளனாய், செந்தாமரை போன்ற சிவந்த திருவிழிகளும் நான்கு திருத்தோள்களும் கம்பீரமான திருமேனியும் பிரகாசிக்கும் வண்ணம் திருவாழி முதலிய திவ்விய ஆயுதங்களையும் திவ்விய பீதாம்பரங்களையும் வனமாலையையும் தரித்துக்கொண்டு வானவில்லினாலும் மின்னற் கொடிகளாலும் விசித்திரமாகப் பிரகாசிக்கும், கருமேகம் போலத் தோன்றினார். அவரது திருமார்பில் ஸ்ரீவச்சம் என்ற மறுப்பொருந்தியிருக்க திருக்காதுகளில் மணிமயமான மகர குண்டலங்கள் குலுங்க, திருமுடியில் வெள்ளைத் தாமரை போன்ற கிரீடமும் இலங்க, யோகசித்தி பெற்று சகல குறைகளுமற்ற சனக சனந்தனாதி முனிவர்களால் தியானஞ் செய்ய, அலங்காரமாக வீற்றிருந்தார். அந்தக் காட்சியை அக்குரூரர் கண்டதும் யமுனை நதியில் ஸ்ரீராம கிருஷ்ணர்களே இப்படி எழுந்தருளியிருக்கிறார்கள் என்று தெரிந்து இவ்வளவு சீக்கிரம் அவ்விருவரும் எப்படி இங்கே எழுந்தருளினார்கள் என்று வியந்து, அவர்களைக் கேட்க வாயெடுத்தார். அவ்வளவிலே அவருக்கு வாய் எழுப்பவொட்டாமல் சுவாமி ஸ்தம்பனம் செய்துவிட்டதால் ஒன்றும் சொல்ல முடியாமல், அக்குரூரர், நதியைவிட்டு கரைக்கு வந்தார். திருத்தேரைப் பார்த்தார். அங்கு ராமகிருஷ்ணர்கள் இருவரும் முன் போலவே மனித அவதாரமாகக் காத்திருப்பதைக் கண்டார். மீண்டும் அக்குரூரர் யமுனைக்கு ஓடினார். அங்கும் முன்பு கண்ட தெய்வீகக் காட்சியையே கண்டார். உடனே அக்குரூரர் பரமார்த்தத்தை அறிந்து, எல்லாம் அறிந்த எம்பெருமானான ஸ்ரீகிருஷ்ணனைத் துதிக்கலானார். எப்பொழுதும் சத்தாக இருக்கும் ரூபமுள்ளவராயும் சிந்திப்பதற்கும் அரியதான மகிமையுள்ளவராயும் அநேக ரூபியாயும் ஒரே ரூபியாயும் இருக்கும் பரமாத்மாவுக்கு நமோ நம என்று தண்டம் சமர்ப்பிக்கிறேன்.

ஓ, மகாப் பிரபுவே! ஞானங்களுக்கு எல்லையாகவும் அறியப்படாத அளவுள்ளவனாகவும், பிரகிருதிக்கு மேம்பட்டவனாகவும் இருக்கும், உன்னை வணங்குகிறேன்! ஓ அளவில்லாமையினாலே சொல்லக்கூடாத குணமுள்ள ஆன்மாவே! சொல்லவொண்ணா உபய விபூதியாலுண்டான ஆனந்தமுள்ளவனே! அளவில்லாத திருநாமங்களுள்ள உன்னைப் பணிகிறேன். பிரம்மம் நீ! எந்தப் பொருளையும் நாமரூப கற்பனைகளில்லாமல் அறியக் கூடாமையால் நீ கிருஷ்ணன் அச்சுதன். அனந்தன், விஷ்ணு முதலிய திருநாமங்களால் துதிக்கப்படுகின்றாய்! ஓ அனந்தா! ஓ சர்வேசுவரா! சூரிய கிரண ரூபியாக இருந்து நீயே பிரபஞ்சத்தைப் படைக்கிறாய். ஆகையால் இந்தப் பிரபஞ்சமெல்லாம் உனக்குச் சேஷ பூதமாக இருக்கிறது. பிரணவபிரதிபாத்தியனான ஸ்ரீபரமாத்மா! உன்னைப் பணிகிறேன். சங்கர்ஷணனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். பிரத்யும்னனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். அநிருத்தனுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன் இவ்விதம் சதுர் வியூக ரூபியான உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்று அக்குரூரர் எம்பெருமானைப்போற்றினார்.

19. மதுரையை அடைதல்

மைத்ரேயரே, மேலும் கேட்பீராக! இவ்வாறு யாதவ பாகவதரான அக்குரூரர் யமுனை நதி நீரில் எம்பெருமானைச் சேவித்துத் துதித்து பரப்பிரம்மரூபமான ஸ்ரீகிருஷ்ணனிடத்திலேயே தன் மனதைச் செலுத்தி நெடுநேரம் தியானித்து பிறகு அந்த நிஷ்டையைவிட்டு, கரையேறித் தம்மைக் கிருதகிருத்தியனாக நினைத்துக் கொண்டு தம்முடையதேரினருகே வந்தார். அங்கே மூத்த நம்பியும் இளைய நம்பியும் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். அவரது கண்கள் மலர்ந்தன அப்போது கிருஷ்ணன் அவரை நோக்கி அக்குரூரரே ! நீர் யமுனை ஜலத்திலே ஏதோ ஒரு ஆச்சரியத்தைக் கண்டீர் போலத் தோன்றுகிறது. ஏனென்றால் உம்முடைய கண்கள் வியப்பினால் மலர்ந்துள்ளன என்று சிரித்தான். அதற்கு அவர் அச்சுதா! அடியேன் ஜலத்தின் நடுவேயாதொரு அதிசயத்தைக் கண்டேனோ அதுவே இவ்விடத்திலும் ரூபீகரித்து என் எதிரில் இருக்கக் காண்கிறேன் ஸ்ரீகிருஷ்ண பகவானே! அந்த உலகம் எல்லாம் எவனுடைய மகா ஆச்சரிய ஸ்வரூபமோ அத்தகைய திவ்யாச்சரிய சேஷ்டிதனான உன்னோடு நான் சேர்ந்திருக்கும்போது என்ன ஆச்சரியங் கண்டாய் என்று என்னை ஏன் கேட்டருள்கின்றீர்? இனி நாம் மதுரைக்குப் போவோம்!

மதுசூதனா! இப்போதும் அடியேன் கம்சனுக்கு அஞ்சுகிறேன் சீச்சீ! அன்னியனுடைய பிண்டத்தினால் பிழைப்பவனுடைய பிறவியைச் சுடவேண்டும்! என்று சொல்லி வாயுவேகமுடைய தமது குதிரைகளை வெகு வேகமாக ஓட்டிக்கொண்டு மதுரை மாநகரை வந்தடைந்தார். அங்கு வந்ததும் அவர் ஸ்ரீராம கிருஷ்ணர்களை நோக்கி, மகா வீரர்களே! இனி, நீங்கள் இறங்கித் திருவடிகளால் நடந்துசெல்லவேண்டும். அடியேன் ஒருவனே தேர்மேல் ஏறிச்செல்வேன். முதலில் உங்கள் தந்தையான வசுதேவருடைய திருமாளிகைக்கு நீங்கள் செல்லவேண்டாம். ஏனென்றால் உங்கள் நிமித்தமாகவே அவரைமகாப் பாதகனான கம்சன் துன்பப்படுத்துகிறான்! என்று விண்ணப்பித்துவிட்டு, மதுரைக்குள் பிரவேசித்தார். பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர்கள் இருவரும் இராஜ வீதி மார்க்கமாக நகரத்து மங்கையரும் ஆடவரும் ஆனந்தமாய் கண்களால் சேவித்து நிற்க இளமதயானைகள் போல் வீதியில் விளையாடிக் கொண்டே சென்றார்கள். அப்போது அந்த வழியிலே குசும்பாதி சாயம்போட்டு ஆடைகளைச் சீர்ப்படுத்தும் வண்ணான் ஒருவனை அக்குமாரர்கள் கண்டு அவனிடம் தங்களுக்கு ஏற்ற நல்ல அழகான ஆடைகளைத் தரவேண்டும் என்று யாசித்தார்கள். அந்த வண்ணானோ கம்சனிடம் பணியாற்றியதனால் மிகவும் செருக்குற்று அவர்களை இழிவாகப் பேசினான். அதைக்கேட்டதும் கண்ணன் கோபங்கொண்டு அந்தக்கொடியவனை கையினால் ஓர் அறை அறைந்து வீழ்த்தினார். பிறகு இருவரும் பீதாம்பர நீலாம்பரங்களுடன் வேண்டிய ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியோடு பூமாலைக்காரனின் மாளிகைக்குச் சென்றார்கள்.

மைத்ரேயரே ! பீதாம்பர நீலாம்பரங்களைத் தரித்து, அதிக அழகுடன் விளங்கும் ராமகிருஷ்ணர்கள் இருவரையும் அந்த பூமாலைக்காரன் கண்டு இவர்கள் யார்? இவர்கள் யாருடைய பிள்ளைகள்? என்று யோசித்தான். பிறகு, இவர்கள் மனிதரல்லர் தேவர்களே இங்கு எழுந்தருளினார்கள் என்று நினைத்தான். பின்னர் ஸ்ரீராம கிருஷ்ணர்கள் இருவரும் அவனை நோக்கி எங்களுக்கு நல்ல மலர் மாலைகளைக் கொடு என்று யாசித்தார்கள். உடனே அவன் அவர்களுக்குத் தண்டம் சமர்ப்பித்து தெய்வீகமானவர்களே! அடியேனுக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டி, அடியேனது குடிசைக்கு எழுந்தருளினீர்களே! அடியேன் தன்யனானேன். நியமனப்படித் தங்களை அர்ச்சிக்கிறேன்! என்று சொல்லி மகிழ்ந்து அவர்கள் திருவுள்ளம் வியப்ப சில மலர்களைச் சமர்ப்பித்து சுவாமி இவை முன்னவையிற்சிறந்தவை; இவை மேலும் மிகச் சிறந்தவை! என்று மேலும் மேலும் மிகவும் மணமுள்ள அழகான மலர்களைக் கொடுத்தான். சுகந்தமும் சுத்தமுமான அம்மலர்களை ஸ்ரீராமகிருஷ்ணர்கள் மனமுவந்து தங்கள் திருமார்பில் அணிந்து கொண்டு அவனைப் பாராட்டினார்கள்.

ஸ்ரீகிருஷ்ணர், அவனுக்கு வரங்களைப் பிரசாதிக்க எண்ணி, ஓ யோக்கியனே! என்னைப் பற்றியிருக்கும் திருமகன் உன்னை ஒருபோதும் விடாமல் அனுக்கிரகம் செய்து கொண்டிருப்பாள். ஓ சவுமியனே! உனக்குப் பலஹானியோ, தனஹானியோ வரமாட்டாது காலமுள்ளளவும் உன் சந்ததி நசிக்காமல் இருக்கும். இப்படியாக நீ எனது அனுக்கிரகத்தால் பெரும் போகங்களையெல்லாம் அனுபவித்து இறுதியில் என் ஸ்மரணமும் அடைந்து திவ்வியலோகத்தை அடையக்கடவாய் உனக்கு ஆதி பவுதிகமான தோஷங்கள் வருவதில்லை. மகானுபாவனே! சூரியன் உள்ள வரைக்கும் எனக்கு இத்தகைய சுகங்கள் உண்டாகும் என்று அனுக்கிரகம் செய்து அவனால் விசேஷமாக ஆராதிக்கப்பட்டான். பின்னர் பலபத்திரரோடு, அம்மாலிகனுடைய மாளிகையிலிருந்து கிளம்பிச் சென்றான்.

20. அழகான கூனியும் கம்சவதமும்

பூமாலைக்காரனின் மாளிகையிலிருந்து புறப்பட்ட ராமகிருஷ்ணர்கள் இருவரும், ராஜவீதி வழியாகச் செல்லும்போது, வழியிலே மங்கைப் பருவமுடைய கூனி ஒருத்தி கையிலே சந்தனக்கிண்ணம் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தாள். அவளைக் கண்டதும் கண்ணன் புன்முறுவலுடன், அடி நீலோத்பலம் போன்ற கண்களையுடையவளே! யாருக்கு இந்த வாசனைப் பூச்சைக் கொண்டு போகிறாய்? என்று கேட்டான். அதற்கு அவள் அழகனே! நான் நைகவக்கிரை என்றும் கம்ஸனால் சிந்தனாதிப் பூச்சுக்கள் செய்யும் வேலையில் வைக்கப்பட்டவள் என்றும் நீ ஏன் அறியவில்லை கம்சனுக்கு சந்தனம் யார் பூசினாலும் பிடிக்காது. நான் அரைத்துச் சேர்க்கும் பூச்சே அவனுக்குப் பிரியமானது ஆகையால் கம்சனின் அனுக்கிரகம் என்னும் தனத்துக்கு முக்கிய பாத்திரமாக இருக்கிறேன்! என்றாள். அதைக்கேட்டுக் கொண்டு கிருஷ்ணன் மேலும் புன்முறுவலுடன் அவளை நோக்கி, அடி இளம் பெண்ணே! இதோ நீவைத்திருக்கும் இந்தப் பூச்சு வாசனை கூட்டியதுதானே தவிர இயற்கையான மணமுடையதல்ல! மற்றொன்றோ ராஜசமுள்ள அரசர்களுக்குத் தகுமேயன்றி சாதாரணமானவருக்குத் தக்கதன்று இதுவோ மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. அழகிய முகமுடையவளே! ஆகையால் எங்களது திருமேனிக்கு ஏற்ற இதை எங்களுக்கே கொடுக்கவேண்டும்! என்று கேட்டான். அதற்கு அழகான கூனி ஒப்புக்கொண்டு அன்போடு அவர்களது திருமேனிக்கேற்ற திவ்வியமான பூச்சைச் சமர்ப்பித்தாள். ஸ்ரீராமகிருஷ்ணர் இருவரும் பத்திரபங்கரசனாவிதமாக அந்தப் பூச்சைத் தங்கள் திருமேனிகளில் தடவிக்கொண்டார்கள். பிறகு கிருஷ்ணன் அந்தக்கூனியின் கோணலை நிமிர்த்தும் வகையையும் அறிந்தவனாகையால் அவளிடம் அன்புகொண்டு தனது நடுவிரலும் அதன் முன் விரலும் கொண்ட நுனிக் கையினால் அவளது மோவாய்க்கட்டையைப் பிடித்துத் தன் திருவடிகளால் அவளது பாதங்களை அமுக்கி இழுத்துத் தூக்கி அவளை நிமிர்த்தியருளினான்.

உடனே அவளுடைய கோணல் நிமிர்ந்தது, அவள் பெண்களில் சிறந்தவளானாள்! அவள் கண்ணனின் பரிவட்டத்தைப் பிடித்துக்கொண்டு நீ என் மாளிகைக்கு வா! என்று அழைத்தாள். அதைக் கண்ட கண்ணன் பலராமரைப் பார்த்த வண்ணம் சிரித்துக்கொண்டே, குற்றமற்ற அந்த நைகவக்கிரையை நோக்கி, பெண்ணே! அப்படியே ஆகட்டும்! பிறகு ஒரு சமயம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அண்ணனைப் பார்த்து உரக்கச் சிரித்தான். இவ்வாறு நம்பிகள் இருவரும் பீதாம்பர நீலாம்பரங்களையணிந்து விசித்திரமான சந்தனப் பூச்சோடும் பலவிதமான திவ்விய மலர் மாலைகளையும் அணிந்துகொண்டு விற்கள் வைத்திருந்த ஆயுத சாலைக்குச் சென்றார்கள். அங்கிருந்த காவற்காரர்களை கண்ணன் ஏறிட்டு நோக்கி, காவல்காரர்களே! இந்தத் தனுர்யாகத்துக்கு உத்தேசித்து வைத்துள்ள வில் எங்கே இருக்கிறது? என்று கேட்டான். அவர்கள் அதைத் தெரிவித்தார்கள். உடனே, கண்ணன் அந்த வில்லை எடுத்து வளைத்து நாணேற்றினான். நாணேற்றியதும் அந்த வில் முறிந்து அந்த மதுரை நகரமெங்கும் செவிடுபடும்படி ஓசையிட்டது வில் ஒடிந்ததும் காவற்காரர்கள் ஸ்ரீராம கிருஷ்ணர்களை எதிர்க்க வந்தார்கள். அவர்களை அம்மகா புருஷர்கள் இருவரும் துவம்சம் செய்து, ஆயுதச் சாலையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். இந்நிலையில் கம்ஸனோ தன் மதுராபுரிக்கு அக்குரூரர் திரும்பி வந்ததையும் வில் முறிந்ததையும் அறிந்தான். அவன் சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்லர்களை வரவழைத்துச் சொல்லலானான்.

மல்லர்களே, கேளுங்கள்! நாம் எதிர்பார்த்திருந்த இடைப்பயல்கள் வந்துவிட்டார்கள் நீங்கள் என் எதிரில் அவர்களோடு மல்யுத்தம் செய்து அவர்களைக்கொன்று விடவேண்டும். அவர்கள் என் உயிரை வாங்கவே பிறந்தார்களாம். மகாபலசாலிகளே நீங்கள் அவர்களை மல்யுத்தத்தில் வென்று எனக்கு மகிழ்ச்சியளித்தால், நீங்கள் விரும்பும் பொருள்களையெல்லாம் தருவேன். என் எதிரிகளான அவ்விரு இடைச்சேரிப் பயல்களையும் நீங்கள் நியாயமாகவோ, அல்லது அநியாயமாகவோ கொன்றே தீர வேண்டும். அப்படிச் செய்தால் இந்த ராஜ்யத்தை நீங்கள் என்னுடன் சமானமாக அனுபவிக்கலாம் என்று கம்ஸன் தன் இரு மல்லர்களுக்கும் கட்டளையிட்டான். பிறகு அவன் தன் யானைப் பாகனையும் அழைத்து, யானைப்பாகனே! நீ நமது குவலயாபீடம் என்ற பெரிய யானையை இந்த சபா மண்டபத்தின் முன்னால் நிறுத்தி வைத்து, அந்த இடைப் பயல்கள் இங்கு போர் செய்ய வரும்போது, யானையைக் கொண்டே அவர்களைக் கொல்விக்க வேண்டும்! என்று கட்டளையிட்டு சதபயில் போடவேண்டிய மஞ்சங்கள் செவ்வனே போடப்பட்டிருப்பதைப் பார்வையிட்டான். பிறகு தனக்கு மரணம் கிட்டியிருப்பதை உணராமல் பொழுது விடிவதை எதிர்பார்த்திருந்தான்.

மறுநாள் பொழுது விடிந்ததும், மதுரை நகர மக்கள் சபைக்கு வந்து அவரவர் உட்காரத்தக்க மஞ்சங்களில் உட்கார்ந்தார்கள். அரசர்கள் ராஜ மஞ்சங்களில் உட்கார்ந்தனர். பின்னர் கம்சன் மல்யுத்த வீரர்களுடன் உயர்ந்ததொரு மஞ்சத்தில் அமர்ந்தான். அந்தப்புர மங்கையரும் பட்டணத்துப் பாவையரும் வேசியரும் அவரவருக்குரிய மஞ்சங்களில் உட்கார்ந்தனர். நந்தகோபர் முதலியோர் தமக்குரியவற்றில் அமர்ந்தனர். அக்குரூரரும் வசுதேவரும் தனித்துப் பேசிக்கொள்வதற்காக ஒரு ஓரத்தில் உட்கார்ந்தார்கள். மகனிடத்தில் பேரன்புடைய தேவகியானவன் முடிவு காலத்திலாவது தன் அன்பு மகனின் முகத்தைப் பார்க்கலாம் என்று பட்டணத்து மங்கையரின் நடுவே உட்கார்ந்திருந்தாள். இன்னிசைக் கருவிகள் முழங்கலாயின. மல்லன் சாணூரன் மிகவும் குதித்துக் கொண்டிருந்தான் மற்றொரு மல்லனான முஷ்டிகனும் தோள் தட்டிக் கொண்டிருந்தான் மக்கள் ஆரவாரஞ் செய்து கொண்டிருந்தனர். மாவீரராயும் பாலகராயும் விளங்கும் பலராம கிருஷ்ணர் இருவரும் புன்னகையோடு சபாமண்டப வாயிலை அடைந்தார்கள்.

அப்போது கம்சனின் கட்டளைப்படி யானைப்பாகனால் ஏவப்பட்ட குவலயாபீடம் என்ற யானை மிக்க கோபத்தோடு அவ்விரு இளைஞரையும் கொல்வதற்கு ஓடிவந்தது; அத்தருணத்தில் அந்தச் சபையின் நடுவே ஒரு ஹாஹாகாரம் உண்டாயிற்று. அப்போது பலராமர் கண்ணனை நோக்கி பகைவனால் ஏவப்பட்ட இந்த யானையைக் கொல்லாமல் இருப்பது நியாயமல்ல அதை அவசியம் கொன்றேயாக வேண்டும் என்றான். உடனே சத்துரு நாசஞ் செய்வதில் வல்லவனாகிய ஸ்ரீகிருஷ்ணன் சிம்ம நாதஞ் செய்து ஐராவதத்துக்கு ஈடான பலமுடைய அந்த யானையின் துதிக்கையைத் தன் திருக்கையினால் பிடித்து இழுத்துச் சுழற்றினான். சர்வேசுவரனாக இருந்தும் கண்ணன் திருவவதாரத்திற்கேற்ப, அந்த யானையுடன் நெடுநேரம் போரிட்டான். அதன் தந்தங்களின் நடுவே நின்று விளையாடி, பிறகு தன் வலது கையினால் அதன் இடதுபுறத் தந்தத்தைப் பிடுங்கி, அதன் மேலிருந்த யானைப் பாகனை அடித்தான். அந்த அடியினால் யானைப் பாகனின் தலை பல துண்டுகளாகச் சிதறியுடைந்தது. உடனே மூத்த நம்பியான பலராமன் அந்த யானையின் வலது தந்தத்தைப் பிடுங்கி பக்கத்திலிருந்த யானைக்காப்போரை அடித்துக் கொன்றுவிட்டு, வேகமாக எழும்பித்தாவி, தன் இடது திருவடியால் அந்த யானையின் மத்தகத்தின் மீது ஓங்கி உதைத்தான். இவ்விதம் பலராமன் விளையாட்டாக உதைத்தவுடனேயே அந்தக் குவலயாபீடம் என்ற யானையானது வஜ்ஜிராயுதத்தினால் அடிபட்ட பருவத்தைப் போலக் கீழே விழுந்து இறந்தது. இவ்வண்ணம் புருஷசிரேஷ்டர்கள் இருவரும் இந்த யானையைப் பாகனோடு சங்கரித்து விட்டு அதன் மதநீராலும் இரத்தத்தாலும் பூசப்பட்ட திருமேனியுடையவர்களாய் அதன் தந்தங்களாகிய திவ்விய ஆயுதத்தைக் கையில் ஏந்திக் கொண்டு சிங்க ஏறுகளைப் போலச் சபாமண்டபத்துக்குள் நுழைந்தார்கள்.

உடனே, சபையில் ஹாஹாகாரம் எழும்பியது. அங்கிருந்த நகரத்தார்கள் யாவரும் வியப்புடன் பார்த்தார்கள். இவனன்றோ முன்பு குழந்தைகளைக் கொன்று கொண்டிருந்த பூதனை அரக்கியைக் கொன்றவன்! இவனன்றோ மருத மரங்களை முறித்தவன்! இவனல்லவா காளிங்கன் என்ற மகாசர்ப்பத்தின் மீதேறி நர்த்தனஞ் செய்த சிறுவன்! ஏழு நாட்கள்வரை கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துப் பிடித்துக் கோகுலம் காத்தவனும் இவனேதான்! பாருங்கள்! பெண்களின் மனங்களையும் கண்களையும் மகிழ்வித்து விளையாடிக்கொண்டே போகிற இந்த கிருஷ்ணனுக்கு முன்னே போகிறவன் அவன் தமையன் பலபுத்திரனான பலராமன் புராணார்த்தம் தெரிந்த பண்டிதர்கள் அமுங்கியிருந்த யாதவவம்சத்தை ஒரு கோபாலன் தலையெடுக்கச் செய்வான் என்று சொல்வது இந்தக் கிருஷ்ணனையே போலும்! யாவற்றுக்கும் உற்பத்தி ஸ்தானமான ஸ்ரீவிஷ்ணு அம்சமாய் பூமி பாரம் தீர்க்க அவதாரஞ் செய்தவன் இவனே! என்றெல்லாம் ஸ்ரீகிருஷ்ணனையும் பலராமனையும் யாதவரும் நகர மக்களும், வர்ணித்துக்கொண்டே இருந்தனர். அப்பொழுது தேவகியின் ஸ்தனங்களின்றும் பால் பெருகி, மார்பு திடுக்திடுக் கென்று துடித்தன. வாசுதேவரோ, தன் பிள்ளைகளின் முகங்களைப் பார்த்ததால் இளமையாகக் காணப்பட்டார். அந்தப்புரத்து மங்கையர் கண்ணனைக் கண்டு மலர மலர விழித்து ஒருத்தியோடு ஒருத்தி பலவாறும் பேசிக் கொண்டார்கள். தோழியரே! அதோ கண்ணனின் திருமுகத்தைப் பாருங்களடி! மிகவுஞ் சிவந்த கண்கள் யானையோடு போரிட்டதால் உண்டான வியர்வைத் துளிகள்! சரத்காலத்தில் மலர்ந்த செந்தாமரை மலர் பனித்துளிகளோடு இருப்பது போலல்லவா தோன்றுகிறது. பெண்கள் நாயகமே! ஸ்ரீவச்சம் என்ற மருப்பொருந்தி, பகைவரின் பலத்தைப் போக்கும்படியான கற்பாறை போன்ற கண்ணனின் திருமுகத்தைப் பாரடி? திரண்ட திருத் தோள்களைப்பாரடி! அந்தக் கண்ணன் மட்டுமா? முன்னே போகிற பலராமரின் சிரிப்பிலே தான் எத்தனைக் கவர்ச்சியடி!

அதோ பாருங்களடி! கிருஷ்ணன் மல்யுத்தஞ் செய்ய சாணூரனோடு சேருகின்றான். இந்த அரசவையில் நியாயமறிந்துவர்கள் இல்லையா? யவுவனத்தை நெருங்கும் சுகுமார மேனியுடைய கண்ணன் எங்கே? வஜ்ராயுதம் போன்ற கடின தேகமுடைய மகாசூரன் எங்கே? இவ்விருவரையும் போரிடச்செய்து வேடிக்கை பார்ப்பது சபையோருக்கு நியாயமா? என்று இவ்விதமாக நகரத்துப் பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் தன் வஸ்திரங்களை இறுக வரிந்து கட்டிக்கொண்டு பூமியதிர ஜனங்களின் நடுவே குதித்துக் கொண்டிருந்தான். பலராமனும் அப்படியே தோள் தட்டிக் கொண்டிருந்தான். அவர்கள் குதித்ததால் பூமியானது பிளந்து போகாமல் இருந்ததே விந்தையாகத் தோன்றியது! பிறகு ஸ்ரீகிருஷ்ணன் மல்லனான சாணூரனோடும், பலபத்திரன் மல்லனான முஷ்டிகாசுரனுடனும் போர் செய்யத்துவங்கினார்கள். அத்தனைப் பெரிய கூட்டத்திலே இவர்களிடம் யாதொரு ஆயுதமுமில்லாத நிலையில் சன்னிபாதம் என்கிற முதலில் கைகொடுத்துப் பஞ்சாப் போடுவதனாலும் அவதூதம் என்ற புறங்கையால் கீழே தள்ளுவதாலும், முஷ்டி என்ற கைப்பிடி இடித்தலினாலுங் கீலநிபாதம் என்ற முழங்கை கணைக்கைகளைக் கொண்டு இடித்தலினாலும் வச்ர நிபாதம் என்ற கையோரங்களால் இடிப்பதனாலும் மத்திமை, அனாமிகை என்ற விரல்களின் நடுவே கட்டை விரல் வைத்த முஷ்டியினால் இடித்தலினாலும், பரதோத்தூதம் என்ற காலால் தூக்கி எரிதலினாலும் பிரமிருஷ்டம் என்ற உடம்பையெல்லாம் இறுகப் பீடித்துத் தள்ளியுழக்குவதினாலும், மிக்க கொடிய பயங்கர மற்போர் நிகழ்ந்தது, அந்தப் போரில் சாணூரன் கண்ணனோடு எவ்வளவுகெவ்வளவு வேகமாகப் பொருந்தினானோ அவ்வளவுக்கவ்வளவு பலவீனமடைந்தான் கண்ணன் சர்வ சக்தனாக இருந்ததாலும் கோபத்தாலும் அந்தச் சாணூரனோடு விளையாட்டுப் போலவே போர் செய்து கொண்டிருந்தான்.

அப்போது சாணூரனுக்குப் பலம் குறைவதையும் கிருஷ்ணனுக்கு பலம் வளர்வதையும் கண்ட கம்சன் மிகவும் கோபங்கொண்டு வாத்திய முழக்கத்தை நிறுத்தம்படிக் கட்டளையிட்டான். வாத்தியங்கள் முழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால் வானில் தேவ வாத்தியங்கள் முழங்கலாயின. தேவர்கள் வானிலிருந்து ஸ்ரீகேசவா! ஸ்ரீகோவிந்தா! சாணூரனை வெல்வாயாக நீ வெற்றியடைவாயாக என்று வாழ்த்தினர். நெடு நேரம் போர் புரிந்து கொண்டிருந்த கண்ணன் அந்த அசுரனைச் சங்கரிக்க எண்ணி அவனைத் தூக்கிக் கிறுகிறுவென்று சுழற்றித் தரையில் ஓங்கி அறைந்தான். அவனுக்கு கண்ணன் பூற்றும் போதே உயிர் போய்விட்டது! தரையில் அறைந்ததும் அவனுடல் துண்டம் துண்டமாகப் பிய்ந்து பூமியில் இரத்தச் சேற்றை உண்டாக்கியது. அதுபோலவே பலராமனும் முஷ்டிகனை தன் முஷ்டியால் சிரத்திலிடித்தும் முழங்காலால் மார்பில் இடித்தும் தரையில் தள்ளி உயிரிழந்த அவனை உதைத்துத் தள்ளினான். அவ்விரு மல்லர்களும் மடிந்தவுடன் தோசலகன் என்பவன் போருக்கு வந்தான். அவனையும் ஸ்ரீகிருஷ்ணன் தனது இடது கை முஷ்டியினால் இடித்துத் தரையில் வீழ்த்தினான். இவ்வாறு சாணூரன், முஷ்டிகன், தோசலகன் ஆகிய மூவரும் வதைக்கப்பட்டதும் மற்ற மல்லர்கள் பறந்தோடிப் போனார்கள். பிறகு தங்களோடு போர் செய்ய ஆளில்லாததால் ஸ்ரீகிருஷ்ணனும் பலராமனும் தங்களுக்குச் சமவயதுள்ள இடைப் பிள்ளைகளை வலுவில் இழுத்து வந்து குதித்து விளையாடி ஆனந்தக் கூத்தாடினார்கள். இதையெல்லாம் கண்ட கம்சனின் கண்கள் சிவந்தன! அவன் அங்கு இருந்த போர் வீரரையழைத்து சேவகரே! இந்த இடைப் பிள்ளைகளைச் சபைக்கு வெளியே இழுத்துச் செல்லுங்கள். நந்தகோபனைப் பிடித்து விலங்கிடுங்கள். வசுதேவனை நல்ல வயதுடையவர்க்குச் செய்யத்தக்க தண்டனை செய்து வதையுங்கள். இதோ கிருஷ்ணனோடு சேர்ந்து துள்ளுகிறார்களே, அந்த இடையர் கூட்டத்தினரின் மாடுகளையும் மற்றுமுள்ள பொருள்களையும் பறிமுதல் செய்யுங்கள்! என்று கட்டளையிட்டான். அப்போது ஸ்ரீகிருஷ்ணன் சிரித்துக் கொண்டே வேகமாகக் கம்சனின் மஞ்சத்துக்குத் தாவி அவனது கிரீடஞ் சுழன்று கீழே விழ அவன் தலைமயிரைப் பிடித்து இழுத்துத் தரையில் தள்ளி அவன் மீது தாவி விழுந்தான்.

மைத்ரேயரே! சர்வ லோகங்களுக்கும் ஆதாரமான ஸ்ரீகிருஷ்ணன் அவன்மீது வீழ்ந்ததும் அந்தப் பாரம் தாங்கமாட்டாமலேயே கம்ஸ மகாராஜன் உயிர் இழந்தான்! அவன் உயிர் இழந்ததும் ஸ்ரீமதுசூதனன் அவனது தலைமயிரைப்பற்றி, அவனது உடலை அரங்கின் நடுவே இழுத்தான். பாரமுள்ள சரீரத்தை இழுத்ததால், தண்ணீர் வெள்ளம் ஓடி அறுத்தாற் போன்று அவ்விடத்தில் ஓர் அகழி உண்டாயிற்று. கம்ஸன் வதைக்கப் பட்டதைக் கண்ட அவன் தம்பி சுநாமா என்பவன் கோபத்தோடு கண்ணன் மீது பாய்ந்தான். அவனை மூத்த நம்பியான பலராமன் விளையாட்டாகவே சங்காரஞ் செய்தான். இவ்விதம் மதுராபுரி அரசனான கம்சன் கண்ணனால் சங்கரிக்கப்பட்டதைக் கண்டு மக்களும் தேவரும் மகிழ்ந்தனர். கிருஷ்ணன் பலராமனோடு சென்று தந்தை வசுதேவரையும் தாயான தேவகியையும் பணிந்தார்கள். அவர்களும் ஸ்ரீராமகிருஷ்ணர்களைப் பாராட்டித் துதித்தனர்.


© Om Namasivaya. All Rights Reserved.